சொல்லதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொல்லதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தொல்காப்பியம் - சொல்லதிகாரம்

 1.4.4 சொல்லதிகாரச் செய்திகள்

தமிழ் இலக்கணத்தில் சிறப்பாக அமைந்த கூறுகளுள் திணைப்பாகுபாடும் ஒன்று. உயர்திணை அஃறிணை என்ற அடிப்படையிலே பெயர்கள் தோன்றுவதனை விளக்கி, இருதிணைக்கும் உரிய ஐந்து பால்களையும், அவற்றுக்கு உரிய பெயர், வினை ஆகியவற்றின் ஈறுகளையும் விளக்குகின்றார்.

தமிழ்த் தொடர்களின் இலக்கணம் இவ்வதிகாரத்தில் சிறப்பாக விளக்கப்படுகிறது. தொடர்களின் ஆக்கம், தொடரில் சொற்கள் நிற்கும் நிலை முதலியன விளக்கம் பெறுகின்றன.

வேற்றுமை உருபுகள், அவை ஏற்கும் பொருள்கள், ஒரு வேற்றுமைப் பொருளை இன்னொரு வேற்றுமையின் உருபு கொண்டு விளங்கும் வேற்றுமை மயக்கம், இருதிணைப் பெயர்களும் விளியேற்கும் மரபு, விளியை ஏற்காத பெயர்கள் முதலானவை தெளிவுறுத்தப்படுகின்றன.

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல் ஆகியவற்றின் பொது இலக்கணம், அவற்றின் பாகுபாடுகள், வினைமுற்று, வினைஎச்சம், தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, பெயரெச்சம், வியங்கோள், எதிர்மறை முற்றுகள் ஆகியனவும், வேற்றுமைத் தொகை, உவமத் தொகை, வினைத்தொகை முதலான தொகைச் சொற்களின் இலக்கணமும், சொற்கள் பொருள் உணர்த்தும் முறையும், செய்யுளில் பயன்படும் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நால்வகைச் சொற்களின் தன்மைகளும் கூறப்பட்டுள்ளன.

வடசொல் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் (66) என்பதன் மூலம், ஆசிரியர் பிறமொழிக்குரிய ஒலிகளைக் கடன் வாங்குவது தகாது என்ற மிகச் சிறந்த கருத்தை வலியுறுத்தக் காணலாம். வரம்பின்றி, வடமொழி ஒலிகளைக் கடன் பெற்ற ஏனைத் திராவிட மொழிகள் தமிழிலிருந்து பெரிதும் வேறுபட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


கிளவியாக்கம்

486. உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவர் அல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே.

487. ஆடூஉ அறி சொல் மகடூஉ அறி சொல்
பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி
அம் முப் பாற்சொல் உயர்திணையவ்வே.

488. ஒன்று அறி சொல்லே பல அறி சொல் என்று
ஆயிரு பாற்சொல் அஃறிணையவ்வே.

489. பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும்
இவ் என அறியும் அந்தம் தமக்கு இலவே
உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும்.

490. னஃகான் ஒற்றே ஆடூஉ அறி சொல்.

491. ளஃகான் ஒற்றே மகடூ அறி சொல்.

492. ரஃகான் ஒற்றும் பகர இறுதியும்
மாரைக் கிளவி உளப்பட மூன்றும்
நேரத் தோன்றும் பலர் அறி சொல்லே.

493. ஒன்று அறி கிளவி த ற ட ஊர்ந்த
குன்றியலுகரத்து இறுதி ஆகும்.

494. அ ஆ வ என வரூஉம் இறுதி
அப் பால் மூன்றே பல அறி சொல்லே.

495. இரு திணை மருங்கின் ஐம் பால் அறிய
ஈற்றின் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும்
தோற்றம்தாமே வினையொடு வருமே.

496. வினையின் தோன்றும் பால் அறி கிளவியும்
பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும்
மயங்கல் கூடா தம் மரபினவே.

497. ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவி
ஆண்மை அறி சொற்கு ஆகு இடன் இன்றே.

498. செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்.

499. வினாவும் செப்பே வினா எதிர் வரினே.

500. செப்பே வழீஇயினும் வரை நிலை இன்றே
அப் பொருள் புணர்ந்த கிளவியான.

501. செப்பினும் வினாவினும் சினை முதல் கிளவிக்கு
அப் பொருள் ஆகும் உறழ் துணைப் பொருளே.

502. தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
பகுதிக் கிளவி வரை நிலை இலவே.

503. இனச் சுட்டு இல்லாப் பண்பு கொள் பெயர்க்கொடை
வழக்கு ஆறு அல்ல செய்யுள் ஆறே.

504. இயற்கைப் பொருளை இற்று எனக் கிளத்தல்.

505. செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்.

506. ஆக்கம்தானே காரணம் முதற்றே.

507. ஆக்கக் கிளவி காரணம் இன்றியும்
போக்கு இன்று என்ப வழக்கினுள்ளே.

508. பால் மயக்கு உற்ற ஐயக் கிளவி
தான் அறி பொருள்வயின் பன்மை கூறல்.

509. உருபு என மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும்
இரு வீற்றும் உரித்தே சுட்டும் காலை.

510. தன்மை சுட்டலும் உரித்து என மொழிப
அன்மைக் கிளவி வேறு இடத்தான.

511. அடை சினை முதல் என முறை மூன்றும் மயங்காமை
நடை பெற்று இயலும் வண்ணச் சினைச் சொல்.

512. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கின் ஆகிய உயர் சொல் கிளவி
இலக்கண மருங்கின் சொல் ஆறு அல்ல.

513. செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
நிலை பெறத் தோன்றும் அந் நாற் சொல்லும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம் மூ இடத்தும் உரிய என்ப.

514. அவற்றுள்,
தரு சொல் வரு சொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீர் இடத்த.

515. ஏனை இரண்டும் ஏனை இடத்த.

516. யாது எவன் என்னும் ஆயிரு கிளவியும்
அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்.

517. அவற்றுள்,
யாது என வரூஉம் வினாவின் கிளவி
அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்தற்குத்
தெரிந்த கிளவி ஆதலும் உரித்தே.

518. இனைத்து என அறிந்த சினை முதல் கிளவிக்கு
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்.

519. மன்னாப் பொருளும் அன்ன இயற்றே.

520. எப் பொருள் ஆயினும் அல்லது இல் எனின்
அப் பொருள் அல்லாப் பிறிது பொருள் கூறல்.

521. அப் பொருள் கூறின் சுட்டிக் கூறல்.

522. பொருளொடு புணராச் சுட்டுப்பெயர் ஆயினும்
பொருள் வேறுபடாஅது ஒன்று ஆகும்மே.

523. இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும்
வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின்
சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்
இயற்பெயர் வழிய என்மனார் புலவர்.

524. முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே.

525. சுட்டு முதல் ஆகிய காரணக் கிளவியும்
சுட்டுப்பெயர் இயற்கையின் செறியத் தோன்றும்.

526. சிறப்பின் ஆகிய பெயர்நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்.

527. ஒரு பொருள் குறித்த வேறு பெயர்க் கிளவி
தொழில் வேறு கிளப்பின் ஒன்று இடன் இலவே.

528. தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவி என்று
எண்ணு வழி மருங்கின் விரவுதல் வரையார்.

529. ஒருமை எண்ணின் பொதுப் பிரி பாற்சொல்
ஒருமைக்கு அல்லது எண்ணு முறை நில்லாது.

530. வியங்கோள் எண்ணுப்பெயர் திணை விரவு வரையார்.

531. வேறு வினைப் பொதுச் சொல் ஒரு வினை கிளவார்.

532. எண்ணுங்காலும் அது அதன் மரபே.

533. இரட்டைக்கிளவி இரட்டின் பிரிந்து இசையா.

534. ஒரு பெயர்ப் பொதுச் சொல் உள் பொருள் ஒழியத்
தெரிபு வேறு கிளத்தல் தலைமையும் பன்மையும்
உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும்.

535. பெயரினும் தொழிலினும் பிரிபவை எல்லாம்
மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன.

536. பலவயினானும் எண்ணுத் திணை விரவுப்பெயர்
அஃறிணை முடிபின செய்யுளுள்ளே.

537. வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல்
வினை வேறுபடாஅப் பல பொருள் ஒரு சொல் என்று
ஆயிரு வகைய பல பொருள் ஒரு சொல்.

538. அவற்றுள்,
வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல்
வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும்
தேறத் தோன்றும் பொருள் தெரி நிலையே.

539. ஒன்று வினை மருங்கின் ஒன்றித் தோன்றும்.

540. வினை வேறுபடாஅப் பல பொருள் ஒரு சொல்
நினையும் காலை கிளந்தாங்கு இயலும்.

541. குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி.

542. குடிமை ஆண்மை இளமை மூப்பே
அடிமை வன்மை விருந்தே குழுவே
பெண்மை அரசே மகவே குழவி
தன்மை திரி பெயர் உறுப்பின் கிளவி
காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொல் என்று
ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ
அன்ன பிறவும் அவற்றொடு சிவணி
முன்னத்தின் உணரும் கிளவி எல்லாம்
உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும்
அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும்.

543. காலம் உலகம் உயிரே உடம்பே
பால் வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம்
ஆயீர் ஐந்தொடு பிறவும் அன்ன
ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்
பால் பிரிந்து இசையா உயர்திணை மேன.

544. நின்றாங்கு இசைத்தல் இவண் இயல்பு இன்றே.

545. இசைத்தலும் உரிய வேறிடத்தான.

546. எடுத்த மொழி இனம் செப்பலும் உரித்தே.

547. கண்ணும் தோளும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினை நிலைக் கிளவி
பன்மை கூறும் கடப்பாடு இலவே
தம் வினைக்கு இயலும் எழுத்து அலங்கடையே.


வேற்றுமையியல்


548. வேற்றுமைதாமே ஏழ் என மொழிப.

549. விளி கொள்வதன்கண் விளியொடு எட்டே.

550. அவைதாம்,
பெயர் ஐ ஒடு கு
இன் அது கண் விளி என்னும் ஈற்ற.

551. அவற்றுள்,
எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே.

552. பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
வினை நிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல்
பண்பு கொள வருதல் பெயர் கொள வருதல் என்று
அன்றி அனைத்தும் பெயர்ப் பயனிலையே.

553. பெயரின் ஆகிய தொகையுமார் உளவே
அவ்வும் உரிய அப்பாலான.

554. எவ் வயின் பெயரும் வெளிப்படத் தோன்றி
அவ் இயல் நிலையல் செவ்விது என்ப.

555. கூறிய முறையின் உருபு நிலை திரியாது
ஈறு பெயர்க்கு ஆகும் இயற்கைய என்ப.

556. பெயர்நிலைக் கிளவி காலம் தோன்றா
தொழில் நிலை ஒட்டும் ஒன்று அலங்கடையே.

557. இரண்டாகுவதே,
ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எவ் வழி வரினும் வினையே வினைக்குறிப்பு
அவ் இரு முதலின் தோன்றும் அதுவே.

558. காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்
ஒப்பின் புகழின் பழியின் என்றா
பெறலின் இழவின் காதலின் வெகுளியின்
செறலின் உவத்தலின் கற்பின் என்றா
அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின்
நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா
ஆக்கலின் சார்தலின் செலவின் கன்றலின்
நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா
அன்ன பிறவும் அம் முதற் பொருள
என்ன கிளவியும் அதன் பால என்மனார்.

559. மூன்றாகுவதே,
ஒடு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைமுதல் கருவி அனை முதற்று அதுவே.

560. அதனின் இயறல் அதன் தகு கிளவி
அதன் வினைப்படுதல் அதனின் ஆதல்
அதனின் கோடல் அதனொடு மயங்கல்
அதனொடு இயைந்த ஒரு வினைக் கிளவி
அதனொடு இயைந்த வேறு வினைக் கிளவி
அதனொடு இயைந்த ஒப்பு அல் ஒப்பு உரை
இன் ஆன் ஏது ஈங்கு என வரூஉம்
அன்ன பிறவும் அதன் பால என்மனார்.

561. நான்காகுவதே,
கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எப் பொருள் ஆயினும் கொள்ளும் அதுவே.

562. அதற்கு வினை உடைமையின் அதற்கு உடம்படுதலின்
அதற்குப் படு பொருளின் அது ஆகு கிளவியின்
அதற்கு யாப்பு உடைமையின் அதன் பொருட்டு ஆதலின்
நட்பின் பகையின் காதலின் சிறப்பின் என்று
அப் பொருட் கிளவியும் அதன் பால என்மனார்.

563. ஐந்தாகுவதே,
இன் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
இதனின் இற்று இது என்னும் அதுவே.

564. வண்ணம் வடிவே அளவே சுவையே
தண்மை வெம்மை அச்சம் என்றா
நன்மை தீமை சிறுமை பெருமை
வன்மை மென்மை கடுமை என்றா
முதுமை இளமை சிறத்தல் இழித்தல்
புதுமை பழமை ஆக்கம் என்றா
இன்மை உடைமை நாற்றம் தீர்தல்
பன்மை சின்மை பற்று விடுதல் என்று
அன்ன பிறவும் அதன் பால என்மனார்.

565. ஆறாகுவதே,
அது எனப் பெரிய வேற்றுமைக் கிளவி
தன்னினும் பிறிதினும் இதனது இது எனும்
அன்ன கிளவிக் கிழமைத்து அதுவே.

566. இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின்
செயற்கையின் முதுமையின் வினையின் என்றா
கருவியின் துணையின் கலத்தின் முதலின்
ஒருவழி உறுப்பின் குழுவின் என்றா
தெரிந்து மொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்
திரிந்து வேறுபடூஉம் பிறவும் அன்ன
கூறிய மருங்கின் தோன்றும் கிளவி
ஆறன் பால என்மனார் புலவர்.

567. ஏழாகுவதே,
கண் எனப் பெயரிய வேற்றுமை கிளவி
வினை செய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
அனை வகைக் குறிப்பின் தோன்றும் அதுவே.

568. கண் கால் புறம் அகம் உள் உழை கீழ் மேல்
பின் சார் அயல் புடை தேவகை எனாஅ
முன் இடை கடை தலை வலம் இடம் எனாஅ
அன்ன பிறவும் அதன் பால என்மனார்.

569. வேற்றுமைப் பொருளை விரிக்கும் காலை
ஈற்று நின்று இயலும் தொகைவயின் பிரிந்து
பல் ஆறாகப் பொருள் புணர்ந்து இசைக்கும்
எல்லாச் சொல்லும் உரிய என்ப.

வேற்றுமைமயங்கியல் 


570.  கருமம் அல்லாச் சார்பு என் கிளவிக்கு
உரிமையும் உடைத்தே கண் என் வேற்றுமை.

571.  சினை நிலைக் கிளவிக்கு ஐயும் கண்ணும்
வினை நிலை ஒக்கும் என்மனார் புலவர்.

572.  கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே.

573.  முதற்சினைக் கிளவிக்கு அது என் வேற்றுமை
முதற்கண் வரினே சினைக்கு ஐ வருமே.

574.  முதல் முன் ஐ வரின் கண் என் வேற்றுமை
சினை முன் வருதல் தெள்ளிது என்ப.

575.  முதலும் சினையும் பொருள் வேறுபடாஅ
நுவலும் காலை சொற்குறிப்பினவே.

576.  பிண்டப் பெயரும் ஆயியல் திரியா
பண்டு இயல் மருங்கின் மரீஇய மரபே.

577.  ஒரு வினை ஒடுச் சொல் உயர்பின் வழித்தே.

578.  மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய
ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி
நோக்கு ஓரனைய என்மனார் புலவர்.

579.  இரண்டன் மருங்கின் நோக்கு அல் நோக்கம் அவ்
இரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும்.

580.  அது என் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின்
அது என் உருபு கெட குகரம் வருமே.

581.  தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும்
கடி நிலை இலவே பொருள்வயினான.

582.  ஈற்றுப் பெயர் முன்னர் மெய் அறி பனுவலின்
வேற்றுமை தெரிப உணருமோரே.

583.  ஓம்படைக் கிளவிக்கு ஐயும் ஆனும்
தாம் பிரிவு இலவே தொகை வரு காலை.

584.  ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு
ஏழும் ஆகும் உறை நிலத்தான.

585.  குத் தொக வரூஉம் கொடை எதிர் கிளவி
அப் பொருள் ஆறற்கு உரித்தும் ஆகும்,

586.  அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும்
எச்சம் இலவே பொருள்வயினான.

587.  அன்ன பிறவும் தொல் நெறி பிழையாது
உருபினும் பொருளினும் மெய் தடுமாறி
இரு வயின் நிலையும் வேற்றுமை எல்லாம்
திரிபு இடன் இலவே தெரியுமோர்க்கே.

588.  உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி
ஒரு சொல் நடைய பொருள் செல் மருங்கே.

589.  இறுதியும் இடையும் எல்லா உருபும்
நெறி படு பொருள்வயின் நிலவுதல் வரையார்.

590.  பிறிது பிறிது ஏற்றலும் உருபு தொக வருதலும்
நெறிபட வழங்கிய வழி மருங்கு என்ப.

591.  ஐயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின்
மெய் உருபு தொகாஅ இறுதியான.

592.  யாதன் உருபின் கூறிற்று ஆயினும்
பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும்.

593.  எதிர் மறுத்து மொழியினும் தம்தம் மரபின்
பொருள் நிலை திரியா வேற்றுமைச் சொல்லே.

594.  கு ஐ ஆன் என வரூஉம் இறுதி
அவ்வொடு சிவணும் செய்யுளுள்ளே.

595.  அ எனப் பிறத்தல் அஃறிணை மருங்கின்
குவ்வும் ஐயும் இல் என மொழிப.

596.  இதனது இது இற்று என்னும் கிளவியும்
அதனைக் கொள்ளும் பொருள்வயினானும்
அதனான் செயற்படற்கு ஒத்த கிளவியும்
முறை கொண்டு எழுந்த பெயர்ச்சொல் கிளவியும்
பால் வரை கிளவியும் பண்பின் ஆக்கமும்
காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும்
பற்று விடு கிளவியும் தீர்ந்து மொழிக் கிளவியும்
அன்ன பிறவும் நான்கன் உருபின்
தொல் நெறி மரபின தோன்றல் ஆறே.

597.  ஏனை உருபும் அன்ன மரபின
மானம் இலவே சொல் முறையான.

598.  வினையே செய்வது செயப்படுபொருளே
நிலனே காலம் கருவி என்றா
இன்னதற்கு இது பயன் ஆக என்னும்
அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ
ஆயெட்டு என்ப தொழில் முதனிலையே.

599.  அவைதாம்,
வழங்கு இயல் மருங்கின் குன்றுவ குன்றும்.

600.  முதலின் கூறும் சினை அறி கிளவியும்
சினையின் கூறும் முதல் அறி கிளவியும்
பிறந்தவழிக் கூறலும் பண்பு கொள் பெயரும்
இயன்றது மொழிதலும் இருபெயரொட்டும்
வினைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ
அனை மரபினவே ஆகுபெயர்க் கிளவி.

601.  அவைதாம்,
தம்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும்
ஒப்பு இல் வழியான் பிறிது பொருள் சுட்டலும்
அப் பண்பினவே நுவலும் காலை.

602.  வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும்.

603.  அளவு நிறையும் அவற்றொடு கொள்வழி
உள என மொழிப உணர்ந்திசினோரே.

604.  கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும்
கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே.

விளிமரபு  


605.  விளி எனப்படுப கொள்ளும் பெயரொடு
தெளியத் தோன்றும் இயற்கைய என்ப.

606.  அவ்வே,
இவ் என அறிதற்கு மெய் பெறக் கிளப்ப.

607.  அவைதாம்,
இ உ ஐ ஓ என்னும் இறுதி
அப் பால் நான்கே உயர்திணை மருங்கின்
மெய்ப் பொருள் சுட்டிய விளி கொள் பெயரே.

608.  அவற்றுள்,
இ ஈ ஆகும் ஐ ஆய் ஆகும்.

609.  ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும்.

610.  உகரம்தானே குற்றியலுகரம்.

611.  ஏனை உயிரே உயர்திணை மருங்கின்
தாம் விளி கொள்ளா என்மனார் புலவர்.

612.  அளபெடை மிகூஉம் இகர இறு பெயர்
இயற்கைய ஆகும் செயற்கைய என்ப.

613.  முறைப்பெயர் மருங்கின் ஐ என் இறுதி
ஆவொடு வருதற்கு உரியவும் உளவே.

614.  அண்மைச் சொல்லே இயற்கை ஆகும்.

615.  ன ர ல ள என்னும் அந் நான்கு என்ப
புள்ளி இறுதி விளி கொள் பெயரே.

616.  ஏனைப் புள்ளி ஈறு விளி கொள்ளா.

617.  அன் என் இறுதி ஆ ஆகும்மே.

618.  அண்மைச் சொல்லிற்கு அகரமும் ஆகும்.

619.  ஆன் என் இறுதி இயற்கை ஆகும்.

620.  தொழிலின் கூறும் ஆன் என் இறுதி
ஆய் ஆகும்மே விளிவயினான.

621.  பண்பு கொள் பெயரும் அதன் ஓரற்றே.

622.  அளபெடைப் பெயரே அளபெடை இயல.

623.  முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே.

624.  தான் என் பெயரும் சுட்டுமுதற் பெயரும்
யான் என் பெயரும் வினாவின் பெயரும்
அன்றி அனைத்தும் விளி கோள் இலவே.

625.  ஆரும் அருவும் ஈரொடு சிவணும்.

626.  தொழிற்பெயர் ஆயின் ஏகாரம் வருதலும்
வழுக்கு இன்று என்மனார் வயங்கியோரே.

627.  பண்பு கொள் பெயரும் அதன் ஓரற்றே.

628.  அளபெடைப் பெயரே அளபெடை இயல.

629.  சுட்டுமுதற் பெயரே முன் கிளந்தன்ன.

630.  நும்மின் திரிபெயர் வினாவின் பெயர் என்று
அம் முறை இரண்டும் அவற்று இயல்பு இயலும்.

631.  எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே
நின்ற ஈற்று அயல் நீட்டம் வேண்டும்.

632.  அயல் நெடிது ஆயின் இயற்கை ஆகும்.

633.  வினையினும் பண்பினும்
நினையத் தோன்றும் ஆள் என் இறுதி
ஆய் ஆகும்மே விளிவயினான.

634.  முறைப்பெயர்க் கிளவி முறைப்பெயர் இயல.

635.  சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும்
முன் கிளந்தன்ன என்மனார் புலவர்.

636.  அளபெடைப் பெயரே அளபெடை இயல.

637.  கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர்
விளம்பிய நெறிய விளிக்கும் காலை.

638.  புள்ளியும் உயிரும் இறுதி ஆகிய
அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும்
விளி நிலை பெறூஉம் காலம் தோன்றின்
தெளி நிலை உடைய ஏகாரம் வரலே.

639.  உள எனப்பட்ட எல்லாப் பெயரும்
அளபு இறந்தனவே விளிக்கும் காலை
சேய்மையின் இசைக்கும் வழக்கத்தான.

640.  அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்
அம் முறைப்பெயரொடு சிவணாது ஆயினும்
விளியொடு கொள்ப தெளியுமோரே.

641.  த ந நு எ என அவை முதல் ஆகித்
தன்மை குறித்த ன ர ள என் இறுதியும்
அன்ன பிறவும் பெயர் நிலை வரினே
இன்மை வேண்டும் விளியொடு கொளலே.

பெயரியல்  


642.  எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.

643.  பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்.

644.  தெரிபு வேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும்
இரு பாற்று என்ப பொருண்மை நிலையே.

645.  சொல் எனப்படுப பெயரே வினை என்று
ஆயிரண்டு என்ப அறிந்திசினோரே.

646.  இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்
அவற்று வழி மருங்கின் தோன்றும் என்ப.

647.  அவற்றுள்,
பெயர் எனப்படுபவை தெரியும் காலை
உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்
அம் மூ உருபின தோன்றல் ஆறே.

648.  இரு திணைப் பிரிந்த ஐம் பால் கிளவிக்கும்
உரியவை உரிய பெயர்வயினான.

649.  அவ்வழி,
அவன் இவன் உவன் என வரூஉம் பெயரும்
அவள் இவள் உவள் என வரூஉம் பெயரும்
அவர் இவர் உவர் என வரூஉம் பெயரும்
யான் யாம் நாம் என வரூஉம் பெயரும்
யாவன் யாவள் யாவர் என்னும்
ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்
பால் அறி வந்த உயர்திணைப் பெயரே.

650.  ஆண்மை அடுத்த மகன் என் கிளவியும்
பெண்மை அடுத்த மகள் என் கிளவியும்
பெண்மை அடுத்த இகர இறுதியும்
நம் ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரமும்
முறைமை சுட்டா மகனும் மகளும்
மாந்தர் மக்கள் என்னும் பெயரும்
ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயரும்
சுட்டு முதல் ஆகிய அன்னும் ஆனும்
அவை முதல் ஆகிய பெண்டு என் கிளவியும்
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ
அப் பதினைந்தும் அவற்று ஓரன்ன.

651.  எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
பெண்மை அடுத்த மகன் என் கிளவியும்
அன்ன இயல என்மனார் புலவர்.

652.  நிலப் பெயர் குடிப் பெயர் குழுவின் பெயரே
வினைப் பெயர் உடைப் பெயர் பண்பு கொள் பெயரே
பல்லோர்க் குறித்த முறை நிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த சினை நிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த திணை நிலைப் பெயரே
கூடி வரு வழக்கின் ஆடு இயற் பெயரே
இன்றிவர் என்னும் எண்ணியற் பெயரொடு
அன்றி அனைத்தும் அவற்று இயல்பினவே.

653.  அன்ன பிறவும் உயர்திணை மருங்கின்
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
என்ன பெயரும் அத் திணையவ்வே.

654.  அது இது உது என வரூஉம் பெயரும்
அவை முதல் ஆகிய ஆய்தப் பெயரும்
அவை இவை உவை என வரூஉம் பெயரும்
அவை முதல் ஆகிய வகரப் பெயரும்
யாது யா யாவை என்னும் பெயரும்
ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்
பால் அறி வந்த அஃறிணைப் பெயரே.

655.  பல்ல பல சில என்னும் பெயரும்
உள்ள இல்ல என்னும் பெயரும்
வினைப் பெயர்க் கிளவியும் பண்பு கொள் பெயரும்
இனைத்து எனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும்
ஒப்பின் ஆகிய பெயர்நிலை உளப்பட
அப் பால் ஒன்பதும் அவற்று ஓரன்ன.

656.  கள்ளொடு சிவணும் அவ் இயற்பெயரே
கொள் வழி உடைய பல அறி சொற்கே.

657.  அன்ன பிறவும் அஃறிணை மருங்கின்
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
என்ன பெயரும் அத் திணையவ்வே.

658.  தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே.

659.  இரு திணைச் சொற்கும் ஓரன்ன உரிமையின்
திரிபு வேறுபடூஉம் எல்லாப் பெயரும்
நினையும் காலை தம்தம் மரபின்
வினையொடு அல்லது பால் தெரிபு இலவே.

660.  நிக ழூஉ நின்ற பலர் வரை கிளவியின்
உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே
அன்ன மரபின் வினைவயினான.

661.  இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற்பெயரே
முறைப்பெயர்க் கிளவி தாமே தானே
எல்லாம் நீயிர் நீ எனக் கிளந்து
சொல்லிய அல்ல பிறவும் ஆஅங்கு
அன்னவை தோன்றின் அவற்றொடும் கொளலே.

662.  அவற்றுள்,
நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர்
நான்கு என மொழிமனார் சினைமுதற்பெயரே
முறைப்பெயர்க் கிளவி இரண்டு ஆகும்மே
ஏனைப் பெயரே தம்தம் மரபின.

663.  அவைதாம்,
பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர்
பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயர் என்று
அந் நான்கு என்ப இயற்பெயர் நிலையே.

664.  பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர்
பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயர் என்று
அந் நான்கு என்ப சினைப்பெயர் நிலையே.

665.  பெண்மை சுட்டிய சினைமுதற்பெயரே
ஆண்மை சுட்டிய சினைமுதற்பெயரே
பன்மை சுட்டிய சினைமுதற்பெயரே
ஒருமை சுட்டிய சினைமுதற்பெயர் என்று
அந் நான்கு என்ப சினைமுதற்பெயரே.

666.  பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் என்று
ஆயிரண்டு என்ப முறைப்பெயர் நிலையே.

667.  பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே.

668.  ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே.

669.  பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றே பலவே ஒருவர் என்னும்
என்று இப் பாற்கும் ஓரன்னவ்வே.

670.  ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே.

671.  தாம் என் கிளவி பன்மைக்கு உரித்தே.

672.  தான் என் கிளவி ஒருமைக்கு உரித்தே.

673.  எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி
பல்வழி நுதலிய நிலைத்து ஆகும்மே

674.  தன் உள்ளுறுத்த பன்மைக்கு அல்லது
உயர்திணை மருங்கின் ஆக்கம் இல்லை.

675.  நீயிர் நீ என வரூஉம் கிளவி
பால் தெரிபு இலவே உடன் மொழிப் பொருள.

676.  அவற்றுள்,
நீ என் கிளவி ஒருமைக்கு உரித்தே.

677.  ஏனைக் கிளவி பன்மைக்கு உரித்தே.

678.  ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி
இரு பாற்கும் உரித்தே தெரியும் காலை.

679.  தன்மை சுட்டின் பன்மைக்கு ஏற்கும்.

680.  இன்ன பெயரே இவை எனல் வேண்டின்
முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல்.

681.  மகடூஉ மருங்கின் பால் திரி கிளவி
மகடூஉ இயற்கை தொழில்வயினான.

682.  ஆ ஓ ஆகும் பெயருமார் உளவே
ஆயிடன் அறிதல் செய்யுளுள்ளே.

683.  இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும்
இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா
நிலத்துவழி மருங்கின் தோன்றலான.

684.  திணையொடு பழகிய பெயர் அலங்கடையே.

வினையியல்  


685.  வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையும் காலை காலமொடு தோன்றும்.

686.  காலம்தாமே மூன்று என மொழிப.

687.  இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்
மெய்ந் நிலை உடைய தோன்றலாறே.

688.  குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்
உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்
அம் மூ உருபின தோன்றலாறே.

689.  அவைதாம்,
அம் ஆம் எம் ஏம் என்னும் கிளவியும்
உம்மொடு வரூஉம் க ட த ற என்னும்
அந் நாற் கிளவியொடு ஆயெண் கிளவியும்
பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே.

690.  க ட த ற என்னும்
அந் நான்கு ஊர்ந்த குன்றியலுகரமொடு
ஏன் அல் என வரூஉம் ஏழும்
தன் வினை உரைக்கும் தன்மைச் சொல்லே.

691.  அவற்றுள்,
செய்கு என் கிளவி வினையொடு முடியினும்
அவ் இயல் திரியாது என்மனார் புலவர்.

692.  அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும்
ஒருவர் மருங்கின் படர்க்கைச் சொல்லே.

693.  அர் ஆர் ப என வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கின் படர்க்கைச் சொல்லே.

694.  மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
காலக் கிளவியொடு முடியும் என்ப.

695.  பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
அந் நால் ஐந்தும் மூன்று தலை இட்ட
முன்னுறக் கிளந்த உயர்திணையவ்வே.

696.  அவற்றுள்,
பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி
எண் இயல் மருங்கின் திரிபவை உளவே.

697.  யாஅர் என்னும் வினாவின் கிளவி
அத் திணை மருங்கின் முப் பாற்கும் உரித்தே.

698.  பால் அறி மரபின் அம் மூ ஈற்றும்
ஆ ஓ ஆகும் செய்யுளுள்ளே.

699.  ஆய் என் கிளவியும் அவற்றொடு கொள்ளும்.

700.  அதுச் சொல் வேற்றுமை உடைமையானும்
கண் என் வேற்றுமை நிலத்தினானும்
ஒப்பினானும் பண்பினானும் என்று
அப் பால் காலம் குறிப்பொடு தோன்றும்.

701.  அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின்
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியும் குறிப்பே காலம்.

702.  பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி உயர்திணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே.

703.  அ ஆ வ என வரூஉம் இறுதி
அப் பால் மூன்றே பலவற்றுப் படர்க்கை.

704.  ஒன்றன் படர்க்கை த ற ட ஊர்ந்த
குன்றியலுகரத்து இறுதி ஆகும்.

705.  பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
அம் மூ இரண்டும் அஃறிணையவ்வே.

706.  அத் திணை மருங்கின் இரு பால் கிளவிக்கும்
ஒக்கும் என்ப எவன் என் வினாவே.

707.  இன்று இல உடைய என்னும் கிளவியும்
அன்று உடைத்து அல்ல என்னும் கிளவியும்
பண்பு கொள் கிளவியும் உள என் கிளவியும்
பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும்
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ
அப் பால் பத்தும் குறிப்பொடு கொள்ளும்.

708.  பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி அஃறிணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே.

709.  முன்னிலை வியங்கோள் வினையெஞ்சுகிளவி
இன்மை செப்பல் வேறு என் கிளவி
செய்ம்மன செய்யும் செய்த என்னும்
அம் முறை நின்ற ஆயெண் கிளவியும்
திரிபு வேறுபடூஉம் செய்திய ஆகி
இரு திணைச் சொற்கும் ஓரன்ன உரிமைய.

710.  அவற்றுள்,
முன்னிலைக் கிளவி
இ ஐ ஆய் என வரூஉம் மூன்றும்
ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும்.

711.  இர் ஈர் மின் என வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்
சொல் ஓரனைய என்மனார் புலவர்.

712.  எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி
ஐம் பாற்கும் உரிய தோன்றல் ஆறே.

713.  அவற்றுள்,
முன்னிலை தன்மை ஆயீர் இடத்தொடு
மன்னாது ஆகும் வியங்கோட் கிளவி.

714.  பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ் வயின் மூன்றும் நிகழும் காலத்துச்
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா.

715.  செய்து செய்யூ செய்பு செய்தென
செய்யியர் செய்யிய செயின் செய செயற்கு என
அவ் வகை ஒன்பதும் வினையெஞ்சுகிளவி.

716.  பின் முன் கால் கடை வழி இடத்து என்னும்
அன்ன மரபின் காலம் கண்ணிய
என்ன கிளவியும் அவற்று இயல்பினவே.

717.  அவற்றுள்,
முதல் நிலை மூன்றும் வினைமுதல் முடிபின.

718.  அம் முக் கிளவியும் சினை வினை தோன்றின்
சினையொடு முடியா முதலொடு முடியினும்
வினை ஓரனைய என்மனார் புலவர்.

719.  ஏனை எச்சம் வினைமுதலானும்
ஆன் வந்து இயையும் வினைநிலையானும்
தாம் இயல் மருங்கின் முடியும் என்ப.

720.  பல் முறையானும் வினையெஞ்சுகிளவி
சொல் முறை முடியாது அடுக்குந வரினும்
முன்னது முடிய முடியுமன் பொருளே.

721.  நிலனும் பொருளும் காலமும் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
அவ் அறு பொருட்கும் ஓரன்ன உரிமைய
செய்யும் செய்த என்னும் சொல்லே.

722.  அவற்றொடு வரு வழி செய்யும் என் கிளவி
முதற்கண் வரைந்த மூ ஈற்றும் உரித்தே.

723.  பெயரெஞ்சுகிளவியும் வினையெஞ்சுகிளவியும்
எதிர் மறுத்து மொழியினும் பொருள் நிலை திரியா.

724.  தம்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின்
எச் சொல் ஆயினும் இடைநிலை வரையார்.

725.  அவற்றுள்,
செய்யும் என்னும் பெயரெஞ்சுகிளவிக்கு
மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம்
அவ் இடன் அறிதல் என்மனார் புலவர்.

726.  செய்து என் எச்சத்து இறந்த காலம்
எய்து இடன் உடைத்தே வாராக் காலம்.

727.  முந் நிலைக் காலமும் தோன்றும் இயற்கை
எம் முறைச் சொல்லும் நிகழும் காலத்து
மெய்ந் நிலைப் பொதுச் சொல் கிளத்தல் வேண்டும்.

728.  வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள என்மனார் புலவர்.

729.  மிக்கதன் மருங்கின் வினைச்சொல் சுட்டி
அப் பண்பு குறித்த வினைமுதற் கிளவி
செய்வது இல் வழி நிகழும் காலத்து
மெய் பெறத் தோன்றும் பொருட்டு ஆகும்மே.

730.  இது செயல் வேண்டும் என்னும் கிளவி
இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே
தன் பாலானும் பிறன் பாலானும்.

731.  வன்புற வரூஉம் வினா உடை வினைச்சொல்
எதிர் மறுத்து உணர்த்துதற்கு உரிமையும் உடைத்தே.

732.  வாராக் காலத்து வினைச்சொல் கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்
இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை.

733.  செயப்படுபொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கு இயல் மரபே.

734.  இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்
சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி.

735.  ஏனைக் காலமும் மயங்குதல் வரையார்.


இடையியல்  


736.  இடை எனப்படுப பெயரொடும் வினையொடும்
நடைபெற்று இயலும் தமக்கு இயல்பு இலவே.

737.  அவைதாம்,
புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதநவும்
வினை செயல் மருங்கின் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபு ஆகுநவும்
அசைநிலை கிளவி ஆகி வருநவும்
இசைநிறைக் கிளவி ஆகி வருநவும்
தம்தம் குறிப்பின் பொருள் செய்குநவும்
ஒப்பு இல் வழியான் பொருள் செய்குநவும் என்று
அப் பண்பினவே நுவலும் காலை.

738.  அவைதாம்,
முன்னும் பின்னும் மொழி அடுத்து வருதலும்
தம் ஈறு திரிதலும் பிறிது அவண் நிலையலும்
அன்னவை எல்லாம் உரிய என்ப.

739.  கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று
அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே.

740.  விழைவே காலம் ஒழியிசைக் கிளவி என்று
அம் மூன்று என்ப தில்லைச் சொல்லே.

741.  அச்சம் பயம் இலி காலம் பெருமை என்று
அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே.

742.  எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை
முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம் என்று
அப் பால் எட்டே உம்மைச் சொல்லே.

743.  பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ
இரு மூன்று என்ப ஓகாரம்மே.

744.  தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே
ஈற்றசை இவ் ஐந்து ஏகாரம்மே.

745.  வினையே குறிப்பே இசையே பண்பே
எண்ணே பெயரொடு அவ் அறு கிளவியும்
கண்ணிய நிலைத்தே என என் கிளவி.

746.  என்று என் கிளவியும் அதன் ஓரற்றே.

747.  விழைவின் தில்லை தன்னிடத்து இயலும்.

748.  தெளிவின் ஏயும் சிறப்பின் ஓவும்
அளபின் எடுத்த இசைய என்ப.

749.  மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை
அப் பால் இரண்டு என மொழிமனார் புலவர்.

750.  எற்று என் கிளவி இறந்த பொருட்டே.

751.  மற்றையது என்னும் கிளவிதானே
சுட்டு நிலை ஒழிய இனம் குறித்தன்றே.

752.  மன்ற என் கிளவி தேற்றம் செய்யும்.

753.  தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே.

754.  அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவி என்று
ஆயிரண்டு ஆகும் இயற்கைத்து என்ப.

755.  கொல்லே ஐயம்.

756.  எல்லே இலக்கம்.

757.  இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி
பலர்க்கு உரி எழுத்தின் வினையொடு முடிமே.

758.  அசைநிலைக் கிளவி ஆகு வழி அறிதல்.

759.  ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை
ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப.

760.  மா என் கிளவி வியங்கோள் அசைச்சொல்.

761.  மியா இக மோ மதி இகும் சின் என்னும்
ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்.

762.  அவற்றுள்,
இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும்
தகு நிலை உடைய என்மனார் புலவர்.

763.  அம்ம கேட்பிக்கும்.

764.  ஆங்க உரையசை.

765.  ஒப்பு இல் போலியும் அப் பொருட்டு ஆகும்.

766.  யா கா
பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம்
ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி.

767.  ஆக ஆகல் என்பது என்னும்
ஆவயின் மூன்றும் பிரிவு இல் அசைநிலை.

768.  ஈர் அளபு இசைக்கும் இறுதியில் உயிரே
ஆயியல் நிலையும் காலத்தானும்
அளபெடை நிலையும் காலத்தானும்
அளபெடை இன்றித் தான் வரும் காலையும்
உள என மொழிப பொருள் வேறுபடுதல்
குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும்.

769.  நன்று ஈற்று ஏயும் அன்று ஈற்று ஏயும்
அந்து ஈற்று ஓவும் அன் ஈற்று ஓவும்
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்.

770.  எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும்
தத்தமுள் மயங்கும் உடனிலை இலவே.

771.  எஞ்சுபொருட் கிளவி செஞ்சொல் ஆயின்
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்.

772.  முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின்
எச்சக் கிளவி உரித்தும் ஆகும்.

773.  ஈற்று நின்று இசைக்கும் ஏ என் இறுதி
கூற்றுவயின் ஒர் அளபு ஆகலும் உரித்தே.

774.  உம்மை எண்ணும் என என் எண்ணும்
தம்வயின் தொகுதி கடப்பாடு இலவே.

775.  எண் ஏகாரம் இடையிட்டுக் கொளினும்
எண்ணுக் குறித்து இயலும் என்மனார் புலவர்.

776.  உம்மை தொக்க எனா என் கிளவியும்
ஆ ஈறு ஆகிய என்று என் கிளவியும்
ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன.

777.  அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும்
பெயர்க்கு உரி மரபின் செவ்வெண் இறுதியும்
ஏயின் ஆகிய எண்ணின் இறுதியும்
யாவயின் வரினும் தொகை இன்று இயலா.

778.  உம்மை எண்ணின் உருபு தொகல் வரையார்.

779.  உம் உந்து ஆகும் இடனுமார் உண்டே.

780.  வினையொடு நிலையினும் எண்ணு நிலை திரியா
நினையல் வேண்டும் அவற்று அவற்று இயல்பே.

781.  என்றும் எனவும் ஒடுவும் தோன்றி
ஒன்று வழி உடைய எண்ணினுள் பிரிந்தே.

782.  அவ் அச் சொல்லிற்கு அவை அவை பொருள் என
மெய் பெறக் கிளந்த இயல ஆயினும்
வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றி
திரிந்து வேறு வரினும் தெரிந்தனர் கொளலே.

783.  கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும்
கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே.

உரியியல் 


784.  உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை
இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி
பெயரினும் வினையினும் மெய் தடுமாறி
ஒரு சொல் பல பொருட்கு உரிமை தோன்றினும்
பல சொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும்
பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி
தம்தம் மரபின் சென்று நிலை மருங்கின்
எச் சொல் ஆயினும் பொருள் வேறு கிளத்தல்.

785.  வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன.

786.  அவைதாம்,
உறு தவ நனி என வரூஉம் மூன்றும்
மிகுதி செய்யும் பொருள என்ப.

787.  உரு உட்கு ஆகும் புரை உயர்பு ஆகும்.

788.  குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே.

789.  சல்லல் இன்னல் இன்னாமையே.

790.  மல்லல் வளனே ஏ பெற்று ஆகும்.

791.  உகப்பே உயர்தல் உவப்பே உவகை.

792.  பயப்பே பயன் ஆம்.

793.  பசப்பு நிறன் ஆகும்.

794.  இயைபே புணர்ச்சி.

795.  இசைப்பு இசை ஆகும்.

796.  அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி.

797.  மழவும் குழவும் இளமைப் பொருள.

798.  சீர்த்தி மிகு புகழ் மாலை இயல்பே.

799.  கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும்.

800.  கதழ்வும் துனைவும் விரைவின் பொருள.

801.  அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்.

802.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள.

803.  தீர்தலும் தீர்த்தலும் விடல் பொருட்டு ஆகும்.

804.  கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு.

805.  தடவும் கயவும் நளியும் பெருமை.

806.  அவற்றுள்,
தட என் கிளவி கோட்டமும் செய்யும்.

807.  கய என் கிளவி மென்மையும் செய்யும்.

808.  நளி என் கிளவி செறிவும் ஆகும்.

809.  பழுது பயம் இன்றே.

810.  சாயல் மென்மை.

811.  முழுது என் கிளவி எஞ்சாப் பொருட்டே.

812.  வம்பு நிலை இன்மை.

813.  மாதர் காதல்.

814.  நம்பும் மேவும் நசை ஆகும்மே.

815.  ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்.

816.  புலம்பே தனிமை.

817.  துவன்று நிறைவு ஆகும்.

818.  முரஞ்சல் முதிர்வே.

819.  வெம்மை வேண்டல்.

820.  பொற்பே பொலிவு.

821.  வறிது சிறிது ஆகும்.

822.  எற்றம் நினைவும் துணிவும் ஆகும்.

823.  பிணையும் பேணும் பெட்பின் பொருள.

824.  பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும்.

825.  படரே உள்ளல் செலவும் ஆகும்.

826.  பையுளும் சிறுமையும் நோயின் பொருள.

827.  எய்யாமையே அறியாமையே.

828.  நன்று பெரிது ஆகும்.

829.  தாவே வலியும் வருத்தமும் ஆகும்

830.  தெவுக் கொளல் பொருட்டே.

831.  தெவ்வுப் பகை ஆகும்.

832.  விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே.

833.  அவற்றுள்,
விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும்.

834.  கம்பலை சும்மை கலியே அழுங்கல்
என்று இவை நான்கும் அரவப் பொருள.

835.  அவற்றுள்,
அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்.

836.  கழும் என் கிளவி மயக்கம் செய்யும்.

837.  செழுமை வளனும் கொழுப்பும் ஆகும்.

838.  விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்.

839.  கருவி தொகுதி.

840.  கம நிறைந்து இயலும்.

841.  அரியே ஐம்மை.

842.  கவவு அகத்திடுமே.

843.  துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும்
இசைப் பொருட் கிளவி என்மனார் புலவர்.

844.  அவற்றுள்,
இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும்.

845.  இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை.

846.  ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள.

847.  கவர்வு விருப்பு ஆகும்.

848.  சேரே திரட்சி.

849.  வியல் என் கிளவி அகலப் பொருட்டே.

850.  பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி
ஆ முறை மூன்றும் அச்சப் பொருள.

851.  வய வலி ஆகும்.

852.  வாள் ஒளி ஆகும்.

853.  துய என் கிளவி அறிவின் திரிபே.

854.  உயாவே உயங்கல்.

855.  உசாவே சூழ்ச்சி.

856.  வயா என் கிளவி வேட்கைப் பெருக்கம்.

857.  கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள.

858.  நிறத்து உரு உணர்த்தற்கும் உரிய என்ப.

859.  நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை.

860.  புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே.

861.  நனவே களனும் அகலமும் செய்யும்.

862.  மதவே மடனும் வலியும் ஆகும்.

863.  மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே.

864.  புதிதுபடல் பொருட்டே யாணர்க் கிளவி.

865.  அமர்தல் மேவல்.

866.  யாணுக் கவின் ஆம்.

867.  பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள.

868.  கடி என் கிளவி
வரைவே கூர்மை காப்பே புதுமை
விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே
அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும்
மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே.

869.  ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே.

870.  ஐ வியப்பு ஆகும்.

871.  முனைவு முனிவு ஆகும்.

872.  வையே கூர்மை.

873.  எறுழ் வலி ஆகும்.

874.  மெய் பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம்
முன்னும் பின்னும் வருபவை நாடி
ஒத்த மொழியான் புணர்த்தனர் உணர்த்தல்
தம்தம் மரபின் தோன்றும்மன் பொருளே.

875.  கூறிய கிளவிப் பொருள் நிலை அல்ல
வேறு பிற தோன்றினும் அவற்றொடு கொளலே.

876.  பொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பு இன்றே

877.  பொருட்குத் திரிபு இல்லை உணர்த்த வல்லின்.

878.  உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே.

879.  மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா.

880.  எழுத்துப் பிரிந்து இசைத்தல் இவண் இயல்பு இன்றே

881.  அன்ன பிறவும் கிளந்த அல்ல
பல் முறையானும் பரந்தன வரூஉம்
உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட
இயன்ற மருங்கின் இனைத்து என அறியும்
வரம்பு தமக்கு இன்மையின் வழி நனி கடைப்பிடித்து
ஓம்படை ஆணையின் கிளந்தவற்று இயலான்
பாங்குற உணர்தல் என்மனார் புலவர்.

எச்சவியல்


882.  இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.

883.  அவற்றுள்,
இயற்சொல்தாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி
தம் பொருள் வழாமை இசைக்கும் சொல்லே.

884.  ஒரு பொருள் குறித்த வேறு சொல் ஆகியும்
வேறு பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்
இரு பாற்று என்ப திரிசொல் கிளவி.

885.  செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி.

886.  வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.

887.  சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்.

888.  அந் நாற் சொல்லும் தொடுக்கும் காலை
வலிக்கும் வழி வலித்தலும் மெலிக்கும் வழி மெலித்தலும்
விரிக்கும் வழி விரித்தலும் தொகுக்கும் வழித் தொகுத்தலும்
நீட்டும் வழி நீட்டலும் குறுக்கும் வழிக் குறுக்கலும்
நாட்டல் வலிய என்மனார் புலவர்.

889.  நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று
அவை நான்கு என்ப மொழி புணர் இயல்பே.

890.  அவற்றுள்,
நிரல்நிறைதானே
வினையினும் பெயரினும் நினையத் தோன்றி
சொல் வேறு நிலைஇ பொருள் வேறு நிலையல்.

891.  சுண்ணம்தானே
பட்டாங்கு அமைந்த ஈர் அடி எண் சீர்
ஒட்டு வழி அறிந்து துணித்தனர் இயற்றல்.

892.  அடிமறிச் செய்தி அடி நிலை திரிந்து
சீர் நிலை திரியாது தடுமாறும்மே.

893.  பொருள் தெரி மருங்கின்
ஈற்று அடி இறு சீர் எருத்துவயின் திரியும்
தோற்றமும் வரையார் அடிமறியான.

894.  மொழிமாற்று இயற்கை
சொல் நிலை மாற்றி பொருள் எதிர் இயைய
முன்னும் பின்னும் கொள் வழிக் கொளாஅல்.

895.  த ந நு எ எனும் அவை முதல் ஆகிய
கிளை நுதற் பெயரும் பிரிப்பப் பிரியா.

896.  இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தல் என்று
அவை மூன்று என்ப ஒரு சொல் அடுக்கே.

897.  வேற்றுமைத்தொகையே உவமத்தொகையே
வினையின்தொகையே பண்பின்தொகையே
உம்மைத்தொகையே அன்மொழித்தொகை என்று
அவ் ஆறு என்ப தொகைமொழி நிலையே.

898.  அவற்றுள்,
வேற்றுமைத்தொகையே வேற்றுமை இயல.

899.  உவமத்தொகையே உவம இயல.

900.  வினையின்தொகுதி காலத்து இயலும்.

901.  வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையின் என்று
அன்ன பிறவும் அதன் குணம் நுதலி
இன்னது இது என வரூஉம் இயற்கை
என்ன கிளவியும் பண்பின்தொகையே.

902.  இரு பெயர் பல பெயர் அளவின்பெயரே
எண்ணியற்பெயரே நிறைப்பெயர்க் கிளவி
எண்ணின்பெயரொடு அவ் அறு கிளவியும்
கண்ணிய நிலைத்தே உம்மைத்தொகையே.

903.  பண்பு தொக வரூஉம் கிளவியானும்
உம்மை தொக்க பெயர்வயினானும்
வேற்றுமை தொக்க பெயர்வயினானும்
ஈற்று நின்று இயலும் அன்மொழித்தொகையே.

904.  அவைதாம்,
முன் மொழி நிலையலும் பின் மொழி நிலையலும்
இரு மொழி மேலும் ஒருங்குடன் நிலையலும்
அம் மொழி நிலையாது அல் மொழி நிலையலும்
அந் நான்கு என்ப பொருள் நிலை மரபே.

905.  எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய.

906.  உயர்திணை மருங்கின் உம்மைத்தொகையே
பலர்சொல் நடைத்து என மொழிமனார் புலவர்.

907.  வாரா மரபின வரக் கூறுதலும்
என்னா மரபின எனக் கூறுதலும்
அன்னவை எல்லாம் அவற்று அவற்று இயல்பான்
இன்ன என்னும் குறிப்புரை ஆகும்.

908.  இசைப் படு பொருளே நான்கு வரம்பு ஆகும்.

909.  விரை சொல் அடுக்கே மூன்று வரம்பு ஆகும்.

910.  கண்டீர் என்றா கொண்டீர் என்றா
சென்றது என்றா போயிற்று என்றா
அன்றி அனைத்தும் வினாவொடு சிவணி
நின்ற வழி அசைக்கும் கிளவி என்ப.

911.  கேட்டை என்றா நின்றை என்றா
காத்தை என்றா கண்டை என்றா
அன்றி அனைத்தும் முன்னிலை அல் வழி
முன்னுறக் கிளந்த இயல்பு ஆகும்மே.

912.  இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்ற
சிறப்புடை மரபின் அம் முக் காலமும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம் மூ இடத்தான் வினையினும் குறிப்பினும்
மெய்ம்மையானும் இவ் இரண்டு ஆகும்
அவ் ஆறு என்ப முற்று இயல் மொழியே.

913.  எவ் வயின் வினையும் அவ் இயல் நிலையும்.

914.  அவைதாம்,
தம்தம் கிளவி அடுக்குந வரினும்
எத் திறத்தானும் பெயர் முடிபினவே.

915.  பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை
எதிர்மறை உம்மை எனவே சொல்லே
குறிப்பே இசையே ஆயீர் ஐந்தும்
நெறிப்படத் தோன்றும் எஞ்சு பொருட் கிளவி.

916.  அவற்றுள்,
பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின.

917.  வினையெஞ்சுகிளவிக்கு வினையும் குறிப்பும்
நினையத் தோன்றிய முடிபு ஆகும்மே
ஆவயின் குறிப்பே ஆக்கமொடு வருமே.

918.  பெயரெஞ்சுகிளவி பெயரொடு முடிமே.

919.  ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின.

920.  எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின.

921.  உம்மை எச்சம் இரு ஈற்றானும்
தன் வினை ஒன்றிய முடிபு ஆகும்மே.

922.  தன்மேல் செஞ்சொல் வரூஉம் காலை
நிகழும் காலமொடு வாராக் காலமும்
இறந்த காலமொடு வாராக் காலமும்
மயங்குதல் வரையார் முறைநிலையான.

923.  என என் எச்சம் வினையொடு முடிமே.

924.  எஞ்சிய மூன்றும் மேல் வந்து முடிக்கும்
எஞ்சு பொருட் கிளவி இல என மொழிப.

925.  அவைதாம்,
தம்தம் குறிப்பின் எச்சம் செப்பும்.

926.  சொல் என் எச்சம் முன்னும் பின்னும்
சொல் அளவு அல்லது எஞ்சுதல் இன்றே.

927.  அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்.

928.  மறைக்கும் காலை மரீஇயது ஒராஅல்.

929.  ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகு இடன் உடைய.

930.  அவற்றுள்,
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே.

931.  தா என் கிளவி ஒப்போன் கூற்றே.

932.  கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே.

933.  கொடு என் கிளவி படர்க்கை ஆயினும்
தன்னைப் பிறன் போல் கூறும் குறிப்பின்
தன்னிடத்து இயலும் என்மனார் புலவர்.

934.  பெயர்நிலைக் கிளவியின் ஆஅகுநவும்
திசைநிலை கிளவியின் ஆஅகுநவும்
தொல் நெறி மொழிவயின் ஆஅகுநவும்
மெய்ந் நிலை மயக்கின் ஆஅகுநவும்
மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும்
அன்றி அனைத்தும் கடப்பாடு இலவே.

935.  செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்
செய் என் கிளவி ஆகு இடன் உடைத்தே.

936.  முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்
அந் நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே.

937.  கடி சொல் இல்லை காலத்துப் படினே.

938.  குறைச்சொற் கிளவி குறைக்கும் வழி அறிதல்.

939.  குறைத்தன ஆயினும் நிறைப் பெயர் இயல.

940.  இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே.

941.  உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய.

942.  வினையெஞ்சுகிளவியும் வேறு பல் குறிய.

943.  உரையிடத்து இயலும் உடனிலை அறிதல்.

944.  முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே
இன்ன என்னும் சொல் முறையான.

945.  ஒரு பொருள் இரு சொல் பிரிவு இல வரையார்.

946.  ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி
பன்மைக்கு ஆகும் இடனுமார் உண்டே.

947.  முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி
பன்மையொடு முடியினும் வரை நிலை இன்றே
ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும்.

948.  செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்
மெய் பெறக் கிளந்த கிளவி எல்லாம்
பல் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
சொல் வரைந்து அறிய பிரித்தனர் காட்டல்.