தமிழர் மறை நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் மறை நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இன்னிலை


இது நான்கு பகுதிகளைக் கொண்டது. இந் நூலைச் செய்தவர் பொய்கையார்.

"திரு. பொய்கையார் இன்னிலை. திரு வ. உ., சிதம்பரம் பிள்ளையவர்கள் விருத்தியுரையுடன் தில்லையாடி த. வேதியப் பிள்ளையால் பதிப்பிக்கப் பெற்றது. இரண்டாம் பதிப்பு. அம்பா சமுத்திரம் அகஸ்தியர் அச்சுக்கூடம் விபவ வருஷம்" என்று முன்பக்கம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் "முன்னுரை" "ஆசிரியர்". "உரைப்பாயிரம்," "இரண்டாம் பதிப்புரை" ஆகிய நான்கும் வ. உ. சி அவர்களே வரைந்திருக்கின்றனர். பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று "இன்னிலை" தான் என்பதற்கும் அதனை இயற்றியவர் பொய்கையார் என்பதற்கும் இது சிறந்த நூல் என்பதற்கும் பல காரணங்காட்டி விளக்குகிறார். இந்நூல் அவர்கள் கைக்குக் கிடைத்த விதம் அப் புத்தகத்தில் உள்ளபடி இங்கு வரைகின்றேன் அறிக. இன்னிலை'ஆசிரியர்' என்ற தலைப்பில் உள்ளது இது.

"இந்நூலினது ஏட்டுப் பிரதியின் முதல் ஏட்டுத் தொடக்கத்தில் மதுரையாசிரியரால் தொகுக்கப்பட்ட இன்னிலை நாற்பத்தைந்து நன்றாக என்னும் சொற்களும், அம் முதலேட்டின் முடிவில் திருமேனிக் கவிராயன் எழுதி வரும் இன்னிலை நாற்பத்தைந்து நன்றாக என்னுஞ் சொற்களும், அவ்வேட்டுப் பிரதியின் கடைசி ஏட்டு முடிவில் பொய்கையார் பாடிய இன்னிலை முற்றிற்று என்னும் சொற்களும், எழுதப்பட்டுள்ளன. இந்நூலின் ஏட்டுப் பிரதியை எழுதிய திருமேனி இரத்தினக் கவிராயரவர்கள் செந்தமிழ்ப் புலமையும் சீரிய ஒழுக்கமும் தெய்வ பக்தியுஞ் சிறந்து விளங்கியவர்கள். இந்நூலின் ஏட்டுப் பிரதியை அளித்த ஸ்ரீமான் மலையையாப் பிள்ளையவர்கள் அக்கவிராயவர்களின் ஏடுகளை யெல்லாம் போற்றி வைத்திருக்கும் அவர்களுடைய சந்ததியார்களின் தலைவராய் விளங்கியவர்கள். பொய்கையார் என்பவர் இன்னிலை என்னும் நூலை இயற்றிற்றிலர் என்றாவது, அந்நூலை வேறு யாரேனும் இயற்றினரென்றாவது நாம் கேள்விப்படவில்லை. ஆதலால் இன்னிலை என்பது இந்நூலே என்றும் இந்நூலை இயற்றியவர் பொய்கையாரே யென்றும் நாம் கொள்ளலாம்" என்பது, இன்னிலை முதலிற் பதித்ததும் இரண்டாவது பதித்ததும் வ.உ.சி அவர்களே என்பதும், ஏட்டுப் பிரதியும் ஒன்றே என்பதும், அது மலையையாப் பிள்ளையவர்கள் அளித்தனர் என்பதும், மதுரையாசிரியரால் தொகுக்கப்பட்ட இன்னிலை நாற்பத்தைந்து, திருமேனிக் கவிராயன் எழுதி வரும் இன்னிலை நாற்பத்தைந்து, பொய்கையார் பாடிய இன்னிலை முற்றிற்று என அவ்வேட்டின் முதலிலும் முடிவிலும் எழுதப்பட்டிருந்தன என்பதும் நாம் அறிகின்றோம். உரையாசிரியர்களில் இன்னார், இந்நூற்கவிகளை மேற்கோள் காட்டி, இன்னிலையில் உள்ளது என்று குறிப்புக் காட்டியுள்ளனர், என்பதற்கு ஆதாரம் ஒன்று மின்று, வ. உ. சி அவர்களும் சான்று காட்டினாரல்லர். உரையாசிரியர் சிலர் மேற்கோளாக இன்னிலையிலுள்ள கவிகளை எடுத்தாண்டனர் என்று வ. உ. சி. அவர்கள் கூறியதை ஆராய்ந்தால் வியப்பு விளைகின்றது. தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 23 ஆம் சூத்திரம் இளம்பூரணருரை, கற்பியல், 5 ஆம் சூத்திரவுரை 12 ஆம் சூத்திரவுரை ஆகிய இடங்களைச் சுட்டி இன்னிலை நூலில் 2, 37, 29, 32, 35 எண்ணுடைய ஐந்து பாடல்களும் வந்துள்ளன என விளக்கினர். இளம் பூரணத்தைநோக்க அவற்றுள் ஒன்றேனும் வந்திலது. முந்தின பதிப்புக்களில் இருந்து பின்னர் அவை விடுபட்டனவோ என ஐயுறும் நிலையிலுள்ளது. தொல்காப்பியம் செய்யுளியல் 113 ஆம் சூத்திரம் பேராசிரியருரையில் அவர்கள் கூறியவாறே இன்னிலை 5 ஆம் செய்யுள் மேற் கோளாக வந்துள்ளது. யாப்பருங்கலவிருத்தி யுரையாசிரியரும் இன்னிலை 2 ஆம் செய்யுளை மேற்கோளாகக் காட்டியுள்ளார். ஆயினும் அக்கவிகள் இன்னிலை என்ற நூற் கவிகள் தாம் என்பதற்குச் சான்று தோன்றும் வகை ஆங்கில்லை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக இன்னிலை வந்த வழி இந்த வழி என்றுணர்க. இனிக் கைந்நிலை வந்த வழி காண்போம்.

கடவுள் வாழ்த்து


வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்
வாலிழை பாகத்து அமரிய கொழுவேல்
கூற்றம் கதழ்ந்தெறி கொன்றையன்
கூட்டா உலகம் கெழீஇய மலிந்தே.
- பாரதம் பாடிய பெருந்தேவனார்.


முருகனைப் பயந்த விரிந்த சடையையுடைய பெருமானும், மழுவாயுதத்தையுடைய இயமனைச் சினந்து கொன்ற கொன்றைமாலை புனைந்த வரும் (ஆகிய சிவபெருமான்), இடப்பாகத்தில் உமை:அமர்ந்திருப்ப, (அதனால்) துணையாக எல்லாவுலகங்களும் பெருகி விளங்கின.

கருத்து : சிவபெருமான் ஓர்பாகத்தில் உமையையமர்ந் திருப்ப எல்லாவுலகங்களும் விளங்கினவாதலால் அச்சிவபெருமானை வணங்குவோம்.


நூல்


1. அறப்பால்


அன்று அமரில் சொற்ற அறவுரை வீழ் தீக்கழுது
மன்றுயர்ந்து போந்த வகை தேர்மின் - பொன்றா
அறம் அறிந்தோன் கண்ட அறம் பொருள் கேட்டல்லல்
மறமொறுக்க வாய்த்த வழக்கு.
1


முற்காலத்தில், பாரதப்போரில் (கண்ணன் அருச்சுனற்குக் கூறிய கீதையாகிய) அறவுரையை விரும்பிக்கேட்ட கொடிய பேயானது, (அறிவால்) உயர்வுற்று ஆன்றோரவையைப் போய்ச்சேர்ந்த வகையை ஆராய்வீர், அழியாத தருமங்களையுணர்ந்தோன் அறிந்து கூறிய அறநூலினையும் பொருள் நூலினையும் (நீங்கள்) கேட்டு, துன்பத்தை விளைக்கும் பாவங்களை நீக்குக, பொருந்திய நன்னெறி இதுவேயாம்.

கருத்து : கொடிய பேயும் அறவுரை கேட்டுயர்ந்தது; ஆதலால் மக்களாகிய நீங்களும் ஆன்றோரறவுரை கேட்டுப் பாவம் நீக்கி வாழ்க.

பொருள் விழைவார் போற்றார் உடல்நலம் நம்மை
அருள் விழைவார் அதே முழுஎவ்வம் பாய்நீல்
இருள் இழையார் வீழ்வார் மேல் பால் ஆக்கார் ஆமாறு
அருள்இழையார் தாமும் அது.
2


செல்வப்பொருளைச்சேர்க்க விரும்புவோர் தம் உடல்நலத்தைப் பேணார், நம் இறைவனருளைப் பெற விரும்புவோர் இயற்கையும் அதுவேயாம், துன்ப முழுவதும் பரவுதற்கு ஏதுவாய நீல நிறமான இருண்டவளையலை யணிந்த மங்கையரின்பத்தை விரும்பியவர், முத்திக்குரிய செயல்கள் ஒன்றும் செய்யார், தம்மாலியன்றவாறு பிறவுயிர்கள் மேல் அருள் புரியாதவர் நிலைமையும் அதுவேயாம்.

கருத்து : பொருளை விரும்புவோரும் இறைவனருளை விரும்புவோரும் உடல் நலம் பேணாமல் எப்போதும் உழைப்பார். மாதர் சிற்றின்பத்தை விரும்புவோரும் பிறவுயிர் மேல் அருள் புரியாதவரும் முத்திக்குரிய செயல் புரியார்.

கோலப் புறவில் குரல்கூவிப் புள்சிமிழ்த்தோன்
காலில் தளைபரப்பச் சீர்ஒலிக்கும் - மாலின்
விரிநிழல் தாம் எய்தார் தீப்பழுவத்து உய்ப்பர்
உரிமை இவண்ஓரா தார்.
3


அழகிய புறாவின் குரல் போலத்தான் கூவியழைத்து அப்புறவாகிய பறவையைப் பிடித்துக் கூட்டிலடைத்தவன், (மறுபிறப்பில் அவனுடைய) காலில் விலங்கு பூட்ட (சிறையிலடைக்க) தன் நிலைமையைக்குறித்துப் புலம்புவன், இவ்வுலகில் தாம் செய்ய வேண்டிய கடமைகளை அறியாதவர், திருமாலின் திருவடியின் விரிந்த நிழலையடைவதற்குரிய செயல் புரியார், கொடிய நரகம் என்ற கானகத்தில் தம்மைச் செலுத்துதற்குரிய பாவச் செயல்களைச் செய்வார்.

கருத்து : தாம் செய்யுங் கடமையறியாத மாந்தர் பாவம் பல புரிந்து நரகத்துன்பத்தையடைவர். திருமாலின் திருவடியைச் சேர்தற்குரிய அறவினையைப் புரிவதே மாந்தர் கடமையாம்.

கழிவிரக்கம் கொள்ளார் கதழ் வாளார் வேர்த்துப்
பழிமுறுகக் கோடார் பயன் பேர்த்து - அழிமுதலை
இல்லம் கொண்டு ஆக்கார் இடும்பைத் தளை தணப்பர்
நல்லறனை நாளணி கொள்வார்.
4


தம்மிடமிருந்து நீங்கிய பொருள்களைக் குறித்து வருந்தாதவரும், சினத்தைமேற்கொள்ளாதவரும், வெகுண்டு பழி மிகுதியாகும்படி அதற்குரிய செயல்களைச் செய்யாதவரும், அறப்பயனை நீக்கிக் கெடுக்கும் முதற் பொருளைத் தமது மனையிற் கொண்டுபோய்ச் சேர்த்துச் செல்வத்தைப் பெருக்காத வரும் (ஆகிய அறிஞர்) துன்பமாகிய கட்டினை யறுப்பார்,

கருத்து : கழிந்த பொருட்கு இரங்காதவர், சினங்கொள்ளாதவர், பழிச்செயல் புரியாதவர், பாவத்தால் பொருள் ஈட்டாதவர் ஆகிய இவரே துன்பத்தின் நீங்கி அறம்புரியும் அறிஞராவர்.

திரைத்த விரிக்கின் திரைப்பின் நாவாய்போல்
உரைத்த உரையதனைக் கேட்டும் - உரைத்த
பயன்தவா செய்வார் சிலர்ஏதம் நெஞ்சத்து
இயன்றவா செய்வார் பலர்.
5


சுருட்டிய பாய்களை விரித்தால். விரித்தபாய்களைச் சுருட்டினால். கப்பல் (மாலுமி குறித்த இடத்திற்குச் செல்வது) போலவும், (அவர்) கூறிய அறிவுரையின் பயன் கெடாமல் நல் வினைகளைச் செய்வார் சிலரே (உள்ளனர்) , தம்மனம் போன போக்காக (தீவினைகளைச்) செய்வார் பலர் (உள்ளனர்) .

கருத்து : அறவுரைகேட்டும் பலர் நன்னெறி யொழுகாது தீயவழியிற் செல்கின்றனரே இதுமிகவும் வருந்தத்தக்கது. எல்லாரும் நல்வாழ்வு வாழப் பழக வேண்டும்.

அம்மை இழைத்த தலைப்பட்டு அழிவாயா
இம்மையும் கொண்டுறுத்தும் ஈர்ம் பெயலாம் - மும்மை
உணர்ந்தால் திருவத்தர் ஓரார் உழண்டைத்
தளைப்படுவர் தட்பம் தெறார்.
6


முற்பிறப்பிற் செய்த வினைகள் (அப்பிறப்பிலேயே செய்தவனை) சென்றடைந்து (பயன்களை நல்கி) கெட்டுப்போதலைப் பொருந்தா (முற்பிறப்பிற் செய்த வினைப்பயனை இப்பிறப்பிலடைய வேண்டும். இப்பிறப்பிற் செய்யும் வினைப்பயனை இனி வரும் பிறப்பில் அடையவேண்டும், அறியாதவர் துன்பத்தின் மயங்கி நிற்பார்; பாசங்களை யறுக்கமாட்டார்.

கருத்து : மறுபிறவியுண்டு; நல்வினை தீவினைப்பயன் நம்மை வந்து சேரும் என்று முக்காலங்களையும் அறியும் சான்றோரே பிறவியை நீக்கி முத்தியடைவர்.

தாம்ஈட்டு அருவினைகள் தண்டா உடம்பு ஒன்ற
நாம்ஈட்டு ஒறுக்கொணா ஞாங்கர்அடித் தீம்பால்
பிதுக்கப் பெயல்போல் பிறப்பறுப்புப் போகா
கதுப்போடு இறுத்தல் கடன்.
7


தாமே புரிந்து சேர்த்த அருமையான நல்வினை தீவினைகள் செய்தவர்களை விட்டு நீங்கமாட்டா. உடம்புடன் பொருந்தியிருக்க நம்மால் வினைகளை மீண்டும் நீக்க முடியா; உள்ளிடத்திலுள்ள இனிய பாலானது பிதுக்கப் பிதுக்க வெளி வருவதுபோல, பிறப்பு இறப்பு போகா பிறவியும் சாவும் அடுத்தடுத்து வரும்; மூட்டொடு அப்பிறவியைக் கெடுப்பதுவே மக்கள் கடமையாகும்.

கருத்து : அவரவர் செய்தவினைகள் அவரவரை விட்டு நீங்கா. செய்தவர்களாலும் திரும்பவும் அவற்றை நீக்கமுடியா. வினையுள்ளவரையும் பிறவியும் ஒழியாது. ஆதலால் வினையைக் கெடுத்துப் பிறவியை நீக்குவதே மக்கள் கடமையாம்.

தூயசொல் லாட்டும் துணிவ றியும் துன்பங்கள்
தோயக் கலங்காத் துணைவலியும் - பூயல்
படுக்குந் திருவத்த னாரே பறிப்பர்
அடுக்கு அடிச்சேரா வாறு.
8


தூய்மையான சொற்களைப் பேசுவதும்; (அறிஞர் உண்டென்று ஆய்ந்து) துணிந்தபொருளை யறிவதும், கவலைகள் வந்து பொருந்தியபோது மனங் கலங்காத வளவு வலிமை பெற்றிருப்பதும், (ஆகிய இவற்றை) பொருந்தச் சேர்க்கும் செல்வத்தினையுடையவரே, அடுக்கி வருகின்ற பிறவியிற் சேராதவாறு அதனைக்களைவர்.

கருத்து : தூயசொற் பேசுதலும், செம்பொருட்டுணிவும், துன்பத்திற்குக் கலங்காத மனவலிமையும் உடையவன் பிறவியை நீக்குவான் என்பது.

கடல் முகந்து தீம்பெயலை ஊழ்க்கும் எழிலி
மடனுடையார் கோதகற்றி மாண்புறுத்தல் ஏமம்
படைத்தாக்கல் பண்பறிந்தோர் சால்பு.
9


மேகமானது, கடலினுள்ள (உப்பு நீரை) முகந்து (நன்னீராக்கி) இனிய மழையாகப் பெய்யும் (அதுபோல) நற்பண்புகளை அறிந்தவரது செயலானது, அறியாமை யுடையவரது குற்றங்களைப் போக்கி நற்குணங்களைப் பொருந்துவித்தலும், (அவர்கட்கு) காவலாக வேண்டியவற்றை உண்டாக்கிப் பெருக்குவதும் ஆம்.

கருத்து : மேகம் கடல் நீரையுண்டு மழை பொழிந்து உலகத்தாரைக் காப்பது போலச் சான்றோர்களும் மக்களிடத்துள்ள அறியாமையை யகற்றி அவரைக்காப்பது கடமையாகும்.

இடிப்பதுஎன்று எண்ணி இறைவானைக் காயார்
முடிப்பர் உயிர்எனினும் முன்னார் - கடிப்பக்
கன்றமர்ந்து தீம்பால் கலுழுமே நீள் மோத்தை
ஒன்ற உணராதார் ஊங்கு.
10


இடிவிழச் செய்கின்றது என்று கருதிச் சிறிதும் மேகத்தை வெறுக்க மாட்டார்; தம் உயிரைப் போக்குவார் (இவர்) என்று தெரிந்தாலும், (அத்தகைய கொடியோர் உயிரை நாம் முதலிற் போக்குவது நலம் என்று (பெரியோர்) கருதமாட்டார். தனது கன்று விரும்பி மடியைக் கடித்தாலும் (தாய்ப்பசு) இனிய பாலினைச் சொரியும், பொருந்த வாழ்வதனை, யறியாத மக்களைப் பார்க்கினும் நீண்ட ஆட்டுக் கடாக்கள் (நல்லனவாம்.)

கருத்து : உதவி செய்பவரிடத்துக் குற்றம் இருப்பினும் பொறுக்கவேண்டும். தமககுத் தீங்கு செய்யினும் அவர்க்குத் தீங்கு செய்ய நினைக்கலாகாது. கூடிவாழ வேண்டும்.

2. பொருட்பால்


உண்மைஓராப் பித்தர் உடைமை மயக்கென்ப
வண்மையுற ஊக்கல் ஒருதலையே - கண்ணீர்
இருபாலும் தோன்றன்ன ஈர்க்கலார் - போழ்வாள்
இருபால் இயங்கலினோடு ஒப்பு.
11


உண்மையையறியாத மயக்க முடையவர் செல்வத்தை மயக்கம் தருவது (சிறந்தது அன்று) என்று கூறுவர். துணிவாகவளம் பொருந்தும்படி தேடுவதற்கு ஊக்கங்கொள்க. கண்ணின் நீர்மை போன்ற இருபக்கமுள்ள அறம் இன்பங்கள் தோன்றுவதாகிய அத்தன்மையுடையது (செல்வம்) வெட்டுவோர்க்கு வெட்டும் வாளாயுதம் இருபாலும் இயங்குவதனோடு ஒப்பாகும் அது.

கருத்து : செல்வம் அறம் இன்பங்களைத் தோன்றுவிக்கும். செல்வ மிருப்பது வீரர்களுக்கு வாளாயுதம் இருப்பது போன்றது. ஆதலாற் செல்வத்தைத் தேட வேண்டியது மக்கள் கடமையாம்.

உடைமைஅறாது ஈட்டல் உறுதுணையாம் யாண்டும்
உடைமையராச் சென்றக்கால் ஊர்எல்லாம் சுற்றம்
உடைமைக் கோல் இன்றங்குச் சென்றக்கால் சுற்றம்
உடையவரும் வேறு படும்.
12


(ஒருநாளும்) நீங்காது செல்வத்தைச் சேர்க்க வேண்டும். அஃது எவ்விடத்தும் மிக்க துணையாகும்; செல்வமுடையவராகி அயலூர்க்குச் சென்றால் சென்றவூரில் உள்ளவர் எல்லாரும் சுற்றத்தாராவார், செல்வமாகிய ஊன்றுகோலின்றி ஆங்குச் சென்றால் சுற்றத்தார் என்ற உரிமையுடையவரும் வேறுபட்டு அயலார் போலாவார்.

கருத்து : செல்வமுடையவரை எல்லாருஞ் சேர்ந்து தம் சுற்றமாகவே கொண்டாடுவர். ஆதலாற் செல்வத்தை இடைவிடாது வருந்திச் சேர்க்கவேண்டும்.

மண்ணீர் உடையார் வழங்கிச் சிறுகாலைத்
தண்ணீரார் சாரும் நிலம்சார்வர் - உண்ணீர்
அறியின் அருஞ்செவிலி மாண்பொருளே வெண்ணீர்ச்
சிறியரையும் ஏர்ப்படுத்தும் செய்.
13


நிலமும் நீர்நிலைகளும் ஆகிய செல்வங்களையுடையவர்; அவற்றை வறியவர்க்குக் கொடுத்து (அறம்புரிந்து) விரைவில், அருட்குணமுடைய ஆன்றோர் எய்தும் மேலுலகத்தினை அடைவர், உண்மைத் தன்மையாய்ந்தால், மாட்சிமையுடைய செல்வப் பொருளே (அந்நற்பண்பு நற்செயல்களை வளர்க்கும்) அருமையான செவிலித்தாயாகும்; (அப்பொருள்) வெள்ளிய தன்மையுடைய சிறியோரையும் பெருமைப் படுத்தும், (ஆதலால் அப்பொருளை) ஈட்டுக.

கருத்து : செல்வமுடையவர்கள் அறம்புரிந்து மேலோர் எய்தும் துறக்கத்தினையும் அடைவர். செல்வமே நற்பண்புகளை வளர்பபது. ஆதலால் நீ செல்வத்தினையே தேடுக.

மெய்வலியும் செல்நிலையும் வாழ்நாளும் தூவொழுக்கும்
மெய்யா அளிக்கும் வெறுக்கைஇலார் - வையத்துப்
பல்கிளையும் வாடப் பணையணை தோள் சேய்திரங்க
ஒல்குஉயிர்நீத்து ஆரும் நரகு.
14


பொருட்செல்வமானது (எல்லார்க்கும்) , உடல்வலியும், தம்வாக்கு எங்குஞ் செல்கின்ற நிலைமையும், நீண்ட வாயுளும், தூயவொழுக்கமும், உண்மையாகக் கொடுக்கும், செல்வமில்லாதவர்கள், இவ்வுலகில், பலசுற்றாத்தாரும் வருந்தும் படியும், மூங்கில் போன்ற தோளுடையவள் ஆகிய மனைவி மக்கள் குறைவாகிய உயிரைப் போக்கி, (மறுமையிலும்) நரகத்திற் சேர்வர்.

கருத்து : ஒருவருக்குச் செல்வமானது உடல்வலி செல்வாக்கு. வாழ்நாள், நல்லொழுக்கம் இவற்றைக் கொடுக்கும், செல்வமில்லாதவர் இம்மையிற் சுற்றம் மனைவி மக்கள் வாடும்படி வாழ்ந்து பின் இறந்து மறுமையில் நரகத்தை யடைவர். ஆதலாற் செல்வத்தைத்தேடுக.

குருட்டுஆயன் நீள்கானம் கோடல் சிவணத்
தெருட்டுஆயம் காலத்தால் சேரான் - பொருட்டாகான்
நல்லறமும் பேணான் நாரம்இவர்த் தானாம்
பொல்லாங்கு உறைவிடாமாம் புல்.
15


(யாவரையும்) தெளிவிக்கின்ற பொருள் வருவாயை, இளமைப்பருவத்திலேயே சேராதவன். கண்குருடாகிய இடையன் நீண்ட கானத்தினை (தன் ஆடுகளை மேய்ப்பதற்கு) இடமாகக் கொள்வதை ஒப்ப, ஒரு பொருளாக மதிக்கப்படான். நல்ல அறங்களையும் செய்ய விரும்பான். மக்கட் கூட்டத்தால் வெறுக்கப்பட்டவனாவன், தீமைகள் யாவும் தங்குவதற்கு இடமாவன். சிறியவன்.

கருத்து : இளமையிற் பொருள் தேடாதவன், குருட்டாயன் காட்டில் ஆடு மேய்த்தது போல வாழ்வில் இடர்ப்பட்டுப் பிறரால் மதிக்கப்படாமல் வாழ்வான்.

முப்பொருள் உண்மை தெளிவான் அருஞ்சீலன்
முப்பொருள் உண்மை உடையான் அருமுனிவன்
முப்பொருள் உண்மை மடுப்பான் இறையாங்கு
முப்பொருள் உண்மைக்கு இறை.
16


(அறம் பொருள் இன்பம் என்ற) மூன்று பொருள்களின் உண்மை இயல்புகளை யுணர்ந்து தெளிந்தவன் அருமையான நல்லொழுக்க முடையவனாவான். அம்மூன்று பொருள்களின் உண்மையறிவுடையவன் அரிய தவ முனிவனாவான். அம்மூன்று பொருள்களின் உண்மையை மனிதர்கட்குக் காட்டி வளர்ப்பவன் அரசனாவான், அம்மூன்று பொருள்களும் மெய்ப் பொருளுக்கு உறைவிடமாம்.

கருத்து : அறம் பொருள் இன்பம் என்ற மூன்று பொருள்களின் இயல்புணர்ந்து தெளிந்தவன் நல்லொழுக்கமுள்ளவன்; அவற்றை அறிந்தவன் முனிவன்; அவற்றை மனிதர்க்குக் காட்டிப் பெருக்குவோன் அரசன். பரம்பொருட்கு இருக்குமிடமும் அவையாம்.

கால்கலத்தால் சேர்பொருளும் கண்ணற்றார் தேர்பொருளும்
நாலிரண்டால் கூடும் நலப்பொருளும் - கோல்தாங்கிக்
கோடும் அரசிற்கு உரியாமே தொல்புவிக்கீழ்
ஆடும் பொருளோடு அணைந்து.
17


வண்டியாலும் கப்பலாலும் வந்து சேர்கின்ற சுங்கப் பொருளும், அறிவில்லாதவர் தேடிய பொருளும், வருவாயில் ஆறிலொரு பங்காகக் கொடுக்கும் நலமான பொருளும், பழைமையான புவிக்குக்கீழ் அசை கின்ற பொருளாகிய புதையலுடன் சேர்ந்து, செங்கோல் தாங்கி நீதி தவறி நடக்கும் அரசுக்கு உரியனவாமோ (உரியனவாகா செங்கோலரசர்க்கே யுரியனவாம்.)

கருத்து : சுங்கப் பொருளும் அறிவில்லார் தேடிய பொருளும், குடிகள் ஆறிலொன்று கொடுக்கும் பொருளும் நிலத்திற் புதைத்த பொருளும் செங்கோலரசர்க்கே சேரும்.

ஆம்போம் வினையாம் அணைவுற்ற பேர்வெறுக்கை
ஓம்புஓம்பு எனமறை கூறத் தலைப்பெயலென்
ஏம்போம் எனவரைதல் ஈட்டுநெறி தேராமை
சாம்போழ்ந்து அலறும் தகைத்து.
18


(பொருள்) முற்பிறப்பிற் செய்த வினை காரணமாக உண்டாகும் பின்பு அழிந்துபோகும், (அப்பொருளுக்கு) சேர்ந்த பெயர் வெறுக்கையாம், ஒழித்துவிடு ஒழித்துவிடு என்று வேதங்கள் கூறவும், அப்பொருளைச் சேர்ப்பது, என்ன காரணம், (பொருளீட்டி) களிப்படையோம் நாம் என்று கூறி அதனை நீக்குவது, பொருள் சேர்த்து இன்பம் துய்க்கும் வழியறியாமையே யாகும், அது இறக்கும்போது வருந்தியழுந் தன்மை யுடையது.

கருத்து : ஆம் போது ஆம் போம்போது போம் என்று எளிதாகச் செல்வத்தைக் கருதி இளமைப் பருவத்தில் தேடாமலிருந்தால் இறக்கும்போது மனைவி மக்களைக் குறித்து வருந்த வேண்டியது நேரிடும்.

பட்டாங்குத் தூயர் பழிச்சற்கு உரியராய்
ஒட்டின்று உயர உலகத்தோர் - கட்டளை
யாம்வெறுக்கை இன்றி அமையாராம் மையாவின்
ஆம்வெறுக்கை நிற்க வுடம்பு.
19


உலகத்துள்ள மக்கள், உண்மையாக, தூய்மையுடையவராகவும் துதிப்பதற்கு உரியவராகவும், ஒப்பில்லாமல் உயர்வதற்கு, செல்வமே உரைகல்லாம், அச் செல்வமில்லாமல் (வேறொன்றாலும் அளப்பதற்கும்) பொருந்தார் ஆம். (செல்வமின்றி) உடல்மட்டும் நின்றால், காட்டுப் பசுவைப்போல வெறுப்பதற்கு உரியதாம்.

கருத்து : உலகத்தில் மக்களையளந்து உயர்வு தாழ்வுகாட்டுவதற்குக் கட்டளைக் கல்லாக இருப்பது செல்வம். செல்வமில்லாதவ ருடம்பு காட்டுப் பசுப்போல வெறுக்கப்படுவதாம்.


3. இன்பப்பால்


அறங்கரை நாவானாம் ஆய்மயிலார் சீரில்
அறங்கரையா நாப்பண் அடைவாம் - புறங்கரையாத்
திண்மை நிலையின் உயர்புலத்தில் சேர்வாம் ஈண்டு
எண்ணிலைக்கு உய்வாய் இது.
20


இன்பத்தின் பகுதியைக் கூறுவது இது. ஐம்புலனுகர்ச்சியிற் சிறந்த இன்பமாவது மங்கையர் காமவின்பமேயாதலின் அதனைக்கூறும் பகுதியாம். மூன்றாவதாக இன்பப்பால் வைக்கப்பட்டுள்ளது.

அறங்கூறும் நாவினால் ஆராய்ந்த மயில்போன்ற மகளிருடன் கூடிவாழும் சிறப்பு (ஒருவனுக்கு) உண்டாகும், இல்லறத்தின் முடிவாக நடுவுலகம் (பொன்னுலகம்) அடைவது கூடும், புறத்தொழுக்கிற் சென்று தளராத வலிமையான நிலையால் உயர்ந்த முத்தியாகிய இடத்திற்குச் சேர்வதும் கூடும், (ஆதலால்) இவ்வுலகத்தில் ஆராய்ந்த நிலைகட்கு எல்லாம் செலுத்துகின்ற வழி, இவ்வழியேயாம்.

கருத்து : இல்லறமே சுவர்க்கத்துச் செல்லுவதற்கும், முத்தியுலகம் அடைவதற்கும் வழியாகும். ஆதலால் இல்லறத்தை நல்லறமாகக்கொள்ளல் வேண்டும் மக்கள் யாவரும்.

துணைஎன்ப காமவிருந்து துய்ப்பார் தோமில்
இணைவிழைச்சின் மிக்காகார் ஆகல் - புணைதழீஇக்
கூட்டும் கடுமிசையான் கட்டியில் கொண்டற்றால்
வேட்டபோழ் தாகும் அணி.
21


காமவின்பமாகிய விருந்துண்பவர் (கணவனும் மனைவியும்) முத்தியுலகஞ் செல்வதற்குத் தக்க துணையாவார் என்று ஆன்றோர் கூறுவர். (அவர்கள்) குற்றமில்லாத புணர்ச்சியின்பத்தின் மிகாதவர்களாகுக. அது புணையாகி அவர்களைத் தழுவி முத்தியிற் சேர்ப்பிக்கும். மணம் புரிந்த போது உண்டாகிய அழகின் தோற்றம், கசப்பு மருந்தினையுண்ணாதவனுக்குக் கருப்புக்கட்டியில் வைத்து ஊட்டினாற்போன்றது.

கருத்து : கணவனும் மனைவியும் முத்தியுலகு செல்வதற்கு வழித்துணையாவார்; காதலிற் கருத்து மிகுதியுஞ் செலுத்தாது வாழ்ந்தால், அது புணைபோலக்கொண்டு போய்ச் சேர்க்கும் மணமுடிப்பது பேரின்ப வாழ்வு குறித்ததுவேயாம்.

ஒப்புயர்வில் வேட்டோன் ஒருநிலைப்பட்டாழ்ந்த செயல்
நப்பின்னை ஞாலம் ஒருங்கு அறிக - துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி அறிந்து.
22


ஒப்பில் உயர்வு இல்லாமல் (காதலன் காதலியிருவரும் ஒப்பென்று கருதி) மணந்தவன் ஒரு நிலைமையடைந்து (இன்பத்தில்) ஆழ்ந்திருந்த செய்தியை, நப்பின்னை (வாழ்வால் அறியலாம்) , உலக முழுவதும் அறிந்து கொள்க, மனத்தூய்மையுடையவராய்த் தூய பூவின் மென்மையாகிய தோற்றத்தையே மனதில் வைத்து (இல்லறம்) நடத்துக.

கருத்து : நப்பின்னையும் கண்ணனும் காதலுடன் கூடி இல்லறம் நடாத்தியது போல ஒருவர் தமக்கு வாழ்க்கைத்துணையை யறிந்து 'மணம் புரிந்து' மென்மைத் தன்மையாக இல்லறம் நடத்த வேண்டும்.

பாலை வளர்த்துக் கணங்குழை மாலையுறல்
சால்பென்ப கண்கூடாக் காணாய் - தழைகாதல்
வாலறிவன் ஆக்க வகையறிக காலத்தால்
தோலொடு நாலைந்து அணந்து.
23


பாலகனை வளர்த்து, பெருகிய ஆசையுடன், அழகுடன் நான்கு அல்லது ஐந்து ஆண்டு கூடிய அக்காலத்தில், (பள்ளியில் வைத்து) தூய அறிவுடையவனாக்குவதற்கு வேண்டும் வழியினை அறிந்து செய்க, (அவ்வாறு செய்யின்) திரண்ட காதணிகளையுடைய மங்கையின் இன்பத்தையுறுவது பெருமை என்று சொல்வார் (பெரியோர்) , அவ்வின்பத்தினை நீ கண்ணுக்குத் தோன்றும்படி காண்பாய்.

கருத்து : நல்ல மைந்தனைப் பெற்றெடுத்து வளர்த்துக் கல்வியறிவுடையனாகச் செய்தால் இல்லறத்தில் மனையாளுடன் கூடியவின்பம் பெருமையுடையதாம்.

அழுக்குடம்பு யாத்தசீர் மெல்லியலை ஆணம்
முழுக்காட்டி மன்றின்முன் கைத்தாக் - குழீஇக்கூடல்
என்னே செறிகாமம் பூட்டும் இயல்மாரன்
மன்னரசால் மாண்பூப்பு உலகு.
24


(எலும்பு நரம்பு முதலியவற்றாற்) கட்டப்பட்ட சிறப்புடைய அழுக்குப் பொருந்திய உடலுடைய மங்கையை, பலவகைக் கூட்டுப் பொருள்களைப் பூசி நீராட்டுவித்து (அலங்கரித்து) அவையோர் முன் கைப்பற்றிக் கொண்டுபோய்ப் புணர்தல் என்ன வியப்பு! நெருங்கிய காமத்தை (ஆடவர் மகளிர் என்ற இரு திறத்தார்க்கும்) பூட்டுகின்ற இயல்புடைய மன்மதனுடைய, நிலைபெற்ற அரசாட்சியினால் மண்ணுலகமானது மாண்பாக உண்டாவது.

கருத்து : அழுக்குடம்புடைய பெண்ணை ஒருவன் அலங்கரித்து மணம் புரிந்து வாழ்கிறான். அதனால் உலகம் மேலும் மேலும் பெருகி நிலைத்து நிற்கிறது.

இன்ப இயலோரார் யாணர் விழைகாமம்
பொன்னின் அணிமலரின் செவ்விதாம் - தன்மேனி
முத்தம் முறுவல் முயக்கொக்கின் அன்னத்தின்
பெற்றியரின் என்பெறும் பேறு.
25


காமவின்பத்தின் இலக்கணங்களை யறியார் (சிலர்) , புதுமையாக விரும்பும் காமவின்பம் பொன்னைப்போலவும், அழகிய மலரைப் போலவும் சிறப்புடையதாகும், ஒருவன் தனது உடம்புக்கு முத்துப்போன்ற பற்களையுடையார் புணர்ச்சி இன்பம் கிடைத்தால், அன்னப்பறவையின் இயல்புவாய்ந்த அம்மங்கையராற் பெறும் இன்பத்தினும் வேறு சிறந்த பேறு யாது? (இல்லை) .

கருத்து : காமவின்பத்தின் இயல்பறியார் சிலர் இகழ்ந்து பேசுவர். காமம் பொன்மலர் போல அழகும், இன்பமும் தருவது. காமத்தைப் போலச் சிறந்த பேறு வேறு ஒன்றும் இல்லை.

தூவி நெருஞ்சிக்காய் நீர்முள்ளி தும்பைஅலர்
காவியன சேல்கண் குறுந்தொடியார் - ஆவிக்கு
இனியர் இணைசேரார் ஈர்ங்கண் மாஞாலத்
தனிமைக்கு அவரோர் கரி.
26


அன்னப்பறவையின் சிறகிலுள்ள மயிர்கள் நெருஞ்சிக் காய் முட்களாகவும் தும்பை மலர்கள் நீர் முள்ளியின் முட்களாகவும் தோன்று மெல்லிய அடிகளையும், நீலமலரும் கெண்டை மீனும் போன்ற விழிகளையும் சிறிய வளையலையும் உடைய மகளிர், ஆவிக்கு, (ஆடவரது) உயிர்க்கு இனிமை தருவோராவார்; (அம்மகளிரைத் தமக்கு) இணையாகக் கொண்டு கூடி வாழாதவர்; குளிர்ந்த இடத்தையுடைய பெரிய வுலகத்தில், தனிமை வாழ்வுக்கு அவ்வாடவர் ஒரு சான்றாவர்.

கருத்து : மங்கையரை வாழ்க்கைத் துணையாக மணந்து வாழ்வதே சிறந்த வாழ்வு. அவ்வாழ்வே இன்பந் தருவது. அவரைக் கூடாத வாழ்வு தனிமையுடையது; துன்ப வாழ்வு.

காமம்வீழ் இன்பக் கடலாமே காதலரின்
ஏம இருக்கையே தூம்திரையாம் - ஏமத்தீண்டு
ஆம்பாலே தோன்றும் அளிஊடலாம்பரலில்
தெற்றித் தெறிப்பாம் ஒளி ஒளிபாய் கண்ணே சீர்த்
துற்றுகப்பாய்ப் பெற்ற மகவு.
27


காமமானது யாவரும் விரும்புகின்ற இன்பக் கடலாகும், காதலன் காதலி இருவரும் கூடிய இன்பத்தின் இருக்கையே வீசும் அலையாகும், அவ்வின்பத்தினின்று இங்கு உண்டாகும் அன்பே முத்தாகும், அம்முத்தினின்று தெளிந்து எழுகின்ற ஒளியே ஊடலாம், அவ்வொளி பாய்கின்ற இடமே சிறந்து மகிழ்வுடன் பெற்ற குழவிகளாம்.

கருத்து : காமம் கடலாகும்; புணர்ச்சியே அக்கடலிற்றோன்றும் அலையாம்; அன்பு அலையில் வந்த முத்து ஆம்; ஊடல் அம்முத்தின் ஒளியாகும்; மக்கள் அவ்வொளி கூடும் இடமாகும்.

கறங்குபறை காணா உறுஊனைக் காதல்
பிறங்கறை நாவாரும் அதே - திறம்இரங்கி
ஊடிஉணர் வாரே தாம்இசைவார் பல்காலம்
ஈடிலதோர் இன்ப விருந்து.
28


பலியிடும்போது தன் பாலுற்ற ஊனினது சுவையை ஒலிக்கின்ற பறைகள் அறியா, காதலை விளங்கச் சொல்லுகின்ற நாவினையுடையவரும் அப்பறைகள் போலக் காதற் சுவையை யறியார்; (காதலிருவரும்) தன்மையறிந்து மனமிரங்கிப் புலந்து பின் அப்புலவி நீங்கிக் கூடியவரே, ஒப்பற்றதாகிய ஓர் இன்ப விருந்தினைப் பலகாலமும் தாம் நுகர்ந்து சுவையறிபவராவர்.

கருத்து : காதற் சுவையைப் பலர்க்கும் விரித்துப் பேசுவார் எல்லாரும் காமச்சுவையையறியார். காதலர் இருவரும் இயல்பறிந்து பிரிவுக்கிரங்கிப் பின் ஊடியும் கூடியும் போகம் நுகர்ந்தவரே சுவையறிந்தவராவர்.

தோற்றாரே வெல்வர் துணைமிசைவார் கோட்டியானை
ஏற்றுக்கழல் தொடியார் மிக்காரை யார்வரைவர்
போற்றளி கூடல் கரி.
29


ஆண்யானைத் தந்தத்தாற் செய்த வீரக்கழலும் வளையலும் அணிந்த ஆடவர் மகளிரில், உயர்ந்தவர்களை யார் மணஞ்செய்துகொள்வர் (ஒப்பவரையே மணம்புரிவர்) , (அவ்வாறு ஒத்த) வாழ்க்கைத் துணையாக அமைந்து காமவின்பம் நுகர்வாரில், ஊடலில் தோல்வியடைந்தவரே வென்றவராவர்; அதற்குச் சான்று தோற்றவர் போற்றுவதும் தலையளி செய்வதும் ஆகிய செயல்களேயாம்.

கருத்து : கழல்-ஆடவர்க்குரியது; தொடி-மகளிர்க்குரியது; கழல் தொடியார் எனவே கழலும் தொடியும் அணிந்தவர் என அவ்விருவரையும் குறிப்பாக உணர்த்திற்று. "ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப" என்றும் பிறப்பே குடிமை ஆண்மை, ஆண்டோ, டுருவுநிறுத்த காமவாயில், நிறையேயருளே யுணர்வொடு திருவென, முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே" என்றும் தொல்காப்பியம் கூறுவதால் "மிக்காரை யார் வரைவர்" என்றார். இருவரும் ஒத்தவராயமைந்தால் அது வாழ்க்கைத் துணையென மதிக்கப்படும் என்பது கருத்து. வாழ்க்கைத் துணையாக மதித்து மணம்புரிந்த காதலர் இருவரினும் "தோற்றாரே வெல்வர் எனக்கொள்க. காதலன், காதலியாகிய இருவரிடத்தும் ஊடல் நிகழ்வதுண்டு. "யானூடத்தானுணர்த்த யானுணராவிட்டதற்பின், தானூட யானுணர்த்தத் தானுணரான்" என்று தலைவி கூறுவது சான்றாம். ஊடியிருந்த தலைவியைத் தலைவன் இன்சொற்கூறி யிரந்து வேண்டுவன், அது போலவே தலைவன் ஊடியிருப்பின் தலைவியும் வேண்டுவள் இருவரும் பின் புலவிநீங்கிக் கூடுவர். இவ்வாறு ஊடல் நிகழ்ந்து பின் கூடுவது மிகவும் இன்பம் பயக்கும் என்பது அறிஞர் கண்டவுண்மை. ஊடியிருந்த இருவரில் ஒருவர்க்குக் காமம் மிகின் அவர் பிணக்கு நீங்கி முதலிற் கூடுதற்கு மனங்கொள்வர். அவரையே தோற்றவர் என்று கொள்க. அவர் புணர்ச்சி விருப்ப மிகவும் உடையர் ஆதலால் அவரே புணர்ச்சிப்போரில் வெல்வார் என்பது குறிப்பு. வள்ளுவரும் "ஊடலிற் றோற்றவர் வென்றா ரதுமன்னும் கூடலிற் காணப்படும்" என்றார். இதனுண்மையாய்க. அவரது தலையளியும் கூடலும் அவர்வென்றமையை யுணர்த்துஞ் சான்றாம் என்பார் "போற்று அளி கூடல் கரி" என்றார்.

காதல் விரிநிலத்து ஆராவகை காணார்
சாதல்நன்று என்ப தகைமையோர் - காதலும்
ஆக்கி யளித்தழிக்கும் கந்தழியின் பேருருவே
நோக்கிலரை நோவது எவன்.
30


பரந்த மண்ணுலகத்தில், காதலின்பம் (எப்போதும்) நிறையாதிருக்கும் விதத்தையறியாதவர்கள்; (காதலின்பத்தைக் கருதி வாழ்வதினும்) சாவதே நல்லது என்று சொல்லுவார்; நற்பண்புடையோரது காதலின்பமும் படைத்துக் காத்துத் துடைக்கும் கடவுளின் பெருமையாகிய வடிவமேயாகும்; (இவ்வுண்மையை) ஆராய்ந்து அறியும் அறிவில்லாதவர்களைக் குறித்து வருந்துவது என்னபயன்.

கருத்து : காமவின்பத்தின் இயல்பு அறியாதவர் இறந்து பேரின்பம் அடைவதே நல்லது என்பார், ஆராய்ந்து பார்த்தால் இச்சிற்றின்பமும் பேரின்பத்திற்கு வழியாகும். ஆதலால் சிற்றின்பத்தினைத் துய்த்து வாழ்வதே நல்லது.

அளகும் அளிநாகைப் பேண அணியார்
அழகுஅரிவை வீழ்முயக்கை அண்ணாத் - தளியாளர்
பெற்ற பிறக்கெறிந்து புத்தாய பெட்டுழலும்
பெற்றியர் பெட்ட கழுது.
31


பெண்பறவைகளும் அன்பினால் இளமையான குஞ்சுகளைப் பேணிவளர்க்கவும், (அதனைக்கண்டும்) நகைநிறைந்த இயற்கையழகுடைய பெண்கள் விருப்பமான புணர்ச்சியின்பத்தைக் கருதாத கோயிலையிடமாகக் கொண்ட துறவிகள்; தாம்பெற்ற பொருள்களைப் புறம்பாக எறிந்துவிட்டுப் புதிதாகிய பொருள்களை விரும்பி உழன்று திரியும் இயல்புடையவராவார்; (அவர்கள் மேலுமேலும் உணவைமட்டும்) விரும்பிய பசாசு ஆவர்.

கருத்து : மங்கையரின்பத்தைக் கருதாத மனமுடைய துறவிகள் பெற்றபொருளை யெறிந்துவிட்டு வேறுபொருள் தேடியுழலும் பித்தர் போன்றவர். பசாசு போன்றவர்கள் என்றுங் கூறலாம்.


4. வீட்டுப்பால்


அ. இல்லியல்


ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக்
குற்றம் ஒரூஉம் குணத்தளாக் - கற்றறிஞர்ப்
பேணும் தகையளாக் கொண்கண் குறிப்பறிந்து
நாணும் தகையளாம் பெண்.
32


(பிறப்பு முதலியவற்றால்) ஒத்த உரிமையுடையவளாகியும், ஊடலில் இனிமையுடையவளாகியும், குற்றங்கள் நீங்கிய நற்குணங்களையுடையவளாகியும், (பலநூல்களையும்) கற்ற அறிவுடையவரைப்பேணும் தன்மையுடையவளாகியும், கணவனுடைய குறிப்பினை அறிந்து (அதற்கியைய) நாணுகின்ற தன்மையுடையவளே பெண் ஆவள்.

கருத்து : ஒத்தவுரிமையும், ஊடலினிமையும், குற்ற நீங்கிய குணமும், கற்றவரைப் பேணும் கருத்தும், கணவன் குறிப்பறிந்து நாணும் பண்பும் உடையவளே இல்லறத்திற்குத் தக்க பெண்ணாவள்.

மனைக்கொளி சேய்நாற் பணியோன் நாரப்புலக்கார்
வினைக்கொளியாம் கட்காம் அனலி - முனைக்குஅஞ்சா
வீரர் ஒளியாம் மடமே அரிவையர்க்காம்
ஏரொளியாம் இல்லுடையான் துப்பு.
33


வீட்டிற்கு விளக்கு மக்கள் ஆவர், நீர் பொருந்திய நிலத்திற்குச் செய்யும் தொழிலுக்கு விளக்கு நான்கு தொழிலும் அறிந்த ழவனேயாவன். விழிகளுக்கு விளக்காவது சூரியனேயாவன், போர் முனைக்கு அஞ்சாத படைவீரர்களே விளக்கு ஆவர், மங்கையருக்கு விளக்கு மடமை யென்னும் பண்பேயாகும், இல்வாழ்வான் வலிமைக்கு விளக்கு ஏருழுதல் என்னுந் தொழிலாம்.

கருத்து : மனைக்கு மக்களும், நிலத்திற்கு உழவனும், கண்ணுக்குக் கதிரவனும், போருக்கு வீரரும், பெண்ணுக்கு மடமையும், இல்வாழ்வானுக்குப் பயிர்த்தொழிலும் சிறப்பைத்தருவனவாம்.

எய்ப்பில்லைப் பாக வருவாயில் ஐந்தொன்றை
மெய்ப்பிணி சேய்வரைவில் கூட்டிடுக - கைப்பொருள்வாய்
இட்டில்உய் வாய்இடுக்க ஈங்க விழையற்க
வட்டல் மனைக்கிழவன் மாண்பு.
34


இடுக்க கைப்பொருள் வருவாய் குறைந்தால் செலவுவழியையும் சுருக்குக, தன்னைப் பெருக்கிக் காட்ட விரும்பற்க, பொருளைத் திரட்டுவதே மனைக்குரிய தலைவன் செயலாகும், இளைத்த பருவத்தில் (கிழப்பருவத்தில்) நுகர்தற்குரிய சேமப்பொருளாகவும், உடற்பிணிக்கு வேண்டும் மருந்துண்டற்குரிய பொருளாகவும், மக்கட்கு மணம் புரியும் செலவிற்குரிய பொருளாகவும்,

கருத்து : வீட்டுக்குரிய தலைவன் பொருளைச் சேர்க்க வேண்டும்; வருவாய் குறைந்தாற் செலவைக் குறைக்கவேண்டும்; ஐந்தில் ஒரு பங்கைச் சேம நிதியாக வைத்திருக்க வேண்டும்; அப்பொருள் மக்கள் மணத்திற்கும் தன் முதுமைப்பருவத்திற்கும் நோய்க்கும் உதவியாகும்.

ஐம்புலத்தோர் நல்குரவோர் ஓம்பித் தலைப்பட்ட
செம்பாக நன்மனையைப் பேணிக் - கடாவுய்த்த
பைம்புல் நிலைபேணி ஊழ்ப்ப வடுஅடார்
ஐம்புலம்ஈர்த் தாரில் தலை.
35


தென்புலத்தார் முதலிய ஐந்து திறத்தாரையும் வறியவரையும் காத்து, தம்மைச்சார்ந்த ஒமுங்காகிய பங்கினால் நல்ல மனைவியைக்காத்து, எருமைக்கடாக்களைச் செலுத்தி யுழுத பசிய புல் நிற்கும் நிலையையுடைய நிலங்களைக் காத்து, சிறக்கும்படி குற்றம் பொருந்தாத வழக்கையுடையவர், ஐம்புலங்களையும் வென்ற முனிவரினும் முதன்மையாவர்.

கருத்து : இல்வாழ்க்கையை முறைப்படி நடத்தி வாழ்பவர் ஐம்புலமடக்கிய முனிவரினும் சிறந்தவர்.

உள்ளவா சேறல்இயைபு எனினும் போம்வாய
வெள்ளத் தனசேறல் வேண்டல் - மனைக்கிழவன்
நள்அளவில் மிக்காய கால்தொழிலை ஓம்பலே
தெள்ளறிஞர் கண்ட நெறி.
36


தன்னிடத்தில் உள்ள பொருளுக்கு ஏற்றவாறு செலவழித்து நடப்பது பொருத்தமென்றாலும், செலவழிக்க வேண்டிய இடத்தில் வெள்ளத்தைப் போலப் பெருக்கமாகச் செலவு செய்து நடப்பதை விரும்பற்க; ஒரு மனைக்குரிமையுடைய தலைவன், விரும்பும் அளவிற்கு மேற்பட்ட அளவுடைய முயற்சியை விலக்குவதே, தெளிந்த அறிவுடையோர் கூறிய வழியாம்.

கருத்து : இல்வாழ்வோர் செல்வத்திற்குத் தக்கவாறு செலவழிக்க வேண்டுமெனினும் அளவுகடந்து செலவழித்தல் ஆகாது; தம்பொருள் அளவிற்கு மேற்பட்ட முயற்சியையும் செய்யக் கருதலாகாது.

ஐங்குரவர் ஓம்பல் இனன்நீக்கல் சேர்ந்தோர்க்குப்
பைங்கூழ் களைகணாப் பார்த்தளித்தல் நையுளத்தர்க்கு
உற்ற பரிவுஈர்த்தல் எண்ணான்கு அறநெறியில்
உற்ற புரிதல் கடன்.
37


ஐந்து குரவரையும் காத்தலும், அவர்கட்கு வருந்துன்பத்தை நீக்குவதும், தன்னைச் சார்ந்தவர்க்கு நல்ல உணவினை ஆதரவாக ஆய்ந்து கொடுப்பதும், வருந்தும் நெஞ்சுடையார்க்கு நேர்ந்த துன்பத்தை நீக்குதலும், முப்பத்திரண்டாகிய தரும வழியில், தனக்கு இய்ற அறங்களைச் செய்வதும் (இல்வாழ்வானுக்குரிய) கடமையாம்.

கருத்து : இல்வாழ்வான், ஐந்து குரவரைப் பேணித், தன்னைச் சார்ந்தவர்க்கு உணவு கொடுத்தாதரித்து, வருந்துவோர் கவலையை மாற்றி, முப்பத்திரண்டு தருமங்களில் தனக்கியன்ற சில தருமங்களைச் செய்து வாழவேண்டும்.குரவர் ஐவராவர், குரு, அரசன், அன்னை, தந்தை, தம்முன் ஆகிய இவர்.

நல்லினம் சாரல் நயன்உணர்தல் பல்லாற்றான்
நல்லினம் ஓம்பல் பொறையாளல் - ஒல்லும்வாய்
இன்னார்க்கு இனிய புரிதல் நெறிநிற்றல்
நல்நாப்பண் உய்ப்பதோர் ஆறு.
38


நல்லோர் கூட்டத்தைச் சேர்வதும், நல்ல வழிகளையறிவதும், பலவழிகளாலும் நல்லொழுக்கமுடையவர்களையே காத்தலும், பொறுமை என்னும் குணத்தைக்கொள்வதும், பகைவர்க்கும் அமையம் வாய்த்தபோது நன்மையான செயல்களைச் செய்வதும், நல்லொழுக்க நெறியில் நின்று வாழ்வதும், நடு விடத்திற் சேர்ப்பதற்குரிய. ஒரு வழியாம்.

கருத்து : நல்லாரைச் சேர்வதும், நல்வழியை யறிவதும், நல்லவர்களைக் காப்பதும், பொறுமையை மனங்கொள்வதும், பகைவர்க்கும் நன்மை செய்வதும், நல்வழியினிற்பதும் ஆகிய செயல்கள் மேலுலகத்திற் சேர்க்கும்.

முனியான் அறம்மறங்கள் முக்குற்றம் பேணான்
நனிகாக்கும் ஒண்மை உறைப்படுத்தும் பண்போன்
பனிநிலத்தின் வித்தாய்ப் பெயரான நடுக்கற்று
இனியன்ஆ வான்மற்று இனி.
39


அறஞ்செய்வதில் வெறுப்பில்லாதவனும், பாவங்களையும் மூன்று குற்றங்களையும் செய்ய விரும்பாதவனும், மிகவும் காக்கப்படுகின்ற ஒழுக்கத்தை நிலை நிறுத்தும் குணமுடையவனும் (ஆகிய ஒருவன்) , குளிர்ந்த நிலத்தில் இட்ட விதையைப்போல, நிலையை விட்டுப் பெயராமல அச்சமற்று வாழ்ந்து இனிமேல் எவர்க்கும் இனியவன் ஆவான்.

கருத்து : அறம் புரிந்து பாவமும் குற்றமும் நீக்கி ஒழுக்கத்தைக்காத்து வாழும் ஒருவன் நிலை பெற்று இனியவனாய் இருப்பான்.

ஆ. துறவியல்


முப்பாலை வீழ்வார் விலங்கார் செறும்பாலை
முப்பால் மயக்கேழ் பிறப்பாகி - எப்பாலும்
மெய்ப்பொருள் தேறார் வெளிஓரார் யாண்டைக்கும்
பொய்ப்பாலை உய்வாயாப் போந்து.
40


(அறம், பொருள், இன்பம் ஆகிய) மூன்று பகுதிகளையும் விரும்புவார் தம்மை வருத்தும் பகுதியை விட்டு விலகார், அம் மூன்று பகுதியால் மயங்கும் மயக்கத்தால் எழுவகைப் பிறப்புக்களும் உண்டாகி, எவ்விடத்திற்கும் பொய்யாகிய பகுதிகளையே பிழைக்கும் வழியாகக் கொண்டு சென்று, எவ்விடத்திலும் உண்மைப்பொருளைத் தெளியார்; பரவெளியையும் ஆராய்ந்தறியார்.

கருத்து : இல்வாழ்வின் நின்று இன்பம் பொருள் அறம். இவற்றை விரும்பியவர்க்குத் துன்பம் நீங்காது; எழுவகைப் பிறவியும் உண்டாகும், பொய்வாழ்க்கையே பிழைக்கும் வழியாகக் கொள்வர், மெய்ப்பொருளையும் அறியார். ஆதலால் துறவே சிறந்தது

உண்மைமால் ஈர்த்து இருள்கடிந்து சார்ஐயம்
புண்விலங்கச் சார்பொருளைப் போற்றினோர் - நுண்ணுணர்வான்
அண்ணா நிலைப்படுவர் ஆற்றல் விழுப்புலனை
எண்பொருட்கு ஊர்இயலைச் சார்ந்து.
41


மெய்யாகத் தோன்றும் மயக்கத்தைக் கொடுத்து, அஞ்ஞானத்தையும் நீக்கி, சார்ந்த ஐயமும் துன்பமும் விலக, சார்தற்குரிய மெய்ப் பொருளை வணங்கியவர்கள், நுட்பமான அறிவினால் வலிய சிறந்த அறிவையும், (ஒருவராலும்) அணுகமுடியாத நிலை (ஆகிய முத்தி) யையடைவர்.

கருத்து : மயக்கத்தையும், அஞ்ஞானத்தையும் நீக்கிப் பரம் பொருளை வணங்கியவர் கூரிய அறிவால் நல்வழி சார்ந்து முத்தியடைவர்.

மாசகல வீறும் ஒளியன்ன நோன்புடையோர்
மூசா இயற்கை நிலன்உணர்வார் - ஆசகற்றி
இன்னல் இனிவாயாக் கொள்வார் பிறப்பிறப்பில்
துன்னார் அடையும் நிலன்.
42


களங்கமற்றுப்பெருகும் ஒளிபோன்ற தவத்தினையுடையார். அழியாத இயற்கையையுடைய இடம் (ஆகிய முத்தி) அறிவார், முக்குற்றங்களையும் நீக்கித் துன்பத்தினை இனிய வழியாகக் கொள்வார், பிறப்பிலும் இறப்பிலும் அவற்றிற்குரிய இடங்களிலும் சேரமாட்டார்.

கருத்து : சிறந்த தவமுடையவர் முத்தியுலகத்தையே அறிந்து சேர்வார். துன்பத்தை இன்பத்திற்கு வழியாகக் கொள்வார். பிறப்பு இறப்பு இவற்றை நீக்குவர்.

பேராப் பெருநிலன் சேய்த்தே உடம்பொன்றா
பேரா ஒருநிலனாம் நீங்காப் பெரும்பொருளை
ஏரா அறிந்துய்யும் போழ்து.
43


பலவகையுடம்புகளிலும் பொருந்தியும் பொருந்தாத, பெயராத ஒப்பற்ற உலகமாக, (எப்போதும்) நீங்காத பெருமையுடைய பரம்பொருளை, எழுச்சியாக வுணர்ந்து பிழைக்கும் பொழுதில், இடம் விட்டுப் பெயராத பெருநிலமாகிய முத்தியுலகம் தூரத்துள்ளதோ (அடுத்ததுதான்)

கருத்து : பரம்பொருளை யுணர்ந்து வாழ்வார்க்கு முத்தி சேர்தல் எளிது.

மெய்யுணர்வே மற்றதனைக் கொள்ள விழுக்கலனாம்
பொய்யுணர்வாம் ஈண்டிய எல்லாம் ஒருங்கழியும்
ஐயுணர்வான் உய்ந்துஅறம் சார்பாச் சார்பொறுக்க
நையா நிலைவேண்டு வார்.
44


பொய்யாகிய அறிவினால் சேர்க்க வந்து சேர்ந்த பொருள்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கெடும், அழியாத நிலையாகிய முத்தியை விரும்புவோர், ஐந்தாகிய அறிவினால் ஆராய்ந்து, துறவறத்தைச் சார்பாகக்கொண்டு, பற்றுக்களை யெல்லாம் ஒழிக்க, உண்மையறிவே அம் முத்தியுலகத்தை யடைவதற்குச் சிறந்த புணையாகும்.

கருத்து : பொய்யுணர்வினாற் சேர்த்த பொருள்களெல்லாம் தொலையும். பற்றுக்களையெல்லாம் ஒழித்துப் பின் மெய்யுணர்வு பெற்றால் முத்தியுலகம் பெறலாம்.

ஒன்றுண்டே மற்றுடலில் பற்றி வினையிறுக்கும்
பொன்றா உணர்வால் விலங்கொறுக்க பைம்மறியாத்
தன்பால் பெயர்க்குந்து பற்றுதலைப் பட்டோர்
நன்பால் அறிந்தார் துறந்தார் வரல்உய்ந்தார்
புன்பாலால் சுற்றப் படார்.
45


உயிர் என்பது ஒன்று உண்டு (இருக்கிறது) . (அவ்வுயிர்) உடம்பைப் பற்றி நின்று வினைகளை மேன்மேலும் கொடுக்கின்றது, கெடாத நல்லறிவினால் அப்பாசத் தளையைத் தகர்த்து விடுக; பையின் உட்புறமாகத் திருப்பிப்பார்ப்பதுபோலத் தன் பகுதியைப் பெயர்த்துப்பார்க்கும் பற்றினைக் கூடியவர்களே, நல்ல வழிகளை யறிந்தவராவார், அவரே துறவிகளாவார், பிறப்பினின்றும் நீங்கியவர், சிறிய பகுதிகளாற் சூழப்படாதவராவர்.

கருத்து : உடம்பில் உயிர் நின்று வினை செய்யச்செய்ய மேன்மேலும் பிறப்பு வளரும் என்பதையும் உடம்பின் இழிவையும் அறிந்தவர் துறவிகளாவார். அவர்கள் பிறவாது முத்தியை யடைவார்.


இன்னிலை முற்றிற்று.

அருங்கலச்செப்பு

 அருங்கலச்செப்பு ஒரு தமிழ் நீதி நூல் ஆகும். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் பெயர் தெரியாத சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது. இதில் 180 குறள் வெண்பாக்கள் உள்ளன. ‘ரத்ன கரண்ட சிராவகாசாரம்’ என்னும் வடமொழி நூலின் மொழிபெயர்ப்பு இது என்று கருதப்படுகிறது. இந்த நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு.

கடவுள் வாழ்த்து

அணிமதிக் குடை அருகனைத் தொழ
அருவினைப் பயன் அகலுமே.

1. நற்காட்சி அதிகாரம்

மங்கல வாழ்த்து

முற்ற உணர்ந்தானை ஏத்தி, மொழிகுவன்
குற்றம்ஒன்று இல்லா அறம். 1

அறம்

நற்காட்சி நன்ஞானம் நல்லொழுக்கம் இம்மூன்றும்
தொக்க அறச்சொல் பொருள். 2

நற்காட்சி

மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்றுரைப்பர்
எப்பொருளும் கண்டுணர்ந் தார். 3

மெய்ப்பொருள்

தலைமகனும் நூலும் முனியும் இம்மூன்றும்
நிலைமைய தாகும் பொருள். 4

தலை மகன் இயல்பு

குற்றமொன்று இன்றிக் குறையின்று உணர்ந்துஅறம்
புற்ற உரைத்தான் இறை. 5


இருக்கத் தகாதவை

பசிவேர்ப்பு நீர்வேட்கை பற்றுஆர்வம் செற்றம்
கசிவினோடு இல்லான் இறை. 6

இருக்கத் தக்கவை

கடையில் அறிவு இன்பம் வீரியம் காட்சி
உடையான் உலகுக்கு இறை. 7

அறத்தினை உரைத்தல்

தெறித்த பறையின் இராகாதி இன்றி
உரைத்தான் இறைவன் அறம். 8

நூல் இயல்பு

என்றும்உண் டாகி இறையால் வெளிப்பட்டு
நின்றது நூலென்பர் உணர். 9
ஆகமத்தின் பயன்

மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரணாகி
துக்கம் கெடுப்பது நூல். 10

முனி இயல்பு

இந்தியத்தை வென்றான் தொடர்ப்பாட்டோடு ஆரம்பம்
முந்து துறந்தான் முனி. 11

முனி மாண்பு

தத்துவ ஞான நிகழ்ச்சியும் சிந்தையும்
உய்த்தல் இருடிகள் மாண்பு. 12

நற்காட்சி உறுப்புகள்

எட்டு வகைஉறுப்பிற் றாகி இயன்றது
சுட்டிய நற்காட்சி தான். 13

இதுவும் அது

ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை
மெய்பெற இன்னவை நான்கு. 14

இதுவும் அது

அறப்பழி நீக்கல், அழிந்தாரைத் தாங்கல்
அறத்துக்கு அளவளா மூன்று. 15

இதுவும் அது

அறத்தை விளக்கலோடு எட்டாகும் என்ப
திறம்பட உள்ள உறுப்பு. 16

ஐயம் இன்மை

மெய்ந்நெறிக்கண் உள்ளம் துளக்கின்மை காட்சிக்கண்
ஐயம் இலாத உறுப்பு. 17

அவா இன்மை

தடுமாற்ற இன்பக்கு இவறாமை ஆகும்
வடுமாற்று அவா இன்மை நற்கு. 18

உவர்ப்பு இன்மை

பழிப்பில் அருங்கலம் பெய்த உடம்புஎன்று
இழிப்பு இன்மை மூன்ற்றம் உறுப்பு. 19

மயக்கு இன்மை

பாவ நெறியாரைச் சேர்ந்த மதிப்பின்மை
மோவம் இலாத உறுப்பு. 20

அறப்பழி நீக்கல்

அறத்துக்கு அலர்களைதல் எவ்வகை யானும்
திறத்தின் உவகூ வனம். 21

அழிந்தாரைத் தாங்கல்

அறத்தின் தளர்ந்தாரை ஆற்றின் நிறுத்தல்
சிறப்புடை ஆறாம் உறுப்பு. 22

அளவளாவல்

ஏற்ற வகையின் அறத்துள்ளார்க் கண்டுவத்தல்
சாற்றிய வச்சளத்தின் மாண்பு. 23

அறம் விளக்கல்

அறத்தின் பெருமையை யார்க்கும் உரைத்தல்
அறத்தை விளக்குதல் நற்கு. 24

எடுத்துக்காட்டுகள்

அஞ்சன சோரன் அனந்த மதிஉலகில்
வஞ்சமில் ஒத்தா யணன். 25

இதுவும் அது

இரேவதை யாரும் சிநேந்திர பத்தரும்
தோவகையின் பாரிசரும் சொல். 26

இதுவும் அது

வச்சிர மாமுனியும் வளர்பெரு விண்ணுவும்
நிச்சயம் எட்டும் உரை. 27

உறுப்புகளின் இன்றியமையாமை

உறுப்பின் குறையின் பயனின்று காட்சி
மறுப்பாட்டின் மந்திரமே போன்று. 28

நற்காட்சியர் தன்மை

மூவகை மூடமும் எட்டு மயங்களும்
தோவகையில் காட்சியார்க்கு இல். 29

உலக மூடம்

வரைப்பாய்தல் தீப்புகுதல் ஆறாடல் இன்ன
உரைப்பின் உலக மயக்கு. 30

தேவ மூடம்

வாழ்விப்பர் தேவர் எனமயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு. 31

இதுவும் அது

மயக்கார்வம் செற்ற முடையாரை ஏத்தல்
துயக்குடைத் தெய்வ மயக்கு. 32

பாசண்டி மூடம்

மாசுண்ட மார்க்கத்து நின்றாரைப் பூசித்தல்
பாசண்டி மூடம் எனல். 33

எட்டு மதங்கள்

பிறப்புக் குலம்வலி செல்வம் வனப்புச்
சிறப்புத் தவமுணர்வோடு எட்டு. 34

மதத்தின் விளைவு

இவற்றால் பெரியேம்யாம் என்றே எழுந்தே
இகழ்க்கில் இறக்கும் அறம். 35

நற்காட்சியின் சிறப்பு

அறம் உண்டேல் யாவரும் எள்ளப்படாஅர்
பிறகுணத்தால் என்ன பயன்? 36

இதுவும் அது

பறையன் மகனெனினும் காட்சி உடையான்
இறைவன் என உணரல் பாற்று. 37

இதுவும் அது

தேவனும் நாயாகும் தீக்காட்சி யால்நாயும்
தேவனாம் நற்காட்சி யால். 38

ஆறு அவிநயம்

அவ்விநயம் ஆறும் அகன்றது நற்காட்சி
செவ்விதின் காப்பார் இடை. 39

அவிநயம் இலக்கணம்

நல்லறத்தின் தீர்ந்த வணக்கத்தை நல்லோர்கள்
சொல்வர் அவிநயம் என்று. 40

அவிநயத்தின் வகை

மிச்சை இலிங்கியர் நூல் தெய்வம் அவாவினோடு
அச்சம் உலோபிதத்தோடு ஆறு. 41

அவிநயம் நீக்கும் வழி

இவ்வாறு நோக்கி வணங்கார் அவிநயம்
எவ்வாறும் நீங்கல் அரிது. 42

நற்காட்சியின் இன்றியமையாமை

காட்சி விசேடம் உணர்வும் ஒழுக்கமும்
மாட்சி அதனில் பெறும். 43

இதுவும் அது

நற்காட்சி இல்லார் உணர்வும் ஒழுக்கமும்
ஒற்கா ஒசிந்து கெடும். 44

இதுவும் அது

அச்சிலேல் பண்டியும் இல்லை சுவரிலேல்
சித்திரமும் இல்லதே போன்று. 45

இதுவும் அது

காட்சியோடு ஒப்பதுயாம் காணோம் வையத்து
மாட்சி உடையது உயிருக்கு. 46

நற்காட்சியின் பயன்

விரதம் இலர் எனினும் காட்சி உடையார்
நரகம் புகுதல் இலர். 47

இதுவும் அது

கலங்கலில் காட்சி உடையார் உலகில்
விலங்காய்ப் பிறத்தல் இலர். 48

இதுவும் அது

பெண்டிர் நபுஞ்சகர் ஆகார் பிழைப்பின்றிக்
கொண்ட நற்காட்சி யவர். 49

இதுவும் அது

இழிகுலத்து என்றும் பிறவார் இறைவன்
பழியறு காட்சி யவர். 50

இதுவும் அது

உறுப்பில் பிறர் பழிப்ப என்றும் பிறவார்
மறுப்பாடில் காட்சி யவர். 51

இதுவும் அது

குறுவாழ்க்கை நோயோடு நல்குரவு கூடப்
பெறுவாழ்க்கை யுள்பிறத்தல் இல். 52

இதுவும் அது

அரசர் இளவரசர் செட்டியரும் ஆவர்
புரைதீர்ந்த காட்சி யவர். 53

இதுவும் அது

மூவகைக் கீழ்த்தேவர் ஆகார்; முகடுயர்வர்
தோவகையில் காட்சி யவர். 54

இதுவும் அது

விச்சா தரரும் பலதேவரும் ஆவர்
பொச்சாப்பில் காட்சி யவர். 55

இதுவும் அது

முச்சக் கரத்தோடு சித்தியும் எய்துவர்
நச்சறு காட்சி யவர். 56

2. நல்ஞான அதிகாரம்

நல் அறிவின் இலக்கணம்

பொருள்நின்ற பெற்றியைப் பொய்யின்று உணர்தல்
மருளறு நன்ஞான மாண்பு. 57

பிரத மானுயோகத்தின் இலக்கணம்

சரிதம் புராணம் அருத்தக் கியானம்
அரிதின் உரைப்பது நூல். 58

காணானுயோகத்தின் இலக்கணம்

உலகின் கிடக்கையும் ஊழி நிலையும்
மலைவுஇன்று உரைப்பது நூல். 59

சரணானுயோகத்தின் இலக்கணம்

இல்லறம் ஏனைத் துறவறம் என்றிவற்றைப்
புல்ல உரைப்பது நூல். 60

திரவியானுயோக இலக்கணம்

கட்டொடு வீடும் உயிரும் பிறபொருளும்
முட்டின்றிச் சொல்லுவது நூல். 61

3. நல்லொழுக்க அதிகாரம்

நல்லொழுக்கத்தின் இலக்கணம்

காட்சி யுடையார் வினைவரும் வாயிலின்
மீட்சியா நல்லொழுக்கு நன்று. 62

நல்லொழுக்கத்தின் வகை

குறைந்ததூஉம் முற்ற நிறைந்ததூஉ மாம
அறைந்தார் ஒழுக்கம் இரண்டு. 63

ஒழுக்கத்துக்கு உரியார்

நிறைந்தது இருடிகட்கு ஆகு மனையார்க்கு
ஒழிந்தது மூன்று வகைத்து. 64

குறைந்த ஒழுக்கத்தின் வகை

அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும்
உணர்நான்கு சிக்கா வதம். 65

அணுவிரதம்

பெரிய கொலைபொய் களவொடு காமம்
பொருளை வரைதலோடு ஐந்து. 66

கொல்லாமை

இயங்குயிர் கொல்லாமை ஏவாமை ஆகும்
பெருங்கொலையின் மீட்சி எனல். 67

அதிசாரம்

அறுத்தல் அலைத்தல் அடைத்தலோடு ஆர்த்தல்
இறப்பப் பொறை இறப்போர் ஐந்து. 68

பொய்யாமை

பாவம் பொருந்துவன சொல்லாமை ஏவாமை
ஆகும் இரண்டாம் வதம். 69

பொய்யாமைக்கு அதிசாரம்

குறளை மறைவிரி இல்லடை வௌவல்
புறவுரை பொய்யோலை கேடு. 70

திருடாமை

கொடாதது கொள்ளாமை ஏவாமை ஆகும்
கொடாதது கொள்ளா வதம். 71

திருடாமைக்கு அதிசாரம்

குறைவு, நிறைகோடல், கொள்ளைக் கவர்தல்
மறைய விராதல் இறப்பு. 72

இதுவும் அது

கள்ளரொடு கூடல் கள்ளர் கொணர்பொருளை
உள்ளினர் கோடலோடு ஐந்து. 73

ஏகதேச பிரமசரியம் இலக்கணம்

விதித்த வழியின்றிக் காமம் நுகர்தல்
மதிப்பின்மை நான்காம் வதம். 74

பிரமசரியத்திற்கு அதிசாரம்

அனங்க விளையாட்டு வேட்கை மிகுதி
மனங்கொள் விலாரிணைக் கேடு. 75

இதுவும் அது

பிறர்மனை கோடல் பிறர்க்குச் செல்வாளை
திறவதில் கோடலோடு ஐந்து. 76

பொருள் வரைதல்

பொருள் வரைந்து ஆசைச் சுருக்கியே ஏவாமை
இருள்தீர்ந்தார்க்கு ஐந்தாம் வதம். 77

மிகுபொருள் விரும்பாமைக்கு அதிசாரம்

இயக்க்மோடு ஈட்டம் பெருக்கலும் லோபம்
வியப்புமிகைக் கோடலோடு ஐந்து. 78

அணுவிரத பயன்

ஐயைந்து இறப்பிகந்த ஐந்து வதங்களும்
செய்யும் சுவர்க்கச் சுகம். 79

விரதங்களால் சிறப்படைந்தவர் வரலாறுகள்

சட்டித் தனதேவன் பாரீசன் நீலியும்
பெற்றார் சயனும் சிறப்பு. 80

விரதமின்மையால் கேடு அடைந்தவர்கள்

தனசிரி சத்தியன் தாபதன் காப்பான்
நனைதாடி வெண்ணெய் உரை. 81

அணுவிரதியின் மூல குணங்கள்

கள்ளொடு தேன்புலைசு உண்ணாமை ஐவதமும்
தெள்ளுங்கால் மூல குணம். 82

குண விரதம் இலக்கணம்

வரைப திசைபத்தும் வாழும் அளவும்
புரைவில் திசைவிரதம் எண். 83

எல்லை அமையும் முறை

ஆறும் மலையும் கடலும் அடவியும்
கூறுப எல்லை அதற்கு. 84

திசை விரதத்தின் சிறப்பு

எல்லைப் புறத்தமைந்த பாவம் ஈண்டாமையின்
சொல்லுப மாவதம் என்று. 85

மகா விரதம்

சிறிய கொலைபொய் களவொடு காமம்
பொருளைத் துறத்தலோடு ஐந்து. 86

இதுவும் அது

கொலைமுதலா ஐந்தினையும் முற்றத் துறத்தல்
தலையாய மாவத மாம். 87

திசை விரத அதிசாரம்

இடம் பெருக்கல் எல்லை மறத்தல் கீழ் மேலோடு
உடன் இறுத்தல் பக்கம் இறப்பு. 88

அனர்த்த தண்ட விரதம்

எல்லை அகத்தும் பயமில மீண்டொழுகல்
நல்அனத்த தண்ட வதம். 89

அனர்த்த தண்ட விரதத்தின் வகை

ஐந்தனத்த தண்ட விரதம் முறையுள்ளிச்
சிந்திக்கச் செய்வன் தெரிந்து. 90

இதுவும் அது

ஆர்வமொடு செற்றத்தை ஆக்கும் நினைப்புகள்
தீவுறு தீச்சிந்தை யாம். 91

இதுவும் அது

சேவாள் விலைகொளல் கூறுதல் கூட்டுதல்
பாபோப தேசம் எனல். 92

இதுவும் அது

பயமின் மரம் குறைத்த லோடுஅகழ்தல் என்ப
பயமில் பமாதம் எனல். 93

இதுவும் அது

தீக்கருவி நஞ்சு கயிறு நார்கள்
ஈத்தல் கொலைகொடுத்த லாம். 94

இதுவும் அது

மோகத்தை ஈன்று தவமழிக்கும் சொல்கேட்டல்
பாபச் சுருதி எனல். 95

அனர்த்த தண்ட விரதத்திற்கு அதிசாரம்

நகையே நினைப்பு மொழியின்மை கூறல்
மிகைநினைவு நோக்கார் செயல். 96

இதுவும் அது

ஐந்தனத்த தண்ட விரதக்கு இறப்பிவை
முந்துணர்ந்து காக்க முறை. 97

போக உபபோக பரிமாண விரதம்

போகோப போக பரிமாணம் என்றுரைப்பர்
வாயில் புலன்கள் வரைந்து. 98

போக உபபோக பொருள் இலக்கணம்

துய்த்துக் கழிப்பன போகம் உபபோகம்
துய்ப்பாம் பெயர்த்தும் எனல். 99

உண்ணத் தகாதன

மயக்கம் கொலை அஞ்சிக் கள்ளு மதுவும்
துயக்கில் துறக்கப் படும். 100
இதுவும் அது

வேப்ப மலரிஞ்சி வெண்ணெய் அதம்பழம்
நீப்பர் இவைபோல் வன. 101
பரிமாணத்திற்கு கால வரம்பு

இயமங்கள் கால வரையறை இல்லை
நியமங்கள் அல்லா வதம். 102
நியமத்திற்கு உரிய பொருள்

உடுப்பன, பூண்பன, பூசாந்தும் ஊர்தி
படுப்ப, பசிய நீராட்டு. 103
இதுவும் அது

கோலம் இலைகூட நித்த நியமங்கள்
கால வரையறுத்தல் நற்கு. 104
நியமத்திற்குக் கால பேதம்

இன்று பகலிரா இத்திங்கள் இவ்வாண்டைக்கு
என்று நியமம் செயல். 105
அதிசாரம்

வேட்கை வழி நினைப்பு துய்ப்பு மிகநடுக்கு
நோக்குஇன்மை ஐந்தாம் இறப்பு. 106

4. சிக்கா வதம்

சாமாயிகம்கட்டு விடுகாறும் எஞ்சாமை ஐம்பாவம்
விட்டொழுகல் சாமா யிகம். 107

கட்டு இன்னது

கூறை மயிர்முடி முட்டி நிலையிருக்கை
கூறிய கட்டென்று உணர். 108

சாமாயிக இடத்தின் தன்மை

ஒரு சிறை இல்லம் பிறவழி யானும்
மருவுக சாமா யிகம். 109

சாமாயிகம் செய்ய சிறப்பான காலம்

சேதியம் வந்தனை பட்டினி ஆதியா
ஓதிய காலம் அதற்கு. 110

சாமாயிக கால நடைமுறை

பெற்ற வகையினால் சாமாயிகம் உவப்பின்
முற்ற நிறையும் வதம். 111

சாமாயிக காலச் சிந்தனை

தனியன் உடன்பிது வேற்றுமை சுற்றம்
இனைய நினைக்கப் படும். 112

இதுவும் அது

இறந்ததன் தீமைக்கு இழித்தும் பழித்தும்
மறந்தொழியா மீட்டல் தலை. 113

இதுவும் அது

தீயவை எல்லாம் இனிச்செய்யேன் என்று அடங்கித்
தூயவழி நிற்றலும் அற்று. 114

இதுவும் அது

ஒன்றியும் ஒன்றாதும் தான்செய்த தீவினையை
நின்று நினைந்திரங்கல் பாற்று. 115

இதுவும் அது

தனக்கும் பிறர்க்கும் உறுதிச் சொல்செய்கை
மனத்தினில் சிந்திக்கற் பாற்று. 116

இதுவும் அது

பிறர்கண் வருத்தமும் சாக்காடும் கேடும்
மறந்தும் நினயாமை நன்று. 117

இதுவும் அது

திருந்தார் பொருள் வரவும் தீயார் தொடர்பும்
பொருந்தாமை சிந்திக்கற் பாற்று. 118

இதுவும் அது

கூடியவை எல்லாம் பிரிவனவாம் கூடின்மை
கேடின்மை சிந்திக்கற் பாற்று. 119

இதுவும் அது

நல்லறச் சார்வு நவையுற நீக்கலும்
பல்வகையாற் பார்க்கப் படும். 120

சாமாயிக விரத அதிசாரம்

உள்ளம் மொழி செய்கை தள்ளல் விருப்பின்மை
உள்ளார் மறத்தல் இறப்பு. 121

போசத உபவாசம்

உவாட் டமியின்கண் நால்வகை ஊணும்
அவாவறுத்தல் போசத மெனல். 122

உபவாசத்தில் நிகழும் விதி

ஐம்பாவம் ஆரம்பம் நீராட்டுப் பூச்சாந்து
நம்பற்க பட்டினியின் ஞான்று. 123

இதுவும் அது

அறவுரை கேட்டல் நினைத்தல் உரைத்தல்
திறவதிற் செய்யப் படும். 124

போசத உபவாசம் பொருள்

உண்டி மறுத்தல் உபவாசம் போசதம்
உண்டல் ஒருபோது எனல். 125

உபவாச நாளில் தொழில் செய்யாமை

போச துபவாசம் என்றுரைப்பர் பட்டினிவிட்டு
ஆரம்பம் செய்யான் எனில். 126

அதிசாரம்

நோக்கித் துடையாது கோடல் மலந்துறத்தல்
சேக்கைப் படுத்தல் இறப்பு. 127

இதுவும் அது

கிரியை விருப்புக் கடைப்பிடி இன்மை
உரிதின் இறப்பிவை ஐந்து. 128

தேசாவகாசிக விரதம்

தேசம் வரைந்தொழுகல் கால வரையறையில்
தேசாவ காசிக மென். 129

தேசாவகாசிக எல்லை

மனைச் சேரி ஊர்புலம் ஆறடவி காதம்
இனைய இடம் வரைதல் எண். 130

தேசாவகாசிக கால எல்லை

ஆண்டொடு நாள்திங் களித்தனை என்றுய்த்தல்
காண்தகு கால மதற்கு. 131

தேசாவகாசிக பெருமை

எல்லைப் புறத்தமைந்த பாவமீண் டாமையின்
புல்லுக நாளும் புரிந்து. 132

அதிசாரம்

கூறல் கொணருதல் ஏவல் உருக்காட்டல்
யாதொன்றும் விட்டெறிதல் கேடு. 133

அதிதி சம்விபாகம்

உண்டி மருந்தோடு உறையுள் உபகரணம்
கொண்டுய்த்தல் நான்காம் வதம். 134

விரதத்தின் பெயர்

தானம் செயல்வையா வச்சம் அறம்நோக்கி
மானமில் மாதவர்க்கு நற்கு. 135

இதுவும் அது

இடர்களைதல் உற்றது செய்தலும் ஆங்கே
படுமெனப் பண்புடை யார்க்கு. 136

உத்தம தானம் தரும் முறை

உத்தமற்கு ஒன்பது புண்ணியத்தால் ஈவது
உத்தம தானம் எனல். 137

தானம் செய்ய வேண்டும்

உத்தம தானம் தயாதானம் தம்மளவில்
வைத்தொழியான் செய்க உவந்து. 138

உத்தம தானத்தின் பயன்

மனைவாழ்க்கை யால் வந்த பாவம் துடைத்தல்
மனைநீத்தார்க்கு ஈயும் கொடை. 139

இதுவும் அது

தான விடயத்தில் தடுமாற்றம் போந்துணையும்
ஈனமில் இன்பக் கடல். 140

தானத்தில் சிறந்து நின்றார்

சிரிசேன் இடபமா சேனையே பன்றி
உரைகோடல் கொண்டை உரை. 141

அதிசாரம்

பசியதன் மேல்வைத்தல் மூடல் மறைத்தல்
புரிவின்மை எஞ்சாமை கேடு. 142

பகவான் பூஜை

தேவாதி தேவன் திருவடிக்குப் பூசனை
ஓவாது செய்க உவந்து. 143

பூஜையின் பெருமை

தெய்வச் சிறப்பின் பெருமையைச் சாற்றுமேல்
மையுறு தேரை உரை. 144

5. சல்லேகனை அதிகாரம்

சல்லேகனையின் காரணம்

இடையூறு ஒழிவில்நோய் மூப்பிவை வந்தால்
கடைதுறத்தல் சல்லே கனை. 145

சல்லேகனை காலத்துச் சிந்தனை

இறுவாய்க்கண் நான்கும் பெறுவாம் என்று எண்ணி
மறுவாய நீக்கப் படும். 146

சல்லேகனை காலத்தில் செய்யவேண்டுவன

பற்றொடு செற்றமே சுற்றம் தொடர்ப்பாடு
முற்றும் துறக்கப் படும். 147

இதுவும் அது

ஆலோ சனையின் அழிவகற்றி மாதவன்கண்
மீள்வின்றி ஏற்றுக் கொளல். 148

இதுவும் அது

கசிவு கலக்கம் அகற்றி மனத்தை
ஒசியாமல் வைக்க உவந்து. 149

சல்லேகனை கால உணவு குறைப்பு முறை

ஊணொடு பானம் முறைசுருக்கி ஓர்ந்துணர்ந்து
மானுடம்பு வைக்கப் படும். 150

சல்லேகனையில் பஞ்ச மந்திரம் நினைக்க வேண்டும்

மந்திரங்கள் ஐந்து மனத்துவரச் சென்றார்கள்
இந்திரற்கும் இந்திரரே எண். 151

அதிசாரம்

சாவொடு வாழ்க்கையை அஞ்சித்தான் மெச்சுதல்
வாழ்வொடு நட்டார் நினைப்பு. 152

இதுவும் அது

நிதானத்தோடு ஐந்திறப்பும் இன்றி முடித்தார்
பதானம் அறுத்தார் எனல். 153

சல்லேகனையின் பயன்

அறத்துப் பயனைப் புராண வகையில்
திறத்துள்ளிக் கேட்கப் படும். 154

இதுவும் அது

பிறப்பு பிணிமூப்புச் சாக்காடு நான்கும்
அறுத்தல் அறத்தின் பயன். 155

இதுவும் அது

பரிவு நலிவினொடு அச்சமும் இல்லை
உருவின் பிறப்பில் லவர்க்கு. 156

இதுவும் அது

கிட்டமும் காளிதமும் நீக்கிய பொன்போல
விட்டு விளங்கும் உயிர். 157

இதுவும் அது

எல்லையில் இன்ப உணர்வு வலிகாட்சி
புல்லும் வினைவென் றவர்க்கு. 158

இதுவும் அது

உலக மறியினும் ஒன்றும் மறியார்
நிலைய நிலைபெற் றவர். 159

இதுவும் அது

மூவுலகத்து உச்சிச் சூளா மணிவிளக்குத்
தோவகையில் சித்தி யவர். 160

சிராவகர் படிநிலைகள்

பதினோர் நிலைமையர் சாவகர் என்று
விதியின் உணரப் படும். 161

தரிசன்

காட்சியில் திண்ணனாய் சீல விரதம் இலான்
மாட்சியுறு தரிசன் ஆம். 162

விரதிகன்

வதம்ஐந்தும் சீலமோர் ஏழும் தரித்தான்
விதியால் விரதி எனல். 163

சாமாயிகன்

எல்லியும் காலையும் ஏத்தி நியமங்கள்
வல்லியான் சாமாயிகன். 164

போசத உபவாசன்

ஒருதிங்கள் நால்வகைப் பவ்வமே நோன்பு
புரிபவன் போசத னாம். 167

அசித்தன்

பழம்இலை காயும் பசியத் துறந்தான்
அழிவகன்ற அச்சித்த னாம். 168

இராத்திரி அபுக்தன்

இருளின்கண் நால்வகை ஊணும் துறந்தான்
இராத்திரி அபுக்தன் எனல். 167

பிரமசரிய நிலை

உடம்பினை உள்ளவாறு ஓர்ந்துணர்ந்து காமம்
அடங்கியான் பம்மன் எனல். 168

அநாரம்பன்

கொலைவரு ஆரம்பம் செய்தலின் மீண்டான்
அலகிலநா ரம்பன் எனல். 169

அபரிக்ரகன்

இரு தொடர்ப் பாட்டின்கண் ஊக்கம் அறுத்தான்
உரியன் அபரிக்ர கன். 170

அனனுமதன்

யாதும் உடன்பாடு வாழ்க்கைக்கண் இல்லவன்
மாசில் அனனு மதன். 171

உத்திட்டன்

மனைதுறந்து மாதவர் தாளடைந்து தோற்று
வினையறுப்பான் உத்திட்ட னாம். 172

படிநிலையர் ஒழுக்கம்

முன்னைக் குணத்தொடு தத்தம் குணமுடைமை
பன்னிய தானம் எனல். 173

நூலுணர்தல்

பாவம் பகையொடு சுற்றம் இவைசுருக்கி
மோவமோடு இன்றி உணர். 174

(இது முதல் வரும் குறள்கள் இடைச் செருகலாகக் கருதப்படுகின்றன)

நூல் கற்றலினால் வரும் பயன்

அருங்கலச் செப்பினை ஆற்றத் தெளிந்தார்
ஒருங்கு அடையும் மாண்புதிரு. 175

இதுவும் அது

வந்தித்தாய்ந்து ஓதினும் சொல்லினும் கேட்பினம்
வெந்து வினையும் விடும். 176

இதுவும் அது

தரப்பினில் மீளாக் கடுந்தவம் நீருற்ற
உப்பினில் மாய்ந்து கெடும். 177

இதுவும் அது

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றின்
நாமம் கெடக்கெடும் நோய். 178

இதுவும் அது

முத்தி நெறிகாட்டும் முன்னறியா தார்க்கெல்லாம்
சித்தி அருங்கலச் செப்பு. 179

இதுவும் அது

தீரா வினைதீர்க்கும் சித்திபதம் உண்டாக்கும்
பாராய் அருங்கலச் செப்பு. 180

அருங்கலச்செப்பு முற்றிற்று