மூன்றாம் தந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூன்றாம் தந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருமந்திரம் - மூன்றாம் தந்திரம் - திருமூலர்

பண் :

பாடல் எண் : 1

உரைத்தன வற்கரி ஒன்று முடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும் முன்பேசிய நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.

பொழிப்புரை :

கணிநூலில் (சோதிட நூலில்) சொல்லப்பட்ட வரிசையான பன்னிரண்டு இராசிகளையும் யாடும் (மேடமும்), அரிமாவும் (சிங்கமும்) முதலாய் நிற்பத் தொடங்கி முடியும் வகைகளில் முறையானே எண்ணி யோக உறுப்புக்கள் எட்டனையும் முன்பு உணர்த்தியருளிய நந்திபெருமான், அவைகளில் முறையான விலக்கு விதிகளை அருளிச் செய்தார்.

குறிப்புரை :

வற்கு - யாடு. பன்னிரண்டு இராசிகளை எண்ணும் பொழுது மேடம் முதலாக எண்ணுதலே யன்றி, சிலவற்றிற்குச் சிங்கம் முதலாக எண்ணுதலும் உளதாதலின், ``வற்கு அரி ஒன்று முடிய`` என்றார். ஒன்று முடிய - ஒன்றாகத் தொடங்கி முடிய. ``நிரைத்த இராசி`` என்றதனை, ``உரைத்தன`` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``இராசியை எண்ணி`` என்றது, யோக நூற்குக் கணிநூல் துணையாக நிற்றல் கூறியவாறு. பிராசாதம் - யோகம்; அது, `பிரச்சதம்` என மருவி நின்றது. யோக உறுப்புக்கள் எட்டு, பின்னர்க் கூறப்படும். `இயமம், நியமம்` என்பன இங்கு யோக உறுப்புக்களைக் குறியாது `விலக்கு, விதி` என்னும் பொருளவாய் நின்றன.
இதனால், யோகப் பயிற்சி, கணிநூல் கூறும் கால இயல்பை நோக்கி அதற்கேற்பச் செய்யப்படுதலும், யோகத்தின் உறுப்புக்கள் எட்டாதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசத்தி உத்தர பூருவம்
எய்தக் கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு நந்திபெருமான் அருளிச்செய்த விலக்கு விதிகளால் சமாதி நிலையை அடைந்து யாவரும் உய்தற் பொருட்டு, ஞானம் இறுதித் தந்திரங்களில் வர நிறுத்தி, முன்னே உள்ள சில தந்திரங்களில் கிரியைகளாகிய கவசம், நியாசம், முத்திரை முதலியவைகளுடன் யோக நெறியையும் கூறுவேன். `இயம நியமத்தால்` என உருபு விரிக்க.

குறிப்புரை :

`உத்தரம் பராசத்தி எய்த, பூருவம் கவசம் நியாசங்கள் முத்திரை இந்நெறி எய்த உரைசெய்வன்` எனக் கூட்டுக. ஞானமாவது திருவருளே யாதலின், ``பராசத்தி`` என்றார். `முத்திரையோடு` என உருபு விரிக்க. ``இந்நிலை`` என்றது, மேல் `பிரச்சதம்` எனக்கூறிய யோகத்தை.
இதனால், சரியை கிரியா யோகங்களாகிய தவங்கள் ஞானத்திற்குச் சாதனமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அந்நெறி இந்நெறி என்னாதே அட்டாங்கந்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
புன்னெறி ஆகத்திற் போக்கில்லை யாகுமே.

பொழிப்புரை :

`நாம் கொண்ட நெறி நன்றோ, இது வல்லாத பிறிதொரு நெறி நன்றோ` என்று ஐயுற்று அலமராது, எந்நெறிக்கும் வேண்டப்படுவதாகிய அட்டாங்கத்தை உடைய யோக நெறியிலே சென்று, உம்மால் விரும்பப்படுகின்ற பொருளிலே உள்ளம் ஒடுங்குங்கள். இவ்வாறு ஒடுங்கும் நன்னெறியில் நிற்பவர்க்கு ஞானத்தை எளிதில் தலைப்படுதல் கூடும். பின்பு அந்த ஞானத்தின் பயனாகப் பிறவியாகிய இழி நெறியிற் செல்லுதல் இல்லையாம்.

குறிப்புரை :

யோகம் மெய்ந்நெறியாளர் பலர்க்கும் வேண்டப் படுவது ஆதலின், அவர் அனைவர்க்கும் பொதுவாயிற்று. புறத்துச் சென்று அலமந்த மனம் அவ்வலமரல் நீங்கி ஒருக்கம் உற்றபின், பொரு ளியல்புகள் எளிதில் உள்ளவாறு விளங்குமாகலின், ``இந்நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகல் ஆம்`` என்றார். ``ஆம்`` என்றது எளிதிற் கூடும் என்றவாறு. `பிற நெறிகளால் பொருளியல்பு உள்ள வாறு விளங்குதல் அரிது` என்பதை விளக்கவே, `இந்நெறி அந்நெறி என்னாது` என முதற்கண் கூறினார். `போலும்` என்பது ``போன்ம்`` என நிற்றல்போல், ``நில்லும்`` என்பது உம்மையுள் உகரங்கெட, ``நின்ம்`` என நின்றது. `நின்மின்` என்பது பாடமாயின், ``இந்நன்னெறி`` எனச் சுட்டு வருவிக்க. ஆகம் - உடம்பு.
இதனால், ஞானத்திற்குச் சிறந்த வழி யோகமாதல் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.

பொழிப்புரை :

அட்டாங்கம் (யோகத்தின் எட்டுறுப்புக்கள்) ஆவன, `இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி` என்பன.

குறிப்புரை :

``எண்ணிலா ஆதனம்`` என்றதனால், `ஆதனங்கள் பல` என்பதும், ``நயமுறும் பிரணாயாமம்`` என்றதனால், `பிரணா யாமமே மனத்தின் அலமரலாகிய இன்பத்தைத் தரும்` என்பதும், ``சய மிகு தாரணை`` என்றதனால், `தாரணை கைவரப் பெற்றவரே மனத்தை அடக்குதலில் வெற்றிபெற்றவராவர்` என்பதும் பெறப்படும். நயம் - இன்பம். சயம் - வெற்றி. அயம் -குதிரை. அயம்உறும் - குதிரை அடங்கப்பெறுகின்ற. ``குதிரை`` என்பது, உவம ஆகுபெயராய் வேகம் மிக்க மனத்தைக் குறித்தல் யோகநூல் வழக்கு. குதிரைக்கு வடமொழி யில் ``வாசி`` என்பது பெயராகையால் அஃது அடங்குதற் பொருட்டுச் செய்யப்படும் யோகம் ``வாசி யோகம்`` எனப்படுகின்றது.
இதனால், யோகத்தின் எண்வகை உறுப்புக்களும் தொகுத்து உணர்த்தப்பட்டன. இவை எட்டும் இங்குக் கூறிய முறையானே முதற் படி, இரண்டாம்படி முதலியவாய் அமையும் என்பது உணர்ந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 1

கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத் திடையில்நின் றானே.

பொழிப்புரை :

கொல்லாமை, பொய்யாமை, விருப்பு வெறுப்புக்கள் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, என்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.

குறிப்புரை :

எனவே, `யோகியாக வேண்டுவான், முதற்கண் இந்நிலையை முற்றப்பெறுதல் வேண்டும்` என்பதும், `முற்றப் பெறாத வழி, முற்றுப்பெறுமாற்றின் முயலுதல் வேண்டும்` என்பதும் பெறப் பட்டன. செய்யுட்கு ஏற்பச் சிலவற்றை உடம்பாட்டு முகத்தாற் கூறினா ரேனும், எல்லாவற்றையும் எதிர்மறையாகக் கூறுதலே கருத்தாம்; என்னை? `இயமம்` என்பதற்கு `விலக்கியன ஒழிதல்` என்பதே பொருளாதலின்.
இவற்றுள், திருவள்ளுவர், `கொல்லாமை, பொய்யாமை, (வாய்மை) கள்ளாமை, வெகுளாமை, காமம் இன்மை, (கூடா ஒழுக்கம் இன்மை) என்னும் ஐந்தையே துறவறத்துள் எடுத்தோதி, கரவாமையை (ஈகையை) இல்லறத்துள்ளும், `நிரம்ப உண்ணாமை, (மருந்து) கள்ளுண்ணாமை` என்னும் இரண்டனையும் பொருட் பாலுள்ளும் எடுத்தோதினார். அவை முறையே பொருளுள்ள வழி யும், உடல் நலம் நோக்கியவழியும் வேண்டப்படுவனவாதல் பற்றி.
அவர் கூறிய `வெஃகாமை, கள்ளாமை` என்பவற்றுள் வெஃகாமை பொருள் பற்றியே நிற்பது. கள்ளாமை பொருளன்றியும் புகழ், நூற்பொருள், மெய்ப்பொருள் உணர்வு முதலியன பற்றியும் நிற்பது. புகழ் முதலியவற்றைத் தாமே தலைவராய் நின்றும், வழிபட்டுக் கொள்ளாது இகலுரை கூறியும் கொள்ளக் கருதுதலும், பிறவும் கள்ளல் எனப்பட்டன. இஃது உணரமாட்டாதார், `கள்ளாமை இல்லறத்துள்ளும், வெஃகாமை துறவறத்துள்ளுமாக மாறிக் கூறற்பாலன` எனத் தாம் வேண்டுமாறே கூறிக்கொள்வர்.
இனி, விருப்பு வெறுப்பின்மையை, `வேண்டுதல், வேண்டாமை இலானடிசேர்ந்தார்` (குறள், 4) என்பதனுள்ளும், மாசின்மையை, ``மாண்டார் நீராடி``(குறள், 278) என்பதனுள்ளும் அவர் உய்த்துணர வைத்தமை அறிக.
வரையறையின்றிக் கிடப்பனவற்றை யாதானுமோராற்றால் வரையறைப்படுத்துக் கூறுதலே நூல்கட்கு இயல்பாகலின், இங்குப் பத்தினையே எடுத்துக் கூறினாராயினும், இவற்றோடு எண்ணத்தக்க பிறவும் கொள்ளப்படும் என்க. வரையறை இல்லவற்றை வரையறைப் படுத்தலை, ``சிறப்புடைப்பொருளைத்தான் இனிது கிளத்தல்`` (தொல். சொல். சேனாவரையம் 33) என்பர். இவ்வாறே தொல்காப்பியனார் சிறப்புடையவற்றைக் கிளந்தோதி, ஏனையவற்றை, `பிறவும்` எனப்புறனடை தந்து போதலை அவர் நூலுள் ஆங்காங்குக் கண்டுணர்க. நாயனார் இங்குப் `பத்து` என்று தொகைகொடாமை கருதத்தக்கது.
எள்கு உணன் - மறுக்கின்ற உணவை உடையான். திருவள்ளுவரும் குறைய உண்டலை, ``மறுத்துண்டல்`` (குறள், 945) என்பர். எள் குதல் - மறுத்தல். ``உணன்`` என்பது, ``உண்`` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் அடியாகப் பிறந்த பெயர். ``ஊணன்`` எனப் பாடம் ஓது தலும் ஆம். `எண்குணன்` என்பது பாடம் அன்று. ``நல்லான்`` என்றது, இங்கு, ``பொறுமை உடையான்`` என்னும் பொருட்டாயும் ``அடக்கம்`` என்றது, ``அடக்குதல்`` என்னும் பொருட்டாயும் நின்றன. ``நல்லனாய்`` என்னும் ஆக்கமும், ``வெகுளியை`` என்னும் செயப்படு பொருளும் வருவித்துக்கொள்க. நடு - நடுவு நிலைமை. இதனை, ``சமநிலை`` எனவும், ``சாந்தம்`` எனவும் கூறுப. செய்தல், தனதாகப் பெறுதல்.

பண் :

பாடல் எண் : 1

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே.

தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே.

பொழிப்புரை :

சிவபெருமானைச் சத்தியோடு உடனாய் நிற்பவனாக உணர்பவனே நியமத்தில் நிற்க வல்லவனாவான்.

குறிப்புரை :

`சிவபெருமானது ஒறுக்கும் ஆற்றலையும், அருளும் ஆற்றலையும் உணர்பவனே இயம நியமங்களில் நிற்க வல்லவ னாவான். ஆயினும், இயமத்தையும் அன்பின் வழிக்கொள்ளுதலே சிறப்பு என்பார் இதனை இங்குக் கூறினார். இயமம் இறைவனது ஒறுப்பிற்கு அஞ்சும் அச்சத்தினாலும், நியமம் அவனது அருளை விரும்பும் அன்பினாலும் ஆகற்பாலனவாதலை அறிந்துகொள்க.
``அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ`` -தி.5 ப.23 பா.9
என அப்பரும் அருளிச்செய்தார்.
வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தோம் என்று மகிழன்மின் - வஞ்சித்த
எங்கும் உளன் ஒருவன் காணுங்கொல் என்றஞ்சி
அங்கங் குலைவ தறிவு.
என்றார் குமரகுருபர அடிகள். அங்கி - அக்கினியாய் நிற்பவன். நீதி - நடுவுநிலைமை; அஃதாவது பொல்லார்க்கும், நல்லார்க்கும் தெறலும், அளியும் அவரவர் செயலுக்குத் தக்காங்கு செய்தல். உடன் நீதி - உடனாய் நின்று செய்யும் நீதி. ``அளி, தெறல் இரண்டும் கருணையே`` என்றற்கு, பராசத்தியோடு உடனாய் நிற்றலை எடுத்தோதினார்.
இதனால், இயம நியமங்கள் வருமாறு கூறப்பட்டது.
இதன்பின் பதிப்புகளில் காணப்படும், ``தூய்மை அருளூரண் சுருக்கம்`` என்ற பாடல் இயமத்தையே கூறுதலானும், அதன் பொருள் மேலே, ``கொல்லான் பொய் கூறான்`` என இயமத்துள் கூறப்பட்டமையானும், மூன்றாம் அடிப் பொருத்த மற்றதாகக் காண்கையிலும் அது பிறர் பாடலாதல் அறியப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 2

தவம்செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன்றன் விரதமே, சித்தாந்தக் கேள்வி,
மகம்சிவ பூசைஒண் மதிசொல் ஈரைந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.

பொழிப்புரை :

தவம் முதலாக மதி ஈறாகச் சொல்லப்பட்ட பத்தினையும் நியமமாகக் கொண்டவன் நியம யோகியாவான்.

குறிப்புரை :

தவம், நெறிப்பட்ட வாழ்க்கை. செபம், வாய்ப்புப் பெற்றுழி மந்திரங்களை மிகுதியாகக் கணித்தல், ஆத்திகம், நூல்களில் சொல்லப்படும் கடவுள், இருவினை, மறுபிறப்பு, துறக்க நிரையங்கள் உள்ளன என உணரும் உணர்வு. சந்தோடம், `உள்ளது போதும்` என்னும் உள்ள நிறைவு. தானம், பொருளை நல்வழியில் ஈட்டி, உயர்ந்தோர்க்குக் கொடுத்தல். சிவன் விரதம், சிவனுக்குரிய சிறப்பு நாள்களில் தவச்செயல்களை மிகச் செய்தல். சித்தாந்தக் கேள்வி, சிவாகமங்களின் ஞானபாதப் பொருளைக் கேட்டல். மகம், இயன்ற பொழுது தீ வேட்டலைச் செய்தலும், செய்வித்தலும். சிவபூசை, சிவலிங்க வழிபாட்டினை இன்றியமையாததாகக் கொண்டு, விடாது செய்து வருதல். ஒண்மதி, நற்பண்பு. நியமமும் இவ்வாறு ``பத்து`` என வரையறுத்து ஓதப்படினும், இவை போல்வன பிறவும் கொள்ளப்படும் என்க. நிவம் - நிபந்தம். மகம், உயிரெதுகை.
இதனால், நியமம் சிறப்பாகப் பத்தாதல் கூறப்பட்டது. இதனை,
பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல்
கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை
பூசனைப் பெரும்பயன் ஆசாற் களித்தலொடு
நயனுடை மரபின் நியமம் ஐந்தே.
என்றார் நச்சினார்க்கினியர்

பண் :

பாடல் எண் : 1

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்தி யெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே.

பொழிப்புரை :

``பதுமம்`` முதலியவற்றின் வடிவத்தால் அவ்வப் பெயரைப் பெற்று பரந்து நிற்கும் ஆதனங்கள் யோக முறையில் பல உள்ளன. அவற்றுள் எட்டு ஆதனங்கள் தாழ்வில்லாது உயர்ந்தனவாய் நிற்க, அவற்றுள்ளும், ``சுவத்தி`` ஆதனத்தில் ஒருவன் இருப்பனாயின் யோகத்தில் மிக்கவனாவான்.

குறிப்புரை :

எனவே, ``சுவத்தி ஆதனம் ஏனை எல்லாவற்றினும் மேலானது`` என்பது பெறப்பட்டது. பங்கயம் - பதுமம்; தாமரை. `அவற்றுள் இருநாலும் சொங்கில்லை` எனக்கூட்டுக. சொங்கு - இழிவு. ``இழிவில்லை`` என்றது, ``உயர்ந்தன - உத்தமம்`` என்றவாறு. உத்தமாதனங்களை வருகின்ற திருமந்திரங்களுட் காண்க.
இதனால், ஆதனங்களின் இயல்பு தொகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே.

பொழிப்புரை :

பாதங்கள் துடைகளின்மேல் ஒன்றாகப் பொருந்துமாறு ஏற்றி, பின் நன்றாக வலித்து இழுத்து அவை துடைகளின் புறம் நிற்குமாறு செய்து, அப்பாதங்களின்மேலே இரு கைகளையும் மலர வைப்பின், அந்நிலை தாமரை மலர் வடிவிற்றாய், ``பதுமாதனம்`` என்று சொல்லுதலைப் பெறும்.

குறிப்புரை :

ஆதனங்களில் விலக்குண்ணாத இடங்களில், ``உடலை நேரே நிமிர நிறுத்தி, இருகண்களாலும் மூக்கு நுனியை நோக்கி நிற்றல்`` என்பது பொதுவாகச் சொல்லுதலை உடைத்து. இதனுள், உடலை நேராக நிறுத்துதலைப் பத்திராதனத்திலும், மூக்குநுனியை நோக்குதலைச் சிங்காதனத்திலும் எடுத்தோதுவார். ஓர் அணைய - ஒன்றாகச் சேர. ஊரு - துடை. ``அழகுற`` என்றது, ``மலர`` என்றவாறு. ``தன்`` என்றது, பாதத்தை. ``அதனை, தன்`` என்பன பன்மை ஒருமை மயக்கம்.
இதனால், உத்தமாதனங்கள் எட்டனுள் பதுமாதனத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளில் அங்கையை நீட்டி
உருசி யொடும்உடல் செவ்வே யிருத்திப்
பரிசு பெறுமது பத்திரா சனமே.

பொழிப்புரை :

``பதுமாதனத்தைச் சிறிது வேறுபடுக்கப் பத்திராதனமாம்`` என்கின்றார். பத்திரம் - வாள்.
பதுமாதனத்தினின்றும், வலக்காலை எடுத்து இடமுழந்தாள் மேலாக ஊன்றி, இரண்டு கைகளையும் அவ்வலக்கால் முழந்தாளின்மேல் நீட்டி, உடலை நேர் நிற்க நிறுத்தினால், அந்நிலை வாளின் வடிவிற்றாய், `பத்திராதனம்` என்னும் பெயரைப் பெறும்.

குறிப்புரை :

``அது பத்திராசனப் பரிசு பெறும்`` என மாற்றுக. பரிசு - தன்மை; என்றது, பெயரை. இதனைப் பிற நூல்கள் பிறவாறும் கூறும்.
இதனால், பத்திராதனத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்
தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்
குக்குட ஆசனங் கொள்ளலு மாமே.

பொழிப்புரை :

``பதுமாதனத்தை வேறொரு வகையாக மாற்றக் குக்குடாதனமாம்`` என்கின்றார். குக்குடம் - கோழி.
பதுமாதனத்தில் மேல்வைக்கப்பட்ட கைகளை உள்ளே விடுத்து நிலத்தில் அழுந்த ஊன்றி, அவ்வாறே முயன்று முழங் கையளவாக மேலெழுந்து சுமைமுழுதும் கைகளில் நிற்றலை அறிந்து வீழாது நின்றால், அந்நிலை கோழி வடிவிற்றாய், ``குக்குடாதனம்`` எனக் கொள்ளத்தகுவதாம்.

குறிப்புரை :

முதல் அடி பதுமாதனத்தின் பகுதியைக் குறித்தது. ``கொள்ளலும்`` என்ற உம்மை சிறப்பு. பிருட்டங்கள் குதிகால்களின் மேல் நிற்க, கால் விரல்களை நிலத்தில் ஊன்றிக் குதிகால்கள் மேல்நிற்க எழுந்து முழங்கால்களின்மேல் கைகளை வைத்து எளிதின் இருத்தலும் ஒருவகைக் குக்குடாதனமாம். எனினும், சிறப்புடையதனையே கூறினார் என்க.
இதனால், குக்குடாதனத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.

பொழிப்புரை :

`குக்குடாதனத்தை வேறுபடுக்கச் சிங்காதனமாம்` என்கின்றார்.
இருகைகளையும் இருமுழந்தாள்களின் இடையே புகச் செலுத்தி இருபாதங்களிலும் படுமாறு நீட்டி, வாயைத் திறந்து கொண்டு, இருகண்களும் மூக்கு நுனியை நோக்க இருக்கின், அவ் இருக்கை சிங்கவடிவிற்றாய், `சிங்காதனம்` என்று பெயர் சொல்லப் படும்.

குறிப்புரை :

`கோடி` என்பது குறுகிநின்றது. செப்பும் - செய்யப் படும்.
இதனால், சிங்காதனத்தின் இயல்பு கூறப்பட்டது.
பதுமாதனம் முதலியவற்றை முறையானே கூறிவந்த நாயனார் குன்றக் கூறார் ஆதலால், `கோமுகாதனம், வீராதனம், சுகாதனம், சுவத்திகாதனம்` என்பவற்றையும் கூறிய திருமந்திரங்கள் கிடையாதொழிந்தன என்றே கொள்க. இங்ஙனமாகவே அவற்றது இயல்பு பிற நூல்களின் வழிக் கொள்ளப்படுவனவாம்.

பண் :

பாடல் எண் : 6

பத்திரங் கோமுகம் பங்கயம் கேசரி
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாம்முது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே.

பொழிப்புரை :

`பத்திரம், கோமுகம், பதுமம், சிங்கம், திரம், வீரம், சுகம்` எனப் பெயர் பெற்ற ஏழ் ஆதனங்களும் உத்தம ஆதனங்களாம். அவற்றொடு உத்தமோத்தம ஆதனமாக முதலிற் கூறப்பட்ட சுவத்திகாதனமும் கூடச் சிறப்புடைய ஆதனங்கள் எட்டாகும். ஆதனங்களை இவ்வாறு `எட்டு` என்பதேயன்றி, `பத்து` என்றும், `நூறு` என்றும், மற்றும் பலவாகவும் கூறுவர்.

குறிப்புரை :

`அவற்றுள் மிகச் சிறப்புடைய எட்டு ஆதனங்களையே யான் கூறினேன்` என்றவாறு. எனவே, இவையே சிவயோகத்திற்கு அமையும் என்பதும் `வேண்டுழிச் சிறுபான்மை பிறவும் கொள்ளத் தகும்` என்பதும் பெறப்பட்டன. சொல்லப்பட்ட ஆதனங்களுள் குக்குடாதனத்தை இங்குக் கூறாது, சொல்லப்படாத `திரம்` என்பதனைக் கூறியவாற்றால் `திராசனம்` என்பது குக்குடாதனமே யாதல் பெறுதும்.
இங்கு எடுத்துச் சொல்லப்படாத ஆதனங்களுள் சிறப்பு உடையன சில வருமாறு:-
மச்சம், (மீன்) கூர்மம், (ஆமை) மகரம், (முதலை) தனுசு, (வில்) பச்சிமோத்தானம், (பின்பாகம் மேல் எழுதல்) மயூரம், (மயில்) மண்டூகம், (தவளை) மற்கடம், (குரங்கு) ஏகபாதம், (ஒற்றைக்கால்) சிரசு, (தலை) அலம், (கலப்பை) நௌகம், (ஓடம்) சருவாங்கம், (முழுதுடல்) சவம் (பிணம்) முதலியன. மற்றும் இவற்றைப் பலவாகச் சிறிது சிறிது வேறுபடுத்துக் காட்டுவர்; அவற்றின் இயல்புகளை எல்லாம் இங்கு விரிக்கிற் பெருகும். வேண்டுவோர் அடயோக தீபிகை, பதஞ்சலி சூத்திரம் முதலிய யோக நூல்களுள்ளும், சில உபநிடதங்களினும் கண்டுகொள்க.
முது ஆதனம் - முன்னே சொல்லப்பட்ட ஆதனம்; சுவத்திகாதனம். `முது ஆதனத்தோடு எட்டு` என உருபு விரித்து முடிக்க. இனி, `எட்டு, எட்டு, பத்து, நூறு` எனக் கூறப்பட்ட தொகை களை ஒருங்கு கூட்டி, ஆதனங்கள் `நூற்றிருபத்தாறு` என வரையறை காண்பாரும் உளர்.
``நிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தல்என்
றொத்த நான்கின் ஒல்கா நிலையோ
டின்பம் பயக்கும் சமய முதலிய
அந்தமில் சிறப்பின் ஆதன மாகும்``
என நச்சினார்க்கினியரும் ஆதனங்களை வரையறாதே கூறினார். அவர் இதனுள் நடத்தலைக் கூறியதும், `சமயம்` என்றதும் அறியத் தக்கன.
இதனால், ஆதனங்கட்குப் புறனடை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.

பொழிப்புரை :

ஐவர் பணியாளர்க்குத் தலைவன் ஒருவன்; அவனே அவ்வூர்க்கும் தலைவன். அவன், தான் நலன் அடைதற் பொருட்டுத் தனதாகக் கொண்டு ஏறி உலாவுகின்ற குதிரை ஒன்று உண்டு. அது வல்லார்க்கு அடங்கிப் பணிசெய்யும்; மாட்டார்க்கு அடங்காது குதித்து அவரைக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடும்.

குறிப்புரை :

`ஆகவே, அதனை அடக்க வல்லராதலைப் பயிலுதலே ஆண்மையுடையோர்க்கு அழகாகும்` என்பது குறிப்பெச்சம்.
இத்திருமந்திரம் பிசிச் செய்யுள். இதனை, `ஐவர், ஐம் பொறிகள்; நாயகன்; உயிர்க்கிழவன்; ஊர், ஐம்பொறியும் தங்கி யுள்ள உடம்பு; குதிரை பிராணவாயு; துள்ளி விழுத்தல், வாழ்நாள் முடிவில் அவரறியாதவாறு விட்டு நீங்குதல்` என விடுத்துக் கண்டுகொள்க. ``மெய்யர், பொய்யர்`` என்பன, வன்மை மென்மை பற்றி வந்தன. `பொய்யரை வீழ்த்திடும்` எனவே, `மெய்யரை வீழ்த்தாது செல்லும்` என்பது பட்டு, மெய்யர்க்கு வாழ்நாள் நெடிது செல்லுதலும், அவர் விடுத்து நீக்க நீங்குதலும் உளவாதலை உணர்த்தி நிற்கும்.
இதனால், பிராணாயாமம் செய்வார் மக்களுடம்பை நெடிது நிறுத்திப் பயனடைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆரியன் அல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.

பொழிப்புரை :

எல்லா மக்களிடத்தும் ``நல்லன்`` என்றும், ``அல்லன்`` என்றும் இரண்டு குதிரைகள் உள்ளன. அவைகளைக் கடிவாளம் இட்டு அடக்குதற்குரிய சூழ்ச்சியை அறிகின்றவர் அவருள் ஒருவரும் இல்லை. அறிவுத் தலைவனாகிய குருவின் அருளால் அச்சூழ்ச்சியை அறிந்து அதன்வழி அடக்கினால், அக்குதிரைகள் இரண்டும் அடங்குவனவாம்.

குறிப்புரை :

``ஆரியன்`` என்றது, `நல்லன்` என்னும் பொருளது. ``ஆரியன், அல்லன் என்பன`` இயற்பெயர்த் தன்மையவாய் விரவி, அஃறிணைக்கண் வந்தன. மேல், ``குதிரை ஒன்று உண்டு`` என்று கூறி, இங்கு, ``குதிரை இரண்டுள`` என்றது, `இடவகையால் இரண்டு` என்னும் குறிப்பினதே யாதலின், மாறு கொள்ளாது என்க. எனவே, `ஒன்று` எனப்பட்ட பிராணவாயு, `இடைகலை, பிங்கலை என்னும் இரண்டு நாடிகளின் வழி இரண்டாய் இயங்கும்` என்பது கூறப் பட்டதாம். இடைகலை நாடி, வலக்கால் பெருவிரலினின்று தொடங்கி மேலேறிப்படரும். பிங்கலை நாடி இடக்கால் பெருவிரலினின்று தொடங்கி மேலேறிப் படரும்; இவை இரண்டும் கொப்பூழில் பிணைந்து இடைகலை இடப்பக்கமாகவும், பிங்கலை வலப்பக்க மாகவும் மாறி, முதுகு, பிடர், தலை வழியாகச்சென்று, முறையே மூக்கின் இடத் துளை வலத் துளைகளில் முடியும். அதனால் இரு நாடிகளும் பிணையும் இடமாகிய உந்தியில் (கொப்பூழில்) மூக்கின் வழியே அந்நாடிகளின்வழி வந்து நின்ற காற்று, மீளவும் அவற்றின் வழி வெளிச்செல்லும். அதனால், பிராணவாயு ஒன்றே இரண்டாகச் சொல்லப்படுகின்றது என்க. கடிவாளம், உயிர்க்கிழவனது ஆற்றல். அதனை வீசி அக்குதிரைகளை அடக்க வேண்டும் என்றார். அது தன்னை முறையறிந்து செய்ய வேண்டுதலின், ``அறிவார் இல்லை`` எனவும், ``குருவின் அருளால் அறிந்து பிடிக்க`` எனவும் கூறினார். ``கூரிய`` என்றதில், ``கூர்ப்பது அறிவு`` என்க. இனி, `அம்முறைதான் அசபா மந்திரத்தால் ஆவது` என்பதை, நான்காந் தந்திரத்துட் கூறுவார். இதனுள், `வீசி` என்பது உயிரெதுகை.
இதனால், `பிராணாயாமம் செய்யும் முறையைக் குருவருளால் அறிந்து செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;
கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.

பொழிப்புரை :

பறவையினும் விரைய ஓடுகின்ற பிராணனாகிய அக்குதிரையின்மேல் ஏறிக்கொண்டால், களிப்பிற்கு வேறு கள்ளுண்ண வேண்டுவதில்லை; அது தானே மிக்கக் களிப்பைத் தரும். அக்களிப்பினாலே துள்ளி நடக்கச் செய்யும்; சோம்பலை நீக்கச் செய்யும்; இவ்வுண்மையை, நாம் சொல்லியவாறே உணரவல்ல வர்க்கே சொன்னோம்.

குறிப்புரை :

மேற்கொள்ளுதல், ஏறிச்செலுத்துதல். அஃது இங்கு அடக்கி ஆளுதலைக் குறித்தது. உடலின் உள்ளுறுப்புக்கள் யாவும் - சிறப்பாக இருதயம் - நன்கு செயற்படுதலும், படாமையுமே உடலின் வலிமைக்கும், வலிமை இன்மைக்கும் காரணம். அவ்வுறுப்புக்களின் நன்மை, குருதி ஓட்டத்தின் தன்மையைச் சார்ந்தது. குருதி ஓட்டம் மூச்சுக் காற்றின் இயக்கத்தை ஒட்டியது. ஆகவே, அவ் இயக்கத்தை வழிப்படுத்தினால், உடல் வலிமை பெற்று, உள்ளமும் கிளர்ச்சி அடைவதாம்.
இதனால், பிராணாயாமம் உள்ளக் கிளர்ச்சியைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராணன் இருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராணன் அடைபேறு பெற்றுண் டிரீரே.

பொழிப்புரை :

பிராண வாயுவால் கிளர்ச்சியுற்று ஓடும் இயல் புடைய மனத்தை உடன்கொண்டு, அப்பிராண வாயு வெளியே ஓடாது உள்ளே அடங்கி இருக்குமாயின், பிறப்பு இறப்புக்கள் இல்லா தொழியும். ஆகவே, அந்தப் பிராண வாயுவை அதன் வழியினின்றும் மாற்றி வேறு வழியில் செல்லச் செலுத்தி, அதனால் மோனநிலையை எய்தி, பிராண வாயுவால் அடையத்தக்க பயனை அடைந்து இன்புற்றிருங்கள்.

குறிப்புரை :

மனம் செயற்பட்டுப் பயன் தருதற்பொருட்டு அமைந்ததே பிராண வாயுவாயினும், இங்கு நுதலிய பொருள் பிராண வாயு ஆதல் பற்றி அதனைத் தலைமைப் பொருளாக வைத்து, `மனத் தொடும் அடங்கிப் பிராணன் பேராது இருக்கின்` என்றார். ``மனத் தொடும்`` என்றதில் ஓடு, `கைப்பொருளொடு வந்தான்` என்றாற்போல உடைமைப் பொருட்கண் வந்தது. எனவே, பிராணாயாமத்தால் மனம் அடங்குதலாகிய பயன் கூறப்பட்டதாம். வழியை `மடை` என்றது, ஒப்புமை வழக்கு.
பிராண வாயு உலாவும் வழி இட நாடி (இட மூக்கு) ஆகிய இடைகலையும், வல நாடி (வல மூக்கு) ஆகிய பிங்கலையும், நடு நாடி (முதுகந்தண்டைச் சார்ந்துள்ள வழி) ஆகிய சுழுமுனையும் என மூன்று. அவற்றுள் பிராணவாயு இயல்பாக உலாவும் வழி இடைகலை பிங்கலைகளாம். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்து தலையே, ``மடை மாற்றி`` என்றார். `நடை மாற்றி` என்னாது, `மடை மாற்றி` என்றதனால், அதற்கு, `இடைகலை பிங்கலைகளுள் ஒன்றின் வழியாகவே விடுதலும் வாங்குதலும் செய்தல்` என உரைத்தல் கூடாமை அறிக. `பேச்சறுதல்` என்பது, `மோனம்` என்பது குறித்த வாறு. உண்மை மோனம், வாய் வாளாமையோடு ஒழியாது மனம் அடங்குதலேயாம் என்க. உண்ணுதல் இங்கு, துய்த்தல். இத்திருமந்திரம் சொற்பொருட் பின் வருநிலை.
இதனால், பிராணாயாமத்தால் மன அடக்கம் உளதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நால்அதில்
ஊறுதல் முப்பத் திரண்ட திரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.

பொழிப்புரை :

இது முதல் பிராணாயாமம் செய்யும்முறை கூறுகின்றார்.
(பிரணாயாமம், ``பூரகம், கும்பகம், இரேசகம்`` என்னும் மூன்று வகையினை உடையது. அவற்றுள்,) `பூரகம்` என்பது வெளியே உள்ள தூயகாற்று உடலினுள் புகுதற்கு உரித்தாய செயல். (எனவே, உயிர்க்கிழவன் தனது முயற்சியால் அக்காற்றினை உள்ளாக இழுத்தலாம்) இதன் உயர்ந்த அளவு பதினாறு மாத்திரை. இஃது இடை நாடியால் இடமூக்கு வழியாகச் செய்யற்பாலது. ``கும்பகம்`` என்பது உள்ளே புகுந்த காற்று அங்கே அடங்கி நிற்றற்கு உரித்தாய செயல். (எனவே, அங்கே நில்லாது ஓடுகின்ற அதனை அங்ஙனம் ஓட வொட்டாது தடுத்து நிறுத்தலாம்) இதன் உயர்ந்த அளவு அறுபத்து நான்கு மாத்திரை. ``இரேசகம்`` என்பது, உள் நின்ற காற்று வெளிப் போதற்கு உரித்தாய செயல். (எனவே, உயிர்க்கிழவன் அதனை வெளிச் செல்ல உந்துதலாம்) இதன் உயர்ந்த அளவு முப்பத்திரண்டு மாத்திரை. இம்மூன்றும் ஒருமுறை இவ்வளவில் அமைவது ஒரு முழு நிலைப் பிராணாயாமமாகும். பூரகம் முதலிய மூன்றும் தம்முள் இவ்வாறு இவ்வளவில் ஒத்து நில்லாது ஒன்றில் மாறுபடுதலும், பிரணாயாமம் புரைபடுதற்கு ஏதுவாம்.

குறிப்புரை :

``பூரகம் வாமத்தால் ஈரெட்டாக ஏறுதல்; கும்பகம் அறுபத்து நாலாக அதில் ஆறுதல்; இரேசகம் முப்பத்திரண்டாக ஊறுதல், ஒன்றின்கண் மாறுதல் வஞ்சகமாம்`` எனக் கூட்டுக. `பூரகம் இடைநாடியால்` எனவே, `இரேசகம் பிங்கலையால்` என்பது சொல்லாமை அமைந்தது. `ஏறுதல்` முதலிய மூன்றும் காரிய ஆகு பெயராய், அவற்றிற்குரிய செயல்களை உணர்த்தின. மாத்திரைகள் மந்திரங்களின்வழி அறியப்படும். அம்மந்திரங்கள் அவரவர் தம் தம் குருமுகத்தால் பெறற்பாலர். அனைவர்க்கும் பொதுவாக நிற்பது ``பிரணவம்`` எனப்படும் ஓங்காரம். அதனை ஒரு மாத்திரை வேண்டும்பொழுது ``உம்`` என்றே கொள்வர். இது சமட்டியாகக் கொள்ளும் முறை. இதனையே, ``அம், உம்`` எனப் பகுத்து வியட்டியாகக் கொள்வர். சமட்டியாக ஓதுபவர் இரண்டு மாத்திரைக்கு `ஓம்` என்றும், அதனின் மிக்க மாத்திரைக்கு அவ்வளவான அள பெடை கூட்டியும் ஓதுவர். ``அம்`` என்பதன்பின் ``சம்`` என்பது கூட்டி, ``அம்ச மந்திரம்`` எனக் கொண்டு, ஓதுதலைப் பெருவழக்காகச் சொல்வர். `ஓம்` என்பது போலவே, ``ஆம், ஈம், ஊம், ஏம், ஐம், ஔம்`` என்பவனவும், ``அம், உம்`` என்பன போலவே, ``இம், எம், ஓம்`` என்பனவும் முதல் (மூல) மந்திரங்களாம் என்பதனை நாயனார் நாலாந் தந்திரத்துள் அருளிச் செய்வார். மந்திரங்களில் ஒற்றெழுத்தின் மாத்திரையைக் கணக்கிடுதல் இல்லை. மந்திரங்களைக் கணிக்கும் முறை ``வாசகம், உபாஞ்சு, மானதம்`` என மூன்று. வாசகம், தன் செவிக்கும், பிறர் செவிக்குங் கேட்குமாறு வெளிப்படக் கூறுதல். உபாஞ்சு, நாப்புடை பெயருமளவாக மெல்ல உச்சரித்தல். இதனை ``முணுமுணுத்தல்`` என்றல் வழக்கு. மானதம், நாவாற் கூறாது மனத்தால் நினைத்தல். இவற்றுள், ``வாசிகம் சரியையாளர்க்கும், உபாஞ்சு கிரியையாளர்க்கும், மானதம் யோகியர்க்கும் உரியன`` எனப் பெரும்பான்மை பற்றிக் கூறப்படும் என்க. மந்திரத்தில் பற்றில்லாதவர் செய்யும் பிரணாயாமம் பெரும்பயன் தாராது.
ஈரெட்டு முதலிய எண்கள், அவ்வவ்வளவினதாகிய மாத்திரையைக் குறித்தன. `ஊருதல்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. `ஊருதல்` என்பதே பாடம் எனினுமாம். ஊருதல் - மேலே (வெளியே) செல்லுதல். ``முப்பத்திரண்டது`` என்றதில், அது பகுதிப் பொருள் விகுதி. `மாறுதலும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத் தலாயிற்று. வஞ்சகம் - பொய்; போலி. பூரிக்கும் அளவில் நான்மடங்கு கும்பித்த வழியே அக் காற்று உடற்குப் பயன் படுவதாகும். எனினும், பூரித்த காற்று முன்னுள்ள காற்றுடன் பயன்பட்டபின் நிலை வேறு படுதலால், மேற்குறித்த கால அளவில் இரேசகம் வேண்டப்படுகிறது.
இதனால், பிரணாயாமத்தின் இயல்பு கூறப்பட்டது.
இதனுள், `கும்பக மாத்திரை பூரக மாத்திரையின் நான் மடங்காம்` என்பதும், `இரேசக மாத்திரை கும்பக மாத்திரையின் அரை மடங்காம்` என்பதும் உய்த்துணர வைக்கப்பட்டவாறு அறிந்து கொள்க. `இஃது உயரளவு` எனவே, `அவ்வளவை எட்டுதற்கு, முதற் கண் சிறிது சிறிதாக அம்முறையிற் பயிலுதல் வேண்டும்` என்பது பெறப்பட்டது. பிராண வாயுவை இவ்வாறு நெறிப்படச் செய்வதால், உடல் தூய்மை பெற்று, ஆற்றல் மிகுந்து, நற்பண்புகளுக்கு இடமாகும்.

பண் :

பாடல் எண் : 6

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியனும் வெட்ட வெளியனு மாமே.

பொழிப்புரை :

ஒருவன் தன் பிராண வாயுவை வளைத்துத் தன்வயப்படுத்தி ஆள வல்லனாயின், ஆண்டுகள் பல செல்லினும் அவனது உடல் முதுமை எய்தாது, பளிங்குபோல அழகிதாய் இளமை யுற்று விளங்கும். அந்நிலையில் அவனது உணர்வு தெளிவு பெறுதற்கு ஞான குருவின் அருளைப் பெறுவானாயின், அவன் சாந்தி, சாந்தி யதீத கலைகளில் உள்ள புவனங்களை அடையும் அபர முத்தி நிலைகளை அடைவான்.

குறிப்புரை :

எனவே, `யோக முதிர்ச்சி, ஞானத்தின் பயனை எளிதில் தரும்` என்றவாறாம். உடல் நெடுநாள் நிற்றற்குப் பயன், பிறிது பிறவி வேண்டாது, எடுத்த பிறவியிலே ஞானத்தைப் பெறுதலாம். இவ் வாறன்றி, அணிமாதி அட்ட சித்திகளையும், பிறவற்றையுமே யோகத் தின் பயனாகக் கொள்வோர், உபாய யோகிகளேயன்றி, உண்மை யோகிகள் அல்லர்; அவர்க்கு வினையும், அதன் விளைவாகிய பிறப்பும் நீங்கா என்க.
`யோக சாக்கிரம், யோக சொப்பனம், யோக சுழுத்தி, யோக துரியம், யோக துரியாதீதம்` என்னும் யோகாவத்தை ஐந்தனுள் இயமம் முதல் பிராணாயாமம் ஈறாக உள்ளவை யோக சாக்கிரம். பிரத்தி யாகாரம் முதலாக உள்ள நான்கும் முறையே யோக சொப்பனம் முதலிய நான்குமாம். ஆகவே, `யோக சாக்கிரத்தின் முதிர்வாகிய பிரணாயாமம் கைவந்தோர் ஏனைய நான்கையும் அடைதல் தப்பாது` என்பது பற்றி இதனையே யோக முடிவுபோல வைத்துக் கூறுதல் வழக்கு. அம் முறையே பற்றி நாயனாரும் ஈண்டே யோகத்தின் பயனைக் குறித்தருளினார். `பழுக்கினும்` என்றது, `ஆண்டளவையால் முதுமை பெறினும்` என்றவாறு. `பழுக்கினும், காயம் பளிங்கொத்துப் பிஞ்சாம்` என மாறிக் கூட்டுக. `முதிரினும்` என்னாது ``பழுக்கிலும்`` என்றதனால், `முதுமை வந்தபின் இது செய்யினும் அது நீங்கும்` என்பது கொள்க. குரு, ஞான குரு ஆதல், யோகிகட்கு ஏனைக் குரு வேண்டாமை பற்றி அறியப்படும். ``வளி, வெளி`` என்பவை சாந்தி, சாந்தியதீத கலைகளைக் குறித்து நின்றன. இவ்வாறன்றி, வாயுத் தம்பனமும், ஆகாயத் தம்பனமும் வல்லராதற்கு ஞான குரு வேண்டாமை அறிக. ஈற்றடியைப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல.
இதனால், பிரணாயாமம் யோகத்தின் சிறப்புறுப்பாய்ப் பயன் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே.

பொழிப்புரை :

எந்த ஆசனத்தில் இருந்து பிராணாயாமம் செய்யினும், பூரகத்தைச் செய்தல் இடைநாடி வழியாகவே யாம். அவ்வாறு செய்தலால், உடலுக்கு ஊறு ஒன்றும் உண்டாகாது. அந்த ஆசனத்திலே பூரகம், கும்பகம், இரேசகம் என்பவற்றை மேற்கூறிய வாறு செய்யச் சங்கநாதம் முதலிய ஓசைகளை உள்ளே கேட்கும் நிலைமை உண்டாகும். அஃது உண்டாகப் பெற்றவன் பின்னர் யோகருள் தலைவனாய் விளங்குவான்.

குறிப்புரை :

``எங்கு`` என்னும் இடப்பெயர் இங்கு யோகா சனத்தைக் குறித்தது. பூரி, முதனிலைத் தொழிற்பெயர். இங்கும், `பூரித்தல் இடமூக்கு வழியாக` எனவே, `இரேசித்தல் வலமூக்கு வழியாக` என்பதும் கூறியதாயிற்று. இவ்வாறு வலியுறுத்து ஓதியதனால், ``மூக்குத் துளை இரண்டாகப் படைக்கப்பட்டது பூரக இரேசகங்களை இவ்வாறு செய்தற் பொருட்டே`` என்பது விளங்கும். விளங்கவே, வாய்வழியாக அவற்றைச் செய்தல் கூடாமையும் பெறப் படும். `அது` என்றது பிராண வாயுவை. பிடித்தல், பூரித்தல், விடுதல், இரேசித்தல், அளவும் - மேற்குறித்த உயரளவுகாறும். செல்ல - பிரணாயாமத்தில் பயில. சங்க நாதம் முதலிய தச நாதங்கள் (பத்து ஒலிகள்) இவை என்பது பின்னர்க் கூறப்படும்.
இதனால், `ஆசன வேறுபாட்டால் பிரணாயாம முறை வேறுபடுதல் இல்லை` என ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.

பொழிப்புரை :

பிராண வாயுவை இடை நாடியால் உட்புகுத்திப் பூரிக்கும் கணக்கையும், பிங்கலை நாடியால் இரேசிக்கும் கணக்கையும் அறிந்து, அதனானே கும்பிக்கும் கணக்கையும் நன்கு அறிகின்றவர் இல்லை. அக்கணக்குகளை ஆசிரியன் அறிவுறுக்கும் யோக நூல் வழியாக மேற்கூறியவாறாக நன்கு உணர்பவர்கட்குக் கூற்றுவனை வெல்லும் பயன் அம்முறையிற் பயிலுதலேயாய் முடியும்.

குறிப்புரை :

இரு கால் - முதற் காற்று, (இடை நாடி வழியது) கடைக் காற்று (பிங்கலை வழியது) என்பன. இது தொகை நிரல்நிறை. ``பூரிக்கும்`` என்பதன்பின், `இரேசிக்கும்` என்பது எஞ்சி நின்றது. `பூரிக்கும், இரேசிக்கும், பிடிக்கும்` என்னும் எச்சங்கள், `கணக்கு` என்னும் ஒரு பெயர் கொண்டன. ``இரு கால்`` மேலே கூறப் பட்டமையின், பின்னர் ``காற்று`` என்றது இடைக்காற்றாதல் (நடுநாடி வழியது) விளங்கும். குறி - குறிக்கோள்; இலட்சியம். துணிவுபற்றி, வழியையே பயனாக அருளினார்.
இதனால், பிரணாயாமத்தைச் செம்மையாகச் செய்தலின் அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி உந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.

பொழிப்புரை :

பிராண வாயுவை உடல் முழுதும் பரவுமாறு பூரகத்தையும், அந்த வாயுத் தூய்மையாயிருத்தற் பொருட்டு இரேசகத்தையும், நீண்ட வாழ்நாளையும், மிக்க ஆற்றலையும், பெறுதற் பொருட்டுக் கும்பகத்தையும் மேற்கூறிய முறையிற் செய்து பிராணவாயுவை வசப்படுத்தினால், இப்பிறப்பிற்றானே சிவபெரு மானது திருவருளைப் பெறலாம்.

குறிப்புரை :

``பாலாம்`` என்பதனை, ``பால்போல ஆகின்ற`` என விரிக்க. பால் தூய்மைக்கு உவமை. ``ஆம்`` என்ற பெயரெச்சம், ``இரேசகம்`` என்னும் ஏதுப் பெயர் கொண்டது. ``இரேசகத்தால் உட் பதி வித்து`` என்றது, இரேசகம் இல்லாது ஒழியின் கும்பகம் தூய்மை யாகாது என்பதனைப் புலப்படுத்தி, இரேசகத்தின் இன்றியமை யாமையைக் குறித்தது. நெடுங்காலம் வாழ்தலால் `அமரர்` எனப்படும் தேவர் பலருள்ளும் வாழ்நாள் மிக்கவன் மாயோனாதலின், ``மாலாகி`` என்றது, நெடுங்காலம் வாழ்தலைக் குறித்தது. ``ஆகி`` என்னும் ஆக்கச்சொல் உவமை மேல் நின்றது. உலக காரணன் ஆகத்தக்க ஆற்ற லால் நான்முகனை உந்தி வழித்தோற்றுவித்தோனாதல்பற்றி, உந்தித் தானத்தில் கும்பகம் செய்து ஆற்றல் மிகுதற்கும் அவனையே உவமை யாகக் கூறினார். வாங்குதல் - வளைத்தல். ``இப்பிறப்பிலே`` என்பது ஆற்றலால் கொள்ளக்கிடந்தது. நெடுங்காலம் வாழ வேண்டுதற்குக் காரணம் கூறுவார், ``ஆலாலம் உண்டான் அருள்பெறலாமே`` என்றார்.
இதனால், பூரகம் முதலிய மூன்றின் பயன் வகுத்துணர்த்தப் பட்டது. கும்பகத் தானம் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.

பொழிப்புரை :

பூரக இரேசகங்களை முற்கூறியவாறு இடைகலை பிங்கலைகளால் செய்தலே முறையாம். கும்பகத்தை ஓமத்தானமாகிய உந்தித் தானத்திற் செய்தலே முறையாம்.

குறிப்புரை :

`உண்மை` என்பது ``இவ்விரண்டு`` என்பதனோடும் இயையும். ``வாமத்தில் பூரித்து, பிங்கலைக்கண் இரேசித்து ஆக, இவ்விரண்டு உண்மை; ஓமத்தால் கும்பிக்க உண்மை`` என்க. ஆதல்- முடிதல். `இவ்விரண்டு` என்ற சுட்டு, பூரக இரேசகங்களைச் சுட்டிற்று. உண்மை - செம்மை. `ஓமம்` என்பது ஆகுபெயராய் அதற் குரிய இடத்தை உணர்த்திற்று. அகப் பூசையில் இருதயம் பூசைத் தானமாகவும், நாபி ஓமத்தானமாகவும், புருவ நடு தியானத் தானமாகவும் கொள்ளப்படுதல் அறிக. ``ஓமத்தால்`` என்பது உருபு மயக்கம். இதற்கு ``ஓம்`` என்னும் அம்மந்திரத்தால் எனவும் உரைப்பர். ``ஆக, கும்பிக்க`` என்ற எச்சங்கள். ``உண்மை` என்னும் குறிப்பு வினை கொண்டன. ``உண்மையது`` எனற்பாலதனை `உண்மை` என்றே கூறுதல் பிற்கால வழக்காயிற்று. ஆகவே, அப் பண்புச் சொல் பண்பிமேல் நின்றதாக உரைத்துக் கொள்ளப்படும். ``கும்பிக்க`` என்பதன்பின், ``அஃது`` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
இதனால், மேல் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டது, எடுத்தோதி வலியுறுத்தப்பட்டது. முன்னவை இரண்டும் அனுவாதம்.

பண் :

பாடல் எண் : 11

இட்டதவ் வீடிள காதே யிரேசித்துப்
புட்டி படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டங் கிருக்க நமனில்லை தானே.

பொழிப்புரை :

இறைவன் உயிரைக் குடிவைத்ததாகிய அந்த இல்லம் (உடம்பு) தளர்வுறா வண்ணம் வீணே போக்கப் படுவதாகிய பிராணவாயுவை அங்ஙனம் போகாதவாறு பிராணாயாமத்தால் பயன்படச் செய்யின் இறப்பு இல்லையாகும். (நீண்ட நாள் வாழலாம் என்பதாம்)

குறிப்புரை :

அவ்வீடு - அத்தன்மையதாகிய வீடு. எனவே, \\\"அஃதழியின் உயிர் தீங்கெய்தும்\\\" என்பதாம். புட்டி, வடசொல்; `நிறைவு\\\' என்பது பொருள். தச நாடிகளாவன, `இடைகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிகுவை, அலம்புடை, சங்குனி, வைரவன், குகுதை\\\' என்பன.
கொட்டி - கொட்டப்படுவது. இஃது யோகியரல்லாதாரது செயல் பற்றிக் கூறியது. பிராணன், மூக்கு வழியாக இயங்கும் காற்று. அபானன், எருவாய் வழியாக வெளிப்படும் காற்று. பிராணனை மூக்கு வழிப் புறப்படாது கும்பிக்கும்பொழுது, அஃது எருவாய்வழிப் புறப் பட முயலும். அதனை அடக்குதலையே, \\\"அபானனைக் கும்பித்தல்\\\" என்றார். எனவே, இயல்பாக வெளிச்செல்லும் அபானனைக் கும்பிக்கக் கூறினாரல்லர் என்க. \\\"அங்கு நட்டு இருக்க\\\" என மாற்றுக. அங்கு - உந்தித் தானத்தில். நடுதல் - நிலைபெறுத்தல். இக்கும் பகத்தால் முதுகெலும்பின் அடியில் உள்ள \\\"சுழுமுனை\\\" என்னும் நாடியுள் பிராணவாயுச் செல்வதாகும். அதனால் பல நலங்கள் விளையும். அது பற்றி \\\"நமன் இல்லை\\\" என்றார். \\\"நட்டம் இருக்க\\\" என்பது பாடம் அன்று.
இதனால், \\\"கும்பகம் ஓட்டைபோகாதவாறு காத்தல் வேண்டும்\\\" என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

பொழிப்புரை :

வெளி வருவதும், உட்புகுவதுமாய்ப் பயனின்றி அலைகின்ற பிராண வாயு, மேற்கூறிய நெறிக்குட்பட்டு நிற்குமாற்றால் தூயதாகச் செய்யின், உடம்பு ஒளிவிட்டு விளங்கும்; தலை, முகம் முதலானவற்றில் உள்ள மயிர்கள் நரையாது கறுப்பனவாம். இவற்றினும் மேலாகச் சிவபெருமான் அத்தகைய யோகியின் உள்ளத்தை விட்டுப் புறம் போகான்.

குறிப்புரை :

\\\"புறப்பட்டுப் போகான்\\\" என்றது `தியானம் சலியாது\\\' என்றவாறாம். எனவே, \\\"இதுவே பிராணாயாமமாகிய பேருழைப் பிற்குச் சிறந்த பயன்\\\" என்பது போந்தது.
இதனால், பிராணாயாமம் மேல் வரும் யோக உறுப்புக்கட்கு இன்றியமையாச் சாதனமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோலம் அஞ்செழுத் தாமே.

பொழிப்புரை :

ஆடரங்கு ஒன்றை அமைத்து, அதனுள் ஆடப் புகுந்த மங்கையர் இருவர் தாங்கள் ஆடும்பொழுது பன்னிரண்டங்குல தூரம் முன்னோக்கிச் செல்கின்றனர்; ஆயினும், பின்னோக்கி வரும் பொழுது எட்டங்குல தூரமே வருகின்றனர். ஆகவே, அவர் ஒவ்வொரு முறையிலும் நாலங்குல தூரம் கூடத்தை விட்டு நீங்கு பவராகின்றனர். (இவ்வாறே அவர்களது ஆட்டம் நடைபெறு மாயின் எப்பொழுதாவது அவர்கள் அவ்வாடரங்கை முழுதும் விட்டு அப்பாற் போதலும், மீள அதன்கண் வாராமையும் உளவாதல் தப்பா தன்றோ!) ஆகையால், ஒவ்வொரு முறையும் அந்த நாலங்குல தூரமும் அவர்கள் மீண்டு வருவராயின், அக் கூடத்தின் அழகு என்றும் அழியா அழகாய் நிலைத்திருக்கும்.

குறிப்புரை :

\\\"ஓடுவர் பன்னிரண்டங்குலம்; மீளுவர் எண்விரல்\\\" என நிரல்நிரையாக்கிப் பின், \\\"நீடு உவர் இவ்வாற்றால் நால் விரல் கண்டிப்பர்; (அதனையும் அவர்) கூடிக்கொளின், கோலம் அஞ் செழுத்தாம்\\\" எனக் கூட்டி உரைக்க. நீடு உவர் - ஆட்டத்தில் நீடு நிற்கின்ற இவர். கண்டிப்பர் - துணிப்பர். மந்திரங்களே அழிவில்லன; அவற்றுள்ளும் அஞ்செழுத்து மந்திரம் அழிவிலதாதலின், அழியாமை குறித்தற்கு, அஞ்செழுத்தாக்கி அருளிச்செய்தார். அஞ்செழுத்து, திருவைந்தெழுத்தும், வியட்டிப் பிரணவமுமாம். இனி, ஓவியத்தின் மறுபெயராகிய `எழுத்து\\\' என்பதும், \\\"கோலம்\\\" என்பதுபோலவே ஆகுபெயராய் அழகினைக் குறித்தது எனக் கொண்டு, ஏகாரத்தை எதிர்மறை வினாவாக்கி, `அழியுமோ என்று அஞ்சப்படும் அழகாகுமோ! ஆகாது\\\' என உரைத்தலுமாம். இனி, இதற்கு \\\"அஞ்செழுத்துருவமாதற்கு ஏற்றதாகும்\\\" என உரைத்தலுமாம். ஆடல் மங்கையர் அப்பாற்போய், மீளவும் அதனுள் வாராதொழியின், ஆடரங்கு அழிந்தொழியும் என்பதாம்.
கூடம், உடம்பு, ஆடல் மங்கையர், இரு மூக்கு வழியாக இயங்குகின்ற பிராண வாயு, \\\"மக்களது மூச்சுக் காற்று இயல்பாக வெளிச் செல்லும் பொழுது பன்னிரண்டங்குல அளவு செல்லும்\\\" என்பதும், \\\"மீண்டு அஃது உட்புகும்பொழுது, முன் சென்ற அளவு புகாது, இயல்பாக எட்டங்குல அளவே புகும்\\\" என்பதும் யோகநூல் வரையறை. எனவே, \\\"வெளிச் சென்ற காற்றில் மூன்றில் இரண்டு பங்கே உட்புக, ஒருபங்கு இழப்பாகின்றது\\\" என்பதும், `அவ் இழப்பினாலே நாள்தோறும் வாழ்நாள் அளவு குறைந்துகொண்டே வருகின்றது\\\' என்பதும், `அவ்வாறாகாது தடுப்பது பிராணாயாமம் என்பதும்\\\' கருத்தாதல் அறிந்துகொள்ளப்படும்.
இதனால், பிரணாயாமத்தால் வாழ்நாள் நீட்டிக்குமாறு தெரித்துணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டா னைக்குப் பகல்இர வில்லையே.

பொழிப்புரை :

பன்னிரு முழ உயரமுள்ள யானை ஒன்று பகலும், இரவுமாய் மாறிவரும் காலச் சுழலில் அகப்பட்டுள்ளது. அஃது அவ்வாறிருத்தலை அதன் பாகன் தனது பேதைமையால் அறிந்தானில்லை. அதனை அவன் அறிவானாயின், அந்த யானை அச் சுழலைக் கடந்து நின்று, அவனுக்கு உதவுவதாகும்.

குறிப்புரை :

ஆனை, மூச்சுக் காற்று. வசப்படுத்துதற்கு அருமை நோக்கி, அதனை யானையாக அருளிச்செய்தார். `சிறந்த யானை ஏழுயர் யானை\\\' என்பது யானை நூல் மரபு. அதனோடொப்ப, `பன்னிரண்டுயர்ந்த யானை\\\' என்றார். `முழம்\\\' எனவும், `உயர்ந்தது\\\' எனவும் கூறாது, பொதுமையில் நயம்பட `பன்னிரண்டு\\\' என்றது, மேல், `அங்குலம்\\\' என்றதனோடும், \\\"முன்னோக்கி ஓடும்\\\" எனக் கூறியவற்றோடும் மாறுகொள்ளாமைப் பொருட்டு. \\\"பகல் இரவு\\\" என்றது, பகல், இரவு, நாள், பக்கம், திங்கள், யாண்டு எனப் பலவாற்றாற் காலம் கழிதலைக் குறித்தவாறு. `பிராணாயாமம் செய்யின், அங்ஙனம் கழிதலாற் கெடுவதொன்றில்லை\\\' என்பதாம். பாகன் - உயிர்.
இதனால், `பிராணாயாமத்தில் மனவெழுச்சி செல்லாமை அறியாமையினாலாம்\\\' என்பது கூறப்பட்டது.
`பிராணாயாமத்துள் பூரகம், கும்பகம், இரேசகம் மூன்றும் தனித்தனியானவை அல்ல; மூன்றும் யாண்டும் கூடி நிற்பனவே; அவற்றுள் \\\"பூரகம், கும்பகம், இரேசகம்\\\" என்னும் முறையால் செய்யப்படுவது இரேசகம். \\\"பூரகம், இரேசகம், கும்பகம் மறித்தும் பூரகம்\\\" என்னும் முறையால் செய்யப்படுவது பூரகம். \\\"பூரகம், இரேசகம், கும்பகம்\\\" என்னும் முறையால் செய்யப்படுவது கும்பகம். எனவே, இவை இறுதியில் நிகழ்வனவற்றால் பூரகம் முதலிய பெயர்களைப் பெற்றன\\\' எனக்கொண்டு, அவ்வாறே, \\\"ஏறுதல் பூரகம், மேல்கீழ் நடுப்பக்கம், வாமத்தில் ஈரெட்டு\\\" என்னும் திரு மந்திரங்களை முறையே `இரேசகம், பூரகம், கும்பகம்\\\' என்பவற்றைக் கூறுவனவாக அரசஞ் சண்முகனார் தமது பாயிர விருத்தி (பக். 45,46) யுள் எழுதியுள்ளார். இன்னும் அவர் பிராணாயாமம் `இம்மூன்றல்லாது, `நிலை\\\' என்ற நான்காவதும் உடையது\\\' எனக் கொண்டு, \\\"இட்டதவ் வீடு கூடம் எடுத்து, பன்னிரண் டானைக்கு\\\" என்னும் திருமந்திரங்கள் அதனையே கூறுகின்றன என்கின்றார். ஆயினும், \\\"நிலை\\\" என்பதைக் குறிக்கும் வடமொழிப் பெயர் இது என்பதனை அவர் கூறவில்லை. `தாபித்தல்\\\' என்ற ஒருசொல் திருமந்திரத்திற் காணப்படுகின்றது; அதனையே கருதினாரோ, என்னவோ! இனி, கும்பகம் என்பது காற்றை உள்ளே நிறுத்துதலன்று; வெளியே நிறுத்துதல் என்கின்றார் விவேகானந்த அடிகள். இவையெல்லாம் முன்னை மரபிற்கு வேறானவையாய் உள்ளன.

பண் :

பாடல் எண் : 1

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.

பொழிப்புரை :

மனத்தை அகநோக்கிலே காணத்தக்க ஆதார நிலைகளைக் கண்டு கண்டு நிற்குமாறு அடக்கினால், அங்குத்தானே களிப்புப் பெற்று பயன்கள் பலவற்றை அடையலாம். முடிவில் பழைய வேதங்கள் எல்லாம் காண விரும்பிப் பண்டு தொட்டு எங்கும் சென்று தேடியும் காணாத சிவனை இன்றே, இவ்விடத்தே கண்டு, அமைதி யோடு இருத்தலும் கூடும்.

குறிப்புரை :

`கருத்தினை உள்ளே கண்டு கண்டு உறவாங்கிடின்` என மாறிக் கூட்டுக. காணுதல், கொள்ளுதல். இவற்றிற்குச் செயப்படு பொருள்கள் வருவிக்கப்பட்டன. ஆதார நிலைகள் இனிக் கூறப்படும். ``குணம்`` என்பது, ``கோளில் பொறியிற் குணமிலவே`` (குறள், 9) என்பதிற் போல, `பயன்` எனப் பொருள் தந்தது, தேடி - தேடப்பட்டவன்.
இதனால், பிரத்தியாகாரத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நாவிக்குக் கீழே பன்னிரண் டங்குலந்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிகிலர்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே.

பொழிப்புரை :

உந்திக்குக் கீழ்ப்பன்னிரு விரற்கிடையளவில் உள்ள இடத்தில் மனத்தை நிலைபெறச் செய்வதாகிய இரகசிய முறையை உலகர் அறியார். அதனை அறிந்து மனத்தை அங்கே நிறுத்துவராயின், இறைவன் தானே வந்து அவர்களைத் தன்பால் வர அழைத்து, அங்கு வீற்றிருப்பான்.

குறிப்புரை :

இதில் குறிக்கப்பட்ட இடம் `மூலம்` (அடிநிலை) எனப்படும். இது முதல் ஆதாரம், இஃது எருவாயுமன்று; கருவாயு மன்று; இரண்டிற்கும் இடைப்பட்ட இடம் என்பது பின்னர் இனிது விளங்கும். தாபித்தல் நிலைபெற வைத்தல். அவ்வாறு வைப் பதனையே ``மந்திரம்`` என்றாராகலின், ``தாபிக்கும்`` என்ற பெய ரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். ``மந்திரம்`` என்றது, `இரகசியம்` என்னும் அளவாய் நின்றது. இனி, `மந்திரம்` என்றே பொருள் உரைப்பின், ``அறிகிலர்`` எனப் பிறரை இகழ்கின்ற நாயனார், தம் மாணாக்கர்க்கு அதனை அறிவியாது வாளாபோதல் அடாதாம். அன்றியும், இஃதொன்றற்கே யன்றி ஏனைப் பலவற்றிற்கும் மந்திரம் உண்மையின் அவ்விடங்களிலும் அவற்றைக் கூறல் வேண்டும்; அவ்வாறு கூறிற்றிலர். இனி, மந்திரமே யன்றி அதிதேவர், அக்கரம், அடையாளம் முதலாக மற்றும் பல உள ஆகலின், அவற்றையும் குறியாது போதல் குன்றக் கூறலாம். அங்ஙனமாயின், அவையும் எடுத்தோதற் பாலனவாகலின் அவற்றை அவ்வாறு ஓதாதுபோதல் என்னை எனின், அவையெல்லாம் யோகத்துட் கிரியையேயாய், நூல்கள் தோறும், மரபு தோறும் வேறு வேறாகக் கொள்ளப்படும் வழி பாட்டு முறைகளேயாதலால், சிவநெறியாளர் அனைவர்க்கும் பொதுப் பட அருளிச் செய்யும் இந்நூலூல் அவற்றுட் பொதுவாவன சிலவற்றை யன்றி ஏனையவற்றை வரையறுத்தோதுதல் ஆகாமையின், ``அவற்றை அவரவர் தம் தம் வாய்ப்பிற்கு ஏற்பப் பெற்றுக் கடைப்பிடிக்க`` என்னும் கருத்தால் வாளா போகின்றார்; ஆதலின், அது நாயனார்க்குக் குற்றமாதல் எங்ஙனம் என்க. சைவாகமங் களுள்ளும் இவற்றுட் சிலவற்றை வேறு வேறாகக் கூறப்படுதற்கும் காரணம், `இவை யெல்லாம் சில வழிபாட்டு முறையே`` என்னும் கருத்தினாலேயாம்.
யோகமும், மன ஒருமைக்கும், ஆன்ம பரிபக்குவத்திற்கும் உரிய ஒரு சாதனமேயன்றிப் பொருளியல்பை உள்ளவாறுணரும் தத்துவ ஞானம் (மெய்யுணர்வு) அன்று` என்பது உணரமாட்டாதார், யோகத்தையே, ``ஞானம்`` என மயங்கி, ஒரு நெறியையே பற்றிப் பிற வற்றை இகழ்வர், இங்கு யோகத்தை உணர்த்தும் நாயனார், பின்னர் ஞானத்தையே முடிவாக உணர்த்துதல் காண்க.
இவ்வாறாயினும், இவ்வழிபாட்டு முறைகளுள் சிலவற்றை இவ்வதிகாரத்திறுதியில் சிறிது காண்போம். பிற அறங்களினும், பிற தெய்வ வழிபாட்டினும், சிவதன்மமும் சிவ வழிபாடும் வேறாதல் போலப் பிற யோகங்களினும் சிவயோகம் வேறு, சரியை முதலிய நான்கனுள் மூன்றாவதாகிய யோகம் சிவயோகமே என்பது உணர்க. முதல் மூன்று அடிகளிலும் வடவெழுத்துப் பகரம் தமிழில் வகரமாய்த் திரிந்தது.
இதனால், பிரத்தியாகாரத்தில், `மூலாதாரம்` என்னும் முதல் ஆதார நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே.

பொழிப்புரை :

எருவாய்க்கு இருவிரற்கிடைமேலாகவும், வெளியே தோன்றி நின்று கருவைப் பயக்கும் கருவாய்க்கு இருவிரற்கிடை கீழாகவும் நிற்கின்ற வட்ட வடிவான குண்டலி சத்தியுள் தோன்றுகின்ற செவ்வொளியின் இடம், உந்திக்கு நான்கு விரற்கிடை கீழே உள்ளது.

குறிப்புரை :

இங்கு``மூலம்`` என்றது எருவாயை. எனவே, இஃது ஆதாரங்களுள் முதலாவதாகிய மூலாதாரத்தினை இனிது விளங்கக் கூறியதாயிற்று. ஞாலம் - பூமி; இடம். இதில் `அத்து` வேண்டாவழிச் சாரியை, ``குண்டலி`` எனப்படுவது சுத்த மாயையில் தோன்றும் எழுத் தோசையாகிய நாதமே. இதற்கு வட்டமே வடிவாகக் கொள்ளப்படு தலின், ``குண்டலி`` எனப் பெயர் பெற்றது. ``கோலித்த`` என்றதும் இதன் வடிவைக் குறித்ததேயாம். ``வட்டமாய் வளைந்து நிற்பது`` என்பது பற்றி, இது பாம்பாக வைத்துப் பாவிக்கப்படுகின்றது. இது பற்றியே உலகத்துப் பாம்பையும் வழிபாட்டிற்கு உரியதாகக் கருதும் வழக்கம் உளதாயிற்று. உண்மையாகச் செய்யும் வழிபாடு யாதா யினும், அதற்குப் பயன் தருபவன் சிவபெருமான் என்பதை நினைவு கூர்க.
``குண்டலி எனப்படும் பாம்பு ஐந்து தலைகளை உடையது`` என்றல், வாக்குகள் சுத்த மாயையின் பஞ்ச கலைகளில் விருத்திப் பட்டு நிற்றலைக் குறிப்பது. சிவாலயங்களில் சிவலிங்கத்திருமேனிக்கு ஐந்து தலைப்பாம்பைக் கவசமாகச் சாத்தி வழிபடுதலும் சிவபெருமான் தனது சத்தி நிவிர்த்தி முதலிய ஐந்தாகிச் சுத்தமாயையின் ஐந்து கலை களிலும் நிற்க, அவ்விடங்கள் எல்லாவற்றிலும் சிவன் நிற்றலையே குறிக்கும்.
மந்திரங்கள் அனைத்தும் நால்வகை வாக்கு வடிவமாகிய சுத்த மாயையின் காரியங்களே. அக் கருத்து விளங்குதற் பொருட்டு, `அனைத்து மந்திரங்கட்கும் மூலமாகிய ஓங்காரமே குண்டலி சத்தி`` என்பர். நால்வகை வாக்கினாலேயே யாவர்க்கும் பொருளுணர்வு உண்டாகின்றது. அவ்வுணர்வு ஆணவத்தின் சார்பால் உலகப் பொருள்களையே உணர்ந்து நிற்குங்காறும் ``அறிவு`` எனப்படாது ``அறியாமை`` என்றே சொல்லப்படும். அதனால், உலகர் எல்லாரிடத்தும் உள்ள குண்டலி சத்தியாகிய பாம்பு, கண்ணை விழியாது உறங்கிக் கிடப்பதாகின்றது.
உலக நடையிலும் அறிவு புருவ நடுவாகிய மேலிடத்திலும், அறியாமை மூலாதாரமாகிய கீழிடத்திலும் உள்ளன என்பதால், ``குண்டலிப் பாம்பு தனது அறிவுக்கு நிலைக்களமாகிய தலையை அறியாமைக்கு இடமாகிய மூலாதாரத்திலும், அறிவுக்கு நிலைக் களமாகாத வாலை அறிவுக்கு இடமாகிய நெற்றியிலும் வைத்துத் தலைகீழாகக் கிடந்து உறக்கத்தில் ஆழ்ந்துள்ளது`` எனவும், ``அர ணியில் அடங்கியுள்ள அக்கினி, கடைந்தபொழுது எரிந்து சுடுதல் போல, மூலாதாரத்தில் அடங்கியுள்ள அக்கினி, பிராணாயாம பிரத்தி யாகாரங்களால் மூண்டெழுந்து தாக்க, அக் குண்டலிப் பாம்பு கண் விழித்து எழுந்து தலைமேலாகவும், வால் கீழாகவும் சுழன்று, இயற்கை நிலையில் நிற்கும்`` எனவும் யோக நூல்கள் கூறும். இவற்றால் எல்லாம் பெறப்படுவது, ``யோக நெறியிற் பழகினால் உயிரினது உணர்வு புறப் பொருள்களாகிய உலகத்தைப் பற்றி நிற்றலை ஒழிந்து, உயிர்க் குயிராய் நிற்கின்ற இறைவனை உள்ளுணர்வாற் பற்றும்`` என்பதே. அதற்குச் சிறந்த துணையாவன பிரணவம் முதலிய மந்திரங்களும், பாவனைகளும், மனத்தால் அகத்தே செய்யும் வழிபாடுகளுமாகும். அவ்வழிபாடுகட்கு முதலாய் நிற்கும் திருமேனிகள் முன்பு உருவத் திருமேனியாய் நின்று, பின்பு அருவுருவத் திருமேனியாய், முடிவில் அருவத்திருமேனியாகும் என்க.
இதனுள்,``குண்டலியுள் எழும் செஞ்சுடர்`` என்றது, இறைவனது அருவுருவத் திருமேனியை, இது புறத்தே இலிங்கமாக வணங்கப்படுதல் போல, அகத்தே யோகத்தில் பேரொளிப் பிழம்பாகக் கொண்டு தியானிக்கப்படும். அதன் விளக்கம் எல்லா ஆதாரங்களிலும் நிறைந்து நிற்பதாயினும், இங்குக் குறிக்கப்பட்ட இடமே அஃது இருக்கும் இடம் என்பது இதனால் பெறப்பட்டது. இதுபற்றியே இவ்விடம் ``சுவாதிட்டானம்`` எனப் பெயர் பெற்றது. ``தனது இடம் `` என்பது இப்பெயரின் சொற்பொருள். தான், உள்ளெழும் சோதி. சோதியின் இயல்பு கீழிருந்து மேல் நோக்கி எழுவதாகலின், பிரத்தியாகாரப் பயிற்சியால் இது மேல் நோக்கி வளர்ந்து காட்டும். மூலாதாரம் குண்டலிக்கு இடமாயினமையின், அதற்கு மேலுள்ள இதுவே இச் சோதிக்கு இடமாயிற்று. இஃது இரண்டாவது ஆதாரம். இதன் இயல்பு கூறவே, ``மனத்தை மூலாதாரத்தில் நிறுத்திப் பயின்றபின், இவ்விடத்து நிறுத்திப் பயில்க`` என்றதாயிற்று.
இதனால், ``சுவாதிட்டானம்`` என்னும் இரண்டாவது ஆதார நிலை கூறப்பட்டது.
மூன்றாவது ஆதாரம் ``மணிபூரகம்`` என்பது; இஃது உந்தித்தானமே, ``மாலாகி உந்தியுட் கும்பித்து வாங்க`` என மேற் கூறியதனானே இதுவும் ஓர் ஆதாரமாதல் அறியப்படுதலின், இவ் விடத்தும் மனத்தை நிறுத்துதல் உய்த்துணர்வகையால் பெறப்படுதல் பற்றி எடுத்தோதாராயினார், வாயுவைக் கும்பிக்கும் சிறந்த இடமாதல் பற்றி, ``மணிபூரகம்`` எனப் பெயர் பெற்றது.

பண் :

பாடல் எண் : 4

நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்யும்
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே.

பொழிப்புரை :

மூக்கிற்குப் பன்னிரு விரற்கிடை கீழாக உள்ள இடத்தில் நீ மனத்தை நிறுத்தித் தியானிக்க வல்லையாயின், அட்டமா சித்திகளைத் தரும் சித்தியோகம் தானே வந்து உன்னை அடையும், உடம்பிற்கும் அழிவு இல்லையாகும்.

குறிப்புரை :

மூக்கிற்குப் பன்னிரு விரற்கிடைக்கீழ் உள்ளது இருதயத் தானம், இஃது `அனாகதம்` எனப்படும்; `வரவற்றது` என்பது இப் பெயரின் பொருள். மனத்தின் இடம் இதுவே` என்பது கருத்து. `இவ் வளவிலே சிவயோகமல்லாத பிற யோகங்கள் கைவரும்` என்பதையே பின்னிரண்டடிகள் உணர்த்தின. அட்டமாசித்திகளைப் பயனாக உடைய யோகம் `ஹட யோகம்` எனவும், உடம்பு நரை திரை மூப்பு இன்றி நெடுங்காலம் நிற்றலைப் பயனாக உடைய யோகம் `ராஜயோகம்` எனவும் சொல்லப்படும். இவையெல்லாம் ஞானத்தைப் பயவாமை மாத்திரையேயன்றி, அதற்குத் தடையாவனவுமாம்; ஆதலின், ஞானத்தை விரும்புவோர் இவற்றை விரும்புதல் இல்லை. இதனுள், மூன்றாம் அடி மூன்றாம் எழுத்து எதுகை.
இதனால், `அனாகதம்` என்னும் நான்காவது ஆதார நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதுவ தும்முடல் உன்மத்த மாமே.

பொழிப்புரை :

`சுவாதிட்டானத்தில் உள்ளது` என மேலே சொல்லப் பட்ட பேரொளி, உங்களுக்குக் கீற்றுப்போன்ற விளக்கொளியாகப் புலப்படுமாயின், `அப்பொழுதே பேரின்பம் கிடைத்து விட்டது` எனக்கொண்டு, அவ்வொளியை நோக்குதலையே குறியாகக் கொள்ளுங்கள். இருதயத்திற்கு அடுத்ததானமாய் விளங்குகின்ற கண்டத்தில் (மிடற்றில்) நிலைத்துள்ளதாகிய அவ்வொளியைத் தலைப் பட்டால், அதன் பயனாகச் சொல்லப்படுவது, அதுகாறும் கண்டறியாத ஒரு புதிய இன்ப அனுபவமாம்.

குறிப்புரை :

இங்ஙனங் கூறவே, `ஞான நாட்டம் உடையோரே முற்கூறிய நிலையின் மேலும் முயன்று இவ்வொளியைக் காண்பர்` என்பதும், `அந்த நாட்டம் இல்லாதோர் முற்கூறிய நிலையோடே நின் றொழிவர்` என்பதும் பெறப்பட்டன. கண்டம் `விசுத்தி` எனப்படும். `மிக்க தூய்மை` என்பது இதன் பொருள். ஞான நெறியிற், செல்லும் முதல் இடமாதல் பற்றி இப்பெயர் பெற்றது. `நிலவொளி` வினைத் தொகை. ``ஆம் அதுவே`` என்பதில் `அது` என்பது எஞ்சிநின்றது.
இதனால், `விசுத்தி` என்னும் ஐந்தாவது ஆதார நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே.

பொழிப்புரை :

(மாணவனே! பிரத்தியாகாரத்தில் நீ விசுத்திக்கு மேலும் செல்ல விரும்புவையாயின், கும்பகத்தால் நின்ற வாயு கீழே போகாமல்) எருவாய்ப் புழையை இறுக அடைத்து, (அவ் வாயு மேல் அண்ணத்தில் உள்ள துளை வழியாக மூக்குத் துளையை அடைந்து புறப்படுமாறு) மனத்தை அவ் அண்ணத்தின் துளையிடத்தே வைத்துப் புருவ நடுவில் நில் - அந்நிலையில் (அக்காற்று, கண் காதுகள் வழியாகவும் பரவிப் புறப்படும் ஆதலின்), கண்களை இமையும் கொட்டாமல் விழித்திரு. இதுவே நீ காலத்தை வெல்லும் முறை.

குறிப்புரை :

தந்துரைத்தன எல்லாம் இசையெச்சங்கள், புருவ நடு வாகிய இடம், `ஆஞ்ஞை` (ஆக்ஞை) என்னும் பெயருடையது. `அறிவிற்கு நிலைக்களம் என்பது இதன்பொருள். இஃது `இலாடம்` என்றும் சொல்லப்படும். இயல்பாக மூக்கின் வழியே உட்புகுந்து மீண்டும் மூக்கின்வழியே வெளிச் செல்லுகின்ற காற்றை அவ்வாறு செல்லாமல் தடுத்து நிறுத்தி, மூலாதாரத்தின் மேல் உள்ள முது கெலும்பின் அடிப்பாகத்திலிருந்து அம் முதுகெலும்பின் உள்ளால் செல்லும்படி செலுத்தினால், அது சிறிது சிறிதாக அவ்வழியே அண்ணத்தில் உள்ள துளையை அடையும். அதனை வாய்வழி வாராது தடுத்தால், உச்சியை அடைந்து மூக்கு வழியாக வெளிவரும். இந்த மாற்று வழியால் உடலுக்குப் பல நன்மைகள் உண்டாதலுடன், தொழிற்படாமலே மடிந்து கிடக்கின்ற அறிவுக் கருவிகள் பலவும் எழுச்சியுற்றுத் தொழிற்படும். அதனால், உண்மைகள் பல எளிதிற் புலனாகும். இம்முறையைத் தான், `இருவழியை (இடைகலை பிங்கலைகளை) அடைத்து, ஒரு வழியை (சுழுமுனையை)த் திறத்தல் வேண்டும்` என்று யோக நூல்கள் கூறுகின்றன. ஞானசம்பந்தரும்,
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்(து)
ஏனை வழிதிறந்(து) ஏத்துவார்க்(கு), இட
ரான கெடுப்பன அஞ்செ ழுத்துமே. -தி.3 ப.22 பா.3
என்றும்
``ஐம்புலன், நாலாம் அந்தக் காரணம்,
முக்குணம், இருவளி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை`` -தி.1 ப.128
என்றும் அருளிச் செய்தார். இவ்வாறு மூச்சை அடக்கும்பொழுது இருதயத் துடிப்பும் நிற்கலாம். ஆயினும் அஃது இருதயம் கெட் டொழிந்ததாகாது. சிறிதுபொழுது அதன் செயலை நிறுத்திவைத்து, மீட்டும் தொடங்குவதேயாகும். இது, கடிகாரத்தில் ஊசலியை - பெண்டுலத்தைச் சிறிதுபொழுது நிறுத்திவைத்து, மீட்டும் அசைய விடுவது போன்றது. இவ்வாறாகவே, இது வாழ்நாள் நீட்டிப்பதற்கு ஏதுவாதல் விளங்கும். எவ்வாறாயினும், இவையெல்லாம் முறையறிந்து செய்யாத வழிப் பெருந்தீங்கு விளைப்பனவாகவே முடியும்.
`மூச்சைப்பிடிப்பது` என்றால், முருட்டுத்தனமாக, விடாமலே பிடித்துக் கொண்டிருப்பது என்பது பொருளன்று; முறையறிந்து சிறிது சிறிதாகப் பயின்று, இயன்ற ஒரு கால எல்லை அளவேதான் பிடிக்கத்தக்கது. `சிரசாசனத்தில் இருப்பது` என்றால், ``எப்பொழுதும் அப்படியே இருப்பது`` என்பது பொருளாகாதது போலத்தான், பிராணாயாமம், பிரத்தியாகாரம் முதலிய யாவும். சிறிது நேரம் செய்த சிரசாசனம், பின் பல நேரத்திற்குப் பயன் தருதல் போலத்தான் பிராணாயாமம் முதலியவைகளும் பயன்தரும்.
மூக்கு வழியாக உட்புகுந்த காற்று மீளவும் அவ்வழியே திரும்பிப் போகாதவாறு தடுத்து, அதனைச் சுழுமுனை வழியாகச் செலுத்தி உச்சியினின்றும் மூக்கு வழியாக மீளச் செய்கின்ற யோகிகள், தங்கள் உடலை விட்டுப் போய்விடக் கருதுவார்களாயின், உச்சியை அடைந்த காற்று மூக்கு வழியாகப் புறப்பட ஒட்டாமல் மூக்கைப் பிடிப்பர்; அதனால், அக்காற்று உச்சியில் மென்மையாக மூடப் பட்டிருக்கும் பெருந்துளையை (பிரமரந்திரத்தை)த் திறந்துகொண்டு வெளியேறிவிடும். அதனுடன் `உடல்` என்னும் இயந்திரம் செயலற்று வீழ்ந்துவிடும். இது பற்றற்ற நிலைமையில் வீடுபெறும் விருப்பத்தால் இறை நினைவுடன் செயப்படுதலின், பாவமாதல் இல்லை. யோகியர் பலர் இவ்வாற்றால் உடல் விடுத்துச் சென்றதை நூல்களால் அறிகின்றோம். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, பெருமிழலைக் குறும்ப நாயனாரது செயலாகும். அதனைச் சேக்கிழார் பின் வருமாறு எடுத்தோதுவார்.
மண்ணில் திகழுந் திருநாவ லூரில் வந்த வன்றொண்டர் நண்ணற் கரிய திருக்கயிலை நாளை எய்த நான்பிரிந்து
கண்ணிற் கரிய மணிகழிய வாழ்வார் போல வாழேன் என்(று)
எண்ணிச் சிவன்தாள் இன்றேசென் றடைவன் யோகத்தால்
என்பார்.
நாலு கரணங் களும்ஒன்றாய் நல்ல அறிவு மேற்கொண்டு
காலும் பிரம நாடிவழிக் கருத்துச் செலுத்தக் கபாலநடு
ஏலவே முன் பயின்றநெறி எடுத்த மறைமூ லந்திறப்ப
மூல முதல்வர் திருப்பாத மடைவார் கயிலை முன்னணைந்தார்.
(மறை மூலம் - மூல மறை; மூல மந்திரம்; திருவைந்தெழுத்து. `கபால நடுவை மூல மந்திரம் திறக்க` என்க)
காலத்தை வெல்லுதல் - காலத்தால் தடைப்படாது, முக்காலப் பொருளையும் ஒருங்குணர்தல். இப்பேரறிவு பிறக்கவே, கருவி கரணங்களின் வழிச்செல்லும் ஏகதேச அறிவில் விருப்பம் நிகழாது என்க. `மேலைத் துவாரத்தில்` என்னாது, ``மேலைத் துவாரத்தின் மேல்`` என்றதனால், `நிற்றல் புருவ நடுவில்` என்பது பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எருவிடும் வாசற் கிருவிரல் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.

பொழிப்புரை :

சுவாதிட்டானத்தில் நின்று மூலாதாரத்திலும் ஊடுருவி விளங்குகின்ற பேரொளியைப் புருவ நடுவில் நின்று தியானிக்க வல்லவர்கட்கு, பிறப்பை நீக்குகின்ற ஞான மயனாகிய இறைவன் இரண்டற நின்று, அவரே தானாகி விளங்குவான்.

குறிப்புரை :

`பிரத்தியாகாரத்தை ஆஞ்ஞையில் செய்ய வல்ல வர்க்குச் சிவோகம் பாவனை கைவர, அவரே சிவமாய் நின்று. எல்லாம் செய்ய வல்லராவர்` என்றவாறு. முதலிரண்டடிகள், ``மூலத் திருவிரல்`` என்னும் திருமந்திரத்திற்போல மூலாதாரத்தை வரையறுத் துணர்த்தின. ``உரு விடும்`` என்ற ``விடு`` துணைவினை, ``கருவிடும்`` என்றதில் விடுதல், நீக்குதல்.
இவை இரண்டு திருமந்திரங்களாலும், `ஆஞ்ஞை` என்னும் ஆறாவது ஆதார நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.

பொழிப்புரை :

மனத்தை ஒருக்குதலால், கருவி கரணங்களின் தொடக்கையும், ஆன்ம அறிவையும் வேறு பிரித்துக் காணுதலும், அவ்வாறு காணும் காட்சியையும் மெல்ல மெல்ல மறந்து, அறிவு வடிவாகிய இறைவனை உணர்தலும், அந்த உணர்வினால் அவனிடத்து அன்பு மிகப் பெறுதலும், அந்த அன்பினால் அவனிடத்தே அழுந்திக் கிடக்க முயலுதலும் ஆகிய இவையே பிரத்தியாகாரத்தால் அடையும் பெரும் பயன்களாம்.

குறிப்புரை :

இதனானே, `பிரத்தியாகாரமாவது இது, என்பது விளங்கும். ``ஒருக்கு`` பிறவினையாய முதனிலைத் தொழிற்பெயர். உபாதி - குற்றச் சார்பு; அது மாயேயத்தொகுதி, சடமாய அவையும் ஒருவாற்றால் ``சோதி`` எனப் படுமாகலின், சித்தாய ஆன்ம அறிவை, ``ஒண்சோதி`` என்றார். உணர்வு, தொழிற்பெயர். பிரிவும், உணர்வும் ஆகுபெயர்கள். கரைத்தல் - அழித்தல். கரைதல் - இளகுதல். ``உள`` என்பதன்பின், ``ஆதல்`` என்பது வருவிக்க. `பயன்` என்னாது, `பெருமை` என்றார். `சித்தி, காயகற்பம் முதலியன சிறந்த பயன்கள் அல்ல` என்றற்கு.
இதனால், பிரத்தியாகாரத்தின் சிறப்புப் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்
திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றதவ் வுள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.

பொழிப்புரை :

பிராணாயாமத்தை அறியாத முன்னெல்லாம் சிறிதும் நின்று பயன் தராமல் வெளியே போய்விடுகின்ற பிராணவாயு, பிராணாயாமத்தில் பூரகத்தால் உள்ளே புகுதலும் அது முன்போலப் போய்விடாதவாறு யோகி கும்பகம் செய்தலில் உறுதி பெற்று நிற்றலால் அவ்வாயு உண்மையாக அவனோடு ஒத்து நிற்குமாயின், மனமும் அவனால் அடையப்பட்ட பொருளாய், அவன், வழிப்பட்டு நின்றதே யாம். அதனால், இறைவன் அவ் யோகியினது உள்ளத்தினின்றும் புறம் போகான்; (சிவனை மறக்கும் நிலை உண்டாகாது என்றபடி.)

குறிப்புரை :

``புக`` என்பது, ``நின்றால்`` என்பதனோடு முடிந்தது. ``திறப்பட`` என்னும் செயவெனெச்சம் காரணப் பொருட்டாகலின், ``திறப்பட்டு`` எனத் திரிந்து நின்றது. இதற்கு, ``யோகி`` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. `நின்றது` என்பது, துணிவுபற்றி எதிர்காலம் இறந்தகாலமாய் வந்த கால வழுவமைதி.
இதனால், பிரத்தியாகாரத்தினது இன்றியமையாமை கூறப்பட்டது. இது கூறுவார், இதற்குப் பிராணாயாமம் இன்றியமை யாமையும் உடன் கூறினார்.

பண் :

பாடல் எண் : 10

குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரனு மாமே.

பொழிப்புரை :

பிரத்தியாகாரத்தை மனப்பயிற்சி அளவில் செய்தால், கால வரையறை இடவரையறைகள் இன்றி, எல்லா வற்றையும் ஒருங்கே உணரத்தக்க யோகக் காட்சியைப் பெறுதலே அதற்குப் பயனாய் முடியும். அதனை அஞ்ஞான இருள் நீங்கி இறைவனை உணரும் கருத்தோடு செய்யின், தான் இறைவனை உணர்தலேயன்றிப் பிறரையும் உணரச் செய்கின்ற கடவுள் தன்மையையும் உடையவனாகலாம்.

குறிப்புரை :

மனத்தைக் குறித்த இடத்தில் செல்லச் செய்தலாதல் பற்றிப் பிரத்தியாகாரத்தை, ``குறிப்பு`` என்றார். வெறுப்பு இருள் - வெறுக்கப்படுவதாகிய அறியாமை. ``நாடும்`` என்பது எச்சம். சிக்கென்று உணர்தல் - உறுதியாகப் பற்றுதல். `அறிவிப்பு` என்பது இடைக்குறைந்து நின்றது. `பிறருக்கு உணர்த்தும் தன்மை` என்றது, குருவாகும் தன்மையை, எந்நிலையிலும் குரு இறைவனேயாதல் பற்றி, ``அமரன்`` என்றார்.
இதனால், பிரத்தியாகாரத்தின் கன்ம வகை ஞானவகைகளின் பயன்கள் கூறப்பட்டன. `தாரணை, தியானம், சமாதி` என்பவற்றையும் இங்ஙனம் பகுத்துக் கூறுதல் காண்க.
உயிருக்கு மாயாபந்தத்தின் அடிநிலை, மாயாகாரியங்களை மறவாது உணர்ந்து நிற்கும் பொருள் உணர்வேயாம். இவ்வுணர்வு சொல்லால் உண்டாகலின், அவ்வுணர்வு சொல் வடிவிலே அமைவ தாகின்றது. ஆகவே, அப்பந்தத்தினின்றும் நீங்குதற்குச் சொற்களைச் சுட்டி உணர வேண்டியுள்ளது.
சொற்கள் அளவில்லனவாயினும், அச் சொற்களுக்கு மூலமாய் உள்ள எழுத்துக்கள் அளவிற்கு உட்பட்டன. ஆகவே, எழுத்துக்களைச் சுட்டி உணரின், அது சொற்களை உணர்வதே ஆகும். அதனால், அனைத்து எழுத்துக்களையும் மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங் களில் ஏற்ற பெற்றியில் வைத்துச் சிந்திக்கும் முறை யோக நூல்களில் கூறப்படுகின்றது.
`அனைத்து மொழிகளில் உள்ள எழுத்துக்களும் வடமொழி எழுத்துக்களில் அடங்கிக் கிடக்கின்றன` என்பது வேத மதங்களின் கொள்கை. அதனால், அவற்றை அவை, `மாத்துருகாட்சரம்` (எல்லா மொழிக்கும் மூலமாய் உள்ள எழுத்துக்கள்) எனக் கூறும்.
வட மொழியில் உள்ள எழுத்துக்கள் ஐம்பத்தொன்று, க்ஷகாரத்திற்குப் பின்பும் வேறு இரண்டெழுத்தைச் (:க:வ!) சேர்த்து `ஐம்பத்து மூன்று` என்று ஒருசிலர் (நன்னூலார் முதலியோர்) கூறுவர். பாணினியார் முதலாகப் பலரது கொள்கையும் `ஐம்பத்தோரெழுத்து` என்பதே, அவற்றுள்ளும் `லகாரம் ளகாரங்கட்கும் தம்முள் வேற்றுமை இல்லை` என்று கொண்டு, ளகாரத்தை நீக்கி, `ஐம்பதெழுத்து` என்றே கூறுவர். க்ஷகாரமே நீக்கற்பாலது என்பது மற்றொரு கொள்கை. `ளகாரம் க்ஷகாரம்` இரண்டையுமே நீக்கி, `நாற்பத்தொன்பது எழுத்து` என்றே கொள்ளவேண்டும் என்பது வேறொரு கொள்கை. `ஆல வாய்க் கடவுள் அகாரத்திற்கு உரியவனாய் நிற்க, ஆகாரம் முதலிய ஏனை நாற்பத்தெட்டிற்கு நாற்பத்தெண்மர் புலவர்களாக, கடைச்சங்கப் புலவர் கண்ணுதற் கடவுளை உள்ளிட்டு நாற்பத்தொன்பதின்ம ராயினர்` எனத் திருவிளையாடற் புராணம் கூறுவது, இறுதியிற் கூறிய கொள்கையை வலியுறுத்துவதாய் உள்ளது. எனினும், இந்நாயனார் (திருமூலர்) பலவிடத்தும் ஐம்பதெழுத்தே கூறுகின்றார்.
வடமொழிக்குச் சிறப்பெழுத்தாகக் கூறப்படுவன பல இருப்பினும், அதற்குச் சிறப்பிற் சிறப்பாக உள்ள எழுத்து முப்பத்து மூன்றாவது மெய் (ஹ என்னும்) எழுத்தே, உயிரெழுத்தில் இறுதியில் உள்ள ஒன்றும், இம் மெய்யின் சார்புடையதே, `அ` என்றால் பிறமொழி; `ஹ` என்றால் வடமொழி; `ஆம் ஊம், ஓம்` என்றால் பிற மொழி; `ஹாம், ஹூம், ஹோம்` என்றால் வடமொழி எனக்கொள்ளப் படுகின்றது. வடமொழியைத் `தெய்வமொழி` என்றும், அதனால் `அதுவே மந்திர மொழி` என்றும் சொல்வதற்குச் சிறந்த காரணம், இம்முப்பத்து முன்றாம் மெய்யைச் சிறப்பாக ஆள்வதேயாகும்.
தமிழில் ஆய்த எழுத்திற்கு இத்தன்மை உண்டு. பிற மொழி களிலும் இந்த மெய்யெழுத்து உண்டு. என்றாலும், அம்மொழிகள் இவ்வெழுத்திற்குத் தனிச் சிறப்புக் கொடுக்கவில்லை. ஆகவே, இந்த முப்பத்து மூன்றாவது மெய்யை யோகநூல்கள் ஆறு ஆதாரங்களில் மேலானதாகிய ஆஞ்ஞையில் (புருவ நடுவில்) வைத்துத் தியா னிக்கும்படி கூறுகின்றன, அதனோடு கணக்கில் கொள்ள வேண்டாத க்ஷகாரமும் அங்குச் சேர்க்கப்படுகின்றது. ஆஞ்ஞைக்குக் கீழ் உள்ள விசுத்தியில் (கண்டத்தில்) உயிரெழுத்துப் பதினாறும், அதற்குக் கீழுள்ள நான்கு ஆதாரங்களிலும் கீழிருந்து முறையே ககாரம் முதலாக, `பன்னிரண்டு, பத்து, ஆறு, நான்கு` என்னும் அளவிலான மெய் யெழுத்துக்கள் ஸகாரம் ஈறாக வைத்துத் தியானித்தல் கூறப் படுகின்றது. ஆகவே, 2+16+12+10+6+4= 50 எழுத்துக்களும் 6 ஆதாரங்களில் வைத்துத் தியானிக்கும் முறை பெறப்படுகின்றது. இதில் ளகாரம் சேர்க்கப்படாமை குறிப்பிடத் தக்கது. எழுத்துக்களின் முறைவைப்பில் முன்முன் உள்ளவை சிறப் புடையன; பின் பின் உள்ளவை சிறப்பில்லன.
ஒவ்வோர் எழுத்தும் தாமரை மலரின் ஒவ்வோர் இதழின் மேல் உள்ளனவாகத் தியானித்தல் வேண்டும் எனப்படுகின்றது. எனவே, மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களும் முறையே நான்கு, ஆறு, பத்து, பன்னிரண்டு, பதினாறு, இரண்டு` என்னும் இதழ்களை உடைய தாமரை மலர்களாகச் சொல்லப்படுகின்றன. இருதய கமலம் எட்டிதழ்த் தாமரையாகக் கூறப்படுதல் தத்துவக் கோட்பாடு பற்றியது; ஆகவே, அதற்கும், இதற்கும் தொடர்பில்லை. உணர்வு, தொடக்கம் முடிவு இரண்டிலும் குவிந்தே இருக்கும். இடைநிலையில் விரிந் திருக்கும்; தொடக்கத்தில் உள்ள குவிவிற்குக் காரணம் அறியாமையும், முடிவில் உள்ள குவிவிற்குக் காரணம் அடக்கமும் ஆகும். ஆகவே, கீழே உள்ள மூலாதாரக் கமலமும், மேலே உள்ள ஆஞ்ஞைக் கமலமும் குறைந்த இதழ்களைக் கொண்டவையாகவும், இடையில் உள்ள ஆதாரங்கள் மிக்க இதழ்களைக் கொண்டவையாகவும் குறிக்கப் படுகின்றன.
இனி, ஆறு ஆதாரங்களில் மேலானதாகிய ஆஞ்ஞை `விந்துத் தானம்` எனப்படுதலால், அதற்குக் கீழ் உள்ள விசுத்தி முதல் நான்கு ஆதாரங்கட்கு அதிதேவராய் அங்குள்ள கமல மலராகிய ஆசனத்தின் மேல் வீற்றிருக்கின்ற கடவுளர் முறையே, `சதாசிவர், மகேசுரர், உருத்திரர், திருமால்` என்பவராவர். இந்த நால்வரும் முறையே, `ஆகாயம், வாயு, தேயு, அப்பு` என்னும் பூதங்கட்கு அதிதேவர் ஆதலால், அப் பூதங்களுக்குரிய பீச மந்திரங்களாகிய `ஹம், யம், ரம், வம்` என்பன அத் தாமரை மலர்ப் பொகுட்டின்கண் வைத்து எண்ணப் படுகின்றன. இவற்றிற்கேற்ப மூலாதாரத்தில் பிருதிவிக்கு அதி தேவராகிய பிரமாவையும், அதற்குரிய பீசமாகிய `லம்` என்பதையுமே வைத்துத் தியானித்தல், வேண்டுமாயினும், மூலாதாரம் `குண்டலிக்கு இடம்` எனப்படுதலால், அதற்குரிய விநாயகரையும், பிரணவத் தையுமே அங்கு வைத்துத் தியானித்தல் சொல்லப்படுகின்றது.
இனி, மந்திரத்தை மட்டும் `லம்` என்பதாகவே வைத்துத் தியானித்தலும் காணப்படுகின்றது. ஆகவே, உலகில் கோயிலைப் பெறாத பிரம தேவர், ஆதாரங்களிலும் பிரமசாரியாராகிய விநாயகர் இடத்தில், அல்லது தமது தோற்றத்திற்கு முதலாகிய திருமாலிடத்தில் அடங்கி நிற்பவராகின்றார். இனி, சுவாதிட்டானம் முதலாகப் பிரமா முதலிய தேவர்களை வைத்து, சதாசிவரை ஆஞ்ஞையில் கொள் வாரும் உளர். சதாசிவரை விசுத்தியில் கொள்ளும் நிலையில் ஆஞ்ஞையில் சதாசிவருக்கு மேல் உள்ள சத்தியே தியானிக்கப் படுவாள். இவ்வாறெல்லாம் மனத்தை அகமுகப்படுத்தி நோக்க, புற நோக்குக் குறைந்து, அகநோக்கு மிகுவதாம் என்க. இத்துணையும் பிரத்தியாகாரம் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 1

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வெளியுறத் தான்நோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே.

பொழிப்புரை :

கோணுதல் (புலன்வழி ஓடுதல்) உடையதாய் இருந்த மனம், பிரத்தியாகாரத்தில் அதனை விடுத்து ஒருவழிப் பட, அதனை அவ்வழியில் முன்போல மீளாதவாறு குறிக் கொண்டு தடுத்து, சுழுமுனை வழியாக மேலே செல்கின்ற வாயுவே பற்றுக்கோடாக மேற்செலுத்தி, ஆஞ்ஞையை அடையு மாற்றால் அவ்விடத்திலே செய்யும் தியானத்தால் ஐம்பொறிகள் செயலற்றிருக்கும் நிலையை எய்தினவர்கட்கு, அந்நிலைதானே பிறவி வரும் வழியை அடைக்கின்ற உபாயமாகிவிடும்.

குறிப்புரை :

கீழ் - கீழ்மையான வாயில்; அவை ஐம்பொறிகள் கட்டுதல், இங்கு, ``தடுத்தல்`` என்னும் பொருளது. விலா எலும்பு, நாடிகள் முதலியவைகளைக் கட்டியுள்ளமையால், முதுகெலும்பைத் தந்திகள் முதலியவற்றை உடைய வீணைத் தண்டோடு உவமித்தல் நூல் வழக்கு. ``சிவபெருமான் திரிவிக்கிரமரது முதுகெலும்பை வீணை யாகக் கொண்டார்`` என்பது புராணம். ஆஞ்ஞை ஆகாயமாகச் சொல்லப்படுதலின், ``வெளி`` என்றார். நோக்கப்படும் பொருள் அவரவர்க்கு ஏற்ற பெற்றியான் அமைதலின், அதனைக் கூறாராயினர். ``கண், செவி`` என்பவை பிற பொறிகளையும் தழுவி நின்ற உப லக்கணம். `என்று`, என்னும் எண்ணிடைச் சொல்லின்பின் `இவற்றை உடையராய்` என்பது வருவிக்க. இனி, `காணா கண் கேளா செவி` என முற்றுத் தொடராகப் பாடம் ஓதுதலுமாம். ``வாணாள் வழி அடைக்கும் வழி`` என்பதனை, ``வாழ்நாள் வழியடைக்குங் கல்`` (குறள், 38) என்னும் திருக்குறளோடு ஒப்பிட்டு நோக்குக. `பிறவாமைக்கு வழியாதல், ஞானத்தின் வழியாக` என்க.
இதனால், `தாரணையாவது இது` என்பதும், அதனது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடும்
தொலையாத ஆனந்தச் சோதி கண் டேனே.

பொழிப்புரை :

மேருமலையின் உச்சியினின்றும் வானீர் அருவி எப்பொழுதும் வீழ்ந்துகொண்டிருக்கும். வில் வடிவாய் அமைந்த அம்பலத்தில் ஒளிவடிவாகிய சிவன், எல்லையில் இன்பத்தைத் தரும் ஆனந்தத் திருக்கூத்தினை எப்பொழுதும் ஆடிக் கொண்டே இருப்பான். இவ்விரண்டையும் நான் நீண்ட சுழுமுனை நாடி வழியாகச் சென்று கண்டேன்.

குறிப்புரை :

நீங்களும் இவற்றைக் காண முயலுதலேநன்று என்பது குறிப்பெச்சம். `மலை` என்பதனை உயர்வு பற்றி, ``மலையார்`` என உயர்திணையாககிக் கூறினார். `மலை` என்பது` தலைமை பற்றி மேருவைக் குறித்தது. முதுகெலும்பை `வீணைத் தண்டு` என்பது போல, `சந்திரசூரியர்` எனப்படுகின்ற இடைநாடி பிங்கலை நாடிகளால் சூழப்பட்டுள்ளமைபற்றி, `மேருமலை` எனக் கூறலும் யோகநூல் வழக்கு. `அதன் தலை` என்பது, `புருவநடு. தலை` என்பவற்றை ஏற்ற பெற்றியாற் குறிக்கும். இங்கு அது புருவநடுவைக் குறித்தது. `வானீர்` என்பது சிலேடையாய் `ஆகாய கங்கை` (வான் நீர்) என்றும், `விந்து` எனப்படும் வெண்பால் - சுக்கிலம்` (வால் நீர்) என்றும் இரு பொருள் குறித்து, உருவக நயத்திற்கு இயைந்து நின்றது.
`கருவிற்கு வித்தாகிய வெண்பால், நெற்றியில் தோன்றிப் புருவநடுவில் உருப்பட்டு நிற்கின்றது` என்பதும், `அஃது இயற்கை யாக இடைநாடி பிங்கலைநாடிகள் வழியாகக் கீழ் இறங்கிச் சுவாதிட் டானத்தை அடைவதனாற்றான் பால் உணர்ச்சியாகிய இழி நிலை உண்டாகின்றது` என்பதும், `அவ் இழிநிலை எவ்வாற்றானும் உடற்குக் கேடுபயப்பதே` என்பதும், அதனை அவ்வாறு அவ் இரு நாடிகள் வழியாக இறங்காது, யோகசாதனையால் நடுநாடியாகி சுழு முனை வழியாக இறங்கச்செய்தால், `அஃது உடலுக்கு வலுவூட்டி, நரை திரை மூப்புப் பிணிகள் வாராமற் காக்கும் அமுதமாய்ச் சிறந்து நிற்கும்` என்பதும் யோகநூற் கொள்கைகள். அதுபற்றியே அவை இவ் வெண்பாலை, `அமுதம்` என்றே குறிப்பிடுதலுடன், அவற்றை நடுநாடிவழியாக ஏற்பதை, `பருகுதல்` என்றேயும் கூறுகின்றன.
சிறப்புமுதலாய காரணங்கள் பற்றி இவற்றையெல்லாம் ஆடவரை நோக்கியே அவை கூறுகின்றனவாயினும், பெண்டிர்க்கும் இவை ஒத்தன என்பதே கருத்து. எவ்வாறெனில், யாதொரு சாதனையும் பெண்டிரை விலக்கி, ஆடவர்க்கு மட்டுமேயாகக் கூறுதல் வேதமதங்களின் கருத்தன்று ஆதலின். சாதனங்களை மேற்கொள்ளும் முறைகளில் சிறிது மாறுபடுதல் கூடும்; அவ்வளவே வேற்றுமை. அதனால், `புருவநடு விந்துத்தானம்` என்பது பெண்டிர்க்கும் பொதுப்படக் கூறுவதேயாம். ஆயினும், அவர்கட்குப் பால் உணர்ச்சிக் காரணமாய நீர் மணிபூரகத்தை அடையும்பொழுதே கருப்பையிற் கலந்து செம்பாலாக (சோணிதமாக) மாறிப் பின் சுவாதிட்டானத்தை அடைவதாகும்.
``பாயும், நாடும்`` என்பன முற்றுக்கள். ``நெடுநாடி ஊடு போய்`` என்பதனை, ``கண்டேன்`` என்பதற்கு முன்வைத்து உரைக்க. புருவ நடு பிறைவடிவிற்று ஆதலாலும், அங்கு இறைவனது நடனம் உளதாதலாலும் அதனை ``சிலைஆர் பொது`` என்றார். இஃது உயிர்கட்கு அறிவைப் பயக்கும் பர நடனம் - அதிசூக்கும நடனம் ` என்பதை ஞான நூல்களை நோக்கி அறிக. இருதயத்தில் செய்யும் நடனம் சூக்கும நடனமேயாம். இருதயம் அருள்வெளி - சிற்றம்பலம். புருவ நடு ஆனந்த வெளி - பேரம் பலம். `சோதி திருநடம் ஆடும்` என மேலே கூட்டி, ``ஆடும்`` என்பதன்பின், இவற்றை` என்னும் சொல்லெச்சம் வருவித்துக் கொள்க.
இதனால், ஆஞ்ஞைத் தாரணையின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் துயில்கின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே.

பொழிப்புரை :

கருவை ஏற்றுக் குழவியாக மாற்றித் தருகின்ற பெண், மேல் மாடத்தில் எதிர்நோக்கி இருக்கின்றாள். அவளுடன் சேர வேண்டிய ஆடவனோ அடித் தலத்தில் உறங்கிக் கொண்டிருக் கின்றான். அவனை நன்றாக விழித்தெழச் செய்து அப் பெண்டுடன் கூடப்பண்ணினால், நல்ல பாலகன் பிறப்பான்; இதற்கு என் குருவின்மேல் ஆணை.

குறிப்புரை :

மேலை நிலம், ஆஞ்ஞை. வேதகம் - இரசவாதம்; இங்கு, பாசஞான பசுஞானங்களைப் பதி ஞானமாக மாற்றுதல். பெண் பிள்ளை, திரோதான சத்தி. இவளது செயல் உயிரின் உணர்வைப் பக்குவப்படுத்துதலின், ``வேதகப் பெண்பிள்ளை`` என்றார். எழுகின்ற - எழுப்பினால் எழத்தக்க; இஃது எதிர் காலத்தில் நிகழ் காலம். `துயில்கின்ற` எனப் பாடம் ஓதுதலே சிறக்கும். மூர்த்தி, உறங்கிக் கிடக்கின்ற குண்டலியோடு சேர்ந்து அதுவேயாய், அறியாமையாயுள்ள உயிரின் உணர்வு. இஃது எழுந்து மேலுள்ள ஆதாரங்களையும் கடந்து ஆஞ்ஞையை அடைந்து, அங்குநின்று அறிவைப் பயக்கின்ற திரோதான சத்தியை உணருமாயின், அவ் வுணர்வு `யான், எனது` என்னும் பற்றுக்களினின்றும் நீங்கித் தூய்மை பெறுவதாகும். அதனையே ``பாலன்`` என்றார். ``பாலனும்`` என்ற சிறப்பும்மையால், `அப் பாலன், இம்மை மறுமை நலங்களுடன், வீட்டையுந் தரத்தக்கவன்` என உரைக்க. இனி ``மூர்த்தி`` என்பதற்கு, `விநாயகர்` என்றாயினும், `பிரமன்` என்றாயினும் பொருள் கொள்ளின், ``பெண்பிள்ளை`` என்றவளை வல்லபை, வாணி` என ஏற்ற பெற்றியான் உரைத்துக்கொள்க. இவ்விருவர்க்கும் பிள்ளை இல்லையாயினும் `பிறப்பான்` என்பதனை உம்மையால் உரைத்துக் கொள்க. இவ்வாறு பொருள் உரைப்பினும், கருத்து மேற்கூறியதே யாம். `ஆதல்` - உண்டாதல்.
இதனால், ஆஞ்ஞைத் தாரணையது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப் போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே.

பொழிப்புரை :

பூரக இரேசகம் செய்து கும்பிக்கப்பட்ட பிராணவாயு கீழ்ப்போகாதவாறு எருவாயை அடைத்து அதனால் போகாது நின்ற வாயுவை மூலாதாரம், சுவாதிட்டானம் முதலாக மேல் நோக்கிப் போகச்செய்து, ஆஞ்ஞைக்குக் கீழ் உள்ள இடை ஆதாரங்கள் ஒவ்வொன்றிலும் மனத்தை நன்றாகப் பொருந்த வைத்து, நீர் மடையில் கொக்கு, தான் வேண்டுகின்ற மீன் வரும் வரையில் அதனையே குறிக்கொன்டு நோக்கிச் செயலின்றியிருத்தல் போல, அங்குக் கருதப்படுகின்ற கடவுளரால் அவ்வாதாரயோகம் கைவருமளவும் அவரை வழிபட்டிருப்பவர்கட்கு, யோகநிலை முற்றும் கைவரும் காலம் வரையில் இறவாமலே இருத்தலும் கூடும்.

குறிப்புரை :

`மடை வாயிற்கொக்கு`, ``கொக்கொக்க கூம்பும் பருவத்து`` (குறள், 490) ``இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன்`` (தி.8 கோயில் மூத்த திருப்பதிகம், 5) மடைத்தலையில் - ஓடுமீனோட உறுமீன் வருமளவும் - வாடியிருக்குமாம் கொக்கு`` (மூதுரை, 16) எனப் பலவிடத்தும் கூறப்படுதல் காண்க.
யோகம் கைவருதல், ஆதார யோகங்கள் ஆறும் பெற்று, அதற்குமேல் நிராதார யோகத்தை அடைந்து, அப்பால் மீதானத்தை உணர்ந்து நிற்றலாம். `அந்நிலை கைகூடுதற்கு நெடுங்காலம் செல்ல வேண்டியிருப்பினும், `அதுகாறும் உடல் அழியாது நிற்கும் நிலையும் தாரணையாலே உளதாகும்` என்பார், ``உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே`` என்றார். உம்மை, யோகம் கைவருதலைத் தழுவிநின்ற எச்ச உம்மை. முதல் மூன்று அடிகள் தாரணையைச் செய்யும்முறை கூறின. வந்தித்தலுக்குச் செயப்படுபொருளாகிய `கடவுளர்` என்பது சொல்லெச்சமாக வந்து இயைந்தது. `சிவயோகம் பயில்வார்க்கு இக் கடவுளர் சம்பு பட்சத்தவர்` எனவும், `பிறயோகம் பயில்வார்க்கு இவர் அணுபட்சத்தினர்` எனவும் உணர்க.
இதனால், தாரணை செய்யுமாறு கூறப்பட்டது. ஒரு கருத்துப் பற்றித் தாரணை வாழ்நாள் நீட்டிப்பிற்கு ஏதுவாதலும் உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கம்
கலந்த உயிரது காலது கட்டிற்
கலந்த உயிருடல் காலமும் நிற்குமே.

பொழிப்புரை :

காலத்தால் கலந்திடப்பட்ட உயிருடன் அக்காலம் கலந்து நிற்கும் இயல்பை ஆராய்ந்து அறியின், அது பிராண வாயுவின் திட்பமேயாம். ஆகவே, அந்த உயிர் பிராண வாயுவை அடக்கும் முறையை அறிந்துகொள்ளுமாயின், உயிர் நிற்பது போலவே அதனைக் கலந்து நிற்கின்ற காலமும் ஓடாது ஒரு நிலையாய் நிற்கும்.

குறிப்புரை :

``அஃதாவது வாழ்நாள் கழியாது`` என்பதாம். இஃது ஒருவாறு முன்னே கூறப்பட்டதாயினும், துணிவு பிறத்தற்பொருட்டு இங்கும் இனிது விளங்கக் கூறினார். இவ்வாறு இன்றியமையாத இடங்களில் சிலவற்றைப் பின்னரும் இவ்வாறு வலியுறுத்தி அருளிச் செய்வார்.
இதனால், ``தாரணை, வாழ்நாள் நீட்டிப்பிற்கு ஏதுவாம்`` என மேற்கூறியதற்கு ஏதுக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையு மாமே.

பொழிப்புரை :

யாவரிடத்திலும் உள்ளமாகிய கருவூலத்தில் ஒரு பெருஞ்செல்வம் உள்ளது. ஆயினும், அக்கருவூலத்திற்கு வாயிலாய் உள்ள சுழுமுனை வழியைத் திறக்க மாட்டாதவர் அச்செல்வத்தை எய்தப் பெறார். அவ்வழியைத் திறக்க விரும்புவோர் பிராண வாயுவை அங்குக் கும்பகம் செய்து திறந்து கும்பித்த அவ்வாயுவை உள்ளே பாய்ச்சுவர். அது செய்யாதோர் மேற்கூறிய செல்வத்தைப் பெறுதற்குத் தம் அறிவை அக் கருவூலத்தின் புறத்தே மோதவிட்டு அல்லற்படுவர். கருவூலத்தைத் திறவாமலே அதிலுள்ள செல்வத்தைப் பெற முயலுபவன் அதனைப் பெறாது பாழுக்கு உழைப்பவனாதலே யன்றி, `அறிவிலி` என அறிவுடையாரால் இகழவும் படுவான்.

குறிப்புரை :

``வாய்திறவார்`` என்பது யோகியரல்லாத பலரையும் குறித்தது. ``மனம்`` என்றது அதற்கு இடமாகிய ஆதாரங்களை ``வாய் திறத்தல்`` என்பதனை ``உரையாடல்`` எனக் கொண்டு, அதற்கு இயையவும் உரை உரைப்பர். அவர், ``மதி`` என்பதனைச் சந்திர மண்டலமாகக் கொள்வர். ``வளியிட்டுப் பாய்ச்சுவர்`` என்பதற்கு, ``பிராணவாயுவைப் பாழ்படுத்துவர்`` என்னும் பொருள் ஏலாமை யாலும், பிறவாற்றாலும் அஃது உரையாகாமையறிக. ``கோயில்`` என்பது கடைக் குறையாயிற்று. ``கோய், செப்பு; சிமிழ்`` எனவும் கொள்வர்.
இதனால், தாரணையது இன்றியமையாச் சிறப்புக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

வாழலு மாம்பல காலம் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம் படாப் பாய்ச்சுறில்
ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தற்
பாழி பெரியதோர் பள்ளி அறையே.

பொழிப்புரை :

சுழுமுனை வழியை ஊடறுத்துச் செல்ல வல்ல தாகிய பிராணவாயுவைப் புறத்துப் போகாதவாறு தடுத்து அச்சுழு முனை வழியுட் பாய்ச்சினால் ஏழு பலகணிகளையும், `தலைவாயில், கடைவாயில்` என்னும் இரண்டு பெரு வாயில்களையும் உடைய பாழ் வீடு இன்பமாகக் கிடந்து உறங்கத் தக்க நல்ல பள்ளியறை யாய்விடும். அப்பொழுது அதில் ஆதாரங்களாகிய கட்டிலிற் கிடந்து பல காலம் இன்புற்றிருக்கலாம்.

குறிப்புரை :

முதலடியை இறுதியில் வைத்துரைக்க. இங்கு, ``பாய்ச்சுதல்`` என்பது ``புறப்படாப் பாய்ச்சுதல்`` என விளக்கிக் கூறப்பட்டமை காண்க. ஏழு சாலேகம், கண், காது, மூக்கு இவற்றின் ஆறு துளைகளுடன், சிறுநீர் வழித்துளை, தலைவாயில், வாய் கடை வாயில், எரு வாய். பாழி - பாழை உடையது. இத் துணை அமைப்புக்கள் இருந்தும் ஆன்மா அதனைத் தூய்மைசெய்து, விளக் கேற்றி வைத்து இன்பமாக வாழாமல் வாளா இருத்தலால், உடம்பை, ``பாழ் வீடு`` என்றார். ``இயமம், நியமம், பிராணாயாமம் என்ப வற்றால் அவ்வீடு தூய்மையும், விளக்கமும் செய்யப்பட்டால், தாரணையில் பல காலம் நலம் பெற்று வாழலாம்`` என்பார் ``பெரிய தோர் பள்ளியறை; ``வாழலுமாம்பலகாலம் என்றார். பிற வற்றை உரு வகம் செய்து, ஆதாரங்களை வாளா கூறினமையால், இது வியநிலை யுருவகம். ``இரண்டுவாசல் - ஏலுடைத்தா அமைத்தங் கேழு சாலேகம் பண்ணி`` (தி.4 ப.33 பா.4) ``பாழறை உனக்குப் பள்ளி யறையாக`` (தி.11 கழுமல) என்னுந் திருமொழிகளை இங்கு நினைவு கூர்க.
யோக நெறியில் நிற்பவர் உடம்பு ஓங்கி நிற்பதொரு கோபுரம் போல்வதும், ஆதாரங்கள் அக்கோபுரங்களில் உள்ள நிலைகள் போல்வனவும், மனம் அக்கோபுரத்தினைப்பற்றி ஏறுதற்குரிய கை கால் முதலிய உறுப்புப் போல்வனவும், பிராண வாயு அவ்வுறுப்புக் களுக்குப் பற்றுக் கோடாய் உதவும் நூலேணி போல்வதும் ஆகும். ஆகவே, கோபுரத்தின்மேல் ஏறிச் செல்பவர்க்கு நூலேணி இன்றியமை யாததுபோல, யோகிகட்குப் பிராணாயாமம் இன்றியமையாததாம், அதனால், ``யோகம்`` என்றாலே, பிறவற்றை எல்லாம் விடுத்து, ``மூச்சை அடக்குதல்`` என்றே பொதுவாகக் கொள்கின்றனர். நாயனார் ``போழ்கின்ற வாயுப் புறப்படாப் பாய்ச்சுறில்`` என இங்கும், இவ்வாறே பல விடத்தும் பிராணயாமத்தை எடுத்தோதிப் போதல், அதன் இன்றியமையாமை பற்றியேயாம் என்க.
இதனால், ``பிரணாயாம பிரத்தியாகாரங்களைப் பயின்ற வர்க்குத் தாரணைக்கண் சலியாது நிற்றல் அரிதன்று`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.

பொழிப்புரை :

ஒன்றும் அறியாத மாணவனே! உடம்பினுள் நிறைந்திருக்கின்ற பத்து வாயுக்களில் இயங்கும் வாயுக்கள் ஐந்து வீணாய்ப் போய்விட்டால், நீ விழித்திருந்தும் என் செய்ய மாட்டுவாய்! கழிந்ததற்கு இரங்கி நிற்பவனேயாவாய். ஆகையால், பிராணா யாமத்திற்குக் கூறிய முறையைக் கடைப்பிடித்துப் பிராண வாயு மேலேறுதற்கு வழியை உண்டாக்குபவர்கட்கு, மனமாகிய குரங்கை ஆதாரங்களாகிய கோட்டையை விட்டுப் புறத்தே குதித்து ஓடாதபடி நிற்கச் செய்தலும் கூடும்.

குறிப்புரை :

அஃதாவது, ``தாரணையைப் பெறுதலும் கூடும்`` என்பதாம். ``ஈரைந்து, ஐந்து`` என்பவை அதிகார இயைபால் வாயுக்களைக் குறித்து நின்றன. ``இரங்கி`` என்பது பெயர். இதன்பின் ``ஆவாய்``என்பது எஞ்சிநின்றது. ``குரங்கு, கோட்டை`` என்பது குறிப்புருவகங்கள்.
உடம்பின்கண் உள்ள வாயு, ``இயங்குவதும், நிற்பதும்`` என இருவகைத்தாம். ``நிற்பது`` என்றல், இயங்குவதை நோக்கியாம். அவற்றுள் இயங்கும் வாயு மூக்கு வழியாக வெளிச் செல்லின் `பிராணன்` என்றும், வாய் வழியாக வெளிச்செல்லின் `உதானன்` என்றும், எரு வாய் வழியாக வெளிச் செல்லின், `அபானன்` என்றும், உடம்பெங்கும் பரவும்பொழுது `சமானன்` என்றும், உணவுப் பையுள் நின்று உணவைச் செரிப்பிக்கும் பொழுது `வியானன்` என்றும் இவ்வாறு ஐந்தாகி நிற்கும். இனி நிற்கும் வாயுவும், தும்மல் இருமல்களாக வலிதிற் புறப்பட்டு வேண்டாப் பொருளைப் புறத்திடும் பொழுது `நாகன்` என்றும், கண்ணைப் பல திசைகளிலும் நோக்குமாறு இயக்கும்பொழுது `கூர்மன்` என்றும், சோம்பல் காரணமாகப் பிராணவாயுவை இயல்பு திரிந்து கொட்டாவி முதலியனவாக ஆக்கும்பொழுது `கிரிகரன்` என்றும், கண் இமைத்தல் வாயசைத்தல் முதலியவற்றைச் செய்யும்பொழுது `தேவ தத்தன்` என்றும், குருதியில் உளதாகும் நோய் காரணமாக உடலை வேறுபடுத்தி நிற்கும்பொழுது `தனஞ்சயன்` என்றும் இவ்வாறு ஐந்தாகும். ஆகப், பத்து வாயுக்களில் முதலாவதாகிய பிராணனே ஏனை இயங்கும் காற்று நான்கிற்கும் ஆற்றல் தருவது; இயங்கும் காற்றுக்கள் ஆற்றல் கெட்டவிடத்து, நிற்கும் காற்றும் தம் தொழிலைச் செய்யமாட்டா. ஆகவே ``நிரம்பிய ஈரைந்தில் ஐந்து போனால் என் செய்வை`` என்றார். பிராண வாயு இங்கு அதிகாரப்பட்டமையால், அதன் வழியவாகிய அனைத்தையும், ``இவை`` எனச் சுட்டினார்.
`பிராணன், உதானன், அபானன், சமானன், வியானன்` என்பவற்றை முறையே, `உயிர்வளி, எழுவளி, விழு வளி, நிறை வளி, அறு வளி,` எனவும், `நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன்` என்பவற்றை முறையே, `தும்மு வளி, நோக்கு வளி, சோம்பு வளி, நுண் வளி, பரு வளி` எனவும் தமிழிற் கூறலாம்.
இதனால், யோகத்திற்குச் சிறந்ததாகிய பிராண வாயுவின் சிறப்புக் கூறுமுகத்தால், பிராணாயாமம் அதற்கு மேல் உள்ள யோகங்கட்கு இன்றியமையாமை கூறப்பட்டது.
(இதன் பின்னர், ``முன்னம் வந்தனர்`` என்னும் பாடல் இடைச் செருகலாய் உள்ளது.)

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே.

பண் :

பாடல் எண் : 9

அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசித் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.

பொழிப்புரை :

தாரணையை மேற்கூறிய பாவனையளவில் செய்யாது, தத்துவ ஞானத்தைப் பெற்று அதன் வழிச் செய்யின், அஃது இறைவனோடே ஒன்றி நிற்பதாகும்.

குறிப்புரை :

அரித்த உடல் - பசி பிணி மூப்புக்களால் அரிக்கப்பட்ட உடம்பு. இவ்வாறு கூறியது, `உதிரம் முதலிய தாதுக்களால் ஆகிய தாத்துவ தூல தேகம்` என்பது விளங்குதற்கு. பொருத்த - ஓன்றாக்க; `ஒடுக்க` என்றபடி. உதிரம் முதலிய தாதுக் களாலான தேகம் ஐம்பூதங்களின் காரியமாகலின், அஃது ஐம் பூதங்களில் ஒடுங்கு வதாயிற்று. ஒடுக்குதல், இங்கு, `அவற்றின் காரியம்` என்று உணர்தல். சத்தாதி - சத்தம் முதலிய தன்மாத்திரைகள். தன்மாத்திரைகளின் காரியங்களே பூதங்களாதலின், அவை தன்மாத்திரைகளுள் ஒடுங்கு வனவாம். மனாதி ``மனம், அகங்காரம், புத்தி`` என்னும் அந்தக் கரணங்கள். சித்த ஆதி - சித்தமாகிய முதல்; சித்தமாயும், குண தத்து வமாயும் நிற்பது மூலப் பிரகிருதியேயாகலின், ``சித்தாதியிற் செல்ல`` என்றது, ``மூலப்பிரகிருதியில் ஒடுங்க`` என்றதாம். மனம் அகங் காரத்திலும், அகங்காரம் புத்தியிலும், புத்தி சித்தத் திலும் ஒடுங்குமாயினும், சித்தம் முடிவாக நிற்றல் பற்றி, ``மனாதி சித்தாதியில் செல்ல`` என்றார். தத்துவ ஒடுக்கங்களை இங்கு ஒருவாறு சிறிது கூறினாரன்றி, முற்றும் விரித்துக் கூறிற்றிலர், இஃது அதற்கு இடமன்மையில், ``பொருத்த, செல்ல`` என்பனபோல, `போத` எனச் செயதவனைச்சமாக ஓதாது, திரித்து ஓதினார்; முன்னின்ற எச்சங்கள் இரண்டும் எண்ணின் கண் வந்தமை தோன்றுதற்கு, `ஆன்மா, தத்துவங்கள் அனைத்தினும் நீங்கின் சிவமே, அதற்குச் சார்பாய் விடுமாதலின், மனத்தை அவ்வகையிற் பயிற்றும் யோகம், அந்த ஞானத்தை நிலை பெறுவிக்கும்` என்பதாம்.
இதனால், ஞான தாரணையின் இயல்பும், பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியானம் உன்னும்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.

பொழிப்புரை :

தாரணை இறுதிக்கண் சொல்லியவாறு, `பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, அந்தக்கரணம் நான்கு, பிரகிருதி ஒன்று` என்னும் பதினைந்துடன் புருடன் ஒன்று கூடப் பதினாறையும் தியான முறைப் படி அவ்வவ் வாதாரங்களில் வைத்துத் தியானித்தல், கருவி கரணங்களினின்று நீங்கிநிற்கும் சாதன யோகமாகவே முடியும். அதற்குமேல் ஒளி வடிவாகிய சத்தியையும், அதற்குமேல் அருவாய் நிற்கும் சிவத்தையும் தியானித்தலே சாத்திய யோகமாம். ஆகவே, தியான யோகம், சாதன சாத்திய வகையால் இங்ஙனம் இருகூறாய் நிற்கும் என்க.

குறிப்புரை :

வரும் - வந்த; தாரணையுள் சொல்லிப் போந்த. ஆதி - முதல்; தத்துவம். அவைகளை ஆதாரங்களில் வைத்துத் தியானிக்கும் முறை, ``நிலம்`` என்னும் பூதத்தையும், அதற்குரிய ``கந்தம்`` என்னும் தன்மாத்திரையையும் மூலாதாரத்திலும், பின்னும் முறையே ஏனைய பூதங்களையும், தன்மாத்திரைகளையும் சுவாதிட்டானம் முதலிய வற்றிலும் வைத்தும், அந்தக்கரணங்களை ``மனம், அகங்காரம், புத்தி, சித்தம்`` என்னும் முறையில் சுவாதிட்டானம் முதலாக முறையே வைத்தும், சித்தமே பிரகிருதியாய் அடங்கப் புருடனை ஆஞ்ஞையில் வைத்தும் தியானித்தல். பொருவாத புந்தி புலன் போக மேவல் - ஆன்ம அறிவொடு மாறுபட்டு வாதிக்கின்ற பொறி புலன்களின் வாதனை அற்றுப்போக, அமைதியுற்று நிற்றற்குரிய சாதனையாம். புந்தி, மேவல் இவை ஆகுபெயர்கள். ஆஞ்ஞையில் புருடனை விழுங்கி நிற்கும் ஒளி வடிவாக இறைவனைத் தியானிப்பின், அது சத்தித் தியானமாகும். பரம் - மேலானது. ஒளி வடிவிற்கு மேலானது அருவம். இறைவனை நிராதாரமான உச்சியில் அருவமாகத் தியானித்தல் சிவத்தியானமாகும். இந்தச் சத்தி சிவத் தியானமே சாத்திய யோகத்தியானம் என்க. `பரத்தியானமாக` என ஆக்கம் வருவிக்க. குரு - திட்பம்.
இதனால், ஞான யோகத்தின் நிலைகள் இவை என்பது கூறப்பட்டது. இயமம் முதலிய எட்டனுள் `தியானம், சமாதி` என்னும் இறுதி இரண்டுமே யோகத்தில் சாத்தியக் கூறாதலின், இதனை, ஈண்டுப் போதந்து கூறினார்.

பண் :

பாடல் எண் : 2

கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.

பொழிப்புரை :

கண் முதலிய பொறியறிவின் சேர்க்கையால் நம்மைப் பண்படுத்தி நின்ற முதற்பொருள் ஒன்று உளது. அஃது, எல்லையற்ற பேரொளியாயினும், அதனை நாம் உள் நாக்கினை ஒட்டி உள்ள சிறிய துளை வழியில் சென்று காண்கின்ற ஒரு சிற்றொளியாகத் தரிசிக்கச் செய்தவாற்றால், `பாம்பு` எனப்படுகின்ற குண்டலி சத்தி நம்மை உய்வித்தது வியக்கத்தக்கது.

குறிப்புரை :

ஞானக்கூட்டம் - ஞானத்தொடு கூடும் கூட்டம். கருவி கரணங்களாகிய மாயேயங்களோடு கூடுதலால் உயிர் பெறுவது அறிவு விளக்கமும், அவ்விளக்கத்தை அவ்வாற்றால் உயிர்கள் பெறச் செய்வது திருவருளும் ஆதலால், ``பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு`` என்றார். அப்பொருளை இங்ஙனம் சிறப்பித்துக் கூறவே, `அதனைக் காணுதலே உயிர் பெறத்தக்க பேறு` என்பது போந்தது. `இனி அப்பேற்றை அடைய வழியறியாது திகைக்கின்ற உயிர்க்கு வாசி யோகத்தின் வழிக் கிடைக்கும் குண்டலி சத்தியே அதனை அடைவித்து உதவி செய்வது` என்பார் ``அண்ணாக்கின் ... ... பிழைப்பித்தவாறே`` என்று அருளினார். `வியக்கத்தக்கது` என்பது சொல்லெச்சம். `கொல்லும் இயல்புடைய பாம்பு, பிழைக்கச் செய்தது வியப்பு` என்பது நயம். பிள் நாக்கி - பிளவுபட்ட நாவை யுடையது; பாம்பு. அண்ணாக்கினை அடுத்துள்ள துளைவழி உச்சியை அடைகின்ற பிராணவாயு, அவ்வுச்சி வழியாகப் புருவ நடுவை அடையும் சுழு முனை நாடியைத் தாக்குதலால், ஆஞ்ஞையில் அனுபவம் நிகழ்தல் பற்றி, ``அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி`` என்றார். ``நம்மைப் பிழைப்பித்தவாறே`` எனத் தமது அனுபவத்தைக் கூறிய வாற்றால், `அவ்வொளியைக் காண வேண்டுவார்க்கு வழி இதுவே` என்பது குறிப்பெச்சமாயிற்று. இங்ஙனம், சுருங்கக் கூறினாராயினும், `தாரணையில் மின்னல்போலத் தோன்றுகின்ற அவ்வொளியை இடைவிடாது உன்ன, அவ்வொளி மறைவின்றி நின்று பயன் தரும்` என விரித்துரைத்துக் கொள்ளப்படும்.
இதனால், ஆஞ்ஞைத் தியானத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.

பொழிப்புரை :

புறத்தில் உள்ளவர்களால் பார்க்க இயலாத கண்ணில் (திறவாது மூடியிருக்கின்ற நெற்றிக் கண்ணில்) மின்னல் போலத் தோன்றிய ஒளியைப் பின் அக்கண் நிரம்பக் குறைவின்றிப் பார்த்து, அதனொடு உணர்வு ஒன்றியிருப்பின், பிற முயற்சிகளுள் யாதும் செய்யாமலே அந்த ஒளியை நன்கு தரிசித்திருக்கலாம்.

குறிப்புரை :

ஒண்ணா நயனம் - பிறர் `கண்` என்று உடன்படவே முடியாத கண். `அக் கண்ணார` எனச் சுட்டு வருவிக்க. விண் ஆறு - வான் வழி. `சென்று` எனற்பாலது, ``வந்து`` என இடவழுவமைதியாய் நின்றது. ``கண்டிட`` என்பது, `அளந்தறியுமாறு` என்றபடி. அஃதாவது, `வான் வெளி முழுதும் ஓடி` என்பதாம். `ஓடிப் பண்ணாமல்` என்றது, `இவ்வாறெல்லாம் உழல வேண்டாமல்` என்றவாறு `ஞான யோகம் செய்ய மாட்டாமையால் இறைவனைக் காணுதற்குச் சிலர் தாம் பெற்ற சித்தியால் ஆகாயத்தில் சென்று அவனைப் பல இடங்களில் தேடியும், பிரமன் முதலிய தேவர்கள் வானவெளியில் தேடி உழன்றும் எய்க்கின்றனர்; அவை வேண்டா` என்றபடி. `நின்று பார்க்கலும் ஆம்` என இயையும். உம்மை, சிறப்பு.
இதனால், ஆஞ்ஞைத் தியானத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப் பூவே.

பொழிப்புரை :

உலகர் பலரும் அழிபொருளாகிய உடம்பை உணர்கின்றார்களே யன்றி, அதனோடு வேறறக் கலந்து நிற்கின்ற அழிவில் பொருளாகிய உயிரை அறிதல் இல்லை. இனி, ஒரு சிலர் உயிரை அறியினும், அவ்வுயிர்க்கு உயிராய் நிற்கின்ற சிவனை அறிகின்றார்களில்லை. இனிச் சிலர், `உயிர்க்குயிராய்ச் சிவன் ஒருவன் இருக்கின்றான்` என்று உணரினும், `அவன், ஆஞ்ஞைத் தியானத்தால் காணத்தக்கவன்` என்று உணரமாட்டாதவராகின்றனர். இன்னும் ஒரு சிலரோ, `அவ்வாறு காணத் தக்கவன்` என்று உணர்ந்தும் ஒரு நொடி நேரமாயினும் அந்தத் தியானத்தைத் தலைப்பட எண்ணாமலே யிருந்தொழிவர்!

குறிப்புரை :

`இஃது இரங்கத்தக்கது` என்பது குறிப்பெச்சம். `தியானத்தின் சிறப்பை அறிந்திருந்தும் அதில் நில்லாதவர் அறியாதா ரோடு ஒப்ப அறிவிலிகளே` என்றற்கு இங்ஙனம் அறியாமையது நிலையைப் பலபட வகுத்துரைத்தருளினார். நான்கிடத்தும் `ஒரு பொழுதும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `சிந்தை` என்பது

பண் :

பாடல் எண் : 5

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல எருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.

பொழிப்புரை :

மேல் மாடத்தில் ஏற்ற வேண்டுவதாகிய விளக்கை நன்றாக ஏற்றிய பின்னும், மாளிகையை அழிக்க அதன் ஒரு பக்கத்தில் பற்றியுள்ள `சினம்` என்னும் நெருப்பை முற்ற அணைத்துவிட்டுக் கீழ் நிலையில் உள்ள மற்றைய விளக்குகளும் அணைந்து போகாதபடி எல்லாவற்றிலும் திரியை ஒரு சேரத் தூண்டி வைத்தால், முன்பு மேல் மாடத்தில் ஏற்றப்பட்ட விளக்கு உண்மையில் ஏற்றப்பட்டதாகும்.

குறிப்புரை :

`மனம்` என்பது இங்குச் செய்யும் உருவகத்திற்கு ஏற்ப, `மேல்மாடம்` எனப் பொருள் தருதலை, அதனை எடுத்தல் ஓசையாற் கூறிக் காண்க. அவ்வாறே ``அனைத்து விளக்கும்`` என்பதும் இங்கு உரைத்தவாறே பொருள் படுதலைப் படுத்தல் ஓசையாற் கூறியறிக. சினத்து விளக்கு, உருவகம். இதில் உள்ள ``விளக்கு`` என்பது காரண இடுகுறியாய் நில்லாது, காரண அளவில் நின்று, நெருப்பைக் குறித்தது. எருக்குதல் - அழித்தல். `நெருக்கி` என்பது பாடம் அன்று. ``அனைத்து விளக்கு`` என்றது, கருவி கரணங்களை. ``திரிதூண்ட`` என்பதில், சினை முதலொடு சார்த்தப்பட்டது. மனத்து விளக்கு அது - மனத்தில் ஏற்றத்தக்க விளக்காகிய அந்த விளக்கு, சிவ ஒளி. ``மாயா விளக்கு`` என்று, மனத்து விளக்கின் இயல்பைத் தெரிவித்துக் காட்டியது. இதன்பின் நின்ற தேற்றேகாரம், அஃது அத்தன்மைத்தாயே நிலைபெறுதல் காட்டி நின்றது. இங்கு, `ஆகும்` என்பது எஞ்சி நின்றது.
`தியானம்` என்பது, உலகர்கொள்ளும் உறக்கம் போல்வது அன்று என்பதற்கு, ``அனைத்து விளக்கும் திரியொக்கத்தூண்ட`` என்றார். எனவே, `யோகநிலையில் நிற்பவர்கட்குக் கருவி கரணங்கள் செயற்படாது நிற்குமேயன்றி, மடிதல் இல்லை` என்பது விளங்கும். இதனை விளக்கவே இந்நிலையே, `யோக நித்திரை, அறி துயில்` என்னும் பெயர்களால் கூறுவர். இவ்வாறன்றிக் கேவல சுழுத்தியாகிய உறக்கம் வருமாயின், இருள் மூடிக் கொள்வதல்லது விளக்கேற்றிய தாகாது; அதனைக் குறிக்கவே, பின்னிரண்டடிகளை அருளிச் செய்தார். இஃது அறியாது ஏகான்ம வாதிகள், `அன்றாடம் உலகர்க்கு வருகின்ற கேவல சுழுத்தியே பேரின்ப நிலை` எனக் கூறி மகிழ்வர். ``சினத்து விளக்கினைச் செல்ல எருக்கி`` என்று வெகுளி நீக்கம் கூறிய தனால், ஏனைக் காமம், மயக்கம் என்பவற்றது நீக்கமும் கொள்ளப் படும். `காம வெகுளி மயக்கங்கள் அற்றிருத்தல்` என்றால் `உறங்கிக் கிடப்பது என்பது பொருளன்று` என்றதற்கு, ``அனைத்து விளக்கும் திரியொக்கத் தூண்ட`` என்றார்.
இதனால், தியானத்தில் செயற்பாலன, தவிரற்பாலன கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கிடில்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

நெடுங்காலம் யோகம் செய்யினும், மேற்கூறிய தியான நிலையை அடைய முயல்பவர் அரியர். அந்நிலையை அடைந்தால், சிவன், கண்ணாடியுள்ளே இருக்கின்ற பொருள் இனிது விளங்குதல்போல, உயிர்க்குயிராய் நிற்கின்ற நிலை இனிது விளங்கும்.

குறிப்புரை :

``கண்`` என்றது, மேற்கூறிய அகக்கண்ணை. மூன்றாம் அடி, தியானத்தைப் பெறும் முறையை நினைப்பித்தது. ``உள்ளே`` என்றதை, `கண்ணாடி` என்பதன் பின்னும் கூட்டுக.
``அடுத்தது காட்டும் பளிங்குபோல்``(குறள், 706) என்பதையும் நோக்குக.
இதனால், ஆஞ்ஞைத் தியானம் இல்வழி யோகத்தால் பயன் இன்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே.

பொழிப்புரை :

ஒருவன் ஆஞ்ஞைத் தியானம் செய்தால் துன்பம், இறப்பு, கவலை, ``எனது`` என்னும் பற்று, ``யான்`` என்னும் முனைப்பு, இவை காரணமாகச் சிலவற்றைத் தேட முயலும் முயற்சி ஆகிய அனைத்தும் அவனுக்கு இல்லாதொழியும். பின்பு அவன் சிவனேயாய் விடுவான்.

குறிப்புரை :

எனவே, ``இன்பமே உளதாகும்`` என்பதாம். ``நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்தல்`` என்பது, கிரியை நிலையில் செபம் முதலியவற்றில் இருவிழிகளையும் மூடி யொழியாமலும், அலர விழியாமலும் சிறிது திறந்த பார்வையுடன் மூக்கின் இருதுளைக்கும் மேலே உள்ள நுனிமூக்கை நோக்கி நிற்றலைக் குறிப்பது. அத்தொடரை இங்கு இயைபுபட எடுத்தோதி, ``நான், சிவன்`` என்னும் இரண்டு எண்ணத்தையும் புருவ நடுவிலே வைத்தல் என ``நாட்டம் இரண்டு`` என்பதற்கு உட்பொருள் கொள்ள வைத்தார். இங்ஙனம் உட்பொருள் கொள்ளாவிடில், இங்கு இது பயன் தாராமை அறிக. மனை, உடம்பு.
இதனால், மேற்கூறியதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நயனம் இரண்டையும் நாசிமேல் வைத்திட்
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே.

பொழிப்புரை :

ஆஞ்ஞைத் தியானத்தை முறைப்படி செய்து அதனால் இன்புற்றிருப்பவர்க்கு இவ்வுடம்பு தரும் பயன் இவ்வின்ப நிலையேயாம். ஆகவே, இப்பயனை இவ்வுடம்பு தாராதொழியின், அதனால் பயன் வேறில்லை.

குறிப்புரை :

உயர்வு எழா - வெளியே போகாமல், `துயர் அற` என்றதனால், `இன்புற்று` என்பது பெறப்பட்டது. `தூங்குதல்` என்பது, அமைதியுற்றிருத்தலைக் குறித்தது. `இந்நிலை கூடுதல் அரிது` என்றற்கு, `வல்லார்க்கு` என்றார். `வல்லார்க்குப் பயன்` எனவே, `பயம் இல்லை` என்றது மாட்டாதார்க்கு ஆயிற்று.
இதனால், `இந்நிலையைப் பெறாத வழி, யோகமேயன்றி, உடம்பும் பயன் இலதாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மணிகடல் யாஅனை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாம்இவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.

(இதற்குப் பின் உள்ள ``கடலொடு மேகம்`` என்னும் பாடல் நாயனார் திருமொழியன்று.)

கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.

பொழிப்புரை :

`மணி நா ஓசை, கடல் ஓசை, யானை பிளிறும் ஒலி, குழல் இசை, மேகத்தின் முழங்கு குரல், வண்டு, தும்பி இவற்றின் ஒலி, சங்கநாதம், முரசின் முழக்கம், யாழ் இை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என்னும் ஒலிகள் போன்ற மெல்லிய ஒலிகள் பத்தினையும் ஆஞ்ஞைத் தியானத்தை அடைந்தவர் கட்கல்லது, மற்றையோர்களுக்குக் கேட்டல் கூடாததாகும்.

குறிப்புரை :

எனவே, `கேட்கப்படுதல் தியானத்தில் நிலைத்து நின்றமைக்கு அறிகுறி` என்றவாறாயிற்று. இவ்வோசைகள், பிராண வாயு மேற்கூறிய பத்து நாடிகளிலும் நிற்றலால் உளவாவனவாம். `இந்த இந்த நாடியில் இன்ன இன்னவாறு ஓசை எழும்` என வரை யறுத்தும் சில நூல்கள் கூறும். வார் - நீண்ட. அணி - அழகு. தணிந்து எழுநாதம் - மெல்ல ஒலிக்கின்ற ஓசை. எனவே, ``மேக ஒலி`` என்றது ``இமயத்து ஈண்டு இன்குரல் பயிற்றி`` (புறம். 34) என்றாற்போல மழை பொழிய வரும் மேகம் மெல்லென முழங்கும் முழக்கத்தையாயிற்று. பணிந் தவர் - (தியானத்துள்) அடங்கியவர். ``அல்லது பார்க்க ஒண்ணாதே`` என எதிர்மறையாற் கூறினமையின், ``இஃது அறிகுறி`` என்பது பெறப் பட்டது. படவே, தியான நிலையில் நிற்போர் அவ்வோசையைக் கேட்டலிலும் செல்லுதல் கூடாமை அறிந்துகொள்ளப்படும்.
இதனால், தியான நிலையை உணர்தற்கு ஆவதோர் அடையாளம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
ஓசை அதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே.

பொழிப்புரை :

தியான யோகத்தால் இறைவனை உணரமாட்டா தவர்க்கு அவனது இயல்பும், தேவர் கூட்டம் முதலிய பிற எல்லாப் பொருள்களும், அவரது உணர்வைத் தம்பால் ஈர்த்து அடக்கி அவரது உணர்வேயாய் நிற்கின்ற, மேற்கூறிய, ``மணி கடல் யானை`` முதலிய ஓசைகளாகவே தோன்றும். அவ்யோகத்தால் அவனை உணர வல்லவர்க்கு அவ்வாறின்றி, ஈசன் இயல்பு முதலிய யாவும், ``அவ் வோசையின் வாசனை`` எனச் சொல்லத்தக்கவாறு, அவ்வோசை நீங்கிய பின்னும் நிலைபெறுவதொரு நுண்ணிய ஓசையாய் விளங்கும்.

குறிப்புரை :

``பாசமாய்`` என ஆக்கச் சொல் வருவிக்க. பாசம், பிறவற்றிற் செல்லாதவாறு தடுத்துத் தம்பால் ஈர்ப்பவை. ``இயங்கும், நிற்கும்`` என்னும் எச்சங்கள், ``ஓை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?`` என்னும் ஒரு பெயர் கொண்டன. ``உயிர்`` என்றது, அதன் உணர்வை. ஓசை நிகழ்ச்சியை, ``பாசம்`` என்றதற்கு ஏற்ப, அதன் நீக்கத்தை ``விடுவது`` என்றார். ``விடுவது`` என்றது விட்டபின் நிலை பெறுவதாகிய தன் காரியம் தோன்ற நின்றது. `ஈசனை` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. இதனால், சொல்லியவை, `மணி கடல் யானை முதலிய ஓசையின் வழி இறைவனை உணர்தல் தியான யோகத்தின் முதல் நிலை` என்பதும், `அவை அடங்கப்பெற்று அவனை உணர்தலே அவ் யோகத்தின் முடிவு நிலை` என்பதுமாம். ``ஓசையெலாம் அவற்றால் ஒலிக்கும் திருச் சிலம்பின் ஓை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?`` என்றார் திருக்களிற்றுப் படியாரிலும் (வெண்பா, 33).
இதனால், தியான யோகத்தின் முதல் நிலை முடிவு நிலைகள் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவில்நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.

பொழிப்புரை :

தத்துவ நிலையிலும் சத்தியும் சிவமும் இருப்பது நாத தத்துவத்திற்கு அப்பாலாகலின், தியான யோகத்தின் முடிவு நிலையும் மேற்கூறிய பத்து வகை ஓசைகள் அடங்கிய இடமேயாம். அதனால், யோகியரது நோக்கம் அவ்விடத்திற் செல்வதே.

குறிப்புரை :

`தியான முதிர்ச்சியில் சிவாநுபவத்தைத் தலைப்படல் கூடும்` என்பதற்கு, ``நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டன்`` என்பதனை இறுதிக்கண் கூறினாராயினும், அதனை இரண்டாம் அடியாக வைத்து, அதன்பின், `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவித்துரைத்தல் கருத்தென்க. நல்யோகம் - தியானம். ``இருப்பது`` எனவந்த எழுவாய்கள் மூன்றும், ``முடிவில்`` என்னும் பயனிலைகளை முதலிற் பெற்று நின்றன. ``நஞ்சுண்ட கண்டன்`` என்பதன் பின்னும் அவ் எழுவாய் எஞ்சிநின்றது.
இதனால், ஓசை அடங்கிய இடமே தியான யோகத்தின் முடிவு நிலையாதல் தத்துவத்தில் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.

பொழிப்புரை :

ஆதார மூர்த்திகள் வெளிப்படும் இடமாகிய ஆறு ஆதாரங்களுள்ளும் உள்ளொளியாகிய பிரமன் முதலிய ஐவரையும் தியானிக்கும் தியானத்தால், புகழப்படுகின்ற ஒளியை உடைய, ஆயினும், சிவனைத் தலைப்பட ஒட்டாத - மயக்கம் நீங்க, அதன்பின், மேம்பட்டவராக மாயோனை முதலில் வைத்து இறுதிக்கண் நாதமூர்த்தியைக் கூட்டி எண்ணும் ஐவருள் நாதமூர்த்தியும் ஒடுங்கக் காணின், பரமசிவனது திருவடியை அடைதல் கூடும்.

குறிப்புரை :

`ஆறினுள்ளும்\\\' என உருபு விரிக்க. `ஆறினுள்\\\' எனப் பாடம் ஓதுதலும் ஆம். உம்மையுடைய இப்பாடத்திற்கு, முற்றும்மை எச்சப்பொருள் தந்ததாக உரைக்க. அங்கி - ஒளி. உள்ளே விளங்கு தலின் ஆதார மூர்த்திகளை `உள்ளொளி\\\' என்றார். ஆஞ்ஞையாகிய ஆறாவது ஆதாரத்தில் விந்துச் சத்தியுடன் விளங்குபவர் நாதமூர்த்தி. ஆகவே, அவருக்குக் கீழுள்ள ஐவராலும் பத்துவகை ஓசைகளைக் கேட்கும் தியானயோகம் முதிர்ந்து வருதலை இருள் நீங்குதலாகக் கூறினார். இங்கு \\\"இருள்\\\" என்பது, சிவாநுபவத்தைப் பெற ஒட்டாது தன்னையே கேட்டு நிற்கச் செய்யும் பத்து வகை ஓசை நிகழ்ச்சியே என்றற்கு, \\\"துதிக்கின்ற தேசுடை\\\" என்றும், ஆதார மூர்த்திகளுள் கீழுள்ளவன் மலரோன் ஆதலின், அவனுக்கு மேல் உள்ளவரை `அதிக் கின்ற ஐவர்\\\' என்றும் தெரித்துக் கூறினார். நாதம் - நாதமூர்த்தி. அவர் ஒடுங்கினமை கூறவே, ஓசை ஒடுங்கினமை தானே பெறப்பட்டது. கதி - புகலிடம். `கதியாகிய ஈசன்\\\' என்க. `கதியாகிய கழல்\\\' எனினு மாம். \\\"கதி\\\" எனவே, அஃது ஒன்றே அடையத் தக்கது என்றவாறு.

பண் :

பாடல் எண் : 13

பள்ளி அறையில் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்
ஒள்ளி தறியில்ஓர் ஓசனை நீள்இது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே.

பொழிப்புரை :

மேற் (பா. 568-573) கூறிவந்த இடங்களுள் முடிவாகிய பள்ளியறையில் பகலன்றி இரவே இல்லை. இவ்வொளி யிடத்தை அடைய நினைத்தால் இஃது ஓரு யோசனை தூரத்தில் உள்ளது. இதனை அடைந்துவிட்டால், வீட்டை எக்காலத்தும் தீப்பற்றிக் கொள்ளாமலும் காப்பாற்றலாம். இப்பள்ளியில் சென்றவர் விழித்தெழுந்து வெளிப்போத வேண்டுவதில்லை.

குறிப்புரை :

நாத மூர்த்தி விந்துச் சத்தியுடன் பிரிவின்றி நின்று அறிவைப் பிறப்பிக்கும் இடமாதல் பற்றியும், தியான யோகத்தின் முதிர்ச்சியில் ஆன்மா ``சமனை`` என்னும் சத்தியோடு கூடி நிற்கும் இடமாதல் பற்றியும் ஆஞ்ஞையை, ``பள்ளியறை`` என்றார். ``இதனை அடைந்துவிட்டால்`` என்பது இசையெச்சம். ``அறையில் கொள்ளி கொளுந்தாமற் காக்கலாம்`` என மாற்றி உரைக்க. அறை, உடம்பு. ``தியானம் முதிரப் பெற்றோர்க்கு வாழ்நாள் நீட்டிப்பும் உளதாகும்`` என்றபடி. `ஓர் ஓசனை நீள்` என்பது சிலேடை. ஓர் ஓசனை (யோசனை) ஒப்பற்ற தியானம். நீளம் - உயரம்; முடிவு. ``நீளம்`` என்பது கடைக்குறையாயிற்று. வெள்ளி அறை, சுவரும், நிலமும் வெள்ளியால் ஆக்கப்பட்ட அறை. ``ஒளியிடம்`` என்பது உண்மைப் பொருள். `அவ்வெள்ளி அறை` எனச் சுட்டு வருவித்து உரைக்க. ``விடிவில்லை`` என்றது, ``எழுந்து வர வேண்டுவதில்லை`` என்பதைக் குறித்த குறிப்பு மொழி.
இதனால், தியான யோகத்தின் முடிவு நிலையது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

கொண்ட விரதம் குறையாமல் தான்ஒன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே.

பொழிப்புரை :

இயமம் முதலாகத் தான் மேற்கொண்ட நோன்புகள் சிறிதும் குறைவுறாதவாறு அவற்றில் உறைத்து நின்று, பிராணா யாமத்தால் சுழுமுனை நாடி வழியே சென்று ஆஞ்ஞையை அடைந்த யோகிக்கு, உடம்பு, `அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்` என்னும் மூன்று பகுதிகளிலும் செம்மையுற்று, நிற்க வேண்டிய முறையில் சிறிதும் பழுதின்றி நிற்கும் ஆதலால், அஃது ஊழிக் காலம் வரினும் நீங்காத தன்மையைப் பெற்றிருக்கும்.

குறிப்புரை :

``ஆறு ஆதாரங்களுள், மூலாதாரம், சுவாதிட்டானம் இரண்டும் அக்கினிமண்டலம்; மணிபூரகம், அனாகதம், விசுத்தி மூன்றும் சூரியமண்டலம்; ஆஞ்ஞையும் பிரமரந்திரமும் சந்திர மண்டலம்`` என்பது யோக நூற்கருத்து. இம்மூன்று மண்டலங்களிலும் உடல் செம்மையுற்றிருத்தல் வேண்டும். அவ்வாறில்லாமல் ஆங் காங்குப் பழுதுறுவதினாலே வாழ்நாள் குறைகின்றது. யோகப் பயிற்சி யால், உடற் செம்மை தானே அமைந்துவிடுதலின், யோகியர்க்கு வாழ்நாள் நீடுவதாம் என்க.
இதனால், மேல், ``கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்`` என்றது, ஏதுக்காட்டி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டலம் ஆயம்மற் றோர்க்கே.

பொழிப்புரை :

(அக்கினி மண்டலம் முதலாகக் கூறிய மண்டலங்கள் மூன்றுக்கும் சிவபெருமான் ஒருவனே முதல்வனாக அறிந்து, எவ்விடத்தும் அவனையே தியானித்து அவனாகின்ற யோகமே உண்மை யோகம்; அது சத்தி நிபாதர்க்கல்லது கூடாது. அது நிற்க.) அம் மூன்று மண்டலங்கட்கும் அக்கினி முதலிய மூவரையே முதல்வராகக் கருதி ஆங்காங்கு அவ்வவரைத் தியானித்து அவரா கின்ற பொது முறைமையும் உண்டு. (அது சத்திநிபாதரல்லாதார்க்கு உரியதாம். மூன்று மண்டலங்கட்கும் மூவர் முதல்வராகிவிடின், கலாம் விளையுமன்றோ எனின்,) மூவரையும் முதல்வராக எண்ணுவோர், ஒருவர் மற்றை இருவர்க்கும் தோழமை யுடையவராக, மூவரிடை இணக்கமே கொள்ளுதலின், கலாம் விளையாதாம்.

குறிப்புரை :

``அவ்வவர் மண்டலம் ஆம் பரிசு`` என்றது, ``மூன்று மண்டலங்களையும் தனித்தனி மண்டலங்களாகக் கருதும் முறை`` எனவும், ``அவ்வவர் மண்டலத்து`` என்பது, ``அம்முறையுள்`` எனவும், ``அவ்வவர்க்கே வரில்`` என்றது, ``அவரவருக்கே உரிய தாய்விடின்`` எனவும் கூறியவாறாம். ``அவ்வவர் மண்டலம் மற்றோர்க்கு ஆயம்`` என மாறிக் கூட்டுக. ஆயம் - தோழமை.
இதனால், ``இறப்பில் தவம்`` (சிவஞானபோதம், சூ.8, அதி.1) எனப்பட்டு ஞானத்தைப் பயக்கும் சிவயோகத்தின் வேறான யோகமும், ``யோகம்`` எனச் சிலரால் மேற்கொள்ளப்படுகின்றது எனமேல் (பா. 557) கூறியதனை
உளத்துட் கொண்டு, அம்முறை பற்றிய மும்மண்டலங்களின் இயல்பு ஈண்டுக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசம் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே.

பொழிப்புரை :

ஒவ்வொரு பயனைத் தருபவர் ஒரோவொரு தேவராக நினைந்து அவர் அனைவரிடத்தும் ஓடி இளைக்கின்ற நெஞ்சத்தைத் தனது சரக்காக உடைய இருட்டறையாகிய உடலி னுள்ளே தனித்தனி முதன்மை பெற்றுத் தோன்றுகின்ற மண்டலங்கள் மூன்றிலும் பொருந்தி ஊடுருவிச் செல்வதாகிய பெரிய நூல் அவ்வாறு அவற்றை ஒன்றுபடக் கோத்துச் செல்லுமாயின், உயிர் மேற்கூறிய இளைப்பை அகன்று, மார்கழி நீராட்டுப்போல இன்ப வெள்ளத்தில் மூழ்கிச் சிறக்கும்.

குறிப்புரை :

இருட்டறை, அறியாமைக்கு இடமாகிய உடம்பு. `நிட்டையிலா உடல்` (தி.9 திருப்பல்லாண்டு, 3) என்றாற்போல, ஞானத்திற்கு ஏதுவாகாத குறையை உடல்மேல் ஏற்றிக் கூறுதலும் மரபாதல் அறிக.
`அறியாமை காரணமாக மூன்றும் மூன்று தனி மண்டலங்களாய்த் தோன்றுகின்றன` என்பது உணர்த்துதற்கு, `இருட்டறை யுள்ளே முளைக்கின்ற மண்டலம் மூன்றினும்` என்றார். துளை, முதனிலைத் தொழிற் பெயர். `துளைத்தலை யுடைய பாசம்` என்க. துளைப்பது ஊசியேயாயினும், `இஃது ஊசியின்றியே உருவிச் செல்வதோர் அதிசய நூல்` என்றவாறு. இது குண்டலி சத்தி என உணர்க. சத்திநிபாதரல்லாதவர்க்கு இம் மண்ட லங்களைத் துளைத்துக் கோத்து ஒன்றாக்கமாட்டாது நிற்கும் இந்நூல், சத்தி நிபாதர்க்குத் துளைத்து ஒன்றாகக் கோக்கும் வன்மையுடையதாம் என்பார், `பெரும்பாசம்` என்றார்.
பாசம் - நூல்; கயிறு. நெளிவும், வளைவும் உடையதாதல் பற்றி, `பாம்பு` எனப்படுகின்ற இதனை, இங்கு, `பாசம்` என்றார். `பிறர்க்குப் பல தெய்வ உணர்வைத் தருகின்ற குண்டலிசத்தி, சத்திநிபாதர்க்குச் சிவனது தனிப்பெரு முதன்மையைத் தந்து நிற்கும்` என்பது கருத்து. சிவயோகம் அல்லாத யோகம் பிறவியைப் போக்காமையேயன்றி அதனை வருவித்தலும் செய்யு மாகலின், அது பவ யோகமாம்.
`மார்கழி` என்பது, அத்திங்களில் ஆடும் நீராட்டைக் குறித்தது. `மார்கழி போல` என உவம உருபு விரிக்க.
இதனால், சிவத்தியான யோகமே பேரின்பத்தைத் தருவது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே.

பொழிப்புரை :

பிராணாயாமம் முதலியவற்றை முறைப்படி பயில வல்லவர்க்கு அவற்றின் பயனைத் தருபவன், தேவ தேவனாகிய சிவபெருமானே; (அவன் வழி நிற்போராகிய ஏனைய தேவர் அது மாட்டார்.)

குறிப்புரை :

`அதனால், அவனைத் தியானிப்பார்க்கல்லது துன்பம் நீங்காது` என்பதாம். முதல் மூன்று அடிகளும் பிராணாயாம முறையை அனுவதித்தவாறு. `முக்குணங்களாகிய பந்தத்தினின்று விடுபடுதற் பொருட்டு மேற்கொள்ளப்படுவதே யோகம்; அப்பயன் சிவயோகத் தாலன்றி எய்தாது` என்பதனை ``முக்குணம் மூடு அற வாயுவைப் பிடித்திட்டு`` என உடம்பொடு புணர்த்து ஓதினார். `உயிரை அவ்வந் நிலையில் வைக்கும்` என்க.
இதனால், மேலதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.

பொழிப்புரை :

சிவயோகியரேயாயினும், அனாகதத்தளவிலே நிற்பவர் ஆன்ம நிலையையே உணர்வர்; சிவ நிலையை உணர மாட்டார்.

குறிப்புரை :

``ஈத்த`` என்பனவும், ``ஈத்து`` என்பதும் குறுக்க லாயின. அவற்றுள் இறுதியில் நின்றது உவம உருபு. நடல் - நடுதல்; நிலை நிறுத்தல். பிராண வாயுவைக் கும்பித்தல். நாபி - மணிபூரகம். மடல் - தாமரை இதழ். வாணி - வாக்கு. ஆகுபெயராய் மத்திமை வாக்குக்கு இடமான விசுத்தியைக் குறித்தது. ``உள்ளே`` என்றது, `கீழே` என்றவாறு. ``கீழே`` எனப் பாடம் ஓதுதலும் ஆம். மணி பூரகத் திற்கும், விசுத்திக்கும் இடையில் உள்ளது, ``அனாகதம்`` எனப்படும் இருதயம். கடல் - கடலின் தன்மை. அது கரை இன்மையும், ஆழம் அறியப்படாமையும், தெளிவுமாம். சடலம் - உடல். அதன் தலைவன், உயிர். ``தியான யோகத்தை இருதயமட்டாகச் செய்து, அப்பால் ஏறமாட்டாதவர், ஆன்ம இயல்பையே உணர்வர்`` என்பதாம்.
இதனால், ``தியான யோகத்தை முற்றப் பயிலல் வேண்டும்`` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

பொழிப்புரை :

யோகத்தை முறைப்படி பயின்ற அடியவரே, அறிவில்லாத பொருளாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அறிவுருவாய் நின்று, அதனால், வலிய மாயையின் மயக்கத்தையும் வென்று, இறைவனது திருவருளால், வேறு நில்லாது அவனது தன்மையையே தமது தன்மையாகப் பெற்று நிற்கின்ற ஞானத்தை நிலைபெற உணர்ந்தோராவர்.

குறிப்புரை :

யோகமும் வழிபாடேயாதலின், அதனைச் செய் வோரை, ``அன்பர்`` என்றார். ``அன்பரே`` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. ``நிலையாக`` என ஆக்கம் வருவித்துரைக்க. ``அறிந்தார்`` என்றதனை, ``அறிவறிந்த மக்கட் பேறு`` (குறள், 61) என்றாற் போல, ``அறிதற்கு உரிமையுடையார்`` எனக் கொள்க. `துணிவுபற்றி, எதிர்காலம் இறந்த காலம் ஆயிற்று` என்றலுமாம். ``நெறியான அன்பர்`` என்பதை முதலில் வைத்து உரைக்க.
இதனால், ``யோகம் முற்றியவர்க்கே ஞானம் கூடும்`` என, யோகத்தது இன்றியமையாமை கூறப்பட்டது. இதனைச் சமாதி இறுதியிற் கூறாது ஈண்டுக் கூறினார், தியானத்திற்கும், சமாதிக்கும் இடையே உள்ள வேற்றுமை சிறிதேயாகலின்.

பண் :

பாடல் எண் : 1

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.

பொழிப்புரை :

``சமாதி`` என்னும் முடிவுநிலை, இயமம் முதலிய ஏனை உறுப்புக்களில் வழுவாது நிற்றலாலே வாய்ப்பதாம். இச்சமாதி யேயன்றி அட்டமாசித்திகளும், இயமம் முதலிய அவ்வுறுப்புக்களால் விளையும். இத்துணைச் சிறப்புடைய இயமம் முதலியவற்றை முற்றிச் சமாதியில் நிலைபெற்றவர்க்கேயன்றோ யோகம் முற்றுப்பெறுவது!

குறிப்புரை :

``யமாதி`` என்பது ஆரியப்புணர்மொழி. ``இன்`` மூன்றும், ஏதுப் பொருளில் வந்த ஐந்தாம் உருபு. ``தான்`` என்பது பிரி நிலை ஏகாரப் பொருளது; இதனை, ``தங்கினோர்க்கு`` என்பதனுடன் கூட்டுக. செல்லல் - வாய்த்தல். இரண்டாம் அடியில், ``சமாதியோடு`` எனவும், மூன்றாம் அடியில், `சமாதிக்கண்` எனவும் ஏற்கும் உருபு விரித்துக் கொள்க. நான்காம் அடியை, ``யமாதியும், சமாதியும் தலைப்படும்`` என மாற்றி உம்மை விரித்து `யோகம்` என்பது அதன் கருத்தாக உரைக்க. ``சித்தி`` என்பதன்பின், ``உளவாம்`` என்னும் பயனிலை எஞ்சிநின்றது.
இதனால், சமாதியே யோகத்தின் முடிவு நிலை என்பதும், அஃது அதற்கு முன்னே செயற்பாலனவற்றால் அடையத் தக்கது என்பதும், அட்டமாசித்திகள் இயமம் முதலியவற்றின் இடைநிலைப் பயன் என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருட்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.

பொழிப்புரை :

கருவிற்கு வித்தாய வெண்பாலும் (சுக்கிலமும்) குண்டலி சத்தியும் ஆஞ்ஞைத் தானத்தில் சோர்வின்றி நிற்குமாயின், அவ்விடத்தில் ஆன்மா சமாதியைத் தலைப்படும். அத்தலைப்பாட்டில் ஏகதேச உணர்வு நீங்கிய வியாபக உணர்வு தோன்ற, அதன்கண் அடைதற்கரிய பொருளாகிய அழகிய சிவம் விளங்கும்.

குறிப்புரை :

வெண்பால் (சுக்கிலம்) சோராமை, ஆன்மா புறப் பொருளையும், தன்னையும் மறந்து தியானப் பொருளோடு ஒன்றுதலாம். குண்டலியாவது ``வாக்கு`` என்பதை மேலே குறித்தாம். அதுவும் மேற்குறித்த இரு பொருளையும் பற்றாது நிற்றலை, ``ஆஞ்ஞையில் நிற்றல்`` என்றார். இதனை நாவுக்கரசர் அரம்பையர் ஆடல் பாடலைக் கண்டு அகம் இளையாதிருந்த ஞானநிலையோடு ஒப்பிட்டு உணர்க. இவ்விரண்டும் உயிர், சமாதிநிலை கூடினமைக்கு அறிகுறி என்றவாறாயிற்று. ஆகவே, தியான நிலையில் இவ்விரண்டும் இந்நிலையினின்றும் சோர்தல் உண்டு என்பது பெறப்பட்டது. ``விந்து, நாதம்`` என்பவற்றிற்கு இங்குப் பிறவாறு உரைத்தல் ஏலாமை அறிக. சுழுமுனையாகிய நடுநாடியின் உச்சியாகிய புருவ நடுவை, ``மேரு`` என்றல் வழக்கு என்பது மேலேயும் கூறப்பட்டது. பின்னிரண்டடிகள் சமாதியில் சிவ நிலை அனுபவமாய் விளங்குதல் கூறப்பட்டது. தியான நிலையில் பாவனை மாத்திரமே உளதாம் என்க.
இதனால், சமாதி நிலையில் விளைவன கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே.

பொழிப்புரை :

புறப் பொருளிடத்தும், ஆன்மாவிடத்தும் நிற்கின்ற மனம் எப்பொழுது உண்டோ, அப்பொழுதெல்லாம் பிராண வாயுவின் இயக்கமும் உளதாகும்; அத்தன்மையான மனம் இல்லாத பொழுது, பிராணவாயுவின் இயக்கமும் இல்லையாம். மேற்கூறிய இரண்டையும் விடுத்து தேயப்பொருளில் (தியானிக்கப்படும் பொருளில்) நிலை பெற்ற மனத்தால் அல்லல் அற்று இன்புற்றிருப் பவர்க்கு, அத்தேயப் பொருளிடத்தே அவரது மனம் ஒடுங்கி நிற்கும்.

குறிப்புரை :

``மன் மனம்`` நான்கில் முதலன மூன்றும் வினைத் தொகை. மன்னும் இடங்கள் ஏற்ற பெற்றியாற் கொள்ளப்பட்டன. இறுதியது, `தலைமைப் பொருளது மனம்` என ஆறாவதன் தொகை. `மனம் மனத்தில் ஒடுங்கும்` என்னும் நயம் தோன்ற ``மன் மனத்துள்ளே மனோலயம் ஆம்`` என்றாரேனும், `மன்னுள்ளே` என்பதே கருத்தாம். மூன்றாம் அடியில், `மனத்தால்` என மூன்றாவது விரிக்க. `மனோலயம் உளதாம்` என்பதே சொற்பொருளாயினும், கருத்து நோக்கி மேற்கூறியவாறு உரைக்கப்பட்டது.
இதனால், `சமாதி நிலையில் உயிர்ப்புத் தானே அடங்கி நிற்கும்` என அந்நிலையில் உளதாகின்ற மற்றொன்று கூறப்பட்டது. இதற்குக் கீழ்ப்பட்ட நிலைகளில் உயிர்ப்பை யோகியர் தமது முயற்சியால் அடக்குவர். இவற்றை, தியான யோக துரியமும், சமாதி யோக துரியாதீதமுமாதல் பற்றி அறிந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 4

விண்டலர் கூபமும் விந்தத் தடவியுங்
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தானே.

பொழிப்புரை :

சமாதி நிலை எய்தினவரைப் பிறர், மனத்தைப் புற விடயங்களில் ஓடவிட்டிருப்பவராகக் கருதிக் கொண்டிருப்பார்கள். ஆயினும், அவர்களோ தமது மனத்தைத் தேயப் பொருளில் ஒடுக்கி விட்டிருப்பர்.

குறிப்புரை :

`குதிரையேற்றம் வல்லான் ஒருவனது குதிரை யேற்றத்தைக் காணவேண்டிச் செண்டு வெளியில் (குதிரையேறிக் காட்டும் இடம்; இதனை `வையாளி வீதி` எனவும் கூறுவர்) கூடியிருந் தோர் பலரும், `அவன் தனது குதிரையை, மலை, பாழ்ங்கிணறு முதலி யவை நிறைந்த காடுகளில் ஓட்டிக்காட்டி வருவான்` என்று நினைத் திருந்தார்கள். அவனோ அவ்வாறு ஒன்றும் செய்யாமல், அச்செண்டு வெளியில் உள்ள ஒரு பெரிய மலையின் பக்கத்தில் கொண்டுபோய் அக்குதிரையை எங்கும் போகவொட்டாமலே கட்டிவிட்டான் என்பது இத்திருமந்திரத்தின் சொற்பொருள். அஃது உள்ளுறை உவமமாய் நின்று, மேல் உரைத்த பொருளைத் தோற்று வித்தது என்க.
விண்டு - மலை. `விண்டுவும்` என உம்மை விரிக்க. அலர் கூபம் - வாய் விரிந்த கிணறு; பாழ்ங்கிணறு. `விண்டலர் கூபம்` என ஒன்றாக்கி உரைப்பினுமாம். இப்பொருட்கு, விண்டு அலர்தல், ஒரு பொருட் பன்மொழி. விந்தத்து அடவி - விந்த மலையைச் சூழ்ந்துள்ள காடு. `இதுவே மிக்க இன்னல் உடையது` என்றல் நம் நாட்டு வழக்கு.
``சிந்தாகுல இல்லொடு செல்வமெனும்
விந்தாடவி என்று விடப்பெறுவேன்`` -கந்தர் அநுபூதி, 33
என்றார் அருணகிரியாரும். `உயிர் பூத உடலைவிட்டுக் கூற்றுவன் உலகிற்குச் செல்லும்பொழுது இடையில் இத்தன்மைத்தான ஒரு காட்டினைக் கடக்கும்` எனப் புராணம் கூறும். கண்டு உணர்வாக - கண்டறிந்து வருவானாக. கருதி யிருத்தற்கும், குசை செறுத்தற்கும் எழுவாய்கள் வருவித்துக்கொள்க. குசை - கடிவாளம். செறுத்தல் - கட்டுதல். `குசையொடு செறுத்தான்` என்க. `கிரியத்திடை` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை. இனி `கிரி உண்டு; அதனிடை` என உரைத்தலுமாம். குதிரை, மனம், குசை, பிராண வாயு, கிரி, தியானிக்கப்படும் பொருள்.
இதனால், சமாதி நிலை புறத்தாரால் அறிதற்கு அருமை கூறப் பட்டது.
இதன்பின், `மூலநாடி` எனக் காணப்படும் செய்யுள் நாயனார் திருமொழியன்று.

பண் :

பாடல் எண் : 5

மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.

பொழிப்புரை :

நாடு சுற்றும் ஒருவன் அங்ஙனம் சுற்றி வரும் நாடுகள் ஐந்து; அவற்றில் உள்ள மலைகள் பன்னிரண்டு; அங்கு வாழும் குடிகள் நாற்பத்தெட்டு வகையினர். அவைகளை எல்லாம் முழுதும் காணவேண்டும் என்று விரும்பிய அவனது மனம் இடையே ஒரு பெரு வெள்ளத்தைக் கண்டு அதில் அழுந்திவிட, அவன் அதனையே குடித்தும், அதனுள்ளே மூழ்கியும் இன்புற்றிருக்கின்றான்.

குறிப்புரை :

மண்டலம் ஐந்து, பஞ்சபூதங்களின் எல்லைகள், வரைகள் பன்னிரண்டு, பிரணவ கலைகள். குடிகள் நாற்பத்தெட்டு, அக்கரங்கள் (ஐம்பதில் க்ஷகாரம், ளகாரம் என்னும் இரண்டும் ஒழித்து ஏனையவை. அடிநிலை எழுத்தாகிய அகரமும் இங்குக் குறிக்கப்பட வில்லை, அது சிவமாதல் பற்றி) இவை மூலாதாரம் முதல் விசுத்தி வரையில் உள்ள ஐந்து ஆதாரங்களிலும் மேலே காட்டப்பட்டவாறு நிற்றலின் ``குடிகள்`` என்றார். `இவற்றைக் கண்டிட விரும்பும் கருத்து` என்க. அஃதாவது, இவற்றையே நோக்கி நிற்கும் எண்ணம். ``நிலா விடும்`` என்ற செய்யுமென்முற்று ஆண்பாலில் வந்தது. இதற்கு, `சமாதி எய்தினோன்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. ``ஓடும்`` என்னும் அடைமொழியால் `பதம்` வெள்ள நீரைக் குறித்தது. வெள்ளம், சிவானந்தம்.
இதனால், சமாதிநிலை எய்தினோர் பிறவற்றை எய்த விரும்பாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற அந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே.

பொழிப்புரை :

கிணற்றில் உள்ள பூட்டைச் சுழல்போல, உடலில் முன்னும் பின்னுமாய் இயங்குதல் தன்மைபெற்று நிற்கும் பிராண வாயுவை, பிற பொருள்களைத் தேடித் திரியாது நிலைத்து நிற்கின்ற ஆஞ்ஞையில் சேர்ந்து அசையாதபடிநிறுத்தி, அதனாலே மனத்தையும் வெளிப்போகாதவாறு தடுத்துத் தியானப் பொருளில் நிலைத்து நிற்பவர்க்கு இன்பம் அங்குத் தானே கிடைக்கும்.

குறிப்புரை :

பொறி - இயங்குந் தன்மை. நாட்டம் - நாடுதல்; தொழிற்பெயர்; இது மனத்தின் தொழில். இதனை மீட்டல், மனத்தைத் தடுத்து நிறுத்துதலாம். நயனம் - கண். கண் போன்று உயிர்க்குயிராய் உள்ள பொருள். `மாம்பழம் தோட்டத்துத் தூங்கலும் ஆம்` என மாற்றிக் கொள்க. ஈற்றடி, ஒட்டணி.
இதனால், சமாதிநிலை தளர்வுறுதல் உளதாயின், பிராணாயாம தாரணை தியானங்களால் அத் தளர்ச்சியை நீக்கி அதன் கண் உறைத்து நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே.

பொழிப்புரை :

அகத்தே ஆஞ்ஞையாகிய மலையின் உச்சியை அடைந்து அங்குள்ள அமுதத்தைத் தேவர்களும் உண்ண மாட்டாராய்ப் புறத்தே பெரிய மலையைப் பெயர்த்துக் கொணர்ந்து திருப்பாற் கடலைக் கடைந்து, அதினின்றும் தோன்றிய அமுதத்தையே உண்டார்கள். (ஆயினும், அதனால் அவர் இறவாதிருக்கின்றார் களில்லை; ஆகவே) இறவாமைக்குப் பொருளாக அறியும் வழி ஒன்றே உண்டு; அஃது ஐம்புல வேட்கையை முடிவின்றிக் கொள்ளும் மனம் முற்றும் ஒடுங்கிய நிலையேயாம்.

குறிப்புரை :

`ஆதலின், அதனையே பெற்றுப் பேணிக்காக்க` என்பது குறிப்பெச்சம். முதல் தொடரை இரண்டாம் அடியின் பின் வைத்து நான்காம் அடிக்கு முன்னே கூட்டி உரைக்க. உரு - பொருள்; மெய்ம்மை. `உருவாக` என ஆக்கம் வருவிக்க. `ஒன்றே` என்னும் தேற்றேகாரமும், `வானொடும்` என்னும் சிறப்பும்மையும் தொகுத் தலாயின. கருமை - பெருமை. ஏறுதற்கு அருமைபற்றி ``அருவரை`` என்றார். `மாட்டாராய் உண்டார்` என எச்சமாக்கி மேலே கூட்டி முடிக்க. `இது மாட்டாமையால் அதனை உண்டார்` என்றதனால், உண்டதனால் கருதிய பயன் விளையாமை பெறப்பட்டது. `திரு` என்பது, `முயற்சி திருவினையாக்கும்` (குறள், 616) என்பதிற்போல நின்றது.
இதனால் சமாதிநிலையது அருமையும், பெருமையும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 8

நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி அருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.

பொழிப்புரை :

சிவனது பெருமையை உணர்ந்தோர் அவன்பால் அன்பு செய்து, அவ்வன்பினாலே பிற ஆசைகளை ஒழித்து, அவனையே நோக்கி ஆஞ்ஞையை அடைந்து அவனை வணங்கி, அவனோடு ஒன்றாய்க் கலந்தார்கள்.

குறிப்புரை :

எனவே, `சிவனை அடைய விரும்புவோர் செய்யத் தக்கன அவையே` என்பதாம். `சிவனது பெருமையை உணர்ந்த வழியே அவனிடத்து அன்பு செல்லும்` என்றதற்கு அவனது பெருமைகளை உடம்பொடு புணர்த்துக் கூறினார். நம்பன் - விரும்பத் தக்கவன். நான்மறையை ஓதியது, அனைவரும் தன்னை அடையு மாற்றை அறிதற்கு. `பொன்னில் நின்று ஒளிர்கின்ற மாற்றுப்போல, உயிரில் நின்று ஒளிர்பவன்` என்பது இரண்டாம் அடியின் பொருள். ஆக்குதல் - பெருக்குதல். அருத்தி - ஆசை. ``கொம்பு`` என்றது, சுழுமுனையை. ``ஏறி`` என்றதனால், அதன் உச்சியை அடைதல் பெறப்பட்டது. கூட்டம் - கூடுதல், புணர்தல்; இரண்டறக் கலத்தல்.
இதனால், சமாதி கூடுதற்கு இயமம் முதலியவற்றில் நிற்கு மிடத்தும் அன்புடையராதலும், உலகப் பற்றை விடுதலும் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மூலத்து மேலது முற்சது ரத்தது
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிக்குநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.

பொழிப்புரை :

மூலாதாரத்திற்குமேல் முதற்கண் காணப்படுகின்ற நாற்கோண வடிவுள்ள இடத்தில் (சுவாதிட்டானத்தில்) நிற்பதாகிய பிராணவாயு அவ்விடத்தில் உள்நுழைகின்ற புழையின் (சுழுமுனை நாடிக்கு) மேலிடத்தில், வானத்தில் உள்ள பிறைபோன்ற புருவநடுவில் நிற்கின்ற பொருளின் வடிவங்கள் பலவாய்த் தோன்றும்.

குறிப்புரை :

இது தியான நிலையாம். `மேலதாகிய சதுரம்` எனவும், `சதுரத்ததாகிய கால்` எனவும் கொள்க. பிராணவாயு கும்பகத்தில் சுவாதிட்டானத்தில் நின்று, பின் சுழுமுனை வழிமேற்செல்லும் என்க. அத்திசை - அவ்விடம். `முச்சதுரத்தது` என்பது பாடம் அன்று. ஆஞ்ஞைத் தியானத்தில் மின்னல், விண்மீன், விளக்கு, பேரொளி முதலிய வடிவில் தியானப் பொருள் பலபடத்தோன்றும். `அவற்றுள் பேரொளித் தோற்றத்தில் ஒன்றுதல் சமாதி` என்றற்கு இதனை முன்னர்க் கூறினார்.
இதனால், சமாதியைத் தலைப்படுங்கால் இடைநிகழ் காட்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பனை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே.

பொழிப்புரை :

மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் செய்யும் பாவனைகளை விடுத்து, அவ்வாதார யோகங்களால் மூண்டெழுந்த கனலைமட்டும் துணையாகப் பற்றி ஆஞ்ஞையிற் சென்று, அங்குச் சிவனது பேரொளித் தோற்றம் ஒன்றையே எதிர்நோக்கி அதனுள் ஒடுங்கும் அவா மிக்கிருந்து, அவ்வொளி தோன்றிய காலத்து அதனையே தனக்கு வியாபகமாகக் கொண்டு அதன்கண் புகுந்து ஒடுங்கி நிற்றலே சமாதியாகும்.

குறிப்புரை :

``சிற்பி`` என்பதனை, `சிற்பன்` என்றார். `எல்லாம்` என்றது, முன்னை ஆதார மூர்த்திகளையும், ஆஞ்ஞையில் தியானத்தில் தோன்றும் பல வகை வடிவங்களையுமாம். ``சிருட்டித்த சிற்பன்`` என மாறுக. எனவே, ``யோகத்தின் தலையாய பொருள் பேரொளி ஒன்றே`` என்பது போந்தது. மதி - அறிவு. அஃது இங்கு ஆர்வத்தை உணர்த்திற்று. ``பரம்`` என்றது, ``வியாபகம்`` என்னும் பொருட்டு. ஆக - ஆகிவிட. தகும் - தக்கிருக்கும். தண்மை, இதுகாறும் உழன்ற உழப்பாகிய வெப்பம் நீங்கிய குளிர்ச்சி. ``தண் சமாதி தக்கிருக்கும்`` என்க.
இதனால், சிவ சமாதியைத் தலைப்படும் முறையும், அச்சமாதியது இயல்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளும்
குலைப்பட் டிருந்திடும் கோபம் அகலும்
துலைப்பட் டிருந்திடந் தூங்கவல் லார்க்கே.

பொழிப்புரை :

துலை நாப்போல உள்ள ஆஞ்ஞையில் அசை வற்றிருக்க வல்லவர்க்கு, மெய்ப்பொருளைத் தலைப்பட்டிருக்குமாறு, அது, தானே கிடைக்கும். ஆணவமாகிய வலையில் தானே சென்று நின்று, அந்நிலை காரணமாகச் சினங்கொண்டவள்போல இருந்த அருட் சத்தியும் சினந்தணிந்து, பிறவிக் கடலுக்குக் கரையாகி நிற்பாள்.

குறிப்புரை :

தத்துவம் - மெய்ப்பொருள். அருட் சத்தியே பாசத்தின் வழி நின்று அதனை நடத்துங்கால் ``திரோதான சத்தி`` எனப்படுதலும், அது, ``சின மருவு திரோதாயி`` (சிவப்பிரகாசம், 48) எனக் கூறப்படுதலும் காண்க. குலை - கரை. குலைப்பட்டு - கரையின் தன்மை எய்தி. ``கோபம் அகலும்`` என்பதை, குலைப்பட்டிருத்தற்கு முன்னே கூட்டிப் பொருள் கொள்க. திரோதான சத்தி, சினந்தணிந்து அருட் சத்தியாய் ஆன்மாவிற் பதிதலே சத்தி நிபாதம் என்பது அறிக. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல்.
இதனால், சிவயோகத்தின் முடிவு நிலையாகிய சிவ சமாதியால் சத்திநிபாதம் முதிர்தல் கூறப்பட்டது. அது கூறவே, ``தத்துவம் கூடும்`` என்றது, ஞானத்தைப் பெறும் பக்குவம் எய்தலைக் குறித்ததாயிற்று.

பண் :

பாடல் எண் : 12

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே.

பொழிப்புரை :

சிவசமாதி கைவரப் பெற்ற நிலையில் சீவனும், சிவம் சத்திகளாய் நிற்கும். அதனால், அத்தகைய யோகீசுரனைப் பிரம விட்டுணுக்களும் வணங்குவர்.

குறிப்புரை :

``ஆதி`` மூன்றும் முறையே சத்தி, முதல், முதல்வன் என்னும் பொருளன. உம்மை நான்கனுள் முன்னவை இரண்டும் எண்ணுப் பொருளிலும், இறுதியது உயர்வு சிறப்புப் பொருளிலும் வந்தன. ஏனையது இழிவு சிறப்பு. உள்நிற்றல் சமாதியில் நிற்றல். ``உள்நின்ற சீவனும்`` என்பதை முதலிற் கொள்க. `சிவமாம்` என்று ஒழியாது, ``சத்தியுமாம்`` என்றது, ``சிவன் செய்யும் செயலெல்லாம் இவ்யோகி செய்யவல்லன்`` என்பது உணர்த்துதற்கு.
``தாமடங்க இந்தத் தலமடங்கும்``
என்ற திருக்களிற்றுப்படி மேலேயும் (பா. 528) காட்டப்பட்டது. இறுதியில் உள்ள ``ஆதி`` என்பதற்கு ``அவ் ஆதி`` எனச் சுட்டு வருவிக்க.
இதனால், சமாதி எய்தினோரது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகம்
சமாதிகள் வேண்டா இறையுட னேகில்
சமாதிதா னில்லை தானவ னாகில்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.

பொழிப்புரை :

சமாதி யோகத்தைத் தலைப்பட்டவர்க்கு ``யோகம்`` எனப்படுவன பலவும் வாய்ப்புடையனவாய்ப் பயன் தரும். இனி, இறைவன் அருள்வழியே எச்செயலையும் செய்வார்க்கு இச் சமாதி யோகம் வேண்டுவதில்லை. சீவன் சிவமாய் நிற்கும் நிலையில் சமாதி என்னும் யோக நிலை இல்லை. (நிட்டை என்னும் ஞான நிலையே உளதாம்) சமாதி யோகத்தால் ஞானம் வருதலேயன்றி அறுபத்து நான்கு சித்திகளும் கிடைக்கும்.

குறிப்புரை :

``பல யோகம்`` என்றது, மனம் ஒன்றி நின்று செய்யப் படுதல் பற்றி, `மந்திரயோகம், கன்மயோகம், பத்தியோகம்` என வழங் கப்படுவனவற்றை. இடைநின்ற இரண்டடிகளாலும் ஞானம், யோகத் தின் வேறாய் மேம்பட்டு நிற்றல் குறித்தவாறு. இறையுடன் ஏகல், அவன் அருள்வழியே செயற்படல். தான் அவனாதல், ஆன்மா இறை வனது எண்குணங்களையும் பெற்று நிற்றல். இவை இரண்டும் யோகத் தில் எய்தாமை அறிக. ஈற்றடியால் யோகத்தின் இடைநிலைப் பயன் கூறப்பட்டது. `எட்டுச் சித்திகளும் கீழ் உலகம் ஒன்றோடு மேல் உலகம் ஏழினும் அவ்வவ்விடத்திற்கு ஏற்பப் பெறப்படுமாற்றால் அறுபத்து நான்காம்`. இது சிவஞானமாபாடியத்துட் (சூ.2 அதி.2) கண்டது.
இதனால், யோகத்தின் எல்லை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடும்
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.

பொழிப்புரை :

மலர்களை விரும்புதலால், அவை பொருந்தப் பெற்ற புரிந்த சடையினையுடைய சிவபெருமானது திருவடியை எத்துணைச் சிறிதளவு விரும்புவராயினும், அவர் சுவர்க்கத்தையே அடைவர்; நிரையம் புகார், இறைவியை ஒருபால் விரும்பிவைத்து நடனம் புரிகின்ற அப்பெருமான், தன்னை விரும்புபவன் எவனாயினும் அவனுக்கு `இவன் விரும்பியது யாது` என்று நினைந்து அதனை அருள்செய்பவன் ஆதலின்.

குறிப்புரை :

`ஆகவே, யோகத்தின் முதற்படியில் நின்றோர்க்கு அவன் இம்மையில் அவன் விரும்பிய பயனையும், மறுமையில் சுவர்க்கத்தையும் அருளுவன்` என்பதாம். ``யாது`` என்பது, `சிறிது` என்னும் பொருட்டாய், அல்லவை செய்தலை ஓம்புதலாகிய (புறம். 195) இயமத்தைக் குறித்தது. `உகந்தாரும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. பின்னிரண்டடிகளால் சிவபெருமான், `வேண்டுவார் வேண்டுவதை ஈயும்` (தி.6 ப.23 பா.1) கருணையாளனாதலைக் குறித்தவாறு மாதொரு பாகானாதலும், நடனம் ஆடுதலும் அக் கருணையைத் தெளிவிப்பனவாம். விடையூர்தியும் விரைந்து வந்து அருளுதலைக் குறிப்பதேயாம்.
`சுவர்க்கம்` என்பது பவ யோகியர்க்குத் தேவர் உலகமும், சிவயோகியர்க்கு உருத்திரர் உலகமுமாகக் கொள்க. பவயோகியர் சிவபெருமானைப் போற்றினும், பிற தேவரோடு ஒப்ப நினைந்து போற்றுபவரே என்க.
இதனால், இயமத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதம் சேரலு மாமே.

பொழிப்புரை :

சிவபிரானது திருவடியைத் துணையாகப் பற்றி அன்பு செய்து, அவனது புகழைக் கற்றும், கேட்டும் ஒரு பெற்றியே ஒழுகுவார்கட்கு, பின்னர், முனிவர் குழாம் முழுவதும் சுவர்க்க லோகத்தே முன்வந்து எதிர்கொள்ள ஒளிமயமாகிய அவ்வுலகத்தை அடைதல் கூடும்.

குறிப்புரை :

``பரன்`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, `பதத்து` என்றார். பரன்புகழ் கற்றல், பிற நியம ஒழுக்கங்கட்கு உபலக்கணம் ``ஆங்கே`` இரண்டில் முன்னது, `ஒருபெற்றியே` என நியமத்தைக் குறித்தது. பின்னது செய்யுளில் சுட்டு முன் வந்தவாறு. `முற்றும்` என்னும் உம்மை தொகுத்தல். தெற்றுதல் - விளங்குதல். ``முனிவர்`` என்பது சிவயோகியர்க்கு உருத்திர கணங்களையும், ``சிவபதம்`` என்பது பவயோகியர்க்கு, `இன்ப உலகம்` என்னும் பொதுப் பொருட்டாய்த் தேவருலகத்தையும் உணர்த்தி நிற்கும். `சேர்தலும்` என்னும் உம்மை, சிறப்பு.
இதனால், நியமத்தின் பயன் கூறப்பட்டது. `உயர்ந்தோராய்ப் போற்றப்படுதல் இங்குக் குறிக்கப்பட்ட சிறப்பு` என்க.

பண் :

பாடல் எண் : 3

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.

பொழிப்புரை :

மக்கள், மெய் வருத்தத்தைப் பெற்றுத் தவம் செய்தபின் சிவபெருமானது அருளால் விண்ணவர்க்குத் தலைவராய், `வானுலகச் செல்வத்திற்கு உரிமையுடையவர் இவரே` என்று பலரும் புகழும்படி, மத்தளம், குழல் முதலிய வாச்சியங்கள் ஒலிக்க வீற்றிருந்து, தலைவராம் இன்பத்தை அடைவர்.

குறிப்புரை :

வருந்துதல், இங்கு, மெய் வருந்தல், எனவே, இஃது ஆசனத்தைக் குறித்தது. ``தவம்`` என்பது ஏற்புழிக் கோடலால் யோகமாயிற்று. `செய்தபின்` என்பது `செய்து` எனத் திரிந்து நின்றது. ``வானவர்`` என்பது பவயோகியர்க்குத் தேவர்களையும், சிவயோகியர்க்கு உருத்திரர்களையும் குறிக்கும். எனவே, தேவர்க்குத் தலைவராதல் திசைகாவலர் ஆதலையும், உருத்திரர்களுக்குத் தலைவராதல் உருத்திர புவனங்கட்கு அதிபதிகள் ஆதலையும் குறிப்பனவாம். `கோ, செல்வன், இவன்` என்பன, பன்மை யொருமை மயக்கங்கள். `அருளால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று.
இதனால், ஆசனத்தின் பயன்கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

செம்பொற் சிவகதி சென்றெய்தும் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே.

பொழிப்புரை :

பிராண வாயுவைக் கும்பகம் செய்ததன் பயனாக மக்கள் செம்பொன் மயமான இன்ப உலகத்தில் சென்று சேரும் பொழுது, விண்ணவர் குழாம் வந்து எதிர்கொள்ள, விண்ணுலக மகளிர் தாம் தாம் `எமக்கு அரிதிற் கிடைத்த தலைவன் இவனே` என மைய லுற்றுச் சொல்லுமாறு கலவி இன்பம் மிகப்பெற்று இருத்தல் கூடும்.

குறிப்புரை :

``கும்பத்து`` என்பதனை முதலிற் கொண்டு உரைக்க. `கும்பகத்து` என்பது குறைந்து நின்றது. `சிவகதி, அமரர்` என்ப வற்றிற்கும் மேல் உரைத்தவாறே உரைக்க. பொன்தலைவன், உவமத் தொகை. உவமை, பயன்பற்றி வந்தது. ``இன்பக் கலவி`` எனப் பின்னர் வருதலால், சொல்வோர் மகளிராதல் பெறப்பட்டது. மையலுற்றுக் கூறுவோர் ஆடல் மகளிர். அவர் அவ்வாறு கூறினும் சிவயோகியர் இன்புறுவது உரிமை மகளிரோடேயாம். ஐம்புல இன்பங்கள் பலவற்றையும் நிரம்பத் துய்த்தலை விளக்கும் குறிப்பு மொழியாக இன்பக் கலவி எய்துதலை எடுத்தோதினார். உருத்திரலோக இன்பம் சிவனை மறப்பியாது என்க.
இதனால், பிராணாயாமத்தின் பயன் கூறப்பட்டது. மேலது பதவிக்களிப்பும், இது துய்த்தற்பேறுமாகிய வேறுபாடு நுனித்துணர்ந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 5

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.

பொழிப்புரை :

இம்பருள்ளாரை விடுத்து, உம்பருள்ளாரைப் பாவனையால் அடைந்தோர், அதன் பயனாக அவரை உண்மை யாகவே அடையுங் காலத்து, அவ்விடத்துள்ளார், `மக்களுள் இவ்வுயர் நிலையை அடைந்தோன் யாவன்` என்று வியப்புற்று வினாவ, (ஒரு சாரார் ஓர்ந்துணராது வடிவம் ஒன்றே பற்றி) `இவன் சிவபெருமான் தான்` என்று மயங்கிக் கூற, இவ்வாறு அமரர் பலரும் ஒருங்குவந்து எதிர்கொள்ளத் திருநீலகண்டப் பெருமானைக் கண்ட முறைமையே எங்கும் நிகழ்வதாகும்.

குறிப்புரை :

உம்பரைப் பாவனையால் அடைதலே பிரத்தியாகா ரமாம். சேர்தல் உண்மை வகையைக் குறித்தலால், அதற்கு வாயில் முன்னர்ச்செய்த பாவனையாதல் பெறப்பட்டது. சேர்தற்குச் செயப்படு பொருள் திசை என்ற குறிப்பாற் பெறப்பட்டது. திசை - இடம். மெய் - வடிவம். `கண்டனை மெய்யைக் கண்டவாறு` என, முதல், சினை இரண்டன்பாலும் ஐயுருபு வந்தது. `நிகழ்வது` என்பது சொல்லெச்சம். ``காருறு கண்டனை மெய்கண்டவாறே` என்றதனால், சீகண்ட உருத்திர வடிவம் பெறுதல் கூறப்பட்டது. இவர் பவயோகியராயின், ஈசான னாகிய திசைக்காவலனது சுற்றமாய் நிற்பர் என்க.
இதனால், பிரத்தியாகாரத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.

பொழிப்புரை :

மக்கள் நல்வழி ஒழுகுமாற்றை ஆராய்ந்து, அவரைத் தீவழியினின்றும் நீக்குகின்ற நிறைமொழி யுடையராகிய முனிவர், பின் விண்ணுலகில் எவ்விடத்துச் செல்லினும், அவ்விடம் மண்ணுலகில் மிக்க கொடையுடைய இல்லறத்தவர் வாழ்கின்ற இடம்போலவே எதிர்கொண்டு பேணும் இடமாம்.

குறிப்புரை :

சொல்வழியாளர் - சொல்லால் வழிப்படுத்தும் ஆற்றல் உடையவர். எனவே, `அவரது சொல், அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப்பயனைத் தப்பாது தருவது, என்பது பெறப்பட்டது. இதனையே ``நிறைமொழி`` எனத் தொல்காப்பியரும், (தொல். செய்யுளியல், 171) திருவள்ளுவரும் (குறள், 28) ஒருபடித்தாகக் கூறினர். இங்ஙனம் கூறவே, `அறமுதற் பொருள்களை உலகிற்கு உள்ளவாறுணர்த்துவார் இவரே` என்பது போந்தது. இவர் இவ்வாறு நிறைமொழி யுடையராதல் தாரணை யோகத்தில் நிற்றலால்; அஃதாவது, மனத்தைப் பிறழவிடாது குறித்த பொருளிடத்தே நிறுத்தி நிற்றலாலாம். இவரே ஐம்புல ஆசையை முழுதும் வென்றவராவர்.
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு. -குறள், 354
என்னும் குறளின் உரையில் பரிமேலழகரும், ``ஐயுணர்வு எய்து தலாவது, மனம் மடங்கி ஒருதலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல்`` என்று உரைத்தார். எனவே, ``உரன் என்னுந் தோட்டியான் ஓரைந்துங் காத்தல்`` (குறள், 24) என்பதும் தாரணையே யாயிற்று. இந்நிலையைப் பெற்றோர் நிறைமொழியாளராதலை,
ஐந்தவித்தா னாற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. -குறள், 25
என்பதனாலும் அறிக. இவையெல்லாம் பிரத்தியாகார நிலைக்கு ஏலாமையும், தியான சமாதிகளில் சிறுபான்மையன்றிப் பெரும் பான்மை நிகழாமையும் அறிந்துகொள்க. இமையவரது பல்வழி என இயையும். `பாரில் இல்வழியாளர் வழியாகும்` என மாறிக் கூட்டுக. ஆக்கம் உவமை குறித்து நின்றது. இத்தொடர் தாம் எய்திநின்ற உலகத்தேயன்றி அதற்குக் கீழுள்ள உலகங்களினும் வியாபகம் உடையராதலை உணர்த்திற்று.
இதனால், தாரணையின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடந்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதம்முன்
தாங்கவல் லார்க்குந்தன் தன்இட மாமே.

பொழிப்புரை :

சமாதி, பிரத்தியாகாரம், தாரணை, தியானம் இவற்றில் நிற்பாற்கு அவரவரது தியானப் பொருளின் இடமே அடையுமிடமாகும்.

குறிப்புரை :

எனவே, தியானத்திற்குப் பயன் தியானிக்கப்பட்ட கடவுளது உலகத்தில் இருந்து இன்பம் நுகர்தல் ஒன்றேயாயிற்று. செய்யுள் நோக்கிச் சமாதி முதற்கண் கூறப்பட்டது. `புவனத்தினின்றும் மனத்தை வாங்க வல்லார்` என உருபு விரித்துச் செயப்படுபொருள் வருவிக்க. இது பிரத்தியாகாரமாதல் அறிக. `நின்ற` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. `நின்ற இடத்தில் தேங்குதலே தாரணை` என்பதும், அமுதத்தை உண்டு தேக்குவார் தியான யோகிகள் என்பதும் வெளிப்படை. தான், தியானிக்கப்படும் கடவுள். `தன்தன்` என்பது அடுக்கு. தியானத்தின் பயனே கூறக்கருதினாராயினும், சிவயோகம், பிறயோகம் என யோகம் இருவகையாய் நிகழும் என்பதனை ஈண்டு உணர்த்துதற்குப் பிறவற்றின் பயனையும் உடன் கூறினார். பிரத்தி யாகாரத்திற்குக் கீழ்உள்ளவற்றில் சிறப்புப்பயன் இன்மை அறிக. இத்திருமந்திரத்திற்கு, `திருப்பாற் கடலில் தூங்க வல்லார்` என ஒரு சொல் வருவித்தும், `வாங்குதல்` என்பதற்குப் `படைத்தல்` எனவும் `தேங்குதல்` என்பதற்கு, தான் அழியாது நின்று பிறவற்றை அழித்தல், எனவும் பொருள் கூறியும் இடர்ப்பட்டுத் தாம் தாம் வேண்டியவாறே உரைத்தனர்.
இதனால், தியானத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரணம் மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.

பொழிப்புரை :

தாத்துவிகங்களாகிய தனு, கரணம் புவனம், போகம் என்னும் அனைத்துப் பந்தங்களையும் கடந்தபின், அவற்றிற்கு நிரம்பிய காரணமாகிய தத்துவங்கள் ஏழனது இயல்பும் தன் அறிவிடத்தே இனிது விளங்கித் தோன்றவும், இடையறாது கிளைத்து வருகின்ற வினையாகிய காரணம் கெட்டொழியவும் அடைவுபடப் பயின்ற யோகத்தால் மறுமையில் தனது கடவுளோடு ஒப்ப இருத்தல், சமாதியாலே பெறத்தக்கதாம்.

குறிப்புரை :

`உபாதி` எனினும், `செயற்கை` எனினும் ஒக்கும். அது தாத்துவிகத்தின் மேல் ஆதற்கு, ``காரியமான உபாதி`` என அடை கொடுத்து ஓதினார். `கடந்தபின்` என்பது `கடந்து` எனத் திரிந்து நின்றது. ``ஆரிய`` என்பது, `ஆர்` என்பது அடியாகப் பிறந்த பெய ரெச்சம். ஆர்தல் - நிரம்புதல்; காரியத்தின் தோற்றத்திற்கு ஏற்புடைத் தாதல். தாத்துவிகங்கட்குக் காரணம் தத்துவமாதல் வெளிப்படை. ஏழென்னும் தொகையானே, இவை வித்தியா தத்துவமாதல் விளங்கும். இவற்றோடே அசுத்தம் நீங்குதல் பற்றி, இவற்றின் மேல் உள்ளவற்றைக் கூறிற்றிலர். ``வாரிய`` என்பது, `வாரி` என்பது அடியாகத் தோன்றிய பெயரெச்சம். வாரி - வருவாய். இது முடிவின்றி வருதலை உணர்த்திற்று. முடிவின்றிக் கிளைத்து வரும் காரணப் பொருள் வினையேயாதல் அறிக. `தாரியல் தவம்` என மாற்றுக. தார் - ஒழுங்கு. ``தற்பரம்`` என்பதில் தன் என்பது ஈறு திரிபெய்தி முடிந்தது. ``சமாதி`` என்றது, அதன் பயனை. உபாதியைக் கடத்தல் முதலிய மூன்றும் யோகத்தின் குறிக்கோள் என்பதை முன்னர் உணர்த்தி, மறுமையில் தான் தியானித்த பொருளோடு ஒப்ப நிற்றல் யோகத்தின் முடிந்தபயன் என்பதனை இறுதியிற் கூறினார். சித்தாந்த நெறி உணராதார், `உபாதி` என்பதே பற்றி இத்திருமந்திரத்திற்குச் சொற்களை வேண்டியவாறே நலிந்துரைத்து, மாயாவாதப்பொருள் கூறுவர்.
இதனால், சமாதியின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையும் தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே.

பொழிப்புரை :

யாவரும் அட்டமா சித்திகளைப் பெற்று, அவற்றை எட்டுத் திக்கிலும் சென்று விளங்கக் காட்டிப் பெருமை பெற்றது, சிவபெருமானைப் பல்லாற்றானும் வழிபட்டேயாம்.

குறிப்புரை :

பணிதல், நிலத்தில் வீழ்ந்து வணங்குதல், தொழுதல், கும்பிடுதல், அணிதல், ஒப்பனை செய்து மகிழ்தல், தணிதல், அடங் குதல். துணிதல் - நம்புதல். ``எண்திசை சென்று அட்டமா சித்தி தாபித் தவாறு, பரமனை நாடித் துணிந்து எண்திசையிலும் சென்று பணிந்து, தொழுது, அணிந்து, தணிந்து`` எனக் கூட்டுக. `சிவபெருமானை எவ்வகையிலேனும் நினையாமல் சித்தி பெறுதல் கூடாது` என்பதாம்.
இதனால், அட்டமா சித்திப் பேற்றிற்கு ஆவது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே.

பொழிப்புரை :

``யான் பெறும் பரிசாவது சிவபெருமானது திரு வடிப் பேறு ஒன்றே`` எனக் குற்றமற உணர்ந்து அவனை யான் அகத்தே தியானித்தேன். ஆகவே, எனக்குப் பெறற்கரிதாய பேறு யாதும் இல்லை; (எல்லாப்பேறும் எளியனவே) அதனால், பிறர் அரியனவாக உணர்கின்ற அட்டமாசித்திகளை அவன் எனக்கு நிரம்பக் கொடுத்துப் பெரும்பயனாகிய பிறவி நீக்கத்தையும் அளித்தருளினான்.

குறிப்புரை :

அறிவானவர்; உருத்திர சிவகணத்தார். பண்பன் - அவருக்கு நல்லன். தூவெளி - சிறந்த ஒளி. இஃது ஆஞ்ஞையில் தியானிக்கப்படுவது.
இதனால், சிவயோகியர்க்கு அட்டமாசித்தி தாமே கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

குரவன் அருளிற் குறிவழி மூலன்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.

பொழிப்புரை :

யோக குருவின் அருளால் அவன் குறித்த முறைப் படியே மூலாதாரத்தை நோக்கி ஓடப் பார்க்கும் வாயு, அவ்வாறு ஓடாது சத்தித் தானமாகிய இலாடத்திற் சென்று சேரும் அரிய நேரத்தைப் பார்த்து, அவ்வாறு சேரும் வாயுவே துணையாகச் சாம்பவி யோகம் கேசரி யோகங்களைச் செய்வார்க்குப் பெரிய சிவகதி போலக் கிடைப்பது, எட்டாம் சித்தியாகிய வசித்துவமாம்.

குறிப்புரை :

``குறிவழிசேர`` என இயையும். மூலத்தின் வழிச் செல்லுங்காற்றை, ``மூலன்`` என்றும், ``நாதம், விந்து`` என்பவற்றில் விந்து, சத்தி பேதமாகக் கூறப்படுதலின், விந்துத் தானத்தை ``பரை`` என்றும் கூறினார். மணம் - கூடுதல்; சேர்தல். ``சங்கடம்`` என்பது விரித்தலாயிற்று. சங்கடம் - சிறிதிடம். மந்திரத்தை உபாஞ்சுவாகக் கணித்தல் சாம்பவி யோகம். இதில் கண்கள் சிறிது திறந்திருக்கும். மந்திரத்தை மானதமாகக் கணித்தல் கேசரி யோகம். இதில் கண்கள் மூடியிருக்கும். இவையே இவை பற்றிக் கூறும் வாக்கியங்கட்குக் கருத்தாதல் அறிந்துகொள்க. சாம்பவி - அம்பாளோடு (சத்தியோடு) கூடியது. ``சாம்பவி தீக்கை, சாம்பவி முத்திரை`` என்னும் இடங்களிலும் சாம்பவி, இப்பொருட்டாதல் அறிக. சத்தி, உலகிற்கும், சிவத்திற்கும் இடைநிற்கும் நிலை. ``எட்டாவது சித்தி இவ் யோகங்களாற் கிடைக்கும்`` எனவே, இவை ஒழிந்த ஏனை யோகங்களால் சில சித்திகளே கிடைக்கும் என்பது பெறப்பட்டது.
இதனால், சித்திகளை முற்றப் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

காயாதி பூதங் கலைகால மாயையில்
ஆயா தகல அறிவொன் றனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.

பொழிப்புரை :

ஆகாயம் முதலிய பூதங்களையும், கலை காலம் முதலிய உள்ளந்தக் கரணங்களையும் பற்றி நின்று ஒரு பொருளைச் சுட்டி யறியாமல் வியாபகமாக அறியும் அறிவால், ஒன்றாய், அனாதியே தனக்கு அறிவைத் தருதலை ஒழியாத பதிப்பொருளின் உண்மையை அடைய விரும்பினால், என்றும் அழியாத பரவெளியிற் சேரலாம்.

குறிப்புரை :

என்றது, `சித்திகளை விரும்பாது மெய்ஞ்ஞானத்தை விரும்பி யோகம் செய்தலே சிறந்தது` என்றவாறு. சிவத்தை விரும்புதல் வியாபக அறிவாதலும், பிறவற்றை விரும்புதல் ஏகதேச அறிவாதலும் உணர்க. ``அகலம்`` என்னும் பண்புப்பெயர் ஈறுகெட்டு, ``அறிவு`` என்பதனோடு புணர்ந்தது. அகலம் - விரிவு. ``அறிவு உண்மையைக் கூடினால்`` என்க. உண்மை - தன்னியல்பு. பர காயம் -மேலான வெளி. ``பராகாயம்`` எனவும் பாடம் ஓதுவர்.
இதனால், சித்தி காம யோகத்தினும், முத்தி காம யோகமே சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது. எனவே, ``பரகாயப் பிரவேசம்`` என்பது சித்தி காமத்திற்கு, ``பிறிதோர் உடம்பிற் புகுதல்`` எனவும், முத்திகாமத்திற்கு, ``சிதாகாசத்திற் புகுதல்`` எனவும் பொருள் தந்து நிற்றல் குறிக்கப்பட்டவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 5

இருபதி னாயிரத் தேழ்நூறு பேதம்
மருவிய கன்மமாம் மாபந்த யோகந்
தருமிவை காய உழைப்பாகும் தானே
அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே.

பொழிப்புரை :

கன்மத்தையே பொருந்தச் செய்கின்ற சித்தி காம யோகம், இருபதினாயிரத்து எழுநூறாய் விளங்கும். சித்திகளையே தருகின்ற இவை அனைத்தும் உடல் உழைப்பாவனவன்றி, உணர்வுப் பெருக்கமாதல் இல்லை. இவை இத்துணையாக விரிவன வாயினும், சித்திகளின் தொகை நோக்கி எட்டாய் அடங்கும்.

குறிப்புரை :

எனவே, அவ்வெட்டும் அவ்வச் சித்தியோகம் எனப்படும் என்க. சித்தி யோகம் இத்துணைத் தாய் விரியுமாறு பின்னர், ``முந்திய முந்நூற்றறுபது`` எனவரும் திருமந்திரத்தால் அறியப்படும். அதனானே ``எண்ணூறு`` என்பது பாடம் ஆகாமையும் விளங்கும். ``ஆரும்`` என்பது குறுகி நின்றது. ஆர்தல், நிரம்புதல். ``சித்திக்கு`` என்றது, ``சித்திக்குத் தக`` என்றவாறு.
இதனால், சித்தி யோகத்தின் அல்லற்பாடும், அதன் இழிபும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்
உதய மதுநா லொழியஓ ரெட்டுப்
பதியும்ஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே.

பொழிப்புரை :

பன்னிரு கலையுடைய சில அதிசய நிலவுகள் முற்றும் மறைந்து பின் தோன்றும்பொழுது அக்கலைகளில் நான்கு ஒழிந்தேபோக, எட்டே நிலைபெறுகின்றன. அவ்வொழிவு நீங்கி அனைத்துக் கலைகளும் நிலைபெறும் செயலைப் பன்னிரண் டாண்டுகள் அயராது செய்தால், அவ்வாண்டெல்லைக்குள் சித்திகள் கைகூடும்.

குறிப்புரை :

பிராண வாயுவின் அளவான பன்னிரண்டங்குலத்தைக் கலையாக உருவகித்தற்கு, அவ்வாயுவைத் திங்களாக உருவகம் செய்தார். இவ்விரண்டு உருவகங்களும், தேய்தல், வளர்தலுக்கு ஏற்புடையவாயின. `உதயமதில்` எனவும், திதமான ஈராறில் எனவும் உருபு விரிக்க. ``பற்று`` என்பது, `செலவு` என்றவாறு. திதம் - நிலைபேறு. `அவ்வீராறில்` எனச் சுட்டு வருவிக்க. கன்ம யோகங்கள் யாவும் காய உழைப்பேயாதலின், `பிராணாயாமத்தால் காயம் செம்மையுற்றிருந்தாலன்றி, அவற்றின் பயனாகிய சித்திகள் எய்தா` என்க. `பிராண வாயு இயங்குங்கால் பன்னிரண்டங்குலமாக வெளிச் சென்று எட்டங்குலமாக உட்புகும்` என்பதும், அவ்வாறின்றி உட்புகும் பொழுதும் பன்னிரண்டங்குலமாகச் செய்யின் உடல் தளர்ச்சியுறாது என்பதும் முன்னே கூறப்பட்டன.
இதனால், சித்திகள் எய்துதற்கு யோக கால அளவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நாடும் பிணியாகும் நம்சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடொன்றி னால்வாயா சித்திகள்பே தத்தின்
நீடுந் தூரங்கேட்டல் நீள்முடி வீராறே.

பொழிப்புரை :

சுற்றத் தொடர்பு யோகத்திற்குத் தடையாகும். யோகமின்றி, நூலறிவு, உலகியலறிவு, இயற்கை நுண்ணறிவு முதலியவற்றுள் ஒன்றினாலும் சித்திகள் கிடைக்கமாட்டா. அவை வேறு வேறாகக் கிடைத்தற்குச் செல்லும் தீர்ந்த யோக கால எல்லையாக நூல்களில் கேட்கப்படுவது, மேற்குறித்த பன்னிரண்டாண்டுகளாம்.

குறிப்புரை :

ஆகவே, `சித்திகளைப் பெறவேண்டுவார் சுற்றத் தொடர்பு, நூலாராய்ச்சி முதலியவற்றிற் காலம் கழியாது, பன்னிரண் டாண்டு யோகத்தில் நிற்க` என்பதாம். கேட்டல், கேட்கப்படும் கால அளவு; ஆகுபெயர்.
இதனால், மேலது நன்கு வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாம்
தாழா நடைபல யோசனை சார்ந்திடும்
சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதிற் றான்பர காயமே.

பொழிப்புரை :

யோகத்தைக் குறைவின்றிப் பயின்றால், ஏழாவ தாண்டில், பிறர் உடன் தொடர இயலாதவாறு காற்றைப் போலக் கடிதிற் செல்லும் நடை உளதாகும். அந்நடையது வேகம் எத்துணைக் காவதம் நடந்தாலும் குறையாது. எட்டாவது ஆண்டில், நரை திரை இருப்பினும் மறைந்து இளமைத் தோற்றம் காணப்படும். ஒன்பதாவது ஆண்டில் உடம்பு தேவ சரீரம்போல ஒளிவிடும்.

குறிப்புரை :

``தோன்றா`` என்பது, `மறையும்` என்னும் பொருட்டு. திரை, தோல் சுருங்கி மடிந்து தொங்குதல். ``தான்`` என்றது, தன் உடம்பைக் குறித்த ஆகுபெயர். `பரம்` என்பது `தெய்வம்` என்னும் அளவாய் நின்றது.
இதனால், குறைவிலா யோகத்தின் அடையாளங்கள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்
ஏரொன்றும் பன்னொன்றில் ஈறாகும் எண்சித்தி
சீரொன்று மேலேழு கீழேழ் புவிச்சென்றவ்
வோரொன்றில் வியாபியாய் நிற்றல்ஈ ராறே.

பொழிப்புரை :

யோகத்தில் பத்தாவதாண்டில் முன்பு இளைத்த உடம்பு பருத்துக் காணப்படும். பதினொன்றாவது ஆண்டில் நெருப்புப்போன்ற உருவினை உடைய உருத்திரனைப் போன்ற செம்மேனியும், எல்லாவற்றையும் வெல்லும் ஆற்றலும் உளவாகும். மேல், `எட்டாவது சித்தி` எனக்குறித்த அது, மேல் ஏழ் உலகம், கீழ் ஏழ் உலகம் இவைகளிற் சென்று அங்குள்ளாரையும் தன்வசப்படுத்தி நிற்றலாம். அது பன்னிரண்டாவது ஆண்டில் எய்தும்.

குறிப்புரை :

பூரித்தலுக்கு `உடம்பு` என்னும் வினைமுதல் வரு வித்துக்கொள்க. ``பூரித்து`` என்னும் எச்சம் எண்ணின் கண் வந்தது. `தீயான` என்பது குறுகிநின்றது. `திருத்தார் நன்றென்றேன் தியேன்`` (யாப்பருங்கலக் காரிகை, 24, உதாரணம்) என்றாற்போல. `ஈராறில் எண் சித்தியாம்` என மாற்றிக்கொள்க. சீர் - தட்டு நிலை. ``வியாபி`` என்றது, தான் பணியப்படுதலை. மேல் (பா.627) ``எட்டாஞ் சித்தி`` எனப்பொதுப்படக் கூறியதனை, இதன் பிற்பகுதியால் விளங்கக் கூறினார். `ஓரொன்றிலும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `அஃது ஈராறில் ஆம்` என முடிக்க.
இதனால், எஞ்சிய அடையாளங்களுடன், முடிந்தது முடித்துக் காட்டப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தானே அணுவும் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும் பரகாயத் தேகலும்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே.

பொழிப்புரை :

எட்டுச் சித்திகளாவன, யோகி ஒருவனே தான் வேண்டியவாறு எட்டுத் தன்மையனாக நிற்றல். அவை அணுவி னுள்ளும் அணுவாய் நுழைதல், அண்டத்தினும் பெரியோனாய் அவற்றைக் கடந்து நிற்றல், காற்றினும் நொய்ம்மையனாய் வானத்தில் உலாவுதல், எத்துணை ஆடவர் கூடி எடுப்பினும் எடுக்கமாட்டாத வராம்படி மலை போலத் திண்மை யுடையனாயிருத்தல், நினைத்த இடத்தில் நினைத்த மாத்திரத்தில் செல்லுதல், நினைத்ததை அடைதல், எல்லோராலும் ஏற்றுப் போற்றப்படுதல், யாவரையும் தன்வழிப் படுத்தி நிற்றல் என்பனவாம்.

குறிப்புரை :

இவை முறையே, `அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்` என்னும் காரணப்பெயர் உடையன என்க.
இம்முறைக்கு ஏற்ப இத்திருமந்திரத்தில் ``பரகாயம் சேர் தன்மை`` என்பதை ``மானாக் கனமும்`` என்பதற்கு முன்னும், `வியா பியும்` என்பதை ``ஆனாத உண்மையும்`` என்பதற்கு முன்னும் கூட்டி உரைக்க. ``சகத்து`` என்றது நில அண்டத்தை. நோன்மை - வலிமை; ஆற்றல். அஃதாவது எல்லாப் பொருளையும் உள்ளடக்கி நிற்றல். இங்கு அஃது அதுபோன்ற ஆற்றலைக் குறித்தது. மானா - ஒரு பொருளும் ஒப்பாகமாட்டாத. பரகாயத்து ஏகல் - பிற உயிரின் உடம்பிற் புகுதல். இஃது எவ்விடத்தும் எளிதிற் செல்லுமாற்றிற்குச் சிறந்து நின்ற உபலக்கணம். ஆவது - பொருட் பேற்றால் உயர்தல். பர காயம் - மேலான ஆகாயம்; என்றது பூதாகாசத்தையேயாம். `தன்மையும்` என்பதனை, `நொய்ம்மையும்` என ஓதுதல் சிறக்கும். ஆனாத உண்மை - பிறர் தன்னை விட்டு நீங்காத நிலை. ``வியாபி`` என்றதை மேலை மந்திரத்திற்போலவே கொள்க. இச்சித்திகளை ஞானியர் விரும்புதல் இல்லை; எனினும் அவர்களிடத்து இவை தாமே அடையும். அடையினும், இவற்றை அவர் பயன்படுத்துதல் இல்லை. இனி, ஞானசம்பந்தர் முதலியோரிடத்து நிகழ்ந்த அற்புதங்கள் இறைவனே நிகழ்த்தினவல்லது, இச்சித்திகளின்பால அல்ல என்பது உணர்க.
வீரவாகு தேவரிடத்தும், அநுமனிடத்தும் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, சித்திகள் விளங்கினமை அவரவர் வரலாற்றுட் கேட்கப்படுகின்றன. `மவுற்கல்லியர்` என்னும் முனிவர், வேண்டிய வடிவங்கொண்டார் என்பதும் `பிராத்தி`. வசிட்டர் முதலியோர் தாம் இருந்த இடத்தில் காமதேனு முதலியவற்றை வருவித்துப் பயன் கொண்டனர் என்பதும் `பிராகாமியம்` என்னும் சித்தியாம். முனிவர் பலரும் பலராலும் புறக்கணியாது பணியப்பட்டமை `ஈசத்துவம்` என்னும் சித்தியாம். நெருப்புச் சுடாதவாறு நின்று அதன்மேல் இருத்தல், நீர் ஆழ்த்தாதவாறு நின்று அதன்மேல் நடத்தல், கொடிய விலங்குகளையும் ஏவல் கேட்டு நடக்கச்செய்தல், மழையைப் பெய்வித்தல், நிறுத்தல் முதலியன `வசித்துவம்` என்னும் சித்தியாம். மற்றும் இவற்றின் இயல்புகளை ஓர்ந்துணர்ந்துகொள்க.
`கரி` என்பது யானை; அது திண்மையைக் குறித்து நின்றது. ஆயினும், அதற்கு, `சாட்சி` எனப்பொருள்கொண்டு, `விடயங்களை நுகர்ந்தும் அவற்றில் தொடக்குண்ணாமை கரிமா` என்கின்றார், சிவஞான போதப் பாடியம் உடையார். அஃது ஒருசார் நூல்களில் - அல்லது ஆகமங்களில் காணப்படும் சிறுபான்மை வழக்காதலன்றிப் பெரும் பான்மை வழக்காகத் தெரியவில்லை. மேலும், அணிமாவிற்கு மறுதலைப்பட மகிமா இருத்தல் போல, இலகிமாவிற்கு மறுதலைப் பட்ட தொன்று இருத்தலும் வேண்டப்படுவதே. அன்றியும், விடயத்தில் தொடக்குண்ணாதிருத்தல் முத்திப் பகுதியாவதன்றிச் சித்திப் பகுதியும் ஆகுமோ என்பது ஆராயத்தக்கது. இனிச் சித்திகளை ``உடம்பால் பெறுவனவும், மனம் முதலியவற்றாற் பெறுவனவும்`` என இருவகையவாகப் பகுத்துணர்த்துகின்ற அவர், ``இருவகையவும் தனித்தனி நந்நான்காய் உள்ளன`` என்னாது, ``உடம்பாற் பெறுவன அணிமா, மகிமா, இலகிமா`` என்னும் மூன்றே என்கின்றார். இவற்றுடன் கரிமாவையும் உடம்பாற் பெறுவனவாகக் கொள்ளின் சாலப் பொருந்தும். `கனமும்` என்பதை, ``ககனமும்`` என ஓதுவாரும் உளர்; அஃது யாப்பிற்கு ஒவ்வாமை அறிக.
இதனால், ``எட்டுச் சித்திகளாவன இவை`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மற்றோர் குறையில்லை
ஆங்கே எழுந்தோன் அவற்றுள் எழுந்துமிக்
கோங்கி வரமுத்தி முந்திய வாறே.

பொழிப்புரை :

யோகி, அணிமாவால் தான் நினைத்த உயிருட் புகுந்தவிடத்தும் மகிமாவால் அவற்றைக் கடந்து நிற்கும் தன்மை குறைபடுதல் இல்லை. எவ்வாறெனில், மகிமா நிலையில் நின்ற அவனே அணிமாவால் அவ்வுயிர்களுள் செறிந்துவர, அவற்றைக் கடந்து நிற்கும் நிலை திரிபின்றி நிற்கும் ஆகலான்.

குறிப்புரை :

``தான் அணுவாய்ப் பல உயிர்களால் ஏற்கப்பட்ட காலத்தும் தாங்கிய தன்மை ஒர் குறையில்லையாய் நிற்கும்`` என்க. ``தன்மையும்`` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம். எழுதல் - கடத்தல். ``எழுந்தோம்`` என்பது பாடமாயின், யோகியின் தன்மையைத் தம்மேல் வைத்து ஓதியதாக உரைக்க. அவற்றுள் - முற்கூறிய பல்லுயிர்களுள், ``ஆகலான்`` என்பது சொல்லெச்சம்.
இதனால், அணிமாவின் இயல்பறியாது ஐயுறும் மாணாக்கர்க்கு அவ்வையம் அகற்றப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிடச்
சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வாய்வலம்
உந்தியுள் நின்று வுதித்தெழு மாறே.

பொழிப்புரை :

``ஓர் ஆண்டு முந்நூற்றறுபது கூறுகளைக் கொண்டது`` எனத் தொன்றுதொட்டுக் கொள்ளப்பட்டு வருகின்ற அக் காலக் கூறு - அஃதாவது, ``ஒருநாள் என்பது, நாழிகைகளின் தொகுதியால் அமைந்தது. அந்த நாழிகைகளை ஐந்து கூறாகப் பகுத்து அப்பகுதி ஐந்தையும் ஐம்பூதங்கட்கும் உரிய பகுதிகளாகப் பாவனை செய்துகொள். பின்பு நிலம் முதலிய பூதங்களின் ஆற்றல் சுவாதிட்டானம் முதலாகத் தோன்றி நிலைபெறுவனவாகக் கொண்டு யோகம் செய்.

குறிப்புரை :

``நாள்`` என்னாது, ``காலம்`` என்றார். ``யாவும் காலத்தின் வழிப்பட்டு நடப்பன`` என்றற்கு. ``ஓர் ஆண்டிற்கு இத்துணை நாள்`` என்பதில் வேறுபாடுகள் பல உள. அவற்றுள் இங்குக் குறிக்கப்படுவது, ``முந்நூற்றறுபது நாள்களைக் கொண்டது`` என்பார், அதனை எடுத்தோதினார். இது கதிர்யாண்டு (சௌரமான வருடம்) இதற்கு முந்நூற்றறுபத்தைந்து நாள் சொல்லப்படுமாயினும், ஐந்து நாள்களை நாயனார் கொண்டிலர். இவ் யாண்டு ஒன்றே மக்கட்கு ஒரு வயது. இதன்படி மக்கள் வாழ்நாள் காலம் நூறு வயது. இனிக் கிரக தசா வருடங்கள். ``முந்நூறு நாள்கள் கொண்டது ஒரு வருடம்`` என்னும் கணக்கில் அமைந்தவை. அதன்படி, ``மக்கள் தாய் வயிற்றில் ஓர் ஆண்டுக் காலம் இருக்கின்றனர்`` என்பதும், ``பிறந்தபின் நூற்றிருப தாண்டு வாழ்வர்`` என்பதும், ``அந்நூற்றிருபதாண்டுகளும் ஒன்பது கோள்களுக்கு ஏற்ற பெற்றியால் அமைந்து நிற்கும்`` என்பதும் சோதிட நூற்கொள்கைகள். எனினும், இஞ்ஞான்று கிரகதசா வருடங்களும், முதற்கண் கூறிய கதிர்யாண்டின்படியே கொள்ளப்படுகின்றன.
``அறுபது நாழிகை கொண்டது ஒரு நாள்`` என்பதில் பரத கண்டத்தில் வேறுபாடின்மையால், அதனை விதந்தோதாது வாளா, ``வந்தது, நாழிகை`` என்றார். ``நாழிகையால்`` என உருபு விரித்து, ``நாழிகையால் வந்தது`` என மாறிக் கூட்டுக. ``அவற்றை வான் முதலாயிடச் சிந்தைசெய்`` என ஒருசொல் வருவித்துக் கொள்க. ``வலம் மண்முதல் உந்தியுள் நின்று உதித்தெழுமாறு தேர்ந்தறிவாய்`` எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க. ``தேர்ந்தறிவார் வலர்`` என்பது பாடமாயின், இதனை, யோகியரது இயல்பாக்கி உரைக்க. ``உந்தி`` என்றது இங்கு அதற்குக் கீழ் உள்ள சுவாதிட்டானத்தை.
இதனாற் சொல்லியது, ``ஒரு நாளில் உள்ள நாழிகையை ஐந்து கூறிட்டு அக்கூறுகளை ஐந்து பூதங்கட்கு உரியவாக்கி, சுவாதிட்டானம் முதலிய ஆதார யோகங்களை அப்பூதங்கட்கு உரிய அந் நாழிகைகளில் செய்தல் வேண்டும்`` என்பதாம். ``ஒருநாளின் தொடக்கம் வைகறைப் போது`` எனக் கொள்ளப்படுதலால், பகலவன் தோற்றத்திற்கு முன் ஆறு நாழிகையை நிலம் என்னும் பூதத்தின் காலமாகக் கொண்டு முதலதாகிய சுவாதிட்டான யோகத்தைத் தொடங்கல் வேண்டும். பின் அவ் ஆறு நாழிகை நீர், நெருப்பு, காற்று, வானம் என்பவற்றுக்கு உரியனவாகக் கொண்டு மணிபூரகம் முதலாக ஆஞ்ஞை வரையில் செல்லுதல் வேண்டும். செல்லின், பகல் பதி னெட்டு நாழிகை முதல் இருபத்து நான்கு நாழிகை வரையில் ஆஞ்ஞையில் நிற்கவேண்டி வரும். யோக நிலையில் இதனோடே பகற் காலம் முடிவுறும். பின்னும் இவ்வாறே சுவாதிட்டானம் முதலாகத் தொடங்கி, இரவு பதினெட்டு முதல் இருபத்து நான்கு நாழிகை வரையில் உள்ள பகுதியில் ஆஞ்ஞை யோகத்தில் இருத்தல் வேண்டும். இவையெல்லாம் உய்த்துணர்ந்து உரையிற் கொள்ளப்படும். ``வான் முதலாயிட`` என்பதற்குச் ``சூரியோதயம் தொடங்கி`` எனவும், ``மண் முதல்`` என்பதற்கு ``அத்தமனம் தொடங்கி`` எனவும் தாம் வேண்டுமாறே அச்சொற்களை வருவித்துக்கொண்டு தமக்குத் தோன்றியவாறேயும் உரைப்பர். அஃது, `உந்தியுள் நின்று உதித்தல்` என்றதனோடு ஒவ்வாமை அறிக.
`இவ்வாறு இடைவிடாது யோகத்தில் இருப்பின், உண்டல், உறங்கல் முதலியவற்றிற்குக் காலம் எப்பொழுது` என ஐயுறல் வேண்டா; என்னை? இது, `ஆதார யோகத்திற் குரிய காலமுறை இவ்வாறு கொள்ளத்தக்கது` எனக் கூறியதன்றி, `அவற்றை இடையறாது செய்தல் வேண்டும்` எனக் கூறியதன்று ஆகலான். யோகமாகிய அறிதுயிலில் இருப்போர் அதனை விடுத்து உலகியலில் விழித்தல் எளிதாதலின் அஃது எந்த நேரத்திலும் இயல்வதேயாம். சிலர் சில நாள்காறும் ஊண் உறக்கம் இன்றி இடைவிடாது செய்ய வல்லராயும் இருப்பர். ஆகவே `இஃது அவரவரது ஆற்றலுக்கு ஏற்பக் கொள்ளப் படுவதே` என்க. எனினும், பொருள் ஈட்டலில் கருத்துடையவர் பொழுதை வீண்போக்குதலும், பொருட் பேற்றிற்கு மாறானவற்றைச் செய்தலும் இல்லாமை போல. யோகத்தில் கருத்துடையோரும் பொழுதை வீண்போக்குதலும், யோகத்திற்கு மாறானவற்றைச் செய்தலும் இலர் என்க.
இங்ஙனமாகவே, மேல் (பா.632) ``ஏழானதிற் சண்டவாயுவின் வேகியாம்`` என்பது முதலாகக் கூறிய ஆண்டுக் கணக்குகள் இங்குக் குறித்த முறையில் ஆதாரயோகம் நிகழும் நாழிகை யளவால் அமைவ தன்றி, ஏனையோர்க்குப் போலப் பகலவனது தோற்ற மறைவு மாத்திரையானே அமைவதன்று என்பது பெறப்படும். அந்த நாழிகைத் தொகையே, மேல், (பா.629) ``இருபதினாயிரத்தேழ்நூறு பேதம்`` எனக் குறிக்கப்பட்டது. ஒருநாளைக்கு அறுபது நாழிகையாக, முந்நூற்றறுபது நாள்களுக்குக் கணக்கிட வருவது. (360 x 60 = 21600) இருபத் தோராயிரத்து அறுநூறு நாழிகை. இதில் பதினைந்துநாள் குறையினும் ஓராண்டாகவே பயன்தரும் என்றற்கே, தொள்ளாயிர நாழிகை தள்ளி, (21600 - 900 = 20700) ``இருபதினாயிரத்து ஏழ் நூறு பேதம்`` எனக் கூறினார். எனவே, சுவாதிட்டானம் முதலிய ஐந்தில் ஒவ்வோர் ஆதார யோகமும் நாலாயிரத்து நூற்று நாற்பது (4,140) நாழிகையிற் குறையாது சம அளவில் நிகழின், அதுவே யோகத்தின் ஓராண்டு எனவும், `அவ் வகையில் பன்னிரண்டாண்டுகள் சென்ற பின்பே சித்திகள் எய்தப் பெறும்` எனவும் கொள்க. `இவ்வாறு சொல்லிய யோக காலத்தை, யோகிகள், மந்திரம் கணிப்பவர் தாம் கருதிய உருவளவை இடை விட்டாயினும், இடைவிடாதாயினும் கணித்து முடித்தல் போல முடிப்பர்` எனவும், அவ்வாறு முடிக்குங்கால் இங்குக் கூறியமுறை வழுவாது செய்து முடிப்பர் எனவும், `யோகப்பயிற்சி உடையவர் தாம் விரும்பும் ஆதார யோகத்தை விரும்பியவாறே செய்ய வல்லராய் இருப்பர்` எனவும் உணர்க. மூலாதாரயோகம், குண்டலியை எழுப்பு தல் மாத்திரையாய் அமைதலின், அது சுவாதிட்டான யோகத்தில் அடங்கிற்று. ``நின்று வுதித்து`` எனக் குற்றியலுகரம் கெடாது நின்று, உடம்படு மெய் பெற்றது.
இதனால், `பன்னிரண்டாண்டு யோகம் செய்க` என மேற்கூறிய ஆண்டின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தின் திருநடத் தோரே.

பொழிப்புரை :

(அட்டமா சித்திகளை அடைய விரும்பி அவற்றைப் பெறும் பவயோகம் செய்பவர் அதனிடையே மலபரி பாகம் காரணமாக) மனம் வேறுபட்டு, சிவனை அடையும் வேட்கை யராய் முத்திப்பேற்றிற்குரிய வழியை உணர்ந்து ஐம்புல ஆசையற்றுச் சிவஞான ஒழுக்கத்தில் நிற்கும் சிவயோகியராதலும் உண்டு. அவ் வாற்றால் தத்துவங்களின் நீங்கவேண்டி மேற்கூறிய ஐம்பூதங்களின் கட்டினின்றும் நீங்கினோர், உள்ளம் இறைவனது ஆனந்த நடனத்தில் ஒடுங்கப் பெறுவர்.

குறிப்புரை :

சிவமயமாதல் சிவனை அடைதலாகிய ஒன்றிலே குறியாய் இருத்தல். `முத்தி` `முத்தம்` எனத் திரிந்து நின்றது. முத்தி, என்றது, அதனை அடையும் நெறியாகிய ஞான ஒழுக்கத்தை. ``உற்ற`` என்ற அநுவாதம், உறுதல் உண்மைபற்றிக் கூறியது. ``முத்தர்`` என்றது யோகியரை. சுத்தமாவது, தத்துவங்களினின்று நீங்குதல். ``ஐந்து`` என்றது, மேல், ``வான்முதல்`` எனவும், ``மண்முதல்`` எனவும் கூறிய பூதங்களை. அவற்றின் தொடக்காவது, ஆதாரங்களையும், மேற் கூறியவாறு அப் பூதங்கட்கு உரியனவாக்கி அவற்றின்வழி நிற்றல். சித்திகளை வெறுத்தோர்க்கு அம்முறை வேண்டாமையின், அவரை, ``அத்தொடக்கு அற்றவர்`` என்றார். ``பரத்தின் திருநடம்``, ஆறாவதன் தொகை.
இதனால், ``சித்தியோகமாகிய பவயோகம் சிவயோகமாய் வேறுபடுதலும் உண்டு`` என்பது கூறப்பட்டது. கூறவே, ``இப்பயன் கருதியே ஞான நூல்களும் யோகத்தை விதிக்கின்றன`` என்பது அறியப்படும்.
இங்கு நின்றும் மேற்குறித்த சிவயோகம் பற்றியே கூறுகின்றார்.

பண் :

பாடல் எண் : 14

ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.

பொழிப்புரை :

சிறப்பால் தம்முள் ஒத்தனவாகிய, தனஞ்சயன் ஒழிந்த ஏனை வாயுக்கள் ஒன்பதும் வேறு வேறு நின்று செயற்படுவன. சிறப்பால் அவ்வொன்பதிலும் மேம்பட்டது `தனஞ்சயன்` என்னும் வாயு. அஃது ஏனை ஒன்பது வாயுக்களினும் ஒப்பக் கலந்து, அவற் றிற்கு வன்மையைத் தந்து நிற்கும். அஃது அவ்வாறு நிற்பதனாலே உயிரும், உடம்பும் இணங்கியிருக்கின்றன.

குறிப்புரை :

முதலடியில் ஈற்றில் நின்ற ``ஒத்தன`` என்பது, ஒன்றை யொன்று அவாவி நில்லாது தனித்து நிற்றலைக் குறித்தது. ``மிக்க`` என்றது அநுவாதம். ``ஏனை வாயுக்கள் ஒழிய இஃது ஒன்றும், ஏனையவற்றில் கலந்து நிற்றல் எவ்வாறு`` என்னும் ஐயத்தை நீக்குதற்கு அதனது இயல்பை விதந்தார். வாயுக்களில் பிராணனே சிறந்ததன்றித் தனஞ்சயன் சிறத்தல் எவ்வாறு எனின், பிராணனுக்கும் இயக்கத்தைத் தருவது தனஞ்சயன் ஆதலின் அது சிறந்தது என்க. மூர்ச்சையில் பிராணன் இயங்காது நின்றவிடத்தும் மீள அதனை இயங்கச் செய்வது இத்தனஞ்சயனேயாம். இது பற்றியே, ``இஃது இறப்புக்காலத்தில் பிராணனை உள்ளிட்ட ஒன்பது வாயுக்களும் நீங்கிய பின்பு தலைக்குள் இருந்து தலை ஓட்டை உடைத்துக்கொண்டு செல்லும்`` என்கின்றனர்.
பவயோகத்தை விடுத்துச் சிவயோகத்தில் நிற்பார் அதனை முற்றச் செய்தற்பொருட்டு வாழ்நாளை நீடித்துக் கொள்ளுதற்கு வழி கூறத்தொடங்கி, முதற்கண் இம்மந்திரத்தால் உடல் நிலைத்திருத்தற்குக் காரணம் இது என்பது இதனாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 15

இருக்குந் தனஞ்சயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற் றிருபத்து நான்கின்
இருக்கு முடலி லிருந்தில தாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.

பொழிப்புரை :

வாயுக்களுள் ஒன்றாய் இருக்கின்ற தனஞ்சயன், மேற்கூறியவாறு ஏனை ஒன்பது வாயுக்களிலும் கலந்திருக்கும். ``தனஞ்சயன்`` என்ற வாயு இல்லை என்றால், உடம்பே நிலைபெறாது பதங்கெட்டு அழியும்.

குறிப்புரை :

``இருக்கும்`` நான்கில் இரண்டாவது முற்று, ஏனை யவை எச்சம். ``இருநூற்றிருபத்து நான்காய் இருக்கும் உடல்`` என்றது, ``பிண்டம், அண்டம் அவை சமமாதல்`` (கோயிற் புராணம், பதஞ்சலி சருக்கம், 70) பற்றி, உடம்பில் இருநூற் றிருபத்து நான்கு புவனங்களும் உளவாக வைத்து நோக்கப்படுதல் பற்றியாம். ``இத்துணைச் சிறப்புடைய உடம்பு``, `தனஞ்சயன்` என்ற ஒரு காற்று இல்லையாயின் அழிந்துவிடும் என்றவாறு. ``வீங்கி வெடித்தது`` என்பது, `பதங்கெட்டு அழிந்தது` என்றபடி.
இதனால், மேற்கூறிய காரணம் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனும் முடமுமாம்
வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே.

பொழிப்புரை :

பலவகை நோய்களும், உறுப்புக் குறைகளும் தனஞ்சய வாயு, அளவில் செம்மையுற்று இராமையால் உளவாவன.

குறிப்புரை :

``தனஞ்சயன் செம்மையுற்றிராமையால்`` என்பது அதிகாரத்தால் கொள்ளக்கிடந்தது. இத்தீங்குகள் பிறப்பிலும், வாழ்வு இடையிலும் வருதல், இவ்வாயு, கருவிலும், இடையிலும் குறைபடுதலாலேயாம் என்க. கழலை - கட்டி. சிரங்கு - சொறிப் புண். `பலவதாய்` என்பதில் ``அது`` என்பது ``அத்தன்மை`` எனப் பொருள் தந்தது. வீங்குதல் நான்கில் முதல் ஒழிந்த மூன்றும், மிகுதற் பொருளன. ``ஆம்`` என்பதை இறுதியில் வைத்து, ``கண்ணில் மருவி வீங்கும் வியாதிகளும் ஆம்`` என மாற்றியும், உம்மை விரித்தும் உரைக்க.
இதனால், உடற்குறைக்குக் காரணம் கூறுமுகத்தால், மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

கண்ணில் வியாதி உரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே.

பொழிப்புரை :

(மேல், ``வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே`` என்றதனால், ``கண் அமைவதற்குத் தனஞ்சயனே காரணம் போலும்`` என மயங்கற்க.) கண்ணில் உளவாகும் நோய்கட்கு மட்டுமே தனஞ் சயனது செம்மையின்மை காரணமாகும். கண்ணில் பொருந்தியுள்ள நரம்புகளின் செயற்பாட்டிற்கும், அச் செயற்பாட்டினால் அமையும் கண்ணொளிக்கும் தனஞ்சயன் காரணமன்று; அவற்றிற்குக் ``கூர்மன்`` என்னும் வாயுவே காரணம்.

குறிப்புரை :

``கண்ணில்`` என்பன பலவும் சொற்பொருட் பின்வரு நிலை யணி. ``வியாதி, ஆணிகள், காசம்`` என்பன அவற்றின் காரணங்களை உணர்த்திய ஆகுபெயர்கள், அவற்றுள் ``ஆணிகள்`` என்பது முதற்கண் அவற்றின் செயற்பாட்டை உணர்த்தி இருமடி யாகு பெயராய் நின்றது. `தனஞ்சயன் உரோகம்` என மாற்றுக. `நோய்` எனப் பொருள்படும் `உரோகம்` என்னும் வடசொல் இங்கு, செப்பம் இன்மையைக் குறித்தது. பின்னிப் பிணைந்து ஒட்டி நிற்றல் பற்றி நரம்புகளை ``ஆணிகள்`` என்றார். `பிரகாசம்` என்னும் வடசொல், முதற்குறைந்து, `காசம்` என நின்றது. `தனஞ்சயன்` என்பதும், `கூர்மன்` என்பதும் சொல்லால் ஆண்பாலோடு ஒத்து நிற்றலின், `அவனல்லன்` என்றும், `கலந்திலன்` என்றும் கூறினார். ``கண்ணின் அமைப்பிற்குக் காரணம் `கூர்மன்` என்னும் வாயுவே`` என்பதனைப் பின்னிரண்டடிகளில் எதிர்மறை முகத்தாற் கூறினார்.
இதனால், மேலது பற்றி நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே.

பொழிப்புரை :

கடவுளருள் சிறந்தோராகிய உருத்திரன், மால், அயன் என்னும் மூவருங்கூட யோகத்தில் பத்து நாடிகளிற் கேட்கப் படுவனவாக மேலே சொல்லிய பத்து ஓசைகளாகிய முழக்கத்தைக் (பா.593) கேட்டலை விடுத்து, கண்ணிலும், இருதயத்திலும் நிலைபெற்று நின்று உடம்பில் துடிப்புள்ளளவும் `துஞ்சும்போதும் சுடர்விடு சோதி` (தி.5 ப.93 பா.8) யாகிய சிவனை அங்கே தியானம் செய்கின்றனர்.

குறிப்புரை :

`மூவரும், நயனம் இருதயம் நின்று, நாடியின் ஓசை ஓ அற, சோதியை அங்கு உணர்ந்திருந்தார்` எனக் கூட்டுக. `துடிப்பு` என்பதன் முதனிலைப் பெயராகிய `துடி` என்பது நீட்டல் பெற்றது. ``பிரமனும்`` என்ற உம்மைச் சிறப்பு. ``ஓ`` என்பது ஒலிக்குறிப்பு இடைச்சொல். `ஓவுற` எனப்பாடம் ஓதி, ஓவுதல் - ஒழிதல் என உரைத்தலுமாம். ``மூவரும் உணர்ந்திருந்தார்`` என்றதனால், ``சிவனை அடைய விரும்புவோர் அவ்வாறு நிற்க`` என்பது குறிப்பெச்ச மாயிற்று. ``நாடி ஓசைகளைக் கேட்டுக் களித்திருத்தல் சித்தி யோகி கட்கே பொருந்துவது`` என்றவாறு. சோதியை நயனத்திற் காண்டல், புறநோக்கு உளதாயவழிச் செய்யும் பாவனை. இருதயத்திற் காண்டல், தாரணை தியான சமாதிகளால் சிவனது ஒளி உருவை இருதயத்தில் காணுதல். அங்ஙனம் காணவே, பவ யோகம் ஒழியச் சிவயோகம் உண்டாகும் என்பதாம். இதனுள் இரண்டடி எதுகை வந்தது.
இதனால், சிவ யோகத்தைத் தலைப்படுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒருங்கவல் லார்களுக்
கொன்பது வாசல் உலைநல மாமே.

பொழிப்புரை :

ஒன்பது வாயில்களை உடைய ஒரு வீடாகிய உடம்பில், ஒன்பது நாடிகளும் சுழுமுனை நாடியில் ஒவ்வோரிடத்தில் ஒருங்கு கூடுவனவாம். அவ்விடங்களை அறிந்து அந்த நாடிகளைத் தம்வசப்படுத்த வல்லவர்க்கு ஒன்பது துருத்திகளை உடைய ஓர் உலைபோல்வதாகிய உடம்பு ஞானத்தைத் தருவதாய் அமையும்.

குறிப்புரை :

நாடிகள் ஒன்பதும் தொகும் இடங்களே. நடுநாடி யாகிய சுழுமுனையில் உள்ள ஆறு ஆதாரங்கள். நாடிகள் பலவும் இணைதல் பற்றி இவற்றை ``கிரந்தி`` (முடிச்சு) எனவும் யோக நூல்கள் கூறும். நாடிகளைத் தம் வசப்படுத்துதலாவது, அவ்வவ்வாதாரத்திற் செய்யும் தியானம் முதலியவற்றிற்கு அவை இடையூறு செய்யாதவாறு அடக்குதல். இறுதியில் ``வாசல்`` என்றது காற்றைப் புகுத்துவதாகிய துருத்தியை. ``உலையில் உள்ள நெருப்பால் இரும்பு ஒரு துருத்திக் காற்றினால் வேகின்றது; உடம்பில் உள்ள வெப்பத்தால் உயிர் ஒன்பது துருத்திக் காற்றால் துன்புறுகின்றது`` என்றபடி. ``சிவயோகத்தைத் தலைப்பட்டால், இவ்வுடம்பே உயிர்க்கு இன்பம் தருவதாய் அமையும்`` என்பது கூறியவாறு.
இதனால், சிவயோகிகட்கு உடம்பு திருவருள் நெறிக்குத் துணையாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே.

பொழிப்புரை :

மூலாதாரத்தில் உள்ள அக்கினியை எழுப்பிச் சுழு முனை நாடி வழியே தலையளவும் செல்லச் செலுத்துதல், பிங்கலை இடைகலை வழியாகப் பிராணனை முறையே வெளியே ஓடவிட்டும், உள்ளே செல்ல இழுத்தும் பயிலுதல், ஏழுலகங்களையும் சுமந்து நிற்றல் ஆகிய முறைகளை நாம் சொன்னது, சிவனது அருள்வழியில் நிற்க விரும்புபவரை நோக்கியேயாம்.

குறிப்புரை :

``ஆயினும், அவை மருள்வழியாகிய சித்தியை விரும்பி நிற்பவர்க்கும் பயன்படுகின்றன`` என்பது குறிப்பெச்சம். ``கீழங்கி`` என்பது, பின்முன்னாக மாறிநின்றது, ``கீழ் நீர்ச்செவ் வரும்பு`` (திருமுருகாற்றுப்படை, 29) என்பதுபோல. வாங்கி - மேல் ஏற்றி. ஓடவிடுதல், தாங்குதல்; இவற்றை இரவி மதி வழிகட்கு நிரனிறை வகையால் பொருத்துக. தாங்குதல் - தடுத்தல்; அஃது உள்ளிழுத்தலைக் குறித்தது. ``எங்கே யிருக்கினும் பூரி இடத்திலே`` (பா.558) என்றதனான் இம்முறை கூறப்பட்டமை காண்க. ``இரவி மதி வழி ஓடிட`` என்றதனால், `மதி இரவிவழி ஓடிட` என்பது பெறப்பட்டதாக வைத்து, இதனை ``விபரீத கரணி`` என்னும் எதிரியக்கலாக உரைப்பாரும் உளர். ``உலகங்கள் ஏழு`` என்றது, ஆறு ஆதாரங்களுடன், உச்சியை. இவற்றைச் சுமத்தலாவது, இவற்றின் இயல்புகளை உணர்ந்து அவைகளில் நிற்கப்பழகுதல். இவை ஏழும் ஒவ்வொரு கடவுளின் உலகமாக மதிக்கப்படுதல் அறிக. இந்த ஆதார நிராதார யோகங்களின் அருமைப் பாட்டினை இவ்வாறு விளக்கி, ``இத்துணை அருமுயற்சிக்குப் பயன் அட்டமா சித்திகளே என்பது நூல்களின் கருத்தன்று`` என அறிவுறுத்தருளினார். ``அருவழியோர்க்கே, அறிவுடையோர்க்கே`` என்பவை பாடமாயினும், கருத்து இதுவே என்க. தரித்திட - தரிக்கும்படி. ``ஆங்கது`` என்பது ஒருசொல் நீர்மைத்து.
இதனால், ``யோகமாகிய அரு முயற்சியால், திருவருளாகிய பெரும்பயன் பெற விரும்புதலே அறிவுடைமை`` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 21

தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே.

பொழிப்புரை :

இடைகலை பிங்கலை நாடிகட்கு நடுவே துலை நாப்போல நிற்கும் சுழுமுனை நாடியையே நல்வழியாகக் கொண்டு இயங்கத் தெரிந்தால், வலையில் அகப்பட்ட பெண் மானை வந்து அடையும் ஆண்மான்போல, அந் நாடியின் முடிவில் விளங்கும் சத்தியைத் தேடிச் சிவனும் வந்து பொருந்துவான். இந்நடு நாடி வழி, விலைக்கு விற்க வைத்திருந்த வித்துத் தனக்கே பயன்படுதல் போல்வதொரு தன்மையுடையது.

குறிப்புரை :

மூன்றாம் அடியைத் தாப்பிசையாக முன்னும், பின்னும் இயைத்துப் பொருள் கொள்க. `தலைப்படும் ஆறு` எனற்பாலதனை, துணிவு பற்றி, `தலைப்பட்ட ஆறு` என்றார். பாசத்துப் பிணை, அன்புக்குரிய பெண்மான், முன்னர், `பிணை` என்றதனால், பின்னர், ``மான்`` என்றது, ``கலை`` என்பது விளங்கிற்று. ``பிணை மான்`` என்னும் தொகைச் சொல்லை ``பிணையை அணையும் மான்`` என விரித்துக்கொள்க. `தூவழி செய்தால், பிணைமான்போல், அண்ணல் தையலை நாடித் தலைப்பட்டவாறு` எனவும், ``தூவழி செய்தால் அது விலைக்கு உண்ண வைத்தது ஓர் வித்தாம்`` எனவும் இரு தொடராக இயைத்துரைக்க. சத்திவழியே சிவத்தைச் சார வேண்டுதலின், அதனை அண்ணல் தையலை நாடி வருவதாக ஓதினார்.
`விலைக்கு உண்ண` என்பது, ``பிறர், விலைக்குக் கொண்டு உண்ண`` என்றதாம். வைத்தது - வைக்கப்பட்ட நெல், ``ஓர்வித்தாம்`` என்றது வித்தாய்த் தனக்கே பயன்படுவதொரு தன்மையையுடையது என்னும் கருத்தினது. ``நெல்லை ஒருவன் அடுத்த ஆண்டிற்கு விதையாக வைத்துப் பெரும்பயன் கொள்ள நினையாமல் விலைக்கு விற்றுச் சிறிது பயன் கொள்ள இருக்கையில் அறிவு திருந்தினானாயின், அந்நெல்லே விதையாய் அவனுக்குப் பெரும் பயன்தருதல்போல, யோகமுயற்சியை ஒருவன் ஞானத்திற்கு வாயிலாகக் கொண்டு அதனை அடையக் கருதிச் செய்யாமல் சித்திகளைப் பெற விரும்பிச் செய்கையில் இடையே பக்குவம் அடைவானாயின், அவ்யோகமே அவனுக்கு ஞானத்திற்கு வாயிலாக அமையும்`` என்பது, ஈற்றடியிற் கூறப்பட்ட உவமையின் பொருள். `தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளையும்` (மதுரைக் காஞ்சி, 11) அத்துணைப் பயன், விலைக்கு விற்றலால் எய்துதல் கூடாமை அறிக.
இதனால், `சித்தியோகந்தானே முத்தியோகமாய்ப் பயன்படும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

ஓடிச் சென்றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கேயுந் தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.

பொழிப்புரை :

பல இடங்களிலும் ஓடிச்சென்று அங்கெல்லாம் ஒவ்வொரு பொருளைக் கண்டவர், அக்காட்சியின் பயனாகப் பத்து நாடிகளிலும் வேறுபட்ட பத்து ஓசைகள் எழக் கேட்டு இன்புறுவர். நீவிர் அதனைச் செய்யாது, தேனை உண்ண விரும்பி அஃது இருக்கும் மலை உச்சியைத் தேடி அடைந்து அங்கே பொருந்தியுள்ள தேனை உண்டு களித்திருத்தலே யன்றி, உம்மை அழிக்கப் பாசறையில் தங்கிக் காலம் பார்த்திருக்கும் பகைவரைச் சிறைப்பிடித்தலையும் செய்யுங்கள்.

குறிப்புரை :

``ஓடிச்சென்று`` என்றதனால், `பல இடங்கள்` என்பதும், ``தேடிச்சென்று`` என்றதனால், `குறித்த பொருள் உள்ள இடம்` என்பதும் பெறப்பட்டன. ``தேன்`` என்றது, திருவருளை. விந்துவை, `அமிர்தம்` என்றலே வழக்கன்றி, `தேன்` என்றல் வழக்கன்று. `தேன்` என்றதற்கு ஏற்ப, `மலையுச்சி` என்பது கொள்ளப்பட்டது. மலையுச்சியாவது நாதாந்தம். அதனை இங்கே, தச நாதங்கள் அடங்கிய இடமாகக் கொள்க. பாடி - பாசறை; என்றது உடம்பை. பகைவர், காம வெகுளி மயக்கங்கள். சித்தியை விரும்புவோர் இவற்றை வெல்லமாட்டார் என்க. கட்டும், `கட்டுமின்` என்பதன் மரூஉ.
இதனால், `சிவயோகமே காம வெகுளி மயக்கங்களை அறுத்துப் பேரின்ப நுகர்ச்சிக்கு வழிசெய்யும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

கட்டிட்ட தாமரை நாளத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப்
பொட்டிட்டு நின்றது பூரண மானதே.

பொழிப்புரை :

ஓர் இல்லத்தில் உள்ள பல கட்டுக்களை ஒத்த ஆதாரத் தாமரை மலர்களில் அதன் தண்டினைப் பற்றி அங்கங்கு நின்று சிறிது சிறிது தேனைத் தெளித்த ஒன்பது மகளிர், அவ்விடங்களை விட்டுத் தேனை நிரம்ப முகர்ந்து வார்க்கின்ற அவ் இல்லத் தலைவியோடு சேர்ந்து விட்டார்கள். அவ்விடங்களில் நின்ற அவர்கள் அவற்றை விட்டு நீங்கித் திலகம் இட்டு நின்றதே தலைவியுடன் ஒன்றாய் நின்ற நிறைவு நிலையாயிற்று.

குறிப்புரை :

``கட்டு இட்ட`` என்பதில் `இட்ட` உவம உருபு. ஒன்பது கன்னியர் என இயையும். கன்னியரை, `கட்டுக்களில் நின்றவர்` என்றதனால், மாது, `அவ்வில்லம் முழுவதற்கும் தலைவி` என்பது பெறப்பட்டது. மட்டு - தேன்; இஃது சிறிதளவாகத் துளிக்கின்ற தேனுக்கே காரணப் பெயர். பின்னர் இது மிக்க தேனைக் குறித்தல் மரூஉ வழக்கே. இல்லத்தின் ஒவ்வொரு பகுதியில் இருப்பவர் தேனைச் சிறிது சிறிது வார்ப்பவர் என்பதனால், இல்லத் தலைவி தேனை நிரம்ப முகந்து வார்த்தல் அறியப்படும். `தளங்களி னூடு தட்டிட்டு நின்று பூரணமானது` என்க.
தட்டிடுதல் - தடைப்படுதல். முன்னர், ``தாமரை நாளத்தில்`` என்றதனால், `போனது, அதன்வழியாகவே` என்பதுபோந்தது. ஒன்பது கன்னியர், `வாமை, சேட்டை, இரௌத்திரி, காளி, கலவி கரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சருவபூததமனி, மனோன்மனி` என்னும் நவசத்திகள். இவர்களில் வாமை மூலாதாரத்திலும், சேட்டை சுவாதிட்டானத்திலும், இரௌத்திரியும் காளியும் மணிபூரகத்திலும், கலவிகரணி முதலிய நால்வரும் அனாகதத்திலும், மனோன்மனி விசுத்தியிலும் நிற்பர். ஆஞ்ஞையில் ஆதிசத்தி இருப்பள் என்க. `வாமை முதலிய ஒன்பதின்மரும் ஏகதேச சத்திகள்` எனவும், `ஆதி சத்தியே பூரணசத்தி` எனவும், `பவயோகியர்க்கு அனைத்துச் சித்தியும் தருகின்ற ஆதி சத்தியே, சிவயோகியர்க்கு அருட்சத்தியாய்ச் சிவானந் தத்தைத் தருவள்` எனவும், உணர்க. வாமை முதலிய சத்திகள் சித்தி களுள் ஓரோஒன்றையும், சிவானந்தத்தின் ஏகதேசத்தையும் தருவர். ஆகவே, சிவயோகியர் அவர்களை ஆஞ்ஞையில் அருட்சத்திபால் சேர்த்துச் சிவானந்தத்தை வேண்டிநிற்பர் என்பது உணர்த்தியவாறு. பொட்டிட்டு நிற்றல், ஆஞ்ஞையை அடைந்து நிற்றல்.
இதனால், சிவயோகமே நிறைவுடைய யோகமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

பூரண சத்தி எழுமூன் றறையாக
ஏரணி கன்னியர் ஏழ்நூற்றஞ் சாக்கினர்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண மாகிக் கலந்து விரிந்ததே.

பொழிப்புரை :

பூரண சத்தியாகிய ஆதிசத்தி, `இச்சை, ஞானம், கிரியை` என மூன்றாகி, குண்டலியில், `அகாரம், உகாரம், மகாரம், அபரவிந்து, அபரநாதம், பரவிந்து, பரநாதம்` என்னும் ஏழு கலை களிலும் பொருந்தி இருபத்தொரு கூறாதலால், அவ் விருபத்தொரு கூறும் பிரமன் முதலிய ஐவரது தொழிற்கும் காரணமாய் அவரொடு பொருந்தி நிற்குமாறு ஏகதேச சத்திகள் அக் காரணப்பகுதிகளை (ஐ இருபத்தொன்று) நூற்றைந்தாக்கிக் கொண்டனர். (எனவே, அவை பிரம இச்சா அகாரம், பிரமஞான அகாரம், பிரமகிரியா அகாரம் என்றற்றொடக்கத்தனவாகப் பெயர்பெற்று நிற்பனவாம்.) இனி அந்த நூற்றைந்தையும் மூலாதாரம் முதலிய ஆறாதாரங்களோடும், ஆஞ்ஞைக்கு மேல் உள்ள நிராதாரத்தோடும் கூட்டி மூலாதாரப் பிரம இச்சா அகாரம், மூலாதாரப் பிரமஞான அகாரம், மூலாதாரப் பிரம கிரியா அகாரம் என்றற் றொடக்கத்தனவாக உறழ்ந்து கூற, ஏழடுக்கிய நூற்றைந்தாம் (ஏழு நூற்றைந்து - 7 x 105 = 735 ஆம்) ஆதலின், அங்ஙனமும் ஆக்கினர்.

குறிப்புரை :

அறை - பங்கு; கூறு. குண்டலி சத்தியைப் பிரமன் முதலியவரோடும் ஏழ் நிலத்தோடும் வைத்து இங்ஙனம் பலவாகப் பகுத்துக் கூறுதல், `உயிர்களின் உணர்வு அந்நிலங்களில் அதிதேவர் வழிவாக்கு வடிவாய் அளவற்றனவாகத் தோன்றும்` என்றற்கும், `அவை அனைத்தையும் ஒடுக்கித் திருவருளில் நிறுத்திப் பயன்பெற வேண்டும்` என்றற்குமாம். உணர்வுகள் அளவின்றித் தோன்றுதலையே,
ஒருபொழுதும் வாழ்வதறியார்; கருதுப
கோடியு மல்ல பல. குறள் - 337
எனக் கூறினார் திருவள்ளுவர். `எழு நூற்றஞ்சாக்கினர்; அவ் ஆக்கப் பாடு கலந்து விரிந்தது` என்க.
இதனால், `பலவகை உணர்வுகளையும், சிவயோக நெறியால் திருவருள் உணர்வில் ஒடுங்கச் செய்தல் வேண்டும்` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 25

விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்
பரந்து குவிந்தது பார்முதற் பூதம்
இரைந்தெழு வாயு விடத்தில் ஒடுங்கே.

பொழிப்புரை :

பல ஏகதேச சத்திகளாய் விரிந்தும் ஒன்றேயான பூரண சத்தியாய்க் குவிந்தும் சிவத்தினின்றும் புலப்பட்டுச் செயல் ஆற்றுகின்ற இவ் ஆதி சத்தி, சிவத்தில் ஒன்றாய் அடங்கியிருக்கும் நிலையினின்றும் வெளிப்பட்டுச் செயலாற்றினால் மண் முதலிய பூதங்கள் தூலமாய் வெளிப்பட்டு விரிந்தும், அவள் சிவத்தில் அடங்கி ஒன்றாய் இருப்பின், அவை (பூதங்கள்) சூக்குமமாய் ஒடுங்கியும் இருக்கும். (ஆகவே, எல்லாம் ஆதிசத்தியால் ஆவனவாகலின்) பூரக இரேசகங்களில் பாம்பு சீறினாற் போன்ற ஓசையை உடையதாய், கும்பகத்தில் சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி எழுகின்ற பிராணவாயுவால் அவளிடத்தில் சென்று ஒடுங்குவாயாக.

குறிப்புரை :

`எழுந்து கரந்து இருக்கின், பரந்துகுவிந்தது` என நிரனிறையாகக் கொள்க. எழுதற்கு முன்னுள்ள நிலையை ``கரந்து உள் - உள் கரந்து`` என்றார். ``குவிந்தது`` என்பது பன்மை ஒருமை மயக்கம். `வாயுவால்` என உருபு விரித்து, `அவளிடத்தினில்` என வருவித்துரைக்க.
இதனால், திருவருளது ஆற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

இடையொடு பிங்கலை என்னும் இரண்டும்
அடைபடு வாயுவும் ஆறியே நிற்கும்
தடையவை ஆறெழுந் தண்சுட ருள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.

பொழிப்புரை :

யோகத்தில் இடநாடி, வலநாடி இரண்டும் அடை பட, நடுநாடி வழியே செல்லும் பிராணவாயு தன் முரண் அவிந்து உனக்குத் துணையாகியே நிற்கும். அதனைப் பற்றிக்கொண்டு சென்று, ஆறு ஆதாரங்களின்மேல் எழுகின்ற சந்திரனுள்ளே பொருந்தி வளர்கின்ற மின்னற்கொடி போன்ற பூரண சத்தியில் நீ ஒடுங்கிவிடு.

குறிப்புரை :

`பின்பு உனக்குத் துன்பமில்லை` என்பது குறிப்பெச்சம். ``அடைபடும்`` என்பது, அடைபட வேறுவழியால் செல்கின்ற எனத் தன்காரியம் தோன்ற நின்றது. ``வாயுவும்`` என்னும் உம்மை, `மனம் திருந்தியகாலத்து` என இறந்தது தழுவிய எச்ச உம்மை. ஆறுதல் - இகல் நீங்குதல். இகலாவது தன்வழிப்படாமை. ``ஆறு`` என்பதன்பின், `மேல்` என்னும் பொருட்டாய கண்ணுருபு விரிக்க. `மேல்` என்பது ஆறாவதனையும், அதன்மேல் உள்ள உச்சியையும் இவ் இரண்டிடங்களும் `சந்திர மண்டலம்` எனப்படும் என்க. `மிடை` என்னும் முதனிலை `மிடைந்து` என வினையெச்சப் பொருள் தந்தது.
இதனால், வாயுவை வயப்படுத்தியதனால் பெறத்தக்க பயன் திருவருட்பேறே என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கின்
மடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி அடங்கிடும் மன்னுயி ருள்ளே
நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே.

பொழிப்புரை :

சந்திரமண்டலத்தில் ஒடுக்கி, மனம் ஒருங்கித் திருவருளையே உணர்ந்திருந்தால், பிராணவாயுவும் மெத்தென இயங்குதலும் ஒழிந்து, அடங்கியிருக்கும். இவ்வாறு மனமும், வாயுவும் அடங்குதலால், அவற்றின் வழிப் புறஉணர்வும், தன் உணர்வும் அற்றிருக்கும் உயிரின் உள்ளத்தையே ஐந்தொழிற் கூத்து இயற்றும் இறைவனும் தனக்குரிய இடமாக விரும்புகின்றான்.

குறிப்புரை :

``அதனுள்`` என்றது, `அதன்வழி` என்றவாறு. `உள்ளம்` என்பது, குறைந்து நின்றது. `உள்ளையே` என உருபு விரிக்க. `கூத்தனை நாடுகின்றேனே` என்பதும் பாடம்.
இதனால், `சிவயோகத்தால் சந்திர மண்டலத்தில் நிற்பவர் கட்குச் சிவனை அடைதல் வாய்க்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

நாடியின் உள்ளெழு நாதத் தொனியுடன்
தேடியுடன் சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடில் ஒருகை மணிவிளக் கானதே.

அணுமாதி சித்திக ளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே.

பொழிப்புரை :

பத்து நாடிகளின் உள்ளே எழுகின்ற பத்து ஓசை களாகிய மங்கல முழக்கத்துடன் திருவருளாகிய நிதிக் குவியலைத் தேடிச் சென்று அடைந்து, அதனைக் கவர நினைக்கும் காமம் முதலிய குற்றங்களாகிய பகைவரைச் சிறைப்படுத்தி, அரண்மனையின் மேல் நிலமாகிய நிலாமுற்றத்தில் நந்தா மணிவிளக்கு (அணையாத இரத்தின தீபம்) ஆகிய சிவஞானத்தை ஏற்றிவைத்து இருத்தலே அதுவாம். (மேல், `ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கிருக்க` எனக் கூறிய சிவயோக சமாதியாம்.)

குறிப்புரை :

``திரு`` முதலாக வந்தவை இப்பொருளையுடைய சிறப்புருவகங்கள். ``தொனி`` என்றது மங்கல முழக்கத்தைக் குறித்தது. மங்கலமாவது பகைவரை அழித்து அவரது கோட்டையைக் கைப் பற்றிய வெற்றி விழா. இது தமிழ் நூல்களில் ``மண்ணு மங்கலம்`` எனக் கூறப்படும். இங்குப் பாசங்களை வென்று திருவருட் கோட்டையைப் பிடித்த வெற்றி குறிப்பிடப்பட்டது. மாடு இல் - செல்வ மனை; அரண் மனை. ஒரு கை - ஓரிடம்; மேல் மாடம். இஃது இங்கே சந்திர மண் டலத்தைக் குறித்தலின், ``நிலாமுற்றம்`` என்றற்கு ஏற்புடைமை அறிக.
``மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியர்என் றுந்தீபற
தவத்தில் தலைவர்என் றுந்தீபற``
என்றார் திருவுந்தியாரினும் (பா.12)
இதனால், சிவயோகத்தது பெருமை கூறப்பட்டது.
(இதன்பின் உள்ள ``அணுமாதி சித்திகள்`` என்னும் பாடல் ``தானே அணுவும்`` என்ற திருமந்திரத்தின் பொருளையே மீள அரை குறையாகக் கூறலின், நாயனாரது திருமொழியன்றாம்.)

பண் :

பாடல் எண் : 29

எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்
மொட்டாம் நடுநாடி மூலத் தனல்பானு
விட்டால் மதியுண்ண வும்வரு மேலதே.

பொழிப்புரை :

வசப்படாத பிராணனை அட்டாங்க யோகத்தால் வசப்படுத்தினால் அட்டமாசித்தி உண்டாகும். இனி மூலாதாரத்தில் உள்ள அக்கினி, மொட்டுப்போல் மூடியுள்ள நடுநாடியைத் திறந்து கொண்டு சூரிய மண்டலத்தையும் கடந்து சென்று அப்பால் நின்ற சந்திர மண்டலத்தில் உள்ள அமுதை உண்ணுதலும் யோகத்தாலே உண்டாவ தாகும்.

குறிப்புரை :

``சித்தி கிடைத்திடும்`` என இயையும். ``கிட்டச் செய்தால்`` என ஒரு சொல் வருவிக்க. ``மதி உண்ணவும் வரும்`` என்றதனால், ``அவ்விடத்துத் திருவருளில் நிற்றலும் கூடுவதாம்`` என்பது பெறப்பட்டது. எனவே, ``அவ்வாறு நிற்கவே முயல்க`` என்ற தாயிற்று. ``மேலதாகிய மதி`` எனக் கூட்டுக. மதி, ஆகுபெயர்.
இதனால், ஆஞ்ஞைக்குக் கீழ், சித்தி பெறும் அளவில் நிற்றல் சிறப்பில்லாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை
சத்தி அருள்தரத் தானுள வாகுமே.

பொழிப்புரை :

அட்டாங்க யோகத்தால் அட்டமாசித்திகளே யன்றித் தத்துவ ஞானங்கள் பலவும் விளங்குவனவாம். ``சித்திகள்`` என்பவற்றைத் தமக்கே பெயராக உடைய அட்டமாசித்திகளும், திருவருளேயாய் நிற்கின்ற அந்தச் சித்திகள், மும்மாயைகளினும் நின்று செயல் செய்யும் ஆதிசத்தி அருள் புரிதலால் உளவாகும்.

குறிப்புரை :

திரிபுரம் - மூன்று நகர். ``சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை`` என்னும் மூன்று மாயையே இவ்வாறு உருவகிக்கப் படும். இம்மூன்றினும் நின்று செயலாற்றுதல் பற்றி ஆதிசத்தி, ``திரிபுரை`` எனப்படுகின்றாள். ``திரிபுர சுந்தரி`` எனக் கூறுதலும் உண்டு.
இதனால், ``அபர சித்திகள்`` எனத் தக்க மருட் சித்திகளாகிய அட்டமா சித்திகளினும் மேற்பட்டு, `பர சித்திகள்` எனத் தக்க அருட் சித்திகளும் உள்ளன`` என்பது கூறி, அவற்றிற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்
இட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சி
எட்டு வரப்பும் இடந்தானின் றெட்டுமே.

பொழிப்புரை :

பர சித்தியாகிய இந்த அருட் சித்தி எட்டனையும் அடைந்து, இவற்றால் சிவப்பேறும் கைகூடப் பெற்றவரே பர லோகத்தை அடைவராதலால் அவரே ``சித்தர்`` (சித்திகளைப் பெற்றவர்) என்று சொல்லத் தக்கவர். அவர்கள் தங்கள் விருப்பம் எல்லாவற்றையும் சிவனது திருவருள் வியாபகத்துள் ஒடுக்கி அத்திரு வருளையே கண்டுகொண்டிருத்தலே உண்மை யோகக் காட்சியாம். மாயையைக் கடந்த இந்த அருட்சித்தியன்றி மாயைக்குட்பட்ட மருட்சித்திகள் அம்மாயைகளில் நின்று சிவத்தை அணுகுதல் கூடுமோ!

குறிப்புரை :

`அதனால், இந்தச் சித்தியையும் காட்சியையுமே பெற முயல்க` என்பது குறிப்பெச்சம். இங்குக் கூறியவை யெல்லாம் விசேட தீக்கை பெற்று யோக நெறியால் திருவருளையும் சிவத்தையும் மனத்தால் பாவித்து நிற்கின்ற யோகத்தில் ஞானமே யன்றி, நிருவாண தீக்கை பெற்றுக் கேட்டல் சிந்தித்தல் முதலியவற்றால் திருவருளையும், சிவத்தையும் அறிவால் உணர்ந்து நிற்கின்ற ஞானச் செய்திகள் அல்ல என்க. `பரலோகம்` என்றது, உருத்திர லோகத்தை.
இதனால், பரசித்தியது உயர்வு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

மந்தரம் ஏறு மதிபானு வைமாற்றிக்
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்
தந்தின்று நற்கா மியலோகஞ் சார்வாகும்
அந்த வுலகம் அணிமாதி யாமே.

பொழிப்புரை :

``மேரு`` எனப் பெயர் பெற்ற சுழுமுனை நாடியைச் சூழ்ந்து இயங்குகின்ற, `சந்திர கலை, சூரிய கலை` என்னும் பெயரை உடைய இடைநாடி பிங்கலை நாடிகளின்வழி இயங்கும் பிராண வாயுவை அடக்கிச் சுழுமுனை நாடியின் உள்ளே செல்லுமாறு மாற்றி யமைத்தபின், மூலாதாரம் முதலிய பள்ளங்களில் தறிபோல நில்லாது, அங்ஙனம் நிற்கும் குற்றத்தின் நீங்க வல்லவர்க்குப் பின் ஞானத்திற்கு ஏதுவாகிய விருப்பத்தைத் தரும் பரலோக இன்பம் இப்பொழுதே உண்டாகிப் பின்பு அவ்வுலகத்தைச் சார்தல் உண்டாகும். அத்தகை யோர்க்கு அந்த உலக இன்பங்களே அணிமாதி அட்டசித்திகளாம்.

குறிப்புரை :

மேருவை, `மந்தரம்` என்றார். `குழியில் நிற்கும்` என ஒருசொல் வருவிக்க. மூலாதாரம் முதல் விசுத்தி ஈறாக நின்று சித்தி களை அடைதலின் இழிபுணர்த்துகின்றாராகலின், அவ்வா தாரங்களை, ``குழி`` என்றார். தர, என்பது, ``தந்து`` எனத் திரிந்து நின்றது. `நிட்காமி யமாவது, உலகியலை விரும்பாது மெய்ந்நெறியை விரும்புதலே` என்றற்கு, அதனை, ``நற்காமியம்`` என்றார். `அக் கசடறு நற்காமிய லோகத்தை இன்றே தரப் பின் அதனைச் சார்வு ஆகும்` எனக் கூட்டுக.
இதனால், `சிவயோகிகட்குத் தவயோகப் பேறே அட்டமா சித்திகளாய் நிற்கும்` என, பரசித்தியாவது இது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

முடிந்திட்டு வைத்து முயங்கில்ஓ ராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனும்
தணிந்தஅப் பஞ்சினுந் தான்நொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே.

பொழிப்புரை :

கீழ் ஆதாரங்களில் இறங்காமல், ஆஞ்ஞையிலே தன்னைச் சத்தியுடன் ஓர் ஆண்டின் முடியிட்டு வைத்து, அவளுடன் நீக்கமின்றியிருந்தால், அச்சத்தி இவனுக்கு அணுவிலும் அணுவாகின்ற `அணிமா` என்னும் சித்தியாய் நிற்கும். அந்தச் சித்தியால் இவனும் அந்நிலையினனாவான். இந்த அருட்சித்தியைப் பெற்றவனை, மருட்சித்திகளால் வெல்ல இயலாது.

குறிப்புரை :

இவ் யாண்டு மேற்கூறிய யோக ஆண்டே என்க. ``அணிந்த`` என்பது, `அணுவாய் நின்ற` என்னும் பொருளது `அணி மாவாகை` என்பது குறைந்து நின்றது. அருள் நிலையில் அணுவாத லாவது, எல்லாப் பொருளிலும் நுண்ணிதாய் நிற்கின்ற திருவருளை. தானும் அங்ஙனம் நுண்ணியனாய் நின்று பாவித்தல். முன்னர், ``தான்`` என்றது, திருவருளை. தணிந்த - சிறிதாய. நொய்ம்மை, இங்கு சிறுமை மேல் நின்றது. நொய்யது - சிறிய பொருள்; ``நொய்யனாகி`` என ஓதில் சிறக்கும். ``இருந்திடும்`` என்னும் முற்று, ஆண்பாலில் வந்தது.
கொண்ட தொருபொருளைக் கோடிபடக் கூறுசெயின், கொண்டவனும் அப்பரிசே கூறுபடும்;-கொண்ட
இருபொருளு மன்றியே இன்னதிது என்னா(து)
ஒருபொருளே யாயிருக்கும் உற்று.
-திருக்களிற்றுப்படியார், 24
என வருதல் காணத்தக்கது. இதன் முதலடியும் ஈற்றடியும் உயிரெதுகை.
இதனால், பரசித்திகள் எட்டனுள், அணிமாவாவது, சிவ சத்தி எப்பொருளிலும் நிறைந்திருத்தலை உணர்தல் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன்
கின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாய்கின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே.

பொழிப்புரை :

தான் காண்கின்ற எப்பொருளிலும், அணிமா வாகின்ற அந்த ஒப்பற்ற சத்தியுடனே சென்று, அச்சத்தியே தனக்கு நிலைக்களமாக, தனக்குக் கழிகின்ற காலம் முழுதும் அச்சத்திவழியே நிற்பானாயின், தற்போதங் கெடுதல் ஐந்தாண்டில் கூடும். அதுவே, பர லகிமாவாகும்.

குறிப்புரை :

``புகலது`` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. ``தன்`` என்றது சத்தியை. மாய்தலுக்கு வினைமுதல் வருவிக்கப் பட்டது. `அதுவே மா லகுவாகும்` என வேறு தொடராக்கி உரைக்க. தற்போதம் அறுதலால் உயிர் பொறை நீங்கி நிற்குமாகலின், இது, `இலகிமா` எனப்பட்டது. இது முதல் பல மந்திரங்கள் அந்தாதியாய் வருகின்றன.
இதனால், `பரசித்திகளுள் பர லகிமாவாவது தற்போதம் கெடுதல்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

மாலகு வாகிய மாய்வினைக் கண்டபின்
சாலொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்
பாலொளி யாகிப் பரந்தெங்கும் நின்றது
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.

பொழிப்புரை :

பர லகிமாவாகிய தற்போதம் கெடுதல் உளதாயின் ஏகதேச உணர்வாய்ப் பொருள்களைப் பற்றுதல் விடுதல்களைச் செய்து நின்ற உயிர், நிறைந்த பேரொளியாம் திருவருளேயாய் நிற்கும்; அதன் பயனாகப் பரம்பொருளாகிய சிவத்தை அறியும்.

குறிப்புரை :

`மாயனை, தானொளி` என்பன பாடமல்ல. மூன்றாம் அடியை முதலடியின் பின்வைத்து உரைக்க. ``நின்றது`` என்பது வினையாலணையும் பெயர்.
இதனால், மேலதன் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடும் ஓராண்டின்
மைப்பொரு ளாகும் மகிமாவ தாகுமே.

பொழிப்புரை :

இலகிமா சித்திக்குப்பின் மெய்ப்பொருளாகிய சிவத்தைச் சத்தி உணர்த்தி நிற்பாள். அவ்வுணர்வினால் அதனை அடைதல் ஓராண்டில் கைப்பொருளாகக் கிடைக்கும். அதுவே, ஒன்றும் தோன்றாத சூனிய நிலையாகிய பர மகிமா வாகும்.

குறிப்புரை :

``சொல்லிய`` என்றனால், சொல்லுதல் அனுவாத முகத்தாற் பெறப்பட்டது. சொல்லுதல் - உணர்த்துதல். தத்பொருள் - அந்தப்பொருள்; என்பது பரம்பொருள். இதுவே மெய்யாதல் பற்றி மீள, ``தத்துவம்`` என்றார். சத்திவழிச் சிவம் வெளிப்படுங்கால் முதற் கண் அஃது இன்னதென அறிய வாராமையானும், பிறிதொரு பொருளும் அங்குப் புலனாகாமை யானும் வெறும் சூனியமாய்த் தோன்றுமாதலின் அதனை, ``மைப்பொருள்`` என்றார். மைப் பொருள் - விளங்காத பொருள். இது வியாபக நிலையின் தலைப் பாடாகலின், `மகிமா` எனப்பட்டது.
இதனால், `அருட்சித்தியாகிய பர மகிமா இது` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 37

ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வெளியுற நின்றன
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.

பொழிப்புரை :

எல்லாவற்றிற்கும் அடிநிலை ஒளியாகிய சிவத்தைக் கண்டபின், காலக் கழிவும் அங்ஙனம் கண்டவனது உணர்வில் தோன்றாது. இனி, எல்லாப் பொருள்கட்கும் மேலான தாகிய காலம், தன்னியல்பில் பொருள்களைத் தன்வழிப்படுத்து நடத்தி நிற்குமாயி னும், அவனது காலங்கள் அவனைக் கட்டுப்படுத்தாது அவன் வழியவேயாம்.

குறிப்புரை :

`போவதும் இல்லை` என்றது, அப்போக்கு உணர்வில் தட்டாமைபற்றி. மேல் நிற்றல், எல்லாப் பொருட்கும் மேலே நிற்றல். வெளி உறுதல், வேறிடத்தில் செயலாற்றுதல். ``தான் நின்ற`` என்றது, `தனக்கு நிலைக்களமான` என்றபடி. தன்வழியாதல், தனது மாற்றத்தை விளைக்கமாட்டாது நிற்றல். `எல்லாவற்றினும் பெரிதாகிய காலத்தையும் அருள்வழி நின்று கடத்தலால், இது மகிமாவாயிற்று` என்பது விளக்கியவாறு. இதில் இரண்டடி யெதுகை வந்தது.
இதனால், மேலதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்
தன்வழி யாகத் தழைத்திடும் வையகம்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்
தன்வழித் தன்னரு ளாகிநின் றானே.

பொழிப்புரை :

தற்போதம் இழந்து சிவத்தை உணர்ந்து நின்றால், ஞானம் மேன்மேல் பெருகும். அங்ஙனம் பெருகப் பெற்றவனால், உலகமும் நலம் பெறும். அங்ஙனம் நலம்பெற்ற உலகம் அவன் வழிப்படுமாயினும், அவன் அவற்றை ஆள நினையாது, சிவனது அருள்வழி நின்று அதுவேயாய் நிற்பன்.

குறிப்புரை :

``நின்றான்`` என்பது காலவழுவமைதி.
இதனால், சிவத்தை உணர்ந்தவன் உலகியலால் தாக்கப் படாமை கூறுமுகத்தால், `மகிமா` என்பதற்குப் பிறிதொரு காரணமும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை யெல்லாங்
கொண்டவை ஓராண்டுக் கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்திய தாகுமே.

பொழிப்புரை :

தோன்றி நின்று தொழிற்படுவனவாகிய தத்துவங்கள் அனைத்திற்கும் தலைவியாகிய ஆதி சத்தியுடன் ஒற்றித்து நின்று கண்ட அத் தத்துவங்களை எல்லாம் யோகி தனக்குக் கீழ்ப்பட்ட வையாக உணர்ந்து ஓராண்டுக்காலம் அவற்றின் தொழிற்பாடுகளைத் தன்னின் வேறாகக் கண்டுகொண்டிருப்பானாயின், அத்தத்துவங் களால் உளவாகும் வாதனை ஒழிந்து அவ்வொழிவே அருட்சித்திப் பிராத்தியாகும்.

குறிப்புரை :

`நின்றன தத்துவம், கண்டன பூதப்படை` என்பன இருபெயரொட்டு. `தத்துவத்துக்கு நாயகி` என நான்காவது விரிக்க. தத்துவங்களை அவளுடன் நின்று காணுமாறு இலகிமாவில் சொல்லப்பட்டது. கண்டன - காணப்பட்டன. ``பூதம்`` என்பது, ஏனைத் தத்துவங்கட்கு உபலக்கணம். `எல்லாவற்றையும் கொண்டு` எனவும், `அவற்றொடு கூட இருந்திடில்` எனவும் உருபுகள் விரிக்க. கொள்ளுதல், அவைகளை வியாப்பியமாக உணர்தல். கூட இருத்தல், ஒட்டின்றிக் கண்டிருத்தல். தத்துவங்கள் தன்னின் வேறாய்த் தனக்குக் கீழ்ப்பட்ட வழி, அவை அனைத்தும் தான் நினைத்தவாறே செயற் படுதல் பற்றி இது பிராத்தி எனப்பட்டது.
இதனால், பர சித்திப் பிராத்தியின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின்ற பூவிற் பரப்பவை காணலாம்
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவது மில்லையே.

பொழிப்புரை :

பிராத்தியில் குண்டலி சத்தியையும் தன் வழிப்படக் கண்ட பின்பு, சுத்த மாயையில் உள்ள சுத்த காலமும் அக்குண்டலிக் குள்ளே அடங்கிவிடும். அதனால், சுத்த தத்துவ நிகழ்ச்சிக்கு ஏதுவாக நிகழ் கின்ற சுத்த காலங்களும் நிகழா. ஆதலால், இந்நிலையில் பாகுபட்ட அனைத்துலகங்களில் உள்ள பொருள்களையும் தன் அறிவினுள்ளே காணுதல் கூடும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை இறுதியில் வைத்து உரைக்க. `பகுகின்ற` என்பது, `பாகின்ற` என மரூஉவாயிற்று. `பூ` என்றது `நிலம்` என்னும் பொருட்டாய்ப் புவனங்களை உணர்த்தி நின்றது. பூவிற் பரப்பவை - பல உலகங்களிலும் நிறைந்து கிடக்கின்ற பொருள்கள். இது வினையாலணையும் பெயர். `மேனின்ற காலம்` என மேல் (பா.661) அசுத்த காலம் குறிக்கப்பட்டமையின். இங்கு, ``மேவுகின்ற காலம்`` என்றது, அதற்கு `மேலே பொருந்தியுள்ள காலம்` எனப் பொருள்பட்டு, சுத்த காலத்தைக் குறித்தல் அறிக. `அசுத்த மாயையில்` உள்ள தத்துவங்கள் அனைத்தும் சுத்த மாயையிலும் உள்ளன என்பது மேலேயும் (பா.407) காட்டப்பட்டது. சிவயோகத்தால் குண்டலி சத்தியை இனிது கண்டவரைச் சுத்த மாயை பந்தியாது என்றவாறு.
இதனால், `சுத்த மாயா காரியங்களின் கட்டு நீங்கப் பெறுதலே பரசித்தி கரிமா` என்பது கூறப்பட்டது. இதனானே, மேல் `கண்டன பூதப் படையவை` என்றது, அசுத்த தத்துவங்களையே யாதல் அறிக. அவற்றை, ``பூதப்படை`` என்றதும் அதுபற்றி

பண் :

பாடல் எண் : 41

போவதொன் றில்லை வருவது தானில்லை
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை
தாமத மில்லை தமரகத் தின்னொளி
ஆவது மில்லை அறிந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

குண்டலி சத்தியை நன்கு காண வல்லவர்க்குப் பல்வேறு வகைப்பட்ட புவனங்களில் சித்திவழிப் போக்கு வரவு புரிதலும், எடுத்த உடம்பு இடையே வீழ்தலும், நுகர்ச்சிப் பொருள் களால் இன்புறுத்தலும், (மயக்கமுறுதலும்) துன்புறுதலும், யோகத்தில் நாடிகளில் பல இனிய ஓசைகளைக் கேட்டலும், மற்றும் ஆதாரக் காட்சிகளில் நிற்றலும், இவைபோல்வனவும் ஆகிய உலகியல்கள் சிறிதும் இல்லையாம்.

குறிப்புரை :

``இல்லை`` என்றது, `அவற்றால் உணர்வு திரிதல் இல்லை` என்றதாம். எனவே, `இந்நிலை கரிமாவாதல் பொருந்தும்` என்பது காட்டியவாறு. தழைத்தல், இன்புறுதல். தாமதம் - மயங்கல். இவை கூறவே துன்புறுதலும் பெறப்பட்டது. தமரம் - ஒலி; இது கடைக் குறைந்து நின்றது. `அகத்து இன்` என்பது தமரம் என்பதனோடும் இயைந்தது மூன்றாம் அடி மூன்றாம் எழுத்தெதுகை.

பண் :

பாடல் எண் : 42

அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூதப் படையவை யெல்லாம்
குவிந்தவை ஓராண்டுக் கூட இருக்கில்
விரிந்த பரகாயம் மேவலு மாமே.

பொழிப்புரை :

அணிமா முதலாகப் பல நிலைகளிலும் தன்னால் அறியப்பட்ட சிவசத்தி, பின் யோகியின் உள்ளத்தில் நீங்காதிருப்பின், தத்துவங்களின் குறும்புகள் முற்றிலும் நீங்கினவாம். அங்ஙனம் அவை நீங்கிய நிலையில் அந்தச் சத்தியுடன் அமைதியுற்று இருப்பின், ஓராண்டுக் காலத்தில் நாதத்திற்கு மேல் அளவின்றிக் கிடக்கின்ற அருள்வெளி வியாபகத்தை அவன் அடைதல் கூடுவதாம்.

குறிப்புரை :

முன்னிரண்டடிகளில் கரிமா நிலையை அனுவதித்த வாறு. `இந்நிலையில் அமைதிதோன்றும்` என்றற்கு, ``குவிந்தவை`` என்றார். அவை - அவைபற்றிய உணர்வுகள். `அவை குவிந்து` என மாற்றுக. `குவிய` என்பது ``குவிந்து`` எனத் திரிந்து நின்றது. பர காயம் - எல்லாப் பொருட்கும் மேலே உள்ள ஆகாயம். ``மேவலும்`` என்ற உம்மை, சிறப்பு. விரிந்த பர காயம் மேவலின் மிக்க பயனில்லை யாதலின். இது ``கரிமா`` எனப்படும். மூன்றாம் அடி உயிரெதுகையும், மூன்றாமெழுத்தெதுகையும் பெற்றது. அடிமுரண் ஆதலும் அறிக.
இதனால், பர சித்தியாகிய கரிமாவின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 43

ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
மூல விளக்கொளி முன்னேயு டையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடெளி தாம்நின்றே.

பொழிப்புரை :

எல்லா ஒளிகட்கும் மூல ஒளியாகிய திருவருளை அனாதியே தம்மிடத்து உடைய அனைவரும் அது தமக்கு நலம் செய்யும் ஒளியாயிருத்தலை அறிந்திலர். அதனைச் சிவயோகப் பயிற்சியால் காட்டுத் தீப்போன்ற பேரொளியாகக் கண்டு மகிழ்பவர் கட்குப் பரஞ்சோதியாகிய சிவ பரம்பொருளில் ஒன்றுபடுகின்ற முத்தி எளிய பொருளாய் நிலைபெற்று நிற்கும்.

குறிப்புரை :

``எல்லா விருப்பத்தினும் வீடு பெறும் விருப்பே உயர் வுடையதாகலின், அது கிடைக்கப் பெறுதலே பிராகாமியமாம்`` என்ற வாறு. ``எளிதாய் நிற்கும்`` என விகுதி பிரித்துக் கூட்டி உரைக்க. இதன் கண் இடையிட்டு எதுகை வந்தது. ``கால விளக்கொளி`` என்பதும் பாட மாதலின், அதனையே கொண்டு, முதலடியை `ஆல விளக்கொளி` என ஓதினும் ஆம். ஆலம், ``அகலம்`` என்பதன் மரூஉமாம். காலம் - பக்குவம் எய்திய காலம்.
இதனால், பரசித்திப் பிராகாமியம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாம்
கொண்டவை ஓராண்டுக் கூடி யிருந்திடிற்
பண்டை அவ் வீசன் பரத்துவ மாகுமே.

பொழிப்புரை :

முன்னைச் சித்திகளில் பல்லாற்றானும் நீங்கிப் போன தத்துவங்களையெல்லாம் ஆஞ்ஞையில் யோகிக்குத் துணை யாய் நிற்கின்ற சிவசத்தி வழியவாகக் கொண்டு அவற்றோடு ஓராண்டுக் காலம் கூடியிருப்பானாயின், அவனுக்கு, எப்பொருட்கும் முன்னோனாகிய சிவனது இறைமைத் தன்மைகள் எல்லாம் கிடைப்பனவாகும்.

குறிப்புரை :

எனவே, ``இதுவே பர சித்தியுள் ஈசத்துவமாம்`` என்ற தாயிற்று. ஐந்தொழில் நிலையில் மேற்பட்டது சதாசிவ நிலையாதலின், அதனையே எடுத்துக் கூறினார். ``பூதம்`` என்றது இங்குத் தத்துவம் முப்பத்தாறனையும். ``எல்லாவற்றையும், அவற்றொடு`` என உருபுகள் விரிக்க. ``நாயகி, தன்னுடன் (யோகி) கண்டன எல்லா வற்றையும் கொண்டு அவற்றொடு கூடியிருந்திடில்`` என்க. தத்து வங்கள் எல்லாவற்றையும் சத்தியே கைக்கொண்டு அவற்றொடு கூடியிருத்தலாவது, ``இவன் செய்தியெலாம் என்செய்தி என்றும், செய்தது எனக்கு இவனுக்குச் செய்தது என்றும்`` (சிவஞானசித்தி. சூ. 10) யோகியின் செயல் அனைத்தையும் தன் செயலாக ஏற்று அனைத்துச் செயல்களையும் அவனுக்கு நலமாக அமையும் வகையிலே புரிதலாம். ``ஓராண்டுக் கூடி இருந்திடில்`` என்றது, ``யோகி தன் செயல்கள் அனைத்தையும் சத்தியின் செயலாக ஒப்புவித்து நிற்றல் வேண்டும்`` என்பதனைச் சத்திமேல் வைத்து ஓதியவாறு. `பண்டைய தத்துவம்` என இயையும். அவை சிவனது பரத்துவம், தன் வயத்தனாதல் முதலியவையாம். இவைகளைப் பெறுதல் ஈசத்துவமாதல் வெளிப்படை. ``தத்துவ மாகுமே`` என்பது பாடம் அன்று.
இதனால், பரசித்தியுள் ஈசத்துவத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன்
ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவ னாமே.

பொழிப்புரை :

ஆஞ்ஞையாகிய சந்திர மண்டலத்தை அடைந்த யோகி அங்கு நின்றும் மீளாது நிற்குமிடத்து முதற்கண் அம் மண்டலத்தின் ஒளியைப் பெற்றுப் பின்னர் அதன் குளிர்ச்சியைப் பெறு வான். அதன்பின் அம்மண்டலத்தின் பகுதிகளை ஒவ்வொன்றாக அடைவானாயின், இறுதியில் அச்சந்திர மண்டலமே தானாய் விடுவான்.

குறிப்புரை :

எனவே, ``இங்கு, சிவம்`` என்பது ஆஞ்ஞை யோகத்தில் விளங்குகின்ற தியானப் பொருள் என்பதும், ``சத்தி`` என்பது, அப்பொருளின் அருள் என்பதும் போந்தன. போதரவே, தன்வயத்தனாதல் முதலியனவும் அவ்வளவில் ஏற்புடைய குணங் களாதல் பெறப்படும். ஆகின்ற - உண்டாகின்ற; கிடைக்கின்ற. ``ஒளி யாயவன்`` எனவே, ஒளியாதலும் அனுவாத முகத்தாற் பெறப்பட்டது. கலை - கூறு. அவையாவன, ஆஞ்ஞைக்குமேல் உள்ள இடங்கள். அவை, `நெற்றி, தலையின் முற்பக்கம், பிற்பக்கம், வலப்பக்கம், இடப் பக்கம், பிரமரந்திரம்`` எனப் பலவாறு யோக நூல்கள் கூறும். இவ் அனைத்திடங்களிலும் தொடர்பு கொண்டு நிற்கும் ஆற்றலை, ``ஆயிர இதழ்த் தாமரை`` என உருவகித்தும் கூறும்.
இதனால், ஓராண்டில் மேலது கைவருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 46

தானே படைத்திட வல்லவ னாயிடும்
தானே அளித்திட வல்லவ னாயிடும்
தானேசங் காரத் தலைவனு மாயிடும்
தானே சிவனெனுந் தன்மைய னாமே.

பொழிப்புரை :

ஈசத்துவத்தைப் பெற்ற யோகி இறைவன் செய்யும் செயலெல்லாம் தானே செய்ய வல்லவனாவான். இதனால், `சிவன் இவனே` என உலகத்தாரால் எண்ணப்படும் தன்மை உடையவனாய் இருப்பன்.

குறிப்புரை :

`படைத்திடும், அளித்திடும்` என்னாது, ``வல்லவ னாயிடும்`` என்றதனால், ``அத்தன்மையனாதலன்றி, அச்செயல் களைச் செய்ய அவன் முற்படான்` என்பது கூறப்பட்டதாம். பவ யோகியின் ஈசத்துவம் இதனின் மிகச் சிறியதாயினும் அதுகொண்டு அவன் பலவும் செய்ய முற்பட்டு, அச்செயல்களால் வினையைத் தேடிக்கொள்வான்; ``சிவயோகி பிறப்பிற்கு அஞ்சுதலின், இது கொண்டு யாதும் செய்ய முற்படான்`` என்க.
எல்லாம் அறியும் அறிவுறினும் ஈங்கிவர் ஒன்(று)
அல்லா தறியார் அற. -திருவருட்பயன், 93
என்றது இங்கே நினைக்கத்தக்கது. இவ்வாறாகவே உலகத்தார் இவனை, ``சிவனே`` என்றும், ``சிவனது கூற்றின் அவதாரம்`` என்றும் கூறுவனவெல்லாம் மயக்க உரையேயன்றி, உண்மை யுரையாகா என்றற்கு, ``தானே சிவன்`` என்று ஒழியாது, ``தானே சிவன் எனும் தன்மைய னாமே`` என்றார். ``எவ்வாற்றானும் பிறப்பது உயிரே யன்றி, இறையாகாது`` என்பது கருத்து.
இதனால், ஈசத்துவத்தின் பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 47

தன்மைய தாகத் தழைத்த கலையினுள்
பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே.

பொழிப்புரை :

ஈசத்துவத்தை அடைந்தோன், பலவாகப் பரந்து விரிந்து கிடக்கின்ற தத்துவங்களை, சத்தியின் தன்மையால் அமைந்த நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளுள் அடங்கி நிற்பனவாக உணர்ந்து ஓராண்டு நிற்பானாயின், சூக்குமப் பொருளாகிய மெய்ப்பொருளைக் காண்பான்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. ``பூதம்`` என்றது தத்துவத்திற்கு உபலக்கணமாய் பின் ஏனை நான்கு அத்துவாக்களுக்கும் உபலக்கணமாயிற்று. தத்துவங்களுள் மிகவும் தூலமாய்ப் பலராலும் அறிந்துரைக்கப் படுவன பூதங்களாதல் பற்றி அவற்றையே பலவிடத்தும் எடுத்தோதினார். உலகம் முழுதும் பஞ்ச பூதங்களுள் அடங்குவனவாகக்கொண்டு, அவற்றை அதிதேவர்கள் வழி வயப்படுத்தல் பொதுநெறியாகிய வேதநெறி; உலகம் அனைத்தும் சிவ சத்திக்கு நேரே தொடர்புடைய பஞ்ச கலைகளில் அடங்கி நிற்பனவாக வைத்து அவற்றின் அதிதேவர்வழி அனைத்துப் பொருள்களையும் வயப்படுத்துதல் உண்மை நெறியாகிய சைவநெறி. சிவசக்தியின் பெருமை உணரப்படுதல் சைவ நெறியில் உள்ள சிறப்பு. அதனால், ``தன்மையதாகத் தழைத்த கலை`` என்றார். பூதங்களை வயப்படுத்துதலால் மருட்சித்திகளன்றி, அருட்சித்திகள் சித்தியா. அதனால் அருட்சித்தி வேண்டுவோர் சைவ நெறியிலே நிற்றல் வேண்டும். அங்ஙனம் நின்று அருட்சித்தி பெற்றோர் சிவனை அடை தற்குத் தடையில்லையாகலின், `பூதத்தைக் கலையினுள் மறித்திடில் மெய்ப்பொருள் காணும்` என்றார். இதனானே, நிலம் முதலிய பூதங்கட்குச் சொல்லப்படும் முறைமைகள் எல்லாம், நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகட்கும் ஏற்புடையனவாதல் அறியப்படும். மென்மை இங்கு நுண்மையைக் குறித்தது.
இதனால், பரசித்தியுள் ஈசத்துவத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவம்
கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாம்
தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.

பொழிப்புரை :

ஈசத்துவத்தால் மெய்ப்பொருட் காட்சி கிடைத்த பின், அதனால் விளையும் பயன் யாது எனின், சித்திகள் எல்லா வற்றுள்ளும் சிறந்த `வசித்துவம்` என்னும் சித்தி பெறுதலேயாம். வசித்துவ சித்தியைப் பெற்றோன், இறைவனுடையவாய்ப் பொருந்தி யுள்ள எல்லா உயிர்கட்கும் தானே மெய்ப்பொருள் போலும் தன்மையை உடையவனாவான்.

குறிப்புரை :

என்றது, `எல்லா உயிர்களும் அவனையே இறைவனாகக் கருதி அச்சமும் அன்பும் உடையவாய் அவன்வழி நிற்கும்` என்பதாம். கைப்பொருளாகக் கலந்த உயிர்களாவன ஈசத் துவத்தால் தனக்குக்கீழ்ப்பட்டு நின்ற உயிர்கள். பின்னிரண்டடிகள் வசித்துவமாவது இதுவென்பதை விளக்கின. முதல் அடியில் குற்றிய லுகரம் கெடாது நின்று உடம்படு மெய் பெற்றது. இம்மந்திரம் வல்லின எதுகை பெற்றமை காண்க.
இதனால், வசித்துவ சித்தியின் இயல்பும், அச்சித்தி கைவருமாறும் கூறப்பட்டன. மருட்சித்தி, மருளுடைய உயிரை யன்றி, அருளுடைய உயிரை வசம் செய்யாது. அருட்சித்தி, அனைத்து உயிரையும் வசம் செய்யும். இதுவே அவை தம்முள் வேற்றுமை என்க.

பண் :

பாடல் எண் : 49

தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
புன்மைய தாகிப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு பல்லுயிர்கட்கும் மெய்ப் பொருள் தன்மையனாய்ப் பெருமை பெற்று நிற்கின்ற அருளொளிக் கதிர வனாகிய சிவயோகி மெய்ப்பொருளைக் கண்டவனாதலின், ஐம்புல ஆசைகள் அருவருக்கத்தக்க பொருள்களாய்த் தலைகாட்டா தொழிய, ஞானஉருவான திருவருளையே நோக்கி நிற்பான்.

குறிப்புரை :

``கண்டிடின்`` என்னும், `செயின்` என்னும் எச்சம் காலம் உணர்த்தாது. காரண மாத்திரையில் நின்று, `அதனால் அதன் காரியம் நிகழ்தல் உறுதி` என்பதை விளக்கி நின்றது; ஒருவன் தான் மெலியனாயிருந்தும் தனது நிலையை அறியாது வலியவன் மேற் சென்றபொழுது, அதனைக் கண்டோர் `அவன்மேற் சென்றானாயின், இவன் விரையக் கெடுவான்` என்பதிற் போல. ``புன்மையது`` என்பது, பன்மை ஒருமை மயக்கம். நன்மை - ஞானம்; ``கொடி`` என்பது உருவகமாய் அஃறிணையாயினமையின், அதன்கண் இரண்டன் உருபு தொக்கது. `பகலவன் கண்டிடின் காணும்` என்க.
இதனால், அருட் சித்தியாகிய வசித்துவம் பெற்றோர், அதனால் உலகப் பயன் கொள்ள நினையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி ஆகம் அறிந்திடில் ஓராண்டுப்
பொற்கொடி யாய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே.

பொழிப்புரை :

ஞான உருவான திருவருளோடு கூடி, அதனது இன்பத்தை யோகி ஒருவன் அறிவானாயின், அதன் பின் ஓராண்டுக் காலத்தில் பொன்மயமான கொடிகளும், தருக்களும் நிறைந்த விண்ணுலகங்களில் சென்று மீள வல்லவனாவான். ஆயினும், அவன், மேருவை அடைந்து பொன்னிறத்தைப் பெற விரும்புகின்ற காக்கையினது ஆசைபோன்ற அவ்வாசையை உடையனாவனோ!

குறிப்புரை :

அஃதாவது, `அச்சித்தியின் வழி விண்ணவர் உலகங்களிற் சென்று மீளுதலால் தானும் விண்ணவன் எனச் சொல்லப் படும் பெருமையை அடைய விரும்புவனோ! விரும்பான்` என்பதாம். ஆகம் - உரு; இயல்பு. ``வரும்`` என்றது, `வரத்தக்க ஆற்றல் பெறும்` என்றபடி. கல் - மலை; அஃது இங்கு, மேருவைக் குறித்தது. இதனை அடுத்துள்ள `கொடி` காகம். காகம் மேருவை அணுகியவிடத்து அதன் ஒளியால் தானும் பொன்னிறம் உடையதுபோலத் தோன்றுதலன்றி, உண்மையில் தன் நிறம் மாறப் பெறுதல் இல்லை. அதுபோல, மனித உடம்பு விடப்படுங்காறும் யோகி உண்மையில் தேவனாதல் இல்லை, ஆகவே, இவ்வுடம்பில் நின்றே, `தேவன்` எனப்பெறும் பொய்யான புகழைச் சிவயோகி விரும்பான் என்பதாம். ஏகாரவினா எதிர்மறைப் பொருள் உணர்த்திற்று. இனி ஏகாரத்தை ஈற்றசையாக்கின், ``கற்கொடி ஆகிய`` என்பதற்குக் `கல்லின்மேல் முளையாத கொடிபோலத் தனது உள்ளத்தில் தோன்றாத ஆசையையுடையவனாவன்` என உரைக்க. `தோன்றாத ஆசையை உடையவன்` என்பது, `ஆசை தோன்றாமை உடையவன்` என்னும் கருத்தினதாம்.
இதனால், `அட்டமா சித்திகளும் கைவந்தவர்கட்குப் பிற உலகங்களிலும் செல்லும் ஆற்றல் கூடும்` என்பதும், `அது கூடினும், சிவயோகி, அவ்வாறெல்லாம் உழலும் தன்மையன் அல்லன்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 51

காமரு தத்துவ மானது கண்டபின்
பூமரு கந்தம் புவனம தாயிடும்
மாமரு வுன்னிடை மெய்த்திய மானனாம்
நாமரு வும்ஒளி நாயக மானதே.

பொழிப்புரை :

ஈசத்துவ சித்தியிற்றானே, விரும்பத் தக்க மெய்ப் பொருட்காட்சி கிடைத்து விடுதலால், அதன்பின் எல்லா உலகமும், பூவினுள் அடங்கித் தோன்றும் மணம்போல உன்னிடத்தே அடங்கித் தோன்றும். அதனால் அவ்வுலகங்கட்கெல்லாம் வியாபகமாம் தன்மையைப் பொருந்திய உன்னிடத்தில், அவற்றிற்கெல்லாம் நீயே உண்மைத் தலைவனாய்நிற்க, புகழ்பொருந்திய அருள் ஒளியே தலைமைபெற்று நிற்கும்.

குறிப்புரை :

`உலகங்கட்கும், சிவயோகிக்கும் இடையே உள்ள இழி வுயர்வுகள் மிகப் பெரியவாகலானும், அவனது இச்சா ஞானக் கிரியைகட்குத் திருவருளே முதலாய் நிற்றலானும் அவன் வசித்துவ சித்தியால் உலகப் பயனை நாடான்` என்றவாறாம். தத்துவம் - மெய்ப் பொருள். `புவனம் பூ மரு கந்தம் ஆயிடும்` என்க. இதனுள் ஆக்கம், உவமை குறித்து நின்றது. மா - பெருமை; ``அத்தகைய மா மருவு உன்னிடை`` எனச் சுட்டு வருவித்துக்கொள்க. மெய்த்தல் - உண்மையாகி நிற்றல். `மெய்த்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத் தலாயிற்று. ``இயமானன்`` என்பது இழிவழக்கில், ``எசமானன்`` என வழங்கும். `வேட்போன்` என்பது இச்சொல்லின் பொருளாயினும், இது ``தலைவன்`` என்னும் பொருளில் வழங்கும். நா - புகழ்; ஆகு பெயர். ``நாம் மருவும்`` எனப் பிரித்து, நாயனார் சிவயோகியைத் தம்மோடு உளப்படுத்துக் கூறியதாகவும் உரைக்கலாம்.
இதனால், மேலதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 52

நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டுபின்
பேயக மாகிய பேரொளி காணுமே.

பொழிப்புரை :

சிவயோகியானவன் எல்லாவற்றுக்கும் தலைமை யான நல்ல திருவருள் ஒளியைக் கண்டபின் அதனையே தனக்கு உறைவிடமாகக் கொண்டு அதனிடத்தே இருத்தலல்லது, அவரவரது புண்ணியங்கட்கு ஏற்ப அவரவருக்கு உரியவாய் உள்ள உலகங்களிலே சென்று, அவற்றைக் கண்டு, பின், அவைகளில், காவல் மிகுதியால் அச்சத்தைத் தரும் தலைமை இடத்தில் வீற்றிருக்கின்ற அவற்றின் தலைமைக் கடவுளரைக் காண்கின்ற அச்செயலை விரும்புவானோ! விரும்பான்.

குறிப்புரை :

``அகமான புவனங்கள் போய்க் கண்டு`` என்க. இதில், ``அகம்`` என்றது, ``உரிமையாய இடம்`` என்றவாறு. பே, ``அச்சம்`` எனப் பொருள்தரும் உரிச்சொல்.(தொல். சொல். 365) உரிச்சொல்லாதலின் யகர உடம்படுமெய் பெற்றது. அகத்துள்ளாரை ``அகம்`` என்றும், ஒளியுடையாரை ``ஒளி`` என்றும் பான்மை வழக்காற் கூறினார். ``பேரொளி`` என்பதில் பெருமை, தலைமை.
இதனால், `திருவருளை அடைந்த சிவயோகி, ஏனைப் பவயோகிகள் போலப் பல புவன இன்பங்களையும், புவனபதிகளது அருளையும் நாடுதல் இல்லை` என்பது கூறப்பட்டது. `கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு` (தி.8 திருச்சதகம், 2) என்றற் றொடக்கத்து அருட்டிரு மொழிகள் இங்கு நினைவுகூரத் தக்கன.

பண் :

பாடல் எண் : 53

பேரொளி யாகிப் பெரியஅவ் வெட்டையும்
பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே.

பொழிப்புரை :

பவயோகியர்க்குப் பெரும் பேறாய்த் தோன்றி விரிந்து விளங்குகின்ற, மேற்சொல்லிய உலகங்கள் எட்டனையும் தான் இருக்கும் நிலவுலகத்தோடு ஒத்தனவாகவே உணர்ந்து, அவற்றின் மேல் மனம் செல்லாது அடங்கிய சிவயோகி, இந்நிலவுலகம் முழு தினும் பொருந்தியுள்ள ஒன்றான ஒளியாகிய பிராண வாயுவின்வழிக் காணத்தக்க குண்டலி ஒளியைப் படிமுறையில் பெருகக் காண்பான்.

குறிப்புரை :

`ஆகி` என்னும் எச்சம், `பெரிய` என்னும் பெயரெச்சக் குறிப்பைக் கொண்டது. மேல், `புவனங்கள்` என வாளா கூறியதனை, `எட்டு` என வரையறுத்துணர்தல் வேண்டும் என்பார், `அவ் எட்டையும்` எனச் சுட்டிக் கூறினார். அட்டமா சித்தி வகையில் உலகங்கள் எட்டாமாறு மேலே (பா.616) காட்டப்பட்டது.
``பாரொளியாக`` என்பதில், ``ஒளி`` என்பது `புலம்` என்னும் பொருட்டாய் நின்றது, இதனுள்ளும் ஆக்கம், உவமைப் பொருட்டு. பதைப்பு மனோவேகம்; அஃதாவது ஆசை. நிலவுலகத்தில் உயிர்களை நிலவச்செய்து அதற்கு விளக்கத்தைத் தருவது பிராணவாயுவாகலின், அதனை, ``தரணி முழுதுமாம் ஓரொளி`` என்றார். ``கால்ஒளி`` என்பதனை, ``காலால் அறியப்படும் ஒளி`` என விரிக்க. யோகத்தின் பயன், பிராணாயாமத்தால் குண்டலி ஒளியை அகத்துக் காணு தலாதலின், அங்ஙனம் காணப்படும் ஒளியை, ``காலொளி`` என்றார். `தாரொளியாக` என்பதனை, ``காரொளி`` என்பதன்பின் கூட்டுக. தார் - ஒழுங்கு; என்றது படிமுறையை. யோகியர்க்குக் குண்டலி ஒளி, `மின்னல், விண்மீன், விளக்கு, பகலவன், திங்கள்` என்னும் இவற்றின் ஒளிபோலப் படிமுறையாற் பெருகித் தோன்றும் என்பது மேலே (612) கூறப்பட்டது. இக்காட்சியை இங்குவந்து கூறியது, `பரசித்தி` எனத்தக்க வகையில் அருள் நிலை அனைத்தும் கைகூடிய பின்பே யோகத்தில் மனம் ஒருங்கி அதனை முற்றுப்பெறச் செய்யும் என்பது உணர்த்துதற்கு. இது, புதியதோர் அரண்மனையிற் புகுந்தவன் முதற்கண் அதனை முழுதும் சென்று கண்ட பின்னரே உரிய இடத்தில் அமர்ந்து இன்புறுதல் போல்வதாம்.
இதனால், பரசித்தி முழுதும் கைவரப் பெற்றபின்பே சிவயோகம் முற்ற முடிவதாதல் கூறப்பட்டது.
`உலகத்தை உணரும் பவயோகத்தினும், திரு வருளை உணரும் சிவயோகமே சிறந்தது` என்பதை உணர்த்துதற்கு அத்திருவருளே யோகத்திற்கு முதலாய் நிற்குமாற்றை இவ் வதிகாரத்துள் இங்கு நின்றும் பதினெட்டுத் திருமந்திரங்களால் உணர்த்துகின்றார்.

பண் :

பாடல் எண் : 54

காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது வக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்ஞூற் றொருபத்து மூன்றையும்
காலது வேமண்டிக் கண்டஇவ் வாறே.

பொழிப்புரை :

பிராணவாயுவும், உயிரும் தம்முள் இயைந்த வாற்றைக் கூறுமிடத்து, பிராணவாயு, உடம்பில் உள்ள நாடிகள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற சிவசத்தியுடன் முன்னர்ப் பொருந்திப் பின்னர், அஃது `ஐஞ்ஞூறு` என்றும், `பத்து` என்றும், `மூன்று` என்றும் சிறந்தெடுத்துக் கூறப்படுகின்ற நாடிகளில் நிறைந்து நிற்கும் வகையினாலேயாம்.

குறிப்புரை :

``கொடி`` என்றது, உடம்பிற் பொருந்தியுள்ள நாடியை. அந்நாடிகள் இவை என்பது நூல்களின்வழி நன்கறியப்பட்டது ஆதலின், ``அக்கொடி`` எனப் பண்டறி சுட்டாற் கூறினார். கொடி நாயகி - கொடிகளில் நிறைந்து நிற்கும் தலைவி. ``நாயகி தன்னுடன்`` என்பதன்பின், `ஆய்` என்பது எஞ்சிநின்றது. உடம்பில் உள்ள நாடிகள் `எழுபத்தீராயிரம்` என்பதுயோகநூல் துணிவு. அவற்றுள், ஐந்நூறு சிறந்தன. அவற்றுள்ளும் சிறந்தன பத்து. அவைமுன்னே (பா.562) சொல்லப்பட்டன. அவற்றுள்ளும் சிறப்புடையன மூன்று; அவை, `இடை, பிங்கலை, சுழுமுனை` என்பன. `ஐந்நூற் றொருபத்து மூன்று` என்றது உம்மைத் தொகையேயன்றி, அத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையன்று. மண்டுதல் - செறிந்து நிற்றல். கண்ட - காணப்பட்ட. இவ்வாறே - இவ்வாற்றினாலேயாம். இத்திரு மந்திரத்துள் சத்தியின் செயல்களை வாயுவின்மேல் வைத்துச் சொற் பொருட் பின்வருநிலையாக அருளிச்செய்தார். இதனுள் குற்றிய லுகரம் பலவிடத்தும் கெடாது நின்று, உடம்படு மெய் பெற்றது.
இதனால், `யோகத்திற்கு முதலாகிய பிராண வாயுவை யோகிக்குக் கூட்டுவித்துப் பின் காத்து நிற்பது திருவருளே` என்பது கூறப்பட்டது. எனவே, உடலில் உள்ள ஆற்றல்கள் பலவும் இயற்கையாய் அமைந்தன எனக் கருதும் பவயோகிகளது கருத்தை விலக்கி, உண்மை யுணர்த்தியவாறாயிற்று.

பண் :

பாடல் எண் : 55

ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிரம் முந்நூற் றொடைஞ்சுள
ஆறது வாயிர மாகும் அருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே.

பொழிப்புரை :

யாறு போல உண்டாகின்ற விந்துவாகிய அமுதத்தை உடைய ஆஞ்ஞையில் அந்த யாறு பாய்கின்ற வாய்க்கால்கள் ``ஆயிரமும், முந்நூறும், ஐந்தும்`` என்று கூறத்தக்க அளவில் உள்ளன. அந்த அரிய வழியிலே அந்த அமிர்த யாறு பெருகிப் பாயச் செய்து உடம்பை வளர்ப்பன இடை நாடி பிங்கலை நாடி என்னும் இருநாடிகளில் நிற்கும் இரு சத்திகளே யாகும்.

குறிப்புரை :

ஆகும் - உண்டாகின்ற. ``ஆறு`` என்பது, ``யாறு, வழி`` என்னும் பொருள்களில் மாறி மாறி வந்தன. ஓடு, எண்ணிடைச்சொல். அஞ்சாவன, இடை, பிங்கலை, சுழுமுனைகளோடு, கண்ணில் நிற்கும் காந்தாரியும், உடம்பெங்கும் நிற்கும் அத்தியும் என்க. பின்னர் ``ஆயிரமாகும்`` என்றது, முன்னர்க் கூறிய முந்நூறு அஞ்சு என்பவற்றிற்கும் உபலக்கணமாய் நின்றது.
இதனால், ``சிவ சத்தி, இடை நாடி பிங்கலை நாடிகளில் நின்று பிராணனை இயக்குமாற்றால் உடல் உறுதிக்கு இன்றியமையாத விந்துவை உண்டாக்கிப் பெருக்குவது`` என்பது உணர்த்து முகத்தால், `யோகத்தில் பருகத் தக்க அமுதத்தை முன்பே தோற்றி வளர்ப்பது திருவருளே` என்பது கூறப்பட்டது. இதனுள்ளும், ``பிராண வாயு இடைகலை பிங்கலை வழியாக இயங்கி உடலை நிலைப்பித்தல் இயற்கை`` எனக் கருதுவாரது கருத்து விலக்கப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 56

இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதொ டொன்றாய்த்
திரண்டது காலம் எடுத்தது அஞ்சே.

பொழிப்புரை :

இடைகலை பிங்கலைகளின்மேல் சுழுமுனைத் தலையில் நிற்கும் சத்தி, இடையும், பிங்கலையுமாகிய இரண்டன் வழியாகப் பிராணனை இயக்கிச் செயல் புரிகின்ற முறையைச் சொல்லுமிடத்து, இரண்டாகிய அந்தப் பிராணன் ஆயிர நாடிகளோடும், ஐம்பத்தோர் அக்கரங்களோடும் கூடியுள்ள ஆறு ஆதாரங்களில் பொருந்தி, ஐந்து காலத்தைக் கொண்டிருக்கும் வகையிலேயாம்.

குறிப்புரை :

``ஆயிரம்`` என்றது, `பல` என்றவாறு. ஐம்பத்தோர் அக்கரங்களும், ஐந்து காலமும் முன்னே (பா.573, 627) கூறப்பட்டன. அவற்றை இங்கு மீளக் கூறியதன் கருத்து, `யோக நிலையில் வேண்டப் படும் அவற்றை எல்லாம் அவ்வாறாக அமைத்து நின்றது திருவருளே` என்பது உணர்த்துதலாம். `திரண்டது, எடுத்தது` என்னுந் தொழிற் பெயர்கள் `எழுவகை` என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் நின்றன. `காலம் அஞ்சு எடுத்தது` என்க.
இதனால், `ஆறு ஆதாரங்களை ஆக்கிக் காத்து நிற்பது திருவருளே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 57

அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே.

பொழிப்புரை :

சதாசிவ மூர்த்தியின் சத்தி, பத்துக் கைகளில் பத்து ஆயுதங்களை ஏந்தி இருப்பவளாகக் கிரியாவான்கள் கருதுவர். ஆயினும், யோகத்தில் அவளை இரண்டாயிரம் கைகளில் இரண்டா யிரம் ஆயுதங்களை ஏந்தி நிற்பவளாகக் கூறலாம். அவள் மேற்கூறிய ஐந்து காலங்களிலும் தங்கி நின்று அருளுதல், உயிர் ஒன்றையேயாம்.

குறிப்புரை :

சதாசிவமூர்த்தி, வேறுபட்ட ஐந்து நிறங்களை உடைய ஐந்து முகங்களையும், அவற்றிற்கு ஏற்ப அமைந்த பத்துக் கைகளில் பத்து ஆயுதங்களையும் உடையராயிருத்தல் பற்றி அவரது சத்தியையும் அத்தன்மையளாகவே கூறினார். எனவே, `அஞ்சுடன் அஞ்சு முகம்` என்றதில் முதலில் உள்ள ஐந்து, ஐந்து நிறங்களைக் குறிப்பதாம். மூன்றாம் அடியில் `அஞ்சுடன் அஞ்சு` என்பதனையே ``அஞ்சு`` எனச் சுருங்க ஓதினார். ``இரண்டது ஆயிரம்`` என்றது மேலைத் திருமந்திரத்தில் இரு பிராணனும் ஆயிர நாடிவழிச் செல்லுதலைக் குறித்ததாம். `அஞ்சு காலத்தும் ஒன்றையே எடுத்து உள்ளும்` என்க. உள்ளுதல் - நினைத்தல்; அருளுதல். `காலம்` என்னும் பொதுமைபற்றி, `அஞ்சது` என ஒருமையாற் கூறினார். எனவே, `அஞ்சாகிய அக்காலம்` என்பது பொருளாயிற்று. `காலத்தும்` என்பதில் அத்தும், உம்மையும் தொகுத்தல் பெற்றன. ``ஒன்று`` என்பதில், இரண்டன் உருபு இறுதிக்கண் தொக்கது.
இதனால், நாடிகள் பலவற்றையும் இயக்கி உயிரைத்தாங்கி நிற்பது திருவருளே என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 58

ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண்டு ஊர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே.

பொழிப்புரை :

தன்னோடு ஒப்பது ஒன்று இல்லாது, தானே தனிப்பொருளாய் நிற்கும் சத்தி, பொதுவில் இரு நாடிகள் இயக்கி நின்ற பிராணனை யோக நிலையில் நடுநாடியாகிய ஒன்றன்வழியே செலுத்தி மேல் ஏறுகின்ற தன்மையைச் சொல்லுமிடத்து, அவ்வொரு வெற்றிச் செயலே அளவற்ற வெற்றிச் செயலாய் அமையும்படி ஒரு காலத்துள்ளே உயிரை உயர்த்தி, அருளுதலைச் செய்வாள். ஆதலின், அவளையே நினை.

குறிப்புரை :

`காலினை ஒன்றதன் வழியாகக் கொண்டு ஊர்வகை சொல்லிடின்` என்க. `ஒன்றது வாகிய வென்றி` என உரைக்க. கொள், முதனிலைத் தொழிற்பெயர். `ஆயிரம் ஆயிரம் ஆக` என்னும் ஆக்கச் சொல் தொகுத்தலாயிற்று. இவ்வொரு வெற்றியே பல வெற்றியோடு ஒத்தலாவது, அபர சித்தி, பரசித்தி இரண்டாலும் அனைவரிலும் மேம்படல், ``ஒன்றது காலம்`` என்றது, `எடுத்த பிறப்பிலே` என்றவாறு. முன்னுதல் - நினைத்தல்.
இதனால், `யோகம் கைகூடச் செய்வதும் திருவருளே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 59

முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடில்
முன்னுறும் ஐம்பதொ டொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே.

பொழிப்புரை :

உயிரோடு உடல் தொடர்பு பட்டபொழுதே தான் எழுந்து இயங்குகின்ற இடைகலை பிங்கலைகளின் தலைவியாகிய சத்தியைப் பற்றி நின்று இயங்குகின்ற பிராணவாயு, பின் முடிவுபெறும் வகையைச் சொல்லுமிடத்து, ஐம்பத்தோர் அக்கரங்களில், பிருதிவி காலம் முதலிய ஐவகைக் காலத்திலும் இயங்கி முடியும் வகையேயாம்.

குறிப்புரை :

`அக்கரங்கள் ஐம்பத்தொன்று` என்றது, குண்டலியின் வழி உணர்வு பலவகையாய் நிகழ்தலைக் கூறியவாறு. எனவே, பிராணவாயு உடல் நிற்குங்காறும் உயிருக்கு உணர்வுகள் பலவும் எழுதற்குக் காரணமாய் இயங்கியிருந்து முடிந்து விடும் என்றதாயிற்று.
இதனால், `வாழ்நாளளவும் உணர்வுகள் பலவும் நிகழுமாறு பிராணவாயுவை இயக்கி உயிரினது பக்குவத்தை முதிர்வித்து வருவது திருவருளே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 60

ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பத்தொன் றொன்பது
மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே.

பொழிப்புரை :

ஆய்ந்துணர்தற்கு அரியவாகிய மேற்சொல்லிய சிவசத்தி, தன்னுடனாய் இயங்கிவருகின்ற பிராண வாயுவை வரையறை செய்யும் வகையைக் கூறுமிடத்து, இயல்பாக இயக்குகின்ற மூச்சு (சுவாசக்) கணக்கிலிருந்து, ஆராயவருகின்ற ஐந்நூற்று நாற்பது மூச்சு அழிந்தொழிய எஞ்சியவை வலிமையுற்று உள்நிற்றலாம்.

குறிப்புரை :

இயல்பான மூச்சுக்கணக்கு, ஒரு விநாடிக்கு ஆறாக, ஒருநாளைக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு (6 x 60 x 60 என்பது நன்கறியப்பட்டது ஆகலின், அதனை எடுத்துக்கூறாது) வாளா, `வாயு அளப்பது` என்றார். அளப்பது - கணக்கிடுதல். ``மாய்தல்`` என்பது ஆற்றலை இழந்து பயனின்றிக் கழிதலாம். `மூச்சுக்கணக்கில் இயங்கி உடலை நிலைப்பிக்கின்ற பிராணவாயு, ஒவ்வொரு மூச்சிலும் நாற் பதில் ஒருகூறு தனது ஆற்றல் கெடுகின்றது` என்பதை இருபத்தோரா யிரத்து அறுநூற்றில் ஐந்நூற்று நாற்பது மாய்கின்றன, என்றார். எனவே, `மக்களது வாழ்நாள் அளவு நூறாண்டு` என்னும் பொதுக் கட்டளை, தொண்ணூற்றேழரையாண்டாகவே முடியும் என்பது கூறினாராயிற்று. இதனைக் கூறியது, `யோகிகளுக்குத் திருவருள் இம் மாய்வினை நீக்குதலே யன்றிப் பிராணாயாமத்தால், பிராணனின் புறக்கழிவு மூன்றில் ஒருபங்கை (பன்னிரண்டில் நான்கினை)க் கழியாது காத்தும், கும்பகத்தால், ஒரு நாளைக்கு `இருபத்தோரா யிரத்து அறுநூறு` என்னும் மூச்சுக் கணக்கினைக் குறைத்தும் வாழ் நாளை நீட்டிக்கச் செய்கின்றது என்பதும், யோகியரல்லாத பிறருள் நெறிப்பட்ட வாழ்க்கை இல்லாதார்க்குத் தீக்காரணங்கள் பலவற்றால் பிராணன் பல வகையிலும் வலிகுன்ற மேற்குறித்த, `தொண்ணூற் றேழரை` என்னும் அளவினும் குறையப் பண்ணும் என்பதும் உணர்த்துதற்காம்.
``ஆய்வரும்`` மூன்றில் முதலது, `ஆய்தற்கு அரிய` என்றும், பின்னது `ஆய்தல் வருகின்ற` என்றும், இடையது `பொருந்தி வருகின்ற` என்றும் பொருள் தந்தன. மாய் வருவாயு - மாய, எஞ்சுகின்ற வாயு. வளப்பு - வளமை. `வளப்பாக` என ஆக்கம் வருவிக்க. `முப்பதொடொன்பது` என்பது பாடம் அன்று.
இதனால், பிராண வாயுவின் இயக்க வேறுபாடு வாயிலாகத் திருவருள் மக்கள் உலகை நடத்தும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 61

இருநிதி யாகிய எந்தை யிடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுந்தே.

பொழிப்புரை :

உயிர்களின் வாழ்நாளுக்கு முதலாய் உள்ள பிராண வாயு உயிர்கட்கு இருநிதி (சங்க நிதி, பதும நிதி) போல உதவுகின்ற இறைவனது திருவருளிடத்து இயங்கும் நிலை உண்டாயின், அஃது, `இருபத்தோராயிரத்து அறுநூறு` என்னும் கணக்கினை விட்டு, `இருநூற்று முப்பத்து எட்டு` என்னும் நிலையை அடையும்.

குறிப்புரை :

இஃது இயற்கைக் கணக்கில் சிறிதுகூடத் தொண்ணூற்றில் ஒருபங்காதல் அறிக. மூச்சுக் கணக்கு இங்ஙனம், இயற்கையினின்றும் தொண்ணூற்றில் ஒருபங்காய்க் குறையவே, வாழ்நாள், சிறிது குறைய ஒன்பதினாயிரம் யாண்டாதல் பெறப்படும். மூச்சுக் கணக்கினை இதற்குமேல் குறைத்துக் கூறாமையால், இவ்யாண்டு மேல் எல்லையாதல் அறியப்படும். பிராணன் திருவருளிடத்து இயங்குதலாவது, ஆஞ்ஞை யோகத்திலே நிற்றல். `எழுத்தே` என்பது பாடம் ஆகாமையை, வருகின்ற மந்திரத்தின் தொடக்கச் சொல்பற்றியும் அறிக.
இதனால், பிறர்க்கு வாழ்நாளை வரையறுக்கின்ற திருவருள் சிவயோகியர்க்கு அதனை மிகுவிக்குமாறு கூறப்பட்டது. `பவ யோகியர்க்கு இந்நிலை கூடாது` என்க.

பண் :

பாடல் எண் : 62

எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற் றிருபத்தொன் பானது நாலாய்
எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.

பொழிப்புரை :

யோகக் காட்சியில் தோன்றுகின்ற ஒளியிடத்தில் அறியப்படும் சத்தியினது இடமாகிய ஆஞ்ஞையில் (சுழுமுனை வழியே) பிராணவாயு அடைவதனால் உளவாகும் நிலையைச் சொல் லுமிடத்து, மூலாதாரத்தில் உள்ள அக்கினி மேல் எழுந்து, எழுநூற் றிருபத்தொன்பது நாடிகள் இடையில் உள்ள நான்கு ஆதாரங்களிலும் தொடர்புபட்டு நிற்க, அவற்றின் வழி உடம்பெங்கும் பரவி நிற்கும்.

குறிப்புரை :

`இவ்வக்கினிப் பரப்பால் இங்கெல்லாம் குண்டலி சத்தி விளங்கி நிற்கும்` என்பது கருத்து.
இதனால், யோகியர்க்கு விளங்குகின்ற குண்டலி விளக்கத்திற்குத் திருவருளே முதல் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 63

ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்
ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட
எட்டது கால்கொண் டிடவகை யொத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.

பொழிப்புரை :

ஆறு ஆதாரங்கட்குமேல் ஏழாவதான உச்சி யளவும் பிராணவாயுவை ஏற்றியும் இறக்கியும் பயின்றால், ஆறு ஆதாரங்களிலும் தாரையாய்ப் பாயும்படி திருவருள் அமுதத்தை விளைத்து நிற்கும். இனி எட்டாந்தானமாகச் சொல்லப்படுகின்ற தலைக்குமேல் பன்னிரண்டங்குலம் பிராண வாயுவை நீக்கி நிற்றலால் ஆதார வேற்றுமைகள் நீங்கியபின், சுழுமுனையோடு மற்றை ஒன்பது நாடிகளிலும் பிராண வாயு ஒருதன்மைத்தாய் நிற்பதாம்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. `கால்` மூன்றனுள் முதலது, வாய்க்கால். ஏனைய இரண்டும், காற்று. `ஏழு, எட்டு` என்பவை அவ்வெண்ணு முறைக்கண் நின்ற இடத்தைக் குறித்தன. அமுதத்தை `இரதம்` (ரசம்) என்றார். விளைத்தற்கு வினை முதலாக மேற்சொன்ன நாயகியைக் கொள்க. இரட்டுதல் - மாறி மாறி வரச்செய்தல். யோகிகள் பிராண வாயுவைச் சுழுமுனை வழியில் மேல் ஏற்றவும், கீழ் இறக்கவும் வல்லராயிருப்பர். அவ்வன்மையைப் பிர மரந்திரம் வரையிலும் பெற்றவர்க்குச் சந்திர மண்டலத்திலுள்ள அமுதம் தாரையாய்க் கீழுள்ள ஆதாரங்களிலும் பாய்வதாம். துவா தசாங்குலத்தில் உணர்வு சென்றவர்க்கு வாயுப்பயிற்சி நீங்குவதால், அதனை, அந்த எட்டாந்தானம் வாங்கிக் கொண்டதாக ஓதினார். `அஃது அங்ஙனம் கொள்ள வைப்பவளும் நாயகியே` என்பது குறிப்பு. கொண்டு - கொள்ளுதலால். இடவகை - ஆதார நிலைகள். அவை ஒத்தலாவது, அவற்றில் வெவ்வேறு வகையாய் நிகழும் பிராணா யாமம் முதலிய உறுப்புக்கள் அங்ஙனம் நிகழாது துவாதசாங்குலத் தியானம் ஒன்றேயாக நிகழ்தல். `இந்நிலையில் பிராண வாயு, தானே தச நாடிகளிலும் நிறைந்து நிற்கும்` என்பார் ``ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே`` என்றார். சுழுமுனைப் பயிற்சியே சொல்லப்பட்டு வருதலின், அதனுடன் ஏனை நாடிகளிலும் ஒருபடித்தாய் நிற்கும் என்றவாறு. துவாதசாங்குலம் `நிராதாரம்` எனவும், அதனைக் கடந்த தாகிய துவாதசாந்தம், `மீதானம்` எனவும்படும். இத்திரு மந்திரத்தின் அடிகள் எண்ணலங்காரமாய், அடி முரண் பெற்று நின்றது.
இதனால், `ஆதார யோகம், நிராதார யோகம், மீதான யோகம் அனைத்தும் கைவரப் பெறுதல் திருவருளாலே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 64

சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்
துந்திச் சமாதி யுடையொளி யோகியே.

பொழிப்புரை :

`சந்திரகலை` எனப்படுகின்ற இடநாடிக் காற்றும், `சூரியகலை` எனப்படுகின்ற வலநாடிக் காற்றும் சிவனது திருமுடியில் உள்ள சந்திரகலை எனப்படுகின்ற பரஞானமாகிய திருவருளும் ஒன்றாய் நிற்கின்ற தன்மையை, அனைத்து நாடிகளும் கூடுகின்ற இடமாகிய ஆஞ்ஞையிலே விளங்கக் கண்டு அத்திருவருளேயாகி நிற்பான், உலகியலை அறவே ஒதுக்கித் தள்ளிச் சிவசமாதி ஒன்றையே உடைய சிவ ஞான யோகியே.

குறிப்புரை :

``தாணு`` என்றது, நீண்ட திருமேனியைக் குறித்தது. ``தாணுவின்`` என்றே போயினாராயினும், `தாணுவின்` தலையில் என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. சிவபெருமான் சந்திர கலையைத் திருமுடியில் அணிந்திருத்தல் ஞானத்தை உணர்த்தும் அடையாளமாம். திருவருளாகிய சிவனது சத்தி ஞானமாதல் வெளிப்படை. சிவபெருமான் தனது நெற்றிக்கு நேராகப் பிறையை அணிந்திருத்தல், இலாடத் தானத்தில் நின்று அறிவைத் தரும் குறிப்பினையும் உடையது. இடைநாடி வலநாடி வழிச்செல்லும் காற்றுச் சுழுமுனை வழிச் சென்று ஆஞ்ஞையை அடையத் திருவரு ளாகிய ஒளி விளங்குதலின், ஆஞ்ஞையை, சந்திரன் முதலிய மூன்றும் கூடும் இடம் என்றார். ஒளி யோகி - ஞான யோகி; என்றது சிவ யோகியை.
இதனால், ஆஞ்ஞையில் திருவருளைக் கண்டு தான் அதுவேயாய் நிற்றல் சிவயோகிக்கே கூடும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 65

அணங்கற்ற மாதல் அருஞ்சனம் நீவல்
வணங்குற்ற கல்விமா ஞான மிகுதல்
சிணுங்குற்ற வாயர்தம் சித்தி தாம்கேட்டல்
நுணங்கற் றிருத்தல்கால் வேகத்து நுந்தலே.

பொழிப்புரை :

மனைவியைத் துறத்தல், மக்கள் முதலிய பிற சுற்றத்தையும் துறத்தல், சிவனை வழிபடுகின்ற நூல் அறிவு மிகுதல், வாய்வாளாதிருக்கும் சிவயோகிகள் அடைந்துள்ள பர சித்திகளை அவரிடம் கேட்டல், உலகியலின் தாக்குதலால் உள்ளம் திரிவுபடா திருத்தல், பிராணாயாமத்தை எளிதாகச் செய்தல்.

குறிப்புரை :

இதனுடன், வருகின்ற திருமந்திரத்தையும் கூட்டி வினை முடிவு செய்க. அணங்கு - பெண்டு. அற்றம் - அறுதி. அருஞ் சனம் - சுற்றம். நீவல் - நீக்குதல். சிணுங்குதல் - முணுமுணுத்தல்.

பண் :

பாடல் எண் : 66

மரணஞ் சரைவிடல் வண்பர காயம்
இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்
அரனன் திருவுரு வாதல்மூ வேழாங்
கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே.

பொழிப்புரை :

மூப்பு இறப்புக்கள் இன்மை, அருள் வெளியிற் கலந்திருத்தல், தன் முன்னோர்களைத் தனது நற்செய்கையால் நற்கதி பெறச் செய்தல், சிவனது திருவுருவைத் தான் பெறுதல் என்னும் பத்து இயல்புகளையும், கைப்பொருள் போன்ற கேள்வியால் யோகநூற் பொருளை நன்குணர்ந்தோன் பெறுவான்.

குறிப்புரை :

செய்யுள்நோக்கிச் சரை (மூப்பு) பின் நின்றது. `இரணியம்` என்பது `இரணம்` என மருவிற்று. இரணிய பூமி - பொன்னுலகம். முற்றத் துறந்தவற்கல்லது இல்வாழ்க்கைக் கடன் முற்றும் நீங்காமையின், சிவயோகியும் தென்புலத்தார் கடன் செயற்பாலன் என்பது கூறினார். `இல்வாழ்வாரினும் சிவயோகிக்கு இஃது எண்ணிய வாறே எளிதின் முற்றுப்பெறும்` என்பது கருத்து. சிவயோகத்தின் இடைநிலைப் பயன்களில் மேலானது சாரூப பதவி பெறுதலாதலின், அதனை இறுதிக்கண் கூறினார். நன் திருவுரு - நல்ல திருவுருவம். மூவேழ் - மூன்றுடன் கூடிய ஏழ்; பத்து. ``ஆம்`` என்றது, `பொருந் துவான்; அடைவான்` என்றவாறு. ``மூவேழனையும் ஆம்`` என இரண்டாவது விரித்துக்கொள்க. ``கரம்`` என்னும் வடசொல், இறுதிப் போலியாகிய தமிழ் முடிபு ஏற்றது. ``கேள்வியால்`` என மூன்றாவது விரிக்க. கணக்கு - நூல். ``அறிந்தோன்`` என்றது, அறிந்து அந்நெறி நின்ற, மேற்கூறிய ஒளி யோகியை. `அறிந்தோன் ஆம்` என மேலே கூட்டி முடிக்க.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும், சிவயோகி பெறும் இடைநிலைப் பயன்களைக் கூறுமுகத்தால், அவனுக்குத் திருவருள் செய்யும் முதல் நலங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 67

ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகரறி வாரே.

பொழிப்புரை :

ஆர்வத்தால் சிவனைக் காணுதற்பொருட்டுக் கடல் சூழ்ந்த உலகம் முழுதும் கால்கள் நோவ நடந்து சுற்றி வரினும் பயன் இல்லை. அது நிற்க, சிவனுக்கு மிக இனியவராகிய சிவயோகியரே அவன் இருக்குமிடத்தை அறிந்து காண்பர்.

குறிப்புரை :

`காண, நடந்து வலம் வந்தும் பயனில்லை` என மாறிக் கூட்டுக. இது, சரியை கிரியைகளில் நின்று அன்பு முதிரப் பெற்றோரை நோக்கிக் கூறியதன்றிப் பிறரை நோக்கிக் கூறியதன்று என்பதை இடம் நோக்கி யுணர்க. ``நாதன் இருந்த நகர், ஆதார நிராதார மீதானங்களே`` என்பது குறிப்பு. ``இவற்றை அறிந்து அடைதல் சிவ யோகிக்கல்லது கூடாது`` என்பதாம்.
இதனால், திருவருட் காட்சிக்குச் சிவயோகம் இன்றி யமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 68

மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே.

பொழிப்புரை :

மகேசுரனுக்குக் கீழ் அயன், மால், உருத்திரன் என்னும் மூவரும் மூலாதாரம் முதலிய மூன்று ஆதாரங்களிலும் முறையே நிற்க, மகேசுரனுக்குமேல், `விசுத்தி, ஆஞ்ஞை, நா அடி, உச்சி, தலைக்குமேல் பன்னிரண்டங்குலம்` என்னும் இடங்களில் சதாசிவன், விந்து, நாதம், பரவிந்து, பரநாதம் என்போர் முறையே நின்று பயன் தருமாறு உயிர்களுக்கு அளித்த சத்தி, `பரை` எனப்படும் சிவனது திருவருளே.

குறிப்புரை :

இதனுள் ஒன்பது இடங்கள் குறிக்கப்பட்டமை புலனாகும். ``முன்`` எனவே, ``பின்`` என்பதும், அவ்விரண்டனாலும் `இடை` என்பதும் பெறப்பட்டன. `முன், பின்` என்பன `கீழ், மேல்` என்னும் பொருளவாய் நின்றன. கீழே உருத்திரன் ஈறாகவும், மேலே சதாசிவர் முதலாகவும் கூறினமையின் இடையே அனாகதத்தில் மகேசுரர் இருத்தல் பெறப்பட்டது. எனவே, நாயனாரது துணிபு இம்முறையே யாதல் பெறப்படும். பிற முறைகளில் சிறிது மேலே (பா. 575 உரை) காட்டப்பட்டது. அம்முறை பற்றி, நிற்பார், இங்கு, ``மூல முதல்`` என்பதற்கு, `கணபதி` எனவும், ``மூலாதாரத்திற்கு மேல்`` எனவும் பொருள் உரைப்பர். `பரவிந்து` முதலியவை செய்யுளுக்கு ஏற்ப வைக்கப்பட்டன. திருவருளை, இறைவன் பாதம் என்றல் மரபு.
இதனால், மேல், ``நாதன் இருந்த நகர்`` எனப்பட்டன இவை என்பது கூறி, இவ்வாறெல்லாம், திருவருள், யோகிகட்கு நலம் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 69

ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தம்ஈ தானந்த யோகமே.

பொழிப்புரை :

மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களையும் அவற்றில் உள்ள கடவுளரைத் தியான சமாதிகளால் வழிபட்டுப் பயன்பெறுமாற்றால் கடந்து, அவற்றிற்கு மேல் நிராதாரமாகிய உச்சிமுதற் பன்னிரண்டங்குலத்தை அடைந்து பரவிந்து பரநாதங் களின் அருள்பெற்று இவ்வாற்றால், மேதை முதலிய பிரணவகலை பதினாறும் கடக்கப்பட்டனவாய்விட, அதற்கு மேல், சொல்லவும், நினைக்கவும் வாராத மீதானமாகிய துவாதசாந்தத்தில் (பன்னிரண்டு அங்குலத்திற்கு அப்பால்) பரமசிவனை அடைந்து நிற்றலே ஆனந்த யோகமாகும்.

குறிப்புரை :

``ஆனந்தயோகம் நிகழ் புதல்வா`` (உண்மை விளக்கம்) என்பது நினைக்கத்தக்கது. ``சிவயோகத்துள்ளும் மூலாதாரம் முதலிய ஐந்து ஆதாரங்களில் நிற்றல் தவயோகமும், ஆஞ்ஞை முதலியவைகளில் நிற்றல் அருள் யோகமும், துவா தசாந்தத்தை அடைதல் ஆனந்த யோகமும் ஆம்` என்றவாறு. ``மேதாதி ஈரெண் கலை செல்ல`` என்றது வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்று வாய் செய்தவாறு. எனவே, ``அக் கலைகளாவன இவை`` என்பது அவ் வதிகாரத்திலே அறியற்பாலதாம்.

பண் :

பாடல் எண் : 70

மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்
துதிசெய் பவர்அவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே.

பொழிப்புரை :

சந்திர கலையாகிய இட நாடிக் காற்றும், சூரிய கலையாகிய வல நாடிக் காற்றும் ஒடுங்கிச் சுழுமுனையில் வந்து பொருந்தச் செய்து, வாசி யோகத்தில் நின்று, ஆதாரங்களில் உள்ள கடவுளரைப் போற்றுகின்ற பொது யோகிகள் மேலுலகத்தில் அவ்வக் கடவுளராய் நின்று இன்பம் நுகர்வர். சிவனை உணர்தலாகிய முறைமையில் வழுவாது நின்று, அருள் யோகம் ஆனந்த யோகங் களைச் செய்கின்ற உண்மை யோகிகட்கே, நிலையான வீடுபேற்றைக் காட்டும் பரமசிவன் முன்னிற்பான்.

குறிப்புரை :

`சந்திர சூரியரோடு கூடி நிற்பவர் வானவரே` என்னும் நயம் தோன்ற முதல் இரண்டடிகளை அவ்வாறு ஓதினார். கூடி - கூடிய பின். துதி செய்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்க. ``அவர்`` என் பதன்பின், `கொண்ட` என ஒருசொல் வருவிக்க. `வானவர்கள்` என் பதன் பின் `ஆவர்` என்பது எஞ்சிநின்றது. தொன்மை, முன்னே துதிக் கப்பட்டமையைக் குறித்தது. ``நின்றான்`` என்பதில் நிற்றல், வெளிப் பட்டு நிற்றல் என்னும் பொருளது. பதி - நிலைத்து வாழும் ஊர்.

பண் :

பாடல் எண் : 71

கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தாமாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
நட்டறி வார்க்கு நமனில்லை தானே.

பொழிப்புரை :

பிராண வாயுவைத் தம்வழியில் இயக்குமளவே வல்லராய்ப் பவயோகம் கைவந்தவர் மருட் சித்திகளையே பெறுவர். ஆஞ்ஞையில் அருள் இன்பத்தைத் தருகின்ற அருள் யோகத்தைத் தலைப்பட்டு, பின் சுழுமுனைத் தலையை அடைந்த பிராண வாயுவால் அவ்விடத்தில் வடு உண்டாகத் தாக்கிப் பின்பு, அவ்வாயுவை மண்டை ஓட்டில் தீப்பொறி உண்டாகுமாறு மோதி, உணர்வை அசையாது நிறுத்திச் சிவனை அறியும் ஆனந்த யோகத்தில் நின்று சிவயோகம் கைவந்தவர்க்கு இறப்பு உண்டாகாது. (எடுத்த பிறப்பிலே வீடு உண்டாகும் என்பதாம்)

குறிப்புரை :

கட்டுதற்கும் நடுதற்கும் செயப்படுபொருள் வருவித்துக் கொள்க. மணம் செய்தல் - கூடுதல். இது, `தாமரையுள்ளே மணம் போல நிற்றல்` என்னும் நயம் தோற்றி நின்றது. `கரந்தெங்கும் தாமாவர்` என்பது பிராத்தியைக் குறித்துப் பிற சித்திகட்கு உபலக் கணமாய் நின்றது. புருவநடுவில் தோன்றும் வடு, பொட்டுப்போலத் தோன்றுதல் பற்றி ``பொட்டெழ`` என்றார். யோகத்தால் இவ்வடுத் தோன்றுதல் பலநாள் பயிற்சியால் ஆதலின், தாமரையுள்ளே மணஞ் செய்தற்குப் பின்னர்க் கூறினார். பொறியெழத் தாக்குதல், வன்மையை மிகுத்துக் கூறியவாறு. தண்டு - சுழுமுனை. அஃது ஆகுபெயரால் அதன்வழிச் செல்லும் பிராண வாயுவைக் குறித்தது. `இறப்பில்லை` என்னும் பொருளதாகிய ``நமனில்லை`` என்பது, இறந்தவர் பின் பிறப்பராதலின், பிறவியற்ற நிலையை அடைதலை உணர்த்தி நின்றது. ``கட்ட வல்லார்கள் கரந்தெங்குந் தாமாவர்`` எனவும், ``நட்டறிவார்க்கு நமனில்லை`` எனவும் கூறியன, பவ யோக சிவ யோகங்களது இழிபு உயர்வுகளை உறழ்ந்து காட்டியவாறு.
இவ் இருமந்திரங்களாலும், இருவகை யோகங்களின் இழிபு உயர்வுகளை ஒருங்கு வைத்துக் காட்டிச் சிவயோகம் வலியுறுத்தி முடிக்கப்பட்டது.
`பரகாயப் பிரவேசம்` என்பதை நாயனார் இங்ஙனம், `மேலான ஆற்றல் பெற்ற உடம்பு` எனவும், ``அருளுடம்பு`` எனவும் இரு பொருள்பட இரட்டுற மொழிதலாக வைத்து, ``சித்திகள் எட்டன்றி`` என்னும் திருமந்திரம் முதல் இது காறும் சிவயோகமாகிய பரயோகத்தையும், பரசித்தியாகிய அதன் பயனையுமே உணர்த்தினமை அறிக.

பண் :

பாடல் எண் : 1

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
காதல் வழிசெய்து காக்கலு மாமே.

பொழிப்புரை :

தன்னை அடைவதற்கு அன்பு ஒன்றையே வழியாக அமைத்துள்ள முக்கட் கடவுளாகிய சிவபெருமானை, அவ் அன்பைத் தரும் வழியாகிய அறிவை உண்டாக்கி, அவ் அறிவு பொருந்த அவனை நோக்கினால், அன்பு பெருகி, அது வழியாக இன்ப வெள்ளம் பெருகும். அது பெருகியபின், அந்த அன்பையே பின்னும் துணையாகப் பற்றி, அந்த இன்ப வெள்ளம் வற்றிப் போகாதவாறு பாதுகாத்துக் கொள்ளுதலும் கூடும்.

குறிப்புரை :

``காதல் வழி`` நான்கனுள் இரண்டாவது, நான்காவதன் தொகை. முதலதும், ஈற்றதும் உருவகங்கள். மூன்றாம் அடியில் ``வழிசெய்து````வழிதரும்`` என்பன` ``வழியும் பெருகும்`` என்னும் பொருளன. ``கண்`` என்றது அறிவை. எனவே, `இது மந்திர யோகம்` என்பது விளங்கும். அறிந்தவிடத்தன்றி அன்பு நிகழாதாகலின், அன்பைத் தரும்வழி அறிவாதல் அறிந்துகொள்க. ``அறிவை உண்டாக்கி அறிவுற நோக்கி`` என்றது ``அறிவைச் செயற்படுத்தி, அதன் வழியே நோக்கி`` என்றவாறு.
இதனால், ``பிராசாத யோகம் வழி முறையில் வீடு தரும்`` என அதனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையும்
காக்கலு மாகுங் கலைபதி னாறையும்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவும்
காக்கலு மாகுங் கருத்துற நில்லே

பொழிப்புரை :

மாணாக்கனே!; நீ பிரணவ கலைகளில் அறிவு பொருந்த நில், அங்ஙனம் நிற்பாயாகில், பிராண வாயுவையும், அக்கலைகள் பதினாறனையும், அவற்றின் வழி இயங்குகின்ற மனம் முதலிய அந்தக்கரணங்களையும் மருள் நெறியிற் செல்லாது தடுத்து, அருள் நெறியில் நிறுத்துதல் கூடும்.

குறிப்புரை :

`பிரணவ கலைகள் சந்திரனது கலைபோல்வன` என உவமை முகத்தான் உணர்த்தற்கு சோடச கலாப் பிராசா தத்தைக் கூறினார். இதனை, மேலேயும் (பா.692) காண்க. வாயுவைக் காத்தலால் மனம் ஒருங்குதல் முன்னே (பா.606) கூறப்பட்டது. `கரணங்கள்` முதலிய மூன்றும் காரிய காரண முறையில் வைக்கப்பட்டன.
இதனால், பிராசாத யோகத்தின் முதற்பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
மலைவற வாகும் வழியது வாமே.

பொழிப்புரை :

வலமும், இடமும் செல்லாமல், நடுநாடி வழிச் செல்கின்ற பிராண வாயு. அத்தகைய செலவிற் பிறழாது நிற்றலே அசை வில்லாது நிற்கும் பிராணாயாம நிலையாம். அந்நிலையால் அறிவும், பிரணவ கலைகளில் நிலைபெற்று நின்று, முதல்வனது திருவருள் அக்கலைகளில் பல்வேறு வகையாய்க் கலந்து நிற்கின்ற கலப்பினை அறியுமாயின், அவ்வாறு அறிந்து நிற்கின்ற அந்நிலையே, அவ்வறிவு பின் பலதலைப்படாது ஒரு தலைப்படும் வழியாம்.

குறிப்புரை :

`ஆதலின், அவ்வாற்றால் அக்கலப்பினை அறிக` என்பது குறிப்பெச்சம். தொழிற் பெயராய் நின்ற ``நின்றது`` இரண்டனுள் முன்னது எழுவாய்; பின்னது பயனிலை. ``நேர்தரு வாயு`` என்பதனை முதலிற்கொள்க. சிலை, கல்; மலையுமாம். ``சிலை`` என்றது அதன் தன்மையை; அஃதாவது, அசை வின்மை. ``தீபம்`` என்றது, அறிவை. உம்மை, இறந்தது தழுவிய எச்சம். ஒத்தல், பிறழாது நிற்றல். ``கலை`` எனப் பின்னர் வருதலின், வாளா, ``ஒத்து`` என்றார். `அலை வற` என்பதும் பாடம்.
இதனால், பிராசாத யோகம், உணர்வு அருள் வழிப்படுவதற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியில்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே.

பொழிப்புரை :

எஞ்ஞான்றும் உடனாய் நீங்காது நிற்கின்ற சிவபெருமானைச் சாரமாட்டாது புறத்தே ஓடிய உணர்வு, அவ்வாறு ஓடாது மடங்கி அவனைச் சார்ந்து நிற்றற்குப் பொருந்திய பிராசாத யோக நெறிக்கண் அவன் இனிது விளங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

புடை ஒன்றி நிற்றல், அருகிலே நிற்றல், ஐம் பொறிகளைக் குறிப்பதாய `மடை` என்பது ஆகுபெயராய், அவற்றின் வழிச் செல்லும் உணர்வைக் குறித்தது. `பிரானை ஒன்றி நின்றிட` என இயையும் `அதற்கு வாய்த்த வழியாவது பிராசாத யோகமே` என்பது அதிகாரத்தால் விளங்கிற்று, ``விடை ஒன்றில் ஏறி`` என விதந்தது, `தடத்தமாய்க் காணப்படுவன்` என்றவாறு. ஏகாரங்கள் தேற்றம், இருத்தல், உண்மை குறியாது, அமர்தலைக் குறித்தலின், இறந்த காலம் ஆயிற்று. `வாய்த்த வழியும்` எனப் பாடம் ஓதியும், ``விடை`` என்றதனைப் பிற குறிப்பு மொழியாக்கியும் தமக்கு வேண்டியவாறே உரைத்துக்கொள்வர்.
இதனால், பிராசாத யோகத்தில் இறைவனது பொதுநிலை இனிது விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒலிக்கின்ற வாயு ஒளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடும் சாதக னாமே.

பொழிப்புரை :

தாம் வாழும் நாளின் எல்லை இவ்வளவினது என்பதை அறியாதவர் அது நீட்டித்தற்பொருட்டு ஒரு வழிப்படுத்து கின்ற பிராணவாயு, அவ்வாறு கால நீட்டிப்பிற்கு மட்டும் ஏதுவா யொழியாது, மெய்யுணர்வைப் பெறுதற்கு ஏதுவாகுமாயின், அத்தகைய சாதனத்தைப் புரிந்த சாதகன், பின்னர்ப் பேரின்பத்தில் திளைத்து மகிழ்ந்திருப்பான்.

குறிப்புரை :

எனவே, `வாயுவை அங்ஙனம் நிற்குமாறு நிறுத்துக` என்பது குறிப்பெச்சமாயிற்று. இருத்தல், உண்மை குறித்து நின்றது. ``அறியார்`` என்னும் எழுவாய் ``ஒருக்கின்ற`` என்பதனோடு முடிந்தது. `ஒருக்குகின்ற` பெருக்குகின்ற` என்பன குறைந்து நின்றன. பெருமை - சிறப்பு. `ஒளிபெற நிற்கும் வழி பிராசாத யோகம்` என்பது கருத்து. ``நின்றிடும்`` என்பது முற்று; ``ஆம்`` என்னும் அசை நிலையை இதனுடன் கூட்டுக.
இதனால், எடுத்த பிறப்பில் ஞானத்தைப் பெற விழைபவர் வாழ்நாள் நீட்டிப்பின் பொருட்டுப் பிராணாயாமத்தினை ஒரு தலையாகச் செய்தல் வேண்டும் என அநுவாத முகத்தான் வலியுறுத்தப்பட்டது. படவே, அடுத்து வருகின்ற `காயசித்தி, கால சக்கரம்` என்னும் அதிகாரங்கட்கு வழிவகுத்தது மாயிற்று.
இதனால், பிராசாத நெறியல்லாத பிற நெறி யோகங்கள் சிறப்பிலவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே.

பொழிப்புரை :

`ஒருக்கின்ற வாயு ஒளிபெற நிற்குமாறு நிறுத்துதல்` என மேற்கூறிய செயலே சாதகன் சாதிக்கத்தக்க முறையாதலை உணர்ந்து, பெருந்தவமாகிய அவ்வழி பாட்டினை ஒருவன் செய்யும் பொழுது, பிரணவ கலைகளின் உள்ளீடாய திருவருளிலே தனது உணர்வு செல்லுமாறு செலுத்துவானாயின், அச்செயலே, அவனது புலன் உணர்வாகிய இரும்பினை மெய்யுணர்வாகிய பொன்னாக மாற்றுகின்ற இரச குளிகையாய் அமைந்து பயனைத் தந்துவிடும்.

குறிப்புரை :

அகத்தொழில் மாத்திரையாற் செய்யும் வழிபாடே யோகமாகலானும், சரியை, கிரியை யாகிய ஏனைத் தவங்களின் மேம்பட்ட யோகத்துள்ளும் பிராசாத யோகம் மிகச் சிறந்ததாகலானும், அதனை ``மாதவமான வழிபாடு`` என்றார். ``செய்திடும்போது`` என்பது ஒருசொல், அகம் கலைகளின் உள்ளிடம். அஃது, ஆகு பெயராய், அவ்விடத்துள்ள திருவருளைக் குறித்தது. `அகத்தாக` என வரற்பாலதாய சாரியை வாராது விகற்பித்தது. பாய்ச்சுதலுக்குச் செயப்படு பொருள் ஆற்றலால் கொள்ளப்பட்டது. துணை வினையாய் வந்த கிடத்தல், துணிவுணர்த்தி நின்றது.

பண் :

பாடல் எண் : 7

கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானே அப் பங்கய மாகத்
தொடர்ந்தது தானே அச் சோதியுள் நின்றே.

பொழிப்புரை :

மேல், ``வேதகமாக விளைந்து கிடக்கும்`` எனப் பட்ட அச்சாதனைதான், மிகத் தருகின்ற பயன் மூன்றாகும். இனி, இயல்பாக இயங்கும் பிராண வாயுவின்வழி எப்பொழுதும் புறத்தே ஓடிய உணர்வுதானே, சாதனையால் சுழுமுனைவழிச் செலுத்தப்பட்ட வாயுவின்வழியே உள்நோக்கிப் படர்ந்து, பின்னும் உச்சிக் கண்ணதாகிய பெரிய தாமரை மலரிடத்து அவ்வாயுவின் வழியே படிமுறையாற் புக, அவ்விடத்து நன்கு விளங்கும் பேரொளியாகிய திருவருள், முன்பு கீழுள்ள ஆதாரங்களினின்று அவ்வுணர்விற்கு விடயமாய்த் தொடர்ந்து விளங்கிவருவதாம்.

குறிப்புரை :

பயன் மூன்றாவன புலன்களின்மேற் சென்ற அவா அறுதலும், திருவருள் தோற்றமும், திருவருட் பேறுமாம். இவை, மேல், (பா.700)`` ஒளிபெற`` என்றதனானே, `பொழுது புலர்தல், செவ்வொளி தோன்றல், ஞாயிற்றைக் காண்டல்` என்பவற்றில் வைத்து அறியக் கிடத்தலின், இவற்றைக் கிளந்தோதாது போயினார். திருவருட் பேறு, படிமுறையானன்றி முதற்கண்ணே முற்றக் கிடையாமையைப் பயன் வகையாலும் உணர்த்துதற்கு, `கிளர் பயன் மூன்று`` என்றார். ``கிளர் பயன்`` என்பது, `கிளர்த்தும் பயன்` என, பிறவினை வினைத்தொகை. `தான்` என்னும் அசை நிலை நான்கிடத்தும் பிரிநிலை ஏகாரத்தோடு வந்தது. `அச்சோதி தானே, உள்நின்று தொடர்ந்தது` என்க. `தொடர்ந்தது தானேயாம்` என்பதில், `ஆம்` என்பது எஞ்சி நின்றது. எனவே, ``தொடர்ந்தது`` என்றது எதிர்காலத்தில் இறந்த காலமாம். `அவ்விடத்து நிற்கும் சோதி` எனற் பாலதனை, ``அச் சோதி`` என்றார்.
இதனால், மேற்கூறிய சாதனை, வேதகமாக விளையும் முறை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகச் சிவாலய மாகுமே.

பொழிப்புரை :

உயிர் தனது முயற்சியால் அடையலா காமையின், தானாகவே அதற்குப் புலப்பட்டு நிற்கின்ற மெய்ப் பொருளாகிய தலைவி தன்னை நாம் அடைவதற்கு இவ்வுடம்பையே வழியாக அமைத்து நம்முள் இருக்கின்றாள். அவளையே பொருளாக நாம் கொள்ளின், இவ்வுடம்பு சிவானந்தமாகிய தேனைப் பருகி இன்புறுகின்ற இடமாய்விடும்.

குறிப்புரை :

``வானோர் உலகீன்ற அம்மை`` என்பது, `அவள்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. `அம்மையை` என்னும் இரண்டனுருபு தொகுக்கப்பட்டது. `பருகி` என்பது பாடமன்று. சிவம், இங்கு, `இன்பம்` என்னும் பொருளது. ``ஆகும்`` என்பதற்கு எழுவாய் வருவிக்க.
இதனால், பிராசாத யோகத்தாற் பெறும் திருவருட்பேறு, பின், சிவப் பேற்றிற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற ஆயுவைச் சேர்தலு மாமே.

பொழிப்புரை :

உடம்பு ஒளி பெற்று நெடுநாள் விளங்குதற் பொருட்டுப் பொருந்தியுள்ள பிராணவாயு, ஒவ்வொரு மூச்சிலும் சிறிது சிறிதாக அழிந்துகொண்டு வருதலை யாரும் அறிந்து கவலைப் படுதல் இல்லை, அதனை அறிந்து கவலைப்பட்டு, அவ்வாயுவை அழியாமற் காப்பார் உளராயின், அவர்க்கு, எடுத்த பிறப்பிலே சிவனை அடைதற்கு ஏதுவான நீண்ட ஆயுளைப் பெறுதல் கூடும்.

குறிப்புரை :

`செறிதல், சிவனருளால்` என்க. அழிதல், பன்னிரண்டு அங்குலமாகப் புறப்பட்டது, பின், நாலங்குலம் அழிய, எட்டங் குலமாகவே புகுதல். நந்தி, சிவன் அவன் திகழ்தலாவது, காட்சிப் படுதல், ``திகழ்கின்ற`` என்னும் பெயரெச்சம், ``ஆயு`` என்னும் ஏதுப் பெயர் கொண்டது. உம்மை, சிறப்பு, இடையிரண்டடிகள் மூன்றாம் எழுத்து எதுகை.
இதனால், `ஆசனம் முதலிய உறுப்புக்களால் யோக நெறி கைவரப் பெற்றுப் பின் பிராசாத நெறியைத் தலைப்பட்டு மெய் யுணர்வைப் பெறுதற்கு, வாழ்நாள் நீட்டித்தல் வேண்டும்` என்ப துணர்த்தி, `அதற்குப் பிராணாயாமம் இன்றியமையாதது` என வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியும்நாள்
சாதன மாகுங் குருவை வழிபட்டு
மாதன மாக மதித்துக்கொ ளீரே.

பொழிப்புரை :

`சிவன், உடலைக் காக்கின்ற சத்தியினின்றும் பிரிகின்ற நாள் இது` என்பதைக் குறிகள் சிலவற்றால் ஐயமற உணரலாகும். `அக் குறிகள் இவை` என்பதை யோக குருவை வழிபட்டே பெற்று, அங்ஙனம் பெற்ற அறிவைப் பெரிய செல்வம் போல மதித்துப் போற்றிக்கொள்ளுங்கள்.

குறிப்புரை :

காக்கும் சத்தியை, ``ஆரணி`` என்பர். சிவன் காக்கும் சத்தியினின்றும் பிரிதலாவது. `நிலை பெறுக என நினைக்கும் நினைவைவிட்டொழிதல். அங்ஙனம் ஒழியின் உடல் ஒரு நொடியும் நிலைபெறாது அழியும். இதனையே,
``கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்,
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே``
-தி.5 ப.90 பா.4
என்று அருளிச்செய்தார் ஆளுடைய அரசர். எனவே, ``நாதனும், நாயகி தன்னிற் பிரியும் நாள்`` என்றது, `உடல் அழியும் நாள்` என்றவாறாம். ஞான குரு, சாத்திய குருவாகலின், யோக குருவை, ``சாதனகுரு`` என்றார். எனவே, கிரியா குருவும் அத்தன்மையரே யாதல் அறியப்படும். இனி, `நாதன், உடம்பினை உடையதாகிய உயிர்; நாயகி குண்டலினி சத்தி` எனவும் உரைப்பர்.
இதனால், பிராணாயாமத்தில் உளஞ்செல்லுதற் பொருட்டு, வாழ்நாளின் எல்லையை உணருமாறு கூறி, பின் வருகின்ற ஆயுள் பரீட்சைக்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீரா யிரமும் நிலமாயிரத் தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.

பொழிப்புரை :

பிராணாயாம வன்மையால் தலையில் உள்ள அமுதத்தைப் பெற்று மிகவும் நுகர வல்லீராயின், உமக்கு உடம்பாய் அமைந்த, நிலம், நீர் முதலிய தத்துவங்கள் பலவும் அவை யவை ஒடுங்கும் முறையில், வலிமை கெட்டு ஒடுங்குதற்குத் தனித்தனிப் பல்லாண்டுக் காலம் செல்லும்; அங்ஙனம் செல்லவே, உடம்பு கெட் டொழியாது, நெடுநாள் நிலைத்து நிற்கும்; இஃது எங்கள் அருளாசிரி யரான நந்தி தேவர்மேல் ஆணையாக நான் சொல்லும் உண்மை.

குறிப்புரை :

பிராணாயாமத்தின் அருமை உணர்த்தற்குப் பிராண வாயுவை நான்கு காலன்றிப் பன்னிரண்டுகால்கொண்டு அதிவேக மாய் ஓடும் குதிரையாக உருவகம் செய்து கூறினார். `பன்னிரண்டு கால்` என்றது. அது புறப்படும் அங்குல அளவை. முன் நிற்கற் பாலதாய நிலம், செய்யுள் நோக்கிப் பின் நின்றது. மூன்றாம் அடியின் இறுதியில் எஞ்சி நின்ற, `என இவ்வாறாக` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. மூன்றாம் அடிக்குப் பிறவாறு உரைப்பாரும் உளர்
இதனால், மேல் வலியுறுத்தப்பட்ட பிராணாயாமம் வாழ்நாள் நீட்டிப்பிற்கு ஏதுவாதல் இவ்வாற்றான் என்பது கூறி. அடுத்து வருகின்ற காய சித்திக்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசி யினில்மூன்றும் நாவில் இரண்டும்
தேசியும் தேசனுந் தம்மிற் பிரியுநாள்
மாசறு சோதி வகுத்துவைத் தானே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு சத்தி சிவங்கள் தம்மிற் பிரிந்து நீங்குகின்ற நாளின் எல்லையை, `சத்தம், உருவம் கந்தம், சுவை, பரிசம்` என்னும் புலன்களில் முறையே, `ஏழு, ஐந்து, மூன்று, இரண்டு, ஒன்று` என இவ்வாறாகப் பொது வகையில், இருளை அறுக்கும் ஒளியாகிய இறைவன் வகுத்து வைத்துள்ளான்.

குறிப்புரை :

எனவே, ``இறப்பு நேருங் காலத்து இப் புலன் உணர்வுகள் இங்குக் கூறிய கால முறையில் கெடுவனவாம்` என்பது இத் திருமந்திரத்தின்வழி அறியப்படுகின்றது. இவ்வாற்றால், ``முதலில் பரிச உணர்வும், முடிவில் ஓசை உணர்வும், அவற்றிற்கு இடையே இங்குக் கூறிய முறையில் ஏனைய புலனுணர்வுகளும் கெடும்`` என்பது பெற்றாம். புலன்களை மேல்நின்றிழியும் கால முறையில் கூறினார். அதனால், பரிச உணர்வு ஒரு நாளிற் கெடும் முறையில் கூறினார். அதனால், பரிச உணர்வு ஒரு நாளிற் கெடும் என்பது தானே விளங்குதலின், செய்யுள் நோக்கி அதனை உபலக்கணத்தால் கொள்ள வைத்தார். `விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண், மூக்கு`` (சிவஞான போதம், சூ.5) எனப் பிறவிடத்தும் இவ்வாறு எஞ்ச வைத்தல் காண்க. புலன்களின் கேடு கூறவே, அவற்றிற்கு முதலாய பூதங்களும் இவ்வாற்றால் சத்தி கெடப் பௌதிகமாகிய உடம்பு அழியும் வகை பெறப்படுவதாம். செய்யுள் நோக்கிப் பொறியும், புலனும் விரவ ஓதினார். தேசி - ஒளியாயுள்ளவள். தேசன், அவ்வொளியை உடையவன். இவ்விருவரையும் மேல், (பா.705) ``நாதனும், நாயகி`` என்றதற்கு உரைத்தவாறே அவர் உரைப்பர். இத்திருமந்திரத்திற்குப் பிறர் பிறவாறு உரைத்த உரை பொருந்துவதாகாமையை அறிந்து கொள்க.
இதனால், யோகத்தால் வாழ்நாள் நீட்டிக்குமாறு கூறிய இயைபு பற்றி, யோகம் இல்லாதார்க்கு உள்ள வாழ்நாள் எல்லை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

பொழிப்புரை :

உடம்பு அழியுமாயின், அதனைப் பெற்றுள்ள உயிரும் அழிந்ததுபோலச் செயலன்றி நிற்பதாம். ஆகவே, உடம்பு அழிந்தபின், அவ்வுடம்பைத் துணைக்கொண்டு இயங்கிய உயிர், தவமாகிய துணையைப் பெறவும், பின் அதனால் இறையுணர்வை அடையவும் இயலாததாய்விடும். இதுபற்றி, உடம்பை நிலைபெறுவிக்கும் வழியை அறிந்து அவ்வழியில் அதனை நிலைபெறுவித்த யான், உயிரை நலம் பெறச் செய்தவனே ஆயினேன்.

குறிப்புரை :

``ஆகவே, என்னை உடம்பையே பொருளெனக் கொண்டவனாகக் கருதி அறிவுடையோர் இகழார்` என்பது கருத்து. எனவே, ``நீவிரும் உடம்பை நிலை பெறுவிக்க முயலுங்கள்`` என்பது குறிப்பெச்சமாயிற்று. ``உடம்பார், உயிரார்`` என்றவை, நிலையாமை யுடைய இழிவு பற்றி வந்த திணை வழுவமைதி. இதனை, ``உயர்வு பற்றி வந்தது`` என்பாரும் உளர்;, ``அழியின் `` எனவும், ``அழிவார்`` எனவும் அழிபொருளாகக் கூறப்பட்டவை, உயர்வுடையனவாதல் எவ்வாறு என எண்ணி ஒழிக. திடம்படல், உறுதி யுண்டாகப் பெறுதல், ``உயிர்க்கு உறுதி`` என்றது, இங்குத் தவத்தை, ``திடம்பட`` என்பதில் எண்ணும்மை தொகுக்கப்பட்டது. இனி, ``சேரவும்`` என்னும் எண் ணும்மையைச் சிறப்பும்மையாக வைத்து, ``திடம்பட`` என்பதனைச் சேர்தற்கு அடையாக்கியே உரைப்பர் பலரும். உடம்பை வளர்க்கும் உபாயம், வருகின்ற திருமந்திரம் முதலாக உள்ளவற்றிற் கூறப்படுவன. ``வளர்த்தேன்`` இரண்டில் முன்னது வினைமுற்று. அதன்பின், ``அதனால்`` என்பதும் இறுதியில், ``ஆயினேன்`` என்பதும் எஞ்சி நின்றன.
இதனால், காயசித்தி இன்றியமையாமையாதற்குக் காரணம் உணர்த்து முகத்தால், அதன் சிறப்புக் கூறப்பட்டது. இதனானே, உடம்பை உயிர் நலத்திற்குக் கருவியாகக் கொள்ளுதலல்லது, அதனையே பயனாகக் கொள்ளுதலும், உடம்பு கருவியாதலை உணராது அதனைப் பகை எனக் கொண்டு வருத்துதலும் ஆகா என்பதும் பெறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

பொழிப்புரை :

சிவ நூல் கேட்பதற்கு முன்பெல்லாம் உடம்பை அழுக்கு ஒன்றையே உடையதாகக் கருதி இகழ்ந்திருந்தேன். சிவநூல் கேட்ட பின்னர், அதற்குள்தானே பயனை அடைதற்குரிய வழிகள் பலவும் இருத்தலை அறிந்தேன். அதனால், அவ்வறிவின் வழியே, உடம்பிற்குள் தானே இறைவன் தனக்கு இடம் அமைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதையும் அறிந்து, இப்பொழுது நான் உடம்பைக் கேடுறாதவாறு குறிக்கொண்டு காக்கின்றேன்.

குறிப்புரை :

`இத்தகைய அறிவையும் செயலையும் நீவிரும் பெறுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். இழுக்கு, குற்றம்; மாசு. இழுக்குடையதனை, `இழுக்கு` என்றார், `சிவ நூல் கேட்கும் முன்னர், கேட்டபின்னர்` என்பன இயைபெச்சமாய் வந்து இயையும். உறுதல், பயனைப் பெறுதல். உறுபொருள், உறுதற்கு ஏதுவாய பொருள்; என்றது வழியை. செய்யுளின் இடைக்கண்நின்ற ஏகாரங்கள் தேற்றம். கோயில் - ஆதார, நிராதார, மீதானங்களாகிய இடங்கள். ``இருந்து`` என்றது `குறிக்கொண்டிருந்து` என்றவாறு.
இதனால். `உடம்பு, உயிர் நலத்திற்குக் கருவியாதல் இவ்வாறு என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்
துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்
கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே.

பொழிப்புரை :

பிராண வாயுவை வாங்கியும், விட்டும் சுழலும்படி செய்ய, உடம்பில் உள்ள மாசுகளும் அதனோடே சுழன்று நீங்கும். அவ்வாற்றால் மாசுகளைப் போக்கித் தூய்தான பிராணவாயுவை ஆதாரத் தாமரைகளில் நிரப்பி, அவை வழியாக உடம்பில் உள்ள எல்லா நாடியினுள்ளும் அவ்வாயுச் சென்று உலவும்படி செய்து, அதன் ஆற்றலை அந்நாடிகட்குத் தருகின்ற இவ்வுபாயத்தை முறை யறிந்து செய்ய வல்லவர்க்கு, உடம்பு நெருப்பிலிட்டுச் சுடப்படுதலினின்றும் நீங்கி, உயிரினுள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய இறைவனைப் புலப்படக் காட்டும் மந்திர மையாய் அமையும்.

குறிப்புரை :

``சுழற்றிக் கொடுக்க`` என்பது ஒரு சொல் நீர்மைத்து. `கொடு` என்பது செயப்படுபொருள் குன்றாவினையில் இவ்வாறு துணைவினையாய் வருதலை, `கிண்டிக் கொடுத்தல், புரட்டிக் கொடுத்தல்` முதலாகவரும் வழக்குநோக்கி அறிக. `சுத்தி` என்பது பாடமன்று. ``மலம்`` எனப் பின்னர் வருதலின்` வாளா,``கழியும்`` என்றார், ``உழற்றிக் கொடுக்கும்`` என்பதில் உழலுதற்கு இடமும், கொடுத்தலுக்குச் செயப்படுபொருளும் ஆற்றலால் கொள்ளக் கிடந்தன. உழற்றிக் கொடுத்தலையே உபாயம் என்கிறாராதலின், ``கொடுக்கும் உபாயம்`` என்பதில், பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். `அழற்றப்படுவது` என்னும் பொருளதாய ``அழற்றி`` என்பது இங்கு அன்னதாம் தன்மையைக் குறித்தது. மந்திர மை, புதையுண்டு கிடக்கும் பொருட்குவை முதலியவற்றைப் புலப்படக் காட்டுதல் நன்கறியப்பட்டது.
இதனால், காயசித்தி உபாயங்களுள் முதல் உபாயம் பிராணாயாமம் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அஞ்சனம் போலுடல் ஐஅறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில்
செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.

பொழிப்புரை :

மந்திரமைபோல நின்று பயன்தரத் தக்கதாகிய உடலை. அன்ன தாகாதவாறு, `ஐ, வளி, பித்து` என்னும் மூன்றானும் தோன்றிக் கெடுக்கின்ற நோய்கள், முறையே, `மாலை, நண்பகல், காலை` என்னும் பொழுதுகளில் செய்யும் பிராணாயாமத்தால் நீங்கும். அதுவேயன்றி, முப்பொழுதும் செய்யும் பிராணாயாமத்தாலும் நரை திரைகள் வாராதொழியும். இவ்வுபாயத்தை இங்கு, உடலைக் கொல்லும் நஞ்சுபோன்ற தீமைகள் நீங்குதல் நோக்கிக் கூறினோம்.

குறிப்புரை :

போல் உடல், வினைத்தொகை. `போன்றுடல்` என்பது பாடமன்று. `உடற்கண்`` என ஏழாவது விரிக்க. ``வஞ்சகம், செய்திடில்`` என்பவற்றை ஏனையவற்றிற்கும் கூட்டுக. ``ஐ, வாதம், பித்து`` என்ற மூன்றும் காரண வாகுபெயராய், அவற்றால் உளவாகும் நோய்களைக் குறித்தன; என்னை? அற்றொழியற்பாலன அந் நோய்களே யாதலின். காலைப் பொழுது எச் செயலுக்கும் சிறப்புடைய தாகலின். அதனை ``செஞ்சிறு காலை`` என்றார். செய்தலுக்குச் செயப்படுபொருள், அதிகாரத்தால் வந்தது. ``நஞ்சறச் சொன்னோம்`` என்பதனை ஈற்றில் வைத்து உரைக்க. ``நரை, திரை நாசம்`` என்றதனால், இளமைநீங்காமை குறிக்கப்பட்டது. இதனைக் காலம் வரையாது கூறினமையின் `எக்காலத்தும் செய்தலால்` என்றதாயிற்று.
இதனால், மேற்கூறிய உபாயத்தைச் செய்யுமாறும், அவற்றால் வரும் பயன்களும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றஇம் மூட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்க உடம்பழி யாதே.

பொழிப்புரை :

மூன்று வளைவை யுடையதாகிய பாம்பு, பதினாறு அங்குல அளவினவாகிய கயிறுகளைக் கொண்ட பூட்டையில் அழுந்தப் பொருந்தி யிருக்குமாயின், உடம்பு அழியாது நிலை பெற்றிருக்கும். அப்பாம்பு அங்ஙனம் பொருந்தி நிற்றற்கு, மேற்கூறிய பூட்டையில், அவிழ்ந்து கிடக்கும் நிலையினவாய்ப் பன்னிரண்டங்குல நீளம் தொங்குகின்ற இரண்டு மூட்டைகள், அவிழ்ந்து வீழாதவாறு கட்டப்படல் வேண்டும்.

குறிப்புரை :

``பாம்பு`` என்றது குண்டலினியை; ``இயந்திரம்`` என்றது நடுநாடியை. `பதினாறு அங்குலக் கயிறு` என்றது, அந்நாடியுள் பதினாறு மாத்திரையளவு பூரிக்கப்படும். பிராணவாயுவை, `பன்னிரண்டு அங்குல நீளம் தொங்குகின்ற இரண்டு மூட்டை`` என்றது, இடைகலை பிங்கலை நாடிகளின் வழி இயல்பிலே பன்னிரண்டங்குலம் வெளிச் செல்லும் பிராண வாயுவை. `அம் மூட்டையை அவிழ்ந்து வீழாமல் கட்டுதல்` என்றது, அந்த இரு வழியையும் அடைத்தலை. எனவே, `இடைகலை பிங்கலை நாடிகளின் வழி இயல்பாக இயங்குகின்ற பிராண வாயுவை அடக்கிப் பதினாறு மாத்திரையளவு நடுநாடி வழிப் பூரித்துக் குண்டலி சத்தியை நடு நாடியில் பொருந்தி யிருக்கச் செய்தால், உடம்பிற்கு அழிவு உண்டாகாது` என்பது இம் மந்திரத்தால் போதரும் பொருளாம்.
`மூன்று மடக்கு` என்றது, உடம்பில், `அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்` எனப் பகுக்கப்படும் மூன்று வட்டங்களை. அம்மூன்றிலும் குண்டலினி வியாபித்துள்ளமை அறிக. இனி, `அப் பாம்பு அவ் யந்திரத்தில் ஊன்றி யிருக்க` என்றது, பொது மக்களிடத்து உணர்வின்றித் தூங்குவது போல் இருக்கின்ற நிலையில் லாமல், விழித்திருப்பதுபோல் செயற்படும் நிலையில் நிற்க, என்றதாம். பிராண வாயுவால் சட ஆற்றல் மிக்கு நிற்கும் உடல் உறுப் புக்கள், பின் அறிவாற்றலால் தூண்டப்படுதலும் அவை செயற் பாடின்றிக் கெட்டொழியாமைக்கு ஏதுவாம் என்க. குண்டலியின் தன்மை மேலே பலவிடத்தும் விளக்கப்படது. ``கட்டியிட்டு`` என்பதில் `இட்டு` அசைநிலை. `பாம்பு, இரண்டு எட்டுள இயந்திரத்தில் நான்ற மூட்டை இரண்டையும் கட்டி ஊன்றியிருக்க உயிர் அழியாதே` என வினை முடிவு செய்க. ``இரண்டெட்டு`` என்பது எண்ணலளவை யாகுபெயர். `முட்டை` என்பது பாடம் அன்று.
இதனால், காய சித்தி உபாயங்களுள் குண்டலினி இயக்கம் இரண்டாவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே.

பொழிப்புரை :

நூறு மாத்திரை காலமேயாயினும், அறுபது மாத்திரை காலமேயாயினும், ஆறு மாத்திரை காலமேயாயினும் பிராண வாயு சுழுமுனை நாடியை வலமாகச் சூழ்ந்தும் இடமாகக் சூழ்ந்தும், அதன் உட்புகுந்து மேலேறியும் வருமாயின், அத்துணை ஆண்டுக்கால வாழ்நாளினை மக்கள் எய்துவர்.

குறிப்புரை :

நூறு முதலிய மூன்றினும் நான்கிடத்தும், `ஆயினும்` என்பது எஞ்சி நின்றது. `பிராண வாயுவைக் கும்பகம் செய்யும் ஆற்றலுக்கு ஏற்பவே வாழ்நாளின் அளவு அமையும்` என்றற்கு இங்ஙனம் நயம்படப் பலவாறு விகற்பித்துக் கூறினார். யோகநெறியிற் கொள்ளப்படும் மாத்திரை என்பது, கைவிரலை இயல்பான இயக்கத்தில் முழந்தாளை ஒருமுறை சுற்றச் செலுத்தி நொடித்தலைச் செய்யும் கால அளவாம். யோக முறையால் பெறப்படும் வாழ்நாள் நீட்டிப்பு, இயல்பாய் அமைந்த வாழ்நாளின் எல்லையோடு கூடிநிற்கும்; அதனால் `ஆறாண்டு` என்பதும் நீட்டிப்பே என்க.
இதனால், `மேற்கூறியவற்றுள் முதலதாகிய பிராணாயாமத் தால் பெறப்படும் ஆற்றல் காயசித்திக்குச் சிறந்தது` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாம்
தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே.

பொழிப்புரை :

மூன்று மடக்குடைப் பாம்புபோல உடம்பில் உள்ள குண்டலி சத்தி, மேற்கூறியவாறு ஊன்றியிருக்கும் இடமாகிய நடு நாடியைப் பிராண வாயு வலமும் இடமுமாகச் சுற்றிவருகின்ற சாதனையைப் புரிந்தால், உலக நோக்கில் இருக்கும்பொழுதே உடலில் உள்ள பத்து நாடிகளில் உண்டாவனவாக மேல் (பா.593) கூறிய ``மணி, கடல், யானை`` முதலியவற்றின் ஓசைபோலும் ஒலிகளைக் கேட்டல் கூடும். இனிச் சிவ பெருமான். தாள அறுதிக்கு இயைய ஆடும் ஆட்டத்தின் ஓசையும் கேட்கப்பட்டுப் பின் அப்பெருமானே விளங்கித் தோன்றுவான். மெய்யான இன்பமே வடிவமான எங்கள் ஆசிரியர் மேல் ஆணையாக, இவ்வாறு நாம் உண்மையையே உங்கட்குச் சொன்னோம்.

குறிப்புரை :

முதலடி, மேல், ``மூன்று மடக்குடை`` என்ற மந்திரத்துட் கூறியதனை அநுவதித்தது. எனவே, இச்சாதனையால் குண்டலியின் இயக்கம் மிகுதல் பெறப்பட்டது. சகல நிலை `பகல்` எனப்படுதலின், சகல சாக்கிர நிலையை, `மத்தியானம்` என்றார். யோகாவத்தை யிலன்றிச் சகலாவத்தையில் தச நாதங்களைக் கேட்டல் அரிதாகலின், ``மத்தியானத்திலே வாத்தியங்கேட்கலாம்`` எனச் சிறந்தெடுத் தோதினார். இஃது உடம்பு சட ஆற்றல் மிக்கிருத்தற்கு அறிகுறியாகும். `தித்தித் தா` என்னும் ஒலிக் குறிப்பினை, ``தித்தித்த`` எனக் குறுக்கி ஓதினார். அஃது இரட்டுற மொழிதலாய் நின்று, கூத்து, அருள் இன்பக் கூத்தாதலை உணர்த்திற்று. கூத்து, கருவியாகுபெயர்; என்னை? சிவனின் வேறாக ஓதப் பட்டமையின் சிவன், தடத்த சிவன். ``வெளி ப்படும்`` என்பதனைத் தனித் தனி இயைக்க. ``சொன்னேன்` என்பதும் பாடம்.
இதனால், இரண்டாவதாகிய குண்டலியின் இயக்கம் திருவருட் பேற்றிற்குச் சிறந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

திறத்திறம் விந்து திகழும் அகாரம்
உறப்பெற வேநினைந் தோதும் சகாரம்
மறிப்பது மந்திரம் மன்னிய நாதம்
அறப்பெறல் யோகிக் கறநெறி யாமே.

பொழிப்புரை :

நாதத்தை முற்றப் பெறக் கருதிச் சொல்லப்படுகின்ற, முறையே மகர மெய்யையும் புள்ளி வடிவினதாய எழுத்தையும் உடன் கொண்டு விளங்கும் அகரமும், சகரமுமே பிராண வாயுவைத் தடுத்தற்குரிய மந்திரமாம்; ஏனெனில், நாதத்தை முற்றும் உணரப் பெறுதலே யோகம் கைவந்தவனுக்குரிய தன்மையாதலின்.

குறிப்புரை :

`உறப் பெறவே நினைந்து ஓதும்` என்பதை முதலிற் கொள்க. பிரணவ கலைகளுள் அகர உகரங்கள் பெருங்கூறாயும், மகர மெய் உட்கூறாயும் நிற்குமாதலின், மகர மெய்யை, ``திறத்திறம்`` என்றார், ``விந்து`` என்றது இங்கு, புள்ளி, வடிவத்தை, மகரத்தை உடன்கொண்ட அகரம் எனவே, `அம்` என்பதும், புள்ளி வடிவை உடன்கொண்ட சகரம் (ஸ) எனவே, `ஸ`என்பதும் விளங்கின. இவை இரண்டுங் கூட, `அம்ஸ:` என்றாகுமாகலின், அதுவே பிராணா யாமத்திற்கு உரிய மந்திரம் என்பது போந்தது. `அகரம்` என வாளா கூறினும், மகரம் தானே பெறப்படுமாயினும், சகரத்திற்கு வேறு கூறு கின்றாராகலின், அகரத்தின்கண் ஐயம் நிகழாமைப் பொருட்டு, அதனை எடுத்தோதினார். `அசபை` எனப்படுவது இவ் அம்ஸ மந்திரமே. உபதேசத்தாற் பெறற்பாலனவாய மந்திரங்களை வெளிப் படக் கூறாது, இங்ஙனம் மறைத்துக் கூறுதலே மந்திர நூல்கட்கு இயல்பென்க.
அம்ஸ மந்திரத்துள் `அம்` என்பது மூச்சினை உள் வாங்குதற்கும், `ஸ` என்பது மூச்சினை வெளிவிடுதற்கும் உரியன, இதனை அவற்றது ஓசை இயல்பாலும் உணரலாகும். இவ்வாறன்றி இவற்றை மாறிக் கூறுவாரும் உளர். உயிர் முதலாய மந்திரங்கள் அனைத்திற்கும் முதற்கண் ஹகாரத்தைச் சேர்த்தல் வடமொழி மரபாகலின், `அம்ஸ:` என்பது, `ஹம்ஸ:` என்றும் `அம்ச மந்திரம்` என்பது `ஹம்ஸ மந்திரம்` என்றும் அம்மொழியில் சொல்லப்படும். இனி, ஸகாரத்திற்கும் மகர மெய்யைச் சேர்த்து `அம்சம்` எனச் சொல்லப்படுவதே அம்ச மந்திரம் என்னும் கொள்கையும் உண்டு. `அதனையே மேற்கொண்டு, இதற்கு அவ்வாறு உரை கூறுவாரும் உளர்.
இது பிராணனின் இயல்பான இயக்கத்தாலே நடை பெறுதலின், `அசபை` எனப்பட்டது. அசபை, வாய்விட்டுச் செபிக்கப் படாதது, `அஜபா` என்பது வடமொழிப் பெண்பாற்சொல். `செபிக்கப் படாதது` எனவே, இதனை, `மானதமாகக் கணித்தலே சிறப்பு` என்பது பெறப்படும்.
`அம்` என்பதனை, `அஹம்` எனத் திரித்து, `ஸ:` என்பதன் பின் வைக்க, `ஸோஹம்` என்றாகி, `அவன் நான்` எனப் பொருள் தரும். அதனால், `ஸோஹம்` எனப் பாவிக்கும் மந்திரமும் அம்ஸ மந்திரத்தின் வேறுபாடே என்பர், அம்ஸ மந்திரத்தால் பாச நீக்கமும், ஸோஹம் பாவனையால் சிவப்பேறும் உளவாகும் என்க.
இதனால், `காயசித்தி முதலிய பலவற்றிற்கும் துணையாகிய பிராணாயாமத்திற்கு உரிய மந்திரம் இது` என்பது, காய சித்தி உபாய இயைபு பற்றிக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே.

பொழிப்புரை :

பூரக ரேசகங்களை மேற்கூறியவாறு அம்ஸ மந்திரத்தாற் செய்தபின் கும்பகம் செய்யும் பொழுது `ஹாம்` என்னும் வித்தெழுத்தாலே (பீஜாட்சரத்தாலே) பிராணனைச் சுழுமுனை நாடி வழியே கண்டத்தளவும் செலுத்திப் பின், `ஹௌம்` என்னும் வித்தெழுத்தால் ஆஞ்ஞையை அடைவித்து, அங்கே மலவெழுத் துக்கள் நீங்கிய திருவைந்தெழுத்து, `தத்துவமசி` மகாவாக்கியப் பொருளையும், `சோஹம்` என்பதன் பொருளையும் தருமாற்றை உபதேச முறையான் உணர்ந்து அதனானே அவ்வாயுவை அசையாது நிறுத்திப் பின் அபானவாயு எழத் தொடங்குமாயின், அதனைப் பிரணவத்தால் அடக்கிப் பிராணனை முன்போலவே மேலெழச் செய்யின், அவ்வாறு செய்பவன் சிவமாந் தன்மையை அடைவான்.

குறிப்புரை :

``உந்திச் சுழியின் உடன் ஏர் பிராணன்`` என்றது, `பிராணனை அஃது எழுமிடத்திலிருந்தே இவ்வாறு எழுப்புக` என்றவாறு. உடன் - விரைவாக. ஏர்தல் - எழுதல். நிறுத்துதற்கு ``சிவமந்திரத்தினால்`` என விதந்தோதியது போலப் பிராணனையும், அபானனையும் எழுப்புதற்கு உரிய மந்திரங்களை விதவாமையானும், ``எழுப்பி`` என வாளாகூறி யொழியாது ``சிந்தித் தெழுப்புக`` என்றமையானும், பிராணனை உள்வாங்குதற்குரிய ``ஹம்`` என்பதனை மாத்திரை கூட்டி அது நெடிது செல்லுமாறு எழுப்பி, அப்பிராணன் நிற்றற்கு அம்மந்திரத்தை ஹௌகாரமாகத் திரித்து முடித்தல் வேண்டும் என்பதும், அபானனை மூலாதாரத்திற்குரிய பிரணவத்தால் எழுப்புதல் வேண்டும் என்பதும் பெறப்பட்டன.
மந்திரங்கள் வாயினால் சொல்லப்படும் சொற்களும், அவற்றொடு கூட்டப்படும் வித்தெழுத்துக்கள் (பீஜாட்சரங்கள்) மனத்தால் சிந்திக்கப்படும் எழுத்துக்களும் ஆம் என்க. `முந்தி நிறுத்தி`` என இயையும். ``முகடு`` என்றது, சுழுமுனையின் உச்சியாகிய ஆஞ்ஞையை. பிராணனை அவ்விடத்து நிறுத்தும் முன்னே அபான வாயு கீழ்ச் செல்லுதல் குற்றமாகாமையின், ``முந்தி முகட்டின் நிறுத்தி`` என்றார், எனவே, ``மூலத்துவாரத்தை முக்காரம் மிட்டிரு`` (பா.571) என மேற் கூறியதும் இதுவேயாதல் அறியப்படும். ``அவன் சிவனாம்`` என மாறுக. இனி `அவ்வாறு செல்பவன்` என்பதைத் தோன்றா எழுவாயாகக் கொள்ளின், ``அவன்`` என்பது பகுதிப் பொருள் விகுதியாம், ``ஆம்`` என்றது ``அப்பாவனையைத் தலைப்படுவன்` என்றவாறு.
இதனால், காயசித்தி பெற்றவன் அதனால் பெறற்பாலதாய பயனைப் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மாறா மலக்குதந் தன்மேல் இருவிரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே.

பொழிப்புரை :

அசுத்தத் தன்மை நீங்காதே எருவாய்க்கு இரண்டு விரற்கிடைமேலேயும், தன் சொல்லாற் சொல்லப்படாத குறிக்குக் கீழே யுமாய் உள்ள இடத்தில் தியானியுங்கள் `யாரை` எனின், உடம்பின் கண் ஆறு வகையில் உள்ள இறைவன் அங்கும் உளன். எனவே, அவனையே தியானியுங்கள் என்பதாம். அங்குத் தியானிக்குமிடத்து, ``ஊமை எழுத்து`` எனப்படும் பிரணவத்தால் தியானியுங்கள்.

குறிப்புரை :

இறைவனைத் தியானிக்கும் இடங்களில் ஒன்றாகிய ``மூலாதாரம் எனப்படுவது எருவாயுமன்று; கருவாயுமன்று`` என மேற் (பா.568) கூறியதனை நன்கு வலியுறுத்தற்கு, ``குதந்தன்மேல்`` எனவும், ``இலிங்கத்தின் கீழே`` எனவும், அங்கு இறைவன் இருக்கு மாறு உணர்த்து முகத்தான் ``யாரை`` என்னும் அவாய் நிலையை நிரப்புதற்கு, ``ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன் ``எனவும் கூறினார். மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களிலும் இறைவன் முறையே ``அதோ முகன், பிரமன், மால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன்`` என்பவராக வீற்றிருப்பான். ``அதோமுகம் கீழண்ட மான புராணன்`` ``அதோமுகமாகிய அந்தமில் சத்தி- அதோ முகமாகி அமர்ந்திருந் தானே`` என்பவற்றால், அதோமுக மூர்த்தியின் நிலை பற்றி அறிந்துகொள்க. பிற யோகநூல்கள் மூலாதாரத்தில் விநாயகராய் இருப்பன் எனக் கூறும். கீழ்நோக்கித் தொங்கும் தும்பிமுகத்தை யுடைய விநாயகர் அதோமுகரே. ஐந்து முகத்தோடு அதோ முகமுங் கூடிய அறுமுக மூர்த்தி முருகன். ``உடம்பிடை`` என்பதன்பின், ``உள்ள`` என்பது சொல்லெச்சமாய் நின்றது. ``அண்ணல் அங்கும் உளன்`` என உம்மையை மாற்றி யுரைக்க.
இதனால், அபானனை எழுப்புதலும் இன்றியமையாத தென்ப துணர்த்த வேண்டி, அதனை எழுப்புமாறு கூறப்பட்டது. இதனுள், ``கூறா உபதேசம்`` என்றது ``அபானனைச் சிந்தித் தெழுப்பி`` என்றதனைத் தெரிந்துணர்த்தியவாறு. உபதேசிக்கப் படுவதனை, ``உபதேசம்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 11

நீல நிறமுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே.

பொழிப்புரை :

பிராணனை முந்தி முகட்டில் நிறுத்திய பின், அதற்கு மேலே உள்ள ஏழாந்தானமாகிய உச்சியில் திருவருளோடு நேரே கூடி, ``இத்திருவருளல்லது பிறிதொன்றும் நிலையுடையதன்று`` என்பதை எவரேனும் உணர்ந்திருப்பார்களாயின், அவர்கள் ஆன்ம லாபத்தைப் பெறுதலேயன்றி, நரை திரை அணுகாது, என்றும் இளமையோடு இருக்கும் நன்மையையும் அடைவர். இஃது எங்கள் ஆசிரியர் ஆணை யாகச் சொல்லப்படும் உண்மை.

குறிப்புரை :

``குண்டலி சத்தியன்றிச் சிவசத்தி`` என்பது உணர்த் துதற்கு, ``நீலநிறமுடை நேரிழையாள்`` என்றார். ஆறாந்தானமாகிய ஆஞ்ஞை விந்துத்தானமாகலின், அதற்கு மேலுள்ள உச்சி சத்தித் தானமாம். சத்தி அருவ நிலையது ஆகலானும், அதில் அருவுருவ நிலையாகிய ஆஞ்ஞையினும் மிக விளக்கமாகத் திருவருள் விளங்கு மாகலானும் அதனையே, ``நீல நிறமுடை நேரிழையாளொடும் சாலவும் புல்லி`` என்றார். ``பாலனும் ஆவர்`` என்ற உம்மை, இறந்தது தழுவிய எச்சம். ``ஆவர்`` என்றது, ``ஆதலை மிகப் பெறுவர்` என்றவாறு. பராநந்தி - பரானந்தத்தை எய்தியவர், பரானந்தம் - மேலாய இன்பம்; சிவானந்தம்.
இதனால், `காய சித்தி பெற்றோன் அதனாலாம் பயனை மிகப் பெறுவானாயின், அதனானே, காய சித்திப் பயனும் மிகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே.

பொழிப்புரை :

உணவுக் குறைவால் முகத்தில் தசை ஒட்டிக் கண்குழியுமாயினும், அதனால், உடலுக்கு அழிவு வந்து விடாது. மாறாக, உடம்பு இளைத்தால் பிராணவாயு வசப்பட்டு காய சித்தி கைகூடும். ஆகவே, உணவு குறையின், உயிர், நலம் பெறுதற்குரிய வழிகள் பலவும் அமையும். அதனால், உண்டி சுருக்கியவன், இறவாமையாலும், இன்ப நிறைவாலும் சிவனோடொத்து நிற்பான்.

குறிப்புரை :

``அண்டம்`` என்றது தலையை. ``அண்டம், பிண்டம்`` என்னும் நயம்பற்றி இவ்வாறு ஓதினார். வருகின்ற திருமந்திரத் துள்ளும்``அண்டத்துள் உற்று`` என்பார். மகளிர் இன்பத்தை விரும்புவோருள்ளும், அதனைக் கை விடின் உடல் கெடும்` என்று அஞ்சுவார் இல்லை. ஆகவே, `அவ்வின்பம் குறையின் உடற்கு அழிவில்லை` என விலக்குதல் வேண்டாமையின், அப்பொருள் பட ஈண்டு நலிந்துரைத்தல் வேண்டாமை அறிக. `உள` என்பதன்பின், `ஆம்` என்பது எஞ்சிநின்றது.
இதனால், ``காய சித்தியும், உயிர் நலமும் வேண்டுவோர் உண்டி சுருக்கல் இன்றியமையாதது`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

பிண்டத்துள் உற்ற பிழைக்கடை வாசலை
அண்டத்துள் உற்ற தடுத்தடைத் தேவிடின்
வண்டிச்சிக் கும்மம் மலர்க்குழல் மாதரார்
கண்டிச்சிக் கும்மந்நற் காயமு மாமே.

பொழிப்புரை :

உடலில் பொருந்தியுள்ள, தவ ஓழுக்கத்திற்கு இழுக்குத் தருகின்ற கடைப்பட்ட வழியை. உச்சியில் விளங்குவதாகிய திருவருளைத் தலைப்படுமாற்றால் அடைத்தே விடின், உடம்பு, மகளிர் கண்ட உடன் விரும்பத் தக்க அழகைப் பெற்று விளங்கும் பயனையும் அடையலாகும்.

குறிப்புரை :

``புழைக் கடை`` என்பது திரிந்து வழங்கும் இழிவழக் கோடு ஒத்துத் தோன்ற, ``பிழைக் கடை` என நயம்பட ஓதினார். பிழை - குற்றம். எனவே, இஃது உண்மையில் புணர்ச்சி தவிர்தல் கூறியதேயாம். திருவருள் உணர்வும், சிவானந்தப் பேறும் உடையவர்க் கன்றி புணர்ச்சி தவிர்தல் இயல்பாக உண்டாகாது. ஆயினும், யோக முயற்சியால் தவிர்தல் கூடும்; அம்முயற்சி இது என்பதனை இதனுள் நாயனார் உணர்த்தியருளினார். ``பிழைக்கடை`` என்பதன் உட் பொருளை உணராமல் வெளிப்பொருளே பற்றி, ``எருவாய்`` எனப் பலரும் உரைத்தார். அப்பொருள் மேலே பலவிடத்தும் பெறப்பட்டது. நன்மை - அழகு. உம்மை, `மேற்கூறியவையேயன்றி` என இறந்தது தழுவிற்று. ``நற்காயமும் ஆம்`` என்றாராயினும், `காயம் நல்லது மாம்` என்றலே கருத்தாதல் அறிக. மகளிரை விரும்ப விரும்ப அவரால் வெறுக்கப்படும் நிலையும், அவரை விரும்பாது ஒழிய ஒழிய அவரால் விரும்பப்படும் நிலையும் உளவாகின்ற வியப்பினைக் குறித்தற்குப் பின்னிரண்டடிகளை அவ்வாறு ஓதினார். இம்மந்திரத்திற் பாடம், பலவிடத்துப் பிழைபட்டது.
இதனால், காய சித்திக்கு வேண்டப்படுவதாய மற்றும் ஓர் உபாயம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலும் மாமே.

பொழிப்புரை :

சிவபெருமான், எவ்வுயிரையும் அதன் உடலினின்றும் பிரித்துக் கொண்டுபோதற்குச் சுற்றிக் கொண்டிருக் கின்ற கூற்றுவனைத் தொன்றுதொட்டே சினந்து, முக்கோண வடிவான மூலாதாரத்தில் உள்ள அக்கினியில் காய்ந்து கொண்டிருக்கின்றான்; ஆகையால், அவ்விடத்தில் அவனது கழல் அணிந்த திருவடியைக் காணப்பெற்றால், பின்னர் நிழலில் நிற்பினும், வெயிலில் நிற்பினும் ஒன்றே; அஃதாவது, அவற்றால் வரும் கேடு ஒன்றுமில்லையாம்.

குறிப்புரை :

``ஈசன்; இரதத்துள் அங்கியுள் சீறி அழலும்` என மாறிக் கூட்டுக. `கூற்றுச் சீறி` என இரண்டாவதன் தொகையாய் இயையும், ``முன்`` என்பது, `முதலாக` எனப்பொருள் தந்தது, `தொன்மை` என்றது, உடம்பு தோன்றிய காலத்தை. முக்கோண வடிவை `இரதம் - தேர்` என்றார். இறைவன் உயிர்களின் உடம்பில் மூலாதாரத்தில் அக்கினியையும், அவ்வக்கினியுள் உடலை நிலைப்பிக்கின்ற ஆற்றலையும் படைத்து, அவற்றை நீங்காது நிறுத்தித் தானும் உடன் நிற்றலானும், அவற்றை அறிந்து, அவ்வக்கினியை எழுப்பி அவ் விடத்தில் அவனைத் தியானிப்பவர், காய சித்தியைப் பெறுவர் ஆகலானும் இவ்வாறு கூறினார். கூறவே, மேற்கூறியவாறு பிராணனையும், அபானனையும் மூலாதாரத்தினின்றும் மேல் எழச் செய்யுங்கால் முதல்வனது திரு வருளை நினைந்து செய்தல் வேண்டும் என்பது பெறப்பட்டது. `திருவருளை நினைந்து செய்யும் முயற்சியே வெற்றி பயக்குமல்லது, அதனை மறந்து செய்யும் முயற்சி ஒன்றொழிய ஒன்றாகும்` என்பது கருத்து.
இதனால் `காய சித்தி உபாயத்தை இறையருள் வழி நின்று` செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது. இவ்வாறன்றி, `உபாயந் தானே காய சித்தியைப் பயந்துவிடும்` என மயங்குவர் பவ யோகிகள் என்க.

பண் :

பாடல் எண் : 15

நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஈசன் இருத்தலை மேல் நான் தெரிந்து சொல்லிய மூலாக்கினி, `அகார கலை, உகார கலை, மகார கலை, விந்துகலை` என்னும் நான்கு கலைகள், மூலாதாரம் முதல் பிரமரந்திரம் ஈறாக உள்ள ஏழு ஆதாரங்களைப் பொருந்திய பிராண வாயு, உடம்பு முழுதும் உள்ள ஊன் ஆகிய இவைகளையே தன் பசிப் பிணிக்கு மருந்தாக உண்டு, ஒரு மான் கன்று வளர்கின்றவாறு வியப்புடைத்து!

குறிப்புரை :

மான், மகான்` என்பதன் திரிபு. மகான் - பெரியோன்; சிவன். `மகான்` என்பதை மான் எனத் திரித்து அதற்கேற்ப, சிவனது மக்களாகிய உயிர்களை, `கன்றாக` உருவகித்து, `புல்லை உண்ணு தலால் `புல்வாய்` எனப் பெயர் பெற்ற மான் ஒன்று, புல்லை உண்டு வளராமல், நெருப்பு, நிலாவொளி, காற்று, ஊன் என்பவற்றை உண்டு வளர்தல் வியப்பாகின்றது` என நயம்படக் கூறினார். எனவே, மேலை மந்திரத்துட் கூறியவாறு மூலாக்கினியை எழுப்புதல் முதலிய யோகமுயற்சியால் வாழ்நாள் நீட்டித்தல் கூறியவாறாயிற்று. புல்லாவது, ஐம்புல இன்பம்.
இதனால், காயசித்தி உபாயங்களால் அப் பயன் வியக்கத்தக்க வகையில் உளதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப்பல் கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே.

பொழிப்புரை :

மேன்மேல் வளரத்தக்கதாகிய காய சித்தி ஆற்றலைப் பெற நீ விரும்புவையாயின், அச்சத்தி ஒவ்வொரு நெல்லின் அளவாக மெல்ல மெல்ல வளர்கின்ற நுட்பத்தை உடலில் அளவற்ற இடங்களில் பாகுபடுத்திக் கண்டு. அவ்விடங்களில் எல்லாம், மேற்பலவகையாலும் முறைப்படச் சொல்லிய மந்திரங்களின்வழி அதனுள் ஒடுங்குவாயாக.

குறிப்புரை :

`சனனம்` என்பது இடைக்குறைந்து நின்றது. `சனனம்` என்றது காயத்தை. இவ்வாறன்றி, `ஆகுஞ்சன இருக்கை` எனவும் உரைப்பர். வேத சத்தி, உடம்பின் நிலையாமையைமாற்றி நெடிது வாழச் செய்கின்ற ஆற்றல். `அன்புறக் கொள்ளின்` என்பதை, `கொள்ள அன்புறின்` என மாற்றிக் கொள்க. தினை, எள், கடுகு முதலியன போல, சிறுமைக்குக் காட்டப்படுவனவற்றுள் நெல்லும் ஒன்றென்க. நெல்லின் - நெல்லின் அளவாக. இனி, `நெல் - நெற்பயிர்` எனக் கொண்டு, `நீர் கொளு நெல்லின்` எனவும் பாடம் ஓதுப. ``களத்தினால்`` என்றது வேற்றுமை மயக்கம்.
இதனால், காய சித்தி உபாயங்கள் மேற் சில வகையால் தொகுத்துணர்த்தப்பட்டதாயினும், உண்மையில் அது பரந்து கிடப்பது என்பது உணர்த்தி, `அவற்றை அறிந்து அனுபவமாகச் செய்க` என முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மதிவட்ட மாக வரையைந்தும் நாடி
இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனால்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்
அதுவிட்டுப் போமாறும் ஆயலுற் றேனே.

பொழிப்புரை :

திங்களினது சுற்றாக வரையறுக்கப்படுகின்ற ஐந்து பகுதிகளையும் முன்னே ஆராய்ந்து, பின்பு அதனை விடுத்து, ஞாயிறு பன்னிரண்டும் பொருந்திய அக் கூற்றினால் இறைவன் கால சக்கரத்துள் நின்று உடலைக் காக்கின்ற வகையையும், பின்பு அங்ஙனம் காக்கப்படுகின்ற உடலை விட்டு உயிர் போகின்ற வகையையும் இங்கு ஆராயத்தொடங்கினேன்.

குறிப்புரை :

சந்திரன் பன்னிரண்டு இராசிகளையும் ஒருமுறை சுற்றிவருகின்ற வட்டத்தில் ஓர் அரை வட்டம் - ஆறு இராசி அளவு - வளர் பிறையாயும், மற்றோர் அரைவட்டம் - ஆறு இராசியளவு தேய் பிறையாயும் தோன்றும். சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்ந்திருக்கும் நாளே அமாவாசியை. அப்பொழுது சந்திரன் சூரிய ஒளியில் மறைந்து விடுவதால் காணப்படுதல் இல்லை. சூரியனை விட்டு விலகிச் செல்லச் செல்லச் சந்திரனது ஒளி சிறிது சிறிதாக மிகுந்து காணப்படும். இந்நிலையில் சந்திரன் சூரியனுக்கு முன்னே செல்வதாய் இருக்கும். அதனால், அந்நிலை `முற்பக்கம்` (பூர்வ பட்சம்) எனப்படும். இது சந்திரனது வெள்ளொளி மிகுந்துவரும் காலம் ஆதலின், `சுக்கில பட்சம்` என்றும் சொல்லப்படுகின்றது. சுக்கிலம் - வெண்மை. சந்திரன் சூரியனுக்கு ஆறாவது இராசியில் நிற்கும்பொழுதே முழு நிலவாய்க் காட்சியளிக்கும். அதுவே பூரணை (பௌர்ணிமை) யாகும். பின்பு சந்திரன் சூரியனுக்கு ஏழாவது இராசி முதலாக வரும்பொழுது சூரியனை நெருங்குவதால், அதன் ஒளி மறையத் தொடங்கும். அந் நிலையில் சந்திரன் சூரியனுக்குப் பின் செல்வதாய் இருக்கும். அதனால், அந்நிலை `பிற்பக்கம்` (அபர பட்சம்) எனப்படுகின்றது. ஒளி குறைய இருள் மிகுவதால் இந்நிலை `கிருஷ்ண பட்சம்` என்றும் சொல்லப் படுகின்றது. கிருஷ்ணம் - கறுப்பு. இந்த அரைவட்டம் ஒவ்வொன்றும் சூரியனது நாட்கணக்கில் ஏறக்குறையப் பதினைந்தாக அமைவதால், அப்பதினைந்திலும் உள்ள சந்திரனது நிலைகள் ஒன்று, இரண்டு என்று முறையாக எண்ணப்பட்டு `பிரதமை, துவிதியை` முதலிய பதினைந்து திதிகளாகச் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு கூற்றிலும் உள்ள ஐந்து திதிகள் நந்தை, பத்திரை, சயை, இரித்தை, பூரணை எனப் பெயர் பெறும். இவ்வைந்தையும் நன்கு உணர்வதே சந்திரகதியை நுண்ணி தாக அறிவது ஆதலின், ``மதி வட்டமாகவரை ஐந்தும் நாடி`` என்றார். ``வரை ஐந்து`` வினைத்தொகை. சந்திர கதியை முன்னே ஆராய்தல், அதுவே நிலவுலகின் உயிர்களது வினை நுகர்ச்சிக்குச் சிறந்த காரண மாதல் பற்றியாம். இதுபற்றியே திதியும், நட்சத்திரமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. முன்னர் ``மதி`` என்றதனாலும், `சூரியர் பன்னிருவர்` என்பது பயின்ற வழக்கு ஆதலாலும், வாளா, ``ஈராறு`` என்றே போயினார். பின் வந்த `வட்டம்` கால சக்கரம் என்பது முன்னிரண்டடிகளாலும் விளங்கிக் கிடந்தது. காலம் இறைவனது ஆணைவழி நின்றே உலகத்தைத் தொழிற்படுத்தும் என்பது உணர்த்துதற்கு, `காலம், பாலிக்குமாறு` என்னாது ``பதி வட்டத்துள் நின்று பாலிக்கு மாறு`` என, இறைவனது செயலாகவே ஓதினார்.
\\\"காலமும் கடவு ளேவ லால்துணைக் கார ணங்காண்``
என்பது சிவஞான சித்தி. (சூ. 1-10)
இதனால், `இவ்வதிகாரம் நுதலிய பொருள் இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழும்
கற்றறி வெட்டும் கலந்தறி வொன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்ற தறியா தழிகின்ற வாறே.

பொழிப்புரை :

உடற் கூற்றால் ஐம்புலன்களை ஐம்பொறிகள் பொருந்திப் பொதுவாக அறிகின்ற ஐந்தினாலும், பொறிகள் பொதுவாக அறிந்தவற்றை மனம் முதலிய உட்கருவினைப் பற்றி நின்று சிறப்பாக அறிகின்ற நிலையில் அந்த ஆறினாலும், மனம் சிறப்பாக அறிபவற்றில் உயிர் அழுந்தி நிற்கும் நிலையில் அந்த ஏழினாலும், உயிர்க்கு உறுதி தேட எண்ணி நூல்களைக் கற்கும் நிலையில் அந்த எட்டினாலும் கற்றவற்றை அநுபவமாக உணரும் நிலையில் அந்த ஒன்பதினாலும், அநுபவமாக உணர்ந்த நூற் பொருளைக் கடைப்பிடிக்கும் நிலையில் அந்தப் பத்தினாலும் இவ்வாறு பலவகைத் தொழிலால் உடலிற்கு அளந்த நாழிகை, கழிந்தது தெரியாமல் கழிந்து போவது இரங்கத்தக்கது.

குறிப்புரை :

புலனுணர்வில், ஒரு காலத்திலே ஒரு பொருளின்கண் ஐம்புலன்களையும் உணர்தல் சிறந்ததாகலின், காலக்கழிவை ஐந்தின் மேல் வைத்தே கூறினார். `ஒருகாலம்` என்றல் விரைவு பற்றியாதலின், ``ஐந்து`` என்றது மலைவாகாமை அறிக. ``ஐந்து`` முதலியவற்றில் ஆன் உருபு விரிக்க. `இப்பலவகை` என்னாது, ``பல வகை`` என்றே கூறினமையால், `இவ்வாறு பலவகையால்` என்பதே பொருளாயிற்று. ஆகவே, ஒன்றனையும் அறியாது அறியாமையுள் அழுந்துதலாலும் காலம் கழிதல் பெறப்படும்.
இதனால், உடலிற்கு அளந்த காலம் ஒழிவின்ற உருண்டோடு கின்றமையும், அவ்வோட்டந்தான் பல்வேறு வகையினதாதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகும்
கழிகின்ற கால்அறு பத்திரண் டெண்ப
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணல் திருந்தே.

பொழிப்புரை :

உலகர்க்குப் பதின்மூன்றாண்டுகள் பயனின்றி இறக்கும் எல்லையாகவும், முப்பத்து மூன்று ஆண்டுகள், பலரும் இரங்கிப்பேச இறக்கும் எல்லையாகவும், அறுபத்திரண்டாண்டுகள் பயன்பெற்று இறக்கும் எல்லையாகவும் எண்பது ஆண்டுகளும், நூறாண்டுகளும் நிறைந்து முற்றிய எல்லையாகவும் கணக்கிடப்படுதல் கால சக்கரத்தின் முறையாகும்.

குறிப்புரை :

எல்லையே கூறினமையால், அவற்றுக்கு உட்பட்ட ஆண்டுகளும் அத்தகையனவாதல் தெளிவு. திருந்து - முதனிலைத் தொழிற்பெயர். இஃது அதனையுடைய முறைமையைக் குறித்தது.
இதனால், கால சக்கரம் அனைவரிடத்தும் ஒருவகையாற் சுழலாது பல்வேறு வகையால் சுழன்று செல்லுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

திருந்து தினமத் தினத்தி னொடுநின்
றிருந்தறி நாளொன் றிரண்டிரு மூன்று
பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி
வருந்துத லின்றி மனைபுக லாமே.

பொழிப்புரை :

பிறந்த நட்சத்திரமும், அதனோடு ``இரண்டு, நான்கு, ஆறு`` என்பவற்றைக் கூட்ட வருகின்ற ``மூன்று, ஐந்து, ஏழு`` என்னும் எண்ணுமுறைக்கண் வருகின்ற நட்சத்திரங்களும் ஒழித்து மற்றைய நட்சத்திரங்களிலே, இல்வாழ்க்கைக்குரிய யாதொரு செயலையும் தொடங்குதல் பொருந்தும்.

குறிப்புரை :

பொருந்துதல், அச்செயல் பற்றி நிகழும் நாள்கள் பலவும் பயன் தரும் நாளாதற்கு ஏதுவாதல். எனவே, விலக்கப்பட்ட நட்சத்திரங்களில் தொடங்கினால் அந்நாள் வீணாகக் கழியும் என்க. இதனானே, யோகியர் யோகம் தொடங்குதற்கு உரியநாளும் இங்கு ``ஆம்`` எனப்பட்ட அவையே என்பதும் கூறியவாறாம். ஒன்று - கூடுகின்ற. ``இருமூன்று`` என்பதில் ``இரு`` என்பது முன்னும் சென்று இயையும். அதற்கேற்ப ``இரண்டு`` என்பதும் இருமுறை ஓதப்படும். ``எட்டு மூன்று`` என்பது பாடம் அன்று. ஒருவன் பிறந்த நட்சத்திரம் முதலாக இருபத்தேழு நட்சத்திரங்களையும் ஒன்பது ஒரு கூறுபடுத்து மூன்று கூறாக வகுக்க. மூன்று கூற்றிலும் முதலில் உள்ள நட்சத்திரங்கள் முறையே ``சென்ம நட்சத்திரம், அனுசென்ம நட்சத்திரம், திரிசென்ம நட்சத்திரம்`` எனப்படும். அவை மூன்றும் ஆகா என்பது வெளிப்படை மற்றும் அம்மூன்று கூறுகளிலும், `மூன்று ஐந்து ஏழு` என்னும் எண்ணு முறைமைக்கண் நிற்கும் நட்சத்திரங்களும் ஆகா என்பதும், ``இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, ஒன்பது`` என்னும் எண்ணுமுறைமைக்கண் நின்ற நட்சத்திரங்கள் ஆகும் என்பதும் இங்குக் கூறப்பட்டன. நட்சத்திரங் களை இவ்வாறு அறிதலை, `தாரா பலன் பார்த்தல்`` எனச் சோதிட நூல்கள் கூறும். அதனை வாழ்நாள் பற்றிய ஆராய்ச்சியில் இங்கு நாயனார் கூறினார் என்க. `மனை` என்றது மனைவாழ்க்கைக்குரிய செயலைக் குறித்த ஆகுபெயர்.
இதனால், கால சக்கரத்துள் நன்மை தரும் பகுதிகள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

மனைபுகு வீரும் மகத்திடை நாடி
எனைஇரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு
வினையறி யாறு விளங்கிய நாலே.

பொழிப்புரை :

ஞாயிற்றின் வட்டத்துள், `முப்பது நாள் ஒரு கூறாகப் பன்னிரண்டு கூறு கூடியது ஒருவட்டம்` என்று அறிந்து, அவ் வட்டம் சிலபோது, பன்னிரண்டு கூறும் கூட வருகின்ற முந்நூற்றறுபது நாள்களுக்கு மேல் ஆறு நாளும், சில போது நான்கு நாளும் கூடி நிற்றலையும் உங்கள் மனத்தில் நன்கு ஆராய்ந்து மேற்சொல்லிய செயல்களில் புகுவீராக.

குறிப்புரை :

`நாள்` என்பது, `ஞாயிறு தோன்றி மறைந்து மீளத் தோன்றுமளவும் உள்ள காலம்` என்பதும், அக்காலத்துள் ஞாயிறு காணப்பட்டு நிற்பது, `பகல்` என்றும், காணப்படாது நிற்பது `இரவு` என்றும் சொல்லப்படுதலும் யாவரும் அறிந்தவை. அவ்வளவான நாள் முப்பது கூடியது, ஞாயிற்றின் பகுதி வட்டம். இதனை, மேடம் முதலிய ராசிகளின் தொடர்பு பற்றி, `மேடரவி, இடபரவி` முதலாக வழங்குவர். எனினும், இப்பகுதிகளில் சந்திரன் முழுநிலவாய்த் தோன்றும் நட்சத்திரத்தை ஒட்டி, இவற்றை, சித்திரைத்திங்கள் வைகாசித் திங்கள் முதலாக வழங்குதலே பெரும்பான்மை. இவ்வாற்றால், ஞாயிற்றின் வட்டப் பகுதியும் வேறே. திங்களின் வட்டப்பகுதியும் வேறே. ஞாயிற்றின் வட்டப்பகுதி பெரும்பான்மை என்றும் ஒருபடித்தாய் நிகழும். திங்களின் வட்டப்பகுதி அவ்வப்பொழுது வேறுபடும். ஞாயிற்றின் வட்டப்பகுதி ஒருபடித்தாய் நிகழ்தலின், அதனை உலகியல் நடை முறைக்கும், திங்களினது வட்டப்பகுதியால் உலகின் விளைவுகள் வேறுபடுதலின் அதனை நோன்புகள் முதலியவற்றிற்கும் வகுத்தனர் முன்னோர். கோள்களின் நிலைகளால் உலகில் விளைவுகள் வேறு படுதலை, நாவுக்கரசர், ஞானசம்பந்தர் பாண்டிநாடு செல்ல நினைத்த பொழுது, `நாளும் கோளும் வலியில` எனக் கூறியருளினமை யாலும், அதுபொழுது ஞானசம்பந்தர், `அவை அன்ன வாயினும் சிவனடி யாரை வாதியாது, நல்லனவாம்` என்பதை வலியுறுத்தித் திருப்பதிகம் அருளிச்செய்தமையானும், பின்னும் அவர் (ஞானசம்பந்தர்) புனல் வாதத்திற்கு அருளிச்செய்த திருப்பாசுரத் திருப்பதிகத்துள்,
``கோட்பா லனவும் வினையுங் குறுகாமை எந்தை
தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க``
என்று அருளிச் செய்தமையானும் அறியலாம்.
``மகத்திடை நாடி`` என்பது பாடம் அன்று. பத்து அஞ்சு - பதினைந்து. இரு பதினைந்து - முப்பது. ``எனை முப்பதும்`` என்றது எந்த ஒரு முப்பதுநாள் கூடிய பகுதியும் ஞாயிற்றின் வட்டத்தில் பன் னிரண்டில் ஒருகூறாய் நிற்கும் என்றவாறு. இக் கூறு `மாதம்` எனவும், இம் மாதம் பன்னிரண்டு கூடிய ஒரு வட்டம் `யாண்டு அல்லது வருடம்` எனவும் படும். ஞாயிற்றின் ஒரு வட்டத்தில் முந்நூற்றறுபது நாள் களுக்கு மேலும் சில நாள் கூடுதல், சில மாதங்கள் முப்பதுக்கு மேலும் சில நாள்களைப் பெறுதலினாலாம். சில மாதங்கள் முப்பது நாளிற் குறைதலும் உண்டு. இவை எல்லாம் சூரியன் அந்த அந்த இராசியோடு தொடர்புகொண்டு நிற்கும் நிலையைப் பற்றியன. சில யாண்டுகளில் ஆறு நாளும், சில யாண்டுகளில் நான்கு நாளும் கூடுதலை, `யாண் டொன்றுக்கு முந்நூற்றறுபத்தைந்து நாள்` என்று அமைத்துப் போவர். இவற்றையெல்லாம் அவ்வப்பொழுது அறுதியிட்டுக் கூறுவர் அறிந்தோர். இவர் `கணிவர்` எனப்படுவர். ``தனை`` என்றதும், ``தற் குறி`` என்றதும் முறையே, ஞாயிற்றின் முழு வட்டத்தையும், அதன் பகுதி யாய நாளினையுமாம். `ஏற அட்டும்` என்பது குறைந்து நின்றது. ஏற அட்டுதல் - கூடச் சேர்த்தல். வினை அறி ஆறு - ஞாயிற்றின் செலவை அறியும் வழி. `எனை முப்பதும் ஈராறு என்னும் அடுக்காகக் கூட்டி ஞாயிற்றின் முழு வட்டத்தின் அளவை உணர்ந்து, தற்குறி ஆறு, விளங்கிய நால் இவற்றையும் உம் மனத்திடை நாடி மனை புகுவீர்` என முடிக்க. முப்பது முதலியன, அவ்வளவினவாகிய நாள்களைக் குறித்தன.
இதனால், கால சக்கரத்தின் பெரும்பான்மை இயல்பு இனிது விளங்கக் கூறப்பட்டது. `சிறுபான்மை இயல்புகளைக் கணி நூல்களில் கண்டுகொள்க` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 6

நாலுங் கடந்தது நால்வரும் நால்ஐந்தும்
பாலங் கடந்தது பத்துப் பதினைந்து
கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்
டாலங் கடந்ததொன் றாரறி வாரே.

பொழிப்புரை :

ஒருவன் பிறந்து நான்கு ஆண்டுகளைக் கடந் தானாயின், பின்னும் நான்கு நான்கு ஆண்டாக இருமுறை கடத்தல் வேண்டும். இனி, ஐந்து ஆண்டுகளைக் கடந்தானாயின், அப்பால் பின்னும் பத்து, பதினைந்து என்னும் ஆண்டுகளைக் கடத்தல் வேண்டும். எனவே, நான்கு, ஐந்து, எட்டு, பத்து, பன்னிரண்டு, பதினைந்து என்னும் ஆண்டுகள் வாழ்நாள் இடையறும் காலமாகும் என்பது அறியப்படும். பதினைந்து யாண்டு வரையில் ஒருவன் யோகத்தைத் தொடங்க இயலாது. ஆகவே, அதுகாறும் வாழ்நாளை நீட்டித்துக்கொள்ளுதலும் இயலாது. அதனால், இவ்வாறு, பிறந்து, ஆண்டுகள் பலவாக வளர்கின்ற உடம்பினை, உடம்பினை உடைய தாகாத தன்மையுடைய ஒரு பொருளால் அருள்புரியப்பட்டு மேற்சொல்லிய ஆறு இடையறவுகளையும் (கண்டங்களையும்) கடந்த ஓர் அருமையை அறிகின்றவர் உலகில் யார் உளர்!

குறிப்புரை :

``அறிவாராயின், பதினாறாவது வயது முதலாகவே அப்பொருளை அடைதற்கு யோகம் முயல்வர். அதனால், காலத்தைக் கடந்து, என்றும் பதினாறாண்டாகவே இருக்கும் பயனையும் பெறுவர்`` என்பதாம். மார்க்கண்டேயரது வரலாறு இங்கு நினைவு கூரத் தக்கது.
நான்கு முதலியன, அவ்வளவினவான ஆண்டுகளைக் குறித்தன. ``கடந்தது`` இரண்டும், ``கடந்ததேல்`` என்னும் பொருள தாகிய முற்றெச்சங்கள். `வரும்` என்றது, `கடத்தற்கு அரிதாய் வரும்` என்றவாறு. இதனைப் பின் வந்த, `நால், பத்து, பதினைந்து` என்பவற் றோடும் கூட்டுக. பாலனாம் தன்மை தமிழில், ``பாலம்`` என நின்றது. குணம் உடையதனை, குணமாகக் கூறினார். இனி, ``சிவன்`` எனத் தோன்றா எழுவாய் வருவித்து உரைத்தலும் ஆம். ஆண்டு - ஆளப் பட்டு. ஆலம் - நஞ்சு; என்றது நஞ்சு போலும் ஆண்டெல்லைகளை.
இதனால், காலசக்கரத்தின் கொடுமையை விதந்து, `அஃது உணர்ந்து, காலம்பெற, யோகத்தைத் தொடங்குக` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆறும் இருபதுக் கையைஞ்சு மூன்றுக்குந்
தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை
கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு
வேறு பதிஅங்கண் நாள்விதித் தானே.

பொழிப்புரை :

முதல் ஆறு திங்கட்குத் தனித்தனி நாள்கள் இருபதும், அடுத்த மூன்று திங்கட்குத் தனித்தனி நாள்கள் இருபத் தைந்தும், அடுத்த இரண்டு திங்கட்குத் தனித்தனி நாள்கள் இருபத் தாறும், இறுதி ஒருதிங்கட்கு நாள் இருபத்தேழும் என்று இவ்வாறு இறைவன் யோகத்திற்குரிய திங்களின் நாட்கணக்கை உலகியலுக்கு வேறாக வகுத்துள்ளான்.

குறிப்புரை :

உலகியலுக்கு வந்துள்ள கணக்கு, மேல், `மனை புகுவீர்` என்னும் மந்திரத்தும் கூறப்பட்டது. யோகத்தைத் தொடங்குவோர் இத்துணை நாளளவே யோகம் புரிந்து எஞ்சிய நாள்களில் ஓய்வு கொள்ளுதல் வேண்டும் என்பதாம். ஓய்வுகொள்ளும் நாள்கணக் கையும், பகிர்ந்து இடைஇடையே கொள்ளுதல் நலமாகும். ஓய்வுநாள் கணக்கை நாழிகையாகவும் பகுத்துக் கொள்ளலாம். தொடக்கத்தில் ஓய்வு மிகுதியாகவும், போகப்போக ஓய்வு குறைந்தும் நிற்றல் அறியத் தக்கது. இவ்வகையில் ஓராண்டு சென்றபின் மீளத் தொடங்கும் பொழுதும் இக்கணக்கின்படியே செய்தல் வேண்டும் என்க.
ஆறுக்கு இருபதும் என உருபையும், உம்மையையும் மாற்றி யுரைக்க. ``மதி, நாள்`` என்றவை இறுதி விளக்காய், மேலான வற்றோடும் சென்று இயைந்தன. ``நாள்`` - ``வேறு விதித்தான்`` என இயையும். பதி - சிவன். அங்கண் - அவ்விடம். அஃது யோகத்தை ஆராயும் இடம்.
இதனால், `யோகம் புரிதற்குரிய நாள் முறை இத்தன்மையது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தறி பத்தெட்டும் பாரா திகள்நால்
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே.

பொழிப்புரை :

யோகத்தில் நிற்க விரும்புகின்ற நீ! தத்துவங்களைச் சுருக்கி எண்ண வேண்டின், அசுத்த தத்துவங்களில் மூன்று நீங்கலாக ஏனைய இருபத்தெட்டோடு, சுத்த தத்துவம் ஐந்தனையும் அங்ஙனமே கொண்டு, ``தத்துவம் முப்பத்து மூன்று`` என வைத்துக்கொள். இனி அத்தத்துவங்களில் இந்திரியம் பத்து சூக்கும தேகமாய் உள்ள எட்டு இவைகளையும் நிலம் முதலிய பஞ்ச பூதங்களில் அடங்கி நிற்பன வாகவே பாவித்துக்கொள். இனி நிலம் முதலிய அப் பூதங்கள் ஐந்தும் ஒன்றின் ஒன்று - அஃதாவது, ஐந்தாவது பூதமாகிய நிலம் நான்காவது பூதமாகிய நீரிலும், நான்காவது பூதமாகிய நீர் மூன்றாவது பூதமாகிய தீயிலும் இவ்வாறு முறையே தோன்றின என்பதை உணர்.

குறிப்புரை :

நீக்கப்படுகின்ற தத்துவங்கள் ``பிரகிருதி, புருடன், மாயை`` என்க. என்னை? அவை தனி தத்துவமாதற் சிறப்பில ஆதலின். அறை - அறுக்கப்படுவன; அஃதாவது குறைக்கப்படுவன. ``மூன்று அறையாக இருபத்தெட்டொடு`` என மாறுக. ``இருபத் தெட்டொடு`` என்றது, இருபத்தெட்டு உளப்பட என்றவாறு. இருபத் தெட்டு உளப்பட முப்பத்து மூன்று எனவே, சுத்தத் தத்துவங்களில் ஒன்றையும் குறையாது ஐந்தையும் கொள்ளல் வேண்டும் என்பது விளங்கிற்று. ``தொகுமின்`` என்றது, ஒருமை, பன்மை மயக்கம். ``பத்து எட்டும் பாராதிகளில் பதித்து அறி`` என்க. எட்டு; தன்மாத்திரை ஐந்தும், ``மனம், அகங்காரம், புத்தி`` என்னும் அந்தக் கரணம் மூன்றுமாம். சித்தம் பிரகிருதியாய் ஒழியும். பத்து எட்டுப் பாரா திகளில் அடங்கவே, ஆன்ம தத்துவம் அனைத்தும் பஞ்ச பூதங்கள் அளவாய் நிற்றல் விளங்கும். இக்கருத்துப் பற்றியே, நாம் காணும் உலகம், ``பஞ்சபூத பரிணாமம்`` என்றே சொல்லப்படுகின்றது.
``நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலக மாதலின்`` -தொல். மரபியல்
என்றார் தொல்காப்பியனாரும். மற்றும் திருமுறைகளிலும் பிற இடங்களிலும் உலகம் முழுவதும் பஞ்ச பூத பரிணாமம் என்னும் கருத்தே பெரும்பான்மையாகக் காணப்படுதல் தெளிவு. நான்கு முதலியன அவ்வவ் எண்ணு முறைக்கண் நின்ற பூதங்களை உணர்த்தின. `உதித்தது` என்னும் தொழிற் பெயர் இடைக்குறைந்து நின்றது. ``உதித்தது அறி`` என்பதனை இறுதிக்கண் கூட்டி, ``அப் பாராதிகள் உதித்தது அறி`` என எடுத்துக்கொண்டு முடிக்க. என்னை? ஏனைய எல்லாவற்றையும் பாராதிகளில் அடக்கவே, பின்னர் அறியற்பாலன அப் பாராதிகளே யாதலின். பூதங்களின் தோற்ற முறையை அறிதலால், அவற்றைக் கடக்குமாறு புலனாகும். ``தத்துவங்களை இவ்வாறு அறிக`` என்றது, மேற்கூறியவாறு காலத்தை அவற்றிற்கு அதிதேவர்க்கு உரிய பகுதிகளாக வைத்து அவ்வப்பொழுது அவரவரைத் தியானித்து அக்காலங்களால் வாதிக்கப்படாமல் இருத்தற்காம்.
இதனால், `காலத்தை யோகத்திற்கு உரிய வகையில் பகுத்துணர்கின்ற யோகி, அவற்றைக் கடத்தற்குத் தத்துவங்களின் முறைமையையும் உணர்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்
இறையிறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரணம் மற்றொன்று மில்லை
பறையறை யாது பணிந்து முடியே.

பொழிப்புரை :

யோகம் முயலும்பொழுது இங்குச் சொல்லிய முறைகளை எல்லாம் முறையாக உணர்ந்து முயலாது, அவரவர் தாம் தாம் அறிந்தவாறே முயல்வார்களாயின், ஒருவர்க்கும் காலத்தைச் சிறிது வென்று நிலைபெறுதலும் இயலாது. இம்முறைகளைப் பெரியோர் வெளிப்படச் சொல்லாமல் மறைத்துச் சொல்லுதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; யோகத்தோடு சிறிதும் இயல்பில்லா தவரும் வாளா வாய்ப்பறை சாற்றிப் பெருமை பேசிக்கொள்ளாமல், விருப்பம் உடையவர்கள் தக்காரை அணுகிப் பணிந்து கேட்டு முயன்று கருத்தை முடிக்க வேண்டும் என்பது ஒன்றுதான் காரணம்.

குறிப்புரை :

இறை இரண்டில் முன்னது சிறிது; பின்னது தங்குதல்; வாழ்தல். இருத்தல் - உளதாதல். முடி, முதனிலைத் தொழிற் பெயர். அஃது, அதனைக் கருதுதலைக் குறித்தது. இறுதியில், `காரணம்` என்பது சொல்லெச்சம்.
இதனால், `காலத்தை வெல்லும் முறையைத் தக்கார் வாய்க் கேட்டுணராவழிப் பயனில்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு
கடிந்தனல் மூளக் கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே.

பொழிப்புரை :

அகல் இனித் தேட வேண்டாது முன்பே கிடைத் திருக்க, விளக்கெரியப் பண்ணி முன்னே இருளை நீக்கிப் பின் அதனானே நெருப்பை, மூண்டு எரியும்படி மூட்ட வல்லவர்க்கு, கால சக்கரம் சுழன்றவழியே சுழன்று செல்லும். இவ்வுலகத்தில் அச் சுழற்சியுட்படாமல், ஒரு நிலையாய் நிற்றலும் கூடும். இம் முறையால் பலருக்கு விளைந்த பயனை, வேறு வழியில் முயலும் மடவோர் அறியமாட்டார்.

குறிப்புரை :

முதலடியை இறுதியிற் கூட்டி உரைக்க. இடிஞ்சில், மூலாதாரம். விளக்கு, அவ்விடத்துள்ள அக்கினி. `எரியக்கொண்டு` என்பது குறைந்து நின்றது. கடிதலுக்கு `இருள்` என்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. இருள், குண்டலியின் உறக்கம். அனல் மூளுதல், மூலாக்கினி எழுந்து உச்சி யளவும் செல்லுதல். வேறுவழி, சில பச்சிலை போன்ற மருந்துகளை உண்டலும், பிறவுமாம்.
இதனால், யோக நெறியே காலத்தை வெல்லுதற்கு உபாய மாதல் கூறப்பட்டது.
கூற்றங் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. -குறள், 269
என்புழித் திருவள்ளுவர், ``நோற்றல்`` என்றது பெரும் பான்மையும் இவ்யோக முயற்சியையே என்க.

பண் :

பாடல் எண் : 11

நண்ணும் சிறுவிரல் நாணாக மூன்றுக்கும்
பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடும்
சென்னியில் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியந் தானே.

பொழிப்புரை :

உற்று நினைக்கத்தக்க இடை, பிங்கலை, சுழுமுனை என்னும் மூன்று நாடிகளும் கையில் சிறுவிரலைப் பெருவிரலோடு சேர்த்து நாண்போல ஆக்க மேல் நிற்கும் ஏனை மூன்று விரல்களைப் போல, இருதயத்தில் வேறு வேறு நிற்கும். பின்பு தலையில், `புருவநடு, நெற்றிநடு, உச்சித் துளை` என்னும் மூன்றிடங்களிலும், அதன்பின், தலைக்குமேல் `சூரியன், சந்திரன், அக்கினி` எனப்படும் மூன்று மண்டலங்களிலும் வேறு வேறாய் நில்லாது ஒன்றியேவிடும்.

குறிப்புரை :

எனவே, அவற்றை உன்னி உணரும் உணர்வும் அவ்வாறாதல் போந்தது. இவ்வாறு உணர்வு அலையாது நிற்றலால் உடம்பும் நிலைக்கும் என்க. ``சிறுவிரல் நாணாக`` என்றது, ``காள கர்ணி`` என்றும், ``திரிசூலம்`` என்றும் சொல்லப்படும் முத்திரையைக் குறித்தவாறு. `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்று நாடி களும் இருதயத்தில் அம்முத்திரைபோல நிற்கும் எனவும், ``சேரவே`` என்றதனால், `ஆஞ்ஞை முதலிய இடங்களில் ஏனை இரு நாடிகளின் ஆற்றலும் சுழுமுனையில் ஒன்றிவிடும்` எனவும் உணர்க. ``சென்னியில் மூன்று`` என்றது, `இரட்டுற மொழிதலாய்` நின்று இவ்வாறு பொருள் பயந்தது. ஓவியம் போல்வனவற்றை ஓவியம் என்றே ஆகுபெயராக ஓதினார். ``ஒத்திடும், நின்றிடும்`` என்பன முற்றுக்கள். உன்னி உணர்தல் - அறிவுடையதாதல். ``ஓவியமாய் விடும்`` என்றது, உடம்பை, இங்கு அதிகாரப்பட்டது அதுவே யாகலின். உடம்பு ஓவியமாதல், காலக் கழிவால் மாறுபடாது, என்றும் இளமையோடிருத்தல்.
இதனால், `யோகத்தின்வழி உணர்வு ஒருங்குதல் காலத்தை வெல்லும் வழியாகும்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஓவிய மான உணர்வை அறிமின்கள்
பாவிகள் இத்தின் பயனறி வாரில்லை;
தீவினை யாம்உடல் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.

பொழிப்புரை :

ஓவியம்போல உணர்வு அலைவற நிற்றற்குரிய வழியை அறியுங்கள். இவ்வுணர்வினால் காலத்தை வெல்வதாகிய பயன் விளைதலை முன்னை நல்வினை இல்லாதோர் அறியமாட்டார்; (அதனால் அவர் வேறு உபாயங்களைத் தேடி அலைவர்.) இனி அவ்வழியாவது, பந்தமாய் நிற்கும் வினை காரணமாக வந்த இவ்வுடலில் உள்ள சூரிய சந்திர அக்கினி மண்டலங்கள் மூன்றிற்கும் ஓர் இணைப்பாகப் பல தாமரை மலர்களில் ஊடுருவி நிற்கும், யோகத்திற்கு ஏதுவாகிய தண்டேயாம்.

குறிப்புரை :

`அதன்வழி உணர்வைச் செலுத்தி நில்லுங்கள்` என்பது குறிப்பெச்சம். பின்னிரண்டடிகளால் குறிக்கப்பட்டது சுழுமுனை நாடி. `யோகம் செய்யாத உடலால் பயனில்லை` என்றற்கு, `தீவினையாம் உடல்` என்றும், அதனைப் பயன்படச் செய்வது `சுழுமுனை` என்பார், ``புண்ணியத் தண்டு`` என்றும் கூறினார்.
இதனால், `காலத்தின், வாதனையைக் கடத்தற்கு யோக நெறியால் உணர்வொன்றியிருத்தலே சிறந்த உபாயம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்றும் மகிழ்ந்துடல் ஒத்திடும்;
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே.

பொழிப்புரை :

மேற்சொல்லியவாறு புண்ணியத்தண்டின்வழிச் சென்று உணர்வைப் பிரமரந்திரத்தில் வைத்த யோகிக்கு உடலில் `சூரியன், சந்திரன், அக்கினி` என்னும் மூன்று மண்டலங்களும் தக்கவாறு அமைந்திருக்கும். ஆகவே, உடல், காலத்தால் வாதிக்கப் படாதாம். இந்நிலையைக் கண்டவர், உடல் கால வயப்படாது நிற்கும் பயனைக் கண்டனர். காணாது வேறு உபாயங்களில் சென்றோர், உடல் கால வயப்பட்டு நீங்க, அதனைக்கண்டு துன்புறுகின்றார்கள்.

குறிப்புரை :

மேல், ``பாவிகள் இத்தின் பயனறிவாரில்லை`` என்றதனால், `கண்டவர் கண்டனர்` என்பதற்கு இதுவே பொருளாதல் அறிக. ``பிரிய`` என்றதும், `பிரியும் நிலையை எய்த` என்றதாம். இனி, ``பந்தல் பிரிந்தது`` (தி.10 பா.151) என்றாற்போல, `கட்டுக் குலைந்தது` என்றலுமாம்.
இதனால், `உணர்வு ஒன்றுதல் காலத்தை வெல்லும் உபாயம் ஆமாறு இவ்வாறு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே.

பொழிப்புரை :

யோகம் செய்யாது பிணங்குகின்றவனுக்கு அவன் அடையத்தக்கதாகிய பயன் கிட்டாது கெடும். அஃது அங்ஙனம் ஆகின்றவாற்றை நீ கேட்பாயாக; பெண்டுடன் கூடுகின்ற நாள் மிகு மாயின், முற்பிறப்பில் இறைவனை வணங்கிய புண்ணியத்தால் வந்த மானுடப் பிறப்பின் வாழ்நாள் அளவு தேய, தான் சிலநாள் வாழ்கின்ற வாழ்வும், நாய்க்காக உடம்பை வளர்க்க முயல்வதாய் முடியும்.

குறிப்புரை :

`பிணங்கிக்கு` என்னும் நான்கனுருபு தொகுத்த லாயிற்று. `நான்` எனப்படுவது ஞாயிற்றின் வட்டப்பகுதியே என்றற்கு, ``ஆதித்தன் ஆறு`` என்றார். `ஆதித்தன் ஆறு அணங்குடனாய் விரியின்` என மாற்றியும், ஆக்கம் வருவித்தும் உரைக்க. ஆய், ஆகுமாற்றால். விரிதல் - மிகுதல். `சில வாயினும் குற்றமின்றாம்` என்றற்கு ``விரியின்`` என்றார். `வணங்கு` என்ற முதனிலைத் தொழிற்பெயர், அதன் பயனாகிய காரியத்தின்மேல் நின்றது. சிற்றின்பத்தை மிக விரும்புவோர்க்குக் கால சக்கரம் விரையச் சுழன்று நிற்கும் என்பதாம்.
இதனால், `காலத்தை வெல்ல வேண்டினோர் சிற்றின்பத்தைத் துறத்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

சுழல்கின்ற ஆறின் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமல்
கழல்கண்டு போம்வழி காணவல் லார்க்குக்
குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே.

பொழிப்புரை :

`சக்கரம்` எனப்படுகின்ற ஆறு ஆதாரங்களிலும் சிவனது திருவடியாகிய திருவருளைக் காணாதவன், அத்திரு வருளினுள் புகாமல், நெருப்பில் புகுந்து அழிவான். அவற்றில் அத்திரு வருளைக் கண்டு அதனுட்புகும் உபாயத்தை அறிய வல்லவர்க்கு, ஐந்தொழிற் கூத்தினை இயற்றுகின்ற சிவன் அவ்வாதாரங்களில் விளங்கியே நிற்பன்.

குறிப்புரை :

``கூத்தன் நின்றிடும்`` என்றது, `காலத்தைக் கருவியாக வைத்து உலகத்தை நடாத்துகின்ற அப்பெருமானது அருளால் காலத்தை வென்று நிற்பர்` என்றவாறு. `சுழல்கின்ற` என்பது, `சுழல்வதனோடு ஒப்பிக்கின்ற` என்றதாம். துணைமலர் - இரண்டு மலர்போலும் திருவடிகள்; உவம ஆகுபெயர். ``கூத்தன்`` எனப் பின்னர் வருதலின், வாளா, ``துணைமலர்`` என்று போயினார். திரு வருளை, `திருவடி` என்றார். உடல் தழலிடைப் புகுதலை, உயிர் தழ லிடைப் புகுவதாக அருளினார், உயிர் அதனால் பயனிழந்து கெடு தலின். ``தன்`` என்றது திருவருளை. `அதனுட் போம் வழி` என்க. குழல், சுழுமுனை நாடி. ஆதாரங்களை அவற்றிற்குப் பற்றுக் கோடாகிய சுழுமுனையாக உபசரித்தார்.
இதனால், யோகநெறி வேறோராற்றானும் காலத்தை வெல்லும் உபாயமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்
சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந் துள்ளே அனுபோகம் நோக்கிடில்
ஆத்தனு மாகி அமர்ந்திடும் ஒன்றே.

பொழிப்புரை :

புறத்தில் சிவபெருமானது திருவுருவில் உண்மைகள் பலவற்றை உணர்ந்தவர், நூலுணர்வாகிய அபர ஞானத்தைப் பெற்றவராவர். அகத்தில் அவனைக் கண்டு, அதனால் விளையும் பயன்களை உணரின், அப்பெருமான் அங்ஙனம் உணர் பவர்க்கு உறவாயும் வேறாய் நில்லாது ஒன்றாயும் உடன் இருப்பான்.

குறிப்புரை :

`அதனால், அவ்வநுபவம் பெற்றவர்களும் அவனைப் போலவே காலத்தைக் கடந்து நிற்பர்` என்பது கருத்து. பின்னர் ``உள்ளே`` என்றலால், முன்னர், `வெளியே` என்பது பெறப்பட்டது. குறி - வடிவம். ``குறிகளும் அடையாளமும் கோயிலும்`` என்ற ருளியது காண்க. வடமொழியில் `இலிங்கம்` எனப்படுதலையும் நினைக. குணம் - தன்மை; உண்மை. அவை ``தோற்றம் துடியதனில், தோயும் திதி அமைப்பில்`` (தி.5 ப.90 பா.6) என்றாற்போல்வன. `அகம்` என்றது ஆதார நிராதாரமீதானங்களை. அங்குப் பார்த் திருத்தல் பாவனையினாலாம். `பாவனை` என்பது பொய்யன்று என்பதற்கு, `அனு போகம்` என்றார். ``அனுபோகம் நோக்கிடில்`` எனவே `பார்த் திருப்பின், அனுபோகம் விளையும்` என்பது பெறப்பட்டது. அநுபவங் காரணமாகச் சமாதியில் நீங்காது நிற்றல் கூடுமாகலின், நோக்கிடில் `ஆத்தனும் ஒன்றாய் அமர்ந்திடும்` என்றார். ``ஆத்தன்`` என்றது, கூத்தனைச் சுட்டும் அளவாய் நின்றது. `ஆத்தனும்` என்ற உம்மை `அங்ஙனம் நோக்குவோனுக்கு இயைய` என இறந்தது தழுவிற்று. `ஆத்தனும் ஒன்றேயாகி அமர்ந்திடும்` என மாறிக் கூட்டுக. `யோகத்தாலன்றி ஏனைச் சரியை கிரியா மார்க்கங்களால் காலத்தைக் கடந்து நிற்றல் அரிது` என்றற்கு, அவற்றின் பயனை இங்கு எடுத்துக் கூறினார்.
இதனால், ``யோகம் மேற்கூறிய வகையில் உபாயமாதல் இவ்வாறு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும்
சென்றிடும் முப்பதுஞ் சேர இருந்திடில்
குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு சிவன் வேறின்றி நிற்கப் பெறின். உளவாகும் நன்மைகள் அளவில. அதனைப் பெறும் முறையை, `நன்மை பயக்கத் தக்கது` என்று உணர்ந்து இப்பொழுது கேட்பாய். `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்று நாடிகளிலும் ஒன்றில் பத்துநாள் பிராணன் இயங்குதல் யோக முறையாகும். மூன்று நாடிகளிலும் முப்பது நாள்கள் முறையாக அஃது அங்ஙனம் இயங்குமாறு ஒருவன் யோகத்தில் நின்றால்,மேரு மலையில் விளங்கும் சிவனாகவும் ஆய்விடுவான்.

குறிப்புரை :

மூன்றுக்கு - மூன்றின்வழி இயங்குதற்கு. செய்யுளில் சுட்டுப் பெயர் முன்வந்து, பின்னர் வரும் முப்பதைக் குறித்தது. ``சென்றிடும்`` என்றது, `செல்லுதல் இயல்பு` என்னும் பொருட்டாய், `அதுவே நெறி` என்பது உணர்த்திற்று. சேர - அம்முறையில் பொருந்த. `பொன்திகழ் குன்றிடை` என மாற்றிக்கொள்க. கயிலை, `மேரு` எனவும்படும். சுழுமுனை நாடியையும், `மேரு` எனக் கூறும் யோக நூல்கள். இங்கு, அதனையும் கொள்க.
இதனால், உள்ளே பார்த்திருத்தற்கு ஆவதொரு முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே
ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்
சாற்றிடு நூறு தலைப்பெய்ய லாமே.

பொழிப்புரை :

சிவன் ஒன்றி நிற்றற்குரிய இம்முறையை அறிந்து இதன்படி, ஒன்றில் பத்து நாளாக மூன்று நாடிகளிலும் மாறி மாறிப் பிராணன் இயங்க, அம்முறை யானே அவனை ஆதார நிராதாரத் தாமரைகளில் வழிபட்டு நிற்பவர், அவ்வழிபாட்டினால் எட்டுத் திக்கும் தாம் இருந்த இடத்திலே விளங்க, அவைகளைப் பார்த்து (தமக்கு யோகம் கைவந்தமைக்கு) மகிழ்ச்சியுற்றுப் பின், அத்தாமரை களில் சிவனை முறையாகக் கண்டு நிற்பார்களாயின், நூல்களிற் சொல்லிய நூறாண்டுக் காலத்தை அவர்கள் குறையாது பெறுதல் கூடும்.

குறிப்புரை :

கூத்தவன் - கூத்தன். கூர்மை - நுட்பம். அஃது அன்னதாகிய முறையைக் குறித்தது. ``அங்கே`` என்றது, பின்வரும் பதுமங்களைச் சுட்டிற்று. ``ஏத்துவர்`` வினையாலணையும் பெயர். `பத்தினில் ஏத்துவர்` என மாற்றிக்கொள்க. எண்டிசை தோன்றுதலைக் கூறியது, யோகம் கைவந்தமை அறியும் குறி கூறியவாறு. பதுமர் - பதுமத்தில் இருப்பவர். `சாத்திடும்` என்பது பாடமன்று. இது, வருகின்ற திருமந்திரத்திற்குமாம்.
இதனால், நூறாண்டிற் குறையாது வாழ்தற்குரிய உபாயம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

சாற்றிடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்
சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்
மூத்துடன் கோடி யுகமது வாமே.

பொழிப்புரை :

முதலில் யோகப் பயிற்சியால் நூறாண்டு வாழ்ந் தவர், பின்பு அம்முறை அவர்க்குக் கைவந்து நிற்றலால், அதனை எளிதாகச் செய்து, `ஆயிர ஆண்டு, (பின் பதினாயிரம், நூறாயிரம் என்று பல ஆயிர ஆண்டுக் காலம்) இருப்பர். பின்பு யுக முடிவு, அதன் பின் கோடிக் கணக்கான யுகம்` என்று இப்படிப் பலகாலமும் காலத்தை வென்றிருப்பர்.

குறிப்புரை :

`இவை, அவர்கள் விரும்பிய பொழுது` என்க. மூத்தல், உலகில் உள்ள பலர்க்கும் ஆண்டினால் முதியராதல், அறிவினால் முதியராதல் பிறவாற்றானும் கூடுமாகலின், ஈண்டு இவ்வுபாயத்தாற் பெறுவது ஆண்டின் முதிர்ச்சியேயாம். ஆயிரம் முதலியன பன்மை குறித்து நின்றன.
இதனால், மேற்கூறிய உபாயம் காலத்தை வெல்லுதற்கு எத்துணையும் பேருதவியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று
அகங்கோடி கண்டுள் அயலறக் காண்பர்கள்
சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்
குகங்கோடி கண்டங் குயருறு வாரே.

பொழிப்புரை :

யோகத்தால் அளவற்ற காலம் வாழ்ந்தும் உடல் தளர்தல் இன்றி நின்று யோகக் காட்சியில் அளவற்ற காட்சிப் பொருள் கருத்துப் பொருள்களைக் கண்டு, பின் `அகம், புறம்` என்னும் வேறுபாட்டைக் கடந்தவர், தாம் முன்பு கண்ட பொருள்களுள் ஒன்றையும் பொருளாக மதியாமல் விடுத்துச் சிவம் ஒன்றையே பொருளாகக் கொண்டு, அதனோடு ஒன்றும் நிலையைப் பெறுதற் பொருட்டு வாழ்ந்து, அவ் வாழ்வில், காலமும் முடிவு எய்துதலைக் கண்டு, அதனின்றும் அக் காலத்தைக் கடந்து மேற்போவர்.

குறிப்புரை :

``அகத்துக் கண்டு`` என்க. அயல் - வெளி. `கோடி விட்டுச் சிவம் செறிய` என மாறுக. இறுதியில் உள்ள ``கோடி``, ``முடிவு`` என்னும் பொருளது. ``சிவம்`` என்றது, உயிரெதுகை.
இதனால், காலத்தை முற்றக் கடப்பாரது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

உயருறு வார்உல கத்தொடுங் கூடிப்
பயனுறு வார்பலர் தாமறி யாமற்
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமல்
கயலுறு கண்ணியைக் காணகி லாரே.

பொழிப்புரை :

உலகத்தில் உடம்பையும், அது வழியாக வரும் பல பற்றுக்களையும் உடையவராய் இருந்தும் பலர் மேற்கூறியவாறு காலத்தை வென்று மேற்போகின்றார்கள். அதனால், உடம்பு எடுத்ததன் பயனையும் அவர்கள் அடைகின்றார்கள். ஆயினும், சிலர், அறிவில்லாமையால் காலச் சுழலைக் கடக்க மாட்டாது அதில் அகப்பட்டு அதன்வழியே வினையுட்படுகின்றனர். அவ்வறியாமை யானே அவர் இவ்வுடம்பு எடுத்ததன் பயனாகப் பெறவேண்டிய திருவருட்காட்சியைப் பெறமாட்டாதவராகின்றனர்.

குறிப்புரை :

`உயர்`, முதனிலைத் தொழிற் பெயர். `உலகத்தொடு கூடியும்` என உம்மையை மாற்றி யுரைக்க. ``பலர், சிலர்`` என்றது, பயனது அனுபவமும், அறியாமையாகிய இழிவும் குறித்தவாறு.
இதனால், காலத்தை வெல்லுதலும், அதனாற் பயன் பெறுதலும் அனுபவமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
நாணகி லார்நயம் பேசி விடுவர்கள்
காணகி லாதார் கழிந்த பொருளெலாம்
காணகி லாமற் கழிகின்ற வாறே.

பொழிப்புரை :

அறிவின்மையால் மேற்கூறியவாறு திருவருளை உணரமாட்டாதவர், கால வயப்பட்டு அழிகின்றவரேயாவர். இனிக் கல்வியால் அறிவு பெற்றவரும் ஊக்கம் இன்மையால் தாம் கற்றறி மூடராகின்ற நிலைக்கு நாணாமல், நூலறிவைப் பிறர்க்கு இனிமை உண்டாக (க் கிளிப்பிள்ளைகள் போல) விரித்துரைத்துப் போவார்கள். இவ்வாறு இருதிறத்தாரும் உயர்ந்த பொருள்கள் பலவற்றை அறியமாட்டாதவராய் அழிகின்றமை இரங்கத் தக்கது.

குறிப்புரை :

`இரங்கத் தக்கது` என்பது சொல்லெச்சம். `நாண கிலாதார்` என்றதனால், `கற்றவர்` என்பது பெறப்பட்டது. கழிந்த பொருள் - மிக்க பொருள்; உயர்ந்த பொருள்.
இதனால், காலத்தை வெல்லும் அறிவும், ஊக்கமும் இல்லாதவரது குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலுமாகும்
கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்
கழியாத அப்பொருள் காணலு மாமே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்களும் கால வயப்பட்டு நிலை யின்றி மறைந்துபோதலை உணர மாட்டாதவர், அதனை உணர்தல் கூடும். எப்பொழுதெனின், அவற்றை உளத்துட்கொண்டு ஊன்றி நோக்குவாராயின். இனி அந்நோக்கினாலே, கால வயப்படாது நிலைத்து நிற்கின்ற முதற்பொருளையும் காணலாம்.

குறிப்புரை :

``கழிகின்ற அப்பொருள்`` என்றாராயினும், `பொருள் கழிகின்ற அதனை` என்பதே கருத்தென்க. பின்னர் வந்த ``கழிகின்ற அப்பொருள்`` என்பது `அது` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. மூன்றாம் அடியில் உள்ள ``கழிகின்ற`` என்பது வினையாலணையும் பெயர். அதனிடத்து, `கழிகின்றவற்றை நோக்கின்` என இரண்டாவது விரிக்க. ``நோக்கின் ஆகும்`` என மேலே கூட்டிமுடித்துப் பின் `அதனானே` என்பது வருவித்து உரைக்க.
இதனால், அவ்வறிவும், ஊக்கமும் பிறத்தற்கு வழி கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 24

கண்ணன் பிறப்பிலி காண்நந்தி யாய்உள்ளே
எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும்
திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாய்நிற்கும்
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே.

பொழிப்புரை :

அருள் உடையவனும், பிறப்பில்லாதவனும் ஆகிய சிவன் உயிர்களின் அகத்தே அவர்கள் காண்கின்ற குருமூர்த்தி வடிவாயும், புறத்தே எட்டுத் திசைகளாயும், முடிவில் ஒருவனேயாயும் இருப்பான். அவனே நிலையான இன்ப வீடும் ஆவான். உண்மையை ஆய்ந்துணர வல்லவர்க்கு, அவர்கள் அடையத்தக்க, முடிந்த பயன் மேற்சொல்லியவற்றை உணர்தலேயாம்.

குறிப்புரை :

``கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்; கண் ணுடையார் - கண்ணோட்டம் இன்மையும் இல்`` (குறள், 720) என்பவாகலின், கண்ணோட்டம் உடையவன் என்பதனைக் குறிக்க, ``கண்ணன்`` என்றார். பெயக் கண்டும் நஞ்சுண்டு அமையும் (குறள், 580) கண்ணோட்டத் திற்குச் சிவபிரான் ஒருவனே இலக்கியமாதல் வெளிப்படை. `சாதனை யாற் காலத்தை வெல்லும் யோகிக்கு இயல்பாகவே காலத்தைக் கடந்தவனே சார்பாவான்` என்றற்குப் பிறப்பின்மை கூறுவார், சார்ந்தாரைக் காக்கும் கண்ணோட்டத்தையும் உடன் எடுத்தோதினார். ``நந்தி`` என்றது பொதுப்படக் `குரு` என்றவாறு. முன்னர், ``உள்ளே`` என்றதனால், பின்னர், `வெளியே` என்பது பெறப்பட்டது. ``சிவகதி`` என்றதில் சிவம், இன்பம், பதம், பதவி. பயனை, `பதவி` என்றார்.
இதனால், மேல், ``கழியாத அப் பொருள்`` எனப்பட்டதன் இயல்பு தெரித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கட்குக் கூறலு மாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய உண்மையை ஓர்ந்துணர வல்லவர்க்குக் காலத் தாக்கு இல்லை. ஆகவே, அவர்கட்கு இறப்பும் இல்லை. அவர்கள் மக்கள் வடிவில் காணப்படுகின்ற கடவுளாய் விளங்குவர். நூல்களின் முடிந்த பொருளைத் தேடிக் கண்டவர்கள் கண்ட பொருள் இதுவே. இதனைப் பெறவல்ல ஆற்றல் உடையவர்கட்கே இஃது உணர்த்தத் தகும்.

குறிப்புரை :

காலத்தை அதற்குரிய நமன்மேல் வைத்துக் கூறினார். நமனது தாக்குதலை ``நமன்`` என்றது ஆகுபெயர். நரபதி - நரனாகிய பதி. அறிவும், காதலும் இல்லாதார்க்குக் கூறின், அங்கணத்துள் உக்க அமிழ்துபோலப் 1 பயனில் சொல்லாய் முடியும் ஆதலின், `கூட வல்லார்கட்குக் கூறலும் ஆம்` என்றார். உம்மை, `சிந்திப்பித்தலும், தெளிவித்தலும் ஆம்` என எதிரது தழுவிற்று.
இதனால், கழியாத அப்பொருள் காணவல்ல முயற்சியை உடையார் பெறும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

கூறும் பொருளி தகார வுகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறும் மகாரங் குழல்வழி யோடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே.

பொழிப்புரை :

மத்திமையாயும், வைகரியாயும் வெளிப்படுகின்ற மந்திரங்கள் உணர்த்தும் பொருளும், அவை உணர்த்தியவாற்றானே உள்ளே உணர்ந்து பற்றத்தக்க பொருளும் மேற்கூறிய பிறப்பில் பொருளாகிய சிவமேயாம். அச்சிவம் சிந்தையுள் நிலைபெறாது நிற்றற்கு, `சூக்குமை வாக்கு` எனப்படும் நாதம் புறம்பற்றி நிகழாது, சுழுமுனைவழி அகம்பற்றி நிகழ்தல் வேண்டும். அவ்வாறு நிகழின், அங்ஙனம் நிகழப் பெறும் சாதகன், ஆறு ஆதாரங்களிலும் அவ்வவ் வாதாரங்கட்கு ஏற்ப நிற்கும் சிவனாகவும் ஆய்விடுவான்.

குறிப்புரை :

`அகார உகாரங்கள் கூறும் பொருள் இது` என மாற்றிக் கொள்க. `அகாரம், உகாரம்` என்பன மத்திமை வைகரியான மந்திரங் கட்குக் குறி. சிந்தையுள் நிற்றற்கு `இது` என மீண்டும் எழுவாய் வருவிக்க. ``நின்றிட`` என்ற காரியப் பொருட்டாய வினையெச்சம், ``ஓடிட`` என்னும் காரணப் பொருட்டாய வினையைக் கொண்டு முடிந்தது. இவ்வாறன்றி, ``நின்றிட`` என்பதனை உடனிகழ்ச்சியாக வைத்து உரைப்பின், மகாரம் குழல்வழி ஓடுதலைக் கூறுதல் வெற் றெனத் தொடுத்தலாய் முடியும். ஆதாரங்கள்தோறும் படிமுறையால் நின்று பயன்பெறுவான் என்றற்கு, ஆறும் அமர்ந்திடுதலைக் குறித்தார். `சாதகன் சிவனாய் விடுவன்` என்றது `காலத்தைக் கடப்பன்` என்றவாறு.
இதனால், நாட வல்லார்கட்கு நண்ணும் பதம் இதுவே யாதல் யோக நெறியில் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன்இவன் ஆகுமே.

பொழிப்புரை :

சிவனது இருப்பிடத்தை ஒருவரும் அறிய மாட்டாது அல்லல் உறுகின்றனர். அதனைக் குருவின் உபதேசப்படி சிந்தித்துத் தெளிகின்றவர்கட்கு, அவன் என்றும் அழியாது உயிர்க் குயிராய் இருத்தல் விளங்கும். அவ்விளக்கத்தின்வழி அவனைக் கண்டால், அவன் காணுகின்றவனுக்கு வேறாய் இராமல் இவனேயாகி விடுவான்.

குறிப்புரை :

இவனேயாகி விடுதலாவது, இவன் செயல்கள் எல்லா வற்றிற்கும் அவனே முதலாய தன்மை விளங்க நிற்றல். `அது விளங்கவே, பின்னர் இவன் தானாய் நில்லாது அவனேயாய் விடுவன்` என்பது கருத்து.
இதனால், சாதகன் ஆறும் அமர்ந்திடும் அண்ணல் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

அவன்இவ னாகும் பரிசறி வாரில்லை
அவன்இவ னாகும் பரிசது கேள்நீ
அவன்இவன் ஓசை ஒளியினுள் ஒன்றிடும்
அவன்இவன் வட்டம தாகிநின் றானே.

பொழிப்புரை :

சிவன் சீவனேயாய் நிற்கும் முறையை உள்ளவாறு உணர்கின்றவர் ஒருவரும் இல்லை. அதனை, மாணவனே, உனக்குச் சொல்கின்றோம்; கேள். சீவன் அறிகின்ற ஓசை, ஒளி முதலிய புலன்களையும் சிவன் அச்சீவனின் பொருட்டு அறிந்து நிற்கின்றான். அதனோடு, சீவனது சுட்டுணர்வை நிகழ்வித்தும் நிற்கின்றான்.

குறிப்புரை :

`இதுவே சிவன் சீவனேயாய் நிற்கும் முறைமை` என்பது குறிப்பெச்சம். `சிவன் சீவனுமாய் நிற்கின்றான்` என்பதற்கு, `பொன்னே பூடணமாய் நிற்றல்போல` எனவும், `மரந்தானே, கிளை, இலை, பூ, காய் முதலியனவாய் நிற்றல்போல` எனவும், `மகா ஆகாயந் தானே கடாகாயம், மடாகாயம் முதலியனவாய் நிற்றல்போல` எனவும், `நீர்தானே நுரை, குமிழி, திவலை முதலியனவாய் ஆதல் போல` எனவும் பலர் பலவாறு விளக்கங்கூறி மலைதல் பற்றி, ``அவன் இவனாகும் பரிசறிவார் இல்லை`` என்றார். ஓசை ஒளி, உபலக்கணம். ஒன்றுதல் அறிவினால் என்க. வரம்புபட்ட சுட்டுணர்வை வட்டமாக உருவகித்தார்.
இதனால், ஞாயிறு கண்ணுக்குப் பொருள்களைக் காட்டுதல் போலச் சிவன் சீவனுக்கு எல்லாவற்றையும் அறிவித்தும், ஆன்ம போதம் கண் ஒன்றைக் காணுதற்குத் தானும் உடன்சென்று காணுதல் போலச் சிவன், சீவன் ஒன்றை அறிதற்குத் தானும் உடன்நின்று அறிந்தும் ஒற்றுமைப்பட்டிருத்தலே `அவன் இவனாய் நிற்கும் முறை` என, மேலே சுட்டியதன் இயல்பு தெரித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்
ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி இருப்பிடங் காணலு மாகுமே.

பொழிப்புரை :

ஆதாரச் சக்கரம் ஆறு, அதற்குமேல் உள்ள மதி மண்டலச் சக்கரம் ஒன்று, இந்த ஏழு சக்கரங்களும் உங்கள் உடம் பினுள்ளே ஏழுவகைத் தாமரை மலர்களாய் மலர்ந்து நிற்கும். அவைகள் யாவும் சிவனது இருப்பிடங்களே. அங்ஙனமாகவும் அவனை அடையும் முறையை நீங்கள் அறியவில்லை. மேற்கூறிய வாறு அவன் உங்களோடு ஒன்றாய் ஒட்டியிருத்தலை அறிந்து, நீங்களும் அவனின் வேறாகாது, அவனோடு ஒன்றாய் ஒட்டி அவனையே நினையும் உபாயத்தை உணர்வீர்களாயின், அங்ஙனம் உணர்பவர்களுக்குக் கருப்பங்கட்டிபோல இனிக்கின்ற அவனைக் கண்டுவிடலாம்.

குறிப்புரை :

யோகக்காட்சி கைவருதலும், ஞானச்செய்தி முறையில் முயலும் பொழுதே கூடும் என்றற்கு இதனைக் கூறினார். கட்டி, உவமையாகுபெயர். `இருப்பிடம்` என்றே போயினாராயினும், `அவ்விடத்து உள்ள பொருளை` என்றலே கருத்தாதல் அறிக.
இதனால், கழியாத அப்பொருளைக் காணுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

காணலு மாகும் பிரமன் அரியென்று
காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்
காணலு மாகுஞ் சதாசிவ சத்தியும்
காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே.

பொழிப்புரை :

மேற்கூறியவாற்றால் சிவனை உணர்வோர்க்கு, அவன், `அயன், மால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன், சத்தி` என நிற்கின்ற நிலை வேறுபாடுகளும், தனது திருவருளை ஆன் மாக்களோடு ஒற்றித்து நிற்கவைத்து அவைகளை நடாத்துகின்ற முறைமைகளும் நன்குணர்தல் கூடும்.

குறிப்புரை :

எனவே, `ஆதார நிராதார தரிசனங்கள் எளிதில் கூடும்` என்பதாம். `இத்தகையோர்க்குக் காலத்தை வெல்லுதல் ஒரு பொருளன்று` என்பது கருத்து. ``என்று`` என்னும் எண்ணிடைச் சொல்லின் பின், `அவரை` என்பது எஞ்சி நின்றது.
இதனால், காலத்தைக் கடந்தாரது பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தமம் மிக்கிடில் ஓராறு திங்களாம்
அத்தம் மிகுத்திட் டிரட்டிய தாயிடில்
நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே.

பொழிப்புரை :

ஒருவனது வாழ்நாள் எல்லையை அளந்தறிகின்றவன் தனது கையை அளக்கப்படுபவனது தலையின்மேல் வைக்க, அஃது அவனுக்கு இயல்பான எடையுள்ளதாய்த் தோன்றுமாயின், அவனது வாழ்நாளுக்குக் கேடில்லை. அவ்வாறன்றி, மிகுந்த எடையுள்ளதாய்த் தோன்றுமாயின், அவனது வாழ்நாள் அதுமுதல் ஆறுதிங்கள் அளவின தாம். மேலும், அஃது இரட்டிப்பான எடையுள்ளதாய்த் தோன்றின், அவனது உயிர்க்கு ஒருதிங்களில் பிறக்கும் சொல் `இறப்பு` என்பதாம்.

குறிப்புரை :

``நீத்தல்`` என்பது குறுகி நின்றது. `பிறக்கும்` என்பது சொல்லெச்சம்.
இதனால், ஒருவகைப் பரீட்சை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை உணர்ந்த வுணர்வது வாமே.

பொழிப்புரை :

உணர்விற்கு முதலாய் நிற்றலில் சொல்லும், இறைவனும் ஒரு நிகரானவர். (ஆயினும் இஃது உலகியலிலாம். ஆதலால்,) சொல்லை விடுத்தவரே இறைவனை உணர்கின்றவாராவர். சொல்லை விடுத்தவரது உள்ளத்தில் இறைவனும் அச்சொல்லைத் தம்மின் வேறாக உணர்ந்த உணர்வு வடிவாய் நிற்பன்.

குறிப்புரை :

எனவே, `வாய் வாளாமை கடவுட்டன்மையை மிகு விக்கும்` என்றவாறு. `ஈசனை உள்காது வாய்வாளாமை மட்டுமே உடையவர் சொல்லை விடுத்தவர் ஆகார்` என்றற்கு, ``ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்`` என்றும், `நாத ஞானமும் பாச ஞானமே` எனவும், ஆதலின் `அதுவும் நீக்கற்பாலது` எனவும், `உணர்த்தற்கு ஓசை உணர்ந்த உணர்வது வாமே` என்றும் கூறினார்.
இதனால், வாய் வாளாமை இறையுணர்வோடு நிகழ்தல் வாழ்நாள் குறைபடாமைக்குக் குறியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே உறைகின்ற நன்மை அளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமே உலகில் தலைவனு மாமே.

பொழிப்புரை :

ஒவ்வொரு மூச்சிலும் பிராண வாயு அழிதலை அறியும் அறிவு உண்டாகுமாயின், அது பயனுடையதாகும். அஃதாவது, நாம் நெடுங்காலம் இவ்வுலகில் வாழ்கின்ற நன்மையைக் கொடுக்கும். அதனால், ஆதார கமலங்களில் நிலைத்து நிற்றற்குரிய ஞானமும் கைவரும். அந்த ஞானம் கைவரப் பெற்றோர் உலகில் கட் புலனாய் நிற்கின்ற இறைவனாகி நிற்கும் பெருமையையும் அடைவர்.

குறிப்புரை :

எனவே, `வாயுப் பயிற்சி உடையவரை அத்தன்மை உடையவராக அறிக` என்பது குறிப்பெச்சம். போதம் - ஞானம்.
இதனால், வாயுப்பயிற்சி ஒன்றேயும் வாழ்நாள் குறை படாமைக்குக் குறியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தலைவன் இடம்வலஞ் சாதிப்பார் இல்லை
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவன் இடம்வலந் தன்வழி நூறே.

பொழிப்புரை :

இறைவன் கொடுத்த இடைநாடி பிங்கலை நாடி வழிகளைப் பயனுடையனவாகின்ற வகையில் சாதனை செய்பவர் உலகத்து அரியர். அந்நாடிகள் பயனுடையனவாய் விடின், அவற்றால் பஞ்சேந்திரியங்களும் தன்வழிப்படும். அவை தன்வழிப்பட்ட நிலையில் பின்னும் அச்சாதனையைச் செய்யின், அவ்வாறு செய் பவனது வாழ்நாள் நூறாண்டு அளவினதாய்க் குறைவின்றி நிற்கும்.

குறிப்புரை :

இடைநாடி பிங்கலை நாடிகள் பயனுடையன வாதல், அவை முறையே பிராண வாயுவை உள்வாங்குதற்கும், வெளி விடுதற்கும் உரியவாம் பொழுதாம். எனவே, அவற்றின் பொருட்டே அவை தரப்பட்டன என்க. ``ஆயிடில்`` எனப்பின்னர் வருதலின், வாளா, ``சாதிப்பார்`` என்றார். ஆதல், பயன்படுதல். `இடைநாடி பிங்கலை நாடிகள் இறைவனால் கொடுக்கப்பட்டனவாதலேயன்றி, அவை சத்தி சிவங்களாயும் நிற்கும்` என்பது உணர்த்துதற்கு, ``தையல் தலைவன் இடம் வலம்`` என்றார்; இது நிரல்நிறை. பின்னிரண்டி டத்திலும், `வலத்தால்` என உருபு விரிக்க. ``தன்வழி அஞ்சில்`` என அனுவாதகமாகக் கூறவே, அஞ்சும் தன்வழியவாதலும் பெறப்பட்டது. ``வழி`` இரண்டில் பின்னது, வாழ்நாளின் வழிமுறை.
இதனால், வாயுவசம், இந்திரியவசம், யோக அனுபவம் மூன்றன் கூட்டம் நிறை வாழ்நாட்குக் குறியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும்
தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்
ஆறொரு பத்தாம் அமர்ந்த இரண்டையுந்
தேறியே நின்று தெளிஇவ் வகையே.

பொழிப்புரை :

பிராண வாயு வலநாடி இட நாடிகளில் முறையே, `ஒன்று, ஆறு` என்னும் முறையில் வெளிப்போகுமாயின், வாழ்நாள் எண்பதாண்டு வரையிற் செல்லும். அவ்வாறன்றி, `ஒன்று, ஏழு` என்னும் முறையில் வெளிப்போகுமாயின், வாழ்நாள் அறு பதாண்டாம். இவ்விரண்டையும் உணர்ந்து, இவ்வாறே இடை நாடியின் வழி இயங்கும் இயக்கம் மிக மிக, வாழ்நாளின் எல்லை குறையும் என்று மேற்கூறுவனவற்றையும் உணர்வாயாக.

குறிப்புரை :

இடை நாடி வழியால் பிராண வாயு உட்செல்லின் உடல் வலிமை மிகும். அவ்வாறன்றி அவ்வழியே வெளிச்செல்லுமாயின், உடல் வலிமை குன்றும். ஒவ்வொரு முறையும் மூச்சு வெளிச்சென்று உட்புகும்பொழுது குறைந்தே புகுகின்றது என்பதுமேலெல்லாம் சொல்லப்பட்டது. அக்குறைவு வல நாசியின்வழி நிகழின் தீங்குமிக இல்லை. இடநாடியின் வழி நிகழின், தீங்கு மிகுதியாம். ஆகவே, கன்மத்துக்கு ஈடாகச் சிலர்க்குப் பிராண வாயு நெடுநேரம் வல நாசியின்வழி வெளிப்போதலும், சிலர்க்கு இடநாசியின்வழி நெடுநேரம் வெளிப்பேதாலும் உளவாகின்றன. அந்நிகழ்ச்சியைச் சரவோட்டம் அறியும் முறையாற் காணின், அவரவரது வாழ்நாள் எல்லையை அறிந்துகொள்ளலாம் என்பது கருத்து. இடை நாடி சத்தியை மிகுவிக்கும் வாயிலாதல் பற்றியே `சத்தி நாடி` எனப்படு கின்றது. அறியாமையால், உலகர் பிராண வாயுவை அது போகின்ற போக்கிலே விட்டிருப்பர். யோகியர் அதனைத் தம் வழிப்படுத்து முறைப்படி இயங்கச்செய்வர். அம்முறை, ``ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்`` (தி.10 பா.556) ``எங்கே யிருக்கினும் பூரி இடத்திலே`` (தி.10 பா.558) ``வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே`` (தி.10 பா.561) என மேற்கூறப்பட்டது. இங்கும் வருகின்ற திருமந்திரத்துள், ``இடம் பெற ஓடிடில்`` எனக் குறிக்கப் படும். அதனால், ஏறுதல் இடநாடியின் வழி என்பது ஆற்றலால் கொள்ளப்பட்டது. ``தெளி இவ்வகையே`` என்றது சரவோட்டத்தின் பயன் முறையை விளக்கியவாறு. ``ஆறொரு பத்து`` என்னும் பெயர்ப் பயனிலை வினையின் இயல்பினதாய், ``எண்ணில்`` என்னும் எச்சத் திற்கு முடிவாயிற்று. `இவ்வாறாய் அமர்ந்த இரண்டையும்` என்க.
இதனால், சர ஓட்டத்தால் வாழ்நாள் எல்லையை அறியும் முறை இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அவ்வகை ஐம்பதே யென்ன அறியலாம்
செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின்
முவ்வகை யாமது முப்பத்து மூன்றே.

பொழிப்புரை :

பிராண வாயு மேற்கூறிய வகையில், `ஒன்று, எட்டு` என்னும் முறையில் இயங்கினால், `வாழ்நாள் ஐம்பதாண்டே` என்று அறியலாம். இனி, `ஒன்று, ஒன்பது` என்ற முறையில் இயங்கினால் அது முப்பத்து மூன்றாண்டேயாம்.

குறிப்புரை :

முவ்வகையாம் - மூன்று கூற்றில் ஒரு கூறாகின்ற `அது, முவ்வகையாம் முப்பத்து மூன்றே` என மாற்றுக.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில்
எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்
பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே.

பொழிப்புரை :

பிராண வாயு மேற்கூறிய வகையில், `ஒன்று, பத்து` என்னும் முறையில் வெளிச்சென்றால், வாழ்நாள் இருபத்தெட்டு ஆண்டாகும். இனி, `ஒன்று, பதினைந்து` என்னும் முறையில் இயங்கினால், `வாழ்நாள் இருபத்தைந்து ஆண்டு` என்று அறியலாம்.

குறிப்புரை :

``இட வகை`` என்பதை, ``முடிவுற`` என்றதற்கு முன்னர்க் கூட்டுக. ``ஈராறு`` என்பதன்பின், `என்று` என்பது எஞ்சி நின்றது.
இதனால், அம்முறை, மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்
ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப்
போக்கலு மாகும் புகலற ஒன்றெனில்
தேக்கலு மாகுந் திருத்திய பத்தே.

பொழிப்புரை :

பிராணவாயு பகல் முப்பது நாழிகையும் இடநாடி வழியே வெளிப்போதுமாயின், `வாழ்நாள் பன்னிரண்டாண்டு` என்று வரையறுத்துவிடலாம். அதனை அநுபவமாகவும் காண முடியும். இடையே மாற்றம் புகாதொழிய ஒருநாள் முழுதும், (அஃதாவது அறுபது நாழிகை) பிராணவாயு இடை நாடி வழியே உள்வந்து வெளிச் செல்லுமாயின், `வாழ்நாள் இனிப் பத்தாண்டு` என்று துணியலாம்.

குறிப்புரை :

`பகல் முப்பதும் ஆகில், ஆறிரண்டை ஆக்கலும் ஆகும்; பார்க்கலும் ஆகும்` என்க. `புகல் அற, ஒன்று உள்ளிட்டுப் போக்கலும் ஆகும் எனில்` என மாற்றுக. ஒன்று, ஒருநாள். தேக்கல் - நிலைநாட்டல்.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற்
பாயிரு நாலும் பகையற நின்றிடும்
தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில்
ஆயுரு வாறென் றளக்கலு மாமே.

பொழிப்புரை :

பிராண வாயு இரண்டு நாள் அளவு இடைநாடி வழியாக இயங்கின், உயிர் எட்டாண்டுகாறும் இடையூறுறின்றி உடலில் நிற்கும். மூன்றுநாள் இயங்கின், வாழ்நாளை, `ஆறு ஆண்டு` என்று அளந்து கூறிவிடலாம்.

குறிப்புரை :

``ஆயுரு`` என்பது வடநூல் முடிபு.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

அளக்கும் வகைநாலும் அவ்வழி ஓடில்
விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில்
களக்க மறமூன்றிற் காணலு மாமே.

பொழிப்புரை :

வாழ்நாளை அளந்தறிகின்ற வகையில் நான்கு நாள்கள் பிராணவாயு இடைகலை வழியே இயங்கின், நான்கு ஆண்டுகள் உயிர் உடலிற் பொருந்தி நிற்கும். ஐந்து நாள் அவ்வாறு இயங்கின், தெளிவாக மூன்றாண்டு அளவில் வாழ்நாள் எல்லையைக் காணலாம்.

குறிப்புரை :

`கலக்கம்` என்பது திரிந்து நின்றது.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

காணலு மாகுங் கருதிய பத்தோடிற்
காணலு மாகுங் கலந்த இரண்டையும்
காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற்
காணலு மாகுங் கருத்துற ஒன்றே.

பொழிப்புரை :

பிராண வாயு பத்து நாள் இடை நாடி வழியே இயங்கின், உயிர் உடலிற் கலந்து வாழும் ஆண்டு இரண்டு என்பதை அறியலாம். பதினைந்து நாள் அவ்வாறு இயங்கின், `வாழ்நாள் ஓர் ஆண்டு` என்பதை மனம் பொருந்தக் கொள்ளலாம்.

குறிப்புரை :

``இரண்டையும்`` என்னும் உம்மை இறந்தது தழுவிற்று.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 12

கருதும் இருபதிற் காணஆ றாகும்
கருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடன்ஆறு காணில்
கருதும் இரண்டெனக் காட்டலு மாமே.

பொழிப்புரை :

பிராண வாயு இருபது நாள் இடைநாடி வழியே இயங்கினால், வாழ்நாள் ஆறு திங்களாம். இருபத்தைந்து நாள் இயங்கினால் மூன்று திங்களாம். இருபத்தாறுநாள் இயங்கினால் இரண்டு திங்களாம்.

குறிப்புரை :

ஆறு முதலியவை, `திங்கள்` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது.
இதனால், அம்முறை மற்றும் மூன்று கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்
காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக்
காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்
காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே.

பொழிப்புரை :

பிராண வாயு இருபத்தேழு நாள் இடைநாடி வழியே இயங்கின், அப்பால் ஒரு திங்களே வாழ்நாள் என்பதை மெய்ப்பித்துக் காட்டமுடியும். இருபத்தெட்டுநாள் இயங்கின், அப்பால் பத்து நாள்களே வாழ்நாள் என்று காட்டலாம்.

குறிப்புரை :

இயக்கம் இருபத்தேழு நாள் என்பது, ஒரு நாள் கூட இருபத்தெட்டு நாளாகுமாயின், எத்துணைத் தீங்கு மிகுகின்றது என்பது இங்கு ஊன்றி உணரத்தக்கது.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்
வாரஞ்செய் கின்ற வகைஆறஞ் சாமாகில்
ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்றும் நாளே.

பொழிப்புரை :

பிராண வாயு மேற்கூறியவாறு இருபத்தொன்பது நாள் இயங்கினும் இருபத்தெட்டு நாள் இயங்குதலோடு ஒப்பதேயாம்; வேறுபாடில்லை. இனி, முப்பது நாள் இயங்கின், வாழ்நாள் அப்பால் ஏழு நாளாகவே நிற்கும்.

குறிப்புரை :

பார் அஞ்சி நின்ற பகை - உலகம் அஞ்சுகின்ற பெருந்தீங்கு; இறப்பு. வாரம் - கூறு. `நாள், ஓர் அஞ்சொடு, ஒன்று, ஒன்று என ஒன்றும்` எனக் கூட்டுக.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 15

ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்
கன்றிய நாளுங் கருத்துற மூன்றாகும்
சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்
மன்றியல் பாகு மனையில் இரண்டே.

பொழிப்புரை :

பிராண வாயு இடை நாடி வழியே முப்பத்தொரு நாள் இயங்குமாயின், வாழ்நாள் அப்பால் மூன்று நாளே. முப்பத் திரண்டு நாள் இயங்கின், அப்பால் இரண்டு நாளில் அவ்வுயிர் உடலை விட்டுச்செல்ல, அது வாழ்ந்த இல்லத்தில் பலர் கூடி ஒலிக்கின்ற மன்றத்தின் இயல்பு தோன்றுவதாகும்.

குறிப்புரை :

கன்றிய நாள் - உயிர் உடலில் அழுந்தியிருக்கும் நாள். ``சென்று`` என்பது, `செல்ல` என்பதன் திரிபு.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 16

மனையினில் ஒன்றாகும் மாதம்மும் மூன்றும்
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே.

பொழிப்புரை :

உயிர் வளர்கின்ற மாதங்கள் முதற்கண் ஓர் அறை யில் ஒன்பதும், பின் நீர்க்குட்டத்தில் ஒன்றும் என்று எங்கள் நந்தி பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். (அஃதாவது தாயின் வயிற்றில் ஒன்பது மாதம் உருப்பெற்று வளர்ந்து, பத்தாம் மாதம் நீரில் மிதந்து கிடக்கும் என்றவாறு) பத்தாம் மாதம் அவ்விடத்தை விட்டு அகன்று திருவருள் உணர்வோடு சிறப்புற்று வெளிவருமாயின், அது தன்னைப் பெறுதலாகிய பேற்றினால் உலகர்க்குத் தலைவனாதலும் கூடும்.

குறிப்புரை :

எனவே, `அவ்வாறின்றி வினைவயப்பட்டே வெளி வருமாயின், அளவற்ற உயிர்களுள் தானும் ஒன்றாய், மேற்கூறிய வாழ்நாள் எல்லைகளுள் ஒன்றைப் பெற்றுக் கழியும்` என்றதாயிற்று. ஒன்றாகும் - பொருந்துதல் உடையதாம்.
இதனால், யோக முயற்சி முன்னைத் தவம் உடையார்க்கே கூடும் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.
தவமும் தவமுடையார்க் காகும்; அவம் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
-குறள், 262
என்றார் திருவள்ளுவ நாயனாரும்.

பண் :

பாடல் எண் : 17

ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரு மறியா அறிவறிந் தேனே.

பொழிப்புரை :

வாழ்நாளை அளந்தறிதற்குக் கருவியாகிய (எனவே, உயிர் வாழ்தற்கு முதலாகிய) மூலாக்கினி, பிராண வாயு இவற்றின் பெருமைகளை அறிகின்றவர் உலகில் எவரும் இல்லை. அதனால், அவற்றை ஒழுங்குபட நிறுத்தாமையால் விரைவில் நீங்குகின்ற உயிரினது பெருமையையும் அறிகின்றவர் இல்லை. யான் திருவருளால் அவ்விரண்டையும் அறியப் பெற்றேன்.

குறிப்புரை :

எனவே, `யான் மேற்கூறியவை ஒருவரும் அறிந்திராத அருமறை` என்றவாறு.
இதனால், ஆயுள் பரீட்சை முறையின் அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

அறிவது வாயுவொ டைந்தறி வாய
அறிவா வதுதான் உலகுயிர் அத்தின்
பிறிவுசெய் யாவகை பேணிஉள் நாடிற்
செறிவது நின்று திகழும் அதுவே.

பொழிப்புரை :

அறியவேண்டுவது, பிராணவாயுவின் இயக்கமும், அதனால் நிலைபெறுகின்ற ஐம்பொறிகளாகிய அறிவும் ஆகிய வற்றையே, `அறிவு` என்று சொல்லப்படுவது எதுவோ அதுவே, உலகில் `உயிர்` என்று சுட்டப்படுவது. அவ்வுயிர் உலகினின்றும் பிரிந்து போகாதவாறு அதற்குரிய முறைகளை அறிந்து, அறிந்த வழியிலே பேணிக் காப்பின், அது உடம்பில் அழுத்தம் உடையதாய் நிலைபெற்று விளங்கும்.

குறிப்புரை :

பின்னர் வரும், பிறிவு செய்யா வகையை அறிதற்கு, முதற்கண், ``அறிவது வாயுவொடு ஐந்தறிவாய`` என்றார். ``ஆய`` என்பது வினைப்பெயர். அதனிடத்து, `ஆயவற்றை` என உருபு விரித்துக்கொள்க. `அதனின்` என்பது, ``அத்தின்`` என மருவிற்று. ``அது`` என்றது, முற்போந்த உலகினை.
இதனால், `அறிவுடையார் ஆயுள் நீட்டிக்கும் முறையை அறிந்து அவ்வழியில் நிற்றல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

அதுவரு ளும்மரு ளான துலகம்
பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளும்
மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி
இதுவருள் செய்யும் இறைஅவ னாமே.

பொழிப்புரை :

`அது` என்று பொதுமையிற் சுட்டப்படும் முதற் பொருள் செய்கின்ற அருள் அனைத்துயிர்க்கும் பொதுவாக உலகின்பத்தையும், உயர்ந்தோர்க்குச் சிறப்பாகப் பேரின்பத்தையும் தரும். அவ்வருளும், செந்தாமரை வெண்டாமரை மலர்களில் வீற்றிருக்கின்ற திருமகள், கலைமகள் என்னும் இருவர்க்கும் தலைவியாகிய உமையே. அதனால், வாழ்நாளை நீட்டிக்கும் அருளைப்புரியும் இறைவன், அவ்வுமைக்குத் தலைவனாகிய சிவபெருமானே.

குறிப்புரை :

`அதனால் அப்பெருமானை நினைந்தே வாழ்நாள் நீட்டிப்பில் முயல்க` என்பது குறிப்பெச்சம். ``அருளும்`` மூன்றில் முன்னது எச்சம்; ஏனையவை முற்று. `உலகத்திற்கு` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. மது, சிவானந்தத் தேன்.
இதனால், வாழ்நாள் நீட்டிப்பின் முயற்சிக்கு இன்றியமை யாததொரு துணை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க் ககலும் மதியே.

பொழிப்புரை :

`உயிர்கள் பிறத்தல் வேண்டும்` என்று கருதிய இறைவனது குறிப்பின்படி அவற்றிற்குக் கிடைத்த அழகிய உடம்பு, `பிஞ்சு, காய், செங்காய்` என்று ஆகி முடிவில் பழமாய்ப் பழுத்து விழுந்துவிடும். அதற்குள் பாசங்கள் ஆழ்ந்து போம்படி அதற்குரிய முறைகளில் பழகினால், பாசம் விலகி, ஞானம் மிகும்.

குறிப்புரை :

`அவ்வாறு முயலுதற்பொருட்டே, இவ்வாயுள் பரீட்சை கூறப்பட்டது` என்பது குறிப்பெச்சம். `குறிப்பதனால்` என உருபு விரிக்க. உடம்பை, `குரம்பை, பதி` என்பனவாகக் குறித்தார். ``ஆவது, அறும்`` என்பன முற்றுக்கள். ``பற்றறும்`` என்பதை, `செய்வார்க்கு` என்பதன் பின் கூட்டுக. உரைக்க - `ஆழ` என்பது குறுகிநின்றது. படி - முறை.
இதனால், இவ்வதிகாரத்திற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.

பொழிப்புரை :

கிழமைகள் ஏழனுள், `வெள்ளி, திங்கள், புதன்` என்னும் மூன்றில் இடநாடி வழியாகவும், `சனி, ஞாயிறு, செவ்வாய்` என்னும் மூன்றில் வலநாடி வழியாகவும், வியாழனில் வளர் பிறையாயின் இடநாடி வழியாகவும், தேய் பிறையாயின் வல நாடி வழியாகவும் இயங்குதல் உடல் நலத்திற்கு ஏற்புடைய இயற்கைப் பிராண இயக்கமாகும்.

குறிப்புரை :

எனவே, மாறி இயங்குதல் உடல் நலத்திற்குப் பொருந்தாது என்பதாம்.
இதனால், சர ஓட்டத்தின் இயற்கைத் தன்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே.

பொழிப்புரை :

`பிராணன், மேற்கூறியவாறு, குறித்த கிழமைகளில், குறித்த நாடியின் வழியே இயங்குமாயின், ஞானத்தைப் பெறுதற்கு வாயிலாகிய உடம்பிற்கு யாதொரு குறையும் உண்டாகாது` என்று, அருள் வள்ளலாகிய நந்தி பெருமான் எங்கட்குத் திருவுளம் உவந்து அருளிச்செய்தார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 3

செவ்வாய் வியாழம் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே.

பொழிப்புரை :

பிராணன், மேற்கூறியவாறு செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வல நாடி வழியே இயங்குதல் வேண்டும் என்பதை அறிந்த யோகியை, `சிவன்` என்றே சொல்லலாம். அஃது அவ்வாறு இயங்காது மாறி நிகழும்பொழுது அதனை ஒத்த முறையில் இயங்கச்செய்து அதன் பயனை அறிபவர்க்கு, அப்பயன் சிவானந்தமாய் முடியும்.

குறிப்புரை :

மேலைத் திருமந்திரத்துள், ``காயத்துக்கு ஊனம் இல்லை`` என்றதனையும், இத்திருமந்திரத்துள், ``ஒவ்வாத வாயு வலத்து (ஒவ்வுமாறு) புரியவிட்டு`` என்றதனையும் இரண்டற்கும் பொதுவாமாறு கூட்டிப்பொருள் கொள்க. அங்ஙனங் கொள்ளவே, `பிராணன் முதலிற் கூறிய இயல்பில் இயங்காது மாறி இயங்கின், அஃது, உடல், இயற்கை நிலையில் இல்லாமைக்கு அறிகுறியாய், மேலும் உடலின் இயற்கை நிலையைக் கெடச்செய்யும்` என்பதும், `அதனால் யோகியானவன் தனது பிராணாயாம முறையால், ஒவ்வா இயக்கத்தை மாற்றி, ஒத்த இயக்கத்ததாக ஆக்குதல் வேண்டும்` என்பதும் போதரும். இத்திருமந்திரத்துள் வல நாடி இயக்கத்திற்குச் சொல்லியன யாவும் இடைநாடி இயக்கத்திற்கும் பொருந்துதல் எளிதின் அறியப்படும்.
`பிராணன் எஞ்ஞான்றும் ஒரு நாடி வழியாகவே இயங் குதலோ, அல்லது மாறி நிகழினும் அம்மாற்றம் முன்னை நிலையொடு பின்னை நிலை ஒத்த அளவினதாய் நில்லாது மிக்காதல் குறைந்தாதல் நிற்றலோ உளதாயின், உடல் தன் இயற்கை நிலைகெடும்` என்பது இம் மூன்று திருமந்திரங்களாலும் அறியப்படும். படவே, `அவ் இரு வகையும் ஆகாது ஒரு நிகரான மாற்றத்ததாமாறு கிழமைக் கணக்கில் வைத்து அமைக்கப்பட்டது` என்பதும் உணர்ந்து கொள்ளப்படும்.
இவ் விரண்டு திருமந்திரங்களாலும் சர ஓட்டத்தின் ஒத்த நிலையது பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.

பொழிப்புரை :

இடை நாடி பிங்கலை நாடிகளாகிய வழியால், முறையே, `சந்திர கலை` என்றும், `சூரிய கலை` என்றும் ஆகின்ற பிராணன், எஞ்ஞான்றும் அவ்வாறே இயங்கி அப்பெயரையே பெற்று நில்லாமல் மாறி வரும். (அஃதாவது, இடை நாடியில் இயங்கி, `சந்திர கலை` எனப் பெயர்பெற்று நின்ற பிராணனே அந்நிலையினின்றும் மாறிப் பிங்கலையில் இயங்கி, `சூரிய கலை` எனப் பெயர்பெற்று நிற்கும். பின்னும் அச் சூரிய கலைதானே சந்திர கலையாய் மாறும். இம் மாற்றத்திற்கு முடிவில்லை) இனி, பிராணன் மேற்கூறியவாறு, `சந்திர கலை, சூரிய கலை` எனப்பெயர் பெறும்பொழுது, அவ்வந் நாடியின் வழி முன்னர் வெளிச் செல்லுதலையும், பின்னர் உட்புகுதலையும் உடையதாய் இருக்கும். நீர் ஊற்றுப்போல இங்ஙனம் சுரந்து முடி வின்றிச் சர ஓட்டமாய் ஓடுகின்ற பிராணன், மேற்கூறிய இரு நாடிகளின் வழி ஓடாது, நடு நாடி (சுழுமுனை நாடி) வழியே இயங்குமாயின், (அஃதாவது, பிராணாயாமமாய் அமையுமாயின்,) அஃது உடற்கே யன்றி, உயிர்க்கும் வலிமை தருவதாம். ஆகவே, அதனை அறிந்து, உலகீர், பிராணனை நடு நாடியிற் செலுத்தும் முறையைக் குருமுகமாகக் கேட்டுச் சிந்தித்துத் தெளியுங்கள்.

குறிப்புரை :

`மதி வெய்யவன் இரு பால் மாறி வரும்; அவை இடை பிங்கலையிடை ஏறி இழியும்` என்க. முதல் அடியால், `மதி, வெய்யவன்` என்பன பொருள் வேறாதலைக் குறியாது, ஒருபொருள் தானே இடம் பற்றிப்பெறும் நிலை வேறுபாட்டினையே குறிக்கும் என்பது உணர்த்தியவாறு. இரண்டாம் அடி, அஃது அவ்வப்பெயர் பெறுங் காலத்தை உணர்த்திற்று. பால் - இடமும், வலமும் ஆகிய பக்கங்கள். `இரு பாற்கண்` என உருபு விரிக்க. மாறுதல் - வேறிடம் செல்லுதல். வருதல் - முன்னையிடத்திற்கு மீளுதல். `இருபாற்கண் வரும்` என இயையும். எனவே, ஏழாவது இறுதிக்கண் தொக்கதாம். மதியும், வெய்யவனும் ஆகுபெயர்கள்.
``உயிர்`` இரண்டனுள் முன்னது பிராணன்; பின்னது ஆன்மா. ``நடுவே`` என்பதன் பின், `இயங்கின்` என்பதும், `உக்கிரம்` என்பதன்பின் `ஆம்` என்பதும் எஞ்சி நின்றன. `இதனைத் தேறி` என எடுத்துக்கொண்டு, `அறிமின்` என்பதற்கு, `நடுவே இயங்குதற்குரிய வழியை` என்னும் செயப்படுபொருள் வருவித்து முடிக்க. `குருமுகமாக` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது.
இதனால், சரவோட்டம் இரு நிலையது ஆமாறும், பின்னும் அதுதானே பிராணாயாமமாய்ப் பயன் தருமாறும், அப்பயனை எய்துமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி ஓடுத லாம்அகன் றாரும்
உதித்தது வேமிக ஓடிடு மாகில்
உதித்த இராசி யுணர்ந்துகொள் உற்றே.

பொழிப்புரை :

பிராண வாயு வல நாடியால் நுழைந்து, இட நாடியால் வெளியேறுமாயின், அது, பிராணன் தனது நிலை கலங்கி இயங்குதலாம். ஏனெனில், அவ்வாறான ஓட்டத்தால் பிராணன் தனது வலிமையை மிக இழந்து நிற்கும். இனி, அதுதானே இட நாடியால் நுழைந்து வல நாடியால் வெளியேறுமாயின், `அது தன் இயற்கையில் உள்ளது` என அறிவாயாக.

குறிப்புரை :

`வலத்து உதித்து` என மாறுக. அகலுதல் - நீங்குதல். இதற்கு `வலிமையை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. ``ஆரும்`` என்பதன்பின், `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது. ``அதுவே`` என்ற தேற்றேகாரத்தால், உதித்தலும், ஓடுதலும் முற்கூறியதற்கு மாறாய் நிகழ்தல் பெறப்பட்டது. இராசி - இயல்பு.
இதனால், சரவோட்டம் பொதுவே நன்றாமாறும், தீதாமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
யிடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.

பொழிப்புரை :

சுழுமுனையில் நில்லாமல், ஏனை இருவழிகளிலும் ஓடி, அதனால் வாழ்நாளைத் தேய்க்கின்ற பிராண வாயுவை யோகி தன் வசமாக்கிக் கொள்ளும் வழியிலே சென்று, அதனால் குண்டலி சத்தியை உணர்ந்தபின், அவ்வுணர்வு வாயிலாக அணையும் விளக்குப் போல மிக ஒளிவிடுகின்ற திரோதான சத்தியை அனுபவமாகக் காண்பான்.

குறிப்புரை :

அந்தணன் - முனிவன்; யோகி. கூடுதல் - அடைதல்; ``கூடியிடுகின்ற`` என்பது ஒருசொல். பணி - பாம்பு; குண்டலினி. தீபத்தின் - தீபத்தைப்போல. இதன்பின், திரோதான சத்தியைக் குறிக்கின்ற. `ஒன்று` என்னும் சொல் எஞ்சி நின்றது. முன் - முன்பே. `என்பான்` என எதிர்காலத்தால் கூறற்பாலதனை, துணிவு பற்றி ``என்றான்`` என இறந்த காலத்தாற் கூறினார். `யோக முறையால் குண்டலினி சத்தியை உணரப் பெற்றவன், அதனால் திரோதான சத்தி உண்மையை இனிது உணர்வான்` என்பது இம்மந்திரத்தின் திரண்ட பொருள். `உலகர்க்கு விளக்குப்போல நிற்கின்ற திரோதான சத்தி, யோகத்தில் ஞானத்தை எய்தினோர்க்கு அருட் சத்தியாய் மாறும் நிலையை அடையும்` என்றற்கு அணைகின்ற விளக்கை உவமையாகக் கூறினார். அதனானே, அஃது இனிது காட்சிப்படுதலும் பெறப்பட்டது.
இதனால், யோகப்பயிற்சி சத்திநிபாதத்திற்கு ஏதுவாதல் கூறும் முகத்தால், `அப்பயிற்சியை மேற்கொள்ளுதலே சரவோட்டத் தின் இயல்புணர்தற்குப் பயன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே.

பொழிப்புரை :

சிவபெருமானது சூலம் மாறி மாறி வருகின்ற திசை களைச் சொல்லுமிடத்து, திங்களும், சனியுமாகிய கிழமைகளில் கிழக்காம். செவ்வாயும், புதனுமாகிய கிழமைகளில் வடக்காம். ஞாயிறும், வெள்ளியுமாகிய கிழமைகளில் மேற்காம். இக்கிழமை களில் சூலம் இவ்வாறாக நிற்கும்.

குறிப்புரை :

எஞ்சிய கிழமையில் நிற்கும் திசையை அடுத்து வரும் திருமந்திரத்திற் காண்க. அத்திருமந்திரத்தில், ``அக்கணி சூலம்`` என வருமாறே, இத்திருமந்திரத்திலும், ``சூலம்`` என்பதுடன் ``அக்கணி`` என்பதனைக் கூட்டிப் பொருள்கொள்க. பார் ஒத்தல் - நிலத்திற்குப் பொருந்துதல். செவ்வாயை `நில மகன்` (நிலத்திற்கு உரிமை யுடையவன்) எனச் சோதிட நூல் கூறும்.

பண் :

பாடல் எண் : 2

தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
அக்கணி சூலமும் ஆம்இடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலம்முன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.

பொழிப்புரை :

வியாழக்கிழமையில் சூலம் இருக்கும் திசை தெற்காகும். சிவபெருமானுடைய சூலம் (பயணம் செய்பவனுக்கும், யோகிக்கும்) இடப் பக்கத்திலும், பிற்பக்கத்திலும் இருப்பின் ஏற்புடையதாகும். ஆகவே, அப்பொழுது அவர்கட்குத் தீங்கு இல்லை. வலப் பக்கத்திலும், முற்பக்கத்திலும் இருப்பின் தீங்கு மிக விளையும்.

குறிப்புரை :

அக்கு அணி - எலும்பை அணிந்தவன். உம்மை இரண்டும் அசைநிலைகள். `சூலம் இடம் பின் ஆகில் ஆம்; துக்கம் இல்லை` எனவும், வலம் முன் தோன்றிடில் மிக்கதாகிய மேல்வினை மேன்மேல் விளையும் எனவும் கூட்டி வினை முடிவுசெய்க.
இவ் இரண்டு திருமந்திரங்களாலும் கூறப்பட்ட பொருள்கள் சோதிட நூல்களிலும் இவ்வாறே கூறப்படுகின்றன.

பண் :

பாடல் எண் : 1

கட்டக் கழன்றுகீழ் நான்றுவீ ழாமலே
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டிப்பின் மேற்பையைத் தாட்கோத்து நட்ட மிருக்க நமனில்லை தானே.

பொழிப்புரை :

இம் மந்திரத்தின் பொருள், மேல் ஆதனம் கூறிய விடத்துச் சிங்காதனம் கூறிய மந்திரத்தின் பொருளே மேலும் சிறிது உறுதிப்படக் கூறுதலாய் இருத்தல் கண்டுகொள்க. `கேசரி` என்பது சிங்கத்தின் மறுபெயராதல் வெளிப்படை.

குறிப்புரை :

``கட்டக் ... ... ... ... கட்டி`` என்பது, `கட்டவும் நில்லாது கழன்று கீழே நான்று விழுந்து பதுமாசனம்போல் ஆகிவிடுகின்ற முழங் காலை அவ்வாறு ஆகாதபடி கைகளால் துடைகளோடு சேரக் கட்டி` என்றவாறு. அட்டம் - முழங்கால். இதனை, முழங்கால்மேல் வைக்கும் காலை ``அட்டங்கால்`` என வழங்கும் வழக்குப் பற்றியும் அறிய லாகும். முழங் கால்களைக் கைகளால் துடைகளோடு சேரக்கட்டுத லாவது, கைகளை முழங்காலின் கீழ்ப்புகுத்தி வெளிக்கொணர்ந்து சுற்றி யிழுத்துச் சேர்த்தல். அடுப்பு, மூலாதாரம். முக்கோண வடிவிற்றாய் நெருப்பை உடைத்தாதல் பற்றி இஃது இவ்வாறு கூறப்பட்டது. மூலாதாரத்தை அணையால் தடுத்தல், மேலே நில்லாமல் தரையிற் பொருந்தவைத்தல். ``அணை`` என்பது, இருக்கும் ஆசனத்திற்குச் சிலேடை. `அணையாற் கோலி` என மூன்றாவது விரிக்க. கோலுதல் - தடுத்தல். விட்டம், குறி. `அதனைப் பூட்டி` என்றது, கோவணம் கட்டுதலை விதித்தவாறு. பின்னர், ``மேற்பையைத் தாட் கோத்து`` என்பார் ஆகலின், அதுபற்றி, `வெற்றரையுடன் இருத்தல் வேண்டும் போலும்` என ஐயுறாமைப் பொருட்டு இதனை எடுத்தோதினார். பை, விதை. தாள் - பாதம். `பையைத் தாள்மேற் கோத்து` என மாறிக் கூட்டுக. இதனால், பாதங்கள் விதைக்குக் கீழ்ப்பொருந்துதல் கூறப் பட்டது. நட்டு இருத்தல் - உடலை அசையாது நிமிர்த்திருத்தல். ``நமன் இல்லை`` என்றது, `யோகம் வாய்ப்புடையதாகும்` என்றபடி. இவ் ஆதனத்தை இங்கு முதற்கண் வலியுறுத்திக் கூறவே, `கேசரி யோகம்` என்பது ஆதனத்தாற் பெற்ற பெயர் என்பது போந்தது. பிற ஆதனங்களிலிருந்து செய்யும் யோகங்களினும் இது மேலானது ஆதலால் இதனையே நாயனார் சிறந்தெடுத்து உணர்த்துகின்றார். இதன் மேன்மை வருகின்ற திருமந்திரங்களுட் காணப்படும். இதனால், கேசரி யோகத்தின் இருக்கை நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.

பொழிப்புரை :

ஆடையை அழுக்கு நீக்க விரும்புகின்ற வண்ணான் முதலில் தனக்குப் பயன்படுகின்ற வாய்க்காலை ஓட்டை போகாமற் கட்டிப் பின் ஆடை ஒலிக்கின்ற கல்லிற்கும் உயரமான அளவில் கரை கட்டி, மழை நீரால் பெருகி வருகின்ற ஆற்று நீரை அவ்வாய்க்காலின் வழியால் புகவிட்டுப் பள்ளத்தை நிரப்பினாலே அதில் ஆடையைத் தோய்த்து எடுத்து உயரத்தில் விரித்து உலர்த்திப் பார்க்கும்பொழுது அவ் ஆடை அழுக்கு நீங்கி விளங்கும். அம்முறை போல்வதுதான், யோகத்தால் உயிர் மல மாசு நீங்கி விளங்கும் முறையும்.

குறிப்புரை :

எனவே, `இவ்வுவமையோடு யோக நிலையைப் பொருத்தி உணர்ந்துகொள்க` என்றதாயிற்று. அங்ஙனம் உணருமாறு:-
வண்ணான், யோகி, ஆடை, யோகியது ஆன்ம அறிவு. ஆடை ஒலிக்கும் பலகை, (கல்) நெற்றி. ``நெற்றி`` என்பது விளங்குதற் பொருட்டே `சதுரப் பலகை` என்றார். ஆன்ம அறிவு மாசு நீங்குதல் ஆஞ்ஞைத் தியானத்தால் ஆகலின், ஆஞ்ஞை இடமாகிய நெற்றியை ஆடை ஒலிக்கும் கல்லோடு உவமித்தார். கண் ஆறு - வாய்க்கால். அஃது அண்ணாவை அடுத்து மேற்செல்லும் துளைக்கு உவமை. உச்சித் துளையை மோழை படாமற் கட்டுதலாவது, அதனை நாவின் நுனியால் அடைத்தல். தலையினின்றும் வரும் அமுதம் இத் துளை வழிக் கீழே ஒழுகிப் போகாமைப் பொருட்டு இது வேண்டப்பட்டது. விண் ஆறு - விண்ணால் பெருகியெழும் யாறு. விண் - மழை, ``விண்ணின்று பொய்ப்பின்`` (குறள், 13) என்பதிற்போல. இது மேற் குறித்த அமுதத்திற்கு உவமை. ``குளம்`` என்றது சிலேடை. இஃது உவமை யில், ``நீர் நிலை`` எனவும், பொருளில், `நெற்றி` எனவும் பொருள் தரும். அண்ணாந்து பார்த்தல், புருவ நடுவை நோக்குதல். ``உயிர் தூய்மை பெறுதல் இவ்வாற்றால் ஆகலின் இவ்வாற்றானே முயல்க`` என்பது குறிப்பெச்சம்.
``வண்ணான் கட்டிப் பாய்ச்சி நிரப்பினால்`` என இயையும். ``தான் ஒலிக்கும்`` என்க. ``கட்டி`` என்பதனை, ``கண்ணாறு மோழை படாமல்`` என்பதனோடும் கூட்டி, அத்தொடரை, `வண்ணான்` என்பதன்பின் வைத்துரைக்க. ஆறு - முறை. இஃது உவமையாகு பெயராய் அது போல்வதொரு முறையைக் குறித்தது. ``நிரப்பினால்`` என்பதில், அழுக்கு அறுதற்கு. கட்டுதல் முதலியவை இன்றி அமை யாதனவாதலை விளக்கி நிற்கும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று.
இதனால், கேசரி யோகத்தைப் புரியுமாறெல்லாம் தொகுத் துணர்த்தப்பட்டன. இவற்றால் ஆஞ்ஞை யோகம் ஒன்றே கேசரி யோகமாதல் அறியப்படும். சிங்காதனம் கூறியவழி ``அங்காந்து`` என்றதனை வலியுறுத்தியதே இதனுள் ``அண்ணாந்து பார்க்க`` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 3

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டா
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்
கிறக்கவும் வேண்டா இருக்கலு மாமே.

பொழிப்புரை :

இடநாடி. வலநாடி இரண்டையும் விடுத்து, நடு நாடியாகிய சுழுமுனை நாடியால் பிராணனைப் பயன்படுத்திக் கொள்ளும் யோகிகட்கு, உடல், நரை திரை மூப்புக்களால் தளர்தல் இல்லை. இதற்குமேல், உலக மயக்கத்தில் ஆழ்தலை ஒழித்துத் திருவருளை நினைந்திருக்க வல்லவர்க்கு அவர் தம் விருப்பத்திற்கு மாறாய் இறப்பு உண்டாகாது; அவர் விரும்புமளவும் இவ்வுலகில் வாழ்தல் கூடும்.

குறிப்புரை :

பவ யோகிகள் சித்திக் களிப்பாலும், சிவ யோகிகள் திரு வருட் களிப்பாலும் மத யானைபோலக் களித்திருப்பர் என்பதனைக் குறிப்பால் உணர்த்துவார், சுழுமுனை நாடியைத் தும்பிக்கையாக உருவகம் செய்தார். இதனானே, விநாயகர் யோக மூர்த்தி யாதலும் விளங்கும். சுழுமுனையை உருவகித்தற்கு ஏற்ப ஏனை இட நாடி வல நாடிகளை இடக் கை வலக் கைகளாகவும், பிராணனை உணவாகவும் உருவகித்தார். பவ யோகிகள், ``வெற்று யோகந்தானே காய சித்தியைப் பயக்கும்`` எனக் கூறுதலை மறுத்தற்குப் பின்னிரண்டு அடிகளைக் கூறினார். `திருவருள் உணர்வைப் பெறுவார் யோகியருள்ளும் அரியர்` என்றற்கு, ``உண்பார்க்கு`` என்றாற்போல `உணர்வார்க்கு` என்று ஒழியாது, ``உணர வல்லார்கட்கு`` என ஓதி யருளினார். மூன்றாம் அடிக்கு இங்கு உரைத்தவாறு உரையாதார்க்கு அவ்வடி வெற்றெனத் தொடுத்தலாய் முடியும் என்க. ``வேண்டா`` என்பன இரண்டும், `நீங்காது வருவன நீங்கும்` என்னும் பொருள் குறித்து நின்றன.
இதனால், கேசரி யோகத்துள் பிராணாயாமத்தது சிறப்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆய்ந்துரை செய்யில் அமுதம்நின் றூறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே.

பொழிப்புரை :

யோக நூல்கள் ஆராய்ந்து கூறிய முறையை மேற் கொண்டு பிரத்தியாகாரம் முதலியவற்றைச் செய்தால், உடம்பினின்றே அமுதம் சுரக்கும். சுரக்கும் அவ்வமுதம் நாடிகளிற் பாய்கின்றபோது அதனை யோகி தனது அநுபவமாகப் பிறர்க்கும் சொல்லுவான். இனி, நரை திரை மூப்புப் பிணி சாக்காடுகளை யேயன்றிப் பிறவிக் கடலையும் யோகி கடக்கின்ற முறையைச் சொல்லுமிடத்து, மேற் சொல்லிய அமுதம் சந்திர மண்டலத்திலிருந்து பாய்ந்து உடலைக் காப்பாற்றுகின்ற அதுவேயாம்.

குறிப்புரை :

``ஆய்ந்துரை செய்யில்`` என்பதில் `உரை` என்பதும், மூன்றாம் அடியில் உள்ள ``நீந்து`` என்பதும் முதனிலைத் தொழிற் பெயர்கள். அவை முறையே செயப்படு பொருளையும், கருவியையும் உணர்த்தி நின்றன. `அது வருகின்ற காலத்து வாய்ந்துரை செய்யும்` எனச் சுட்டுப் பெயர் வருவித்து, முன்னே கூட்டி முடிக்க. `நீந்து உரை செய்யின் உரை செய்தது நிலாமண்டலமதாய்ப் பாய்ந்து பாலிக்குமாறு` எனக் கொண்டு கூட்டி உரைக்க. நிலாமண்டலத்தில் உள்ளதனை `நிலாமண்டலம்` என்றே பான்மைப்படுத்து ஓதினார். `நிலா மண்டலத்ததாய்` என்றே பாடம் ஓதுதலும் ஆம்.
இதனால், `யோகம் பிறவியைக் கடப்பிக்கும் சிறப்புடையது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி ஊனே.

பொழிப்புரை :

பிராண வாயு சுழுமுனை வழியே மேல் ஏறும் பொழுது அது மீளக் கீழ்ப் பாயாதபடி நாவின் நுனியால் அண்ணாக் கினை அடுத்துள்ள துளையை அடைத்தால், (அவ்வாயு தலையிலும், நெற்றியிலும் உள்ள நாடிகள் வழியாகப் பரவுதலால்) சீவனும், சிவனும் இருக்கும் இடம் தலையில் உள்ள அவ் ஆயிர இதழ்த் தாமரை யாகவே முடியும். (அஃதாவது, பாச ஞானங்கழல, பசு ஞான பதி ஞானங்கள் விளங்குவனவாம்.) ஆகவே, அப்பொழுது மூவர் காரணக் கடவுளரையும், ஏனை முப்பத்து மூவர் தேவரையும் காணும் ஒளிக்கண் கிடைக்கும். மற்றும் நூறு கோடி யுகங்கள் சென்றாலும் உடம்பு அழியாது நிலைபெற்றிருக்கும்.

குறிப்புரை :

`சிவிறுதல்` என்பது, `விசிறுதல்` என இக்காலத்து எழுத்து நிலைமாறி வழங்கும். நாவின் நுனியால் உச்சித் துளையை அடைக்க, அதன்வழி மேற்சென்ற பிராணன் மீளாமையும், அதனாற் பெருகும் அமுதம் கீழ்ப் போகாமையும் உளவாதலால் விளைகின்ற பயன்கள் பல என்றவாறு.
இதனுள், ``நாவின் நுனியை நடுவில் சிவிறிடில்` எனவும், பின் வருகின்ற திருமந்திரங்களிலும் இவ்வாறு இப் பொருளே படக் கூறுவனவும், மேல் சிங்காதனம் கூறியவழி, ``அங்காந்து`` என்றதனுள்ளே உய்த்துணர்ந்து கொள்ளக் கிடந்தன. ஆகவே, இது கேசரி யோகத்தைக் குறிக்கும் குறிப்பாதல் பெறப்படும். ``அங்கே`` என்பதன்பின், `உளதாம்` என்பதும், `உறைவிடம்` என்பதன்பின் `அதுவேயாம்` என்பதும் எஞ்சி நின்றன. ஆக்கங்கள் புதியனவாய் அறியப்படுதலைக் குறிக்கும்.
காரணக் கடவுளர் மூவர் ஆவார், `அயன், அரி, அரன்` என்போர். முப்பத்து மூவர் ஆவார், `உருத்திரர், சூரியர், அசுவினி தேவர், வசுக்கள்` என நால்வகைப்பட்டு, முறையே பதினொருவர், பன்னிருவர், இருவர், எண்மர் என்னும் தொகை பெற்று நிற்பவர். இவரை, ``நால்வே றியற்கைப் பதினொரு மூவர்`` (திருமுருகாற்றுப்படை, 167) என்றார் நக்கீர தேவர். இவர் ஒவ்வொருவரும் தம்மைப் போலும் `கோடி` என்னும் எண்ணுடையோரைச் சுற்றமாகக் கொண்டு நிற்றலால், `தேவர் முப்பத்து முக்கோடியர்` என்பர். பொதுவே ``மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்`` என்றாராயினும், சிவயோகியர்க்கு அவரது வரம்புபட்ட நிலைகளும் உடன் அகப்பட்டுத் தோன்றும், என்பது கருத்து என்க. இவ் விளக்கங்கள் தத்துவ விளக்கம் ஆதல் அறிக.
இதனால், கேசரி யோகத்தால் பாச பசு பதிகளின் காட்சி கிடைத்தல் கூறப்பட்டது. பாசக் காட்சியைக் கடைக்கண் ஓதினார், பாசங்களது இழிபு பற்றி. இதனுள், நாவின் நுனியை நடுவே சிவிறுதல் சிறப்பாகக் குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வானூறல் பாயும் வகையறி வாரில்லை
வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்
தேனூறல் உண்டு தெளியலு மாமே.

பொழிப்புரை :

குருதி பாய்ந்து ஓடுகின்ற தலையிலிருந்தே தேவ ருலகத்து அமுதம் பாய்கின்ற வகை அறிகின்றவர் உலகில் ஒருவரும் இல்லை. அதனை அறிதல் உடையவர்க்கு அந்தத் தேன்போலும் அமுதத்தை உண்டு, அதன் சிறப்பை உணர்தலும் கூடும்.

குறிப்புரை :

ஊனின்கண் சுரப்பதனை ``ஊன் ஊறல்`` என்றும், வானின்கண் குறையாது நிற்பதனை, ``வான் ஊறல்`` என்றும் கூறினார். வான் ஊறல் என்பது ஒரு சொல்லாய்ப் பின் உவமையாகு பெயராயிற்று. வரை - மலை; அஃது அதன் உச்சியைக் குறித்தது. `வரைபோலும் உச்சி` என்க. முதனிலைத் தொழிற் பெயரும் பெய ராதலின், அதனை இரண்டாவதன் பொருள்பட, ``அறிவாளர்க்கு`` என ஓதினார். `தேன்` என்பதும் உவமையாகுபெயர். இதன் சிறப்பு வருகின்ற திருமந்திரத்திற் பெறப்படும்.
இதனால், கேசரி யோகத்தால் அண்டத்து அமுதம் பிண்டத்துட் கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

மேலைஅண் ணாவில் விரைந்திரு காலிடிற்
காலனும் இல்லை கதவும் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவான் பராநந்தி ஆணையே.

பொழிப்புரை :

அண்ணாக்கின் அருகில் உள்ள துளையில், `இடை கலை, பிங்கலை` என்னும் இரு நாடிகளின் வழியே இயங்கும் பிராணனைப் பொருத்தினால், யம பயம் இல்லை. மேலுலகத்து வாயிற் கதவும் திறக்கும். உளவாய் இருந்த நரை திரைகளும், உலகத்தார் கண்டு வியக்கும் வண்ணம் மாறிவிடும். அதன்பின் யோகி இளமைத் தோற்றத்தையும் உடையவனாவான். இஃது எங்கள் ஆசிரியர்மேல் ஆணையாகச் சொல்லுகின்ற உண்மை.

குறிப்புரை :

`நாக்கில் இரு கால்களை இடுதல் எவ்வாறு` என வியக்கும் முறையில் நயம்பட ஓதினார், இச்செயல் செயற்கரிதாதல் தோன்றுதற்கு. `இரு காலால் உதைத்தால் கதவு திறந்துகொள்ளும்` என்பதும் ஓர் நயம். `கதவு` மேல் `உலகத்தது` என்பது ஏற்புழிக் கோடலால் விளங்கும். மேல் உலகத்தை, அண்டம், பிண்டம் இரண்டிலும் கொள்க. கட்டிளமை யுடையாரையும் `பாலியர்` என்றல் வழக்கு. இனி, `குழவிப் பருவத்துத் தோற்றம் உடையவராவர்` என உரைப்பினும் குற்றமின்று. என்னை? தோற்ற மாத்திரமேயன்றி அறிவு முதலியன அப்பருவத்தன ஆகாமையின்.
இதனால், கேசரியோகத்தால் இம்மை மறுமைப் பயன்கள் கிடைத்தல் கூறப்பட்டது. இவற்றுள், இம்மைப் பயன் மேற்கூறிய அமுதத்தின் பயனாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 8

நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.

பொழிப்புரை :

கேசரி யோகத்தைச் சிவபெருமானையே முதல் வனாக உணரும் உணர்வில் நின்று செய்து, அதனானே, அவனைத் தலைப்படுகின்ற யோகி, உலகத்தார் யாவரையும் ஆட்கொள்கின்ற திருவருட் செல்வம் உடையவன் ஆவான். அங்ஙனமாகவும், அவ்யோகத்தை மேற்கொள்ளாது உலகியலில் பலவற்றை ஆக்க நினைத்துக்கொண்டிருப்போர், நல்வினை இல்லாதவரே யாவர்.

குறிப்புரை :

``முதலாக`` என்பது, `முதல்வனாக` எனப் பொருள் தந்து நின்றது. ஆளுதல் இங்கு, `அருள் வழியில்` என்பது வெளிப் படை. எனவே, யோகாசாரியனாதல் கூறியவாறாயிற்று. பந்தித்தல் - இருத்தற்குரிய. பகலோன், சூரியகலை. இது பொதுவாக வெளிச் செல்வது ஆதலின், ``பகலோன் வெளியாக`` என்றார். சிந்தித்தல், ``கருதுப கோடியும் அல்ல பல`` (குறள்) என்றாற்போல, நினைவு மாத் திரமாய்க் கழிவனவற்றை எண்ணுதல். இது பிராணன் வீணேகழிதலை உணராமையைக் குறித்து நின்றது. சூரியன் உதயமான பின்பும், `எப்பொழுது உதயமாகும்` எனக் கவலையுறுபவர் என்பது ஒரு நயம்.
இதனால், கேசரி யோகத்தால் யோகாசாரியனாதற் சிறப்புக் கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தீவினை ஆடத் திகைத்தங் கிருந்தவர்
நாவினை நாடின் நமனுக் கிடமில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை ஆடிய தீங்கரும் பாமே.

பொழிப்புரை :

முன் செய்த தீவினை வந்து விளையாட, அவ் ஆடலைப் போக்க வழியறியாது நின்றவர், கேசரி யோகத்தைச் செய்யின், அவ் ஆடல் இல்லையாய்விடும். மேலும் அதனானே, அவர்க்குச் சிவனோடு கூடித் திளைத்தற்கு, இனிய கரும்புபோலும் திருவருளும் கிடைப்பதாகும்.

குறிப்புரை :

நா வினை - நாவால் உச்சித் துளையை அடைக்கும் செயல். பா வினை - பரவிய (மிக்க) வினை என்றது முன்னர், ``தீ வினை`` எனக் கூறியவற்றை. அவற்றோடு ஆடுதலாவது, அவற்றின் பயன்களில் அழுந்துதுதல். பயன், அவை அற்றொழிதல். இம் மூன்றாம் அடி, மேல், ``திகைத்து அங்கிருந்தவர்`` எனக் குறித்தவரைச் சுட்டும் அளவாய் நின்றது. இவ்வடியின் ஈற்றில் நான்காம் உருபு தொகுத்தலாயிற்று. தே - சிவம். இஃது இன் சாரியையோடு இரண்டாம் உருபு ஏற்று நின்றது. ``ஆடிய`` என்பது, ``செய்யிய`` என்னும் வினையெச்சம். ஆடுதல் - திளைத்தல்; அநுபவித்தல்.
இதனால், கேசரி யோகம் கீழ் நிலையில் உள்ளாரை எளிதில் மேல் ஏற்றுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தீங்கரும் பாகவே செய்தொழில் உள்ளவர்
ஆங்கரும் பாக அடையநா ஏறிட்டுக்
கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட
ஊன்கரும் பாகியே ஊனீர் வருமே.

பொழிப்புரை :

மேற்சொல்லிய கரும்பைப் பயிரிட (திருவருளைப் பெற) விரும்புவோர் கேசரி யோகத்தால் குண்டலியை எழுப்பி நிராதாரத்திற் செலுத்துதல் வேண்டும். செலுத்தினால், அருவருக்கத் தக்க இவ்வுடம்பே ஆனந்தத்தைத் தரும் கரும்பாகி, நிராதாரத்தில் உள்ள திருவருள் வெள்ளம் பாய்ந்தோடி வரும்.

குறிப்புரை :

``தீங் கரும்பாக`` என்பதில், ஆதல், விளைதல். ஆக - ஆமாறு. ஆங்கு - அத்தொழிற்கண். ``நாவை அரும்பாக அடைய மேல் நிமிர்த்தி`` என உரைக்க. இதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது. கோங்கின் அரும்பு, உறக்கத்தால் சுருங்கிக் கிடக்கும் பாம்பின் முகத்திற்கு உருவகம். ``அரும்பினதாகிய`` என்பதை ``அரும்பாகிய`` என்றார். குண்டலியை ``கோண்`` என்னும் தமிழ்ச் சொல்லாற் கூறினார். ``ஆகி`` என்னும் வினையெச்சம் எண்ணின்கண் வந்தது. ``ஊன் நீர்`` என்பதில் ஊன் - உவ்விடம்; மேலிடம்; என்றது நிராதாரத்தை. எனவே, குண்டலி நிமிர்தல் இதுகாறுமாயிற்று. ``நிராதாரத்தில் உள்ள நீர்`` எனவே, அது திருவருள் வெள்ளமாயிற்று.
இதனால், கேசரி யோகத்தை நிராதாரமாகச் செய்தவழித் திருவருட் பேறு கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே.

பொழிப்புரை :

மேற்கூறிய திருவருள் வெள்ளம் பெருகுதல் உண்டாகும் முறையிலே கேசரி யோகத்தைச் செய்து, அதனால், தேன்போல இனிய அந்த வெள்ளத்தைப் பருகி, திருவைந்தெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்து ஓதியிருக்க, காற்றும், நீரும் உலாவும் இடமாகிய இந்த உடம்பு ஆகாய கங்கையை உம்மிடம் வரச்செய்யும். அவ்வாறு அக்கங்கை வரும் வழியை அமைந்துணர்ந்து, முயலுங்கள்.

குறிப்புரை :

``ஊன் நீர்`` என்பதற்கு, மேல் உரைத்தவாறே உரைக்க. ``உள் நாவை ஏறிட்டு`` என்றது கேசரியோகத்தைக் குறித்தவாறு. இதனை, `நாவை உள் ஏறிட்டு` என மாற்றி யுரைக்க. ``உள்`` `அண்ணத் துளையினுள்` என்றவாறு. தேன் நீர், இல்பொருள் உருவகம். இஃது அணிநூலில் புறனடையாற் கொள்ளப்படும். ``என்று`` என்பதன்பின், `இருக்க` என ஒருசொல் வருவிக்க. ``வான் நீர்`` என்பது, முன்வந்த `கங்கை` என்றதனைச் சுட்டும் அளவாய் நின்றது. ``ஊன் நீர்`` என்றாற் போலப் பொதுப்பட `நீர்` என்றொழியாது, ``கங்கை`` என உயர்த்துக் கூறினமையின், அதனைச் சிவானந்த வெள்ளமாகக் கொள்க.
இதனால், நிராதார கேசரி யோகத்தால் சிவானந்த அனுபவம் உளதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலுமாமே.

பொழிப்புரை :

நிராதார கேசரி யோகம் சிவானந்தத்தைத் தருமாற்றை அறிந்து அதன்கண் நின்றவர், அவ் யோகத்தானே பாசங்களை வென்று அறிவே வடிவாய் இருக்குமாறு சிவன் தனது திருவருளைப் பொழிவான். மேலும், அவரை அவன் தனது வியாபகத்துள் அடக்கிக் காப்பவனும் ஆவான்.

குறிப்புரை :

``வழிபாடு`` என்றது மேற்கூறிய நிராதார யோகத் தையே என்பது இயைபுபற்றி இனிது விளங்கும். மூன்றாம் அடியும் அதனை மீள அநுவதித்ததேயாம். `உள்ளே பாய்ந்து` என முன்னே கூட்டுக. உள் - பிரம ரந்திரம்; அறிதல், நிராதாரத்தில் உள்ள சமனை உன்மனை சத்திகளை. படி - வாயில். வாயிலில் கதவு இடுதல், நாவின் நுனியால் அண்ணத் துளையை அடைத்தல். `குவிந்து` என்பது எதுகை நோக்கி, ``கூய்ந்து`` எனத் திரிக்கப்பட்டது. குவிவது மனம். இறுதியில் உள்ள ``அறிந்து`` என்பதனை, `அறிய` எனத் திரிக்க. உள் உறைபவன் யோகியும், கோயில் ஆகின்றவன் சிவனும் என்க.
இதனால், நிராதார கேசரி யோகம் முதிருந்தோறும் விளையும் பயன்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே.

பொழிப்புரை :

சிவனது வியாபகத்துள்ளே ஒடுங்கிப் புறம் போகாது நிற்கும் நிராதார கேசரி யோகிகள், எல்லா உயிரிடத்தும் தாயினும் மிக்க அருளுடையராய் இருப்பர். அறியாமையால் சிலர் அவர்க்கு ஊறு செய்யினும், அவரிடத்தும் அவர் அவ்வருள் நீங்குதல் இலர். ஆயினும், அவர்க்கு ஊறு செய்தவர் அத்தீவினையால் தம்மால் தாம் கேடுறுவர் ஆதலின், அது பற்றி அவர்க்கு அவ்யோகிகள் தீயினும் கொடியராகவும் சொல்லத்தக்கவர்.

குறிப்புரை :

``தீயினும் தீயர்`` என்றதனை,
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். -குறள், 77
என்றதுபோலக் கொள்க. `ஈசன் அடியார் இதயம் கலங்கிட` (பா.528) `தானே படைத்திட வல்லவ னாயிடும்` (பா.670) என்னும் திருமந்திரங் களையும் இங்கு நினைவு கூர்க. `தம்முளும்` என்னும் உம்மையைப் பிரித்து, ``தீயரும் ஆவர்`` எனக் கூட்டி யுரைக்க.
இதனால், கேசரி யோகம் முற்றி நின்றாரது பெருமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 14

தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன்
பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்
மாவினை யாளர் மதியிலுள் ளானே.

பொழிப்புரை :

தன்னை வழிபடும் நல்லூழ் இல்லாதவர்க்கு அவர் தலைக்கு அப்பால் மறைந்தே நிற்கின்றவனும், தன்னை யாதானும் ஒரு குறியில் புறத்தே வைத்து வழிபடுகின்றவர்கட்கு அக்குறியேயாய் நின்று அருள் செய்கின்றவனும், தன்னை அகத்தே ஆதாரங்களில் வைத்துப் பாவிக்கின்றவர்கட்கு அப்பாவனையிலே விளங்கு கின்றவனும் ஆகிய சிவன், பெருஞ்செயலாகிய நிராதார யோகத்தைச் செய்கின்றவர்கட்கு அவர்களது உணர்வு வடிவாய் நிற்கின்றான்.

குறிப்புரை :

`சென்னியில்` என்றது, ``உச்சிக் கூப்பிய கையினர்`` (திருமுருகாற்றுப்படை, 185), `சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்` (தி.8 திருப்பள்ளியெழுச்சி, 4) என்பனபோல `துவாத சாந்தத்தில்` என்றவாறு. சிவன் யாவரையும் விடாதே தொடர்ந்து நிற்பவன் ஆகலின், அவ்வாறு அவன் நிற்கும் இடம் துவாதசாந்தமே. அவனை வழிபடுவார் புறத்தே பல குறிகளிலும், அகத்தே ஆதார நிரா தாரங்களிலும் அவனைத் தலைப்பட்டுப் பின் துவாதசாந்தத்திலும் தலைப்படுவர். வழிபடாதார் ஓரிடத்தும் அவனைச் சாராமையின், அவர்க்கு அவன் துவாதசாந்தத்தில் தோன்றாது நிற்கும் அவ்வளவிலே யிருப்பன். அதனால், ``தீவினையாளர்தம் சென்னியில் உள்ளவன்`` என்றார். பூ வினை - பூவைக்கொண்டு செய்யும் செயல்; வழிபாடு. பொற்பதி - அழகிய தலம்; அது தானியாகு பெயராய் அதன்கண் உள்ள குறியை உணர்த்திற்று. இங்குச் சரியையும் கிரியையுள் அடக்கப் பட்டது. பா வினை - பரவுகின்ற செயல். பரவுவது மனம் என்க. பாவகம் - பாவனை.
இதனால், நிராதார யோகம் முதிரப் பெற்றோர் உண்மை ஞானத்தைப் பெறுதற்குரியராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

மதியின் எழுங்கதிர் போற்பதி னாறாய்ப்
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே.

பொழிப்புரை :

மாவினையாளர் மதியில் உள்ள சிவன், அதில், சந்திரனது கலைகள் போல்வனவாகிய பிராசாத கலைகள் பதினாறாய் நின்றும், புவன பதிகளின் இடமாகிய புவனங்கள் இருநூற்றிருபத்து நான் காய் நின்றும், இயங்கும் இல்லமாகிய உடம்பினுள் வினைகள் ஆகிய பகைவர் அவ்யோகியர் எதிர்சென்று போர்புரியாதவாறு தனது அருளாற்றலாகிய கணைகளைப் பொழிந்து கொண்டு இருக்கின்றான்.

குறிப்புரை :

பிராசாத கலைகள் பலவற்றுள் சிறப்புடையன சோடச கலைகளாதலின் அவற்றையே கூறுவார். அவை யோகியின் உணர் விற்கு உரியவாதல் இனிது விளங்குதற்கு ``மதியின் எழுங்கலை போல`` எனச் சிலேடித்துக் கூறினார். `பதிகள்` என்னாது `பதி` என்றது பன்மையொருமை மயக்கம், `ஏவல் இளையர் தாய் வயிறு கரிப்ப` என்பதிற்போல. ``நூறுநூற்`` றென்னும் சீரில் குற்றியலுகரம் அலகு பெறாது நின்றது. அத்துவாக்களுள் புவனங்களே பருப்பொருளாய் இனிது விளங்கலின், அவற்றைக் கூறவே, அவற்றொடு பிரிப்பின்றி நிற்கும் ஏனையவும் கொள்ளப்படும். ஆறு அத்துவாக்களுடன் நால் வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பின் எண்பத்து நான்கு நூறாயிர யோனிபேதங்களாகிய சராசரங்கள் யாவும் நெறியில் பிண்டத்துள்ளே நிற்கும் முறையைப் பிராசாத நூல்கள் இனிது விளங்கக் கூறுதலை அந்நூல்களுட் காண்க; ஈண்டு விரிப்பிற் பெருகும். கதி - நடை. யோகிகளது உணர்வில் அத்துவாக்கள் பலவும் தானேயாய் நின்று அவர்களது, உலகியல் உணர்வைத் தடுக்கும் முகத்தால் சஞ்சித பிராரத்த கன்மங்களின் வலியைக் கெடுத்தலின், ``கணைகள் பரப்பி - எதிர் மலையாமல் இருந்தனன்`` என்றார். மலைதற்கு வினைமுதல் வருவித்துக் கொள்க.
இதனால், கேசரி யோகத்தை நிராதாரமாகச் செய்தலின் மேல், பிராசாதமாகச் செய்தல் பெரும்பயன் உடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

இருந்தனள் சத்தியும் அக்கலை சூழ
இருந்தனள் கன்னியும் அந்நடு வாக
இருந்தனள் மான்ஏர் முகநில வார
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.

பொழிப்புரை :

மதியின் எழுங்கதிர்போல நிற்கும் பிராசாத கலைகள் பதினாறும் தன்னைச் சூழ்ந்து நிற்க, அவற்றின் நடுவே திரோதான சத்தி, தனது அழகிய முகமாகிய சந்திரன் நிறைந்த ஒளியுடன் விளங்க, அந்தப் பிராசாத கலைகளின் வழி அமுதத்தைப் பொழிந்துகொண்டு, அவற்றோடு தானும் இருக்கின்றாள்.

குறிப்புரை :

``அதனால், அன்ன சிறப்பினதாகிய அந்தப் பிராசாத யோகத்தையை முயலுங்கள்`` என்பது குறிப்பெச்சம். சத்தி, கன்னி, மான் என்பன ஒருத்தியையே குறித்தன. அந்நடு - அவற்றின் நடு. ``சூழ நடுவாக இருந்தனள்`` என்றது, ``ஆட்சி செய்திருக்கின்றாள்`` என்ற வாறு. திரோதான சத்தி தன் நிலைமாறி அருட் சத்தியாகும் நிலை மையைக் குறிக்க, ``முக நிலவு ஆர அமுதம் பொழிந்து இருந்தனள்`` என்றும், அஞ்ஞானம், ``மிருத்தியு`` எனப்படுதலால், அதனைப் போக்குகின்ற மெய்ஞ்ஞானத்தை ``அமுதம்`` என்றும் கூறினார்.
இதனால், மேற்கூறிய அவ்யோகம் அங்ஙனம் பெரும்பயன் உடைத்தாமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

பொழிந்தவி ரும்வெள்ளி பொன்மன் றடையில்
வழிந்துள் ளிருந்தது வான்முதல் அங்குக்
கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்
கொழுந்தது வாகும் குணமது தானே.

பொழிப்புரை :

பிராசாத கலைகளின் வழிச் சத்தியால் பொழியப் பட்டு விளங்குகின்ற அந்த ஞானம், அகார கலை முதலிய கலைகளின் அளவில் சுவாதிட்டானம் முதலிய கீழ் இடங்களோடு நில்லாது, அருத்த சந்திர கலை முதலிய கலைகளின் வழி ஆஞ்ஞை முதலிய மேல் இடங்களை அடையுமாயின், அவ்விடத்தே அந்த ஞானத்திற்கு முத லாகிய சிவம் வியாபகப் பொருளாய் விளங்கித் தோன்றும். அதன்பின் அந்த அருத்த சந்திராதி கலைகளின் ஞானங்கள் மறைந்து முன் போலக்கீழே போய்விடாமல் காக்க வல்லவர்கட்கு அந்த ஞானம் முடி நிலை வளர்ச்சியை எய்தும். அதுவே, அந்தக் கலா யோகத்தின் பயனாம்.

குறிப்புரை :

`புறத்துப் பொன்மன்றுபோல, அகத்தே விளங்குவது ஆஞ்ஞை` என்றற்கு அதனை, ``பொன் மன்று`` எனக் கூறுகின்றவர், அதனோடு இயைந்து ஓர் நயத்தைத் தோற்றுவித்தற்கு, பிராசாத ஞானத்தை, வெள்ளியாக உருவகம் செய்து கூறினார். ``வெள்ளி`` எனப்பட்டது இந்த ஞானமே என்பது, ``பொழிந்தவிரும் வெள்ளி`` என மேற்கூறியதனையே அனுவதித்துக் காட்டியதனானே இனிது உணரப்படும். இதனையும், ``பொன் மண்`` என்பது பாடம் ஆகாமையையும் உணராது `வெள்ளி, பொன்` என்றவற்றைச் சுக்கில சோணிதங்களாகக் கொண்டு உரைப்பின், அஃது இவ்விடத்திற்கு யாதோர் இயைபுமின்றிப் போதல் அறிந்து கொள்க.
இதனால், பிராசாத யோகத்தின் முடிநிலையும், அதன் பயனும் கூறப்பட்டன. குணம் - பயன்.

பண் :

பாடல் எண் : 18

குணமது வாகிய கோமள வல்லி
மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்
தனமது வாகிய தத்துவ ஞானம்
இனமது வாக இருந்தனன் தானே.

பொழிப்புரை :

சத்தி, பிறர்க்குப் பிறவித் துன்பத்தைத் தருபவள் போலாது வீட்டின்பத்தைத் தருபவளாய் மாறுகின்ற அந்நிலை யிலேயே நிற்கும்படி யோகி மேற்கூறிய மேல் நிலையினின்றும் தாழாது நிற்பானாயின், அச்சத்தியால் நிதிபோலக் கிடைக்கின்ற உண்மை ஞானத்தின் வழியாகச் சிவனும் அவனிடத்தினின்றும் நீங்காதிருப்பான்.

குறிப்புரை :

குணம் - நன்மை. நன்மை யுடையவளை, `நன்மை` என்றார். மணம் - பொருந்துதல்; அந்நிலையிலே நிற்றல். ஆக - உண்டாகும்படி. `அங்கே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்த லாயிற்று. `யோகி` என்பது பொருட்டொடர்பால் வந்தது. இனம் - பொதுத்தன்மை; அஃது இயைபின்மேல் நின்றது. தான், சிவன்; இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், `பிராசாத யோகத்தின் முடிநிலையை எய்தினார் அந்நிலையிலே உறைத்து நிற்றல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

இருந்த பிராணனும் உள்ளே எழுமா
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே.

பொழிப்புரை :

சுவாதிட்டானத்தில் இருந்த பிராண வாயு வெளிப் புறமாக அன்றி உட்புறமாக எழுமாறு திறக்கப்பட்ட சுழுமுனை நாடி வழியே சென்று, ஆஞ்ஞையும் திறக்க, அதற்குமேல் விரிந்து விளங்கு கின்ற ஆயிர இதழ்த் தாமரை மலரின்மேல் பின்னும் மேல் எழும் வகையில் பொருந்தச் செய்தால், ஞான மண்டலமாகிய நிராதாரமும், அதற்குமேல் உள்ள பரமண்டலமாகிய மீதானமும் இனிது விளங்கு வனவாம். அதுவன்றி, நெடுங்காலம் வாழ்தலும் கூடும்.

குறிப்புரை :

`எழுமாறு` என்பது செய்யுளிடத்துக் கடைக் குறைந்து நின்றது. பரிதல் - உடைதல்; திறத்தல். அண்டம் - ஆகாயம். ஆஞ்ஞை முதலாக உள்ளவை ஆகாயமண்டலம் என்க. `நெடுங்காலம்` என்பது சொல்லெச்சம்.
இதனால், `கேசரி யோகத்தை வாசி வகையிற் செய்யினும், பிராசாத வகையிற் செய்யினும் ஆதாரங்களைக் கடந்து, நிராதாரமாகச் செய்தல் நன்று` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

மண்டலத் துள்ளே மனஒட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே.

பொழிப்புரை :

ஞானமண்டலமாகிய நிராதாரத்தில், மனம் ஒடுங்கும் நிலை உள்ளதை உணர்ந்து, தியானத்தை அவ்விடத்தே செய்து, அதனாலே மனம் கீழ்ப் போகாதவாறு தளைத்து, உடம்பில் எக்காலத்தும் இருள் இன்றி ஒளியே வீசப் பண்ணினால், சிவன், ஆடும் பெருமானாய் அசைந்து கொண்டிராமல், ஏக பாதனாய் அசையாது நிற்பான்.

குறிப்புரை :

மனம் நிராதாரத்திற்செல்லின் ஒடுக்கம் பெறுதலால், அங்குள்ள ஆற்றலை மனத்தை வளைக்கும் ஒட்டியாணமாகக் கூறினார். ஒட்டியாணம் - இடைப்பூண். பண்டம் - உடம்பு. மகரங் கெட்டபின் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `பகல் ஒளியே ஆக` என, ஏகாரத்தை மாற்றி யுரைக்க. கூத்து, இங்கு அதி சூக்கும ஊன நடனம். இது புலனுணர்வைத் தந்து மனத்தை அலைப்பதாகலின், `அதனை ஒழிவான்` என்றார். ``ஒழிந்தான்`` என்பது துணிவுபற்றி வந்த கால வழுவமைதி. `கூத்து ஒழிந்தான்` எனவே அசையாது நிற்றல் பெறப்பட்டது. அதனால், மனம் ஒடுங்குதல் கூறப்பட்டதாம். உடம்பில் எப்பொழுதும் ஒளியே விளங்குதல், கருவி கரணங்களும் ஞானமயமாய் நிற்றல். இதுவும் அனுவாத முகத்தால் இடையே கூறப்பட்டமை காண்க.
இதனால், நிராதார யோகத்தின் பயன் கூறும் முகத்தால், அதன் சிறப்பிற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பூசு வனஎல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய
காசக் குழலி கலவி யொடுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே.

பொழிப்புரை :

யோகி போகத்தை விளைவிக்கின்ற ஒப்பனையுடன் வருகின்ற தன் மனைவியோடு கூடினானாயினும், அவனது மனம் பிரமந்திரத்திலே நிற்கும் ஆதலின், அவனுக்கு அதனால் போகம் மிகாது; (யோகமே மிகும்.)

குறிப்புரை :

`புலர்த்திய, சாத்திய` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, `காசக்குழலி` என்னும் ஒரு பெயர் கொண்டன. காசம் - மயிர்ச்சாந்து. `கலந்தும்` என உம்மையை மாற்றியுரைக்க. ஊசித் துளை, பிரம ரந்திரம். தூங்குதல், மேலிடல்.
இதனால், பரியங்க யோகம் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

போகத்தை உன்னவே போகாது வாயுவும்
மோகத்து வெள்ளியும் மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலை யாளும்நற் சூதனுந்
தாதிற் குழைந்து தலைக்கண்ட வாறே.

பொழிப்புரை :

போகத்தில் மனம் சென்றவழிப் பிராணன் சுழு முனை வழியில் செல்லமாட்டாது. காமத்தை விளைக்கின்ற வெண்பாலும் செம்பாலில் வீழ்ந்தொழியும், ஆகவே, துணைவியும், துணைவனும் ஆகிய இருவரும் தங்கள் செம்பால் வெண்பால்களால் மன வலி இழந்து தாழ்தலைப் பின்னர் உணர்ந்து வருந்துவதுதான் போகத்தால் அவர்கள் எய்தும் பயன்.

குறிப்புரை :

`அதனால், போகத்தை மேற்கொள்ளா திருத்தலும், மேற்கொள்ளினும் அதில் அழுந்தாதிருத்தலுமே அறிவுடைமை` என்பது குறிப்பெச்சம். இதனை உணர்த்துதற் பொருட்டே போகத்தின் இயல்பையெல்லாம் விரித்தார் ஆதலின், அது மிகை யாகாமை அறிக. போகத்தில் ஈடுபடினும் அதன் கண் அழுந்தா திருக்கும் நிலை முன்னை மந்திரத்திற் கூறப்பட்டது. சூது - சூதாடு கருவி, சூதன் - அக் கருவியைப் பயன்படுத்துகின்றவன். தலைக்காண்டல் என்பது ஒரு சொல். இதன்கண் ஈரடி எதுகை வந்தது.
இதனால், இல்லறத்துள் நிற்கும் யோகிக்குப் பரியங்கயோகம் இன்றியமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வான்நீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே.

பொழிப்புரை :

ஒருவர் மற்றொருவர் வரைக்கண் நிற்பவராகிய கணவனும், மனைவியும் அவருள் ஒருவராயினும், இரு வருமாயினும் விரும்புவதாகிய போகத்தின்கண், வல, இட நாசிகளின்வழி ஏறியும், இறங்கியும் சுழன்று வீணாகின்ற சரவோட்டமாகிய தேரினில் ஏறி, அதனையே ஏழாந்தானமாகிய வானத்தில் அமுதமாகிய வெள்ளத்தில் ஓட்டினால், போகமாகிய, பகையை வெல்கின்ற யோகமாகிய படை தனது சதுரங்கம் (நான்கு உறுப்பு - யானை, தேர், குதிரை, காலாள்) ஆகிய பிரத்தியாகாரம் முதலியவை ஒருபோதும் தளர்ச்சியடையா திருக்கும்.

குறிப்புரை :

``இருபால்`` எனவும், ``வெளிநிற்கும்`` எனவும் கூறியதனால் அவை பிராணாயாமத்தைக் குறியாது சரவோட் டத்தையே குறித்தல் தெளிவு. பிராணாயாமத்தால் ஏழாந் தானத்தில் செல்வோர் வானவூர்தியின்வழி வானத்திற் செல்பவர். `அவ்வாறன்றிச் சரவோட்டத்தில் நின்றே அதனை அடைதல், தேரில் நின்றே வானத்திற் செல்லுதல் போல்வது` என அதன் அருமை கூறியவாறு. `தேர் வானத் திற் செல்லுதலேயன்றி, அவ்விடத்து நீரிலும் செல்ல` என மேலும் ஓர் வியப்புத் தோன்றக் கூறினார். `தண்டு, அங்கம்` என்பன சிலேடை யாய், `சுழுமுனை, படை` எனவும், `படையின் உறுப்பு, யோகத்தின் உறுப்பு` எனவும் இவ்விரண்டு பொருள் பயந்தன. `சுழுமுனை` என்றது அதன்வழிச் செய்யும் யோகத்தினை. போகமும், யோகமும் தம்முள் மாறாவன ஆகலின், அவற்றை முறையே பகையாவும், படையாகவும் உருவகம் செய்தார். ``தண்டு`` என்றது குறிப்புருவகம்.
இதனால், பரியங்க யோகத்தின் அருமைப்பாடும் அதன் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

அங்கப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம்
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித் துத்தன்னைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே.

பொழிப்புரை :

கணவனும், மனைவியும் மெய்யுறுகின்ற செய் கையும் யோகத்தால் விளைகின்ற மெய்யுணர்வை மழுங்கச் செய்வதே யாம். அச்செய்கையில் வெண்பால் வெளிப்படுகின்ற இன்ப நிலைக் கண் யோகி அது வெளிப்பட்டுக் கெடாதவாறு காத்துக் கொண்ட அச்செயலில் நின்று தன்னைத் தன் மனைவிக்கு இன்பந்தருபவனாகக் கொடுத்தால், தனது யோகம் கெடாமையே யன்றி, யோகிகட்குத் தலைவனாயும் விளங்குவான்,

குறிப்புரை :

யோகியின் உணர்வைத் தாக்குவனவாகிய பசி, பிணி முதலியவற்றுள் இணை விழைச்சும் ஒன்று என்பார். `அங்கப் புணர்ச் சியும்` என உம்மை கொடுத்து ஓதினார். `மங்கு` என்னும் முதனிலைத் தொழிற்பெயர், மங்குதற்கு ஏதுவாவதன் மேல் நின்றது. `புணர்ச்சியுள்` எனப்பாடம் ஓதி, `தத்துவம் மங்குதலையுடைய தாம்` என உரைத் தலும் ஆம். `அதில்` என்பது `அத்தில்` என விரித்தலாயிற்று. `தம்மை` என்பது பாடம் அன்று. மேலெல்லாம் உணர்வு மாத்திரத்தால் யோகமாமாறு கூறி, இதனுள் உடலாலும் யோகமாமாறு கூறினார். இதனை, வேறோர் இயைபு பற்றி, `விந்துசயம்` எனப் பின்னர் விரிப்பார், (தி.10 ஏழாந் தந்திரம்) விந்து சயம் பெறுதலாவது, விந்து கீழே வீழ்ந்து கெடாது, சுழுமுனைவழி மேலேசென்று ஒளியாகப் பெறுதல்.
இதனால், விந்து சய பரியங்கயோகம் சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது. இதனானே, பரியங்க யோகத்து `விந்து சயம்` என்பது ஒன்று உண்டு என்பதும் பெறப்பட்டது,

பண் :

பாடல் எண் : 5

தலைவனு மாயிடுந் தன்வழி ஞானம்
தலைவனு மாயிடுந் தன்வழி போகம்
தலைவனு மாயிடுந் தன்வழி உள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே.

பொழிப்புரை :

பரியங்க யோகத்தால் உணர்வும், விந்துவும், அந்தக் கரணமும், ஐம்பொறியும் தன்வழிப்பட்டு நிற்க, யோகி அவை அனைத்தையும் தன் விருப்பப்படி ஆளும் தலைவன் ஆவான்.

குறிப்புரை :

``ஆயிடும்`` நான்கும் முற்றுக்கள். உம்மைகள், ஞானம் முதலியவற்றிற்குத் தலைவனாதலைத் தழுவும் எச்ச உம்மை<கள், அடி தோறும் ஈற்றில் ஆ உருபு தொகுத்தலாயிற்று ``தன்வழி`` நான்கும், `குறும்பிற் கொற்றன், பறம்பிற் பாரி` - என்பனபோல நின்றன. இரண்டாம் அடியில் ``போகம்`` என்பது வடசொல்லாதலின், நிலை மொழியோடு ஒற்று மிகாது புணர்ந்தது. போகம், காரியவாகுபெயர். உள் நிற்பனவற்றை ``உள்`` என்றார். `உள்ளம்` என்பது குறைந்தது எனினுமாம். `தீயதின் நீங்கி நல்லதின் நிற்றல் உணர்வு` எனவும், `முக்குண வடிவாய் நிற்பன அந்தக்கரணம்`` எனவும், `` ஐம்புல வடிவாய் நின்பன ஐம்பொறிகள்`` எனவும், உணர்க. ``உள்ளே`` என்னும் ஏகாரமும், ``வாடா வள்ளியங் காடிறந் தோரே`` (குறுந்தொகை, 216) என்பதிற் போலச் செய்யுள் இடைக்கண் வந்த அசைநிலை.
இதனால், பரியங்க யோகி போகத்தால் தனது நிலையி னின்றும் தாழாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
பஞ்ச கடிகைப் பரியங்க யோகமே.

பொழிப்புரை :

யோகி தன் மனைவியுடன் ஐந்து நாழிகை கலவியில் ஈடுபட்ட பின், மனைவி அவன் பக்கலில் அமைதியாய் உறங்குதல் ஒன்றே பரியங்க யோகத்தின் பயன். அதனால், ``நெஞ்சு நிறைந்தது வாய்கொளாது`` என்னும் இன்பமுறை, ஐந்து நாழிகையை எல்லை யாக உடைய பரியங்கயோகத்தின் கண்ணே மிகப் பொருந்துவதாம்.

குறிப்புரை :

``அஞ்சு கடிகைமேல்`` எனவும், ``பஞ்ச கடிகை`` எனவும் போந்தவற்றால் பரியங்க யோகத்திற்குக் கொள்ளத்தக்க காலம் வரையறுக்கப்பட்டது. `அத் துணைவி துணைவன் பால் துஞ்சுவது ஒன்று` என மாற்றியுரைக்க. ``ஒன்று`` என்பது, ஒன்றாம் பயனைக் குறித்தது. `ஒன்றே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப் பட்டது. அதனை விரிக்கவே, `ஒன்றே பயனாம்` என்பது பொருளாம். `இஃது ஒன்றே பயன்` என்றதனால், `துறவு பூண மாட்டாது இல்லறத்தில் நிற்கும் யோகிக்கு இப்பரியங்க யோகம் ஆண் கடன் இறுத்தற் பொருட்டு உடன்படப்பட்டது` என்பது போந்தது. இனி, அவ் ஆண் கடன் இறுத்தலும், விலக்கிய காலத்துக் கூடாமை அறிந்து கொள்க. `விலக்கப்பட்ட காலங்கள் இவை` என்பதை,
``மிகத் தெளிந்தார் ஓதி விதிநிசித்தம் எல்லாம்
பகற்பொழுது பாரார் பகம்``
-சைவ சமயநெறி, பொது இலக்கணம் 224
``அட்டமி சட்டி பதினான்கைம் மூன்றினும்
தொட்டிடேல் இல்லவள்வேய்த் தோள்``
-சைவ சமயநெறி, பொது இலக்கணம் 235
``சென்மமொரு மூன்றும் திருவா திரைஓணம்
என்னுமிவை தம்மினுந்தீண் டேல்``
-சைவ சமயநெறி, பொது இலக்கணம் 226
என்பன முதலியவற்றான் அறிக. சென்மம் மூன்றாவன:- சென்மம், அனுசென்மம், திரிசென்மம். இவை தான் பிறந்த நட்சத்திரமும், அதனைச் சேர்ந்து எண்ண ஒன்று பத்தாவதும், அவ்வாறே அதற்குப் பத்தாவதுமான நட்சத்திரங்களுமாகும்.
``பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம்`` என உலக நூலாகிய வைதிக நூல்கள் பொதுவாகக் கூறும் நால் வகை நிலைகளையே மெய்ந்நூல்களாகிய சைவ நூல்கள், `சரியை கிரியை, யோகம், ஞானம்` என ஓராற்றால் சிறப்பாகக் கூறும். அதனால், யோகி இல்லறத்தவனாயும், ஞானி துறவறத்தவனாயும் நிற்றலே பெரும் பான்மையாதலின், யோகியைப் பற்றிக் கூறும் இப்பகுதியுள் இப் பரியங்க யோகம் கூறப்படுகின்றது. அகத்தியர், கௌதமர் முதலியோர் போல ஞானியராயும் இல்லறத்தில் நிற்றல் சிறுபான்மை, அவர்க்கும் இப்பரியங்கயோகம் உரித்து என்க. ``யோகம்`` என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. நெஞ்சு நிறைந்தது. வாய்கொளாமையாவது, உள்ளத்தில் நிறைந்த இன்பம் வாயால் சொல்ல வாராமை
இதனால், பரியங்க யோகத்திற்கு நாழிகை வரையறை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் யோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவர்க்கொண் ணாதே.

பொழிப்புரை :

பரியங்க யோகத்தில் ஐந்து நாழிகையளவு நிலை யின் திரியாது நிற்பதாகிய இவ் அரிய செயலைப் பொருந்தினவர்க் கல்லது வேறொருவனுக்கும் இணை விழைச்சு கொள்ளத் தகாததே.

குறிப்புரை :

பின் வந்த ``யோகம்`` ``செயல்`` என்னும் அளவாய் நின்றது. சரி வளை, இருபெய ரொட்டு. ``உருவி`` என்பதனை, `உருவ` எனத் திரிக்க. ``வேறு ஒருவற்கும்`` என ஒரு சொல் வருவித்தும், உம்மை விரித்தும் உரைக்கப்பட்டது. `ஒருவன், யோகியருள் ஒருவன்`` என்பது அதிகாரத்தால் விளங்கிற்று. ஒண்ணாததாதல், தவநெறி ஒழியப் பவநெறியாதல் பற்றி.
இதனால், இல்லறத் தவருள் யோகியர் பரியங்க யோகத்தைக் கொள்ளாதவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆரென்னில்
விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணா மென்றெண்ணி இருந்தார் இருந்ததே.

பொழிப்புரை :

செய்தற்கரிய இப்பரியங்க யோகத்தைப் பொருந் தினவர் எத்தகைய பெருமையுடையவர் என்றால் ``நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றவ `` னாயும் (தி.6 ப.50 பா.3) ``மங்கை யோடிருந்தே யோகு செய்பவ `` னாயும் (தி.9 ப.13 பா.11) உள்ள சிவபெருமானே எனத் தக்க பெருமை யுடையவர். ஏனெனில், தாம் பெற்ற அரிய அமுதத்தை அதனை நுகர்தற்குரிய ஐந்து நாழிகை யளவிலும் ``உளத்தால் நுகரேம்`` என உறுதிபூண்டு, முன்பு இருந்த ஏழாந் தானத்திலே இருப்பர் ஆதலால்.

குறிப்புரை :

பண்ணுதல் - தேடிக்கொள்ளுதல், இங்குத் துணைவியை மணந்துகொள்ளுதல். ``ஆரமுது`` என்றது வாயூறலை. என்னை? இன்பத்தை விரும்புவார்க்கு அது பாலொடு தேன் கலந்தாற் போல (குறள், 1121) இனிதாகலின். `கடிகையினும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. ``இருந்தது`` என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. அதன்பின், ``ஆதலால்`` என்னும் சொல் லெச்சம் வருவிக்க. பின்னிரண்டு அடிகளால் பரியங்க யோகத் திருத்தலின் அருமை கூறியவாறு.
இதனால், பரியங்க யோகத்தில் நிற்பாரது பெருமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும்
வாய்ந்த குழலிக்கும் மன்னற்கும் ஆனந்தம்
ஆய்ந்த குழலியோ டைந்தும் மலர்ந்திடச்
சோர்ந்தனன் சித்தமும் சோர்வில்லை வெள்ளிக்கே.

பொழிப்புரை :

பெண்மகளுக்கும், ஆண்மகனுக்கும் வேட்கை மிக்கிருக்கின்ற அகவையளவு முறையே இருபது ஆண்டும், முப்பது ஆண்டுமாம். முப்பது ஆண்டிற்குமேல் ஆண்மகன் ஐம்புலன்களையும் ஒருங்கு நுகரும் வேட்கை மிகுவனாயின், விந்து சயம் பெற்று நிற்கற்பாலன்.

குறிப்புரை :

`இதுவும் யோகியைக் குறித்ததே` என்பதை மறவற்க. ``சோர்ந்தனன்`` என்பதன் பின், ``ஆயினும்`` என்பது எஞ்சி நின்றது. ``சித்தமும்`` என்ற உம்மை, சிறப்பு. ``சோர்வில்லையாகுக`` என ஆணையாக ஓதற்பாலதனை, ``இல்லை`` என இயல்பாக வைத்து ஓதினார்.
``பன்னீராட்டைப் பிராயமும், பதினாறாட்டைப் பிராயமும் முறையே பெண்டிர்க்குப் பெண்மையும், ஆடவர்க்கு ஆண்மையும் உளதாம் காலம்`` (இறையனார் அகப்பொருள் உரை. தொல்காப்பிய உரைகள்) என்பர் ஆதலின், ``அதுமுதல் எட்டாண்டுக் காலமே பெண்டிர்க்கு வேட்கை மிக்கிருக்கும் காலம்`` என்று கூறியவர், ``ஆடவர்க்குப் பதினான்கு ஆண்டுக் காலம் வேட்கை மிக்கிருக்கும்`` என்று கூறியதனால், ஆடவர் வழிமுறைக் கிழத்தியரோடும் வேட்கை மிக்கிருத்தல் பெறப்பட்டது.
இதனால், பரியங்க யோகி விந்து சயம் பெற முயலுதற்குக் காலம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

வெள்ளி யுருகிப்பின் பொன்வழி ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
அள்ளிஉண் ணாவில் அடக்கிவைத் தாரே.

பொழிப்புரை :

பரியங்க யோகம் செய்பவர்க்கு வெண்பால் உருகிச் செம்பாலில் வீழாதபடி, அவரது உள்ளத்துள்ளே ஒளிந்து நிற்கும் சிவபெருமான், எல்லாவற்றிற்கும் சாட்சியாய் நிற்கும் தனது திருவருளைக் கொண்டு தடுப்பான். அதுவன்றி, அந்த யோகியர் தமது மூலாக்கினி மூண்டெரியச் சுழுமுனை வழியே சென்று அள்ளி உண்ணும்படி அமுதத்தை அவர் நாவடியில், பொருந்த வைத்தும் உள்ளான்.

குறிப்புரை :

`குழல்` என்பது `வெளிப்பொருளில் நெருப்பூதும் குழலைக் குறிக்கும். ``உண்ண`` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல் பெற்றது. உண்ணுதற்கும், அடக்குதற்கும் செயப்படுபொருள் மேலெல் லாம் விளங்கிக் கிடந்தது. உண்ண அமுதத்தை வைத்தமை கூறியது, பின் யோகம் முதிர்ந்து பயன் தருமாறு தோன்றுதற்பொருட்டு.
இதனால், ``விந்து சயமும் திருவருளாற் பெறற்பாலது`` என்பதும், அச் சயம் யோகம் முற்றுதற்குத் துணையாதலும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 11

வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன்
சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே.

பொழிப்புரை :

இன்பம் தூய்த்தற்குச் சிவனால் அமைக்கப்பட்ட துணைவன், துணைவி என்னும் இருவரும் அவ்வின்பத்தில் திளைப் பினும், உள்ளம் திரியாது நின்றே செய்கின்ற கலவித் தொழிலால் யோகி, பத்துத் திக்கினர்க்கும், பதினெண்கணத்தவர்க்கும் ஞான சூரியனாய் நிற்கும் திறப்பாடுடையவனாவான்.

குறிப்புரை :

``ஆனந்தம்`` என்றது, அதற்கு ஏதுவாய செயலை, ``ஆனந்தத்தால்`` என உருபு விரித்து, ``வெங்கதிரோன் ஆவன்`` என முடிக்க. ``வித்தகனாய் நிற்கும் வெங்கதிரோனே`` என்றாராயினும், ``வெங்கதிரோனாம் வித்தகனாம்`` என்றலே கருத்து. நிற்றற்கு, ``யோகி`` என்னும் எழுவாய் வருவிக்க.
இதனால், பரியங்க யோகி கலவிக் காலத்திலும் உணர்வு திரியாது நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

வெங்கதி ருக்கும் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தம்
தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனம்
திங்களிற் செவ்வாய் புதைத்திருந் தாரே.

பொழிப்புரை :

அறிதுயிலுக்கும், அறியாத் துயிலுக்கும் இடையே நிற்கின்ற துணைவியைத் துணைவன் புல்லுமிடத்து இருவரும் அவ்வின்பம் முற்றுங்காறும் திங்கள் போன்ற முகத்தில் உள்ள சிவந்த வாயைப் பொத்தியேயிருந்தாராயினும், துணைவனுக்கு வேறோர் இன்பமும் அவ்விடத்து உளது.

குறிப்புரை :

சூரியன் ஒளிப்பொருளாகலின் ஞானத்திற்கும், சனி`மைம்மீன்` (புறம். 117) ஆகலின், அஃது அஞ்ஞானத்திற்கும் உவமை யாயின. அறிதுயில், யோகம். அறியாத் துயில், உறக்கம், புணர்ச்சி இவ் விரண்டிற்கும் இடைநிகழ்வதேயாகலின், அதற்கு உரியவளாகிய துணைவியை, அவ்விடத்து நிற்பவளாகக் கூறினார். ``ஓர் ஆனந்தம்`` என்றது, `வேறோர் ஆனந்தம்` என்னும் குறிப்பினது. அவ்வானந்தம் சிவானந்தமாதல் வெளிப்படை. `தங்களில் புதைத்திருந்தார்` என இயையும். `பொன், (வியாழன்) வெள்ளி, சனி, வெங்கதிர், திங்கள், செவ்வாய்` என்பன சில சொல் நயங்கள். `பொன், வெள்ளி` என்ப வற்றின் உட்பொருள் மேல் (818) உரைக்கப்பட்டன. ``புதைத்தல்`` என்பது இரட்டுற மொழிதலாய், செய்தல், செய்யப்படுதல் என்னும் இரு பொருளையும் தந்தது. ``திங்களிற் செவ்வாய் புதைத்திருந்தாரே`` என்பது, ``வளி இடை போழப்படாதவாறு முயங்கினாரே`` (குறள், 1108) எனப் பொருள் தந்தது. ஏகாரம், தேற்றம். இதன்பின், ``ஆயினும்`` என்னும் சொல்லெச்சம் விரித்து, மூன்றாம் அடி முதலாகத் தொடங்கிப் பொருள் உரைக்க.
இதனால், பரியங்க யோகி சிற்றின்பத்திலும் பேரின்பத்தினை இழவாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்
கருத்தழ காலே கலந்தங் கிருக்கில்
வருத்தமு மில்லையாம் மங்கை பங்கற்கும்
துருத்தியுள் வெள்ளியுஞ் சோரா தெழுமே.

பொழிப்புரை :

இன்பத்தில் வேட்கை கொண்ட மனம் கலவியால் நிறைவு பெற்றபின், மேலும் அவ்வேட்கையை உற்றுக் குறைபடாத வாறு திருத்துகின்ற `சிவன் சத்தி` என்னும் இருவரிடத்தும் தனது மனம் பொலிவோடு பொருந்தி அவ்விடத்தே நிற்கப்பெற்றால் துணைவியை யுடைய யோகிக்கும் அவளையுடைமையால் உலகியல் துன்பமும் உண்டாகாது. விந்துவும், கீழ் விழுவதாகாது, மேல் எழுவது (ஊர்த்துவ ரேதசு) ஆகும்.

குறிப்புரை :

``திருத்தி`` என்பது, ``நிறைவு`` என்னும் பொருட்டாய வடமொழிப் பெயர்ச்சொல். புதன் - புத்தி; மனம். ``யோகி, தன்மனத்தை நல்வழிப்படுத்துவர் சிவனும், சத்தியுமே என உணரின், அவன் மனம் அவரிடத்தே பதிந்து நிற்கும்`` என்றற்கு, ``மனத்தைத் திருத்தல் செய்வார்க்கு`` என உடம்பொடு புணர்த்து ஓதினார்.
``திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை
இடங்கொள் கயிலாயா`` -தி.7 ப. 47 பா. 8
``நெஞ்சினைத் தூய்மை செய்து
நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ
வானவர் தலைவ னேநீ`` -தி.4 ப. 23 பா.9
என்பவற்றால் இறைவன் தன் அடியவர் மனத்தைத் திருத்துபவனாதல் அறிக. ``செய்வார்க்கு`` என ஒருமையாக ஓதாது, ``செய்வார்க்கு`` எனச் சத்தியை வேறாக வைத்து ஓதினார், இங்குக் கூறப்படுவன திரோதான சத்தியின் செயலாதல் பற்றி இனி, ஒருமையாகவே பாடம் ஓதுதலும் ஆம். ``செய்வார்க்கு`` என்றது உருபு மயக்கம். இவ்வா றெல்லாம் இன்றி, ``செய்வார்`` என்பதனை யோகியர்க்கு ஆக்கி, ``அங்கு`` என்பதனைப் பண்டறி சுட்டாக வைத்து, ``இருக்கில்`` என்பதற்கு, `இருக்கும் நிலை வாய்க்கப் பெற்றால்` என உரைத்தலும் ஆம். இப்பொருட்கு, `மங்கை பங்கர்க்கும்` என்பது பாடமாதல் வேண்டும். பிறவாறு கூறாது, யோகியை `மங்கை பங்கன்` என்றார், `ஊர்த்துவ ரேதசுடையானாய்ச் சிவனோடு ஒப்பன்` என்றற்கு. ``பங்கன்`` என்பதில் உள்ள பங்கு, வாழ்க்கைக் கண்ணது. இவ்வா றாயினும், `முற்றத் துறந்த யோகி சிறப்புடையன்` என்றற்கு, `மங்கை பங்கற்கும்` என இழிவு சிறப்பும்மை கொடுத்தார். ஏனை இரண்டு உம்மைகளும் எச்சங்கள். துருத்தி - உடம்பு.
இதனால், பரியங்க யோகி உலகியலால் தாக்குண்ணாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றால்
மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே
உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே.

பொழிப்புரை :

இம் மந்திரம் ஒட்டணி. ஆகவே, இதன் பொருள் வருமாறு:-
மூலாக்கினியைத் தலையளவும் கொண்டு செலுத்தினால், அங்குள்ள அறிவாற்றல் சிவனை அறிந்து அவனிடத்துத் தோயும் அன்பாக மாறுவது உண்மை. இவ்வாற்றால் ஏழாந்தானத்திற் சென்று சத்தியை உணர்ந்தவர்கள். பின் உலகியலில் கிடந்து தடுமாறுதல் இல்லை. அதற்குமேல் நிராதாரத்திற் சென்றவர்கள் சுவாதிட்டானத்தில் நிகழும் காமத்தில் வீழ்தல் இல்லை.

குறிப்புரை :

`மெழுகு எய்திடும்` என இயையும். உருகும் பரிசு - உருகுதலாகிய தன்மை. உழுதல் காலாலும் கையாலும் வழியைத் தடவுதல். வெளி - வான். இது வானில் இயங்கும் முறையைக் குறித்தது. `இம்முறையை உணர்ந்தோர் நிலத்தில் வீழ்ந்து நடந்து இளைத்தல் இல்லை` என்க. இம்மந்திரத்துள் அடியோடு அடிக் கூட்டத்து நிரையொன் றாசிரியத்தளை சிறுபான்மை மயங்கிற்று.
இதனால், ``வருத்தமும் இல்லை``, ``வெள்ளியும் சோராது எழும்`` என மேற் கூறப்பட்டவை உவம வாயிலாகத் தெளிவிக்கப் பட்டன.

பண் :

பாடல் எண் : 15

வெளியை அறிந்து வெளியின் நடுவே
ஒளியை அறிவின் உளிமுறி யாமே
தெளிவை அறிந்து செழுநந்தி யாலே
வெளியை அறிந்தனன் மேலறி யேனே.

பொழிப்புரை :

யான் என் ஆசிரியர் நந்தி பெருமானது அருளால் வான மண்டலமாகிய நிராதாரத்தையும், அதில் விளங்குகின்ற அருளொளியையும், அவ்வொளியால் தெளியப்படுகின்ற மெய்ப் பொருளையும் உணர்ந்து, அவ்வுணர்வு கெடாதிருக்க விந்து சயம் பெறும் முறையையும் உணர்ந்தேன். யோகத்தில் இதற்குமேல் அறியத் தக்கது ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

குறிப்புரை :

``அறிந்து`` என்பதனை, ``ஒளியை`` என்பதற்கும் கூட்டுக. ``அறிவின் உளி`` என்பதில் இன் வேண்டா வழிச் சாரியை. ``உளி`` என்றது, ``கருவி`` என்றவாறு. இஃது உருவக அணி. ``உளி - கூர்மை`` எனின், ``அறிவின் உளி`` என்பது ஆறாவதன் தொகையாம். ``அறியின்`` என்பது பாடம் அன்று, ``அறிவின் உளி முறியாமே`` என்ற தனை, நான்காமடியின் முன்னே கூட்டி உரைக்க. நான்காம் அடியில், ``வெளி`` என்பது, ``வெள்ளி`` என்பதன் இடைக்குறை அஃது அதனை வசப்படுத்தும் முறையைக் குறித்தது. விந்து சயம் துறவிகளும் கொள் ளத் தக்கதாகலின், நாயனார் அஃது உடையராய் இருந்தார் என்க.
இதனால், விந்து சயம் அநுபவ நிகழ்ச்சியால் கூறும் முகத்தால், பரியங்க யோகி அஃது உடையனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

மேலாந் தலத்தில் விரிந்தவர் ஆரென்னில்
மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலாம் நிலத்தின் நடுவான அப்பொருள்
மேலா வுரைத்தனர் மின்னிடை யாளுக்கே.

பொழிப்புரை :

``இல்லறத்தவருள் நிராதார யோகத்தில் நின்று அதனால் வியாபக உணர்வைப் பெற்றிருந்தோர் எவரேனும் உளரோ`` எனின், அயன், மால், நந்தி கணங்கள், ஆகிய யாவரும் அத்தகை யோரே. இவரெல்லாம் துரிய மூர்த்தியாகிய சிவனை உணர்ந்து, அவனையே பரம்பொருளாகத் தம் துணைவியருக்கு உணர்த்தினர்.

குறிப்புரை :

எனவே, ``அத் துணைவியரும் தம் துணைவர் செயலை உவந்திருந்தினர்`` என்பது போந்தது. ``இல்லறத்தவருள்` என்பது அதிகாரத்தால் வந்தது. ``ஆர்`` என்பதன்பின், ``உளர்`` என்பது எஞ்சி நின்றது. `நந்திகள்` என்னாது, ``நந்தி`` என்றது பன்மை ஒருமை மயக்கம். `மாலும் திசைமுகனும் மாநந்தியாயவரும் ஆவர்`` என்க. துரியம், இங்கு, யோக துரியம். சாக்கிரம் முதலிய நான்கும் யோகத்தில் முறையே இருதயம், கண்டம், உச்சி நிராதாரம் என்பவை இடமாக நிகழும். ``மின்னிடையாளுக்கு`` என்றதும் பன்மை ஒருமை மயக்கம். `மின்னிடையாருக்கு`` என்றே பாடம் ஓதுதலும் ஆம்.
இதனால், உயர்நிலை வானவர் பரியங்க யோகத்தால் அந்நிலை இழவாது நிற்றல் கூறும் முகத்தால், அவ்யோகப் பயன் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

மின்னிடை யாளும்மின் னாளனுங் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லாரேல்
மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே.

பொழிப்புரை :

துணைவனும், துணைவியும் தாம் கூடுகின்ற காலத்துத் தங்கள் உள்ளத்தை ஆஞ்ஞை முதலிய மேலிடங்களில் பொருந்த வைத்து, அங்கு விளங்குகின்ற சிவனுடன் தங்களை ஒன்று படுத்த வல்லவராயின், இவ்வுலகத்திலும் பல்லூழி காலம் வாழ்தல் கூடும்.

குறிப்புரை :

``மின்னாளன்`` என்பதில் மின் - பெண்டு. பொன் இடை வட்டம், பொன்னை உள்ளிட்ட இடம்; பொன்னம் பலத்தை, ``பொன்`` என்றார், அதனை உள்ளிட்ட இடம். ஆஞ்ஞை முதலாக மேலே உள்ளவை. புகப் பெய்தலுக்கு, ``உள்ளம்`` என்னும் செயப்படு பொருள் வருவிக்க. ``தன்னொடு`` என்பதில் தான், சிவன். ``தன்னை`` என்பது `மின்னிடையாள், மின்னாளன்`` என்பவற்றோடு தனித்தனி சென்று இயையும். விண்ணிடைப் பல்லூழி வாழ்தல் இயல்பாகவே பெறப்பட்டுக் கிடத்தலின் மண்ணிடைப் பல்லூழி வாழ்தலும்`` என் னும் உம்மை இறந்தது தழுவிற்று. இதன்கண் இனவெதுகை வந்தது.
இம்மந்திரத்தினை நாயனார், துணைவி, துணைவன் இருவர்க்கும் ஒப்பக் கூறியதனால், பரியங்க யோகம் பெண்டிர்க்கும் உரித்தாதல் பெறப்பட்டது. இதனால், சிவநெறி, மெய்ந்நெறியை இருபாலார்க்கும் ஒப்ப உரித்தாகக் கூறுதல் அறியப்படும். காரைக்கால் அம்மையார் தாம் கணவனோடு வாழ்ந்த காலத்தில் தம் உடம்பை அவனுக்காகவே தசைப் பொதியாகச் சுமந்து நின்றமை தி.12 திருத் தொண்டர் புராணத்தால் அறியப்படுதலின், அக்காலத்து அவர் பரியங்க யோகம் உடையராய் இருந்தமை உய்த்துணர்ந்து கொள்ளப் படும்.
இதனால், பரியங்க யோகம் காயசித்தியையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

வாங்க இறுதலை வாங்கலில் வாங்கியே
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளர் தாம்
ஓங்கிய தம்மை உதம்பண்ணி னாரே.

பொழிப்புரை :

துணைவி வாங்கிக் கொள்ளத் துணைவனிட மிருந்து நீங்குவதாகிய விந்துவை அங்ஙனம் நீங்காமல் உள்வாங்கிக் கொள்ளும் முறையில் வாங்கி, பின் அஃது உடம்பினுள் ஆற்றலாய் மிகுமாறு உறுதிப்படுத்திக் கொள்ளும் வழியை அறிகின்றவர் ஒருவரும் இல்லை. (`அரியர்` - என்றபடி.) இனி, அவ்வழியை அறிந்தவர் யோகத்தில் மிக்கு விளங்கும் தம்மைப் போகத்திற்கும் தகுதியுடையவராகச் செய்து கொண்டவராவர்.

குறிப்புரை :

முதற்கண் நின்ற வாங்குதலுக்கு, `துணைவி` என்னும் எழுவாய் வருவிக்க. இறுதல் - அழிதல்; அஃது இங்கு, நீங்குதலைக் குறித்தது. ``வாங்கல்`` என்பது அதற்குரிய முறையை உணர்த்திற்று. முதற் சீரினையும் ``வாங்கல்`` என்றே பாடம் ஓதின், ``வாங்கலால் `` என உருபு விரிக்க. ``வலித்தல் - திட்பம் செய்தல். ``யுக்தம்`` என்னும் ஆரியச் சொல்லின் திரிபாகிய ``உத்தம்`` என்பது இடைக் குறைந்து நின்றது. இது வருகின்ற திருமந்திரத்திற்கும் ஆம். ``போகத்திற்கு`` என்பது அதிகாரத்தால் வந்தது. உத்தராவாரை. ``உத்தம்`` என்றது. ஆகுபெயர். ``போகத்திற்குத் தகுதி`` என்றது, அதனால், ஆற்றலும், மனப் பண்பும் கெடாமையை. மேலேயும், (பா.815) அரிய இவ்யோகம் அடைந்தவர்க்கல்லது ... ... ... ஒருவற்கு ஓண்ணாதே`` எனக் கூறினார். இம்மந்திரம் பலவிடத்துப் பாடம் திரிந்துள்ளது.
இதனால், பரியங்க யோகத்துள் விந்து சயத்துடன் நிற்றலின் அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டால்
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறிந் தும்முளே பார்கடிந் தாளே.

பொழிப்புரை :

போகத்தை நுகர்தற்குத் தகுதியான வழியை அறிந்து அவ்வெள்ளத்தில் மூழ்கினால், அவ்வழி உம்மால் நன்கு பயிலப்பட்டு அந்நிலையிற்றானே நரை வாராதொழியும். எக் காலத்தும் உமது நன்மையையே நினைத்திருப்பவளாகிய சத்தியும், உமது பக்குவ காலத்தை அறிந்து உங்கள் உணர்வில் உலகியலைப் போக்கி யருள்வாள்.

குறிப்புரை :

``உதம்`` (உத்தம் என்றது, அதற்குரிய வழியை. கதம் - அடையப்பட்டது. அது, முதற்கண் கூறிய வழியேயாம். அறிந்து - அறியப்பட்டு. இது, காரணப் பொருட்டாய்ப் பின் வரும் கபாலம் கறுத்தற்கு ஏதுவாதலை உணர்த்திற்று. கபாலம், ஆகுபெயர். பார் - உலகம், என்றது உலகியலை. இறுதிக்கண் இங்ஙனம் பொதுப் படக் கூறவே, உலகியலுள் தலையாயதான காம இன்பம் பற்றிப் ``பரியங்க யோகம்`` எனக் கூறப்பட்டதாயினும், அந்நிலை யோகியர்க்குப் பிற உலகியலிலும் உளதாதல் குறிக்கப்பட்டதாம்.
இதனால், பரியங்க யோகியர்க்கு நல்வாழ்வும், வீடு பேறும் கேடுறாமை கூறப்பட்டது. ``இவை அனைத்திற்கும் திருவருளே காரணம்`` என அறிவுறுத்தப்பட்டவாற்றைக் கடைப்பிடிக்க.

பண் :

பாடல் எண் : 20

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே.

பொழிப்புரை :

இது பிசிச் செய்யுள் ஆதலின், இதனை விடுத்துக் காணுமாறு:- பங்கயம் - தாமரைக் கொடி. ``இது, மண்ணும், தண்ணீரும் இல்லாமலே முளைத்து வளர்ந்தது`` என்றதனால், சுழுமுனைத் தண்டைக் குறித்தது. ``அக்கொடிக்குச் சல்லிவேர், ஆணிவேர் முதலியன இல்லாமலே பூப் பூத்தது`` என்றதனால், அஃது அத்தண்டு ஆதார பங்கயங்களை உடைத்தாதலைக் குறித்தது. தார் - இழை போன்றவை. ``ஊர்`` என்றது ஊரின்கண் வாழ்வாரை. ``அவர் (ஏற்றுவார்) ஒருவரும் இல்லாமலே காணப்படுகின்ற விளக்கு ஒன்று உண்டு`` என்றதனால், அஃது, அவ்வாதார நிராதாரங்களில் ஏற்ற பெற்றியால் விளங்கும் அருளுருவத்தைக் குறித்தது. பூ - நிலம்; உலகம் ``காட்சிக்கு வாராது, ஆசிரியர் தம் அருள் மொழிக் கேள்வி யால் அறியப்படுகின்ற உலகம்`` என்றதனால், அஃது அண்டத்தைப் போலவே பிண்டத்திற்குக் கொள்ளப்படும் உலகங்களைக் குறித்தது. கீழ்மேல் இல்லை என்றதனால் அவை பாவனைப் பொருளாதல் குறிக்கப்பட்டது. ``பூவிற்கு` என்னும் நான்கன் உருபு தொகுத்தல் ஆயிற்று.

குறிப்புரை :

``யோக நெறியில் உள்ள பொருள்கள் இத்துணை வியப்புடையன`` என்றவாறு. இதனை இவ்விடத்திற் கூறினார். ``மான் தோல், புலித்தோல, தருப்பை முதலிய ஆசனங்களின் மேல் இருத்தலும் காடு, மலை, முழை முதலிய இடங்களில் தனித்திருத்தலும் போல்வன இல்லாமல், கட்டிலிற் பஞ்சணையின் மேல் துணைவியுடன் கிடந்தும் முனிவராய் நிற்கும் வியத்தகு நிலையும் யோகத்தால் கூடும் என்பது தோன்றுதற்கு.
இதனால், ``பரியங்க யோகம் வியப்புடையதொன்று`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உடலிற் கிடந்த உறுதிக் குடி நீர்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாட்டலு மாமே.

பொழிப்புரை :

உடம்பில் இயல்பிலே பொருந்தியுள்ள ஆற்றல் மிக்க, குடிக்கத் தகும் நீர், கடலில் சிறிய கிணற்றுக்கு இடப்படும் ஏற்றத்தை இட்டு இறைத்துக் கொள்ளுதலோடு ஒத்திருக்கும். (அஃதாவது, ``மிகுதியாய் வெளிப் போகும் சிறுநீரில் சிறிதளவு உளதாகும்`` என்பதாம்) அதனை உடலினின்று வெளிப்போதும் முன்பே வேறொரு வழியால் அவ்வுடலுக்கே ஆகுமாறு பாய்ச்சினால், உயிர் துன்பப் படாது நெடுங்காலம் நிற்கும்படி நிறுத்துதல் கூடும்.

குறிப்புரை :

``அமுரி`` என்றாயினும், ``நீர்`` என்றாயினும் ஒரு பெயர்ச் சொல்லால் ஓதின், ``அது சிறுநீரே போலும்`` என மலைய வரினும் வரும் என்னும் கருத்தால், அங்ஙனம் மலையாமைப் பொருட்டு, ``உறுதிக் குடி நீர்`` எனத் தொடர்மொழியால் பொருள் இனிது விளங்க ஓதினார். சிறுநீர் தீப்பொருளாய்க் கழிக்கப்படுவது ஆதலின், அஃது உறுதியைத் தருவதாய்க் குடிக்கத் தக்கதாகாமை வெளிப்படை.
``உடலில் இறைக்கில்`` என்றது, ``உடலினுள் இருக்கும் பொழுதே இறைத்தால்`` என்றவாறு. வேறொரு வழி, சுழுமுனைத் தண்டு; உடலில் உள்ள பல நாடிகளும் இதனைச் சுற்றிக்கிடத்தலால், அவற்றின்வழி அமுரியைப் பிராண இயக்கத்தால் உடல் எங்கும் செல்லுமாறு பாய்ச்சுதல் கூடும் என்க. யோக முயற்சி இல்லாதார்க்குப் பிராணன் அபானனாதல் பெரும்பான்மையாய்க் கீழ்ப்போய் ஒழிய, யோக முயற்சி உடையார்க்கு அஃது அவ்வாறாகாமல் சுழுமுனைவழிச் சென்று உடற்குப் பயன் தருதல்போல, அமுரியும் பிறர்க்குச் சிறுநீரோடு ஒன்றாய் வெளிப்போந்து ஒழிய, யோகியர்க்கு அவ்வாறாகாமல் உடற்கண் சென்று பயன்படுவதாம். அதனை அங்ஙனம் பயன்படச் செய்யும் முறையையே, ``உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்`` என்றார். ஒன்று - ஒன்றாய் நிற்கும் உடல். நடலை - துன்பம். ``உயிர் நாட்டலும் ஆம்`` என்றது, அமுரியின் பயன் கூறும் முகத்தால் பெயர்க் காரணத்தை விளக்கியவாறு.
இதனால், ``அமுரியாவது இது`` என்பதும், அதனைத் தரிக்கும் முறையும், அதன் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டில் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகம தாமே.

பொழிப்புரை :

யோக முறையால் வடித்துக்கொள்ளப்படுதலால் ``சிவ நீர்`` எனச் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற இந்த அமுரியைப் பருகுதலை மேற்கொண்டால், ஓராண்டுக் காலத்தில் அறிவு மிக விளக்கம் பெறும். உடலுக்கு உள்ள நோய், இளைப்பு முதலிய குறைகள் நீங்கும். எட்டாண்டில் வாசி யோகம் கைவரும். அதனால், மன ஒருமை உளதாகும். அதனால் அமைதியான ஓர் இன்பம் தோன்றும். உடம்பு பொன் போல அழகு பெற்று விளங்கும்.

குறிப்புரை :

``தெளி தரும்`` என்றது, ``தெளித்துத் தரப்படும்`` என்னும் பொருளது. இதனானும், சிறுநீரே அமுரி அல்லது சிவ நீர் ஆகாமை அறியப்படும். ``பருகில்`` எனப் பொதுவகையாற் கூறினாரேனும், மேல், ``உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்`` என்றதே பொருளாம். ``ஓராண்டில் எட்டில்`` என்பவற்றை அவ்வவ் அடியின் முதற்கண் வைத்து உரைக்க.
இதனால், அமுரி தாரணையின் பயன்கள் பலவும் எடுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

நூறும் மிளகு நுகரும் சிவத்தின் நீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்காள்
தேறி இதனைத் தெளிஉச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே.

பொழிப்புரை :

யோகியர்களே, நீவிர் பொடி செய்த மிளகை உண்ணுங்கள்; அதனால், சிறுநீர் சிவநீராய் மாறும். அவ்வாறு மாறுவதற்கு மருந்து ஒன்றும் வேண்டுவதில்லை. மிளகுப் பொடியின் ஆற்றலைத் தெளிந்து அறிவிற்கு நிலைக்களமான உச்சியில் அதனை அப்பினாலும் அவ்வாறாம். இன்னும் இதனாலே நரையும் மாறும்.

குறிப்புரை :

நூறுதல் - பொடித்தல். ``நூறு மிளகு`` எனக் கொண்டு, எண் வரையறையாக உரைத்தல் கூடாமை அறிக. நுகரும், பன்மை ஏவல். ``மாந்தர்கள்`` என்பது பாடமாக ஓதின், இதனை, ``நுகர`` எனச் செயவென் எச்சமாக ஓதுக. ``நீர் சிவத்தின் மாறும்`` என மாற்றி யுரைக்க. சிவத்தின் - சிவமாக. ``மருந்தில்லை`` என்றதனால் இங்குக் கூறப்பட்டவை யோகியர்தம் ஒழுக்கப் பகுதியாய், அமுரி தாரணை யாய யோகத்திற்குத் துணையாவனவாயின. கப்புதல் - மூடுதல் `கப்பஇடின்` என்பதில் அகரமும், ``கப்பிடினும்`` என்னும் எச்ச உம்மையும் தொகுத்தல் பெற்றன. `உச்சிக்கு அப்பிடின்` எனப் பாடம் ஓதி, `உச்சிக்கு என்பது உருபு மயக்கம்` என்றலும் ஆம். ``இதற்கு`` என்பது உருபு மயக்கம்.
இதனால், அமுரி தாரணைக்குத் துணையாவன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனுமங் கில்லையே.

அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளுங் கபாலமே.

பொழிப்புரை :

உண்ணத் தகுவதனையும், தகாததனையும் அறிய மாட்டாத சிலர், தம்வழி நிற்பாரை, கடற்கரையின் அருகில் கானலிலே உள்ள உப்பங்கழியின் நீரை அப்படியே முகந்து உண்ணுமாறு பணிப்பர். அந்நீரை நுரையையும், பிற மாசுகளையும் நீக்கி உண்ண வல்லவர்க்கே பயன் உளதாம்.

குறிப்புரை :

இது ஒட்டணி. இதனுள் ``உவரி`` என்பது அடை பொதுவாக்கி மொழிதலும், ஈற்றடி அடை விரவத்தொடுத்தலும் ஆம்.(தண்டியலங்காரம், 51) இதனாற் பெறப்படும் பொருள் வருமாறு:- சுவாதிட்டானத்திற்கு அருகில் நின்று குறிவழியே வெளிப்போதுகின்ற சிறு நீரையே சிலர் `அமுரி` எனச் சொல்லிப் பிறரை உண்பிக்கின்றனர்; அஃது அறியாமைப்பாலது. அச் சிறுநீரைக் குற்றம் களையும் முறையறிந்து களைந்து உண்ண வல்லவர்க்கே அமுரியால் விளையும் பயன் உளதாகும்.
கானல் - கடற்கரையை அடுத்த இடம். `கானல்` எனவே, கரை, கடற்கரையாயிற்று. `உவரி` என்பது காரணக் குறியாய் உப்பங்கழி நீரைக் குறித்துச் சிறுநீர் மேலும் நோக்குடைத்தாயிற்று. வரைதல் - கொள்ளுதல். ``வரை வரை`` என ஏவல் முற்று, வலியுறுத்தற்கண் அடுக்கி வந்தது. இது பன்மை ஒருமை மயக்கம். முதற்கண் நின்ற திரை, அலை. அஃது ஆகுபெயராய் அதன்மேல் மிதக்கும் மாசுகளைக் குறித்தது. ``நரை திரை மாறும்`` என்றது, `மூப்பு நீங்கி இளமை உண்டாகும்` எனவும், ``நமனும் அங்கு இல்லை`` என்றது கூற்றுவன் வருதலும் அவரிடம் இல்லை எனவும் கூறியவாறு. ``நமன்`` என்பது அவனது வருகைமேல் நின்ற ஆகுபெயர். வரைதலைத் தள்ளுதலாக்கி, அதற்கியைய உரைப்பாரும் உளர்.
இதனால், `அமுரி` என்பதனை உள்ளவாறு உணராத வழிப் பயன் இன்மை கூறப்பட்டது.
இதன்பின், பதிப்புக்களில் காணப்படும் ``அளக நன்னு தலாய்`` என்னும் செய்யுள் நாயனார் திருமொழி அன்று என்பது, யாப்பமைதியானே எளிதின் விளங்கும். அன்றியும், மகடூஉ முன்னிலையாக நாயனார் மந்திரம் செய்யாமையும் நோக்கற்பாற்று. யாப்பமைதியைச் சீர்செய்தற்கு நிகழ்ந்த சிறு முயற்சி, ``அழகிய நன்னுத லாயோ ரதிசயம்`` எனவும், ``இளகிடும் மேனி`` எனவும் காணப்படுகின்ற பாட வேற்றுமைகளால் அறியப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 5

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே.

பொழிப்புரை :

அமுரியை, `வீரத்தைத் தரும் மருந்து` என்றும், `தேவர் உண்கின்ற அமுதம்` என்றும், `மகளிரோடு மெலிவின்றிக் கூடுதற்குரிய மருந்து` என்றும் எங்கள் நந்தி பெருமான் அருளிச் செய்தார். `இஃது இறைவனே மக்கட்குப் படைத்துத்தந்த இயற்கை மருந்து` என்று குருமொழியால் அறிகின்றவர்கள், இதன் பயனை இவ்வுலகத்தில் கண்கூடாகக் காணும் மருந்து இது. இதன் பெருமையைப் பொதுமக்கட்குச் சொல்லுதல் கூடாது.

குறிப்புரை :

`சொன்னால் இதனைப் பெறும் முறை அறியாமையால் சிறுநீரையே உண்பவராவர்` என்பது கருத்து. நாரி, பன்மை ஒருமை மயக்கம். ஆதி - இறைவன். சோதி மருந்து, வினைத்தொகை. இதன்கண் உயிரெதுகை வந்தது.
இதனால், அமுரியின் சிறப்பு விரித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்துங் கலைபோல ஏறி இறங்குமாம்
துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே.

பொழிப்புரை :

சந்திரனிடத்துப் பொருந்தியுள்ள கலைகள் நுண்மை யினின்று வளர்ந்து பருமையாக நிறைவெய்தும், (பின் பருமை யினின்றும் தேய்ந்து நுண்மையாக ஒடுங்கும்) வளர்பிறை தேய்பிறை என்னும் இருவகைப் பக்கத்திலும் அவை அவ்வாறாதல் போல உடம்பில் உள்ள சந்திர மண்டலத்தின் ஆற்றல்களும் நுண்மை யினின்றும் வளர்ந்து பருவுடம்பில் நிறைதலும், பருவுடம்பினின்றும் தேய்ந்து நுண்ணுடம்பில் ஒடுங்குதலும் உடையவாம்.

குறிப்புரை :

`சூக்குமம்` என்பது, ``சூக்கம்`` என மருவிற்று. உவமையில் வளர்தல் கூறியதனானே தேய்தலும் பெறப்பட்டது. அஃது, ``இருவகைப் பக்கத்துள்`` என்பதனானும் அறியப்படும் `அவ்வாறு எய்தும் கலைபோல` என்க. ஆம், அசைநிலை. ``துய்யது`` என்றது, சந்திரமண்டலத்தை, என்னை? சந்திரனோடு ஒப்பிக்கத் தக்கது அதுவேயாகலின், உவமையிற்போலப் பொருளிலும் `சூக்கத்தில், தூலத்தில்` என நீக்கப் பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு விரிக்க. ``காயம்`` என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `துய்யது காயத்தில் சூக்கத்தினின்றும் தூலத்தினின்றும் ஏறி இறங்கும்` எனக் கூட்டி உரைக்க. சந்திர மண்டலத்தின் ஆற்றலைத் தனக்கேற்ற வகையில் பெற்ற நுண்ணுடம்பையே நாயனார்மேல் (பா.625) `பரகாயம்` எனக் கூறியிருத்தல் இங்கு நினைவு கூரத்தக்கது.
இதனால், பிண்டத்தில் உள்ள சந்திர மண்டலம் அண்டத்தில் உள்ள சந்திர மண்டலத்தோடு ஒத்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள்
ஏகின்ற அக்கலை யெல்லாம் இடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே.

பொழிப்புரை :

யோகத்திற்கு உரியனவாகின்ற சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை என்பவை முறையே பதினாறு, பன்னிரண்டு, பத்து என்னும் எண்ணிக்கையை உடையன. இயங்குகின்ற அவ் எல்லாக் கலைகளும் யோகி தனது அறிவால் அறிந்து அமைக்க அமைவனவே; அண்டத்தில் உள்ள சந்திரன் முதலியவற்றின் கலைகள் போல இயல்பாக அமைந்தன அல்ல.

குறிப்புரை :

யோகியால் அறிந்து அமைக்கப்படுதலாவது, ஒரு முறை பூரித்துக் கும்பித்து இரேசித்து முடிப்பது `ஒருகலை` எனப் படுதல். ``உள்`` என்னும் முதனிலை, `உள்ளன` எனப் பொருள் தந்தது. இடைவழி - நடு நாடி. ``இடைவழி ஆகின்ற யோகி`` என்றது, யோகியின் தன்மையை விதந்தவாறு. யோகத்தில் கொள்ளப்படும் `சந்திரன், சூரியன், அக்கினி` என்பன, இடை பிங்கலை சுழுமுனை நாடிகளின்வழி இயங்கும் பிராண வாயுக்கள் என்பது மேலே பலவிடத்தும் பெறப்பட்டது. உலகச் சந்திரனுக்குக் கலைகள் பதினாறாதலும், சூரியர் பன்னிருவர் எனப் படுதலும் ஆகிய ஒற்றுமைபற்றி இங்குச் சொல்லப்படும் கலைகளும் இயல்பாய் அமைந்தவை போலும் என மலையாமைப் பொருட்டுப் பின்னிரண்டு அடிகளைக் கூறினார்.
இதனால், யோகத்திற்குரிய சந்திரன் முதலிய மூன்றற்கும் உரியகலை யளவுகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஆறாற தாங்கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலங்கிளர் ஞாலங் கவர்கொளப்
பேறாங் கலைமுற்றும் பேருங்கால் ஈரெட்டும்
மாறாக் கதிர்கொள்ளும் மற்றங்கி கூடவே.

பொழிப்புரை :

சூரியன் பன்னிரண்டு கலைகளையே உடைய தாயினும் அது சந்திரனது பதினாறு கலைகளையும், அதற்கு ஏதுவாய் நிற்கும் பதினாறு மாத்திரைப் பிராண வாயுவையும் உட்கொள்ளும் ஆற்றல் படைத்தது. அஃது அன்னதாவது, தான் அக்கினி கலையோடு சேரும்பொழுதேயாம்.

குறிப்புரை :

எனவே, `சந்திரனிலும் சூரியன் ஆற்றல் மிக்கது` என்றவாறு. இஃது உலகியல்பானே அறியப்படுமாயினும், `யோக முறையில் வேறாங்கொல்லோ` என ஐயுற நிற்குமாதலின், அது நீக்க வேண்டி எடுத்தோதினார். அன்றியும், ஒப்பினாற் பெற்ற பெயர் உடைமை பற்றியே உவமைக்கு உள்ளன வெல்லாம் பொருட்கும் கொள்ளல்வேண்டும் என்னும் கட்டளை இன்மையால் `இது கொள்க` என்றற்கும் ஓதினார். இனி `சூரியன் அக்கினியோடு சேர்ந்தே ஆற்றல் மிக்கு நிற்கும்` என்பது இங்கு இன்றியமையாது ஓதற்பால தாயினமையும் அறிக.
``ஆறாறு`` என்பதனை `ஆறோடு கூடிய ஆறு` என விரிக்க. `ஆதித்தன் ஆறாறதாயினும் கொள்ளும்` என ஒருசொல் வருவித்து இயைக்க. `சந்திரன் நாறாமலும், ஞாலம் கவர் கொளவும் கதிர் கலை களையும், காலினையும் கொள்ளும்` எனக் கூட்டி வினை முடிவு செய்க. நாறுதல் - தோன்றுதல். கவர் - கவர்த்தல்; ஐயுறல். அஃது இங்கு மருட்கை எய்தலின் மேற்று. பேறாங் கலை - சந்திரனுக்கு இயல்பாய் உள்ள கலை. பேர்தல் - இயங்குதல். மாறாக் கதிர் - என்றும் மறையாத கதிர்; சூரியன். இது, `மாறாக் கதிராகிய அது` எனப் பொருள் தந்தது. `மற்றும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. `அங்கியோடு` என மூன்றாவது விரிக்க. ஏகாரம் பிரிநிலை. இம் மந்திரம் பெரிதும் பாடம் வேறுபட்டுள்ளது.
இதனால், மேற்கூறிய சந்திரன் முதலிய மூன்றனுள் சூரியனது ஆற்றல் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொ டாறும் உயர்கலை பால்மதி
ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே.

பொழிப்புரை :

`சூரியன், சந்திரன்` என்னும் இரண்டற்கும் மேற் சொல்லிய கலையளவில் வேறுபாடில்லை. ஆயினும், அக்கினிக்கு மேற்சொல்லப்பட்ட கலையளவு இழிபளவாக, உயர்பளவு அறுபத்து நான்காம். இதனை யோக முறையை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.

குறிப்புரை :

அக்கினி கலைக்குத் திரிபு கூறுவார், பிறவற்றின் கலைகளில் ஐயம் வாராமைப் பொருட்டு அவற்றின் அளவுகளைப் பெயர்த்துங் கூறி வலியுறுத்தினார். `அடங்கு தீ, அழலுந் தீ` என அக்கினி இரு நிலைமை உடைத்தாதலின், அதற்கேற்ப அதன் கலை களும் இழிபு உயர்வுகளை உடையவாயின. இது பற்றியே அக் கினியைச் சில இடங்களில் இரண்டாக வைத்து எண்ணுவார் ஆசிரியர்.
இதனால், சந்திரன் முதலிய மூன்றனுள் அக்கினியின் கலைக்கு எய்தியதன்மேல் சிறப்புணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை
கட்டப் படுமீரெட் டாகும் மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாகவே.

பொழிப்புரை :

அக்கினி முதலிய மூன்றற்கும் சொல்லப்பட்ட கலை அளவுகளை ஒன்றற்கு உரியது மற்றொன்றற்கு ஆகுமாறு பொருத் துதல் கூடாது.

குறிப்புரை :

என்றது, `அதனதன் அளவில் கூட்டுதல் - அல்லது குறைத்தல் கூடாது` என்றவாறு. இங்ஙனம் வலியுறுத்தி ஓதியதனால், மேற்கூறிய அளவை மாற்றின் தீங்கு பயக்கும் என்பது பெறுதும். மேற்கூறிப் போந்த அளவுகளை எல்லாம் மீளவும் வகுத்தோதியது வரையறையை வலியுறுத்தற் பொருட்டாதல் அறிக. சுட்டப்படுதல் - சிறப்பித்துச் சொல்லப்படுதல். கட்டப்படுதல் - வரையறுக்கப்படுதல்.
இதனால், கலைகளின் அளவு வரையறையே அவற்றால் விளையும் நன்மைக்கு ஏதுவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக்
கட்டப் படும்தா ரகைக்கதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே.

பொழிப்புரை :

அக்கினிக்கு அறுபத்து நான்கு, சூரியனுக்குப் பன்னிரண்டு, சந்திரனுக்குப் பதினாறு எனக் கலைகள் மேற்கூறியவாறு வரையறுக்கப்படும் பொழுது அவற்றிற்கு மேலும் நட்சத்திரக் கலை என நான்கு சொல்லப்படும். ஆகவே, அவையும் கூடக் கலைகள் தொண்ணூற்றாறாம். இத்தொண்ணூற்றாறு கலைகளையும் தத்துவ தாத்துவிகங்களாகிய தொண்ணூற்று ஆறுமாகக் கொள்க.

குறிப்புரை :

அங்ஙனம் கொள்ளுதலால் வரும் பயனும், ``நட்சத்திரக் கலையாவன இவை`` என்பதும் வருகின்ற மந்திரத்துட் பெறப்படும். நட்சத்திரக் கலை நான்கு உளவென்பது உணர்த்து தலேயன்றி, அனைத்தையும் எண்ணித் தொகை கொள்ளுதலும் செய்கின்றாராதலின், அதன் பொருட்டு மேற்கூறிய அவ்வளவு களையும் உடன் கூட்டி எண்ணினார். `சுட்டியிட்ட, கட்டியிட்ட` என்பவை குறைந்து நின்றன. ``கலாதி`` என்றது கலையைத் தோற்ற முறையிலும், ஒடுக்க முறையிலும் முதலாக வைத்துக் கூறியவாறு.
இதனால், கலையளவிற்கு எய்தாதது எய்துவித்து முற்ற முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலம்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லார் திருவடி நண்ணிநிற் பாரே.

பொழிப்புரை :

தொண்ணூற்றாறு கலைகளும், `இடை, பிங்கலை, சுழுமுனை` என்பவற்றுடன், நடுநாடி வழியாகக் கீழ்ப் போய்த் தொடர்கின்ற, இதுகாறும் சொல்லப்படாத மூலாதாரத்திலும் ``பூரகம், கும்பகம்`` என்பவற்றில் ஏற்ற பெற்றியால் பொருந்திப் பின் மேல் எழுந்து தலையிலே சேர்தலால், யோகிகள் சிவனது திருவடியை அடைய வல்லவராவர்.

குறிப்புரை :

``இடை, பிங்கலை`` என்பவற்றில் பூரகத்தாலும், சுழுமுனையில் கும்பகத்தாலும் பொருந்துவன முறையே சந்திர கலை சூரிய கலை அக்கினி கலைகளாதல் மேலெல்லாம் இனிது பெறப் பட்டமையின் ``மூலம்`` என்றது நட்சத்திரக் கலை பொருந்தும் இடத்தையே குறித்தது என்பது நன்கு பெறப்படும். ``அவ்விடத்துத் தொடர்தலும் கும்பகத்தாலே`` என்றற்கு ``நடுநாடி யூடே தொடர் மூலம்`` என்றார். ``சொல்லா மூலம் தொடர் மூலம்`` எனத் தனித்தனி கூட்டி யுரைக்க. எல்லாக் கலையும் உடன் சிரத்துச் சேர்தலால், ``பெத்தத்தில் தத்துவ வன்னரூபனாய் (சிவப்பிரகாசம், 64) உள்ள சீவன் அவ்வுருவத் தோடே சிவனடியைச் சேர்பவனாவன்`` என்பது மேல் தொண்ணூற் றாறு கலைகளையும் தொண்ணூற்றாறு தத்துவங்களாகக் கொள்க என்றதனால் பெறப் பட்டது. `சிவனது திருவடி சீவர்களது தலைமேல் உள்ளது` என்பது யோக நெறி. `இறைவன் அடியை அவன் அடியவர் தம் முடிமேற் கொள்வர்` என்பதனைச் சரியையாளரும், கிரியையாளரும், தாம் வழிபடும் மூர்த்தியின் திருவடி தம் சென்னி மேல் பொருந்துமாறு வீழ்ந்து வணங்குதலாகவும், யோகியர், சகத்திராரத்தும், நிராதாரத்தும் இறைவன் திருவடியைத் தியானித்தலாகவும், ஞானியர், தமது ஞான சத்தி கிரியா சத்தி இரண்டனையும் இறைவனது ஞான சத்தி கிரியா சத்திகளில் அடங்கப்பண்ணி அவனது அருள்வழி நிற்றலாகவும் கொண்டு ஒழுகுவர் என்க.
இனி, ``எல்லாக் கலையும் எழும்பிச் சிரத்துடன் சேர்தலால் திருவடி நண்ணி நிற்பார்`` என்றதனால், அங்ஙனம் சேரும் நிலையை அக்கலைகள் படிமுறையால் பெற்று நிறைவுறுதலே சந்திரயோகம் என்பதும் விளங்கும்.
இதனால், மேற்கூறிய கலைகள் பயன் தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்
தங்கிய தாரகை யாகும் சசிபானு
பங்கிய தாரகை யாகும் பரையொளி
தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே.

பொழிப்புரை :

`அக்கினிகலையில் சந்திரன், சூரியன்` என்னும் இரண்டன் கலைகள் தாக்குதலால் அவற்றொடு வைத்து எண்ணப் படுகின்ற நட்சத்திரக் கலைகள் தோன்றும். இங்கு, `சந்திரன், சூரியன், அவற்றின் கூறுகளாகிய நட்சத்திரம்` என்று சொல்லப்படுவன வெல்லாம் சத்தியது ஒளிப்பகுதிகளே. அதனால், இவை பிரணவ யோகிகட்கு நவமண்டலமாயும் நிற்கும்.

குறிப்புரை :

இம்மந்திரத்துச் சொல்லப்பட்ட பொருள்களுள் முதலது ``அங்கி மதிகூட`` (பா.847) என்னும் மந்திரத்திலும், ஈற்றது வருகின்ற மந்திரத்திலும் விளங்கும். சின்னம் - துண்டம்; என்றது கலையை. `கதிர் இரண்டு` என்பது ஒரு சொல் தன்மைப்பட்டு நிற்க, `சின்னக்கதிர் இரண்டு` என்பது, பின் முன்னாகத் தொக்க ஆறாவதன் தொகை யாயிற்று. `பங்கு` என்பதன் அடியாகப் பிறந்த `பங்கிய` என்பது, `பக்கு நின்ற` எனப் பொருள் தந்தது. திரோதான சத்தியையே இங்கு, `பரா சத்தி` என்றார். யோகியர்க்கு அஃது அவ்வாறு சிறந்து நிற்றலின். அதன் ஒளியாவது குண்டலி சத்தி. சந்திர கலை முதலியவாய் நிற்கும் வாயுக்களையே `குண்டலி சத்தி` என்றது, அவை அச்சத்தியை விளக்கி அதனோடு ஒற்றித்து நிற்றல்பற்றி. இவ்வாற்றால், இவை குண்டலி சத்தியாதல் இனிது விளங்குதற் பொருட்டே பிரணவ யோகிகட்கு இவை நவமண்டலமாய் நிற்றலும் உடன் கூறினார். தொண்ணூற்றாறு கலைகளையும் முன்னர்த் தொண்ணூற்றாறு தத்துவமாகக் கூறிப் பின் அவற்றைக் குண்டலி சத்தியாகக் கூறியவதனால், தத்துவ வன்ன ரூபியாகிய சீவன் சந்திர யோகத்தால் குண்டலி சத்தி வடிவாய்ச் சந்திர மண்டலத்தை அடைந்து சிவனது திருவடியைச் சேர்வான் என்பது போந்தது. `பரையொளியாகும்` என மாறிக்கூட்டுக.
இதனால், கலைகளுக்கு எய்தியதன் மேற் சில சிறப்பு இயல்புகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

தரணி சலங்கனல் கால்தக்க வானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே.

பொழிப்புரை :

`பிரணவயோகம்` எனப்படுகின்ற பெரிய நெறி, `பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சந்திரன், சூரியன், அக்கினி, நட்சத்திரம்` என்னும் நவமண்டலங்களை (ஒன்பான் வட்டங்களை) உடையது.

குறிப்புரை :

இங்கு, `பிரணவம்` என்றது பிராசாதத்தினை. மண்டலம் அல்லது வட்டமாவது பகுதி. ஒன்பான் வட்டங்களுள், தீயைப் பஞ்ச பூதங்களிடை, ``கனல்`` என்றும், முச்சுடரில் இறுதிக்கண் ``அங்கி`` என்றும் இருகால் ஓதியதனாலும், மேலேயும் (பா.835, 837) அக்கினிக்கு இருவகைக் கலையளவு கூறினமையாலும் `அடங்கு தீ, அழலுந் தீ` எனத் தீயை இரண்டாகக் கொள்ளுதலும், பூதத் தீ அடங்கு தீயும், சுடர்த் தீ அழலுந் தீயும் ஆதலும் பெறப்படும்.
பிருதிவி வட்டம் முதலிய ஒன்பான் வட்டங்களை, ``பிரணவ மாகும் பெருநெறி`` என்றமையால், அவை பிராசாத கலைகளின் தானங்களேயாயின. அத் தானங்கள் பன்னிரண்டனுள் இறுதி நான்கும் நிராதாரமாதலின், சந்திர கலை முதலிய நால்வகை கலைகளும் அவ் விடத்துச் சொல்லமாட்டா. எனவே, எஞ்சிய எட்டுத் தானங்களோடு சோடசகலைத் தானங்கள் இரண்டு கூடத்தானங்கள் பத்தாம். ஆயினும், `அருத்த சந்திரன், நிரோதினி` என்னும் இருகலைகட்கு இடையேயும், அவற்றின் தானங்கட்கிடையேயும் உள்ள வேற்றுமை சிறிதாகலின் அத்தானங்கள் இரண்டையும் ஒன்றாகக் கொள்ளத் தானங்கள் ஒன்பதாய், அவை இங்குக் கூறிய ஒன்பான் வட்டங்களாயும் அமையும். இவற்றுள், அழலுந் தீயை மரபுபற்றிச் சுடர்களோடு வைத்து எண்ணினாரேனும், `அது மூலாதாரத்தில் உள்ளது` என்பதே யோக நூல் துணிபாதலின், அதனை அங்ஙனமே வைக்க, `மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை, நெற்றி, தலை, தலையின் பின்புறம்` என்னும் இடங்கள் முறையே, `அங்கி, பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், நட்சத்திரம்` என்பவற்றின் வட்டங்களாம் என அறிக. பிராசாத கலைத் தானங்களை இவ்வாறான ஒன்பான் வட்டங்களாகக் கூறியது, ``மேற்கூறிய சந்திர கலை முதலிய நால்வகைக் கலைகளும் இப்பிராசாத கலைத் தானவகையினால் இங்குக் கூறிய பிருதிவி கலை முதலிய ஒன்பான் கலைகளாயும் நிற்கும்`` என்பது உணர்த்துதற்கு என்க. அரணியம் - காடு; என்றது ஒளிக்கற்றையை. முரணிய - தம்முள் மாறுபட்டு விளங்குகின்ற.
இதனால், மேல் தோற்றுவாய் செய்யப்பட்ட நவ மண்டலங்கள் (ஒன்பான் வட்டங்கள்) இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகை பூவிற் சகலத்தி யோனிகள்
தாரகைத் தாரகை தானாம் சொரூபமே.

பொழிப்புரை :

நட்சத்திரங்கள் சந்திரன் தேயும் பக்கத்தில் விளங்கு தலன்றி, அது வளரும் பக்கத்தில் தனியே விளங்கா; சந்திரனது ஒளியிலே ஒன்றி அதுவாய்விடும். யோகத்தில் ``நட்சத்திரங்கள்`` எனப்படுபவை, பூமியில் உள்ள பலவகை உயிர்கள். எனவே, யோகியின் சந்திர மண்டலம் விளங்கி நிற்கும்பொழுது உலகப் பொருள் பற்றிய உணர்வுகள் முன்னை மந்திரத்துட் கூறிய நட்சத்திர மண்டலத்தில் வேறு நின்று விளங்காது, சிவ உணர்விலே ஒன்றிவிடும்.

குறிப்புரை :

பூ - பூமி. ``சகலத்து யோனிகள்`` என்பதில் அத்து வேண்டாவழிச் சாரியை. சிறப்புப் பற்றி உயிர்களையே கூறினா ராயினும், பிற உலகப் பொருள்களும் கொள்ளப்படும். சொரூபம் - மெய்யுணர்வு; என்றது சிவ உணர்வை. உலகுணர்வை ``நட்சத்திரம்`` என்றதற்கு ஏற்பச் சிவ உணர்வை, ``சந்திரன்`` என்னாமையால், இஃது ஏகதேச உருவகம். இதனானே ``சந்திர மண்டலத்தின் ஆற்றலாவது சிவ உணர்வே`` என்பது அறியப்படும். ``சொரூபத்துக்கண்`` என இறுதிக்கண் ஏழாவது விரிக்க. ``தாரகை தாரகைக்கண் சொரூபத்தின் கண் தானாம்`` எனக் கூட்டுக. தாரகை இரண்டில் முன்னது நட்சத்திர மண்டலமாகிய இடம்; பின்னது நட்சத்திரம். தான், பன்மை ஒருமை மயக்கம். மூன்றாம் அடி இடைநிலையாய் நிற்க, ஏனையடிகள் தொக்கு எடுத்துக்காட்டுவமையாயின.
இதனால், சந்திர யோகத்தில் நிகழ்வன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

முற்பதி னஞ்சின் முளைத்துப் பெருத்திடும்
பிற்பதி னஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்
அப்பதி னஞ்சும் அறியவல் லார்கட்குச்
செப்பரி யான்கழல் சேர்தலு மாமே.

பொழிப்புரை :

பிண்டத்தில் உள்ள சந்திர மண்டலமும், அண்டத்தில் உள்ள சந்திர மண்டலம் போலவே தனது முற்பக்க நாள் பதினைந்தில் தோன்றி வளர்ந்து, பிற்பக்க நாள் பதினைந்தில் நிறை வினின்றும் தேய்ந்துவிடும். அதனால், அவ்விருவகைப் பதினைந்து நாள்களையும் அறிந்து முற்பக்க நாளில் யோகம் புரிய வல்லவர்கட்கு, சொல்லுதற்கரிய சிவனது திருவடியைச் சேர்தலும் கூடும்.

குறிப்புரை :

``அப்பதினைஞ்சும்`` என்பதில், `பதினைஞ்சு` என்னும் பால்பகா அஃறிணைப் பெயர் பன்மையாய் நின்றது. `அறிய வல்லார்` என்றதனால், இங்கு, ``முற்பக்கம், பிற்பக்கம்`` எனப்பட்டவை உலகில் காணப்படும் பக்கங்கள் அல்ல; யோக நிலையில் உள்ளவையே என்பது விளங்கும். ``அவை இவை`` என்பது வருகின்ற மந்திரத்தால் பெறப்படும்.
இதனால், பிண்ட, சந்திரனுக்கும் அண்ட, சந்திரன்போல இருவகைப் பக்கங்கள் உளவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அங்கி எழுப்பி அருங்கதிர் வட்டத்துத்
தங்குஞ் சசியினால் தாமம்ஐந் தைந்தாகிப்
பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்
திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே.

பொழிப்புரை :

முதற்கண் மூலாக்கினியை எழுப்பிப் பின் அவ்வக் கினியோடே சூரிய வட்டத்தில் தங்குகின்ற சந்திர கலையாகிய வாயு அங்ஙனம் ஓடித் தங்குதற்கு நாள்கள் பத்தாகிவிடப் பின் அவ்வக்கினி, நட்சத்திரங்களாகிய புலன் உணர்வு ஒழியும்படி சந்திர மண்டலத்தில் சென்று சேர்கின்ற யோக நாள்களே முற்பக்க நாள்களாம்.

குறிப்புரை :

சூரிய வட்டம், இங்கு மும்மண்டலங்களுள் ஒன்றாய அது. தாமம் - வரிசை; இது நாளின் அடைவைக் குறித்தது. ``ஆகி`` என்பதனை `ஆக` எனத் திரிக்க. கதிர் அங்கி - சூரிய வட்டத்தில் உள்ள அக்கினி. இது திங்களைச் சேர்கின்ற யோகம் `முற்பக்கம்` என்க. மந்திரத்து இறுதியில் `முற்பக்கம்` என்பது எஞ்சி நின்றது. இதனானே, `யோகம்` என்பது அது நிகழ்கின்ற காலத்தைக் குறித்தமை தெளிவு.
இதனால், பிண்ட சந்திரனுக்கு உரிய முற்பக்க நாள் இவை என்பது கூறப்பட்டது.
`சந்திர கலையாகிய வாயு இவ்வாறு வளர்ந்து செல்வது முற் பக்கம்` என்றதனானே, `சூரிய கலையாகிய வாயு இவ்வாறாதல் பிற் பக்கமாம்` என்பதும் உய்த்துணர வைக்கப்பட்டவாறு அறிக. முற்பக்க நாள்கள் முடிந்தபின் பிற்பக்க நாள் தொடங்குதல் ஒருதலையாதல் பொருட் பெற்றியாகலின், யோகத்திலும் முற்பக்கம் முடிந்தபின் யோகியால் பிற்பக்க யோகம் ஒருதலையாகச் செய்யப்படும். அவ்வாறு செய்யாதொழியின், விளைவுகள் வேறு வேறாம் என்க.

பண் :

பாடல் எண் : 13

ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.

பொழிப்புரை :

இங்குக் கூறிய இருவகைப் பக்கங்களின் படி வளர்ந்தும், தேய்ந்தும் நிற்கின்ற சந்திர கலை பதினாறும் அண்டத்தில் உள்ளது போலவே பிண்டத்திலும் பொருந்தி உள்ளதை உயர் நெறியில் வேட்கையில்லாதோர் நினைப்பதில்லை. அதனால், வாழ்நாளை வீணாளாக்கிய குற்றம்பற்றி அவர்கள்மேல் சீற்றங் கொள்கின்ற கூற்று வன் அவர்களை இழிபிறப்பில் தள்ளியபின், அதிலே சென்று வீழ்ந்து மேல் ஏற வழியறியாது திகைத்தலையே அவர்கள் உடையராவார்கள்.

குறிப்புரை :

கரு - பிறப்பு. ``குழி`` என்றதனால் அஃது இழிபிறப் பாயிற்று. `வீழ்த்தபின்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
இதனால், பிண்ட, சந்திரனை நினையாதவரது குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

அங்கி மதிகூட ஆகும் கதிரொளி
அங்கி கதிர்கூட ஆகும் மதியொளி
அங்கி சசிகதிர் கூடஅத் தாரகை
தங்கி அதுவே சகலமு மாமே.

பொழிப்புரை :

இடை நாடி வழியாகப் பூரிக்கப்படும் சந்திர கலை யாகிய வாயு அக்கினி கலையாகிய சுவாதிட்டான கும்பகத்தில் முன்னர்ப் பொருந்தி நிற்பின், பின்னர் வல நாடி வழியாகப் பூரிக்கப் படும் சூரிய கலையாகிய வாயுவே அவ்வக்கினி கலையில் சென்று பொருந்துவதாகும். அவ்வாறே, சூரிய கலையாகிய வாயு முன்னர்ச் சென்று அக்கினி கலையில் பொருந்தின், பின்னர்ச் சந்திரகலையே அதன் கண் சென்று பொருந்துவதாகும். இவ்வாறு அக்கினி கலையில் சந்திர கலை, சூரிய கலை என்னும் இரண்டும் பொருந்திய பின்னரே, அதனை மூலா தாரத்திற் செலுத்துதலாகிய அந்த நட்சத்திர, கலை மூலா தாரத்தில் சென்று தங்கி, அதுவே அனைத்துக் கலைகளுமாய் அங்கு நிரம்பி நிற்கும்.

குறிப்புரை :

என்றது, ``சந்திர கலையைச் சுவாதிட்டானத்தில் பூரித்த பின்னரே சூரிய கலையை அங்குப் பூரித்தல் வேண்டும்`` எனவும், `இரண்டையும் அங்குப் பூரித்த பின்னரே நட்சத்திர கலையை அங்கு நின்றும் மூலாதாரத்தில் பூரித்தல் வேண்டும்` எனவும் மேற்சொல்லிய கலைகளைத் தொகுக்கும்முறை கூறியவாறு. ``அங்கியிற் சின்னக் கதிரிரண்டாட்டத்துத் - தங்கிய தாரகை யாகும்`` என மேலேயும் (பா.841) கூறினார். `இதுவே முறை` என்றதனால், `மூலாக்கினி இவ்வாற்றானே எழுப்பப்படும்` என்பதும் அறியப்படும். படவே, மேல் (பா.845) ``அங்கி யெழுப்பி`` என்றது, `இவ்வாற்றால் எழுப்பி` என்றதாயிற்று. ஆகவே, அவ்விடத்தில், `சசியால்` எனச் சந்திரகலை ஒன்றையே கூறியது தலைமை பற்றியாதல் விளங்கும்.
மூன்றிடத்தும், ``அங்கி`` என்பதன் பின் ஏழாவது விரிக்க. சசி கதிர், உம்மைத் தொகை. அகரச்சுட்டு, நட்சத்திர கலையது இயல்பாக மேற்கூறியதனைச் (பா.841) சுட்டிற்று. ``அது`` என்றது, தங்குதலாகிய அத்தொழிலை உணர்த்திற்று. ``சகலமும் ஆம்`` என்றது, `எல்லாக் கலைகளும் ஒருங்கு தொக்க தொகை நிலையாம்` என்றபடி.
இதனால், சந்திர கலை முதலிய கலைகளை ஆக்கி மூல அங்கியை எழுப்புமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை
பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே.

பொழிப்புரை :

``பன்னிரண்டு`` என வரையறுக்கப்பட்ட சூரிய கலைகள் பெண் கலைகள். ``பதினாறு`` என வரையறுக்கப்பட்ட சந்திர கலைகள் ஆண் கலைகள். இவைகளை இந்த அளவுகளில் குறையாமல் பூரித்து, மூலாக்கினி விளங்கும் இடமாகிய சுவாதிட்டானத்தில் கும்பித்தால், அவ்விடத்துத் தெவிட்டாது தோன்றுகின்ற இன்பம் பேரின்பமே.

குறிப்புரை :

சூரிய சந்திரர்களை முறையே ஆண்மையும், பெண்மையும் உடையவராகக் கூறுதல் மரபாயிருக்க, இங்குச் சூரிய கலை சந்திர கலைகளை மாறிக் கூறியது என்னை யெனின், சந்திர கலையே சந்திர மண்டல ஆற்றலை மிகுவித்தல் பற்றி என்க. இது பற்றியே யோகத்தில் சந்திர கலையை முன்னர் வைத்துக் கூறுதல் பெரு வழக்காயிற்று. ``பன்னிரண்டு, பதினாறு`` என்பவைகளை எடுத்தோதி யதனால், முன்னை மந்திரத்தில் ``கூட`` என்றது, `இந்த அளவில் குறையாது கூடியபின்` என்பது பெறப்பட்டது.
`ஒரு கலை` எனப்படுவது, ஒரு முறை பூரித்துக் கும்பித்து, இரேசித்தலாம், என்பது மேலேயும் (பா. 835) கூறப்பட்டது. `பூரக, கும்பகம்` என்னும் முறையில் நிகழும். இரேசகங்களுக்கு மேல் (பா.556) சொல்லப்பட்ட மாத்திரை அளவுகள் சந்திர கலைக்கு உரியன. பதினாறு கலைகளையுடைய சந்திர கலைக்கு மாத்திரை அளவு சொல்லப்பட்டதனானே, பன்னிரண்டும் பத்தும் நான்கும் ஆகிய கலைகளை உடைய சூரியகலை அக்கினி கலை நட்சத்திர கலைகட் குரிய மாத்திரை அளவுகள் கணக்கிட்டுக் கொள்ளப்படும் என்க. அக்கினி கலைக்குப் பூரித்தலாவது சுவாதிட்டானத்தில் கும்பிக்கப் பட்ட வாயுவை மணி பூரகம் முதலிய ஆதாரங்களில் செல்ல மேற் செலுத்தல். கும்பித்தலாவது, ஆஞ்ஞை முதலிய மேல் இடங்களில் அவ்வாயுவை நிறுத்துதல். இரேசகமாவது அவ்விடங்களிற் சென்ற வாயுவை இரு மூக்கு வழியாகவும் வெளிச் செலுத்துதல்.
`பேராமல் பெய்யில்` என இயையும். புக்கு - முயன்று. மூலாதாரத்தில் உள்ளது காரண நிலையில் நிற்றலால், அஃது எழுந்து செல்லும் நிலையை, ``நேராகத் தோன்றும் நெருப்பு`` என்றார். இங்கு, `நெருப்பு` என்றது அஃது அடையும் இடத்தைக்குறித்தது. கும்பித்த பின் சந்திர மண்டலத்தில் உளதாம் இன்பத்தை, கும்பித்ததனானே உளதாகக் கூறினார். இஃது உடற்கண்ணே தோன்றுவதாயினும் வீட்டின்பமே என்றற்கு, ``ஆனந்தம் ஆனந்தம் ஆனதே`` என்றார். ஆணும், பெண்ணும் கூடியவழி இன்ப நுகர்ச்சியும், அவ்விருவரும் ஒருங்கே தீப்புக்கவழித் துறக்க இன்பமும் உளவாம் என வேறு பொருளும் இதன்கண் தோன்றிற்று.
இதனால், ``அங்கி கதிர் கூட, அங்கி மதி கூட`` என்றவற்றின் அளவுபற்றி ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் காலை வலத்திட்டுப்
பேணியிவ் வாறு பிழையாமற் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே.

பொழிப்புரை :

சூரிய கலையைப் பூரித்துப் பின் இடநாடி வழி இரேசித்தும், சந்திர கலையைப் பூரித்துப் பின் வலநாடி வழி இரேசித்தும் பிராணாயாமத்தை இவ்வாறு பன்முறை தவறாமல் போற்றிச் செய்வீராயின், ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் உம் உடல் தளர்ச்சி யடையாமலே யிருக்கும்.

குறிப்புரை :

`சந்திர கலை சூரிய கலைகளைப் பூரித்தவழியே இரேசித்தலே முறை` என்பது, மேலே (பா.777) கூறப்பட்டமையின், இது பூரித்தவழியாலன்றி வேறு வழியால் இரேசித்தலும் வேறொரு முறையாதல் கூறியதாயிற்று. ``பேணி`` எனவும், ``பிழையாமல்`` எனவும் கூறியவாற்றால், `இம்முறையை மேற்கொண்டு செய்யு மிடத்துப் பிழைபடாதவாறு குறிக்கொண்டிருத்தல் வேண்டும்` என்பது அறியப்படுகின்றது. ஆணி - இணைப்புக் கருவிகள். `வலக் கால் இடக் கால்களை எதிர்ப் பக்கங்களில் மடக்கிப் பின்னி, இருக்கையில் இருந்தால், அசைவின்றி யிருக்கலாம்` என வேறொரு பொருளும் இதன்கண் தோன்றிற்று.
இதனால், சந்திர கலை சூரிய கலைகளை இயக்குதற்குரிய பிறிதொருமுறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்கும்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே.

பொழிப்புரை :

சிவன், யோகிகளது உள்ளத்திற்குத் தோன்றும்படி தருகின்ற தச நாதங்களில் சங்கொலி ஒழிந்த ஒன்பது நாதங்களாய் முதற்கண் அவர்கட்கு அநுபவப் படுவான். பின்பு மேலிடமாகிய ஆஞ்ஞையில் விளக்கொளி போலக் காட்சியளிப்பான். அஞ்ஞானம் ஆகிய இருள் நீங்கி ஞான ஒளி வெளிப்படுகின்ற நான்காம் சத்தி நிபாதமாகிய காலைப் பொழுதில் காலைச் சங்கொலியாயும், காலைக் கதிரொளியாயும் கேள்வியிலும், காட்சியிலும் அனுபவமாவான்.

குறிப்புரை :

``பாலிக்கும்`` என்பது எச்சம்; ``ஆலிக்கும்`` என்பது முற்று. ``நெஞ்சம்`` என்பதை முதற்கண் வைத்து, நான்காவது விரிக்க. ஆலித்தல் - மகிழ்தல், ஒலித்தலுமாம். தச நாதங்கள் மேலே (பா.593) கூறப்பட்டன. ``மேலைக்கு, காலைக்கு`` என்பவற்றைத் தொல் காப்பியர், `இக்குச்சாரியை` என்பர்; பிற்காலத்தார், `உருபு மயக்கம்` என்பர். `முன்னே ஆலிக்கும்` என மேலே கூட்டி முடிக்க. `காலைச் சங்கும், காலைக் கதிரவனும் ஆவான்` எனப் படிமுறையை வகுத்துக் கூறவே, சந்திர யோகத்தால் சந்திர மண்டலம் இவ்வாறு படிமுறையான் வளர்தல் பெறப்பட்டது.
இதனால், சந்திர மண்டல வளர்ச்சியின் படிமுறை தெரித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவன் அண்டப் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவன் ஈசன் இடமது தானே.

பொழிப்புரை :

சூரிய கலை சந்திர கலைகள் சரவோட்டத்தில் மக்களது வாழ்நாளைப் படிமுறையாகக் குறைத்து நிற்பன. உடல் அழியாது நிலைபெறும்படி பொழிகின்ற அமுத மழை, யோகத்தால் ஆற்றல் மிகுகின்றவனது உடலினுள்ளே நீங்காது நிலைபெற்றுள்ளது. பிராணாயாமத்தால் நாடிகள் மாற்றத்தை எய்தப்பெறுகின்ற யோகி, `அண்டம்` எனப்படுகின்ற தலைக்கு அப்பால் நிராதாரத்திற் சென்று அதனை ஒளி மண்டலமாகச் செய்ய, அவன் அங்குக் காண்பது சிவனது இருப்பிடத்தையே.

குறிப்புரை :

அளத்தல். இங்குப் படிமுறையால் கழித்தல். பொதிர்த்தல் - பெருத்தல். ``பொதிர் அவன், அதிர் அவன்`` என்பன வினைத்தொகைகள். `அவன் எதிர் காண்பது ஈசன் இடமே` என ஒருசொல் வருவிக்க. அது, பகுதிப் பொருள் விகுதி. தான், அசை நிலை. வாழ்நாள் கழிதலை முன்னே விதந்து, பின் யோக முறை யையும், பயனையும் விதந்தமையால், `காலம்பெற அம்முறையை மேற்கொண்டு அப்பயனையே பெறுக` எனக் குறித்ததாயிற்று.
இதனால், `சந்திரயோகத்தை வாழ்நாள் கழியுமுன்னே மேற்கொண்டு, அதன் பயனைப் பெறல் வேண்டும்` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலார்
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே.

பொழிப்புரை :

நாபித் தானத்தில் தோன்றிப் பின் மேல் ஓங்குகின்ற குண்டலி சத்தியைத் தலைப்படுதற்குரிய மந்திரத்தை அறிபவர் அரியர். அதனை அறிந்தால், தந்தைக்கு முன்னே மகன் பிறத்தலாகிய புதுமை காணப்படும்.

குறிப்புரை :

``கனல்`` என்னாது, ``சோதி`` என்றதனால் அது குண்டலியேயாதல் அறிக. மூலாதாரம் குண்டலிக்குத் துயிலிடமாக, அது விழித்தெழுந்து செயற்படும் இடம் மணிபூரகம் முதலிய ஆதாரங்களேயாதல் பற்றி, மணிபூரகத்தினையே குண்டலி தோன்றும் இடமாகக் கூறினார். அந்தித்தல் - சந்தித்தல். ``மந்திரம்`` என்றது அசபையை. சுவாதிட்டானம் முதலிய ஆதாரங்களுள் கீழ்க்கீழ் உள்ள ஆதாரங்களில் நிற்கும் கடவுளர், மேன்மேல் உள்ள ஆதாரங்களில் நிற்கும் கடவுளருக்கு மைந்தர் ஆதலாலும், ஆதாரங்களைக் கீழ்நின்று மேற்சொல்லும் முறையானே அடைந்து நீங்க வேண்டுதலானும் ``தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான்`` என மருட்கை விளையக் கூறினார். ``மகன் இருந்தான்`` என்பதும் பாடம். `பிராணாயாமத்தை வறிதே செய்யாது, அசபா மந்திரத்துடன் செய்து, அதனால் குண்டலி சத்தியை மணிபூரகத்திலே அடையப்பெற்று, அச்சத்தி யோடே மேல் ஏறிச் சென்று சந்திர மண்டலத்தை அடைந்த வழியே யோகம், சந்திர யோகமாம்` என்றபடி. மந்திரமின்றியும், குண்டலியைத் தலைப் படாமலும் செய்யப்படுவது அட யோகம் என்க.
இதனால், ``உண்மைச் சந்திர யோகமாவது இது`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லிரேல்
வேதியன் அங்கே வெளிப்படுந் தானே.

பொழிப்புரை :

நூல்களைக் கற்பினும் அவற்றின் பயனைச் சிறிதும் உணரமாட்டாத அறிவிலிகள், அவற்றைப் பிறர் உரைப்பினும் உணர் வாரல்லர். ஆதலின், அவர் நிற்க. நீவிர் யாம் கூறிய முறையால் குண்டலி சத்தியை அது தோன்றுகின்ற மணிபூரகத்தில் சந்தித்தலோடு ஒழியாது, அதன் முடிவிடமாகிய சந்திர மண்டலத்திலும் விடாது பொருந்தி நிற்றல் வேண்டும். அவ்வாறு நிற்க வல்லிராயின், அவ்விடத்தில் சிவன் வெளிப்பட்டுத் தோன்றுவான்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் கூட்டி உரைக்க. ``ஆதியும் அந்தமும்`` என்னும் உம்மைகள் எச்ச உம்மைகள் ஆதலின், அதற்கு, மேல் உரைத்தவாறு உரைக்கப்பட்டது. ``ஆதி, அந்தம்`` என்பவை ஆதாரங்களை முறையாற் குறித்தன.
இதனால், அசபா யோகமும் சந்திர மண்டலங்காறும் சென்று முற்றிய வழியே சந்திர யோகமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

பாம்பு மதியைத் தினலுறும் அப்பாம்பு
தீங்கு கதிரையுஞ் சேரத் தினலுறும்
பாம்பும் மதியும் பகைதீர்த் துடன்கொளீஇ
நீங்கல் கொடானே நெடுந்தகை யானே.

பொழிப்புரை :

குண்டலினியாகிய பாம்பு சந்திரகலை, சூரியகலை என்னும் இருகலை வாயுவையும் ஒருங்கே உட்கொண்டு சிறந்து எழும். பின் பெருந்தகையோனாகிய சிவபிரான் அந்தப் பாம் பினையும், சகத்திராரத்தில் உள்ள சந்திரனையும் மாறிநிற்க விடாமல் ஒன்றியிருக்கச் செய்து, அவ்வொன்றுதலில் தானும் நீங்காது நிற்பான்.

குறிப்புரை :

குண்டலியைப் பாம்பாகக் கூறுதல் வடிவுபற்றியன்றியும் சந்திர சூரிய கலைகளையும், அப்பெயர்த்தாகிய காற்றினையும் உண்ணும் செயல் பற்றியுமாம் என்பதும் குறிப்பால் உணர்த்தியவாறு. மதியைத் தினல் உறுதலை வேறாக முன் வைத்துக் கதிரைத் தினல் உறுதலை உம்மை கொடுத்துப் பின் வைத்தமையால், சந்திர கலையே சிறப்புடைத்தாதல் பெறப்பட்டது. இராகு கேதுக்களாகிய பாம்புகள் சந்திரன், சூரியன் என்னும் இரு கோள்களையும் விழுங்குகின்றன எனக் கூறும் உலக வழக்காகிய நயம்தோன்ற நின்றது இம்மந்திரம்.
குண்டலிப் பாம்பும் சகத்திராரத்தில் உள்ள சந்திரனும் மாறி நிற்றலாவது, குண்டலிப் பாம்பு சந்திரனுடன் தனது முகத்தைப் பொருந்தவையாது, வாலைப் பொருந்த வைத்திருத்தல். சந்திர யோகத்தால் அப்பாம்பு கீழ்மேலாகச் சுழன்று முகத்தை அச்சந்திர னிடத்து வைத்து விளையாடுவதாம். அவ்விளையாட்டில் சிவபிரான் நீங்காது நிற்றலாவது, சிவ உணர்வு மறையாது விளங்குதல். சிவபெரு மான், ``பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகைதீர்த்து உடன் வைத்த பண்பன்`` (தி.6 ப.5பா.4) ஆதல் அறிக.
`சந்திர சூரியரை விழுங்கிய பாம்பு பின், சந்திரனோடு நட்புக் கொண்டு சிவபிரானிடம் விளையாடுகின்ற சிறப்புடையது, சந்திர யோகம்` என ஓர் வியப்புத் தோன்றக் கூறியவாறு; இதனுள் இன வெதுகை வந்தது. இம்மந்திரம் பாட வேறுபாடு மிகக் கொண்டுள்ளது.
இதனால், சந்திர யோகம் சந்திர மண்டலத்தில் சிவபிரானை அடையச்செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்
பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று
நயந்தரு பூரணை உள்ளம் நடத்தின்
வியந்தரு பூரணை மேவும் சசியே.

பொழிப்புரை :

சர நிலையில் சந்திர கலை இயங்கும்பொழுது உறங்காமல் விழித்திருந்து, சந்திர கலை நின்று சூரிய கலை இயங்கும் பொழுது உறங்கி, இரண்டு கலையும் சேர இயங்கும்பொழுது யோகத்திற் சென்றால், சந்திர மண்டலம், விரிவடைதலாகிய பௌர்ணிமை நிலையை எய்தும்.

குறிப்புரை :

அயின்றது - அயிலப்பட்டது. யோகத்தில் பதினாறு கலையாகப் பூரிக்கப்படும் சிறப்புப்பற்றி, ``அயின்றது, பயின்றது`` என்பன சந்திர கலையையே குறித்தன. சந்திர கலை வீழ்தலைக் கூறி யொழிந்ததனானே, சூரிய கலை இயங்குதல் பெறப்பட்டது. இரு கலைகளும் சேர இயங்குதலை, ``பூரணை`` என்றார். அஃது யோகத்திற்குரிய காலமாதல் பற்றி, ``நயந்தரு பூரணை`` எனச் சிறப்பித்தார். உள்ளத்தை நடத்துதல், மனோலயம் செய்தல். எனவே, யோகம் புரிதலாயிற்று. `நடத்தி` என்பது பாடம் அன்று.
`யோகி சரவோட்டத்தில் சந்திர கலை இயங்கும் பொழுது உறங்குதல் கூடாது` என்பதும், `சந்திர கலை, சூரிய கலை இரண்டும் சேர இயங்கும் பொழுது யோகத்திற் செல்லுதல் வேண்டும்` என்பதும் இங்குக் கூறப்பட்டவை. இதனால், யோகிகட்குச் சர நிலையில் சந்திர கலை இயங்குதல் முற்பக்கமும், சூரிய கலை இயங்குதல் பிற்பக்கமும், இரண்டும் இயங்குதல் பூரணையும் ஆயின. உலகர் இவற்றை மறுதலைத்துக் கொள்வர்.
இதனால், சந்திர யோகம் செய்வார்க்குரிய சில கால முறைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 23

சசியுதிக் கும்அள வந்துயி லின்றிச்
சசியுதித் தானேல் தனதூண் அருந்திச்
சசிசரிக் கின்றள வுந்துயி லாமற்
சசிசரிப் பிற்கண்தன் கண்டுயில் கொண்டதே.

பொழிப்புரை :

சந்திர யோகத்தில் சந்திர மண்டலம் தோன்று மளவும் சோம்பல் இன்றி யோகத்தில் முயன்று, அது தோன்றியபின் அதினின்றும் பெருகும் அமுதத்தைப் பருகிச் சரவோட்டத்தில் சந்திர கலை இயங்காமல் சூரிய கலை இயங்கும் பொழுது உறங்குதல் தக்கது.

குறிப்புரை :

``துயில்`` இரண்டனுள் முன்னது சோம்பல். ``சரிப் பின் கண்`` என்பதில் சரி - சரித்தல்; முதனிலைத் தொழிற்பெயர். `பின்` என்பது இங்குப் பெயராய் நின்று, சரிப்பிற்குப் `பிற்கண்` என ஏழன் உருபு ஏற்றது. ``கொண்டது`` என்பது கால மயக்கம். இதன்பின், `முறை` என்பது சொல்லெச்சமாய் நின்றது. முன்னை மந்திரத்தின் முன் இரண்டடிகளில் கூறியவற்றையே இம் மந்திரத்தின் பின்னிரண் டடிகளில் கூறினார்; முன்னை மந்திரத்தின் பின் இரண்டடிகளில் கூறிய வற்றை இம் மந்திரத்து விளங்கக் கூறினமை பற்றி அவை நெகிழ்ந் தொழியாது நிற்றற்பொருட்டு.
இதனால், முன்னை மந்திரப் பொருள் இனிது விளங்கக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழஅல் லார்இச் சசிவன்னர் தாமே.

பொழிப்புரை :

ஊழிகள் பல சென்றாலும் உலகிலே வாழ்கின்ற காய சித்த யோகிகள், தாம் யோகத்தில் இருக்கின்ற நாழிகையையே முழம் அளக்கும் கையாகக் கொண்டு எமனது ஆற்றலை அளப் பார்கள். ஆயினும், இங்குக் கூறப்படுகின்ற சந்திர யோகிகள் ஊழிக்கு முதல்வனாய் உள்ள சிவனேயாகின்ற உயர்நிலையை அடைவர்; உலகியலில் தாழ்தற்கு உரியரல்லராவர்.

குறிப்புரை :

``நாழிகை`` என்பது கடைக்குறைந்து நின்று, ``நாழி என்னும் முகத்தல் அளவைக் கருவி கையிடத்ததாக`` என வேறோர் பொருளையும் தோற்றுவித்தது. நமன், ஆகுபெயர். அளத்தல், உட்படக் கொள்ளுதல். ``இச் சசிவன்னர்`` என்பதை மூன்றாம் அடியின் முதற்கண் வைத்து உரைக்க.
இதனால், காய சித்தரினும் சந்திர யோகிகள் மேம்பட்டு நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

தண்மதி பானுச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
கண்மதி வீழ்வள விற்கண மின்றே.

பொழிப்புரை :

மக்களது உணர்வு அவர்களது தலையில் உள்ள சந்திர மண்டலம் உருப்பெற்றுத் தோன்றிய பின் அவர்களது சந்திர கலை சூரிய கலைகளாகிய வாயுக்கள் இயங்கும் வழியிலே விளங்கி, உலகம் மதிக்கின்ற இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலங் களிலும் நிகழும் நிகழ்ச்சிகளை முறையே கண்டு விளங்கிய பின், முடிவில் அச்சந்திர மண்டலம் வீழ்ச்சி அடையும்பொழுது ஒரு நொடி நேரமும் இல்லாதொழியும்.

குறிப்புரை :

``ஆகவே, உணர்வின் விளக்கமாகிய மெய்யுணர்வைப் பெற வேண்டுவார் மேற்கூறியவாறு சந்திர யோகத்தால் சந்திர மண்டலத்தை விளக்கம் பெறச் செய்தல் வேண்டும்`` என்பது குறிப் பெச்சம். ``உணர்வு`` என்னும் பொருட்டாகிய ``கண்`` என்பதனை ``வெண்மதி தோன்றிய நாளில்`` என்பதற்கு முன்னே கூட்டி, அனைத்தையும் முதற்கண் வைத்து உரைக்க. நான்காம் அடியில் ``தண்மதி`` என்பது பாடம் அன்று. `கணமும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.
இதனால், சந்திர யோகம் மெய்யுணர்விற்கு இன்றியமை யாததாமாறு விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

வளர்கின்ற ஆதித்தன் தன்கலை ஆறும்
தளர்கின்ற சந்திரன் தன்கலை ஆறும்
மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே.

பொழிப்புரை :

சந்திரனிலும் ஆற்றல் மிகுகின்ற சூரியனது கலைகள் ஆறும், சூரியனும் ஆற்றல் மெலிகின்ற சந்திரனது கலைகள் ஆறும் தனித்தனி இருதயத்திற்குமேல் பன்னிரண்டங்குலம் சென்று சந்திர மண்டலத்தில் பரவி நின்றதன் பயனை அறிகின்றவர் உலகத்து அரியர்.

குறிப்புரை :

வாயு சுழுமுனை வழியாக மேற்செல்லும் பொழுது இருதயத் தானத்தை அடைந்தபின் வலிமிகுமாகலின் அவ்வாறு மிக்குச் செல்வதை, ``மலர்ந்தெழுதல்`` என்றும் சந்திர மண்டலத்தை அடைந்த வாயு பயனுடைத்தாகலின், அதனை, ``அலர்ந்து விழுதல்`` என்றும் கூறினார்.
``சந்திர கலை சூரிய கலையினும் மிக்கிருத்தல் உடல் உயிர்கட்கு முற்பக்கத்து முதிர்ச்சியும், அது சூரிய கலையினும் குறைந்திருத்தல் பிற்பக்கத்து முதிர்ச்சியுமாம் ஆதலின், இரண்டும் சமமாதல் அட்டமியாம். ஆகவே, முற்பக்கத்தை முதிரச் செய்யா விடினும் பிற் பக்கத்தை முதிரச் செய்யாமலேனும் இருத்தல் வேண்டும்`` என்றவாறு.
இதனால், சூரிய கலை சந்திர கலைகளைச் சமமாகச் செய்கின்ற சமநிலை யோகம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்
காமுற வின்மையிற் கட்டுண்ணும் மூலத்தில்
ஓமதி யுள்விட் டுரையுணர் வாலே.

பொழிப்புரை :

யோகிக்கு உணர்வு பெருகுகின்ற உயிர் போல் வதாகிய சந்திர கலை குறைகின்ற நாளே விந்து இழப்பாகின்ற காலம் என்க. ஆகவே, முன்னை மந்திரத்திற் கூறியவாறு சந்திர கலையைக் குறைவுறாதபடி செய்கின்ற சமநிலை யோகத்தையுடைய யோகிக்கு எக்காலத்தும் விந்து இழப்பாகாது. ஏனெனில், மூலாதாரத்தில் உள்ள ஓங்கார உணர்வு நுண்ணிய நாதமாத்திரையாய்ச் சந்திர மண்டலத்துட் சேர்க்கப்பட்டதனால் ஆகிய உரை உணர்வுகளால் காமம் மீதூரா தொழிய, விந்து தனக்கு மூலமாகிய சுவாதிட்டானத்தில் கட்டுண்டு நிற்கும் ஆதலால்.

குறிப்புரை :

``உயிர் மதி`` எனக் கொண்டு கூட்டி, உவமத் தொகை யாக்குக. ``எனல்`` என்னும் வியங்கோட்சொல்லை, ``போம் வழி`` என்பதன் பின் கூட்டுக. ``போம் வழி`` என்பதும், `எங்கணும்` என்பதும் காலத்தை உணர்த்தின. ``யோகி`` என்றே போயினார், முன்னை மந்திரத்துட் கூறிய யோகம் இடையறாது நிற்றலின், ``அது போகாது`` எனச் சுட்டுப் பெயர் வருவித்துக்கொள்க. இறுதியடியை மூன்றாம் அடிக்கு முன்னே கூட்டியுரைக்க. ``மூலம்`` என்பது, ``விந்துவுக்கு மூல மான இடம்`` எனவே பொருள் தந்தது. ``மூலத்திற் கட்டுண்ணும்`` என மாற்றி, ``ஆதலால்`` என்னும் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. `விட்ட` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. விட்ட - விட்டதனால் ஆகிய.
`சமநிலை யோகத்தை உடைய யோகிக்குச் சந்திர மண்டல உணர்வு குறைவுபடாது நிற்பக் காமம் மீதூராது ஒழியும்` என்றதனால், அவ்யோகம் யோகிக்கு இன்றியமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

வேறுறச் செங்கதிர் மெய்க்கலை ஆறொடுஞ்
சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும்
ஈறில் இனன்கலை ஈரைந்தொ டேமதித்
தாறுட் கலையுள் அகலுவா வாமே.

பொழிப்புரை :

மேல் சூரிய கலை பன்னிரண்டினின்று வேறாகத் தோன்றக் கூறிய ஆறனுடன், சுவாதிட்டானத்தினின்றும் கீழ்ச் சென்று மூலாதாரத்தைத் தாக்குவதாகிய அக்கினி கலை நான்கு தொடர்ந்து பொருந்தி நிற்கும் இயல்புடையன. அவற்றால் பத்தாகின்ற சூரிய கலைகளோடு சந்திரனது அடக்கமான கலை ஆறு கூடின், அந்நிலை யோகிக்கு மேற்கூறிய உரை உணர்வுகள் முழுதும் அற்றொழிகின்ற அமாவாசியை நாளாம்.

குறிப்புரை :

``ஆதலின், மேலே (பா.859) கூறிய அட்டமி நிலையில் அக்கினி கலை எழாதவாறு காக்க`` என்பது குறிப்பெச்சம். சூறுதல் - அகழ்தல். `மதித்து` என்னும் குறிப்பு வினைப்பெயர், பன்மை யொருமை மயக்கம். ``மதித்து உட்கலை ஆறுள்`` என மாற்றுக. உட் கலை - அடங்கும் கலை. ஆறுள் - ஆறு கூடிய காலத்தில். அகலுதல் - நீங்குதல். இதற்கு `உரை உணர்வு` என்னும் எழுவாய் முன்னை மந்திரத்தினின்றும் வந்தது. `சந்திர மண்டலத்து உரை யுணர்வு முற்றும் அகல்உவா` என்றதனால், அப்பொழுது காம இச்சை மிக்கு, விந்து சயம் சிறிதும் இலதாதல் பெறப்பட்டது. சூரியனது பேரொளியுள் சந்திரன் அடங்கி நிற்றலே உவா (அமாவாசியை) ஆதல் உலகியல்பும் ஆதல் அறிந்துகொள்க.
இதனால், மேற்கூறப்பட்ட சமநிலை யோகத்தின் இன்றியமை யாமை எதிர்மறை முகத்தாற் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

உணர்விந்து சோணி உறஇனன் வீசும்
புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில்
உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே.

பொழிப்புரை :

புணர்ச்சிக் காலத்துச் சந்திர கலை குறையுமாயின், சூரிய கலை உணர்விற்கு முதலாகிய வெண்பாலினையும், உடம்பிற்கு முதலாகிய செம்பாலினையும் மிக இழக்குமாறு தனது ஆற்றலைச் செயற்படுத்தி நிற்கும். ஆகவே, உணர்வும், உடம்பும் போல்வன வாகிய சூரிய கலை, சந்திர கலைகளாகிய அவை தம்மில் ஒத்து நிற்பின், உணர்விற்கு முதலாகிய வெண்பாலும், உடம்பிற்கு முதலாகிய செம்பாலும் ஒருபோதும் மிக இழக்கப்படா.

குறிப்புரை :

எனவே, ``அப்பயன் கருதியே மேல் (பா.859) இருகலையும் சமமாதல் வேண்டும் எனக் கூறப்பட்டது`` என்றவாறு. இரண்டாம் அடியை முதற்கண் கூட்டி உரைக்க. முதற்கண் நின்ற உணர், முதனிலைத் தொழிற் பெயர். `சோணிதம்` என்பது குறைந்து நின்றது. வெண்பாலினை ``உணர்வு`` என்றதனால், செம்பால் உடம் பாதல் பெறப்பட்டது. உற - மிகுதியாய்க் கழிய. புணர்வு - புணர்ச்சி. இந்து - சந்திரன். `இந்து தான் வீசும் கதிரிற் குறையில்` என்க. `உணர்வும் உடம்பும்` என்னும் தொடர் இருமுறை வந்து, மேற்கூறிய வாறு வேறு வேறு பொருளைக் குறித்தன. ``உற`` என்பததை ``விடா`` என்பதனோடும் கூட்டுக.
இதனால், `மெய்யுணர்வில் விருப்பமுடையவர்க்குச் சமநிலை யோகம் புணர்ச்சிக் காலத்து மிக இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது. இதனை ஆடவர், மகளிர் இருபாலார்க்கும் ஒப்ப வைத்துக் கூறினமை குறிக்கொண்டு நோக்கத்தக்கது.

பண் :

பாடல் எண் : 30

அமுதப் புனல்வரும் ஆற்றங் கரைமேல்
குமிழிக்கத் தற்சுடர் ஐந்தையுங் கூட்டிச்
சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு
நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே.

பொழிப்புரை :

சந்திர மண்டலத்தில் ஊறுகின்ற அமுதம், தான் பாய்கின்ற யாறாகிய புருவ நடுவின் எல்லையைக் கடந்து வழிந்து கொண்டிருக்க, அப்புருவ நடுவினின்றும் மேன்மேல் சுடர்விட்டு விளங்குகின்ற ஒளிகள் ஐந்தையும் ஒன்று படுத்தி, அவற்றிற்கு ஏற்பு டையதான அந்தத் தண்டின் முனையில் அவைகளை ஓங்கி எரியச் செய்து, அவற்றைச் சுமக்க வல்லவர்கட்கு, நமனது வருகையும், கலை, நாள் முதலாகச் சொல்லப்படுகின்ற காலப்பகுதிகளும் இல்லையாகும்.

குறிப்புரை :

`குமிழி` என்னும் பெயர்ச்சொல்லடியாக, ``குமிழிக்க`` என்னும் செயவெனெச்சம் பிறந்தது. இவ்வெச்சம் நிகழ்காலத்தின்கண் வந்தது. `தன்` என்றது முன்னர்ப்போந்த யாற்றினை. தற்சுடர் ஐந்து, தற்சுடரை முதலாக உடைய ஐந்து. ``கூட்டி, ஒட்டி`` என்னும் எச்சங்கள், அடுக்கி, ``தரிக்க`` என்னும் ஒருவினை கொண்டன. `சமைந்த அத்தண்டு` என்க. சமைதல் - அமைதல். ``அத்தண்டு`` என்றது, சுழுமுனையை. அது மேற் பலவிடத்தும் பெறப்பட்ட மையின், இவ்வாறு சுட்டி யொழிந்தார். ``தண்டு`` என்பதன்பின், `மேல்` என்னும் பொருளதாகிய கண்ணுருபு விரிக்க. ஓட்டுதல், இங்கே ஒளியைப் பரவச் செய்தல். `விளக்கைத் தண்டின்மேல் வைத்து ஓங்கி எரியச் செய்தல்` என்னும் நயமும் இங்குத் தோற்றுவிக்கப்பட்டது. புருவ நடு முதலாக மேன்மேல் விளங்கும் ஒளிகள் ஐந்தாவன:- `விந்து, அருத்த சந்திரன், நிரோதினி, நாதம், நாதாந்தம்` என்பன. ``நமன் இல்லை; நற்கலை நாள் இல்லை`` என்றது, `இறப்பும், பிறப்பும் அற்ற வீட்டு நிலை உளதாம்` என்றவாறு.
இதனால், சந்திர யோகம், பிராசாத முறையில் முதிர்ந்து ஞானயோகமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத்திறந்
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங்
கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே.

பொழிப்புரை :

உலகீர், அமுதம் நிறைந்துள்ள ஊற்றின் மடையைத் திறந்து, அவ்வமுதம் பெருகிவர, அதனை உண்ணுங்கள். அதனை உண்டதன் பயனாக இவ்வுலகிலே நெடுங்காலம் வாழ நினையாமல், ஞான சமாதியில் அமர்ந்து சிவனது இரண்டு திருவடிகளாகிய தாமரை மலரின்கீழ்ச் சென்று இருக்கவே நினையுங்கள். அங்ஙனம் இருத்தலாகிய அழியா இன்பத்தின் பொருட்டு முதற்கண் உங்கள் மூச்சுக் காற்றினை இருமூக்காகிய வழிகளை மாற்றிக் கண்வழியாகச் செலுத்துங்கள்.

குறிப்புரை :

`அமுதம் உறும் ஊறலைத் திறந்து உண்ணீர்` எனவும், `தெள்நீர்ச் சமாதி அமர்ந்து இணையடித் தாமரைக்கே செல எண்ணீர்` எனவும், எச்சங்களை முன்னே கூட்டி முடிக்க. ``நலம் மாறும்`` என்பது, `இப்பெற்றங்கள் அறங் கறக்கும்` என்பதுபோல நான்காவதன் தொகை. `சென்று மாறும்` என்பதை, `மாறிச் செல்லும்` என விகுதி பிரித்துக் கூட்டிக் கொள்க. `உம்முடைய கால்கள் குருட்டு வழியை விட்டுக் கண் தெரிந்த வழியில் செல்வனவாகும்` எனவும், `உம்முடைய சந்ததிகளும் நீவிர் சென்ற வழியிற் சென்று திருந்தும்` எனவும் வரும் நயங்களும் ஈற்றடியில் தோன்றுதல் காண்க.
இதனால், உலகர்க்கு உறுதியுரைக்கும் முகத்தால், சந்திர யோகத்தினது சிறப்பு வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

மாறும் மதியும்ஆ தித்தனும் மாறின்றித்
தாறு படாமல்தண் டோடே தலைப்படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்
பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே.

பொழிப்புரை :

இடநாடி வழியாகவும், வலநாடி வழியாகவும் இயங்குகின்ற தம் இயல்பினின்றும் மாறுகின்ற சந்திர கலையும், சூரியகலையும் பின், யோகத்திற்குரிய முறையில் மாறுபடாமலும், குறைவுறாமலும் சுழுமுனை வழியே சென்று சந்திர மண்டலம் உள்ள தலையை அடையுமாயின், உடல், தனது நலத்திற்கு வேண்டுகின்ற வழிகளில் சிறிதும் சிதைவு உண்டாகாது. என்றும் அழிவில்லாத வீட்டின்பமும் இவ்வுலகில் மிகுவதாகும்.

குறிப்புரை :

தாறு - குலை. இது, சொல்லொற்றுமையால் குலைதலை (சிதைதலை) உணர்த்திற்று. இதனை, `புத்தி சேனன்` என்பவனை, ``திங்கள் விரவிய பெயரினான்`` (சீவகசிந்தாமணி - காந்தருவ தத்தையார் இலம்பகம் - 181) என்றது போலக் கொள்க.
``உபாயமும் ஊறுபடாது`` என முன்னே கூட்டுக. பாறு படுதல் - அழிவெய்துதல். ``பொங்குமே`` என்னும் ஏகாரம் தேற்றம்.
இதனால், யோக முறையும், அதன் பயனும் இறுதிக்கண் ஒரு திருமந்திரத்தால் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 33

விடாத மனம்பவ னத்தொடு மேவி
நடாவு சிவசங்க நாதங் கொளுவிக்
கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே.

பொழிப்புரை :

ஓடுதலை விடாத மனம் பிராணாயாமத்தால் ஒருவழிப்பட்டுச் சிவநாத ஒலியைக் கேட்பிக்கும். மதம் நீங்காத ஐம்பொறிகளாகிய யானைகளும் உரிய இடத்தில் கட்டுப்படும். அதனால், பருகப்படுகின்ற சந்திர மண்டலத்து அரிய அமிர்தமே பெத்த காலத்தில் விளையாத பேரின்பமாய் நிற்கும்.

குறிப்புரை :

`ஓடுதலை` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. ``சங்கம்`` என்பது பொதுப்பட நாதத்தை உணர்த்தி நிற்ப, ``சிவசங்க நாதம்`` என்பது இருபெயரொட்டாயிற்று. `கொளுவுதலால்` என்பது, ``கொளுவி`` எனத் திரிந்து நின்றது. ``வீடு`` என்றது சிலேடை. படாத னவாகிய இன்பம், பேரின்பம். இஃது ஒன்றேயாயினும் எல்லை யின்றிப் புதிது புதிதாய் விளைதல் பற்றிப் பன்மையாக ஓதப்பட்டது. `பருகு ஆரமுதமே படாதனவாகிய இன்பங்களாய் நிற்கும்` என்க.
இதனால், சந்திர யோகம் வாசி முறையில் முதிர்ந்து ஞான யோகமாய் விளங்குதல் கூறப்பட்டது.