அறத்துப்பால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறத்துப்பால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாலடியார் - அறத்துப்பால்

நாலடியார் - 1.செல்வம் நிலையாமை

கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.

வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கா¢து; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இ·து உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத (பூ மேல் நடந்த) அருகக் கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக! (வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. யின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து)

நூல்

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று.
1

ஆறு வகைச் சுவை உணவை அன்புடன் மனைவி உண்பிக்க, ஒரு கவளமே கொண்டு, மற்றவற்றை நீக்கியுண்ட செல்வர்களும் வறியராகி, வேறோர் இடம் போய், எளிய கூழ் உணவை இரந்து உண்பர். ஆதலால் செல்வம் நிலையானது என்று கருதத்தக்கதன்று.

துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
2

குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம் உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம்போல் (மேல்கீழாகவும், கீழ் மேலாகவும்) மாறிவரும்.

யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.
3

யானையின் பிடா¢யிலே அமர்ந்து எல்லாரும் காணுமாறு குடைநிழலில் படைகளுக்கெல்லாம் தலைவராகச் சென்ற அரசர்களும், தீவினை கெடுப்பதனால், முன்னிருந்த நிலையினின்றும் வேறுபட்டு, தம் மனைவியையும் பகைவர் கவர்ந்துகொண்டு போக, வறுமையில் வீழ்வர். (நல்வினை போய், தீவினை வருமானால் அரசரும் தாழ்வடைவர். எனவே, செல்வம் உள்ளபோதே அறம் செய்க என்பதாம்.)

நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
4

நிலைபெற்றன நிலைபெற்றன என்று நினைக்கப்பட்ட பொருள்கள் நிலைத்திராது அழியும் என்று உணர்ந்து உங்களால் செய்யக்கூடிய அறங்களைச் செய்ய நினைத்தால் விரைந்து செய்க! (ஏனெனில்) வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டேயிருக்கின்றன. எமன் கோபித்து வந்துகொண்டே யிருக்கிறான்.

என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
கொடுத்தாறு செல்லும் சுரம்.
5

ஏதாகிலும் ஒரு பொருள் தமது கையில் சேரப் பெற்றால், முதுமைக் காலத்தில் பயன்படும் என்று அதனைப் பிடித்து வைத்திராமல் அப்பொருள் அழிவதற்கு முன்பே அறம் செய்தவர்கள் தனது தொழிலில் தவறாத கொடிய எமன், பாசக் கயிற்றால் கட்டியிழுத்துச் செல்லும் பாலை வழியினின்றும், தப்பிச் செல்வர். (அறம் செய்பவர் நரகம் புகார்; துறக்கம் எய்துவர் என்பது கருத்து.)

இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; - ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின் நாளைத்
தழீஇம்தழீஇம் தண்ணம் படும்.
6

ஆயுட் காலத்தின் எல்லையைக் கடந்து எமனிடமிருந்து தப்பிக் குதித்து ஓடிப் பிழைத்தவர் இல்லை! பெரும் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர்களே! அதைப் பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்! நாளைக்கே (விரைவில்) உங்களது பிணப்பறை 'தழீம் தழீம்' என்னும் ஓசையுடன் எழும்

தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்; - ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
பிறந்தும் பிறவாதார் இல்.
7

எமன், ஒளி மிக்க சூரியனை, 'நாழி' என்னும் அளவு கருவியாகக் கொண்டு, உமது வாழ்நாள்தோறும் அளந்து ஆயுள் இறுதியில் உயிரை உண்ணும்! ஆதலால் மிகுதியாக அறம் செய்து உயிர்களிடத்தில் அருளுடையவராக ஆகுங்கள்! அப்படி காதவர் மக்களாகப் பிறந்தும் பிறவாதவரே வர்!

செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.
8

நாம் செல்வம் உடையயோம்!' என்ற கர்வம் கொண்டு மறுமையைப் பற்றி எண்ணாத சிற்றறிவினா¢ன் பெரும் செல்வம், இரவில் கருமையான மேகம் வாய் திறப்பதால் உண்டான மின்னலைப் போலத் தோன்றி, இருந்த இடம் தொ¢யாமல் அழிந்துவிடும்!

உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ
இழந்தான்என் றெண்ணப் படும்.
9

ஒருவன் தான் உண்ணாதவனாய், மதிப்பை நிலை நிறுத்தாதவனாய், மிக்க புகழுக்குரிய செயல்களைச் செய்யாதவனாய், நெருங்கிய உறவினா¢ன் துன்பங்களைக் களையாதவனாய், இரப்பார்க்குக் கொடாதவனாய், வீணாகப் பொருளைக் காத்திருப்பானாயின், ஐயகோ! அவன் அந்தப் பொருளை இழந்து விட்டான் என்றே கருதப்படுவான்! (செல்வம் நிலையில்லாதது. ஆதலின் இருக்கும்போதே அதனை நன்கு பயன்படுத்தாவிடின் அந்தப் பொருள் இழந்த பொருளாகக் கருதப்படும்.)

உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி.
10

வானளாவிய மலைகளையுடைய நாட்டுக்குத் தலைவனே! உடுக்காமலும் உண்ணாமலும், உடம்பு நலிவுற்ற போதும் கெடாத நல்லறம் செய்யாராகி இரவலர்க்குக் கொடாது பொருளைச் சேர்ப்பவர், அதனை இழப்பர். பல மலா¢னின்றும் கொண்டு வந்து சேர்த்து வைக்கும் தேனை இழக்கும் தேனீயானது இதற்குச் சான்றாகும்!

நாலடியார் - 2.இளமை நிலையாமை

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்தீருப் பார்.
11

நல்லறிவாளர், மூப்பு நிச்சயமாக வரும் என்று கருதி இளமையிலேயே துறவு பூண்டனர்; குற்றம் நீங்காத, நிலையற்ற இளமைப் பருவத்தில் மகிழ்ந்து வாழ்ந்தவர், முதுமைக் காலத்தில் கோலை ஊன்றிக் கொண்டு வருத்தத்துடன் எழுந்திருப்பர்.

நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன, - உட்காணாய்;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி.
12

நட்பாகிய கயிறுகள் அற்றுப் போயின; பெண்களும் அன்பில் குறைந்தனர்; சுற்றத்தாரின் அன்பாகிய கயிறும் அவிழ்ந்து வீழ்ந்தது; மனத்திலே யோசித்துப் பார்! கடலில் மூழ்கும் கப்பலில் இருப்போர்க்கு நேர்ந்த துன்பம் போலத் துன்பம் (முதுமை) வந்து விட்டது! இனி உயிரோடு இருப்பதில் என்ன பயன் உண்டு? ஒரு பயனும் இல்லை.

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
ஏம நெறிபடரும் ஆறு.
13

பேச முடியாது சொல் தடுமாறி, கோல் ஊன்றித் தள்ளாடும் நடையினராய்ப் பற்களும் வீழ்ந்துபட, தமது உடலைப் பிறர் பார்த்து எள்ளி நகையாடுமாறு இல்வாழ்க்கையில் பொ¢தும் ஈடுபாடு கொண்டு, சிற்றின்ப ஆசையிலே மூழ்கிக் கிடக்கும் அற்ப அறிவீனர்க்குப் போ¢ன்பமாகிய வீட்டு நெறியிலே செல்லும் வகை இல்லை.

தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக் கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.
14

முதுகு வளைந்து கூனி உடல் தளர்ந்து, தலை நடுங்கி, தடியை ஊன்றி நடந்து தள்ளாடி வீழ்ந்து இறக்கும் நிலையில் உள்ள இவளிடத்தும், மன உறுதி யில்லாத காம மயக்கம் கொண்ட மனிதருக்கு, இவள் கையிலிருக்கும் ஊன்று கோலானது இவள் தாய்க்கு ஊன்று கோலாக இருந்த நாளில் (இவள் இளமையோடிருந்த நாளில்) மிக்க ஆசை உண்டாகியிருக்கும். (இந்தக் கிழவி இளமையோடிருந்தபோது, இவள் மீது ஆசை உண்டாகியிருக்கும் என்றதனால், இப்போது இளமையோடிருப்பவர், நாளை முதுமையடைந்து வெறுக்கத்தக்க நிலையடைவர் என்பது உணர்த்தப்பட்டது.)

எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள்; - தனக்குத்தாய்
ஆகியவளும் அதுவானாள் தாய்த்தாய்க்கொண்டு
ஏகும் அளித்திவ் வுலகு.
15

எனக்குத் தாயாக இருந்தவள் என்னை இவ்வுலகத்தில் விட்டு விட்டுத் தனக்கொரு தாயைத் தேடிப் போனாள். (இறந்துவிட்டாள்) அப்படிப் போன என் தாய்க்குத் தாயாக இருந்த என் பாட்டியும், தனக்கொரு தாயைத் தேடிச் சென்றாள். இத் தன்மையாய் இந்த உலகம் ஒரு தாய் மற்றொரு தாயைத் தேடிக்கொண்டு செல்லும் எளிமை உடையது! (எத்தகைய இளமை அழகுடையோரும் இறந்துபடுவர் என்பது கருத்து)

வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல்.
16

வெறியாடும் பலிக் களத்தில், வெறியாடும் பூசாரியின் கையில் கட்டியுள்ள தளிர்கள் நிறைந்த மணமுள்ள பூமாலை எதிரில் விளங்க, அது கண்ட பலி ஆடு, அந்தத் தளிரை உண்டு மகிழ்தல் போன்று, நிலையில்லாத இளமை இன்பத்தில் மகிழ்தல், அறிவுடையவா¢டத்து இல்லை!

பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து.
17

இளமைப் பருவமானது, குளிர்ச்சி மிக்க சோலையில் உள்ள பயனைத் தரும் மரங்களெல்லாம், பழங்கள் உதிர்ந்து வீழ்ந்தாற்போல் ஆகும்! ஆதலால் இப்போது இப்பெண்ணை இளமை அழகுமிக்க, வேல் போன்ற கண்ணையுடையவள் என்று வியந்து, இவளிடம் மிகவும் ஆசை கொள்ளாதீர்! இந்த இளம் பெண்ணும் ஒரு காலத்தில் முதுகு வளைந்து கூனியாகி, கோலாகிய கண்ணையுடையவளாவாள்! (கனிகள் உதிர்ந்த மரம் விரும்பத் தகாததாகி விடும். அதுபோல இளமை கழிந்த உடலும் விரும்பத் தகாததாம். முதுமையில் பார்வை குறைவதால் கோலைத் தட்டி வழி கண்டு செல்வாள் என்பதை உணர்த்த 'கோல் கண்ணள்' என்றார்.)

பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
இருசிகையும் உண்டீரோ என்று - வரிசையால்
உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடை யார்.
18

வயது எத்தனை ஆயிற்று? பல்லின் நிலைமை என்ன? ஆடாது இருக்கிறதா? இரு புறங்களிலும் மென்று தின்ன முடிகிறதா?' என்று வயதானவர் நிலையைக் கேட்டறிவதால், அறிவுடையோர், இளமையின் உடல் வலிமையை நிலையானது என்று கருதமாட்டார்கள்.

மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்
முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.
19

நல்லறங்களைப் பின்னர் ஆராய்ந்து செய்வோம். இப்போது இளைஞராக இருக்கிறோம் என்று நினையாமல், பொருள் இருக்கும்போதே மறைக்காமல் அறத்தைச் செய்யுங்கள். ஏனெனில், கடுங்காற்றால் நன்கு பழுத்த பழங்கள் விழாமலிருக்க, நல்ல காய்கள் உதிர்தலும் உண்டு. (பெருங்காற்று வீசும்போது பழங்கள் உதிராமல் இருக்க, காய் உதிர்வது போல, வயதானவர் பிழைத்திருக்க வாலிபர் இறத்தலும் உண்டு. ஆதலால் இப்போது இன்பங்களை அனுபவித்து, வயது முதிர்ந்த பின் நல்லறங்களைச் செய்து கொள்வோம் என்று நினையாமல் பொருள் கிடைத்த போதே அறம் செய்ய வேண்டும் என்பது கருத்து)

ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று.
20

ஆயுள் முடியும் ஆளைத் தேடிக்கொண்டு திரிகின்ற, அருள் இல்லாத எமன் என ஒருவன் இருப்பதால் (மறுமைப் பயணத்துக்கு வேண்டிய) தோளில் சுமக்கத்தக்க கட்டுச் சோற்றை (புண்ணியத்தை) தக்க காலத்தில் தேடிப் பிழைத்துக்கொள்ளுங்கள்! வயிற்றில் இருக்கும் கருவை வெளிப்படச் செய்து, தாய் அலறி அழுமாறு பிள்ளையைக் கொண்டு போவதால், அந்த எமனுடைய வஞ்சனையை அறிந்து நல்வினை செய்தல் நல்லது!

நாலடியார் - 3.யாக்கை நிலையாமை

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.
21

மலையின் மீது காணப்படும் சந்திரனைப் போல, யானைத் தலையின் மீது பிடித்த குடையுடைய அரசர்களும், உலகில் இறந்தனர் என இகழப்பட்டார்களே அல்லாமல், இவ்வுலகில் இறவாது எஞ்சி இருந்தவர் யாரும் இல்லை. (மன்னாதி மன்னர்களும் மாண்டனர் என்றதனால் யாக்கை நிலையாமை உணர்த்தப்பட்டது.)

வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்
நிலவார் நிலமிசை மேல்.
22

உயிரோடு வாழும் காலத்தை அளக்கும் கருவியாக விளங்கும் சூரியன், நாள் தவறாமல் உதயமாதலால், ஆயுள் கெடா முன்னர், பிறருக்கு உதவி செய்யுங்கள். யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க மாட்டார்கள். (சூரியன் தோன்றுவது - ஒரு நாள் கழிந்தது; இரு நாட்கள் கழிந்தன என ஆயுளை அளவிடுவதாக இருத்தலால், வாழ்நாள் முடிவதற்கு முன்னரே நல்லறம் செய்து வாழவேண்டும் என்பது கருத்து.)


மன்றம் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை
ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்.
23

திருமண மண்டபம் முழங்க மண வாத்தியமாக நின்றவை, அன்றைக்கே, அங்கேயே அந்த மனிதர்க்குப் பிணப்பறையாய் ஒலித்தலும் உண்டு என நினைத்து, மாட்சிமையுடையோர் மனமானது, பிறவிப் பிணியினின்று நீங்கும் வழியையே உறுதியாய்ப் பற்றியிருக்கும்.

சென்றே எறிய ஒருகால்; சிறுவரை
நின்றே எறிப பறையினை - நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டுஎழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து.
24

(பறை அடிப்போர்) இறந்தவர் வீட்டிற்குச் சென்று ஒரு முறை பிணப்பறையை அடிப்பர்; சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை அடிப்பர்; மூன்றாவது முறை பறை அடிப்பதற்குள் சாகப் போகிறவர்கள், செத்தவர்களைத் துணியால் மூடி மறைத்துத் தூக்கிக் கொண்டு, நெருப்பை எடுத்துக்கொண்டு சுடுகாட்டை நோக்கிப் புறப்பட்டுச் செல்வர். (எனவே யாக்கை நிலையாமையை நன்கு யோசித்துப் பார்!)

கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங்கொண்டீண்டு
உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை.
25

கூட்டமாகக் கூடி உறவினர் கூவி அழ, பிணத்தைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டில் இடுபவரைப் பார்த்தும், திருமணம் செய்துகொண்டு, இவ்வுலகில் நிச்சயமாய் 'இன்பம் உண்டு, இன்பம் உண்டு' என்று மயங்குபவனுக்கு, 'டொண் டொண் டொண்' என ஒலிக்கும் சாப்பறையானது, இவ்வுலக வாழ்க்கையில் இத்தகைய இன்பம் இல்லை (யாக்கை நிலையில்லை) என்னும் உண்மையை உரைக்கும்!

நார்த்தொடுத்து ஈர்க்கிலென் நன்றாய்ந்து அடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.
26

தோல் பையாகிய உடம்பிலிருந்து, தான் செய்ய வேண்டிய தொழில்களை முழுமையாகச் செய்து, அப்பயனைத் தானே அனுபவிக்கின்ற கூத்தாடியாகிய உயிர் உடலைவிட்டு அப்புறம் சென்றால், பின் அவ்வுடலைக் கயிற்றால் கட்டியிழுத்தால்தான் என்ன? நன்றாகச் சுத்தம் செய்து அடக்கம் செய்தால் தான் என்ன? கண்ட இடத்திலே போட்டால்தான் என்ன? பலரும் பழித்தால்தான் என்ன? (ஒரு செயலைச் செய்யத் தூண்டுவதும் உயிர்தான்; அந்தச் செயலின் பயனை அனுபவிப்பதும் உயிர்தான். அத்தகைய உயிர் இருக்கும்போது மேலான செயல்களைச் செய்க! என்பதாம். ஒவ்வொரு நேரமும் வெவ்வேறு சிந்தனைகளை, செயல்களையுடையதால் உயிரைக் கூத்தன் என்றார்.)

படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.
27

வீழ்கின்ற மழை நீரிலே தோன்றும் குமிழிபோலப் பலமுறை தோன்றி அழியும் ஒருவகைப் பொருள் இந்த உடம்பு எனக் கருதி, இப்பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்வோம் நாம் என்று உணர்ந்து, அதற்கான அறங்களைச் செய்யும் உறுதியான நல் ஞான முள்ளவரை இப்பொ¢ய உலகில் ஒத்திருப்பவர் யார்? ஒருவரும் இல்லை!

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க; - யாக்கை
மலைநாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.
28

உடம்பை உறுதியுடையதாக முன் செய்த நல்வினைப் பயனால் பெற்றவர், அதனால் ஆகும் பயனான நற்காரியங்களைச் செய்வாராக! ஏனெனில் மலை மீது உலாவும் மேகம்போல் காணப்பட்டு நிலை பெறாது இவ்வுடல் அழிந்துவிடும்

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.
29

ஒருவன் இப்பொழுது நின்று கொண்டிருந்தான்; உட்கார்ந்தான்; படுத்தான்; தன் உறவினர் அலறி அழ இறந்தான் என்று கூறப்படுவதால், புல் நுனியிலிருக்கும் நீர்த்துளியைப் போல நிலையில்லாத தன்மையுடையது இந்த உடம்பு என்று எண்ணி, இப்பொழுதே அறவினைகளைச் செய்க!


கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.
30

மனிதர்கள் 'வரட்டுமா' என்று கேளாமல் வந்து உறவினராய் ஒரு வீட்டில் பிறந்து பின், தாம் வாழ்ந்த கூடு மரத்திலே கிடக்கத் தூரத்தே பறந்து செல்லும் பறவைகளைப் போலச் சுற்றத்தாரிடம் உடம்பை விட்டு விட்டுப் பேசாமல் இறந்து போவார்கள். ('குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே, உடம்போடு உயிரிடை நட்பு' என்பது குறள்.)

நாலடியார் - 4.அறன் வலியுறுத்தல்

அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்.
31

(அதற்கும் முன் பிறப்பில் தவம் செய்யாத காரணத்தால்) முற்பிறப்பில் தவம் செய்யாதவர், 'இவ்வீட்டில் உள்ளவர்களே சிறப்புடன் வாழ்பவராவர்! என்று கருதி உயர்ந்தோங்கி நிற்கும் ஒரு வீட்டை அண்ணாந்து நோக்கி, உள்ளே போக முடியாதவராகி, தலை வாயிலைப் பிடித்துக்கொண்டு மிக வருந்தியிருப்பர். (முற்பிறப்பில் தவம் செய்யாதவர் என்றதனால், அதற்கு முன் பிறப்பிலும் அவர் தவம் செய்யாதவர் என்பது கருத்து. 'தவமும் தவமுடையார்க்கு ஆகும்' என்பது திருக்குறள்.)

ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே - ஓவாது
நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
சென்றன செய்வது உரை.
32

செல்வத்தை விரும்பி அதனைப் பெருக்கிப் பெருஞ்செல்அறத்தை மறந்து இறந்துபோவோம் நாம் என்று எண்ணாத அற்ப நெஞ்சே! வராவோம் என்றெண்ணி ஓயாமல் உழைத்து வாழ்கின்றாய். எனினும், உன் வாழ் நாட்கள் ஒழிந்தன! இனி நீ மறுமைக்காகச் செய்யப் போவதுதான் என்ன? சொல்!

வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்ததனைத்
தொல்லையது என்றுணர் வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்தொருவு வார்.
33

அறிவில்லாதவன், முன் செய்த தீவினை இப்போது வந்து பயனைத் தந்து துன்புறுத்தும்போது பெருமூச்சு விட்டு மனம் வருந்துவான். அத்தீவினைப் பயனை நினைத்துப் பார்த்து, இது முற்பிறப்பின் பாவத்தால் நேர்ந்தது என்று உணர்ந்து அதனை ஏற்று அமைதியாக அனுபவிக்கும் அறிவுடையோர் பிறவித் துன்பத்தின் எல்லையைக் கடந்து நீங்குவர்.

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும் பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.
34

பெறுதற்கு அரிய இம்மனித உடம்பை (இம் மனிதப் பிறவியை) புண்ணியப் பயனால் பெற்றிருக்கிறோம். அப்படிப் பெற்றதைக் கொண்டு சிறந்த புண்ணியத்தை மேலும் மிகுதியாகத் தேடிக்கொள்ள வேண்டும். அப்புண்ணியம், கரும்பிலிருந்து உண்டான சாறுபோல், உயிருக்குப் பொ¢தும் உதவும். அக்கரும்பின் சக்கை போல் உடம்பு பயனற்றதாய் அழிந்து போகும்!


கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்.
35

கரும்பை ஆலையில் ஆட்டி அதன் சாற்றினால் ஆகிய வெல்லக் கட்டியை நல்ல பதத்திலே கொண்டவர்கள். அந்தக் கரும்பின் சக்கை தீப்பற்றி எரியும்போது துன்புறமாட்டார்கள். அதுபோல, முயன்று நல்லறம் செய்து பிறவிப் பயனைப் பெற்றவர் எமன் வரும்போது துன்பமடையார்.


இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.
36

இறப்பு இன்று வருமோ அன்று வருமோ என்று வருமோ என்று நினையாமல், எமன் பின் புறத்திலேயே நிற்கிறான் என எண்ணித் தீய செயல்களை விட்டு விடுங்கள். முடிந்த அளவு மாண்புடையார் போற்றிய அறத்தைச் செய்யுங்கள். (இன்று, அன்று, என்று என்பன இளமைக் காலத்தையும், முதுமைக் காலத்தையும் இடைக் காலத்தையும் உணர்த்தின. ஒல்லும் வகை - இல்லறத்தைப் பொருள் நிலைக்கு ஏற்பவும், துறவறத்தை உடல் நிலைக்கு ஏற்பவும் மேற்கொள்ளல்.)


மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாதுஉம்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.
37

மக்கட் பிறவியால் செய்யத்தக்க நற்செயல்களைப் பற்றி எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் அவை மிகப் பலவாம். அப்படியிருக்க, எலும்பும், தோலும், சதையும், இரத்தமும் கூடிய இந்த உடம்புக்கே உதவி செய்து வாழ்ந்து கொண்டிராமல் மறுமை இன்பங்களை நுகர்தற்கேற்ற நல்லறங்களைச் செய்ய வேண்டும்.

உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங்கு - அறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.
38

(விரலால் கிள்ளி எடுக்கும் அளவுள்ளதான) மிகச்சிறிய ஆலம் விதை, வளர்ந்து ஓங்கித் தழைத்து மிக்க நிழலைத் தருவதுபோல, அறப்பொருள் மிகச்சிறியதாயினும் அது தகுதியுடையவர் கையில் சேர்ந்தால், அதன் பயன் வானினும் பொ¢தாக விளங்கும் (வான் சிறிதா-வானினும் பொ¢தாக)


வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
39

நாள்தோறும் நாள் கழிந்து வருவதைப் பார்த்திருந்தும், அப்படி நாள் தோறும் நாள் கழிதலை அறியாதவர், தமது ஆயுள் நாளில் ஒரு நாள் அப்படிக் கழிவதை உணராது, அது 'நிலையாக இருக்கிறது' என நினைத்து இன்புறுவர். (இதனால் ஒவ்வொரு நாளும் கழிதற்கு முன் நல்லறம் செய்ய வேண்டும் என வற்புறுத்தப்பட்டது)


மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.
40

இழிவான காரியத்தைச் செய்து உணவு ஊட்டுவதனாலும் உறுதியுடன் கூடி இவ்வுடம்பு நீண்ட நாள் நிலைத்திருக்கும் என்பது உண்மையானால் மானம் என்னும் சிறந்த அணிநலனைக் களைந்தெறிந்து விட்டு உயிர்வாழ்வேன் (எப்படி ஊட்டினாலும் இந்த உடம்பு அழியக் கூடியதே

 நாலடியார் - 5.தூய் தன்மை

மாக்கேழ் மடநல்லாய் என்றாற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.
41

மாந்தளிர் போலும் நிறமும், இளமையும் உடைய பெண்ணே!' என்று மாதரை நோக்கிப் பிதற்றும் அறிவுடையோர், அற்ப உடம்பின் இழிவை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ? அவ்வுடம்பில் இழிவை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ? அவ்வுடம்பில் ஈயின் சிறகு அளவான சிறிய தோல் அறுபட்டாலும், அந்த இடத்தில் உண்டான புண்ணை நோக்கி வரும் காக்கையை விரட்ட ஒரு கோல் வேண்டும். (அறிவுடையோர் என்பது எள்ளல் குறிப்பு.)


தோல்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் - மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்.
42

தோலாகிய போர்வையின் மீதும் துளைகள் பலவாகி உள்ளே அழுக்கை மறைக்கின்ற போர்வையினால், பெருமையுடையதாக இருக்கிறது இவ்வுடம்பு! அப்படி ஆதலால், மேல் போர்வை கொண்டு உள்ளிருக்கும் அழுக்கை மறைக்காமலும், ஆசை மொழி புகலாமலும் அவ்வுடம்பை ஒரு பையைத் திருப்பிப் பார்ப்பது போல எண்ணிப் பார்க்க வேண்டும்! (அப்போதுதான் உடம்பின் புன்மை புலப்படும்.)


தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப்
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும்
உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல்.
43

எப்பொழுதும் உண்ணும் தொழில், உடம்பின் உள்ளே அழுக்கை மிகுவிக்கும் என்று உணர்ந்து பொ¢யோர் விலக்கிவிட்ட ஆசை என்னும் மயக்கத்தைத் தரும் உடம்பின் அழுக்கு (கெட்ட நாற்றம்) வால்மிளகு, வெற்றிலை, பாக்கு முதலான வாசனைப் பொருள்களை வாயிலிட்டு மென்று தின்று, தலை நிறைய மணமலர் சூடிச் செயற்கையாக அலங்கா¢த்துக் கொள்வதால் ஒழியுமா? ஒழியாது!


தெண்ணீர்க் குவளை பெருங்கயல் வேலென்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன்.
44

உள்ளே இருக்கும் நீரை நீக்கிவிட்டால், பனை நுங்கைத் தோண்டியெடுத்தாற் போல் காணப்படும் கண்ணின் இயல்பை அறிந்து, பற்றற்று நடக்கும் நான், மகளிரின் கண்களைத் தெளிந்த நீரிலே உள்ள குவளை மலர்கள் என்றும், புரளும் கயல்மீன்கள் என்றும், வேற்படை என்றும் கூறி அறிவுக் கண் இல்லாத அற்ப மனிதர்கள் எனது மனத்தைத் துன்புறுத்தவிடுவேனா? (ஒழுக்கத்தை விட்டு விடுவேனா? விடமாட்டேன்.)

முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
எல்லோரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன்.
45

எல்லோரும் காணுமாறு சுடுகாட்டில் உதிர்ந்து சிந்திக்கிடக்கின்ற பல்லாகிய எலும்புகளைப் பார்த்துப் பற்றற்று ஒழுகும் நான், மகளிரின் பற்களை முல்லை அரும்புகள் என்றும், முத்துக்கள் என்றும் கூறிப் பிதற்றும் மேலான நூலறிவு அற்ற கீழ் மக்கள் எனது உள்ளத்தைத் துன்புறுத்த விடுவேனா? (ஒழுக்கத்தை விட்டு விடுவேனா? விடமாட்டேன்.)

குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்.
46

குடலும், கொழுப்பும், இரத்தமும், எலும்பும், ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்ற நரம்பும், தோலும் இவற்றின் இடையிடையே வைத்த தசைகளும் நிணமும் கிய இவைகளுள், குளிர்ந்த மாலை அணிந்த பெண் என்பவள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவள்? (இத்தகைய பொருள்களின் சேர்க்கையான உடம்பில் பற்று வைத்து அறத்தை விடக் கூடாது என்பது கருத்து

ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை
பெருந்தோளி பெய்வளையாய் என்னுமீப் போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.
47

அழுக்குகள் ஊறி, வெறுக்கத்தக்க ஒன்பது துளைகளையுடைய புலன்கள் வழியாக அவ்வழுக்குக் குழம்பை வெளிப்படுத்தும் உடலாகிய ஒரு குடத்தைப் பார்த்து அறிவில்லாத ஒருவன், மேலே போர்த்திருக்கும் அழகான தோலினால் கண்கள் கவரப்பட்டு, 'பெருத்த தோளையுடையவளே! வளையல்களை அணிந்தவளே! என்று பிதற்றுவான்! (அறிவிலான் உடம்பின் புற அழகைக் கண்டு மயங்குவான்!)

பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல்
முடைச்சாகாடு அச்சிற்று உழி.
48

உடம்பாகிய பண்டத்தின் இயல்பை அறியாதவர்கள் அதன்மேல் பூசப்படும் சந்தனத்தையும், அணியப் பெறும் மலர் மாலையையும் கண்டு பாராட்டுகின்றனர். அவர்கள், முடை நாற்றமுடைய இவ்வுடம்பாகிய வண்டியை, அதன் அச்சாகிய உயிர் முறிந்தபின் பெண்ணும் ஆணுமான வலிமை மிக்க கழுகுகள் நெருங்கிக் கூடிப் புரட்டிக் குத்தித் தின்பதைப் பார்க்கவில்லை போலும்!


கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சிரித்து.
49

இறந்தவர்களுடைய, சுடுகாட்டில், எரிக்கப்பட்ட தலைகள், பார்த்தவர் மனம் அஞ்சுமாறு, பள்ளமாய் ஆழ்ந்திருக்கின்ற கண்களையுடையனவாகத் தோன்றி, இறவாதிருக்கும் மற்றவரைப் பார்த்து, ஏளனமாக, மிகவும் சிரித்து, 'இவ்வுடம்பின் தன்மை இப்படிப்பட்டது! எனவே அறத்தைப் போற்றி நன்னெறியில் நில்லுங்கள்!' என்று கூறும் போலும்!


உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ணம் என்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர்.
50

இறந்தவரது மண்டை ஓடுகள், கண்டார் அஞ்சும்படி நகைத்து, இல்லறத்தில் இறுமாந்து கிடப்பவருடைய குற்றத்தைப் போக்கும், மயக்கமாகிய அக்குற்றத்தினின்றும் நீங்கியவர்கள், உண்மையை உணர்ந்து, இத்தகையதுதான் இவ்வுடம்பின் இயல்பு என்று நினைப்பதால், தமது உடம்பை ஒரு பொருளாக மதிப்பதில்லை!

 நாலடியார் - 6.துறவு

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.
51

விளக்கொளி வர, அங்கே இருந்த இருள் அகல்வது போல, ஒருவன் செய்த தவத்தின் முன்னே பாவம் விலகும், விளக்கில் எண்ணெய் குறையும்போது, இருள் பரவுவது போல் நல்வினை நீங்குமிடத்துப் பாவம் நிலைத்து நிற்கும்


நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.
52

நிலையாமையும், நோயும், மூப்பும், சாவுத் துன்பமும் இவ்வுடம்புக்கு உண்டு என ஞான நூல்களை ஆய்ந்துணர்ந்த, சிறந்த அறிவுடையோர் தமக்கு உறுதியான தவத்தைச் செய்வர். முடிவில்லாத இலக்கணநூல் என்று சொல்லப்பட்ட பல நூல்களையே விடாமல் சொல்லிக்கொண்டு திரியும் பித்தரைவிட அறிவில்லாதவர் உலகில் இல்லை!


இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம்உய்யக் கொண்டு.
53

இல்லற வாழ்வு, இளமை, மிக்க அழகு, செல்வாக்கு, செல்வம், வலிமை என்று கூறப்படும் இவையெல்லாம் நாளடைவில் நிலையில்லாமல் போதலை அறிந்து, சான்றோர்கள் தாம் கடைத்தேறும் வழியை மேற்கொண்டு காலம் தாழ்த்தாது இருவகைப் பற்றையும் துறப்பர்.


துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையாறு
அடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.
54

அறிவில்லாதவர், பல நாட்கள் துன்பத்தால் வருந்தினாலும் ஒரு நாள் கிடைக்கும் அற்ப இன்பத்தையே விரும்புவர். கல்வி கேள்விகளால் நிறைந்த சான்றோர், இன்பத்தின் நிலையற்ற தன்மையையும் அதனால் நேரும் துன்பத்தையும் உணர்ந்து இல்லறத்தின் நீங்கினர். (துறவறத்தை மேற்கொண்டனர்).


கொன்னே கழிந்தன்று இளமையும் இன்னே
பிணியோடு மூப்பும் வருமால் - துணிவொன்றி
என்னொடு சூழாது எழுநெஞ்சே போதியோ
நன்னெறி சேர நமக்கு.
55

இளமைப் பருவமும் வீணாகக் கழிந்துவிட்டது. இப்பொழுதே நோயும் முதுமையும் வந்து சேரும்; ஆதலால் துணிவுடன், என்னோடு ஆராயாது புலன்வழி செல்லும் மனமே! நமக்கு நல்வழி உண்டாக நீ என்னுடன் வருவாயாக! (புலன் வழி செல்லாது அறிவுவழி செல்வாயாக! என ஆத்மா, மனத்தை நோக்கிக் கூறியது இது.)


மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்
பூண்டான் கழித்தற்கு அருமையால் - பூண்ட
மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார்.
56

மாட்சிமைப்பட்ட குணங்களும், பிள்ளைப் பேறும் மனைவியிடம் இல்லாவிட்டாலும், மணம் செய்து கொண்ட கணவன் அவளை விட்டுவிட முடியாது! எனவே திருமணம் என்பது ஒருவன் தானே மேற்கொண்ட துன்பம் ஆகும். ஆதலால்தான் மேலான ஒழுக்க நூல்களிலே உள்ள கருத்துக்களைக் கற்றுணர்ந்த ஞானிகள் 'திருமணம் செய்து கொள்ளாதீர்!' என்றனர்.


ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர்.
57

முயற்சியுடன் தாம் மேற்கொண்ட விரதங்களும் (தவங்களும்) உள்ளமும் சிதையுமாறு, தடுக்க முடியாத துன்பங்கள் வந்தபோதும், எப்படியாவது அத்துன்பங்களை விலக்கித் தம் விரதங்களை நிலை நிறுத்தும் மன வலிமை மிக்கவரே துறவற ஒழுக்கத்தைக் காக்கும் சிறப்புடையவராவர். (நல்ல துறவிகளாவர்.)

தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.
58

பிறர் தம்மைப் பழித்துப் பேசியதைப் பொறுத்துக்கொள்வதல்லாமல், 'இவர்கள் எம்மை இகழ்ந்த தீவினைப் பயனால் மறுமையில் எரியும் நரகத்தில் வீழ்ந்து துன்புறுவார்களே!' என்று இரங்குவதும் துறவிகளின் கடமையாகும். திருவத்தவர் - சிறப்பினை உடையவர். (மேல்பாட்டில் துறவிகளின் பொறையுடைமையும், இப்பாட்டில் அவர்தம் அருளுடைமையும் கூறப்பட்டுள்ளன.)

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்.
59

மெய், வாய், கண், மூக்கு, செவி எனப் பெயர் பெற்ற ஐந்து புலன்களை அடக்கி, அவற்றின் வழியாக வரும் மிகுந்த ஆசையை மனக் கலக்கமின்றித் தன்னிடம் சேராமல் பாதுகாத்து, நல்லொழுக்கத்தில் செலுத்தும் வல்லமையுடையவனே தவறாமல் வீடுபேறு அடைவான். (ஐம்புலன்களை அடக்கி ஆள்பவனே வீடு பேறு அடைவான்.)

துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல்.
60

அறிவிலாதார், வாழ்க்கையில் துன்பமே மிகுதியாக வருதலைக் கண்டும், துறத்தலை நினையாதவராய்ச் சிறிதளவாகிய இன்பத்தையே விரும்பியிருப்பர்! ஆனால் அறிவுடையவரோ அச்சிறிதளவு இன்பம் கிடைக்கும் போதெல்லாம் அதனைத் தொடர்ந்து வரும் துன்பத்தைக் கண்டு அச்சிற்றின்பத்தை விரும்பார்.

நாலடியார் - 7.சினம் இன்மை

மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.
61

தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும்; சிறிதும் மதிக்காது அவமதித்து நடப்பாரும் நடக்கட்டும்; அற்ப ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் உட்காருதலால், அந்நிலையை உணர்ந்து சிந்திக்கும் சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது சீறி விழும் சினம் இலராய் இருத்தல் நல்லது

தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.
62

ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாமல் நெருங்கி மிகவும் அவமதிப்பு வந்த போதிலும், அதற்குக் கலங்காது எடுத்த காரியத்தை நிறைவேற்றும் மனவலிமை மிக்கவர், சிறிதே இடர் கண்டபோதெல்லாம் சினத்தைப் பொறுத்துத் தாங்காமல், அழியாச் சிறப்புடைய இனிய உயிரை விடுவரோ? (மனவலிமைமிக்கவர் கண்டதற்கெல்லாம் சினம் கொள்ளாமல் சாந்தமாயிருப்பர். முந்திக்குரிய உயிர் ஆதலின் அழியா உயிர் என்றார்).

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.
63

ஒருவன் நா காவாமல் வாய் திறந்து சொல்லும் சினச்சொல், இடைவிடாது தன்னையே வருத்தும் ஆதலால், ஓயாது ஆராய்ந்தறிந்த அறிவையும், கேள்வி ஞானத்தையும் உடைய சான்றோர், எப்போதும் சினம் கொண்டு கடுமையான சொற்களைச் சொல்லமாட்டார்கள். (பிறர் மீது சினம் கொண்டு தாக்கும் கடுஞ்சொற்கள் திருப்பித் தம்மையே தாக்கும். ஆதலால் ஞானிகள் கடுமையான சொற்களைச் சொல்ல மாட்டார்கள்).

நேர்த்து நிகரல்லார் நிரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்ததனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.
64

மேலோர், தமக்கு நிகா¢ல்லாதவர் தம்மை எதிர்த்து நன்மையற்ற தீய சொற்களைச் சொன்னால், அதற்காக மனம் புழுங்கிச் சினம் கொள்ளார். ஆனால் கீழ்மக்களோ, பிறர் கூறும் இழி சொற்களையே மனத்தில் நினைத்து நினைத்து, பிறா¢டம் சொல்லிச் சொல்லி, மேலும் மேலும் சினம் அடைந்து ஆற்றாது துள்ளிக் குதித்து தூணில் முட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வர்.

இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.
65

வாலிபப் பருவம் உடையவனது புலனடக்கமே அடக்கம் எனப்படும். நிறைந்த பொருள் இல்லாதவனது கொடையே பயனுள்ள கொடையாம். அவை போல, எல்லா எதிர்ப்புகளையும், வெல்லத்தக்க உடல் வலிமையும், உள்ள உறுதியும் உடையவன், சினத்தைப் பொறுத்துக்கொள்ளும் பொறுமையே சிறந்த பொறுமை ஆகும்.

கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.
66

மந்திரித்து இட்ட திருநீற்றினால் உடனே சீற்றம் தணிந்து படம் அடங்கும் பாம்பைப் போல, தங்கள் உயர்குலப் பெருமையால் தடைசெய்யப்பட்டு, கல்லால் எறிந்தது போல் கீழ் மக்கள் வாயிலிருந்து வரும் சொற்களை, யாவரும் காண, பொ¢யோர் சினம் கொள்ளாது பொறுத்துக்கொண்டு நல்லொழுக்க நெறியிலே தமது அறிவைச் செலுத்துவர்.

மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.
67

பகைவராக நின்று அப்பகைமைப் பண்புக்கேற்பக் காரியங்களைச் செய்யும்போது, தாமும் எதிர்த்துப் பகைமை கொள்ளாதவருடைய பொறுமையை, 'இயலாமையாகிய பலவீனம்' என்று கூறமாட்டார்கள், அறிஞர்கள். அப்பகைவர், தம் தீமையை அடக்கிக் கொள்ளாது மேலும் கொடுமைகள் செய்தாலும் தாம் அவர்களுக்குத் திருப்பித் தீங்கு செய்யாதிருத்தல் நல்லது.

நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.
68

கீழ் மக்களின் சினம் நெடுங்காலம் கழிந்தாலும் தணியாது மேன்மேல் வளரும். ஆனால் புகழ் பெற்ற மேன் மக்களின் சினமானது, சுட வைக்கும் போது தண்ணீர் அடைந்த வெப்பத்தைப் போல, தானாகவே தணியும். (இயல்பில் குளிர்ச்சியும், பிறர் சுடவைத்தால் வெம்மையும் நீர்க்கு இருப்பது போல் பொ¢யோர் குணத்திற்கும் உண்டு. பிறர் துன்புறுத்தும் வரை உள்ளம் சினம் கொண்டாலும், பிறர்க்கு யாதொரு துன்பமும் செய்யாது அச்சினம் தானே தணியும் என்பது கருத்து).

உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.
69

தாம் செய்த உதவியைச் சிறிதும் எண்ணிப் பாராது, தமக்கு மிகுதியான தீமைகளைச் செய்தாலும், தாம் அவருக்குத் திரும்பவும் உதவி செய்வார்களேயன்றி, தவறியும் தீமை செய்ய முயலுதல், வானளாவிய புகழ் மிக்க குடியிலே பிறந்தவா¢டம் இல்லை.

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.
70

சினம் கொண்டு நாய் தமது உடம்பைக் கடிப்பதைப் பார்த்தும், அதற்குப் பதிலாகத் தம் வாயினால் நாயைக் கடித்தவர்கள் இவ்வுலகில் இல்லை! அதுபோல, தகுதியின்றி, கீழ் மக்கள் கீழ்த்தரமான சொற்களைச் சொல்லும்போது மேன் மக்கள், அவர்களுக்கு எதிராக அச்சொற்களைத் திருப்பிச் சொல்வார்களோ? சொல்லமாட்டார்கள்.

நாலடியார் - 8.பொறையுடைமை

கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோடு யாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.
71

மாலை போன்ற அருவிகளாலே குளிர்ந்த மலைகளையுடைய மன்னனே! அறிவில்லாதவனோடு எதையும் சொல்லவேண்டாம்! அவனிடம் ஒன்றைச் சொன்னால் அவன் மாறுபட்டுப் பதில் உரைப்பான். ஆதலின் கூடுமானவரை அப்பேதையிடமிருந்து தப்பித்து நீங்குதல் நல்லது.

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற்று - ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்.
72

நற்குணமில்லாதவர் பண்பற்ற சொற்களைச் சொல்லும்போது அச்சொற்களைப் பொறுத்துக் கொண்டிருப்பதே தகுதியாகும்! அவற்றைப் பொறுக்காமல் பதில் கூறினால், கடல் சூழ்ந்த உலகம் அதனைப் புகழுக்குரிய செயலாகக் கொள்ளாது; பழிக்குரிய செயலாகக் கருதும்.

காதலார் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொல்லின் தீதாமோ - போதெல்லாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப!
ஆவ தறிவார்ப் பெறின்.
73

மலர்களிலெல்லாம் அழகான வண்டுகள் ஒலிக்கும் குளிர்ச்சி பொருந்திய கடற்கரையையுடைய வேந்தனே! நமக்கு நன்மை தருவதை ஆராய்ந்து சொல்லும் அறிஞரை உறுதுணையாகப் பெற்றால், அவர்கள் நம் மீது அன்பு கொண்டு கூறும் கடுமையான சொல்லானது, அயலார் மகிழ்ந்து கூறும் இனிமையான சொல்லினும் தீதாகுமா? ஆகாது. (ஏதிலார் என்பதற்குப் 'பகைவர்' எனப் பொருள் கொண்டு, உள்ளத்தில் பகையுணர்வுடன், அதை மறைக்க முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுபவா¢ன் இன்சொல்லைப் போல், அன்புடையார் கடுஞ்சொல் தீதாகுமோ? எனவும் பொருள் கொள்ளலாம்.)

அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.
74

அறிய வேண்டிய நன்மை தீமைகளை அறிந்து, அடக்கமுடையவராகி, அஞ்ச வேண்டிய பழி பாவங்களுக்கு அஞ்சி, செய்வதை உலகம் மகிழுமாறு செய்து, அறநெறியில் வந்த பொருளால் மகிழ்ந்து வாழும் இயல்புடையவர் எக்காலத்தும் துன்புற்று வாழ்தல் இல்லை. (நன்மை தீமைகளை அறிந்து தீமைக்கு அஞ்சி உலகம் மகிழ வாழும் அடக்கமுடையவர் துன்புறுதல் இல்லை.)

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.
75

மனவேற்றுமை சிறிதும் இன்றி இருவர் நண்பரான பிறகு, தகாத ஒழுக்கம் ஒருவனிடம் உண்டானால் அதனை மற்றொருவன் பொறுக்கக் கூடிய அளவு பொறுத்துக் கொள்க! பொறுக்கமுடியாமற் போனால் பிறர் அறிய அவனது குற்றத்தை வெளிப்படுத்திப் பழிக்காமல் அவன் நட்பை விட்டு விடுக. (நண்பா¢டையே மன வேறுபாடு தோன்றினால் விலகிவிட வேண்டுமேதவிர, பழி தூற்றித் திரியக்கூடாது. குறிப்பு : விட்டு நீங்குதல் என்பது இறுதி நிலை ஆதலால், இப்பாடல், அடுத்த இரு பாடல்களுக்குப் பின் அமைதல் நன்று).

இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!
விலங்கிற்கும் விள்ளல் அரிது.
76

காடுகள் நிறைந்த நாட்டையுடைய மன்னனே! நண்பர்கள் நமக்குத் தீமைகள் செய்தாலும் அவை நன்மையாகக் கடவது என்று நினைத்து, வினைப்பயன் என எண்ணித் தன்னையே தான் வெறுப்பதல்லாமல், நெருங்கி மனம் ஒன்றிப் பழகியவரை விட்டு விடாதே! சேர்ந்தபின் பிரிதல் விலங்கினிடத்தும் இல்லை! (பிறர் செய்யும் தீமையும் நாம் பொறுக்கும் தன்மையால் அவர் மனமாற்றத்துக்குக் காரணமாதல் கூடும். ஆதலால் 'விட்டு விலகாதே' என்றார்).

பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்ப என்றன்றோ - அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!
நல்லசெய் வார்க்குத் தமர்.
77

ஓல்' என ஒலிக்கும் அருவிகளைக் கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டின் வேந்தனே! பொ¢யோர்களின் மேன்மையான நட்பைக் கொள்ளுதல், தாங்கள் செய்த அரிய குற்றங்களையும் அவர்கள் பொறுத்துக்கொள்வார்கள் அல்லவா? எப்போதும் நல்ல செயல்களைச் செய்பவர்க்கு நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்களா? கிடைப்பார்கள். (பழகியவர் பிழையைப் பொறுத்தலே உயர்ந்த நட்பாம்).

வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க - அற்றம்
மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மைத்
துறக்கும் துணிவிலா தார்.
78

உடல்வற்றித் துரும்பு ஒத்த நிலை எய்துமாறு பசி வந்தாலும், உதவி செய்யும் பண்பு இல்லாதவா¢டம் சென்று வறுமையைச் சொல்லாதீர்! உயிரை விடும் துணிவில்லாதவர், உதவி செய்யும் பண்புடையவா¢டம் மட்டும் தமது வறுமைபற்றியுரைப்பர். (பசித் துன்பத்தைப் பொறுத்து, உழைத்து வாழ வேண்டுமே தவிர, பிறர் உதவிகேட்டு வாழ்தல் சிறப்பன்று என்பது பொருள்).

இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!
பழியாகா ஆறே தலை.
79

இன்பம் தந்த செயலிலே தாழ்வு நேர்ந்தாலும் இன்பத்தையே கருதி, அவ்வின்பத்திலேயே நிலைத்திருக்கும் உனக்கு இன்பம் இடையறாது பெருகுவதைக் கண்டாலும், நீ பழியுண்டாகாத செயலைச் செய்வதுதான் சிறந்ததாகும். (ஒரு செயலைச் செய்யும்போது அதில் இன்பம் உண்டாவதோடு தாழ்வும் பழியும் உண்டானால், அச்செயலை விட்டு விட வேண்டும்).

தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க - வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல்.
80

தான் கெட்டாலும் தக்கார்க்குக் கேடு செய்ய எண்ணாதிருப்பாயாக! தனது உடலில் உள்ள சதை முழுதும் பசியால் உலர்வதானாலும், உண்ணத்தகாதவா¢டத்து உணவை உண்ணாதிருப்பாயாக! வானம் மூடிய இந்த உலகம் எல்லாம் பெறுவதாயினும் பொய் கலந்த சொற்களைச் சொல்லாதிருப்பாயாக!

நாலடியார் - 9.பிறர்மனை நயவாமை

அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால் - நிச்சலும்
கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார்.
81

காமத்தால் வரும் அச்சம் பொ¢து! அந்த அச்சத்துடன் ஒப்பிட்டு நோக்கும்போது பெறும் இன்பம் சிறிதே! யோசித்துப் பார்த்தால் அரசனால் கொலைத் தண்டனையும் உண்டு! எந்நாளும் நரக வேதனையை அடைதற்குரிய மிக்க பாவச் செயலாகும் அது! ஆதலால் நாணம் உடையவர்கள் பிறன் மனைவியை விரும்பாதிருப்பாராக!

அறம்புகழ் கேண்மைபெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார் சேரா - பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
அச்சத்தோடு இந்நாற் பொருள்.
82

புண்ணியம், புகழ், தக்கோர் நட்பு, பெருமை ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புபவா¢டத்தில் சேரமாட்டா, மாறாகப் பகை, பழி, பாவம், அச்சம் ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புபவா¢டத்தில் வந்து சேரும்.

புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்.
83

பிறர் மனைவியை நாடி அவள் வீட்டிற்குள் புகும்போது அச்சம்; திரும்பி வெளியே வரும்போது அச்சம்; இன்பம் நுகரும்போது அச்சம்; பிறர் அறியாமல் காப்பதில் அச்சம்; இவ்வாறு எப்போதும் அச்சம்; இவற்றையெல்லாம் எண்ணிப் பாராது ஒருவன் பிறன் மனைவியை விரும்புவது என்ன பயன் கருதியோ?

காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்;
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீள்நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி, நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு.
84

அயலார் கண்டால் தன் குலத்திற்குப் பழிப்பாகும்; கையில் அகப்பட்டால் கால் முறியும்; ஆண்மையற்ற இப்பிறர்மனை புகுதலைச் செய்யின் அச்சம் தோன்றும்; பின் நரகமாகிய துன்பத்தைத் தரும்! எனவே தீய ஒழுக்கம் உடையவனே! நீ இதில் கண்ட இன்பம் எவ்வளவு? எனக்குச் சொல்!

செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை
வலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை
அலியாகி ஆடிஉண் பார்.
85

சிறிதும் நல்லொழுக்கம் இன்றிச் சிற்றினம் சேர்ந்து, அழகிய கோலம் எழுதப் பெற்ற கொங்கைகளையுடையவளின் தோளைச் சேர விரும்பி, முற்பிறப்பில் தமது வலிமையால் பிறர் மனைவியிடம் சென்றவரே, இப்பிறப்பில் அலித் தன்மையுடையவராய்க் கூத்தாடி உண்டு வாழ்வர்.

பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியல்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு.
86

பலரும் அறியுமாறு மண முரசு கொட்டி, நல்ல நாளிலே திருமணம் செய்து கொண்டு, தன் காவலிற் புகுந்த மென்மைத் தன்மை வாய்ந்த அன்புடைய மனைவி வீட்டில் இருக்க, ஏன் ஒருவன் பிறர் மனையாளைக் கெட்ட எண்ணத்துடன் நோக்குகிறான்? (தன் மனைவி வீட்டில் இருக்கப் பிறன் மனைவியை நாடுதல் குற்றமாகும்; தன் மனைவிக்குச் செய்யும் துரோகமாகும்).

அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று - நம்பும்
நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு; பாம்பின்
தலைநக்கி யன்னது உடைத்து.
87

அயலார் பழித்துரைக்க, சுற்றத்தார் பயந்து வருந்தி நிற்க, அயலான் மனைவியைத் தழுவி மகிழ்ச்சியுற்ற, யாவராலும் நம்பத்தக்க இயல்பு இல்லாத மனத்தையுடையவனது காம நுகர்ச்சி, பாம்பின் தலையை நக்கியது போன்ற தன்மையுடையது! (பிறர் மனைவியை விரும்புதல் பாம்பின் தலையைத் தொடுவது போன்ற ஆபத்தானது).

பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;
உரவோர்கண் காமநோய் ஓஓ!- கொடிதே!
விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்
உரையாதுஉள் ஆறி விடும்.
88

காமநோய் கொடியது! ஆயினும் அந்நோய் மனவலிமை மிக்கவா¢டம் வளராது; ஒருகால் வளர்ந்தாலும் வெளிப்படாது; அப்படி ஒருகால் வெளிப்பட்டாலும் அயல் மாந்தா¢டம் செல்லாது! பலருக்கும் நாண வேண்டியிருப்பதால் மனவலிமை மிக்க அவர்தம் காம உணர்வு சிறிதும் தோன்றாது உள்ளேயே தணிந்து ஆறிவிடும்.

அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்; - வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப் படும்.
89

அம்பும், தீயும், ஒளிவீசும் கதிர்களையுடைய சூரியனும் வெப்பத்துடன் சுட்டாலும், உடம்பை மட்டுமே சுடும். ஆனால் காமமானது வெப்பமாகி மனத்தை வருத்திச் சுடுதலால், அந்த அம்பு முதலியவற்றைக் காட்டிலும் அஞ்சத்தக்கதாம்.

ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும்.
90

ஊர் நடுவே பற்றிக் கொண்ட செந்தழலுக்கு, அருகில் இருக்கும் நீருள் மூழ்கியும் தப்பித்துக்கொள்ள முடியும். ஆனால் நீருள் மூழ்கினாலும் காமம் சுடும்; மலைமீது ஏறி ஒளிந்துகொண்டாலும் அது சுட்டு எரிக்கும்!

நாலடியார் - 10.ஈகை

இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு.
91

பொருள் இல்லாதபோதும் தம்மால் இயன்ற அளவு பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து இயல்பாகக் கொடுக்கும் குணமுள்ள மக்களுக்கு மறுமை உலகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள
பின்னரும் பீடழிக்கும் நோயுள; - கொன்னே
பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.
92

எதிரிலேயே இறக்கும் நாளும், வெறுக்கத்தக்க முதுமைப் பருவமும் உள்ளன. அவை அல்லாமல் வலிமையை அழிக்கும் நோய்களும் உண்டாகியிருக்கின்றன. ஆதலால் பொருள் உள்ள காலத்தில் மேலும் அதனைச் சேர்க்க நாற்புறமும் ஓடி அலையாதீர்! பொருளை இறுகப் பிடித்துக்கொண்டிராதீர்! பலருக்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள்! சிறிதும் ஒளிக்காதீர்!

நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால்.
93

பிறருக்குக் கொடுத்துத் தானும் அனுபவித்தாலும் பொருள் சேரும் காலத்தில் சேரும். (நம்மிடத்தில் பொருளைச் சேர்த்த) நல்வினை தொலைந்தபோது, அப் பொருளை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் நில்லாது நீங்கிவிடும். (இந்த உண்மையை அறியாதவர்) வறுமையால் வாடி வருந்தித் தம் உதவி நாடி வந்தவா¢ன் துயரைப் போக்க மாட்டார்கள் (அறிந்தவர்கள் பிறர் துன்பம் களைவர் என்பது கருத்து).

இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர்.
94

ஒரு சிறிய அரிசியின் அளவாவது - நாள்தோறும் உங்களால் இயன்ற அளவு பிறருக்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்! ஏனென்றால், ஆழமான கடல் சூழ்ந்த இவ்வுலகில் சமைத்தல் இல்லாத அடுப்பினையுடைய வறியவர்களை, முற்பிறப்பில் பிறருக்கு ஒன்றும் உதவாது இருந்தவர்கள் என்று சான்றோர் உரைப்பர்.

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையா தெனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும்.
95

மறுமையில் துறக்க வாழ்வும் இம்மையில் புகழும் நோக்கி ஏற்ற வகையில், முடிந்த அளவு கொடுக்க வேண்டும். வறுமை காரணமாக அவ்வாறு தர முடியாவிட்டாலும், பிறா¢டம் சென்று பிச்சை எடுக்காமல் இருத்தல், கொடுப்பதைவிட இரண்டு மடங்கு நல்லது. (வறுமையால் பிறருக்கு ஒன்றும் தர முடியாவிட்டாலும் பிறா¢டம் பிச்சை கேட்காமல் இருத்தல் மிக நன்று).

நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.
96

பலரும் தம்மை விரும்புமாறு வள்ளன்மையுடன் வாழ்பவர்கள், ஊர் நடுவிலே மேடையால் சூழப்பட்ட பயன்தரும் பெண் பனை மரத்தைப் போன்றவர், தன் குடும்பம் வளமுடையதாயிருக்கும் போதும் பிறர்க்குக் கொடுத்துத் தான் உண்ணாத மாக்கள் சுடு காட்டில் உள்ள ஆண் பனை மரமே ஆவர். (ஊர் நடுவில் பழம் தரும் பெண் பனையும் இருந்து, அதைச் சுற்றிலும் திண்ணையும் இருந்தால், பலரும் வந்து பழத்தைப் பறித்துத் திண்ணையில் அமர்ந்து உண்பர். அதுபோலச் செல்வர் தம்மை அடைந்தவர்க்கு உண்ண உணவும், இருக்க இடமும் தருவர். செல்வம் பெருகியிருந்தும் யாருக்கும் கொடாதவர் அனைவராலும் வெறுக்கத்தக்க சுடுகாட்டில் உள்ள ஆண் பனை போல்வர்).

பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்
செயற்பால செய்யா விடினும் - கயற்புலால்
புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப!
என்னை உலகுய்யு மாறு.
97

கயல் மீனின் புலால் நாற்றத்தைப் புன்னை மலர்கள் போக்கும் அலை மோதும் குளிர்ந்த கடற்கரையையுடைய அரசனே! பருவ மழை தவறியபோதும், உலகில் உள்ள உயர்ந்தோர் செய்யத்தக்க உதவிகளைப் பிறருக்குச் செய்யாவிட்டால் உலகத்து உயிர்கள் எவ்வாறு பிழைக்கும்?

ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையார்
ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் - ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து.
98

வளம் மிகுந்த குளிர்ச்சியான கடற்கரையையுடைய வேந்தே! ஏந்திய கையை மறுக்காது,எதையாவது, இன்னார் இன்னார் என ஒரு வரையறை செய்யாது, திருப்பித்தர முடியாத வறியருக்கு ஒன்று ஈதலே ஆண் மக்களின் கடமையாகும். மீண்டும் திருப்பிக் கொடுப்பவர்க்கு ஒன்றை ஈதல் யாவரும் அறிந்த 'கடன்' என்னும் பெயருடையது.

இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
அறப்பயன் யார்மாட்டும் செய்க - முறைப்புதவின்
ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும்.
99

நாம் தருவது மிகவும் சிறியது என்று கருதாது, இல்லை என்று சொல்லாது, எப்போதும், பயனுடைய அறத்தை அனைவா¢டத்தும் செய்க! அது, வாயில் தோறும் பிச்சைக்குச் செல்லும் தவசியின் பிச்சைப் பாத்திரம் சிறிது சிறிதாய் நிரம்புவது போல, மெல்ல மெல்லப் புண்ணியப் பயனைப் பூரணமாக்கும்

கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படுஞ் சொல்.
100

குறுங்கோலால் அடித்து ஒலிக்கப்படும் முரசின் ஒலியை ஒரு காத தூரம் வரையில் இருப்போர் மட்டுமே கேட்பர்! மேகத்தின் இடி ஓசையை ஒரு யோசனை தூரம் வரையில் இருப்போர் மட்டுமே கேட்பர்! ஆனால் தகுதியுடையவர்க்குக் கொடுத்தார் என்னும் புகழ்ச் சொல்லை, ஒன்றன் மேல் ஒன்றாக உள்ள மூவுலகங்களில் உள்ளாரும் கேட்பர். (இதனால் பாத்திரம் அறிந்து பிச்சையிடல் உணர்த்தப்பட்டது

நாலடியார் - 11.பழவினை

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு
101

பல பசுக்களின் கூட்டத்தில் கொண்டு போய் விட்டாலும் இளைய பசுங்கன்று தன் தாயைத் தேடி அடைதலில் வல்லதாகும். அது போல முற்பிறப்பிற் செய்த பழவினையும், அவ்வினை செய்தவனைத் தேடி அடைதலில் வல்லமை யுடையதாகும். (பல பசுக்களின் நடுவே விட்ட கன்று தன்தாயைத் தேடி எப்படி அடைகின்றதோ அப்படியே ஒருவன் செய்த பாவ புண்ணியமும் அவனை வந்து அடையும். இதனால் கருமங்கள் அந்தந்தப் பிறப்பிலேயே கழியும் என நினையாமல் பல பிறப்பிலும் தொடர்ந்து பயனைத் தரும் என உணர்ந்து நல்வினையே செய்ய வேண்டும்).

உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு
நின்றுவீழ்ந் தக்க துடைத்து
102

அழகும், வாலிபமும், மேன்மையான பொருளும், பலர் அஞ்சத்தக்க மதிப்பும் ஓரிடத்தில் நிலைத்திராமையைப் பார்த்தும், யாதேனும் ஒரு வகையில் ஒரு நற்செயலும் செய்யாதவனுடைய வாழ்க்கை, உடலெடுத்துச் சில காலம் நின்று பயனில்லாது பின் அழிந்து போகும் தன்மையுடையது.

வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;
அளந்தன போகம் அவரவர் ஆற்றான்
விளங்காய் திரட்டினார் இல்லை களங் கனியைக்
காரெனச் செய்தாரும் இல்
103

செல்வம் முதலியவற்றால் வளமுடன் வாழ்தலை விரும்பாதவர் யாரும் உலகில் இல்லை. ஆனால் அவரவர் செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப அவரவர்களுடைய இன்ப நுகர்வுகள் (சுகபோகங்கள்) வரையறை செய்யப்பட்டுள்ளன. விளாங்காயை உருண்டை வடிவமாகச் செய்தவரும் இல்¨ல் களாப்பழத்தைக் கருமையுடையதாகச் செய்தவரும் இல்லை! (விளாங்காய் ஒருவரால் திரட்டப்படாமல் இயற்கையாகத் திரண்டிருப்பது போலவும், களாப்பழம் ஒருவரால் கறுப்பாக்கப்படாமல் தானே கறுப்பாய் இருப்பது போலவும், அவரவர் இன்பமும் அவரவர் புண்ணிய இயற்கையால் அமைந்துள்ளது. ஆகவே இன்பம் விரும்புவோர் நல்வினையே செய்தல் வேண்டும்).

உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்.
104

வந்து சேரும் தீமைகளை முனிவர்களாலும் தடுக்க முடியாது! அவ்வாறே பெறக் கூடிய நன்மைகளையும் யாராலும் தடுக்க முடியாது! மழை பெய்யாது ஒழிந்தால் அதனைப் பெய்விப்பாரும் இல்லை! அதிகமாகப் பெய்தால் அதனைத் தடுத்து நிறுத்துவாரும் இல்லை! (மழை வறண்ட போது அதனைத் தருவதற்கோ, அது அதிகமானால் அதனைத் தணிப்பதற்கோ எப்படி ஒருவருக்கு ஆற்றல் இல்லையோ அப்படியே ஒருவருக்குத் தீவினைப்பயன் நோ¢ட்ட போதும் நல்வினைப் பயன் நோ¢ட்ட போதும் தடுக்கும் ஆற்றல் இல்லை! அவற்றின் பயன்களை அனுபவித்தே ஆக வேண்டும்).

தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
நினைப்பக் கிடந்தது எவனுண்டாம் மேலை
வினைப்பயன் அல்லால் பிற.
105

பனை அளவாக உயர்ந்த பெருமை மிக்கவரும் தினையளவாகச் சிறுத்துச் சிறுமையுற்று வருந்தி வாழ்வர்! இதற்குக் காரணம் முற்பிறப்பில் செய்த தீவினையின் பயனேயன்றி வேறில்லை. (உயர்ந்தோர் தாழ்ந்தோர் வதற்குக் காரணம் முன் செய்வினையே).

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வதும் அறிதிரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று.
106

பல மேன்மைப்பட்ட நூற்கேள்விகளின் பயனை அறிந்தவர்கள் இறப்பதையும், அறிவீனர்கள் நீடு வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் 'சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் 'சக்கை' என்று நினைத்து எமன் கொள்வதில்லை.

இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ
அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
முன்னை வினையாய் விடும்.
107

அடம்பங் கொடியின் மலர்களை அன்னங்கள் கோதிக் கிழிக்கும் அலைகடலினது குளிர்ச்சியாகிய கரையையுடைய மன்னனே! சிலர் துன்பம் மிகுந்த மனமுடையவராகி யாவரும் காண, பொ¢ய வீடுகளின் தலைவாயிலில் நின்று பிச்சை கேட்டு வருந்தும் செயல் எல்லாம் முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனே ஆகும். (வறுமைக்குக் காரணம் தீவினையே).

அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடும் பட்டவை செய்தல் - வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!
செய்த வினையான் வரும்.
108

காற்று வீசி நெய்தல் நிலங்களிலே தேனைச் சிந்தும் நீண்ட கடலினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய வேந்தனே! அறிவீனராக இன்றி அறிவுடையவராகத் திகழ்ந்தாலும் சிலர், பழியுடன் கூடிய செயல்களைச் செய்தல், முற்பிறப்பிற் செய்த தீவினையின் விளைவாகும். (நல்லறிவு கெடுதற்கும் காரணம் தீவினையே).

ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும எத்துணையும்
வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது.
109

மிகுதியான நீரையுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் வாழும் எல்லாரும் சிறிய தீமையையும் விரும்பமாட்டார்கள். நல்லதையே விரும்புவார்கள். ஆனால் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்வினைப் பயனால் வரத்தக்கவை வராமற் போவதில்லை. (நம் விருப்பத்திற்கும் விரும்பாமைக்கும் ஏற்ப எதுவும் நடப்பதில்லை; வினைப்படியே எல்லாம் நடக்கும்)

சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பரிவு.
110

கரு அமைந்த காலத்திலேயே உண்டான ஊழ் வினைகள் குறையமாட்ட வளரமாட்ட முறைமாறி வரமாட்ட துன்பம் வந்த காலத்தே ஊன்றுகோலாக மாட்ட எவையும் வரவேண்டிய காலத்தே வந்து சேரும். அப்படியிருக்க மரண காலத்தில் ஒருவன் வருந்துவது ஏன்? (ஒருவனது வினைப்பயன் குறைந்தும், வளர்ந்தும், மாறியும் வருவதில்லை. வரும் காலத்து நிச்சயம் வரும். ஆதலால் நேரும் துன்பங்கள் குறித்துத் துயருறுவது வீண்).

நாலடியார் - 12.மெய்ம்மை

இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து.
111

வா¢சையாக வளையலை அணிந்தவளே! தம்மால் தர முடியாத ஒரு பொருளை இரப்போர்க்கு இல்லை என்று கூறுதல் யார்க்கும் பழியாகாது. அ·து உலகில் இயற்கை. ஆனால், ஏற்பவன் ஆசை கெடும்படி பல நாட்கள் கழித்து இல்லையென்று சொல்லுதல் செய்ந்நன்றி மறந்தவா¢ன் குற்றத்தைப் போன்ற குற்றமாகும். ('தருகிறேன். தருகிறேன்' என்பவன் வள்ளல் தன்மையில் இருப்பது போல இரப்பவனை நம்பச் செய்து, நன்றிக்குரியவனாக இருந்துபின் பொய்த்தல் செய்ந்நன்றி கொன்றதற்கு இணையான குற்றம் என்பதாம்).

தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை
எக்காலுங் குன்றல் இலராவர்! - அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.
112

சான்றோரும், சான்றோர் அல்லாதாரும் தத்தம் குணங்களில் எப்போதும் குறையாமல் இருப்பர். வெல்லத்தை யார் தின்றாலும் கசக்காது. வேப்பங்காயைத் தேவரே தின்றாலும் கசக்கும். (தக்காரும் தகவிலாரும் தங்கள் தங்கள் இயல்பிலேயே என்றும் நிலைத்து நிற்பர். இ·து உலக இயல்பு).

காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலராவர் - ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
தொடர்புடையேம் என்பார் சிலர்.
113

குளிர்ந்த மலைகளையுடைய நாட்டுக்கு அரசனே! செல்வம் உண்டான காலத்தில் மேலே வானத்தில் உள்ள நட்சத்திரங்களைவிட நெருங்கிய உறவினர் பலராவர். தகாத, கொடிய வறுமையை ஒருவர் அடைவராயின், அப்போது, 'அவர் எம் உறவினர்' என்று உரிமை பாராட்டுவோர் ஒரு சிலரே ஆவர். (இதுவும் உலக இயல்பாகும்).

வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்
நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
அடுவது போலும் துயர்.
114

குற்றமற்ற இந்த உலகத்தில் போற்றத்தக்க அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப் பொருள்கள் மூன்றனுள் நடுவில் உள்ள பொருளை ஒருவன் அடைந்தால் அவன், அதன் காரணமாக முதலில் உள்ள அறத்தையும், இறுதியில் உள்ள இன்பத்தையும் அடைவான். பொருளைப் பெறாதவன், கொல்லன் உலையிலிட்டு இரும்பைக் காய்ச்சுவதுபோல வறுமைத்துன்பமெய்தி வருந்துவான். (பொருள் உள்ளவன் அறம், இன்பம் ஆகிய இரண்டையும் பெறுவான். பொருள் இல்லாதவன் அறம் முதலான உயிர்ப் பண்புகளை இழந்து வருந்துவான்).

நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
கல்லாரே யாயினும் செல்வர் வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.
115

உயர்ந்த சாதிப் பசுவின் கன்றாக இருந்தால் இளங்கன்றும் நல்ல விலை போகும். கல்லாரேயாயினும் செல்வரது வாயிலிருந்து வரும் சொற்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சிறிதே ஈரமுள்ள காலத்தில் உழுதலைப் போல, வறியவர் வாய்ச்சொல் மதிக்கப்படாது ஒழியும். (சிறிது ஈரத்தில் உழுதால் கொழு மேலே நிற்குமேயன்றி, உள்ளே செல்லாது. அதுபோல, வறியவனுடைய சொற்கள் மேலுக்குத் தலையசைத்துக் கேட்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா).

இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார் - தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்.
116

அகன்ற கண்களையுடையவளே! பேய்ச் சுரைக்காயை உப்புடன் நெய்யும், பாலும், தயிரும், பெருங்காயமும் இட்டுச் சமைத்தாலும் அதன் கசப்பு நீங்காது. அதுபோல, மெய் அறிவை உணர்த்தும் நூல்களை மிக விரிவாக எக்காலமும் கற்றாலும் இயல்பாக அடக்கமில்லாதவர் எப்போதும் அடங்காமலே இருப்பர்.

தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க
என்னை அவரோடு பட்டது - புன்னை
விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப!
உறற்பால யார்க்கும் உறும்.
117

புன்னையின் அழகிய பூமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த கடற்கரையையுடைய வேந்தனே! ஒரு காரணமும் இன்றித் தம்மை இகழ்ந்து பேசுபவரை, அவர் முன்னிலையிலேயே கடிந்து பேசிப் புறக்கணித்துவிட வேண்டும். அவருடைய தொடர்பால் வருவதென்ன? வருபவை ஊழால் வரும். (ஒரு காரணமும் இன்றிப் பழிப்பவரை அடக்கும் வழி அவர் எதிரிலேயே அவரைக் கண்டிப்பதுதான்; புறங்கூறிப் பயனில்லை என்பது கருத்து

ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம்; - பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.
118

பசுக்கள் பல்வேறு நிறத்தனவாயினும் அவை தரும் பால் வெவ்வேறு நிறமுடையதன்று; ஒரே நிறம் உடையதுதான். பாலைப் போல், அறப்பயனும் ஒரே தன்மை உடையதாகும். அவ்வறத்தை ஆற்றும் முறைகள், பசுக்களின் நிறங்களைப் போலப் பலவாகும்.

யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்? - யாஅர்
இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர்
கடைபோக செல்வம்உய்த்தார்?                             119

மனித வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும்போது, ஒரு பழிச்சொல் இல்லாமல் வாழ்ந்தவர் யார்? ஒரு தொழில் இன்றி வாழ்ந்தவர் யார்? வாழ்நாளின் இடையே துன்பத்தை அடையாதவர் யார்? வாழ்நாள் முழுதும் செல்வத்துடன் வாழ்ந்து அதனை அனுபவித்தவர் யார்?

தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று
யாங்கணும் தேரின் பிறிதில்லை; - ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே
கூற்றம் கொண்டுஓடும் பொழுது.
120

எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் உயிருக்குத் துணையாக வருவது அவரவர் நல்வினைகளேயன்றி வேறில்லை. எமன் உயிரைக் கொண்டு செல்லும்போது, அதுவரை ஆடை அணிகளால் அழகுடன் பாதுகாத்த உடம்பும் உயிருக்குத் துணையாக வராது. (உடம்பும் வராது என்றதால், செல்வம் முதலானவையும் வாரா வினையே தொடர்ந்து வரும் என்பது கருத்து).

நாலடியார் - 13.தீவினை அச்சம்

துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
புல்லறி வாளர் வயிறு.
121

சுடுகாடுகள், துயரங்களைத் தரும் இல்வாழ்க்கையில் கிடந்து உழன்று அவற்¨றிவுடையவர்களின் வயிறுகளோ, தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுடுகாடுகளாக இருக்கின்றன. (புலால் உண்பது தீவினைகளுள் தலையானது என்பது கருத்து). ஒழிக்கும் துறவற நெறியை அடையாத மக்களின் பிணத்தையுடையன. அற்ப அறிவுடையவர்களின் வயிறுகளோ, தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுடுகாடுகளாக இருக்கின்றன. (புலால் உண்பது தீவினைகளுள் தலையானது என்பது கருத்து)


இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்
கரும்பார் கழனியுள் சேர்வர் - சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.
122

வண்டுகள் ஒலிக்கும் காட்டில் வாழும் கவுதாரியையும், காடையையும் பிடித்துக் கூட்டில் அடைத்து வைப்பவர்கள், மறு பிறவியில் பகைவர்களிடம் அடிமைகளாகி, காலில் விலங்குகள் பூட்டப்பட்டு, வலிய பார் நிலங்களிலோ கழனிகளிலோ வேலை வாங்கப்படுவார்கள்.

அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால்
அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்.
123

அந்தக் காலத்தில் (முற்பிறவியில்) நண்டைப் பிடித்து அதன் காலை ஒடித்து விரும்பித்தின்ற தீவினை வந்தடைந்தபோது சங்கு மணியைப் போல உள்ளங்கை மட்டும் வெண்ணிறமாய் விளங்க, விரல்களெல்லாம் அழுகிக் குறைந்து துன்பம் தரும் தொழுநோயால் வருந்துவ

நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் - பரப்பக்
கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்
கடுவினைய ராகியார்ச் சார்ந்து.
124

உடம்புக்கு நன்மை செய்யும் நெய்யும் நெருப்பிலிட்டுக் காய்ச்சப்பட்டால், உடம்பில் பட்டுச் சுட்டுத் துன்பம் தரும் நோயை உண்டாக்கும். அதுபோல, நெறி தவறாத நல்லோரும் தீவினையாளரைச் சார்ந்தால் நெறிகெட்டுக் கொடுந்தொழில் செய்பவர் ஆவர். (சிற்றினம் சேர அஞ்சுதல் வேண்டும் என்பது கருத்து).

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நத்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு.
125

பொ¢யோர் நட்புப் பிறைச் சந்திரனைப்போல, நாள்தோறும் படிப்படியாக வளரும். கீழோர் உறவு வானத்தில் தவழும் முழுமதி போல நாள்தோறும் சிறிது சிறிதாகத் தானே தேய்ந்து குறைந்து ஒழியும்.

சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து.
126

நீ சிலரை நற்குணம் உடையவர் என மிகவும் மதித்து நட்புக் கொள்கிறாய்! அப்படி நீ நட்புக் கொண்ட அவர்களிடம் உண்மையிலேயே நற்குணம் இல்லையானால், அவர்களைச் சார்ந்தவனே! உனக்கு நேரும் துன்பத்தினை ஓர் உவமையால் கூறுகிறேன், கேட்பாயாக! அது, ஒருவன் வாசனை மிக்க சந்தனம் இருக்கிறதென நினைத்துச் செப்பைத் திறந்தபோது உள்ளே பாம்பைப் பார்த்தது போலாம்! (ஆராயாமல் நட்புக் கொள்ள அஞ்ச வேண்டும் என்பது கருத்து).

யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் - சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.
127

மலைச் சாரல்களில் ஒளிவிடும் மணிகள் மிகுந்திருக்கும் நாட்டையுடைய அரசனே! கேட்பாயாக! உலகில் ஒருவருடைய மனத்தில் உள்ள எண்ணத்தை அறியும் வல்லமையுடையவர் யார் இருக்கிறார்கள்? (ஒருவரும் இல்லை) ஏனெனில், மக்களின் மனம் வேறாக இருக்கிறது! சொல் வேறாக இருக்கிறது! செயல் வேறாக இருக்கிறது! (ஒருவர் நினைத்தபடி, சொன்னபடி, செய்யாம் வஞ்சனை புரிதலால் அவருடன் தொடர்பு கொள்ள அஞ்ச வேண்டும் என்பதாம்).

உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்க்
கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை - தெள்ளிப்
புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
மனத்துக்கண் மாசாய் விடும்.
128

தெளிந்த தன்மையுடன் கூடிய அருவிநீர் சேற்றை அலசி ஒதுக்கும் மலைநாட்டு மன்னனே! மனப்பூர்வமாக நட்புக் கொள்ளாமல் (இவர் உண்மையாக அன்பு கொள்பவர் என நம்புமாறு) உறுதியான செயல்களைச் செய்து வஞ்சனையாக உறவு கொள்பவருடைய மிக்க நட்பு மனத்தில் பெருங் குற்றமுடையதாக இருக்கும். (வஞ்ச மனத்தான் நட்பு நஞ்சாகும்; அதற்கு அஞ்சுக என்பது கருத்து).

ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஆக்கம்
இருமையும் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு.
129

தான் பகைவர் மீது வீசிய ஒளிமிக்க வாள், அப்பகைவர் கையில் அகப்பட்டால், அது தனது மனவலிமையைக் கெடுப்பது உறுதி. அதுபோல, தீயோர்க்குச் செய்த உதவி, உதவி செய்தவனின் இம்மை மறுமைப் பயன்களையும் தொடர்ந்து கெடுப்பதால், அத்தகைய தீயோரிடமிருந்து விலகி இருப்பது நல்லதே ஆகும். (ஒருவனைக் கொல்ல வீசிய வாள் அவன் கையில் அகப்பட்டால், அவ்வாளை வீசியவனின் உறுதி கெடும். தலால் அவ்வாளுக்கு அஞ்சி அவனிடமிருந்து விலக வேண்டும். அப்படியே ஒரு மூடனுக்கு ஓர் உதவி செய்தால் அவன் அதைக் கொண்டு பல கொடுமைகள் செய்வான். அதனால் உதவி செய்தவனுக்கு இம்மையில் நன்மையும் புகழும் கெடுவதுமன்றி மறுமையில் நரகத்திற்கும் காரணமாகும். ஆகவே வாளுக்கு அஞ்சுவதைவிட, மூடனுக்கு உதவி செய்வதில் மிகவும் அஞ்ச வேண்டும் என்பது கருத்து).

மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே! - எனைத்தும்
சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு.
130

நெஞ்சமே! நீ மனைவியிடம் கொண்டுள்ள ஆசையை விடமாட்டாய்! மக்களுக்குப் பொருள் முதலியன சேர்த்து வைக்க வேண்டும் என்று ஏக்கமுற்று இன்னும் எவ்வளவு காலம் வாழப் போகிறாய்? சிறிதளவாயினும் செய்யும் அறச்செயலாலன்றி உயிர்க்கு வேறு செயலால் கிடைக்கும் பயன் எதுவும் இல்லை! (மனைவி மக்களிடத்துப் பற்றுக் கொண்டு அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்ய வேண்டும் என ஏக்கம் கொண்டு இன்னும் எவ்வளவு காலம் வாழப்போகிறாய்? இந்த ஏக்கத்தினாலேயே நீ இறக்கப் போவதன்றி வேறொரு நற்பயனையும் பெறப் போவதில்லை! இருக்கும் குறைந்த ஆயுட்காலத்திலாவது அறம் செய்தால் அதுவே உயிர்க்கு நற்பயனாகும். ஆதலால் உயிர்க்கு உறுதி செய்யாமல் வாழ்வதற்கு அஞ்ச வேண்டும் என்பது கருத்து).

திருக்குறள் - அறத்துப்பால் - கடவுள் வாழ்த்து - திருவள்ளுவர்


குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து.

குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.
மு.வரதராசனார் உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
பரிமேலழகர் உரை:
அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க. 
விளக்கம்: எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உலகில் வழங்கிவரும் எழுத்துக்கள் எல்லாம் ஒளிவடிவான 'அகர'மாகிய முதலை உடையன. அதுபோல, உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடையது.
Transliteration
agara mudhala ezhuthellaam aadhi
bhagavan mudhatRe ulagu

Translation:
A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains.
Explanation:
As all letters have the letter A for their first, so the world has the eternal
God for its first
.

குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.
மு.வரதராசனார் உரை:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
சாலமன் பாப்பையா உரை:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.
பரிமேலழகர் உரை:
கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.
மணக்குடவர் உரை:
மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின். சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எல்லா நூல்களையும் கற்றவனுக்கு அக்கல்வி அறிவால் உண்டான பயன் என்னவென்றால். தூய அறிவினன் - மெய்யுணர்வினன் - ஆகிய இறைவனுடைய நல்ல அடிகளைத் தொழுதல் ஆகும்.
Transliteration:
katRadhanaal aaya payanenkol vaalaRivan
natRaal thozhaa-ar enin.
Translation:
No fruit have men of all their studied lore, Save they the 'Purely Wise One's'feet adore.
Explanation:
What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?.

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
மு.வரதராசனார் உரை:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
சாலமன் பாப்பையா உரை:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.
பரிமேலழகர் உரை:
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார். (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்).
மணக்குடவர் உரை:
மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். 'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உள்ளக் கமலத்தில் - மனத்தில் - சென்றிருப்பவனான இறைவனுடைய மாட்சியமைப்பட்ட அடிகளை எப்போதும் நினைப்பவர்கள் , உலகில் அழிவின்றி வாழ்வார்கள்.
Transliteration:
malarmisai aeginaan maaNadi saerndhaar
nilamisai needu-vaazh vaar
Translation:
His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain.
Explanation:
They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).

குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
மு.வரதராசனார் உரை:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.
பரிமேலழகர் உரை:
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.).
மணக்குடவர் உரை:
இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டாமையிலான்" என்று பெயரிட்டார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
விருப்பும் வெறுப்பும் இல்லாவனான இறைவனின் அடிகளை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, எக்காலத்திலும் துன்பமே உண்டாகாது.
Transliteration:
vaeNdudhal vaeNdaamai ilaanadi saerndhaarkku
yaaNdum idumbai ila
.
Translation:
His foot, 'Whom want affects not, irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain.
Explanation:
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.


குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
கலைஞர் மு.கருணாநிதி  உரை:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.
Transliteration:
iruLser iruvinaiyum saeraa iRaivan
poruLser pugazh-purindhaar maattu
.
Translation:
The men, who on the 'King's' true praised delight to dwell, Affects not them the fruit of deeds done ill or well.
Explanation:
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.


குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
கலைஞர் மு.கருணாநிதி  உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
மு.வரதராசனார் உரை:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
சாலமன் பாப்பையா உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றர் நெடுங்காலம் வாழ்வார்.
பரிமேலழகர் உரை:
பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது).
மணக்குடவர் உரை:
மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்?.இது சாவில்லையென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து பொறிகளின் வழியாக வரும் ஆசைகளை அறுத்தவனுடைய மெய்யான ஒழுக்க வழியில் நின்றவர்கள், எக்காலத்திலும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள்.
Translation:
Long live they blest, who 've stood in path from falsehood freed; His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.
Explanation:
Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.


குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
மு.வரதராசனார் உரை:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.
பரிமேலழகர் உரை:
தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. ("உறற்பால தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.).
மணக்குடவர் உரை:
தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது மனத்துண்டாங் கவலையை மாற்றுத லரிது. வீடுபெறலாவது அவலக்கவலைக் கையாற்றினீங்கிப் புண்ணிய பாவமென்னுமிரண்டினையுஞ் சாராமற் சாதலும் பிறத்தலுமில்லாத தொரு தன்மையை யெய்துதல். அது பெறுமென்பார் முற்படக் கவலை கெடுமென்றார். அதனால் எல்லாத் துன்பமும் வருமாதலின்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தனக்கு ஈதாக எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாவனுடைய தாள்களை நினைப்பவர்களுக்கு அல்லாமல், மற்றவர்களால் மனத்தில் உண்டாகும் துன்பங்களை நீக்க முடியாது.
Translation:
Unless His foot, 'to Whom none can compare,gain, 'This hard for mind to find relief from anxious pain.
Explanation:
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.


குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
கலைஞர் மு.கருணாநிதி  உரை:
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
மு.வரதராசனார் உரை:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.
பரிமேலழகர் உரை:
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.).
மணக்குடவர் உரை:
அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அறக்கடலாகிய இறைவனுடைய அடிகளாகிய தெய்வத்தினைச் சார்ந்தவர்க்கு அல்லாமல், மற்றவர்களுக்குப் பொருள், இன்பம் ஆகிய கடல்களை நீந்திக் கடத்தல் முடியாததாகும்.
Translation:
Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain, 'Tis hard
the further bank of being's changeful sea to attain.
Explanation:
None can swim the sea of vice, but those who are united to the feet of that
gracious Being who is a sea of virtue.


குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
கலைஞர் மு.கருணாநிதி  உரை:
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
மு.வரதராசனார் உரை:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
சாலமன் பாப்பையா உரை:
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.
பரிமேலழகர் உரை:
கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தத்தமக்குரிய புலன்களைக் கொள்ளுதல் இல்லாத மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளைப்  போல அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடைய இறைவனுடைய தாள்களை வணங்காத் தலைகளும் பயன்படுத்தலுடையான் அல்லவாம்.
Translation:
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead.
Explanation:
The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.


குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
கலைஞர் மு.கருணாநிதி  உரை:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
மு.வரதராசனார் உரை:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.
பரிமேலழகர் உரை:
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.).
மணக்குடவர் உரை:
பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இறைவன் அடிகள் என்னும் தொப்பத்தைச் சேர்ந்தவர்கள், பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பர். அவ்வாறு சேராதவர்கள் (நினைத்திருக்காதவர்கள்) நீந்த மாட்டார்கள்; அதனுள் அழுந்துவார்கள்.
Translation:
They swim the sea of births, the 'Monarch's' foot who gain; None others reach
the shore of being's mighty main.
Explanation:
None can swim the great sea of births but those who are united to the
feet of God.