உலகநீதி என்ற நீதிநூல் உலகநாதர் என்ற புலவரால் எழுதப்பட்டுள்ளது, இந்நூலின் இறுதிவரிகள் இயற்றிய புலவரின் பெயரைத் தருகின்றன. பதின்மூன்று ஆசிரிய விருத்தப்பாக்களைக் கொண்ட இந்த நூலின் நோக்கம், உலக மக்களுக்குப் பொதுவான நீதிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது. பாக்களின் ஒவ்வொரு அடியும் ஒரு நீதியை அறிவுறுத்துகிறது. பாடல் வரிகளின் மூலம் உலகநாதர் ஒரு முருகபக்தர் என்பது மட்டுமே தெரிகிறது. இத்தகவலைத் தவிர இவரைப்பற்றிய பிற தகவல்களோ, காலமோ, வரலாறோ அறியக்கூடவில்லை. தமிழிலக்கியம் தரும் நீதி நூல்களின் தொகுப்பில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்த நூல்களுள் உலகநாதர் இயற்றிய உலகநீதியும் ஒன்று.
நீதி என்ன என்பதை அனைவரும் புரிந்து கொள்வது இன்றியமையாததாகிறது. இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் விளக்க உரையின்றி அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய பாடல் வரிகளை பள்ளிச் சிறுவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியுள்ளார் உலகநாதர். ஒலி நயத்தோடு பாடவும் அதனால் மனதில் இருத்தவும் கூடிய வரிகளைக் கொண்ட பாடல்களாக இவை விளங்குகின்றன. உலகநீதியைப் பள்ளியில் படித்த நினைவில்லையே என்று வியப்பவர்களுக்கு “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்” என்ற வரிகள் சட்டென இப்பாடல் படித்ததை நினைவிற்கு கொண்டு வந்துவிடும்.உலகநீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு
என்ற இரு இறைவணக்க வரிகளுடன் துவங்கி 13 ஆசிரிய விருத்தப்பாக்களும் தொடர்கின்றன. ஒவ்வொரு விருத்தப்பாவும் எட்டு வரிகள் என்ற வீதத்தில் (13 X 8) 104 வரிகளையும், பிள்ளையாரிடம் இந்த உலகநீதிபுராணத்தைப் பாட அருள் பெற வேண்டி வணங்கும் இரு காப்பு வரிகளுடன் சேர்த்து முழுப் படைப்பும் 106 வரிகள் மட்டும் கொண்டது. மிகச் சுருக்கமாக உலகநாதர் உலகிற்கு சொல்ல விரும்பபிய நீதிகள் அனைத்தும் இவற்றுள் சொல்லப்பட்டுவிடுகின்றன.
பதினொன்றாவது பாடலும், பதின்மூன்றாவது பாடலும் அமைப்பில் சற்றே மாறுபட்டவை. பதினொன்றாம் பாடல் முழுவதும் கோர்வையாக ஒருகருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடல். எனவே வரிக்கு வரி ஒரு நீதியை குறிக்கும் பொதுவான முறையில் இருந்து பதினொன்றாவது பாடல் மாறுபட்டுள்ளது.
ஒவ்வொரு பாடலும் முருகனை வாழ்த்தி முடிவதாக அமைந்துள்ளது, இடைச்சொருகல் போன்று காணப்படுகிறது. அவ்வரிகள் இல்லாமல் பார்த்தால் அவ்வை காலத்துக்கு நெருங்கிய நாட்களில் இந்நூலை கொண்டு சேர்க்கும்.
இந்நூல் கூறும் அறிவுரைகள் எதனைச் செய்ய வேண்டாம் என்று எதிர்மறையாக அமைந்துள்ளன. (எ.கா. ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்)
16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகநாத பண்டிதர் இந்த நூலை இயற்றினார் என்பர் ஆனால் அதற்கு சான்று இல்லை.
16-ஆம் நூற்றாண்டு உலகநாத பண்டிதர் சைவ சித்தாந்த நூல்கள் வெளிவரத் தூண்டியவர். சிவனை வழிபட்டவர்.
18-ஆம் நூற்றாண்டு உலகநீதி இயற்றிய உலகநாதர் முருக வழிபாடுடையவர்.
"அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்" என்பன போன்றவற்றிலுள்ள 'உலகநீதி' தமிழ்நடை பிற்காலத்தது.
கடவுள் வாழ்த்து
- உலக நீதி புராணத்தை உரைக்கவே
- கலைக ளாய்வரும் கரிமுகன் காப்பு
- பாடல் 01
- ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் [ஓதாமல் = படிக்காமல், பாடங் கற்காமல்]
- ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் [பொல்லாங்கு = கெட்டது, கெட்டசொல்]
- மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் [மாதா = தாய்]
- வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம் [செய்வாரோடு இணங்க; இணங்கு = பழகு]
- போகாத இடந்தனிலே போக வேண்டாம் [போகாத = போகத்தகாத, போகக்கூடாத]
- போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் [புறம் = முதுகு; புறஞ்சொல்லல் = ஆளில்லாத பொழுது பழித்தல்; திரி = நட]
- வாகாரும் குறவருடை வள்ளிபங்கன் [வாகு = பாகு, புஜம், மேற்கை, கைவலிமை; ஆரும் = நிறைந்த; வாகாரும் = வலிமைநிறைந்த]
- மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
- பாடல் 02
- நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
- நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
- நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
- நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் [நல்லவர்களின் தொடர்பு இல்லாதவரோடு]
- அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
- அடுத்தவரை ஒருநாளுங் கெடுக்க வேண்டாம் [அடுத்தவர் = அண்டியிருப்பவர், நம்பி ஒட்டியிருப்பவர்]
- மஞ்சாருங் குறவருடை வள்ளிபங்கன் [மஞ்சு = மைந்து, வலிமை; ஆரும் = நிறையும்; மஞ்சாரும் குறவர் = வலிமையான குறவர்]
- மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே [மயிலேறும் பெருமாள் = மயிலேறும் கடவுள், முருகன்]
- பாடல் 03
- மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
- மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம் [மாற்றான் = பகைவன், எதிரி; எதிரியை நண்பனாய் நம்பாதே]
- தனந்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் [தனம் = செல்வம்; உண்ணாமல் = நுகராமல், புழங்காமல்; புதை = மறை, ஒளித்துவை]
- தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் [தருமம் = நற்செய்கை]
- சினந்தேடி அல்லலையுந் தேட வேண்டாம் [அல்லல் = துன்பம்]
- சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம் [சினந்திருந்தார் = கோபக்காரர்; சேறல் = செல்தல், செல்லுதல்]
- வனந்தேடுங் குறவருடை வள்ளி பங்கன் [வனம்= காடு; தேர்= வேட்டை விலங்கைத் தேடு; பங்கன் = துணைவன், கணவன்]
- மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
- பாடல் 04
- குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் [பாராட்டு = பெரிதாக நினை, நினைத்துக்கொண்டே இரு]
- கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம் [களவு = திருட்டு, இணங்கு = பழகு]
- கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
- கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் [கற்பு = உறுதி, வாழ்வில் ஒருவனையே காதலிக்கும் உறுதி]
- கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம் [கொற்றவன் = அரசன்; எதிர் = முன்; மாறு = பகை, பகையான பேச்சு]
- கோயிலில்லா ஊரில்குடி இருக்க வேண்டாம்
- மற்றுநிகர் இல்லாத வள்ளிபங்கன் [நிகர் = ஈடு, ஈடிணை ஒப்புமை; சரிசமம். தனக்கு ஈடிணையற்ற வள்ளிகணவன்]
- மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
- பாடல் 05
- வாழாமல் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம்
- மனையாளைக் குற்றம்ஒன்றும் சொல்ல வேண்டாம்
- வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
- வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம் [வெம் = கடுமை; சமர் = போர்; புறம் = முதுகு; புறங்கொடு = முதுகுகாட்டிப் ஓடு]
- தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம் [குலம் = கூட்டம்]
- தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் [பொல்லாங்கு = கெட்டது]
- வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன் [வாழ்வு ஆரும் = நல்வாழ்வு நிரம்பும்]
- மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
- பாட்டு 06
- வார்த்தைசொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
- மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
- மூத்தோர்சொல் வார்த்தைதனை மறக்க வேண்டாம்
- முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
- வாத்தியார் கூலியைவைத் திருக்க வேண்டாம் [ஆசிரியர்க்கான ஊதியத்தைக் கொடுக்காமல் வைத்திருக்க வேண்டாம்;]
- வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
- சேர்த்தபுக ழாளன்ஒரு வள்ளி பங்கன்
- திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே
- பாடல் 07
- கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம் [கருதாமல் = தீர எண்ணிப்பார்க்காமல்]
- கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம் [கணக்கழிவு = முறைகேடு, injustice]
- பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம் [பொருவார் = போர்புரிவார்]
- பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
- இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம் [தாரம் = மனைவி]
- எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம் [எதிரிடு = எதிரியாக்கு]
- குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன் [குருகு = பறவைகள்; புனம் = தினைவளரும் நிலம்; ஏழை = வஞ்சமற்றவள்]
- குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே [வேள் = தலைவன், கடவுள்]
- பாடல் 08
- சேராத இடம்தனிலே சேர வேண்டாம்
- செய்தநன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
- ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம் [குண்டுணி = கோள்சொல்வோன், கலகமூட்டுவோன், tale bearer]
- உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம் [உதாசினம் = அலட்சியவார்த்தை, அவமதிப்பு]
- பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம் [பேர் = பெயர்புகழ்; புகழ்தருஞ் செயல்களைத் தவிர்க்கவேண்டா]
- பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம் [பிணை = உத்தரவாதம், bail bond; குற்றஞ்செய்வார்க்கு உத்தரவாதமாகி]
- வாராரும் குறவருடை வள்ளி பங்கன் [வார் = பெருமை, வேட்டை வலை; ஆரும் = அமையும், இருக்கும்]
- மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
- பாடல் 09
- மண்ணின்று மண்ணோரம் சொல்ல வேண்டாம் [மண்ணோரம் = நிலவழக்கில் நடுநிலையற்ற ஒருதலையான பேச்சு]
- மனம்சலித்துச் சிலுகிட்டுத் திரிய வேண்டாம் [சலித்து = தளர்ந்து; சிலுகிடு = சண்டைபோடு]
- கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம் [கண்ணழிவு = இரக்கமின்மை; துயர்காட்டு = துயரஞ் செய்]
- காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம் [கட்டுரைத்தல் = உறுதியாகச் சொல்லுதல்]
- புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
- புறம்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம் [புறம் சொல்லி = முதுகுக்குப் பின்னால் பழிகூறி]
- மண்ணளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன் [மண்ணளந்தான் = திருமால்; எங்கோன் = எம் மன்னன், எம் தலைவன்]
- மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
- பாடல் 10
- மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம் [மறம் = வீரவலிமை; வீரம்பேசிச் சண்டைக்கு அலைவாரொடு பழகாதே]
- வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம் [வழக்கழிவு = அநியாயம், முறைகேடு]
- திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம் [திறம் = வலிமை]
- தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
- இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
- ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம் [ஏசல் = திட்டல், நத்து = விரும்பு]
- குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
- குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே
- பாடல் 11
- அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம் [அஞ்சுபேர் = வண்ணான், அம்பட்டன், ஆசிரியர், மருத்துவிச்சி, மருத்துவன்]
- அதுஏது இங்குஎனின்நீ சொல்லக் கேளாய்
- தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்தன் கூலி [நாவிதன் = அம்பட்டன், முடிதிருத்துவோன்; தஞ்சம் = பாதுகாப்பு]
- சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி [சகலம் = அனைத்து; ஓதுவி = படிக்கவை]
- வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
- மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்தன் கூலி [மகா நோவு = பெரு நோய்]
- இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
- ஏதுஏது செய்வானோ ஏமன் தானே [ஏமன் = எமன்]
- பாடல் 12
- கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம் [கூறு = பகுதி; கூறாக்கி = குடும்பத்தாரைப் பிரித்து]
- கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
- தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம் [தூறு = பழிச்சொல்; தூறாக்கு = பழிசொல்லு; தலையிடுதல் = புகுதல்]
- துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம் [துர்ச்சனர் = தீய மக்கள்]
- வீறான தெய்வத்தை இகழ வேண்டாம் [வீறு = தனிப்பட்ட சிறப்பு; இகழ் = அலட்சியப்படுத்ஹ்து, புறக்கணி]
- வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
- மாறான குறவருடை வள்ளி பங்கன் [மாறு = பகை, போராட்டம்; மாறான குறவர் = பகையில் ஈடுபடும் (அ) போராடத் தயங்காத குறவர்]
- மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
- பாடல் 13
- ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி [ஆதரி = ஆசைகூர், ஆசைப்படு]
- அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
- ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
- உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
- காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும் [காதலி = விரும்பு]
- கருத்துடனே நாள்தோறும் களிப்பி னோடு [களிப்பு = கவலையற்ற பேரின்பம்]
- போதமுற்று மிகவாழ்ந்து புகழும் தேடிப் [போதம் = அறிவுத்தெளிவு]
- பூலோகம் உள்ளளவும் வாழ்வார் தாமே
உலகநாதன் பாடிய உலகநீதி முற்றும்
உலகநீதி பாடல் வரிகள், தான் கூறும் அறிவுரைகளை எதிர்மறையாகவே கூறிச் செல்கிறது. இம்முறையை புலவர் கையாண்டதை, அவர் சொல்லும் கருத்தை வலியுறுத்தும் முயற்சியாக, எச்சரிக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட அறிவுரைகளாகக் கொள்ளலாம். இதை ஒட்டிய சுவையான தகவல் ஒன்றும் உண்டு. திரு அருட்பிரகாச வள்ளலார் இளமையில் கல்வி பயிலும்பொழுது “வேண்டாம், வேண்டாம்” என்று முடியும் இப்பாடல் வரிகளைக் கண்டு வியப்புற்றாராம். ஏன் அறநெறிகளை “வேண்டும், வேண்டும்” என்று எழுதலாகாது என்ற எண்ணம் கொண்டு “உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்” என்ற பாடலை எழுதியதாகக் கூறப்படுகிறது.
உலகநீதி பாடலகளில் காணும் வெறும் 66 வரிகளே உள்ள அறநெறிப் பாடல் வரிகளை சிறுவயதில் பொருள் புரியாமல் மனனம் செய்தாலும்கூட, வளர்ந்த பின்னர் வாழ்நாள் முழுவதும் நல்வழிப்படுத்தும் கருத்துரைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது தெரிகிறது. எனவே அதன் அடிப்படையில் மனதில் எழும் கேள்வி; ஏனிந்த 66 வரிகளையும் ஆரம்பப்பள்ளி கல்வி நாட்களிலேயே சிறார் எண்ணத்தில் பதியுமாறு சொல்லி, கடைபிடிக்கும் அவசியத்தையும் வலியுறுத்தக் கூடாது என்பதே.
பாடலின் ஒவ்வொரு வரியையும் ஒரு திருக்குறள் கருத்துடன் இணைத்தும் கவிதை நயம் பாராட்டலாம், அத்துடன் மற்ற அறநெறி நூல்களின் பாடல்களும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவும் இயலாது. உலகநீதி பாடல் வரிகளை மேலும் பலகோணங்களிலும் ஆராய்ந்து இலக்கிய நயம் பாராட்டலாம்.