பரிபாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரிபாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பரிபாடல் - கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து

1. திருமால்
அரு மறைப் பொருள்

ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை;       5

எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும் மேனியை; மேனித்
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்
தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை-       10

சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்,
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.

அமர் வென்ற கணை

இணைபிரி அணி துணி பணி எரி புரை
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர்       15

நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற்       20

றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப்       25

போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.

சொல்லில் அடங்காப் பெரும் புகழ்

‘பொருவேம்‘ என்றவர் மதம் தபக் கடந்து,
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்!       30

இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:
அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது?       35

அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்.

துதி மொழிகள்

விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும்       40

அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ;       45

ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும்,       50

நிலனும், நீடிய இமயமும், நீ.
அதனால்,
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய       55

மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!
நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை;       60

எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,
ஆங்கு,
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே;       68

------------------------------------------

2. திருமால்

திருமாலின் பெருமை

ஊழிகளின் தோற்றம்

தொல் முறை இயற்கையின் மதிய
... ..... ... மரபிற்று ஆக,
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லக்,
கரு வளர் வானத்து இசையின் தோன்றி,       5

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிள்ர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்;
செந் தீச்சுடரிய ஊழியும்; பனியடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,       10

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை-       15

வராக கற்பம்

கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுதும்

திருமாலின் நிலைகள்

நீயே, ‘வளையடி புரையும் வாலியோற்கு அவன்       20

இளையன்‘ என்போர்க்கு இளையை
ஆதாம்,
‘புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்,
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்,       25

இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை
நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச்சிறப்பே.

திருமாலின் சிறப்பு

ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில
நித்தில மதாணி அத்தகு மதி மறுச்       30

செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்-
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
‘புள்ளி நிலனும் புரைபடல் அரிது‘ என
உள்ளுநர் உரைப்போர் உரையடு சிறந்தன்று.       35

படைச் சிறப்பு

ஒடியா உள்ளமொடு உருத்து, ஒருங்கு உடன் இயைந்து,
இடி எதிர் கழறும்-கால் உறழ்பு எழுந்தவர்
கொடி அறுபு இறுபு, செவி செவிடு படுபு,
முடிகள் அதிர, படிநிலை தளர,
நனி முரல் வளை முடி அழிபு, இழிபு,       40

தலை இறுபு தாரொடு புரள-
நிலை தொலைபு, வேர், தூர், மடல்,
குருகு, பறியா நீள் இரும் பனைமிசைப்
பல பதினாயிரம் குலை தரை உதிர்வபோல்-
நில்லாது, ஒருமுறை கொய்பு கூடி,       45

ஒருங்கு உருண்டு, பிளந்து, நெரிந்து, உருள்பு சிதறுபு,
அளறு சொரிபு, நிலம் சோர,
சேரார் இன் உயிர் செகுக்கும்-
போர் அடு குரிசில்! நீ ஏந்திய படையே:
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே;       50

பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே.

திருமால் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புக்கள்
நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி;
கண்ணே, புகழ்சால் தாமரை அலர் இணைப் பிணையல்;
வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த
நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும்,       55

சாயல் நினது, வான் நிறை-என்னும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே:
அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்
எவ் வயினோயும் நீயே.

உருவமும், உணவும், வெளிப்பாடும்
செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே!       60

கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,
நின் உருபுடன் உண்டி;       65

பிறர் உடம்படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு.

பல் புகழும் பரவலும்

வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர,
மூவா மரபும் ஓவா நோன்மையும்       70

சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின்
... ... ... மரபினோய் நின் அடி
தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்;
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்,
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்-
‘கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!‘ எனவே.       76
-------------------------------------

கடவுள் வாழ்த்து
3. திருமால்


திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள்

மா அயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி

மணி திகழ் உருபின் மா அயோயே!
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், 5

திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் 10

மாயா வாய்மொழி உரைதர வலந்து:
‘வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ‘ என பொழியுமால், அந்தணர் அரு மறை.

முனிவரும் தேவரும் பாடும் வகை

‘ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின், 15

பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; 20

தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும்,
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்
ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு
கேழலாய் மருப்பின் உழுதோய்‘ எனவும்,
‘மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் 25

சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய்‘ எனவும்,
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
பாடும் வகையே: எம் பாடல்தாம் அப்
பாடுவார் பாடும் வகை. 30

வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும்
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரூ கை,
இரூ கை மாஅல் ! 35

முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 40

ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! 45

நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,
முன்னை மரபின் முதுமொழி முதல்வ!

வனப்பும் வலியும்

நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50

அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,
பிறை வளர், நிறை மதி உண்டி,
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் 55

அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்‘ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?
ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட
சேவல் ஊர்தியும், ‘செங் கண் மாஅல்! 60

ஓ!‘ எனக் கிளக்கும் கால முதல்வனை;
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;

சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள்

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; 65

வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,
உறையும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70

முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;

நால்வகை யுகங்களிலும் ஆராயப்படும் சிறப்பு

பறவாப் பூவைப் பூவினோயே!
அருள் குடையாக, அறம் கோலாக,
இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும் 75

ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை; 80

நால் வகை வியூகம்

செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!

பல திறப் பெயரியல்புகள்

இடவல! குட அல! கோவல! காவல!
காணா மரப! நீயா நினைவ!
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! 85

தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண
பருதி வலவ! பொரு திறல் மல்ல!
திருவின் கணவ! பொரு விறல் மள்ள! 90

மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே! 94

--------------------------------

கடவுள் வாழ்த்து
4. திருமால்


புகழ்தலை ஒழியோம்

ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்துத் தம்
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி,
நின் புகழ் விரித்தனர்; கிளக்குங்கால், அவை நினக்கு
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம், ஆயினும்,
நகுதலும் தகுதி, ஈங்கு ஊங்கு நிற் கிளப்ப; 5

திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,
வரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்;
மாஅ மெய்யடு முரணிய உடுக்கையை;
நோனார் உயிரொடு முரணிய நேமியை;

இரணியனைத் தடித்தமை

செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ- 10

புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா 15

நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்-
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியடு, 20

தடி தடி பல பட-வகிர் வாய்த்த உகிரினை;

வராகம் ஆகி உலகத்தை எடுத்தமை

புருவத்துக் கரு வல் கந்தத்தால்
தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்;
உலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; 25

நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள; 30

நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,
ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,
மேவல் சான்றன, எல்லாம். 35

கருடக் கொடி

சேவல் ஓங்கு உயர் கொடியோயே!
சேவல் ஓங்கு உயர் கொடி
நின் ஒன்று உயர் கொடி பனை;
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்;
நின் ஒன்று உயர் கொடி யானை; 40

நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று;
விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்;
அவன் மடிமேல் வலந்தது பாம்பு;
பாம்பு தொடி; பாம்பு முடி மேலன;
பாம்பு பூண்; பாம்பு தலைமேலது; 45

பாம்பு சிறை தலையன;
பாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவை
கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு;

பகையும் நட்பும் இன்மை

கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் 50

உள்வழி உடையை; இல்வழி இலையே;
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,
மாற்று ஏமாற்றல் இலையே; ‘நினக்கு
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்‘ எனும்
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: 55

மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,
நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை;
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!
நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை 60

அன்ன நாட்டத்து அளப்பரியவை;
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;
நின்னில் சிறந்த நிறை கடவுளவை;
அன்னோர் அல்லா வேறும் உள; அவை
நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை. 65

பல்வேறு திருப்பெயர் கொண்ட ஒரு பொருள்

அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர் 70

தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;
அவரவர் ஏவலாளனும் நீயே;
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. 73