ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புறநானூறு - கடவுள் இலவே! - முரண்

சங்ககாலத்தில் கடவுள் என்பது இயற்கை வழிபாடே என்ற கருத்தை வலியுறுத்த இந்தப் பாடலை பலர் மேற்கோள் கட்டுவதுண்டு.

புறநானூறு - 335. கடவுள் இலவே! - மாங்குடி கிழார் (அ) மாங்குடி மருதனார் 

அடலருந் துப்பின் .. .. .. ..
.. .. .. .. குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு             5
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,                 10
கல்லே பரவின் அல்லது, .. .. .. .. .. .. .. ..
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

பொருளுரை: குருந்து [குறிஞ்சி], முல்லை. (மருதம், நெய்தல்) என்னும் நான்கு பூக்களைத் தவிர வேறு வாழ்வியல் திணையைக் குறிக்கும் பூக்கள் இல்லை. வரகு, தினை, கொள், அவரை என்னும் நான்கு அல்லாத வேறு உணவுப்பொருள் அந்த மூதில் குடிக்கு இல்லை. துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் நான்கு இனக் குடிமக்கள் அல்லது அந்த மூதில் மக்களுக்கு உறவினர் வேறு குடிமக்கள் இல்லை. இப்படி எல்லாம் நான்கு வகைப்பட்டதாக இருக்கும்போது அவர்களுக்குக் கடவுள் மட்டும் ஒன்றே. அந்த ஒன்றும் நடுகல். வாளேந்திப் போர்க்களம் சென்று பகையரசரின் களிற்றை வீழ்த்திவிட்டு மாண்டுபோனவனுக்கு நடப்பட்ட கல் அது. அதற்கு அவர்கள் பூவைப் போட்டுப் பூசை செய்வது போல நெல்லை ஒவ்வொன்றாகப் போட்டுப் பூசை செய்வர்.

பொதுவாக இறைவன் பற்றிய கருத்துக்கள் நூல்களுக்கு இடையே அலல்து சமையங்களுக்கு இடையே முரண் படும். ஒரே பாடலில் முரண்படுவதாக இந்த பொழிப்புரை சொல்கிறது.

கடவுள் ஒன்றே என்று கூறும் இந்த முழுமையாக கிடைக்கப் பெறாத பாடல், அந்த கடவுள் என்று நடுகல் என்றும் அதை விடுத்தால் வேறு கடவுள் இல்லை என்று கூறுகிறது என்பதாக பொழிப்புரை வழங்கப் பட்டுள்ளது.  

முரண்: கடவுள் ஒன்று என்ற பின் அது நாடு கல் என்று கூறுவது எப்படி பொருந்தும்? வாளேந்தி போரிட்டு மாண்டவன் ஒரே ஒருவன் தான் இருந்தானா? அவருக்கு நடப்பட்ட ஒரே ஒரு நடுகல் தான் இருந்ததா? 

இதை இப்படி புரிந்து கொள்வதா? அல்லது ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதா? 

மாங்குடி கிழார் கடவுள் இல்லவே இல்லை என்றும், அல்லது கல்தான் கடவுள் என்றும் கூறவில்லை. நெல்லை உதிர்க்கும் "கடவுளும் இலவே" என்கிறார். அதாவது வேறு ஒன்று கடவுளாக உள்ளது. அதோடு சேர்த்து நெல்லை உதிர்க்கும் இதையுமா கடவுள் என்கிறீர்; என்கிறார். (உம் விகுதி சிறப்பு.) 

மறைநூல்களில் இடைச்செருகல்கள்

பாரதம் பாடிய பெருந்தேவனார் 

இவர் சங்ககாலப் புலவர் அல்லர். வியாச பாரதத்தை வெண்பாவும் அகவலும் உரைநடையும் விரவிவரப் பாடி வெளியிட்டமையால் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப்பெற்றார். இவர் பிறந்தது தொண்டை நாடு எனத் தொண்டை மண்டலம் குறிப்பிடுகின்றது. சங்கநூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தவர். எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்தவர். இவரது கடவுள் வாழ்த்துப் பாடல்களை நூலுக்குத் தொடக்கப் பாடலாக இணைத்துள்ளார். 

இவரது பாடல்கள் சங்க நூல்களான 1) அகநானூறு 2) ஐங்குறுநூறு 3) குறுந்தொகை 4) நற்றிணை & 5) புறநானூறு ஆகிய ஐந்து நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல்களாக இவரது காலத்தில் சேர்க்கப்பட்டன.

கடவுளின் வரையறையாக அந்த நூல்கள் சொல்வதற்கு முரணாக அந்த கடவுள் வாழ்த்துகள் அமைந்துள்ளன. எந்தவித அதிகாரமும் இல்லமால் பிறர் இயற்றிய சங்கநூல்களில் இப்படி கருத்து திரிபு செய்யும் துணிச்சல் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறதோ? உதாரணமாக, 

புறநானூறு கடவுள் வாழ்த்து
 
கண்ணி கார்நறுங் கொன்றை, காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை(2);
ஊர்தி வால்வெள் ஏறே, சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்ஏறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று, அக்கறை                    5
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறைநுதல் வண்ணம் ஆகின்று, அப்பிறை
பதினெண் கணனும்(1) ஏத்தவும் படுமே;                                10

பொருளுரை:  தவமுதிர்ச்சியின் சான்றாவது அவனது தாழ்சடை. அனைத்து உயிர்க்கும் காவலாகும் அருளுடைமையைக் காட்ட, நீர் வற்றுதல் இல்லாத கமண்டலமும் அவன் கையிலே உள்ளது. மேலும், அவன் தலையிலும் மார்பிலும் கொன்றைப்பூவினை அணிபவன். வாகனமாகவும், கொடியாகவும், தூய ஆனேற்றைக் கொண்டிருப்பவன். அவன் கழுத்தை நச்சுக்கறை அழகு செய்கிறது. மறைகளை ஒதுபவரான அந்தணரால் அது புகழவும் படுகிறது. பெண் உருவை ஒரு பாகத்திலே அறியக்காட்டியும், தன்னுள் அதனை அடக்கி ஒளித்துத் தானாகத் தனித்தும் அவன் விளங்குகின்றான். அவனது நெற்றிக்கு வனப்புத் தரும் பிறை பதினெண் கனத்தால் போற்றவும் படுகிறது.  

முரண் 1: பதினெண்கணங்கள் - தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாரகணம், ஆகாசவாசி, போகபூமியர் என்று கூறப்படுகிறது ஆனால் பிறவாவது தேவ, அசுரர் இயக்கர் என மூன்று மட்டும் என்று தொல்காப்பியம் சொல்கிறது. 

முரண் 2: இந்த கொண்டை, நீல் முடி, கமண்டலம், போன்றவைகள் நல்லடியார் என்பதற்கான சான்றால்ல என்று பொருகுருக்கள் என்கிற தலைப்பில் பலவேறு சித்தர்களும் நூல்களும் எச்சரித்து உள்ளன. சான்று  

மாற்றான் பிள்ளைக்கு தனது முகவரியை (inital) தருவது போன்ற இழி செயல் இது. ஆனால் உண்மையை ஏற்றுக்கொண்ட இவரைக்கூட சகிக்கலாம். கீழே வரவிருப்பவைகள், நூலாசிரியர் எழுதினார் போல சொருகப்பட்ட விஷ விதைகள். 

திருமூலர் 

திருமந்திரத்தின் உண்மை கடவுள் கொள்கை 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே - திருமந்திரம் 2066

மாயனை நாடி மனநெடுந் தேர்
ஏறிப்போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக்
காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே. - ஒன்பதாம் தந்திரம் - 28. பாடல் எண் : 1

பொருள்: கண்ணால் காண இயலாத இறைவனை மனம் என்னும் தேர் ஏறி பொய் தேடி ஆவான் நாடு  இடம் அறியாமல் புலம்புவர் தேகம் என்னும் நாட்டுக்குள் தேடி திரிந்து ஊன் என்னும் நாட்டிடை கண்டுகொண்டேன் என்ப்று 

திருமந்திரத்தின் கடவுள் கொள்கையானது ஒரே இறைவன் அவனை கண்களால் காண இயலாது என்பதாம். 

புகுத்தப்பட்ட கடவுள் கொள்கை 

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. - திருமந்திரம் கடவுள் வாழ்த்து 

பல கடவுளிகளில், முழுமுதற் கடவுள் விநாயகர் என்றும், அவருக்கு ஐந்து கைகள், யானை முகம் என்று வருணிப்பது திருமந்திரத்துக்கு நேர் எதிர் கருத்தல்லவா? 

இந்த பாடல் பின்னர் நுழைக்கப்பட்டது, திருமூலர் தமது நூலை “ஏனவெயிறணிந்தாரை ஒன்றவன்றான்“ எனத் தொடங்கினார் என்பது தான் சேக்கிழார் கூறுவது. ஆகவே கடவுள் வணக்கமாக இப்பாடல் பிற்கால இணைப்பானது என்பதையும் அறியலாகும்.

அத்துடன், திருமந்திரம் பாயிரப்பகுதியிலுள்ள 112 பாடல்களில் 67 பாடல்களே திருமூலர் வாக்கென்றும் ஏனைய 45 பாடல்களும் இடைச்செருகல் என்றும் கருத்தும் உள்ளது. அவ்வாறே, பாயிரத்திறுதியில் திருமந்திரப் பாடல் தொகையினையும் பொருட் சிறப்பினையும் கூறும் 99, 100ஆம் பாடல்களும், குரு வரலாறு கூறும் 101, 102 ஆம் பாடல்களும் பிற்காலச் சேர்க்கையாகும் என்றும் அறியப்பட்டுள்ளது (சைவ சித்தாந்த சாத்திர வரலாறு).

இப்பொழுது இதில் காப்புச் செய்யுளோடு சேர்த்து 3048 பாடல்கள் உள்ளன. மற்றும் சிலர் 3100 செய்யுட்கள் என்றும் கணக்கிடுகின்றனர். இருந்தாலும், “முன்னிய அப்பொருண்மாலைத் தமிழ் மூவாயிரஞ்சாத்தி” என்ற சேக்கிழார் கூற்றாலும், ‘மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்’ என்பது வழக்கு என்பதாலும் 3000 செய்யுட்களே மூலப்பாடம் மற்றவை பிற்சேர்க்கை என்பது அறியக்கூடியது. பாடல் எண்ணிக்கை 3000 என்பதற்கும் மேல் சென்ற காரணம் சில பாடல்கள் மீண்டும் மற்றொரு பகுதியில் கொடுக்கப்பட்டதும், சொல் பிரித்து எழுதுகையில் வேறு பாடலாகக் கணக்கிடப்பட்டதாலும் என்ற கருத்தும் உண்டு.

அவ்வையார் பாடல்கள்  

அவ்வையாரின் உண்மை கடவுள் கொள்கை 

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - நல்வழி வெண்பா 40

விளக்கம்: தெய்வப் புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளும், நான்கு வேதத்தின் முடிவும், அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய மூவர் பாடிய தேவாரமும், மாணிக்க வாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவையும், திருமூலர் பாடிய திருமந்திரம் ஆகிய நூல்கள் சொல்லும் பொருள்கள் அனைத்தும் ஒன்று தான் என்று நீ உணர்ந்து கொள்.

 அவ்வையார் நூல்களில் கடவுள் வாழ்த்து திணிப்புகள் 

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு. - மூதுரை கடவுள் வாழ்த்து 

பொருள்: பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய இலக்குமியின் அன்பும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா. - நல்வழி கடவுள் வாழ்த்து 

விளக்கம்: பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப் பாகுவையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன், ஆண் யானை உருவம் உடைய உயிர்களுக்கு நல்லது செய்யும், மாசில்லாத விநாயகப் பெருமானே நீ எனக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என்ற சங்கத் தமிழ் மூன்றும்தா.

“ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே” - ஆத்த்திச்சூடி கடவுள் வாத்து 

பொருள்: திருவாத்தி பூமாலையை அணிபவராகிய சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை வாழ்த்தி வாழ்த்தி வணங்குவோம் நாமே.

ஔவையார் சான்றிதழ் தரும் திருக்குறள் "தனக்குவமை இல்லாதான்" என்றும், திருமந்திரம் "ஒருவனே தேவன்" என்றும் கூறும் கடவுள் கொள்கைக்கு எதிராக அமைந்துள்ள இந்த அவ்வையாரின் நூல்களில் உள்ள கடவுள் வாழ்த்தும் எனவே இவைகள் இடைச் சொருகல்களே. 

திரிகடுகம் 

கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த்
தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம், - இம் மூன்றும்
பூவைப் பூ வண்ணன் அடி. - கடவுள் வாழ்த்து

பொருள்: உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும் நிகழ்த்திய திருமாலின் அடிகளை வணங்கினால் அனைத்து தீமைகளும் போகுமே. 

முடிவுரை 

இவைகளெல்லாம் கண்ணுக்கு தெரிந்த இடைச்சொருகல்கள். நாம் கண்டறியாத பாடல்களில் மாற்று நூலின் பொழிப்புரையில் பொய் கலந்திட்ட விடயங்களையெல்லாம் எப்படி கண்டறிவது? 

எங்கெல்லாம் விநாயகரும் திருமாலும் இடம் பெறுகிறார்களோ அப்பொழுது அறியலாம் அது இடைச்சொருகலாக இருக்கலாம் என, குறைந்தது பொழிப்புரையில் விளையாடி உள்ளனர் என.

கண்டறிந்து என்ன செய்யப் போகிறோம்? இந்த மறைநூல்களெல்லாம் (அ) அறநெறி நூல்களெல்லாம் நாம் கற்று பின்பற்றுவதற்க்காக நமக்கு வழங்கப்பட்டது. அதை கற்பதால் ஏற்படும் நன்மையையும் கல்லாமையினால் ஏற்படும் தீமையும் கல்வி என்னும் தலைப்பில் ஒவ்வொரு நூலிலும் விளக்கப் பட்டுள்ளது.