மதுரைக்காஞ்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதுரைக்காஞ்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மதுரைக்காஞ்சி

 மதுரைக்காஞ்சி

எளிய உரை – வைதேகி

பாடியவர் – மாங்குடி மருதனார்
பாடப்பட்டோன் – தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை – காஞ்சி
பா வகை – அகவல்பா (ஆசிரியப்பா), வஞ்சிப்பா
மொத்த அடிகள் – 782

தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.

புலவர்: இப்புலவர் பெருமான் மாங்குடி கிழார், மதுரைக்காஞ்சிச் புலவர், காஞ்சிப் புலவர் என்னும் பெயர்களாலும் வழங்கப்படுகின்றார்.  இவர் எழுதிய பாடல்கள் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகியவற்றில் உள்ளன.  இவர் சைவ, பௌத்த, சமண சமயம் பற்றிய குறிப்புகளைக் கொடுத்ததால் அவர் இன்ன சமயத்தர் எனக் கூற இயலாது.  இவர் வேளாண் மரபினர் என அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.       

பாட்டுடைத்தலைவன்:  தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இம்மன்னன் தலையாலங்கானம் (ஆலங்கானம்) என்ற சோழ நாட்டின் ஊரில் சோழ மன்னரையும், சேர மன்னரையும், ஐந்து வேளிர் மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) தோல்வியுறச் செய்தான்.  இப்போர் பற்றின குறிப்புகள் அகநானூறு 36, 175-11, 209-6, நற்றிணை 387, புறநானூறு 19, 23-16, மதுரைக்காஞ்சி 127 ஆகியவற்றில் உள்ளன.  பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடைப் பாட்டின் தலைவனும் இவனே.

காஞ்சித்திணை:  நிலையில்லாத இந்த உலகில் நிலைபேறுடைய புகழை நாடிச் செயல்படும் நிகழ்ச்சிகளைக் கூறுவது காஞ்சித்திணை.  தனக்குத் துணையில்லாத வீடுபேறு நிமித்தமாக அறம் பொருள் இன்பம் என்னும் பொருட்பகுதியாலும் அவற்றின் உட்பகுதியாகிய உயிரும் உடலும் செல்வமும் இளமையும் நிலைபெறாத உலகின் இயற்கையைப் பொருந்திய நல்ல நெறியினை உடையது.  மதுரைக்காஞ்சி என்பதற்கு ‘மதுரையிடத்து அரசர்க்குக் கூறிய காஞ்சி’ எனப் பொருள் கூறினார் ஆசிரியர் நச்சினார்க்கினியர்.    

கதைச்சுருக்கம்:  சிவபெருமானின் வழித்தோன்றல் என முதலில் புலவர் மன்னனைப் புகழ்கின்றார். நிலந்தரு திருவில் பாண்டியனின் வழிமுறை என உரைக்கின்றார். மன்னனின் வள்ளன்மை, ஆலங்கானம் போர் வெற்றி, பிற போர் வெற்றிகள், கைப்பற்றிய பகைவர் நாடுகளைச் செங்கோன்மையுடன் ஆட்சி புரிதல், செழியனை வாழ்த்தி அவனுக்கு நிலையாமை அறிவுறுத்தல், பாண்டிய நாட்டின் ஐந்து வகை நிலங்களின் தன்மைகள், மதுரை நகரின் சிறப்புகள் மற்றும் அங்கு வாழும் மக்கள் பற்றின குறிப்புகள், கடை வீதிகள், உணவுப்பொருட்கள், செல்வந்தர்களின் மாளிகைகள், நால்வகைப் படைகளின் இயக்கம், பௌத்தப் பள்ளி, அந்தணர் பள்ளி, சமணர் பள்ளி, அறங்கூறு அவையம், மதுரையில் இரவு வாழ்க்கை, ஓண நாள் விழா, மன்னனின் நிலை, போர் மறவர்களை மன்னன் வாழ்த்துதல், மன்னனை புலவர் மிகச் சிறப்பாக வாழ்த்துதல் ஆகியவற்றைக் கொண்டது இப்பாடல்.

செழிப்பு நிலை

ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம்பு ஆகத்
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியல் ஞாலத்து,
வல மாதிரத்தான் வளி கொட்ப,   5
வியல் நாள்மீன் நெறி ஒழுக,
பகற் செய்யும் செஞ்ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண்திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க,
மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்க,   10
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய,
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த, (1 – 12)

பொருளுரை:  உயர்ந்த அலைகளையும் அகன்ற நீர்ப்பரப்பையும் முழக்கத்தையும் உடைய கடலை எல்லையாகக் கொண்ட, தேன் கூடுகள் தொங்குகின்ற உயர்ந்த உச்சியுடைய மலைகள் தோன்றியுள்ள உலகத்தில், வலிமையுடன் வானில் காற்றுச் சுழல, அகலத்தையுடைய நாள்மீன்கள் தான் செல்லும் வழியில் செல்ல, பகல் பொழுதை உண்டாக்கும் சிவந்த ஞாயிறும் இரவை உண்டாக்கும் வெண்மையான நிலவும், குற்றம் இல்லாமல் தோன்றி விளங்க, முகில்கள் மழையைப் பொழிந்து உதவ, திசைகள் எல்லாம் தழைக்க, ஒரே விதைப்பில் விதைத்த விதைகள் ஆயிரமாக வளர, விளை நிலங்களும் மரங்களும் உயிர்களுக்குப் பயன் கொடுப்பதை மேற்கொண்டு தழைக்க,

குறிப்பு:  நெடுநல்வாடை 1-2 – வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென.  மாதிரத்தான் (5) – நச்சினார்க்கினியர் உரை – வலமாக ஆகாயத்தின்கண் காற்றுச் சுழல, சோமசுந்தரனார் உரை – விசும்பு, திசை எனினுமாம், காற்று வலப்பக்கம் சுற்றி வீசின் உலகின் நன்மை உண்டாம் என்பது நம்பிக்கை.  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடைமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

சொற்பொருள்:  ஓங்கு திரை வியன் பரப்பின் ஒலி முந்நீர் வரம்பு ஆக – உயர்ந்த அலைகளையும்  அகன்ற நீர்ப்பரப்பையும் முழக்கத்தையும் உடைய கடல் எல்லையாக (ஒலி முந்நீர் – வினைத்தொகை), தேன் தூங்கும் உயர் சிமைய மலை வியல் நாறிய ஞாலத்து – தேன் கூடுகள் தொங்குகின்ற உயர்ந்த உச்சியுடைய மலைகள் தோன்றியுள்ள உலகத்தில் (தேன் – ஆகுபெயர், தேனிறாலுக்கு), வல மாதிரத்தான் வளி கொட்ப – வலிமையுடன் வானில் காற்றுச் சுழல, வலப்பக்கமாக வானில் காற்றுச் சுழல (மாதிரத்தான் – மூன்றனுருபு ஏழனுருபின் பொருளில் வந்தது, வேற்றுமை மயக்கம்), வியல் நாள்மீன் நெறி ஒழுக – அகலத்தையுடைய நாள்மீன்கள் தான் செல்லும் வழியில் செல்ல, பகற் செய்யும் செஞ்ஞாயிறும் இரவுச் செய்யும் வெண்திங்களும் – பகல் பொழுதை உண்டாக்கும் சிவந்த ஞாயிறும் இரவை உண்டாக்கும் வெண்மையான நிலவும், மை தீர்ந்து கிளர்ந்து விளங்க – குற்றம் இல்லாமல் தோன்றி விளங்க, மழை தொழில் உதவ – முகில்கள் மழையைப் பொழிந்து உதவ, மாதிரம் கொழுக்க – திசைகள் எல்லாம் தழைக்க, தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய – ஒரே விதைப்பில் விதைத்த விதைகள் ஆயிரமாக வளர (தொடுப்பு – தொழிற்பெயர்), நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த – விளை நிலங்களும் மரங்களும் உயிர்களுக்குப் பயன் கொடுப்பதை மேற்கொண்டு தழைக்க (நிலன் – நிலம் என்பதன் போலி, மரன் – மரம் என்பதன் போலி)

நோய் இகந்து நோக்கு விளங்க,
மேதக மிகப் பொலிந்த
ஓங்கு நிலை வயக்களிறு,   15
கண்டு தண்டாக் கட்கு இன்பத்து
உண்டு தண்டா மிகு வளத்தான்
உயர் பூரிம விழுத்தெருவில்,
பொய் அறியா வாய்மொழியால்,
புகழ் நிறைந்த நல்மாந்தரொடு   20
நல் ஊழி அடிப்படர,
பல் வெள்ளம் மீக்கூற,
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக! (13 – 23)

பொருளுரை:  உலகில் உள்ளவர்களின் பசியும் பிணியும் நீங்கி அழகு விளங்க, மிகவும் பொலிவு பெற்ற உயர்ந்த நிலையை உடைய வலிமையான திசை யானைகள் தம் பாரம் நீங்கி வருத்தம் இல்லாமல் சிறக்க, கண்டும் அமையாத கண்ணுக்கு இனிமையான, உண்டும் குறையாத மிகுந்த செல்வத்தையுடைய, உயர்ந்த பக்கங்களையுடைய வளமையுடைய தெருவில், பொய் அறியாத உண்மையைப் பேசும் புகழ் நிறைந்த நல்ல அமைச்சர்களுடன், ஊழிக்காலம் எல்லாம் அடிபட்டு நடப்ப, பல வெள்ளம் என்ற எண்ணை பெற்ற காலமெல்லாம் செங்கோல் ஆட்சியைப் புகழ்ந்து சொல்லும்படி உலகத்தை ஆட்சிபுரிந்த உயர்ந்தவர்கள் குடியில் தோன்றியவனே!

குறிப்பு:  பூரிமம் (18) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிறகு (சிறகு – பக்கம்), அஃதாவது தெருவின் இரு மருங்கிலும் நிரல்பட அமைந்த வீட்டொழுங்கு. தண்டா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.  வய – வய வலியாகும் (தொல்காப்பியம், உரியியல் 68).

சொற்பொருள்:  நோய் இகந்து நோக்கு விளங்க மேதக மிகப் பொலிந்த – உலகில் உள்ளவர்களுக்குப் பசியும் பிணியும் நீங்கி அழகு விளங்க மிகவும் பொலிவு பெற்ற, ஓங்கு நிலை வயக்களிறு மேதக – உயர்ந்த நிலையை உடைய வலிமையான திசை யானைகள் தம் பாரம் நீங்கி வருத்தம் இல்லாமல் சிறக்க (வய – உரிச்சொல்), கண்டு தண்டாக் கட்கு இன்பத்து – கண்டும் அமையாத கண்ணுக்கு இனிமையான (தண்டா – அமையாத, குறையில்லாத), உண்டு தண்டா மிகு வளத்தான் – உண்டு குறையாத மிகுந்த செல்வத்தையுடைய, உயர் பூரிம விழுத்தெருவில் – உயர்ந்த பக்கங்களையுடைய வளமையுடைய தெருவில், பொய் அறியா வாய்மொழியால் புகழ் நிறைந்த நல்மாந்தரொடு – பொய் அறியாத உண்மையைப் பேசும் புகழ் நிறைந்த நல்ல அமைச்சர்களுடன், நல் ஊழி அடிப்படர – ஊழிக்காலம் எல்லாம் அடிபட்டு நடப்ப, பல் வெள்ளம் மீக்கூற உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக – பல வெள்ளம் என்ற எண்ணை பெற்ற காலமெல்லாம் செங்கோல் ஆட்சியைப் புகழ்ந்து சொல்லும்படி உலகத்தை ஆட்சிபுரிந்த உயர்ந்தவர்கள் குடியில் தோன்றியவனே!

சிவனின் வழிவந்த சான்றோன்

பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின்
நிணம் வாய்ப்பெய்த பேய்மகளிர்   25
இணை ஒலி இமிழ் துணங்கைச் சீர்ப்
பிணை யூபம் எழுந்து ஆட,
அஞ்சுவந்த போர்க் களத்தான்,
ஆண்தலை அணங்கு அடுப்பின்,
வயவேந்தர் ஒண் குருதி,   30

சினத்தீயின் பெயர்பு பொங்க
தெறல் அருங் கடுந்துப்பின்,
விறல் விளங்கிய விழுச்சூர்ப்பின்
தொடித் தோட்கை துடுப்பு ஆக,
ஆடுற்ற ஊன் சோறு,   35

நெறி அறிந்த கடி வாலுவன்
அடி ஒதுங்கிப் பின் பெயராப்
படையோர்க்கு முருகு அயர,
அமர் கடக்கும் வியன் தானை
தென்னவன் பெயரிய துன் அருந்துப்பின்,   40
தொல்முது கடவுள் பின்னர் மேய,
வரைத் தாழ் அருவிப் பொருப்பின் பொருந! (24 – 42)

பொருளுரை:  பிணங்களைக் கோத்த தந்தங்களை உடையனவாகிய யானைக் கூட்டத்தின் கொழுப்புடைய தசையைத் தின்ற பேய்மகளிரின் இணைத்த ஒலி முழங்குகின்ற துணங்கைக் கூத்தின் சீர்க்குத் தலையில்லாப் பிணங்கள் எழுந்து ஆட, அச்சமுடைய போர்க்களத்தில் மறவர்களின் தலையாகிய வருத்தும் அடுப்பில், வலிமை மிகுந்த வேந்தரின் ஒளியுடைய குருதியைச் சினத்தீயில் இட்டு அது பொங்க, பகைவர்களால் வெல்லுதற்கரிய மிகுந்த வலிமையையும் வெற்றி விளங்கிய சிறந்த கொடுந்தொழிலைச் செய்த மறவரின் தொடி அணிந்த தோளுடைய கைகளைத் துடுப்பாகக் கொண்டு துழாவிச் சமைத்த தசையினால் ஆன சோற்றினை இடும் முறையை அறிந்த பேய்ச் சமையல்காரன் (பேய் மடையன்), போரில் இட்ட அடியைப் பின்வாங்காமல் இருந்த வீரர்களுக்கு வேள்வி செய்யும்படி, போரினை வெல்லும் படையினை உடைய ‘தென்னவன்’ என்னும் பெயரையுடைய, பகைவர்கள் நெருங்க முடியாத வலிமையையுடைய, பழமை முதிர்ந்த கடவுளாகிய சிவபெருமானின்வழித்தோன்றலும், பக்கமலையில் வீழ்கின்ற அருவியினையுடைய மலைக்கு வேந்தனுமாகிய வீரர் பெருமானே!

குறிப்பு:  புறநானூறு 26 – முடித்தலை அடுப்பாகப் புனல் குருதி உலைக் கொளீஇத் தொடித் தோள் துடுப்பின், புறநானூறு 372 – பொருந்தாத் தெவ்வர் அருந்தலை அடுப்பின் கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்க ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்.  தென்னவன் பெயரிய துன் அருந் துப்பின் தொல்முது கடவுள் பின்னர் மேய வரைத் தாழ் அருவிப் பொருப்பின் பொருந (40-42) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தென்னவன் என்னும் பெயரினையுடைய பழமை முதிர்ந்த கடவுளாகிய சிவபெருமானின் வழித்தோன்றிய, பக்கமலையில் வீழ்கின்ற அருவிகளையுடைய மலைக்கு வேந்தனாகிய வீரர் பெருமானே, நச்சினார்க்கினியர் உரை – இராவணனைத் தமிழ்நாட்டை ஆளாதபடி போக்கின கிட்டுதற்கரிய வலியினையுடைய பழமை முதிர்ந்த அகத்தியன் (பக்க மலையிலே விழுகின்ற அருவியினையுடைய பொதியின் மலையிலிருக்கும் கடவுள்) பின்னே எண்ணப்பட்டுச் சான்றோனாயிருத்தற்கு மேவின ஒப்பற்றவனே.  வய – வய வலியாகும் (தொல்காப்பியம், உரியியல் 68).  சிவன் – ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிவன் திராவிடர் நாகரிகமான சிந்துவெளி நாகரித்தின் கடவுள் என நிரூபித்துள்ளார்.  பதினெட்டு வேளிர் குடும்பங்களுடன் தெற்கே வந்த அகத்தியர் திராவிடர் எனத் தன்னுடைய ஆராய்ச்சியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.   நச்சினார்க்கினியர் தந்த குறிப்பு – நச்சினார்க்கினியர் தன்னுடைய தொல்காப்பிய உரையில் அகத்தியர் 18 வேளிர் மன்னர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் வடக்கிலிருந்து தெற்கே கொண்டு வந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

சொற்பொருள்:  பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின் நிணம் வாய்ப் பெய்த பேய்மகளிர் – பிணங்களைக் கோத்த தந்தங்களை உடையனவாகிய யானைக் கூட்டத்தின் கொழுப்புடைய தசையைத் தின்ற பேய்மகளிர் (கோட்ட – பலவறி சொல்), இணை ஒலி இமிழ் துணங்கைச் சீர்ப் பிணை யூபம் எழுந்து ஆட – இணைத்த ஒலி முழங்குகின்ற துணங்கைக் கூத்தின் சீர்க்குத் தலையில்லாப் பிணங்கள் எழுந்து ஆட  (ஒலி இமிழ் – பண்புத்தொகை, பிணை- நெருக்கம்), அஞ்சுவந்த போர்க் களத்தான் – அச்சமுடைய போர்க்களத்தில், ஆண்தலை அணங்கு அடுப்பின் – மறவர்களின் தலையாகிய வருத்தும் அடுப்பில், வய வேந்தர் ஒண் குருதி சினத்தீயின் பெயர்பு பொங்க – வலிமை மிகுந்த வேந்தரின் ஒளியுடைய குருதியைச் சினத்தீயில் இட்டு அது பொங்க, தெறல் அருங் கடுந்துப்பின் விறல் விளங்கிய விழுச்சூர்ப்பின் தொடித்தோள் கை துடுப்பு ஆக ஆடுற்ற ஊன் சோறு – பகைவர்களால் வெல்லுதற்கரிய மிகுந்த வலிமையையும் வெற்றி விளங்கிய சிறந்த கொடுந்தொழிலைச் செய்த மறவரின் தொடி அணிந்த தோளுடைய கைகளைத் துடுப்பாகக் கொண்டு துழாவிச் சமைத்த தசையினால் ஆன சோறு, நெறி அறிந்த கடி வாலுவன் – இடும் முறையை அறிந்த பேய்ச் சமையல்காரன் (கடி – பேய், கடி வாலுவன் – பேய்களுக்கு அடிசில் சமைப்பவன், மடை – சோறு), அடி ஒதுங்கிப் பின் பெயராப் படையோர்க்கு – இட்ட அடியைப் பின்வாங்காமல் இருந்த வீரர்களுக்கு, முருகு அயர – வேள்வி செய்ய, அமர் கடக்கும் வியன் தானை தென்னவன் பெயரிய – போரினை வெல்லும் படையினை உடைய தென்னவன் என்னும் பெயரையுடைய, துன் அருந்துப்பின் – பகைவர்கள் நெருங்க முடியாத வலிமையையுடைய, தொல்முது கடவுள் பின்னர் மேய – பழமை முதிர்ந்த கடவுளாகிய சிவபெருமானின் வழித்தோன்றிய, வரைத் தாழ் அருவிப் பொருப்பின் பொருந – பக்கமலையில் வீழ்கின்ற அருவியினையுடைய மலைக்கு வேந்தனாகிய வீரர் பெருமானே! 

திருவிற் பாண்டியனின் வழித் தோன்றல் – படைகளின் வலிமை

விழுச் சூழிய விளங்கு ஓடைய
கடுஞ்சினத்த கமழ் கடாஅத்து
அளறுபட்ட நறுஞ் சென்னிய   45
வரை மருளும் உயர் தோன்றல
வினை நவின்ற பேர் யானை,
சினம் சிறந்து களன் உழக்கவும்,
மா எடுத்த மலி குரூஉத் துகள்
அகல் வானத்து வெயில் கரப்பவும்,   50
வாம்பரிய கடுந் திண்தேர்
காற்று என்னக் கடிது கொட்பவும்,
வாள் மிகு மற மைந்தர்
தோள் முறையான் வீறுமுற்றவும்,

இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப்   55
பொருது அவரைச் செருவென்றும்
இலங்கு அருவிய வரை நீந்தி
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்
உயர்ந்து ஓங்கிய விழுச் சிறப்பின்,
நிலம் தந்த பேர் உதவி   60
பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்! (43 – 61)

பொருளுரை:  சிறப்பான சூழி என்ற அணிகலனையும் விளங்குகின்ற ஓடை என்ற அணிகலனையும் அணிந்த மணம் கமழ்கின்ற மதத்தால், மதத்தின் சேற்றினால் நறுமணமான தலையினை உடையவாய், மலை என மருளும்படி உயர்ந்த தோற்றத்தை உடையவாய், போர்த்தொழில் பயின்ற பெரிய யானைகள் மிகுந்த சினத்துடன் போர்க்களத்தில் பகைவர்களைக் கொல்லவும், குதிரைப்படை பகைவர்மேல் செல்லும்பொழுது எழுப்பிய நிறத்தையுடைய தூசி அகன்ற வானத்தில் வெயிலை மறைக்கவும், தாவும் குதிரைகளையுடைய விரைந்து செல்லுதலையுடைய திண்மையான தேர்ப்படை கடும் காற்றினைப் போல் சுழலவும், வாள் போரில் சிறந்த மறவர்கள் தங்கள் தோளால் முறையாக செய்கின்ற போரில் வெற்றி அடையவும், சோழ சேர மன்னர்களுடனும் வேளிர் மன்னர்களுடனும் போரிட்டு வெற்றி பெற்றும் அமையாமல், விளங்கும் அருவிகளையுடைய  மலையின்கண் அரசர்களுடன் போரிட்டு வென்று, அப்பகைவர்களின் காடுகளைப் பாலை நிலங்களாக ஆக்கிய வலிமையுடையோனும், மிக உயர்ந்த பெருஞ் சிறப்புடைய, உலகத்திற்குப் பெரிய உதவியைச் செய்த பொன்னால் செய்த மாலை அணிந்த திருவில் பாண்டியன் என்ற புகழ் பெற்ற மன்னனின் வழியில் தோன்றியவனுமாகிய யானை போன்றவனே!   

குறிப்பு:  இருபெரு வேந்தரொடு வேளிர் சாய (55) – பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் வெற்றி கொண்டான்.  தலையாலங்கானம் போர் – அகநானூறு 36, 175, 209, நற்றிணை 387, புறநானூறு 19, 23, 25, 76, மதுரைக்காஞ்சி 55, 127.  நெடியோன் உம்பல் (61) – நச்சினார்க்கினியர் உரை – வடிம்பலம் நின்ற பாண்டியன் வழியில் வந்தோனே, பொ. வே. சோமசுந்தரனார் உரை – திருவிற் பாண்டியன் என்னும் புகழால் நீண்டவனுடைய வழியில் தோன்றியவனே.  நிலந்தரு திருவின் நெடியோன் (மதுரைக்காஞ்சி 763) – நச்சினார்க்கினியர் உரை – எல்லா நிலங்களையும் தன்னிடத்தே காட்டின பெருஞ்செல்வமுடைய மாயோனைப் போல, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தமிழ்ச் சங்கம் நிறீஇ அதன்கண் மெய்ந்நூல் புலப்படுத்த சிறப்பினையுடைய நிலந்தரு திருவிற்பாண்டியன் என்னும் புகழால் நீண்ட மன்னனைப் போல.  குரு – குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 5).  சூழிய, ஓடைய, சினத்த, சென்னிய, தோன்றல – வினையெச்சமுற்றுக்கள். பொலம் (61) – பொன்.  பொன்னென் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடரியலான (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 61). 

சொற்பொருள்:  விழுச் சூழிய விளங்கு ஓடைய கடுஞ்சினத்த கமழ் கடாஅத்து – சிறப்பான சூழி என்ற அணிகலனையும் விளங்குகின்ற ஓடை என்ற அணிகலனையும் அணிந்த மணம் கமழ்கின்ற மதத்தால் (கடாஅத்து – அத்து சாரியை), அளறுபட்ட நறுஞ் சென்னிய – மதத்தின் சேற்றினால் நறுமணமான தலையினை உடையவாய், வரை மருளும் உயர் தோன்றல – மலை என மருளும்படி உயர்ந்த தோற்றத்தை உடையவாய், வினை நவின்ற பேர் யானை – போர்த்தொழில் பயின்ற பெரிய யானை, சினம் சிறந்து களன் உழக்கவும் – மிகுந்த சினத்துடன் போர்க்களத்தில் பகைவர்களைக் கொல்லவும் (களன் – களம் என்பதன் போலி), மா எடுத்த மலி குரூஉத் துகள் – குதிரைப்படை பகைவர்மேல் செல்லும்பொழுது உண்டான நிறத்தையுடைய தூசி (குரூஉ – அளபெடை), அகல் வானத்து வெயில் கரப்பவும் – அகன்ற வானத்தில் வெயிலை மறைக்கவும் (அகல்வானம் – வினைத்தொகை), வாம் பரிய – தாவும் குதிரைகளையுடைய (வாம் – வாவும் என்னும் செய்யுமென் வாய்பாட்டுப் பெயரெச்சம், ஈற்று மிசை உகரம் மெய்யொடுங்கெட்டு வாம் என நின்றது), கடுந்திண் தேர் காற்று என்னக் கடிது கொட்பவும் – விரைந்து செல்லுதலையுடைய திண்மையான தேர்ப்படை கடும் காற்றினைப் போல் சுழலவும் (என்ன – உவமப்பொருள் தரும் சொல்), வாள் மிகு மற மைந்தர் தோள் முறையான் வீறுமுற்றவும் – வாள் போரில் சிறந்த மறவர்கள் தங்கள் தோளால் முறையாக செய்கின்ற போரில் வெற்றி முற்றுப்பெறவும் (வெற்றி அடையவும்), இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் பொருது அவரைச் செருவென்றும் – சோழ சேர மன்னர்களுடன் மற்றும் வேளிர் மன்னர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றும் அமையாமல், இலங்கு அருவிய வரை நீந்தி சுரம் போழ்ந்த இகல் ஆற்றல் – விளங்கும் அருவிகளையுடைய மலையின்கண் அரசர்களையும் வென்று அப்பகைவர்களின் காடுகளைப் பாலை நிலங்களாக ஆக்கி போர் வலிமையுடையவனும் (அருவிய – குறிப்புப் பெயரெச்சம்), உயர்ந்து ஓங்கிய – மிக உயர்ந்த (ஒருபொருட் பன்மொழி), விழுச் சிறப்பின் – பெருஞ் சிறப்புடைய, நிலம் தந்த பேர் உதவி பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல் – உலகத்திற்கு பெரிய உதவியைச் செய்த பொன்னால் செய்த மாலை அணிந்த திருவில் பாண்டியனுடைய வழியில் தோன்றியவனுமாகிய யானை போன்றவனே! 

மன்னர் மன்னனாக விளங்கிய பெருமை

மரம் தின்னூஉ வரை உதிர்க்கும்
நரை உருமின் ஏறு அனையை!
அருங்குழு மிளைக் குண்டு கிடங்கின்
உயர்ந்து ஓங்கிய நிரைப் புதவின்   65

நெடுமதில் நிரை ஞாயில்
அம்பு உமிழ் அயில் அருப்பம்
தண்டாது தலைச் சென்று,
கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்
தென்குமரி வட பெருங்கல்    70

குணகுட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப,
வெற்றமொடு வெறுத்து ஒழுகிய
கொற்றவர் தம் கோன் ஆகுவை! (62 – 74)

பொருளுரை:  மரங்களைத்  தீயினால் சுட்டு, மலைகளை உடைத்துத் தூசியாக்கும் பெருமையுடைய இடியைப் போன்று உள்ளாய் நீ!  பகைவர்கள் அடைதற்கு அரிய, அடர்ந்த காவல் காட்டினையும் ஆழ்ந்த அகழியையும் உயர்ந்து ஓங்கிய உயர்ந்த மதிலில் வரிசையாக உள்ள வாயில்களையும், வரிசையாக உள்ள ஏவல் அறைகளையும், வேலினையும், அம்பினையும், வீசும் கோட்டைகளையும், ஓய்ந்திராது, அவ்விடங்களுக்குச் சென்று அவற்றைக் கைக்கொண்டு சிறந்த தலைமையுடன், தென்திசையில் உள்ள குமரியும் வட எல்லையில் உள்ள மலையும், கீழ்த்திசையிலும் மேற்குத் திசையிலும் கடல் எல்லை ஆக, இந்த எல்லைக்குள் உள்ள வேந்தர்கள் எல்லாம் தங்கள் பழமையைச் சொல்லி உன்னிடம் ஏவல் கேட்கும்படி வெற்றியுடன், அடங்கி நடந்த மன்னர்க்கு மன்னனாக விளங்குகின்றாய்!

குறிப்பு:  அருங்குழு மிளை(64) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பகைவர் எய்துவதற்கு அரிய திரட்சியையுடைய காவற்காடு. நீங்கிய (69) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உலகெல்லாம் பொது நீக்கித் தன்னொரு குடைக் கீழ் கொண்டாளும் சிறப்பு.  கடலா (69) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடலாக என்னும் சொல் ஈறுகெட்டுக் கடலா என நின்றது. அதன் பின் உள்ள ஆக்கச் சொல்லை எல்லை என்பதன் பின்னாக மாற்றிக் குமரி முதலிய நான்கனோடும் தனித்தனி இயைத்துக் கொள்க.  புறநானூறு 17-2 – குணகுட கடலா எல்லை.

சொற்பொருள்:  மரம் தின்னூஉ – மரங்களைத் தீயினால் சுட்டு (தின்னூஉ – அளபெடை), வரை உதிர்க்கும் – மலைகளை உடைத்துத் தூசியாக்கும், நரை உருமின் ஏறு அனையை – பெருமையுடைய இடியைப் போன்று உள்ளாய் நீ (உருமின் – இன் அசைநிலை), அருங்குழு மிளைக் குண்டு கிடங்கின் உயர்ந்து ஓங்கிய – பகைவர் அடைதற்கு அரிய அடர்ந்த காவல் காட்டினையும் ஆழ்ந்த அகழியையும் உயர்ந்து ஓங்கிய (உயர்ந்து ஓங்கிய – ஒருபொருட் பன்மொழி), நிரைப் புதவின் நெடுமதில் – உயர்ந்த மதிலில் வரிசையாக உள்ள வாயில்களையும், நிரை ஞாயில் – வரிசையாக உள்ள ஏவல் அறைகளையும், அம்பு உமிழ் அயில் அருப்பம் – அம்பினையும் வேலினையும் வீசும் கோட்டைகள் (அயில் – வேல்), தண்டாது தலைச் சென்று கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின் – ஓய்ந்திராது அவ்விடங்களுக்குச் சென்று அவற்றைக் கைக்கொண்டு சிறந்த தலைமையுடன் (தலை – இடம்), தென்குமரி வட பெருங்கல் – தென்திசையில் உள்ள குமரியும் வட எல்லையில் உள்ள மலை, குண குட கடலா எல்லை – கீழ்த்திசையிலும் மேற்குத் திசையிலும் கடல் எல்லை ஆக, தொன்று மொழிந்து தொழில் கேட்ப வெற்றமொடு வெறுத்து ஒழுகிய கொற்றவர் தம் கோன் ஆகுவை – இந்த எல்லைக்குள் உள்ள வேந்தர்கள் எல்லாம் தங்கள் பழமையைச் சொல்லி ஏவல் கேட்கும்படி வெற்றியுடன் செறிந்து நடந்த மன்னர்க்கு மன்னனாக விளங்குகின்றாய் (வெறுத்து – செறிந்து, அடங்கி)

கடல் வளம் மிகுந்த சாலியூரைக் கொண்ட வெற்றி

வான் இயைந்த இருமுந்நீர்ப்   75
பேஎம் நிலைஇய இரும் பெளவத்து
கொடும் புணரி விலங்கு போழ,
கடுங்காலொடு கரை சேர,
நெடுங் கொடி மிசை இதை எடுத்து
இன் இசைய முரசம் முழங்க,   80
பொன் மலிந்த விழுப் பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்
ஆடு இயற் பெரு நாவாய்,
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங்கு இருக்கைத்   85

தெண் கடல் குண்டு அகழி,
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ! (75 – 88)

பொருளுரை:  வானத்துடன் ஒன்றியதாகத் தோன்றும் பெரிய முந்நீர்க் கொண்ட அச்சம் தரும் கடலில், வளையும் அலைகள் குறுக்கே பிளக்கும்படி, பெரும் காற்றினால் கரையைச் சேரும் பொருட்டு உயர்ந்த கொடியை உச்சியில் உடையதாய்ப் பாய் விரிக்கப்பட்டு, இனிய ஓசையையுடைய முரசு முழங்க, பொன் மிகும்படி சிறந்த பொருட்களை நாட்டில் உள்ளவர்கள் நுகர, நன்றாக இறக்குதல் செய்யும், அசையும் இயல்பினை உடைய பெரிய கப்பல்கள், முகிலால் சூழப்பட்ட மலையைப் போல் கடலால் சூழப்பட்டு இருக்கும் இடமான, தெளிந்த கடலாகிய ஆழ்ந்த அகழியினை உடைய நெல்லூரைக் கைக்கொண்ட உயர்ந்த வெற்றியை உடையவனே!  

குறிப்பு:  பேஎம் – பே நாம் உரும் என வரூஉம் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப்பொருள. (தொல்காப்பியம், உரியியல் 67).  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடைமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

சொற்பொருள்:  வான் இயைந்த இரு முந்நீர்ப் பேஎம் நிலைஇய இரும் பெளவத்து நிலைஇய – வானத்துடன் ஒன்றியதாகத் தோன்றும் பெரிய முந்நீர்க் கொண்ட அச்சம் தரும் கடலில் (பேஎம் – அளபெடை, நிலைஇய – அளபெடை), கொடும் புணரி விலங்கு போழ – வளையும் அலைகள் குறுக்கே பிளக்கும்படி, கடுங்காலொடு கரை சேர நெடுங்கொடி மிசை இதை எடுத்து – பெரும் காற்றினால் கரையைச் சேரும் பொருட்டு உயர்ந்த கொடியை உச்சியில் உடையதாய்ப் பாய் விரிக்கப்பட்டு, இன் இசைய முரசம் முழங்க – இனிய ஓசையையுடைய முரசு முழங்க, பொன் மலிந்த விழுப் பண்டம் நாடு ஆர – பொன் மிகும்படி சிறந்த பொருட்களை நாட்டில் உள்ளவர்கள் நுகர, நன்கு இழிதரும் – நன்றாக இறக்குதல் செய்யும், ஆடு இயற் பெரு நாவாய் – அசையும் இயல்பினை உடைய பெரிய கப்பல்கள், மழை முற்றிய மலை புரைய – முகிலால் சூழப்பட்ட மலையைப் போல் (புரை – உவம உருபு), துறை முற்றிய துளங்கு இருக்கை – கடலால் சூழப்பட்ட அசையும் கப்பல்கள் இருக்கும் இடம், தெண் கடல் குண்டு அகழிச் சீர் சான்ற நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ – தெளிந்த கடலாகிய ஆழ்ந்த அகழியினை உடைய நெல்லூரைக் கைக்கொண்ட உயர்ந்த வெற்றியை உடையவனே (நெல்லின் – இன் சாரியை)

குரவை ஒலியும் பிற ஓசைகளும் மலிந்த ஊர்

நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர்
பாடு சிலம்பு இசை ஏற்றத்   90
தோடு வழங்கும் அகல் ஆம்பியின்
கயன் அகைய வயல் நிறைக்கும்
மென் தொடை வன் கிழாஅர்,
அதரி கொள்பவர் பகடு பூண் தெள்மணி
இரும் புள் ஓப்பும் இசையே என்றும்   95
மணிப் பூ முண்டகத்து மணல் மலி கானல்
பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப, (89-97)

பொருளுரை:  நீரினை முகந்து இறைக்கின்ற வரிசையாக நின்று தொழில் செய்பவர்கள் பாடும் ஒலியுடைய இசையும்,  நீர் இறைக்கும் கருவியுடன் இயங்கும் அகன்ற வாளிகளின் ஓசையும், குளத்தில் நீர் இல்லாது போகுமாறு நீரை முகந்து வயலை நிறைக்கும், மெல்லிய கட்டுக்களையுடைய பூட்டைப் பொறியினால் எழும் ஓசையும், கடா விடுபவர்களின் ஓசையும், எருதுகள் பூண்ட தெளிந்த மணியின் ஓசையும், பெரிய பறவைகளை விரட்டும் ஓசையும், என்றும் நீலமணிபோலும் மலர்களை உடைய கழிமுள்ளிச் செடிகள் உடைய மணல் நிறைந்த கடற்கரையில் இருக்கும் பரதவ மகளிர் குரவை ஆடும் ஒலியுடன் ஒலிப்ப,  

சொற்பொருள்:  நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர் – நீரினை முகந்து இறைக்கின்ற வரிசையாக நின்று தொழில் செய்பவர்கள், பாடு சிலம்பு இசை – பாடும் ஒலியுடைய இசை, ஏற்றத்தோடு வழங்கும் அகல் ஆம்பியின் – ஏற்றத்துடன் இயங்கும் அகன்ற பன்றிப்பத்தரின் (வாளிகளின்) ஓசையும் (ஏற்றம் – நீர் இறைக்கும் கருவி), கயன் அகைய வயல் நிறைக்கும் – குளத்தில் நீர் இல்லாது போகுமாறு நீரை முகந்து வயலை நிறைக்கும் (கயன் – கயம் என்பதன் போலி), மென் தொடை வன் கிழாஅர் – மெல்லிய கட்டுக்களையுடைய பூட்டைப் பொறியினால் எழும் ஓசையும் (கிழாஅர் – அளபெடை), அதரி கொள்பவர் – கடா விடுபவர்களின் ஓசையும் (கடா விடுதல் – எருதுகளை நெல்லின் மேல் நடக்க வைத்து உமியையும் அரிசியையும் பிரித்தல்), பகடு பூண் தெள்மணி – எருதுகள் பூண்ட தெளிந்த மணியின் ஓசையும், இரும் புள் ஓப்பும்  இசையே – பெரிய பறவைகளை விரட்டும் ஓசையும், என்றும் மணிப் பூ முண்டகத்து மணல் மலி கானல் – என்றும் நீலமணிபோலும் மலர்களை உடைய கழிமுள்ளிச் செடிகள் உடைய மணல் நிறைந்த கடற்கரை, பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப – பரதவ மகளிர் குரவை ஆடும் ஒலியுடன் ஒலிப்ப

பொருநர்க்கு யானை முதலிய பரிசுகளைப் பாண்டியன் கொடுத்தல்

ஒரு சார் விழவு நின்ற வியல் ஆங்கண்
முழவுத் தோள் முரண் பொருநர்க்கு
உருகெழு பெருஞ்சிறப்பின்   100
இரு பெயர்ப் பேர் ஆயமொடு
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும்,
பொலந்தாமரைப் பூச் சூட்டியும்,
நலம் சான்ற கலம் சிதறும்,
பல் குட்டுவர் வெல் கோவே!   (98 – 105)

பொருளுரை:  ஒரு பக்கத்தில் விழாக்கள் கொண்டாடுவதால் எழுந்த ஓசைகள் நின்ற அகன்ற இடத்தையுடைய ஊர்களில் இருந்து, முழவுபோலும் தோளினையுடைய கல்வியால் மாறுபடும் தடாரிப் பொருநர்க்கு, அச்சம் பொருந்திய தலைமை உடைய கன்றும் பிடியும் கொண்ட கூட்டத்துடன், ஒளியுடைய தந்தங்களை உடைய களிற்று யானைகளைக் கொடுத்தும், பாணர்க்கும் விறலியர்க்கும் பொன்னால் செய்த தாமரை மலர்களைச் சூட்டியும், அழகிய அணிகலன்களை எல்லார்க்கும் கொடுக்கும், பல குட்ட நாட்டில் உள்ளவர்களை வென்ற வேந்தனே!  

குறிப்பு:  உருகெழு – உரு உட்காகும் புரை உயர்வாகும். (தொல்காப்பியம், உரியியல் 4).  பொருநர் (99) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தடாரி முதலிய இசைக் கருவிகளை முழக்கிப் பாடுவர்.  இவர் ஏர்க்களம் பாடுநர், போர்க்களம் பாடுநர், பரணி பாடுநர் எனப் பலராவர்.  இரு பெயர்ப் பேர் ஆயமொடு (101) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கன்றும் பிடியுமாகிய இரு பெயரையுடைய திரளோடே.

சொற்பொருள்:  ஒரு சார் விழவு நின்ற வியல் ஆங்கண் – ஒரு பக்கத்தில் விழாக்கள் கொண்டாடுவதால் எழுந்த ஓசைகள் நின்ற அகன்ற இடத்தையுடைய ஊர்களில் இருந்து, முழவுத் தோள் முரண் பொருநர்க்கு – முழவுபோலும் தோளினையுடைய கல்வியால் மாறுபடும் தடாரிப் பொருநர்க்கு, உருகெழு பெருஞ்சிறப்பின் இரு பெயர்ப் பேர் ஆயமொடு – அச்சம் பொருந்திய தலைமை உடைய கன்றும் பிடியும் கொண்ட கூட்டத்துடன், இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும் – ஒளியுடைய தந்தங்களை உடைய களிற்று யானைகளைக் கொடுத்தும், பொலந்தாமரைப் பூச் சூட்டியும் – பொன்னால் செய்த தாமரை மலர்களைச் சூட்டியும், நலம் சான்ற கலம் சிதறும் பல் குட்டுவர் வெல் கோவே – அழகிய அணிகலன்களை எல்லார்க்கும் கொடுக்கும் பல குட்ட நாட்டில் உள்ளவர்களை வென்ற வேந்தனே!

முது வெள்ளிலை என்னும் ஊரின் சிறப்பு

கல் காயும் கடு வேனிலொடு
இரு வானம் பெயல் ஒளிப்பினும்,
வரும் வைகல் மீன் பிறழினும்,
வெள்ளம் மாறாது விளையுள் பெருக,
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை   110

புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும்,
சலம் புகன்று சுறவுக் கலித்த
புலவு நீர் வியன் பெளவத்து
நிலவுக் கானல் முழவுத் தாழைக்
குளிர்ப் பொதும்பர் நளித் தூவல்   115

நிரை திமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
இருங்கழிச் செறுவின் வெள்உப்புப் பகர்நரொடு,
ஒலி ஓவாக் கலியாணர்
முது வெள்ளிலை (106 – 119)

பொருளுரை:  மலைகள் காயும் கடுமையான வேனிலால் பெரிய முகில்கள் மழையை மறைத்துக் கொண்டாலும், காலையில் வரும் வெள்ளி என்னும் கோள்மீன் தென்திசையில் சென்றாலும், ஆறுகளில் நீரோட்டம் குறையாது விளைச்சல் பெருகுவதால், நெற்கதிர்கள் காற்றில் அசையும் ஒலியும், அதனை அறுப்பவர்களின் ஓசையும், பறவைகள்  கத்தும் ஓசையும், என்றும் தம்முள் மாறுபாட்டை விரும்பி சுறாமீன்கள் செருக்கி நீந்துகின்ற புலவு நாறும் நீரையுடைய கடலில் எழுந்து நிலாப்போலும் மணலையுடைய கரையில் முழவுப்போலும் காய்களையுடைய தாழை வேலியாக உள்ள குளிர்ந்த சோலையில் செறிந்த அலைத் துவலைகள் விழும் ஓசையும், வரிசையாக உள்ள படகாலே மீன் வேட்டையாடுபவர்கள் கரையில் வந்து சேரும் ஓசையும், பெரிய கழியில் உப்புப் பாத்தியில் கிடைத்த வெள்ளை உப்பை விற்பவர்களின் ஓசையும், ஒலி அடங்காத வளமை உடைய முதுவெள்ளிலை என்னும் ஊரில் வாழும்,  

குறிப்பு:  நிலவு மணல்: அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர்.  வெள்ளி திசை மாறினும்:  புறநானூறு 35 – இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும், புறநானூறு 117 – தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், புறநானூறு 388 – வெள்ளி தென் புலத்து உறைய, புறநானூறு 389 – வெண்பொன் போகுறு காலை, மதுரைக்காஞ்சி 108 – வரும் வைகல் மீன் பிறழினும், பட்டினப்பாலை 1 – வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும்.  நளி – நளியென் கிளவி செறிவும் ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 25).  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  சுறா சுறவு என வந்தது. குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

சொற்பொருள்:  கல் காயும் கடு வேனிலொடு – மலைகள் காயும் கடிய வேனிலால், இரு வானம் பெயல் ஒளிப்பினும் – பெரிய முகில்கள் மழையை மறைத்துக் கொண்டாலும், வரும் வைகல் மீன் பிறழினும் – காலையில் வரும் வெள்ளி தென்திசையில் சென்றாலும், வெள்ளம் மாறாது விளையுள் பெருக – ஆறுகளில் நீரோட்டம் குறையாது விளைச்சல் பெருக (விளையுள் – விளை உள், தொழிற்பெயர் விகுதி), நெல்லின் ஓதை அரிநர் கம்பலை – நெற்கதிர்கள் காற்றில் அசையும் ஒலியும் அதனை அறுப்பவர்களின் ஓசையும், புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே – பறவைகள் கத்தும் ஓசையும் (இசையே – ஏகாரம் ஈற்றசை), என்றும் – என்றும், சலம் – மாறுபாடு, புகன்று சுறவுக் கலித்த – விரும்பி சுறாமீன்கள் செருக்கி நீந்துகின்ற (சுறவு – சுறா சுற என்றாகி உகரம் ஏற்றது), புலவு நீர் வியன் பெளவத்து – புலவு நாறும் நீரையுடைய கடலில் எழுந்து, நிலவுக் கானல் முழவுத் தாழை – நிலாப்போலும் மணலையுடைய கரையில் முழவுப்போலும் காய்களையுடைய தாழை வேலி, குளிர்ப் பொதும்பர் நளித் தூவல் – குளிர்ந்த சோலையில் செறிந்த துவலைகள் விழும் ஓசையும், நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை – வரிசையாக உள்ள படகாலே மீன் வேட்டையாடுவார் கரையில் வந்து சேரும் ஓசையும், இருங்கழிச் செறுவின் வெள் உப்புப் பகர்நரொடு – பெரிய கழியில் உப்புப் பாத்தியில் கிடைத்த வெள்ளை உப்பை விற்பவர்கள் ஓசையும் (செறு – உப்பளம்), ஒலி ஓவாக் கலியாணர் முதுவெள்ளிலை – ஒலி அடங்காத புதிய வருவாயையுடைய (வளமை உடைய) முதுவெள்ளிலை 

முதுவெள்ளிலையார் ஏவல் கேட்பத் தலையாலங்கானத்தில்

பகைவர்களை வென்றமை

………………………………..மீக்கூறும்
வியல் மேவல் விழுச் செல்வத்து,   120
இரு வகையான் இசை சான்ற
சிறுகுடிப் பெருந்தொழுவர்
குடி கெழீஇய நால் நிலவரொடு
தொன்று மொழிந்து தொழில் கேட்பக்,
கால் என்னக் கடிது உராஅய்   125

நாடு கெட எரி பரப்பி,
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து,
அரசுபட அமர் உழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட,
அடுதிறல் உயர் புகழ் வேந்தே! (119 – 130)

பொருளுரை:  சான்றோரால் புகழப்படும் பெரிய உயர்ந்த சிறந்த செல்வமாகிய உழவு வணிகம் என்ற இரண்டு வகையால், புகழ் நிறைந்த, சிறிய குடிமக்களும் பெரிய வணிகரும், குடிகள் பொருந்திய நான்கு வகை நிலங்களில் வாழ்பவர்களுடன் தம் பழமை கூறி நின்று ஏவலைக் கேட்கும்படி, காற்று என்னும்படி விரைந்து சென்று பகைவரின் நாடு கெடும்படி நெருப்பைப் பரப்பி, தலையாலங்கானம் என்ற ஊரில் பகைவர்களுக்கு அச்சம் தோன்றும்படி தங்கிப் போரிட்டு, சேர சோழ மன்னர்களையும் ஐந்து குறுநில மன்னர்களையும் தோற்கடித்து, அவர்களின் முரசைக் கைப்பற்றிக் களவேள்வி விரும்பிப் பகைவர்களைக் கொல்லும் ஆற்றல் மிக்க உடைய உயர்ந்த புகழையுடைய வேந்தனே!

குறிப்பு:  ஆலங்கானத்து (127) – பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான்.  தலையாலங்கானம் போர் – அகநானூறு 36, 175, 209, நற்றிணை 387, புறநானூறு 19, 23, 25, 76, மதுரைக்காஞ்சி 55, 127.  களவேள்வி – புறநானூறு 26 – மன்னிய வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே, புறநானூறு 372 – புலவுக் களம் பொலிய வேட்டோய், மதுரைக்காஞ்சி 128-130 – களம்வேட்ட அடு திறல் உயர் புகழ் வேந்தே, திருமுருகாற்றுப்படை 100 – களம் வேட்டன்றே ஒரு முகம். 

சொற்பொருள்:  மீக்கூறும் வியல் மேவல் விழுச் செல்வத்து  – சான்றோரால் புகழப்படும் பெரிய உயர்ந்த சிறந்த செல்வமாகிய, இரு வகையான் – உழவு வணிகம் என்ற இரண்டு வகையால், இசை சான்ற – புகழ் நிறைந்த, சிறுகுடிப் பெருந்தொழுவர் – சிறிய குடிமக்களும் பெரிய வணிகரும், குடி கெழீஇய நால் நிலவரொடு – குடிகள் பொருந்திய நான்கு வகை நிலங்களில் வாழ்பவர்களுடன் (கெழீஇய – அளபெடை), தொன்று மொழிந்து தொழில் கேட்ப – பழமைகூறி நின்று ஏவலைக் கேட்கும்படி, கால் என்னக் கடிது உராஅய் –காற்று என்னும்படி விரைந்து சென்று (என்ன – உவமப்பொருள் தரும் சொல், உராஅய் – சென்று, அளபெடை), நாடு கெட எரி பரப்பி – பகைவரின் நாடு கெடும்படி நெருப்பைப் பரப்பி, ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி – தலையாலங்கானம் என்ற ஊரில் பகைவர்களுக்கு அச்சம் தோன்றும்படி தங்கி, முரசு கொண்டு களம் வேட்ட – அவர்களின் முரசைக் கைப்பற்றிக் களவேள்வி விரும்பி, அடு திறல் உயர் புகழ் வேந்தே – கொல்லும் ஆற்றல் உடைய உயர்ந்த புகழையுடைய வேந்தனே

கொற்கைக்குத் தலைவன்

நட்டவர் குடி உயர்க்குவை;
செற்றவர் அரசு பெயர்க்குவை;
பேர் உலகத்து மேஎந் தோன்றிச்
சீருடைய விழுச் சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழுமுத்தின்   135

இலங்கு வளை இருஞ்சேரி
கட் கொண்டிக் குடிப்பாக்கத்து

நற்கொற்கையோர் நசைப் பொருந! (131 – 138)

பொருளுரை:  உன்னுடன் நட்புக் கொண்டவர்களின் குடியை நீ உயர்த்துவை.  பகைவர்களின் அரச உரிமையை மாற்றுவாய். பெரிய சான்றோரிடம் மேலாகத் தோன்றுவதால் புகழையுடைய தலைமையையும் உடையை நீ.  விளைந்து ஒளி முதிர்ந்த சிறப்பான முத்துக்களையும், கடலில் ஒளியுடைய சங்கு எடுப்பவர்களின் பெரிய தெருவும், கள்ளையுடைய கடற்கரைச் சிற்றூர்களை உடைய, நல்ல கொற்கை என்னும் ஊரில் வாழ்பவர்கள் விரும்பும் மற வேந்தனே!

குறிப்பு:  கட் கொண்டி (137) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கள்ளாகிய உணவு, கொள்ளப்படுதல் என்னும் பொருட்டாய் உணவிற்காயிற்று.

சொற்பொருள்:  நட்டவர் குடி உயர்க்குவை – உன்னுடன் நட்புக் கொண்டவர்களின் குடியை உயர்த்துவை, செற்றவர் அரசு பெயர்க்குவை – பகைவர்களின் அரச உரிமையை மாற்றுவாய், பேர் உலகத்து மேஎம் தோன்றி – பெரிய சான்றோரிடம் மேலாகத் தோன்றி (மேஎம் – அளபெடை), சீருடைய விழுச் சிறப்பின் – புகழையுடைய தலைமையையும், விளைந்து முதிர்ந்த விழு முத்தின் – விளைந்து ஒளி முதிர்ந்த சிறப்பான முத்துக்களையும், இலங்கு வளை இருஞ்சேரி – கடலில் ஒளியுடைய சங்கு எடுப்பவர்களின் பெரிய தெருவும், கள் கொண்டிக் குடிப்பாக்கத்து – கள்ளையுடைய கடற்கரை ஊர்களையுமுடைய, நற்கொற்கையோர் நசைப் பொருந – நல்ல கொற்கை என்னும் ஊரில் வாழ்பவர்கள் விரும்பும் மற வேந்தனே

செழியன் பரதவரை வென்றமை

செற்ற தெவ்வர் கலங்கத் தலைச் சென்று
அஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பின்   140

கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சிப்
புலவு வில் பொலி கூவை
ஒன்றுமொழி ஒலி இருப்பின்
தென் பரதவர் போர் ஏறே! (139 – 144)

பொருளுரை:  தம்மால் சினம் கொள்ளப்பட்ட பகைவர்களின் மனம் கலங்கும்படி அவர்கள் இடத்திற்குச் சென்று, அவர்களுக்கு அச்சம் தோன்றும்படித் தங்கி வருந்தும் வலிமையுடன், கொழுத்த இறைச்சியுடைய சோற்றினையும், புலவு நாற்றத்தையுடைய வில்லையும், பொலிவுடைய கூவைக் கிழங்கையும், சூளுரையைக் கூறுதலையும், ஆரவாரத்தை உடைய குடியிருப்பையும் உடையவர்களாகிய தென்திசையில் வாழும் பரதவர்களைப் போரில் அடக்கிய சிங்கம் போன்றவனே!

குறிப்பு:  கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சி (141) – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  கொழுத்த இறைச்சி கலந்தமையால் கொழுப்புண்டாக்கும் சோறு என்பார்.

சொற்பொருள்:  செற்ற தெவ்வர் கலங்கத் தலைச் சென்று – தம்மால் சினம் கொள்ளப்பட்ட பகைவர்களின் மனம் கலங்கும்படி அவர்கள் இடத்திற்குச் சென்று, அஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பின் – அவர்களுக்கு அச்சம் தோன்றும்படித் தங்கி வருந்தும் வலிமையுடன், கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சி – கொழுத்த இறைச்சியுடைய சோறு (கோழ் – கொழுப்பு, முதனீண்டது, ஊஉன் – அளபெடை), புலவு வில் – புலவு நாற்றத்தையுடைய வில், பொலி கூவை – பொலிவுடைய கூவைக் கிழங்கு, ஒன்றுமொழி ஒலி இருப்பின் தென் பரதவர் போர் ஏறே – சூளுரையைக் கூறுதலையும் ஆரவாரத்தையும் உடைய குடியிருப்பை உடையவர்களாகிய தென்திசையில் வாழும் பரதவர்களைப் போரில் அடக்கிய சிங்கம் போன்றவனே (ஒன்றுமொழி – வஞ்சினம், சூளுரை)

பகைவரது நாட்டைக் கைக்கொண்ட வெற்றி

அரிய எல்லாம் எளிதினின் கொண்டு   145

உரிய எல்லாம் ஓம்பாது வீசி,
நனி புகன்று உறைதும் என்னாது ஏற்று எழுந்து
பனிவார் சிமையக் கானம் போகி
அகநாடு புக்கு அவர் அருப்பம் வெளவி,
யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து,   150
மேம்பட மரீஇய வெல்போர்க் குருசில்! (145 – 151)

பொருளுரை:  பிறர்க்கு அரியவாகிய பொருட்களை எல்லாம் எளிதில் கைக்கொண்டு, அவ்வாறு பெற்றவற்றை உனக்கென்று பாதுகாக்காது பிறர்க்கு நல்கி, மிகவும் விரும்பி ஓரிடத்தில் வாழ்வோம் என்னாது மேற்கொண்டு போகுதல் விரும்பி எழுந்து, பனி ஒழுகும் மலையில் உள்ள காடுகளுக்குச் சென்று, அவர்கள் நாட்டிற்குள் சென்று, அவர்களுடைய அரண்களைக் கைக்கொண்டு, பல ஆண்டுகள் கழியுமாறு நீ கொள்ள விரும்பிய இடத்தில் தங்கி, அந்நிலங்கள் முன்பு இருந்ததை விட மேலாவதற்கு அங்குப் பொருந்தி இருந்த வெல்லும் போரினையுடைய தலைவனே! 

குறிப்பு:  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  அரிய எல்லாம் எளிதினின் கொண்டு – பிறர்க்கு அரிய பொருட்களை எல்லாம் எளிதில் கைக்கொண்டு, உரிய எல்லாம் ஓம்பாது வீசி – உனக்கு உரியவற்றை உனக்கென்று பாதுகாக்காது பிறர்க்கு நல்கி, நனி புகன்று உறைதும் என்னாது ஏற்று எழுந்து – மிகவும் விரும்பி ஓரிடத்தில் வாழ்வோம் என்னாது மேற்கொண்டு போகுதல் விரும்பி எழுந்து, பனி வார் சிமையக் கானம் போகி – பனி ஒழுகும் மலையில் உள்ள காடுகளுக்குச் சென்று (சிமையம் – உச்சி, ஆகுபெயர் மலைக்கு), அக நாடு புக்கு அவர் அருப்பம் வெளவி – அவர்கள் நாட்டிற்குள் சென்று அவர்களுடைய அரண்களைக் கைக்கொண்டு, யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து – பல ஆண்டுகள் கழியுமாறு நீ கொள்ள விரும்பும் இடத்தில் தங்கி, மேம்பட மரீஇய வெல்போர்க் குருசில் – அந்நிலங்கள் பண்டையினும் மேலாவதற்கு அங்குப் பொருந்தி இருந்த வெல்லும் போரினையுடைய தலைவனே (மரீஇய – அளபெடை)

பகைவர் நாடு பாழ்பட்ட நிலை

உறு செறுநர் புலம் புக்கு அவர்
கடி காவின் நிலை தொலைச்சி,
இழிபு அறியாப் பெருந்தண்பணை
குரூஉக் கொடிய எரி மேய,   155
நாடு எனும் பேர் காடு ஆக,
ஆ சேந்த வழி மா சேப்ப,
ஊர் இருந்த வழி பாழ் ஆக,
இலங்கு வளை மட மங்கையர்
துணங்கை அம் சீர்த் தழூஉ மறப்ப,   160

அவை இருந்த பெரும் பொதியில்
கவை அடிக் கடு நோக்கத்துப்
பேய்மகளிர் பெயர்பு ஆட
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண்
நிலத்து ஆற்றும் குழூஉப் புதவின்   165

அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவ,
கொழும் பதிய குடி தேம்பிச்
செழுங் கேளிர் நிழல் சேர,
நெடுநகர் வீழ்ந்த கரி குதிர்ப் பள்ளிக்
குடுமிக் கூகை குராலொடு முரல,   170

கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை
களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர,
நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல்
பல்மயிர்ப் பிணவொடு கேழல் உகள,
வாழாமையின் வழிதவக் கெட்டு   175
பாழ் ஆயின நின் பகைவர் தேஎம். (152 – 176)

பொருளுரை:  தொன்றுதொட்டு பகைமைக் கொண்டவர்களின் நிலங்களில் புகுந்து, அவர்களுடைய காவலுடைய சோலைகளை அழித்து, வளப்பம் குன்றுதல் அறியாத பெரிய குளிர்ச்சியுடைய மருத நிலங்களை நிறம் பொருந்திய உயர்ந்த (படர்ந்த) நெருப்பால் எரித்து, நாடு என்னும் பெயர் போய் அவை காடு என்னும் பெயரைப் பெற, ஆவினம் தங்கிய இடங்களில் காட்டு விலங்குகள் தங்க, ஊர்களாக இருந்த இடங்கள் பாழாக, ஒளியுடைய வளையல்கள் அணிந்த மடப்பதையுடைய பெண்கள் துணங்கைக் கூத்தினையும் அழகிய தாளத்தையுடைய குரவைக் கூத்தினையும் மறப்ப, சான்றோர் இருந்த பெரிய அம்பலத்தில், இரண்டாகப் பிளவு உடைய கால் அடிகளையும் கடுமையான பார்வையையும் உடைய பேய் மகளிர் உலவி ஆட, கடவுள்கள் உலவும் அந்த இடங்களில், நிலத்தில் நிற்கின்ற நிலையுடன் கூடிய கதவின் அருகில் துன்பம் மிகுந்த பெண்கள் வருந்தி அழைக்க, வளமையான ஊர்களில் உள்ள குடிகள் வருந்தி வேறு இடங்களில் உள்ள சுற்றத்தாரிடம் சென்று அடைய, பெரிய இல்லங்களில் தீயில் வீழ்ந்த கரிந்த குதிர்களில் குடுமியுடைய கூகைச் சேவல் பெடையுடன் ஒலிக்க, செங்கழுநீர் மிகுந்த இடம் அகன்ற பொய்கைகளில் யானைகள் மறையும்படி வாட்கோரையும் சம்பங்கோரையும் நெருங்கி வளர, நல்ல காளை மாடுகள் உழுத விரும்புதல் அமைந்த விளைச்சல் உடைய வயல்களில் பல மயிரையுடைய பெண் பன்றியுடன் ஆண் பன்றிகள் ஓடித்திரிய, உன்னிடம் அடங்கி வாழாததால் வழி மிகக் கெட்டுப் பாழாகி விட்டன பகைவர்களின் நாடுகள். 

குறிப்பு:   உறுசெறுநர் (152) – தலைமுறை தலைமுறையாகப் பகைமைக் கொண்டவர்கள்.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  குரூஉ (155) – குருவும் கெழுவும் நிறனாகும்மே (தொல்காப்பியம், உரியியல் 5).  தழூஉ:  அகநானூறு 176 – விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து, கலித்தொகை 103 – மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத் தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ, கலித்தொகை 104 – எழில் நல்லாரும் மைந்தரும், மல்லல் ஊர் ஆங்கண் அயர்வர் தழூஉ, கலித்தொகை 106 – அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர் இன்புற்று அயர்வர் தழூஉ, பதிற்றுப்பத்து 52 – முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை ஆக,  மதுரைக்காஞ்சி 159-160 – இலங்கு வளை மட மங்கையர் துணங்கை அம் சீர்த் தழூஉ மறப்ப, மதுரைக்காஞ்சி 329 – துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி.  நச்சினார்க்கினியரும் (கலித்தொகை) சோமசுந்தரனாரும் (மதுரைக்காஞ்சி) குரவைக் கூத்து எனக் கொள்கின்றனர்.  அருள் அம்பலவாணரும் (பதிற்றுப்பத்து), ஒளவை துரைசாமியும் (பதிற்றுப்பத்து), வேங்கடசாமி நாட்டாரும் (அகநானூறு), சோமசுந்தரனாரும் (அகநானூறு) தழுவி ஆடுவதாக கொள்கின்றனர்.   மதுரைக்காஞ்சி 615-616 – தழூஉப் பிணையூஉ மன்றுதொறும் நின்ற குரவை.

சொற்பொருள்:  உறு செறுநர் புலம் புக்கு – தொன்றுதொட்டு பகைமைக் கொண்டவர்களின் நிலங்களில் புகுந்து, அவர் கடி காவின் நிலை தொலைச்சி – அவர்களுடைய காவலுடைய சோலைகளை அழித்து, இழிபு அறியாப் பெருந்தண் பணை குரூஉக் கொடிய எரி மேய – வளப்பம் குன்றுதல் அறியாத பெரிய குளிர்ச்சியுடைய மருத நிலங்களை – நிறம் பொருந்திய உயர்ந்த (படர்ந்த) நெருப்பால் எரித்து (குரூஉ – அளபெடை), நாடு எனும் பேர் காடு ஆக – நாடு என்னும் பெயர் போய் அவை காடு என்னும் பெயரைப் பெற, ஆ சேந்த வழி மா சேப்ப – ஆவினம் தங்கிய இடங்களில் காட்டு விலங்குகள் தங்க, ஊர் இருந்த வழி பாழ் ஆக – ஊர்களாக இருந்த இடங்கள் பாழாக, இலங்கு வளை மட மங்கையர் துணங்கை அம் சீர்த் தழூஉ மறப்ப – ஒளியுடைய வளையல்கள் அணிந்த மடப்பதையுடைய பெண்கள் துணங்கைக் கூத்தினையும் அழகிய தாளத்தையுடைய குரவைக் கூத்தினையும் மறப்ப (தழூஉ – அளபெடை, குரவைக் கூத்திற்கு ஆகுபெயர்), அவை இருந்த பெரும் பொதியில் – சான்றோர் இருந்த பெரிய அம்பலத்தில் (அவை – சான்றோர் இருந்த மன்றம், பொதியில் – அம்பலங்களில், பொது இல் ‘பொதியில்’ என வந்தது), கவை அடிக் கடு நோக்கத்துப் பேய்மகளிர் பெயர்பு ஆட – இரண்டாகப் பிளவு உடைய கால் அடிகளையும் கடுமையான பார்வையையும் உடைய பேய் மகளிர் உலவி ஆட, அணங்கு வழங்கும் அகல் ஆங்கண் – கடவுள்கள் உலவும் அந்த இடங்களில், நிலத்து ஆற்றும் குழூஉப் புதவின் – நிலத்தில் நிற்கின்ற நிலையுடன் கூடிய கதவின் அருகில் (குழூஉ  – அளபெடை), (பதிற்றுப்பத்து 53-16 குழூஉ நிலைப் புதவின் கதவு), அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவ – துன்பம் மிகுந்த பெண்கள் வருந்தி அழைக்க, கொழும் பதிய குடி தேம்பிச் செழுங் கேளிர் நிழல் சேர – வளமையான ஊர்களில் உள்ள குடிகள் வருந்தி வேறு இடங்களில் உள்ள சுற்றத்தாரிடம் சென்று அடைய, நெடுநகர் வீழ்ந்த கரி குதிர்ப் பள்ளிக் குடுமிக் கூகை குராலொடு முரல – பெரிய இல்லங்களில் தீயில் வீழ்ந்த கரிந்த குதிர்களில் குடுமியுடைய கூகைச் சேவல் பெடையுடன் ஒலிக்க (பள்ளி – இடம்), கழுநீர் பொலிந்த கண்அகன் பொய்கை களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர – செங்கழுநீர் மிகுந்த இடம் அகன்ற பொய்கைகளில் யானைகள் மறையும்படி வாட்கோரையும் சம்பங்கோரையும் நெருங்கி வளர, நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல் பல்மயிர்ப் பிணவொடு கேழல் உகள – நல்ல காளை மாடுகள் உழுத விரும்புதல் அமைந்த விளைச்சல் உடைய வயல்களில் பல மயிரையுடைய பெண் பன்றியுடன் ஆண் பன்றிகள் ஓடித்திரிய  (பிணவொடு – பிண + ஒடு, பிணவென்னும் அகர ஈற்றுச்சொல் வகரவுடம்படு மெய் பெற்றது), வாழாமையின் வழி தவக் கெட்டு பாழ் ஆயின நின் பகைவர் தேஎம் – உன்னிடம் அடங்கி வாழாததால் வழி மிகக் கெட்டுப் பாழாகி விட்டன பகைவர்களின் நாடுகள் (தேஎம் – அளபெடை)

பகைவரை அடக்கி அவரை அறநெறியில் நிறுத்துதல்

எழாஅத் தோள், இமிழ் முழக்கின்,
மாஅத்தாள், உயர்மருப்பின்,
கடுஞ்சினத்த களிறு பரப்பி,
விரிகடல் வியன் தானையொடு,   180

முருகு உறழப் பகைத் தலைச் சென்று,
அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ,
பெயல் உறழக் கணை சிதறி,
பல புரவி நீறு உகைப்ப,
வளை நரல வயிர் ஆர்ப்ப,  185
பீடு அழியக் கடந்து அட்டு, அவர்
நாடு அழிய எயில் வெளவி,
சுற்றமொடு தூ அறுத்தலின்
செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப,
வியன்கண் முது பொழில் மண்டில முற்றி   190

அரசியல் பிழையாது அறநெறி காட்டி
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது,
குடமுதல் தோன்றிய தொன்று தொழு பிறையின்
வழிவழிச் சிறக்க நின் வலம்படு கொற்றம்!
குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின்,   195
தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம்! (177 – 196)

பொருளுரை:  போரில் புறமுதுகிட்டவர்களைத் தாக்காத மறத்தோளுடைய மறவர்களுடன், முழங்குகின்ற ஓசையையுடைய பெரிய கால்களையும் உயர்ந்த தந்தங்களையுமுடைய மிக்கச் சினமுடைய களிற்று யானைகளை எங்கும் பரப்பி, விரிந்த கடல் போன்ற தானையுடன், முருகன் பகைவர்கள் மேல் சென்றாற்போல் சென்று, அகன்ற வானில் ஆரவார ஒலி முழங்க, மழைபோன்று அம்புகளைத் தூவி, பல குதிரைகள் ஓடுவதால் தூசி எழும்ப, சங்கு ஒலிக்க, வயிர் என்ற இசைக்கருவி ஆர்ப்ப, பகைவர்களின் பெருமை அழியும்படி போரில் அவர்களைக் கொன்று வென்று, அப்பகைவர்களின் நாடுகள் அழியும்படி அவர்களுடைய கோட்டைகளைக் கைப்பற்றி, அவர்களுடைய சுற்றத்தாருடன் அவர்களின் வலிமையை நீக்குதலால், உன் சினத்தைப் பெற்ற பகைவர்கள் உன் ஏவல் கேட்டு நடப்ப, அகன்ற இடத்தையுடைய பழைய நாவலம் பொழிலின்கண் உள்ள நாடுகளை உன்னுடையன ஆக வளைத்துக் கொண்டு, செங்கோன்மையில் பிழையாது அரசியல் அறம் இதுவெனப் பிறர்க்குக் காட்டி, உன் குலத்தின் சான்றோர்கள் நடந்த வழியிலிருந்து பிறழாது ஒழுகிய வலிமையுடைய உன் வெற்றி, மேற்குத் திசையின்கண் தோன்றிய பழையதாகிய யாவரும் தொழும் பிறை நிலா நாள்தோறும் சிறக்குமாறு போலச் சிறக்கட்டும்! கீழ்த்திசையில் தோன்றிய நிறைந்த இருள் பக்கத்தின் திங்கள் தேய்வது போல உன்னுடைய பகைவர்களின் ஆக்கம் தேய்வனவாகிக் கெடுவன ஆகுக!

குறிப்பு:   வியன்கண் முது பொழில் மண்டில முற்றி (190) – நச்சினார்க்கினியர் உரை – அகலத்தை இடத்தே உள்ள பழைய நாவலந்தீவின்கண் உளவாகிய சோழ மண்டலம், தொண்டை மண்டலம் என்கின்ற மண்டலங்களை நின்னவாக வளைத்துக் கொண்டு. மண்டலம் மண்டிலம் என மருவிற்று.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மண்டிலம் என்பது வட்டம் என்னும் பொருட்டாதலின் நாட்டிற்கு ஆகுபெயர் எனினுமாம். 

சொற்பொருள்:  எழாஅத் தோள் – புறமுதுகிட்டவர்களைத் தாக்காத மறத்தோளுடைய மறவர்களுடன் (எழாஅ – அளபெடை), இமிழ் முழக்கின் மாஅத் தாள் உயர் மருப்பின் கடுஞ்சினத்த களிறு பரப்பி – முழங்குகின்ற ஓசையையுடைய பெரிய கால்களையும் உயர்ந்த தந்தங்களையுமுடைய மிக்கச் சினமுடைய களிற்று யானைகளை எங்கும் பரப்பி (மாஅ – அளபெடை), விரிகடல் வியன் தானையொடு – விரிந்த கடல் போன்ற தானையுடன், முருகு உறழப் பகைத் தலைச் சென்று – முருகன் பகைவர்கள் மேல் சென்றாற்போல் சென்று, அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ – அகன்ற வானில் ஆரவார ஒலி முழங்க, பெயல் உறழக் கணை சிதறி – மழைபோன்று அம்புகளைத் தூவி, பல புரவி நீறு உகைப்ப – பல குதிரைகள் ஓடுவதால் தூசி எழும்ப, வளை நரல வயிர் ஆர்ப்ப – சங்கு ஒலிக்க வயிர் என்ற இசைக்கருவி ஆர்ப்ப, பீடு அழியக் கடந்து அட்டு – பகைவர்களின் பெருமை அழியும்படி போரில் அவர்களைக் கொன்று வென்று, அவர் நாடு அழிய எயில் வெளவி – அப்பகைவர்களின் நாடுகள் அழியும்படி அவர்களுடைய கோட்டைகளைக் கைப்பற்றி, சுற்றமொடு தூ அறுத்தலின் – அவர்களுடைய சுற்றத்தாருடன் அவர்களின் வலிமையை நீக்குதலால் (தூ – வலிமை), செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப – உன் சினத்தைப் பெற்ற பகைவர்கள் உன் ஏவல் கேட்டு நடப்ப, வியன்கண் முது பொழில் மண்டில முற்றி – அகன்ற இடத்தையுடைய பழைய நாவலம் பொழிலின்கண் உள்ள நாடுகளை வளைத்துக் கொண்டு, அரசியல் பிழையாது அறநெறி காட்டி – செங்கோன்மையில் பிழையாது அரசியல் அறம் இதுவெனப் பிறர்க்குக் காட்டி, பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது – உன் குலத்தின் சான்றோர்கள் நடந்த வழியிலிருந்து பிறழாது, குடமுதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் வழிவழிச் சிறக்க நின் வலம்படு கொற்றம் – மேற்குத் திசையின்கண் தோன்றிய பழையதாகிய யாவரும் தொழும் பிறை நிலா நாள்தோறும் சிறக்குமாறு போலச் சிறக்கட்டும் வலிமையுடைய உன் வெற்றி (பிறையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, சிறக்க – வியங்கோள் வினைமுற்று), குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின் தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம்  – கீழ்த்திசையில் தோன்றிய நிறைந்த இருள் பக்கத்தின் திங்கள் தேய்வது போல உன்னுடைய பகைவர்களின் ஆக்கம் தேய்வனவாகிக் கெடுவன ஆகுக (மதியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, கெடுக – வியங்கோள் வினைமுற்று)

செழியனை வாழ்த்தி அவனுக்கு நிலையாமை

அறிவுறுத்தத் தொடங்குதல்

உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்,
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே;
முழங்கு கடல் ஏணி மலர்தலை உலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்,  200

பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே;
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும் ,
பழி நமக்கு எழுக என்னாய் விழுநிதி
ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே;   205

அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ?
கொன் ஒன்று கிளக்குவல், அடுபோர் அண்ணல்!
கேட்டிசின் வாழி! கெடுக நின் அவலம்!
கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசை. (197 – 209)

பொருளுரை:  அமிழ்தத்துடன் கூடிய மேல் உலகைப் பெற்றாலும், பொய் உன்னை விட்டு நீங்க மெய்யுடனே நீ நட்புச் செய்தல் உடையை!  முழங்கும் கடலை எல்லையாக உடைய அகன்ற இடத்தையுடைய உலகத்துடன், உயர்ந்த வானுலகில் உள்ளவர்கள் பகைவர்களாக வந்தாலும், நீ அப்பகைவர்களுக்கு அஞ்சிப் பணிதலைச் செய்ய மாட்டாய். தென்திசை மலைகள் நிறையும்படி வாணன் என்ற சூரன் வைத்த பொருள் திரளை நீ பெறுவாயாயினும், பிறர் கூறும் பழி நமக்கு வருவதாக என நீ எண்ண மாட்டாய்.  சிறந்த பொருட்களைப் பிறர்க்கு வழங்கும் உள்ளத்துடன், அதனால் வரும் புகழை விரும்புவாய் நீ! அத்தன்மை உடையாய் நீ!  உன்னிடம் நான் கூறுவதற்கு யாது உள்ளது?  இவற்றிற்கு எல்லாம் மேலாக உள்ள ஒன்றினை நான் கூறுவேன் உன்னிடம்! கொல்லும் போர்த்தொழிலில் வல்லமை உடைய தலைவனே! கேட்பாயாக! நீ நீடு வாழ்வாயாக! உன் கலக்கம் கெடுவதாக! கெடாமல் நிலைக்கட்டும் தொலைவில் எல்லாம் சென்று விளங்கும் உன்னுடைய நல்ல புகழ்!  

குறிப்பு:  கொன் – அச்சம் பயமிலி காலம் பெருமை என்றப்பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம், சொல்லதிகாரம். இடையியல் 6).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்,  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

சொற்பொருள்:  உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் – அமிழ்தத்துடன் கூடிய மேல் உலகைப் பெறினும், பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே – பொய் உன்னை விட்டு நீங்க மெய்யுடனே நீ நட்புச் செய்தல் உடையை (நட்பினை – முன்னிலை வினைமுற்று, ஏகாரம் அசைநிலை), முழங்கு கடல் ஏணி மலர்தலை உலகமொடு – முழங்கும் கடலை எல்லையாக உடைய அகன்ற இடத்தையுடைய உலகத்துடன் (ஏணி – எல்லை), உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் – உயர்ந்த வானுலகில் உள்ளவர்கள் பகைவர்களாக வந்தாலும் (தேஎத்து – அளபெடை), பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே – நீ பகைவர்களுக்கு அஞ்சிப் பணிதலைச் செய்ய மாட்டாய் (ஒழுகலை – முன்னிலை எதிர்மறை வினைமுற்று, ஏகாரம் அசைநிலை), தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் – தென்திசை மலைகள் நிறையும்படி வாணன் என்ற சூரன் வைத்த பொருள் திரளை நீ பெறுவாயாயினும் (விண்டு – மலை), பழி நமக்கு எழுக என்னாய் – பிறர் கூறும் பழி நமக்கு வருவதாக என நீ எண்ண மாட்டாய் (என்னாய் – முன்னிலை எதிர்மறை வினைமுற்று), விழுநிதி ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே – சிறந்த பொருட்களைப் பிறர்க்கு வழங்கும் உள்ளத்துடன் அதனால் வரும் புகழை விரும்புவாய் (வேட்குவை – முன்னிலை வினைமுற்று, ஏகாரம் அசைநிலை), அன்னாய் – அத்தன்மை உடையாய் நீ, நின்னொடு முன்னிலை எவனோ – உன்னிடம் நான் கூறுவதற்கு யாது உள்ளது, கொன் ஒன்று கிளக்குவல் – இவற்றிற்கு எல்லாம் மேலாக உள்ள ஒன்றினை நான் கூறுவேன் உன்னிடம் (கொன் – மிகுதி, பெரியது, கிளக்குவல் – அல் ஈற்றுத்தன்மையொருமை வினைமுற்று), அடு போர் அண்ணல் – கொல்லும் போர்த்தொழிலில் வல்லமை உடைய தலைவனே, கேட்டிசின் – கேட்பாயாக (சின் – முன்னிலை அசைச் சொல்), வாழி – நீ நீடு வாழ்வாயாக, கெடுக நின் அவலம் – உன் கலக்கம் கெடுவதாக (கெடுக – வியங்கோள் வினைமுற்று), கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசை – கெடாமல் நிலைக்கட்டும் தொலைவில் எல்லாம் சென்று விளங்கும் உன்னுடைய நல்ல புகழ் (நிலைஇயர் – அளபெடை, வியங்கோள் வினைமுற்று)

உலகத்தைச் சிறப்புற ஆண்டு மறைந்தோர் பலர் எனல்

தவாப் பெருக்கத்து அறா யாணர்   210

அழித்து, ஆனாக் கொழுந்திற்றி
இழித்து ஆனாப் பல சொன்றி
உண்டு, ஆனாக் கூர் நறவின்
தின்று, ஆனா இன வைகல்
நிலன் எடுக்கல்லா ஒண்பல் வெறுக்கைப்   215

பயன் அறவு அறியா வளம் கெழு திருநகர்
நரம்பின் முரலும் நயம்வரு முரற்சி
விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப்
பாணர் உவப்பக் களிறு பல தரீஇ,
கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ,   220

மறம் கலங்கத் தலைச் சென்று
வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி,
நாள் ஈண்டிய நல் அகவர்க்குத்
தேரோடு மா சிதறி,
சூடுற்ற சுடர்ப் பூவின்   225

பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்றம் ஆகக்
கள்ளின் இரும் பைக்கலம் செல உண்டு,
பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப
பணியார் தேஎம் பணித்துத் திறை கொண்மார்   230

பருந்து பறக்கல்லாப் பார்வல் பாசறைப்
படுகண் முரசம் காலை இயம்ப,
வெடிபடக் கடந்து வேண்டு புலத்து இறுத்த
பணை கெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்
கரை பொருது இரங்கும் கனை இரு முந்நீர்த்   235
திரை இடு மணலினும் பலரே உரை செல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே!  (210 – 237)

பொருளுரை:  கெடாத மிகுதியையுடைய நீங்காத வளமையும், உண்டும் குறையாத கொழுப்புடைய தசையும், உண்டும் குறையாத பல வகையான சோறும், குடித்தும் குறையாத மிக்க கள்ளும், தின்றும் குறையாத உணவு வகைகளும் தங்குதல் உடைய, நிலம் சுமக்க முடியாத ஒளியுடைய பொருட்களையுடைய, எப்பொழுதும் பயன் கெடுதல் அறியாத செல்வமுடைய அரண்மனைகளில், யாழின் நரம்பு போன்று பாடும் நயத்துடன் தோன்றும் பாட்டினையுடைய விறலியர் தம்முடைய வளையல் அணியாத கைகளில் வளையல்களை அணிவிக்கக் கொடுத்து, அகவல் பாணர்கள் மகிழ்ச்சி அடையும்படி களிற்று யானைகளை அவர்களுக்குக் கொடுத்து, நட்பில் கலந்தவர்கள் மகிழக் கைப்பற்றிய அரண்களில் உள்ள பொருட்களையும் அவர்களுக்குக் கொடுத்து, பகைவர்களின் மறம் கெடுமாறு அவர்களிடத்தில் சென்று, வாளினால் செய்த போரில் அவர்கள் வருந்தி வென்றதற்குக் காரணமான அவர்களின் முயற்சியைப் பாராட்டி, விடியற்காலையில் வந்த பாணர்களுக்குத் தேருடன் குதிரைகளையும் கொடுத்து, சூடுதல் கொண்ட ஒளியுடைய வஞ்சி மலர்களையும் பூசிப் புலர்ந்த நறுமணமான சந்தனத்தையுமுடைய சிறந்த படைத் தலைவர்களைச் சுற்றமாகக் கொண்டு, கள்ளையுடைய பெரிய தோல் குப்பிகள் வற்றும்படிக் குடித்து, பணிந்தவர்களின் நாடுகள் தன் ஏவல் கேட்டு நடக்க, பணியாதவர்களின் நாடுகளைப் பணியச் செய்து அவர்களிடம் திறை கொள்ளும்பொருட்டு உயரப்பறக்கும் பருந்துகளும் பறக்கமுடியாத உயர்ச்சியுடைய அரண்மனைகளின் பாசறைக்கண், ஒலிக்கின்ற கண்ணையுடைய பள்ளியெழுச்சி முரசம் அதிகாலையில் ஒலிக்க, பகைவர்களுக்குக் கேடு உண்டாகும்படி வென்று, வேண்டிய நிலங்களில் சென்று தங்கின, வெற்றி முரசுகளையுடைய பல வேல்களை உடைய மன்னர்கள், கரையை இடித்து முழங்கும் செறிந்த கரிய கடலின் அலைகள் குவிக்கின்ற மணலினும் பலர் ஆவார்கள், தங்கள் புகழ் எங்கும் பரவும்படி, அகன்ற இடத்தையுடைய இந்த உலகை ஆண்டு, பிறவியை நீக்க முயலாது மாண்டவர்கள்.

குறிப்பு:  இழித்து (212) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உண்டு அமையாத, உண்டு கெடுத்தும் என்னும் பொருட்டு, நச்சினார்க்கினியர் உரை, C. ஜெகந்நாதாசார்யர் உரை – விருப்பம் அமையாத, தீது என்று.  அழித்து, இழித்து, தின்று, உண்டு –  ச. வே. சுப்பிரமணியன் உரை – உண்ணலைக் குறிக்கும் சொற்கள்.  இரும் பைக்கலம் (228) – தோலினால் செய்த பை, பெரும்பாணாற்றுப்படை 382 – நீலப் பைங்குடம் தொலைச்சி நாளும் பெரு மகிழ் இருக்கை.  பார்வல் (231) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரசர் தம் பகைவர் சேய்மைக்கண் வருதலைப் பார்த்திருத்தற்குரிய உயர்ச்சியுடைய அரண்: ஆகுபெயர்.  பெரியோர் (227) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – படைத்தலைவர்கள்.  படைத் தலைவர்களை சான்றோர் என்றும் குறிப்பிட்டுள்ளனர் (புறநானூறு 63-5, பதிற்றுப்பத்து 14-12, 58-11, 67-18).  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  மணலினும் பலவே:  அகநானூறு 93 – தண் ஆன்பொருநை மணலினும் பலவே, புறநானூறு 9- நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே, புறநானூறு 43 – எக்கர் இட்ட மணலினும் பலவே, புறநானூறு 55 – வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே, புறநானூறு 136 – நுண் பல மணலினும் ஏத்தி, புறநானூறு 363 – இடு திரை மணலினும் பலரே, 387 – கல்லென் பொருநை மணலினும், மதுரைக்காஞ்சி 236 – திரை இடு மணலினும் பலரே, மலைபடுகடாம் 556 – வடு வாழ் எக்கர் மணலினும் பலரே.  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடைமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை. கூர் – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18). உலகம் ஆண்டு கழிந்தோரே (237) – நச்சினார்க்கினியர் உரை – இது ‘மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை’ அன்றி பிறவியற முயலாமையிற் கழிந்தமை கூறிற்று.  இதன் விளக்கம் – C.ஜெகந்நாதாசார்யர் உரை – பிறரால் தடுத்தற்கரிய கூற்றம் வருமெனச் சான்றோர் சாற்றிய பெருங்காஞ்சியையும் காதால் கேட்டனரேயன்றிப் பிறவி அறுக்க முயலாமையின் கொன்னே கழிந்தொழிந்தனர் என்பது.  இதனால் மருதனார் தாம் காஞ்சி கூறப்புகுந்ததனைக் கேட்டு நெடுஞ்செழியன் பிறவியற முயலல் வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

சொற்பொருள்:  தவாப் பெருக்கத்து அறா யாணர் – கெடாத மிகுதியையுடைய நீங்காத வளமை, அழித்து ஆனாக் கொழுந்திற்றியும் –  அழிக்கப்பட்டும் (உண்டும்) குறையாத கொழுப்புடைய தசையும், இழித்து ஆனா பல சொன்றி – உண்டும் குறையாத பல வகையான சோறும்,  உண்டு ஆனாக் கூர் நறவின்  – குடித்தும் குறையாத மிக்க கள்ளும், தின்று ஆனா இன வைகல் – தின்றும் குறையாத உணவு வகைகள் தங்குதல் உடைய (வைகல் – தங்குதல்), நிலன் எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கை – நிலம் சுமக்க முடியாத ஒளியுடைய பொருட்களையுடைய (நிலன் –  நிலம் என்பதன் போலி), பயன் அறவு அறியா வளம் கெழு திருநகர் – எப்பொழுதும் பயன் கெடுதல் அறியாத செல்வமுடைய இல்லங்கள், நரம்பின் முரலும் நயம்வரு முரற்சி விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்ப – யாழின் நரம்பு போன்று பாடும் நயத்துடன் தோன்றும் பாட்டினையுடைய விறலியர் தம்முடைய வளையல் அணியாத கைகளில் வளையல்களை அணிவிக்கக் கொடுத்து (நரம்பின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது), பாணர் உவப்பக் களிறு பல தரீஇ – பாணர்கள் மகிழ்ச்சி அடையும்படி களிற்று யானைகளைக் கொடுத்து  (தரீஇ – அளபெடை), கலந்தோர் உவப்ப – நட்பில் கலந்தவர்கள் மகிழ, எயில் பல கடைஇ – கைப்பற்றிய அரண்களில் உள்ள பொருட்களை அவர்களுக்குக் கொடுத்து (கடைஇ – அளபெடை), மறம் கலங்கத் தலைச் சென்று  – பகைவர்கள் மறம் கெடுமாறு அவர்களிடத்தில் சென்று, வாள் உழந்ததன் தாள் வாழ்த்தி – வாளினால் செய்த போரில் அவர்கள் வருந்தி வென்றதற்குக் காரணமான அவர்களின் முயற்சியைப் பாராட்டி, நாள் ஈண்டிய நல் அகவர்க்கு தேரோடு மா சிதறி – விடியற்காலையில் வந்த பாணர்களுக்குத் தேருடன் குதிரைகளையும் கொடுத்து, சூடுற்ற சுடர்ப் பூவின் பாடு புலர்ந்த நறுஞ்சாந்தின் விழுமிய பெரியோர் சுற்றம் ஆக – சூடுதல் கொண்ட ஒளியுடைய வஞ்சி மலர்களையும் பூசிப் புலர்ந்த நறுமணமான சந்தனத்தையுமுடைய சிறந்த படைத் தலைவர்களைச் சுற்றமாகக் கொண்டு, கள்ளின் இரும் பைக்கலம் செல உண்டு – கள்ளையுடைய பெரிய தோல் குப்பிகள் வற்றும்படிக் குடித்து (செல – இடைக்குறை), பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப – பணிந்தவர்களின் நாடுகள் தன் ஏவல் கேட்டு நடக்க (தேஎம் – அளபெடை), பணியார் தேஎம் பணித்துத் திறை கொண்மார் – பணியாதவர்களின் நாடுகளைப் பணியச் செய்து அவர்களிடம் திறை கொள்ளும்பொருட்டு (தேஎம் – அளபெடை), பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை – உயரப் பறக்கும் பருந்துகளும் பறக்கமுடியாத உயர்ச்சியுடைய அரண்மனைகளின் பாசறைக்கண், படுகண் முரசம் காலை இயம்ப – ஒலிக்கின்ற கண்ணையுடைய பள்ளியெழுச்சி முரசம் அதிகாலையில் ஒலிக்க, வெடிபடக் கடந்து வேண்டு புலத்து இறுத்த – பகைவர்களுக்குக் கேடு உண்டாகும்படி வென்று  வேண்டிய நிலங்களில் சென்று தங்கின, பணை கெழு பெருந்திறல் பல்வேல் மன்னர் – வெற்றி முரசுகளையுடைய பல வேல்களை உடைய மன்னர்கள், கரை பொருது இரங்கும் கனை இரு முந்நீர்த் திரை இடு மணலினும் பலரே – கரையை இடித்து முழங்கும் செறிந்த கரிய கடலின் அலைகள் குவிக்கின்ற மணலினும் பலர் ஆவார்கள், உரைசெல மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே – புகழ் பரவ அகன்ற இடத்தையுடைய உலகை ஆண்டு மாண்டவர்கள் (செல – இடைக்குறை, கழிந்தோரே – ஏகாரம் ஈற்றசை) 

மருத நில வளப்பம் – வலைஞர் இயல்பு

அதனால் குணகடல் கொண்டு குடகடல் முற்றி
இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது
அவலும் மிசையும் நீர்த் திரள்பு ஈண்டி,  240

கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்பக்
கழை வளர் சாரல் களிற்றினம் நடுங்க,
வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து,
சிதரற் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது,
குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல் உந்தி,   245

நிவந்து செல் நீத்தம் குளம் கொளச் சாற்றி
களிறு மாய்க்கும் கதிர்க் கழனி;
ஒளிறு இலஞ்சி அடை நிவந்த
முள் தாள் சுடர்த் தாமரை;
கள் கமழும் நறு நெய்தல்;   250

வள் இதழ் அவிழ் நீலம்
மெல் இலை அரி ஆம்பலொடு,
வண்டு இறை கொண்ட கமழ்பூம் பொய்கை
கம்புள் சேவல் இன் துயில் இரிய,
வள்ளை நீக்கி வயமீன் முகந்து   255

கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்,
வேழப் பழனத்து நூழிலாட்டு
கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை;  (238 – 258)

பொருளுரை:  அதனால், முகில்கள் கீழ்த்திசைக் கடலிலிருந்து நீரை முகந்துக் கொண்டு மேற்குத் திசையில் உள்ள கடற்கரையில் உள்ள மலையை வளைத்துக் கொண்டு, இரவு பகல் ஆகியவை முடியும் வேளையை அறியாதபடி பள்ளமும் மேடும் ஆகிய நிலங்களில் உண்டாக்கிய நீரினால் ஒருசேரக் குவிந்து கவலைக்கிழங்குகள் அழகிய குழிகளில் உள்ளன. அருவிகள் ஒலிக்கின்றன.  மூங்கில் வளர்ந்துள்ள மலையின் பக்கங்களில் யானைக் கூட்டங்கள் நடுங்குகின்றன.  மலையில் ஒலிக்கும் இடியுடன் முகில்கள் பரவி நீரைச் சிதறிய பெருமழை மிகுந்ததால், ஆறுகள் நீர்நிறைந்து பாரம் தாங்காமல் கீழ்த்திசைக் கடலுக்குச் செல்லுகின்ற, கலங்கிய நீரினால் நிறத்தையுடைய நீர் முன்னால் உள்ள யாவற்றையும் தள்ளிக் கொண்டு செல்லும் வெள்ளமானது குளங்கள் கொள்ளும்படி அவற்றை நீரால் நிரப்புகின்றன.  யானைகளை மறைக்கும் அளவிற்குக் கதிர்கள் வளர்ந்த வயல்களிலும், விளங்கும் குளங்களிலும், இலைக்கு மேலே உயர்ந்த, முள்ளையுடைய தண்டுகளையும் ஒளியையும் உடைய தாமரை மலர்களையும், தேன் கமழும் நறுமணமான நெய்தல் மலர்களையும், பெரிய இதழ்களையுடைய மலர்ந்த நீலப்பூக்களையும், மெல்லிய இலைகளையும் வண்டுகளையுமுடைய ஆம்பல் பூக்களுடன் வண்டுகள் தங்கியிருக்கும் மணமுடைய பிற மலர்களையும் உடைய பொய்கைகளிலும், கம்புள் சேவலின் இனிய உறக்கம் கெடும்படி வள்ளைக் கொடிகளைத் தள்ளி, வலிய மீன்களை முகந்து கொண்டு விலை கூறி விற்ற முடிச்சுகளால் ஆன வலையால் மீன் பிடிப்பவர்களின் ஓசையும், கொறுக்கச்சி உடைய மருத நிலத்தில் மீன்களைக் கொன்று குவித்ததால் எழுந்த ஓசையும், கரும்பு ஆலைகளின் ஓசையும், களை பறிப்பவர்களின் ஓசையும் கேட்கின்றன.

குறிப்பு:  குரூஉ (245) – குருவும் கெழுவும் நிறனாகும்மே (தொல்காப்பியம், உரியியல் 5).  உந்தி (245) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உந்துதல், முன் உள்ளவற்றைத் தள்ளுதல், C. ஜெகந்நாதாசார்யர் உரை – ஆற்றிடைக் குறை (ஆற்றில் உள்ள சிறிய தீவு).

சொற்பொருள்:  அதனால் – அதனால், குணகடல் கொண்டு குடகடல் முற்றி – முகில்கள் கீழ்த்திசைக் கடலிலிருந்து நீரை முகந்துக் கொண்டு மேற்குத் திசையில் உள்ள கடற்கரையில் உள்ள மலையை வளைத்துக் கொண்டு, இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது – இரவு பகல் ஆகியவை முடியும் வேளையை அறியாதபடி (விளிவு – முடிவு, இடன் – இடம் என்பதன் போலி), அவலும் மிசையும் நீர்த் திரள்பு  ஈண்டி – பள்ளமும் மேடும் ஆகிய நிலங்களில் உண்டாக்கிய நீரினால் ஒருசேரக் குவிந்து, கவலை அம் குழும்பின் – கவலைக்கிழங்குகள் அழகிய குழிகளில் உள்ளன (குழும்பின் – குழிகளில்), அருவி ஒலிப்ப – அருவிகள் ஒலிக்க, கழை வளர் சாரல் களிற்றினம் நடுங்க – மூங்கில் வளர்ந்துள்ள மலையின் பக்கங்களில் யானைக் கூட்டம் நடுங்க, வரை முதல் – மலையில், இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து – ஒலிக்கும் இடியுடன் முகில்கள் பரவி (வான் ஆகுபெயர் முகிலுக்கு), சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் – நீரைச் சிதறிய பெருமழை மிகுந்ததால், தாங்காது குண கடற்கு இவர் தரும் குரூஉப் புனல் – ஆறுகள் நீர்நிறைந்ததால் தாங்காமல் கீழ்த்திசைக் கடலுக்குச் செல்கின்ற நிறத்தையுடைய வெள்ளம் (குரூஉ – அளபெடை), உந்தி நிவந்து செல் நீத்தம் – நீர் உயர்ந்து யாவற்றையும் தள்ளிக் கொண்டுச் செல்லும் நீரோட்டம், நீர் உயர்ந்து ஆற்றின் சிறிய தீவின் மேல் செல்லும் நீரோட்டம் (உந்தி – தள்ளிக்கொண்டு, ஆற்றிடைக் குறை) குளம் கொளச் சாற்றி – குளங்கள் கொள்ளும்படி நிரம்பி, களிறு மாய்க்கும் கதிர்க் கழனி – யானைகளை மறைக்கும் அளவிற்குக் கதிர்கள் வளர்ந்த வயல்கள், ஒளிறு இலஞ்சி அடை நிவந்த முள் தாள் சுடர்த் தாமரை – விளங்கும் குளங்களிலும் இலைக்கு மேலே உயர்ந்த முள்ளையுடைய தண்டுகளையுடைய ஒளியுடைய தாமரை மலர்களையும், கள் கமழும் நறு நெய்தல் வள் இதழ் அவிழ் நீலம் – தேன் கமழும் நறுமணமான நெய்தல் மலர்களையும் பெரிய இதழ்களையுடைய மலர்ந்த நீலப்பூக்களையும், மெல் இலை அரி ஆம்பலொடு – மெல்லிய இலைகளையும் வண்டுகளையுமுடைய ஆம்பல் பூக்களுடன் (அரி – வண்டு), வண்டு இறை கொண்ட கமழ்பூம் பொய்கை – வண்டுகள் தங்கியிருக்கும் மணமுடைய பிற மலர்களையும் உடைய பொய்கைகளிலும், கம்புள் சேவல் இன் துயில் இரிய வள்ளை நீக்கி – கம்புளின் சேவல் இனிய உறக்கம் கெடும்படி வள்ளைக் கொடிகளைத் தள்ளி, வயமீன் முகந்து கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் – வலிய மீன்களை முகந்து கொண்டு விலை கூறி விற்ற முடிச்சுகளால் ஆன வலையால் மீன் பிடிப்பவர்கள் (கொடுமுடி – கொடுமுடி என்றது வலையின்கண் உள்ள முடிச்சுக்களை), வேழப் பழனத்து நூழிலாட்டு ஓதை – கொறுக்கச்சி உடைய மருத நிலத்தில் மீன்களைக் கொன்று குவித்ததால் எழுந்த ஓசை, கரும்பின் எந்திரம் ஓதை – கரும்பு ஆலைகளின் ஓசை, கட்பின் ஓதை – களை பறிப்பவர்களின் ஓசை (கட்பு – களை எடுப்பு)

மருத நிலத்தில் எழும் பற்பல ஓசைகள்

அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம்
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே   260

ஒலிந்த பகன்றை விளைந்த கழனி;
வன்கை வினைஞர் அரிபறை இன்குரல்
தளி மழை பொழியும் தண் பரங்குன்றில்
கலி கொள் சும்மை ஒலிகொள் ஆயம்
ததைந்த கோதை தாரொடு பொலியப்   265
புணர்ந்து உடன் ஆடும் இசையே அனைத்தும்
அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்பக்
குருகு நரல மனை மரத்தான்
மீன் சீவும் பாண் சேரியொடு,
மருதம் சான்ற தண்பணை சுற்றி ஒரு சார்;  (259 – 270)

பொருளுரை:  சேற்றில் அகப்பட்ட தங்களுடைய வலிமையில்லாத எருதுகளின் துன்பத்தை, கள்ளை உண்ணுபவர்களாகிய, வயலில் பணிபுரிவோர், நீக்கும் ஒலியும், தழைத்த பகன்றைச் செடிகள் உடைய நெல் முற்றிய வயல்களில் நெல்லை வலிமையான கைகளால் அறுப்பவர்களின் ஓசையும், இனிய ஓசையுடைய துளிகளையுடைய முகில்கள் பெய்யும் குளிர்ச்சியுடைய திருப்பரங்குன்றத்தில் விழாக்கள் கொண்டாடும் ஒலியும், ஆரவாரமுடைய மகளிரின் நெருங்கின மாலைகள் தங்கள் கணவரின் மாலைகளுடன் அழகுபெறக் கூடுமாறு துணைவர்களுடன் நீராடும் ஆரவாரமும், இவை அனைத்தும், அகன்ற பெரிய வானத்திற்குச் சென்று முழங்கி இனிமையாக ஒலிக்க, குருகுகள் அழைக்கும்படி மனையில் மரத்தடிதோறும் மீனைச் சீவும் பாணர்களின் குடியிருப்பில் எழும் ஓசையுடன் ஊடலாகிய உரிப்பொருளைக் கொண்ட குளிர்ச்சியுடைய மருத நிலத்தால் சூழப்பட்ட ஒரு பகுதியும்,

குறிப்பு:  மருதம் சான்ற தண்பணை சுற்றி ஒரு சார் (270) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஊடலாகிய உரிப்பொருள் அமைந்த மருத நிலத்தாலே சூழப்பட்ட ஒரு பகுதி. மருதம் சான்ற:  மதுரைக்காஞ்சி 270, சிறுபாணாற்றுப்படை 186.  பாணரும் மீனும்:  அகநானூறு 196 – வராஅல் துடிக் கண் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடி வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து, அகநானூறு 216 – நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள், குறுந்தொகை 169 – பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல, ஐங்குறுநூறு 47 – முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த, ஐங்குறுநூறு 48 – வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த, ஐங்குறுநூறு 49 – பாண்மகள் சில் மீன் சொரிந்து,  ஐங்குறுநூறு 111 – பாணன் சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇச் சினைக் கயல் மாய்க்கும், புறநானூறு 348 – மீன் சீவும் பாண் சேரி, மதுரைக்காஞ்சி 269 – மீன் சீவும் பாண் சேரியொடு, பெரும்பாணாற்றுப்படை 284-285 – கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ.  சும்மை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 51).  சேரியொடு (269) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இஃது ஆண்டு எழும் ஆரவாரத்திற்கு ஆகுபெயர்.

சொற்பொருள்:  அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் – சேற்றில் அகப்பட்ட வலிமையில்லாத எருதுகளின் துன்பம், கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே – கள்ளை உண்ணும் வயலில் பணிபுரிவோர் நீக்கும் ஒலியும், ஒலிந்த பகன்றை – தழைத்த பகன்றைச் செடிகள் உடைய, விளைந்த கழனி – நெல் முற்றிய வயல்கள், வன்கை வினைஞர் அரி பறை – நெல்லை வலிமையான கைகளால் அறுப்பவர்களின் ஓசையும், இன்குரல் தளி மழை பொழியும் தண் பரங்குன்றில் – இனிய ஓசையுடைய துளிகளையுடைய முகில்கள் பெய்யும் குளிர்ச்சியுடைய திருப்பரங்குன்றத்தில்  (தளி – துளி, மழை – முகில்கள்), கலி கொள் சும்மை – விழாக்கள் கொண்டாடும் ஒலியும்,  ஒலி கொள் ஆயம் – ஆரவாரமுடைய மகளிர், ததைந்த கோதை தாரொடு – ஆடவரும் பெண்களும் செறிந்த மலர் மாலையுடன் (கோதை – பெண்கள் அணியும் மாலை, தார் – ஆண்கள் அணியும் மாலை), பொலியப் புணர்ந்து உடன் ஆடும் இசையே – அழகுபெற துணைவர்களுடன் நீராடும் ஆரவாரமும், அனைத்தும் – இவை அனைத்தும், அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப  – அகன்ற பெரிய வானத்திற்குச் சென்று முழங்கி இனிமையாக ஒலிக்க, குருகு நரல – குருகுகள் ஒலிக்க, மனை மரத்தான் மீன் சீவும் பாண் சேரியொடு – மனையில் மரத்தடிதோறும் மீனைச் சீவும் பாணர்களின் குடியிருப்பில் எழும் ஓசையுடன், மருதம் சான்ற தண் பணை சுற்றி ஒரு சார் – ஊடலாகிய உரிப்பொருளைக் கொண்ட குளிர்ச்சியுடைய மருத நிலத்தால் சூழப்பட்ட ஒரு பகுதியும்

முல்லை நிலக் காட்சிகள்

சிறுதினை கொய்ய கவ்வை கறுப்ப
கருங்கால் வரகின் இருங்குரல் புலர,
ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர,
எழுந்த கடற்றில் நன்பொன் கொழிப்பப்
பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி,   275

மடக்கண் பிணையொடு மறுகுவன உகளச்
சுடர்ப் பூங் கொன்றை தாஅய நீழல்
பாஅயன்ன பாறை அணிந்து,
நீலத்து அன்ன பைம் பயிர் மிசைதொறும்
வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து   280

சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்
மணி மருள் நெய்தல் உறழ காமர்
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர
வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப,
முல்லை சான்ற புறவு அணிந்து ஒரு சார்;  (271 – 285)

பொருளுரை:   சிறிய தினைக்கதிர்கள் கொய்யப்படவும், எள்ளின் இளங்காய் முற்றிக் கருமை அடையவும், கரிய தாளினையுடைய வரகின் கரிய கதிர் முற்றி ஈரம் புலரவும், ஆழ்ந்த குழிகளில் அழகிய மணிகள் விளங்கவும், வளர்ந்த காட்டில் நல்ல பொன் மேலே பிறழும்படி மிகுந்த அழகையுடைய சிறிய தலையையுடைய நெளவி மான் மடப்பத்தை உடைய கண்களையுடைய தம் பெண் மானுடன் சுழன்றுத் துள்ளி விளையாடவும், ஒளியுடைய மலர்களையுடைய கொன்றை மரத்தின் நிழலில் பரப்பி வைத்தாற்போன்ற பாறை அழகுபெற்று, நீலமணியை ஒத்த பசுமையான பயிர்கள் உள்ளஇடந்தொறும், வெள்ளியின் நிறத்தை ஒத்த முல்லையின் ஒளியுடைய மலர்கள் உதிர்ந்து, முறுக்குண்ட அரும்புகளையுடைய முசுண்டை மலர்களுடன் பரவி, நீலமணிபோன்ற நெய்தல் மலர்கள் மாறுபடும்படி விருப்பத்தையுடைய தெளிந்த நீரையுடைய மென்மையான பள்ளங்களில் தொய்யில் கொடி மலர, வேலன் இயற்றிய வெறிக்களத்தை ஒத்திருந்த முல்லை ஒழுக்கம் அமைந்த முல்லைக்காடு சூழ்ந்த ஒரு பகுதியும்,  

குறிப்பு:  முல்லை சான்ற புறவு அணிந்து (285) – நச்சினார்க்கினியர் உரை – இருத்தல் ஆகிய உரிப்பொருள் அமைந்த காடு சூழ்ந்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முல்லை ஒழுக்கம் அமைந்த முல்லைக்காடு சூழ்ந்து.  அகநானூறு 274 – முல்லை சான்ற கற்பின், நற்றிணை 142 – முல்லை சான்ற கற்பின், பரிபாடல் 15 – முல்லை முறை, சிறுபாணாற்றுப்படை 30 – முல்லை சான்ற கற்பின்,  சிறுபாணாற்றுப்படை 169 – முல்லை சான்ற முல்லை அம் புறவின், மதுரைக்காஞ்சி 285 – முல்லை சான்ற புறவு.

சொற்பொருள்:  சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்ப கருங்கால் வரகின் இருங்குரல் புலர – சிறிய தினைக்கதிர்கள் கொய்யப்படவும் எள்ளின் இளங்காய் முற்றிக் கருமை அடையவும் கரிய தாளினையுடைய வரகின் கரிய கதிர் முற்றி ஈரம் புலரவும் (கவ்வை – எள்ளின் இளங்காய், கறுப்ப – முற்றிக் கருமை எய்த), ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர – ஆழ்ந்த குழிகளில் அழகிய மணிகள் விளங்கவும், எழுந்த கடற்றில் நன்பொன் கொழிப்ப – வளர்ந்த காட்டில் நல்ல பொன் மேலே பிறழும்படி (எழுந்த – வளர்ந்த), பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி மடக்கண் பிணையொடு மறுகுவன உகள – மிகுந்த அழகையுடைய சிறிய தலையையுடைய நெளவி மான் மடப்பத்தை உடைய கண்களையுடைய பெண் மானுடன் சுழன்று துள்ளி விளையாட, சுடர்ப் பூங் கொன்றை நீழல் – ஒளியுடைய மலர்களையுடைய கொன்றை மரத்தின் நிழலில் (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), பாஅய அன்ன பாறை அணிந்து – பரப்பி வைத்தாற்போன்ற பாறை அழகுபெற்று (பாஅய – அளபெடை), நீலத்து அன்ன பைம்பயிர் மிசைதொறும் – நீலமணியை ஒத்த பசுமையான பயிர்கள்தோறும் (நீலத்து – நீலம், அத்து சாரியை), வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து – வெள்ளியின் நிறத்தை ஒத்த முல்லையின் ஒளியுடைய மலர்கள் உதிர்ந்து, சுரி முகிழ் முசுண்டையொடு – முறுக்குண்ட அரும்புகளையுடைய முசுண்டை மலர்களுடன், முல்லை தாஅய் – முல்லை மலர்கள் பரவி (தாஅய் – அளபெடை), மணி மருள் நெய்தல் – நீலமணிபோன்ற நெய்தல் மலர்கள் (மருள் – உவம உருபு), உறழ – மாறுபட, காமர் துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர – விருப்பத்தையுடைய தெளிந்த நீரையுடைய மென்மையான பள்ளங்களில் தொய்யில் கொடி மலர (மெல் அவல் – நெகிழ்ந்த பள்ளம்), வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப முல்லை சான்ற புறவு அணிந்து  ஒரு சார் – வேலன் இயற்றிய வெறிக்களத்தை ஒத்திருந்த முல்லை ஒழுக்கம் அமைந்த முல்லைக்காடு சூழ்ந்த ஒரு பகுதியும் (தைஇய – அளபெடை)

குறிஞ்சி நிலத்தின் இயற்கை வளம்

நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி,
இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்
பல்வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி,   290

தினை விளை சாரற் கிளிகடி பூசல்,
மணிப்பூ அவரைக் குரூஉத் தளிர் மேயும்
ஆமா கடியும் கானவர் பூசல்,
சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின்
வீழ்முகக் கேழல் அட்ட பூசல்,   295

கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர்
நறும் பூக் கொய்யும் பூசல், இருங் கேழ்
ஏறு அடு வயப்புலிப் பூசலொடு, அனைத்தும்
இலங்கு வெள் அருவியொடு சிலம்பகத்து இரட்ட,
கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து,   300
அருங்கடி மாமலை தழீஇ ஒரு சார்; (286 – 301)

பொருளுரை:  நறுமண அகில் மரங்களையும் சந்தன மரங்களையும் வெட்டி மேட்டு நிலத்தில் விதைத்த குறிய கதிர்களையுடைய தோரை நெல்லும் (மூங்கில் விதையும்), நெடிய தண்டினையுடைய வெண்கடுகும், ஐவனம் என்ற வெள்ளை நெல்லுடன் பிணங்கி வளர்ந்து, இஞ்சியும் மஞ்சளும் பசுமையான மிளகுக் கொடியும் பிற பல்வேறு பொருட்களும் கல் தரையில் குவிக்கப்பட்டு, இவற்றுடன், தினை விளையும் மலைப்பக்கத்தில் கிளியை விரட்டும் ஆரவாரமும், மணிபோலும் மலர்களையுடைய அவரையின் நிறமுடைய தளிர்களை மேயும் காட்டுப் பசுவை விரட்டும் கானவரின் ஓசையும், மலைக்குறவன் தோண்டிய மூடின வாயையுடைய பொய்க்குழியில் விழுந்த நிலைமையையுடைய ஆண் பன்றியைக் கொல்லும் ஓசையும், கரிய அடிப்பகுதியையுடைய வேங்கை மரத்தின் பெரிய கிளைகளில் உள்ள நறுமண மலர்களைப் பறிக்கும் பெண்களின் ‘புலி புலி’ என்ற ஆரவாரமும், கரிய நிறத்தையுடைய பன்றியைக் கொல்லும் வலிமையுடைய புலியின் ஆரவாரத்துடன் கூடிய எல்லா ஓசைகளும், ஒளியுடைய வெள்ளை அருவியின் ஒலியுடன் மலையில் எதிரொலிக்க, கரிய தண்டினையுடைய குறிஞ்சியின் பெயரையுடைய புணர்ச்சியாகிய உரிப்பொருள் அமைந்த பக்க மலைகளால் சூழப்பட்ட, பெறுவதற்கு அரிய சிறப்பையுடைய மலை தழுவப்பட்ட ஒரு பக்கம்,

குறிப்பு:   சேணோன் (294) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உயரத்தில் இருப்பான் என்னும் பொருட்டாகலின் மலை மிசை வாழும் குறவன் எனப்பட்டது, உ. வே. சாமிநாதையர் உரை (குறுந்தொகை 150) – பரண் மீது இருக்கும் குறவன். வேங்கை இருஞ்சினைப் பொங்கர் நறும் பூக் கொய்யும் பூசல் (296-297) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வேங்கை மலர் கொய்யும் மகளிர் புலி புலி என்று கூவுதல், அங்ஙனம் கூவினால் அம்மரம் மலரும் என்றும் வளைந்து கொடுக்கும் என்றும் கொண்ட எண்ணத்தாலாம்.  குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து (300) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறிஞ்சியினது பெயரையுடைய புணர்ச்சியாகிய உரிப்பொருள் அமைந்த பக்க மலைகளாற் சூழப்பட்ட.  ‘புலி புலி’ என்று ஓசை எழுப்புதல்:  அகநானூறு 48 – ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி புலி புலி என்னும் பூசல் தோன்ற, அகநானூறு 52 – வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள் இன்னா இசைய பூசல் பயிற்றலின், மதுரைக்காஞ்சி 396-397 – கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர் நறும் பூக் கொய்யும் பூசல், மலைபடுகடாம் 305-306 தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப் பூசல்.  குரூஉ (292) – குருவும் கெழுவும் நிறனாகும்மே (தொல்காப்பியம், உரியியல் 5).

சொற்பொருள்:  நறுங்காழ் கொன்று – நறுமண அகில் மரங்களையும் சந்தன மரங்களையும் வெட்டி, கோட்டின் வித்திய குறுங்கதிர்த் தோரை – மேட்டு நிலத்தில் விதைத்த குறிய கதிர்களையுடைய தோரை நெல் (தோரை – மூங்கில் நெல், மூங்கில் விதை), நெடுங்கால் ஐயவி – நெடிய தண்டினையுடைய வெண்கடுகு, ஐவன வெண்ணெலொடு – ஐவனம் என்ற வெள்ளை நெல்லுடன் (ஐவனம் – மலை அரிசி), அரில் கொள்பு நீடி – பிணங்கி வளர்ந்து, இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும் – இஞ்சி மஞ்சள் பசுமையான மிளகுக் கொடியும் பிறவும், பல்வேறு தாரமொடு கல் அகத்து ஈண்டி – பல்வேறு பொருட்கள் கல் தரையில் குவிக்கப்பட்டு, தினை விளை சாரற் கிளிகடி பூசல் – தினை விளையும் மலைப்பக்கத்தில் கிளியை விரட்டும் ஆரவாரம், மணிப்பூ அவரைக் குரூஉத் தளிர் மேயும் ஆமா – மணிபோலும் மலர்களையுடைய அவரையின் நிறமுடைய தளிர்களை மேயும் ஆமா (ஆமா – காட்டுப் பசு, குரூஉ – அளபெடை), கடியும் கானவர் பூசல் – விரட்டும் கானவரின் ஓசை, சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின் வீழ்முகக் கேழல் அட்ட பூசல் – மலைக்குறவன் தோண்டிய மூடின வாயையுடைய பொய்க்குழியில் விழுந்த நிலைமையையுடைய ஆண் பன்றியைக் கொல்லும் ஓசை, கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர் நறும் பூக் கொய்யும் பூசல் – கரிய அடிப்பகுதியையுடைய வேங்கை மரத்தின் பெரிய கிளைகளில் உள்ள நறுமண மலர்களைப் பறிக்கும் பெண்களின் ‘புலி புலி’ என்ற ஆரவாரமும், இருங்கேழ் ஏறு அடு வயப்புலிப் பூசலொடு அனைத்தும் – கரிய நிறத்தையுடைய பன்றியைக் கொல்லும் வலிமையுடைய புலியின் ஆரவாரத்துடன் கூடிய எல்லா ஓசையும், இலங்கு வெள் அருவியொடு சிலம்பு அகத்து இரட்ட – ஒளியுடைய வெள்ளை அருவியின் ஒலியுடன் மலையில் எதிரொலி கேட்க, கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து – கரிய தண்டினையுடைய குறிஞ்சியின் பெயரையுடைய புணர்ச்சியாகிய உரிப்பொருள் அமைந்த பக்க மலைகளால் சூழப்பட்ட (வெற்பு – மலை), அருங்கடி மாமலை தழீஇ ஒரு சார் – பெறுவதற்கு அரிய சிறப்பையுடைய மலை தழுவப்பட்ட ஒரு பக்கம் (தழீஇ – அளபெடை)

பாலை நில இயல்பு

இருவெதிர்ப் பைந்தூறு கூர்எரி நைப்ப,
நிழத்த யானை மேய்புலம் படர,
கலித்த இயவர் இயம் தொட்டன்ன,
கண்விடு உடையூஉத் தட்டை கவின் அழிந்து,   305

அருவி ஆன்ற அணி இல் மாமலை
வை கண்டன்ன புல் முளி அம் காட்டுக்
கமம் சூழ் கோடை விடரகம் முகந்து,
கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மை
இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி   310

உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர்,
சிலையுடைக் கையர் கவலை காப்ப
நிழல் உரு இழந்த வேனில் குன்றத்து
பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒரு சார்;  (302 – 314)

பொருளுரை:   பெரிய மூங்கிலின் அடியில் உள்ள பசுமையான புதரில் தோன்றிய மிகுந்த நெருப்புச் சுட்டு அழித்ததால், தளர்ந்த யானைகள் தங்களுக்கு மேய்ச்சல் கிடைக்கும் இடங்களுக்குச் செல்ல, மகிழ்ச்சியுடைய இசைக்கருவியாளர்கள் தங்கள் இசைக் கருவிகளை ஒலித்தாற்போல், மூங்கிலின் கணுக்கள் திறக்கப்பட்டு உடைவதால் தட்டையின் அழகு அழிந்து, அருவிகள் இல்லாது ஆகிய அழகில்லாத பெரிய மலையில், வைக்கோலைக் கண்டாற்போல் ஊகம்புல் உலர்ந்த காட்டில், நிறைவுடைய சூறாவளிக் காற்றை மலை இடுக்குகள் கொள்வதால் கடல் போல் ஒலிக்கும் ஆரவாரம் உடைய, இலையால் வேய்ந்த குடிசையில் இருக்கும் மான் தோல் படுக்கையினையும் தழையினால் கட்டின கண்ணியினையும் கடிய சொல்லையுமுடைய இளைஞர்கள் வில்லினைத் தங்கள் கைகளில் உடையவர்களாய் ஆறலைகள்வர் வராது பாதுகாக்க, நிழல் தன் உருவத்தை இழந்த வேனில் காலத்தின் மலையில், பாலைத் திணையின் ‘பிரிவு’ என்னும் உரிப்பொருள் அமைந்த ஒரு பக்கம்.

குறிப்பு:  பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒரு சார் (314) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிரிவாகிய உரிப்பொருள் அமைந்த அருநிலம் சேரப்பட்டு ஒரு பக்கம்.  சும்மை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 51).  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம், உரியியல் 57).  உறு -உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3). கூர் – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

சொற்பொருள்:   இரு வெதிர்ப் பைந்தூறு கூர் எரி நைப்ப – பெரிய மூங்கிலின் அடியில் உள்ள பசுமையான புதரில் தோன்றிய மிகுந்த நெருப்புச் சுட்டு அழித்ததால், நிழத்த யானை மேய்புலம் படர – தளர்ந்த யானைகள் மேயும் இடங்களுக்குச் செல்ல, கலித்த இயவர் இயம் தொட்டன்ன – மகிழ்ச்சியுடைய இசைக்கருவியாளர்கள் தங்கள் இசைக் கருவிகளை ஒலித்தாற்போல், கண்விடு உடையூஉத் தட்டை கவின் அழிந்து – மூங்கிலின் கணுக்கள் திறக்கப்பட்டு உடைவதால் தட்டையின் அழகு அழிந்து (உடையூஉ- அளபெடை), அருவி ஆன்ற அணி இல் மாமலை – அருவிகள் இல்லாது ஆகிய (ஆன்ற – இல்லாது ஆகிய) அழகில்லாத பெரிய மலையில், வை கண்டன்ன புல் முளி அம் காட்டு – வைக்கோலைக் கண்டாற்போல் ஊகம்புல் உலர்ந்த காட்டில், கமம் சூழ் கோடை விடரகம் முகந்து கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மை – நிறைவுடைய சூறாவளிக் காற்றை மலை இடுக்குகள் கொள்வதால் கடல் போல் ஒலிக்கும் ஆரவாரம் (உறு – மிக்க, கடலின் – ஐந்தாம் வேற்றுமை உருபு, இன் ஒப்புப்பொருளில் வந்தது), இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர் – இலையால் வேய்ந்த குடிசையில் இருக்கும் மான் தோல் படுக்கையினையும் தழையினால் கட்டின கண்ணியினையும் கடிய சொல்லையுமுடைய இளைஞர்கள்,  சிலையுடைக் கையர் கவலை காப்ப  – வில்லினைத் தங்கள் கைகளில் உடையவர்களாய் ஆறலைகள்வர் வராது பாதுகாக்க, நிழல் உரு இழந்த வேனில்  குன்றத்து – நிழல் தன் உருவத்தை இழந்த வேனில் காலத்தின் மலையில், பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒரு சார் – பாலைத் திணையின் பிரிவு என்னும் உரிப்பொருள் அமைந்த ஒரு பக்கம்

நெய்தல் நில இயல்பு

முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம்   315
அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை
பரதர் தந்த பல்வேறு கூலம்,
இருங்கழிச் செறுவின் தீம்புளி வெள் உப்புப்
பரந்து ஓங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழு மீன் குறைஇய துடிக்கண் துணியல்   320
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்து உடன்கொணர்ந்த புரவியொடு அனைத்தும்,
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப
நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஆங்கு,   325
ஐம்பால் திணையும் கவினி அமைவர   (315 – 326)

பொருளுரை:  முழங்கும் கடல் தந்த ஒளியினையுடைய முத்துக்களும், அரத்தால் சங்கினைப் பிளந்து வெட்டி இடம் செம்மையாக உள்ள ஒளியினையுடைய வளையல்களும், வணிகர்கள் கொண்டு வந்த பல்வேறு உணவுப் பொருட்களும், பெரிய உப்பங்கழியின் பாத்தியில் விற்கும் இனிய புளியுடன் உப்பும், மணற்குன்று பரந்து உயரும் இடத்தில், வலிய கைகளையுடைய மீனவர்கள் கொழுத்த மீனை அறுத்த துடி முரசின் கண் போன்ற உலர்ந்த துண்டுகளும், சிறந்த மரக்கலங்களும் அவற்றைக் கடலில் இயக்குபவர்களும், அகன்ற இடத்தையுடைய நாடுகளில் இருந்து வந்து இங்கிருந்து நல்ல அணிகலன்கள் கொண்டு போகும் பொருட்டு, பலரும் கூடித் தம்முடன் கொண்டுவந்த குதிரைகளுடன், அனைத்தும் நாள்தோறும் முறை முறையாகச் சிறப்ப, இரங்கல் என்ற உரிப்பொருள் கொண்ட நெய்தல் நிலத்தில் வளம் பல நெருங்கி இருக்க, அங்கு இவ்வாறு ஐந்து நிலங்களும் அழகுபெற்றுத் தோன்ற.

குறிப்பு:   துணியல் (320) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உருண்ட உணங்கல் துண்டுகள்.  நெய்தல் சான்ற வளம் (325) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரங்கல் ஆகிய உரிப்பொருள் அமைந்த இன்னோரன்ன வளம் பலவும்.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  சங்கை வெட்டி இயற்றிய வளையல் – அகநானூறு 24 – வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த வளை, நற்றிணை 77 – வல்லோன் வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை, ஐங்குறுநூறு 194-கடல் கோடு அறுத்த அரம் போழ் அவ்வளை, மதுரைக்காஞ்சி – அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை.

சொற்பொருள்:  முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம் – முழங்கும் கடல் தந்த ஒளியினையுடைய முத்துக்களும், அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை – அரத்தால் சங்கினைப் பிளந்து வெட்டி இடம் செம்மையாக உள்ள ஒளியினையுடைய வளையல்களும், பரதர் தந்த பல்வேறு கூலம் – வணிகர்கள் கொண்டு வந்த பல்வேறு உணவுப் பொருட்களும், இருங்கழிச் செறுவின் தீம்புளி வெள் உப்பு  – பெரிய/கரிய உப்பங்கழியின் பாத்தியில் விற்கும் இனிய புளியுடன் உப்பும், பரந்து ஓங்கு வரைப்பின் – மணற்குன்று பரந்து உயரும் இடத்தில், வன்கைத் திமிலர் கொழு மீன் குறைஇய துடிக்கண் துணியல் – வலிய கைகளையுடைய மீனவர்கள் கொழுத்த மீனை அறுத்த துடி முரசின் கண் போன்ற உலர்ந்த துண்டுகளும் (திமில் – தோணி, குறைஇய – அளபெடை), விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர் நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார் புணர்ந்து  உடன்கொணர்ந்த புரவியொடு – சிறந்த மரக்கலங்களும் அவற்றைக் கடலில் இயக்குபவர்களும் அகன்ற இடத்தையுடைய நாடுகளில் இருந்து வந்து இங்கிருந்து நல்ல அணிகலன்கள் கொண்டுபோகும் பொருட்டு, பலரும் கூடித் தம்முடன் கொண்டுவந்த குதிரைகளுடன் (தேஎத்து – அளபெடை, உய்ம்மார் – மார் ஈற்று வினையெச்சம்), அனைத்தும் – அனைத்தும், வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப – நாள்தோறும் முறை முறையாக சிறப்ப, நெய்தல் சான்ற வளம் பல பயின்று – இரங்கல் என்ற உரிப்பொருள் கொண்ட நெய்தல் நிலத்தில் வளம் பல நெருங்கி இருக்க, ஆங்கு ஐம்பால் திணையும் கவினி அமைவர – அங்கு இவ்வாறு ஐந்து நிலங்களும் அழகுபெற்றுத் தோன்ற

மதுரை மாநகரின் அமைப்பும் காட்சிகளும்

முழவு இமிழும் அகல் ஆங்கண்,
விழவு நின்ற வியல் மறுகின்
துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி,
இன் கலியாணர் குழூஉப்பல பயின்று ஆங்கு   330
பாடல் சான்ற நல்நாட்டு நடுவண்; (327 – 331)

பொருளுரை:  முழவு முழங்கும் அகன்ற அவ்விடத்தில், விழாக்கள் நிலைபெற்ற அகன்ற தெருவில், துணங்கைக் கூத்தினையும் அழகிய குரவைக் கூத்தினையும் உடைய மணம் கமழ்கின்ற பரத்தையரின் தெருக்களையும், இனிய செருக்கினைக் கொண்ட வளமை உடைய பல்வேறு குடிகளையும் கொண்ட அவ்விடத்தில், புலவர் பாடலில் சிறப்புடைய நல்ல நாட்டின் நடுவில்,

குறிப்பு:  மணம் கமழ் சேரி (329) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மணம் கமழ் சேரி என்றது பரத்தையர் சேரியினை.  பரத்தையர் எப்பொழுதும் தம்மை மலர் முதலிய மணப் பொருள்களால் ஒப்பனை செய்து கோடலின் ஆண்டு இடையறாது மணங்கமழும் என்க.  தழூஉ:  அகநானூறு 176 – விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து,  கலித்தொகை 103 – மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத் தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ, கலித்தொகை 104 – எழில் நல்லாரும் மைந்தரும், மல்லல் ஊர் ஆங்கண் அயர்வர் தழூஉ, கலித்தொகை 106 – அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர் இன்புற்று அயர்வர் தழூஉ, பதிற்றுப்பத்து 52 – முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை ஆக,  மதுரைக்காஞ்சி 159-160 – இலங்கு வளை மட மங்கையர் துணங்கை அம் சீர்த் தழூஉ மறப்ப, மதுரைக்காஞ்சி 329 – துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி.  நச்சினார்க்கினியரும் (கலித்தொகை) சோமசுந்தரனாரும் (மதுரைக்காஞ்சி) குரவைக் கூத்து எனக் கொள்கின்றனர்.  அருள் அம்பலவாணரும் (பதிற்றுப்பத்து), ஒளவை துரைசாமியும் (பதிற்றுப்பத்து), வேங்கடசாமி நாட்டாரும் (அகநானூறு), சோமசுந்தரனாரும் (அகநானூறு) தழுவி ஆடுவதாக் கொள்கின்றனர்.  மதுரைக்காஞ்சி 615-616 – தழூஉப் பிணையூஉ மன்றுதொறும் நின்ற குரவை.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  முழவு இமிழும் அகல் ஆங்கண் – முழவு முழங்கும் அகன்ற அவ்விடத்தில், விழவு நின்ற வியல் மறுகின் – விழாக்கள் நிலைபெற்ற அகன்ற தெருவில், துணங்கை அம் தழூஉவின் – துணங்கைக் கூத்தினையும் அழகிய குரவைக் கூத்தினையும் உடைய (தழூஉ – அளபெடை), மணம் கமழ் சேரி – மணம் நாறுகின்ற பரத்தையரின் தெருக்களையும், இன் கலி யாணர் குழூஉப்பல பயின்று – இனிய செருக்கினை உடைய வளமை (யாணர் – புதிய வருவாய்) உடைய பல்வேறு குடிகளையும் உடைய (குழூஉப்பல – கூட்டங்கூட்டமாக உள்ள பல்வேறு குடிகள், குழூஉ  – அளபெடை), ஆங்கு பாடல் சான்ற நல்நாட்டு நடுவண் – புலவர் பாடலில் சிறப்புடைய நல்ல நாட்டின் நடுவில்,

பெரும் பாணர் வாழும் இருக்கை

கலை தாய உயர் சிமையத்து
மயில் அகவும் மலி பொங்கர்,
மந்தி ஆட மா விசும்பு உகந்து
முழங்கு கால் பொருத மரம் பயில் காவின்   335

இயங்கு புனல் கொழித்த வெண்தலைக் குவவு மணல்,
கான் பொழில் தழீஇய அடைகரை தோறும்,
தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய்
கோதையின் ஒழுகும் விரிநீர் நல்வரல்
அவிர் அறல் வையைத் துறை துறை தோறும்,   340
பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி
அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும், (332 – 342)

பொருளுரை:  கலை (ஆண் குரங்குகள்) தாவும் உயர்ந்த மலை உச்சியில் மயில்கள் ஆரவாரிக்கும் மிகுந்த மரக்கிளைகளில் மந்தி (பெண் குரங்குகள்) விளையாட, பெரிய வானில் உயர்ந்து முழங்குகின்ற காற்று மோதுகின்ற மரங்கள் நெருங்கின சோலைகளில், இயங்குகின்ற ஆறு ஒதுக்கிய வெள்ளை மேற்பகுதியையுடைய குவிந்த மணல் உடைய, காட்டுச் சோலைகள் சூழ்ந்த நீரடைந்த கரைகள் தோறும், தாதுக்கள் சூழ்ந்த கோங்க மரத்தின் மலர்களும் ஏனைய மலர்களும் பரவிய, மாலைகள் போல் ஒழுகும் பெருகிய நீர் நன்றாக வருதல் உடைய விளங்குகின்ற மணலையுடைய வைகையின் துறைகளில் எல்லாம், பல வேறுபட்டுள்ள பூங்கொத்துக்களையுடைய தோட்டங்களால் சூழப்பட்ட, நெடுங்காலம் அங்கு வாழும் பெரும்பாணர் குடியிருப்பினையும்,

குறிப்பு:  அழுந்துபட்டிருந்த (342) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வாழ்ந்த.  கான் – மணம், அகநானூறு 391 – தலை வேய் கான் மலர் தேம் பாய் முல்லையொடு, பதிற்றுப்பத்து 30-23 – கான்மிகு குளவிய, திருமுருகாற்றுப்படை 198 – விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கான், மதுரைக்காஞ்சி 337 – கான் பொழில் தழீஇய அடைகரை தோறும்.

சொற்பொருள்:  கலை தாய உயர் சிமையத்து மயில் அகவும் மலி பொங்கர் – ஆண் குரங்குகள் தாவும் உயர்ந்த மலை உச்சியில் மயில்கள் ஆரவாரிக்கும் மிகுந்த மரக்கிளைகளில் (பொங்கர் – சோலை, மரக்கிளை), மந்தி ஆட – பெண் குரங்குகள் விளையாட, மா விசும்பு உகந்து முழங்கு கால் பொருத மரம் பயில் காவின் – பெரிய வானில் உயர்ந்து முழங்குகின்ற காற்று மோதுகின்ற மரங்கள் நெருங்கின சோலைகளில், இயங்கு புனல் கொழித்த வெண்தலைக் குவவு மணல் – இயங்குகின்ற ஆறு ஒதுக்கிய வெள்ளை மேற்பகுதியையுடைய குவிந்த மணல், கான் பொழில் தழீஇய அடைகரை தோறும் – காட்டு சோலைகள் சூழ்ந்த நீரடைந்த (மணல் அடைந்த) கரைகள் தோறும் (தழீஇய – அளபெடை), தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய் – தாதுக்கள் சூழ்ந்த கோங்க மரத்தின் மலர்களும் ஏனைய மலர்களும் பரவிய (தாஅய் – அளபெடை), கோதையின் ஒழுகும் விரிநீர் நல்வரல் – மாலைகள் போல் ஒழுகும் பெருகிய நீர் நன்றாக வருதல் (கோதையின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), அவிர் அறல் வையைத் துறை துறை தோறும் – விளங்குகின்ற மணலையுடைய வைகையின் துறைகளில் எல்லாம் (அவிர் அறல் – விளங்கும் கருமணல்), பல்வேறு பூத்திரள் தண்டலை – பல வேறுபட்டுள்ள பூங்கொத்துக்களையுடைய தோட்டங்கள், சுற்றி – சூழப்பட்டு, அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும் –  நெடுங்காலம் அங்கு வாழும் பெரும்பாணர் குடியிருப்பினையும்

அகழியும் மதிலும் பெற்று, மாடங்கள் ஓங்கி நிற்றல்

நிலனும் வளனும் கண்டு அமைகல்லா
விளங்கு பெருந்திருவின் மான விறல் வேள்
அழும்பில் அன்ன நாடு இழந்தனரும்,   345
கொழும்பல் பதிய குடி இழந்தனரும்,
தொன்று கறுத்து உறையும் துப்புத் தர வந்த
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
இன்இசை முரசம் இடைப் புலத்து ஒழிய
பன்மாறு ஓட்டிப் பெயர் புறம்பெற்று,   350

மண் உற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின்
விண் உற ஓங்கிய பல் படைப் புரிசை,
தொல் வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை,
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு,   355

வையை அன்ன வழக்குடை வாயில்
வகை பெற எழுந்து வானம் மூழ்கி,
சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல்
யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்,  (343 – 359)

பொருளுரை:  நிலத்தையும் வளமையையும் கண்ட காட்சி முடிவு இல்லாது விளங்கும் பெரும் செல்வத்தை உடைய, மான விறல் வேள் என்ற மன்னனின் அழும்பில் என்னும் ஊரை ஒத்த நாடுகளை இழந்தவர்களும், செல்வமுடைய பல ஊர்களில் உள்ள குடிகளை இழந்தவர்களும், பண்டைய சினம் கொண்டு தங்கள் வலிமையுடன் வந்த தலைமை உடைய யானைகளை உடைய பகைவரைக் கொல்லும் போரினைப் புரியும் வேந்தர்களை, இனிய ஓசையுடைய அவர்களின் முரசுகள் போர்க்களத்தில் கிடக்கும்படி, அவர்கள் உள்ளத்தில் இருந்த மாறுபாட்டை அகற்றி, அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யும்படி மண்ணுள்ள அளவும் ஆழ்ந்த நீலமணி போன்ற நீரையுடைய கிடங்கினையும், வான் அளவு உயர்ந்த, பல போர்க்கருவிகளை உடைய மதிலினையும், பழைய வலிமை நிலைபெற்ற கடவுளை உடைய உயர்ந்த நிலையினையும், நெய்யை ஊற்றி விட்டதால் கருகின திண்மையான பொருந்திய கதவினையும், முகில் உலவும் மலைபோன்ற உயர்ந்த மாடங்களுடன், வையை ஆறுபோல் மக்கள் வழங்கும் வாயிலினையும், கூறுபாடாகிய பெயர்களைப் பெறும்படி உயர்ந்த வானத்திற்குச் சென்று, தென்றல் காற்று ஒலிக்கும் பல சன்னல்களையுடைய நல்ல இல்லங்களையும், ஆறு கிடந்தாற்போல் உலா அகன்ற தெருக்களில், 

குறிப்பு:  நற்றிணை 200 – யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்.  தொல் வலி நிலைஇய (353) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தொல் வலி நிலைஇய என்ற தொடரை அணங்கிற்கேற்றி வலிமிக்க மறத்தெய்வமாகிய கொற்றவையின் உருச் செதுக்கப்பட்ட நெடுநிலை எனினுமாம்.  அக் கொற்றவைப் படிமத்திற்கு நெய்யணிதலானும் விளக்கிடுதலானும் நெய் ஒழுகிக் கரிந்த கதவு என்க.  திண் போர்க் கதவின் (354) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – திண்ணிதாக வாய் பொருத்தப்பட்ட கதவு.  பல் படைப் புரிசை (352) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பல கற்படைகளையுடைய மதில், மதில் பற்பல படைகளால் உயர்த்தப்படுதலின் பல்படை என்றார், பல் படைப் புரிசை – புறநானூறு 244 – ஒளவை துரைசாமி உரை – பல படையாகச் செய்யப்பட்ட மதில் (படை – அடுக்கு).  வானம் மூழ்கி (357) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வானம் மூழ்கி என்றது மிக உயர்ந்து என்றவாறு, நச்சினார்க்கினியர் உரை – தேவருலகிலே சென்று.  மான விறல் வேள் (மதுரைக்காஞ்சி 344) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மான விறல் வேள் என்ற குறுநில மன்னன், மான விறல் வேள் (மலைபடுகடாம் 164) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மானத்தையும் வெற்றியையும் உடைய நன்னன்.

சொற்பொருள்:  நிலனும் வளனும் கண்டு – நிலத்தையும் வளமையையும் கண்டு (நிலன் – நிலம் என்பதன் போலி, வளன் – வளம் என்பதன் போலி), அமைகல்லா விளங்கு பெருந்திருவின் – முடிவு இல்லாத விளங்கும் பெரும் செல்வத்தை உடைய, மான விறல் வேள் அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் – மான விறல் வேள் என்ற மன்னனின் அழும்பில் என்னும் ஊரை ஒத்த நாடுகளை இழந்தவர்களும், கொழும்பல் பதிய குடி இழந்தனரும் – செல்வமுடைய பல ஊர்களில் உள்ள குடிகளை இழந்தவர்களும், தொன்று கறுத்து உறையும் துப்புத் தர வந்த – பண்டைய சினம் கொண்டு தங்கள் வலிமையுடன் வந்த, அண்ணல் யானை அடுபோர் வேந்தர் – தலைமை உடைய யானைகளை உடைய பகைவரைக் கொல்லும் போரினைப் புரியும் வேந்தர்களை, இன்இசை முரசம் இடைப்புலத்து ஒழிய – இனிய ஓசையுடைய முரசுகள் போர்க்களத்தில் கிடக்கும்படி, பன்மாறு ஓட்டி – அவர்கள் உள்ளத்தில் இருந்த மாறுபாட்டை அகற்றி, பெயர்புறம் பெற்று – அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்து, மண் உற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின் – மண்ணுள்ள அளவும் ஆழ்ந்த நீலமணி போன்ற நீரையுடைய கிடங்கினையும், விண் உற ஓங்கிய – வான் அளவு உயர்ந்த, பல் படைப் புரிசை – பல போர்க்கருவிகளை உடைய மதிலினையும், பல அடுக்களையுடைய மதிலினையும், தொல் வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை – பழைய வலிமை நிலைபெற்ற கடவுளை உடைய உயர்ந்த நிலையினையும் (நிலைஇய – அளபெடை), நெய்படக் கரிந்த திண் போர்க் கதவின் – நெய்யை ஊற்றி விட்டதால் கருகின திண்மையான பொருந்திய கதவினையும், மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு – முகில் உலவும் மலைபோன்ற உயர்ந்த மாடங்களுடன் (மலையின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது), வையை அன்ன வழக்குடை வாயில் – வையை ஆறுபோல் மக்கள் வழங்கும் வாயில், வகை பெற எழுந்து வானம் மூழ்கி – கூறுபாடாகிய பெயர்களைப் பெறும்படி உயர்ந்த வானத்திற்குச் சென்று, சில் காற்று இசைக்கும் பல் புழை – தென்றல் காற்று ஒலிக்கும் பல சாளரங்களையுடைய (சில் காற்று – தென்றல் காற்று, சாளரங்களையுடைய  – சன்னல்களையுடைய), நல் இல் – நல்ல இல்லங்களையும், யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில் – ஆறு கிடந்தாற்போல் உலா அகன்ற தெருக்களில்

ஒலியும் கொடியும்

பல்வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப,   360

மா கால் எடுத்த முந்நீர் போல,
முழங்கு இசை நன்பணை அறைவனர் நுவல,
கயம் குடைந்தன்ன இயம் தொட்டு இமிழ் இசை
மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை;
ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமத்து,   365

சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல்கொடி
வேறு பல் பெயர ஆர் எயில் கொளக் கொள,
நாள் தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி
நீர் ஒலித்தன்ன நிலவு வேல் தானையொடு,
புலவுப்படக் கொன்று மிடை தோல் ஓட்டி   370

புகழ் செய்து எடுத்த விறல் சால் நன்கொடி
கள்ளின் களி நவில் கொடியொடு நன்பல
பல்வேறு குழூஉக் கொடி பதாகை நிலைஇ
பெருவரை மருங்கின் அருவியின் நுடங்கப்  (360 – 374)

பொருளுரை:  பல்வேறு மக்கள் கூட்டங்களின் ஒலிகள் மிகுந்து முழங்க, பெரிய காற்று எழுப்பிய கடல் போல முழங்கும் ஓசையையுடைய நல்ல பணை முரசினை அறைபவர்கள் அறைந்து மக்களுக்கு அறிவிக்க, குளத்தைக் கையால் குடைந்து விளையாடும் தன்மையுடைய இசைக்கருவிகளை இயக்குவதால் எழும் ஆரவாரத்தையுடைய ஓசையும் உடைய, ஓவியத்தைக் கண்டாற்போன்ற காட்சியினை உடைய இரண்டு பெரிய கடைவீதியிடத்து, விழா நிகழ்த்திக் கட்டிய அழகிய பல கொடிகளும், வேறு பல பெயர்களையுடைய அழித்தற்கரிய அரண்களைக் கைக்கொள்ள அவ்வெற்றியைக் குறித்து நாள்தோறும் உயர்த்திய நன்மையுடைய வெற்றிக் கொடிகளும், கடல் ஒலித்தாற் போல் இருக்கும் நிலைபெறுதல் உடைய வேற்படையுடன் சென்று, புலவு நாற்றம் உண்டாகக் கொன்று. அணியாக உள்ள யானைகளைக் கொன்று, புகழை உண்டாக்கி உயர்த்திய வெற்றிக் கொடியையும், கள்ளின் களிப்பு மிகுதியைச் சாற்றும் கொடிகளும், நல்ல பலவாக வேறுபட்ட பல கொடிகளுடன் பெருங்கொடிகள் நிலைபெற்று பெரிய மலையிலிருந்து அருவி அசைவதுபோல் அசைய. 

குறிப்பு:  கயம் குடைந்தன்ன இயம் தொட்டு இமிழ் இசை (363) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குளத்தின்கண் நீரைக் கையாற் குடையின் துடும் துடும் என ஒலிக்கும், அங்ஙனம் ஒலிக்கும் இயம் என்க.  மிடை தோல் (370) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அணிவகுக்கப்பட்ட யானை.  வேறு பல் பெயர ஆர் எயில் கொளக் கொள (உழிஞைத் திணை) – முழுமுதல் அரணம் முற்றலுங் கோடலும் அனை நெறி மரபிற்றாகுமென்ப (தொல்காப்பியம், புறத்திணையியல் 10).  சும்மை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 51).  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடைமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

சொற்பொருள்:  பல்வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப – பல்வேறு மக்கள் கூட்டங்களின் ஒலிகள் மிகுந்து முழங்க (குழாஅத்து – அத்து சாரியை), மா கால் எடுத்த முந்நீர் போல முழங்கு இசை நன்பணை அறைவனர் நுவல – பெரிய காற்று எழுப்பிய கடல் போல முழங்கும் ஓசையையுடைய நல்ல பணை முரசினை அறைபவர்கள் அறைந்து மக்களுக்கு அறிவிக்க, கயம் குடைந்தன்ன இயம் தொட்டு இமிழ் இசை மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை – குளத்தைக் கையால் குடைந்து விளையாடும் தன்மையுடைய இசைக்கருவிகளை இயக்குவதால் எழும் ஆரவாரத்தையுடைய ஓசை, ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமத்து – ஓவியத்தைக் கண்டாற்போன்ற காட்சியினை உடைய இரண்டு பெரிய கடைவீதியிடத்து, சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல்கொடி – விழா நிகழ்த்திக் கட்டிய அழகிய பல கொடிகளும், வேறு பல் பெயர ஆர் எயில் கொளக் கொள – வேறு பல பெயர்களையுடைய அழித்தற்கரிய அரண்களைக் கைக்கொள்ள, நாள் தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி  – நாள்தோறும் உயர்த்திய நன்மையுடைய வெற்றிக் கொடிகளும், நீர் ஒலித்தன்ன நிலவு வேல் தானையொடு – கடல் ஒலித்தாற் போல் இருக்கும் நிலைபெறுதல் உடைய (நீர் – கடலுக்கு ஆகுபெயர், அல்லது நிலவின் ஒளியையுடைய) வேற்படையுடன் சென்று, புலவுப்படக் கொன்று – புலவு நாற்றம் உண்டாகும்படிக் கொன்று, மிடை தோல் ஓட்டி – அணியாக உள்ள யானைகளைக் கொன்று, புகழ் செய்து எடுத்த விறல் சால் நன்கொடி – புகழை உண்டாக்கி உயர்த்திய வெற்றிக் கொடியையும், கள்ளின் களி நவில் கொடியொடு – கள்ளின் களிப்பு மிகுதியைச் சாற்றும் கொடிகளும், நன்பல பல்வேறு குழூஉக் கொடி – நல்ல பலவாக வேறுபட்ட பல கொடிகளுடன் (குழூஉ  – அளபெடை), பதாகை நிலைஇ – பெருங்கொடிகள் நிலைபெற்று (நிலைஇ – அளபெடை), பெருவரை மருங்கின் அருவியின் நுடங்க – பெரிய மலையிலிருந்து அருவி அசைவதுபோல் அசைய (அருவியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது)

படைகளின் இயக்கம்

பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின்   375

வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூக்
கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன்
கடுங்காற்று எடுப்ப கல்பொருது உரைஇ,
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல,
இருதலைப் பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து   380

கோலோர்க் கொன்று மேலோர் வீசி
மென்பிணி வன்தொடர் பேணாது காழ் சாய்த்துக்
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும்,
அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து,
ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவாத் திரிதரும்   385

செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன
குரூஉ மயிர்ப் புரவி உராலின் பரி நிமிர்ந்து,
கால் எனக் கடுக்கும் கவின் பெறு தேரும்,
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டிலத்து ஆதி போகிய   390

கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும்,
வேழத்து அன்ன வெருவரு செலவின்
கள் ஆர் களமர் இருஞ்செரு மயக்கமும்,
அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின்,  (375 – 394)

பொருளுரை:  பனை மீன் உலவும் சங்கு மேய்கின்ற கடலில் இறுகும் பிணிப்பையுடைய வலிமையான பாயில் கட்டின கயிற்றை அறுத்து, பாயைக் கிழித்துப் பாய்மரம் அடியில் முறியும்படி மோதி, சினத்துடன் கடுங்காற்று எழுந்ததால், நங்கூரக்கல் இடித்து உலவி, நீண்ட சுழியில் அகப்பட்ட கப்பல் போல, மத யானையின் வரவை உணர்த்த முன்னும் பின்னும் சங்குகள் ஒலிக்க, சினம் மிகுந்து, பரிக்கோலைச் செலுத்துபவரைக் கொன்று பாகரை வீசி விட்டு, மெல்லிய பிணிப்பை உடைய கால் சங்கிலியை காவல் எனக் கருதாது, கட்டின கம்பத்தை முறித்து, கம்பத்தைக் கைவிட்டுச் சுழலும் யானையும், அழகிய கண்ணாகிய கதிரவனையுடைய வானம் மறையும்படி காற்றைப் பிளந்து, ஒளியுடைய கதிர்களையுடைய ஞாயிற்றைத் தாம் சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் பறக்கும், சிவந்த கால்களையுடைய அன்னத்தின் சேவலை ஒத்த, வெள்ளை நிற மயிரையுடைய குதிரைகள் ஓடுதலால் செலவு மிகுந்து, காற்று என விரைந்து ஓடும் தேரும், கையில் மத்திகை உடைய தேரோட்டி பதினெண்வகைத் துறைகளைக் கற்றதால், குளம்பு அழுத்தின வட்டமான இடத்திலும் ஆதி என்னும் ஓட்டத்தில் ஓடிய, ஒழுங்கான பிடரி மயிரையும் இட்ட மயிரையும் உடைய குதிரைகளும், யானை போன்று அச்சத்தை உண்டுபண்ணும், கள்ளைக் குடிக்கும் மறவர்கள் தம்முள் போர் செய்யும் கலக்கமும், தடுத்தற்கரிய மிகவாய் உள்ள படைகளும் வருதலும் போதலும் உடைமையால்.

குறிப்பு:  இதை புடையூ (376) – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாயைப் பீறி (கிழித்து).  புடையூ என்ற சொல்லுக்கு ‘தட்டி’ ‘கொட்டி’ ‘புடைத்து’ என்று நெடுநல்வாடை 8, குறிஞ்சிப்பாட்டு 160, மலைபடுகடாம் 204, பதிற்றுப்பத்து 26, 30 ஆகிய பாடல்களில் உரை ஆசிரியர்கள் (நச்சினார்க்கினியர், பொ. வே. சோமசுந்தரனார், ஒளவை துரைசாமி, அருள் அம்பலவாணர், பழைய உரை ஆசிரியர்) பொருள் கொடுத்துள்ளனர்.   குரூஉ (387) – குருவும் கெழுவும் நிறனாகும்மே (தொல்காப்பியம், உரியியல் 5).  விடுமயிர் (391) – C. ஜெகந்நாதாசார்யர் உரை – இடுமயிர் – இது இட்ட வாசம்.  குதிரையின் கழுத்தின் புறத்திலும் தலையின் சூட்டினிடத்திலும் இடப்படும் கவரி மயிரைக்காட்டும்.  அளவா (385) – அளந்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:  பனை மீன் வழங்கும் வளை மேய் பரப்பின் – பனை மீன் உலவும் சங்கு மேய்கின்ற கடலில் (பரப்பு – கடலுக்கு ஆகுபெயர்), வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ – இறுகும் பிணிப்பையுடைய வலிமையான பாயில் கட்டின கயிற்றை அறுத்து (அரீஇ- அளபெடை), இதை புடையூ கூம்பு முதல் முருங்க எற்றி – பாயைக் கிழித்துப் பாய்மரம் அடியில் முறியும்படி மோதி, காய்ந்து உடன் கடுங்காற்று எடுப்ப – சினத்துடன் கடுங்காற்று எழுந்ததால், கல் பொருது உரைஇ – நங்கூரக்கல் இடித்து உலவி (உரைஇ – அளபெடை), நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல – நீண்ட சுழியில் அகப்பட்ட கப்பல் போல, இருதலைப் பணிலம் ஆர்ப்ப – முன்னும் பின்னும் சங்குகள் ஒலிக்க (மத யானையின் வரவை உணர்த்த), சினம் சிறந்து கோலோர்க் கொன்று மேலோர் வீசி – சினம் மிகுந்து பரிக்கோலைச் செலுத்துபவரைக் கொன்று பாகரை வீசி விட்டு, மென்பிணி வன்தொடர் பேணாது காழ் சாய்த்து – மெல்லிய பிணிப்பை உடைய கால் சங்கிலியை காவல் எனக் கருதாது கட்டின கம்பத்தை முறித்து, கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் – கம்பத்தைக் கைவிட்டுச் சுழலும் யானையும், அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து – அழகிய கண்ணாகிய கதிரவனையுடைய வானம் மறையும்படி காற்றைப் பிளந்து, ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவாத் திரிதரும் – ஒளியுடைய கதிர்களையுடைய ஞாயிற்றைத் தாம் சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் பறக்கும், செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன – சிவந்த கால்களையுடைய அன்னத்தின் சேவலை ஒத்த, குரூஉ மயிர்ப் புரவி உராலின் பரி நிமிர்ந்து – நிறமுடைய மயிரையுடைய குதிரைகள் ஓடுதலால் செலவு மிகுந்து (உராலின் – ஓடுதலால், குரூஉ – அளபெடை), கால் எனக் கடுக்கும் கவின் பெறு தேரும் – காற்று என விரைந்து ஓடும் தேரும், கொண்ட கோலன் – கையில் மத்திகை உடைய தேரோட்டி, கொள்கை நவிற்றலின் – பதினெண்வகைத் துறைகளைக் கற்றதால் (பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஐந்து வகைச் செலவினையும் பதினெண்வகைச் சாரியையும் பயிற்றுதலாலே), அடிபடு மண்டிலத்து – குளம்பு அழுத்தின வட்டமான இடத்திலும், ஆதி போகிய – ஆதி என்னும் ஓட்டத்தில் ஓடிய, கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும் – ஒழுங்கான பிடரி மயிரையும் இட்ட மயிரையும் உடைய குதிரைகளும், வேழத்து அன்ன – யானை போன்று (வேழத்து – வேழம், அத்து சாரியை), வெருவரு செலவின் கள் ஆர் களமர் இருஞ்செரு மயக்கமும் – அச்சம் உண்டுபண்ணும் கள்ளைக் குடிக்கும் மறவர்கள் தம்முள் போர் செய்யும் கலக்கமும், அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின் – தடுத்தற்கரிய மிகவாய் உள்ள படைகளும் வருதலும் போதலும் உடைமையால்

நாளங்காடியில் பூ முதலிய பொருட்களை விற்றல்

தீம் புழல் வல்சிக் கழற் கால் மழவர்   395

பூந்தலை முழவின் நோன்தலை கடுப்பப்

பிடகைப் பெய்த கமழ் நறும் பூவினர்,

பல வகை விரித்த எதிர் பூங்கோதையர்,

பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர்,

தகை செய் தீம் சேற்று இன் நீர்ப் பசுங்காய்   400

நீடுகொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்,

இருதலை வந்த பகை முனை கடுப்ப

இன் உயிர் அஞ்சி இன்னா வெய்து உயிர்த்து,

ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றை

பல் வேறு பண்ணியம் தழீஇத் திரி விலைஞர்   405

மலை புரை மாடத்துக் கொழு நிழல் இருத்தர,  (395 – 406)

பொருளுரை:  இனிய பண்ணியாரங்களாகிய உணவுகளை விற்பவர்களும், வீரக்கழல் அணிந்த கால்களையுடைய மழவர்களின் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட முழவின் வலிய மேற்பகுதியை ஒப்ப உள்ள கூடைகளில் இட்டு வைத்த நறுமணம் கமழும் மலர்களை விற்பவர்களும், பல வகையாக விரித்து வைத்த மாறுபட்ட வகையுடைய பூ மாலைகளை விற்பவர்களும், பலர் ஒன்று சேர்ந்து இடித்த பூந்தாதுகள் போலும் பறக்கும் சுண்ணத்தை உடையவர்களும், உடலுக்கு அழகு செய்யும் இனிய களி கலந்த இனிய நீரையுடைய பசிய பாக்குடன் நீண்ட கொடியில் வளர்ந்த வெற்றிலை உடையவர்களும், சங்கு சுடுதலால் உள்ள சுண்ணாம்பை உடையவர்களும், இருபக்கமும் போர்ப்படைகள் வந்த பகைப் புலத்தை ஒக்க உள்ள சூழ்நிலையில் தங்களின் இனிய உயிருக்கு அஞ்சி ஏங்கி பெருமூச்சு விட்டு, பின் அந்த நாற்படையும் சென்ற பின்னர், பல்வேறு பண்டங்களைத் தம்மிடத்தில் சேர்த்துக் கொண்டு திரிந்து விற்பவர்களும், மலையை ஒத்த மாடங்களின் அடர்ந்த நிழலில் இருக்க,

குறிப்பு:  தீம் புழல் (395) – நச்சினார்க்கினியர் உரை – இனிய பண்ணியாரங்கள், இருப்பைப் பூவுமாம்.  ஐங்குறுநூறு 187 – தொடலைக்கு உற்ற சில பூவினரே.  நெடுநல்வாடை 26 – தெண் நீர் பசுங்காய் சேறு கொள முற்ற.

சொற்பொருள்:  தீம் புழல் வல்சி – இனிய பண்ணியாரங்களாகிய உணவுகள், கழற் கால் மழவர் பூந்தலை முழவின் நோன்தலை கடுப்ப – வீரக்கழல் அணிந்த கால்களையுடைய மழவர்களின் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட முழவின் வலிய மேற்பகுதியை ஒப்ப (கடுப்ப – உவம உருபு), பிடகைப் பெய்த கமழ் நறும் பூவினர் – கூடைகளில் இட்டு வைத்த நறுமணம் கமழும் மலர்களை விற்பவர்கள், பல வகை விரித்த எதிர் பூங்கோதையர் – பல வகையாக விரித்து வைத்த மாறுபட்ட வகையுடைய பூ மாலைகளை விற்பவர்கள், பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர் – பலர் ஒன்று சேர்ந்து இடித்த பூந்தாதுகள் போலும் பறக்கும் சுண்ணத்தை உடையவர்கள், தகை செய் தீம் சேற்று இன்நீர்ப் பசுங்காய் நீடுகொடி இலையினர் – உடலுக்கு அழகு செய்யும் இனிய களி கலந்த இனிய நீரையுடைய பசிய பாக்குடன் நீண்ட கொடியில் வளர்ந்த வெற்றிலை உடையவர்கள், கோடு சுடு நூற்றினர் – சங்கு சுடுதலால் உள்ள சுண்ணாம்பை உடையவர்கள், இருதலை வந்த பகை முனை கடுப்ப இன் உயிர் அஞ்சி இன்னா வெய்து உயிர்த்து ஏங்குவனர் இருந்து – இருபக்கமும் போர்ப்படைகள் வந்த பகைப் புலத்தை ஒக்கத் தங்களின் இனிய உயிருக்கு அஞ்சி ஏங்கி பெருமூச்சு விட்டவர்கள் ஆக இருந்து (கடுப்ப – உவம உருபு), அவை நீங்கிய பின்றை – அந்த நாற்படையும் சென்ற பின்னர், பல் வேறு பண்ணியம் தழீஇத் திரி விலைஞர் – பல்வேறு பண்டங்களைத் தம்மிடத்தில் சேர்த்துக் கொண்டு திரிந்து விற்பவர்கள் (தழீஇ – அளபெடை), மலை புரை மாடத்துக் கொழு நிழல் இருத்தர – மலையை ஒத்த மாடங்களின் அடர்ந்த நிழலில் இருக்க (புரை – உவம உருபு) 

பண்டங்கள் விற்கும் முதுபெண்டிரும் மயில் இயலாரும் மடமொழியோரும்

இருங்கடல் வான்கோடு புரைய, வாருற்றுப்
பெரும் பின்னிட்ட வால் நரைக் கூந்தலர்
நன்னர், நலத்தர், தொல் முதுபெண்டிர்,
செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை   410

செல் சுடர்ப் பசுவெயில் தோன்றியன்ன,
செய்யர், செயிர்த்த நோக்கினர் மடக்கண்
ஐஇய கலுழும் மாமையர் வை எயிற்று
வார்ந்த வாயர் வணங்கு இறைப்பணைத் தோள்
சோர்ந்து உகுவன்ன வயக்குறு வந்திகை   415

தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இளமுலை
மை உக்கன்ன மொய் இருங்கூந்தல்
மயில் இயலோரும், மட மொழியோரும்,
கைஇ மெல்லிதின் ஒதுங்கி கை எறிந்து,
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப   420

புடை அமை பொலிந்த வகை அமை செப்பில்,
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்
கமழ் நறும்பூவொடு மனை மனை மறுக, (407 – 423)

பொருளுரை:  கரிய கடலில் வெள்ளைச் சங்கைப் போல வாரிப் பெரும் பின்னலாக இட்ட வெள்ளை நரையுடைய கூந்தலையுடையவர்களாகிய நல்ல அழகுடைய மிக மூத்த பெண்கள் பொருட்களை விற்கின்றனர்.  சிவந்த நிறமுடைய கிளிச்சிறை என்னும் பொன்னால் செய்த பாவை வீழும் கதிரவனின் கதிர்களாகிய பசிய வெயிலில் தோன்றினாற் போன்று சிவந்த நிறத்தை உடையவர்களாய் இருந்தனர் சிலர். ஆடவரை வருத்தும் பார்வை உடையவர்களாய் இருந்தனர் சிலர். மடப்பத்தையுடைய கண்களுடன் வியப்பினை உடையவராக நோக்குபவர்கள் கலங்குவதற்குக் காரணமான மாமை நிறத்தையுடையவர்களாக இருந்தனர் சிலர். கூரிய நேராக உள்ள பற்களை உடையவர்களாக, வளைந்த சந்தினையும் மூங்கில் போன்ற தோளினையும், நெகிழ்ந்து விழுவது போன்ற ஒளியுடைய கையில் அணியும் வந்திகை என்ற வளையும், தொய்யில் எழுதப்பட்ட சுணங்குடைய இளைய முலைகளை உடையவர்களாக, மை ஒழுகினாற்போன்ற செறிந்த கரிய மயிரினையும் உடைய  மயிலின் தன்மையை உடையவர்களும், மடப்பமான சொற்களை உடையவர்களும், ஒப்பனை செய்து, மென்மையாக நடந்து, கையைத் தட்டி, கல்லாத இளைஞர்களுடன் மகிழ்ச்சியுடன் புணரும்படி, திரண்ட (பருத்த) அழகிய பல கிண்ணங்களில், விரும்பும் வடிவுடைய நுகர்வார் விரும்பும் பொருட்களை, நறுமணம் கமழும் மலர்களுடன் ஏந்தி மனைகள்தோறும் உலவி விற்ப, 

குறிப்பு:  நன்னர் நலத்தர் (409) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நன்றாகிய வனப்பையுடைய பழமை மூத்த பெண்டிர், C. ஜெகந்நாதாசார்யர் – நன்னர் நலத்தர் என்பது மயில் இயலோர்க்கும் மடமொழியோர்க்கும் அடை.  மை உக்கன்ன (417) – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மை ஒழுகினாற்போல.  காமர் (422) – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை,  விருப்பம் மருவிய, C. ஜெகந்நாதாசார்யர் உரை – காமரு – காமர் + மருவு.  காமர் என்பது கடைக்குறைந்து நிற்க, மருவு என்பதன் ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டுமவ்வீறு சந்தியாற் கெட்டது.  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

சொற்பொருள்:  இருங்கடல் வான்கோடு புரைய – கரிய கடலில் வெள்ளைச் சங்கைப் போல (புரை – உவம உருபு), வாருற்றுப் பெரும் பின்னிட்ட வால் நரைக் கூந்தலர் – வாரிப் பெரும் பின்னலிட்ட வெள்ளை நரையுடைய கூந்தலையுடையவர்கள், நன்னர் நலத்தர் தொல் முது பெண்டிர் – நல்ல அழகுடைய மிக மூத்த பெண்டிர் (நன்னர் – நல்ல, தொல், முது – ஒரு பொருட்பன்மொழி), செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை செல் சுடர் பசு வெயில் தோன்றியன்ன – சிவந்த நிறமுடைய கிளிச்சிறை என்னும் பொன்னால் செய்த பாவை வீழும் கதிரவனின் கதிர்களாகிய பசிய வெயிலில் தோன்றினாற்போன்று, செய்யர் – சிவந்த நிறத்தை உடையவர்கள், செயிர்த்த நோக்கினர் – ஆடவரை வருத்தும் பார்வையுடையவர்கள், மடக்கண் ஐஇய கலுழும் மாமையர் – மடப்பத்தையுடைய கண்களுடன் வியப்பினை உடையவராக நோக்குபவர்கள் கலங்குவதற்குக் காரணமான மாமை நிறத்தையுடையவர்களாக (ஐஇய – அளபெடை), வை எயிற்று வார்ந்த வாயர் – கூரிய நேராக உள்ள பற்களையுடையவர்கள், வணங்கு இறைப் பணைத் தோள் – வளைந்த சந்தினையும் மூங்கில் போன்ற தோளினையும், சோர்ந்து உகுவன்ன – நெகிழ்ந்து விழுவது போன்ற, வயக்குறு வந்திகை – ஒளியுடைய கையில் அணியும் வந்திகை என்ற வளையும், தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இளமுலை – தொய்யில் எழுதப்பட்ட சுணங்குடைய இளைய முலையும், மை உக்கன்ன மொய் இருங்கூந்தல் – மை ஒழுகினாற்போன்ற செறிந்த கரிய மயிரினையும் உடைய  (மொய் – செறிவு, நெருக்கம்), மயில் இயலோரும் – மயிலின் தன்மையை உடையவர்களும் , மட மொழியோரும் – மடப்பமான சொற்களை உடையவர்களும், கைஇ – ஒப்பனை செய்து (அளபெடை), மெல்லிதின் ஒதுங்கி – மென்மையாக நடந்து, கை எறிந்து –  கையைத் தட்டி, கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப  – கல்லாத இளைஞர்களுடன் மகிழ்ச்சியுடன் புணரும்படி, புடை அமை பொலிந்த வகை அமை செப்பில் – திரண்ட (பருத்த) அழகிய பல கிண்ணங்களில், காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம் – விரும்பும் வடிவுடைய நுகர்வார் விரும்பும் பொருட்களை, கமழ் நறும்பூவொடு மனை மனை மறுக – நறுமணம் கமழும் மலர்களுடன் ஏந்தி மனைகள்தோறும் உலவி விற்ப (மறுக – உலவ)

ஏழாம் நாளில் தீர்த்த நீரில் ஆடுதல்

மழை கொளக் குறையாது, புனல் புக மிகாது,
கரை பொருது இரங்கும் முந்நீர் போலக்   425

கொளக் கொளக் குறையாது தரத் தர மிகாது,
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே,
மாடம் பிறங்கிய மலி புகழ்க் கூடல்;
நாள் அங்காடி நனந்தலைக் கம்பலை;  (424 – 430)

பொருளுரை:  முகில்கள் முகந்து கொண்டாலும் குறையாது, ஆறுகள் பாய்வதனாலும் கூடாது, கரையை மோதி முழங்கும் கடல் போல், பலரும் வந்து கொள்ளக் கொள்ளக் குறையாமல், பலரும் மேலும் மேலும் தரத் தரக் கூடாமல், தீவினையைக் கழுவுவதற்குக் காரணமான தீர்த்த நீரை உடைய ஏழாவது நாள் அந்தி வேளையில், வெற்றி நெருங்கும் திருவிழா நாளில் நாட்டில் உள்ள மக்கள் ஆரவாரித்தாற்போன்று, மாடங்களால் ஒளிபெற்ற மிகுந்த புகழையுடைய நான்மாடக் கூடலின்கண், நாள் அங்காடியுடைய அகன்ற இடத்தில் தோன்றிய பெரிய ஆரவாரமும்,

குறிப்பு:  கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடைமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.  துவன்று -துவன்று நிறைவு ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 36).

சொற்பொருள்:  மழை கொளக் குறையாது – முகில்கள் முகந்து கொண்டாலும் குறையாது, புனல் புக மிகாது – ஆறுகள் பாய்வதனாலும் கூடாது, கரை பொருது இரங்கும் முந்நீர் போல – கரையை மோதி முழங்கும் கடல் போல், கொளக் கொளக் குறையாது – பலரும் கொள்ளக் கொள்ளக் குறையாமல், தரத் தர மிகாது  – பலரும் மேலும் மேலும் தரத் தரக் கூடாமல், கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி – தீவினையைக் கழுவுவதற்குக் காரணமான தீர்த்த நீரை உடைய ஏழாவது நாள் அந்தி வேளையில், ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே – வெற்றி நெருங்கும் திருவிழா நாளில் நாட்டில் உள்ள மக்கள் ஆரவாரித்தாற்போன்று (ஆடு – வெற்றி, துவன்று – நிறைந்து, நாடு – ஆகுபெயர் நாட்டில் உள்ளோர்க்கு), மாடம் பிறங்கிய மலி புகழ்க் கூடல் – மாடங்களால் ஒளிபெற்ற மிகுந்த புகழையுடைய நான்மாடக் கூடலின்கண், நாள் அங்காடி நனந்தலைக் கம்பலை – நாள் அங்காடியுடைய அகன்ற இடத்தில் தோன்றிய பெரிய ஆரவாரம்

செல்வர்கள் செல்லும் நிலை

வெயிற் கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச்
செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின்,
கண் பொரு புகூஉம் ஒண் பூங்கலிங்கம்
பொன் புனை வாளொடு பொலியக் கட்டித்
திண் தேர்ப் பிரம்பின் புரளும் தானை,   435

கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெருந் தெரியல்,
மணி தொடர்ந்தன்ன ஒண் பூங்கோதை
அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ,
கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇக்   440

காலோர் காப்ப கால் எனக் கழியும்,
வான வண்கை வளங்கெழு செல்வர்
நாள் மகிழ் இருக்கை காண்மார்;    (431 – 443)

பொருளுரை:  வெயிலின் கதிர்கள் மழுங்கிய செலவு மிக்க கதிரவனுடைய வான் சிவந்தாற்போல் சிவந்து, நுண்ணிய வடிவாலே காண்பவர்களின் கண்களை வெறியோட பண்ணி அவற்றைத் தாக்கி வெல்வது போன்ற ஒளியுடைய பூந்தொழிலையுடைய ஆடைகளை, பொன்னால் ஒப்பனை செய்த வாளுடன் பொலிவுடன் கட்டி, திண்மையான தேரினிடத்து உள்ள பிரம்பில் புரளும் முந்தானையினையும், சுற்றிக் கட்டிய வார் தேய்த்த தழும்புடைய கழல் அசையும் திருத்தமான அடியினையும், பிறரின் வலிமையைக் கடந்து புகழ்ச்சியால் திரியும் ஒன்றாகிய பெரிய வேப்ப மாலையினையும், மணிகளைத் தொடுத்தாற்போல் ஒளியுடைய மலர் மாலைகளையும், அழகு விளங்கும் மார்பில் அணிந்திருந்த முத்து மாலையுடன் கலந்து, காற்றின் விரைவையுடைய விரைந்த குதிரைகளைச் செலுத்தி, காலாட்கள் சூழ்ந்து காக்கக், காற்று என்னும்படி விரையும் முகிலைப் போன்று எல்லையில்லாமல் பிறர்க்குக் கொடுக்கும் வளம் பொருந்திய செல்வர்கள், நாட்காலத்தில் மகிழ்ந்திருக்கின்ற இருக்கையில் இருந்து விழாக் காண்பார்களாக!  

குறிப்பு:  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19). கூர் – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

சொற்பொருள்:  வெயிற் கதிர் மழுங்கிய – வெயிலின் கதிர்கள் மழுங்கிய, படர்கூர் ஞாயிற்றுச் செக்கர் அன்ன சிவந்து – விரைந்து செல்லும் கதிரவனுடைய வான் சிவந்தாற்போல் சிவந்து, நுணங்கு உருவின் கண் பொரு புகூஉம் – நுண்ணிய வடிவாலே கண்களை வெறியோட பண்ணி அவற்றைத் தாக்கி வெல்வது போன்ற (புகூஉம் – அளபெடை), ஒண் பூங்கலிங்கம் – ஒளியுடைய பூந்தொழிலையுடைய ஆடைகளை, பொன் புனை வாளொடு பொலியக் கட்டி – பொன்னால் ஒப்பனை செய்த வாளுடன் பொலிவுடன் கட்டி, திண் தேர்ப் பிரம்பின் புரளும் தானை – திண்மையான தேரினிடத்து உள்ள பிரம்பில் புரளும் முந்தானையினையும், கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி – சுற்றிக் கட்டிய வார் தேய்த்த தழும்புடைய கழல் அசையும் திருத்தமான அடியினையும், மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெருந் தெரியல் – பிறரின் வலிமையைக் கடந்து புகழ்ச்சியால் திரியும் ஒன்றாகிய பெரிய வேப்ப மாலையினையும், மணி தொடர்ந்தன்ன ஒண் பூங்கோதை – மணிகளைத் தொடுத்தாற்போல் ஒளியுடைய மலர் மாலைகளையும், அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ – அழகு விளங்கும் மார்பில் அணிந்திருந்த முத்து மாலையுடன் கலந்து  (அளைஇ – அளபெடை), கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ – காற்றின் விரைவையுடைய விரைந்த குதிரைகளைச் செலுத்தி (கடைஇ – அளபெடை), காலோர் காப்பக் கால் எனக் கழியும் – காலாட்கள் சூழ்ந்து காக்கக் காற்று என்னும்படி விரையும், வான வண்கை வளம் கெழு செல்வர் – முகிலைப் போன்று எல்லையில்லாமல் கொடுக்கும் வளம் பொருந்திய செல்வர்கள் (வானம் – ஆகுபெயர் முகிலுக்கு), நாள் மகிழ் இருக்கை காண்மார் – நாட்காலத்தில் மகிழ்ந்திருக்கின்ற இருக்கையில் இருந்து விழாக் காண்பார்களாக (காண்மார் – வினையெச்சம்)

 செல்வ மகளிர்

…………………………….…………………..பூணொடு,
தெள் அரிப் பொற்சிலம்பு ஒலிப்ப, ஒள் அழல்
தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை   445

அணங்கு வீழ்வு அன்ன பூந்தொடி மகளிர்
மணம் கமழ் நாற்றம் தெருவுடன் கமழ,
ஒண் குழை திகழும் ஒளிகெழு திருமுகம்
திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம்
தெண் கடல் திரையின் அசைவளி புடைப்ப,   450
நிரை நிலை மாடத்து அரமியம் தோறும்
மழைமாய் மதியின் தோன்றுபு மறைய, (443 – 452)

பொருளுரை:  வேறு அணிகலன்களுடன் உள்ளிட்ட தெளிவான மணிகளையுடைய பொற்சிலம்பு ஒலிக்க வந்த, ஒளியுடைய நெருப்பில் இட்டுச் செய்த விளங்கிய அழகிய பொன்னால் செய்த விளங்கும் அணிகலன்களையுடைய, வானில் உள்ள மகளிர் கீழே வந்தாற்போன்று உள்ள, பூந்தொழிலையுடைய வளையல்களை அணிந்த மகளிரின் நறுமணப்பொருட்களால் உண்டான நறுமணம் கமழும் நாற்றம் தெருவெங்கும் பரவ, ஒளியுடைய காதணிகள் விளங்கும் ஒளி பொருந்திய அழகினையுடைய பெண்களின் முகங்கள் முகிலில் மறையும் நிலவைப் போல் தோன்றி மறைகின்றன, வரிசையாக உள்ள மாடங்களின் நிலா முற்றங்கள்தோறும், திண்மையான கொடித் தூண்களில் ஏற்றிய அகலத்தினையுடைய பெரிய கொடிகள் காற்றினால் தெளிந்த கடல் அலைகள் போன்று எழுந்து விழும் பொழுதெல்லாம்.  

குறிப்பு:  மாடத்து அரமியம் தோறும் – (451) – ச. வே. சுப்பிரமணியன் உரை – நிலா மாடத்திலிருந்து அப்பெண்டிர் திருவிழாக் காட்சிகளைக் கண்டனர்.

சொற்பொருள்:  பூணொடு தெள் அரிப் பொற்சிலம்பு ஒலிப்ப – வேறு அணிகலன்களுடன் உள்ளிட்ட தெளிவான மணிகளையுடைய பொற்சிலம்பு ஒலிக்க வந்த, ஒள் அழல் விளங்கிய ஆய் பொன் அவிர் இழை – ஒளியுடைய நெருப்பில் இட்டுச் செய்த விளங்கிய அழகிய பொன்னால் செய்த விளங்கும் அணிகலன்களையுடைய, அணங்கு வீழ்வு அன்ன – வானில் உள்ள மகளிர் கீழே வந்தாற்போன்று உள்ள, பூந்தொடி மகளிர் மணம் கமழ் நாற்றம் தெருவுடன் கமழ – பூந்தொழிலையுடைய வளையல்களை அணிந்த மகளிரின் நறுமணம் கமழும் நாற்றம் தெருவெங்கும் பரவ (மணம் – மணமுடைய பொருட்கு ஆகுபெயர்), ஒண் குழை திகழும் திருமுகம் – ஒளியுடைய காதணிகள் விளங்கும் ஒளி பொருந்திய அழகினையுடைய முகங்கள், திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம் தெண் கடல் திரையின் அசை வளி புடைப்ப – திண்மையான கொடித் தூண்களில் ஏற்றிய அகலத்தினையுடைய பெரிய கொடிகள் தெளிந்த கடல் அலைகள் எழுந்து விழும் வீசும் காற்று மோத (விலோதம் – கொடி, திரையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நிரை நிலை மாடத்து அரமியம் தோறும் – வரிசையாக உள்ள மாடங்களின் நிலா முற்றங்கள் தோறும், மழை மாய் மதியின் தோன்றுபு மறைய  – முகிலில் மறையும் நிலவைப் போல் தோன்றி மறைய (மதியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு)

அந்தி விழா

நீரும், நிலனும், தீயும், வளியும்,
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழுவாள் நெடியோன் தலைவன் ஆக,   455

மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர்
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு
மாற்று அரு மரபின் உயர்பலி கொடுமார்
அந்தி விழவில் தூரியம் கறங்க,   460

பொருளுரை:  நீரும் நிலமும் தீயும் காற்றும் வான் வெளியும் ஆகிய ஐந்தினையும் இயற்றிய, மழுவாகிய வாளையுடைய சிவபெருமானை முதல்வனாகக் கொண்ட, மாசு இல்லாது திகழும் உடலையுடையவர்கள், சூழ்ந்த ஒளியினையுடைய வாடாத மலர்களையும் அவியாகிய உணவினையும் (வேள்விப் பொருட்களையும்) இமையாத கண்களையுடைய அச்சம் பொருந்திய முருகன் மாயோன் ஆகிய கடவுள்களுக்கு, விலக்குவதற்கு அரிய முறைகளையுடைய உயர்ந்த பொருட்களைக் கொடுத்தற்கு, அந்தி நேரத்தில் நிகழும் விழாவில் இசைக்கருவிகள் முழங்க,   

குறிப்பு:  இமையா நாட்டத்து (457) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இமையாத கண்.  இமையவர் (பெரும்பாணாற்றுப்படை 429) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இமைத்தல் இல்லாத இமையினையுடைய தேவர்கள்.  புறநானூறு 62 – வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற உணவினோரும் ஆற்ற அரும் பெறல் உலகம். பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேவர்களுக்கு மலர் வாடுதலும் கண் இமைத்தலும் இன்மையானும், அவர்கள் தீயில் இடப்படும் அவியின் மணத்தையே நுகர்ந்து கொள்வர் என்பதானும் வாடா பூவின் இமையா நாட்டத்து நாற்றவுணவிற் பெரியார் என்றார்.  இங்ஙனம் ஆதலை, இத் தொல்காப்பிய நூற்பாவினாலும் உணர்க.  வண்டே இழையே வள்ளி பூவே கண்ணே அலமரல் இமைப்பே அச்சம் என்று அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ நின்றவை களையும் கருவி என்ப (தொல்காப்பியம், களவியல் 4).

சொற்பொருள்:  நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய – நீரும் நிலமும் தீயும் காற்றும் வான்வெளியும் ஆகிய ஐந்தினையும் இயற்றிய (நிலன் – நிலம் என்பதன் போலி, மாக விசும்பு – இருபெயரொட்டு), மழு வாள் நெடியோன் தலைவன் ஆக – மழுவாகிய வாளையுடைய சிவபெருமானை முதல்வனாகக் கொண்ட, மாசு அற விளங்கிய யாக்கையர் – மாசு இல்லாது திகழும் உடலையுடையவர்கள், சூழ் சுடர் வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு – சூழ்ந்த ஒளியினையுடைய வாடாத மலர்களையும் அவியாகிய உணவினையும் (வேள்விப் பொருட்களையும்) இமையாத கண்களையுடைய அச்சம் பொருந்திய முருகன் மாயோன் ஆகிய கடவுள்களுக்கு, மாற்று அரு மரபின் உயர்பலி கொடுமார் – விலக்குவதற்கு அரிய முறைகளையுடைய உயர்ந்த பொருட்களைக் கொடுத்தற்கு (கொடுமார் – வினையெச்சம்), அந்தி விழவில் தூரியம் கறங்க – அந்தி நேரத்தில் நிகழும் விழாவில் இசைக்கருவிகள் முழங்க,

பௌத்தப் பள்ளி

திண்கதிர் மதாணி ஒண் குறுமாக்களை
ஓம்பினர்த் தழீஇ தாம் புணர்ந்து முயங்கித்
தாது அணி தாமரைப் போது பிடித்தாங்குத்
தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்   465

பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்கும் கடவுட் பள்ளியும்,  (461 – 467)

பொருளுரை:  திண்ணிய ஒளியுடைய பெரிய அணிகலன்கள் அணிந்த பொலிவுடைய சிறு பிள்ளைகளைப் பாதுகாத்துத் தங்கள் கைகளால் அணைத்து, அவர்களை மேலும் இறுக்கமாக அணைத்துத் தழுவி, தாது உடைய தாமரை மலர்கள் தாமரை அரும்பைப் பிடித்தாற்போல், அவர்களும் அவர்களுடைய குழந்தைகளும் சேர்ந்து திகழ, விருப்பமுடைய அழகிய பெரிய இளம் பெண்கள், பூசைக்கு வேண்டிய மலர்களை உடையவர்களாக, நறுமணப் புகையை உடையவர்களாக, புகழ்ந்து வாழ்த்த, சிறப்பு அடைந்து அவர்களால் பாதுகாக்கப்படும் பௌத்தப் பள்ளியும்,

குறிப்பு:  தாது அணி தாமரைப் போது பிடித்தாங்கு தாமும் அவரும் (461-462) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாது சேர்ந்த தாமரைப் பூ தாமரை முகிழைப் பிடித்தாற்போன்று அம்மக்கள் கையினைத் தம் கையால் பற்றி.  கடவுட் பள்ளி (467) – நச்சினார்க்கினியர் உரை – பௌத்தப் பள்ளி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – புத்தரை வழிபடும் இடத்தைப் பள்ளி என்றல் மரபு.  பேரிளம் பெண்டிர் – பெண்ணின் ஒரு பருவம் குறித்தது.   பழிச்சும் – பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள (தொல்காப்பியம், உரியியல் 86).

சொற்பொருள்:  திண் கதிர் மதாணி – திண்ணிய ஒளியுடைய பெரிய அணிகலன்கள் (மதாணி – பதக்கமுமாம்), ஒண் குறுமாக்களை ஓம்பினர்த் தழீஇ – பொலிவுடைய சிறு பிள்ளைகளை பாதுகாத்துத் தங்கள் கைகளால் அணைத்து (தழீஇ – அளபெடை), தாம் புணர்ந்து முயங்கி – அவர்களை மேலும் இறுக்கமாக அணைத்துத் தழுவி, தாது அணி தாமரைப் போது பிடித்தாங்கு – தாது உடைய தாமரை மலர்கள் தாமரை அரும்பைப் பிடித்தாற்போல், தாமும் அவரும் ஓராங்கு விளங்க – அவர்களும் அவர்களுடைய குழந்தைகளும் சேர்ந்து திகழ, காமர் கவினிய பேர் இளம் பெண்டிர் – விருப்பமுடைய அழகிய பெரிய இளம் பெண்கள், பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி – பூசைக்கு வேண்டிய மலர்களை உடையவர்களாக நறுமணப் புகையை உடையவர்களாக புகழ்ந்து வாழ்த்த, சிறந்து புறங்காக்கும் கடவுட் பள்ளியும் – சிறப்பு அடைந்து அவர்களால் பாதுகாக்கப்படும் பௌத்தப் பள்ளியும்

அந்தணர் பள்ளி

சிறந்த வேதம் விளங்கப் பாடி,
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து,
நிலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி   470

உயர்நிலை உலகம் இவண் நின்று எய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்,  (468 – 474)

பொருளுரை:  சிறந்த வேதங்களை பொருள் விளங்கப் பாடி, மிகச் சீரிய தலைமை அடைந்த ஒழுக்கத்துடன், நால்வகையான நிலங்கள் கொண்ட இந்த உலகத்தில், இறை பணியினால் உயர்ந்த நிலையை இவ்வுலகத்தில் இருந்தே அடையும், அறநெறியிலிருந்து தப்பாது அன்புடைய நெஞ்சம் உடையவர்களாய் உயர்ந்தவர்கள் பொருந்தி இனிது வதியும் மலையைக் குடைந்தாற்போல் உள்ள அந்தணர் இருப்பிடமும், 

குறிப்பு:  ஒரு தாம் ஆகி (470) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி இறைபணி நின்று என்றவாறு.  அந்தணர் (474) – நச்சினார்க்கினியர் உரை – வேதாந்தத்தை எக்காலமும் பார்ப்பார்.  கலித்தொகை 1 – நச்சினார்க்கினியர் உரை – ‘அந்தத்தை அணவுவார் அந்தணர்’ என்றது, வேதாந்தத்தையே பொருளென்று பார்ப்பார் என்றவாறு.

சொற்பொருள்:  சிறந்த வேதம் விளங்கப் பாடி – சிறந்த வேதங்களை பொருள் விளங்கப் பாடி, விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து – மிகச் சீரிய தலைமை அடைந்த ஒழுக்கத்துடன், நிலம் அமர் வையத்து – நால்வகையான நிலங்கள் கொண்ட உலகத்தில், ஒரு தாம் ஆகி உயர்நிலை உலகம் இவண் நின்று எய்தும் – இறை பணியினால் உயர்ந்த நிலையை இவ்வுலகத்தில் இருந்தே அடையும், அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின் – அறநெறியிலிருந்து தப்பாது அன்புடைய நெஞ்சம் உடையவர்களாய் (பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்), பெரியோர் மேஎய் இனிதின் உறையும் – சான்றோர்கள் பொருந்தி இனிது வதியும்  (மேஎய் – அளபெடை, மேஎய் – பொருந்தி), குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் – மலையைக் குடைந்தாற்போல் உள்ள அந்தணர் இருப்பிடமும்

அமணப் பள்ளி

வண்டு படப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப்   475

பூவும், புகையும், சாவகர் பழிச்சச்
சென்ற காலமும், வரூஉம் அமயமும்,
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து,
வானமும் நிலனும் தாம் முழுது உணரும்
சான்ற கொள்கை சாயா யாக்கை   480

ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல் பொளிந்தன்ன இட்டுவாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்றி, நல்கு வர
கயம் கண்டன்ன வயங்குடை நகரத்து
செம்பு இயன்றன்ன செஞ்சுவர் புனைந்து,   485

நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி,
இறும்பூது சான்ற நறும் பூஞ்சேக்கையும்
குன்று பல குழீஇப் பொலிவன தோன்ற,  (475 – 488)

பொருளுரை:  வண்டுகள் படியும்படி முதிர்ந்த தேன் இருந்த தோற்றத்தையுடைய மலர்களும் நறுமணப்புகையும் ஏந்தி விரதங்கள் கொண்டவர்கள் வாழ்த்த, கடந்த காலத்தையும் வருங்காலத்தையும் இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்துடன் நன்கு உணர்ந்து, வான் உலகமும் எல்லா நிலங்களும் முழுவதாக உணரும், தமக்கு அமைந்த விரதங்களும், தளராத உடலையுடைய அடங்கின ஒழுக்கத்தையுமுடைய அறிஞர்கள், நெருங்கினவர்களாக இருந்த நோன்பிற்கு, கல்லை கடைந்தாற்போல் ஒடுங்கிய வாயை உடைய பானைகளைப் பல கயிறுகளை உடைய உறியில் இட்டு, உயிர்களுக்கு அருளுதலை உடைய, குளத்தை ஒத்த ஒளியுடைய கோவிலில், செம்பினால் செய்தாற்போல் உள்ள செஞ்சுவர்களில் ஓவியம் வரைந்து, கண் பார்க்கும் விசையைத் தவிர்க்கும்படி, மேல் நிலம் மிக உயர்ந்து, வியப்புடைய நறுமண மலர்களையுடைய சமணப் பள்ளியும், மலைகள் பல தோன்றி பொலிவது போன்று தோன்ற, 

குறிப்பு:  சாவகர் (476) – நச்சினார்க்கினியர் உரை – சைனரில் துறவாது விரதங் காக்கும் இல்லறத்தார்.  செம்புச் சுவர்: புறநானூறு 201 – செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, அகநானூறு 375, புறநானூறு 37 – செம்பு உறழ் புரிசை, மதுரைக்காஞ்சி 485 – செம்பு இயன்றன்ன செஞ்சுவர், நெடுநல்வாடை112 – செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ் சுவர்.  பழிச்சும் – பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள (தொல்காப்பியம், உரியியல் 86).

சொற்பொருள்:  வண்டு படப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப் பூவும் புகையும் சாவகர் பழிச்ச – வண்டுகள் படியும்படி முதிர்ந்த தேன் இருந்த தோற்றத்தையுடைய மலர்களும் நறுமணப்புகையும் ஏந்தி விரதங்கள் கொண்டவர்கள் வாழ்த்த, சென்ற காலமும் வரூஉம் அமயமும் இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து – கடந்த காலத்தையும் வருங்காலத்தையும் இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்துடன் நன்கு உணர்ந்து (வரூஉம் – அளபெடை), வானமும் நிலனும் முழுது உணரும் – வான் உலகமும் எல்லா நிலங்களும் முழுவதாக உணரும் (நிலன் – நிலம் என்பதன் போலி), தாம் சான்ற கொள்கை – தமக்கு அமைந்த விரதங்களும், சாயா யாக்கை ஆன்று அடங்கு அறிஞர் – தளராத உடலையுடைய அடங்கின ஒழுக்கத்தையுடைய அறிஞர்கள் (ஆன்று – நிறைந்து), செறிந்தனர் நோன்மார் – நெருங்கினவர்களாக இருந்த நோன்பிற்கு, கல் பொளிந்தன்ன இட்டுவாய்க் கரண்டை பல்புரிச் சிமிலி  நாற்றி – கல்லை கடைந்தாற்போல் ஒடுங்கிய வாயை உடைய பானைகளைப் பல கயிறுகளை உடைய உறியில் இட்டு, நல்குவர – அருளுதலை உடைய, கயம் கண்டன்ன – குளத்தை ஒத்த, வயங்குடை நகரத்து – ஒளியுடைய கோவிலில், செம்பு இயன்றன்ன செஞ்சுவர்புனைந்து – செம்பினால் செய்தாற்போல் உள்ள செஞ்சுவர்களில் ஓவியம் வரைந்து, நோக்கு விசை தவிர்ப்ப – கண் பார்க்கும் விசையைத் தவிர்க்கும்படி, மேக்கு உயர்ந்து ஓங்கி – மேல் நிலம் மிக உயர்ந்து (உயர்ந்து ஓங்கி – ஒருபொருட் பன்மொழி), இறும்பூது சான்ற நறும் பூஞ்சேக்கையும் – வியப்புடைய நறுமண மலர்களையுடைய சமணப் பள்ளியும், குன்று பல குழீஇ பொலிவன தோன்ற – மலைகள் பல தோன்றி பொலிவது போன்று தோன்ற (குழீஇ – அளபெடை)

அறம் கூறு அவையம்

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்,
செற்றமும் உவகையும் செய்யாது காத்து,   490
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகிச்,
சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும், (489 – 492)

பொருளுரை:  நடுவுநிலைமையுடன் கூறுவார்களா அல்லது கூறமாட்டார்களா என வந்தவர்களின் அச்சத்தையும் வருத்தத்தையும் ஆர்வத்தையும் நீக்கி, சினமும் மகிழ்ச்சியும் கொள்ளாது காத்து, துலாக்கோலை ஒத்த நடுவுநிலைமை உடையராய், சிறந்த கொள்கையுடைய அறம் கூறும் அவையிருக்கும் தெருவிடத்தும்,  

சொற்பொருள்:  அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி – நடுவுநிலைமையுடன் கூறுவார்களா அல்லது கூறமாட்டார்களா என வந்தவர்களின் அச்சத்தையும் வருத்தத்தையும் ஆர்வத்தையும் நீக்கி, செற்றமும் உவகையும் செய்யாது – சினமும் மகிழ்ச்சியும் கொள்ளாது, காத்து – காத்து, ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி –துலாக்கோலை ஒத்த நடுவுநிலைமை உடையராய், சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும் – சிறந்த கொள்கையுடைய அறம் கூறும் அவையிருக்கும் தெருவிடத்தும்,

காவிதி மாக்கள்

நறுஞ்சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து
ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து,
மா விசும்பு வழங்கும் பெரியோர் போல   495

நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி,
அன்பும் அறனும் ஒழியாது காத்து,
பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்,  (493 – 499)

பொருளுரை:  நறுமணச் சந்தனத்தைப் பூசிய நிறம் பொருந்திய மார்பை உடையவர்களாக, வேள்விகள் செய்து, தலையில் ஒளியுடைய தலைப்பாகைக் கட்டி, பெரிய மேல் உலகில் வாழும் சான்றோர் போல நல்லதையும் தீயதையும் கண்டு ஆராய்ந்து தங்களின் மனதை அடக்கி, அன்பும் அறமும் அழியாது அதனைக் காத்து, பழியைத் தவிர்த்து, உயர்ச்சி எய்தி, பரவிய புகழ் நிறைந்த, தலைமை உடைய அமைச்சர்கள் வாழுமிடத்தும்,

சொற்பொருள்:  நறுஞ்சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து – நறுமணச் சந்தனத்தைப் பூசிய நிறம் பொருந்திய மார்பை உடையவர்களாக, ஆவுதி மண்ணி – வேள்விகள் செய்து, அவிர் துகில் முடித்து – தலையில் ஒளியுடைய தலைப்பாகைக் கட்டி, மா விசும்பு வழங்கும் பெரியோர் போல – பெரிய மேல் உலகில் வாழும் சான்றோர் போல, நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி – நல்லதையும் தீயதையும் கண்டு ஆராய்ந்து தன் மனதை அடக்கி, அன்பும் அறனும் ஒழியாது காத்து – அன்பும் அறமும் அழியாது அதனைக் காத்து (அறன் – அறம் என்பதின் போலி), பழி ஒரீஇ – பழியைத் தவிர்த்து (ஒரீஇ – அளபெடை), உயர்ந்து – உயர்ச்சி எய்தி, பாய் புகழ் நிறைந்த – பரவிய புகழ் நிறைந்த, செம்மை சான்ற காவிதி மாக்களும் – தலைமை உடைய அமைச்சர்கள் வாழுமிடத்தும்,

பண்டங்கள் விற்கும் வணிகர்

அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகிக்   500

குறும்பல் குழுவின் குன்று கண்டன்ன,
பருந்து இருந்து உகக்கும் பல்மாண் நல்இல்
பல்வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி,
மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்

பல் வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு   505
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்,  (500 – 506)

பொருளுரை:  அற நெறியிலிருந்து தவறாது, நல்ல வழியில் நடந்து, சிறிய பல மலைகளின் தொகுப்பைக் கண்டாற்போல், பருந்துகள் இளைப்பாறி பின் உயர்ந்து பறக்கும் பல மாண்பு மிகுந்த நல்ல இல்லங்களில், பல் வேறு பொருட்களுடன் உணவுப் பொருட்களும் மிகுந்து அழகுபெற்று, மலையிலிருந்தும் நிலத்திலிருந்தும் நீரிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் பல் வேறு அழகிய மணிகளும் முத்தும் பொன்னும் வாங்கிக்கொண்டு, சிறந்த நாடுகளின் பண்டங்களை விற்கும் வணிகர்கள் வாழும் தெருவிடத்தும்,

சொற்பொருள்:  அற நெறி பிழையாது – அற நெறியிலிருந்து தவறாது, ஆற்றின் ஒழுகி – நல்ல வழியில் நடந்து, குறும் பல் குழுவின் குன்று கண்டன்ன – சிறிய பல மலைகளின் தொகுப்பைக் கண்டாற்போல், பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல் – பருந்துகள் இளைப்பாறி பின் உயர்ந்து பறக்கும் பல மாண்பு மிகுந்த நல்ல இல்லங்களில், பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி – பல் வேறு பொருட்களுடன் உணவுப் பொருட்களும் மிகுந்து அழகுபெற்று, மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும் பல் வேறு திருமணி முத்தமொடு பொன் கொண்டு – மலையிலிருந்தும் நிலத்திலிருந்தும் நீரிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் பல் வேறு அழகிய மணிகளும் முத்தும் பொன்னும் வாங்கிக்கொண்டு, சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும் – சிறந்த நாடுகளின் பண்டங்களை விற்கும் வணிகர்கள் வாழும் தெருவிடத்தும் (தேஎத்து – அளபெடை)

நாற்பெருங்குழு

மழை ஒழுக்கு அறாஅப் பிழையா விளையுள்
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றியன்ன,
தாம் மேஎந் தோன்றிய நாற்பெருங்குழுவும்,   (507 – 510)

பொருளுரை:  மழை பெய்தல் தவறாது இருந்ததால் விளைச்சலையுடைய, பழையன் என்னும் குறுநில மன்னனின் அவை திகழும்படி, நால்வகையான கோசர்கள் தோன்றினாற்போல், உயர்வாகத் தோன்றிய நாற்பெரும் குழுவினர் வாழும் தெருவிடத்தும்,

குறிப்பு:  நான்மொழிக் கோசர் (509) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நான்மொழிக் கோசர் என்பதானும் இவர் நால்வேறு மொழிகளையும் பேசி வந்தனர் என எண்ணக்கூடும்.  ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘நாற்கோசர் மொழி தோன்றியன்ன’ என மாறி ‘நான்கு வகையாகிய கோசர் வஞ்சின மொழியாலே விளங்கினாற்போல என்றார்.   கோசர் – குறுந்தொகை 15 – நாலூர்க் கோசர் நன்மொழி போல, குறுந்தொகை 73 – ஒன்றுமொழிக் கோசர் போல, அகநானூறு 15 – மெய்ம்மலி பெரும்பூண் செம்மல் கோசர், அகநானூறு 196 – ஒன்றுமொழிக் கோசர்.

சொற்பொருள்:  மழை ஒழுக்கு அறாஅப் பிழையா விளையுள் – மழை பெய்தல் தவறாது இருந்ததால் விளைச்சலையுடைய  (அறாஅ – அளபெடை, பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்), பழையன் மோகூர் அவையகம் விளங்க – பழையன் என்னும் குறுநில மன்னனின் அவை திகழும்படி, நான்மொழிக் கோசர் தோன்றியன்ன – நால்வகையான கோசர்கள் தோன்றினாற்போல், தாம் – தாங்கள், மேஎம் தோன்றிய நாற்பெருங்குழுவும் – உயர்வாகத் தோன்றிய நாற்பெரும் குழுவினர் வாழும் தெருவிடத்தும் (மேஎம் – அளபெடை)

பல்வேறு தொழிலாளர்கள்

கோடு போழ் கடைநரும், திருமணி குயினரும்,
சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும்,
பொன் உரை காண்மரும், கலிங்கம் பகர்நரும்,
வம்பு நிறை முடிநரும், செம்பு நிறை கொண்மரும்,
பூவும் புகையும் ஆயும் மாக்களும்,   515

எவ்வகைச் செய்தியும் உவமம் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடித்
தெண் திரை அவிர் அறல் கடுப்ப, ஒண்பல்
குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்துச்   520
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ,
நால்வேறு தெருவினும் கால் உற நிற்றர, (511 – 522)

பொருளுரை:  சங்கினை அறுத்து வளையல் செய்பவர்களும், அழகிய மணிகளில் துளை இடுபவர்களும், சுட்ட நல்ல பொன்னினால் ஒளியுடைய அணிகலன்களைச் செய்பவர்களும், பொன்னை கல்லில் தேய்த்து அதன் தூய்மையைப் பார்ப்பவர்களும், துணி விற்பவர்களும், கச்சுக்களை முடிப்பவர்களும், செம்பினை எடையிட்டு வாங்குபவர்களும், மலர்களையும் நறுமணப் புகையை உண்டுபண்ணும் சாந்தையும் நன்றாக ஆராய்ந்து விற்பவர்களும், பலவகைப்பட்ட தொழில்களையும் உவமையாகக் காட்டி, நுணுக்கமாக உணர்ந்த கூர்மையான அறிவுடைய ஓவியக் கலைஞர்களும், பிறரும் கூடி, தெளிந்த அலைகளில் விளங்குகின்ற அறலை ஒப்ப, ஒளியுடைய பல சிறியவும் பெரியவுமாகிய மடித்த துணிகளைக் கொணர்ந்து விரித்து, சிறியவர்களும் பெரியவர்களும் நெய்தல் தொழில் செய்பவர்களும் கூடி, நான்காக வேறுபட்ட தெருக்களில், கால்கள் நெருங்கி நிற்றலைச் செய்ய,

குறிப்பு:  கண்ணுள் வினைஞரும் (518) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூரிய அறிவு உடையார்க்கு அன்றி ஓவியத் தொழில் இயற்ற வாராமையின் நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞர் என்றார்.  C. ஜெகந்நாதாசார்யர் உரை – குயினரும், புனைநரும், பகர்நரும், கொண்மரும், மாக்களும் ‘கூடி’ என்ற வினையெச்சத்தோடு இயைந்தன. 

சொற்பொருள்:  கோடு போழ் கடைநரும் – சங்கை அறுத்து வளையல் செய்பவர்களும், திருமணி குயினரும் – அழகிய மணிகளில் துளை இடுபவர்களும், சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும் – சுட்ட நல்ல பொன்னினால் ஒளியுடைய அணிகலன்களைச் செய்பவர்களும் (சூடு – முதனிலை திரிந்த தொழிற் பெயர்), பொன் உரை காண்மரும் – பொன்னை கல்லில் தேய்த்துப் பார்ப்பவர்களும், கலிங்கம் பகர்நரும் – ஆடை/துணி விற்பவர்களும், வம்பு நிறை முடிநரும் – கச்சுக்களை முடிப்பவர்களும், செம்பு நிறை கொண்மரும் – செம்பினை எடையிட்டு வாங்குபவர்களும், பூவும் புகையும் ஆயும் மாக்களும் – மலர்களையும் நறுமணப் புகையை உண்டுபண்ணும் சாந்தையும் நன்றாக ஆராய்ந்து விற்பவர்களும், எவ்வகைச் செய்தியும் உவமம் காட்டி – பலவகைப்பட்ட தொழில்களையும் உவமையாகக் காட்டி, நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞரும் – நுணுக்கமாக உணர்ந்த கூர்மையான அறிவுடைய ஓவியக் கலைஞர்களும், பிறரும் கூடி – பிறரும் கூடி, தெண் திரை அவிர் அறல் கடுப்ப – தெளிந்த அலைகளில் விளங்குகின்ற அறலை ஒப்ப (கடுப்ப – உவம உருபு), ஒண் பல் குறியவும் நெடியவும் மடி தரூஉ – ஒளியுடைய பல சிறியவும் பெரியவுமாகிய மடித்த துணிகளைக் கொணர்ந்து (தரூஉ – அளபெடை), விரித்து – விரித்து, சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ – சிறியவர்களும் பெரியவர்களும் நெய்தல் தொழில் செய்பவர்களும் கூடி (குழீஇ – அளபெடை), நால்வேறு தெருவினும் – நான்காக வேறுபட்ட தெருக்களில், கால் உற நிற்றர – கால்கள் நெருங்கி நிற்க (கால் உற – காலோடு கால் பொருந்த, நிற்றர – நிற்றலைச் செய்ய, தர – பகுதிப் பொருளது, துணைவினை) 

பலரும் கூடி நிற்றலால் உண்டாகும் ஆரவாரம்

கொடும்பறைக் கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும்
தண் கடல் நாடன் ஒண் பூங்கோதை
பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ,   525

விழைவு கொள் கம்பலை கடுப்பப் பலவுடன், (523 – 526)

பொருளுரை:  வளைந்த கண்கள் கொண்ட பறையையுடைய கோடியர் சுற்றத்துடன் வாழ்த்தும், குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டை உடையவனாகிய ஒளியுடைய பனை மாலை அணிந்த சேரனின் நாள் அவையில், கற்று உணர்ந்த சான்றோர் கூடிய விரும்புதல் பொருந்திய ஆரவாரத்தை ஒப்ப உள்ள பல ஆரவாரத்துடன், 

குறிப்பு:  கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

சொற்பொருள்:  கொடும் பறைக் கோடியர் – வளைந்த கண்கள் கொண்ட பறையையுடைய கோடியர், கடும்பு உடன் வாழ்த்தும் – சுற்றத்துடன் வாழ்த்தும், தண் கடல் நாடன் ஒண் பூங்கோதை பெருநாள் இருக்கை – குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டை உடையவனாகிய ஒளியுடைய பனை மாலை அணிந்த சேரனின் நாள் அவையில், விழுமியோர் குழீஇ – கற்று உணர்ந்த சான்றோர் கூடிய (குழீஇ – அளபெடை), விழைவு கொள் கம்பலை கடுப்ப – விரும்புதல் பொருந்திய ஆரவாரத்தை ஒப்ப (கடுப்ப – உவம உருபு), பலவுடன் – பல ஆரவாரத்துடன்

உணவு வகைகள்

சேறும் நாற்றமும் பலவின் சுளையும்,
வேறுபடக் கவினிய தேமாங்கனியும்,
பல்வேறு உருவின் காயும் பழனும்,
கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி   530
மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்,
அமிர்து இயன்றன்ன தீம்சேற்றுக் கடிகையும்,
புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும்,
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்,
இன்சோறு தருநர் பல்வயின் நுகர, (527 – 535)

பொருளுரை:  சாற்றாலும் மணத்தாலும் வேறுபட அழகு கொண்ட பலாவின் சுளையும் இனிய மாவின் பழங்களையும், பல்வேறு வடிவில் உள்ள காய்களும், பழங்களும், முகில்கள் மழைபொழிந்து வளர்த்த கொடிகள் அழகு பெற்று, மெல்லிய சுருள் விரிந்த சிறிய இலைகளையுடைய கீரைகளும், அமுதை வார்த்தாற்போல் உள்ள இனிய சாற்றையுடைய கற்கண்டுத் துண்டுகளையும், பலரும் புகழும்படி சமைத்த பெரிய இறைச்சித் துண்டுகள் கலந்த சோற்றையும், கீழே போகுமாறு வளர்ந்த கிழங்குகளுடனும் பிற உணவுகளுடனும், இனிய சோற்றினை இடுபவர்கள் கொடுத்ததைப் பெற்றவர்கள் பல இடங்களிலும் உண்ண,

குறிப்பு:  சேறும் நாற்றமும் பலவின் சுளையும் வேறுபடக் கவினிய தேமாங்கனியும் (527-528) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘சாறும் நாற்றமும் பலவின் சுளையும் வேறுபடக் கவினிய தேமாங்கனியும்’ என்றும், ‘சாறு நாற்றம் வேறுபடக் கவினிய பலவின் சுளையும் தேமாங்கனியும்’ என்று இருவேறு பாடங்களும் உள என்று நச்சினார்க்கினியர் குறித்துள்ளார்.  தருநர் (535) – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  தரப்போட்டோர்.  தருநர் என்றது ஈண்டுச் செயப்பாட்டு வினைமேல் நின்றது, நச்சினார்க்கினியர் – கொண்டு வந்து இடுவார், C. ஜெகந்நாதாசார்யர் உரை – கொண்டு வந்து இடுவார்.  கொடிவிடுபு (530) – C. ஜெகந்நாதாசார்யர் உரை – ‘கொடிவிடுபு’ என்றவிடத்து ‘கொடி’ என்பது ஒழுங்குபட விடுகின்ற கிளைகளை.

சொற்பொருள்:  சேறும் நாற்றமும் பலவின் சுளையும் வேறுபட கவினிய – சாற்றாலும் மணத்தாலும் வேறுபட அழகு கொண்ட பலாவின் சுளையும், தேமாங்கனியும் – இனிய மாவின் பழங்களையும், பல்வேறு உருவின் காயும் – பல்வேறு வடிவில் உள்ள காய்களும், பழனும் – பழமும் (பழன் – பழம் என்பதன் போலி), கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி – முகில்கள் மழைபொழிந்து வளர்த்த கொடிகள் அழகு பெற்று, மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும் – மெல்லிய சுருள் விரிந்த சிறிய இலைகளையுடைய கீரைகளும், அமிர்து இயன்றன்ன தீம்சேற்றுக் கடிகையும் – அமுதை வார்த்தாற்போல் உள்ள இனிய சாற்றையுடைய கற்கண்டுத் துண்டுகளையும், புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும் – பலரும் புகழும்படி சமைத்த பெரிய இறைச்சித் துண்டுகள் கலந்த சோற்றையும், கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும் – கீழே போகுமாறு வளர்ந்த கிழங்குகளுடனும் பிற உணவுகளுடனும் (செல – இடைக்குறை), இன்சோறு தருநர் பல்வயின் நுகர – இனிய சோற்றினை இடுபவர்கள் கொடுத்ததை பல இடங்களிலும் உண்ண, இனிய சோற்றினை கொடுக்கப் பெற்றோர் பல இடங்களிலும் உண்ண

அந்திக் கடையில் எழும் ஓசை மிகுதி

வால் இதை எடுத்த வளிதரு வங்கம்
பல்வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து
ஒல்லென் இமிழ் இசை மானக் கல்லென,
நனந்தலை வினைஞர் கலம் கொண்டு மறுகப்
பெருங்கடற் குட்டத்துப் புலவுத் திரை ஓதம்   540

இருங்கழி மருவிப் பாய பெரிது எழுந்து
உருகெழு பானாள் வருவன பெயர்தலின்,
பல்வேறு புள்ளின் இசை எழுந்தற்றே
அல் அங்காடி அழிதரு கம்பலை; (536 – 544)

பொருளுரை:  வெள்ளைப் பாய்களை விரித்த காற்றுக் கொண்டு வரும் கப்பல்களில் கொணர்ந்த பல்வேறு சரக்குகளைக் கீழே இறக்கும் பட்டினத்தில், ஒல்லென முழங்கும் ஓசையை ஒக்கக் கல்லென்னும் முழக்கத்துடன், அகன்ற இடத்தையுடைய பிற நாட்டு வணிகர்கள் இங்குச் செய்த அணிகலன்களை விலைக்கு வாங்கி உலவ, பெரிய கடல் சூழ்ந்த இடத்தில் புலால் நாற்றம் உடைய அலைகளையுடைய வெள்ளத்தின் ஓசை, கரிய உப்பங்கழியில் புகார் முகத்தில் பாய்ந்து பெரிது எழுந்து, அச்சம் தருகின்ற நடு இரவில் வந்து மீள்வதால், அங்கு இருக்கும் பல்வேறு பறவைகளின் ஓசை எழுந்த தன்மையுடையது, இரவு நேரக் கடைகளில் மிகுதியான ஆரவாரம்.

குறிப்பு:  வினைஞர் கலம் கொண்டு மறுக (539) – மதுரையிடத்தே இயற்றப்படுகின்ற அணிகலன்களை விலைபேசி வாங்கிக் கொண்டு மேலும் அணிகலன் வாங்கும் பொருட்டுத் திரியா நிற்ப என்பார் ‘கலங் கொண்டு மறுக’ என்றார்.  துறைமுகப் பட்டினத்து அயல்நாட்டு வணிகர் மிக்கு முழங்கினாற் போன்று ஈண்டும் மிக்கு ஆரவாரித்தனர் என்றவாறு.  பல்வேறு புள்ளின் இசை எழுந்தற்றே – (534) – அவர் பல நாட்டினின்றும் வந்து பல்வேறு மொழிகளைப் பேசுதலால் பல்வேறு வகைப்பட்ட பறவைகள் ஒருங்கு கூடி ஆரவாரித்தலை உவமை கூறினார்.  கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  பெருங்கடற் குட்டத்து (540) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய கடல் சூழ்ந்த இடத்தினின்றும்.

சொற்பொருள்:  வால் இதை எடுத்த வளி தரு வங்கம் – வெள்ளைப் பாய்களை விரித்த காற்றுக் கொண்டு வரும் கப்பல்களில் கொணர்ந்த, பல்வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து – பல்வேறு சரக்குகளைக் கீழே இறக்கும் பட்டினத்தில், ஒல்லென் இமிழ் இசை மானக் கல்லென – ஒல்லென முழங்கும் ஓசையை ஒக்கக் கல்லென்னும் முழக்கத்துடன் (மான – உவம உருபு, ஒல்லென் – ஒலிக்குறிப்பு, கல்லென – ஒலிக்குறிப்பு), நனந்தலை வினைஞர் கலம் கொண்டு மறுக – அகன்ற இடத்தையுடைய பிற நாட்டு வணிகர்கள் இங்குச் செய்த அணிகலன்களை விலைக்கு வாங்கி உலவ (மறுக – உலவ), பெருங்கடற் குட்டத்துப் புலவுத் திரை ஓதம் – பெரிய கடல் சூழ்ந்த இடத்தில் புலால் நாற்றம் உடைய அலைகளையுடைய வெள்ளத்தின் ஓசை (ஓதம் – வெள்ளம், பேரலை), இருங்கழி மருவிப் பாயப் பெரிது எழுந்து – கரிய உப்பங்கழியில் புகார் முகத்தில் பாய்ந்து பெரிது எழுந்து, உருகெழு பானாள் வருவன பெயர்தலின் – அச்சம் தருகின்ற நடு இரவில் வருவனவாய் மீள்வதால், பல் வேறு புள்ளின் இசை எழுந்து அற்றே – அங்கு இருக்கும் பல்வேறு பறவைகளின் ஓசை எழுந்த தன்மையுடையது, அல் அங்காடி அழிதரு கம்பலை – இரவு நேரக் கடைகளில் மிகுதியான ஆரவாரம் (அழி – மிகுதல்)

இரவுக் கால நிலை

ஒண் சுடர் உருப்பு ஒளி மழுங்க சினம் தணிந்து,   545

சென்ற நன்பகல் கொண்டு
குடமுதல் குன்றம் சேர குணமுதல்
நாள்முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு
பகல் உரு உற்ற இரவு வர, நயந்தோர்
காதல் இன்துணை புணர்மார் ஆய் இதழ்த்   550

தண் நறுங்கழுநீர் துணைப்ப இழை புனையூஉ
நல் நெடுங்கூந்தல் நறுவிரை குடைய
நரந்தம் அரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென் நூற் கலிங்கம் கமழ் புகை மடுப்ப
பெண் மகிழ்வுற்ற பிணை நோக்கு மகளிர்,   555

நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ நெடுநகர்
எல்லை எல்லாம் நோயொடு புகுந்து,
கல்லென் மாலை நீங்க,  (545 – 558)

பொருளுரை:  ஒளியுடைய கதிர்களின் வெப்பமும் ஒளியும் மழுங்கச் சுடும் சினம் தணிந்து அகன்ற கதிரவன், நன்றாகிய பகற்பொழுதைக் கொண்டு மேற்குத் திசையில் உள்ள மலையில் சேர, கீழ்த்திசையில் 16 நாட்கள் சென்று முதிர்ந்த நிலா தோன்றி, நிலாவின் ஒளி பரவுவதால் பகலின் வடிவை ஒத்த இரவுக்காலம் வரும்படி, விரும்பின பெண்கள் காதல் மிக்க தங்கள் இனிய கணவர்களைக் கூடும்பொருட்டு, அழகிய இதழ்களையுடைய குளிர்ந்த நறுமணச் செங்கழுநீர் மலர்களை மாலையாகக் கட்டும்படியும், அணிகலன்களை அணிந்து நன்றாகிய நீண்ட கூந்தலில் பூசின நறுமண மயிர்ச் சந்தனத்தை அலைத்து நீக்கும்படியும், கத்தூரியை அரைக்கும்படியும்,  நறுமணச் சந்தனத்தை அரைக்கும்படியும், மெல்லிய நூலால் நெய்த துணிகளுக்கு நறுமணப் புகையை ஊட்டவும், பெண்கள் விரும்பும் சிறப்பையுடைய பெண் மான் போலும் நோக்கினையுடைய மகளிர் நெடிய ஒளியையுடைய விளக்குகளை ஏற்றி, பெரிய ஊரின் எல்லையாகிய இடம் எல்லாம் தங்கள் கணவர்களுடன் கூட விரும்பியவர்களுக்கு நோயைச் செய்தலுடன் புகுந்து கல்லென்னும் ஓசையுடைய மாலைக்காலம் நீங்க, 

சொற்பொருள்:  ஒண் சுடர் உருப்பு ஒளி மழுங்கச் சினம் தணிந்து சென்ற ஞாயிறு – ஒளியுடைய கதிர்களின் வெப்பமும் ஒளியும் மழுங்கச் சுடும் சினம் தணிந்து அகன்ற கதிரவன், நன்பகல் கொண்டு குடமுதல் குன்றம் சேர – நன்றாகிய பகற்பொழுதைக் கொண்டு மேற்குத் திசையில் உள்ள மலையில் சேர, குண முதல் நாள் முதிர் மதியம் தோன்றி – கீழ்த்திசையில் 16 நாட்கள் சென்று முதிர்ந்த நிலா தோன்றி, நிலா விரிபு பகல் உரு உற்ற இரவு வர – நிலாவின் ஒளி பரவுவதால் பகலின் வடிவை ஒத்த இரவுக்காலம் வரும்படி (விரிபு – செய்பு என்னும் எச்சம்), நயந்தோர் காதல் இன் துணை புணர்மார் – விரும்பின பெண்கள் காதல் மிக்க தங்கள் இனிய கணவர்களைக் கூடும்பொருட்டு (புணர்மார் – கூடும்பொருட்டு), ஆய் இதழ்த் தண் நறுங் கழுநீர் துணைப்ப – ஆராய்ந்த/அழகிய இதழ்களையுடைய குளிர்ந்த நறுமணச் செங்கழுநீர் மலர்களை மாலையாகக் கட்டும்படியும், இழை புனையூஉ நல் நெடுங்கூந்தல் நறுவிரை குடைய – அணிகலன்களை அணிந்து நன்றாகிய நீண்ட கூந்தலில் பூசின நறுமண மயிர்ச் சந்தனத்தை அலைத்து நீக்கும்படியும் (புனையூஉ – அளபெடை), நரந்தம் அரைப்ப – கத்தூரியை அரைக்கும்படியும், நறுஞ்சாந்து மறுக – நறுமணச் சந்தனத்தை அரைக்கும்படியும் (மறுக – அரைக்க), மென் நூற் கலிங்கம் கமழ் புகை மடுப்ப – மெல்லிய நூலால் நெய்த துணிகளுக்கு நறுமணப்புகையை ஊட்டவும், பெண் மகிழ்வுற்ற பிணை நோக்கு மகளிர் – பெண்கள் விரும்பும் சிறப்பையுடைய பெண் மான் போலும் நோக்கினையுடைய மகளிர், நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ – நெடிய ஒளியையுடைய விளக்கினை ஏற்றி (கொளீஇ – அளபெடை), நெடு நகர் எல்லை எல்லாம் நோயொடு புகுந்து கல்லென் மாலை நீங்க – பெரிய ஊரின் எல்லையாகிய இடம் எல்லாம் விரும்பியவர்களுக்கு நோயுடன் புகுந்து கல்லென்னும் ஓசையுடைய மாலைக்காலம் நீங்க (கல்லென் – ஒலிக்குறிப்பு)   

குல மகளிர் செயல்

………………………………………………. நாணுக்கொள
ஏழ் புணர் சிறப்பின் இன் தொடைச் சீறியாழ்
தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப பண்ணுப் பெயர்த்து   560
வீழ்துணை தழீஇ, (558 – 561)

பொருளுரை:  தங்கள் கணவர்களை விரும்பிய பெண்கள் நாணம் கொண்டு, குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், என்ற இசை ஏழும் தன்னிடத்தில் கொண்ட இனிய நரம்பினையுடைய சிறிய யாழில், அதன் அருகில் தாழ்ந்து செறிந்த தங்கள் பாடல்களுக்கு ஒப்ப பண்களை மாறிமாறி இசைத்து, தம்மை விரும்பும் துணைவர்களைத் தழுவி இருந்தனர்.

குறிப்பு:  ஏழ் புணர் சிறப்பின் (559) –  பொ. வே. சோமசுந்தரனார் உரை – குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்.

சொற்பொருள்:  நாணுக்கொள – தங்கள் கணவர்களை விரும்பிய பெண்கள் நாணம் கொள்ள, ஏழ் புணர் சிறப்பின் இன் தொடைச் சீறியாழ் – குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்ற இசை ஏழும் தன்னிடத்தில் கொண்ட இனிய நரம்பினையுடைய சிறிய யாழ் (தொடை – நரம்பிற்கு ஆகுபெயர்), தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப – அதன் அருகில் தாழ்ந்து செறிந்த தம் பாடல் ஒப்ப (கடுப்ப – உவம உருபு), பண்ணுப் பெயர்த்து – பண்களை மாறிமாறி இசைத்து, வீழ் துணை தழீஇ – தம்மை விரும்பும் துணைவர்களைத் தழுவி (தழீஇ – அளபெடை)

பரத்தையரது வாழ்க்கை

………………………….வியல் விசும்பு கமழ,
நீர் திரண்டன்ன கோதை பிறக்கு இட்டு
ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி,
போது அவிழ் புது மலர் தெரு உடன் கமழ,
மேதகு தகைய மிகுநலம் எய்தி,   565

பெரும் பல்குவளைச் சுரும்புபடு பல்மலர்
திறந்து மோந்தன்ன சிறந்து கமழ் நாற்றத்துக்
கொண்டல் மலர்ப் புதல் மானப் பூ வேய்ந்து,
நுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி
மாயப்பொய் பல கூட்டி கவவுக் கரந்து,   570

சேயரும் நணியரும் நலன் நயந்துவந்த
இளம்பல் செல்வர் வளம் தப வாங்கி
நுண் தாது உண்டு, வறும் பூத் துறக்கும்
மென்சிறை வண்டினம் மான புணர்ந்தோர்,
நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து,   575

பழம் தேர் வாழ்க்கைப் பறவை போலக்
கொழுங் குடிச் செல்வரும் பிறரும் மேஎய,
மணம் புணர்ந்து ஓங்கிய அணங்குடை நல் இல்
ஆய் பொன் அவிர் தொடிப் பாசிழை மகளிர்,
ஒண்சுடர் விளக்கத்துப் பலர் உடன் துவன்றி   580

நீல்நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவமகளிர் மான கண்டோர்
நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்,
யாம நல் யாழ் நாப்பண் நின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடி குண்டு நீர்ப்   585

பனித்துறைக் குவவு மணல் முனைஇ, மென் தளிர்க்
கொழுங் கொம்பு கொழுதி நீர்நனை மேவர,
நெடுந்தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி,
மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயர  (561 – 589)

பொருளுரை:  அகன்ற வானில் மணக்கும்படி, நீர் திரண்டாற்போல் வெள்ளை மலர்களால் புனைந்த மாலைகளைக் கூந்தலில் இட்டு, அழகிய திரட்சியுடைய வளையல்கள் விளங்கும்படி கையை வீசி நடந்து, அரும்பு அவிழ்ந்த புதிய மலர்களின் மணம் தெருவெங்கும் கமழ, பெரும் தகைமையுடைய மிகுந்த நன்மை உண்டாக ஒப்பனை செய்து, பெரிய பல குவளை வண்டுகளுக்கு மலர்கின்ற பல மலர்களைத் திறந்து மோந்தாற்போல், சிறந்த கமழும் நறுமணத்துடன், மழைக்கு மலர்ந்த மலரையுடைய சிறு புதர் போன்ற மலர்களையும் அணிந்து, தம்மைப் புணர்வோரின் நுண்ணிய அணிகலன்களையுடைய மார்பை தம் மார்பில் வடுபடும்படி தழுவி, மயக்கும் பொய்களையும் கூறி, முயக்கத்தை அவர்கள் பொருள் தரும் வரை மறைத்து, தொலைவிலிருந்தும் அருகிலிருந்தும் தங்கள் அழகை விரும்பி வந்த இளைஞர்களாகிய பல செல்வங்களையுடைய ஆண்களிடம் அவருடைய செல்வம் கெடுமாறு அவற்றைக் கவர்ந்து, பூ மலரும் பொழுதை அறிந்து அதன் நுண்ணியத் தாதினை உண்டு பின்னர்த் தாது இல்லாத அப்பூவினை துறக்கும் மெல்லிய சிறகையுடைய வண்டினம் போலத் தம்மைப் புணந்தவர்களின் நெஞ்சு கலக்கமுறும்படி அவர்களைக் கைவிட்டு, அவர்களுடன் இணைவதை நீக்கி, பழத்தையுடைய மரத்தைத் தேடிச் சென்று அவற்றின் பழத்தை ஆராய்ந்து கவரும் பறவைகளைப் போன்று, செல்வக்குடியில் பிறந்த செல்வரும் பிறரும் தரும் பொருந்திய புதிய மணம் நிகழ்ந்ததால் உயர்ச்சி பெற்றனவும் இல்லத்தில் உறையும் கடவுள்களையுடைய நல்ல இல்லங்களில் சென்று அழகிய பொன்னால் செய்த விளங்குகின்ற வளையல்களையும் புதிய அணிகலன்களையும் அணிந்த பெண்கள், ஒளியுடைய சுடரின் ஒளியில் பலரும் ஒருசேர நெருங்கி, நீல நிறமுடைய வானின்கண் நெஞ்சமர்ந்து விளையாடும் மகளிர் போன்று, தம்மைக் கண்டவர்களின் நெஞ்சை வருத்தி அவர்களிடம் பொருட்களை வாங்கும் கொள்ளையடிக்கும் மகளிர், முதல் யாமத்தில் நல்ல யாழ்களுக்கு நடுவில் அவற்றின் இசையோடு இயைந்த முழவின் ஓசைக்கு ஏற்ப கூத்தாடி, ஆழ்ந்த நீரையுடைய குளிர்ந்த துறையின் குவிந்த மணலில் ஆடி அதன் பின் அதை வெறுத்து, மெல்லிய தளிர்களை அடர்ந்த கிளைகளிலிருந்து கொய்து, நீர்க்கீழ் அரும்புடன் பொருந்துதல் வரத் தொடுத்த மாலையுடைய குவளை மலரை கால் விளிம்பில் படும்படி அணிந்து, மணங்கமழும் இல்லம்தோறும் பொய்தல் விளையாட்டைச் செய்ய.  

குறிப்பு:  பிறக்கு (562) – பின்புறம், கொண்டை.   நுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி (569) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தம்மைப் புணர்வோரின் நுண்ணிய அணிகலன்களையுடைய மார்பைத் தம் மார்பிலே வடுப்படும்படியாகத் தழுவி.  தொடி வடு – கலித்தொகை 71 – தொடி வடு, கலித்தொகை 78 – தொடி உற்ற வடு, கலித்தொகை 91- தொடி உற்ற வடுவும்.  அகநானூறு 142 –  தொடிக்கண் வடுக் கொள முயங்கினள்.  கொண்டி மகளிர் (583) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருள் வாங்குதலையுடைய வரைவின் மகளிர், கொண்டி – கொள்ளையுமாம்.  பழ மரமும் புள்ளும்:  புறநானூறு 173 – பழுமரம் புள் இமிழ்ந்தன்ன, புறநானூறு 370 – பழுமரம் உள்ளிய பறவை போல, பெரும்பாணாற்றுப்படை 20 – பழுமரம் தேரும் பறவை போல, பொருநராற்றுப்படை 64 – பழுமரம் உள்ளிய பறவையின், மதுரைக்காஞ்சி 576 – பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல. 

சொற்பொருள்:  வியல் விசும்பு கமழ – அகன்ற வானில் மணக்கும்படி, நீர் திரண்டன்ன கோதை பிறக்கு இட்டு – நீர் திரண்டாற்போல் வெள்ளை மலர்களால் புனைந்த மாலைகளைக் கூந்தலில் இட்டு, ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி – அழகிய திரட்சியுடைய வளையல்கள் விளங்கும்படி கையை வீசி நடந்து, போது அவிழ் புது மலர் தெரு உடன் கமழ – அரும்பு அவிழ்ந்த புதிய மலர்களின் மணம் தெருவெங்கும் கமழ, மேதகு தகைய மிகு நலம் எய்தி – பெரும் தகைமையுடைய மிகுந்த நன்மை உண்டாக ஒப்பனை செய்து, பெரும் பல் குவளைச் சுரும்புபடு பல் மலர் திறந்து மோந்தன்ன – பெரிய பல குவளை வண்டுகளுக்கு மலர்கின்ற பல மலர்களைத் திறந்து மோந்தாற்போல், சிறந்து கமழ் நாற்றத்து – சிறந்த கமழும் நறுமணத்துடன், கொண்டல் மலர்ப் புதல் மானப் பூ வேய்ந்து – மழைக்கு மலர்ந்த மலரையுடைய சிறு புதர் போன்ற மலர்களையும் அணிந்து (கொண்டல் – ஆகுபெயர் முகிலுக்கு, மான – உவமை உருபு), நுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி – தம்மைப் புணர்வோரின் நுண்ணிய அணிகலன்களையுடைய மார்பை தம் மார்பில் வடுபடும்படி தழுவி, மாயப்பொய் பல கூட்டி – மயக்கும் பொய்களையும் கூறி, கவவுக் கரந்து – முயக்கத்தை அவர்கள் பொருள் தரும் வரை மறைத்து, சேயரும் நணியரும்  நலன் நயந்து வந்த இளம்பல் செல்வர் வளம் தப வாங்கி – தொலைவிலிருந்தும் அருகிலிருந்தும் தங்கள் அழகை விரும்பி வந்த இளைஞர்களாகிய பல செல்வங்களையுடைய ஆண்களிடம் அவருடைய செல்வம் கெடுமாறு கவர்ந்து, நுண் தாது உண்டு வறும் பூத் துறக்கும் மென் சிறை வண்டினம் மான – பூ மலரும் பொழுதை அறிந்து அதன் நுண்ணியத் தாதினை உண்டு பின்னர்த் தாது இல்லாத அப்பூவினை துறக்கும் மெல்லிய சிறகையுடைய வண்டினம் போல (மான – உவம உருபு), புணர்ந்தோர் நெஞ்சு ஏமாப்ப – தம்மை புணந்தவர்களின் நெஞ்சு கலக்கமுறும்படி அவர்களைக் கைவிட்டு, இன்துயில் துறந்து – அவர்களுடன் இணைவதை நீக்கி (இன்துயில் – இடக்கரடக்கல்), பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல – பழத்தையுடைய மரத்தைத் தேடிச் சென்று அவற்றின் பழத்தை ஆராய்ந்து கவரும் பறவைகளைப் போன்று, கொழுங்குடிச் செல்வரும் பிறரும் மேஎய மணம் புணர்ந்து ஓங்கிய அணங்குடை நல் இல் – செல்வக்குடியில் பிறந்த செல்வரும் பிறரும் தரும் பொருந்திய புதிய மணம் நிகழ்ந்ததால் உயர்ச்சி பெற்றனவும் இல்லத்தில் உறையும் கடவுள்களையுடைய நல்ல இல்லங்களில் சென்று (மேஎய – அளபெடை), ஆய் பொன் அவிர் தொடிப் பாசிழை மகளிர் – அழகிய/ஆராய்ந்த பொன்னால் செய்த விளங்குகின்ற வளையல்களையும் புதிய அணிகலன்களையும் அணிந்த பெண்கள், ஒண் சுடர் விளக்கத்துப் பலர் உடன் துவன்றி – ஒளியுடைய சுடரின் ஒளியில் பலரும் ஒருசேர நெருங்கி, நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும் வானவமகளிர் மான – நீல நிறமுடைய வானின்கண் நெஞ்சமர்ந்து விளையாடும் மகளிர் போன்று (மான – உவம உருபு, நீல் – கடைக்குறை), கண்டோர் நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர் – தம்மைக் கண்டவர்களின் நெஞ்சை வருத்தி அவர்களிடம் பொருட்களை வாங்கும் கொள்ளையடிக்கும் மகளிர் (நடுக்குறூஉ – அளபெடை), யாம நல் யாழ் நாப்பண் நின்ற முழவின் மகிழ்ந்தனர் ஆடி – முதல் யாமத்தில் நல்ல யாழ்களுக்கு நடுவில் அவற்றின் இசையோடு இயைந்த முழவின் ஓசைக்கு ஏற்ப ஆடி, குண்டு நீர்ப் பனித்துறைக் குவவு மணல் முனைஇ – ஆழ்ந்த நீரையுடைய குளிர்ந்த துறையின் குவிந்த மணலில் ஆடி அதன் பின் அதை வெறுத்து (முனைஇ – அளபெடை), மென் தளிர்க் கொழுங் கொம்பு கொழுதி – மெல்லிய தளிர்களை அடர்ந்த கிளைகளிலிருந்து கொய்து, நீர்நனை மேவர நெடுந்தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி – நீர்க்கீழ் அரும்புடன் பொருந்துதல் வரத் தொடுத்த மாலையுடைய குவளை மலரை கால் விளிம்பில் படும்படி அணிந்து, மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயர – மணங்கமழும் இல்லம்தோறும் பொய்தல் விளையாட்டைச் செய்ய

ஓண நாள் விழாவில் மறவர் மகிழ்ந்து திரிதல்

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்   590

மாயோன் மேய ஓண நன்னாள்
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப்படு நெற்றி   595

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதரக்,  (590 – 599)

பொருளுரை:   குழுமிய அவுணர்களைக் கொன்ற, பொன்னால் செய்த மாலையினையுடைய திருமால் உலகில் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில், யானைத் தோட்டி வெட்டின ஆழ்ந்த வடுவுடைய முகத்தினையும், போர்க்கருவிகளைப் பயில்தலால் தேய்ந்து தழும்புபட்ட போரைத் தாங்கும் பெரிய கையினையும், மறத்தை தம்மிடம் கொண்ட மறவர்கள் வாழும் தெருக்கள் தம்மில் மாறுபட்டு செய்த போரின்கண், அடி மாறாமையால் அடைந்த தழும்பினையுடைய நெற்றியினை உடைய, வண்டுகள் நிறைந்த மலர்ச் சரத்தை அணிந்த, போரை விரும்பும் மறவர்கள் கடிய களிற்று யானைகளைச் செலுத்துவதால், அதைக் காண்பவர்கள் அங்குள்ள மக்கள் மேல் யானைகள் வராமல் இருக்க இட்ட நீண்ட கரையாகிய கரிய இடத்தில் பரல் கற்கள் கால்களை உறுத்த, கடிய கள்ளின் தெளிவை உண்டு மிகுந்த திரிதலைச் செய்ய,   

குறிப்பு:  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24). பொலம் (590) – பொன்.  பொன்னென் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடரியலான (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 61). 

சொற்பொருள்:  கணம் கொள் அவுணர்க் கடந்த – குழுமிய அவுணர்களைக் கொன்ற (அவுணர் – அசுரர்), பொலந்தார் மாயோன் மேய ஓண நன்னாள் – பொன்னால் செய்த மாலையினையுடைய திருமால் உலகில் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில், கோணம் தின்ற வடு ஆழ் முகத்த – யானைத் தோட்டி வெட்டின ஆழ்ந்த வடுவுடைய முகத்தை உடையவர்களும், சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை – போர்க்கருவிகளைப் பயில்தலால் தேய்ந்து தழும்புபட்ட போரைத் தாங்கும் பெரிய கையினையும் (சாணம் – தழும்பு), மறம் கொள் சேரி மாறு பொரு செருவில் – மறத்தை தம்மிடம் கொண்ட மறவர்கள் வாழும் தெருக்கள் தம்மில் மாறுபட்டு செய்த போரின்கண், மாறாது உற்ற வடுப்படு நெற்றி  – அடி மாறாமையால் அடைந்த தழும்பினையுடைய நெற்றியினை உடைய, சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர் கடுங்களிறு ஓட்டலின் – வண்டுகள் நிறைந்த மலர்ச் சரத்தை அணிந்த போரை விரும்பும் மறவர்கள் கடிய களிற்று யானைகளைச் செலுத்துவதால், காணுநர் இட்ட நெடுங்கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப – காண்பவர்கள் அங்கு மக்கள் மேல் யானைகள் வராமல் இருக்க இட்ட நீண்ட கரையாகிய கரிய இடத்தில் பரல் கற்கள் உறுத்த (காழகம் – கரிய நிலம்), கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர – கடிய கள்ளின் தெளிவை உண்டு மிகுந்த திரிதலைச் செய்ய 

புதல்வர்களை ஈன்ற மகளிர் நீராடுதல்

கணவர் உவப்பப் புதல்வர்ப் பயந்து,   600

பணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊறப்
புலவுப் புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு,
வளமனை மகளிர் குளநீர் அயர,  (600 – 603)

பொருளுரை:  தங்கள் கணவர்மார் மகிழும்படி பிள்ளைகளைப் பெற்று, பெரிதாகிய (பாலால்) உயர்ந்த இளமுலையில் பால் சுரக்க, புலால் நாற்றத்தையுடைய ஈன்ற அணிமை தீர்ந்து, தம் பொலிவுற்ற உறவினர்களுடன் வளமான செல்வம் மிகுந்த குடியின் மகளிர் குளத்தில் நீராட,

குறிப்பு:  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே, தொல்காப்பியம் உரியியல் 79.

சொற்பொருள்:  கணவர் உவப்பப் புதல்வர்ப் பயந்து – தங்கள் கணவர்கள் மகிழும்படி பிள்ளைகளைப் பெற்று, பணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊற – பெரிதாகிய (பாலால்) உயர்ந்த இளமுலையில் பால் சுரக்க, புலவுப் புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு – புலால் நாற்றத்தையுடைய ஈன்ற அணிமை தீர்ந்து தம் பொலிவுற்ற உறவினர்களுடன், வள மனை மகளிர் குள நீர் அயர – வளமான செல்வம் மிகுந்த குடியின் மகளிர் குளத்து நீரில் நீராட, 

சூல்மகளிர் கடவுளுக்கு மடை கொடுத்தல்

திவவு மெய்ந்நிறுத்துச் செவ்வழி பண்ணிக்
குரல் புணர் நல்யாழ் முழவோடு ஒன்றி,   605

நுண்நீர் ஆகுளி இரட்டப் பலவுடன்
ஒண் சுடர் விளக்கம் முந்துற மடையொடு,
நல்மா மயிலின் மென்மெல இயலிக்
கடுஞ்சூல் மகளிர் பேணிக் கைதொழுது,
பெருந்தோட் சாலினி மடுப்ப,  (604 – 610)

பொருளுரை:  வார்க்கட்டினை யாழ் தண்டில் கட்டிச் செவ்வழிப் பண்ணை வாசித்து, ‘குரல்’ என்னும் நரம்பு கூடின நல்ல யாழுடன் முழவும் பொருந்தி, மெல்லிய தன்மையுடைய ஆகுளி என்னும் சிறு பறை ஒலிப்ப, பூசைக்கு உரிய பல பொருட்களுடன் ஒளியுடைய சுடரையுடைய நெய்விளக்கு முற்பட, பாற்சோறு முதலியவற்றுடன், நல்ல பெருமையுடைய மயில்போல் நடந்து, முதற்சூல் கொண்ட பெண்கள் கடவுளை வணங்கித் தொழுது, பெரிய தோளினையுடைய தேவராட்டியால் தம் வழிபடும் கடனைச் செலுத்த,

குறிப்பு:  மெய்ந்நிறுத்து (604) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மெய் நிறுத்தலாவது அதனைச் செறித்துப் பண்ணமைத்தல்.  சாலினி (610) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேவராட்டி, தெய்வம் ஏறி ஆடும் மகள்.

சொற்பொருள்:  திவவு மெய்ந்நிறுத்துச் செவ்வழி பண்ணி – வார்க்கட்டினை யாழ் தண்டில் கட்டிச் செவ்வழிப் பண்ணை வாசித்து (திவவு – வார்க்கட்டு), குரல் புணர் நல்யாழ் முழவோடு ஒன்றி – குரல் என்னும் நரம்பு கூடின நல்ல யாழுடன் முழவும் பொருந்தி, நுண்நீர் ஆகுளி இரட்ட – மெல்லிய தன்மையுடைய ஆகுளி என்னும் சிறு பறை ஒலிப்ப, பலவுடன் ஒண் சுடர் விளக்கம் முந்துற – பூசைக்கு உரிய பல பொருட்களுடன் ஒளியுடைய சுடரையுடைய நெய்விளக்கு முற்பட, மடையொடு – பாற்சோறு முதலியவற்றுடன், நல்மா மயிலின் மென்மெல இயலி – நல்ல பெருமையுடைய மயில்போல் நடந்து (மயிலின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), கடுஞ்சூல் மகளிர் பேணி கைதொழுது – முதற்சூல் கொண்ட பெண்கள் கடவுளை வணங்கித் தொழுது, பெருந்தோட் சாலினி மடுப்ப – பெரிய தோளினையுடைய தேவராட்டியால் தம் வழிபடும் கடனைச் செலுத்த

வேலன் வழிபாடும் குரவைக் கூத்தும்

………………………………………… ஒரு சார்,
அருங்கடி வேலன் முருகொடு வளைஇ,
அரிக்கூடு இன் இயம் கறங்க நேர் நிறுத்துக்,
கார் மலர்க் குறிஞ்சி சூடி கடம்பின்
சீர் மிகு நெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ
மன்றுதொறும் நின்ற குரவை, (610 – 615)

பொருளுரை:  ஒரு பக்கத்தில் அரிய அச்சத்தைச் செய்யும் வேலன் இத் துன்பம் முருகனால் வந்தது என்று கேட்பவர்களை வளைத்துக் கொண்டு அரித்து ஒலிக்கும் இனிய இசைக்கருவிகள் முழங்க, முருகனை முன்னிலையாக வைத்து, கார்காலத்தின் குறிஞ்சி மலர்களைச் சூடி, கடம்ப மரத்தில் உறையும் புகழ்மிக்க முருகனை வழிபட்டு, மகளிர் தம்முள் தழுவிக் கைகோத்து மன்றங்கள்தோறும் குரவைக் கூத்து ஆட,

குறிப்பு:  கடம்பின் சீர் மிகு நெடுவேள் கார் மலர்க் குறிஞ்சி சூடி (613-614) – நச்சினார்க்கினியர் உரை – கார்காலத்தான் மலரையுடையவாகிய குறிஞ்சியைச் சூடி கடம்பு சூடுதலால் அழகு மிகுகின்ற முருகனைச் செவ்விதாகத் தன் மெய்க்கண்ணே நிறுத்தி வழிபடுகையினாலே, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார்காலத்தான் மலர்தலையுடைய குறிஞ்சிப் பூவினைச் சூடிக் கடப்ப மரத்தின்கண்ணே புகழ்மிக்க செவ்வேளாகிய முருகனை வழிபடுதலாலே.  அருங்கடி (611) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டு அச்சம்.  என்னை?  கடியென் கிளவி வரைவே கூர்மை  காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்றாயீரைந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டாகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87).  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார்வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.

சொற்பொருள்:  ஒரு சார் – ஒரு பக்கத்தில், அருங்கடி வேலன் முருகொடு வளைஇ – அரிய அச்சத்தைச் செய்யும் வேலன் இத் துன்பம் முருகனால் வந்தது என்று கேட்பவர்களை வளைத்துக் கொண்டு (வளைஇ- அளபெடை), அரிக்கூடு இன்இயம் கறங்க – அரித்து ஒலிக்கும் இனிய இசைக்கருவிகள் முழங்க, நேர் நிறுத்து – முருகனை முன்னிலையாக வைத்து, கார் மலர்க் குறிஞ்சி சூடி – கார்காலத்தின் குறிஞ்சி மலர்களைச் சூடி, கடம்பின் சீர் மிகு நெடுவேள் பேணி – கடம்ப மரத்தில் உறையும் புகழ்மிக்க முருகனை வழிபட்டு (கடம்பு அமர் நெடுவேள் – பெரும்பாணாற்றுப்படை 75), தழூஉப் பிணையூஉ மன்றுதொறும் நின்ற குரவை – மகளிர் தம்முள் தழுவிக் கைகோத்து மன்றங்கள்தோறும் குரவைக் கூத்து ஆட (தழூஉ – அளபெடை, பிணையூஉ – அளபெடை)

இரவின் முதற்சாம நிகழ்ச்சிகள் முடிவு பெறுதல்

…………………………………………சேரிதொறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ,
வேறு வேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி,
பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாள்
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு
முந்தை யாமம் சென்ற பின்றைப்,  (615 – 620)

பொருளுரை:  குடியிருப்புகள் தோறும், உரைகளும் பாட்டுக்களும் கூத்துக்களும் கலந்து, வெவ்வேறு ஒலிகள் ஒழுங்கு கொண்டு கலந்து, பெரும்புகழ் பெற்ற நன்னனின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்ற குடியிருப்புகளில் உள்ளவர்கள் விழாக்களில் உள்ள ஆரவாரம் போன்று, இரவின் முற்பட்ட யாமம் சென்ற பின்னர்,

குறிப்பு:  கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  பெரும்பெயர் (618) – நல்ல நாள், பிறந்த நாள்.

சொற்பொருள்:  சேரிதொறும் – குடியிருப்புகள் தோறும், உரையும் பாட்டும் ஆட்டும் – உரைகளும் பாட்டுக்களும் கூத்துக்களும், விரைஇ – கலந்து, வேறு வேறு கம்பலை – வெவ்வேறு ஒலிகள் (விரைஇ – அளபெடை), வெறிகொள்பு – ஒழுங்கு கொண்டு, மயங்கி – கலந்து, பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாள் – பெரும்புகழ் பெற்ற நன்னனின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்ற, சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு – குடியிருப்புகளில் உள்ளவர்கள் விழாக்களில் உள்ள ஆரவாரம் போன்று, முந்தை யாமம் சென்ற பின்றை – இரவின் முற்பட்ட யாமம் சென்ற பின்னர்,

இரண்டாம் சாமத்தில் நகரின் நிலை

பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து,
நொடை நவில் நெடுங்கடை அடைத்து மடமதர்
ஒள்ளிழை மகளிர் பள்ளி அயர,
நல்வரி இறாஅல் புரையும் மெல் அடை
அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம்   625

கவவொடு பிடித்த வகை அமை மோதகம்
தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க,
விழவின் ஆடும் வயிரியர் மடிய,
பாடு ஆன்று அவிந்த பனிக்கடல் புரைய,
பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப,   630

பானாள் கொண்ட கங்குல் இடையது;  (621 – 631)

பொருளுரை:  சங்குகளின் ஆரவாரம் அடங்கிக் கிடக்க, சட்டக்காலை சாய்த்துப் பண்டங்களுக்கு விலை கூறி விற்கும் நெடிய கடையை அடைத்து, மடப்பத்தையும் செருக்கையும் கொண்ட ஒளியுடைய அணிகலன் அணிந்த மகளிர் படுக்கையில் துயில, நல்ல வரிகளையுடைய தேனிறாலை ஒக்கும் மெல்லிய அடையினையும் கற்கண்டை வெப்பம் ஏற்றி சமைத்த பாகினைக் கூட்டிய தேங்காயும் பருப்புமாகிய உள்ளீட்டுடன் பிடித்த வகை அமைந்த மோதகத்தையும், இனிய பாகுடன் செய்த அப்பத்தையும் விற்பவர்களும் உறங்க, திருவிழாக்களில் ஆடும் கூத்தர்கள் துயில் கொள்ள, ஒலி நிறைந்து அடங்கின குளிர்ந்த கடலை ஒத்த, படுக்கையில் துயில் கொள்ளுபவர்கள் இனிது உறங்க, இரவின் பாதியாகிய இடை யாமத்தில்,

குறிப்பு:  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 51).

சொற்பொருள்:  பணிலம் கலி அவிந்து அடங்க – சங்குகள் ஆரவாரம் அடங்கிக் கிடக்க, காழ் சாய்த்து நொடை நவில் நெடுங்கடை அடைத்து – சட்டக்காலை சாய்த்துப் பண்டங்களுக்கு விலை கூறி விற்கும் நெடிய கடையை அடைத்து, மடமதர் ஒள் இழை மகளிர் – மடப்பத்தையும் செருக்கையும் கொண்ட ஒளியுடைய அணிகலன் அணிந்த மகளிர், பள்ளி அயர – படுக்கையில் துயில, நல்வரி இறாஅல் புரையும் மெல் அடை – நல்ல வரிகளையுடைய தேனிறாலை ஒக்கும் மெல்லிய அடையினையும் (இறாஅல் – அளபெடை, தேனிறாலை – தேன்கூட்டை, புரை – உவம உருபு), அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம் கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – கற்கண்டை வெப்பம் ஏற்றி சமைத்த பாகினைக் கூட்டிய தேங்காயும் பருப்புமாகிய உள்ளீட்டுடன் பிடித்த வகை அமைந்த மோதகமும் (நச்சினார்க்கினியர் உரை – இதன் முன் கூட்டிப் பாகிலே சமைத்த அடை), தீஞ்சேற்றுக் கூவியர் – இனிய பாகுடன் செய்த அப்பம் விற்பவர்களும், தூங்குவனர் உறங்க – உறங்க (தூங்குவனர் உறங்க – ஒருபொருட் பன்மொழி), விழவின் ஆடும் வயிரியர் மடிய – திருவிழாக்களில் ஆடும் கூத்தர்கள் துயில் கொள்ள, பாடு ஆன்று அவிந்த பனிக்கடல் புரைய – ஒலி நிறைந்து அடங்கின குளிர்ந்த கடலை ஒத்த (புரை – உவம உருபு), பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப – படுக்கையில் துயில் கொள்ளுபவர்கள் இனிது உறங்க, பானாள் கொண்ட கங்குல் இடையது – இரவின் பாதியாகிய இடை யாமத்தில்,

மூன்றாம் சாம நிகழ்ச்சிகள்

பேயும் அணங்கும் உருவு கொண்டு, ஆய்கோல்
கூற்றக் கொல் தேர் கழுதொடு கொட்ப,
இரும்பிடி மேஎந்தோல் அன்ன இருள் சேர்பு
கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத்   635
தொடலை வாளர் தொடுதோல் அடியர்,
குறங்கிடைப் பதித்த கூர் நுனைக் குறும்பிடி
சிறந்த கருமை நுண் வினை நுணங்கு அறல்
நிறம் கவர்பு புனைந்த நீலக் கச்சினர்,
மென் நூல் ஏணிப் பல்மாண் சுற்றினர்   640

நிலன் அகழ் உளியர் கலன் நசைஇக் கொட்கும்
கண்மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி,
வயக் களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த   645

நூல்வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி
ஊர் காப்பாளர் ஊக்க அருங்கணையினர்,
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக
மழை அமைந்து உற்ற அரை நாள் அமயமும்
அசைவிலர் எழுந்து நயம் வந்து வழங்கலின்,   650

கடவுள் வழங்கும் கையறு கங்குலும்
அச்சம் அறியா ஏமம் ஆகிய
மற்றை யாமம் பகல் உறக் கழிப்பிப்,  (632 – 653)

பொருளுரை:  பேய்களும், வருத்தும் கடவுள்களும், கண்களால் காணத்தக்க உருவங்கொண்டு, உயிர்களின் வாழ்நாட்களை ஆயும் செங்கோன்மையுடைய கூற்றுவனும், கொலை செய்ய ஊரும் தேராகிய கழுதுகளுடன் (பேய்களுடன்), கரிய பிடி யானையின்கண் பொருந்திய தோலை ஒத்த கருமையான இருளிடத்தில் சேர்ந்து, கற்களையும் மரங்களையும் வெட்டும் கூர்மையான தொங்கிய வாளை உடையவர்கள், செருப்பினை அணிந்தவர்களாக, தொடையில் பதிந்து கிடக்கும்படி அழுத்தின கூரிய முனையையும் கைப்பிடியையும் உடைய வாளையும், மிக்க கருமையுடைய நுணுக்கமாகச் செய்த, நுண்ணிய கருமணலின் நிறத்தை எடுத்துச் செய்தாற்போன்ற நிறம் அமைந்த நீலநிறக் கச்சினை உடையவராய், மெல்லிய நூலால் செய்த ஏணியை மாட்சிமையுடன் இடுப்பில் சுற்றினவராய், நிலத்தைக் தோண்டும் உளியினை உடையவராய், அணிகலன்களை விரும்பி அவற்றைத் திருடுவதற்கு இடம் பார்த்து சுழன்று திரியும் விழித்த கண் இமைக்கும் அளவிலே மறையும் கள்வர்கள் ஒடுங்கி இருக்கும் இடங்களை அவர்கள் அறியாதவாறு ஒற்றுதல் செய்து, வலிய களிற்று யானையை இரையாக எண்ணிப் பார்க்கும் வலிய புலியைப் போல், துஞ்சாத கண்களை உடையவர்களாக, அச்சம் இல்லாத கொள்கை உடையவர்களாக, களவுத் தொழிலை அறிந்தவர்கள் புகழ்ந்த ஆண்மை உடையவர்களாக, பொருள் செறிவினையுடைய நூலின் வழியாகப் பிழையாத மிக நுண்ணியதாக ஆராய்ச்சியால் தெளிந்தவர்களாக உள்ள ஊர்க் காவல் புரிபவர்கள், தப்ப எண்ணுபவர்களுக்குத் தப்புவதற்கு அரிய அம்பினை உடையவர்களாக, தேர்கள் இயங்கும் தெருவில், நீர் திரண்டு ஒழுகும்படி மழை மிகப் பெய்த இரவின் நடுப்பொழுதிலும், மடிவு (தளர்ச்சி) இல்லாதவர்களாக விருப்பத்துடன் உலவுவதனாலே, கடவுள்கள் உலவும் செயலற்ற இருளிடத்தும், அச்சம் அறியாது காவலாகிய, முந்தைய யாமத்தை அடுத்து வந்த யாமத்தையும் பகுத்தல் உண்டாகப் போக்கி, 

குறிப்பு:  அகநானூறு 3 – முதலை மேஎந்தோல் அன்ன.  தேர் வழங்கு தெரு:  அகநானூறு 16 – தேர் வழங்கு தெருவில், நற்றிணை 227 – தேர் வழங்கு தெருவின், மதுரைக்காஞ்சி 648 – தேர் வழங்கு தெருவில்.  C. ஜெகந்நாதாசார்யர் உரை – அடியர், கச்சினர், சுற்றினர், உளியர், வாளர் என்ற வினைக்குறிப்பு முற்றுக்கள் வினையெச்சப்பொருட்டாய், செருப்பைத் தொட்டுக், கச்சைக்கட்டி, நூலேணியைச் சுற்றி, உளியை எடுத்து, வாளைப் பிடித்து என வந்து நிற்குமாறு காண்க.  இங்ஙனம் நிற்குமாறு ‘முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே’ (தொல்காப்பியம், எச்சவியல் 63) என்பதனால் உணர்க.  மற்றை என்னும் ஐகார ஈற்று இடைச்சொல் முந்தைய யாமம் என முன்னர்ச் சுட்டப்பட்டதனையொழித்து அதனினங்குறித்து நின்றது –  ‘மற்றையது என்னும் கிளவிதானே சுட்டு நிலை ஒழிய இனம் குறித்தன்றே’ (தொல்காப்பியம் இடையியல் 16).  சிறந்த கருமை நுண் வினை நுணங்கு அறல் நிறம் கவர்பு புனைந்த நீலக் கச்சினர் (638-639) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மிக்க கருமையுடையமையால் நுணுகிய தொழிற்திறமையாலே நுண்ணிய கருமணலின்கண் நிறத்தை வாங்கி இயற்றினாற் போன்ற நிறம் அமைந்த நீலநிறக் கச்சினையுடையவராய், C. ஜெகந்நாதாசார்யர் உரை – மிக்க கருமையினையுடைய நுண்ணிய தொழில்களையுடைய நுண்மை தன்னிடத்தே பற்றுதலுடைய ஆடையை பல நிறங்களைத் தன்னிடத்தே கைக்கொண்டு கையால் செய்யப்பட்ட நீல நிறத்தையுடைய கச்சினையுடையவராய், நச்சினார்க்கினியர் உரை – மிக்க கருமையினையுடைய நுண்ணிய தொழில்களையுடைய நுண்மை தன்னிடத்தே பற்றுதலையுடையது என்றது இறைமுடிந்த சேலை என்றவாறு; ஆகுபெயர்.

சொற்பொருள்:  பேயும் அணங்கும் உருவு கொண்டு – பேய்களும் வருத்தும் கடவுள்களும் கண்களால் காணத்தக்க உருவங்கொண்டு, ஆய் கோல் கூற்றக் கொல் தேர் கழுதொடு கொட்ப – உயிர்களின் வாழ்நாட்களை ஆயும் செங்கோன்மையுடைய கூற்றுவனும் கொலை செய்ய ஊரும் தேராகிய கழுதுகளுடன் (பேய்களுடன்), இரும்பிடி மேஎம் தோல் அன்ன இருள் சேர்பு – கரிய பிடி யானையின்கண் பொருந்திய தோலை ஒத்த கருமையான இருளிடத்தில் சேர்ந்து (மேஎம் தோல் – பொருந்திய தோல், மேல் தோல், மேஎம் – அளபெடை), கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத் தொடலை வாளர் – கற்களையும் மரங்களையும் வெட்டும் கூர்மையான தொங்கிய வாளை உடையவர்கள் (மரன் – மரம் என்பதன் போலி), தொடுதோல் அடியர் – செருப்புகளை அணிந்தவர்களாக, குறங்கிடைப் பதித்த கூர் நுனைக் குறும்பிடி – தொடையில் பதிந்து கிடக்கும்படி அழுத்தின கூரிய முனையை உடைய பிடியுடைய வாளையும், சிறந்த கருமை நுண்வினை நுணங்கு அறல் நிறம் கவர்பு புனைந்த நீலக் கச்சினர் – மிக்க கருமையுடைய நுணுக்கமாகச் செய்த, நுண்ணிய கருமணலின் நிறத்தை எடுத்துச் செய்தாற்போன்ற நிறம் அமைந்த நீலநிறக் கச்சினை உடையவராய், மென் நூல் ஏணிப் பல்மாண் சுற்றினர் – மெல்லிய நூலால் செய்த ஏணியை மாட்சிமையுடன் இடுப்பில் சுற்றினவராய்,  நிலன் அகழ் உளியர் – நிலத்தைக் தோண்டும் உளியினை உடையவராய் (நிலன் – நிலம் என்பதன் போலி), கலன் நசைஇக் கொட்கும் கண்மாறு ஆடவர் – அணிகலன்களை விரும்பி அவற்றைத் திருடுவதற்கு இடம் பார்த்து சுழன்று திரியும் விழித்த கண் இமைக்கும் அளவிலே மறையும் கள்வர்கள் (நசைஇ – அளபெடை), ஒடுக்கம் ஒற்றி – ஒடுங்கி இருக்கும் இடங்களை அவர்கள் அறியாதவாறு ஒற்றுதல் செய்து, வயக் களிறு பார்க்கும் வயப்புலி போல – வலிய களிற்று யானையை இரையாக எண்ணிப் பார்க்கும் வலிய புலியைப் போல், துஞ்சாக் கண்ணர் – துஞ்சாத கண்களை உடையவர்களாக, அஞ்சாக் கொள்கையர் – அச்சம் இல்லாத கொள்கை உடையவர்களாக, அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் – களவுத் தொழிலை அறிந்தவர்கள் புகழ்ந்த ஆண்மையை உடையவராய், செறிந்த நூல்வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி – பொருள் செறிவினையுடைய நூலின் வழியாகப் பிழையாத மிக நுண்ணியதாக ஆராய்ச்சியால் தெளிந்தவர்களாய் (பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்), ஊர் காப்பாளர் – ஊர்க் காவல் புரிபவர்கள், ஊக்க அருங்கணையினர் – தப்ப எண்ணுபவர்களுக்குத் தப்புவதற்கு அரிய அம்பினை உடையவர்களாய், தேர் வழங்கு தெருவில் – தேர்கள் இயங்கும் தெருவில், நீர் திரண்டு ஒழுக – நீர் திரண்டு ஒழுகும்படி, மழை அமைந்து உற்ற அரை நாள் அமயமும் – மழை மிகப் பெய்த இரவின் நடுப்பொழுதிலும், அசைவிலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் – மடிவு இல்லாதவர்களாக விருப்பத்துடன் உலவுவதனாலே (வழங்கலின் – இன் ஏதுப்பொருளது), கடவுள் வழங்கும் கையறு கங்குலும் – கடவுள்கள் உலவும் செயலற்ற இருளிடத்தும், அச்சம் அறியா ஏமம் ஆகிய – அச்சம் அறியாது காவலாகிய, மற்றை யாமம் பகல் உறக் கழிப்பி – முந்தைய யாமத்தை அடுத்து வந்த யாமத்தையும் பகுத்தல் உண்டாகப் போக்கி

விடியற்காலத்தில் மதுரை மாநகர்

போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கைத்
தாது உண் தும்பி போது முரன்றாங்கு,   655

ஓதல் அந்தணர் வேதம் பாட,
சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி,
யாழோர் மருதம் பண்ண காழோர்
கடுங்களிறு கவளம் கைப்ப நெடுந்தேர்ப்
பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்டப்   660

பல்வேறு பண்ணியக் கடை மெழுக்கு உறுப்பக்,
கள்ளோர் களி நொடை நுவல, இல்லோர்
நயந்த காதலர் கவவுப் பிணித் துஞ்சி
புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பிக்
கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய,   665
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி
திண் சுவர் நல் இல் கதவம் கரைய,
உண்டு மகிழ் தட்ட மழலை நாவின்
பழஞ் செருக்காளர் தழங்கு குரல் தோன்றச்
சூதர் வாழ்த்த மாகதர் நுவல,   670

வேதாளிகரொடு நாழிகை இசைப்ப,
இமிழ் முரசு இரங்க ஏறு மாறு சிலைப்ப,
பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப,
யானையங்குருகின் சேவலொடு காமர்
அன்னம் கரைய அணி மயில் அகவ,   675
பிடி புணர் பெருங்களிறு முழங்க முழுவலிக்
கூட்டு உறை வயமாப் புலியொடு குழும,
வானம் நீங்கிய நீல் நிற விசும்பின்
மின்னு நிமிர்ந்த அனையர் ஆகி நறவு மகிழ்ந்து
மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த   680

பரூஉக் காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு,
பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கு என்ன
அம்மென் குரும்பைக் காய் படுபு பிறவும்
தருமணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப,
மென் பூஞ்செம்மலொடு நன்கலம் சீப்ப,   685
இரவுத் தலைப்பெயரும் ஏம வைகறை;  (654 – 686)

பொருளுரை:  பூக்கள் தளை (கட்டு, பிணிதல்) அவிழ்ந்த மணம் கமழ்தலையுடைய நறுமணமுடைய பொய்கைகளில் தாதை உண்ணும் தும்பிகள் பூக்களில் பாடினாற்போன்று, ஓதுதல் புரியும் அந்தணர்கள் வேதம் பாட, தாளத்தை இனிமையாக உட்கொண்டு யாழின் நரம்பை இனிதாக மீட்டி, யாழ் வாசிப்பவர்கள் மருதப் பண்ணை இசைக்க, கையில் கோலையுடைய யானைப் பாகர்கள் கடிய களிற்று யானைக்குக் கவளம் ஊட்ட, நெடிய தேரில் கட்டப்படும் பணையில் உள்ள குதிரைகள் புல்லை உண்டு கனைக்க,

பல்வேறு பண்டங்கள் விற்கும் கடைகளில் தரையை மெழுகுதலைச் செய்ய, கள்ளை விற்பவர்கள் களிப்பைத் தரும் கள்ளிற்கு விலைக்கூற, இல்லத்தில் உள்ள பெண்கள் தாங்கள் விரும்பின தங்கள் கணவர்களின் அணைப்பில் துயில் கொண்டு, இருள் மாய்ந்து கதிரவனின் கதிர்கள் விரிகின்ற விடியற் காலையில் இல்லத்தில் செய்ய வேண்டியவற்றைச் செய்வதற்கு விரும்பி, கண்களை வெறியோடப் பண்ணும் விளங்கும் மின்னல் கொடியை ஒப்ப ஒளியுடைய பொன்னால் செய்த விளங்கும் சிலம்பு முதலியவை ஒலிக்க நடந்து, வலிய சுவர் உடைய நல்ல இல்லங்களில் கதவுகளைத் திறப்பதால் ஒலி எழ, நாவின் பழஞ் செருக்காளர் கள்ளை உண்டு களிப்பினை தம்மிடத்தில் தடுத்துக் கொண்ட மழலைச் சொற்களை உடைய பழைய களிப்பினை உடையவர்களின் முழுங்கும் குரல் கேட்ப,  நின்று ஏத்துபவர்கள் வாழ்த்த, அமர்ந்து இருப்போர் வாழ்த்த,

கூத்தர்களுடன் நாழிகை சொல்பவர் இன்ன நேரம் எனச் சொல்ல, முழங்கும் முரசு ஒலிக்க, ஏறுகள் தம்முள் மாறுபட்டு முழங்க, பொறியுடைய மயிரையுடைய கோழிச் சேவல் விடியற்காலத்தை அறிந்து கூவ, யானையங்குருகின் சேவலுடன் விருப்பத்தை உடைய அன்னச் சேவல்களும் தம் பெடையை அழைக்க, அழகிய மயில்கள் தங்கள் பெடையை அழைக்க, பிடியுடன் கூடின பெரிய களிற்று யானைகள் முழங்க, மிக்க வலிமையுடைய கூட்டில் உறைகின்ற கரடி முதலிய விலங்குகள் புலியுடன் முழங்க, முகில் நீங்கிய நீல நிற வானில் மின்னல் நிமிர்ந்தாற்போல் ஆகி, மதுவை உண்டு, மாட்சிமை உடைய அணிகலன்களை அணிந்த பெண்கள் தங்கள் கணவருடன் ஊடல் கொண்டு அறுத்த பருத்த வடத்தின் சொரிந்த முத்துக்களுடன், பொன்னை உருக்குகின்ற நெருப்புச் சிந்தின நிலத்தைப் போல, அழகிய மென்மையான இளைய பச்சைப் பாக்கு விழுந்து பிற மணிகளும் கிடப்ப, கொண்டு வந்து இட்ட மணல் உடைய முற்றத்தில் வண்டுகளும் ஞிமிறுகளும் ஆரவாரிக்க, மெல்லிய பூ வாடல்களுடன் நல்ல அணிகலன்களும் பொறுக்கிப் போகும்படி, இரவு செல்லும், ஏம வைகறை காவலாகிய விடியற்காலத்தில்,       

குறிப்பு:   நெடுநல்வாடை 93-94 – பணை நிலை முனைஇய பல் உளைப் புரவி புல் உணாத் தெவிட்டும்.  ஆரம் சொரிந்த முத்தமொடு பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன அம்மென் குரும்பைக் காய் படுபு பிறவும் (681-683) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வடத்தின்கண் முத்தும் பிற மணிகளும் பொன்சுடு நெருப்பு நிலத்தே சிந்திக் கிடந்தாற்போன்று சிதறி அவற்றோடு அழகிய மெல்லிய பச்சைப் பாக்கும் விழுந்து, ச. வே. சுப்பிரமணியன் உரை – அறுத்த மாலையிலிருந்து மணிகளும் முத்துக்களும் உதிர்ந்தன.  அக்காட்சி பொன்னைச் சுடும் நெருப்புச் சிந்தியத்தைப் போலும், அழகிய பச்சைப் பாக்கு உதிர்ந்ததைப் போலும் இருந்தது.  மின்னல் நிமிர்ந்தாற்போல்:  மின்னு நிமிர்ந்தன்ன – அகநானூறு 124, 158, நற்றிணை 51, புறநானூறு 57, மின்னு நிமிர்ந்தாங்கு – பெரும்பாணாற்றுப்படை 484,  மின்னு நிமிர்ந்தனைய – மதுரைக்காஞ்சி 679.  வேதாளிகரொடு (671) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரிக்கூத்து உட்பட்ட வேதாளிக்கூத்தினை ஆடுபவரோடு.  C. ஜெகந்நாதாசார்யர் உரை – ‘பாட’ முதல் ‘சீப்ப’ வரையுள்ள வினையெச்சங்கள் அடுக்கி ‘தலைப்பெயரும்’ என ஓர் முடிபு கொண்டன.  பொரா – பொருது (தாக்கி) என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:  போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கைத் தாது உண் தும்பி போது முரன்றாங்கு – பூக்கள் தளை (கட்டு, பிணிதல்) அவிழ்ந்த மணம் கமழ்தலையுடைய நறுமணமுடைய பொய்கைகளில் தாதை உண்ணும் தும்பிகள் பூக்களில் பாடினாற்போன்று, ஓதல் அந்தணர் வேதம் பாட – ஓதுதல் புரியும் அந்தணர்கள் வேதம் பாட, சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி – தாளத்தை இனிமையாக உட்கொண்டு யாழின் நரம்பை இனிதாக மீட்டி, யாழோர் மருதம் பண்ண – யாழ் வாசிப்பவர்கள் மருதப் பண்ணை இசைக்க, காழோர் கடுங்களிறு கவளம் கைப்ப – கையில் கோலையுடைய யானைப் பாகர்கள் கடிய களிற்று யானைக்குக் கவளம் ஊட்ட,  நெடுந்தேர்ப் பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட – நெடிய தேரில் கட்டப்படும் பணையில் உள்ள குதிரைகள் புல்லை உண்டு கனைக்க (உணா – உணவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது),

பல்வேறு பண்ணியக் கடை மெழுக்கு உறுப்ப – பல்வேறு பண்டங்கள் விற்கும் கடைகளில் மெழுகுதலைச் செய்ய (தரையை), கள்ளோர் களி நொடை நுவல – கள்ளை விற்பவர்கள் களிப்பைத் தரும் கள்ளிற்கு விலைக்கூற, இல்லோர் நயந்த காதலர் கவவுப் பிணித் துஞ்சி – இல்லத்தில் உள்ள பெண்கள் தாங்கள் விரும்பின தங்கள் கணவர்களின் அணைப்பில் துயில் கொண்டு, புலர்ந்து விரி விடியல் – இருள் மாய்ந்து கதிரவனின் கதிர்கள் விரிகின்ற விடியற் காலையில், எய்த விரும்பி – இல்லத்தில் செய்ய வேண்டியவற்றைச் செய்வதற்கு விரும்பி, கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய – கண்களை வெறியோடப் பண்ணும் விளங்கும் மின்னல் கொடியை ஒப்ப (புரை – உவம உருபு), ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி  – ஒளியுடைய பொன்னால் செய்த விளங்கும் சிலம்பு முதலியவை ஒலிக்க நடந்து, திண் சுவர் நல் இல் கதவம் கரைய – வலிய சுவர் உடைய நல்ல இல்லங்களில் கதவுகளைத் திறப்பதால் ஒலி எழ, உண்டு மகிழ் தட்ட மழலை நாவின் பழஞ் செருக்காளர் தழங்கு குரல் தோன்ற – கள்ளை உண்டு களிப்பினை தம்மிடத்தில் தடுத்துக் கொண்ட மழலைச் சொற்களை உடைய பழைய களிப்பினை உடையவர்களின் முழுங்கும் குரல் கேட்ப,  சூதர் வாழ்த்த –  நின்று ஏத்துபவர்கள் வாழ்த்த, மாகதர் நுவல – அமர்ந்து இருப்போர் வாழ்த்த,

வேதாளிகரொடு – கூத்தர்களுடன், நாழிகை இசைப்ப – நாழிகை சொல்பவர் இன்ன நேரம் எனச் சொல்ல, இமிழ் முரசு இரங்க – முழங்கும் முரசு ஒலிக்க, ஏறு மாறு சிலைப்ப – ஏறுகள் தம்முள் மாறுபட்டு முழங்க, பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப – பொறியுடைய மயிரையுடைய கோழிச் சேவல் விடியற்காலத்தை அறிந்து கூவ, யானையங்குருகின் சேவலொடு காமர் அன்னம் கரைய – யானையங்குருகின் சேவலுடன் விருப்பத்தை உடைய அன்னச் சேவல்களும் தம் பெடையை அழைக்க, அணி மயில் அகவ – அழகிய மயில்கள் தங்கள் பெடையை அழைக்க, பிடி புணர் பெருங்களிறு முழங்க – பிடியுடன் கூடின பெரிய களிற்று யானைகள் முழங்க, முழுவலிக் கூட்டு உறை வயமாப் புலியொடு குழும – மிக்க வலிமையுடைய கூட்டில் உறைகின்ற கரடி முதலிய விலங்குகள் புலியுடன் முழங்க, வானம் நீங்கிய நீல் நிற விசும்பின் – முகில் நீங்கிய நீல நிற வானில் (நீல் – கடைக்குறை), மின்னு நிமிர்ந்த அனையர் ஆகி – மின்னல் நிமிர்ந்தாற்போல் ஆகி, நறவு மகிழ்ந்து – மதுவை உண்டு (நறவு – ஐகாரம் கெட முற்று உகரம் பெற்று நறவு என்றாயிற்று), மாண் இழை மகளிர் புலந்தனர் – மாட்சிமை உடைய அணிகலன்களை அணிந்த பெண்கள் தங்கள் கணவருடன் ஊடல் கொண்டனர், பரிந்த பரூஉக் காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு – அறுத்த பருத்த வடத்தின் சொரிந்த முத்துக்களுடன் (பரூஉ – அளபெடை, காழ் ஆரம் – இருபெயரொட்டு), பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கு என்ன – பொன்னை உருக்குகின்ற நெருப்புச் சிந்தின நிலத்தைப் போல (என்ன – உவமப்பொருள் தரும் சொல்), அம்மென் குரும்பைக் காய் படுபு பிறவும் – அழகிய மென்மையான இளைய பச்சைப் பாக்கு விழுந்து பிற மணிகளும் கிடப்ப, தருமணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப – கொண்டு வந்து இட்ட மணல் உடைய முற்றத்தில் வண்டுகளும் ஞிமிறுகளும் ஆரவாரிக்க, மென் பூஞ்செம்மலொடு நன்கலம் சீப்ப – மெல்லிய பூ வாடல்களுடன் நல்ல அணிகலன்களும் பொறுக்கிப் போகும்படி, இரவுத் தலைப்பெயரும் – இரவு செல்லும், ஏம வைகறை – காவலாகிய விடியற்காலத்தில் (இரவுத் தலை – தகர ஒற்று விகாரம்)

மதுரையின் சிறப்பு

மைபடு பெருந் தோள் மழவர் ஓட்டி,
இடைப் புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை
பகைப் புலம் கவர்ந்த பாய் பரிப் புரவி
வேல் கோல் ஆக ஆள் செல நூறி,   690

காய் சின முன்பின் கடுங் கட்கூளியர்
ஊர்சுடு விளக்கின் தந்த ஆயமும்
நாடு உடை நல் எயில் அணங்குடைத் தோட்டி
நாள்தொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி,
நாள் தர வந்த விழுக்கலம் அனைத்தும்   695
கங்கை அம் பேர் யாறு கடற் படர்ந்தாங்கு
அளந்து கடை அறியா வளங்கெழு தாரமொடு,
புத்தேள் உலகம் கவினிக் காண்வர
மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரைச் (687 – 699)

பொருளுரை:  பெருந்தோளையுடைய பகை மறவரைக் கெடுத்து அவர்கள் விட்டுச் சென்ற போர்க்களத்தில் நின்ற நிமிர்ந்த தந்தத்தை உடைய யானைகளும், பகைவர்களின் நாடுகளிலிருந்து கொண்டு வந்த பாய்ந்து செல்லும் குதிரைகளும், தங்கள் கையில் உள்ள வேலை ஆநிரைகளை ஓட்டும் கோலாகக் கொண்டு ஆநிரையைக் காத்திருந்த வீரர்களை வெட்டி எரிகின்ற சினத்தையும் வலிமையையும் கொடூரத்தையும் உடைய மறவர்கள் பகைவர்களின் ஊர்களைச் சுடுகின்ற விளக்கில் கொண்டு வந்த பசுத்திரளும், நாட்டில் உள்ள நல்ல அரண்களில் (கோட்டையில்) உள்ள வருத்தத்தையுடைய கதவுகளும், நாள்தோறும் தமக்குச் செல்வம் மிகும்படி கையால் தொழுதும் வாழ்த்தியும் திறையாகக் கொண்டு வந்த சிறப்பான அணிகலன்களும், கங்கையாகிய அழகிய பெரிய ஆறு கடலை நோக்கிச் சென்றாற்போல, முடிவறிதல் இல்லாத அளக்க முடியாத செல்வம் பொருந்தின பொருட்களுடன், மேல் உலகத்தில் உள்ளவர்கள் காணும்படி அழகைப் பெற்று, மிகுந்த புகழை அடைந்த பெரிய சிறப்பையுடைய மதுரையில்,

குறிப்பு:  ஊர்சுடு விளக்கின் தந்த ஆயமும் (692) – பொ. வே. சோமசுந்தரனார் உரை  – வெட்சிப்போர் கூறிற்று.  என்னை?  வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக் களவின் ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும் (தொல்காப்பியம், புறத்திணையியல் 2).  பழிச்சும் – பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள (தொல்காப்பியம், உரியியல் 86).

சொற்பொருள்:  மைபடு பெருந்தோள் மழவர் ஓட்டி இடைப் புலத்து ஒழிந்த  ஏந்து கோட்டு யானை – பெருந்தோளையுடைய பகை மறவரைக் கெடுத்து அவர்கள் விட்டுச் சென்ற போர்க்களத்தில் நின்ற நிமிர்ந்த தந்தத்தை உடைய யானைகளும், பகைப் புலம் கவர்ந்த பாய் பரிப் புரவி – பகைவர்களின் நாடுகளிலிருந்து கொண்டு வந்த பாய்ந்து செல்லும் குதிரைகளும், வேல் கோல் ஆக ஆள் செல நூறி காய் சின முன்பின் கடுங்கண் கூளியர்  ஊர் சுடு விளக்கின் தந்த ஆயமும் – தங்கள் கையில் உள்ள வேலை ஆநிரைகளை ஓட்டும் கோலாகக் கொண்டு ஆநிரையைக் காத்திருந்த வீரர்களை வெட்டி எரிகின்ற சினத்தையும் வலிமையையும் கொடூரத்தையும் உடைய மறவர்கள் பகைவர்களின் ஊர்களைச் சுடுகின்ற விளக்கில் கொண்டு வந்த பசுத்திரளும் (செல – இடைக்குறை), நாடு உடை நல் எயில் அணங்குடைத் தோட்டி – நாட்டில் உள்ள நல்ல அரண்களில் (கோட்டையில்) உள்ள வருத்தத்தையுடைய கதவுகளும் (தோட்டி – வாயில், கதவு), நாள்தொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி நாள் தர வந்த விழுக்கலம் – நாள்தோறும் தமக்குச் செல்வம் மிகும்படிக் கையால் தொழுதும் வாழ்த்தியும் திறையாகக் கொண்டு வந்த சிறப்பான அணிகலன்களும் (தொழூஉ – அளபெடை), கங்கை அம் பேர் யாறு கடற் படர்ந்தாங்கு – கங்கையாகிய அழகிய பெரிய ஆறு கடலை நோக்கிச் சென்றாற்போல, அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு – முடிவறிதல் இல்லாத அளக்க முடியாத செல்வம் பொருந்தின பொருட்களுடன், புத்தேள் உலகம் கவினிக் காண்வர – மேல் உலகத்தில் உள்ளவர்கள் காணும்படி அழகைப் பெற்று, மிக்குப் புகழ் எய்திய பெரும்பெயர் மதுரை – மிகுந்த புகழை அடைந்த பெரிய சிறப்பையுடைய மதுரையில்,

இரவில் மன்னன் துயில் கொள்ளும் நிலை

சினை தல மணந்த சுரும்புபடு செந்தீ   700

ஒண் பூம்பிண்டி அவிழ்ந்த காவில்,
சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று
இலங்கு கதிர் இளவெயில் தோன்றியன்ன,
தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை
நிலம் விளக்குறுப்ப மேதகப் பொலிந்து,   705

மயில் ஓரன்ன சாயல் மாவின்
தளிர் ஏர் அன்ன மேனி தளிர்ப்புறத்து
ஈர்க்கின் அரும்பிய திதலையர் கூர் எயிற்று
ஒண் குழை புணரிய வண் தாழ் காதின்
கடவுட் கயத்து அமன்ற சுடர் இதழ்த் தாமரைத்   710

தாதுபடு பெரும் போது புரையும் வாள்முகத்து
ஆய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து,
கோதையின் பொலிந்த சேக்கைத் துஞ்சித்,  (700 – 713)

பொருளுரை:  மரக்கிளைகள் தம்மில் கூடிய வண்டுகள் மொய்க்கின்ற செந்தீப் போன்ற ஒளியுடைய மலர்களையுடைய அசோக மரங்கள் மலர்ந்துள்ள சோலையில், ஒளியைப் பொழிந்து குடதிசை மலையில் ஏறிய கதிருடைய ஞாயிற்றின் விளங்கும் இளங்கதிர் தோன்றினாற்போல் உள்ள பொன்னின் ஒளி சூழ்ந்து, குற்றம் இல்லாது விளங்குகின்ற அணிகலன்களால் நிலம் ஒளியடைய மென்மையுடன் பொலிவு பெற்ற, மயில் போன்ற மென்மையும், மாமரத்தின் தளிர் போன்ற மேனியையும், தளிரின் புறத்தில் ஈர்க்குப் போல் தோன்றிய திதலையையும், கூர்மையான பற்களையும், ஒளியுடைய காதணிகளை உடைய காதினையும், கடவுள் தன்மையுடைய பொற்றாமரைக் குளத்தில் நெருங்கின நெருப்புப் போலும் இதழ்களையுடைய தாமரையின் தாது உடைய பெரிய மலரைப் போன்ற ஒளியுடைய முகத்தினை உடையவர்களும், ஆராய்ந்த வளையல்களை அணிந்தவர்களுமான மகளிரின் நறுமணமான தோளை அணைத்து, மாலைகளால் பொலிவு பெற்ற படுக்கையில் துயில் கொண்டு,  

குறிப்பு:  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).

சொற்பொருள்:  சினை தலைமணந்த சுரும்பு படு செந்தீ ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த காவில் – மரக்கிளைகள் தம்மில் கூடிய வண்டுகள் மொய்க்கின்ற செந்தீப் போன்ற ஒளியுடைய மலர்களையுடைய அசோக மரங்கள் மலர்ந்துள்ள சோலையில் (தலைமணந்த – தலைக்கூடின), சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று இலங்கு கதிர் இள வெயில் தோன்றியன்ன – ஒளியைப் பொழிந்து குடதிசை மலையில் ஏறிய கதிருடைய ஞாயிற்றின் விளங்கும் இளங்கதிர் தோன்றினாற்போல், தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை – பொன்னின் ஒளி சூழ்ந்து குற்றம் இல்லாது விளங்குகின்ற அணிகலன்களால் (வளைஇய – அளபெடை), நிலம் விளக்குறுப்ப மேதகப் பொலிந்து – நிலம் ஒளியடைய மென்மையுடன் பொலிவு பெற்று, மயில் ஓரன்ன சாயல் – மயில் போன்ற மென்மை , மாவின் தளிர் ஏர் அன்ன மேனி – மாமரத்தின் தளிர் போன்ற மேனி, தளிர்ப்புறத்து ஈர்க்கின் அரும்பிய திதலையர் – தளிரின் புறத்தில் ஈர்க்குப் போல் தோன்றிய திதலை உடைய பெண்கள் (ஈர்க்கின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, ஈர்க்கு – இலையின்/மடலின் நரம்பு), கூர் எயிற்று ஒண் குழை புணரிய வண் தாழ் காதின் – கூர்மையான பற்களையும் ஒளியுடைய காதணிகளை உடைய காதினையும், கடவுட் கயத்து அமன்ற சுடர் இதழ்த் தாமரைத் தாதுபடு பெரும் போது புரையும் வாள் முகத்து – கடவுள் தன்மையுடைய பொற்றாமரைக் குளத்தில் நெருங்கின நெருப்புப் போலும் இதழ்களையுடைய தாமரையின் தாது உடைய பெரிய மலரைப் போன்ற ஒளியுடைய முகத்தினையும் (புரை – உவம உருபு), ஆய் தொடி மகளிர் – ஆராய்ந்த வளையல்களை அணிந்த மகளிர், அழகிய வளையல்களை அணிந்த மகளிர், நறுந்தோள் புணர்ந்து – நறுமணமான தோளை அணைத்து, கோதையின் பொலிந்த சேக்கைத் துஞ்சி – மாலைகளால் பொலிவு பெற்ற படுக்கையில் துயில் கொண்டு 

காலையில் மன்னன்

திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து,
திண் காழ் ஆரம் நீவிக் கதிர் விடும்   715

ஒண்காழ் ஆரம் கவைஇய மார்பின்
வரிக் கடைப்பிரசம் மூசுவன மொய்ப்ப,
எருத்தம் தாழ்ந்த விரவுப் பூந்தெரியல்
பொலஞ்செயப் பொலிந்த நலம் பெறு விளக்கம்
வலி கெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச்   720

சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம்
உடை அணி பொலியக் குறைவு இன்று கவைஇ,
வல்லோன் தைஇய வரிப் புனை பாவை
முருகு இயன்றன்ன உருவினை ஆகி,  (714 – 724)

பொருளுரை:  உறக்கத்திலிருந்து இனிது எழுந்து, திண்ணிய வைரம் பாய்ந்த சந்தன மரத்தின் சாந்தினைப் பூசி, ஒளிவிடும் ஒளிமிக்க வடமாகிய முத்துச் சூழ்ந்த மார்பில், வரியை உடைய பின் பகுதியையுடைய தேனீக்கள் மொய்ப்ப, கழுத்திலிருந்து தாழ்ந்து தொங்கும் பல மலர்கள் கலந்த பூமாலையினையும் பொன்னால் செய்தலால் பொலிவு பெற்ற அழகுடைய மோதிரம் பொருந்திய வலிமை பொருந்தின பெரிய கையில் வீரவளையலுடன் விளங்க, கஞ்சி உடைய ஆடையை, உடைக்கு மேல் அணியும் அணிகலன்களால் தாழ்வு இன்றாக உடுத்தி, சிற்ப நூல் வல்லவன் செய்த முருகனுக்கு உரிய வடிவம் போன்ற வடிவினைக் கொண்டு,

குறிப்பு:  திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து (714) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சூதர் இனிய இசையால் ஏத்தித் துயில் எடுத்ததாலே திருந்திய உறக்கத்தினின்றும் இனிதாக எழுந்து.  முருகு இயன்றன்ன உருவினை ஆகி (724) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடவுளாகிய முருகன் தான் அறிவுப் பொருளும் வியாபகப் பொருளும் ஆதல் நன்கு அறிந்தேயும், தன் தகவுக்கேற்பச் சிற்பியால் இயற்றி அழகு செய்யப்பட்ட வடிவத்தே நின்று அடியார்க்கு காட்சியின்பம் நல்கி அருளுமாப்போலவும் அவன் தான் ஏறிய பாவை அழியுங்கால் தனக்கு அழிவின்மையை உணர்துவனாய் அவ்வுருவத்திற் பற்றின்றியும் உவந்து விளையாடுமாறு போலவும் அம்முருகன் உருவத்தினின்று விளையாடுதல் தன் பொருட்டன்றி உயிர்களின் பொருட்டே ஆதல் போன்றும், நீதானும் உனது உயிரியல்பினை இப் பாச இயல்பினான் வேறாக உணர்ந்து கொண்டனையாய். உன் தகுதிக்கேற்ப ஊழாகிய சிற்பியால் இயற்றி கை செய்து அளிக்கப்பட பாவையாகிய இவ்வுலகின்கண் பற்றின்றியும் உவந்திருந்து, நினக்கு ஏதும் பயன் கருதாமல் நின் கடமையாகிய அரசியலைப் பிறர் நலன் பொருட்டு ஊக்கத்துடன் இயற்றி வாழக்கடவை.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

சொற்பொருள்:  திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து – உறக்கத்திலிருந்து இனிது எழுந்து, திண் காழ் ஆரம் நீவி – திண்ணிய வைரம் பாய்ந்த சந்தனத்தைப் பூசி (காழ் – வைரம் பாய்ந்த மரம், மிகவும் உறுதியான உட்பகுதியுடைய மரம், சந்தன மரத்தைக் குறிக்கின்றது), கதிர் விடும் ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின் – ஒளிவிடும் ஒளிமிக்க வடமாகிய முத்துச் சூழ்ந்த மார்பில் (கவைஇய – அளபெடை), வரிக் கடைப்பிரசம் மூசுவன மொய்ப்ப – வரியை உடைய பின் பகுதியையுடைய தேனீக்கள் மொய்ப்ப, எருத்தம் தாழ்ந்த விரவுப் பூந்தெரியல் – கழுத்திலிருந்து தாழ்ந்து தொங்கும் பல மலர்கள் கலந்த பூமாலை, பொலஞ்செயப் பொலிந்த நலம் பெறு விளக்கம் – பொன்னால் செய்தலால் பொலிவு பெற்ற அழகுடைய மோதிரம் (செய – செய்ய என்பதன் இடைக்குறை), வலி கெழு தடக்கைத் தொடியொடு – வலிமை பொருந்தின பெரிய கையில் வீரவளையலுடன், சுடர்வர – விளங்க, சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம் – கஞ்சி உடைய ஆடையை (சோறு அமைவுற்ற நீர் – கஞ்சி), உடை அணி பொலியக் குறைவு இன்று கவைஇ – உடைக்கு மேல் அணியும் அணிகலன்களால் தாழ்வு இன்றாக உடுத்தி (கவைஇ – அளபெடை), வல்லோன் தைஇய வரிப் புனை பாவை முருகு இயன்றன்ன உருவினை ஆகி – சிற்ப நூல் வல்லவன் செய்த முருகனுக்கு உரிய வடிவம் போன்ற வடிவினைக் கொண்டு, (தைஇய – அளபெடை)

வீரர்கள் மன்னனை வாழ்த்துதல்

வருபுனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து,   725
ஒன்னார் ஓட்டிய செருப்புகல் மறவர்
வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த,  (725 – 727)

பொருளுரை:  மிகுந்து வருகின்ற ஆற்று நீரில் கல் அணை நின்று தாங்கினாற்போல் தம் படையைக் கெடுத்து வருகின்ற பகைவர் நடுவே சென்று அப்பகைவர்களைக் கெடுத்த போரை விரும்பும் போர் மறவர்கள், வாள் வெற்றியை உடைய நினது முயற்சியை வாழ்த்த,

சொற்பொருள்:  வருபுனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து ஒன்னார் ஓட்டிய செருப்புகல் மறவர் (கடுப்ப – உவம உருபு) – மிகுந்து வருகின்ற ஆற்று நீரில் கல் அணை நின்று தாங்கினாற்போல் தம் படையைக் கெடுத்து வருகின்ற பகைவர் நடுவே சென்று அப்பகைவர்களைக் கெடுத்த போரை விரும்பும் போர் மறவர்கள், வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த – வாள் வெற்றியை உடைய நினது முயற்சியை வாழ்த்த,

சிறந்த வீரர் முதலியோரைக் கொணர

மன்னன் பணித்தல்

வில்லைக் கவைஇ கணை தாங்கு மார்பின்
மா தாங்கு எறுழ்த்தோள் மறவர்த் தம்மின்
கல் இடித்து இயற்றிய இட்டுவாய்க் கிடங்கின்   730

நல் எயில் உழந்த செல்வர்த் தம்மின்
கொல் ஏற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த,
மாக்கண் முரசம் ஓவு இல் கறங்க,
எரி நிமிர்ந்தன்ன தானை நாப்பண்
பெரு நல்யானை போர்க்களத்து ஒழிய,   735

விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம் பூந்தும்பை
நீர்யார் என்னாது முறை கருதுபு சூட்டி,
காழ்மண்டு எஃகமொடு கணை அலைக் கலங்கி,
பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து   740

வானத்து அன்ன வள நகர் பொற்ப
நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்
நிவந்த யானைக் கண நிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப் பூந்தெரியல்   745
பெருஞ் செய் ஆடவர்த் தம்மின் பிறரும்
யாவரும் வருக ஏனோரும் தம் என,  (728 – 747)

பொருளுரை:  வில்லைக் கையில் அடக்கிக் கொண்ட அம்பினைத் தாங்கும் மார்பினையும், குதிரையைச் செலுத்தி வேண்டும் அளவு பிடிக்கும் வலிமையான தோளினையும் உடைய மறவரைக் கொண்டு வாருங்கள்!  கல் தரையை உடைத்து இயற்றிய ஒடுங்கிய நீர் உடைய கிடங்கினையுடைய அரணில் நின்று வருந்தின வீரர்களைக் கொண்டு வாருங்கள்!  கொல்லும் தொழிலையுடைய ஏற்றினது தோலை மயிர் சீவாமல் போர்த்திய பெரிய கண்ணுடைய முரசம் ஓய்வில்லாமல் ஒலிக்க நெருப்பு நடந்தாற்போன்ற பகைவர் படையின் நடுவில் சென்று, பெரிய நல்ல யானைகளைப் போர்க்களத்தில் வீழ்த்தி, பெரும் புண்ணினால் வீழ்ந்த தலைவரைக் கொண்டு வாருங்கள்!  உயர்வுடையோர் பொருட்டுக் கட்டப்பட்ட பொன்னால் செய்த பூவினையுடைய தும்பை மாலையை, நீர் யார் எனக் கேட்காது குறிப்பால் அறிந்து அவர்கள் தகுதிக்கு ஏற்பக் கொடுத்து ஏவி, காம்புகள் செருகின வேல்களுடன் அம்புகளும் சென்று நிலை குலைத்ததால் கலங்கிப் பிரிந்து இணைந்த பொருந்துவாய் அற்ற பழைய நிறம் கெட்ட கவசத்துடன், வானுலகை ஒத்த வளமையான நகர் போலும் விளங்க, வலிமையான வண்டிச் சக்கரத்தின் குடம் போன்று இருந்த தசை சிதைந்த மார்புடைய, உயர்ந்த உதவியை ஊக்கத்துடன் செய்பவர்களைக் கொண்டு வாருங்கள்!  உயர்ந்த யானைக் கூட்டத்தைக் கவர்ந்த புலர்ந்த சந்தனத்தையும் மலர் மாலையையும் அணிந்த பெரும் செயலைப்புரிந்த ஆடவர்களைக் கொண்டு வாருங்கள்!  பிற மறவர்கள் ஏனையோரையும் கொண்டு வாருங்கள்!   

குறிப்பு:  வீழ்ந்த (736) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – களிற்று யானைகளை வெட்டிக் கொன்று விழுப்புண் பட்டமையான் வீழ்ந்த மறவர்.  புரையோர்க்கு (737) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புரையோர் – உயர்ந்தோர், ஈண்டு உயர்ந்தோர் என்பது மறத் துறையில் உயர்ச்சி பெற்ற படைத் தலைவர்.  புரை – உரு உட்கு ஆகும், புரை உயர்பு ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 4).  தம்மின் (729, 731, 736, 743 746) – வியங்கோள், மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி.  பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39).  எறுழ் – எறுழ் வலி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 92). மின் – இர் ஈர் மின் என வரூஉம் மூன்றும் பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும் சொல் ஓரனைய என்மனார் புலவர்(தொல்காப்பியம், வினையியல் 26).

சொற்பொருள்:  வில்லைக் கவைஇ கணை தாங்கு மார்பின் மா தாங்கு எறுழ்த்தோள் மறவர்த் தம்மின் – வில்லைக் கையில் அடக்கிக் கொண்ட அம்பினைத் தாங்கும் மார்பினையும் குதிரையைச் செலுத்தி வேண்டும் அளவு பிடிக்கும் வலிமையான தோளினை உடைய மறவரைக் கொண்டு வாருங்கள் (கவைஇ – அளபெடை), கல் இடித்து இயற்றிய இட்டுவாய்க் கிடங்கின் நல் எயில் உழந்த செல்வர்த் தம்மின் – கல் தரையை உடைத்து இயற்றிய ஒடுங்கிய நீர் உடைய கிடங்கினையுடைய அரணில் நின்று வருந்தின வீரர்களைக் கொண்டு வாருங்கள், கொல் ஏற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம் ஓவு இல் கறங்க – கொல்லும் தொழிலையுடைய ஏற்றினது தோலை மயிர் சீவாமல் போர்த்திய பெரிய கண்ணுடைய முரசம் ஓய்வில்லாமல் ஒலிக்க, எரி நிமிர்ந்தன்ன தானை நாப்பண் – நெருப்பு நடந்தாற்போன்ற பகைவர் படையின் நடுவில் சென்று, பெரு நல்யானை போர்க்களத்து ஒழிய – பெரிய நல்ல யானைகளைப் போர்க்களத்தில் வீழ்த்தி, விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின் – பெரும் புண்ணினால் வீழ்ந்த தலைவரைக் கொண்டு வாருங்கள், புரையோர்க்குத் தொடுத்த பொலம் பூந்தும்பை – உயர்வுடையோர் பொருட்டுக் கட்டப்பட்ட பொன்னால் செய்த பூவினையுடைய தும்பை மாலையை, நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டி – நீர் யார் எனக் கேட்காது குறிப்பால் அறிந்து அவர்கள் தகுதிக்கு ஏற்பக் கொடுத்து ஏவி,  காழ் மண்டு எஃகமொடு கணை அலைக் கலங்கி  – காம்புகள் செருகின வேல்களுடன் அம்புகளும் சென்று நிலை குலைத்ததால் கலங்கி, பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து – பிரிந்து இணைந்த பொருந்துவாய் அற்ற பழைய நிறம் கெட்ட கவசத்துடன், வானத்து அன்ன வள நகர் பொற்ப – வானுலகை ஒத்த வளமையான நகர் போலும் விளங்க (வானத்து – வானம், அத்து சாரியை), நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின் – வலிமையான வண்டிச் சக்கரத்தின் குடம் போன்று இருந்த தசை  சிதைந்த மார்புடைய, உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின் – உயர்ந்த உதவியை ஊக்கத்துடன் செய்பவர்களைக் கொண்டு வாருங்கள், நிவந்த யானைக் கண நிரை கவர்ந்த புலர்ந்த சாந்தின் விரவுப் பூந்தெரியல் பெருஞ்செய் ஆடவர்  தம்மின் – உயர்ந்த யானைக் கூட்டத்தைக் கவர்ந்த புலர்ந்த சந்தனத்தையும் மலர் மாலையையும் அணிந்த பெரும் செயலைப்புரிந்த ஆடவர்களைக் கொண்டு வாருங்கள், பிறரும் யாவரும் வருக ஏனோரும் தம் என – பிற மறவர்கள் ஏனையோரையும் கொண்டு வாருங்கள்

மன்னனது பெருங்கொடை

வரையா வாயில் செறாஅது இருந்து,
பாணர் வருக, பாட்டியர் வருக,
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என,   750

இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்,
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி,  (748 – 752)

பொருளுரை:  குறிப்பிட்டுக் கூறி, வாயிலில் தடை செய்யாது, பாணர்கள் வருக, பாணர் குடும்பத்தில் உள்ள பாடும் பெண்கள் வருக, செய்யுளாகிய வளமையை உடைய புலவருடன் கூத்தர்களும் வருக, என்று பெரிய சுற்றத்தாரைப் பாதுகாக்கும், பரிசிலர்க்கு எல்லாம் தாமரை வடிவில் உறுப்புகள் உடைய நெடிய தேர்களைக் களிற்று யானைகளுடன் அளித்து,

குறிப்பு:  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  வரையா (748) – செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.

சொற்பொருள்:  வரையா – வரைந்து கூறி (குறிப்பிட்டுக் கூறி), வாயில் செறாஅது இருந்து – வாயிலில் தடை செய்யாது (செறாஅது – அளபெடை), பாணர் வருக – பாணர்கள் வருக, பாட்டியர் வருக – பாணர் குடும்பத்தின் பெண்கள் வருக, யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக – செய்யுளாகிய வளமையை உடைய புலவருடன் கூத்தர்களும் வருக, என இருங்கிளை புரக்கும் – என்று பெரிய சுற்றத்தாரைப் பாதுகாக்கும், இரவலர்க்கு எல்லாம் கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி – பரிசிலர்க்கு எல்லாம் தாமரை வடிவில் உறுப்புகள் உடைய நெடிய தேர்களைக் களிற்று யானைகளுடன் அளித்து

மன்னனை வாழ்த்துதல்

களம் தோறும் கள் அரிப்ப,
மரம் தோறும் மை வீழ்ப்ப,
நிண ஊன் சுட்டு உருக்கு அமைய,  755

நெய் கனிந்து வறை ஆர்ப்ப
குரூஉக் குய்ப் புகை மழை மங்குலின் 
பரந்து தோன்றா வியல் நகரால்
பல் சாலை முது குடுமியின்
நல் வேள்வித் துறை போகிய,   760

தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டு உண்ட புகழ் சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன் போல,
வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்
பலர் வாய்ப் புகர் அறு சிறப்பின் தோன்றி,   765

அரிய தந்து குடி அகற்றி,
பெரிய கற்று இசை விளக்கி,
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்,
பல்மீன் நடுவண் திங்கள் போலவும்,
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கிப்   770

பொய்யா நல் இசை நிறுத்த புனை தார்ப்
பெரும் பெயர் மாறன் தலைவனாகக்
கடந்து அடு வாய்வாள் இளம்பல் கோசர்
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப
பொலம் பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த   775
மறம் மிகு சிறப்பின் குறுநில மன்னர்
அவரும் பிறகும் துவன்றி
பொற்பு விளங்கு புகழ் அவை நிற் புகழ்ந்து ஏத்த,
இலங்கு இழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
மணம் கமழ் தேறல் மடுப்ப, நாளும்   780
மகிழ்ந்து, இனிது உறைமதி பெரும,
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே! (753 – 782)

பொருளுரை:  இடந்தோறும் கள்ளை அரிக்கவும், மரத்தடிகள்தோறும் செம்மறிக் கிடாக்களைக் கொல்லவும், கொழுப்பையுடைய தசைகளைச் சுடுவதால் அக்கொழுப்பு உருகவும், நெய்யுடன் பொரியல்கள் ஆரவாரிக்கவும், தாளிக்கும்போது எழுந்த நிறத்தையுடைய புகை முகில்கள் போல் திசைகளில் பரவ, அகன்ற இந்த ஊரில், பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று நல்ல வேள்வித் துறையில் நீ முயல்தலைச் செய்வாயாக! பண்டைய ஆணையையுடைய விளங்கிய நல்ல ஆசிரியர்கள் தம்முள் புணர்ந்து நுகரும் மெய்ப்பொருள் இன்பத்தை உணர்ந்து நுகர்ந்த செந்தமிழ் வழங்கும் காலம் எல்லாம் தன் புகழ் விளங்குவதற்குக் காரணமான தமிழ்ச் சங்கம் நிறுவி அதனிடத்து மெய்ந்நூல் புலப்படுத்த சிறப்பினை உடைய நிலந்தரு திருவின் நெடியோன் போல, வியப்பும் சான்றான்மையும் உடைய செவ்விதான சான்றோர் பலரிடத்தில், குற்றம் இல்லாத சிறப்புடன் தோன்றி, அரிய பொருட்களைக் கொணர்ந்து குடிமக்களைப் பெருக்கி, நூல்களைக் கற்று நின் புகழை நிலைநிறுத்தி, கடல் நடுவில் தோன்றும் கதிரவன் போலவும், பல விண்மீன்களுக்கு நடுவில் உள்ள நிலவு போலவும், பொலிவு பெற்ற சுற்றத்துடன் பொலிந்து இனிது விளங்கி, உண்மையான நல்ல புகழை உலகில் நிறுத்தின, கையால் செய்த மாலையினையும், பெரிய பெயரையுமுடைய பாண்டியன் தலைவனாக, பகைவர்களை வென்று கொல்லும் தவறாத வாளையுடைய இளைய பல கோசர்கள், நெறி முறையின் மரபில் நின்னுடைய மெய்மொழியைக் கேட்டு நடக்க, பொன்னால் செய்த அணிகலன்களை அணிந்த ஐம்பெரும் அமைச்சர்களும் (ஐம்பெரும் குழுக்களும்), பிறரும் நிறைந்து, பொலிவு விளங்குகின்ற புகழினை உடைய அவை நின்னுடைய அறத்தின் தன்மையைப் புகழ, விளங்குகின்ற அணிகலங்களை அணிந்த மகளிர் பொன்னால் செய்த வட்டில்களில் நறுமணம் மிகுந்த தேறலை நினக்குத் தர, அதனைப் பருகி, நாள்தோறும் மகிழ்ச்சி அடைந்து இனிதாக இருப்பாயாகப் பெருமானே, கடவுளால் உனக்குக் கொடுக்கப்பட்ட உன்னுடைய நல்ல ஊழிக்காலத்தில்!

குறிப்பு:  குரூஉ (757) – குருவும் கெழுவும் நிறனாகும்மே (தொல்காப்பியம், உரியியல் 5).  நிலந்தரு திருவின் நெடியோன் (763) – நச்சினார்க்கினியர் உரை – எல்லா நிலங்களையும் தன்னிடத்தே காட்டின பெருஞ்செல்வமுடைய மாயோனைப் போல, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தமிழ்ச் சங்கம் நிறீஇ அதன்கண் மெய்ந்நூல் புலப்படுத்த சிறப்பினையுடைய நிலந்தரு திருவிற்பாண்டியன் என்னும் புகழால் நீண்ட மன்னனைப் போல.  நெடியோன் உம்பல் (மதுரைக்காஞ்சி 61) – நச்சினார்க்கினியர் உரை – வடிம்பலம் நின்ற பாண்டியன் வழியில் வந்தோனே, பொ. வே. சோமசுந்தரனார் உரை – திருவிற் பாண்டியன் என்னும் புகழால் நீண்டவனுடைய வழியில் தோன்றியவனே.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  தோன்றா – தோன்றிய என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39).  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடைமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

சொற்பொருள்:  களம் தோறும் கள் அரிப்ப – இடந்தோறும் கள்ளை அரிக்கவும் (களம் – இடம்), மரம் தோறும் மை வீழ்ப்ப – மரத்தடிகள்தோறும் செம்மறிக் கிடாக்களைக் கொல்லவும், நிண ஊன் சுட்டு உருக்கு அமைய – கொழுப்பையுடைய தசைகளைச் சுடுவதால் அக்கொழுப்பு உருகவும், நெய் கனிந்து வறை ஆர்ப்ப – நெய்யுடன் பொரியல்கள் ஆரவாரிக்கவும் (வறை – பொரிக்கறி), குரூஉக் குய்ப் புகை – நிறத்தையுடைய தாளிக்கும்போது எழுந்த புகை (குரூஉ – அளபெடை), மழை மங்குலின் பரந்து தோன்றா – முகில்கள் போல் திசைகளில் பரவ, மழை உடைய திசையைப் போல் பரவ (மங்குலின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), வியல் நகரால் – அகன்ற இந்த ஊரில் (நகரால் – நகரிடத்து, வேற்றுமை மயக்கம்), பல் சாலை முதுகுடுமியின் – பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று (முதுகுடுமியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது), நல் வேள்வித் துறை போகிய – நல்ல வேள்வித் துறையில் நீ முயல்தலைச் செய்வாயாக (போகிய – வியங்கோள்), தொல் ஆணை நல் ஆசிரியர் புணர் கூட்டு உண்ட – பண்டைய ஆணையையுடைய விளங்கிய நல்ல ஆசிரியர்கள் தம்முள் புணர்ந்து நுகரும் மெய்ப்பொருள் இன்பத்தை உணர்ந்து நுகர்ந்த, புகழ் சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன் போல – செந்தமிழ் வழங்கும் காலம் எல்லாம் தன் புகழ் விளங்குவதற்குக் காரணமான தமிழ்ச் சங்கம் நிறுவி அதனிடத்து மெய்ந்நூல் புலப்படுத்த சிறப்பினை உடைய நிலந்தரு திருவின் நெடியோன் போல, வியப்பும் சால்பும் செம்மை சான்றோர் பலர் வாய் – வியப்பும் சான்றான்மையும் உடைய செவ்விதான சான்றோர் பலரிடத்தில், புகர் அறு சிறப்பின் தோன்றி – குற்றம் இல்லாத சிறப்புடன் தோன்றி, அரிய தந்து குடி அகற்றி – அரிய பொருட்களைக் கொணர்ந்து குடிமக்களைப் பெருக்கி, பெரிய கற்று இசை விளக்கி – நூல்களைக் கற்று நின் புகழை நிலைநிறுத்தி, முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் – கடல் நடுவில் தோன்றும் கதிரவன் போலவும், பல்மீன் நடுவண் திங்கள் போலவும் – பல விண்மீன்களுக்கு நடுவில் உள்ள நிலவு போலவும், பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி – பொலிவு பெற்ற சுற்றத்துடன் பொலிந்து இனிது விளங்கி, பொய்யா நல் இசை நிறுத்த – உண்மையான நல்ல புகழை உலகில் நிறுத்தி, புனை தார்ப் பெரும் பெயர் மாறன் தலைவனாக – கையால் செய்த மாலையினையும் பெரிய பெயரையுமுடைய பாண்டியன் தலைவனாக, கடந்து அடு வாய்வாள் இளம் பல் கோசர் – பகைவர்களை வென்று கொல்லும் தவறாத வாளையுடைய இளைய பல கோசர்கள், இயல் நெறி மரபின் – நெறி முறையின் மரபில், நின் வாய்மொழி கேட்ப – நின்னுடைய மெய்மொழியைக் கேட்டு நடக்க, பொலம் பூண் ஐவர் உட்பட – பொன்னால் செய்த அணிகலன்களை அணிந்த ஐம்பெரும் அமைச்சர்களும் (ஐம்பெரும் குழுக்களும்), புகழ்ந்த மறம் மிகு சிறப்பின் குறுநில மன்னர் – புகழப்பட்ட மறம் மிக்க குறுநில மன்னர்களும், அவரும் பிறகும் துவன்றி – அவர்களும் பிறரும் நிறைந்து, பொற்பு விளங்கு புகழ் அவை நிற்புகழ்ந்து ஏத்த – பொலிவு விளங்குகின்ற புகழினை உடைய அவை நின்னுடைய அறத்தின் தன்மையைப் புகழ, இலங்கு இழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய மணம் கமழ் தேறல் மடுப்ப – விளங்குகின்ற அணிகலங்களை அணிந்த மகளிர் பொன்னால் செய்த வட்டில்களில் நறுமணம் மிகுந்த தேறலை நினக்குத் தர அதனைப் பருகி, நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி பெரும – நாள்தோறும் மகிழ்ச்சி அடைந்து இனிதாக இருப்பாயாகப் பெருமானே (மதி – முன்னிலையசை), வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே – கடவுளால் உனக்குக் கொடுக்கப்பட்ட உன்னுடைய நல்ல ஊழிக்காலத்தில்