நற்றிணை

நற்றிணை – தமிழ் உரையுடன்    

எளிய தமிழ் உரை – வைதேகி

உரை நூல்கள்
நற்றிணை – ஔவை துரைசாமி – தமிழ் மண் பதிப்பகம், சென்னை
நற்றிணை – வித்துவான் H. வேங்கடராமன் – உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை
நற்றிணை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை

குறிஞ்சித் திணை –  புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

முல்லைத் திணை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

மருதத் திணை – ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தற்  திணை – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலைத் திணை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

மருதத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள்:  வயல், பழனம் (pond), கழனி,  குளம், வாளை மீன், வாகை மீன், கெண்டை மீன் , ஆமை, உழவர், அரிநர், நெல், மாமரம், ஞாழல் மரம், நொச்சி மரம், கரும்பு, நீர்நாய்  (otter), ஆம்பல் (white waterlily), தாமரை, பொய்கை, கயம் (pond), குருவி, கோழி, சேவல்,  கழனி, கொக்கு, காரான் (buffalo), காஞ்சி மரம்,  மருத மரம், அத்தி மரம்,  கரும்பு, குளம்,  தாமரை மலர், எருமை,  பொய்கை, ஆம்பல், முதலை, களவன் (நண்டு)

குறிஞ்சித் திணையில் அடிக்கடி வரும் சொற்கள்:  வரை (mountain),  மலை, குன்று, சாரல் (mountain slope), அடுக்கம் (mountain range), கிளி,   ஏனல் (தினை), அவணை (millet field),  தினை,  இறடி (millet),  இருவி (millet stubble), தாள் (stubble), குரல் (millet spikes),  தட்டை (stubble) – and also bamboo rattle to chase parrots – வெதிர் புனை தட்டை, குளிர், தழல் (gadgets used to chase parrots), கவண், தினை, புனவன் (mountain farmer),  குறவன்,  கானவன், கொடிச்சி, கழுது, இதண், மிடை  (Platform in the millet field), ஓப்புதல் (chase parrots and other birds that come to eat the grain),  கொடிச்சி, யானை, குரங்கு, மஞ்ஞை (peacock), புலி,  பாம்பு, பன்றி (wild boar), வரை ஆடு,  அருவி, சுனை, பலாமரம், பலாப்பழம், சந்தன மரம், மா மரம், பணை (bamboo), வேங்கை மரம், அகில் மரம், மாமரம்,   குறிஞ்சி, குவளை, காந்தள், தேன், வண்டு, சுரும்பு, ஞிமிறு, தும்பி (honeybee), மஞ்சு,  மழை (word is used for both cloud and rain),  பெயல் (rain), ஐவனம் (wild rice)

நெய்தற் திணையில்  அடிக்கடி வரும் சொற்கள் –   கடல், கடற்கரை, பரதவர், மீன், சுறா, முதலை, திரை (wave), அலை, கானல் (கடற்கரை சோலை),  திமில் (boat), அம்பி (boat), சேரி (settlement) , புன்னை, ஞாழல், தாழை, கைதல், கைதை (screwpine),   உப்பு, உமணர் (salt merchant), உப்பங்கழி (salty land), மணல், எக்கர் (மணல் மேடு), அலவன் (நண்டு), அடும்பு (a creeper with beautiful pink flowers), நெய்தல் ஆம்பல் (white waterlily), கோடு, வளை (conch shell), வலை, குருகு, நாரை, அன்றில்

முல்லைத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள் – புறவு (முல்லை நிலம்), இரலை மான், முயல், ஆ (பசு), கன்று, மழை, முல்லை, காயா, கொன்றை, தோன்றல், தேர், பாகன், மாரி, பித்திகம், கோவலர், ஆயர் (cattle herders), ஆடு, குழல், மஞ்ஞை (peacock),  குருந்தம், மழை,  மான், முயல்

பாலைத் திணையில்  அடிக்கடி வரும் சொற்கள்  –  அத்தம் (harsh path), சுரம் (wasteland), எயினர் (tribes living in the wasteland), பல்லி, ஓதி, ஓந்தி (big garden lizard), பாதிரி (summer blooming flower), கள்ளி (cactus), யா மரம், ஓமை மரம், குரவம், கள்ளிச்செடி, கோங்கு மரம்,  ஞெமை, இருப்பை மரம், வேம்பு, யாமரம், உகாய், கழுகு, கடுஞ்சுரம், அருஞ்சுரம் (harsh wasteland), செந்நாய் (red fox), யானை, புலி, மூங்கில், பதுக்கை (leaf heap, usually a shallow grave), நெல்லி, நெறி (path), ஆறு (path), வேனிற்காலம்,  பரல் கற்கள், இறத்தல் (கடப்பது)

நற்றிணை (69) – 1, 2, 3, 4, 5, 6, 11, 12, 13, 16, 27, 34, 45, 48, 57, 60, 61, 69, 70, 87, 88, 90, 94, 95, 98, 100, 101, 102, 110, 115, 118, 120, 136, 143, 146, 155, 162,169, 172, 177, 179, 184, 187, 191, 194, 196, 200, 213, 220, 222, 227, 231, 239, 242, 249, 258, 261, 264, 271, 276, 280, 305, 320, 329, 342, 359, 368, 373, 397

நற்றிணை 1, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நின்ற சொல்லர், நீடு தோறு இனியர்,
என்றும் என் தோள் பிரிபு அறியலரே,
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போலப்
புரைய மன்ற, புரையோர் கேண்மை,  5
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்து அருளி,
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே.

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி கூறியது.

பொருளுரை:   அவர் சொல்லிய சொல்லிலிருந்து  மாறுபடாதவர்.  பெரிதும் இனிமையாகப் பழகும் தன்மையுடையர்.  என் தோள்களை என்றும் பிரிதல் அறியாதவர்.   (வண்டு) தாமரைப்பூவின் குளிர்ச்சியான மகரந்தத் தாதினைத் துளைத்து எடுத்து, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் உச்சியில் கொண்டு போய் சேர்த்து வைத்த இனிய தேனைப் போல (தாமரைத்தாது – தலைவனின் உள்ளம், சந்தன மரம்-தலைவியின் உள்ளம், தேன் – இருவரின் அன்பு) உறுதியாக உயர்வினை உடையது உயர்ந்தோராகிய தலைவரின் நட்பு.   நீர் இன்றி இவ்வுலகமானது சிறக்கவியலாது.  அதுபோல, அவர் இன்றி நாம் சிறத்தலில்லை.   அவரும் நம்மீது கொண்ட விருப்பத்தின் காரணமாக கருணையோடு நடப்பவர்.  பிரிவதால் நம் மணம் வீசும் நெற்றியில் ஏற்படும் பசலை படர்வதற்கு அஞ்சுதலையுடைய அவர், பிரிதல் என்ற சிறுமையான செயலைச் செய்ய நினைப்பாரோ? அவ்வாறு செய்தற்குக்கூட அறியாதவர் அவர்!

குறிப்பு:   ஒளவை துரைசாமி உரை –  ‘அவனறிவு ஆற்ற அறியுமாகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பாவில் ஏற்றற்கண் நிகழும் தலைவி கூற்றுக்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணர்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தாமரைத்தாது தலைவன் உள்ளத்திற்கும் சந்தனத்தாது தலைவியின் உள்ளத்திற்கும் உவமையாக்கி இருவர் கருத்தும் ஒத்த வழி சாந்திலே தீந்தேனிறால் வைத்தது போலத் தலைவன் தலைவிபால் அன்பு வைத்தான் எனப் பொருந்த உரைக்க.  ஒளவை துரைசாமி உரை – தாமரைத் தேனைச் சாந்தம் தன் மணத்தை ஊட்டிச் சிறப்பிப்பது போலத் தன்பால் வைத்த புல்லிய என் அன்பை உள்ளத்திற் கொண்டு கேண்மையாம் பெருமை உறுவித்தார் என்பாள், சாந்தில் தொடுத்த தீம் தேன் போல புரைய மன்ற என்றாள்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  இன்று – ஒளவை துரைசாமி உரை – இன்றி என்பது செய்யுளாதலின் இன்று என வந்தது.  இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி நின்ற இகரம் உகரம் ஆதல், தொன்றியல் மருங்கின் செய்யுளில் உரித்தே  (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 237). இலக்கணம்:  மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல்மீமிசை – ஒருபொருட் பன்மொழி, அறியலரே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   நின்ற சொல்லர் – மாறுபடாத சொல்லினை உடையர்; நீடு தோன்று இனியர் – பெரிதும் இனிமையாகப் பழகும் தன்மையுடையர், என்றும் என் தோள் – என்றும் என் தோள்களை, பிரிபு அறியலரே- பிரிவதற்கு அறியாதவர், தாமரைத் தண் தாது – தாமரை மலரின் குளிர்ச்சியான மகரந்தத் தாதினை, ஊதி – துளைத்து, மீ – மேலிடம், மிசை – மேலே, சாந்தில் தொடுத்த – சந்தனமரத்தில் சேர்த்துவைத்த, தீம் தேன் போல – இனிய தேன் போல, புரைய – உயர்வு, மன்ற – உறுதியாக,  புரையோர் – உயர்ந்தோர், கேண்மை – நட்பு, நீர் இன்று – நீர் இல்லாது, அமையா – சிறப்பாகாத, உலகம் போல – உலகத்தைப் போல, தம் இன்று – அவர் இல்லாது,  அமையா – சிறப்படையா, நம் – நம்மை, நயந்து அருளி – விரும்பி கருணையோடு, நறு நுதல் – மணம் வீசும் நெற்றி,  பசத்தல் அஞ்சி – பசலை படரும் என்பதற்கு அஞ்சி, சிறுமை உறுபவோ – சிறுமையான செயலைச் செய்தற்கு நினைப்பாரோ, செய்பு அறியலரே- செய்தற்கு அறியாதவரே

நற்றிணை 2, பெரும்பதுமனார், பாலைத் திணை – கண்டோர் சொன்னது
அழுந்து பட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து,
ஒலி வல் ஈந்தின் உலவையங்காட்டு,
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம்மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
வல்லியப் பெருந்தலைக் குருளை, மாலை,  5
மரல் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே
வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று
எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே.  10

பாடல் பின்னணி:  தலைவனையும் தலைவியையும் பாலை நிலத்தில் கண்டவர்கள் சொன்னது.  

பொருளுரை:   ஆழ்ந்துப்பட்டு இருந்த பெரிய குளிர்ச்சியான மலையின் தழைத்த மிகுந்த வலிமையுடைய ஈத்த மரங்களையுடைய காற்று சுழன்று வீசும் காட்டில், வழியில் செல்லும் மக்களின் தலையில் மோதியதால் குருதி படிந்த மாறுபட்ட தலையையும், குருதி பூசிய வாயையும், பெரிய தலையையும் உடைய புலிக்குட்டிகள் மாலை நேரத்தில் தாம் பதுங்கியிருக்கும் மரல் செடிகளை நிமிர்ந்து நோக்கும் இண்டுக் கொடியுடன் ஈங்கைப் பரவிய பாலை நிலத்தில், கூரிய பற்களையுடைய மெல்லியளான இளம் பெண்ணை முன்னே போக விட்டு இரவுப் பொழுதில் அவள் பின் செல்லும் இளைஞனின் உள்ளம், காற்றுடன் கலந்து மழை பெய்யும் பொழுது பெரிய பாறைகளைப் புரண்டு விழுமாறு மோதுகின்ற இடியைக் காட்டிலும் கொடுமையானது.

குறிப்பு:  இறைச்சிப் பொருள் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குடிப்பிறப்புடையாளை மயக்கி அவள் சுற்றத்தினின்றும் பெயர்த்து அழைத்தேகுகின்றான் என்னும் இறைச்சிப் பொருள் தோன்றக் காலொடு பட்ட மாரி மால் வரை மிளிர்க்கும் உரும் என்றார் என்க.  ஒளவை துரைசாமி உரை – ‘பொழுதும் ஆறும் உட்கு வரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்’ எனத் துவங்கும் நூற்பாவில்…………சேய் நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும், கண்டோர் மொழிதல் கண்டது என்ப’ (தொல்காப்பியம் அகத்திணையியல் 43) என்பதற்கு இதனைக்காட்டி இது செலவின்கண் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.  இலக்கணம்:  அம் சாரியை, கொடிதே – ஏகாரம் அசை நிலை.  மடந்தை முன் உற்று (7) –  ஒளவை துரைசாமி உரை –  காதலியின் மேனி நலமும் நடைவனப்பும் கண்டு மகிழ்வதோடு கண்முன் நிறுத்திக் காவல் செய்து போதரும் தலைவனது காப்பு மறம் புலப்பட மடந்தையை முன்னுய்த்துத் தான் பின்னே செல்கின்றான் என்பார்.  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).  வல்லியம் குருளை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலிக்குட்டிகள், ஒளவை துரைசாமி உரை – வலிய புலிகள் தம்முடைய குட்டிகளுடன்.

சொற்பொருள்:   அழுந்து பட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து – ஆழ்ந்துப்பட்டு இருந்த பெரிய குளிர்ச்சியான மலையின், ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு – தழைத்த மிகுந்த வலிமையுடைய ஈத்த மரங்களையுடைய காற்று சுழன்று வீசும் காட்டில், ஆறு செல் மாக்கள் – வழியில் செல்லும் மக்கள், சென்னி எறிந்த செம்மறுத் தலைய – தலையில் மோதியதால் குருதி படிந்த மாறுபட்ட தலையையுடைய, நெய்த்தோர் வாய – குருதி பூசிய வாயையுடைய, வல்லியப் பெருந்தலைக் குருளை – பெரிய தலையையுடைய புலிக்குட்டிகள், மாலை – மாலை நேரத்தில், மரல் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே – மரல் செடிகளை நிமிர்ந்து நோக்கும் இண்டுக் கொடியுடன் ஈங்கைப் பரவிய பாலை நிலமே, வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று – கூரிய பற்களையுடைய மெல்லியளான இளம் பெண்ணை முன்னே போக விட்டு, எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம் – இரவுப் பொழுதில் செல்லும் இளைஞனின் உள்ளம், காலொடு பட்ட மாரி மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே – காற்றுடன் கலந்து மழை பெய்யும் பொழுது பெரிய பாறைகளைப் புரண்டு விழுமாறு மோதுகின்ற இடியைக் காட்டிலும் கொடுமையானது

நற்றிணை 3, இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ்சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,
கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்,
வில் ஏர் உழவர் வெம்முனைச் சீறூர்ச்  5
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே, உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே?

பாடல் பின்னணி:  முன்னொரு காலத்தில் பொருள்வயின் பிரிந்த கணவன் பின்னும் பொருள்தேடும்படி கருதிய தன் நெஞ்சிடம் சொன்னது.

பொருளுரை:   குஞ்சுகளைப் பெற்ற பருந்து வருந்தி வாழும் வானைத் தொடும் உயர்ந்த கிளைகளையும் பொரிந்த அடியையும் உடைய வேப்ப மரத்தின் புள்ளி போன்ற நிழலில், பொன்னை உரைத்துப் பார்க்கும் கல்லைப் போன்ற அரங்கை வட்டியால் கீறி, நெல்லிக்காயை வட்டாகக் கொண்டு, தொழில் எதுவும் கற்காத சிறுவர்கள் பாண்டில் விளையாடும், வில்லால் வழியில் செல்லுபவர்களைத் துன்புறுத்தி உண்ணும் வேடரின் கொடிய குடியிருப்பை உடைய சிற்றூர்களைக் கொண்டிருக்கும் பாலை நிலத்தின்கண், வலிமையை அழிக்கும் மாலைப் பொழுதில் நினைத்தேன் அல்லவா நான், கருதிய வினையை முடித்தாற்போன்ற இனிமையுடைய நம் தலைவி இல்லத்தில் மாட்சிமைப்பட்ட விளக்கை ஏற்றி துன்புற்று வருந்தும் பொழுதாகும் இது என்று?  அதனால், என் நெஞ்சே! மீண்டும் பிரியக் கருதலை எண்ணாதே.  இனி நான் பிரிய மாட்டேன்.

குறிப்பு:   இறைச்சிப் பொருள் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பருந்து வருந்தியிருக்கும் வேம்பின் நிழலில் அப்பருந்தின் வருத்தத்தை ஏறிட்டு நோக்காது, சிறார் நெல்லிவட்டாடி மகிழாநிற்பர் என்றது, யான் இவளைப் பிரிதலால் வரும் துன்பத்திற்கு அஞ்சி வருந்தவும் அதனைக் கருதாத என் நெஞ்சே, நீ பொருள்மேற் சென்று மீளும் மகிழ்ச்சியை உடையையாயிரா நின்றாய் என்பது.  இலக்கணம்:  நீழல் – நிழல் என்பதன் விகாரம், சிறாஅர் – அளபெடை, சுரன் – சுரம் என்பதன் போலி, யானே – ஏகாரம் அசை நிலை, எனவே – ஏகாரம் அசை நிலை.  ஒளவை துரைசாமி உரை – ‘உள்ளிய வினைமுடித்தன்ன இனியோள்’ என வருவதை ‘ஆங்கவை ஒருபாலாக’ என்ற நூட்பாவில் கூறப்படும் இன்புறல் என்னும் மெய்ப்பாட்டுக்கும், முன்பு நிகழ்ந்ததனைக் கூறிப் போகாது ஒழிந்ததற்கும் இதனைக் காட்டுவர் இளம்பூரணர்.  நச்சினார்க்கினியர் ‘தலைவன் நினைந்து செலவு அழுங்குவதற்கு நிமித்தமாயவாறு காண்க’ என இதனைக் காட்டுவர்.

சொற்பொருள்:   ஈன் பருந்து உயவும் – குஞ்சுகளைப் பெற்ற பருந்து வருந்தி இருக்கும், வான் பொரு நெடுஞ்சினைப் பொரி அரை வேம்பின் புள்ளி நீழல் – வானைத் தொடும் உயர்ந்த கிளைகளையும் பொரிந்த அடியையும் உடைய வேப்ப மரத்தின் புள்ளி போன்ற நிழலில், கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் – பொன்னை உரைத்துப் பார்க்கும் கட்டளைக் கல் போன்ற அரங்கை வட்டியால் கீறி நெல்லிக்காயை வட்டாகக் கொண்டு பாண்டில் விளையாடும் தொழில் எதுவும் கற்காத சிறுவர்கள் (அரங்கு – சதுரம்), வில் ஏர் உழவர் வெம்முனைச் சீறூர்ச் சுரன் முதல் வந்த – வில்லால் வழியில் செல்லுபவர்களைத் துன்புறுத்தி உண்ணும் வேடரின் கொடிய குடியிருப்பை உடைய சிற்றூர்களைக் கொண்டிருக்கும் பாலை நிலத்தின்கண் வந்த, உரன் மாய் மாலை – வலிமையை அழிக்கும் மாலைப் பொழுது, உள்ளினென் அல்லெனோ யானே – நினைத்தேன் அல்லவா நான், உள்ளிய வினை முடித்தன்ன – கருதிய வினையை முடித்தாற்போன்ற, இனியோள் – இனிமையுடைய நம் தலைவி, மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே – இல்லத்தில் மாட்சிமைப்பட்ட விளக்கை ஏற்றி துன்புற்று வருந்தும் பொழுதாகும் என்று

நற்றிணை 4, அம்மூவனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கானலஞ் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிறப் புன்னைக் கொழு நிழல் அசைஇத்,
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,
‘அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை  5
அரிய ஆகும் நமக்கு’ எனக் கூறின்,
கொண்டும் செல்வர் கொல் தோழி, உமணர்
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக்
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்  10
கருங்கால் வெண்குருகு வெரூஉம்
இருங்கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே?

பாடல் பின்னணி:  அலர் ஏற்பட்டதைக் கூறி வரைவு கடாயது.

பொருளுரை:   கடற்கரைச் சோலையில் உள்ள சிறுகுடியிலிருந்து கடல் மேல் செல்லும் பரதவர் நீல நிறமுடைய புன்னையின் அடர்ந்த நிழலில் தங்கி, குளிர்ச்சியுடைய கடல் பரப்பில் செல்வதற்கு உரிய நேரம் பார்த்து, முறுக்குண்டு கிடந்த வலையை உலர்த்தும் நெய்தல் நிலத் தலைவனுடன் ஏற்பட்ட உறவினால் நமக்கு உண்டான பழிச் சொல்லை அன்னை அறிந்தால், இங்கு வாழ்வது நமக்கு கடினமாகும் என்று அவரிடம் கூறினால், உன்னை அழைத்துக் கொண்டு செல்வாரா தோழி, வெள்ளை உப்பின் விலையைக் கூறி கூட்டமாகிய ஆனிரையை எழுப்புகின்ற, நீண்ட வழியில் செல்லும் வண்டி மணலை உரசும் ஓசைக்கு வயலில் உள்ள கரிய காலையுடைய வெள்ளைக் குருகு அஞ்சும் கரிய உப்பங்கழி சூழ்ந்த நெய்தல் நிலத்தில் உள்ள தாம் வாழும் ஊருக்கு?

குறிப்பு:  அம் கண் அரில் வலை (4) – ஒளவை துரைசாமி உரை – அழகிய கண்களோடு கூடித் தம்மிற் பின்னிச் சிக்குண்டு கிடக்கும் வலை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முறுக்குண்டு கிடந்த வலை.  உள்ளுறை (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பரதவர் புன்னையின் கீழிருந்து கடலிற் செல்லுதற்குப் பத நோக்கி அதுகாறும் வலையை உணக்கும் துறைவன் என்றது, தலைவன் சிறைப்புறத்திலிருந்து, தலைவியைக் கூடுவதற்கு யாருமில்லாத பதம் பார்த்து அதுகாறும் ஆராய்ந்து கொண்டிருப்பது என்றதாம்.  உள்ளுறை (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சகடம் மணலில் மடுத்து முழங்கும் ஓசைக்குக் கழனி நாரை வெருவும் என்றது, தலைவன் சான்றோரை முன்னிட்டு அருங்கலன் தந்து வரைவரு மண முரசொலி கேட்பின் அலரெடுக்கும் ஏதிலாட்டியர் வாய் வெருவி ஒடுங்கா நிற்பர் என்றதாம். இலக்கணம்:  அம் – சாரியை, நீல் – கடைக்குறை, அசைஇ – அளபெடை, வெரூஉம் – அளபெடை, ஊர்க்கே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர் – கடற்கரைச் சோலையில் உள்ள சிறுகுடியிலிருந்து கடல் மேல் செல்லும் பரதவர், நீல் நிறப் புன்னைக் கொழு நிழல் அசைஇ – நீல நிறமுடைய புன்னையின் அடர்ந்த நிழலில் தங்கி, தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி – குளிர்ச்சியுடைய கடல் பரப்பில் செல்வதற்குரிய நேரம் பார்த்து, அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு – முறுக்குண்டு கிடந்த வலையை உலர்த்தும் நெய்தல் நிலத் தலைவனுடன், அலரே அன்னை அறியின் – நமக்கு உண்டான பழிச் சொல்லை அன்னை அறிந்தால், இவண் உறை வாழ்க்கை அரிய ஆகும் நமக்கு எனக் கூறின் கொண்டும் செல்வர் கொல் தோழி – இங்கு வாழ்வது நமக்கு கடினமாகும் என்று அவரிடம் கூறினால் அழைத்துக் கொண்டு செல்வாரா தோழி, உமணர் வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி – உப்பு வணிகர் வெள்ளை உப்பின் விலையைக் கூறி, கண நிரை கிளர்க்கும் – கூட்டமாகிய ஆனிரையை எழுப்புகின்ற, நெடு நெறிச் சகடம் மணல் மடுத்து உரறும் ஓசை – நீண்ட வழியில் செல்லும் வண்டி மணலை உரசும் ஓசை, கழனிக் கருங்கால் வெண்குருகு வெரூஉம் – வயலில் உள்ள கரிய காலையுடைய வெள்ளைக் குருகு அஞ்சும், இருங்கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே – கரிய உப்பங்கழி சூழ்ந்த நெய்தல் நிலத்தில் உள்ள தாம் வாழும் ஊருக்கு

நற்றிணை 5, பெருங்குன்றூர் கிழார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நிலம் நீர் ஆரக், குன்றம் குழைப்ப,
அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர் கால்யாப்பக்,
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப்
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி  5
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்
அரிதே, காதலர்ப் பிரிதல் இன்று செல்
இகுளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த தூதே.

பாடல் பின்னணி:   வினைவயின் செல்லும் தலைவனின் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.

பொருளுரை:   நிலம் நீரால் நிரம்பப்பெற்று, மலையில் உள்ள மரம் செடி தழைப்ப, அகன்ற வாயையுடைய சுனையில் நீர் நிறைந்ததால் அங்குள்ள பயிர் நெருங்கி வளர, மலையில் வாழ்பவர்களால் வெட்டப்பட்ட நறைக்கொடி, நறுமணமுடைய வைரம் பாய்ந்த சந்தன மரத்தைச் சுற்றிப் படர, பெருமழைப் பொழிந்த தொழிலையுடைய மேகம் தென்திசையின்கண் எழுந்து ஒலிக்கும் முன்பனிக் காலத்தில் நீ காதலரைப் பிரிந்து வாழ்தல் அரிதாகும்.  பிரிந்து செல்லும் தோழியரை வாடைக்காற்று செல்லாமல் கூட்டுகின்றது.  துன்பத்தைத் தரும் வாடைக்காற்றினால் வருந்தும் இதழுடைய கண்ணீர் விடும் உன் கண்கள் அவருக்குத் தூதை அனுப்பி வைத்தன. அதனால் அவர் உன்னை விட்டு பிரிய மாட்டார்.

குறிப்பு:  குழைப்ப (1) – ஒளவை துரைசாமி உரை – குழை இளந்தளிர், குழைப்ப என்றது பெயரடியாகப் பிறந்த வினை.  கால்யாப்ப (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெருங்கி வளர.  இறைச்சிப் பொருள் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறவர் கொன்ற குறைக் கொடி நறைப்பவர் நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப என்புழி, நீ அவர் பிரிவார் என்ற கருத்தால் மெலிந்த மெலிவு அகன்று நின் காதலனை இனி ஆர முயங்கி உடல் பூரித்திடுக என்பது.  தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும் (6) – ஒளவை துரைசாமி உரை – மேகம் தென்திசை நோக்கி எழுந்து சென்று முழங்கும் வாடைக்காலமும். பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மேகமானது தென் திசையின்கண்ணே எழுந்து செல்லுதலாலே பிரிந்தோர் இரங்குகின்ற முன்பனிக் காலத்தும்.  இலக்கணம்:  தரூஉம் – அளபெடை, தூதே – ஏகாரம் அசை நிலை.  இன்று செல் இகுளையர் தரூஉம் வாடை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – இன்று பிரிந்து செல்லும் தோழியரை, வாடைக் காற்று செல்லாது கூட்டுகிறது.

சொற்பொருள்:   நிலம் நீர் ஆர – நிலம் நீரால் நிரம்பப்பெற்று, குன்றம் குழைப்ப – மலையில் உள்ள மரம் செடி தழைப்ப, அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர் கால்யாப்ப – அகன்ற வாயையுடைய சுனையில் நீர் நிறைந்ததால் அங்குள்ள பயிர் நெருங்கி வளர, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்- மலையில் வாழ்பவர்களால் வெட்டப்பட்ட நறைக்கொடி, நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப – நறுமணமுடைய வைரம் பாய்ந்த சந்தன மரத்தைச் சுற்றிப் படர, பெரும் பெயல் பொழிந்த – பெருமழைப் பொழிந்த, தொழில எழிலி – தொழிலையுடைய மேகம், தெற்கு ஏர்பு – தென் திசையின்கண் எழுந்து, இரங்கும் – ஒலிக்கும், வருந்தும், அற்சிரக் காலையும் அரிதே – முன்பனிக் காலத்தில் அரிதாகும், காதலர்ப் பிரிதல் – நீ காதலரைப் பிரிதல், இன்று செல் தோழியரைத் தரூஉம் வாடையொடு – இன்று பிரிந்து செல்லும் தோழியரை செல்லாமல் கூட்டும் வாடைக்காற்றினால், மயங்கு இதழ் மழைக் கண் – வருந்தும் இதழுடைய ஈரக் கண்கள், பயந்த தூதே – தூதை விடுத்தன

நற்றிணை 6, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படி
நீர் வளர் ஆம்பல் தூம்புடைத் திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இன் மாமைக்,
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,
திதலை அல்குல், பெருந்தோள் குறுமகட்கு,
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே,  5
‘இவர் யார்?’ என்குவள் அல்லள், முனாஅது
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி,
இரும் பல் ஒலிவரும் கூந்தல்  10
பெரும் பேதுறுவள் யாம் வந்தனம் எனவே.

பாடல் பின்னணி:  இரவுக்குறி வேண்டிச் சென்ற தலைவன், தலைவியிடம் சென்று கூறுவாரை நான் பெறவில்லையே என்று வருந்திக் கூறியது.

பொருளுரை:    நீரில் வளரும் ஆம்பலின் துளையுடைய, நார் உரித்த தண்டு போல் அழகையுடையவள் என் காதலி.  உயர்ந்து மலரும் குவளை மலர்களை ஒத்தது அவளுடைய நீர் நிறைந்த கண்கள்.  தேமல் உடையது அவளுடைய அடி வயிறு. பெரிய தோளையுடைய இளம் பெண்ணான அவளிடம் யாராவது தூதாகச் சென்றால், அவரை நோக்கி, இவர் யார் என்று  கேட்க மாட்டாள்.  நாம் வந்திருக்கின்றோம் என்று பெரிதும் மகிழ்வாள்.  காட்டுப் பாதையில் உள்ள குமிழ மரத்தில் உள்ள வளைந்த மூக்குடைய பழுத்தப் பழங்களை உணவாக உண்ணும் குதித்து விளையாடும் மடமைப்பொருந்திய மான்களுடைய காட்டில் உள்ள நறுமணத்தைக் கொண்டது அவளுடைய அடர்ந்த, கருமையான கூந்தல்.

குறிப்பு:   நற்றிணை 6 – அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி, நற்றிணை 24 – விளவின் ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு, நற்றிணை 372 – பெண்ணைத் தேனுடை அழி பழம் வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென, ஐங்குறுநூறு 213 – நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த.  மதன் இன் மாமை (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகு குறைந்த மாமையும் (மாமையும் – மாந்தளிரின் தன்மை), ஒளவை துரைசாமி உரை – அழகும் ஒளியும் பொருந்திய மாமை நிறம்.  பெரும் பேதுறுவள் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை  – களிப்பினால் பெரிதும் மகிழ்வாள், ஒளவை துரைசாமி உரை – பெருங் கலக்கமுற்று வருந்துவள்.  மூக்கு – பொ. வே. சோமசுந்தரனார் உரை, ஐங்குறுநூறு 213, மூக்கு = காம்பு.  இறைச்சிப் பொருள் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை –  குமிழின் கனி மானுக்கு உணவாகும் என்றது யாம் வந்திருக்கின்றேம் என்று கூறும் அச் சொல்லானது நமது தலைவிக்கு மகிழ்வு அளிக்கும் என்றதாம்.  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.  இலக்கணம்:  முனாஅது – அளபெடை, பெறினே – ஏகாரம் அசை நிலை, யாம் – தன்மைப் பன்மை, வந்தனம் – தன்மைப் பன்மை, எனவே – ஏகாரம் அசை நிலை.  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – புணர்ச்சி விருப்பம் குறித்ததால் இப்பாட்டு குறிஞ்சியாயிற்று.

சொற்பொருள்:   நீர் வளர் ஆம்பல் – நீரில் வளரும் வெள்ளை ஆம்பல், தூம்புடை திரள் கால் – தூம்பு உள்ள திரண்ட தண்டின்,  நார் உரித்தன்ன – நாரை உரித்தாற்போல், மதன் இல் மாமை – செருக்கு இல்லாத மா நிறம், குவளை அன்ன – குவளை மலர்கள் போன்ற,  ஏந்து – உயர்ந்த, எழில் – அழகு,  மழைக் கண் – நீர் நிறைந்த கண், திதலை அல்குல் – பசலைப் படர்ந்த அடி வயிறு, பெருந்தோள் – பெரிய தோள்கள்,  குறுமகட்கு – இளம் பெண்ணிடம், எய்தச் சென்று – தூதாகச் சென்று,  செப்புநர்ப் பெறினே – சொன்னார்கள் என்றால் (பெறினே – ஏ அசை நிலை), இவர் யார் என்குவள் அல்லள் – ‘அவர் யார்?” என்று அவள் கேட்க மாட்டாள்,  முனாஅது – வெறுப்பு இன்றி,  அத்த – காட்டு வழியில்,  குமிழின் – குமிழ மரத்தின்,  கொடு மூக்கு – வளைந்த மூக்குடைய, விளை கனி – பழுத்தப் பழம், எறி மட மாற்கு – குதித்து விளையாடும் மடமைப்பொருந்திய மான்களுக்கு, வல்சி ஆகும் – உணவு ஆகும், வல் வில் ஓரி – வலுவான வில்லையுடைய ஓரி,  கானம் – காடு,  நாறி – நறுமணமுடையவாகி, இரும் – கருமை, பல் ஒலி வரும் கூந்தல் – அடர்ந்தக் கூந்தல், பெரும் பேதுறுவள் யாம் வந்தனம் எனவே – நாம் வந்திருக்கின்றோம் என்று பெரிதும் மகிழ்வாள்

நற்றிணை 11, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்,
ஒழிக மாள நின் நெஞ்சத்தானே,  5
புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர,
நிலவு விரிந்தன்றால் கானலானே.

பாடல் பின்னணி:  காவல் மிகுதியால் தலைவனைக் கூடப் பெறாமையால் ஆற்றாது வருந்திய தலைவிக்குக் கூறுவாளாய், சிறைப்புறத்திருந்த தலைவன் வரைவொடு வருமாறு தோழி சொல்லியது.

பொருளுரை:  அவருடையக் குறியைத் தப்பியதால் (குறிப்பிட்டபடி அவரைச் சந்திக்க முடியாமல் போனதால்), உன்னுடைய உடல் அணியாது தங்கிப் போன மலர் மாலையைப்போல் தளர்ந்து விட்டது.  பழிச்சொற்கள் கூறுபவர்களை நினைத்து நீ வருந்துகின்றாய்.  கண்டிப்பாக அவர் வர மாட்டார் என்று நீ நினைத்து ஊடல் கொண்டாய். உன் நெஞ்சில் எழும் இந்த எண்ணங்களை ஒழித்து விடு.  அலைகள் மோதியதால் குவிந்த பூக்கள் உடைய மணல் நிறைந்த கடற்கரைக் கானலில், அவருடைய தேர் வரும்.  அவருடைய தேரோட்டி நண்டுகளின் மேல் தேர்ச் சக்கரம் படாதவாறு தேரை கவனத்துடன் செலுத்தி, நிலவொளி நிறைந்த கடற்கரையில் அவருடன் வருவான்.

குறிப்பு:   பூ மணல் (6) – ஒளவை துரைசாமி உரை – பூக்கள் விழுந்து கிடைக்கும் மணல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இளமணல்.  நெஞ்சத்தானே – ஏகாரம் அசை நிலை, கானலானே – ஏகாரம் அசை நிலை.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – அலவனுக்கு ஊறு ஏற்படாதவாறு தேர் செலுத்தப்படுமென்றது தலைவி பழிச்சொல்லால் வருந்தாத வண்ணம் வரைந்து கொள்வான் என்பதாம்.  இலக்கணம்:   நெஞ்சத்தானே – ஏ அசை நிலை, மாள – முன்னிலை அசை, விரிந்தன்றால் = விரிந்தன்று + ஆல் , ஆல் அசைநிலை, கானலானே – ஏ அசை நிலை.

சொற்பொருள்: பெய்யாது – அணியாது, வைகிய – தங்கிப் போன, கோதை போல – மாலையைப்போல், மெய் – உடல், சாயினை – நீ தளர்ந்தாய், அவர் செய் குறி – அவர் கூறியக் குறி, பிழைப்ப – தப்பியதால், உள்ளி – நினைத்து, நொதுமலர் – வம்பு பேசுபவர்கள், நேர்பு உரை – பழிச்சொல், தெள்ளிதின் – தெளிவாக, வாரார் – அவர் வர மாட்டார், என்னும் – என்று, புலவி – ஊடல், உட்கொளல் – செய்யாதே, ஒழிக – ஒழித்து விடு, மாள – முன்னிலை அசை, நின் நெஞ்சத்தானே – உன்னுடைய நெஞ்சத்தில், புணரி பொருத – அலைகள் மோதும், பூ மணல் – மலர் நிறைந்த மணல், அழகிய மணல், மென்மையான மணல்,, அடைகரை – மணல் நிறைந்த கரை, நீர் நிறைந்த கரை, ஆழி மருங்கின் – தேர்ச்சக்கரத்தின் அருகில், கடற்கரை அருகில், அலவன் – நண்டுகள், ஓம்பி – பாதுகாத்து, வலவன் – தேரோட்டி, வள்பு – கடிவாள வார், ஆய்ந்து ஊர – கவனமாக ஒட்டி, நிலவு விரிந்தன்றால் கானலானே – கடற்கைக் கானலில் நிலவொளி படரும் பொழுது

நற்றிணை 12, கயமனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
விளம்பழம் கமழும் கமஞ்சூல் குழிசிப்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண்  5
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்
‘இவை காண்தோறும் நோவர் மாதோ,
அளியரோ அளியர் என் ஆயத்தோர்’ என
நும்மொடு வரவு தான் அயரவும்,
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே.  10

பாடல் பின்னணி:  தலைவனோடு தலைவி செல்லத் தோழி உடம்படுத்தினாள்.  பின்பு தலைவியிடம் அவ்வுடன்போக்கு இப்போது வேண்டாம் என்று நிறுத்தினாள்.  தலைவனிடம் சென்று, ‘தலைவி உன்னுடன் வர உடன்பட்டாள்.  ஆனால் தோழியர் நோகுவர் என வருந்தினாள்’ என்று அச்செலவைத் தவிர்த்தாள்.  திருமணத்திற்கு முயல்க என அறிவுறுத்துகின்றாள்.

பொருளுரை:  நிறைந்த தயிர் பானையில் உள்ள நாற்றத்தைப் போக்க விளாம்பழத்தை இட்டு வைத்துள்ளனர்.  அதன் மணம் கமழ்கின்றது.  தயிர்ப்பானையைத் தயிர் கடையும் கயிறு ஆடி தேய்த்ததால், மத்தின் தண்டு தேய்ந்திருக்கின்றது.  வெண்ணை எடுக்கக் கடைவதால் அதன் ஓசை அதிகாலையில் தூணின் அடியிலிருந்து  முழங்கும். அப்பொழுது அவள் தன் உடம்பை மறைத்து, காலில் உள்ள சிலம்பைக் கழற்றினாள்.  அதையும் வரியுடைய பந்தையும் ஒருசேர வைக்கச் சென்றாள்.  தன் தோழிமார் இதனைக் கண்டால் வருந்துவார்களே என்று நினைத்தாள்.  அவள் கண்கள், அவளுடைய கட்டுப்பாட்டையும் மீறி கண்ணீரைச் சொரிந்தன.  ஆனாலும் உன்னோடு வருவதற்குத் தான் அவள் விரும்புகின்றாள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘தலைவரு விழும நிலை’ (தொல்காப்பியம், பொருள் 39) என்று தொடங்கும் நூற்பா உரையின்கண் இதனைக் காட்டி, ‘இந் நற்றிணை போக்குத் தவிர்ந்ததாம்’ என்றும், ‘தாயத்தினடையா’ (தொல்காப்பியம், பொருள் 25) என்ற நூற்பா உரையில் ‘தன் கால் அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் வரி புனை பந்தொடு வைஇய செல்வோள் ‘இவை காண்தோறும் நோவர் மாதோ’ என்ற இப்பகுதியைக் காட்டி, ‘என்பதும் இதன்கண் அடங்கும்’ என்று கூறுவர் நச்சினார்க்கினியர்.  இஃது உடன்போக்குத் தவித்தற்பொருட்டுக் கூறியதென்பர் இளம்பூரணர். பாசம் தின்ற (2) – ஒளவை துரைசாமி உரை – பசிய நாரால் திரிக்கப்பட்டுப் பசுமை நிறம் படிந்திருப்பது தோன்றப் பாசம் என்றார்.  கயிறு என்பது வடமொழியில் பாசம் எனப்படுதல் பற்றிப் பாசம் என்றார் என்பாருமுளர்.  வெளில் முதல் முழங்கும் (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தறியடியில் ஓசை முழங்குகின்ற, ஒளவை துரைசாமி உரை – மன்றுவெளி காறும் முழங்கும், நாட்காலையில் ஊர் ஆனிரைகள் வந்து தொகும் வெளியிடம், இனி இதை தூண் எனக் கோடலும் உண்டு.  வரிப் பந்து – நற்றிணை 12 – வரி புனை பந்தொடு – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, ஒளவை துரைசாமி உரை – வரிந்து புனையப்பட்ட பந்தொடு, திருமுருகாற்றுப்படை 68 – வரிப் புனை பந்தொடு – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி  உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தோடு, கலித்தொகை 51 – வரிப் பந்து – நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து, பரிபாடல் 9 – வரிப் பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரியினையுடைய பந்து, பெரும்பாணாற்றுப்படை 333 – வரிப்பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து.  இலக்கணம்:  கமஞ்சூல் –  கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது, கழீஇ – அளபெடை, வைஇய – அளபெடை,  மாதோ – மாது, ஓ – அசை நிலைகள், கண்ணே – ஏகாரம் அசை நிலை.  கமம் – கமம் நிறைந்து இயலும் (தொல்காப்பியம், உரியியல் 59).

சொற்பொருள்:   விளம்பழம் கமழும் – விளாம்பழம் மணம் கமழும், கமஞ்சூல் குழிசி – பெரிய பானை (நிறைசூல் கொண்ட மகளிரது வயிற்றைப் போலத் தோன்றும்), பாசம் தின்ற – கயிறு உரசி தேய்த்த, தேய் கால் மத்தம் – தேய்ந்த மத்து, நெய் தெரி இயக்கம் – வெண்ணையைச் செய்யும் கடைதல், வெளில் முதல் முழங்கும் – தூணின் அடியிலிருந்து வரும் ஒலிகள் முழங்கும், வைகு புலர் விடியல் – விடியக்காலையில், மெய் கரந்து – உடம்பை மறைத்து, தன் கால் – தன்னுடைய கால், அரி அமை சிலம்பு – பரல் கற்களைக்கொண்ட அழகான கொலுசுகள், ஒலிக்கும் அழகான கொலுசுகள், கழீஇ – கழற்றி, பல் மாண் – மாண்புடைய, வரிப் புனை பந்தொடு – கோடு போட்ட பந்துடன், வைஇய – வைப்பதற்கு (அளபெடை), செல்வோள் – அவள் செல்லும் பொழுது, இவை காண்தோறும் நோவர் – இவற்றைக் கண்டால் வருந்துவார்கள், மாதோ – மாது, ஓ – அசைநிலைகள், அளியரோ அளியர் – மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள், என் ஆயத்தோர் – என் தோழிகள், என – என்று, நும்மொடு வரவு – உன்னோடு வர, தான் அயரவும் – தான் உடன்பட்டும், தன் வரைத்து அன்றியும் – தன் கட்டுப்பாட்டையும் மீறி, கலுழ்ந்தன கண்ணே – கண்களில் நீர் நிறைந்துள்ளது

நற்றிணை 13, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த
பகழி அன்ன சேயரி மழைக் கண்
நல்ல பெருந்தோளோயே! கொல்லன்  5
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியா மன்னோ,
பயில் குரல் கவரும் பைம்புறக் கிளியே.

பாடல் பின்னணி:  இயற்கைப் புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் உடல் வேறுபாடு கண்ட தோழி, இந்த வேறுபாடு எதனால் ஆயிற்று என்று கேட்டதற்கு தலைவி மறைத்துக் கூறியதால், அவளது களவொழுக்கத்தைத் தான் அறிந்ததைத் தோழி சொல்லியது.

பொருளுரை:  தினைக் காவலர் விலங்குகளைக் கொன்று பறித்த அம்பைப் போன்ற செவ்வரிகள் கொண்ட ஈர கண்களையும் நல்ல பெரிய தோளையுமுடையவளே!

கொல்லனின் உலைக்களத்தில் அடிக்கும் இரும்பின் பொறி சிதறுவது போலச் சிறிய பலகாய்களையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்கின்ற உயர்ந்த மலையின் கூட்டில் இருக்கும் மயில்கள் அறியாது என்று கருதி, நெருங்கிய தினைக் கொத்துக்களை எடுத்துச் செல்லுகின்றன, பச்சைப் புறத்தையுடைய கிளிகள்.  நீ அவற்றை விரட்டுவதற்கு எழாது இருக்கின்றாய்.  கதிர்கள் அழிந்து போகின்றன.  உன் அழகிய மேனி நலம் எல்லாம் கெடுமாறு நீ அழாதே, அயலார் இருக்கும் இவ்விடத்தில்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்று தொடங்கும் நூற்பா உரையில், இப்பாட்டைக் காட்டி, ‘இது தலைவி வேறுபாடு கண்டு ஆராயும் தோழி தனது ஆராய்ச்சியை மறைத்துக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.  இறைச்சிப் பொருள் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை –  வேங்கை மலர் உதிரப் பெற்ற கூட்டிலிருக்கும் மயில் தினைக் கதிர்களைக் கிளிகள் கொண்டுபோவதனை அறிந்திருந்தும் ‘நாம் கொய்து கொண்டு போவதை அம்மயில்கள் அறியாவாகும்’ என்று கிளிகள் கருதிக் கவர்ந்தேகுதல் போல, அன்னை பலகாலுந் தூண்டியதனால் நின்னைக் காவல் செய்துறையும் யான் நின் களவொழுக்கத்தை அறிந்து வைத்தும் ‘யான் அறிந்திலேன்’ என நீ கருதி இதனை மறைத்தொழுகா நின்றாய் என்றதாம்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – பொற்பிதிர் போல ஒளி திகழும் வேங்கைப் பூ காய் தோன்றும் காலத்தில் அம்மரத்தினின்றும் உதிர்ந்து நீங்கும் என்றது, பிறந்த மனைக்குத் தம் பொற்பால் அழகு விளங்கத் தோன்றிய மகளிர், காமச் செவ்வி எய்துங் காலத்துத் தம் பெற்றோரின் நீங்கிப் பிறர்பால் உள்ளத்தை விடுதல் தவறன்று.  அது இயற்கை அறம் எனத் தோழி தலைவியின் செயலுக்கு அமைதி கூறுவாளாய் உள்ளுறைத்து உரைத்தாள்.  இலக்கணம்:  எழாஅ – அளபெடை,  அழாஅதீமோ – அளபெடை, ஒளவை துரைசாமி உரை – அழாதி என்ற முன்னிலை வினை ஈறு நீண்டது, H.வேங்கடராமன் உரை – அழாதீம், தலையே – ஏகாரம் அசை நிலை, பிதிரின் – இன் உருபு ஒப்புப் பொருளது, தாஅய் – அளபெடை, கிளியே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   எழாஅ ஆகலின் – நீ எழாததால், எழில் நலம் தொலைய – உன் அழகு மேனி கெட, அழாஅதீமோ – அழாதே (மோ – முன்னிலையசை), நொதுமலர் தலையே – அயலார் இருக்கும் இவ்விடத்தில் (ஏகாரம் அசை நிலை), ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த பகழி அன்ன சேயரி மழைக் கண் – தினைக் காவலர் விலங்குகளைக் கொன்று பறித்த அம்பைப் போன்ற செவ்வரிகள் கொண்ட ஈர கண்கள், நல்ல பெருந்தோளோயே – நல்ல பெரிய தோளையுடையவளே, கொல்லன் எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய் வேங்கை வீ உகும் – கொல்லனின் உலைக்களத்தில் அடிக்கும் இரும்பின் பொறி சிதறுவது போலச் சிறிய பலகாய்களையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்கின்ற, ஓங்கு மலைக் கட்சி மயில் – உயர்ந்த மலையின் கூட்டில் இருக்கும் மயில், அறிபு அறியா – அறிவதை அறியாத, மன் – கழிவுக் குறிப்பு, ஓ – அசை நிலை, பயில் குரல் – நெருங்கிய கொத்துக்கள், கவரும் பைம்புறக் கிளியே – பசுமை நிறத்தின் புறத்தையுடைய கிளிகள் எடுத்துச் செல்லும்

நற்றிணை 16, சிறைக்குடி ஆந்தையார்பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
புணரின் புணராது பொருளே, பொருள்வயின்
பிரியின் புணராது புணர்வே, ஆயிடைச்
செல்லினும், செல்லாய் ஆயினும், நல்லதற்கு
உரியை வாழி என் நெஞ்சே! பொருளே
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்  5
ஓடு மீன் வழியின் கெடுவ; யானே
விழுநீர் வியல் அகம் தூணி ஆக
எழு மாண் அளக்கும் விழுநிதி பெறினும்,
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்
அமர்ந்து, இனிது நோக்கமொடு செகுத்தன  10
எனைய ஆகுக! வாழிய பொருளே!

பாடல் பின்னணி:  தலைவியை விட்டுப் பிரிந்து சென்று பொருள் ஈட்ட விரும்பிய தன் நெஞ்சிடம் தலைவன் சொன்னது.

பொருளுரை:  நாம் தலைவியுடன் இருந்தால் பொருளை அடைய முடியாது. பொருளுக்காக நாம் பிரிந்தால் தலைவியுடன் இணைய முடியாது. அதனால் சென்றாலும் செல்லா விட்டாலும், நல்லது செய்வதற்கு உரியை நீ, என் நெஞ்சே. நீடு வாழ்வாயாக நீ!

பொருளானது, வாடாத மலர்களையுடைய பொய்கையின் நடுவில் ஓடும் மீன் செல்லும் வழி கெடுவது போன்றது. நானே, பெரிய கடல் சூழ்ந்த இந்த உலகத்தையே மரக்காலாகக் கொண்டு, ஏழு முறை பெரும் மாட்சி பெற்ற அளவு பெருஞ்செல்வத்தை நான் அடைந்தாலும், கனமான காதணி அணிந்த தலைவியின் மாறுபட்ட சிவந்த வரிகளுடைய குளிர்ச்சியுடையக் கண்கள் இனிதாக நோக்கும் நோக்கத்தால், பொருளை நாட மாட்டேன். நான் செல்லும் எண்ணத்தை அவள் கண்கள் அழித்தது. என்னவானாலும் ஆகட்டும். போற்றுவாரிடத்து வாழட்டும் அப் பொருள்!

குறிப்பு:  நற்றிணை 46 – எய் கணை நிழலின் கழியும்.  ஒளவை துரைசாமி உரை – நீர்ப்பூ தேன் ஒழிந்தவிடத்து மணம் இழந்து அழுகிக் கெடுவல்லது, நிலப்பூப் போல வாடுவதின்மையின், வாடாப் பூவின் பொய்கையை என்று சிறப்பித்தார்.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

சொற்பொருள்:   புணரின் புணராது பொருளே – நாம் தலைவியுடன் இருந்தால் பொருளை அடைய முடியாது, பொருள்வயின் பிரியின் புணராது புணர்வே – பொருளுக்காக நாம் பிரிந்தால் தலைவியுடன் இணைய முடியாது, ஆயிடைச் செல்லினும் செல்லாய் ஆயினும் – அதனால் சென்றாலும் செல்லா விட்டாலும், நல்லதற்கு உரியை – நல்லது செய்வதற்கு உரியை நீ, வாழி – நீ நீடு வாழ்வாயாக, என் நெஞ்சே – என்னுடைய நெஞ்சே, பொருளே – பொருளானது, வாடாப் பூவின் பொய்கை நாப்பண் – வாடாத மலர்களையுடைய பொய்கையின் நடுவில், ஓடு மீன் வழியின் கெடுவ – ஓடும் மீன் செல்லும் வழி கெடும், யானே – நானே, விழுநீர் வியல் அகம் – பெரிய கடல் சூழ்ந்த உலகம், தூணி ஆக – மரக்கால் ஆக, எழு – ஏழு முறை, மாண் அளக்கும் – பெரும் மாட்சி பெற்ற அளவு, விழுநிதி பெறினும் – பெருஞ்செல்வத்தை நான் அடைந்தாலும், கனங்குழைக்கு – கனமான காதணி அணிந்த தலைவிக்கு, அமர்த்த – மாறுபட்ட, சேயரி – சிவந்த வரிகள், மழைக் கண் – குளிர்ச்சியுடைய கண்கள், அமர்ந்து, இனிது நோக்கமொடு செகுத்தன – அழித்தன, இனிதாக நோக்கும் நோக்கத்தால் , எனைய ஆகுக – என்னவானாலும் ஆகட்டும், வாழிய – போற்றுவாரிடத்து வாழட்டும், பொருளே – பொருள்

நற்றிணை 27, குடவாயிற் கீரத்தனார்நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நீயும் யானும், நெருநல் பூவின்
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி,
ஒழி திரை வரித்த வெண்மணல் அடைகரைக்
கழி சூழ் கானல் ஆடியது அன்றிக்,
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை, உண்டு எனின்  5
பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே, நன்றும்
எவன் குறித்தனள் கொல் அன்னை, கயந்தோறு
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப சுறவம்
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடிக்
கண் போல் பூத்தமை கண்டு நுண் பல  10
சிறு பாசடைய நெய்தல்
குறுமோ சென்று எனக் கூறாதோளே?

பாடல் பின்னணி:  பகற்குறி வந்து ஒழுகும் தலைவன் வந்து ஒரு புறமாக இருந்ததை அறிந்த தோழி, களவு ஒழுக்கம் நீட்டியாமல் வரைந்து கொள்ள வேண்டித் தம்மை அன்னை இற்செறித்ததாகக் கருதுமாறு, தலைவியிடம் கூறுவது போல உரைத்தது.

பொருளுரை:  நீயும் நானும் நேற்று மலரின் நுண்ணியத் தாதில் பாய்ந்து விழும் வண்டுகள் அதை உதிர்ப்பது கண்டு அவற்றை விரட்டி, கரையை உடைக்கும் அலைகளால் அழகுறுத்தப்பட்ட வெண்மணல் நிறைந்த கரையில், உப்பங்கழி சூழ்ந்த சோலையில் விளையாடியது அன்றி, நாம் மறைத்து எதையும் செய்யவில்லை. அவ்வாறு செய்தது எதுவும் இருந்திருந்தால், அது பெரிதும் பரவி, அதனைப் பிறர் அறிந்திருப்பார்கள்.

அப்படி இருந்தும் தாய் எதனைக் கருதுகின்றாள், குளங்கள்தோறும் சென்று இறா மீன்களை உண்ணும் குருகுகள் ஆரவாரிக்கும், சுறா மீன்கள் உப்பங்கழியில் சேரும் இடத்தின் பக்கத்தில் உள்ள, திரண்ட தண்டு நீண்டு, கண் போல் மலர்ந்த, நுண்ணியப் பல சிறிய பசுமையான இலைகளையுடைய நெய்தல் மலர்களைச் சென்று பறித்து வாருங்கள் என்று நம்மிடம் கூறாதவள்?

குறிப்பு:  உறைக்கும் வண்டினம் (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பாய்ந்து விழுகின்ற வண்டினம், H.வேங்கடராமன் உரை – திளைக்கும் வண்டினம்.  திரை வரித்த (3) – ஒளவை துரைசாமி உரை – அலைகளால் அழகுறுத்தப்பட்ட, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – திரை கொழித்த.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – இறாமீனை உண்ணும் குருகினம் ஆரவாரிக்கச் சுறாமீன் கழியின்கண் உலவும் என்றது, நம் நலம் காணும் அயற்பெண்டிர் அலரெடுத்து உரைக்குமாறு தலைமகன் குறியிடம் நோக்கிப் போக்குவரவு புரிகின்றான் என்றவாறு. எனவே வரைவு நினைந்திலன் எனத் தோழி உரைத்தாள்.

சொற்பொருள்:   நீயும் யானும் – நீயும் நானும், நெருநல் – நேற்று,  பூவின் நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி – மலரின் நுண்ணிய தாதில் படியும் வண்டுகள் அதை உதிர்ப்பது கண்டு அவற்றை விரட்டி (உறைக்கும் – உதிர்க்கும்), ஒழி திரை வரித்த வெண்மணல் அடைகரை – கரையை உடைக்கும் அலைகளால் அழகுறுத்தப்பட்ட வெண்மணல் நிறைந்த கடற்கரை (அடைகரை – நீர் அடைந்த கரை, மணல் நிறைந்த கரை), கழி சூழ் கானல் – உப்பங்கழி சூழ்ந்த கடற்கரைச் சோலை, ஆடியது அன்றி – விளையாடியது அன்றி, கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை – நாம் மறைத்து எதையும் செய்யவில்லை, உண்டு எனின் – செய்தது எதுவும் இருந்தால், பரந்து – பரவி, பிறர் அறிந்தன்றும் இலரே – பிறர் அறியவும் இல்லை, நன்றும் எவன் குறித்தனள் கொல் அன்னை – அப்படி இருந்தும் தாய் எதனைக் கருதுகின்றாள், கயந்தோறு – குளங்கள்தோறும், இற ஆர் இனக் குருகு ஒலிப்ப – இறா மீன்களை உண்ணும் குருகுகள் ஆரவாரிக்க, சுறவம் கழி சேர் மருங்கின் – சுறா மீன்கள் உப்பங்கழியில் சேரும் இடத்தில், கணைக் கால் நீடிக் கண் போல் பூத்தமை கண்டு நுண் பல – திரண்ட தண்டு நீண்டு கண் போல் மலர்ந்த நுண்ணிய பல, சிறு பாசடைய நெய்தல் – சிறிய பசுமையான இலைகளையுடைய நெய்தல் மலர்கள், குறுமோ சென்று எனக் கூறாதோளே – பறித்து வாருங்கள் என்று கூறவில்லை

நற்றிணை 34, பிரமசாரி, குறிஞ்சித் திணை – தோழி முருகனிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டிப்,
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன்,  5
மார்புதர வந்த படர் மலி அரு நோய்,
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து
கார் நறுங்கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்,
கடவுள் ஆயினும் ஆக  10
மடவை மன்ற, வாழிய முருகே!

பாடல் பின்னணி:  தோழி முருகனுக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது.  களவு நீட்டித்து ஒழுகும் தலைவனிடம் வரைவு கடாயதுமாம்.

பொருளுரை:  முருகனே!  நீடு வாழ்வாயாக!  கண்டிப்பாக நீ அறியாமையுடையவன்! கடவுள் தன்மை பொருந்திய மலையில் உள்ள சுனையில் உள்ள இலைகளை விலக்கி விட்டு மேலே மலர்ந்து எழுந்த, பிறர் பறிக்காது விட்டிருந்த, குவளை பூக்களைப் பறித்து அவற்றுடன் குருதி நிறமுள்ள ஒளியுடைய காந்தள் மலர்களை நல்ல வடிவத்துடன் கட்டி, பெரிய மலையின் பக்கங்கள் விளங்குமாறு சூர் மகள் அருவியின் இனிய ஒலியை இசைக்கருவியின் ஒலியாகக் கொண்டு ஆடுகின்ற நாட்டினது தலைவனின் மார்பைத் தழுவியதால் இவளுக்கு ஏற்பட்ட பசலைப் படர்ந்த அரிய காதல் நோயானது உன்னால் ஏற்பட்டது இல்லை என்பதை அறிந்தும், மழைக் காலத்தின் நறுமணமான கடம்ப மலர் மாலையைத் தலை நிமிர்ந்து அணிந்து வேலன் உனக்குப் பலியைக் கொடுத்து அழைத்ததால், நீ வெறியாட்டம் நிகழும் இல்லத்திற்கு வந்துள்ளாய்!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி அறத்து இயல் மரபு இலள் தோழி என்ப’ (தொல்காப்பியம்,பொருளியல் 11) என்பதற்கு இப்பாட்டைக் குறித்து ‘இது வெறியாட்டு எடுத்தவழி அறத்தொடு நின்றது” என்றும், இது முருகற்கு கூறியது என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.  இளம்பூரணர், இது முருகனை முன்னிலையாகக் கூறியது என்றும், ஆடிய சென்றுழி அழிவு தலைவரின் நிகழும் கூற்று என்றும் கொள்வர்.  இறைச்சிப் பொருள் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சூரரமகள் மாலைசூடி அருவியை இனிய வாச்சியமாகக் கொண்டு ஆடுமென்றதனாலே தலைமகள் தலைவனை மணமாலை அணிந்து மணந்து என்னை எஞ்ஞான்றும் தனக்கு உசாத்துணையாக நீங்காது கொண்டு இல்லறம் நிகழ்த்தக் கருத்தியிருக்குமென்றவாறு.  ஒளவை துரைசாமி உரை – முருகன் தன்கண் மெய்யுற்று வந்திருப்பதாகச் சொல்லி, வேலன் கண்ணி சூடி வேலேந்தி ஆடுதலின் அவனை முருகனாகக் குறித்து முருகே என அவனை முன்னிலைப்படுத்தி மொழிந்தாள்; ஆகவே, இதனால் எய்தும் வசை வேலற்கே; முருகவேட்கு அன்று எனக் கொள்க.  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ‘முருகனே!  இதனை நீ அறியாமையின் உண்மையில் நீ அறிவுற்றவனே ஆவாய்’ என்கிறாள்.  அருவி இன் இயத்து (5) – ஒளவை துரைசாமி உரை – அருவியின் இனிய முழக்கத்திற்கு, கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – அருவியின் ஒலியே இனிய இசைக் கருவிகளாகக் கொண்டு.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  அண்ணாந்து (7) – ஒளவை துரைசாமி உரை – நீ அண்ணாந்து வந்தோய்.

சொற்பொருள்:  கடவுட் கற்சுனை – கடவுள் தன்மை பொருந்திய மலையில் உள்ள சுனையில், அடை இறந்து – இலைகளை விலக்கி விட்டு, அவிழ்ந்த – மலர்ந்த, பறியா – பிறரால் பறிக்கப்படாத, குவளை மலரொடு – குவளை மலர்களுடன், காந்தள் குருதி ஒண் பூ – குருதி நிறமுள்ள ஒளியுடைய காந்தள் மலர்கள, உருகெழக் கட்டி – வடிவு விளங்க மாலையாகக் கட்டி, பெருவரை அடுக்கம் – பெரிய மலையின் பக்கங்களில், பொற்ப – பொலிய, சூர்மகள் – சூரர மகளிர், அருவி இன் இயத்து – அருவியின் இனிய ஒலியை இசைக்கருவியின் ஒலியாகக் கொண்டு, ஆடும் நாடன் – ஆடுகின்ற நாட்டினது தலைவன், மார்பு தர வந்த – மார்பைத் தழுவி அதனால் வந்த, படர் மலி அரு நோய் – பசலைப் படர்ந்த நீக்குவதற்கு அரிய காதல் நோய், நின் அணங்கு அன்மை அறிந்தும்  – உன்னால் ஏற்பட்டது இல்லை என்று அறிந்தும், அண்ணாந்து – தலை நிமிர்ந்து, கார் – மழைக் காலம், நறுங்கடம்பின் கண்ணி சூடி – நறுமணமான கடம்ப மலர்களையுடைய மாலையை  அணிந்து, வேலன் வேண்ட – வேலன் அழைக்க, வெறி மனை வந்தோய் – வெறியாட்டம் நடத்தப்படும் இல்லத்திற்குப் பலியை பெற வந்தாய், கடவுள் ஆயினும் ஆக – கடவுளே ஆனாலும், மடவை மன்ற – கண்டிப்பாக நீ அறியாமையுடையவன், வாழிய – நீடு வாழ்வாயாக, முருகே – முருகனே

நற்றிணை 45, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே; நீயே,
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே;  5
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும், செல நின்றீமோ!
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே;  10
எம்மனோரில் செம்மலும் உடைத்தே

பாடல் பின்னணி:  குறை வேண்டி நின்ற தலைவனைத் தோழி சேட்படுத்தியது.

பொருளுரை:   என் தோழியோ கடற்கரைச் சோலையின் அருகில் உள்ள அழகிய சிற்றூரில் உள்ள, கடலில் சென்று மீனைப் பிடிக்கும் பரதவரின் மகள்.   நீயோ பெரிய கொடிகள் பறக்கும் கடை வீதிகள் உள்ள பழமையான ஊரில் விரைந்துச் செல்லும் தேரையுடைய பணக்காரரின் அன்பு மகன்.  கொழுத்த சுறா மீனை அறுத்துக் காய வைத்து பறவைகளை விரட்டும் எங்களுக்கு உன்னால் என்ன பயன்?  இங்கு மீன் நாற்றம் அடிக்கின்றது.  நிற்காமல் இங்கிருந்து போய் விடு.   பெரிய கடல் தரும் பயனால் நாங்கள் எளிய நல்ல வாழ்க்கையை வாழ்கின்றோம்.  அது உன்னுடையதைப் போன்று உயர்வானது இல்லை.  ஆனால், எங்கள் நடுவிலும் உயர்ந்தோர் உள்ளனர்!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின் ‘பெருமையிற் பெயர்ப்பினும்’ என்ற பகுதிக்கு இப்பாட்டினை ஓதிக் காட்டுவர் இளம்பூரணர்.  நச்சினார்க்கினியரும் அதற்கே இதனைக் காட்டினர்.  ‘ஏனோர் பாங்கினும்’ (தொல்காப்பியம், புறத்திணையியல் 23) என்ற நூற்பா உரையுள் ‘கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே!’ என்றது அருமை செய்து அயர்த்தலின் அவனை இகழ்ச்சிக் குறிப்பால் தலைமையாகக் கூறினாள் என்பர் நச்சினார்க்கினியர்.   இலக்கணம்:  நின்றீமோ – முன்னிலை ஒருமை முற்றுவினைத் திரிசொல், இகரவீறு நீண்டு மோ என்னும் முன்னிலையசை பெற்றது, அன்றே – ஏகாரம் அசை நிலை, உடைத்தே – ஏகாரம் அசை நிலை, நீல் – கடைக்குறை.   எமக்கு நலன் எவனோ (9)  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – எமக்கு நின் சிறந்த நலன்தான் யாது வேண்டிக்கிடந்தது?  ஒன்றும் வேண்டா, ஒளவை துரைசாமி உரை – எம்பால் அமைந்த நலம் யாது பயன் தருவதாம், H.வேங்கடராமன் உரை – எமக்கு நலன் என்பது யாதாகுமோ.  பெருநீர் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெருநீர் என்பது அன்மொழித்தொகை.  கடல் என்பது பொருள்.

சொற்பொருள்:   இவளே – இவள், கானல் நண்ணிய – கடற்கரை சோலை அருகே உள்ள, காமர் சிறுகுடி – அழகிய சிற்றூர், நீல் நிறப் பெருங்கடல் – நீல நிறமுடைய பெரிய கடல், கலங்க – கலங்க, உள்புக்கு – உள்ளே புகுந்து,  மீன் எறி பரதவர் மகளே – மீனை பிடிக்கும் பரதவர் மகள், நீயே – நீ, நெடுங்கொடி நுடங்கும் – பெரிய கொடி பறக்கும், நியம மூதூர் – கடைவீதி உள்ள பழமையான ஊர், கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே – விரைவாகச் செல்லும் தேரையுடைய செவந்தரின் அன்பு மகன், நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி – கொழுத்த சுறா மீனை அறுத்துக் காய வைக்க வேண்டி, இனப்புள் ஓப்பும் எமக்கு – பறவைகளை விரட்டும் எங்களுக்கு, நலன் எவனோ – என்ன பயன், புலவு நாறுதும் – இங்கு மீன் நாற்றம் அடிக்கின்றது, செல நின்றீமோ – நிற்காமல் நீ சென்று விடு, பெரு நீர் விளையுள் – கடலின் பலனால், எம் சிறு நல் வாழ்க்கை – எங்களுடைய எளிமையான நல்ல வாழ்க்கை, நும்மொடு புரைவதோ அன்றே – உன்னுடையதைப் போன்று உயர்வானது இல்லை, எம்மனோரில் செம்மலும் உடைத்தே – எங்களிலும் உயர்ந்தோர் உள்ளனர்

நற்றிணை 48, பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
அன்றை அனைய ஆகி இன்றும் எம்
கண் உள போலச் சுழலும் மாதோ,
புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ
வைகுறு மீனின் நினையத் தோன்றி
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை,  5
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது
அமர் இடை உறுதர நீக்கி, நீர்
எமர் இடை உறுதர ஒளித்த காடே.

பாடல் பின்னணி:  திருமண வாழ்வில் பிரிவு உணர்த்திய தலைவனிடம், தோழி களவில் நடந்ததை நினைவூட்டியது.

பொருளுரை:   அன்று நடந்தது இன்றும் எம் கண்களில் சுழல்கின்றது.  சிறிய மெல்லிய இதழ்களையுடைய குடையைப் போன்ற கோங்க மலர்கள், அதிகாலையின் விண்மீன்கள் என்று நினைக்குமாறு தோன்றிக் காட்டை அலங்கரித்தன.  மலர்களின் நறுமணத்தை உடைய காட்டில், திரண்ட வளையல்களை கையில் அணிந்த மறவர்கள் கூர்மையான அம்புடன் ஆரவாரத்துடன் வந்த பொழுது, நீ அஞ்சாது, அவர்களுடன் போரிட்டு, அவர்களை விரட்டினாய்.  ஆனால் எங்கள் உறவினர்கள் காட்டிற்கு வந்தவுடன், நீ ஒளிந்துக் கொண்டாய்.

குறிப்பு:   ஒளவை துரைசாமி உரை (நற்றிணை 318) – உடன்போக்கின்கண் தோழியும் உடன்சேறல் இல்லையாயினும், தலைவிக்கும் தோழிக்கும் உள்ள ஒருமையுளப்பாடு கருதி ‘நாம்’ என்றார்.  இவ்வாறு வருவனற்றை, ‘ஒன்றித் தோன்றும் தோழி மேன’ (தொல்காப்பியம், பொருள் 39) என்பதனால் அமைப்பர் நச்சினார்க்கினியர்.  ஒளவை துரைசாமி உரை – மறவர் காண்பவர்க்கு அச்சமுண்டாகுமாறு முழங்கிக் கொண்டு போந்தமை குறிப்பாள், கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் என்றாள்.  கோல் தொடி (6) – ஒளவை துரைசாமி உரை – திரண்ட வளையல்கள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வீர வளையல்கள்.  மறவர் (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஆறலைக்கள்வராகிய மறவர்கள், ஒளவை துரைசாமி உரை – தமர் (தலைவியின் உறவினர்) விடுத்த மறவர்கள்.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கோங்கம் பூ மலர்ந்து காடு அழகு கொண்டவென்றது, நீயிர் தலைவிபால் முகமலர்ந்து உறைதலால் இல்லறம் அழகாக நடைபெறுகின்றது என்பதாம்.  இலக்கணம்:  மாதோ – மாது, ஓ – அசை நிலைகள், காடே – ஏகாரம் அசை நிலை, கிடின் – ஒலிக்குறிப்பு.  மேற்கோள்:  நற்றிணை 362 – அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென் நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே.

சொற்பொருள்:   அன்றை அனைய ஆகி இன்றும் எம் கண் உள போலச் சுழலும் – அன்று நடந்தது இன்றும் எம் கண்களில் சுழல்கின்றது,  மாதோ – மாது, ஓ – அசைநிலைகள், புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ – சிறிய மெல்லிய இதழ்களையுடைய குடையைப் போன்ற கோங்க மலர்கள், வைகுறு மீனின் நினையத் தோன்றி – அதிகாலை விண்மீன் என நினையுமாறு தோன்றின, புறவு அணி கொண்ட – காட்டை அழகு செய்த, பூ நாறு கடத்திடை – பூவின் நாற்றதையுடைய காட்டில், கிடின் என இடிக்கும் – பலத்த ஒலியுடன் ஒலிக்கும், கோல் தொடி மறவர் – திரண்ட வளையல்களை அணிந்த மறவர்கள், வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது – கூர்மையான அம்பை எய்துவோரின் அம்பிற்கு அஞ்சாது, அமர் இடை உறுதர நீக்கி – போரிட வந்த அவர்களுடன் போரிட்டு அவர்களை விரட்டி (உறுதர – வந்தபொழுது), நீர் – நீ, எமர் இடை உறுதர ஒளித்த காடே – எங்கள் உறவினர் அங்கு வந்தவுடன் காட்டில் ஒளிந்துக் கொண்டாய் (உறுதர – எதிரே வர)

நற்றிணை 60, தூங்கலோரியார், மருதத் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின்
பெரு நெல் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது தண் புலர் விடியல்,
கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு  5
கவர்படு கையை கழும மாந்தி,
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின்
நடுநரொடு சேறி ஆயின், அவண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம் இல்
மா இருங்கூந்தல் மடந்தை  10
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே.

பாடல் பின்னணி:  மருதத்துள் நெய்தல்.  தலைவி இற்செறிக்கபட்டாள் என்பதனை தலைவனுக்கு உணர்த்துகின்றாள் தோழி.  வரைவு கடாயது.

பொருளுரை:   மலையைப் போன்ற நிலைப் பொருந்திய உயர்ந்த பல நெற்குதிர்களையும் எருமைகளையும் உடைய உழவனே!  நீ உறங்காமல், அதிகாலையில் எழுந்து பெரிய துண்டங்களாக வெட்டிய கரிய கண்களை உடைய வரால் மீன் குழம்பை நிறைய சோற்றுடன் பெரிய திரளாக விரும்பி கையினால் உண்டு விட்டு, பின் நீர் உள்ள சேற்றில் உன் நடுபவர்களுடன் நாற்றினை நடுவதற்குச் செல்வாய்.  அப்பொழுது பிடுங்கி எறியும் கோரைப் புல்லையும் குவளை மலர்களையும் பாதுகாப்பாயாக.  எங்கள் இல்லத்தில் உள்ள கரிய அடர்ந்த கூந்தலை உடைய இளம் பெண் அவற்றை அழகிய வளையல்களாகவும் ஆடையாகவும் அணிந்து கொள்வாள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – களவின்கண் சிறைப்புறத்தானாகிய தலைமகற்குத் தலைவி இற்செறிப்புண்டு மேனி மெலிந்திருக்கும் திறத்தைச் சொல்லி, வரைவு கடாவும் கருத்தினளாகலின், தோழி, மறுநாட் காலையில் நாற்று நடுவதற்கு நடுநரை நாடிச் செல்லும் உழவனை நோக்கிக் கூறுவாளாய், நெல் நாற்றின் மெல்லிய வேர்கள் இனிது பற்றுமாறு செறுவை எருமைகொண்டு ஆழ உழுது பயன்படுத்தி மென் சேற்றைப் பரம்பிட்டுச் செம்மை செய்து நீர் நோக்கி வந்தமை போன்ற எருமை உழவ என்றும், நடும்வினை முடியுங்காறும் பசியின்றி நடுநரொடு உடனிருக்க வேண்டிப் பெருஞ்சோறு உண்டு செல்கின்றனை என்பாள், பொம்மற் பெருஞ்சோறு கழும மாந்தி நடுநரோடு சேறி என்றும் கூறினாள். கவர்படு கையை (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விருப்பம் மிக்க கையை உடையையாய்.  மிகுதியாக அள்ளிகொள்ளுதலுடைய கையுமாம்.   இலக்கணம்:  பெறாஅது – அளபெடை, வராஅல் – அளபெடை, ஓம்புமதி – மதி முன்னிலை அசை, அணியுமார் – ஆர் அசைச் சொல், அவையே – ஏகாரம் அசை நிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

சொற்பொருள்:   மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின் – மலையைக் கண்டாற்போல் நிலை பொருந்திய உயர்ந்த, பெரு நெற் பல் கூட்டு எருமை –  எருமைகளையும் பல பெரிய நெற் குதிர்களைக் கொண்ட, உழவ – உழவனே, கண் படை பெறாஅது – கண்களை மூடாமல் (உறங்காமல்),  தண் புலர் விடியல் – குளிர்ந்த அதி காலையில், கருங்கண் வராஅல் – கரிய கண்களை உடைய வரால் மீன், பெருந்தடி மிளிர்வையொடு – பெரிய துண்டுகளாக மிளிரும் வண்ணம், புகர்வை – உணவு, அரிசிப் பொம்மல் பெருஞ் சோறு – அரிசியால் சமைத்த பெரிய சோற்றுத் திரளை, கவர்படு கையை – விரும்பி உண்ணும் கையை உடையையாய், கழும மாந்தி – நிறைய உண்டு, நீர் உறு செறுவின் – நீர் உள்ள சேற்றில், நாறு முடி அழுத்த – நாற்றினை நடுவதற்கு, நின் – உன், நடுநரொடு –  நடுபவர்களுடன், சேறி ஆயின் – செல்வாய் ஆயின், அவண் – அங்கு, சாயும் – கோரைப்புல்லும், நெய்தலும் – குவளையும், ஓம்புமதி – பாதுகாப்பாயாக, எம் இல்  – எங்கள் வீட்டில் உள்ள, மா இருங் கூந்தல் – கரிய அடர்ந்த கூந்தல், மடந்தை – இளம் பெண், ஆய் வளை கூட்டும் – அழகு வளையல்களாகக் கட்டி, அணியும் ஆர் அவையே – அவை அணிவதற்கு உரியவாம்

நற்றிணை 61, சிறுமோலிகனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
கேளாய் எல்ல தோழி! அல்கல்
வேண் அவா நலிய வெய்ய உயிரா,
ஏ மான் பிணையின் வருந்தினெனாக,
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,
‘துஞ்சாயோ என் குறுமகள்?’ என்றலின்,  5
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,
‘படுமழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ?’ என்றிசின் யானே.  10

பாடல் பின்னணி:  தலைவன் வரவு உணர்ந்து உரைத்தது.  அறிஞர்கள் ஒளவை துரைசாமி, கு. வெ. பாலசுப்ரமணியன், H. வேங்கடராமன், ச. வே. சுப்பிரமணியன் உரைகளில் தோழியின் கூற்றாகவே உள்ளது.   பொ. வே. சோமசுந்தரனார் தலைவியின் கூற்றாகக் கொள்கின்றார்.

பொருளுரை:   ஏடி தோழி!  இதனைக் கேள்!  நேற்று இரவு அவன் மீதுக் கொண்ட அதிக விருப்பத்தால் வருந்தி, பெருமூச்சு விட்டு, அம்புப்பட்ட பெண் மான் போல் துடித்தேன்.  என் மிகுந்த துன்பத்தை அறிந்தவள் போல் அன்னை ‘இள மகளே, தூங்காமல் இருக்கின்றாயா?’ என்று கேட்டாள்.  என்னிடமிருந்து சொற்கள் வெளி வரவில்லை.  ஆனால் என் நெஞ்சுக்குள் சொல்லிக் கொண்டேன், ‘மிக்க மழை பொழிந்த கற்பாறையின் அருகில் மீன்கொத்திப் பறவையின் வாயைப்போன்ற அரும்புகளை உடைய  காட்டு மல்லிகைக் கொடிகளையும்,  பரல் கற்கள் நிறைந்த பள்ளங்களையும் உடைய காடு சூழ்ந்த நாட்டினை உடைய தலைவனை பிரிந்தவளுக்கு தூக்கம் வருமா?’ என்று.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச்செய்யுளைத் தலைவி கூற்றாகவே கொண்டு ஆசிரியர் நச்சினார்க்கினியர், ‘மனைப்பட்டுக் கலங்கிக் சிதைந்த வழித் தோழிக்கு நினைத்த சான்றல் அருமறை உயிர்த்தலும் (தொல்காப்பியம், களவியல் 21) என்னும் துறைக்கு எடுத்துக் காட்டினர்.  தலைவி கூற்றெனலே நேரிதாம்.  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூற்பாவின்கண் வரும் ‘மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அரு மறை உயிர்த்தலும்’ என்ற பகுதிக்கு இப்பாட்டினை எடுத்தோதி, ‘இதனுள் துஞ்சாயோ எனத் தாய் கூறியவழி மனைப்பட்டுக் கலங்கியவாறும், படர்ந்தோர்க்கு என மறை உயிர்த்தவாறும், கண்படாக் கொடுமை செய்தான் எனப் பரத்தமை கூறியவாறும் காண்க’ என்பர் நச்சினார்க்கினியர்.  பரல் அவல் (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பரல்கள் நிரம்பிய பள்ளம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பரல் ஆகுபெயராக மேட்டு நிலத்தைக் குறித்து நின்றது.  எனவே மிசையும் அவலும் உடைய கான் என்பதாயிற்று.  மேற்கோள்:  ஐங்குறுநூறு 447-2 – தளவின் சிரல் வாய்ச் செம்முகை.  இலக்கணம்:  பிணையின் – இன் உருபு ஒப்புப் பொருளது, என்றிசின் – இசின் அசை நிலை, யானே – ஏகாரம் அசை நிலை.  உயிரா – உயிர்த்து, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

சொற்பொருள்:   கேளாய் எல்ல தோழி – ஏடி தோழி இதனைக் கேட்பாயாக (எல்ல – ஏடி), அல்கல் – நேற்று இரவு, வேணவா – அதிக விருப்பத்தினால், நலிய – வருந்த, வெய்ய – வெப்பம், உயிரா – பெருமூச்சு விட்டு,  ஏ – அம்பு,  மான் பிணையின் – பெண் மானைப் போன்று, வருந்தினெனாக – நான் வருந்தியபொழுது, துயர் மருங்கு அறிந்தனள் போல – என் மிகுந்த துன்பத்தை அறிந்தவள் போல் (மருங்கு – மிகுதி), அன்னை – அன்னை,  துஞ்சாயோ என் குறுமகள் என்றலின் – தூங்காமல் இருக்கின்றாயா எனது இள மகளே என்று கேட்டாள், சொல் வெளிப்படாமை – சொற்கள் வெளி வரவில்லை, மெல்ல என் நெஞ்சில் – மெதுவாக என் நெஞ்சில், படு மழை பொழிந்த – பெரு மழைப் பொழிந்த, பாறை மருங்கில் – பாறை அருகில், சிரல் வாய் உற்ற – மீன் கொத்திபறவையின் வாயைப்போன்ற, தளவின் – காட்டு மல்லியின் கொடி, பரல் அவல் –  சிறிய பரல் கற்கள் நிறைந்த பள்ளம், கான் கெழு – நிறைந்த காடு, நாடற் – நாட்டவன், படர்ந்தோர்க்கு – பிரிந்தோர்க்கு, கண்ணும் படுமோ என்றிசின் யானே – தூங்க முடியுமா என்று எனக்குள்ளே நான் கூறிக் கொண்டேன்

நற்றிணை 69, சேகம்பூதனார், முல்லைத் திணை – தலைவி சொன்னது
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி
சேய் உயர் பெரு வரைச் சென்று அவண் மறைய
பறவை பார்ப்பு வயின் அடைய புறவில்
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ
முல்லை முகை வாய் திறப்ப பல் வயின்
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை
ஆள் வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்
இனையவாகித் தோன்றின்
வினை வலித்து அமைதல் ஆற்றலர் மன்னே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள்வயின் பிரிந்த வேளையில் தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை: பல கதிர்களையுடைய கதிரவன் பகலில் ஒளி தந்து, தன் பணியை முடித்து, மிக உயர்ந்த பெரிய மலையை அடைந்து அங்கு மறைய, பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் கூட்டில் அடைய, காட்டில் கரிய கழுத்தையுடைய கலைமான்கள் தங்கள் இளமையுடைய பெண்மான்களைத் தழுவ, முல்லை அரும்புகள் மலர, பல இடங்களில் காந்தள் மலர்கள் தோன்றி புதர்களில் ஒளியுடன் திகழ, செருக்குடைய நல்ல பசுக்களின் மாசில்லாத தெளிவான மணிகள், வளைந்த கோலையுடைய இடையர்களின் குழலுடன் மெல்லிதாக வந்து இசைக்கும் அருள் இல்லாத மாலை வேளை, பொருள் ஈட்ட சென்றவர் சென்ற நாட்டிலும் இவ்வாறாகத் தோன்றினால், தலைவர் தான் மேற்கொண்ட செயலில் உறுதி கொண்டு தங்கியிருக்க மாட்டார் அங்கு.

குறிப்பு:  சேய் உயர் – ஒருபொருட் பன்மொழி, உறாஅ – செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, கொடுங்கோல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை, நெடுநல்வாடை 3 – ஆ முதலியவற்றை அலைத்து அச்சுறுத்தும் கோலாகலான் கொடுங்கோல்.  இனி வளைந்த கோல் எனினுமாம், மன்னே – மன் கழிவுக்குறிப்பு, ஏகாரம் அசை.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்: பல் கதிர் மண்டிலம் – பல கதிர்களையுடைய கதிரவன், பகல் செய்து ஆற்றி – பகலில் ஒளி தந்து தன் பணியை முடித்து, சேய் உயர் பெரு வரைச் சென்று – மிக உயர்ந்த பெரிய மலையை அடைந்து, அவண் மறைய – அவ்விடம் மறைய, பறவை பார்ப்பு வயின் அடைய – பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் கூட்டில் அடைய, புறவில் மா எருத்து இரலை மடப் பிணை தழுவ – காட்டில் கரிய கழுத்தையுடைய கலைமான்கள் தங்கள் இளமையுடைய பெண்மான்களைத் தழுவ, முல்லை முகை வாய் திறப்ப – முல்லை அரும்புகள் மலர, பல் வயின் – பல இடங்களில், தோன்றி தோன்றுபு – காந்தள் மலர்கள் தோன்றி (தோன்றி – காந்தள்), புதல் விளக்கு உறாஅ – புதர்களில் ஒளியுடன் திகழவும், மதர்வை நல் ஆன் செருக்குடைய நல்ல பசுக்களும், மாசு இல் தெண் மணி – மாசில்லாத தெளிவான மணிகள், கொடுங் கோல் கோவலர் – வளைந்த கோலை உடைய இடையர்கள், கொடிய கோலை உடைய இடையர்கள், குழலோடு ஒன்றி ஐது வந்து இசைக்கும் – குழலுடன் மெல்லிதாக வந்து இசைக்கும், அருள் இல் மாலை – அருள் இல்லாத மாலை வேளை, ஆள் வினைக்கு அகன்றோர் – பொருள் ஈட்ட சென்றவர், சென்ற நாட்டும் இனையவாகித் தோன்றின் – சென்ற நாட்டிலும் இவ்வாறாகத் தோன்றினால், வினை வலித்து அமைதல் ஆற்றலர் மன்னே.- தலைவர் தான் மேற்கொண்ட செயலில் உறுதி கொண்டு தங்கியிருக்க மாட்டார் அங்கு

நற்றிணை 70, வெள்ளிவீதியார், மருதத் திணை – தலைவி குருகிடம் சொன்னது
சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!
எம் ஊர் வந்து எம் உண் துறைத் துழைஇ,
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி;  5
அனைய அன்பினையோ, பெரு மறவியையோ,
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே?

பாடல் பின்னணி:  தலைவி வரைதல் வேட்கை கொண்டு குருகிடம் உரைத்தது.

பொருளுரை:   சிறிய வெள்ளைக் குருகே! சிறிய வெள்ளைக் குருகே!  துவைக்கும் துறையில் துவைத்த தூய்மையான வெள்ளை ஆடைகளின் நிறத்தையுடைய சிறகுகளையுடைய சிறிய வெள்ளைக் குருகே!  எங்கள் ஊருக்கு வந்து குடிக்கும் நீர் துறைகளில் தேடி, சினைக் கெளிற்று மீன்களை நிறைய உண்டு விட்டு, அவருடைய ஊருக்குச் செல்வாயாக.  அவரிடம், ‘உன் தலைவி வருந்துகின்றாள்.  அவளுடைய வளையல்கள் நெகிழ்ந்து விழுகின்றன’ என்று நீரும் வயல்களும் நிறைந்த ஊரினனான என் தலைவனிடம் சொல்லாது இருக்கின்றாய் நீ.  உனக்கு என் மேல் அன்பு இல்லையா?  இல்லை பெருமறதி உடையையா நீ?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – மறைந்தவற் காண்டல் (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூட்பாவுரையின்கண் இப்பாட்டினைக் காட்டி, இது காப்புச் சிறை மிக்க கையறு கிளவி என்பர் நச்சினார்க்கினியர்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்குங் கழனி என்றது அவர் ஊரிலுள்ள இனிய புனலே இங்கு வருவதால் அங்கும் இரையை பெறுதற்கு இயலும் என்றும் கழனியின் புனல் ஈண்டு வருவதால் ஊரும் அணித்தேயாம் ஆதலின் வருந்தாதேகுதற்கு இயலும் என்றுங் கூறியதாம்.  அனைய அன்பினையோ என்றது எம்மூர் வந்துண்ட நன்றி மறவாமல் இனி அவரிடம் கூறுதற்குத் தக்க அத்தகைய அன்புடையயோ என்றதாம்.  ஒளவை துரைசாமி உரை – அவர் ஊர் ஆங்கட் கழனி ஆதாரமானாற்போல, ஈங்கு உறையும் யான் உயிர் தாங்கி வாழ்வதற்கு ஆங்கு அவர் வரவு ஆதாரம் என்றாளாயிற்று.  இலக்கணம்:   துழைஇ – அளபெடை, செப்பாதோயே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   சிறு வெள்ளாங்குருகே – சிறிய வெள்ளைக் குருகே (குருகு – நாரை), சிறு வெள்ளாங்குருகே – சிறிய வெள்ளைக் குருகே, துறை போகு – நீர் துறைக்குப் போகும், அறுவை – துணிகள், தூமடி – தூய்மையான ஆடைகள், துவைத்த ஆடைகள், அன்ன – போல், நிறம் – நிறம், கிளர் – ஒளி, தூவி – சிறகு, சிறு வெள்ளாங்குருகே – சிறிய வெள்ளைக் குருகே, எம் ஊர் வந்து – என்னுடைய ஊருக்கு வந்து, எம் – எங்கள், உண்துறைத் – குடி நீர் துறையில், துழைஇ – தேடி, சினைக் கெளிற்று – சினையுடையக் கெளிற்று மீனை, ஆர்கையை – நிரம்ப உண்டு, அவர் ஊர்ப் பெயர்தி – அவருடைய ஊருக்குச் செல்வாயாக, அனைய அன்பினையோ – அவ்வாறு அன்புடைய அல்லையோ, பெரு மறவியையோ – பெரு மறதியை உடையையோ, ஆங்கண் – அங்கு, தீம் புனல் – இனிய நீர், ஈங்கண் – இங்கே, பரக்கும் – படர்ந்த, கழனி நல் ஊர் – வயலுடைய நல்ல ஊர், மகிழ்நர்க்கு – என்னை மகிழ்வித்த என் தலைவனுக்கு, என் – என், இழை நெகிழ் – நகைகள் (வளையல்கள்) நெகிழ்ந்தன, பருவரல் – வருந்துகின்றேன், செப்பாதோயே – சொல்லாது இருக்கின்றாய் நீ

நற்றிணை 87, நக்கண்ணையார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,
வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங்காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,
அது கழிந்தன்றே தோழி, அவர் நாட்டுப்  5
பனி அரும்பு உடைந்த பெருந்தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,
பெருந்தண் கானலும் நினைந்த அப் பகலே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைவி கனாக்கண்டு தோழிக்கு உரைத்தது.

பொருளுரை:   தோழி!  தலைவரது நாட்டில் உள்ள பெரிய அடியையுடைய புன்னை மரத்தின் குளிர்ந்த அரும்புகள் உடைந்து அவற்றின் தாது கடலின் துறையில் மேய்கின்ற சிப்பியின் ஈரமான முதுகின் புறத்தே (ஓட்டின் புறத்தே) விழும் சிறுகுடியில் உள்ள பரதவர் அடைந்த மகிழ்ச்சியையும் பெரிய குளிர்ந்த கரையில் உள்ள சோலையையும் நான் நினைத்த அப்பகல் பொழுதில், ஊரில் உள்ள மாமரத்தில் இருக்கின்ற முள் போன்ற பற்களையுடைய வௌவால் உயர்ந்த ஒரு கிளையில் தொங்கியபடி தூங்கும் பொழுதிலே, போர்களில் வெற்றி அடையும் சோழ மன்னனான ஆற்காட்டில் உள்ள அழிசியின் பெரிய காட்டில் உள்ள நெல்லிக்கனியின் இனிய புளிச்சுவையைத் தான் பெற்றதாகக் கனவு கண்டாற்போல், தலைவரோடு இருந்ததாக நான் கனவு கண்டேன். ஆனால் அவ்வின்பம் நான் விழித்தவுடன் ஒழிந்தது.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – இப்பியின் புறத்தைப் புன்னையின் தாது மூடிக்கொள்ளும் என்றது, பசலை தலைவியின் மேனியை மறைக்குமாறு பரவும் என்பது.  வரலாறு:  சோழர், அழிசி.  மாஅத்த – அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது, கழிந்தன்றே – ஏகாரம் அசை நிலை, பகலே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல் – ஊரில் உள்ள மாமரத்தில் இருக்கின்ற முள் போன்ற பற்களையுடைய வௌவால், ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின் – உயர்ந்த ஒரு கிளையில் தொங்கியபடி தூங்கும் பொழுதிலே, வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங்காட்டு நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு – போர்களில் வெற்றி அடையும் சோழ மன்னனான ஆற்காட்டில் உள்ளவ அழிசியின் பெரிய காட்டில் உள்ள நெல்லிக்கனியின் இனிய புளிச்சுவையை தான் பெற்றதாகக் கனவு கண்டாற்போல், அது கழிந்தன்றே – அந்த இன்பம் ஒழிந்தது, தோழி – தோழி, அவர் நாட்டுப் பனி அரும்பு உடைந்த பெருந்தாட் புன்னை – தலைவரது நாட்டில் உள்ள பெரிய அடியையுடைய புன்னை மரத்தின் குளிர்ந்த அரும்புகள் உடைந்து அதன் தாது, துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் – கடல் துறையில் மேய்கின்ற சிப்பியின் ஈரமான முதுகின் புறத்தே (ஓட்டின் புறத்தே) விழும், சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும் பெருந்தண் கானலும் நினைந்த அப் பகலே – சிறுகுடியில் உள்ள பரதவர் அடைந்த மகிழ்ச்சியையும் பெரிய குளிர்ந்த கானலையும் நான் நினைத்த அப்பகல் பொழுதில்

நற்றிணை 88, நல்லந்துவனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?
வருந்தல், வாழி தோழி! யாம் சென்று
உரைத்தனம் வருகம் எழுமதி! புணர் திரைக்
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றா அங்கு
உருகி உகுதல் அஞ்சுவல், உதுக்காண், 5
தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது
கண்ணீர் அருவியாக
அழுமே தோழி, அவர் பழமுதிர் குன்றே.

பாடல் பின்னணி:  வரையாது வந்தொழுகும் தலைவன் சிறைப்புறமாக இருப்பதை அறிந்த தோழி, தலைவியிடம் கூறியது.  வரைவு கடாயது.

பொருளுரை:   நாம் செய்த பழைய வினை அவ்வாறு இருக்க, அதை ஆராயாது, எதற்காக வருந்துகின்றாய்? வருந்தாதே!  நீடு வாழ்வாயாகத் தோழி! நாம் தலைவனிடம் சென்று பேசி வருவோம்.  நீ எழுவாயாக. பொருந்திய அலைகளையுடைய கடலில் விளைந்த உப்பானது மழையை ஏற்று உருகியதைப் போல் நீ உருகுகின்றாய் என்று நான் அஞ்சுகின்றேன். அங்கே பார்!  தலைவன் நமக்கு இழைத்த கொடுமையை எண்ணி தன் வருத்தத்தை அடக்கிக் கொள்ள முடியாது, தன்னுடைய கண்ணீரை அருவியாக வடிக்கின்றது தோழி, தலைவனுடைய பழம் உதிர்கின்ற மலை.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் ‘என்பு நெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்’ என்றதற்கு இப்பாட்டை எடுத்தோதி ‘இது பிரிவிடைத் தோழி இயற்பழித்து வற்புறுத்தது’ என்பர் நச்சினார்க்கினியர்.  அகநானூறு 208 – உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல நாணு வரை நில்லாக் காமம், கலித்தொகை 138 – உப்பு இயல் பாவை உறை உற்றது போல உக்கு விடும் என் உயிர்.  அகநானூறு 208 – உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல நாணு வரை நில்லாக் காமம், கலித்தொகை 138 – உப்பு இயல் பாவை உறை உற்றது போல உக்கு விடும் என் உயிர்.   யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நாம் செய்த பழவினை அங்ஙனமாயிருக்க அதனை ஆராயாது நீ இதன்பொருட்டு மயங்குகின்றனை?, ஒளவை துரைசாமி உரை – பண்டு நாம் செய்த பழவினை போந்து வருந்துதற்கு மயங்கி வருந்துவது என்ன பயனுடைத்தாம்.  இலக்கணம்:   மதி – முன்னிலையசை, தன்மையொருமை வினைமுற்று, குன்றே – ஏகாரம் அசை நிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

சொற்பொருள்:   யாம் செய் தொல் வினைக்கு – நாம் செய்த பழைய வினை, எவன் பேதுற்றனை – எதற்காக வருந்துகின்றாய், வருந்தல் – வருந்தாதே, வாழி தோழி – நீடு வாழ்வாயாக தோழி, யாம் சென்று உரைத்தனம் வருகம் – நாம் தலைவனிடம் சென்று பேசி வருவோம், எழுமதி – எழுவாயாக, புணர் திரைக் கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு உருகி உகுதல் அஞ்சுவல் – பொருந்திய அலைகளையுடைய கடலில் விளைந்த உப்பு மழையை ஏற்று உருகியதைப் போல் நீ உருகுகின்றாய் என்று நான் அஞ்சுகின்றேன், உதுக்காண் – அங்கே பார், தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி – தலைவன் நமக்கு இழைத்த கொடுமையை நினைத்து, நயம் பெரிது உடைமையின் – நம்பால் அன்பு உடைமையாலே, தாங்கல் செல்லாது – வருத்தத்தை அடக்கிக் கொள்ள முடியாது, கண்ணீர் அருவியாக அழுமே தோழி – தன்னுடைய கண்ணீரை அருவியாக வடிக்கின்றது தோழி, அவர் பழம் உதிர் குன்றே – தலைவருடைய பழம் உதிர்கின்ற மலை

நற்றிணை 90, அஞ்சில் அஞ்சியார், மருதத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, பாணன் கேட்கும்படியாக
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்,
உடையோர் பன்மையின் பெருங்கை தூவா,
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர, ஓடிப்  5
பெருங்கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்,
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி,
நல்கூர் பெண்டின் சில் வளைக் குறுமகள்,
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா  10
நயன் இல் மாக்களொடு கெழீஇ,
பயன் இன்று அம்ம, இவ் வேந்துடை அவையே.

பாடல் பின்னணி:  பரத்தையினால் பிரிந்த தலைவன், தலைவியின் ஊடல் தணியப் பாணனை அனுப்புகிறான்.  அப்பாணன் கேட்குமாறு தோழி தலைவியிடம், “அப்பரத்தை ஊஞ்சலாடாது அழுதாள்.  அவளை ஆற்றுவித்து மீண்டும் ஊஞ்சலாடுமாறு செய்ய அமையாதவனாய் உள்ளான் நம் தலைவன்.  அவள் ஊடியதால் இங்கு வர விரும்புகின்றான்” எனக் கூறி வாயில் மறுத்தது.

பொருளுரை:  கேட்பாயாக!  நடனமாடுகின்ற விழாக்களில் ஒலியை உடைய பழமையான ஊரில் ஆடைகளைத் துவைக்கும், பெரிதும் தன் கை ஓயாத வறுமை இல்லாத வண்ணாத்தி இரவில் துவைத்த சோற்றின் கஞ்சியை இட்ட சிறிய பூ வேலைப்பாடு அமைந்த ஆடையுடன், தன் பொன் மாலை அசைய ஓடிச் சென்று பெரிய கயிற்றால் தொங்கவிட்ட கரிய பனை நாரால் செய்யப்பட்ட ஊஞ்சலில், மலரைப் போலும் கண்களையுடைய தோழியர் ஆட்டவும் ஆடாமல் அழுது நகரும், அழகிய மென்மையான கூந்தலையுடைய, சில வளையல்களை அணிந்த, மிகவும் வருந்தும் இளம் பெண்ணின் ஊஞ்சலாடுகின்ற ஆரவாரத்தில் சேராத, விருப்பம் இல்லாத மக்களுடன் சேர்ந்து, பயன் இல்லாது உள்ளது தலைவனின் சுற்றம்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பாவின்கண் வரும், ‘வாயிலின் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ கிழவோள் செப்பல் கிழவது என்ப’ என்பதன் உரையில் இப்பாட்டைக் காட்டி, ‘இது பாங்கனைக் குறித்துக் கூறியது’ என்பர் இளம்பூரணர்; ‘இது பாணனைக் குறித்துக் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  பயன் இன்று வேந்துடை அவை (12) – ஒளவை துரைசாமி உரை – வேந்தனாகிய தலைவனது சுற்றம் பயன் தருவதன்று, பாணன் முதலிய சுற்றம் சூழஇருப்பு அவை எனப்பட்டது.  அம்ம (12) – ஒளவை துரைசாமி உரை- கேட்பாயாக (அம்ம கேட்பிக்கும் – (தொல்காப்பியம், இடையியல் 28)), பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – என்ன வியப்பு.  புலைத்தி – அகநானூறு 34 – பசை கொல் மெல் விரல் பெருந்தோள் புலைத்தி, அகநானூறு 387 – பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய பூந்துகில், நற்றிணை 90 – வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு, குறுந்தொகை 330 – நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து, கலித்தொகை 72 – ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி, புறநானூறு 311 – புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை, புறநானூறு 259 முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல, கலித்தொகை 117 மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர் போழில் புனைந்த வரிப் புட்டில்.

சொற்பொருள்:  ஆடு இயல் விழவின் – கூத்தாடுகின்ற (நடனமாடுகின்ற) விழாக்களில், அழுங்கல் மூதூர் – ஒலியை உடைய பழமையான ஊர், உடையோர் பன்மையின் – ஆடைகளை துவைக்கும் தன்மையில், பெருங்கை தூவா வறன் இல் புலைத்தி – பெரிதும் தன் கை ஓயாத வறுமை இல்லாத துவைக்கும் பெண், எல்லித் தோய்த்த – இரவில் துவைத்த, புகாப் புகர் கொண்ட – சோற்றின் கஞ்சியை இட்ட, புன் பூங்கலிங்கமொடு – சிறிய பூ வேலைப்பாடு அமைந்த ஆடையுடன், வாடா மாலை துயல்வர – வாடாத மாலை அசைய, பொன் மாலை அசைய, ஓடி – ஓடி, பெருங்கயிறு நாலும் – பெரிய கயிற்றால் தொங்கவிட்ட, இரும் பனம் பிணையல் – கரிய பனை நாரால் செய்யப்பட்ட ஊஞ்சலில், பூங்கண் ஆயம் ஊக்க – மலரைப் போலும் கண்களையுடைய தோழியர் ஆட்டவும், ஊங்காள் அழுதனள் பெயரும் – ஆடாமல் அழுது நகரும், அம் சில் ஓதி – அழகிய மென்மையான கூந்தல், நல்கூர் பெண்டின் சில் வளைக் குறுமகள் – வருந்தும் பெண்ணாகிய சில வளையல்களை அணிந்த இளம் பெண், ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா – ஊஞ்சலாடுகின்ற தொழிலின் ஆரவாரத்தில் சேராத, நயன் இல் மாக்களொடு கெழீஇ – விருப்பம் இல்லாத மக்களுடன் சேர்ந்து, பயன் இன்று – பயன் இல்லை, அம்ம – கேட்பாயாக, வியப்பு, அசை நிலையுமாம், இவ் வேந்துடை அவையே – வேந்தனாகிய இத் தலைவனின் சுற்றம்

நற்றிணை 94, இளந்திரையனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கிக்,
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப குவி இணர்ப்  5
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன் கொல் தோழி, தன் வயின்
ஆர்வம் உடையர் ஆகி
மார்பு அணங்குறுநரை அறியாதோனே?

பாடல் பின்னணி:  தலைவன் சிறைப்புறமாக இருக்க, தலைவி தோழிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

பொருளுரை:   காம நோயானது நம்மை வருத்துகின்றபோது நாம் மனம் கலங்கி வலிமை அழிகின்ற வேளையில் அன்போடு வந்து அருகில் இருந்து நம்மை ஆற்றுவித்தல் ஆண்மகனுக்கு உரிய சிறந்த பண்பாகும்.  நான் காதல் நோயால் வருந்தியபோது நம் தலைவன் ஆற்றவில்லை.  நான் என்னுடைய நலனை நுண்மையாகத் தாங்கி என் பெண்மையால் தடுத்துக் கொண்டேன்.  கைத்தொழிலில் வல்லவன் ஒருவன் அழகுபெற கழுவாத பசிய (புதிய) முத்து தன்னுடைய ஒளியை வெளியே செலுத்தாதது போல, குவிந்த பூங்கொத்துக்களையுடைய புன்னை மரத்தில் புலவு நாற்றத்தையுடைய நீர் தெறித்ததால் மலர்கள் மலர்ந்த கடற்கரையின் தலைவன் அவன் மார்பால் வருத்தமுற்ற என் இயல்பை அறியாத காதலன் என்ன மகன் எனக் கூறப்படுவானோ?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை– ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூற்பாவின்கண் வரும் ‘ஏமம் சான்ற உவகைக்கண்ணும்’ என்றதற்கு இப்பாட்டினை எடுத்தோதிக் காட்டி ‘கழுவாத பசிய முத்தம் தனது மிக்க ஒளியை மறைத்துக் காட்டினாற்போல் யாமும் புணர்ச்சியால் நிகழ்ந்த மிக்க நலனைப் புலப்படாமல் அரிதாகத் தாங்கிப் பெண்மையால் தகைத்துக் கொள்ளும் படியாகத் தன் மார்பால் வருத்தமுற்றாரைக் கண்டு அறியாதோனாகிய சேர்ப்பனை என்ன மகன் என்று சொல்லப்படும் என மகிழ்ந்து கூறினாள்; ஆர்வமுடையவராக வேண்டி மார்பு அணங்குறுநரை அறியாதோன் என்க; அலராமற் குவித்த கொத்தையுடைய புன்னைக் கண்ணே புலால் நாற்றத்தையுடைய நீர் தெறித்து அரும்பிய சேர்ப்பன் என்றதனால், புன்னையிடத்துத் தோன்றிய புலால் நாற்றத்தைப் பூ விரித்து கெடுக்குமாறு போல, வரைந்துகொண்டு வந்த குற்றம் வழிகெட ஒழுகுவன் என்பது உள்ளுறை’ என்பர் நச்சினார்க்கினியர்.   உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – அலராமற் குவித்த கொத்தையுடைய புன்னைக் கண்ணே புலால் நாற்றத்தையுடைய நீர் தெறித்து அரும்பிய சேர்ப்பன் என்றதனால், புன்னையிடத்துத் தோன்றிய புலால் நாற்றத்தைப் பூ விரிந்து கெடுக்குமாறு போல, வரைந்துகொண்டு வந்த குற்றம் வழிகெட ஒழுகுவன் என்பது உள்ளுறை என்பர் நச்சினார்க்கினியர்.  இலக்கணம்:  ஏய்ப்ப – உவம உருபு, அறியாதோனே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில் காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும் – காம நோயானது நம்மை வருத்துகின்றபோது நாம் மனம் கலங்கி வலிமை அழிகின்ற வேளையில் அன்போடு வந்து அருகில் இருந்து நம்மை ஆற்றுவித்தல் ஆண்மகனுக்கு உரிய சிறந்த பண்பாகும், யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி – நான் என்னுடைய நலனை நுண்மையாகத் தாங்கி என் பெண்மையால் தடுத்துக் கொண்டேன், கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப – கைத்தொழிலில் வல்லவன் அழகுபெற கழுவாத பசிய முத்து தன்னுடைய ஒளியை வெளியே செலுத்தாதது போல, குவி இணர்ப் புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன் என்ன மகன் கொல் தோழி – குவிந்த பூங்கொத்துக்களையுடைய புன்னை மரத்தில் புலவு நாற்றத்தையுடைய நீர் தெறித்ததால் மலர்ந்த கடற்கரையின் தலைவன், தன் வயின் ஆர்வம் உடையர் ஆகி மார்பு அணங்குறுநரை அறியாதோனே – அவன் மார்பால் வருத்தமுற்ற என் இயல்பை அறியாத காதலன் என்ன மகன் எனக் கூறப்படுவானோ?

நற்றிணை 95, கோட்டம்பலவனார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் தோழனிடம் சொன்னது
கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,
ஆடுமகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று
அதவத் தீம் கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன் பறழ் தூங்க,
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து,  5
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்;
சீறூரோளே நாறு மயிர்க் கொடிச்சி
கொடிச்சி கையகத்ததுவே, பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே.  10

பாடல் பின்னணி:  தலைவன் பாங்கற்கு, இவ்விடத்து இத்தன்மையத்து என உரைத்தது.

பொருளுரை:  புல்லாங்குழல் ஒலிக்க, பல இசைக் கருவிகளும் முழங்க, ஆடும் மகள் நடந்த முறுக்குடைய வலிமையான கயிற்றில், இனிய அத்திப் பழத்தைப் போன்ற சிவந்த முகத்தைக் கொண்ட பஞ்சுபோன்ற தலையையுடைய (தலையின் மேல் பகுதியில்) பெண் குரங்கின் வலுவான குட்டியானது இறுக்கமாக பற்றிக் கொண்டு தொங்கி ஆட , சிறுவர்கள் மூங்கில் அருகில் உள்ள பெரிய பாறையின் மீது ஏறி, வேகமாக எழுந்துத் தாளம் கொட்டும் அம்மலையில் உள்ள வளமான காவல் உடையச் சிற்றூரில் வாழும் நறுமணம் மிகுந்த கூந்தலை உடைய மலைக் குறவனின் மகளின் கைகளில் உள்ள என் நெஞ்சை, பிறரால் விடுவிக்க முடியாது.  அது அவளுடன் பிணிக்கப்பட்டது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘மெய் தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம் களவியல் 11) என்ற நூற்பாவின் கண் வரும் ‘குற்றம் காட்டிய வாயில் பெட்பினும்’ என்றதற்கு இப்பாட்டினைக் காட்டுவர் இளம்பூரணர்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கழைக்கூத்தி ஆடிய கயிற்றின் மேல் குரங்கின் குட்டி ஆடக்கண்டு குறச்சிறார் கைகொட்டி நகைப்பர் என்றது, உலகின் சிறந்த நெறிகளில் விலகாது நடந்தொழுகும் என் உள்ளத்தில் ஒரு கொடிச்சி வந்து உறைந்தனள் என்பதறிந்து நீ கைகொட்டி நகைத்தற்காயிற்று என்பது உணர்த்தவாம்.  இலக்கணம்:   நெஞ்சே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   கழை – மூங்கில் (புல்லாங்குழல்), பாடு இரங்க – இசை ஒலிக்க,  பல் இயம் கறங்க – பல வகை இசைக் கருவிகளும் முழங்க, ஆடு மகள் நடந்த – ஆடும் பெண் நடந்த, கொடும் புரி நோன் கயிற்று – பெரும் முறுக்குண்ட வலிமையான கயிற்றில், அதவத் தீம் கனி அன்ன – அத்தியின் இனிய பழத்தைப்போன்ற, செம்முக – சிகப்பு முகம்,  துய்த்தலை மந்தி – பஞ்சு போன்ற தலையை உடைய பெண் குரங்கின், வன் பறழ் தூங்க – வலிமையான  குட்டி தொங்க, கழைக் கண் – மூங்கில் அருகில், இரும் பொறை ஏறி – பெரிய பாறையின் மீது ஏறி, விசைத்து எழுந்து – வேகமாக எழுந்து, குற குறுமாக்கள் – மலையில் வாழ்பவர்களின் சிறுவர்கள், தாளம் கொட்டும் – தாளம் கொட்டுவார்கள், அக் குன்றகத்ததுவே – அந்த மலையிலே, குழு – வளமான, மிளை சீறூர் – காவலுடைய சிற்றூர், சீறூரோளே – சிற்றூரில் உள்ளவளே, நாறு மயிர்க் கொடிச்சி – நறுமணமுள்ள கூந்தலை உடைய மலை நாட்டுப்பெண், கொடிச்சி – மலைக் குறவனின் மகள், கையகத்ததுவே – கையில் உள்ளது, பிறர் – பிறரால்,  விடுத்தற்கு ஆகாது – விடுவிக்க முடியாது, பிணித்த என் நெஞ்சே – பிணிக்கப்பட்ட என் நெஞ்சு

நற்றிணை 98, உக்கிரப் பெருவழுதி, குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்
செய்ம்ம் மேவல் சிறுகண் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென,  5
மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ்பதம் நோக்கி,
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே;  10
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே.

பாடல் பின்னணி:  இரவுக்குறி வந்தொழுகும் தலைவனைத் தோழி வரைவு கடாயது.  இது தலைவி கூற்றைத் தன் கூற்றாகத் தோழி கொண்டு கூறியது.

பொருளுரை:  முள்ளம்பன்றியின் முள்ளைப் போன்ற பருத்த மயிரை உடைய பிடரியினைக் கொண்ட சிறிய கண்களை உடைய பன்றி, உயர்ந்த மலையில் உள்ள தினைப்புரத்தில் மேய விரும்பியது. அந்தப் பன்றி, பன்றியை பிடிக்க வைத்திருக்கும் பொறியை உடைய சிறு பாதையில் நுழையும் பொழுது அருகில் இருந்த பல்லி ஒலிக்கக் கேட்டு, தன் மலைக் குகைக்குத் திரும்பி விட்டது.  இவ்வாறு உள்ள மலையின் நாடனே! என் தந்தையால் பாதுக்காக்கப்படும் காவல் மிக்கப் பெரிய இல்லத்தில் காவலர் சிறிது அயரும் பொழுது நீ இரவில் வருவதை விட, நாள்தோறும் இமைகள் பொருந்தா என் கண்களும், உன்னிடத்தில் சென்று மீண்டும் என்னிடம் வராத என் அன்பு இல்லாத நெஞ்சமும் கொடுமையானவை.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பன்றி நூழையுட் புகுங்கால் பல்லியின் ஒலிகேட்டுத் திரும்பும் என்றது, காவல்மிக்க மாளிகையின் உள்ளே தலைவன் நுழைய முயலும் போது, காவலர் வரினும், நிலவு வெளிப்படினும் இது தக்க வேளை அன்று என்று தலைவன் தன் இடம் நோக்கிப் பெயர்தலை உணர்த்திற்று.  எய்ம் முள் (1) – ஒளவை துரைசாமி உரை – எய்யப்படும் முள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முள்ளம்பன்றியின் முள்.  நூழை (4) – ஒளவை துரைசாமி உரை – நுழைவோர் உடலைச் சுருக்கி அல்லது நுழையாவாறு அமைவது பற்றி நூழை எனப்பட்டது.  இலக்கணம்:   பரூஉ – அளபெடை, பிறக்கே – ஏகாரம் அசை நிலை, கொடிதே – ஏகாரம் அசை நிலை, கொடிதே – ஏகாரம் அசை நிலை, நெஞ்சே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   எய்ம் முள் அன்ன – முள்ளம்பன்றியைப் போல், பரூஉ மயிர் – பருத்த மயிர், எருத்தின் – கழுத்தில், செய்ய்ம்ம் மேவல் – வயலில் உண்ணும் விருப்பமுடைய பன்றி, சிறு கட் பன்றி – சிறிய கண்களையுடைய பன்றி, ஓங்கு மலை – உயர்ந்த மலை,  வியன் புனம் – அகன்ற மலைக் கொல்லை, படீஇயர் – பிடிக்க,  வீங்கு – பெரிய, பொறி – பொறி, நூழை – சிறிய பாதை,  நுழையும் பொழுதில் – நுழையும் பொழுது,  தாழாது – தாமதம் இல்லாமல், பாங்கர் பக்கத்து – அருகில், பல்லி பட்டென – பல்லி ஒலித்ததால் கெட்ட சகுனம் என்று எண்ணி, மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்து தன் – மெதுவாக திரும்பி சென்று விட்டது, கல் அளை – மலைக் குகைக்கு, பள்ளி – உறங்குவதற்கு, வதியும் – வசிக்கும், நாடன் – நாட்டவன், எந்தை ஓம்பும் – என் தந்தை காக்கும்,  கடியுடை – காவலுடைய, வியல் நகர் – பெரிய வீடு, துஞ்சாக் காவலர் – உறங்காக் காவலர், இகழ் பதம் நோக்கி – அவர்கள் அயர்வதைப் பார்த்து, இரவின் வரூஉம் – இரவில் வருவது, அதனினும் கொடிதே – அதை விட கொடியது, வைகலும் – தினமும், பொருந்தல் ஒல்லா – மூடாத, கண்ணொடு – கண்களுடன், வாரா – திரும்பி வராத, என் நார் இல் நெஞ்சே – என் அன்பு இல்லாத நெஞ்சு

நற்றிணை 100, பரணர், மருதத் திணை – பரத்தை விறலியிடம் சொன்னது
உள்ளுதொறும் நகுவேன் தோழி, வள் உகிர்
மாரிக் கொக்கின் கூர் அலகு அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின்
வான் கோல் எல் வளை வெளவிய பூசல்  5
சினவிய முகத்து, ‘சினவாது சென்று நின்
மனையோட்கு உரைப்பல்’ என்றலின், முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்  10
மண் ஆர் கண்ணின் அதிரும்,
நன்னராளன் நடுங்கு அஞர் நிலையே.

பாடல் பின்னணி:  பரத்தை, தலைவியின் தோழியர் கேட்ப, தன் தோழியாகிய விறலியிடம் கூறியது.

பொருளுரை:   பெரிய நகங்களையுடைய மழைக் காலத்தில் உலவும் கொக்கின் கூர்மையான அலகைப் போன்ற ஆம்பல் பூவை உடைய தண்ணிய நீர்த் துறையின் ஊரன், என் கூந்தலை பற்றி இழுத்து, என் கையில் உள்ள வெள்ளிய வேலைப்பாடு அமைந்த வளையல்களை கழற்றிக் கொண்ட பூசலினால், சினம் கொண்ட முகத்துடன் அவனை நோக்கி, “சினம் கொள்ளாமல் உன் மனைவியிடம் சென்று உரைப்பேன்” என்று நான் சொன்னவுடன் ஊர்க் கோடியில் உள்ள பல நெடிய ஆனிரைகளை வில்லினால் போரிட்டு வென்று செலுத்திக் கொண்டு வருபவனும், வருகின்ற இரவலர்க்கு தேர் கொடுப்பவனும் ஆகிய மலையமானின் அவைக்கு முன்பு வேறு நாட்டிலிருந்து வந்த நல்ல இசையுடைய கூத்தர்களின் நன்மையை அறிவிக்கும் மார்ச்சனை பொருந்திய பக்கம் அதிர்வது போன்ற அதிர்ச்சியுடன், நன்மையை விரும்பும் அவன் நடுங்கி வருத்துகின்ற நிலைமையை நினைக்கும் பொழுதெல்லாம் நான் சிரிப்பேன், தோழி!

குறிப்பு:  இலக்கணம்:   தேம் – தேன் என்றதன் திரிபு, கண்ணின் – இன் உருபு ஒப்புப் பொருளது, நிலையே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   உள்ளுதொறும் – நினைக்கும் பொழுதெல்லாம், நகுவேன் தோழி – சிரிப்பேன் தோழி, வள் உகிர் – பெரிய நகங்கள்,  மாரிக் கொக்கின் – மழைக் காலத்தில் உலவும் கொக்கு, கூர் அலகு – கூர்மையான அலகு, அன்ன – போன்ற, குண்டு நீர் – குளத்து நீர், ஆம்பல் – ஆம்பல் மலர், தண்துறை ஊரன் – தண்ணிய நீர்த் துறையின் ஊரன், தேம் கமழ் – தேனின் மணம் வீசும், ஐம்பால் – ஐந்துப் பகுதியாக பிரித்துக் கட்டிய கூந்தல், பற்றி – பற்றி, என் வயின் – என்னிடம் உள்ள, வான் கோல் – வெள்ளிய வேலைப்பாடு அமைந்த, எல் வளை – ஒளியுடைய வளையல்கள், வெளவிய – கழற்றிக் கொண்ட, பூசல் – பூசல், சினவிய முகத்து – சினம் கொண்ட முகத்தோடு, சினவாது சென்று – சினம் கொள்ளாமல், நின் மனையோட்கு உரைப்பல் – உன் மனைவியிடம் சொல்லுவேன், என்றலின் – என்று நான் கூறியதால், முனை ஊர் – ஊரின் எல்லை, பல் ஆ நெடு நிரை – பல நெடிய ஆனிரைகளை,  வில்லின் ஒய்யும் – வில்லினால் போரிட்டு வென்று செலுத்திக் கொண்டு, தேர் வண் மலையன் – இரவலர்க்கு தேர் கொடுக்கும் மலையமான், முந்தை – முன்பு, பேர் இசை – சிறப்பான இசை, புலம் புரி வயிரியர் – வேறு நாட்டிலிருந்து வந்த கலைஞர்கள், நலம் புரி முழவின் – நன்மையை முழங்குகின்ற மத்தளத்தின், மண் ஆர் கண்ணின் அதிரும் – மார்ச்சனை பொருந்திய பக்கம் போல் அதிரும், நன்னராளன் – நன்மையை மேற்கொள்ளும் அவன், நடுங்கு – நடுங்கு, அஞர் நிலையே – துன்ப நிலைமை

நற்றிணை 101, வெள்ளியந்தின்னனார், நெய்தற் திணை – தலைவன் சொன்னது, தோழி கேட்கும்படியாக
முற்றா மஞ்சள் பசும்புறம் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிப்,
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்
துறை நணி இருந்த பாக்கமும் உறை நனி  5
இனிது மன்; அளிதோ தானே, துனி தீர்ந்து,
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின்
மீனெறி பரதவர் மடமகள்
மானமர் நோக்கம் காணா ஊங்கே.

பாடல் பின்னணி:  தலைவியின் மேல் உள்ள காதலினால் அடைந்த பெரும் துன்பத்தைத் தோழி உணரும் வகையில் கூறுகின்றான் தலைவன்.

பொருளுரை:   அகன்ற அல்குலையும், மெல்லிய இடையையும், மான் போன்ற அமர்ந்த பார்வையையும் கொண்ட,  மீன் பிடிக்கும் பரதவரது இளமகளை, நான் காண்பதற்கு முன்னே, முற்றாத மஞ்சளின் பசுமையான புறத்தைப் போன்ற சொரசொரப்பான தோலையுடைய, சூழ்ந்தக் கழியில் உள்ள இறா மீனின் கூட்டமான குவியலை, அடர்ந்த நிழலையுடைய புன்னை மரத்திற்கு அருகே காய்வதை நோக்க, துறையும் அருகில் இருந்த ஊரும் இனிமையாக இருந்தது.  இப்பொழுது  இரங்கத்தக்கதாய் உள்ளது.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – இறா மீன்கள் காய்வதற்காகப் புன்னை மர நிழலில் பரப்பப் பெறும் என்பது, தலைவனும் தலைவியும் காம நோய் நீங்குமாறு பகற்குறி கருதலாம் என்ற இறைச்சி பயந்தது.  ‘மீனெறி பரதவர் மடமகள்’ – மீன் ஒத்த கண்ணினால் இவளும் எறிவள் என்பது பற்றியாம்.  ஒளவை துரைசாமி உரை – இறவின் குப்பையது உணங்கு திறன் நோக்கிப் பாக்கத்து உறையும் பரதவர் அதனைப் புன்னை மரநிழலில் முன்னுய்த்துப் பரப்புவர் என்றது, தலைமகளது மானமர் நோக்கத்தால் வருந்தி உணங்கும் தன் திறம் நோக்கித் தலைமகளைப் புன்னை நீழற்கண் கொண்டுய்த்தல் வேண்டும் எனத் தலைமகன் குறிப்பால் தோழியிடம் சொல்லியது.  இலக்கணம்:   கடுப்ப – உவம உருபு, அளிதோ – ஓகாரம் அசை நிலை, தானே – தான், ஏ அசை நிலைகள், ஊங்கே – ஏகாரம் அசை நிலை.  மன் – கழிவுக் குறிப்பு.   கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே.(இடையியல் 4)

சொற்பொருள்:   முற்றா மஞ்சள் – முற்றாத மஞ்சள், பசும் புறம் கடுப்ப – பசுமையான புறம், சுற்றிய – சுற்றிய, பிணர – சருச்சரையை உடைய, சொரசொரப்பான, சூழ் – சூழ்ந்த, கழி இறவின் –  உப்பங்கழியின் இறா மீனின், கணம் கொள் – கூட்டம் கொண்ட, குப்பை – குவியல், உணங்கு திறன் நோக்கி – காய்வதை நோக்கி, புன்னையங் கொழு நிழல் – புன்னையின் அடர்ந்த நிழல், முன் உய்த்து – முன்னே மகிழ்ந்து, பரப்பும் துறை – பரப்பும் துறை, நணி இருந்த பாக்கமும் – அருகில் இருந்த கடற்கரை அருகில் உள்ள ஊரும், உறை – உறைவதற்கு, நனி – மிக, இனிது – இனிமையானது, மன் – கழிவுக் குறிப்பு, அளிதோ தானே – இரங்கத்தக்கது அல்லவா, துனி தீர்ந்து – வருத்தம் இன்றி, அகன்ற அல்குல் – அகன்ற அல்குல், ஐது அமை நுசுப்பின் – மெல்லிதாக அமைந்த இடையை உடைய, மீன் எறி – மீன் பிடிக்கின்ற, பரதவர் மட மகள் – பரதவரது இள மகள், மான் அமர் நோக்கம் – மான் போன்ற அமர்ந்த பார்வை, காணா ஊங்கே – காண்பதற்கு முன்னே

நற்றிணை 102, செம்பியனார், குறிஞ்சித் திணை – தலைவி கிளியிடம் சொன்னது
கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி!
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு
நின் குறை முடித்த பின்றை என் குறை
செய்தல் வேண்டுமால் கைதொழுது இரப்பல்!
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு 5
நின் கிளை மருங்கின் சேறி ஆயின்,
அம் மலை கிழவோற்கு உரைமதி “இம் மலைக்
கானக் குறவர் மட மகள்
ஏனல் காவல் ஆயினள்” எனவே.

பாடல் பின்னணி:  இரவுக்குறியிலும் பகற்குறியிலும் வந்தொழுகும் தலைவன் இடையீடுபட்டு வராததால், தலைவி வரைதல் விரும்பி கிளியிடம் இரந்துக் கூறியது.

பொருளுரை வளைந்த தினைக் கொத்துக்களைக் கொய்த, சிவந்த வாயையுடைய பைங்கிளியே! நீ அஞ்சாமல் உனக்கு வேண்டிய உணவை உண்டு, உன்னுடைய குறை யாவும் முடிந்தபின், என் குறைபாட்டை நீ செய்து முடிக்க வேண்டும் என்று என் இரு கைகளைக் குவித்து நான் உன்னைக் கெஞ்சுகின்றேன். பல பழக்குலைகளை உடைய பலா மரங்களைக் கொண்ட மலைச் சரிவையுடைய அவருடைய நாட்டில் உள்ள உன் உறவினர்களிடம் நீ செல்லுவாய் ஆயின், அம்மலைக்கு உரியவரான என் தலைவரிடம் கூறுவாயாக “இந்த மலையில் உள்ள காட்டில் உள்ள குறவருடைய இளமகள் கொல்லைக்கு (தினைப்புனத்திற்கு) நல்ல காவலாக அமைந்து அங்கு இருக்கின்றாள் என்று”.

குறிப்பு:  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – என்னைக் கைவிட்ட கொடுமையையுடையவர் சாரலாயிருந்தும் அச்சாரலின்கண் உள்ள பலா மரங்கள் பிறர்க்குப் பயன்படுமாறு காய்க்கின்றனவே; இஃது என்ன வியப்போ எனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றியது அறிக.  இலக்கணம்:   வேண்டுமால் – ஆல் ஓர் அசைச்சொல், உரைமதி – மதி – முன்னிலையசை, எனவே – ஏகாரம் அசை நிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

சொற்பொருள்:  கொடுங்குரல் குறைத்த – வளைந்த கொத்துக்களைக் கொய்த, செவ்வாய்ப் பைங்கிளி – சிவப்பு வாயையுடைய பைங்கிளியே, அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு – அஞ்சாமல் வேண்டிய உணவை உண்டு, நின் குறை முடித்த பின்றை – உன்னுடைய குறை யாவும் முடிந்தபின், என் குறை செய்தல் வேண்டுமால் – என் குறைபாட்டை நீ செய்து முடிக்க வேண்டும் என்று, கைதொழுது இரப்பல் – என் இரு கைகளைக் குவித்து நான் கெஞ்சுகின்றேன், பல் கோட் பலவின் சாரல் – பல பழக்குலைகளை உடைய பலா மரங்களுடைய மலைச் சரிவு, அவர் நாட்டு – அவருடைய நாட்டிற்கு, நின் கிளை மருங்கின் சேறி ஆயின் – உன் உறவினர்களிடம் செல்லுவாய் ஆயின், அம் மலை கிழவோற்கு உரைமதி – அம்மலைக்கு உரியவரான என் தலைவனிடம் கூறுவாயாக, இம் மலைக் கானக் குறவர் மட மகள் – இந்த மலையில் உள்ள காட்டில் உள்ள குறவருடைய இளமகள், ஏனல் காவல் ஆயினள் எனவே – கொல்லைக்கு (தினைப்புனத்திற்கு) நல்ல காவலாக அமைந்து அங்கு இருக்கின்றாள் என்று

நற்றிணை 110, போதனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப்,
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல்
‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5
அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்,
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றெனக்  10
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்,
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே?

பாடல் பின்னணி:  1.  நற்றாய் உடன்போக்கு மேற்கொண்ட மகளை எண்ணி வருந்தி உரைத்தது.  2.  மணம் நிகழ்ந்தபின் தலைவியின் இல்லச் சிறப்பினைக் கண்டு வந்து விவரித்த செவிலித்தாயிடம் நற்றாய் உரைத்தது.

பொருளுரை:  தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்?  திருமணம் புரிந்த கணவனின் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டதால், அவளுடைய தந்தை கொடுத்த செல்வமிக்க உணவை எண்ணவில்லை அவள்.  நீர் இருக்கும் பொழுது நனைந்து, பின் நீர் இல்லாத பொழுது உலரும் நுண்ணிய மணல் போல, ஒரு பொழுதின்றி ஒரு பொழுது உண்ணும் சிறிய வலிமையுடையவள் ஆக இருக்கின்றாள் இப்பொழுது.

குறிப்பு:   பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் (1) – நற்றிணை 110 – பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் – ஒளவை துரைசாமி உரை – தேன் கலந்த சுவை மிக்க வெண்மையான இனிய பால், H.வேங்கடராமன் உரை – தேனை கலந்தாற்போன்ற நல்ல சுவையை உடைய இனிய வெள்ளிய பால், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேன் கலந்தாலொத்த நல்ல சுவையையுடைய இனிய வெளிய பால்.  பூந்தலை (3) – ஒளவை துரைசாமி உரை – மென்மையான நுனி, H.வேங்கடராமன் உரை – பூக்களைத் தலையிலே கொண்ட, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பூவொத்த மெல்லிய நுனி.  இலக்கணம்:   பந்தர் – பந்தல் என்பதன் போலி, மதுகையளே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  பிரசம் கலந்த – தேன் கலந்த, வெண் சுவைத் தீம் பால் – வெண்மையான சுவையான இனிய பால், விரி கதிர்ப் பொற்கலத்து – விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தில், ஒரு கை ஏந்தி – ஒரு கையில் ஏந்தியவண்ணம், புடைப்பின் சுற்றும் – முனையில் சுற்றிய, பூந்தலைச் சிறு கோல் – பூக்களைத் தலையில் கொண்ட சிறிய கோல், மென்மையான மேல்பகுதியைக் கொண்ட சிறு கோல், உண் என்று – ‘இதைக் குடி’ என்று, ஓக்குபு புடைப்ப – ஓங்கி அடிக்க, தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்ப – தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள பொற்சிலம்பு ஒலிக்க, தத்துற்று – பாய்ந்து, அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் – சிறிதாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள், பரி மெலிந்து ஒழிய – நடையின் தளர்ந்து ஓட முடியாமல், பந்தர் ஓடி – பந்தலுக்கு ஓடி, ஏவல் மறுக்கும் – ‘இதைக் குடி’ என்று அவர்கள் கூறுவதை மறுக்கும், சிறு விளையாட்டி – விளையாடும் இளைய பெண், அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல் – எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள், கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென – திருமணம் புரிந்த கணவனின் குடும்பத்தில் வறுமை உற்றதால், கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள் – அவளுடைய தந்தை கொடுக்கும் செல்வமிக்க உணவை எண்ணவில்லை அவள், ஒழுகு நீர் நுணங்கு அறல் போல – ஓடுகின்ற நீரில் இருக்கும் நுண்ணிய மணல் போல, பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே – ஒரு பொழுதின்றி ஒரு பொழுது உண்ணும் சிறிய வலிமையுடையவளே

நற்றிணை 115, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மலர்ந்த பொய்கைப் பூக்குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்,
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர்த்
தடங்கடல் வாயில் உண்டு சில் நீர் என
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி  5
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழக்,
கார் எதிர்ந்தன்றால் காலை; காதலர்
தவச் சேய் நாட்டர் ஆயினும், மிகப் பேர்
அன்பினர், வாழி தோழி, நன் புகழ்
உலப்பு இன்று பெறினும் தவிரலர்,  10
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே?

பாடல் பின்னணி:  பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி பருவம் காட்டி, ‘வருந்தாதே’ என வற்புறுத்தியது.

பொருளுரை:   நீடு வாழ்வாயாக தோழி!  பெரிய பொய்கையில் உள்ள மலர்களைப் பறித்ததால் களைப்பு அடைந்த தோழிகளை, அவர்கள் வருத்தம் நீங்குமாறு, இனிமையாக நடத்தி, தாய் நம் மீதுக் கொண்ட சினம் தணியுமாறு  பெருமூச்சு விட்டாள்.  அப்பொழுது இனிய மழை நீர் பொழிந்து பெரியக் கடலுக்குள் சென்று அடைந்தது.  மயிலின் அடியைப் போன்ற இலைகளையும், பெரிய கொத்தான மலர்களையும் உடைய நொச்சி மரத்தில், நம் வீட்டின் நடுவே உள்ள முல்லைக் கொடி படர்ந்துள்ளது.  அதன் முதிர்ந்த மொட்டுக்கள் மலரும் காலம் வந்து விட்டது.  உன்னுடைய காதலர் தொலை தூர நாட்டிற்கு சென்றாலும் உன்னிடம் மிகுந்த அன்பை உடையவர்.  அங்கு சென்ற பணியை முடித்து நல்ல புகழைப் பெற்றாலும் அங்கு தங்குபவர் இல்லை.  வானத்தில் இடியின் ஒலி கேட்கின்றது.  கார் காலம் தொடங்குகின்றது. அவர் வருவார்.

குறிப்பு:   நற்றிணை 305 – மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், நற்றிணை 115 – மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி, குறுந்தொகை 138 – மயில் அடி இலைய மா குரல் நொச்சி.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – மனையில் நட்ட மௌவல் நொச்சிமேற் படர்ந்து மலர்வது கூறியது, இம்மனைக்கண் வளர்ந்த நீ தலைவனை மணந்து இன்புறுவாய் என்ற கருத்தை உள்ளுறுத்து நின்றது.  கேட்டிசின் (11) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கேட்டேன், ஒளவை துரைசாமி உரை – கேட்கின்றேன், H.வேங்கடராமன் உரை – கேட்பாயாக, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நான் கேளா நின்றேன்.  இலக்கணம்:   கேட்டிசின் – சின் தன்மை அசை, தகவே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   மலர்ந்த பொய்கைப் பூ – பெரிய குளத்தில் மலர்ந்த பூக்களை, குற்று – பறித்து, அழுங்க – நீங்க, அயர்ந்த ஆயம் கண் – வருந்திய தோழியர் மீது, இனிது படீஇயர் – இனிதாகும்படி, அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் – தாயும் சிறிது சினம் தணிந்து பெரு மூச்சு விட்டாள், இன் நீர் – இனிய நீர், தடங் கடல் – பெரிய கடல், வாயில் உண்டு சில் நீர் என – அடைந்தது சில நீர் என்று, மயில் அடி இலைய – மயிலின் அடிப் போன்ற இலையையும், மாக் குரல் நொச்சி – கருமையான மலர் கொத்துக்களையுடைய நொச்சி மரம், மனை நடு மௌவலொடு – வீட்டில் உள்ள முல்லைக் கொடியோடு, ஊழ் முகை அவிழ – முதிர்ந்த மொட்டுக்கள் மலர, கார் எதிர்ந்தன்றால் காலை – கார் காலம் வந்த வேளை, காதலர் தவச் சேய் – காதலர் மிகுந்த தூரத்தில் உள்ள, நாட்டர் ஆயினும் – நாட்டிற்கு சென்றாலும், மிகப் பேர் அன்பினர் – உன்னிடம் மிகுந்த அன்பை உடையவர், வாழி தோழி – வாழ்த்துக்கள் தோழி, நன் புகழ் – நல்ல புகழ், உலப்பு இன்று – அழிவு இன்றி, பெறினும் தவிரலர் – பெற்றாலும் தங்குபவர் இல்லை, கேட்டிசின் – கேட்பாயாக, அல்லெனோ – மிகுந்த ஒலி (இடி), விசும்பின் தகவே – வானத்தின் தகுதி (ஒலி)

நற்றிணை 118, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அடைகரை மாஅத்து அலங்கு சினை ஒலியத்
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்,
சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்,
அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என,  5
இணர் உறுபு உடைவதன் தலையும், புணர் வினை
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்திப்,
புது மலர் தெருவுதொறு நுவலும்  10
நொதுமலாட்டிக்கு, நோம் என் நெஞ்சே.

பாடல் பின்னணி:  பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி கூறியது.

பொருளுரை:   மணல் அடைந்த கரையில் உள்ள மாமரங்களின் அசைகின்ற கிளைகள் எல்லாம் தழைத்து தளிர் ஈன்று, அழகு அடைந்த நறுமணமுடைய சோலையில், தன்னுடைய சேவலுடன் பொருந்திய சிவந்த கண்ணையுடைய கரிய குயில், ஒன்றையொன்று விரும்பி, எதிரிலிருந்து ஆரவாரிக்கும் கொத்தாக மலர்கள் மலரும் இளவேனில் காலத்திலும், நம்மை விட்டு அகன்ற காதலர் உறுதியாக நம்மை மறந்து விட்டார் என்று நாம் வருந்துவதன் மேலும், தம் தொழிலில் வல்ல ஓவியர் ஒளியுடைய அரக்கை ஊட்டிய எழுதுகோல் போன்ற மேல் பகுதி பஞ்சுபோன்று உள்ள பாதிரியின் ஒளியுடைய மலர்களை ஏந்தி, புதிய மலரை வண்டுகள் மொய்க்குமாறு தெருதோறும் விற்கும் பெண்ணை நோக்கும் பொழுது என் நெஞ்சு வருந்துகின்றது.

குறிப்பு:   குறுந்தொகை 147 – வேனில் பாதிரிக் கூன் மலர் அன்ன மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை.  அடைகரை – மணல் அடைந்த கரை, நீர் நிறைந்த கரை, ஆற்றின் கரை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  இலக்கணம்:  மாஅத்து – அத்து சாரியை, நம் – தன்மைப் பன்மை, நெஞ்சே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   அடைகரை மாஅத்து – மணல் அடைந்த கரையில் உள்ள மாமரங்கள், நீர் அடைந்த கரையில் உள்ள மாமரங்கள், அலங்கு சினை ஒலியத் தளிர் – அசைகின்ற கிளைகள் எல்லாம் தழைத்த தளிர் ஈன்று, கவின் எய்திய – அழகு அடைந்த, தண் நறும் பொதும்பில் – நறுமணமுடைய சோலையில், சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில் – தன்னுடைய சேவலுடன் பொருந்திய சிவந்த கண்ணையுடைய கரிய குயில், புகன்று எதிர் ஆலும் – விரும்பி எதிரிலிருந்து ஆரவாரிக்கும், பூ மலி காலையும் – கொத்தாக மலர்கள் மலரும் இளவேனில் காலத்திலும், அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என – நம்மை விட்டு அகன்ற காதலர் உறுதியாக நம்மை மறந்துவிட்டார் என்று, இணர் உறுபு, உடைவதன் தலையும் – வருந்துவதன் மேலும், புணர் வினை ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய – தம் தொழில் வல்ல ஓவியர் ஒளியுடைய அரக்கை ஊட்டிய, துகிலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி – எழுதுகோல் போன்ற தலையில் பஞ்சுபோன்ற பாதிரியின் மலர்களை ஏந்தி வண்டுகள் மொய்க்குமாறு, புது மலர் தெருவுதொறு நுவலும் நொதுமலாட்டிக்கு – புதிய மலரை தெருதோறும் விற்கும் பெண்ணிற்கு, நோம் என் நெஞ்சே – என் நெஞ்சு வருந்துகின்றது

நற்றிணை 120, மாங்குடி கிழார், மருதத் திணை – தலைவன் சொன்னது
தட மருப்பு எருமை மட நடைக் குழவி
தூண்தொறும் யாத்த காண்தகு நல் இல்,
கொடுங்குழை பெய்த செழுஞ்செவி பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப,
வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇ,  5
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப்
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில்தலையில் துடையினள், நப் புலந்து,
அட்டிலோளே அம் மா அரிவை,
எமக்கே வருகதில் விருந்தே, சிவப்பு ஆன்று  10
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்த தலைவன் விருந்தினரோடு புகுந்தான்.  தலைவி ஊடலை மறைத்து விருந்து பேணினாள்.  அது கண்ட தலைவன் கூறியது.

பொருளுரை:   வளைந்த கொம்புகளையுடைய எருமைகளின் மெதுவாக நடக்கும் கன்றுகள், எல்லாத் தூண்களிலும் கட்டப்பட்டிருக்கும் தகைமை உள்ள இல்லத்தில் வளைந்த காதணிகளை அணிந்திருப்பாள், செழுமையான காதுகளையுடைய, பேதமையுடைய என் காதலி.  கையில் சிறிய மோதிரத்தை அணிந்திருப்பாள்.  வாளை மீனை துண்டுத் துண்டாக வெட்டி, நல்ல விதமாக அதை வகைப்படுத்தி சமைப்பாள்.  அதன் புகை அவள் அமர்த்த கண்களை அடையும்.  பிறைப் போன்ற அவளுடைய நெற்றியில் சிறிய வியர்வைத் துளிகள் தோன்றும்.  அதைத் தன் சேலைத் தலைப்பால் துடைப்பாள்.  என்னோடு ஊடல் கொண்டாலும் சமையல் செய்வாள், அழகிய கருமையான அவள்.  விருந்தினர் வந்தால் சினத்தால் கண் சிவக்காமல், சிறிய முட்களைப் போன்ற தன் பற்கள் தோன்றுமாறு அவள் முறுவல் கொள்வதைக் காண முடியும்.

குறிப்பு:  இலக்கணம்:   வகைஇ – அளபெடை, தில் – விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச் சொல், காண்கம்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது.

சொற்பொருள்:   தட மருப்பு எருமை – வளைந்த கொம்புகளை உடைய எருமைகளின், மட நடைக் குழவி – மெதுவாக நடக்கும் கன்றுகள், தூண் தொறும் யாத்த – எல்லா தூண்களிலும் கட்டப்பட்ட, காண்தகு நல் இல் – காண்பதற்கு நல்ல இல்லம், கொடுங் குழை – வளைந்த காதணி, பெய்த – தொங்கும், செழுஞ்செவி பேதை – செழுமையான காதுகளையுடைய பேதைமையுடைய காதலி, சிறு தாழ் – சிறிய மோதிரம், செறித்த மெல் விரல் – அணிந்த மென்மையான விரல், சேப்ப – சிவக்க, வாளை ஈர் – வாளை மீனை வெட்டி, தடி – துண்டு, வல்லிதின் வகைஇ – நல்ல விதமாக வகைப்படுத்தி, புகை உண்டு அமர்த்த கண்ணள் – புகையை உண்ட அமர்த்த கண்கள், தகை பெற – தகை அடைய, பிறை நுதல் பொறித்த – பிறையைப் போன்ற நெற்றியில், சிறு நுண் பல் வியர் – சிறிய பல வியர்வை, அம் துகில் – அழகிய ஆடையின், தலையில் துடையினள் – தலைப்பில் துடைத்தாள்,  நப் புலந்து – எம்மோடு ஊடல் கொண்டு, அட்டிலோளே – சமைப்பாள், அம் மா அரிவை – அழகியக் கருமையான பெண், எமக்கே – எனக்கே, வருக தில் விருந்தே – விருந்தினர் வந்தால், சிவப்பு ஆன்று – சினத்தால் கண் சிவக்காமல், சிறு முள் எயிறு தோன்ற – சிறிய முள் போன்ற பற்கள் தோன்றுமாறு, முறுவல் கொண்ட – முறுவல் கொண்ட, முகம் காண்கம்மே – முகத்தைக் காண முடியும்

நற்றிணை 136, நற்றங்கொற்றனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்,
அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல,
என் ஐ வாழிய, பலவே பன்னிய
மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய  5
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல,
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து
தோள் பழி மறைக்கும் உதவிப்
போக்கு இல் பொலந்தொடி செறீஇயோனே.

பாடல் பின்னணி:  களவு ஒழுக்கத்தில் தலைவன் பிரிவால் வருந்தும் தலைவி, தன் மேனி வேறுபடுவதை உணர்ந்து, தலைவன் அவளை மணம் புரிய வேண்டும் என்று கருதினாள்.  அவன் அருகில் இருப்பதை அறிந்து இவ்வாறு உரைக்கின்றாள்.  தலைவன் பிரிதலால் மெலிந்த தலைவிக்கு அவளுடைய தந்தை இறுக்கமான வளையல்களைத் தந்தார்.  அது ஊராரின் அலரைத் தடுத்தது என்று தலைவி தோழியிடம் கூறியது.

பொருளுரை:   அழகான திரண்ட ஒளியுடைய வளையல்களை விரும்பி, அவை வேண்டும் என்று நான் அழவும், நோயுற்றவர்களுக்கு அவர்கள் வேண்டியது கொடுக்காமல் நல்ல மருந்தை ஆராய்ந்து கொடுத்த மருத்துவன் போல, என் தந்தை, பலராலும் புகழப்பெற்ற மலைகள் பொருந்திய நாட்டையுடைய என்னுடைய தலைவனுடன் எனக்கு ஏற்பட்ட சிறிய பிரிவு உண்மையை அறிந்தவன் போன்று, கழற்றினாலும் கழன்று நீங்காது, தன் எல்லையில் தங்கி என் தோளின் பழியை மறைக்கின்ற, எனக்கு உதவும், கலப்பு இல்லாத பொன்னாலாகிய தோள் வளையல்களைத் தந்து இறுக்கமாக இருக்குமாறு செய்தான். அவன் பல்லாண்டு வாழ்வானாக!

குறிப்பு:  இலக்கணம்:   கொடாஅது – அளபெடை, செறீஇயோனே – அளபெடை, ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:   திருந்து கோல் – திருத்தமான திரண்ட, அழகான திரண்ட, எல் வளை வேண்டி யான் அழவும் – ஒளியுடைய வளையல்களை விரும்பி வேண்டும் என்று நான் அழவும், அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது – நோயுற்றவர்களுக்கு அவர்கள் வேண்டியது கொடுக்காமல், மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல – மருந்தை ஆராய்ந்து கொடுத்த மருத்துவன் போல, என் ஐ வாழிய – என் தந்தை பல்லாண்டு வாழ்வானாக, பலவே – பல, பன்னிய – பலராலும் புகழப்பெற்ற, மலை கெழு நாடனொடு – மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனுடன், நம்மிடைச் சிறிய தலைப்பிரிவு உண்மை அறிவான் போல – சிறிதளவு அவன் பிரிகின்றதன் உண்மையை அறிந்தவன் போன்று, நீப்ப நீங்காது – கழற்றினாலும் கழன்று நீங்காது, வரின் வரை அமைந்து – தன் எல்லையில் தங்கி, தோள் பழி மறைக்கும் – தோளின் பழியை மறைக்கின்ற, உதவி – உதவியையுடைய, போக்கு இல் – கலப்பு இல்லாத, பொலந்தொடி செறீஇயோனே – பொன்னாலாகிய தோள் வளையல்களை தந்து செறிக்கச் செய்தான் (இறுக்கமாக இருக்குமாறு செய்தான்)

நற்றிணை 143, கண்ணகாரன் கொற்றனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
ஐதே காமம் யானே, ஒய்யெனத்
தருமணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்,
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்
கிள்ளையும் கிளை எனக் கூஉம், இளையோள் 5
வழு இலள் அம்ம தானே, குழீஇ
அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன்,
‘நறிய நாறும் நின் கதுப்பு’ என்றேனே.  10

பாடல் பின்னணி:  தலைவி தலைவனோடு கூடி உடன்போனாள் என்பதை அறிந்த நற்றாய் உரைத்தது.

பொருளுரை:  காதல் வியப்பானது! விரைவாக புதிய மணலைக் கொணர்ந்து பரப்பிய எங்கள் அழகிய இல்லத்தின் முற்றத்தில் அவளுடைய தோழியரையும் நொச்சி மரத்தையும் காணும்பொழுதெல்லாம், கண்ணீர் வடிக்கும் கண்களையுடைய என்னைவிட, அவளுடைய கிளியும் தன்னுடைய உறவினள் அவள் என்று கருதி அவளை அழைக்கும்.  என்னுடைய மகள் மாசற்றவள்.  ஒருசேரக் கூடி அலர் மிக்க பரப்பும் இந்தப் பழைய ஊரில் தூற்றும் வாயையுடைய பெண்களின் கொடியவும் இன்னாமை உடையதாகவும் உள்ள சொற்களைக் கேட்ட நான், சில நாட்கள் ஒன்றும் அறியாதவள் போல இருந்தேன்.  மூச்சு விட முடியாமல் இருக்கின்றேன். “உன்னுடைய கூந்தல் நறுமணமாக உள்ளது” என்று என் மகளிடம் நான் கூறினேனே.

குறிப்பு:  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – இன்னா இன்னுரை என்பது முரண் தொடர்.  அயலார் தலைவியின் களவொழுக்கத்தைப் பழித்தமையால் இன்னா உரை என்றும் களவும் ஓர் அறநெறியே ஆதலால் இனிய உரை என்றும் தாய் கருதினாள்.  நறிய நாறும் நின் கதுப்பு (10) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தலைவன் வேற்றுப் புலத்தான்.  அவன் தந்த பூவும் தம் நிலத்திற்குரியது அன்று.  எனவே பூ வேறுபாட்டினைத் தாய் உணர்ந்தாள். இலக்கணம்:   ஒய்யென – விரைவுக்குறிப்பு, கூஉம் – அளபெடை,  குழீஇ – அளபெடை, என்றேனே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   ஐதே காமம் யானே – காதல் வியப்பானது, ஒய்யென – விரைவாக, தருமணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – மணலைக் கொணர்ந்து பரப்பிய அழகிய இல்லத்தின் முற்றத்தில், ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும் – அவளுடைய தோழியரையும் நொச்சி மரத்தையும் காணும்பொழுதெல்லாம், நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும் – கண்ணீர் வடிக்கும் கண்களையுடைய என்னைவிட, கிள்ளையும் கிளை எனக் கூஉம் – அவளுடைய கிளியும் உறவினள் அவள் என்று கருதி அழைக்கும், இளையோள் வழு இலள் – என்னுடைய மகள் மாசற்றவள், அம்ம – அசை, தானே – அவள், குழீஇ அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர் – ஒருசேரக் கூடி அலர் மிக்க இந்த பழைய ஊரில் தூற்றும் வாயையுடைய பெண்கள், இன்னா இன் உரை கேட்ட – கொடியவும் இன்னாமை உடையதாகவும் உள்ள சொற்களைக் கேட்ட, சில் நாள் – சில நாட்கள், அறியேன் போல – அறியாதவள் போல, உயிரேன் – மூச்சு விட முடியாமல் இருக்கின்றேன், நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே – உன்னுடைய கூந்தல் நறுமணமாக உள்ளது என்று என் மகளிடம் கூறினேன்

நற்றிணை 146, கந்தரத்தனார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படியாக
‘வில்லாப் பூவின் கண்ணி சூடி,
நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே!
கடன் அறி மன்னர் குடை நிழல் போலப்
பெருந்தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து 5
இருந்தனை சென்மோ, வழங்குக சுடர் என’,
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்,
‘நல்லேம்’ என்னும் கிளவி, வல்லோன்
எழுதி அன்ன காண்தகு வனப்பின்
ஐயள், மாயோள், அணங்கிய 10
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே.

பாடல் பின்னணி:  தலைவன் பன்னாள் தோழியை இரந்து தன் குறையை உணர்த்தினான்.  அவனுடைய வேண்டுதல் நிறைவேறாதலால் மடல் ஏறத்துணிந்த தன் நெஞ்சிடம் கூறுவான் போல் தோழி கேட்க உரைத்தான்.

பொருளுரை:  அருளுடைய உள்ளத்தால் வந்து கூடியிருக்கும் அன்புடைய மக்கள் ‘நாம் நல்லேம்’ என நம்மைப் புகழ்வார்கள்.  ஓவியத்தில் வல்லவன் வரைந்தாற்போல் காண்பதற்கு உரிய அழகையுடைய மெல்லியவளான மாமை நிறத்துடையவளால் நோயுற்று வருந்திய மயக்கத்தையுடைய என் நெஞ்சமே!  விலைக்கு விற்க இயலாத மலர்களின் கண்ணியைச் சூடி, நான் நல்ல பித்தேறினேன் என்னும்படி பல ஊர்களில் சென்று திரிகின்ற நெடிய கரிய பனை மடலால் செய்யப்பட்ட மடல் குதிரையை உடையாய்! நீ என் சொற்களை ஏற்றுக்கொள்ள விரும்புவாயாயின், ஞாயிறு வெயில் வீசி அடங்கும் அளவும், முறை அறிந்து கடமையை ஆற்றும் மன்னர்களின் குடை நிழல் போல உள்ள பெரிய குளிர்ச்சியான மரத்தின் நிழலில், குதிரையிலிருந்து இறங்கி, சிறிது தங்கியிருந்து, பின்னர் செல்வாயாக!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – மடலூர்தல் என்பது தமிழகத்தில் எங்கும் எக்காலத்திலும் நடைபெறாத ஒரு கற்பனைச் செயல்.  வில்லாப் பூ (1) – ச. வே. சுப்பிரமணியன் உரை – விற்கப்படாத பூக்கள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – விற்க இயலாத பூ, ஒளவை துரைசாமி உரை – வில்லாப்பூ பிற்காலத்தில் வில்லாப்பூ எனவும் வில்லா மரம் வில்வ மரம் என்றும் வழங்குவவாயின.  வில்லாப்பூவை விலைக்கு விற்கப்படாத பூ என்று பொருள் கொள்வாருமுண்டு, H.வேங்கடராமன் உரை – விலைப்படுத்தற்கு ஆகாத பயனற்ற பூவாகிய பூளை, உழிஞை, எருக்கம், ஆவிரம் முதலிய பூக்கள்.  நல்லேம் என்னும் (8) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – நாம் நல்லேம் என நம்மைப் புகழ்வர், ஒளவை துரைசாமி உரை – உமக்கு யாம் நல்லம்.  எம் இல்லம் வருக என்றும் சொல்லுதலையுடையவர்கள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – யாம் நல்லேம் என்னும் புகழ்ச்சொல் அடையப்பெற்ற சித்திரம் தீட்ட வல்ல ஓவியன்.   கு. வெ. பாலசுப்ரமணியன் உரை:  ‘கடனறி மன்னர் குடைநிழல்’ என்றது மன்னர் எங்ஙனம் குடிகள் வருத்தம் நீங்குமாறு குடைநிழல் கொண்டு காப்பாரோ அங்ஙனம் தலைவியால் நேர்ந்த துயர் நீங்கத் தோழி கருதிட வேண்டும் எனவும் குறித்தது.  இலக்கணம்:   சென்மோ – மோ முன்னிலை அசை, என – இடைச்சொல்,  கொளினே – ஏ அசை நிலை.

சொற்பொருள்:  வில்லாப் பூவின் கண்ணி சூடி – விலைக்கு விற்க இயலாத மலர்களின் கண்ணியைச் சூடி, நல் ஏமுறுவல் என – நான் நல்ல பித்தேறினேன் என்னும்படி, பல் ஊர் திரிதரு – பல ஊர்களில் சென்று திரிகின்ற, நெடு மாப் பெண்ணை மடல் மானோயே – நெடிய கரிய பனை மடலால் செய்யப்பட்ட மடல் குதிரையை உடையாய், கடன் அறி மன்னர் குடை நிழல் போல – முறை அறிந்து கடமையை ஆற்றும் மன்னர்களின் குடை நிழல் போல, பெருந்தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து இருந்தனை சென்மோ – பெரிய குளிர்ச்சியான மரத்தின் நிழலில் குதிரையிலிருந்து இறங்கி சிறிது தங்கியிருந்து பின்னர் செல்வாயாக, வழங்குக சுடர் என – ஞாயிறு வெயில் வீசி அடங்கும் அடங்கும் அளவும், அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் – அருளுடன் கூடிய அன்புடைய மக்கள், நல்லேம் என்னும் கிளவி – யாம் நல்லேம் என்னும் புகழ்ச் சொல், வல்லோன் எழுதி அன்ன – ஓவியத்தில் வல்லவன் வரைந்தாற்போல், காண்தகு வனப்பின் ஐயள் – காண்பதற்கு அழகுடையவள் மெல்லியள், மாயோள் – மாமை நிறத்துடையவள், அணங்கிய – வருந்திய, மையல் நெஞ்சம் – நோயுற்று மயக்கத்தையுடைய என் நெஞ்சமே, என் மொழிக் கொளினே – நீ என் சொற்களை ஏற்றுக்கொள்ள விரும்புவாயாயின்

நற்றிணை 155, பராயனார், நெய்தற் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
‘ஒள்ளிழை மகளிரொடு ஓரையும் ஆடாய்,
வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய்,
விரி பூங்கானல் ஒரு சிறை நின்றோய்,
யாரையோ? நிற் தொழுதனெம் வினவுதும்,
கண்டோர் தண்டா நலத்தை தெண் திரைப்  5
பெருங்கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ?
இருங்கழி மருங்கு நிலை பெற்றனையோ?
சொல் இனி மடந்தை’ என்றனென், அதன் எதிர்
முள் எயிற்று முறுவல் திறந்தன
பல் இதழ் உண்கணும் பரந்தவால் பனியே?  10

பாடல் பின்னணி:  (1) இடந்தலைப்பாடு கொண்டு (இரண்டாம் கூட்டம்) கூடுமாறு சென்ற தலைவன் சொன்னது.  (2) பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுடன் தலைவி ஊடிய போது உரைத்தது.

பொருளுரை:   நீ ஒளியுடைய அணிகலன்களை அணிந்த பெண்களுடன் ஓரை விளையாட்டு விளையாடவில்லை.  பெரிய இதழ்களை உடைய நெய்தல் மலர்களை மாலையாகத் தொடுத்து அணியவில்லை.  மலர்களை உடைய பெரிய கடற்கரைச் சோலையில் இருக்கும் உன்னை நான் தொழுது கேட்கின்றேன்.  நீ யார்?  காண்போர் கண்ணுக்கு, குறையில்லாத அழகை உடைய, தெளிந்த அலைகளை உடைய பரந்த கடலின் பரப்பில் உறையும் பெண் கடவுளா நீ?  நீ கரிய உப்பங்கழியுடைய இடத்தில் வாழ்கின்றாயா?  சொல் பெண்ணே என்றேன்.  அதற்குப் பதிலாகக் கூர்மையான பற்களுடன் புன்னகையை உதிர்த்தாள்.  பல இதழ்களையுடைய  மலர்களைப் போன்ற அவளுடைய மையிட்ட  கண்களில் கண்ணீர் படர்ந்தது.

குறிப்பு:  இலக்கணம்:   யாரை – முன்னிலைக்கண் வந்த வினா, ஓ அசைநிலை, தொழுதனெம் – தன்மைப் பன்மை, பரந்தவால் – ஆல் அசைநிலை, பனியே – ஏகாரம் அசை நிலை, கணும் – கண்ணும், இடைக்குறை.

சொற்பொருள்:  ஒள் இழை மகளிரொடு – ஒளியுடைய அணிகலன்களை அணிந்த பெண்களுடன், ஓரையும் ஆடாய் – ஓரை விளையாட்டு விளையாடவில்லை நீ, வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய் – பெரிய இதழ்களை உடைய நெய்தல் மலர் மாலையையும் நீ தொடுத்து அணியவில்லை, விரி பூங்கானல் – விரிந்த மலர்களையுடைய கடற்கரைச் சோலை அல்லது மலர்களை உடைய பெரிய கடற்கரைச் சோலை, யாரையோ – நீ யார், நிற் தொழுதனெம் வினவுதும் – உன்னைத் தொழுது கேட்கின்றேன், கண்டோர் – காண்போரால், தண்டா நலத்தை – கெடாத அழகை, தெண் திரைப் பெருங்கடல் பரப்பின் அமர்ந்து உறை – தெளிந்த அலைகளை உடைய பரந்த கடலின் பரப்பில் உறையும், அணங்கோ – பெண் கடவுளா, இருங்கழி மருங்கு நிலை பெற்றனையோ – கரிய உப்பங்கழியுடைய இடத்தில் வாழ்கின்றாயா, சொல் இனி மடந்தை என்றனென் – இப்போது சொல் பெண்ணே என்றேன், அதன் எதிர் – அதற்குப் பதிலாக, முள் எயிற்று முறுவல் – கூர்மையான பல்லுடன் புன்னகை, திறந்தன – திறந்தன, பல் இதழ் – பல இதழ்கள், உண்கணும் பரந்தவால் பனியே – மையிட்ட கண்களில் படர்ந்தது கண்ணீர்

நற்றிணை 162, பாடியவர் பெயர் கிடைக்கவில்லைபாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
‘மனை உறை புறவின் செங்கால் பேடைக்
காமர் துணையொடு சேவல் சேர,
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்
தனியே இருத்தல் ஆற்றேன்’ என்று, நின்
பனி வார் உண்கண் பைதல கலுழ,  5
‘நும்மொடு வருவல்’ என்றி, எம்மொடு
பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர்
யாயொடு நனி மிக மடவை! முனாஅது
வேனில் இற்றித் தோயா நெடு வீழ்,
வழிநார் ஊசலின் கோடை தூக்குதொறும்  10
துஞ்சு பிடி வருடும் அத்தம்
வல்லை ஆகுதல் ஒல்லுமோ, நினக்கே?

பாடல் பின்னணி:  தன்னுடன் வருவேன் என்ற தலைவியிடம் தலைவன் கூறியது.

பொருளுரை:   பெரும் புகழையுடைய தந்தையின் பெருஞ்செல்வம் நிறைந்த பெரும் மாளிகையில் தாயோடு பிரியாது இருக்கும் மிக்க இளமையுடையாய்! மனையில் வாழும் புறாவின் செங்காலையுடைய அழகிய பெண் புறாவோடு ஆண் புறா சேர, வருத்தம் உண்டாகுமாறு எழுந்த, வருத்தம் செய்யும் மாலையில் தனியே இருக்கும் துன்பத்தை ஆற்ற முடியவில்லை என்னால், என்று உன்னுடைய கண்ணீர் வடியும் மையிட்ட கண்கள் துன்புற்றுக் கலங்க, ‘நும்முடன் வருவேன்’ எனக் கூறுகின்றாய். எம்முடன் வந்தால், வேனில் காலத்தின் இற்றி மரத்தின் தரையில் தோயாத, தொங்கும் நீண்ட விழுது, கோடையின் மேல்காற்று வீசும்பொழுது, ஊஞ்சலாடுவது போல் அசைந்து, கீழே உள்ள பெண்  யானையின் மீது உரசும் பாலை நிலத்தில் செல்லுதல் உனக்குப் பொருந்துமா?

குறிப்பு:  முனாஅது (8) – ஒளவை துரைசாமி உரை – வெறுப்பின்றி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முன்பு.  இற்றி மர விழுது:  குறுந்தொகை 106 – புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் வரை இழி அருவியின் தோன்றும்,   நற்றிணை 162 – வேனில் இற்றித் தோயா நெடு வீழ் வழிநார் ஊசலின் கோடை தூக்குதொறும் துஞ்சு பிடி வருடும் அத்தம் அகநானூறு 345 – ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் கல் கண் சீக்கும் அத்தம்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கோடைக் காற்று வீசும்போதெல்லாம் இற்றியின் விழுது பிடியை வருடும் என்றது, யான் மீண்டு வருமளவும் ஆற்றாமை உண்டாகியபோது தோழி நின்னை ஆற்றுவிப்பாள் என்று உணர்த்தற்காம்.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:   மனை உறை புறவின் செங்கால் பேடைக் காமர் துணையொடு – மனையில் வாழும் புறாவின் செங்காலையுடைய அழகிய பெண் புறாவோடு, சேவல் சேர – ஆண் புறா சேர, புலம்பின்று எழுதரு – வருத்தம் உண்டாகுமாறு எழுந்த, புன்கண் மாலைத் தனியே இருத்தல் ஆற்றேன் – வருத்தம் செய்யும் மாலையில் தனியே இருக்கும் துன்பத்தை ஆற்ற முடியவில்லை என்னால், என்று – என்று, நின் பனி வார் உண்கண் – உன்னுடைய கண்ணீர் வடியும் மையிட்ட கண்கள், பைதல கலுழ – துன்புற்றுக் கலங்க, நும்மொடு வருவல் – நும்முடன் வருவேன், என்றி – எனக் கூறுகின்றாய், எம்மொடு – என்னுடன், பெரும் பெயர்த் தந்தை – பெரும் புகழையுடைய தந்தை, நீடு புகழ் நெடு நகர் – பெருஞ்செல்வம் (பெருஞ்சிறப்பு) நிறைந்த பெரும் மனை, யாயொடு நனி மிக மடவை – தாயோடு பிரியாது இருக்கும் மிக்க இளமையுடையாய், முனாஅது – முன்பு, வெறுப்பின்றி, வேனில் – வேனில் காலத்தின், இற்றித் தோயா நெடு வீழ் வழிநார் – இற்றி மரத்தின் தரையில் தோயாத தொங்கும் நீண்ட விழுது , ஊசலின் கோடை தூக்குதொறும் துஞ்சு பிடி வருடும் – கோடையின் மேல்காற்று வீசும்பொழுது ஊஞ்சலாடுவது போல் அசைந்து கீழே உள்ள பெண்யானையின் மீது உரசும், அத்தம் வல்லை ஆகுதல் ஒல்லுமோ – பாலை நிலத்தில் செல்லுதல் பொருந்துமா, நினக்கே – உனக்கு

நற்றிணை 169, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, முல்லைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
‘முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்,
வருவம்’ என்னும் பருவரல் தீர,
படும் கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி,
பரல்தலை போகிய சிரல் தலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை  5
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன் கை இடையன் எல்லிப் பரீஇ,
வெண்போழ் தைஇய அலங்கல் அம் தொடலை
மறுகுடன் கமழும் மாலை,
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே?  10

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளுங்கால் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது.

பொருளுரை:  என் நெஞ்சே! நீடு வாழ்வாயாக!  மேற்கொண்ட பணியை முடித்தோம் ஆயின், நல்ல நெற்றியையுடைய என் தலைவிக்கு, நாம் திரும்பி வருவோம் அவளுடைய துயரம் நீங்குமாறு என்று, நெடிய சுவரில் இருக்கும் பல்லி ஒலித்துத் தெரிவிக்குமா, பரல் கற்கள் நிறைந்த பாலை நிலத்தில் உள்ள சிரல் பறவையைப் போன்ற மேல் பகுதியைக் கொண்ட கள்ளிச் செடியின் மேலே படர்ந்து தழைத்த முல்லையின் நறுமணமான மலர்களை, அசைகின்ற தலைகளையுடைய ஆடுகளின் கூட்டத்தை மேய விடுகின்ற இடையன் இரவிலே கொய்து, வெள்ளை நாரால் தொடுத்து அணிந்த அசைகின்ற மாலையின் நறுமணம் தெருவில் கமழும் இந்த மாலைப் பொழுதில், சிறிய குடியில் உள்ள எம்முடைய பெரிய இல்லத்தில்?

குறிப்பு: சிரல் தலைக் கள்ளி (4) – ஒளவை துரைசாமி உரை – சிரப்பறவையின் கொண்டை போல் பூத்துள்ள கள்ளி மரம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சிச்சிலிப்பறவை போன்ற தலையையுடைய கள்ளி.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இடையன் தொடுத்த கண்ணி போழுடனே கமழும் என்றது, பல்லி அடிப்பக்கண்ட தலைவி தன் புதல்வனுடன் மகிழ்ந்து நம் வரவினாலே களிப்பெய்தி இருக்கும் என்றதாம்.  இலக்கணம்:   நன்னுதல் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, வருவம் – தன்மைப் பன்மை, மீமிசை – ஒருபொருட் பன்மொழி, பரீஇ – அளபெடை, தைஇய – அளபெடை, நகரானே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  முன்னியது முடித்தனம் ஆயின்- எடுத்த பணியை முடித்தோம் ஆயின், நன்னுதல் – அழகிய நெற்றியை உடையவள், வருவம் என்னும் – வருவோம் என்னும், பருவரல் தீர – துன்பம் தீர, படும் கொல் – கத்தித் தெரிவிக்குமா, வாழி – நீடு வாழ்வாயாக, நெடுஞ்சுவர் பல்லி – பெரிய நெடிய சுவரில் இருக்கும் பல்லி, பரல் தலை போகிய – பரல் கற்கள் நிறைந்த பாலை நிலத்தில் உள்ள, சிரல் தலைக் கள்ளி – மீன்கொத்திப் பறவை போன்ற தலையையுடைய கள்ளி, மீமிசைக் கலித்த – மேலே படர்ந்து தழைத்த, வீ – மலர்கள், நறு முல்லை – நறுமணமான முல்லை மலர்கள், ஆடு தலைத் துருவின் – ஆடுகின்ற தலையையுடைய ஆட்டின், தோடு தலைப்பெயர்க்கும் – கூட்டத்தை மேய விடுகின்ற, வன் கை இடையன் – வலிய கையையுடைய இடையன், எல்லிப் பரீஇ – இரவிலே பறித்து, வெண் போழ் – வெண்மையான நாரால், தைஇய – தொடுத்த, அலங்கல் – அசையும், அம் தொடலை – அழகிய மாலை, மறுகுடன் – தெருவில், கமழும் மாலை – நறுமணமான மாலை நேரம், சிறுகுடிப் பாக்கத்து – கடற்கரைச் சிற்றூரின்கண் உள்ள, எம் பெரு நகரானே – எங்கள் பெரிய இல்லத்தில்

நற்றிணை 172, பாடியர் பெயர் கிடைக்கவில்லைநெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
நெய் பெய் தீம் பால் பெய்து, இனிது வளர்ப்ப,
‘நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்’ என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே;  5
அம்ம நாணுதும், நும்மொடு நகையே,
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க! நீ நல்கின்,
நிறைபடு நீழல் பிறவுமார் உளவே.  10

பாடல் பின்னணி:  பகற்குறி வந்த தலைவனைத் தோழி வரைவு கடாயது.  “தலைவனே!  சந்திக்கும் இடத்திற்கு அன்னை அடிக்கடி வருகின்றாள்.  களவு வெளிப்படும்” எனக் கூறி வரைவு நாடினாள்.

பொருளுரை:  புதிதாக வந்த பாணர் பாடுகின்ற மெல்லிய இசைபோல, வலம்புரியுடைய வெள்ளைச் சங்கு ஒலிக்கும், விளங்கும் நீரையுடைய துறை பொருந்திய நெய்தல் நிலத் தலைவனே!

விளையாடுகின்ற தோழியருடன் வெள்ளை மணலில் புன்னையின் விதையைப் புதைத்து விட்டு, நாங்கள் அதை மறந்து சென்றபின், அவ்விதையானது வேரூன்றி முளைத்துத் தோன்ற, அதற்கு நெய்கலந்த இனிய பாலை ஊற்றி, நாங்கள் இனிதாக வளர்க்க, “உங்களை விடச் சிறப்பானது ஆகும், உங்கள் தங்கை முறைகொண்ட இப்புன்னை மரம்” என்று அன்னை கூறினாள்.  இப்புன்னை மரத்தின் சிறப்பு இது.  நும்முடன் அதன் கீழிருந்து நகையாடி மகிழ எங்களுக்கு நாணமாக உள்ளது.  நீ அருளினால், நிறைய நிழல் உடைய மரங்கள் பிற உள்ளன.

குறிப்பு:   ஒளவை துரைசாமி உரை – ‘உடனுறை உவமம் சுட்டு நகை’ (தொல்காப்பியம், பொருளியல் 46) என்னும் நூற்பா உரையில் இப்பாட்டைக் காட்டி, ‘இதனுள் புன்னைக்கு நாணுதும் எனவே, அவ்வழித் தான் வளர்த்த புன்னையென்றும், பலகாலும் அன்னை வருவள் என்றும் உடனுறை கூறி விலக்கியவாறு’ என்பர் இளம்பூரணர்.  இனி, ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்னும் நூற்பாவின்கண் ‘நாணு மிக வரினும்’ என்றதற்கு இதனைக் காட்டி, ‘இதனுள் அம்ம நாணுதும் எனப் புதிது வந்தோர் நாணுமிகுதி தோன்ற மறுத்து உரைத்தலின் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தமையும் கூறினாள்’ என்றும் ‘உடனுறை உவமம் சுட்டு’ (தொல்காப்பியம், பொருளியல் 46) என்ற நூற்பா உரையில், ‘இதனுட் புன்னையை அன்னை நுவ்வை ஆகுமென்றதனால் இவளெதிர் நும்மை நகையாடுதல் அஞ்சுதும் என நகையாடிப் பகற்குறி எதிரே கொள்ளாமைக் குறிப்பினால் மறைத்துக் கூறியவாறு காண்க; இதனைச் செவ்வனம் கூறாமையின் அமைத்தார்’ என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.  நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அதனை நோக்கி மகிழ்ந்து நெய் கலந்த இனிய பாலை நீராக ஊற்றி மேன்மேலும் பெய்து இனியதாக வளர்ப்ப, ச. வே. சுப்பிரமணியன் உரை –  அதனை எடுத்துக் கொண்டு என் தாய் இனிதாக வளர்த்தாள்.  நுவ்வை (4) – ஒளவை துரைசாமி உரை – நுவ்வை நுமக்கு முன் பிறந்தாளெனப் பொருள் தருமாயினும், ஈண்டு பின் தோன்றியமை பற்றி நும் தங்கை எனக்கூறல் வேண்டிற்று.

சொற்பொருள்:  விளையாடு ஆயமொடு – விளையாடுகின்ற தோழியருடன்,  வெண்மணல் அழுத்தி – வெள்ளை மணலில் புதைத்து, மறந்தனம் துறந்த – நாங்கள் மறந்து சென்ற, காழ் முளை அகைய – விதையானது வேரூன்றி முளைத்துத் தோன்ற, நெய் பெய் தீம் பால் பெய்து – நெய்கலந்த இனிய பாலை ஊற்றி, இனிது வளர்ப்ப – நாங்கள் அதனை இனிதாக வளர்க்க, அன்னை அதனை இனிதாக வளர்க்க, நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று அன்னை கூறினள் – உங்களை விட சிறப்பானது ஆகும் உங்கள் தங்கை முறையான இப்புன்னை மரம் என்று அன்னை கூறினாள், புன்னையது நலனே – புன்னையின் சிறப்பு (நலனே – ஏ அசைநிலை), அம்ம – அசைநிலை, நாணுதும் நும்மொடு நகையே – நும்முடன் நகைக்க நாணமாக உள்ளது எமக்கு (நகையே – ஏ அசைநிலை), விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப – புதிதாக வந்த பாணர் பாடுகின்ற மெல்லிய இசைபோல, வலம்புரி வான் கோடு நரலும் – வலம்புரிக் கொண்ட வெள்ளைச் சங்கு ஒலிக்கும், இலங்கு நீர்த் துறை கெழு கொண்க – விளங்கும் நீரையுடைய துறை பொருந்திய நெய்தல் நிலத் தலைவனே, நீ நல்கின் – நீ அருளினால், நிறைபடு நீழல் பிறவுமார் உளவே – நிறைய நிழல் உடைய மரங்கள் பிற உள்ளன (பிறவுமார் – பிறவும் +ஆர், ஆர் – அசை நிலை, உளவே – ஏ அசைநிலை)

நற்றிணை 177, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பரந்துபடு கூர் எரி கானம் நைப்ப,
மரம் தீயுற்ற மகிழ்தலை அம் காட்டு
ஒதுக்கு அரும் வெஞ்சுரம் இறந்தனர் மற்று அவர்,
குறிப்பின் கண்டிசின் யானே; நெறிப்பட
வேலும் இலங்கு இலை துடைப்ப, பலகையும்  5
பீலி சூட்டி மணி அணிபவ்வே,
பண்டினும் நனி பல அளிப்ப இனியே
வந்தன்று போலும் தோழி, நொந்து நொந்து,
எழுது எழில் உண்கண் பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே.  10

பாடல் பின்னணி:  செலவு குறிப்பறிந்த தலைவி தோழிக்கு உரைத்தது.

பொருளுரை:  பரந்துபட்ட மிக்க தீ எரிக்க, மரங்கள் எல்லாம் தீய்ந்து, மகிழ்ச்சி அழிந்த காட்டில், நிழலில் ஒதுங்குவதற்கு இடமில்லாத கொடிய காட்டு வழியில் சென்று விட்டார் என்று அவருடைய செய்கைகளினால் நான் அறிந்தேன்.  ஒழுங்குபட வேலின் ஒளியுடைய இலையைத் துடைத்தார்.  கிடுகிற்கும் (கேடயத்திற்கும்) மயில் இறகு சூடி மணியால் அலங்கரித்தார்.  முன்னை விட மிகுதியாகவே என்னிடம் அன்பாக இருந்தார்.  நான் வருந்தி வருந்தி ஓவியர் வரைவதற்கு தகுந்த அழகு அமைந்த என்னுடைய மையிட்ட கண்களில் பாவை தோன்றாதபடி வெள்ளம் போன்று கண்ணீர் வடிய, அவ்வெள்ளத்தின்கண் விழுந்து நீந்தி வருந்தும் நாள் வந்துவிட்டது போலும் தோழி.

குறிப்பு:  கண்ணின் பாவை – நற்றிணை 177 – உண்கண் பாவை அழிதரு வெள்ளம், அகநானூறு 5 – பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு, அகநானூறு 229 – பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப.  ஒதுக்கு அரும் (3) – ஒளவை துரைசாமி உரை – செல்லுதற்கரிய, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஒதுங்கியிருத்தலுக்கு நிழலில்லாத கொடிய.  நெறிப்பட (4) – ஒளவை துரைசாமி உரை – நெறியில் செல்லுவதற்காக, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஒழுங்குபட.  இலக்கணம்:   அம் – சாரியை, மற்று – அசை நிலை, கண்டிசின் – இசின் தன்மை அசை, வகரம் விரித்தல் விகாரம், நாளே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  பரந்துபடு கூர் எரி கானம் நைப்ப – பரந்து பட்ட மிக்க தீ எரிக்க, மரம் தீயுற்ற மகிழ்தலை அம் காட்டு – மரங்கள் எல்லாம் தீய்ந்து மகிழ்ச்சி அழிந்த காட்டில், ஒதுக்கு அரும் வெஞ்சுரம் இறந்தனர் – நிழலில் ஒதுங்குவதற்கு இடமில்லாத கொடிய காட்டு வழியில் சென்றார், மற்று அவர், குறிப்பின் கண்டிசின் யானே – அவருடைய செய்கைகளினால் நான் அறிந்தேன், நெறிப்பட வேலும் இலங்கு இலை துடைப்ப – ஒழுங்குபட வேலின் ஒளியுடைய இலையைத் துடைத்தார், பலகையும் பீலி சூட்டி மணி அணிபவ்வே – கிடுகிற்கும் (கேடயத்திற்கும்) மயில் இறகு சூடி மணியால் அலங்கரித்தார், பண்டினும் நனி பல அளிப்ப – முன்னை விட மிகுதியாகவே என்னிடம் அன்பாக இருந்தார், இனியே – இனியே, வந்தன்று போலும் தோழி – வந்து விட்டது போலும் தோழி, நொந்து நொந்து எழுது எழில் உண்கண் பாவை அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே – நான் வருந்தி வருந்தி ஓவியர் வரைவதற்கு தகுந்த அழகு அமைந்த மையிட்ட கண்களில் பாவை தோன்றாத வெள்ளம் போன்று கண்ணீர் வடிய அவ்வெள்ளத்தின்கண் விழுந்து நீந்தி வருந்தும் நாள்

நற்றிணை 179, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென,
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி,
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள்,
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு
யானும் தாயும் மடுப்ப தேனொடு  5
தீம் பால் உண்ணாள், வீங்குவனள் விம்மி,
நெருநலும் அனையள் மன்னே, இன்றே
மை அணல் காளை பொய் புகல் ஆக,
அருஞ்சுரம் இறந்தனள் என்ப, தன்
முருந்து ஏர் வெண்பல் முகிழ்நகை திறந்தே.  10

பாடல் பின்னணி:  தலைவனுடன் தலைவி உடன்போக்கில் சென்றபின் வருந்திய நற்றாய் உரைத்தது.

பொருளுரை:  எங்கள் இல்லத்தில் வளரும் வயலைக் கொடியை, கன்றை ஈன்ற பசு தின்றதால், தன்னுடைய பந்தை நிலத்திலே எறிந்து விட்டு, விளையாட்டுப் பாவையை (பொம்மையை) விலக்கி விட்டு, தன்னுடைய அழகிய வயிற்றில் அடித்துக் கொண்ட, செயலில் திறமையுடைய என்னுடைய இளமகள், மானோடு பொருந்திய கலங்கிய பார்வையை உடையவளாய், நானும் செவிலித் தாயும் தேனுடன் கூடிய இனிய பாலைக் குடிக்க ஊட்ட, குடிக்க மாட்டாள்.  விம்மி அழுவாள். நேற்றும் அவ்வாறு தான் இருந்தாள்.
இன்று, கருமையான தாடியையுடைய இளைஞன் ஒருவனின் பொய்ம்மொழிகளை உண்மை என்று ஏற்று, மயில் சிறகின் அடியைப் போன்ற தனது வெண்மையான பற்களில் அரும்பிய நகையைத் தோற்றுவித்து, செல்லுதற்கு அரிய சுரத்தின்கண் சென்றனள் எனக் கூறுகின்றனர்.

குறிப்பு:  என் செய் வினைக் குறுமகள் (3) – ஒளவை துரைசாமி உரை – யான் செய்த நல்வினைப் பயனாத் தோன்றிய இளையவள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – செய்யும் காரியங்களில் வல்ல என் இளம் புதல்வி.  வயிற்றில் அடித்தல் – நற்றிணை 179 – அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள், நற்றிணை 379 – அவ் வயிறு அலைத்தலின், நற்றிணை 398 – அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து ஓரை மகளிரும், அகநானூறு 106 -பாணன் எறியும் தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே.  இலக்கணம்:   மன் – கழிவுக்குறிப்பு, ஏர் – உவம உருபு, திறந்தே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென – இல்லத்தில் வளரும் வயலைக் கொடியை கன்றை ஈன்ற பசு தின்றதால், பந்து நிலத்து எறிந்து – தன்னுடைய பந்தை நிலத்திலே எறிந்து, பாவை நீக்கி – விளையாட்டு பொம்மையை விலக்கி, அவ் வயிறு அலைத்த – தன்னுடைய அழகிய வயிற்றில் அடித்துக் கொண்ட, என் செய் வினைக் குறுமகள் – என்னுடைய செயலில் திறமையுடைய இளமகள், யான் செய்த நல்வினைப் பயனாத் தோன்றிய இளையவள், மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு – மானோடு பொருந்திய கலங்கிய பார்வையுடன், யானும் தாயும் மடுப்ப – நானும் செவிலித் தாயும் குடிக்க ஊட்ட, தேனொடு தீம் பால் உண்ணாள் – தேனுடன் கூடிய இனிய பாலை குடிக்க மாட்டாள், வீங்குவனள் விம்மி – விம்மி அழுவாள், நெருநலும் அனையள் – நேற்றும் அவ்வாறு இருந்தாள், மன் – கழிவுக்குறிப்பு, ஏ – அசை நிலை, இன்றே – இன்று, மை அணல் காளை – கருமையான தாடியையுடைய இளைஞன், பொய் புகல் ஆக – பொய்யைப் பற்றுக்கோடாக எண்ணி, அருஞ்சுரம் இறந்தனள் என்ப – செல்லுதற்கு அரிய சுரத்தின்கண் சென்றனள் எனக் கூறுவர், தன் முருந்து ஏர் – தன்னுடைய மயில் சிறகின் அடியைப் போன்ற, வெண்பல் – வெண்மையான பற்கள், முகிழ்நகை திறந்தே – அரும்பிய நகையைத் தோற்றுவித்து

நற்றிணை 184, பாடியர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
ஒரு மகள் உடையேன் மன்னே, அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்,
இனியே ‘தாங்கு நின் அவலம்’ என்றிர், அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ, அறிவுடையீரே?  5
உள்ளின் உள்ளம் வேமே, உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே.

பாடல் பின்னணி:  தலைவி தலைவனுடன் உடன்போக்கில் சென்றபின் நற்றாய் வருந்தி உரைக்கின்றாள்.

பொருளுரை:  ஒரு மகளை மட்டுமே உடையவள் நான். அவளும் போரில் மிகுந்த வலிமையையும் கூரிய வேலையுமுடைய ஒரு இளைஞனோடு நேற்று பெரிய மலையில் உள்ள அரிய பாலை நிலத்திற்குச் சென்றாள்.  இனி உன்னுடைய துன்பத்தைத் பொறுத்துக் கொள் எனக் கூறுகின்றீர்கள்.  அது எவ்வாறு இயலும் அறிவு உடையவர்களே?

மை தீட்டிய கண்ணின் மணியில் வாழும் பாவை வெளியே நடந்து வந்தாற்போல,  அழகிய சாயலை உடைய என்னுடைய இளைய மகள் விளையாடிய நீலமணியைப் போன்ற மலர்களையுடைய நொச்சி மரத்தையும் திண்ணையையும் நோக்கி, அவளை நினைத்தால் என் உள்ளம் வெந்து போகும்.

குறிப்பு:  மணி வாழ் பாவை நடை கற்றன்ன (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அவளதருமை கூறுவாள் கண்மணியுள் வாழ் பாவையை யுவமித்தாள், ஒளவை துரைசாமி உரை – கண்ணிற் பாவை, மகளாகிய பாவை போல நடையுடைய தன்மையின் நடைகற்றன என்றாள்.  இலக்கணம்:   இனியே – ஏகாரம் அசை நிலை, அறிவுடையீரே – ஏகாரம் அசை நிலை, வேமே – ஏகாரம் அசை நிலை, ஏர் – உவம உருபு, கண்டே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   ஒரு மகள் உடையேன் – ஒரு மகளை மட்டுமே உடையவள் நான், மன் – கழிவுக்குறிப்பு, ஏ – அசை நிலை, அவளும் செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு – அவளும் போரில் மிகுந்த வலிமையையும் கூரிய வேலையுமுடைய ஒரு இளைஞனோடு, பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள் – நேற்று பெரிய மலையில் உள்ள அரிய பாலை நிலத்திற்குச் சென்றாள், இனியே தாங்கு நின் அவலம் என்றிர் – இனி உன்னுடைய துன்பத்தைத் பொறுத்துக் கொள் எனக் கூறுகின்றீர்கள், அது மற்று யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே – அது எவ்வாறு இயலும் அறிவு உடையவர்களே, உள்ளின் உள்ளம் வேமே – அவளை நினைத்தால் என் உள்ளம் வெந்து போகும், உண்கண் மணி வாழ் பாவை நடை கற்றன்ன – மை தீட்டிய கண்ணின் மணியில் வாழும் பாவை நடை கற்றாற்போல், என் அணி இயற் குறுமகள் ஆடிய – அழகிய சாயலை உடைய என்னுடைய இளைய மகள் விளையாடிய, மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே – நீலமணியைப் போன்ற மலர்களையுடைய நொச்சி மரத்தையும் திண்ணையையும் நோக்கி

நற்றிணை 187, ஒளவையார், நெய்தற் திணை – தலைவி தன் நெஞ்சிடம் சொன்னது
நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக,
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணியப்,
பல் பூங்கானலும் அல்கின்றன்றே;
இன மணி ஒலிப்ப பொழுதுபடப் பூட்டி
மெய்ம்மலி காமத்து யாம் தொழுது ஒழியத்  5
தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு
யாங்கு ஆவது கொல், தானே தேம்பட
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்
மின் இவர் கொடும் பூண் கொண்கனொடு
இன்னகை மேவி நாம் ஆடிய பொழிலே?  10

பாடல் பின்னணி:  பகற்குறி வந்து செல்லும் தலைவனை நோக்கித் தலைவி தனக்குள் கூறியது.

பொருளுரை:  நெஞ்சே!  நெய்தல் மலர்கள் கூம்ப, நிழல் எல்லாம் கீழ்த்திசையை அடைய, மலையை அடைந்த ஞாயிறு சிவந்த நிறமுற்று நிலத்தின்கண் தான் காட்டிய வெப்பத்தைத் தணிக்க, பல மலர்களையுடைய கடற்கரைச் சோலையும் பொலிவு இழந்ததே.  மிகுதியாக உள்ள மணிகள் ஒலிக்க, உடலில் காதல் உணர்வு உடைய யாம் காதல் பெறாது தொழுது ஒழிய தலைவனின் குதிரைகளைப் பூட்டிய தேரும் சென்று மறையும்.  இந்த ஊருடன் நமக்கு இனி எவ்வாறு ஆகுமோ, தேன் பொருந்திய வண்டுகள் ஒலிக்கும் மாலையை அணிந்த மார்பில் மின்னும் வளைந்த அணிகலன்களை அணிந்த தலைவனுடன் இனிய உவகையுடன் நாம் ஆடிய சோலை!

குறிப்பு:  குறுந்தொகை 276 – யாங்கு ஆவது கொல்.  யாங்கு (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – எப்படி, அறிகிலேன், சொல்லெச்சம், இது துன்பத்துப் புலம்பல்.  இலக்கணம்:   தேம் தேன் என்றதன் திரிபு, அல்கின்றன்றே – ஏ அசை நிலை, பொழிலே – ஏ அசை நிலை.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இனி இச் செய்யுளை இளம்பபூரணர் அடிகளார் தோழி கூற்றாகக் கொண்டு ‘நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும்’ (தொல்காப்பியம், களவியல் 23).

சொற்பொருள்:   நெய்தல் கூம்ப – நெய்தல் மலர்கள் கூம்ப – நிழல் குணக்கு ஒழுக – நிழல் எல்லாம் கீழ்த்திசையை அடைய, கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய – மலையை அடைந்த ஞாயிறு சிவந்த நிறமுற்று நிலத்தின்கண் தான் காட்டிய வெப்பம் தணிய, பல் பூங்கானலும் அல்கின்றன்றே – பல மலர்களையுடைய கடற்கரைச் சோலையும் பொலிவு இழந்ததே (அல்குதல் – குறைதல்), இன மணி ஒலிப்ப – மிகுதியாக உள்ள மணிகள் ஒலிக்க, பொழுதுபடப் பூட்டி – பொழுதுபட குதிரைகளைப் பூட்டி, மெய்ம்மலி காமத்து யாம் தொழுது ஒழிய – உடலில் காதல் உணர்வு உடைய யாம் தலைவனின் காதல் பெறாது தொழுது ஒழிய, தேரும் செல்புறம் மறையும் – தேரும் சென்று மறையும், ஊரொடு யாங்கு ஆவது கொல் – இந்த ஊருடன் என்ன ஆகுமோ, தானே தேம்பட ஊது வண்டு இமிரும் – தேன் பொருந்திய வண்டுகள் ஒலிக்கும், கோதை மார்பின் – மாலை அணிந்த மார்பில், மின் இவர் கொடும் பூண் கொண்கனொடு – மின்னும் வளைந்த அணிகலன்களை அணிந்த தலைவனுடன், இன்னகை மேவி நாம் ஆடிய பொழிலே – இனிய உவகையுடன் நாம் ஆடிய பொழில்

நற்றிணை 191, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டல் பாவை வன முலை முற்றத்து
ஒண் பொறிச் சுணங்கின் ஐதுபடத் தாஅம்
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி,  5
‘எல்லி வந்தன்றோ தேர்’ எனச் சொல்லி,
அலர் எழுந்தன்று இவ் ஊரே; பலருளும்
என் நோக்கினளே அன்னை, நாளை
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின்,
அணிக் கவின் உண்மையோ அரிதே, மணிக் கழி  10
நறும் பூங்கானல் வந்து அவர்
வறுந்தேர் போதல் அதனினும் அரிதே.

பாடல் பின்னணி:  களவில் வந்தொழுகும் தலைவனிடம் தலைவியைத் தமர் இற்செறிப்பர் எனக் கூறியது.  வரைவு கடாயது.  பலருள்ளும் யானே தலைவியின் நெருங்கிய தோழியாதலால் “பலருளும் என் நோக்கினளே அன்னை” என்றாள்.

பொருளுரை:  சிறிய மலர்களையுடைய ஞாழலின் தேன் பொருந்திய ஒளியுடைய பூங்கொத்துக்கள் அழகிய அணிகலன்கள் அணிந்த மகளிர் வண்டல் மணலால் செய்த பாவையின் அழகிய கொங்கைகளில் ஒளியுடைய பொறியுடைய சுணங்கு போல மெல்லிதாகப் படும்படி உதிர்ந்து பரவியிருக்கும், கண்டல் மரங்களாகிய வேலியையுடைய அழகிய குடித்தெருவில், “நேற்று இரவில் ஒரு தேர் வந்தது” என்று உரையாடி இந்த ஊரில் அலர் எழுந்தது. பலர் இருக்க என்னையே குறிப்பாக அன்னை நோக்கினாள். நாளை கழி அருகில் உள்ள நீலமணி போன்ற மலரை நான் கொய்யாவிட்டால், என்னுடைய மிகுந்த அழகு நிலைத்து இருப்பது அரிதாகும்.  நீலமணி போலும் கரிய உப்பங்கழி அருகில் உள்ள நறுமணமுடைய பூஞ்சோலையில் அவர் வந்து எம்மை அணைக்காது தேரில் செல்லுதல் அதனினும் துன்பமானது.

குறிப்பு: அகநானூறு 51 – முலை முற்றம் வீங்க, அகநானூறு 279 – செறிய வீங்கிய மென் முலை முற்றம், அகநானூறு 263 – வருமுலை முற்றத்து, அகநானூறு 361 – வார் முலை முற்றத்து, அகநானூறு 362 – முலைச் சுணங்கணி முற்றத்து, நற்றிணை 191 – வன முலை முற்றத்து.   எல்லி (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பகலுமாம்.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஞாழலின் ஒள்ளிய பூங்கொத்து மகளிர் இழைத்த வண்டல் பாவையின் மார்பிலே தேமல் போல பரக்குமென்றது, அன்னையின் காவல் தலைவியின் மீது ஒறுப்பது போல தாக்காநிற்குமென்றதாம்.  இலக்கணம்:  தாஅம் – அளபெடைசுணங்கின் – இன் உருபு ஒப்புப் பொருளது, அரிதே – ஏ அசை நிலை, உளும் – உள்ளும், இடைக்குறை.

சொற்பொருள்:   சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் – சிறிய மலர்களையுடைய ஞாழலின் தேன் பொருந்திய ஒளியுடைய பூங்கொத்துக்கள், நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த – அழகிய அணிகலன்களையுடைய மகளிர் செய்த, வண்டல் பாவை – வண்டல் மணலால் செய்த பாவையின், வன முலை முற்றத்து ஒண் பொறிச் சுணங்கின் ஐதுபடத் தாஅம் – அழகிய கொங்கைகளில் ஒளியுடைய பொறியுடைய சுணங்கு போல மெல்லிதாகப் படும்படி பரவியிருக்கும், கண்டல் வேலிக் காமர் சிறுகுடி – கண்டல் மரங்களாகிய வேலியையுடைய அழகிய குடித் தெருவில், எல்லி வந்தன்றோ தேர் எனச் சொல்லி – நேற்று இரவில் ஒரு தேர் வந்தது என்று உரையாடி, அலர் எழுந்தன்று இவ் ஊரே – இந்த ஊரில் அலர் எழுந்தது, பலர் உளும் என் நோக்கினளே அன்னை – பலர் இருக்க என்னையே குறிப்பாக அன்னை நோக்கினாள், நாளை மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின் – நாளை நான் கழி அருகில் நீலமணி போன்ற மலரை நான் கொய்யாவிட்டால், அணிக் கவின் உண்மையோ அரிதே – என்னுடைய மிகுந்த அழகு நிலைப்பது அரிதாகும், மணிக் கழி நறும் பூங்கானல் வந்து அவர் வறுந்தேர் போதல் அதனினும் அரிதே – நீலமணி போலும் கரிய உப்பங்கழி அருகில் உள்ள நறுமணமுடைய பூஞ்சோலையில் அவர் வந்து எம்மை அணைக்காது தேரில் செல்லுதல் அதனினும் துன்பமானது

நற்றிணை 194, மதுரை மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! கைம்மாறு
யாது செய்வாம் கொல் நாமே, கயவாய்க்
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்
வலன் உயர் மருப்பின் நிலம் ஈர்த் தடக் கை
அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத்  5
தனி நிலை இதணம் புலம்பப் போகி,
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை
குன்ற வெற்பனொடு நாம் விளையாட,
விரும்பு கவர் கொண்ட ஏனல்
பெருங்குரல் கொள்ளாச் சிறு பசுங்கிளிக்கே?  10

பாடல் பின்னணி:  தலைவன் வரைதலை மேற்கொள்ளாது களவின்கண் வந்தொழுகுகின்றான்.  அந்நிலையில் தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்பதைத் தலைவனுக்கு உரைத்து, தோழி வரைவு கடாயது.

பொருளுரை:  வாழி தோழி!  கேட்பாயாக!  சிறிய பச்சைக் கிளிகளுக்கும், குட்டியுடன் இருக்கும் தன் பெண் யானையைப் புணர்ந்த வலிமை மிக்க தந்தங்களையும் நிலத்தில் தோயும் பெரிய வாயையும் பெரிய தும்பிக்கையும் உடைய பெருமை மிக்க களிற்று யானைக்கும், நாம் எவ்வாறு கைம்மாறு செய்வோம்? நம் நிலைபெற்ற காவல் இதணத்தை வறிது ஆகும்படி விட்டு விலகி நாம் மந்தியும் அறியாத அடர்ந்த மரங்களை உடைய இடத்தில் மலை நாடனுடன் விளையாடிய பொழுது அவை கதிர் கொத்துக்களைத் தின்று அழிக்காததற்கு?

குறிப்பு:  மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் (அகநானூறு 92-8), மான்று அமை அறியா மரம் பயில் இறும்பின் (அகநானூறு 238-1).  இலக்கணம்:   நாமே – ஏகாரம் அசை நிலை, பசுங்கிளிக்கே – ஏகாரம் அசை நிலை.  கய – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  கொல் – கொல்லே ஐயம் (தொல்காப்பியம், இடையியல் 20).

சொற்பொருள்:   அம்ம – கேட்பாயாக, வாழி தோழி – வாழி தோழி, கைம்மாறு யாது செய்வாம் கொல் நாமே – நாம் எப்படி கைம்மாறு செய்யலாம், கய வாய் – பெரிய வாய், கன்றுடை மருங்கின் – கன்றை பக்கத்தில் உடைய, பிடி புணர்ந்து இயலும் – பெண் யானையோடு புணர்ந்து இயங்குகின்ற, வலன் உயர் மருப்பின் – வலிமை மிக்க தந்தங்கள், நிலம் ஈர்த் தடக் கை – நிலத்தின் கண் தோயும் பெரிய தும்பிக்கை, அண்ணல் யானைக்கு – பெருமையுடைய யானைக்கு, அன்றியும் – அல்லாமலும், கல் மிசை – மலை மேலே, தனி நிலை இதணம் – தனியாக நிலைபெற்ற பரண், புலம்பப் போகி – வறிது ஆகும்படி, மந்தியும் அறியா – பெண் குரங்குகளும் அறியாத, மரம் பயில் – மரங்கள் நிறைந்த, ஒரு சிறை – ஒரு பக்கம், குன்ற வெற்பனொடு – மலை நாடனுடன், நாம் விளையாட – நாம் விளையாட, விரும்பு கவர் கொண்ட – விருப்பம் கொண்ட, ஏனல் பெருங்குரல் கொள்ளா – பெரிய தினைக் கதிர் கொத்துக்களைத் தின்று அழிக்காத, சிறு பசுங்கிளிக்கே – சிறிய பச்சைக் கிளிகளுக்கு

நற்றிணை 196, வெள்ளைக்குடி நாகனார்நெய்தற் திணை – தலைவி நிலாவிடம் சொன்னது
பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடை இடைப்,
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்,
மால்பிடர் அறியா, நிறையுறு மதியம்!
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்,
நின் கரந்து உறையும் உலகம் இன்மையின்  5
என் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்,
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்
சிறுகுபு சிறுகுபு செரீஇ,
அறிகரி பொய்த்தலின், ஆகுமோ அதுவே?

பாடல் பின்னணி:  தலைவன் பொருள்வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைவி நிலவை நோக்கி உரைத்தது.

பொருளுரை:  பளிங்குக் கற்களை ஒன்றாக நெருக்கமாக இணைத்து வைத்தாற்போலப் பல கதிர்களுக்கு இடை இடையே பாலை முகந்து வைத்தாற்போலக் குளிர்ச்சியுடைய வெண்ணிலவினையுடைய, முகிலின் பிடர் மேல் தோன்றி பிறரால் அறியப்படாத, நிறைவுற்ற திங்களே! நீ நிறைவும் நேர்மையும் உடையை! உனக்குத் தெரியாதபடி மறைந்து வாழும் உலகம் எதுவும் இல்லாததால், என்னிடமிருந்து மறைந்து வாழ்பவர் இருக்கும் இடத்தைக் காட்டுவாயாக! நல்ல அழகினை இழந்த என் தோள் போன்று வாட்டமுற்று சிறுகிச் சிறுகிக் குறைந்து, நீ சாட்சி கூறாது பொய்யை மேற்கொண்டதால், அது உன்னால் இயலுமா?

குறிப்பு:   மால்பிடர் அறியா நிறையுறு மதியம் (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை ஆகிய இரண்டு உரைகளிலும் – மேகத்தின் பிடர் (பிடரி) மேல் தோன்றிப் பிறரால் அறியப்படாத எல்லாக் கலைகளும் நிறைவுற்ற திங்களே.  மால் – மேகம்.  இனி மால்பு இடர் எனக் கொண்டு நிலத்தைக் குறிஞ்சியாக்கி எமர் தேனெடுக்கச் சமைத்த கண்ணேணியாலே இடரப்பட்டு அறியாத திங்கள் என உரைப்பினுமாம்.  மால்பு இடர் அறியா – பொ. வே. சோமசுந்தரனார் உரையில் அவர் மேலும் கூறும் பொருள் – மயங்கி எம்மனோர் இடர் அறியா.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரையில் அவர் மேலும் கூறும் பொருள் – எமர் தேனெடுக்கச் சமைத்த கண்ணேணியாலே இடரப்பட்டு அறியாத திங்கள் எனவும் உரைப்பினுமாம்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை:  சொற்பொருளில் அவரும் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரும் ஒத்துள்ளனர்.  எனினும் இவ்வாறு மேலும் இப்பாடலுக்கு உரை எழுதி, இதுவே பொருந்தும் எனக் கூறுகின்றார் சோமசுந்தரனார்:  பலவாகிய கதிர்களையும் இடையே இடையே பால்முகந்தன்னை பசு வெண்ணிலவையும் உடைய செல்வச் செருக்குடைமையால் மயங்கி எம்மனோர் இடர் அறியா நிறைவுறு மதியமே! நீ தானும் சால்பும் செம்மையும் உடைமை ஆதலின் நினக்கிந்த பொச்சாப்பு ஆகுமோ?  ஆகாதன்றே!  அஃது உண்மையின் எற் கரைந்து உறைவோர் உள்வழி காட்டாய்; ஆதலின் நீ அறிகரி பொய்த்தாய், அங்ஙனம் பொய்த்தலின் நீ என் தோள் போல் நாடொறும் சிறுகுபு சிறுகுபு வானத்தூடே செரித்தொழியக்கடவாய்!  காட்டாய் (6) – ஒளவை துரைசாமி உரை – நீ காட்டுகின்றாய் இல்லை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நீ காட்டுவாயாக.

சொற்பொருள்:   பளிங்கு செறிந்தன்ன – பளிங்குக் கற்களை ஒன்றாக நெருக்கமாக இணைத்து வைத்தாற்போல, பல் கதிர் இடை இடைப் பால் முகந்தன்ன – பல கதிர்களுக்கு இடை இடையே பாலை முகந்து வைத்தாற்போல, பசு வெண் நிலவின் – குளிர்ச்சியுடைய வெண்ணிலவினையுடைய, மால்பிடர் அறியா – முகிலின் பிடர் மேல் தோன்றி பிறரால் அறியப்படாத, நிறையுறு மதியம் – நிறைவுற்ற திங்களே, சால்பும் செம்மையும் உடையை – நீ நிறைவும் நேர்மையும் உடையை, ஆதலின் – நின் கரந்து உறையும் – உனக்குத் தெரியாதபடி மறைந்து வாழும், உலகம் இன்மையின் – உலகம் எதுவும் இல்லாததால், என் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய் – என்னிடமிருந்து மறைந்து வாழ்பவர் இருக்கும் இடத்தைக் காட்டுவாயாக, நற்கவின் இழந்த என் தோள் போல் – நல்ல அழகினை இழந்த என் தோள் போன்று, சாஅய் – வருந்தி, சிறுகுபு சிறுகுபு செரீஇ – சிறுகிச் சிறுகிக் குறைந்து, அறிகரி பொய்த்தலின் – நீ சாட்சி கூறாது பொய்யை மேற்கொண்டதால், ஆகுமோ அதுவே – உன்னால் இயலுமா

நற்றிணை 200, கூடலூர் பல்கண்ணனார், மருதத் திணை – தோழி குயவனிடம் சொன்னது, வாயிலாக வந்த பாணன் கேட்கும்படி
கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி,
யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்
‘சாறு’ என நுவலும் முதுவாய்க் குயவ!
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ,  5
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோய் ஆகி,
‘கை கவர் நரம்பின் பனுவல் பாணன்
செய்த அல்லல் பல்குவ, வை எயிற்று
ஐது அகல் அல்குல் மகளிர், இவன்  10
பொய் பொதி கொடுஞ்சொல் ஓம்புமின்’ எனவே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனால் விடப்பட்ட பாணன் இருப்பதை அறிந்த தோழி உரைத்தது.

பொருளுரை:   சரமாகக் கட்டிய கதிர் போன்ற ஒளியையுடைய நொச்சி மலர் மாலையைச் சூடி ஆறு கிடந்தாற்போன்ற அகன்ற நீண்ட தெருவில் ‘திருவிழா’ என்று அறிவிக்கும் அறிவு சான்ற குயவனே!  நெருக்கமாக ஆம்பல் மலர்கள் மலர்ந்த இனிய பெரிய வயல்களையும் குளங்களையும் உடைய ஊருக்குச் சென்று நீ அறிவிக்கும் பொழுது இதையும் சேர்த்துக் கொள்வாயாக.  கூர்மையான பற்களையும் மென்மையான அகன்ற அல்குலையும் உடைய மகளிரிடம், “விரும்புவதற்குக் காரணமான நரம்பையுடைய யாழை மீட்டிப் பாடும் பாணன் செய்த துன்பம் பல.  பொய் பேசி கொடுஞ்சொல் கூறுபவன்.  அவனிடமிருந்து நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்”.

குறிப்பு:  கண்ணி கட்டிய (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, H. வேங்கடராமன் உரை – அரும்பு தோன்றல், ஒளவை துரைசாமி உரை – கண்ணியிடத்தே வைத்துக் கட்டிய.  மேற்கோள்:  குறுந்தொகை 127 – ஒரு நின் பாணன் பொய்யனாக உள்ள பாணர் எல்லாம் கள்வர் போல்வர், ஐங்குறுநூறு 139 – நின்னினும் பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே.  மதுரைக்காஞ்சி 359 – யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்.  இலக்கணம்:   மாதோ – மாது, ஓ அசைநிலைகள், ஓம்புமின்  – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, எனவே – ஏகாரம் அசை நிலை, கதிர – அ சாரியை.

சொற்பொருள்:   கண்ணி கட்டிய – சரமாக கட்டிய, கதிர அன்ன – கதிர் போன்ற, ஒண் குரல் நொச்சி – ஒளியுடைய நொச்சி மலர்கள், தெரியல் சூடி – மாலையைச் சூடி, யாறு கிடந்தன்ன – ஆறு கிடந்தாற்போல், அகல் நெடுந்தெருவில் – அகன்ற நீண்ட தெருவில், சாறு என நுவலும் – திருவிழா என்று அறிவிக்கும், முதுவாய்க் குயவ – அறிவு சான்ற குயவனே, ஈதும் ஆங்கண் நுவன்றிசின் – இதையும் சேர்த்துக் கூறுவாயாக, மாதோ – மாது, ஓ – அசைநிலைகள், ஆம்பல் அமன்ற – ஆம்பல் மலர்கள் நெருங்கிய, தீம் பெரும் பழனத்துப் பொய்கை ஊர்க்கு – இனிய பெரிய வயலும் பொய்கையும் உடைய ஊரின்கண், போவோய் ஆகி – நீ செல்வாய் ஆகி, கை கவர் நரம்பின் – கை விரும்புவதற்கு காரணமாக உள்ள நரம்பை உடைய, பனுவல் பாணன் – பாடும் பாணன், செய்த அல்லல் – செய்த துன்பம், பல்குவ – மிக பல, வை எயிற்று – கூர்மையான பற்கள், ஐது அகல் அல்குல் – மென்மையான அகன்ற அல்குல், மகளிர் – பெண்கள், இவன் பொய் பொதி கொடுஞ்சொல் – பொய் பேசும் இந்தப் பாணனின் கொடிய சொற்கள், ஓம்புமின் – உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள், எனவே – என

நற்றிணை 213, கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார், குறிஞ்சித் திணை – தலைவன் தலைவியிடமும் தோழியிடமும் சொன்னது
அருவி ஆர்க்கும் பெருவரை நண்ணிக்,
கன்று கால்யாத்த மன்றப் பலவின்
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ்சுளைப் பெரும் பழம்
குழவிச் சேதா மாந்தி, அயலது
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்  5
பெருங்கல் வேலிச் சிறுகுடி யாது என
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லெனக்
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த
செங்கேழ் ஆடிய செழுங்குரல் சிறு தினைக்
கொய் புனம் காவலும் நுமதோ,  10
கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே?

பாடல் பின்னணி:   இயற்கைப் புணர்ச்சியின்பின் தலைவன் தோழியை மதி உடம்படுப்பானாய், தலைவியும் தோழியும் இருக்கும் இடத்திற்குச் சென்று, தலைவியையும் தோழியையும் நோக்கித், தான் புதியவன் போல் உரைத்தான்.

பொருளுரை:   உயர்ந்த அல்குலையும் பெருத்த தோளையுமுடைய மகளிரே! அருவி ஒலிக்கின்ற பெரிய மலையை அடைந்து, ஆவின் கன்றின் காலில் கட்டிய கயிறு பிணித்த பொது மன்றத்தில் உள்ள பலா மரத்தின் வேர்க்கு அருகில் தொங்கும் தழைத்த சுளைகளையுடைய பெரிய பழத்தை அக்கன்றின் சிவந்த நிற தாயானது தின்று, அருகில் உள்ள மூங்கில் நிறைந்த சிறிய மலையில் உள்ள நீரைப் பருகும் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள உங்கள் சிற்றூர் எது என நான் கேட்கவும் பதில் சொல்ல மாட்டீர்கள்!  அது இருக்க, இடி மின்னல் ஆகியவற்றின் தொகுதியால் மிகுதியான மழை விழுந்ததால், விளைந்த சிவந்த நிறம் பொருந்திய செழிப்பான கதிர்களையுடைய கொய்யத் தக்க சிறுதினையுடைய புனத்தின் காவல் தொழில் உங்களுடையதோ?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை –  ‘மெய்தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என்று தொடங்கும் நூற்பாவின்கண் ‘ஊரும் பேரும் கெடுதியும் பிறவும் நீரின் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும்’ என்றதன் உரையில் இதனைக் காட்டி, இஃது ஊர் வினாயது என்பர் இளம்பூரணர்; இஃது ஊரும் பிறவும் வினாயது என்பர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கன்றையுடைய சிவந்த பசு, பலாப்பழத்தைத் தின்று அயலிலுள்ள மலை நீரைப் பருகும் என்றது, தலைவியை முன்பே இயற்கைப்புணர்ச்சியில் கூடி இன்புற்ற தலைவன் தினைப்புனத்தில் பகற்குறியாகக் கூடி அவர்தம் சிறுகுடி இரவுக்குறியிலும் கூடித் தலைவியை நுகர்ந்து மகிழ்வான் என்பதனை உள்ளுறுத்திற்று.  மன்றப் பலவின் (2) – ஒளவை துரைசாமி உரை – மன்றத்தில் நிற்கும் பலா மரத்தின், H. வேங்கடராமன் உரை – மன்றம் போன்ற தழைத்த பலா மரத்தின்.  மன்றப் பலவின் – புறநானூறு 128, 375.  கருவி மா மழை (8) – H. வேங்கடராமன் உரை – மின்னல் இடி முதலிய தொகுதிகளையுடைய மேகம்.  குழவி (4) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).  தோளீரே – ஏகாரம் அசை நிலை.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).

சொற்பொருள்:   அருவி ஆர்க்கும் பெருவரை நண்ணி – அருவி ஒலிக்கின்ற பெரிய மலையை அடைந்து, கன்று கால்யாத்த மன்றப் பலவின் வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ்சுளைப் பெரும்பழம் – ஆவின் கன்றின் காலில் கட்டிய கயிறு பிணித்த பொது மன்றத்தில் உள்ள பலா மரத்தின் வேர்க்கு அருகில் தொங்கும் தழைத்த சுளைகளையுடைய பெரிய பழம், குழவிச் சேதா மாந்தி – அக்கன்றின் சிவந்த நிற தாய்ப் பசுவானது தின்று, அயலது வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் – அருகில் உள்ள மூங்கில் நிறைந்த சிறிய மலையில் உள்ள நீரைப் பருகும், பெருங்கல் வேலிச் சிறுகுடி யாது என சொல்லவும் சொல்லீர் – பெரிய மலைகள் சூழ்ந்துள்ள உங்கள் சிற்றூர் எது என நான் கேட்கவும் பதில் சொல்ல மாட்டீர்கள், ஆயின் – அது கிடக்க, கல்லெனக் கருவி மா மழை வீழ்ந்தென – இடி மின்னல் ஆகியவற்றின் தொகுதியால் மிகுதியான மழை விழுந்ததால், எழுந்த செங்கேழ் ஆடிய செழுங்குரல் சிறு தினைக் கொய் புனம் காவலும் நுமதோ – விளைந்த சிவந்த நிறம் பொருந்திய செழிப்புடையக் கதிர்களையுடைய கொய்யத் தக்க சிறுதினையுடைய புனத்தின் காவல் தொழில் உங்களுடையதோ, கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே – உயர்ந்த அல்குலையும் பெருத்த தோளையுமுடைய மகளிரே

நற்றிணை 220, குண்டுகட் பாலியாதனார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் கூறியது
சிறு மணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக்,
குறு முகிழ் எருக்கங்கண்ணி சூடி,
உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்
பெரிதும் சான்றோர் மன்ற, விசி பிணி  5
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,
ஊரேம் என்னும் இப் பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின், தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே.  10

பாடல் பின்னணி:  தலைவன் ஆற்றானாய்க் கூறியது அல்லது தோழி தலைவியிடம் கூறியது.  ஒளவை துரைசாமி உரை – தலைமகனுடைய இக்கூற்றின்கண், தான் மடலேறக்கருதுவதையும், தோழியைத் தனக்கு உயிர்த்துணையாகத் தலைமகள் குறித்ததற்கு மாறாக அயலார் போன்று ஒழுகுதல் அவட்கு அறமன்று எனத் தலைவிக்கும் தனக்குமுள்ள முன்னுறவை உய்த்துணர வைத்து உடம்படுவிக்கும் திறத்தையும் கண்ட புலவர் பாலியாதனார் இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார்.

பொருளுரை உணவு உண்ணாத பனை மடலால் செய்த நல்ல குதிரைக்குச் சிறிய மணிகளைக் கோர்த்து அணிந்து, பெரிய கச்சினை அதன் உடலில் போர்த்தி, சிறிய அரும்புகளைக் கொண்ட எருக்க மலர் மாலையைச் சூடி, தெருவிற்கு வந்தால், எம்முடன் தெருவில் திரியும் சிறுவர்கள் கண்டிப்பாக மிகுந்த அறிவுடையவர்கள் ஆவார்கள்.  இறுக்கமாகப் பிணித்துக் கட்டிய முழவின் கண் உலராத அளவிற்குத் தொடர்ந்து விழாக்கள் உடைய இங்கு, ‘இந்த ஊரினர் நாங்கள்’ என்று கூறும் பெரிய மகிழ்ச்சியையுடைய அவர்கள் உலக நடை அறிந்திருப்பார்கள் ஆயின், இனிமையான சொற்களையும், கயல் மீன் போன்ற மையிட்ட கண்களையுமுடைய இளைய பெண்ணிற்கு, அவளுடைய தோழி அயலோள் ஆகுவள் என்ற எம் கருத்திற்கு ஒத்துப் பேசுவார்கள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – முற்றியலுகரமும் மொழி சிதைத்துக் கொளாஅ நிற்றல் இன்றே ஈற்று அடி மருங்கினும் (தொல்காப்பியம், செய்யுளியல் 8) என்பதன் உரையில் ‘முழவு முகம் புலரா’ என்று பாடங்கொண்டு அமைதி கூறுவார் பேராசிரியர்.   எருக்கங்கண்ணி சூடி (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைமகன் சூடுவது.  ஊரேம் என்னும் இப் பேர் ஏமுறுநர் (6) – ஒளவை துரைசாமி உரை – யாவிரென வினவுவோர்க்கு இவ்வூரினேம் என்று சொல்லிப் பெருமகிழ்ச்சிக் கொள்ளும் சிறுவர்கள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இவ்வூரினேம் என்று கூறும் பெரிய மயக்கமுடையவர்கள் தாம்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  உண்ணா நல்மா – வெளிப்படை, பனை மடலினால் செய்த உணவு உண்ணாத நல்ல குதிரை.

சொற்பொருள்:  சிறு மணி தொடர்ந்து – சிறிய மணிகளைக் கோர்த்து, பெருங்கச்சு நிறீஇ – பெரிய கச்சினை உடலில் போர்த்தி, குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி – சிறிய அரும்புகளைக் கொண்ட எருக்க மலர் மாலையை நான் சூடி, உண்ணா நல் மாப் பண்ணி – உணவு உண்ணாத பனை மட்டையால் செய்த நல்ல குதிரை, எம்முடன் மறுகுடன் திரிதரும் – எம்முடன் தெருவில் திரியும், சிறு குறுமாக்கள் – சிறுவர்கள், பெரிதும் சான்றோர் – மிகுந்த அறிவுடையவர்கள், மிகுந்த மகிழ்ச்சியை உடையவர்கள்,  மன்ற – கண்டிப்பாக, விசி பிணி முழவு – இறுக்கமாகக் கட்டிய முழவு, கண் புலரா – கண் உலராத, விழவுடை ஆங்கண் – விழாக்கள் உடைய அங்கே, ஊரேம் என்னும் – இந்த ஊரினர் நாங்கள் என்று கூறும், இப் பேர் ஏமுறுநர் – இப்பெரிய மயக்கமுடையவர்கள், தாமே ஒப்புரவு அறியின் – அவர்கள் உலக நடை அறிந்திருப்பார்கள் ஆயின், தேமொழி – இனிமையான சொற்கள், கயல் ஏர் – கயல் மீன் போன்ற, உண்கண் குறுமகட்கு – மையிட்ட கண்களையுடைய இளைய பெண்ணிற்கு, அயலோர் ஆகல் என்று – அவளுடைய தோழி அயலோள் ஆகுவள் என்று, எம்மொடு படலே – எம் கருத்திற்கு ஒத்து பேசுகின்றனர்

நற்றிணை 222, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கருங்கால் வேங்கைச் செவ்வீ வாங்கு சினை
வடுக் கொளப் பிணித்த விடுமுரி முரற்சிக்
கை புனை சிறு நெறி வாங்கி பையென,
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று
பசுங்காழ் அல்குல் பற்றுவன் ஊக்கிச்  5
செலவுடன் விடுகோ தோழி, பலவுடன்
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சுபட காணாது
பெருங்களிறு பிளிறும் சோலை அவர்
சேண் நெடுங்குன்றம், காணிய நீயே.  10

குறிப்பு:  பாடல் பின்னணி:  தலைவன் வரைவு அறிந்து உரைத்தது.  வரைவு கடாயது.

பொருளுரை:   தோழி! அவருடைய அழகிய மலை வாழை மரங்களையும், பலா மரங்களையும் உயரமான சுரபுன்னை மரங்களையும் உடையது.  அங்குத் துயிலும் பெண் யானையை மேகம் மறைத்துள்ளது. தன் பெண் யானையைக் காணாத ஆண் யானை பிளிறுகின்றது.  அவருடைய மலையைக் கண்டால் உன்னுடைய துயரம் தணியும்.  கரிய அடிப்பகுதியை உடைய சிவந்த மலர்களையுடைய வேங்கை மரத்தின் அழகிய வளைந்த கிளைகளில் வடு ஏற்படும் படி இறுக்கமாகப் பின்னப்பட்ட கயிற்றினால் செய்த சிறிய ஊஞ்சலில் நீ அமர்ந்தால் அதை இழுத்து மெல்ல ஆட்டுவேன். உன் அடி வயிற்றின் மேல் கிடக்கும் பொன்னால் ஆகிய வடத்தைப் பற்றி ஆட்டும் பொழுது நீ ஆகாயத்தில் பறக்கும் அழகிய மயிலைப் போல் விளங்குவாய்.  அவ்வாறு ஊஞ்சலை ஆட்டும் பொழுது தொலைவில் உள்ள உன் தலைவரின் மலையைக் காண்பாயாக.

உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – சிலம்பின்கண் துஞ்சுகின்ற பிடியை மஞ்சு பரந்து மறைத்தமையின், களிறு அறியாது பிளிறி வருந்தும் என்றது, மனையின் கண் நின்னை நினைத்திருக்கும் தலைமகள் இற்செறிப்புண்டாளாகலின் அதனை அறியாது நீ கொன்னே இவண் போந்து நின்று வறிதே வருந்துகின்றனை என உள்ளுறுத்தவாறு.

சொற்பொருள்:   கருங்கால் – கரிய அடிப்பகுதி,  வேங்கை – வேங்கை மரம், செவ்வீ – சிவந்த மலர்கள், வாங்கு சினை – வளைந்தக் கிளை, வடுக் கொள – வடு ஏற்படும் மாதிரி, பிணித்த – கட்டிய, விடு புரி முரற்சி – இறுக்கமாக பின்னப்பட்ட கயிறு, கை புனை – கையால் செய்த, சிறு நெறி – சிறிய ஊஞ்சல்,  வாங்கி – இழுத்து, பையென – மெதுவாக, விசும்பு – வானம், ஆடு – ஆடு, ஆய் – அழகிய,  மயில் கடுப்ப – மயிலைப் போன்று, யான் – நான், இன்று – இன்று,  பசுங்காழ் – பொன் மேகலை, அல்குல் – இடுப்புக்கு கீழே உள்ள பகுதி, பற்றுவனன் ஊக்கி – பற்றிக்கொண்டு தள்ளி விட்டு,  செலவுடன் – சென்றால், விடுகோ – தள்ளி, தோழி – தோழி, பலவுடன் – பலா மரங்களுடன்,  வாழை – வாழை மரங்கள், ஓங்கிய வழை – உயர்ந்த சுரபுன்னை மரங்கள், அமை சிலம்பில் – திருத்தமான மலையில், துஞ்சு – துயிலும், பிடி – பெண் யானை, மருங்கின் – அருகில்,  மஞ்சு பட காணாது – மஞ்சு உள்ளதால் காண முடியாமல்,  பெருங்களிறு பிளிறும் – பெரிய ஆண் யானை பிளிரும், சோலை – சோலை, அவர் – அவர், சேண் – தொலைவில் உள்ள,  நெடுங்குன்றம் – உயர்ந்தக் குன்றம், காணிய நீயே – பார் நீயே

நற்றிணை 227, தேவனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
அறிந்தோர் ‘அறன் இலர்’ என்றலின், சிறந்த
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே;
புன்னையம் கானல் புணர் குறி வாய்த்த
பின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ!
படுமணி யானைப் பசும்பூண் சோழர்  5
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்,
கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத்
தேர் வழங்கு தெருவின் அன்ன,
கௌவை ஆகின்றது ஐய, நின் அருளே.

பாடல் பின்னணி:  வரையாது களவுப் புணர்ச்சியையே கருதி வந்து ஒழுகும் தலைவனிடம் தோழி கூறியது.  வரைவு கடாயது.

பொருளுரை:   ஐயனே! புன்னை மரங்கள் உடைய கானலில் புணர்தற்கு நீ கூறிய குறியிடம் வந்து நின்ற, பின்னிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழிக்கு நீ காட்டிய அருள், ஒலிக்கும் மணிகளையுடைய யானைகளையுடைய பசிய அணிகலன்களை அணிந்த சோழரின் கொடிகள் அசையும் தெருக்களையுடைய ஆர்க்காட்டில், கள்ளுடைய பானைகளில் வண்டு ஒலித்து நீங்காத தேர்கள் செல்லும் தெருவைப் போன்று பெரிய ஆரவாரம் ஆகிவிட்டது.  ‘அறிந்தவர் என்று கூறும் அவர் அறநெறியில் நிற்பவர் அல்லர்’ என்ற பழிச்சொல் எங்கும் பரவியது.  அவளுடைய இனிய உயிர் போனாலும் பெரும் துன்பத்தைத் தருகின்ற தன்மையுடையது.  ஐயோ!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – புன்னையங்கானல் கூறினமையின் இது பகற்குறி என்க.  அறிந்தோர் (1) – ஒளவை துரைசாமி உரை – களவும் கற்புமாகிய கைகோளின் அறப்பண்பை அறிந்தவர்.  தேர் வழங்கு தெரு: – அகநானூறு 16 – தேர் வழங்கு தெருவில், நற்றிணை 227 – தேர் வழங்கு தெருவின், மதுரைக்காஞ்சி 648 – தேர் வழங்கு தெருவில்.

சொற்பொருள்:   அறிந்தோர் – அறிந்தவர், அறன் இலர் என்றலின் – அவர் அறம் இல்லாதவர் என்றதால் (அறன் – அறம் என்பதன் போலி), சிறந்த இன் உயிர் கழியினும் – இனிய உயிரைத் துறந்தாலும், நனி இன்னாதே – துன்பம் மிகுதியானது, புன்னையம் கானல் புணர் குறி வாய்த்த – புன்னை மரங்கள் நின்ற கானலில் புணர்தற்கு நீ கூறிய குறியிடம் வந்து நின்ற, பின் ஈர் ஓதி என் தோழிக்கு – பின்னிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழிக்கு, அன்னோ – ஐயோ, படுமணி யானைப் பசும்பூண் சோழர் கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு – ஒலிக்கும் மணிகளையுடைய யானைகளையுடைய பசிய அணிகலன்களை அணிந்த சோழரின் கொடிகள் அசையும் தெருக்களையுடைய ஆர்க்காட்டில், ஆங்கண் – அங்கே, கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து கள்ளுடைய பானைகளில் வண்டு ஒலித்து, ஓவாத் தேர் வழங்கு தெருவின் அன்ன – விடாமல் தேர்கள் செல்லும் தெருவைப் போன்று, கௌவை ஆகின்றது – அலர் ஆகின்றது, ஐய – ஐயனே, நின் அருளே – உன்னுடைய அருள்

நற்றிணை 231, இளநாகனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழுமீன் போல,
பெருங்கடற் பரப்பின் இரும் புறம் தோயச்,
சிறுவெண்காக்கை பலவுடன் ஆடும்
துறை புலம்பு உடைத்தே தோழி, பண்டும்  5
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,
பெரும் போது அவிழ்ந்த கருந்தாள் புன்னைக்
கானல் அம் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்காமாறே.

பாடல் பின்னணி:  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தலைவியின் கூற்றைத் தோழி தன் கூற்றாகக் கொண்டு உரைத்தது.  வரைவு கடாயது.

பொருளுரை:   இதற்கு முன்னும், ஊர்க்குருவியின் முட்டையை உடைத்தாற் போன்று தோன்றும், பெரிய அரும்புகளிலிருந்து மலர்ந்த பூக்களையுடைய, கரிய அடியையுடைய புன்னை மரங்களையுடைய கடற்கரையின் தலைவன் கொடுத்த காதல் நம்மை விட்டு நீங்காமையாலே, குற்றமற்று விளங்கும் நீலமணியின் நிறத்தையுடைய வானத்தில் கையால் தொழப்படும் ஏழு விண்மீன்களைப் போல, பெரிய கடற் பரப்பின்கண் கரிய முதுகு நனையும்படி சிறிய வெள்ளை நீர்க்காக்கை ஒருசேர குடையும் துறையானது, இன்னாமை உடையதாக உள்ளதே, தோழி!

குறிப்பு:  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சிறுவெண்காக்கை தாம் ஆணும் பெண்ணும் பல ஒருசேர ஆடுதலை நோக்கினகாலை நாமும் அங்ஙனம் ஆடற்கில்லையே என வருந்தாநிற்கும் என்றதாம்.  எழுமீன் (2) – ஒளவை துரைசாமி உரை – சாலி என்னும் விண்மீன் கூட்டம், எழுகின்ற மீன் என்னாது ஏழாகிய மின் கூட்டத்தோடே காணப்படும் வடமீன், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உத்திரதுருவத்தை சூழ்ந்து வரும் ஏழு முனிவர் எனப்படும் எழுமீன்கள்.  உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன பெரும் போது அவிழ்ந்த – ஒளவை துரைசாமி உரை – புன்னையின் மலர்ந்த பூ ஊர்க்குருவியின் முட்டை உடைந்தாற்போல்வது.  குரீஇ – அளபெடை, நீங்காமாறே – ஏ – அசை நிலை.

சொற்பொருள்:   மை அற விளங்கிய மணி நிற விசும்பில் – குற்றமற்று விளங்கிய நீலமணியின் நிறத்தையுடைய வானத்தில், கைதொழும் மரபின் எழுமீன் போல – கையால் தொழப்படும் ஏழு விண்மீன்களைப் போல, பெருங்கடற் பரப்பின் இரும் புறம் தோயச் சிறுவெண்காக்கை பலவுடன் ஆடும் துறை – பெரிய கடற் பரப்பின்கண் கரிய முதுகு நனையும்படி சிறிய வெள்ளை நீர்க்காக்கை ஒரு சேர குடையும் துறை, புலம்பு உடைத்தே – இன்னாமை உடையதாக உள்ளதே (உடைத்தே – ஏ அசை நிலை), தோழி – தோழி, பண்டும் உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன – இதற்கு முன்னும் ஊர்க்குருவியின் முட்டையை உடைத்தாற் போன்று, பெரும் போது அவிழ்ந்த கருந்தாள் புன்னைக் கானல் அம் கொண்கன் – பெரிய அரும்பு மலர்ந்த கரிய அடியையுடைய புன்னை மரங்களையுடைய கடற்கரையின் தலைவன், தந்த காதல் நம்மொடு நீங்காமாறே – கொடுத்த காதல் நம்மை விட்டு நீங்காமையாலே (நீங்காமாறே – ஏ அசை நிலை)

நற்றிணை 239, குன்றியனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
ஞான்ற ஞாயிறு குட மலை மறைய,
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
காமர் சிறுகுடிச் செல் நெறி வழியின்,  5
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்
மல்லல் இருங்கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டு அன்றோ இலமே; ‘முன் கை
வார் கோல் எல் வளை உடைய வாங்கி  10
முயங்கு’ எனக் கலுழ்ந்த இவ் ஊர்
எற்று ஆவது கொல், யாம் மற்றொன்று செயினே?

பாடல் பின்னணி:  களவில் வந்தொழுகும் தலைவன் வரையாது இருந்தான்.  அவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி, அவனை மணம் புரியத் தூண்டுவாளாய் உரைத்தது.

பொருளுரை:   மாலை நேரத்தில் வானில் இறங்கிய கதிரவன், மேற்கு திசையில் மறைந்தது.  மீனவர்கள் கள் குடித்து மகிழ்ந்தனர்.  பிடித்த பெரிய மீன்களை எளிதாக விற்றனர்.  நண்டுகள் விளையாடும் மீன் நாற்றமுடைய மணலில் உள்ள அவர்களது அழகிய சிறுகுடியில், வீட்டு முற்றங்களில் உள்ள ஒழுங்கான வழிகளில் நீலமணிகளைப் போன்ற குவளை மலர்கள் குவிந்துக் கிடக்கும்.  மெல்லிய இதழ்களையுடைய அந்த மலர்களை மிதித்தவண்ணம் செல்கின்றான் வளமான உப்பங்கழியை உடைய நெய்தல் நிலத் தலைவன்.  அவன் மனதிற்கு பொருந்தும்படியாக நாம் நடக்கவில்லை.  நெடிய வேலைப்பாட்டுடன் உள்ள ஒளியுடைய வளையல்களை முன்னம் கையில் அணிந்த உன்னை ‘வளையல்கள் உடையுமாறு அவனை அணைத்து இணைவாயாக’  என்று அழுகின்றது இந்த ஊர்.  நாம் அவனுக்கு பொருந்திய செயல்களை செய்தால் என்ன ஆகும்?

குறிப்பு:  பூத் தப மிதிக்கும் (7) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கெடுமாறு மிதித்துச் செல்கின்றார் நம் தலைவர், ஒளவை துரைசாமி உரை – செல்வோர் கால்பட்டு மிதியுண்டு கெடும்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – குடித்து மயங்கிய பரதவர் தாம் பெற்ற பெரிய மீனை எளிதில் விற்று நீலமலரை மிதித்துச் செல்வர் என்றது, காமத்தால் மயக்கமுற்ற தலைவன் மணம்புரி கொடையாய் மிகுதியான பொருள் தந்து தலைவியைப் பெற்றவனாய் அயலார் எடுத்த அலர்மொழியெல்லாம் தாழ மிதித்து அடக்கித் தன் ஊருக்கு உடன்கொண்டு பெயர்வான் என்பதனை உள்ளுறுத்திற்று.

சொற்பொருள்:   ஞான்ற – இறங்கிய, சாய்ந்த, ஞாயிறு – கதிரவன், குடமலை மறைய – மேற்கு திசையில் மறைய, மான்ற மாலை – மயங்கிய மாலை வேளையில், மகிழ்ந்த பரதவர் – மகிழ்ந்த மீனவர்கள், இனிது – இனிமையாக, பெறு பெரு மீன் – பெற்றப் பெரிய மீனை, எளிதினின் மாறி – எளிதாக விற்று, அலவன் ஆடிய – நண்டு ஆடிய, புலவு மணல் – நாற்றமுடைய மணல், முன்றில் – வீட்டு முற்றத்தில், காமர் சிறுகுடி – அழகியச் சிறுகுடி,  செல்நெறி வழியின் – செல்லும் ஒழுங்கான வழியின், ஆய் மணி – அழகிய நீலமணி, பொதி அவிழ்ந்தாங்கு – குவியலாக இருப்பதுப் போன்று, நெய்தல் – குவளை மலர்கள், புல் இதழ் பொதிந்த பூ – மெல்லிய இதழ்களை உடைய மலர்களை, தப மிதிக்கும் – மிதித்தவண்ணம், மல்லல் – வளமான, இருங்கழி – உப்பு நீரை உடைய இடத்தில், மலி – நிறைந்த, நீர்ச் சேர்ப்பற்கு – நெய்தல் நிலத் தலைவனுக்கு, அமைந்து தொழில் கேட்டன்றோ – மனம் பொருந்தும் வழியில் கேட்க, இலமே – இல்லை, முன்கை – முன் கை, வார் – நெடிய, கோல் – உருண்ட, வேலைப்பாட்டுடன் செய்யப்பட்ட,  எல் வளை  – ஒளி பொருந்திய வளையல்கள், உடைய – உடையுமாறு, வாங்கி – தழுவி, முயங்கு – இணைவாய், என – என்று, கலுழ்ந்த இவ் ஊர் – அழுகின்றது இந்த ஊர், எற்று ஆவது கொல் – என்ன ஆவது, யாம் மற்றொன்று செயினே – நான் வேறு ஒன்றும் செய்தால்

நற்றிணை 242 விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,
புதல் இவர் தளவம் பூங்கொடி அவிழப்,
பொன் எனக் கொன்றை மலர மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ்சினை கஞலக்,
கார் தொடங்கின்றே; காலை வல் விரைந்து  5
செல்க பாக நின் தேரே! உவக்காண்!
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓடக்,
காமர் நெஞ்சமொடு அகலா,
தேடூஉ நின்ற இரலை ஏறே.  10

பாடல் பின்னணி:  வினைமுற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் கூறியது.

பொருளுரை:   மழைக்காலம் தொடங்கிய இந்த வேளையில் இலைகள் இல்லாத பிடவம் மென்மையான மலர்களைத் தரும் அரும்புகளை ஈன்றுள்ளது. புதர்களின் மேல் படர்ந்திருக்கும் தளவத்தின் கொடிகளில் மலர்கள் பூத்துள்ளன.  பொன்னைப் போன்ற கொன்றை மலர்கள் மலர்ந்துள்ளன.  நீலமணியைப் போன்று நிறையக் காயா மலர்கள் குறுகிய மரக் கிளைகளில் பூத்துள்ளன.  மிகவும் விரைவாக உன் தேரை ஓட்டுவாயாக, பாகனே!  அங்கே பார்!
கழி நீர் பெயர்ந்த களர் நிலத்தில் விழித்த கண்களையுடைய தன் குட்டியுடன் ஒரு பெண் மான் தன் கூட்டத்திலிருந்து பிரிந்து ஓட, அதனுடைய ஆண் மான் காதல் நெஞ்சுடன் அதைத் தேடுகின்றது.

குறிப்பு:  இல – இல்லை என்பதன் விகாரம், இனன் – இனம் என்பதன் போலி.

சொற்பொருள்:   இலை இல பிடவம் – இலைகள் இல்லாத பிடவம், ஈர் மலர் அரும்ப – குளிர்ச்சியான மலர்களைத் தரும் அரும்புகளை ஈன, மென்மையான மலர்களைத் தரும் அரும்புகளை ஈன, புதல் இவர் தளவம் – புதர் மேல் படர்ந்திருக்கும் தளவம், பூங்கொடி அவிழ – மலர்க் கொடிகள் மலர, பொன் எனக் கொன்றை மலர – பொன்னைப் போன்று கொன்றை மலர்கள் மலர்ந்திருந்தன, மணி எனப் பல் மலர் காயா – நீலமணியைப் போன்று பல காயா மலர்கள் பூத்தன, குறுஞ்சினை – குறுகிய மரக்கிளைகளில், கஞல – நெருங்கி இருந்தன, கார் தொடங்கின்றே காலை – மழைக்காலம் தொடங்கிய காலம், வல் விரைந்து செல்க பாக – மிக வேகமாக ஓட்டிச் செல்வாயாகப் பாகனே, நின் தேரே – உன் தேரை, உவக்காண் – அங்கே பார், கழிப் பெயர் களரில் – கழி நீர் பெயர்கின்ற களர் நிலத்தில், கழி நீர் பெயர்ந்த களர் நிலத்தில், போகிய மட மான் – சென்ற பெண்மான், விழிக் கட் பேதையொடு – விழித்த கண்களையுடைய தன் குட்டியுடன், மருண்ட கண்களையுடைய தன் குட்டியுடன், இனன் இரிந்து ஓட – தன்னுடைய கூட்டத்தினின்று பிரிந்து ஓட, காமர் நெஞ்சமொடு – காதல் நெஞ்சுடன், அன்பு நெஞ்சத்துடன், அகலா – செல்லாத, தேடூஉ நின்ற – தேடி நின்ற, இரலை ஏறே – ஆண் மான்

நற்றிணை 249, உலோச்சனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகந்தொறும்;
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந்தாது உதிரப்,
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்  5
வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇப்,
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்,
மல்லல் அம் சேரி கல்லெனத் தோன்றி,
அம்பல் மூதூர் அலர் எழ  10
சென்றது அன்றோ, கொண்கன் தேரே?

பாடல் பின்னணி:  வரைவதற்குப் பொருள் தேடிப் பிரிந்தான் தலைவன்.  வருந்திய தலைவி உரைத்தது.

பொருளுரை:   இரும்பைப் போன்ற கரிய கிளைகளையுடைய புன்னை மரங்களில் உள்ள இலைகள் நீலமணிகளைப் போல் பசுமையாக உள்ளன. புன்னை மரங்களின் மலர்கள் வெள்ளியைபோன்ற நிறத்தை உடையன.  அம் மலர்களுக்கு நடுவில் உள்ள உதிரும் நறுமணம் நிறைந்த பூந்தாதுக்கள் பொன்னை ஒத்து இருந்தன. புலியின் புள்ளிகளையும், முதுகில் அழகிய நிறங்களுடன் உள்ள வரிகளையும் கொண்ட வண்டுகள் நறுமணம் மிகுந்த புன்னை மலர்களை மொய்த்து மிகுந்த ஒலியுடன் ரீங்காரமிட்டன.  தலைவனின் தேரில் இணைக்கப்பட்ட குதிரை அந்த ஒலியைக் கேட்டு அது புலியின் உறுமல் என்று நினைத்து அஞ்சி, வலிமை மிக்கக் கால்களுடன் பந்து போல் தாவி, கட்டுக்கு அடங்காமல் வேகமாகச் சென்றது அல்லவோ?  பழமையான எங்கள் ஊரில் உள்ள, வளம் நிறைந்த தெருவில், வம்புப் பேச்சு தோன்றியது.  இவ்வாறு பழி எழுமாறு சென்று விட்டானே நெய்தல் நிலத் தலைவன்!

குறிப்பு:  பூ நாறு குரூஉச் சுவல் (5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அழகு விளங்கிய நல்ல நிறமுற்ற மேற்புறத்தையுடைய (வண்டுகள்), ஒளவை துரைசாமி உரை – பூவின் மணம் கமழும் நிறம் பொருந்திய மணல் மேடு.

சொற்பொருள்:   இரும்பின் அன்ன – இரும்பைப் போன்ற கரிய நிறம் (இரும்பு அன்ன, இரும்பின் – இன் சாரியை), கருங்கோட்டுப் புன்னை – கருமையான கிளைகளை உடைய புன்னை மரங்கள் – நாகம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, நீலத்து அன்ன – நீல மணியைப் போல், பாசிலை – பசுமையான இலைகள் (நீலத்து – நீலம், அத்து சாரியை), அகம் தொறும் – அதன் மீது, வெள்ளி அன்ன – வெள்ளியைப் போன்று, விளங்கு இணர் – விளங்கும் மலர் கொத்துக்கள், நாப்பண் – நடுவே, பொன்னின் அன்ன – பொன்னைப் போன்ற,  நறுந்தாது உதிர – நறுமணமுள்ள தாது உதிரும், புலிப் பொறிக் கொண்ட – புலியின் பொறியைக் கொண்ட, பூ நாறு – பூ மணக்கும், குரூஉச் சுவல் – நிறமுடைய முதுகுடைய (அளபெடை), வரி வண்டு – வரியுடைய வண்டுகள், ஊதலின் – ஊதுவதால், புலி செத்து – அது புலி என்று நினைத்து, வெரீஇ – அஞ்சி (அளபெடை), பரியுடை வயங்கு தாள் – குதிரையின் வேகமான வலிமை மிக்கக் கால்கள், பந்தின் தாவ – பந்தைப் போன்று தாவ (பந்தின் – இன் உருபு ஒப்புப் பொருளது), தாங்கவும் – கட்டுப்படுத்தவும், தகை – நிறுத்தவும், வரை – எல்லை, நில்லா – நிற்காமல், ஆங்கண் – அங்கே, மல்லல் அம் சேரி – வளம் மிகுந்த தெரு, கல்லெனத் தோன்றி – ஒலியுடன் தோன்றியது, அம்பல் – வம்புப் பேச்சு, மூதூர் – பழமையான ஊர், அலர் எழ – பழி எழ, சென்றது அன்றோ – சென்று விட்டது அல்லவா, கொண்கன் தேரே – நெய்தல் நிலத்தலைவனின் தேர்

நற்றிணை 258, நக்கீரர்நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பல் பூங்கானல் பகற்குறி மரீஇச்
செல்வல் கொண்க! செறித்தனள் யாயே,
கதிர் கால் வெம்பக் கல் காய் ஞாயிற்றுத்
திருவுடை வியல் நகர் வருவிருந்து அயர்மார்,
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த  5
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட,
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப்பட்டினத்து அன்ன இவள் 10
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே.

பாடல் பின்னணி:  பகற்குறி வந்த தலைவனிடம் தலைவியை அன்னை இற்செறித்து காவலுட்படுத்தினாள் என்று கூறி வரைவு கடாயது.

பொருளுரை:   நெய்தல் நிலத் தலைவனே! பல மலர்களையுடைய கானலிடத்தே, உன்னிடம் கூறுவதற்காக நான் பகற்குறியிடம் வந்து, இப்பொழுது இல்லம் திரும்புகிறேன்.

கதிர்கள் தாக்கியதால் மக்களின் கால்கள் வெம்பும்படி கீழ்த் திசையின் மலையில் தோன்றிய கதிரவன் இயங்கும் வேளையில், செல்வம் மிகுந்த இல்லத்தின்கண் வரும் விருந்தினரை ஓம்புவதற்குப் பொன்னால் செய்த வளையல்களை அணிந்த பெண்கள் சமைத்து புறங்கடையில் எறிந்த, கொக்கின் கால் நகம் போன்ற சோற்றை உண்டு, பொழுது மறையும் மாலை நேரத்தில், அகன்ற கடையின் அசையும் நிழலில் குவித்த, பச்சை இறாமீனைக் கவர்ந்து உண்ட பச்சைக் கண்ணையுடைய காக்கை, அசையும் கப்பலின் கம்பத்தில் போய்ச் சேரும், மருங்கூர்ப்பட்டினத்தைப் போன்ற அழகுடைய இவளின் நெருங்க அணிந்த ஒளியுடைய வளையல்கள் கழன்று ஓடுவது கண்டு, தாய் அவளை மனையின்கண் செறித்தாள்.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மகளிரிட்ட பலிச்சோற்றை உண்ட காக்கை, அங்காடியில் இறா மீனைக் கவர்ந்து கூம்பில் சென்று தங்கும் என்றது, பாங்கற் கூட்டத்தில் தலைவியுடன் இன்பம் துய்த்துப் பின் பாங்கியிற் கூட்டத்திலும் கூடி இன்புற்ற தலைவன் சிறிதும் மனக் கவற்சியின்றித் தன்னூர் சென்றான் என்பதை உள்ளுறுத்தி நிற்கும்.  வரலாறு:  மருங்கூர்ப்பட்டினம்.  கொக்கு உகிர் நிமிரல் – புறநானூறு 395, 398.  Natrinai 258, 281, 293, 343 and 367 have references to food offerings to crows.  கல் காய் ஞாயிற்று (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கீழ்த்திசையில் தோன்றிக் காய்கின்ற ஞாயிற்றுனுடைய, H.வேங்கடராமன் உரை – கற்களும் வெடிப்புறும்படி ஞாயிறு தாக்குவதாலும்.  எல் பட (6) – ஒளவை துரைசாமி உரை – பொழுது மறையும் மாலையில், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பொழுது படும்பொழுதில்,  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பொழுது சாயும் வேளையில்.

சொற்பொருள்:  பல் பூங்கானல் பகற்குறி மரீஇ – பல மலர்களையுடைய கானலிடத்தே பகற்குறியிடம் நான் வந்து, செல்வல் – மனைக்குச் செல்கின்றேன், கொண்க – நெய்தல் நிலத் தலைவனே, செறித்தனள் யாயே – தாய் அவளை மனையின்கண் செறித்தாள், கதிர் – கதிர்கள், கால் வெம்ப – மக்களின் கால்கள் வெப்பத்தால் வெம்பும்படி, கல் காய் ஞாயிற்று – கீழ்த் திசையின் மலையில் தோன்றி கதிரவன் காயும் வேளையில், திருவுடை வியல் நகர் வருவிருந்து அயர்மார் – செல்வம் மிகுந்த இல்லத்தின்கண் வரும் விருந்தினரை ஓம்புவதற்கு, பொற்றொடி மகளிர் – பொன்னால் செய்த வளையல்களை அணிந்த பெண்கள், புறங்கடை உகுத்த – புறங்கடையில் எறிந்த, கொக்கு உகிர் நிமிரல் மாந்தி – கொக்கின் கால் நகம் போன்ற சோற்றை உண்டு, எல் பட – பொழுது மறையும் வேளையில், மாலை நேரத்தில், அகல் அங்காடி அசை நிழல் குவித்த – அகன்ற கடையின் அசையும் நிழலில் குவித்த, பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை – பச்சை இறாமீனைக் கவர்ந்த பச்சைக் கண்ணையுடைய காக்கை, தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும் – அசையும் கப்பலின் கம்பத்தில் போய் சேரும், மருங்கூர்ப்பட்டினத்து அன்ன – மருங்கூர்ப்பட்டினத்தைப் போன்ற, இவள் – இவளின், நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே – நெருங்க அணிந்த ஒளியுடைய வளையல்கள் கழன்று ஓடுவது கண்டு

நற்றிணை 261, சேந்தன் பூதனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது அல்லது தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அருளிலர், வாழி தோழி, மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெஞ்சுடர் கரந்த கமஞ்சூல் வானம்,
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகித்
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்துக்,  5
களிறு அகப்படுத்த பெருஞ்சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேங்கமழ் விடர் முகை,
எருவை நறும் பூ நீடிய
பெருவரைச் சிறுநெறி வருதலானே. 10

பாடல் பின்னணி:  தோழி இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது.  தலைவனை இகழ்ந்த தோழியிடம் தலைவி கூறியதுமாம்.

பொருளுரை:   நீ நீடு வாழ்வாயாக தோழி! அருள் இல்லாதவர் நம் தலைவர், மின்னல் பிளந்து இருள் நிறைந்த வானில் அதிர்கின்ற இடியோடு ஞாயிறு தோன்றாதபடி அதை மறைத்த சூலுடைய (நீர் நிறைந்த) முகில் நெடிய பல மலையிடத்து சிறிய பலவாக இயங்கி, குற்றமற்ற பெருமழை பெய்த நடுஇரவில், களிற்று யானையை அகப்படுத்திய பெருஞ்சினத்தையுடைய பெரிய பாம்பு உள்ளே வெண்மையில்லாத வைரம் பாய்ந்த சந்தன மரத்தை மிகவும் புரட்ட, சந்தன நறுமணம் கமழும் மலைப்பிளவின்கண், கொறுக்கச்சியின் நறுமணமான மலர்கள் நீண்டு வளரும் பெரிய மலையில் அமைந்த சிறிய பாதையில் அவர் வருவதால்.

குறிப்பு:   தலைவனை இகழ்ந்த தோழியிடம் தலைவி கூறியதுமாம். மின்னல் பிளத்தல்:  மின்னு வசிபு – அகநானூறு 162, 212, 322, நற்றிணை 228, 261, மலைபடுகடாம் 97, மின்னு வசி – நற்றிணை 334.  களிறு (6) – ஒளவை துரைசாமி உரை – ஆண் யானை.  ஆண் காட்டுப் பன்றியுமாம்.  விடர்முகை (8) – ஒளவை துரைசாமி உரை – மலைப்பிளவு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மலைப்பிளவினையுடைய துறுகல்.  பாம்பை இடி துன்புறுத்தலும் கொல்லுதலும் –  அகநானூறு  68, 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை  37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 37, 58, 126, 211, 366, 369.

சொற்பொருள்:   அருளிலர் – அருள் இல்லாதவர் நம் தலைவர், வாழி தோழி – நீடு வாழ்வாயாக தோழி, மின்னு வசிபு இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு – மின்னல் பிளந்து இருள் நிறைந்த வானில் அதிர்கின்ற இடியோடு, வெஞ்சுடர் கரந்த கமஞ்சூல் வானம் – ஞாயிறு தோன்றாதபடி அதை மறைத்த சூலுடைய முகில், நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி – நெடிய பல மலையிடத்து சிறிய பலவாக இயங்கி, தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து – குற்றமற்ற பெரு மழை பெய்த நடுஇரவில் (தலைஇய – அளபெடை), களிறு அகப்படுத்த பெருஞ்சின மாசுணம் – களிற்று யானையைப் பற்றிச் சுற்றிக்கொண்ட பெருஞ் சினத்தையுடைய பெரிய பாம்பு, வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் – உள்ளே வெண்மையில்லாத வைரம் பாய்ந்த சந்தன மரத்தை மிகவும் புரட்டும், சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை – சந்தன மரத்தின் மணம் கமழ்கின்ற மலைப்பிளவின்கண் (தேம் – தேன் என்றதன் திரிபு), எருவை நறும் பூ நீடிய பெருவரைச் சிறுநெறி வருதலானே – கொறுக்கச்சியின் நறுமணமான மலர்கள் நீண்டு வளரும் பெரிய மலையில் அமைந்த சிறிய பாதையில் வருவதால்

நற்றிணை 264, ஆவூர்க் காவிதிகள் சாதேவனார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு
வான் தளி பொழிந்த காண்பின் காலை,
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர  5
ஏகுதி மடந்தை, எல்லின்று பொழுதே,
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்,
உதுக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே.

பாடல் பின்னணி:  உடன்போக்கில் தலைவன் தலைவியிடம் கூறியது.

பொருளுரை:   மடந்தையே!  ஞாயிறு மேற்கு திசையில் சென்று மறைந்து ஒளி மழுங்கியது.  அங்கே பார்!  மூங்கில் நிறைந்த சிறிய மலையில், கோவலர் தங்கள் பசுக்களின் கழுத்தில் கட்டிய தெளிந்த ஓசையையுடைய மணிகள் ஒலிக்கும் எம்முடைய சிறிய நல்ல ஊர் தோன்றுகின்றது.  பாம்பு புற்றில் அடங்கி இருக்குமாறு முழங்கி, வலமாக எழுந்து முகில்கள் மழையைப் பொழியும் காண்பதற்கு இனிமையான இந்தப் பொழுதிலே, அழகு விளங்கும் தோகையை மெல்ல விரித்து நீலமணி போன்ற கழுத்தினையுடைய ஆடும் மயில் போல், மலர் அணிந்த உன்னுடைய கூந்தலில் வீசும் காற்று உளரி விரித்து விடச் சிறிது விரைந்து செல்வாயாக.

குறிப்பு:  உடன்போக்கில் தலைவன் தலைவியிடம் கூறியது.  காண்பின் காலை (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காட்சியையுடைய காலைப் பொழுதிலே, கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – காண்பதற்கு இனிதாக விளங்கும் பொழுதில்.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.

சொற்பொருள்:  பாம்பு அளைச் செறிய முழங்கி – பாம்பு புற்றில் அடங்கி இருக்குமாறு முழங்கி, வலன் ஏர்பு வான் தளி பொழிந்த காண்பு இன் காலை – வலமாக எழுந்து முகில்கள் மழையைப் பொழியும் காண்பதற்கு இனிமையான பொழுதிலே, அணிகிளர் கலாவம் ஐது விரித்து இயலும் மணி புரை எருத்தின் மஞ்ஞை போல – அழகு விளங்கும் தோகையை மெல்ல விரித்து நீலமணி போன்ற கழுத்தினையுடைய மயில் ஆடும், நின் வீ பெய் கூந்தல் வீசு வளி உளர – உன்னுடைய மலர் அணிந்த கூந்தலில் வீசும் காற்று உளர, ஏகுதி மடந்தை – விரைந்து செல்க மடந்தாய், எல்லின்று பொழுதே – ஞாயிறு மேற்கு திசையில் சென்று ஒளி மழுங்கியது, வேய் பயில் இறும்பில் – மூங்கில் நிறைந்த சிறிய மலையில், கோவலர் யாத்த ஆ பூண் தெண் மணி இயம்பும் – கோவலர் தங்கள் பசுக்களின் கழுத்தில் பூண்ட (கட்டிய) தெளிந்த ஓசையையுடைய மணிகள் ஒலிக்கும், உதுக்காண் – அங்கே பார், தோன்றும் – தோன்றும், எம் சிறு நல் ஊரே – எம்முடைய சிறிய நல்ல ஊர்

நற்றிணை 260, பரணர், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇத்,
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது
குன்று சேர் வெண்மணல் துஞ்சும் ஊர!
வெய்யை போல முயங்குதி; முனை எழத்  5
தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன என்
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன் மன், யான் மறந்து அமைகலனே.  10

பாடல் பின்னணி:  ஊடல் கொண்டு, தலைவனை மறுத்து உரைத்தது.

பொருளுரை:   கழுநீர் மலர்களை மேய்ந்த கரிய கால்களையுடைய எருமை, குளத்தில் உள்ள குளிர்ச்சியான தாமரை மலரை வெறுத்து, கையில் தண்டை உடைய வீரரைப் போல் நடந்து, அருகில் உள்ள குன்று போல் உள்ள மணல் மேட்டில் உறங்கும் ஊரனே!
என்னை விரும்புவது போல் அணைக்கின்றாய்.  எதிரிகளைத் தோற்கடித்து இருப்பை என்ற ஊரை, செவ்வேலை உடைய வீரன் காப்பாற்றினான்.  என்னுடைய அழகு அந்த இருப்பை ஊரை ஒத்தது.  என் தழைத்த அடர்ந்த கூந்தல் அழகுப் பெற நான் அணிந்த மலர்ந்த மாலையை, நீ வாடச் செய்தாய்.  எனக்கு நீ ஓர் எதிரி.  அதை நான் மறந்து விட மாட்டேன்.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தாமரை மலரை வெறுத்துக் கழுநீரை மேய்ந்த எருமை மணற் குன்றில் சென்றுறங்கும் என்பது, தலைவி நலனை வெறுத்துத் காதற் பரத்தையிடம் கூடி இன்புற்ற தலைவன் அவளிடத்தும் தங்காது பரத்தையின் இல்லம் சென்று உறங்கும் தன்மையன் என்பதனை உள்ளுறுத்தி நின்றது.  அகநானூறு 316 – போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன்.  இருப்பை (7) – ஒளவை துரைசாமி உரை – இருப்பையூர்.  இப்போது விராலிமலைக்கு அணிமையில் உள்ளது.  விராஅனது இம்மலை இன்று விராலிமலை என விளங்குகிறது

சொற்பொருள்:  கழுநீர் மேய்ந்த – கழுநீர் மலர்களை மேய்ந்த, கருந்தாள் எருமை – கரிய கால்களையுடைய எருமை, பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ – குளத்தில் உள்ள குளிர்ச்சியை உடைய தாமரை மலரை வெறுத்து, தண்டு சேர் மள்ளரின் இயலி – கையில் தண்டை உடைய வீரரைப் போல் நடந்து (மள்ளரின் – இன் உருபு ஒப்புப் பொருளது), அயலது – அருகில் உள்ள, குன்று சேர் வெண் மணல் துஞ்சும் – குன்றுப் போல் உள்ள மணல் மேட்டில் உறங்கும், ஊர – ஊரனே (அண்மை விளி), வெய்யை போல முயங்குதி – என்னை விரும்புவதுப் போல் அணைக்கின்றாய், முனை எழத் தெவ்வர்த் தேய்த்த – பகை எழ எதிரிகளை தோற்கடித்த செவ்வேல் வயவன் – வேலை உடைய வீரன், மலி புனல் வாயில் இருப்பை அன்ன – நீர் நிறைந்த இருப்பை ஊர் அன்ன, என் ஒலி பல் கூந்தல் நலம் பெற – என் தழைத்த அடர்ந்த கூந்தல் அழகுப் பெற, புனைந்த – நான் அணிந்த, முகை அவிழ் – மொட்டு மலர்ந்த, கோதை – மலர் மாலை, வாட்டிய – வாடச் செய்த, பகைவன் – எதிரி, மன் – ஓர் அசைச் சொல், யான் மறந்து அமைகலனே – நான் மறந்து அமைதியாக இருக்க மாட்டேன்

நற்றிணை 271, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
இரும் புனிற்று எருமைப் பெருஞ்செவிக் குழவி
பைந்தாது எருவின் வைகு துயில் மடியும்
செழுந்தண் மனையோடு எம் இவண் ஒழியச்,
செல் பெருங்காளை பொய்ம் மருண்டு சேய் நாட்டுச்
சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர்  5
வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று,
வீ சுனைச் சிறு நீர் குடியினள், கழிந்த
குவளை உண்கண் என் மகள் ஓரன்ன,
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு, 10
மா இருந்தாழி கவிப்ப
தா இன்று கழிக எற் கொள்ளாக் கூற்றே.

பாடல் பின்னணி:  தலைவனுடன் உடன்போக்கு மேற்கொள்ளுதலும் ஓர் அறநெறியே என்பது உணரினும், அயலார் அலர் கூறுவதால் வருந்திய தாய் மருட்சியுடன் கூறியது.

பொருளுரை:   பெரிய பெண் எருமை ஈன்ற கருமையான, பெரிய காதுகளை உடைய இளம் கன்று, உதிர்ந்த மலர் தாதின் மேல் படுத்து உறங்கும் செழுமையும் குளிர்ச்சியும் உள்ள எங்கள் இல்லத்தில் இருக்கும் எங்களை விட்டு விலகி, பெரிய இளைஞன் ஒருவனின் பொய்யில் மயங்கி, அவனுடன் சென்று விட்டாள், என் மகள். தொலைவில் உள்ள நாட்டில் கடினமான பாதையில் உள்ள நெல்லி மரக் கிளைகள் உதிர்த்த சுவையான காய்களைத் தின்று விட்டு, வறண்ட சுனையில் உள்ள சிறிய அளவான நீரைக் குடிக்கின்றாள். அவளுடைய மையிட்ட கண்கள் குவளை மலர்களைப் போன்றன. பனை ஓலையைக் கிழித்து அவளுடன் சிற்றில் விளையாடிய பெண்கள் விளையாடும் இடத்திற்கு நிலவு ஒளியில் தேடிச் சென்றேன். என்னைப் பெரிய தாழியில் இடுமாறு, சாவை எனக்குத் தராத கூற்றுவன், தன் வலிமையை இழந்து அழியட்டும்!

குறிப்பு:  குழவி (1) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).   இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – எருமை கன்று தாதிலே துயிலும் என்றது, உடன் கொண்டு சென்ற தலைவன் இனிய தன் மார்பில் துயிலுமாறு உள்ளம் மகிழத் தலைவி இருப்பாள் என்பது உணர்த்திற்று. குறுந்தொகை 46 -4 – எருவின் நுண் தாது, நற்றிணை 343 – தாது எரு மறுகின், கலித்தொகை 103 – தாது எரு மன்றத்து, கலித்தொகை 108 – தாது உக்கன்ன தாது எரு மன்றத்து, புறநானூறு 33 – தாது எரு மறுகின், புறநானூறு 215 – தாது எரு மறுகின், புறநானூறு 311 – தாது எரு மறுகின்.

சொற்பொருள்:   இரும் புனிற்று எருமை – பெரிய பெண் எருமை ஈன்ற, பெருஞ்செவிக் குழவி – கருமையான பெரிய காதுகளை உடைய கன்று, பைந்தாது எருவின் வைகு துயில் மடியும் – உதிர்ந்த புதிய மலர்த் தாதில் கிடந்து உறங்கும், செழுந்தண் மனையோடு – பெரும் குளிர்ச்சியுடைய மாளிகையில், எம் இவண் ஒழிய – எங்களை இங்கே விட்டு விட்டு, செல் – செல்லும், பெருங்காளை – பெரிய இளைஞன் ஒருவன், பொய்ம் மருண்டு – பொய்யில் மயங்கி, சேய் நாட்டு – தொலைவில் உள்ள நாட்டின், சுவைக் காய் நெல்லி – சுவையான நெல்லிக்காய், போக்கு அரும் – செல்லுவதற்கு சிரமம், பொங்கர் – கிளைகள், வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று – கீழே விழுந்த திரண்ட காயைத் தின்று, வீ சுனைச் சிறு நீர் குடியினள் – வறண்ட சுனையில் உள்ள கொஞ்சம் நீரைக் குடித்து, கழிந்த – சென்ற, குவளை – குவளை மலர்கள், உண்கண் – மை இட்ட கண்கள், என் மகள் – என்னுடைய மகள், ஓரன்ன – போன்ற, செய் போழ் வெட்டிய – பனை இலைகளை வெட்டி, பொய்தல் ஆயம் – சிற்றில் கட்டி விளையாடிய பெண்களோடு, மாலை விரி நிலவில் – மாலை நேரத்தில், நிலவு ஒளியில், பெயர்பு புறங்காண்டற்கு – காணச் சென்றேன், மா இருந் தாழி கவிப்ப – என்னைப் பெரிய தாழியில் இட,  தா இன்று – வலிமை இன்றி, கழிக – அழியட்டும், எற் கொள்ளாக் கூற்றே – என் உயிரை கொண்டுப் போகாத கூற்றுவன்

நற்றிணை 276, தொல் கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
‘கோடு துவையா, கோள்வாய் நாயொடு,
காடு தேர்ந்து நசைஇய வயமான் வேட்டு
வயவர் மகளிர்’ என்றி ஆயின்,
குறவர் மகளிரேம், குன்று கெழு கொடிச்சியேம்,
சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதில்  5
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே; செல்லாது
சேந்தனை சென்மதி நீயே, பெருமலை
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு
வேங்கை முன்றில் குரவையும் கண்டே.  10

பாடல் பின்னணி:  பகற்குறி வந்து பெயரும் தலைவனிடம் உலகியல் உரைத்தது.

பொருளுரை:    கொம்பை ஊதி ஒலித்து, கொள்ளுதல் வல்ல நாய்களுடன், காட்டின்கண் தேர்ந்து விரும்பி வலிமையான மிருகங்களை வேட்டையாடும் வேடவர்களின் பெண்கள் நாங்கள் என்று நீ கருதுவாய் ஆயின், நாங்கள் குறமகளிர்.  மலையில் வாழும் பெண்கள் நாங்கள்.  தினைப்புனத்தின் காவலன் செய்த உயரமான அடியையுடைய பரணில் காட்டு மயில்கள் தங்கும் இடமாகக் கொள்ளும் மலையிடத்து உள்ளது எங்கள் ஊர். இங்கிருந்து அகலாது எங்கள் ஊரை அடைந்து, அதன் பின் உன் ஊருக்குச் செல்வாயாக. பெரிய மலையின்கண் உள்ள வளைந்த மூங்கிலினால் செய்யப்பட்டக் குழாயில் முற்றிய கள்ளைக் குடித்து விட்டு, வேங்கை மரங்களுடைய முற்றத்தில் நாங்கள் ஆடும் குரவைக் கூத்தைப் பார்த்து விட்டு அதன் பின் செல்வாயாக.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கட்டுப் பரணைத் தம்முடையதாய்க் கருதி மயில்கள் தங்கும் என்றது, தலைவனும் தலைவியின் மாளிகையைத் தமதாகக் கருதி தங்க வேண்டும் என்று வேண்டி உரைத்ததாம்.  மூங்கிலில் விளைந்த கள்:  அகநானூறு 348 – ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி, அகநானூறு 368 – அம் பணை விளைந்த தேன் கண் தேறல், நற்றிணை 276 – வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, பதிற்றுப்பத்து 81 – தூம்பு அகம் பழுனிய தீம் பிழி, திருமுருகாற்றுப்படை 195 – நீடு அமை விளைந்த தேக்கண் தேறல், மலைபடுகடாம் 171 – வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல், மலைபடுகடாம் 522 – திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்.  கோள்வாய் நாயொடு (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கொல்லும் இயல்புடைய வேட்டை நாயுடன், ஒளவை துரைசாமி உரை – கொள்ளுதல் வல்ல வேட்டை நாயுடன், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கவ்விக் கொல்லும் நாயுடன், N. Kandasamy – with dogs of biting mouths.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  துவையா – துவைத்து (ஒலித்து) என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:  கோடு துவையா – கொம்பை ஒலித்து, கோள் வாய் நாயொடு – கொள்ளுதல் வல்ல நாய்களுடன், வாயினால் கொள்ளும் நாய்களுடன், காடு தேர்ந்து – காட்டின்கண் தேர்ந்து, நசைஇய – விரும்பிய (அளபெடை), வயமான் – வலிமையான மிருகங்கள், வேட்டு வயவர் மகளிர் – வேடவர்களின் பெண்கள், என்றி ஆயின் – என்றீர் ஆயின், குறவர் மகளிரேம் – நாங்கள் குறமகளிர், குன்று கெழு கொடிச்சியேம் – மலையில் வாழும் பெண்கள் நாங்கள், சேணோன் இழைத்த – தினைப்புனத்தின் காவலன் செய்த, நெடுங் கால் கழுதில் – உயரமான அடியையுடைய பரணில், கான மஞ்ஞை கட்சி சேக்கும் – காட்டு மயில்கள் தங்கும் இடமாகக் கொள்ளும், கல் அகத்தது எம் ஊரே – மலையிடத்து உள்ளது எங்கள் ஊர், மலை சூழ்ந்தது எம் ஊர், செல்லாது – இங்கிருந்து அகலாது, சேந்தனை – எங்கள் ஊரை அடைந்து, சென்மதி – பிறகு உன் ஊருக்குச் செல்வாயாக (மதி – முன்னிலையசை), நீயே – நீ, பெருமலை – பெரிய மலை, வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு – வளைந்த மூங்கில் குழாயில் நிரப்பி முற்றிய கள்ளை உண்டு, வேங்கை முன்றில் – வேங்கை மரங்களுடைய முற்றத்தில், குரவையும் கண்டே – எங்கள் குரவைக் கூத்தைக் கண்டு

நற்றிணை 280, பரணர், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
‘கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்
தூங்கு நீர்க் குட்டத்து துடுமென வீழும்
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை
புலவாய்’ என்றி தோழி! புலவேன்,  5
பழன யாமைப் பாசடைப் புறத்து
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்,
தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என்
நல் மனை நனி விருந்து அயரும்
கைதூவு இன்மையின் எய்தாமாறே.  10

பாடல் பின்னணி:   வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைவி மறுத்து மொழிந்தது.  தலைவனை ஏற்றுக்கொண்டு அவனைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைவி சொல்லியதுமாம்.

பொருளுரை:  மாமரத்திலிருந்து விழுந்த இனிய பழம் கொக்கினது குவிந்த நிலையையுடைய அரும்புகளையுடைய ஆம்பல் மிகுந்த அசைகின்ற நீர்நிலையின்கண் துடும் என விழும் குளிர்ச்சியுடைய துறைகளையுடைய ஊரனின் நீங்காத பரத்தமை செய்கையைக் கண்டும், “ஊடல் கொள்ளாதே நீ” என்கின்றாய் தோழி.  நான் ஊடவில்லை.  வயலில் உள்ள ஆமையின் பசிய கல் போலும் முதுகாகிய ஓட்டின் மேல் வைத்து வயலைக் காவல் செய்யும் காவலர்கள் தாம் சுடுகின்ற நத்தையை உடைத்து உண்ணும் பழமை முதிர்ந்த வேளிருடைய குன்றூர் போன்ற என்னுடைய நல்ல மனைக்கு வரும் விருந்தினரை ஓம்புவதில் கையொழிந்தமையால், நான் அவனை எதிர்ப்படவில்லை.  இல்லாவிடின் எனக்கு மிகும் ஊடலில் நான் அவனை இங்கு வரவிட மாட்டேன்.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மரத்திலிருந்து வீழும்பழம் பொய்கையை விரைந்து சேரும் என்றது, பரத்தையின் நீங்கிய தலைவன் விரைந்து நின்னைச் சேர்வான் என்பது உணர்த்திற்று.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – உழவர் சிறப்பற்ற நத்தையை ஆமையின் முதுகில் வைத்து உடைத்து உண்பர் என்றது, தலைவன் சிறப்பற்ற பரத்தையை நயந்து ஒழுகுவன் என்பதாம்.  வரலாறு:  வேளிர் குன்றூர்.  கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம் (1) – ஒளவை துரைசாமி உரை – மாமரத்தினின்று காம்பற்று வீழ்ந்த இனிய பழம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கொக்கு வந்திருந்தனவால் கிளை அசைதலின் உதிர்ந்த மாங்கனி.  எய்தாமாறே (10) – கு. வெ. பாலசுப்ரமணியன் – நான் அவனை இங்கு வர விட்டேன், ச. வே. சுப்பிரமணியன் உரை – நான் அங்கு அவனை வரவிட மாட்டேன், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அவனை எதிர்ப்படப் பெற்றிலேன்.  இலக்கணம்:  என்றி – முன்னிலை ஒருமை முற்றுவினைத் திரிசொல், மாறு – மூன்றாம் வேற்றுமை ஏதுப் பொருள்பட வந்த சொல்லுருபு, எய்தாமாறே – ஏ அசை நிலை.

சொற்பொருள்:  கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம் – மாமரத்திலிருந்து விழுந்த இனிய பழம், கொக்கு அமர்ந்ததால் விழுந்த பழம், கொக்கின் கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் – கொக்கினது குவிந்த நிலையையுடைய உடைய அரும்புகளையுடைய ஆம்பல், தூங்கு நீர்க் குட்டத்து துடுமென வீழும் – அசைகின்ற நீர்நிலையின்கண் துடும் என விழும், தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை – ஊரனின் நீங்காத பரத்தமை செய்கையைக் கண்டும், புலவாய் என்றி தோழி – புஊடல் கொள்ளாதே நீ என்கின்றாய் தோழி, புலவேன் – நான் ஊடவில்லை, பழன யாமைப் பாசடைப் புறத்து கழனி காவலர் சுரி நந்து உடைக்கும் – வயலில் உள்ள ஆமையின் பசிய கல் போலும் முதுகாகிய ஓட்டின் மேல் வைத்து வயலைக் காவல் செய்யும் காவலர்கள் தாம் சுடுகின்ற நத்தையை உடைத்து உண்ணும், தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன – பழமை முதிர்ந்த வேளிருடைய குன்றூர் போன்ற, என் நல் மனை நனி விருந்து அயரும் கைதூவு இன்மையின் – என்னுடைய நல்ல மனைக்கு வரும் விருந்தினரை ஓம்புவதில் கையொழிந்தமையால், எய்தாமாறே – நான் அவனை எதிர்ப்படவில்லை

நற்றிணை 305, கயமனார், பாலைத் திணை – தலைவியின் தாய் தோழியிடம் சொன்னது
வரி அணி பந்தும், வாடிய வயலையும்,
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,
கடியுடை வியல் நகர் காண்வரத் தோன்றத்
தமியே கண்ட தண்டலையும் தெறுவர
நோய் ஆகின்றே மகளை!  நின் தோழி  5
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி
உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி
இலங்கு இலை வென்வேல் விடலையை,
விலங்கு மலை ஆர் இடை, நலியும் கொல் எனவே?  10

பாடல் பின்னணி:  தலைவியை உடன்போக்கில் தலைவன் கூட்டிச் சென்று விட்டான் என்பதை செவிலித்தாய் மூலம் அறிந்த நற்றாய் தோழியிடம் சொல்லியது.

பொருளுரை:  வரிப் பந்தையும், வாடிய வயலைக் கொடியையும், மயிலின் அடியைப் போன்ற இலைகளையுடைய கரிய நிறத்தில் உள்ள மலர்க் கொத்துக்களையுடைய நொச்சி மரத்தையும், காவலையுடைய பெரிய இல்லத்தில் நான் காணும்பொழுது வருந்துகின்றேன்.  அவள் இல்லாமல் தனியாக நான் காணும் சோலையும் எனக்கு வருத்தத்தைத் தருகின்றது.  மன நோயினால் வருந்துகின்றேன்.  மகளே!  உன்னுடைய தோழி, கதிரவனின் வெப்பம் தணிந்த வேளையில், இலைகள் இல்லாத அழகிய மரக்கிளைகளில் அமர்ந்தபடி வரிகளை முதுகில் கொண்ட புறாக்களின் வருந்தும் தெளிவான கூவுதலைக் கேட்டு, வெப்பம் மிகுந்த பொழுதில், விலக்குகின்ற மலையின் அரிய பாதையில், போரிடுபவள் போல நோக்கி, விளங்கும் இலையை உடைய வெற்றிகரமான வேலையுடைய தன்னுடைய காதலனை வருத்துவாளோ?

குறிப்பு:  நலியும் கொல் (10) – ஒளவை துரைசாமி உரை – வேண்டாத வினாக்களை எழுப்பி வருத்துதல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – துன்புறுத்தல்.  மயிலடி அன்ன இலை – நற்றிணை 305 – மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், நற்றிணை 115 – மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி, குறுந்தொகை 138 – மயில் அடி இலைய மா குரல் நொச்சி.  திருமுருகாற்றுப்படை 68  – வரிப் புனை பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து,  நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து,  வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி  உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து.  மதுரைக்காஞ்சி 333 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து, நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிதலையுடைய பந்து, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – நூலால் வரிதலையுடைய பந்து.  கலித்தொகை 51 – வரிப் பந்து – நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து.  தலைவி பந்துடன் விளையாடுதல் – புலவர் கயமனார் எழுதிய நற்றிணை 12, 305, 324 மற்றும் குறுந்தொகை 396 ஆகிய பாடல்களில் தலைவி பந்துடன் விளையாடும் குறிப்பு உள்ளது.  மகளை – ஐகாரம் முன்னிலை அசை.

சொற்பொருள்:  வரி அணி பந்தும் – ஒப்பனையுடைய பந்தும், வரிகள் உடைய பந்தும், வாடிய வயலையும் – வாடிய வயலைக் கொடியும், மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும் – மயிலின் அடியைப் போன்ற இலைகளையுடைய கரிய நிறத்தில் உள்ள மலர்க் கொத்துக்களையுடைய நொச்சி மரமும், கடியுடை வியல் நகர் – காவலையுடைய பெரிய இல்லம், காண்வரத் தோன்ற – நான் காணுமாறு தோன்ற, தமியே – தனியாக, கண்ட – நான் கண்ட, தண்டலையும் – சோலையும், தெறுவர நோய் ஆகின்றே – வருத்தம் தருகின்றன, மகளை – மகளே, நின் தோழி – உன்னுடைய தோழி (என் மகள்), எரி சினம் தணிந்த – கதிரவனின் வெப்பம் தணிந்த, இலை இல் அம் சினை – இலைகள் இல்லாத அழகிய மரக்கிளை, வரிப் புறப் புறவின் – வரிகளை முதுகில் கொண்ட புறாக்களின், புலம்புகொள் தெள் விளி – வருந்தும் தெளிவான கூவுதல், உருப்பு அவிர் அமையத்து – வெப்பம் விளங்கும் பொழுது, அமர்ப்பனள் நோக்கி – போரிடுபவள் போல் நோக்கி, இலங்கு இலை – விளங்கும் இலை வடிவமாகிய, வென்வேல் – வெற்றிகரமான வேல், விடலையை – இளைஞனை, விலங்கு மலை – விலக்குகின்ற மலை, தடுப்பாக உள்ள மலை, ஆர் இடை – அரிய பாதை, நலியும் கொல் எனவே – வருத்துவாளோ என்று

நற்றிணை 320, கபிலர், மருதத் திணை – பரத்தை சொன்னது
‘விழவும் உழந்தன்று, முழவும் தூங்கின்று,
எவன் குறித்தனள் கொல்?’ என்றி ஆயின்,
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல்
ஓரிக் கொன்ற ஒரு பெருந்தெருவில்  5
காரி புக்க நேரார் புலம் போல்
கல்லென்றன்றால், ஊரே அதற்கொண்டு,
காவல் செறிய மாட்டி, ஆய் தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே.  10

பாடல் பின்னணி:  பரத்தையைப் பிரிந்த தலைவன் அவளை நீங்கிப் புதிய பரத்தையிடம் சென்றான்.  அதை அறிந்த முதல் பரத்தை சினந்து, தலைவன் கேட்குமாறு, தன்னுடைய தோழியரிடம் இவ்வாறு கூறுகின்றாள்.

பொருளுரை:  ஊரில் திருவிழாக்கள் முடிந்து விட்டன.  முழவு ஒலியும் அடங்கி விட்டது.  இவள் என்ன கருதினாளோ என்று கேட்பாயாயின், தழை ஆடையை அணிந்து, அசையும் இடையுடன் தெருவில் இந்த இளையவள் சென்ற அந்த காரணத்திற்காக, பழமையான வெற்றியை உடைய வல்வில் ஓரியைக் கொன்ற ஒரு பெரிய தெருவில், மலையமான் திருமுடிக் காரி புகுந்தபொழுது, பகைவர் நிலம் போல, ஆரவாரமுடையதாக இருந்தது ஊர்.  அதனால், ஆராய்ந்த வளையல்களை அணிந்த அழகிய கருமையான மேனியை உடைய பெண்கள், மேன்மை  அடைந்தனர், தங்கள் கணவன்மாரை இவளிடமிருந்து பாதுகாத்து.

குறிப்பு:  ‘ஓரிக் கொன்ற ஒரு பெருஞ்செருவில்’ என்றும் பாடல் உண்டு.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 55).

சொற்பொருள்:  விழவும் உழந்தன்று – திருவிழாக்களும் முடிந்து விட்டன, முழவும் தூங்கின்று – முழவு ஒலியும் அடங்கி விட்டது, எவன் குறித்தனள் கொல் – இவள் என்ன கருதினாளோ, என்றி ஆயின் – என்று கேட்பாயாயின், தழை அணிந்து – தழை ஆடையை அணிந்து, அலமரும் – அசையும், அல்குல் – இடை, தெருவின் – தெருவில், இளையோள் இறந்த – இளையவள் சென்ற, அனைத்தற்கு – அந்த காரணத்திற்காக, பழ விறல் ஓரிக் கொன்ற – பழைய வெற்றியை உடைய வல்வில் ஓரியைக் கொன்ற, ஒரு பெருந்தெருவில் – ஒரு பெரிய தெருவில், காரி – மலையமான் திருமுடிக் காரி, புக்க – புகுந்தபொழுது, நேரார் – பகைவர், புலம் போல் – நிலம் போல, புலப்பம் போல், கல்லென்றன்றால் ஊரே – ஆரவாரமுடையதாக இருந்தது ஊர், அதற்கொண்டு – அதனால்,  காவல் செறிய மாட்டி – நன்கு காவலிட்டு, ஆய் தொடி – அழகிய வளையல்கள், ஆராய்ந்து அணிந்த வளையல்கள், எழில் மா மேனி மகளிர் – அழகிய கருமையான மேனியை உடைய பெண்கள், விழுமாந்தனர் – நன்மை அடைந்தனர், தம் கொழுநரைக் காத்தே – தங்கள் கணவர்களைக் காத்து

நற்றிணை 329, மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
வரையா நயவினர் நிரையம் பேணார்
கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி  5
செங்கணைச் செறித்த வன்கண் ஆடவர்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்,
அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து
அல்கலர் வாழி தோழி, உதுக்காண்,
இரு விசும்பு அதிர மின்னி,  10
கருவி மா மழை கடல் முகந்தனவே.

பாடல் பின்னணி:  பிரிவிடை மெலிந்த தலைவியைத் தோழி பருவம் காட்டி, ‘வருந்தாதே’ என வற்புறுத்தியது.

பொருளுரை:  நீ நீடு வாழ்வாயாக தோழி!  நம் தலைவர் அளவில்லாத அன்புடையவர். நிரையம் போன்ற தீய நெறிகளைக் கைக்கொள்ளாதவர்.  பாலை நிலத்தில் கொல்லப்பட்டவர்களின் பிணங்களின் தீநாற்றமுடைய இடத்தில் அருகில் சென்று உண்ணுவதற்கு இடம் பெறாததால் வெறுத்த, அண்மையில் ஈன்ற புள்ளியுடைய முதிய பாறு, தன் சிறகுகளை அடித்துக் கொள்ளுவதால் உதிர்ந்த பறத்தலையுடைய மெல்லிய இறகினை சிவந்த அம்பில் கட்டிய வலிமையான மறவர் வெற்றிகொள்ளும் கருத்துடன் வழியைப் பார்த்து ஒழுகும் மலை வழியில் சென்றார் ஆயினும், நம்மைக் கைவிட்டு அங்கு தங்குபவர் இல்லை அவர்.  அங்கே பார்! கரிய வானம் அதிரும்படி இடித்து மின்னி, இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய கருமுகில்கள் கடல் நீரை முகந்துள்ளன. நம் தலைவர் விரைவில் வந்துவிடுவார்.

குறிப்பு:   இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – (1) பருந்துகள் பிணத்தின் ஊனைத் தின்ன மாட்டாமல் விலகி இருக்கும் என்றது, தலைவியின் நெற்றியில் உள்ள பசலை அவர் வரும் நாளில் தானே அகலும் என்பது.  (2) – மறவர் தம் கணையுடன் அதர் பார்த்திருப்பர் என்றது, ஊர்ப்பெண்டிர் அலர் தூற்ற அற்றம் பார்த்திருப்பர் என்பது குறித்தவாறு.  கருவி மா மழை (11) – இடி மின்னல் முதலாய தொகுதிகளையுடைய கரிய மேகங்கள்.  புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு (4) –  பொ. வே. சோமசுந்தரனார் உரை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, H.வேங்கடராமன் உரை – ஈன்ற அணிமையால் நெருங்காது வெறுத்துக் கடந்து போன புள்ளிகளையுடைய முதிய பருந்து.

சொற்பொருள்:  வரையா நயவினர் – அளவில்லாத அன்புடையவர், நிரையம் பேணார் – நிரையம் போன்ற தீய நெறிகளைக் கைக்கொள்ளாதவர், கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன் இடுமுடை மருங்கில் – பாலை நிலத்தில் கொல்லப்பட்டவர்களின் பிணங்களின் தீநாற்றமுடைய இடத்தில், தொடும் இடம் பெறாஅது – அருகில் சென்று உண்ணுவதற்கு இடம் பெறாது, புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு – அண்மையில் ஈன்ற புள்ளியுடைய வெறுத்த/சினந்த முதிய பாறு, இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி – தன் சிறகுகளை அடித்துக் கொள்ளுவதால் உதிர்ந்த பறத்தலையுடைய மெல்லிய இறகு, செங்கணைச் செறித்த வன்கண் ஆடவர் – சிவந்த அம்பில் கட்டிய வலிமையான மறவர், ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும் அத்தம் இறந்தனர் ஆயினும் – வெற்றிகொள்ளும் கருத்துடன் வழியைப் பார்த்து ஒழுகும் மலை வழியில் சென்றார் ஆயினும், நத் துறந்து அல்கலர் – நம்மைக் கைவிட்டு அங்கு தங்குபவர் இல்லை, வாழி தோழி – நீ நீடு வாழ்வாயாக தோழி, உதுக்காண் – அங்கே பார், இரு விசும்பு அதிர மின்னி கருவி மா மழை கடல் முகந்தனவே – கரிய வானம் அதிரும்படி இடித்து மின்னி இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய கரிய முகில் கடல் நீரை முகந்துள்ளன

நற்றிணை 342, மோசிகீரனார், நெய்தற் திணை – தோழி சொன்னது
‘மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்கு
மதில் என மதித்து வெண்தேர் ஏறி,
என் வாய் நின் மொழி மாட்டேன் நின் வயின்
சேரி சேரா வருவோர்க்கு, என்றும்
அருளல் வேண்டும் அன்பு உடையோய்!’ என,  5
கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்;
யானே, எல் வளை, யாத்த கானல்
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த
சென்னிச் சேவடி சேர்த்தின்,
என்னெனப்படுமோ என்றலும் உண்டே.  10

பாடல் பின்னணி:  தலைவனுக்கு குறை நேர்ந்த தோழி, ஆற்றாளாய்த் தனக்குள்ளே சொல்லியது.

பொருளுரை:  நான் அவளிடம், “அன்புடைய தோழியே!  குதிரை என்று கருதி பனை மடலில் வந்து, காவலுடைய மதில் என்று எண்ணி கானல் நீரைத் தாண்டி, நம்முடைய தெருவிற்கு உன்னுடைய உறவை நாடி வரும் தலைவனுக்கு நீ அருள வேண்டும். அவனிடம் நான் ‘உன்னுடைய சொற்களை நான் அவளிடம் கூற மாட்டேன்.  நீயே உன் குறையை அவளிடம் கூறு’ எனக் கூறினேன் “, என்று என் தலையைச் சாய்த்து, என் கண்களினால் இனிமையை வெளிப்படுத்திக் கூறினேன்.  ஆனாலும் ஒளியுடைய வளையல்களை அணிந்த அவள் தெளிவு அடையவில்லை.  வண்டுகள் நறுமணமான மலர்களை உண்டு அவற்றை நுண்ணியக் கோலமாக உதிர்த்த வேலியை உடையக் கடற்கரைச் சோலையில், என் தலையை அவளது சிவந்த அடியில் பொருத்தி அவளிடம் கேட்டால், அவள் ஒரு வேளை சூழ்நிலையைப் பற்றிக் கேட்க வாய்ப்பு உள்ளது.  அப்பொழுது நிகழ்ந்தவற்றை நான் கூறுவேன்.

குறிப்பு:  சேரா – சேர என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  என் வாய் நின் மொழி மாட்டேன் (3) – ஒளவை துரைசாமி உரை – என் வாயால் நீ கூறற்குரியவற்றை கூற வல்லேனல்லேன்.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  மடல் ஏறுதல் –  சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைகின்றான்.   தொல்காப்பியம் பொருள் அதிகாரம் – எத்திணை மருங்கினும் மகடூஉ மடல் மேல் பொற்புடை நெறிமை இன்மையான.   திருக்குறள் – கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல் (1137), திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் – பெருந்தெருவெ ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல்திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் – உன்னியுலவா உலகறிய ஊர்வன் நான், முன்னி முளைத்து எழுந்தோங்கி ஒளி பரந்த, மன்னியம் பூம் பெண்ணை மடல், நம்மாழ்வார்  திருவாய்மொழி – (3371) நாணும் நிறையும் கவர்ந்து, என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு, சேண் உயர் வானத்து இருக்கும் தேவ பிரான் தன்னை ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி, ஆம் கோணைகள் செய்து  திரியாய் மடல் ஊர்துமே! நம்மாழ்வார்  திருவாய்மொழி  (3372) யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரான் உடை தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம், ஆம் மடம் இன்றி, தெருவுதோறு அயல் தையலார் நா மடங்காப் பழி தூற்றி, நாடும் இரைக்கவே.  மாணிக்கவாசகர் திருக்கோவையார் – (75) அண்ணல் மடங்கல் அதள் அம் பலவன் அருளிலர்போல் பெண்ணை மடன் மிசை யான்வரப் பண்ணிற்று ஓர் பெண்கொடியே, மாணிக்கவாசகர் திருக்கோவையார் – (76) கழிகின்ற என்னையும் நின்ற நின் கார்மயில் தன்னையும் யான் கிழியன்ற நாடி எழுதிக் கைக் கொண்டென் பிறவிகெட்டின்(று) அழிகின்ற(து) ஆக்கிய தாள் அம்பலவன் கயிலையந்தேன் பொழிகின்ற சாரல் நும் சீறூர்த் தெருவிடைப் போதுவனே.

சொற்பொருள்: மா என மதித்து – குதிரை என்று கருதி, மடல் ஊர்ந்து – பனை மடலில் வந்து, ஆங்கு மதில் என மதித்து – காவலுடைய மதில் என்று எண்ணி, வெண்தேர் ஏறி – கானல் நீரைத் தாண்டி, பேய்த்தேரைத் தாண்டி, என் வாய் – என் வாயால் கூற, நின்மொழி – உன்னுடைய சொற்களை, மாட்டேன் – நான் கூற மாட்டேன், நின் வயின் – உனக்காக, சேரி சேரா வருவோர்க்கு – நம்முடைய தெருவிற்கு உன்னுடைய உறவை நாடி வரும் தலைவனுக்கு, என்றும் அருளல் வேண்டும் – நீ அருள வேண்டும், அன்பு உடையோய் – அன்பு உடையவளே, என – என்று, கண் இனிதாகக் கோட்டியும் – கண்ணினால் இனிமையான குறிப்பை தலையைச் சாய்த்துக் காட்டியும், தேரலள் – அவள் அறியவில்லை, யானே – நான், எல் வளை – ஒளியுடைய வளையல், யாத்த கானல் – வேலிச் சூழ்ந்தக் கடற்கரைச் சோலை, வண்டு உண் – வண்டுகள் உண்ணும், நறு வீ – நறுமணமான மலர்கள், நுண்ணிதின் வரித்த – நுண்ணிதாகக் கோலம் செய்த, சென்னி – தலை, சேவடி – சிவந்த அடி, சேர்த்தின் – சேர்த்தால், என் எனப் படுமோ – சூழ்நிலை இப்பொழுது எவ்வாறு உள்ளது, என்றலும் உண்டே – என்று வினவுவதும் உண்டாகும்

நற்றிணை 359, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி சொன்னது
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா
அலங்கு குலைக் காந்தள் தீண்டித் தாது உகக்,
கன்று தாய் மருளும் குன்ற நாடன்
உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃது
உடுப்பின் யாய் அஞ்சுதுமே; கொடுப்பின்  5
கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை
வாடல கொல்லோ தாமே, அவன் மலைப்
போருடை வருடையும் பாயா,
சூருடை அடுக்கத்தது கொயற்கு அருந்தழையே?

பாடல் பின்னணி:  தலைவன் கொடுத்த கையுறையைத் தோழி ஏற்றுக்கொண்டு தலைவியிடம் சென்றாள்.  தழையுடை வாடாமலிருக்க வேண்டும் என்று தலைவியின் குறிப்பறிந்து ஒழுகுபவள் போலக் கூறியது.

பொருளுரை:  மலையில் மேயச் சென்ற சிறிய கொம்புகளை உடைய சிவந்த பசு, அசைகின்ற கொத்தை உடைய காந்தள் செடியினை உரசியதால் அக்காந்தள் செடியின் மலர்களில் உள்ள தாது அதன் மேல் உதிர்வதால் அதன் கன்று நிறம் வேறுபட்டுத் தோன்றும் தன் தாயை அடையாளம் கொள்ளாமல் மருளும் மலைநாடன், உடுத்திக்கொள்ளத் தழை ஆடையைத் தந்தான்.  நாம் அதை உடுத்தினால், அன்னை சினம் கொள்வாள் என அஞ்சுகின்றோம்.  அதைத் தலைவனிடம் திருப்பிக் கொடுப்போமாயின், அவன் துன்புறுவான் என அஞ்சுகின்றோம்.  அவ்விடத்து, வாடுதல் அடையலாமா, தலைவனின் மலையில் ஒன்றோடு ஒன்று போரிடும் மலை ஆடுகளும் பாய்வதற்கு அஞ்சும், கடவுள் வாழும், மலைப் பக்கத்தில் உள்ள கொய்வதற்குக் கடினமான இலைகள்?

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தாது உகப் பெற்ற கன்று மருளும் என்றது, தலைவி இத் தழையுடை கொணரக்கண்டு நாண மிக மயங்கினாள் என்பது உணர்த்தவாம்.  ஐங்குறுநூறு 211 – செயலையம் பகைத்தழை வாடும்.  ஆயிடை (6) – ஒளவை துரைசாமி உரை – அவ்விடை:  ஆயிடை எனச் சுட்டு நீண்டு இடையே யகரம் பெற்றது.  வாடல கொல்லோ (7) – ஒளவை துரைசாமி உரை – வாடாவோ என நின்று வாடிவிடும் என்ற பொருள் தந்தது, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வாடுதலையுடைய ஆகலாமோ.

சொற்பொருள்:   சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா – மலையில் மேயச் சென்ற சிறிய கொம்புகளை உடைய சிவந்த பசு, அலங்கு குலைக் காந்தள் தீண்டித் தாது உக – அசைகின்ற கொத்தை உடைய காந்தள் செடியினை உரசி அக்காந்தள் செடியின் மலர்களில் உள்ள தாது அதன் மேல் உதிர, கன்று தாய் மருளும் – அதன் கன்று நிறம் வேறுபட்டுத் தோன்றும் தன் தாயை அடையாளம் கொள்ளாமல் மருளும், குன்ற நாடன் – மலைநாடன், உடுக்கும் தழை தந்தனனே – உடுத்திக்கொள்ளத் தழை ஆடையைத் தந்தான்; யாம் அஃது உடுப்பின் – நாம் அதை உடுத்தினால், யாய் அஞ்சுதுமே – அன்னை சினம் கொள்வாள் என அஞ்சுகின்றோம்; கொடுப்பின் – தலைவனிடம் கொடுப்போமாயின், கேளுடைக் கேடு அஞ்சுதுமே – அவன் துன்புறுவான் என அஞ்சுகின்றோம்; ஆயிடை – அவ்விடத்து, வாடல கொல்லோ – அவை வாடுதல் அடையலாமா, தாமே – தாம், ஏ அசைநிலைகள்,   அவன் மலைப் போருடை வருடையும் பாயா – தலைவனின் மலையில் ஒன்றோடு ஒன்று போரிடும் மலை ஆடும் பாய்வதற்கு அஞ்சும், சூருடை அடுக்கத்தது கொயற்கு அருந்தழையே – கடவுள் வாழும் மலைப் பக்கத்தில் உள்ள கொய்வதற்குக் கடினமான இலைகள்

நற்றிணை 368, கபிலர், குறிஞ்சித் திணை, தோழி தலைவனிடம் சொன்னது 
பெரும்புனம் கவரும் சிறு கிளி ஓப்பி,
கருங்கால் வேங்கை ஊசல் தூங்கி,
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து நும்மொடு
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ,
நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த  5
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி,
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே.
ஐய! அஞ்சினம், அளியம் யாமே.  10

பாடல் பின்னணி:  தலைவியை தாய் இற்செறிப்பாள் (காவலில் வைத்து விடுவாள்) என்பதனை உணர்த்தி வரைவு கடாயது.

பொருளுரை:   பெரிய புனத்தில் தினையை உண்ண வரும் சிறுகிளிகளை விரட்டி விட்டு, இடையில் நீண்ட உயர்ந்த அல்குலை மறைக்கும் இலை ஆடைகளை அணிந்து, கரிய அடியை உடைய வேங்கை மரத்தில் உள்ள ஊஞ்சலில் விளையாடி, பின் உன்னுடன் அருவியில் விளையாடுவதை விட இனியது வேறு எதுவும் உண்டா?   இவளுடைய ஒழுங்காக உள்ள கரிய கூந்தலில் உள்ள நறுமணத்தையும் சிறிய நெற்றியில் உள்ள பசலையையும் வருத்தத்துடன் நோக்கி, வெப்பத்துடன் பெருமூச்சு விட்டாள் அன்னை. அவளை வீட்டை விட்டு செல்ல முடியாதப்படிக் காவலில் வைத்து விடுவாள்.  நானும் என் தோழியும் அஞ்சுகின்றோம்.  அளிக்கத்தக்கவர்கள் நாங்கள். அருள்வாயாக!

சொற்பொருள்:   பெரும்புனம் – பெரிய புனம்,  கவரும் – உண்ண வரும்,  சிறு கிளி – சிறுகிளிகள், ஓப்பி – விரட்டி, கருங்கால் வேங்கை – கரிய அடியை உடைய வேங்கை மரங்கள்,  ஊசல் – ஊஞ்சல்,  தூங்கி – ஆடி, கோடு ஏந்து அல்குல் – நீண்ட உயர்ந்த அல்குல் (இடைக்கு கீழே உள்ள முன் பகுதி), தழை அணிந்து – இலை ஆடைகளை அணிந்து,  நும்மொடு – உன்னுடன், ஆடினம் வருதலின் – அருவியில் விளையாடுவதை விட,  இனியதும் உண்டோ – இனியது வேறு எதுவும் உண்டா?, நெறிபடு – ஒழுங்காக உள்ள, வளைந்த, கூழைக் கார் முதிர்பு இருந்த – முதிர்ந்த கருமையான கூந்தலில் இருந்த, வெறி கமழ் கொண்ட – நிறைய மணம் கொண்ட,  நாற்றமும் – மனமும்,  சிறிய – சிறிய, பசலை பாய்தரு நுதலும் நோக்கி – பசலைப் பாய்ந்த நெற்றியையும் நோக்கி, வறிது உகு நெஞ்சினள் – வருத்தத்துடன் நோக்கினாள் (தாய்),  பிறிது ஒன்று சுட்டி – அதை சுட்டிக் காட்டி, வெய்ய உயிர்த்தனள் யாயே – வெப்பத்துடன் பெருமூச்சு விட்டால் தாய், ஐய அஞ்சினம் – ஐயா, நாங்கள் அஞ்சுகின்றோம்,  அளியம் யாமே – அளிக்கத்தக்கவர்கள் நாங்கள்

நற்றிணை 373, கபிலர், குறிஞ்சித் திணை, தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
முன்றில் பலவின் படுசுளை மரீஇப்,
புன்தலை மந்தி தூர்ப்ப தந்தை
மைபடு மால் வரை பாடினள் கொடிச்சி,
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
சூருடைச் சிலம்பின் அருவி ஆடிக்,  5
கார் அரும்பு அவிழ்ந்த கணிவாய் வேங்கைப்
பா அமை இதணம் ஏறி, பாசினம்
வணர் குரற் சிறு தினை கடிய,
புணர்வது கொல்லோ நாளையும் நமக்கே?

பாடல் பின்னணி:  அன்னை இற்செறிக்க எண்ணுகின்றாள் எனக் குறிப்பால் கூறியது.

பொருளுரை:  மெல்லிய தலையையுடைய பெண் குரங்கு ஒன்று, வீட்டு முற்றத்தில் உள்ள பலா மரத்தின் பழத்தைக் கிழித்து, அதன் சுளைகளை உண்டு விட்டு கொட்டைகளைக் கீழே எறிய, தன்னுடைய தந்தையின் முகில் சூழ்ந்த உயர்ந்த மலையைப் பற்றிப் பாடி வெள்ளை மலை நெல்லைக் குத்துகின்றாள் அருகில் உள்ள மலைப் பெண் ஒருத்தி.  அந்த மலையின் தலைவன், கடவுள்களையுடைய மலை அருவியில் விளையாடி, கரிய அரும்பிலிருந்து மலர்ந்த பூக்களையுடைய சோதிடம் கூறும் வேங்கை மரத்தின் மேல் அமைத்த பரந்த பரணில் ஏறி, வளைந்த கொத்துக்களை உடைய சிறு தினையைக் கிளிகளிடமிருந்து காத்து அவற்றை விரட்ட, நம்மோடு வருவானா நாளைக்கு?

குறிப்பு:  கணிவாய் வேங்கை – வேங்கை மரம் கணிப்பதால் (பின்னால் வருபவற்றைக் கூறுவதால்) சோதிடன் என்று கருதப்படும். வேங்கையில் அரும்புகள் மலரும் வேளையில் தினைப் புனத்தில் தினை முற்றும். மலையில் வாழ்பவர்கள் வேங்கையின் அரும்புகள் அவிழ்வதைப் பார்த்ததும் அறுவடையைத் துவங்குவார்கள். அவ்வேளையில் தாய் தலைவியை இல்லத்தில் சிறைப்படுத்தல் வழக்கம்.

சொற்பொருள்:   முன்றில் பலவின் – வீட்டு முற்றத்தில் உள்ள பலா மரத்திலிருந்து, படுசுளை மரீஇ – அதன் பழத்தை கிழித்து உண்டு (மரீஇ –  அளபெடை), புன்தலை மந்தி – மெல்லிய தலையையுடைய பெண் குரங்கு, தூர்ப்ப – கீழே எறிய, தந்தை மைபடு மால் வரை பாடினள் கொடிச்சி – தன்னுடைய தந்தையின் முகில் சூழ்ந்த உயர்ந்த மலையைப் பற்றி பாடினாள் மலைப் பெண், ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு – வெள்ளை மலை நெல்லைக் குத்துகின்ற நாடனுடன் (குறூஉம் – அளபெடை), சூருடைச் சிலம்பின் அருவி ஆடி – கடவுள்களையுடைய மலை அருவியில் விளையாடி, அச்சத்தைத் தரும் மலையின் அருவியில் விளையாடி, கார் அரும்பு அவிழ்ந்த – கரிய அரும்பு மலர்ந்த, கணிவாய் வேங்கை – பின்னால் நடப்பதைக் கூறும் வேங்கை மரம், பா அமை – பரப்பு அமைந்த, இதணம் ஏறி – பரணில் ஏறி, பாசினம் – பச்சைப் பறவை இனம், கிளியினம், வணர் குரல் சிறு தினை – வளைந்த கொத்துக்களை உடைய சிறு தினை, கடிய – விரட்ட, புணர்வது கொல்லோ – பொருந்துமோ, நாளையும் நமக்கே – நமக்கு நாளைக்கு

நற்றிணை 397, அம்மூவனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
தோளும் அழியும் நாளும் சென்றென,
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்றுக்
கண்ணும் காட்சி தௌவின, என் நீத்து
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே,
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று,  5
யாங்கு ஆகுவென் கொல் யானே? ஈங்கோ
சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன் கொல் என் காதலன் எனவே

பாடல் பின்னணி:  குறித்த பருவத்தில் தலைவன் வரவில்லை என்று வருந்திய தலைவியைத் தோழி ஆற்றியிருக்குமாறு கூறுகின்றாள்.  அவளிடம் தலைவி சொல்லியது.

பொருளுரை:   என் தோள்களும் மெலிந்து அழகு இழந்தன.  தலைவன் திரும்பி வருவேன் எனக் குறித்த பருவமும் சென்று விட்டது. நீண்ட சுரத்து வழியைப் பார்த்து, ஒளி இல்லாது என் கண்கள் தங்கள் பொலிவை இழந்தன.  என்னுடைய அறிவும் என்னைவிட்டு நீங்கி மயங்கி (குழப்பம் அடைந்து) வேறு ஆகின்று. என்னுடைய காதல் நோய் பெருகியது. என்னைத் துன்புறுத்தும் மாலை நேரமும் வந்தது.  என்ன ஆவேன் நான்?  இங்கு நான் சாவிற்கு அஞ்சவில்லை, நான் அஞ்சுவது யாது எனின், சாவிற்குப் பின் என்னுடைய மறுபிறப்பு வேறாகும்பொழுது என் தலைவனை நான் மறந்து விடுவேனோ என்பது தான்.

குறிப்பு:  அஞ்சுவல் – தன்மையொருமை வினைமுற்று, ஈங்கோ – ஓகாரம் அசைநிலை, எனவே – ஏகாரம் அசைநிலை.  ஒளவை துரைசாமி உரை – ‘இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் எம் கணவனை, யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே’ (குறுந்தொகை 49) இவ்வாசிரியரே கூறுதல் காண்க.  ஆதலால் அவர் பிரிவை ஆற்றியிருப்பேன்.  நீ கவலற்க என்பது குறிப்பெச்சம்.  தோழி கேட்டு ஆற்றாமை தீர்வாளாவது பயன் என்க.

சொற்பொருள்:   தோளும் அழியும் – என் தோள்களும் மெலிந்து அழகு இழந்தன, நாளும் சென்றென – தலைவன் திரும்பி வருவேன் எனக் குறித்த பருவமும் சென்றது, நீள் இடை அத்தம் நோக்கி – நீண்ட சுரத்து வழியைப் பார்த்து, வாள் அற்றுக் கண்ணும் காட்சி தௌவின – ஒளி இல்லாது என் கண்கள் பொலிவு இழந்தன, என் நீத்து அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே – என்னுடைய அறிவும் என்னைவிட்டு நீங்கி மயங்கி (குழப்பம் அடைந்து) வேறு ஆகின்று, நோயும் பெருகும் – என்னுடைய காதல் நோய் பெருகியது, மாலையும் வந்தன்று – மாலை நேரமும் வந்தது, யாங்கு ஆகுவென் கொல் யானே – என்ன ஆவேன் நான், ஈங்கோ சாதல் அஞ்சேன் – இங்கு நான் சாவிற்கு அஞ்சவில்லை, அஞ்சுவல் – நான் அஞ்சுவது யாதெனின், சாவின் பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் மறக்குவேன் கொல் என் காதலன் எனவே – சாவிற்குப் பின் என்னுடைய மறுபிறப்பு வேறாகும்பொழுது என் தலைவனை நான் மறந்து விடுவேனோ என்று (கொல் – ஐயம் என்ற பொருளில் வந்த இடைச்சொல்)