நல்வழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்வழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நல்வழி - ஒளவையார்

நல்வழி: வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் 41 வெண்பாக்களையுடைய நூல்,

கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

விளக்கம்: பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப் பாகுவையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன், ஆண் யானை உருவம் உடைய உயிர்களுக்கு நல்லது செய்யும், மாசில்லாத விநாயகப் பெருமானே நீ எனக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என்ற சங்கத் தமிழ் மூன்றும்தா


வெண்பா : 1
புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்

விளக்கம:
மனிதன் பிறக்கும் போதும், இறக்கும் போதும் அவன் கூட வருவது அவன் செய்த புண்ணியம் பாவம் என்று கூறும் இரண்டு மட்டுமே, இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது, அனைத்து சமயமும் கூறுவது தீமையை செய்யாதே உன்னால் முடிந்த நன்மையை செய் என்பது தான்…

வெண்பா : 2
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி

விளக்கம்:
உண்மை நெறிப்படி கூறுவதாயின், உலகத்தில் பிறந்த மனிதர்களில் இரண்டு வகை ஜாதியினர் தான் உள்ளனர். ஒருவர் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் நல்ல குணம் படைத்த மேலோர், மற்றொருவர் தன்னிடம் உள்ளவற்றை அடுத்தவருக்கு கொடுத்து உதவாத கீழோர்..மேலோர் கண்ட நீதி நெறி நூலில் சொல்லப்பட்ட விஷயம் இது தான், இதை நன்றாக உணர்ந்து கொள்.

வெண்பா : 3
இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே – இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு

விளக்கம்:
நிலையில்லாத இந்த உடம்பை, மெய் என்று கருதி அதற்கு அனைத்தும் செய்கிறாயே, மெய் என்று கூறும் உடல் பொய் என்பதை உணர்ந்து, வறியவருக்கு விரைந்து காலம் தாழ்த்தாமல் ஈகை செய்க, மக்கள் ஊழின் வினைப்படி நல்ல காரியம் செய்து செல்ல வேண்டும் என்று நினைக்கும் சொர்க்கம் உங்களுக்கு வாசல் கதவை திறக்கும்

வெண்பா : 4
எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு

விளக்கம்:
கண் தெரியாத குருடன் , மாங்காய் அடிக்க முயற்சி செய்து அவன் கையில் வைத்திருந்த கோலை இழப்பதை போல், ஒருவன் காலம் அறியாமல் ஒரு செயலைச் செய்தால் அவனிடன் உள்ளதையும் இழக்க நேரிடும். நாம் செய்த புண்ணியத்தின் பலனாக, ஒரு காரியம் கைகூடும் வேலை வரும் வரை நாம் செய்யும் எந்த முயற்சியும் பலன் தராது, அதனால் காலம் கருதி ஒரு செயலை தொடங்க வேண்டும்.

வெண்பா : 5
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்

விளக்கம்:
நாம் மனம் வருந்தி அழைத்தாலும், நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது, அனைத்து காரியங்களும், உறவுகளும் நாம் செய்த பாவம், புண்ணியம் என்ற இரண்டு விசயங்களின் மூலமே அமைகிறது, இதை உணராமல் தினம் தினம் புலம்பி, நெஞ்சம் வருந்துவது மனிதர்களின் இயல்பு.

வெண்பா : 6
உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு

விளக்கம்:
கடல் கடந்து போய், கை நிறைய பணம் சம்பாதித்தாலும், ஒருவருக்கு என்ன கிடைக்க வேண்டும், எதை அனுபவிக்க வேண்டும் என்று விதி நிர்ணயம் செய்கிறதோ அது தான் கிடைக்கும், அடுத்தவருக்கு கிடைக்கும் சுகம் நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்துவதால், எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று பேராசையுடன் நினைப்பதால் என்ன லாபம் ?

வெண்பா : 7
எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு

விளக்கம்:
எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும், இந்த உடம்பு நிலையில்லாதது, புழுக்களும், நோய்யும் நிறைந்து வாழும் குடிசை. இதை அறிந்த நல்லவர்கள் தாமரை இலை தண்ணீரில் வாழ்தாலும், அதுனுடன் ஒட்டாமல் வாழ்வது போல் இந்த உலகத்தில் பற்று இல்லாமல் வாழ்வார்கள், இந்த உண்மையை புரியாதவரிடம் /உணர முடியாதவரிடம் இதை பற்றி பேச மாட்டார்கள்.

வெண்பா : 8
ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் – தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.

விளக்கம்:
உலகத்தில் நாம் சம்பாதிக்க வேண்டியவை எண்ணிலடங்காது இருப்பினும் , விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேற எதுவும் நம்மிடம் சேராது, ஆதலால் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசையை விட்டு அடுத்தவருக்கு உதவும் நல்ல மனிதர் இவர் என்ற மரியாதையை முதலில் சம்பாத்தியம் செய்யுங்கள்.


வெண்பா : 9
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து

விளக்கம்
கால் சுடும் அளவிற்கு நீர் வற்றி போய் வெரும் மணலாக ஆறு வற்றி போனாலும், அதை தோண்டுவோருக்கு, ஊற்று நீர் கொடுத்து இந்த உலகதிற்கு உதவும் நதியைப் போலே நல்ல மனம் படைத்தோர், நல்ல காரியங்கள் செய்யும் நல்ல குடியில் பிறந்தோர் தங்களுக்கு இல்லையென்றாலும் அடுத்தவர் கேட்கும் பொது தங்களிடம் உள்ள பொருளையும் கொடுத்து உதவுவார்கள்.

வெண்பா : 10
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் – வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்

விளக்கம்:
பல ஆண்டுகள் அழுதாலும் இறந்தவர் திரும்ப இந்த பூமிக்கு வருவதில்லை, பல முயற்சி செய்தாலும் இறப்பை தள்ளிபோடலாமே தவிர தவிர்க்க/தப்பிக்க முடியாது. இறப்பு உறுதியாக இறுதியில் வரும். ஆதலால் நமக்கு மட்டும் என்று சேர்த்து வைக்காமல் நம்மால் முடிந்த பொருள்களை அடுத்தவருக்கு கொடுத்து நாம் வாழ வேண்டும் .

வெண்பா : 11
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது

விளக்கம்:
ஒரு நாள் எனக்கு பசி வேண்டாம் அமைதியாக இரு என்று சொன்னால் வயிரே நீ கேட்க்க மாட்டாய், சரி உணவு அதிகமாக கிடைக்கிறது ஆகையால் இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானவற்றை இன்றே நிரப்பிக் கொள் என்றால் அதையும் செய்ய மாட்டாய். நாள் தவறாமல் ஒவ்வொரு வேலையும் உன்னையை நிரப்புவதே பெரும் வேலையாக இருக்கிறது , உன் தேவைக்காகவே பலருடன் போராட வேண்டி இருக்கிறது. உன்னோடு வாழ்வது துன்பத்தை தருகிறது.

வெண்பா : 12
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே – ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு

விளக்கம்:
ஆற்றங்கரையில் உள்ள மரம், அரச வாழ்க்கை போகம் ஆகியவை நிலையில்லாமல் அழிந்து விடும். உழுதுண்டு வாழும் வாழ்வை விட மேலான வாழ்க்கை வேறு ஒன்று இங்கு இல்லை, மற்ற வேலை அனைத்தும் உழவை விட குறைவானவை தான்.

வெண்பா : 13
ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்

விளக்கம்:
வாழ வேண்டும் என்று விதி உடையவரை, என்ன முயற்சி செய்தாலும் எவரும் கொல்ல முடியாது. அது போல் இறக்க வேண்டும் என்ற விதி உடையவரை யார் தடுத்தாலும் வாழ வைக்க முடியாது, எத்தனை முயற்சி செய்தாலும் முன்னேற்றம் அடையாமல் பிச்சை எடுக்க வேண்டும் என்ற விதி உடையவரை யார் காப்பாற்ற முடியும். இது தான் இந்த பூமியில் கண் கண்ட உண்மை. ஒருவரை காப்பாற்றவோ அழிக்கவோ விதியைத் தவிர வேறு ஒருவராலும் முடியாது, அவர் அவரின் வினைக்கேற்ப உள்ள பலன்களை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.

வெண்பா : 14
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை – சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்

விளக்கம்:
நல்ல குடியில் பிறந்தவர்கள் வயிறு வளர்பதற்காக அடுத்தவரை அண்டி, அவரை புகழ்ந்து பிச்சை வாங்கி வாழ்வது சீச்சீ என்று கூறும் அளவிற்கு இழிவான செயலாகும். இப்படி மானம் விட்டு உயிர் வாழ்வதை விட இறப்பது மேல்.

வெண்பா : 15
சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்

விளக்கம்:
சிவாய நம என்று கூறும் ஐந்தெழுத்து மந்திரமே விதியை வெல்லும் உபாயமாகும். அவர்களுக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை. இதைத் தவிர நாம் மதி / அறிவு என்று நினைக்கும் அனைத்து விஷயங்களும் விதியின் வழியில் தான் செல்லும்

வெண்பா : 16
தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் – பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி

விளக்கம்:
கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் தண்ணீரின் குணம்/பெருமை அது இருக்கும் நிலத்தின் தன்மையினாலும், நல்ல மனிதர்களின் குணம்/பெருமை அவர் செய்யும் தர்ம காரியங்களினாலும், கண்ணின் பெருமை கருணை பொங்கும் விழிகள் மூலமும், சிறந்த பெண்ணின் குணம் /பெருமை அவளின் கற்பு நெறி மாறாப் பண்பினாலும் நீ அறியலாம்.

வெண்பா : 17
செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
“அறும்-பாவம்!” என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?

விளக்கம்:
வெறும் பானையை அடுப்பில் வைத்து தீ மூட்டி பொங்கு என்றால் பொங்குமா ? அது போல் செய்ய வேண்டிய காலத்தில் நல்லது செய்யாமல், அடுத்தவருக்கு கொடுத்து உதவாமல் இருந்து விட்டு, அதன் பலனாக இன்று வறுமை வந்த போது, கடவுளே இது சரியா , இது முறையா, நீ இருக்கிறாயா , இல்லையா . சங்க நிதி, பதும நிதி என்று கூறும் இரண்டு நிதி அளவுப் பணம் வருமா ? என்று கடவுளை நொந்து கொள்வதால் என்ன பயன் , நமக்கு நல்லது நடக்க வேண்டுமானால் பிறருக்கு நல்லது செய்யுங்கள், கடவுளை நொந்து கொள்வதால் ஒரு பயனும் இல்லை.

வெண்பா : 18
பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் – மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்

விளக்கம்:
அடுத்தவருக்கு கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத உலோபிகள் தன்னிடம் உள்ள செல்வத்தை தனைப் பெற்றோர், உடன் பிறந்தோர், தன் இனத்தைச் சார்ந்தவர், உற்றார், உறவினர், தன்னை சரணம் அடைந்து சலாம் போட்டு சேவகம் செய்பவர் என்று தனக்கு உதவி செய்யும் ஒருவருக்கும் ஈய மாட்டார், ஆனால் அவரிடம் உள்ள செல்வத்தை பறிக்க வரும் கொள்ளையர்கள் அவரை உதைத்து கேட்டால் தன்னிடம் உள்ள செல்வத்தை கொடுப்பர். அது போல் ஒரு மனிதன் தன் இம்மை மறுமைக்கு நன்மை புரியும் நல்ல காரியம், தர்மம் செய்தல், இறை சிந்தனை, கோவிலுக்குச் செல்தல், அன்ன தானம், அடுத்தவனுக்கு உபகாரம் செய்தல், ஆகிய தன்னால் இயன்ற ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார், ஆனால் அவரை விதி என்னும் கொள்ளைக்காரன் வந்து துன்பம் செய்யும் போது தன் துன்பம் விலக பரிகாரம், அடுத்தவருக்கு உதவி, கோவிலுக்குச் செல்தல் என்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவர். இதை உணர்ந்து விதி நம்மை துன்பம் செய்யும் முன்னர் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.

வெண்பா : 19
சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் – போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால
நாழி அரிசிக்கே நாம்

விளக்கம்:
பிறருக்குச் சலாம் போட்டும், அடுத்தவரிடம் சென்று இரங்கி உதவி கேட்டும், உறவுகளை விட்டு அகலமான கடல் கடந்தும், தன் இயல்பான பழக்க வழக்கங்களை மாற்றி தனக்கு உதவி புரியும் மனிதரோடு இணைந்தும், அவர்களை நல்லவர், வல்லவர் என்று பொய்யாகப் புகழ்ந்து பாடியும் வாழ்வது இந்த பாழாய்ப்போன வயிறால் தான், இந்த ஒரு சான் வயிறை நிரப்ப உள்ள நாழி அரிசி சோறு பெறுவதற்காக இத்தனை பாடு பட வேண்டி உள்ளது.

வெண்பா : 20
அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்

விளக்கம்:
கனமான அம்மியை துணையாகக் கொண்டு ஆற்றில் இறங்கினால் அது நம்மை மூழ்கச்செய்து விடும், அது போல் அழகான மார்பகங்களைக் கொண்டு நம்மை மயக்கும் வேசியுடன் கொண்ட உறவு. அந்த உறவு இந்த பிறவிக்கும் அடுத்து வரும் பிறவிக்கும் நல்லது இல்லை. நம்மிடம் உள்ள அனைத்து செல்வத்தையும் பறித்து நம்மை ஒன்றும் இல்லாத வறுமை நிலைக்கு தள்ளி, நீங்காத துன்பத்தில் ஆழ்த்தி விடும்.

வெண்பா : 21
நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்

விளக்கம்:
பிறருக்கு துன்பம் செய்யாதவருக்கு, அடுத்தவர் அழிய வேண்டும் என்ற வஞ்சனை இல்லாதவருக்கு நல்ல நீர்வளம், நிழல் தரும் மரங்கள், நெல் வளம், பேரும், புகழும், சிறப்பான வாழ்க்கையும், நல்ல வீடும், தேவையான செல்வமும், நீண்ட ஆயுளும் செந்தாமரையில் அமரும் மஹாலக்ஷ்மி அருளுவாள்.

வெண்பா : 22
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்

விளக்கம்:
அடுத்தவருக்கு துன்பம் விளைவித்து, ஓடி ஓடி பணத்தை தேடும் கேடு கேட்ட மனிதர்களே கேளுங்கள், உங்கள் உயிர் பிரிந்து போகும் வேளையில் பணம் உங்களுடன் வராது, அதை யாரோ அனுபவிப்பார்கள், ஆதலால் உயிர் இருக்கும் போதே பணத்தை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யுங்கள்.

வெண்பா : 23
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை

விளக்கம்:
வழக்காடு மன்றத்தில் (கோர்ட்) பொய் சாட்சி சொல்பவர் வீடு ஒருவருக்கும் பயன் படாமல் போகும், அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும், வெள்ளை எருக்கம் பூ பூக்கும் , பாதாள மூலி என்னும் கொடிய விஷம் உள்ள கொடி வளரும், மூதேவி போய் வாழ்வாள், பாம்பு குடியேறும். ஆதலால் நியாய அநியாயங்களை அலசி ஒருவரின் பிரச்சனையை தீர்க்க உதவும் வழக்காடு மன்றத்தில் நாம் பொய் சாட்சி சொல்லக்கூடாது.

வெண்பா : 24
நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் – மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை

விளக்கம்:
திருநீரோ, திருமண்ணோ இடாத நெற்றி வீணானதாகும்,
நெய்யில்லாமல் உண்ணும் உணவு வீணானதாகும்,
நீர் வளம் தரும் ஆறு இல்லாத ஊர் வீணானதாகும்,
ஒத்த கருத்து உடைய உடன்பிறப்பு இல்லாத உடம்பு வீணானதாகும், நல்ல குணங்கள் உள்ள மனைவி இல்லாத வீடு வீணானதாகும்,

வெண்பா : 25
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

விளக்கம்:
ஒருவன் தன் வருவாயை விட அதிகம் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்படும் , போகும் திசை எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப்போல் பாவித்து அவனிடம் பேச தவிர்ப்பர், ஏழு பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கு ஆகாதவனாய் மாறிவிடுவான். ஆதலால் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யக்கூடாது.

வெண்பா : 26
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்

விளக்கம்:
ஒருவனுக்கு பசி தோன்றிய போது அவனிடத்தில் உள்ள சிறந்த குணங்கள் அனைத்தும் போய்விடும். இதை தான் “பசி வந்தால் பத்தும் பறக்கும்” என்பார்கள். அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பறந்து போகும்.

வெண்பா : 27
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்

விளக்கம்:
ஒரு பொருளை வேண்டும் என்று நினைத்தால் அது கிடைக்காமல் வேறு கிடைக்கலாம், அல்லது அது தான் வந்து சேர வேண்டும் என்ற விதி இருந்தால் அது கூட கிடைக்கும், நினைக்காத ஒன்று நமக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் எல்லாம் ஈசன் செயல். மனிதர்களின் விருப்பத்தில் ஒன்றும் நடக்காது, இறைவனின் விதிப்படி தான் அனைத்தும் நடக்கும்.

வெண்பா : 28
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன – கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்

விளக்கம்:
நாம் உண்ண தேவை நாழி அரிசி சோறு தான், உடுக்க நான்கு முழம், ஆனால் நாம் ஆசைப்படுவது என்பது கோடி விஷயங்கள், மெய்ஞானம் என்ற அகக்கண் இல்லாமல் கிடைப்பதை வைத்து போதும் என்ற மனநிலையில் வாழாமல் வாழும் மனிதரின் வாழ்க்கை மண் கலம் போல் எப்போதும் துன்பமே நிலைக்கும். ஆதலால் இருப்பதை வைத்து கொண்டு வாழும் மன அமைதி வேண்டும்.

வெண்பா : 29
மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை – சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்

விளக்கம்:
ஒரு மரம் பழுத்தால் அது பறவைகளையோ, மனிதர்களையோ கூவி அழைக்க வேண்டிய அவசியமில்லை, அது போல் அமுதசுரபி போல் அடுத்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் கேட்டதை கொடுக்கும் வள்ளல்களுக்கு அனைவருமே உறவினர். (கொடுக்கும் வரை தான் உறவு)

வெண்பா : 30
தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே – வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி

விளக்கம்:
ஒருவன் தன்னுடைய முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினையின் பயனை வெள்ளை தாமரையில் இருக்கும் பிரம்மன் விதித்த விதி வழியே தானே தான் அனுபவிப்பார். மன்னனே (மனிதர்களே) ஆதலால் உங்களை துன்பப்படுத்தியவரை என்ன செய்யலாம்? , ஊரிலுள்ளார் எல்லாரும் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது). ஒருவன் நமக்கு தீங்கு செய்யின் அது நாம் செய்த முன் பிறவியின் வினை என்று அறிந்து அவரை துன்பம் செய்ய கூடாது. அவரின் வினையை அவர் அனுபவிப்பார்.

வெண்பா : 31
இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று – வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி

விளக்கம்:
இலக்கண பிழை உடைய பாட்டு எழுதுவதை விட, உரைநடை நல்லது.

உயர் குலத்தில் பிறந்து ஒழுக்கம் தவறுவதை விட உயிரை விடுவது நன்று, திறமையில்லாத வீரத்தில் போர் களம் சென்று புறமுதுகிட்டு ஓடி உயிரை விடுவதை விட தீராத வியாதியினால் உயிர் போவது நல்லது. தவறு செய்தால் பழிநேருமே என்று அஞ்சாமல் தவறு செய்யும் பெண்ணுடன் வாழ்வதை விட தனியாக வாழ்வது நல்லது. இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொழுக்க மில்லாத உயர்குலமும், தவறுதலடையும் வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கையும் தீரா வசையை விளைவிக்கும்

வெண்பா : 32
ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் – சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து

விளக்கம்:
ஆறு வரும் வழியில் உண்டாக்கும் மேடும் பள்ளம் போல, நம்முடைய செல்வம் ஒருநாள் அதிகமாகும் அல்லது குறையும். பூமியில் வாழும் மனிதர்களே இதை உணர்ந்து உங்களிடம் செல்வம் இருக்கும் போதே பசி என்று வந்தவருக்கு அன்னம் இடுங்கள், தாகம் என்று வந்தவருக்கு தண்ணீர் கொடுங்கள், நீங்கள் செய்த தர்மம் உங்களின் தலை காக்கும், அதுவே உங்கள் உயிர் உயரும் உபாயம் ஆகும்.

வெண்பா : 33
வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது – நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்

விளக்கம்:
பெரிய யானையின் மீது அம்பு பாய்ச்சினால் அது அதைக்கொன்று விடும், அதே அம்பை பஞ்சு மூட்டையில் எறிந்தால், அது மூட்டையை துளைத்து வெளியே சென்று விடும், பஞ்சுக்கு ஒரு சேதாரமும் ஆகாது. கடிய கடப்பாரைக்கு வளைந்து கொடுக்காத பெரிய பாறை, சிறிய செடியின் வேர் ஊன்றி வெடித்து உடைந்து விடும். அது போல் கண்டிப்பான குணங்களாலும், கடுமையான சொற்களாலும் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது. மென்மையாக இன்சொல்லுடன் பழகினால் நம்மை யாரும் அழிக்க முடியாது, கடுமையான விஷயங்களையும் சுலபமாக சாதிக்கலாம்

வெண்பா : 34
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் – இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்

விளக்கம்:
ஒருவன் கல்வி கற்கவில்லை என்றாலும், அவன் கையில் பொருள் இருந்தால் அவனுடன் எல்லாரும் சென்று உறவாடுவர். கையில் பணம் இல்லாதவனை வீட்டில் இருக்கும் மனைவியும் மதிக்க மாட்டாள், பெற்றெடுத்த தாயும் வேண்டாள். அவன் சொல்லும் வார்த்தை செல்லாது, சபையில் எடுபடாது.

வெண்பா : 35
பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே – தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு

விளக்கம்:
பூ பூக்காமல் காய்க்கும் மரங்கள் உள்ளன, அது போல் ஏவல் செய்வதற்கு முன் , குறிப்பறிந்து வேலை செய்யும் வேலைக்காரர்களும் உள்ளனர். இதற்கு மாறாக, தூவி விதைத்தாலும் முளைக்காத விதைகள் உள்ளன. அது போல் மூடர்களுக்கு எத்தனை உரைத்தாலும் அவர்கள் மாற மாட்டார்கள்.

வெண்பா : 36
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல்-ஒண்டொடீ
போதந் தனங்கல்வி பொன்றவருங் காலம்அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்

விளக்கம்
நண்டு, முத்துச்சிப்பி, மூங்கில், வாழை அது அழியும் காலம் வந்தவுடன் கன்று ஈனும். கன்று வருவதை வைத்து இது அழியும் காலம் வந்து விட்டது என்று அறியலாம். அது போல் ஒருவனுக்கு கல்வி, பதவி, பண்பு, பெயர், புகழ், செல்வம் ஆகியவை அழியும் வேளை வருவதை அவர் பிறர் மனையை பார்க்கத் தொடங்கியதில் இருந்து நாம் அறியலாம்.

வெண்பா : 37
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி.

விளக்கம்:
பாவம் புண்ணியம் ஆகிய இரு வினைப் பயன்களை போக்குவதற்கான உபாயம் வேதம் முதல், அனைத்து நூல்களிலும் இல்லை. அதை கற்பதால் உங்கள் விதி மாறாது. உண்மையான வீட்டு நெறியில் (பண்பான குணங்களோடு) இருப்பவருக்கு விதி இல்லை என்பதை உணர்ந்து கொள். ஆதலால் மனமே நீ கவலைப் படாதே.

வெண்பா : 38
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே – நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்

விளக்கம்:
நல்லது இது என்றும், கெட்டது எது என்றும், இதை செய்தவன் நான் என்றும், அவன் என்றும், இது நடந்து இன்று என்றும் அன்று என்றும் வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களை பேதம் பிரித்து பார்க்காமல் இருக்கும் பற்று அற்ற நிலையே உண்மை நிலையாகும். கோரைப்புல்லை வெட்டி அதை கட்டுவதற்கு கோரைப்புல்லை கயிறாக பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு கயிறு தேடும் மனிதரைப் போல், இறைவன் நம் உள்ளே இருக்கிறான், அவனே அனைத்திற்கும் காரணம் என்பதை உணராமல் இருப்பது சரியாகாது.

வெண்பா : 39
முப்பது ஆண்டிற்குள் முதல்வனை யறி
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின்-செப்புங்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.

விளக்கம்
ஒருவன் எத்தனை தான் கல்வி கற்றாலும், அவனது முப்பது வயதிற்குள் ஆணவம், கண்மம், மாயை என்ற மும் மலங்களை கடந்து இறைவனை உணராமல் இருந்தால், அவன் கற்ற கல்வி வயதான பெண்களுக்கு உள்ள மார்பகங்கள் அவள் கணவனுக்கும், அவர்களின் குழந்தைக்கும் பயன் படாமல் வெறும் பெயர் அளவுக்கு இருக்கும் உறுப்பு இருப்பது போல், அவன் கற்ற கல்வி ஒன்றுக்கும் பயன் படாமல் வெறும் கல்வி என்று தான் இருக்கும். அதனால் ஒரு பயனும் இல்லை.

வெண்பா :40
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.

விளக்கம்:
தெய்வப் புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளும்,
நான்கு வேதத்தின் முடிவும், அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய மூவர் பாடிய தேவாரமும், மாணிக்க வாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவையும், திருமூலர் பாடிய திருமந்திரம் ஆகிய நூல்கள் சொல்லும் பொருள்கள் அனைத்தும் ஒன்று தான் என்று நீ உணர்ந்து கொள்.