சிவவாக்கியம் பாடல்கள் விளக்கத்த்துடன்

காப்பு

அறியதோர் நமசிவாய மாதியந்த மானதும்
ஆறிரண்டு நூறுதேவ ரன்றுரைத்த மந்திரம்
சுரியதோ ரெழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோ(ஷ)டதோ(ஷ்)ட பாவமாய்கை தூரதூர வோடவே. 1

மிகவும் அரியதான நவசிவய என்ற அஞ்செழுத்தே ஆதியும் அந்தமும் ஆகி உள்ளது. எண்சான் உடம்பைப் பெற்ற அறிய பிறவியை அடைந்த மனிதர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அன்றும் இன்றும் ஓதி வருவதும் அனைவருக்கும் எடுத்துரைத்த மந்திரம் ‘ஓம் நமசிவய’ என்பதே. அதுவே அனைத்தும் அடங்கிய ஒரெழுத்தானதையும் என் உயிரில் வாலையாக விளங்குவதையும் உணர்ந்து அந்த ஓரெழுத்தை தியானித்து அதன் உள்ளிருக்கும் சிவனை அறிந்து இதனை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றே ஈசனை தியானித்து இந்த சிவ வாக்கியம் என்ற நூலைச் சொல்லுகின்றேன். இதனைப் படித்து உணர்பவர்களுக்கு எல்லா தோஷங்களும், பற்றிய பாவ வினைகளும், தொடரும் மாயைகள் யாவும் விலகி தானே வெகு தூரம் ஓடிவிடும்.

கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள்நூல்கள் ஞானமுங் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி யோதிடும் பிழை பொறுக்க வேண்டுமே. 2

“கரியதோர் முகத்தையுற்ற கற்பகம்” இது உபதேசத்தினால் உணர்ந்து கொள்ள வேண்டிய மெய்ப்பொருள். இந்த ஒரு பொருளை உலகோர் உணர்வதற்கே இந்த சிவவாக்கியம் முழுவதும் சொல்லி இருக்கின்றார் சிவவாக்கியர். கரிய நிறமுடைய தும்பிக்கையை முகத்தில் உடையவரும் கேட்ட வரங்கள யாவையும் கற்பகத்தருவை போல் வழங்கும் கருணை உடையவரான கணபதியை கைகள் தொழுது வேண்டுகின்றேன். ஆய கலைகள் அறுபத்தி நான்கும், வேத ஆகம புராண சாஸ்திர நூல்களில் உள்ள உண்மைகளும், முக்கண் ஞான அறிவும் என் கருத்தில் தோன்றி இந்நூலில் உதிக்க வேண்டும். அறிஞர் பெருமக்களும், வயதில் சிறியவராயினும் ஞானம் பெற்றவர்களும், யோக ஞானம் அனைத்தையும் கற்று உணர்ந்தவர்களும் மற்றும் யாவரும் பேயனாகிய யான் சொல்லுகின்ற சிவ வாக்கியத்தில் உள்ள தவறுகளை பொறுத்து அருள வேண்டும்.

ஆனவஞ் செழுத்துளே யண்டமும் மகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே யாதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே யகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே யடங்கலாவ லுற்றே. 3

நமசிவய என்ற அஞ்செழுத்துக்குள்ளே அண்டமாகிய இவ்வுலகமும் அகண்டமாகிய ஆகாய வெளியும் அமைந்துள்ளது. ஆதி பராசக்தியினால் ஆன அஞ்செழுத்தே ஆதியாகி, அதிலேயே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் அமர்ந்திருக்கின்றனர். அந்த அஞ்செழுத்தின் உள்ளேயே அகாரமாகவும் மகாரமாகவும், அறிவும் மனமும், ஒளியும் இருளும், இறையும் மாயையுமாய் அமைந்துள்ளது. ஆதலின் இந்த அஞ்செழுத்தை அறிந்துணர்ந்து ஓதுங்கள். இந்த அஞ்செழுத்துக்குள் தான் அனைத்து தத்துவங்களும் அடங்கி அது நமக்குள்ளேயே பஞ்சாட்சரமாகி உற்ற பொருளாய் உட்கலந்து இருக்கின்றது.

ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே. 4

அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை, மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ? தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே.

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருட்டரித்த நாதர்பாத மம்மைபாதம் உண்மையே. 5

நம் உடம்பில் கழுமுனை நாடியில் மூலாதாரத்தில் தனஞ்செயன் எனும் பத்தாவது வாய்வு ஒடுங்கி பாம்பைப் போல் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கின்றது. இதையே யோகிகள் குண்டலினி சக்தி என்பர். தாயின் கர்ப்பத்திலிருந்து முழு உருவமாய் வெளிவரும் பொது தனஞ்செயன் என்ற இக்காற்றின் செயலால் தான் பிண்டம் பிறக்கின்றது. . அதன் பிறகு எச்செயலும் இன்றி மூலாதாரத்திலேயே ஒடுங்கி உள்ளது. உயிர் உடம்பை விட்டு போன பிறகு மூன்று நாட்கள் இருந்து இவ்வுடம்பை அழுகச் செய்தபின் கபாலத்தைப் பிளந்து வெளியேறும். .ஆதலால் இதனை நன்குஅறிந்து வாசியோகம் எனும் யோக தந்திரத்தால் கருத்தோடு இருத்தி அதனை எழுப்பி சுழுமுனையினால் முதுகுத் தண்டின் வழியாக மேலே ஏற்றி கபாலம் எனும் உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்த்து தியானம் செய்து வரவேண்டும். .இதனை முழுமுயற்சியுடன் பயிற்சி செய்து தொடர்ச்சியாக தியானத்தில் இருந்து வருபவர்கள் கிழவனாக இருந்தாலும் இளமை பெற்று மெய்பரவசத்தால் குழந்தையைப் போல் மாறுவர். அவர்கள் உடல் பொன் நிறமாக மாறும். இந்த யோக தந்திரத்தை முறையாக அனுசரித்து செய்து வந்தால் இறையருள் கிடைக்கப் பெற்று இன்புறலாம். . நம் உடம்பிலேயே சிவசக்தி திருவடியான் பாதம் மெய்ப்பொருள் என்பதுவே உண்மை.

வடிவு கண்டுகொண்ட பெண்ணை மற்றொருவர் நத்தினால்
விடுவனோ லவளையின்னம் வெட்டவேணு மென்பனே
நடுவன் வந்தழைத்தபோது நாறுமிந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைகொடுப்பரே. 6

அழகிய பெண்ணைக் கண்டு மணமுடித்துக் கொண்டவன் அப்பெண்ணை வேறு ஒருவன் தொட்டு விட்டால், விடாதே அவனைப் பிடித்துக் கட்டுங்கள் . முதலில் அவனை வெட்டவேண்டும் என்று அரிவாளை எடுப்பான். . அந்த அழகிய பெண்ணை விதிவசத்தால் எமன் வந்து உயிரை எடுத்துப் போய்விட்டால் என்ன செய்வாய். . மிக அழகிய பெண்ணாயிற்றே என்று அந்தப் பிணத்தை அப்படியே வைத்திருக்க முடியுமா? அவ்வுடம்பில் பிணவாடை வீசி நாற்றமடிக்குமல்லவா . ஆகவே அதனை அந்த அழகிய உடம்பை, சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தோட்டியின் கையில் கொடுத்து அவன், அந்த தோட்டி, அவ்வுடலை தொட்டுத் தூக்கி எரிக்கவோ, புதைக்கவோ சொல்லுவார்கள். .அப்போது மட்டும் அந்த தொட்டியின் மீது கோபம் வருவதில்லையே? அது ஏன் என்று யோசியுங்கள். . அந்த அழகின் மீதிருந்த மோகமோ அன்போ எங்கே போயிற்று என சிந்தியுங்கள். . அப்போது புரியும் அழியும் பொருள்களின் மீதுள்ள ஆசை நிலைப்பதில்லை என்று.

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யார் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே. 7

எனக்குள்ளே ஒன்றான மெய்ப்பொருளாக இறைவன் இருக்கின்றான் என்பதை நான் முன்பு அறிந்து கொள்ளவில்லை. அப்பரம்பொருளை பல இடங்களில் தேடியும், நல்ல நூல்களைப் படித்தும், நல்லோரிடம் பழகியும், நல்ல குருநாதர் மூலம் அது என்னிடமே இருப்பதை யான் அறிந்து கொண்டேன். தனக்குள் இருந்த உயிரை அறிந்து அதனுள் இருக்கும் ஈசனை யார் காண வல்லவர்கள். என்னிலே இருந்த அந்த மெய்ப்பொருளை அறிந்து அதையே என் உள்ளத்தில் இருத்தி தியானத்தில் இருந்து, இருந்து அந்த உண்மையை யான் உணர்ந்து கொண்டேன்.

நினைப்பதொன்று கண்டிலே னீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை
அனைத்துமா யகண்டமா யனாதிமுன் னாதியாய்
யெனக்குள்நீ யுனக்குள்நா னிற்குமாற தெங்கனே. 8

நான் தியானத்திலிருந்து நினைப்பது ஒன்றான மெய்ப் பொருளே, அது நீயேயன்றி வேறு ஒன்றையும் நான் கண்டது இல்லை. நான் தியானத்தில் அமர்ந்து நான் என் நினைவை புருவ மத்தியில் நிறுத்தி பார்க்கும்போது அங்கு உன் நினைவைத் தவிர வேறு நினைவு இல்லை. நான் நினைப்பதாகவும், மறப்பதாகவும், நின்ற மனம் ஒரு மாயையோ, இவ்வுலகில் உள்ள அனைத்துமாகவும் எல்லாம் அடங்கியுள்ள ஆகாயமாகவும் அநாதி காலங்களுக்கும் முன் உள்ள அனாதியாகவும் உள்ளவன் நீயே. எனக்குள் நீ இருப்பதுவும் உனக்குள் நான் இருந்ததையும் உணர்ந்த பிறகு எல்லாம் உன்செயல் என்று அறிந்த பிறகு உன்னை நினைப்பது எவ்விதம் என் ஈசனே, உன்னை மறந்தால் தானே நினைக்க முடியும். உன்னை மறவேன் நானே!

மண்ணும்நீ விண்ணும்நீ மறுகடல்க ளேழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ யியைந்த பண்ணெழுத்தும்நீ
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுளாடும் பாவைநீ
நண்ணுநீர் மைநின்ற பாதம் நண்ணுமா றருளிடாய். 9

பூமியாகவும், ஆகாயமாகவும், ஏழு கடல் நீராகவும், காற்று நெருப்பு என பஞ்ச பூதங்களாக இருப்பவனும் நீயே. எட்டிரண்டு என்ற எண்ணாகவும், அகார உகார எழுத்தாகவும் ஆகி இசையுடன் கூடிய தேவாரப் பண்ணாகவும், ஏழு ஸ்வரங்களான சரிகமபதநி என்ற ராக எழுத்தாகவும் உள்ளவன் நீயே. கண்ணாகவும், கண்மணி யாகவும், கண்ணுள் ஆடும் பாப்பாவாகவும் ஆனவனும் நீயே. இப்படி அனைத்துமாய் உள்ள உண்மையான பிரம்மா ஞானத்தை எனக்கு வழங்கி என்னுள் நீராகி நின்ற நினது திருவடி பாதத்தை என்றும் என் தியானத்தில் வைக்க அருள்செய் ஈசா!

அரியுமல்ல வயனுமல்ல வலப்புறத்தி லப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்து நின்றகாரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமுங் கடந்துநின்ற தூரதூர தூரமே. 10

மெய்ப் பொருள் விஷ்ணுவுமல்ல, பிரம்மாவும் அல்ல. விஷ்ணுவாலும், பிரம்மாவாலும் அடி முடி காண முடியாமல் அப்பாலுக்கப்பாலாய் நின்றவன் ஈசன். அவன் அதுவாகி அப்புறத்தில் அப்புறமாய் கருமை செம்மை வெண்மை நிறங்களைக் கடந்து நின்ற சோதியாகி காரணப் பொருளாய் நமக்குள்ளேயே இருக்கிறான். அச்சிவனே சீவனாக கருமையிலும் சிகப்பு வெள்ளை அணுக்களிலும் கலந்து நின்று உயிரும் உடலும் இயங்க காரணமாக இருக்கின்றான். அவனுடைய திருவடி நமக்குள் இருப்பதைஉணருங்கள். அது பெரியதும் இல்லை, சிறியதும் இல்லை, யாவிலும் நடுவாய் இருப்பது. அப்பாதத்தையே பற்றி நின்று தியானியுங்கள். அது துரியமாகிய ஆஞ்ஞா கமலத்தில் ஆகாயத் தத்துவத்தையும் கடந்து நிற்பதால் வெகு தூரமாய் தோன்றுகின்றது. இதனை தனக்குள்ளேயே அறிவை அறிந்து உண்மையை என்று உணர்ந்து தியானியுங்கள்.

அந்திகால முச்சிமூன்று மாடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களுந் தபங்களுஞ் செபங்களும்
சிந்தைமேவு ஞானமுந் தினஞ்செபிக்கு மந்திரம்
சிந்தைராம ராமராம ராமவெனும் நாமமே. 11

அதிகாலை, மதியம், மாலை என்று மூன்று நேரங்களிலும் நீராடி குளித்து விட்டு இயம நியமங்களுடன் இருந்து சந்தியா வந்தனம் தர்ப்பணங்கள் போன்றவைகளை செய்வதும், பெறற்கரிய தவங்கள் புரிந்து காயத்ரி செபம் செய்வதும், இதனால் வரும் பலன்களால் சிந்தையில் எப்போதும் ஞானம் ஒன்றையே வைத்து தியானம் செய்வதினால் வரும் பலன்களும் எந்தையாகிய ஸ்ரீ இராமனின் ராம மந்திர செபத்தை செய்வதனாலே கிடைக்கும். ஆதலால் என் குருநாதரின் இராம நாமத்தை தினமும் செபித்து தியானித்திருங்கள்.

சதாவுபஞ்ச பாதகங்க ளைத்துரந்த மந்திரம்
இதாமிதாம நல்லவென்று வைத்துழலு மோழைகாள்
சதாவிடாம லோதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாமிதாம ராம ராமராம ராமவென்னும் நாமமே. 12

செய்த பாவங்கள் யாவும் அகலவும், பஞ்சமா பாதகங்களை செய்யா வண்ணம் காப்பதற்கும் ஒதுவதற்குரிய அறிய மந்திரம் இதுவாக இருக்குமோ அல்லது அதுவாக இருக்குமோ என்று பற்பல மந்திரங்களை ஓதி உச்சரித்து வையகத்தில் வாழ்ந்து உழன்று வரும் ஏழை பக்தர்களே! இதோ சர்வ நேரந்த்திலும் சர்வ காலங்களிலும் உச்சரித்து ஒதுவ்த்ர்குரிய அறிய நல்ல மந்திரம் இதுதான் என்பதனை உணர்ந்து எப்போதும் இராம ராம ராம என்னும் நாமத்தை என்றும் மறவாது ஓதி உயர்வடையுங்கள்.

நானதேது நீயதேது நடுவினின்ற தேதடா
கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது வழிவதேது வப்புறத்தி லப்புறம்
ஈனதேது ராமராம ராமவென்ற நாமமே. 13

நான் என்று ஆனது எது? நீ என்பது எது? ஞாமாகி நமக்குள் நடுவாக நின்றது என்ன? கோனாகி இவ்வுடலை ஆட்சி செய்வது எது? குருவாக அமைந்திருப்பது எது? அது என்பதை எதுவென்று கூறிடுங்கள் எமக்குள மக்களே! ஆதியாக ஆனது எது? அது நம் உடம்பில் அழியாத பொருளாய் நின்றது எது? அது நம் உடம்பிலேயே அப்புரத்துக்கும் அப்புறமாய் வெளியாக நின்று உடல் அழிந்த பிறகும் கூட வருவது எது என்பதை நன்கு சிந்தித்து அறிந்து கூறுங்கள். இவை யாவும் ஒன்றே என அறிவை அறியவைத்து நம் பிறவியை ஈடேற்ற சரியானது இராம நாமமே என்பதை உணர்ந்து இராம மந்திரத்தை ஓதுங்கள்.

சாத்திரங்கள் ஓதுகின்ற ச(த்த)ட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ
மாத்திரைப்போ தும்முளே மறித்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்தி முத்தி சித்தியே. 14

சாஸ்திரங்கள் வேத பாராயணங்கள் போன்றவைகளை தினமும் ஓதுகின்ற சட்டநாதப்பட்டரே! உங்களுக்கு நோய்வேர்த் வந்து மாரடைப்பு ஏற்பட்டு வேர்த்து இறைத்து உயிர் ஊசலாடும் போது நீங்கள் சொல்லி வந்த வேதம் அந்நேரம் வந்து உதவுமோ? உதவாது. ஆதலால் ஒரு நொடி நேரமாவது உங்களுக்குள்ளே உள்ள மைப்போருளை அறிந்து வாசியோகம் செய்து அதையே தொக்கியிருந்து தியானம் செய்து வந்தீர்களானால் சோற்றுப் பையான இவ்வுடம்பிற்கு நோய் என்பது வராது. மரண காலத்திலும் ஈசன் கருணையினால் சக்தியும், முத்தியும், சித்தியும் கிடைக்க மெய்பொருளை அறிந்து தியானியுங்கள். தினம் தினம் தாங்கள் சொல்லி வந்த வேத சாத்திரங்களுக்கும் அதனால் சக்தி கிட்டி முக்திபெற்று சித்தி அடைவீர்கள்.

தூரதூரந் தூரமென்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணு மெங்குமாய் பரந்தவிப் பராபரம்
ஊருகாடுநாடுதேடி யுழன்றுதேடு மூமைகாள்
நேரதாக வும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே. 15

இறைவன் வெகு தூரத்தில் இருக்கின்றான் என்றும் அவனை ஆன்மீக நாட்டம் கொண்டு அடையும் வழி வெகுதூரம் என்றும் சொல்லுபவர்கள் சோம்பேறிகள். அவன் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து மண்ணாகவும், வின்னாகவும் எங்கும் பறந்து இருக்கின்றான். அவனை பல ஊர்களிலும், பல தேசங்களிலும் பற்பல காடுகளிலும் மலைகளிலும் உழன்று அலைந்து தேடும் ஊமைகளே! அவ்வீசன் உனக்குள் உள்ளதை உணர்ந்து முதுதண்டு வளையாமல் நேராக பத்மாசனத்தில் அமர்ந்து தியானித்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.

நாலுவேத மோதுவீர் ஞானபாத மறிகிலீர்
பாலுநெய்க லந்தவாறு பாவிகா ளறிகிலீர்
ஆலமுண்ட கண்டனா ரகத்துளே யிருக்கவே
காலனென்று சொல்லுவீர் கனாவிலும்ம தில்லையே. 16

ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் நன்றாக மனப்பாடம் செய்து ஒதுவீர்கள். ஆனால் அந்த நான்கு வேதங்களும் சொல்லும் ஞான பாதம் எது என்பதை அறிவீர்களா? அமுதம் வேண்டி திருப்பார் கடலை கடையும்போது, ஆதிசேசன் கக்கிய ஆலகால விஷத்தை உண்டு அவனியைக் காத்த நீலகண்டன் நம் உள்ளத்தில் இருப்பதையும் ஞானபாதம் எனும் மெய்ப்பொருளை அறிந்தவர்க்கும் காலன் என்ற எம் பயம் கிடையாது. அதை அறிந்து அதையே எண்ணி தியானிப்பவர்களுக்கு கனவில் கூட எம பயமோ எம வேதனையோ இருக்கவே இருக்காது.

வித்திலாத சம்பிரதாய மேலுமில்லை கீழுமில்லை
தச்சிலாத மாளிகை சமைந்தவாற தெங்ஙனே
பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்திலாத போதுசீவ நில்லையில்லை யில்லையே. 17

பரம்பொருளே அனைத்துக்கு வித்தாக இருக்கின்றது. அதனாலேயே எல்லா சம்பிரதாயங்களும் மேலுலகிலும், பூலோகத்திலும் அமைந்துள்ளது. அவனின்றி ஓரணுவும் அசையாது. தச்சன் இல்லாது மாளிகை அமையுமா? அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் எழும்புமா? நம் உடம்பில் உயிராகி வித்தாகி இருப்பவன் ஈசன், மானிடப் பிறவிகள் சிவனை வித்தாகக் கொண்டே நடமாடும் கோயிலாக உடம்பு அமைந்துள்ளது. பெற்ற தாயை மறந்து(விற்று)விட்டு மற்ற பெண்களை அடிமை கொள்ளும் பேதை மக்களே!! பெற்ற ஞானத்தை விற்று சிவன் உறையும் சீவர்களை அடிமைகளாக மாற்றுகின்ற பேத ஞானிகளே!!! சிவன் இல்லது போனால் அந்த சீவனும் இல்லையே!!! இந்த உடம்பும் இல்லையென ஆகிவிடும் என்பதனை உணர்ந்து அச்சிவனையே நினைத்து தியானம் செய்யுங்கள்.

அஞ்சுமூணு மெட்டதா யநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நூறுருச் செபிப்பீரேல்
பஞ்சமான பாதகங்க ணூறுகோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே. 18

‘நம சிவய என்ற அஞ்செழுத்தும்’ எ, உ, ம் என்ற மூன்றெழுத்தும் சேர்ந்த ‘ஓம் நமசிவய’ என்ற எட்டெழுத்து மந்திரமே அனாதியாக விளங்கும் ஈசனின் மந்திரம், இதுவே அநாதியான மந்திரம். இதனை நன்கு அறிந்து கொண்டு நம் உள்ளமாகிய கோவிலிலே இறுத்தி நினைந்து நீங்கள் கண்ணீர் விட்டு அழுது உருக் கொடுத்து செபித்து தியானியுங்கள். எந்த ஜென்மத்தில் செய்த பஞ்சமா பாதகங்களும், பாவங்களும் அனைத்தும் இம்மந்திர செபத்தால் காற்றில் பஞ்சு பறப்பது போல் நம்மை விட்டு பறந்துவிடும். எவ்வித பழிபாவங் களையும் செய்யா வண்ணம் நம்மை நன்னெறியில் நடக்கச் செய்யும் என்று நான்கு மறைகளும் சொல்லுகின்றது. .”ஓம் நமசிவய”.

அண்டவாச லாயிரம்ப்ர சண்டவா சலாயிரம்
ஆறிரண்டு நூறுகோடி யானவாச லாயிரம்
இந்தவாச லேழைவாச லேகபோக மானவாசல்
எம்பிரா னிருக்கும்வாச லியாவர்காண வல்லரே. 19

இவ்வுலகத்திற்கும் பிற உலகங்களுக்கும் ஆயிரமாயிரம் வழிகள் வாசல்களாக அமைந்திருக்கின்றது. எண் சாண் உடம்பு எண்ணாயிரம் கோடி உயிர்களிலும் கோடிக்கணக்கான வாசல்கள் கொண்டு இப்பூமியில் இலங்கி வருகின்றது. இதிலே இறைவன் பத்தாவது வாசலிலிருந்து உலாவுகின்றான். இந்த வாசல் ஏழை வாசலாகவும், ஏகமாகி நின்று இறை இன்பம் கிட்டும் வாசலாகவும் எளிமையாக எல்லோரிடமும் மறைவாக இருக்கின்றது. இந்த பத்தாவது வாசலை அறிந்து யோகா ஞானத்தால் அவ்வாசலின் பூட்டைத் திறந்து எம்பிரானாகிய ஈசன் இருக்கும் வாசலை யாவர் காணவல்லவர்கள்.

சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும்
சேமமாக வோதிலுஞ் சிவனேநீ ரறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே யுணர்ந்தபின்
ஊனமற்ற காயமா யிருப்பனெங்க ளீசனே. 20

காலம் தவறாது நான்கு வேதங்களையும், சகல சாஸ்திரங்களையும் வெகு நேர்த்தியாகவும், ஒழுங்காகவும், மிக அழகாகவும், நன்றாக ஓதி வந்தாலும் சிவன் தங்களுக்குள் நீராக உள்ளதை அறியார்கள். தன உடம்பில் உயிர் இருப்பதையும், அதற்குள் சிவன் இருப்பதையும் அறிந்துணரமாட்டார்கள். தனக்குள் உட்பகையாக இருக்கும் காமம் என்ற நோயை அகற்றிவிட்டு அதே காமம் தோன்றும் இடத்தில் கருத்துடன் எண்ணத்தை வைத்து ஈசனை உணர்ந்து தியானித்தால் நம்மில் ஊமை எழுத்தாகி சூட்சும உடம்பில் இருப்பான் எண்கள் ஈசன் என்பதை அறிந்து நீங்களும் உணர்ந்து தியானியுங்கள்.

சங்கிரண்டு தாரையொன்று சன்னபின்ன லாகையால்
மங்கிமாளு தேயுலகில் மானிடங்க ளெத்தனை
சங்கிரண்டை யுந்தவிர்ந்து தாரையூத வல்லிரேல்
கொங்கைகொங்கை பங்கரோடு கூடிவாழ லாகுமே. 21

நமது மூக்கு ஒன்று, வாசல்கள் இரண்டு. அவைகளில் நம் காற்றானது இடகலை, பிங்கலை, சுழுமுனை எனும் நாடிகளில் சன்னல் பின்னலாக ஓடி நடந்துக் கொண்டிருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு சுவாசத்திலும் பிராணனில் இருந்து நாலு அங்குலம் நஷ்டமடைகிறது. அதனால் பிணி மூப்பு ஏற்பட்டு ஆயுளும் மங்கி, மாண்டு போகும் மனிதர்கள் கோடானு கோடி. இப்படியாக ஓடிக் கொண்டிருக்கும் மூச்சை சந்திரகலை, சூரியக்கலை, வழியாக கட்டுப்படுத்தி பிரனாயமத்தினால் பிராண வாயுவைப் பெருக்கி ரேசகம், பூரகம், கும்பகம், செய்து உடம்பையும், உயிரையும் வளர்க்கவேண்டும். இதனை நன்கு அப்பியாசித்து இடபிங்களைகளை ஒழுங்குபடுத்தி சுழுமுனை எனும் வாசலைத் திறந்தது வாசியினால் தாரை ஊதுவதைப் போல் ஊதி மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை மேலேற்றி அனலுடன் கூட்டி சோதியில் சேர்க்க வல்லவர்கள் ஆனால் அழகில் சிறந்த அம்மையை இடபாகம் கொண்ட ஈசருடன் கூடி வாழலாம்.

தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலு மீசனுஞ் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்றநாமம் நாமமிந்த நாமமே. 22

தங்கம் என்ற ஒரு பொருளில் இருந்தே கம்மல், வளையல், மோதிரம், தாலி, மூக்குத்தி போன்ற நகைகள் பல வகைகளில் உருவாகி வெவ்வேறு தன்மைகளில் விளங்குகின்றது. அதுபோலவே ஒன்றான பிரமத்தில் இருந்தே திருமாலும், ஈசனும் சிறந்த மெய்ப்பொருளில் அமர்ந்திருந்து நமக்குள்ளே இருக்கின்றார்கள். இதனை அறியாமல் விஷ்ணு பெரியது, சிவன் பெரியது என்று வியாக்கியானங்கள் பேசி வாழ்பவர்கள் வாழ்வு விளங்காது. நமக்குள் இருந்த பரம்பொருளே இப்பிரபஞ்சம் முழுவதும் நின்றிப்பதை அறிந்து சிவனும் ஈசனும் ஒன்றாகவே விளங்கும் ஓரெழுத்தை உணர்ந்து தியானியுங்கள்.

அஞ்செழுத்தி லேபிறந்து அஞ்செழுத்தி லேவளர்ந்து
அஞ்செழுத்தை யோதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தி லோரெழுத் தறிந்துகூற வல்லிரேல்
அஞ்சலஞ்ச லென்றுநாத னம்பலத்தி லாடுமே. 23

ஐந்து பூதங்களால் பிறந்து அந்த ஐந்து பூதங்களின் தன்மைகளால் வளர்ந்து அஞ்செழுத்தில் உண்மைகளை உணராது அதனை பஞ்சாட்சரமாக வெறும் வாயால் மட்டும் அஞ்செழுத்து மந்திரமாக ஓதி வரும் பஞ்சபூதங்களால் ஆன பாவிகளே பஞ்சபூதங்களும் நமக்குள்ளே பஞ்சாட்சரமாக இயங்கி வருகிறது என்ற உண்மையை உணர்ந்து, அறிந்து அதனை அஞ்செழுத்தால் அதற்குறிய இடத்தில் வைத்து ஓதி தியானியுங்கள். நமசிவய என்ற அஞ்செழுத்தில் ஒரேழுத்து என்ன என்பதை அறிந்து அதிலேயே நினைவால் நிறுத்தி செபித்து தியானிக்க வல்லவர்களானால் அந்த அஞ்செழுத்தும் ஒரேழுத்தாகி நிற்கும் அம்பலமான கோயிலில் ஈசன் அஞ்சல் அஞ்சல் என்று நடராஜனாக ஆடி நிற்பான்.

அஞ்சுமஞ்சு மஞ்சுமே யனாதியான தஞ்சுமே
பிஞ்சுபிஞ்சு தல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்
நெஞ்சிலஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லிரே
லஞ்சுமில்லை யாறுமில் லனாதியாக தோன்றுமே. 24

அஞ்செழுத்தே ஐந்து பூதங்களாகவும், ஐந்து புலன்கலாகவும் நமது உடம்பில் இருந்து இயங்கி அனாதியான பஞ்சாட்சரமாக இருக்கின்றது. அதுவே சீவனாகி என்றும் அன்னதியாக உள்ள சிவனால் ஜீவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அதுவே பின்ஜெழுத்தான வாலையாக ஒரேழுத்தாகி உள்ளது. இதனை அறியாமல் பித்தர்களைப் போல் வெறும் வாயால் மட்டுமே பிதற்றுவதால் பயன் ஏது? அந்த அஞ்செழுத்தாக ஆகியிருப்பது இன்னது என்பதை அறிந்து கொண்டு நெஞ்சமாகிய கோவிலிலே அஞ்செழுத்து ஓதி உள்ளம் உருகி கண்ணீர் கசிந்து அங்கேயே நினைவை நிறுத்தி அதிலேயே நின்று தியானிக்க வல்லவர்க்கு அஞ்செழுத்தும் இல்லை ஆறாதாரங்களும் இல்லை. அஞ்செழுத்தும், ஆறு ஆதாரங்களில் உள்ள தெய்வ சக்திகளும் ஒன்றான சிவமாகி அனாதியாகத் தோன்றும்.

நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலனோலை வந்தபோது கைகலந்து நின்றிடும்
ஆலமுண்ட கண்டர்பாத மம்மைபாத முண்மையே. 25

தான் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதற்காக நீளமாக பெரிய வீட்டைக் கட்டி வேறு எவரும் உள்ளே நுழையாவண்ணம் பெரிய நிலைக்கதவுடன் அமைத்து வைத்திருக்கும் மனிதர்களே!! எத்தனை கதவுகள் அமைத்து சாத்தி வைத்தாலும் எமனின் ஓலையில் எழுதியபடி உயிர் போகும் தருணத்தில் எதைக் கொண்டும் தடுக்க இயலாமல் நம்மால் எதுவும் ஆகாது என கைவிரித்து நிற்பார்கள். ஆலகால விஷத்தை உண்டு அகிலம் முழுமையும் காத்த நீலகண்டராகிய ஈசன் பாதமும் அம்மை சக்தியின் பாதமும் நம்மிடம் உள்ளதை உணர்ந்து அத்திருவடிகளைப் பற்றி தியானியுங்கள். அத்திருவடி சத்தியமாய் நம்மை கரை சேர்க்கும். இது உண்மையே!

வீடெடுத்து வேள்விசெய்து மெய்யரோடு பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர்சுற்ற மென்றிருக்கு மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர்கையி லோலைவந் தழைத்திடில்
ஓடுபெற்ற தவ்விலை பொறாது காணுமுடலமே. 26

மெய்யாகிய வீட்டை அறியாது பொய்யான வாழ்வை நம்பி, புது வீட்டைக் கட்டி வேள்விகள், செய்து புது மனை புகுவிழா நடத்தி, மாடு மக்கள் மனைவி சொந்தம் பந்தம் என அனைவரோடும் எப்போதும் இப்படியே இருப்போம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே! நல்லது கேட்டது என்பதை நடுவாக இருந்து தீர்ப்பளிக்கும் இறைவனின் இறுதி ஓலை எமன் கையில் கிடைத்து இவ்வுயிரை கொண்டு போனால் மண்ணால் செய்த ஓடு பெரும் விலை கூட பெறாது ஒரு காசுக்கும் உதவாது இவ்வுடம்பு என்பதனைக் கண்டு அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். ஆதலின் இவ்வுடலில் ஈசன் இருக்கும்போதே அவனை உங்களில் கண்டுணர்ந்து தியானியுங்கள்.

ஓடமுள்ள போதெலாம் ஓடியே உலாவலாம்
ஓடமுள்ள போதெலாம் உறுதிபண்ணிக்கொள்ளலாம்
ஓடமும் உடைந்தபோதங்கு ஒப்பில்லாத வெளியிலே
ஆடுமில்லை கோனுமில்லை ஆருமில்லை ஆனதே. 27

ஒடமாகிய இவ்வுடம்பு இருந்தால்தான் அங்கும் இங்கும் ஓடி உலவலாம். இந்த உடம்பில்தான் உயிர் உள்ளது என்பதையும் அதிலேதான் இறைவன் இருக்கின்றான் என்பதையும் அறிந்து பிராணாயாமம், வாசியோகம், தியானம், தவம் போன்றவைகளை அறிந்து புரிந்து இவ்வுடம்பை உறுதியான கல்பதேகமாக மாற்றிக் கொள்ளலாம். இதை உணராது இவ்வுடலை விட்டு உயிர்போய் ஆகாயத்தில் மறைந்து விட்டால் அப்போது இவ்வுடலில் ஆடிக் கொண்டிருந்த உயிரும் இல்லை. அதனை மேய்த்துக் கொண்டிருந்த ஈசனும் இல்லை என்றாகி தம மனைவி மக்களோ, சொந்த பந்தங்களோ, யாரும் இல்லாது போய்விடும். ஆகவே இவ்வுடம்பில் உயிர் இருக்கும் பொழுதே இறைவனை அறிந்து தியானம் செய்யுங்கள். பிறவிப் பெருங்கடலை கடந்து கரை சேரலாம்.

அண்ணலே யனாதியே யனாதிமுன் னனாதியே
பெண்ணுமாணு மொன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலாணின் சுக்கிலங் கருதியோங்கு நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாற தெங்ஙனே. 28

நம் ஆருயிரில் ஆதி, அனாதி அந்தமாக உள்ளவன் சிவனே. அவனே அனாதிக்கும் முன் தோன்றிய அனாதியாக என்றும் நம் ஆன்மாவில் உறைகின்றான். பிறப்பதற்கு முன் எல்லா ஆன்மாக்களும் ஒரேழுத்தாக ஒன்றாகவே இருந்தது. அவைகளுக்கு ஆன, பெண் என்ற பேதம் ஏதும் கிடையாது. அது கண்ணில் நினைவாகத் தோன்றி ஆணிடம் சுக்கிலமாக உற்பத்தியாகி உருவாகின்றது. அப்போதே ஆன்மாவில் ஆண்டவன் நுழைந்து விடுகின்றான். பின்னரே உருவாகி ஆன்மா வளர்கின்றது. இப்படித்தான் மண்ணில் வாழும் மனிதர்களாகவும்,விண்ணில் சேரும் தேவர்களாகவும் அனைவரும் வந்தனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்க ளெத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்க ளெத்தனை
மிண்டராய்த் திரிந்தபோ திரைத்தநீர்க ளெத்தனை
மீளவுஞ் சிவாலயங்கள் சூழவந்த தெத்தனை. 29

தன் வாழ் நாளில் முன்பு வீணாய்ப் பறித்து எறிந்த பன்வகை மலர்கள் எத்தனையோ? மற்றவரை பாழாக்குவதற்கு செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனையோ? இளைஞனாய் திமிரெடுத்து திரிந்தபோது சிற்றின்பத்தில் இரைத்த நீர்கள் எத்தனையோ? இம்மாதிரி செய்ய தகாதவைகளை செய்து இதனால் ஏற்பட்ட பாவங்கள் அகல சுற்றி வந்த சிவாலயங்கள் எத்தனையோ என்பதை உணர்ந்தறியுங்கள்.

அண்டர்கோ னிருப்பிட மறிந்துணர்ந்த ஞானிகள்
பண்டறிந்த பான்மைதன்னை யாரறிய வல்லரோ
விண்டவேத பொருளையன்றி வேறுகூற வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப தில்லையே. 30

அண்டங்கள் யாவினுக்கும் அரசனான ஈசனை, அவன் கோனாக அமர்ந்து தனக்குள் ஆட்சி செய்யும் இடம் இதுவென அறிந்து, உணர்ந்த ஞானிகள் அவனையே அறிவதற்காக பட்ட பாட்டினையும், இழந்த பொருளையும், அலைந்த அனுபவங்களையும், அலைந்து தேடியதையும் யாராவது அறிய முடியுமா? வேதங்கள் வெளிப்படுத்தும் மெய்ப் பொருளை ஈசனாக அறிந்தவர்கள் தனக்குள்ளே இறைவனைக் கண்டு கண்ட அதே தெய்வம் என உணர்ந்தவர்கள் காணுகின்ற கோயில்களில் எல்லாம் தெய்வம் இருப்பதாக எண்ணி கைதொழ மாட்டார்கள்.

நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தநித்த நீரிலே
விருப்பமோடு நீர்குளிக்கும் வேதவாக்கியங் கேளுமின்
நெருப்புநீரு மும்முளே நினைந்துகூர வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே. 31

நாள்தோறும் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு நெருப்பை மூட்டி அதில் நெய்யை வார்த்து வேதங்களை ஓதும் வேதியர்! அந்த வேதங்கள் சொல்கின்ற மெய்பொருளை உணருங்கள். சிகாரமாக அதை “சிவயநம” என்ற பஞ்சாட்சரத்தால் நினைத்து கூறி வந்து தியானிப்பவர்களானால் அம்மெய்ப் பொருள் சுருக்கமே அற்ற சக்தியாக இருப்பதை உணருங்கள். இதனை முறையாக தொடர்ந்து செய்து வந்தால் சோதி நிலைத்து ஈசன் அருள் பெற்று அவனோடு சேர்ந்து வாழலாம்.

பாட்டிலாத பரமனை பரமலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிபங்கர் பாகனை
கூட்டிமெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முநின்றதே. 32

பாட்டுக்கள் யாவும் பரமனையே பாடுகிறது. எல்லா லோகங்களுக்கும் அவனே நாதன். எல்லா நாடும் அவன் நாடே. மௌனமாக விளங்கும் பரம்பொருளே நாதமாகவும், விந்தாகவும் விளங்குகின்றது. நாரணன் தங்கையான சக்திக்கு தன் இடப்பாகம் தந்த சிவனை தம உடம்பிலேயே இருப்பதை அறிந்து கொண்டு வாய் மூடி மௌனமாக இருந்து உச்சரிக்க வேண்டிய மந்திரமே ஓம் நமசிவயஅவனை எண்ணி தியானம் செய்ய வாசி யோகம் தெரிய வேண்டும். அது இரவில் வேட்டைக்கு செல்லும் வேட்டைக்காரர்கள் மற்றவர்களிடம் பேசி தெரிவிக்க குசு குசு வென்று கூப்பிடுவார். இந்த இரகசிய பாஷையை அறிந்துகொண்டு அதன்படி வாசியோகபயிற்சி செய்துவந்தால் இப்பிறவிப் பிணி முடிய அதுவாகிய ஈசன் திருவடி கிட்டும்.

செய்யதெங்கி லேயிளநீர் சேர்ந்தகார ணங்கள்போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே. 33

தென்னை மரத்தின் மேலே காய்க்கும் தேங்காயின் உள்ளே இளநீர் எப்படி சேர்ந்துள்ளதோ, அது போலவே ஈசன் எனது உள்ளத்தில் புகுந்து கோயில் கொண்டு இருக்கின்றான். என் உள்ளம் என்பதையும் அதிலே என் ஐயன் புகுந்து கோயில் கொண்ட இடம் எது என்பதையும் தெரிந்து கொண்டபின் இவ்வுலகத்தில் உள்ள ஆசைவயப்பட்ட மாந்தர்கள் முன்னம் வாய் திறந்து பேசா மௌனியானேன்.

மாறுபட்டு மணிதுலக்கி வண்டினெச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே யூற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரு மறிந்துநோக்கு மென்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள்பாதம் வைத்ததே. 34

செம்பு, பித்தளை, வெண்கலம் போன்றவைகளின் கலப்பினால் மாறுபட்டு செய்த ஓசை மணியை ஒலித்து, வண்டின் எச்சிலாகிய தேனைக் கொண்டு உளியினால் பற்பல வகைகளில் உடைத்து செதுக்கப்பட்ட கற்சிலையின் மீது ஊற்றி அபிஷேகம் செய்து அதன் உட்பொருளை அறியாத மூடர்களே! மெய்ப்பொருளாகிய ஈசன் நம்மிடமே மாறுபட்ட அண்டக்கல்லாக இருப்பதை அறிந்து அதிலேயே அபிஷேகம் செய்து அதனையே நோக்கி தியானிக்கவும், செய்த பாவங்கள் யாவையும் கூறுபட்டு தீர்க்கவும் மெய்குருவின் திருவடிகளை சிந்தையில் வைத்து தவம் செய்யுங்கள்.

கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே. 35

கோயில் என்பது என்ன? குளங்கள் ஆவது எது? என்பதை அறியாமல் புறத்தில் அமைந்துள்ள கோயில்களையும், குளங்களிலும் தீர்த்தமாடி வணங்கிவரும் எம்குலமக்களே! நமது உடம்பினுள் கோயிலாகவும், குலமாகவும் மனமே அமைந்துள்ளது. அம்மனதை நிலைநிறுத்தி தியானித்தால் ஆன்மாவை அறிந்து கொள்ளலாம். அவ்வான்மா என்றும் நித்தியமாக உள்ளது என்பதையும் அது உற்பனம் ஆவதும் இல்லை உடம்பைப் போல் அழிவதும் இல்லை என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

செங்கலுங் கருங்கலுஞ் சிவந்தசாதி லிங்கமும்
செப்பிலே தராவிலுஞ் சிவனிருப்ப னென்கிறீர்
உன்பத மறிந்துநீ ரும்மைநீ ரறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாத ராடல்பாட லாகுமே. 36

செங்கற்களாலும், கருங்கற்களாலும், சிகப்பு நிறம் பொருந்திய சாதி லிங்கத்திலும், செம்பினாலும், தராவினாலும் செய்யப்பட்ட சிலைகளிலும் சிவன் இருக்கிறான் என்கின்றீர்களே! உம்மிடம் சிவன் இருப்பதை அறிவீர்களா? உம்மை நீரே அறிந்து உமக்குள்ளே உயிரை உணர்ந்து அதில் கோயில் கொண்டு விளங்கும் சிவனின் திருவடியைப் பற்றி அதையே நினைந்து ஞான யோகம் செய்து தியானத்தால் திறந்து நான் யார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நமக்குள்ளே திருசிற்றம்பலமாக விளங்கும் ஈசனின் நடனத்தையும் அதனால் அடையும் நாதலயமும் கிடைத்து இன்புறலாம்.

பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசைகொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே. 37

கால நேரம் தவறாமல் பூசை செயம் பக்தர்காள், பூசை என்றால் என்ன என்பதை அறிவீர்களா? “பூ” என்பது நமது ஆன்மா. “சை” என்பது அசையாமல் நிறுத்துவது. இதுவே உண்மையான பூசையாகும். இந்த பூசையை நமக்குள்ளேதான் செய்ய வேண்டும். ஆன்மாவான பூவை அது எந்த இடத்தில் இருக்கிறதோ அன்க்கேயே நினைத்து நினைத்து நிறுத்தி அசையாமல் இருத்துவதே பூசை என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதை யோக தியானத்தால்தான் நமக்குள்ளே செய்ய வேண்டும். இதை விட்டு நீங்கள் செய்கின்ற பூசைகள் யாவும் புறச்சடங்குகளே. ஆதியான சக்தியோ அநாதியான சிவனோ இந்த பூசையை ஏற்றுக் கொண்டார்களா? ஆதலால் அப்பூசை செய்து தியானியுங்கள். அதனை ஆதியாகவும் அனாதியாகவும் நம் உயிரில் உறையும் சிவனும், சக்தியும் ஏற்றுக் கொள்வார்கள்.

இருக்குநாலு வேதமு மெழுத்தையற வோதிலும்
பெறுக்கநீறு பூசிலும் பிதற்றிலும் பிரானிரான்
உருக்கி நெஞ்சை யுட்கலந்து வுண்மைகூற வல்லீரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே. 38

இருக்கும் நான்கு வேதங்களில் உள்ள எழுத்துக்கள் யாவையும் மனப்பாடம் செய்து நன்கு ஒதுவதினாலோ, உடம்பு முழுமையும் நிறைத்து பதினாறு பட்டைகள் போட்டு விபூதி பூசுவதினாலேயோ, ‘சிவசிவ’ என வெறும் வாயால் பிதற்றுவதினாலோ எம்பிரானாகிய சிவன் இருப்பதில்லை. நமக்குள்ளேயே உள்ள சிவனை அறிந்து நெஞ்சுருகி கண்ணில் நீர் மல்கி கசிந்து நினைந்து தியானிக்க வேண்டும். அந்த உண்மையான மெய்ப் பொருளை உணர்ந்து கொண்டு தியானம் தொடர்ந்து செய்தால் சர்க்கம் இல்லாத சோதியான அப்பரம் பொருளோடு கூடி வாழ்வோம்.

கலத்தில் வார்த்து வைத்தநீர் கடுத்ததீமுடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்ததீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின்மாயை நீக்கிலே மனத்துள்ளே கரந்ததே. 39

வெண்கலப்பானையில் பிடித்து வைத்த நீரை அடுப்பில் வைத்து தீயை அதிகமாக எரியவிட்டால், அப்பானையில் உள்ள நீர் முழுவதும் சுண்டிப்போய் ஆவியாகிவிடும். அப்பணியில் முழுவதும் வைத்த நீர் அதிலேயே கரைந்து மறைந்ததா? கடுமையாக எரியவிட்ட தீ குடித்ததா? அல்லது நிலமாகிய மண்ணில் கரைந்ததா? அணைந்ததும் அடங்கிய ஆகாயத்தை அடைந்ததா? என்பதை சிந்தியுங்கள். அந்த நீர் ஆவியாகி ஆகாயத்தை அடைந்ததுவே உண்மை என்பதைப் புரிந்து கொண்டு நம் மனதினுள்ளே உள்ள மாயையான பாவங்களையும், குற்றங்களையும் நீக்கி அதே மனதை இறைவன் பால் செலுத்தி தியானம் செய்து வந்தால் நம் ஆன்மாவை மனமாகிய ஆகாயத்தில் கரைக்கலாம். எப்படி நீரானது பானையில் தீயால் மறைந்ததோ அது போல தியானத்தீயால் ஆகாயம் ஆளலாம்.

பறைச்சி ஆவதேதடா பணத்தி ஆவதேதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ, பணத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துப் பாரும் உம்முளே. 40

பறைச்சி என்பதும் பார்ப்பனத்தி என்பதும் ஏனாடா? அவர்கள் அனைவரும் பெண்கள்தானே. யாவருக்கும் தசை, தோல், எலும்பு யாவும் ஒரே மாதிரிதானே அமைந்துள்ளது. அதில் எதிலாவது இவள் தாழ்ந்த சாதி, அவள் உயர்ந்த சாதி என்று எழுதப்பட்டா இருக்கிறது? பெண்கள் பால் கிடைக்கும் சிற்றின்பம் யாவருக்கும் ஒன்றாகவே அனுபவம் கிடைக்கிறது. இவை யாவையும் நன்கு பகுத்தறிந்து உனக்குள்ளே இருக்கும் இறையை உணர்ந்து தியானம் செய்து பாருங்கள்.

வாயிலே குடித்தநீரை யெச்சிலென்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயினெச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயினெச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே. 41

மற்றவர் வாய் வைத்த நீரை எச்சில் என்று சொல்லி கீழே கொட்டுகின்றீர்களே! உங்கள் வாயால் எச்சிலோடு கலந்து சொல்லும் வார்த்தைகளை மட்டும் வேதம் என்கின்றீர்கள் வாயில் உள்ள எச்சில் போக அவ்வாயினால்தான் நீரைக் குடிக்கின்றீர்கள். வாயில் உள்ள எச்சிலும் நீர்தான். ஆதலால் வாயில் உள்ள எச்சில் எவ்வாறு எவ்வண்ணம் போனது என்பதை எனக்கு வந்திருந்து சொல்லுங்கள்.

ஓதுகின்ற வேதமெச்சி லுள்ளமந் திரங்களெச்சில்
மோதகங்க ளானதெச்சில் பூதலங்க ளேழுமெச்சில்
மாதிருந்த விந்துவெச்சில் மதியுமெச்சி லொலியுமெச்சில்
எதிலெச்சி லிலதில்லை யில்லையில்லை யில்லையே. 42

வாயினால் ஓதுகின்ற வேதம், மந்திரங்களாக உள்ளவை, உண்ணும் உணவு, ஏழு உலகங்கள், பெண்களிடம் விட்ட விந்து, அறிவு, சப்தங்கள் யாவுமே எச்சில்தான், ஆகவே அனைத்திலும் நீராகிய எச்சிலால் ஆனது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீரில்லாமல் ஏதும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பிறப்பதற்கு முன்னெலா மிருக்குமாற தெங்ஙனே
பிறந்துமண் ணிறந்துபோ யிருக்குமாற தெங்ஙனே
குறித்துநீர் சொலாவிடிற் குறிப்பிலாத மாந்தரே
அறுப்பனே செவியிரண்டு மஞ்செழுத்து வாளினால். 43

பிறப்பதற்கு முன்பு நாம் எங்கிருந்தோம், பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்தபின் எங்கே போய் இருப்போம் என்பதை எண்ணிப்பாருங்கள். .இப்பிறவியின்மேன்மையை உணராமல் எந்த இலட்சியமும் இல்லாமல் மறைந்து போகும் மானிடர்களே! உங்கள் பிறவியை அறுக்கவும், மீண்டும் பிறவாமல் இருக்கவும் அஞ்செழுத்து என்றும் பஞ்சாட்சர மந்திரத்தை உங்கள் காதுகளில் ஓதுகின்றேன்.

அம்பலத்தை யம்புகொண் டசங்கென்றா லசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை யிருளும்வந் தணுகுமோ
செம்பொனம் பலத்துளே தெளிந்ததே சிவாயமே. 44

அம்பலமாய் இருக்கின்ற ஆகாயத்தை அம்பைவிட்டு அசை என்றால் அசையுமா? கலங்கம் இல்லாத திருப்பாற்கடலை கலங்க முயன்றால் கலங்குமா? அதுபோல் உலக இன்பங்களைத் துறந்து செவ்வனே யோக, தியானம் பயின்று வந்த யோகிகளிடம் துன்பமாகிய இருள் கிட்டே அணுகுமா? செம்மையான பொன்னம்பலத்தில் சோதியாக விளங்கும் சிவனை அறிந்து தெளிந்து “சிவாய நம” என தியானம் செய்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

சித்தமேது சிந்தையேது சீவனேது சித்தரே
சத்தியேது சம்புவேது சாதிபேத மற்றது
முத்தியேது மூலமேது மூலமந்தி ரங்களேது
வித்திலாத வித்திலே யின்னதென் றியம்புமே. 45

சித்தரென்றும் அவதாரமென்றும் சொல்லித் திரியும் ஞானிகளே! சித்தம் என்று சொல்லுமிடம் ஏது? சிந்தனை எங்கு தோன்றுகிறது? சீவனாகிய உயிர் எங்குள்ளது? சத்தியாகிய வாலை இருப்பிடம் எது? சம்பு எனப்படும் ஈசன் உலாவும் இடம் எது? சாதி பேதம் இல்லாதது எது? முத்தியை அழிப்பது எது? உடம்புயிருக்கு மூலம் எது? மூல மந்திரமான ஒரேழுத்து எது என்பதையெல்லாம் அறிவீர்களா? வித்தே இல்லாமல் வித்தாக என்றும் நித்தியமாய் விளங்கும் உளதாய், இலதாய் உள்ள பொருளை இதுதான் அது என்று விளக்கமாக இயம்புங்கள்.

சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தையித்தை யீன்றவித்தில் விளைந்ததே சிவாயமே. 46

தியான நிலையில் சித்தத்தையும், சிந்தையையும், சீவனையும் அறிந்து அது நின்ற இடத்தில் மனதை நிறுத்த வேண்டும். அங்கு வாலையாகிய சக்தியையும் அறிவாகிய சிவனையும் சாதி பேதம் ஏதும் இன்றி இரண்டும் ஒன்றான மெய்ப்பொருளில் சேர்க்கவேண்டும். அதுவே முக்திக்கு வித்தாகும். இந்த ஓரெழுத்தை மேலே ஏற்றி ஆறு ஆதாரங்களையும் கடந்து, சகஸ்ரதளத்தில் சேர்க்க வாசியென்ற யோக வித்தையை அறிந்து பயிற்சி செய்ய வேண்டும். ஞான வித்தையான பிரமமான ஒரெழுத்தெனும் விதத்தில்தான் அஞ்செழுத்தும் விளைந்து பஞ்சபூதங்களாய் விரிந்து நிற்கிறது.

சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலாம்
பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம்பொ னொன்றலோ
சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே. 47

ஆண், பெண் என்பது தானே சாதி, இதில் பல சாதிகள் ஏதப்பா? இவ்வுலகம் முழுமையும் நீர்தான் நிரம்பியுள்ளது. அதுபோலவே உயிரும் நீராகத்தான் உள்ளது. உடம்பில் பத்தாம் வாசலாகவும், பஞ்சபூதமாகவும், பஞ்சாட்சரமாகவ்வும் உள்ள பொருள் ஒன்றே. அது நகைகளில் காதில் அணியும் தோதாகவும், மூக்கில் அணியும் மூக்குத்தியாகவும், கைகளில் அணியும் வளையல் போன்ற பல வகையாகவும் இருப்பது தங்கம் ஒன்றே. இதை அறியாமல் எல்லா உயிர்களும் இறைவனிடம் இருந்து வந்ததை உணராமல் சாதி, பேதம் பேசுகின்ற உங்களின் தன்மைகளை என்னவென்று கூறுவேன்!

கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை யுயிர்களு முடற்புகா
விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே. 48

பசுவின் மடியில் இருந்து கறந்த பால் மீண்டும் பசுவின்முலைக் காம்புகளில் சேராது, மோரிலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட வெண்ணெய் மீண்டும் மோராகாது. உடைந்து போன சங்கிலிருந்து ஓசை வராது, அதிலிருந்து வெளிவரும் உயிர் மீண்டும் அவ்வுடலாகிய சங்கில் புகாது. விரிந்த பூ மொட்டாகாது. மரத்திலிருந்து உதிர்ந்த காய் மீண்டும் மரத்தில் ஓட்ட முடியாது. அது போல்தான் நம் உடம்பை விட்டு உயிர்போய் விட்டால் மீண்டும் அவ்வுடம்பில் சேர்ந்து பிழைக்க வைக்க முடியவே முடியாது. ஆகவே உடம்பில் உயிர் உலாவிக் கொண்டிருக்கும்போதே யோக தியானம் செய்து இறைவனை அடைந்து பிறவா நிலை அடையுங்கள்.

தரையினிற் கிடந்தபோ தன்றுதூமை யென்கிலீர்
துறையறிந்து நீர்குளித்த தன்றுதூமை யென்கிலீர்
பறையறைந்து நீர்பிறந்த தன்றுதூமை யென்கிலீர்
புறையிலாத வீசரோடு பொருதுமாற தெங்ஙனே. 49

குழந்தை பிறந்து தரையில் வீழ்ந்தவுடன் தீட்டு என்கிறீர். நீர்த்துறை சென்று நீங்கள் குளித்தபோது தூய்மையாகி விட்டோம் என்கிறீர். “நீங்கள் பிறந்தபோது அத்தீட்டு எங்கே சென்றது?”, என நான் பறையை அடித்துக் கேட்கிறேன். இதுபோல் நாட்களில், இந்த நாள் (தீட்டு) ஆகாது. அந்த நாள் ஆகாது. இப்படிக் கூறிக்கொண்டு நாட்களை வீணடிக்கிறீர்களே! நீங்கள் எப்பவும் ஆகாயத்தாமரையில் இருந்து தவம் செய்து எப்படிக் குற்றமே (தீட்டே) இல்லாத இறைவனை அடையப் போகிறீர்கள்?

தூமைதூமை யென்றுளே துவண்டலையு மேழைகாள்
தூமையான பெண்ணிருக்கத் தூமைபோன தெவ்விடம்
ஆமைபோல முழுகிவந் தனேகவேத மோதுறீர்
தூமையுந் திரண்டுருண்டு சொற்குருக்க ளானதே. 50

எந்தச் செயலும் தூய்மையானதல்ல; கெட்டதாகவே (தூமை=தீட்டு) இருக்கின்றன; எனும் சஞ்சலத்தால் அலைக்கழிக்கப்படும் மனிதர்கள், ஒழுக்கமற்ற தூய்மையற்ற பெண்ணைக் கண்டதும் மனம் மயங்கி அப்பெண்ணின் பின் அலைவது ஏன்? அப்பொழுது அவர்கள் கூறும் அந்தத் தூய்மை எங்கே போனது? ஆமையைப்போல் நீரில் முழுகிவிட்டு, அழுக்கு போய்விட்டதா என்று கூடப் பார்க்காமல், சுத்தமாய்த்தான் இருக்கிறோமென்று சொல்லிக்கொண்டு வாயால் மட்டும் எண்ணிலடங்கா முணுத்தங்களைச் (மந்திரங்கள்) சொன்னால் மட்டும் போதுமா? நற்பயன் கிட்டுமா? சலனமற்ற மனம் ஒருநிலைப்பட்டுத் தவத்தில் (முக்கலையொன்றித்தல்) நின்றால் மட்டுமே அழுக்கற்ற சிவத்தின் தன்மையை உணரலாம்.

சொற்குருக்க ளானதுஞ் சோதிமேனி யானதும்
மெய்க்குருக்க ளாயினும் வேணபூசை செய்கினும்
சற்குருக்க ளாயினுஞ் சாத்திரங்கள் சொல்லினு
மெய்க்குருக்க ளாயினுந் திரண்டுருண்ட தூமையே. 51

வேதங்களை ஓதி மெய்யாலுமே குருக்களாய் இருந்தாலும், வேண்டிய அளவு பூசைகள் செய்தாலும், “சற்குரு” எனப் பலராலும் போற்றும் மானிடராய் இருந்தாலும், சாற்றிறங்கள் பல படித்திருப்பினும், தாம் செய்யும் செயல்கள்தாம் தூய்மையானவை எனக்கூறும் மானிடராய் இருந்தாலும், அவர்கள் எல்லாம் தீட்டு என இவர்களால் அழைக்கப்படும் தாயின் சூதகத்தில் இருந்து திரண்டு மனித உடலெடுத்துத் திரண்டு வெளி வந்தவர்கள்தாம். முக்கலையைச் சேர்த்துத் தவமியற்றி தம்நிலை கடந்தவர்கள்தாம் மெய்யிலே(உடலிலே) தூய்மையானவராம்.

கைவ(ழ)டங்கள் கொண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டுநீ ரெண்ணியெண்ணிப் பார்க்கிறீர்
பொய்யுணர்ந்த சிந்தையைப் பொருந்திநோக்க வல்லீரேல்
மெய்கடிந்த தும்முளே விளைந்துகூற லாகுமே. 52

எவ்வளவோ கை முறைகள் கொண்டு யோக ஞானம் கற்றாலும் நம் மெய்யில் மெய்யான இடம் எதுவென அறியாமல் கண்களை சிமிட்டி நிற்கிறீர்கள். .ஈசன் இருக்கும் இடம்எங்கே என்று தெரிந்து கொள்ளாமல் எவ்விடத்தில் மனதை இறுத்தி தியானம் செய்கிறீர்கள். பொய்யாயின யாவையும் ஒழித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து, அங்கேயே சிந்தையைப் பொருத்தி அதையே நோக்கி தியானிக்க வல்லவர்கலானால் மெய்ப்பொருளில் சோதியாக விளங்கி எல்லாவற்றையும் கடந்து நின்ற ஈசனை உங்களுக்குள்ளேயே கண்டு விரைவில் சேர்ந்து கூடி இறவா நிலையைப் பெறுங்கள்.

ஆடுகாட்டி வேங்கையை யகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி யென்னைநீ மதிமயக்க லாகுமோ
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி யென்னைநீ வெளிப்படுத்த வேணுமே. 53

ஆடு ஒன்றைக் கட்டிப்போட்டு, அதைக் காட்டி வேங்கையைப் பிடிப்பதுபோல், செல்வம் என்னும் இரையைக் காட்டி என் புத்தியை மயக்கலாமோ? இலைக் கொம்பாகிய கோடுதனைக் காட்டி யானையக் கொன்று தோலை உரித்த என் கொற்றவனாம் இறைவா, நான் வாழவேண்டிய இறைவீட்டைக் காட்டிக்கொடுத்து, என்னை மதி மயக்கத்திலிருந்து வெளியேற்றிக் காக்கவேண்டும், ஐயா.

இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம் வலக்கைசூல மான்மழு
எடுத்தபாதம் நீண்முடி யெண்டிசைக்கு மப்புறம்
உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லரோ. 54

உனது இடது கண் சந்திரன், வலது கண் சூரியன். இடது கையில் சங்கு சக்கரமும் வலது கையில் மான் மழுவையும் கொண்டு பிரம்மாவும் விஷ்ணுவும் அடிமுடி காண இயலாமல் பூமிக்கும் வானத்திற்கும், எட்டு திசைகளுக்கும் அப்புறமாய் நின்ற சிவனே! நீ என் உடம்பில் கலந்து நின்ற மாயத்தை யார் காண வல்லவர்கள்? என் உடம்பினில் மனதை அறிந்து மாயையே நீக்கி அறிவாய் நீ உள்ளதை அறிந்து கொண்டேன்.

நாழியும் நாழியுப்பு நாழியான வாறுபோல்
ஆழியோனு மீசனு மமர்ந்துவாழ்ந் திருந்திடம்
எருதிலேறு மீசனு மியங்குசக்ரத் தரனையும்
வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீ ணரகிலே. 55

ஒரு படி நீரில் ஒரு படி உப்பைச் சேர்த்தால் அது அந்நீரிலேயே கரைந்து ஒரு படி உப்பு நீராகத்தான் இருக்கும். அதுபோலதான் திருப்பாற் கடலில் பள்ளி கொண்ட விஷ்ணுவும் திருசிற்றம்பலத்தில் நடனமிடும் ஈசனும் ஒன்றாகவே நம் உள்ளத்தில் அமர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தை அறிந்து கொள்ளுங்கள். எருதாகிய நந்தியில் ஏறும் ஈசனையும், சக்ராயுதத்தை உடைய விஷ்ணுவையும் அதுதான் பெரிது, இதுதான் பெரிது என வேறுபடுத்திக் கூறுபவர்கள் மெய்ப்பொருளை அறியமாட்டாது கொடுமையான நரகக் குழியில் வீழ்வார்கள்.

தில்லைநா யகனவன் திருவரங் கனுமவன்
எல்லையான புவனமு மேகமுத்தி யானவன்
பல்லுநாவு முள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே. 56

தில்லை அம்பலத்திலே களிநடனம் புரியும் நடராசப் பெருமானும் அவனே! திருவரங்கத்தில் அறிதுயிலில் ஆழ்ந்திருந்து அருள் புரிபவனும் அவனே! புவனங்கள் அனைத்துக்கும் ஒரே மூர்த்தியாகப் புலப்பட்டு(புலன்+பட்டு) ஏகமுத்தி தருபவனும் அவனே! இதையெல்லாம் உணராமல், பல்மேல் நாக்குப் போட்டு பிரித்துப் பேசி அற்பத்தனமான மகிழ்ச்சி அடைபவர்கள் சிலர்; தன்னை வல்லவர்கள் என நினைத்துக்கொண்டு இதையே மாற்றி மாற்றிப் பேசுபவர்கள் சிலர்; இவர்கள் எல்லோரும் வாய் புழுத்துச் சாவார்கள்.

எத்திசைக்கு மெய்வுயிர்க்கு மெங்களப் பனெம்பிரான்
முத்தியான வித்துளே முளைந்தெழுந்த வச்சுடர்
சித்தமுந் தெளிந்து வேதகோயிலுந் திறந்தபின்
அத்தனாடல் கண்டபின் னடங்கலாடல் காணுமே. 57

எட்டு திசைகளுக்கும், எல்லா உயிர்களுக்கும் தந்தையாக இருப்பவன் எம்பிரானாகிய ஈசனே. சக்தியாகிய நம் உடம்பில் வித்தாகவும், உயிராகவும், அறிவாகவும் விளங்கும் வாலியை அறிந்து தியானம் செய்ய செய்ய அருட்பெருஞ் சோதியாக ஆண்டவன் வருவான். சித்தம் தெளிந்து, அறிவை அறிந்து நான்கு வேதங்களும் கூறும் உள்ளமாகிய கோயிலின் வாசலை திறந்து ஈசனின் நடனங்கண்டு ஆனந்தம் அடைந்து அமைதி பெறலாம்.

உற்றநூல்க ளும்முளே யுணர்ந்துணர்ந்து பாடுவீர்
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்க ளெய்துவீர்
செற்றமாயை யுள்ளாரைச் செருக்கறுத் திருத்திடில்
சுற்றமாக வும்முளே சோதியென்றும் வாழுமே. 58

இறைவனுக்கு உற்ற நூல்களை உணர்ந்துணர்ந்து பாடுங்கள். பற்றுக்களை அறத்து, தவத்தில் நிட்று பராபரமான எசனை சேருங்கள். பகைமைகளை ஒழித்து உள்ளத்தில் மாசுகளை அறுத்து, பத்தாம் வாசலை திறந்து ஆணவத்தையும், கர்வத்தையும் அழித்து மெய்ப்பொருளை அறிந்து தியானம் செய்து வந்தால் உனக்குள் பரிசுத்தமான மெய்ப்பொருளில் ஈசன் சோதியாக என்றென்றும் நிலைத்து வாழ்வார் மரணம் இல்ல பெருவாழ்வில் வாழலாம்.

போதடா வெழுந்ததும் புலனாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா வஞ்சுமூன்று மொன்றதான வக்கரம்
ஓதடா விராமராம ராமவென்னும் நாமமே. 59

காலைப் பொழுதில் எழுந்தது அது என்ன என்பதையும், நீராகி, நின்று வந்த அது என்ன என்பதையும் நாத விந்தான தாதுவை புகுந்து நெருப்பாகி விளைந்த அது என்ன? என்பதில் எல்லாம் நமக்குள் நன்கு அறிந்து அது “மெய்பொருளே” என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அது பஞ்சபூத தன்மையைக் காட்டும் “நமசிவய” எனும் ஐந்தெழுத்தாகவும் அறிவு, உணர்வு, நினைவு என்பவைகளை உணர்த்தும் அகாரம், உகாரம், இகாரம் என்ற மூன்றெழுத்து “ஓம்” எனும் ஓங்காரகமாக உள்ளதை உணர்ந்து “ஓம் நமசிவய” எனும் அச்சரத்தை உங்களுக்குள் ஓதி உயர்வடையுங்கள். ஒரெழுத்தான வித்திலிருந்து ஐந்து மூன்றும் எட்டாகி உடம்பாக விளங்குவதை உணர்ந்து அதுவே ராம மந்திரமாக இருப்பதை அறிந்து ராமநாமத்தை ஓதி தியானியுங்கள்.

அகாரமென்ற வக்கரத்து ளவ்வுவந் துதித்ததோ
உகாரமென்ற வக்கரத்தி லுவ்வுவந் துதித்ததோ
அகாரமும் உகாரமுஞ் சிகாரமின்றி நின்றதோ
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே. 60

அகாரம் என்ற ‘அ’ எழுத்தில் ஒரெழுத்தான அவ்வு தோன்றியதோ! உகாரம் என்ற ‘உ ‘ எழுத்தில் ஊமைஎழுத்தான உவ்வு வந்து தோன்றியதோ! இந்த எட்டிரண்டுமான ‘அ ‘-வும் ‘உ’-வும் ‘சி’என்ற சிகாரம் இன்றி தோன்றியிருக்க முடியுமா? இதனை எவ்வித மன விகாரமும் அற்ற யோகிகளே விரிவாக எடுத்துரைத்து விளக்க வேண்டும். எந்த மொழி எழுத்துக்களுக்கு முதல் எழுத்தாக இருப்பது (.) புள்ளியாகவும், பேசும் எழுத்தாக மாறும் பொது ‘சி’யாகவும் உள்ளது, ஆதலால் சிகாரம் இல்லாமல் எந்த எழுத்தும் நிற்காது என்பதி புரிந்துகொண்ட அந்த ஓரெழுத்தை உணர்ந்து தியானியுங்கள்.

அறத்திரங்க ளுக்குநீ மகண்டமெண் டிசைக்கும்நீ
திறத்திரங்க ளுக்குநீ தேடுவார்கள் சிந்தைநீ
உறக்கம்நீ யுணர்வுநீ யுட்கலந்த சோதிநீ
மறக்கொணாத நின்கழற் மறப்பினுங் குடிகொளே. 61

ஈஸ்வரா! தர்மகாரியங்கள் யாவும் நீ, அகண்டங்கள் அனைத்துக்கும் எட்டு திசைகளுக்கும் காரணமானவன் நீ. உன்னை அடைய வேண்டும் என்று தேடுவோர்களின் சிந்தையிலும் மெய்யறிவாகவும் உள்ளவன் நீ. மெய் ஞானா விஞ்ஞானத் திறன்களுக்கும் அதில் ஆராய்ந்து சாதிக்கும் திறமைகளுக்கும் காரணம் நீ. தூக்கத்தில் கிடைக்கும் சுகம் நீ. உன்னை உணரும் உணர்வும் நீ ஏன் உடலில் உட்கலந்து நிற்கும் சோதியும் நீ. கனவிலும், நனவிலும் மறக்கக் கூடாத நின் திருவடியை அடியேன் அறியாது மறந்து போனாலும் ஏன் உடலாகிய வீட்டில் மனத் தாமரையில் வந்து குடியிருந்து ஆண்டு கொள்.

அண்டம்நீ யகண்டம்நீ யாதிமூல மானநீ
கண்டம்நீ கருத்தும்நீ காவியங்க ளானநீ
புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்
கொண்டகோல மானநேர்மை கூர்மையென்ன கூர்மையே. 62

அண்டம், அகண்டம், ஆதிமூலம், எல்லை, மனிதனின் கருத்து, காவியம் ஆகிவைகளாய் விளங்கும் இறைவா! அறிவுக்கும் அறிவே! புண்டரீகம் என்னும் வெண்தாமரையினுள்ளே, தத்தம் சூரிய, சந்திர, அக்கினி கலைகளை ஒன்று சேர்த்துத் தவம் இயற்றும் புண்ணியர்கள் உணரும் நுண்மையான உணர்வுதான் நீ.

மையடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
மையிறந்து கொண்டுநீங்க ளல்லலுற் றிருப்பீர்காள்
மெய்யடர்ந்த சிந்தையால் விளங்குஞான மெய்தினால்
உய்யடர்ந்து கொண்டுநீங்க ளூழிகாலம் வாழ்விரே. 63

மைபூசிக் கருமைபெற்ற கண்களை உடைய மயக்கும் கன்னிகளின் மயக்கத்திலே ஆழ்ந்து அவதியுறும் மக்களே! பொய்க் கலப்பில்லாத சிந்தையை உள்ளுணர்வு நிலைக்குக் கொண்டு செல்லும் நிலையைத் தெளிவாக அறிந்து செம்மையாகச் செய்ய இயலுமாயின் மறலியாம் மரணத்தை வென்று அழிவற்று வாழலாம்.

கருவிருந்து வாசலாற் கலங்குகின்ற வூமைகாள்
குருவிருந்து சொன்னவார்த்தை குறித்து நோக்கவல்லீரேல்
உருவிலங்கு மேனியாகி யும்பராகி நின்றநீர்
திருவிலங்கு மேனியாகச் சென்று கூடலாகுமே. 64

கருக்குழியின் மயக்கத்தால் கலங்கி வாய்மூடி மவுனம் காக்கும் ஊமைகளே! குருவின் உபதேசத்தில் குறித்த இடமாம் நாசி நுனியில் ஊசிப்பார்வை வைத்து நோக்கும் வல்லமை உள்ளவராயிருந்தால் அச்சம் துலங்கும் உடலை உடைய நீங்கள், உயர்வடைந்து, திருவாகிய இறைவன் நடமாடும் உடலுடன் அவனை இனங்கண்டு அவனுடன் கூடலாகுமே.

தீர்த்தமாட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தமாடல் எவ்விடந் தெளிந்துநீ ரீயம்பிலீர்
தீர்த்தமாக வும்முளே தெளிந்தநீ ரிருந்தபின்
தீர்த்தமாக வுள்ளதுஞ் சிவாயவஞ் செழுத்துமே. 65

தலம் , தீர்த்தம், மூர்த்தம் என்றும் நல்ல தீர்த்தங்களில் மூழ்கி நீராடினால் அநேக பாவங்களும் அகன்றுவிடும் என்றும் காவிரி, கங்க, யமுனா என்று தீர்த்தங்களைத் தேடி ஓடும் அன்பர்களே!! அப்படியெல்லாம் தேடித் தீர்த்தமாடியதால் செய்த பாவம் யாவும் போய்விட்டதா? பாவங்கள் அகல தீர்த்தமாடுவது எந்த இடம் என்று நீங்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். உங்களுக்குள் தெளிந்த தீர்த்தமாக உள்ள நீரையும் அது இருக்கும் இடத்தையும் தெரிந்து கொண்டீர்களா? அவ்வாறு அனைத்து பாவங் களையும் போக்க வல்லதாக உள்ள தீர்த்தமாகிய அது பஞ்சாட்சரம் என்ற மெய்ப்பொருள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதிலேயே பஞ்சபூதங்களும் உள்ளதை உணர்ந்து சிவயநம என்று அஞ்செழுத்தை ஓதி அதையே நினைந்து நெகிழ்ந்து நீராடும் வழியை அறிந்து தியானம் செய்யுங்கள்.

கழுத்தையு நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்துவாய் விழுந்துபோன பாவமென்ன பாவமே
அழுத்தமான வித்திலே யனாதியா யிருப்பதோர்
எழுத்திலா வெழுத்திலே யிருக்கலா மிருந்துமே. 66

நீங்கள், கழுத்தை நிமிர்த்தி, கண்களை விரிய விழித்து யோகம் புரிகிறேன் எனக்கூறி, இறுதியில் வயதாகி உடல் பழுத்து, வாயில் உள்ள பற்கள் உதிர்ந்துபோன நிலையை அடைந்துள்ளது பாவமே! சிறு அணுக்குள் பெரிய சக்தியை அடைத்து வைத்ததால் அழுத்தம் நிறைந்துள்ள விந்தினுள்ளே அனாதியாயிருக்கும் சிவத்தை, எழுத்திலா எழுத்தை அறிந்து அதனுள் மூழ்கியிருக்கலாமே.

கண்டுநின்ற மாயையுங் கலந்துநின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீ ருணர்ந்திருக்க வல்லீரேல்
பண்டையா றுமொன்றுமாய்ப் பயந்தவேத சுத்தனாய்
அண்டமுத்தி யாகிநின்ற வாதிமூல மூலமே. 67

கண்ணால் காண்பது எல்லாம் மாயை. அதில் திளைத்துள்ள ஐந்து பூதங்கள். உண்டி உண்டவுடன் உடல் உறங்குவதுபோல், இந்த ஐம்பூதங்களையும் மாயையையும் உறங்க வைக்கும் வழியை உணர்ந்து இருக்கும் வல்லமை உடையவரென்றால், பயபக்தியுடன் சுத்தமான மனதுடன் பழய வழியாகிய முக்கலையை ஒன்றித் தவமிருந்து ஆதி மூலமாகிய அண்டத்துடன் ஒன்றி முத்தி பெறலாம்.

மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாடிநாடி யும்முளே நாழிகை யிருந்தபின்
பாலனாகி வாழலாம் பறந்துபோக யாக்கையும்
ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே. 68

மூலநாடியான சுழுமுனையில் வாசியோகம் செய்து அதனால் வரும் நாத சப்தத்தால் அங்கெ தோன்றி எழுந்த சோதியில் மனம் பொருத்தி நான்கு நாழிகை நேரம் தியானம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து நாடி செய்து தவம் புரியும் யோக ஞான சாதகர்கள் என்றும் இளமையோடு பாலனாக வாழ்வார்கள். அதன் பலனாய் அவர்களே பரப்பிரமமாய் அவார்கள் இது ஆலகால விஷம் உண்ட நீலகண்டர் மீதும் அம்மையான உமையவள் மீது ஆணையிட்டு சத்தியம் என்று சொல்கின்றேன்.

ஈன்றவாச லுக்கிறங்கி யெண்ணிறந்து போவீர்காள்
கான்றவாழை மொட்டலர்ந்த காரண மறிகிலீர்
நான்றவாசலைத் திறந்து நாடிநோக்க வல்லீரேல்
தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே. 69

பெண்கள் மேல் கொண்ட மையலினால் அவர்களுக்கு இரங்கி வாழ்நாள் முழுதும் உழைத்து இளைத்து மாண்டு போகின்ற மனிதர்காள்! வாழையடி வாழையாக வாழைமரம் கன்று ஈன்றதாயும் பூ பூத்து காய்க்கும் காரணத்தை அறிவீர்களா!! மனிதர்களுக்கும் வாழைக்கும் நீரே வித்தான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கும் இருக்கும் நந்தியின் வாசலைத் திறந்து மெய்ப்பொருளையே நாடி நோக்கியிருந்து தியானித்திருக்க வல்லவர் ஆனால் மனத்தினால் தோன்றுகின்ற மாயைகள் யாவும் நம்மைவிட்டு ஒழிந்து நம்முள் அருட்பெரும் ஜோதியாக ஈசன் வந்து தோன்றுவான்.

உழலுவாச லுக்கிரங்கி யூசலாடு மூமைகாள்
உழலும்வாச லைத்திறந்து வுண்மைசேர வெண்ணிலீர்
உழலும்வாச லைத்திறந்து வுண்மைநீ ருணர்ந்தபின்
உழலும்வாச லுள்ளிருந்த வுண்மைதானு மாவீரே. 70

வீடு மனைவி மக்கள் செல்வம் என்று அதற்காகவே அலைந்து உலக வாழ்வில் இன்ப துன்பங்களில் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஊமை மக்களே! நம்மை மீண்டும் பிறவிப்பிணியில் ஆட்படுத்தி உழலும் அந்த வாசலைத் துறந்து உண்மையை உணர்ந்து மெய்ப்பொருள சேர்ந்து மீதும் பிறவா நிலை பெற எண்ணம் வையுங்கள். அனைத்தையும் துறந்து அவனே கதியென சரணடைந்து தன்னைத் தான் அறிந்து தனக்குள்ளேயே இறைவன் இருக்கும் உண்மையை உணர்ந்து தியானியுங்கள் நம்மில் இருக்கும் பத்தாம் வாசலில் உள்ளிருந்து உழலும் சோதியான மெய்ப் பொருளையே பற்றி இருங்கள் நீயே அதுவாகிய பெருன்மையாக ஆவீர்கள்.

இருக்கவேணு மென்றபோ திருக்கலா மிருக்குமோ
மரிக்கவேணு மென்றலோ மண்ணுளே படைத்தனர்
சுருக்கமற்ற தம்பிரான் சொன்னவஞ் செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதங்கெடீர். 71

நாம் எப்பொழுதும் இப்படியே இருக்க வேண்டும் என்று நினைத்தால் இருக்க முடியுமா? இருந்து இறக்க வேண்டும் என்று தானே இப்பூமியில் நம்மைப் படைத்தனர். குறுகிய எண்ணம் இல்லாத என் குருநாதன் எனக்கு உபதேசித்த சிவனாம என்ற அஞ்செழுத்தையும் இறப்பதற்கு முன் அறிந்து கொண்டு வணங்கி செபம் செய்து தியானம் செய்யுங்கள். அதுவே இப்பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாக இருப்பதை உணராமல் இறை திருவடியை மறந்து கெடுகின்றீர்கள்.

அம்பத்தொன்றி லக்கர மடங்கலோ ரெழுத்துளே
விண்பரந்த மந்திரம் வேதநான்கு மொன்றலோ
விண்பரந்த மூலவஞ் செழுத்துளே முளைத்ததே
அங்கலிங்க பீடமா யமர்ந்ததே சிவாயமே. 72

‘நமசிவய’ என்ற அஞ்செழுத்துக்கும் (9+11+4+15+12=51) எண்களைக் கொடுத்து அம்பத்தோர் அட்சரங்களாக்கி அமைத்து அதை ஒரேழுத்தான ‘சி’ யில் அடக்கினர். ஆகாயத்தில் பறந்து நின்ற சோதியான சிகாரமும், வேதங்கள் நான்கும் கூறும் சிகாரமும் ஒன்றே. மூலாதரத்திலிருந்து ஆஞ்ஞா வரை ஓம் நமசிவய என்று உச்சரித்து தியானியுங்கள். நம் உடம்பிலேயே இழிந்கமாகவும், பீடமாகவும் அமைத்திருப்பது சிவமே என்பதை உணருங்கள்.

சிவாயவென்ற வக்கரஞ் சிவனிருக்கு மக்கரம்
உபாயமென்று நம்புதற்கு உண்மையான வக்கரம்
கபாடமற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயமிட் டழைக்குமே சிவாயவஞ் செழுத்துமே. 73

சிவயநம என்ற மந்திரமே சிவன் இருக்கும் அட்சரமாகும். நமக்கு ஆபத்து வரும் காலங்களில் உபாயமாக வந்து காப்பதற்கு நம்பி உபாசிக்க உண்மையாக உள்ள மந்திரம் இதுவே. நம் பிராணனிலிருந்து கடந்து போன பிராண வாயுவை மீண்டும் நம் பிரானநிலேயே சேர்த்து ஆயுளைக் கூட்ட பிரானவாமம் செய்தால் அதற்கு உற்ற துணையாக இருப்பது சிவாயநம எனும் அஞ்செழுத்து மந்திரமே. ஆதலின் அதை ஓதி தியானியுங்கள். அதுவே உங்களுக்கு உபாயமாக என்றும் வரும்.

உருவமல்ல வெளியுமல்ல வொன்றைமேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல வற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே. 74

உருவாக உள்ளது ஆனால் உருவும் அல்ல. வெளியாகி இருப்பது ஆனால் வெளியும் அல்ல. ஐம்புலன்களில் உருவாக உள்ளது, ஆனால் உருவும் அல்ல. ஐம்புலன்களில் ஒன்றை சேர்ந்து இருப்பது ஆனால் அதைச் சார்ந்து நிற்கவில்லை. மறுவாக உள்ளது ஆனால் தூரம் அல்ல. பஞ்சபூதங்களில் எல்லாம் உள்ளது அனால் மற்றதல்ல. பாசம் அற்றிருப்பது ஆனால் பாசம் அற்றதல்ல. மிகவும் பெரியது ஆனால் பெரியதும் அல்ல. மிகவும் சிறியது ஆனால் சிறியதும் அல்ல. பேசும் தன்மை கொண்டது ஆனால் பேசாதது. ஆன்மா தானாகி தற்பரமாய் நின்ற அதை அறிவதற்கு அறிய மெய்ப்போருல்களின் உண்மைகளை யார் அறிந்துகொண்டு தியானம் செய்து காண வல்லவரோ!

ஆத்துமா வனாதியோ வாத்துமா வனாதியோ
பூத்திருந்த ஐம்பொறி புலன்களு மனாதியோ
தாக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ
வீக்கவந்த யோகிகாள் விரித்துரைக்க வேணுமே. 75

உனக்குள் இருக்கும் ஆன்மா அனாதியா? அனைத்திலும் இருக்கும் ஆண்டவன் அனாதியா? உனக்குள் ஐம்போரிகலாகவும், ஐந்து புலன்கலாகவும், இருப்பவை அனாதியா? தத்துவ விளக்கங்கள், உண்டென்றும் இல்லையென்றும் தர்க்கம் செய்யும் வேதாகம நூல்கள் அனாதியா? அல்லது ஆஞ்ஞாவில் உள்ள சதாசிவம் அனாதியா? என்பதை யோக ஞானம் விளக்க வரும் யோகிகளே எது அநாதி என்பதயும் எது நித்தியம் என்பதை அனைவரும் உணரும் வண்ணம் விரைந்து வந்து கூறவேண்டும்.

அறிவிலே பிறந்திருந் தாகமங்க ளோதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மையொன் றறிகிலீர்
உறியிலே தயிரிருக்க வூர்புகுந்து வெண்ணைதேடும்
அறிவிலாத மாந்தரோ டணுகுமாற தெங்ஙனே. 76

“அறிவுப் பிறப்பெடுத்துள்ளேன்,” எனக் கூறி அறிவுபூர்வமாய்ச் சிந்தித்து ஆகமங்கள் அனைத்தையும் ஓதுகின்ற மனிதர்களே! அறிவுப் பிறப்பெடுத்தோர் செல்லும் வழி எது என அறிந்திடாது, மயங்கி, எது நேர்வழி என அறிகிலீர். நம் வீட்டு உறியிலேயே தயிர் இருக்க, ஊரிலுள்ள எல்லா வீடுகளிலும் சென்று வெண்ணையைத் தேடும் அறிவற்றவர்களாகிய உங்களுக்கு எப்படி விளக்குவேன்? நம் உடலிலேயே தயிர் உள்ளது; அதைக் கடைந்தால் வெண்ணை கிடைத்துவிடும். கடையும் வழி என்ன? என்பதைக் காணுங்கள். இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடத்திலே தேடிப் பயனென்ன?

இருவரங்க மும்பொருந்தி யென்புருகி நோக்கிலீர்
உருவரங்க மாகிநின்ற வுண்மையொன்றை யோர்கிலீர்
கருவரங்க மாகிநின்ற கற்பனை கடந்துபின்
திருவரங்க மென்றுநீர் தெளிந்திருக்க வல்லீரே. 77

சக்தியாகிய உடலும் சிவனாகிய உயிரும் ஒரே நினைவோடு அன்பால் என்புருகி தியானம் செய்யுங்கள். நமக்குள் உருவாக அரங்கத்தில் ஒளியாக நின்று ஒன்றாய் இருக்கும் உண்மையை உணர்ந்து அதுவே இறைவன் குடியுருக்கும் கோயிலாக இருப்பதைக் கண்டு அறிந்து அத்திருவரங்கத்தில் உடலையும் உயிரையும் இணைத்து சிவத்தில் கரைய தவம புரியுங்கள்.

கருக்குழியி லாசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கு மேழைகள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்திருத்தி மெய்யினாற் சிவந்த வஞ்செழுத்தையும்
உருக்கழிக்கு மும்மை யுமுணர்ந்துணர்ந்து கொள்ளுமே. 78

பெண்ணின்ப ஆசையால் காதல் வயப்பட்டு அதே நினைவில் நிற்கின்றீர்கள். அந்த குறிப்பைத் தவிர அதனால் வரும் துன்பங்களை அறியாத ஏழைகளே! பெண்ணின்பத்தினை பெரிதாக போற்றி குலாவுகின்ற பாவிகளே! அதனால் உங்கள் உடம்பு உருக்குலைந்து உயிர் போய்விடுமே! ஆதலால் நல்ல குருநாதர் உன்னைத் திருத்திக் கற்றுக்கொடுக்கும் உண்மையான யோகத்தை செய்து நமது மெய்யில் பஞ்சாட்சரமாக இருக்கும் மெய்ப் பொருளை அறிந்து ‘சிவயநம’ என்ற அஞ்செழுத்தை ஓதி உனக்குள்ளேயே உணர்ந்து தியானித்து அறிந்து கொள்ளுங்கள்.

மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது ரைக்கவும்
எண்ணிலாத கோடிதேவ ரென்னதுன்ன தென்னவும்
கண்ணிலே மணியிருக்க கண்மறைத்த வாறுபோல்
எண்ணில்கோடி தேவரு மிதன்கணால் விழிப்பதே. 79

இருவினை பாவ புண்ணியத்தால்தான் மண்ணில் பிறக்கின்றோம். கடவுள் உண்டென்றும் இல்லையென்றும் வழக்குகள் பேசுகின்றோம். எண்ணில்லாத கோடி தேவர்களையும் என்னுடையது, உன்னுடையது என்றும் உரிமை கொண்டாடுகின்றோம். அதனால் இறைவனை அறிந்து கொண்டீர்களா? அவ்வண் உனக்குள்ளேயே அதுவாக இருப்பதை உணருங்கள். கண்களில் இருக்கும் கண்மணியால் எல்லாம் காணப்பட்டாலும் அதனை அக்கண்ணே மறைப்பதுபோல் தனக்குள் இருக்கும் ஆன்மாவை காணமுடியாது மையை மறைக்கின்றது. இதனை தியானத்தால் அகக்கண் திறந்து பார்த்தால் எல்லா தெய்வங்களும் இதன் கண் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத் தடுக்குவார்
வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நங்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண்கலந்து நின்றமாய மென்னமாய மீசனே. 80

மண்பானை கவிழ்ந்து உடைந்து போனால் அது தேவைப்படும் என எடுத்து அடுக்கி வைப்பார்கள். வெண்கலப் பானை வீழ்ந்து நசுங்கிப் போனால் அது வேணும் என்று பாதுகாப்பார்கள். ஆனால் நமது உடம்பை விட்டு உயிர் போய் கிடக்கும் போது அதனைப் பிணம் என்று இகழ்ந்து அது கிடந்தால் நாறும் எனக் கூறி குழிவெட்டி அதனில் போட்டு மூடிவிடுவார்கள். இப்படி ஒரு காசுக்கும் கூட உதவாத என் எண்சாண் உடம்பில் நீ நின்று ஆடிய மாயம்தான் என்ன மாயமையா ஈசனே!

மிக்க செல்வநீ படைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவ தறிகிலீர்
மக்கள்பெண்டிர் சுற்றமென்று மாயைகாணு மிவையெலாம்
மறலிவந் தழைத்தபோது வந்துகூட லாகுமோ. 81

பாவச் செயல்கள் செய்து நிறைந்த செல்வங்களைப் பெற்றும் நிம்மதி இன்றி வாழும் பாவிகளே! நீர் இறந்து போனால் சுடுகாட்டிற்கு கொண்டு போய் விறகு, விராடியினால் அடுக்கி தீ வைத்து எரித்து இவ்வுடம்பு ஒருபிடி நீரும் இல்லாது சாம்பலாவதை அறிய மறந்தீர்களே! மக்கள், மனைவி, உறவு என்பவர்கள் யாவும் வெறும் மாயை என்பதை உணருங்கள். எமன் வந்து இவ்வுயிரை எடுத்து போகும் பொது நீ செய்த புண்ணிய பாவமின்றி வேறு யாரும் கூட வரமாட்டார்கள்.

ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தி லழகிய
ஒருவராகி யிருவராகி யிளமைபெற்ற வூரிலே
அக்கணிந்து கொன்றைசூடு மம்பலத்தி லாடுவார்
அஞ்செழுத்தை யோதிடி னனேகபாவ மகலுமே. 82

ஒத்து வாழும் பெண்ணுடன் சிற்றின்பத்தில் ஈடுபடும்போது அதையே யோகமாக்கி பேரின்பம் அடையும் பட்டணம் ஒன்று என்றும் இளமையோடு இருக்கின்றது. அந்த இடத்தில் ருத்திராட்ச மாலையும் கொன்றை மலரையும் சூடி ஈசன் உள்ளமாகிய அம்பலத்தில் நடனமாடிக் கொண்டிருக்கின்றார். அவனை அறிந்து அஞ்செழுத்து மந்திரத்தை ஓதி தியானம் செய்தால் செய்த அநேக பாவங்கள் யாவும் அகன்று விடும்.

மாடுகன்று செல்வமு மனைவிமைந்தர் மகிழவே
மாடமாளி கைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
உடல்கிடந் துயிர்கழன்ற வுண்மைகண்டு முணர்கிலீர். 83

மாடமாளிகைகள் கட்டி மாளிகைகள் கட்டி மாடு, கன்று போன்ற சகல செல்வங்களையும் சம்பாதித்து தம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நாட்களில், திடீரென்று விபத்தில் நடப்பது போல் எமதூதர்கள் ஒரு நொடியில் உயிரைக் கொண்டு போன பின் அவ்வுடல் பிணமாக கிடப்பதைக் கண்டும் உயிர் போனதை உணர்ந்தும் உயிரை அறியாமல் இருக்கின்றீர்கள். அவ்வுடலில் உயிராய் நின்ற ஈசன் ஆட்டுவித்த உண்மையை உணர்ந்து இரவா நிலைபெற்று இறைவனை சேர தியானம் செய்யுங்கள்.

படுகின்ற உம்பருக்குள் ஆடுபாதம் உன்னியே
பழுதிலாத தர்மகூட்ட மிட்டஎங்கள் பரமனே
நீடுசெம்பொன்னம் பலத்துள் ஆடுகின்ற அப்பனே
நீலகண்ட காளகண்ட நித்யகல் லியாணனே. 84

பரமனையே பாடுகின்ற உத்தமபக்தர்கள் இறைவனின் ஆடுகின்ற திருவடியையே தியானிப்பார்கள். குற்றமில்லாத கர்ம யோகிகள் கூட்டம் அரஹர என கோஷம் இட்டுக் கூவி நாதோபாசானையால் அழைப்பதும் எங்கள் பரமனையே. என்றென்றுமுள்ள செம்மையான பொன்னம்பலத்துள் சோதியாக நின்று நடராஜனாக ஆடல் புரியும் எங்கள் அப்பனே. நீயே ஆழம் உண்ட நீலகண்டன், நீயே காலனை உதைத்த காலகண்டன், நீயே நித்தியமுமாய் ஆனந்தம் தரும் கல்யாண குணத்தவன்.

கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானமுற்ற நெஞ்சகத்தில் வல்லதேது மில்லையே
ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்தடக்கினால்
தேனகத்தின் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே. 85

இவ்வுடம்பை சுடுகாட்டில் வைத்து எரிக்கும் போது அது ஒன்றுக்கும் உதவாத ஒரு பிடி சாம்பலாகும். அது போல ஞானம் சிறிதும் இல்லா நெஞ்சம் உடையவர்களிடம் நல்லது ஒன்றும் இருக்காது. அறிவாக சுடர் விடும் சோதியை அறிந்து அங்கேயே உன் உணர்வையும், மனதையும் நிலை நிறுத்தி தியானம் செய்து வந்தால் தேனில் ஒடுங்கியிருந்த ருசியானது நாவில் ஊறுவதுபோல் ஈசனின் அருளால் ஆனந்தம் கிடைக்கும்.

பருகியோடி உம்முளே பறந்துவந்த வெளிதனை
நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அதாகுமே
உருகியோடி எங்குமா யோடும்சோதி தன்னுள்ளே
கருதுவீர் உமக்கு நல்ல காரணம் அதாகுமே. 86

மூச்சுக் காற்றைப் பருகி, ஞானம் பழகி வரும்போது நம்முள்ளே பறந்துவந்த ஆகயவெளியில் நிலைத்து, நினைந்து கூர்ந்து நோக்கில் உன் மலங்களாகிய பாவங்கள் அழியும். உருகிய நெய்போல் எங்குமாய் ஓடிக் கலந்துள்ள சோதி தன்னுள்ளும் உள்ளது. அப்படியுள்ள அருட்பெரும் சோதிக்குள் கலக்கவேண்டும் எனக் கருதி உள்நோக்கிச் செல்வதே உங்களுக்கு நல்ல வழியாகும்.

சோதியாதி யாகிநின்ற சுத்தமும் பலித்துவந்து
போதியாத போதகத்தை வோதுகின்ற பூரணா
வீதியாக வோடிவந்து விண்ணடியி னூடுபோய்
ஆதிநாத னாதனென் றனந்தகால முள்ளதே. 87

பூரணமாகிய சோதியில் ஆண் பாதி, பெண் பாதியாக அர்த்தனாரீயாக நின்றது எது எனவும், எனக்குள் பரிசுத்தமான இடம் எது எனவும் காட்டி, எனக்கு யோகம் தியானம் செய்யும் முறைகளையும் போதித்து உபதேசித்த மெயகுருனாதனே வாசி யோகத்தில் குண்டலினி சக்தியானது மூலாதாரத்திலிருந்து முதுகுத் தண்டின் வீதி வழியாக மேலேறி சகஸ்ரதளத்தை அடைந்து வெளியாக விளங்கும் இடத்தின் அடியில் சென்று சேருகின்றது. அங்கெ சோதியாகவும், நாதனாகவும், ஆதியாகவும் ஈசன் அனாதியாக எப்போதும் இருக்கின்றான்.

இறைவனா லெடுத்தமாடத் தில்லையம் பலத்திலே
அறிவினா வடுத்தகாய மஞ்சினா லமர்ந்ததே
கருவிநாத முண்டுபோய் கழன்றவாச லொன்பதும்
ஒருவரா யொருவர்கோடி யுள்ளுளே யமர்ந்ததே. 88

நமது உடம்பிலேயே சிவன் இருக்கும் சிதம்பரமாகிய ஆகாயத் தலத்தில் அறிவாக விளங்கும் சித்தத்தை அறியுங்கள். அவ்வறிவால் அமைந்த இவ்வுடலானது மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களால் அடுக்கடுக்காக ஆராதாரங்களாய் அமைந்து உள்ளது. தாயின் கருவினிலே புகும் விந்து நாதத்தை உண்டு உருவாக்கி ஒன்பது வாசல் கொண்ட உடலுயிர் வளர்ந்து இப்பூமியில் வெளிவுறம். அப்படிவரும் கோடிக்கணக்கான உயிர் ஒவ்வொன்றிலும் சிவனே அதனுள் அமர்ந்துள்ளார் என அறியுங்கள்.

நெஞ்சிலே யிருந்திருந்து நெருக்கியோடும் வாயுவை
அன்பினா லிருந்துநீ ரருகிருத்த வல்லீரேல்
அன்பர்கோயில் காணலா மகன்று மெண்டிசைக்குளே
தும்பியோடி யோடியே சொல்லடா சுவாமியே. 89

நெஞ்சிலே இருந்து ஓடிக் கொண்டிருக்கும் பிராணவாயுவை யோகப் பயிற்சியினால் நிறுத்தி அன்பெனும் பக்தியுடன், தியானம் செய்து, வாசியை உங்களுக்குள்ளேயே இருத்த வல்லவர்கலானால் அவ்வாசி யானது நம் பிராணனில் கலந்து இறைவன் இருப்பிடத்தை காட்டும். செய்த பாவவினைகள் யாவும் அகலும். எண்திசைகள் யாவிலும் இயங்கும் ஈசனை அறிந்துணர்ந்து, தும்பியானது ரீங்காரம் இடுவதைப் போல உனக்குள்ளே வாசியை ஓட்டி தியானம் செய்து இறைவனை அடையுங்கள்.

தில்லையே வணங்கிநின்று தெண்டனிட்ட வாயுவை
எல்லையைக் கடந்துநின்று ஏகபோக மாய்கையோ
டெல்லையைக் கடந்துநின்று சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையுஞ் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே. 90

தில்லையில் ஆடும் ஈசன் நம் உடலில் இடங்கொண்டு ஆகாய எல்லையில் ஆடி நம்மை ஆட்டுவிக்கின்றான். வாசிக் காற்றை மேலேற்றி செய்யும் பயிற்சியினால் அவ்வாசியானது ஈசனை வணங்கி அவனுடன் சேர்க்கின்றது. மனமெனும் எல்லையைக் கடந்து ஏகமாக நின்று எல்லா இன்ப போகங்களையும் அடையச் செய்வது மாயையே. மனமே வாசியாகி எல்லையாகவிருக்கும் ஆகாயத்தையும் கடந்து இறையைச் சேர்வதுவே ஆனந்தம். அவ்விறையையே உயிராக வெள்ளையும் சிகப்புமாக நம் உடலில் மெய்ப்பொருளாக நின்றது.

உடம்புயி ரெடுத்ததோ வுயிருடம் பெடுத்ததோ
உடம்புயி ரெடுத்தபோ துருவமேது செப்புவீர்
உடம்புயி ரிறந்தபோ துயிரிறப்ப தில்லையே
உடம்புமெய் மறந்துகண் டுணர்ந்துஞான மோதுமே. 91

உடம்பானது உயிர் எடுத்து வந்ததா? அல்லது உயிரானது உடம்பு எடுத்துக் கொண்டு வந்ததா? உடம்புதான் உயிர் எடுத்ததென்றால் உயிர் உயிர் வந்த பிறகுதானே உடம்பே தோன்றுகிறது. உடம்பில் உள்ள உயிருக்கு உருவம் ஏது சொல்லுங்கள். உடம்பும் உயிரும் கூடிய மனிதன் இறந்த பின்னும் அவன் ஆன்மா அழிவது இல்லையே. ஆகவே இவ்வுடம்பு உண்மையல்ல, என்பதை உணர்ந்து, ஆன்மாவே மெய் என்பதை அறிந்து உடம்பில் மெய்ப் பொருளாக இறைவன் இருப்பதைக் கண்டு தன்னை மறந்த தியான நிலையிலோ இருந்து உணர்ந்து கொண்டு ஞானம் போதியுங்கள்.

அவ்வெனு மெழுத்தினா லகண்டமேழு மாகினாய்
உவ்வெனு மெழுத்தினா லுருத்தரித்து நின்றனை
மவ்வெனு மெழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வுமுவ்வு மவ்வுமா யமர்ந்ததே சிவாயமே. 92

“ஓம்” என்ற ஓங்காரத்தில்தான் அனைத்தும் தோன்றுகின்றது. “ஓம்” என்பதில் அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்று தத்துவங்கள் எழுத்துக்களாக அமைந்துள்ளது. அதில் “அ” என்னும் ஆகாயத் தத்துவத்தில் ஏழு உலகமும் ஆகி நிற்கின்றது. “உ” என்னும் விந்து தத்துவத்தில்தான் உருவம் தரித்து உருவாகின்றது. “ம” என்னும் த்த்துவத்தினால்தால் இவ்வுலகம் முழுவது மயங்குகின்றது. இதில் அவ்விலும், உவ்விலும் மவ்விலும் அமர்ந்திருப்பது “சி” என்னும் சிகாரமே.

மந்திரங்க ளுண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்க ளாவது மரத்திலூற லன்றுகாண்
மந்திரங்க ளாவது மதித்தெழுந்த வாயுவை
மந்திரத்தை யுண்டவர்க்கு மரணமேது மில்லையே. 93

மந்திரங்கள் யாவையும் படித்து ஓதி மயங்குகின்ற மனிதர்களே! மந்திரம் என்பது மனதின் திறமே! மந்திரங்கள் தர்ம வழியையே பின்பற்றும். மந்திரங்களை உணர்ந்து உச்சரிக்கும் பொது அதில் ஏழும் சப்தங்களின் அதிர்வலைகள் மூலாதாரத்தில் மோதி அங்கிருக்கும் கனலான வாயுவை எழுப்புதற்கே அன்றோ அமைக்கப்பட்டது. அதனால் வாசி மேலே ஏறி பிராணசக்தி கூடி மரணமில்லா பெருவாழ்வு அடைவார்கள். மந்திரங்களை முறையாக அறிந்து ஓதி ஆறு ஆதாரங்களிலும் நிறுத்தி தியாநிப்பவர்களுக்கு மரணம் ஏதும் இல்லையே!

என்னவென்று சொல்லுவே னிலக்கண மிலாததைப்
பன்னுகின்ற செந்தமிழ்ப் பதங்கடந்த பண்பென
மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல்
என்னகத்து ளீசனும் யானுமல்ல தில்லையே. 94

இலக்கணம் இல்லாத தமிழைப் போல் இலட்சியம் ஏதுமில்லாத மனிதர்களை என்னவென்று சொல்லுவது. பண்ணிசைத்துப் படும் செந்தமிழ் பாடல்கள் யாவும், பரம்பொருளின் பாதம் பற்றி இறைவனை அடைவதே குறிக்கோள் என்பதே மனிதனின் பண்பு என்று கூறுகின்றது. மின்னலாது தோன்றி, மின்னளிலேயே ஒடுங்கி, மின்னலாக மறந்தது, அது எங்கிருந்தும் ஒளியைப் பெற்றுக் கொள்ளாமல், மேக மூட்டங்களின் மோதலால் தானே தோன்றி ஒடுங்குவதைப் போல் எனக்குள் மன ஓட்டத்தை நிறுத்தி வாசியால் கனலும் அனாலும் கலந்து என்னுள் சோதியான ஈசனைக் கண்டு தியானம் செய்தேன். அங்கு என்னையும் ஈசனையும் தவிர வேறு யாரும் இல்லையே!

ஆலவித்தி லாலொடுங்கி யாலமான வாறுபோல்
வேறுவித்து மின்றியே விளைந்துபோக மெய்திடீர்
ஆறுவித்தை யோர்கிலீ ரறிவிலாத மாந்தரே
பாருமித்தை யும்முளே பரப்பிரம மானதே. 95

மிகச்சிறிய ஆலவிதைக்குள் பெரிய ஆலமரம் ஒடுங்கியிருந்து வளர்ந்து மிகப் பெரிய ஆலமரமாக ஆகின்றது. அதுபோல பரம் பொருளே ஓரெழுத்து வித்தாக இருந்து, விளைந்து இன்ப துன்பமுறும் உடலாக உலாவுகின்றது. ஒரேழுத்தே பிரமமாகி நமக்குள் இருப்பதை அறிந்து அதனை நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் வாசியை ஏற்றி இறக்கி யோகவித்தை செய்வதை அறியாமல் இருக்கும் அறிவிலாத மனிதர்களே!! உமக்குள்ளேயே இந்த வாசி யோகத்தைச்செய்து பாருங்கள். மெய்ப்பொருளை அறிந்துப் பார்ப்பானைப் பார்த்து, வித்தாக உள்ள ஈசனை தியானம் செய்யுங்கள். நீங்களே அந்த பரப்பிரம்ம்மம் ஆவீர்கள்.

அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு ஏழுபிறப்பு அது இங்கிலை
சவ்வுதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால்
அவவும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே. 96

ஒரேழுத்து மந்திரமே முதல் எழுத்தாகிய அகாரம் தோன்றுவதற்கும் உயிர் எழுத்தாகி உகாரம் தோன்றுவதற்கும் காரணமாய் உள்ளது. அது எவ்வாறு என்பதை அறிந்து தியாநிப்பவர்களுக்கு இங்கு ஏழு பிறப்பு என்பது இல்லை என்றாகிவிடும். தொண்டைச் சவ்வில் உதிக்கும் அந்த மந்திரத்தை ‘ம்’ என்று ஓதி தன்னிடமே உள்ள பரம்பொருளில் இருத்தி தியானியுங்கள். அகாரத்திலும், உகாரத்திலும், மகாரத்திலும் சிகாரமாய் அமர்ந்திருப்பது ஊமைஎழுத்தே என்பதை உணருங்கள்.

நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதா யெழுந்துநின்ற நேர்மையிற்
செவ்வையொத்து நின்றதே சிவாயமஞ் செழுத்துமே. 97

பஞ்சாட்சரம் நமது உடம்பில் நகாரம் இடுப்பிலிருந்து கால்கள் வரையிலும், மகாரம் வயிறாகவும், சிகாரம் நெஞ்சிலிருந்து இரண்டு தோள்கள் ஆகவும், வகாரம் தொண்டையாவும், யகாரம் இரண்டு கண்களாகவும் அனைவருக்கும் நேர்மையாக அமைந்துள்ளது. தூலத்தில் இவ்வாறு அமைந்துள்ள அஞ்செழுத்து சூட்சமத்தில் செம்மையான மெய்ப்பொருளாக அதே பஞ்சாட்சரமாக ஒத்து இருப்பதை அறிந்து தியானித்து சிவமே அஞ்செழுத்தாக இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இரண்டுமொன்று மூலமா யியங்குசக் கரத்துளே
சுருண்டுமூன்று வளையமாய் சுணங்குபோற் கிடந்ததீ
முரண்டெழுந்த சங்கினோசை மூலநாடி யூடுபோய்
அரங்கன்பட் டணத்திலே யமர்ந்ததே சிவாயமே. 98

மூலாதார சக்கரத்தின் உள்ளே பாம்பைப் போல் சுருண்டு மூன்று வளையமாக குண்டலினி சக்தி கனலான தீயாக இருந்து தூங்கிக் கொண்டுள்ளது. அதனை வாசியோகத்தில் விழிப்புறச் செய்தால் அச்சக்தியானது சங்கின் ஓசையுடன் கிளம்பும். . அவ்வாசியை சுழுமுனை எனும் மூலனாடியால் முதுகுத் தண்டின் வழியாக மேலேற்றி சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். அது சக்தியும் சிவனும் ஒன்றாகி இயங்கும் அரங்கன் பள்ளி கொண்ட இடத்தில் சிவமாக அமர்ந்திருப்பதை அறிந்து யோகஞான சாதகத்தால் தியானம் செய்து உணர்ந்து கொள்ளுங்கள்.

கடலிலே திரியுமாமை கரையிலேறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல்
மடலுளே யிருக்குமெங்கள் மணியரங்க சோதியை
உடலுளே நினைந்துநல்ல வுண்மையான வுண்மையே. 99

கடலில் வாழும் ஆமையானது கரையில் ஏறி முட்டையிட்டு மணலைப் போட்டு மூடிவிட்டு கடலுக்கே சென்று விடும். பின் கடலில் திரிந்து கொண்டே நினைவாலே அடைகாக்கும். அதனால் முட்டைகள் பொறித்து அவை ரூபமாக வெளிவரும். அதன் பின்னரே தாயுடன் சேர்ந்து ஆமை குஞ்சுகளும் கடலில் திரயும். அவை ரூபம் அடைவதற்கு தாய் ஆமையின் நினைவே காரணமாய் இருந்தது போல், நம் உள்ளமாகிய தாமரையில் இருக்கும் மணியாக விளங்கும் அருட்பெருஞ் சோதியான ஆண்டவனை உடலுக்குள்ளேயே மெய்ப் பொருளாக இருப்பதை எண்ணி நினைத்து தியானியுங்கள்.

மூன்றுமண்ட லத்தினு முட்டினின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த வட்சரம்
ஈன்றதாயு மப்பனு மெடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோ ரெழுத்துளே சொல்லவெங்கு மில்லையே. 100

அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் ஆகிய மூன்று மண்டலங்கள் நம் உடற் தத்துவத்தில் உள்ளது. சந்திரகலை, சூரிய கலை சுழுமுனை நாடிகளில் ஓடும் காற்றை வாசியாக்கி மூலாதாரத்தில் செலுத்தி தூணாகிய முதுகுத் தண்டினில் முட்டி மேலேற்ற எண்டும் பாம்பைப் போல் சுருண்டு உறங்கும் குண்டலினி சக்தியை ஓங்காரத்தில் எழும் அகார உகார அட்சரத்தால் எழுப்பி உண்ணாக்கில் வைத்து ஊதவேண்டும். இந்த மந்திரமே பெற்ற தாயும் தந்தையும் எடுத்துரைத்த ஓங்காரமாகும். அதுவே ‘ம்’ என்ற நாத ஒலியுடன் சோதியான பிரம்மத்தில் சேரும், ஒரெழுத்தில் தோன்றுவதே ஓங்காரம். இதனைச் சொல்லித்தர யாரும் எங்கும் இல்லையே.

மூன்றுமூன்று மூன்றுமே மூவர்தேவர் தேடிடும்
மூன்று மஞ்செழுத்துமாய் முழங்கு மவ்வெழுத்துளே
ஈன்றதாயு மப்பரு மியங்குகின்ற நாதமும்
தோன்றுமண்ட லத்திலே சொல்லவெங்கு மில்லையே. 101

ஓம் என்ற ஓங்காரத்தில் ஒன்பது வகையான சூரியன், சந்திரன், அக்னி, நட்சத்திரம், ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி என அனைத்தும் தோன்றியது. இதனை மூவர்களும், தேவர்களும் தேடினார்கள். அது அ, உ, ம் என்ற மூன்றேழுத்தாகவும், ‘நமசிவய’ அன்ஜெழுத்தாகவும் அனைத்தும் அடங்கிய ஒரேழுத்தாகவும் இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இந்த ஓங்காரமே நமையீன்ற தாய், தந்தையாகவும், நாத விந்தாகவும் இயங்கி வருகின்றது. அதுவே மூன்று மண்டலத்திலும் அ, உ, ம் என்ற எழுத்தாக இருந்து வருகின்றது. இந்த ஓங்கார உட்பொருளையும் ஒரேழுத்து உண்மையையும் சொல்ல எங்கும் யாரும் இல்லையே. ஆதலால் ஓங்காரத்தின் அனுபவ உண்மைகளை அனைவரும் அறிந்து தியானியுங்கள்.

சோறுகின்ற பூதம்போற் சுணங்குபோற் கிடந்தநீ
நாறுகின்ற கும்பியி னவின்றெழுந்த மூடரே
சீறுகின்ற வைவரைச் சிணுக்கறுக்க வல்லீரேல்
ஆறுகோடி வேணியா ராறிலொன்றி லாவரே. 102

உண்ணும் உணவின் சக்தியினால் பஞ்சபூதங்களால் உருவான சுக்கிலமானது விந்து பையில் சேருகின்றது. அதனை காம வேட்கையால் நாறுகின்ற சாக்கடையில் வீழ்ந்து எழுவதைப் போல சிற்றின்பத்தில் விரும்பி வீணாக்கும் மூடர்களே! காமத்தைத் தூண்டும் ஐம்புலன்களையும் ஐந்தெழுத்தால் அடக்கி, வாசி யோகத்தால் அந்நீரை அனலாக மாற்றி, மேலேற்றி காம கோபத்தை அறுக்க வல்லவர்களானால் மனிதர்களில் கோடியில் ஒருவராகி ஆறு ஆதாரங்களையும் கடந்து ஒன்றாக ஒளிரும் சோதியாக ஆவீர்கள்.

வட்டமென்று வும்முளே மயங்கிவிட்ட திவ்வெளி
அட்டாக் கரத்துளே யடக்கமு மொடுக்கமும்
எட்டுமெட்டு மெட்டுமாய யியங்குசக்க ரத்துளே
எட்டலாமு தித்ததெம்பி ரானைநா னறிந்தபின். 103

பிரம்மம் உனக்குள்ளே வட்டமாக நின்று ஆட்டுவித்து வெளியான ஆகாயத்தில் திகழ்கிறது. ‘ஓம்நமசிவய’ எனும் எட்டு அட்சரத்துக்குள்ளே தான் ஐம்புலன் அடக்கமும் தியான ஒடுக்கமும் நிறைந்துள்ளது. எண்சான் உடம்பில் எட்டாகிய அகாரத்தில் எட்டுத் திசைகளாகவும், பதினாறு கோணமுமாக இயங்கும் வெட்டாத சக்கரத்துளே சோதியாக உதிப்பவன் ஈசன். நாம் இதனை நன்கு அறிந்து அந்த இடத்திலேயே ‘ஓம்நமசிவய’ என்று ஓதி தியானிப்போம்.

பேசுவானு மீசனே, பிரமஞான மும்முளே
ஆசையான வைவரும் அலைந்தருள் செய்கிறார்
ஆசையான வைவரை யடக்கியோ ரெழுத்திலே
பேசிடா திருப்பிரேல் நாதம்வந் தொலிக்குமே. 104

மனசாட்சியாக இருந்து பேசுபவன் ஈசன், உனக்குள் பிரமத்தை அறிந்து ஞானம் பெற்று தியானம் செய்யுங்கள். ஆசைகள் ஐம்புலன்களால் வெளிப்பட்டு ஞானமடைய தடை செய்து, நம்மை அலைக்கழித்து துன்புறுத்துகின்றன. அவ்விச்சையை விட்டு ஐம்புலன்களையும் அடக்கி ஒரேழுத்திலேயே மனதை நிறுத்தி மௌனமாக இருந்து தவம் செய்து வந்தால் உள்ளிருக்கும் ஈசனே குருநாதனாக வந்து பேசுவான்.

நமசிவாய வஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்
நமசிவாய மஞ்சுமஞ்சும் புராணமான மாய்கையை
நமசிவாய மஞ்செழுத்து நம்முளே யிருக்கவே!
நமசிவாய வுண்மையை நற்குரைசெய் நாதனே. 105

‘நமசிவய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை அனுதினமும் உபாசித்து வந்தால் எல்லா வளமும் நலமும் மேலான நிலைகளும் கிடைக்கும். நமசிவாய எனும் அஞ்செழுத்தே பஞ்சபூதங்கலாகவும், புராணங்களாகவும், மாயையாகவும் அமைந்துள்ளது. இந்த அஞ்செழுத்து நமக்குள்ளேயே ஆறாதாரங்களிலும், பஞ்சாட்சரமான மெய்ப்பொருளாகவும் இருப்பதை அறிந்து அது எப்போதும் நித்தியமாய் உள்ளது என்பதை உணர்ந்து நமசிவாய! உண்மையை நன்றாக உபதேசியுங்கள் குருநாதரே!

பரமுனக் கெனக்குவேறு பயமிலை பராபரா
கரமெடுத்து நிற்றலுங் குவித்திடக் கடப்படா
சிரமுருகி யமுதளித்த சீருலவு நாதனே
வரமெனக்கு நீயளித்த ஓம்நமசி வாயமே. 106

நீயே பரம்பொருள் என அறிந்து என் உடல், பொருள், ஆவியை உனக்கே என ஒப்படைத்துவிட்டேன். . அதனால் எனக்கு வேறு பயம் ஏதும் இல்லாதிருக்கிறேன் பராபரனே. உன்னை தினமும் கைக்கூப்பி வணங்கிடவும், மெய் பக்தியினால் சிரம் உருகி கண்ணீர்விட்டு ஆர்த்தார்த்து அழுதிடவும், எந்நேரமும் என் பிராணனை சிவசிவ என வாசியிலேற்றி தியானித்திடவும், என் உயிருக்கும், உடலுக்கும் உறுதுணையாக வந்து நான் வாழ உரமாக இருப்பது நீ எனக்கு உபதேசித்த ‘ஓம்நமசிவய’ என்னும் மந்திரமே.

பச்சைமண் பதுப்பிலே பழுப்பதிந்த வேட்டுவன்
நித்தமும் நினைந்திட நினைத்தவண்ண மாயிடும்
பச்சைமண் ணிடிந்துபோய் பறந்ததும்பி யாயிடும்
பித்தர்கா ளறிந்துகொள் பிரானிருந்த கோலமே. 107

தும்பியான குளவியானது ஈரமான மண்ணைக் கொண்டு அழகிய கூடுகட்டி உணர்வுள்ள புழுவை வேட்டையாடி கொண்டு வந்து அடைக்கும். பின் எந்நேரமும் தன்னைப் போல் மாற்றுவதற்கு ரீங்கார ஓசையுடன் கொட்டிக்கொண்டே இருக்கும். இப்படி ஒரே நினைவோடு செய்யும் அதன் செயலால் அப்புழுவானது குளவி நினைத்தவாறே குளவியாக மாறிவிடும். அற்ப உயிராக இருந்த புழு குளவியாகி அக்கூட்டை உடைத்துக்கொண்டு தும்பியாக பறந்து செல்லும். இதனை அறிந்து கொண்டு ஒரே நினைவோடு பிராணனை இறைவனோடு இணைக்க தியானம் செய்யுங்கள். ஈசன் நடத்தும் நாடகமே எல்லாம் என்பதை உணருங்கள்.

ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விசுவநாத னானவன்
தெளியுமங்கை யுடனிருந்து செப்புகின்ற தாரகம்
வெளிதோர் ராமராம நாமமிந்த நாமமே. 108

வெளியில் காசிமாநகரில் ஜோதிர்லிங்கமாக இருப்பவன் விஸ்வநாதன். நம் உடம்பில் ஒளிவீசும் இடமான புருவமத்தியையே கங்கை ஆறு ஓடும் காசி எனப் புகலப்படும். அவ்விடத்தில் ஈசனை கன்டு தியானம் செய்பவர், வெட்ட வெளியாக சோதிமேனி கொண்டு விளங்கும் விஸ்வநாதனாக காட்சி தருவான். அங்கு இடகலையும், பிங்கலையும் இணைந்து சுழுமுனையில் வாசியை ஏற்றி இறக்கி நிறுத்து தியானிப்பதற்கு எளியதான மந்திரம் இராம நாமமே.

விழியினோடு புனல்விளைந்த வில்லவல்லி யோனியும்
வெளியிலே பிதற்றலாம் விளைவுநின்ற தில்லையே
வெளிபரந்த தேசமும் வெளிக்குள் மூலவித்தையும்
தெளியும் வல்லஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே. 109

கண்களில் கண்ணீர் சிந்தி அன்பால் விளைந்த கரும்புவில்லைக் கொண்ட மனோன்மணி ஆத்தாளை ஐந்தாவது யோனியில் பிறந்து அறிந்து கொள்ள வேண்டும். வெளியிலே அவள் சக்தியை உணராமல் எப்படி வேண்டுமானாலும் பிதற்றலாம். ஆனால் அவளுடைய அருட்செயல்களால் ஏற்படும் விளைவுகள் யாவும் எப்போதும் நிற்பதில்லை. பரந்து காணப்படும் ஆகாயம் நம் மனமாக இருப்பதை அறிந்து தன் ஆன்மாவில் மூல வித்தாக ஈசன் மெய்ப்பொருளாக இருப்பதை உணர்ந்து தெளிந்த ஞானிகள் திண்ணமாக தியானத்தில் இருப்பார்கள்.

ஓம்நமசி வாயமே யுணர்ந்துமெய் யுணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே யுணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம்நமசி வாயமே யுணர்ந்துமெய் யுணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே யுட்கலந்து நிற்குமே. 110

ஓம் நமசிவாய என்பதை நன்றாக உணர்ந்து அதை நம் உடலில் உணர்ந்து கொள்ள வேடும். ஓம் நமசிவாய என்பது என்ன என்பதை எல்லாம் உணர்ந்து அதன் மெய்யான தன்மைகளை சிந்தித்து தெளிந்து கொள்ள வேண்டும். ஓம் நமசிவாய என்பது நம் உடம்பில் உயிராக உள்ள மெய்ப்பொருளே என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இப்படி அனைத்துமாய் இருக்கும் பஞ்சாட்சரம் நம் உடம்பிலும், உயிரிலும் கலந்து நிற்பதை ஓம் நமசிவாய என ஓதி தியானியுங்கள்.

அல்லல்வாச லொன்பது மறுத்தடைத்த வாசலும்
சொல்லுவாச லோரைந்து சொம்மிவிம்மி நின்றது
நல்லவாச லைத்திறந்து ஞானவாச லூடுபோய்
எல்லைவாசல் கண்டவ ரினிப்பிறப்ப தில்லையே. 111

ஒன்பது வாசல் கொண்ட இவ்வுடம்பு இவ்வுலக வாழ்வில் அல்லல் படுத்துகின்றது. அருத்தடைத்த வாசலாகவும், சொர்க்கக் வாசலாகவும் உள்ள பத்தாம் வாசலை அறிந்து கொள்ளுங்கள். அங்குதான் ஒரேழுத்து பஞ்சாட்சரமாக மின்னிக்கொண்டு நிற்கிறது. அந்த நல்ல வாசலில் ஐந்தெழுத்தை ஓதி நந்தி விலகி ஈசன் உறையும் ஞான வாசலில் சேந்து இன்புறலாம். இதுவே இறைவன் இருக்கும் எல்லைவாசல் என கண்டறிந்து தியானமும் தவமும் புரிபவர்கள் இனி இப்பூமியில் பிறப்பது இல்லையே!

ஆதியான தொன்றுமே யனேகனேக ரூபமாய்
சாதிபேத மாயெழுந்து சர்வசீவ னானபின்
ஆதியோடு ஆடுகின்ற மீண்டுமிந்த சென்மமாம்
சோதியான ஞானியர்க்கும் சுத்தமாய் இருப்பனே. 112

ஆதியிலிருந்தே பிரமமான ஒன்றிலிருந்தே அநேக அநேக ரூபங்களாகி மனித சாதி, மிருக சாதி, பறவை சாதி என பல பேதங்கலாகத் தோன்றி சகல உயிர்களாக ஆனது. முன்பிறவியில் ஆதியை அறிந்து தியானித்தவர்கள் நிலையடையாது மீண்டும் ஜென்மம் எடுத்தவர்கள் விட்ட குறை பற்றி வந்து மைப் பொருளை அறிந்து கொள்வார்கள். யோக ஞான சாதகத்தை தொடர்ந்து செய்து சுத்த ஜோதியான ஈசனை உணர்ந்து சுத்த ஞானியாகி இறைவனை அடைய பாடுபட்டு வாழ்ந்திருப்பர்.

மலர்ந்ததாது மூலமாய் வையகம் மலர்ந்ததும்
மலர்ந்தபூ மயக்கம்வந் தடுத்ததும் விடுத்ததும்
புலன்களைந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இனங்கலங்கி நின்றமாய மென்னமாய மீசனே. 113

மூலமான வித்திலிருந்து இயங்கும் நாத வித்து எனும் தாதுக்களால் இந்த பூமியும் உயிர்களும் தோற்றியது. இவ்வுலக வாழ்வில் வரும் இன்ப துன்பங்களின் அனுபவங்களால் இறைவனை அடுத்தும், விடுத்தும் வாழ்ந்து, மலர்ந்த பூக்கள் உதிருவது போல் வாழ்வு முடிந்ததும் ஐம்புலன்களும் பொறிகளும் கலங்கி பூமியில் மரணமடைகின்றனர். பிறப்பு, இறப்பு எனும் இவ்வுலக மாயையில் சிக்கி உழலும் மனிதர்கள் உடம்பில் நீ நின்று ஆட்சி செய்யும் மாயம் என்ன மாயம் ஈசனே!

பாரடங்க வுள்ளதும் பரந்தவான முள்ளதும்
ஓரிடமு மன்றியே யொன்றிநின்ற ஒண்சுடர்
ஆரிடமு மன்றியே யகத்துளும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவர் சிவன்தெரிந்த ஞானியே. 114

பூமியில் அடங்கியுள்ள யாவிலும் ஆகாயமாக விரிந்துள்ள அனைத்திலும் அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்த பரம்பொருளே சோதியாக உள்ளது. அச்சோதியே எல்லா உயிரிலும் வியாபஈத்து அவரவர் மனத்துள்ளும் புற உடம்பிலும் மெய்ப் பொருளாக விளங்கி நிற்கின்றது. அதனை அறிந்து தன சீவனிலே சிவனைக் கண்டு தியானிக்கும் யோகி தெளிந்த ஞானியே!

மண்கிடார மேசுமந்து மலையுளேறி மறுகுறீர்
எண்படாத காரியங்க ளியலுமென்று கூறுறீர்
தம்பிரானை நாள்கடோறும் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடிவாழ்வ தெங்ஙனே. 115

மண்பாண்டமாகிய இவ்வுடலைச் சுமந்து ஏறாத மலையிலேல்லாம் ஏறி துன்புறுகின்றீர்கள். என்னால் ஆகாத காரியங்கள் யாவையும் செய்ய முடியும் என ஆணவத்தோடு கூறுகின்றீர்கள். தமக்குள்ளே இருக்கும் ஈசனை அறிந்து கொள்ளாமல் இருந்தாலும், கோயிலில் சென்று நாள்தோறும் இறைவனை தரிசித்து தரையில் தலைப்பட வனாகவும் மாட்டீர்கள். இப்படிப்பட்ட மனிதர்களோடு எப்படி என்னால் சேர்ந்து வாழ முடியும்.

நாவி நூலழிந்ததும் நலங்குல மழிந்ததும்
மேவுதே ரழிந்ததும் விசாரமுங் குறைந்ததும்
பாவிகா ளிதென்னமாயம் வாமநாடு பூசலாய்
ஆவியா ரடங்கினா லைவரு மடங்குவார். 116

நாவில் பேச்சு அழிந்ததும், நலமுடன் வாழ்ந்த மனித குலம் அழிந்ததும், தான் பயன்படுத்தி மென்மையாக பாதுகாத்த வாகனங்கள் அழிந்ததும் இவைகளால் ஏற்படும் மன உளைச்சல்களால் இறை விசாரம் குறைந்ததும் இயற்கையாகவே எப்போதும் நடந்து வரும் மாயம் என்பதை அறியாமல் வாழும் பாவிகளே. வாமநாடு எனும் வலப்பக்கமாய் இருந்து உழன்ற நம் ஆன்மா போகும் நாளில் பஞ்சபூதங்களும் ஒவ்வொன்றாகவே மறைந்துவிடும்.

இல்லைஇல்லையென் றியம்புகின்ற வேழைகாள்
இல்லையென்று நின்றதொன்றை இல்லையென்ன லாகுமோ
இல்லையல்ல வொன்றுமல்ல விரண்டுமொன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபே ரினிப்பிறப்ப தில்லையே. 117

கடவுள் இல்லை, இல்லை என்று இயம்புகின்றவர்கள் எதுவும் இல்லா எழைகளாவார்கள். இல்லையென்றும், உண்டென்றும் சொல்லுமாறு தனக்குள்ளேயே நானாக நின்ற ஆன்மாவையும், ஆன்மாவில் ஆண்டவனையும், அறியாமல் இல்லை என்று சொல்ல என்ன ஆகுமோ? அது இல்லாததும் இல்லை, ஒன்றும் உள்ளதும் அல்ல. சக்தியாகவும், சிவனாகவும் இரண்டும் ஒன்றி நின்ற மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்து, நினைந்து, தியானித்து சும்மா இருக்கும் சமாதிநிலை என்ற எல்லையைக் கண்ட தவசீலர்கள், மரணமில்லா பெருவாழ்வடைந்து இறைவனுடன் இரண்டறக் கலப்பார்கள். அவர்கள் இனி இம்மாய உலகில் பிறப்பெடுக்க மாட்டார்கள்.

காரகார காரகார காவலூழி காவலன்
போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்களேழு மெய்தசீ
ராமராம ராமராம ராமமென்னும் நாமமே. 118

எப்படி மாற்றிப் போட்டும் நாமசெபம் செய்தாலும் அது உண்மையை உணர்ந்தும். உண்மையாக உச்சரிக்கும் மந்திரங்களின் உட்கருத்து மாறாது. அது அகங்காரத்தை அழித்து தீரத்தைக் கொடுக்கும். உலகங்கள் யாவையும் காத்து ரட்சிக்கும் இறைவன், இராவண வதம் செய்யா போரில் நின்ற புண்ணியன், வாலியை வதம் செய்ய மாமரங்கள் ஏழையும் பானத்தில் துளைத்தவன் ராமன். அதுபோல நம் உடலில் உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா, சகஸ்ராரம் என்ற ஏழு சக்கரங்களையும் ஸ்ரீராம நாமத்தில் பரிசுத்தமாக்கி, அவைகளின் ஆற்றலால் தியானம், தவம் மேலோங்கி பிறவா நிலையடைய துணையாக நிற்பது ஸ்ரீராம நாமமே!

நீடுபாரி லேபிறந்து நேயமான காயந்தான்
வீடுவேறி தென்றபோது வேண்டியின்பம் வேண்டுமோ
பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடுராம ராமராம நாமமென்னும் நாமமே. 119

இப்பூவுலகில் பல பிறவிகள் எடுத்து பிறந்த இவ்வுடம்பை இது என்னுடையது என எண்ணி இருக்கின்றோம்!!! இது வீடுபேறு எனும் இன்பம் பெற வேண்டினால் கிடைக்குமா? அதற்கு நான்கு வேதங்களையும் நன்கு பாடிப் பழகி இவ்வுலகமெங்கும் இறை நிறைத்திருக்கும் இயல்பை அறிந்து தன உடம்பையும், உயிரையும் உணர்ந்து யோக ஞான நாட்டமுடன் தியானம் கடைபிடியுங்கள். அதற்கு உற்ற துணையாக வருவது ராமநாமம்!!! இராம நாமத்தில் ஓரெழுத்தும் ஓங்காரமும் உள்ளதை உணருங்கள்.

உயிருநன்மையா லுடலெடுத்துவந் திருந்திடும்
உயிருடம்பொழிந்தபோது ரூபரூப மாயிடும்
உயிர்சிவத்தின் மாய்கையாகி யொன்றையொன்று கொன்றிடும்
உயிரும்சத்தி மாய்கையாகி ஒன்றையொன்று தின்னுமே. 120

உயிரானது நல்வினை, தீவினைக்கேற்ப உடலைப் பெற்று இப்புவியில் வந்து வாழ்ந்து வருகின்றது. உடம்பைவிட்டு உயிர் போனபோது அது உருவம் ஒழிந்து அரூபமாக ஆகின்றது. உயிர் என்பது சிவமென்ற பரம்பொருளின் மாயையாகி, மெய்ப்பொருளாகி அனைத்தையும் தன்னுள் மறைத்து மறைந்திடுமே!!! உயிர் சிவனாகவும், உடம்புச் சக்தியாகவும் இருப்பதை அறிந்து தியான தவத்தால் ஒன்றிணைத்து சமாதி இன்பம் அடைபவர், உடம்பை உயிரில் கரைத்து இரண்டும் ஒன்றாகி சிவத்தை அடைவர்.

நெட்டெழுத்து வட்டமோ நிறைந்தவல்லி யோனியும்,
நெட்டெழுத்தில் வட்டமொன்று நின்றதென்று கண்டிலேன்
குட்டெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடின்
எட்டெழுத்தில் வட்டமொன்றில் நேர்படானம் ஈசனே. 121

‘அ’ முதல் ‘ஔ’ வரை உள்ள நேட்டேழ்த்துக்கள் யாவும் வட்டத்தில் இருந்து தோன்றுவதைப் போல் வட்டமான பிரமத்திலிருந்தே நால்வகை யோனிகளிலும் உயிர்கள் உலகுக்கு வருகின்றது. எல்லா எழுத்திலும் ஒரேழுத்து நின்றதை கண்டுகொள்ளுங்கள். குற்றெழுத்தாகிய ‘க’ முதல் ‘ன’ வரையில் அகார ஒலியில் உற்றிருப்பதை உணருங்கள். அதில் கொம்பு, கால் ஆகியவைச் சேர்த்தால் எழுத்துக்களின் ஒலி மாறுவதை அறியுங்கள். உதாரணமாக ‘ச’ என்பதில் கொம்பு போட்டால் ‘சி’ என்ற சிவனாகவும், ‘சீ’ என்ற சீவனாகவும், கொம்பு கால் சேர்த்தால் செ, சே, சு, சூ, சா, சொ, சோ, என்று ஒலி மாறுகிறது. இப்படி விளங்கும் எழுத்துக்கள் யாவும் ஒரெழுத்தில் இருந்தே உற்பத்தி ஆகி மொழியில் நிற்பதைப் போல் பிரம்மமான ஈசனிடம் இருந்தே அனைத்தும் ஆகி நிற்பதை உணர்ந்து தியானியுங்கள்.

விண்ணிலுள்ள தேவர்க ளறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற தெம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரு மெம்முளே யமர்ந்துவாழ்வ துண்மையே. 122

அமிர்தம் உண்டு அழியாமல் வானுலகில் இருக்கும் தேவர்களும் அறிய முடியாதது மெய்ப்பொருள். அதனை ஈசன் எனக்கு அறிவித்து கண்ணில் ஆணியைப் போல் கலந்து நிற்கிறான் என் குருபிரான். மெய்ப் பொருளை அறிந்தாலே இம்மண்ணில் பிறப்பு, இறப்பு இல்லாது போகும் ஈசனின் திருவடிகளை சிந்தையில் வைத்து தியானியுங்கள். இந்த ஞானத்தை பெற்ற யோகியரிடத்தில் அண்ணலாக ஈசன் சோதி வடிவாய் அமர்ந்து வாழ்வதும் சத்தியமே!

விண்கடந்து நின்றசோதி மேலைவாச லைத்திறந்து
கண்களிக்க வுள்ளுளே கலந்துபுக் கிருந்தபின்
மண்பிறந்த மாயமும் மயக்கமு மறந்துபோய்
எண்கலந்த வீசனோ டிசைந்திருப்ப துண்மையே. 123

உனக்குள் வின்வேளியாக இருக்கும் மனத்தை கடந்து அப்பால் சோதியாக உலாவும் ஈசனை அறிந்து மேலைவாசல் என்னும் பத்தாம் வாசலை யோக ஞானத்தால் திறந்து தியானிக்க வேண்டும். அப்போது கண்களிக்க உனக்குள்ளே கலந்து புகுந்திருக்கும் இறைவனை தரிசிக்கலாம். இம்மண்ணிலே பிறவி எடுக்கும் மாயமும், மயக்கத்தைத் தருகின்ற சுக போகங்கள் யாவும் மறைந்துபோய் விடும். விண்ணில் நிற்கும் சூரியனைப் போல் என்னில் அகாரத்தில் கலந்து நிற்கும் ஈசனோடு இணைந்து இருப்பது உண்மையாகும்.

மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்
நாலுநாளு முன்னிலொரு நாட்டமாகி நாட்டிடில்
பாலனாகி நீடலாம் பரப்பிரம மாகலாம்
ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே. 124

இவ்வுடலுக்கு மூலமாக இயங்கும் பிராணவாயுவை அறிந்து பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியை செய்யவேண்டும். நம் பிராணனில் இருந்து வெளியேறும் நாலு அங்குல மூச்சை இந்த யோகத்தில் நாட்டம் வைத்து ரேசகம், கும்பகம், பூரகம், என்று வாசியை நாட்டி செய்து வந்தீர்களானால் என்றும் இளமை பெற்று பாலனாக வாழலாம். இது ஆலகால விஷம் உண்ட நீலகண்டர் மீதும் அவ்விஷத்தை தடுத்த என் அன்னையின் மீதும் ஆணையிட்டுக் கூறுகின்றேன்.

மின்னெழுந்து மின்பரந்து மின்னொடுங்கு வாறுபோல்
என்னுள்நின்ற வென்னுளீச னென்னுளே யடங்குமே
கண்ணுநின்ற கண்ணில்நேர்மை கண்ணறி விலாமையால்
என்னுண்ணின்ற வென்னைநானி யானறிந்த தில்லையே. 125

மின்னல் வானில் தோன்றி மின்னலாக ஒளிவீசி மின்னளுக்குல்லேயே ஒடுங்கிவிடுகிறது. அதுபோல என் உடலில் நின்று என் உயிருள் உள்ள ஈசன் நானாக எனக்குள்ளேயே ஒடுங்கி அடங்கியுள்ளான். கண்ணிலே நின்று கண்ணிலே நேர்படும் பிம்ம்பத்தைக் கண்கள் அறியாத தன்மையினால் கண்ணைப் பற்றிய அறிவு இல்லாமையால் என்னுள் நின்ற ஆன்மாவையும் அதனுள் நின்றிலங்கும் ஆண்டவனையும் நான் எனும் ஆணவத்தால் யான் அறிய முடியாமல் ஆனதே.

இருக்கலா மிருக்கலா மவனியி லிருக்கலாம்
அரிக்குமால் பிரமனு மகண்ட மேழு மகற்றலாம்
கருக்கொளாத குழியிலே காலிடாத கண்ணிலே
நெருப்பறை திறந்தபின்பு நீயும்நானும் மீசனே. 126

இந்த அவனியில் தியான தவத்தை மேற்கொண்டு அதனால் சித்தி பெற்று சித்தர்களைப் போல் எப்போதும் இருக்கலாம். அரண், அரி, பிரமன் என்ற மூவர்களையும் கண்டு வணங்கி அண்டங்கள் எழும் சுற்றி வரலாம். ஐந்தாவது யோனியில் பிறந்து அது கருக்கொளாத குழி, நாற்றமில்லா யோனி என்பதை உணர்ந்து புருவமத்தி எனும் மூன்றாவது கண்ணில் சுழுமுனை தாளைத் திறந்து நெருப்பாற்றைக் கடந்து சோதியில் கலந்து பின்பு நீயும் எச்சனே என்று அறிந்து கொள்ளலாம்.

ஏகபோக மாகிய விருவரு மொருவராய்
போகமும் புணர்ச்சியும் பொருந்துமாற தெங்ஙனே
ஆகலும் அழிதலும் அதங்கணேய தானபின்
சாகிலும் பிறக்கிலு மில்லையில்லை யில்லையே. 127

ஏகமனதுடன் ஆணும் பெண்ணும் கூடி இருவரும் ஒருவராகி புணர்ந்து போகம் செய்கின்ற சிற்றின்பம் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக பொருத்தி ஒத்து இருக்கின்றதே அது எங்ஙகனம்? அதுபோல் ஏகமாக உனக்குள் செய்யும் யோகத்தால் சக்தியும் சிவனும் ஒன்றாகி கலந்து பேரின்ப அனுபவத்தை ஞானிகளும் சித்தர்களும் பொதுவாக இருப்பதை உணர்ந்தனர். அனைத்தும் ஆவதற்கும், அழிவதற்கும், அழகிற்கும் காரணம் சிவமே என்பதை அறிந்து அன்பு வைத்து தியானியுங்கள். தன்னம்பிக்கையுடன் பாடுபட்டு மெய்நிலை அடைந்தவர்களுக்கு இப்பூவுலகில் சாவதும் பிறப்பதும் இல்லாது போகும்.

வேதனாலு பூதமாய் விரவுமங்கி நீரதாய்
பாதமேயி லிங்கமாய்ப் பரிந்துபூசை பண்ணினால்
காதினின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள்
ஆதியந்த முங்கடந் தரியவீட டைவரே. 128

நாண்டு வேதங்களில் உள்ள மெய்ப்பொருள் பஞ்சபூதங்களாய் விரிந்து நம் உடம்பில் நீராய் நிற்கின்றது. அதுவே ஈசன் திருவடியாகவும் இழிந்கமாகவும் இருப்பதை அறிந்து ஆன்மா எனும் பூவை அசையாமல் நிறுத்தி தியானிக்க வேண்டும். அப்போது வாசியானது லயமாகி நாத சப்தத்துடன் நம் காதுகளில் கேட்கும். அந்நாத ஒலியால் மெய் வாசலைத் திறந்து மனமெனும் பேயை தவத்தால் கட்டறுத்த ஞானிகள் ஆதி அந்தமும் கடந்து அனாதியாய் உள்ள சிவத்தை அடைந்து அரிய வீடு பேறை அடைவார்கள்.

பருத்திநூல் முறுக்கியிட்டுப் பஞ்சியோது மாந்தரே
துருத்திநூல் முறுக்கியிட்டு துன்பநீங்க வல்லீரேல்
கருத்திநூல் கலைப்படுங் காலநூல் கழிந்திடும்
திருத்திநூல் கவலறும் சிவாயவஞ் செழுத்துமே. 129

நைந்துபோன பருத்தி நூலினால் நெய்த ஆடைகளை உடுத்தி பஞ்சப்பாட்டு பாடி வாழும் மனிதர்களே! உங்களுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை வாசியோகத்தால் துருத்திக் கொண்டு ஊதுவதுபோல ஊத்தி விழிப்புறச் செய்து மேலேற்றினால் துன்பங்கள் யாவும் தானே நீங்கும். இந்த யோகத்தால் தியானிப்பவர் சிந்தையில் கருத்துள்ள நல்ல நூல்களும் உதிக்கும். பல கலை ஞானத்திலும் சிறந்து விளங்குவர். காலன் எனும் எமன் அணுகான். வாழ்நாள் காலங்கள் திருத்தி ஆயுள் அமையும். கவலைகள் யாவும் அற்றுப் போகும். ஆகவே ‘சிவயநம’ என அஞ்செழுத்தை ஓதி தியானம் செய்யுங்கள்.

சாவதான தத்துவச் சடங்குசெய்யு மூமைகாள்
தேவர்கல்லு மாவரோ சிரிப்பதன்றி யென்செய்வேன்
மூவராலு மறியொணாத முக்கணன்முதற் கொழுந்து
காவலாக வும்முளே கலந்திருப்பன் காணுமே. 130

ஒன்றுக்கும் உதவாத தத்துவச் சடங்குகள் செய்து செத்துப் போகும், உண்மையை உணராத ஊமை மனிதர்களே!! வெறும் கல்லுக்கு செய்யும் சடங்குகள் இறைவனைச் சேருமோ? எல்லாம் படைத்த ஈசன் கல்லாகவா இருப்பான்!!! இதைக் கண்டு சிரிக்காமல் வேறு என்ன செய்வேன். அறிவு, உணர்வு, நினைவு என்ற மூன்றாலும் அறிய முடியாத முக்கண்ணனான ஈசனின் முதல் பிள்ளையான கணேசன் உனக்குக் காவலாக உனக்குள்ளேயே பிண்டக்கல்லாக கலந்திருப்பதை கண்டு தியானம் செய்யுங்கள்.

காலைமாலை நீரிலே முழுகுமந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை யென்பெறும்
காலமே யெழுந்திருந்து கண்கண் மூன்றி லொன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே. 131

காலையும் மாலையும் மனச்சுத்தம் செய்யத் தெரியாமல் உடல் சுத்தம் மட்டுமே செய்து நீரில் மூழ்கி குளித்துவிட்டு மோட்சம் அடைவோம் எனக்கூறும் மூடர்களே!!! எப்போதும் நீரிலேயே வாழும் தவளையால் முத்தி அடைய முடியுமா? அதிகாலையிலே எழுந்து தியானம் செய்து மூன்றாவது கண்ணாகிய புருவமத்தியில் ஒன்றி யோக ஞானப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை வாசியால் மேலேற்றி மெய்ப் பொருளை நினைத்து தியானித்து இருப்பிராகில் அதுவே முத்தி அடைவதற்கும், சித்தி பெறுதற்கும் வழியாகும்.

எங்கள்தேவ ருங்கள்தேவ ரென்றிரண்டு தேவரோ
இங்குமங்கு மாயிரண்டு தேவரே இருப்பரோ
அங்குமிங்கு மாகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே. 132

எங்கள் கடவுள் இது என்றும் உங்கள் கடவுள் அது என்றும் இரண்டு கடவுளா இருக்கின்றது? இங்கொன்றும் அங்கொன்றும் இரண்டு தெய்வம் இருக்குமா? அங்கும் இங்கும் எல்லாமாய் ஆகி நின்ற ஆதிமூர்த்தியான சிவம் ஒன்றல்லவா, எங்கும் உள்ள ஒரே கடவுள். இது பெரியது என்றும் உங்களது சிறியது என்றும் கூறி இறைவனின் உண்மையை உணராது வாதம் பேசுபவர்கள் வாய்புழுத்து மாள்வார்கள்.

இறையறை யிடைக்கிட வன்றுதூமை யென்கிறீர்
முறையறிந்து பிறந்தபோது மன்றுதூமை யென்கிறீர்
துறையறிந்து நீர்குளித்தா லன்றுதூமை யென்கிறீர்
பொறையிலாத நீசரோடும் பொருந்துமாற தெங்ஙனே. 133

இறைவனை அறையில் வைத்து வணங்குகிறீர்கள்; அந்த இடம் தூய்மையானது என்கிறீர்கள். நான் இன்ன குலத்தில் பிறந்தவன்; அதனால் தூய்மையானவன் என்கிறீர்கள். உயர்சாதிக்காரர்கள் குளிக்கும் துறையில் குளிக்கிறேன்; அதனால் தூய்மையானவன் என்கிறீர்கள். இந்தப் பொறையற்ற நீசர்களின் கருத்துக்களோடு ஒவ்வுவது எப்படி? ஒவ்வ முடியாது.

சுத்தம்வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டுமூழ்கும் மூடரே
சுத்தமேது சட்டமோது தூய்மைகண்டு நின்றதேது
பித்தர்காய முற்றதேது பேதமேது போதமே. 134

சுத்தமான ஆகாயத்திலிருந்து சுத்தமான மழைநீர் பெய்கிறது.இதனை உனக்குள் அறியாது சிற்றின்ப நீரிலே மூழ்கி அதனாலேயே பல துன்பங்களுக்கு ஆட்பட்டு விந்து விட்டு நொந்து கெடும் மூடரே!!! நீரிலே மூழ்குவது மட்டும் சுத்தம் அல்ல. மனதிலுள்ள மாசுக்களை நீக்குவதே சுத்தம். சுத்தம் ஏது? தீயாக சுட்டது ஏது? என்பதை அறிந்து அது பேதம் ஏதும் இல்லாத மெய்ப்பொருளாய் இருப்பதை அறிந்து உணர்ந்து மனதை அதிலேயே இருத்தி தியான போதத்தில் திளைத்திடுங்கள்.

மாதமாதந் தூமைதான் மறந்துபோன தூமைதான்
மாதமற்று நின்றலோ வளர்ந்துரூப மானது
நாதமேது வேதமேது நற்குலங்க ளேதடா
வேதமோதும் வேதியா விளைந்தவாறு பேசடா. 135

மாதம்தோறும் பெண்களுக்கு இயற்கையாய் வரும் தூமையே அவள் தூய்மையானவள் என்பதற்கு சான்று. அது நின்று போனால் அவள் கருவைத் தான்கியிருக்கின்றால் என்பதே காரணம். அத்தீட்டில் கலந்தே உடலும் உயிரும் வரர்ந்து உருவமாகி ஜனிக்கின்றது. நாதமும் விந்துவும் கலந்தே உயிர்கள் யாவும் உண்டானது. இதில் நாதம் எது? வேதம் எது? நற்குலங்கள் எது? எல்லாம் அத்தூயமையில் இருந்தே தோன்றியுள்ளது என்பதனை அறியாமல் வேதங்களை வெறும் வாயால் ஓதுவதால் மட்டும் உயர்ந்த குளம் எனப் பேசும் வேதியரே! நீங்கள் இப்போவியில் இவை இல்லாமல்தானோ விளைந்தீர்களா? அது எப்படி எனக் கூறுங்கள்!!!

தூமையற்று நின்றலோ சுதீபமற்று நின்றது
ஆண்மையற்று நின்றலோ வழக்கமற்று நின்றது
தாண்மையற்று ஆண்மையற்று சஞ்சலங்க ளற்றுநின்ற
தூமைதூமை யற்றகாலஞ் சொல்லுமற்று நின்றதே. 136

பெண்ணிடம் தூமை என்ற மாதவிலக்கு நின்ற பிறகுதான் அங்கெ கருவாகி, ஆண், பெண், அலி என்ற தன்மையற்ற பிண்டமாக உயிர் நிற்கின்றது. அதன் பின் அப்பிண்டம் சிசுவாகி கருவறையில் வளர்ந்து குழந்தையாக வெளிவருகிறது. அது வளர்ந்து வாழ்கையில் அடையும் இன்ப துன்பங்களை பெற்று தான் என்ற ஆணவத்தால் பல சஞ்சலங்களை அடைந்து மரணம் அடைகிறது. அத்தூமையால் ஆனா உடம்பில் உயிர் போன பின் பிணம் என்ற பேர் பெற்றது, தூமை அற்றதால் என்பதனை அறியுங்கள். ஆகவே தீட்டில்லாத உடம்பு சவமே!

ஊறிநின்ற தூமையை யுறைந்துநின்ற சீவனை
வேறுபேசி மூடரே விளைந்தவாற தேதடா
நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்க ளாவன?
சீறுகின்ற மூடரேயத் தூமைநின்ற கோலமே. 137

தாயின் கருவறையில் சுக்கில சுரோனித கலப்பால் தூமையில் ஊறி நின்று உருவான உயிர் மனித குலத்திற்கு பொதுவாக அமைந்துள்ளது அறியாமல் நீ வேறு குலம் நான் வேறு குலம் என்று வேறுபடுத்திப் பேசுகின்ற முட்டாள்களே! அதனால் நீங்கள் அடைந்த பலன் என்ன? நாற்றம் வீசும் தூமையில் பிறந்தவர்கல்தால் மனிதனில் ஞானியராகவும், சித்தர்களாகவும், நற்குலங்களலாகவும் உள்ளார்கள். இதை உணராது கோபப்படும் முட்டாள்களே! அத்தூமையில் பரிசுத்தனாய் நின்ற ஈசனின் களத்தை கண்டுணர்ந்து ஒன்றி தியானம் செய்யுங்கள்.

தூமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானு மூறியே
சீமையெங்கு மாணும்பெண்ணும் சேர்ந்துலகங் கண்டதே.
தூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை
தூமையற்று கொண்டிருந்த தேசமேது தேசமே. 138

தீட்டு நின்ற பெண்ணின் தீட்டில் ஊறி வளர்ந்த உயிரே ஊர்கள் எங்கும் ஆண்களும் பெண்களுமாய் சேர்ந்து வாழ்ந்து வருவதை இவ்வுலகம் முழுமையும் காண்கின்றோம். காம ஆசையால் தீட்டில் தோன்றி உருவாக்கி நின்ற தன்னை அறிந்தவர்கள் எல்லா ஆசைகளையும் துறந்து இவ்வுலகில் சிவனையே தியானித்து இருப்பார்கள். இருக்கும் அனைத்து சீவனிலும் தீட்டு இல்லாமல் இருக்கும் தேசம் எங்காவது உள்ளதா?

வேணுவேணு மென்றுநீர் வீணுழன்று தேடுவீர்
வேணுமென்று தேடினாலு முள்ளதல்ல தில்லையே
வேணுமென்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்
வேணுமென்ற வப்பொருள் விரைந்துகாண லாகுமே. 139

உலகில் பிறப்பெடுத்த மனிதர்கள் இறைநிலை அடைவதற்கும், எட்டு சித்திகளை பெறுதற்கும், பிறவிப் பிணிமுதல் வரும் பிணிகள் யாவையும் நீக்குவதற்கும், பொன் செய்யும் வித்தைகள் செவதற்கும், மெய்ப்பொருள் கிடைக்கவேண்டும். அது கிடைத்தால் எல்லாம் செய்து வளமோடு வாழலாம் என்று வீனாசைக் கொண்டு பல இடங்களிலும் அலைந்து தேடுகிறார்கள். அது வேணும் என்று எங்கு சென்று தேடினாலும் கிடைக்காது. உனக்குள்ளே உள்ளதாகவும்,இல்லாததாகவும் இருப்பதை அறிந்து கொண்டு வேண்டும் என்ற ஆசைகள் யாவையும் துறந்து தியானம் செய்யுங்கள். உண்மையான யோக ஞான சாதனங்கள் வேண்டும் என்ற அந்த மெய்ப்பொருள் கிடைக்கப் பெற்று விரைவில் சோதியான ஈசனை காண்பீர்கள்!

சிட்டரோது வேதமுஞ் சிறந்தவாக மங்களும்
நட்டகார ணங்களும் நவின்றமெய்மை நூல்களும்
கட்டிவைத்த போதகங் கதைக்குகந்த பித்தெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையா னறிந்தபின். 140

வேத பண்டிதர்கள் ஓதும் நான்கு வேதங்களும், சிறந்ததாய் விளங்கும் ஆகம சாஸ்திரங்களும், கோயில் கட்டி அதன் கருவறையில் கற்சிலைகள் நட்டு வைத்து கும்பாபிஷேகம் செய்யும் காரணங்களும், திருமந்திரம், திருக்குறள், திருவாசகம் போன்ற உன்னதமான நூல்களும், யோகா தவத்தால் கட்டிச் சேர்த்து வைத்த போதப் பொருளும், இராமாயணம், மகாபாரதம், புராணம் போன்ற கதைகளில் எல்லாம் உகந்ததாகச் சொல்லாப்படும் பிரமம் போன்ற இவை யாவும் எனக்குள் இருக்கும் எம்பிரான் ஈசனை அறிந்தபின் எனக்குள்ளேயே ஒரு பொட்டாக ஒரே மெய்ப்போருளாகவே முடிந்திருக்கிறதே என்பதை உணர்ந்து கொண்டேன்.

நூறுகோடி யாகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாளிருந்து மோதினா லதென்பயன்
ஆறுமாறு மாறுமா யகத்திலோ ரெழுத்துமாய்
ஏறுசீ ரெழுத்தையோத வீசன்வந்து பேசுமே. 141

எவ்வளவோ ஆகமங்கள், அதில் எத்தனயோ மந்திரங்கள், வாழ்நாள் காலம் முழுவதும் இருந்து ஒதிவந்தாலும், அதனால் மெய்நிலை அடைய முடியுமா? அதன் பயனால் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற பதினெட்டுப் படிகளையும் கடந்து அகத்தில் ஓர் எழுத்தாக மெய்ப் பொருளை அடைந்து அதையே நினைந்து ‘சிவயநம’ என்று ஓதி தியானிக்க சோதியாக உலாவும் ஈசனே உன் குருவாக வந்து பேசுவான்.

காலைமாலை தம்மிலே கலந்துநின்ற காலனார்
மாலைகாலை யாய்ச்சிவந்த மாயமேது செப்பிடீர்
காலைமாலை யற்றுநீர் கருத்திலே யொடுங்கினால்
காலைமாலை யாகிநின்ற காலனில்லை யில்லையே. 142

இரவும் பகலும் தனக்குள்ளேயே கலந்து நிற்கும் இறைவனார், இரவும் பகலுமாய் சிவந்த சோதியாக நின்றிலங்கும் மாயம் எப்படி என்பதனைச் சொல்லுங்கள். அது மெய்ப் பொருளாக இருப்பதை அறிந்து இரவும் பகலும் எந்நேரமும் கருத்துக்கள் உதிக்கும் சிந்தையிலே நினைவு ஒடுங்கி சிவத்தியானம் செய்து வந்தால் இராப்பகல் இல்லாத இடத்தில் ஈசன் சோதியாக திகழ்வான். அதனால் எமன் வருவான் என்பதோ, எமபயம் என்பதோ, தியானம் செய்பவர்களுக்குக் கிடையாது.

எட்டுமண்ட லத்துளே யிரண்டுமண்ட லம்வளைத்து
இட்டமண்ட லத்துளே யெண்ணியாறு மண்டலம்
தொட்டமண்ட லத்திலே தோன்றிமூன்று மண்டலம்
நட்டமண்ட லத்துளே நாதனாடி நின்றதே. 143

எட்டாகிய எண்சான் உடம்பிலே இரண்டாகிய உயிர் உள்ளது. இப்படி எட்டும் இரண்டுமாய் இணைந்த இத்தேகத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா ஆகிய ஆறு ஆதாரங்கள் உள்ளது. இவ்வுடம்பில் சூரியமண்டலம், சந்திரமண்டலம், அக்நிமண்டலம், என்ற மூன்று மண்டலங்கள் இருக்கின்றது. இப்படி உள்ள உடம்பாகிய மண்டபத்தில் நடுவாக இருந்து நாதனாகிய ஈசன் ஆடி நின்று ஆட்டுவிக்கின்றான்!

நாலிரண்டு மண்டலத்துள் நாதனின்ற தெவ்விடம்
காலிரண்டு மூலநாடி கண்டதங் குருத்திரன்
சேலிரண்டு கண்கலந்து திசைகளெட்டு மூடியே
மேலிரண்டு தான்கலந்து வீசியாடி நின்றதே. 144

எண்சான் உடன்பில் நாதன் நின்றது எந்த இடம்? இடகலை, பிங்கலை எனும் மூச்சில் மூலநாடியான சுழுமுனையில் ஏற்றி இறக்கி, வாசிப் பயிற்சியினால் தீயாக விளங்கும் ருத்திரனை கண்டு அங்கு சந்திர, சூரியனாக விளங்கும் இரண்டு கண்களையும் ஒன்றாக இணைத்து எட்டுதிசைகளையும் மூடி அகக்கண்ணைத் திறந்து தியானம் செய்யுங்கள். மேலான அவ்வாசலில் சக்தியும், சிவனும் கலந்து சிவமாக ஆடி நிற்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அம்மையப்ப னப்புநீ யறிந்ததே யறிகிலீர்
அம்மையப்ப னப்புநீ யரியய னரனுமாய்
அம்மையப்ப னப்புநீ ராதியாதி யானபின்
அம்மையப்ப னின்னையன்றி யாருமில்லை யானதே. 145

தாயாகவும் தந்தையாகவும் நாத விந்துதான் அப்புவான நீராக இருப்பதை அறிந்தும் நாத விந்தை அறியாமல் உள்ளீர்களே. அப்பு எனும் நீரே விஷ்ணு, பிரம்மா, சிவன் எனும் மும்மூர்த்திகளாக இருக்கின்றனர். அந்த நீரே ஆதிக்கும் ஆதியான அனாதியாகவும், பிரமமாகவும் இருப்பதை உணர்ந்து அது ஒன்றையே எண்ணித் தியானியுங்கள். அதுவே அம்மையாகவும், அப்பனாகவும் வாலை அன்னையாகவும் இருந்து அருளும்.

உருத்தரிப்ப தற்குமுன் னுடல்கலந்த தெங்ஙனே
கருத்தரிப்ப தற்குமுன் காரணங்க ளெங்ஙனே
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாற தெங்ஙனே
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே. 146

ஆன்மா உருத்தரிப்பதற்கும் உடம்பு எடுப்பதற்கும் முன் தாய் தந்தை உடல் கலந்தது எவ்வாறு? அது நினைவு எனும் ஆகாயத்தில், அதனால் தோன்றிய சுக்கில சுரோணித கலப்பால் நீராகி தாயின் கருவில் சிசுவாக வளர காரணங்கள் என்ன? அது உகாரமாகிய உணர்வால் இரு வினைக்கு ஒப்பவே. இவ்வுடலில் பொருத்தி வைத்த போதப் பொருள் பொருந்தி இருப்பது எவ்விடம்? அது அகாரமாகிய அறிவாகி மெய்ப்பொருளாக உடம்பில் உள்ளது. இவை யாவையும் குரு திருத்தமாக சொல்லித்தந்து உபதேசித்ததை உணர்ந்து அதையே குறித்து தியானித்து இறவாநிலைப் பெறுங்கள்.

ஆதியுண்டு வந்தமில்லை யன்றுநாலு வேதமில்லை
சோதியுண்டு சொல்லுமில்லை சொல்லிறந்த தேதுமில்லை
ஆதியான மூவரி லமர்ந்திருந்த வாயுவும்
ஆதியன்றி தன்னையும் மாரறிவ ரண்ணலே. 147

ஆதியை அறிந்து, அது ஒன்றையே பற்றி, தவம் புரியும் ஞானிகள் அழிவது இல்லை. அவர்களுக்கு நான்கு வேதமும் தேவை இல்லை. அவர்கள் சோதியான ஈசனைக் கண்டு அங்கெ சொல் ஏதும் இல்லாமல் சொல்லிறந்த தன்மையும் இல்லாமல் மௌனத்தில் ஊன்றி சும்மா இருப்பார்கள். ஆதியான அணுவில் அயன், அரி, அரன் என மூவரும் இருப்பதை உணர்ந்து, பிரா ணசக்தியாக வாலை அமர்ந்தே தானாகி நிற்பதனையும் உணர்ந்து தியானத்தில் இருப்பார்கள். இதனை வேறு யார் அறிவார்கள் அண்ணலே!

புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர்
புலாலைவிட்டு மெம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே
புலாலுமாய்ப் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தர்காணு மத்தனே. 148

நாறும் இறைச்சியிலான இவ்வுடம்பு இதுவென்று அறிந்தும் வேறுபடுத்தி இகழ்ச்சியாகப் பேசுகிறீர்கள். இறைச்சியிலான உடம்பைவிட்டு இறைவன் பிரிந்து தானாகி இருந்தது எவ்வாறு? உடம்பாகவும், உயிராகவும் இருந்து வாசியாகி உலாவிக்கொண்டு தானாகி நின்ற பரம்பொருள் இவ்வுடம்பில்தான் வித்தாக முளைத்து முதலாக உள்ளது. இதனை நன்கு உணர்ந்து கொண்டு இவ்வான்மாவை மேம்படுத்த, சோதியாக எழுந்த ஈசானை கண்டு தியானம் செய்யுங்கள்.

உதிரமான பால்குடித் தொக்கநீர் வளர்ந்ததும்
இரதமா யிருந்ததொன் றிரண்டுபட்ட தென்னலாம்
மதிரமாக விட்டதேது மாங்கிசம் புலாலதென்று
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே. 149

தாயின் இரத்தத்திலிருந்து உருவான பாலைக் குடித்துதான் நீங்கள் வளர்ந்தீர்கள். சதையாக இருந்த ஒன்றிலிருந்தே பிண்டம் உருவாகி வெளிப்பட்டு தாயாகவும், சேயாகவும் இரண்டானது. அமிர்தமான தாய்ப்பால் கொடுப்பதும் மாமிசப்புலாலான சதைதானே. மாமிசத்தில் இருந்தே உருவாகி மாமிசமாகவே வளர்ந்த நீங்கள் மாமிசமில்லாத சதுரமான நான்கில் நின்று வளராமல் இருந்தது எது என்பதை அறிவீர்களா? மற்றவரை சைவர் இல்லையென வெறுக்காது சைவத்தைக் கடைப்பிடியுங்கள்.

உண்டகல்லை யெச்சிலென் றுள்ளெறிந்து போடுறீர்
கண்டவெச்சில் கையல்லோ பரமனுக்கும் ஏறுமோ
கண்டவெச்சில் கேளடா கலந்தபாணி யப்பிலே
கொண்டசுத்த மேதடா குறிப்பிலாத மூடரே. 150

புறச்சடங்குகளால் செய்யப்படும் பூஜைகளில் நிவேத்தியமாக படைக்கப்படும் பிரசாதங்களை ஒரு குழந்தை அறியாது எடுத்து தின்றுவிட்டால் அது எச்சில் பட்டுவிட்டது என்று சொல்லி யாருக்கும் பயனில்லாது கீழே எறிந்து விட்டு வேறு பிரசாதம் செய்து படைக்கின்றார்கள். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் கைப்பட்டு எச்சிலான இவர்கள் கையால் செய்த பிரசாதங்களை மட்டும் இறைவன் ஏற்று உண்பானோ? எச்சிலாலே தோன்றிய உடம்பில் தானே கைகள் கலந்து இருக்கின்றது? அதனை சுத்தமான நீரில் கழுவி கைகளைத் துடைத்தால் சுத்தம் வந்துவிடுமா? குறிக்கோள் ஏதும் இல்லாத மூடரே! சுத்தம் என்பது என்ன? இவ்வுடலில் பரிசுத்தனாய் ஈசன் இருக்கும் இடம் எது என்பதை அறிந்து மனமாகிய அகத்தை சுத்தம் செய்து இறைவனை தியானியுங்கள்.

ஓதிவைத்த நூல்களு முணர்ந்துகற்ற கல்வியும்
மாதுமக்கள் சுற்றமும் மறக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ வெங்குமாகி நின்றதோ
சோதிபுக் கொளித்தமாயஞ் சொல்லடா சுவாமியே. 151

படித்தறிந்து பாதுகாக்கும் நூல்களும், உணர்ந்து கற்ற கல்வியும், மனைவி, சுற்றத்தினர் என யாவையும் மறக்கும் படியான மரணம் என்று ஒன்று வந்ததே! அது ஏன் வந்தது என்பதை சிந்தியுங்கள். உடலோடிருந்து உலாவிய உயிர் மரணம் வந்ததும் எங்காவது சென்று ஒளிந்து கொண்டதோ? அல்லது எங்குமான வானத்தில் நின்றதோ? சோதியான ஈசனை அடைந்ததா? ஒளியாக நின்ற உயிர் ஒழிந்த மாயம் எங்கு என்பதை சுவாமி வேடம் போட்டு திரிபவர்களே சொல்லவேண்டும். எல்லாம் ஈசன் செயல் என்பதை உணர்ந்து, மரணமில்லாப் பெரு வாழ்வை அடைய முயற்சியுங்கள்.

ஈணெருமை யின்கழுத்தி லிட்டபொட்ட ணங்கள்போல்
மூணுநாலு சீலையில் முடிந்தவிழ்க்கும் மூடர்காள்
மூணுநாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை
ஊணியூணி நீர்முடிந்த வுண்மையென்ன வுண்மையே. 152

கன்று ஈன்ற எருமை மாட்டின் கழுத்தில், கண் திருஷ்டி படக்கூடாது என்பதற்காக மூன்று பொட்டணங்களை வைத்து முடிச்சுப் போட்டு வைப்பார்கள். அதுபோல பிராமணர்கள் குளிக்கும்போது ஒரு துண்டில் மூன்று முடிச்சுப்போட்டு கழுத்தில் போட்டுக்கொண்டு தண்ணீரில் மூழ்குவார்கள். பின் அந்த முடிச்சுக்களை அவிழ்த்துத் தண்ணீரிலே போட்டுவிட்டு முன்ஜென்மம், இந்த ஜென்மம், மறுஜென்மம் ஆகிய முப்பிறவிகளின் கர்மவினையை தொலைத்துவிட்டேன் என்று சொல்லித் தலை முழுகுவார்கள். ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களை விட்டுவிட்டேன் என்றும் விளக்கம் சொல்லுவார்கள். இதனால் அவைகள் அகன்றுவிடுமா? ஏழு உலகங்களிலும் ஆதியந்தம் இல்லாத அநாதியான ஈசனை உங்கள் ஊண் உடம்பிலே உணர்ந்து அதிலே ஊன்றி அறிவு, உணர்வும், மனம் ஆகிய மூன்றையும் முடிந்து தியானியுங்கள். மும்மலங்களும், மூவினைகளும் தானே விலகும். இதுவே உண்மையாக இறைவனை அடையும் வழி.

சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல்
காயமான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே
கூவமான கிழநரிக் கூட்டிலே புகுந்தபின்
சாவல்நாலு குஞ்சதஞ்சுந் தானிறந்து போனதே. 153

நான்கு சாவல்களையும் ஐந்து குஞ்சுகளையும் அதன் தாய்க் கோழியையும் ஒரே கூட்டில் அடைத்து வைத்தால் அவை ஒன்றுக் கொன்று கூவி கொத்தி சண்டை போடுகிறது. அக்கூட்டில் ஒரு கிழநரி புகுந்துவிட்டால் அவை யாவும் இறந்து போய்விடும். அது போலவே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கும், பஞ்ச பூதங்களும், ஆன்மாவும் நம் உடம்பான கூட்டில் இருந்து ஐம்புலன்களாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வுயிரை, உடம்பில் புகுந்து எமன் கொண்டு போய்விட்டால் அந்தக் கரணம் நான்கும், பஞ்சபூதங்களும் மறைந்து போய்விடும் என்பதையும், எல்லா தத்துவங்களும், ஆன்மாவில் அடங்கிவிடும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

மூலமாங் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே யெழுந்திருந்து நாலுகட் டறுப்பீரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரம மாகலாம்
ஆலமுண்ட கண்டர்பாத மம்மைபாத முண்மையே. 154

அதிகாலை எழுந்து நமது மூலாதார சக்கரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை பிராணாயாம பயிற்சி செய்து கோரையைப் போல முளைக்கும் கோழையாகிய எமனைக் கட்டறுத்து வெளியேற்ற வேண்டும். பின் வாசியோகம் செய்து பிராணசக்தியை மேலேற்றி ரேசக பூரக கும்பகம் என்று மூச்சை கட்டுப்படுத்தி, மனதை இறைவனுடன் இருத்தி, நான்கு நாழிகை நேரம் முயற்சியுடன் தியானப் பயிற்சியைத் தொடர்ச்சியாக தினமும் செய்து வரவேண்டும். இதனை விடாமல் தொடர்ந்து செய்து வரும் யோகிகள் பாலனாகி வாழ்ந்து பரப்பிரம்மம் ஆவார்கள். ஆலம் உண்ட நீலகண்டர் பாதமும் அம்மை பாதமும் நம்முள் அமர்ந்திருப்பதை உண்மையாய் உணர்ந்து தியானியுங்கள்.

செம்பினிற் களிம்புவந்த சீதரங்கள் போலவே
அம்பினி லெழுதொணாத வணியரங்க சோதியை
வெம்பிவெம்பி வெம்பியே மெலிந்துமேல் கலந்திட
செம்பினிற் களிம்புவிட்ட சேதியேது காணுமே. 155

செம்பினில் களிம்பு வந்து சேர்ந்தது போல் நீ செய்த பாவங்கள் உயிரில் சேர்ந்து அது அழிவதற்கு காரணமாகின்றது. ஆகவே இச்சீவனை பாவங்கள் சேரா வண்ணம் சிவனோடு சேர்த்து தியானியுங்கள். அச்சிவன் நம் உடம்பில் எழுதா எழுத்தாகவும், அணி அரங்கமான அழகிய சிற்றம்பலத்தில் சோதியாக உள்ளான். அதனை அறிந்து அவனையே நினைந்து வெம்பி வெம்பி அழுது உன் உயிரும் ஊணும் உருக உணர்ந்து தியானம் செய்து வாருங்கள். செம்பினில் களிம்பு போனால் தங்கமாவது போல் நீயும் பாவங்கள் நீங்கி இறைவனோடு சேர்ந்து இன்புறலாம்.

நாடிநாடி யும்முளே நயந்துகாண வல்லிரேல்
ஓடியோடி மீளுவா ரும்முளே யடங்கிடும்
தேடிவந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடி காலமும் உகந்து இருந்தவாறது எங்ஙனே. 156

இறைவனை அடைவதற்கான வழி, அவனையே நாடி அவன் புகழைப் பாடி அவனை நயந்து தேடி நமக்குள்ளேயே கண்டு கொண்டு, யோகமும் தியானமும் பழகவேண்டும். அதனால் நம்மில் இருந்து வெளியேறி ஓடும் மூச்சு நமக்குள்ளேயே ஒடுங்கி பிராணசக்தி கூடி உயிரிலேயே அடங்கிடும். இப்படியே தினமும் செய்ய வல்லவர்களுக்கு ஆயுள் கூடி தேடி வரும். எமனே திகைத்து திரும்பிடுவான், அவர்கள் கல்பகோடி காலமும் ஈசனோடு உகந்து இருப்பார்கள். ஆகவே யோக ஞான சாதனங்களைக் கைக்கொண்டு பிறவாநிலை பெறுங்கள்.

பிணங்குகின்ற தேதடா பிரஞ்ஞைகெட்ட மூடரே
பிணங்கிலாத பேரொளிப் பிராணனை யறிகிலீர்
பிணங்குவோ ரிருவினைப் பிணக்கறுக்க வல்லிரேல்
பிணங்கிலாத பெரியவின்பம் பெற்றிருக்க லாகுமே. 157

கோபம் கொள்வது ஏது என்பதை உணராத மூடரே!! சாந்தமான பேரொளியாக ஈசன் உன் பிராணனில் இருப்பதை அறியாமல் இருக்கிறீர்கள். இவ்வுலகில் பிறக்க வைக்கும் நல்வினை, தீவினை எனும் இரு வினைகளை யோக ஞானத்தால் பிணக்கு அறுத்து தியானம் செய்ய வல்லவர்கலானால் ஈசன் அருளால் பேரின்பம் பெற்று மரணமில்லா பெருவாழ்வில் இருக்கலாகுமே.

மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
மானுரித்த தோலலோ மார்பில்நூ லணிவதும். 158

மீன் இறைச்சி வேதம் ஓதும் பிராமணர்கள் எப்போதும் உண்பதில்லை. அசைவத்தை உண்பதால் அசுத்தம் வந்துவிடும் என்றிடும் அவர்கள் மீன் இருக்கும் நீரில்தான் குளிக்கின்றார்கள், அதையேதான் குடிக்கின்றார்கள். தின்னாமல் குடிப்பதில் மட்டும் சுத்தமாகிவிடுமா? மான் இறைச்சியை உண்பதில்லை என்று சொல்லும் பிராமணர்கள் அந்த மானை உரித்த தோலில் பூணூல் அணிகின்றார்களே, இறைச்சி உண்ணாமல் இருப்பதால் மட்டும் இறைவனை அடையமுடியாது. சுத்தம் என்பது அவரவர் எண்ணத்தில்தான் இருக்கின்றது.

ஆட்டிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம் நீங்க ளாற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
மாட்டிறைச்சி யல்லவோ மரக்கறிக் கிடுவது. 159

ஆட்டின் இறைச்சியை அந்தணர்கள் உண்பதில்லை. ஆனால் ஆட்டை பள்ளியிட்டு அவ்விறைச்சியை யாகத்தில் போட்டு செய்வது ஏன்? அக்காலத்தில் யாகங்களில் ஆட்டிறைச்சியை இட்டு செய்தார்கள் வேதியர்கள், இக்காலத்தில் மாட்டின் பாலிலிருந்து உண்டான நெய்யினை இட்டு செய்கின்றார்கள். மாட்டிறைச்சி தின்பதில்லை வேதியர்கள், ஆனால் அவர்கள் உண்ணும் காய்கறிகளுக்குப் போடுவது மாட்டிறைச்சியே. உணவுப் பழக்கத்தினாலோ, ஆசார அனுட்டனங் கலாலோ இறைவனை அடைந்து விடமுடியாது.

அக்கிடீ ரனைத்துயிர்க்கு மாதியாகி நிற்பதும்
முக்கிடீ ருமைப்பிடித்து முத்தரித்து விட்டதும்
மைக்கிடில் பிறந்திறந்து மாண்டுமாண்டு போவது
மொக்கிடி லுமக்குநா னுணர்த்துவித்த துண்மையே. 160

(அக்கிடீர்=நீரும், நெருப்பும்) ஆதியாக உள்ள மெய்ப்பொருளே அனைத்து உயிர்களிலும் நீராகவும், நெருப்பாகவும் இருக்கின்றது. அதுவே உங்களிடம் அறிவு, உணர்வு, மனம் என்று மூன்றாக தரித்து முப்பொருளாய் உணராது இப்பூமியில் பிறந்து இறந்து பிறந்து மாண்டு போகிறார்கள். ஆகவே மெய்ப்பொருளை அறிந்து அதையே ஒத்து தியானம் செய்வதுவே இப்பிறவித் தளையிலிருந்து ஆன்மா விடுதலை அடைவதற்கான வழி என நான் உங்களுக்கு உணர்த்துவிக்கும் உண்மையாகும்.

ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாற தெங்ஙனே
செய்யதெங்க ளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே.
ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே. 161

ஈசன் ஏன் உடன்பின் உள்ளே புகுந்தது எங்ஙகனமெனில் தென்னை மரத்தின் மேலே இளங் குரும்பையில் நீர் புகுந்து இருப்பது போலத்தான். இறைவன் என் மெய்யாகிய உடம்பில் உள்ளமாகிய கோயிலில் உறைவதை நான் அறிந்து கொண்டபின் அந்த மெய்ப்பொருள் நாட்டத்திலேயே ஒன்றி தியானம் செய்வதைத் தவிர வேறு எண்ணம் ஏதுமில்லையே. ஆதலால் இவ்வுலகில் மதத்தாலும், இனத்தாலும், சாதியாலும் பிரிந்து தீங்கையே செய்து தீவினைகளை சேர்த்துக் கொண்டு இறக்கப் போகும் மாந்தர்களோடு நான் வாய் திறந்து பேசுவதில்லை.

நவ்வுமவ்வை யுங்கடந்து நாடொணா தசியின்மேல்
வவ்வுயவ்வு ளுஞ்சிறந்த வண்மைஞான போதகம்
ஒவ்வுசத்தி யுண்ணிறைந் துச்சியூ டுருவியே
இவ்வகை யறிந்தபேர்க ளீசனாணை யீசனே. 162

அஞ்செழுத்தில் ‘ந’ என்ற சுவாதிட்டானத்தையும், ‘ம’ என்ற மணிப்பூரகத்தையும் கடந்து அனாகத்தில் உள்ள ‘சி’ யின் மேல் இருக்கும் விசுத்தியில் ‘வ’வும் ஆஞ்ஞாவில் ‘ய’ வும் ஓதி உணரவேண்டும். இந்த நமசிவய என்ற அஞ்செழுத்து நம் உடம்பில் மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களாக இருப்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். மூலாதாரத்தில் ‘ஓம்’ என்ற அட்சரத்தால் குண்டலினி சக்தியை, வாசியால் மேலேற்றி நினைவால் “ஓம் நமசிவய” என்று ஓதி ஒவ்வொரு சக்கரத்திலும் அதற்குறிய எழுத்தை நிறுத்தி அப்பியாசித்து வரவேண்டும். தூலத்தில் “ஓம் நமசிவய” எனும் இந்த பஞ்சாட்சரமே உள்ளே சூட்சுமமாகவும் எல்லா வல்லமையும் உள்ள சிறந்த ஞான போதப் பொருளாக இருக்கிறது. அதுவே உச்சியில் உள்ள மெய்ப் பொருள். இதற்குள் ஈசன் சோதியாக இருப்பதை உணர்ந்து “சிவயநம ஓம்” என்ற பஞ்சாட்சரத்தை அங்கு நிறுத்தி தியானிக்க வேண்டும். இப்படி மூலாதாரத்தில் இருந்து உச்சி வரை முதுகுத்தண்டின் வழியாக ஊடுருவி வாசியை மெய்ப் பொருளில் உள்ள சோதியில் சேர்க்கவேண்டும். “ஓம் நமசிவய” என்ற பஞ்சாட்சரமே நம் உடம்பில் தூலமாகவும், உயிரில் சூட்சுமமாகவும் இருப்பதை அறிந்து இந்த யோக ஞானத்தை உணர்ந்து தவம் புரிபவர்கள் ஈசனாகவே ஆவார்கள்!! இது அந்த பஞ்சாட்சரமாக விளங்கும் ஈசன் மீது ஆணை.

முச்சதுர மூலமாகி மூன்றதான பேதமாய்
யச்சதுர மும்முளே யடங்க வாசி யோகமாம்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமா
யுச்சரித்த மந்திரம் ஓம் நமச்சிவாயமே. 163

வாயிலிருந்து வெளியேறும் பன்னிரெண்டு அங்குல அளவு பிராணனை அடக்கி, பூரகம், இரேசகம், கும்பகம் ஆகிய முறைகளினால் வாசியைப் பயில அது வாசி யோகமாகும். நம் உடலில் மெய்ப்பொருளாம் கண்கள் ஞான தீபமாய் விளங்குகின்றது. அதனுள்ளே சென்று முக்கலைகளை ஒன்றாக்கி அதை மேலேற்றித் தவம் செய்யும்போது உச்சரிக்கவேன்டிய மந்திரம் ஓம் நமசிவய.

பார்த்ததேது பார்த்திடில் பார்வையூ டழிந்திடும்
கூத்ததாய் இருப்பிரேல் குறிப்பிலாச் சிவமதாம்
பார்த்தபார்த்த போதெல்லாம் பார்வையு மிகந்துநீர்
பூத்தபூவுங் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே. 164

எல்லாவற்றையும் பார்த்தது எது என்பதை அறிந்து, அதையே பார்த்து தியானிக்க பார்வை ஒடுங்கி, அகக்கண் திறந்திடும். அதையே குறியாகக் கொண்டு மெய்ப்பொருளை உணர்ந்து சுழுமுனையில் கூர்மையான நினைவை குவித்திருந்தால் சோதியைக் காணலாம். அதுவே சிவம் ஆகும். ஆகவே தியானம் செய்யும் போதெல்லாம் பார்ப்பானையே பார்த்திரு. அதை விடுத்து நினைவை பல இடங்களில் வைத்து, பார்வையை பலவிதங்களில் செலுத்தி தியானத்தை இகழ்ந்து மறந்தால் நீங்கள் மீண்டும் பூத்த பூவும் காயுமாய் பிறப்பிறப்பில் உழலுவீர்.

நெற்றிபத்தி யுழலுகின்ற நீலமா விளக்கினைப்
பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்த தென்பலன்
உற்றிருந்து பாரடா வுள்ளொளிக்கு மேலொளி
அத்தனா யமர்ந்திட மறிந்தவ னனாதியே. 165

நெற்றியைப் பற்றி உழன்று கொண்டிருக்கின்ற ஒரு நீல நிறம் உடைய விளக்கை குறு தொட்டுக் காட்ட உணர்ந்து கொள்ளுங்கள். பின் அதையே பற்றி அறிவு, உணர்வு, நினைவு என்ற மூன்றையும் ஒன்றாக்கி நின்று தியானிக்க உலகப் பற்றுக்கள் யாவும் நீங்கும். அதனால் அநேக பலன்கள் கிடைக்கும். அதுவே இறைவனை அடையும் வழி என்பதை அறிந்து அந்நீல விளக்கையே உற்று நோக்கி தியானிக்க உள்வெளிக்குள் பரம்பொருள் ஒளி பொருந்திய சோதியாக ஒளிறும் . அதுவே ஈசன் அமர்ந்திருக்கும் இடம் என்பதை அறிந்து தவம் புரிபவர்கள் என்றும் அனாதியாக உள்ள ஈசனை அடைவார்கள்.

நீரையள்ளி நீரில்விட்டு நீநினைத்த காரியம்
ஆரையுன்னி நீரெலா மவத்திலே யிறைக்கிறீர்
வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழுந்த
சீரையுன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம். 166

பிராமணர்கள் குளித்து முடித்த பின்னர் அந்நீரில் நின்றபடியே, மூன்று முறை தண்ணீரை கைகளில் அள்ளி அத் தண்ணீரிலேயே மந்திரங்களை முணுமுணுத்து விடுவார்கள். இதற்கு வாக்கு, மனம், செயல் என்ற மூன்றையும் திரிகரண சுத்தி செய்வதாகச் சொல்லுவார்கள். இவையெல்லாம் இறைவனுக்கே செய்கின்ற சடங்குகள் தானே!! இதனால் இறைவனை அடைய முடியுமா? உனக்குள்ளேயே வேராக இருக்கும் ஆன்மாவையும், வித்தாக இருக்கும் இறைவனையும் அறிந்த அதிலேயே முளைத்து எழுகின்ற சிகரத்தை உணர்ந்து ‘சிவயநம’ என்று உனக்குள் பரவச் செய்து தியானம் செய்ய வல்லவர்களானால் சிவத்தின் திருவடியில் சேரலாம்.

நெற்றியி றயங்குகின்ற நீலமாம் விளக்கினை
யுய்த்துணர்ந்து பாரடா வுள்ளிருந்த சோதியைப்
பத்தியிற் றொடர்ந்தவர் பரமயம தானவர்
அத்தலத்தி லிருந்தபேர்க ளவரெனக்கு நாதரே. 167

விளக்கில் எரியும் தீபத்தை உற்றுப் பார்த்தால் அதன் நடுவில் நீல நிறம் பொருந்திய ஒளி வீசுவதை உணரலாம். அதுபோல நமது நெற்றியில் இயங்கிக் கொண்டிருக்கின்ற நீல நிறமாக விளங்கிக்கொண்டிருக்கும் ஆன்மாவை அறிந்து கொள்ளுங்கள். அதுவே இப்பிறவி உய்யும் வழி என உணர்ந்து அதன் உள்ளேயே அருட்பெருஞ் ஜோதியாகி விளங்கும் ஈசனைத் தியானித்துப் பாருங்கள். அவரே அனைத்திற்கும் நாதன் என்பதை உணர்ந்து, பக்தியால் பாடியும், ஆடியும் கண்ணீர்விட்டு கசிந்து தொடர்ந்து தியானியுங்கள். நீங்களே அப்பறம்போருளாக ஆவீர்கள். அதிலேயே இருந்து தியானமும் தவமும் செய்பவர்கள் எனக்கும் குருநாதன் அவார்கள்.

கருத்தரிக்கு முன்னெலாங் காயம்நின்ற தெவ்விடம்
உருத்தரிக்கு முன்னெலா முயிர்ப்புநின்ற தெவ்விடம்
அருட்டரிக்கு முன்னெலா மாசைநின்ற தெவ்விடம்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயமென்று கூறுவீர். 168

தாயின் வயிற்றில் கருவாக தரிப்பதற்கு முன்பு உடம்பு எங்கு எவ்வாறு இருந்தது. உருவாக்கி வளர்வதற்கு முன்பு உயிர் இருந்த இடன் எது. இறை அருள் கிடைப்பதற்கு முன்பு ஆசைகளின் மனம் நின்றது எவ்விடம் என்பதை, யாவும் சந்தேகங்கள் ஏதுமின்றி திருக்கமுடன் தெரிந்த கொண்டு ‘சிவயநம’ என்ற அஞ்செழுத்தாக இருப்பதை அறிந்து கொண்டு பஞ்சாட்சரத்தை சொல்லி தியானியுங்கள்.

கருத்தரிக்கு முன்னெலாங் காயம்நின்ற தேயுவில்
உருத்தரிக்கு முன்னெலா முயிர்ப்புநின்ற தப்புவில்
அருட்டரிக்கு முன்னெலா மாசைநின்ற வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாய மென்று கூறுவீர். 169

ஆகாயத்திலிருந்து ஆன்மா கருத்தரிக்கும் முன்பு காயமான உடம்பு, தாய் தகப்பனின் உஷ்ணத்தில் தீயாக நின்றிருந்தது. உருவாக ஆவதற்கு முன்பு உயிர் சுக்கில சுரோனித நீராகி நின்றது. இறை அருளால் உயிர் உடம்பாகி வெளிவருவதற்கு முன்பு மனமானது ஆசையாக காற்றில் நின்றது. பின் தாயின் கருவறை என்ற மண்ணில் சிசுவாக வளர்ந்து உடலுயிராய் பிறவி வந்தது என்பதை திருத்தமாக தெரிந்துகொண்டு ‘சிவயநம’ என்ற பஞ்சாட்சரத்தை உணர்ந்து சொல்லி தியானம் செய்யுங்கள்.

தாதரான தாதருந் தலத்திலுள்ள சைவரும்
கூத்தரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த காரியம்
வீதிபோகு ஞானியை விரைந்துகல் லெறிந்ததும்
பாதகங்களாகவே பலித்ததே சிவாயமே. 170

மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்று தொண்டு செய்ய வந்தவர்கள் சுயநலமாக செய்யும் தீமைகளும், தலம் எனப்படும் கோயில், பள்ளி, ஆஸ்ரமம் போன்ற அறச்சாலைகளில் நடக்கும் கீழான செயல்களும், கூத்தாடிப் பிழைப்பவர்க்கு இழிவான கடைமக்கள் கூடிச் செய்கின்ற தீங்கும், வீதி வழியாகப் போகும் ஞானியை பழித்துரைத்துக் கல்லால் எரிந்து அடித்ததும் தப்பாமல் திரும்பி வந்து அவர்களுக்கு பாதகங்கள் ஆகவே பலித்து, துன்புற்று சாவார்கள். நீங்கள் செய்த பழிபாவங்கள் நீங்க ‘சிவயநம’ என்ற அஞ்செழுத்தை ஓதி பாதகங்கள் செய்யாது வாழுங்கள்.

ஓடியோடி பாவிழைத் துள்ளங்கால் வெளுத்ததும்
பாவியான பூனைவந்து பாவிலே குதித்ததும்
பணிக்கன்வந்து பார்த்ததும் பாரமில்லை யென்றதும்
இழையறுந்து போனதும் என்னமாய மீசனே. 171

நெசவு நெய்யும் பாவைப்போல அங்கும் இங்கும் ஓடியோடி உழைத்து மூச்சானது ஓடி ஒய்ந்து உயிர்போகின்ற தருனஹ்தில் உங்கள் உள்ளங்கால் வெளுத்து படுக்கையில் படுத்ததும் அச்சமயம் ஓடிய நேசவுப்பாவிலே பூனை வந்து குதித்ததும், பாவிழை அறுந்து போவது போல, எமன் வந்து உயிரை எடுத்துப் போவது போனதும் மூச்சு நின்றதும், மருத்துவன் வந்து பார்த்து உயிர் போய்விட்டது என்பதும், பாவிலே நூல் இழை அறுந்து தறி ஓட்டம் நின்றுபோவது போலவே உடம்பைவிட்டு உயிர் மூச்சு நின்று போவது யாவும் உன்மாயமே ஈசனே!

சதுரம்நாலு மறையுமிட்டு தானதங்கி மூன்றுமே
எதிரதான வாயுவாறு எண்ணும்வட்ட மேவியே
உதிரந்தான் வரைகளெட்டு மெண்ணுமென் சிரசின்மேல்
கதிரதான காயகத்தில் கலந்தெழுந்த நாதமே. 172

சதுரம் எனப்படும் நான்கு வேதங்களும் எண்சான் உடம்பிலே தங்கி, மூன்றான ஓங்காரமாய் இருக்கின்றது. அதையே பிரனவமாக்கி மூன்றெழுத்தால் ஆறு ஆதார வட்டங்களிலும் வாசியினால் மேலேற்றிப் பயில வேண்டும். உயிரிலிருந்தே உதிரங்கள் எட்டாகிய உடம்பு முழுவதும் ஓடிக் கொண்டிருப்பதை உணர்ந்து அகார, உகாரத்தை உயிரில் அறிந்து சிரசு எனும் தலை உச்சியில் சூரியனாக இருக்கும் சூட்சும உடம்பில் சுழுமுனையில் அவ்வாசியினைச் சேர்க்க நாத ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும்.

நாலொடாறு பத்துமேல் நாலுமூன்றும் இட்டபின்
மேலுபத்து மாறுடன் மேதிரண்ட தொன்றுமே
கோலிஅஞ் செழுத்துளே குருஇருந்து கூறிடில்
தோலுமேனி நாதமாய்த் தோற்றிநின்ற கோசமே. 173

மூலாதாரத்தில் நான்கு இதழ் கமலமாகவும் ‘ஓம்’ என்ற மூன்று எழுத்தாகவும், சுவாதிட்டானத்தில் ஆறு இதழ் கமலமாகவும் ‘ந’ என்ற மண் பூதமாகவும், மணிப் பூரகத்தில் பத்து இதழ் கமலமாகவும் ‘ம’ என்ற நீர்பூதமாகவும், அனாகத்தில் பனிரெண்டு இதழ் கமலமாகவும் ‘சி’ என்ற நெருப்பு பூதமாகவும், விசுத்தியில் பதினாறு இதழ் கமலமாகவும் ‘வ’ என்ற காற்றுப் பூதமாகவும், ஆஞ்ஞாவில் இரண்டு இதழ் கமலமாகவும் ‘ய’ என்ற ஆகாயப் பூதமாகவும் உயிர் ஒன்றாகவும் உங்கள் உடம்பில் அஞ்செழுத்து அமைந்துள்ளது. இதனை உண்மையான குறு விரும்பி உபதேசித்து அதை உன் உடம்பிலேயே உணர்ந்து உபாசித்தால் நாத ஒலித் தோன்றும். அந்த நாதம் ‘ஓம் நமசிவய’ கோசமாக எழுந்து நிற்கும்.

கோசமா யெழுந்ததும் கூடுருவி நின்றதும்
தேசமாய்ப் பிறந்ததுஞ் சிவாயமஞ் செழுத்துமே
ஈசனாரிருந்திட மனேகனேக மந்திரம்
ஆகமம் நிறைந்துநின்ற வைம்பத்தோர் எழுத்துமே. 174

ஐயும், கிலியும், சவ்வும், றீயும், ஸ்ரீயும் என்ற கோச அட்சரங்களாக எழுந்து கூடாகிய உடலுக்குள் ஊடுருவி நின்று இத்தேசத்தில் தேகம் எடுத்து பிறந்ததும் ‘நமசிவய’ என்ற அஞ்செழுத்து மந்திரத் தத்துவத்தாலே தானே. சோதியான ஈசனையும், அவன் நம் உடம்பில் தற்பரமாய் நின்ற இடத்தையும் தான், அனைத்து மந்திரங்களும் வேதங்களும் சொல்கின்றது. அதனை ஐந்து ஐந்து கட்டங்களாக வரைந்து ‘நமசிவய’ என்ற அஞ்செழுத்தின் பீஜ அட்சரமாக அ, இ, உ, எ, ஒ என்ற எழுத்தையும் கோச அட்சரங்களால் ஐயும், கிலியும், சவ்வும், றீயும், ஸ்ரீயும் எழுத்தையும் அமைத்து 9, 11, 4, 15, 12 என்ற என்னையும் கொடுத்து அது மொத்தம் ஐம்பத்தொன்று என்பதையே ஐம்பத்தோர் அட்சரம் என்பார்கள்.

அங்கலிங்க பீடமா வையிரண் டெழுத்திலும்
பொங்குதா மரையினும் பொருந்துவா ரகத்தினும்
பங்குகொண்ட சோதியும் மரந்தவஞ் செழுத்துமே
சிங்கநாத வோசையுஞ் சிவாயமல்ல தில்லையே. 175

உடம்பில் உள்ள அங்கத்தை பீடமாக இலிங்கமே ஐம்பத்தொரு அட்சரமாக உள்ளது. சகஸ்ரார தலமான தாமரையில் மனதை நிறுத்தி தியானத்தில் பொருந்துவார்கள் அகத்தில் சக்தியும் சிவனுமாய் பக்குகொண்டிருக்கும் சோதியாக பரந்து இருப்பதும் பஞ்சாட்சரமே! இந்த அஞ்செழுத்தில் சிகரமாகும் நாத ஒளியாகவும் இருப்பதும் பஞ்சாட்சரமே. இதை அறிந்துணர்ந்து ஒலியையும், ஒளியையும் ஒன்றாக்கி தியானியுங்கள்.

உவமையில்லாப் பேரொளிக்கு ளுருவமான தெவ்விடம்
உவமையாகி யண்டத்தி லுருவிநின்ற தெவ்விடம்
தவமதான பரமனார் தரித்துநின்ற தெவ்விடம்
தற்பரத்தில் சலம்பிறந்து தாங்கிநின்ற தெவ்விடம். 176

எதனோடும் ஒப்பிடமுடியாத தனித்தன்மையான பேரொளி நம்முள் உருவமாக நிற்பது எவ்விடம்? ஆகாயத்திற்கு உவமையான மனம் அண்டத்திலும் பிண்டத்திலும் அமைந்திருப்பது எந்த இடம்? தவத்திற்கு உரிமையான பரமனார் மெய்ப்பொருளாய் தரித்து நின்றது எந்த இடம்? தன் உடம்பில் நீராக நின்று தாங்கி தற்பரமாய் இருப்பது எந்த இடம்?

ககமதாக வெருதுமூன்று கன்றையீன்ற தெவ்விடம்
சொல்லுகீழு லோகமேழும் நின்றவாற தெவ்விடம்
அளவதான மேருவும் அம்மைதான தெவ்விடம்
அவனுமவளு மாடலா லருஞ்சீவன் பிறந்ததே. 177

மாடான மனதில்தான் புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய மூன்றும் பிறந்தது. அந்த நான்கு அந்த கரணங்களும் உடம்பில் எங்கு இருக்கின்றது. சொல்லும் வார்த்தைகள் தோன்றுவதும் ஏழு உலகங்களாக நின்றதும் அதுவாக இருப்பதும் எவ்விடம். அவளதான வாலை மேரு சக்கரமாகவும் அம்மையான மனோன்மணியாகவும் அமர்ந்திருந்தது எவ்விடம்? அவனும் அவளும் ஆடியே அருஞ்சீவன் உருவானது. எல்லாம் சிவசக்தியின் திருவிளையாடல் என்பதை புரிந்து தியானம் செய்து இச்சீவனை சிவனோடு சேருங்கள்.

உதிக்குகின்ற தெவ்விட மொடுங்குகின்ற தெவ்விடம்
கதிக்குகின்ற தெவ்விடம் கன்றுறக்க மெவ்விடம்
மதிக்கநின்ற தெவ்விடம் மதிமயக்க மெவ்விடம்
விதிக்கவல்ல ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே. 178

மனம் உதிப்பதும், ஒடுங்குவதும் எந்த இடம்? கதியாகிய வாசி இருப்பது எந்த இடம்? கண்ணுறக்கம் கொள்வது எந்த இடம்? யாவரும் மதின்க்கும்படி நின்றது எவ்விடம்? மதியாகிய அறிவும் மயக்கமான மாயையும் தோன்றிய இடம் எது என்பதையெல்லாம் விதியை வெல்ல ஞானம் போதிக்க வந்த குருமார்களே!! சீடர்கள் ஆறியும் வண்ணம் விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

திரும்பியாடு வாசலெட்டு திறமுரைத்த வாசலெட்டு
மருங்கிலாத கோலமெட்டு வன்னியாடு வாசலெட்டு
துரும்பிலாத கோலமெட்டு சுத்திவந்த வருளரே
அரும்பிலாத பூவுமுண்டையனாணை யுண்மையே. 179

மீண்டும் மீண்டும் இப்பூவுலகில் பிறந்திறந்து உழலும் உடல் எண்சான் அளவே. அந்த எட்டான உடலில் திறமாக செயல்படும் உயிர் எட்டாகிய ஆகாரத்தின் வாசலில் உள்ளது. அது ஆகாயமான எட்டாகி இருக்கும் கோலமும் அதிலே வன்னி எனும் தீயாக ஈசன் இருந்து ஆடும் இடம் அகாரம். அந்த எட்டான அகாரத்தில் ஒரு தூசோ, துரும்போ அண்டாது. பரிசுத்தமான கோலமாய் உள்ள இடமாகிய அகாரத்தில்தான் சோதி உள்ளது. இதனை யாவும் எட்டாக விளங்கும் தன் உடம்பிலே காணாமல் வேறு எங்கெங்கோ சுற்றி வருகின்ற மருள் பிடித்த மனிதர்களே! அரும்போ, மோட்டோ இல்லாத பூவாக உன் ஆன்மா உனக்குள் இருப்பதை உணர்ந்து அதிலேயே தியானித்து பிறவா நிலை பெற வாருங்கள். இது என் ஐயன் மீது ஆணையிட்டு உண்மையாகச் சொல்லுகின்றேன்.

தானிருந்து மூலவங்கி தணலெழுப்பி வாயுவால்
தேனிருந்து வறைதிறந்து தித்தியொன்று வொத்தவே
வானிருந்து மதியமூன்று மண்டலம் புகுந்தபின்
ஊனிருந் தளவுகொண்ட யோகிநல்ல யோகியே. 180

யோக ஞான சாதகத்தால் உடம்பில் உள்ள மூலாதாரத்தில் தீயாக இருக்கும் குண்டலினியை அங்கிருக்கும் தனஞ்செயன் என்ற பத்தாவது வாயுவால் வாசியை மேலே எழுப்பி கபாலத்தில் உள்ள கோழையை அகற்றி அமிர்தம் உண்ணவேண்டும். அது தேனைப் போல ஆயிரம் மடங்கு தித்திப்பைக் கொடுப்பது. ஆகாயத்தாமரையில் உள்ள இவ்வமுதத்தை வாசியோகத்தால் கறந்து சந்திர மண்டலம், ஆதித்த மண்டலம், அக்னி மண்டலம் ஆகிய மூன்று மண்டலத்திலும் கரைத்து தம் உடம்பில் தினந்தோறும் அளவுடன் சேர்க்கும் யோகிகள் நல்ல யோகிகளே!

முத்தனாய் நினைந்தபோது முடிந்தவண்டத் துச்சிமேல்
பத்தனாரும் மம்மையும் பரிந்துவாட லாடினார்
சித்தரான ஞானிகாள் தில்லையாட லென்பிர்காள்
அத்தனாட லுற்றபோ தடங்கலாட லுற்றவே. 181

முக்தியைப் பெற நினைத்து முனைந்து தியானம் புரிகின்ற போது ஆதி அந்தமாக முடிந்த ஆகாயத் தாமரையின் உச்சியில் அப்பனும், அம்மையும் பரிவுடன் நடனம் ஆடுவதை அறியலாம். இதனை தவம் முடித்த சித்தர்களும், ஞானிகளும் தனக்குள் நின்று பரம்பொருள் ஆடுவதையே தில்லையில் ஈசனுக்கும் ஈஸ்வரிக்கும் நடந்த ஆட்டம் இதுவே என்பார்கள். இந்த வண்ணம் உடலில் நின்று ஆட்டுவிக்கும் அம்மை அப்பன் ஆட்டம் நின்று போனால் உயிர் பொய் உடம்பு ஆடிய ஆட்டம் எல்லாம் அடங்கிவிடும். ஆகவே இதனை நன்கு அறிந்துணர்ந்து நினைந்து தியானியுங்கள்.

ஒன்றுமொன்று மொன்றுமே யுலகனைத்து மொன்றுமே
அன்றுமின்று மொன்றுமே யனாதியான தொன்றுமே
கன்றல்நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வ மும்முளே யறிந்ததே சிவாயமே. 182

சக்தியும் சிவனும் ஒன்றாகி இந்த உலகம் அனைத்திலும் ஒன்றான சிவமே எல்லாமாய் இருக்கின்றது. இதனை சக்தியாகிய உடலையும் சிவனாகிய உயிரையும் ஒன்றில் ஒன்றாக்கி ஒன்றி தியானித்து சிவம் ஆகிய மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ளுங்கள். அன்றும் இன்றும் ஒன்றே தெய்வம். ஒருவனே தேவன். அவன் அனாதியாக என்றும் எப்போதும் நிலையான ஒன்றாக இருப்பவன். என்றும் இளமை மாறாமல் நின்ற செம்பொன்னம்பலத்தைக் கண்டு செம்பில் களிம்பருத்து பொன்னாக்குவது போல் நீங்கள் செய்த பாவங்கள் யாவையும் நீக்கி சோதியில் மனதை நாட்டி தியானித்தால் அப்போதே தெய்வம் உமக்குள்ளே இருப்பதை அறிவீர்கள். அது சிவம் என்று. (கன்றல் – இளமை)

நட்டதா வரங்களும் நவின்றசாத் திரங்களும்
இட்டமான ஓமகுண்ட மிசைந்தநாலு வேதமும்
கட்டிவைத்த புத்தகம் கடும்பிதற் றிதற்கெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையா னறியவே. 183

மரம் நடுவது போன்ற புண்ணியச் செயல்களும், தர்ம சாஸ்திரங்கள் சொல்லும் உயர்ந்த பரம் பொருளும், ஹோமங்கள் செய்ய அமைத்த யோனி குண்டங்களும், வேள்வியில் ஓதுகின்ற நான்கு வேத மந்திரங்களும், மிகவும் முக்கியமான நூல்கள் என்று பாதுகாத்து வைக்கும் புத்தகங்களும், ஞானியர் உபதேசிக்கும் யோக ஞானங்களும், அது பெரியது இது பெரியது என செய்யும் வாதங்களும் ஆகிய இவைகள் யாவுமே என் உடம்பில் பொட்டாக விளங்கும் பிரம்மத்தையே போதிக்கின்றது என்பதையே என் பிரானாகிய ஈசனை அறிந்தபின் யான் தெளிந்து உணர்ந்து கொண்டேன்.

வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த வம்புலி
சட்டமீ படைத்திலே சங்குசக் கரங்களாய்
விட்டதஞ்சு வாசலில் கதவினா லடைத்தபின்
முட்டையி லெழுந்தசீவன் விட்டவாற தெங்ஙனே. 184

உடம்பாகிய கூட்டுக்குள்ளே வட்டமான பூரண நிலவாக வளர்ந்து எழுந்து நிற்கின்றது பிரமம். அதுவே இப்பூமியெங்கும் சங்கு சக்கரங்களாக திகழ்கின்றது. இதனை அறிந்து ஐம்புலன்களையும் அஞ்செழுத்தால் அடக்கி அண்டமாக விளங்கும் முட்டையில் எழுந்துள்ள உயிராகிய சீவனை சிவனுடன் சேருங்கள். இறவா நிலையடைந்து இறைவனுடன் இரண்டறக் கலந்து பேரின்பம் பெறலாம்.

கோயில்பள்ளி யேதடா குறித்துநின்ற தேதடா
வாயினால் தொழுதுநின்ற மந்திரங்க ளேதடா
ஞானமான பள்ளியிற் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியிற் காணலா மிறையையே. 185

கோயில் என்பதும் மெய் கல்வி கற்க வேண்டிய பள்ளி என்பதும் எது? மெய்ப்பொருளை குறித்து நின்றது எது? கோயில் என்ன்பது இறைவனை தொழுவதற்கும் பள்ளி என்பது arivai வளக்கவும் உள்ள இடங்களே! வெறும் வாயினால் மட்டும் சொல்லுன் மந்திரங்களால் மட்டுமே இறைவனைக் காண முடியுமா? இறைவனும் அறிவும் கோயிலாகவும் பள்ளியாகவும் உங்கள் உள்ளத்தில் உறைவதை உணருங்கள். யோக ஞானத்தால் அதனை அறிந்து இறை நாட்டத்துடன் நன்மையாய் வணங்கி மந்திரங்களைச் செபித்து தியானித்தால் இறைவனைக் காணலாம்.

நல்லவெள்ளி யாறதாய் நயந்தசெம்பு நாலதாய்
கொல்லுநாக மூன்றதாய் குலாவுசெம்பொ னிரண்டதாய்
வில்லினோசை யொன்றுடன் விளங்கவூத வல்லிரேல்
எல்லையொத்த சோதியானை யெட்டுமாற்ற தாகுமே. 186

நல்ல வெள்ளி ஆறுபங்கும், செம்பு நாலு பங்கும், துத்தநாகம் மூன்று பங்கும், தங்கம் இரண்டு பங்கும் சேர்ந்து துருத்தி கொண்டு ஊத்தி உருக்கினால் அது எட்டு மாற்றுத் தங்கமாகும் என்று பொருள் கண்டு ஏமாந்தது போனவர்கள் அநேகர். நான்கு இதழ் கமலமான மூலாதாரத்தில் உள்ள குண்ட்டளினியை மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கு அந்த கரணங்களாலும் இணைத்து ஆனவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் நீக்கி, நம்முள் செம்பொன்னம்பலமாக விளங்கும் சோதியில் அகாரம், உகாரம் என்ற எட்டிரண்டால் வாசியை வில்லில் இருந்து அம்புவிடும் போது தோன்றும் ‘ம்’ என்ற ஓசை லயத்துடன் உண்மை விளங்கி ஊதா வல்லவர்கலானால் ஆறு ஆதாரங்களையும் கடந்து அப்பாலாய் சோதியாய் நிற்கும் ஈசனிடம் சேரலாம். இப்படி யோக ஞான தியானம் செய்யும் சாதகர்களின் உடம்பு பொன் போல மின்னும். இது எல்லையில்லா அந்த பரம்பொருள் அருளால் ஆகும்.

மனத்தகத் தழுக்கறாத மவுனஞான யோகிகள்
வனத்தகத் திருக்கினும் மனத்தகத் தழுக்கறார்
மனத்தகத் தழுக்கறுத்த மவுனஞான யோகிகள்
முலைத்தடத் திருக்கினும் பிறப்பறுத் திருப்பரே. 187

மனதின் உள்ளே இருக்கும் பாவம், ஆசை எனும் மாசுகளை நீக்காமல் வாய்மூடி மவுனத்தில் இருக்கும் ஞான யோகி என்போர் காட்டிற்குள் சென்று ஆஸ்ரமம் அமைத்து இருந்தாலும், அவர்களின் மனத்தில் அழுக்கு அகலாது. காம கோப தாபங்களை விட்டு மனதின் ஆசைகளை ஒழித்து உண்மையான மவுனத்தை அறிந்த ஞான யோகியர் கலவி இன்பத்தில் பெண்ணில் முலைதடத்தில் கிடந்தாலும் அவர்களின் எண்ணம் முழுதையும் இறைவனிடத்திலேயே இருத்தி பிறப்பு இறப்பு எனும் மாயையில் சிக்காது இறைநிலை அடைவார்கள்.

உருவுமல்ல வொளியுமல்ல வொன்றதாகி நின்றதே
மருவுமல்ல கந்தமல்ல மந்தநாடி யுற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாக நின்றநேர்மை யாவர்காண வல்லிரே. 188

மெய்ப்பொருள் என்பது உருவும் அல்ல, ஒளியும் அல்ல, உருவும் ஒளியும் சேர்ந்து ஒன்றாகி நிற்பதே ! அது மருவாக இருப்பதல்ல, வாசனைப் பொருந்திய மனமாக வீசுவதல்ல, சுழுமுனை எண்டும் நாடியில் ஓடுவதல்ல. பெரியதும் அல்ல, சிறியதும் அல்ல, பேசுகின்ற ஆவியும் அல்ல. யாதுக்கும் நடுவாக இருந்து அறிவதற்கு அரியதாகி நிற்பதால் அந்த மெய்ப் பொருளை அறிந்து அதன் பெருமையை உணர்ந்து தியானித்து சோதியான ஈசனை யாவர் காண வல்லவர்கள்.

ஓரெழுத் துலகெலா முதித்தவட் சரத்துளே
ஈரெழுத் தியம்புகின்ற வின்பமே தறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை
நாவெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே. 189

பிரம்மமே ஒரேழுத்து அட்சரமாக உதித்து உலகமெல்லாம் நின்று உடம்பாகியது. அதில் ஈரேழுத்தாக இயங்கும் ஒலியையும் ஒளியையும் அறிந்து அகார உகார அட்சரத்தின் உண்மையை உணர்ந்து வாசி எனும் யோக ஞானத்தால் இறை இன்பத்தை அடையும் வழியை அறியாமல் இருக்கின்றீர்கள். மூவெழுத்தான அகார, உகார, மகாரம் எனும் ஓங்காரத்தில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவராக மூண்டெழுந்த சிவத்தை நாள் தோறும் அதிகாலையில் எழுந்து மனம் மொழி மெய்யால் ‘ஓம் சிவயநம’ என உச்சரித்து நினைவால் நினைந்து தியானம் செய்யுங்கள்.

ஆதியந்த மூலவிந்து நாதமைந்து பூதமாய்
ஆதியந்த மூலவிந்து நாதமைந் தெழுத்துமாய்
ஆதியந்த மூலவிந்து நாதமேவி நின்றதும்
ஆதியந்த மூலவிந்து நாதமே சிவாயமே. 190

ஆதியான தோற்றத்திற்கும் அந்தமான முடிவிற்கும் மூலமாக இருப்பது விந்து நாதம். அதுவே ஐந்து பூதங்களாகவும் விரிந்து ஐந்து எழுத்தாகவும் அமைந்தது. அந்த நாத விந்தே ஒளியாகவும், ஒலியாகவும் நம் உடலில் மேவி நிற்கின்றது. ஆதியாகவும், அந்தமாகவும், நாதமாகவும், சிவனாகவும், சக்தியாகவும், ஒலியாகவும், ஒளியாகவும் உள்ளவை யாவுமே சிவம் என்ற பரம் பொருளால் ஆனதே!

அன்னமிட்ட பேரெலா மனேககோடி வாழவே
சொன்னமிட்ட பேரெலாந் துரைத்தனங்கள் பண்ணலாம்
வின்னமிட்ட பேரெலாம் வீழ்வர்வெந் நரகிலே
கன்னமிட்ட பேரெலாம் கடந்துநின்ற திண்ணமே. 191

அரும்பசிக்கு அன்னதானம் செய்தவர்கள் கோடி வளம் பெற்று பல்லாண்டு காலம் வாழவேண்டும். அன்னதானம் செய்வதற்கு பொருள் வேண்டி செல்வந்தர்களிடம் சென்று உதவி கேட்டால் அவர்கள் அதிகாரம் செய்து இல்லை என்று விரட்டலாம். அன்னதானம் செய்வதை குற்றம் என்று சொல்லி வில்லங்கம் செய்பவர்கள் பாழும் நரகக் குழியில் வீழ்ந்து அல்லலுறுவார்கள். அனைத்து உயிரிலும் ஆண்டவன் இருப்பதை அறிந்து அவனைத் தனக்குள்ளேயே கண்டு கள்வர்கள் கன்னமிடுவதைப் போல் யோக ஞான சாதனத்தால் தியானிப்பவரால் பத்தாம் வாசலைக் கடந்து கடவுளை அடைவது நிச்சயம்.

ஓதொணாமல் நின்றநீ ருறக்கமூணு மற்றநீர்
சாதிபேத மற்றநீர் சங்கையின்றி நின்றநீர்
கோதிலாத வறிவிலே குறிப்புணர்ந்து நின்றநீ
ரேதுமன்றி நின்றநீ ரியங்குமாற தெங்ஙனே. 192

ஓதாது உணரும் ஒரேழுத்தாக நின்றது நீர். உறக்கம் என்பதோ, உணவு என்பதோ அற்று நிற்பது நீர். சாதி பேதம் அற்று சகலரும் ஒன்றாக உள்ளது நீர். சங்கோசமில்லாமல் நிர்வாணமாக நிற்பது நீர். குற்றமேதுமில்லாத அறிவாகவும் ஆயுளின் குறிப்பையும் உணர்ந்து நிற்பது நீர். இப்படி யாவும் எனக்குள்ளே நீராக நின்று இயங்குவது ஈசா உன் செயலே!! (சங்கை =வெட்கம்)

பிறந்தபோது கோவண மிலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்குநாற் சடங்கெலா
மறந்துநாலு வேதமும் மனத்துளே யுதித்ததோ
நிலம்பிளந்து வானிடிந்து நின்றதென்ன வல்லிரே. 193

பிறந்தபோதே கோவணமும் பூணூலும் குடுமியும் கூடவே பிறக்கின்றதா? பிறக்கும் பொது இறைவனைத் தவிர வேறு எதையும் கொண்டு வருவது இல்லை என்பதை மறந்துவிட்டு வெறும் சடங்குகளை எல்லாம் குரங்குப் பிடியாக பிடித்துக் கொண்டு அதிலேயே மனம் வைத்து ஈசனை அறியாமல் இருக்கின்றார்கள். நான்கு வேதங்களும் மனதினுள்ளே உதித்ததா? அறிவிலே உதித்ததா? பிரம்மாவும், விஷ்ணுவும் தானே பெரியவன் என்ற சர்ச்சையில் எச்சன் நிலத்துக்கும் வானுக்கும் லிங்கோத்பவராக நின்று தானே அநாதி என நிரூபித்ததை அறிந்து அவ்வீசனை உங்களுக்குள் உணர்ந்து அவனை ஆயா தவம் செய்ய முயலுங்கள்.

துருத்தியுண்டு கொல்லனுண்டு சொர்ணமான சோதியுண்டு
திருத்தமாய் மனத்திலுன்னித் திகழவூத வல்லிரேல்
பெருத்ததூ ணிலங்கியே பிழம்பதாய் விரிந்திடும்
நிருத்தமான சோதியும் நீயுமல்ல தில்லையே. 194

நாம் விடும் மூச்சில் வாசியைக் கண்டு அதனை யோகமாக்கி செய்ய உடம்பு உண்டு. அதில் உள்ள ஆன்மாவில் பொன்னார் மேனியாகிய ஈசன் விளங்கும் சோதி உண்டு. இந்த வாசி யோகத்தை தினமும் முறை பிசகாமல் மனதில் நிறுத்தி இறைவனை எண்ணி ஊத ஊத மனம் இலயமாகி பெருத்த தூணாக மறைக்கும் நந்தி விலகி நெருப்பாறு ஒளிபிழம்பாக விரிந்து நிற்கும். அங்கு மயிர்பாலம் எனும் பிரம்மாந்திரத்தில் ஏறிக் கடந்தால் கோடி சூரியப் பிரகாசமான சோதியில் சிவனும் சீவனுமின்றி வேறு எதுவுமில்லை. நீயே அந்த பரம்பொருள் என்பதை உணர்ந்து யோக தியானமும் செய்து ஈசனைச் சேருங்கள்.

வேடமிட்டு மணிதுலக்கி மிக்கதூப தீபமாய்
ஆடறுத்து கூறுபோட்ட வவர்கள்போலும் பண்ணுறீர்
தேடிவைத்த செம்பெலாந் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூசை பூசையென்ன பூசையே. 195

ஆசாரமாக வேடம் போட்டு ருத்திராட்சம் ஸ்படிகம் போன்ற மணிகளால் ஆன மாலைகளைக் கழுத்தில் போட்டு மணியோசையுடன் இறைவனுக்கு தூப தீபங்கள் காட்டுகின்றீர்கள். ஆட்டை அறுத்துக் கூறுபோட்டு விற்பவர்கள் போல சடங்குகள் பண்ணுகின்றீர்கள். தேடிக் கொணர்ந்து வைத்து செம்புகளில் நீர் நிரப்பி அதனை அங்கு திரளாகப் பரப்பி பூக்களால் அர்ச்சித்து செய்வதாக போடும் பூசை என்ன பூசையோ. உயிரை வளர்க்க செய்யும் பூசையை அறியாமல் வயிறை வளர்க்க செய்யும் பூசை என்ன பூசையோ?

முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டிக்கொண்டு நின்றிடம் கடந்துநோக்க வல்லிரேல்
முட்டுமற்று கட்டுமற்று முடியினின்ற நாதனை
எட்டுத்திக்குங் கையினா லிருந்தவீட தாகுமே. 196

தாயின் கருவிலே தூமையினால் உருவான உடலிலே சீவன் புகுந்து மனிதனாக வளர்ந்துள்ளது. உடம்பிலே விந்துகள் ஒன்று சேர்ந்து இலிங்கமாகக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றது. அதனை அறிந்தபின், உடலில் எதனுடனும் முட்டாமலும், கட்டாமலும், ஒட்டாமலும் தனித்திருக்கும் உறுப்பு எது என அறிந்து அங்கிருந்து உள்ளே செல்ல முட்டுமின்றி கட்டுமின்றி முடிவாக நின்ற ஈசனை உணரலாம். அறிவு, உணர்வு, நினைவு, கருத்து ஆகிய நிலைகளைக் கடக்கவேண்டும். ஈசன் உனக்குள்ளேயே எட்டு திசைகளாகவும், நான்கு கைகளாகவும் இருக்கிறான். கவனத்தை அங்கேயே நிறுத்திப் பின்னர் அதையும் கடந்து சென்று இறையுடன் கலக்கவேண்டும்.

அருக்கனோடு சோமனு மதுக்குமப் புறத்திலே
நெருக்கியேறு தாரகை நெருங்கிநின்ற நேர்மையை
உருக்கியோ ரெழுத்துளே யொப்பிலாத வெளியிலே
யிருக்கவல்ல பேரலோ யினிபிறப்ப தில்லையே. 197

சூரியக்கலை, சந்திரக்கலை எனும் பிராணயாமத்திற்கு அப்பால் சுழுமுனை எனும் அக்னிக் கலையால் மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை முதுகுத்தண்டின் வழியாக வாசியை மேலேற்றும் நேர்மையை உள்ளுணர்ந்து செய்ய வேண்டும். வாசி ஒடுங்கும் ஓர் எழுத்தாக உனக்குள் இருக்கும் பிரம்மத்தில் சேர்க்க வேண்டும். அந்த ஓர் எழுத்து உனக்குள் ஒப்பற்ற வெளியாக இருப்பதை உணர்ந்து வாசியோகம் செய்து தியானத்தில் இருக்கும் உத்தம யோக ஞானிகள் இறவா நிலைப் பெற்று இறைவனுடன் சேர்ந்து இனி இப்பூமியில் பிறப்பெடுக்க மாட்டார்கள்.

கள்ளவுள்ள மேயிருக்க கடந்தஞான மோதுவீர்
கள்ளமுள் ளறுத்தபோது கதியிதன்றிக் காண்கிலீ
ருள்ளமே விளக்கிநித்த மொளியணுக வல்லிரேற்
றெள்ளுஞான மும்முளே சிறந்ததே சிவாயமே. 198

உள்ளத்தில் உலகாயதமான ஆசைகளையும், கள்ள எண்ணங்களையும் வைத்துக் கொண்டு, எல்லாம் கடந்த ஞானிபோல ஞானோபதேசம் செய்கிறீர்கள். உள்ளத்தில் உள்ள மூவாசைகளையும், கள்ள எண்ணங்களையும் வேரோடு அறுத்தபோது கதியிதுதான்; வேறில்லை என்று உணருவீர்கள். உள்ளத்தைச் சுத்தமாக்கி, கண்களின் சுடர் வழியே கபாலத்துக்குள் செல்ல வல்லவராயின், தெளிந்த ஞானம் உம்முளே தெளியும். அதுவே சிவாயம்.

சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள்
முச்சதுர மெட்டுளே மூலாதார வறையிலே
அச்சமற்ற சவ்வுளே யரியர னயனுமாய்
உச்சரிக்கும் மந்திரம் முண்மையே சிவாயமே. 199

சுக்கில சுரோணிதக் கலப்பால் உருவாகியது எட்டு சாண் அளவேயுள்ள உடல். அது ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எட்டு எனப்படும் மூலாதர அறையாம் யகாரமாகிய கண்ணிலே கவனத்தை வைத்து ஞனவினையாற்ற வேண்டும். அச்சமற்ற வாசியை உள் தொண்டை மேலுள்ள சவ்விலே வைத்து ஊதி உண்ணாக்கின் வழியாக மேலேற்றுங்கள். அங்கே மும்மூர்த்திகளும் உள்ளனர். அதை அறிந்து கவனத்தைக் கருத்தில் சேருங்கள். இதுதான் உண்மையான மந்திரம்.

பூவுநீரு மென்மனம் பொருந்துகோயி லென்னுளம்
ஆவியோடி லிங்கமாய் யகண்டமெங்கு மாகினாலும்
மேவுகின்ற ஐவரும் விளங்குதூப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோ ரந்திசந்தி யில்லையே. 200

பூவாகவும், நீராகவும் இருப்பது என் மனம். அதில் ஈசன் பொருந்தி கோயில் கொண்டிருப்பது என் உள்ளம். ஆவியான ஆன்மா இலிங்கமாக அமைந்து உள்ளதும் அங்கேயே. இந்த அகிலம் எங்கும் நிறைந்த ஐம்பூதங்களும் என் உடலில் மேவியுள்ளன. தூப தீபமாய் விளங்கி நடமாடும் கூத்தன் அந்த உடலில் இரவு பகலற்ற இடமாம் கண்களில் நடனம் ஆடிக்கொண்டுள்ளான். அங்கே சென்று அவனுடன் ஒன்றவேண்டும்.

உருக்கலந்த பின்னலோ வுன்னைநா னறிந்தது
இருக்கிலென் மறக்கிலென் னினைந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயுநானு மொன்றலோ
திருக்கலந்து போதலோ தெளிந்ததே சிவாயமே. 201

இறைவா! நான் ஆன்மாவாக இருந்து உருவாகி வளர்ந்து இவ்வுடலைப் பெற்றேன். அதன்பின் உன்னை அறிந்தேன். நீ என்னை மறந்தால் என்ன? என்னுடன் இருந்தால் என்ன? நான் நினைத்த போதெல்லாம் என்னுடன் கலந்து நின்றபோது, நீயும் நானும் ஒன்றுதானே! உன் திருவருளால் ஞானவினையாற்றி நான் தெளிந்தபோது எனக்கு சிவாயம் தெளிந்தது.

சிவாய மஞ்செழுத்திலே தெளிந்துதேவ ராகலாம்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்துவான மாளலாம்
சிவாய மஞ்செழுத்துளே தெளிந்துகொண்ட வான்பொருள்
சிவாய மஞ்செழுத்துளே தெளிந்துகொள்ளு முண்மையே. 202

சிவயநம எனும் ஐந்தெழுத்து மந்திரத்தின் உட்பொருளை உணர்ந்து தொடர்ந்து ஞானவினையாற்றுவோர்கள் தேவர்கள் ஆகலாம். சிவயநம எனும் ஐந்தெழுத்துக்குள்ளே ஓரெழுத்தை உணர்ந்து தியானம் செய்து இறைவனைத் தெளிந்து கண்டு கொண்டவர்கள் ஆகாயத்தை ஆளலாம்(தத்துவார்த்தமாக). அங்ஙனம் தெளிந்து கண்டுகொண்ட வான்பொருளாம் ஈசனை சிவயநம என்னும் ஐந்தெழுத்துக்குள்ளே தெளிந்து கொள்ளுங்கள். உண்மை இதே.

பொய்க்குடத்தி லைந்தொதுங்கிப் போகம்வீசு மாறுபோல்
இச்சடமு மிந்திரியமும் நீருமே லலைந்ததே
அக்குடம் சலத்தைமொண் டமர்ந்திருந்த வாறுபோல்
யிச்சடஞ் சிவத்தைமொண் டுகந்தமர்ந் திருப்பதே. 203

பொய்க் குடமாகிய மானுட உடலில் ஐந்து பூதங்களும் அமைந்து உள்ளன. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களும் சுகபோகங்களை அனுபவிக்கின்றது. இந்த உடம்பும் இந்திரியங்களும் நாதவிந்தாகிய நீரினால் அமைந்து அலைந்து கொண்டிருக்கின்றது. மண் குடத்தில் நீரை ஊற்றி வைத்தால் அது எப்படி உறுதியாக சாயாமல் இருக்கின்றதோ, அது போலவே பொய்க் குடமான இந்த உடலில் மெய்ப் பொருளாகிய சிவம் உகந்து அமர்ந்திருப்பதால் தான் இவ்வுலகில் உயிர்கள் உலவுகின்றன. சிவமாகிய சீவன் போனால் சவம்தான்.

பட்டமுங் கயிறுபோல் பறக்கநின்ற சீவனைப்
பார்வையாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்ளனை. 204

பட்டம் போன்று உயிர் அந்தரத்தில் பறந்து கொண்டு இருக்கிறது. இணைக்கும் கயிறு உடலில் உள்ள உயிர். அக்கயிற்றை இயக்கும் சூத்திரதாரி ஈசன். இருகண் கொண்டு ஈசனை உன் பார்வையால் கவனித்து மூச்சுக் காற்றை கும்பகத்தால் நிறுத்தி இறுக முடிச்சு போட வேண்டும். இந்த ஞானக் கலை தெரியாமல், பூரக, கும்ப, இரேசகம் செய்து வாசியைப் பிடிக்கத் தெரியாமல் யாரையும் திட்டாதீர்கள். விந்து நாசம் செய்து சீவனாகிய உயிரை வீணே விடாதீர்கள். ஞானவினையாற்றி களவறிந்த கள்வனாம் ஈசனை சிக்கென்று பிடித்துக் கட்டிவிடுங்கள்.

அல்லிறந்து பகலிறந் தகப்பிரம மிறந்துபோய்
அண்டாண்ட முங்கடந் தனேகனேக ரூபமாய்ச்
சொல்லிறந்து மனமிறந்த சுகசொரூப வுண்மையைச்
சொல்லியாற வென்னில்வேறு துணைவரில்லை யானதே. 205

தினந்தோறும் இரவும் பகலும் அவனையே நினைத்து உள்ளத்தை பிரமத்தில் ஒன்றி ஞானவினையாற்றுங்கள். அண்டாண்டங்கள் அனைத்தில் வாழும் உயிர்கள் யாவிலும் ஆன்மா ஒன்றுதான் என உணருங்கள். அறிவையும் உணர்வையும் நினைவையும் ஒன்றிணைத்து கருத்தில் வைத்து கண்களுக்குள் சென்று ஞானவினை புரிய சொல்லற்ற மவுனம் எனும் சொல்லும், மனமும் இறந்த சுகம் கிடைக்கும். நான் அனுபவித்த உண்மையான சுகத்தைச் சொல்லியாற அனுபவித்து உணர்ந்த துணைவர்கள் யாருமில்லையே.

ஐயிரண்டு திங்களா யடங்கிநின்ற தூமைதான்
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு மாகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாய மானதுஞ் சொல்லுகின்ற தூமையே. 206

இந்த உடல் உருவானது தூமை என்னும் தீட்டினால்தான். பத்து மாதம் தாயின் கருவறையில் வெளியேறாமல் அடங்கி நின்ற தீட்டினால் உடல் வளர்ந்தது. கைகள் இரண்டு, கால்கள் இரண்டு, கண்கள் இரண்டு ஆகி மெய்யாகிய உடல் திரண்டு உருவானது. அதில் சத்தம் கேட்கக் காதுகளும், ரசமாகிய சுவையை உணர வாயும், கந்தமாகிய மணம் உணர மூக்கும் தோன்றி தூய உடல் உருவானதும், உலகில் வாழ்வோர் சொல்லும் தீண்டத்தகாத தீட்டினால் உருவானது என்பதே உண்மை.

அங்கலிங்க பீடமு மசவைமூன் றெழுத்தினுஞ்
சங்குசக் கரத்திலுஞ் சகல வானகத்தினும்
பங்குகொண்ட யோகிகள் பரமவாச லஞ்சினும்
சிங்கநாத ஓசையுஞ் சிவாயமல்ல தில்லையே. 207

நம் அங்கத்தில் சூட்சமாக இலிங்க பீடமாக இருப்பதும் அசபை மந்திரம் எனும் “அ, உ, ம்” என்ற மூன்று எழுத்தாக இருப்பதும், சங்கு சக்கரங்களாகவும், சகல சராசரங்கலாகவும் இருப்பதும் மெய்ப்பொருளான சிவமே. இதனை அறிந்து ஆகாயமான தன் மனத்தில் ஈசனையே நினைந்து வாசியோகம் செய்யும் யோகிகள் பத்தாவது வாசல் எனும் பரமபத வாசலில் நாத ஓசையை சேர்த்து பரமனைக் கண்டு ஐம்புலன்களையும் ஐந்தெழுத்தால் அடக்கி தியானத்தில் இருப்பார்கள்.

அஞ்செழுத்தும் மூன்றெழுத்து மென்றுரைக்கு மன்பர்கா
ளஞ்செழுத்தும் மூன்றெழுத்து மல்லகாணு மப்பொருள்
அஞ்செழுத்து நெஞ்செழுத்தி லவ்வெழுத் தறிந்தபின்
அஞ்செழுத்தும் அவ்வின்வண்ண மானதே சிவாயமே. 208

அஞ்செழுத்து பஞ்சாக்கரமென்றும் மூன்றெழுத்து ஓங்காரம் என்றும் உரைத்து செபம் செய்யும் அன்பர்களே! ஈசன் அஞ்செழுத்தாகவோ, மூன்றெழுத்தாகவோ இருப்பதில்லை. “நமசிவய” நம் உடலே என்பதை உணர்ந்து, அதன் நெஞ்செழுத்து “சி“காரம் எனவும் அறிந்துகொள்ளுங்கள். அதுவே ஓரெழுத்து. அங்கிருந்துகொண்டு “சிவயநம” என்னும் பஞ்சாக்கரத்தை மனதில் செபிக்க வேண்டும். அப்பொழுது பிரமம் ஓரெழுத்தாகவும், அதுவே உயிராகவும் உள்ளதை உணர்வீர்கள். ஓரெழுத்திலே ஐந்தெழுத்தும் அடங்கி இருப்பதையும் அவ்வெழுத்தே பஞ்சாக்கரமாக ஐந்து வண்ணங்கள் ஆகி நிற்பதையும் அதிலேயே ஐந்து பூதங்களும் உள்ளதையும் அறிந்து உணர்ந்து ஞானவினை புரியுங்கள்.

ஆதரித்த மந்திர மமைந்த வாகமங்களும்
மாதர்மக்கள் சுற்றமும் மயக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ வெங்குமாகி நின்றதோ
சோதிபுக் கொளித்திடஞ் சொல்லடா சுவாமியே. 209

நித்திரை வந்தபொழுது, ஆகமங்களில் சொல்லியபடி வாழ்ந்து செபித்த மந்திரங்கள், மனைவி, மக்கள், சுற்றம் ஆகியவைகள் எங்கு சென்றன? நம் உடலில் உலவிய உயிர் எங்கு ஒளிந்தது? எங்குமாகி நிற்கும் ஆகாயத்தில் உலவியதோ? நம் உடலில் சோதி ஒளிந்திருக்கும் இடத்தைச் சொல்லித் தாருங்கள் சாமி.

அக்கர மனாதியோ வாத்துமா வனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களு மனாதியோ
தக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ
மிக்கவந்த யோகிகாள் விரைந்துரைக்க வேணுமே. 210

உடல் அனாதியா? உயிரான ஆன்மா அனாதியா? ஐம்பூதங்களும், ஐம்புலன்களும் அனாதியா? ஆராய்ந்தறிந்து விளக்கத்தக்க நூல்கள் அனாதியா? சதாசிவம் அனாதியா? யோக ஞானம் மிகுந்து மேற்கூறியவற்றை விளக்கவல்ல யோகிகளே! விரைந்து விளக்கம் தாருங்கள்.

ஒன்பதான வாசல்தா னொழியுநா ளிருக்கையில்
ஒன்பதாம் ராமராம நாமமென்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோ யடைப்பதாம்
அன்பரான பேர்கள்வாக்கி லாய்ந்தமைந் திருப்பதே. 211

ஒன்பது வாசல் கொண்ட உடல் ஒரு நாள் அழியும் என்ற உண்மை உணர்ந்து எந்நேரமும் இராமநாமம் செபித்து அவனைச் சரண் அடையுங்கள். இராமநாமம் செபிக்காத வஞ்சகர்களின் நாவில் நோய் வரும். அப்பொழுதும் அவர்களால் இராமநாமம் செபிக்க இயலாது. இராமனை வணங்கும் அன்பர்களின் நாவில் சதா சர்வகாலமும் இராமநாமம் ஒலிக்கும்.

அள்ளிநீரை யிட்டதே தகங்கையிற் குழைத்ததேது
மெள்ளவே மிணமிணவென்று விளம்புகிற்கு மூடர்காள்
கள்ளவேட மிட்டதேது கண்ணைமூடி விட்டதேது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர். 212

ஆற்றில் குளிக்கும்போது கைகளில் ஆற்று நீரையள்ளி ஆற்றிலே விட்டு, உள்ளங்கையில் விபூதி எடுத்து அதில் நீரை விட்டுக் குழைத்து உடம்பு முழுவதும் பட்டை போட்டு மெல்ல வாய்க்குள்ளேயே முணுமுணுவென்று மந்திரங்களைச் சொல்லும் மூடர்களே! ஏன் இந்தக் கள்ள வேடம்? மரணம் வந்தபோது கண்களை மூடிவிடுகிறீர்கள். இதனால் சாதித்ததேது? இவ்வாறு செய்யும் குருக்களே! இதன் தத்துவத்தை மெதுவாக விளக்கிக் கூறுங்கள்.

அன்னைகர்ப்பத் தூமையி லவதரித்த சுக்கிலம்
மின்னையே தரித்தும் பனித்துளிபோ லாகுமே
உன்னிதொக் குளழலுந் தூமையுள்ளே யடங்கிடும்
பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே. 213

பித்தர்களே! தாயின் கர்ப்பத்தில் உள்ள தூமையில் சேர்ந்த சுக்கிலம் மின்னலைப் போன்ற ஒளியால் தரித்து பனித்துளி போலாகி உயிர் உண்டாகும். அவ்வுயிரே உடல் எடுத்து தாயின் வயிற்றுக்குள் உழன்று பத்து மாதம் தூமையின் உள்ளேயே அடங்கி இருக்கும். பின்னர் குழந்தையாகப் பிறக்கிறது. இப்படி நாம் பிறந்ததே தீட்டினால்தான் என்றும், அத்தூமையில்தான் ஈசன் இருக்கிறான் என்பதனையும் உணர்ந்து கொண்டு யாரையும் தீட்டு என்று ஒதுக்காதீர்கள்.

அழுக்கறத்தி னங்குளித் தழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்த தவ்விட மழுக்கிலாத தெவ்விடம்.
அழுக்கிருந்த தவ்விடத் தழுக்கறுக்க வல்லிரேல்
அழுக்கிலாத சோதியோ டணுகிவாழ லாகுமே. 214

அழுக்குப் போகவேண்டும் என்று தினந்தினம் நீரில் குளித்தும் அழுக்கு அகலாத மனிதர்களே! மாயையாம் அழுக்கு எவ்விடத்தில் உள்ளது? அந்த அழுக்கு இல்லாத இடம் எது? மனதில் உள்ள மாயை, ஆசாபாசங்கள் முதலிய அழுக்குகளை ஒழிக்க முடியுமானால் மாசற்ற சோதியாம் ஈசனோடு சேர்ந்து வழலாம்.

அனுத்திரண்ட கண்டமா யனைத்துபல் யோனியாய்
மனுப்பிறந் தோதிவைத்த நூலிலே மயங்குறீர்
சனிப்பதேது சாவதேது தற்பரத்தி னூடுபோய்
நினைப்பதேது நிற்பதேது நீர்நினைந்து பாருமே. 215

விந்து அணுக்களால் திரண்டு உருவானது உடம்பு. அகண்டத்தில் உள்ள பலவிதமான யோனிகளில் கருத்தரித்து, பலவிதமான உயிரினங்களாக வாழ்கின்றன. மனிதனின் பிறப்பும் அவ்வாறே. முன்னால் வந்தவர்கள் சொல்லி வைத்த சாற்றிறங்களைப் படித்து உள் மெய்யை உணராது மயங்குகிறீர்கள். ஆன்மா பிறப்பதோ இறப்பதோ இல்லை. ஒன்று மற்றொன்றாக மாறி வருகின்றது. நினைவாக இருப்பது எது? என்றும் நிலையாக நிற்பது எது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.. தற்பரமாம் ஆகாயத்திற்குள்ளே நீங்கள் சென்று நினைவினில் நின்று பாருங்கள்.

ஆதியாகி யண்டாண்ட மப்புறத்து மப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை
போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள்
சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை யில்லையே. 216

அனைத்துக்கும் ஆதியாகவும், அண்டங்களுக்கு அப்பாலும் சோதியாக நின்றும், சுருதியுடன் கூடிய நாதலயமாகவும் விளங்கும் ஈசனாம் சோமனை, யாரும் போதிக்காமல் தனக்குள் உணர்ந்த ஞானிகள் அவனையே நினைவில் வைத்திருப்பர்; எல்லோருக்குள்ளும் அவன் இருப்பதை உணர்ந்ததால் சாதி பேதம் பார்க்காமல் ஈசனையே அனைவரிடமும் காண்பார்கள்.

ஆக்கைமூப்ப தில்லையே யாதிகா ரணத்திலே
நாக்கைமூக்கை யுள்மடித்து நாதநாடி யூடுபோய்
எக்கறுத்தி ரெட்டையு மிறுக்கழுத்த வல்லிரேல்
பார்க்கப்பார்க்க திக்கெலாம் பரப்பிரம்ம மாகுமே. 217

ஆக்கையாகிய உடலில் உள்ள ஆதியான ஆன்மாவிற்கு மூப்பு என்பதில்லை. ஆன்மா ஆதியாக இருப்பதால் உடல் மூப்பு அடைந்தாலும் ஆன்மா என்றும் இளமையோடு உள்ளது. நாக்கை உள் மடித்து மூக்கில் இழுக்கும் வாயுவை இடகலை பிங்கலையாக ஓடும் மூச்சுக் காற்றுடன் கலந்து, உண்ணாக்கினுள் செலுத்தி நடு நாடியில் கலந்து, பலமான விசையுடன் ஊதினால் நாதம் உண்டாகும். எக்கி எட்டு ரெண்டும் பத்து அக்கரத்தால் கபாலத்துக்குள்ளே வாசியை இறுக்கி அழுத்தி வைத்து ஞானவினை புரிய வல்லவர்கள் ஆனால் பார்க்கும் திசைகளில் எல்லாம் அவர்களுக்கு பரப்பிரம்மமாய்க் காட்சி தரும்.

அஞ்செழுத்தி னாதியா யமர்ந்துநின்ற தேதடா
நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீசெபிப்ப தேதடா
அஞ்செழுத்தின் வாளதா லறுப்பதாவ தேதடா
பிஞ்செழுத்தி னேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே. 218

நெஞ்சை அழுத்தி நின்றுகொண்டு செபம் செய்வது எதனால்? அஞ்செழுத்து வாளால் மனதில் இருந்து அறுத்து எறிவது எவைகளை? அஞ்செழுத்தில் ஓர் எழுத்தாய் அனாதியாய் அமர்ந்து நின்றது “சி“காரமே. பஞ்சாக்கரத்தில் சக்தியைக் குறிக்கும் ‘வ‘ என்ற எழுத்து. அதுவே பிஞ்செழுத்து. அதன் மகிமையைப் பிரித்து உரையுங்கள்.

அஞ்சுமஞ்சு மஞ்சுமஞ்சு மல்லல்செய்து நிற்பதும்
அஞ்சுமஞ்சு மஞ்சுமே யமர்ந்துளே யிருப்பதும்
அஞ்சுமஞ்சு மஞ்சுமே யாதரிக்க வல்லிரேல்
அஞ்சுமஞ்சு மும்முளே யமர்ந்ததே சிவாயமே. 219

மானுட உடலில் ஐந்து பூதங்களும் ஐந்து புலன்களும் ஐந்து கோசங்களும் ஐந்து அவத்தைகளாகவும் இருந்து அல்லல் செய்து நிற்கிறது. அஞ்செழுத்தாகிய நமசிவய என்ற பஞ்சாக்கரமே நமது உடல். ஐந்து பூதங்களாகவும் ஐந்து புலன்களில் இயங்கும் அஞ்செழுத்தை நமசிவய என பலுக்கித் தியானிக்க வேண்டும். அஞ்செழுத்தின் உட்பொருள் யாவையும் நன்கு உணர்ந்து உடலையும் உயிரையும் பாதுகாத்து அஞ்செழுத்தை ஓதி வருபவர்கள், அஞ்செழுத்துக்களாகவும் ஐந்து வண்ணங்களாகவும் இருந்து ஈசன் தனக்குள்ளேயே அமர்ந்திருப்பதை உணரலாம்.

சுழித்தவோ ரெழுத்தையுஞ் சொன்முகத் திருத்தியே
துன்பவின்ப முங்கடந்து சொல்லுமூல நாடிகள்
அழுத்தமான வக்கர மங்கியுள் ளெழுப்பியே
ஆறுபங்க யங்கலந் தப்புறத் தலத்துளே. 220

சுழித்த ஒரே எழுத்து “அ“காரம். அதுவே கண்கள். அங்குள்ள சூரிய சந்திர கலைகளை எழுப்பி மூல நாடியான அக்கினி கலையுடன் கலக்கவேண்டும். இதனால் ஏற்படும் இன்ப துன்பங்களைக் கடந்து அழுத்தமாக அக்கினி கலையை மேல் ஆதாரங்கள் வழியாக மேலே உள்ள தலத்தில் நிறுத்தவேண்டும். இதுவே வாசியோகம்.

உயிரிருந்த தெவ்விட முடம்பெடுத்த தின்முனம்
உயிரதாவ தேதடா வுடம்பதாவ தேதடா
உயிரையு முடம்பையு மொன்றுவிப்ப தேதடா
உயிரினா லுடம்பெடுத்த வுண்மைஞானி சொல்லடா. 221

இந்த உடலை எடுப்பதற்கு முன் உயிர் எங்கு இருந்தது? உயிர் ஆவது எது? உடம்பாக ஆவது எது? உயிரையும் உடம்பையும் ஒன்றாக்குவது எது? உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானியே சொல்லுங்கள். உடலாக உருவெடுக்கும் முன்ப உயிர் ஆகாயத்தில் இருந்தது. உடல் அம்மையின் கருவில் உள்ள தீட்டு. உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது சிவம். அனைத்தும் அச்சிவமே.

உருத்தரிப்ப தற்குமுன் னுயிர்புகுந்த நாதமும்
கருத்தரிப்ப தற்குமுன் காயமென்ன சோணிதம்
அருட்டரிப்ப தற்குமுன் னறிவுமூலா தாரமாம்
குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடும் குருக்களே. 222

குணங்கெடும் குருக்களே! உடல் உருவாவதற்கு முன் உயிர் வானத்தில் நாதமாக இருந்தது. கருத்தரிப்பதற்கு முன்பு உடல் தாயின் கருவறையில் சுரோணிதமாய் இருந்தது. உயிரும் உடலும் சேர்ந்து வளர்வதற்கு இறையருள் மூலாதாரத்தில் இருந்தது. இப்படி வெளிவந்த உடலில் உயிர் சூக்குமாய் இருப்பதைக் குறித்தறிந்து கொள்ளுவீர்கள்.

எங்குமுள்ள வீசனா ரெம்முடல் புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென்று அணுகிலார்
எங்கள்தெய்வ முங்கள்தெய்வ மென்றிரண்டு பேதமோ
உங்கள்பேத மன்றியே வுண்மை இரண்டு மில்லையே. 223

எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஈசன் எனது உடலில் இயக்குவோனாகப் புகுந்திருந்தான் என்பதை என்னிலே உணர்ந்து கொண்டேன்பிறைவன் ஒன்றே. அவனுக்குப் பல பெயரிட்டு பங்கு போட்டு பேசுவோர்கள், அவனை அடைவதற்குரிய உண்மையான வழியை அறிந்து அதன் வழி செல்ல முயலமாட்டார்கள். எங்கள் தெய்வமே பெரிதெனவும், உங்கள் தெய்வம் சிறிது எனவும் பேசி இறைவனை பேதப் படுத்துவார்கள். இது உங்களது அறியாமையால் விளைந்த பேதம்தான். இறைவனில் பேதம் இல்லை.

அரியுமாகி யயனுமாகி யண்டமெங்கு மொன்றதாய்ப்
பெரியதாகி யுலகுதன்னில் நின்றபாத மொன்றலோ
விரிவிதென்று வேறுசெய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாருமிங்கு மங்குமெங்கு மொன்றதே. 224

ஈசன் இந்த அண்டமெங்கும் ஒன்றாய் விளங்குகிறான். திருமாலாய், பெரும்மா(பிரம்மா)வாய், அனைத்துமாய் பெரியதாகி உலகில் விளங்கும் திருவடி ஒன்றே. மால், பிரம்மா, சிவன் என மூவரையும் வேறுபடுத்தி விளக்கம் இதுதான் என்று வாதாடும் வேடதாரி மூடர்களே! மூவரும் ஒன்றாகி உனக்குள்ளேயே அறிவாக இருப்பதை அறிவால் அறிந்து உண்மையை உணர்ந்து பாருங்கள். ஈசன், இங்கும், அங்கும், எங்குமே ஒன்றே!

வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமுந் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினஞ்செபிக்கு மந்திரம்
முந்தமந்தி ரத்திலோ மூலமந்திரத்திலோ
எந்தமந்தி ரத்திலோ வீசன்வந் தியங்குமே. 225

வெந்த விபூதியைக் குழைத்து உடல் முழுவதும் பூசி சிவஞானி போல் வேடம் போடுகிறீர். ஈசன் இவ்வுடலில் வந்து இயங்குவது எந்த மந்திரத்தால்? அறிவீர்களா? நீங்கள் மனதில் நினைத்து தினம் செபிக்கும் மந்திரத்தாலா, முதலில் தோன்றிய ஆதி மந்திரத்தாலா, அல்லது மூலமந்திரத்தாலா?

அகாரகா ரணத்திலே யனேகனேக ரூபமாய்
உகாரகா ரணத்திலே யுருத்தரித்து நின்றனன்
மகாரகா ரணத்திலே மயங்குகின்ற வையகம்
சிகாரகா ரணத்திலே தெளிந்ததே சிவாயமே. 226

அகாரம், உகாரம், மகாரம் சேர்ந்து ஓங்காரமானது. அகாரம் உடலானது. அனேக உருவங்களில் வாழ்கின்றன. உகாரம் உருவாகி உயிர் தரிப்பதற்குக் காரணம். வையகம் முழுதும் மயங்குவதற்குக் காரணம் மகாரமே. ஓங்காரமே அனைத்தும் தோன்றுவதற்கு காரணம். இம்மயக்கம் தீர சிகாரத்தைப் பிடித்து ஞானவினை புரியுங்கள். அகம் தெளிந்து சிவம் விளங்கும்.

அவ்வெழுத்தி லுவ்வுவந் தகாரமுஞ் சனித்ததோ
உவ்வெழுத்து மவ்வெழுத்து மொன்றையொன்றி நின்றதோ
செவ்வையொத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வையொத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே. 227

அ, உ, ம் ஆகிய அக்கரக்கங்கள் சேர்ந்து ‘ஓம்‘ ஆகியது. இதைத்தான் அவ், உவ், மவ் என்றும் அம், உம், இம் என்றும் சொல்கின்றனர். அவ்வும் உவ்வும் ஆகிய நாத விந்து சேர்ந்தே அகாரமாகிய உடல் உருவானது. உவ்வும் மவ்வும் ஆகிய உயிரும் மனமும் ஒன்றாகி ஒன்றி நிற்கின்றது. இங்ஙனம் ஓங்காரம் செம்மையான பொருளாய் இருப்பதை அறிந்து, உடலுயிராய் நிற்பதை உணரவேண்டும். பின்னர் ஞானவினை புரியவேண்டும். இவ்வாறு ஞானவழி நிற்கும் நற்குணம் நிறைந்த ஞானிகள் உலகோருக்கு இவைகளை விளக்கமாக உபதேசிக்க வேணும்.

ஆதியான வஞ்சிலு மனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலுஞ் சொரூபமற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்துநின்ற வத்துவை
ஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே. 228

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களும் ஆதியாக உள்ளவை. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கும் அந்தக் கரணங்கள். அகாரம், உகாரம், மகாரம் ஆகிய மூன்றும் சோதி. சூரிய சந்திர கலை ஆகிய இரண்டும் உருவமில்லாதவை. இவையெல்லாம் சேர்ந்து எல்லோர்க்கும் பொது நீதியாக விளங்கும் வத்து ஒன்றிலே நிறைந்து நிற்கிறது. இந்த வத்துவை அறிந்து, அதுவே ஆதியென உணர்ந்து ஐந்தெழுத்தால் தியானம் செய்யுங்கள்.

வானிலாத தொன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாத தொன்றுமில்லை யூனுமில்லை யூனிடில்
நானிலாத தொன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாத தொன்றுமே தயங்கியாடு கின்றதே. 229

ஆகாயம் இல்லாதது ஒன்றும் இல்லை. ஒன்றும் இல்லாததே ஆகாயம். உடல் இல்லாத உயிர் ஒன்றுமில்லை; அப்பொழுது உடலும் இல்லை. உடல் இல்லை என்பதை நினைவில் நிறுத்து. நான் என்பது என்ன என்பதை உணர். நான் என்ற ஆணவம் இல்லாது ஞானவினை புரியுங்கள். நான் என்பதற்று தானாக நின்றது ஒன்றான சிவம் என உணரலாம். அச்சிவம் உன் உடலில் தங்கி இயங்கி ஆடுகின்றது. அத்திருவடி பற்றினால் சிவநிலை கிட்டும்.

விழுத்தகண் குவித்தபோ தடைந்துபோ யெழுத்தெலாம்
விளைந்துவிட்ட விந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி யனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே. 230

விழித்திருக்கும் அகக்கண்ணில் எண்ணங்களைக் குவித்தால் ஓங்காரம், பஞ்சாட்சரம் என்ற எழுத்துக்கள் எல்லாம் அங்கேயே அடைந்து போய் மெய்யான மவுனம் கிட்டும். இந்திரியங்களால் விளைந்த வீடாகிய உடலில் உள்ள ஆகாயத்தில் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கையும் அங்கேயே அழுத்தி நிறுத்தி உடலையும் உயிரையும் ஒன்றாக்கி பேரின்பத்தை அனுபவிக்கும் நேரத்தில் ஈசனில் ஒன்றலாம். அப்போது ஈசனுண்டு; நான் இல்லை.

நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி யோடுறீர்
நல்லமஞ் சனங்களுண்டு நாதனுண்டு நம்முளே
எல்லைமஞ் சனங்கள்தேடி யேகபூசை பண்ணினால்
தில்லைமேவுஞ் சீவனுஞ் சிவபதத்து ளாடுமே. 231

ஈசனுக்குத் திருமுழுக்காட்டு செய்ய எண்ணி, அதற்கெனத் தேவையான பொருள்களை நல்லதாகப் பார்த்து நாடிநாடித் தேடி ஓடுகிறீர்கள். நமக்குள்ளேயே நல்ல மஞ்சனங்கள் உண்டு, நாதனான ஈசன் உண்டு. நமக்குள் எல்லையாக இருக்கும் மனதில் நல்ல எண்ணங்களால் மனமுருகித் திருமுழுக்காட்டு செய்து ஒரே மனதாக ஈசனை எண்ணித் தியானியுங்கள். தில்லையாம் ஆகாயத்தலத்தில் உள்ள சீவன், சிவனின் திருவடியைச் சேர்ந்து நடனமாடும்.

உயிரகத்தில் நின்றிடு முடம்பெடுத்த தற்குமுன்
உயிரகார மாயிடு முடலுகார மாயிடும்
உயிரையு முடம்பையு மொன்றுவிப்ப தச்சிவம்
உயிரினா லுடம்புதா னெடுத்தவா றுரைக்கினே. 232

உடம்பு எடுப்பதற்கு முன் உயிர் அகத்தில் உள்ள ஆகாயத்தில் நின்றிருக்கும். உயிர் அகாரமான சிவனாகவும் உடல் உகாரமான சக்தியாகவும் இருக்கும். உயிரையும் உடலையும் ஒன்று சேர்ப்பது சிவம். இவ்வாறு உயிர் உடம்பெடுத்து வந்ததை உரைக்கிறேன்.

அண்டமேழு முழலவே யனந்தயோனி யுழலவே
பண்டுமா லயனுடன் பரந்துநின் றுழலவே
எண்டிசை கடந்துநின் றிருண்டசத்தி யுழலவே
அண்டரண்ட மொன்றதா யாதிநட்ட மாடுமே. 233

அண்டங்கள் ஏழும் சுற்றிக்கொண்டே இருக்கின்றது. அனந்த கோடி யோனியில் உதித்த உயிர்களும் சுற்றி உழன்று கொண்டிருக்கின்றது. உங்கள் உடலில் திருமால் முகுளமாகவும், பிரமன் மனமாகவும் இருந்து உழன்று கொண்டு உள்ளனர். இவர்கள் உடலின் உள்ளேயே காத்தும், படைத்தும் வருகிறார்கள். எண்திசைக்கு அப்பாலாய் கடந்து நின்ற இருளான சக்தி உழலவே அண்டங்கள் அனைத்தும் ஒன்றதாகிவிடும். அப்போது உடலில் நின்ற ஆதி உனக்குள் நடனமாடும்.

உருவநீ ருறுப்புகொண் டுருத்தரித்து வைத்திடும்
பெரியபாதை பேசுமோ பிசாசையொத்த மூடரே
கரியமாலு மயனுமாக காணொணாத கடவுளை
உரிமையாக வும்முளே யுணர்ந் துணர்ந்து கொள்ளுமே. 234

நீராக இருக்கும் விந்து முட்டையில் கலந்து முழு மனிதனாக உருவெடுக்கிறது. மனிதனானபின், இந்த வழியில் சென்றால்தான் இறைவனைக் காணலாம், பக்தி வழிதான் சிறந்தது எனப் பல வழிகளிலும் அலந்தால் பலன் இல்லை. பிசாசைப்போல அங்கும் இங்கும் அலைந்து திரியும் மூடர்களே! திருமாலும் பிரமனும் தேடி அடிமுடி காண முடியாத ஈசனை உனக்குள்ளேயே உரிமையாகக் கண்டு உணர்ந்து ஞானவினை புரியுங்கள்.

பண்ணிவைத்த கல்லையும் பழம்பொரு ளதென்றுநீர்
எண்ணமுற்று மென்னபே ருரைக்கிறீர்க ளேழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்து வைத்தளிக்கவும்
ஒண்ணுமாகி யுலகளித்த வொன்றை நெஞ்சிலுண்ணுமே. 235

ஏழைகளே! தெய்வம் என்று மனிதன் செய்து வைத்துள்ள கற்சிலையைப் பழமையான தெய்வம் என்று எண்ணிப் பல பெயரிட்டு அழைக்கிறீர்கள். எதையும் செய்யவும், உண்டாக்கிப் படைக்கவும், காத்து அளிக்கவும், ஒன்றாகிய இறைவனை, இவ்வுலகை அளித்த ஒன்றை, ஈசனை உள்ளத்தில் நிறுத்தி எண்ணித் தவம் செய்யுங்கள்.

நாலதான யோனியுள் நவின்றவிந்து மொன்றதாய்
ஆலதான வித்துளே யமர்ந்தொடுங்கு மாறுபோல்
சூலதான வுற்பனஞ் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே. 236

யோனிகள் நான்கு: ஊர்வன, பறப்பன, விலங்கினம், மனிதன். இவ்வகை யோனிகளுள் விந்து விழுந்து சூலாகிய கருப்பம் தரிக்கிறது. ஒரு சிறிய ஆல வித்துக்குள்தான் மிகப் பெரிய ஆலமரம் ஒடுங்கி உள்ளது. அவ்வாறே ஒரு துளி விந்துக்குள் இவ்வுடல் ஒடுங்கியுள்ளது. இதனை அறிந்த மேன்மையான ஞானிகள், உலகோருக்கு விளக்கிச் சொல்லுங்கள்.

அருவமா யிருந்தபோ தன்னையங் கறிந்திலை
உருவமா யிருந்தபோ துன்னைநா னறிந்தனன்
குருவினால் தெளிந்துகொண்டு கோதிலாத ஞானமாம்
பருவமான போதலோ பரப்பிரம மானதே. 237

ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய ‘சிவய‘ என்ற அக்கரத்தில் ஆன்மா உருவின்றி இருந்தபோது அங்கு அன்னையால் கூட உன்னை அறியமுடியவில்லை. நீர், மண் ஆகிய ‘நம‘ என்றதில் சேர்ந்து உருவாகி ஐம்பூதங்களும் சேர்ந்து உடலாகி இருந்தபோது உன்னை நான் அறிந்து கொண்டேன். குரு தொட்டுக்காட்டி சொல்லித்தந்த குறையில்லாத ஞானம் என்னைத் தெளிய வைத்தது. ஞானவினையைத் தொடர்ந்து செய்து, தக்க பருவம் வந்தபோது பரப்பிருமத்தை உணர்ந்து அத்துடன் கலந்தேன்.

பிறப்பது மிறப்பதும் பிறந்திடா திருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறந்ததைத் தெளிந்ததும்
துறப்பதுந் தொடுப்பதும் சுகித்துவாரி யுண்பதும்
பிறப்பது மிறப்பதும் பிறந்தவீ டடங்குமே. 238

உலகில் பிறப்பதும், இறப்பதும், மீண்டும் பிறந்திடாது இருப்பதும் ஈசன் செயல். தன்னை மறந்து இருப்பதும், தன்னையே நினைந்து இருப்பதும், என்னுள்ளே மறைந்திருந்த ஈசனை அறிந்தபின் தெளிந்து, பின்னர் உலக சுகங்களைத் துறந்து அவனையே எண்ணித் தவம் புரிந்ததும், அப்போது கிடைத்த அமிர்தத்தை வாரி உண்பதும் ஆகியவை எல்லாம் பிறக்கவும் இறக்கவுமாக இருக்கும் பிறந்த வீடாக விளங்கும் உள்ளத்தில் அடங்கியுள்ளது.

கண்ணிலே யிருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே யிருப்பனே மேவியங்கு நிற்பனே
தன்னுளே யிருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே யிருப்பனே யெங்குமாகி நிற்பனே. 239

பாற்கடலை கடைந்த திருமால் கண்ணின் கருமணியில் உள்ளான். விண்ணாக விளங்கும் மனத்தை மேவி அங்கு நிற்பான். இந்த தராதலம் படைத்த பிரம்மன் தனக்குள்ளே இருப்பான். ஈசன் என்னுள்ளே எங்குமாகி நிற்பான். ஆக மும்மூர்த்திகளையும் உடலில் காணுங்கள்.

கண்ணிலே யிருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே யிருப்பனே மேவியங்கு நிற்பனே
தன்னுளே யிருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே யிருப்பனே யெங்குமாகி நிற்பனே. 240

பாற்கடலை கடைந்த திருமால் கண்ணின் கருமணியில் உள்ளான். விண்ணாக விளங்கும் மனத்தை மேவி அங்கு நிற்பான். இந்த தராதலம் படைத்த பிரம்மன் தனக்குள்ளே இருப்பான். ஈசன் என்னுள்ளே எங்குமாகி நிற்பான். ஆக மும்மூர்த்திகளையும் உடலில் காணுங்கள்.

எள்ளிரும்பு கம்பளி யிடும்பருத்தி வெண்கலம்
அள்ளியுண்ட நாதனுக்கோ ராடைமாடை வத்திரம்
உள்ளிருக்கும் வேதியர்க் குற்றதான மீதிரால்
மெள்ளவந்து நோயனைத்து மீண்டிடுஞ் சிவாயமே. 241

பசியென வந்தோருக்கு அன்னமிட்டு, தானியங்கள், கம்பளிப் போர்வை, பருத்தி ஆடை, வெண்கலப் பாத்திரங்கள் போன்றவைகளைத் தானமாக கொடுத்து, தர்மங்கள் செய்து வாழ வேண்டும். முதுமையினால் உடல் நலிந்து வீட்டுக்குள் இருக்கும் வேதியர்களுக்குத் தேவையான உதவிகளை தேடிச் சென்று செய்து, தானம் கொடுக்க வேண்டும். இவ்வாறு தான தர்மங்கள் செய்பவர்களுக்கு மெள்ள வந்த நோய்கள் அனைத்தும் அவர்களை விட்டு விலகும். தான தர்மம் செய்வது ஈசனைச் சேர வழி.

ஊரிலுள்ள மனிதர்கா ளொருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத் திழுக்கிறீர்
ஆரினாலும் மறியொணாத வாதிசித்த நாதரை
பேதையான மனிதர்பண்ணும் பிரளிபாரும் பாருமே. 242

கோயில் திருவிழாக்களில் தேர் இழுப்பது வழக்கம். ஊரில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒருமனதாய் ஒன்றாகக்கூடி தேரில் வடக்கயிற்றைக் கட்டி, செம்பினால் ஆன மூர்த்தங்களை வைத்து இழுக்கிறார்கள். தன் உடலைத் தேராக ஆக்கி, யாராலும் அறிய முடியாத ஆதிசித்த நாதனான ஈசனை அதனுள் இருத்தி, வாசியைக் கயிறாக ஆக்கித் தேரில் உள்ள ஈசனை இழுக்கவேண்டும். தன் உடலில் சோதியாக ஈசன் இருப்பதை உணராத பேதை மனிதர்கள் பண்ணும் பிரளியைப் பாருங்கள்.

மருள்புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே
குருக்கொடுத்த மந்திரங் கொண்டுநீந்த வல்லிரேல்
குருக்கொடுத்த தொண்டருங் குகனொடிந்த பிள்ளையும்
பருத்திபட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே. 243

சிந்தையில் அருளுக்குப் பதில் மருள் புகுந்ததால் மாயையில் சிக்கி மயங்குகின்ற மாந்தர்களே! குரு கொடுத்த மந்திரத்தால் ஞானவினை புரிந்து ஈசனை உணர்ந்து தெளியுங்கள். சிந்தையில் சிவம் இருப்பதை உணருங்கள். பருத்தி ஆடை ஆவதற்கு முன் பஞ்சானது பன்னிரண்டு பாடுபட்டே உடையாக மாறுகிறது. அதுபோல ஞானகுருவிடம் சீடராகப் பன்னிரண்டு ஆண்டுகள் இருந்து ஞானப்பாடுபட்டு என்றும் மாறா இளமையுடன் இருக்கும் ஈசனின் பிள்ளை முருகனை போல் நீங்களும் ஆகுங்கள்.

அன்னைகர்ப்ப வறையதற்கு ளங்கியின்பிர காசமாய்
அந்தறைக்குள் வந்திருந் தரியவிந்து ரூபமாய்
தன்னையொத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய்
தங்கநற் பெருமைதந்து தலைவனாய் வளர்ந்ததே. 244

தாயின் கர்ப்ப அறையினுள் தீயின் ஒளியுடன் வந்த விந்து அங்கிருந்த முட்டையில் சேர்ந்து உருவாக்கி உடலாகிறது. அது முழு வளர்ச்சியுற்று தன்னைப் போல் கை, கால், தலை, முதலியவைகளுடன், தடை அனைத்தையும் உடைத்து வெளி வருகிறது. பின் அதுவே இப்பூமியில் தங்கி வளர்ந்து பல பெருமைகளையும் பெற்றுத் தலைவனாய் வாழ்கிறது. எல்லாம் விந்துவில் உள்ள சோதியில்தான் என்பதை உணருங்கள்.

உன்னையற்ப நேரமு மறந்திருக்க லாகுமோ
உள்ளமீ துறைந்தெனை மறைப்பிலாத சோதியை
பொன்னைவென்ற பேரொளிப் பொருவிலாத வீசனே
பொன்னடிப் பிறப்பிலாமை யென்றுநல்க வேணுமே. 245

உள்ளம் எனும் கோயிலிலே உள்ள மறைப்பில்லா சோதியாக என்னுள் விளங்கும் ஈசனே! ஒரு நொடி நேரம்கூட உன்னை என்னால் மறந்து இருக்க முடியாது. பொன்னையும் மிஞ்சி சொக்கத் தங்கமான பேரொளியாக பொருந்தி விளங்கும் ஈசனே! உன் பொன்னான திருவடியை என் தலை மேல் வைத்துள்ளாய். அதைப் பிடித்து மேலேறி, நான் பிறவா நிலை நான் பெற அருள்புரியாய்.

பிடித்ததெண்டு மும்மதோ பிரமமான பித்தர்காள்
தடித்தகோல மத்தைவிட்டு சாதிபேதங் கொண்மினோ
வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மைகூற வல்லிரேல்
திடுக்கமுற்ற வீசனைச் சென்றுகூட லாகுமே. 246

பித்தர்களே! உங்களுக்குப் பிடித்தவைகள் எல்லாம் என்றும் உங்களுக்கு சொந்தமோ? பிரமமே அனைவராயும் உள்ளது. இதை அறியாமல் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற சாதி பேதங்கள் கொள்ளாதீர்கள். உங்களுக்குள்ளேயே ஓரெழுத்தாக வடிவம் கொண்டிருக்கும் சிவத்தின் உண்மைகள் யாவையும் உணர்ந்து தெளிந்து ஞானவினை புரிந்தீர்களானால் ஈசனை அடையலாம்.

சத்திநீ தயவுநீ தயங்குசங்கி னோசைநீ
சித்திநீ சிவனுநீ சிவாயமா மெழுத்துநீ
முத்திநீ முதலும்நீ மூவரான தேவர்நீ
அத்திபூர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே. 247

சக்தியான அம்மை நீ, தயாவாகிய கருணை நீ, திருமாலின் சங்கோசை நீ, சித்தி நீ, சீவனிலாடும் சிவனும் நீ, சிவாயநம எனும் ஐந்தெழுத்தும் நீ, முத்தி தருபவன் நீ, உயிரின் முதலாம் ஆதி நீ, மும்மூர்த்திகளும் நீ, பூரணமான அகத்தீயுமாய் என்னுள் இருக்கும் ஈசனே! நீ எனக்குள் சீவனாய் இருப்பதை அறிந்து உணர்ந்து கொண்டேன்.

சட்டையிட்டு மணிதுலங்குஞ் சாத்திரச் சழக்கரே
பொத்தகத்தை மெத்தவைத்து போதமோதும் பொய்யரே
நிட்டையேது ஞானமேது நீரிருந்த வட்சரம்
பட்டைஏது சொல்லிரே பாதகக் கபடரே. 248

பளபளக்கும் பட்டுச்சட்டைகளை அணிந்து கொண்டு கழுத்தில் மணிமாலைகள் மின்ன, சாத்திரங்களை இட்டமுடன் வளைத்துப் பேசி மயக்கும் சாத்திரச் சழக்கரே! பொத்தகங்களை மட்டும் படித்துவிட்டு போதனை செய்யும் பொய்யர்களே! நிட்டை என்பது எது? ஞானம் என்பது எது? திருநீறாக தெய்வம் இருந்த அட்சரம் எது? பட்டை போடுவது எதற்காக என்னும் வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் கபட வேடதாரிகளே!

உண்மையான சுக்கில முபாயமா யிருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்துநீர தானதும்
தண்மையான காயமே தரித்துருவ மானதும்
தெண்மையான ஞானிகாள்தெளிந் துரைக்க வேணுமே. 249

உண்மையான விந்துவே சுக்கிலமாகி உயிர் உருவாகக் காரணம். யாவற்றையும் அறிந்த ஞானிகளே! வெண்மை நிறமான அவ்விந்து சுரோணிதத்தில் விரைந்து கலந்து நீராகிக் கருவாகிப் பின் உடலாக உருவானதையும், அதன் தத்துவங்களையும் தெளிவாக உலகோருக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமே.

வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தி னுண்மையை யறிகிலாத மாந்தர்காள்
வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லிரேல்
அஞ்செழுத்தி னுண்மையை யறிந்துகொள்ள லாகுமே. 250

அஞ்செழுத்தால் ஆகிய இவ்வுடல் எதற்குக் கிட்டியது எனும் உண்மையை அறியாத மாந்தர்களே! வஞ்சகப் பிறவியாம் மானிடப் பிறவியின் மேல் ஆசை கொண்டு, அதனால் இன்னல்பல பட்டு வாழும் மனிதர்களே! மனதின் ஆசைகளைக் களைந்து, ஞானவினை புரிந்து இப்பிறவியை அறுக்க முடியுமானால், ஐந்தெழுத்தின் உண்மைத் தத்துவத்தை அறியமுடியும்.

காயிலாத சோலையிற் கனியுகந்த வண்டுகள்
ஈயிலாத தேனையுண் டிராப்பக லுறங்குறீர்
பாயிலாத கப்பலேறி யக்கரைப் படுமுனே
வாயினா லுரைப்பதாகு மோமவுன ஞானமே. 251

காயே இல்லாமல் அனைத்தும் கனிகளாகக் காய்த்துள்ள சோலையில், வண்டுகள் கனிக்குள் புகுந்து, உண்டு, அதன் சுவையில் மயங்கி எந்நேரமும் அதற்குள்ளேயே கிடந்து அழிந்து விடுவதைப் போல, ஈ இல்லாத தேனைப்போல் உள்ள உலக இன்பங்களில் அமிழ்ந்து இராப்பகல் முழுதும் உறங்குகிறீர். உங்கள் உடலில் உள்ள காயில்லாக் கனி நிறைந்த கற்பகத் தரு எங்கே உள்ளது. ஈ மொய்க்காத் தேனாம் அமிர்தம் எங்கே உள்ளது. இவையெல்லாம் அறிந்து ஞானவினையாற்ற, பாய்மரம் இல்லாத கப்பலாம் நம் உடலை வைத்துக்கொண்டு பிறவிப் பெருங்கடல் தாண்டலாம். அப்பொழுது கிட்டும் இன்பத்தை வாயினால் சொல்ல முடியாது; உணர்வால்தான் உணர முடியும். அந்த நிலைதான் மவுனம்.

பேய்கள்பேய்க ளென்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுதோ
ஆதிபூசை கொள்ளுமோ வனாதி பூசை கொள்ளுதோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. 252

பேய்கள், பிசாசுகள் என்று பொய்களைப் பிதற்றி அவைகளுக்குப் பூசைகள் போடும் பேயர்களே! பேய்களும் பிடாரிகளும் பூசையை ஏற்றுக்கொள்கின்றவா? ஆதிசக்தி பூசையை ஏற்றுக்கொள்ளுமோ? அநாதியான ஈசன் பூசையை ஏற்றுக்கொள்கின்றானா? உடலெடுத்து வாழும் பேராசைப் பேய்களான மனிதனே பூசை செய்து அதனால் மற்றவர்களை ஏமாற்றிப் பொன்னும் பொருளும் பறித்து வாழ்கின்றனர். உலகோரே! இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

மூலமண்ட லத்திலே முச்சதுர மாதியாய்
நாலுவாச லெம்பிரான் நடுவுதித்த மந்திரம்
கோலிஎட் டிதழுமாய் குளிர்ந்தலர்ந்த தீட்டமாய்
மேலும்வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே. 253

நம் உடலில் மூலமண்டலமான இடம் கபாலம். அதற்குள் ஆதி முக்கோணச் சதுரத்துக்குள் உள்ளது. அங்கு நான்கு வாசல் உள்ளது. அனைத்துக்கும் நடுவில் உள்ள மந்திரம் உயிராம் சீவனே! இச்சீவன் எண்சாண் உடலெடுக்கும்; அல்லது குளிர்ந்து காய்ந்து தீட்டாக வெளிவரும். இதைத் தவிற வேறு எதையும் காண்கிலேன். அப்படி உடலெடுத்து வந்ததே சிவாயம்.

ஆதிகூடு நாடியோடி காலைமாலை நீரிலே
சோதிமூல மானநாடி சொல்லிறந்த தூவெளி
யாதிகூடி நெற்பறித்த காரமாதி யாகமாம்
பேதபேத மாகியே பிறந்துட லிறந்ததே. 254

ஆதியான உயிர் மூச்சு நம் உடலில் உள்ள நாடிகளுக்குள் அல்லும் பகலும் ஓடி உடலுக்கு உயிர் தருகிறது. நீரில் எரியும் நெருப்பாகிய கண்களிலிருந்து உடலின் ஆகாயமான கபாலத்துக்கு ஒரு நாடி ஓடுகிறது. ஆதி கூடி விளைந்த விளைச்சலாம் நெற்பயிரைப் பறிக்க ஞானவினை புரியவேண்டும். ஆதி ஆகமங்கள் சொல்வதும் இதே. இங்ஙனம் செய்யாது மாறாக வாழ்ந்தால் உடல் பிறக்கும்; இறக்கும். இதுவே தொடரும். பிறப்பறுக்க இயலாது.

பாங்கினோ டிருந்துகொண்டு பரமனஞ் செழுத்துளே
யோங்கிநாடி மேலிருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில்வெட்டி நாருரித்து முச்சில்செய் விதத்தினி
னாய்ந்தநூலிற் றோன்றுமே யரிந்துணர்ந்து கொள்ளுமே. 255

ஐந்தெழுத்தினுள்ளே ஈசன் பாங்காக இருக்கிறான். கபாலத்தில் ஞானவினை புரிந்து ஒன்று சேர்த்த நாடியில் நின்று உச்சரித்த மந்திரமாம் “ஓம்சிவயநம” ஈசனுடன் சேர்த்து பிறப்பறுக்கும். மூங்கில் மரங்களை வெட்டி, அதில் நார் உரித்து முறம், கூடை, தட்டு போன்ற பலவகைப் பொருட்கள் செய்கிறோம். அதேபோல் அனைத்து உயிர் உடல்களும் ஒரே பிரம்மத்திலிருந்தே வந்தன என்பதை உணருங்கள். இதைத்தான் திருவாசகம், திருமந்திரம், தேவாரம் போன்ற அனைத்து நூல்களும் உரைக்கின்றன. இவைகளை உணர்ந்து ஞானவினையாற்றுங்கள்.

புண்டரீக மத்தியி லுதித்தெழுந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை
அண்டரண்ட மூடறுத் தறிந்துணர வல்லிரேல்
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப தில்லையே. 256

புண்டரீகமாம் இருதயத் தாமரை கண்களே. கண்களில் உள்ள சோதியை சூரிய, சந்திர அக்கினி கலைகளில் ஒன்றுவிக்கவேண்டும். அப்பொழுது ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றால் மறைக்கப்பட்டுள்ள ஈசன் வெளிப்படுவான். அப்பொழுது உடலில் உள்ள மண்டலங்களுக்குள் ஊடுருவிச் செல்ல ஈசனுடன் ஒன்றலாம். இந்நிலை கிட்டியபின் கண்டகண்ட கோவிலுக்குச் செல்லவேண்டாம்; தெய்வங்களைக் கையெடுத்துக் கும்பிட வேண்டாம்.

அம்பலங்கள் சந்தியி லாடுகின்ற வம்பனே
அன்பனுக்கு ளன்பனாய் நிற்பனாதி வீரனே
அன்பருக்கு ளன்பராய் நின்றவாதி நாயனே
உன்பருக்கு வுண்மையாய் நின்றவுண்மை யுண்மையே. 257

திருச்சிற்றம்பலம் போன்ற அம்பலங்கள் யாவிலும் நடனமாடும் ஆண்டவனே! உன்னை அன்போடு நினைக்கும் அன்பனுக்குள் அன்பனாய் நிற்கும் ஆதி வீரனே! அன்பருக்குள் அன்பராய் நிற்கும் ஆதி நாயகனே! உண்மை(உன்+மெய்) அடியார்களுக்கு நீ உண்மையாகக் காட்சி தந்து ஆட்கொண்டது யாவும் உண்மையே. அந்த உள் மெய்யே உண்மை என்பதை உணர்ந்து ஞானவினை புரியுங்கள்.

அண்ணலாவ தேதடா வறிந்துரைத்த மந்திரம்
தண்ணலாக வந்தவன் சகலபுராணங் கற்றவன்
கண்ணனாக வந்தவன் காரணத் துதித்தவன்
ஒண்ணதாவ தேதடா உண்மையான மந்திரம். 258

ஈசன் நம் உடலில் குருவாகி வந்தவன். குரு எனில் இருளைப் போக்கி ஒளி தருபவன். தண்ணீரில் தணலாய் இருப்பவன். அவன் மூலம்தான் சகல புராணங்களையும் படித்து அறியவேண்டும். கண்ணனாக வந்தவன். அது தான் கண். அதைத் திறந்ததும்தான் சகல காரணப் பிறப்புக்களும் உண்டாகின்றன. அதன் கருவிழியே ஓரெழுத்தாம் குத்தெழுத்து. அதுதான் உண்மையான மந்திரம்; அண்ணலாகிய குரு உபதேசிக்கும் மந்திரம். இதையறிந்து ஞானவினையாற்றி ஈசனை அடையுங்கள்.

தன்மசிந்தை யாமளவுந் தவமறியாத் தன்மையாய்க்
கன்மசிந்தை வெயிலுழன்று கருத்தழிந்த கசடரே
சென்மசென்மந் தேடியுந் தெளியொணாத செல்வனை
நன்மையாக வும்முளே நயந்துகாண வேண்டுமே. 259

தர்மமே தவம் என்பதை அறியாது, தர்ம சிந்தையே இல்லாததால், அதர்ம வழி சென்று, அதனால் செய்யும் கரும வினைகளால் ஏற்பட்ட பந்த பாசங்களில் சிந்தையை வைத்து, அதனால் ஏற்படும் இன்ப துன்பங்களால் வெயிலில் விழுந்து துடிக்கும் புழுப்போல துடித்து, கருத்தழிந்த கசடர்களே! கோடி கோடி சென்மங்கள் எடுத்துத் தேடினாலும் கண்டு அறிந்து, இதுதான் எனத் தெளிவடைய முடியாத செல்வமான ஈசனை, நம் உடலுக்குள் நயந்து தேடிக் கண்டுபிடித்து, அங்கேயே நினைவை நிறுத்தித் தவம் செய்யுங்கள்.

ஆரலைந்து பூதமா யளவிடாத யோனியும்
பாரமான தேவரும் பழுதிலாத பாசமும்
ஓரொணாத வண்டமு முலோகலோக லோகமும்
சேரவெந்து போயிருந்த தேகமேது செப்புமே. 260

உயிர் பஞ்சபூதங்களால் எண்ணற்ற யோனிகளில் பிறக்கிறது. உடல் சுமையுடன் மனதில் ஆசாபாசங்களையும் சுமக்கிறது. உடலாகிய அண்டம் உயிர் பிரிந்து பிணமாகி, தன் உடலில் உள்ள உலோகச் சத்துக்களுடன் ஒருசேர வெந்துபோனால், அத்தேகம் என்ன சொல்லும்.

என்னகத்து ளென்னைநா னெங்குநாடி யோடினேன்
என்னகத்து ளென்னைநா னறிந்திலாத தாகையால்
என்னகத்து ளென்னைநா னறிந்துமே தெரிந்தபின்
என்னகத்து ளென்னையன்றி யாதுமொன்று மில்லையே. 261

என் உள்ளத்தில் இருக்கும் என்னை நான் அறியாததால், என் உள்ளத்தில் என்னை நான் அங்குமிங்கும் நாடித்தேடினேன். அப்படித் தேடிக் கண்டுகொண்டபின் என் உள்ளத்தில் நானாகிய சிவத்தைத் தவிர யாதுமில்லையே.

விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கு மாறுபோல்
என்னுள்நின்று மெண்ணுமீச னென்னகத்திருக் கையால்
கண்ணினின்று கண்ணில்தோன்றும் கண்ணறிவி லாமையால்
என்னுளின்ற வென்னையும் யானறிந்த தில்லையே. 262

விண்ணில் உதிக்கும் மின்னலானது அந்த மின்னலிலேயே ஒடுங்கிவிடுவது போல், என் ஆகாயமான நினைவில் நிற்கும் ஈசன் நானாக என் உள்ளத்தில் இருக்கின்றான். கண்தான் நுழைவாயில் என்னும் உண்மையை அறியாமையால், கண்ணின் கருமணியில் நின்றுள்ள என் ஈசனை அறியாது இருந்தேன். ஈசனும் நானும் ஒன்றே என அறிந்தபின், என்னையும் அவனையும் தவிர யாரும் இல்லையே.

அடக்கினு மடக்கொணாத வம்பலத்தி னூடுபோய்
அடக்கினு மடக்கொணா தன்பிருக்கு மென்னுளே
கிடக்கினு மிருக்கினுங் கிலேசம்வந் திருக்கினும்
நடக்கினு மிடைவிடாத நாதசங் கொலிக்குமே. 263

எவ்வளவுதான் அடக்கினாலும் அடக்க முடியாத மூச்சுக் காற்றை கபாலத்தில் உள்ள சிற்றம்பலத்தினுள் செலுத்தி, அதை அங்கேயே நிறுத்தி அடக்கவேண்டும். அடங்காத மனதை அன்பால் உருக்கவேண்டும். சதா சர்வ காலமும், எச்செயலைச் செய்து கொண்டிருந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நினைவை அவன்மேல் வையுங்கள். மனம் உதிக்கும் இடமாம் கண்ணிலேயே மனம் ஒடுங்கும். கருத்தில் நினைவு ஒன்றி இடைவிடாத சங்கோசை ஒலிக்கும்.

மட்டுலாவு தண்துழா யலங்கலாய் புனற்கழல்
விட்டுவீழில் தாகபோக விண்ணில் கண்ணில் வெளியினும்
எட்டினோ டிரண்டினு மிதத்தினால் மனந்தனைக்
கட்டிவீடி லாதுவைத்த காதலின்ப மாகுமே. 264

துளசியிலிருந்து நறுமணம் எப்போதும் விலகாது. அதுபோல், எப்போதும் என் மனம் நீராக உள்ள ஈசனின் திருவடிகளை திருவடிகளை விட்டு விலகாது. ஆகாயமே எனக்குள் மனமாகி வெட்டவெளியாக உள்ளது. எட்டு இரண்டு எனும் அகார உகாரம் சேர்ந்து பத்தாகிக் கண்ணாகிக் கபாலத்தில் உள்ளது. அதனுள் சென்று ஞானவினை புரிய மனம் அடங்கும். அறிவு வீட்டினுள் சென்று ஈசனுடன் இணையலாம். பேரின்பக் காதல் இன்பம் கிட்டும்.

ஏகமுத்தி மூன்றுமுத்தி நாலுமுத்தி நன்மைசேர்
போகமுற்றி புண்ணியத்தில் முத்தியன்றி முத்தியாய்
நாகமுற்ற சயனமாய் நலங்கடல் கடந்ததீ
யாகமுற்றி யாகிநின்ற தென்கொலாதி தேவனே. 265

ஈசனைச் சேர்ந்து ஏகமுத்தி பெற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் நீக்கவேண்டும். மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கு அந்தக் கரணங்களாலும் நன்மைகளைச் சேர்க்க வேண்டும். ஞானவினை செய்து போகம் முற்றிப் புண்ணியத்தால் முத்தி கிட்டும். மூன்று தீச்சுவாலைகளையும் ஒன்றாக்கி, கபாலத்தில் பள்ளிகொள்ளும் திருமாலாம் முகுளத்தில் உள்ள நினைவில் நிறுத்த, அது ஆதிதேவனிடம் அழைத்துச் செல்லும். அங்கு ஈசனுடன் ஒன்றலாம்.

மூன்றுமுப்பத் தாறினோடு மூன்றுமூன்று மாயமாய்
மூன்றுமுத்தி யாகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்
தோன்றுசாதி மூன்றதாய் துலக்கமில் விளக்கதாய்
என்றனாவி னுள்புகுந்த தென்கோலோநம் மீசனே. 266

(தத்துவங்கள் – மூன்று முப்பது ஆறு — தொண்ணூற்றி ஆறு. ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்கள்.) மண், பெண், பொன் என்ற மூவாசைகள். 96 தத்துவங்களோடு இவைகள் மாயமாய் அமைந்து உள்ளன. அதில் மூன்று தீயாக சந்திரன், சூரியன், அக்னியாக உள்ளது. உயிர் சூரியநாடி, சந்திர நாடி, சுழுமுனை என்ற நாடிகளில் ஓடும் மூச்சாகும். இவ்வுடலில் ராஜசம், தாமசம், சாத்வீகம் என்ற மூன்று குணங்களும், வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்று பிணிகளும், லோக ஏடனை, அர்த்த ஏடனை, புத்திர ஏடனை என்ற மூன்று ஏடனைகளும் சேர்ந்து ஆண், பெண், அலி என்ற மூன்று சாதியாகி விளங்குகின்றது. உடலில் சோதி விளக்காக ஈசன் வாழுகின்றான். இவ்விளக்கத்தை என்நாவின் வழி சொல்லவைத்தாயே, ஈசா.

ஐந்துமைந்தும் ஐந்துமா யல்லவத்து ளாயுமாய்
ஐந்துமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனே
ஐந்துமைந்து மைந்துமா யமைந்தனைத்தும் நின்றநீ
ஐந்துமைந்து மாயநின்னை யாவர்காண வல்லரே. 267

ஐந்தெழுத்தாகவும், பஞ்ச பூதங்களாகவும், ஐம்புலன்களாகவும் இவ்வுடல் உள்ளது. பஞ்சாக்கரமாகவும், அ,உ,ம என்னும் ஓமாகவும் உள்ள அக்கரங்கள் ஒன்றாகி ஈசன் உட்லில் வாழ்கிறான். அகாரத்தின் ஆதியாம் குத்தெழுத்துதான் ஓரெழுத்து. ஓரெழுத்தாக உடலில் உள்ள ஆதி தேவனே! சிவயநம என்ற பஞ்சாக்கரமாகவும் ஐந்து வண்ணங்கள் கொண்ட திருவடியாகவும் நின்றுள்ள உன்னை யார் காணவல்லவர்.

ஆறுமாறு மாறுமா யொரைந்துமைந்து மைந்துமாய்
ஏறுசீ ரிரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய்
வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறுமோசை யாயமர்ந்த மாயமாயம் மாயனே. 268

ஆறு ஆறும் ஆறும் = 18
ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்தும் = 16
ஏறு சீர் இரண்டு = 32 — 64
மூன்றும் = இடகலை, பிங்கலை, அக்கினி கலை.
ஏழும் = ஏழு திரைகள்.
ஆறும் = ஆறு ஆதாரங்கள்.
எட்டு = ஆகாயம்.

சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய பதினெட்டு படிகளை உடைய நிலைகளை அடையவேண்டும். அதற்கு வளிப்பயிற்சி செய்யவேண்டும்.

ஏறுதல் – பூரகம்: சிவசிவ என நான்கு முறை கணித்து வலது நாசித் துவாரத்தினால் தூய மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்.

ஆறுதல் – கும்பகம்: சிவசிவ எனப் பதினாறு முறை கணித்து உள்ளிழுத்த மூச்சை மூடி உள்ளே நிறுத்தல்.

ஊறுதல் – இரேசகம்: உள் நிறுத்திய மூச்சை சிவசிவ என எட்டுமுறை கணித்து வல நாசித் துளை வழியே மெதுவாக வெளியில் விடுவது.

திருமூலர்:

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.

இதனால் புருவ மத்தியில் உள்ள ஏழு திரைகளும் விலகும். உடலில் உள்ள ஆறு மேலாதாரங்களும் பரிசுத்தமாகி எட்டாகிய வெட்ட வெளியிலுள்ள சோதியில் உடல், உயிர், மனம் ஆகியவை ஒன்று சேரும். இதுவே வெவ்வேறு வகை ஞானங்களையும் உணரவைக்கும். பொய் உடலில் மெய்யான ஆன்மாவும் அதனுள் ஈசனும் இருப்பதை உணரலாம். இவ்வகையில் ஞானவினை புரிய அமுதம் ஊறும். நாதம் கேட்கும். நாதத்தோடு நினைவு ஒன்ற ஆன்மா ஈசனுடன் ஒன்றும்.

எட்டுமெட்டு மெட்டுமா யோரேழுமேழு மேழுமாய்
எட்டுமொன்று மூன்றுமாகி நின்றவாதி தேவனே
எட்டுமாய் பாதமோ டிறைஞ்சி நின்றவண்ணமே
எட்டெழுத்து மோதுவார்க ளல்லல்னீங்கி நிற்பரே. 269

ஈசன் எட்டு சாண் உடலில் எட்டாகிய அகரமான அறிவாகவும், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம், இடம்பம், அகங்காரம் எனும் எட்டு ராகங்களாகவும் எண்குலங்களாகியும் உள்ளான். ஏழாம் நிலையான சகஸ்ராரத்தில் ஏழு திரைகளாகவும், இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மச்சை, சுக்கிலம் என்ற ஏழு தாதுக்களாகவும், சரிகமபதநீ எனும் ஏழிசை ஸ்வரங்களாகவும் உள்ளான். ஆதி தேவன், எட்டும் ஒன்றும் ஒன்பதான மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், வெப்பமான அனல் நட்சத்திரம் ஆகிய பிரணவம்(ப்ர+நவம்), அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்றாகிய ஓங்காரமாகி நம் உடலில் உள்ளான். அவனை இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி எனும் அட்டாங்க யோகம் புரிந்து, அகரமாகிய திருப்பாதமாம் கண்களைப்பற்றி, எட்டெழுத்தான ஓம்(அஉம்) சிவயநம என்ற அக்கரத்தால் ஓதுபவர்கள் துன்பங்களை யாவும் நீங்கி வாழ்வார்கள்.

பத்தினோடு பத்துமா யோரேழினோ டொன்பதாய்
பத்துநாற் றிசைக்குநின்ற நாடுபெற்ற நன்மையா
பத்துமாய கொத்தமோடு மத்தலமிக் காதிமால்
பத்தர்கட்க லாதுமுத்தி முத்திமுத்தி யாகுமே. 270

பத்து நாடிகளாகவும்; பத்து வாயுக்களாகவும் உயிராம் ஆன்மா, ஓர் ஏழினோடும்(1+7) எட்டாகிய உடம்பில் ஒன்பது வாசல்கள் வழியாக இயங்குகிறது. இதில் நாற்பத்து முக்கோணமாய் விளங்கும் ஞானவீட்டில் ஆன்மாவை நிலைநிறுத்தி தியானிப்பதால் நன்மை கிட்டும். எட்டிரண்டும் பத்தாகிய யகாரமான ஆகாயத்தலத்தில், ஆதியாகவும் சிவனாகவும், திருமாலாகவும் பரம்பொருள் உள்ளதென அறிந்து உணரவேண்டும். இது ஞானவினை புரிவோருக்கு முத்தியைத் தரும். ஆன்மா சோதியாகிய ஈசனைச் சேர்ந்து முக்தி பெறும்.

பத்து நாடிகள் – இடகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குக்கு

தச வாயுக்கள் – பிராணன், அபாணன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன்

வாசியாகி நேசமொன்றி வந்தெதிர்ந்த தென்னுக
நேசமாக நாளுலாவ நன்மைசேர் பவங்களில்
வீசிமேல் நிமிர்ந்ததோளி யில்லையாக்கி னாய்கழல்
ஆசையால் மறக்கலா தமரராக லாகுமே. 271

உண்மையான இறை பக்தியினாலும் குருவின் கருணையாலும் வாசியோக உபதேசம் கிடைத்தது. ஞானம் கிட்டியது. இவ்வாசி யோகத்தை நேசமுடன் எந்நாளும் இடைவிடாது பயிற்சி செய்துவருபவர்களுக்குப் பாவங்கள் யாவும் அகலும். ஞானானுபவம் கிடைக்கும். அவ்வாசியையே பிடித்து மேலேறினால் வெட்டவெளியாக வீசி நிமிர்ந்திருக்கும் ஈசன் திருவடியை அடையும். அத்திருவடியே மெய்; மற்றவைகள் பொய் என உணர்ந்து உலகாயத ஆசைகளில் மூழ்காது வாசியோகம் செய்ய அமரர்கள் போல் பிறவா நிலை பெறலாம்.

எளியதான காயமீதி லெம்பிரா னிருப்பிடம்
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்
கொளுகையான சோதியுங் குலாவிநின்ற தவ்விடம்
வெளியதாகு மொன்றிலே விளைந்ததே சிவாயமே. 272

அகாரமாகவும், உகாரமாகவும், இரண்டும் சேர்ந்த யகாரமாய், எளிமையான என் உடலில் தலையில் உள்ள கண்ணில் உள்ளே ஈசனாகிய எம்பிரான் இருக்கிறான். அங்கேதான் சோதி வடிவில் ஈசன் உலவுகின்றான். வெட்ட வெளியாம் ஆகாயத் தலத்திலே அவன் சிவாயமாய் விளைந்து உள்ளான்.

அஞ்செழுத்து மூன்றெழுத்து என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்து மல்லகாணு மப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி யவ்வெழுத் தறிந்தபின்
அஞ்செழுத்து மூன்றெழுத்து மவ்வுமாஞ் சிவாயமே. 273

அருத்தம் புரியாது அஞ்செழுத்து, மூன்றெழுத்து எனக்கூறும் அன்பர்களே! ஈசனாம் மெய்ப்பொருள் அஞ்செழுத்தோ (சிவயநம), மூன்றெழுத்தோ (ஓம்=அ+உ+ம்) அல்ல. சிவயநமவை நினைவினில் ஒன்றி ஓரெழுத்தாம் சிகாரத்தை அறிந்தபின், ஈசன் அஞ்செழுத்தாகவும் மூன்றெழுத்தாகவும் ஆகி நிற்பதை உணருங்கள்.

பொய்யுரைக்க போதமென்று பொய்யருக் கிருக்கையால்
மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர்மெய்க் கிலாமையால்
வையகத்தி னுண்மைதன்னை வாய்திறக்க வஞ்சினேன்
நையவைத்த தென்கொலோ நமசிவாய நாதனே. 274

நான் சித்தன்; ஞானி; அவதாரப் பிறப்பு; குரு; ஆச்சார்யார் எனப் பொய்கள் சொல்கிறார்கள். நான் உபதேசிப்பது வேதத்தின் தெளிவு; மற்றவையெல்லாம் பொய் என மக்களை ஏமாற்றுகிறார்கள். பணம் பறிக்கின்றனர். உண்மையை விரும்பும் சில நல்லவர்கள் கூட இப்பொய்களை நம்புகிறார்கள். ஆதலால் மெய்ப்பொருளை எடுத்து உரைக்க முடியவில்லை. உள் மெய் ஞானம் இதுதான் என்னும் உண்மையை வாய் திறந்து சொல்லவும் அஞ்சினேன். இங்ஙனம் என் மனத்தை நையச் செய்த்தும் ஏனோ, என் ஈசனே?

ஒன்றையொன்று கொன்றுகூட னுணவுசெய் திருக்கினும்
மன்றினூடு பொய்களவு மாறுவேறு செய்யினும்
பன்றிதேடு மீசனைப் பரிந்துகூட வல்லிரேல்
அன்றுதேவ ரும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே. 275

ஒன்றையொன்று கொன்று தின்று வாழ்வதுதான் இவ்வுலக இயற்கை. இவ்வுலகில் வாழும் மனிதர்கள் திருட்டு, புரட்டு, பொய், களவு, ஏமாற்று ஆகியனவற்றைச் செய்துதான் வாழ்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் நிலையற்றவை; நிலையான மெய்ப்பொருளை உணரவேண்டும் என விழைபவர்கள், உலகாயத ஆசைகளைத் துறந்து ஈசனைத் தேடுகின்றனர். பக்தி, யோகம், ஞான மார்க்கங்களில் செல்கின்றனர். பன்றி உருவெடுத்து நிலத்தைக் கீறி ஈசனின் அடியைத் தேடினார் திருமால். அதுபோல, ஈசனின் திருவடியைத் தன் உடலிலே தோண்டிக் கண்டுகொண்டு, ஞானவினையாற்ற நாமும் ஈசனை உணர்ந்து தேவராகலாம்; பிறப்பறுக்கலாம்.

மச்சகத்துளே யிவர்ந்து மாயைபேசும் வாயுவை
அச்சகத்துளே யிருந் தறிவுணர்த்திக் கொள்விரேல்
அச்சகத்துளே யிருந் தறிவுணர்த்திக் கொண்டபின்
இச்சையற்ற வெம்பிரா னெங்குமாகி நிற்பனே. 276

உடலில் உயிராய் ஓடும் பிராணனான மூச்சுக்காற்று வெளியேறினால் மரணம். இவ்வுலக வாழ்வில், நாம் அனுபவிக்கும் இகவாழ்வில் உள்ளே இருக்கும் மூச்சுக்காற்றைவிட வெளியேற்றுவது அதிகம். ஆயுள் குறைகிறது. இரேசக, பூரக, கும்பகம் எனும் வளிப்பயிற்சியால் பிராணனைக் கட்டுப்படுத்த வேண்டும். இது கைவரப்பெற்றால், ஆசையழித்த ஈசன் எங்கும் பரவி இருப்பதை உணரலாம்.

வயலிலே முளைத்தசெந்நெல் களையதான வாறுபோல்
உலகினோரும் வண்மைகூறில் வுய்யுமாற தெங்ஙனே
விரகிலே முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய்
நரகிலே பிறந்திருந்து நாடுபட்ட பாடதே. 277

உழவு செய்யும்போது பயிர் வளர்க்கும் முறை தவறினால் வயலிலே முளைக்கும் செந்நெல் களையாகும். அது போல பிறவி எடுத்த நோக்கம் அறியாது உலகிலுள்ள மனிதர்கள் நான், எனது என்று வண்மைகள் பேசிக் கொண்டிருந்தால் இப்பிறவிப் பிணியிலிருந்து தப்பிப் பிழைக்கும் வழி என்ன? விறகிலே முளைத்து எழுகின்ற தீயைப் போல் விரகத் தீயால் ஆண், பெண் சேர்ந்து முளைத்த இப்பொய்யான உடலை மெய்யென நினைக்கிறோம். உடலிலே மெய்சோதி இருப்பதை உணராது, பிறந்த நோக்கம் அறியாது வாழ்வதால், மீண்டும் பிறவிகளெடுத்து மாள்கிறோம். மெய்யாம் உடலே பொய்யாகி மாண்டு நரகத்திலே விழுகிறது. இதுதான் நாட்டில் நடக்கிறது.

ஆடுகின்ற வெம்பிரானை யங்குமிங்கு மென்றுநீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை யோர்கிலீர்
காடுநாடு வீடுவீண் கலந்துநின்ற கள்வனை
நாடியோடி யும்முளே நயந்துணர்ந்து பாருமே. 278

உங்கள் உடலுக்குள்ளே சித்தத்தில் நின்று நடனமாடும் எம்பிரானை அறியாமல் அங்குமிங்கும் தேடுகின்ற பாவிகளே!! தெளிந்த மெய்ப்பொருளாக விளங்கும் அந்த ஒரு பொருளை அறிந்து அதனுள்ளே சென்று நினைவில் நிற்கத் தெரியாது அலைகின்றீர். காட்டிலும், நாட்டிலும், வீட்டிலும், ஆகாயத்திலும் என்று கண்டவிடமெல்லாம் பரவி நிற்கும் கள்வனாம் ஈசனை, உங்கள் உடலிலேயே தேடி அறிந்து உணர்ந்து பாருங்கள்.

ஆடுகின்ற வண்டர்கூடு மப்புற மதிப்புறம்
தேடுநாலு வேதமுந் தேவரான மூவரும்
நீடுவாழி பூதமும் நின்றதோர் நிலைகளும்
ஆடுவாழி னொழியலா தனைத்துமில்லை யில்லையே. 279

உடலினுள்ளே ஆடும் அருட்சோதியாக உள்ளது கண்கள். அக்கண்கள் சேருமிடம் அறிவு உள்ள இடம். நான்கு வேதங்களும் மும்மூர்த்திகளும் தேடுவது அதையே. ஐம்பூதங்களும், அவைகள் நின்ற நிலைகளும் ஆடவல்லானின் திருவடிகளே. இதையொழிய அனைத்தும் மெய் இல்லை.

ஆவதும் பரத்துளே யழிவதும் பரத்துளே
போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே
யாவரும் பரத்துளே யானுமப் பரத்துளே. 280

சகல சீவராசிகளும் பிறப்பதும் பின் இறந்து கலப்பதும் பரமாகிய பரிபூரணத்துள்ளேதான். இப்பிறவிப் பெருங்கடலைத் தாண்ட நாம் போகவேண்டியது பரமாகிய கண்ணுக்குள்ளே; புகவேண்டிய இடமும் அதுதான். அங்கேதான் தேவர்களும் திசைகளுமுள்ளன. எல்லோரும் இருப்பதும், நானும் இருப்பதும் அந்தப் பரிபூரணத்துக்குள்ளேதான்.

ஏழுபா ரெழுகட லிடங்களெட்டு வெற்புடன்
சூழுவான் கிரிகடந்து சொல்லு மேழுலகமும்
ஆழிமால் விசும்புகொள் பிரமாண்ட ரண்டவண்டமும்
ஊழியா னொளிக்குளே யுதித்துட னொடுங்குமே. 281

அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம் ஆகியன கீழ் ஏழு உலகங்கள். பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் ஆகிய ஏழு மேல் உலகங்கள்.

கீழ் ஏழு உலகங்களும், ஏழு கடல்களும், எட்டுத் திசைகளும் வெப்பம் சூழ்ந்த மலை கடந்து உள்ள மேல் ஏழு உலகங்களும், பாற்கடல் பள்ளிகொண்ட திருமாலும், அண்டங்கள் யாவையும் ஊழியானாம் ஈசன் என்னும் சோதிக்குள்ளே உதித்துப் பின் ஒடுங்கும். சகலமும் உதிப்பதும் அடங்குவதும் சோதிக்குள்ளே. உடலில் உள்ள சோதி கண்கள்.

கயத்துநீ ரிறைக்குறீர் கைகள்சோர்ந்து நிற்பதேன்
மனத்துளீர மொன்றிலாத மதியிலாத மாந்தர்காள்
அகத்துளீரங் கொண்டுநீ ரழுக்கறுக்க வல்லிரேல்
நினைத்திருந்த சோதியும் நீயும்நானு மொன்றலோ. 282

ஈவு, இரக்கம் ஆகிய ஈரம் எதுவும் இல்லாத மனத்தை உடைய மாந்தர்களே! மொள்ள சால் இல்லாது கயிற்றை மட்டும் வைத்துக்கொண்டு கேணியிலிருந்து நீர் இறைக்கிறீர்கள். கைதான் வலிக்குமே ஒழிய நீரை இறைக்க முடியாது. உங்கள் உள்ளத்தில் அன்பு, இரக்கம் ஆகிய ஈரம் சுரக்கவேண்டும். அதன்பின், செய்த பாவங்களாம் அழுக்கை அறுக்க முடியுமானால், நினைவில் நின்றுள்ள சோதிக்குள், நீயும், நானும் ஒன்றி விடுவோம். பின் அனைத்தும் பிரமம் என்பது புரியும்.

நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு செய்கிறீர்
ஆரையுன்னி நீரெலா மவத்திலே யிறைக்கிறீர்
வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழுஞ்
சீரையுன்ன வல்லிரேற் சிவபத மடைவிரே. 283

நீரால் உருவாகிய இவ்வுடலை வைத்து நீங்கள் சடங்குகள் செய்கிறீர்கள். யாரை எண்ணி நீரை இறைக்கிறீர். வேராக உள்ள ஆதியை எண்ணி, நினைவாகிய வித்தை எண்ணி, அதில் முளைத்தெழும் சீர்பெறும் சோதியை எண்ணி, அதில் கலக்க சிவபதம் அடையலாம்.

பத்தொடுற்ற வாசலிற் பரந்துமூல வக்கர
முத்திசித்தி தொந்தமென் றியங்குகின்ற மூலமே
மத்தசித்த வைம்புலன் மகரமான கூத்தையே
அத்தியூரர் தம்முளே யமைந்ததே சிவாயமே. 284

உடலாகிய வீட்டுக்கு ஒன்பது வாசல். அதன்றி பத்தாம் வாசல் ஒன்று உண்டு. அங்குதான் மூல அக்கரமாம் ஓரெழுத்தாம் ஆதி உள்ளது. அதுவே முத்தி பெறுவதற்கும் சித்தி அடைவதற்கும் மூலம். மனம், புத்தி, சித்தம் அகங்காரம் எனும் அந்தகரணங்களையும், மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களையும் ‘ம்‘ என்ற மகாரத்தில் குவித்து ஓத சோதியில் ஒன்றலாம். சோதியாக, தீயாக விளங்கும் ஈசன் நமக்குள்ளேயே இருப்பதை உணரலாலம்.

அணுவினோடு மண்டமா யளவிடாத சோதியை
குணமதாகி யும்முளே குறித்திருக்கில் முத்தியா
முணமுணென்று உம்முளே விரலையொன்றி மீளவும்
தினந்தினம் மயக்குவீர் செம்புபூசை பண்ணியே. 285

முணுமுணுவென முனுத்தங்களை உச்சரித்து, அவைகளை விரல்களால் எண்ணி, பூசை செய்கிறேன் எனத் தானும் மயங்கி, தினமும் மற்றவர்களை மயக்கி, செம்பு சிலைகளை வைத்து பூசையிடும் வேடதாரிகளே! அணுவாகவும், அண்டமாகவும், அனைத்துமாகவும், எதனாலும் அளவிட முடியாத சோதியாகவும் இருப்பவன் ஈசனே. அவன் எண்குணத்தானாக இருப்பதை உணருங்கள். அவனையே நினைவில் நிறுத்தித் தவம் புரிவோருக்கு முக்தி கிட்டும்.

மூலமான வக்கர முகப்பதற்கு முன்னெலாம்
மூடமாக மூடுகின்ற மூடமேது மூடரே
காலனான வஞ்சுபூத மஞ்சிலே யொடுங்கினால்
ஆதியோடு கூடுமோ வனாதியோடு கூடுமோ. 286

பிரசாதத்தை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி, ஒருவரும் முகர்ந்து விடாமல் இறைவருக்கு படைப்பதாக நினைத்து, திறந்து மூடி நைவேத்தியம் செய்யும் மூடர்களே! அனைத்துக்கும் மூலமாய் இருக்கும் ஈசன் சமைக்கும்போதே முகர்ந்து விடுகிறானே! எமன் வந்து உயிரை எடுக்கும் பொழுது பஞ்ச பூதங்களும், அதனதன் கூறுகளில் கூடுமோ? அல்லது அனாதியாம் ஈசனோடு கூடுமோ?

முச்சதுர மூலமாகி முடிவுமாகி யேகமாய்
அச்சதுர மாகியே யடங்கியோ ரெழுத்துமாய்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரத்தி னுண்மையே சிவாயமே. 287

இரு கண்களால் தலை உச்சியைக் காணும்போது உண்டாவது முக்கோணமாம் முச்சதுரம். அதுவே ஏக வழி. மூலவழி; முடிவான வழி. ஊசிப்பார்வை நாசி நுனிமீது வைக்கின் அதுவே மேலெழுந்து முக்கோணமாகி, பார்வை சுருங்கச் சுருங்க முக்கோணம் மறைந்து(அடங்கி) ஓரெழுத்தாம் குத்தெழுத்தாக இவ்வுடலில் விளங்கும். அங்கேதான் ஞான சோதி உள்ளது. அதன்மேல் நினைவு வைத்து தவம் புரியும்போது முனுமுனுக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயம்.

வண்டுலங்கள் போலுநீர் மனத்துமா சறுக்கிலீர்
குண்டலங்கள் போலுநீர் குளத்திலே முழுகுறீர்
பண்டுமுங்கள் நான்முகன் பறந்துதேடி காண்கிலான்
கண்டிருக்கு மும்முளே கலந்திருப்பர் காணுமே. 288

தேன்வண்டு தேன் எடுக்கவேண்டும் என்னும் ஒரே குறிக்கோளோடு நல்ல தேன் உள்ள மலர்களை மட்டும் நாடித் தேனைச் சேகரிக்கும். அதுபோல கவனம் சிதறாது ஒரே நினைவோடு தவம் செய்து மனத்தில் உள்ள அழுக்குகளை அகற்றத் தெரியாமல், உடல் அழுக்கை அகற்றும் மாடுகளைப் போல் குளத்தில் மூழ்குகிறீர்கள். என்ன பயன்? ஈசனின் முடியைக் காணச் சென்ற பெரு(பிர)மனால் பறந்து தேடியும் காண முடியவில்லை. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடினால் கிட்டாது. நம் உடலில் ஒளியுள்ள கண்ணைக் கொண்டு கவனம் சிதறாது ஒரே நினைவோடு தவம் செய்தால், ஈசன் உம்மோடு கலந்திருப்பதைக் காணலாம்.

நின்றதன் றிருந்ததன்று நேரிதன்று கூறிதன்று
பந்தமன்று வீடுமன்று பாவகங்க ளற்றது
கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே
அந்தமின்றி நின்றதொன்றை யெங்ஙனே யுரைப்பதே. 289

பரிபூரணமாம் பரம்பொருள் ஒரு இடத்தில் நின்றது இல்லை; இருந்தது இல்லை. அதற்கு ஒப்பானது(சமமானது) ஒன்றுமில்லை; சொற்களால் கூற இயலாது; அதற்கு எந்த பந்தமும் இல்லை; எந்த வீடும் இல்லை. பாவங்களற்றது; மணங்கள் இல்லாதது; கேள்விகளற்றது; கேடில்லாத வானிலே முடிவற்று நின்ற ஒன்றை எப்படி உரைப்பது?

பொருந்துநீரு மும்முளே புகுந்துநின்ற காரணம்
எருதிரண்டு கன்றையீன்ற வேகமொன்றை யோர்கிலீர்
அருகிருந்து சாவுகின்ற யாவையு மறிந்திலீர்
குருவிருந் துலாவுகின்ற கோலமென்ன கோலமே. 290

நீராகிய விந்துவினால் உருவாகிய உடலில் இரத்தமாம் நீர் உலவுவதன் காரணத்தை அறியமாட்டீர்கள். சூரிய சந்திர கலைகள் சேர்ந்து எழுப்பிய குண்டலினியின் வேகத்தை நினைத்துப் பார்க்க மாட்டீர்கள். அருகே வாழ்ந்து வந்தவர்கள் ஏன் இறந்தார்கள் என்றும் அறியீர். அதுபோல உடலில் ஈசன் இருக்குமிடத்தையும் உணரமாட்டீர்கள். அந்த ஒளிவீசும் குரு இவ்வுடலில் உலவும் கோலத்தை எவ்வாறு சொல்வேன்.

அம்பரத்து ளாடுகின்ற வஞ்செழுத்து நீயலோ
சிம்புளாய் பரந்துநின்ற சிற்பரமு நீயலோ
எம்பிரானு மெவ்வுயிர்க்கு மேகபோக மாதலால்
எம்பிரானு நானுமா யிருந்ததே சிவாயமே. 291

அம்பரமாம் ஆலயத்துள்ளே ஆடுகிறான் பரமன்; அதுபோல் உடலான அம்பரத்துள்ளே ஆடுகிறது ஐந்தெழுத்து ஆன்மா. சிம்புள் என்னும் பறவை வானிலேயே முட்டை இடும். அம்முட்டை கீழே விழும்போதே அதன் குஞ்சு வெளிவந்து இறக்கைகள் முளைத்து தரையைத் தொடாமல் பறந்து சென்று வானில் தாயைச் சேரும். அது போலவே பூமியாகிய இகலோக சுகங்களைத் தொடாது, வானமாகிய மனத்தில் பரவி இருக்கும் பரம்பொருளும் நீ அல்லவா? எம்பிரானாகிய ஈசன் எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்று. ஆகவே, அவனிருக்குமிடம் அறிந்து, உணர்ந்து தவம் செய்யுங்கள். எம்பிரானாகவும் நானாகவும் இருந்தது சிவாயமே.

ஈரொளிய திங்களே யியங்கிநின்றது தப்புறம்
பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர்
காரொளிய படலமுங் கடந்துபோன தற்பரம்
பேரொளிப் பெரும்பத மேகநாத பாதமே. 292

நம் முகத்தில், சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகள் இயங்கி வருகின்றன. அவைகளே இரு கண்கள். அதற்கு அப்புறம், அதாவது கபாலத்துக்குள்ளே, ஒரு பேரொளி உள்ளது. அதை யாரும் அறியீர். படலங்களாம் திரைகளைக் கடந்து சென்றால் ஏகநாதனின் திருவடிப் பேரொளியில் கலக்கலாம்.

கொள்ளொணாது மெல்லொணாது கோதறக் குதட்டொணா
தள்ளொணா தணுகொணா தாகலான் மனத்துளே
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தி னுட்பயன்
விள்ளொணாத பொருளைநான் விளம்புமாற தெங்ஙனே. 293

பரம்பொருள், கொள்ள முடியாதது, மெல்ல முடியாதது; மென்று சக்கையின்றிக் குதப்ப முடியாதது. தள்ள முடியாதது; அணுக முடியாதது. மனத்தினுள்ளே தெள்ளிப்பார்க்காமல் தெளிந்து உணராமல் இத்தகைய சிற்பரமாம் பரம்பொருளின் உட்பயனை உணர இயலாது. இவ்வாறு சொல்ல முடியாத பொருளை நான் சொல்லுவது எவ்வாறு? அது உணரவேண்டியது. உணர ஒரே வழி தவம் செய்வதுதான்.

வாக்கினால் மனத்தினால் மதித்தகா ரணத்தினால்
நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கையெங்க ணோக்குமே. 294

வாக்கினாலும் மனத்தினாலும் ஈசனை சதாசர்வ காலமும் மதித்து, நினைத்த காரணத்தால் மட்டுமே ஈசனை அடையமுடியும். பார்க்கமுடியாத பார்வையை நினைத்து அப்பார்வையை யார் பார்க்க முடியும்? அதாவது, இரு கண்களினாலும் கபாலத்துக்குள் ஐம்புலன்களும் சந்திக்கும் இடத்தை நோக்க வேண்டும். அப்படிப் பார்க்கமுடியாத பார்வையை நினைத்து அப்பார்வையைப் பார்த்துப் பார்த்து தவம் செய்ய அகக்கண் திறக்கும். பின்னர் பார்க்கும் இடமெல்லாம் பராபரமே தெரியும்.

உள்ளினும் புறம்பினு முலகமெங்கணும் பரந்
தெள்ளிலெண்ணெய் போலநின் றியங்குகின்ற வெம்பிரான்
மெள்ளவந் தென்னுட்புகுந்து மெய்த்தவம் புரிந்தபின்
வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே. 295

உடலின் உள்ளே மனமாகவும், வெளியே ஆகாயத் தலமாகவும், எள்ளில் எப்படி எண்ணை உள்ளதோ அதுபோல ஈசன் நின்று இயங்குகிறான். அவனே மெல்ல என்னுள் புகுந்து என்னை மெய்யில் தவம் புரிய வைக்கிறான். அத்தவம் புரிந்தபின் அவனே என்னை ஆட்கொள்ளுகிறான். அவன் வள்ளல். அவனுக்கு ஆயிரம் வண்ணம். அதில் எந்த வண்ணமென்று நான் சொல்ல?

வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப் பிலாமையால்
போதநின்ற வடிவதாய் புவனமெங்கு மாயினாய்
சோதியுள் ளொளியுமாய்த் துரியமோ டதீதமாய்
ஆதிமூல மாதியா யமைந்ததே சிவாயமே. 296

நான்கு வேதங்களும் கூறும் இறைவனை நான் கண்டதில்லை. அப்படிக் கண்டிருந்தால் இக்கொடிய பிறப்பை ஒழித்திருக்கலாம். தெளிவுடன் நின்ற வடிவாய் இவ்வுலகமெங்கும் ஆயினாய்; சோதியில் ஒளியாய், துரியம் துரியாதீதமாய், ஆதி மூலமாய், ஆதியாய் அமைந்ததே சிவாயம்.

சாணிரு மடங்கினாற் சரிந்தகொண்டை தன்னுளே
பேணியப் பதிக்குளே பிறந்திறந் துழலுவீர்
தோணியான வைவரைத் துறந்தறுக்க வல்லிரேல்
காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே. 297

வயிற்றிலிருந்து இரண்டு சாண் அளவுள்ள சரிந்த உறுப்புக்குள்ளே உருவாகிப் பிறந்து, இறந்து உழலுவீர். தோணியான இவ்வுடலில் நாட்டாமை செய்யும் ஐம்புலன்களால் ஏற்படும் இச்சை முதலிய மாசுக்களை முழுவதுமாக அறுக்கமுடியுமானால் ஈசனை இப்பூமியில் எங்குவேண்டுமாகிலும் காணலாம். கோடி உயிர்களிலும் சிவாயம் கலந்திருப்பதை உணரலாம்.

அஞ்சுகோடி மந்திர மஞ்சுளே யடங்கினால்
நெஞ்சுகூற வும்முளே நினைப்பதோ ரெழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே. 298

அஞ்சுகோடி மந்திரங்கள் அனைத்தும் சிவயநம என்ற அஞ்செழுத்து மந்திரத்தில் அடக்கம். அதை உங்களுக்குள்ளே மனதில் கூறி, நினைவில் நின்று சிகாராமாகிய ஓரெழுத்தைக் கருத்தில் பதிக்க, அஞ்சு பூதங்கள், நான்கு அந்தக்கரணங்கள், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் அடங்கும். அப்போது அஞ்சு எழுத்துக்களும் ஓரெழுத்தாகி அமைந்ததே சிவாயம்.

அக்கரந்த வக்கரத்தி லுட்கரந்த வக்கரம்
சக்கரத்து சிவ்வையுண்டு சம்புளத் திருந்ததும்
எட்கரந்த வெண்ணெய்போ லெவ்வெழுத்து மெம்பிரான்
உட்கரந்து நின்றநேர்மை யாவர்காண வல்லரே. 299

ஃ என்ற ஆயுத எழுத்தின் அட்சரத்தில் உள்ளே இருக்கும் புள்ளியே ஊமை எழுத்து. வெட்டாத சக்கரமும் அதுவே. அது சிகாரத்திலேறி சம்புவாகிய ஈசன் உள்ளத்தில் உள்ளது. எள்ளுக்குள் எண்ணெய் போல் எல்லா எழுத்துக்களிலும் (.) குத்து எழுத்தாக எம்பிரான் அமர்ந்து உள்ளான். பிண்டத்தில் குத்தெழுத்தாம் கண்ணின் கருவிழி. அதற்குள் சோதி வடிவில் ஈசன் உள்ளான் எனும் உண்மையை யார் காண வல்லவர். தவம் செய்தவர்தான்.

ஆகமத்தி னுட்பொரு ளகண்டமூல மாதலால்
தாகபோக மன்றியே தரித்ததற் பரமும்நீ
ஏகபாதம் வைத்தனை யுணர்த்துமஞ் செழுத்துளே
ஏகபோக மாகியே யிருந்ததே சிவாயமே. 300

ஆகமங்கள் கூறும் உட்பொருள்; அகண்டங்களின் மூலமாக உள்ள பரம்பொருள்; இவையிரண்டும் ஒன்றேயான ஈசன்தான். விரக தாகம், சிற்றின்ப போகம், ஆகியவை ஏதும் இல்லாத தற்பரமான சதாசிவன் நீயே. நீ எனக்குள் உதித்தாய். அஞ்செழுத்தாம் உடலிலே, கண்ணின் கருமணியான ஏகபாதம் வைத்தாய். ஏகபாதத்தைப் பிடித்து உன்னையே உள்ளத்தில் வைத்துத் தவம் இயற்ற ஏகபோகமாக சிவாயம் இருப்பதை உணரலாம்.

சிவ வாக்கியம் பாடல்கள் (301 – 450)

மூலவாசல் மீதுளே முச்சதுர மாகியே
நாலுவாச லெண்விரல் நடுவுதித்த மந்திரம்
கோலமொன்று மஞ்சுமாகு மிங்கலைந்து நின்றநீ
வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே. 301

உடலுக்கு ஒன்பது வாயில். மூல வாசல் பத்தாம் வாசல். அதுவே கபாலக் குகை வாயில். நாலு வாசல் என்பது கண் இமைகளாகும். இவை மூன்றும் சேர முச்சதுரமாம் முக்கோணம் கிட்டும். இதன் சுற்றளவு எட்டு விரல் நடு அளவு. இம்முக்கோணத்தில் நினைவை வைத்து பிராணனைக் கட்ட ஈசனின் கோலம் அஞ்சாகும். இங்குமங்கும் அலைந்து திரியும் நீ இத்தவத்தைச் செய். இஞ்ஞனம் செய்த நான் வேறெதையும் கண்டிலேன். ஆக சிவாயம் என்னுள் விளைந்தது.

சுக்கிலத் தடியுளே சுழித்ததோ ரெழுத்துளே
அக்கரத் தடியுளே யமர்ந்தவாதி சோதிநீ
உக்கரத் தடியுளே யுணர்ந்தவஞ் செழுத்துளே
அக்கரம தாகியே யமர்ந்ததே சிவாயமே. 302

ஆணுறுப்புக்குள்ளே விந்து சுழித்த ஒரு எழுத்துப்போல் உள்ளது. அகாரமான உடலில் ஆதியான சோதியாக அமர்ந்து இருப்பவன் ஈசன். அவனை உகாரமான உயிரில் உணரவேண்டும். அஞ்செழுத்துக்குள்ளே அவனே ஒரெழுத்தாகி அமர்ந்து இருப்பது சிவாயமே.

குண்டலத்து ளேயுளே குறித்தகத்து நாயகன்
கண்டவந்த மண்டலங் கருத்தழித்த கூத்தனை
விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள்
கண்டுகொண்ட மண்டலஞ் சிவாயமல்ல தில்லையே. 303

காதில் அணியும் குண்டலங்கள் தொங்கி ஆடும். அதுபோல, முகத்தில் இரு பளபளக்கும் குண்டலங்கள் ஆடிக்கொண்டு இருக்கின்றன. அவைகள்தான் கண்கள். அதற்குள்ளேதான் சோதி வடிவான ஈசன் உள்ளான் என்பதைக் குறிப்பால் அறிந்து கொள்ளுங்கள். கண்ட அந்த மண்டலத்திலே இருளாகிய அஞ்ஞானக் கருத்துக்களை அழித்து, சந்திரனைத் தலையில் தாங்கி நடனமிடும் மெய்ப்பொருள் ஈசன் உள்ளான். அப்படிக் குறித்த இடத்தில் ஈசனைக் கண்டுகொண்டால், அவ்விடத்தே சிவாயம் மட்டுமே இருக்கும்.

சுற்றுமைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்தியுஞ் சிவனுமாக நின்றதன்மை யோர்கிலீர்
சத்தியாவ தும்முடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்கா ளறிந்திலீர் பிரானிருந்த கோலமே. 304

ஐம்பூதங்களால் உருவாக்கப்பட்ட உடலில் மவுனவெளிக் கூடம் உள்ளது. அம்மையாம் உடலில் சீவனாம் சிவன் நின்ற தன்மையை அறிவீர்களா? இங்ஙனம் சிவசக்தி நம் உடலில் இருப்பதை அறியாத பித்தர்களே! எம்பிரான் இருந்த கோலத்தை அறியாமல் இருக்கிறீர்களே!

மூலமென்ற மந்திர முளைத்தவஞ் செழுத்துளே
நாலுவேத நாவுளே நவின்றஞான மெய்யுளே
ஆலம்முண்ட கண்டனு மரியயனு மாதலால்
ஓலமென்ற மந்திரஞ் சிவாயமல்ல தில்லையே. 305

ஐந்து பூதங்களும் ஐந்து எழுத்துக்களாக உள்ளது. அதுவே உடல். அதற்குள் மூல மந்திரமாம் ஒரெழுத்து மந்திரம் உள்ளது. அதுவே ஆதி. நான்கு வேதங்களும், நாவினால் சொல்லும் ஞானக் கருத்துக்களும் அவ்வோரெழுத்தில் அடக்கம். விடமுண்ட கண்டனும், திருமால், பிரமனும் அதற்குள்ளேதான். ஆக, ஓம் என்னும் மந்திரம் சிவாயமே.

தத்துவங்க ளென்றுநீர் தமைக்கடிந்து போவிர்காள்
தத்துவஞ் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ
முத்திசீவ னாதமே மூலபாதம் வைத்தபின்
அத்தனாரு மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே. 306

தன்னையும் தன் உடல், உயிர், இறைத் தத்துவங்களையும் உணராது தன்னையே கடிந்து கொள்வீர்கள். தத்துவம் சிவம் ஆனால் தற்பரம் நீங்கள் தானே? உங்கள் உடலில் மூலபாதமாகிய கண்களை வைத்தது அதற்குத்தானே. முக்தி என்பது சிவனாகிய உயிரிலும், நாதமானது உடலிலும் உள்ளது. ஆகவே, ஈசன் உமக்குள்ளே என்பதை அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.

மூன்றுபத்து மூன்றையு மூன்றுசொன்ன மூலனே
தோன்றுசேர ஞானிகாள் துய்யபாத மென்றலை
என்றுவைத்த வைத்தபின் னியம்பு மஞ்செழுத்தையும்
தோன்றவோத வல்லிரேல் துய்யசோதி காணுமே. 307

தொண்ணூற்றி ஆறு தத்துவங்களையும் தன்னுடைய திருமந்திரத்தில் சொன்ன திருமூலன் வழியில் வந்த ஞானிகளே! துய்ய பாதத்தைக் கண்ணாக என் தலையில் வைத்துள்ளான் ஈசன். அதை அறிந்து ஓதும் ஐந்தெழுத்தையும் நினைவில் அழுத்தி ஓத வல்லவர்கள் ஆனால் பரிசுத்த சோதியான ஈசனைக் காணலாம்.

உம்பர்வான கத்தினு முலகபார மேழினும்
நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
செம்பொன்மாட மல்குதில்லை யம்பலத்து ளாடுவான்
எம்பிரான லாதுதெய்வ மில்லையில்லை யில்லையே. 308

எங்கும் பரந்து விரிந்த ஆகாயத்திலும், ஈரேழு பதினான்கு உலகங்களிலும், நாம் வாழும் நாட்டிலும், நாவலந்தீவு என்ற தீவிலும், எங்கு பார்த்தாலும் ஈசன் ஒருவனே. அவன் தில்லையில் செம்பொன் மாடத்தில் நடனம் ஆடுகிறான். நம் உடலில் (செம்பொன் மாடத்தில்) சீவனாக ஆடிக்கொண்டுள்ளான்.. அந்த எம்பிரானைத் தவிர வேறு தெய்வம் இல்லை இல்லை இல்லையே

பூவிலாய வைந்துமாய் புனலில்நின்ற நான்குமாய்
தீயிலாய மூன்றுமாய் சிறந்தகா லிரண்டுமாய்
வேயிலாய தொன்றுமாய் வேறுவேறு தன்மையாய்
நீயலாமல் நின்றநேர்மை யாவர்காண வல்லரே. 309

பஞ்ச பூதங்கள், இந்த உலகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலங்களாகவும், புனலாகிய நீரில் ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என்ற நான்கு வகையாகவும், தீயாக சூரியன், சந்திரன், அக்னி என்று மூன்று வகையாகவும், காற்றில் தென்றல், சூறாவளி என்ற இரண்டு வகையாகவும், வெட்ட வெளியாகிய ஆகாயம் ஒன்றாகவும் அமைந்து வெவேறு தன்மை உடையதாய் உள்ளது. அவைகளுக்குள் நீ நின்ற நேர்மையை யார் காண வல்லவர்கள்.

அந்தரத்தி லொன்றுமா யசைவுகா லிரண்டுமாய்
செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்தவப்பு நான்குமாய்
ஐந்துபாரி லைந்துமா யமர்ந்திருந்த நாதனை
சிந்ததையிற் றெளிந்தமாயை யாவர்காண வல்லரே. 310

நம் உடலில் பஞ்சபூதங்கள் கீழ்கண்டவாறு அமைந்துள்ளன. ஆகாயம் அந்தரத்தில் மனம் என்ற ஒன்றாகவும், காற்று வெளிச்சுவாசம் உட்சுவாசம் என இரண்டு வகையாகவும், நெருப்பு சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்னி மண்டலம் என மூன்று வகையாகவும் நீர், இரத்தம், வியர்வை, எச்சில், சிறுநீர் என நான்கு வகையாகவும், மண், எலும்பு, நரம்பு, தசை, தோல், உரோமம் என ஐந்து வகையாகவும் அமைந்திருக்கிறது. இந்த பஞ்சபூதங்களிலும் அஞ்செழுத்தாக ஊடுருவியுள்ள நாதனை சிந்தையில் உணர்ந்து தெளியும் மாயம் யார் காண வல்லவர்கள்?

மனவிகார மற்றுநீர் மதித்திருக்க வல்லிரேல்
நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்
அனைவரோதும் வேதமு மகம்பிதற்ற வேணுமேல்
கனவுகண்ட துண்மைநீர் தெளிந்ததே சிவாயமே. 311

மன விகாரங்கள் நீங்கி ஈசனையே மதித்து நினைவில் நிற்க, மனதில் வேறு எண்ணங்களுக்கு இடமில்லை. உடலில் உள்ள மணிவிளக்காம் கண்களில் உள்ள சோதி நித்தியமாக ஒளிவீசும். அனைவரும் ஓதும் வேதம் கூறும் ஈசனை நினைந்து அகமாம் மனம் பிதற்ற, கனவு கண்டது போல் உண்மை தெரியும். அப்படித் தெளிந்தது சிவாயமே.

இட்டகுண்ட மேதடா விருக்கு வேத மேதடா
சுட்டமட் கலத்திலே சுற்றுநூல்க ளேதடா
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியை
பற்றிநின்ற தேதடா பட்டநாத பட்டரே. 312

யாகம் செய்ய அமைக்கும் யோனி குண்டம் எதற்கு? அங்கே ஓதும் இருக்கு முதலிய நாலு வேதங்கள் சொல்வதின் பொருள் என்ன? அங்கு சுட்ட மண் பானைகளாம்(உடல்) கடங்களில் நூல் சுற்றி வைப்பது எதற்காக? யாக குண்டங்களில் உள்ள தீயில் நெய்யூற்றி அத்தீயை வளர்ப்பது எதற்கு? உனக்குள் உள்ள தீயை வளர்த்து மேலேற்ற, அது மேலேறி, கபாலத்தில் உள்ள உள்நாக்கு என்னும் நட்ட தூணிலே முட்டும். அங்கு முளைத்து எழுந்த சோதியைப் பற்றி நின்றது ஆன்மா. அதை அறியுங்கள் பட்டநாத பட்டரே!.

நீரிலே முளைத்தெழுந்த தாமரையி னோரிலை
நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடிநின்ற பண்புகண் டிருப்பிரே. 313

தடாகத்திலே முளைத்து உள்ள தாமரை இலையானது நீரில் மிதந்தாலும், அதன் மீது நீர் ஒட்டாது. அதுபோல, மண்ணாலான இவ்வுடலில் முளைத்தெழுந்த ஈசன், அனைத்து சீவராசிகளிலும் ஒட்டியும் ஒட்டாமலும், பற்றியும் பற்றாமலும் உள்ளான். இப்படிக் கூடிநின்ற பண்பை கண்டு, அவனை உணர முயலுங்கள்.

உறங்கிலென் விழிக்கிலெ லுணர்வுசென் றொடுங்கிலென்
சிறந்தவைம் புலன்களுமந் திசைத்திசைக ளொன்றிலென்
புறம்புமுள்ளு மெங்கணும் பொருந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பதேது மில்லையே. 314

தூங்கினாலும், விழித்திருந்தாலும், உணர்வு நினைவில் ஒடுங்கினாலும், சிறந்த ஐம்புலன்களையும் ஒரு சேர அடக்கி எத்திசையும் ஒன்றே என ஒன்றி இருந்தாலும், உள்ளும் புறமும், எல்லா இடங்களிலும் ஈசன் இருப்பதை அறிந்த ஞானிகள், தங்கள் உடலில் பரம்பொருளே சிவமாக இருப்பதை உணர்ந்து அதைத் தவிர வேறு எதையும் நினைப்பது இல்லையே.

ஓதுவார்க ளோதுகின்ற வோர்எழுத்து மொன்றதே
வேதமென்ற தேகமாய் விளம்புகின்ற தன்றிது
நாதமொன்று நான்முகன் மாலும்நானு மொன்றதே
ஏதுமன்றி நின்றதொன்றை யானுணர்ந்த நேர்மையே. 315

சைவமறைகளை ஓதும் ஓதுவார்கள் ஓதும் ஓர் எழுத்து சிகாரம். வேத மந்திரங்களைப் போல் வெளிப்படையாக உச்சரிக்கக் கூடாதது. நாதம், பிரம்மா, திருமால், நானாகிய சிவனும் இணைந்த ஒன்று. எல்லாமாய், ஏதுமின்றி நின்ற ஈசனை இங்ஙனம்தான் உணர்ந்தேன்.

பொங்கியே தரித்தவச்சு புண்டரீக வெளியிலே
தங்கியே தரித்தபோது தாதுமா துளையதாம்
அங்கியுட் சரித்தபோது வடிவுக ளொளியுமாய்க்
கொம்புமேல் வடிவுகொண்டு குருவிருந்த கோலமே. 316

விந்துவும் முட்டையும் கலந்து உடல் உருவானது. உயிர், புண்டரீகம் எனும் ஆகாயத் தாமரையாம் நினைவிலே இருந்தது. இரண்டும் சேர்ந்து கருவாகி உருவாகி உடலாக வெளிவந்தது. தீயில் சேர்ந்தபோது வடிவுக்குள் ஒளி ஊடுருவியது. ஈசனான சோதிதான் சிகார வடிவு கொண்டு உடலில் உயிராகவும், ஒளியாகவும் விளங்கும் உண்மையான குரு என்பதை உணருங்கள்.

மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாற தெங்கெனில்
கண்ணினோடு சோதிபோற் கலந்தநாத விந்துவும்
அண்ணலோடு சத்தியு மஞ்சுபஞ்ச பூதமும்
பண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழு மின்றுமே. 317

மண்ணில் வாழும் மனிதர்களும், விண்ணில் உள்ளவர்களும் கண்ணில் கலந்திருக்கும் சோதிபோல விந்துநாதம் சேர்ந்ததால் உருவானார்கள். அப்பனோடு அம்மையும்(அ+உ) ஐந்து பூதங்களும் சேர்ந்து உயிர் உண்டாயிற்று. ஏழு உலகங்களிலும் உள்ள சீவராசிகள் இங்ஙனம் பிறந்து வாழ்ந்து இறக்கின்றன. இதை உணர்ந்து தவம் செய்து பிறவிப் பெருங்கடல் தாண்டுங்கள்.

ஒடுக்குகின்ற சோதியு முந்திநின்ற வொருவனும்
நடுத்தலத்தி லொருவனும் நடந்துகாலி லேறியே
விடுத்துநின்ற விருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்
அடுத்துநின் றறிமினோ வனாதிநின்ற வாதியே. 318

உந்திக்கமலமான மணிபூரகத்தில் நின்ற திருமாலையும் நடு உடம்பில் உள்ள சுவாதிட்டானத்தில் உள்ள பிரம்மனையும் அறிந்து, முக்கலை ஒன்றி வாசிக்காலால் மேலேறி, அனாகதத்தில் உருத்திரனையும் விசுத்தியில் மகேசுவரனையும் ஆஞ்ஞையில் சதாசிவனையும் அறிந்து வாசியை மேலேற்றித் தவம் செய்ய, அனைத்தையும் ஒடுக்கி இருக்கின்ற சோதியான ஈசனை அடையலாம். அனாதியாய் நிற்கும் ஆதியை இங்ஙனம் அறிந்து, உணர்வு நினைவு ஆகியவற்றை ஒன்றித்து, கருத்தினில் நிறுத்தவேண்டும். இதுவே தவம்.

உதித்தமந் திரத்தினு மொடுங்கு மக்கரத்தினும்
மதித்தமண் டலத்தினும் மறைந்துநின்ற சோதிநீ
மதித்தமண் டலத்துளே மரித்துநீ ரிருந்தபின்
சிறுத்தமண் டலத்துளே சிறந்ததே சிவாயமே. 319

ஐந்தெழுத்து மந்திரமாம் உடல் உதித்தது. அவ்வுடலிலே ஒடுங்கிய அக்கரமாம் குத்தெழுத்தாம் கண் உள்ளது. அந்த மதித்த மண்டலத்திலே விளங்கும் ஈசனாம் சோதி நீ. அக்கண்ணின் கருமணிக்குள்ளே முக்கலையையும் ஒன்றி மனதை அழித்துப் பிணம்போல் தவம் செய்ய, அச்சிறிய துளைக்குள்ளே சிவாயம் காணலாம்.

திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர்
குருக்கொடுக்கும் பித்தரே கொண்டுநீந்த வல்லிரோ
குருக்கொடுக்கும் பித்தருங் குருக்கொள் வந்தசீடனும்
பருத்திபட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே. 320

மூன்று ஆசைகளாலும் அலைக்கழிக்கப்பட்டு, பாவங்கள் பல செய்த இப்பிறவியை திருத்தி, அறிவை உள் மெய்யில் அறிய வைத்து, உண்மையை உணர வைத்து, ஈசனைக் நமக்குள் காட்டிய சற்குருவாம் கண்களைச் சீர் பெற வணங்கமாட்டீர்கள். பித்தர்களே! அங்ஙனம் குரு உபதேசித்தவாறு தவம் செய்து பிறவி என்னும் கடலை நீந்திக் கடக்க முடியுமா? பருத்தி பல பாடுகள் பட்டு ஆடையாகும். அதுபோல், குரு உபதேசித்தபடி இன்னல் பல கடந்து பித்தராம் சிவனை அடையுங்கள்.

விழித்தகண் துதிக்கவும் விந்துநாத வோசையும்
மேருவுங் கடந்தவண்ட கோளமுங் கடந்துபோய்
எழுத்தெலா மழிந்துவிட்ட விந்திரஞால வெளியிலே
யானும்நீயு மேகலந்த தென்னதன்மை யீசனே. 321

விழித்த கண்கள் உன்னையே துதித்திருந்தது. அதனுள்ளே சென்றால், அங்கே விந்துநாத ஓசை கேட்டது. நினைவு மேருவாம் தலை கடந்து, அண்டங்கள் கோளங்கள் என அனைத்தையும் கடந்து, எழுத்தெல்லாம் அழிந்துவிட்ட வெட்ட வெளியாம் இந்திரஞால வெளியிலே போய் சூனியமாய் இருந்த உன்னுடன் கலந்துவிட்டது. நீயும் நானும் கலந்து இருந்த தன்மையை என்னவெனச் சொல்வேன், ஈசா.

ஓம்நம வென்றுளே பாவையென்று அறிந்தபின்
பானுடற் கருத்துளே பாவையென் றறிந்தபின்
நானும்நீயு முண்டடா நலங்குலம் துண்டடா
ஊனுமூணு மொன்றுமே யுணர்ந்திடா யுனக்குளே. 322

நமசிவய என்னும் உடலில் பாவையாம் பராசக்தி உயிராக உள்ளாள். அவள் ஊடாடும்போது நானும், நீயும், அனைத்து நலன்களும், குலங்களும் உண்டு. ஊனாகிய சதையும், ஊணாகிய ஆன்ம இன்பதுன்ப உணர்வும் ஒன்றும் என்பதை உணர்வாய் உனக்குள்ளே. பிண்டத்தில் பாவையைக் கண் என்று சொல்வார்கள். கண்வழி சென்று கருத்தினில் கலந்தபின், எல்லா நன்மைகளும் உண்டு. உயிர்போனால் ஒன்றுமில்லை.

ஐம்புலனை வென்றவர்க் கன்னதான மீவதாய்
நன்புலன்க ளாகிநின்ற நாதருக்க தேறுமோ
ஐம்புலனை வென்றிடா தவத்தமே யுழன்றிடும்
வம்பருக்கு மீவதுங் கொடுப்பது மவத்தமே. 323

ஐம்புலன்களையும் வென்ற ஞானிகளுக்கு அன்னதானம் செய்தால், புண்ணியமாகி, அவர்களுக்குள் இருக்கும் ஈசனைச் சேரும். புண்ணியம் கிட்டும். அல்லாது, ஐம்புலன்களை அடக்கமுடியாமல் அவத்தத்தில் உழலும் வம்பர்களை ஞானி எனப்போற்றி தான தர்மம் செய்வது பாவம்.

ஆதியான வைம்புலன்க ளவையுமொக்கு ளொக்குமோ
யோனியிற் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ
வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே யுணர்த்திரேல்
ஊணுறக்க போகமு முமக்கெனக்கு மொக்குமே. 324

உலகில் அனைவருக்கும் உங்களுக்கு இருப்பது போல அனைத்தும் அமைந்துள்ளது. பாவ புண்ணியங்களுக்கு காரணமான ஐம்புலன்களும், அன்னையின் வயிற்றில் பத்து மாதம் இருந்து பிறந்த இன்பதுன்பங்களும், உணவு, உறக்கம், போகம் போன்றவைகளும் யாவருக்கும் ஒன்றாகவே அமைந்துள்ளது. அதுபோல் உடலில் அனைவருக்கும் ஒரே மாதிரி அமைந்திருக்கும் மெய்ப்பொருளை உணராமல் பிதற்றுகின்ற வீணர்களே! மெய்யில் மெய்யை உணருங்கள்.

ஓடுகின்ற வைம்புல னொடுங்கவஞ் செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற கண்டித குணங்கள்மூன் றெழுத்துளே
ஆடுகின்ற பாவையா யமைந்ததே சிவாயமே. 325

உடலில் ஓடுகின்ற ஐம்புலன்களையும் ஐந்தெழுத்தால் அடக்கி, நாலு வேதத்தையும் பொருளுணர்ந்து ஓதும் ஞானிகளே! உங்களுக்குள் உள்ள கண்டித குணங்களாம், ராஜசம், தாமசம், சாத்வீகம் என்ற முக்குணங்களையும் விலக்க ஓம்(அ+உ+ம்) எனும் ஓங்காரத்தினுள் ஆடிக் கொண்டிருக்கும் கண்ணின் கருமணியைப் பிடித்து தவம் செய்யுங்கள். அதுவே சிவாயமாகும்.

புவனசக் கரத்துளே பூதநாத வெளியிலே
பொங்குதீப வங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத்
தவனசோம ரிருவருந் தாமியங்கும் வாசலில்
தண்டுமாறி யேறிநின்ற சரசமான வெளியிலே. 326

புவன சக்கரமாம் கண்ணின் கருமணிக்குள் செல்ல பூதநாத வெளி செல்லலாம். சூரிய, சந்திர, அக்கினி கலைகளை ஒன்றுவித்து மேலேற்றி, கண்ணுக்குள் இருக்கும் தீபத்தில் உள்ள நெருப்பில் செலுத்த வேண்டும். அது கபாலத்துக்குள் மடைமாறி, ஏறி வெட்ட வெளிக்கு செல்லும். இதுதான் வாசியோகம்.

மவுனவஞ் செழுத்திலே வாசியேறி மெள்ளவே
வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின்
அவனுநானும் மெய்கலந் தனுபவித்த வளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே. 327

ஐந்தெழுத்தாம் உடலிலே மவுனத்தில் இருந்து வாசியோகப் பயிற்சியால் வாசியை ஏற்றி ஆகாயத் தலமாம் வெட்ட வெளிக்குள் நிறைந்திருந்த சோதி மண்டலத்தில் புகுந்து ஈசனுடன் கலக்கவேண்டும். அப்போது ஈசன் மட்டும் உண்டு; நான் இல்லை; வேறு யாரும் இல்லை. சராசரம் முழுதும் ஈசனே நிறைந்திருப்பான்.

வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம்
ஆளுறையில் ஆளடக்கம் அருமைஎன்ன வித்தைகாண்
தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும்
நாளுறையில் நாளடக்கம் நானும்நீயுங் கண்டதே. 328

வாளின் உறைக்குள்ளே வாள் அடங்கி உள்ளது. வாய் எனும் வாயுறையில் நம் ஆயுள் முழுதும் விடும் மூச்சுக் காற்று அடங்கியுள்ளது. மானிட உடலில் நான் எனும் ஆன்மா அடங்கியுள்ள விந்தை என்ன? நெற்பயிரின் தாளுக்குள்ளே மற்றொரு தாளும் உள்ளே ஒடுங்கி உள்ள தன்மையையும், சூரிய உதயம் மறுநாள் சூரிய உதயம் வரை ஒரு நாள் அடங்கியிருப்பதையும் அறிந்து கொள்ளுங்கள். இதுதான் அன்றுமின்றும் நீயும் நானும் கண்டதே.

வழுத்திடா னழித்திடான் மாயரூப மாகிடான்
கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்
துவண்டிடா னசைந்திடான் தூயரூப மாகிடான்
சுவன்றிடா னுரைத்திடான் சூட்சசூட்ச சூட்சமே. 329

ஈசனை வாழ்த்திக்கொண்டே ஆன்மா உடலுக்குள் இயங்குகிறது. அதனால் அழிவில்லாதது. கண்ணுக்குத் தெரியாததால் மாய ரூபம் ஆகி நின்றது. உடலை விட்டு கழன்றிடாது இருப்பது. சினமில்லாது இருப்பது. காலா காலமும் நித்தியமாக உள்ளது. எந்நிலையிலும் துவளாது ஒரே நிலையில் இருப்பது. அசையாத தூய உருவானது. ஒரே அளவில் அனைத்திலும் சுவன்றிடாது இருப்பது. அது வெளியாக உரைக்கப்படாதது. ஐதுதான் சூட்சுமத்தின் சூட்சுமம்.

ஆகிகூவென் றேயுரைத்த வட்சரத்தி னானந்தம்
யோகியோகி யென்பர்கோடி யுற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு பொங்குமங்கு மிங்குமாய்
ஏகமேக மாகவே யிருப்பர்கோடி கோடியே. 330

அ, இ, உ என்ற மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரித்து இறை ஆனந்தம் அடைந்த யோகி யோகி என்று சொல்லித் திரியும் பலர், அந்த அக்கரத்தையே உற்றுப் பார்த்து பயிற்சி செய்து கண்டறியார். அப்படி வாசி யோகம் செய்து இன்பம் கண்ட யோகிகள், அங்குமிங்கும் குரங்கைப் போல் தாவும் மனதை அடக்கி ஏகமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து ஏகமனதோடு தவத்தில் இருப்பார்கள்.

கோடிகோடி கோடிகோடி குவலயத்தோ ராதியை
நாடிநாடி நாடிநாடி நாளகன்று வீணதாய்
தேடிதேடி தேடிதேடி தேகமுங் கசங்கியே
கூடிகூடி கூடிகூடி நிற்பர்கோடி கோடியே. 331

உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஆதியாம் ஈசனை அடைந்தால் சொர்க்கத்தை அடையலாமென எண்ணி, அவனை நாடி, பூசைகள் பல செய்து நாட்கள் வீணாகியது. ஈசனிருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடங்களில் எல்லாம் தேடி அலைந்து, உடல் இளைத்தது. அந்த ஆதியான மெய்ப்பொருள் தன் உடலின் உச்சியில் கபாலத்தில் இருப்பதை உணர மாட்டார்கள். இப்படி உணராதவர்கள் கூடிக்கூடி ஏங்கி நிற்பவர்கள் கோடி.

கருத்திலான் வெளுத்திலான் பரனிருந்த காரணம்
இருத்திலா னொளித்திலா னொன்றுமிரண்டு மாகிலான்
ஒருத்திலான் மரித்திலா னொழிந்திடா னழிந்திடான்
கருத்திற்கீயுங் கூவுமுற்றோன் கண்டறிந்த வாதியே. 332

முதன்முதலில் பரனாம் ஈசன் இருந்த காரணத்தை அறியுங்கள். அது கருப்பு இல்லை; வெளுப்பும் இல்லை. இருப்பதும் இல்லை; ஒளிவதும் இல்லை. ஒன்றும் இல்லை; இரண்டும் இல்லை. ஒன்றாகவும் அநேகமாகவும் உள்ளது. பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை. அது ஒழிந்து போவதோ அழிந்து போவதோ இல்லை. இவைகளைக் கருத்தில் கொண்டு தவம் செய்யவேண்டும். அப்போது வாசியினால் கீ என்று கூவி, கபாலத்திற்குள் ஊதவேண்டும். அப்படிச் செய்தவர்கள் ஆதியாம் ஈசனைக் கண்டறிவார்கள்.

வாதிவாதி வாதிவாதி வண்டலை யறிந்திடான்
ஊதியூதி யூதியூதி யொளிமழுங்கி யுளறுவான்
வீதிவீதி வீதிவீதி விடைஎருப் பொறுக்குவோன்
சாதிசாதி சாதிசாதி சாகாரத்தை கண்டிடான். 333

வாத வித்தை செய்யும் இரசவாதிகள் வழலையிலிருந்து காய்ச்சி எடுக்கும் வண்டலாகிய உப்பையும் அதை முப்பு ஆக்கும் முறையையும் அறியமாட்டார்கள். இரசவாதம் செய்கின்றேன் என்று செம்பை பொன்னாக்க முயற்சித்து உலையில் வைத்து ஊதி ஊதி, தனக்குள் உள்ள ஒளி மழுங்கி கண்டபடி உளறுவார்கள். வீதி வீதியாகச் சென்று மாட்டுச் சாணத்தாலாகிய எருவைப் பொறுக்கி, அதை வைத்துப் புடம் போடுவார்கள். இன்னல் பல பட்டும் சொக்கத் தங்கம் செய்ய இயலாது மடிவார்கள். இப்படிப்பட்டவர்கள் சொக்கத் தங்கமாக உடலில் விளங்கும் சாகரத்தில் உள்ள சோதியை உணர மாட்டார்கள்.

ஆண்மையாண்மை யாண்மையாண்மை ஆண்மைகூறும் அசடரே
காண்மையான வாதிரூபங் காலகால காலமும்
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்
நாண்மையான நரலைவாயில் நங்குமிங்கு மங்குமே. 334

ஆண்மைதான் உயர்வு என ஆண்மை பேசும் அசடர்களே! பெண்மை இல்லாத ஆண்மை எப்படி வந்தது? கிடையாது. உங்களின் உடலிலே உள்ள ஆதியான வாலைக்குமரி ரூபம்தான் காலா காலமாக அனைவருக்கும் இருக்கின்றது. அது மவுனத்திலே, பதி, பசு, பாசமாகி நின்றுள்ளது. அந்த வாலைக்குமரி நாற்றம் இல்லாத நரகல் வெளி வரும் வாசலில் தங்கி உள்ளாள் என்பதையும், இங்கும் அங்கும் எங்குமே அவளால் ஆகி நிற்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

மங்குவென்ற அட்சரத்தின் மீட்டுவாகிக் கூவுடன்
துங்கமாகச் சோமனோடு சோமன்மாறி நின்றிடும்
அங்கமா முனைச்சுழியி லாகுமேக வாகையால்
கங்குலற்றுக் கியானமுற்று காணுவாய் சுடரொளி. 335

மங்கு என்ற அட்சரத்தோடு கூவைச் சேர்த்து, சூரிய, சந்திர கலைகளை அக்கினியில் சேர்த்து கபாலத்தினுள் ஊதவேண்டும். கபாலத்தில் உள்ளே உள்ள சுழுமுனையில் மடைமாறி ஏகமாகி வெட்டவெளியில் நிற்கும். அந்த இரவு பகலற்ற இடத்தில் ஞானம் கிட்டி சுட்ரொளி காணலாம்.

சுடரெழும்பும் சூட்சமுஞ் சுழுமுனையின் சூட்சமும்
அடரெழும்பி யேகமாக வமர்ந்துநின்ற சூட்சமுந்
திடரதான சூட்சமுந் திரியின்வாலை சூட்சமுங்
கடலெழும்பு சூட்சந்தன்னை கண்டறிந்தோன் ஞானியே. 336

உடலில் சீவ உறுப்பிலிருந்து சோதியை எழுப்பும் சூட்சமத்தையும், கபாலத்தின் உள்ளே உள்ள சுழிமுனையின் சூட்சமத்தையும், அக்கினியில் உயிர் கலந்து எழும்பி ஏகமாக அமர்ந்து நின்ற சூட்சமத்தையும், திடப்பொருளாக உள்ள மெய்ப்பொருளின் சூட்சமத்தையும், உடலில் உயிர் என்னும் திரியாக வாலைக்குமரி இருக்கும் சூட்சமத்தையும், ஏழு கடலையும் எழுப்பும் சூட்சமத்தையும், தன்னை அறிந்து தனக்குள்ளேயே கண்டவர்களே ஞானிகள்.

ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடிகோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலான சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமற் கோடிகோடி முன்னறிந்த தென்பரே. 337

கோடி கோடியான பேர்கள் தன்னையே ஞானி ஞானி என்று அழைத்துக்கொண்டு அலையும் நாய்கள். வானிலிருந்து பெய்யாத நீரே அமுரி என்று நாள்தோறும் கூறி அதனை தேடித் தேடி அலையும் இரசவாதிகளும் கோடி கோடி. இவர்கள் எல்லாம் தன்னில் உள்ள கடலில் மிதக்கும் கண்களின் தன்மையை அறியாத மூடர்கள். தன் உடலின் முன் பகுதியில் உள்ள வாயிலைத் திறக்க வழி அறியார். இந்த இரகசியங்கள் எல்லாம் எங்களுக்கு முன்னரே தெரியும் எனப் பேசி மடிவார்கள்.

சூட்சமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே
வீச்சமான வெயிலே விபுலைதங்கும் வாயிலே
கூச்சமான கொம்பிலே குடியிருந்த கோவிலே
தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே. 338

கபாலத்தின் உள்ளே உள்நாக்கு தொங்கும் இடத்தில் உள்ள சுழி முனையில் உள்ள தீயான சுடரிலே ஆடிக்கொண்டு இருக்கும் உயிரில் வாலைக்குமரி தங்கியுள்ளாள். அந்தக் கொம்பிலேதான் ஈசன் குடியிருக்கிறான். அந்தக் கோயிலான இடத்திலே தொட்டுக் காட்டி குரு தீட்சை வழங்கிய சோதி விளங்கும் இடத்தில் சிறந்து இருந்தது சிவாயமே.

பொங்கிநின்ற மோனமும் பொதிந்துநின்ற மோனமுந்
தங்கிநின்ற மோனமுந் தயங்கிநின்ற மோனமுங்
கங்கையான மோனமுங் கதித்துநின்ற மோனமுந்
திங்களான மோனமுஞ் சிவனிருந்த மோனமே. 339

உடலில் பொதிந்து நின்றது கண்கள். அது மவுனம். ஞானம் பொங்கி நின்றது, உயிரில் தங்கி நின்றது, தயங்கி ஆடுவது, கங்கையான நீரைப் பொழிவது, மூச்சோட்டத்தில் நின்றது, சந்திரனானது ஆகிய எல்லாம் சிவன் இருந்த மவுனமே.

மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில்
பானமான வீதியில் பசைந்தசெஞ் சுடரிலே
ஞானமான மூலையில் நரலைதங்கும் வாயிலில்
ஓனமான செஞ்சுட ருதித்ததே சிவாயமே. 340

மவுனமான வீதியில் ஆகாயத் தலத்தில் வாலைக்குமரி உள்ளாள். முக்கலையையும் ஒன்றித்து மேலேற்றி வீதிகளைக்(ஆதாரங்கள்) கடந்து, செஞ்சுடரில் கலக்கவேண்டும். அப்போது ஞானம் விளங்கும் மூலையில், கழிவுப் பொருள் வெளியேறும் வாயிலில் ஓங்காரச் செஞ்சுடர் உதிக்கும். அதுவே சிவாயம்.

உதித்தெழுந்த வாலையு முயங்கிநின்ற வாலையும்
கதித்தெழுந்த வாலையுங் காலையான வாலையும்
மதித்தெழுந்த வாலையும் மறைந்துநின்ற ஞானமுங்
கொதித்தெழுந்து கும்பலாகி ஹூவும்ஹீயும் ஆனதே. 341

வாலைக்குமரி, உதித்தெழுந்தவள்; உயிராய் இயங்குபவள்; உடலில் மூச்சுக் காற்றாய் கதி தவறாமல் ஓடுபவள்; காலையில் உதிக்கும் கதிரவனில் நின்றவள்; மதித்துப் பூசிக்க எழுபவள்; நமக்குள் மறைந்து நின்ற ஞானத்தைத் தருபவள். அவளை அறிந்து, வாசியோகம் செய்து, ஹூங்காரம் ஹீங்காரம் இரண்டையும் ஒன்று சேர்த்து ஓத, வாலை ஓங்காரமாகி நிற்பாள்.

கூவுங்கியும் மோனமாகி கொள்கையான கொள்கையை
மூவிலே யுதித்தெழுந்த முச்சுடர் விரிவிலே
பூவிலே நறைகள்போற் பொருந்திநின்ற பூரணம்
ஆவியாவி யாவியாவி யன்பருள்ள முற்றதே. 342

கூ என்பது உகாரம்; கி என்பது இகாரம். இது அகாரத்துடன் சேர்ந்து மவுனமாக நின்றதை உணர்ந்திடுங்கள். மூன்று எழுத்தாக உதித்தெழுந்த வாசி சூரிய, சந்திர, அக்கினி கலையாக விரிவாகி நின்றது. பூவிலே உள்ள மணம் போல நமக்குள் பொருந்தி நின்ற அதுவே பூரணம். அது ஆவியாக ஆன்மாவாகி, சிவாமாய் அன்பர் உள்ளத்தில் உள்ளது.

ஆண்மைகூறு மாந்தரே அருக்கனோடும் வீதியைக்
காண்மையாகக் காண்பிரே கசடறுக்க வல்லிரே
தூண்மையான வாதிசூட்சஞ் சோபமாகு மாகுமே
நாண்மையான வாயிலில் நடித்துநின்ற நாதமே. 343

ஆண்மை பேசும் மனிதர்களே! சூரிய கலை ஓடும் வழியை உற்று நோக்கி மெய்ப்பொருளைக் காணுங்கள். ஆணவம், கன்மம், மாயை ஆகியவைகளால் ஏற்பட்ட பாவங்களையும், குற்றங்களையும் அகற்ற வல்லவர்களானால் கபாலத்தில் தூணாகி நிற்கும் ஆதியின் சூட்சத்தில் பரஞ்சோதியைக் காணலாம். நாக்கில் நடமாடும் நாதமாக உள்ளவன் ஈசனே.

நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில்
வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே
கீதமான ஹீயிலே கிளர்ந்துநின்ற கூவிலே
பூதமான வாயிலைப் புகலறிவ னாதியே. 344

சூரிய, சந்திர, அக்கினி கலைகளை ஒன்றி, வேதமான நான்கு வாசல் பொருந்திய வீதியில் மேலேற்றி, நாதம் வெளிவரும் வாயால் ஹீங்கார ஒலி எழுப்பி, இரண்டையும் சேர்த்து கூவெனும் உகாரத்தில் சேர்க்கவேண்டும். ஐம்பூதங்களும் ஒன்றாகப் பொருந்தி நின்ற அகாரத்தினுள் புகுந்து செல்ல, அங்கிருப்பது அறிவாகிய ஆதியே.

ஆவியாவி யாவியாவி ஐந்துகொம்பி னாவியே
மேவிமேவி மேவிமேவி மேதினியில் மானிடர்
வாவிவாவி வாவிவாவி வண்டல்க ளறிந்திடார்
பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே. 345

ஆவி எனும் ஆன்மா ஐம்புலன்களிலும் கலந்து ஆவியாகவே உள்ளது. அது உலகில் மனிதர்களின் உடலில் பரவி நின்றுள்ளது. உடலில் மற்ற தன்மைகள் இல்லாதுபோயின், மிஞ்சி நிற்பது வண்டல்களாய் இருந்த உப்பு. அதன் தன்மைகளை யாரும் அறியவில்லை. உப்பைப் படியில் அளந்து அதனை உண்டு வாழ்பவர்கள் அதன் மகிமையை அறியாதது பாவமே.

வித்திலே முளைத்தசோதி வில்வளைவின் மத்தியில்
உத்திலே யொளிவதாகி மோனமான தீபமே
நத்திலோதி ரட்சிபோன்ற நாதனை யறிந்திடார்
வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே. 346

ஆன்ம வித்தில் முளைத்த சோதி வில்லின் வளைவை ஒத்த புருவ மத்தியில் அமர்ந்துள்ளது. அந்த உத்தமமான ஒளிதான் ஆன்மசோதியாம் ஈசன். தவம் செய்து அதன் ஒளியைப் பெருக்குங்கள். நத்தையின் திரட்சி போன்று நம் உடலுக்குள் கண்களாக உள்ள நாதனை அறியாது இருக்கின்றீர்கள். அது நம் முகத்தில் இருந்து உழன்றுகொண்டிருக்கும் வாலை. அதுவே சூட்சமம்.

வாலையோடு காலையும் வடிந்துபொங்கும் மோனமே
மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே
மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்
காலையோடு பானகன்று தங்கிநின்ற மோனமே. 347

வாலைக்குமரியுடன் காலாகிய காற்றைச் சேர்க்க, அனைத்தும் அடங்கி, மவுனம் பொங்கி வடியும். காலையும் மாலையும் மாறிமாறி வருவதுபோல, பிறப்பும் இறப்பும் தொடர்ந்து வருகிறது. உங்கள் கபாலத்துக்குள்ளே உள்ள முக்கோணத்தின் மூலையில் முளைத்து எழுகின்ற செஞ்சுடராக விளங்கும் சோதியைக் கண்டு, சர்வகாலமும் சூரிய கலையில் நின்று தவம் இயற்ற தங்கி நின்றது மவுனம்தான்.

மோனமான வீதியில் முடுகிநின்ற நாதமே
ஈனமின்றி வேகமான வேகமென்ன வேகமே
கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில்
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே. 348

வாசியோகத்தால் முக்கலையையும் ஒன்றாக்கி மேலேற்றி, கபாலத்துக்குள்ளே மவுனமான பாதையில் செல்ல ஹுங்கார நாதம் வேகமாகக் கேட்கும். இன்னும் மேலேற்ற, கபாலத்தின் உச்சியில் ஆகாயத்தில் கனிந்திருந்த வாலையில் உள்ள ஞானமான செஞ்சுடருடன் கலக்கும். இங்ஙனம், வாசியும் வாலையும் சேர்ந்தது சிவாயமே.

உச்சிமத்தி வீதியி லொழிந்திருந்த சாதியிற்
பச்சியுற்ற சோமனும் பரந்துநின் றுலவவே
செச்சியான தீபமே தியானமான மோனமே
கச்சியான மோனமே கடந்ததே சிவாயமே. 349

கபாலத்தின் மத்தியில் சாதி பேதமற்ற மெய்ப்பொருள் உள்ளது. சூரிய, சந்திர, அக்கினி கலைகளை ஒன்றாக்கி மேலேற்ற, மனம் அழிந்து, உயிர் செக்கச் சிவந்த சோதியில் ஒன்றும். அங்கே மவுனத்தில் நின்று தவம் செய்ய, கச்சியாம் இறுதியைக் கடக்கலாம். கடந்ததும் இருப்பது சிவாயமே.

அஞ்சுகொம்பி னின்றநாத மாலைபோ லெழும்பியே
பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுட ருதித்தபோது தேசிகன் சுழன்றுடன்
பஞ்சபூத மானதே பறந்துநின்ற மோனமே. 350

ஐம்புலன்களில் நின்ற நாதம் வாசியோகத்தால், ஆலையில் இருந்து கிளம்பும் புகைபோல் மேல் நோக்கி எழும். அது விந்துவுடன் சேர்ந்து பூவாக மலர்ந்து உடலில் பரிசுத்தமாகி நின்றிருக்கும். அதில்தான் செஞ்சுடராக சிவம் உதித்து சுழன்று கொண்டுள்ளது. அங்கே பஞ்ச பூதங்களும் பரந்து நின்றுள்ளது. அங்குதான் மவுனம் உள்ளது. அதில் நினைவை வைத்து ஈசனை அடையுங்கள்.

சடுதியான கொம்பிலே தத்துவத்தின் ஹீயிலே
அடுதியான ஆவிலே அரனிருந்த ஹூவிலே
இடுதியென்ற சோலையி லிருந்தமுச் சுடரிலே
நடுதியென்று நாதமோடி நன்குற வமைந்ததே. 351

நொடியில் மறையும் இவ்வுடலின் தத்துவங்கள் எல்லாம் ‘ஹீ‘ என்னும் எழுத்தில்தான் உள்ளது. அகாரமானது, அரன் இருக்கும் ஹூ. இரு தீயாக உள்ள சூரிய, சந்திர கலைகளை அக்கினி கலையுடன் சேர்த்து மேலேற்றி, நடுத் தீயாம் ஈசனுடன் கலக்கவேண்டும். அந்த இடத்தில் நாதம் வாசியுடன் சேர்ந்து கூடி நன்றாக அமைந்து உள்ளது.

அமையுமால் மோனமு மரனிருந்த மோனமும்
சமையும்பூத மோனமுந் தரித்திருந்த மோனமும்
இமையு(ய)ம்கொண்ட வேகமு மிலங்குமுச்சி மோனமும்
தமையறிந்த மாந்தரே சடத்தையுற்று நோக்கிலார். 352

திருமாலும், சிவனும் மவுனத்தில் அமைந்திருப்பதையும், ஐந்து பூதங்களும் ஒன்றாகி சமைந்திருப்பதையும், அங்கு உடல் தரித்திருந்ததையும், தங்கள் உடலில் இமயம் என்ற மலையாம் தலையின் உச்சியில் வாசி இயங்கிக்கொண்டு இருப்பதையும், தன்னை உணர்ந்த ஞானிகளே அறிவார்கள். அவர்கள் இந்தப் பொய்யான உடலைப் பற்றியோ, அது அழிவதைப் பற்றியோ கவலைப்பட மாட்டார்கள்.

பாய்ச்சலூர் வழியிலே பரனிருந்த சுழியிலே
காய்ச்சகொம்பி னுனியிலே கனியிருந்த மலையிலே
வீச்சமான தேதடா விரிவுதங்கு மிங்குமே
மூச்சினோடு மூச்சைவாங்கு முட்டிநின்ற சோதியே. 353

மனமாகிய நினைவு பாய்ந்து செல்லும் வழியிலேதான் பரம் பொருளான ஈசன், காயமான உடலினுள்ளே கபாலத்துக்குள் உள்ள சுழிமுனையில் உள்ளான். அனைவரின் உடலிலும் அது வெட்டவெளியாம் ஆகாயத்தில் இங்குமங்கும் தங்கியும், விரிந்தும் உள்ளது. அதை உணர்ந்து வெளி மூச்சோடு உள் மூச்சை முட்டி அவ்விடத்துக்கு ஏற்றி சுழிமுனையில் நிற்கும் சோதியோடு கலக்கலாம்.

சோதிசோதி யென்றுநாடித் தோற்பவர் சிலவரே
ஆதிஆதி யென்றுநாடு மாடவர் சிலவரே
வாதிவாதி யென்றுசொல்லும் வம்பருஞ் சிலவரே
நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர். 354

சோதியே ஈசன் என்று நாடித் தவமிருந்து அதை அடைய முடியாது தோற்றவர்கள் சிலரே. அதுவே ஆதி என உணர்ந்து, அதையே நாடித் தேடும் வல்லவர்கள் சிலரே. காயகற்பம் செய்து உண்டு ஈசனை அடையலாம் என்று சொல்லி இரசவாதம் செய்து வம்பு பேசுபவர்கள் சிலரே. அது ஆதியும் அந்தமும் இல்லாது; அனைவருக்கும் பொதுவான நீதியாக நிற்பது; முழுச்சுடர் என்பதை உணருங்கள்.

சுடரதாகி யெழும்பியங்கு தூபமான காலமே
இடரதாய்ப் புவியும்விண்ணு மேகமா யமைக்கமுன்
படரதாக நின்றவாதி பஞ்சபூத மாகியே
அடரதாக அண்டமெங்கு மாண்மையாக நின்றதே. 355

ஈசன் இவ்வுடலில், காலங்காலமாக ஒளிமிக்க சுடராக இருந்து இயங்குகிறான். அந்த சோதியே பரிபூரணம். அந்த நெருப்புக் கோளத்திலிருந்துதான் அண்ட சராசரங்கள் உண்டாகியது. அது ஆதியாகி, அனைத்திலும் படர்ந்து பஞ்ச பூதங்கள் ஆகின. அதுவே அண்டத்திலும் பிண்டத்திலும் அகாரமான சீவனிலிருந்து ஆண்மையாகி, சிவனாக நின்றது.

நின்றிருந்த சோதியை நிலத்திலுற்ற மானிடர்
கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற் றுலாவுவோர்
கண்டமுற்ற மேன்முனையின் காட்சிதன்னைக் காணுவார்
நன்றியற்று நரலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும். 356

நம் உடலில் நின்று கொண்டிருக்கும் சோதியை இப்பூமியிலே உள்ள மனிதர்கள் தனக்குள்ளேயே கண்டு, அறிந்து, கண்களில் நீர் தளும்ப, அன்பே சிவம் என உணர்ந்து ஞானப் பயிற்சி செய்து வாழ்வார். தன் இரு கண்களால் உச்சியில் உள்ள ஞானக் கண்ணை நோக்கி ஞானப் பயிற்சி செய்ய, ஞானக் கண்ணில் தன்னையே காணுவார்கள். அப்போது, ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களும் விலகி நரலை(கடல்) பொங்கி வடிந்திடும். விந்து நாதமாகிய சிவசக்தி இணையும். பேரின்பம் கிட்டும்.

வயங்குமோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமுங்
கயங்கள்போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
பயங்கொடின்றி யின்றியே படர்ந்துநின்ற பான்மையை
நயங்கள்கோ வென்றேநடுங்கி நங்கையான தீபமே. 357

வடிந்த சோதியான ஒளியும் நாதமான ஒலியும் நிலையாக இயங்கும் மோனச் செஞ்சுடராகிய சிவத்திலிருந்து தோன்றியது. அதுவே யானைக்குட்டி போலக் கதறி அழுது பிறப்பெடுக்கின்றது. யோனியற்ற சூன்ய வெளியில் பஞ்ச பூதங்களும் கோள்களும் தோன்றிப் படர்ந்து நின்ற பாங்கைப் பாருங்கள். இவை யாவும் உடலிலே கபாலத்தின் உச்சியில் ஆடிக்கொண்டிருக்கும் வாலைத் தீபமே.

தீபவுச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே
கோபமாறு கூவிலே கொதித்துநின்ற தீயிலே
தாபமான மூலையிற் சமைந்துநின்ற சூட்சமுஞ்
சாபமான மோட்சமுந் தடித்துநின் றிலங்குமே. 358

கபாலத்தில், தீபமாம் சோதியின் உச்சி முனையிலே சூரியன் என்னும் அகாரத்தின் சுழியில் கொதித்து நின்ற தீயாக ஈசன் உள்ளான். அத்தீயை, முக்கலைகளையும் ஒன்றாக்கி கோபமாக ஊதுவதைப்போல, கூ என்னும் உகாரத்தால் ஊதவேண்டும். தாபமான மூலையில் உள்ள வாலை அங்கு நிற்கும் சூட்சமம் தெரியும். சாபங்களையும், பாவங்களையும் ஒழித்து நினைவை அங்கேயே நிறுத்தித் தவம் செய்யுங்கள். அந்த வாலையில்தான் ஆன்மா உள்ளது.

தேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில்
வேசமோடு வாலையில் வியனிருந்த மூலையில்
நேசசந்தி ரோதயம் நிறைந்திருந்த வாரமில்
வீசிவீசி நின்றதே விரிந்துனின்ற மோனமே. 359

கபாலத்தில், மூன்று கலைகளும் ஒன்று சேருமிடத்தில் வாலை உள்ளாள். அங்குதான் ஈசன் சுழன்று ஆடிக் கொண்டிருக்கிறான்.. வேடமிட்டு நிற்கும் வாலையை அறிந்து அதன் மூலையில் உள்ள ஈசனை உணர்ந்து, கண்களைப் பவுர்ணமியாக்கி முக்கலைகளையும் வீசிவீசித் தவம் இருக்க மவுனம் விரியும்.

உட்கமல மோனமி லுயங்கிநின்ற நந்தியை
விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில்
முட்பொதிந்த தென்னவே முடுகிநின்ற செஞ்சுடர்
கட்குவைகள் போலவுங் கடிந்துநின்ற காட்சியே. 360

உடலில் உள்ள கண்களில் மவுனத்தில் இயங்கும் நம் தீயை அறியுங்கள். இரு கண்களால் வில்லைப் போல் வளைந்த புருவ மத்தியில் நோக்க, அது நெற்றிக்கண்ணாம் ஞானக் கண்ணில் உள்ள செஞ்சுடரில் கலக்கும். அப்போது வாசியை “கீ” என்னும் ஒலியோடு மேலேற்ற வேண்டும். அப்படி ஞானத்தவம் செய்ய கல்லால மரத்தடியில் இருக்கும் குருவின் காட்சி கிட்டும்.

உந்தியிற் சுழிவழியி லுச்சியுற்ற மத்தியிற்
சந்திர னொளிகிரணந் தாண்டிநின்ற செஞ்சுடர்
பந்தமாக வில்வளைவிற் பஞ்சபூத விஞ்சையாங்
கிந்துபோற் கீயில்நின்று கீச்சுமூச்சு வென்றதே. 361

உகாரமான உடலின் உந்தியில்(உன்+தீ) உள்ளே சுழிவழியாகச் சென்றால் கபாலத்தின் மத்தியில் செஞ்சுடர் உள்ளது. அது சூரிய சந்திர கலைகளைத் தாண்டி உள்ளது. இரு கண்களாலும் வில்வளவை ஒத்த புருவ மத்தியில் வைக்க, அது மேலேறி இந்துவாம் வேள்வித் தீயாக எழும்பி சோதியில் கலக்கும். அப்போது கீச்சுமூச்சு என ஒலி கேட்கும்.

செச்சையென்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும்
பச்சையாகி நின்றதே பரவெளியின் பான்மையே
இச்சையான ஹூவிலே இருந்தெழுந்த ஹீயிலே
உச்சியான கோணத்தி லுதித்ததே சிவாயமே. 362

சிவ சிவ எனும் சிகார வகாரத்தை நினைவில் வைத்து பிசிறு இல்லாத ஒழுங்குடன் வாசியை மேலேற்றுங்கள். ஈசன், சோதியாக, பச்சை பசேல் என்றுள்ள பரவெளியில் உள்ளான். வாசியை உள்ளே இழுத்து ஹூ என்ற உகாரத்தினால் ஊத, அதில் இருந்து எழுகின்ற ஹீ என்னும் சிகாரத்தின் மீத ஏறும். கபாலத்தின் உச்சியில் சோதியாக உதித்து நின்றது சிவாயம் என்னும் சோதி என அறிந்து, வாசியோகம் செய்யுங்கள்.

ஆறுமூலைக் கோணத்தி லமைந்தவொன்ப தாத்திலே
நாறுமென்று நங்கையான நாவியுந் தெரிந்திட
கூறுமென்று ஐவரங்கு கொண்டுநின்ற மோனமே
பாறுகொண்டு நின்றது பரந்ததே சிவாயமே. 363

ஆறு ஆதாரங்களும் ஒன்பது வாயில்களும் கொண்ட இந்த உடல், உயிருடன் இருக்கும்போதும் மடிந்த பின்னும் நாற்றம் வீசுகிறது. அப்படி நாறுகின்ற இவ்வுடலில் நாறாத வாயிலில் வாலைக்குமரியாக நம் ஆவியில் உள்ளது வாலை. அதிலேயே ஐந்து பூதங்களும் இணைந்து நிற்கும் மவுனமே திருவடி. இது, இவ்வுலகம் முழுவதும் உள்ள எல்லா உயிர்களின் தலையிலும் உள்ளது. இத் திருவடி, கண்களாய் விளங்கிப் பரந்து நின்று இயங்குகிறது. அப்படி இயக்குவது சிவமே.

பறந்ததே கறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே
பிறந்ததே பிராணனன்றிப் பெண்ணுமாணு மல்லவே
துறந்ததோ சிறந்ததோ தூயதுங்க மானதோ
இறந்தபோதி லன்றதே இலங்கிடுஞ் சிவாயமே. 364

உயிர் இறக்கும்போது பத்தாம் வாயிலாம் வாய் வழியாகப் பறந்து சென்றது. அங்கிருந்து பிரிந்த ஆன்மா ஆணுமல்ல; பெண்ணுமல்ல; அலியும் அல்ல. அவ்வான்மா மறு உடலில் பிறவி எடுத்து தூய தங்கமாக விளங்கியது. உடலில் உலாவி நின்ற உயிரானது இறந்த போதில் எங்கு சென்றது? யாவும் சிவத்தின் செயல் என்றுணர்ந்து, உயிரோடு உள்ள காலத்தில் தவம் செய்து அத்துடன் ஒன்றவேண்டும்.

அருளிருந்த வெளியிலே அருக்கனின்ற விருளிலே
பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே
தெருளிருந்த கலையிலே தியங்கிநின்ற வலையிலே
குருவிருந்த வழியினின்று ஹூவும்ஹீயு மானதே. 365

சிவத்தின் அருள் இருந்தது வெட்டவெளியாகிய ஆகாயத்தில்; சூரியன் நின்றுள்ளது இருளாகிய மனத்தில்; மெய்ப்பொருள் இருந்தது சுழிமுனையில்; வாசி புரண்டு எழுந்து மேலே ஏறுவது சுழிமுனை வழியில். ஆன்மா அலைக்கழிக்கப் படுவது ஆசை என்னும் வலையில். இதனை எல்லாம் நன்குணர்ந்து தெளிவு பெறுங்கள். ஆன்மா கடைத்தேற வாசி யோகம் என்னும் கலையால் மட்டும் முடியும் எனத் தெளிவுற்று, குரு உபதேசித்த வழியில் அறிவு, உணர்வு, நினைவு ஆகியவற்றைக் கருத்தில் வைத்து, தவம் செய்யுங்கள். ஹூ என்னும் உயிரை, ஹீ என்னும் சிகாரத்தில் சேர்க்கும் வழி இதுதான்.

ஆனதோ ரெழுத்திலே யமைந்துநின்ற வாதியே
கானமோடு தாலமீதிற் கண்டறிவ தில்லையே
தானுந்தானு மானதே சமைந்தமாலை காலையில்
வேனலோடு வாறுபோல் விரிந்ததே சிவாயமே. 366

ஆதி, குத்தெழுத்தாய் நம் முகத்தில் கண்ணாய் உள்ளது. அது கானல் நீரைப் போல் தனக்குள் இருப்பதை உலகத்தில் உள்ளவர்கள் உணர்வதில்லை. தானாகவே ஆகித் தானாக நின்ற அந்த ஆதியை இராப்பகல் இல்லாத இடத்தே கண்டு காலையும் மாலையும் நினைவைக் கருத்தில் நிறுத்தித் தவம் செய்யுங்கள். அது நம் உடலில் நெருப்பாறாக ஓடி விரிந்த இடமே. அதுதான் சிவாயம்.

ஆறுகொண்ட வாரியு மமைந்துநின்ற தெய்வமுந்
தூறுகொண்ட மாரியுந் துலங்கிநின்ற தூபமும்
வீறுகொண்ட மோனமும் விளங்கு முட்கமலமும்
மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே. 367

ஆறுகள் கலக்கும் திருப்பாற்கடலும், அதில் பள்ளிகொண்ட திருமாலும், தூய்மையான மழை நீரும், விசுவரூபம் எடுக்கும் மவுனமும், உடலில் உள்ள தாமரையாம் மனமும் எல்லாம் ஒன்றாக ஹூங்காரத்தில் மறைந்து சிவமாகும்.

வாயில்கண்ட கோணமில் வயங்குமைவர் வைகியே
சாயல்கண்டு சார்ந்ததும் தலைமன்னா யுறைந்ததுங்
காயவண்டு கண்டதும் கருவூரங்கு சென்றதும்
பாயுமென்று சென்றதும் பறந்ததே சிவாயமே. 368

ஐம்புலன்களை அடக்கி, ஈசனிருக்கும் வாயில் கண்டு, அவனின் கோணமில்லா சாயல் கண்டு, உடலுள் உள்ள தலையில் வாழும் அவனை வாசியோகத்தால் சார்ந்து, கருத்து என்னும் கரு இருக்கும் ஊரில் அவனுடன் சேருங்கள். உடல் இறந்ததும் பரந்து நின்ற சிவம் பாய்ந்து வெளியே சென்றதே.

பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே
மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையுன் மேவியே
பிறந்ததே யிறந்தபோதிற் பீடிடாமற் கீயிலே
சிறந்துநின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே. 369

உடலைத் துறந்து பறந்த சிவம் பாய்ச்சலூர் வழியிலே சென்றதை அறியுங்கள். வாசி யோகத்தினால், முக்கலைகளையும், வாணர்கை யாழிசையைப் போல் இடைவிடாது ஏற்றுங்கள். கபாலத்தின் உள்ளே சென்று ஈசனை அடையுங்கள். பிறப்பறுக்க ‘கீ‘ என்னும் சிகாரத்தில் சோதியாக விளங்கும் மவுனத்தில் தவம் புரிந்து சிவத்தை தெளிந்து அதனுடன் ஒன்றுங்கள்.

வடிவுபத் மாசனத் திருத்திமூல வனலையே
மாருதத்தி னாலெழுப்பி வாசலைந்து நாலையு
முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால்
முளரியால யங்கடந்து மூலநாடி யூடுபோய். 370

பத்மாசனத்தில் அமர்ந்து மூலாதாரத்தில் கனலாக இருக்கும் குண்டலினி சக்தியை வாசிக் காற்றினால் எழுப்பி ஒன்பது வாசல்களையும் ஒருசேர அடைத்து, யோக முத்திரையில் இருந்து முதுகுத் தண்டின் மூலம் மேலேற்றுங்கள். முளரியாம் பிரமலோகத்தில் உள்ள ஆலயங்கடந்து, மூல நாடியான சுழுமுனையின் ஊடே செலுத்தி சிவத்தை அடையுங்கள்.

அடிதுவக்கி முடியளவு மாறுமா நிலங்கடந்
தப்புறத்தில் வெளிகடந்த வாதிஎங்கள் சோதியை
யுடுபதிக்கண் ணமுதருந்தி யுண்மைஞான யுவகையுள்
உச்சிபட் டிறங்குகின்ற யோகிநல்ல யோகியே. 371

அடியாம் மூலாதாரத்திலிருந்து முடியாம் ஆகாயத் தலம் வரை முக்கலைகளையும் ஒன்றாக்கி சேர்த்து ஆறு ஆதாரங்களையும் கடந்து செலுத்த வேண்டும். அப்பாலுக்கு அப்பாலாய் அப்புறத்தில் வெளிக்கு உள் கடந்த வெளியில் ஆதியாக விளங்கும் சோதியில் சேர்த்துத் தவம் இருத்தல் வேண்டும். அப்போது அமிர்தம் உண்ணாக்கில் இறங்கும். உண்மையான ஞான ஆனந்தம் கிட்டும். உச்சிக்கு ஏற்றிப் பின், உச்சி முதல் பாதம் வரை உடல் முழுவதும் இறங்க வைத்து, தவம் செய்யும் யோகியே நல்ல யோகி.

மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றநீர் மரித்தபோது சொல்விரோ
மந்திரங்க ளும்முளே மதித்தநீரு மும்முளே
மந்திரங்க ளாவது மனத்தினைந் தெழுத்துமே. 372

மந்திரங்கள் அனைத்தையும் ஐயமின்றிக் கற்று உச்சரித்து, அவைகளால்தான் ஈசனை அடைய முடியும் என்னும் மாயையில் மயங்குகின்ற மாந்தர்களே! இநத மந்திரங்களை வைத்துக்கொண்டு, இறக்குமுன் அவற்றை உச்சரித்து மரணத்தைத் தள்ளிப்போட முடியுமா? மந்திரமாக இருப்பது உனக்குள்ளே உள்ள குத்தெழுத்தே. அதுவே யாவரும் மதிக்கும்படி நீங்களாக உள்ள உயிராகி நின்றது. மந்திரங்கள் என்பது மனதின் திடம். பஞ்சாட்சரமே அந்த மந்திரங்கள் என்று உணருங்கள். நினைவாம் குத்தெழுத்தில்(ஆதி) உள்ளத்தை சேருங்கள்.

உள்ளதோ புறம்பதோ உயிரொடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினாவவேண்டு மென்கிறீர்
உள்ளதும் பிறப்பது மொத்தபோது நாதமாங்
கள்ளவாச லைத்திறந்து காணவேண்டு மாந்தரே. 373

உயிர் உடலுள் உள்ளதா? அல்லது இவ்வுடலுக்கு வெளியே நின்றுள்ளதா? என மெல்ல அருகில் வந்து கேட்கவேண்டும் என்று சொல்லுகிறீர்கள். உயிர் உடலின் வெளியே நினைவு என்னும் ஆகாயத்திலும், பிறந்தபின் உடலுக்கு உள்ளே சோதியாகவும், இரண்டும் சேர்ந்தபோது நாதமாகவும் உள்ளது. இதை உணர்ந்து, இரகசிய வாயிலாம் வாயைத் திறந்து ஞான யோகம் செய்து அதனுள் சென்று ஈசனைக் காணவேண்டும், மனிதர்களே!

ஓரெழுத்தி லிங்கமா யோதுமட் சரத்துளே
ஓரெழுத் தியங்குகின்ற வுண்மையை யறிகிலீர்
மூவெழுத்து மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாவெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே. 374

நம் உடலில், குத்தெழுத்தாம் புள்ளியே இலிங்கமாக உள்ளது. அது, ஓதுகின்ற அட்சர மந்திரங்கள் முதலாகவும், நடுவாகவும் முடிவாகவும் இருந்து இயங்குகின்ற உண்மையை அறியாது இருக்கின்றீர்கள். அதுவே அகார, உகார, மகாரமான மூன்றெழுத்தாகிறது. அங்கு அதுவே அரி, அரன், அயன் என்ற மூவராகவும், முளைத்து எழும் சோதியாகவும் உள்ளது. அந்த நாக்குதான் கபலத்துக்குள்ளே செல்லும் வழி என உணர்ந்து கொள்ளுங்கள். அந்த நாக்கால் அனுதினமும் ஐந்தெழுத்தாம் சிவாயத்தை ஓதித் தவம் செய்யுங்கள்.

முத்திசித்தி தொந்தமா முயங்குகின்ற மூர்த்தியை
மற்றுதித்த வப்புனல்க ளாகுமத்தி மப்புலன்
அத்தர்நித்தர் காளகண்ட ரன்பினா லனுதினம்
உச்சரித் துளத்திலே யறிந்துணர்ந்து கொண்மினே. 375

முத்திக்கும் சித்திக்கும் காரணமான ஈசன், நம் உடலில், கண்களின் நடுவில் நீருக்குள் சோதியாய் மிதந்து கொண்டுள்ளான். பக்தர்களும், ஞானிகளும், யோகிகளும் அன்பினால் அனுதினமும் உள்ளத்தில் சிவயநம என உச்சரித்து ஈசனைப் பூசிக்கிறார்கள். அனைவரும் அவ்வழியே சென்று தவம் செய்ய ஈசனை உணரலாம்.

மூன்றிரண்டு மைந்துமாய் முயன்றெழுந்த தேவராய்
மூன்றிரண்டு மைந்ததாய் முயன்றதே யுலகெலாம்
ஈன்றதாயு மப்பனு மியங்குகின்ற நாதமாய்
தோன்றுமோ ரெழுத்தினோடு சொல்லஒன்றும் இல்லையே. 376

அகார, உகார, மகாரம் என்ற மூன்றாகிய ஓங்காரமும் நாதம் விந்து ஆகிய இரண்டும் சேர்ந்து, அதில் முயன்றெழுகின்ற சக்தியே ஈசன். ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றினோடு இரு வினைகள் சேர்ந்து, பெற்ற தாய் தந்தையாகி, உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இயங்குகின்றன. இவை யாவும் நாதமாய் விளங்கும் குத்தெழுத்தால்தான் என்பதை உணருங்கள். இதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லையே!

வெளியுருக்கி யஞ்செழுத்து விந்துநாத சத்தமுந்
தளியுருக்கி நெய்கலந்து சகலசத்தி யானதும்
வெளியிலு மவ்வினையிலு மிருவரை யறிந்தபின்
வெளிகலந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே. 377

வெட்ட வெளியாகிய மனத்தை உருக்கி, சிவயநம என்று அஞ்செழுத்தை ஓதித் தவமிருக்க விந்தும், நாதமும் சேர்ந்து ஒலி கேட்கும். தயிரைக் கடைந்து நெய் எடுப்பது போல உடலை உருக்கி, உயிரினைக் கடைந்து, நெய்யாகிய மெய்ப்பொருளை உணருங்கள். அது உங்களுக்குள்ளே சகல சக்தியாக உள்ளது. வெளியான மனதையும் நல்வினை தீவினையையும் அறிந்து சக்தியான உடம்பையும், சிவனாகிய உயிரையும் ஒன்றாக்கித் தவம் இருங்கள். அப்போது சோதி வெட்டவெளியில் கலந்து இருப்பது தெளிவாகத் தெரியும். அதுவே சிவாயம்.

முப்புறத்தி லப்புறம் முக்கண்ணன் விளைவிலே
சிற்பரத்து ளுற்பனஞ் சிவாயமஞ் செழுத்துமாந்
தற்பரமுதித்து நின்று தாணுவெங்கு மானபி
னிப்புற மொடுங்குமோடி யெங்கும்லிங்க மானதே. 378

சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்னி மண்டலம் ஆகிய மூன்று மண்டலங்களுக்கும் அப்பால் இருக்கும் முக்கண்ணாம் ஈசன் அருளால் அனைத்தும் விளைந்தது. உனக்குள் இருக்கும் சிற்றம்பலத்தில் உற்பத்தி ஆகி நிற்கும் சிவாயம் அஞ்செழுத்தே. அது தனக்குள் உதித்து நின்று, தாணு எனும் ஈசனாகி உலகெங்கும் பரவி உள்ளது. அதுவே உன் உடலில் ஒடுங்கி, ஓடி இலிங்கமாய் அமைந்துள்ளது.

ஆடிநின்ற சீவனோ ரஞ்சுபஞ்ச பூதமோ
கூடிநின்ற சோதியோ குலாவிநின்ற மூலமோ
நாடுகண்டு நின்றதோ நாவுகற்ற கல்வியோ
வீடுகண்டு விண்டிடின் வெட்டவெளியு மானதே. 379

உடலில் ஆடி நின்ற சீவனே பஞ்சபூதங்களாய் விரிந்து நின்றது. அதிலே கூடி நின்றது சோதி. அங்கே குலாவி நின்றது மூலப் பொருளான ஆதி. அனைட்து நாட்டையும் கண்டு நின்ற கண்கள் அதுவே. நாவினால் கற்றுத் தெளிந்த ஞானக்கல்வி அதுவே. அது இருக்கும் இரகசிய வீட்டை கண்டு உணர்ந்து சொன்னால் அதுவே வெட்ட வெளியாம்.

உருத்தரித்த போதுசீவ னொக்கநின்ற வுண்மையுந்
திருத்தமுள்ள தொன்றிலுஞ் சிவாயமஞ் செழுத்துமா
மிருத்துநின் றுறுத்தடங்கி யேகபோக மானபின்
கருத்தினின் றுதித்ததே கபாலமேந்தும் நாதனே. 380

உரு உண்டாகியபோதே சிவனும் சீவனும் ஒன்றாகி நின்ற உண்மையையும், அது உனக்குள் திருத்தமுள்ளதாக ஓரெழுத்தாகவும் அஞ்செழுத்தாகவும் ஆகி நிற்பதை அறிந்து கொள்ளுங்கள். அந்த ஒன்றிலேயே நினைவை இருத்தி நின்று வாசியை ஏற்றினால் மனம் அடங்கி ஐம்புலன்களும் ஒடுங்கும். கபாலம் ஏந்தும் நாதனாகிய ஈசனையே கருத்தில் வைத்து துதித்துத் தவம் செய்யுங்கள். அது ஏகபோகத்தைத் தரும்.

கருத்தரித் துதித்தபோது கமலபீட மானதுங்
கருத்தரித் துதித்தபோது காரணங்க ளானதுங்
கருத்தரித் துதித்தபோது கரணமிரண்டு கண்களாய்
கருத்தினின் றுதித்ததே கபாலமேந்தும் நாதனே. 381

கருத்தரித்து உதித்த போது உயிர், உடலில் உள்ள ஆகாயத் தாமரையான கமல பீடத்தில் இருந்தது. அவ்வுயிரே, அனைத்திற்கும் காரணமானது. கருவாக உருவானபோது முதலில் தோன்றியது, காணும் இரண்டு கண்களே. நான் உருவாகும்போது என் கருத்தில் நின்று உதித்தது கபாலம் ஏந்தும் நாதனாகிய ஈசனே.

ஆனவன்னி மூன்றுகோண மாறிரண்டு எட்டிலே
யானசீவ னஞ்செழுத் தகாரமிட் டலர்ந்தது
மானசோதி யுண்மையு மனாதியான வுண்மையு
மானதான தானதா யவலமாய் மறைந்திடும். 382

ஆறும் இரண்டும் எட்டாகிய உடலில் வன்னி என்னும் தீ சூரிய சந்திர அக்னி கலைகளாக (மூன்று கோணமாகி) உள்ளது. அதிலே ஆன அஞ்செழுத்தாகிய சீவன் அகாரத்திலே அமர்ந்திருக்கிறது. அதுவே தனக்குள்ளே தானாகி நின்றது. அந்த சீவ சோதியின் உண்மையையும் அதிலே அநாதியான ஈசனின் உண்மையையும் உணர்ந்து தவம் செய்யுங்கள். தவம் விளைய விளைய அனைத்து அவலங்களும் மறைந்திடும்.

ஈன்றெழுந்த வெம்பிரான் திருவரங்க வெளியிலே
நான்றபாம்பின் வாயினால் நாலுதிக்கு மாயினான்
மூன்றுமூன்று வளையமாய் முப்புரங் கடந்தபின்
னீன்றெழுந்த அவ்வினோசை யெங்குமாகி நின்றதே. 383

திருவரங்கவெளியாம் உடலிலே எம்பிரானாகிய ஈசன் தலையில் எழுந்து நிற்கின்றான். நான்கு திசைகளாக ஆகி உள்ளான். குண்டலினி சக்தியாக ஆறு ஆதாரங்களையும் சூரிய சந்திர அக்னி மண்டலமான முப்புரங்களையும் கடந்த பின் அவ்வின் ஓசை எங்கும் கேட்கும். ஈசன் எங்குமாகி நாதமாகி நிற்கின்றான்.

எங்குமெங்கு மொன்றலோ வீரேழ்லோக மொன்றலோ
அங்குமிங்கு மொன்றலோ வனாதியான தொன்றலோ
தங்குதா பரங்களுந் தரித்தவார தொன்றலோ
உங்களெங்கள் பங்கினி லுதித்ததே சிவாயமே. 384

எங்கெங்கும் ஈரேழு உலகத்திலும் அங்கும் இங்கும் அனாதியானதும் உள்ளது ஒன்றுதான். இப்பூமியில் உள்ள தாவரங்களிலும் உயிர் தரித்திருப்பதும் இவ்வாறே. உங்களிடமும் எங்களிடமும் உடலில் பங்கு கொண்டு இருப்பது அந்த ஒன்றாகிய மெய்ப்பொருளே. அதுவே சிவாயம்.

அம்பரத்தி லாடுஞ்சோதி யானவன்னி மூலமா
மம்பரமுந் தம்பரமு மகோரமிட் டலர்ந்தது
மம்பரக் குழியிலே யங்கமிட் டுருக்கிட
வம்பரத்தி லாதியோ டமர்ந்ததே சிவாயமே. 385

உடலில் கண்களில் ஆடுகின்ற சோதியான தீயே அனைத்திற்கும் மூலம். உடலுக்குள் உயிர் அகாரத்தில் உள்ளது. கபாலக் குழியில் உள்ள கண்களில் உள்ள உயிரை அறியுங்கள். ஞானவினையால் அங்கம் உருகத் தவம் இருங்கள். உடலில் ஆதியான சோதியாக அமர்ந்திருப்பதே சிவாயம்.

வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே
யோடிநின் றுருவெடுத் துகாரமா யலர்ந்தது
மாடியாடி யங்கமு மகப்படக் கடந்தபின்
கூடிநின் றுலாவுமே குருவிருந்த கோலமே. 386

வாடாத பூவாகக் கண்களாக மலர்ந்திருக்கும் மலரடி அது. வண்டைப்போல் நாவிலே ரீங்காரமிட்டு ஓடி நின்று உருவெடுத்து உகாரமாய் மலர்ந்திருக்கிறது. வாசி யோகத்தால் அதனை உடலுக்குள் மேலும் கீழும் ஏற்றி இறக்கி, செலுத்தி, ஞானக்கண் சோதியில் கூடி நின்று உலாவுவது குரு இருந்த கோலமே.

விட்டடி விரைத்ததோ வேருருக்கி நின்றதோ
எட்டிநின்ற சீவனு மீரேழ்லோகம் கண்டதோ
தட்டுருவ மாகிநின்ற சதாசிவத் தொளியதோ
வட்டவீ டறிந்தபேர்கள் வானதேவ ராவரோ. 387

உடலை விட்டு உயிர் போனால் மரணம். வேராகிய உயிர் உருக்கி வெளி வரும். வந்த சீவன் ஈரேழு லோகங்களையும் ஆகாயத் தலத்தில் நின்று கண்டது. பின்னர் தான் செய்த இரு வினைகளால் மறுபடியும் பிறப்பெடுக்கிறது. இது சதாசிவத்தின் ஒளியினால்தான். இவ்வொளி இருக்குமிடம் கண்களில்தான். அதையறிந்து தவம் செய்ய மனிதன், வானவர், தேவர் ஆகலாம்.

வானவர் நிறைந்தசோதி மானிடக் கருவிலே
வானதேவ ரத்தனைக்குள் வந்தடைவர் வானவர்
வானகமும் மண்ணகமும் வட்டவீ டறிந்தபின்
வானெலாம் நிறைந்தமன்னு மாணிக்கங்க ளானதே. 388

ஆகாயத் தலத்தில் நிறைந்துள்ள ஈசனாம் சோதி, மானிடக் கருவில் உட்புகுந்து உயிருள்ள உடலாய் ஆனது. வானவர்கள், தேவர்கள் ஆகியோர் தவம் செய்து அந்த சோதியில் கலந்து ஈசனை அடைந்தனர். அதுபோல, மானிடரும் தன்னுள் உள்ள வட்ட வீடாம் கண்களை அறிந்து, அதனுள்ளே சென்று தவம் புரிய நிலைபெற்ற மாணிக்கங்களாய் வானில் நிறைந்து விளங்கும் ஈசனை அடைவார்கள்.

பன்னிரண்டு கால்நிறுத்திப் பஞ்சவர்ண முற்றிடின்
மின்னியே வெளிக்குணின்று வேறிடத் தமர்ந்ததுஞ்
சென்னியாந் தலத்திலே சீவனின் றியங்கிடும்
பன்னியுன்னி யாய்ந்தவர் பரப்பிரம்ம மானதே. 389

ஐந்து வண்ணங்கள் கொண்ட திருவடியாம் கண்களில் மின்னியபடி உள்ள தீச்சுடர், வெட்டவெளிக்குள் இருந்ததையும், அத்தீயே உள்ளே சோதியாகக் கண்களில் இருப்பதையும் அறிந்து, நினைவைக் கருத்தில் வைத்து, பன்னிரண்டு அங்குலம் சூரியகலையில் ஏறும் காற்றை கும்பகம் செய்து நிறுத்தி ‘சிவயநம‘ என தவம் செய்யுங்கள். அப்போது சென்னி எனும் தலையில் சீவனாகிய ஈசன் நின்று இயங்கும். இதனை உணர்ந்து தவம் செய்ய பரம்பொருளைச் சார்ந்து பரப்பிரம்மம் ஆவார்கள்.

உச்சிகண்டு கண்கள்கட்டி யுண்மைகண்ட தெவ்விடம்
மச்சுமாளி கைக்குளே மானிடங் கலப்பிரேல்
எச்சிலான வாசல்களு மேகபோக மாய்விடும்
பச்சைமாலு மீசனும் பரந்ததே சிவாயமே. 390

கண்களை மூடி கபால உச்சியில் கருத்தை நிறுத்தித் தவமிருந்து மெய்ப்பொருளைக் கண்டது எந்த இடம்? நம் உடலிலே மச்சு வீடான தலைக்குள்ளே உள்ள சீவனுடன், அங்கேயே அறிவு, உணர்வு, நினைவு என்ற மூன்றையும் ஒன்றாக்கிக் கலந்து தவம் செய்யுங்கள். எச்சில் சுரக்கும் வாயில் அமிர்தம் சுரக்கும். அதையுண்டால் ஏகபோகம்தான். அந்த இடத்தில்தான் பச்சை வண்ணத் திருமாலும், ஈசனும் ஒன்றாகி நிறைந்து விரிந்து உள்ளனர்.

வாயிலிட்டு நல்லுரிசை யட்சரத் தொலியிலே
கோயிலிட்டு வாவியுமங் கொம்பிலே யுலர்ந்தது
மாயிலிட்ட காயமு மனாதியிட்ட சீவனும்
வாயுவிட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே. 391

வாயில் உள்ள உள்நாக்கை மேலெழுந்தவாறு மடக்கி, துளையை அடைத்து, வாசியை வாய்க்குள் இழுத்து மேலேற்ற நாதம் கேட்கும். கோயிலாம் உடலின் உச்சியில் உள்ளது உயிராம் ஈசன். மாயையான உடம்பும் அனாதியான சீவனான உயிரும் கபாலத்தில் தங்கியுள்ளது. கண்களில் உள்ள நந்தி(நம்+தீ)யாக விளங்கும் சோதியினுள்ளே சென்று தவம் செய்யுங்கள். அதனால் சீவன் சிவத்தை அடையும்.

அட்சரத்தை யுச்சரித் தனாதியங்கி மூலமா
யட்சரத்தை யுந்திறந் தகோரமிட் டலர்ந்தது
மட்சரத்தி லுட்கர மகப்படக் கடந்தபின்
அட்சரத்தி லாதியோ டமர்ந்ததே சிவாயமே. 392

“ஓம் நமசிவய” எனும் அட்சரத்தை உச்சரித்து உணர்வில் ஓத அதில் அனாதியாக இயங்கும் சிகாரமே அனைத்திற்கும் மூலமாய் உள்ளது. அதனை வாசி யோகத்தால் அறிந்து திறக்க அகாரம் மலரும். ‘ஓம்‘ என்ற அட்சரத்தின் மெய்ப்பொருள் உணர்ந்து ஓரெழுத்தாம் குத்தெழுத்தை அறிந்து மாயையைக் கடந்த பின் அந்த ஓங்காரத்தில் ஆதியோடு அமர்ந்திருந்தது சிவாயமே.

கோயிலுங் குளங்களுங் குறியினிற் குருக்களாய்
மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்
ஆயனை யரனையு மறிந்துணர்ந்து கொள்விரேல்
தாயினுந் தகப்பனோடு தானமர்ந்த தொக்குமே. 393

கோயிலும் குளங்களும் தன் உடலில் கண்ணாக(குறியாக) இருக்கும் மெய்குருவை அறிவதற்குத்தான். அதுவே தாயாகவும் தகப்பனாகவும் தானாகவும் அமர்ந்திருப்பது. இதை உணராமல் உலக மாயையிலும் பெண்ணின் மடியிலும் விழுந்து மனம் போனபடி அலமலந்து, மயங்கி அலைகிறீர்கள். தனக்குள்ளே வசிக்கும் ஆயனாம் மாலையும், அரனாம் ஈசனையும் அறிந்து, உணர்ந்து தவம் செய்யுங்கள். அப்படிச் செய்ய ஈசனுடன் கலக்கலாம்.

கோயிலெங்கு மொன்றலோ குளங்கணீர்க ளொன்றலோ
தேயுவாயு மொன்றலோ சிவனுமங்கே யொன்றலோ
ஆயசீவ னெங்குமா யமர்ந்துவார தொன்றலோ
காயமீ தறிந்தபேர்கள் காட்சியாவர் காணுமே. 394

அனைத்துக் கோயில்களிலும் இறைவன் ஒன்றே என்பதையும், எல்லாக் குளங்களிலும் உள்ள நீர் ஒன்றே என்பதையும், தேயுவாகிய நெருப்பும், வாயுவாகிய காற்றும் ஒன்றே என்பதையும், அனைத்து சீவராசிகளிலும் உள்ள சீவன் ஒன்றே என்பதையும் உணருங்கள். நம் உடலில் நீரில் நெருப்பாய், சோதியாய் ஈசன் கண்களில் உள்ளான். அதை உணர்ந்து உடலுக்குள் தவம் செய்ய ஈசன் காட்சி கிட்டும்.

காதுகண்கள் மூக்குவாய் கலந்தவார தொன்றலோ
சோதியிட் டெடுத்ததுஞ் சுகங்களஞ்சு மொன்றலோ
ஓதிவைத்த சாத்திர முதித்தவார தொன்றலோ
நாதவீ டறிந்தபேர்கள் நாதராவர் காணுமே. 395

நம் உடலில், காது கண்கள் மூக்கு வாய் ஆகிய யாவும் கலந்து நின்ற இடம் கண்களில்தான். ஆங்குதான் சோதி தீயாக உதித்து ஆடிக்கொண்டுள்ளது. எண்சாண் உடல் எடுத்ததும், அதனால் அடையும் இன்பங்கள் பல(அஞ்சு) வகையாயினும் இன்பம் ஒன்றுதான். ஓதிவைத்த சாத்திரங்கள் யாவும் கூறுவதும் ஒன்றுதான். சோதியில் நாதம் ஒடுங்குமிடத்தை அறிந்தவர்கள் நாதனாம் ஈசன் ஆவர்.

அவ்வுதித்த வட்சரத்தி னுட்கலந்த வட்சரம்
சவ்வுதித்த மந்திரஞ் சம்புளத் திருந்ததால்
மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள்
உவ்வுதித்த தவ்வுமா யுருத்தரித்த வுண்மையே. 396

‘அ‘ எனும் எழுத்துக்குள் முன்பு உதித்த ஒரேழுத்து குத்தெழுத்தாம் புள்ளியாகிய ஆதி. தொண்டைச் சவ்வில் உதித்த ‘ஓம்‘ எனும் மந்திரம்தான் சம்புவாகிய ஈசன் உள்ளத்து இருக்கும் மந்திரம். ‘மவ்‘ எனும் மாயையால் மயங்குகின்ற மாந்தர்களே! ‘உவ்‘ எனும் உகாரமாம் உடலில் உயிராகவும், ‘அவ்‘ எனும் அகாரமாம் உயிரில் உடலாகவும் உருத்தரித்தது உண்மையே.

அகாரமென்னு மக்கரத்தி லக்கர மெழுந்ததோ
அகாரமென்னு மக்கரத்தி லவ்வுவந் துதித்ததோ
உகாரமு மகாரமு மொன்றிநன்று நின்றதோ
விகாரமற்ற ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே. 397

‘அகாரம்‘ என்னும் உயிரில் குத்தெழுத்தாகிய அக்கரம் எழுந்தது. அகாரமாகிய உயிர் உகாரமாகிய உடலில் ஓடிக்கொண்டு உள்ளது. அத்துடன் மகாரமாகிய மனமும் சோதியில் உள்ளது. மனவிகாரமற்ற ஞானிகளே! இப்படி அகார, உகார, மகாரம் சேர்ந்து ஓங்காரமாகவும், உடல், பொருள், ஆன்மாவாகவும், அறிவு உணர்வு நினைவாகவும், எட்டும், இரண்டும் சேர்ந்து பத்தாகிய கண்ணாகவும் நம் உடலில் உள்ளதை விரிவாக விளக்கி சொல்ல வேண்டுமே.

சத்தியாவ துன்னுடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்கா ளிதற்குமேல் பிதற்றுகின்ற தில்லையே
சுத்தியைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்திசிவமு மாகிநின்று தண்மை யாவதுண்மையே. 398

உன் உடல் சக்தி; அதில் இயங்கிக்கொண்டிருப்பது சீவன்; அதனுள் இருப்பது சிவம். இத்தத்துவங்களை அறியாத பித்தர்களே! இதற்குமேல் பிதற்றுவதற்கு ஒன்றும் இல்லையே. ஐம்புலன்களாக சுற்றி அமைந்துள்ள கபாலத்தில் உள்ளது சொல்லிறந்த மௌன வெளி. அங்கு சக்தியும் சிவமும் ஒன்றாகி சோதியாய் நின்ற தன்மையை உணருங்கள். அச்சோதியே மெய்ப்பொருளாம்.

சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே
முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மோட்டினில்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமா
யுச்சரிக்கும் மந்திரம் ஓம்நமசி வாயமே. 399

சுக்கிலமாம் விந்துவும், சுரோணிதமாம் முட்டையும் கலந்து கரு உண்டானது. அது சீவனாம் சிவனுடன் கலந்து உயிருள்ள உடல் ஆனது. அதற்குள் சூரிய, சந்திர, அக்கினி கலைகள் ஊடாடிக் கொண்டுள்ளது. கண்களை உச்சிக்குக் கொண்டு செல்ல முக்கோணப் பார்வை கிடைக்கும். அங்கு உச்சி மோட்டினில் சோதி உள்ளது. மூன்று கலைகளையும் ஒன்றுவித்துக் குவித்து சோதியில் நிறுத்த உச்சரிக்க வேண்டிய மந்திரம் “ஓம் நமசிவாய“வே.

அக்கர மனாதியல்ல வாத்தும மனாதியல்ல
புக்கிருந்த பூதமும் புலன்களு மனாதியல்ல
தக்கமிக்க நூல்களுஞ் சாத்திர மனாதியல்ல
ஒக்க நின்றுடன்கலந்த வுண்மைகாண் அனாதியே. 400

நம் உடல், அதில் வாழும் ஆன்மா, உடலில் உள்ளே உள்ள பஞ்சபூதங்கள், ஐம்புலன்கள், தகுதிமிக்க மெய் நூல்கள் சொல்லும் கருத்துக்கள், சாத்திரங்கள் உரைக்கும் உண்மைகள், ஆகியன யாவும் அனாதி இல்லை. உயிராம் சிவனும், உடலாம் சிவையும் ஒன்று கலந்து உள் மெய்யில் சோதியாய் நின்ற சிவம் ஒன்றுதான் அனாதி.

மென்மையாகி நின்றதேது விட்டுநின்று தொட்டதேது
வுண்மையாக நீயுரைக்க வேணுமெங்க ளுத்தமா
பெண்மையாகி நின்றதொன்று விட்டுநின்று தொட்டதை
யுண்மையா யுரைக்கமுத்தி யுட்கலந் திருந்ததே. 401

உத்தமரே! நம் உடலில் மென்மையான மலரைப்போன்றதும், உடலை விட்டு நின்றும் உயிரைத் தொட்டும் உள்ளது எது என்ற உண்மையை உரைக்கவேண்டும். எண்ணங்களை உருவாக்கும் மனமென்னும் பெண்மையாகி நின்ற ஒன்றை என்ன என உரைப்பீர். அதுதான் கண்மலர். இந்த உண்மையை சொல்லிவிட்டால், அதற்குள்ளேயே முத்தி உட்கலந்து சோதியாய் இருக்கின்றது.

அடக்கினா லடங்குமோ வண்டமஞ் செழுத்துளே
யுடக்கினா லெடுத்தகாய முண்மையென் றுணர்ந்துநீ
சடக்கிலாறு வேதமுந் தரிக்கவோதி லாமையால்
விடக்குநாயு மாயவோதி வேறுவேறு பேசுமோ. 402

நாம் முயன்று அடக்கினால், அஞ்செழுத்துக்குள்ளே அண்டங்களை அடக்கலாம். உள் மருமத்தால் (விந்துவும் முட்டையும்கூடி) வந்த இவ்வுடலை உள் மெய் என உணருங்கள். வேதங்கள் ஓதினாலும், சடங்குகள் செய்தாலும் ஈசனை அடையும் வழி அறியமாட்டீர்கள். எவ்வளவுதான் ஆற்றில் நீர் ஓடினும், நாய் நக்கித்தான் குடிக்கும். அதுபோல அலையாதீர்கள். ஈசனை அடையும் வழி அறிந்து, அதன் வழி சென்று மவுனத்தில் ஒன்றுங்கள்.

உண்மையான சக்கர முபாயமா யிருந்ததும்
தண்மையான காயமுந் தரித்தரூப மானதும்
வெண்மையாகி நீறியே விளைந்துநின்ற தானது
முண்மையான ஞானிகள் விரிந்துரைக்க வேணுமே. 403

வெண்மையான விந்து முட்டையுடன் சேர்ந்த்து உடல் உருவானது. அதில் உள்ள சக்கரமான கண்வழி சென்றுதான் பரஞ்சோதியை அடையவேண்டும். உண்மையான ஞானிகளே! இந்த உண்மையை அனைவருக்கும் புரியும் வண்ணம் விரிவாய் எடுத்துச் சொல்ல வேண்டுமே.

எள்ளகத்தி லெண்ணெய்போல வெங்குமாகி யெம்பிரா
னுள்ளகத்தி லேயிருக்க வூசலாடும் மூடர்காள்
கொள்ளைநாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லிரேல்
வள்ளலாகி நின்றசோதி காணலாகு மெய்ம்மையே. 404

எம்பிரான் ஈசன், எள்ளுக்குள் இருக்கும் எண்ணெய் போல எங்கும் பரவி உள்ளான். ஈசனை நம் உடலில், கபாலத்தில் கண்ணாக இருப்பதை உணராமல் உலகமெங்கும் தேடி ஊசலாடும் மூடர்களே! திருட்டு நாயின் வாலைப்போல் ஆடிக் கொண்டிருக்கும் மனத்தின் அலைபாயும் குணத்தை அடக்கித் தவம் இருக்க வல்லவர்களானால், வள்ளலாகிய ஈசன் நமக்குள்ளே பரஞ்சோதியாக நின்றதைக் காணலாம். பரஞ்சோதியே மெய்ப்பொருள்.

வேணுமென்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே
தாணுவுண்டங் கென்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர்
தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி யும்முளே
காணுமன்றி வேறியாவுங் கனாமயக்க மொக்குமே. 405

ஞான நூல்களை எல்லாம் படித்துவிட்டு மட்டும், தாணுவாம் ஈசனைக் காணாது, அவன் நமக்குள்ளே இருக்கிறான் என்று சொல்கிறீர்கள். தன்னை மறந்து தவம் செய்து அவனை உணரவில்லை. மூலநாடியைத் தன் நாடியுடன் சேர்த்து மேலேற்றித் தவம் செய்து மெய்ப்பொருளுடன் கலக்கவேண்டும். அவ்வின்பத்தை உணரவேண்டும். மற்றவை அனைத்தும் கனவில் கண்ட காட்சி போலத்தான்.

வழக்கிலே யுரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர்
உழக்கிலாது நாழியான வாறுபோலு மூமைகாள்
உழக்குநாலு நாழியான வாறுபோலு மும்முளே
வழக்கிலே யுரைக்கிறீர் மனத்துளீசன் மன்னுமே. 406

இறைவன் எங்கு இருக்கிறான்? என வழக்காடும்போது, பல வாதங்களையும் எடுத்து வைக்கிறீர்கள். ஆனால் அவன் எங்குள்ளான் என உங்களுக்கே தெரியாது. மனதுக்குள் தவிக்கிறீர்கள். எப்படிக் கடல் நீரைச் சூடாக்கி, உப்பை எடுத்து அளப்பது என்ற உண்மையை அறியாதது போல், ஈசன் எங்கு உள்ளான் என்னும் உண்மையை உணராத ஊமைகளே! கடல் நீரினில் உப்பாக, உப்பு இருப்பதைப்போல், உங்கள் உடலுக்குள்ளே உப்பான மெய்ப் பொருளாய் ஈசன் இருப்பதை உணருங்கள். உள்ளுக்குள்ளே தவம் செய்து வந்தால் மனதுக்குள்ளேயே ஈசன் உள்ளதை அறியலாம்.

சுத்தியைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்தியுஞ் சிவமுமாகி நின்றதன்மை யோர்கிலீர்
சத்தியாவ தும்முடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்கா ளறிந்துகொள் பிரானிருந்த கோலமே. 407

சக்தியாவது உங்கள் உடல்; அதில் இயங்கும் சீவனாம் சிவம் உயிர். இங்ஙனம் இவ்வுடலில் சக்தியும் சிவனும் இணைந்து உலவுவதை அறியமாட்டீர்கள். ஐம்பூதங்களாலாகிய உடலின் மேல் உள்ள மவுன வெளியில் ஈசன் சக்தியுடன் கூடி சோதி வடிவில் உள்ளான். பித்தர்களே! இதுதான் எம்பிரான் உடலில் இருக்கும் கோலம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அகாரமான தம்பலம் மனாதியான தம்பலம்
உகாரமான தம்பல முண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலஞ்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே. 408

அகாரமாகிய உயிர்தான் அநாதியான ஈசன். அவன், உகாரம் என்னும் உடலில், உள் மெய்யில், குடி கொண்டு இருக்கிறான். மகாரமாகிய மனதில் சோதி வடிவாகி உள்ளான். ஆதி, நடு, அந்தம் ஆகிய அனைத்துமான சிகாரத்தில் நினைவை வைத்துத் தவம் செய்ய சிவாயம் தெளிவாய் விளங்கும்.

சக்கரம் பறந்தோடி சக்கரமேல் பலகையாய்
செக்கிலாடு மெண்ணெய்போல சிங்குவாயு தேயுவு
முக்கிலே யொளிகலந்து யுகங்களுங் கலக்கமாய்
புக்கிலே புகுந்தபோது போனவாற தெங்ஙனே. 409

வண்டிச் சக்கரம் கழன்று ஓடினால், வண்டி வெறும் பலகைதான். சக்கரமாக இருக்கும் கண்களிலிருந்து உயிர் பிரிந்தால் உடல் வெறும் கட்டைதான். கண்களில் உள்ள சோதியில் உள்ள நெருப்பையும், உயிரில் உள்ள வாயுவையும் இணைத்து சோதியில் நிறுத்தி யுகங்கள் தோறும் தவம் செய்யுங்கள். கண்களாகிய பூவினுள்ளே இருந்த ஆன்மா கலங்கி உடலை விட்டு போனது எவ்வாறு என்பதை ஆராயுங்கள்.

வளர்ந்தெழுந்த கொங்கைதன்னைமாய மென்றெண்ணிநீ
ரருள்கொள்சீவ ராருடம்புடைமை யாகத்தேர்வீர்காள்
விளங்கு ஞானமேவியே மிக்கோர்சொல்லலைக் கேட்பிரேல்
களங்கமற்று நெஞ்சுளே கருத்துவந்து புக்குமே. 410

வளர்ந்து கொழுத்த மார்பகங்களை உடைய பெண்களின் மேல் உள்ள ஆசையை மாயம் எனப் புறந்தள்ளி, அருளுடைய சீவனிருக்கும் உடலை நிலையென நினைத்து, ஞானமிகுந்தவர்களின் போதனைகளைக் கேட்டு, அதன்படி நடந்து தவமிருக்க, களங்கம் இல்லா மனம் கிட்டும். அதனுள் கருத்தாய் ஈசன் வந்து அமர்வான்.

நாலுவேத மோதுகின்ற ஞானம்ஒன் றறிவிரோ
நாலுசாம மாகியே நவின்றஞான போதமா
யாலமுண்ட கண்டனு மயனுமந்த மாலுமாய்ச்
சாலவுன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே. 411

நான்கு வேதங்களும், நான்கு சமயங்களும் ஓதும் ஞானம் ஒன்றுதான். ஈசன் நம் உடலினுள்ளே உள்ளான் என்பதுதானது. அவனை அடையும் வழியையும் அவைகள் சொல்கின்றன. அதன்படி முக்கலைகளையும் ஒன்றாக்கி மேலேற்றித் தவம் புரிய, விடமுண்ட கண்டனாம் சிவன், பிரம்மா, திருமால் ஆகிய மூவரும் ஒன்றாகி நெஞ்சத்தில் சிவாயமாகி இருப்பார்கள்.

சுற்றமென்று சொல்வதுஞ் சுருதிமுடிவில் வைத்திடீ
ரத்தன்நித்த மாடியே யமர்ந்திருந்த தெவ்விடம்
பத்திமுற்றி யன்பர்கள் பரத்திலொன்று பாழது
பித்தரே யிதைக்கருதி பேசலாவ தெங்ஙனே. 412

உயிர் பிரியும்போது சுற்றம் எங்கு போயிற்று. நம் உடலில், தினம்தோறும், அத்தனாகிய ஈசன் ஆடிக்கொண்டு இருக்கும் இடம் எந்த இடம்? அதுவே கண்கள். ஞானிகள் அதனை அறிந்து அதிலேயே பக்தியுடன் நினைவை வைத்துத் தவம் செய்து, பாழ் என்ற சூன்யமே பரம்பொருள் என்பதை உணர்ந்து, பரத்தை அடைவார்கள். பித்தர்களே! இதைக் கருத்தில் கொண்டு ஈசனை அடைவதைத் தவிர வேறு பேசுவதால் என்ன பயன்?

எங்ஙனே விளக்கதுக்கு ளேற்றவாறு னின்றுதா
னெங்ஙனே எழுந்தருளி யீசனேச ரென்பரே
லங்ஙனே இருந்தருளு மாதியான தற்பரம்
சிங்கமண்மி யானைபோலத் திரிமலங்க ளற்றவே. 413

நம் உடலில் உள்ள கபாலக் குகையில் உள்ள கண்களில் உள்ள சோதியான விளக்கின் உள்ளே நினைவை நிறுத்திக் கருத்தில் கலவுங்கள். அங்கே ஆதியான தற்பரத்தில் ஈசன் எழுந்தருளி உள்ளான். அவனை அறிந்து அங்கேயே நின்று அவனையே நினைத்துத் தவமிருக்க, நாம் யோக சிங்கங்களாக ஆகி, யானையைப் போன்ற அறிவு பெற்று, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் அறுத்துப் பிறவாநிலை அடையலாம்.

அற்றவுள் ளகத்தையு மலக்கிடு மெழுகிடு
மெத்ததீப மிட்டதிற்பிற வாதபூசை யேத்தியே
நற்றவம் புரிந்துஏக நாதர்பாதம் நாடியே
கற்றிருப்ப தேசரிதை கண்டுகொள்ளு மும்முளே. 414

உள் மனதினுள்ளே உள்ள மும்மலங்களையும் விலக்கி, ஈசனைப் பற்றிய சிந்தனையால் மெழுகி, தலையில் ஏற்றி வைத்த தீபமாம் கண்களில் உள்ள சோதியிலேயே நினைவை நிறுத்துங்கள். மூன்று கலைகளையும் ஒன்றாக்கி உயிர் மூச்சை மேலேற்றி, ஈசனின் திருவடி நாடித் தவம் செய்யுங்கள். இதுவே நீங்கள் கற்கவேண்டிய ஞானக்கல்வி. தவம் செய்யச் செய்ய விளங்காத உண்மைகளெல்லாம் விளங்கும். சாத்திரப் பூட்டுக்கள் உடையும்.

பார்த்துநின்ற தம்பலம் பரமனாடு மம்பலங்
கூத்துநின்ற தம்பலங் கோரமான தம்பலம்
வார்த்தையான தம்பலம் வன்னியான தம்பலஞ்
சீற்றமான தம்பலந் தெளிந்ததே சிவாயமே. 415

மெய்ப்பொருள் எது? அதுவே கண்கள். அது பார்த்து நின்றது. பரமன் சோதியாக ஆடிக் கொண்டிருக்கும் இடம். விழித்துக் கூர்மையாகப் பார்ப்பது. விழிக்கும்போது கோரமாக உள்ளது. சொல்லாத சொல்லின்(மவுனம்) பொருள். வன்னியாகிய தீச்சுடரை உள்ளடக்கியது. சினந்து பார்க்க சீற்றம் தோன்றும். இதுவே ஈசனின் அம்பலமாம் கோயில். அறிவாகத் தெளிவாக இருப்பது கண்களாம் சிவாயமே.

சென்றுசென் றிடந்தொறும் சிறந்தசெம்பொன் னம்பலம்
அன்றுமின்று நின்றதோ ரனாதியான தம்பலம்
என்றுமென்று மிருப்பதோ ருறுதியான வம்பல
மொன்றியொன்றி நின்றது ளொழிந்ததே சிவாயமே. 416

ஆலயங்கள் இல்லாவிடினும் நாம் செல்லுமிடங்களில் எல்லாம் சிறந்த பொன்னம்பலமாக விளங்குவது கண்கள். அன்றும் இன்றும் எப்பொழுதும் இருக்கும் அநாதியான, உறுதியான ஆலயம். அதன் உள்ளே சென்று சோதியில் நினைவை ஒன்றித் தவம் செய்யவேண்டும். அச்சோதியில் ஒளிந்திருப்பது சிவாயமே.

தந்தைதாய் தமரும்நீ சகலதே வதையும்நீ
சிந்தைநீ தெளிவுநீ சித்திமுத்தி தானும்நீ
விந்துநீ விளைவுநீ மேலதாய வேதம்நீ
யெந்தைநீ யிறைவனீ யென்னையாண்ட வீசனே. 417

என்னுள் இருந்து என்னை ஆண்டுகொண்டிருக்கும் ஈசனே! என் தந்தை, தாய், மற்றும் சுற்றமும் நீயே. அனைத்து தேவதைகளும் நீயே. என் சிந்தை நீயே. சிந்தையில் தெளிந்த அறிவும் நீயே. சித்தியும் முத்தியும் நீயே. விந்தாகிய முதலும் நீயே. அதில் விளைந்த உயிரும் நீயே. வேதங்கள் உரைக்கும் இறையும் நீயே. எந்தையாம் ஏக இறைவன் நீயே. அனைத்தும் நீயே.

எப்பிறப்பி லும்பிறந் திருந்தழிந்த வேழைகா
ளிப்பிறப்பி லும்பிறந்து என்னநீறு பூசுறீ
ரப்புடன் மலமறுத்து ஆசைநீக்க வல்லிரேல்
செப்புநாத வோசையிற் றெளிந்துகாண லாகுமே. 418

எந்தப் பிறவி எடுத்தாலும், பிறக்கிறீர்; வாழ்கிறீர்; இறக்கிறீர். கிடைத்தற்கரிய மானிடப் பிறவி எடுத்தும், ஈசனை அடையும் வழி என்ன என்று தேடாது, எருவாலாகிய சாம்பலை உடல் முழுதும் பூசிக்கொள்கிறீர்கள். நீரால் ஆகிய உடல் பற்றி இருக்கும் மும்மலங்களையும் அறுத்து, ஆசைகளை ஒழிக்க வல்லவர்களானால், ஞானிகள் சொல்லியுள்ள நாத ஓசையாம் “நமசிவய” என ஓதித் தவம் இருந்து, அந்த நாதத்தில் கலக்கத் தெளிவு உண்டாகும்.

எட்டுயோக மானது மியங்குகின்ற நாதமு
மெட்டுவக்க ரத்துளே உகாரமு மகாரமும்
விட்டலர்ந்த மந்திரம் வீணாதண்டி னூடுபோ
யட்டவட்ச ரத்துளே யமர்ந்ததே சிவாயமே. 419

எண் சாண் அளவுள்ள உடலில் செய்யும் யோகத்தால், ஓம்(அகாரமாம் உயிர்+உகாரமாம் உடல்+மகாரமாம் மனம்) எனும் நாதத்தை எழுப்பி மேலேற்ற வேண்டும். அது வீணாத் தண்டின் ஊடே போய் “அ” என்னும் உயிர் அட்சரத்துள் செல்லும். அங்குதான் சிவாயம் அமர்ந்துள்ளது.

பிரான்பிரா னென்றுநீர் பினாத்துகின்ற மூடரே
பிரானைவிட்டு மெம்பிரான் பிரிந்தவாற தெங்ஙனே
பிரானுமாய் பிரானுமாய் பேருலகு தானுமாய்
பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணு மும்முடல். 420

உடலை விட்டு சீவன் பிரியும் நேரத்திலே, எம்பிரானே! ஈசா! என பிதற்றுகின்ற பித்தர்களே! நம் உடலில் ஓடும் சீவனாகிய பிராணனை விட்டு எம்பிரான் பிரியவே இல்லை. அவனை நீங்கள் அப்போது உணரவில்லை. பிராணனாகவும், அதனுள் எம்பிரானாகவும் இப்பேருலகில் உள்ள அனைத்து சீவராசிகளிலும் ஈசன் இருக்கிறான். அப்பிராணனில் முளைத்தெழுந்ததே நம் உடல்.

ஆதியில்லை யந்தமில்லை யானநாலு வேதமில்லை
சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி
நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும்
ஆதிகண்டு கொண்டபின் னஞ்செழுத்து மில்லையே. 421

இறைவனுக்கு ஆதியில்லை; அந்தமுமில்லை. நான்கு வேதங்களால் ஆனதும் இல்லை. அது சோதி இல்லை; சொல்லாலாகிய மந்திரங்களும் இல்லை; சொல்லற்ற மவுன தூய வெட்டவெளி; அதற்கென்று எந்த நீதியும் இல்லை; அன்பும் இல்லை. அது இப்படித்தான் என வரையறுக்க முடியாதது. இப்படிப்பட்டதான, இருந்தும் இல்லாததான ஆதியைக் கண்டபின் எந்த எழுத்தாலாகிய மந்திரமும் வேண்டாம். அஞ்செழுத்தாகிய நமசிவய என்னும் மந்திரமும் இல்லை.

அம்மையப்ப னப்பநீ ரமர்ந்தபோ தறிகிலீ
ரம்மையப்ப னானநீ ராதியான பாசமே
அம்மையப்ப னின்னையன்றி யாருமில்லை யானபின்
னம்மையப்ப னின்னையன்றி யாருமில்லை யில்லையே. 422

நம் உடலில் அம்மையப்பன் அமர்ந்திருந்த போது நீங்கள் அவனை அறியவில்லை. நீரான விந்துவும், அம்மையப்பனும் ஆதியான பாசமாகவும், மனமாகவும் உள்ளதை அறியுங்கள். அனைத்தையும் அம்மையப்பனிடம் ஒப்படைத்து, சரணடைந்து, அவன் திருவடியில் நினைவை வைத்துவிட்ட பின், அவனைத் தவிர யாரும் இல்லையே.

முந்தவோ ரெழுத்துளே முளைத்தெழுந்த செஞ்சுட
ரந்தவோ ரெழுத்துளே பிறந்துகாய மானது
மந்தவோ ரெழுத்துளே யேகமாகி நின்றது
மந்தவோ ரெழுத்தையு மறிந்துணர்ந்து கொள்ளுமே. 423

ஆதியாகிய விந்துவால் உண்டாகியது பிறப்பு. அவ்வுடலில் ஏகமாக நின்றது உயிராகிய சோதி. எந்த எழுத்தையும் எழுத ஆரம்பிக்கும்பொழுது முதலில் ஒரு புள்ளி வைத்து அதிலிருந்துதான் எழுதத் தொடங்குகிறோம். அப்புள்ளியே முந்திய எழுத்து. அதுவே ஆதி. அதுதான் கண்ணின் கருமணி. அதனுள் முளைத்து எழுந்து ஆடிக்கொண்டிருக்கும் சோதி. அந்த சோதியை அறிந்து, உணர்ந்து கொள்ளுங்கள்.

கூட்டமிட்டு நீங்களுங் கூடிவேத மோதுறீர்
ஏட்டகத்து ளீசனு மிருப்பதென் னெழுத்துளே
நாட்டமிட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே
யாட்டகத்து ளாடிடு மம்மையாணை யுண்மையே. 424

சகல காரியங்களும் நிறைவேற இதைச் செய்; அதைச் செய் எனக் கூறி, கூட்டங்களைச் சேர்த்து வேத மந்திரங்களை ஓதுகிறீர்கள். நூல் ஏடுகளின் உள்ளே ஈசன் எந்த எழுத்தில் இருக்கின்றான் என்பதை அறிவீர்களா? நாலும் மூன்றுமான சப்த(ஏழு)நாடிகளுக்குள்ளே ஓடிடும் ஆன்மா, கபாலமெனும் ஆட்ட அரங்கிலே ஆடிடும் சோதியில் கலந்தால் ஈசனை அடையலாம். இதுவே உண்மை. இது பராசக்தியின் மீது ஆணை.

காக்கைமூக்கை யாமையா ரெடுத்துரைத்த காரணம்
நாக்கையூன்றி யுள்வளைத்து ஞானநாடி யூடுபோ
யேக்கைநோக்க வட்சர மிரண்டெழுத்து யேத்திடிற்
பார்த்தபார்த்த திக்கெலாம் பரப்பிரம்ம மானதே. 425

தவம் செய்யும் முறை பற்றி காகனாம் காகபுசுண்டர், மூலனாம் திருமூலர், ஆமையாம் அகத்தியர் போன்ற சித்தர்கள் எடுத்துரைத்த உண்மையை உணருங்கள். நாக்கை உள்மடக்கி உண்ணாக்கைத் தொட்டு, கபாலத்துக்குள் போய் ஏக்கத்துடன் மேலே நோக்கி, வாசியை அம், உம் என மேலேற்ற, பார்த்த திக்கில் எல்லாம் பரப்பிருமமே தெரியும்.

ஓசையுள்ள கல்லைநீ ருடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்தகல்லில் பூவும்நீருஞ் சாத்துறீர்
ஈசனுக் குகந்தகல் லெந்தக்கல்லு சொல்லுமே. 426

தட்டினால் ஓசை வரும் ஒரே பாறையை இரண்டாய் உடைத்து, ஒன்றை வாசல்படியாக்கி வாசலில் போடுகிறீர்கள்; மற்றொன்றில் ஈசனை சிலையாய் வடித்து பூசைகள் செய்கிறீர்கள். வாசல்படி மழுங்கும்படி மிதிக்கிறீர்கள். ஆனால், அதே கல்லில் செய்த ஈசனின் உருவுக்கு நீரால் முழுக்காட்டி பூ சாத்தி வணங்குகிறீர்கள். இவ்விரு கற்களில் எந்தக்கல் ஈசனுக்கு உகந்த கல் எனக் கூறுங்கள். அவனிருப்பதோ பிண்டக்கல்லாம் உடலில்தான் என்பதை உணருங்கள்.

ஓட்டுவைத்து கட்டிநீ ருபாயமான மந்திரங்
கட்டுபட்ட போதிலுங் கர்த்தனங்கு வாழுமோ
எட்டுமெட்டு மெட்டுளே யியங்குகின்ற வாயுவை
வட்டமிட்ட யவ்விலே வைத்துணர்ந்து பாருமே. 427

விந்தாகிய நீரால் உருவாகிய இவ்வுடல் எலும்பும் தோலும் ஒட்டு போட்ட ஒன்று. இதில் பிறப்பறுக்கும் மந்திரம் ஓரெழுத்தாம் கண்ணே. அதில்தான் ஈசன் சோதி உருவாகக் கட்டுப்பட்டுள்ளான். எண்சாண் உடலிலே எட்டும் வரைக்கும் ஓடும் பிராணனை வட்டமான கண்களின் உள்ளே வைத்து, உணர்ந்து பாருங்கள்.

இந்தவூரி லில்லையென்று எங்குநாடி யோடுறீ
ரந்தவூரி லீசனு மமர்ந்துவாழ்வ தெங்ஙனே
யந்தமான பொந்திலாரில் மேவிநின்ற நாதனை
யந்தமான சீயிலவ்வி லறிந்துணர்ந்து கொள்ளுமே. 428

இந்த ஊரில் ஈசன் இல்லை; அந்த ஊரில்தான் இருக்கிறான்; என்று எண்ணி அவனை நாடி ஓடுகிறீர்கள். அவன் இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ அலைகிறீர்கள். இந்த ஊரில் இல்லாத அந்த ஈசன் அந்த ஊரில் எங்கு உள்ளான். கபாலத்தில் முடிவான பொந்து ஒன்று உண்டு. அதில்தான் கண்கள் உள்ளது. கண்களில் உள்ளே உள்ள ஈசனை அறிய வழி என்ன? சிகாரமாம் கண்களில் அகாரமாம் உயிரை ஏற்றி, ஈசனை அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். அதாவது உயிர் மூச்சை கண்களில் உள்ளே செலுத்துங்கள்.

புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம்
தொக்குசட்சு சிங்குவை யாக்கிராணன் சூழ்ந்திடி
லக்குமணி கொன்றைசூடி யம்பலத்து ளாடுவார்
மிக்கசோதி யன்புடன் விளம்பிடாது பின்னையே. 429

நம் உடலில் புகுந்திருந்ததும், பூரணமானதும் கண்ணே. தொக்கு, சட்சு, சிங்கு என்னும் மூன்று நாடிகளையும் ஆக்கிராணன் என்னும் நாடியில் இணைத்து மேலேற்றினால் கபாலத்துக்குள் உருத்திராட்சமும் கொன்றையும் சூடிய சிவன் சோதி உருவில் தாண்டவம் செய்வதைக் காணலாம்.

பின்னெழுந்த மாங்கிசத்தை பேதையர் கண்பற்றியே
பின்புமாங்கி சத்தினால் போகமாய்கை பண்ணினால்
துன்புறும் வினைகள்தாம் சூழ்ந்திடும்பி னென்றலோ
அன்பரா யிருந்தபேர்க ளாறுநீந்தல் போல்விடே. 430

பெண்களின் உடலில் பின்புறம் முதுகுக்கு கீழே முட்டிக் கொண்டுள்ள சதையின் மேல் ஆசை கொண்டு, அவர்களின் கண் வீச்சில் மயங்கி, பெண்ணாசையால் அவர்களை புணர்ந்து அலைந்தால், அதன் பலனாகத் தீராத நோய்களும் வினையும் வந்து சூழும். அதைவிடுத்து பேரின்பம் பெற விழைந்தால், ஆற்றைக் கடந்து அக்கரை செல்வது போல் எளிதாகப் பிறவிப் பெருங் கடலைத் தாண்டலாம்.

விட்டிருந்த தும்முளே விதனமற் றிருக்கிறீர்
கட்டிவைத்த வாசல்மூன்று காட்சியான வாசலொன்று
கட்டிவைத்த வாசலுங் கதவுதாள் திறந்துபோய்த்
திட்டமான வீசனைத் தெளியுமாங் கிசத்துளே. 431

ஈசனிருப்பது உன் உடலுக்குள்ளே கபாலத்தில். அதை பற்றிய கவலை ஏதும் இல்லாது இருக்கிறீர்கள். உடலுக்குள் சந்திர, சூரிய, அக்கினி மண்டலங்கள் மூன்று. இவைகள் கட்டி வைத்த வாசல்கள். கண்கள் காட்சியான வாசல். கண்களைத் திறந்து மூன்று மண்டலங்களையும் ஒன்றாக்கி மேலேற்றி உள்நாக்கின் மேல் உள்ள கதவைத் திறக்க, இச்சதைப் பிண்டத்தினுள்ளே திடமாக ஈசனைக் காணலாம்.

ஆகுமாகு மாகுமே யனாதியான வப்பொருள்
ஏகர்பாதம் நாடிநாடி யேத்திநிற்க வல்லிரேல்
பாகுசேர் மொழியுமைக்குப் பாலனாகி வாழலாம்
வாகுடனே வன்னியை மருவியே வருந்திடீர். 432

அநாதியான ஈசனை அடைய நம் உடலில் உள்ள கண்ணால்தான் முடியும். அதனால்தான் எல்லாமே ஆகும். அதுவே ஏகராம் ஈசன் பாதமாம் திருவடி. அதுவே சூரிய, சந்திர கலைகளாம். அத்துடன் வன்னியாம் அக்கினி கலையை சேர்த்து மேலேற்றி அங்கேயே நிற்க முடியுமானால், இனிய மொழியுடைய உமைக்குப் பாலனாகி வாழலாம். ஆகவே முக்கலைகளும் ஒன்றிய வன்னியாகிய சுத்த அக்கினியைத் தழுவி வாழ்ந்து, இறையடியே கதியென வருந்தித் தவம் செய்யுங்கள்.

உண்மையான தொன்றதொன்றை யுற்று நோக்கியும்முளே
வண்மையான வாசியுண்டு வாழ்த்தியேத்த வல்லிரேல்
தண்மைபெற் றிருக்கலாம் தவமும்வந்து நேரிடும்
கன்மதன்ம மாகுமீசர் காட்சிதானுங் காணுமே. 433

உண்மையானது எது? உள் மெய்யில் உள்ள கண்கள்தான். அதனுள் உற்று நோக்கி, முக்கலைகளை ஒன்றாக்கி உயிர் மூச்சை(வாசி) வாழ்த்தி ஏற்ற முடிந்தவரானால், குளிர்ச்சி பொருந்தியவராகலாம். தவமும் வந்து சேரும். இதுவே மனிதனின் கர்மமும் தருமமும் ஆகும். இதனால் ஈசனின் காட்சி கிட்டும்.

பாலனாக வேணுமென்று பத்திமுற்று மென்பரே
நாலுபாத முண்டதில் நினைந்திரண் டடுத்ததால்
மூலநாடி தன்னில்வன்னி மூட்டியந்த நீருண
ஏலவார் குழலியூடே யீசர்பாத மெய்துமே. 434

இளமையாக வாழவேண்டும் என்றால், உடலும் உயிரும் பக்தியிலேயே முற்றி மூழ்கியிருக்க வேண்டும் என்பார்கள். நான்கு இதழ் கமலமாம் மூலாதாரத்தில் எழும் குண்டலினி சக்தியை ஞான வினையால் எழுப்பி, சூரிய, சந்திர கலைகளை அக்கினி கலையோடு சேர்த்து மூல நாடியில் ஏற்றி, அங்கேயே நினைவில் நின்று தவம் செய்தல் வேண்டும். அப்படி செய்ய, ஏலவார் குழலியுடன் இருக்கும் ஈசனின் திருவடி அடையலாம்.

எய்துநின்னை யன்பினா லிறைஞ்சியேத்த வல்லிரே
லெய்துமுண்மை தன்னிலே யிறப்பிறப் பகற்றிடும்
மையிலங்கு கண்ணிபங்கன் வாசிவானி லேறிமுன்
செய்தவல் வினைகளுஞ் சிதறுமது திண்ணமே. 435

மனிதப் பிறப்பு எடுத்த நோக்கமே இறைவனை அடைவதுதான். அவனை அடைய அவன் திருவடியிலேயே அறிவு உணர்வு நினைவு என்ற மூன்றையும் இணைத்து, நின்று அன்பினால் கெஞ்சித் தவம் இருத்தல் வேண்டும். அப்படி செய்ய வல்லவராயின், பிறப்பும் இறப்பும் இன்றி இருக்கலாம். வாசியானது ஆகாயத்தலத்தில் ஏறி நிற்க, மைதீட்டிய கண்ணை உடைய உமைபாகன் அருளால் முன் செய்த தீவினைகள் அனைத்தும் சிதறி ஓடும். இது திண்ணமே.

திண்ணமென்று சேதிசொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
யண்ணலன் புளன்புகுந் தறிந்து நோக்கலாயிடும்
மண்ணதிர விண்ணதிர வாசியை நடத்திடில்
நண்ணியெங்க ளீசனும் நமதுடலி லிருப்பனே. 436

வாசி யோகம் செய்தால் பிறவா நிலை கிடைக்கும்; இது உறுதி என்ற சேதி சொன்ன செம்மை வழி நின்றவர்களே! கேளுங்கள். அண்ணல் அன்பு உள்ளத்தில் உள்ளான் என்பதை உணர்ந்து, அவனை நோக்கித் தவம் இருங்கள். மண்ணாம் உடல் அதிர, விண்ணாம் உயிர் அதிர வாசியை மேலேற்ற, நம் ஈசனும் நம்மை நாடி வந்து நம் உடலில் இருப்பானே! அப்போது பிறவா நிலை தானே கிட்டும்.

இருப்பனெட் டெட்டெண்ணிலே இருந்துவேற தாகுவன்
நெருப்பவாயு நீருமண்ணும் நீள்விசும்பு மாகுவன்
கருப்புகுந்து காலமே கலந்தசோதி நாதனைக்
குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே. 437

படுக்கவைத்த 8 கண்கள். அதுவே தமிழ் எழுத்தான அகாரம். ஆக, எண்ணாகவும் எழுத்தாகவும் இருப்பது ஈசனான கண்கள். உடலுக்குள் இருக்கும் அகாரம் சிகாராமாகும்; அதுவும் வேறான ஒன்றாகும். நெருப்பு, காற்று, நீர், மண், ஆகாயம் என ஐந்து பூதங்களாகவும் இருக்கும். சோதி வடிவில் நாம் கருவில் உருவானபோதே நம் உடலில் கலந்தது. அதுவே குரு. இருளை நீக்கி ஒளி தருவதால் குரு. அது மிதப்பது நீரில். இதுவே ஈசனின் திருவடி. ஆக, இந்த இரகசியத்தை அறிந்து தவம் செய்யவேண்டும்.

கொள்ளுவார்கள் சிந்தையிற் குறிப்புணர்ந்த ஞானிகள்
விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டிவேண்டி யேத்தினால்
உள்ளுமாய்ப் புறம்புமா யுணர்வதற் குணர்வுமாய்த்
தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே. 438

ஈசனை அடைய வழி அறிந்த ஞானிகள், எந்த நேரமும் நினைவைக் கருத்தினில் ஒன்றி வைத்திருப்பர். அவர்களை அடையாளம் கண்டு, சென்று, பக்குவமாக திரும்பத் திரும்ப வேண்டிக்கொண்டால், அந்த வழியை சொல்லித் தருவார்கள். அவ்வழியில் தவம் செய்ய, நமக்கு உள்ளாகவும், புறமாகவும், உணர்வதற்கு உணர்வாகவும், தெளிவானதாகவும் நின்ற சோதியை அடையும் செம்மையான வழி தெளிவாகத் தெரியும்.

தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம்பெறும்
தெளிந்தநற் கிரியைபூசை சேரலாஞ் சாமீபமே
தெளிந்தநல் யோகந்தன்னில் சேரலாகுஞ் சாரூபந்
தெளிந்தஞானம் நான்கிலும் சேரலாஞ் சாயுச்சியமே. 439

சரியை வழி செல்ல சாலோகம் அடையலாம். நல்ல கிரியை வழி செல்ல சாமீபம் கிட்டும். தெளிந்த நல்ல யோகம் செய்தால் சாரூபம் என்னும் நிலை கிட்டும். ஞானம் நான்கு வகை. அவையாவன: ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் ஆகும். இவ்வழிகளில் செல்ல சாயுச்சியம் என்னும் நிலை அடைந்து ஈசனுடன் கலந்து இருக்கலாம்.

சேருவார்கள் ஞானமென்று செப்புவார் தெளிவுளோர்
சேருவார்கள் நாலுபாதச் செம்மையென்ற தில்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்
சேருமாறு கண்டுநாலுஞ் செய்தொழில் திடப்படே. 440

ஈசனிருக்கும் இடம் செல்ல வழி அறிந்து, அதனுடன் பொருந்தினால்தான் ஞானம் கிட்டும் என்பர் ஞானிகள். தெளிவோடு தவம் செய்பவர் அதனுடன் சேருவார்கள். நான்கு இதழ் தாமரையாம் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்பித் தவம் செய்வதுதான் செம்மையாகும். முக்கலை ஒன்றி, குண்டலினி எழுப்பி சோதியில் ஒன்றித் தவம் செய்ய ஈசனின் திருவருள் கிட்டும். அதற்கு, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நிலைகளிலும் நின்று திடமாகத் தவம் செய்யவேண்டும்.

திறமலிக்கு நாலுபாதஞ் செம்மையுந் திடப்படார்
அறிவிலிகள் தேசநாடி யவத்திலே யலைவதே
குழி(றி)யதனைக் காட்டியுட் குறித்துநோக்க வல்லிரேல்
வெறிகமழ் சடையுடையோன் மெய்ப்பத மடைவரே. 441

நான்கு இதழ் தாமரையாம் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை திறமை அனைத்தையும் பயன்படுத்தி மேலேற்றி, செம்மையாகத் தவம் செய்து திடப்படார்கள். அறிவிலிகள் இறைவனை நாடெங்கும் தேடி அங்குமிங்கும் அலைந்து அவத்தைப் படுகின்றனர். கபாலத்தில் குழியில் உள்ள குறியை அறிந்து அதற்குள் உற்று நோக்க வல்லவராயின், கங்கையையும் பிறையையும் தாங்கிய சடையுடைய ஈசனின் மெய்ப்பாதத்தை அடைவார்கள்.

அடைவுளோர்கள் முத்தியை யறிந்திடாத மூடரே,
படையுடைய தத்துவமும் பாதகங்க ளல்லவோ
மடைதிறக்க வாரியின் மடையிலேறு மாறுபோல்
உடலில்மூல நாடியை யுயரவேத்தி யூன்றிடே. 442

எல்லா அறிவும் இருந்தாலும், முத்தியை அறியாத முட்டாள்களே! ஏகப்பட்ட அலங்காரங்கள் செய்து, தத்துவங்கள் பல சொல்லி, “நான் முத்தியடையும் வழி கண்டுவிட்டேன்” என மற்றவர்களை ஏமாற்றுவது பாவம். அது உனக்கே பாதகங்கள் செய்யும். அதனால், தத்துவம் பேசிக்கொண்டிருக்காது,, அணையில் தேக்கி வைத்துள்ள நீர் மடை திறந்ததும் வெள்ளமாக மடை மீது ஏறுவது போல, குண்டலினி சக்தியை மூல நாடியினுள் மேலேற்றி அங்கேயே ஊன்றி நில்லுங்கள்.

ஊன்றியேத்தி மண்டல முருவிமூன்று தாள்திறந்
தான்றுதந்தி யேறிடி லமுர்தம்வந் திறங்கிடும்
நான்றிதென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படு
மான்றியு முயிர்பரம் பொருந்திவாழ்வ தாகவே. 443

முக்கலைகளையும் ஒன்றாக்கி, அதை ஊன்றி மேலே ஏற்றி மூன்று மண்டலங்களையும் ஊடுருவிக் கடந்து, உண்ணாக்கின் மேல் உள்ள கதவின் தாளைத் திறக்க, அமிர்தம் வந்து உண்ணாக்கில் இறங்கிடும். அப்போது ஞான வினை செய்பவருக்கு, நான் என்பது என்ன? எனும் வினாவுக்கு விடை கிட்டும். நாதனான ஈசனும் சோதியாய் வெளிப்படும். நம் உயிரில் பரம்பொருள் பொருந்தி இருப்பதை, நன்கு ஆராய்ந்து அறிந்துணர்ந்து தவம் புரிந்து எம பயமின்றி வாழுங்கள்.

ஆகமூல நாடியி லனலெழுப்பி யன்புடன்
மோகமான மாயையில் முயல்வது மொழிந்திடில்
தாகமேரு நாடியே கனேகமான வாறுபோல்
ஏகபாத மன்புட னிறைஞ்சினா ரறிவரே. 444

மோகமாகிய மாயையில் மயங்கி, சிற்றின்பத்தை ஒழித்தபின், வாசி யோகத்தால் மூல நாடியில் மூலக் கனலை எழுப்பி அன்புடன் கபாலத்தில் உள்ள மேருவை நாடி, அங்கேயே நின்று தவம் செய்யுங்கள். ஏகன் அனேகன் ஆனதுபோல் இருக்கும் ஏகபாதனாம் ஈசனை அன்புடன் கெஞ்சிக் கெஞ்சி வேண்டினால், அந்த ஈசனை அறியலாம்.

அறிந்துநோக்கி யும்முளே யயன்தியான மும்முளே
யிருந்திராம லேகர்பாதம் பெற்றிருப்ப துண்மையே
யறிந்துமீள வைத்திடா வகையுமரண மேத்தினார்
செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரு மும்முளே. 445

கபாலக் குகையின் வாசல் கண்தான் என்று அறிந்து அதற்குள்ளேயே நோக்கி ஈசனையே எண்ணித் தவமிருக்க, மும்மூர்த்திகளும் அந்தத் திருவடியாம் ஏகபாதத்தில் இருக்கும் உண்மையை உணரலாம். உணர்ந்த பின்னர் முக்கலைகளையும் ஒன்றாக்கி, மேலேற்றி, உண்ணாக்கின் மேல் உள்ள வாயிலைத் திறந்து, நினைவைக் கருத்தில் இருத்தினால் மரணத்தை வெல்லலாம்.

சோதியாக வும்முளே தெளிந்துநோக்க வல்லிரேல்
சோதிவந் துதித்திடுந் துரியாதீத முற்றிடு
மாதிசக் கரத்தினி லமர்ந்துதீர்த்த மாடுவான்
பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே. 446

நம் உடலில் சோதியாக உள்ளது கண்கள். அதற்குள்ளே தெளிவாக உற்று நோக்கி பிராணனைத் திருத்தினால் வாசி இலயமாகும்; கபாலத்துக்குள் சோதி உதிக்கும். அதன் பின்னர், இவையிரண்டும் சேர்ந்து துரியாதீதமாகிய வெட்டவெளிக்குள் செல்லும். இலயமான வாசியை இலயம் தவறவிடாது (பேதியாது) ஞான வினையாற்ற, ஆதி சக்கரமாகிய கண்ணின் கருமணிக்குள் நீரில் அமர்ந்து தீர்த்தமாடும் ஈசனைக் கண்டு கொள்ளலாம்.

திருவுமாய் சிவனுமாய் தெளிந்துளோர்கள் சிந்தையில்
மருவிலே யெழுந்துவீசும் வாசனைய தாகுவன்
கருவிலே விழுந்தெழுந்த கன்மவா தனையெலாம்
பருதிமுன் னிருளதாய் பறியுமங்கு பாருமே. 447

மரு என்னும் மலரின் வாசனையை உடைய ஈசன், திருவுமாகி சிவனுமாகி இருப்பதைத் தெளிந்து வாழுவோர் நினைவில் உள்ளான். கருவில் உருவாகிய உடல் எடுத்தபோதும், பின்னரும் உண்டாகிய கர்ம வினைகளெல்லாம், பகலவனைக் கண்ட இருளைப்போல் விலகி ஓடிவிடும். ஆகவே, நினைவைக் கருத்தில் வைத்து அங்கு பாருங்கள்.

பாருமெந்தை யீசர்வைத்த பண்பிலே யிருந்துநீர்
சேருமே நடுவறிந்து செம்மையான வப்பொருள்
வேரையும் முடியையும் விரைந்துதேடி மாலயன்
பாரிடந்து விண்ணிலே பறந்துங்கண்ட தில்லையே. 448

அனைத்துலக சீவராசிகளுக்கும் எந்தையாம் ஈசர், தன் திருவடியை ஒளிபொருந்திய பாகமாகத் தத்தம் உடலில் வைத்துள்ளார். அந்த செம்மையான மெய்ப்பொருள் கண்கள்தான். திருமாலும் பிரமனும் அடி முடி தேடி ஒருவர் நிலத்தைத் தோண்ட, மற்றொருவர் மேலே பறக்க, ஒருவராலும் காண இயலவில்லை. ஏனெனில் ஈசன் இருப்பது ஒவ்வொருவர் உடலிலேதான். கண்ணின் நடு அறிந்து மேலேறிக் கபாலத்துக்குள் செல்ல ஈசனைக் காணலாம்.

கண்டிலா தயன்மாலென்று காட்சியாக சொல்லுறீர்
மிண்டினா லரனுடன் மேவலா யிருக்குமோ
தொண்டுபட்டு மன்புடன் தொழுதுநோக்க வல்லிரேல்
பண்டுமுப் புரமெரித்த பத்திவந்து முத்துமே. 449

திருமாலும், பிரமனும் ஈசனின் அடிமுடியைத் தேடிக் கண்டதில்லை என்று கதை கதையாய்ப் பார்க்காமலே சொல்லுகிறீர்கள். செருக்குடன்(மிண்டு) பேசித் திரிவதால் ஈசனுடன் மேவி இருப்பது எங்ஙனம்? இறைத்தொண்டுகள் பல செய்து, அன்புடன் ஈசனை நினைந்து, தொழுது, திருவடிக்குள் (கண்) நோக்க வல்லவர்களானால், முன்னொரு காலத்தில் முப்புறம் எரித்த ஈசன் நம் அருகில் வந்து ஆட்கொள்ளுவான்.

முற்றுமே யவனொழிந்து முன்பினொன்று காண்கிலேன்
பற்றிலாத தொன்றுதன்னை பற்றிநிற்க வல்லது
கற்றதாலோ யீசர்பாதங் காணலா யிருக்குமோ
பெற்றபேரை யன்புடன் பிரியமாகக் கேளுமே. 450

அனைத்திலுமே ஈசன் பரவியுள்ளான். அதனால் அவனைத் தவிர முன்னும் பின்னும் வேறு ஒன்றையும் காண்கிலேன். அவன் பற்றில்லாத பரம்பொருள். ஆயினும் நம்மைப் பற்றி நிற்கும் வல்லமையுடைய ஒன்று. கண்டதையெல்லாம் கற்றுப் பண்டிதன் ஆனாலும், உனக்குள் இருக்கும் ஈசனின் திருவடி அறியாது இருக்கலாமோ? கல்வியால் மட்டும் ஈசன் பாதம் அறிய முடியாது. திருவடியைப் பற்றி நின்று பரம் பொருளை அடைவதுதான் மெய் கல்வி. ஈசனின் திருவடி வழி சென்று ஞானம் அடைந்த பெரியோரை அணுகி, அவர்கள் பெற்ற பெரும் பேற்றைத் தனக்குத் தருமாறு அன்புடன் வேண்டிக் கேட்டால் தருவார்கள். அவ்வழி நின்று வாழுங்கள்.


கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலந்தன்னுளே
வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும்
வீட்டிலே வெளியதாகும் விளங்கவந்து நேரிடும்
கூட்டிவன்னி மாருதம் குயத்தைவிட்டு எழுப்புமே.

448
எழுப்பி மூலநாடியை இதப்படுத்த லாகுமோ
மழுப்பிலாத சபையைநீர் வலித்துவாங்க வல்லீரேல்
சுழுத்தியும் கடந்துபோய் சொப்பனத்தில் அப்புறம்
அழுத்திஓர் எழுத்துளே அமைப்பதுஉண்மை ஐயனே.

449
அல்லதில்லை என்றுதான் ஆவியும் பொருளுடல்
நல்லஈசர் தாள்இணைக்கும் நாதனிக்கும் ஈந்நிலை
என்றும்என்னுள் நேசமும் வாசியை வருந்தினால்
தொல்லையாம் வினைவிடென்று தூரதூரம் ஆனதே.

450
ஆனதே பதியது உயிர் அற்றதே பசுபாசம்
போனவே மலங்களும் புலன்களும் வினைகளும்
கானகத்தில் இட்டதீயில் காற்றுவந்து அடுத்ததோ?
ஊனகத்தில் வாயுஉன்னி ஒன்றியே உலாவுமே.

451
உலாவும் உவ்வும் அவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும்
உலாவிஐம் புலன்களும் ஒருதலத்து இருந்திடும்
நிலாவும்அங்கு நேசமாகி நின்றும் அமுதம்உண்டுதாம்
உலாவும் எங்கள் ஈசனைக் குறித்துணர்ந்து கும்பிடே.

452
கும்பிடும் கருத்துளே குகனைஐங் கரனையும்
நம்பியே இடம்வலம் நமக்கரித்து நாடி
எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவனைத்
தும்பிபோல வாசகம் தொடர்ந்துசோம்பி நீங்குமே.

453
நீங்கும்ஐம் புலன்களும் நிறைந்தவல் வினைகளும்
ஆங்காரமாம் ஆசையும் அருந்தடந்த பாதமும்
ஓங்காரத்தின் உள்ளிருந்து ஒன்பதொழிந் தொன்றிலத்
தூங்காஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே.

454
கருக்கலந்த காலமே கண்டுநின்ற காரணம்
உருக்கலந்த போதலோ உன்னைநான் உர்ந்தது
விரக்கில்என் மறைக்கில்என் வினைக்கிசைந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ?

455
ஞானநூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள்,
ஞானமான சோதியை நாடிஉள் அறிகிலீர்
ஞானம்ஆகி நின்றதோர் நாதனை அறிந்தபின்
ஞானம்அல்லது இல்லைவேறு நாம் உரைத்த துண்மையே

456
கருத்தரிப்ப தற்குமுன் காயம்நின்றது எவ்விடம்?
உருத்தரிப்ப தற்குமுன் உயிர்ப்புநின்றது எவ்விடம்?
மருட்பொதிந்த சிந்தையில் மயக்கம்நின்றது எவ்விடம்?
விருப்புணர்ந்த ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே.

457
கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும்
இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்
மறுவினைப் பிறவிமூன்று காலமும் வகுத்தபின்
உறுவினைப்பயன் இதென்று உணர்ந்தஞானி சொல்லுமே.

458
வாயில்எச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர்
வாயிருக்க எச்சில்போன வாறதென்ன எவ்விடம்?
வாயில்எச்சில் அல்லவோ நீர்உரைத்த மந்திரம்?
நாயினை அறிந்தபோது நாடும்எச்சில் ஏதுகொல்?

459
தொடக்கதென்று நீர்விழத் தொடங்குகின்ற ஊமர்காள்
தொடக்கிருந்தது எவ்விடம்? சுத்தியானது எவ்விடம்?
தொடக்கிருந்த வாறறிந்து சுத்தபண்ண வல்லீரேல்
தொடக்கிலாத சோதியைத் தொடர்ந்துகாண லாகுமே.

460
மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில்
சாதிபேத மாம்உருத் தரிக்கும்ஆறு போலவே
வேதம்ஓது வானுடன் புலைச்சிசென்று மேவிடில்
பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே.

461
மேதி - எருமை
வகைக்குலங் கள்பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள்
தொகைக்குலங் கள்ஆனநேர்மை நாடியே உணர்ந்தபின
மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறுஒன்று கண்டிலீர்
நகைக்குமாறு மனு எரிக்கநாளும்நாளும் நாடுவீர்.

462
ஓதும்நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும்
பூதத்தத்து வங்களும் பொருந்தும் ஆகமங்களு
சாதிபேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம ஆகியே பிறந்துஉழன்று இருந்ததே.

463
அங்கலிங்கம் பூண்டுநீர் அகண்டபூசை செய்கிறீர்
அங்கலிங்கம் பூண்டுநீர் அமர்ந்திருந்த மார்பனே
எங்கும்ஓடி எங்கும்எங்கும் ஈடழிந்து மாய்கிறீர்
செங்கல்செம்பு கல்லெலாம் சிறந்துபார்க்கும் மூடரே.

464
தீட்டம்தீட்டம் என்றுநீர் தினமும்மூழ்கும் மூரே
தீட்டமாகி அல்லவோ திரண்டுகாயம் ஆனதும்
பூட்டகாயம் உம்முளே புகழுகின்ற பேயரே
தீட்டுவந்து கொண்டலோ தெளிந்ததே சிவாயமே.

465
உந்திமேலே நாலுமூன்று ஓம்நமசி வாயமாம்
சந்திசந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே
மூந்தவந்து நம்முளே மூலநாடி ஊடுபோய்
அந்திசந்தி அற்றிடம் அறிந்துணர்ந்து பாருமே.

466
வன்னிமூன்று தீயினில் வாழும்எங்கள் நாதனும்
கன்னியான துள்ளிருக்கக் காதல்கொண்டது எவ்விடம்
சென்னிநாலு கையிரண்டு சிந்தையில் இரண்டிலொன்று
உன்னியுன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே.

467
தொண்டுசெய்து நீங்களும் சூழஓடி மாள்கிறீர்
உண்டுஉழன்று நும்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர்
வண்டுலாவு சோலைசூழ வாழும்எங்கள் நாதனும்
பண்டுபோல நும்முளே பகுத்திருப்பன் ஈசனே.

468
பரம்உனக்கு எனக்குவேறு பயம்இல்லை பாரையா
கரம்உனக்கு நித்தமும் குவித்திடக் கடமையாம்
சிரமுருக்கி அமுதளித்த சீருலாவும் நாதனே
உரம்எனக்கு நீஅளித்த உண்மைஉண்மை உண்மையே.

469
என்அகத்தில் என்னைநான் எங்கும்ஓடி நாடினேன்
என்அகத்தில் என்னைஅன்றி ஏதும்ஒன்று கண்டிலேன்
மின்எழுப்பி விண்ணகத்தின் மின்ஒடுங்கு மாறுபோல்
என்அகத்துள் ஈசனோடு யானும்அல்ல தில்லையே.

470
இடங்கள்பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே
அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கும்ஞானம் எவ்விடம்?
அடங்குகின்றது எவ்விடம்? அறிந்துபூசை செய்யுமே.

471
புத்தகங் களைசுமந்து பொய்களைப் பிதற்றுவீர்.
செத்திடம் பிறந்திடம் அதுஎங்ஙன்என்று அறிகிலீர்
அத்தனைய சிந்தனை அறிந்துநோக்க வல்லீரேல்
உத்தமத்துள் ஆயசோதி உணரும்போகம் ஆகுமே.

472
அருளிலே பிறந்துநின்று மாயைரூபம் ஆகியே
இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ.
பொருளிலே தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லீரேல்
மருள்அதுஏது? வன்னியின் மறைந்ததே சிவாயமே.

473
தன்மசிந்தை ஆம்அளவும் தவமறியாத் தன்மையாய்க்
கன்மசிந்தை வெயில்உழன்று கருத்தழிந்த கசடரே,
சென்மம்சென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை
நன்மையாக உம்முளே நயந்துகாண வேணுமே.

474
கள்ளவுள்ள மேயிருக்கக் கடந்தஞானம் ஓதுவீர்
கள்ளம்உள் அறுத்தபோது கதிஇதன்றிக் காண்கிலீர்?
உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லீரேல்
தெள்ளு ஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே.

475
காணவேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே?
வேணும் என்று அவ்வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்ற சீவன் தான்சிவம் அதாகுமே.

476
தாணு - பரம்பொருள்
அணுவினோடு அகண்டமாய் அளவிடாத சோதியைக்
குணமதாக உம்முளே குறித்துநோக்கின் முத்தியாம்
மிணமிணென்று விரலைஎண்ணி மீளொணா மயக்கமாய்த்
துணிவிலாத படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர்

477
எச்சில்எச்சில் என்றுநீர் இடைந்திருக்கும் ஏழைகாள்
துச்சில்எச்சில் அல்லவோ தூயகாயம் ஆனதும்
வைத்தெச்சில் தேனலோ, வண்டின்எச்சில் பூவலோ?
கைச்சுதாடல் வைத்துடன் கறந்தபாலும் எச்சிலே!

478
சுதா - பசுவின் முலைக்காம்பு
தீர்த்தலிங்க மூர்த்திஎன்று தேடிஓடும் தீதரே
தீர்த்தலிங்கம் உள்ளில்நின்ற சீவனைத் தெளியுமே
தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்துகாண வல்லீரேல்
தீர்த்தலிங்கம் தான்அதாய்ச் சிறந்ததே சிவாயமே.

479
ஆடுகொண்டு கூறுசெய்து அமர்ந்திருக்கும் ஆறுபோல்
தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே
போடுதர்ப்ப பூசைஎன்ன பூசைஎன்ன பூசையோ

480
என்னை அற்பநேரமும் மறக்கிலாத நாதனே
ஏகனே இறைவனே இராசராச ராசனே
உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்க லாகுமே
உனதுநாமம் எனதுநாவில் உதவிசெய்வீர் ஈசனே.

481
எல்லையற்று நின்றசோதி ஏகமாய் எரிக்கவே
வல்லபூர ணப்பிரகாசர் ஏகதபோகம் ஆகியே
நல்லஇன்பம் மோனசாக ரத்திலே அழுத்தியே
நாடொணாத அமிர்தம்உண்டு நான்அழிந்து நின்றநாள்.

482
ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை
ஊனைகாட்டி உம்முளே உகந்துகாண வல்லீரேல்
ஊனகாயம் ஆளலாம் உலகபாரம் ஆளலாம்
கானநாடும் ஆளலாம் வண்ணநாடர் ஆணையே

483
நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து
வத்தியே கதறியே கண்கள்மூடி என்பயன்?
எத்தனைபேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ?
அத்தனுக்கிது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே?

484
எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை
மட்டதாக உம்முளே மதித்துநோக்க வல்லீரேல்
கட்டமான பிறவிஎன் கருங்கடல் கடக்கலாம்
இட்டமான ஒளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே.

485
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்துரூபம் ஆகியே
வெண்மையான மந்திரம் விளைந்துநீற தானேதே
உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே.

486
தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரம் தலங்களாய்
முச்சுடரும் மூவிரண்டும் மூண்டெழுந்த தீச்சுடர்
வச்சிரம் அதாகியே வளர்ந்துநின்றது எவ்விடம்?
இச்சுடரும் இந்திரியமும் ஏகமானது எங்ஙனே?

487 ஏகன் - தனிமுதன்மையானவன்
வல்லவாசல் ஒன்பதும் மறுத்தடைத்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர்ஐந்தும் சொல்லவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்ப தில்லையே.

488
வண்டுபூ மணங்களோடு வந்திருந்த தேன்எலாம்
உண்டுளே அடங்கும்வண்ணம் ஓதுலிங்க மூலமாய்க்
கண்டுகண்டு வேரிலே கருத்தொடுங்க வல்லீரேல்
பண்டுகொண்ட வல்வினை பறந்திடும் சிவாயமே.

489
ஓரெழுத்தில் லிங்கமாக ஓதும்அக் கரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்தும் மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே.

490
தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும்
பாரபார பாரம்என்று பரிந்திருந்த பாவிகாள்!
நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லீரேல்
தூரதூர தூரமும் தொடர்ந்துகூடல் ஆகுமே.

491
குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கள்தோறும் மூழ்குறீர்
மண்டுகங்கள் போலநீர் மனத்தின் மாசறுக்கிலீர்;
மண்டைஏந்து கையரை மனத்திருந்த வல்லீரேல்
பண்டைமால் அயன்தொழப் பணிந்து வாழலாகுமே.

492
மண்டுகம் - தவளை
கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல்
ஆடிரண்டு கன்றைஈன்ற அம்பலத்துள் ஆடுதே;
மாடுகொண்டு வெண்ணெய்உண்ணும் மானிடப் பசுக்களே!
வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே.

493
நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்!
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

494
நானும்அல்ல நீயும்அல்ல நாதன்அல்ல ஓதுவேன்
வானில்அல்ல சோதிஅல்ல சோதிநம்முள் உள்ளதே
நானும்நீயும் ஒத்தபோது நாடிகாண லாகுமோ?
தானதான தந்தான தாதனான தானனா.

495
நல்லதல்ல கெட்டதல்ல நடுவில்நிற்பது ஒன்றுதான்
நல்லதென்று போதது நல்லதாகி நின்றபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால்
நல்லதென்ற நாடிநின்று நாமம்சொல்ல வேண்டுமே.

496
பேய்கள்கூடிப் பிணங்கள்தின்னும் பிரியமில்லாக் காட்டிலே
நாய்கள்சுற்ற நடனமாடும் நம்பன்வாழ்க்கை ஏதடா?
தாய்கள்பால் உதிக்கும்இச்சை தவிரவேண்டி நாடினால்
நோய்கள்பட்டு உழல்வதேது நோக்கிப்பாரும் உம்முளே.

497
நம்பன் - பரமேசுவரன்
உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில்நீ
அப்பியாசை கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா
தப்பிலிப்பொய் மானம்கெட்ட தடியனாகும் மனமேகேள்;
ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன்பாதம் உண்மையே.

498
பிறப்பதெல்லாம் இறப்பதுண்டு பேதைமக்கள் தெரிகிலாது
இறப்பதில்லை எனமகிழ்ந்து எங்கள்உங்கள் சொத்தெனக்
குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்டகோலம் என்னவோ?
நிறப்பும்பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே.

499
சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத்
திட்டநெட்டு எழுந்தறியாது ஏங்கிநோக்கு மதவலீர்
பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்டம் அறியிரோ?
கட்டவிழ்த்துப் பிரமன்பார்க்கில் கதிஉமக்கும் ஏதுகாண்?

500
வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே!
காதகாத தூரம்ஓடிக் காதல்பூசை வேணுமோ?
ஆதிநாதன் வெண்ணெய் உண்டஅவனிருக்க நம்முளே?
கோதுபூசை வேதம்ஏது குறித்துப்பாரும் உம்முளே.

501
பரம்இலாதது எவ்விடம்? பரம்இருப்பது எவ்விடம்?
அறம்இலாத பாவிகட்குப் பரம்இலைஅது உண்மையே;
கரம்இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது
பரம்இலாத சூனியமாம் பாழ்நரகம் ஆகுமே.

502
மாதர்தோள் சேராததேவர் மானிலத்தில் இல்லையே!
மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே,
மாதராகும் சத்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்துகொண்டான் ஈசனே.

503
நீலிகங்கை - நீல நிறம் உடைய கங்கை.
சித்தர்என்றும் சிறியர்என்றும் அறியொணாத சீவர்காள்!
சித்தர்இங்கு இருந்தபோது பித்தர்என்று எண்ணுவீர்!
சித்தர்இங்கு இருந்தும் என்ன பித்தன்நாட்டிருப் பாரோ?
அத்தன்நாடும் இந்தநாடும் அவர்களுக்கெலா மொன்றே.

504
மாந்தர்வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே
சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லீரேல்
வேந்தன்ஆகி மன்றுளாடும் விமலன்பாதம் காணலாம்
கூந்தலம்மை கோணல்ஒன்றும் குறிக்கொணாதி துண்மையே.
மன்று - மன்றம்; சபை; விமலன் - மலமற்றவன்

505
சருகு - உதிர்ந்த இலை.
சருகருத்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்!
சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே;
வருவிருந்தோடு உண்டுஉடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே.

506
காடுமேடு குன்றுபள்ளம் கானின்ஆறு அகற்றியும்
நாடுதேசம் விட்டலைவர் நாதன்பாதம் காண்பரோ?
கூடுவிட்டு அகன்றுன்ஆவி கூத்தனூர்க்கே நோக்கலால்
வீடுபெற்ற அரன்பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே.

507
கட்டையால்செய் தேவரும் கல்லினால்செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்
வெட்டவெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே.

508
தங்கள்தேகம் நோய்ப்பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல்வைத்து ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளும்தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள்குலத்துத் தெய்வம்உம்மை உருக்குலைப்ப தில்லையே.

509
ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம்செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச்செய் பாதகர்
காசினியில் எழுநரகைக் காத்திருப்பது உண்மையே.

510
நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்துநெற்றி மைதிலகம் இட்டுமே
மோசம்பொய் புனைசுருட்டு முற்றிலும்செய் மூடர்காள்
வேசரிகளம் புரண்டவெண் ணீறாகும் மேனியே.

511
வாதம்செய்வேன் வெள்ளியும் பொன்மாற்றுயர்ந்த தங்கமும்
போதவே குருமுடிச்சுப் பொன்பணங்கள் தரவெனச்
சாதனைசெய் தெத்திச்சொத்து தந்ததைக்க வர்ந்ததுமே
காததூரம் ஓடிச்செல்வர் காண்பதும் அருமையே.

512
யோகசாலை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர்போல் பேருலகில் சாவரே.

513
காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வதுஎங்கு மடிப்புமோசம் செய்பவர்
நேரமாகக் கஞ்சாஅடித்து நேர்அபினையைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே.

514
நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று
ஊரினில் பறைஅடித்து ஊதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்குஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை நீளவும்கைப் பற்றுவார்.

515
காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம்எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட்டு அலைவரை.

516
முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனக்
சத்தியங்கள் சொல்லிஎங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறுவளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரேல்.

517
செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில்பாத குறடுசெய்து அழிக்கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடிநோக்க வல்லீரேல்
இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே.

518
எத்திசைஎங்கும் எங்கும்ஓடி எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ?
பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்;
முத்திஇன்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து அலைவரே.

519
கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில்
தொல்லைஅற் றிடம்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர்?
இல்லைஇல்லை இல்லைஇல்லை ஈசன்ஆணை இல்லையே.

520
இச்சகம் சனித்ததுவும் ஈசனைஐந்து எழுத்திலே
மெச்சவம் சராசரங்கள் மேவும்ஐந்து எழுத்திலே
உச்சிதப் பலஉயிர்கள் ஓங்கல்அஞ் செழுத்திலே
நிச்சயமெய்ஞ் ஞானபோதம் நிற்கும்ஐந் தெழுத்திலே.

521
சாத்திரங்கள் பார்த்துப்பார்த்துத் தான்குருடு ஆவதால்
நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்கா
பாத்திரம் அறிந்துமோன பக்திசெய்ய வல்லீரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தர்ஆவர் அங்ஙனே.

522
மனவுறுதி தானிலாத மட்டிப்பிணை மாடுகள்
சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர்எங்கும் சுற்றிதிண்டிக்கே அலைபவர்
இனமதில் பலரும்வையும் இன்பம் அற்ற பாவிகள்.

சிவாயவசி என்னவும் செபிக்கஇச் சகம்எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே. 523

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக