ஏலாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏலாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஏலாதி

 கடவுள் வாழ்த்து



அறு நால்வர் ஆய் புகழ்ச் சேவடி ஆற்றப்
பெறு நால்வர் பேணி வழங்கிப் பெறும் நான் -
மறை புரிந்து வாழுமேல், மண் ஒழிந்து, விண்ணோர்க்கு
இறை புரிந்து வாழ்தல் இயல்பு.



மந்திரி முதலிய இருபத்து நால்வரும் குற்றமற்றபுகழமைந்த தனது சிவந்த பாதங்களாலிட்ட பணியைச்செய்யாநிற்க, ஒழுக்கத்தின் பயனைப் பெறுகின்றபிரமச்சாரி முதலிய நால்வர் விரும்பிய பொருளைக்கொடுத்துக் கற்றுணர்ந்தடைந்த நான்மறையொழுக்கத்தை விரும்பி நடந்து ஒருவன்வாழ்வானானால், பூமியினின்று நீங்கித் தேவர்க்குஅரசனாகிய இந்திரனால் விரும்பப்பட்டு வாழ்தல்உண்மையாம்.

நூல்


சென்ற புகழ், செல்வம், மீக்கூற்றம், சேவகம்
நின்ற நிலை, கல்வி, வள்ளன்மை, - என்றும்
அளி வந்து ஆர் பூங் கோதாய்!-ஆறும் மறையின்
வழிவந்தார்கண்ணே வனப்பு.
1


நிறைந்த பூவையணிந்த கூந்தலையுடையாய்! திசையெங்கும் பரந்த புகழ், செல்வம், மேன்மையாகக் கொள்ளுஞ் சொல், வீரத்தில் அசையாது நின்ற நிலை, கல்வி, வரையாது கொடுத்தல் ஆகிய இவ்வாறும் தொன்மையுடைய குடிப்பிறந்து திருநான்மறை நெறியிலொழுகுவோரது இலக்கணம்,

கருத்து: புகழ் முதலிய ஆறும் நற்குடியிற் பிறந்து நான்மறையொழுக்கம் உடையாரிடத்திலேயே அழகு பெறும்.

கொலை புரியான், கொல்லான், புலால் மயங்கான், கூர்த்த
அலைபுரியான், வஞ்சியான், யாதும் நிலை திரியான்,
மண்ணவர்க்கும் அன்றி, - மது மலி பூங் கோதாய்!-
விண்ணவர்க்கும் மேலாய்விடும்.
2


தேன் பொழியும் பூவை யணிந்த கூந்தலையுடையாய்! பிறர் புரியுங் கொலைத்தொழிலை விரும்பாதவனும், கொல்லாதவனும், தசையை அறிவு மயங்கித் தின்னாதவனும், மிகுந்த வருத்துந் தொழிலைச் செய்யாதவனும், பொய்யொழுக்கமில்லாதவனும், யாது காரணம் பற்றியும் தன்னிலைமையினின்று விலகாதவனும், பூவுலகத்தாரது வணக்கத்துக் குரியனாவதுடன் வானுலகத்தார் வணக்கத்துக்கும் உரியவனாவது திண்ணம்.

கருத்து: கொலை விரும்பாமை முதலிய ஆறு நல்லியல்புகளையுமுடையவன் மக்கட்குந் தேவர்க்குந் தலைவனாவான்.

தவம் எளிது; தானம் அரிது; தக்கார்க்கேல்,
அவம் அரிது; ஆதல் எளிதால்; அவம் இலா
இன்பம் பிறழின், இயைவு எளிது; மற்று அதன்
துன்பம் துடைத்தல் அரிது.
3


யாவர்க்குந் தவஞ் செய்தல் எளிது, கைப்பொருள் வழங்கல் அரிது பெரியோர்க்குக் குற்றத்துக்குள்ளாதல் அரிது; நன்னெறியி லொழுகுதல் எளிது. கெடுதலில்லாத இன்பநெறி தடுமாறிச் சென்றால்பிறப்பிற் பொருந்துதல் எளிது. அவ்வாறு பிறந்ததின்கணுண்டாகுந் துன்பத்தை நீக்கிக் கொள்ளுதல் அரிது.

கருத்து: மக்கட்குத் தவம் எளிது, ஈகை அரிது; தக்கார்க்குத் தீமை அரிது, நன்மை எளிது; திருவருள் நெறி தவறின் பிறவி எளிது; ஆனால் அதன் நீக்கம் அரிது.

இடர் தீர்த்தல், எள்ளாமை, கீழ் இனம் சேராமை,
படர் தீர்த்தல் யார்க்கும், பழிப்பின் நடை தீர்த்தல்,
கண்டவர் காமுறும் சொல், - காணின், கலவியின்கண்
விண்டவர் நூல் வேண்டாவிடும்.
4


பிறர்க்கு நேரிட்ட துன்பந் துடைத்தலும், பிறரை இகழாமையும், கீழ்மக்களோடு பழகாமையும், யாவர்க்கும் பசித்துன்பம் போக்குதலும், உலகம் பழிக்கும் நடையினின்று நீங்குதலும், தன்னை யெதிர்ப்பட்டவர் விரும்பும் இன்சொல்லும் ஒருவன் தானே கண்டுகொண்டானெனில் கற்றறிந்தோராற் சொல்லப்பட்ட நூல்களைப் பார்த்து அறிய வேண்டிய பொருள் ஒன்றுமில்லாதவன் ஆவன்.

கருத்து: இடர் தீர்த்தல் முதலிய ஒழுக்கங்களையுடையவன் கற்றவர்க்கு ஒப்பாவான்.

தனக்கு என்றும், ஓர் பாங்கன், பொய்யான்; மெய் ஆக்கும்;
எனக்கு என்று இயையான், யாது ஒன்றும்; புனக் கொன்றை
போலும் இழையார் சொல் தேறான்; களியானேல்; -
சாலும், பிற நூலின் சார்பு.
5


தனக்கென்றும் தன்னைச் சார்ந்தவனுக்கென்றும் பொய்யுரையாதவனாய், உண்மையையே யுரைப்பவனாய், யாதொரு பொருளையும் எனக்குரியதென அன்பு வையாதவனாய், முல்லை நிலத்திலுள்ள கொன்றை மலரை ஒக்கும் அணிகளையணியும் மாதர் சொல்லைப் பேணாதவனாய், செல்வச் செருக்கில்லாதவனாய் ஒருவன் வாழ்வானாயின், அவனிடத்து அறநூல்களிற் கூறப்பட்ட மேன்மையான பொருள்களெல்லாம் வந்து நிரம்பும்.

கருத்து: பொய்யாமை முதலியன உடையானுக்கு நூல்களால் உணர்தற்குரிய ஏனைய நல்லியல்புகளுந் தாமே வந்து நிரம்பும்.


நிறை உடைமை, நீர்மை உடைமை, கொடையே,
பொறை உடைமை, பொய்ம்மை, புலாற்கண் மறை உடைமை,
வேய் அன்ன தோளாய்! - இவை உடையான் பல் உயிர்க்கும்
தாய் அன்னன் என்னத் தகும்.
6


மூங்கிலையொத்த தோளையுடையவளே! புலன்வழி போகாது தன் மனதை நிறுத்தலுடைமையும், நற்குணமுடையனாதலும் ஈதலும் பொறுமையோடிருத்தலும், பொய்கூற விடாது தன்னை யடக்குதலும், ஊன் தின்னவிடாது தன்னையடக்குதலும் ஆகிய இவ்வாறும் பொருந்திய ஒருவன், பல உயிர்கட்கும் தாயினது அன்புபோலும் அன்பினையுடையவன் என்று யாவருஞ் சொல்லத்தகுந்தவன் ஆவன்.

கருத்து: நிறையுடைமை முதலியன உடையவன் பல்லுயிர்கட்கும் நன்மை செய்பவ னாவான்.

இன்சொல், அளாவல், இடம், இனிது ஊண், யாவர்க்கும்
வன்சொல் களைந்து, வகுப்பானேல் மென் சொல், -
முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய்! - நாளும்
விருந்து ஏற்பர், விண்ணோர் விரைந்து.
7


மிருதுவாகிய சொல்லையும் மயிற்பீலியினது அடியையொத்து விளங்கும் கூரிய பல்லையுமுடையாய்! தன் மனை நோக்கி வரும் விருந்தினர் யாவரிடத்தும் இன்சொற் கூறலும், கலந்துறவாடலும், இருக்கையுதவலும், அறுசுவை யுண்டியளித்தலும் செய்து, கடுஞ்சொலொழித்து மென்சொல் வழங்கிச் சிறப்பிப்பானாயின் எக்காலமும் அவனை வானோர் விருந்தினனாய் ஏற்றுக்கொள்வர்.

கருத்து: விருந்தினனுக்கு இன்சொல் முதலிய வழங்கு வானுக்கு மறுமையில் இன்பமுண்டாம்.

உடன்படான், கொல்லான், உடன்றார் நோய் தீர்ந்து,
மடம் படான், மாண்டார் நூல் மாண்ட இடம் பட
நோக்கும் வாய் நோக்கி, நுழைவானேல், - மற்று அவனை
யாக்குமவர் யாக்கும், அணைந்து.
8


ஒன்றினைப் பிறர் கொல்ல உடன்படாது, தானுங் கொல்லாது, பிணியால் வருந்தினார் நோயைத் தீர்த்து பேதைமையின்கட் படாதே, மாட்சிமைப்பட்டார் நூல்களின் மாட்சிமைப்பட்ட குணங்க டனக்குப் பெருகும்படி யாராயுமாயின், தானாராய்ந்தவற்றின்கணுள்புக் கொழுகுவனாயின், அவனை யணைந்தார்க்கு நெறியெல்லாங் கூடியாக்கும்.

கருத்து: நல்லாரோடு இணங்குவார்க்கும் அந் நல்லன உண்டாகும்.

கற்றாரைக் கற்றது உணரார் என மதியார்,
உற்றாரை அன்னணம் ஓராமல், அற்றார்கட்கு
உண்டி, உறையுள், உடுக்கை, இவை ஈந்தார் -
பண்டிதராய் வாழ்வார், பயின்று.
9


கற்றாரைக் கற்றிலரென்று மனதிற் கொள்ளாதே, உற்றாரையு முற்றாரென்று கொள்ளாதே, பொருளற்றார்க்குணவும், மருந்தும், உறையிடமும், உடுக்கையும் பயின்று கொடுத்தா ரறிவுடையாரென்று பிறரான் மதிக்கப்படுவர்.

கருத்து: பிறரெவரையும் தாழ்வென்று கருதாமல் அற்றார்க்கு வேண்டுவன உதவுவார், அறிவுடையராய்க் கருதப்படுவார்.

செங் கோலான், கீழ்க் குடிகள், செல்வமும்; சீர் இலா
வெங் கோலான், கீழ்க் குடிகள், வீந்து உகவும்; வெங் கோல்
அமைச்சர், தொழிலும், அறியலம் - ஒன்று ஆற்ற
எனைத்தும் அறியாமையான்.
10
செங்கோலானது செல்வமும், அவன் கீழ்வாழுங் குடிகளது செல்வமும், வெங்கோலானது கேடும், அவன் கீழ் வாழுங் குடிகளது கேடும், வெங்கோலமைச்சரது கேடும், அவர் தொடங்கிய வினை முடியாது கெடுதலும், இவ்வாறினையுமொரு திறனறிய மாட்டோம். யாது மெமக்கறியப் பொருந்தாமையின்.

கருத்து: நல்லோரும் வீழ்கின்றார், தீயோரும் வீழ்கின்றாரானமையின், இவற்றின் ஏது ஏதோ அறிகின்றிலமென்பது.



அவா அறுக்கல் உற்றான் தளரான்; அவ் ஐந்தின்
அவா அறுப்பின், ஆற்ற அமையும்; அவா அறான் -
ஆகும் அவனாயின், ஐங் களிற்றின் ஆட்டுண்டு,
போகும், புழையுள் புலந்து.
11


மனத்தின்க ணவாவினை யறுப்பான் றொடங்கியவன் றனன்வா வின்றியே நிற்கும். பொறி புலனாகிய நிலங்களாலே மெய்ப்பொருள் மேம்படலென ஐவகைப்பட்ட பொருட்கட் செல்லு மவாவினை மிகவு மறுப்பவ னெல்லாக்குணங்களாலு மிக வமைவுடையனாமன்றி யவாவறா தொழியுமாயி னைம்பொறியென்னுங் களிற்றா லலைப்புண்டு நரகவாயிலுட்டுன்பமுற்றுச் செல்லும்.

கருத்து: அவா வறுத்தலாவது, ஐம்பொறி யடக்கமாகும்.

கொலைக் களம், வார் குத்து, சூது ஆடும் எல்லை,
அலைக் களம் போர் யானை ஆக்கும் நிலைக்களம்,
முச் சாரிகை ஒதுங்கும் ஓர் இடத்தும், - இன்னவை
நச்சாமை, நோக்காமை, நன்று.
12


பொருது கொல்லுங் கொலைக்களமும் வார்குத்துமிடமும், சூதாடுமிடமும், தண்ட முதலாயினவற்றாலலைக்குஞ் சிறைக்களமும், போர் யானைகளைக் கொலை கற்பிப்பானுக்கு நிலையிடங்களும், யானை, தேர், குதிரையான மூன்று திறமுஞ் சாரிகையாக வோடு மோரிடத்துஞ் செல்லுதற் குடன் படாமையும் அவை சென்று நோக்காமையும் நல்வினையாம்.

கருத்து: கொலைக்களம் முதலியவற்றை நச்சாமையும் நோக்காமையும் நன்று.

விளையாமை, உண்ணாமை, ஆடாமை, ஆற்ற
உளையாமை, உட்குடைத்தா வேறல், களையாமை, -
நூல் பட்டு ஆர் பூங்கோதாய்! - நோக்கின், இவை ஆறும்
பாற்பட்டார் கொண்டு ஒழுகும் பண்பு.
13


உழவாற் பயிர் விளைக்காமையும், ஐம்பொறிகள் களிப்புற உண்ணாமையும், நீடாடாமையும், பிறர் சொன்ன கடுஞ் சொற்களுக்கு மிக உளையாமையும், உட்குடைய வருத்தங்களை வேறலும், மேற்கொண்ட சீலங்களை யரிதென்றுகளையாமையுமாகிய இவ்வாறும் துறவின்பாற்பட்டார் கொண்டொழுகு மொழுக்கங்கள், நூற்பட்டார் பூங்கோதாய்!

கருத்து: விளையாமை முதலியன துறவற வழிப்பட்டாரொழுகும் பண்புகளாம்.

பொய்யான், புலாலொடு கள் போக்கி, தீயன
செய்யான், சிறியார் இனம் சேரான், வையான், -
கயல் இயல் உண் கண்ணாய்! - கருதுங்கால், என்றும்
அயல, அயலவர் நூல்.
14


பொய்யுரையாது புலாலையுங் கள்ளையுமுண்டல் களைந்து தீவினைகளைச் செய்யாது சிறியாரினத்தைச் சேராது பிறர்க்கின்னாதன ஒருவன் சொல்லானாயினென்று மாராயுங்கா லவற்குப் பிறராய்ந்த நூலினறிவால் பயனில்லை கயலுண் கண்ணாய்!

கருத்து: பொய்யாமை முதலிய இயல்புகளை யுடையவன் அறிவு நூல்கள் ஆராய்ந்தவனை ஒப்பான்.

கண் போல்வார்க் காயாமை; கற்றார், இனம் சேர்தல்;
பண் போல் கிளவியார்ப் பற்றாமை; பண் போலும்
சொல்லார்க்கு அரு மறை சோராமை; சிறிது எனினும்
இல்லார்க்கு இடர் தீர்த்தல், - நன்று.
15


ஒருவன் றனக்குக் கண்போலு நட்டாரைக் காயாமையும், கற்றாரினஞ் சேர்தலும், அரிவையரை மிக அன்பு செய்யாமையும், அவர்க்கு மறை யுரையாமையும் வறியார்க்குச் சிறிதிடராயினும் தீர்த்தலுமாகிய வாறும் நல்ல குணம்,

கருத்து: கண்போல்வார்க் காயாமை முதலியன நல்லவாம்.



துறந்தார்கண் துன்னி, துறவார்க்கு இடுதல்,
இறந்தார்க்கு இனிய இசைத்தல், இறந்தார்,
மறுதலை, சுற்றம், மதித்து ஓம்புவானேல்,
இறுதல் இல் வாழ்வே இனிது.
16


மனைத் துறந்த வருந்தவரைச் சேர்ந்து, துறவார்க் கீதலைச்செய்து கல்வியில் மிக்கார்க் கினியவற்றை மருவிச் செய்து, தான் குடிப்பிறந்த வருந்தவரைச் சேர்ந்து, குடியு ளிறந்தாரையும், தனக்கின்னாதாரையு மதித்தவர்க்கு வேண்டுவன செய்வானாயி னிறுதலில் வாழ்வே துறவறத்தினுமினிது.

கருத்து: துறவற வொழுக்கத்தை இல்வாழ்க்கையினின்றே செய்யின், அவ்வில்வாழ்க்கை புறத்துறவினுஞ் சிறந்தது.

குடி ஓம்பல், வன்கண்மை, நூல் வன்மை, கூடம்,
மடி ஓம்பும், ஆற்றல் உடைமை, முடி ஓம்பி,
நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல்
தேற்றானேல், தேறும் அமைச்சு.
17


குடிகளைப் பாதுகாத்தலும், வன்கண்மையுடையவனாதலும், பல நூலுங் கற்ற வன்மையும், வஞ்சனையுடையனாதலும், சோம்பு தன்மாட்டு வாராமையும், பாதுகாக்கு மாற்றலுடைமையு மென்கின்ற வைந்து முடையனாய் முடியுடையரசனாலோம்பி விரும்பப்படு நாற்றமுஞ் சுவையுங் கேள்வியும் விரும்பி நல்லாரினத்தைச் சேர்தல் செய்யானாயி னவன் அரசர்க்கமைச்சனாகத் தேறப்படுவான்.

கருத்து: குடியோம்பல் முதலியன அமைச்சர்க்குரிய இயல்புகளாகும்.

போகம், பொருள் கேடு, மான் வேட்டம், பொல்லாக் கள்,
சோகம் படும் சூதே, சொல்வன்மை, சோகக்
கடுங் கதத்துத் தண்டம், அடங்காமை, காப்பின்,
அடும் கதம் இல், ஏனை அரசு.
18


மகளிரோடு நுகரும் போகமும், தான் தேடிய பொருளைப் பாதுகாவா தழித்துக் கொடுத்தலும், மான் வேட்டையாடுதலும், பொல்லாக் கள்ளினை நுகர்தலும், துன்பம் விளையப்படும் சூதாடுதலும், வன்சொற்சொல்லுதலும், துன்பத்தைச் செய்யும் மிக்க கோபத்தாற் பிறந்த தண்டஞ் செய்தலுமென்கிற இவ்வேழு முறா வின்ப வரசன் பகையரசரடுங் கோபமுளவாகான்.

கருத்து: போகம் முதலியவற்றிற் கருத்தீடுபடாத அரசனுக்குப் பகை யரசர்கள் ஏற்படார்.

கொல்லான், கொலை புரியான், பொய்யான், பிறர் பொருள்மேல்
செல்லான், சிறியார் இனம் சேரான், சொல்லும்
மறையில் செவி இலன், தீச் சொற்கண் மூங்கை, -
இறையில் பெரியாற்கு இவை.
19


தானொன்றனைக் கொல்லான், பிறர் கொன்ற கொலையினை விரும்பான், பொய் சொல்லான், பிறர் மனையாண்மேற் செல்லான், கீழ்மக்களினஞ் சேர்தலை மாட்டான், பிறர் மறை கூறுமிடத்தின் செவி கொள்ளானாய், பிறரைத் தீச்சொற் சொல்லுமிடத்து மூங்கைபோலொழுகு முதன்மையிற் பெரியார்க் கிவ்வேழ் திறமுமாம்.

கருத்து: கொல்லாமை முதலியன பெருந்தன்மையுடையான்பாற் காணப்படும்.

மின் நேர் இடையார் சொல் தேறான், விழைவு ஓரான்,
கொன்னே வெகுளான், கொலை புரியான், - பொன்னே! -
உறுப்பு அறுத்தன்ன கொடை உவப்பான், தன்னின்
வெறுப்பு அறுத்தான், - விண்ணகத்தும் இல்.
20


பொன்னேயனையாய்! மின்போலு நேரிடையார் சொல்லைத் தேறாது, காமநுகர்ச்சியை நினையாது, பயனின்றியே மிக வெகுளாது, ஓருயிரைக் கொலைமேவாது, தன்னுறுப்பறுத்துக் கொடுப்பது போலுங் கொடையுவந்து, தன் மனத்திலுள்ள செருக்கையுறுமறுத்தான் விண்ணகத்து மிலன்.

கருத்து: மகளிரின் மழலையை நம்பாமை முதலியன உடையவன் தேவரினுஞ் சிறந்தா னென்க.



இளமை கழியும்; பிணி, மூப்பு, இயையும்;
வளமை, வலி, இவை வாடும்; உள நாளால்,
பாடே புரியாது, - பால் போலும் சொல்லினாய்!-
வீடே புரிதல் வீதி.
21


பால்போலுஞ் சொல்லினாய்! இளமை நில்லாது கழியும், பிணியும் மூப்பும் வந்தடையும், செல்வமும் வலியும் வாடும், தானுள்ள நாளின்க ணிவ்வைந்தானும் வருந்துன்பத்தையே நுகரவிரும்பாது, வீடு பெறுதலையே விரும்புதலொருவர்க்கு நெறியாவது.

கருத்து: இளமை கழிந்து பிணி மூப்புகள் உண்டாதலின், மக்கள் வீடுபேற்றை விரும்பி நிற்றலே கடமையா மென்பது.

வாள் அஞ்சான், வன்கண்மை அஞ்சான், வனப்பு அஞ்சான்,
ஆள் அஞ்சான், ஆம் பொருள்தான் அஞ்சான்; நாள் எஞ்சாக்
காலன் வரவு ஒழிதல் காணின், வீடு எய்திய
பாவின் நூல் எய்தப்படும்.
22


வாள் வென்றியை யஞ்சான், தறுகண்மையை யஞ்சான், தோற்றப்பொலிவினை யஞ்சான், படையாளனென் றஞ்சான், செல்வமுடையனென் றஞ்சான், நாளினை மறந்தொழியாத காலன் தன்மேல்வரும் வரவினை யொழிதலொருவன் காண்பனாயின், வீட்டு நெறியைப் பொருந்திய தன்மையையுடைய நூல்களைச் சாரத்தகும்.

கருத்து: வீடுபே றடைவதற்கு நல்லொழுக்கங்களே யல்லாமல் அகவழிபாடு முதலியனவும் வேண்டப்படும்.

குணம் நோக்கான்; கூழ் நோக்கான்; கோலமும் நோக்கான்;
மணம் நோக்கான், மங்கலமும் நோக்கான்; கணம் நோக்கான்; -
கால் காப்பு வேண்டான், - பெரியார் நூல் காலற்கு
வாய் காப்புக் கோடல் வனப்பு.
23


குணமுடையானென்று பாரான், செல்வமுடையானென்று பாரான், தோற்றப் பொலிவுடையானென்று பாரான், கலியாணஞ் செய்ய நின்றானென்று பாரான், புண்ணியஞ் செய்ய நின்றானென்று பாரான், சுற்றமுடையானென்று பாரான், ஆதலால் தன்னகர்க்குத் துணையாகிய மனைவாழ்க்கையை வேண்டானாய்ப் பெரியோராற் செய்யப்பட்ட ஆகமத்தைக் காலற்கு வாய்ப்பாகக் கோடல் ஒருவற் கழகாவது.

கருத்து: துறவொழுக்கத்தை விரும்புகின்றவன் இயல்பு முதலியவற்றைப் பொருட்படுத்தாமற் பிறப் பிறப்புக் கெடுதற்கான ஆன்றோ ரறிவு நூல்களைக் கற்றொழுகுதலே அழகாகும்.

பிணி, பிறப்பு, மூப்பொடு, சாக்காடு, துன்பம்,
தணிவு இல் நிரப்பு, இவை தாழா - அணியின்,
அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்று ஆம்
நிரம்புமேல், வீட்டு நெறி.
24


பிணியும், ‘பிறப்பும், மூப்பும், சாக்காடும் இழவினான் வருந் துன்பமும், தேடுதலானே வருங் குறையாத விடும்பையுமென் றிவை யாறு மதிட்டியாது வருமாயிற் சொல் வேறுபாட்டினா னரங்கின்கண் வந்தாடும் கூத்தரைப்போலப் பிறந்திறந்துழலாதே வீட்டுநெறியே யொருவற்கு வந்து நிரம்புமாயினன்றாம்.

கருத்து: ஒவ்வொரு பிறப்பிலும் பிணி முதலான துன்பங்களுண்மையின், வீடுபேற்றிற்குரிய துறவொழுக்கத்தை மேற்கோடலே நன்மையாம்.

பாடு அகம் சாராமை; பாத்திலார்தாம் விழையும்
நாடகம் சாராமை; நாடுங்கால், நாடகம்
சேர்ந்தால், பகை, பழி, தீச்சொல்லே, சாக்காடே,
தீர்ந்தாற்போல் தீரா வரும்.
25


(ஓருறுதி படாதபோது) மகளிர் விரும்புகின்ற பாடுமிடஞ் சாராதொழிக. அவர்களோடு நாடகஞ் சேர்ந்து காணாதொழிக. அவர்களாடுமிடஞ் சார்ந்து காணுமாயிற்பகையும், பழியும், பிறர் சொல்லுந் தீச்சொல்லும், சாக்காடுமென்று சொல்லப்பட்ட நான்கு மவர்க்கு நீங்கினபோல நீங்காவாய் வரும்.

கருத்து: பொதுமகளிருடைய பாட்டையும் ஆட்டத்தையுங்கேட்டலுங் காண்டலும், பகையும் பழியுங் கடுஞ்சொல்லும் சாவும் விளைக்கும்.



மாண்டு அமைந்தார் ஆய்ந்த மதி வனப்பே, வன்கண்மை,
ஆண்டு அமைந்த கல்வியே, சொல் ஆற்றல், பூண்டு அமைந்த
காலம் அறிதல், கருதுங்கால், - தூதுவர்க்கு
ஞாலம் அறிந்த புகழ்.
26


மாட்சிமைப் பட்டமைந்தாராய்ந்த மதியுடைமையும், தோற்றப் பொலிவுண்டாதலும், தறுகண்மையும், தன்னா லாளப்பட்டமைந்த கல்வியுடைமையும், சொல் வன்மையும், பொருந்தியமைந்த காலமறிதலுமென விவை யாராயுங்கால் தூதுவர்க் குலகறிந்த புகழாவது.

கருத்து: அறிவு அழகு முதலியன தூதுவர்க்கு இயல்பாவனவாம்.

அஃகு, நீ, செய்யல், எனஅறிந்து, ஆராய்ந்தும்,
வெஃகல், வெகுடலே, தீக் காட்சி, வெஃகுமான்,
கள்ளத்த அல்ல கருதின், இவை மூன்றும்
உள்ளத்த ஆக உணர்!
27


வெஃகுதலையஃகு வெகுடலை நீக்கு, தீக்காட்சியைக் கருதிச் செய்ய லென்றறிந்தா னொருவன் சொல்லி, நீடுநின் மனத்தின் கருதற்றொழிலாக வேண்டின் நினையாக்கள்ளத்தனவல்ல.

கருத்து: சினத்தல் முதலான செயல்களை ஒருவன் தீயவென்று அறிந்துஞ் செய்வனாயின், அவன் அவற்றை ஒரு செயல் முடிதற் பொருட்டுச் செய்கின்றானாதலால் நன்மையாம்.

மை ஏர் தடங் கண் மயில் அன்ன சாயலாய்! -
மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர்; - பொய்யே,
குறளை, கடுஞ் சொல், பயன் இல் சொல், நான்கும்
மறலையின் வாயினவாம், மற்று.
28


மையேர் தடங்கண் மயிலன்ன சாயலாய்! அறிவுடையார்தா மெய்யுரையே யுரைப்பார். பொய்யும், வடுச்சொல்லும், குறளையும், கடுஞ்சொல்லும், பயனில சொல்லுமென்று சொல்லப்பட்ட வைந்து மறலையின் வாயின்கண்ணே பிறக்கும்.

கருத்து: பெரியோர் வாய் நன்மொழிகளும், சிறியோர் வாய்த் தீச்சொற்களும் பிறக்கும்.

நிலை அளவின் நின்ற நெடியவர்தாம் நேரா,
கொலை, களவு, காமத் தீ வாழ்க்கை; அலை அளவி,
மை என நீள் கண்ணாய்! - மறுதலைய இம் மூன்றும்
மெய் அளவு ஆக விதி!
29


தங்கட்குச் சொன்ன நிலையளவின்கண்ணே நின்ற நெடியவர்க ளுடன்படாத கொலையும், களவும், காமத்தீ வாழ்க்கையுமென்னு மூன்றும், இவற்றுக்கு மறுதலையாகிய கொல்லாமையும், களவு காணாமையும், காம வாழ்க்கைப்பாடாமையுமென்னு மிம்மூன்று முடம்பின்றொழிலாக அலைத்தலை மேவி மையென நீண்ட கண்ணாய் விதிப்பாயாக.

கருத்து: கொல்லாமை முதலியனவே நிலைபிறழாத சான்றோரொழுக்கங்களாம்.

மாண்டவர் மாண்ட அறிவினால், மக்களைப்
பூண்டு அவர்ப் போற்றிப் புரக்குங்கால், - பூண்ட
ஒளரதனே, கேத்திரசன், கானீனன், கூடன்,
கிரிதன், பௌநற்பவன், பேர்.
30


மாட்சிமைப்பட்ட வறிவுடையார், மாட்சிமைப்பட்ட தம் மறிவினாற் புதல்வரைப் பொருந்தியவகை யுரைக்குமிடத்து, தனக்குப் பிறந்தவ னுரதனென்றும், தன்னேவலாலாதல், தானிறந்ததற்பின்பு குருக்களாலாதல் தன் மனையாள் வயிற்றே பிறனொருவற்குப் பிறந்தவனைக் கேத்திரசனென்றும், தீவேட்டு மணம்புரியுமுன் தாய் வீட்டிற் பெற்ற பிள்ளையைக் கானீனனென்றும், மணம் புரிந்தபின் கணவன் வீட்டில் அவனுக்கொளித்துப் பிறனொருவனிடத்துப் பெற்ற பிள்ளையைக் கூடனென்றும், கணவனிறந்த பின்னர் வேறொருவனுக்குத் தான் மனையாளா யவனொடு பெற்ற பிள்ளைப் புநர்ப்பவனென்றும் கூறுப.

கருத்து: மக்கள் ஒளரதன் முதலாகப் பலவகைப்படுவர்.



மத்த மயில் அன்ன சாயலாய்! மன்னிய சீர்த்
தத்தன், சகோடன், கிருத்திரமன், புத்திரி
புத்ரன் அபவித்தனொடு, பொய் இல் உருகிருதன்,
இத் திறத்த, - எஞ்சினார் பேர்.
31


களிப்பு மிக்க மயிலையொத்த சாயலையுடையவளே! கூறாது மீந்தவர்களுடைய பெயர்களும் தத்தன், சகோடன், கிருத்திரமன், தௌத்திரன், அபவித்தன்,உபகிருதன் என்னும் இவ்வகையே யுள்ளனவாம்.

கருத்து: மக்கள் தத்தன் முதலாகப் பின்னும் பலவகைப் படுவர்.

உரையான், குலன், குடிமை; ஊனம் பிறரை
உரையான்; பொருளொடு, வாழ்வு, ஆயு, உரையானாய், -
பூ ஆதி வண்டு தேர்ந்து உண் குழலாய்! - ஈத்து உண்பான்
தேவாதி தேவனாத் தேறு!
32


மலர் முதலியவற்றை வண்டுகள் மொய்த்துண்கின்ற கூந்தலையுடையாளே! தன் குலத்தினுயர்வையும் குடிப்பிறப்பி னுயர்வையும் சொல்லாமல், அவ்விரண்டு மில்லாத மற்றவர்மேல் குற்றங் கூறாமல் தனது பொருளினளவோடு அனுபவிக்குஞ் செல்வத்தையும் ஆயுளையும் வெளிப்படுத்தானாகி, இரப்பவர்க்குக் கொடுத்துத் தானும் அனுபவிப்பவனைத் தேவர் களிற் சிறந்த தேவனாகத் தெளிவாய்.

கருத்து: தன்னுயர்வு கருதிப் பிறரை இழித்துரையாமலும் உடைமை விளம்பாமலும் ஒழுகி, வறியார்க்கு இட்டுண்பவன், தேவர் தலைவனாவான்.

பொய் உரையான், வையான், புறங்கூறான் யாவரையும்,
மெய் உரையான், உள்ளனவும் விட்டு உரையான், எய் உரையான், -
கூந்தல் மயில் அன்னாய்! - குழீஇய வான் விண்ணோர்க்கு
வேந்தனாம் இவ் உலகம் விட்டு.
33


விரி தோகையன்ன கூந்தலையுடையாளே! பிறர் தீங்கு கருதி யுண்மையும் பேசானாகியும் இகழானாகியும் தனக்குத் தீமை செய்தாரையும் புறத்தில் அவமதித்துப் பேசானாகியும், ஒருவருக்கு நேர்ந்த இடுக்கண்களை யொழிக்கும் பொருட்டு நடந்த உண்மையைச் சொல்லானாகியும், தன்னிடத்திலுள்ள பொருள்களை வாய் விட்டுச் சொல்லானாகியும், நண்பனிடத்தும் தன் வறுமைத் துன்பத்தைச் சொல்லானாகியும் உள்ள ஒருவன் இந்த உலகத்தைவிட்டு வானுலகிற் கூடியுள்ள தேவர்கட்குத் தலைவனாகிய இந்திரனாவான்.

கருத்து: பொய்யாமை முதலியன உடையான் இந்திர வாழ்வில் வைகுவான்.

சிதை உரையான், செற்றம் உரையான், சீறு இல்லான்,
இயல்பு உரையான், ஈனம் உரையான், நசையவர்க்குக்
கூடுவது ஈவானை, - கொவ்வைபோல் செவ் வாயாய்! -
நாடுவர், விண்ணோர், நயந்து.
34


கோவம்பழம் போன்ற சிவந்த வாயினையுடையாய்! கீழ்மையான சொற்களைப் பேசாமலும், சினமூட்டுஞ் சொற்களைக் கூறாமலும், சீறுதலில்லாமலும், தன்னாலியலக்கூடிய மேம்பாட்டை எடுத்துப் பாராட்டாமலும், பிறர் குற்றங்களைச் சொல்லாமலும், தன்னிடத்து வந்து ஏற்றோர்க்கு இல்லையென்னாது இசைந்தமட்டு முதவுவோனைத் தேவர்கள் தங்களுடனிருந்து மகிழ விரும்புவர்.

கருத்து: கீழ்மைபேசாமை முதலியன உடையானைத் தேவரும் விரும்புவார்.

துறந்தார், துறவாதார், துப்பு இலார், தோன்றாது
இறந்தார், ஈடு அற்றார், இனையர், சிறந்தவர்க்கும், -
பண் ஆளும் சொல்லாய்! - பழி இல் ஊண் பாற்படுத்தான்,
மண் ஆளும், மன்னாய் மற்று.
35


பண்ணின் இனிமையை வென்ற சொல்லையுடையவளே! துறந்தவர்க்கும், துறவாதவராகிய பிரம்மச்சாரி வானப்பிரத்த னிவர்க்கும், வறியார்க்கும், தென்புலத்தார்க்கும், பலமற்றவர்க்கும், இவர்போல்வராகிய மற்றுஞ் சிறந்த தக்கார்க்கும் நல்வழியிலீட்டிய உணவை யளித் தன்பு செய்தவன் மறு பிறப்பில் பூமண்டலத்தையாளு மன்னனாவான்.

கருத்து: துறந்தார் முதலானவர்கட்கு ஊண் கொடுப்பவன் மறுமையில் அரசனாவான்.



கால் இல்லார், கண் இல்லார், நா இல்லார், யாரையும்
பால் இல்லார், பற்றிய நூல் இல்லார், சாலவும்
ஆழப் படும் ஊண் அமைத்தார், இமையவரால்
வீழப்படுவார், விரைந்து.
36


நொண்டிகளுக்கும், குருடர்களுக்கும், ஊமைகளுக்கும், எவரையும் தம்பக்கம் துணையாக இல்லாதவர்களுக்கும், பதிந்த நூலறிவில்லாதவர்க்கும் நீரினாற் சமைக்கப்பட் டாழ்ந்த உணவை விரும்பி யளித்தவர், தேவர்களால் விரைவாக விரும்பப்படுவார்.

கருத்து: முடவர் முதலாயினாருக்கு வயிறு நிறைய உணவு படைத்தல் வேண்டும்.

அழப் போகான், அஞ்சான், அலறினால் கேளான்,
எழப் போகான், ஈடு அற்றார் என்றும் தொழப் போகான்,
என்னே, இக் காலன்! நீடு ஓரான், தவம் முயலான்,
கொன்னே இருத்தல் குறை.
37


காலனானவன் ஒருவன் இறுதிக்காலம் வந்து விட்டால், அழுதாலும் விட்டுப் போகின்றவனல்லனன், ஓ என அலறிக் கூவினுங் கேட்டிரங்குகின்றவனல்லன், எழுந்தெங்கேனுஞ்செல்வதற்கும் விடாதவன், இழந்து வலியற்றிருப்போர் நின்னையே குலதெய்வமாக வழிபடுவோம் என்று வணங்கவும் விட்டுச் செல்கின்றவனல்லன், இக்காலன் என்ன தன்மையனாயிருக்கின்றான், ஆதலின், காலனது வரவுக்கோர் உபாயஞ்சூழாது, தவம்புரியாது வீணாட் கழித்துக் கொண்டிருப்பது தகாத செய்கை.

கருத்து: காலனைக் கடக்க விரும்புவோர் வாணாளை வீணாக்காமல் விரைவாகத் தவ முயலவேண்டும்.

எழுத்தினால் நீங்காது, எண்ணால் ஒழியாது, ஏத்தி
வழுத்தினால் மாறாது, மாண்ட ஒழுக்கினால்,
நேராமை சால உணர்வார் பெருந் தவம்
போகாமை, சாலப் புலை.
38


இறப்பும் பிறப்புமாகிய துன்பம் கல்வியறிவினளவே நீங்காது, தியான அளவிலே நீங்காது, துதிக்குந் தோத்திரத்தினாலும் நீங்காது, இவை முதலாகிய மாட்சிமைப் பட்ட ஒழுக்கங்களினாலேயும் அவை தீர்த்துப் பேரின்பம் வாயாமை முற்றுங் கண்ட துறந்தோரது மாதவத்தை அடையாதிருத்தல் மிக்க அறியாமையாம்.

கருத்து: உணர்ந்தோரெல்லாரும் ஒழுக்கமுந் தவமுங் கெட்டு வெறும் பொருளற்ற வழிபாடுகள் செய்தல் பெரிதுந்தவறாகும்.

சாவது எளிது; அரிது, சான்றாண்மை; நல்லது
மேவல் எளிது; அரிது, மெய் போற்றல்; ஆவதன்கண்
சேறல் எளிது; நிலை அரிது; தெள்ளியர் ஆய்
வேறல் எளிது; அரிது, சொல்.
39


இறத்தல் எளியது, அதற்கு முன் நல்லோன் எனப் பெயர்படைத்தல் அரியது, நல்ல பொருளை விரும்பி யதனை யடைதல் எளியது, வாய்மையைத் தனக்குக் காப்பாகக் கொண்டொழுகுவது அரியது, தனக்குத் துணையாவதாகிய பெருந்தவத்திற்குச் செல்வது எளியது, நிட்டை கைகூடும் வரை நிலைத்தல் அரியது, தெளிந்த ஞானியரான விடத்தும் ஐம்புலன்களையும் வென்று அவித்தலை எளிய காரியமாகச் செய்தல் அரியதாகுமெனச்சொல்.

கருத்து: கல்வி கேள்விகளால் நிறைந்தொழுகுதல் முதலாயின அருமையாகும்.

உலையாமை, உற்றதற்கு ஓடி உயிரை
அலையாமை ஐயப்படாமை, நிலையாமை
தீர்க்கும் வாய் தேர்ந்து, பசி உண்டி நீக்குவான்,
நோக்கும் வாய் விண்ணின் உயர்வு.
40


தனக்குற்ற துன்பத்துக் கோடித் தளராது, பிறருயிரை வருந்த அலையாது, மறுமையை ஐயப்படாது, நிலையாத பிறப்பைத் தீர்க்கும் வா யாராய்ந்து, பசியினையு முண்டியினையு நீக்கித் தவஞ் செய்வா னுறைதற்கே யாராயுமிடம் விண்ணினுச்சி.

கருத்து: உலையாமை முதலியன உடையான் விண்ணுலக நிலைக்கும் மேல் நிலையை அடையான்.



குறுகான், சிறியாரை; கொள்ளான், புலால்; பொய்
மறுகான்; பிறர் பொருள் வெளவான்; இறுகானாய்,
ஈடு அற்றவர்க்கு ஈவான் ஆயின், நெறி நூல்கள்
பாடு இறப்ப, பன்னும் இடத்து.
41


சிற்றினத்தைக் குறுகாது, புலாலை விரும்பாது, பொய்யுரையைக் கொண்டொழுகாது, பிறர் பொருளை விரும்பாது, பற்றுள்ளத்தா லிறுகாது தளர்ந்தார்க் கொன்றீவனாயி னறஞ் சொல்லு நூல்கள் சொல்லுமிடத்துப் பயனற்றன.

கருத்து: கீழ்மக்களை இணங்காமை முதலியன உடையானுக்கு அறிவு நூல்கள் வேண்டா.

கொல்லான், உடன்படான், கொல்வார் இனம் சேரான்,
புல்லான் பிறர் பால், புலால் மயங்கல் செல்லான்,
குடிப் படுத்துக் கூழ் ஈந்தான், - கொல் யானை ஏறி
அடிப் படுப்பான், மண் ஆண்டு அரசு.
42


பிறிதோருயிரைக் கொல்லாது, கொல்லுதற்குடன்படாது, கொல்லுவா ரினத்தைச் சேராது, பிறர் மனையாளை விரும்பாது, ஊனுண்டலோடு, கலவாது,பிறருடைய குடிகளை நிறுத்திக் கூழை யீந்தவன் கொல்யானையேறி மண்ணையாண்டிடப்படுவன்.

கருத்து: கொல்லாமை முதலியன உடையான் உலக முழுவதும் அரசாளு நிலைமையை யடைவா னென்க.

சூது உவவான், பேரான், சுலா உரையான், யார்திறத்தும்
வாது உவவான், மாதரார் சொல் தேறான், - காது தாழ்
வான் மகர வார் குழையாய்! - மா தவர்க்கு ஊண் ஈந்தான்-
தான் மகர வாய் மாடத்தான்.
43


சூதினைக் காதலியாது, ஒன்றினான் மறைந்து வஞ்சியாது, பயனில்லாவற்றைப் பரக்கவுரையாது, ஒருவர் திறத்து மாறுபட்டுரைத்தலைக் காதலியாது, மாதரார் சொல்லு மின் சொல்லைத் தேறாது, காது தாழச்செய்யா நின்ற வாபரணங்களார் குழையாய்! மாதவர்க் கூணீந்தவன்றான் மகரத் தொழிலையுடைய வாயின் மாடத்து வாழ்வான்.

கருத்து: கவறாடாமை முதலியன உடையான் பெரிய மாளிகையிலிருக்கும் வாழ்வு பெறுவான்.

பொய்யான், பொய் மேவான், புலால் உண்ணான், யாவரையும்
வையான், வழி சீத்து, வால் அடிசில் நையாதே
ஈத்து, உண்பான் ஆகும் - இருங் கடல் சூழ் மண் அரசாய்ப்
பாத்து உண்பான், ஏத்து உண்பான், பாடு.
44


தான் பொய்யுரையாது, பிறர் சொல்லும் பொய்க் குடன்படாது, புலாலுண்ணாது, யாவரையும் வையாது, பலர் போம் வழிகளையுந் திருத்தி, நல்ல வடிசிலை யொழியாதே யீத்துண்பானாகு மிருங்கடல்சூழ் மண்ணரசாய்ப் பகுத்துண்பான் பிறராற் றன் பெருமை யேத் துண்பானும்.

கருத்து: பொய்யாமை முதலிய உடையவன் பெருமையும் புகழும் ஐம்புலவின்பங்களும் நுகரும் அரசனாவான்.

இழுக்கான், இயல் நெறி; இன்னாத வெஃகான்;
வழுக்கான், மனை; பொருள் வெளவான்; ஒழுக்கத்தால்
செல்வான்; செயிர் இல் ஊண் ஈவான்; அரசு ஆண்டு
வெல்வான் விடுப்பான் விரைந்து.
45


தானொழுகுநெறியைத் தப்பாது பிறர்க்கின்னாதனவற்றைச் செய்ய விரும்பாது, பிறன் மனை பிழையாது, பிறர் பொருள் வௌவாது தானொழுகுங்கா லொழுகி, குற்றமில்லாத வுணவினை யீவான், அரசாண்டு பகைவரை விரைந்து நீக்கி வெல்வான்.

கருத்து: ஒழுக்கம் வழுவாமை முதலியன உடையவன் உலகத்திற் பலரையும் வென்று அரசனாவான்.



களியான், கள் உண்ணான், களிப்பாரைக் காணான்,
ஒளியான் விருந்திற்கு, உலையான், எளியாரை
எள்ளான், ஈத்து உண்பானேல், ஏதம் இல் மண் ஆண்டு
கொள்வான், குடி வாழ்வான், கூர்ந்து.
46


கள்ளையுண்டு களியாமலும், கள்ளையுண்ணாமலும், களிப்பாரைக் காணாமலும், வந்த விருந்தினரை ஓம்புதற்குப் பயந்து ஒளியாமலும், விருந்தினரை ஓம்பி மன நோகாமலும், ஏற்றோர்க்குக் கொடுத்துத் தானும் உண்பானாயின்; தானே மண் அனைத்தும் ஆண்டுகொள்வதுமன்றித் தன் இல்லற வாழ்க்கையினும் ஓங்கி வாழ்வான்.

கருத்து: செருக்காமை முதலியன உடையான், குடிபெருகி நாடாள்வான்.

பெரியார் சொல் பேணி, பிறழாது நின்று,
பரியா அடியார்ப் பறியான், கரியார் சொல்
தேறான், இயையான், தெளிந்து அடிசில் ஈத்து உண்பான் -
மாறான், மண் ஆளுமாம் மற்று.
47


ஒழுக்கத்திற் பெரியோரது உறுதிமொழியைப் போற்றி, அவ்வொழுக்குக்குத் தக வழுவாது நிலைத்து, அன்பு நிறைந்த அடியவரை விட்டு நீங்காது, மருள் நீங்காரது சொல்லைக் கொள்ளாது, அவரோடு பொருந்தாது, வேள்வியின் பயனறிந்து பகுத்துண்பவன், நீங்காதவனாய்ப் பூமி முழுதும் ஆளும் அரசன் ஆவான்.

கருத்து: பெரியார் சொற்பேணல் முதலியன உடையவன் கட்டாயம் மண்ணாள்வான்.

வேற்று அரவம் சேரான், விருந்து ஒளியான் தன் இல்லுள்
சோற்று அரவம் சொல்லி உண்பான் ஆயின், மாற்று அரவம்
கேளான், கிளை ஓம்பின், கேடு இல் அரசனாய்,
வாளால் மண் ஆண்டு வரும்.
48


பழிதருஞ் செயலை விரும்பானாகி, வந்த விருந்தினர்க் கஞ்சி ஒளியாமல் தன் இல்லத்தில் பிறர் வந்துண்ணும்படியாகத் தான் உண்ணுஞ் செய்தியை யறிவித்துப் பின் ஒருவன் உண்பானாயின், பகையரசர் சொல்லுங் கேட்க வேண்டானாய்த் தன் குடும்பத்தைப் பேணி அழிவில்லாத அரசுரிமையுடையவனாய் வாளால் வெல்லும் பூமியினை ஆண்டுகொண்டிருப்பான்.

கருத்து: தீய சொற்களைப் பேசாமை முதலியன உடையவன் என்றும் நாடாள்பவனாவான்.

யானை, குதிரை, பொன், கன்னியே, ஆணிரையோடு
ஏனை ஒழிந்த இவை எல்லாம், ஆன் நெய்யால்
எண்ணன் ஆய், மா தவர்க்கு ஊண் ஈந்தான் - வைசிர-
வண்ணன் ஆய் வாழ்வான் வகுத்து.
49


யானையும் குதிரையும் பொன்னும் கன்னிகையும் பசுவின் கூட்டமும், மற்றப் பொருள்களும் வேண்டியஅவரவர்க்கு வகையறிந்து ஈந்தவனும், மாதவர்க்குப் பசுவினெய்யுடன் உணவளித்து அன்பு செய்தவனும் ஆகிய ஒருவன், குபேரப் பட்டம் பெற்று வாழ்வான்.

கருத்து: தவத்தோர்க்கு ஆவின் நெய் பெய்த உணவும், ஏனையோர்க்கு யானை, குதிரை முதலானவைகளும் வழங்குகின்றவன், குபேரனைப்போற் பெருஞ் செல்வமுந் தனிமதிப்பும் உடையனாவான்.

எள்ளே, பருத்தியே, எண்ணெய், உடுத்தாடை,
வள்ளே, துணியே, இவற்றோடு, கொள் என,
அன்புற்று, அசனம் கொடுத்தான் - துணையினோடு
இன்புற்று வாழ்வான், இயைந்து.
50


அன்புடன் உணவினையும் எள்ளினாகிய எண்ணெயையும் பருத்தியினாகிய உடுக்கையையும் கொடுத்து, கணக்கு நூலையும் இலக்கண நூலையும் பயன்படும் நுட்பத்தோடும் தெளிந்த அறிவோடும் கொள்வோர்க்கு உளமார உதவியவன் தன் மனைவியுட னின்புற்று அளாவி வாழ்வான்.

கருத்து: மாதவர்க்கு எள் முதலியவற்றை அன்புடன் ஈவான், தன் மனைவி மக்களோடு இன்பமாய் வாழ்வான்.



உண் நீர் வளம், குளம், கூவல், வழிப் புரை,
தண்ணீரே, அம்பலம், தான் பாற்படுத்தான் - பண் நீர
பாடலொடு ஆடல் பயின்று, உயர் செல்வனாய்,
கூடலொடு ஊடல் உளான், கூர்ந்து.
51


நாட்டினுள் நீர்வளத்தையும் குளத்தையும் கிணற்றையும் பலருஞ் செல்லும் வழியிற் றங்குதற்குரிய சிறு வீடுகளையும், தண்ணீர்ப் பந்தல்களையும் மண்டபங்களையும் வகையினால் அமைப்பித்தவன், சிறந்த செல்வமுடைவனாய், இசையோடு பொருந்தின இயல்புடைய பாடலையும் ஆடலையும் பன்முறை கேட்டுங் கண்டும் அனுபவித்து உள்ளன்புடைய மாதர்களின் ஊடலோடு கூடுதலை மிகுந்துள்ளவன் ஆவான்.

கருத்து: உலகத்துக்கு உண்ணீர் வளம் முதலியன அமைத்துக் கொடுப்பவன், இம்மை யின்பங்களை நன்கு நுகர்வான்.

இல் இழந்தார், கண் இழந்தார், ஈண்டிய செல்வம் இழந்தார்,
நெல் இழந்தார், ஆன் நிரைதான் இழந்தார்க்கு, எல் உழந்து,
பண்ணி ஊண் ஈய்ந்தவர் - பல் யானை மன்னராய்,
எண்ணி ஊண் ஆர்வார், இயைந்து.
52


வீட்டை இழந்தவர்களுக்கும், கண்ணையிழந்தவர்களுக்கும், சேர்ந்திருந்த செல்வத்தை இழந்தவர்களுக்கும், விளைந்த நெல்லை யிழந்தவர்கட்கும், பசுமந்தையை இழந்தவர்களுக்கும், இரவிலும் வருந்தி முயன்று பொருளையீட்டி உணவுகளைச் சமைத்துக் கொடுத்தவர், பலவாகிய யானைப்படையுடைய அரசர்களாய் மதிக்கப்பட்டு, மனைவி மக்கள் முதலியவர்களுடன் கூடி நுகர்பொருளை நுகர்ந்திருப்பர்.

கருத்து: இருக்க இடம் இல்லாதார் முதலியவர்கட்கு உழன்று தேடியேனும் உணவு முதலியன உதவி செய்கின்றவர், இம்மையிற் செல்வராய் இன்ப நுகர்வார்.

கடம் பட்டார், காப்பு இல்லார், கைத்து இல்லார், தம் கால்
முடம் பட்டார், மூத்தார், மூப்பு இல்லார்க்கு உடம் பட்டு,
உடையராய் இல்லுள் ஊண் ஈத்து, உண்பார் - மண்மேல்
படையராய் வாழ்வார், பயின்று.
53


கடன்பட்டவர்களுக்கும், தம்மைக் காப்பவர் ஒருவரும் இல்லாதவர்களுக்கும், பொருளில்லாதவர் கட்கும், தங்கால் முடம்பட்டவர்க்கும், முதிர்ந்தவர்களுக்கும், பெற்றோர் முதலிய பெரியார்க ளில்லாதவர்க்கும், மனமியைந்து அன்புடையவர்களாய்த் தம் வீட்டில் உணவு கொடுப்பித்து உண்பவர், பூமியின்மீது நால்வகைப் படைகளையுமுடைய மன்னர்களாய் மனைவி மக்களுடன் கூடி இன்பமுடன் வாழ்வார்கள்.

கருத்து: கடன்பட்டவர் முதலானவர்க்கு உணவு கொடுத்து உதவி செய்பவர், மன்னராய் இன்பம் மிக்கு வாழ்வார்.

பார்ப்பார், பசித்தார், தவசிகள், பாலர்கள்,
கார்ப்பார், தமை யாதும் காப்பு இலார், தூப் பால
நிண்டாரால் எண்ணாது நீத்தவர் - மண் ஆண்டு,
பண்டாரம் பற்ற வாழ்வார்.
54


பார்ப்பாரும், பசித்தவர்களும் தவஞ் செய்கின்றவர்களும், பாலர்களும், உடம்பை வெறுக்கின்றவர்களும், தங்களைக் காத்தற்குரிய ஆதரவு ஒன்று மில்லாதவர்களும், தூய்மையாகிய தன்மையை யுடையனவாகிய அறநெறிகளில் மிக்கவர்களும் ஆகிய இவர்களுடைய துன்பங்களை யாதொரு பயனையும் விரும்பாமல் போக்கினவர்கள், பூமியை ஆண்டு செல்வம் தம்மைச் சூழ்ந்திருக்க இன்புடன் வாழ்வார்கள்.

கருத்து: அந்தணர் முதலியோருடைய துன்பங்களைப் பயன் கருதாமல் நீக்கினவர்கள் செல்வராய் வாழ்வார்.

'ஈன்றார், ஈன்கால் தளர்வார், சூலார், குழவிகள்,
மான்றார், வளியான் மயங்கினார்க்கு, ஆனார்!' என்று,
ஊண் ஈய்த்து, உறு நோய் களைந்தார் - பெருஞ் செல்வம்-
காண் ஈய்த்து வாழ்வார், கலந்து.
55


ஈன்றவர், ஈனுங்காலத்து நோயாற் றளர்வார், சூலையுடையார், பிள்ளைகள், பித்தேறினார், வாத நோயா லறிவு கெட்டார், ஓம்புதற் கமைந்தாரென் றூணுதவியுறுநோயைக் களைந்தார், பிறர்க்குத் தனங்களை யீந்து பெருஞ் செல்வங்களை நுகர்ந்து வாழ்வார்.

கருத்து: ஈன்றார் முதலானவர்களுக்கு உணவு கொடுத்தல், நோய் நீக்குதல் முதலான அறச்செயல்களைச் செய்தல் வேண்டும்.

தளையாளர், தாப்பாளர், தாழ்ந்தவர், பெண்டிர்,
உளையாளர், ஊண் ஒன்றும் இல்லார், கிளைஞராய் -
மா அலந்த நோக்கினாய்! - ஊண் ஈய்ந்தார், மாக் கடல் சூழ்
நாவலம்தீவு ஆள்வாரே, நன்கு.
56


தளையீடுண்டார், தாப்பாளர், புலையர், பெண்டுகள், பிணியாலுழன்றார், வறியர் என்றிப் பெற்றிப்பட்டார்க்குக் கிளைஞரா யூணீய்ந்தார், மானைப் பிணித்த நோக்கையுடையாய்! பெரிய கடல் சூழ்ந்த மண்ணையாள்வார்.

கருத்து: தளையாளர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்தல் அறமாம்.

கருஞ் சிரங்கு, வெண் தொழு நோய், கல், வளி, காயும்
பெருஞ், சிரங்கு, பேர் வயிற்றுத் தீயார்க்கு, அருஞ் சிரமம்
ஆற்றி, ஊண் ஈத்து, அவை தீர்த்தார் - அரசராய்ப்
போற்றி ஊண் உண்பார், புரந்து.
57


கருஞ்சிரங்கும், வெள்ளிய தொழுநோயும், கல்லெரிப்பும், வாதமும், காய்ந்திடர் செய்யும் கழலையும், பெருவயிற்றுப் பெருந்தீயு மென இவ் ஆறு திறத்தாராகிய பிணியுடையார்க்கு மரிய வருத்தத்தைத் தவிர்த் தூணீய்ந் தந்நோய்களைத் தீர்த்தாரே; பின்பு அரசராய்ப் பிறந் துலகினைக் காத்து விரும்பிய நுகர்ச்சியை நுகர்வார்.

கருத்து: நோயாளர்க்கு நோய் நீக்கலும் உணவு கொடுத்தலும் வேண்டும்.

காமாடார், காமியார், கல்லார்இனம் சேரார்,
ஆம் ஆடார், ஆயந்தார் நெறி நின்று, தாம் ஆடாது,
ஏற்றாரை இன்புற ஈய்ந்தார், முன், இம்மையான்
மாற்றாரை மாற்றி வாழ்வார்.
58


காமநுகராது, பொருளின்மேற் காதலியாது, கல்லாரினஞ் சேராது, நீரில் விளையாடாது, கற்றார் நிற்கு நெறியின்க ணின்று, தாம் வழுவா திரந்தேற்றாரை யின்புறும் வகை முற்பிறப்பின்க ணீய்ந்தார் இப்பிறப்பின்கண் பகைவரை வென்றரசராய் வாழ்வார்.

கருத்து: முற்பிறப்பில் நல்லொழுக்கத்தினின்று பிறர்க்குதவி செய்பவர்களே, இப்பிறப்பில் அரசர்களாய் வாழ்கின்றவராவார்கள்.

வணங்கி, வழி ஒழுகி, மாண்டார் சொல் கொண்டு,
நுணங்கிய நூல் நோக்கி, நுழையா, இணங்கிய
பால் நோக்கி வாழ்வான் - பழி இல்லா மன்னனாய்,
நூல் நோக்கி வாழ்வான், நுனித்து.
59


பிறர்க்குப் பணிந்து, நெறியே யொழுகி, மாட்சிமைப்பட்டார் சொற்களை யுகந்துகொண்டு, நுண்ணிய நூல்களை யோதி, நுண்ணிதாக வறிந்து பொருந்திய பான்மையை நோக்கி யொழுகுவான், குற்றமில்லா வரசனாய் நுண்ணிய நூல்களை யறிந்து மறுமையின்கண் வாழ்வான்.

கருத்து: இம்மையில் வணக்கமும், ஒழுக்கமும், சான்றோர் மதிப்பும், ஆராய்ச்சியும் உடையவன், மறுமையில் இக்கல்வியுடன் பொருளும் ஒருங்கெய்தி வாழ்வான்.

பெருமை, புகழ், அறம், பேணாமை சீற்றம்,
அருமை நூல், சால்பு, இல்லார்ச் சாரின், இருமைக்கும்,
பாவம், பழி, பகை, சாக்காடே, கேடு, அச்சம்,
சாபம்போல் சாரும், சலித்து.
60


பெருமையும், புகழும், அறம் பேணாதசினமும், அருமை நூலும், சால்புக் குணமுமில்லார் சாரின், இம்மை மறுமை யென்னு மிரண்டிற்கும் பாவமும், பழியும் பகையும், சாக்காடும், கேடும், அச்சமு மென்னு மிவ் ஆறு திறமு முனிவராற் சாபமிட்டாற் போலச் சென்று சாரும் வெகுண்டு.

கருத்து: கீழோரைச் சார்ந்தால் பழி பாவம் முதலியன வந்தெய்தும்.

ஆர்வமே, செற்றம், கதமே, அறையுங்கால்,
ஒர்வமே, செய்யும் உலோபமே, சீர்சாலா
மானமே, மாய உயிர்க்கு ஊனம் என்னுமே -
ஊனமே தீர்ந்தவர் ஒத்து.
61


சுற்றத்தார்மே லன்பும், செற்றமும், கோபமும் சொல்லுங்காற் பாங்கோடுதலும், உள்ளத்தாற் செய்யப்படு முலோபமும், சீர் நிரம்பாத மானமு மென்று சொல்லப்பட்ட ஆறு திறமு மாயத்தையுடைய வுயிர்கட்குக் குற்றமென்று சொல்லும் குற்றந்தீர்ந்தார் சொல்லிய நூல்கள்.

கருத்து: அவா முதலியன தீது தருமென்று அறிவு நூல்கள் கூறும்.

கூத்தும், விழவும், மணமும், கொலைக் களமும்,
ஆர்த்த முனையுள்ளும், வேறு இடத்தும், ஒத்தும்
ஒழுக்கம் உடையவர் செல்லாரே; செல்லின்,
இழுக்கம் இழவும் தரும்.
62


கூத்தாடு மிடத்தும், விழாச் செய்யுமிடத்தும், மணஞ் செய்யுமிடத்தும், ஆர்த்த போர்க்களத்தும், பகைவரிடத்தும், இதுபோலும் வேறிடத்தும் ஒழுக்க முடையவர் செல்லார். செல்வராயின் உயிர்க்கிடையூறும் பொருளிழவுந் தரும்.

கருத்து: கூத்தாடுமிடம் முதலியவற்றிற்குச் செல்லுதல் கீழ்மைத் தன்மையையும் பொருளழிவையும் உண்டாகும்.

ஊணொடு, கூறை, எழுத்தாணி, புத்தகம்,
பேணொடும் எண்ணும், எழுத்து, இவை மாணொடு
கேட்டு எழுதி, ஓதி, வாழ்வார்க்கு ஈய்ந்தார் - இம்மையான்
வேட்டு எழுத வாழ்வார், விரிந்து.
63


ஊணும் ஆடையும், எழுத்தாணியும், பொத்தகமும் என்கின்ற நான்கினையும், விருப்பத்துடனேயெண்ணும், எழுத்து மென்னு மவற்றையு மாணாக்கர் தொழிலினாற் கேட்டெழுதி யோதி வாழ்வார். முற்பிறப்பின்கட் கொடுத்தா ரிப்பிறப்பின்க ணுலகத்தார் விரும்பித் தம தாணை விரும்பியெழுத மன்னராய் வாழ்கின்றார்.

கருத்து: ஊக்கத்தோடு கற்கும் மாணாக்கர்களுக்கு ஊண் உடை முதலியன கொடுத்துதவுகின்றவர்கள் செல்வராய் வாழ்வர்.

உயர்ந்தான் தலைவன் என்று ஒப்புடைத்தா நோக்கி,
உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி, உயர்ந்தான்
அருந் தவம் ஆற்றச் செயின், வீடு ஆம் என்றார் -
பெருந் தவம் செய்தார், பெரிது.
64


எல்லாரினு முயர்ந்தவன் றலைவனாவானென் றுள்ளங்கொண்டு, மாற்றவர்க்குச் சொன்ன நன்மையானே யொக்க வாராய்ந்து, உயர்ந்தவனாற் சொல்லப்பட்ட வாகமத்தை யோதி, அவ்வாகமத்திற் சொன்ன வகையானேயடக்க முடையவனாய்; அவ்வுயர்ந்தவன் சொல்லிய வரிய தவத்தை மிகவுஞ் செய்தால், பிறப்பில்லாத வீடாமென்று சொல்லினார், மிகவும் பெருந் தவஞ்செய்தார்.

கருத்து: கடவுணெறியி லொழுகுவார்க்கே வீடுபேறுண்டாகுமென்பது சான்றோர் கருத்து.

காலனார் ஈடு அறுத்தல் காண்குறின், முற்று உணர்ந்த
பாலனார் நூல் அமர்ந்து, பாராது, வாலிதா,
ஊறுபாடு இல்லா உயர் தவம் தான் புரியின்,
ஏறுமாம், மேல் உலகம் ஓர்ந்து.
65


காலனாரது வலியை யறுத்தும் பிறப் பறுக்கலுறின் முற்றுணர்ந்த தன்மையாரையு மவராற் சொல்லப்பட்ட வாகமத்தையும் விரும்பி யரிதென்று பாரா தூறுபாடில்லாத வுயர்ந்த தவத்தை யொருவன் செய்வானாயின் வீட்டுலகத்தின்க ணேறுமேனோக்கி.

கருத்து: ஆண்டவ னறிவுநூல்களை யோதித் தவஞ்செய்வார் வீடுபேறடைவர்.

பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த
மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின், - மை தீர்
சுடர் இன்று; சொல் இன்று; மாறு இன்று; சோர்வு இன்று;
இடர் இன்று; இனி துயிலும் இன்று.
66


பொய் தீர்ந்த வறிவுடையார் பொருளாக விரும்பி யாராய்ந்த குற்றந்தீர்ந்த வீட்டுலகின் மாட்சிமையையுரைப்போமாயின், ஒளியில்லை, உரையில்லை, மாறுபாடில்லை, கேடில்லை, துன்பமில்லை, இனிய துயிலு மில்லை.

கருத்து: வீடுபேற்றிற் பகலிரவு முதலாயின இல்லையென்க.

கூர் அம்பு, வெம் மணல் ஈர் மணி, தூங்கலும்,
ஈரும் புகை, இருளோடு, இருள், நூல் ஆராய்ந்து,
அழி கதி, இம் முறையான், ஆன்றார் அறைந்தார் -
இழி கதி, இம் முறையான் ஏழு.
67


கூரிய வம்பும், வெம்மணலும் குளிர்ந்த மணியு, மொழுகியவன்று மீரத்தக்க புகையு, மிருளிலிருளுமென நூலால் நிரம்பினார் ஆயி னழியுங் கதிக ளிம் முறையினின்று மொழிந்த வருந்தவர் சொல்லினா ரிழிகதியாகிய நரகங்களில் முறையா னேழாக.

கருத்து: அம்புள்ள இடம் முதலாகத் தீவாய்க் குழிகள் ஏழென்ப.

சாதல், பொருள் கொடுத்தல், இன்சொல், புணர்வு உவத்தல்,
நோதல், பிரிவில் கவறலே, ஓதலின்
அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக,
மென்புடையார் வைத்தார், விரித்து.
68


சாவிற்சாதலும், பொருள் கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், புணர்ச்சி விரும்புதலும், நோவில் நோதலும், பிரிவின் கலங்குதலு மெனு மிவ்வாறு குணமும் நீங்காத வன்புடையார்க் குள்ளனவாக மெல்லிய திறப்பாட்டையுடையார் விரித்துரைத்து வைத்தார்.

கருத்து: சாவின் சாதல் முதலியன உள்ளன்புடையார் செயல்களாம்.

எடுத்தல், முடக்கல், நிமிர்த்தல், நிலையே,
படுத்தலோடு, ஆடல், பகரின், அடுத்து உயிர்
ஆறு தொழில் என்று அறைந்தார், உயர்ந்தவர் -
வேறு தொழிலாய் விரித்து.
69


உறுப்பினை யெடுத்தலும் முடக்கலும், நிமிர்த்தலும், நிற்றலும், கிடத்தலும், ஆடுதலுமெனத் தொழிலாறு வகைப்படும், பகர்வேமாயி னித்தொழில்களையடுத் துயிர் தனது வருத்த முறுந் தொழிலென்றவற்றை யறிந்தார் சொன்னாரொன் றொன்றனோடு வேறுபட்ட தொழிலாக விரித்து.

கருத்து: உயிர்களை எடுத்தல் முதலாயின, உடம்பெடுத்த உயிர்களின் தொழில்கள் என்க.

ஐயமே, பிச்சை, அருந் தவர்க்கு ஊண், ஆடை,
ஐயமே இன்றி அறிந்து ஈந்தான், வையமும்
வானும் வரிசையால் தான் ஆளும் - நாளுமே,
ஈனமே இன்றி இனிது.
70


இரந்தவர்க் கையமும், பிச்சையும் அருந்தவர்க்கூணு, முடையில்லாதார்க் குடையு மென்றிந் நான்கினையுங் கொடைப்பயன்களை யறிந் தையமின்றித் துணிந்து கொடுத்தான்; வையத்தையும் வானத்தையு முறைமையானே நாடோறுமாளுங் குறைவின்றி யினிதாக.

கருத்து: ஐயம் முதலியவற்றை இயல்பறிந்து கொடுப்பவன் இம்மை மறுமை நலன்களை எய்துவான்.

நடப்பார்க்கு ஊண், நல்ல பொறை தாங்கினார்க்கு ஊண்,
கிடப்பார்க்கு ஊண், கேளிர்க்கு ஊண், கேடு இன்று உடல் சார்ந்த
வானகத்தார்க்கு ஊணே, மறுதலையார்க்கு ஊண், அமைத்தான் -
தான் அகத்தே வாழ்வான், தக.
71


வழிபோய் வருந்தினார்க் கூணும், சுமையெடுத்து வருந்தினார்க் கூணும், நோய்கொண்டு கிடப்பார்க்கூணும், கேளாயினார்க் கூணும், இறந்துபோய வானகத்தார்க் கூணு மமைத்தவன்றா னின்பத்தோடு வாழ்வான் றகுதிபட்டு.

கருத்து: வழிநடப்பவர் முதலானவர்களுக்கு உணவு கொடுப்பவன் இம்மையில் நல்வாழ்வு பெறுவான்.

உணராமையால் குற்றம்; ஒத்தான் வினை ஆம்;
உணரான் வினைப் பிறப்புச் செய்யும்; உணராத
தொண்டு இருந் துன்பம் தொடரும்; பிறப்பினான்
மண்டிலமும் ஆகும்; மதி.
72


பேதைமையாற் காமம் வெகுளி மயக்கமாகிய முக்குற்றமுளவாம். கல்வியாற் சீலமுளவாம், அறிவிலாதான் செய்யும் வினைகள் பிறப்பினையாக்கும். பிறப்பினானுணராத தொண்டான் வரும் பெருந்துன்பந் தொடர்ந்து வரும், பின்னையும் பிறப்பாலே பஞ்ச பரிவத்தானமா மென்றவாறு. இதனுட் டுன்பமென்ப தொன்பது. அவ்வொன்பதாவன : உயிரும் உயிரில்லாதனவும், புண்ணியமும் பாவமுமுற்றுஞ் செறிப்புங் கட்டு முதிர்ப்பும் வீடுமென விவை.

கருத்து: அறியாமையாற் குற்றமும், நூலுணர்ச்சியால் நல்வினையும், அஃதின்மையாற் பிறப்பும், அப்பிறப்பால் துன்பமும், அதனான் மேன்மேலும் பிறவிச் சுழற்சியும் விளையுமென்பது. எனவே அறிவு நூல்களைப் பழுதறவோதி அறிவைப் பெருக்கிக் கொள்ளல் வேண்டுமென்பது கருத்து.

மனை வாழ்க்கை, மா தவம், என்று இரண்டும், மாண்ட
வினை வாழ்க்கை ஆக விழைப; மனை வாழ்க்கை
பற்றுதல்; இன்றி விடுதல், முன் சொல்லும்; மேல்
பற்றுதல், பாத்து இல் தவம்.
73


மனை வாழ்க்கையு மாதவமென்று சொல்லப்பட்ட விரண்டு மாட்சிமைப்பட்ட நல்வினை வாழ்க்கையாக விரும்புவார்கள். அவற்றில் மனைவாழ்க்கையாவது பொருளின்மேற் பற்றுடையவனா யொழுகுதலாம். இதன்கண் முற்சொல்லிய மாதவமாவது பொருள்கண்மேற் பற்றுதலின்றி நீங்குதல். இனி யோகமாகிய பாத்திறவமாவ துலகி னுச்சிமேற் பற்றுதலாகிய வீட்டைத் தரும்.

கருத்து: பற்றுவைத் தொழுகும் மனைவாழ்க்கையும். பற்றின்றி யொழுகுந் தவ வாழ்க்கையும் அறிஞர்க்கு நல்வாழ்க்கைகளேயாம்.

இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும்,
நடை வனப்பும், நாணின் வனப்பும், புடை சால்
கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல; எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு.
74


இடையினழகும், தோளினழகும், பெருமையினழகும், நடையினழகும், நாணுடைமையினான்வரு மழகும், புடையமைந்த கழுத்தினழகும் அழகல்ல, ஒருவர்க் கெண்ணு மெழுத்து மறிதலாகிய வழகே யழகு.

கருத்து: மக்கட்குக் கல்வியழகே உண்மையழகாம். ஓடு எண்; ஈண்டு எடுத்துக்காட்டப்பட்ட வனப்புக்கள் ஆண் பெண் இரு பாலார்க்கும் ஒத்திருத்தல் உணரற்பாலது. ஏகாரம் : தேற்றப்பொருளது.

அறுவர் தம் நூலும் அறிந்து, உணர்வு பற்றி,
மறு வரவு மாறு ஆய நீக்கி, மறு வரவின்
மா சாரியனா, மறுதலைச் சொல் மாற்றுதலே -
ஆசாரியனது அமைவு.
75


அறுசமயத்தார் நூலையு மறிந்ததனாலே கூரிய வுணர்வுடையனா யவற்றுட் குற்றமுடைய பொருள்களையு மறுதலைப்பட்ட பொருள்களையு நீக்கி மறித்துப் பிறத்தலில்லாத பெரிய சரிதையை யுடையனா யதன்மாட்டு மறுதலைச்சொல்வராமற் சொல்லுத லாசாரியனுக்கியல்பு.

கருத்து: சமய நூல்கள் பலவு முணர்ந்து, தவறு நீக்கியொழுகும் ஒழுக்கமுடையனாய்த் தனக்கு மாறாவார் கூறும் மறுப்புரைகளை மாற்றி நிறுத்தவல்ல ஆற்றலுடையவனே ஆசிரியனாவானென்க.

ஒல்லுவ, நல்ல உருவ, மேற் கண்ணினாய்!
வல்லுவ நாடி, வகையினால், சொல்லின்,
கொடையினால் போகம்; சுவர்க்கம், தவத்தால்;
அடையாத் தவத்தினால் வீடு.
76


தம்மோ டொத்தவாய்த் திருத்தக்கவேல் போன்ற கண்ணையுடையாய்! வல்ல நூல்களை யாராய்ந்து திறம்படச் சொல்லுவேனாயிற் கொடையாற் போகமும் தவத்தினாற் றுறக்கமும், வேறுபடா தறிவோடு கூடிய மிக்க தவத்தினால் வீடும் பெறும்.

கருத்து: ஈகையால் இம்மை யின்பமும், தவத்தால் விண்ணுலக நுகர்ச்சியும், மெய்யுணர்வால் வீடுபேறு முண்டாமென்பது.

நாற் கதியும் துன்பம் நவை தீர்த்தல் வேண்டுவான்,
பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து, நூற் கதியின்
எல்லை உயர்ந்தார் தவம் முயலின், மூன்று, ஐந்து, ஏழ்,
வல்லை வீடு ஆகும்; வகு!
77


தேவர் கதி, நரகர் கதி, விலங்கு கதி, மக்கள் கதி யென்று நான்கு கதியினுமுள்ள துன்பமே, யத்துன்பந்தீர்த்தல் வேண்டுவான் பகுதிப்பட்ட கதிகளின் கூறுபிறழாம லாராய்ந்து நூல்வழியா னெல்லை காண்கின்ற முனிவரது தவத்தை முயல்வனாயின் மூன்றாம் பிறப்பின்கணாத லேழாம் பிறப்பின்கணாதல் விரைந்து வீடாகுமென்று வகுத்துச்சொல்லுக.

கருத்து: பிறவித் துன்பத்தை ஒழித்தற்கு விரும்புகின்றவன் மெய்யுணர்ந்து தவம் புரிதல் வேண்டும்.

தாய் இழந்த பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி,
வாய் இழந்த வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார்,
கைத்து ஊண் பொருள் இழந்தார், கண்ணிலவர்க்கு, ஈய்ந்தார்; -
வைத்து வழங்கி வாழ்வார்.
78


தாயை யிழந்த குழவியும், தலைவனையிழந்த பெண்டாட்டியும், வாயில்லாத மூங்கைகளும், வாணிகம் போய்ப் பொருளிழந்தாரும் ‘உண்ணுதற் காதாரமாய பொருளை யிழந்தாரும்' கண்ணில்லாதாரு மென்னு மிவர்கட்குப் பொருள் கொடுத்தார் மேலைக்கு வைத்து வழங்கி வாழ்வார்.

கருத்து: தாயில்லாத பிள்ளை முதலானவர்க்கு வேண்டுவன கொடுத்துதவல் வேண்டும்.

சாக்காடு, கேடு, பகை, துன்பம், இன்பமே,
நாக்கு ஆடு நாட்டு அறைபோக்கும், என நாக் காட்ட,
நட்டார்க்கு இயையின், தமக்கு இயைந்த கூறு, உடம்பு
அட்டார்வாய்ப் பட்டது பண்பு.
79


சாக்காடுங் கேடும் பகையும் துன்பமுமின்பமுஞ் சொல்லப்படுகின்ற நாட்டறை போக்குமென்று சொல்லப்பட்ட விவை நட்டோர்க்கு வருமாயின் மற்றொன்று நாவாடாது தமக்கியைந்த கூறுவுடம்பட்டார் கண்ணேயுள்ள குணம்.

கருத்து: பிறர்க்கு வருஞ் சாக்காடு முதலியவற்றைத் தமக்கு வந்தாற்போற் காணுமியல்பே, நல்லியல்பெனப்படுமென்க.

புலையாளர், புண்பட்டார், கண் கெட்டார், போக்கு இல்
நிலையாளர், நீர்மை இழந்தார், தலையாளர்க்கு
ஊண் கொடுத்து, ஊற்றாய் உதவினார் - மன்னராய்க் -
காண் கொடுத்து வாழ்வார், கலந்து.
80


தாழ்வை யுடையவர்களுக்கும், உடலிற் புண்பட்டவர்களுக்கும், நாடு சுற்றி வருவதில் நிலைகொண்டிருப்பவர்களுக்கும், மேன்மைத்தன்மை யிழந்தவர்களுக்கும், ஆதரவாய் உணவைக் கொடுத்துதவி செய்தவர்கள்; அரசர்களாய் அடுத்து ஏற்போர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து நண்பர் முதலியவருடன் கூடி இன்புற்று வாழ்வார்.

கருத்து: புலையாளர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்து உதவி செய்தவர்கள், மறுமையில் மன்னராய் வாழ்வார்.

சிறப்புப் பாயிரம்


இல்லற நூல்; ஏற்ற துறவற நூல், ஏயுங்கால்,
சொல் அற நூல்; சோர்வு இன்றித் தொக்கு உரைத்து, நல்ல
அணி மேதை ஆய், நல்ல வீட்டு நெறியும்
கணிமேதை செய்தான், கலந்து.


சிறந்த அழகாகிய அறிவை யுடையாளே! கணிமேதை என்னும் புலவர் இல்லற நூலும் ஞானமடைதற்குரிய துறவற நூலும் ஆகிய கடவுளாற் சொல்லப்பட்ட அறநூல்களின் பொருள்களையும் தளர்ச்சியின்றித் தொகுத்துக் கூறி ஏற்றவிடத்தில் வீடடைதற்குரிய ஞான வழியையும் உடன் கூட்டி அந்நூலை யியற்றி யருளினார்.

கருத்து: கணிமேதை. ‘ஏலாதி' யென்னும் உயர்ந்த அறநூலை இயற்றினான்.

ஏலாதி முற்றும்.