முதுமொழிக் காஞ்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதுமொழிக் காஞ்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முதுமொழிக் காஞ்சி

மதுரைக் கூடலூர் கிழார்
இயற்றிய
முதுமொழிக் காஞ்சி
(உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.)


     முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும் குறிக்கும். பல மணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பல கோத்த நூல் முதுமொழிக் காஞ்சி எனப் பெயர் பெற்றது எனச் சிலர் கூறுவர்.


     இந் நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர் கிழார். கூடலூர் இவர் பிறந்த ஊராயும், மதுரை பின்பு புகுந்து வாழ்ந்த ஊராயும் இருத்தல் கூடும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம். சங்க நூல்களில் குறிக்கப்பெறும் கூடலூர் கிழாரும் இவரும் ஒருவர் அல்லர். சங்கப் புலவர் 'புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்' என்று குறிக்கப் பெறுகிறார். இவ் இருவரையும் குறிக்கும் அடைமொழி வேறுபாடே இருவரும் வேறு வேறு புலவர் என்பதைப் புலப்படுத்தும். மேலும், முதுமொழிக் காஞ்சியில் வரும் விழைச்சு, சொன்மலை, மீப்பு முதலிய பிற்காலச் சொல்லாட்சிகளும் இவர் சங்கப் புலவர் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதைத் தெளிவுபடுத்தும்.

     இந் நூலுள் பத்துப் பத்துக்களும், ஒவ்வொரு பத்திலும் பத்து முதுமொழிகளும் உள்ளன. ஒவ்வொரு செய்யுளின் முதல் அடியும், 'ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்' என்றே தொடங்குகின்றமையால் இந் நூல் நூறு குறள் வெண் செந்துறையாலானது எனலாம். எல்லா அடிகளிலும் பயின்று வரும் சொற் குறிப்பைக் கொண்டு, ஒவ்வொன்றும் சிறந்த பத்து, அறிவுப் பத்து என்று பெயர் பெற்றுள்ளது.

     நூறதாம் சிறுபஞ்ச மூலம்; நூறு
     சேர் முதுமொழிக் காஞ்சி.

எனவரும் பிரபந்த தீபிகைக் குறிப்பினால் முதுமொழிக்காஞ்சி நூறு எண்ணிக்கை உடையதாகக் கருதப் பெறுதலும் விளங்கும்.


1. சிறந்த பத்து

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை.
ஆர்கலி - கடல்
ஓதலின் - கற்றலைப் பார்க்கிலும்

     ஓசையினை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஒழுக்கத்துடன் இருப்பது சிறந்ததாகும்.

2. காதலின் சிறந்தன்று, கண் அஞ்சப்படுதல்.
காதலின் - பிறரால் அன்பு செய்யப்படுவதைக் காட்டிலும்
சிறந்தன்று - சிறப்புடையது

     பிறர் அன்பு பாராட்டும்படி நடத்தலை விட அவர் மதிக்கும்படி நடத்தல் மேலானது.

3. மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை.
கற்றது - கற்ற பொருளை
மறவாமை - மறவாதிருத்தல்

     புதிதாக ஒன்றை அறிந்துகொள்வதை விட கற்றதை நினைவில் வைத்திருப்பது மேலானது.

4. வண்மையின் சிறந்தன்று, வாய்மை உடைமை.
வண்மையின் - வளமையோடிருத்தலை விட

     செல்வத்தினும் சிறப்புடையது உண்மை வாழ்க்கையாகும்.

5. இளமையின் சிறந்தன்று, மெய் பிணி இன்மை.
மெய் - உடம்பு
பிணி இன்மை - நோயில்லாமலிருத்தல்

     நோயில்லாமல் இருத்தல் இளமையினும் சிறப்பானது.

6. நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று.
நலன் உடமையின் - அழகுடைமையை விட
நாணு - நாணமுடைமை

     அழகைக் காட்டிலும் வெட்கம் சிறப்பானது.

7. குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று.
குலன் உடைமையின் - நல்ல குணத்தையுடைமையினும்
கற்பு - கல்வியுடைமை

     உயர்ந்த குலத்தைக் காட்டிலும் கல்வி மேன்மையானது.

8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
கற்றாரை - கற்ற பெரியாரை
வழிபடுதல் - போற்றியொழுகுதல்

     கற்றலை விடக் கற்றாரை வழிபட்டொழுகுதல் மேலானது.

9. செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று.
செற்றாரை - பகைவரை
செலுத்துதலின் - ஒறுத்தலினும்

     பகைவரை வெல்லுவதைவிட தன்னை மேம்படுத்திக் கொள்வது சிறப்பானது.

10. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று.
முன் பெருகலின் - முன்பு பெருகிப் பின் அழிதலைக் காட்டிலும்
சிறுகாமை - நின்ற நிலையில் குறையாதிருத்தல்

     செல்வம் பெருகி அழிவதைவிட, பெருகாமல் நிலையாக இருத்தல் நன்று.

2. அறிவுப்பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. பேர் இல் பிறந்தமை ஈரத்தின் அறிப.
ஈரத்தின் - அவனுக்குள்ள அருட்டன்மையினால்
அறிப - அறிஞர் அறிந்து கொள்வர்

     கடல் சூழ்ந்த உலகத்தில் உள்ள மக்களுக்கெல்லாம் ஒருவன் உயர்ந்த குடியில் பிறந்தாலும் அவன் அருளால் அறியப்படுவான்.

2. ஈரம் உடைமை ஈகையின் அறிப.
ஈரம் உடைமை - அருளுடைமையை
ஈகையின் - அவன் கொடைத்தன்மையினால்

     இரக்கம் உள்ளவன் என்பது அவன் கொடுப்பதனால் தெரியும்.

3. சோரா நல் நட்பு உதவியின் அறிப.
சோரா - நெகிழாத
நல்நட்பு - உயர்ந்த நட்புடைமையை

     உதவி செய்யும் தன்மையினால் நல்ல நண்பர்களைப் பெறுவான்.

4. கற்றது உடைமை காட்சியின் அறிப.
கற்றது உடைமை - கற்ற கல்வியுடைமையை
காட்சியின் - அறிவினால்

     ஒருவன் பெற்ற கல்வியை அவனின் அறிவால் அறிவார்கள்.

5. ஏற்றம் உடைமை எதிர்கோளின் அறிப.
ஏற்றம் உடைமை - ஆராய்ச்சியுடைமையை
எதிர்கோளின் - இடையூறுகள் வருவதற்கு முன்னே அவன் செய்யும் முன்னேற்பாடுகளால்

     ஒருவன் செய்யும் செயல்களால் அவனின் ஆராய்ச்சி அறிவு அறியப்படும்.

6. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப.
சிற்றில் பிறந்தமை - தாழ்ந்த குலத்தில் பிறந்தமையை
பெருமிதத்தின் - செருக்கினால்

     தாழ்குலத்திற் பிறந்தமையைச் செருக்கினால் அறிந்து கொள்வர்.

7. சூத்திரம் செய்தலின், கள்வன் ஆதல் அறிப.
சூத்திரம் செய்தலின் - வஞ்சனை செய்தலால்
கள்வன் ஆதல் - திருடனாதலை

     வஞ்சகச் செயலும் எண்ணமும் ஒருவனைத் திருடனாக்கும்.

8. சொற்சோர்வு உடைமையின், எச் சோர்வும் அறிப.
சொற்சோர்வு உடைமையின் - சொல்லில் தளர்ச்சியுடைமையால்
எச்சோர்வும் - ஏனை எல்லாச் சோர்வுகளையும்

     சொல் தளர்ச்சி எல்லாத் தளர்ச்சியையும் காட்டிவிடும்.

9. அறிவுச் சோர்வு உடைமையின், பிறிது சோர்வும் அறிப.
அறிவுச் சோர்வு உடைமையின் - அறிவுமழுக்கமுடைமை
பிறிது சோர்வும் - செயல் மழுக்கமும்

     ஒருவன் அறிவுச் சோர்வுடையதாக இருந்தால் அவன் எல்லாச் சோர்வுகளையும் உடையவனாவான்.

10. சீர் உடை ஆண்மை செய்கையின் அறிப.
சீர் உடைமை ஆண்மை - புகழ்பொருந்திய ஆள்வினைத் தன்மையை
செய்கையின் - எடுத்து முடிக்குஞ் செய்கையினால்

     முயற்சியின் திறம், முடிக்கும் செயலால் அறியப்படும்.

3. பழியாப் பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. யாப்பு இலோரை இயல்பு குணம் பழியார்.
யாப்பு இலோரை - யாதொன்றிலும் உறுதியில்லாதவர்களை
பழியார் - அறிஞர் பழித்துரையார்

     கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருக்குள்ளும், ஒரு செய்கையிலும் நிலை இல்லாத இயற்கை குணத்தை அறிஞர் பழிக்கமாட்டார்.

2. மீப்பு இலோரை மீக் குணம் பழியார்.
மீப்பு இலோரை - பெருந்தன்மையில்லாதவர்களின்
மீக்குணம் - பெருமிதத் தன்மையை

     மேன்மைக்குணம் இல்லாதவருக்கு மேன்மை செய்யாவிட்டால் யாரும் பழிக்கமாட்டார்கள்.

3. பெருமை உடையதன் அருமை பழியார்.
பெருமையுடையதன் - பெருமையுடையதொரு பொருளை
அருமை - முடித்துக் கொள்ளும் அருமையை

     பெருமை தரத்தக்க செயலை முடிக்கும் தன்மையை யாரும் பழிக்கமாட்டார்கள்.

4. அருமை உடையதன் பெருமை பழியார்.
அருமை உடையதன் - அடைதற்கருமையான பொருளின்
பெருமை - உண்மைப் பெருமையை

     அருமையான பொருளின் பெருமையை யாரும் பழிக்கமாட்டார்கள்.

5. நிறையச் செய்யாக் குறை வினை பழியார்.
நிறையச் செய்யா - முழுவதும் செய்யப்படாத
குறைவினை - குறைவான வேலையை

     ஒரு வேலை முடியாதபோது அதனைக் குறித்துப் பழிக்கமாட்டார்கள்.

6. முறை இல் அரசர் நாட்டு இருந்து பழியார்.
முறை இல் - முறையில்லாத
நாட்டு இருந்து - நாட்டிலிருந்து கொண்டு

     தர்மம் இல்லாத அரசனிடத்து இருக்கும் அறிஞர்கள் அவனது நாட்டைப் பழிக்கமாட்டார்கள்.

7. செயத்தக்க நற் கேளிர் செய்யாமை பழியார்.
செயத்தக்க - உதவி செய்யவல்ல
நற் கேளிர் - நல்ல இயல்புடைய சுற்றத்தாரை

     உதவி செய்யவல்ல நல் இயல்புடைய சுற்றத்தார் அதனைச் செய்யவில்லை என்றால் பழிக்க மாட்டார்கள்.

8. அறியாத தேசத்து, ஆசாரம் பழியார்.
அறியா தேசத்து - தான் முன் அறியாத நாட்டினது
ஆசாரம் - வேறுபட்ட பழக்க ஒழுக்கங்களை

     தெரியாத தேசத்திற்குச் செல்லும்போது அங்குள்ள ஒழுக்கத்தைப் பழிக்கமாட்டார்கள்.

9. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்.
வறியோன் - பொருளில்லாதவன்
வள்ளியன் - ஈகையுடையன்

     வறுமையுடையவனின் ஈயாமையை யாரும் பழிக்கமாட்டார்கள்.

10. சிறியார் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.
சிறியார் ஒழுக்கம் - கீழ்மக்களின் ஒழுக்கத்தை
சிறந்தோரும் - ஒழுக்கத்தின் மிக்காரும்

     சிறுமைக் குணம் உடையவரின் ஒழுக்கத்தை யாரும் பழிக்கமாட்டார்கள்.

4. துவ்வாப் பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. பழியோர் செல்வம் வறுமையின் துவ்வாது.
பழியோர் செல்வம் - பழியுடையோர் செல்வம்
துவ்வாது - நீங்கியொழியாது

     பழியுடையாருக்குச் செல்வம் இருந்தாலும் இல்லாததைப் போன்றதாகும்.

2. கழி தறுகண்மை பேடியின் துவ்வாது.
கழி - அளவின் மிக்க
தறுகண்மை - வீரம்

     அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருத்தல் பேடித்தன்மையாகும்.

3. நாண் இல் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.
நாண் இல் வாழ்க்கை - நாணமில்லாது உண்டு உயிர்வாழும் வாழ்க்கை
பசித்தலின் - பசித்தலினின்றும்

     வெட்கத்தை விட்டுப் பசி நீங்கினாலும் அது பசி நீங்காததைப் போன்றதாகும்.

4. பேண் இல் ஈகை மாற்றலின் துவ்வாது.
பேண் இல் ஈகை - விருப்பமில்லாத ஈகை
மாற்றலின் - ஈயாமையின்

     விருப்பமில்லாமல் கொடுத்தால் அது கொடைத்தன்மை ஆகாது.

5. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது.
செய்யாமை - செய்யத்தகாத செயல்களை
சிதடியின் - மூடத்தன்மையின்

     செய்ய இயலாதவற்றை நான் செய்வேன் என்பது பேதைமையாகும்.

6. பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது.
பொய் வேளாண்மை - போலியான ஈகை
புலைமையின் - கீழ்மையின்

     பொய்யாகச் செய்யும் உதவி கீழ்மைத் தன்மையாகும்.

7. கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது.
கொண்டு - ஒருவனை நட்பு கொண்டு
கொடுமையின் - கொடுமை செய்தலினும்

     பழைய நண்பனுக்கு உதவி செய்யாமல் இருத்தல் கொடுமையானதாகும்.

8. அறிவு இலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது.
அறிவு இலி - அறிவில்லாதவனை
துணைப்பாடு - துணையாகக் கொள்ளுதல்

     அறிவில்லாதவனோடு துணைக் கொள்ளுதல் தனித்திருத்தலை ஒக்கும்.

9. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது.
இழிவு உடை மூப்பு - இழிவினையுடைய கிழத்தனம்
கதத்தின் - சினத்தின்

     கிழத்தனமும் சினமும் ஒன்று.

10. தான் ஓர் இன்புறல் தனிமையின் துவ்வாது.
தான் - தானொருவனே
தனிமையின் - வறுமையின்

     பிறருக்கு உதவாமல் தானே இன்பம் அடைந்து கொள்வான்; அவன் செல்வந்தனாயினும் வறியவனே.

5. அல்ல பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்.
நீர் அறிந்து - கணவனியல்பை அறிந்து
ஒழுகாதாள் - நடவாதவள்

     கணவன் குறிப்பறிந்து ஒழுகாதவள் உண்மை மனைவியாகாள்.

2. தாரம் மாணாதது வாழ்க்கை அன்று.
தாரம் மாணாதது - மனை மாட்சிமைப் படாத இல்வாழ்க்கை
வாழ்க்கை அன்று - இல்வாழ்க்கை அன்று

     மனை மாட்சிமை இல்லாத இல்லறம் நல்லறமாகாது.

3. ஈரம் அல்லாதது கிளை நட்பு அன்று.
ஈரம் அல்லாதது - அன்பில்லாத தொடர்பு
கிளை - சுற்றமும்

     அன்பில்லாத தொடர்பு உறவுமாகாது நட்புமாகாது.

4. சோரக் கையன் சொல்மலை அல்லன்.
சோராக் கையன் - ஈயாத கையையுடையவன்
சொல்மலை அல்லன் - புகழ்மாலையையுடைவன் அல்லன்

     யாருக்கும் ஈயாதவனுக்குப் புகழில்லை.

5. நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன்.
நேரா - ஒற்றுமைப்படாத
நெஞ்சத்தோன் - உள்ளத்தையுடையவன்

     மன ஒற்றுமை இல்லாதவன் நண்பனில்லை.

6. நேராமல் கற்றது கல்வி அன்று.
நேராமல் - ஆசிரியருக்கு ஒன்றும் உதவாமல்
கற்றது - படித்தது

     கற்பிக்கும் ஆசிரியனுக்கு உதவாமற் கற்கும் கல்வி கல்வியாகாது.

7. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று.
வாழாமல் - தான் வாழ்வதை வேண்டாமல்
வருந்தியது - பிறர் வாழ்வுக்காக வருந்தியது

     தான் வாழாமல் பிறர் வாழ்வதற்காக வருந்தியது வருத்தமன்று.

8. அறத்து ஆற்றின் ஈயாதது ஈகை அன்று.
அறத்து ஆற்றின் - அறவழியில்
ஈயாதது - கொடாதது

     நல்ல வழியில் வராத செல்வத்தைக் கொடுப்பது தர்மமாகாது.

9. திறத்து ஆற்றின் நோலாதது நோன்பு அன்று.
திறத்து ஆற்றின் - தனது தகுதிக்கேற்ற வகையில்
நோலாதது - தவம் புரியாமை

     தனது தகுதிக்கேற்ற தவம்புரியாமை தவமன்று.

10. மறு பிறப்பு அறியாதது மூப்பு அன்று.
மறுபிறப்பு அறியாதது - மறுமையுண்மை உணராதது
மூப்பு அன்று - சிறந்த முதுமையாகாது

     மறுமைக்குரிய அறவொழுக்கங்களை ஒழுகாமலே அடைந்த மூப்புச் சிறப்பாகாது.



 6. இல்லைப் பத்து

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. மக்கட் பேற்றின் பெறும் பேறு இல்லை.
மக்கட் பேற்றின் - மக்கட்பேற்றை விட
பெறும் பேறு - அடையத்தக்க பேறு
     எல்லாச் செல்வங்களைவிட மக்கட் செல்வமே சிறந்த செல்வம்.

2. ஒப்புரவு அறிதலின் தகு வரவு இல்லை.
ஒப்புரவு - செய்யத்தக்க செயல்களை
அறிதலின் - செய்தலை விட
     கடமைகளைச் செய்வதைவிட வேறு செயல்கள் நமக்கில்லை.

3. வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை.
வாய்ப்புடை - மக்கட்பேறு வாய்க்கும்
விழைச்சு - கலவியின்
     மக்கட்பேறு வாய்த்தலான கலவியே சிறந்த கலவியாம்.

4. வாயா விழைச்சின் தீ விழைச்சு இல்லை.
வாயா - மக்கட்பேறு பொருந்தாத
தீ விழைச்சு - தீமையான கலவி
     மக்கட்பேறு இல்லாத கலவி தீய கலவியாம்.

5. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை.
இயைவது - கொடுத்தற்கு இயலுமானதை
கரத்தலின் - கொடாது ஒளித்தலினும்
     கொடுக்கக்கூடியதை மறைத்து வைத்தல் பெரிய கொடுமையாகும்.

6. உரை இலன் ஆதலின் சாக்காடு இல்லை.
சாக்காடு - இறப்பு
     உணர்வில்லாதவன் பிணத்துக்கு ஒப்பாவான்.

7. நசையின் பெரியது ஓர் நல்குரவு இல்லை.
நசையின் - அவாவினும்
நல்குரவு - வறுமை
     ஆசையே ஒருவனுக்கு வறுமையாகும்.

8. இசையின் பெரியது ஓர் எச்சம் இல்லை.
இசையின் - புகழுடைமையின்
எச்சம் - மிச்சப்படுத்தும் பொருள்
     புகழே இவ்வுலகத்தில் சேர்த்து வைக்கும் செல்வமாகும்.

9. இரத்தலினூஉங்கு இளிவரவு இல்லை.
இரத்தலின் ஊங்கு - இரத்தலை விட
இளிவரவு - இகழ்ச்சி
     ஒருவனுக்கு இரத்தலை விட வேறு இகழ்ச்சி இல்லை.

10. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பு இல்லை.
இரப்போர்க்கு - பிச்சையெடுப்பவர்கட்கு
ஈதலின் - ஒன்று கொடுப்பதை விட
     ஈதலினால் வரும் சிறப்பைவிட வேறு சிறப்பில்லை.

7. பொய்ப் பத்து

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. பேர் அறிவினோன் இனிது வாழாமை பொய்.
பேர் அறிவினோன் - பேரறிவுடையவன்
இனிது வாழாமை - இன்பமாய் வாழானென்பது
     அறிவு இல்லாதவன் இனிமையாக வாழ்வது அரிது. (நல்ல அறிவுடையவன் இன்பமாய் வாழ்வான்.)

2. பெருஞ் சீரோன்தன் வெகுளி இன்மை பொய்.
பெரும் சீரோன் - மிக்க செல்வமுள்ளவன்
தன் - தன்னிடத்தில்
     மிக்க செல்வமுள்ளவன் கோபப்படாமல் இருத்தல் அரிது.

3. கள் உண்போன் சோர்வு இன்மை பொய்.
கள் உண்போன் - கள்ளைக் குடிப்பவன்
சோர்வு இன்மை - ஒழுக்கங்களில் வழுவாதிருத்தல்
     கள் உண்போன் சோர்வு இல்லாமல் இருப்பது அரிது. (கள் உண்பவன் ஒழுக்கத்துடன் இருக்க மாட்டான்.)

4. காலம் அறியாதோன் கையுறல் பொய்.
காலம் - முயற்சி செய்தற்குரிய காலத்தை
அறியாதோன் - அறிந்து முயலாதவன்
     காலம் அறியாது செய்யும் செயல் வெற்றி பெறுதல் அரிது. (காலமறிந்து செய்யும் செயல் வெற்றியடையும்.)

5. மேல் வரவு அறியாதோன் தற் காத்தல் பொய்.
மேல்வரவு - எதிர்காலத்தில் வருதலை
தற்காத்தல் - தன்னைத்தான் பாதுகாத்துக் கொள்ளல்
     வருவதை அறியாதவன் தற்காப்புடன் வாழ்வது அரிது. (எதிர்காலத்தில் வருவதை அறிபவன் தற்காப்பு உடையவன் ஆவான்.)

6. உறு வினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்.
உறுவினை - தக்க செயலை
உயர்வு - மேன்மை
     சிறந்த செயல்களைச் செய்யாமல் சோம்பலுடன் இருப்பவனுக்குச் சிறப்பில்லை.

7. சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய்.
சிறுமை - சிறியனாயிருக்கும்
நோனாதோன் - பொறாதவன்
     அடக்கமில்லாமல் இருப்பவர் பெருமையுடன் வாழ்வது அரிது. (பெருமை வேண்டுபவன் அடக்கத்துடன் இருக்க வேண்டும்.)

8. பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய்.
நோனாதான் - பொறாதவன்
சிறுமை வேண்டல் - கீழ்மையை விரும்புதல்
     பெருமைச் செருக்கில்லாதவன் இழிந்த இயல்புகளை அடைய மாட்டான்.

9. பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய்.
முறை செயல் - அறநெறிப்படி முறை செயல்
பொய் - இல்லை
     பொருட்பற்றுடையவன் நடுவு நிலைமையில் இருக்க இயலாது.

10. வாலியன் அல்லாதோன் தவம் செய்தல் பொய்.
வாலியன் அல்லாதோன் - உள்ளத்தின் கண் தூயனல்லாதவன்
     உள்ளத்தில் தூய்மை இல்லாதவன் தவஞ்செய்தல் இயலாது.

8. எளிய பத்து

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. புகழ் வெய்யோர்க்குப் புத்தேள் நாடு எளிது.
புகழ் வெய்யோர்க்கு - புகழப்படும் அறச்செயல்களைச் செய்ய விரும்பினோர்க்கு
புத்தேள் நாடு - தேவர்கள் வாழும் விண்ணாடு
     புகழ்மிக்க அறச்செயல்களைச் செய்தவர்கள் சொர்க்கத்திற்குப் போவார்கள்.

2. உறழ் வெய்யோர்க்கு உறு செரு எளிது.
உறழ் - கலகத்தை
உறு செரு - மிக்க போர்
     கலகத்தின் மேல் விருப்ப உடையவர்களுக்கு சண்டை உண்டாதல் எளிது.

3. ஈரம் வெய்யோர்க்கு நசை கொடை எளிது.
ஈரம் - அன்பை
நசை - பிறர் விரும்பிய பொருளை
     இரக்கம் உடையவன் கேட்டவுடன் பொருள் தருவான்.

4. குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது.
குறளை - கோட் சொற்களை
மறை விரி - மறையை வெளிப்படுத்தல்
     கோட் சொல்பவர்கள் அதர்மத்தை வெளிப்படுத்துவார்கள்.

5. துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது.
துன்பம் - முயற்சியால் வருந்துன்பங்களை
வெய்யோர்க்கு - விரும்புவோர்க்கு
     செயலில் உள்ள துன்பத்தைத் தாங்குபவர்களுக்கு இன்பம் உண்டாகும்.

6. இன்பம் வெய்யோர்க்குத் துன்பம் எளிது.
இன்பம் - முயற்சியின் பயனாகப் பெறும் இன்பத்தை
துன்பம் எளிது - துன்பங்களே எளிதில் மிகும்
     இன்பத்தை விரும்பி முயல்பவர்கள் துன்பத்தைச் சந்திக்க நேரிடும்.

7. உண்டி வெய்யோர்க்கு உறு பிணி எளிது.

உண்டி - மிக்க உணவை
உறு பிணி - மிகுந்த நோய்

     உணவினை மிகுதியாக விரும்புபவர்களுக்கு நோய் உண்டாகும்.

8. பெண்டிர் வெய்யோர்க்குப் படு பழி எளிது.
பெண்டிர் - பெண்மக்களை
படு பழி - உண்டாகும் பழி
     பெண்களை விரும்புவர்களுக்குப் பழி அதிகமாக வரும்.

9. பாரம் வெய்யோர்க்குப் பாத்தூண் எளிது.
பாரம் - பிறர் சுமையை
பாத்தூண் - தமக்கு உள்ளதைப் பகுத்து கொடுத்து உண்ணல்
     பிறர் கவலையைத் தாங்குபவர்களுக்குப் பகுத்துண்டல் எளிது.

10. சார்பு இலோர்க்கு உறு கொலை எளிது.
சார்பு இலோர்க்கு - நல்லினத்தார் சேர்க்கை இல்லாதவர்க்கு
உறு கொலை - உள்ள கொலைத் தொழில்
     கெட்டவர்களோடு சேர்ந்தவர்கள் கொலையும் செய்வர்.

9. நல்கூர்ந்த பத்து

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. முறை இல் அரசன் நாடு நல்கூர்ந்தன்று.
முறையில் - முறைமையில்லாத
நல்கூர்ந்தன்று - வறுமையுறும்
     முறை செய்யாத அரசனுடைய நாடு எந்நாளும் வறுமையுடையதாகும்.

2. மிக மூத்தோன் காமம் நல்கூர்ந்தன்று.
மிக மூத்தோன் - இளமை கடந்து மிகவும் மூத்து உடல் தளர்ந்தவன்
காமம் - காம நுகர்ச்சிக்கு
     இளமை கடந்தவனின் காமத்தை நுகர்வது துன்பத்தைத் தரும்.

3. செற்று உடன் உறைவோனைச் சேர்தல் நல்கூர்ந்தன்று.
செற்று - உட்பகை கொண்டு
சேர்தல் - நண்பராய்க் கொண்டொழுகுதல்
     உள்ளத்தில் பகை கொண்டவனைச் சேர்ந்து வாழ்தல் துன்பத்தைத் தரும்.

4. பிணி கிடந்தோன் பெற்ற இன்பம் நல்கூர்ந்தன்று.
பிணி கிடந்தோன் - நோயடைந்து உடம்பு மெலிந்தவன்
பெற்ற இன்பம் - அடைந்த உலக இன்பங்கள்
     நோயுடையவன் பெற்ற இன்பம் துன்பத்தைத் தரும்.

5. தற் போற்றாவழிப் புலவி நல்கூர்ந்தன்று.
தற் போற்றாவழி - தன் மேல் அன்புடையராய்த் தன்னைப் போற்றாதாரிடத்து
புலவி - பிணங்குதல்
     அன்பில்லாதவரிடம் பழகுதல் துன்பத்தைத் தரும்.

6. முதிர்வு உடையோன் மேனி அணி நல்கூர்ந்தன்று.
முதிர்வு உடையோன் - முதுமைப் பருவம் அடைந்தவனது
மேனி அணி - உடம்பிலணியும் அணிவகைகள்
     முதுமையுடையவன் அணியும் அணிகலன் துன்பத்தைத் தரும்.

7. சொல் செல்லாவழிச் சொலவு நல்கூர்ந்தன்று.
சொல் - தன் சொல்
செல்லாவழி - மதிக்கப்படாவிடத்து
     சொல்லை மதிக்காதவரிடத்து சொல்லுதல் துன்பத்தைத் தரும்.

8. அகம் வறியோன் நண்ணல் நல்கூர்ந்தன்று.
அகம் வறியோன் - உள்ளத்தில் நன்மையில்லாதவனை
நண்ணல் - சேர்தல்
     நல்ல எண்ணம் இல்லாதவரிடத்துச் சேர்தல் துன்பத்தைத் தரும்.

9. உட்கு இல்வழிச் சினம் நல்கூர்ந்தன்று.
உட்கு - மதிப்பு
இல்வழி - இல்லாவிடத்து
     மதிக்காதவரிடத்து சினம் கொள்ளுதல் துன்பத்தைத் தரும்.

10. நட்பு இல்வழிச் சேறல் நல்கூர்ந்தன்று.
நட்பு - நட்பியல்பு
இல்வழி - இல்லாவிடத்து
சேறல் - ஒரு உதவியை நாடிப்போதல்
     நட்பு இல்லாதவரிடத்து உதவிக்குச் செல்லுதல் துன்பத்தைத் தரும்.

10. தண்டாப் பத்து

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. ஓங்கல் வேண்டுவோன் உயர் மொழி தண்டான்.
ஓங்கல் - தான் உயர்வடைதலை
வேண்டுவோன் - விரும்புவோன்
     உயர விரும்புபவன் பிறரை உயர்த்திப் பேச வேண்டும்.

2. வீங்கல் வேண்டுவோன் பல புகழ் தண்டான்.
வீங்கல் - செல்வம் பெருகுதலை
பல புகழ் - செயல்களை
     செல்வத்தை விரும்புபவன் புகழுக்குரிய செயல்களைச் செய்ய வேண்டும்.

3. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்.
கற்றல் வேண்டுவோன் - அறிவு நூல்கள் கற்றலை விரும்புகின்றவன்
தண்டான் - தவிரான்
     கல்வி வேண்டுபவன் ஆசிரியரை வழிபட வேண்டும்.

4. நிற்றல் வேண்டுவோன் தவம் செயல் தண்டான்.
நிற்றல் வேண்டுவோன் - ஒரு நிலையில் நிலைத்தலை விரும்புகின்றவன்
தவம் செயல் - நோன்பு செய்தலை
     முக்தி வேண்டுபவன் தவம் செய்ய வேண்டும்.

5. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்.
வாழ்க்கை - செல்வாக்குடன் வாழ்தலை
சூழ்ச்சி - மேற்கொண்ட செயலை நன்காராய்தல்
     செல்வாக்கு வேண்டுபவன் தன் செயலை ஆராய வேண்டும்.

6. மிகுதி வேண்டுவோன் தகுதி தண்டான்.
மிகுதி வேண்டுவோன் - செல்வ மிகுதியை விரும்புவோன்
     செல்வம் வேண்டுபவன் இடைவிடாது முயற்சி செய்ய வேண்டும்.

7. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்.
இன்பம் வேண்டுவோன் - இன்ப நிலையை விரும்பி நிற்பவன்
துன்பம் - அதற்குரிய முயற்சிகளிடையே நேருந் துன்பங்களை
     இன்பம் வேண்டுபவன் முயற்சியில் உள்ள துன்பங்களைப் பொருட்படுத்தக் கூடாது.

8. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்.
துன்பம் வேண்டுவோன் - பின்பு துன்பத்தை ஏற்றுக் கொள்பவன்
இன்பம் தண்டான் - முன்பு இன்பப்பட்டிருத்தலைத் தவிரான்
     சிற்றின்பத்தில் மூழ்குபவன் துன்பமடைவான்.

9. ஏமம் வேண்டுவோன் முறை செயல் தண்டான்.
ஏமம் வேண்டுவோன் - குடிமக்களின் இன்பத்தை விரும்பும் அரசன்
முறை செயல் - முறையோடு அரசாட்சி செய்தல்
     குடிமக்களின் இன்பத்தை விரும்பும் அரசன் முறையோடு அரசாட்சி செய்ய வேண்டும்.

10. காமம் வேண்டுவோன் குறிப்புச் செயல் தண்டான்.
காமம் வேண்டுவோன் - காம இன்பத்தை விரும்புகின்றவன்
குறிப்புச் செயல் - குறிப்பறிதல்
     காமத்தை விரும்புபவன் குறிப்பறிதலில் வல்லவனாயிருத்தல் வேண்டும்.