பொருநராற்றுப்படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொருநராற்றுப்படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பொருநராற்றுப்படை

 பொருநராற்றுப்படை

எளிய உரைவைதேகி

பாடியவர் – முடத்தாமக் கண்ணியார்
பாடப்பட்டோன் – சோழன் கரிகால் பெருவளத்தான்
திணை – பாடாண்
துறை – ஆற்றுப்படை
பா வகை – அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த வரிகள் – 248

தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்.  (தொல்காப்பியம், புறத்திணையியல் 29).

ஆற்றுப்படை:  ஆற்றுப்படை என்பது ஒரு கொடையாளியிடம் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர் வந்த வறியோர்க்கு அவ்வள்ளலிடம் சென்று தாம் பெற்றவாறு அவர்கள் பெறுமாறு வழிப்படுத்தல்.  இப்பாடலில், ஒரு பாணர் மற்றொரு பாணரிடம், தான் பரிசு பெற்ற மன்னனிடம் சென்று பரிசு பெறும் முறையைக் கூறுகின்றார்.  சங்க நூல்கள் பதினெட்டில் நான்கு நூல்கள் பாணர்கள் பற்றி இருப்பது, சங்க காலத்துப் பாணர்களின் சிறப்பை வெளிப்படுத்துகின்றது.

புலவர்:  இவர் ஒரு பெண்புலவர்.  இவரது இயற்பெயர் முடத்தாமக்கண்ணி. இவரைப்பற்றி நமக்கு விவரங்கள் எவையும் கிடைக்கவில்லை.  இவர் எழுதியதாக வேறு பாடல்கள் எவையும் கிடைக்கவில்லை.

பாட்டுடைத் தலைவன்:  திருமாவளவன்.  கரிகாலன் என்பவனும் இவனே என்று நச்சினார்க்கினியர் கொண்டார்.  இச்சோழ மன்னன் கரிகாலனுக்காக கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையை எழுதியுள்ளார்.  இவன் சிறுவயதில் பகைவர்களால் சிறையில் அடைக்கப்பட்டான் என்றும், சிறையில் பகைவர்கள் தீக்கொளுத்தினர் என்றும், அவன் அதிலிருந்து தப்பி வெளியேறிய வேளையில் அவன் கால் தீயால் கரிந்தது என்றும், அதன்பின்னரே அவன் கரிகாலன் எனக் கூறப்பட்டான் என்றும் கூறப்படுகின்றது.  கரிகால் என்பது, கரிசல் மண்ணொடு வரும் காவிரியின் காலைக் (பிரிவை) குறித்தது என விளக்கியுள்ளார் பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன். 

பொ. வே. சோமசுந்தரனார் உரை – பத்துப்பாட்டில் இரண்டாம் பாட்டாகத் திகழும் இப்பொருநராற்றுப்படையை யாத்தவர் முடத்தாமக் கண்ணியார் என்னும் நல்லிசைப் புலவராவார்.  இவரைப் பெண்பாற் புலவர் என்று கூறுவாரும் உளர்.  தொல்காப்பிய உரையின்கண் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 22 – இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி பலர்க்கு உரி எழுத்தின் வினையொடு முடிமே, சேனாவரையர் உரை) ஆர் விகுதி பன்மையோடு முடிதற்கு ‘முடத்தாமக் கண்ணியார் வந்தார்’ என்று எடுத்துக் காட்டப்  பட்டிருப்பதால் இவர் பெயர் முடத்தாமக் கண்ணி என்பதாம் என்பர்.

கதைச்சுருக்கம்:  இப்பாட்டில் உள்ள யாழின் வருணனை மிகச் சிறப்பானது. ஒப்பில்லாதது பாடினியின் அழகை புலவர் விவரித்த முறை. தலையிலிருந்து கால் வரை அவளுடைய அழகு இனிமையான உவமைகளுடன் விவரிக்கப்பட்டுள்ளது. கரிகாலனின் விருந்தோம்பல் பண்பு, பாணர் குடும்பத்தை அரண்மனையில் தங்க வைத்து அன்புடன் அவர்களுக்கு நிறைய உணவும் அரிய பரிசுகளை மன்னன் கொடுத்தது ஆகிய விவரங்களை நாம் காணலாம். மேலும் பாணர்க்கு நான்கு குதிரைகள் பூட்டிய தேர் ஒன்றையும் கொடுத்து, அவர் தேரில் ஏறுமுன், மன்னன் ஏழு அடி பின்னால் நடந்து வழியனுப்புகின்றான். இது அவனுக்குப் பாணர்மேல் உள்ள பெரும் அன்பையையும் மதிப்பையும் காட்டுகின்றது. காவிரியின் சிறப்பு, சோழ நாட்டின் வளம், பண்ட மாற்று விவரங்கள், சோழ நாட்டின் நான்கு நிலங்கள் ஆகியவற்றையும் இப்பாடலில் புலவர் மிகவும் அழகாக விவரித்துள்ளார்.

அறாஅ யாணர் அகன்தலைப் பேரூர்
சாறு கழி வழிநாள் சோறு நசை உறாது,
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந! (1-3)

பொருளுரை:  இடையறாத வளமை உடைய அகன்ற பெரிய ஊர்களில் திருவிழாக்கள் கழிந்த பின் வரும் நாட்களில், அங்குக் கிடைக்கும் மிகுந்த உணவை விரும்பாது, வேறு நிலத்தை அடைய நினைத்த திறமையும் அறிவுமுடைய பாணனே!

குறிப்பு:  பொருந (3) – பொ. வே. சோமசுந்தரனார் – உரை – பொருநர் என்பவர் ஏர்க்களம் பாடுவோர் போர்க்களம் பாடுவோர் பரணி பாடுவோர் எனப் பல திறப்படுவோர்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  அறாஅ யாணர் – இடையறாத வளமை, தொடர்ந்த வளமை, குறையாத வளமை (அறாஅ – அளபெடை), அகன்தலை – அகன்ற இடம், பேரூர் – பெரிய ஊர், சாறு கழி – திருவிழாக் கழிந்த, திருவிழா முடிந்த, வழிநாள் – பின் நாள், சோறு நசை உறாது – அங்கு கிடைக்கும் மிகுந்த சோற்றை விரும்பாது, வேறு புலம் முன்னிய – வேறு நிலத்தை அடைய நினைத்த, விரகு அறி பொருந – திறமையும் அறிவுமுடைய பாணனே

பாலை யாழின் வருணனை

குளப்புவழி அன்ன கவடுபடு பத்தல்,
விளக்கு அழல் உருவின் விசி உறு பச்சை,   5
எய்யா இளஞ்சூல் செய்யோள் அவ்வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை,
அளை வாழ் அலவன் கண் கண்டன்ன
துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி,   10
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி
அண்ணா வில்லா அமைவரு வறுவாய்ப்,
பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின்,
மாயோள் முன் கை ஆய் தொடி கடுக்கும்,
கண் கூடு இருக்கைத் திண் பிணித் திவவின்,   15
ஆய் தினையரிசி அவையல் அன்ன,
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள் விசித் தொடையல்
மணம் கமழ் மாதரை மண்ணியன்ன,
அணங்கு மெய்ந்நின்ற அமைவரு காட்சி   20
ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை, (4 – 22)

பொருளுரை:  மானினது குளம்பு பதிந்த இடம் போன்று இரண்டு பக்கங்களும் தாழ்ந்து நடு உயர்ந்த குடம் போன்றுள்ள பத்தல் என்னும் ஓர் உறுப்பினையும், விளக்கின் எரிகின்ற நிறத்தை ஒத்த இழுத்துக்கட்டப்பட்ட தோலையும், பிறரால் அறியப்படாத இளைய கருவையுடைய சிவந்த நிறமுடைய பெண்ணின் அழகிய வயிற்றின் மேல் மென்மையான மயிர் ஒழுங்காக அமைந்த தோற்றம் போல இரண்டு தலைப்பையும் இணைத்து மரத்தைத் தன் உள் பொதித்த போர்வையினையும், பொந்தில் வாழும் நண்டின் கண்களைப் போன்றுள்ள துளைகளின் வாயை நிரப்பிய முடுக்கப்பட்ட ஆணிகளையும், எட்டாவது நாள் நிலவு போலும் வடிவை உடைத்ததாக உள்ள உள் நாக்கு இல்லாத பொருந்துதல் உடைய வறிய (உள்ளே ஒன்றும் இல்லாத) வாயினையும், பாம்பு தலை நிமிர்ந்தாற்போல் உள்ள உயர்ந்த கரிய தண்டினையும், கரிய நிறப்பெண்ணின் முன்னங்கையில் அணியப்பட்ட அழகிய வளையலைப் போன்று நெருங்கி இருக்கும் இறுக்கமாகக் கட்டப்பட்ட வார்க்கட்டினையும், அழகான தினை அரிசியை குத்துதல் செய்தது போன்று உள்ள, குற்றம் இல்லாத, விரலால் மீட்டும் நரம்பினையுடைய இசை முற்றுப்பெற்ற நீண்ட கட்டப்பட்ட தொடர்ச்சியையும், திருமணம் செய்யும் பெண்களை ஒப்பனை செய்தாற்போல யாழுக்குரிய கடவுள் தன்னிடத்தில் உள்ள கண்ணுக்கு அழகாக இருக்கும் தோற்றத்தையுமுடைய, வழிப்பறிக் கள்வர்கள் தங்கள் படைக்கலங்களைக் கைவிடும்படி, அருளிற்கு மாறான அவர்களின் பண்பை மாறச் செய்யும், கேட்கும்பொழுதெல்லாம் இன்பம் பயக்கும் பாலை யாழ்.

குறிப்பு:  குளப்புவழி (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  குளப்புவழி  என வேற்றுமைப் புணர்ச்சியில் வன் தொடராயிற்று.  மருவு இன் பாலை (22) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மருவு இன் பாலை என்றது கேட்குந்தோறும் பயிலுந்தோறும் வெறாஅது இனிமை மிகுதற்கியன்ற பாலை யாழ் என்றவாறு.

சொற்பொருள்:  குளப்புவழி அன்ன – மானினது குளம்பு பதிந்த இடம் போன்று, கவடுபடு பத்தல் – இரண்டு பக்கங்களும் தாழ்ந்து நடு உயர்ந்த குடம் போன்றுள்ள பத்தல் என்னும் ஓர் உறுப்பு, விளக்கு அழல் உருவின் – விளக்கின் எரிகின்ற நிறத்தை ஒத்த (உருவின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), விசியுறு பச்சை – இழுத்துக்கட்டப்பட்ட தோல், எய்யா இளஞ்சூல் – பிறரால் அறியப்படாத இளைய கருவையுடைய, செய்யோள் – சிவந்த நிறமுடையவள், அவ் வயிற்று – அழகிய வயிற்றின் மேல், ஐது மயிர் – மென்மையான மயிர், ஒழுகிய தோற்றம் போல – ஒழுங்காக அமைந்த தோற்றம் போல, பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை – இரண்டு தலைப்பையும் இணைத்து மரத்தைத் தன் உள் பொதித்த போர்வை, அளை வாழ் அலவன் – பொந்தில் வாழும் நண்டு, கண் கண்டன்ன – கண்களைக் கண்டாற்போன்ற, துளைவாய் – துளைகளின் வாய், தூர்ந்த – நிரப்பிய, துரப்பு அமை ஆணி – முடுக்கப்பட்ட ஆணிகள், எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி – எட்டாவது நாள் நிலவு போலும் வடிவை உடைத்ததாக ஆகி, அண் நா இல்லா – உள் நாக்கு இல்லாத, அமைவரு – பொருந்துதல் உடைய, வறுவாய் – வறிய வாய், உள்ளே ஒன்றும் இல்லாத வாய், பாம்பு அணந்து அன்ன – பாம்பு தலை எடுத்தாற்போல் உள்ள, ஓங்கு இரு மருப்பின் – உயர்ந்த கரிய தண்டினையும், மாயோள் முன் கை ஆய் தொடி கடுக்கும் – கரிய நிறத்தையுடையவளின் முன்னங்கையில் அணியப்பட்ட அழகிய வளையலைப் போன்று, கண் கூடு இருக்கை – நெருங்கி இருப்பதும், திண் பிணித் திவவின் – இறுக்கமாகப் பிணித்த வார்க்கட்டினையும், ஆய் தினை அரிசி – அழகான தினை அரிசி, அவையல் அன்ன – குத்துதல் செய்தது போன்ற, வேய்வை போகிய – குற்றம் இல்லாத, விரல் உளர் நரம்பின் – விரலால் மீட்டும் நரம்பினையுடைய, கேள்வி போகிய – இசை முற்றுப்பெற்ற, இசை மிகவும் திருத்தமாக உள்ள, நீள் விசித் தொடையல் – நீண்ட கட்டப்பட்ட தொடர்ச்சி உடைய, மணங்கமழ் மாதரை – திருமணம் செய்யும் பெண்களை, மண்ணி அன்ன – ஒப்பனை செய்தாற்போல, அணங்கு மெய்ந்நின்ற – கடவுள் தன்னிடத்தில் உள்ள, அமைவரு காட்சி – கண்ணுக்கு அழகான காட்சி, ஆறலை கள்வர் – வழிப்பறிக் கள்வரும் (ஆறலை கள்வரும் – கள்வரும் எனற்பாலது செய்யுள் விகாரத்தால் உம்மை தொக்கு, ஆறலை கள்வர் என நின்றது), படை விட – படைக்கலங்களைக் கைவிட, அம்பு, வில் போன்ற கலங்களைக் கைவிட, அருளின் மாறு தலைபெயர்க்கும் – அருளிற்கு மாறான அவர்களின் பண்பை மாறச் செய்யும், மருவு இன் பாலை – கேட்கும்பொழுதெல்லாம் இன்பம் பயக்கும் பாலை யாழ்  

யாழை வாசிக்கும் முறை

வாரியும், வடித்தும், உந்தியும், உறழ்ந்தும்,
சீருடை நன் மொழி நீரொடு சிதறி; (23-24)

பொருளுரை:  நரம்புகளைத் தழுவியும், உருவியும், தெறித்தும், ஒன்றைவிட்டு ஒன்றைத் தெறித்தும், சீரை உடைய நல்ல பாடல்களை நீர்மையுடன் (நல்ல முறையாக) பரப்பி 

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வார்தல் என்றது சுட்டு விரல் செய்தொழில்.  வடித்தல் என்றது சுட்டுவிரலும் பெருவிரலும் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல்.  உந்தல் என்றது நரம்புகளை உந்தி வலிவிற்பட்டதும், மெலிவிற்பட்டதும், நிரல்பட்டதும், நிரலிலி பட்டதும் என்றறிதல்.  உறழ்தல் என்றது ஒன்றை இட்டும் இரண்டை இட்டும் ஆராய்தல்.  சிலப்பதிகாரம் – வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் சீருடன். (கானல் – 12-13).

சொற்பொருள்:  வாரியும் – நரம்புகளைத் தழுவியும், வடித்தும் – நரம்பினை உருவியும், உந்தியும் – தெறித்தும், உறழ்ந்தும் – ஒன்றைவிட்டு ஒன்றைத் தெறித்தும், சீருடை நன் மொழி – சீரை உடைய நல்ல பாடல்களை, நீரொடு சிதறி – நீர்மையுடன் (நல்ல முறையாக) பரப்பி

பாடினியின் வருணனை

அறல் போல் கூந்தல், பிறை போல் திரு நுதல்,   25
கொலை வில் புருவத்துக் கொழுங்கடை மழைக் கண்,
இலவிதழ் புரையும் இன் மொழித் துவர் வாய்ப்
பல உறு முத்தின் பழி தீர் வெண்பல்,
மயிர் குறை கருவி மாண் கடையன்ன
பூங்குழை ஊசல் பொறை சால் காதின்,  30
நாண் அடச் சாய்ந்த நலங்கிளர் எருத்தின்,
ஆடு அமைப் பணைத் தோள் அரி மயிர் முன்கை,
நெடுவரை மிசைஇய காந்தள் மெல் விரல்,
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர்,
அணங்கென உருத்த சுணங்கணி ஆகத்து   35
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை,
நீர்ப் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ்
உண்டென உணரா உயவும் நடுவின்
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல்,
இரும் பிடித் தடக் கையின் செறிந்து திரள் குறங்கின்   40
பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப,
வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி,
அரக்கு உருக்கு அன்ன செந்நிலன் ஒதுங்கலின்
பரல் பகை உழந்த நோயொடு சிவணி
மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள்,   45
நன்பகல் அந்தி நடையிடை விலங்கலின்
பெடை மயில் உருவில் பெருந்தகு பாடினி; (25-47)  

பொருளுரை:  ஆற்றின் கருமணல் போன்ற கூந்தலையும், பிறை நிலா போன்ற அழகினையுடைய நெற்றியையும், கொலைத் தொழில் செய்யும் வில்லைப் போன்ற புருவத்தினையும், அழகிய கடைப்பகுதியையுடைய குளிர்ச்சியை உடைய மழைக்கண்களையும், இலவ மலரின் இதழைப் போல் உள்ள இனிய சொற்களை உடைய சிவந்த வாயையும், பல முத்துக்கள் சேர்ந்தாற்போன்ற குற்றமற்ற வெள்ளைப் பற்களையும், மயிரை வெட்டும்  கத்தரிக்கோலின் மாட்சிமை உடைய கைப்பிடியைப் போல் இருந்த அழகிய காதணிகள் அணிந்த, அசைதலுடைய, பொருந்துதல் அமைந்த காதுகளையும், நாணம் வருத்துவதால் பிறரை நோக்காது கவிழ்ந்த நன்மை விளங்குகின்ற கழுத்தினையும், அசைகின்ற மூங்கில் போன்ற பெரிய தோளினையும், மென்மையான மயிரையுடைய முன்னங்கைகளையும், உயர்ந்த மலையின் உச்சியில் உள்ள காந்தள் மலர் இதழ் போல் மென்மையான விரல்களையும், கிளியின் அலகு போன்ற ஒளியுடைய நகங்களையும், கண்டாரை வருத்தும் நெருங்கிய சுணங்குடைய ஈர்க்குச்சியும் இடையே போகாத அழகிய எழுச்சியுடைய இளமுலைகளையும், நீரில் உள்ள நகரும் சுழி போல உள்ள அழகான கொப்பூழையும், உண்டு என்று பிறரால் அறியப்படாத வருத்துகின்ற இடையையும், பல வண்டு இனங்கள் சேர்ந்து இருந்தாற்போலப் பல மணிகள் கோர்த்த மேகலை அணிந்த அல்குலையும், பெரிய (கரிய) பெண் யானையின் பெரிய தும்பிக்கை நெருங்கி இருப்பது போன்ற தொடையினையும், பொருத்தமான மயிரையுடைய திருத்தமான கால்களுக்கு ஒப்ப உள்ள, ஓடி இளைத்த நாயின் நாக்கு போன்ற பெரும் தகைமையுடைய சிறிய அடிகளையும், அரக்கு உருக்கிய தன்மையுடைய நிலத்தில் நடந்ததால், பரல் கற்கள் மீது பொருந்தி நடந்து வருந்தியதால் மரல் பழுத்தாற்போன்று தளும்பு நீர் நிறைந்த கொப்புளங்களும் உடைய பாடினி, நல்ல உச்சி வெயிலிலும் மாலையிலும் நடப்பதைத் தவிர்த்ததால், பெண் மயில் போன்ற உருவினை உடையவளாகவும், பெரிய தகைமையுடையவளாகவும் இருந்தாள்.    

குறிப்பு:  நாயின் நாக்கு அன்ன அடி:  நற்றிணை 252 – கத நாய் நல் நாப் புரையும் சீறடி, மலைபடுகடாம் 42-43 – ஞமலி நாவின் அன்ன துளங்கு இயல் மெலிந்த கல்பொரு சீறடி, பொருநராற்றுப்படை 42 – வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி, சிறுபாணாற்றுப்படை 17-18 – உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ வயங்கு இழை உலறிய அடியின் அடி.  பிடி யானையின் தும்பிக்கையைப் போன்ற தொடை: சிறுபாணாற்றுப்படை 19-20 – இரும் பிடித் தடக் கையின் சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு.  காந்தள் இதழ் போன்ற விரல்:  முல்லைப்பாட்டு 95 – கோடல் குவி முகை அங்கை அவிழ, குறுந்தொகை 167 – காந்தள் மெல்விரல், பரிபாடல் 19 – கை போல் பூத்த கமழ் குலைக் காந்தள், பொருநராற்றுப்படை 33 – காந்தள் மெல் விரல், புறநானூறு 144 – காந்தள் முகை புரை விரலின்.  முத்தைப் போன்ற பற்கள்: அகநானூறு 27 – முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 – இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 – முத்து ஏர் வெண்பல், கலித்தொகை 64 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏய்க்கும் வெண்பல், கலித்தொகை 131 – முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 – எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 – முத்த முறுவல்,  பொருநராற்றுப்படை 27 – துவர் வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 – நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 – முத்து உறழ் முறுவல்.  அறல் போல் கூந்தல்:  அகநானூறு 142 – அறல் அன்ன இரும் பல் கூந்தல், அகநானூறு 162 – அறல் என அவிர்வரும் கூந்தல், அகநானூறு 213 – அறலென நெறிந்த கூந்தல், அகநானூறு 265 – அறலின் நெறித்த கூந்தல், அகநானூறு 299 – அறல் மருள் கூந்தலின், குறுந்தொகை 116 – தேம் பாய் கூந்தல் வளங் கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண் மணல் அறல் வார்ந்தன்ன, குறுந்தொகை 286 – அறல் போல் கூந்தல், கலித்தொகை 71 – கதுப்பு அறல், கலித்தொகை 98 – நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, பொருநராற்றுப்படை 25 – அறல் போல் கூந்தல்.  பெடை மயில் உருவில் பெருந்தகு பாடினி (47) – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெடை மயிலின் அருகுநின்ற மயில்போலும் சாயலினையுடைய கல்விப்பெருமை தக்கிருக்கின்ற பாடினி, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – பெட்டை மயில் போலும் சாயலினைக் கொண்ட கல்விப்பெருமை தக்கிருக்கின்ற பாடினி.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

சொற்பொருள்:  அறல் போல் கூந்தல் – ஆற்றின் கருமணல் போன்ற கூந்தல், பிறை போல் திரு நுதல் – பிறை நிலா போன்ற அழகினையுடைய நெற்றி, கொலை வில் புருவத்துக் கொழுங்கடை மழைக் கண் – கொலைத் தொழில் செய்யும் வில்லைப் போன்ற புருவத்தினையும் அழகிய கடைப்பகுதியையுடைய குளிர்ச்சியை உடைய மழைக்கண்கள், இலவிதழ் புரையும் இன் மொழித் துவர் வாய் – இலவ மலரின் இதழைப் போல் உள்ள இனிய சொற்களை உடைய சிவந்த வாயும், பல உறு முத்தின் பழி தீர் வெண்பல் – பல முத்துக்கள் சேர்ந்தாற்போன்ற குற்றமற்ற  வெள்ளைப் பற்கள், மயிர் குறை கருவி மாண் கடையன்ன  பூங்குழை ஊசல் பொறை சால் காதின் – மயிரை வெட்டும் கத்தரிக்கோலின் மாட்சிமைப்பட்ட கைப்பிடியைப் போல் (குழைச்சைப் போல்)  இருந்தன அழகிய காதணிகள் அணிந்த அசைதலுடைய பொருந்துதல் அமைந்த காதுகள், நாண் அடச் சாய்ந்த நலங்கிளர் எருத்தின் – நாணம் வருத்துவதால் பிறரை நோக்காது கவிழ்ந்த நன்மை விளங்குகின்ற கழுத்து, ஆடு அமைப் பணைத் தோள் – அசைகின்ற மூங்கில் போன்ற பெரிய தோள், அரி மயிர் முன்கை – மென்மையான மயிரையுடைய முன்கை, நெடுவரை மிசைஇய காந்தள் மெல் விரல் – உயர்ந்த மலையின் உச்சியில் உள்ள காந்தள் மலர் இதழ் போல் மென்மையான விரல்கள் (மிசைஇய – அளபெடை), கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர் – கிளியின் அலகு போன்ற ஒளியுடைய பெரிய நகங்கள், அணங்கென உருத்த சுணங்கணி ஆகத்து  ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை – கண்டாரை வருத்தும் நெருங்கிய சுணங்குடைய ஈர்க்கும் இடையே போகாத அழகிய இள எழுச்சியுடைய முலைகள், நீர்ப் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ் – நீரில் உள்ள நகரும் சுழி போல உள்ள அழகான கொப்பூழ், உண்டென உணரா உயவும் நடுவின் – உண்டு என்று பிறரால் அறியப்படாத வருத்துகின்ற இடையும், வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல் – பல வண்டு இனங்கள் சேர்ந்து இருந்தாற்போல பல மணி கோர்த்த மேகலை அணிந்த அல்குல், இரும் பிடித் தடக் கையின் செறிந்து திரள் குறங்கின் – பெரிய (கரிய) பெண் யானையின் பெரிய தும்பிக்கை நெருங்கி இருப்பது போன்ற தொடையினையும், பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப – பொருத்தமான மயிரையுடைய திருத்தமான கால்களுக்கு ஒப்ப, வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி – ஓடி இளைத்த நாயின் நாக்குப் போன்ற பெரும் தகைமையுடைய சிறிய அடிகள், அரக்கு உருக்கு அன்ன செந்நிலன் ஒதுங்கலின் – அரக்கு உருக்கிய தன்மையுடைய நிலத்தில் நடந்ததால், பரல் பகை உழந்த நோயொடு சிவணி – பரல் கற்கள் மீது பொருந்தி நடந்து வருந்தியதால் (சிவணி – பொருந்தி), மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள் – மரல் பழுத்தாற்போன்று தளும்பு நீர் நிறைந்த கொப்புளம், நன்பகல் அந்தி நடையிடை விலங்கலின் – நல்ல உச்சி வெயிலிலும் மாலையிலும் நடப்பதைத் தவிர்த்ததால், பெடை மயில் உருவில் பெருந்தகு பாடினி – பெண் மயில் போன்ற உருவினை உடையவளாக இருந்தாள் பெரிய தகைமையுடைய பாடினி

வழிப்படுத்தும் பொருநன்

பாடின பாணிக்கு ஏற்ப, நாள்தொறும்
களிறு வழங்கு அதர்க் கானத்து அல்கி,
இலை இல் மராஅத்த எவ்வம் தாங்கி,   50
வலை வலந்தன்ன மென் நிழல் மருங்கில்,
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றைப், (48 – 52)

பொருளுரை:  பாடின தாளத்திற்கு ஏற்பப் பாடி, நாள்தோறும் யானைகள் உலவும் வழிகளையுடைய காட்டில் தங்கி, வழியில் செல்லும் வருத்தத்தைத் தாங்கி, இலை இல்லாத கடம்ப மரத்தின் அடியில் உள்ள, வலையை மேலே கட்டிடனாற்போன்ற மெல்லிய மர நிழலில், காட்டில் தங்குகின்ற கடவுளுக்கு முறைகளைச் செய்த பின்பு,

சொற்பொருள்:  பாடின பாணிக்கு ஏற்ப – பாடின தாளத்திற்கு ஏற்ப, நாள்தொறும் – நாள்தோறும், களிறு வழங்கு அதர்க் கானத்து அல்கி – யானைகள் உலவும் வழிகளையுடைய காட்டில் தங்கி, இலை இல் மராஅத்த – இலை இல்லாத கடம்ப மரத்தின் (அத்துச்சாரியை, அகர விகுதி பெற்றது), எவ்வம் தாங்கி – வருத்தம் தாங்கி, வலை வலந்தன்ன – வலையை மேலே கட்டினாற்போல், மென் நிழல் மருங்கில் – மெல்லிய நிழல் உள்ள இடத்தில், காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை – காட்டில் தங்குகின்ற கடவுளுக்கு முறைகளை செய்த பின்பு

பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள்,
முரசு முழங்கு தானை மூவருங்கூடி,
அரசவை இருந்த தோற்றம் போலப்   55
பாடல் பற்றிய பயனுடைய எழாஅல்
கோடியர் தலைவ கொண்டது அறிந!
அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது
ஆற்று எதிர்ப் படுதலும் நோற்றதன் பயனே,
போற்றிக் கேண்மதி, புகழ் மேம்படுந! (53 – 60)

பொருளுரை:  பெருமையுடைய செல்வத்தையும், பெரிய பெயரையும், வலிய முயற்சியையும், வெற்றி முரசு முழங்கும் படையையும் உடைய மூவேந்தர்கள் ஒன்றாகக் கூடி அரச அவையில் இருக்கும் தோற்றம் போல, பாடல்களையும் பற்றித் தோன்றும் இசைப் பயனையுடைய யாழினையும் உடைய கூத்தர்களின் தலைவனே!  பிறர் மனதில் கொண்டதைக் குறிப்பால் அறிய வல்லவனே! அறியாமையினால் வழியைத் தவறிச் செல்லாது, இந்த வழியில் என்னைக் கண்டது உன்னுடைய நல்வினையின் பயனே!  நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக புகழை உடையவனே!

குறிப்பு:  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

சொற்பொருள்:  பீடு கெழு திருவின் பெரும் பெயர் – பெருமையுடைய செல்வத்தையும் பெரிய பெயரையும், நோன் தாள் – வலிய முயற்சியையும், முரசு முழங்கு தானை – வெற்றி முரசு முழங்கும் படையையுடைய, மூவருங் கூடி அரசவை இருந்த தோற்றம் போல – மூவேந்தர்கள் (சேர, சோழ, பாண்டியர்) கூடி அரச அவையில் இருக்கும் தோற்றம் போல, பாடல் பற்றிய பயனுடைய எழாஅல் – பாடல்களையும் பற்றித் தோன்றும் இசைப் பயனையுடைய யாழினையுடைய (எழாஅல் – அளபெடை), கோடியர் தலைவ – கூத்தர்களின் தலைவனே, கொண்டது அறிந – பிறர் மனதில் கொண்டதைக் குறிப்பால் அறிய வல்லவனே, அறியாமையின் நெறி திரிந்து – அறியாமையினால் வழியைத் தவறி, ஒராஅது – ஒருவாது, நீங்காது (அளபெடை), ஆற்று எதிர்ப்படுதலும் – இவ்வழியில் என்னைக் கண்டதும், நோற்றதன் பயனே – உன்னுடைய நல்வினையின் பயனே, போற்றிக் கேண்மதி – நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக  (கேண்மதி – மதி முன்னிலையசை), புகழ் மேம்படுந – புகழை உடையவனே

ஆடு பசி உழந்த நின் இரும்பேர் ஒக்கலொடு,
நீடு பசி ஒராஅல் வேண்டின், நீடு இன்று
எழுமதி, வாழி! ஏழின் கிழவ!
பழுமரம் உள்ளிய பறவையின், யானும் அவன்
இழுமென் சும்மை இடனுடைய வரைப்பின்   65
நசையுநர்த் தடையா நன் பெருவாயில்
இசையேன் புக்கு என் இடும்பை தீர
எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகிப்,
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப
கைக் கசடு இருந்த என் கண் அகன் தடாரி  70
இரு சீர்ப் பாணிக்கு ஏற்ப, விரி கதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்,
ஒன்றியான் பெட்டா அளவையின் ஒன்றிய, (61 – 73)

பொருளுரை:  கொல்லும் பசியால் வருந்தும் உன்னுடைய மிகப் பெரிய சுற்றத்தாருடன் நீண்டநாட்களாக உள்ள உன்னுடைய பசி உன்னைக் கைவிட வேண்டுமானால், காலத்தை நீட்டிக்காது எழுவாயாக, யாழின் ஏழு நரம்புகளிடத்தும் உரிமையுடைய இசையின் தலைவனே! நீ நீடு வாழ்வாயாக! பழங்கள் கொண்ட மரத்தை நினைத்துச் செல்லும் பறவையைப் போல் நானும் அவனுடைய ‘இழும்’ என ஒலி உடைய அகலமான அரண்மனை மதிலில் உள்ள, விரும்பி வந்தவர்களுக்குத் தடை இல்லாத நல்ல பெரிய வாயிலின்கண் இருந்த வாயிலோனுக்கு அறிவிக்காமல் புகுந்து, என்னுடைய துன்பம் தீர்ந்ததால் இளைத்த உடலை உடைய நான் மகிழ்ச்சியால் இளைப்புத் தீர்ந்து, படம் விரித்த பாம்பின் பொறியை ஒப்பக் கையினால் ஏற்பட்ட வடு இருந்த அகன்ற கண்ணையுடைய என்னுடைய உடுக்கையில் தோற்றுவித்த இரட்டைத் தாளத்திற்குப் பொருந்துமாறு, விரிகின்ற கதிர்களையுடைய வெள்ளி எழுந்த அடர்ந்த இருளையுடைய விடியற்காலையில், நான் விருப்பத்துடன் ஒரு பாட்டைப் பாடுமுன், பொருந்திய

குறிப்பு:  யாழின் ஏழு நரம்புகள்:  குரல், கைக்கிளை, உழை, இளி, துத்தம், விளரி, தாரம்.  வெள்ளி தோன்ற:  புறநானூறு 385 – வெள்ளி தோன்றப் புள்ளுக் குரல் இயம்ப புலரி விடியல், புறநானூறு 397 – வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும் புள்ளும் உயர் சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே பொய்கையும் போது கண் விழித்தன பையச் சுடரும் சுருங்கின்று ஒளியே பாடெழுந்து இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி, புறநானூறு 398 – மதி நிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர வகை மாண் நல் இல், பொருநராற்றுப்படை 72 – வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்.  பழ மரமும் புள்ளும்:  புறநானூறு 173 – பழுமரம் புள் இமிழ்ந்தன்ன, புறநானூறு 370 – பழுமரம் உள்ளிய பறவை போல, பெரும்பாணாற்றுப்படை 20 – பழுமரம் தேரும் பறவை போல, பொருநராற்றுப்படை 64 – பழுமரம் உள்ளிய பறவையின், மதுரைக்காஞ்சி 576 – பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல.  பாம்பின் பொறி: குறுந்தொகை 294 – தித்தி பரந்த பைத்து அகல் அல்குல்.  இரும்பேர் ஒக்கல் – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 – கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை – புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 – மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 – கரிய பெரிய சுற்றத்தார், பொ. வே. சோமசுந்தரனார் உரை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அகநானூறு 301 – மிகப் பெரிய சுற்றத்தார்.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்  இடையியல் 26).  சும்மை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 51).  பெட்டா – பெள் (விருப்பம்) என்னும் பகுதியின் அடியாகப் பிறந்த எதிர்மறைப் பெயரெச்சம்.  புறநானூறு 399 – ஒன்றியான் பெட்டா அளவை.

சொற்பொருள்:  ஆடு பசி உழந்த – கொல்லும் பசி, மிக்க பசி (பொ. வே. சோமசுந்தரனார் உரை – அடு பசி – ஆடு பசி என முதனீண்டது), நின் இரும் பேர் ஒக்கலொடு – உன்னுடைய மிகப் பெரிய சுற்றத்தாருடன் (இரும்பேர் – ஒருபொருட் பன்மொழி), உன்னுடைய கரிய பெரிய உறவினர்களுடன், நீடு பசி ஒராஅல் வேண்டின் –  நீண்டநாட்களாக உள்ள உன் பசி உன்னைக்  கைவிட வேண்டுமானால் (ஒராஅல் – அளபெடை), நீடு இன்று எழுமதி – காலத்தை நீட்டிக்காது எழுவாயாக (மதி – முன்னிலையசை), வாழி – நீடு வாழ்வாயாக, ஏழின் கிழவ – யாழின் ஏழு நரம்புகள்கண்ணும் உரிமையுடைய இசையின் தலைவனே, பழுமரம் உள்ளிய பறவையின் – பழமுடைய மரத்தை நினைத்துச் செல்லும் பறவையைப் போல் (பழுமரம் – வினைத்தொகை, பறவையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), யானும் – நானும், அவன் – அவனுடைய, இழுமென் சும்மை – இழும் என ஒலி உடைய (இழுமென் – ஒலிக்குறிப்பு), இடன் உடைய – அகலத்தை உடைய (இடன் – அகலம், இடம் என்பதன் போலி), வரைப்பின் – அரண்மனை மதிலில், நசையுநர்த் தடையா நன் பெருவாயில் – விரும்பி வந்தவர்களுக்குத் தடை இல்லாத நல்ல பெரிய வாயில், இசையேன் புக்கு – வாயிலோனுக்கு அறிவிக்காமல் நான் புகுந்து (வாயிலோனுக்கு என்பது அவாய் நிலையான் வந்தது), என் இடும்பை தீர – என்னுடைய துன்பம் தீர, எய்த்த மெய்யேன் – இளைத்த உடலை உடைய நான், எய்யேன் ஆகி – மகிழ்ச்சியால் இளைப்புத் தீர்ந்து, பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப – படம் விரித்த பாம்பின் பொறியை ஒப்ப (பைத்த – பெயரெச்சம், ஏய்ப்ப – உவம உருபு), கைக் கசடு இருந்த – கையினால் ஏற்பட்ட வடு இருந்த, என் கண் அகன் தடாரி இரு சீர்ப் பாணிக்கு ஏற்ப – அகன்ற கண்ணையுடைய என்னுடைய  உடுக்கையில் தோற்றுவித்த இரட்டைத் தாளத்திற்குப் பொருந்துமாறு, விரி கதிர் வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல் – விரிகின்ற கதிர்களையுடைய வெள்ளி எழுந்த அடர்ந்த இருளையுடைய விடியற்காலையில், ஒன்று யான் பெட்டா அளவையின் – நான் விருப்பத்துடன் ஒரு பாட்டைப் பாடுமுன், ஒன்றிய – பொருந்திய

அரசனின் விருந்தோம்பும் பண்பு

கேளிர் போலக் கேள் கொளல் வேண்டி,
வேளாண் வாயில் வேட்பக் கூறி,   75
கண்ணில் காண நண்ணுவழி இரீஇ,
பருகு அன்ன அருகா நோக்கமொடு,
உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ,
ஈரும் பேனும் இருந்து இறை கூடி
வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த   80
துன்னல் சிதாஅர் துவர நீக்கி,
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவு உரி அன்ன அறுவை நல்கி, (74 – 83)

பொருளுரை:  நண்பர் போல என்னுடன் உறவுகொள்ளுதலை விரும்பி, தன்னுடைய விருந்தோம்பல் தொழிலை நான் விரும்பும்படி அவன் என்னிடம் அன்புடன் மொழிந்து, தன் கண்ணால் காணும்படி என்னைத் தன் அருகில் இருக்க வைத்து, பருகும் தன்மை போன்ற கெடாத தன் பார்வையால் உருகும் தன்மையுள்ள வெண்ணெய் மெழுகு முதலியன போல் என் எலும்பு நெகிழும்படி என்னைக் குளிர்ச்சிகொள்ளச் செய்து, ஈரும் பேனும் கூடி இருந்து அரசாண்டு, வேர்வையால் நனைந்த ஆடையின் நூல் அல்லாத வேற்று நூல் இழைகள் நுழைத்துத் தைக்கப்பட்ட என் கந்தல் ஆடையை முழுக்க நீக்கி, கண்களால் இழைபோன வழி இது எனக் காண முடியாத நுண்ணிய பூத்தொழில் முற்றுப்பெற்ற, பாம்பின் தோலை ஒத்த ஆடைகளை எனக்கு நல்கி,

குறிப்பு:  வேற்று இழை:  புறநானூறு 69 – வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர், பொருநராற்றுப்படை 80 – வேற்று இழை நுழைந்த துன்னல் சிதாஅர்.  பாம்பின் தோல் அன்ன ஆடை:  புறநானூறு 283 – பாம்பு உரி அன்ன வடிவின காம்பின் கழைபடு சொலியின் இழை அணி வாரா ஒண் பூங்கலிங்கம் உடீஇ, பொருநராற்றுப்படை – 83 – அரவு உரி அன்ன அறுவை நல்கி.

சொற்பொருள்:  கேளிர் போல – உறவினர் போல, நண்பர் போல, கேள் கொளல் வேண்டி – உறவுகொள்ளுதலை விரும்பி, வேளாண் வாயில் வேட்பக் கூறி – விருந்தோம்பல் தொழிலை நான் விரும்பும்படி கூறி, கண்ணில் காண நண்ணுவழி இரீஇ – தன் கண்ணால் காணும்படி என்னைத் தன் அருகில் இருக்க வைத்து (இரீஇ – அளபெடை), பருகு அன்ன அருகா நோக்கமொடு – பருகும் தன்மை போன்ற கெடாத பார்வையால், உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ – உருகும் தன்மையுள்ள வெண்ணெய் மெழுகு முதலியன போல் எலும்பு நெகிழும்படி என்னைக் குளிர்ச்சிகொள்ளச் செய்து (கொளீஇ – அளபெடை), ஈரும் பேனும் இருந்து இறை கூடி வேரொடு நனைந்து – ஈரும் பேனும் கூடி இருந்து அரசாண்டு வேர்வையால் நனைந்து, வேற்றிழை நுழைந்த துன்னல் – வேறு நூல் இழைகள் நுழைந்துள்ள தைக்கப்பட்ட, சிதாஅர் – கந்தல் ஆடை (சிதாஅர் – அளபெடை), துவர நீக்கி – முழுக்க நீக்கி, நோக்கு நுழைகல்லா நுண்மைய – கண்களால் இழைபோன வழி என்று காண முடியாத நுண்ணிய, பூக் கனிந்து – பூத்தொழில் முற்றுப்பெற்ற (திருத்தமாக செய்யப்பட்ட), அரவுரி அன்ன அறுவை நல்கி – பாம்பின் தோலை ஒத்த ஆடைகளை நல்கி

கள் கொடுத்தல்

மழை என மருளும் மகிழ் செய் மாடத்து,
இழை அணி வனப்பின் இன்னகை மகளிர்,   85
போக்கு இல் பொலங்கலம் நிறையப் பல் கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட,
ஆர உண்டு பேரஞர் போக்கிச்
செருக்கொடு நின்ற காலை, (84 – 89)

பொருளுரை:  மகிழ்ச்சியை விளைவிக்கும் உயர்நிலை மாடத்தில், கூந்தல் முகிலோ எனக் கண்டவர்கள் மருள்வதற்குக் காரணமான, அணிகலன் அணிந்த அழகிய இனிய புன்னகையுடைய பெண்கள், குற்றமில்லாத பொற் கிண்ணங்களில் நிறையக் கள்ளைப் பலமுறை வார்த்துத் தரும்பொழுதெல்லாம் வழியில் வந்த வருத்தம் போகும்படி நிறையப் பருகி பெரும் துன்பத்தைப் போக்கி, நான் செருக்குடன் நின்றபொழுது,

குறிப்பு:  மழை என மருளும் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழை – முகில், மழையென என்ற உவமைக்குத் தகுதியாற் கூந்தல் வருவித்துரைக்கப்பட்டது.

சொற்பொருள்:  மழை என மருளும் – இவை முகிலோ எனக் கண்டவர்கள் மருளும் (மழை – ஆகுபெயர் முகிலுக்கு), மகிழ் செய் மாடத்து – மகிழ்ச்சியை விளைவிக்கும் உயர்நிலை மாடத்தில், இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் – அணிகலன் அணிந்த அழகிய இனிய புன்னகையுடைய பெண்கள், போக்கு இல் பொலங்கலம் – குற்றமில்லாத பொற்கலங்கள் (போக்கு – குற்றம்), நிறைய பல் கால் – நிறையப் பலமுறை, வாக்குபு தரத்தர – வார்த்துத் தரும்போதும், வருத்தம் வீட ஆர உண்டு – வழியில் வந்த வருத்தம் போகும்படி நிறையப் பருகி, பேர் அஞர் போக்கி – பெரும் துன்பத்தைப் போக்கி, செருக்கொடு நின்ற காலை – நான் செருக்குடன் நின்றபொழுது

தங்குதற்குரிய இருப்பிடம் தரல்

……………………………………….மற்று அவன்,
திருக்கிளர் கோயில் ஒரு சிறைத் தங்கி,   90
தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது
அதன் பயம் எய்திய அளவை மான,
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி,
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம் கவல்பு இன்றி, மாழாந்து எழுந்து, (89 – 95)

பொருளுரை:  பின்னர் அவனுடைய செல்வம் விளங்குகின்ற அரண்மனையில் ஒரு பக்கம் தங்கி, தவம் செய்யும் மக்கள் தங்கள் உடம்பைக் கெடுக்காது அத் தவத்தின் பயனை அடைந்த தன்மையை ஒப்ப, வழியில் போன வருத்தம் என்னை விட்டுச் செல்லுமாறு அதனைப் போக்கி, கள் குடித்ததால் உண்டான செருக்கினால் உடல் நடுக்கம் அன்றி வேறு மனக்கலக்கம் இல்லாமல், துயின்று பின் உணர்ந்து எழுந்து,

குறிப்பு:  மாழாந்து (95) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மயங்கி என்னும் பொருட்டு.  ஈண்டுப் பொறிகள் மயங்குதற்குக் காரணமான துயிலை ஆகுபெயரால் உணர்த்தி நின்றது).

சொற்பொருள்:  மற்று அவன் திருக் கிளர் கோயில் – பின்னர் அவனுடைய செல்வம் விளங்குகின்ற அரண்மனையில், ஒரு சிறைத் தங்கி – ஒரு பக்கம் தங்கி, தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது – தவம் செய்யும் மக்கள் தங்கள் உடம்பைக் கெடுக்காது (இடாஅது – அளபெடை), அதன் பயம் எய்திய – அத் தவத்தின் பயனை அடைந்த, அளவை மான – தன்மையை ஒப்ப (மான – உவம உருபு), ஆறு செல் வருத்தம் அகல நீக்கி – வழியில் போன வருத்தம் செல்லுமாறு அதனைப் போக்கி, அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும் மனம் கவல்பு இன்றி – கள் குடித்ததால் உண்டான செருக்கினால் உடல் நடுக்கம் அன்றி வேறு மனக்கலக்கம் இல்லாமல் (அனந்தர் – கள் மயக்கம்), மாழாந்து எழுந்து – துயின்று பின் உணர்ந்து எழுந்து

மாலையும் காலையும்

மாலை அன்னது ஓர் புன்மையும் காலைக்
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்,
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப,
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்பக்,
கல்லா இளைஞர் சொல்லிக் காட்டக்   100
கதுமெனக் கரைந்து வம் எனக் கூஉய்,
அதன் முறை கழிப்பிய பின்றைப் (96 – 102)

பொருளுரை:  இம்மன்னனைக் காணுமுன் மாலை வேளையில் என்னிடமிருந்த வறுமையையும், மறுநாள் காலையில் என்னைக் கண்டவர்கள் நேற்று வந்தவன் அல்லன் இவன் என மருள்வதற்குக் காரணமான, வண்டுகள் என்னை மொய்க்கின்ற நிலைமையும், இது கனவாக இருக்கும் என்று கலங்கிய என்னுடைய நெஞ்சு இது நனவு என்று துணியும்படி, மிகுந்த வருத்தம் பொருந்திய என் நெஞ்சம் உள்ளே மகிழும்படி, தம் தொழிலையன்றி வேறு எதுவும் கற்காத இளைஞர் எடுத்துக் கூற, விரைவாக அழையுங்கள் என வாயிலோரிடம் கூறி, வருக எனக் கூவி மன்னன் அழைத்ததால், அம்மன்னனைக் கண்டு முறைகளைச் செய்த பின்னர், 

குறிப்பு:  அன்னது (96) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பண்டறி சுட்டு. தன்னிடத்தே அஃதின்மையால் சேய்மைச் சுட்டால் சுட்டினான் என்க.  

சொற்பொருள்:  மாலை அன்னது ஓர் புன்மையும் – இம்மன்னனைக் காணுமுன் மாலை வேளையில் என்னிடமிருந்த வறுமையையும், காலை கண்டோர் மருளும் – மறுநாள் காலையில் என்னைக் கண்டவர்கள் மருள்வதற்குக் காரணமான, வண்டு சூழ் நிலையும் – வண்டுகள் என்னை மொய்க்கின்ற நிலைமையும், கனவு என மருண்ட என் நெஞ்சும் – இது கனவாக இருக்கும் என்று கலங்கிய என்னுடைய நெஞ்சு, ஏமாப்ப – தெளிய, நனவு என்று துணியும்படி, வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப – மிகுந்த வருத்தம் பொருந்திய என் நெஞ்சம் உள்ளே மகிழும்படி, கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட – தம் தொழிலையன்றி வேறு எதுவும் கற்காத இளைஞர் எடுத்துக் கூற, கதுமென – விரைவாக (விரைவுக்குறிப்பு), கரைந்து – கூறி, வம்மெனக் கூஉய் – வருக என அழைத்து (கூஉய்  – அளபெடை), அதன் முறை கழிப்பிய பின்றை – மன்னனைக் கண்டு முறைகளைச் செய்த பின்னர் 

அரசன் உணவளித்த பாங்கு

…………………………………………பதன் அறிந்து,
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை பருகு எனத்தண்டி
காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங்குறை   105
ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி,
அவை அவை முனிகுவம் எனினே, சுவைய
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ
மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்
ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க,   110
மகிழ்ப்பதம் பல் நாள் கழிப்பி ஒரு நாள்
“அவிழ்ப் பதம் கொள்க” என்று இரப்ப, முகிழ்த்தகை
முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்,
பரல் வறைக் கருனை, காடியின் மிதப்ப,   115
அயின்ற காலைப் பயின்று இனிது இருந்து,
கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே,
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி,
உயிர்ப்பிடம் பெறாஅது, ஊண் முனிந்து (102 – 119)

பொருளுரை:  காலம் அறிந்து அறுகம் புல்லால் திரித்த பழுதையைத் தின்ற செம்மறிக் கிடாயின் அழகிய வெந்த தசையின் பருத்த துண்டுகளை “உண்ணு” என வற்புறுத்தியதாலும், இரும்புக் கம்பியில் கோத்துச் சுட்ட கொழுத்த தசையின் பெரிய துண்டுகளை “உண்ணு” என வற்புறுத்தியதாலும், முறையாக முறையாக வாயில் அத் தசையின் வெம்மையை ஆற்றி உண்டு, அவற்றை வேண்டாம் என நாங்கள் மறுத்ததால், சுவையான வேறு பல வடிவங்களுடைய உணவைக் கொடுத்து எங்களை அங்கு இருத்தி, மார்ச்சனை அமைந்த முழவுடனும் பண் பொருந்திய சிறிய யாழின் இசையுடனும்,  ஒளியுடைய நெற்றியையுடைய ஆடும் பெண்கள் தாளத்திற்கு ஏற்ப ஆட, இவ்வாறு பல நாட்கள் கள்ளின் மகிழ்ச்சியால் கழிந்தன.  ஒரு நாள் சோறாகிய உணவை “உண்க” என அவன் வேண்ட, முல்லை அரும்பின் வரி இல்லாத தன்மையுடைய முரியாத அரிசியினால் சமைத்த விரல் என்னும்படி நீண்ட சோற்றையும், பருக்கைக் கற்கள் போன்று நன்று பொறிக்கப்பட்ட பொரியல்களையும் கழுத்தில் வந்து நிரம்பும்படி உண்டு, அம் மன்னனுடன் தொடர்ந்து உடன் இருந்ததால், கொல்லையை உழும் கொழுப்போன்று எம் பற்கள் பகலும் இரவும் இறைச்சியைத் தின்று மழுங்கி, மூச்சு விடவும் இடம் இல்லாது, உணவினை வெறுத்து, 

குறிப்பு:  மகிழ்ப்பதம் (111) நச்சினார்க்கினியர் உரை – மகிழ்ச்சியை உடைய கள்.  பரல் (115) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பருக்கைக் கற்கள்.  இது பொரிகறிக்கு உவமை.  இனி பரலைப் பொரித்ததென்னும் நச்சினார்க்கினியர் உரையும் காண்க. ஈண்டுப் பரல் என்றது பலா அல்லது அவரை முதலியற்றின் விதையை.   காடியின் (115) – நச்சினார்க்கினியர் உரை – கழுத்திடத்தே, காடியை புளிங்கறியாக்கிப் புளிங்கறியோடே நிரம்ப விழுங்கின காலை என்றும் உரைப்பர்.

சொற்பொருள்:  பதன் அறிந்து துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் – காலம் அறிந்து அறுகம் புல்லால் திரித்த பழுதையை (பழுதை – கயிறாக திரித்த வைக்கோல்) தின்ற செம்மறிக் கிடாயின் அழகிய வெந்த தசையை (துராஅய் – அளபெடை), பராஅரை வேவை – வெந்த பருத்த துண்டுகள் (பராஅரை – அளபெடை), பருகு எனத் தண்டி – உண்ணு என வற்புறுத்தி, காழின் சுட்ட – இரும்புக் கம்பியில் கோத்துச் சுட்ட, கோழ் ஊன் – கொழுத்த தசை, கொழுங்குறை – பெரிய துண்டுகள், ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி – முறையாக முறையாக வாயில் அத் தசையின் வெம்மையை ஆற்றி உண்டு, அவை அவை முனிகுவம் எனினே – அவற்றை வேண்டாம் என நாங்கள் மறுத்ததால், சுவைய வேறு பல் உருவின் விரகு தந்து – சுவையான வேறு பல வடிவங்களுடைய உணவைக் கொடுத்து (விரகு – ஈகை என்னும் பொருட்டு), இரீஇ – எங்களை அங்கு இருத்தி (இரீஇ – அளபெடை), மண் அமை முழவின் பண் அமை சீறியாழ் ஒண்ணுதல் விறலியர் – மார்ச்சனை அமைந்த முழவுடன் பண் பொருந்திய சிறிய யாழையுடைய ஒளியுடைய நெற்றியையுடைய ஆடும் பெண்கள், பாணி தூங்க – தாளத்திற்கு ஏற்ப ஆட,  மகிழ்ப்பதம் பல் நாள் கழிப்பி – பல நாட்கள் இவ்வாறு கள்ளின் மகிழ்ச்சியால் கழிந்தன, ஒரு நாள் அவிழ்ப் பதம் கொள்க என்று இரப்ப – ஒரு நாள் சோறாகிய உணவை உண்க என அவன் வேண்ட, முகிழ்த் தகை முரவை போகிய முரியா அரிசி  – முல்லை அரும்பின் வரி இல்லாத தன்மையுடைய முரியாத அரிசி, விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் – விரல் என்னும்படி நீண்ட சோற்றையும், பரல் வறைக் கருனை – பருக்கைக் கற்கள் போன்று நன்று பொறிக்கப்பட்ட பொரியல்களையும், காடியின் மிதப்ப அயின்ற காலை – கழுத்தில் வந்து நிரம்பும்படி உண்ட பொழுது, பயின்று இனிது இருந்து – தொடர்ந்து உடன் இருந்து, கொல்லை உழு கொழு ஏய்ப்ப – கொல்லையை உழும் கொழுப்போன்று (கொழு – ஏர்க்காறு, கலப்பையின் வெட்டும் முனை, ஏய்ப்ப – உவம உருபு), பல்லே – பற்கள், எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி – பகலும் இரவும் இறைச்சியைத் தின்று மழுங்கி, உயிர்ப்பு இடம் பெறாஅது – மூச்சு விடவும் இடம் இல்லாது (பெறாஅது – அளபெடை), ஊண் முனிந்து – உணவினை வெறுத்து

தம்மூர் செல்ல முனைந்த பொருநன்

………………………………………………………….ஒரு நாள்,
“செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய   120
செல்வ! சேறும் எம் தொல் பதிப் பெயர்ந்து” என,
மெல்லெனக் கிளந்தனம் ஆக, “வல்லே
அகறிரோ எம் ஆயம் விட்டு?” என,
சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு,
“துடி அடி அன்ன தூங்கு நடைக் குழவியொடு   125
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க!” எனத்
தன் அறி அளவையின் தரத்தர, யானும்,
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு,
இன்மை தீர வந்தனென்; (119 – 129)

பொருளுரை:  ஒரு நாள், “குற்றத்தைச் செய்து உனக்கு எதிராக எழுந்த பகைவர்களிடம் திறைகொள்ளும் செல்வனே!  நாங்கள் எங்கள் தொன்மையான ஊர்க்குச் செல்கின்றோம்” என்று மெதுவாகச் சொன்னோம் ஆக, “விரைந்து எம் சுற்றத்தாரை விட்டு நீவீர் போகின்றீர்களா?” என வெகுண்டவன் போல், எங்களுக்கு வருத்தத்தைச் செய்த பார்வையுடனே எங்களை நோக்கி, அதன்பின் துடி போலும் அடியுடைய அசையும் நடையுடைய கன்றுகளுடனே பிடிகளுடன் கூடிய களிற்று யானைகளையும் கொடுத்து, “நீவீர் விரும்பிய பொருள்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என தான் அறிந்த அளவிற்கு எங்களுக்கு அவன் தர, நானும் அறிந்த அளவிற்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு என் துன்பம் தீர வந்தேன்.

குறிப்பு:  துறை போகிய (121) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – திறை கோடற்குரிய கூறுபாடுகள்.  பகை மன்னரின் தகுதிகளை அறிந்து பொருந்துமாற்றால் கோடலும் இன்னின்ன அரசர்பால் இன்னன்ன பொருள் கோடற்பாற்றெனத் தெளிதலும் பிறவும் என்க.  செயிர்த்த (124) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செயிர் – குற்றம், செயிர்த்து குற்றம் செய்தென்க.  செயிர்த்து சினந்து எனின் ஈண்டுச் சிறவாமை உணர்க.  குழவி (125) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).

சொற்பொருள்:  ஒரு நாள் – ஒரு நாள், செயிர்த்து எழு – குற்றத்தைச் செய்து எழுந்த, சினத்துடன் எழுந்த, தெவ்வர் திறை துறை போகிய செல்வ – பகைவர்களிடம் திறைகொள்ளும் செல்வனே, சேறும் எம் தொல் பதிப் பெயர்ந்து என – செல்வோம் எங்கள் தொன்மையான ஊர்க்கு என்று, மெல் என கிளந்தனம் ஆக – மெதுவாகச் சொன்னோம் ஆக, வல்லே அகறிரோ எம் ஆயம் விட்டு – விரைந்து எம் சுற்றத்தாரை விட்டுப் போகின்றீர்களா, என – என,  சிரறியவன் போல் – வெகுண்டவன் போல், செயிர்த்த நோக்கமொடு – எங்களுக்கு வருத்தத்தைச் செய்த பார்வையுடனே, துடி அடி அன்ன தூங்கு நடைக்  குழவியொடு – துடி போலும் அடியுடைய அசையும் நடையுடைய கன்றுகளுடன், பிடி புணர் வேழம் – பிடிகளுடன் கூடிய வேழம், பெட்டவை கொள்க என – நீவீர் விரும்பிய பொருள்களை எடுத்துக் கொள்ளுங்கள் என, தன் அறி அளவையின் தரத்தர – தான் அறிந்த அளவிற்கு எங்களுக்கு அவன் தர, யானும் என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு – நானும் அறிந்த அளவிற்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, இன்மை தீர வந்தனென் – என் துன்பம் தீர வந்தேன்

கரிகாலனின் சிறப்புகள்

………………………………………….வென்வேல்
உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்   130
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்,
தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி,
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப்
பவ்வ மீமிசைப் பகல் கதிர் பரப்பி,   135
வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு
பிறந்து தவழ் கற்றதன் தொட்டுச் சிறந்த நல்
நாடு செகிற் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப,
ஆளி நன் மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி   140
முலைக் கோள் விடாஅ மாத்திரை, ஞெரேரென
தலைக் கோள் வேட்டம் களிறு அட்டாங்கு,
இரும் பனம் போந்தைத் தோடும் கருஞ்சினை
அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்,
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மிலைந்த   145
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய,
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள்
கண் ஆர் கண்ணிக் கரிகால் வளவன், (129 – 148)

பொருளுரை:   வெற்றிவேலினையும் அழகிய பல தேர்களையுமுடைய இளஞ்சேட்சென்னியின் மகனான, முருகனது சீற்றம் போலும் அச்சத்தைத் தரும் மன்னன் கரிகாலன், தாயின் வயிற்றில் கருவாக இருந்தபொழுதே அரச உரிமை பெற்று, முன்பு அவனுடைய வலிமை அறியாத பகைவர்கள் பின்பு அவனுடைய வலிமையை அறிந்து ஏவல் செய்ய, ஏவல் செய்யாத பகைவர் நாடுகளில் துன்பம் பெருக, கடலின் மேல் தன் கதிர்களைப் பரப்பி யாவரும் விரும்பும் வெம்மையுடைய ஞாயிறு வானில் சென்றாற்போல், பிறந்து தவழ்ந்த நாள் தொடங்கி, தன்னுடைய சிறந்த நல்ல நாட்டினைத் தன் தோள்களில் தாங்கி, நாள்தோறும் பேண, ஆளி என்ற விலங்கின் துன்புறுத்தும் குட்டியினது  தலைமைசான்ற வலிமை போன்ற வலிமையுடன் மிகவும் வலுவுடன் செருக்குக் கொண்டு, முலையில் பால் குடிப்பதைக் கைவிடாத இளம் பருவத்தில் ஆளிக் குட்டி விரைந்து களிற்று யானையைக் கொன்றாற்போல, கரிய பனையாகிய போந்தையின் கண்ணியையும், கரிய கிளையையுடைய அரத்தின் வாய்போலும் வாயையுடைய வேம்பின் அழகிய தளிரால் செய்த கண்ணியையும், தங்கள் ஓங்கிய பெரிய தலையில் சூடிய சேரனும் பாண்டியனும் ஒரு களத்தில் ஒழியும்படி வெண்ணி என்ற ஊரில் போரிட்ட அச்சம் தோன்றுகின்ற வலியையுடைய முயற்சியையும் கண்ணுக்கு அழகு நிறைந்த ஆத்தி மாலையினையும் உடைய கரிகால் சோழன்,

குறிப்பு:  ஆளி – நற்றிணை 205 – ஆளி நன்மான் வேட்டு எழு கோள் உகிர்ப் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந் நுதி ஏந்து வெண்கோட்டு வயக் களிறு இழுக்கும்.  ஆளி (139) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரிமா, அரிமாப் போன்ற வேறொரு விலங்கென எண்ணவும் இடமுள்ளது.  வெண்ணி – கரிகாலன் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னனையும் பதினொரு வேளிரையும்  சோழ நாட்டில் உள்ள வெண்ணி என்ற ஊரில் தோற்கடித்தான்.  காய்சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணி வாயில் சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் இமிழிசை முரசம் பொரு களத்து ஒழியப் பதினொரு வேளிரொடு வேந்தர் சாய (அகநானூறு 246).   வெண்ணிப் போர் – அகநானூறு 55, 246, புறநானூறு 65, 66, பொருநராற்றுப்படை 147.  வெண்ணி ஊர் – நற்றிணை 390. ஆளி – அகநானூறு 78, 252, 381, நற்றிணை 205, புறநானூறு 207, குறிஞ்சிப்பாட்டு 252, பெரும்பாணாற்றுப்படை 258, பொருநராற்றுப்படை 139. குருளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (மரபியல் 1, தொல்காப்பியம்). தெருமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).

சொற்பொருள்:  வென் வேல் உருவ பஃறேர் இளையோன் சிறுவன் – வெற்றிவேலினையும் அழகிய பல தேர்களையுமுடைய இளஞ்சேட்சென்னியின் மகன் (பல்தேர், லகர மெய் ஆய்தமாய்த்  திரிந்தது), முருகற் சீற்றத்து – முருகனது சீற்றம் போலும், உருகெழு குருசில் – அச்சத்தைத் தரும் மன்னன் கரிகாலன், தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி – தாயின் வயிற்றில் கருவாக இருந்தபொழுதே அரச உரிமை பெற்று (கருவாயிருந்த காலத்தில் தந்தை இறந்தனன் என்பது குறித்து), எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப – முன்பு அவனுடைய வலிமையை அறியாத பகைவர் பின்பு அவனுடைய வலிமையை அறிந்து ஏவல் செய்ய, செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப – ஏவல் செய்யாத பகைவர் நாடுகளில் துன்பம் பெருக (தேஎம் – அளபெடை), பவ்வ மீமிசை – கடலின் மேல் (மீ மிசை – ஒருபொருட் பன்மொழி), பகல் கதிர் பரப்பி வெவ்வெஞ் செல்வன் – தன் கதிர்களைப் பரப்பி யாவரும் விரும்பும் வெம்மையுடைய ஞாயிறு, விசும்பு படர்ந்தாங்கு – வானில் சென்றாற்போல், பிறந்து தவழ் கற்றதன் தொட்டு – பிறந்து தவழ்ந்த நாள் தொடங்கி, சிறந்த நல் நாடு செகிற் கொண்டு – தன்னுடைய சிறந்த நல்ல நாட்டினைத் தன் தோள்களில் தாங்கி, நாள்தொறும் – நாள்தோறும், வளர்ப்ப – பேண, ஆளி நன் மான் அணங்குடைக் குருளை – ஆளி என்ற விலங்கின் துன்புறுத்தும் குட்டியினது வலிமை போன்ற வலிமையுடன், மீளி மொய்ம்பின் – தலைமைசான்ற வலிமையுடன், கூற்றுவனைப் போன்ற வலிமையுடன், மிகு வலி செருக்கி – மிகவும் வலுவுடன் செருக்குக் கொண்டு, முலைக் கோள் விடாஅ மாத்திரை ஞெரேர் என தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு – முலையில் பால் குடிப்பதைக் கைவிடாத இளம் பருவத்தில் விரைந்து களிற்று யானையைக் கொன்றாற்போல (ஞெரேர் – விரைவுக்குறிப்பு), இரும் பனம் போந்தைத் தோடும் – கரிய பனையாகிய போந்தையின் மாலையும் (பனம் போந்தை – இருபெயரொட்டு), கருஞ்சினை அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும் – கரிய கிளையையுடைய அரத்தின் வாய்போலும் வாயையுடைய வேம்பின் அழகிய தளிரால் செய்த கண்ணியையும், ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த இரு பெரு வேந்தரும் – தங்கள் ஓங்கிய பெரிய தலையில் சிறந்த அடையாளக் கண்ணியைச் சூடிய சேரனும் பாண்டியனும், ஒரு களத்து அவிய வெண்ணித் தாக்கிய – ஒரு களத்தில் ஒழியும்படி வெண்ணி என்ற ஊரில் போரிட்ட, வெருவரு நோன் தாள் – அச்சம் தோன்றுகின்ற வலியையுடைய முயற்சி, கண் ஆர் கண்ணிக் கரிகால் வளவன் – கண்ணுக்கு அழகு நிறைந்த ஆத்தி மாலையினையும் உடைய கரிகால் சோழன்

ஆற்றுப்படுத்தும் பொருநன்

தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகித்
தொழுது முன் நிற்குவிர் ஆயின், பழுது இன்று,  150
ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி, நும்
கையது கேளா அளவை, ஒய்யெனப்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னல் சிதாஅர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப்,   155
பெறல் அருங்கலத்தில் பெட்டாங்கு உண்க எனப்
பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர,
வைகல் வைகல் கைகவி பருகி,
எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை
சுரி இரும் பித்தை பொலியச் சூட்டி,   160
நூலின் வலவா நுணங்கு அரில் மாலை
வால் ஒளி முத்தமொடு பாடினி அணியக்
கோட்டின் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஊட்டு உளை துயல்வர, ஓரி நுடங்கப்
பால் புரை புரவி நால்கு உடன் பூட்டிக்   165
காலின் ஏழ் அடிப் பின் சென்று கோலின்
தாறு களைந்து, ஏறு என்று ஏற்றி, வீறு பெறு
பேர்யாழ் முறையுளிக் கழிப்பி, நீர்வாய்த்
தண் பணை தழீஇய தளரா இருக்கை
நன் பல் ஊர நாட்டொடு, நன் பல்   170
வெரூஉப் பறை நுவலும் பரூஉப் பெருந்தடக்கை,
வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவு இடைத் தங்கல் ஓவிலனே வரவிடைப்
பெற்றவை பிறர் பிறர்க்கு ஆர்த்தித் தெற்றெனச்
செலவு கடைக்கூட்டுதிர் ஆயின், பல புலந்து,   175
நில்லா உலகத்து நிலைமை தூக்கி
செல்க என விடுக்குவன் அல்லன்; (149 – 177)

பொருளுரை:   அவன் திருவடி நிழலில் அணுகி நின்று, அவனை வணங்கி, அவன் முன்னே நீவீர் நிற்பீர் ஆயின், நும்முடைய வறுமை இல்லையாகும்படி, கன்றை ஈன்ற ஆன் (பசு) அதனை நோக்கும் விருப்பத்தைப் போன்று நும்மை அவன் பேணிப் பார்த்து, நும்மிடத்தில் உள்ள இசையைக் கேட்கும் முன், விரைந்து, நும்முடைய பாசியின் வேர் போன்று அழுக்குடன் நல்ல நிலையிலிருந்து குறைந்த, கிழிசலில் இழையிட்டுத் தைத்த ஆடைகளைப் போக்கித் தூய்மையான கரையில் முடிச்சு உடைய பட்டு ஆடைகளைத் தந்து, பெறுவதற்கு அரிய பொற்கலத்தில் விரும்பியதை நீவிர் உண்ணுவீராக எனக் கூறி, பூ மணமுள்ள கள்ளை மேலும் மேலும் தர, நாள்தோறும் கையைக் கவிழ்த்து வேண்டாம் என மறுத்துக் கூறி உண்டு, நெருப்புத் தழைத்தாற்போல ஒருவர் செய்தது அன்றித் தனக்கென்று இதழ் இல்லாத தாமரையான பொற்றாமரையை இறுதிப்பகுதி சுருண்ட கரிய மயிரில் பொலிவுபெறச் சூட்டி, நூலால் கட்டப்படாத (பொற்கம்பியால் இணைத்த) நுண்மையினையும் நெருக்கத்தையுமுடைய பொன் மாலையை வெண்மையான ஒளியுடைய முத்துக்களுடன் பாடும் பெண் அணிவதற்குக் கொடுத்து, யானையின் தந்தத்தால் செய்த கொடுஞ்சி எனும் தாமரை வடிவில் உள்ள உறுப்புடன் நெடிய தேரையும், நிறம் ஊட்டின தலையாட்டம் பொங்கப் பிடரி மயிர் அசையப் பாலின் நிறத்தை ஒத்த குதிரைகள் நான்கினை அதில் கட்டி, தன் காலால் ஏழு அடி பின்னே வந்து, ஓட்டும் கோலில் உள்ள தாற்றுக் கோலை அகற்றி ‘ஏறுவாயாக’ என உம்மை ஏற்றி, சிறப்பான பேரியாழ் இசைக்கும் பாணர்களுக்குக் கொடுக்கும் முறைகளை உமக்குத் தந்து, நீர் நிறைந்த மருத நிலத்தையும் குளிர்ச்சியான அசையாத குடியிருப்பினையுமுடைய நல்ல பல ஊர்களுடைய நாடுகளுடன், நல்ல பல அச்சத்தை அறிவிக்கும் பறைகள் முழங்கும்படி பருத்த, பெரிய வளைவினையுடைய தும்பிக்கையையும் விரைந்து செல்லும் ஓட்டத்தையையும் உடைய சினம் மிகுந்த யானைகளையும், தருதல் தொழிலில் தளர்ச்சி இல்லாது இருப்பவன், இவ்வாறு உமக்குக் கிடைக்கும் பொருட்களைப் பிறர்க்கும் கொடுத்து விரைந்து அவனிடமிருந்து விலகி நீவீர் செல்ல முடிவு செய்தீரானால், மிகவும் வருந்தி, நிலையில்லாத இந்த உலகத்தின் இயல்பை ஆராய்ந்து பார்த்துச் “செல்வீராக நீயீர்” என உங்களை அவன் விடமாட்டான்

குறிப்பு:  பழுது (150) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பழுது – குற்றம், ஈண்டு ஆகுபெயராய் வறுமையைக் குறித்து நின்றது.  எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை (159) – நெருப்புத் தழைத்தாற் போன்ற ஒருவன் செய்ததன்றித் தனக்கென இதழ் இல்லாத தாமரை, ஏடு இல் தாமரை – பொற்றாமரைக்கு வெளிப்படை.  காலின் ஏழ் அடி பின் சென்று (166) – உயர்குடிப் பிறந்தோர் நண்பர் பெரியோர் முதலியோரை வரவேற்கும்போதும் வழிவிடும்போதும் நிரலே ஏழடி எதிர் சென்று வரவேற்றலும், ஏழடி பின் சென்று வழிவிடுதலும் ஆகிய மரபினைக் குறித்து நின்றது.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24). 

சொற்பொருள்:  தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகி – அவன் திருவடி நிழலில் அணுகி நின்று, தொழுது முன் நிற்குவிர் ஆயின் – வணங்கி முன்னே நிற்பீர் ஆயின், பழுது இன்று – நும்முடைய வறுமை இல்லையாகும்படி, ஈற்று ஆ விருப்பின் – கன்றை ஈன்ற ஆன் (பசு) அதனை நோக்கும் விருப்பத்தைப் போன்று (ஈற்று – தொழிற்பெயர், விருப்பின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), போற்றுபு நோக்கி – நும்மைப் பேணிப் பார்த்து, நும் கையது கேளா அளவை – நும்மிடத்தில் உள்ள இசையைக் கேட்கும் முன், ஒய்யென – விரைந்து (விரைவுக்குறிப்பு), பாசி வேரின் மாசொடு குறைந்த துன்னல் சிதாஅர் –  பாசியின் வேர் போன்று அழுக்குடன் நல்ல நிலையிலிருந்து குறைந்த தையல் உடைய ஆடைகளைப் போக்கி (சிதாஅர் – அளபெடை), நீக்கி, தூய – தூய்மையான, கொட்டைக் கரைய பட்டுடை நல்கி – கரையில் முடிச்சு உடைய பட்டு ஆடைகளைத் தந்து, பெறல் அருங்கலத்தில் பெட்டாங்கு – உண்க என பெறுவதற்கு அரிய பொற்கலத்தில் விரும்பியதை உண்ணுவீராக என்று, பூக்கமழ் தேறல் வாக்குபு தரத் தர – பூ மணமுள்ள கள்ளை மேலும் மேலும் தர, வைகல் வைகல் – நாள்தோறும், கை கவி பருகி – கையைக் கவிழ்த்து மறுத்துக் குடித்து, எரி அகந்தன்ன ஏடு இல் தாமரை – நெருப்புத் தழைத்தாற்போல ஒருவர் செய்தது அன்றி தனக்கென்று இதழ் இல்லாத தாமரை (பொற்றாமரை), சுரி இரும் பித்தை பொலியச் சூட்டி – இறுதிப்பகுதி சுருண்ட கரிய மயிரில் பொலிவுபெறச் சூட்டி, நூலின் வலவா நுணங்கு அரில் மாலை – நூலால் கட்டப்படாத நுண்மையினையும் நெருக்கத்தையுமுடைய பொன் மாலை, வால் ஒளி முத்தமொடு – வெண்மையான ஒளியுடைய முத்துக்களுடன், பாடினி அணிய – பாடும் பெண் அணிவதற்கு, கோட்டின் செய்த  கொடுஞ்சி நெடுந்தேர் – யானையின் தந்தத்தால் செய்த தாமரை போன்று உறுப்புடன் நெடிய தேரையும், ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்கப் பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி – நிறம் ஊட்டின தலையாட்டம் பொங்கப் பிடரி மயிர் அசையப் பாலினை ஒத்த குதிரைகள் நான்கினைச் சேர்த்துக் கட்டி (புரை – உவம உருபு, நால்கு – நான்கு என்னும் எண்ணுப்பெயர் திரிசொல்), காலின் ஏழ் அடி பின் சென்று – தன் காலால் ஏழு அடி பின்னே வந்து, கோலின் தாறு களைந்து ஏறு என்று ஏற்றி – ஓட்டும் கோலில் உள்ள தாற்றுக் கோலை அகற்றி ‘ஏறுவாயாக’ என ஏற்றி, வீறு பெறு பேர் யாழ் முறையுளி கழிப்பி – சிறப்பான பேரியாழ் இசைக்கும் பாணர்களுக்குக் கொடுக்கும் முறைகளை உனக்குத் தந்து, நீர்வாய்த் தண் பணை – நீர் நிறைந்த மருத நிலத்தையும் (நீர்வாய் = நீர் பொருந்திய), குளிர்ச்சியான மருத நிலம் தழீஇய தளரா இருக்கை நன் பல் ஊர நாட்டொடு – குளிர்ச்சியான அசையாத குடியிருப்பினையுமுடைய நல்ல பல ஊர்களுடைய நாடுகளுடன் (தழீஇய – அளபெடை), நன் பல் வெரூஉப்பறை நுவலும் – நல்ல பல அச்சத்தை அறிவிக்கும் பறைகள் முழங்கும்படி (வெரூஉ – அளபெடை), பரூஉப் பெருந் தடக்கை – பருத்த பெரிய வளைவினையுடைய தும்பிக்கை (பரூஉ – அளபெடை), வெருவரு செலவின் வெகுளி வேழம் – விரைந்து செல்லும் ஓட்டத்தையுடைய சினம் மிகுந்த யானைகளையும், தரவு இடைத் தங்கல் தொய்வு இன்றி ஓவிலனே – தருதல் தொழிலில் தளர்ச்சி இல்லாது இருப்பவன் (ஓவிலனே – ஏகாரம் அசைநிலை), வரவிடைப் பெற்றவை பிறர் பிறர்க்கு ஆர்த்தி – இவ்வாறு உமக்குக் கிடைக்கும் பொருட்களை பிறர்க்கும் கொடுத்து, தெற்றெனச் செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் – விரைந்து அவனிடமிருந்து விலகி நீவீர் செல்ல முடிவு செய்தீரானால், பல புலந்து – மிகவும் வருந்தி, நில்லா உலகத்து நிலைமை தூக்கி செல்க என விடுக்குவன் அல்லன் – நிலையில்லாத இந்த உலகத்தின் இயல்பை ஆராய்ந்து பார்த்துச் செல்வீராக நீயீர் என விடமாட்டான்

சோழ நாட்டு வளம்

………………………………………ஒல்லெனத்
திரை பிறழிய இரும் பௌவத்துக்
கரை சூழ்ந்த அகன் கிடக்கை,
மா மாவின் வயின் வயின் நெல்,   180
தாழ் தாழைத் தண் தண்டலைக்
கூடு கெழீஇய குடிவயினான்,
செஞ்சோற்ற பலி மாந்திய
கருங்காக்கை கவவு முனையின்,
மனை நொச்சி நிழல் ஆங்கண்,   185
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும்
இளையோர் வண்டல் அயரவும், முதியோர்
அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும்,
முடக்காஞ்சிச் செம்மருதின்,
மடக்கண்ண மயில் ஆல   190
பைம்பாகற் பழம் துணரிய
செஞ்சுளைய கனி மாந்தி,
அறைக் கரும்பின் அரி நெல்லின்
இனக் களமர் இசை பெருக,
வறள் அடும்பின் இவர் பகன்றைத்   195
தளிர்ப் புன்கின் தாழ் காவின்
நனை ஞாழலொடு மரம் குழீஇய
அவண் முனையின், அகன்று மாறி
அவிழ் தளவின் அகன் தோன்றி,
நகு முல்லை உகு தேறு வீ   200
பொன் கொன்றை மணிக் காயா
நற்புறவின் நடை முனையின்,
சுற வழங்கும் இரும் பௌவத்து
இறவு அருந்திய இன நாரை
பூம் புன்னைச் சினைச் சேப்பின்   205
ஓங்கு திரை ஒலி வெரீஇ, (177 – 206)

பொருளுரை:   ஒல் என்னும் ஒலி உண்டாக அலைகள் முரிந்த கரிய கடலின் கரையால் சூழ்ந்த அகன்ற நிலத்தில் ஒரு மா அளவு நிலத்தின் இடந்தொறும், தாழ்ந்த தென்னை உடைய குளிர்ந்த சோலையில் நெற்கூடுகள் பொருந்தின வளமான குடிகளிடத்தில், கொடுக்கப்பட்ட சிவந்த சோற்று உணவை உண்ட கரிய காக்கை அதை வெறுத்ததால், மனையில் உள்ள நொச்சி மரத்தின் நிழலில் உள்ள ஈன்ற ஆமையின் குட்டிகளைக் காக்கவும், இளைய மகளிர் மண் பாவை செய்து விளையாடவும், முதியவர்கள் நீதி கூறும் அவைக்குள் புகுந்து நல்ல நீதி கிடைத்ததால் தம் பகைமையை நீக்கவும், வளைந்த காஞ்சி மரத்திலும் செவ்விதான (நேரான) மருத மரத்திலும் மடப்பம் பொருந்திய கண்களையுடைய மயில்கள் தங்கிப் பசிய (பசுமையான) கொத்தாக உள்ள பாகற்பழத்தையும் பலாப்பழத்தையும் தின்று ஆரவாரிக்கவும், கரும்பை அறுக்கும் தொழிலையும் நெல்லை அறுக்கும் தொழிலையும் செய்யும் பல உழவர்களின் ஒலிபெருகுவதால், நீர் இல்லாத இடத்தில் வளரும் அடும்புக் கொடியினையும் படர்கின்ற பகன்றையினையும் தளிருடைய புன்க மரங்களையும் தாழ்ந்த மரங்களையுமுடைய சோலையையுமுடைய, அரும்புடைய ஞாழலுடன்  பிற மரங்களும் குழுமிய அவ்விடத்தை வெறுத்து அகன்று, மலர்கின்ற செம்முல்லையையும் காந்தள் மலரினையும்  முல்லையையும், உதிர்ந்த தேற்றா மலரினையும், பொன்னிறம் கொண்ட கொன்றை மலரினையும் நீலமணி போன்ற காயா மலரினையும் உடைய நல்ல முல்லை நிலத்தின் ஒழுக்கத்தை வெறுத்து, சுறாமீன் திரியும் கரிய கடலில் இறால் மீனைத் தின்ற நாரைக் கூட்டம் பூக்களையுடைய புன்னை மரங்களின் கிளைகளில் தங்கியதால், உயர்ந்து எழும் அலையின் ஓசைக்கு அஞ்சி,

குறிப்பு:  மனை நொச்சி: அகநானூறு 21 – மனை இள நொச்சி, அகநானூறு 23 – மனைய தாழ்வின் நொச்சி, அகநானூறு 367 – மனை வளர் நொச்சி, நற்றிணை 246 – மனை மா நொச்சி, பொருநராற்றுப்படை 185 – மனை நொச்சி.  மா மாவின் வயின் வயின் (180) – பொ. வே. சோமசுந்தரனார் உரை- ஒரு மாநிலத்தில் ஒரு மாநிலத்தில் திடர்தோறும் திடர்தோறும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – மா என்னும் அளவினையுடைய நிலத்தின் இடந்தோறும்.  பைம்பாகற் பழம் துணரிய செஞ்சுளைய கனி மாந்தி (191-192) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுளையைக் கனி என்றது பலாப்பழம் என்றவாறு.  மயில் பாகற் கனியை உண்ணுதலைப் பாகல் ஆர்கைப் பறைக் கண் பீலித்தோகை (அகநானூறு 15-4,5) என்றும், பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக் கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை  (அகநானூறு 177-9,10) என்றும் பிறர் கூறுமாற்றானும் அறிக.  இறா இறவு என வந்தது. ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – மா என்பது நூறு குழிகொண்ட நிலம் என்பர்.  இங்கு, மருத நிலத்துக் காக்கை நெய்தல் நிலத்து யாமைப் பார்ப்பைத் தின்னுமென்று கூறியது திணை மயக்கம்.  திணை மயக்கங் கூறுவதற்குக் காரணம் அந்நாட்டில் நால்வகை நிலங்களும் ஒன்றையொன்று அடுத்துள்ளன என்பது தோன்றுதற்கு ஆகும். கவவு முனையின் (184) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அகத்தீடு.  இங்கு உணவு என்னும் பொருட்டாய் நின்றது. நெல் (180) – 180ம் அடியில் உள்ள ‘நெல்’ என்னும் சொல்லை 182ம் அடியில் உள்ள கூட்டிற்கு முன் சேர்க்கவும்.

சொற்பொருள்:  ஒல் எனத் திரை பிறழிய இரும் பௌவத்துக் கரை சூழ்ந்த அகன் கிடக்கை – ஒல் என்னும் ஒலி உண்டாக அலைகள் முரிந்த கரிய/பெரிய கடலின் கரையால் சூழ்ந்த அகன்ற நிலம், மா மாவின் வயின் வயின் – ஒரு மா அளவு நிலத்தின் இடந்தொறும், தாழ் தாழை  தண் தண்டலை – தாழ்ந்த தென்னை உடைய குளிர்ந்த சோலை, நெல் கூடு கெழீஇய குடிவயினான் – நெற்கூடுகள் பொருந்தின வளமான குடிகளிடத்தில் (கெழீஇய – அளபெடை), செஞ்சோற்ற பலி மாந்திய கருங்காக்கை கவவு முனையின் – கொடுக்கப்பட்ட சிவந்த சோற்று உணவை உண்ட கரிய காக்கை அதை வெறுத்ததால், மனை நொச்சி நிழலாங்கண் ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் – மனையில் உள்ள நொச்சி மரத்தின் நிழலில் உள்ள ஈன்ற ஆமையின் குட்டிகளைக் காக்கும் (பொ. வே. சோமசுந்தரனார் உரை – தான் பசித்த காலத்தில் தின்பதாய்ப் பாதுகாத்து வைப்பவும்), இளையோர் வண்டல் அயரவும் – இளைய மகளிர் மண் பாவை செய்து விளையாடவும், முதியோர் அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும் – முதியவர்கள் நீதி கூறும் அவைக்குள் புகுந்து நல்ல நீதி கிடைத்ததால் தம் பகைமையை நீக்கவும், முடக்காஞ்சி செம் மருதின் மடக்கண்ண மயில் ஆல – வளைந்த காஞ்சி மரத்திலும் செவ்விதான (நேரான) மருத மரத்திலும் மடப்பம் பொருந்திய கண்களையுடைய மயில்கள் தங்கி ஆரவாரிக்க, பைம்பாகல் பழம் துணரிய செஞ்சுளைய கனி மாந்தி – பசிய கொத்தாக உள்ள பாகற்பழத்தையும் பலாப்பழத்தையும் தின்று, அறைக் கரும்பின் அரி நெல்லின் இனக் களமர் – கரும்பை அறுக்கும் தொழிலையும் நெல்லை அறுக்கும் தொழிலையும் செய்யும் பல உழவர்கள், இசை பெருக – ஒலி பெருக, வறள் அடும்பின் இவர் பகன்றைத் தளிர்ப் புன்கின் தாழ் காவின் – நீர் இல்லாத இடத்தில் வளரும் அடும்புக் கொடியினையும் படர்கின்ற பகன்றையினையும் தளிருடைய புன்க மரங்களையும் தாழ்ந்த மரங்களையுமுடைய சோலையையுமுடைய, நனை ஞாழலொடு – அரும்புடைய ஞாழலுடன், மரம் குழீஇய – மரங்கள் குழுமிய (குழீஇய – அளபெடை), அவண் முனையின் அகன்று மாறி – அங்கிருந்து வெறுத்து அகன்று, அவிழ் தளவின் அகன் தோன்றி நகு முல்லை – மலர்கின்ற செம்முல்லையையும் காந்தள் மலரினையும் முல்லையையும், உகு தேறு வீ – உதிர்ந்த தேற்றா மலரினையும், பொன் கொன்றை மணிக் காயா – பொன்னிறம் கொண்ட கொன்றை மலரினையும் நீலமணி போன்ற காயா மலரினையும், நற் புறவின் நடை முனையின் – நல்ல முல்லை நிலத்தின் ஒழுக்கத்தை வெறுத்து, சுற வழங்கும் – சுறாமீன் திரியும் (சுற – சுறா, கடைக்குறை), இரும் பௌவத்து – கரிய/பெரிய கடலில், இறவு அருந்திய இன நாரை – இறால் மீனைத் தின்ற நாரைக் கூட்டம், பூம் புன்னைச் சினைச் சேப்பின் – பூக்களையுடைய புன்னை மரங்களின் கிளைகளில் தங்கின், ஓங்கு திரை ஒலி வெரீஇ – உயர்ந்து எழும் அலையின் ஓசைக்கு அஞ்சி (வெரீஇ – அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது),

தீம் பெண்ணை மடல் சேப்பவும்,
கோள் தெங்கின், குலை வாழை,
கொழுங் காந்தள், மலர் நாகத்து,
துடிக் குடிஞை குடிப் பாக்கத்து   210
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப,
கலவம் விரித்த மட மஞ்ஞை
நிலவு எக்கர்ப் பல பெயரத், (207 – 213)

பொருளுரை:   இனிய பனையின் மடலில் தங்கவும், குலைகள் உடைய தென்னையினையும் குலைகள் உடைய வாழையினையும்,  திரண்ட காந்தளினையும் மலர்ந்த சுரபுன்னையினையும், துடி ஓசைபோலும் ஓசையினையுடைய பேராந்தையினையும் உடைய குடியிருப்புகள் உள்ள பாக்கத்தில், யாழின் ஓசை போலும் உள்ள வண்டினது பாட்டைக் கேட்டு அதற்கு ஏற்பத் தோகையை விரித்த மடப்பம்பொருந்திய மயில்கள், இடப்பட்ட நிலவுபோலும் உள்ள பல மணல் மேடுகளில் ஆடுதலைச் செய்யும்.

குறிப்பு:  நிலவு மணல்: அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர், மதுரைக்காஞ்சி 114 – நிலவுக் கானல்.

சொற்பொருள்:  தீம் பெண்ணை மடல் சேப்பவும் – இனிய பனையின் மடலில் தங்கவும், கோள் தெங்கின் குலை வாழை – குலைகள் உடைய தென்னையினையும் குலைகள் உடைய வாழையினையும், கொழுங் காந்தள் மலர் நாகத்து – திரண்ட காந்தளினையும் மலர்ந்த சுரபுன்னையினையும், துடிக் குடிஞைக் குடிப்பாக்கத்து – துடி ஓசைபோலும் ஓசையினையுடைய பேராந்தையினையும் உடைய குடியிருப்புகள் உள்ள பாக்கத்தில், யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப – யாழின் ஓசை போலும் வண்டினது பாட்டைக் கேட்டு அதற்கு ஏற்ப, கலவம் விரித்த மட மஞ்ஞை – தோகையை விரித்த மடப்பம்பொருந்திய மயில்கள், நிலவு எக்கர்ப் பல பெயர – இடப்பட்ட நிலவுபோலும் உள்ள பல மணல் மேடுகளில் ஆடுதலைச் செய்யும்

தேனெய்யொடு கிழங்கு மாறியோர்,
மீன் நெய்யொடு நறவு மறுகவும்,   215
தீங் கரும்போடு அவல் வகுத்தோர்,
மான் குறையொடு மது மறுகவும்,
குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்
நறும் பூங்கண்ணி குறவர் சூட,
கானவர் மருதம் பாட, அகவர்   220
நீல் நிற முல்லைப் பல் திணை நுவல, (214 – 221)

பொருளுரை:   தேனாகிய நெய்யுடன் கிழங்கு விற்றவர்கள் மீனினது எண்ணெய்யுடன் கள்ளையும் பண்ட மாற்றாகக் கொண்டுபோக, இனிய கரும்புடன் அவலைக் கூறுபடுத்தி விற்றவர்கள், மானின் தசையுடன் மதுவையும் பண்டமாற்றாகக் கொண்டு போகவும், குறிஞ்சிப் பண்ணை நெய்தல் நிலப் பரதவர் பாடவும், குறிஞ்சிக் குறவர்கள் நறுமணமான நெய்தல் மலர்க்கண்ணியைச் சூடவும், முல்லை நிலத்தில் உள்ளவர்கள் மருதப்பண்ணைப் பாடவும், மருத நிலத்து உழவர்கள் நீல நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பல முல்லை நிலங்களைக் கொண்டாடவும் 

குறிப்பு:  தேன் நெய்யொடு (214) – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  தேனெய், இருபெயரொட்டுப் பண்புத் தொகை, தேனாகிய நெய் என்க,  வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – நெய்யென்று தேனை வழங்கப்படுவதனை ‘தேனெய் தோய்ந்தன’ என்ற சீவக சிந்தாமணியாலும் தேனை வடிப்பதற்கு உதவும் பன்னாடையை நெய்யரி என்று வழங்குவதாலும் அறியலாம்.  கலித்தொகை 42 – வரை மிசை மேல் தொடுத்த நெய்க் கண் இறாஅல்.  பண்டமாற்று – அகநானூறு 60, 61, 126, 140, 245, 296, 390, நற்றிணை 183, குறுந்தொகை 221, 269, ஐங்குறுநூறு 47, பொருநராற்றுப்படை 214-215, 216-7, பட்டினப்பாலை 28-30, மலைபடுகடாம் 413-414.   நெய் – தேன்.  கலித்தொகை 42-22, வரை மிசை மேல் தொடுத்த நெய்க் கண் இறாஅல், மலைபடுகடாம் 524 – நீல் நிற ஓரி பாய்ந்தென நெடுவரை நேமியின் செல்லும் நெய்க்கண் இறாஅல், பொருநராற்றுப்படை 214 – தேனெய்யொடு.

சொற்பொருள்:  தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர் – தேனாகிய நெய்யுடன் கிழங்கு விற்றவர்கள், மீன் நெய்யொடு நறவு மறுகவும் – மீனினது எண்ணெய்யுடன் கள்ளையும் பண்ட மாற்றாகக் கொண்டுபோக (நறவு – நறா நற என்றாகி உகரம் ஏற்றது), தீங்கரும்போடு அவல் வகுத்தோர் – இனிய கரும்புடன் அவலைக் கூறுபடுத்தி விற்றோர்,  மான் குறையொடு மது மறுகவும் – மானின் தசையுடன் மதுவையும் பண்டமாற்றாகக் கொண்டு போகவும், குறிஞ்சி பரதவர் பாட – குறிஞ்சிப் பண்ணைப் பரதவர் பாடவும், நெய்தல் நறும் பூங்கண்ணி குறவர் சூட – குறிஞ்சிக் குறவர்கள் (மலையில் வாழ்பவர்கள்) நறுமணமான நெய்தல் மலர்க்கண்ணியைச் சூடவும், கானவர் மருதம் பாட –முல்லை நிலத்தில் உள்ளவர்கள் மருதப்பண்ணைப் பாடவும் , அகவர் நீல் நிற முல்லைப் பல் திணை நுவல – மருத நிலத்து உழவர்கள் நீல நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பல முல்லை நிலங்களைக் கொண்டாடவும்  (பொ வே. சோமசுந்தரனார் உரை –  முல்லை என்பதற்கு முல்லை நிலம் எனப் பொருள்கொண்டு முல்லை நிலம் காடு நிறைந்ததாகலின் நீனிறக்காடெனக் கொள்ளலுமாம்) (நீல் – கடைக்குறை)

கானக் கோழி கதிர் குத்த,
மனைக் கோழி தினைக் கவர,
வரை மந்தி கழி மூழ்க,
கழி நாரை வரை இறுப்ப,  225
தண் வைப்பின் நால் நாடு குழீஇ,
மண் மருங்கினான் மறு இன்றி,
ஒரு குடையான் ஒன்று கூற,
பெரிது ஆண்ட பெருங்கேண்மை
அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல்,   230
அன்னோன் வாழி, வென் வேல் குருசில்! (222 – 231)

பொருளுரை:   முல்லை நிலத்தின் காட்டுக் கோழிகள் மருத நிலத்தின் நெற்கதிர்களைத் தின்னவும் மருதநிலத்தின் மனையுறை கோழிகள் குறிஞ்சி நிலத்தின் தினையைத் தின்னவும், குறிஞ்சி நிலத்தின் குரங்குகள் உப்பங்கழியில் மூழ்கவும், உப்பங்கழியில் திரியும் நாரைகள் மலையில் வந்து தங்கவும், குளிர்ந்த நான்கு வகை நிலக் கூறுபாடுகளையுடைய நிலங்கள் உடைய நாடுகள் சேர்ந்து மண் உலகத்தில் குற்றம் இல்லாமல், ஒரு குடையால் தன் ஆணை ஒன்றையே உலகம் கூறும்படி, நெடுங்காலம் உலகை ஆண்ட பெரும் நட்பையும், அறத்துடன் பொருந்திச் செல்லும் வழியை உலகம் அறிவதற்குக் காரணமான செங்கோலையும் வெற்றி வேலையுமுடைய மன்னன் கரிகாலன் நீடு வாழ்வானாக

சொற்பொருள்:  கானக்கோழி கதிர் குத்த மனைக் கோழி தினைக் கவர – முல்லை நிலத்தின் காட்டுக் கோழிகள் மருத நிலத்தின் நெற்கதிர்களைத் தின்னவும் மருதநிலத்தின் மனையுறை கோழிகள் குறிஞ்சி நிலத்தின் தினையைத் தின்னவும், வரை மந்தி கழி மூழ்க – குறிஞ்சி நிலத்தின் குரங்குகள் உப்பங்கழியில் மூழ்கவும், கழி நாரை வரை இறுப்ப – உப்பங்கழியில் திரியும் நாரைகள் மலையில் வந்து தங்கவும், தண் வைப்பின் நால் நாடு குழீஇ – குளிர்ந்த நான்கு வகை நிலக் கூறுபாடுகளையுடைய நிலங்கள் உடைய நாடுகள் சேர்ந்து (குழீஇ – அளபெடை), மண் மருங்கினான் மறு இன்றி – மண் உலகத்தில் குற்றம் இல்லாமல், ஒரு குடையான் – ஒரு குடையால், ஒன்று கூற – ஒன்றையே உலகம் கூறும்படி, பெரிதாண்ட பெருங்கேண்மை – நெடுங்காலம் உலகை ஆண்ட பெரும் நட்பையும், அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல் – அறத்துடன் பொருந்திச் செல்லும் வழியை உலகம் அறிவதற்குக் காரணமான செங்கோல் உடைய, அன்னோன் வாழி –  கரிகாலன் நீடு வாழ்க, வென்வேல் குருசில் – வெற்றிவேலையுடைய மன்னன் 

காவிரி வளம்

மன்னர் நடுங்கத் தோன்றிப் பல் மாண்
எல்லை தருநன், பல் கதிர் பரப்பிக்,
குல்லை கரியவும், கோடு எரி நைப்பவும்,
அருவி மா மலை நிழத்தவும், மற்று அக்   235
கருவி வானம் கடற் கோள் மறப்பவும்,
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும்,
நறையும், நரந்தமும், அகிலும், ஆரமும்,
துறை துறை தோறும் பொறை உயிர்த்து ஒழுகி,
நுரைத் தலைக் குரைப் புனல் வரைப்பு அகம் புகுதொறும்,  240
புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடையக்,
கூனிக் குயத்தின் வாய் நெல் அரிந்து
சூடு கோடாகப் பிறக்கி நாள்தொறும்
குன்று எனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடம் கெடக் கிடக்கும்,  245
சாலி நெல்லின் சிறை கொள் வேலி,
ஆயிரம் விளையுட்டு ஆகக்
காவிரி புரக்கும் நாடு கிழவோனே. (232 – 248)

பொருளுரை:   பகையரசர்கள் நடுங்கும்படி விளங்கி, பல மாண்புகளையுடைய பகற்பொழுதைத் தருகின்ற கதிரவன் பல கதிர்களைப் பரப்புவதால் கஞ்சங்குல்லை தீயவும், மரங்களின் கிளைகளை நெருப்பு எரிக்கவும், அருவிகள் பாய்தலைப் பெரிய மலைகள் தவிர்க்கவும், கூட்டமாக உள்ள முகில்கள் கடலில் நீர் முகத்தலை மறக்கவும், பெரிது வறண்ட நல்ல பண்பு இல்லாத வேளையிலும், நறைக்கொடியும் நரந்தப்புல்லும் அகிலும் சந்தனமும், ஆகிய சுமையைத் துறைகளில் எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இளைப்பாறி நகர்ந்து, நுரையை மேலே கொண்ட ஆரவாரமுடைய நீர் குளங்களிலும் தோட்டங்களிலும் புகும் பொழுதெல்லாம் நீராடும் மகளிர் விரைந்து குடைந்து விளையாட, குனிந்து நின்று அரிவாள் வாயினால் நெல்லை அறுத்து சூட்டை (தாளினை) மலையாக அடுக்கி, நாள்தோறும் மலை என்னும்படி குவித்த நெற்குவியல் குறையாத அளவில் இருக்க, வெற்று இடம் இல்லை எனும்படி நெல் மூடைகள் நெருங்கிக் கிடக்க,செந்நெல் இருக்கும் வரம்புடைய ஒருவேலி நிலம் ஓராயிரம் கலம் என்னும் அளவிற்கு நெல் விளைவிக்கும் காவிரி ஆற்றினால் பாதுகாக்கப்படும் நாட்டின் உரிமைத்தலைவன் கரிகாலன் நீடு வாழ்க 

குறிப்பு:  புறநானூறு 23 – காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந.  புறநானூறு 285 – கடுந்தெற்று மூடையின்.  கருவி வானம் (236) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள்.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).

சொற்பொருள்:  மன்னர் நடுங்க தோன்றி – பகையரசர்கள் நடுங்கும்படி விளங்கி, பல் மாண் எல்லை தருநன் – பல மாண்புகளையுடைய பகற்பொழுதைத் தருகின்ற கதிரவன் (தருநன் – தருபவன், கதிரவன்), பல் கதிர் பரப்பி – பல கதிர்களைப் பரப்பி, குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும் – கஞ்சங்குல்லை தீயவும் மரங்களின் கிளைகளை நெருப்பு எரிக்கவும், அருவி மா மலை நிழத்தவும் – அருவிகள் பாய்தலைப் பெரிய மலைகள் தவிர்க்கவும், மற்ற  கருவி வானம் கடல் கோள் மறப்பவும் – கூட்டமாக உள்ள முகில்கள் கடலில் நீர் முகத்தலை மறக்கவும், பெரு வறன்ஆகிய பண்பு இல் காலையும் – பெரிது வறண்ட நல்ல பண்பு இல்லாத வேளையிலும், நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் – நறைக்கொடியும் நரந்தப்புல்லும் அகிலும் சந்தனமும், துறை துறைதோறும் – துறைகளில் எல்லாம், பொறை உயிர்த்து – சுமையை ஒதுக்கி வைத்துவிட்டு இளைப்பாறி (உயிர்த்து – இளைப்பாறி), ஒழுகி – ஓடி, நுரைத் தலைக் குரைப்புனல் – நுரையை மேலே கொண்ட ஆரவாரமுடைய நீர், வரைப்பு அகம் புகுதொறும் – குளங்களிலும் தோட்டங்களிலும் புகும் பொழுதெல்லாம், புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய – நீராடும் மகளிர் விரைந்துக் குடைந்து விளையாட (விரைவுக்குறிப்பு),   கூனிக் குயத்தின் வாய் நெல் அரிந்து – குனிந்து நின்று அரிவாள் வாயினால் நெல்லை அறுத்து, சூடு கோடாகப் பிறக்கி – சூட்டை (தாளினை)மலையாக அடுக்கி, நாள்தொறும் குன்று எனக் குவைஇய – நாள்தோறும் மலை என்னும்படி குவித்த நெற்குவியல் (குவைஇய – அளபெடை), குன்றா குப்பை – குறையாத குவியல், கடுந்தெற்று மூடையின் – நெருங்கக் கிடக்கும் மூடைகளின் (தெற்று – அடைப்பு), இடம் கெடக் கிடக்கும் – வெற்று இடம் இல்லை எனும்படி கிடக்கும், சாலி நெல்லின் சிறை கொள் வேலி – செந்நெல் இருக்கும் வரம்புடைய ஒருவேலி நிலம், ஆயிரம் விளையுட்டு ஆக – ஓராயிரம் கலம் என்னும் அளவிற்கு நெல் விளைவிக்கும், காவிரி புரக்கும் நாடு கிழவோனே – காவிரி ஆற்றினால் பாதுகாக்கப்படும் நாட்டின் தலைவன்  (கிழவோனே – ஏகாரம் அசைநிலை)