நான்காம் தந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நான்காம் தந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருமந்திரம் - நான்காம் தந்திரம் - திருமூலர்


பண் :

பாடல் எண் : 1

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தை
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோ சிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.

பொழிப்புரை :

நமக்கெல்லாம் தலைவனாகிய சிவனுக்குரிய ஓரெழுத்து மந்திரமாம் பிரணவத்தின் சிறப்பே, ஏனை எல்லா மந்திரங்களினும் உயர்வுடையதாதலை இத்தந்திரத்துள் யான் கூறுவேன். அதனானே, ஞானங்கள் பலவற்றினும் மேலானதாக உயர்ந்தோர் சொல்கின்ற சிவஞானத்தைப் புகழ்ந்து பாதுகாப்பவனும், யாவருடைய உள்ளத்திலும், `சிவனது திருவடியே பொருள்` எனத்தெளிவிப்பவனும், சிவயோகத்தையும் சுருங்கக் கூறுபவனும் ஆவேன். பிரணவத்தினை அறிய விரும்புபவர்களே! இதனைச் செவிக்கொண்மின்.

குறிப்புரை :

`நம் பிரான் ஓர் எழுத்தே ஏற்றுகின்றேன்; (அதனால்) புகல் ஞானத்தைப் புகழ்ந்தும் போற்றுகின்றேன்; சிந்தை நாயகன் சேவடி தேற்றுகின்றேன்; சிவயோகத்தைச் சாற்றுகின்றேன்; அறையோ` எனக்கூட்டுக. சிந்தை நாயகன் சேவடி தேற்றுகின்றேன்; சிவயோகத்தைச் சாற்றுகின்றேன்; அறையோ` எனக் கூட்டுக.
``புகழ்ந்தும்`` என்னும் உம்மை எதிரது தழுவிய எச்சம். ஏற்றுதல் - உயர்த்துதல்; என்றது உயர்வை உணர்த்துதலை.
`ஓர் எழுத்து` என்பது ஓகாரத்தைக் குறித்தல் மந்திர நூல் மரபு. `ஏகாட்சரம்` என்பர். யாதொரு மந்திர எழுத்தும் இறுதியில் மகர மெய்யைப் பெற்று நிற்றலும் மந்திர மரபு. அதனால், ஓகாரம் `ஓம்` என நின்று, `ஓங்காரம்` என வழங்கப்படும். மெய்யெழுத்து எண்ணப்படுவ தில்லையாகையால், `ஓம்` என நிற்பினும் ஓரெழுத்தேயாம். `மந்திரம்` என்பது ஓரெழுத்தாலாய மந்திரத்திற்கே சிறப்பாக உரிய பெயராதல் மந்திர நூல்களால் அறியப்படுவது. அவற்றின் இறுதியில் நிற்கும் மகர மெய் `விந்து` (பிந்து) எனப்படும்.
சொல்லுவோன், தனது கருத்தைப் பிறர்க்கு இனிது விளங்க வெளிப்படக் கிளந்து சொல்லுங்கால், புறத்து நிகழ்கின்ற இசையோசையையே ஒற்றுமை பற்றி எழுத்தோசையாக ஆசிரியர் கூறுவராயினும், `உண்மையில் எழுத்தோசை அவ் இசையோசையின் வேறே` என்பதனை ஆசிரியர் தொல்காப்பியனார், ``அகத்தெழு வளியிசை`` எனவும், `அதனை யான் இங்குக் கூறிற்றிலேன்` எனவும் கூறியுணர்த்தினார். மேற்குறித்த இசையோசையை, ``எழுந்து புறத்திசைக்கும் -மெய் தெரி வளியசை என்றார்.
`நாதம்` என்பது, எழுத்தோசைக்கே பெயராக மெய்யுணர்வு நூல்கள் (தத்துவ சாத்திரங்கள்) கூறும். இசையோசையை `ஓசை` எனவும், எழுத்தோசையை `ஒலி` எனவும் குறியிட்டு, ``ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே`` 2 எனத் திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்தார்.
இசையோசை கருவியாக அன்றி எழுத்தோசையை நேரே உணரும் ஆற்றல் உலகர்க்கு இல்லை.
`ஓ` என்பது இசையோசையைக் குறிக்கும் குறிப்பிடைச் சொல் என்பது, `ஓ` என அரற்றினான்` என்பது முதலிய வழக்குக் களால் நன்கு அறியப்படும். அதுபற்றி இசையோசைக்கு முதல் `ஓ` என்பது பட்டு நிற்றலின், இசையோசையானே அறியப்படுகின்ற எழுத்தோசைக்கும், `ஓகாரமே முதல்` எனப்பட்டது. படவே, சொல்லுலகம் முழுவதற்கும் ஓங்காரமே முதலாயிற்று. அதனால், எல்லா மந்திரங்கட்கும் முன்னும், பின்னும் ஓங்காரத்தைக் கூட்டிக் கூறுதல் இன்றியமையாததாயிற்று. இவ்வாற்றால், சொல்லுலகம் முழு வதற்கும் முதலாய் நிற்கும் ஓங்காரத்திற்கு, எல்லாவற்றிற்கும் முதல் வனாகிய சிவபெருமானே முதல்வனாதலும் இயல்பான் அமைந்தது. அதனால், நாயனார் ஓங்காரத்தை, ``நம்பிரான் ஓரெழுத்து`` என்றார். மொழிகளில் உள்ள எழுத்துக்கள் போலச் சொற்கு உறுப்பாய் நின்று பொருள்விளக்காமையால் இதனை `ஊமையெழுத்து` என்பர்.
சொல்லுலகத்திற்கு முதலாய் இதனை நிற்றல்பற்றி ஓங்காரம் `தாரக மந்திரம்` எனவும்படும். பற்றுக் காரணமாகத் தேவர் பிறரை முதற்கடவுளராக எண்ணும் சமயத்தவர் இத்தாரக மந்திரத்திற்கும் தாம்தாம் கொள்ளும் கடவுளரையே முதல்வராகக் கூறி மகிழ்வர். அவையெல்லாம் வெறும் முகமனேயாதல் அக்கடவுளரது இயல் புகளை உள்ளவாறு உணர்வார்க்குத் தெற்றெனவிளங்கும்.
எழுத்தோசையைப் பற்றுக்கோடாகக்கொண்டே மக்கட்கு எண்ணங்கள் பலவும் தோன்றும். புதிது புதிதாகத் தோன்றி வரும் எண்ணங்கட்குக் கடலில் புதிது புதிதாகத் தோன்றிவருகின்ற அலையை உவமையாகக் கூறும் சிவஞானபோதம்.
புதிது புதிதாய்த் தோன்றிவரும் எண்ணங்கட்கு மேற்கூறிய வாற்றால் முதலாதல்பற்றி ஓங்காரம், `பிரணவம்` எனப் பெயர் பெற்றது. நவம் - புதுமை.
சொல்லுலகம் அனைத்திற்கும் முதல் ஓங்காரம் எனப்படுதல் பற்றி, `அனைத்து மந்திரங்களும் ஓங்காரத்தின் சூக்கும பரிணாமமே` என்பர். எனினும், அதன் கருத்து மந்திரங்கள்,
நாதமாய் நிற்கும் சுத்த மாயையின் காரியம் என்பதே. அதனால், `ஓங்காரம்` `ஓரெழுத்து` என்னும் சொற்கள் `ஓம்` என ஒலிக்கும் இசையோசையைக் குறித்தலேயன்றி. சங்கேதத்தால் நாதத்தையும் குறிக்கும்.
அவ்வாறான மந்திரங்களுள் `அம், சம்` என்னும் இரண் டெழுத்தாகச் சொல்லப்படுகின்ற மந்திரம் `அம்ச (ஹம்ஸ) மந்திரம்` எனப்படும். அவ்இரண்டெழுத்தும் பிராணாயாமத்துள் இரேசக பூரகங்கட்கு உரியனவாம். இரேசக பூரகங்கள் யோக முறைப்படி அறிந்து செய்யப்படும்பொழுது அம்மந்திரச் சேர்க்கைகளோடு செய்யப்படுதல் சிறப்பு. அது பிற மந்திரங்கள் போலாது பிராணனின் இயக்கமாகவே கொள்ளப்படுதலால், `அசபை` (செபிக்கப்படாமல் தானாகவே இயல்வது) எனப் பெயர்பெற்றது. எனவே, பிராண இயக்கத்தை உடைய ஒவ்வோர் உயிரிடத்தும் இஃது உளதாகக் கொள்ளப்படும்.
திருப்பாற்கடலில் திருமால் கொள்கின்ற அறிதுயிலிலும் இம்மந்திரம் இயல்பாக விளங்கினமையால், `அவரது இதயத்தில் வீற்றிருந்த தியாகேசப்பெருமான் அங்கு அசபா நடனம் புரிந்தனர்` எனவும், அப்பெருமானே முசுகுந்தச் சக்கரவர்த்தியால் திருவாரூரில் கொணர்ந்து எழுந்தருள்விக்கப்பெற்றமையால் `திருவாரூர்த் தியாகேசரது நடனம் அசபா நடனம்` எனவும் கூறுவர்.
அம்ச மந்திரத்துள் `சம்` என்பதை விசர்க்கத்துடன் கூடியதாக ஆக்கி `ச:` என முன்னும், `அம்` என்பதை `அஹம்` என வேறுபடுத்திப் பின்னும் வைத்து உச்சரிக்க வருவதே `சோஹம்` என்பது. `அவன் நான்` என்பது இதன் பொருள். எண் வகை யோகமும் கைவந்த நிலையில் தியானத்தானமாகிய ஆஞ்ஞையில் யோகி இச் சோஹம் பாவனையைச் செய்வானாயின், `அவன்` எனக் கருதுதல் இறைவனையே யாகலின், சாத்திய மந்திரங்களால் மந்திரான்மாவாய் நிற்கின்ற அவ்யோகி பசுத்துவம் நீங்கிப் பதிநிலையை எய்திப் பரமா காச வடிவாக ஆவான். சிவயோகி, `சோஹம்` எனப் பொதுப்படப் பாவியாது, `சிவோஹம்` எனச் சிறப்பாகப் பாவிப்பான். அதனால், அவன் சிவமாய் நின்று சிவானந்தத்தை நுகர்வான். ஞானத்தை எய்தினோரும் நிட்டையில் நிற்கமாட்டாதபொழுது அம்மாட் டாமைக்குக் காரணமாகிய வாசனா மலம் நீங்குதற் பொருட்டுத் திருவைந்தெழுத்தை அதற்குரிய முறையில் சுத்தமானதமாகக் கணிக்கும் போது சிவோகம் பாவனையை உடையவராயே இருந்து கணிப்பர். தத்துவமசி முதலிய மகா வாக்கியங்களும் `சோஹம்` என்னும் பொருளையே வேறுவேறு வகையில் கூறுவனவாம். `அம்சம்` என்ப தேயன்றி, இச் `சோஹம்` என்பதும் அசபையாகச் சொல்லப் படும். `சோஹம்`` என்பதன் பொருள் திருவைந்தெழுத்தில் இன்னும் விரிவாக அமைந்துள்ளது. ஆகவே, பிரணவத்தின் காரியங் களுள் அம்சம், சோஹம், திருவைந் தெழுத்து ஆகிய மந்திரங்கள் முதன்மை யுடையன. ஆகவே, அவை யெல்லாம் குறிப்பால் உணரக் கூறுகின்ற இவ்வதிகாரத்தை நம்பிரான் ஓர் எழுத்தைக் கூறுவதாக நாயனார் அருளிச்செய்தார்.
இதனால், `இவ்வதிகாரம் நுதலிய பொருள் இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கம துற்றதே.

பொழிப்புரை :

`ஓம்` என்று ஓரெழுத்தாகச்சொல்லப்படுகின்ற சமட்டிப் பிரணவத்தின் பொருளாகிய `இலய சிவன்` என்னும் அருவ நிலையால் உலகெங்கும் வரம்பின்றி நிறைந்து நின்று பின், `அ, உ` என்று, மகாரம் இன்றி இரண்டெழுத்தாகச் சொல்லப்படுகின்ற சூக்கும வியட்டிப் பிரணவத்தில் முறையே அவ்வெழுத்துக்களின் பொரு ளாகிய சிவமும், சக்தியும் செம்பாதியான ஒளிவடிவாயுள்ள `போக சிவன்` என்னும் அருவுருவ மூர்த்தியாய் உலகத்தைத் தொழிற் படுத்த நினைந்து, பின், மேற்கூறிய இரண்டெழுத்துடன் மகாரத்தையும் கூட்டி `அ,உ,ம்` என மூன்றெழுத்தாகச் சொல்லப் படுகின்ற தூல வியட்டிப் பிரணவத்தில் முறையே அவ்வெழுத்துக் களின் பொருளாகிய `அயன், அரி, அரன்` என்னும் மூவராம் `அதிகார சிவன்` என்னும் உருவ மூர்த்தியாய்ப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களில் தலைப்பட்டு நிற்கின்ற சிவனை அவனது திருவைந்தெழுத்தில் மகாரத்தின் பொருளாகிய மலத்தின் மறைப்பினால் அறியமாட்டாது உலகம் திகைக்கின்றது.

குறிப்புரை :

எனவே, `பிரணவத்தினை அதன் முறைகளை யெல்லாம் உணர்ந்து ஓதின் அவனைப்படிமுறையால் உணர்ந்து உய்யலாம்` என்பது கருத்தாயிற்று. உணரப்படுபொருளாகிய சிவனது சிறப்பினை உணர்த்தும் முகத்தால் அவனை உணர வேண்டுவதன் இன்றியமையாமையை உணர்த்தவேண்டி இவ்வாறு சிவன்மேல் வைத்து ஓதினாரேனும், பிரணவத்தை ஓதும் முறைமைகளையும், அவற்றது பயனையும் உணர்த்தலே கருத்தென்க.
`இருவராய் இசைந்து` என மாற்றியுரைக்க. ``இசைந்து`` என்ற தனால், அஃது அவ்விருவரும் வேறு நில்லாது ஒன்றாய் இயைந்து நிற்கும் அருவுருவ நிலையைக் குறித்ததாயிற்று. முளைத்தல், உருவாய்த்தோன்றித் தொழில் இயற்றல், `சோதியை` என்பதன்பின், `அறியாது` என்னும் சொல்லெச்சமும், மயக்கம் உறுதற்கு, `உலகம்` என்னும் எழுவாயும் வருவித்துக் கொள்க. இதன்கண் ஈரடி எதுகைவந்தது. உயிரெதுகையுமாம். `மவ்வெழுத்து` என்பது இத்தொடை நோக்கி விகாரமாயிற்று.
இதனால், அசபை சிவபெருமானுக்கு அருள்வாயிலாய் நின்று அவனை உணர்வித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றும்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்
தேவர் உறைகின்ற திருவம் பலம்என்றும்
தேவர் உறைகின்ற தென்பொது ஆமே.

பொழிப்புரை :

சிவபெருமானார் தாம் இயல்பாக என்றும் எழுந் தருளியிருக்கின்ற சிதாகாசமாகவே திருவுளத்துக் கொண்டு வெளிநின் றருள்கின்ற தில்லையம்பலமும் மேற்கூறிய ஓரெழுத்தேயாகும்.

குறிப்புரை :

``தேவர்`` என்றது சிவபிரானையே. முதல் மூன்று அடிகளிலும் ```தேவர்`` என்பவற்றின்பின் `தாம்` என்பது வருவிக்க. ``சிற்றம்பலம்`` என்பதில் உள்ள சிறுமை, `நுண்மை` என்னும் பொருளதாய், ``சிதம்பரம்`` என்பதில் உள்ள `சித்து` என்னும் பொருளையே குறிக்கும். உபநிடதத்துள் `தகராகாசம்` எனப்படுவதில் உள்ள `தகரம்` என்பதற்கும் `சிறுமை` என்பதே பொருளாதல் அறிக. ``திருவம்பலம்`` என்பதிலுள்ள `திரு` என்பதும் அருளையே குறிப்பது. `சித்து, அருள்` என்னும் வெளிப்படைச் சொற்களாலும்., `சிறுமை, தகரம்` என்னும் குறிப்புச் சொற்களாலும் உணர்த்தப் படுவது சிவனது சக்தியே. அதனால் ``சிற்றம்பலம், சிதம்பரம், திருவம்பலம், தென்பொது`` என்னும் இந்நான்கும் சிவன் இயல்பாய் இருக்கின்ற பரவெளியாய் நிற்பது அவனது சத்தியே என்பது போந்தது. எனவே, சிவன் நிலவுலகத்தார்க்கு அருள் புரிதல் காரணமாகத் தில்லையம் பலத்தையே தனது பரவெளியாக ஏற்று எழுந்தருளியுள்ளான் என்பதை நாயனார் இம்மந்திரத்துள் முதற்கண் உடம்பொடு புணர்த் தலாற் கூறியருளினாராயிற்று. என்று - என்றுகொண்டு. ஊரின் திசை அதன்கண் உள்ள அம்பலத்திற்குப் புணர்த்துரைக்கப்பட்டது. `பொது வும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. அதனால் `அசபை மேற் கூறியவாறு, இலய சிவன் முதலியோர் வடிவாதலேயன்றி` என்னும் பொருள் தோன்றிற்று. ``ஆம்` என்பதற்கு `அசபை` என்னும் எழுவாய், அதிகராத்தால் வந்தியைந்தது.
இதனால், அசபை மேற்கூறியாவறு இலயசிவன் முதலியோர் வடிவாதலே யன்றி, இந்நிலவுலகில் அதிகார சிவன் வெளிநிற்கின்ற தில்லையம்பலமாயும் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆமேபொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத் தனவரத தாண்டவம்
ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம்
ஆமேசங் காரத் தருந்தாண் டவங்களே.

பொழிப்புரை :

பொன்னால் இயன்றுள்ளதாகிய மேற்கூறிய தென்போது, மேற்கூறியவாறு ஞானமாய் நிற்க. அதன் கண் நின்று சிவபிரான் நிகழ்த்துகின்ற திருக்கூத்து, அந்த ஞானத்தின் வழியே விளையும் ஆனந்தமாய் நிகழும். மேலும், அத்திருக்கூத்து இடை யறாது நிகழ்ந்து, ஊழிக்காலம் முழுவதும் உலகைத் தொழிற் படுத்துதலாகிய தூல ஐந்தொழிலை இயற்றுவதுமாம். அதுவேயன்றிச், சருவ சங்காரத்தின்பின், உலகத்தை மீளத் தோற்றுவித்தற்பொருட்டுச் செய்யப்படுகின்ற செயல்களாகிய சூக்கும ஐந்தொழில்களை இயற்றும் திருக்கூத்தும் அதுவேயாம்.

குறிப்புரை :

``பொன்னம்பலம் அற்புதம் ஆமே; திருக்கூத்து ஆனந்தம் ஆமே; அத்தாண்டவமே பிரளயம் ஆகும்`` எனக்கூட்டுக. அற்புதம் - ஞானம். ``பொன்னம்பலம் அற்புதம் ஆமே`` என்றது, திருக்கூத்து ஆனந்தமாதற்குரிய இயைபுணர்த்தற்குக்கூறிய அனு வாதம். அவ்வியைபால் திருக்கூத்து ஆனந்தமாதலை உணர்த்தியவர், அதுதானே தூல ஐந்தொழில் நடன மாதலின் இயைபு உணர்த்தற்கு, அனவரத தாண்டவமாதலை, முன்னர்க் கூறினார். மூன்றாம் அடியில் ``ஆமே`` என்பதன்பின் ``அதனால்`` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. ``பிரளயம்`` என்றது ``ஊழி`` என்னும் பொருளதாய், ஆகுபெயரால் அதன் கண் நிகழும் தூல ஐந்தொழிலை உணர்த்திற்று. ``ஆம்`` என்பதன்பின் எல்லா இடத்தும் தேற்றேகாரம்புணர்த் தோதினார், அங்ஙனம் ஆகிநின்றதன் அருமை புலப்படுத்தற்கு. ``சங்காரம்`` என்றது அதன் முடிவை. அருமை, காண்டல் கூடாமையை உணர்த்திற்று. ``சூக்குமம்`` என்றவாறு. இச்சூக்கும நடனத்தைக் காண்பவள் அம்மை ஒருத்தியே, அவ்விடத்துப் பிறர் ஒருவரும் இல்லாமையால் தாண்டவம் ஒன்றேயாயினும், அதன் பகுதிகள் பலவாதல் பற்றி, ``தாண்டவங்கள்`` எனப்பன்மையாகக் கூறினார். ஈற்றில் நின்ற ஏகாரம் பிரிநிலையாய், ``அத்தாண்டவம்`` என்றதனோடு இயைவதாய் நின்றது.
அசபை தென்பொதுவாதலின் சிறப்புணர்த்தற்கு அப்பொது வின் சிறப்பை மேலைத்திருமந்திரத்துள் வகுத்தோதிய நாயனார், அசபை அப்பொதுவில் நிகழும் திருக்கூத்துமாய் நிற்றலின் சிறப்பை வருகின்ற திருமந்திரத்தால் உணர்த்தற்கு, அத்திருக்கூத்தின் சிறப்பை இதனால் வகுத்தோதினார் என்க.

பண் :

பாடல் எண் : 5

தாண்டவ மான தனியெழுத் தோரெழுத்துத்
தாண்டவ மான தனுக்கிர கத்தொழில்
தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரம்
தாண்டவக் கூத்துத் தமனியந் தானே.

பொழிப்புரை :

மேற்குறித்த அனவரத தாண்டவ உருவாய் நிற்கின்ற ஒப்பற்ற திருவைந்தெழுத் தாவதும் ``ஓர் எழுத்து`` எனப்பட்ட அசபையேயாம். அத்தாண்டவம் உயிர்கட்கு அருள்புரியும் செயலே, அதனால், அஃது ஒப்பற்ற பரம் பொருளால் செய்யப்படுகின்றது. இப்பெருமையை உணர்த்தும் குறிப்பே அத்தாண்டவம் நிகழும் அம்பலம் பொன்மயமாய் நிற்றல்.

குறிப்புரை :

கூத்தப் பெருமானது வடிவம் ஐந்தெழுத்தாதல் நன்கறியப்பட்டதாகலின், அதனை அனுவாதமாகக்கூறி, அத்தகைய ஐந்தெழுத்தாய் நிற்பதும் அசபையே என்றார். அதனானே, அசபை கூத்தப்பெருமானது வடிவாதலும் தானே அமைந்தது. ```தனி யெழுத்தும்`` என்னும் உம்மை தொகுக்கப்பட்டது. இங்ஙனம் உணர்த்திய பின்னர் இயைபு பற்றியும், மேல் வகுத்துக் காட்டிய தாண்டவத்தின் சிறப்பும், அதுநிகழிடம் ஆகிய அம்பலத்தின் சிறப்பும் உணர்த்தினார் என்க.
கூத்தப் பெருமானது வடிவம் ஐந்தெழுத்தால் அமைந் திருத்தலை உண்மைவிளக்கம் முதலியவற்றான் அறிக. மேல் ``அன வரத தாண்டவம்`` என்றதனையே இதனுள்``தாண்டவம்`` எனச் சுருங்கக் கூறினாராதலின், ``தாண்டவக் கூத்து`` என்பது இருபெய ரொட்டாம். ``பொன்போற் பொதிந்து`.1 ``பொன்போற் புதல்வர்`` 2 ``பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரை`` 3 என்றாற் போல்வன வற்றால் பொன்னினது சிறப்பினை உணர்க. தற்பரத்தால் செய்யப் படுவதனை, ``தற்பரம்`` என்றார். `ஓரெழுத்` எனத் தகரவுகரமின்றி ஓதுதல் பாடம் அன்று.
இதனால், அசபை கூத்தப்பெருமானது வடிவாதற் சிறப்புடைய திருவைந்தெழுத்தாயும் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலந் தானே.

பொழிப்புரை :

கூத்தப்பெருமான் ஒருவனே தத்துவம் எல்லா வற்றையும் கடந்து நிற்கும் பேரொளிப் பொருளாயும், தத்துவம் எல்லா வற்றிலும் அவையேயாய்க் கலந்துநிற்பவனாயும், பிரணவ மாயும், மூவகை ஐந்தொழிற் கூத்திற்கும் முதல்வனாயும், அக்கூத்து இயற்றுங் கால் தன்னைத் தாங்கி நிற்கின்ற அம்பலமாயும் உள்ளான்.

குறிப்புரை :

``அதனால், பிரணவமாகிய அசபை மேற்கூறிய வாறெல்லாம் நிற்றல் அவனது திருவருட் சங்கற்பத்தாலல்லது தானாக அன்று`` என்பது குறிப்பெச்சம். ``அகார உகாரம்`` என்பது ``பிரணவம்`` என்னும் பொருளதாயும், ``பரஞ்சுடர்`` இரண்டில் பின்னது, ``முதல்வன்`` என்னும் பொருளதாயும் நின்றன. தராதலம் - தாங்குகின்ற இடம். தத்துவக் கூத்து - தத்துவங்களை ஆக்குகின்ற கூத்து.
``அசபை மேற்கூறியவாறெல்லாம் நிற்றல் தானாகவே போலும்`` என மலையாமைப்பொருட்டு ``எல்லா முதன்மையும் உடையவன் சிவன் ஒருவனேயாதலின், அசபையின் காரியமும் அவனன்றி ஆகாது`` என இதனால் ஓர் ஐயம் அறுத்தவாறு.

பண் :

பாடல் எண் : 7

தராதல மூலைக்குத் தற்பரம் மாபரன்
தராதல வெப்பு நமவா சியஆம்
தராதலம் சொல்லின் தான்வா சியஆம்
தராதல யோகம் தயாவாசி ஆமே.

பொழிப்புரை :

ஆதாரங்களில் ஏனையவற்றிற்கெல்லாம் அடி யாகிய மூலாதாரத்திற்கு உரிய தெய்வ மந்திரம், நகாரம் முதலாக முழுமையாய் மாறாது நிற்கும் திருவைந்தெழுத்தாம். அதற்கு மேல் உள்ள அக்கினி மண்டலத்தில் அம்மந்திரம் அருள் எழுத்து மாறி இடை நிற்க ஏனைய எழுத்துக்கள் முன் நின்றவாறே நிற்க இருக்கும். அதற்குமேல் உள்ள சூரியமண்டலத்தில் பாச எழுத்துக்கள் நீங்க, ஏனைய மூன்றும் முன்நின்றவாறே நிற்க இருக்கும். அதற்கு மேல் யோகத்தால் அடையப்படும் சந்திர மண்டலத்தில் பசு எழுத்து நீங்க, அருளேயான ஏனை இரண்டழுத்தும் அவ்வாறே நிற்க இருக்கும்.

குறிப்புரை :

``அதனை யறிந்து சிவயோகி தனது சிவயோகத்தைச் செய்க`` என்பது குறிப்பெச்சம்.
திருவைந்தெழுத்து,
மூலாதார மண்டலத்தில் - நமசிவாய - என்றும்,
அதற்குமேல் அக்கினி மண்டலத்தில் - நமவாசிய - என்றும்,
அதற்குமேல் சூரிய மண்டலத்தில் - வாசிய - என்றும்,
அதற்குமேல் சந்திர மண்டலத்தில் - வாசி - என்றும்
நிற்கும் என்பது இதன் தெளிபொருளாதல் காண்க. ``பிற யோகிகள் யோகத்தை அமந்திரமாகவும், பிரணவமாகவும் செய்வாராயினும், சிவயோகி இவ்வாறு திருவைந்தெழுத்து மந்திரத்தால் யோகம் செய்யக்கடவன்`` என்பது குறிப்பால் உணர்த்தியவாறு, இச் சிவயோக நெறியால் பாசமும், அதன்வாதனையால் நிற்கும் பசுத்துவமும் நீங்கச் சிவமாம் தன்மையைப் பெறுவன் என்க.
மூலாதாரத்தை, ``மூலை`` என மறைபொருளாகக் கூறுதல் சித்தமுறை. அது பற்றி,
``மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியர்என் றுந்தீபற;
தவத்தில் தலைவர்என் றுந்தீபற``
என்ற திருவுந்தியாரையும் (பா.12) நோக்குக. தற்பரம் - அதிதெய்வம். மாபரன் - பதியாய் (முழுமுதல் தலைவனாய்) நிற்கும் சிவன். ``தற்பரம், மாபரன்`` என்ற இரண்டும் ஆகுபெயராய் அவர்க்குரிய மந்திரத்தைக் குறித்தது, வாளா, ``தரா தலம்`` என்றாரேனும், `அதற்கு மேல் உள்ள தராதலம் என்றல் கருத்தாதல் அறிக. வெப்பு, இடை நின்ற இரு தராதலம், யோகம் இவையும் ஆகுபெயராய் அவ்விடத்து நிற்கும் மந்திரங்களைக் குறித்தன. யோகம் - கூடுதல். வெப்பு, இருமடியாகு பெயர்.
இதனால், `சிவயோகம் செய்வார் அறிதற்குரிய நான் மண்டல மந்திரங்கள் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா இடம்என்ப
ஆமே திருக்கூத் தடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்த மாமே.

பொழிப்புரை :

பிரணவ யோகிகட்கு அகார உகாரமாய் நிற்கின்ற பிரணவ கலைகள் சிவயோகிகட்கு முறையே திருவைந் தெழுத்தில் சிகார வகாரங்களாய் நிற்கும். (எனவே சிகார வகாரங்களின் பொருள்களாகிய அபர சிவனும், ஆதி சத்தியும் சொல்லால் உணரப் படுபவர் என்பதாம்.) சொல்லால் உணரப்படாத நிலையில் நிற்பவர் பரசிவனும், பராசத்தியுமே. அவர்களது நிலை ஐந்தொழிற்கூத்தொழிய ஞான மாத்திரமாய், மேல் நிற்பதாம். `சிவ கதி` எனவும், ``சிவானந்த மயம்` எனவும் சொல்லப்படுகின்ற பரநிலை அவர்களது நிலையேயாம்.

குறிப்புரை :

`பிரணவ யோகத்தோடு நில்லாது, சிவமந்திர யோகத்தில் செல்வோரே நாதத்தைக் கடந்து, பரநிலையை எய்துவர்` என்பதை உணர்த்துவார், அவர்க்கும் பிரணவம் பயனளிக்குமாற்றை முதற்கண் கூறினார். `அகார உகாரங்கள் சிவங்கள் ஆமே` எனக் கூட்டுக.
சிவங்கள் என்றது, `சிம், வம்` என்னும் எழுத்துக்கள் என்றவாறு. சிகார வகாரங்களைத் தனிப்பட எடுத்துக் கூறுமிடத்து இவ்வாறு விந்துவுடனாகக் கூறுதலும் உண்டு. `அறியா இடம் பரங்களே ஆம்` என்க. இடத்தில் உள்ளவர்களை ``இடம்`` எனவும், பரமாய் நிற்பவர்களை, ``பரம்`` எனவும் கூறினார். சிவனையும், சத்தியையும் வேறுவேறாக வைத்து எண்ணுதலின், ``பரங்கள்`` எனப் பன்மையாற் கூறினார். இரண்டாம் அடியின் இறுதியில், `அவையே` என்னும் எழுவாய் வருவிக்க. `இவை அறியா இடம்` எனவே முன்னர்க் கூறியன அறியும் இடமாதல் பெறப்பட்டது.
இதனால், அசபை சிவ யோகிகட்குச் சிவமந்திரமாய்ப் பயன்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஆனந்தம் மூன்றும் அறிவிரண் டொன்றாகும்
ஆனந்தம் சிவாய அறிவார் பலர்இல்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்களுக்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்தில் துன்பத்தைத் தரும் பாச எழுத்துக்களாகிய நகாரம் மகாரம் இரண்டும் நீங்க, எஞ்சிய மூன்றும் நின்றவழி உளதாவது இன்பமே. அம் மூன்றெழுத்துக்களில் சிகாரமும், வகாரமும் ஆகிய இரண்டெழுத்துக்கள் அறிவெழுத்துக்களாம். (சிகாரம் அறிவைச் செலுத்துவதும், வகாரம் செலுத்தியவாற்றிலே சென்று அறிவதும் ஆம்.) அவற்றுள்ளும் அறிவதாகிய வகாரம் தன்னைச் செலுத்துவதாகிய சிகாரத்திலே அடங்க, சிகாரமும் வகாரமும் ஆகிய இரண்டெழுத்தும் சிகாரமாகிய ஓர் எழுத்தேயாய் விடும். (அதுவே ஆனந்தாதீத நிலையாம்.) இவ்வாறு, `சிவாய` என்னும் மூன்றெழுத்து ஆன்மாக்களுக்கு ஆனந்தப்பேற்றினை வழங்குவனவாதலை அறிபவர் மிகச் சிலரே. அவற்றை அன்போடு அறிய வல்லவர்கட்கு ஆனந்தம், அம்பலத்தில் கண்கூடாகக் காணப்படும் அருள்நடனத்திலேயே எளிதில் உண்டாகும்.

குறிப்புரை :

``சிவாய`` எனப்பின்னர் வருதலின், முன்னர் வாளா, ``மூன்று`` என்றார். `இரண்டு அறிவு; அவை ஒன்றும் ஆகும்` என்க. `ஒன்றும்` என்னும் எதிர்மறை உம்மையும், `ஆனந்தக்கூத்தாயே` என்னும் பிரிநிலை ஏகாரமும் தொகுத்தல்பெற்றன. `இரண்டு, ஒன்று` என்பன அவ்வவ்வெழுத்துக்களைத் தொகைக் குறிப்பால் உணர்த்தின. ``சிவாய`` என்பதன்பின், என்பதை என்பது எஞ்சி நின்றது. `சிவாய` என்னும் மூன்றெழுத்தில் சிகாரம் பேறும், வகாரம் பெறுவிப்பதும், யகாரம் பெறுவானும் ஆக நிற்கும் நுட்பமும், அம் மூன்றும் உள்ளவழியே ஆனந்தானுபவம் நிகழ்தலும் நல்லாசிரியர் வழி மரபில் நின்று உணர்பவர்க்கல்லது உணர வாராமையின் ``அறிவார் பலர் இல்லை`` என்றார். மூன்றாவதாக வந்த `ஆனந்தம்` அன்பின்மேல் நின்றது, சிவயோகிகட்குத் திருவம்பலக் கூத்து ஆனந்த நடனமாதல் அனுபவமாய் விளங்கலின், ``ஆனந்தக் கூத்தாய் அகப்படும்`` என்றார்.
``உணர்வின் நேர்பெற வரும்சிவ போகத்தை
ஒழிவின்றி உருவின்கண்
அணையும்`` ஐம்பொறி யளவினும் எளிவர
அருளினை`` 1
என்ற அனுபவத்தினை இங்கு நினைவு கூர்க.
இதனால், அசபா யோகத்தின் முதிர்ந்த நிலையாகிய சிவ மந்திர யோகத்தினது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

படுவ திரண்டு பலகலை வல்லார்
படுகுவ தோங்கார பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே.

பொழிப்புரை :

யோக நூல்களிலும், ஞானநூல்களிலும் வல்ல வர்கள் பொருந்துவது ``அம், சம்`` என்னும் இரண்டெழுத்திலும், ஓங் காரத்திலும் திருவைந்தெழுத்திலும் சிவனது அருளல் நடனத்தின் அன்பிலும், அவையெல்லாம் பலவகைச் சக்கரங்களில் பரவி விளங்குகின்ற முறைமைகளிலுமாம்.

குறிப்புரை :

``படுவது`` என்பன தொழிற்பெயர்கள். அவை சொற் பொருட்பின்வருநிலையாய் வந்தன. முத்தொழிலாகக் கூறுமிடத்தில் அருளல் அழிப்பில் அடங்குகின்ற முறை பற்றி, ஐந்தொழிலில் இறுதிக்கண்ணதை, ``சங்காரம்`` என்றார். ``கோணம்`` என்றது பலவகையாக வரையப்படும் சக்கரங்களை, ``இரண்டு, பஞ்சாக்கரம், பத்தி, கோணம், வாறு`` - இவைகளில் ஏழாம் உருபு விரித்துக் கொள்க. ``ஆறு`` என்பது சில இடங்களில் முதற்கண் வகரமெய் பெற்றும் வருதல் உண்டு. சங்கச் செய்யுட்களில் மகரமெய் பெற்று, ``மாறு`` என வருதல் அறியத்தக்கது. ஆறு - வழி; முறை. ``ஓங்கார பஞ்சாக் கரங்கள்`` என அஃறிணை உம்மைத்தொகை பன்மையீற்றொடு வந்தது.
இதனால், மேற்கூறிய மந்திரங்கள், தாண்டவம் இவை யோகத்திற்கும், ஞானத்திற்கும் வாயிலாதல் கூறப்பட்டது. புற வழிபாட்டிற்கும் உரியதாகப் பின்னர்க் கூறப்படும் சக்கரங்களும் இங்கு எதிரதுபோற்றிக் குறிப்பிடப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்துறை பின்னையும்
வாறே திருக்கூத்தா கமவ சனங்கள்
வாறே பொதுவாகும் மன்றின் அமலமே.

பொழிப்புரை :

மேற்கூறிய மூன்று மந்திரங்களும் சதா சிவ மூர்த்தியால் அருளிச்செய்யப்பட்ட ஆகமங்களின் ஞானப் பகுதி களும், அவற்றால் அடையப்படும் சிவகதியாகிய வளப்பமான கடல் துறையும், அத்துறையில் மூழ்கினோர்க்கு ஐம்பொறி வழியிலும் அவ் வானந்தத்தைத் தருகின்ற திருநடனமும், மற்றும், ஆகமங்களின் கிரியைப் பகுதிகளும், ஞானிகட்கேயன்றிப் பிறர் அனைவர்க்கும் பொதுவாகச் செய்யப்படுகின்ற அம்பலக்கூத்தும் ஆகிய அனைத்து மாய் நிற்கும்.

குறிப்புரை :

``இவ்வாறே`` எனச் சுட்டியுரைத்தல் கருத்தாகலின், ``வாறு`` என்பன மேற்கூறிய மந்திரங்களைச் சுட்டி நின்றன. ``சதாசிவம்`` என்பது, செய்யுட் கிழமைக்கண் வந்த ஆறாவதன் தொகையில் ஈறு கெட்டுப் புணர்ந்தது. ஞானப் பகுதிகள் தம்முள் முரணுதல் இன்மையின், ``மாறிலா ஆகமம்`` என்றது அவற்றை யாயிற்று, ``பின்னையும்`` என்பது ``மற்றும்`` எனப் பொருள் தந்து, ஞானத்தின் வேறாகிய கிரியை முதலியவற்றைக்கூறும் குறிப்புணர்த்தி நின்றது. ``புன்னையும்`` என்பது பாடம் அன்று. இதனை, `திருக்கூத்து` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``அமலம்`` என்பது ஆகுபெயரால் அதனையுடைய கூத்தினைக் குறித்தது.
இதனால், மேலானவற்றின் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
அமலம் திரோதாயி ஆகும்ஆ னந்தமாம்
அமலஞ்சொல் ஆணவ மாம்மாயை காமியம்
அமலம் திருக்கூத்தங் காமிடந் தானே.

பொழிப்புரை :

``அமலம்`` எனப்பட்ட நடனமே முப் பொருள்களாயும், ஆகமங்களாயும், திரோதான சத்தி அருட் சத்திகளாயும், முப்பாசங்களாயும் நிற்கும். அந்நடனம் நிகழ்கின்ற அம்பலம் அருளே.

குறிப்புரை :

இப்பொருள்களின் இயக்கங்களாய் நிற்றல் பற்றித் திருக்கூத்தினை இப்பொருள்களாகவே கூறினார். `இயக்கம்` என்பதைப் பதியொழிந்தவற்றில் காரியம் காரணமாக உபசரிக்கப் பட்டது என்க. பதி - ஐந்தொழில் செய்பவன். `இத்தகைய கூத்து நிகழ் தற்கு இடமும் தக்கதாயுள்ளது` என்றற்கு அதனது சிறப்பினை இறுதிக் கட்கூறினார். ``ஆமிடந் தானும்`` எனற்பாலதாய எச்சவும்மை தொகுத் தலாயிற்று.
``ஆம்`` இரண்டில் முன்னது முற்று; அதனை, ``காமியம்`` என்பதன்பின்னர்க் கூட்டுக. பின்னதும், ``ஆகும்`` என்பதும் எச்சங்கள். ``ஆகும்`` என்பதில் ஆதல், எல்லையின்றிப்பெருகுதல். மூன்றாம் அடியை ``ஆம்`` என்பதை ஒழித்து ஓதின் தளை சிதைதல் அறிக.
இதனால், மேல் ``திருக்கூத்து`` எனவும், ``அமலம்`` எனவும் முறையே குறிக்கப்பட்ட ஞான நடன ஊன நடனங்களுள் ஊன நடனமும் சிறுமையுடைத்தாகாது பெருமையுடைத்தாதல் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 13

தானே தனக்குத் தலைவியு மாய்நிற்கும்
தானே தனக்குத் தனமலை யாய்நிற்கும்
தானே தனக்குத் தனமய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனு மாமே.

பொழிப்புரை :

``திருக்கூத்து ஆமிடம்`` என மேற்குறிக்கப் பட்ட அருளாகிய சத்தி தனக்கு ஒரு தலைவியை வேண்டாது தானே தனக்குத் தலைவியாய் நிற்பாள்; மேலும், தானே தனக்கு இன்றியமையாத பொருள்களாயும், தன்னுள்ளே சூக்குமமாயும் நிற்பாள். இனி, தனக்குத் தலைவனாகிய சிவனும் அவளே.

குறிப்புரை :

முதல் அடியில் ``தலைவனுமாய்`` என ஓதுதல் பாடம் ஆகாமை அறிந்துகொள்க. தன மலை - செல்வமாகிய மலை; இதனை `விபூதி` என்பர், பின்வந்த ``தனம்``, `தன்னம்` என்பதன் இடைக் குறை.
இதனால், மேல். `அருள்` எனப்பட்ட சத்தியது சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.

பொழிப்புரை :

யாதொரு தொழிலுமின்றிச் சிவனாய் நிற்றலே யன்றி ஐந்தொழில் செய்யும் பதியாயும் நிற்கின்ற முதல்வனது தன்மையையும், அம்முதல்வனது தொழில்களில் பிறவற்றின் பயனையன்றி, இறுதித் தொழிலாகிய அருளலின் பயனையும் ஏற்கும் நல்ல கொள்கலமாகிய பக்குவம் வாய்ந்த உயிரினது தன்மையையும் மகரந்தங்களாக உதிர்த்து மலர்கின்ற திருவாய்மலரையுடைய சிறந்த ஞானாசிரியனாயும் நிற்பன சிவனது இரண்டு திருவடிகளே.

குறிப்புரை :

தற் பரம் - தனக்கு (ஆன்மாவிற்கு) மேலானவன். ஆசிரியன் தன்னைச் சிவமாகப் பாவிக்கும் பாவனையில் நின்றே உபதேசித்தல் பற்றி இங்கு, ``தன்`` என்று ஆசிரியனையே சுட்டி, `அவனுக்கு மேலானவன்` என்றார். அபக்குவிகட்கு மேலாய் நிற்றல் பற்றிப் பக்குவியை, ``தலைவன்`` என்றார். ``தாதவிழ்`` என்றதை அவ்வடியின் முதற்கண்வைத்து உரைக்க. அது, ``ஞானத்தலைவன்`` என்னும் முதற்பெயரோடே முடியும். மூன்றாவதாக வந்த ``தலைவன்`` என்பது, ``ஞானாசிரியருள் மேம்பட்டவன்`` எனப் பொருள் தந்தது. இறுதியில் உள்ள `நின்ற` என்பது முற்று. ``தானே`` என்பது பன்மை யொருமை மயக்கம்.
இதனால், தடத்த நிலையில் உள்ள சிவனுக்குத் திருவடிகளாய் உள்ளது அவனது `அருள்` எனப்படும் சத்தியே என்பது குறிக்கப் பட்டது. இதனது பயன், வருகின்ற மந்திரம் முதலியவற்றுள், ``இணையார் திருவடி`` என்பனபோலக் கூறும் வழக்கினது உண்மையை உணர்தல்.

பண் :

பாடல் எண் : 15

இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே.

பொழிப்புரை :

சிவனது, இணைதல் பொருந்திய திருவடிகளே வித்தெழுத்துக்கள் மூன்றோடு கூடி எட்டெழுத்தாய் நிற்கும் பஞ்சாக்கரமும், பத்துக் கூறுகளாகப் பகுக்கப்பட்டு நிற்கும் பிரணவமும், மூல எழுத்துக்களாகிய (மாதுருகாட்சரங்களாகிய) அகாரம் முதல் க்ஷகாரம் ஈறாக உள்ள ஐம்பத்தோரெழுத்துக்களும், ஏழு கோடிகளையுடைய பல மந்திரங்களுமாய் நிற்கும்.

குறிப்புரை :

இணை, முதனிலைத் தொழிற்பெயர். `இணையாகப் பொருந்திய` என்றும் ஆம், `இறைவனது ஞான சத்திகிரியா சத்திகளே அவனது இரண்டு திருவடிகள்` என்பது உணர்த்துதற்கு, ``இணையார் திருவடி`` என்றார். ``இணையார் கழல்`` மூன்றும் அடையடுத்த ஆகுபெயர்களாய் நின்றன. எனவே, இணைதல், கழல் என்னும் அணியைச் சிறப்பித்து நின்றனவாம். அங்கு இணைதல், அறியப் படுதல். ``ஏழு`` என்பதும் ஆகுபெயராய் அத்துணைக் கோடியை உணர்த்திற்று. ஆயிரம், பன்மை குறித்தது.
இதனால், எல்லாவற்றிலும் நீக்கம் அற நிறைந்து நிற்கின்ற சிவ சக்திக்குச் சிறப்பிடம் மந்திரங்கள் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி
ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
ஏழாய் இரண்டாய் இருக்கின்ற வாறே.

பொழிப்புரை :

மந்திரங்கள் அளவற்றனவாய் நின்று அளவற்ற உயிர்களில் நிற்பினும் அவை அனைத்தும் ஐம்பதெழுத்திற்குள்ளும், `ஏழு கோடி` என்னும் வகைக்குள்ளும், `ஏழு, இரண்டு` என்னும் வடிவத்துள்ளும், அடங்கி நிற்கும் முறைமை அறியத் தக்கது.

குறிப்புரை :

``எண்ணிலா மந்திரம் ஏழாயிரத்துயிர் ஏழாயிரமாய்`` எனக் கூட்டுக. `எழுவகைப் பிறப்பிலும் பலவாய் உள்ள உயிர்`` என்றற்கு ``ஏழாயிரத்துயிர்`` என்றார். ஏழாயிரத்துயிர்க்கும்` என்னும் நான்கனுருபும், முற்றும்மையும் தொகுத்தல் பெற்றன. ``இருபதாய் முப்பதாய்`` என்றது, `ஐம்பதாய்` என்றவாறு. மாதுருகாட்சரங்களை ஈற்றிலுள்ள க்ஷகாரத்தைக் கூட்டி `ஐம்பத்தொன்று` என்றல், கூட்டாது விடுத்து `ஐம்பது` என்றல் ஆகிய இருமரபுகளும் உள்ளன என்க. உயிர்களைக் குறிப்பதாய் இரண்டாம் அடியில் வந்த ``ஏழாயிரத்தும்`` என்பது சொற்பொருட் பின்வருநிலை. `எல்லாப் பொருள்கட்கும் மந்திரம் உண்டு` என்பதைச் சிவஞான போத ஒன்பதாம் சூத்திரத்தின் இரண்டாவது அதிகரண பாடியத்திற் காண்க.
கோடி - இறுதி. மந்திரங்கள் அனைத்தும் எழுவகை இறுதி உடையனவாம். அவை:- `நம:, ஸ்வதா, ஸ்வாஹா, வஷட், வௌஷட், பட், ஹும்` என்பன. (ஹும், பட்` - இரண்டும் ஓரிடத்தே இணைந்தும் வரும். அவ்விடத்து, `ஹும் பண்` என நிற்றலும் உண்டு.) `ஏழு, இரண்டு` எனப்பட்டவை பஞ்சாக்கர பேதங்கள். மேல் ``எட்டெழுத்து`` என்றதில் வித்தெழுத்து மூன்றனுள் இறுதி நின்றதை நீக்கி, இங்கு ``ஏழு`` என்றார். அவ்வாறு நிற்றலும் உண்மை பற்றி. இரண்டு, சிகார வகாரங்கள். `அறியத்தக்கது` என்பது சொல்லெச்சம்.
இதனால், மந்திரங்கள் விரிந்தும், ஒடுங்கியும் நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணந் தானே.

பொழிப்புரை :

உண்மையில் உள்ள மந்திரங்கள் அளவற்றன. எந்தப் பொருட்கு மந்திரம் இல்லை! அனைத்து மந்திரங்களும் சிவனது திருமேனியே. அவற்றின் உண்மை இதுவே.

குறிப்புரை :

முன்னிரண்டடிகள், ``கற்றது கைமண்ணளவு; கல் லாதது உலகளவு`` 1 என்பதுபோல, அறியப்படாது பல மந்திரங்கள் உள என்பது உணர்த்தின. சிவனுக்குத் திருமேனியாவது அவனது சத்தியேயாகலின், மூன்றாம் அடி மந்திரங்கள் சத்தியின் வடிவமாதல் குறித்ததாம். அதனானே, மந்திரங்கள் அவனது உறுப்புக்களில் நியசிக்கப்படுவதற்குக் காரணமும் கூறியதாயிற்று. `மந்திரங்கள் சிவ சத்தியே` என்பதனை ஈற்றடி உணர்த்திற்று. மூன்றாம் அடியில், `மந்திரம்` என்னும் வட சொல்லின் இகரம் அலகு பெறாது நின்றது.
இதனால், மேல் `சத்தி மந்திரமாய் நிற்கும்` எனச் சத்திமேல் வைத்துக் கூறியது, `மந்திரங்கள் சத்தியாம்` என மந்திரங்களின்மேல் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

தானே தனக்குத் தகுநட்டந் தானாகும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானேரீங் காரம்அத் தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடந் தானே.

பொழிப்புரை :

சிவன், தானே தான் ஆடத்தக்க கூத்து வகைகளை வகுத்துக்கொள்வான்; பின்பு அக்கூத்துக்களை மந்திரங்களையே வடிவாகக்கொண்டு ஆடுவான். அக்கூத்து வகைகளுள் சத்தியின் கூத்திலும் தான் நிறைந்து நிற்பான். சில கூத்துக்களைத் தன்னுடையன வாகவே ஆடி நிற்பான்.

குறிப்புரை :

`அவனது நிலையை அறிபவர் யார்` என்பது குறிப் பெச்சம். ``அகார, உகாரம்`` என்றது அவற்றை அடியாகக் கொண்டு எழும் மந்திரங்களை உணர்த்திற்று. `ஹ்ரீம்` என்பது சத்தி பீஜம் ஆதலின் அத்தத்துவக் கூத்து சத்தியினுடையதாயிற்று. ``ரீங்காரம்`` என்றது, `அக்கூத்திற்கு மூலம்` என்றவாறு. ``தனி நடம்`` என்றது, தன்னுடை யவற்றை. மூன்றாம் அடியை அகரச்சுட்டின்றி ஓதுதல் பாடம் அன்று.
இதனால், மேல், ``சிவன் திருமேனி`` எனக் கூறப்பட்டதில் இடம்பெற்றுநின்ற சிவனது பெருமை கூறப்பட்டது. சத்தியின் பெருமை மேலெல்லாம் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

நடம்இரண் டொன்றே நளினமதாய் நிற்கும்
நடம்இரண் டொன்றே நமன்செய்யுங் கூத்து
நடம்இரண் டொன்றே நகைசெயா மந்திரம்
நடம்சிவ லிங்கம் நலம்செம்பு பொன்னே.

பொழிப்புரை :

``தனிநடம்`` என மேற்குறிக்கப்பட்ட சிவ நடனம் இரு வகைத்து. ஒன்று இன்பத்தையே தரும்; மற்றொன்று துன்பத்தையே தரும். துன்பத்தைத்தருவது மறைத்தலைச் செய்கின்ற எழுத்துக்களை முதலாகக் கொண்ட மந்திரத்தையே வடிவமாகக் கொள்ளும்; இன்பத்தைத் தருவது விளக்கத்தைச் செய்கின்ற எழுத்துக்களை முதலாகக் கொண்ட மந்திரத்தையே வடிவமாகக் கொள்ளும். பின்னதனால் விளைகின்ற நலம் செம்பு பொன்னானது போல அதியற்புதம் உடையதாகும்.

குறிப்புரை :

பிரிநிலை ஏகாரங்கள் பிரித்துக் கூட்டப்பட்டன. நளினம்- இன்பம். நமனது செயலாகிய கொல்லுதலை ``நமன்`` என்றது ஆகுபெயர். அதனின் மிக்க துன்பச்செயல் இன்மையின் அதனைக் கூறினார். இன்பம் வீடும், துன்பம் பந்தமும் ஆதல் வெளிப்படை. இக் கூத்து இரண்டும் முறையே, `ஞான நடனம், ஊன நடனம்` எனப்படும். மறைத்தலைச் செய்யும் எழுத்துக்கள்நகார மகாரங்கள். அவை திரோதான சத்தியும், மலமுமாய் நிற்பனவாம். விளக்கத்தைச் செய்யும் எழுத்துக்கள் சிகார வகாரங்களாம். அவை முறையே சிவமும், அருட்சத்தியுமாய் நிற்பன. இவற்றான் அமையும் இரு வேறு வடிவங்களை ``ஆடும் படி கேள்``, ``சேர்க்கும் துடி சிகரம்`` என்னும் உண்மைவிளக்க வெண்பாக்களால் அறிக. `நகை செய்யும் மந்திரம்` என ஓதுதல் பாடம் அன்று.
செய்யுட்கு ஏற்ப ``மந்திரம், லிங்கம்`` என்றவற்றை வேறு வேறிடத்து வைத்து ஓதினாராயினும், இரண்டையும் ஈரிடத்தும் ஒருங்கோதுதல் கருத்தென்க. உருவத் திருமேனியும் `வியத்தலிங்கம்` எனப்படுதல் அறிந்துகொள்க. `ஒன்று நகை செயா மந்திரம்` எனவே, `மற்றொன்று நகை செயும் மந்திரம்` என்பது தானே விளங்கிற்று. ``இரண்டு`` என வந்தவை மூன்றில் முதலது பயனிலையாயும், ஏனையவை ஏழன் உருபேற்ற பெயராயும் நின்றன. உருபேற்றுத் தொடர்ந்த பெயர்களை நான்காம் அடியிலும் கூட்டிப் பொருள் கொள்க. `செம்பு, பொன்` என்னும் உவமைகள் முறையே உயிர்க்கும், சிவத்திற்கும் ஆயின.
இதனால், ``வாறே சதாசிவம்`` என்ற மந்திரத்துள் குறிக்கப் பட்ட இருவகை நடனத்தின் இயல்புகளும் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 20

செம்புபொன் னாகும் சிவாய நமஎன்னில்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரம்
செம்புபொன் னாகும் சிறீயும் கிரீயும்எனச்
செம்புபொன் னான திருவம் பலமே.

பொழிப்புரை :

மேற்கூறிய, செம்பு பொன்னாவது போன்ற அதிசயப்பயன் மேற்கூறிய ஞானநடனத்தின் வடிவாய் அமைந்த `சிவாயநம` என்பதை ஓதினால் கிடைக்கும். அப்பயன் உயிர்கட்குக் கிடைத்தற்பொருட்டே சிவன் அம்மந்திர வடிவைக் கொண்டான். இனி, `ஷ்ரீம், ஹ்ரீம்` என்பன அவ்வடிவம் நிற்கும் செம்பொன் மய மான திருவம்பலமாகிய சத்தியின் எழுத்துக்களாதலின், அவற்றை ஓதினாலும் மேலை மந்திரத்திற் சொல்லிய பயன் விளைவதாம்.

குறிப்புரை :

இறுதியில் உள்ள ``செம்பு`` `செம்மை` என்றவாறு, `ஷ்ரீயும், கிரீயும் எனச் செம்பு பொன்னாகும், அது திருவம்பலம் ஆதலால்` என்க. `எனவும்` என்னும் எச்சவும்மை தொகுத்தல். `ஆதலால்` என்பது சொல்லெச்சம்.
இதனால், மேற்கூறிய ஞானநடனத்தின் பயனை எய்துமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

திருவம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்
திருவம் பலமாக ஈராறு கீறித்
திருவம் பலமா இருபத்தஞ் சாக்கித்
திருவம் பலமாச் செபிக்கின்ற வாறே.

பொழிப்புரை :

சக்கர வழிபாட்டில் திருவம்பலம் அமைதற்கு அச்சிறப்பினதாகிய சக்கரத்தை நெடுக்கில் ஆறு கீற்றும், குறுக்கில் ஆறு கீற்றும் கீறி இருபத்தைந்து அறைகளாகத் தோற்றுவித்து மந்திர எழுத்துக்களை உரிய முறையால் அவ்வறைகளில் பொறித்து வழிபட்டுச் செபிக்க.

குறிப்புரை :

`மந்திரமாவது இது` என்பது வருகின்ற பாட்டிற் கூறப்படும். ``திருவம்பலமாக`` என்பன சொற் பொருட் பின்வரு நிலை. `பொறித்து வழிபடுக` என்பது சொல்லெச்சம். `பொறிக்க` என்றே ஒழிதலும் ஆம்.
இதனால், நடனம் நிகழும் அகண்டமான திருவம்பலத்தைக் கண்டமாகக் கண்டு வழிபடும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

வாறே சிவாய நமச்சிவா யந்நம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.

பொழிப்புரை :

மேற்கூறிய முறையால் ஞான நடனத்தின் வடிவமாகிய, `சிவாயநம` என்னும் மந்திரத்தைப் பலகாலும், தொடரஓதிப் பயின்றால் இறப்பும், பிறப்பும் இல்லையாகும். அதற்குமுன்னே அவ்வோதுதலானே ஞானநடனத்தை நேரே காணுதல் கூடும். முன்னே சொன்ன செம்பு பொன்னானது போன்ற பயனாகிய சிவமாந்தன்மைப் பெரு வாழ்வும் கிடைக்கும்.

குறிப்புரை :

அடுக்கு, பன்முறை கூறுதலை உணர்த்திற்று. பேர், முதனிலைத் தொழிற்பெயர். பேர்தல், உயிர் ஓருடலை விட்டுப் பிறிதோர் உடலைத் தேடிச் செல்லுதல். அஃது இல்லை என்றது, `வீடடையும்` என்னும் பொருட்டாய் நின்றது. `பிறப்பில்லை` என்று மேற்கூறியதனை எதிர்மறை முகத்தான் வலியுறுத்தவாறு.
இதனால், மேற்கூறிய சக்கரத்தில் பொறித்தற்கு உரிய மந்திரமும், அதன் சிறப்பும் பயனும் கூறப்பட்டன. இவ் விரு மந்திரங்களால் சக்கர வழிபாடு பொதுவாக விதிக்கப்பட்டது; விளக்கம் வருகின்ற அதிகாரத்துட் கூறப்படும்.

பண் :

பாடல் எண் : 23

பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறிகிஞ் சுகத்தாகும்
பொன்னான மந்திரம் புகைஉண்டு பூரிக்கில்
பொன்னாகும் வல்லோர்க் குடம்புபொற் பாதமே.

பொழிப்புரை :

பொன்போலச் சிறந்ததாகிய மேற் சொன்ன மந்திரம் வாயாற் சொல்லப்படாது. அதனால், அது மேற்கூறிய சக்கரத்துள் குங்குமத்தால் பொறிக்கப்படும். அங்ஙனம் பொறிக்கப் பட்ட அது தூப தீபங்களை ஏற்று மகிழுமாயின், அவ்வாறு மகிழ்விப் போரது உடம்பு பொன்போல ஒளிவிட்டு விளங்கும். மேலும், அதனை நன்கு வழிபட வல்லவர்க்கு அதனால் விளையும் பெரும் பயன், சிவபெருமானது பொன்போலும் திருவடியை அடைதலாகும்; அஃதாவது, `சிவனது அருள் கைவரப்பெறுதல் கூடும்` என்பதாம்.

குறிப்புரை :

பொறி, முதனிலைத் தொழிற் பெயர். கிஞ்சுகம் - முள்முருக்கு. அஃது அதனோடு நிறத்தால் ஒத்த குங்குமத்திற்கு உவம ஆகுபெயராயிற்று. குங்குமத்தால் எழுதுதல் வெட்டுவாயின்மேல் என்க. ``உடம்பு`` என்பதை, ``பொன்னாகும்`` என்பதன்பின்னர்க் கூட்டி வேறு தொடராக முடிக்க. `பயன்` என்பது சொல்லெச்சமாக எஞ்சிநின்றது.
இதனால், மேலதன் வழிபாட்டுமுறை சிலவும், அதன் பயன்களுள் முதலதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 24

பொற்பாதம் காணலால் புத்திரர் உண்டாகும்
பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும்
பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும்
பொற்பாதம் நன்னடஞ் சிந்தனை சொல்லுமே.

பொழிப்புரை :

திருவருள் கைவரப் பெறுதலால் சிவனுக்கு மைந்தராம் தன்மை உளதாகும்; `செம்பு பொன்னாதல் போல்வது` என மேலெல்லாம் சொல்லிவந்த சிவமாம் தன்மையும் கிடைக்கும். அதனால், மாயாகாரிய உடம்பும் சிவனது அருள்மயமான உடம்பாய்விடும். ஞான நடனத்தின் உண்மை தெளிவாகும்.

குறிப்புரை :

இதனுள்ளும் பொருட் பின்வருநிலையணி வந்தமையின், முதலடியில் `காணலாம்` என ஓதுதல் பாடம் அன்று. ``புத்திரர்`` என்பது பொருளாகுபெயராய் அவரது பண்பின்மேல் நின்றது. அங்ஙனமன்றாயின், `உண்டாகும்` என்பதனோடு இயை யாமை அறிக. `ஆணையாலே` என உருபு விரிக்க. ஈண்டும் ``செம்பு பொன்னாயிடும்`` என ஒட்டணியாக ஓதியது, `இவ்வுலகில் உண்மை யாகவே செம்பைப் பொன்னாக்குதல் முதலிய சித்திகளாகிய இடை நிலைப் பயனும் கூடும்` என்பதும் தோன்றுதற்பொருட்டு. புத்திரராந் தன்மை பெறுதற்கு முத்தினாலான சிவிகை, சின்னம் முதலிய சிறப்புக்களைப் பெற்று ஞானாசிரியத் தன்மைபெற்று விளங்கிய ஆளுடைய பிள்ளையாரிடத்தும், செம்பு பொன்னாவதற்குச் செங்கல் பொன்னாகவும், ஆற்றிலிட்ட பொன் குளத்திற் கிடைக்கவும், தம்மை வழிபட்ட பெருமிழலைக் குறும்பர்க்குச் சிவயோகம் எளிதில் கூடவும் பெற்று விளங்கிய ஆளுடைய நம்பிகளிடத்தும் எடுத்துக்காட்டுக் கண்டுகொள்க. அவ்விருவரையும் திருவருள் கைவரப் பெற்றமை மாத்திரத்திற்கு ஒப்புமைகொள்க. நான்காம் அடியில், `பொற்பாதம் சொல்லும்` என இயையும். ``நடஞ் சிந்தனை`` என்பது தொழிற் பெயரொடு தொக்க இரண்டாவதன் தொகை. ``சிந்தனை`` என்பது அதன் முடிவின்மேல் நின்றது.
இதனால், திருவருளால் மக்கள் எய்தும் பயன்கள் வகுத்தோதப்பட்டன.

பண் :

பாடல் எண் : 25

சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவாள் நயந்துட னேவரும்
சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமந் தானே.

பொழிப்புரை :

(இம்மந்திரம் இருபொருள் கொள்ள நிற்பது) ஓர் உரை:- தான் நிற்கும் உடல் துன்பம் உடையதாயும், மற்றோர் உடம்பு இன்பம் உடையதாயும் எவ்வகையாலேனும் தோன்றினால் நிற்கும் உடம்பை விட்டுத் தான்விரும்பிய வேறோர் உடம்பில் புகுந்து இன்புறலாம்; இல்லறத்தில் நிற்க விரும்பினால் நல்ல மனையாள், தன்னை விரும்பி விரைவில் வந்து அடைவாள்; மாணிக்கத்தைக் கொண்டு விளங்கும் கொடிய நாகமும் தான் சொல்லிய அளவில் கட்டுண்டு அகலும். மேற்சொல்லிய திரு வம்பலச் சக்கரத்து வழிபாட்டின் மறைபொருள் (இரகசியம்) இது.

குறிப்புரை :

``ஒரு கூடு`` என்பதை எடுத்தல் ஓசையாற் கூறி இப்பொருள் காண்க. இப்பயனுக்கு எடுத்துக்காட்டாக இந் நாயனாரையே கொள்ளலாம். `மனம் சொல்லும் ஒரு கூடு` என்க. ``பாசம்`` என்பது `கட்டு` என்னும் பொருளதாய் `கட்டுட்பட்டு` எனப் பொருள் தந்துநின்றது. சுடர், ஆகுபெயர். ``திருக்கூத்து`` என்றது தானியாகு பெயராய் அது நிகழும் இடத்தின்மேல் நின்று, இடஇயை பால் மேற்குறித்த சக்கரத்தைக் குறித்தது. சூக்குமம் - மறைப் பொருள்.
மற்றோர் உரை:- சிறப்பித்துச் சொல்லப்படும் திருவருளாகிய அவ்வுறைக்குள்ளே தனது சீவபோதமாகிய வாள் புகுந்து அடங்கி நிற்றலால், சிவானந்தத்தைத் துய்க்கலாம். அப்பயன் உண்டாகும்படி திரோதான சத்தி நீங்க அருட்சத்தி தன்னை விரும்பி வந்து விரைவில் தன்னிடத்தில் பதியும். திருவைந் தெழுத்தை ஓதுதலானே கொடிய நாகம் போல்வதாகிய ஆணவம் வாதனையும் கெட்டுப் பற்றறக் கழியும். (நான்காம் அடிக்கு மேற்கூறியவாறே உரைக்க.)
இங்கு, ``கூடு`` என்றதை, ``கூட்டில் வாள் சார்த்தி நின்றுந் தீபற`` என்னும் திருவுந்தியார் (30) பகுதியொடு வைத்து உணர்க. தனது போதம் புகுதலை ஒற்றுமை பற்றித் தானே புகுதலாகக் கூறினார். அருட்சத்தி என்பது விளங்குதற்கே, ``நல்ல மடாவள்`` என்றார். பாசப் பாம்பு, உருவகம். இவ்விருவகைப் பயனையும் அவரவர் தகுதிக்கு ஏற்பக் கொள்க.
இதனால், மேற்கூறிய வழிபாடு புத்தி, முத்தி இரண்டனையும் தருவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தால்உம் மேல்
சூக்கும மான வழிஇடைக் காணலாம்
சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்
சூக்கும மான சிவனதா னந்தமே.

பொழிப்புரை :

மறைவாகச் சொல்லப்படும் மொழியாகிய மேற் சொன்ன மந்திரத்தை இடைவிடாது செபித்தால் உங்கள் தலைமேல் உள்ள நுண்ணிய வழியை அச் செபத்திற்கு இடையே காணுதல் கூடும். அதனால், முன்னே முகந்து கொண்டதனால் நுண்ணியதாய்ப் பொருந்தி நிற்கின்ற பிராரத்த வினையையும் அழிக்க இயலும். அதனை அழிக்கவே, உயிரிடத்து விளைவதாகிய சிவானந்தம் வெளிப்படும்.

குறிப்புரை :

வழி, பிரமரந்திரம். இது ஆதார யோகத் தினின்றும் நிராதாரத்திற்குச் செல்லும் வழியாதல் பற்றி ``வழி`` எனப் பட்டது. சஞ்சிதம் ஞானிகட்கு முன்பே கெடுக்கப்பட்டமையானும், யோகி யர்க்கு இனி வேறோராற்றால் கெடுக்கப்படுமாகலானும் இங்கு ``வினை`` என்றது பிராரத்தத்தையே. அது முகந்துகொள்ளப்பட்ட நிலையில் சூக்குமமாய் நின்று, பயன் தருங்கால் தூலமாய் வந்து பொருந்தும். ஆதலின், ``சூக்குமமான வினை`` என்றார். இம் மந்திரம் ஞானியர்க்கும், யோகியர்க்கும் பொதுப்பட ஓதப்பட்டமையின், `வழி காணுதல், வினையைக் கெடுத்தல்` என்பவற்றை உடனே வீடுபெற விரும்புவார்க்கு, தலையைப் பிளந்துகொண்டு உடலை விட்டு நீங்கும் வழியாகவும், பிராரத்தத்தை நசிக்கச் செய்தலாகவும், சீவன் முத்தர்க்கும், யோகியர்க்கும் முறையே ஆதார யோகத்திலிருந்து நிராதார யோகத்திற் செல்லும் வழியாகவும், பிராரத்தத்தை மெலி வித்து உடல்ஊழாய் ஒழியவும், யோகத்தைத் தடுக்காது நீங்கவும் செய் தலாகவும் விளக்க. சிவானந்த வெளிப்பாடும் முறையே பரமுத்தி யிலும் சீவன் முத்தியிலும், யோக சமாதியிலும் நிகழ் வனவாகவும் கொள்க.
இதனால், மேற்கூறிய வழிபாடு வீட்டு நெறி நிற்பார்க்கும் உதவுவதாதல் சிறந்தெடுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென் றறிந்திட
ஆனந்தம் ஆஈஊ ஏஓம்என் றைந்திட
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும்அ தாயிடும்
ஆனந்தம் ஆம்ஹிரீம் ஹம்க்ஷம்ஹாம் ஆகுமே.

பொழிப்புரை :

`சிவானந்தம் ஒன்றே ஆனந்தம்` என்று உணர, அவ்வானந்தம் விளைவதாம். `ஆ, ஈ, ஊ, ஏ, ஓம் என்னும் ஐந்தெழுத்துக்களை அச்சக்கரத்தில் இட்டுச் செபிக்க அவ்வானந்தம் மிக விளையும். அந்த ஐந்தெழுத்துத் தொடரே` திருவைந்தெழுத்துத் தொடருமாம். இனி, அம், ஹ்ரீம், ஹம், க்ஷம், ஹாம்` என்னும் ஐந்தைத்தாமும் மேற்கூறிய `ஆ` முதலிய ஐந்திற்கு ஈடாகவும், திருவைந்தெழுத்திற்கு ஈடாகவும் கொள்ளலாம்.

குறிப்புரை :

முதலடியில் இரண்டாவதாக நின்ற ஆனந்தம்`, சிவானந்தத்தைச் சிறப்பு வகையாற் குறித்தது. `ஒன்றே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது. மூன்றாம். அடியில் பெயர்ப் பயனிலையாய் நின்ற அடுக்கு, மிகுதி குறித்து நின்றது. `ஆ` முதலிய ஐந்தும் மகாரத்தைக் கூட்டியும், கூட்டாதும் ஓதப்படும் என்பது உணர்த்துதற்கு முதல்நான்கனை மகாரம் இன்றியும், இறுதியதை மகாரம் கூட்டியும் ஓதினார் `அது அஞ்சும் ஆயிடும்` என மாற்றிக்கொள்க. ஈற்றடியில் நின்ற ``ஆனந்தம்` அதனைத் தருவதாய மந்திரத்திற்கு ஆகி, எழுவாயாய் நின்றது. இவ்வடியில் மூன்றாவதாக நிற்கும் எழுத்தையும் `அம்` என ஓதுதலும், இரண்டாம் நான்காம் அடிகளிலும் அடுக்கிவர ஓதுதலும் பாடமாகா.
இதனால், மேற்கூறிய வழிபாட்டில் செபித்தற்கு உரிய மந்திரங்கள் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

மேனி யிரண்டும் விலங்காமல் மேற்கொள்ள
மேனி யிரண்டும்மிக் கார்அவி காரியாம்
மேனி யிரண்டும்ஊ ஆஈஏ ஓ என்னும்
மேனி யிரண்டும்ஈ ஓஊஆ ஏகூத்தே.

பொழிப்புரை :

மேலை மந்திரத்தில் உயிரெழுத்துக்களாகவும், திருவைந்தெழுத்தாகவும் சொல்லப்பட்ட இருவகை மந்திரங்களும் சிவனது திருமேனிகளாய் நிற்றற்கு உரியனவாம். அவற்றைப் பிழை யின்றி ஓதுதலைச் செய்தால், சிவனது திருமேனி திரிபின்றி அமையும். இனி அவ்விருவகை மந்திரங்களையும் இருவேறு வகையாக மாற்றி உச்சரிக்க, இறைவனது இருவகை நடனங்களும் அமைவனவாம்.

குறிப்புரை :

``அவிகாரி`` என்றது பன்மை ஒருமை மயக்கம். மேலை மந்திரத்தில் தமிழ் உயிர் நெட்டெழுத்து ஏழில் `ஐ, ஔ` என்னும் இரண்டை ஒழித்து ஏனைய ஐந்தும் முறைப்படியே கூறப் பட்டன. அதனால், அவை மேல், ``வாறே சிவாய நம`` (888) எனக் குறித்த முறையில் அமைந்த மந்திரத்தில் முறையே சிகாரம் முதலிய ஐந்திற்கும் ஈடாக அமைதல் அறியப்படும். அதனானே, மேலை மந்திரத்து இறுதி அடியிற் சொல்லிய `அம்` முதலிய ஐந்தும் அம் முறையில் அமைதலும் பெறப்படும். படவே, இம்மந்திரத்து மூன்றாம் அடியில் ஓதியவாறு உச்சரிக்க ஞான நடனமும், நான்காம் அடியில் ஓதியவாறு உச்சரிக்க ஊன நடனமும் நிகழ்வனவாம் என்க.
மேலை மந்திரத்துள் இரண்டாம் அடியிற் கூறியன தமிழ் கூறுவார்க்காகவும், நான்காம் அடியில் கூறியன ஆரியங் கூறுவார்க் காகவும் என்க. பரதகண்டத்தில் இவ்விரண்டல்லாத பிறமொழிகள் சிறப்பிலவாதல் அறிக. இவை இருதிற எழுத்துக்களும் சங்கேத மாத்திரமாய் நிற்பனவன்றிச் சொற்கு உறுப்பாய் எழுத்தாந் தன்மை யிலவாகலின், இருதிறத்தாரும் `சிவாய நம` என்பதை ஓதுதலே சிறப்பு என்பது கருத்து.
இதனுள், ஞானநடன மந்திரத்தில் ஆன்மஎழுத்தை முன்னர் எடுத்து அது இறையெழுத்தோடு புணரவும் இறை அருளோடு புணரவும், அருள் திரோதானத்தோடு புணரவும், திரோதானம் மலத்தோடு புணரவும் வைத்தல் அறிக. இறுதியில் நின்ற மல எழுத்து, பின் ஆன்மாவோடு புணரும்நிலை உள்ளதாயினும், அது வேறு உருவாகலானும், ஆன்மா இறையை நோக்கிச் செல்லுதலானும் அவ்விடத்து மலம் ஆன்மாவைப் பற்ற மாட்டாமை அறிக.
இனி ஊன நடன மந்திரத்தில் அருளை முன்னர் எடுத்து அது மலத்தோடு புணர்ந்து தோன்றாது நிற்கவும், அந்த மலம் ஆன்மா வோடு புணரவும், ஆன்மா சிவத்தோடு புணரினும் அந்தச் சிவம் அருளோடு புணராது திரோதானத்தோடு புணர்ந்து பந்தத்தை நிகழ்த்துவதாகவும் வைத்தல் அறிக. இவ்இருமுறையும் மேலை மந்திரத்துட் கூறிய மூவகை எழுத்திற்கும் கொள்க. ``என்னும்`` என்பதும், ``கூத்தாம்`` என்பதும் ஏனை இடங்களிலும் சென்று இயையும்.
இதனால், மேற்சொல்லிய மந்திரங்கள் இருவகை நடனத் திலும் நிற்குமாறு கூறப்பட்டது. `சுத்த மானதம்` என்னும் அறிவாற் கணித்தலாகிய ஞானநிலைக்குத் திருவைந்தெழுத்து ஒன்றே மந்திர மாகவும் அஃது ஒன்றே அந்த ஞானத்தின் படிநிலைக்கு ஏற்ப வேறு வேறு நிலையில் நிற்பதாகவும் சொல்லப்படுமாகலின், இங்குக்கூறிய இம்முறைகள் வழிபாட்டு நிலையில் நின்று பயன்பெறுதற்கு உரியன என உணர்க.

பண் :

பாடல் எண் : 29

கூத்தே சிவாய நமமசி யாயிடும்
கூத்தே, ஈஊ ஆ ஏஓசி வாய நமஆயிடும்
கூத்தேஇ, உஅஎ ஒசி வயநம வாயிடும்
கூத்தேஈ, ஊஆஏ ஓநமசி வாயகோள் ஒன்றுமே.

பொழிப்புரை :

மேற்கூறிய இருவகை நடனங்களுள் ஞான நடனம், `சிவாயநம` என்பதனாலேயும் அமையும். அம் மந்திரம் இவ்வாறு தனியாக உச்சரிக்கப் படுதலேயன்றி ஈம், ஊம், ஆம், ஏம், ஓம் என்னும் வித்தெழுத்துக்களுள் ஒன்றேனும் பலவேனும் கூட்டியும் உச்சரிக்கப்படலாம். இனி, மேற்கூறிய அவ்வெழுத்துக்கள் நெடிலாய் இல்லாமல் குறிலாய் நிற்கவும் கொண்டு உச்சரித்தற்கு உரியன. `சிவாய நம` என்னும் சூக்கும பஞ்சாக்கரமே நகாரம் முதலாய தூல பஞ்சாக்கரமாய் நிற்குமாதலின் அது ஊன நடனத்திற்கு உரியதாய் மேற்கூறியவாறே வித்துக்களைக் கூட்டாதும், கூட்டியும் உச்சரிக்கப் படும்.

குறிப்புரை :

தேற்றேகாரங்களைப் பிரித்துத் திருவைந்தெழுத்து மந்திரத்தின் பின்னர்க் கூட்டிப் பொருள் கொள்க. ஏற்புழிக் கோடலால் ஈற்றில் உள்ள கூத்து ஊன நடனமாகவும் ஏனைய மூன்றும் ஞான நடனமாகவும் கொள்ள நிற்றல் அறிக. கூறியது கூறலாகவும், பின்னர்த் திருவைந்தெழுத்துக் குறிலாக வருவதனோடு இயையாதனவாகவும் மூன்றாம் அடியிலும் உயிரெழுத்துக்களை நெட்டெழுத்தாக ஓதுதலும், நான்காம் அடியில் முதல் உயிரைக் குற்றெழுத்தாக ஓதுதலும் பாடம் ஆகாமை அறிந்து கொள்க. `சிவாயநம` என்பதைத் திரும்பத் திரும்ப ஓதினால் மகாரம் சிகராத்தோடு புணரும் நிலை உண்டாகும், உண்டாயினும் அதனால் தீங்கில்லை என்றற்கு `மசி` என்பதையும் முதலடிக்கண் கூறினார். `வாயிடும்` என்பது பாடம் அன்று.
திருவைந்தெழுத்தைப் பீசங்களோடு கூட்டாதது `நிர்ப்பீசம்` என்றும், கூட்டுவது `சபீசம்` என்றும் சொல்லப்படும். சபீசம் உயர்ந் தோர்க்கே உரியன; நிர்ப்பீசம் பிறர்க்கும் உரியன. இப் பீசங்களை மேலை மந்திரத்திற் கூறிய முறையாற் கூறாது வேறுபட ஓதினார், அவை திருவைந்தெழுத்தோடு கூட்டப்படுங்கால் முன்னவை இரண்டினும் பார்க்கப் பின்னவை மூன்றும் திருவைந்தெழுத்தோடு இயையக் கூட்டுதல் பெரும்பான்மை என்பது உணர்த்துதற்கு. உகார ஊகாரங்கள் `ஔ` என்னும் நெட்டெழுத்தாய்ப் பரிணமிக்கின், அதுவும் பெரும்பான்மையதாம் என்க. கோள் ஒன்றும் - பீசங்களைத் திருவைந்தெழுத்துக் கொள்ளுதளைப் பொருந்தும். முதலடி ஒழிந்த அடிகளில் ``கூத்தே`` என்பன கூனாகி நின்றன.
இதனால், திருவைந்தெழுத்தைச் சபீசமாகக் கூறும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

ஒன்றிரண் டாடஓர் ஒன்றும் உடனாட
ஒன்றினில் மூன்றாட ஓரேழும் ஒத்தாட
ஒன்றினா லாடஓர் ஒன்ப துடனாட
மன்றினில் ஆடினான் மாணிக்கத் கூத்தே.

பொழிப்புரை :

ஒன்று முதலாவது; சிவதத்துவம், இரண்டு இரண்டாவது; சத்தி தத்துவம், ஓர் ஒன்று, சத்தி தத்துவத்தின்பின் அடுத்தடுத்து நிற்கின்ற ஒன்றும், ஒன்றும்; சாதாக்கிய தத்துவமும், ஈசுர தத்துவமும். ஒன்றினில் மூன்று. ஈசுர தத்துவத்தை அடுத்துள்ள சுத்த வித்தியா தத்துவத்தில் `அரன், அரி, அயன்` என்பவரது அதிட்டானங் களாகிய மூன்று. ஓர் ஏழு, இந்த ஏழும். ஒன்பது, இவற்றுடன் இவற்றிற் கெல்லாம் மேலே உள்ள நாத விந்துக்கள் கூடிய அனைத்துத் தத்து வங்களும். ஒன்றினால் ஆட - அவை அனைத்தும் அங்ஙனம் ஆடல் மூர்த்தமாகிய ஒன்றினாலே ஆடும்படி இறைவன் மன்றினில் மாணிக்கக் கூத்து ஆடினான்.

குறிப்புரை :

``ஒன்பது உடனாட`` என்பதை, ``ஒன்றினால் ஆட`` என்றதற்கு முன்னே கூட்டுக. `இறைவன்` என்பது தோன்றா எழு வாயாய் நின்றது. மாணிக்கக் கூத்து - மாணிக்கம் போல வரம்பறிய லாகாத தாண்டவம். ஒன்பது தத்துவங்களும் ஆடுதல், (செயற்படுதல்) சம்புபட்சமாயாதல், அணுபட்சமாயாதல் அவ்வப்பெயர் பெற்று நிற்கும் முதல்வராகலாம் ஆதலின், ``ஆட, ஆட`` என வந்தன பலவும் அவர்கள் ஆடலின் வழியாடலேயாம் என்க. எனவே, அனைத்து முதல்வர்களது ஆடற்கும் இவ் ஒரு மூர்த்தத்தின் ஆடலே முதலாதல் அறியப்படும். `மாகேசுர மூர்த்தங்களில் ஒன்றாக எண்ணப்பட்ட வடிவத்தையுடைய கூத்தப்பிரானின் வேறாய்ச் சிவதத்துவத்தில் இலய நிலையில் நிற்கும் கூத்தப் பிரான் ஒருவர் உளர்` என மகுடாகமம் கூறுகின்றது.
தத்பரம் சிவதத்வம் ச பூஜயேத் ஞான மூர்திகம்
ஸர்வகாரண தேவேசம் த்யாத்வா தாண்டவ மீச்வரம்
ஆவாஹயேத் ததோ தேவம் புஷ்பஹஸ்தம் ஸுகாஸந:
இவர் இருக்கும் இடமே இருக்கு வேதத்தில் சொல்லப்பட்ட பரம வியோமம் என்பதும், பிருகதாரணியத்தில் சொல்லப்பட்ட இருதய ஆகாசம் என்பதுமாம் எனவும், இதுவே தமிழில் திருச்சிற்றம்பலம் எனப்படுகின்றது எனவும் இதனால், மேற்கூறிய இடங்களில் முறையே `பிரபஞ்ச அத்தியட்சகர்` என்றும்; `ஈசானர்` என்றும் சொல்லப் பட்டவர் சிவதத்துவத் தாண்டவேசுரரே எனவும் கொள்ளப் படுகின்றன. ஆதலால், இங்கு ``மன்று`` (திருச்சிற்றம்பலம்) எனப் பட்டது பரமவியோமமும் அதன்கண் ஆடுவார் சிவதத்துவத் தாண்டவேசுரரும் எனவே கொள்க. ``அருமறைச் சிரத்தின் மேலாம் - சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலம்`` 1 என்ற சேக்கிழார் வாக்கும் இங்கு நினைவுகூரத்தக்கது.

பண் :

பாடல் எண் : 1

இருந்தஇவ் வட்டங்கள் ஈரா றிரேகை
இருந்த இரேகைமேல் ஈரா றிருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்
றிருந்த மனையொன்றில் எய்துவன் தானே.

பொழிப்புரை :

மந்திரங்களைச் செபிக்கும் முறைகளுள் ஒன்றாதல் பற்றி மேலையதிகாரத்துள் பொது வகையாகக் கூறப்பட்ட திருவம்பலச் சக்கரத்தின் இயல்புகளை இனி இவ்வதிகாரத்துள் எண்பத்தொன்பது திருமந்திரங்களால் கூறுகின்றார்.
சக்கரங்கள் பலவற்றில், நெடுக்கும், குறுக்குமாகப் பன்னிரு, பன்னிரு கீற்றுக்கள் கீற, நூற்றிருபத்தோர் அறைகளாக அமைகின்ற சக்கரத்தில் கூத்தப் பெருமான் விளங்கித் தோன்றுவான்.

குறிப்புரை :

`வட்டங்களுள்` என ஏழாவது விரித்து, அதனை, ``ஒன்றில் எய்துவன்`` என்பதனோடு முடிக்க. ``தான்`` என்றது மேலை மந்திரத்தில் ``ஆடினான்`` எனப்பட்டவனைக் குறித்தல் வெளிப்படை. ``இருத்தி`` என்பதை முதலடியின் இறுதியிலும் கூட்டி பின், `அவ்வாறிருந்த` என உரைக்க. ஈராறு - பன்னிரண்டு; பன்னிருபத்து - நூற்றிருபது; அதனுடன் ஒன்று சேர்க்க நூற்றிருபத்தொன்றாகும்.
இதனால், திருவம்பலச் சக்கரத்துள் ஒன்றனை வரையுமாறு கூறப்பட்டது. பிறவற்றை வருகின்ற மந்திரங்களுள் கூறியருளுவார்.

பண் :

பாடல் எண் : 2

தான்ஒன்றி வாழ்இடம் தன்னெழுத் தேயாகும்
தான்ஒன்றும் அந்நான்கும் தன்பேர் எழுத்தாகும்
தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்
தான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே.

பொழிப்புரை :

தான்மேலே குறிக்கப்பட்ட பெருமான், ஒன்றி வாழ்தல், நடுவிடத்தை ஒட்டியிருத்தல். தன் எழுத்து சிகாரம். தன்பேர் எழுத்து, தனது திருப்பெயராகிய மூல மந்திர எழுத்துக்கள். அவற்றுள் சிகாரமாகிய ஒன்று முன்னே கூறப்பட்டமையின், இவை ஏனைய நான் கெழுத்துக்களாம். நாற்கோணம், நான்கு திசைகளிலும் இடை வெளி யாய் நீண்டு, நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு சக்கரத்தைப் பிரித்து நிற்கும் நேர்க்கோட்டு அறைகள். அவைகளில் ஐந்தெழுத்துக் களும் சிகாரம் முதலாக அமையும். ஒன்றிலே ஒன்றுதல், நடுவண தாகிய ஓர் அறையிலே பொருந்துதல். அரன், `ஹர`: என்னும் மந்திரம். இஃது `ஓம்` என்பதனை முன்னர்க்கொண்டு நிற்கும் என்பது ஆற்ற லால் விளங்கும்.

குறிப்புரை :

இடத்தில் நிற்பவற்றை ``இடம்`` என்றார். ``அந்நான்கு`` என்றதும், `எஞ்சிய நான்கிடங்களில் நிற்கும் எழுத்துக்கள்` என்றதேயாம். ``அவ்வரன்`` என்பதில் அகரம் பண்டறிசுட்டு. ``அரன்`` என்னும் சொல் இங்குத்தன்னையே குறித்து நின்றது. ஈற்றில் நின்ற `தான்`, அசை. ஏகாரம், `அரனாகிய` எனத் தேற்றமாயிற்று. இனி இச்சக்கரத்தைப் புலப்படக் காணுமாறு கீழே காண்க.
பெருந்திசை நான்கில் நான்கு சிகாரங்களும், கோணத்திசை (மூலை கள்) நான்கில் நான்கு சிகாரங்களும் உள்ளன. அவற்றை முதலாகத் தொடங்கி, `சிவாயநம` என ஓதுதல் வேண்டும். அங்ஙனம் ஓதுங்கால் பெருந்திசையில் உள்ள சிகாரம் ஒவ்வொன்றும் இருமுகமாகத் தொடர் தலும், கோணத் திசையில் உள்ள சிகாரம் ஒவ்வொன்றும் மூன்று முகமாகத் தொடர்தலும் காணலாம். ஆகவே, அவற்றைக் கிழக்கு முதலாகத் தொடங்கி வட கிழக்கில் மூன்று முகமும் ஓதி முடித்தால், இருபது (20) உருச் செபித்தலாகும். அவ்வாறு ஐந்து முறை திரும்பத் திரும்ப ஓதி, அதன் பின்னர்ப் பெருந்திசை முதலாக மட்டும் தொடங்கி ஓதி முடித்தால், நூற்றெட்டு (108) உருச் செபிக்கப்பட்டு முடியும். ஐம்பது முறை முற்ற ஓதி, இறுதியில் மேற்சொன்னவாறு பெருந் திசையில் தொடங்கிமட்டும் ஓதி முடித்தால், ஆயிரத்தெட்டு (1008) உருச் செபிக்கப்பட்டு முடியும். சித்தி பெறும் வரையில் இவ்வாறே இச்சக்கரத்தை வழிபட்டுப் பலமுறை ஓதுதல் செய்யத்தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 3

அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை

குறிப்புரை :

இதனால், மேற்குறித்த சக்கரத்தின் நடுவண் நிற்கும் `ஹர`: என்னும் மந்திரத்தின் சிறப்புக் கூறப்பட்டது. சிவனுக்கு இப்பெயர் பாசங்களைப் போக்குபவனாதல் பற்றி வந்தது. மெய்கண்ட தேவரும் தமது நூலுள் 1 இப்பெயரையே சிறந்தெடுத்தோதினார். `சிவன்` என்னும் பெயரது சிறப்பே இதுகாறும் கூறிவந்தமையின், இதனை இங்குக் கூறல் வேண்டினார்.

பண் :

பாடல் எண் : 4

எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரம் பான்மொழி பாலே.

பொழிப்புரை :

எட்டுநிலை, மேற்காட்டிய சக்கரத்துள் நடு அறையைச் சுற்றியுள்ள அறைகள். அவற்றில் சிகாரம் நிற்றல் மேலே கூறப்பட்டது.
அவ்வெட்டில் கோணத்திசை (மூலைகள்) நான்கும் ஒழித்து எஞ்சிய நான்கிற்கும் நேர் நேராக நடு அறையுள் மேலைச் சக்கரத்தில் உள்ள `ஹர`: என்பதை நீக்கி ஹும், ஹௌம், ஹம், ஹ: என்பவற்றைப் பிரணவத்திற்கு மேலே பொறிக்கப் பெருமானோடு, பெருமாட்டிக்கும் உரிய சக்கரமாய் விளங்கும்.

குறிப்புரை :

இருமூன்று, ஆறாவது உயிரெழுத்து; ஊ. ஈரேழு, பதினான்காவது உயிரெழுத்து; ஔ. இவை தனியாய் நிற்றலேயன்றி, மேற்காட்டியவாறும் நின்று பீசங்களாம். விந்து, அம். நாதம், அஃபான்மொழி, சத்தி. `ஓங்கிட மந்திரம்பான்மொழி பாலேபட்டது` என வேறு தொடராக்குக.
இதனால், மேற்காட்டிய சிவ சக்கரம் சிவம் சக்திகளது சக்கரம் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி யிருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவல் லார்உயிர் காக்கவல் லாரே.

பொழிப்புரை :

தேனோடு மலர்கின்ற இதயத் தாமரையுள் சிவன் அருட் சத்தியுடன் எழுந்தருளியிருக்கும் முறையை மக்கள் அறி கின்றார்களில்லை. அதனை அறிந்து பாசங்களை நீக்கி விட்ட ஆன்ம எழுத்தைச் சிவத்தை ஒருபோதும் விட்டு நீங்காத அருளெழுத்துடன் பிணைக்கவல்லவர் உளராயின், அவரே தம்மைப் பிறவிக்கடலில் வீழ்ந்து அழியாமல் காத்துக்கொள்ள வல்லவராவர்.

குறிப்புரை :

மேற்கூறிய சக்கரத்தில் நடுவண் நிற்கும் ஓர் அறை இதயத் தாமரையாக அறியத்தக்கது என்பது முதலிரண்டடிகளில் குறிப்பாற் கூறப்பட்டது. அவ்வறையைச்சூழ எல்லா இடத்தும் சிகாரம் நிற்றலைச் சிவன் சத்தியோடு ஒட்டியிருத்தலாகக் கூறினார். பின் இரண்டடிகளால் மேல், ``தானொன்றும் அந்நான்கும் தன்பேரெழுத் தாகும்`` (898) எனக் குறித்ததை, `வாயநம` என, எழுத்து இவை என்ப தும், அவை பொறிக்கப்படும் முறையும் இனிது விளங்கக் கூறினார். இச்சக்கரத்தில் உள்வட்டம் மூன்றும் அக வட்டங்களும், வெளி வட்டங்கள் இரண்டும் புறவட்டங்களும், ஆதலின், பாச எழுத்துக்கள் புறவட்டத்திலும், அவற்றுள்ளும் மல எழுத்து விளிம்பு வட்டத்திலும் நிற்பவாயின என்க. தேன், இதயத்தாமரையில் சிவானந்தமாம்.

பண் :

பாடல் எண் : 6

ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தஅத் தூலம்போய்
ஆலய மாக அறிகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்திருந் தானே.

பொழிப்புரை :

இறைவன் தனக்கு இடமாக விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற திருவைந்தெழுத்து, முதற்கண் அவன் அங்ஙனம் எழுந் தருளியிருந்த தூல நிலை போகப் பின்பு அவனுக்கு மிக உவப்பான இடமாக அறியப்படுகின்ற சூக்கும நிலையைத் தனக்கு இடமாகும்படி கொண்டு அதன்கண் மிக விரும்பி எழுந்தருளியிருக்கின்றான்.

குறிப்புரை :

`ஆகையால், இந்தச் சூக்கும பஞ்சாக்கரமே திருவம் பலச் சக்கரத்துள் கொள்ளப்படுவதாயிற்று` என்பது குறிப்பெச்சம்.
எனவே, இதனால், `மேற்கூறிய சக்கரத்தில் தூல பஞ்சாக் கரமும் கொள்ளத் தக்கதோ, அன்றோ` என எழும் ஐயத்தினை அறுத்த தாம். இதனானே, இது சூக்கும திருவம்பலச் சக்கரம் ஆதலும் பெறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

இருந்தஇவ் வட்டம் இருமூன் றிரேகை
இருந்த அதனுள் இரேகைஐந் தாக
இருந்த அறைகள் இருபத்தஞ் சாக
இருந்த அறை ஒன்றில் எய்தும் மகாரமே.

பொழிப்புரை :

இறைவன் அமர்ந்திருக்கின்ற மேற்சொல்லிய சக்கரத்தில் இருபத்தைந்து அறைகள் அமைந்துள்ள ஒரு பகுதியைத் தனியாக வாங்கித் தனிச்சக்கரமாகக் கொண்டு, அதன் நடுவிடத்தில் மகாரத்தைப் பொறிக்க.

குறிப்புரை :

எஞ்சிய அமைப்பு முறைகளை அடுத்த மந்திரத்தில் கூறி முடிப்பார். நூற்றிருபத்தொன்றாகக் காணப்படும் மேற் சொல்லிய சக்கர அறைகள் ஒன்று இருபத்தைந்து அறைகளாக அமைந்த நான்கு சக்கரங்களின் கூட்டாக அமைந்திருத்தலின் `அவற்றுள் ஒன்றை மட்டும் கொள்க` என்பார், அதுதானே பிறிதொரு சக்கரமாதலை உணர்த்தற்பொருட்டுச் செய்முறையை விரித்துக் கூறினார் என்க.

பண் :

பாடல் எண் : 8

மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை
ஒகாரம் வளைத்திட் டுப்பிளந் தேற்றி
யகாரம் தலையா இருகண் சிகாரமா
நகார அகாரம்நற் காலது வாமே.

பொழிப்புரை :

மேற்சொல்லியவாறு நடுவே பொறிக்கப்பட்ட மகாரத்தைச் சூழ வகாரத்தைப் பொறியுங்கள்; பின்பு அவ்விரண் டையும் ஒகாரத்தால் வளைத்து, அவ் ஒகாரத்துள் உகாரத்தைத் தொடங்கி அடுத்த அறைகள் இரண்டிரண்டாகும்படி பிளந்து ஏறக் கீறிப் புறவட்டத்தில் இருபக்கத்து அறைகளைத் தலைகளாகவும், மற்றைய இருபக்கத்து அறைகளைக் கால்களாகவும் கருதிக் கொண்டு, தலைகளாகின்ற அறைகளில் யகாரத்தையும், கால்களாகின்ற அறைகளில் ஒன்றில் நகாரத்தையும், மற்றொன்றில் அகாரத்தையும் பொறித்து வழிபடுதலையும், செபித்தலையும் செய்யுங்கள்.

குறிப்புரை :

இதன் வடிவத்தைக் கீழே காண்க.
இதனால், உருவாகும் மந்திரங்கள், `அ உ ம வ சி ய` என்பதும், ` ந ம உ வ சி ய` என்பதும் ஆகும். இரண்டற்கும் முன்னே `ஓ` கொள்ளப்படும். அகாரம் முதலாகவும், நகாரம் முதலாகவும் தொடங்கும்பொழுது உள் வட்டத்திலிருந்தே தொடங்கிப் பலமுக மாகவும் செல்ல ஓதுதல் கூடுமாற்றை அறிந்து கொள்க. விளிம்பு வட்ட தலைக்குப் பக்கங்களில் உள்ள அறைகள் நடனத்தில் இறை வனது தலைசெல்லும் பக்கங்களாகவும், கால்களுக்கு நேரே உள்ள ஓர் அறை, நிற்கும் நிலை இட மாகவும், அவற்றின் பக்கத்தில் ஒற் றித்தும் இரட்டித்தும் உள்ள இடங்கள் நடனத்தில் தலை, கை, கால்கள் பெயர்ந்து செல்லும் இடங்களாகவும் கருதிக்கொள்க. இங்ஙனமெல்லாம் கருதிக்கொள்ளுதற்காகவே` தலை, கண், கால்` என உருவகித்து ஓதினார். சமட்டி, வியட்டிப் பிரணவங் களோடு தூல பஞ்சாக்கரம் அமைந்திருத்தலால், இது தூலத் திருவம்பலச் சக்கரம் ஆதல் அறியப்படும்.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும் மற்றொருவகைத் திருவம்பலச் சக்கரம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நாடும் பிரணவம் நடு இரு பக்கமும்
ஆடும்அவர் வா அமர்ந்தங்கு நின்றது
நாடும் நடுஉள் முகம்ந மசிவாய
வாடும் சிவாயநம புறவட்டத் தாயதே.

பொழிப்புரை :

மேற்சொல்லிய தூலசக்கரத்தில்தானே முன் சொன்ன எழுத்துக்களை நீக்கி நடுவிடத்தில் நடுவிலே பிரணவத் தையும், (நடுவிடத்தை இருமுக்கோணத்தின் கூட்டாகக் கருதி) மேல் முக் கோணப் பகுதியில் சிகாரம் நான்கும், கீழ் முக்கோணப் பகுதியில் வகாரம் நான்கும், நடுவிடத்தைச் சூழ்ந்துள்ள உள்வட்டக் கட்டங்கள் எட்டினையும் முன்சொன்ன வாறே பகுதிப்படக் கருதி மேற் பகுதி அறை ஒவ்வொன்றிலும் `நம` என்பதனையும், கீழ்ப் பகுதி அறை ஒவ்வொன்றிலும் `ய` என்பதனையும், சுற்று வட்டத் தின் (விளிம்பு வட்டத்தில்) மேற் புறத்து இடப்பக்க மூலையிலும், கீழ்ப்புறத்து வலப்பக்க மூலையிலும், `சி` என்பதை நிறுத்தி, அவற்றின் இருபக்கக் கட்டங் களிலும் முறையே, `வா, ய, ந, ம` என்னும் எழுத்துக்களையும் பொறித்து வழிபட்டுச் செபிக்க.

குறிப்புரை :

இதன் வடிவம் வருமாறு:-
இதனுள், பிரணவத்தை முதலிற் கொண்டு, `நமசிவாய` என்பதை நான்கு முறையாலும், `சிவாயநம` என்பதை நான்கு முறையாலும் செபிக்க ஒரு வட்டமாம். ஐம்பத்து நான்குவட்டம் செபிக்க தூல சூக்கும பஞ்சாக்கரங்கள் தனித்தனி நூற்றெட்டு உருவாக முடியும். இருநூற்று ஐம்பத்து நான்கு வட்டம் செபிக்கின் அவை தனித்தனி ஆயிரத்தெட்டு உருவாக முடியும்.
இவற்றுள், தூல பஞ்சாக்கரத்தில் பாச எழுத்து இரண்டும் தம்முள் இணைந்தும், பதி எழுத்து இரண்டும் தம்முள் இணைந்தும் ஆன்ம எழுத்து அருளெழுத்தோடும், திரோதான எழுத்தோடும் தொடர்புற்றும் நிற்றல் அறிந்துகொள்க.
சமட்டிப் பிரணவத்தோடு `தூலம், சூக்குமம்` என்னும் இருபஞ்சாக்கரங்களும் செபிக்கப்பட நிற்றலால் இது சூக்குமா சூக்கும திருவம்பலச் சக்கரமாகும். சூக்கும சக்கரம் தவிரப் பிற்கூறிய இரண்டிற்கும் தலை, கால் பக்கங்கள் உளவாதலை அறிக.
இதுகாறும் விளக்கப்பட்டு வந்தவற்றுள் சூக்கும சக்கரம் வீடுபேற்றினை விரும்புவோர்க்கும், தூல சக்கரம் உலக இன்பத்தை விரும்புவோர்க்கும், சூக்குமா சூக்கும சக்கரம் இரண்டனையும் விரும்புவோர்க்கும் உரியனவாம் என்க.
இதனால், வேறொருவகைத் திருவம்பலச் சக்கரம் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஆயும் சிவாய நமமசி வாயந
ஆயும் நமசி வயய நமசிவா
ஆயுமே வாய நமசியெனும் மந்திரம்
ஆயும் சிகாரம்தொட் டந்தத் தடைவிலே.

பொழிப்புரை :

`சிவாயநம` என்பதை ஒன்று, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டாம் எழுத்துக்களை முறையே முதலில் வைத்து ஏனைய எழுத்துக்களையும் முறையானே மேற்கூறிய சக்கர அறைகளில் பொறிக்கச் சிகாரமே முதலாகத் தொடங்கி, முடிவாகவும் முடியும்.

குறிப்புரை :

`இதுவும் ஒருவகைத் திருவம்பலச் சக்கரமாம்` என்பது கருத்து. அச்சக்கரம் ஆமாறு:-
மேற்கூறிய சக்கரங்களைக் கொள்ளமாட்டாதவர் பொருட்டுக் கூறப்பட்டது. ஐந்தெழுத்தின் பேதங்கள் பலவும் இதில் அடங்கி யுள்ளன என்பது உட்கிடை. இரண்டாம் அடியில் வகர ஆகாரம் செய்யுள் நோக்கிக் குறுக்கலாயிற்று. இவ்வடியின் இறுதியை வேறு வகையாக ஓதுதல் கூடாமையறிக.
இதனால், மற்றும் ஒருவகைத் திருவம்பலச் சக்கரம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அடைவினில் ஐம்பதும் ஐயைந் தறையின்
அடையும் அறைஒன்றுக் கீரெழுத் தாக்கி
அடையும் அகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்தைம்பத் தொன்றும் அமர்ந்ததே.

பொழிப்புரை :

இதுமுதல் ஐந்து மந்திரங்களால் பெரியதொரு திருவம்பலச் சக்கரம் கூறுகின்றார். எனவே, இது பேரம்பலச் சக்கர மாம். பெருமை, எல்லா மந்திரங்களும், எல்லா எழுத்துக்களையும் கொண்டிருத்தல். இதனால், முன்னவை சிற்றம்பலச் சக்கரங்களாய் நிற்பனவாம். சிறுமை, சிலமந்திரங்களையே கொண்டிருத்தல்.
மேற் சொல்லிய வகையில் நெடுக்கில் ஐந்தும், குறுக்கில் ஐந்துமாக இருபத்தைந்து அறைகள் உள்ள சக்கரத்தில் மாதுரு காட்சரங்கள் (மூல எழுத்துக்கள்) ஐம்பதும் அடங்கி நிற்கும். அம் முறையில் உயிரெழுத்துப் பதினாறு, உடலெழுத்து முப்பத்தைந்து (வட மொழி எழுத்துக்கள்) ஆக ஐம்பத்தொன்றினையும் `அ, ஆ` முதலாக முறையே ஓர் அறைக்கு இரண்டாக வைத்துப் பொறித்துவர, ளகாரம் ஈறாக மேற்கூறியவாறு ஐம்பது எழுத்துக்களும் நிரம்பும். அதற்குமேல் ஐம்பத்தொன்றாவது எழுத்தாக நிற்பது க்ஷகாரம். அதனை எல்லா எழுத்திற்கும் பொதுவாகிய `ஹ` என்பதுடன் கீழ்வரிசை அறை ஐந்தில் நடு அறையின் கீழ் வெளியில் பொறித்துவிடல் வேண்டும்.

குறிப்புரை :

மூன்றாம் அடியில், ``அகாரம்`` என்றது ஹகாரத்தை யேயாம். அடைவு, நெடுங்கணக்குமுறை. `அமர்ந்தது` என, இடம் வினைமுதல்போலச் சொல்லப்பட்டது. `அமர்ந்தது சக்கரம்` எனச் சொல்லெச்சம் வருவித்துமுடிக்க.

பண் :

பாடல் எண் : 12

அமர்ந்த அரகர வாம்புற வட்டம்
அமர்ந்த அரிகரி யாம்அதனுள் வட்டம்
அமர்ந்த அசபையாம்அத னுள்வட்டம்
அமர்ந்த இரேகையும் ஆகின்ற சூலமே.

பொழிப்புரை :

சதுரத்தில் அமைந்த மேற்கூறிய சக்கரத்திற்கு வெளியே அதனை உள்ளடக்கி `புறம், நடு, உள்` என மூன்று வட்டங்களை வரைந்து, சதுர சக்கரத்தில் அறைகள் உண்டாதற் பொருட்டுக் கீறியுள்ள கீற்றுக்களை வெளியே நிற்கும் புற வட்டம் வரையில் நீட்டி, மேலும் வெற்றவெளியிலும் செல்ல நீட்டி, அக்கீற்றுக்களின் முனைகளைச் சூலவடிவாக ஆக்குதல் வேண்டும். பின்னர் வெற்ற வெளியை ஒட்டிநிற்கும் புறவட்டத்தில் உள்ள அறை களில் ஒவ்வொன்றிலும் `ஹர` என்பதையும், நடுவட்ட அறைகளில் `ஹரி` என்பதையும், சதுரத்தை அடுத்து நிற்கும் உள்வட்டத்தில் `ஹம்ஸம்` என்பதையும் பொறித்தல் வேண்டும்.

குறிப்புரை :

`ஹர` என்பதும், `ஹரி` என்பதும் தமிழ் முறையில் அடுக்கிக் கூறப்பட்டன. அடுக்குக்கள், பன்மைபற்றி வந்தன. அசபை யாவது, அம்ஸ மந்திரமாதல் வெளிப்படை. `ஆகின்ற` என்றது முற்று.

பண் :

பாடல் எண் : 13

சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்
சூலத் தலையினில் சூழூம்ஓங் காரத்தால்
சூலத் திடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்
தால்அப் பதிக்கும் அடைவது ஆமே.

பொழிப்புரை :

மேற்கூறிய சூலங்கள் ஒவ்வொன்றின் முனை யிலும் சத்தி பீசம் (ஹ்ரீம்) காணப்படும்; அங்ஙனம் காணப்படுதல் தன்னைச் சூழ நிற்கும் ஓங்காரத்துடனாம்.
இனி ஒரு சூலத்திற்கும், மற்றொரு சூலத்திற்கும் இடையே யுள்ள வெற்றிடங்கள் ஐந்திலும் இடத்திற்கு ஒன்றாக ஐந்தெழுத்துக்கள் பொறிக்கப்படும். இதுவும் மேற்கூறிய சக்கரத்தின் முறையாம்.

குறிப்புரை :

`இடைவெளி அஞ்செழுத்தால் தோற்றிடும்` என்க. ஆல் உருபு இரண்டும் உடனிகழ்ச்சிக்கண் வந்தன. அடைவது - அடையும் இடம். இடமாவது அவ் இடைவெளி என்க. ஐந்தெழுத்து இவை என்பது வருகின்ற மந்திரத்தில் அறியப்படும்.

பண் :

பாடல் எண் : 14

அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகார ஒகாரம தஞ்சாம்
அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம்
பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே.

பொழிப்புரை :

அகார, இகார, உகார, எகார, ஒகாரங்களே மேற் கூறிய அவ் ஐந்தெழுத்துக்களாம். அவ் வெழுத்துக்களையுடைய ஐந்து ஓங்காரங்களே புறவட்டத்திற்குமேல் மற்றொரு வட்டமாய் நிற்கும். இனி, அறைகளாய் நில்லாது சதுரத்தின் மேல் பொதுவாய் நிற்கும் இடைவெளிகளில் பஞ்சாக்கர பேதங்களுள் ஒன்று எழுதப்பட்டு விளங்கும்.

குறிப்புரை :

``அது`` என்றது, மேற்சொன்ன அஞ்செழுத்தைத் தொகுதி வகையாற் சுட்டிற்று. முன்னிரண்டடி சொற்பொருட் பின்வருநிலை.

பண் :

பாடல் எண் : 15

பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துட் சந்தியில்
நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.

பொழிப்புரை :

மேல் ``நம் பேர்`` என்றது சிவமூல மந்திரத்தை யாம். அதன் பேதங்களில் இறுதியானதாகிய சிகார வகாரங்கள் இணைந்துநிற்கும் மந்திரம், வளைந்து நிற்கும் வட்டங்கட்கு உள்ளே சதுரத்திற்கும் அவற்றிற்கும் இடையே உள்ள சந்தி அறைகளில் நிற்பதாம். இங்கு எடுத்துக்கொண்ட சக்கரத்தின் இயல்பு இவ்வாறாம்.

குறிப்புரை :

இதனுள், சதுரத்திற்கு மேல் உள்ள சந்தி அறை ஒவ் வொன்றிலும் `சிவ` என்பது பொறிக்கப்பட வேண்டும் என்பது கூறப்பட்டமை காண்க. ``சக்கரம் ... ... இயல்பிது வாமே` என்றது முடித்துக்கூறி முற்றுவித்தது. சோர்வு, பொதுவாய் நிற்றல். `சோர்வுற்ற சந்தி` என இயையும். இதனுள், எல்லா மந்திரங்களும், எல்லா மூல எழுத்துக்களும் அடங்கியுள்ளன என்பது கருத்து. வடமொழி நோக்கில் எழுத்துக்கள் மிகப் பலவாதல் பற்றி அவையும் அடங்குதற் பொருட்டு அறை ஒன்றில் இரண்டெழுத்துக்களை அமைக்குமாறு விதித்தார். எனவே, இதனைத் தமிழ் முறையில், மேல்வரிசையில் உள்ள ஐந்து அறைகளில் மட்டும் `அ, இ, உ, எ, ஒ` என்னும் ஐந்து குற்றெழுத்துக்களோடு அவற்றிற்கு இனமான ஆ, ஈ, முதலிய ஐந்து நெட்டெழுத்துக்களையும் சேர்த்து இரண்டிரண்டெழுத்தாக முறையே எழுத, எஞ்சி நிற்பவை இருபது அறைகளாம். அவற்றில் முதல் இரண்டு அறைகளில் `ஐ, ஔ` என்னும் இரு நெட்டெழுத்துக்களை யும், அவற்றின்பின் `க,ங` முதல் `ன` ஈறான பதினெட்டெழுத்துக் களையும் எழுத, இருபத்தைந்து அறைகளும் எழுத்துக்களால் நிரம்பி நிற்கும்; வடமொழி வகையில் அமைந்த சக்கரத்தில் `க்ஷகாரம்` எழுதப் பட்ட இடத்தில் `அஃகேனம்` என்பதை எழுதலாம். `ஓம், ஹ்ரீம், ஹர, ஹரி, ஹம்ஸ:, ஸோஹம், ‹ிவ`என்பவற்றை, `ஓம், க்ரீம், அர, அரி, அம்ச, சோகம், சிவ` என எழுதிக் கொள்ளலாம். அகரம் முதலிய ஐந்து குற்றெழுத்துக்களைத் தமிழில் எழுதுவதில் தடையொன்றும் இல்லை. ஆதலின், இச்சக்கரம் வடமொழி கூறுவார்க்கேயன்றித் தமிழ் கூறுவார்க்கும் உரியதாதல் பெறப்படுதலின், அதனை, இவ்வாற்றால் அறிந்து செய்து கொள்க.
வடமொழியில், `எ, ஒ` என்னும் குற்றெழுத்துக்கள் இல்லை; ஆயினும், அவை மந்திரங்கட்கு வேண்டப்படுகின்றன. அதனால், தமிழிலிருந்து அவை அவற்றில் கொள்ளப்படுகின்றன. வடவெழுத் துக்களில் பல தமிழில் இல்லையாயினும் மந்திரங்களைத் தமிழாகக் கூறுமிடத்தில் தமிழ் முறையிலே அவை சொல்லப்படலாம். அது குற்றமாகாது. `குற்றமாம்` எனின், இந்நாயனாரும், பிற அருளா ளர்களும் அவற்றைத் தமிழ் முறைப்படியே கூறியிருத்தல் குற்றமாய் விடும். அம்முறை செய்யுட்களிற் கொள்ளப்பட்டது எனின், செய் யுளில் குற்றம் ஆகாத ஒன்று வழக்கில் குற்றமாய்விடும் என்றல் ஏற்கத் தக்கதாகாது. நாயனார் தம்மை, இறைவன் தன்னைப் பலபடியாலும் தமிழால் போற்றும் முறையை அருளிச் செய்யவே மூலன் உடம்பில் இருக்கவைத்தான் எனப் பாயிரத்துட் கூறியிருத்தல் 1 பொருட்படுத்தி உணரத்தக்கது.
பஞ்சப் பிரம மந்திரத்தின் பீசங்களுள் ஈசானம், தற்புருடம் இரண்டற்கும் முறையே `ஒ, எ` என்னும் குறில்களே கொள்ளற்பாலன என்பது ஏனைய மூன்றன் பீசங்களையும் நோக்கினால் நன்கு தெரியவரும். ஆயினும், அங்கு நெடிலே கொள்ளப்படுகின்றன. `பிரம மந்திரத்திற்குக் குறில்களும், கலா மந்திரம், அங்க மந்திரங்கட்கு நெடில்களும் பீசங்களாகும்` என்பதே அம் மந்திரங்களைக் கூறிய நூற்குக் கருத்தாகலின், பிரம மந்திரங்கள் இரண்டற்கு நெடிலைக் கொள்ளுதல் ஏற்புடைத்தாகாமை அறிக.
இவ் ஐந்து மந்திரங்களாலும் பெரியதொரு திருவம்பலச் சக்கரத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

இயலும்இம் மந்திரம் எய்தும் வழியில்
செயலும் அறியத் தெளிவிக்கும் நாதன்
புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண்
முயலும் எழுத்துக்கு முன்னா யிருந்ததே.

பொழிப்புரை :

மேற்சொல்லிய சக்கரத்தில் உள்ள மந்திரங்கள் பொறிக்கப்படும் வழியையும், பொறித்து வழிபட வேண்டிய முறை களையும் அறிந்தால் அவ்வாறு அறிபவர்கட்கு இறைவன் அவர்களது உணர்வு தெளிவுபெறும்படி செய்வான். இனி, அம்மந்திரங்களில் ஒவ் வொன்றும் நிலம் முதலிய மா பூதங்களை வழிபடுவதற்கு அமைந்த வித்துக்களில் (பீசாக்கரங்களில்) ஒவ்வொன்றின் முன்னதாயிருக்கும். அதுவும் அவை எய்தும் வழிகளில் ஒன்றாகும்.

குறிப்புரை :

இதனுட் சிறப்பாகச் சொல்லியது, நிலம் முதலிய பூதங்கட்கு உரிய `ஹ்லாம், ஹ்வீம், ஹ்ரீம், ஹ்யைம், ஹ:` என்னும் வித்தெழுத்துக்கள் மேற்கூறிய சக்கரத்திலுள்ள `ஹம்ஸ:, ஹரி, ஹர, ஹ்ரீம், ‹ிவ` என்னும் மந்திரங்கட்கு முன்னே சேர்த்துச் சொல்லப் படும் என்பது. `இவ் வித்தெழுத்துக்கள் இம்முறையே நிவிர்த்தி முதலிய கலைகட்கும் உரியன. என்பது` சிவஞான சித்தியாரிலும் (சூ. 2 - 67, 68) சொல்லப்பட்டது. `இது பற்றியேமேலைச் சக்கரத்தில் சூலங் கட்கு இடையே அகரம் முதலிய ஐந்து குற்றெழுத்துக்களும் பொறிக்கப் பட்டன` என்பது கருத்து.
நிலம் முதலிய பூதங்களைச் செய்யுள்பற்றி முறை பிறழக் கூறினார். முயலுதல் - வழிபடுதல். இங்கு ``முன்`` என்றதை எழுத்திலக்கணத்துள் புணர்ச்சி விதிகளில் `முன்` என்பது போல இடமுன்னாகக் கொள்க.
இதனால், மேலைச் சக்கரத்திற்கு எய்தியதன்மேல் மற்றொரு செய்தி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

ஆறெட் டெழுத்தின்மேல் ஆறும் பதினாலும்
ஏறிட் டதன்மேலே விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாய நமஎன்னக்
கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கரத்தில் உள்ள ஐம்பத்தோர் எழுத்துக்களில் நாற்பத்தெட்டாம் எழுத்துடன் (`ஸ்` என்பதுடன்) ஆறாம் எழுத்தையும், (`உ` என்பதையும்) பதினான்காம் எழுத்தையும் (`ஔ` என்பதையும்) ஏறச்செய்து, (`ஸு` என்றும், `ஸௌ` என்றும் ஆக்கி,) அவற்றின் இறுதியில் முறையே விந்துவையும் நாதத்தையும் சேர்த்து ஒலிக்கப் பண்ணிப் பின்பு, `சிவாயநம` என்று உச்சரித்தால் மூன்று மலங்களும் அலறி ஓடிவிடும்.

குறிப்புரை :

`ஏற இட்டு, சீற இட்டு` என்பவற்றில் அகரங்கள் தொகுத்தலாயின. ``கூறிட்டு`` என்பது கூறிட என்பதன் மரூஉ. கூப்பிட்டு என்றது. இலக்கணை. இதனுட் கூறப்பட்டது, `திருவைந் தெழுத்தை, `ஓம் ஸும் ஸௌ: சிவாயநம` எனச் செபித்தல் மிகச் சிறந்ததாகும்` என்பதும் `அதன் பயன் வீடுபேறே` என்பதுமாம்.
இதனால், மேலெல்லாம் பலவகைப்படக் கூறிவந்த திருவைந் தெழுத்துச் செபத்திற்கு ஆவதொரு சிறப்புமுறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

அண்ணல் இருப்ப தவளக் கரத்துளே
பெண்ணினல் லாளும் பிரானக் கரத்துளே
எண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப்
புண்ணிய வாளர் பொருளறி வார்களே.

பொழிப்புரை :

சிவனும், சத்தியும் தம்முள் வேறல்லர். ஆதலால், அவருள் ஒருவர்க்கு உரிய பீசங்களிலும், மந்திரங்களிலும் மற் றொருவர் பொருந்தியே நிற்பர். என்றாலும் இருவரையும் வேறுபோல எண்ணி, இருதிறத்து மந்திரங்களையும் செபிக்கின்ற செயல் உடையவர்களே மெய்ப்பொருளை உணரப் பெறுவார்கள்.

குறிப்புரை :

`உண்மையில் இருவரும் வேறல்லராயினும் வழி பாட்டில் வேறுபோல நின்றே பயன் தருவர்; ஆதலின், அவ்வாறே வழி படல் வேண்டும்` என்பதாம். வழிபாட்டில் அவ்வாறு நிற்றல் வழிபடு வோரது இயல்புபற்றி என்க.
`உள்ளே` என்பவற்றுள் இரண்டாவதன் இறுதியில், `இருக்கும்` என்பது எஞ்சிநின்றது. `எனினும் வேறுபோல எண்ணி` என்க. இப்பொருட்கு, ``அக்கரம்`` என்பன ஒருமருங்கு ஆகு பெயராம். ``இருந்திட`` என்பது ``ஆளர்`` என்பதில் ஆளுதல் தொழிலோடு முடிந்தது.
இனி, இதற்கு மற்றோர் உரை:- சிவனது எழுத்தும், சக்தியின் எழுத்திற்கு இடையில் நிற்கும். அவ்வாறே, சக்தியின் எழுத்தும் சிவன் எழுத்திற்கு இடையில் நிற்கும். இந்நிலைமையை ஓர்ந்துணர்ந்து, இருவரது எழுத்துக்களும் இணைந்திருக்கச் செபிக்கும் செயல் உடையவர்களே மெய்ப்பொருளை உணரப் பெறுவார்கள்.
கு-ரை: இவ்வுரையாற் பெறப்படுவது, `சிவ` என்னும் மந்திரமே யாதலும், அதனைத் தொடர்பாக ஓத, சிவசத்தியரது எழுத்துக்கள் மேற்கூறியவாறு நிற்றலும் அறிந்துகொள்க. இப் பொருட்கு, ``அண்ணல், நல்லாள்`` என்பன ஆகுபெயர்கள். இவ் இரண்டனையும் இதற்கு உரையாகக் கொள்க.
இதனால், மேலைச் சக்கரத்துள், பொறிக்கத்தக்க மந்திரங்களுள் தலையாயதன் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந் தாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கரத்தில் சந்திகளில் உள்ள குற்றெழுத்துக்களில் முதலாவதாகிய அகாரத்தை வாங்கி அடியிலும், இகாரத்தைவாங்கி முடியிலும் வைத்து இடையில் `ஹர` என்னும் மந்திரத்தை வாங்கியிட்டு நோக்கினால் இலிங்கமாய்த் தோன்றும். ஆதலின் அவற்றை அம்முறைப்படி மூலாதாரம், இருதயம், புருவநடு என்பவற்றில் வைத்துத் தியானித்து மகாரத்துடன் கூட்டிப் பிராணா யாமத்துடன் செபித்தால், கூத்தப்பிரானது ஒளிவடிவு காட்சிப்படும்.

குறிப்புரை :

இங்குக் கூறிய முறையில் இலிங்க வடிவம் அமையுமாறு:-
இவற்றை மகாரத்துடன் கூட்டி செபிக்குமாறு, `அம் இம் ஹரோம்` என செபித்தலாம். `அம், இம்` என்பன அம்ச மந்திரம் போல வாயுப்பயிற்சியைத்தரும். ``தொம்`` என்பது நடனக் குறிப்பு.
இதனால், மேலைச் சக்கரத்துள் நின்ற சில எழுத்துக்கள் மந்திரம் என்பவற்றது சிறப்புணர்த்தும் முகத்தால் அவை தம்முட் கூடிநின்று பயன் விளைக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

அவ்வுண்டு சவ்வுண் டனைத்தும்அங் குள்ளது
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வார்இல்லை
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச்
சவ்வுண்டு சத்தி சதாசிவன் றானே.

பொழிப்புரை :

எங்கே அகாரமும், சகாரமும் உள்ளனவோ அங்கே அனைத்துப் பொருள்களும் உள்ளனவாம். இவ்வாறு, இந்த இரண் டெழுத்துக்களில் எல்லாப் பொருளும் அடங்கிநிற்கின்ற நுட்பத்தை அறிபவர் உலகில் இல்லை. அதனை அறியவல்லவர்க்குச் சத்தி வடி வாகிய சிவன் சகாரத்திலே உளனாய்த் தோன்றுவான்.

குறிப்புரை :

`அ, ச` என்பவை விந்துவோடு கூடியன என்பதும், அவ்வாறே, ஈற்றில் உள்ள `\\\\u2970?` என்பது நாதமாகிய விசர்க்கத்தோடு கூடியது என்பதும் கருத்துக்களாம். எனவே `அம்ச மந்திரத்தின் வழி சோகம்பாவனை செய்யச் சிவம் விளங்கும்` என்றதாயிற்று. `அம்ச மந்திரம் உயிர்ப்பு மந்திரம் ஆதலின், அஃது எல்லா மந்திரத்திற்கும் மூலமாம்; ஆகவே, அதனுள் அனைத்துப் பொருளும் அடங்குவன வாம்` என்றவாறு. பின்னர் ``அங்கு`` என வருதலால், முன்னர் `எங்கு` என்பது கொள்ளப்படும். கவ்வுண்டு நிற்றல் - அகப்பட்டு நிற்றல்.
இதனால், மேற்கூறியவற்றில் இரு மந்திரங்களின் சிறப்புக் கூறப்பட்டது. இம் மந்திரம் ஹௌம், ஸௌம்` என்னும் பீசங்களது சிறப்புணர்த்துதல் மேலும் நோக்குடையதாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 21

அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழுத் தாகிய அக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே அமர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

மேல், ``அதுவாம் அகார`` என்னும் மந்திரத்தில் (910) கூறப்பட்ட ஐந்தெழுத்து வழியாகவே சிவபிரான் வந்து அமர் கின்றான். அந்த ஐந்தெழுத்தினாலே அவனது பஞ்சாக்கர மந்திர எழுத் துக்களும் அமைகின்றன. ஆகவே, அவ் இருதிற எழுத்துக்களாலும் அமைகின்ற சக்கரங்களிலே அவன் தங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

`அக்கர சக்கரம் அஞ்செழுத்தாலே ஆகிய` என்க.
இதனால், மேலைச் சக்கரங்களில் உள்ள அகாரம் முதலிய வற்றின் சிறப்பும், திருவைந்தெழுத்தின் சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 22

கூத்தனைக் காணும் குறிபல பேசிடின்
கூத்தன் எழுத்தின் முதலெழுத் தோதினால்
கூத்தனொ டொன்றிடுங் கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணும் குறியது வாகுமே.

பொழிப்புரை :

கூத்தப்பெருமானைப் பருவடிவிற்காண நிற்கும் பொருள்கள் பலவாம். அவற்றுள் மந்திரம் சிறந்தது ஆதலின், அவற்றுள் தலையானதாகிய மந்திரத்தை முதலெழுத்தளவில் ஓதி னாலும் அப்பெருமானோடு ஒற்றித்து நிற்கும் உணர்வை மக்கள் பெறு வார்கள். ஆகவே, இதுகாறும் சக்கர வடிவில் மந்திரங்களைக் கூறி வந்ததன் குறிக்கோள் அப்பெருமானை அடைவிப்பதேயாம்.

குறிப்புரை :

``பேசிடில்`` என்பதை முதலில் வைத்து உரைக்க.
இதனால், மேல் பலபடக் கூறியதன் பயன் இது என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 23

அத்திசைக் குள்நின் றனலை எழுப்பிய
அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத் தோதினால்
அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை
அத்திசைக் குள்ளுற வாக்கினள் தானே.

பொழிப்புரை :

மேற்காட்டிய சக்கரங்களில் யாதானும் ஒன்றில் உணர்வை நிறுத்திப் பிராணாயாமத்தால் மூலாதாரத்தில் உள்ள அனலை ஓங்கி எழச் செய்து, சக்கரத்தில் உள்ள எழுத்துக்களில் நகாரத்தைச் செபித்தால், அச்சக்கரத்தில் மறைந்து நிற்கும் கூத்தப் பெருமானை அந்த நகாரத்திற்கு உரியவளாகிய திரோதன சக்தி அச்சக்கரத்திலே பொருந்தச் செய்வாள்.

குறிப்புரை :

திசை - பகுக்கப்பட்ட இடம். உறுதல் இங்கே உலகப் பயனைப் பெற்று மகிழ்தலாம். ஆகவே ``நின்ற``, என்பதும், போகியாய் நின்றதனையாதல் அறிக. `ஆக்கினன்` என்பது பாடம் ஆகாமை அறிந்துகொள்க. தான், திரோதான சக்தி.
இதுமுதல் நான்கு மந்திரங்களால், மேலை மந்திரத்துள் ஓதியவாறு ஒவ்வோர் எழுத்தே பயனளித்தலை வகுத்தோதப் புகுந்து, இதனால் நகாரத்தை ஓதுதலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேல்உற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதினால்
தானே அளித்ததோர் கல்ஒளி யாமே.

பொழிப்புரை :

தானாகவே முன் வந்து காக்கின்ற அருட் சத்தியின் எழுத்தாகிய வகாரத்தை ஓதினால், அவள் தானே முன்வந்து சிவ ஞானத்தை அளித்துப் பரமுத்தியை அடையச் செய்வாள். இனி, அவளாலே உபதேசிக்கப்பட்ட மல எழுத்தாகிய மகாரத்தை ஓதினால், அவ்வருட் சக்தியால் வழங்கப்பட்ட மாணிக்கமாகிய உயிர் மாசுநீங்கி ஒளியுடையதாய் விளங்கும்.

குறிப்புரை :

`குரு சிவமேயாதலின், தானே உபதேசித்த` என்றார். கல், உவம ஆகுபெயர். ஒளியுடையதனை ``ஒளி`` என்றார்.
இதனால், வகார மகாரங்களை ஓதுதலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

கல்லொளி யேஎன நின்ற வடதிசைக்
கல்லொளி யேஎன நின்றநல் லிந்திரன்
கல்லொளி யேஎன நின்ற சிகாரத்தைக்
கல்லொளி யேஎனக் காட்டிநின் றானே.

பொழிப்புரை :

வெள்ளியேயானும் மாணிக்கத்தைப் போலச் சிறப் புற்று நிற்கின்ற, வடதிசைக்கண் உள்ள மலை ஆகிய கயிலாயத்தின் கண் தழல்போன்ற உருவினையுடையவனாய் உள்ள சிவபெரு மான், திருவைந்தெழுத்தில் மாணிக்கம் போலச் சிறந்து நிற்பதாகிய சிகாரத் தையே தானாக உணரும்படி, மாணிக்கமாகக் காட்டி நிற்கின்றான்.

குறிப்புரை :

இந்திரன் - தலைவன். பிறதலைவரினின்றும் பிரித்தற்கு ``நல்லிந்திரன்`` என்றார். இனி, `இந்தீரன்` என்பது குறுகியது எனக் கொண்டு, `சந்திரனை அணிந்து காத்த அருளுடையவன்` என உரைத்த லுமாம். ``மாணிக்கமாகக் காட்டிநின்றான்`` என்றதனால், `அதனின் மிக்கது பிறிதில்லை` என்பது பெறப்பட்டது. படவே, `அதனால் சிவானந்த விளைவு உண்டாகும்` என்றவாறாயிற்று. இரண்டாம் அடியில் உள்ள ``ஒளி`` ஆகுபெயர். ஏனைய அடிகளில், `ஒளிக்கல்` என்பது பின் முன்னாக நின்றது.
இதனால், சிகாரத்தை ஓதுதலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்
தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவ னாமே.

பொழிப்புரை :

ஆன்மா சீவ நிலையினின்றும் ஏழு மடங்கு உயர்ந்து தண்ணிய சந்திரனைப் போல விளங்கி நிற்றலும், நூலறிவை உடைய தாதலும், நல்லியல்பைப் பெறுதலும் தனது எழுத்தை ஓதுவதனாலாம். தனது எழுத்தாவது ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ள `ய` என்பதாம்.

குறிப்புரை :

``தான்`` நான்கும் ஓதுபவனைக் குறித்தன. குணம் - மடங்கு. ஏழு, மிகுதி குறித்து நின்றது. ``தண்சுடராய் நிற்கும்`` என்றது வாலிதாய் (தூய்மை பெற்று) நிற்கும் என்றதாம். வேதத்தால் பெறும் அறிவை ``வேதம்`` என்றார். நல்லியல்பு, சீவத்தன்மை நீங்குதல். மறை - மந்திர எழுத்து. யவன் - யகரத்தை உடையவன். `தானே யவன் ஆம்` என்க. `நிற்கும், நிற்கும்` என்று ஓதினாராயினும் பின்னர் வரும் `ஆவதும்` என்பதனோடு இயைய `நிற்பதும், நிற்பதும்` என ஓதுதலே கருத்து என்க. `நிற்பது, ஆவது` என்பன தொழிற் பெயர்கள்.
இதனால், யகாரத்தை ஓதுதலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

மறையவன் ஆக மதித்த பிறவி
மறையவன் ஆக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத் துள்நிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத் தாம்அவர் தாமே.

பொழிப்புரை :

ஆன்மா மந்திர ஆன்மாவாய் விளங்கிச் சிவமாக வேண்டியே சிவபிரானால் கொடுக்கப்பட்டது மக்கட்பிறவி. ஆகவே, அதில் நிற்கும் ஆன்மா அங்ஙனமே மந்திர ஆன்மாவாய் விளங் குதலை அறிந்து அப்பெருமான் மகிழ்வதைக் காணக்கூடியவர்கள், எல்லா மந்திர வடிவினனுமாயினும் சிறப்பாகத் திருவைந்தெழுத்துள் மறைந்து நிற்கும் கள்வனாகிய அப்பெருமானது திருவைந்தெழுத்தே தாமாய் நிற்பவரே; பிறரல்லர்.

குறிப்புரை :

`ஆகையால், அப்பயனைப் பெற விரும்புவோர் அம்மந்திரத்தையே செபிக்க` என்பது குறிப்பெச்சம். சிவபெருமான் பின்னர்க் குறிக்கப்படுதலின், ``மதித்த`` என்றும், ``மதித்திட`` என்றுமே கூறிப்போயினார். மதித்தல், இங்கு அதன் காரியம் தோன்ற நின்றது. பிறவியைப் பெற்றவனை, ``பிறவி`` என்றார், `அவன் ஒரு தெய்வப் பிறவி, அதிசயப்பிறவி` என்பன போல. மூன்றாம் அடியில் ``மறையவன்`` என்பதன்பின், `ஆயினும்` என்பது வருவிக்க. நான்காம் அடியில் அச்சொல்லின்பின் ஆறாவது விரிக்க.
இதனால், மேற்கூறிய ஐந்து எழுத்துக்களின் சிறப்பும் தொகுத்துக் கூறி, அவை ஒருங்கு தொடர்ந்து நின்ற மந்திரத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

ஆகின்ற பாதமும் அந்நவ்வாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகரரமாம்
ஆகின்ற சீஇரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற அச்சுடர் அவ்வியவ் வாமே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்தில் நகாரம் கூத்தப் பெரு மானுக்குத் திருவடியாயும், மகாரம் வயிறாயும், சிகாரம் தோள் களாயும், வகாரம் முகமாயும், யகாரம் சென்னியாயும் நிற்கும்.

குறிப்புரை :

இவ்வாறே உண்மை விளக்க நூலிலும் கூறப்படுதல் காண்க. (வெண்பா - 33). ஆதல் - மந்திரமேயாதல். மூன்றாம் அடி யிலும், `ஆகின்ற இருதோள், ஆகின்ற வாய்` எனக் கூட்டிக் கொள்க. `இரு தோள் வாய் சீ வவ்வாகக் கண்டபின்` என, ஆக்கம் வருவிக்க. `சி` என்பது நீட்டல் பெற்றது. சுடர் - ஒளி. அஃது ஆகுபெயராய் அதனையுடைய தலைக்கு ஆயிற்று. ஒளி சடையினால் உளதாவது. `அவ்வியல்பாமே` என்பது, பாடம் அன்றாதல் அறிக. அடுத்த மந்திரம், `அவ்வியல்பு` எனத் தொடங்குவதாயினும், இதனுள், ``அவ் விய`` என்பதே அதற்கு அமையும். மேலை மந்திரத்துள் ``ஆம்`` என்ற அதனைக் கொண்டே இம்மந்திரம் ``ஆகின்ற`` எனத் தொடங்கிற்று. `அவ்ய` என்பது இடையே இகரம் விரித்தல் பெறநின்றது.
திருவைந்தெழுத்து இம்முறையால் இறைவனுக்குத் திருமேனி யாதல் கூறவே, அவனை வழிபடுபவரும் தம் உடல் உறுப்புக்களில் அதனை இம்முறையில் நியாசம், திருநீற்றுத் திரிபுண்டரம் இடல் முதலியவற்றால் பொருந்தக் கொள்ளல் முறையாதலும் பெறப்பட்டது.
இதனால், மேற்கூறிய மந்திரம் இறைவனுக்குத் திரு மேனியாய் நிற்கும் முறை வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

அவ்வியல் பாய இருமூன் றெழுத்தையும்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடின்
பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு தனக்குத் திருமேனியாய் அமைகின்ற, பிரணவத்தோடுகூடி ஆறெழுத்தாய் நிற்கின்ற நகாரம் முதலிய ஐந்தெழுத்தினாலும் ஆகிய மந்திரத்தையே சிவபெருமான் தனக்கு நேர் வாயிலாகக் கொண்டு நிற்கின்றான். ஆகையால், அவனை அந்தப் பிரணவத்தின் காரியங்களாகிய ஏனை எழுத்துக் களையும் அவனது ஒளிக்கதிர்களாகப் பொருந்தக் கொண்டு தியானித்தால், அவன் தனது ஆனந்தக் கடலாய் அளவின்றி நிற்பான்.

குறிப்புரை :

பிரணவம் இயல்பாகவே எல்லாமந்திரத்தின் முன்னும் நிற்குமாதலின், அதனை, ``இருமூன் றெழுத்தையும்`` என அனுவாத முகத்தாற் கூறினார். ``செவ்வியல்பாக`` என்றதன்பின், `கொண்டு` என ஒரு சொல் வருவிக்க. `ஓ` என்பது தொடை நோக்கிக் குறுகி நின்றது. அதனது காரியத்தை ``இயல்பு`` என்றார், பரிணாமமாகாது, விருத்தி யாதல் பற்றி. `ஒளியாக உறநோக்கிடில்` என மாற்றிக்கொள்க. `அனு வாதத்தாற் கூறிய ஓங்காரம் ஒளிப் பிழம்பாகிய திருவாசியாயும், அதனது விருத்தியாகிய அகாரம் முதலிய எல்லா எழுத்துக்களும், அத்திருவாசியின் மேல் விளங்கும் சுடர்களாயும் நிற்கும் என்பது மூன்றாம் அடியாற் குறித்தவாறு.
``ஓங்கார மேநல் திருவாசி; ஆங்கதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம்``
என்னும் உண்மை விளக்க வெண்பாவை (35) நோக்குக. `பவ்வம்` என்பது கடைக்குறைந்து நின்றது.
இதனால், மேலைச் சக்கரத்தில் கூறிய ஓங்காரமும், பிற எழுத்துக்களும் கூத்தப்பெருமானுக்குத் துணை உறுப்புக்களாய் (உபாங்கங்களாய்) நின்று பயன் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரும் மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓம்என் றெழுப்பே.

பொழிப்புரை :

மந்திரம் வகையாலும், விரியாலும், பலவாய்ப் பரந்து கிடப்பது. அதனால், அவை பலதிறத்து எல்லா உயிர்கட்கும் அவை விரும்பிய பயனைத்தரும் தன்மையன ஆதலின், உனக்கு உன் குரு வினது அருளால் மந்திரம் கிடைக்குமாயின் அதனைப் பெற்று அதன் துணையால் உன்னைச் சூழ்ந்துள்ள வினையாகிய பகை தொலையும் படி ஓட்டு. ஓட்டுமாறு எங்ஙனம் எனின், அதற்குரிய வலிமையை உனக்குத் தருகின்ற மந்திரத்தை முதற்கண் பிரணவத்தை வைத்து உச்சரி.

குறிப்புரை :

பல திறமாவன, பிறப்புவகைகள். மூன்றாம் அடியில் உள்ள `மந்திரம்` என்பதை மேலே, ``வாய்த்திட`` என்பதற்கு முன்னே கூட்டுக. முதல் மூன்றடிகள் சொற்பொருட் பின்வருநிலை. மக்கள் உடம்பில் நின்ற உயிர் சில தீவினை காரணமாகக் கீழ்ப்பிறப்பை எடுக்குமாயின், அப்பிறப்பிலே அவை எவ்வகையாலேனும் மந்திரங் களை அறிந்து எண்ணிப் பயன்பெறும் என்பது உண்மை நூல் துணி பாகலின், ``பல்லுயிர்க்கெல்லாம் வரந்தரும்`` என்றார். அஃறிணை உயிர்கள் பல இறைவனை வழிபட்டுப் பயன்பெற்றமை புராணங் களில் பெரும்பான் மையது. இனி, `இங்கு உயிர்` என்றது, `மக்கள் உயிரையே` எனக் கொள் ளினும் கொள்க. `மந்திரங்கள் மேற்கூறிய ஆற்றலை உடையதாதல் அவற்றை இறைவன் தனக்கு வாயிலாகக் கொள்ளுதலாலே என்பது மேலை மந்திரத்தால் அறியக்கிடந்தது.
இதனால், இறைவன் உயிர்கட்குத் தனது அருளை வழங்கு தற்கு வாயிலாக மந்திரங்களை அமைத்துள்ள சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

ஓமென் றெழுப்பித்தம் உத்தம நந்தியை
நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென் றெழுப்பிஅவ் வாரறி வார்களே
மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.

பொழிப்புரை :

மந்திரங்கட்கெல்லாம் தலையானதாகிய சிவமூல மந்திரமாம் திருவைந்தெழுத்தை முதற்கண் பிரணவமும், நகார மகா ரங்களும் முற்பட்டு நிற்க ஓதிப் பின்னர், அவ் ஐந்தெழுத்தில் நடுவண் விளக்குப்போல எழுச்சிபெற்று விளங்குகின்ற சிகாரம் முதலிய மூன் றெழுத்துக்களையும் அம்ச மந்திரத்தாற் செய்யப்படும் பிராணா யாமத்தால் இதய வெளியில் உள்ள ஒளி விளக்கமுறும்படி செய்து, தியானிக்கப்படும் பொருளை மேற்கூறிய சிகாரம் முதலிய மூன் றெழுத்தின் முறைமையதாகவே அறிந்து நிற்பவர்கள், திருவம் பலத்தை உள்ளவாறு தரிசித்து மகிழ்ந்திருப்பார்கள்.

குறிப்புரை :

``நந்தி`` என்பது ஆகுபெயராய் அவனது மந்திரத்தை உணர்த்திற்று. ``உத்தமம்`` என்பது ஆகுபெயர்ப் பொருளைச் சிறப் பித்து நின்றமையால், ``உத்தம நந்தி`` என்பது இருபெயரொட்டாகு பெயர். இத் தொடரை முதலில் வைத்து உரைக்க. `நம என்று` என்பது ``நாம என்று`` எனவும் `அம் என்று`, என்பது ``ஆம்`` எனவும் தொடைக் கேற்ப வேண்டுந்திரிபு பெற்று நின்றன. ``நடுவெழு தீபம்`` என்பது இரட்டுற மொழிதலாய், சிகாரம் முதலிய மூன்றெழுத்துக்களையும், இருதய ஒளி யையும் குறித்து நின்றது. மூன்றெழுத்து நின்ற முறைமை யாவது, உயிர் பாசத்தை விடுத்து அருளைச் சார்ந்து அதுவழியாகச் சிவத்திற்கு அடிமையாதலாம். இவ் எழுத்துக்கள் இருதயத்தில் வைத்து எண்ணவும், புருவ நடுவில் வைத்துத் தியானிக்கவும் படும் என்க. இவை ``தத்துவமசி`` என்னும் வேதாந்த மகாவாக்கியப் பொருள், ``சிவத்துவமசி`` என்னும் சித்தாந்த மகாவாக்கியப் பொருள் என்ப வற்றையும் தந்து நிற்குமாறு அறிந்துகொள்க. `உண்மைத் திருவம் பலம்` என்றதற்கு ``மாமன்று`` என்றார். இது இதய வெளியும், புருவ நடுவுமாகும்.
``சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்பலத்தும் என்
சிந்தையுள்ளும் உறைவான்`` ( திருக்கோவையார் - 20)
எனப் புறத்தும், அகத்தும் விளங்கும் மன்றுகளைக் குறிப்பால் அருளிச் செய்தவாறு அறிக. இதனால், மேல் பலவாய்ப் பரந்து நிற்பவனவாகக் கூறிய மந்திரங்களுள், சிறந்து நிற்பதும் மிகச் சிறந்து நிற்பதும் இவை எனக்கூறி, அவற்றை ஓதுமாறும் அதனால் பெறும் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 32

ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத் தொருவெழுத் துள்நிற்கப்
பாகொன்றி நிற்கும் பராபரன் றானே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கரத்தில் பாகுபட்டு நின்ற அறை களில் வழங்கப்படுகின்ற ஐம்பத்தோரெழுத்துக்களின் இடையே திருவைந்தெழுத்து நிற்குமாயின், கூத்தப்பெருமான் அந்தச் சக்கரத்தில் பாகுபோல இனிதாய ஆனந்த நடனத்தைப் பொருத்தி நிற்பன்.

குறிப்புரை :

``எழுத்தைந்தும்`` என்பதை முதலிற்கொண்டு உரைக்க. ``வர்த்திக்கும், ஆகின்ற`` என்னும் பெயரெச்சங்கள், ``ஐம்பத்தொரு எழுத்து`` என்னும் தொகைநிலைப் பெயர் கொண்டு முடிந்தது. இறுதி யிலுள்ள பாகு, உவம ஆகுபெயர். `ஐந்தெழுத்து நிற்க ஆனந்த நடனத்தைப் பொருந்தி நிற்பவன்` எனவே `அவை நில்லாதபொழுது அருள் நடனமாத்திரையே பொருந்தி நிற்பான்` என்பது போந்தது. பதங்கள் - இடங்கள்; அறைகள். `ஐம்பத்தோரெழுத்து` என நிற்கற் பாலது, செய்யுள் நோக்கி, `ஐம்பத்தொரு எழுத்து` எனத் திரிந்து நின்றது.
இதனால், மேற்கூறிய சக்கரம் சிறந்து நின்று பயன் தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப்
பரமா யநவசிம பார்க்கில் மவயநசி
பரமா யசியநம வாபரத் தோதில்
பரமாய வாசி மயநவாய் நின்றதே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்து மேற்கூறியவாறு ஐம்பத் தோரெழுத்துக்களின் இடை நிற்குங்கால் நெடுக்காயினும் குறுக் காயினும் நடுவரிசை யுள்ளே நிற்கும். ஆகவே, அதன்பொருட்டு ஏனைய இடங்களில் எழுத்துக்கள் நடுவரிசைக்கு மேல் வரிசையில் (2) `ய ந வா சி ம`` என்றும், அதற்கு மேல் வரிசையில் (3) `ம வா ய ந சி` என்றும், அடி வரிசையில் (4) `சி ய ந ம வா` என்றும் அதற்கு மேல் வரிசையில் (5) `வா சி ம ய ந` என்றும், மாறி நிற்பனவாம்.

குறிப்புரை :

அஃது ஆமாறு:-
இதனால், நடுவரிசையை இடமிருந்து வலமாகவும், கீழிருந்து மேலாகவும் ஓதத் திருவைந்தெழுத்து நகாரம் முதலாக அமைதலும், சிகாரங்கள் முக்கோணக் கூட்டிரேகையில் முழுதும் நின்று சிகாரம் முதலாக ஏற்ற பெற்றியால் ஓதிக் கொள்ளுமாறு அமைதலும் காண்க. மேற்கூறிய சக்கரத்தில் வடமொழி எழுத்துக்களோடு இவற்றை எழுது வதாயின் இரண்டெழுத்திற்கும் இடைநிற்கவும், தமிழ் எழுத்துக் களோடு எழுதுவதாயின் அவ் எழுத்திற்கு மேல் நிற்கவும் எழுதுதல் வேண்டும் என்க. `மிகவும் உள்ளிடம்` என்பார் ``உள்நடு`` என்றார்.
பரம் - மேன்மை, மேல். நடுவரிசை தொடங்கி மேன்மேற் செல்லுங்கால் அடிவரிசைக்குத் திரும்பிப் பின் நடுவரிசையை அணுக வருதல் அறிக. வகார ஆகாரத்தைச் செய்யுள் நோக்கிச் சில இடங்களில் வகரமாக ஓதினார்.
இதனால், மேற்கூறிய பேரம்பலச் சக்கரத்திற்கு மேலை மந்திரத்திற் கூறிய ஒரு சிறப்பு முறை விளக்கிக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.

பொழிப்புரை :

மேலை மந்திரத்திற் சொல்லப்பட்டவாறு பொறிக்கப் பட்டபின் செங்குத்தாய் நின்ற வரிசைகளில் முதல் வரிசையிலுள்ள எழுத்துக்களை மேல்நின்று நோக்கினால், `ம ய ந வா சி` என வரும். அவை முறையே, `நிலம், நீர், தீ, வளி, வான்` என்னும் பூதங்களாய் நிற்கும். ஆதலால், அவற்றை முதலாகக் கொண்டு வலம் நோக்கிச் செல்லும் தொடராகிய மந்திரங்களும் அப்பூதங்கள் ஆதலை யுடையவாம். அதனால், அவ்வெழுத்துக்களும், தொடர் களும் அப்பூதங்கட்கு உரிய `பொன்மை, வெண்மை, செம்மை, கருமை, புகைமை` என்னும் நிறங்களாயும் நிற்பனவாம். அவை இவ்வாறு நிற்றலால், அவை அடங்கி நின்ற சக்கரத்தைக் கூத்தப்பெருமான் தனக்கு இடமாகக் கொண்டு விளங்குகின்றான்.

குறிப்புரை :

முதலிரண்டடிகளில், `ஆம்` என்பன எஞ்சி நின்றன. மூன்றாம் அடியில், ``நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்`` என்பது, முன்னும் பின்னும் உள்ள அடிகளுடன் சென்று இயையும், நேர்தர நிற்றல் - செம்மையுண்டாக நிற்றல். நின்ற எழுத்துக்கள்நேர்தர நின்றிடில்`` என்றதனால், முதல் எழுத்துக்கள் மட்டிலே முதன்மை யாகக் கொண்டு, பின்னர் அவற்றைத் தொடர்ந்த வல எழுத்துக்கள் அவற்றின் வழியவாக்கப்படும். உம்மை, `பிறவிடத்து நிற்றலேயன்றி` என எச்சம். பொது நெறிபற்றிப் பூதங்களையே கூறினாராயினும், சிவநெறியின் வழி அவை பஞ்ச கலைகளாயும் நிற்கும் என்க.
இதனால், திருவைந்தெழுத்தை மேலைமந்திரத்திற் கூறிய வாறு பொறித்தால் உண்டாகும் சிறப்புக் கூறப்பட்டது

பண் :

பாடல் எண் : 35

நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வா நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடுங் கொள்கையன் ஆமே.

பொழிப்புரை :

மேற்கூறிய பேரம்பலச் சக்கரம் மேலை மந்திரத்திற் கூறியவாறு அமைந்த பெருமையுடையது ஆகலின், அதன்கண் எல்லா உலகங்களும் அடங்குவனவாம். அதனால், அந்தச் சக்கரத்தையே திருவம்பலமாகக் கொண்டு விளங்கும், சிதாகாய வெளியனாகிய சிவபெருமானாகிய பசுவை, அந்தச் சக்கரத்தையே கன்றாகக் கொண்டு , அவனது திருவருளாகிய பாலைத்தருமாறு எம் ஆசிரியர் நந்தி பெருமான் கறந்து கொண்டார். அதன் பயனாகக் குன்றின் உச்சியில் ஏறி நின்றவர் போன்ற உயர்வை அவர் பெற்றவரானார்.

குறிப்புரை :

உலகரால் அறியவராத நுண்பொருளாய் இருத்தல் பற்றிச் சிதாகாசத்தை, ``மாய நாடு`` என்றும், ஆயினும் அது மாயம் (வஞ்சனை) உடையதன்று என்றற்கு, ``நன்னாடு`` என்றும் கூறினார். நடு இரண்டடிகள் ஏகதேச உருவகம். மெய்யுணர்வின் மிக்காரை, ``குன்றேறி நின்றார்``1 என்பவாகலின், ``குன்றிடை நின்றிடுங் கொள்கையன்`` என்றார். ``ஆம்`` என்றது. ``முந்நிலைக் காலம் தோன்றும் இயற்கை மெய்நிலைச் சொல்லாய்`` 2 நின்றது. ஈற்றடி, நந்தி பெருமான் கயிலையைக்காக்கும் அதிகாரம் பெற்று நின்றதையும் உட்கிடையாகக் கொண்டது. நந்தி பெருமான் பயன்பெற்றவாற்றைக் கூறி, `பிறரையும் அவ்வாறு பெறுக` என அருளிச் செய்தவாறு.
இதனால், மேற்கூறிய சக்கரம் பயன்தருதற்கு அனுபவம் காட்டப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து
கொண்டஇச் சக்கரம் கூத்தன் எழுத்தைந்தும்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.

பொழிப்புரை :

கூத்தப்பெருமானது பஞ்சாக்கர பேதங்கள் அனைத்தும் இச்சக்கரத்தை இடமாகக் கொண்டன. அதனால், இதன்கண் அமைந்த நலங்கள் இன்னும்பல. அவை அத்திருவைந் தெழுத்தால் குறிக்கப்படும், `சிவன், அருள், ஆன்மா, திரோதாயி, ஆணவம்` என்பனவும், அவற்றுள் சிவன் ஆன்மாக்களின் பொருட்டுச் செய்யும் அளவிறந்த கூத்துக்களும், பிறவுமாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை, `கூத்தன் எழுத்தைந்தும் இச்சக்கரம் கொண்ட` என மாற்றி, முதற்கண் வைத்து உரைக்க. ஏனை இடங்களில் ``கொண்ட`` என்பது, செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப் பட்டதாம். குணம் - நன்மை. ``பல`` என்றதை எடுத்தல் ஓசையாற் கூறி, இப்பொருள் காண்க. குறி - குறிக்கோள்; குறிக்கப்பட்ட பொருள். நின்ற - நின்றன. ``பல, ஐந்து`` என்பவற்றின்பின் `உள்ளன` என்பது எஞ்சி நின்றது. கூத்து, `ஞான நடனம், ஊன நடனம்` என இருவகைப் பட்டு, அவை ஒவ்வொன்றும் ஐவைந்தாதலேயன்றி, `தூல நடனம், சூக்கும நடனம், பர நடனம்` என்று ஆதலும், அனைத்து நடனங்களும் சிறப்புவகையால் தத்துவந்தோறும், ஆன்மாக்கள்தோறும் வேறு வேறாதலும் ஆகிய பலவும் அடங்கப் பொதுமையில் ``கூத்து`` என்றார்.
இதனால், மேற்கூறிய சக்கரத்தது சிறப்பின் மிகுதி கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 37

வெளியில் இரேகை இரேகையில் அத்தலைச்
சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி
நெளிதரு கால்கொம்பு நேர்விந்து நாதம்
தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே.

பொழிப்புரை :

வெறுவெளியாய் யாதும் எழுதப் படாத பரப்பு ஒன்றில் ஒரு நேர்க்கோடு இழுத்து, அக்கோட்டின் தலையில் ஒரு சுழியை இட்டால் அஃது உகாரவடிவாய்த் தோன்றும். அதில் `கொம்பு` எனப்படுகின்ற சுழியும், நேர்க்கோடும் முறையே விந்துவிற்கும், நாதத்திற்கும் உரிய வரிவடிவமாகும். இனி அவையே `தீ, காற்று` என்னும் பூதத்திற்கு உரிய குறிகளாயும் நிற்கும். இவற்றை இவ்வாறு தெளிவதே சிவ மந்திரத்தை உணர்தலாகும்.

குறிப்புரை :

இதில் சொல்லப்பட்ட வடிவம் - ``ƒ`` - என்பது. இதனைப் `பிள்ளையார் சுழி` என்பர். இதனைச் சுழி கீழாக ஆக்கினால் - `` `` - இவ்வாறாம். இதனையே ஏழாந் தந்திரத்துள் `ஆன்மலிங்கம்` என்னும் அதிகாரத்தில்,
``விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்;
விந்துவதே பீடம்; நாதம் இலிங்கமாம்``.
எனக் கூறுவார். பூதங்களுள் தேயு (தீ) இலிங்கவடிவாய் நிற்றலாலும், அது கீழே சுழித்துக் கொண்டு மேலே கொழுந்துவிட்டு ஓங்குவது ஆதலாலும் சுழியை, `தீ` என்றும், செங்குத்து நேர்க்கோட்டினை, `காற்று` என்றும் கூறினார். தீ கொழுந்து விட்டு எரிதல் காற்றினால் என்பது வெளிப்படை. விந்து சத்தியும், நாதம் சிவமும் ஆதலின், இச்சுழியை இவ்வாறு தெளியும் உணர்வே சிகார வகாரங்கள் கூடிய சிவ மந்திரத்தைத் தெளிதலாய் முடியும் என்றார் என்க. எனவே, `மேற்கூறிய சக்கரங்களை யாதானும் ஒரு பரப்பில் பொறிப்பதற்கு முன்னே. மேலிடத்தில் இச்சுழியைப் பொறிக்க` என்பது குறிப்பு ஆயிற்று. `சுழி` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. சுளியில் - சுழித்தால் - `வெளியில் இரேகை உளதாக, இரேகையில் அத்தலைச் சுளியில்` என்க. அத்தலை - அதன் தலை. சுற்றிய - சுழித்தெழுந்த` ``கொம்பு, நேர்` என்பன, ``வன்னி, நேர்`` என்பவற்றுடன். எதிர் நிரல் நிறையாயும் ``விந்து, நாதம்`` `என்பவற்றுடன் முறை நிரல்நிறையாயும் இயையும். நெளிதரல் - நில்லாது இயங்குதல். பிரகாரம் - வகை. இதில் ``பிரகாரம்`` என்ற வடசொல்லின் இகரம் அலகு பெறாது நின்றது.
ஓங்காரம் உச்சரிக்கப்படுவதாய் நாதத்தை உணர்த்தி, மந்திரங்கட்கெல்லாம் முன்னிற்கும். `நாதம்` என்பதனானே அதனை, `ஊமை யெழுத்து` என்பர். எனினும், இங்குக் கூறிய இவ்வடிவம் யாதோர் உச்சரிப்பையும் உடையதாகாமையால், உண்மை ஊமை எழுத்தாய், விந்து நாதங்களாய் நிற்கும். அதனானே, எவற்றையேனும் வரிவடிவு எழுத்தால் எழுதத் தொடங்குமுன் முதலில் இவ்வடிவினை எழுதுதல் மரபாயிற்று. `அம்மரபினை இங்குக் கூறிய சக்கரங்கட்கும் கொள்க` என்பது இதனால் உணர்த்தினார். எனவே, இம்மந்திரம் மேற்கூறிய சக்கரங்களைப் புறத்தில் புலப்பட அமைக்கும்பொழுது முதற்கண் செயற்பாலது ஒரு மரபு செயலினைக் கூறியதாயிற்று.

பண் :

பாடல் எண் : 38

அகார உகார சிகாரம் நடுவா
வகாரமொ டாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவஞ்சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்துநின் றானே.

பொழிப்புரை :

சிகாரம் அகார உகாரங்களின் நடுவே நிற்கக் கொண்டு செய்கின்ற பிராணாயாமத்தில் கும்பிக்கப்பட்ட பிராணவாயு வோடே ஆறு ஆதாரங்களில் பொருந்தி, `சிவ என்னும் மந்திரத்தை ஓதிச் சிவனைத் தியானித்தால், பிரணவ முதல்வனாகிய அப்பெரு மான் மகிழ்ந்து சக்கரங்களில் நின்று அருள் செய்வான்.

குறிப்புரை :

`சிகாரம் அகார உகார நடுவாக` என்க, இது, `சிம்` என்பது நடுவேவர, முன்னே `அம்` என்பதையும், பின்னே ``உம்`` என்பதனையும் ஓதல் வேண்டும் என்றதாம். அஃதாவது, பிராணனை ``அம்`` என்று பூரித்து, `உம்` என்று இரேசித்து, `சிம்` என்றுகும்பித்தல் வேண்டும் என்றவாறு. இதுவும் ஒருவகைப் பிராணாயாம முறை. ``வகாரமோடு சிகாரமுடனே`` என எண்ணிடைச்சொல் எண்ணப் படும் பெயர் தோறும் வந்தது. அதனால், அப்பெயர்களை ஒருங்கு இணைய வைத்து உரைக்க. `ஓகாரம்` என்பது குறுக்கலாயிற்று.
இதனால், மேற்கூறிய சக்கரங்களின் வழிபாட்டிற்குரிய, சிறந்ததொரு செபம், அதற்குரிய பிராணாயாமத்துடன் சொல்லப் பட்டது.

பண் :

பாடல் எண் : 39

அற்ற இடத்தே அகாரம தாவது
உற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்தபொன் போலும் குளிகையே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு அகாரம் முதலியவற்றால் ஆயாமம் (தடுத்தல்) செய்யப்பட்ட பிராண வாயு நிராதாரமாகிய உச்சியை அடைந்தபொழுது, அடைதற்குரிய பொருளாகிய சிவனைக் காணலாம். அப்பொழுது முன்பெல்லாம் மறக்கருணை உடையனாய் இருந்த சிவன் அந்நிலை நீங்கி அறக்கருணை உடையனாய், வளவிய ஒளியாயும், உண்மையாயும் நின்று, செம்பைக் களிம்பு நீக்கிப் பொன்னாகச் செய்யும் குளிகைத் தன்மையைப் பொருந்தி நிற்பன்.

குறிப்புரை :

அற்ற இடம் - `ஆதாரம்` எனப்பட்டவைகளைக் கடந்த இடம். ``அகாரம்`` என்றது உபலக்கணம். `அகாரமதனால்` என உருபு விரித்துக் கொள்க. ஆவது - உண்டாவது. `அகாரமதனால் ஆவது அற்ற இடத்தே உற்றவிடத்து` என்க. ``செற்றம் அறுத்த செழுஞ்சுடர்`` என்றது அனுவாதமாய் நின்று பொருள் பயந்தது. `செழுஞ்சுடர் குளிகை போலும்` என இயையும். ஈற்றடி, `பொன்னினது குற்றத்தை அறுத்த குளிகைபோலும்` என்னும் பொருளது.
இதனால், `மேற்கூறிய ஆதார யோக செபங்களிலும் நிராதாரயோக செபம் சிறந்தது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்
உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும்
மவ்வென்றென் னுள்ளே வழிபட்ட நந்தியை
எவ்வண்ணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.

பொழிப்புரை :

அகாரத்தை உச்சரித்த உடனே உகாரத்தை உச்சரித்தால், மேலிடத்ததாக அறியப்படுகின்ற வீட்டின்பம் பொங்கி வழிந்து உயிரின்கண் கலக்கும். அந்த இரண்டெழுத்தையும் மகாரத்துடன் சேர்த்து உச்சரித்து என் உடலகத்தே நான் சிவனை வழிபட்ட செயலால் விளைந்த அவனது இன்பத்தை நான் எவ்வாறு பிறர்க்குச் சொல்லுவேன்! அவ்வின்பம் அத்தகையதாய் இருந்தது.

குறிப்புரை :

முதலடி, மேற்கூறிய பிராணாயாம முறையை அனுவதித்தது. மேல் எடுத்துக் கூறாத மகாரத்தை இதனுள் எடுத்துக் கூறினார். உ என்ற - உகரச்சுட்டால் சுட்டப்பட்ட. `முத்தி, நந்தி` என்பன ஆகுபெயர்கள். `அருள் வழியே ஆனந்தம் பிறக்கும்` என்பதை விளக்க, `பெருகிக் கலக்கும்` என்னாது, `உருகிக் கலக்கும்` என்றார். ``இயற்கை`` என்றது, அவனுக்கு இயல்பாய் உள்ள இன்பத்தையேயாம். இதன்பின், `அன்னது` என்னும் பயனிலை வருவித்துக் கொள்க.
இதனால், மேற்கூறிய பிரணவயோக செபம் வீட்டின்பத்தைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 41

நீரில் எழுத்திவ் வுலகர் அறிவது
வானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லை
யாரிவ் வெழுத்தை அறிவார் அவர்களே
ஊனில் எழுத்தை உணர்கிலார் தாமே.

பொழிப்புரை :

இவ்வுலகத்தில் உள்ள பலரும் அறிதல் நீர்மேல் எழுத்துப் போலும் அழியும் எழுத்துக்களையேயாம். மேலை வெளியில் அழியாத எழுத்து ஒன்று உள்ளது. அதனை அறிபவர் ஒருவரும் இல்லை. அதனை அறிபவர் எவரோ அவரே உடம்பில் நின்று அறியும் நிலையில்லாத எழுத்தை அறியாதவர் ஆவர்.

குறிப்புரை :

`நீர்மேல் எழுத்துப்போல பிற எழுத்துக்கள் நிலையில் லாதன அல்ல எனப் பொதுவாகக் கருதப்பட்டாலும் உண்மையில் அவையும் நிலையில்லாத எழுத்துக்களே` என்பது முதலடியில் உணர்த் தப்பட்டது. ``வான்`` என்றது, ஏற்புழிக் கோடலால் மேலை வெளி யாயிற்று. மேலை வெளியாவது விந்து. அதன்கண் உள்ள எழுத்துப் பிரணவம். வழக்கிடத்தும், செய்யுளிடத்துமாக அறியப்படும் எழுத் துக்கள் உடம்பில் இயல்பாக நின்று அறியப்படுவனவாதல் அறிக. ``ஊனில் எழுத்து`` என்றது, உலகப் பொருளைக் குறித்த குறிப்பு மொழி. ``உணர்கிலர்`` என்றது, `அவற்றை உணர்ந்து அவற்றில் தொடக்குறுதலினின்றும் நீங்குவர்` என்றவாறு. இதனுள் இடையீட்டெதுகை வந்தது.
இதனால், மேற்கூறிய பிரணவ யோக செபம் பாசத்தின் நீங்குதற்கு வாயிலாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலன் நடுவுற முத்திதந் தானே.

பொழிப்புரை :

பிராண வாயுவை உடம்பில் நடு நாடியாகிய சுழுமுனையில் பொருந்தும்படி செலுத்தினால், அந்நாடியில் நிற்கின்ற ஆதார மலர்களில் ஐம்பத்தோர் எழுத்துக்களும் முறையானே விளங்கி நிற்கும். அவ்வாறு நிறைவிடத்து முதற்காலத்திலே யாவர்க்கும் பொதுவாக வேதத்தை அருளிச்செய்த முதற்பொருளாகிய சிவன் தன் அடியார் நடுவில் இருக்கும் வீடுபேற்றைத் தருதல் திண்ணம்.

குறிப்புரை :

முதலடியில், `நடுவுறச் செய்ய` என ஒருசொல்லும், இரண்டாம் அடியில் `மாலையாக` என ஆக்கமும் வருவிக்க. `காலைக் காயத்தில் நடுவுறச் செய்ய` என்க. கால் - காற்று. `காலை உடம்பின் நடுவிடத்தில் கொணர்ந்து ஊன்ற` என்பது நயம். ஆதல் - தோன்றுதல். `தோன்றவே, அவற்றைச் சுட்டியறிந்து நீங்குதல் கூடும்` என்பது கருத்து. அடியார் நடுவுறும் முத்தி, அபரமுத்தியாம். துணிபுபற்றி, எதிர் காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.
இதனால், மேற்கூறிய செபத்திற்குப் பிராணாயாமம் இன்றியமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 43

நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியஒண் ணாதது
தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே.

பொழிப்புரை :

உந்தியின் கீழ் மூலாதாரத்தில் சிறப்புடைய ஓர் எழுத்து உள்ளது. அதன்மேலேதான் சிவன் தானும், தன் துணைவி யுமாக எழுந்தருளியிருக்கின்றான். அதனைத் துறவுபூண்ட முனிவ ராலும் அறிதல் இயலாது. எனவே, துறவுள்ளம் தோன்ற ஒட்டாது மயக்கி நிற்கின்ற வினைக்கட்டில் அகப்பட்டுள்ளவர் அறிய மாட்டாதவராதல் சொல்லவேண்டுமோ!.

குறிப்புரை :

``ஓர் எழுத்து`` என்றது, ஓங்காரத்தை. `தவத்தால் அதனைக் காண முயலுதலே செய்யத்தக்கது` என்பது குறிப்பெச்சம். ஓவியர் - ஓவினவர்; பற்று நீங்கினவர். பொருளுக்கு ஏற்ப அடிகளை மாற்றி உரைக்க. `அறிவாரில்லை` என்பது ஒரு சொல் நீர்மைத்தாய எதிர்மறை முற்று, `அது அறிய ஒண்ணாது` என்க. இதனால், மேற்கூறிய அகார உகார மகாரங்களது சமட்டியாகிய அதனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

அவ்வொடு சவ்வென் றரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே.

பொழிப்புரை :

சிவனை, `ஔ` என்றும், `சௌ` என்றும் பிறந்து பொருந்திய மந்திரமே `அம்` என்றும், `சம்` என்றும் அமைந்த மறை பொருளை ஒருவரும் அறியவில்லை. அறிந்தார்களாயின் `அம்சம்` எனப்படுகின்ற அந்த மந்திரந்தானே அனாதியான சிவமாய் நிற்கும்.

குறிப்புரை :

`அரனை` என்னும் இரண்டனுருபு தொகுக்கப்பட்டது. ``அவ், சவ்`` நான்கில் முதலது, `ஔ, சௌ` என்பவற்றின் போலி. ஏனை யவை, ஈற்றில் மகாரத்தோடு கூடிய மந்திரங்கள். ``சவ்வும், அனாதியும்`` என்ற உம்மைகள் முறையே இழிவு சிறப்பும், உயர்வு சிறப்புமாம்.
இதனால், `அம்சமந்திரம் சிவ மந்திரமாம் சிறப்பினை யுடையது` என்பது உணர்த்து முகத்தால், மேல், ``அகார உகார``, (934) ``அவ்வென்ற போதில்`` (936) என்னும் மந்திரங்களிற் கூறிய உகாரத்திற்கு ஈடாக `சம்` என்பதனை வைத்து அம்ச மந்திரத்தால் பிராணாயாமத்தைச் செய்தலும் பொருந்தும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்கும்
சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர்
அந்தி தொழுதுபோய் ஆர்த்தகன் றார்களே.

பொழிப்புரை :

மேல், ``நல்ல எழுத்து`` எனப்பட்ட அந்த ஓர் எழுத்தே, அக மலர்களாகிய ஆதார பங்ககயதந்தோறும் பலவகை யாகக் காட்சிப்படும். அது மூலாதாரத்தில் நிற்பதாயினும், சுவாதிட் டானத்தில் கும்பிக்கப்பட்ட பிராண வாயுவாய் மேலெழுந்து மணி பூரகம் முதலாக விளங்கத் தொடங்கும். சந்திக்காலங்களில் சந்திவழி பாட்டினைத் தவறாது செய்பவர்களுங்கூட, `அவ்வழிபாடு இக் காட்சியை எய்துதற்கு வழி` என்பதை அறிவதில்லை. ஏதோவோர் ஒழுக்கமாகக் கருதி அந்தியிலுங்கூடத் தவறாமல் அவ்வழிபாட்டினை முடித்து, வேறு செயல் செய்யச் சென்றுவிடுகிறார்கள்.

குறிப்புரை :

`ஒன்றே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று. ``மலரில்`` என்பதில், `ஆல்` உருபு, `தொறுப்` பொருளில் வந்தது. ஆர்த்தல் - நிரப்புதல். பிரணவம் பல்வேறு கலைகளாய் ஆதாரந் தோறும் நிற்குமாறு, மூன்றாம் தந்திரத்துள் `கலை நிலை` என்னும் அதிகாரத்துட் குறிக்கப்பட்டது.
இதனால், சந்திவழிபாடு முதலியவை வாயிலாக, மேற்கூறிய பிரணவக் காட்சியைப் பெற முயலுதல் வேண்டும் என்பதும் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 46

சேவிக்கும் மந்திரம் செல்லும் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே.

பொழிப்புரை :

மக்கட் பிறப்பு எடுத்தோர் ஒருதலையாக வணங் குதற்குரிய இத்தந்திரத்தில் தொடக்கம் முதலாகப் பலவிடத்தும் கூறி, இங்கும் கூறப்பட்ட ஓரெழுத்தாகிய பிரணவம், மேற்கூறியவாறு விளங்கி நிற்கும் நிலையைப் பெறுவதற்கு, உயிர்ப்புக்கு இன்றியமை யாததாகிய அம்சமந்திரம் முதலிய பிராணாயாம மந்திரங்களே பற்றுக் கோடாகும். ஆகவே, ஆதார பங்கயங்களில் பிரணவத்தை மேற்கூறிய வாறு குற்றமறக் காணவேண்டின், அந்தப் பிராணாயாம மந்திரங்களே ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கும் அங்குசமாய் நின்று, மனத்தை ஒருவழிப்படுத்துவனவாகும்.

குறிப்புரை :

`அதனால், அம்மந்திரங்களுடன் பிராணாயாமத்தை முன்னர்ச் செய்க` என்பது குறிப்பெச்சம். செல்லுதல், முறையாக விளங்குதல். திசை - இடம். ``செல்லும் திசைபெற`` என்றாராயினும், `திசைகளில் செல்லும் நிலையினைப் பெற` என்றலே கருத்து. காற்றை, `ஆவி` என்றலும் ஒரு வழக்கு. காற்று, இங்கே நெறிப்படுத்தப்படும் காற்று. `ஆவிக்கு` என்னும் நான்கனுருபு. `கூலிக்கு வேலை செய்தான்` என்பது போல் நிமித்தப் பொருளில் வந்தது. உள் மந்திரம் - நினைக்கப் படுகின்ற மந்திரம். ``அங்குசம்`` என்றது, குறிப்பு உருவகம்.
இதனால், பிரணவக் காட்சிக்கு இன்றியமையாத பிராணா யாமம். மந்திரத்தோடுகூடச் செய்தலின் இன்றியமையாமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 47

அருவினில் அம்பரம் அங்கெழும் நாதம்
பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி யகார சிகாரம் நடுவாய்
உருவிட ஆறும் உறுமந் திரமே.

பொழிப்புரை :

சிவம் சூக்குமமான நிலையில் பரவெளியாய் நிற்க, அதன்கண் நாதம் தோன்றும். பின்பு சத்தி அச்சிவத்தைவிட தூலமாய் அவ்வெளியினுள் தோன்ற, அதனிடத்து விந்து தோன்றும். ஆகவே, அப்பெற்றியவாய நாத விந்துக்களின் நடுவில் சிகார யகாரங்கள் பொருந்தி நிற்க நின்ற ஆறு எழுத்துக்களும் உயர்ந்த மந்திரமாய் விளங்கும்.

குறிப்புரை :

`அதனால், அம்மந்திரத்தை மேற்கொண்டு செபிக்க` என்பது குறிப்பெச்சம். இங்குக் கூறியவாறு ஆறு எழுத்தாய் நிற்கும் மந்திரம், `ஓம் நமச்சிவாயம்` என்பது. முன்னர் நின்ற விந்துவை அடுத்து நிற்பது யகாரமாதலின் அதனை முன்னர்க் கூறினார். நாதம் சகாரமோடு புணருமிடத்து சகார மெய்யாய் நிற்கும்.
`ஓoநம‹‹ிவாய` என்னும் மந்திரம், தமிழில் `ஓநமச் சிவாய` என்றும், `ஓநமச்சிவாயம்` என்றும் நிற்கும் என்பதை,
``போற்றியோ நமச்சிவாய`` 1
என்னும் திருவாசகத்தாலும்,
``நமச்சிவா யம்சொல்ல வல்லோம்`` 2
என்னும் திருத்தாண்டகத்தாலும் அறிக. இங்ஙனமாகவே, `தமிழ் கூறுவார்க்கு இஃது ஆம்` என்றதாயிற்று. ஆக்கங்கள் வருவித்துக் கொள்க. பெருகுதல் - தூலமாதல், உருவிட - ஊடே நிற்க. `ஆறும் மந்திரமாய் உறும்` என்க.
இதனால், மூலமந்திரம் தமிழில் நிற்பதொரு முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

விந்துவும் நாதமும் மேவி உடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடின்
அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாமே.

பொழிப்புரை :

விந்துவும், நாதமும் திருவைந்தெழுத்து மந்திரத் தோடு ஒருசேரப் பொருந்திச் சந்திர மண்டலமாகிய ஆயிர இதழ்த் தாமரையுள்ள தலையை அடையுமாயின் நிராதாரத்தில் உள்ள தேவாமிர்தமாகிய சிவன் இன்ப ஊற்றாய் வெளிப்படுவான். அவனுக்கு அவ்விடத்து நினைக்கப்படுகிற அந்த மந்திர செபமே வேள்வியாய் அமையும்.

குறிப்புரை :

`திருவைந்தெழுத்து மந்திரம்` என்பது மேலை மந்திரத் தினின்றும் வந்து இயைந்தது. அல்லாவிடில், விந்து நாதங்கள் மட்டில் மந்திரம் ஆகாமை அறிக. இப்பயனை விதந்து கூறியது, `மேற் சொல்லிய முறையால் இழுக்கொன்றும் இல்லை` என்றவாறு.
இதனால், `திருவைந்தெழுத்தை விந்து இறுதியாகச் சொல்லு தலால் அதனது தன்மை சிறிதும் குறைவுறாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 49

ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்
ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள்
வேறெழுத் தின்றி விளம்பவல் லார்கட்கு
ஓரெழுத் தாலே உயிர்பெறல் ஆமே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்தைப் பிரணவத்தோடு சேர்த்து ஆறெழுத்தாக ஓதி உணரும் உணர்வின் பயனை அறிபவர் உலகில் ஒருவரும் இல்லை. அதனால், அந்த மந்திரத்தை ஒப்பற்ற ஒன்றாகக் கொண்டு ஓதிப் பெறும் உணர்வையும் யாரும் அடைவதில்லை. வேறு மந்திரத்தை அதற்கு நிகரானதாக நினையாமல் அந்த மந்திரம் ஒன்றையே ஓத வல்லவர்கட்கு அதன்கண் உள்ள ஓர் எழுத்தாலே ஆன்ம லாபத்தைப் பெறுதல் இயையும்.

குறிப்புரை :

ஈரிடத்தும் ``ஆறெழுத்து`` என்றே ஓதினாராயினும், `அவ் ஆறெழுத்து` எனச் சுட்டி ஓதுதலே கருத்து. ``இன்றி`` என்றதும், `இணையில்லையாக` என்றவாறு. ``ஓரேழுத்து`` என்றது பொதுப்பட நின்று, சிகாரமாகிய அவ்வொன்றின்மேல் நோக்குடையதாய் நின்றது. இதன்கண் உயிரெதுகை வந்தது.
இதனால், மேற்சொல்லப்பட்ட மந்திரங்கள் பலவற்றுள் திருவைந்தெழுத்து இன்றியமையாச் சிறப்பினதாய் ஆன்ம லாபத்தைத் தருவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.

பொழிப்புரை :

உச்சரிக்கும் எழுத்தாகிய அகாரத்தோடு ஏனைய பதினைந்தும் உயிரெழுத்துக்களாம்; ஆயினும், `மூல எழுத்துக்கள் ஐம்பத்தொன்று` என்று மந்திர நூலார் கூறுவர். அவையெல்லாம் எவ் வாறாயினும், முதல்வனுக்குரிய முதன்மை மந்திரத்தில் மேற் சொல்லிய ஆறெழுத்துக்களே உள்ளன. அவற்றை நால்வகை வாக்கிலும் வைத்து ஆராய்ந்து கொள்ளுங்கள்.

குறிப்புரை :

``அகரம், ஒலிப்பின் முதல் முயற்சியிலே தோன்றி எல்லா எழுத்துக்களிலும் கலந்து நிற்கும் சிறப்பினது; அதனால், அஃது உயிரெழுத்திற்கும் உயிராய் நிற்பது`` என்பார், ``ஓதும் எழுத்தோடு`` என அதனது இயல்பும், உயர்வும் தோன்ற ஒடுஉருபு கொடுத்து, வேறுவைத்து ஓதினார். இது பற்றியே இறைவன் அகரவடிவினன் எனக் கூறப்படுகின்றான். ``ஓதும் எழுத்து`` என்றது, `ஓதப்படும் - உச்சரித்தல் உண்டான பொழுதே தோன்றுகின்ற - எழுத்து` என்றவாறு, கலை - கூறு. `சொற்களது உறுப்பு` என்பதாம். `மூவைஞ்சும் உயிர்க்கலை` என மாறிக்கூட்டுக` ``அவை`` பகுதிப்பொருள் விகுதி. சோதி, இறைவன், நாத எழுத்து - நாதத்தின் காரியமாகிய எழுத்து; `பூதகாரியமாகிய எழுத்தாகக் கொள்ளுதலோடு ஒழியாது` என்றவாறு. `நாத எழுத்தில் இட்டு` என்க. `திருவைந்தெழுத்தை யோகமுறையால் நாத எழுத்தாக உணர்ந்து சுத்தமானதாகக் கணிக்க, சுத்த தத்துவத்தில் விளங்கிநிற்கும் தடத்த சிவனைத் தலைப்பட்டு அபரமுத்தியை எய்திப் பின் பரமுத்தியை எளிதிற்பெறலாம்` என்பது கருத்து.
இதனால், `மூல எழுத்துக்கள் ஐம்பத்தொன்று என்றாலும், அவற்றுள் உயிரெழுத்தாவன பதினாறே` என்பதும், `அவற்றுள்ளும் அகரம் உயிர்க்குயிராய எழுத்து` என்பதும், `எனினும், மேற்கூறிய ஆறெழுத்துக்கள் அவை எல்லாவற்றினும் மேம்பட்டன` என்பதும் கூறி, மேற்கூறிய மந்திரத்தின் சிறப்பு வலியுறுத்தப்பட்டது.
`ஐம்பத்தோரெழுத்து இவை` என்பதை மேற்காட்டிய பேரம்பலச் சக்கரத்துட் காண்க.

பண் :

பாடல் எண் : 51

விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவிபதி னாறு கலையதாய்க்
கந்தர வாகரம் கால்உடம் பாயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே.

பொழிப்புரை :

சுத்த மாயையினின்றும் ஓங்காரமாய் நாதம் தோன்ற, அந்த நாதத்தின் தலைவியாகிய குண்டலினி சக்தி, பதினாறு கலைகளையுடைய பிரணவமே தானாகி மக்களது உடம்பில் `தலை, கால், உடல்` என்னும் உறுப்புக்களில் நிற்கின்றாள். அவள் ஒன்றி நிற்கப் பெறுதலே பிரணவம் அழிவின்றி மேற்கூறிய ஐம்பத்தோரெழுத் தாயிற்று.

குறிப்புரை :

``சுழி`` என்றது ஒங்காரத்தின் வடிவத்தை. `சுழியாய்` என, ஆக்கம் வருவித்துக்கொள்க. நாதமாவது வாக்கு. உயிர்களைப் பிணித்துள்ள பந்தங்களில் நீக்குதற்கரிய பரமபந்தமாய் நிற்பது வாக்காதலின், அதனையே ``பந்தம்`` என்றார். `பதினாறுகலைகள் இவை` என்பதும், அவை உடம்பில் நிற்கும் இடங்களும் மேல் மூன்றாம் தந்திரத்துள் `கலைநிலை` அதிகாரத்திற் காட்டப்பட்டன. கந்தரம் - கழுத்து. ஆகாரம் என்பது குறுகி நின்றது. ஆகாரம் - வடிவம். கழுத்தோடு கூடிநிற்கும் வடிவம் தலை. ``அந்தம் இன்றி ஆயது`` என்றது `அக்கரம்` (அட்சரம்) எனப்பட்டது என்றவாறு. இதனால், `உண்மை அக்கரம் குண்டலினிசத்தியே என்பதும், அவட்கு இடமாதல் பற்றியே வாக்கின் வடிவாக எழுத்துக்கள், `அக்கரம்` என உபசரித்துக் கூறப்படுகின்றன` என்பதும் பெறப்பட்டன. உண்மை விளக்கத்துள், `திருவைந்தெழுத்து ஏனையெழுத்துக்கள் போல அழியும் எழுத்துக்கள் அல்ல` (40, 41) எனக் கூறியதையும் இவ்விடத்து நினைவுகூர்க. ``அந்தமும்`` என்ற உம்மை `ஆதியின்றி` என இறந்தது தழுவிய எச்சம். ``ஆயது`` என்பதற்கு, `அது` என்னும் எழுவாய் வருவிக்க. அச்சுட்டுப் பெயர், முன்னர், ``பதினாறு கலைய`` என்ற பிரணவத்தைக் குறிக்கும்.
இதனால், `மேற்கூறிய ஆறெழுத்தின் பொருளாகிய சிவனுடைய சத்தியினது சார்பு காரணமாகவே பிரணவமும், அதன் காரியமாகிய எழுத்துக்களும் சிறப்புற்றன` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 52

ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தா கமங்களும்
ஐம்ப தெழுத்தேயும் ஆவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.

பொழிப்புரை :

மேற் சொல்லிய ஐம்பத்தோரெழுத்துக்களே வேதம், ஆகமம் அனைத்துமாய் நிற்கும். அவ் உண்மையை உணர்ந்த பின் `ஐம்பதெழுத்து அல்லது ஐம்பத்தோரெழுத்து` என்றெல்லாம் எண்ணுகின்ற அலைவு நீங்கி, `ஐந்தெழுத்து` என்று உணர்ந்து நிற்கின்ற அடக்கம் உண்டாகும்.

குறிப்புரை :

`ஐம்பதெழுத்துமே` என்பதில் உம்மையும், ஏகாரமும் மாறிநின்றன. ஆவது, அனைத்தும் ஆவது. ``ஐம்பதெழுத்தும்`` என்றது, எல்லா வகையான எழுத்துக்களும்` என்றவாறு. எழுத்துக் களை, `ஐம்பத்தொன்று`என்பதனோடு, `ஐம்பது` என்றலும் வழக்கு என்பது உணர்தற்கு, மேல், ``ஐம்பத்தோரெழுத்து`` என்றவர், இங்கு, `ஐம்பதெழுத்து` என்றார். இது மூன்றாம் தந்திரத்திலும் விளக்கப் பட்டது. வேதம், ஆகமம் முதலிய பல நூல்களையும் கற்றோர், `அவை அனைத்திலும் சொல்லப்படுவது திருவைந்தெழுத்தின் பொருளே` என்பதை நன்குணர்வர் ஆதலின், ``ஐம்பதெழுத்தும் போய் அஞ்செழுத்தாமே`` என்றார்.
``அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் அஞ்சின்
பொருள்நூல் தெரியப் புகின்``
என்னும் திருவருட்பயனையும் காண்க. மூன்றாம் அடியில் ஏகாரம் பிரிநிலையும், உம்மை முற்றும்மையுமாம். ஆகவே, `ஐம்பதெழுத் துமே அனைத்துமாவது` என்பது பொருளாயிற்று.
இதனால், அனைத்தெழுத்துக்களும் மேற்கூறிய ஆறெழுத்தின் விரிவேயாதல் கூறப்பட்டது.
இது முதலாக, இருபத்தொரு மந்திரங்களால் திருவைந் தெழுத்தின் பெருமையே கூறி வலியுறுத்துகின்றார்.

பண் :

பாடல் எண் : 53

அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் வகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான் தத்துவங்களைப் படைத்தும், அவற்றின் காரியமாகிய எண்பத்து நான்கு நூறாயிர வகைப்பிறவி களான உடம்புகளையும் ஆக்கி உயிர்கட்குத் தந்தும், அவைகளைக் காத்தும், அவ்வுயிர்கள் தன்னை மன மொழி மெய்களால் வழிபட்டு நலம் பெறுதற் பொருட்டுத் திருமேனி கொண்டு எழுந்தருளியிருப் பதும் ஆகிய எல்லாம் திருவைந்தெழுத்தாலேயாம்.

குறிப்புரை :

``ஐந்து பூதம்`` என்றது உபலக்கணம். ஐந்தொழில்களில் இங்கு வேண்டற்பாலனவாகிய இரண்டையே கூறினார். ஐந் தொழிலையும் சிவபெருமான் ஏவுதல் வகையானும், இயற்றுதல் வகையானும் செய்தருளுவன்.
``மூவகை அணுக்களுக்கும் முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாயின் விளங்கிய ஞானம் இன்றாம்``1
என்றவாறு, நாதம் இன்றி ஒருவர்க்கும் சிறப்புணர்வு கூடாது ஆதலால், `ஏவுதல் ஐந்தெழுத்தாலே` என்பது தெளிவாகும். இனி, அத் தொழில்களைத் தானே இயற்றுமிடத்தும் அவற்றால் உயிர்கள் பயன் கொள்ளுதற்கு நாதம் இன்றியமையாமை பற்றி அதனையும் ஐந்தெழுத் தாலே ஆவனமாகக் கூறுதல் அமைவுடைத்தாம். ஐந்தெழுத்தாலே திருமேனி கொள்ளுதல் எவ்விடத்தும் ஒத்ததாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 54

வீழ்ந்தெழல் ஆம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே.

பொழிப்புரை :

சிவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தைத் தளர்ச்சியின்றி ஓத உறுதிபூண்டு நிற்பவர்கட்கு, வினைக்குழியில் வீழ்ந்து கிடந்தாலும் எழுந்து கரையேறுதல் கூடுவதாம். மேலும் அப்பெருமான் அவர்களை வினைத்துன்பம் விட்டொழியுமாறு தன்மாட்டு அழைத்து ஆண்டுகொள்வான்.

குறிப்புரை :

`வீழ்ந்தும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத் தலாயிற்று. போந்திடும் என்னும் - `வாருங்கள்` என்று அழைப்பான். `புரிசடையோனாகிய தலைவனும்` என மேலே கூட்டி உரைக்க.

பண் :

பாடல் எண் : 55

உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்
விண்ணின் றமரர் விரும்பி அடிதொழ
எண்ணின் றெழுத்தஞ்சு மாகிநின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான், தேவர்கள் தன்னை விண்ணுலகத் தில் விருப்பத்தோடு அடிபணிய, அவர்கட்கு அவர்கள் உண்ணுகின்ற அமுதமாயும், அதன் பயனாகிய நீண்ட வாழ்நாளாயும், அவர்கட்கு விருப்பத்தைத் தருகின்ற இசையாயும், பாட்டாயும் நிற்றலேயன்றி, அவர்களது கருத்தில் நிற்கும் திருவைந்தெழுத்தாயும் நின்று மேலை மந்திரத்திற்கூறிய பயன்களை அளிப்பன்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் வைத்து, இரண்டாம் அடியிறுதியில், `அதுவன்றி` என்பது வருவித்து உரைக்க. ``நிற்கும்`` என முன்னவற்றை முடித்தமையால், பின்னதற்குப் பயன் மேற்கூறிய தாயிற்று. `எண்ணின்ற` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. ``அஞ்சும்`` என்ற உம்மை, `அவ்வாறு நின்றதன்றியும்` என, இறந்தது தழுவிநின்றது. `தேவர்களும் தாம் விரும்பிய பயனைப் பெறுதல் திருவைந்தெழுத்தை ஓதியே` என்பது இங்குக் கூறப்பட்டது.
``மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றுஅவர் தம்மை ஆள்வன
... ... ... அஞ்செழுத்தும்மே`` 1
என்ற திருஞானசம்பந்தர் திருமொழியும் காண்க. `தலைவன்` என்னும் எழுவாய் இயைபினால் வந்து இயையும்.

பண் :

பாடல் எண் : 56

ஐந்தின் பெருமையே அகலிட மாவதும்
ஐந்தின் பெருமையே ஆலய மாவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.

பொழிப்புரை :

உலகம் நிலைபெற்றிருத்தலும் கல் முதலியவற்றால் கட்டப்பட்டு அமைந்த இடங்கள் சிவபெருமானது அருள் நிலையங் களாதலும், அந்நிலையங்களில் அவன் விளங்கி நின்று, வேண்டு வார்க்கு வேண்டுவன வழங்குதலும் திருவைந்தெழுத்தாலேயாகும். இனி, அதனை அதன் வகை பலவற்றையும் அறிந்து ஓத, அப்பெருமான் அங்ஙனம் ஓதுவாரது பக்கத்திலே எப்பொழுதும் இருப்பவனாவான்.

குறிப்புரை :

அகலிடம் - உலகம்; என்றது உயிர்களை. `அவை நிலைபெறுதல்` என்பதனை,
``வானின் றுலகம் வழங்கி வருதலால்`` 1
என்பது போலக் கொள்க. ``ஆலயம் ஆவது`` என்றது `ஆலயம் ஆலயமாவது` என்றவாறு. `சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்` என்னும் முறைமையிற் சிறிதும் வழுவாதவன் என்பார், `சிவபெருமானை, `அறவோன்` என்றார். செய்தல், இங்கே ஓதுதல். பால் - பக்கம். பாலன் ஆதலை,
``இவன்எனைப் பன்னாள் அழைப்பொழி யான்என்
றெதிர்ப்படுமே`` 1
``எங்குற்றாய் என்றபோதில்
இங்குற்றேன் என்கண்டாயே`` 2
``தோன்றாத் துணையாய் இருந்தனன்
தன்னடியோங்களுக்கே`` 3
``ஆரூரர்தம் - அருகிருக்கும் விதியன்றி அறம் இருக்க
மறம்விலைக்குக் கொண்டவாறே`` 4
என்பன முதலிய திருமொழிகளை நோக்கி அறிக.
``சிவனே சிவனே சிவனேஎன் பார்பின்
சிவன்உமையா ளோடுந் திரிவன்``
என்பதொரு வெண்பாவையும் காண்க. இதன் முதலடி மூன்றாம் அடிகளில் னகர ஒற்றுக்கள் அலகு பெறாது நின்றன.

பண் :

பாடல் எண் : 57

வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும்
நீரெழுத் தாய்நிலம் தாங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்
தோரெழுத் தீசனும் ஒண்சுட ராமே.

பொழிப்புரை :

சிவபெருமான் நாத எழுத்தாகிய பிரணவமாய் அதன் வழியே வானத்தில் பொருந்தி எல்லாப் பொருட்கும் வியாபக மாய் நிற்பான். நீரெழுத்தாகிய நகாரமாய் அதன்வழியே நீரில் பொருந்தி அதன்வழியே பொருள்களைப் பதம் செய்வான். நில வெழுத்தாகிய மகாரமாய் அதன்வழியே நிலத்திற் பொருந்தி எல்லா வற்றையும் தாங்குவான். நெருப்பெழுத்தாகிய சிகாரமாய் அதன் வழியே நெருப்பில் பொருந்திப் பொருள்களைச் சுட்டுப் பக்குவப் படுத்துவான். காற்றெழுத்தாகிய வகாரமாய் அதன்வழியே காற்றிற் பொருந்திப் பரந்து சலித்துப் பொருள்களைத் திரட்டுவான். எஞ்சிய ஓரெழுத்தாய யகாரமாய் அதன்வழியே ஆன்மாவிலும், இருசுடரிலும் பொருந்தி அறிதலும், ஒளிவீசலும் செய்வான்.

குறிப்புரை :

செய்யுள் நோக்கி, வேண்டும் சொற்கள் பலவற்றைத் தொகுத்து அவை குறிப்பால் தோன்றக் கூறினாராகலின், அவற்றை இவ்வாறு விரித்துரைத்துக்கொள்க. பூதம் முதலியவற்றைத் திருவைந் தெழுத்தில் எழுத்துக்கள் நிற்கும் முறைபற்றிக் கூறினமை அறிக. இங்குக் கூறிய ஐந்தெழுத்துப் பிரணவத்தோடுகூடிய தூல ஐந்தெழுத் தாதல் வெளிப்படை. ``ஒண் சுடர்`` என்பது அகத்தொளியாகிய அறி வையும், புறத்தொளியாகிய சூரிய சந்திரர்களையும் குறித்தது. அப்புற மாதல், வியாபகமாய் நிற்றல். ``ஓரெழுத்து`` என்பதன் பின்னும் ஆக்கம் வருவிக்க. ``ஈசனும்`` என்ற உம்மை சிறப்பு. இவ்வெழு வாயை முதலிற்கொண்டு உரைக்க. மேலை மந்திரத்தில், ``ஐந்தின் பெருமையே அகலிட மாவது`` என்றது இனிது விளங்குதற்பொருட்டு, அஃது ஆமாற்றை இதனுள் வகுத்துக் கூறினார். ஆகவே, நீரெழுத்து முதலியவற்றைப் பூதங்கட்குரிய பீசாக்கரங்களாகக் கொள்ளல் வேண்டாமை அறிக. இங்குக் கூறிய எழுத்துக்கள், அவ்வப்பொருட்கு உரியனவாதலை ஆணையாற்கொள்க.

பண் :

பாடல் எண் : 58

நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே.

பொழிப்புரை :

மேற்கூறிய எழுத்துக்களில் பிரணவம் நீங்க நகாரம் முதலாக முறையானே நின்ற ஐந்தெழுத்துக்களில் இறுதிநின்ற யகாரம் ஒழித்து நான்காய்நின்ற எழுத்துக்களது ஓசையே உலகெங்கும் வியாபிப்பது. அதனால், எல்லா உலகமும் அவ்வெழுத்திற்குள்ளே அடங்கியுள்ளன. அதனால், அவற்றாலாய அவ்வோசையின் பெருமை அறிந்து அதனையே ஓதவல்லவர்கட்கு அதுவே நன்னெறி யாய் நன்மை பயக்கும்.

குறிப்புரை :

கடவுளரைப் போற்றுமிடத்து அவர்தம் பெயரோடு பெரும்பான்மையும் நான்காம் வேற்றுமையைப் புணர்த்து அவரைப் படர்க்கையில் வைத்துப் போற்றுதல் வடமொழி வழக்கு. அப்பெயர் களைப் பெரும்பான்மையும் எட்டாம் வேற்றுமையாக்கி அவரை முன்னிலைப் படுத்திப் போற்றுதல் தமிழ் வழக்கு. அதனால், ``சிவாய`` என்பது தமிழ் முறையில் `சிவ` என்றே நிற்குமாதலின், `சிவமூல மந்திரம், மேல், ``ஆறெழுத்தோதும்`` என்ற மந்திரத்துட் கூறியவாறு பிரணவத்தோடு கூடி ஆறெழுத்தாலேயன்றி, யகாரம் நீங்க ஐந்தெழுத் தாயும் நிற்றலுடையது` என்பது உணர்த்துவார் ஐந்தெழுத்தின் பெருமையெல்லாம் எடுத்தோதினார். எனவே, யகாரம் அவற்றுள் அடங்கி நிற்பதாயிற்று. `இம் மந்திரத்திற்கு இதுவே பொருள்` என்பதை வருகின்ற மந்திரங்களால் அறிக.
நால் ஆம் எழுத்து - `நான்கு` என்னும் தொகையை உடைய வாகின்ற எழுத்து. `அவற்றால் ஆய ஓசை` என்றது, `மந்திரம்` என்ற வாறு. ``உருவுவது`` என்பது குறைந்து நின்றது. எழுத்து அது - எழுத்தாய் நின்ற அம்மந்திரம். `அதுவேயும்` என்னும் பிரிநிலை ஏகாரமும், இறந்தது தழுவிய எச்ச உம்மையும் விரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 59

இயைந்தனள் ஏந்திழை என்உளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயந்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்த்தனன் மற்றுப் பிதற்றறுத் தேனே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு யான் அந்நான்கு எழுத்தையே ஓதினமையால் சிவசத்தி என்னிடத்து வந்து பொருந்தி, எனது உள்ளத்தை இடமாகக் கொள்ள விரும்பி, அங்ஙனம் அதன்கண்ணே அமர்ந்தாள். அதனால், யான் எனது சீவநிலையினின்று நீங்கினேன். பிறமந்திரங்களைப் பல்வேறு பயன் குறித்துப் பிதற்றுதலையும் ஒழித்தேன். ஆகவே, நீவிரும் `நமசிவ` என்று ஓதுதலின் பயனை ஆய்ந்து உணர்மின்; உணர்ந்து அம்மந்திரத்தைப் பற்றுமின்.

குறிப்புரை :

`அந்நான்கெழுத்தையே ஓதினால்` என்பது இயைபு பற்றிக் கொள்ளக் கிடந்தது. ``நமசிவ என்னும்`` என்பது தொடங்கி மூன்றாம் அடியை இறுதியில் வைத்து உரைக்க.

பண் :

பாடல் எண் : 60

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினை
ஓமத்தி லேஉதம் பண்ணும் ஒருத்திதன்
நாம நமசிவ என்றிருப் பாருக்கு
நேமத் தலைவி நிலவிநின் றாளே.

பொழிப்புரை :

அரிசி முதலியவற்றில் உடலுக்கு நலந்தரும் பொருளாய் நின்று, அவை சோறு முதலியனவாய்ப் பக்குவப்பட்ட பின்பு அவற்றை, வயிற்றுத்தீ வேள்வித்தீயாகுமாறு அதில்நின்று அவிசாகச் சீரணிப்பிக்கின்ற அத்தன்மையளான திரோதான சத்திக் குரிய நகாரம் முதலாக நின்ற அந்நான்கெழுத்தே துணை என்று இருப் பவர்கட்குச் சிவசத்தி அவர்களது வழிபாட்டின் பயனைத் தரும் முதல் வியாய் நீங்காது நிற்பாள்.

குறிப்புரை :

ஆமம் - அரிசி. அன்னம் - சோறு. இவை உபலக்கணம். `ஓமம், உதம்` என்பன உருவகங்கள். உதம் - அவிசு. ``இருந்து பண்ணும்`` என்னும் அடைமொழியால், ``ஒருத்தி`` என்றது திரோதான சத்தியையாயிற்று. நகாரம் திரோதான சத்தி எழுத்தாகலின், அதனை முதலாக உடைய மந்திரமும் அவளதாயிற்று. நேமம், `நியமம்` என்பதன் மரூஉ. `இனிதாய், உதமாக, தலைவியாய்` என ஆக்கங்கள் வருவிக்க. `உலகப் பயனை வேண்டுவார்க்குத் தூல பஞ்சாக்கரம் உரியது` என்பதை விளக்கியவாறு.

பண் :

பாடல் எண் : 61

பட்ட பரிசே பரன்அஞ் செழுத்தின்
இட்டம் அறிந்திட் டிரவு பகல்வர
நட்டம தாடும் நடுவே நிலயங்கொண்
டட்டதே சப்பொருள் ஆகிநின் றானே.

பொழிப்புரை :

சிவன், `ஐம்பூதம், இருசுடர், ஆன்மா` என்னும் உலகப் பொருள் எட்டுமாய் நிற்பவன் ஆதலால், அவரவர் விருப் பத்தை உணர்ந்து அவரவர் மேற்கொள்ளப்பட்ட வகையிலே அமைந்த அஞ்செழுத்தின் உள் நின்று இரவும் பகலும் ஆகிய காலங்கள் மாறிமாறித் தொடர்ந்துவர இடையறாது நடம் புரிந்து நிற்பான்.

குறிப்புரை :

`பட்ட பரிசே அஞ்செழுத்தின் நடுவே நிலயங்கொண்டு ஆடும்` என்க. பட்டபரிசே ஆடுதலாவது, தூல பஞ்சாக்கரத்தின் நடுவில் ஊன நடனத்தையும், சூக்கும பஞ்சாக்கரத்தின் நடுவில் ஞான நடனத்தையும் செய்தல். ஈற்றில் `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவிக்கப்பட்டது. ஈற்றடி, வேண்டுவோர் வேண்டுவனவற்றை அறிதல் கூறி, `அங்ஙனம் அறிதலால், அவரவர்க்கு உரிய பயனை அளித்தல் அல்லது நியதியின்றி அளியான்` என்பது உணர்த்தப் பட்டது. தூலமும், சூக்குமமும் ஆகிய பஞ்சாக்கரங்கள் தத்தம் பயனையே தருதலன்றிப் பிறிது பயன் தாராமையைக் காரணங்காட்டி விளக்கியவாறு. ``நம`` ஊன நடனத்தையும், ``சிவ`` ஞான, நடனத்தையும் குறித்தலை 955, 956 இல் உணர்த்தியுள்ளார் எனக் கோடல் பொருத்தம்.

பண் :

பாடல் எண் : 62

அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் மலமாய் வரும்முப்பத் தாறில்
சிகாரம் சிவமா வகாரம் வடிவா
யகாரம் உயிரென் றறையலும் ஆமே.

பொழிப்புரை :

முப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் அகாரத்தைப் பற்றியும், சிவ தத்துவம் ஐந்தும் உகாரத்தைப் பற்றியும், வித்தியா தத்துவம் ஏழும் மகாரத்தைப் பற்றியும் நிற்கும். இனித் திருவைந்தெழுத்தில் சிறப்புடைய மூன்றில் அவ்வாறின்றிச் சிகாரம் சிவமும், வகாரம் சத்தியுமேயாக, யகாரம் ஆன்மாவேயாம் என்று சொல்லுதலும் கூடும்.

குறிப்புரை :

மேல் பிரணவ கலைகளையும், திருவைந்தெழுத்தை யும் ஒப்ப வைத்துக் கூறிவந்தமைபற்றி மயங்காமைப் பொருட்டு இவ்வாறு கூறி அக்கலைகளினும் திருவைந்தெழுத்துக்கள் உயர்ந்தன வாதலை விளக்கினார்.
``முப்பத்தாறில்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. ``முப்பத்தாறில்`` என்றதனால், `உயிர், பரம், மலம்` என்பன அவை பற்றிய தத்துவங்களே ஆதல் விளங்கும். `மலம்` என்றது, `அசுத்தம்` என்னும் பொருட்டாய், அசுத்தமாயா தத்துவங்களை உணர்த்திற்று. வடிவு - சிவனது உருவம்; அது சத்தியாதல் அறிக. `சிவம், வடிவு, உயிர்` என்பவற்றில் தேற்றேகாரங்கள் தொகுத்தலாயின. அவற்றால், அவற்றின் பொருள்கள் சடமாகாது சித்தாதலும் அப்பொருள்களோடு அவ்வெழுத்திற்கு உள்ள பேருரிமையும் தோன்றுவனவாம். அவை பற்றியே ``அறையலும் ஆம்`` என உயர்வு சிறப்பும்மை கொடுத்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 63

நகார மகார சிகாரம் நடுவா
வகாரம் இரண்டு வளியுடன் கூடி
ஒகாரம் முதற்கொண் டொருகால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே.

பொழிப்புரை :

நகார மகாரங்களை முன்னர் உடைய சிகாரம் நடுவணதாய் நிற்க, அவற்றின் பின்னதாகிய வகாரம் இடைகலை, பிங்கலை என்னும் இரு வாயுக்களுடன் பொருந்தி, ஓங்காரத்தை முதற்கண்ணே பெற்று ஓதப்படின், மேற்கூறிய எழுத்துக்களில் மகாரத்திற்கு முதல்வனாய் நின்று அதனைப் பரிபாகப்படுத்திவரும் சிவன், அங்ஙனம் ஓதுவாரது உள்ளத்தைத் தனக்கு இடமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பான்.

குறிப்புரை :

``நடுவாய்`` என்றமையால், நகார, மகாரங்களை உடைமை முதற்கண்ணதாயிற்று. `நடுவாய் நிற்க` என ஒரு சொல் வருவிக்க. உரைக்க - உரைக்கப்பட. தூல பஞ்சாக்கரமாதலின் ஊன நடனப் பிரானையே கூறினார். மேல் இரண்டிடங்களில் (955, 56) எடுத்தோதிய `நமசிவ` என்பதனை முதலில் பிரணவத்தோடு கூட்டிப் பிராணாயமத்துடன் ஓதல் வேண்டும் என்பது உணர்த்தியவாறு.
``நாலாம் எழுத்தோசை`` (954) என்பது முதல், இதுகாறும் அஞ்செழுத்து நாலெழுத்தாயும் நிற்கும் முறைமையே கூறினார்.

பண் :

பாடல் எண் : 64

அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன
அஞ்சையுங் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி ஆதி யகம்புகல் ஆமே.

பொழிப்புரை :

ஒரு காட்டில் வாழ்வனவாகிய ஓர் ஐந்து யானைகள் உள்ளன. அவைகளை அடக்குதற்குச் சிவ நாமத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களே அங்குசங்களாய் உதவும். அந்த அங்குசத்தைக் கொண்டு அவைகளை முழுதும் அடக்கவல்லவர்கட்கே ஐந்து பூதம் முதலிய தத்துவங்கட்கு முதல்வனும், முதற்கடவுளுமாகிய சிவனது இடத்தில் புகுதல் கூடும்.

குறிப்புரை :

``அஞ்சு ஆனை`` என்றதும் `அடவி` என்றதும், `தாம் குறித்த அவை` என்னும் பொருளவாய் நின்றன. அவை ஐம்பொறி களும், தத்துவதாத்துவிகக் கூட்டங்களுமாம். ``அஞ்சுக்கும் அஞ்செழுத்து`` என்றது நயம் தோற்றி நின்றது. நகாரம் முதலியவற்றை மூக்கு, நாக்கு, கண், மெய், செவி என்பவற்றோடு முறையே இயைத்துக் காட்ட முயல்வாரும் உளர். கூட - ஒருசேர, `அஞ்சாதி யாகிய ஆதி` என்க. அகம் திருவடி நிழல்.

பண் :

பாடல் எண் : 65

ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற்றி மகாராதி
நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்
சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.

பொழிப்புரை :

நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளில் உள்ள அகரம் முதலிய எழுத்துக்களில் சிலவாயுள்ள நகாரம் முதலிய ஐந்தெழுத் துக்களை அம்முறையில் நில்லாது பிரணவம் முதலாக மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களிலும் முறையே நிற்க மாற்றி வைத்து, தடத்த சிவனை மூலாதாரம் முதலாகவே திரோதன சத்தியோடுகூடத் தியானித்து, இவ்வாறு சந்தியா காலங்களில் வழிபடுபவர்க்கு வேறு சந்தியாவந்தனம் முதலிய சடங்குகள் வேண்டுவதில்லை.

குறிப்புரை :

``ஐந்து கலையில் அகராதி`` என்பதில், ஏழனுருபு பெயரோடு முடிந்தது. ``தன்னில்`` என்பது பன்மையொருமை மயக்கம். ``ஐந்து கலையில் அகராதி தன்னிலே வந்த நகராதிமாற்றி`` என்றது, `பிற எழுத்துக்களுள் சிலவாய அவையாக நிலையாமல், வேறாக மதிக்க` என்பது உணர்த்தற்கு. மேல் (959) ``மகார முதல்வன்`` என்றவாறே இங்கு ``மகாராதி`` என்றார். இங்குக் கூறுகின்றதும் தூல பஞ்சாக்கரமாதல் பற்றி. தூல பஞ்சாக்கரத்தை இறைவன் திருவடி முதலாகக் கொண்டு நிற்கும் முறையிலே ஆதாரங்களில் அமைத்தல் வேண்டும் என்பது கருத்து. `` மூலத்தே `` என்றது, ``மூலத்தில் தொடங்கியே`` என்றவாறு. மூலாதாரம் முதலிய எல்லா ஆதாரங் களிலும் `சிவனையே அவனது சத்தியோடு தியானிக்க` என்றது, `ஆதார மூர்த்திகளைச் சம்பு பட்சத் தினராகத் தியானிக்க` என்றதாம். சிறப்புப் பற்றிச் சந்தியாகாலத்தையே வரைந்தோதினார். அதனால், பிற காலங்கள் தவிர்க்கப்பட்டன அல்ல வாம். ``சடங்கு`` என்றது, `பிறிது சடங்கு` என்னும் குறிப்பினது. ``தான்`` என்பது கட்டுரைச் சுவைபட நின்றது.
பேரம்பலச் சக்கரத்தில் நிற்கும் ஐம்பத்தோரெழுத்துக்களை அகாரம் முதலாகத் தொடங்கி எண்ணுதல் அவற்றின் தோற்ற முறையாகும். அம்முறையில் முதல் தொடங்கிப் பதினாறு (உயிர்) எழுத்துக்கள் சாந்தியதீத கலையில் நிற்கும் (மெய்யெழுத்துக்களில்) ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய மூன்றெழுத்துக்கள் சாந்தி கலையில் நிற்கும். அடுத்த ஏழெழுத்துக்கள் வித்தியா கலையில் நிற்கும். அடுத்த இருபத்து நான்கு எழுத்துக்கள் பிரதிட்டா கலையில் நிற்கும். இறுதி எழுத்தாகிய க்ஷகாரம் ஒன்றும் நிவிர்த்தி கலையில் நிற்கும் என்க.

பண் :

பாடல் எண் : 66

மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த யோகமும் ஞானமு மாகும்
தெருள்வந்த சீவனார் சென்றிவற் றாலே
அருள்தங்கி அச்சிவ மாவது வீடே.

பொழிப்புரை :

உயிர்கள் சிவனை அடைவதற்கு வாயிலாகப் பொருந்திய, `சிவாய` என்னும் மூன்றெழுத்துக்களே உயிர்கட்கு உயிரும், கிடைத்தற்கரிய யோகமும், ஞானமுமாய்ச் சிறந்து நிற்பன. இவ்வுண்மையைப் பரிபாகம் வரப்பெற்றமையால் நகர மகரங்களின் நீங்கி யகரமாய் நின்ற உயிர், வகரமாகிய அருளிலே தங்கிப் பின் சிகரமாகிய சிவத்தை அடைந்து அதுவாய் விடுதலே வீடுபேறாம்.

குறிப்புரை :

வருவித்துரைத்தவை ஆற்றலால் வந்தன. அரு மருந்து - தேவாமுதம். அருமந்த, ``அருமருந்தன்ன என்பதன் மரூஉ. `சிவயோகம்` என்றற்கு, ``அருமருந்தன்ன யோகம்`` என்றார். இவ் அடை ஞானத்திற்கும் உரியதாதலின், அதுவும் சிவஞானமாயிற்று. சிவயோக சிவஞானங்களன்றிப் பிற யோக ஞானங்கள் வீடு பய வாமை அறிக. ``வீடே`` என்னும் ஏகாரம், பிரிநிலையாய்ப் பிறவாறு கூறப்படும் வீடுகள் வீடல்ல` என்பது உணர்த்தி நின்றது. மேல், `பல எழுத்துக்களுள் நின்ற சில எழுத்தாகாது அவற்றின் வேறாய் உயர்ந்து நிற்பன` எனக்கூறப்பட்ட ஐந்தெழுத்துக்களுள் மூன்றெழுத்து முத்தி மந்திரமாய்ச் சிறந்து நிற்பன என்பது உணர்த்தியவாறு. இங்கு, ``சிவாயமே`` என ஓதிய இதனாலும், அஞ்செழுத்து இறுதியில் மகாரத்தோடு நிற்றலும் உண்டு என்பது அறியப்படும். `சிவாயவே` எனப் பாடம் ஓதினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 67

அஞ்சுக அஞ்செழுத் துண்மை அறிந்தபின்
நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுஎன்று சாற்றுகின் றேனே.

பொழிப்புரை :

ஐந்து மலங்களும் நீங்கிப் போகும்படி அஞ் செழுத்தின் பொருளை எவரேனும் அறிந்தபின், இறைவன் அவர்களது நெஞ்சத்தில் நிரம்பி விளங்குவான். அவர்களது உறைவிடத்திற்கும் `அழிவு` என்பது உண்டாகாது. ஆகையால், இந்த மந்திரமே யாவர்க்கும் புகலிடமாகும். நான் உண்மையாகவே சொல்லுகின்றேன்; இதில் சிறிதும் பொய்யில்லை.

குறிப்புரை :

ஐந்து மலங்களாவன; `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி` என்பன.
``மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்றான்`` 1
என்றதேயன்றி
``மலங்கள் ஐந்தாற் சுழல்வன் தயிரிற்பொரு மத்தெனவே`` 2
எனவும் அருளிச் செய்தமை காண்க. உகுதல் - சிந்திப்போதல். ``உண்மை`` என்றது பொருளை. அஞ்செழுத்தின் பொருள்கள் மேலே பலவிடத்தும் கூறப்பட்டன. `உண்மை விளக்கம், திருவருட்பயன்` என்னும் நூல்களிலும் தெளியக் காண்க. `பொருளை அறிதல்` மேற்கூறிய மூன்றெழுத்துக்களின் சிறப்பு உணர்தலைப் பயக்குமாதலின், ``அறிந்த பின், நெஞ்சகத்து உள்ளே நிறையும் பராபரம்`` என்றார், மனை, பெத்தத்தில் உடம்பும், முத்தியில் அருளுமாம். `மனைக்கு அழிவில்லை` எனவே, `அருளே நிலைக்களமாய்விடும்` என்றதாயிற்று. ஆகவே, மேற் கூறிய மூன்றெழுத்தின் பெருமை இதனால் வலியுறுத்தப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 68

சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்
சிவாயவொ டவ்வே சிவனுரு வாகும்
சிவாயவொ டவ்வும் தெளியவல் லார்கள்
சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே.

பொழிப்புரை :

மேற்கூறிய ``சிவாய`` என்னும் மூன்றெழுத்தை `ஔ` என்னும் வித்தெழுத்தோடு ஒரு மந்திரமாகத் தெளிந்து, அங்ஙனமே ஓதினால், அம்மந்திரமே சிவனது வடிவாய் விளங்கும். அதனால், அத்தெளிவை உடையவர்கள் பிற மந்திரங்களைத் தெளிதல் இல்லை.

குறிப்புரை :

இதனால் மேற்கூறிய மந்திரம் `ஔ` என்னும் பீசாக்கரத்தை உடைமை கூறப்பட்டது. `ஔ` என்றே விதிப்பினும், `ஔம்` என்பதே கருத்து என்பது மேலே கூறப்பட்டதைக் கடை பிடிக்க. இது, `ஹௌம்` எனப்படுதலும் இயல்பு. `ஓம்` என்பது முதற் கண் நிற்றலை எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை. `ஔ` என்பதைச் செய்யுளின்பம் நோக்கி, `அவ்` என்றே ஓதினார். இவ்வாறன்றி, வகர ஈற்றுச் சுட்டுப் பெயராக உரைப்பின் பொருள்படாமை அறிக.

பண் :

பாடல் எண் : 69

சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுற நாடி
ஒகார முடனே ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்துநின் றானே.

பொழிப்புரை :

மேல், ``நகார மகார சிகார நடுவாய்`` (959) என்ற மந்திரத்தின் பொருளே இதன் பொருளாகும்.

குறிப்புரை :

அங்கு, நகார முதலாக நிற்கும் மந்திரத்தை ஓதும் முறை கூறுதல் கருத்து; இங்கு அம்மந்திரத்தின் பயனையும் மேலை மந்திரங்களிற் கூறிய மூன்றெழுத்து மந்திரத்தின் பயனையும் புடைபட வைத்து உணர்த்து முகத்தால் பின்னதன் சிறப்பை வலியுறுத்துதல் கருத்து. இவையே இரண்டற்கும் வேற்றுமை. இது, வருகின்ற மந்திரத்திற்கும் பொருந்தும்.

பண் :

பாடல் எண் : 70

நம்முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத்
தம்முத லாகும் சதாசிவன் றானே.

பொழிப்புரை :

நகாரம் முதலாக நின்ற ஐந்தெழுத்து மந்திரத்தால் நினைத்த செயல் கைகூடும்; எவ்வாறெனில், ஆன்மாக்களுக்குப் பயனை விளைக்கின்ற வினைகள் அதன்கண் அடங்கியிருத்தலால். சிகாரம் முதலாக நின்ற மேற்கூறிய மூன்றெழுத்து மந்திரத்தில் அவையின்மையால், அதனைத் தெளிந்து ஓத வல்லவர்கட்கு உண்மை முதல்வனாகிய சதாசிவ மூர்த்தியே தலைவனாய் நிற்பான்; என்றது, `அபரமுத்திப் பெரும் பயன் உளதாகும்` என்றவாறு.

குறிப்புரை :

முதலடியின் இறுதியில், `கூடும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. இதன்பின், `என்னை` என எடுத்துக் கொண்டு உரைக்க. ``அடங்கிய`` என்பது முற்று. `வல்வினை அடங்கிய` என மாற்றி. `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. அடங்கியது நகாரத்திலாம். ``சிம் முதல்`` என்பது அதனை முதலாக உடைய மேற் கூறிய மந்திரத்தைக் குறித்தது. ``தானே`` என்னும் பிரிநிலை உயர்வு சிறப்பு உணர்த்தி நின்றது. மந்திரங்களை ஓதும் நிலை நாதத்தைக் கடவாத நிலையாதலின், அதற்கு அபரமுத்தியே பயனாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 71

நவமும் சிவமும் உயிர்பர மாகும்
தவம்ஒன் றிலாதன தத்துவ மாகும்
சிவம்ஒன்றி ஆய்பவர் ஆதர வால்அச்
சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே.

பொழிப்புரை :

பிரணவமும், சிவமந்திரமும் என்னும் இரண்டுமே உயிர் சிவமாதற்குரிய சாதனமாகும். அவற்றோடே நில்லாமல் பிறவற்றோடு பொருந்தி நிற்பனவெல்லாம் கருவிக் கூட்டத்துள்ளே நிறுத்துவனவே. சிவத்தோடு ஒன்றிய நிலையில் எல்லாவற்றையும் காண்கின்ற அனுபூதிச் செல்வர்களும் தமக்குத் தாம் சிவமேயாய் நிற்கும் தெளிவு உண்டானது அச்சிவமந்திரத்தால் என்றே ஆர்வத்துடன் கூறுவர்.

குறிப்புரை :

`பிரணவம்` என்பதை `நவம்` என்றே கூறினார். ``சிவம்`` மூன்றில் முதலதும், இறுதியதும் அதன் மந்திரத்தின்மேல் நின்றன. சிவ மந்திரம், `சிவ` என்பது. `நவமும் சிவமும்` என்றதனால், `ஓம் சிவ` என்பதைக் குறித்ததாயிற்று. ஈற்றில் மகாரத்தைக்கூட்டி `ஓம் சிவம்` என்றலும் பொருந்துவதாதல், `சிவ` என்னாது, ``சிவம்`` என்ற தனால் பெறப்படும், `ஒன்றிலாதன` என்பது பிறவற்றோடும் கூடி நிற்றலைக் குறித்தது. அதனால்,, இங்கு நகர மகரங்களேயன்றி யகரமும் விலக்கப்பட்டது. ``தானாம்`` என்பது, `தாம் தானாம்` எனப் பொருள் தந்தது ஆற்றலால். தான், சிவம். ஈற்றடி முதலில், `சிவத்தால் என்னும் உருபு தொகுத்தலாயிற்று. மேற் கூறிவந்த மூன்றெழுத்து மந்திரத்தினும் இவ் இரண்டெழுத்து மந்திரம் சிறப்புடைத்தாதல் இதனுள் கூறப்பட்டதாம். ``ஐம்பதெழுத்தே`` (948) என்பது முதலாக இதுகாறும் திருவைந்தெழுத்தின் பெருமையே விரித்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 72

கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குற வாவர்கள்
தேடி யதனைத் தெளிந்தறி யீரே.

பொழிப்புரை :

அறிவுடையோர் நாடி நிற்கின்ற சிவனை அறிவின் கண் உள்ளவனாக உணர்ந்து, அவ்வறிவைப் பெறுதற்கு அகார உகாரங்களின் கூட்டாகிய ஓகாரத்தையாவது அல்லது யகாரத்தை யாவது நீயாக மனம் ஒருங்கித் தியானி. அங்ஙனம் தியானித்தால் இது காறும் உன்னோடு மாறுபட்டுப் போராடி வந்த பஞ்சேந்திரியங்களும் உன் வயத்தனவாய் உனக்குத் துணைசெய்து நிற்கும். ஆதலால், அவ் இந்திரியங்களை வயப்படுத்த நீ தேடிக்கொண்டிருந்த வழியை இவ்வாறு தெளிந்தறிக.

குறிப்புரை :

`எட்டு` என்னும் எண்ணின் வடிவம் `அ` என்பதும், `இரண்டு` என்னும் எண்ணின் வடிவம் `உ` என்பதும் ஆதலால், அவற்றைக் குறிக்கும் குறிப்பு மொழியாக முறையே, `எட்டு` என்பதும், `இரண்டு` என்பதும் குழூஉக்குறியாகச் சொல்லப்படுதல் வழக்கம். `கூடிய அ, உ` என்றதனால், `ஓகாரம்` என்பது விளங்கிற்று.
இனி, இஃது, எட்டும், இரண்டும் கூடிய வழி ஆவது பத்தாத லின், `பத்தின் வடிவமாகிய யகரம்` என்பதும் பொருளாகும். ஆகவே, ஆன்மா தன்னை அசுத்த தத்துவங்களினின்றும் வேறாகக் காணுதற்குத் தன்னைப் பிரணவ வடிவாகவேனும், திருவைந்தெழுத்தில் யகார வடிவாகவேனும் உணர்தல் வேண்டும் என்பது இதனால் உணர்த்தப் பட்டதாம். ``எட்டினோடிரண்டும் அறியே னையே`` (திருச்சதகம் - 53) என்ற திருவாசகத் தொடரும் இங்கு நினைக்கத் தக்கது.
இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. தேடியது - தேடப்பட்டது. ஈற்றில், ``அறியீர்`` என்றது, உயர்த்தற்கண் வந்த பால் வழுவமைதி. திருவம்பலச் சக்கரத்தில் அமைந்த மந்திரங்களுள், திருவைந் தெழுத்தின் சிறப்பினைப் பல்லாற்றானும் வலியுறுத்தி ஓதியபின், இதுமுதலாகப் பிறவற்றின் சிறப்பை வலியுறுத்துகின்றார்.

பண் :

பாடல் எண் : 73

எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.

பொழிப்புரை :

மேல், ``எட்டும் இரண்டும்`` என்னும் குறிப்பு மொழியால் உணர்த்தப்பட்ட அப்பொருள்களை அனுபவமாக உணராதவர், `அ, உ` என்று எழுத்தை அறியத் தொடங்கும் அத் தொடக்க அறிவுகூட இல்லாதவரேயாவர். இன்னும், எட்டு என்னும் எண்ணை யும் இரண்டு என்னும் எண்ணையும் கூட்டுத்தொகை காணும் அறிவும் இல்லாதவரே யாவர். இனி, ``எட்டும், இரண்டும்`` என்பதற்கு, மேற் சொல்லப்பட்ட இருபொருள்களில் பின்னதாகிய `பத்து` எனக் கொண்டு யகாரத்தைக் கொள்ளுதலே சிவாகமங்களின் ஞானபாதக் கருத்தாகும்.

குறிப்புரை :

கல்வியறிவு மிக்கிருந்தும் அதனாற் பயன் கொள் ளாமைபற்றி அவரை இத்துணை அறிவிலிகளாகக் கூறினார். ஆகவே, இரண்டாம் அடிக்கு இந்த இருபொருளும் கொள்க.
அவ் இருபொருள்களில் ஒன்றை,
``அ உ அறியா அறிவில் இடைமகனே`` 1
என்பதிலும் காணலாம். மேற் காட்டிய திருவாசகத்தொடர் மேற்போக் கில் இங்குக் கூறியவாறே இவ் இருபொருளையும் குறித்தல் வெளிப் படை. இரு மூன்று நான்கு - பத்து. சிவாகமங்களே சித்தாந்தமாதல் நன்கறியப்பட்டது.
இவ் இரண்டு மந்திரங்களாலும் முன்னர்க் கூறிப் போந்த மந்திர எழுத்துக்களுள் சிலவற்றின் சிறப்பு வலியுறுத்தப்பட்டது. `தமிழில் மந்திரம் உண்டோ` என ஐயுறுவார்க்கு `உண்டு` என இம்மரபு தெளிவுறுத்துதல் காண்க.

பண் :

பாடல் எண் : 74

எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி
யிட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேஅறை நாற்பத்தெட் டும்இட்டுச்
சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே.

பொழிப்புரை :

செங்குத்தாக எட்டு நேர்க்கோடு கிழித்து, அவற்றின் மேல் குறுக்காக எட்டுக் கோடுகளை இழுக்க நாற்பத்தொன்பது அறைகள் உண்டாகும்; அவற்றுள் நடு அறையில் இறைவன் எழுத் தாகிய சிகாரம் அமையுமாறு மேல் (906) மேற்கூறியபடி திருவைந் தெழுத்தை ஐந்து வகையாக மாற்றி முறையே இருபத்தைந்து அறைகளில் பொறித்தபின், நடு அறையொழிந்த நாற்பத்தெட்டு அறைகளிலும் எழுத்துக்கள் இருக்கச்செய்ய வேண்டும்; அஃதாவது எஞ்சிய இருபத்து நான்கு அறைகளிலும் பிற எழுத்துக்களைப் பொறிக்க வேண்டும். அவ்வாறு செய்தவுடன் சக்கரத்தை வழிபட்டுத் திருவைந்தெழுத்தைச் செபிக்கத் தொடங்கலாம்.

குறிப்புரை :

``கீறியிட்ட`` என்பது ஒருசொல். கீறியிட்ட நடுவு - கீறிய தனால் உண்டான நடு அறை. `ஒன்றியபின்` என்பது, ``ஒன்றில்`` எனத் திரிந்து நின்றது. வட்டம் - சக்கரம். `நாற்பத்தெட்டிலும் எழுத்தை இட்டு` எனச் செயப் படுபொருள் வருவித்துக் கொள்க. `சிட்ட` என்பதில் அகரம் தொகுத்த லாயிற்று. சிட்டம் - மேன்மை. எஞ்சிய இருபத்து நான்கு அறைகளிலும் பொறித்தற்கு உரிய எழுத்துக்கள் வருகின்ற மந்திரத்திற் கூறப்படும்.

பண் :

பாடல் எண் : 75

தானவர் சிட்டர் சதுரர் இருவர்
ஆனஇம் மூவரோ டாற்ற அராதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் செய்சிவ சக்கரந் தானே.

பொழிப்புரை :

தானம் - இடம். தானவர் -இடங்காவலர்; (கே்ஷத் திர பாலகர்) பைரவர். சட்டர் - செப்பம் செய்பவர்; குற்றம் செய் தோரை ஒறுத்துத் திருத்துபவர்; வீரபத்திரர். சதுரர் இருவர் - திற முடைய மகார் இருவர்; பிள்ளையாரும், முருகரும். ஆன இம் மூவர் - இவ்வாறு மூன்று வகையாகச் சொல்ல நின்றவர். ஆற்ற அராதிகள் - நெறியில் உள்ள உருத்திரர் முதலியோர்; உருத்திரர் முதலாகக் கீழ் நோக்கி எண்ண வருகின்ற மாலும், அயனும், உருத்திரர் முதலாக மேல் நோக்கி எண்ணவருகின்ற மகேசுரர், சதாசிவரும் ஆக ஐவர். ஏனைப் பதினைந்தும் - மேற்சொல்லிய ஒன்பதின்மரது எழுத்துக்களையும் பொறித்தபின் எஞ்சி நிற்கின்ற பதினைந்து அறைகளிலும், விந்து, நாதம், சூழ்படை (பரிவாரங்கள்) என்ப வற்றது எழுத்துக்களைப் பொறிக்கச் சிவசக்கரம் அமையும்.

குறிப்புரை :

இச்சக்கரத்தின் வடிவம் ஆமாறு:
`கள்` விகுதி உயர்திணைப் பன்மையையும் உணர்த்தி நிற்றல் பிற்கால வழக்காதல் வெளிப்படை. ``ஏனைப் பதினைந்து`` என்ற தனால்,, `முன்னர்க் கூறப்பட்டன ஒன்பது` என்பது பெறப்பட்டது. பதினைந்தில் விந்து நாதங்களைப் பிரித்தமையால். சேனை பதின் மூன்றாயிற்று. ``சேனை`` எனப்பட்ட பதின்மூவராவார் திசை காவலர் எண்மரும், `நந்தி, மாகாளர், பிருங்கி, இடபர், சண்டர்` என்னும் ஐவரும் ஆவர். ஈற்றில், `அமையும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
விளிம்பு அறை இருபத்து நான்கிலும் உள்ள எழுத்துக்களின் விளக்கம் வருமாறு:-
1. ளம் - இந்திரன், 2. ரம் - அக்கினி, 3. யம் - யமன். 4. ந்ரூம்- நிருதி, 5. வம் - வருணன், 6. ஹ்யம் - வாயு, 7. கம் - குபேரன், 8. ஈம் - ஈசானன்.
9. ஹ்லாம் - பிரமன், 10. ஹ்வீம் - திருமால், 11. ஹ்ரூம் - உருத்திரன், 12. ஹ்யைம் - மகேசுவரன், 13. ஹ - சதாசிவன், 14. அம்- விந்து, 15. அ - நாதம்.
16. கம் - கணபதி, 17. ஸம் - கந்தன், 18. நம் - நந்தி, 19. ரும்- இடபன், 20. ஸம் - மகாகாளன், 21. ப்ரும் - பிருங்கி, 22. ஹ்வம் - வீரபத்திரன். 23. சம் - சண்டன், 24. பம் - பைரவன்.
மையக் கட்டத்தில் இறைவன் எழுத்தாகிய சிகாரம் நிற்றலைக் காண்க
இவ் வரிசை எண் வழிபாட்டு முறை பற்றியது. நாயனார் சொல் சுருங்கிச் செய்யுளாமாறு பற்றியே கூறினார்; வழிபாட்டு முறை பற்றிக் கூறினாரல்லர், அஃது ஆசிரியன்மார் அறிவுறுக்க அறிந்து கொள்ளப்படும் ஆதலின்.
சக்கரத்தின் மேற்பக்கம் வடக்காகும். ஆன்மார்த்த வழி பாட்டில், வழிபடுவோர் வடக்குநோக்கி அமர்ந்திருக்க, வழி பாட்டிடம் மேற்குநோக்கிய நுழைவாயிலைக் கொண்டிருக்கும். அதனால், சக்கரத்தின் நுழைவாயிலும் மேற்கு நோக்கியே நிற்கும்.
அம்முறையில் இருத்தப்பட்ட இச்சக்கரத்தில் முதற்கண் திசை காவலரை இந்திரன் முதலாக ஈசானன் ஈறாக முறையே வலமாக வழிபட்டு, அதன்பின் பிரமன் முதலாக நாதம் ஈறாக முறையே வலமாக வழிபட்டு, மூன்றாவது கணபதி முதலாகப் பைரவர் ஈறாக முறையே வலமாக வழிபட்டு, வழிபாடு முடிந்த பின்னர் அம்முறையே ஒவ்வொரு மந்திரத்தையும் பத்து பத்து உருச் செபித்துப் பின் திரு வைந்தெழுத்தை நூற்றெட்டு முதலாக வேண்டும் அளவு செபிக்கலாம். இது, போக சாதன முறை.
முத்தி சாதன முறைக்குத் திசை காவலரைவழிபட்ட பின்னர்க் கணபதி முதலாகத் தொடங்கி நேரே வலமாகச் சென்று பைரவனோடு ஒரே வழிபாடாக முடிக்கப்படும். திருவைந்தெழுத்தும் இவ் இருமுறை கட்கும் ஏற்றவாறு செபிக்கப்படுதல், மேற் பலவிடத்தும் கூறப்பட்டது.
இச்சக்கரத்தை மேற்கூறியவாறு வைத்து நோக்கின், வலப் பாதி காரணக் கடவுளர் பகுதியாயும், இடப்பாதி காரியக் கடவுளர் பகுதியாயும் நிற்றல் காணலாம். இவையெல்லாம் மரபு வழி அறிய வைத்தார் என்க.
இவ்விரண்டு மந்திரங்களாலும் மேற்கூறிய சிற்றம்பலச் சக்கரத்தைச் சிவசக்கரமாகச் செய்து வழிபடுமாறு கூறப்பட்டது.
இதனுள், இந்திரதிசையில் சூரியனும், குபேரதிசையில் சந்திரனும் அடங்குவர். சூரியனிடத்து அங்காரகன் முதலிய ஐங்கோ ளினரும் அடங்குவர். உருத்திரனிடத்தில் உருத்திரர் யாவரும் அடங் குவர். வித்தியேசுரர்களும், மந்திர மகேசுரர்களும் மகேசுரனிடத்தில் அடங்குவர். அணு சதாசிவர்கள் சதா சிவனிடத்தில் அடங்குவர். நந்தி யிடத்துச் சிவகணங்கள் பலரும் அடங்குவர். பிருங்கியினிடத்து முனிவர்கள் அடங்குவர். இன்னும் பிற தேவர்களும் இந்திரனிடத்தே அடங்குவர். இங்குக்கூறிய தலைவர் பலர்க்கும் பரிவாரங்களாய் உள்ளவர்கள் அவ்வத் தலைவரிடத்தே அடங்கி நிற்றல் சொல்ல வேண்டா. இதனால், இச்சக்கரம் கடவுளர் பலரையும் புறஞ் சூழக் கொண்ட சிவசக்கரமாய் அமைந்து நிற்றல் அறிக.

பண் :

பாடல் எண் : 76

பட்டன மாதவம் ஆற்றும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நம என்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.

பொழிப்புரை :

இயன்ற அளவு செய்யப்பட்ட சிவன் பணியே, மேலானவற்றிற்கெல்லாம் மேலான வீட்டினைப் பெறுவிப்பதாகும். அதனால், தற்போதத்தை விட்டவர்கள் சிவனையே புகலிடமாக அடைவர். ஆகலின், யானும் அவனது பணி வகைகள் பலவற்றில் ஏதேனும் ஒன்றில் எள்ளளவாயினும் மேற்கொள்வேன்; போற்றுங் கால் அவனது திருநாமத்தையன்றி வேறொன்றைச் சொல்ல அறியேன்.

குறிப்புரை :

`இறப்பில்தவம்` 1 என்பார். ``மாதவம்`` என்றார். `பராபரம் ஆற்றும்` என மாறிக் கூட்டுக. ஆற்றுதல் - தருதல். `பராற்பரம்` என்பது `பராபரம்` என மருவிற்று.
இதனால், `சிவசக்கரத்தை அமைத்து அதன் வழி இயன்றளவு சிவழிபாடு செய்யுங்கள்` என்பது குறிப்பால் உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 77

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றான
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.

பொழிப்புரை :

[இம்மந்திரம் மேலே 89 ஆம் மந்திரமாகவும் வந்திருத்தலால் இதன் பொருளை அவ்விடத்தே கண்டு கொள்க].

குறிப்புரை :

இது முன்னே வந்திருப்பினும், அங்கு, `எல்லாப் பேத மும் சிவபேதமே` என்பதை விளக்குதற் பொருட்டும், இங்கு, எல்லா மந்திரங்களும் சிவனது மந்திரமே` என்பதை விளக்குதற் பொருட்டும் வந்தன. எனவே, இரண்டிடத்தும் கருத்து வேறுபடுதல் அறிக. தொல்காப்பியத்திலும் சூத்திர வடிவம் பல இடங்களில் ஒன்றாய் இருப்பினும், பொருளால் அவை வேறு வேறு சூத்திரங்களாய் நிற்றல் காண்க. இதனால், ``சவை`` என்பது, மேல், `தொகுதி` என்றும், இங்கு, `திருவம் பலம்` என்றும் பொருள்படுதல் அறிந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 78

வித்தாஞ் செகமய மாக வரைகீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்
உத்தாரம் பன்னிரண் டாதிகலை தொகும்
பத்தாம் பிரம சடங்குபார்த் தோதிடே.

பொழிப்புரை :

உலகத்திற்குக் காரணமாகிய தத்துவங்களின் எண்ணிக்கை (முப்பத்தாறு) அளவில் அறைகள் கீறி, அவற்றுள் இடப் பால் பதினாறு அறைகளைச் சந்திரன் கூறாகக் கொண்டு ஐம்பத்தோ ரெழுத்துக்களில் ஐவருக்கத்தில் இடைநின்ற பதினைந்தும் நீக்கி ஒடுக்க முறையில் க்ஷகாரம் முதலாக டகாரம் ஈறாக உள்ள பதினாறு எழுத்துக் களையும் சந்திரனது பதினாறு கலைகளாகப் பாவித்தும், வலப்பால் பன்னிரண்டு அறையில் ஞகாரம் முதலாக உயிரெழுத்துக்களில் எகர ஒகரக் குறில்களையும் சேர்த்து எகரம் ஈறாகப் பன்னிரண்டெழுத்துக் களையும் சூரியனது கலைகளாகப் பாவித்தும், எஞ்சி நின்ற எட்டு அறைகளோடு மேற்பக்கத்தில் கொடு முடிபோல நடுவிரண்டு அறைக்கு நேராக இரண்டு அறைகள் நிராதார மாகப் பரசிவன் பராசத் திகளுக்குக் கீறி, ஆகப் பத்து அறைகளில் எஞ்சிய, ளுகாரம் (ளு) முதலிய பத்து உயிரெழுத்துக்களையும் அக்கினி கலைகளாகப் பாவித்தும் பொறித்துக் காயத்திரியை முறைப்படி செபித்தபின், இவ்வெழுத்துக்களை விந்து ஈறாக ஓதுக.

குறிப்புரை :

`செக வித்தாம் அவை மயமாக` என்க. `வித்துக் கூறவே அவற்றின் நிலமாய பரையும், அந்நிலத்தைப் பக்குவப்படுத்து வோனாகிய பரசிவனும் கொள்ளப்படுவர்` என்பது பின்னர் முப்பத் தெட்டு இடங்களைக் குறித்தலால் அறியப்படும். யோகத்திலும், சிவனது கூற்றிலும், `இடப்பால், வலப்பால், நடு` என்னும் மூன்று பகுதியும் சந்திர சூரிய அக்கினிகளின் கூறாதல் தெளிவாதலின், சக்கர அறைகளிலும் அவ்வாறு கொள்ளுதல் பெறப்பட்டது. இம்முறையில் இச்சக்கரம் அமையும் முறை வருமாறு:-
சிவனது அதிட்டானங்களில் (இடங்களில்) சந்திர சூரிய அக்கினி மண்டலங்கள் சிறந்தனவாகலின் அம்மண்டல வடிவில் அமைவது இச்சக்கரம். இதனால், இது திரிமண்டலச் சக்கரமாகும். இறைவனது அதிட்டானங்களுள் திருவம்பலமாகும் என்பது கருத்து. `நந்து` என்பது வலித்தல் பெற்றது. நந்துதல் - வளர்தல். உத்தாரம் - பின்பு. ஆதி - ஆதித்தன். அவன் கலையொடு தொகுவது அக்கினிகலை.
இதனால், இது மற்றொருவகைத் திருவம்பலமாகிய திரிமண்டலச் சக்கரம் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 79

கண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடைக்
கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்
பண்பழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமஎன லாமே.

பொழிப்புரை :

யான் சிவனை இச்சக்கரத்தின் வழியே கண்டு உயர்வு பெற்றேன்; அதனால், பின்பு அவனை நான் எனது உள்ளத் தாமரையிலே அடங்கக் கொண்டு மேலும் உயர்வு பெற்றேன்; ஆகவே, இனித் தன் இயல்பு கெடாத பதிஞானத்தின் வழியே சென்று அழியாத அன்புடன் திருவைந்தெழுத்தைச் செபிக்கும் பேற்றினைப் பெறுதல் திண்ணம்.

குறிப்புரை :

`அதனால், நீவிரும் இவ்வாறு அப்பேற்றினைப் பெறு மின்` என்பது குறிப்பெச்சம். பதி, ஆகுபெயர். ``நம`` என்றது, `நம சிவாய` என்பதை முதற் குறிப்பாற் கூறியவாறு. இங்குக் கூறிய பஞ் சாட்சரம் அதன் பேதங்கள் அனைத்தையும் கொள்ள நின்றது.
இதனால், மேற்கூறிய திரிமண்டலச் சக்கரம் அதற்கு முன்னர்க் கூறப்பட்ட சிவசக்கரத்திற் செலுத்துவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 80

புண்ணிய வானவர் பூமழை தூவிநின்
றெண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நமஎன்னும் நாமத்தைக்
கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.

பொழிப்புரை :

தேவர்களுக்குள் பக்குவம் எய்தினோர் பூக்களை மழைபோலத் தூவிச் சிவசக்கரத்தில் உள்ள திருவைந்தெழுத்து வாயிலாகச் சிவபெருமானது இரண்டு திருவடிகளைத் தியானிப் பார்கள். பின்னும் அம்மந்திரத்தையே துணையாகப் பற்றி அத்திருவடி களைக் கண்போலச் சிறந்தனவாக உணர்ந்து அவற்றில் இரண்டறக் கலந்து நிற்பார்கள்.

குறிப்புரை :

இதனால், சிவசக்கரம் திரிமண்டலச் சக்கரத்தின் பயனாதல் கூறி, அதன் சிறப்பு வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 81

ஆறெழுத் தாகுவ ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலைஎழுத் தொன்றுளது
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.

பொழிப்புரை :

பிரணவத்தோடு கூடிய ஆறாகிநிற்கும் திருவைந் தெழுத்து மந்திரத்தையே ஆறு சமயங்களும் பற்றி நிற்றல் வெளிப் படை. ஆயினும், சிலர் `அந்த ஆறெழுத்து மந்திரத்தினும் இருபத்து நான்கு எழுத்தாகிய காயத்திரி மந்திரமே சிறந்தது` என மயங்குவர். `ஆறு` என்னும் எண்ணினது நான்மடங்கே இருபத்து நான்கு என்னும் எண் ணியல்பை நோக்கினாலே, `திருவைந்தெழுத்தில் அடங்குவது காயத்திரி` என்பது புலனாய் விடும். இன்னும் காயத்திரியின் முதலிலே `ஓம்` என்ற ஓர் எழுத்து உள்ளது. அதனைப் பகுத்தறிய வல்லவர் திரு வைந்தெழுத்தின் உண்மையையும் உணர்ந்து பிறவி நீங்கவல்லவராவர்.

குறிப்புரை :

`எனவே, அங்ஙனம் அறியமாட்டாதவரே, `திருவைந் தெழுத்திற்கு மேற்பட்டது காயத்திரி` எனக் கூறிப்பிறவியில் அழுந்துவர்` என்பது பெறப்பட்டது. `இருபத்து நான்கு` என்னும் எண்ணிற்குக் காரண எண் ஆறேயன்றி, `நான்கு, மூன்று, இரண்டு` என் பனவும் ஆதலின், `திருவைந்தெழுத்தும் அவ்வெண்களின் அளவாக நின்று மேன்மேல் உயர்ந்த பயன்களைத் தருதல் மேலெல்லாம் கூறி வந்தவாறு பற்றி அறிந்து கொள்க` என்பது குறிப்பாற் கூறியதாயிற்று. `சாவித்திரி, காயத்திரி` என்பார் வேறு வேறு தேவியாராயினும், ஒற்றுமைபற்றி ஒருவராகச் சொல்லும் வழக்கும் உண்மை பற்றி இங்குக் காயத்திரி மந்திரத்தை, ``சாவித்திரி`` என்றார். தலை - முதல்.
பிரணவமாகிய ஓங்காரம், `அ, உ, ம்` எனப் பிரிக்கப்படும் என்பது மேல் பலவிடத்தும் சொல்லப்பட்டது. அப்பிரிவு மூன்றனுள் அகாரம் தோற்றத்தையும், உகாரம் நிலையையும், மகாரம் இறுதியை யும் குறிக்கும். அதனால், அவை பிரமன் முதலிய மூவரைக் குறிப்பனவுமாம். வியட்டி நிலையில் பிரணவம் இவ்வாறாதலை உணர்வார், சமட்டி நிலையில் முத்தொழிற்கும் முதல்வனாகிய சிவபெருமானையே குறிக்கும் என்பதை ஐயம் அற உணர்வர். பிரணவத்தின் பின் பூ: முதலிய வியாகிருதியைச் சேர்த்தால் காயத்திரி; சேர்க்காதது சாவித்திரி எனப்படும்.
இனிச் சடப்பொருள்களாகிய தனு கரண புவன போகங் களினது தோற்றம் முதலிய மூன்றனைக் குறிக்கின்ற அவ் அகாரம் முதலிய மூன்றும் சித்துப் பொருளாகிய உயிரினது அறிவின் தோற்றம், நிலை, ஒடுக்கம் என்னும் மூன்றனையும் கூடக் குறிப்பனவாம். ஆகவே, அகார உகாரங்கள் சகல நிலையில் புருவ நடுவில் நிகழும் சகலசாக்கிரம் முதலிய ஐந்திலும் உயிர்கட்குப் பாசஞான பசுஞானங் களைத் தோற்றுவித்து நிறுத்தலாகிய நினைப்பினையும் ஒடுக்கு தலாகிய மறப்பினையும் குறித்தலும், சுத்தநிலையில் அவை சுத்தாவத் தைகளில் பதிஞானத்தினைத் தோற்றுவித்து நிறுத்துதலாகிய அருள் நிலையையும் பின் பசுபேத ஒடுக்கமாகிய ஆனந்த நிலையையும் குறித்தலும் பெறப்பட்டன. படவே, பிரணவம் வியட்டிநிலையில் பிரமன் முதலிய மூவரையும் இயைபுபற்றி ஓர் ஓர் எல்லையளவும் உபசாரத்தாற் குறிப்பதாயினும், உண்மையில் அஃது எந்நிலையிலும் சிவபெருமானையே உணர்த்தி நிற்றல் இனிது பெறப்படும். அதனால், பிரணவத்தின் பொருளும் திருவைந்தெழுத்தால் உணர்த்தப்படும் சிவபெருமானே யாதல் நன்கு அறியப்படும்.
இன்னும் காயத்திரி மந்திரம் மூன்று பிரிவுகளாய் (வியாகிருதி களாய்) நிற்றலைப் பலரும் எடுத்துக் கூறுவர். அவற்றுள், முதற்பிரிவு சிவசத்தியையும், இரண்டாவது பிரிவு சிவத்தையும், மூன்றாவது பிரிவு உயிரையும் முதன்மையாக நோக்கி நிற்பன. ஆகவே, அம்மூன்றையும் குறித்து நிற்கின்ற திருவைந்தெழுத்தின் பொருளே காயத்திரியின் பொருளு மாதல் தெளிவாம். இன்னோரன்ன காரணங்கள் பற்றியே நாயனார், இங்கு,
``சாவித் திரியில் தலையெழுத் தொன்றுள;
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே``
என அறுதியிட்டு அருளிச் செய்தார்.
காயத்திரி மந்திரத்துள் அமைந்த `சவிதா, பர்க்கஸ்` என்னும் சொற்களுக்கு முறையே, `சூரியன்` என்றும், `சூரியனது ஒளி` என்றுமே வைதிகர் பொருள் கொள்வர். ஆனால், சைவர் அவ்வாறன்றி அவற்றிற்கு முறையே `சிவன்` என்றும், `அவனது சத்தி` என்றுமே பொருள்கொள்வர். `வேதம் ஓரோர் இடத்தில் ஓரொரு தேவரைப் புகழ்ந்து கூறினாலும் உண்மை முதற்கடவுளாவான் சிவபெருமானே என்பதே அதற்குக் கருத்து` எனவும், `ஆகவே, காயத்திரிக்கும் மேற் கூறியவாறு சைவர் கூறும் பொருளே பொருள்` எனவும் உணர்ந்து, அதனானே, திருவைந்தெழுத்து மந்திரமே அனைத்து மந்திரங்களினும் தலையானதாகக்கொண்டு அவ்வுணர்வோடே முத்தீவேட்டல், சந்தியா வந்தனம் செய்தல் முதலிய செயல்களைச் செய்வோரே சிறப்புடைய வேதியர் ஆவார் என்பதனைத் திருஞானசம்பந்தர் தமக்கு வேதியர்கள் உபநயனச் சடங்குசெய்து பூணூல் அணிவித்தல், பிரமோபதேசம் செய்தல், வேதம் ஓதுவித்தல் என்பவற்றைச் செய்த பொழுது அவர்கட்குத் தாம் கூறும் அறிவுரையாக,
``செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்திஉள் மந்திரம் அஞ்செ ழுத்துமே`` 1
என அருளிச் செய்தமையும், திருநாவுக்கரசரும் தமது ஆதி புராணத் திருக்குறுந்தொகையில்
``அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்;
அருக்க னாவான் அரனுரு அல்லனோ!
இருக்கு நான்மறை ஈசனை யேதொழும்
கருத்தி னைஅறி யார்கல் மனவரே`` 2
என அருளிச் செய்தமையும் இங்கு இன்றியமையாது நோக்கற் பாலன. திருஞானசம்பந்தர் குறிப்பிட்டருளிய செம்மை வேதியரை இக்காலத்துக் காண்டல் அரிது.
``ஆறு சமயங்கள்`` என்றது `காணாபத்தியம், கௌமாரம், சாத்தம், சைவம், ஸொரம், ஸௌமியம்`` என்பவற்றை. இவற்றில் நிற்போர் தம் தம் விருப்பக் கடவுளர் (இஷ்டதேவர்) ஆகிய கணபதி முதலியோரிடத்து அன்பு பூண்டு அவர்தம் மந்திரங்களை அன்பினால் ஓதினாராயினும், `சிவபெருமானே முதற் கடவுள்` என்பதிலும், `அதனால், அவனது திருவைந்தெழுத்தே முதல் (மூல) மந்திரம்` என்பதிலும் மாறுகொள்ளாதவராய் உடம்பட்டு ஒழுகுதல்பற்றி, ``ஆறெழுத்தாகுவ ஆறு சமயங்கள்` என்றார். ``சமயத்தில் உள்ளது நீறு`` என்ற திருநீற்றுப் பதிகத் தொடரும் இங்கு உடன் வைத்து உணரத்தக்கது. இதனானே, இவை `அகச் சமயம்` எனப்பட்டன.
இவற்றோடு ஒரு காலத்தில் ஒருங்குவைத்து எண்ணப்பட்ட வைணவம், பிற்காலத்தில், சிவபெருமானது ஆற்றலைத் தெளிய மாட்டாது தக்கனது ஆற்றலுக்கு அஞ்சி அவனது வேள்வியிற் சென்றிருந்து, அதனால், அவ்வேள்வியை ஒதுக்கிநின்ற சில திண்ணிய பேரிருடிகளது சாபத்திற்கு உட்பட்டோரால் மேற்கூறிய கருத்துக் களோடு மாறுகொண்டு வேறு நிற்பதாயிற்று. அதுபற்றி அதுவும் புறச் சமயமாக எண்ணப்படுகின்றது. இது,
``தாயி னும்நல்ல சங்கர னுக்கன்ப
ராய வுள்ளத் தமுதருந் தப்பெறார்
பேயர் பேய்முலை உண்டுயிர் போக்கிய
மாயன் மாயத்துட் பட்ட மனத்தரே`` 1
என்னும், மேற்குறித்த திருக்குறுந்தொகைப் பதிகத் திருப்பாடலால் நன்கறியப்படும். இதனுள் ``மாயன்`` என்றது, `மாயம் செய்யும் இயல்பினன்` என்பதையும், ``பேய் முலை உண்டு உயிர் போக்கிய`` என்றது, `நல்லோரை வஞ்சனையாற் கெடுக்க என்னும் தீயோரைக் தானும் வஞ்சனையாற் கெடுப்பவன்` என்பதையும், வெளிப்படை யினாலும், குறிப்பினாலும் உணர்த்தி நின்றன. ``மாயன் மாயம்`` என்றது, அவன் இவ்வாறான கருத்துப் பற்றிச் செய்த நூல்களை.
இதனால், ஆறெழுத்தின் பெருமை கூறும் முகத்தால் சிவசக்கரத்தினது சிறப்பே வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 82

எட்டினில் எட்டறை யிட்டோ ரறையிலே
கட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச்
சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டே
ஒட்டும் உயிர்கட் குமாபதி யானுண்டே.

பொழிப்புரை :

வெளியில் நான்கு கோடுகளும், உள்ளால் நான்கு கோடுகளும் ஆக எட்டுக் கோடுகளால் சுற்றிலும் எட்டு அறைகள் உண்டாக்கி, அவற்றின் நடுவில் உள்ள ஓர் அறை எட்டின் வடிவமாகிய அகாரத்தைப் பெற்று எட்டு முகமாய் அந்த எட்டு அறைகளையும் நோக்கும்படி அவற்றைப் பிரணவ கலைகளால் நிரப்பிப் பின்பு எல்லா அறைகளையும் உட்படுத்துச் சூழும்படி ஓங்காரத்தைப் பொறித்து அவற்றைப் பொருந்திச் செபிப்போர்க்குச் சிவன் உமா சகாயனாய் வெளிப்படுவான்.

குறிப்புரை :

எனவே, `இஃது உமாபதி சக்கரம்` என்பது பெறப் பட்டது. `மேற்கூறிய சிவ சக்கரத்தால் சிவன் அனைத்துக் கடவுளர் அதிபதியாய்த் தோன்றுவன்` என்பதும், இதனால், `உமையோடு மட்டும் கூடியே தோன்றுவான்` என்பதும், அறிந்து கொள்ளப்படும். இச்சக்கரத்தைக் காணுமாறு.
இதனால், மற்றொருவகைத் திருவம்பலச் சக்கரமாகிய உமாபதி சக்கரம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 83

நம்முதல் அவ்வொடு நாவின ராகியே
அம்முத லாகிய எட்டிடை யுற்றிட்டு
உம்முத லாக உணர்பவர் உச்சிமேல்
உம்முத லாயவன் உற்றுநின் றானே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கரத்தின்படியே சமட்டிப் பிரண வத்தை முன்வைத்து வியட்டிப் பிரணவத்தைச் செபிக்குங்கால் இடையே நகார முதலும் யகார ஈறுமான தூல பஞ்சாக்கரத்தை ஓதுதலையும் முறையாகக் கொண்டு, `இச்செபம் உகாரத்தை முதலிற் கொண்ட மந்திரத்திற்குரிய உமாதேவியின் தலைவனாகிய சிவனுக்கு உரியது` என்பதனை ஐயம் அறத் தெளிந்து செபிப்பவர் சென்னிமேல் அந்த உமாபதியாகிய சிவன் எழுந்தருளியிருப்பன்.

குறிப்புரை :

``நம்முதல் அவ்வொடு`` என்றதில், `அ` என்றது, யகரத்தையே, `யவ்வொடு` என்றே பாடம் ஓதினுமாம். ``அவ்வொடு`` என்றது அகர ஈற்றோடு என்றவாறு. அவ்வொடு என்றதன் பின் `பொருந்திய` என்பது எஞ்சி நின்றது. `நம்முதலொடும் அவ்வீற் றொடும் பொருந்திய நாவினர் ஆகி` என்க. ``எட்டு`` என்றது, எட்டு முகமாகவும் செபிக்கப்படும் எட்டு உருக்களை. `நாவினராகியே எட்டிடை உற்று` என்ற தனால், வியட்டிப் பிரணவத்திற்கு முன்னே தூல பஞ்சாக்கரத்தை வைத்து ஓதுதல் பெறப்பட்டது. உகாரம் முதலாகிய மந்திரம், `உம` என்பது,
இதனால், மேற்கூறிய சக்கரத்திற்கு, முன்னர்க் கூறிய முறைகளின்மேல் மற்றொரு முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 84

நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம்
துன்ற மெழுகைஉள் பூசிச் சுடரிடைத்
தன்றன் வெதுப்பிடத் தம்பனம் காணுமே.

பொழிப்புரை :

மாந்திரிக முறையில் `அட்ட கன்மவித்தை` என்ற ஒரு முறை சிறப்பாகச் சொல்லப்படுவது. `அவற்றுள் சிறந்தன ஆறே` என்பர். அந்த ஆறனையும் இது முதலாக ஆறு மந்திரங்களும் கூறுகின்றன. இவை வாம மார்க்கமாய் உயர்ந்தோர்கட்குரியன அல்ல ஆகையால், திவ்வியாகமப் பொருளாதல் அமையாது. அதனால், இவை பிறரால் சேர்க்கப் பட்டனவோ என எண்ண வேண்டியுள்ளது.
அட்ட கன்ம வித்தையுள் இது தம்பனம் கூறுகின்றது தம்பன மாவது பிறபொருள்களின் ஆற்றலைக் கட்டுப்படுத்துதல். நீரை அமிழ்த்தவொட்டாது தரைபோலநின்று தாங்கச்செய்வது `ஜலத்தம் பனம்` என்றும், நெருப்பைச் சுடவொட்டாது தடுத்து அதன்கண் இருத்தல், அதனைக் கையிற் கொள்ளுதல் முதலியவற்றைச் செய்தல் `அக்கினித்தம்பனம்` என்றும், காற்றை மோதி அலைக்கவொட்டாது தடுத்தலும், மூச்சுக்காற்றினை இயங்காது உள்நிறுத்தி உடம்பை மேலெழுப்பப் பண்ணுதலும் `வாயுத்தம்பனம்` என்றும் இவ்வாறு பல தம்பனங்கள் சொல்லப்படுகின்றன. மக்களை அசைய வொட்டாது தூண்கள் போல நிற்கச் செய்வதும், ஓடுகின்ற ஊர்திகளை ஓடவொட் டாமல் நிறுத்திவிடுதலும் போல்வனவும் இத் தம்பன வித்தையேயாம்.
தம்பனம் முதலிய ஒவ்வொன்றிற்கும் வேண்டப் படுவன மரப்பலகை, அதில் பொறிக்கப்படும் மந்திரம், ஓலையின் மேல் பூசத்தக்க பூச்சுப்பொருள், அவ்வோலையை இடும் இடம் முதலியன.
அவற்றுள் தம்பனத்திற்குப் பலகை, அரசமரப் பலகை. அதில், மேல் தொள்ளாயிரத்து ஆறாம் (906 ஆம்) மந்திரத்துள் சொல்லப்பட்ட ஐந்தெழுத்து மாற்றுமுறைகளில் இரண்டாவதனை முதலாகக் கொண்டு ஐயைந்து இருபத்தைந்தாகிய சதுரச் சக்கர அறைகளில் பொறித்து, அம்மந்திரம் முயற்சியால் பயனளித்தற்பொருட்டு ஓலையிலும் அவ்வாறே எழுதி, அதன்மேல் எந்த மெழுகையேனும் பூசி, விளக்கிலே அதன் வெப்பம் தாக்கும்படி அவ்வோலையைக் காய்ச்சி, யந்திரத்தை வழிபட்டு, மந்திரத்தை அம்முறையிலே செபித்து வர, `தம்பனம்` என்னும் வித்தை கைவரும்.

குறிப்புரை :

``நேராக ஒன்றிட`` என்றது, ``சக்கரத்தின் மேல்வரிசை யாகிய வடக்கு விளிம்பில்`` என்றவாறு. `ம இட்டு` `மகாரத்தை முதலிலே பொருந்த எழுதி` என்றதாம். இம்மந்திரம் `மசி` எனத் தொடங்குவதால், தம் பனத்திற்கு உரியதாம்; ``தன் தன்`` என்றதில் இரண்டாவது `தன்`, சாரியை, `வெதுப்பில் இட` என்க. இங்குக் கூறிய சக்கர அமைப்பு வருமாறு:-
இதனுள் மேல் விளிம்பில் உள்ள மந்திர எழுத்துக்கள் ஈசான மூலை தொடங்கி நிருதி மூலையில் முடியும் ஒரு கோடு தொடங்கி முன்னோக்கி அமைந்திருத்தல் காண்க.
இது `மோகனம்` என்னும் வித்தை கூறுகின்றது. மோகனம் - மயக்குதல். பொதுமக்கள், அரசர், செல்வர், மாதர், பகைவர், தெய்வம், பேய், பூதம், விலங்கு முதலிய அனைத்துயிர்களையும் தம்மிடத்து மயங்கித் தம்வழி நிற்கப்பண்ணுதலே மோகனம் என்க.

பண் :

பாடல் எண் : 85

கரண இறலிப் பலகை யமன்திசை
மரணமிட் டேட்டில் மகார எழுத்திட்டு
அரணமில் ஐங்காயம் பூசி அடுப்பில்
முரணப் புதைத்திட மோகனம் ஆகுமே.

பொழிப்புரை :

இதற்குப் பலகை கொன்றை மரப்பலகை. மந்திரம் மேற்சொல்லியவாறேயாம். மகாரத்தை முதலிற் கொண்டு நிற்றலால் இதுவே மாரண மந்திரமுமாம். (மலம். `மிருத்தியு` எனவும், `மூர்ச்ை\\\\u2970?` எனவும் சொல்லப்படுதலால், அதனைக் குறிக்கும் எழுத்தை முதலில் உடைய இம் மந்திரமே அவற்றை யெல்லாம் தருவதாம். இவ்வாறன்றி, `நசி என மாறித்தொடர்வதே மாரண மந்திரம்` என்னும் கருத்திற்கு இங்கு ஆசிரியர் நேர்ச்சி காணப்படவில்லை). மந்திரம் மேற்கூறிய வாறே யாயினும், அவற்றைச் சக்கரத்திலும், ஏட்டிலும் யமன் திசையாகிய தெற்கில் உள்ள வரிசையை முதலாகவும், வடக்கில் உள்ள வரிசையை இரண்டாவதாகவும் கொண்டு முறையே எழுதி ஓலையில் ஐங்காயத்தை அரைத்துப் பூசி அதனை அடுப்பு வாயில் அழுந்தப் புதைத்துச் சக்கரத்தை வழிபட்டு, மந்திரத்தைக் கீழ் விளிம்பு தொடங்கி மேற்கூறிய முறையிலே செபித்து வர, `மோகனம்` என்னும் வித்தை கைவரும்.

குறிப்புரை :

கரணம் - உபகரணம்; கருவி. அரணம் - பாதுகாவல். அரணம் இல் ஐங்காயம் - பிறரை பாதுகாவல் நீக்கி மயங்கச் செய்யும் ஐங்காயம். சுக்கு, மிளகு, கடுகு, ஈருள்ளி, வெள்ளுள்ளி என்பனவே ஐங்காயமாம். முரண் - வலிமை.
இங்குக் கூறிய சக்கர அமைப்பு வருமாறு:-
இதனுள், மாரண மந்திர எழுத்துக்கள் வாயுமூலை தொடங்கி அக்கினி மூலையில் முடியும் ஒரு கோடு தொடங்கி முன்னோக்கி அமைந்திருத்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 86

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாசப் பலகையில்
காண்கரு வேட்டில் கடுப்பூசி விந்துவிட்
டோங்காரம் வைத்திடு உச்சா டனத்துக்கே.

பொழிப்புரை :

இஃது உச்சாடனம் என்னும் வித்தை கூறுகின்றது. உச்சாடனம் - ஓட்டுதல். மேல்மயங்கிப் பண்ணின உயிர்களையே விலகி ஓடப் பண்ணுதல் உச்சாடனம் என்க.
இதற்குப் பலகை புரசம் (பூவரசம்) பலகை. சக்கரத்திலும், ஏட்டிலும் எழுத வேண்டிய மந்திரம் மேற்கூறிய வாறேயாம். ஓலையில் கரியும், நஞ்சும் பூசி, ஓங்காரத்தில் மகாரத்தை நீக்கி ஓகாரம் மட்டும் பலகையிலும், ஓலையிலும் சக்கரத்தைச் சுற்றி வளைத்து எழுதி, அதை ஒருமுறை பலகையோடு வழிபட்டு ஓலையைக் கொண்டுபோய் ஐயனார் கோவிலில் வடமேற்கு மூலையில் பாதுகாப்பாகப் புதைத்து விட்டுச் சக்கரத்தை வழிபட்டு, மந்திரத்தை மேற்கூறியவாறே செபித்து வர, `உச்சாடனம்` என்னும் வித்தை கைவரும்.

குறிப்புரை :

``ஐயனார் கோட்டத்தில்`` என்பதனை முதலில் கொண்டு உரைக்க. பாங்கு பட - பாதுகாப்பு உண்டாகும்படி. `காரேடு` என வரற்பாலது, `கருவேடு` என வந்தது. இதில் இன எதுகை வந்தது. இதற்குரிய சக்கரம் மேற் காட்டியதே ஆயினும், சக்கரத்தை ஓகாரத்தால் வளைத்தல் வேண்டும்.

பண் :

பாடல் எண் : 87

உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச்சோலையில் பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தில் முதுகாட்டில் வைத்திடு
வைச்சபின் மேலுமோர் மாரணம் வேண்டிலே.

பொழிப்புரை :

இது `மாரணம்` என்னும் வித்தை கூறுகின்றது. மாரணம் - மரணத்துன்பம். `அழிக்கப்படற்பாலன` என்று எண்ணும் உயிர்களை அழித்தொழிப்பதே மாரணம் என்க. உச்சாடனத்திற்குமேல் மாரணம் செய்ய விரும் பினால், மேலே சொல்லியவாறு செய்தபின் மற்றோர் ஓலை அதுபோல எழுதி, ஐங்காயம் பூசி உச்சி வேளையில் (நண்பகற்போதில்) சுடு காட்டிற் கொண்டுபோய் அக்கினிமூலையில் ஒன்றின்மேல் ஒன்றாய் எட்டு மூலை உண்டாக இரண்டு சதுரங்களையும் அவற்றின் உள்ளே ஒரு சதுரத் தையும் வரைந்து உள்ளே புதைத்துவிட்டு வந்து வழிபாட்டினையும், செபத்தையும் முன்போலச் செய்துவர, `மாரணம்` என்னும் வித்தை கைவரும்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொண்டு உரைக்க. ``பச்சோலை`` என்றது, `எழுதுவதற்குப் பதமாயுள்ள ஓலை` என்றவாறு. முச்சதுரம் வரையும் முறை:-

பண் :

பாடல் எண் : 88

ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி
ஏய்ந்த அகார உகார எழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்
கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே.

பொழிப்புரை :

இது, `வசியம்` என்னும் வித்தை கூறுகின்றது. மோகனம் செய்யப்பட்டேனும், அது செய்யப்படாது இயல்பாகவேனும் தம்வழி நிற்கும் உயிர்களை எவ்வாற்றானும் பிரிந்து போகாதபடி தம்வசப் படுத்தி வைப்பதே வசியம் என்க. இதற்குப் பலகை, வில்வமரப் பலகை. மந்திரம் அகார உகாரங்கள், அகார உகாரங்கள் விந்துவோடு கூடினவையாக மேற் சொல்லிய சக்கரத்தில் ஈசான மூலையிலிருந்து தொடங்கிப் பொறித்து, ஓலையிலும் அவ்வாறே எழுதி, அதன்மேல் அரிதாரத்தை (மஞ்சள் நிறமுடைய ஒன்றை)ப் பூசி, அதனை அந்தப் பலகைமேலே வைத்து வழிபட்டு அம்மந்திரத்தை எண்பதினாயிரம் உருச் செபித்தால், `வசியம்` என்னும் வித்தை கைகூடுவதாகும்.

குறிப்புரை :

ஈற்றடியில் `ஏய்ந்தது` என்பது ஈறு குறைந்து, `ஏய்ந் ததில்` என ஏழாவதன் தொகைபட நின்றது. வேண்டில் - விரும்பிச் செபித்தல், இதன்பின் `ஆம்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது. இங்குக் கூறிய சக்கர அமைப்பு வருமாறு:-

பண் :

பாடல் எண் : 89

எண்ஆக் கருடணைக் கேட்டின் யகாரமிட்
டெண்ணாப் பொன் நாளில் எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவ லின்பல கையிட்டு மேற்குநோக்
கெண்ணாஎழுத்தொடண்ணாயிரம்வேண்டியே.

பொழிப்புரை :

இஃது, `ஆகருடணம்` என்னும் வித்தை கூறுகின்றது. உயிர்ப் பொருளாயினும், உயிரல் பொருளாயினும் தொலைவில் உள்ளவற்றைத் தான் இருந்த இடத்தில் இருந்தே வரவழைத்தல் `ஆகருடணம்` என்னும் வித்தையாம். இதற்குப் பலகை வெண்ணாவல் மரப்பலகை. மந்திரம் மேற்கூறிய ஐந்தெழுத்து மாறலில் யகராம் முதலாக அமைவது யகாரம் முதலாக உள்ளது முதல் ஐந்து தொடர்களையும் முறையே ஐந்து வரிசை அறைகளில் பொறித்து, ஓலையிலும் அவ்வாறே எழுதி, அதன்மேல் யாதேனும் ஒரு வெண்பூச்சினைப் பூசி வியாழக் கிழமையில் மேற் சொன்ன பலகை மேல்வைத்து வழிபட்டு அன்று முதலாக மேற்கு நோக்கி அமர்ந்து அம் மந்திரங்களை அசபாமந்திரத்தோடே எண் ஆயிர உரு விரும்பிச் செபித்தால், `ஆகருடணம்` என்னும் வித்தை கைவரும்.

குறிப்புரை :

`உகாரம் இட்டு` என்பதும் பாடமாதலால், மேல் வசியத்திற்குச் சொல்லிய அம் மந்திரத்தை உகாரம் முதலாக மாற்றிக் கொள்ளுதலும் இதற்குப் பொருந்துவதே. `ஆகருடணை` என்பது, `ஆக்கருடணை` என மருவி நின்றது. இங்குக்கூறிய சக்கர அமைப்பு வருமாறு:- இதனுள் மந்திரங்கள் குறுக்கு வரிசையிலும், நெடுக்கு வரிசையிலும் ஒரே வகையாக அமைந்திருத்தலும், `நமசிவாயநமசி`, சிவாயநம சி` என மூலை நோக்கில் அமைந்திருத்தலும் காண்க. மேற்கூறியவாறு இச்சக்கரத்தில் ஈசான மூலை தொடங்கி முறையே `அம், உம்` என்பவற்றை `உம், அம்` என மாறி மாறி எழுதுதலும் பொருந்தும் என்க. இரண்டாம் அடியில், ``எண்ணா`` என்பதற்கு, `நாள்களை எண்ணி` என உரைக்க. எண்ணா எழுத்து - செபியாத மந்திரம்; அசபை. ``வேண்டி நோக்கு`` என்றாராயினும், `நோக்கி வேண்டு` என்றலே கருத்தாதல் அறிக. இதனுள், மூன்று, நான்காம் அடிகளைப் பிறவாறு ஓதுவன பாடம் ஆகாமை அறிந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 1

அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

பொழிப்புரை :

தாமரை முதல் செவ்வந்தி ஈறாக இங்குக் கூறப்பட்ட பூக்கள் வழிபாட்டிற்குக் கொள்ளத் தக்கனவாம்.

குறிப்புரை :

அம்புயம் - தாமரை. நீலம் - நீலோற்பலம்; குவளை, கழுநீர் - செங்கழுநீர்; இதுவும் குவளையின் வகை. நெய்தல் - ஒரு வகை ஆம்பல். வம்பு அவிழ் - வாசனையோடு மலர்கின்ற. பூகம் - கமுகு; இஃது இதன் பாளையில் உள்ள அரும்புகளாம். மாதவி - குருக் கத்தி; இதுவும் ஒருவகை மல்லிகை. மந்தாரம் - மந்தாரை. வகுளம் - மகிழ்.
வழிபாட்டிற்கு வேண்டும் பொருள்களுள் முதன்மை யானதாகிய பூவின் வகைகள் இதனால் எடுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

சாங்கம தாகவே சாந்தொடு சந்தனம்
தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்
பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்
தாங்கே அணிந்துநீர் அற்சியும் அன்பொடே.

பொழிப்புரை :

சந்தனத் தேய்வையைக் குங்குமப்பூ, பச்சைக் கர்ப்பூரம், அகிற் சாந்து இவை சேர்த்துப் பனிநீராற் குழம்பாக்கிச் சாத்தி நீரால் ஆட்டி அன்போடு வழிபடுங்கள்.

குறிப்புரை :

சாங்கமதாக - திருமேனியில் படத்தக்கதாக. சாந்து - தேய்வை. தேம் கமழ் - இனிதாக மணக்கின்ற. பாங்கு - நன்மை. `பாங்காகப் பட` (பொருந்த) என்க ``வைத்து`` என்றார், `முன்னே ஆட்ட வேண்டிய பொருள்களை ஆட்டியபின்` என்றற்கு. `அர்ச்சித்தல்` என்னும் பொதுச் சொல், இங்கு, ஆட்டுதல்மேல் நின்றது, இனி, ``நீர்`` என்பதை முன்னிலைப் பெயராக்கி உரைத்தலும் ஆம்.
இதனால், சிறப்புடைய ஒன்றை எடுத்துக் கூறும் முகத்தால் அபிடேகம் விதிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அன்புட னேநின் றமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகையும் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவார் நினையுங்கால்
இன்ப முடனேவந் தெய்திடும் முத்தியே.

பொழிப்புரை :

நிவேதனம், தீபம், தூபம் என்பவைகளால், எட்டுத் திக்கிலும் வரற்பாலனாவாகிய தடைகளை அகற்றி வழிபாடு செய்பவர், தாம் விரும்பும் பொழுது முத்திநிலை இன்பமே வடிவாய் வந்து எய்தப் பெறுவர்.

குறிப்புரை :

ஏற்றுதல் - ஏற்பித்தல். பொன் - உலோகம். `பொன் னால் செய்த` என்க. அமுதம் முதலிய மூன்றிலும் மூன்றாம் உருபு விரிக்க. முதலிரண்டடிகளை வேறாக ஓதுவன பாடம் அல்ல. திசை தொறும் வரும் துன்பங்கள் தீத் தெய்வங்களால் ஆவன. அவற்றைத் திக்குப் பந்தனம் முதலியவற்றால் நீக்கல் வேண்டும் என்க.

பண் :

பாடல் எண் : 4

எய்தி வழிபடில் எய்தா தனஇல்லை
எய்தி வழிபடில் இந்திரன் செல்வம்உண்
டெய்தி வழிபடில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிபடில் எய்திடும் முத்தியே

பொழிப்புரை :

வழிபாட்டினை அன்போடு மனம் பற்றிச் செய்தால், கிடைக்காதன இல்லை. எண்வகைச் சித்திகளும், இந்திராதி போகங்கள் மட்டுமன்று; முக்தியும் கிடைப்பதாகும்.

குறிப்புரை :

`வழிப்படில்` என்பன பாடமல்ல.

பண் :

பாடல் எண் : 5

நண்ணும் பிறதாரம் நீத்தார் அவித்தார்
அண்ணிய நைவேத் தியம்அனு சந்தானம்
நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபம்மன்னும்
மண்ணும் அனல்பவ னத்தொடு வைகுமே.

பொழிப்புரை :

பிறருக்கு உரியராய மனைவியரை விரும்புதலை விட்டவர்களும், புலனடக்கம் உள்ளவர்களும் ஆகிய அவர்களது நிவேதனம், தோத்திரம், வணக்கம், செபம், ஓமம் என்னும் இவையே வழிபாட்டிற்கு உரியனவாம். அவ்விடத்தில் காற்றும் தூய்மை யுள்ளதாய் இருக்கும்.

குறிப்புரை :

மேற்கூறியவையன்றி மேலும் உள்ள பொருள்களைக் கூறுவார், `அவற்றை ஈட்டிக் கொண்டு வழிபடுவோர் முதற்கண் நல்லொழுக்கத்தில் நிற்பவராய் இருத்தல் வேண்டும்` என்பதனை அஃது இயல்பென்பது தோன்ற, அனுவாத முகத்தாற் கூறினார். கூறவே, `வழிபாடு சிறந்த ஓர் ஒழுக்கமாதலின் அது செய்வார் பிற ஒழுக்கங்களைக் கடைப் பிடித்தல் வேண்டும் என்னும் கட்டளை யில்லை` என்று எண்ணுதல் மடமையாகும் என்பது இனிது விளங்கிற்று. புலனடக்கம், நாச் சுவை, வேட்கை முதலியவற்றை அடக்குதல் யோக நெறியிலும் இயம நியமங்கள் அடிநிலையாகக் கூறப்படுதல் இங்கு நினைக்கத்தக்கது.
`தாரம்` என்பது தமிழில் அஃறிணை இயற்பெயர் போலவே வருதலை அறிக. `நீத்தாருடையனவும், அவித்தாருடையனவும்` என உரைக்க. அண்ணிய - இனிய. அனுசந்தானம் - இடைவிடாது தொடர்ந்து செய்தல். பஞ்சாங்கம் - ஐந்துறுப்புக்கள் நிலத்திற் பொருந்த வணங்கும் வணக்கம். ஐந்துறுப்புக்களாவன; தோள் இரண்டு, முழந்தாள் இரண்டு, முகம் ஒன்று, இவற்றோடு காது இரண்டு, மார்பு ஒன்று இவையும் நிலத்திற் பொருந்த வணங்குதல் அட்டாங்க வணக்கமாம். இதனை `சாஷ்டாங்கம்` என்பார்கள். இனம் பற்றி இதனையும் இங்குக் கொள்க. மகளிர்க்குப் பஞ்சாங்க வணக்கம் ஒன்றே உரியது. மண்ணும் அனல் - சிவாக்கினியாகச் செய்யப்பட்ட நெருப்பு. பவனம் - காற்று.
இதனுள்ளும் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல
இதனால், மேற்கூறப்பட்டவற்றிற்குப்பின் எஞ்சி நின்ற பொருள்கள் கூறப்பட்டன்.

பண் :

பாடல் எண் : 6

வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர்
வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை யற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே.

பொழிப்புரை :

சிவபெருமானுக்கு அடியவராகத் தம்மை ஒப்படைத்துவிட்டவர்களும், பசு புண்ணியத்தால் விளையும் சிறு பயன்களில் விருப்பம் இல்லாதவர்களும். உயர்ந்த சிவயோகத்தில் நிற்பவர்களும், பயன் கருதிச் செய்யும் காமிய வழிபாடுகளை மேற்கொள்ளாது, ஆய்ந்துணர்ந்த உணர்வினால் மிக்க அன்பு ஒன்றே காரணமாக வழிபாட்டினை மேற்கொள்வர்.

குறிப்புரை :

ஈற்றடியை, `கன்மம் வேண்டார்களாய், ஆய்ந்து அன்பே மிகுதியோராவர்` எனக் கூட்டி முடிக்க. ``கன்மம்`` என்பதற்கு இங்கு இதுவே பொருளாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 7

அறிவரு ஞானத் தெவரும் அறியார்
பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள்
நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்
எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.

பொழிப்புரை :

அறிவுருவாகிய இறைவனை எவரும் அவனறி வாலே அறிய முயலாமல் தம் அறிவால் ஐம்பொறிகளாலும், மனம் முதலிய உட்கருவிகளாலும் ஆராய்ந்து துன்புறுகின்றார்கள். ஆயினும், முறைப்படி, மேற்கூறிய சக்கரம் முதலியவற்றின் வழி மனம் ஒருங்கிநினைத்தால், ஒளி வீசுகின்ற மாணிக்கம் போல்பவனாகிய இறைவனது அருளில் மூழ்கியிருத்தல் கூடும்.

குறிப்புரை :

`அறிவு அறியார்` என இயையும். `ஞானம்` என்பது சிறப்புப்பற்றிப் பதி ஞானத்தையே குறித்தல் வழக்கு முறைமை. `நெறி யால் நோக்கில்` என்க. மனை, இங்குச் சக்கரத்தில் உள்ள அறைகள். இனம் பற்றிக் கும்ப விம்ப தம்பங்களும் கொள்க.
இதனால் `வழிபாடுகள் பதிஞானத்தைத் தந்து, அது வழி யாகப் பதியை அடைவிக்கும்` என்று அதனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

இருளும்வெளி யும்போல் இரண்டாம் இதயம்
மருள்அறி யாமையும் மன்னும் அறிவும்
அருள் இவை விட்டறியாமை மயங்கும்
மருளும் சிதைத்தோ ரவர்களா வாரே.

பொழிப்புரை :

ஆன்ம அறிவு இருளே போன்றும், ஒளியே போன்றும் இருதன்மையதாய் நிற்கும் இயல்புடையது. அதனால் அதனிடத்தே மயக்கத்தைத் தரும் அறியாமையும், தெளிவைத்தரும் அறிவும் என்னும் இரண்டுமே என்றும் நிலை பெற்றிருக்கும், எனினும், அறிவால் இருதன்மையை நீக்கி ஒரு தன்மையாகிய அறிவேயாய் நிற்பவரே, அழிவற்ற அறியாமையை அழியப் பண்ணினவராகவும் சொல்லப்படுவர்.

குறிப்புரை :

`ஆதலால், மேற்கூறிய முறையால், அறிவாய் நிற்கும் நிலையைப் பெற முயலுங்கள்` என்பது குறிப்பெச்சம் ``போல்`` என்றது `அவையே போலத் திரிந்து` என்றவாறு. ஆன்ம அறிவை `இதயம்` என்றல் பொருந்துமாறு,
``சிந்தையைச் சீவன் என்றும்
சீவனைச் சிந்தை என்றும் ... ... ... வந்திடும்`` 1
என்னும் சிவஞான சித்தியால் அறிக. `அறிவும் மன்னும்` என முன்னே கூட்டி முடிக்க. ``அறியாமை`` என்றது அதனைச் செய்யும் ஆணவ மலத்தையும், ``அறிவு`` என்றது இறைவனது திருவருளையும் ஆதல் அறிக. `இரண்டும் அழிவுற்ற பொருளாயினும், மலம் திருவருளை வெல்லமாட்டாமையால் அதனைக் கொண்டு அறியாமையைப் போக்க வேண்டும்` என்பார், ``அருளால் இவை விட்டு`` என்றார். உருபு தொகுத்தலாயிற்று. `இது பக்குவம் எய்திய வழிக்கூடும்` என்பது கருத்து.
``ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்; ஒன்றுமேலிடின், ஒன்று
ஒளிக்கும் எனினும் இருள் அடராது; உள் உயிர்க்குயிராய்த்
தெளிக்கும் அறிவு திகழ்ந்துள தேனும் திரிமலத்தே
குளிக்கும் உயிர் அருள் கூடும்படி கொடி கட்டினனே`` 2
என்பதிலும் இவ்வாறு கூறப்படுதல் காண்க.
இதனால், மேற்கூறியவாற்றால் பதிஞானத்தைப் பெற்றோரது சிறப்புக் கூறப்பட்டது. அறியாமை மயங்கும் மருள் - உண்மையை உணராமல் திரிய உணர்வதற்கு ஏதுவாகிய மலம்.

பண் :

பாடல் எண் : 9

தானவ னாக அவனேதா னாயிட
ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்
போனவன் அன்பிது நாலாம் மரபுறத்
தானவன் ஆகும்ஓர் ஆசித்த தேவனே.

பொழிப்புரை :

சிவம் தான் தோன்றாது ஆன்மாவேயாய் நிற்றலும், ஆன்மா தான்தோன்றாது சிவமேயாய் நிற்றலும் என்னும் இருநிலைகளுள், அறிபவனாகிய ஆன்மா அறியப்படுபொருளாகிய சிவமேயாகி விடுகின்ற இரண்டாம் நிலையை எய்தினவன் பின்பு `அறிபவன்` என்பதோடு நில்லாது, அன்பு செய்பவனாயும் நிற்பான். இந்நிலையே, `சிவ ரூபம், சிவதரிசனம், சிவ யோகம், சிவ போகம்` என்னும் நான்கனுள் இறுதிக்கண்ணதாகிய சிவபோகத்தை அடையச் சிவமாம் தன்மையை எய்தும் வழியாம்.

குறிப்புரை :

இரண்டு: பெத்தமும், முத்தியும். ``அவனே தானே ஆகிய அந்நெறி - ஏக னாகி`` என்னும் சிவஞானபோதத்தை இங்கு உடன் வைத்துக் காண்க. அன்பு வடிவானவனை,``அன்பு`` என்றார். ஈற்றடியை` தான் ஆசித்ததேவனாகிய அவனாகும் ஓர் நிலை` எனக் கொண்டு கூட்டிக் கொள்க. `ஆசிரயித்த` என்பது ``ஆசித்த`` எனச் சிதைந்து நின்றது. `யாசித்த` எனப் பாடம் ஓதலுமாம். யாசித்தல் - வேண்டுதல்.
இதனால், பதி ஞானம் முதிர்ந்து முற்றுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா அகராமும் நீள்கண்டத் தாயிடும்
பாங்கார் உகாரம் பயில்நெற்றி உற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதம்மேல் ஆகுமே.

பொழிப்புரை :

பிரணவத் தியானத்தில் ஓங்காரம் மூலாதாரத்திலும், மகாரம் உந்தியிலும், அகாரம் இருதயம்,கண்டம் என்ப வற்றிலும், உகாரம் புருவ நடுவிலும், விந்துவும் நாதமும் அதற்குமேல் நெற்றியில் உள்ள வேறு வேறு இடங்களிலும் வைத்துத் தியானிக்கப்படும் என்க.

குறிப்புரை :

மகாரம் நிற்கும் இடம் குறிப்பினாற் கொள்ள வைத்தார். `பாங்கார் நகாரம்` என்பது பாடம் ஆகாமை யறிக.
இதனால், வழிபாட்டில் பிரணவத்தைத் தியானிக்கும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

நமஅது ஆசன மான பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமஅற ஆதி நாடுவ தன்றாம்
சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே.

பொழிப்புரை :

`நம` என்பதை அடிநிலையாகக் கொண்டு பசுவாய் நிற்கின்ற உயிரே. `சிவ` என்பதனை அடிநிலையாகக் கொள்ளும் நிலை கிடைக்கப்பெறுமாயின், சிவத்தோடு ஒன்றிப் பதியாய்விடும். ஆதலால், நகார மகாரங்களால் குறிக்கப் பெறுகின்ற திரோதாயியும், மலமும் அறுவதற்கு வழி அவற்றை முதலாகக் கொண்டு ஓதுவதன்று; மற்று, சிகார வகாரங்களை முதலாகக் கொண்டு ஓதுதலேயாகும். அவ்வாறு செபித்தல் பரமுத்திக்கு வாயிலாம்.

குறிப்புரை :

`பசுவே சிவமாய்ப் பதியாம்` என்க. `சித்தி` என்னும் முதனிலையே `சித்திக்க` என வினையெச்சப் பொருள் தந்தது. `ஆதி யாவது` என ஆக்கம் வருவித்து, அதனை, `சிவம் ஆதி ஆவதாகும்` என ஈற்றிலும் கூட்டுக. மோனம் சேர்தல் - செபித்தல். இவ்வாறே,
``நம்முதலா ஓதில் அருள் நாடாது; நாடும் அருள்
சிம்முதலா ஓதுநீ சென்று`` (வெண்பா - 14)
என்னும் உண்மை விளக்கம் முதலிய சித்தாந்த நூன்மொழிகளையும் இங்கு நோக்குக. இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், நிட்காமிய வழிபாட்டில் திருவைந்தெழுத்தைச் செபிக்கும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

தெளிவரும் நாளில் சிவஅமு தூறும்
ஒளிவரும் நாளில் ஓர் எட்டில் உகளும்
ஒளிவரும் அப்பதத் தோரிரண் டாகில்
வெளிதரும் நாதன் வெளியாய் இருந்தே.

பொழிப்புரை :

`சிவனன்றி வேறு யாதும் இல்லை` என்ற தெளிவு வந்து சிவத்தில் அழுந்தித் தன்னையும் மறந்த பொழுதே சிவானந்தம் ஊற்றெடுப்பதாகும். அவ்வாறன்றி, `சிவனை யான் உணர்கின்றேன்` எனத் தன்னை உணர்ந்து நிற்றலாகிய அறிவு உண்டாய காலத்தில் ஆன்மா அந்தப்பசு அறிவிலே நின்று அலமரும். ஒருதலைப்படாது இவ்வாறு இருதலைப்பட்டு நிற்கும் நிலையில் சிவம் வெளிப்பட்டு நின்றும் வெளிப்படாததேயாய் இருக்கும்.

குறிப்புரை :

எட்டு - அகாரம். அது நாதத்தைக் குறித்தல் வழக்கு. `பசுபோதம் தலையெடுத்தும் வழி வாக்காகிய பாச ஞானமும் விரையத் தோன்றி அலைவை உண்டு பண்ணும், என்பார், ``எட்டிலே உகளும்`` என்றார். `இவ்வாறு ஓரிரண்டாகில்` என அனுவாத மாக்கியுரைக்க. ``வெளி`` இரண்டில், முன்னது புறம்; பின்னது வெளிப்படை. திரிபுடி நீங்காதாயின் அருள் நிலையன்றி, ஆனந்த நிலை எய்தாமை பற்றி `நாதன் வெளியாய் இருந்தே வெளிதரும்` என்றார். வெளிதருதல் - ஆன்மாவிற்குத் தன்னின் வேறான இடத்தைத் தருதல். திரிபுடி - காண்பான், காட்சி, காட்சிப் பொருள் என்பனவாம். `ஞாதுரு, ஞானம், ஞேயம்` என்றும் சொல்லப்படும்.
இதனால், `திரிபுடி நீங்கும் தெளிவைப் பெறமுயல வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

நவகுண்ட மானவை நானுரை செய்யின்
நவகுண்டத் துள்எழும் நற்றீபந் தானும்
நவகுண்டத் துள்எழும் நன்மைகள் எல்லாம்
நவகுண்ட மானவை நானுரைப் பேனே.

பொழிப்புரை :

அழலோம்புதற்குரிய குண்டங்கள் ஒன்பது வகையின. அவற்றின் சிறப்பை நான் சொல்லுமிடத்து, சிவபெருமானது சிறந்த உருவமாகிய ஒளிப்பிழம்பு ஓங்கி விளங்குவது அக்குண்டங்களிலே தான். அதனால், அப்பெருமானை அம்முறையில் வழிபடும் வழி பாட்டினால் எல்லா நன்மைகளும் விளையும். அது பற்றி அவற்றின் முறையை நான் இங்குக் கூறுகின்றேன்.

குறிப்புரை :

``நல்தீபம்`` என்றது சிவனது ஒளி உருவத்தையாம். ``தானும்`` என்பதில் தான், அசை. உம்மை, சிறப்பு.
இதனால், அதிகாரம் நுதலியது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உரைத்திடுங் குண்டத்தி னுள்ளேமுக் காலும்
வகைத்தெழு நாற்கோண நன்மைகள் ஐந்தும்
பகைத்திடு முப்புரம் பார் அங்கி யோடே
மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே.

பொழிப்புரை :

மேற் சொல்லப்பட்ட குண்டங்களிலே முக்காலங் களையும், ஐம்பெரும் பூதங்களையும், மும்மல நீக்கத்தையும் `அக்கினி` என்ற ஒன்றன் வழியாகவே காணுதல் கூடும். ஆதலின், அக் குண்டங்கட்கு மேலான தெய்வ இடங்களாக நான் வேறொன்றை அறிந்திலேன்.

குறிப்புரை :

``முக்காலம்`` என்றது, அவற்றின்கண் உள்ள நிகழ்ச்சிகளை. அவற்றுள், இறந்தோரை நற்கதி எய்துவித்தல் முதலியன இறந்தகாலம் பற்றியன, பகைவரை அழித்தல் முதலியவை நிகழ்காலம் பற்றியன, மகப் பேறு முதலியவை எதிர்காலம் பற்றியன. ஐம்பெரும் பூதங்களைக் காணுதல் அவற்றின் வடிவாய் அமைந்த குண்டங்களை வழிபட்டுப் பயனடைதல். `நிலம், நீர், தீ, வளி, வானம்` என்னும் பூதங்கட்கு வடிவம் முறையே, `நாற்கோணம், பிறை, முக்கோணம், அறுகோணம், வட்டம்` என்பனவாதல் நன்கு அறியப் பட்டது. 1 இதனுள் பிறை வடிவம் சந்திரனுக்கு ஆகும். சூரியனுக்கு வட்டத்தின் வகையாகிய தாமரை ஆகும். முக்கோணத்தைச் சிறிது வேறுபடுத்தி யோனி வடிவாக்கச் சத்திக்கு ஆகும். ஒரு சதுரத்தின் மேல் மற்றொரு சதுரம் வடக்கு முதலிய திசைகளை நோக்கி அமைந்த மூலைகளை உடையன போல அமைக்க அட்டகோணம் அட்டமூர்த்தி வடிவினனாகிய சிவபிரானுக்கு ஆகும். பஞ்சமுகம், பஞ்சாக்கரம், பஞ்சக்கிருத்தியம், பஞ்ச மூர்த்திகள் முதலியன பலவற்றிற்கும் இயைபுடைய பஞ்சமுக குண்டமும் பதும குண்டத்தின் வேறுபாடாய் அமைவதாம். இவ்வாறாக நவகுண்டமும் காண்க. இவற்றை நாயனார் பின்னர் (1027) விதித்தல் அறியத் தக்கது. குண்டங்கள் வழிபாட்டிற்கு ஏற்பப் பல வகையாக அமைத்தல் சொல்லப்படினும், எல்லாவற்றிற் கும் பெரும் பான்மை நாற்கோண குண்டமே அமைத்தல் காணப்படு கின்றது. அது பிருதிவியின் அடையாளமாதல் பற்றிப் போலும்.
இதனால், நவகுண்ட வடிவுகள் குறிப்பாற் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

மேலறிந் துள்ளே வெளிசெய்த அப்பொருள்
காலறிந் துள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பாரறிந் தண்டம் சிறகற நின்றது
நானறிந் துள்ளுளே நாடிக்கண் டேனே.

பொழிப்புரை :

பிராணாயாம முறையை அறிந்து அதன்வழியே தியானிக்கப்பட்ட சிவந்த ஒளிப்பிழம்பே புறத்திலும் குண்டத்தின் அழலாய் அறியப்பட்டுக் காட்சிப்பட நின்ற பொருளாய், நிலவுலகத் தாரல் நன்கறியப்பட்டு, அண்டங்களின் திசைவரம்பைக் கடந்த பெரும் பொருளாய் நிற்கும். அவ்வுண்மையை நான் நன்கறிந் திருத்தலால். அப்பொருளை அகத்தே தியானத்தினாலும், புறத்தே அழலோம்பலாலும் பெற்றேன்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் வைத்து, ``அப் பொரு ளாய்`` என ஆக்கம் வருவித்துரைக்க. முதலடி மூன்றாம் அடிகளில் உள்ள, `அறிந்து` என்பன, `அறியப்பட்டு` என்னும் பொருளன.
``சுடர்விட்டுளன் எங்கள் சோதி`` 1
என்னும் திருப்பாசுரத் திருமொழிக்குச் சேக்கிழார் இவ்வாறே.
``தோன்று காட்சிச் ``சுடர்விட் டுளன்`` என்பது
ஆன்ற அங்கிப் புறத்தொளி யாய், அன்பில்
ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்;
ஏன்று காண்பார்க் கிதுபொருள் என்றதாம்`` 2
எனக் கருத்துரைத்தல் காண்க. இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், `நவகுண்டத் துள்ளெழும் நல்தீபத்தது` உண்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கொண்டஇக் குண்டத்தினுள்ளெழு சோதியால்
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்
இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.

பொழிப்புரை :

நான் மெய்ப்பொருளைப் பெற்ற வகைகளுள் ஒன்றாகிய குண்டத்தீயால் பதினான்கு உலகங்களை ஆக்கவும் முடியும்; பழமையாய் அவற்றுப் பரந்து கிடந்த மறைகளின் விரிந்த பொருள்களை நான் இன்று செய்கின்ற இந்தச் சிறிய ஒரு நூலின் பகுதியிலே எடுத்துக் கூறினேன்.

குறிப்புரை :

``உள் வேதம்`` என்பதை, `வேதத்துள்` என மாற்றிக் கொள்க. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், மேற்கூறிய தீபத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.

பொழிப்புரை :

புறத்தே அமைக்கப்பட்ட குண்டத்தினில் எழுகின்ற தீயினிடத்தும் உடம்பில் சொல்லப்பட்ட பதினாறு இடங்களைக் கற்பித்து வழிபட அவ்விடங்களில் உள்ளே தியானிக்கப்பட்ட பிராசாத கலைகள் பதினாறும் இனிது அருள் வழங்கி நிற்கும். இவ்வாறு அகவழி பாட்டோடு ஒன்றி நிற்கும் வகையில் குண்டத் தீயைக் காண்பவர் களுக்கே அவர்கள் மேல் சீற்றங்கொண்டு எழுகின்ற வினைகள் அவரைச் சாரமாட்டாவாய் ஒழியும்.

குறிப்புரை :

எனவே, `பிறவாறு காண்பார்க்கு அவையொழியாது பற்றுவனவாம்` என்றதாயிற்று. உலகில் நிகழுந் தீமைகட்குக் காரணம் அவரவர் முன்செய்த வினையே. அவையொழிந்தாலல்லது, துன்பங்கள் முற்ற ஒழியா. மாற்று முறைகளால் (பரிகாரங்களால்) ஓரளவே ஒழியும் என்க.
வேள்வித்தீயின் வழியாகத் தேவர் பலரை வழிபடுதலினும், பிராசாத கலையின் அதிதேவர்களை இவ்வாறு வழிபடுதல் சிறப் புடைத்து என்றவாறு. பிராசாத கலை பற்றி முன்னைத் தந்திரக் குறிப்பில் விரித்துக் கூறப்பட்டது. இதனுள்ளும் முதலடி இன எதுகையாய் நின்றது.
இதனால், மேற்கூறிய குண்ட வழிபாட்டில் மிக்கதொன்றன் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கூடமுக் கூடத்தி னுள்ளெழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம்புற மாய்நிற்கும்
பாடிய பன்னீ ரிராசியும் அங்கெழ
நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.

பொழிப்புரை :

ஒன்பது வகைக் குண்டங்களுள் அறுகோணமாய் அமைந்த குண்டத்தில் ஐம்பெரும் பூதங்களும் அக்குண்டத் தீயின் அக மாயும், அதன் புறமாயும் நிற்கும். அதனையும் நினைந்து நிலவுலகத் தின் பகுதிகளாகிய மேடம் முதலிய பன்னிரண்டு ராசிகளையும் அக் குண்டத்திலே பாவித்து வழிபடுவார்க்கு அதனின்றும் எழுகின்ற தீ எல்லாத் தேவரையும், கோள்களையும் மகிழ்விக்கின்ற நல்ல தீயாய் அமையும்.

குறிப்புரை :

``கூட முக்கூடம்`` என்றது, `அறுகோணம்`` என்றவாறு, ஆடிய - காரியங்களைத் தோற்றுவித்த. பாடிய - நூல்கள் சொல்லிய. அறுகோண குண்டத்துள் பன்னிரண்டு ராசிகளைப் பாவிக்குமாறு, கோணம் ஒன்றிற்கு இரண்டிரண்டு ராசியாகக் கிழக்கு முதல் வலமாகச் சென்று வடக்கில் முடிய வைத்துப் பாவித்தல் என்க. குண்டம், இடவாகு பெயர். ``தான்`` என்றது, மேற்குறித்த குண்டத் தீயை.
இதனால், பொதுவகை வழிபாடு ஒன்றன் முறை கூறப்பட்டது. இதன்கண் அறுகோண குண்டம் பயன்படுமாறும் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நற்சுட ராகும் சிரம் முக வட்டமாம்
கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளில்
பைச்சுடர் மேனி பதைப்பற்ற லிங்கமும்
நற்சுடர் ராய்எழும் நல்லதென் றாளே.

பொழிப்புரை :

அங்கியங் கடவுட்குச் சிரசும், முகமும், கொழுந் தாகிய சுடர்களாம். பக்கங்களில் படர்ந்து தாவுகின்ற சுடர்கள் கைகளாம், கீழ்நின்று பசிய நிறத்தை உள்ளே உடையதாய் எழுகின்ற இடை ஒளிப் பிழம்பே மேனியாம், இவ்வாறாதலின் வேள்வித் தீயே சிவனது வடிவமாகவும் எண்ணப்படுகின்ற நன்மையை உடைய தாகின்றது என்று சிவசக்தி கூறினாள்.

குறிப்புரை :

முதல் `நற் சுடர்` - சிறந்த சுடர்; அவை கொழுந்தாகி மேலே உள்ளன. சிரம் கூறவே சிகையும் கொள்ளப்படுவதாம். `நற் சுடர் சிரமாகும்; முக வட்டமாம்` என்க. `கைகளில் ஆகும் சுடர் கை,` எனக் கொண்டு கூட்டி உரைக்க, `கை` இரண்டில் பின்னது பக்கம் `பைஞ்சுடர்` என்பது வலிந்து நின்றது. பதைப்பு அறுதலாவது, சாந்தம் உறுதல். எழவே, `சிவலிங்கம்` என்றதாயிற்று. ஈற்றடியை `நற்சுடர் பதைப்பற்ற லிங்கமுமாய் எழும் நல்லது` எனக் கூட்டி உரைக்க. சிவ சத்தி கூறியதாக அருளிச் செய்தது, அவளே வேள்விக்குரிய மந்திரங் களைப் பிரேரிப்பவளாதல் பற்றி. தீயின் வடிவத்தை இவ்வாறு அங் கியங் கடவுள் வடிவாகக் கற்பித்துக் காட்டினார், மேற்கூறிய பிராசாத கலா நியாசத்தையும், பிறவற்றையும் செய்தற் பொருட்டு. ``லிங்கம்`` என்றது, வியத்த லிங்கத்தை என்பது மேல் உறுப்புகளைக் கற்பித்துக் காட்டியதனால் கொள்க. இதனுள்ளும் இன எதுகை வந்தது.
இதனால், வேள்வித் தீ தீக் கடவுளாய் நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நல்லதென் றாளே நமக் குற்ற நாயகம்
சொல்லதென் றாளே சுடர்முடி பாதமா
மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
கல்லதன் தாளையும் கற்றும்வின் னாளே.

பொழிப்புரை :

வேள்வித் தீயினது சிறப்பைக் கூறிய அந்தச் சிவ சக்தியே, `நம்மைச் செலுத்தி நிற்பன மந்திரங்களே` என அருளிச் செய் தாள். அம் மந்திரங்களையே தனக்கு முடி முதல் அடிவரையும் உள்ள உறுப்புக்களாகக் கொண்டு அருளோடு நிற்கின்ற அவளது உண்மை யை உணராதவர்கள், எல்லாக் கல்விகளையும் அடி தொடங்கி முறையாகக் கற்றும் அக்கல்விகள் பகலில் காணப்படுகின்ற வான வில்போல வெறுந்தோற்ற மாத்திரையாய்ப் பயன்படாதொழியும்.

குறிப்புரை :

சொல், இங்கு மந்திரம். மென்மை - அருள். கல், கல்வி; முதனிலைத் தொழிற் பெயர். நாள் - பகல்.
இதனால்,` அங்கியங் கடவுட்கு மந்திரமும் வடிவாம்` என்பது பெறுதற் பொருட்டு யாவர்க்கும் மந்திரம் வடிவாமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

வின்னா இளம்பிறை மேவியகுண்டத்துச்
சொன்னா இரண்டும் சுடர்நாகம் திக்கெங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்னாகத் துள்ளே இடங்கொண்ட வாறே.

பொழிப்புரை :

வில்லின் நுனி போன்ற இரண்டு நுனிகளுடன் விளங்கும் இளம்பிறை வடிவாகப் பொருந்திய குண்டத்தில் அந்த இரு நுனிகளிலும் எழுகின்ற தீ இரண்டு பாம்புகளாய் எங்கும் ஒளி வீசும். அவை ஒவ்வொன்றிற்கும் உள்ள பற்கள் நான்கு. இந்த நாகங்களுடன் பரந்தெழுகின்ற தீ எனது உடம்பினுள்ளும் இடங் கொண்டிருத்தல் வியப்பு.

குறிப்புரை :

`வில் நாப்போலும் நாவினையுடைய இளம் பிறை போல் மேவிய குண்டம்` என்க. `சொல் நால்` என்பது பாடமன்று. சுடர் நாகம், வினைத்தொகை. `திக்கெங்கும் தாவும்` என்க. இவ்வாறு உடம் பினுள் அமையுமாறு:- நாபித்தானம் குண்டமாகவும், இட நாடி வல நாடிகள் பாம்பாகவும், மூலாக்கினி மேல் எழுந்து நடு நாடிவழிச் செல்லுதல் குண்டத்தீ ஓங்குவதாகவும் அமைதலாம். `பல் நாலு` என்றது, அவ் வாயுவிற்கு வலுவூட்டுகின்ற அம்ச மந்திரத்தை. அம்ச மந்திரத்துள் ஈரிடத்தும் இங்கு விந்துவை வேறெண்ணித் தொகை கூறப்பட்டது.
இதனால், ஒளி நிலை அகத்தும், புறத்தும் ஒரு படித்தாய் நிற்குமாறு கூறப்பட்டது. இதனுள் பிறைக் குண்டம் குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

இடங் கொண்ட பாதம் எழிற்சுட ராக
நடங்கொண்ட பாதம்நன் னீராம் அவற்குச்
சகங்கொண்ட கைஇரண் டாறும் தழைப்ப
முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.

பொழிப்புரை :

சிவபிரானது அகத்தொளி வடிவில் ஊன்றிய திருவடி அக்கினி மண்டலமாகிய மூலாதாரமும், சுவாதிட்டானமும் ஆம். தூக்கி யாடுந் திருவடி நீர் மண்டலமாகிய மணிபூரகமும், அனா கதமுமாகும். திசைகளை அளக்கும் எட்டுக் கைகள் உடலகம் எங்கு மாகும். முகமும், அதன்கண் உள்ள முச்சுடர்களாகிய மூன்று கண்களும் விசுத்தியும், ஆஞ்ஞையுமாகிய இடங்களாகும்.

குறிப்புரை :

இடங் கொள்ளுதல் - நிலத்தை இடமாகக் கொள்ளுதல், சுடர் - நெருப்பு. சகம், இங்குத் திசை. இரண்டு ஆறு - எட்டு. இதனுள் ஈரடி எதுகை வந்தது.
இதனால், இறைவனது அகத்தொளியுருவம் உடம்பினுள் இடங்கொண்டு நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

முக்கணன் றானே முழுச்சுட ராயவன்
அக்கணன் றானே அகிலமும் உண்டவன்
திக்கண னாகி திசைஎட்டும் கண்டவன்
எக்கணன் றன்னுக்கும் எந்தை பிரானே.

பொழிப்புரை :

மூன்று கண்களை உடையவனாகிய சிவபெரு மானே அனைத்துத் தேவர்க்கும் வாயிலாகும் நிறைவான ஓமாக்கினி. அஃது எவ்வாறெனில், மண்ணை உண்டு உமிழும் அந்த மாயோனும், உலகங்களைப் படைக்கும் எண்கணனாகிய பிரமனும் தானேயாய் நிற்றலால். இதனானே, எங்கு யாவன் ஒருவன் தேவன் இருப்பினும் அவனுக்குப் பற்றுக்கோடாகின்றவன் சிவனே என்பது விளங்கும்.

குறிப்புரை :

எனவே, `ஓமாக்கினியில் அவன் ஒருவனையே மந்திர நியாசங்களுடன் வழிபடின் அஃது எல்லாத் தேவர்க்கும் உவப்பாகும்` என்பது கருத்தாயிற்று. இவ்வுணர்வு தோன்றி நிலைபெறுதற் பொருட்டே, வைதிக வேள்வியில் ஓமாக்கினியை அங்கியங் கட வுளாகக் கொள்ளுதல் போலல்லாது, சிவவேள்வியில் வாகீசுவரியது பூப்பு நீராட்டு, கர்ப்பாதானம் முதலிய சடங்குகளால் அக்கினியை வாகீசுவரனால் பிறப்பித்து, அவனுக்குப் பிறப்புச் சடங்கு இயற்றி, `சிவாக்கினி` என நாம கரணம் செய்து சிவாக்கினியாக்கிக் கொள்ளும் முறை சைவாகமங்களில் விரிவாகக் கூறப்பட்டது என்க.
`அகிலமும் உண்ட அக்கண்ணனும் தானே; திசை எட்டும் கண்டவனாகிய திக்குக் கண்ணனும் ஆகி` என்க. எச்ச உம்மைகள் தொகுத்தலாயின. ``ஆகி`` என்பது பெயர். இறுதியில் `பற்றுக்கோடு` என்பது சொல்லெச்சம்.
இதனால், வேள்வித் தீ சிவாக்கினியாதலின் சிறப்புக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 12

எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னமே சண்முகன் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால்
மைந்தன் இவனென்று மாட்டுக்கொள் ளீரே.

பொழிப்புரை :

சிவபிரானுக்கு இயல்பாகவே ஆறு முகம் இருப்பினும் அவற்றுள் அதோமுகம் தோன்றாதிருக்க அதுவும் கூடி ஆறுமுகம் வெளிப்படையாய்த் தோன்றும்படி முருகன் உமையிடத்து உதியாது சிவபிரானது, முகங்களினின்றே தோன்றினமையாலும், பின்னும் சிவனும், சத்தியுமாகிய தந்தை தாயரது இடையிலே முருகன் குழவியாய் என்றும் நீங்காதிருத்தலாலும் `மைந்தன் தந்தையின் மறுவடிவமே` என்னும் ஒற்றுமை பற்றி, மேற்கூறிய ஓமாக்கினியை, `சிவாக்கினி` என்றலேயன்றி, `குகாக்கினி` எனவும் ஆகமங்கள் கூறுதலின் பொருத்தத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

குறிப்புரை :

இஃது ``ஈசானஸ் ஸர்வ வித்யானாம் ஈஸ்வரஸ் ஸர்வ பூதா நாம் I பிரஹ்மாதிபதிர் பிரஹ்மணோதிபதிர் பிரஹ்மாசிவோமே அஸ்து சதாசிவோம் II `` எனச் சதாசிவனையே `ஓம்` மொழிப் பொருளாகக் கூறிய வேதம்.
``சுப்ரஹ்மண்யோம்! சுப்ரஹ்மண்யோம்! சுப்ரஹ்மண்யோம்``
எனக் கூறுதல் பற்றி ஐயம் நிகழாமைப் பொருட்டு அறுமுகன் ஐம்முக னின் வேறாகாமை விளக்கப்பட்டது. இதனானே, சிவாக்கினி எல்லாத் தேவர்க்கும் வாயிலாதலே யன்றிச் சிறப்புடைய முருகனுக்கும் உரித் தாதல் கூறப்பட்டதாம்.
வட்டம், இங்கு முகம். `வட்டமாயும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ஏகாரம், உமையினின்றும் பிரித்த பிரிநிலை, அதனால், சிவனின் வேறன்மை இனிது விளக்கப்பட்டதாம். `கந்தனும், சுவாமியும்` என்க. `சுவாமி` என்பது சிவனுக்கே உரிய பெயராதலை, `சுவாமி நாதன்` என்னும் முருகனது பெயருள்ளும் காண்க. மாட்டு - பொருத்தம். அஃதாவது, வேத மொழியின் பொருத்தம். திருவுருத் திரத்துள் ``யாதே சிவாதநூ:`` எனத் தொடங்கும் மந்திரத்தின் தியான உருவம் அறுமுகனாகச் சொல்லப்படுதலும் இங்கு நினைக்கத்தக்கது. சிவஞான யோகிகள் தமது காஞ்சிப் புராணம் குமரகோட்டப் படலத்துள், மேற்காட்டிய வேத மந்திரங்களை,
``எக்கலைக்கும் பூதங்கள் எவற்றினுக்கும் பிரமனுக்கும்
ஈசன் என்னத்
தக்கமுதல் பரப்பிரமம் சதாசிவன்ஓம் எனவேதாம்
சாற்றும் அல்லால்
முக்கனல்சூழ் வேள்வியிற்சுப் பிரமணியன் ஓமெனவும்
முக்காற் கூறும்
இக்கருத்தை யறியானை எவ்வாறு விடுவிப்ப
தியம்பு மின்னோ``
என மொழி பெயர்த்துக் கூறினார். முருகன் அறுமுகச் சிவனாதலை நாயனார் இரண்டாம் தந்திரத்துள் `அதோமுக தரிசனம்` என்னும் அதிகாரத்துள்ளும் கூறினார்.
இதனால், `வேள்வித் தீ சிவாக்கினியே` என்பது பற்றி நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மாட்டிய குண்டத்தி னுள்எழு வேதத்துள்
ஆட்டி கால்ஒன் றிரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழ
நாட்டுஞ் சுரர்இவர் நல்லொளி யானே.

பொழிப்புரை :

அகமும், புறமும் ஒற்றுமைப்படக் காட்டிய குண்டங்களில் எழுகின்ற தீயினுள்ளே, `காற்று` என்னும் ஒன்று, `இடைகலை, பிங்கலை` என இரண்டாய் இயங்கும். அவ் இயக்கத் திற்கு உரிய வழி மூன்றில் இரண்டு தடுக்கப்பட, ஒன்றில் மட்டுமே இயங்கச் செய்வோர் மேற்கூறிய ஒளியால் தேவராக மதிக்கப்படுவர்.

குறிப்புரை :

வேத மந்திரத்தின் வடிவாதல் பற்றி வேள்வித் தீயை, ``வேதம்`` என்றே கூறினார். ஆட்டிய - பொருள்களைச் சலிப்பிக் கின்ற. `ஒன்றே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது. `இரண்டு மாய்` எனவும், `கையிரண்டு வாட்டியவாக` எனவும் ஆக்கம் வருவித்துக் கொள்க. கை - பக்கம்; என்றது வழியை. `ஒன்றில் பதைத்து எழ` என உருபு விரிக்க. `எழ நாட்டும் இவர் நல்லொளி யானே சுரராவர்` என்க. `சிவபுத்திரனாய் நிற்கும் அக்கினியையும் யோகியாக்கித் தாமும் யோகராயிருந்து வேட்பார் பெரும் பயன் எய்துவர்` என்றவாறு.
இதனால், அழல் ஓம்புதற்கு ஒரு சிறப்புமுறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

நல்லொளி யாக நடந்துல கெங்கும்
கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்
சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம்
கல்லொளி கண்ணுளு மாகிநின் றானே.

பொழிப்புரை :

மொழியையே அறிவாகப் பெற்று இயங்கிவரும் மக்களுயிர்க்கெல்லாம் மாணிக்க ஒளிபோல உள்நின்று, கண்மணி போல உதவி வருகின்ற சிவன், இவ்வுலக முழுதிலும் வேள்வித் தீயாக விளங்கியே திருக்கோயிற் படிமங்களில் உள்ளொளியாய்க் கலந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. ``கல்`` இரண்டில் முன்னது அதனாலாகிய படிமம். பின்னது மாணிக்கம். ``ஆகி`` என்பதை அதன்முன் உள்ள ``கல்லொளி`` என்பதனோடும் கூட்டுக.
இதனால், அழலோம்பல் திருக்கோயிற் சிறப்பிற்கு இன்றி யமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

நின்றஇக் குண்ட நிலைஆறு கோணமாய்ப்
பண்டையில் வட்டம் பதைத்தெழும் ஆறாறுங்
கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ
விண்ணுளும் என்ன விடுக்கலும் ஆமே.

பொழிப்புரை :

மேற் கூறியவாறு சிவன் திருக்கோயிலில் விளங்கி நிற்றற்கு உரியது, சிறப்பாக அறுகோணக் குண்டமே. அவற்றோடு முன்னே சொன்ன பிறவும் இருத்தல் சிறப்பே இதனுள், விளங்கு கின்ற சிவாக்கினியையும், தம்மையும் முன்போல யோகியராகச் செய்தலேயன்றி, முப்பத்தாறாய தத்துவ ரூபிகளாகவும் செய்தால், எவ் வுலகத்தில் உள்ளார்க்கும், எப்பொருளையும் அவன் வாயிலாகக் கொடுத்தல் கூடும்.

குறிப்புரை :

`குண்டநிலை ஆறுகோணமாக, வட்டமும் பதைத் தெழும்` என முடிக்க. `கொண்ட தத்துவம் ஆறாறும்` என மாறிக் கூட்டுக. ``உள்ளே`` எனப் பொதுப்படக் கூறியதனால், இருவருள்ளும் கொள்க. `வட்டமும், என்னவும்` என்னும் உம்மைகள் தொகுத்தல் ஆயின. `எடுக்கலுமாமே` என்பது பாடமாகாமை அறிக. இதனுள் ளும் முதலடி இன எதுகையாய் நின்றது.
இதனால், அழலோம்புதற்கண் உள்ள மற்றொரு சிறப்பு முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

எடுக்கின்ற பாதங்கள் மூன்ற(து) எழுத்தைக்
கடுத்த முகம் இரண் டாறுகண் ணாகப்
படித்தெண்ணும் நாஏழு கொம்பொரு நாலு
அடுத்தெழு கையான தந்தமி லாற்கே.

பொழிப்புரை :

குண்டத்தில் தீயாய் விளங்கும் சிவனுக்கு, (சிவாக்கினிக்கு) நடக்கின்ற பாதங்கள் மூன்று; `ஐ` என்னும் எழுத்தின் வடிவை ஒத்த முகம் இரண்டு; அம்முகங்களில் உள்ள கண்கள் ஆறு; நாக்கு ஏழு; தலையிரண்டிலும் கொம்புகள் நான்கு; கை ஏழு; இவ்வாறு அமைந்துள்ளன.

குறிப்புரை :

`இவ்வாறு ஆகமங்களுட் சொல்லப் பட்டது` என்பதாம். மூன்றது - மூன்று என்னும் எண்ணினையுடையது. படித்து - ஒரு படித்தாக. ``அடுத்து`` என்றது, `மற்று` என்னும் பொருளது. ``ஆனது`` என்பதனை எல்லாவற்றோடும் கூட்டி, ஏற்ற பெற்றியால் முடிக்க. `எழுகண்ணானது` என்பது பாடம் ஆகாமை அறிக.
இதனால், சிவாக்கினியது உருவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

அந்தமி லானுக் ககலிடந் தானில்லை
அந்தமி லானை அளப்பவர் தாமில்லை
அந்தமி லானுக் கடுத்தசொல் தானில்லை
அந்தமி லானை அறிந்துகொள் பத்தே.

பொழிப்புரை :

அழிவில்லாத சிவாக்கினியைத் தன்னுள் வியாப் பியமாகக் கொள்வதோர் இடமில்லை. (அவனே எல்லாவற்றிலும் வியா பகன்.) அவனுக்குத் தோற்றமும், முடிவுமாகிய கால எல்லையும் இல்லை. (என்றும் உள்ளவன்.) அவனது இயல்பை முற்றக் கூறச் சொல்லில்லை. ஆகவே, அவனைத் திருவைந்தெழுந்துள் யகர வாச்சியமாகிய ஆன்மாவினுள்ளே காண்பதே அறிவுடைமையாம்.

குறிப்புரை :

`சிவாக்கினியாவான் சிவனே` என்பதனை இவ்வாற்றால் உணர்த்தினார். `பத்தின் கண்` என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது.
இதனால், `சிவாக்கினியாவான் சிவனே` என்பது கூறி, அதன் சிறப்புணர்த்தப்பட்டது, இதனானே, சிவன் அவ்வக்கினியாய் யாண்டும் நின்று அருள்புரிதலும் பெறப்பட்டது படவே, ``பொங்கழல் உருவன்``1 என்ற திருஞானசம்பந்தர் திரு மொழி, - `அழல்போலும் உருவத்தை உடையவன்` என உவமத் தொகையாயும், `அழலை உருவாக உடையவன்` என இரண்டாம் வேற்றுமைத் தொகையாயும் நிற்றலேயன்றி, `அழலாகிய உருவத்தை உடையவன்` எனப் பண்புத்தொகையாயும் நின்று பொருள்படுதல் கொள்ளப்படும். உவமத் தொகையை நிறமும், வடிவும் பற்றிக் கொள்க. வடிவு இலிங்கத் திருமேனி.

பண் :

பாடல் எண் : 18

பத்திட்டங் கெட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் ஆகமும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.

பொழிப்புரை :

பத்தும், எட்டும், ஆறும், நான்குமாகிய கோணங்களால் வரையறுக்கப்பட்ட குண்டமாகிய பொய்கையில் வளர்ந்து மலர்கின்ற தீயாகிய தாமரை மலரில் அடங்கிக் கலந்து நிற்கின்ற முப்பத்தாறு தத்துவங்களும், அவற்றின் காரியமாகிய உடம்பும் சத்தியிடமே அடங்கிநிற்பனவாம்.

குறிப்புரை :

நவ குண்டங்களுள் சிறப்புடையவற்றை எடுத்துக் கூறியவாறு. தீயைத் தாமரையாக உருவகித்தது, அகத்தும், புறத்தும் தத்துவங்களைச் சிவனுக்குக் கமலாசனமாகக் கற்பிக்கும் முறையோடு மாட்டேற்றுதற்கு. ஆசனமாய் அடங்கும் தத்துவங்கள் யாவும் மூர்த்தியாகிய சத்திக்குக் கீழே அடங்கிவிடுதல் பற்றி, ``மெய்யும், ஆகமும் பார்ப்பதிபாலே பட்டிட்டுநின்றது`` என்றார். மெய் - தத்துவம்; இதனிடத்து எண்ணும்மை தொகுத்தல் பெற்றது. இதனுள்ளும் முதலடி இன எதுகையாய் நின்றது.
இதனால், மேல் (1012) ``ஆறாறும் கொண்ட இத்தத்துவம்`` எனக் குறிக்கப்பட்ட தத்துவங்கள் அகத்தொளி, புறத்தொளிகளில் கலந்து நிற்கச் செய்யுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

பார்ப்பதி பாகன் பரந்தகை நாலஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திர நல்லிருப் பத்தஞ்சே.

பொழிப்புரை :

மேற் கூறிய கமலாசனத்தில் எழுந்தருளியிருப்பவ ராகிய, மனோன்மனி மணாளராகிய சதாசிவ மூர்த்திக்கு முகம் ஐந்தாக லின், உச்சி முகம் நீங்க ஏனைய நாற்றிசையில் உள்ள நான்கு முகங் கட்கும் முகம் ஒன்றிற்கு நான்காகக் கைகள் இருபதும், எல்லா முகங் கட்குமாக வாய் ஐந்தும், கண்கள் ஐம்மூன்று பதினைந்தும், காதுகள் பத்துமாய் உள்ளன.

குறிப்புரை :

`கால் பத்துப் பத்து (இருபதில் காற்பங்கு) முகம்` எனவும், `கால் பதி - காற்பங்கு குறைந்த - பத்துப் பத்து (இருபது) கண்கள்` எனவும் கொள்க. பூப்பதி பாதம் - கமலாசனத்தில் பொருந்தி யுள்ள திருவடி` `நாற்பத்து` என்பது முதல் நீண்டது, `இருப்பு` என்னும் குற்றுகர ஈற்றுச் சொல், அத்துச் சாரியை பெற்றது. `சுடர் முடி பத்துச் சோத்திரம் இருப்பத்து அஞ்ே\\\\u2970?` என இயைந்து நிற்கும். இதனை, முதற் கண் எடுத்துக் கொண்டு உரைக்க. இங்ஙனங் கூறவே, மேல், ``எடுக் கின்ற பாதங்கள்`` என்னும் மந்திரத்துட் கூறியாங்குச் சிவாக்கினியை வேறு வடிவில் தியானித்தலே யன்றிச் சதாசிவ மூர்த்தியாகவே தியானித்தலும் முறை என்பது பெறப்பட்டது. இஃது இன எதுகை.

பண் :

பாடல் எண் : 20

அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங் கிருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.

பொழிப்புரை :

ஐந்து முகங்களால் ஐந்து வேறுபட்ட நிலைகள் போலக் காணப்படுகின்ற சதாசிவரால் அளவிட்டறிந்து ஆளப்படும் மகேசுவரரது நிலைகள் இருபத்தைந்தும் புகை பொருந்திய ஓம குண்டத்தில் பொருத்தி விளங்குதலால், சதாசிவர் முதல் ஐவராக விரிந்து நிற்கின்ற சிவன் மகிழ்ந்து தோன்றுகின்ற ஓமாக்கினியை நல்ல வகையில் ஓம்பி வாழ்தலே முத்தி நிலையாகும்.

குறிப்புரை :

மஞ்சு - மேகம்; என்றது புகையை. `மஞ்சம்` என்பது கடைக் குறைந்து நின்றது. `சிவபிரான் அவ்வப்பொழுது அடியவர்க்கு அருளக் கொண்ட பழைய உருவத் திருமேனிகள் இருபத்தைந்து` என ஒரு வரம்பு செய்யப்பட்டுள்ளன. அவையாவன:- 1. விக்கினப் பிரசாதர், (விநாயகரை அளித்தவர் - கஜமுகானுக்கிரகர்) 2. பிரமசிரச் சேதர், (நகமுக நிக்கிரகர்) 3. பிட்சாடனர், 4. வீரபத்திரர், 5.கஜசம்மாரர், (யானையுரித்த பெருமான்) 6. சிராதர், (வேடர் -அருச்சுனனுக்கு அருள்புரிந்தவர்) 7. காளகண்டர், (விஷாப ஹரணர் - நஞ்சுண்ட பெருமான்) 8. கங்காளர், (கங்காளம் - பரம விட்டுணுக் களது எலும்புக்கூடு) 9. சக்கரப் பிரதானர், (திருமாலுக்குச் சக்கரம் அருளியவர்) 10. சண்டேசானுக்கிரகர், 11. சுகாசனர், (யோக மூர்த்தி) 12. ஏகபாதர், (உலகைத் தோற்றுவித்தவர்) 13. நடராஜர், 14. சலந்தராரி (சலந்தரனை அழித்தவர்) 15. திரிபுராரி, (திரிபுரத்தை எரித்தவர்.) 16. காலாரி, (காலனை உதைத்தவர்) 17. காமாரி, (மன்மதனை எரித்தவர்) 18. இலிங்கோற்பவர், 19. சந்திரசேகரர், (பிறைமுடிப் பெருமான்) 20. சோமாஸ்கந்தர், 21. இடபாரூடர், 22. உமாமகேசர், 23. கல்யாணசுந்தரர், 24. அர்த்தநாரீசுரர், 25. அரியர்த்தர் (திருமாலை இடப்பாதியில் உடையவர்)என்னும் மூர்த்தங்களாம்.
இவை சிறிது மாறுபடவும் கூறப்படும். அவ்விடத்தில் தட்சிணாமூர்த்தி, யக்ஞேஸ்வரர், உக்கிரர், கங்காதரர், ஆபற்சகாயர், மச்ச கூர்மவராக நரசிங்க சங்காரர்கள், அந்தகாரி (அந்தகாசுரனை அழித்தவர்) என்னும் மூர்த்தங்கள் சொல்லப் படும். வீரபத்திரரையும், பைரவரையும் மாகேசுர மூர்த்தங்களுள் வையாது சிவகுமாரர்களாகக் கொள்ளுதலே மரபு.-
ப்ரதமம் ஸோம தாரீச த்விதீய முமயாசகம் I
த்ருதீயம்து வ்ருஷாரூடம் சதுர்த்தம் ந்ருத்தரூபகம் II
வைவாஹை்யம்பஞ்சமம் வித்யாது ஷஷ்டம்பிக்ஷாடனம்பவேது I
காமாரிம் ஸப்தமம் வித்யாது காலகால மதாஷ்டமம் II
நவமம் த்ரிபுராரிஸ்யாது ஜலந்தர வதோதச I
ஏகாதசம் தஜாரிஸ்யாது த்வாதசம் வீரபத்ரகம் II
த்ரயோதசம் ஹரேரர்த்தம் அர்த்தநாரீ சதுர்தசம் I
பஞ்சாதசம் கிராதம்ஸ்யாது கங்காளம் ஷோடசம்பவேது II
சண்டேசானுக்கிரஹம்சைவ ததஸ்ஸப்த தசோபவேது I
விஷாபஹரணஞ்சைவ த்வஷ்டாதச மிதிஸ்ம்ருதம் II
சக்ரதானஸ்வரூபந்து ஏகோநவிம்சமீரிதம் I
விக்னப்ரஸாதம் விம்சஸ்யாது ஸோமாஸ்கந்தமத:பரம் II
த்வாவிம்ஸதேக பாதந்து த்ரயோவிம்சத்ஸுகாஸநம் I
தக்ஷிணாமூர்த்திரூபந்து சதுர்விம்சத்ப்ரகீர்த்திதம் II
லிங்கோத்பவஸ்வரூபந்து பஞ்சவிம்சத்ப்ரகீர்த்திதம் I
ஏதந்மஹேசரூபாணாம் மூர்த்தி பேதா: ப்ரகீர்த்திதா: II
இதனால்,`ஓமாக்கினியே அனைத்துச் சிவமூர்த்திகளாயும் நிற்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

முத்திநற் சோதி முழுச்சுட ராயவன்
கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்றற்று நாடிப் பரந்தொளி யூடுபோய்ச்
செற்றற் றிருந்தவர் சேர்ந்திருந் தாரே.

பொழிப்புரை :

வீடு பேற்றைத் தருகின்ற ஞானவடிவினனும், வேள்வியில் நிறைவுடைய தீயாய் நிற்பவனுமாகிய சிவன், வேதங்களைக் கற்று அவ்வொழுக்க நெறியில் குற்றமின்றி நிற்பவரது உள்ளத்திலே விளங்கி நிற்பான். உலகப் பற்றுக்களைவிடுத்து அவனை யே நாடி, படர்ந்து எரிகின்ற அத்தீயிடமாக அவனை அணுகி வெகுளி முதலிய குற்றம் நீங்கி நின்றவர் அவனைப் பெற்று நின்றார்கள்.

குறிப்புரை :

வேத ஒழுக்க நெறியாவது முத்தீ வேட்டல். `செற்றம்` என்பது குறைந்து நின்றது, வெகுளி முதலிய குற்றமாவன, வெகுளி, காமம், மயக்கம் என்பன. இக்குற்றங்கள் நீங்கினோர் உலக நலத்தின் பொருட்டே வேள்வி வேட்பர்; அவ்விடத்தில் அவர் சிவனைத் தாம் அன்பால் வழிபடுவர்; அவ்வழிபாடு ஞானம் வாயிலாக வீட்டைத் தரும் என்க. இதனுள்ளும் முதலடி இன எதுகை பெற்றது.
இதனால், வேள்வி வீடும் பயக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

சேர்ந்த கலைகளும் சேரும்இக் குண்டமும்
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.

பொழிப்புரை :

எல்லாவற்றையும் வியாபித்து நிற்கின்ற நிவிர்த்தி யாதி பஞ்சகலைகளும், ஓமத் தீயும் ஒன்றாய் இயைந்து நிற்கும், அதனால், எல்லா உலகங்களும் அத்தீயினிடத்து அடங்கி நிற்பன வாம். ஆகையால், அந்தத் தீயை நிவிர்த்திக்குமேல் பிரதிட்டையில் சிறிது எல்லையளவிலே நிற்கின்ற ஐம்பூதங்களின் ஒன்றாகிய தீயாக எண்ணும் எண்ணத்தை வெறுத்தவரே மேற் சொல்லியவாறு சிவ னோடு என்றும் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையைப் பெற்றவராவர்.

குறிப்புரை :

வேள்வித் தீயைப் பூதாக்கினியாக நினைப்பவர் வைதி கரும், அந்நினைப்பை விடுத்துச் சிவாக்கினியாக நினைப்பவர் சைவரும் ஆவர் என்க. `கலை அஞ்சும் இக்குண்டமும் சேரும் எனக் கூட்டுக. இதனுள்ளும் ஈரடி எதுகைவந்தது.
இதனால், `வீடுபயக்கும் வேள்வி சிவவேள்வியே` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

மெய்கண்ட மாம்விரி நீர்உல கேழையும்
உய்கண்டஞ் செய்த ஒருவனைச் சேருமின்
செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
பொய்கண்ட மில்லாப் பொருள்கலந் தாரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த நிலவுலகின் ஏழு பொழில்களையும் (தீவுகளையும்) உயிர் உய்தி பெறுதற்கு உரிய உலகமாக அமைத்த ஒருவனாகிய சிவனை அவ்விடங்களில் பிறந்துள்ள நீங்கள் வழிபாட்டினால் அடையுங்கள், அவனால் படைக்கப்பட்ட அவ் வுலகம் முழுதையும் அறியும் அறிவைப் பெற்ற தேவர்களும் அதன்கண் சென்று அவனை வழிபட்டே மெய்ப் பொருளைப் பெற்றார்கள் ஆதலால்.

குறிப்புரை :

`மெய்க்கண்டம், பொய்க்கண்டம்` என்பவற்றின் ஒற்று எதுகை நோக்கித் தொகுத்தலாயிற்று. `விரிநீர் உலகு ஏழையும் மெய்க்கண்டமாகவும், உய்கண்டமாகவும் செய்த ஒருவன்` என்க. ``கண்டம்`` நான்கில் இறுதி ஒன்றும் தடை; அஃதாவது பாசம். ஏனைய, உலகம். `மெய்யுணர்வு பெறுதற்கு ஏற்ற இடம் நிலவுலகமே` என்பது சிவநூல் துணிபு. அதனுள்ளும், பரத கண்டமும், அதனுள்ளும் குமரிக் கண்டமும் சிறந்தன என அவை கூறும் என்க. ``இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு`` எனவும், 1 ``வானிடத் தவரும் மண்மேல் வந்து அரன்றனை அற்சிப்பர்`` 2 எனவும் போந்தன காண்க.
இதனால், வழிபாட்டுலகமாகிய இவ்வுலகத்தின் சிறப்பு உணர்த்தும் முகத்தால் இதன்கண் செயற்பாலாகிய முத்தீ வழிபாட்டின் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

கலந்திரு பாதம் இருகர மாகும்
அலர்ந்திரு குண்டம் அகாரத்தோர் மூக்கு
மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி
உலர்ந்திருங் குஞ்சி அங் குத்தம னார்க்கே.

பொழிப்புரை :

சிவாக்கினியது உருவத்தை மேல் ``எடுக்கின்ற பாதம்` (1013) என்னும் மந்திரத்திலும், ``பார்ப்பதி பாகன்`` (1016) என்ற மந்திரத்திலும் கூறியவாறன்றி வேள்வி வேட்பார் தம் வடிவு போன்ற வடிவமாகவும் தியானிக்கலாம். அவ்விடத்திடல் நெற்றிக்கண் ஒன்று மட்டுமே சிறப்புருவமாகக் கொள்ளத்தக்கது.

குறிப்புரை :

`கலந்த, அலர்ந்த, உலர்ந்த` என்பவற்றின் அகரங்கள் தொகுத்தலாயின. கலத்தல் - இணைதல்; அஃதாவது ஒன்றுபோலவே மற்றொன்றும் இருத்தல். ``குண்டலம்` என்பது இடைக்குறைந்து நின்றது. ``அகாரம்`` என்றது நாதத்தை. அஃது அதனைக்கேட்கும் செவியை உணர்த்திற்று, `அகாரத்து அலர்ந்த இரு குண்டலம்` என்க. ``உலர்ந்த`` என்றது, `விரிக்கப்பட்டும், சிவந்தும் உள்ள` என்றவாறு. எனவே, `சடை` என்றதாயிற்று. பாதம் முதலியவற்றில் `உள்ளன, உள்ளது` என்னும் பயனிலைகள் எஞ்சி நின்றன.
இதனால், சிவாக்கினியின் மற்றொரு வகைத் தியான உருவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

உத்தமன் சோதி உளன்ஒரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் வாகீசுவரிக்கு நாயகனாய் இன் புற்று மகிழ்ந்ததனால் உண்டாகிய ஓமத்தீ குண்டத்தின் கீழ்ப்பாதியோடு நில்லாமல் மேற்பாதியிலும் பரத்தலால், அங்கு உள்ள இடங்களும் வேறுபடும். அந்நிலையில் அச்சிவனே அந்தத் தீயுருவில் முதலிலே குழவிப் பருவத்தனாயும், பின்பு காளைப் பருவத்தனாயும் இருப்பான்.

குறிப்புரை :

இதன்கண் உள்ள அடிகளை `ஈறு, ஈற்றயல், முதல், இரண்டு` என்னும் முறையிற் கொண்டு உரைக்க. `ஒரு சோதிப் பாலனாய் உளன்; சோதி மத்திமனாய் இருந்திடும்` என்க. வடக்கில் தோற்றுவிக்கப்பட்ட தீ வலமாக எழுந்து மேற்கில் பரந்து ஓங்கும் என்பார் ``பச்சிம திக்கும்`` என்றார். இதனால், `வடக்கில் பாலனாய்த் தோன்றி வளர்ந்த சிவாக்கினி மேற்கில் காளையாய் நிற்பன்`` என்பது பெறப்பட்டது. ``சத்திமானாக`` என்பதற்கு எழுவாய் `உத்தமன்` என்பதேயாம். தழைத்த கொடி - உண்டாய கொடி; கொடி, தீயின் சுடர். சிவவேள்வியில் தீயை வாகீசுவர வாகீசுவரியர்தம் புதல்வனாகத் தோற்றுவிக்கும் முறை சிவாகமங்களுட் கூறப்படுதல் மேலும் (1008) குறிப்பிடப்பட்டது. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், சிவசத்திகளது கூறாகிய ஓமாக்கினியது நிலைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

கொடிஆறு சென்று குலாவிய குண்டம்
அடிஇரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படிஏ ழுலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு நிற்கும் சிவாக்கினிக்கு இரு முக்கோணங்களை ஒன்றன்மேல் ஒன்றாய் இட்டது போல அமைக்கும் அறுகோண குண்டமே சிறந்தது. அதன் கண் சிவசோதியை அவியாத வாறு கண்டவர்க்குப் பெரிய செல்வம் உண்டாகும்.

குறிப்புரை :

``கொடி`` என்பதற்குப் பொருள் மேற்கூறப்பட்டது. `ஆறு பக்கம் சென்று குலாவிய குண்டம்` என்க. `இருகோணமாய் அடியும் அந்தமும் (மேலும்) ஒக்கும்` எனக் கூட்டுக. `ஆறு பக்கம்` எனவே, இரண்டும் முக்கோணமாதல் பெறப்பட்டது `கண்டவர்க்கு` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. மாதனம் - பெரிய செல்வம். இது அருட் செல்வத்தையும் குறிப்பதாம்.
அறுகோணம் சிறந்த குண்டமாதல், சிவனது முகத்தோடும், குணத்தோடும் ஒத்து நிற்றலாலும், உடம்பினுள் ஆதாரங்களும் ஆறாத லாலும் என்க. இதனானே, இஃது ஆறுமுகனுக்கும் மிக ஏற்புடைய தாதல் அறியப்படும். இதன் பயனும் சிறப்பாகப் போகமாதல் கூறப் பட்டமை காண்க.
இதனால், அறுகோண குண்டத்தின் சிறப்பு வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 27

மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
சாதனமாகச் சமைந்த குருஎன்றும்
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பிரிந்தது பார்த்தே.

பொழிப்புரை :

தன்னைக் காண்பவர்க்குப் பெரிய செல்வமாய் வளர்கின்ற ஓமத்தீயைத் தனக்குப் பயன் தரும் சாதனமாகக் கொண்ட ஆசாரியன், எப்பொழுதும் மாணவர்களது சத்திநிபாத வகையைத் தெரிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு அதனை அறிவித்தலை மேற் கொள்வானாயின், அவன் உலகம் முழுதிற்கும் குருவாய்ப் பலரை ஆட்கொள்ள வல்லவனாவன்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை ஈற்றில் வைத்து உரைக்க. `போதனம், பாதனம்` என்பன, `போதித்தல், வீழ்தல்` எனத் தொழிற் பெயராய் நின்றன. நான்காம் அடியில், `ஆக` `உண்டாக` என்னும் பொருட்டு.
இதனால், அழலோம்பல் ஆசாரியர்கட்குச் சிறப்புக் கடனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார்இல்லை
காத்துட லுள்ளே கருதி யிருந்தவர்
மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.

பொழிப்புரை :

உருவத்தால் ஓம குண்டத்தளவிலே நின்ற தாயினும், ஆற்றலால் எவ்விடத்தும் நிறைந்து நிற்கும் ஓமாக்கினியைத் தமக்கு எல்லா நலனையுந் தரும் அருந்துணையாக ஆராய்ந்தறிபவர் ஒருவரும் இல்லை, அவ்வாறு அறிந்து அதனை முறைப்படி ஓம்பி, மனத்திலும் தியானிப்பவர் உடல், ஆண்டுகள் பல சென்றாலும் அழிவின்றிப் பல யுகங்களைக் கண்டு கொண்டிருந்தவாறு பல இடங்களில் கேட்கப் படுகின்றது.

குறிப்புரை :

`பார்த்த` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. `கேட்கப் படுகின்றது` என்பது சொல்லெச்சம்.
இதனால், வேள்வி வேட்டல் காய சித்தியையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகிஉள் நாடி எழுப்பும்
பகங்கண்டு கொண்டஅப் பாய்கரு ஒப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே.

பொழிப்புரை :

அக வழிபாடாகிய யோகத்தை நன்கறிந்த யோகி, மேற்கூறியவாறு பல யுகங்கள் அழியாதிருத்தற்கு ஏதுவாகிய நவ குண்ட வேள்வியையும் ஒருங்கே தன் உடலகத்துள் முறையறிந்து வளர்ப்பான். தாய் வயிற்றினுள் தங்கிப் பிறக்கின்ற கருவிற்கு அவளது குறிபோல எல்லாப் பயன்களது விளைவிற்கும் இன்றியமையாச் சாதனமாக உலகம் கண்டது வேள்வியே.

குறிப்புரை :

``அகங் கண்ட யோகி``, என்பதை முதலிற் கொண்டு உரைக்க. `பகத்தைச் சாதனமாகக் கண்டு கொண்ட கரு`` என்க. இவ்வாறு உவமை கூரியதனால். காய சித்தி முதலிய சிவ பயன்களுக்கு யோனி குண்டம் சிறந்ததாதல் பெறுதும்.
இதனால், யோகிகள் வேள்வியை அகத்து ஓம்பியே பயன் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

சாதனை நாலு தழல் மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளைவாறு பூநிலை
போதனை போ(து) அஞ்சு பொற்கய வாரணம்
நாதனை நாடும் நவகோடி தானே.

பொழிப்புரை :

பயன்களில் சரியை முதலிய நான்கிற்கும் நாற்கோண குண்டமும், வேள்விக் கடன் முற்றுதற்கு முக்கோண குண்டமும், வெற்றிக்கு வில்லை ஒத்த பிறைக் குண்டமும், துன்ப நீக்கத்திற்கு விருத்த குண்டமும், எல்லாப் பயன்கட்கும் அறுகோண குண்டமும், நிலைபேற்றிற்கு அட்டகோண குண்டமும், ஆசிரியத் தன்மைக்குப் பதும குண்டமும், அழகிய கையையுடைய யானைமேற் செல்லும் அரசச் செல்வத்திற்குப் பஞ்சகோண குண்டமும் சிறப்பாக உரியனவாம். நவகுண்டங்களை இவ்வாறு பெரும்பான்மை பகுத்துணர்ந்து கொள்க.

குறிப்புரை :

யோனி குண்டம் மேலே குறிக்கப்பட்டமையால், அதனை உளப்படுத்து இங்கு, `நவ குண்டம்` என்றார். சாதனை முதலிய எல்லாவற்றிலும் நான்கனுருபு விரித்துக் கொள்க. ``வேதனைக்கு`` என்பதனை, ``துன்பத்திற்கியாரே துணையாவார்`` 1 என்பது போலக் கொள்க. `கைய` என்பது போலியாயிற்று. பூ - பூமி; என்றது அதன் திசைகளை கோடி - கோடுதலை உடையது; குண்டம்.
இதனால், நவ குண்டங்கட்குப் பெரும்பான்மை உரிய பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை நாரணி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவாம் திரிபுரை ஆங்கே.

பொழிப்புரை :

மாமாயை முதலாகச் சொல்லப்படும் பொருள்கள் யாவும் தானேயாயும், அல்லவாயும் சிவ சத்தி நிற்பாள்.

குறிப்புரை :

மா மாயை - சுத்த மாயை. இதுவே வியாபகமாய்ப் பெரிதாதலின் இப்பெயர் பெற்றது. `மாயை` என வாளா கூறும் வழியெல்லாம் அஃது அசுத்த மாயையையே குறிக்கும். வயிந்தவம் - விந்துவின் காரியம்; சுத்ததத்துவங்கள். சுத்த மாயைக்கு `விந்து` என்பது பெயராகலின், அதன் காரியங்கள் `வைந்தவம்` எனப்படும். அசுத்த மாயையின் காரியங்கள் `மாயேயம்` என்றும், பிரகிருதியின் காரியங்கள் `பிராகிருதம்` என்றும் சொல்லப்படும் என்பதும் இங்கு உணர்ந்து கொள்க. வைகரி - வைகரி, முதலிய நால்வகை வாக்குகள். அவை, `வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை` என்பன. சூக்குமை, `பரை` எனவும்படும். இது காரணநிலையாய், நுண்ணிதாய் நிற்பது. `நாதம்` எனப்படுவதும் இதுவே. இதன் விருத்தி (வளர்ச்சி) வகைகளே பைசந்தி முதலிய ஏனைய மூன்றும். ஓ மாயை - அசுத்த மாயை யினின்றும் தோன்றிய, ஆன்ம தத்துவங்கள் தோன்றுதற்கு முதலாகிய பிரகிருதி மாயை. `மூலப் பிரகிருதி` எனப்படுவது இதுவே. ஓவுதல் - நீங்குதல்; வெளிப்படுதல். உள்ளொளி - குண்டலி சத்தி. மந்திரங் களின் கோடி (முடிவு) ஏழனுள், `ஹும், பட்` என்னும் இரண்டும் சிலவிடத்து ஒன்றாக எண்ணப்படும். அம்முறை பற்றி இங்கு ``ஓராறு கோடியில் தாமான மந்திரம்`` என்றார். ஏழு கோடிகள் முன் தந்திரத்தில் கூறப்பட்டன. சத்தி தன் மூர்த்திகள் - சத்தியின் வேறுபாடுகள்தாம் பல. அவை, `ஞானசத்தி, இச்சாசத்தி, கிரியாசத்தி` என்பனவும், `ஆரணி, ஜெனனி, உரோதயித்திரி` என்பனவும், `வாமை, ஜேஷ்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரமதனி, சருவபூததமணி, மனோன்மனி,` எனவும், `சத்தி, விந்து, மனோனமனி, மகேசுவரி, உமை, திரு, வாணி` எனவும், மற்றும் பலவுமாம். `ஆம் ஆய்` `` என்பதில், `ஆம்` அசை நிலை. `அன்று, அல்ல` என்பன வற்றைப் பொதுவினை போலக்கூறுதல் சிலவிடத்துக் காணப்படு கின்றது. ஆங்கு - சிவன் நினைத்தவிடத்து.
இதனால், `சிவனது சத்தியே பிற பொருள்களில் கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் நிற்கும்` என்பது கூறப்பட்டது.
``பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணும் சுவையும்போல் எங்குமாம் - அண்ணல்தாள் அத்துவித மாதல்`` 1
என்ற சிவஞான போதத்தைக் காண்க. இதனுள் `தான்` என்றது சத்தியாதல் அறிக. ஒன்றாதலும் வேறாதலும் கூறவே உடனாதலும் பெறப்பட்டது.
``பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை`` 2
என்பது அப்பர் திருமொழி. இங்ஙனமாகவே சிவனுக்குப் பிற பொருள்களோடு தொடர்பு உண்டாதல் அவனது சத்திவழியேயாதல் அறியப்படும்.
இதனால், `எல்லாப் பொருளும் சத்தியே` என அவளது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப்
பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமாது தானே.

பொழிப்புரை :

மகாதேவியாகிய சிவசத்தி, திரிபுரை முதலிய பல காரணப் பெயர்களைப் பெற்று, அவ்வகையிலெல்லாம் விளங்குவாள்.

குறிப்புரை :

`திரிபுரை` என்பதன் காரணம் இவ்வதிகாரத் தொடக்கத்தில் கூறப்பட்டது. சுந்தரி - மிக்க அழகுடையவள். அந்தரி - ஆகாயத்தில் விளங்குபவள். சிந்துரம் - திலகம். இது நீட்டல் பெற்றது. `சிந்துரத்தை அணிந்த பரிபுரை` என்க. `சிந்துரை` என வேறோதற்பாலதனைச் செய்யுள் நோக்கித் தொகுத்தோதினார். பரிபுரை - சிலம்பணிந்தவள். நாரணி - `நாரணன் தங்கை` எனப் படுபவள். நாரணன் சிவனுக்குப் புருட ரூப சத்தியாதல் பற்றிப் பெண்ணாகச் சொல்லப்படுகின்ற இவள், `அவனுக்குத் தங்கை` எனப் படுகின்றாள். ஆம் - பொருந்திய, பல வன்னத்தி - பல்வேறு நிற வடிவத்தையும் உடையவள். அந்நிறங்களுள் சிறப்பாக நீல நிறத்தை உடையவளாய் `ஈசுவரி,மனோன்மனி` என்னும் பெயர்களைப் பெற்று நிற்பாள் என்பது மூன்றாம் அடியின் பொருள். இவ்வாறு வருகின்ற பல்வேறு நிலைகளில் நிற்பாள் என்க.
இதனால், மேலை மந்திரத்து இறுதியிற் கூறப்பட்ட சத்திதன் மூர்த்தி வேறுபாடுகள் பல விரித்துக் கூறப்பட்டன. அதிகாரமும் சத்திபேதம் ஆதல் நினைவு கூரத்தக்கது.

பண் :

பாடல் எண் : 3

தானே அமைந்தஅம் முப்புரந் தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள் கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே.

பொழிப்புரை :

சத்தி, தனது வியாபகத்தைப் பெற்றுள்ள, `உருத்திர லோகம், விட்டுணுலோகம், பிரமலோகம்` என்னும் மூன்று உலகங்களில் தலைமை பூண்டு நிற்கின்ற உருத்திரன், விட்டுணு, பிரமன் என்னும் மூவரையும் தோற்றி ஒடுக்கும் நான்காவது பொருளாய் நிற்பாள். அவள் ஓருத்தியே பொன்னிறம் உடைய சத்தியாய் நின்று முத்தியையும், செந்நிறம் உடைய திருமகளாய் நின்று செல்வத்தையும், வெண்ணிறம் உடைய கலைமகளாய் நின்று கல்வியையும் தருவாள்.

குறிப்புரை :

`உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் மூவரும் ஒற்றுமை பற்றி, `சிவன்` என ஒருவராக அடக்கப்பட்டனர். மூவுரு ஓர் உரு - மூவுருவையும் அடக்கி உள்ள ஓர் உரு. எனவே, பிரேரக தத்துவங்களில் பலவாகி நிற்கும் ஆதிசத்தியைக் குறித்ததாயிற்று. சத்தி, `நீல நிறம் உடையள்` என்பது பற்றி `நீலி` எனப்படுதலேயன்றி, `கௌர நிறம் உடையள்` என்பது பற்றி, `கௌரி` எனவும் படுவளாதலின், இங்கு அவளுக்குப் பொன்னிறம் கூறினார்.
இதனால், ஒருத்தியே மூவராய் முத்தொழில் இயற்றியும், ஐவராய் ஐந்தொழில் இயற்றியும் நிற்கும் தலைவர் அனைவர்க்கும் தலைவியாய் உயிர்கட்குப் போக மோட்சங்களைத் தந்து நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

நல்குந் திரிபரை நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார்அண்ட மானவை
நல்கும் பரை அபிராமி அகோசரி
புல்கும் அருளும் அப் போதம்தந் தாளுமே.

பொழிப்புரை :

ஐந்தொழில் முதல்வரைத் தருகின்ற திரிபுரை நாதம், நாதாந்தம், பலவாய் விரியும் பரவிந்து, நிலம், வானம் முதலிய அளவற்ற பொருள்களை ஆக்குவாள். அதனால், அவள் அனை வர்க்கும் மேலானவள்; பலரையும் இன்புறச் செய்பவள்; மன வாக்குகளுக்கு அகப் படாதவள். பக்குவம் வந்த நிலையில் அருட் சத்தியாயும் பதிவாள். பின்பு ஞானத்தைக் கொடுத்துத் தன் திருவடிக்கு ஆளாக்கிக் கொள்வாள்.

குறிப்புரை :

நல்குதல் இரண்டில் முன்னது அருளல்; பின்னது படைத்தல். நாதம் முதலியன, காரியப் பொருள்கள் பலவற்றுள் சிலவற்றை விதந்தவாறு. பரை முதலிய மூன்றும் காரணப்பெயர்களாய் நின்றன. புல்குதல் - பதிதல். ``அருளும்`` என்னும் உம்மை சிறப்பு. `மெய்யுணர்வு` என்றற்கு. `அப்போதம்` எனச் சிறப்பித்துக் கூறினார். `போதமும்` என்னும் எண்ணும்மை தொகுத்தலாயிற்று.
இதனால், சத்தி போக மோட்சங்களைத் தருமாறு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தாளணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.

பொழிப்புரை :

திருவடிகளில் சிலம்பு, இடையில் சிவந்த பட்டுடை, மார்பில் கச்சு, நான்கு கைகளிலும் கரும்பு வில், மலர்க்கணை, அங்குசம், பாசம், சென்னியில் நவமணிகளின் அழகு விளங்கும் முடி, காதுகளில் நீல ரத்தினம் மின்னுகின்ற குண்டலம் - இவைகளே திரிபுரைக்கு உள்ள அடையாளங்களாம்.

குறிப்புரை :

``குண்டலக் காதிக்கு`` என்றது உடம்பொடு புணர்த்ததாகலின் அதற்கு இவ்வாறு உரைத்தல் கருத்தாயிற்று.
``பனிமலர்ப்பூங் - கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங் [குசமும் கையில்
அணையுந் திரிபுர சுந்தரி யாவதறிந்தனமே`` 1
எனப் பின்வந்த அடியார் ஒருவரும் அம்மைதன் திருவடிவை இங்ஙனமே கூறினார். இவ்வடிவத்தை `இராசேசுவரி கோலம்` என்பர். முதலடி இனஎதுகையாய் நின்றது.
இதனால், திரிபுரையது ஒருவகைத் தியான உருவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறம்மன்னு கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.

பொழிப்புரை :

குண்டலம் அணிந்த காதினை உடையவள்; கொலை செய்கின்ற வில்லை ஒத்த புருவத்தை உடையவள்; சிவந்த மேனியை உடையவள்; உருத்திராக்க மாலையைப் பூண்டவள்; ஒளிவீசுகின்ற கிரீடத்திலே பிறை அணிந்தவள்; `சண்டிகை` என்னும் பெயர் உடையவள்; இவள் உலகங்களைத் தீமையினின்றும் நீக்கிக் காத்தருள்கின்றாள்.

குறிப்புரை :

தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காப்பாற்று கின்றாள்` என்றபடி. இவளுக்குச் சிவந்த நிறம் - நெருப்புப் போன்ற காட்சி கூறினமை அறியத் தக்கது. `முடியில் மதியை உடைய சண்டிகை` என்க.
இதனால், திரிபுரையது மற்றொருவகைத் தியான உருவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை
நன்றறி கண்டிகை நாற்கால் கரீடிணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.

பொழிப்புரை :

நித்தியளாகிய திரிபுரை கால எல்லையைக் கடந்த பழமை உடையவள். மாயை வழியாக உயிர்களை மயக்குபவள்; அழகிய கூந்தலை உடையவள் ; நன்கு விளங்குகின்ற உருத்திராக்க மாலையை அணிந்திருப்பவள்; நான்கு கால்களை உடைய யானையை ஊர்பவள். வெண்டாமரைமேல் வீற்றிருக்கும் வெள்ளைத் திருமேனியை உடையவள்.

குறிப்புரை :

தாமரை, திருமேனி என்பவற்றது நிறத்தோடு ஒப்ப யானையின் நிறத்தையும் வெண்மையென உணர்க. வெண்மை, ஞானத்தின் அடையாளம். `பின்னர் ஞானத்தை வழங்கும் இவளே முன்னர் மயக்கத்தைச் செய்பவள்` என்பார், ``குன்றலில் மோகினி`` என முன்னே கூறினார். மாது - அழகு. கூந்தலை, `சிகை` என்றது வழு வமைதி. சுத்தமாவது வெண்மை. `சுத்தை` என்பது பெண்பாற் பெயர்.
இதனால், திரிபுரையது முதல் தியான உருவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சுத்தஅம் பாரத் தனத்தி சுகோதையள்
வத்துவ மாய்ஆளும் மாசத்தி மாபரை
அத்தகை யாயும் அணோரணி தானுமாய்
வைத்தஅக் கோலம் மதியவ ளாகுமே.

பொழிப்புரை :

திரிபுரை இன்னும் தூய, அழகிய, திண்ணிய கொங்கைகளை உடையவள்; பேரின்பத் தோற்றத்திலே விளங்கு பவள்; மெய்ப்பொருள்களை உணரும் ஞானமாய் நின்று உயிர்களை ஆட்கொள்கின்ற பேராற்றலை உடையவள். எல்லாச் சத்திகளினும் பெரியளாய் மேலான சத்தி; அப்பொழுதே அணுவினுள் அணுவாய் நிற்கும் நுண்ணியளுமாய் எண்ணப்பட்டு அழகிய நிறைமதி போலும் ஒளியினை உடையவளுமாவாள்.

குறிப்புரை :

ஞானம் நிறைந்து நிற்றலைக் குறிக்க, ``சுத்த, அம், பாரத்தனம்`` என்றார். வத்து - பொருள்; மெய்ப்பொருள். அதன் தன்மை, ``வத்துவம்`` எனப்பட்டது. வத்துவம் உடையதனை, ``வத்துவம்`` என்றார். `வாஸ்துவம்` என்னும் வழக்குண்மை காண்க. எழுவாய், மேலை மந்திரத்தினின்றும் வந்தது. ``கோலம் மதியவள்`` எனப் பண்புப் பெயர் பண்பி வினையொடு முடிந்தது.
இதனால், திரிபுரை தியானத்தில் அவளைப் பற்றி அறியத் தக்க பெருமைகள் கூறப்பட்டன. தனமும், ஒளியும் உருவவழியாக ஞானத்தை உணர்த்தின.

பண் :

பாடல் எண் : 9

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.

பொழிப்புரை :

[இதன் பொருள் வெளிப்படை.]

குறிப்புரை :

ஐவர், படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் செய்யும் தலைவர். ஊர், முத்தி. சிவ பரத்துவம் உணர்த்திய. ``அவனை ஒழிய அமரரும் இல்லை`` என்ற மந்திரத்தினை (41) இதனுடன் வைத்து நோக்குக.
இதனாலும், அவளது பெருமை பிற சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே.

பொழிப்புரை :

திரிபுரையை அனுபவமாக உணர்ந்தவர்கள் அவளை, `ஆனந்தமாய் இருப்பவள்` என்றும், `அருவமாயும், உருவ மாயும் விளங்குபவள்` என்றும் `நிறைந்தஞானம், கிரியை, இச்சை என்னும் வகையினள்` என்றும் கூறுவர். அதனால், அறிவுருவின னாகிய சிவனும் அவள் வழியாகவே தோன்றுவான்.

குறிப்புரை :

அருவமும், உருவமும் கூறவே, அருவுருவம் கொள்ளப்படும். மூன்றாமடி நான்காமடிகளில் ``அறிவார்`` என்ற வற்றை, `அறிவு ஆர்` எனப் பிரித்து. `ஆர்ந்த அறிவு` முதலியன வாகவும், `அறிவாய் ஆர்ந்த பரனும்` எனவும் உரைக்க. இரண்டாம் அடியை `அறிவுரு` எனப்பாடம் ஓதுவாரும் உளர். அவர்க்கு அவள் அருவம் முதலியன ஆதல் கிடையாமை அறிக. மூன்றாம் அடியிலும் `அவள்` என்பதை ``இச்ை\\\\u2970?`` என்பதன் பின் கூட்டுக. ``இடம்`` என்றது, `வழி` என்றவாறு.
இதனாலும், வேறும் சில பெருமையே கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

தான்எங் குளன்அங் குளள்தையல் மாதேவி
ஊன்எங் குளஅங் குளஉயிர் காவலன்
வான்எங் குளதங் குளேவந்தும் அப்பாலாம்
கோன்எங்கும் நின்ற குறிபல பாரே.

பொழிப்புரை :

உடம்புகள் எங்கு உள்ளனவோ அங்கெல்லாம் உள்ள உயிர்களைக் காப்பவனாகிய சிவன், தான் எங்கு இருப்பவனாக அறியப்படுகின்றானோ அங்கெல்லாம் சத்தியும் உடன் இருக் கின்றாள். அதனால், ஆகாயம் உள்ள இடங்களில் எல்லாம் இருக்கின்ற எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நின்றும், அப்பொருள்களையும், அவற்றிற்கு இடம் தந்து நிற்கின்ற ஆகாயத்தையும் கடந்து நிற்பவ னாகிய சிவன் எங்கும் விளங்குகின்ற எந்த உருவமும் சத்தி என்றே அறிவாயாக.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் கொண்டு உரைக்க. இரண்டாம் அடி உயிர்கள் உடம்பையின்றி அமையாமையும், மூன்றாம் அடி எப்பொருள்களும் வானத்தையின்றி அமையாமையும் கூறியவாறு. வந்தும் அப்பாலாதற்கு `அவள்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. குறி, வடிவம்.
இதனால், சிவனது வடிவங்கள் யாவும் சத்தியே யாதல் கூறப்பட்டது.
``தானும் தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்`` 1
என்றாற் போலவரும் திருமொழிகளும், தென்முகக் கடவுள் முதலிய கோலங்களும் அம்மையோடு உடனாய உருவமாகக் கூறப்படுதலும், பிறவும் இக்கருத்தே பற்றியனவாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 12

பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை உணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனாம்
புராசத்தி புண்ணிய மாகிய போகமே.

பொழிப்புரை :

`திரிபுரை` என்னும் சத்தியே மேலானவளும், பெரியவளும் ஆவள். அதனால், அவளே பல்வேறு வகையான காப்புச் சத்தியாய் நிற்றலை, மாணவனே, நீ அறிவாயாக. இனி, அக் காப்புத்தான், திரிவுபடுகின்ற ஊழிகள் தோறும் உடனாய் நின்று புண்ணியத்தின் பயனாகிய உலகின்பத்தைத் தருதலேயாம்.

குறிப்புரை :

``புரா சத்தி`` என்பதனை முதலிற் கொண்டு உரைக்க. தரா சத்தி - தாங்கும் சத்தி. தாங்குதல், காத்தல், உராவுதல், திரிவு படுதல். புண்ணியத்தின் பயனை, `புண்ணியம்` என்றே கூறினார். பெத்தத்தின் வகையாகிய முத்தொழில்களுள் கன்மத்தை நுகர்விப்பது காத்தலேயாகலின், அஃது ஒன்றனையே திரோதானசத்தியது தொழிலாகக் கூறினார். பாவத்தின் பயனாகிய துன்பத்தைத் தருதல் விருப்பின்றிச் செய்யப்படுவதாதலின், அதனையொழித்துப் புண்ணியத்தின் பயனாகிய இன்பத்தைத் தருதல் ஒன்றையே கூறினார். `முன்னர்த் திரோதான சத்தியாய் உலகின்பத்தையும், பின்னர் அருட் சத்தியாய் வீட்டின்பத்தையும் தருபவள் திரிபுரை` என்பது குறிப்பு. பிற்பகுதியில் `அச்சத்தி` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
இதனால், திரிபுரை ஒருத்தியே திரோதான நிலையில் பல்வேறு வகையினளாய் நின்று உயிர்களைப் புரத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

போகம்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகம்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகம்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
பாகம்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.

பொழிப்புரை :

அடியார்கள் நாள்தோறும் தங்கள் உள்ளத்தில் தியானிக்க, அங்ஙனம் தியானிக்குந்தோறும் அவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, உண்மை ஞானமாகிய கொடி படர்தற்கு ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தியே, முன்பு ஒரு கூற்றில் அவ் விடத்துத் திரோதான சத்தியாய் நின்று, பின் அருட் சத்தியாயே விளங்குவாள்.

குறிப்புரை :

``அடியவர் நாள்தொறும் ஆகம் செய்தாங்கே`` என மாற்றி, அது முதலாகத் தொடங்கி உரைக்க. `அகம் செய்தல்` என்பது முதல் நீண்டது. அங்கு, ``செய்து`` என்றது, `செய` என்பதன் திரிபு. `பாகம் செய் கொம்பு` என இயையும். இங்கு, பாகம் செய்தல், பக்குவப்படுத்தல். முன் வந்த `பாகம் செய்தல்`, பங்கில் கொள்ளுதல். போகம்செய் சத்தி, திரோதான சத்தி. `போகம் செய் சத்தியாகிய புரிகுழலாள்` என்க.
இதனால், திரோதான சத்தி அருட் சத்தியின் வேறாகாமை கூறப்பட்டது. அருட் சத்தியது இயல்பும், திரோதான சத்தியால் உளதாகும் பயனும் என்னும் இவைகளும் அனுவாத முகத்தால் ஈண்டே கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பிஎன் னுள்ளே நயந்துவைத் தேனே.

பொழிப்புரை :

[இதன் பொருள் வெளிப்படை.]

குறிப்புரை :

கொம்பு அனையாள் - பூங்கொம்பு போன்றவள். வம்பு அவிழ்கோதை - வாசனையோடு மலர்கின்ற பூக்களையுடைய மாலையை அணிந்தவள். நாடி - நாடப்பட்டவள். சிறுமி - கன்னி. நம்பி - தெளிந்து. நயந்து - விரும்பி. இதனுள்ளும் அம்மைக்குச் செம்மை நிறம் கூறப்பட்டமை அறியத் தக்கது.
``மென்கடிக் குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி [அபிராமி`` 1
எனப் பின்வந்த அடியவரும் கூறினார்.
இதனால், திரிபுரையது தியானச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பாரபரச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலைவிய ளாம.

பொழிப்புரை :

பலவகை வழிபாட்டிலும் விளங்கும் தலைவி யாகிய திரிபுரையே, உலகத்தில் வைக்கப்பட்டுள்ள பல சடப்பொருள் களும், அளவிறந்த உயிர்களாகிய சித்துப்பொருள்களும், உலகின் பத்துத் திசைகளும், சூக்குமை முதலிய நால்வகை வாக்குகளும் அந்தக் கரணங்களது உயர்வும், தாழ்வுமாகிய எண்ண அலைவுகளும், அவ் எண்ணங்களின் வழி நிகழ்கின்ற செயலாற்றல்களுமாய் நிற்பாள்.

குறிப்புரை :

``பரை`` என்றது உபலக்கணம். `வித்தைத் தலைவியள் வைத்த பொருள் முதலிய பலவும் ஆம்` என்க.
இதனால், திரிபுரையே வழிபாடுகள் பலவற்றிலும் விளங்கிப் பல பயன்களையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.

பொழிப்புரை :

`வழிபாடுகளின் தலைவி` என மேற்கூறப்பட்ட திரிபுரை கொங்கைகள் விம்ம நிற்பவள்; அழிவில்லாத தவத்தைச் செய்யும் தூய நெறியை உடையவள்; நூல்கள் பலவற்றையும் தன்னுள் அடக்கி நிற்பவள் ; என்றும் கன்னியாய் இருப்பவள். அவள் இவ்வுலகில் என் உள்ளத்திலே நீங்காது நிறைந்து நிற்கின்றாள்.

குறிப்புரை :

``தலைவி`` என்றது அனுவாதம். கொங்கைகள் பால் சுரந்து விம்ம நிற்றல் அருட் பெருக்கையும், தவம் செய்தலும், நூல்களை அடக்கி நிற்றலும் ஆசிரியத் தன்மையையும், கன்னிமை பற்றின்மையையும் விளக்குவனவாம்.
இதனால், திரிபுரை ஒன்றொடொன்றொவ்வாத நிலைகள் பலவற்றையும் உடையளாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு எனது உள்ளத்திலே நிறைந்து நிற்பவளாகிய திரிபுரை, மனத்துக்கு மேலே உள்ளவளாயும், அழியாத மங்கலத்தை யுடையவளாயும் இருப்பவள். தனது பல வகைப்பட்ட நிலைகளுடனும் என் உள்ளத்தில் பொருந்தியும், உலகமெல்லாம் வணங்கும்படி அம்பலத்தில் நின்றும் அவளையே பற்றி நிற்கின்ற என்னிடத்தில் வேறற நிற்க இசைந்து, அங்ஙனமே வந்து நின்றாள்.

குறிப்புரை :

`நின்றவளாகிய நேரிழை` என்க. கலை - கூறு. ``அகம் படிந்து`` எனவும், ``மன்றது ஒன்றி`` எனவும் கூறியன, அகத்தும் புறத்தும் விளங்குபவளாதலைத் தெரித்தனவாம். `அவளொடு ஒன்றுகின்ற என்னோடு அவளும் ஒன்றி நின்றாள்`` என்றதனை,
``அற்றவர்க்கு அற்ற சிவன்`` 1
எனவும்,
``தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்பன்`` 2
எனவும் வருவனவற்றோடு வைத்துக் காண்க ``ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்`` என்பதனை `ஒத்து அடைந்து ஒன்றி நின்றாள்`` எனப் பின் முன்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டி உரைக்க. ஒத்தல் - உள்ளம் ஒத்தல்; இசைதல்.
இதனால், திரிபுரை அன்பர்களையே அடைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

பொழிப்புரை :

அன்பர்களிடத்தில் ஒன்றியிருக்க இசைந்து, அவர்களது உள்ளத் தாமரையிலே அடங்கி நிற்கின்றவளும், அத் தன்மையை உடைய உயர்ந்த பெரிய தலைவனாகிய சிவனிடத்தில் நிறைந்து நிற்பவளும், மனோன்மனியும், நித்திய சுமங்கலியும் ஆகிய திரிபுரை பல வகைச் சித்துக்களையும் உயிர்களிடத்தில் புரிந்து நிற்கின்ற முறையை உலகர் ஆராய்ந்து அறிகின்றார் களில்லை.

குறிப்புரை :

`கமலத்திடை அடங்கும் ஆயிழை` என மாற்றிக் கொள்க. `பதியோடு` என உருபு விரிக்க. `மத்து` என்பது, நிறைவை உணர்த்தும் வடசொல். ``சித்து`` என்றது `அதிசயச் செயல்கள்` என்றபடி. ``வழி`` என்றது தான் சிவத்தொடு நின்றே எதனையும் செய்பவளாதலை. இதனால், திரிபுரை எதனையும் சிவத்தொடு நின்றே செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதிஅளிப் பாளே.

பொழிப்புரை :

உண்மையை உணர்ந்தவழி விரைய விளங்கும் உள் ளொளியாகிய சிவன் எவ்விடத்தும் சத்தியும், தானுமாய், இயைந்தே நிற்பான். அங்ஙனம் நிற்குங்கால் தம்மை எண்ணுகின்ற வர்கட்கே திரிபுரை நற்கதி வழங்குவாள்.

குறிப்புரை :

`உணர்ந்தவழி` என்பது `உணர்ந்து` எனத் திரிந்து நின்றது, நிற்றல் - விளங்கி நிற்றல். `ஆகி` என்பது பெயர். மூன்றாம் அடியில் ``உடனே`` என்றது, `உடனாகியே` என்றவாறு. `கணித்து` என்பது மெலிந்து, நின்றது. அளித்தலுக்கு எழுவாய், அதிகாரத்தால் வந்தது.
இதனால், சத்தியைச் சிவனோடன்றித் தனித்து நிற்பவளாக எண்ணுதல் கூடாமை கூறப்பட்டது. மேல் (1038) சிவனைச் சத்தியோ டன்றித் தனித்து நிற்பவனாக எண்ணுதல் கூடாமை கூறப்பட்டதையும் இங்கு நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 20

அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போல்உள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யஉண் டாளே.

பொழிப்புரை :

அன்பர்களது உள்ளத் தாமரையை வண்டுபோல விரும்பி உறைகின்றவளும், ஆனந்தமே உருவாய் அழகொடு நிற் பவளும் ஆகிய திரிபுரை, எனது உள்ளம் புளிய மரத்தில் பொருந்திய பழுத்த பழம்போல ஆகும்படி அருள் நோக்கம் செய்து பக்குவப் படுத்திச் சிவஞானத்தைத் தந்து சிவத்தைப் பெறுவித்து, யான் உய்யும் வண்ணம் என்னைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள்.

குறிப்புரை :

புளி - புளிய மரம். புன்மை, இங்கு முற்றி முதிர்ந்து வீழும் மென்மை நிலையைக் குறித்தது. போல - போல ஆகும்படி; அகரம் தொகுத்தலாயிற்று. உள்ளம் புளியம் பழம்போல ஆதலாவது, புளியம் பழத்தின் உள்ளேயிருக்கின்ற புளி அங்ஙனம் உள்ளே யிருப்பினும் ஓட்டில் பற்றுவிட்டுத் தனித்து நிற்றல்போல், உலகியலோடு உடனாய் இருப்பினும், பற்று நீங்கியதாதல். கதி - ஞானம். ஒளியுடையதனை, ``ஒளி`` என்றார்.
இதனால், திரிபுரை மேற்கூறியபடி கதியளிக்குமாறு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 21

உண்டில்லை என்ன உருச்செய்து நின்றது
வண்டில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தன்னொடும்
மண்டிலம் மூன்றுற மன்னிநின் றாளே.

பொழிப்புரை :

காரணங்கட்கெல்லாம் காரணமாய் உள்ள திரி புரை, சிவத்தோடு மூன்றுலகங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கின்றாள்; அதனையும், அவளே சமய வாதிகள் `உண்டு` என்றும், `இல்லை` என்றும் தம்முள் மாறுபட்டு வழக்கிட மறைந்து நிற்றலையும், அடியார் கட்கு உருவொடு தோன்றிக் காட்சியளித்தலையும், வளவியதில்லை யின் அம்பலத்துள் நிலைபெற்று நிற்றலையும் உலகர் அறிந்திலர்.

குறிப்புரை :

``காரண காரணி`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க. ``நின்றது`` முதலிய மூன்றும் தொழிற் பெயராய்ச் செவ் வெண்ணாக எண்ணப்பட்டன. காரணமாவன, தத்துவங்களும், அவற்றின் தலைமைக் கடவுள்களுமாம். முன்னர் அக்கடவுள்களைப் படைத்து, அவர்கள் வாயிலாகத் தத்துவங்களைத் தோற்றி, நிறுத்தி, ஒடுக்கச் செய்து, பின்பு அக்கடவுள்களையும் ஒடுக்குதல் பற்றி, ``காரண காரணி`` என்றார். இது நான்காவதன் தொகை. காரணி - காரணமாய் நிற்பவள், `தான்` என்பது சிவத்தைக் குறிக்கும் குறியீட்டுச் சொல். மண்டிலம் - வட்டம்; `உலகம்` என்றவாறு. `உடம்பில் உள்ள அக்கினி சூரிய சந்திர மண்டலங்கள்` என்றலும் ஆம். ஈற்றில், `அதனையும்` என்பது சொல்லெச்சமாய் நின்றது.
இதனால், திரிபுரை மெய்ப் பொருளேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே
என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.

பொழிப்புரை :

சிவனது செயல்களிலெல்லாம் உடன் சேர்ந்தே நிற்கின்ற மேலான சத்தியாகிய திரிபுரை, அச்சிவனோடு உடலும் உயிரும்போலப் பிரிப்பின்றி வாளாதும் இருப்பாள்; செயற்பட்டும் நடப்பாள். மேன்மை பொருந்திய ஞானமே யாகின்ற அவள், முதலில் புத்தகம் ஏந்திய கையினையுடைய நாமகளாய் நின்று எனக்கு நூலறிவைத் தந்தும், பின்பு எனது உணர்வினுள் உணர்வாய் இன்புறச் செய்தும் என்னைத் தன் அடியவனாக ஏற்றுக்கொண்டாள்.

குறிப்புரை :

``அவன்`` எனச் சுட்டுப்பெயர் செய்யுளில் முன்னர் வந்தது. `சிவன்` என்னும் உயர்திணைப்பெயர் இங்குத் திரிபு புணர்ச்சி எய்தியது. கதி - நடை; செயல். ``சிவகதி`` என்பது, `அரச தண்டம்` என்பதுபோல ஆறாவதன் தொகை, `சிவ கதியில் சேர்ந்திருக்கும் பராசத்தி அவன்றன் உடலும் உயிருமாய் நின்றாள்; சென்றாள்`` எனக் கூட்டி உரைக்க. ``உணர்வு`` என்பது அனுபவ ஞானத்தை. அதனால், இன்பமும் பெறப்பட்டது. ``ஏடு அங்கையாள்`` என்பது உடம்பொடு புணர்த்ததாகலின், அதற்கு இவ்வாறு உரைத்தல் கருத்தாதல் அறிக. ``ஏன்றாள்`` என்பது குறுகிநின்றது. நான்காம் அடியில் `நின்றாள்` என ஓதுதல் பாடமன்று.
இதனால், திரிபுரை ஞானத்தைப் படிமுறையால் அளித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த்தோத்திரங்கள் சொல்லுமே.

பொழிப்புரை :

எங்கள் தலைவியாகிய திருபுரையே புத்தகத்தைக் கையில் ஏந்தி யிருக்கும் நாமகளாகி நிற்பவள். அந்நிலையில் அவளது நிறம் பளிங்கு போல்வது. இருக்கை வெண்டாமரை மலர். கையில் உள்ள புத்தகமும் இசையோடு கூடிய திருப்பாட்டு எழுதப்பட்டது. ஆதலால், அவளைப்பிறள் ஒருத்தியாக நினையாது திரிபுரையாகவே அறிந்து, அவளது பாதமாகிய மலர்களைச் சென்னியில் சூடிக் கொள்ளுங்கள்; வாயால் அவளது புகழ்களைச் சொல்லுங்கள்.

குறிப்புரை :

`இறை` என்பது தொழிலாகு பெயராதலின், பெண் பாற்கும் உரியதாம். `இறைவி` என்பது குறைந்து நின்றது எனினுமாம். `எங்கள் இறை` என மாறிக் கூட்டுக. ``பாடுந் திருமுறை` என்றது, வீணையுடைமையையும் குறித்தவாறு. `திருமுறையைப் பாடும்` என்ற லுமாம். ``பார்ப்பதி`` என்றது `பார்ப்பதியேயான அவள்` என்றபடி.
இதனால், முதற்கண்ணதாகிய நூலறிவைத் தரும் அவளது வடிவியல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

தோத்திரம் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிரும்
பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும்
பார்த்திடும் பூப்பின்னை ஆகுமாம் ஆதிக்கே.

பொழிப்புரை :

காணப்படுகின்ற அங்குச பாசங்கள் ஈரமுடைய கரும்பினாலாகிய வில், அதன்கண் பொருத்தப்படும் பூவாகிய கணைகள், இவை ஆதிசத்தியாகிய திரிபுரைக்கு உரிய அடையாளங்க ளாகும். அவைகளை அறிந்து, அவளது இரண்டு பாதங்களும் உங்கட்குக் கிடைத்தற் பொருட்டு அவளைத் தோத்திரித்தும், வணங்கியும் வழிபடுதற்காகவே உலகில் வாழ்வீராக.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. ``வழிபடுமாறு`` என்பது, வினையெச்சப்பொருட்டாய் நின்றது. ``பின்னை`` என்பது, `மற்று` என்னும் பொருளது. `பிள்ளை` என்பது பாடமன்று. ``ஆகுமாம்`` என்பதில் ஆம், அசைநிலை. `ஆம் ஆதி` என இயைத்து, `நன்மையை அடைதற்கு நிமித்தமாகிய ஆதிசத்தி` என உரைப்பினும் ஆம்.
இதனால், திரிபுரையை இராசேசுவரியாகக் கண்டு வழிபடுக என்பது கூறப்பட்டது. அதன் பொருட்டு, அவளது வடிவம் மறித்தும் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

ஆதி விதம்மிகுத் தண்டந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேல்
சோதி மிகுத்துமுக் காலமும் தோன்றுமே.

பொழிப்புரை :

ஆதி சத்தியின் பேதங்கள் அனைத்துமாய் உலகத்தைச் சார்ந்து நிற்கின்றவளும், `திருமாலின் தங்கை` எனப்படு பவளும், நீதியாளர்களது நெஞ்சத் தாமரையில் விளங்குபவளும் ஆகிய திரிபுரையது மந்திரத்தை, நெஞ்சில் இருத்திப் பலமுறை கணிப் பீர்களாயின், அறிவு விரிவுற்று, முக்கால நிகழ்ச்சிகளும் ஒரு காலத்திதே உங்கட்கு விளங்குவனவாகும்.

குறிப்புரை :

``அண்ணுதல்`` என்பது ``அண்டுதல்`` என மருவி வழங்கும். நீதி - நடுவு நிலைமை. `நீதியாளரது மனத்தாமரை என்றற்கு, ``நீதி மலர்`` என்றார். திரிபுரையது மந்திரம், ``ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் த்ரிபுராயை நம;`` என்பது. இது நவாக்கரியாதலை நோக்குக. மூலாதாரம் முதலிய ஏழ் நிலையுள் நடுவணதாகிய அனாகதத்தை, ``பாதி`` என்றார். `ஆறாதாரங்களில் மேற்பாதியில் முன் உள்ளது` என்றலுமாம்.
இதனால், திரிபுரையது ஆசனமும், மந்திரமும், அவ்வாற்றாற் செய்யும் வழிபாட்டின் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

மேதாதி ஈரெட்டு மாகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே.

பொழிப்புரை :

திரிபுரை, மேதை முதலிய பிராசாத கலைகள் பதினாறுமானவள்; வேதம் முதலிய நூல்களின் பொருளாய் விளங்குபவள்; `இலயம், போகம்` என்னும் மேல் நிலையிலும் `அதிகாரம்` என்னும் கீழ் நிலையிலும் இருப்பவள்; எல்லாப் பொருள் கட்கும் நிலைக்களமாய் நுணுகிப் பரந்த வியாபகத்தை உடையவள்; நாதத்திற்கு முதலாகிய பரநாதத்தில் நிற்கும் அருள் வடிவானவள்.

குறிப்புரை :

`அவளது பெருமையை இவ்வாறு அறிந்து கொள் ளுங்கள்` என்பது குறிப்பெச்சம். எழுவாய் மேலை மந்திரத்தினின்றும் வந்தது. `பிரசாத கலைகள் பதினாறு இவை` என்பது முன்னைத் தந்திரத்திற் காட்டப்பட்டது.
இதனால், திரிபுரையது மிக்க பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே.

பொழிப்புரை :

மனிதர்களே, நான் மயக்கம் பொருந்திய என் மனத்தை மாற்றி உண்மையை உணரப் பெற்ற அதன்கண், புவனங்கள் அனைத்துமாய் நிற்றல் பற்றி, `புவனை` எனப்படுகின்ற திரிபுரைக்குத் தலைவனாகிய சிவனது, அரிய பொருளாய்ப் பொருந்திய செம்மை யான திருவடிகளையே போற்றுவேன்; உங்களில் அருள் பெற்றவரா யுள்ளோர் என்னுடன் வாருங்கள்; அனைவரும் ஒருங்கு கூடிப் போற்றுவோம்.

குறிப்புரை :

`பொருள் பெற்ற சிந்தையில் உற்ற புவனாபதியார் சேவடி` என இயைத்துக் கொள்க. `சத்தி வழிபாடு சிவனை நீக்கிச் செய்யப்படுவதன்று` என்பது உணர்த்தியவாறு.
இதனால், சத்தி வழிபாட்டின் கண்ணது ஓர் ஐயம் அறுக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 28

ஆன வராக முகத்தி பதத்தினில்
ஈனவ ராகம் இடிக்கும் முசலத்தோ
டேனை எழுபடை ஏந்திய வெண்ணகை
ஊனம் அறஉணர்ந் தார்உளத் தோங்குமே.

பொழிப்புரை :

திரிபுரை, ஒறுப்பிற்கு ஏற்ற வராக முகத்தை உடை யவள்; இழிகுணம் படைத்த தீயோரது உடலங்களைக் காலத்தில் அழிப்பாள்; உலக்கையோடு மற்றும் ஏழு ஆயுதங்களை ஏந்தி இருப்பாள்; சிரித்த முகத்தையுடையவள். தங்கள் துன்பங்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் அவள் இவ்வாறு விளங்குவாள்.

குறிப்புரை :

`இறைவன் போகி, யோகி, வேகி - என்னும் மூன்று நிலையில் நிற்குங்கால் சத்தியும் அவற்றிற்கு ஏற்பவே நிற்பாள்` என்பது,
``எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பாள்`` 1
என்பதனால் அறியப்படும். அற்றுள் சத்தியது வேகவடிவத்தில் `வராகி` - என்பவள் மிகக் கடுமையானவளாகக் குறிக்கப்படுதலால் அவளது நிலையை இங்குச் சிறப்பாக எடுத்துக் கூறினார். இதனானே, ஏனை வேகவடிவங்களும் கொள்ளப்படும்.
இதனால், சத்தியது மறக்கருணை நிலையாகிய வேகவடி வத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.

பொழிப்புரை :

பரவிந்துவாய் நிற்கின்ற சிவ சத்தியே `ஒரு கன்னிகை` எனச் சொல்லவும், பச்சை நிறத்தையுடைய திருமேனி யளாக எண்ணவும் படுகின்றது. ஏனெனில், அஃது எழுச்சிபெற்றுப் பரநாத வடிவினனாகிய இறைவனோடு கூடிச் சதாசிவன் முதலிய ஐவரைக் கால்வழியினராகத் தோற்றுவித்து, `ஹ்ரீம்` என்னும் வித்தெழுத்தை இடமாகக்கொண்டு நன்கு பயனளித்து நிற்றலால்.

குறிப்புரை :

`உயிர்களின் வாக்கு மனங்கட்கு அப்பாற்பட்ட சிவ சத்தி அவற்றிற்கு அகப்படுதற் பொருட்டுக் கருணையால் இவ்வாறு உருவும், பெயரும்கொண்டு நின்று, உயிர்களை உய்வித்தற்குரிய செயல்களைச் செய்கின்றது` என்பதாம். அகங்காரம் - `யான் இது செய்வேன்` என முனைதல். இது தனக்கு ஏலாததன்கண் தோன்றின் குற்றமாகும். ஆகவே, தமக்கெனச் சுதந்திரம் இல்லாத உயிர்கட்கு இது குற்றமாகின்றது. சிவசத்திக்குச் சிறப்பாகின்றது. அகங்காரம், `ஆங்காரம்` என மருவி வழங்கும்.
``ஓருரு வாயினை; மான் ஆங்காரத்து
ஈரியல்பாய், ஒரு விண்முதல் பூதலம்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை`` 1
என்பது காண்க. சதாசிவன் முதலிய ஐவராவார், `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என்போர். இவர் சம்பு பட்சத் தினர் என்க. ஈற்றடி அவள் தன் அடியார்க்குப் பயன் தரும் முறையைக் கூறியவாறு. `ஹ்ரீம்` என்பதில் முதற்கண் உள்ள மெய்யின் சிதை வாகிய இகரம், அம்மெய்போலவே வேறெண்ணப் படாது நின்றது.
இதனால், திரிபுரையது கருணைச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயர்வித்துத் தந்த பதினாலும்
மானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதித் தன்மையு மாமே.

பொழிப்புரை :

உயிர்களால் பொதுப்பட `அது` எனக் கூறப்பட்ட தலைவியாய், அவ்வுயிர்கட்கு மேலே இருப்பவளும், ஐந்தொழிற்கும் முதல்வியும், சுத்த மாயை அசுத்த மாயைகளின் காரியங்கள் பதினான் கும், பிரகிருதியும், அதன் காரியங்களாகிய அந்தக்கரணம் முதலியன வுமாய் நின்று உயிர்களைப் பந்திப்பவளும், பின் அவற்றினின்றும் நீக்கி வீட்டை எய்துவிப்பவளும் எல்லாம் திரிபுரையே ஆவள்.

குறிப்புரை :

தத் + பரை = தற்பரை; `தத்` என்னும் சொல்லால் குறிக்கப்படுகின்ற மேலிடத்தவள். உயர் வித்து - பிரகிருதிக்கு மேலே உள்ள முதனிலைகள்; அவை சுத்த மாயையும், அசுத்த மாயையுமாம். அவற்றுள் சுத்த மாயையின் காரியம் ஏழு. அவை, பரநாதம், அபர நாதம், சாதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தையின் ஊர்த்துவ பாகம், மத்திய பாகம், அதோ பாகம்` என்பன. ஊர்த்துவபாகம் உருத்திர னுக்கும், மத்திய பாகம் திருமாலுக்கும், அதோபாகம் அயனுக்கும் இடமாய் இருக்கும். அசுத்த மாயையின் காரியம் ஏழு வித்தியா தத்துவங்கள். மான் - பிரகிருதி. `மானாகிய ஓர் தலம்` என்க. இது பிரகிருதியாதல் பற்றி, `தலம் - இடம்` என்றார். ``மனமும், நற்புத்தியும்`` என்றது ஆன்ம தத்துவம் அனைத்திற்கும் உபலக்கணம். தன்மை - ஈகைக் குணம். தன்மை உடையவளை, ``தன்மை`` என்றார்.
இதனால், திரிபுரையது முழுமுதல் தன்மை இனிது விளக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி
தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண் டாதியோ டந்தப் பதினாலும்
சொன்னிலை சோடசம் அந்தம்என் றோதிடே.

பொழிப்புரை :

பன்னிரு கலைகளை உடையதாகச் சொல்லப்படு கின்ற ஓங்காரத்தில் நாத விந்துக்களைப் பாவித்து, அதன் பின் ஆதி யாகிய வயிரவியது மந்திரத்தில் முதல்எழுத்து அகாரம் முதலிய வற்றில் பன்னிரண்டாம் எழுத்தாகிய `ஐ` எனவும், ஈற்றெழுத்து அவற்றில் பதினான்காம் எழுத்தாகிய `ஔ` என்பது பதினாறாம் எழுத்தாகிய விசர்க்கத்தோடு கூடியது எனவும் அறிந்து அவ்வாறே ஓதிப் பயன் பெறுக.

குறிப்புரை :

``பன்னிரண்டாம் கலை`` என்பதில் `கலை` சினையாகு பெயராய் அவற்றையுடைய ஓங்காரத்தைக் குறித்தது. ஓங்காரமே பிராசாத கலைகளாய் விரிந்து நிற்பதாதல் அறிக. `கலையின்கண்` என ஏழாவது விரித்து, அதனை, ``கற்பித்து`` என்பதனோடு முடிக்க. அகாரம் - நாதம். எனவே, மாயை சுத்த மாயையாயிற்று. ``ஆதி பயிரவிதன்னில்`` என்பதை மூன்றாம் அடியில் முதலிற் கூட்டுக. பயிரவியது மந்திரத்தையே ஒற்றுமை பற்றி, `பயிரவி` என்றார். `பயிரவி தன்னில் ஆதி பன்னிரண்டோடு, அந்தம் அந்தப் பதினாலு சோடசமும் சொல்நிலை என்று ஓதிடு` எனக் கூட்டி வினைமுடிவு செய்க. `ஓடு` `உம்` என்பன எண்ணிடைச் சொற்கள். இங்ஙனம் கூறியதனால், `ஹோம் ஹைம் ஹௌ: பைரவ்யே நம:` என்பதே வயிரவி மந்திரமாதல் பெறப்பட்டது. தொடக்கத்தில் கூறப்பட்ட பொருளாகிய இது பற்றியே இவ்வதிகாரம், `வயிரவி மந்திரம்` எனப் பெயர் பெற்றது என்க. `பைரவ்யே நம:` என்பது `பயிரவிதன்னில்` என்பதனானே விளங்கிக் கிடந்தது. `வயிரவி` என ஓதாது, ``பயிரவி`` என ஓதியதும் இதன் பொருட்டு.
இதனால், வயிரவியது முதனிலை (மூல) மந்திரம் உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அந்தம் பதினா லதுவே வயிரவி
முந்தும் நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தைக் கமலத் தெழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகிநின் றாளே.

பொழிப்புரை :

மேற் கூறியவாறு விசர்க்கத்தோடு கூடி இறுதியில் நிற்கின்ற `ஔ` என்னும் எழுத்தே வயிரவி மந்திரமாகிய சொல் தொடருக்கு முன்னும், ஏனைய `ஐ, ஓம்` என்பவை முறையே அந்த ஔகாரத்திற்கு முன்னே நடுவணதாயும், முதற்கண்ணதாயும் உள்ள பீசங்கள் முன்னே நிற்க. அவ்வாற்றால் உள்ளக்கமலத்தில் விளங்கு கின்ற பராசத்தியாகிய வயிரவி, உலகிற்கு முடிவும் முதலுமாய் உள்ளாள்.

குறிப்புரை :

``அந்தம் பதினாலதுவே முந்து`` என அனுவதித்து ஓதினமையால், ஏனையிரண்டும் சொல்லாமே விளங்கிக்கிடந்தன. எனவே, இதன் முதல்மூன்று அடிகளாலும், `ஹோம் ஹைம் ஹௌ: பைரவ்யே நம:` எனபதே வயிரவி மூலமந்திரம் என்பதை வலியுறுத் தியதாயிற்று. ஈற்றடி அவளது முதன்மை உணர்த்திற்று. அது, பகுதிப் பொருள் விகுதி. இதனால், வயிரவியது முதன்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.

பொழிப்புரை :

உலகிற்குக் காரணர்களாகின்ற `அயன், அரி, அரன்` என்னும் மூவரும் வயிரவியது அழிப்பும், காப்பும், படைப்பும் ஆகிய செயல்களில் ஒரு கூற்றிலே அடங்குபவர் ஆதலின், வீடாகிய பெரும் பயனைப்பெற விரும்பி அவளை வழிபடுகின்ற சிறந்த புண்ணியத்தை உடையவர்கள், நிலையற்ற அம்மூவர் பதவிகளுள் ஒன்றனையும் விரும்பார்.

குறிப்புரை :

முதலடியின் ஈற்றில், `ஆகலான்` என்பது சொல்லெச்ச மாய் நின்றது. போகின்ற - அழிகின்ற. `பூதத்தில்` என உருபுவிரிக்க. ``புரம்`` என்றது புவனத்தை. ஆதரர் - விரும்புபவர். என்றது, முன்னர்க் கூறிய மூவரையே. எனவே, `புராதரர் ஆகிய அவர்` என்றதாயிற்று. ``சார்வுழி`` என்பதில் சார்தல், வாளா அடையாயிற்று. போகும் - அவ் வழியில் ஒழுகுகின்ற. `போகும் புண்ணியத்தோர்` என இயையும்.
இதனால், `வயிரவியை வினைநீக்கம் வேண்டி நிட்காமிய மாக வழிபடுதலே சிறந்தது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தையன் தென்னனு மாமே.

பொழிப்புரை :

இருபத்தேழு நாட்களைக் கொண்ட மதியளவை (சாந்தரமான) மாதம் ஒன்றுகாறும் அகத்தும், புறத்தும் வளர்க்கப் படுகின்ற ஓமாக்கினியே வயிரவி வடிவமாகும். அதனைப் பகல் இரவு இடைவிடாது ஓம்புகின்ற மன உறுதியுடையவன் `சிவனே` என எண்ணத்தக்கபெருமை யுடையவனாவன்.

குறிப்புரை :

``புண்ணிய நந்தி, புனிதன்`` என்றவை, ``சிவன்`` என்ற வாறு. அவனது திரு, சத்தி. இங்கு வயிரவி ``எண்ணிய ... ... வன்னி, புண்ணிய ... ... ... திரு ஆகும்`` எனக் கூட்டியுரைக்க. ``பகலோன், மதி`` என்றது அவர்கள் விளங்கி நிற்கும் பகலும், இரவுமாகிய காலத்தைக் குறித்தன. ``நாளின் தொடக்கம் பகலவன் தோற்றமும், இறுதி மதியின் மறைவும்` என்னும் பொது முறை பற்றி ``மதியீறு`` என்றார். `மதியீறாக அதனை (அவ்வன்னியை)ப் பண்ணும் திண் ணியன்` என்றார். ``பண்ணிய வன்னி`` எனப்பொதுப்படக் கூறி யதனால், அகத்தும், புறத்தும் பண்ணுதல் கொள்ளப்பட்டது. அவ்வாறு பண்ணும் முறை மேலெல்லாம் சொல்லப்பட்டது. வடக்கில் கயிலைச் சிகரமாகிய ஓரிடத்தில் அரிதிற்காண இருக்கின்ற சிவன், தென்னாட்டில் அளவற்ற கோயில்களில் எளிதிற் காண இருத்தலால் அவனை, `தென்னன்` எனத் தமிழாகமம் கூறிற்று என்க. வாதவூரடிகளும் சிவனை இவ்வாறு கூறுதல் இது பற்றியே எனக் கொள்ளலுமாம்.
இதனால், வயிரவி வழிபாட்டில் சிறப்புடையது ஒன்று கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தென்னன் திருநந்தி சேவகன் றன்னொடும்
பொன்னங் கிரியினிற் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோ
டுன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே.

பொழிப்புரை :

உள்ளத்தில் பொருள் வடிவாக எண்ணப்படுகின்ற திரிபுரை மந்திரத்தை, உயர்த்துச் சொல்லப்படுகின்ற அன்பினாலாகிய மேற்கோளோடு வாழ்நாளின் இறுதிவரை சிவனொடு வைத்து, சொல் வடிவிலும் ஓதிவரும் அன்பன் பொருட்டாக அவளை நிலவுலகம் கயிலாய மலைபோலவே சிவனோடு தன்னகத்து வைத்துப் போற்று கின்றது.

குறிப்புரை :

சேவகன் - வீரன். கிரியினில் - கிரியைப் போல. பரிதல் - அன்பு செய்தல். `கட்டு, ஒட்டு` முதலியன போல, ``பிடி`` என்பது முதனிலைத் தொழிற்பெயர். ``பரி பிடி`` நிகழ்கால வினைத் தொகை. `பிடியொடு` என உருபு விரிக்க. ``திரிபுரை`` என்றது அவளது நாமத்தை. ஓதி நின்றானுக்காக அவள் கயிலையிற் போல சிவனோடு வெளிநிற்றலை, ``பூதலம் போற்றிடும்`` என உலகின்மேல் வைத்துக் கூறினார். `ஓதி நின்றான் அவனைச் சிவனோடு இங்குத்தானே காண்பான்` என்றவாறு.
இதனால், `மேற்கூறிய வழிபாடு இம்மையிற்றானே பயன் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஓதிய நந்தி உணருந் திருவருள்
நீதியில் வேத நெறிவந் துரைசெயும்
போதம் இருபத் தெழுநாள் புணர்மதிச்
சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.

பொழிப்புரை :

நூல்களால் சொல்லப்படுகின்ற சிவனுடையதும், உணர்வுடையோரால் உணரப்படுவதும் ஆகிய திருவருட்சத்தியும், வேதத்தின்வழி வழுவாது ஒழுகிவருவோரால் வழிவழியாக உபதேசிக் கப்பட்டு வருகின்ற ஞானமும், மேற்கூறியவாறு இருபத்தேழு நாள்களை உடைய ஒரு மதி வட்டங்காறும் விளங்கி நிற்கின்ற ஓமாக்கினியை வயி ரவிதேவி தன் அடியார்களின்முன் சூலத்தோடு வந்து அருள்புரிவாள்.

குறிப்புரை :

`நந்தி அருள், உணரும் அருள்` எனத் தனித்தனி முடிக்க. `நீதி -முறை, நீதியில்வந்து` என இயையும். சோதி, ஆகு பெயர். திரு வருள், போதம், சோதி என்பன ஒரு பொருள்மேல் வந்த பல பெயராய் வயிரவியையே குறித்தன. `சூலத்தோடு` என உருபு விரிக்க. `சூலம் அவட்குச் சிறப்படையாளம்` என்பது தோன்றுதற் பொருட்டு அதனை விதந்தவாறு.வருகின்ற மந்திரத்துள் மறித்தும் `சூலி` என்றலும் இது பற்றி.
இதனால், மேற்கூறிய வழிபாட்டினது சிறப்பு வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சூலம் கபாலம்கை யேந்திய சூலிக்கு
நாலங் கரம்உள நாகபா சாங்குசம்
மாலங் கயன்அறி யாத வடிவற்கு
மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.

பொழிப்புரை :

வயிரவிக்கு அழகிய கைகள் நான்கு. அவைகளில் சூலம், கபாலம், நாகபாசம், அங்குசம் என்பவற்றை ஏந்தியிருப்பாள். இவள், மாலாலும், அயனாலும் அறியப்படாத அழல் வடிவத்தை உடைய சிவனுக்குச் சிறந்த திருமேனியாகின்ற அருளேயன்றி, வேறல்லள்.

குறிப்புரை :

``சூலம் கபாலம் கையேந்திய சூலி`` என்றது உடம் பொடு புணர்த்தல். வலக்கையிரண்டில் மேலதிற் சூலமும், கீழதில் அங்குசமும் இடக்கை யிரண்டில் மேலதில் கபாலமும், கீழதில் நாகபாச மும் உள எனக் கொள்க. `இவள் சிவனது அருளே` என்றது, `சாந்த ரூபி` என்பதன்கண் ஐயம் அறுத்தவாறு.

பண் :

பாடல் எண் : 8

மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லியல் கிஞ்ச நிறம்மன்னு சேயிழை
கல்லியல் ஒப்பது காணும் திருமேனி
பல்லியல் ஆடையும் பன்மணி தானே.

பொழிப்புரை :

மேலும் இவள், மென்மையான இயல்பை உடையவள்; வஞ்சிக் கொடிபோலும் வடிவினை யுடையவள்; சிறிது சினங்கொண்ட மனத்தினள்; பலகலையும் உணர்ந்தவள் ; தோன்றுகின்ற வாய் முள்முருக்க மலர்போலச் சிவந்திருப்பவள்; நீல மணி போன்ற நிறத்தை உடையவள்; பல நிறத்தோடும், பல மணிகளோடும் கூடிய உடையை அணிந்தவள்.

குறிப்புரை :

``சொல் இயல்`` என்பதில் இயலுதல், அதற்குரிய இடத்தின் மேல் நின்றது. கிஞ்சுகம் `கிஞ்சம்` என மருவிற்று. `காணும் திருமேனி கல் இயல் ஒப்பது` எனக் கூட்டுக. ``ஆடையும்`` என்னும் உம்மை, சிறப்பு. மணியை உடையதனை ``மணி`` என்றார்.

பண் :

பாடல் எண் : 9

பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக் காதி உழைக் கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.

பொழிப்புரை :

இன்னும் இவள், பல வயிரங்கள் இழைத்த கோடி சந்திரன்போலும் அழகிய முடியை அணிந்தவள்; சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற இரத்தின குணடலத்தை அணிந்த காதினை உடையவள்; மான் போல மருண்டு பார்க்கும் பார்வையை உடையவள்; சிறந்த ஒளிகளாகிய சூரியனையும், சந்திரனையும் கண்களாகக் கொண்டவள்; பொன்னாலாகிய மணி போலும் நெருப்புக் கண்ணையும் நிரம்ப உடையவள்.

குறிப்புரை :

திருமுடி, அன்மொழித்தொகை. `கன்மணி குண்டலக் காதி` எனப் பாடம் ஓதி, இங்கும், `மணி` என்பதற்கு `அழகு` எனப் பொருள் கொள்ளுதல் சிறக்கும், ``வன்னி`` என்றது அதனையுடைய கண்ணினை. உம்மை, இறந்தது தழுவிய எச்சம். நிரம்புவது சிவசத்தித் தன்மை என்க.
இவை மூன்று மந்திரங்களாலும் வயிரவியது தியானவடிவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளேஓர்
ஆரியத் தாள்உளள் அங்கெண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.

பொழிப்புரை :

விரிந்துநின்ற ஒரு தாமரை மலரின் எட்டிதழின் நடுவில் (பொகுட்டில்) மேலான சத்தி ஒருத்தி இருக்கின்றாள். அவ் எட்டிதழ்களில் கன்னியர் எண்மரும், அவருள் ஒருத்திக்கு எண்மராக அறுபத்து நால்வர் பணிமகளிரும் அங்குச்சூழ்ந்து பணிபுரிந்து அந்தச் சத்தியைத் தொழுது கொண்டிருக்கிறார்கள்.

குறிப்புரை :

இவளே `மனோன்மனி` எனப்படுபவள். நான்கு திசை யிலும் திசைக்கு இரண்டாக உள்ள எட்டிதழ்களில் கிழக்கு முதலாகத் தொடங்கி வலமாக முறையே `வாமை, சேட்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூத தமனி` எனச் சொல்லி, எண்மர் கன்னியரை அறிக. பாரித்தல் - சூழ்தல். `சரித்து` என்பது முதல் நீண்டது. இதன்கண் கூறப்பட்ட தாமரை மலர் வடிவத்தையும், அதன்கண் இருக்கும் முதற்சத்தி ஒருத்தி பரிவாரசத்தி எண்மர் ஆகியோரைக் கீழ் உள்ளவாறு கண்டுகொள்க.
சிவனைப் பூசித்தற்குரிய பதுமாசனத்தின் அமைப்பு ஆகமங் களில் ஆங்காங்கு வேறு வேறுவகையாகச் சொல்லப் படுகின்றது. அவற்றுள் இங்குக் கூறிய எட்டிதழ்களும் சுத்த வித்தை ஒன்றும், வித்தியா தத்துவம் ஏழும் கூடியவையாம். ஆகவே, இதன் பொகுட்டு முதலியன ஏனைச் சிவத்தத்துவங்களும், இதன் தண்டு ஆன்ம தத்துவம் இருபத்து நான்குமாம். இதனை, அகத்தே பாவிக்கும் பொழுது தண்டினைக் கொப்பூழ் அடி முதலாகவும், மலரை இருதயத் திலும் கொள்ள வேண்டும். மனோன்மனியே இங்குப் பூசிக்கப் படுவள். ஏனையோர் அவளுக்குப் பரிவாரமும், பரிவாரங்கட்குப் பரி வாரங்களும் ஆவர். சிவ வழிபாட்டு முறையே சத்திக்கும் ஆதலின், அதனை இங்குக் கூறினார். இதனானே, எந்தச் சத்தியை யார் வழி படினும் வழிபடப்படுபவளைத் தலைவியாகப் பொகுட்டில் வைத்துப் பரிவாரங்களை இதழ்களில் நிறுத்திப் பூசித்தல் வேண்டும் என்பது கொள்ளப்படும்.
இதனால், சத்தியை அகத்தும், புறத்தும் ஆசனத்தில் வைத்து வழிபடுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசத்தி
அண்டமொ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுட் பூசனை யாளே.

பொழிப்புரை :

இறைவியாகிய பராசத்தி மேற்கூறிய மனோன் மனியாய்ப் பூசிக்கப்படும் பொழுது கன்னித் தன்மையைக் குறிக்கச் சிலம்பும், வளையலும் அணிந்தவளாகவும், உலகத்தைக் காக்கின்ற செயலைக் குறிக்கச் சங்கு சக்கரங்களை ஏந்தியவளாகவும், எட்டுத் திசையும் நிறைந்தவளாதலைக் குறிக்க எட்டிதழ்த் தாமரையின் நடுவில் உள்ளவளாகவும் கருதப்படுவாள்.

குறிப்புரை :

``எண்டிசை யோகி``, ``எண்டிசை தாங்கும் அருட் செல்வி`` என்பன உடம்பொடு புணர்த்தலாய் நின்றமையின், இதற்கு இவ்வாறுரைத்தல் கருத்தாதல் அறிக. யோகி - பொருத்தி யிருப்பவள்.
மேற்கூறிய மனோன்மனியைத் தியானிக்கும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

பூசனை கந்தம் புனைமலர் மாகோடி
யோசனை பஞ்சத் தொலி வந் துரைசெய்யும்
வாச மிலாத மணிமந் திரயோகம்
தேசந் திகழும் திரிபுரை காணே.

பொழிப்புரை :

எங்கும் நிறைந்தவளாகிய சத்திக்கு உரிய பூசைப் பொருள்களாவன. சந்தனம் குங்குமம் பனிநீர் முதலிய நறுமணப் பொருள்கள். சூடத்தக்க மிக்க பல மலர்கள், ஐவகை வாத்தியங்கள், ஒலிக்காத மணிபோல வாய்க்குள்ளே சொல்லப்படும் மந்திரங்கள் முதலியனவாம்.

குறிப்புரை :

பூசனைப் பொருள்களில் சிறந்தன சிலவற்றை எடுத்தோதி, ஏனையவற்றை உபலக்கணத்தால் கொள்ள வைத்தார். வழக்கம் பற்றி அவற்றை உணர்தல் எளிதாதலின், ``தேசந் திகழும் திரிபுரை` என்பதனை முதற்கண் வைத்து, `திரிபுரைக்கு` என உருபு விரித்துக்கொள்க. காண். முன்னிலையசை.
இதனால், சத்தி வழிபாட்டிற்குரிய பொருட்படை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 13

காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணுந் தலைவிநற் காரணி காணே.

பொழிப்புரை :

உலகில் காணப்படுகின்ற பலப்பல தெய்வங் களும், வேறு வேறு வகையாய் அணியப்படுகின்ற அணிகலங்கள் பலப்பலவும் ஒரு பொன்னின் வேறுபாடேயாதல் போலத் தோன்று வனவாம். அவைகளுள் முதல்வராகப் போற்றப்படுகின்ற மும் மூர்த்தி களாயும் காணப்படுந்தலைவி உலக காரணியாகிய ஆதி சத்தியே.

குறிப்புரை :

`வெவ்வேறாய், மாயனுமாய்` என ஆக்கம் வருவிக்க. ``பூணும் பல பலவும்`` என்னும் முற்றும்மை தொகுத்தல் பெற்றது. ``பொன்`` என்றது அதன் காரிய வேறுபாட்டினை. `தெய்வங்கள் தோற்றத்தில் பலப் பல வாய்க் காணப்படினும் பொருளால் ஒன்றே` என்பது முன் இரண்டடிகளால் கூறப்பட்டது. இதனை எடுத்தோதியது, `சத்தி ஒருத்தியே முதல்வி` எனப் பின்னர் வருவதனை நிறுவுதற் பொருட்டு. வேறுபட்டுக் காணப்படுகின்ற பல தெய்வங்களும், `சம்பு பட்சமும், அணுபட்சமும்` என இருதிறத்தன என்பது முதல் தந்திரத்தில் (90) காட்டப்பட்டது. சிவபுண்ணிய மிகுதியால் உருத்திரன் மாலும், அயனும் ஆகிய ஏனை இருவர்போல ஒரோவழியும் மயக்கம் எய்துதல் இலனாயினமையின் அவனைச் சிவனாகவே கூறுதல் உண்டு என்க. ``சிவன்`` முதலிய மூன்றிலும் உள்ள உம்மைகள் எண்ணோடு உயர்வு சிறப்பு. `மும்மூர்த்திகட்கும் முதல்வி யாதல் கூறவே, ஏனையோர்க்கு முதல்வியாதல் கூற வேண்டா` என்பது கருத்து. சத்தியது முதன்மையை விதந்தது. அவளை வழிபட்டால் அனைத்துத் தேவரையும் வழிபட்டதாம் என்பது உணர்த்துதற்கு என்க.
இதனால், மேற்கூறிய வழிபாட்டின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

காரண மந்திரம் ஓதும் கமலத்துப்
பூரண கும்ப இரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடு அங் குரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமு மாமே.

பொழிப்புரை :

தூலம், சூக்குமம் முதலாக வகுத்துச் சொல்லப் படுகின்ற மந்திரங்களுள் காரண மந்திரத்தை ஓதுவோரது உள்ளக் கமலத்தில், பூரக கும்பக இரேசகங்களாகின்ற பிராணாயாமத்தால் விளங்கி நிற்கின்ற சத்தி, சத்தனாகிய சிவனது நடுவில் உள்ளவளாய் இருப்பாள். இவ்வாறு சொல்லுகின்ற வேதப் பகுதி வேதத்தின் முடிவாய் விளங்குவதாம்.

குறிப்புரை :

`பூரகம், கும்பகம், இரேசகம்` என்பன திரிவுபெற்று நின்றன. `இரேசகத்தால்` என உருபு விரிக்க. ``நடு`` என்பதன்பின், ``இருப்பாள்`` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. இதனுள், ``மந்திரம்`` என்றது பஞ்சாக்கரத்தை. ``காரணம்`` என்றதும், மகா காரணமாம். அஃது ஒன்பதாந் தந்திரத்தில் பஞ்சாக்கர பேதங்களைக் கூறுமிடத்து ஈரெழுத்தின் ஈரடுக்காக எடுத்தோதப்படுதல் காண்க. அதன்கண் சத்தி சிவத்தின் நடுவிலும், சிவம் சத்தியின் நடுவிலும் இருப்பினும் இங்கு இயைபு பற்றிச் சத்தி சிவத்தின் நடுவில் இருத்தலையே குறித்தார். ஓதுபவரது வினை அவரது உள்ளத்தின்மேல் ஏற்றப்பட்டது.
``உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீஇருத்தி`` 1
என்பது இம் மகாகாரண பஞ்சாக்கரத்தின் மேலும்,
``அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதனால்``
என்பது மூன்றெழுத்தாய் நின்று அடுக்கிவரும் காரண பஞ்சாக் கரத்தின்மேலும் நோக்குடையன என்றல் மரபு. இதனின் மிக்க மந்திரம் இன்மையின் இதனைக் கூறும் உபநிடதமே வேத முடிவாகும் என்றார். மகாகாரண பஞ்சாக்கரத்தைச் சத்தி பரமா ஓதுங்கால் சத்தியெழுத்தை நெடிலாக ஓதுதல்வேண்டும் என்பது உய்த்துணர்ந்து கொள்க.
இதனால், மேற்கூறிய வழிபாட்டின் மந்திரங்களுள் தலையாயது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடும்
நந்தி இதனை நவம்உரைத் தானே.

பொழிப்புரை :

கைகளில் மோதிரவிரல், சிறுவிரல் முதலாகத் தொடங்கி வலமாகப் பெருவிரலின் நுனியால் வரைகளைத்தொட்டு உருவை எண்ணி நடுவிரலில் முடிக்கும் வகையால் மீள மீள உருவேற்றப்படும் தமிழ்மந்திரம் முதலிய மந்திரங்களை அவ்வவற்றிற் குரிய தெய்வங்களாகவே தெளிந்து வழிபடுங்கள்; (பயன் விளையும்.) இதனை எங்கள் நந்திபெருமான் நான் உணரும் வண்ணம் உரைத்தருளினார்.

குறிப்புரை :

நடுவிரலிற் சிறியவாதல்பற்றி மோதிரவிரலையும் `சிறுவிரல்` எனப் பொதுப்படக் கூறினார். எனவே, `தீரச் சிறியவிரல்` எனக் கூறவில்லை என்க. கையில் உள்ள ஐந்து விரல்களில் பெருவிரல் எண்ணுவதும், ஏனை நான்கு விரல்களும் எண்ணப்படுவனவுமாய். நிற்கும். ஒவ்வொரு விரலிலும் மும்முன்று கீற்றுக்கள் உள; எண்ணப் படும் விரலின் வரைகள் பன்னிரண்டில் நடுவிரலிலும், மோதிர விரலிலும் உள்ள நடுக்கீற்று இரண்டும் எப்பொழுதும் தீண்டப்படா. `அவையிரண்டும் சிவமும், சத்தியும்` என்பர். அவை ஒழிய ஏனைப் பத்துக் கீற்றுக்களை மோதிரவிரலின் அடிக்கீற்று முதலாகத் தொடங்கி வலமாகச் சுற்றிவந்து நடுவிரலின் அடிக் கீற்றில் முடிக்க உளவாகின்ற உருக்கள் பத்தாம். இவ்வாறு பெருவிரலின் நுனியால் மீள மீளச் சுழன்று எண்ண உருக்கள் பலவாக ஏறும். `எட்டு` என்னும் உருவும் உண்மையில் பத்தாகவே எண்ணப்படும். அவ்வாறு எண்ணப்படுத லால் இடையில் நிகழ்ந்த குறை நிரம்பும் என்பது கருத்து. இனி எட்டு வேண்டியவிடத்துச் சிறுவிரலின் அடி தொடங்கிச் சென்று சுட்டு விரலின் அடிக்கண் முடித்தல் வேண்டும் என்பாரும் உளர்.
செபமணியிலன்றிக் கைவிரல்களால் மந்திரங்களைக் கணிக்கும் வகையில் பலவேறுமுறைகள் பலவிடத்து உள்ளன. அவற்றுள் ஒன்றனை நாயனார் விதந்தார்.
`மேற்கூறிய பத்துக் கீற்றுக்களோடு பெருவிரலில் இரண்டு கீற்றுக்களைக் கூட்டிப் பன்னிரண்டு பன்னிரண்டாக ஒன்பது முறை கணிக்க நூற்றெட்டு உருவாகும் என்பாரும், `சிறு விரலின் அடி தொடங்கிப் பெருவிரலின் ஒரு கீற்றேகொண்டு நடுவிரல் அடிமுடியப் பத்தாகும்` என்பாரும் இங்ஙனம் பலதிறத்தர் கிரியையாளர் என்க.
தமிழ் மொழியிலும் மந்திரம் உண்மையை வலியுறுத்துபவர் இந் நாயனார் ஆதலின் ``செந்தமிழாதி`` என்றார். ``செந்தமிழாதி மந்திரங் களை` என்க. ``தமிழ்`` என்பது அதனாலாகிய மந்திரத்தைக் குறித்தது.
தமிழ்ச் செய்யுட்கே இலக்கணம் கூறவந்த தொல்காப்பியர் அதன் செய்யுட்களை ஏழாகவகுத்து, `அவற்றுள் ஒன்று மந்திரம்` எனக்கூறி,
``நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப`` 1
என நூற்பாச் செய்வாராயின், அந்நூற்பாவினுள் ``மந்திரம்`` என்றது வடமொழி மந்திரமே என உரைத்தல் உரையாதல் எங்ஙனம்? இந்நூற் பாக் கூறும் மந்திரம் தமிழ் மந்திரமே என்பதில் உரையாளர் யாவரும் ஒத்த கருத்தினர் ஆதலை அவர் உரைநோக்கி உணர்ந்து கொள்க. நவம் - புதுமை; அஃதாவது முன்னர் அறியாதிருந்து பின்னர் அறிதல்.
இதனால், மந்திரங்களைக் கணிக்கும் முறைகளுள் எளிதான ஒன்று இயைபு பற்றிக் கூறப்பட்டது.
இதற்குப் பிறர் இவ்வாறன்றி, வயிரவி மந்திரங்களால் கர நியாசம் செய்யுமாறு கூறியதாகக்கொண்டு, அம்மந்திரங்களை இங்குத் தந்துரைப்பாரும், பஞ்சாக்கரத்தால் இருவைகப்படக் கரநியாசம் செய்யுமாறு கூறியதாகக் கொண்டு, அம்மந்திரத்தைத் தந்துரைப் பாரும் ஆவர். அவரெல்லாம், ``செந்தமிழாதி`` என்பதற்கு, `தமிழுக்கு முதல்வியாகிய வயிரவி` என இயைபின்றியும், `செந்தமிழாவது ஆகமம்` எனவும் `செந்தமிழ் மந்திரமாவது திருவைந்தெழுத்தே` எனவும் தத்தமக்கு வேண்டியவாறே உரைத்துக் கொள்வர். அவ் வுரைகளது தன்மை ஓர்ந்துணர்க.

பண் :

பாடல் எண் : 16

உரைத்த நவசக்தி ஒன்று முடிய
நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும்முன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம்செய் தானே.

பொழிப்புரை :

``மேல்,`` ``பூரித்த பூவிதழ்`` (1067) என்னும் மந்திரத் திற் சொல்லப்பட்ட ஒன்பது சத்திகளுள் இறுதியதாகிய `மனோன்மனி` என்ற ஒன்று முடிவாய் நிற்க. மற்றைய எட்டினையும், வரிசைப்பட்ட எட்டு இடங்களில் வைத்துஒன்றன்பின் ஒன்றாக முறையே எண்ணிப் பிராசாத கலைகள் பன்னிரண்டில் இறுதி எட்டோடும் அவற்றை முன்னே கூறிய நந்திபெருமான், அவ்வாற்றானே வரிசைப்பட நியமிக்கப்பட்ட முறையில் வழிபாட்டு முறையை ஆக்கியருளினார்.

குறிப்புரை :

`ஆதலின் அங்ஙனமே அச்சத்திகளை வழிபடுக` என்பது குறிப்பெச்சம். இராசி - இடம். `இராசிக்கண்` என ஏழாவது விரிக்க. ``நெடுமுறை` என்பது, `நெடுங்கணக்கு` என்பது போல இடை யில் ஒன்று விடாது கூறுதலைக் குறித்தது. `பிராசாதம்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. `பிரைச்சதம்` என்பதும் பாடம். `பிராசாதம்` என்றது அதன் கலைகளை, இங்குக் குறிக்கப்பட்டது, துவாதச கலாப் பிராசாதமே, அதன் இறுதி எட்டுக்கலைகளாவன உன்மனைக்குக்கீழே உள்ளனவாம். அவை, `விந்து, அருத்த சந்திரன், நிரோதினி, நாதம், நாதாந்தம், சத்தி, வியாபினி, சமனை என்பன. `இவற்றிற்கு உரிய இடங்கள் ஆஞ்ஞை முதலாக மேலே உள்ளவை` என்பதை முன்னைத் தந்திரத்துள் `கலை நிலை` என்னும் அதிகாரத் தொடக்கத்தே விளங்கக் கூறினோம். கிழக்கு முதலாக ஒரு திக்கிற்கு இரண்டாக உள்ளன என மேற்காட்டிய எட்டிதழ்களில் வாமை முதலிய எட்டுச் சத்திகளையும், பொகுட்டில் மனோன்மனியையும் வைத்து எண்ணுங்கால் விந்து, முதலிய பிராசாத கலைகளோடு ஒன்றுபட வைத்து எண்ணுதல் வேண்டும் என்பதே இம்மந்திரத்தால் கூறப்பட்டது. இவ்வாறு எண்ணு தலால் சத்தி வழிபாடு பிராசாத யோகமாயும் அமையும் என்பது கருத்து. `எட்டோடும் நிரைத்து` என்க. நியதி - நியமிக்கப்பட்டமுறை. நியமம் - வழிபாட்டுமுறை, செய்தான் - ஆக்கினான். சத்தியை அஃறி ணையாகக் கூறுதலும் உண்மையின் இங்கு அவ்வாறு கூறப்பட்டது.
இதனால், வயிரவி வழிபாட்டினைப் பிராசாத முறையிற் செய்யின் சிறப்பாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற
ஏமத் திருளற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள்ளெழு நுண்புகை
மேவித் தமுதொடு மீண்டது காணே.

பொழிப்புரை :

மாலையையணிந்த கூந்தலை உடையவளும், அருள் பொழியும் கண்களை உடையவளும், உயிரின் அறிவில் பொருந்திய வலிய ஆணவ இருள்போகும்படி ஞான ஒளியைப் பரப்பு கின்ற இளமையான கொடிபோல்பவளும் ஆகிய வயிரவி, வெளியில் ஓமத்தீ வடிவாயும், உள்ளே மூலாக்கினி வடிவாயும் பொருந்தி, விந்துத் தானத்து அமுதத்தோடு இருதயத்தில் வந்து நின்றதை, நீ காண்பாயாக.

குறிப்புரை :

பின்னர், உள்ளெழுதல் கூறப்பட்டமையால், முன்னர் வெளியில் எழுதல் பெறப்பட்டது. மூலாக்கினி கருத்துப் பொருளா தலின், அதனை நுண்ணிதாகக் கூறியதோடு `புகை` எனவும் கூறினார். `மேவி` என்பது ஈறுகெட்டு நின்றது, `விந்து` என்பது வலித்தல் பெற்றது.
இதனால், சத்தி வழிபாட்டினைப் புறத்தும், அகத்தும் அழலோம்பல் முறையால் செய்க என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

காணும் இருதய மந்திரமும் கண்டு
பேணும் நமஎன்று பேசும் தலைமேலே
வேணு நடுவு மிகநின்ற ஆகுதி
பூணும் நடுவென்ற வஞ்சஞ் சிகையே.

பொழிப்புரை :

இருதய மந்திரமும், சிரோமந்திரமும் `நம:` என்னும் முடிபினை உடையன. சிகா மந்திரமும் `வஷட்; என்னும் முடிபினை உடையது.

குறிப்புரை :

`இருதய மந்திரமும் `நம` என்று கண்டு பேசும்; தலை மேல் ``மந்திரமும்`` `நம` என்று கண்டு பேசும், சிகை `வம்சம்` என முடிவு கொள்க. ``மந்திரமும்`` என்பது, ``தலைமேல்`` என்பதனோடும் சென்று இயையும். `வம்,சம்` என்பன வகாரத்தையும், ஷகாரத்தையும் குறித்து `வஷட்` என்பதை உணர்த்தின. ``பேசும்`` என்பது, `பேசப் படும்` என்னும் பொருளது. ``வேணு நடுவு மிக நின்ற ஆகுதி பூணும் நடு என்ற`` என்றது, `மூங்கிற் குழல்போலும் சுழுமுனை நாடியின் உள்ளே ஓங்குகின்ற மூலாக்கினியை எதிரேற்றுக்கொள்கின்ற நடுவிடமாகிய உச்சிக்கு உரியது எனப்பட்ட சிகை வம்சம், என்றவாறு.

பண் :

பாடல் எண் : 19

சிகைநின்ற அந்தம் கவசம்கொண் டாதி
பகைநின்ற அங்கத்தைப் பட்டென்று மாறித்
தொகைநின்ற நேத்திரம் முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வருத்தலும் ஆமே.

பொழிப்புரை :

சிகா மந்திரத்தில் உள்ள `வஷட், என்னும் முடிபு சிறிது வேறுபட்ட `வௌஷட்` என்பது கவச மந்திரத்திற்கும், `பட்` என்பது அத்திர மந்திரத்திற்கும் முடிபாகும். நேத்திரங்கட்குரிய மந்திரத்திற்கு, பொதுவாயுள்ள, `நம:` என்பதே முடிபாம். நேத்திர நியாசத்தில் திரிசூல முத்திரை காட்டல் வேண்டும். சத்தி வழிபாட்டில் யோனி முத்திரை காட்டலும் பொருந்தும்.

குறிப்புரை :

இவ் இரண்டு மந்திரங்களிலும் எடுத்துச் சொல்லப் பட்டவை, `இருதயாய நம:, சிரசே நம:, சிகாயை வஷட், கவசாய, வௌஷட், அஸ்த்ராய பட், நேத்ரோப்யோந் நம:` என்னும் அங்க மந்திரங்கள் ஆறுமாம். ``கொண்டு`` என்பதை, `கொள்ள` எனத் திரிக்க ``பகை நின்ற`` என்பது, `பகைக்கு - பகையை அழித்தற்கு - நின்ற, என்றவாறு, ஆதி - வயிரவி. `ஆதியிடத்து நின்ற` என்க, `பாரென்று` என்பது பாடம் அன்று. தொகை - பொது `நேத்திரம் தொகையோடு நின்றன` என மாறிக் கூட்டுக. ``நின்றன`` எனப் பன்மை கூறியதனால் அது பன்மை வாசகமாகச் சொல்லப்படுதல் கொள்க. `வருவித்தல்` என்பது இடைக் குறைந்து, `வருத்தல்` என நின்றது. `சிரோ மந்திரம் சுவஹாந்த மானது`, என்பாரும் உளர். `நம:` பொதுவாக எல்லாவற்றிற்கும் உரியதே. அஃது ஒன்றே பட இம்மந்திரங்கட்குப் பொருளுரைப் பாரும் உளர். அவர், `வம்சம்` என்பதையும், `அந்தம்` என ஓதித் தமக்கு வேண்டியவாறு உரைத்துப் போவர்.
இவ் இரண்டு மந்திரங்களாலும் அங்க மந்திரங்கள் கூறப்பட்டன, வழிபாட்டில் இவை அங்க நியாசத்திற்கும், பிறவற்றிற் கும் பயன்படுதல் கருதி.
சம்மிதா மந்திரங்களுள் பிரம மந்திரம் ஐந்தும் சத்தி வழிபாட்டில் சத்திக்கு ஏற்பச்சொல்லப்படும். அங்கமந்திரங்கள் அவ்வாறன்றி எவ்விடத்தும் ஒருபெற்றியவாயே வரும் என்க.

பண் :

பாடல் எண் : 20

வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறிப்
பொருத்தி அணிவிரல் சுட்டிற் பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரல்இரண் டுள்புக்குப் பேசே.

பொழிப்புரை :

கைகளை உள்முகமாகக் கொண்டு முயற்சியோடு சிறுவிரல் இரண்டையும் ஒன்றின்மேல் ஒன்றாக மாறி வைத்து அணிவிரல்களையும் அவ்வாறே சுட்டு விரல்களால் மாறிப்பிடித்து மோதிர விரல்களின் மேல் நீண்டதாகிய நடுவிரல் ஒவ்வொன்றையும் நிமிர்த்திப் பொருந்த வைத்துப் பெருவிரல் இரண்டையும் மாற்றமின்றி உள்ளே புகச் செய்தபின், நேத்திர மந்திரத்தைச் சொல்லுக.

குறிப்புரை :

இவ்வாறு அமைப்பது யோனிமுத்திரையாம். இது பஞ்சமுக முத்திரையினின்றும் சிறிதே வேறுபடுதல் அறிக. மாறி வைக்கப்பட்ட சிறு விரல்களைப் பின் நடு விரல்களின் மேல் சார்த்த வேண்டுதல் காண்க. மேற்கூறிய இரண்டில், `திரிசூல முத்திரை நன்கு அறியப்பட்டது` என்னும் கருத்தால். ஏனை ஒன்றன் அமைப்பையே கூறினார். சிலர் வலக்கையில் உள்ள சிறுவிரலைப் பெருவிரலால் வளைத்துப்பிடித்து அவற்றின் நடுவில் உள்ள மூன்று விரல்களை நிமிர்த்திக் காட்டும். ஆக்ரகண்ட முத்திரையையே `நேத்ர முத்திரை` என்றும், `திரிசூல முத்திரை` என்றும் கொள்வர். எனினும், இரு கை விரல்களையும் நன்கு கோத்துப் பிடித்துச் சிறுவிரல்கள், நடுவிரல்கள், பெருவிரல்கள் என்பவற்றை நிமிர்த்தித் தம்முள் பொருந்த வைத்துக் காட்டுவதே திரிசூல முத்திரை என்க.
`வருத்தத்தோடு சிறுவிரல் இரண்டும் மாறிப் பொருந்தி` எனவும், `நெடிதாகிய நடுவை நெரித்து ஒன்ற வைத்து` எனவும் கூட்டுக. `புக்கபின்` என்பது, `புக்கு` எனத் திரிந்தது.
இதனால், அரிதில் அறியப்படுவதொரு முத்திரையை அமைக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரை
கூச மிலாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக்
கூசிய விந்து வுடன்கொண்டு கூவே.

பொழிப்புரை :

சத்தி வழிபாட்டில் பிராண வாயு வசப்படுதற்கு உரியதாகிய உபதேசத்திற்குச் சொல்லப்பட்ட மந்திரமாவது, இகர உயிர், அம்ச மந்திரத்தினின்று பிரித்துத் தனியே தயக்கம் இல்லாமல் சொல்லப்படுகின்ற சகர மெய்யை முன்னர்க் கொண்டு, இறுதியில், முடித்துச் சொல்லப்படும் விந்துவாகிய மகாரத்தையும் ஏற்று நிற்கச் சொல்லப்படுவதாம்.

குறிப்புரை :

எனவே, `சிம்` என்பதே அம்மந்திரமாதல் அறிக. மூன்றாம் அடியை முதற்கண்வைத்து உரைக்க. `மந்திரம்` என்னும் வட சொல்லில் `இகரம் சகாரத்தை முன்கொண்டு` என்க. இங்கு, `முன்` என்பது, புணர்ச்சிவிதிகளின் முறைப்படி, `இடமுன்` என்க. வாசிப் பிராணன் - யோக நூல்களில் `வாசி` எனவழங்கும் பிராணன். `பிராணனுக்கு` என்னும் நான்காவது தொகுத்தலாயிற்று, கூசுதல், இங்கு, அடங்கு தலின் மேற்று. ``கூவு`` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் ஆகு பெயராய்ச் செயப்படுபொருள் மேல் நின்றது. இனி ஏவல் முற்றாக்கி, அது கருத்து வகையால் பெயர்ப் பயனிலையாய் நின்றதாக உரைத்தலுமாம்.
இதனால், சத்தி வழிபாட்டில் கொள்ளப்படும் பிராணாயாம மந்திரம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

கூவிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணும் மகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.

பொழிப்புரை :

மேற்சொல்லிய பிராணாயாம மந்திரத்தைச் சொல்லிப் பிராணாயாமம் செய்த அடியவன், பின்பு மாயையின் அடையாளமாகக் காட்டுகின்ற சங்க முத்திரையின் நடுவில் சத்தி விளங்கி நிற்பாள்.

குறிப்புரை :

முதல் இரண்டடிகள் அனுவாதம். கையை நிமிர்த்திப் பெருவிரல் தவிர மற்றைய நான்கு விரல்களையும் சேர்த்து நீட்டிச் சிறிது வளைத்துப் பெருவிரலை வளைத்து அதன் நுனி சுட்டுவிரலின் அடியில் பொருந்த வைப்பதே சங்க முத்திரையாம். `இது மாயையின் விரிவைக் குறிக்கும்` என்பது இங்குக் கூறப்பட்டது. இம்முத்திரை தேவர்கட்கும், தேவகணங்கட்கும் செய்யும் தர்ப்பணத்திற்குக் கொள்ளப் படுவது. இதனால் விரல் நுனிகளின்வழிச் செல்லும் நீர் `தேவதீர்த் தம்` எனப்படும். `கணபதி, கந்தர், தேவர், நந்தி, மகாகாளர், பிருங்கி, இடபர், சண்டர்` என்னும் இவர்களுக்கும் இவ்வாறே தர்ப்பணம் செய்யப்படும் ஆகையால், `சங்க முத்திரையின் நடுவில் தேவி விளங்கு வாள்` என்றார். எனவே, `பிராணாயாமத்தின் வழியான தியானம், செபம் இவைகளோடு தேவிக்குத் தர்ப்பணமும் செய்க என்றாராயிற்று.
``கூவிய சீவன்`` என்பதை மூன்றாம் அடியின் முதற்கண் வைத்து, `மாயையாக விரிக்கின்ற சங்க முத்திரை நடுவுள் தேவி திகழ்ந்துநின்றாள்` என முடிவுசெய்க.
இதனால், சத்தியது தர்ப்பணம் விதிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.

பொழிப்புரை :

துன்பத்தை நீக்க முன்னிற்கும் வயிரவி நீல நிறத்தை உடையவள்; இரவில் உலாவுபவள்; மனமாகிய ஒன்றும், வாக்கும் காயமுமாகிய ஏனை இரண்டும் ஒருவழிபட்டோரது உள்ளத்தில், தானே விளங்கி அருள்புரிபவள்; சிவபிரானுக்கே உரியசத்தி; அவளைத் துதித்து, அவளது நல்ல திருவருளை இவ்வுலகத்தில் பெற விரும்புங்கள்.

குறிப்புரை :

இரவில் உலாவுதல் தீயவரை ஒறுத்தற்கு. `மனம்` என்பதும், `உள்ளம்` என்பதும் வேறு வேறாதலை அறிக. ``தேவர் பிரானுக்கு நாயகி`` என்றது, `வயிரவி சிவசத்தியே`` என்பதனை வலி யுறுத்தியதாம். இத்தொடர் ஒருபெயர்த்தன்மைப்பட்டு, `சென்றருள்` என்பதனோடு வினைத்தொகையாகத் தொக்கது. `நன்றாகிய அருள்` என்க. ``ஞாலத்து நாடிடும்`` என்றது, `உலகில் பகை முதலிய துன்பங்கள் நீங்கி வாழலாம்` என்றவாறு.
இதனால், வயிரவி வழிபாடு உலகில் வரும் துன்பங்களை நீக்குவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்
நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொ டாய்நிற்கும் ஆதி முதல்வியே.

பொழிப்புரை :

முக்கண்ணியும், சோதி (ஒளி) வடிவானவளும், பராபரையும், `ஆதி` என்னும் பெயரொடு முதல்வியாய் நிற்பவளும் ஆகிய வயிரவி தனது ஆற்றலால் வேதம் சராசரப் பொருள்கள், ஐம்பூதம், நான்குதிசை, இருள், ஒளி, பலவகை உடம்புகளாய்த் தோன்றுகின்ற பல உயிர்கள் முதலிய எல்லாமாய் நிற்கின்றாள்.

குறிப்புரை :

மேல், `திரிபுரை` எனப்பட்ட அவளே இங்கு, `வயிரவி` எனப்படுகின்றாள் என்பது உணர்த்துதற்கு முன்னை யதிகாரத்தில், ``வைத்த பொருளும்`` (1042) என்னும் மந்திரத்திற் கூறியதனையே இங்கும் கூறினார். பர+ அபரை = பராபரை; மேலாய பொருளும், கீழாய பொருளுமாய் நிற்பவள். ஒடு உருபு ஆனுருபின் பொருளில் வந்தது.
இதனால், வயிரவி உலகப் பயனைத் தருதற்கு உரியவள் ஆமாறு குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகில் பிறவிகள் நாசமாம்
ஓத உலவாத கோலம்ஒன் றாகுமே.

பொழிப்புரை :

தென்கோடியாகிய குமரித்துறையில் நிலைபெற் றிருப்பவளும் எப்பொருட்கும் ஆதியுமாகிய வயிரவியைத் துதித்தும், தியானித்தும் நின்றால், உடலில் உள்ள உயிர் சிவமாகும். அறியாமை பொருந்திய இவ்வுலகில் பலவாறு பிறக்கும் பிறவிகள் ஒழியும். அவளது வடிவு எண்ணிறந்த வகையினது ஆகலின், அஃது ஒன்றாயே இருத்தல் கூடுமோ!

குறிப்புரை :

எவ்விடத்தும் சிவமும், சத்தியும் பிரிப்பின்றியிருப் பினும், சிலவிடத்துச் சிவத் தன்மையும், சிலவிடத்துச் சத்தித் தன்மை யும் முனைந்து தோற்றும். அவ்வாற்றால் வடக்கில் கயிலைமலை, சிவ மலையாகின்றது. அதுபோலத் தெற்கில் `குமரி` என்னும் மலை சத்தி மலையாய் இருந்தது. காலவேறுபாட்டால் அம்மலையைக் கடல் தன்னுள்ளே அகப்படுத்து வடக்கில் மிகப்பரந்து நின்றமையின், அதன் வடகரையில் சத்திகுமரியாய் எழுந்தருளியிருக்க, அக் கடல் முனை யும் `குமரி முனை` எனப் படுவதாயிற்று. அவ்விடம் சிவனுக்குக் கயிலைபோல, உமைக்கு மிகச் சிறந்த இடமாதலை உணர்த்தற்கு வயிரவியை, ``கன்னித் துறைமன்னி`` என்றார். இறையன்புடையோர் யாவரும் கயிலையை அணுகிக் காணலையும், குமரி தீர்த்தத்தில் (கடலில்) முழுகுதலையும் ஒருபெற்றியவாக மேற்கொள்ளல் இன்றும் நிகழ்வது. இதனால், ஒரு கருத்துப் பற்றிச் சிவனை, மேல், (1061, 62) ``தென்னன்`` எனக் குறித்த நாயனார், தேவியை இங்கு, ``கன்னித் துறை மன்னி`` என்றார். பின்னரும், (1088) ``இனிய தென்மூலை இருக்கும் குமரி`` என்பார். ``நல் ஆவடு தண்டுறை ஆவின் கிழத்தி`` (1105) எனவும் கூறுவார். பாயிரத்திலும், ``சிவன் ஆவடு தண்டுறை சீருடையாள்`` (17) என்றார். ``மன்னி`` என்பது பெயர். இதில் ஐயுருபு தொகுத்தலாயிற்று. கன்னித் துறையைப் பிறரெல்லாம் உருவகமாக்கித் தாம் தாம் வேண்டும் பொருளை உரைப்பர். `சத்தியது வடிவு ஒன்றாகாது பலவாதல் செயல் வேறுபாடு நோக்கியாதலின், அவற்றை அவ்வாறே கொள்க` என்பார், ``ஓத உலவாத கோலம் ஒன்றாகுமே`` என்றார். ஏகாரம் எதிர்மறை வினா. இதனால், வயிரவி சிவ சத்தியேயாதல் இங்கும் தெளிவிக்கப்பட்டது.
இதனால், வயிரவி வழிபாடு வீடுபேற்றினையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.

பொழிப்புரை :

`அழகிய கூந்தல், வளைந்த புருவம்` நீல நிறத்தை உடைய குவளை மலர்போலும் கண்கள்` களிப்பைத் தருகின்ற இனிய அமுதம் போன்ற ஆனந்தமே உருவான அழகிய வடிவம், இவைகளை உடைய வயிரவியே எப்பொருட்கும் மேலான சிவத்தை உயிர்கட்கு வெளிப்பட்டுத் தோன்றச் செய்தாள்.

குறிப்புரை :

`சத்தி வழியாக அன்றிச் சிவத்தை நேரே காணுதல் இயலாது` என்பது தோன்ற, நேரே சென்று காணுதலினின்றும் பிரித்த, `சுந்தரியே` என்னும் பிரிநிலை ஏகாரம், தொகுத்தலாயிற்று. அவ் ஏகாரத்தை இரட்டுற மொழிந்து தேற்றேகாரமாக்கி, `உலகப் பயனைத் தருகின்ற வயிரவியே மெய்ப் பயனையும் தருகின்றாள்` என்பது கொள்க. மெய்ப்பயன் கருதி வழிபடுவோர் அவளைச்சாந்த ரூபியாகக் கண்டு வழிபடுக என்பார், ``கோலக் குழலி`` என்பது முதலாக உடம் பொடு புணர்த்துக் கூறினார்.
இதனால், வயிரவியையே சாந்த ரூபியாகக் கண்டு வழி பட்டுப் பேரின்பத்தினைப் பெறுதல் கூடுவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

வெளிப்படு வித்து விளைவறி வித்துத்
தெளிப்படு வித்தென்றன் சிந்தையி னுள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படுவித்தென்னை உய்யக்கொண் டாளே.

பொழிப்புரை :

முன்னே சிவத்தை வெளிப்படுவித்துக் காணச் செய்து, பின் அக்காட்சியின் பயனாக முற்றறிவையும், முற்றறிவின் பய னாகத்தெளிவையும், தெளிவின், பயனாக இன்ப அனுபவத்தையும், அவ்வனுபவத்தின் பயனாக, சிவத்தைவிட்டு நீங்காது அதனுள்ளே அடங்கியிருத்தலையும் முறையே பெறச் செய்து என்னை உய்யக் கொண்டாள் வயிரவி.

குறிப்புரை :

இதனால் சத்தி மெய்ப்பயனைத் தரும் முறை, நிரல்படக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

கொண்டனள் கோலம் கோடி அனேகங்கள்
கண்டனள் எண்ணெண் கலையின்கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.

பொழிப்புரை :

வணங்குவாரது உச்சிமேல் நிற்பவளாகிய `வயிரவி` என்னும் நல்ல சத்தி, அளவிறந்த வடிவுகளைக் கொண்டாள், கொண்டு, அக இருளை நீக்குதற்கு `அறுபத்து நான்கு` எனப்படும் கலைத்துறைகள் அனைத்திலும் நூல்களை ஆக்கினாள். புற இருளைப் போக்குதற்கு வானத்தில் விளங்கும் ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று ஒளிகளையும் படைத்தாள்.

குறிப்புரை :

`உயிர்களின் பொருட்டு அவள் அளித்தன தாம் பல, என்றவாறு. `அதனால், அவளை மறாவது வழிபடுதல் உயிர்கட்குக் கடன், என்பது குறிப்பெச்சம். மாலை, மொழிமாலை. விண்டனள் - தோற்றுவித்தாள். தண்மை - தணிவு; வணக்கம். வணங்குவாரது தணிவு, அவரது தலைமேல் ஏற்றிச் சொல்லப்பட்டது.
இதனால், சத்தியது உதவியை உயிர்கள் மறக்கலாகாமை கூறப்பட்டது.
``அவளால் வந்த ஆக்கம் இவ் வாழ்க்கை யெல்லாம்`` 1
எனச் சிவஞானச்சித்தி கூறும்.

பண் :

பாடல் எண் : 29

தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நூக்கும் மனோன்மனி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

``பைய`` என்றது, `இயன்ற அளவு` என்றவாறு, அவளது பெருமை முழுவதையும் அறிந்து துதித்தலும், அப்பெருமை யளவிற்குத் தக வழிபடுதலும் ஒருவர்க்கும் கூடாமையின் ``பைய`` என்றார். ``மலையளவு சுவாமிக்குக் கடுகளவு கர்ப்பூரம்`` என்பது பழமொழி.
``ஏழை அடியார் அவர்கள் யாவைசொன
சொல்மகிழும் ஈசன்`` 2
என்பதில் ஞானசம்பந்தர். அடியார்களை, `ஏழை அடியார்`` என்றருளிச் செய்ததும் இக்கருத்துப் பற்றி,
``யானறி யளவையின் ஏத்தி ஆனாது
நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி வந்தனென்`` 3
என்றார் முருகாற்றுப்படையிலும், நூக்குதல் - போக்குதல். பவம் - பிறப்பு.
இதனால், சத்தியது பெருமையும், உயிர்களது சிறுமையும் கூறுமுகத்தால், உயிர்கள் அவளை வழிபடும் கடப்பாடுடையன வாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய சடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயென துள்ளத் தினிதிருந் தாளே.

பொழிப்புரை :

[இதன் பொருள் வெளிப்படை.]

குறிப்புரை :

வேய் - மூங்கில். விரை - நறுமணம். ஏய - பொருந்திய. குழல் - கூந்தல். `பிறையைச் சூடிய ஏந்திழை` என்க. பிறைசடையில் உள்ளது. சூலினி - சூலத்தை ஏந்தியவள். ஏய் உள்ளம் - தான் இருத் தற்குப் பொருந்திய உள்ளம்; அஃதாவது, அறிவும், அன்பும் நிரம்பிய உள்ளம். ``சுந்தரி`` என்பதை ``குழலி`` என்பதன் பின்னர்க் கூட்டி, அது காறும் ஒருவகைக் கோலமும், பின், ``சூலினி`` என்பது காறும் வேறொரு வகைக் கோலமும் ஆக இருவேறு வடிவங்களைக் கூறினமை கொள்க. முன்னது அமைதிக்கோலமும், பின்னது கடுமைக் கோலமுமாதல் அறிக. எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இது முதல் ஐந்து மந்திரங்களால் சத்தி தமக்கு அருள் புரிந்த வாறு கூறினார் என்க.

பண் :

பாடல் எண் : 31

இனியதென் மூலை இருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனள் சார்வு படுத்து
நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.

பொழிப்புரை :

தென்கோடியில் உள்ள இனிய கடற்கரையில் எழுந் தருளியிருக்கும் குமரியாகிய வயிரவி, தன்னோடு இணை ஒருவர் இல்லாத ஒப்பற்ற தலைவி; அதனால், அவள் ஒருத்தியே உலகத்திற்கு முதல்வி. அவள் என்னை உலகச் சார்பினின்றும் நீக்கித் தனியனாகச் செய்து, பின் தனது துணைமையில் இருக்கவைத்து, இன்பத்தை மிக உண்டாக்கி, இவ்வாறு என் உள்ளத்தில் நின்று பயனளித்தாள்.

குறிப்புரை :

மேல் (1082) ``கன்னித்துறை`` என்பதனை உருவக மாக்கி உரைத்தாரும், இங்கு, ``தென் மூலை`` என்றதற்கு அவ்வாறு உரைத்தலில் திட்பங் கொள்ளாது நெகிழ்ந்து, இப்பொருளையே கருதுவாராயினார். ``நனிபடுவித்து`` என்பதில் பகர மெய் விரித்தல். படுவித்தலுக்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

நாடிகள் மூன்றுள் நடுவெழு ஞாளத்துக்
கூடி யிருக்கும் குமரி குலக்கன்னி
பாடகச் சீறடி பைம்பொற் சிலம்பொலி
ஊடகம் மேவி உறங்குகின் றேனே.

பொழிப்புரை :

`இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்று நாடிகளுள் நடுவிலே ஓங்குகின்ற நாளம் போல்வதாகிய சுழுமுனை நாடியுள்ளே பொருந்தி நின்ற, இளையவளும், கன்னிகையும் ஆகிய சத்தியது பாடகம் அணிந்த சிறிய பாதத்திலே உள்ள பசிய பொன்னா லாகிய சிலம்பினது ஒலி அந்த நாடிக்குள்ளே ஒலித்துக் கொண்டிருக் கவும் அதனைக் கேட்கமாட்டாமல் உறங்குகின்றேன் என்றால், எனது அறியாமையை என்னென்பது.

குறிப்புரை :

``ஊடகம்`` என்பதை, `அகத்தூடு` என மாற்றிக் கொள்க. ``மேவி`` என்பது `மேவ` என்பதன் திரிபு. `மேவியும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `உறங்குகின்றாளே` என்பது பாடம் ஆகாமை. அடுத்த மந்திரத்தின் முதலடியால் விளங்கும். `உயிரின் உறக்கத்திற்குக் காரணம் குண்டலியின் உறக்கமே` என்பது மேல் பலவிடத்தும் கூறியவாற்றால் அறியக் கிடத்தலின், அதனை இங்கு உய்த்துணர்ந்து கொள்ள வைத்தார். எனவே, `யோக முயற்சியால் மூலாக்கினியை எழுப்பி, அதனால் குண்டலியைத் துயில் உணரச் செய்தவழியே அச்சிலம்பொலியைக் கேட்டல் கூடும்` என்பது போந்தது. அங்ஙனம் கேட்குமாறு நடு நாடியிற் பொருந்தியிருத்தலே சத்தியானவள் உயிருக்கு அளிக்கும் கருணையாதல் விளங்கும்.

பண் :

பாடல் எண் : 33

உறங்கு மளவில் மனோன்மனி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்
டுறங்கல்ஐ யாஎன் றுபாயஞ்செய் தாளே.

பொழிப்புரை :

மேற் கூறியவாறு யான் உறங்கிக் கொண்டு இருக்கும் பொழுது மனோன்மனியாகிய சத்தி வந்து, ஒலிக்கின்ற வளையணிந்த தனது கைகள் என் கழுத்திற் பொருந்தும்படிக் கட்டிக்கொண்டு, விளங் குகின்ற ஒளியை உடைய தம்பலத்தை என் வாயில் உமிழ்ந்து உடனே `யான் சிறிது விழித்தபொழுது, ஐயா உறங்கியே காலத்தைக் கழிக் காதே` என்று சொல்லி, உறக்கம் வாராதிருத்தற்கு வழியும் செய்தாள்.

குறிப்புரை :

`கழுத்தாரப் புல்லியது, உலக உணர்வை மாற்றி அருட் சத்தியாய்ப் பதிந்தமை` எனவும், `தம்பலத்தை வாயில் உமிழ்ந்தது, உணர்வின்கண் விழிப்பை உண்டாக்கியது` எனவும் `உபாயத்தைச் செய்தது யோக முயற்சியை உண்டாக்கியது` எனவும் ஒட்டணி வகையால் உணர்ந்துகொள்க.
``கறங்கு வளைக் கை`` என்றதும் விழிப்பைத் தரும் செயலை மேற்கொண்ட ஆற்றலையேயாம். `யோகத்திற் செலுத்தும் சத்தி நிபாத நிலையை இங்ஙனம் நயம்படக் கூறுதல் சித்தர்மரபு` என்பது இதனாற் பெறுதும். பெறவே, இம்மரபுணராது, வாம மார்க்கத்தார் இதற்குச் சிற்றின்பப் பொருளே கொண்டு, குழியை வழியாக மயங்கி வீழ்வர் என்பது விளங்குவதாம்.


பண் :

பாடல் எண் : 34

உபாயம் அளிக்கும் ஒருத்திஎன் உள்ளத்
தபாயம் அறக்கெடுத் தன்பு விளைத்துச்
சுவாவை விளக்கும் சுழியகத் துள்ளே
அவாவை யடக்கிவைத் தஞ்சல்என் றாளே.

பொழிப்புரை :

எல்லாவற்றுக்கும் வழியைத் தருகின்ற ஒப்பற்றவள் ஆகிய சத்தி எனது மனத்தில் உண்டாகின்ற தீங்குளையெல்லாம் அறவே போக்கி, அவ்விடத்தில் அன்புவிளையச் செய்து, நல்லாள் ஆகிய குண்டலியை விளங்கச் செய்கின்ற சுழுமுனை நாடியினுள்ளே எனது மனத்தை ஒடுங்கப் பண்ணி `இனி நீ எதற்கும் அஞ்சவேண்டா` என்று என் அச்சத்தை நீக்கியருளினாள்.

குறிப்புரை :

`சுபா` என்பது `சுவா` எனத் திரிந்தது. சுபா - சுபை; நல்லவள். துயிலுணர்ந்தாளாயின் எல்லா நலன்களையும் தருதல் பற்றிக் குண்டலியை `நல்லாள்` என்றார். அவாவுதலைச் செய்து அதனால் தீங்கு விளைக்கின்ற மனத்தை ``அவா`` என்றார், ஆகு பெயரால். இதன்கண் ஈரடி எதுகை வந்தது. இது வருதற்பொருட்டே `சுபா` என்பதை, ``சுவா`` எனத் திரித்து ஓதினார்.

பண் :

பாடல் எண் : 35

அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சம்என் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்
கின்சொல் லளிக்கும் இறைவிஎன் றாரே.

பொழிப்புரை :

`சத்தி தனது திருவடியையே தஞ்சமாகக் கருதிப் போற்றுபவர்க்கே அருள்புரியும் இறைவியாவாள்` என்று அறிந்தோர் சொல்லுவர்.

குறிப்புரை :

முதல் இரண்டு அடிகள் சத்தியின் இயல்புகளை விரித்தவாறு. ``அஞ்சொல் மொழி, செஞ்சொல் மொழி`` என்பவற்றை, ``இடைச்சொற் கிளவி, உரிச் சொற்கிளவி`` 1 என்றாற்போலக் கொள்க. சத்தி தவம் செய்தல், ஆட்டுவான் ஆடிக்காட்டுதல் போல்வதாம். செஞ்சொல் - என்றும் செவ்வே நிற்கின்ற (மாறுபடாத) சொல். மடப்பம் - இளமை; இது பெண்மையியல்பு. சீர் - அழகு. சேயிழை - நன்கமைந்த ஆபரணம். மடமொழி, சேயிழை என்பன அன்மொழித் தொகைகள். இன்சொல், அருளின் அடையாளம். `போற்றுவார்க்கே` என்னும் பிரிநிலை ஏகாரம், தொகுத்தலாயிற்று. போற்றுவார்க்கு அருளல் கடனாதலின், பிறர்க்கு அருளாமை கோட்டமன்றாம்.
``சலமிலன்; சங்கரன்; சார்ந்தவர்க்கலால் நலமிலன்`` 2
எனவும்,
``சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்
சார்ந்தாரைக் காத்தும் சலமிலனாய்`` 3
எனவும் போந்தவற்றையும் காண்க.
இதனால், `சத்தியைப் போற்றுகின்றவரே, அவளது அருளைப் பெறுதற்கு உரியர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
காரியல் கோதையள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரிஎன் உள்ளங் குலாவிநின் றாளே.

பொழிப்புரை :

சத்தியானவள், அரிய உயிர்களின் பக்குவங் களையே எப்பொழுதும் நோக்கி நிற்பவளாதலின், இயல்பிலே அவள் ஞானத்தைத் தருகின்ற சாந்த ரூபியாயினும், உயிர்களது அபக்குவ நிலைபற்றிப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் துன்பத்திற்கு ஏதுவான தொழில்களைச் செய்பவளாகின்றாள். எனினும், என் உள்ளத்தில் அவள் சாந்தரூபியாயே விளங்கு கின்றாள்.

குறிப்புரை :

``அருந்தவம்`` என்பது அதன் பயனாகிய ஞானத்தின் மேல் நின்றது. காரியல் - மேகம் போன்ற. கோதை, அதனை அணிந்த கூந்தலை உணர்த்திற்று. இது சாந்த வடிவத்தைக் குறித்தவாறு. காரணி - தோற்றத் திற்குக் காரணமாய் இருப்பவள்; படைப்பவள், ``நாரணி`` என்றது, `காப்பவள்` என்றவாறு, ஊர்தல் - உலாவுதல். `ஊர் - உடம்பு` என்பாரும் உளர். ``ஊரும் உயிரும் உலகும்`` என்றது தாப்பிசையாய் முன்னும் சென்று இயையும். கோரி - கோரம் உடையவள். கோரம் - கொடுமை.
இதனால், சத்தி உயிர்களின் பொருட்டு முத்தொழில் செய்தலைக் கூறுமுகத்தால், வயிரவி அச்சத்தியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

குலாவிய கோலக் குமரிஎன் னுள்ளம்
நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளே
கலாவி யிருந்த கலைத்தலை யாளே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு என் உள்ளத்திலே மகிழ்ச்சியோடு இருக்கின்ற அந்தச் சத்தி அவ்வாறு அளவற்ற காலங்கள் இருந்தும் நீங்குதல் இல்லாதவளாய், நான் பிராசாத யோகத்திலே உழன்று நின்ற பொழுது அதன் கலைகளில் முடிவானதற்கு இடமாகிய துவாத சாந்தத்தில் பொருந்தி நிற்பவளாயினாள்.

குறிப்புரை :

`இஃது அவளது கருணையிருந்தவாறு` - என்பது குறிப்பெச்சம். `உணர்ந்தவழி` என்பது ``உணர்ந்து`` எனத் திரிந்து நின்றது. பிராசாத கலையில் முடிவாயுள்ளது உன்மனை. தலை - முடிவில் உள்ளது. இதனால், அவளது பேரருள் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

கலைத்தலை நெற்றிஓர் கண்ணுடைக் கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி யிருக்கும்
சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் ஆங்கிருந் தாளே.

பொழிப்புரை :

மேற் கூறிய அச்சத்தி, உன்மனாகலையின் இடமாகிய அந்தத் துவாதசாந்தத்தில் தான் தனியே இராது சிவத்தோடு கூடியே விளங்குவாள். அவ்வாறு விளங்குதல், பிராசாத யோகிகட்கு அவ்யோகத்தால் புருவ நடுவில் அவ்வப்பொழுது புதிது புதிதாகத் தோன்றுகின்ற உணர்வைக் கண்டுகொண்டேயாம்.

குறிப்புரை :

``முலைத்தலை மங்கை`` என்பதை முதலில் வைத்து உரைக்க. `முலையையுடைய தலை மங்கை` என்க. `முலையை உடைய` என்னும் விதப்பு. அபர ஞான பரஞானங்களைத் தருபவ ளாதலைக் குறித்து நின்றது. தலை மங்கை - தலைவி. `அக்கலைத் தலைக்கண்` எனச் சுட்டு வருவித்தும், உருபு விரித்தும் ``இருக்கும்`` என்பதனோடு முடிக்க. ``கலைத் தலை, சிலைத் தலை`` என்பவற்றில் தலை, இடம். ``கண்`` இரண்டனுள், பின்னது, `உயிர்கட்குக் கண் போலச் சிறந்தவன்` எனப் பொருள் தந்து, சிவபிரானைக் குறித்தது. ``உள் முயங்கி`` என்றது. `இரண்டறக் கலந்து` என்றவாறு. `முயங்கியே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று. சிலை - வில். அஃது உவமையாகுபெயராய்ப் புருவத்தை உணர்த்திற்று. தெரிவு - அறிவு. அலைதல் - அசைதல். `அலைந்த` என்பது வலிந்துநின்றது கொம்பினள் - கொம்புபோல்பவள். `அலைத்த பூங்கொம்பினள்` என்பது, சுட்டுப் பெயரளவாய் நின்றது.
இதனால், சத்தி துவாதசாந்தத்தில் விளங்கும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்
பொருந்திரு நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.

பொழிப்புரை :

என் இருதயத்தில் இருப்பவளாகிய அந்தச் சத்தி, மேற்கூறியவாறு சிவனுடன் துவாதசாந்தத்தில் விளங்குதல், பிராசாத யோகத்தைப் பற்றி இருதயத்தினின்றும் எழுந்து கண்டத் தானத்தை அடைந்து, அதன்பின்னர் அங்கு நின்றும் துவாதசாந்தத்தில் சென்றே யாம். அந்நிலையும் பழமையானதேயன்றிப் புதியதன்று.

குறிப்புரை :

`என்னுள்ளம் மேவி இருந்தனளாகிய ஏந்திழை, பொருந்து இருநால் விரல் கடந்து புக்கனளாய்ப் புல்லியபின், தாணுவில் சேர்ந்து உடன்ஒன்றி, ஆதியின் நாளே அருந்தவம் எய்தினள்` என முடிவு செய்க. தவம் எய்துதல், ஞானத்தைக் கொடுத்தலில் குறிக்கோளாய் இருத்தல். `அந்நிலை யோகத்தால் புலனாவதன்றிப் புதிதாக உளதாவதன்று` என்பார், ``ஆதியின் நாளே` என்றார். இவ்விடத்து இன், வேண்டாவழிச் சாரியை.
இதனால், மேற்கூறிய நிலை பிராசாத யோகத்தானே அறியற் பாலதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

ஆதி அனாதி அகாரணி காரணி
சோதி அசோதி சுகபர சுந்தரி
மாது சாமாதி மனோன்மனி மங்கலி
ஓதிஎன் உள்ளத் துடன்இயைந் தாளே.

பொழிப்புரை :

என் உள்ளத்தில் இருந்துகொண்டு எனக்கு எல்லா வற்றையும் அறிவித்துக்கொண்டு என்னோடு உடனாய் இயைந்திருக் கின்ற சத்தி, ஆதியாதல் முதலிய பல பெருமைகளை உடையவள்.

குறிப்புரை :

ஆதி - தானே எல்லாவற்றிற்கும் முதல்வி. அனாதி - தனக்கு ஒரு முதற்பொருள் இல்லாதவள். காரணி - தானே எல்லா வற்றுக்கும் காரணமாய் இருப்பவள். அகாரணி - தனக்கு ஒரு காரணம் இல்லாதவள். சோதி - ஒளியாய் இருப்பவள். அசோதி - இருளாயும் இருப்பவள். சோதி, `அசோதி` என்பன முறையே அறிவையும், அறி யாமையையும் உணர்த்தி நின்றன. அறியாமையைச் செய்வது மலமே. எனினும், அதன் சத்தியைத் தூண்டி அதனைத் தொழிற்படச் செய்தல் பற்றிச் சத்தி, இருளாயும் இருக்கின்றாள். ``சுகபரம்`` என்பதை, `பரசுகம்` என முன்பின்னாக வைத்து, `மேலான இன்பம்` என உரைக்க. `மேலான இன்பத்தை (சிவானந்தத்தை)த் தரும் சுந்தரி` என்க. `சுந்தரி` என்பது இயற்பெயரளவாய் நின்றது. `சமாதியில் மனோன்மனி மாது` எனக்கூட்டி, `சமாதி நிலையில் மனோன்மனி என்னும் சத்தியாய் விளங்குபவள்` என்க. சமாதி, இங்கு மேற்கூறிய துவாதசாந்தத்தில் உணர்வை நிறுத்தி ஒன்றச்செய்தல். மங்கலி - என்றும் நன்மையே உடையவள்; `சிவை` என்றவாறு.
இதனால், ``கலைத்தலை இருக்கும்`` என மேற்கூறிய அவளது பெருமைகள் பலவும் விரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 41

இயைந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயன்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றுப் பிதற்றறுத் தாளே.

பொழிப்புரை :

சத்தி எனது உள்ளத்தில் பொருந்தியதனோடு அதனை விரும்பியும் இருக்கின்றாள். அவள், நான் அஞ்செழுத்தை ஓதி உணரும் பொழுது அவ்விடத்தைப் பற்றியிருக்கின்றாள். அதனை ஓதாத பொழுது நீங்கிவிடுகின்றாள். ஆயினும், பிற மந்திரங்களையும், பயனில்லாத சொற்களைப் பேசுதலையும் என்னிடத்தினின்றும் நீக்கிவிட்டாள்.

குறிப்புரை :

``நயந்தனள் மேவி`` என்பதனை `நயந்து மேவினள்` என மாற்றி யுரைக்க. அஞ்செழுத்தில் யகாரம் தொகுத்தலாயிற்று. பதம் - காலம். பற்றும் - பற்றுவாள். `பதத்தில் அங்கே பற்றும்` எனக் கூட்டுக. மற்று. வினை மாற்றின்கண் வந்தது. பிதற்றுதலுக்குச் செயப் படுபொருள் ஆற்றலால் வந்தது.
இதனால், `சத்தியது விளக்கம் உள்ளத்தில் இடையறாது நிற்றற்குத் திருவைந்தெழுத்தை மானதமாக ஓதுதலை ஒழியாது செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முத்தி யருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணும் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள வாமே.

பொழிப்புரை :

ஞானத்தைக் கொடுத்துப் பின் அது வழியாக முத்தியைத் தருகின்ற முதல்வியாகிய சத்தியது கயல்போலும் மூன்று கண்களும், அறைகூவி அருள்செய்கின்ற சிவந்த வாயும், முகத்திலே உள்ளதாகிய திருவருட் பார்வையும் அடியார்களுக்குத் கண்முன் னாகவே நிற்பனவாயிருக்க, அவைகளை எண்ணித் துதியாமல் அறிவில்லாதமக்கள் எதைஎதையோ பிதற்றிவிட்டுப் போய்விடுகின் றார்கள்; அவர்தம் அறியாமை இருந்தவாறு என்!

குறிப்புரை :

முயற்று, `முயற்சி` என நின்றது. `முயற்சி` என்பதே பொருள் - முயற்சி, இங்கு ஞானச் செய்திகள். இது மேற்கூறிய அஞ் செழுத்தோதலைச் சிறப்பாகக் குறித்தது. `அதுவழியாக முத்தியைத் தருபவள்` என்பதனால், முன்னே அம்முயற்சியைத் தருதல் பெறப் பட்டது. கயலாகிய உவமை இனம் பற்றி நெற்றிக் கண்ணிற்கும் சொல்லப்பட்டது.
இதனால், திருவைந்தெழுத்தை ஓதுபவர்க்குச் சத்தி நேரே எளிவந்தருளுதல் கூறப்பட்டது. இதனுள் உயிரெதுகையும், மூன்றாமெழுத் தெதுகையும் வந்தன.

பண் :

பாடல் எண் : 43

உள்ளத் திதயத்து நெஞ்சத் தொருமூன்றுள்
பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது
வள்ளற் றிருவின் வயிற்றினுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.

பொழிப்புரை :

பரசிவத்தினது சத்தியாகிய பராசத்தியது வயிற்றில் உள்ள சுத்த மாயையின் தோன்றி மறையும் ஒளியாகிய கருவினுள் நிற்பவளாகிய ஆதி சத்தி, பிள்ளையாய்ப் பிறந்து தவழும் இடமும் அகத்து உள்ளதாகவே சொல்லும்படி அங்குப் பிறந்தது, `சித்தம், புத்தி, மனம்` என்னும் மூன்றனிடத்துமாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி, இரண்டாம் அடியை முதலடியின் முன் வைத்து உரைக்க. சித்தம் முதலிய மூன்றனையும் நாயனார் உள்ளம் முதலிய மூன்றாக அருளினமை காண்க. ஆதி சத்தி உயிர்கட்குப் புலனாதல் வாக்கு அல்லது மொழி வடிவிலேயாதலானும், சுத்தமாயையின் காரியமாகிய வாக்குகள் அசுத்த மாயையின் காரியங்கள்போல மயக்கத்தைச் செய்யாது அறிவைத் தருவதேயாயினும், அவ்வறிவும் வினைக்கீடாக நிகழ்வதே யாகலானும் ஆதிசத்தியை ``மாமாயைக் கள்ள ஒளியின் கருத்தாகும் கன்னி`` என்றார். மாமாயைக்கு ஆதிசத்தி ஆதி வியாபகமேயாக. அனாதி வியாபகம் பராசத்தியே யாதல் பற்றி அதனைப் பராசத்தியின் வயிற்றில் உள்ள கருவாகக் கூறினார். ஆதி சத்தி பராசத்தியின் கூறாதலை, ``வள்ளல் திருவின் வயிற்றினுள் கருத்து`` என்பதனால் விளக்கினார். கருத்து - கருவினுள் இருப்பது. இருப்பது - இருப் பதாகிய பொருள். `வயிறு, கரு, கருவினுள் இருப்பது` என்பன உரு வகங்கள். தடம் - வழி; இங்கு இயங்கும் இடத்தைக் குறித்தது. வாக்கு வடிவில் பொருள்கள் தோன்றும் பொழுது மனத்தில் பொதுவாயும், புத்தியில் சிறப்பாயும், சித்தத்தில் பல்காலும் எண்ணி உணரும் உணர்வாயும் தோன்றுமாதலின், ஆதி சத்தியும் உயிர்கட்கு அவ்வாறே புலனாம் என்பார். `பிறந்தது உள்ளம் மூதலிய மூன்றிடத்திலும்` என்றார். ``பிறந்தது`` என்பது தொழிற்பெயர். ஆதிசத்தி தோன்றும் முறையை இங்ஙனம் விளக்கியது திருவைந்தெழுத்து உணர்வின் வழியே அவள் விளங்குதலை வலியுறுத்தற் பொருட்டு.
இதனால், மேலது இனிது விளங்க வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி
துன்னிஅங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குளர்
என்னேஇம் மாயை இருளது தானே.

பொழிப்புரை :

பராசக்தியின் வயிற்றினின்றும் பிறந்த ஆதி சத்தி யாகிய பெண் தனது கன்னித்தன்மை அழியாமலே ஒருவனுக்கு மனைவியாய்ப் பொருந்தி ஐவர்மக்களைப் பெற்றாள். அவர்கள்பால் நல்ல நூல்களைக் கேட்டுணர்ந்த அறிவரும் பலர் உளர். இவ்வியப்பு தான் என்னே!

குறிப்புரை :

`கன்னியும் அழிந்திலள்` எனச்சிறப்பும்மையை மாற்றி யுரைக்க கன்னித்தன்மை அழியாமையாவது, படைத்தலைக் கரணத்தால் செய்து திரிபு எய்தாது, சங்கற்ப மாத்திரையாற் செய்து, என்றும் ஒருபெற்றியளாய் இருத்தலாம். `காதலியாய்த் துன்னி` என ஆக்கம் வருவித்துக்கொள்க. துன்னப்பட்டவனாகிய ஒருவன் ஆதி சிவனாதல் வெளிப்படை. ஐவராவார். `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன் என்போர். இவர் யாவரும் சுத்த தத்துவத்தில் உள்ளோர். மொழி - நூல்; என்றது ஆகமங்களையும், அவற்றிற் சொல்லப்பட்ட மந்திரங்களையும். ``பன்னிய`` என்னும் பெயரெச்சம் ``பகவர்`` என்னும் கோடற்பொருட் பெயர் கொண்டது. ஆகமங் களைப் பிரணவர் முதலியோர் சதாசிவ மூர்த்தியிடத்துக் கேட்டமை முதல் தந்திரத்துள் `ஆகமச்சிறப்பு` என்னும் அதிகாரத்துள் விளக்கப் பட்டது. மந்திரத்தைச் செலுத்தி நிற்போர் மந்திரமகேசுரர். இவர்களும் மகேசுரரைச் சூழ்ந்திருப்பவர். ஆகவே, ``அங்கு`` என்றது சதாசிவ புவனத்தையும், மகேசுர புவனத்தையும் ஆயிற்று. அரிதற்கரிய பொருளாய் வியப்பைத் தருதல் பற்றியே, இதனை ``மாயை`` என்றும், ``இருள்`` என்றும் கூறினார்.
இதனால், ஆதிசத்தி தனது சங்கற்பத்தானே சதாசிவர் முதலிய முதல்வர்களைப் படைப்பவளாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

இருளது சத்தி வெளியதெம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வம்என் றெண்ணில்
அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

சிவம் வெளிப்படாது நிற்க நிகழும் செயல் களெல்லாம் ஆதிசக்தியுடையன. அவற்றின் பயனாகப் பின்னர்ச் சிவம் வெளிப்படுவதாகும். அவ்வெளிப்பாட்டினைப் பெற்ற புண்ணியர்கள் இம்மையிலும் பொருளாகத் தெளிவது சிவானந்தம் ஒன்றையே. அத்தகைய தெளிவைப் பெற்ற உள்ளமே சிவனுக்கு இருப்பிடம் என்று அறிந்தால், சிவன் முன்னின்று அருள்செய்வான்.

குறிப்புரை :

`அது` என்பன பலவும் பகுதிப் பொருள் விகுதி. ``வெளியது`` என்பதில், `வெளியதாம்` என ஆக்கம் வருவித்துக் கொள்க. `புண்ணியர் பொருளது போகத்துள் இன்பம்` எனக் கூட்டுக. போகம் - இம்மை நுகர்ச்சி. தெய்வத்தின் இடத்தை, ``தெய்வம்`` எனப் பாற்படுத்து ஓதினார்.
இதனால், மேற் கூறிய படைத்தல் முதலிய செயல்களின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 46

ஆதி அனாதியும் ஆய பராசத்தி
பாதி பராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மனி மங்கலி
ஓதுமென் உள்ளத் துடன்முகிழ்த் தாளே.

பொழிப்புரை :

உலகத்தைத் தோற்றுவிக்க நினைப்பவளும், அத்தோற்றத்திற்கு முன்னே உள்ளவளும், சிவத்தில் செம்பாதியாய் நிற்பவளும் ஆகிய பராசத்தி, எல்லாப்பொருளிலும் நிறைந்து, அவற்றிற்கு அப்பாலும் உள்ளவளாய்ப் பின்பு சமாதியில் மேற் கூறிய வாறு மனோன்மனியாயும், நன்மையையே உடையவளாயும் உள்ள அவளைத் துதிக்கின்ற எனது உள்ளத்தில் விரையத் தோன்றினாள்.

குறிப்புரை :

``பராபரை`` என்பது எல்லாப் பொருளிலும் உள்ளன வளாதலைக் குறித்தது. இதுமுதலாக, ``மங்கலி`` என்பது காறும் வருவனவற்றில் `ஆய்` என்பது வருவித்துக்கொள்க.
இதனால், சத்தி, `பரை, ஆதி, அருள்வல்லி` என்னும் மூன்று நிலைகளை உடையவளாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 47

ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதிஇல் வேதமே யாம்என் றறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள்
ஆதிஎன் றோதினள் ஆவின் கிழத்தியே.

பொழிப்புரை :

`பிறப்புக்கள் பலவும், பலவேறு வகைப்பட்ட ஏனைப் பொருள்களும், அவற்றிற்கு முதலாகிய தத்துவங் களுமாய் ஆதி சத்தி ஒருத்தியே நிற்பாள்` என்று ஆவுருவாய் நிற்கும் பெரு மாட்டி எனக்கு அறிவித்தாள். எல்லா நூல்களிலும் மேம்பட்டதும், தனக்கு ஒரு முதல்நூல் இன்றித் தானே முதல் நூலாய் நிற்பதுமாகிய வேதம் சொல்லிய முறையும் இதுவே என்பதைப் பலர் அறிந்திலர்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி, `வேதம் ஓதிய வண்ணமேயாம் என்று அறிகிலர்` என முடிக்க. வேதப் பொருளின் சிறப்பை உணர்தற்கு, ``கலையின் உயர்கலை, ஆதி இல்` என்பவற்றை விதந்து ஓதினார். `சாதி, பிறப்பு` என்பன ஒருபொருட் சொற்கள். இவை இங்கு உடம்பைக் குறித்தன. ``தத்துவம்`` என்பதில் எண்ணும்மை தொகுத்தலாயிற்று. ``ஆவின் கிழத்தி`` என்பதில் இன், அல்வழிக்கண் வந்த சாரியை. நாயனார் எழுந்தருளியிருந்த ஆவடுதுறையில் அம்மை ஆவுருவாய் வந்தமை வெளிப்படை. இத்தொடர்க்கு இதுவே பொருளாதல், வருகின்ற மந்திரத்தாலும் அறியப்படும்.
இதனால், `சத்தி மேற்கூறிய மூன்று நிலைகளில் `ஆதி` என்னும் நிலை ஒன்றில் நின்றே அனைத்துக் காரியங்களையும் செய்வள் என்பதே வேதம் முடிபாதலை அறிதல் திருவருளானே கூடும்` என்பது கூறப்பட்டது. ஆகவே, பல தெய்வக் கொள்கை. பக்குவம் இல்லாதாரை நோக்கி அமைந்தன என்பதாம்.

பண் :

பாடல் எண் : 48

ஆவின் கிழத்தி நல் ஆவடு தண்டுறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடும்
தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை
மேவுங் கிழத்தி வினைகடிந் தாளே.

பொழிப்புரை :

ஆவுருவாய் நின்ற பெருமாட்டி திருவாவடு துறையில் பக்குவர்களுக்கு உண்மையை யுணர்த்துபவளும், தனது நன்மைகளை உயர்ந்தோர் பலரும் எடுத்துக் கூறித் துதிக்கின்ற கடவுள் தன்மை உடையவளும், முத்திச் செல்வத்தை உயிர்கள் அடைதற்கு ஏதுவான சிவசத்தியாய் நிற்பவளுமாய் இருந்து, உயிர்களின் சஞ்சித வினையை நீக்குகின்றாள்.

குறிப்புரை :

`அவளை யடைந்த எனக்கு வினை நீங்காது நிற்குமோ` என்பது கருத்து. தேவின் கிழத்தி - தேவினையுடைய கிழத்தி. கிழத்தி - எப்பொருளையும் தன்னுடையனவாக உடைய தலைவி. `முத்தியை அளிப்பவன் சிவன் ஒருவனேயாதலின், அவனது சத்தியாய் நின்று முத்தியையளிப்பாள்` என்றவாறு `சிவமங்கையாய்` என ஆக்கம் வருவிக்க.
இதனால், தமக்கு உண்மையை உணர்த்திய சத்தியது பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 49

வினைகடிந் தார்உள்ளத் துள்ளொளி மேவித்
தனையடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
எனையடி மைக்கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியு மாமே.

பொழிப்புரை :

என்னை அடிமையாகக் கொண்ட அந்தத் தலைவி, வினை நீங்கியவரது உள்ளத்தில் ஞானமாய் நின்று, தன்னைப் புகலிட மாக அடைந்தவர்க்கெல்லாம் மெய்ப்பொருளாய் (சத்தாகி) நிற்பாள். இனி அவள், சிவனிடத்தில் அவனைத் தலைப்பட்டுணரும் பொழுது அவனோடு இயற்கையாயுள்ள எண் குணங்களாயும் நிற்பாள்.

குறிப்புரை :

`உள்ளொளியாய்` என ஆக்கம் வருவிக்க. ``ஈசன் கண்`` என்றதில் ஏழாம் உருபு வகையுளியாய் அடுத்த அடிமுதற்கண் நின்றது. இவ்வாறன்றி, `ஈசன் அவளுக்குக் கணவன்` என்பாரும் உளர். அனாதியானவற்றை ``அனாதி`` என்றார். ``காண`` என்னும் செயவெனெச்சம், தனக்குரிய நிகழ்காலத்தில் வந்தது. சிவனது எண்குணங்களில் `வரம்பில் இன்பம்` எனப்படும் நிரதிசயானந்தம் இங்குச் சிறப்பாகக் கருதப்பட்டது.
இதனால், தமக்கு அருள்புரிந்த சத்தி சத்துச் சித்து ஆனந்தமாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

ஆதி அனாதி அகாரணி காரணி
வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய் நின்ற
சோதி தனிச்சுடர்ச் சொரூபம தாய்நிற்கும்
பாதி பராபரை பன்னிரண் டாதியே.

பொழிப்புரை :

சத்தியே வேதியர்கள் பொருட்டு வேதத்தை நுட்பமாக ஓதியும், உணர்த்தியும் நின்றாள். ஒளி வடிவினனாகிய சிவனுக்கு அவ்வுருவமும் ஆவாள். பன்னிரு கலையை உடைய பிரணவ ரூபியாகிய குண்டலியாயும் விளங்குவாள்.

குறிப்புரை :

முதலடியில் உள்ளவை, பாதி, பராபரை இவற்றிற்குப் பொருள் மேலே கூறப்பட்டது. ஆய்தல் - நுணுகி நிற்றல். வேதியர், `சொல் நயம், ஓசை நயம்` என்பவற்றைச் சிறப்பாக விரும்புபவர் ஆகலின், அவர்கட்கு வேதத்தை அவ்வாறெல்லாம் அருளிச்செய்து, அடியார் கட்கு அருட்டிருமேனியாய் நின்றாள் என்க.
இதனால், சத்தி அவரவர்க்கு ஏற்ப அருள்புரிதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அளந்தேன் அகலிடத் தந்தமுன் ஈறும்
அளந்தேன் அகலிடத் தாதிப் பிரானை
அளந்தேன் அகலிடத் தாணொடு பெண்ணும்
அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே.

பொழிப்புரை :

சத்தியது அருட் பெருமையை நான் சிந்தித்து தெளிந்தேன். அதனானே, உலகத்திற்கு ஆதியும், அந்தமும் ஆன பொருளினையும், உலகத்தார் பலபடக் கூறுகின்ற முதற்கடவுளையும், உலகில் உள்ள உயிர்களின் இயல்பையும் என் அறிவின்கண் அகப்படும்படி நன்கு உணர்ந்தேன்.

குறிப்புரை :

என்றது, `சத்தியை விட்டு வேறாய் யாதொரு பொருளும் இல்லை` என்றவாறு. ஈற்றடியை முதலில் வைத்து, அதன் பின், `அதனானே` என்பது வருவித்துரைக்க. `முன்னும்` என்னும் எண்ணும்மை தொகுத்தலாயிற்று. அவன் - சிவன். அருள் - சத்தி; என்றது அவளது இயல்பை. ``அந்த முன்`` என்பதில் சுட்டு, `அந்தத்தை உணர்தலினும் ஆதியை உணர்தல் அரிது` என்பதை விளக்கி நின்றது.
இதனால், சத்தியை முற்ற உணர்தலே முற்றறிவாதல் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே.

பொழிப்புரை :

பல ஊழிகளையும் ஆக்குபவளாகிய சத்தியை உணர்தலே `பேரறிவு` எனப்படும் முற்றுணர்வாகும். இதனை உணராதவர் சிவனையும் உணராதவரே. தன்னை அடைகின்ற புண்ணியம் உடையவர்களைத் தனது அருள்வடிவாகச் செய்கின்ற சத்தி, அங்ஙனம் பலரைப் புண்ணியராகச் செய்தற்கு ஆக்கியுள்ளவழி பிராணனைக் கும்பிப்பதே.

குறிப்புரை :

``உணர்ந்திலர் ஈசனை`` என்றது, சிவனைத் தனித்து நிற்பவனாகக் கருதுவோரை நோக்கி யாதலின் அதனை, ``பூரணம்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. ``கொண்டு`` என்பதை, ``கொள்ள`` எனத்திரிக்க. ``உணர்ந்திலர் ஈசனை, ஊழி செய் சத்திபுணர்ந்தது பூரணம்`` என்றது, மேலதனை வலியுறுத்தியவாறு.
இதனால், சத்தியைப் பெறுதற்குரிய வழி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கும்பக் களிறைந்தும் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வள்ளலும்
இன்பக் கலவி இனிதுறை தையலும்
இன்பக் கலவியுள் இன்பமுற் றாரே.

பொழிப்புரை :

மத்தகத்தை யுடைய களிற்றியானைகளாகிய ஐந்து புலன்களும், அவற்றை மனமாகிய கோலால் செலுத்துகின்ற பாகனாகிய உயிரும், அவ்யானைகட்கும், பாகனுக்கும் தலைவனும், அரசனாகிய சிவனும், அச்சிவனோடு இன்பக் கலவி செய்து இனிதே உறையும் அரசியாகிய சத்தியும் இனிதாகிய கூட்டத்தில் இன்ப முற்றிருக்கின்றனர்.

குறிப்புரை :

என்று, `மாயா காரியமாகிய கருவி கரணங்களுள், அவற்றைக் கொண்டு செயலில் ஈடுபடுகின்ற ஆன்மாவும், சிவனும், சத்தியும் ஒருங்குகூடி நிற்றலாலே உலகியல் நடைபெறுகின்றது` என்ற வாறு. இங்ஙனங் கூறினும், சத்தியது இன்றியமையாமையே இங்குக் கருதப்பட்டது என்க. ஐம்புலன்களே உலகியலாம். ஐம்புல அவா வையே `யானை` என்றல் மரபாயினும், அவ் அவாவினோடு காரண காரியத் தொடர்ச்சிகளை யுடையனவாதல் பற்றி இங்கு அப்புலன் களையே ``களிறு`` என்றார். வம்பு - வாசனை. அஃது அதனையுடைய மாலையை உணர்த்திற்று. இன்பக் கலவி`` இரண்டில் முன்னது காமக் கூட்டம் ; பின்னது இனிய நட்பு, நட்டாரை, ``கலந்தார்`` என்றல் வழக்காதைல,
``கலந்தாரைக் கைவிடு தல் கானக நாட,
விலங்கிற்கும் விள்ள லரிது`` (நாலடி - 76.)
என்பது முதலியவற்றால் அறிக. ஈற்றடியை, `அன்பிற் கலவியுளா யொழிந்தாரே` என ஓதுதல் பாடமாகாமை, அந்தாதிக்கு ஒவ்வாமை யான் அறிக. இதனுள் இனவெதுகை வந்தது.
இதனால், மெய்ந்நெறியே யன்றி உலகியலும் சத்தியின்றி அமையாமை கூறப்பட்டது. இந்நிலையில் சத்தி, `திரோதாயி` எனப் படுவாள் என்பது பலவிடத்தும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இன்பக் கலவியில் இட்டெழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம் எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பராசத்தி என்னம்மை தானே.

பொழிப்புரை :

எங்கள் தந்தையாகிய சிவன் ஆணும், பெண்ணு மாய உயிர்களைக் காமக் கூட்டத்தில் செலுத்தி, அதுகாரணமாக எழுகின்ற அன்பினையே வாயிலாகக்கொண்டு அவ்வுயிர்களின் உள்ளத்தில் புகுந்து நலம்செய்யும் தன்மையை உடையவன். என் தாயாகிய சத்தி, உயிர்கள் துன்ப மயமாகிய கருப்பைக் குழம்பில் அகப் பட்டுத் துன்புறுகின்ற அவ்வுடம்பில் தானே அவற்றின் சுழுமுனை நாடியிற் பொருந்தி நலம் புரிகின்றவளாவள்.

குறிப்புரை :

``பாசம்`` என்றது, இங்கு உடம்பினை, என்பு முதுகந் தண்டு. அஃது அதன்கண் உள்ள சுழுமுனை நாடியைக் குறித்தது. அப்பனுக்குக் கூறிய புகல் வன்மை, அம்மைக்கும் ``என்பில்`` என்பதன்பின் வந்து இயைந்தது.
இதனால், சத்தி பெத்த நிலையிலும் முதற்றொட்டு உயிர் களைப் புரந்து வருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

என் அம்மை என் அப்பன் என்னும் செருக்கற்று
உன் அம்மை ஊழித் தலைவன் அங்குளன்
மன் அம்மை யாகி மருவி உரைசெய்யும்
பின் அம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.

பொழிப்புரை :

உடல்வழிப்பட்டு, `என் தாய், என் தந்தை` எனக் கூறி உலகியலில் மயங்குகின்ற மயக்கத்தை விடுத்து நினைத்தவழி, உண்மைத் தாயாய் ஊழிக் காலத்தும் அழியாத உயிர்த் தலைவன் அவ் விடத்தே உளனாவன். இனி, `அத் தலைவனாவான் யாவன்` எனின், முதலிலே திரோதான சத்தியாய்ப் பொருந்தி, உண்மையை மறைத்து நின்று, பின் அருட் சத்தியாகிய உண்மையை விளக்குகின்ற சிவனேயாம்.

குறிப்புரை :

உம்மை, சிறப்பு. உரை செய்தல் - உபதேசித்தல், உண்மை ஞானத்தை விளக்குதல். ``உரை செய்யும்`` எனவும், ``பின்`` எனவும் பின்னர் வருகின்றமையால் முன்னர் அவற்றின் மறுதலைகள் கொள்ளப் பட்டன. `பின் உரைசெய்யும் அம்மையாய் நின்ற நந்தி` என இயைக்க. ``பேர் நந்தி`` என்பது அடையடுத்த சொல்லாகுபெயர். சிவனே சத்தியாதலன்றி வேறின்மை இங்குத் தோன்றும்படி இவ்வாறு ஓதினார்.
இதனால், திரோதான சத்தி அருட் சத்திகளும், ஆதி சிவன், அநாதிசிவன் இவர்களுமே உலகிற்கு உண்மைத் தாயும் தந்தையும் ஆதல் கூறப்பட்டது. ``அம்மையப்பரே உலகுக்கம்மையப்பர்`` என்பது திருக்களிற்றுப்படியார்.

பண் :

பாடல் எண் : 6

தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மேல் இருப்ப தொருநூறு தானுள
பூமேல் உறைகின்ற போதகி வந்தனள்
நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே.

பொழிப்புரை :

காரணக் கடவுளர்களது வரிசையில் முதற்கண் பிருதிவி அண்டத்தின்மேல் இருக்கின்ற பிரமன் அவ்வாறிருப்பது நூற்றிதழ்த் தாமரை மலரின் மேலேயாம். அவனுக்குத் துணைவியாய் வெண்டாமரைமேல் வாணி அமர்ந்திருக்கின்றாள். இவையெல்லாம் வாகீசுவரியாய் நிற்கின்ற திரோதான சத்தியது ஆணையாலேயாம்.

குறிப்புரை :

தார் - மாலை; அது வரிசையைக் குறித்தது. ``உள`` என்னும் வினைக்குறிப்புப் பெயர், உண்மைக்கு இடமாய மலரினைக் குறித்தது. ``தான்`` என்பது பன்மை யொருமை மயக்கம். ``நூறு`` என்பது மலரின் இதழாதல் விளங்குதற்கு முதற்கண், ``தண்மலர் நான் முகன்`` என உடம்பொடு புணர்த்து ஓதினார். ஈற்றடியின் முதலில், `எல்லாம்` என்னும் எழுவாய் வருவிக்க. இதனுள் ஆசெதுகை வந்தது.
இதனால், படைப்புத் தொழிலும் திரோதான சத்தியதாதல் கூறப்பட்டது. பொதுமக்களாய் உள்ளவர், உலகத்தைப் படைக்கும் தொழில் ஒன்றையே இறைவனது அதிசயத் தொழிலாக எண்ணுவர். ஆதலின், அஃதொன்றனையே இங்குச் சிறந்தெடுத்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 7

ஆணைய மாய்வருந் தாதுள் இருந்தவர்
மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை அறிந்தபின்
தாணைய மாய தனாதனன் தானே.

பொழிப்புரை :

திரோதான சத்தியின் வசமாய் வருந்தாது பற்றற்றுத் திருவருளில் இருப்பவர். அதன் மேலும், எப்பொழுதும் பெரிய ஐயத்தையே கொண்டு அலைவதாகிய மனத்தை அவ்வாறு அலையாமல் ஒருவழிப்படுத்தி எல்லாம் அற்ற இடத்தில் விளங்குவ தாகிய பரம் பொருளை உணர்வார்களாயின், அப்பொருளாகிய சிவன் அப்பொழுது தனது அருட்சத்தியாகிய இயற்கை ஆசனத்தில் விளங்கி நின்று அருள் புரிவான்.

குறிப்புரை :

ஆணை, திரோதானசத்தி, `அகமாய்` என்பது இடைக் குறைந்து நின்றது. திரோதான சத்தியின் வசமாய் நிற்றலாவது வினைப் பயனை நுகர்வதிலும், ஈட்டுவதிலும் முனைந்து நிற்றல், அதனால் வருவது அல்லலே யாதலாலும், அதனின் நீங்கினார்க்கு அருளே தாரகம் ஆதலாலும் ``வருந்தாது உள் இருந்தார்`` என்றார். ``மாண் ஐயம்`` என்பதில் மாண்பு, பெரிது. ``பாழ் நயம், தாள் நயம்`` என்ப வற்றில், நயம் `நையம்` எனப் போலியாயிற்று. `பாணயம், தாணயம்` என்பனவும் பாடம். தத்துவம் அனைத்தும் கடந்த இடத்தை, ``பாழ்`` என்றார். அவ்விடத்துள்ள நயம், இன்பம். பின் வந்த நயம் விருப்பம் `தாள் ஆய நய ஆதனம்` என மாற்றிக் கொள்க.
இதனால், படைப்பு முதலியவற்றைச் செய்யும் திரோதான சத்தி செயற்கையேயாக, அருட்சத்தியே இயற்கையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தானே எழுந்தஇத் தத்துவ நாயகி
வானேர் எழுந்து மதியை விளக்கினள்
தேனேர் எழுகின்ற தீபத் தொளியுடன்
மானே நடமுடை மன்றறி யீரே.

பொழிப்புரை :

உயிர்களின் முயற்சியாலன்றித்தானே விளங்கி நின்றவளாகிய அருட்சத்தி, இன்ப மழையைப் பொழிகின்ற மேகமாய் நின்று, ஞானத்தை விளங்கச்செய்தாள். இனி, இனிமையைத் தருவ தாகிய தேன்போல விளங்கிய அந்த ஞான ஒளியுடனே கூத்தப் பெருமான் செய்கின்ற ஆனந்த நடனத்தைக் கண்டு இன்புற வேண்டுவதுதான் உங்கட்குக் கடமை.

குறிப்புரை :

தத்துவம் - மெய்ப் பொருள். `போல` என்பது `போல்` என வருதல்போல, `நேரே` என்பது இரண்டிடத்தும், `நேர்` என வந்தது. ``மானே`` என்னும் பிரிநிலை ஏகாரம் `ஞான நடம் புரிகின்ற பெருமான்` என்பது உணர்த்தி நின்றது. ``நடம் உடை மன்று`` என்பதை, `மன்று உடை நடம்` என மாற்றிக்கொள்க. இஃது அருள் பெற்றுநின்ற ஞானியரை நோக்கிக் கூறியவாறாக அருளிச் செய்யப் பட்டது.
இதனால், அருட் சத்தி பக்குவ நிலையில்தானே தோன்று தலும், அத் தோற்றத்தின் பயன் முறையே அறிவும், ஆனந்தமும் ஆதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்
தறிவான மங்கை அருளது சேரின்
பிறியா அறிவறி வாருளம் பேணும்
நெறியாய சித்தம் நினைந்திருந் தாளே.

பொழிப்புரை :

அருள்வழி நிற்கும் அறிவேயன்றி, மாயா கருவிகளின் வழி நிற்கும் அறிவும்தான் ஐம்புலன்களை நுகர்கின்ற பொழுது அறிவே வடிவான அருட் சத்தியோடு கூடியிருக்கப் பெறு மாயின், உயிர்க்குயிராய் உள்ள சிவத்தையே நினைக்கின்றவருடைய உள்ளத்தையே விரும்பியிருக்கும் தனது முறைமையை அவர்கள் இடத்தும் அருட்சத்தி கொண்டிருப்பாள்.

குறிப்புரை :

அஃதாவது, `அவர்கள் உள்ளத்திலும் விரும்பியிருந்து, அவர்கள் செயலெல்லாம் தன் செயலாகச் செய்வள்` என்பதாம். `மாயையேயான அறிவு` எனற்பாலதனை, ``அறிவான மாயை`` என ஓதினார். உம்மை, இறந்தது தழுவிய எச்சம். கூட்டம் - கூடி நுகர்தல். ``கூட்டத்துச் சேரின்` என இயையும். ``சித்தம்`` என்பது அதன்கண் கொள்ளப்படும் பொருளை உணர்த்திற்று. ``சேரின்`` என்பதன்பின், `அவள்` என்பது வருவிக்க.
இதனால், அருட்சத்தி ஞானிகட்கு உலகியலால் பழுதுண்து ஆகாதவாறு காத்தல் கூறப்பட்டது. இந்நிலையே, ``பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம்`` 1 நிலை என்க.

பண் :

பாடல் எண் : 10

இரவும் பகலும் இலாத இடத்தே
குரவஞ்செய் கின்ற குழலியை நாடி
அரவஞ்செய் யாமல் அவளுடன் தூங்கப்
பருவஞ்செய் யாததோர் பாலனும் ஆமே.

பொழிப்புரை :

`இரவு, பகல்` என்னும் வேறுபாடுகள் இல்லாத ஓர் அதிசய இடத்திலே சென்று அங்கே உள்ளவளாகிய அருட் சத்தி யையே நினைந்து, பிறிதொன்றும் செய்யாமல் அவளது அருளுடனே கூடித் தன்னை மறந்திருப்பவன், என்றும் இளையவனாய் இருக்கும் அவள்தன் மகனாய் விளங்குவான்.

குறிப்புரை :

நினைப்பும் மறப்பும் ஆக மாறிமாறி நிகழும் மாயா உணர்வுகளை, `இரவு, பகல்` எனக் குறித்தல் மரபு. அவை அற்ற இடம் என்றும் ஒரு பெற்றியாய அருளுணர்வு. மகளிரது கூந்தலில் குராமலர் முடிக்கப்படுதலை ஒரு சிறப்பாகக் கூறும் இலக்கிய மரபு பற்றி,`` குரவம் செய்கின்ற குழலி`` என்றார். அரவம் செய்யாமை, மௌனமாய் இருத்தல்; என்றது செயலற்றிருத்தலை, பருவம் செய்தல், `காளை, முதியன்` என்னும் நிலைகளை அடைதல், `அவை இல்லாமை` என்றது, என்றும் ஒரு பெற்றியனாய் இருத்தல். எனவே, உலகியலால் வேறுபட்டு வருந்தாமை பெறப்பட்டது.
இதனால், அருட் சத்தியால் பாதுகாக்கப்பட்டவர்களது பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

பாலனு மாகும் பராசத்தி தன்னொடு
மேலணு காவிந்து நாதங்கள் விட்டிட
மூலம தாம்எனும் முத்திக்கு நேர்படச்
சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.

பொழிப்புரை :

`முத்திக்கு மூலம்` என்றும், எல்லாவற்றிற்கும் மேலான பொருள்` என்றும் சொல்லப்படுகின்ற அருட்சத்தி, சிவ புண்ணிய மிகுதியால் தனக்குக் கிடைக்க அவளோடு கூடி நின்றவன். அதன் பயனாக மாயா காரியங்கள் பலவும் தன்னை அணுகமாட்டாது நீங்க, இதுகாறும் மாயையின் மகனாய் நின்ற நிலைநீங்கி, அவ்வருட் சத்தியின் மகனாகின்ற பேற்றைப் பெற்று விளங்குவான்.

குறிப்புரை :

உம்மைகள், சிறப்பு. ``பராசத்தி`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது, ``நேர்பட`` என்பதை ஈற்றடியின் பின் வைத்து, ``முத்திக்கு மூலமதாம் எனும் ... ... தற்பரத்தாள் நேர்பட, பராசத்தி தன்னொடு கூடி மேலணுகா ... ... விட்டிடப் பாலனும் ஆகும்`` எனக் கூட்டி உரைக்க.
இதனால், அருட் சத்தியைச் சார்ந்தவழி மாயை அணுக மாட்டாமை கூறி, அவளை அடைந்தவர் துன்புறாதிருத்தற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

நின்ற பராசத்தி நீள்பரன் றன்னொடு
நின்றறி ஞானமும் இச்சையு மாய்நிற்கும்
நன்றறி யுங்கிரி யாசத்தி நண்ணவே
மன்றன் அவற்றுள் மருவிநின் றானே.

பொழிப்புரை :

`முத்திக்கு மூலமாய் உயிர்களிடத்தில் நிற்பாள்`` என மேற்கூறப்பட்ட அந்த அருட் சத்தியே முன்பு, உயிர்களை உய் விக்க விரும்பும் சிவனுடனே அந்த விருப்ப ஆற்றலாயும், பின், உயிர் களை உய்விக்கும் வழிகளை அறிகின்ற அறிவாற்றலாயும் நிற்பாள். (அப்பொழுதெல்லாம் சிவன் விரும்பியும், அறிந்து நிற்பதன்றிச் செயலில் ஈடுபடுதல் இல்லை.) பின்பு, அவள் நல்லவளாக அறியப் படுகின்ற கிரியா சத்தியாய் நின்ற பொழுதே, சிவன் அம் மூன்று சத்திக ளோடும் கூடிநின்று எல்லாச் செயலையும் செய்கின்றவனாவான்.

குறிப்புரை :

நீள் பரன் - தன்னிலையினின்றும் உயிர்களை உய் விக்கும் நிலைக்குச் செல்லும் சிவன். இங்ஙனம் செல்லும் நிலையே `ஆதி சிவன்` என்னும் நிலையாகும். எனவே, இந் நிலையில் அவனது சத்தியும் `ஆதி சத்தி` எனப்படுவாள் என்பது விளங்கும். `திரோதான சத்தி, திரோதானகரி, திரோதாயி` என்னும் பெயர்களால் குறிக்கப் படுபவளும் இந்த ஆதி சத்தியே. இவளே, `இச்சை, ஞானம், கிரியை` என முதற்கண் மூன்றாய் நின்று, பின், பற்பல காரணங்கள் பற்றிப் பல்வேறு வகையாய், அளவிறந்து நிற்பாள். ஆதிக்கு முன் உள்ள நிலை அநாதி. அந்நிலையில் சிவனும், சத்தியும் முறையே `பரசிவன்` என்றும், `பராசத்தி` என்றும் சொல்லப்படுவர்.
மன்றன் - மன்றில் (சபையில்) நிற்பவன் என்றது. `ஐந் தொழில் செய்து நிற்பவன்` என்றதாம். செயலே உயிர்களால் அறியப் படுதலின், அதனையே ``நன்றறி கிரியா சத்தி`` என்றார். `நன்றாக, கிரியா சத்தியாய், மன்றனாய்` என்னும் ஆக்கச் சொற்கள் தொகுத் தலாயின. ``மன்றனாய் அவற்றுள் மருவிடும்`` என்றாராயினும், `அவற்றுள் மருவி மன்றனாயிடும்` என்பதே கருத்தாதல் அறிக.
இதனால், அருட்சத்தியே முதற்கண் ஆதிசத்தியாய் இறைவனது செயல்கள் எல்லாவற்றிற்கும் நீங்காத் துணையாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மருவொத்த மங்கையும் தானும் உடனே
உருவொத்து நின்றமை ஒன்றும் உணரார்
கருவொத்து நின்று கலக்கின்ற போது
திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.

பொழிப்புரை :

சத்தியும் சிவனும் மலரும், மணமும் போலக் குண குணித்தன்மையால் இயைந்து, பொருள் ஒன்றேயாய் நிற்கும் உண்மையைச் சிலர் சிறிதும் உணர்வதில்லை. (அதனால், இரு வரையும் வேறு வேறுள்ளவர்களாகக் கருதி, அவர்களிடையே தார தம்மியம் கற்பித்து வாதிடுவர் என்றவாறு) சிவசத்திகள் பற்றிய இவ் வுண்மையை ஒத்துணர்ந்து அவர்களிடத்தில் உணர்வு செல்ல நிற்கும் பொழுதுதான் சிவன் அவ்வுணர்வை அருட்சத்திக்கு ஏற்புடையதாகச் செய்து, அச்சத்தியோடு தானும் அதன்கண் விளங்கிநிற்பான்.

குறிப்புரை :

``மருவொத்த`` என்றதனால், `மலரொத்த` என்பது கொள்ளப்பட்டது. உரு - பொருள். உருஒத்து நிற்றல் - பொருள் ஒன்றேயாய் நிற்றல். கரு - அடிநிலை உண்மை. `கருவை ஒத்து (உடம்பட்டு) நின்று` என்க. திரு - அருட்சத்தி. `திருவுக்கு ஒத்த` என்க.
இதனால், `சத்தியைச் சிவனின் வேறாக உணர்தல், அறியாமையின் காரியமாய், அல்லற்படுத்தும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

சிந்தையி னுள்ளே திரியும் சிவசத்தி
விந்துவும் நாதமும் மாயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமும் ஆதியும் ஆம்வன்னத் தாளே.

பொழிப்புரை :

மேற்கூறிய பண்பமைந்த உள்ளத்திலே நீங்காது விளங்குபவளாகிய அருட் சத்தியே, மேற்கூறியவாறு ஆதி சத்தியாய் நின்று, நாதம், விந்து முதலிய மாயா காரியங்கள் அனைத்தையும் தோற்றுவித்து, அவைகளில் வியாபித்து நிற்பாள்; பிண்டத்தில் சந்திர மண்டலத்தில் விளங்குவாள்; சடைமுடி தரித்துத் தவக் கோலத்துடனும் காணப்படுவாள். சாத்தேய மதத்திலும் நின்று, அவர்களது தகுதிக்கு ஏற்ப அருள் செய்வாள். அகாரம் முதல் க்ஷகாரம் ஈறாக உள்ள மூல எழுத்துக்களாயும் நிற்பாள்.

குறிப்புரை :

``விரிந்தனள்`` என இறந்த காலத்தாற் கூறியதும், `விரி யும் இயல்பினை உடையவள்` என்றதேயாம். இடைநின்ற ஏகாரம், பிரித்து, ``சத்தி` என்பதனோடு கூட்டப்பட்டது. ``பூமி`` என்பதன்பின் வினைமுதற் பொருண்மை உணர்த்தும் இகர விகுதி புணர்ந்து கெட்டது. `ஆதியதோடு அந்தமாம் வன்னம்` எனற்பாலதனைச் செய்யுள் நோக்கிப் பிறழக் கூறினார். அது, பகுதிப் பொருள் விகுதி.
இதனால், சத்தி, ஆதியாய் நின்று செய்யும் செயல்களெல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 15

ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழிஅறி வார்இல்லை
தேறி யிருந்துநல் தீபத் தொளியுடன்
ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே.

பொழிப்புரை :

தோன்றாது அடங்கியிருந்த, ஞான உருவின ளாகிய அருட் சத்தி, அந்நிலைமாறி வெளிப்பட்டுநின்ற நிலையை அறிபவர் உலகருள் ஒருவரும் இல்லை, ஆயினும் புற நோக்கத்தை விடுத்து அக நோக்கத்தைக் கொண்டுள்ளவர்களுக்கு அவள் வெளிப் பட்டு, அவர்களைத் தன் அடியார்களாக ஏற்றுக்கொண்டு ஞான ஒளியின்வழிப் பேரின்பப் பெருக்காய்ச் சுரந்து நிற்கின்றாள்.

குறிப்புரை :

அமுத பயம் - அமிர்தமாய் (ஆணவத்தைப் போக்கு கின்ற மருந்தாய்) உள்ள பால். `அதனைக் கொண்ட தனங்களை யுடையவள்` என்க. அருட்சத்தியாதல் தெளிவு. தேறுதல் - தெளிதல்; ஏற்றுக்கொள்ளுதல். `சத்தி ஆறியிருத்தல், சிவத்தில் அடங்கித் திருவைந்தெழுத்தில் சிகாரத்தின் பின்னிற்றல்` எனவும், `மாறி இருத்தல், சிகாரம் பின்னாகத் தான் முன்னே நின்று `வசி` என்பதாக நிற்றல்` எனவும், `அவ்வாறு மாறிநிற்கும் வழியை அறிவார் இல்லை` எனவும் முதலிரண்டடிகட்குக் குறிப்புப் பொருள் கொள்வாரும் உளர். அக நோக்காவது அருட்கண்.
இதனால், அருட்கண்ணைப்பெறும் பக்குவம் உடையார்க்கே அருட்சத்தி பயன் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

உடையவன் அங்கி உருத்திர சோதி
விடையவன் ஏறி விளங்கி யிருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்
தடையது வாகிய சாதகர் தாமே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்களையும் அடிமையும், உடை மையுமாக உடையவனும், அக்கினியைச் சிறப்பு வடிவமாகக் கொண்டவனும், `உருத்திர மூர்த்தி` எனப்படுபவனும், இடப வாகனத்தை ஊர்பவனும் ஆகிய சிவன் இனிது விளங்கியிருக்கும் இடமே, மேற்கூறிய அக நோக்குடையவர் சென்று சேரும் இடமாகும். ஆகவே, அவ்விடத்திற் சென்று சிவனை நேர்படக் கண்டவர்களே உள்ளமாகிய வாயில் வாயிலாகப் பயன்படப் பெற்ற சாதகராவர்.

குறிப்புரை :

`விடை ஏறியாகிய அவன்` என மாற்றிக் கொள்க. கடை - இடம், போதல், இங்குச் சேர்தலைக் குறித்தது. ``போயிடும்`` என்பது இங்குச் செயப்பாட்டு வினையாய் ``கடை`` என்றதற்கு முடிபாயிற்று. அறிவை `நெஞ்சம், உள்ளம்` முதலியனவாகக் கூறுதல் வழக்கு. தடை - வாயில். அதுவாதல் - வாயிலாகவே நின்று பயன்தருதல். `நெஞ்சத்து அடையதுவாகிய` எனப் பிரித்தல் மோனை நயத்திற்கு ஏலாமையும், ``அடை`` என்பதற்கு `அடயோகம்` எனப் பொருளுரைத்தலும், `அடயோகமே சிவனை விளங்கக் காணுதற்குச் சாதகம்` என்றலும் ஒவ்வாமையும் அறிந்துகொள்க.
இதனால், அருட்சத்தி விளக்கத்திற்கு உரியவர் ஆயினோர், பின் சிவப்பேறாகிய முடிந்தபயனைப் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

தாமேல் உறைவிடம் ஆறித ழானது
பார்மேல் இதழ்பதி னெட்டிரு நூறுள
பூமேல் உறைகின்ற புண்ணியை வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே.

பொழிப்புரை :

மேற் கூறிய சாதகர் உலகரின் மேம்பட்டுத் தங்கு கின்ற இடம் ஆறு. அவற்றுள் ஒவ்வொன்றும் தாமரைகளாய் விளங்கும். அவர்கட்குப் பிருதிவி `முதலாக மேல்நோக்கி எண்ணு கின்ற தத்துவம் முப்பத்தாறினையும் இதழ்களாகக் கொண்ட மாயை யாகிய தாமரையிலும், உண்மையாகவே நூறிதழ் உள்ள தாமரையிலும் உள்ளவளாய்க் காட்சியளிக்கின்ற அச்சத்தி, உலகர் பொருட்டுப் பூமியில் தேவியாயும் விளங்குகின்றாள்.

குறிப்புரை :

முதற்கண் உள்ள இதழ், சினையாகுபெயர். ஆறு தாமரைகளாகிய இடம் ஆறு ஆதாரங்கள். `இரு பதினெட்டு` என மாறிக் கூட்டுக. `இதழ் இருபதினெட்டு உள பூ, நூறுள பூ` எனத் தனி இயைக்க. வழிபாட்டிற்குச் சிறந்த ஆசனம் தாமரை மலரும், அதனுட் சிறப்புடையது நூறிதழ் உடையதும் ஆதலின், தேவியை அதன்மேற் கண்டு அன்பர்கள் வழிபடுதல் மரபு. ``பார்`` இரண்டில் முன்னது பிருதிவி தத்துவம்; பின்னது பூவுலகம். `பைந்தொடியாளாய் வந்தனள்` என மேலே கூட்டுக. இதனுள்ளும் ஆசெதுகை வந்தது. `புண்ணியம்` என்பது பாடமாயின், அதனை ஆகுபெயராகக் கொள்க.
இதனால், ஆறாதாரங்களின்வழி அகநோக்கிற் செல்ல மாட்டாத உலகர் பொருட்டு அச்சத்தியே திருக்கோயில்களில் உருக்கொண்டு எழுந்தருளியிருத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத்
திண்கொடி யாகித் திகழ்தரு சோதியாம்
விண்கொடி யாகி விளங்கி வருதலால்
பெண்கொடி யாக நடந்த துலகே.

பொழிப்புரை :

சிவன் யாதொன்றையும் நினையாது வாளா இருக்கும் பொழுது, சத்தியும் அசைதல் இல்லாத கொடிபோல ஞானமாத்திரையாய் நிற்பாள். சிவன் மேகத்தில் உண்டாகின்ற மின்னலைப்போல உலகை நோக்கித் தெய்வ நாயகனாய் வருதலினால், சத்தி தெய்வநாயகியாய் அவனுக்குத் துணை நிற்கின்றாள். அதனாலே உலகம் நடைபெற்று வருகின்றது.

குறிப்புரை :

``பரமன் இருந்திட`` என்பதை முதற்கண் வைத்து உரைக்க. `திண்கொடி` இல்பொருள் உவமை. ``ஆக`` இரண்டில் முன்னது உவம உருபு., ``பெண்கொடியாக`` என்ற அனுவாதத்தால், பெண்கொடியாதலும் பெறப்பட்டது. `பரமன், பைந்தொடியாள்` என்பன பின்னும் சென்று இயைந்தன.
இதனால், சத்தி சிவங்களது சொரூப தடத்த நிலைகள் கூறப்பட்டன. சொரூபம் அநாதி; பரம். தடத்தம் ஆதி; அபரம்.

பண் :

பாடல் எண் : 19

நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்
படர்ந்தது தன்வழிப் பங்கயத் துள்ளே
தொடர்ந்தது உள்வழிச் சோதி அடுத்தே.

பொழிப்புரை :

உலகம் நடைபெறுவது ஒன்பது இதழ்த்தாமரை வடிவாகியாம். அதனால், சத்தியின் பேதங்களாய் உள்ள கன்னியரும் வாமை முதலிய எண்மரும், முதல்வியாகிய மனோன்மனியும் என ஒன்பதின்மராயினர். அவர் அனைவரும் இயங்குவது ஆதி சத்தியின் வழியேயாம். அவர்களை உலகத்தார் தொடர்வது மேற்கூறிய தாமரை மலரிலே. இவையெல்லாம். இங்ஙனம் இருத்தல் சிவனைச் சார்ந்தேயாம்.

குறிப்புரை :

1067 - ஆம் மந்திரத்தின் உரை பார்க்க. இரண்டாம் அடி மூன்றாம் எழுத்தெதுகை.
இதனால், சத்தியின் நிலைகளை வழிபாட்டு முறையிற் காணுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

அடுக்கின்ற தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்கின்ற தாமரை இல்லகத் துள்ளது
மடுக்கின்ற தாமரை மத்தகத் தேசெல
முடுக்கின்ற தாமரை முற்சது ரத்ததே.

பொழிப்புரை :

பிராணன் எளிதில் சென்று பொருந்துகின்ற ஆஞ்ஞா சக்கரத்தில் உள்ள தாமரையே ஆதிசத்தி நின்று உயிர்களுக்கு அறிவிக்கின்ற இடமாகும். ஆன்மாவைக் கீழே செல்லாது தியானம் முதலியவற்றால் மேலெழச் செய்கின்ற ஆசனமாகிய தாமரை மலர் உடலின் நடுவிடத்தில் உள்ளது. (அனாகதம் - இருதயம் என்றவாறு.) வழிபடுவோன் சந்திரனது அமுதத்தைப் பருகும் இடமாகிய ஆயிர இதழ்த் தாமரை மலர் உள்ள தலையிலே உயிருணர்வு செல்லும்படி ஓட்டுகின்ற தாமரை மலர், மேற்சொல்லிய அனைத்திற்கும் முதலிலே நாற்கோண நிலையினதாய் உள்ளது. (மூலாதாரத்திலே உள்ளது என்பதாம்.)

குறிப்புரை :

`அம்முறையறிந்து சத்தியை அங்கெல்லாம் வழிபடுக` என்பது குறிப்பெச்சம். `அடுக்கும்` என்பது முதலாகவும், `முச்சதுரத்து` எனவும் ஓதுவன பாடம் ஆகாமையறிக.
இதனால், `சத்தியை யோக முறையில் வழிபடுதல் மிக்க பயனைத் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

முற்சது ரத்தே எழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற
எச்சது ரத்தும் இருந்தனள் தானே.

பொழிப்புரை :

முதல் ஆதாரமாகிய மூலத்தினின்றும் எழுகின்ற தீக் கொழுந்து ஏனை ஆதாரங்களிலும் சென்று பரவுதற்பொருட்டும், அங்ஙனம் பரவுதலின் பயனாகிய உள்ளொளியைத் தரிசித்தற் பொருட்டும் சத்தி அந்த ஆதராங்களாகிய சிறிய இடங்களில் அடங்கு பவள் அல்லளாய் இருந்தும் அவைகளில் எழுந்தருளியிருக்கின்றாள்.

குறிப்புரை :

`அதற்குக் காரணம் கருணையே` என்பது கருத்து. முன்னது, ``சதுரம்`` எனக் கூறினமையால், ஏனைய ஆதாரங்களையும் பொதுப்பட, ``சதுரம்`` என்றார். மந்திரக் கட்டங்கள் சதுர வடிவாயினும், `சக்கரம்` என வழங்கப்படுதல் போல, `சக்கரம்` எனப்படுபவற்றை `சதுரம்` என்றார். `கடந்தும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. முதலடி இன எதுகை.
இதனால், `எங்கும் வியாபியாய் உள்ளவளைச் சக்கரங்கட் குள்ளே காணுதல் எவ்வாறு` என்னும் ஐயம் நீக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்
பரந்தன வாயு திசைதிசை தோறும்
குவிந்தன முத்தின் முகம்ஒளி நோக்கி
நடந்தது தேறல் அதோமுகம் அம்பே.

பொழிப்புரை :

சத்தி பத்துத்திருமுகங்களைக்கொண்டு பத்துத் திசைகளையும் நோக்கியிருக்கின்றாள். அதனாலே, காற்று எங்கும் சென்று அசைதலும், நெருப்பு மேல்நோக்கி எரிதலும், நீர் கீழ்நோக்கிப் பாய்தலும் உடையனவாய்த் தம்தம் செயலைச்செய்கின்றன.

குறிப்புரை :

``திசை திசைதோறும்`` என்றமையால் பத்துத் திசையையும் நோக்குதற் பொருட்டுப் பத்து திருமுகங்களையுடைய ளாயினமை பெறப்பட்டது. சிறப்புடைய மூன்றனை எடுத்துக்கூறிப் பிறபிற பொருள்களும் சத்தியின் பார்வையாலே செயற்பட்டு நிற்றலைக் கொள்ளவைத்தார். வாயு ஒன்றேயாயினும் திசைநோக்குப் பற்றிப் பலவாக வழங்கப்படுதல் நோக்கிப் பன்மையாகக் கூறினார். ``ஒளி`` என்றது சுடரை. தீயின் சுடர்கள் பலவாதல் வெளிப்படை. ``முத்து`` என்றது நகைப்பினை. `ஒளிமுத்தின் முகம் நோக்கிக் குவிந்தன` எனக் கூட்டுக. குவிதல், மேல்நோக்கி எழுதல். தேறல் - தேன். `அம்பு தேறல்போல அதோமுகம் நடந்தது` என்க. தேன் போறல், இனிமையை உண்டாக்கல். இதனுள் பின்னிரண்டடிகள் மூன்றாம் எழுத்தெதுகை.
இதனால், பொருள்தன்மை பலவும் சத்தியது அருள் நோக்காலே நிலைபெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மனி
கொம்பன்ன நுண்ணிடைக் கோதை குலாவிய
செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.

பொழிப்புரை :

சத்தி, சிவனது சிவந்த பொன் போலும் திரு மேனியில் நிறைந்த நறுமணம் கமழும்படி அவனையே நாள்தோறும் பற்றிப் பயில்கின்றாள்.

குறிப்புரை :

முன்னிரண்டடிகளின் பொருள் வெளிப்படை. ``செறி கமழ்`` என்பது, `செறிந்து கமழ` எனப்பொருள் தந்தது. நவிலுதல் - பயிலுதல். முதலடி உயிரெழுத்தெதுகை.
இதனால், சத்தி மேற்கூறிய செயல்கள் அனைத்தையும் சிவனிடத்தில் நின்றே செய்தலன்றித் தனித்து நின்று செய்யாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

நவிலும் பெருந்தெய்வம் நான்மறை சத்தி
துகிலுழை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமும் அண்டம் முழுதும்செம் மாந்து
புகலும்முச் சோதி புனையநிற் பாளே.

பொழிப்புரை :

நான்கு வேதங்களும் சொல்கின்ற பெருந்தெய்வம் (முதற்கடவுள்) ஆகிய பூரணசத்தி, திக்குகளையே ஆடையாகக் கொண்டு, பாதம் பூமியைக் கடந்தும், முடி வானத்தைக் கடந்தும் இருக்க, `சூரியன், சந்திரன், அக்கினி` என்னும் முச்சுடர்களே மணிகள் இழைத்த அணிகளாய் அழகுபடுத்த நிற்பாள்.

குறிப்புரை :

`உலகம் முழுவதையும் தனக்குத் திருமேனியாகக் கொண்டு விளங்குவாள்` என்றபடி. இதனையே `விசுவரூபம்` என்பர். விசுவம் - உலகம்.
`நான்மறை நவிலும் பெருந் தெய்வசத்தி` என மாறிக் கூட்டுக. உழை - பக்கம்; திசை. துகில் - உயர்வகைப்புடைவை. புலித்தோலே யல்லது மான்தோல் உடையாகச் சொல்லப்படாமையால், ``உழை`` என்பதற்கு `மான்` என உரைத்தல் பொருந்தாமை அறிக. நிலம் பொதி - பூமியை உள்ளடக்கிய. செம்மாந்து - நிமிர்ந்து; கடந்து.
``நிலமுதற்கீழ் அண்டம் உள நிமிர்ந்தது`` என்றல் காண்க. முதலடி உயிரெதுகை.
இதனால், `சில பொருள் அளவிலே வியாபகமாகாது, எல்லா உலகத்திற்கும் வியாபகமாகின்ற சத்தியே பூரண சத்தியாம்` என அவளது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

புனையவல் லாள்புவ னத்திறை எங்கள்
வனையவல் லாள்அண்ட கோடிகள் உள்ளே
புனையவல் லாள்புவ னத்தொளி தன்னை
புனையவல் லாளையே போற்றியென் பேனே.

பொழிப்புரை :

உலகத் தலைவனாகிய சிவனையும், உயிர்களாகிய எங்களையும் தாங்க வல்லவள்; உலகங்கள் அனைத்தையும் ஆக்க வல்லவள்; அவைகளைத் தனக்குள்ளே அடக்கிக் காக்க வல்லவள்; உலகத்து ஒளிகள் அனைத்தையும் தனது திருமேனியின் ஒளியாகச் செய்ய வல்லவள்; அத்தகைய பேராற்றல் உடையவளாகிய பூரண சத்தியையே நான் துதிக்கின்றேன்.

குறிப்புரை :

முதற்கண் உள்ள புனைதல் - தரித்தல். ``இறை`` என்பதில் இரண்டனுருபு இறுதிக்கண் தொக்கது. ``எங்கள்`` என்பதில் இரண்டனுருபு தொகுக்கப்பட்டது. சத்தி இறைவனைத் தாங்குதல் ஆவது, உற்ற துணையாய் இருத்தல். ``மண்டலம்`` என்பது `அண்டம்` என்னும் பொருளதாய் நின்றது. `அப்புனைய வல்லாளையே` எனச் சுட்டு வருவிக்க.
இதனால், பூரண சத்தியது ஆற்றலின் பெருமை வகுத்துரைத்து, `சத்தி` எனப்படுவாள் அவளேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

போற்றிஎன் பேன் புவனாபதி அம்மை என்
ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை
சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை
கூற்றந் துரக்கின்ற கோட்பைந் தொடியே.

பொழிப்புரை :

எனது இச்சா ஞானக்கிரியைகளாகிய ஆற்றலில் இயைந்து நின்று அவற்றை இயக்குகின்ற, அரியதவத்தால் அடையப் படுபவளும், `சாந்த ரூபம், யமனையும் வெல்லும் வேக ரூபம்` என்னும் இரு நிலைகளையும் உடையவளும் ஆகிய அந்த உலகத் தலைவியாம் பூரண சத்தியையே நான் வணங்குதல், வாழ்த்துதல் முதலியவற்றைத் தெரிவிக்கும் சொற்களைச் சொல்லி வழிபடுகின்றேன்.

குறிப்புரை :

புவனாபதி அம்மை - உலகத்தோடு இயைந்து நின்று அதனைச் செயற்படுத்திகின்ற சத்தியும், அச்சத்தியோடு கூடி நிற்பவ னாகிய `பதி` என்னும் சிவனும் என்னும் இருவராகவும் அறியப் படுகின்ற அம்மை. `சத்தியும், சிவமும் தம்மில் வேறல்லவாகலின், இங்குக் கூறிவருகின்ற பெருமைகளை அவ்விருவரில் எவருக்கு உரியதாகக் கூறினும் குற்றம் இன்று` என்பதை விளக்க. `அம்மை` என்றாயினும் கூறாது புவனாபதி அம்மை`` எனக் கூறினார். `இங்ஙனமாயினும், அவரவர்க்கு அன்பு செல்லும் வழியாற் கூறுதலே முறை` என்பது பற்றி இந்நூலுள் இத்தன்மைகளைச் சில விடத்துச் சிவனுக்குரியவாகவும், சிலவிடத்துச் சத்திக்குரியவாகவும் கூறப்படு கின்றன` என்பது பெறப் பட்டமை காண்க. `புவனாபதி அம்மை என்பதன் பொருள் விளங்கினமையின், `புவனாபதி` என்னும் அளவாகவே பின்னர்க் கூறுமிடத்து, அச்சொற்பொருளும் இதுபற்றி அறிந்துகொள்ளப்படும். அஃதாவது, `அம்மை என்பது ஆற்றலால் விளங்க வைத்துக் கூறப்படுதல் அறியப்படும்` என்க.
சீற்றங் கடிதல், சாந்தமாய் இருத்தல். கோள் - கருத்து. கூற்றந் துரக்கின்ற கோள் - பகையை அழிக்கும் கருத்து. ``அம்மை`` முதலியவற்றில் இரண்டனுருபுகள் தொகுத்தலாயின.
இதனால், பூரண சத்தி, `அமைதி, சீற்றம்` என்னும் இரு நிலையிலும் நின்று நலம் செய்தல் கூறப்பட்டது. வேகநிலை துன்பத்தைப் போக்குவது. சாந்த நிலை இன்பத்தை ஆக்குவது.

பண் :

பாடல் எண் : 27

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தர
வடிவார் திரிபுரையாம் மங்கை சங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்
அடியார் வினைகெடுத் தாதியு மாமே.

பொழிப்புரை :

வளையல் அணிந்த கைகளையுடையவளும், இன்பத் தோற்றத்திற்குக் காரணமாயிருப்பவளும், அழகிய வடிவத்தை யுடைய `திரிபுரை` என்னும் தேவியும் ஆகிய சத்தி, ஐயத்திற்குக் காரண மாயுள்ள கீழான முன்னை வினைகள் கெடுதலினால் தன்னை உணர்ந்து வந்து அடைபவர்களை, `என் அடியார்கள்` என்று சொல்லி ஏற்று, அவர்கட்கு, மேல் வினை வாராமல் காக்கின்ற தலைவியாயும் நிற்பாள்.

குறிப்புரை :

`சுந்தரி` என்பது பாடமாகாமை அறிக. `சேர்வாரை` என்பது குறுகிநின்றது. `என் அடியார் என்று வினை கெடுத்து` எனக் கூட்டுக. ``ஆதியும் ஆம்`` என்னும் உம்மை, இறந்தது தழுவிய எச்சம்.
இதனால், பூரணசத்தியைத் தெளிந்து அடைந்தோர் வினைக்கட்டு நீங்கி வீடுபெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி
பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி
புல்லிசைப் பாவையைப் போகத் துரந்திட்டு
வல்லிசைப் பாவை மனம்புகுந் தாளே.

பொழிப்புரை :

மென்மைத்தன்மையோடு பொருந்து தலை யுடைய பெண்மகளாகக் காட்சியளிப்பவளும், ஆகாயத்தில் தோன்றும் மின்னலை ஒப்பவளும், பலவாகிய புகழையுடைய தேவியாய் நின்று பல பயன்களைத் தருகின்ற, பசிய கொடி போன்றவளும் ஆகிய சத்தி, கீழ்மையோடு இசைதலையுடைய அக இருளாகிய பெண்டினை என் மனமாகிய வீட்டினின்றும் ஓட்டிவிட்டுத் தான் வலிமையோடு கூடிய பெண்டாய் அதனுள் குடிபுகுந்தாள்.

குறிப்புரை :

``இசை`` நான்கில் இரண்டாவது, புகழ். ஏனையவை முதனிலைத் தொழிற் பெயர்.
இதனால், பூரணசத்தி, மேற்கூறிய வினைகட்குக் காரணமாய் நின்று அக இருளையும் போக்கியருள்கின்ற ஆற்றலுடையளாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

தாவித்த அப்பொருள் தான் அவன் எம்மிறை
பாவித் துலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பராசத்தி மேலொடு கீழ்தொடர்ந்
தாவிக்கு மப்பொரு ளானது தானே.

பொழிப்புரை :

சத்தி மேற்கூறியவாறு மனம் புகுந்தபின் அவளால் அங்கு நிறுவப்பட்ட (நிலைப்பிக்கப்பட்ட) அப்பொருள் எம் இறைவனாகிய சிவனேயாகும். எதனால் எனின், அவன் உலகைப் படைக்க நினைக்கும்பொழுது சத்தியும் அதனையே விரும்பி, மாயையின், மேல் கீழ் ஆகிய இரு பகுதிகளையும் சார்ந்து நின்று பல்வேறு வகையாகப் புலனாகின்ற அப்பொருளாய் நிற்கின்ற அச்செயலையே தான் செய்வாள் ஆதலின்.

குறிப்புரை :

``தாவித்த அப்பொருள்`` என்ற அனுவாதத்தால், தாவித்தலும் பெறப்பட்டது. படவே, சத்தி தான் மனம் புகுந்தபின் சிவனை அங்கு நிலைப்பிக்கச் செய்தலும் ஒருதலையாக நிகழ்தல் அறியப்படும். இதனை, சிவனே முதல்வனாக, சத்தி துணைவியாய் நிற்றலாகிய உண்மைபற்றித் தெளிந்து கொள்ளுதற்குப் பின்மூன்று அடிகளைக் கூறினார். `அவன்தான்` என மாற்றியுரைக்க. ``பாவித்துப் படைக்கின்ற காலத்து`` என்றாராயினும் `படைக்கப் பாவிக்கின்ற காலத்து` என்றலே கருத்தென்க. தொடர்தற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது.` ஆவித்தல் - உயிர்த்தல் புலனாதல். `ஆனதே செய்தாள்` எனவும், `ஆதலின்` எனவும் சொல்லெச்சங்கள் வருவித்துக் கொள்க. `தானது தானே` என்பது பாடமன்று.
இதனால், பூரணசத்தி, பின் சிவத்தைத்தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

அதுஇது என்பார் அவனை அறியார்
கதிவர நின்றதோர் காரணம் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது உன்னார்கள் தேர்ந்தறி யாரே.

பொழிப்புரை :

`அதற்குக் காரணம் அதற்கு முன்னுள்ள அந்த ஒன்று; இதற்குக் காரணம் இதற்கு முன்னுள்ள இன்னொன்று` என்று இப்படிக் காரியப்பொருள்கள் பலவற்றிற்கும் பல காரணப் பொருள்களையே முடிந்த காரணப் பொருளாக மயங்கி, அனைத்துக் காரணங்கட்கும் காரணமாய் உள்ள பொருளை உணரமாட்டாதவர் சிவனை அறியுமாறில்லை. அதனால், முத்திக்கு வழியை அவர் அறியாதவரே யாகின்றனர். அவர் அன்னராதல் சத்தியின் இயல்பை முற்பட உணராமை யாலேயாம். ஆதலின், அவர் உண்மைச் சிந்தனையாளர் அல்லர்.

குறிப்புரை :

ஓர் காரணம் - பிறிதுகாரணம் இல்லையாகத் தான் ஒன்றேயாய் உள்ள காரணம். திதம் - நிலைமை; இயல்பு. அது, முன்னே திரோதாயியாய் நின்று பக்குவத்தை வருவித்துப் பின் அருட் சத்தியாய்ப் பதிதல்.
இதனால், பூரண சத்தியது இயல்பை உணர்தலின் இன்றி யமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு
நாலித ழானவை நாற்பத்து நாலுள
பாலித ழானஅப் பங்கய மூலமாய்த்
தானித ழாகித் தரித்திருந் தாளே.

பொழிப்புரை :

நான்கு இதழ்களையுடைய தாமரையாகிய மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களில் சுத்த
தத்துவம் ஐந்தும், புருடன் ஒன்றும் தவிர, ஏனையதத்துவ தாத்துவிகங்கள் தொண்ணூறும் அடங்கி நிற் கின்றன. இடைநான்கு ஆதாரத்தின் தாமரைகளில் நாற்பத்து நான்கு இதழ்கள் உள்ளன. இரண்டிதழ்களையுடைய அந்த ஆஞ்ஞைத் தாமரைக்கு அடியாயுள்ள ஏனைய ஆதாரத் தாமரைகளாய் நின்று அந்த ஆஞ்ஞையைத் தாங்கியும், அவ் ஆஞ்ஞைத் தாமரையாய் நின்று அதன்கண் விளங்கும் தியானப்பொருளைத் தாங்கியும் அருள் புரிகின்றாள் சத்தி.

குறிப்புரை :

ஆறு ஆதாரங்களும், அவற்றின் அமைப்புக்களும், அவற்றில் உள்ளனவும் முன்னைத் தந்திரத்தில் விளங்கக் கூறப் பட்டன. ``இதழ்`` நான்கில் முதலதும், ஈற்றதும் ஆகுபெயர். முத லடியில் ``நாலிதழ்`` என்பதன்பின் `முதலிய` என்பது எஞ்சி நின்றது. சுத்த தத்து வங்கள் ஏழாந் தானத்தில் நிற்றல் பற்றியும், புருடன் ஆஞ் ஞையைக் கடந்தும் செல்லுதல் பற்றியும் அவை ஒழிந்தன ஆறா தாரங்களில் நிற்கும் என்க. ``நாலிதழானவை`` என்பதில் ``நாலின்கண் இதழானவை`` என ஏழன் உருபு விரித்துக்கொள்க. ``அவிர்ந்தது`` என்பது `நவின்றது` என இருந்தது போலும். பால் - பகுப்பு. எனவே, `இரண்டு` என்றதாயிற்று. தரித்தல் - தாங்குதல்; இதற்குச் செயப்படு பொருள் வருவித்துக்கொள்க. உயர்ந்ததாகிய ஆஞ்ஞையின் ஆதார ஆதேயங்களாதல் கூறவே, கீழுள்ளவற்றிற்கும் அவ்வாறாதல் பெறப் பட்டது. மூலாதாரத்திற்கு ஆதார மாதல் நேரேயாம். `சத்தி` என்பது முன்னை அதிகாரத்தினின்றும் வந்து இயைந்தது. ஈற்றடி உயிரெதுகை.
இதனால், சத்தி ஆதார பங்கயங்களின் ஆதார ஆதேயமாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தரித்திருந் தாள்அவள் தன்னொளி நோக்கி
விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளை
குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்தும்
மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே.

பொழிப்புரை :

சத்தி அனைத்துயிர்க்கும் தாயாகலின் அவள் மேற் கூறியவாறு ஆதார பங்கயங்களின் ஆதாரமும், ஆதேயமுமாய் நிற்றல் தனது ஒளியுருவை யோகியர் காணுதல் குறித்தும், கலைஞானத்தை மிகத்தந்தும், ஐம்புல ஆசைகளின் கொடுமையைக் கண்டு அதனைத் தடுத்துக் கொண்டுமாம்.

குறிப்புரை :

`மாதுரு` என்னும் வடசொல் ஈறுதொகுத்தல் பெற்று நின்றது. இதன்பின் `ஆதலின்` என்பது எஞ்சி நின்றது. `மாதுரு நல்லா ளாகலின்` என எடுத்துக்கொண்டு உரைக்க. ``தன்னொளி நோக்கி`` என்பது, `தன்னொளியை அடியவர் காணுதல் குறித்து` எனப் பொருள் தந்தது. ``கூறிய ஐந்தும்`` என்பது, இடைநிலைத் தீவகமாய் நின்றது. பின்னிரண்டடிகள் ஒப்பெதுகை.
இதனால், சத்தி ஆதார பங்கயங்களின் ஆதார ஆதேயமாய் நின்று செய்வன இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்
பாதிநல் லாளும் பகவனும் ஆனது
சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.

பொழிப்புரை :

சத்தி தனது மணாளனாகிய சிவன் ஒருபோதும் தன்னைவிட்டு நீங்காதிருத்தலினாலே ஒரு பாதியேதானாய், மற்றொரு பாதி அச்சிவனாய் இருக்கின்றாள். (இந்நிலை எக்காலத்தும் வேறு படுதல் இல்லை என்றபடி) அத்தன்மையை உடைய ஒளி வடிவி னளாகிய அவளைத் துணையாக உங்கள் உள்ளத்தில் இருத்த வல்லீ ராயின், எல்லாத் துன்பமும் நீங்கும்; வெளுக்கப்பட்ட ஆடைபோல் ஆன்மா மும்மலங்களும் நீங்கத் தூயதாய் விளங்கும்.

குறிப்புரை :

``மாது நல்லாளும்`` என்னும் உம்மை சிறப்பு. `மாது நல்லாளும் ஆனது இருந்திட` என இயையும். சொல்லமைதி இங்ஙன மாயினும், கருத்து நோக்கி மேற்கண்டவாறு உரைக்கப்பட்டது. `துணை யாக` என ஆக்கம் வருவிக்க. வெள்ளாடை என்பது குறுகி நின்றது. இயல்பாகவே கொண்டு, `உயிர் தூய்மையை அடைதல் உண்டாகும்` என உரைத்தலுமாம். வெள்ளாடையாதற்கு வினைமுதல் வருவிக்க.
இதனால், `சத்தியை, சிவனை ஒரு பாதியில் உடையவ ளாகவே தியானித்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வெள்ளடை யான்இரு மாமிகு மாமலர்க்
கள்ளடை ஆரக் கமழ்குழ லார்மனம்
மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகன் பிறவிபெண் ணாமே.

பொழிப்புரை :

கருவி கரணங்கள் சென்று பற்றும் வகையில் வெளி நில்லாதவனும், கரிய வண்டுகள் மொய்க்கின்ற மலர்களின் தேன் பொருந்தி நிரம்புதலால் நறுமணம் கமழ்கின்ற கூந்தலையுடைய மகளிரால் மனம் வருந்துதல் இல்லாதவனும் ஆகிய சிவன், அத் தன்மையனாயினும், சிலபொழுது தனது கூறேயான ஒரு பெண்ணைத் தன் உடம்பில் ஒருபாதியில் கொண்டவனாய்க் காணப்படுதலும், சிலபொழுது பெண்ணேயாய்க் காணப்படுதலும் உடையன்.

குறிப்புரை :

``மா`` இரண்டில் முன்னது வண்டு, ``கள் அடை`` என்பதில் ``அடை`` என்னும் பகுதி `அடைந்து` என வினையெச்சப் பொருள் தந்தது. `குழலாரால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. மள் - மள்கல்; முதனிலைத் தொழிற் பெயர். `மழுங்குதல்` என்பது பொருள். `வெள்ளடையானாகிய மள்ளடையானாயினும்` என்பது சொல் அமைதி. ``ஆம்`` என்பதை, ``பாகன்`` என்பதனோடும் கூட்டுக. `பிறவியே` என்னும் ஏகாரம் தொகுத்தலாயிற்று. `சிவன் உண்மையில் ஆணும் அல்லன்; பெண்ணும் அல்லன்; அதனால், வேடங்கட்டி ஆடுவார் போன்று பொது நிலையில் எவ்வகையாயும் தோன்றுவன்` என்பது ஈற்றடியின் கருத்து. எனவே, சிவனது ஆண் தோற்றம் ஒன்றையே கொண்டு `அதுவே அவனது உண்மையியல்பு` என வழக் கிடுதலும், பெண் தோற்றம் ஒன்றையே கொண்டு, `அதுவே அவனது உண்மை யியல்பு` என வழக்கிடுதலும், மாதொரு கூறாய தோற்றம் ஒன்றையே கொண்டு `இரண்டும் கூடியுள்ளதே அவனது உண்மை யியல்பு` என வழக்கிடுதலும் பேதைமைப் பாலவாதல் விளங்கும். இவ்வியல்பு சிவன், சத்தி இருவர்க்கும் உரியதென்க. எனவே, கடவுளது ஆண் தோற்றம் முதலிய மூவகைத் தோற்றங்களுள் எதனைக் காணினும், `இஃது உயிர்கள் பொருட்டு ஏற்ற பெற்றியாற் கொண்ட பொதுவியல்பாம்` என உணர்தலல்லது, `சிவன், சத்தி இவர்களது உண்மை யியல்பு என மயங்குதல் பொருந்தாதாயிற்று. இவ்வியல்பினை,
``ஒன்றொடொன் றொவ்வா வேடம்ஒருவனே தரித்துக்
[கொண்டு
நின்றலால் உலகம் நீங்கி நின்றனன் என்றும் ஓரார்`` 1
என விளக்கிற்றுச் சிவஞான சித்தி. இன்னும்,
``எம்பெருமான் இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன் தமையன்`` 2
எனவும்,
``சிவம் சத்தி தன்னை யீன்றும் சத்திதான் சிவத்தை யீன்றும்
உவந்திரு வரும் புணர்ந்திங் குலகுயி ரெல்லாம் ஈன்றும்
பவன்பிரம சாரி யாகும்; பால்மொழி கன்னி யாகும்;
தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே`` 3
எனவும் வருவன போல்வன பலவும், இவையெல்லாம் கடவுள் தனது அருள் நாடகத்திற்கொள்ளும் பொதுவியல்பாதலன்றி உண்மை யியல்பாகாமையை விளக்க எழுந்தனவேயாம். ஆகவே,
``கூத்தினர் தன்மை வேறு கோலம்வே றாகு மாபோல்`` 4
என்ற பெரியவர் ஒருவர் வாக்கின்படி ஆடவர் போலவும், மகளிர் போலவும் வேடங்கட்டியாடுவார். அவ்வேடத்திற்கு ஏற்பவே நடித்து நிற்பினும் அவரது உண்மைத் தன்மை அவ்வேடத்திற்கு வேறாயினாற் போலவே, ஆணாயும், பெண்ணாயும் தோன்றும் கடவுளின் உண்மையியல்பு அவற்றின் வேறேயாம் என்பது இனிது விளங்கும்.
``சத்திதான் நாத மாதி தானாகும்; சிவமும் அந்தச்
சத்திதான் ஆதி யாகும்; தரும்வடி வான வெல்லாம்
சத்தியும் சிவமும் ஆகும்`` 1
என்ற சிவஞான சித்தியையும் அதற்கு மாபாடியம் உடையார் உரைத்த உரையும் இங்கு இனிது நோக்கி உணர்க. இங்ஙனம், உணரமாட்டாது தம்முள் மாறுபட்டு வழக்கிடுவாரை நோக்கியேயன்றோ தாயுமான அடிகள்,
``அன்னே அனே எனும் சிலசமயம் நின்னையே;
ஐயா ஐயா என்னவே
அலறிடும் சிலசமயம்``
என முதற்கண் நகையாடியும், பின்னர்,
``என்னே எனேகருணை விளையாட் டிருந்தவாறு`` 2
என வியந்தும் கூறியருளினார். ஈற்றடி இனவெதுகை.
இதனால், `சிவம் சத்தி இவர்களிடையே சொல்லப்படும் நாயக நாயகித் தன்மை குணியும், குணமுமாய் நிற்கும். அதனை விளக்கும் அத்துணையதேயல்லது முழுவதுமாகின்ற உண்மையியல்பு அன்று` என்பதும், `அதனால் அத்தன்மைக்கு ஏற்ப அவர்கள் கொள்ளும் கோலம் அவர்களது பொதுவியல்பேயாம்` என்பதும் குறிப்பு மொழியாற் கூறப்பட்டன. இது பற்றியன்றே ஞானசம்பந்தரும், இறைவனை ``ஒருமை பெண்மை யுடையனாக`` 3 முன்னரே கண்டு வைத்திருந்தும், வையைக் கரையில் பாண்டியன் கேட்க அருளிச் செய்த திருப்பாசுரத் திருப்பதிகத்தில்
``எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ`` 4
என அருளிச் செய்தார்! அதனால், இறைவனது உண்மையியல்பு உயிர் களால் `இன்னதுதான்` என வரையறுத்துணரப் படாததாதல் தெற்றென விளங்கும். இதனை விளக்கும் முகத்தானே ஆதார ஆதேயங்களாய் நிற்றல் சத்தி, சிவம் இருவர்க்கும் பொதுவேயாதல் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண்ணிடை ஆணின் பிறப்பறிந் தீர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே.

பொழிப்புரை :

ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு புணர்தலால் பயனின்மையின் அங்ஙனம் புணர்தல் பேதமைச் செயலாதல் தெளியப் பட்டதாயினும், அச்செயலால் ஆண் ஒன்று பிறந்த பயன் ஓரிடத்தில் காணப்படுகின்றது (இஃது அதிசயம்) இனி, புணரப்பட்ட அப் பெண்ணிடத்தினின்றும் பிறந்த அந்த ஆணின் உண்மையை உணர்ந்து, யாவரையும் அந்த ஆணினிடத்தே ஈர்த்து வைக்கின்ற அந்தப் பெண்ணைத் துணைவியாக உடைய அந்த ஆணின் பக்கல் அந்தப் பெண் ஈர்த்தவாறே சென்று அடைவதே, `இஃது இயற்கைக்கு மாறாய் இயலாததொன்றாம்` என்று பேசும் பேச்சு அற்றொழிதற்கு வழியாம்.

குறிப்புரை :

முதலில் உள்ள `பெண்` பராசத்தி. அடுத்த வந்த பெண் ஆதிசத்தி. பராசத்தி ஆதிசத்தியோடு புணர்தலாவது அந்நிலையில் கலந்து நிற்றல். ஆதிசத்தியினின்றும பிறந்த ஆண் சதாசிவ மூர்த்தி. `இவ் வுண்மையை அறிதல் வேண்டும்` என்றவாறு. `பேதைமையால்` என உருபு விரிக்க. ஈர்க்கின்ற பெண், அனுக்கிரக மூர்த்தியாகிய சதாசிவர் பால் உயிர்களை ஈர்த்துச் சேர்க்கின்ற மனோன்மனிசத்தி, `ஆணிடைப் பேச்சறும்` என்றது, ஆணிடை அடைந்தால் பேச்சறும் என்றதாம்.
இதனால், ``தவந்தரும் ஞானத்தோர்க்கு இத்தன்மைதான் தெரியும்`` என மேற்காட்டியவாறு. மேற்கூறிய உண்மைகள் எல்லாம் திருவருள் கிடைக்கப்பெற்ற பின்பு இனிது விளங்கும், என்பது நகைச்சுவை படக்கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை
மாச்சற்ற சோதி மனோன்மனி மங்கையாம்
காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந்
தாச்சற்றெ னுட்புகுந் தாலிக்குந் தானே.

பொழிப்புரை :

சொல்லற்ற இடத்தில் நிற்கும் தலைவனாகிய சிவன் குற்றம் அற்ற ஒளிப்பொருள். துணைவியாகிய சத்தியும் அங்ஙனம் குற்றம் அற்ற ஒளிப்பொருளே. ஆயினும் சத்தியே சிவத்துடன் வந்து குற்றம் அற்ற என்உள்ளத்தில் புகுந்து ஆரவாரிக்கின்றாள்.

குறிப்புரை :

அஃதாவது, `சிவமும் சத்தியும் ஒரு பொருளே யாயினும், அப்பொருள் உயிர்களோடு தொடர்புகொள்ளும் நிலையில் `சத்தி` எனப்படுகின்றது` என்பதாம். பெருந்தகை - தலைவன். காண், உம் அசைகள். `குற்றம்` என்னும் பொருளைத் தருகின்ற, `மாசு, காசு, ஆசு` என்பன எதுகை நோக்கி விரிதல் பெற்றன. இறுதியடியில், `அற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மங்கையாம் மனோன்மனி என மாறுக. இங்கு உம்மை தொகுக்கப்பட்டது `மங்கையும்` என்றே ஓதுதலுமாம். `அவள் புணர்ந்து புகுந்து ஆலிக்கும்` என வேறு தொடராக்கி முடிக்க. ``கடவுளுடன் புணர்ந்து`` என்றது. தனித்து நில்லாமையை வலியுறுத்தியதாம்.
இதனால், `முதற்பொருள் இரண்டில்லையாயினும், செய லிடத்துச் சத்தியாய் நிற்கும்` என்பதுணர்த்தி, மேல், `சத்தியே ஆதார ஆதேயமாய் நிற்கின்றாள்` எனக் கூறியதன்கண் ஐயம் அறுக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மனி
பாலித் துலகில் பரந்துபெண் ணாகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஓலித் தொருவன் உகந்துநின் றானே.

பொழிப்புரை :

என் உள்ளத்தில் புகுந்து ஆரவாரிக்கின்ற கன்னிப் பெண்ணாகிய சத்தி பெண் தன்மையை உடையளாய் உலகெங்கும் நிறைந்து உலகினைப் பாதுகாத்து நிற்பாள். உலகத்தலைவியும், வேதங்களால் குறிப்பிடப்படும் முதல்வியுமாகிய அவளை வேதங்களும் காணமாட்டாது ஓலமிட்டு நிற்கின்ற சிவன் யாண்டும் பிரியாதே கூடி நிற்கின்றான்.

குறிப்புரை :

`பாலித்துப் பரந்து பெண்ணாகும்` என்பதை, `பெண் ணாகிப் பரந்து பாலிக்கும்` எனப் பின் முன்னாகவைத்து, விகுதி பிரித்துக் கூட்டிக் கொள்க. ஓலித்தல் - ஓலம் இடுல். `ஓலித்த` என்னும் அகரம் தொகுத்தல். வேலை - கடல். அஃது அதனாற் சூழப்பட்ட உல கிற்கு ஆயிற்று. ஈற்றடியைப் பிறவாறு ஓதுவன பாடம் ஆகாமை அறிக.
இதனால், மேற்கூறியவாறு சத்தி சிவனோடு கூடியே நிற்றல் போல, சிவனும் சத்தியோடுகூடியே நிற்றலைக் கூறி, இருமையின் ஒருமை வலியுறுத்தப்பட்டது.
``துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான்`` 1
என்றார் திருக்களிற்றுப்படியாரினும்.

பண் :

பாடல் எண் : 8

உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோ
டுகந்துநின் றான்நம் முழைபுக நோக்கி
உகந்துநின் றான்இவ் வுலகங்க ளெல்லாம்
உகந்துநின் றான்அவ டன்றோ டொகுத்தே.

பொழிப்புரை :

நம்பியாகிய சிவன் காமனை எரித்த நெற்றிக் கண்ணோடு நின்றே மேற்கூறிய நங்கையாகிய வேத முதல்வியை விரும்பி நின்றான். பின்பு அவளது தோள்களைத் தன் தோளோடு ஒன்றாகும்படிச் சேர்த்து மகிழ்ந்து நின்றான். இவை முறையே அவன் உயிர்களாகிய நம்மிடம் வருதல் குறித்தும் அனைத்து உயிர்களுக்கும் போகத்தைத் தருதல் குறித்துமாம்.

குறிப்புரை :

`இல்லையேல் அவை இயலா` என்பது கருத்து. மூன்றாம் அடிக்கு, `இவ்வுலகங்கள் எல்லாம் போகத்தை எய்த உகந்து நின்றான் ஆதலின்` என உரைக்க.
இதனால், `சிவன் தனது உண்மை நிலையில் அணியனல்ல னாயினும், உயிர்களின் பொருட்டு அணியனாதற்கும், போகியல்ல னாயினும் உயிர்கள் போகத்தை எய்துதற் பொருட்டும் சத்தியோடு மணந்து நிற்பன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி
புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்தது சொல்லகி லேனே.

பொழிப்புரை :

சத்தி பெண்ணியல்புகள் பலவும் தோன்ற நின்று சிவனை மணந்ததில் உள்ள கருத்து சொல்லுதற்கரிதாம்.

குறிப்புரை :

துத்தி - பாம்பின் படப்பொறி. விரிதல் - பரத்தல். `துத்தி போல விரிந்து சுணங்கு` எனவும், `புத்தகம் போலும் சீறடி` எனவும் விரித்துக்கொள்க. தொத்தல் - பற்றுதல் `தொகுத்த` என்பதன் விகார மாகக் கொண்டு, `உள்ளீடான` என்று உரைப்பினும் அமையும். சத்தி சிவங்களது குறிப்பு முழுதும் உயிர்களால் அறிதல் கூடாது என்பதாம். ``புணர்வினை`` என்பது இரண்டாவதன் விரியாக முன்னர்க் கூறிய பொருளும், வினைத் தொகையாகப் பின்னர்க் கூறிய பொருளும் அமைவனவாம்.
இதனால், சிவம் சத்திகளது ஆதார ஆதேயங்களாய் நிற்கும் அருட்பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

சொல்லவொண் ணாத சுடர்ப்பொதி மண்டலம்
செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்
வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி
மல்லவொண் ணாத மனோன்மனி தானே.

பொழிப்புரை :

அருள் ஒளி மண்டலம் உயிர்களது சொல்லுக்கு எட்டாதது. அதனால், அங்குச் செல்லமாட்டாது பலரும் திகைத்து நிற் கின்றார்கள். அம்மண்டலமாவாள் பிறரால் கடத்தற்கரிய செயல்களை உடையவளும், வலிந்து பற்றிக் கொள்ளவாராதவளும் ஆகிய சத்தியே.

குறிப்புரை :

``அங்கு`` என்றது, அவரவர் இருக்கும் இடத்தை. `வலிமை` எனப் பொருள்தரும் `மல்` என்னும் உரிச் சொல்லடியாக ``மல்ல`` என்னும் செயவெனச்சம் பிறந்தது.
இதனால், சத்தி ஒளி மண்டலமாய் நின்று அனைத்திற்கும் ஆதாரமாமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரை தண்கடற் கண்ணே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை)

குறிப்புரை :

``தான்`` என்றது சத்தியை. தாங்குதல், இடந்தருதல். மழை பொழி தையல், கங்காதேவி. எனவே, கங்கையை உமைக்கு மாற்றாள்போல வைத்துச் சொல்வனவெல்லாம் செய்யுளின்பம் படக்கூறும் கூற்றேயாதல் தெளியப்படும். வடவரை - மேருமலை. தலைமை பற்றி இதனைக் கூறவே பிறமலைகளும் கொள்ளப்படும். ``கண்`` என்பது, `இடம்` எனப் பொருள்தரும் பெயர்ச்சொல். எனவே, ``கடற்கண்`` என்பது இருபெயரொட்டாயிற்று. `தண்கடலாகுமே` என்பதும் பாடம்.
இதனால், சத்தி ஆதராமாய் நிற்கும் வகைகள் சில கூறப் பட்டன. மழை பொழி தையலாய் நிற்றல் உயிர்கள் அழியாதவாறு நிறுத்தலாம். இதனுள் ``தான்`` என்றதனைச் சிவத்திற்கு ஆக்கி, சிவ பரத்துவ அதிகாரத்திலும் இம் மந்திரத்தை, ``பொன்னாற் புரிந்திட்ட`` என்னும் மந்திரத்தின்பின் ஒருமுறை ஓதுவாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 12

கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணா
பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.

பொழிப்புரை :

எவ்விடத்தையும் தனதாக உடைய சத்தியைக் கூடி அவளுடன் எங்கும் வியாபகமாய் நின்ற அறிவர் சிவத்தன்மை பெற்றவர்; சீவத் தன்மையாகிய முனைப்பு நீங்கியவர். அதனால் பர வெளியில் நிற்பவராகிய அவரை மிக்க மேன்மை உடையவராக அறிந்து, மண்ணில், வாழ்பவராகிய மனிதரில் வைத்து எண்ணா தொழிதல் வேண்டும். (`விண்ணில் வாழும் கடவுளரில் வைத்து எண்ணல் வேண்டும்` என்றபடி).

குறிப்புரை :

``கண்`` என்பது மேலை மந்திரத்தில் வந்தவாறே வந்தது. இதற்கு, `விழி - நெற்றிக்கண்` என உரைத்தற்கு ஓர் இயை பின்மை அறிக. இரண்டாம் அடியில் நின்ற ஐகாரம் சாரியை. `மண் ணுடையாராகிய மனிதர்` என்க. பண் - பண்ணப்படுதல்; செம்மை யாக்கப்படுதல். இரண்டாம் அடியை இறுதியில் கூட்டியுரைக்க.
இதனால், சத்தியது ஆதாரமாய் நிற்கும் நிலையை உலகில் வைத்து உணர்பவர் ஏகதேச உணர்வு நீங்கி வியாபக உணர்வைப் பெறுதல் கூறப்பட்டது. சத்தியது ஆதார ஆதேயமாம் நிலையை உலகில் வைத்து உணர்தலை, `பாரயோகம்` என்பர்.

பண் :

பாடல் எண் : 13

கண்டெண் டிசையும் கலந்து வருங்கன்னி
பண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும்
விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டெண் டிசையும் தொழநின்ற கன்னியே.

பொழிப்புரை :

எல்லா உலகங்களையும் நினைவு மாத்திரத்தாலே உண்டாக்கி, அவை அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற சத்தி, அதற்கு முன்னே அவ்வுலகங்களைக் கடந்து நின்ற ஒரு சத்தியாய் இருப்பாள். அதனால், எட்டுத்திக்கில் உள்ளாரும் தாம் தாம் தமக்கு ஏற்ற பெற்றியால் மணம் பொருந்திய மலர்களைக் கையிலே கொண்டு தோத்திரங்களைச் சொல்லித் தொண்டுபட்டு அம்மலர்களைத் தூவித் தொழுகின்ற தேவி அப்பராசத்தியே யாவாள்.

குறிப்புரை :

கு-ரை: `அந்நிலையை அறியாதவர் வேறு வேறு தேவியராகக் கருதிச்செய்யும் வழிபாடுகளையும் ஏற்று அவர்கட்கு ஏற்ற பெற்றியால் அருள் புரிபவளும் அவளன்றி வேறில்லை` என்றபடி,
``யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்``1
என்னும் சிவஞான சித்தியை நோக்குக. காணல் - கருத்தாற் படைத்தல். `எண்திசையும் கண்டு` எனக் கூட்டுக. ``நிற்கும்`` என்பது இறந்த காலத்தில் நிகழ்காலம். இதன்பின் `அதனால்` என்பதும், இறுதியில் `அவளே` என்பதும் எஞ்சி நின்றன. இவ்வாறன்றி, மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, `தொழநின்ற கன்னி கலந்து வருங் கன்னியாம். அவள், பண்டு பராசத்தியாய் நிற்கும்` என உரைத்தலும் ஆம். இவ்வுரையில் மேற்கூறிய கருத்து உடம்பொடு புணர்த்தலாய் அமையும். மூன்றாம் அடியில் ``தசை`` ஆகுபெயர். ஈற்றடியில், `எண்டிசையிலும்` என்னும் உருபு விரித்துக் கொள்க. இதனால், சத்தி ஆதார ஆதேயமாய் நிற்றலின் பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

கன்னி யொளியென நின்றஇச் சந்திரன்
மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி யிருப்பிடம் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசத்தி யாமே.

பொழிப்புரை :

இறைவி அழியாத ஒளி வடிவாய் நிற்கும் இடம் இது போலும் பிறைவடிவம் பொருந்தியிருக்கின்ற ஆஞ்ஞைத் தானமாம். அது சிவந்த நிறத்தை உடைய தாமரை மலர் வடிவும் உடையது. அவள் தலையாகிய இருப்பிடத்தில், நிரம்பிய பதினாறு கலைகளை யுடைய சந்திரனோடு கூடியிருக்கும் பொழுது பராசத்தியாய் விளங்குவாள்.

குறிப்புரை :

என்றது, `சத்தி, ஆதாரயோகத்தில் ஒளியுருவாயும், நிராதார யோகத்தில் உருவம் அற்ற அருவப் பொருளாயும் நிற்பாள்` என்றதாம். கன்னி - அழியாமை, ``இச்சந்திரன்`` என்றது, `இவ்வாறு கன்னி ஒளியாயுள்ள சந்திரன்` என்றவாறு. இதில் கன்னிமை இளமையைக் குறித்தது. ``சந்திரன்`` என்றது அவனது வடிவைக் குறித்த ஆகுபெயர். `சென்னியாகிய இருப்பிடத்தில் இருப்ப` என இயையும். `இருப்பிடத்தில்` என்னும் சாரியை தொகுத்தலாயிற்று. முன்னர் `சந்திரன்` என வந்தமையால், ``பதினாறு`` என்பது அவனது கலைகளைக் குறித்தது. நிரம்பிய சந்திரன் போல்வதாய், `சந்திர மண்டலம்` எனப்படுவது, நெற்றிக்கு மேலிடத்துள்ள ஆயிர இதழ்த் தாமரை மலராகும். ``பன்னி`` என்பது, `பத்நி` என்னும் ஆரியச் சொல்லின் சிதைவு. இதனையே முதற்கண் கொண்டு உரைக்க. ``பராசத்தி`` என்பது, `உருவத்தைக் கடந்தவள்` என்னும் அளவினதாய் நின்றது.
இதனால், சத்தியது ஆதார ஆதேயமாய் நிற்கும்நிலை உடலில் வைத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

பராசத்தி என்றென்று பல்வகை யாலும்
தராசத்தி யான தலைப்பிர மாணி
இராசத்தி யாமள ஆகமத் தாள்ஆங்
குராசத்தி கோலம் பலஉணர்ந் தேனே.

பொழிப்புரை :

`பராசத்தி` என்றே பல வகையிலும் பன்முறை துதிக்கப்பட்டு எல்லாவற்றிற்கும் ஆதார சத்தியாய் நிற்கின்ற, வேதத் தின் வழி அறியப்படுகின்ற அவளே முழுமுதற் சத்தியாம். அவளை யாமள ஆகமம் பலபடக் கூற, அவ்வாறும் பல்கி நின்ற அவளது பல கோலங்களையும் யான் அவளது அருளாலே அறிந்தேன்.

குறிப்புரை :

``என்று`` என்பது, `எனப்பட்டு` எனப் பொருள் தந்தது. `பல்வகையானும் பராசத்தி என்றென்று` என மாற்றி உரைக்க. அடுக்கு, பன்மை குறித்தது. தலைப்பிரமாணம் - தலையாய நூல். அது வாயிலாக அறியப்படுபவளை, ``தலைப்பிரமாணி`` என்றார். `இரா சாத்தி` என்பது குறுகிநின்றது. இராணியை `இராசாத்தி` என்றல் நாட்டு வழக்கு. யாமள ஆகமம் வாம மார்க்கத்ததாய்ச் சத்தியின் வடி வங்களைப் பலப்படக் கூறி, அவற்றிற்குரிய வழிபாடுகளையும் பலபட விதிக்கும். அந்நிலையில் நிற்பாரையும் உய்வித்தல் சத்திக்குக் கடப்பாடாதலின், அவ்வாறு நின்று அவர்கட்கும் அருள்புரிதல் பற்றி, ஆங்கு ``உரா சத்திகோலம் பல உணர்ந்தேன்`` என்றார். உராவுதல் பரந்து தோன்றல். `உராவு` என்பது குறைந்து நின்றது, `உராவு கோலம்` என இயையும். முருகனும் இவ்வாறு தாழ் நிலையில் நின்று செய்வாரது வழிபாட்டினையும் ஏற்று, அவர்க்கு ஏற்றவாறு அருள் புரிதலைத் திரு முருகாற்றுப்படை ``சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து`` என்பது முதலாகப் பல அடிகளால் உணர்த்துதல் காண்க. `ஆகமத் தாளாக` என ஆக்கம் விரிக்க.
இதனால், சத்தி தன்னை அறிவார் அறிந்த வாற்றான் வழி படும் இடங்களில் எல்லாம் ஆதார ஆதேயங்களாய் நின்று அவர வர்க்குத் தக அருள் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

உணர்ந்துல கேழையும் யோகினி சத்தி
உணர்ந்துயி ராய்நிற்கும் உன்அதன் ஈசன்
புணர்ந்தொரு காலத்துப் போகம(து) ஆதி
இணைந்து பரமென் றிசைந்திது தானே.

பொழிப்புரை :

சிவன் தனது சங்கற்ப மாத்திரையானே தோற்று வித்த ஏழு உலகங்களையும், அவ்வுலகத்தோடே பொருந்துவதாகிய சத்தி, தான் அறிந்து, அவற்றிற்கு உயிராய், அவைகளோடு கலந்து நிற்கும். அங்ஙனம் நிற்கின்ற அச்சத்திக்குச் சத்தனாய் நிற்கின்ற இறைவன் அச் சத்தியை மணந்த பொழுதே உயிர்கட்குப் போகம் அமையும். அச் சிவத்தோடு இணைந்து நின்ற இச்சத்தியே உலகிற்குத் தலைமையாவது.

குறிப்புரை :

`என்றது, சத்தி படைப்புக் காலத்தில் இறைவனது சங்கற்பரூப ஆதி சத்தியாய் நின்று உலகைத் தோற்றுவித்துப் பின் யோகினி சத்தியாய் உலகெங்கும் வியாபித்துப் பின் இறைவனோடு இணைந்து நின்று போக சத்தியாகி உலகிற்குப் போகத்தைத் தந்து, உலகிற்குத் தலைமை பூண்டு நிற்கின்றது` என்றவாறு. முதலடி மூன்றாம் அடிகளில் `உணர்ந்த, புணர்ந்த` என்னும் பெயரெச்சத்து அகரங்களும் தொகுத்தலாயின. `இசைந்த` என்பதன் அகரமும் அன்னது. `யோக சத்தி` எனின் பிறிது பொருள் படுமாகலின் `யோகினி` என்றார். எனவே, இதனை யாமள தந்திரங் கூறும் யோகினிகளாகக் கொள்ளுதல் பொருந்தாமை அறிக. `அதனோடு` என உருபு விரிக்க. ஆதி, பரம் இவை இங்குத் தலைமை. `இதுதானே ஆதி` என மேலே கூட்டி முடிக்க.
இதனால், `சத்தி `யோகினி` என நின்று ஆதார ஆதேயங் களாய்ப் போகத்தைப் பயப்பித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

இதுவப் பெருந்தகை எம்பெரு மானுள்
பொதுவக் கலவியுள் போகமு மாகி
மதுவக் குழலி மனோன்மனி மங்கை
அதுவக் கலவியுள் ஆயுழி யோகமே.

பொழிப்புரை :

`போகத்தைத் தருவது` என மேற்கூறப்பட்ட இம் மறைப்புச் சத்தி சிவனுடன் உயிர்கட்கெல்லாம் பொதுவாயுள்ள போகக் கலப்பில் நின்று போகத்தைத் தந்து `அருட்சத்தி` என்னும் அந்தச் சத்தியாய் அச்சத்திக்கும் சிவத்திற்குமே சிறப்பாய் உள்ள அந்த அருட்கலவியுள் நின்றவழி உயிர்கட்கு யோகம் உளதாகும்.

குறிப்புரை :

`போகமும்` என்னும் உம்மை இழிவு சிறப்பு. அனுக் கிரக மூர்த்திதன் சத்தியின் பெயராகிய `மனோன்மனி` என்பது, இங்கு `அருட்சத்தி` எனப் பொருள் தந்தது. அது - அந்நிலை. `அதுவாய்` என ஆக்கம் வருவிக்க. `அக்கலவி` என்னும் சுட்டு, அவர்கட்கே உரித்தாகி, சிறப்புணர நின்றது. `பொதுவக் கலவி, மதுவக் குழல்` என்பவற்றில் அகரம் விரித்தல். ``பொதுக்கலவி`` என்றது, `பொதுக்கலவி போலும் படிக் கலக்கும் கலவி`` என்றவாறு. இதனுள் முன்னிரண்டடி அனு வாதம். ``ஆயுழி`` என்பது முன்னரும் சென்று இயைந்தது.
இதனால், சத்தி ஆதார ஆதேயங்களாய் நின்று உயிர்கட்கு யோகத்தைப் பயக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

யோகநற் சத்தி ஒளிபீடந் தானாகும்
யோகநற் சத்தி ஒளிமுகம் தெற்காகும்
யோகநற் சத்தி உதரம் நடுவாகும்
யோகநற் சத்திதாள் உத்தரம் தேரே.

பொழிப்புரை :

`போகசத்தி, யோகசத்தி` என்னும் இருசத்திகளில் யோக சத்திக்கு வானத்தில் சூரியனும், பூமியில் வேள்வித்தீயும் ஆசனமாகும். அவ்வாசனங்களின்மேல் அவள் தெற்கு நோக்கிய முகத்துடன் உடம்பை நடுவில் வைத்துக் கால்களைப் பாதங்கள் வடக்குநோக்க மடக்கி நீட்டிக்கிடந்த கோலமாய் இருப்பாள். இதனை அறிந்து வழிபடுக.

குறிப்புரை :

தெற்கு நோக்குதல், வழிபடுவோர்க்கு அருளுதற் பொருட்டு. கிடத்தல், தாயாகிய தான் தன்னை வழிபடுவோராகிய மகவுகளை யோகத்தில் ஆழ்த்தற்பொருட்டு. யோகம் வேண்டுவோர் இச்சத்தியை இங்ஙனம் சூரிய மண்டிலத்திலும், வேள்வித்தீயிலும் கண்டு வழிபடின் பயன்பெறலாம் என்றமை அறிக. முதலடியில், `சத்திக்கு` என்னும் உருபு தொகுத்தலாயிற்று.
இதனால், சத்தி யோகியர்க்குச் சில ஆதாரங்களில் நின்று பயன்தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

தேர்ந்தெழு மேலாம் சிவனங்கி யோடுற
ஆர்ந்தெழு மாயையும் அந்தம தாய்நிற்கும்
ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிடக்
கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.

பொழிப்புரை :

யோக சத்தி யோகத்தை விரும்புவர்க்கு அதனை அருளுமாற்றை யறிந்து சிவாக்கினியோடு பொருந்தி நிற்பின், பல்வேறு வகையாய்ப் பரிணமித்து நின்று பந்திக்கின்ற மாயை அங் ஙனம் பந்தத்தைச் செய்தலைத் தவிர்ந்து, ஞானத்திற்குத் துணையாய் நிற்கும். அதன்பின் விந்து நாதங்களின் வடிவாய் உள்ள குண்டலி சத்தி துயிலெழுந்து மேலோங்கிச் செல்லுமாறு யோகசத்தி மேலும் அருள் மிகுந்து நிற்பாள்.

குறிப்புரை :

அக்கினியைச் `சிவாக்கினி` என்று கூறவே, சூரியனும் `சிவசூரியன்` என்பது பெறப்பட்டது. ``கோல் வளைதான்`` என்பதை முதலில் வைத்து உரைக்க.
இதனால், யோகசத்தி மேற்கூறியவாறு நிற்றலால் வரும் பயன் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

தானான வாறெட்ட தாம்பரைக் குள்மிசை
தானான வாறும்ஈ ரேழும் சமகலை
தானான விந்து சகமே பரமெனும்
தானாம் பரவா தனையெனத் தக்கதே.

பொழிப்புரை :

சத்திக்குத்தானே அதுவாய் நின்று அருள்செய் கின்ற சிறந்த ஆதாரம், உள்ளே எட்டாயும் வெளியே பதினான்காயும், இடையில், `இரண்டு பத்து` என்னும் சம அளவினவாயும் உள்ள கோணங்களை உடைய சக்கரமாகும். இச்சக்கரம் சொல்லும், பொரு ளும் ஆகிய இருவகை உலகங்களாயும், அவற்றைச் செயற்படுத்து கின்ற கடவுளராயும், அக்கடவுளரது செயல்களாயும் விளங்கும்.

குறிப்புரை :

`ஆதலின் அச்சக்கரத்தில் சத்தியை வழிபடுதல் தக்கது` என்பது குறிப்பெச்சம். இங்குக் குறிக்கப்பட்ட சக்கரம் ஷ்ரீசக்கரமாகும். இது மேல்நோக்கிய முனைகளையுடைய முக்கோணம் நான்கு, கீழ் நோக்கிய முனைகளையுடைய முக்கோணம், நான்கு, நடுமுக்கோணம் ஒன்று இவை ஒன்பதும் வேறு வேறாய்த் தோன்றாது ஒன்றினுள் ஒன்று கோத்து நிற்கும் வண்ணம் உபதேச முறையால் வரையப்பட்டு, நடுக் கோணத்தில் விந்துப்புள்ளி இடப்படும். மேலும், பதினான்காய் உள்ள வெளிக் கோணங்களைச் சுற்றி எட்டிதழ்த் தாமரையும், அதனைச் சுற்றி ஒருவட்டமும், அதற்குமேல் பதினாறு இதழ்த்தாமரையும், அதற்கு மேல், மேல் மூன்று வட்டங்களும் வரைந்து, எல்லாம் ஒரு நாற் கோணத்தின்மேல் அமைந்துள்ளதாக வரையப்படும். நாற்கோண மேடையை, `பூ புரம்` என்பர். 1
இவற்றுள் மேல் நோக்கிய முனைகளையுடைய முக் கோணங்கள் சிவ கோணங்களும் கீழ்நோக்கிய முனைகளையுடைய முக்கோணங்கள் சத்தி கோணங்களுமாகும். இவற்றுள் நடு முக் கோணம் மேல் நோக்கியிருப்பது, சிருட்டிக்கிரம சக்கரமும், கீழ் நோக்கி யிருப்பது சங்காரக் கிரம சக்கரமும் ஆகும்.
இப்பாட்டில் நாயனார் நடுக்கோணம் ஒழிந்த நாற்பத்திரண் டினைக் குறித்தார். எனவே, `நடுக்கோணத்தையும் கூட்ட இச் சக்கரத்தில் அமையும் முக்கோணம் நாற்பத்து மூன்றாம், என்பது தெளி வாகும். சத்திக்குரிய சக்கரங்கள் அனைத்தும் இதனுள் அடங்கும் என்பதுபற்றி இது `ஷ்ரீசக்கரம்` எனப்படுகின்றது.
இதில் எழுதப்பட வேண்டிய எழுத்துக்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், சத்திக்குரிய பொதுச் சக்கரம் ஆதலின், பின்வருமாறு கொள்ளுதல் பொருந்தும்.
பூ புரமாகிய நாற்கோணத்தில் மேற்பக்கம் தொடங்கி வலமாக `ஓம், ஐம், க்லீம், ஸௌ`: என்பனவும், பதினாறு இதழ்களில் ஓம் என்ப தன் கீழ் `ஷ்ரீம்` என்பதும், அதனையடுத்து வலமாக, ககாராதி பஞ்சத சாட்சரங்களும், எட்டிதழ்களில் `ஷ்ரீம்` என்பதன் கீழ்முதல் வலமாக வும், அங்ஙனமே பதினான்கு கோணம், வெளிப்பத்துக் கோணம், உட்பத்துக் கோணம், உள் எட்டுக் கோணம் என்னும் ஐம்பது கோணங் களிலும் ளகாரம் நீக்கி ஏனை அகராதி ஐம்பதெழுத்தும், நடுக்கோணத் தில் பிரணவமும், விந்துவில், `ஹ்ரீம்` என்பதும் எழுதப் படலாம். பிறவகை சொல்லப்படின் ஏற்பது கொள்க. `பஞ்சத சாட்சரங்களில் சிவாட்சரங்களும் உள` எனவும், ஷ்ரீசக்கர கோணங்களில் சில கோணங்களும், விந்துவும் சிவாம்சங்கள் எனவும் கூறப்படுதல் அறிக. இன்னும் பஞ்சதசாட்சர அம்சங்கள் முப்பத்தேழும் முப்பத்தாறு தத்துவமும், தத்துவாதீதப் பொருளும் ஆகும் எனப் படுதலும் காண்க.
இங்ஙனம் இச்சக்கரம் அனைத்தையும் தன்னுள் அடங்கக் கொண்டிருத்தல் பற்றி, ``விந்து, சகம், பரம்`` எனவும், ``பரவாதனை`` எனவும் சொல்லத் தக்கது என்றார். விந்து - வாக்கு; சொற்பிரபஞ்சம். பரவாதனை - கடவுளர்தம் அதிகாரம். ``பரைக்கு`` என்பதை முதலிற்கொண்டு உரைக்க. ``தானானவாறும்`` என்னும் உம்மையை, ``சமகலை`` என்பதனோடு கூட்டுக.
இதனால், சத்தி தன்னை வழிபடுவார் பொருட்டுக் கொள்ளும் ஆதார ஆதேயங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 21

தக்க பராவித்தை தான்இரு பானேழில்
தக்கெழும் ஓர்ருத்தி ரஞ்சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண்சத்தி வெண்ணிற முக்கண்ணி
தொக்கதை யோடுதொன் முத்திரை யாளே.

பொழிப்புரை :

ஷ்ரீசக்கரத்தில் சத்தியை வழிபட்டு, அவளுக்கு உரிய மந்திரங்களில் எந்த ஒரு மந்திரத்தையேனும் திரும்பத்திரும்பச் சொல்லி உருவேற்றினால், வெண்ணிறமும், மூன்று கண்களும், திரு மேனி அழகும், அபய வரத முத்திரைகளும் உடையவளாகிய ஞான சத்தியாகிய மனோன்மனியே ஏனை வாமாதி எண் சத்திகளாயும் மிகத்தோன்றி அருள்புரிவாள்.

குறிப்புரை :

சக்கரத்தையே ``வித்தை`` என்றார். இருபத்தேழு, ஒன்பது முக்கோணங்களிலும் உள்ள கீற்றுகள். இஃது ஆகுபெயராய் அவற்றாலாகிய சக்கரத்தை உணர்த்திற்று. காரணக் குறியாக மந்திரத் தினையே ``ருத்திரம்`` என்றார். ஷ்ரீசக்கர வழிபாட்டிற்குரிய ஷ்ரீவித் தியா மந்திரம், ``யாம் - ராம் - லாம் - வாம் - ஸாம் - த்ராம் - த்ரீம் - க்லீம், - ப்லூம் - ஸ: ஸர்வ ஜம்பநேப்யோ காமேஸ்வரீ காமேஸ்வர பாணேப்யோநம: பாண சக்தி பாதுகாம் பூஜயாமி`` என்பது.
இனி, ``ஓர் ருத்திரம்`` என்பதற்கு `தேவிக்குரிய யாதேனும் ஒரு மந்திரத்தை` எனப் பொருள் உரைத்தலுமாம். தொக்கு - மெய்; உடம்பு. ஐ - அழகு.
இதனால், ஷ்ரீசக்கர வழிபாடாகிய ஷ்ரீவித்தை சத்தியின் எல்லா வழிபாட்டுப் பயனையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள்
தத்துவ மாய்அல்ல வாய சகலத்தள்
வைத்த பராபர னாய பராபரை
சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே.

பொழிப்புரை :

மலரில் மணம் போலச் சிவத்தில் வேறாகாது நிற்பவளாகிய சத்தி மூன்று பிரிவுகளாய் அமைந்த பஞ்ச தசாட்சரி (பதினைந் தெழுத்து) மந்திரத்தில் முற்ற விளங்குகின்ற மெய்ஞ்ஞான வடிவினள்; தத்துவங்களாயும், அவை யல்லவாயும் எல்லாமாய் இருப்பவள்; வேதம் முதலிய நூல்கள் பலவும் முடித்துக் கூறுகின்ற சிவனோடு ஒன்றான சிவையாய் விளங்குபவள்; அருட் சத்தியும், ஆனந்த சத்தியுமானவள்.

குறிப்புரை :

கொங்கு - மணம்; உவமை யாகுபெயர். இதனை முதலிற் கொண்டு உரைக்க. பஞ்சதசாட்சரத்தின் உட்கூறுகளே தத்துவ மாயும், தத்துவாதீதப் பொருளாயும் நிற்றல்மேலே கூறப்பட்டது. `முத்திரை மூன்று` என்பதற்கு வேறு பொருள் உரைப்போர், இரண்டாம் அடிஈற்றில் `ச-க-ல` என்று பிரித்து, அதனைப் பஞ்ச தசாட்சரியின் மூன்றாம் பிரிவாகக் கொள்வர். பஞ்ச தசாட்சரங்களை நாயனார் புவனாபதி சக்கர அதிகாரத்தின் முதலிற் குறிப்பிடுவார்.
இதனால், ஷ்ரீசக்கரத்தில் விளங்கும் சத்தியது பெருமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 23

கொங்கீன்ற கொம்பிற் குரும்பை குலாங்கன்னி
பொங்கிய குங்குமத் தோளி பொருந்தினள்
அங்குச பாசம்எனும் அகி லம்களி
தங்கும் அவள்மனை தானறி வாயே.

பொழிப்புரை :

`நறுமணத்தை வெளிப்படுத்துகின்ற பூங்கொம்பில் தென்னங்குரும்பைகள் விளங்குவது போலும் தோற்றத்தையுடைய கன்னிகையாகிய சத்தி, குங்குமம், பூசப்பட்ட தோள்களை உடை யவள்` என்றும், அங்குச பாசங்களை ஏந்தியவள்` என்றும், `அவளது மகிழ்ச்சியுள்ள கோயில் அகில உலகங்களும்` என்றும் உண்மை நூல்கள் கூறும். இதனை அறிந்து போற்றுவாயாக.

குறிப்புரை :

உடம்பு பூங்கொம்பு போலவும், தனங்கள் குரும்பை போலவும் இருத்தலை முதலடியில் இல்பொருள் உவமையாகக் குறித்தார். `அங்குச பாசம் பொருந்தினள்` என்க. ``எனும்`` என்பதை ``அவள் மனை`` என்பதன்பின் கூட்டியுரைக்க. அறிதல், இங்கு அதன் காரியமும் உடன் தோன்ற நின்றது.
இதனால், ஷ்ரீசக்கரத்தில் விளங்கும் தேவியது வடிவம் கூறப்பட்டது. எனவே, அகிலமாவது, இச்சக்கரத்தில் பூபுரமாம்.

பண் :

பாடல் எண் : 24

வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமும் ஆமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை).

குறிப்புரை :

இப்பொருள் மேலேயும் குறிக்கப்பட்டது. ``தாய்`` எனல், சத்தி தத்துவ சத்தியினின்று சதாசிவன் தோன்றுதல் பற்றி. ``மகள்`` எனல், சிவ தத்துவ சிவத்தினின்று மேற்கூறிய சத்தி தத்துவ சத்தி தோன்றுதல் பற்றி. ``தாரம்`` எனல், யாண்டும் சத்தனுக்குச் சத்தியாய் நிற்றல் பற்றி. வாய் - வாக்கு. கணம் - பூதக் குழாம்.
இதனால், சத்தி சிவனுடன் பல்வேறு வகையில் இயைந்து நின்று செயலாற்றுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

தாரமும் ஆகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகும் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே.

பொழிப்புரை :

(இதன் பொருளும் வெளிப்படை).

குறிப்புரை :

தத்துவம் - முதற்பொருள். தாய் நிலை காரணமும், மகள் நிலை காரியமும் ஆதல் அறிக. கலப்புச் சிவனோடென்பது வெளிப் படை. பூரணம் - பெரு வியாபகம். விந்து - சுத்த மாயை. `விந்துவிற் பொதிந்த` என்க. புராதனி - பழமையானவள். பார் - உலகம். அளவு - எல்லை. உடையாள் - தன்னுடையனவாக உடையவள்.
இதனால், மேலதனை வேறோராற்றால் விளக்கி, சத்தி உலக நாயகியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

பத்து முகமுடை யாள்நம் பராசக்தி
வைத்தனள் ஆறங்கம் நாலுடன் தான்வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே.

பொழிப்புரை :

பத்துத் திசைகளையும் நோக்கிய பத்து முகங்களை உடையவளாகிய, நமக்குத் தலைவியாம் பராசத்தி நம் பொருட்டு நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் ஆக்கி வைத்து, அவற்றிற் கூறப்பட்ட பொருளாகியும் நின்றாள். அத்தகைமைய ளாகிய அவள் ஒப்பற்ற ஓர் ஆதாரமாகிய ஷ்ரீசக்கரத்தில் நீங்காது நிற்கின்றாள். அவளை அந்நூல்களின் வழிப்போற்றுக.

குறிப்புரை :

`வேதம் நாலுடன் தான்வைத்தனள்` என இயைக்க. ஒத்தல் - தான் வைத்தற்கு ஏற்ப இருத்தல். முன்னர், ``வைத்தனள்`` என்றும், ``ஒத்தனள்`` என்றும் கூறிப்போந்தமையின், கூறுதல் அவற்றின் வழியதாயிற்று. ``நேரிழை`` என்பதில் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று.
இதனால், `ஷ்ரீசக்கரத்தில் தேவியை வேத நெறியான் வழிபடுக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

கூறிய கன்னி குலாய பருவத்தள்
சீறிய ளாய்உல கேழுந் திகழ்ந்தவள்
ஆறிய நங்கை அமுத பயோதரி
பேறுயி ராளி பிறிவறுத் தாளே.

பொழிப்புரை :

மேற் சொல்லப்பட்ட சத்தி இளமையான தோற்றத்தையுடையவள்; ஏழுலகிலும் நுண்ணியளாய் நிறைந்தவள்; அடக்கமான பெண்மை இயல்புடையவள்; அமுதமயமாம் பால் நிறைந்த தனங்களை உடையவள்; வீடு பெறுதற்குரிய உயிர்களை ஆட்கொண்டு, அவை தன்னை விட்டுப் பிரிதலை நீக்குபவள்.

குறிப்புரை :

`சிறியள்` என்பது நீட்டலாயிற்று. இம் மந்திரத்தின் எல்லா அடிகளையும் ரகர எதுகைப் படவும், ஒன்றிரண்டு அடிகளை அவ் எதுகைப் படவும் பாடம் ஓதி, அவற்றிற்கேற்ப உரைப்பாரும் உளர். அவர், மேலைமந்திரத்தின் இறுதிச் சீரினையும் `கூரே` எனப்பாடம் ஓதுவர். அவையெல்லாம் சிறவாமை அறிந்துகொள்க.
இளமைப் பருவ சத்தி, `வாலை, வாலாம்பிகை` (பாலை, பாலாம்பிகை) எனப்படுவாள்.
இதனால், சத்தி பக்குவிகளுக்குச் சிறந்த தலைவியாய் வீடு பேறளித்தல் கூறப்பட்டது. இதனானே, ஷ்ரீவித்தை வீடுபேற்றையும் தருதல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பெண்பிள்ளை
குறியொன்றி நின்றிடும் கோமளக் கொம்பு
பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே
அறிவொன்றி நின்றனள் ஆருயி ருள்ளே.

பொழிப்புரை :

சிவத்தோடு வேற்றுமையின்றி நிற்பவளாகிய சத்தி அடியவரது தியானத்திலே பொருந்தி விளங்குகின்ற அழகிய பூங் கொம்பு போன்றவள்; அதனால், முன்னர் மனம் முதலிய அந்தக் கரணங்களின் வழியே தலைப்பட்டுப் பின்னர் உயிர்களினது அறிவுக் கறிவாய் விளங்குவாள்.

குறிப்புரை :

குறி - இலட்சியம்; தியானம். பொறி - அந்தக்கரணம்.
இதனால், சத்தி முதற்கண் தியானத்தில் விளங்கிப் பின் அறிவினுள் விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

உள்ளத்தி னுள்ளே உடனிருந் தைவர்தம்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளற் றலைவி மருட்டிப் புரிந்ததே.

பொழிப்புரை :

தன்னைக் கூடியதனால் விளைகின்ற இன்பத்தை யுடைய வள்ளலாகிய சிவனுக்குத் தேவியாய் உள்ள சத்தி அடி யேனைத் தன்வசப்படுத்தித் தவநெறியை அடையச்செய்தது, என் உள்ளத்திலே நின்று ஐம்புலக்கள்வர் தம் கள்ளத்தைப் போக்கி இரண்டறக் கலந்து, என்றும் உடனாய் இருந்ததாம்.

குறிப்புரை :

தலைவி என்னை மருட்டி, யான் தவநெறி கொள்ளப் புரிந்தது, இருந்து, நீக்கி, கலந்து, புல்கி, எனக் கூட்டி முடிக்க. `இஃது அவளை வழிபட்டதன் பயன்` என்பது குறிப்பெச்சம். எதுகை நோக்கி, ``வள்ளல்`` என்பதன் ஈறு கெடாது திரிந்து நின்றது.
இதனால், சத்தி தன்னை வழிபடுபவரை மலத்தின்வழிச் செல் லாது தடுத்துத் தன்வழிப்படுத்தித் தவநெறியருளுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி யிருந்த புதல்வி பூவண்ணத்
திருந்த இலக்கில் இனிதிருந் தாளே.

பொழிப்புரை :

உயிர்களுக்கு நலம் செய்ய விரும்பி அங்ஙனமே செய்துவருகின்ற போக சத்தி, உயிர்களிடத்துத் தான் தங்கியிருந்து ஆக்க இருக்கின்ற இன்பம் இது என்பதனை உலகர் ஒருவரும் அறிய மாட்டார். பூவில் நிறம்போல உயிர்களிடத்தில் பொருந்தியிருக்கின்ற அவள், தான் அவ்வாறிருக்கின்ற குறிக்கோளினின்றும் சிறிதும் மாறுபடாமலே இருக்கின்றாள்.

குறிப்புரை :

`இருந்தருள் செய்கின்ற இன்பம் வீட்டின்பமே; உலக இன்பம் அன்று` என்றதாம். இருந்த இலக்கும் அதனைத் தருதலேயாம். ``புதல்வி`` என்பது முறை சுட்டாது, இளமை குறித்து நின்றது. `பூவில் வண்ணம்போல` என்பது ஒன்றாய்க் கலந்திருத்தற்கு உவமை.
``பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணும் சுவையும்போல் எங்குமாம் - அண்ணல்தான்`` 1
என்றது காண்க.
இதனால், சத்தியது குறிக்கோள் வீட்டின்பத்தைத் தருதலே யாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

இருந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி
திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னி
நிரந்தர மாகிய நீர்திசை ஓடு
பொருந்த விலக்கில் புணர்ச்சி அதுவே.

பொழிப்புரை :

சத்தி, யான் உள்ளம் திருந்தித் தன்னை அடைய விரும்பிய நிலையில் அந்நிலையை நன்குணர்ந்து அவளும் எனது உள்ளத்தை விரும்பி, அதன்கண் இருப்பாளாயினாள். அவ் இருப்பு, இடையறாது ஓடும் நீர், தான் ஓடுகின்ற திசையை நோக்கி ஓடும் ஓட்டத்தை ஒப்ப இடையறாது இருக்கும் இருப்பாம்.

குறிப்புரை :

``திருந்து புணர்ச்சியில்`` என்பதில், `புணர்ச்சி` என்பது அதனை விரும்பி நின்ற காலத்தைக் குறித்தது.
இதனால், சத்தி பக்குவான்மாக்களது உள்ளத்தையே விரும்பி அவற்றில் இடையறாது விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே.

பொழிப்புரை :

`எனக்கு அது வேண்டும், இது வேண்டும்` என்று அவாவுகின்ற அவாவை விடுத்து, சந்திர மண்டலத்தில் உள்ள ஆயிர இதழ்த்தாமரையில் விளங்குபவளாகிய சத்தி விளக்கியருளிய மூன்று மண்டலங்களில் உள்ள பொருள்களைப் போற்றி செய்து சுழுமுனை யில் நின்று பொருந்த நோக்கினால் விதியையும் வெல்லுதல் கூடும்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலடியின் பின்னர்க் கூட்டியுரைக்க. சுழு முனையை, ``சுழி`` என்றார். மண்டலம் மூன்றாவன அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம். இவை `உடம்பில் உள்ளன` என்பது அடுத்த மந்திரத்தில் கூறப்படும். ``மூன்று`` என்பது இடவாகுபெயர்.
இதனால், சத்தியது குறிக்கோள் நிறைவுறுதற்கு யோக சாதனை வேண்டப்படுதல் கூறப்பட்டது. இதன்கண் மண்டலமாகிய ஆதாரமும், அவற்றின்கண் உள்ள ஆதேயமும் கூறப்பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 33

மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம்
ஏன்றுள ஈரா றெழுகலை உச்சியில்
தோன்றும் இலக்குற லாகுதல் மாமாயை
ஏன்றனள் ஏழிரண் டிந்துவொ டீறே.

பொழிப்புரை :

மேற்கூறிய மூன்று மண்டலங்களும் அசுத்த மாயையின் காரியங்களாய் நிற்கும் உடம்பில் உள்ள இடங்களே. எனினும், உச்சிக்கு மேல் பன்னிரண்டங்குலத்தில் உணர்வு செல்லின் அது சுத்த மாயையைப் பொருந்தியதாகும். அங்ஙனம் உணர்வு செல்லும்பொழுது சத்தி, பிராசாத கலைகள் பதினாறில் ஒன்பதை ஏற்றுச் சந்திர மண்டலத்தைக் கீழ்படுத்தி நிற்பாள்.

குறிப்புரை :

ஆறு ஆதாரங்களில் மூலாதாரம் முதல் சுவாதிட்டானம் முடிய அக்கினி மண்டலமும், சுவாதிட்டானத்திற்குமேல் விசுத்தி முடியச் சூரிய மண்டலமும், விசுத்திக்கு மேல் பிரமரந்திரம் முடியச் சந்திர மண்டலமும் ஆதலின், `மூன்று மண்டலங்களும் உடம்பினுட் பட்டன` என்றார். `உச்சியின் ஈராறாய் எழுதலையில் தோன்றும் இலக்கு` என்க. கலை - கூறு; அங்குலம். இவ்வாறன்றி, `பிராசாதகலை பன்னிரண்டு, என உரைப்பின், அதற்கு அப்பால் உள்ளது பரசிவம் ஆதலின்` அதனை, ``மாமாயை`` என்றல் கூடாமை அறிக. ஆதார யோகத்தில் சவிகற்ப உணர்வு உடம்பைப் பற்றாது விடுதல் இன்றி, நிராதார யோகத்திலே அதனை விட்டு நீங்குதலின், அது நாத மாத்திரை யாம் மாமாயை ஆயிற்று. பிராசாத கலைகளில் ஒன்பதாவதாகிய சத்தி கலையே ஆதாரத்தைக் கடந்த முதற்கலையாதலின், ``ஏழிரண்டில், இந்துவொடு ஈறாக ஏன்றனள்`` என்றார். ஒடு, எண்ணொடு. `முன்னர் இந்துவை ஏன்று, பின் அஃது ஈறாதலை ஏன்றனள்` என்க. ஈறாதல், கீழ்ப்படுதல். பிராசாத ககைளின் விளக்கம் மேல், 696 ஆம் மந்திர உரையில் தரப்பட்டது.
இதனால், சத்தி ஆதார நிராதாரத்தானங்களில் நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

இந்துவி னின்றெழும் நாதம் இரவிபோல்
வந்துபின் நாக்கின் மதித்தெழும் கண்டத்தின்
உந்திய சோதி இதயத் தெழும் ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறது தானே.

பொழிப்புரை :

பிறை வடிவாயுள்ள ஆஞ்ஞை எல்லையினின்று மேலெழுந்து நுணுகிச் செல்கின்ற நாதம், (வாக்கு) கீழே வந்து, நாவினால் பிராணவாயு அலைக்கப்படும் பொழுது பரு வடிவினதாய்ச் செவிக்குப் புலனாகிக் கேட்போருக்கும் பொருளை இனிது விளங்கச் செய்யும் முடிவு மொழியாம். ஆகவே, கண்டத் தானத்தில் உதான வாயுவால் உந்தப்பட்டுச் சொல்வோனுக்கு மட்டும் பொருள் விளங்க நிற்கின்ற இடைமொழியும், அங்ஙனம் உதான வாயுவாலும் உந்தப் படாமல் இதயத்தானத்தில் பொதுமையில் விளங்கியும் விளங்காதும் நிற்கும் முதல்மொழியும், ஆஞ்ஞை எல்லையினின்று மேலெழும், எனப்பட்ட, ஒடுக்கமாகிய அந்த நாதத்தின் விரிவேயாகும்.

குறிப்புரை :

முடிவுமொழி `வைகரி வாக்கு` என்றும், இடைமொழி மத்திமை வாக்கு என்றும், முதல் மொழி `பைசந்தி வாக்கு` என்றும் சொல்லப்படும். `நாதம்` எனப்படுகின்ற அதுவே இவ்வாறு `பைசந்தி, மத்திமை, வைகரி` என மூவகை நிலையாய் விரியும் என்பது இங்குக் கூறப்பட்ட பொருளாகும். இம்மூவகை வாக்குகளும் இங்ஙனம் தோன்றவும், ஒடுங்கவும் உள்ள சுத்த மாயையின் பகுதியே `நாதம்` எனப்படுவது என்பார், ``நாதம் நாக்கின்மதித்தெழும்`` எனவும், ``கண்டத்தின் உந்திய சோதியும், இதயத்தெழும் ஒலியும் இந்துவின் மேல் உற்ற ஈறு அதுவே`` எனவும், கூறினார்.
பொருளை விளங்கச் செய்தல்பற்றி வாக்குகளை இரவிபோல் எழுவதாகவும் சோதியாகவும் கூறினார். இவை பற்றிப் பிறிது பொருள் தோன்றி மயக்காமைப் பொருட்டு, ``ஒலி`` என்று வெளிப்படக் கூறினார். ``இரவிபோல்வது`` எனவும் ``சோதி`` எனவும் கூறப் பட்டவை இனிது பொருள் விளங்க நிற்பனவும், ``ஒலி`` எனப்பட்டது அங்ஙனம் விளங்க நில்லாததும் ஆதல் தெரிந்துணரற்பாலது. `இரவிபோல் எழும்` என இயையும். ``பின்`` என்றது கீழிடத்தை. `பின்வந்து` என மாறுக. மதித்தல் - கடைதல்; அலைத்தல். ``மதித்து`` என்பதனை, `மதிக்க` எனத் திரிக்க. ``எழும்`` என்பது முற்று. மதித் தற்குச் செயப்படு பொருளும், உந்துதற்கு வினைமுதலும் வருவிக்கப் பட்டன. ``சோதி, ஒலி`` என்பன செவ்வெண். `ஈறாகிய அது` என்க. தான், அசைநிலை. ஏகாரம் தேற்றம்.
இதனால், மேற்கூறப்பட்ட இரு மாயைகளில் சுத்த மாயையின் சிறப்புக் காரியமாகிய சொல்லுலகம் ஆதார நிராதார யோகங்களில் காட்சிப் படுமாறு கூறப்பட்டது. இதனானே, `அவ் வுலகத் தொடக்கு அவ் யோகங்களால் முறையே ஒரளவிலும், பெரிய அளவிலும் மெலிவடையும்` என்பதும் உணர்ந்து கொள்ளப்படும்.

பண் :

பாடல் எண் : 35

ஈறது தான்முதல் எண்ணிரண் டாயிரம்
மாறுதல் இன்றி மனோவச மாஎழில்
தூறது செய்யும் சுகந்தச் சுழியது
பேறது செய்து பிறந்திருந் தாளே.

பொழிப்புரை :

மேல், ``இந்துவின் மேல் உற்ற ஈறு`` எனப்பட்ட அந்த நாதமே சொல்லுலகங்கள் எல்லாவற்றிற்கும் (வேதம், வேதாங்கம், ஆகமம், புராணம், இதிகாசம், மிருதி முதலிய எல்லா நூல் கட்கும், பலவாய் வழங்கும் மொழிகட்கும்) முதல். சில சுழிக் கூட்டத்தால் பூங்கொத்துப் போல்வதாய வடிவினையுடைய அது நிராதார யோகத்தில் பிராசாத கலைபதினாறில் முடிவாயுள்ள உன்மனா கலையிலும், ஆதாரயோகத்தில் ஆயிர இதழ்த் தாமரை யிலும் மனம் யாதோர் அசைவுமின்றி நின்று வசமாகும்படி உயிரினது ஆற்றலை மிகக் குவிப்பதாகும். அதனால், அதனைக் காணுதலையே சத்தி தன் அடியவர்க்குப் பெரும்பேறாக அளித்துத் தானும் அவ்விடத்தே அவர்கட்குக் காட்சியளித்து நிற்பாள்.

குறிப்புரை :

ஈறு அதுதான் - `ஈறு` எனப்பட்ட அதுவே. `எண்ணிரண் டிலும், ஆயிரத்திலும் மனம் மாறுதல் இன்றி வசமாக` எனக் கூட்டுக. எண்ணுப் பெயர்கள் முறையே அவ் எண்ணு முறைக்கண் நிற்கும் கலையையும், அத்துணை இதழ்களையுடைய மலரையும் குறித்தன. இவைகளில் ஏழன் உருபுகள் தொக்கு நின்றன. ஆக - ஆகும்படி. இதன் ஈறு குறைந்து நின்றது. `எழில் - எழுச்சி; ஆற்றல். தூறு - குவியல். இதன் பின் நின்ற `அது`, பகுதிப் பொருள் விகுதி. சுகந்தம், முன்னர்ப் பூவையும், பின்னர் அதன் கொத்தினையும் குறித்த இருமடி ஆகுபெயர். `சுகந்தம் போலும் சுழியாகிய அது` என்க. `சுகந்தச் சுழி யாகிய அது, எண்ணிரண்டிலும் ஆயிரத்திலும் மனம் மாறுதல் இன்றி வசமாக, எழிலைத் தூறு செய்யும்` எனவும், `அதுபேறு செய்து பிறந் திருந்தாள்` எனவும் கூட்டி முடிக்க. பூங்கொத்துப் போலும் வடிவுடை யது விந்து வின் பகுதியாகிய நிரோதினி கலையே யாயினும், அவ் விடத்துச் சத்தி உருவப் பொருளாய் விளங்குதல் கூறுவார், விந்துவின் நுண்ணிலையாகிய அதனையே `நாதம்` என உபசரித்துக் கூறினார்.
இதனால், சத்தி விந்துத் தானத்தில் உருவப் பொருளாய்க் காட்சியளித்துப் பின் அடியவரை ஆதாரயோக முடிவிலும், நிராதார யோக முடிவிலும் மனோலயம் பெற்றவராக ஆக்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

இருந்தனள் ஏந்திழை ஈ(று) அதில் ஆகத்
திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்தி
வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே.

பொழிப்புரை :

சத்தி மேற்கூறிய அவ்விடத்தே இனிது விளங்கி யிருக்கின்றாள்; பல புவனங்களில் உள்ளோரும் தாம் பேரானந்தத்தை அடைதற்குரிய செவ்விய வழியைப் பொருந்தித் தன்னை, `போற்றி` என்று சொல்லித் துதித்துப் பெருமுயற்சி செய்யவும் சத்தி அவர்கள் முன் வெளிப்படாமல், மேற்கூறிய இடத்தே அந்த ஆனந்தம் விளையும்படி அங்கே விளங்கி நிற்கின்றாள்.

குறிப்புரை :

`ஏந்திழை ஈறு இருந்தனள்` எனவும், `மங்கை நல்லாள், புவனங்கள் வருந்த, திருந்திய ஆனந்தம் அதில் ஆக இருந்தனள்` எனவும் கூட்டி முடிக்க. ``ஈறு`` என்பது ஏழாவதன் தொகையில் ஒற்றிரட்டாமை, இரண்டாவதற்குத் திரிபு ஓதிய இடத்து நின்ற இலேசினால் அமையும். (தொல் - எழுத்து. 158)
இதனால், மேற்கூறிய ஆதாரத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

மங்கையும் மாரனுந் தம்மொடு கூடிநின்
றங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கைநல் லாருங் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்குசெய் தார்களே.

பொழிப்புரை :

சத்தியும், சிவனும் தம்மிற் கூடிநின்று, தம்மைப் போலவே மங்கையர் ஐவரையும், அவர்கட்கு ஏற்ற காளையர் ஐவரையும் கை கோத்துவிட்டு, அவர்களது கருத்தையும் செயலையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அத்தம்பதியர் தங்களுள் அன்பு செய்து கூடித் தங்கள் தொழிலைக் கடமையாக நன்கு நடாத்தி வருகின்றார்கள்.

குறிப்புரை :

சத்தியும், சிவனும் இங்குக் குறிக்கப்பட்ட நிலை, வாகீசு வரியும், வாகீசுவரனுமாய் நிற்கின்ற நிலையாம். கொங்கை நல்லார் ஐவர், `மனோன்மனி, மகேசுவரி, உருத்திராணி, திரு, வாணி` என்பவரும், அவருக்கு ஏற்ற காளையர் ஐவர் முறையே, `சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், மால், அயன்` என்பவரும் ஆவர். இவர் செய்யும் செயல், முறையே, `அருளல், மறைத்தல், அழித்தல், காத்தல், படைத்தல்` என்பவையாம். இவர்களை இங்குக் குறித்தது, முறையே, `ஆஞ்ஞை, விசுத்தி, அனாகதம், மணிபூரகம், சுவாதிட்டானம்` என்னும் ஆதாரங்களில் வைத்து. எனவே, சத்தியும், சிவனும் வாகீவரியும், வாகீசுவரனுமாய், நிற்றல், ஆஞ்ஞைக்கு மேல் உள்ள தானங்களிலாம். ஆகவே, `சத்தி சிவங்கள் இங்ஙனம் நிற்றலால், யோக நெறி, நின்று பயன் தருகின்றது` என்பது பெறப்பட்டது.
``மாரன்`` என்பது `அழகன்` என்னும் அளவினதாய் நின்றது. அங்குலி - கை விரல்கள். கூட்டுதல் - இருவர் கைகளையும் கோத்து விடுதல். `மணம் செய்வித்தனர்` என்றபடி. ``அகம், புறம்`` என்பன ஆகுபெயராய், கருத்தையும் செயலையும், ``பார்த்தனர்`` என்பது அவர்கள் அவ் ஐவருடனும் உடனாய் நிற்றலையும் குறித்தன. `கொங்கை நல்லாள்` என்பது பாடம் அன்று. ``குமாரர்கள்`` என்பது பருவம் குறித்து நின்றது. இலய நிலையின் கீழ்வந்து அதிகார நிலையில் நிற்பவர் என்பது தோன்ற, இவ்வாறு கூறினார். ``சடங்கு`` என்றது, திருமணச் சடங்கையும், தங்கட்கு உரிய கடமைகளையும்.
இதனால், சத்தியும், சிவனும் மேல் ஆதாரத்தினின்று, கீழ் ஆதாரங்களைப் புரந்தருளுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

சடங்கது செய்து தவம்புரி வார்கள்
கடந்தனி னுள்ளே கருதுவ ராயின்
தொடர்ந்தெழு சோதி துணைவழி ஏறி
அடங்கிடும் அன்பின தாயிழை பாலே.

பொழிப்புரை :

புறத் தொழிலைச் செய்யும் அளவில் தவத்தில் நிற்போர், உடம்பில் அகமுகத் தியானித்தலில் பழகுவார்களாயின், அந்தத் தியான உணர்வு தொடர்ந்து முதிர்ந்து, சுழுமுனை பற்றுக் கோடாக மேல் ஏறிச் சென்று, உயிர்களின் அன்பிற்குச் சார்பாகிய சத்தியிடத்தில் மேற்கூறிய இடத்தில் சென்று அடங்கும்.

குறிப்புரை :

`அதனால், அங்ஙனம் தியானிக்க என்பது குறிப் பெச்சம். ``உள்ளே கருதுவராகில்`` எனப் பின்னர்க் கூறியதனால், முன்னர், சடங்கது செய்தல் புறத்தின்கண்ணதாயிற்று. கடம் - குடம்; என்றது, மண்ணாற் செய்யப்படும் குடம் போல்வதாகிய உடம்பைக் குறித்தது. அதன் உள்ளே கருதுதல், ஆதார பங்கயங்களிலாம். எனவே, புறமாவதும் உடம்பின் கண்ணதேயாய், சடங்காவன கர நியாசம், அங்க நியாசம் முதலியனவாம்.
இதனால், மேற்கூறிய குமாரர்கள் ஐவரையும் அவர்தம் தேவி யரோடு முறையாகத் தியானித்துச் செல்வோர், விந்துத் தானத்தில் மங்கை நல்லாளை மாரனோடு தலைப்படுபவர் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

பாலித் திருக்கும் பனிமலர் ஆறினும்
ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி
சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம்
மூலத்தின் மேலது முத்தது வாமே.

பொழிப்புரை :

துணைவழி ஏறுதற்குத் துணையாகின்ற மந்திரம் முதல் நிலையாகிய மூலாதாரத்திலே உள்ளது. அதுவே இரண்டாவது முதல் ஏழாவது முடிய உள்ள ஆறு நிலங்களின் தாமரைகளிலும் ஏற்ற பெற்றியிற் பொருந்தி, அவற்றைக் காத்து நிற்கும். அதனால், அம் மந்திரம் ஒன்றே அந்நிலங்களில் அழுந்தி விடுவதாகிய நிலையினை விடுத்து மேன்மேற் செல்லுதற்குச் சிறந்த துணையாம்.

குறிப்புரை :

`திகழ்ந்தெழு மந்திரம் மூலத்துமேலது; பனி மலர் ஆறினும் பாலித்திருக்கும்; `ஆலித்திருக்கும் அவற்றின் அகம்படி சீலத்தை நீக்க அதுவே முத்தாம்` எனக்கொண்டு கூட்டி முடிக்க. ஆலித் திருக்கும் அவை - மகிழ்ந்து அழுந்தியிருத்தற்கு இடமாகிய அவை. அகம்படி சீலம் - ஆதாரங்களினுள்ளே அழுந்தியிருக்கும் நிலை.
மந்திரம், பிரணவம். அது பிராசாதமாய்ப் பரிணமித்து ஆறு ஆதாரங்களிலும், அவற்றிற்குமேலும் பல கூறுகளாய் விளங்கி நிற்பதாம். ``முத்து`` என்றது, உயர்வுணர்த்தியவாறு, இதற்கு ஈண்டைக்கு இயைபில்லாத ஒரு பொருளையும் கூறுவார் உளர்.
இதனால், கடந்தனின் உள்ளே கருதித் துணைவழி ஏறுதற் குரிய மந்திரத் துணை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

முத்து வதனத்தி முகந்தொறும் முக்கண்ணி
சத்தி சதுரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என்னுள்ளம் மேவிநின் றாளே.

பொழிப்புரை :

மேல் (1155 - ல்) கூறப்பட்ட யோக நற்சத்தி முத்து வதனம் முதலியவைகளை உடையவளாய், என் உள்ளத்தில் விரும்பி இருக்கின்றாள்.

குறிப்புரை :

எனவே, `அவளை அவ்வாறு தியானித்தல் வேண்டும்` என்பதாம். ``சத்தி`` என்பதை முதலிற்கொள்க. முத்து, பற்களைக் குறித்து உவமையாகுபெயர். வதனம் - முகம்; என்றது வாயினை, சதுரி - திறமை உடையவள். சகளி - உருவத் திருமேனி கொண்டவள். ``பைந்தொடி`` என்பது, `தேவி` எனப் பொருள் தந்தது. ஏனையவை வெளிப்படை. பத்துக்கரம் கூறப்படுதலால் ஐம்முகம் உடையளாதல் பெறப்பட்டது.
இதனால் யோக சத்தியது வடிவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 41

மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ்எரி
தாவிய நற்பதத் தண்மதி அங்கதிர்
மூவருங் கூடி முதல்வியாய் முன்னிற்பர்
ஓவினும் மேலிடும் உள்ளொளி ஆமே.

பொழிப்புரை :

அக்கினி மண்டலம் முதலிய மூன்று மண்டலங் களுடன் அவற்றிற்குரியோராகிய, `அக்கினிதேவன், நிலவோன், கதிரோன்` என்னும் மூவரும் கலந்து, அவரே சத்தியாய் முன்னிற்பர். அவர்களுக்கு உள்ளீடாக ஓங்காரத்தினின்றும் மேலெழுந்து செல்கின்ற மந்திர ஒளி உளதாகும்.

குறிப்புரை :

`மேவிய மண்டலம் மூன்றுடன்` என்பதை, ``கூடி`` என்பதற்கு முன் கூட்டியுரைக்க. ``கீழ், தாவியநற்பதம்`` என்பவற்றால் முறையே எரியும், மதியும் பிண்டத்தில் நிற்குமிடம் குறிக்கப்பட்டன. அதனால், கதிருக்குரிய இடம் இடைப்பட்டது என்பதுதானே பெறப்படும். தாவிய நற்பதம் - உயரநிற்கும் இடம்; எனவே, அக்கினி அடியிலும், கதிர் இடையிலும், மதி முடியிலும் நிற்பனவாதல் அறிக. எரி முதலிய மூன்றும் அவ்வவற்றிற்குரிய தேவரைக் குறித்தன. அவரே சத்தியாய் முன்னிற்றலாவது, சத்தியது கலப்பால் அவனேயாக அறிய நிற்றல். அவர்களை `அங்ஙனம் அறிந்து நோக்க உள்ளொளி மேலிடும்` என்பது ஈற்றடியிற் கூறப்பட்ட பொருள்.
இதனால், மும்மண்டலங்களில் உள்ள மூவராகிய ஆதாரங்களைச் சத்தியின் வடிவாகக் கண்டு வழிபடுதலும் உள்ளொளியைப் பெறுதற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

உள்ளொளி மூவிரண் டோங்கிய அங்கங்கள்
வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடும்
கள்ளவிழ் கோதைக் கலந்துட னேநிற்கும்
கொள்ளவி சித்திக் கொடியமு தாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய உள்ளொளி உயர்ந்து செல்கின்ற ஆறு ஆதாரங்களாகிய உறுப்புக்கள் வெண்மையான வேள்வித் தீயிலும் அவற்றின் அதிதேவர் வழியாகச் சத்தியைப் பொருந்தி விளங்கும். அதனால், அத்தீயின் வழியாகத் தேவர்கள் ஏற்கின்ற அவிசுகளும், யாவர்க்கும், எல்லாப் பயனையும் தருகின்ற சத்தியே யாய் நிற்கும்.

குறிப்புரை :

ஆகையால், `ஆதார தேவர்களும், ஏனைத் தேவர் களும் சத்தியால் நிலை பெறுகின்றவர்களேயாவர்` என்பதாம். ``உள் ளொளி யோங்கிய மூவிரண்டு அங்கங்கள்`` எனக்கூட்டுக. ``வெள் ளொளி அங்கி`` என்றது, `இனிது வளர்க்கப்பட்டு விளங்குகின்ற தீ` எனப் பொருள்தந்து, வேள்வித் தீயைக் குறித்தது. `மூவிரண்டு அங்கங்கள்` என்றதனால், அவற்றின் அதிதேவரை, ``அவர்`` எனச் சுட்டியொழிந்தார். ``கள்ளவிழ் கோதை`` என்னும் உயர்திணையிடத்து இரண்டனுருபு தொக்குநின்றது. `மூவிரண்டு அங்கங்கள் அங்கியில் அவரொடு மேவிக் கோதையைக் கலந்து உடனே நிற்கும்` என இயைத்து முடிக்க, சித்திக் கொடி சத்தி. `சித்திக்கொடியாகிய அமுதம்` என உருவகங் காண்க. `அவி அமுதேயாம்` என்க. `சுத்திக் கொடி` என ஓதிப் பிறிது பொருளுரைத்தல் பொருந்தாமை அறிக.
இதனால், சத்தி யோகியர்க்கு உள்ளமுதாதல் போலத் தேவர்க்கு வெளியமுதாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 43

கொடிய திரேகை குருவுள் ளிருப்பப்
படிவது வாருணைப் பைங்கழல் ஈசன்
வடிவது ஆனந்தம் வந்து முறையே
இடுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே.

பொழிப்புரை :

``சிந்திக்கொடி`` என மேற் கூறப்பட்ட சத்தியது உருவம் ஆஞ்ஞை முதலிய மேல் நிலங்களில் வெளிப்படாது மறைந்து நிற்கும் நிலையில் யாவரும் மூழ்குவது சிற்றின்பத்திலேயாம். ஆகவே, சிவனது வடிவாய் உள்ள ஆனந்தத்தை (சிவானந்தத்தை,ஆறு ஆதாரங் களிலும் முறையே வந்து வழங்குகின்ற முதல்வி யோக சத்தியே.

குறிப்புரை :

இரேகை - மின்னல்போலத் தோன்றுகின்ற ஒளி யுருவம். குரு - திண்மை; என்றது உயர்வினை. அது மேல் நிலமாகிய ஆஞ்ஞை முதலியவைகளை உணர்த்திற்று. அந்நிலங்களில் சத்தி உருவம் எப்பொழுதும் இருப்பினும், அந்நிலங்களில் சத்தியைக் காணு மளவு யோகம் முதிரப் பெற்றவர்கட்கே அது காட்சிப் படுவதாகும். அந்நிலையில்தான் சிவானந்தம் தோன்றும். அதனை அந்நிலையில் எங்கும் ஏற்ற பெற்றியால் வழங்குபவள் யோக சத்தி. ஆகவே, அவளை அங்ஙனம் அடையாத பொழுது யோகியரும் சிற்றின்ப வேட்கையைக் கடக்கமாட்டார் என்பது இதனுள் கூறப்பட்டது.
வாருணை - நீர்ச்சத்தி. இவள் சிற்றின்ப வேட்கையை உண்டாக்கி இன்புறுத்துபவள். `வாருணைக்கண்` என உருபு விரிக்க. `ஈசன் வடிவதுவாகிய ஆனந்தத்தை ஆறங்கங்களிலும் வந்து முறையே இடும் முதல் ஏந்திழையாள்` எனக் கூட்டுக. `அவ் ஏந்திழை யாளே` எனச் சுட்டு வருவித்துக் கொள்க. `படியது` என்பது பாடம் அன்று.
இதனால், சத்தி, சுவாதிட்டானம் முதலிய ஆதாரங்களில் மறைந்து நின்று சிற்றின்பத்தையும், ஆஞ்ஞை முதலிய மேல் நிலங் களில் வெளிப்பட்டு நின்று சிவானந்தத்தையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

ஏந்திழை யாரும் இறைவர்கள் மூவரும்
காந்தாரம் ஆறும் கலைமுதல் ஈரெட்டும்
மாந்தர் உளத்தியும் மந்திரர் ஆயமும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.

பொழிப்புரை :

மேற் கூறப்பட்ட யோக சத்தி `அயன், மால், உருத்திரர்` என்னும் மும்மூர்த்திகளும், அவர்களுக்குத் தேவியராய் உள்ளோரும், ஒளியை உடைய ஆதாரங்கள் ஆறுமாய் உள்ள ஆதார சத்தியும், `கலை` என்னும் பொருளாகச் சொல்லப்படுகின்ற மேதை முதல் உன்மனை ஈறாக உள்ள பதினாறு நிலைகளையுடைய குண்ட லினியும், மக்கள் அறிவில் பொருந்திப் புலன்களை அறிவிக்கின்ற திரோதாயியும், மந்திர மகேசுவர மகேசுவரிகளாய் உள்ள கூட்டத் தினரும் தன்னையடைந்து துதிக்கும்படி மேற்கூறிய மேல் நிலங்களில் எழுந்தருளியிருக்கின்றாள்.

குறிப்புரை :

`ஏந்திழையாளும்` என்பது பாடமன்று. ``மூவர்`` எனப் பின்னர் வருதலின், வாளா, ``ஏந்திழையார்`` என்றார். காந்துதல் - ஒளி வீசுதல். ஆரம் - சக்கரம். `கலையாகிய முதல்` என்க. மூதல் பொருள், பராசத்தியின் சிறுகூறாதல் பற்றித் திரோதாயியை வேறுபோலக் கூறினார். (ஆயம் - மகளிர் கூட்டம்) திணை விராய் எண்ணிய விடத்துப் பெரும்பான்மைபற்றி, ``சார்ந்தனர்`` என உயர்திணை முடிபு கொடுக்கப்பட்டன. இது முற்றெச்சம். `அச்சத்தி` எனச் சுட்டு வருவித்துக்கொள்க.
இதனால், யோக சத்தியது உயர்வு இனிது விளங்கக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 45

சத்தி என்பாள்ஒரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்ப தறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே.

பொழிப்புரை :

`சத்தி` என்று யாவராலும் போற்றப்படுகின்ற தேவி, வேண்டுவார் வேண்டும் பயனைப் பெறுதற்குத் துணைபுரிகின்ற ஒரு கன்னிகை. ஆயினும், வீடு பேற்றைத் தரும் முதல்வி அவளே என்பதைப் பலர் அறியமாட்டாதவராய் அவளிடத்துத் தாம் செய்கின்ற அன்புக்கு உலக வாழ்வே பயனாக எண்ணி அந்த அன்பினை வீணாக்கி யொழிகின்ற அறிவிலிகள் அவளை உலக வாழ்வை அளிப் பவளாகவே சொல்லிப் புகழ்ந்து, அறிவுடையோரால் நாய் போன்ற வராக வைத்து இகழப்படுகின்றது.

குறிப்புரை :

`இவரது நிலை இரங்கத் தக்கது` என்பது குறிப்பெச்சம். பொன்னும், மணியும் போல்வனவற்றை வாரி வழங்கும் வள்ளன்மை யுடையவரிடத்துக் கூழும், காடியும் இரந்து பெறுவாரை யொத்தலின், ``அப்பாவிகள்`` என்றும்` அவர், தாம் எல்லாம் அறிந்தவர்போலக் கூறுதலை, நாய் விருந்தினரையும் கள்வர்போலக் கருதிக் குரைத்த லோடு உவமித்தும் கூறினார். `பாவிகள் - புத்தியுடையோர்` ஆதலின், அப்பாவிகள், புத்தியில்லாதவர் என்க. இனி, `அந்தத் தீவினை யுடையோர்` என உரைத்து, இரக்க மிகுதியால் அவ்வாறு கூறியதாகக் கொள்ளலுமாம்.
இதனால், சத்தியை யோக சத்தியாகக் கண்டு வழிபட்டு முத்திப் பயன் பெறுதலே அறிவுடைமை யாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 46

ஆரே திருவின் திருவடி காண்பர்கள்!
நேரேநின் றோதி நினையவும் வல்லார்க்குக்
காரேய் குழலி கமல மலரன்ன
சீரேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.

பொழிப்புரை :

பிறிது பயனை வேண்டாது தன்னைப் பெறு தலையே பயனாகக் கருதி, மந்திரங்களைச் சொல்லி, மறவாது தன்னை நினைக்கவும் வல்லவர்களுக்கே அம்மை தனது தாமரை மலர் போன்ற அழகு பொருந்திய சிவந்த திருவடிகளை அவர்களது உள்ளக் கம லத்தில் பதிய வைத்துக் காட்சி வழங்குகின்றாள். ஆகவே, அந்நிலை யில் நின்று அவளது திருவடிகளைக் காண வல்லார் உலகருள் எவர்!.

குறிப்புரை :

முதலடியை இறுதியில் வைத்து உரைக்க. பிற பயன் கருதுவார் கோடுதல் (வளைதல்) உடையராகலின், அவரது நிலை நேரியதன்றாதல் தோன்ற, ``நேரே நின்று`` என்றார். சேவடி சிந்தை வைத்தல், அவ்விடத்துக் காட்சி தருதலை உணர்த்திற்று.
இதனால், மேலை மந்திரத்துக் கூறிய நிலையது அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 47

சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத்தம் மூலத்தி லேவைத்து
நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.

பொழிப்புரை :

தேவியை முதலில் உங்கள் உடம்பில் சிரம் முதலிய இடங்களிலே வைத்தும், பின்பு இருதயம் முதலிய உறுப்புக்களிலே வைத்தும், அதன்பின் உங்கள்முன் உள்ள திருவுருவத்தில் வைத்தும், அதன்பின் மூலம் முதலிய ஆதாரங்களில் வைத்தும் வழிபட்டு அவளோடு ஒன்றாகி நில்லுங்கள். அங்ஙனம் வழிபடும் பொழுது பிற வற்றை நினைத்தலாகிய குற்றத்தில் அகப்படுத்தப்படாத மனத்தை அவ் விடங்களிலே பிறழாது நிறுத்துதலையும், அவ்வவற்றிற்கு ஏற்ற மந்திரங்களில் அவளை எண்ணுதலையும் இன்றியமையாததாகக் கொள்ளுங்கள்.

குறிப்புரை :

`மந்திரம், கிரியை, பாவனை` என்னும் வழிபாட்டுப் பகுதி மூன்றனுள், ``சந்தையில் வைத்து`` என்பதனால் மந்திரமும், ``நினைவு வைத்து`` என்பதனால் பாவனையும், ஏனையவற்றால் கிரியையும் கூறப்பட்டன. சிராதிகளாவன, `தலை, முகம், மார்பு, குய்யம், பாதம், முதலாக எஞ்சியவை` என்னும் ஐந்துமாம். இவ்விடங்களில் அம்மையின் தலை முதலியன முறையே பஞ்சப் பிரம மந்திரங்களால் வைத்து எண்ணப்படும். இருதயம் முதலியவை யாவன, `இருதயம், சிரசு, கூந்தல், கவசம், நேத்திரம், அஸ்திரம்` என்னும் ஆறுமாம். இவற்றில் அம்மையின் அங்கங்கள் அவ்வம் மந்திரங்களால் முறைப்படி வைத்து எண்ணப்படும். முந்தை - முன்னுள்ள இடம்; இஃது ஆகுபெயராய் அங்கு உள்ள திருவுரு வத்தைக் குறித்தது. திருவுருவத்தில் மேற்கூறிய இருவகை மந்திரங் களால் மேற்கூறிய இருவகையாகவும், வேறு பல மந்திரங்களால் விரிவாகவும் வைத்து அம்மை வழிபடப்படுவாள். `இருதயம், மூலம்` என்பன உபலக்கணமாய் நின்றன. மூலம் முதலிய ஆதாரங்களில் வைத்து வழிபடுதலே யோகம் என்பது வெளிப்படை. யோகத்திலும் கிரியை உளதாதலை நினைக்க. சந்தை - ஓசை; அஃது அதனையுடைய மந்திரத்தை உணர்த்திற்று. இங்ஙனம் செய்யும் வழிபாடுகளால் தேவியது காட்சியை நாளடைவில் பெறுதல் கூடும் என்பதாம்.
இதனால், சத்தி தன் அடியார்களது உடம்பும், அவர்கள் முன் நிற்கும் படிவங்களும் ஆகிய ஆதாரங்களில் நின்று அருள் புரிதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச்
சிவாதியில் ஆகும் சிலைநுத லாளை
நவாதியில் ஆக நயந்தது ஓதில்
உவாதி அவளுக் குறைவில தாமே.

பொழிப்புரை :

தன்னைத் தியானித்துத் தன்னிடத்து வேறற ஒன்றி நிற்கும் உணர்வுடையவர்கட்குத் தலைவியாய், `சிவா` என்பதை முதலாகக் கொண்ட மந்திரத்தில் பொருந்தி நிற்பவளாகிய சத்தியை, `நவாக்கரி` எனப்படும் ஒன்பது பீஜங்களில் பொருந்த வைத்து அந்த மந்திரத்தை விருப்பத்துடன் ஓதினால், செயற்கையாய் நிற்கின்ற நிலைமை அவளிடத்துப் பொருந்துதல் இல்லையாம்.

குறிப்புரை :

``நவாதி`` என்பதில், `பீஜம்` `ஆதி` எனப் பட்டது, வித்து, `முதல்` எனப்படுமாதலின். ``அது`` என்றது, ``சிவாதி`` என முன்னே கூறப்பட்ட மந்திரத்தை, உவாதி - உபாதி; செயற்கை. சத்திக்குச் செயற்கை நிலையாவது, மலத்தின்வழி நின்று மறைத்தலைச் செய்தல். `அஃது இலதாம்` எனவே, `இயற்கையான தனது விளக்க நிலையை உடையவளாய் நிற்பாள்` என்பது போந்தது. முதலடி உயிரெதுைக.
இதனால், `சத்தியை நவாக்கரியோடு கூடிய அஞ்செழுத்து மந்திரத்தால் வழிபடின் மருள்நிலை நீங்க, அருள்நிலையைப் பெறலாம்` என்பது கூறப்பட்டது. நவ பீஜம் `நவாக்கரிசக்கரம்` என்னும் அதிகாரத்திற் கூறப்படும்.

பண் :

பாடல் எண் : 49

உறைபதி தோறும் உறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாள்தொறும் நண்ணி
மறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும்
இறைதிளைப் போதிடில் எய்திட லாமே.

பொழிப்புரை :

சத்தி இந்நிலவுலகத்தில் தனக்கு இடமாகக் கொண்டு எழுந்தருளியுள்ள தலங்களில் அவள் எழுந்தருளியிருக் கின்ற வகைகளை விருப்பத்துடன் உணர்ந்து, நாள்தோறும் அவ்விடங் களை அடைந்து, அவளுக்குரிய மந்திரத்தோடு நீங்காது நிற்கின்ற `பிர ணவம், பீஜம், சக்தி, கீலகம்` என்னும் நான்கினையும் தெய்வத் தன்மை மிகும்படி ஓதி வழிபட்டால், பயன்கள் பலவற்றை அடையலாம்.

குறிப்புரை :

உறை முறையாவன: காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அன்னபூரணி, அபிராமி முதலாகப் பலவாம். ஆங்காங்கு உள்ள அவ்வகைகளை அறிந்து அன்புடன் வணங்கின், அவ்வவற்றால் அடையும் பலன்கள். கைகூடும் என்பதாம். இறை - இறைமை, தெய்வத் தன்மை, திளைத்தல் - மிகுதல், `திளைப்ப` என்னும் செய வென் எச்சத்தது அகரம் தொகுத்தலாயிற்று. எய்துதலும், `அவ்வப் பயன்கள்` என்னும் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. தலங்கள் பலவற்றில் சத்தி பீடங்களாய் உள்ளவை அம்மைக்குச் சிறந்தனவாம்.

பண் :

பாடல் எண் : 50

எய்திட லாகும் இருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாம்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
கைதவம் இன்றிக் கருத்துறு மாறே.

பொழிப்புரை :

ஞானிகட்கு உரிய இருவினைப் பயனாவன, அம்மையிடத்தில் அன்பு செய்தலும் `செய்யாமையுமாகிய அவற்றால் வருவனவாம்.

குறிப்புரை :

``ஆகும்`` என்பது எச்சம். குலாம் - விளங்குகின்ற, மாதுரிகை - இனிமையைச் செய்பவள். கைதவம் - வஞ்சனை; அஃது அவளை ஐய உணர்வுடன் எண்ணுதல். `கை தவமும் அஃது இன்றிக் கருத்துறு மாறும்` என்க. இவற்றால் விளையும் பயனை இவையேயாக உபசரித்துக் கூறினார். `இருவினைப் பயன் மாதுரிகையோடு கைதவ மும், அஃது இன்றிக் கருத்துறுமாறுமாம்` என இயையும். `கருத்து அவள்பால் உறுமாறு` என்க. `பிறரெல்லாம் எண்ணும் புண்ணிய பாவங்கள் போலாது ஞானியர் எண்ணும் புண்ணிய பாவங்கள் அம்மையை நினைதலும், நினையாமையு மேயாம்` என்றவாறு. எனவே, `அவரது எண்ணமே உண்மை` என்பது அறியப்படும். ஒடு உருபைக் கண்ணுருபாகத் திரித்துக் கொள்க. அன்றி, ஒடு `அதனொடு மயங்கற்` பொருளது எனினுமாம்.
இதனால், உயர்ந்தோர்க்குச் சத்தியது வழிபாடு இன்றியமை யாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 51

கருத்துறுங் காலம் கருது மனமும்
திருத்தி யிருந்தவை சேரும் நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மேன்மேல்
இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே.

பொழிப்புரை :

சத்தியிடத்து மனம் செல்லும் பொழுது அதனை நன் மனமாகச் செய்து, அதன்கண் உள்ள எண்ணங்களெல்லாம் குவிகின்ற இடமாகிய இருதயத்தில் ஒப்பற்றவளாகிய அவளையே முதல்வியாக உணர்ந்து தியானி. அங்ஙனம் தியானித்தால், அவள் உன்னை மேன் மேல் உயரச் செய்வாள். அதனால், நீ முடிவில் சிவனது எண்குணங் களையும் பெற்று விளங்கலாம்.

குறிப்புரை :

மனம் திருந்தியபொழுது உண்டாகின்ற எண்ணம், `எல்லாம் சத்தியின் செயலே` என்பதும், `அவளையின்றி நமக்குச் சுதந்திரம் இல்லை` என்பதும், மற்றும் இவை போல்வனவுமாம். சிவனது எண்குணங்களாளாவன: `தன்வயம், தூய உடம்பு, இயற்கை யுணர்வு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசம் இன்மை, முடிவிலாற்றல், பேரருள், வரம்பில் இன்பம்` என்பன. ``எண்குணத்துளோம்`` 1 என்று நாவுக்கரசரும் அருளிச்செய்தமையால், திருவருள் பெற்றோர் இவ் எண் குணங்களையும் பெறுதல் அறியப்படும்.
இதனால், சத்தியது வழிபாடு உயிர்களை மேன்மேல் உயரச் செய்து, முடிவில் சிவமாகச் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 52

ஆமைஒன் றேறி அகம்படி யான்என
ஓமஎன் றோதிஎம் உள்ளொளி யாய்நிற்கும்
தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்
சோம நறுமலர் சூடிநின் றாளே.

பொழிப்புரை :

யான் ஆமையைப்போல ஐம்புல ஆசைகளைத் திருவருளுக்குள்ளே அடக்கி, மெல்லென மேலேறிச் சென்று, புறத்தே செல்லாது அகத்தே நிற்பவனாகி, ஓங்காரத்தை உச்சரித்து, எம்போல் வார்க்கு உள்ளொளியாய் விளங்குகின்ற யோக சத்தியைத் தரிசித்த பின்பு, அவள் சந்திரமண்டலத்தில் உள்ள நறுமணம் பொருந்திய தாமரை மலரைச் சூடி வெளிநின்றாள்.

குறிப்புரை :

ஐம்புல ஆசையை அடக்குவோர்க்கு ஐந்துறுப்புக் களையும் ஓட்டிற்குள் அடக்கிக்கொள்ளும் ஆமை உவமையாதல்,
``ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து`` (குறள் - 126)
எனவும்,
``புலன் அடக்கித் தம்முதற்கண் புக்குறுவார்; போதார்
தலன்நடக்கும் ஆமை தக`` 1
எனவும் போந்தவற்றால் நன்கறியப்பட்டது. `ஒன்ற` என்னும் உவம உருபின் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. அகம்படி - அகத்தேபடிந்து நிற்பவன். `என` - என்று ஆகி. `ஓம்` என்பது அகரச் சாரியை பெற்று வந்தது. சந்திரமண்டலம், சென்னி. அங்குள்ளது ஆயிர இதழ்த் தாமரை மலர். அதனைச் சூடிநிற்றல். ஆஞ்ஞை முதலாக வெளிப்பட்டு நிற்றல்.
இதனால், ஐம்புலன்களை அடக்கிப் பிரணவ யோகம் செய்தால் யோக சத்தியைத் தரிசித்தல் கூடும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 53

சூடிடும் அங்குச பாசத்துளை வழி
கூடும் இருவளை கோலக்கைக் குண்டிகை
நாடும் இருபதம் நன்னெடு ருத்திரம்
ஆடிடம் சீர்புனை ஆடக மாமே.

பொழிப்புரை :

யோக சத்தியை அணுகும் வழி சுழுமுனா நாடி. அவளது இருகைகளில் காணப்படுவன சங்கமும், குண்டிகையும். அவளுக்குரிய சீருத்திர மந்திரம் சிகாரமும், வகர ஆகாரமும் ஆகிய இரண்டெழுத்துக்களால் ஆகிய சொல். அவள் நடனம் புரிகின்ற அரங்கு `புகழை உடைய பொன்மன்று` எனப்படும் புருவநடு.

குறிப்புரை :

அங்குசம்போல மேலே வளைந்து நிற்கும் முதுகந் தண்டினைச் சூழ்ந்து செல்லும் கயிறு போன்றுள்ளது பற்றிச், சுழுமுனை நாடியை, ``அங்குச பாசத் துளை`` என்றார். அங்குச பாசங்கள் அம்மைதன் ஆயுதமுமாதல் பற்றி, `சூடிடும்` என்றார். `இரு கோலக் கையில் வளை குண்டிகை` எனக் கூட்டுக. ருத்திரம், சீருத்திரப் பிரச்சினம். அஃது ஆகுபெயராய் அதன்கண் உள்ள மந்திரத்தைக் குறித்தது. `வேத பாகங்களில் சிறந்தது சீருத்திரமே` என்பதைக் குறிக்க, வாளா, `மந்திரம்` என்னாது, `ருத்திரம்` என்றார். `சிவா` என்னும் பதம் சீருத்திரத்துள் பலவிடத்து வருதல் அறிக. எழுத்தை, `பதம்` என்றது, ``வகரக் கிளவி`` 2 என்பது போல ஆகுபெயர். ``ஆடிடும்`` என்பது பாடமன்று, `சீர்` என்பது மிகுத்துக் கூறப்படுதலை உணர்த்திற்று.
இதனால், யோகசத்தியை அணுகுதற்குரிய வழி முதலியன கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 54

ஆம்அயன் மால் அரன்ஈசன் சதாசிவன்
தாம்அடி சூடிநின் றெய்தினர் தம்பதம்
காமனும் சாமன் இரவி கனலுடன்
சோமனும் வந்தடி சூடநின் றாளே.

பொழிப்புரை :

உலகிற்கு முதல்வராம் `அயன், மால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன்` என்னும் ஐவர்தாமும் சத்தியை வழிபட்டே தங்கள் பதவியைப் பெற்றார்கள். மற்றும் காமன், சாமன், சூரியன், அங்கி, சந்திரன் என்னும் இவர்களும் வந்து வணங்க அவள் வீற்றிருக்கின்றாள்.

குறிப்புரை :

இங்குக் கூறப்பட்ட அயன் முதலிய ஐவர் அணுபட்சத் தினர் என்க. `சாமன்` என்பான் காமனுக்குத் தம்பி என்ப.
இதனால், `சத்தியே கடவுளர் பலர்க்கும் தலைவி` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 55

சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை
நாடி நடுவிடை ஞாளம் உருவநின்
றாடும் அதன்வழி அண்ட முதல்வியே.

பொழிப்புரை :

உலக முதல்வியாகிய சத்தி இளம் பிறையைச் சூடிக் கொண்டும், சூலத்தையும் கபாலத்தையும் ஏந்திக் கொண்டும், என்றும் மாறாத கொடிபோல்பவளாய் இருப்பாள்; இயல்பாகவே மலம் நீங்கியவள்; நேரிய (நுண்ணிய வேலைப்பாடமைந்த) அணி கலங்களை யணிந்தவள். அவள் நடு நாடியாகிய சுழுமுனையிடத்து அதன் உள்துளையில் பிராணவாயு ஊடுருவிச் செல்லும்பொழுது அவ்வாயுவின் வழியே நின்று நடனம் புரிவாள்.

குறிப்புரை :

``சூடும்`` என்பது முற்று. ``இளம்பிறை`` என்பதில் இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. `நடுநாடியிடை` என மாற்றி யுரைக்க. `நாளம்` என்பது ``ஞாளம்`` எனப் போலியாயிற்று. உரு வுதலுக்கு வினைமுதல் வருவிக்க. `அதன்வழி நின்று ஆடும்` என்க. `ஆடுதல்` இங்கு விளங்கித் தோன்றுதல்.
இதனால், யோகிகட்கு அவரது அகக்காட்சியில் சத்தி விளங்கி நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 56

அண்ட முதலா அவனி பரியந்தம்
கண்டதொன் றில்லைக் கனங்குழை யல்லது
கண்டனும் கண்டியு மாகிய காரணம்
குண்டிகை கோளிகை கண்டத னாலே.

பொழிப்புரை :

ஆகாயம் முதல் பூமி ஈறாகப் பார்த்தால் நாம் கண்டது சத்தியைத் தவிர வேறொரு பொருளும் இல்லை. சத்தி தான் மாத்திரமாய் நின்று உலகிற்கு முதற்பொருளாகாது சிவத்தொடு கூடி நின்றே முதற்பொருளாயிருத்தல், உலகம், `ஆண், பெண்` என்னும் இரு பகுதிப்பட்டே நிற்றலைக் காண்கின்ற அதனானே அறியப்படும்.

குறிப்புரை :

``கனங்குழை யல்லது கண்டதொன்றில்லை`` என்றது, `சத்தியது கலப்பில்லாமல் எதுவும் இல்லை` என்றவாறு. ``கண்டன், கண்டி`` என்பன, `சிவம்` என்றும் `சத்தி` என்றும் வரையறுக்கப்படும் தன்மை யுடையவர்களாய் இருத்தலைக் குறித்தது. காரணம் - காரணத் தன்மை. ``குண்டிகை, கோளிகை`` என்பன ஆடவர் பெண்டிர் அவயவங்களை, `குண்டு` எனவும் `குழி` எனவும் மறைத்து வழங்கும் வழக்குப்பற்றி வந்தன. கோளிகை - கொள்வது. `கோளகை` என ஓதலுமாம், ஈற்றில், `அறியப்படும்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.
இதனால், சத்தியே உலக முதல்வியாயினும், அவள் சிவனைப் பற்றி நின்றே முதலாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 57

ஆலம்உண் டான்அமு தாங்கவர் தம்பதம்
சாலவந் தெய்தும் தவத்தின்பந் தான்வரும்
கோலிவந் தெய்தும் குவிந்த பதவையே
டேலவந் தீண்டி யிருந்தனள் மேலே.

பொழிப்புரை :

சத்தி, எல்லா உலகங்களையும் கடந்து சென்று எய்தப்படுவதாகிய சிவலோகத்திற்குத் தலைவனாகிய சிவனுடனே மிக அணிமையில் வந்து யோகியர்தம் உச்சியிலே இருக்கின்றாள். அவளை அடைதலாலே, சிவன் நஞ்சை உண்டதனால் அமுதத்தை உண்ணப் பெற்ற அந்தத் தேவர்கள் பதவிகள் மிகக் கிடைக்கும்; அதுவேயன்றிச் சரியை முதலிய தவங்களால் வருகின்ற சிவலோகத்து இன்பமும் கிடைக்கும்.

குறிப்புரை :

`ஆலம் உண்டானால் ஆங்கு அமுதுண்ட அவர்` என உருபும், ஒருசொல்லும் விரித்துக் கொள்க. கோலுதல் - விலக்குதல். ``கோலி வந்து`` என்பதில் ``வந்து`` என்பது இட வழுவமைதி, ``குவிந்த`` என்றது, `முடிந்த` என்றவாறு. ஐ - தலைவன். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, ஈற்றடியின் பின் `அவளால்` என்பது வருவித்துக் கொண்டு உரைக்க.
இதனால், சத்தியது அருளால் எல்லா இன்பமும் எய்தப் படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 58

மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலாம் நளினம்நின் றேற்றிநட் டுச்சிதன்
மேலாம் எழுத்தினல் ஆமத்தி னாளே.

பொழிப்புரை :

உணவுப் பொருளாய் நின்று உடம்பையும், அது வழியாக உயிரையும் வளப்பவளாகிய சத்தி, நாலிதழ்த் தாமரையாகிய மூலாதாரத்திலிருந்து மேலேற்றிப் பல ஆதாரங்களில் ஊன்றப்பட்டு முடிவில் தலைக்குமேல் உள்ள துவாதசாந்தத்தில் முடிகின்ற பிரணவ வடிவாய் இருந்து அருள் புரிகின்றாள். இதனை யறியாது, பலர் மேலாகிய ஞானயோகம் முதிர்தற்பொருட்டு மலை, காடு, தீர்த்தக்கரை முதலிய இடங்களை அடைந்து துன்புற்று விரைய இறந்தொழி கின்றார்கள்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. ``ஏத்தி`` என்பது பாடமாயின், `ஓதி` என உரைக்க. நட்டு, நடப்பட்டு, ஆமம் - உணவுப் பொருள். `பிறர் கணத்திடைக் கழிவர்` என்றதனால், யோகத்தினர் நீண்ட நாள் வாழ்தல் பெறப்படும்.
இதனால், `சத்தியைப் பிரணவ யோகத்தினாலே தலைப்படல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 59

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்
ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
நாமம் நமசிவ யவ்வென் றிருப்பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே.

பொழிப்புரை :

அடப்படாத உணவுப் பொருளாயிருந்து பின் அடப்பட்ட உணவாகவும் ஆகின்ற சத்தி, வயிற்றுத் தீயும், குண்டத் தீயு மாகிய ஓமத் தீக்களிலும் ஒப்பற்ற ஒருத்தியாய் இருந்து அவற்றை அடையும் பொருள்களைச் செரிப்பித்தும், அவியாக்கியும் உதவு கின்றாள். அவளது பெயராகிய திருவைந்தெழுத்தையே துணையாகப் பற்றி அமைதியுற்று இருப்பவர்கட்கு, தவத்தின் முதல்வியாகிய அவள் இனிது விளங்கி அருள்புரிவாள்.

குறிப்புரை :

``இருந்து`` என்னும் எச்சம் ``அன்ன மயத்தினள்`` என்பதில் தொக்குநின்ற `ஆவாள்` என்பதனோடு முடிந்தது. உணவு கொள்ளுங்கால் வயிற்றுத்தீயும் ஓமாக்கினியாகக் கருதப்படுதலை நினைக. வயிற்றுத் தீயில் நின்று மண்ணுலகத்தவர்க்கும், வேள்வித் தீயில் நின்று விண்ணுலகத்தவர்கட்கும் உதவுதலைக் குறித்தவாறு. இவ்வாறு யாவர்க்கும் உதவுபவளாகிய அவளை அஞ்செழுத்து வழியாக அடைந்து பயன்பெற வேண்டும் என்பதாம். `நமசிவ` எனப் பாடம் ஓதின் யாப்புக் கெடுதலை நோக்குக. சத்தி சிவங்கட்கு இடையே வேற்றுமையின்மையின், சிவனது நாமத்தைச் சத்தியது நாமமாகவே அருளிச் செய்தார். `நமச்சிவாயை என்று` எனப் பாடம் ஓதலுமாம். நியமம், ``நேமம்`` என மருவிற்று.
இதனால், சத்தி உயிர்களைச் சில ஆதாரங்களில் நின்று காக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 60

நிலாமய மாகிய நீள்படி கத்தி
சிலாமய மாகுஞ் செழுந்தர ளத்தி
சுலாமய மாகும் சுரிகுழற் கோதை
கலாமய மாகக் கலந்துநின் றாளே.

பொழிப்புரை :

நிலவைப் போன்ற ஒளியையுடைய படிகத்தின் நிறத்தையும், ஒளிக் கல்லாகிய முத்தின் நிறத்தையும் உடையவளும், செறிந்த சுரிந்த கூந்தலை உடையவளும் ஆகிய சத்தி பிரணவ கலைகளின் வடிவாய் யோகிகளிடத்தில் கலந்து நிற்கின்றாள்.

குறிப்புரை :

`ஆதலின், அவளை அக்கலை வழியாகக் காணுதலே சிறந்தது` என்பது குறிப்பெச்சம். படிகமும் தரளமும் அவற்றின் நிறத்தை உணர்த்தின. `படிகத்தின், தரளத்தின்` என்பன பாடம் ஆகாமை அறிக.
இதனால், சத்தி யோகிகளிடத்தில் நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 61

கலந்துநின் றாள்கன்னி காதல னோடும்
கலந்துநின் றாள்உயிர்க் கற்பனை யெல்லாம்
கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாம்
கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே.

பொழிப்புரை :

சத்தி சிவனோடு தாதான்மியமாய் ஒன்றுபட்டு நின்றே, உயிர்களின் அறிவு. வேதம் முதலிய எண்ணிறந்த நூல்கள், காலம் முதலிய தத்துவங்கள் ஆகிய எல்லாப் பொருளிலும் அத்து விதமாய் ஒன்று பட்டிருக்கின்றாள்.

குறிப்புரை :

`ஆகவே, அவளைச் சிவனது பண்பாகவே உணர்தல் வேண்டும்; தனித்த ஒருத்தியாக எண்ணுதல் கூடாது, என்பதாம். `கற்பனை` - எண்ணம்; என்றது அறிவை. ``கலைஞானங்கள்`` என்பதை `ஞானக்கலைகள்` எனமாற்றிக் கொள்க. இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலை.
இதனால், ``அண்ட முதலா அவனி பரியந்தம்`` (1193) அனைத்தும் சத்தி மயமாமாறு இவ்வாறு என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 62

காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்றாகும் கூடல் இழைத்தனள்
மாலினி மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம தாகுமே.

பொழிப்புரை :

காலமாய் இருப்பவளும், எல்லா இடமுமாய் இருப் பவளும், உயிர்களின் எண்ணமும், விருப்பமும் கைகூட உதவியாய் இருப்பவளும், எல்லாப்பொருளிலும் தான் ஒன்றாயிருக்கும் கலப்பினைச் செய்தவளும், உயிர்களை மயக்குகின்றவளும், அம்மயக்கம் நீங்கத் தெளிவைத் தருகின்ற மேன்மை வாய்ந்தவளும், மந்திரங்களின் ஆற்றலாய் நிற்பவளும், உயிர்களைக் காக்கின்றவளும் ஆகிய சத்தி தன்னில் ஒரு கூறாய் நிற்கின்ற சிவனிடத்துத் தான் அவனிடத்தில் ஒரு கூறாய் இருப்பாள்.

குறிப்புரை :

`காலத்தி, கூலத்தி` என்பவை அத்துச் சாரியை தொக வந்தன. அனுகூலத்தை, ``கூலம்`` என முதற் குறைத்துக் கூறினார். ``எங்கு`` என்பது பெயர்த்தன்மைப்பட்டது. மாகுலம் - உயர்குலம்; அஃதாவது தெளிவிக்கும் தன்மை. சண்டிகை - வேகம் (மந்திரத்தினது ஆற்றல்) ஆகின்ற தன்மையுடையவள். பாலினி - பாலனம் செய் பவள். `சத்தியும், சிவனும் தம்மில் தாம் கூறாய் இருப்பர்` என்பதை விளக்க, ``பாலவன்`` என்றும், ``பாகமதாம்`` என்றும் கூறினார்.
இதனால், பல்வகைப் பெருமைகளும் உடையவளாகிய சத்தி சிவனது கூறாயே நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 63

பாகம் பராசத்தி பைம்பொற் சடைமுடி
ஏக இருதயம் ஈரைந்து திண்புயம்
மோக முகம்ஐந்து முக்கண் முகந்தொறும்
நாகம் உரித்து நடம்செய்யும் நாதற்கே.

பொழிப்புரை :

பசிய பொன்போலும் சடைமுடியையும், ஒரே எண்ணத்தையும். திண்ணிய பத்துத்தோள்களையும், விருப்பத்தைத் தருகின்ற ஐந்து முகங்களையும், முகந்தோறும் மும்மூன்று கண் களையும் கொண்டு, யானையை உரித்துப் போர்த்து நடனம் புரிபவ னாகிய சிவபெருமானுக்கு அவனது ஒரு கூறாய் இருப்பாள் பராசத்தி.

குறிப்புரை :

`சிவபிரானது பல்வகை உருவும், குணமும், செயலும் ஆகிய எல்லாம் சத்தியால் அமைவனவே` என்பதை விளக்க, அவனது உருவம் முதலியவற்றை வகுத்துரைத்து, `அவனுக்குப் பாகம் பராசத்தி` என முடித்தார். ஆகவே, ``பைம்பொற் சடைமுடி`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
இதனால், `சிவனின்றிச் சத்தி யில்லாமைபோலச் சத்தியின்றி யும் சிவனில்லை` என்பதுணர்த்தி, இருவரும் யாண்டும் பிரிந்து நில்லாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 64

நாதனும் நாலொன்ப தின்மருங் கூடிநின்
றோதிடும் கூடங்கள் ஓரைந் துளஅவை
வேதனும் ஈரொன் பதின்மரும் மேவிநின்
றாதியும் அந்தமும் ஆகிநின் றாளே.

பொழிப்புரை :

தலைவனாகிய இறைவனும், அவனால் செயற் படுத்தப்பட்ட முப்பத்தாறு தத்துவங்களும் ஏற்ற பெற்றியால் பொருந்தி நிற்பவனவாகச் சொல்லப்படுகின்ற நிலையங்கள் ஐந்து உள்ளன. அவைகளில் பிரமன் முதலியோரும், பதினெண், கணங்களும், வந்து வணங்கச் சத்தி அவற்றிற்கு முதலும், முடிவுமாகி நிற்கின்றாள்.

குறிப்புரை :

ஐந்து நிலையங்கள் என்றது. `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் ஐந்து கலைகளை. இவைகளிலே முப்பத்தாறு தத்துவங்கள் முதலிய பிற அத்துவாக்கள் ஐந்தும் அவற்றிற்கு ஏற்ற பெற்றியால் அடங்கி நிற்க, இறைவனும் பெற்றியால் ஆதியும் அந்தமுமாம் தலைவனாய் நிற்றலின், சத்தியும் அங்கு அவ்வாறு நிற்கின்றாள் என்க. ``வேதனும் ஈரொன்பதின்மரும் மேவ நின்று`` என்றது, அவளது பெருமை கூறியவாறு. `அவை மேவ` என இயையும். `பதினெண் கணத்தவர் இவர்` என்பதை
``விரவுசா ரணரே, சித்தர், விஞ்சையர், பசாசர், பூதர்,
கருடர்,கின் னரர், இயக்கர், காந்தர்வர், சுரர், தைத்தியர்,
உரகர் ஆகாச வாசர் உத்தர குருவோர் யோகர்
நிருதர்,கிம் புருடர், விண்மீன் நிறைகணம், மூவா றாமே`` 1
என்பதனான் அறிக. தைத்தியர் - அசுரர். நிருதர் - இராக்கதர். உத்தர குரு - போக பூமி. யோகர் - முனிவர். ``விண்மீன்`` என்றதும் அவற்றிற்குத் தலைவரை.
இதனால், சத்தி பஞ்சகலைகளிலும் ஏற்ற பெற்றியால் அனைத்திற்கும் ஆதியும், அந்தமுமாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 65

ஆகின்ற நாள்களில் ஐம்பத் தொருவர்கள்
ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள்
ஆகிநின் றாள்உட னாகிய சக்கரத்
தாகிநின் றான்அவன் ஆயிழை பாடே.

பொழிப்புரை :

உலகம் தோன்றும்பொழுது பஞ்ச கலைகளிலும் நிற்கும் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றும் முதலில் முறையானேதோன்ற, அவற்றிற்கு முதல்வர் ஐம்பத்தொருவரும் உடன்தோன்றி நிற்பர். அங்ஙனம் நிற்கும் அவர் எல்லார்க்கும் சத்தி உயிராய் உள் நிற்பாள். ஆகவே, அவ் எழுத்துக்களைப் பல்வேறு முறையில் தம்முட்கொண்ட சக்கரங்களில் எல்லாம் அச்சத்தி உயிராய் நிற்றல் பெறப்படுதலின், சிவனும் அவளிடத்து நீக்கமின்றி அச்சக்கரங்களில் நிற்பவனாவான்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை, `அங்ஙனம் ஆகிநின்ற அவள் நீங்காது நிற்கின்ற சக்கரம்` என எடுத்துக்கொண்டு உரைக்க. பின் னிரண்டடிகளில், ``ஆகிநின்றாருடன் நாயகி சக்கரத் - தாகிநின்றான் அவன் ஆயிழை யோடே`` என்பதும் பாடமாய் உள்ளது.
இதனால், `சக்கரங்களாக அமைக்கப்படுவனயாவும் சத்தி சிவமயமேயன்றித் தனியில்லை` என்பது கூறி, தனிப்பட்ட வேறு ஆற்றல் உடையனவாகக் கருதுதல் அறியாமையாதல் விளக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 66

ஆயிழை யாளொடும் ஆதிப் பரனிடம்
ஆயதொ ரண்டவை ஆறும் இரண்டுள
ஆய மனந்தொ றாறுமுக மாமவற்
றேய குழலி இனிதுநின் றாளே.

பொழிப்புரை :

சத்தி, சிவன் இருவருக்கும் உரிய இடம், உலக முதல்களுக்கு மேலாய், எட்டாய் அமைந்த இதழ்களையுடைய தாமரை மலராகும். அதுவன்றியும் தியான வகையால் வேறுபடுகின்ற ஆறு இடங்களும் உள. எல்லாவற்றிலும் சத்தி இனிது வீற்றிருக் கின்றாள்.

குறிப்புரை :

அண்டகம் - உலகம்; ஐ - முதல்; என்றது தத்து வங்களை. `தத்துவங்கள்` எனப் பொதுப்படக் கூறினும் சகலர்க்கே உரிய ஆன்ம தத்துவங்களே குறிக்கப்பட்டன. அவற்றின் மேல் உள்ள எட்டிதழ்க் கமலம், இருதய கமலமாம். இதனிடத்திலும், ஆறாதாரங்களிலும் சத்தியும், சிவமும் கலந்து நிற்பினும், தன்னை இவ்விடங்களில் நினைபவர்க்குச் சத்தி இனிது விளங்குவாள் என்றவாறு. பின்னிரண்டடிகளில் பாடம்பெரிதும் திரிபுபட்டுள்ளது.
இதனால், சத்தி தியான இடங்களில் விளங்குதல் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 67

நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட
இன்றென் அகம்படி ஏழும் உயிர்ப்பெய்தும்
துன்றிய ஓரொன் பதின்மரும் சூழலுள்
ஒன்றுயர் வோதி உணர்ந்துநின் றாளே.

பொழிப்புரை :

யான் சத்தியோடு ஒன்றிச் செவ்வியனாகும்படி அவள் எனக்கு இனிது வெளிநிற்கின்றாள். எதனால் எனின், இப் பொழுது என் உடலுள்ளே உயிர்ப்புக் காற்று என் வசமாய் ஆறு ஆதாரங் களிலும், அவற்றின்மேல் உள்ள ஏழாந்தானமாகிய சிரசிலும் செல் கின்றது. பத்து வாயுக்களும் நெருங்கி நின்று சுழலுகின்ற உடம்பினுள் ஏனை ஒன்பதினும் உயர்வுடையது. உயிர்ப்புக் காற்று ஒன்றே என்பதை எனக்கு அவள் அறிவித்து, என்பொருட்டு அறிந்தும் நின்றாள்.

குறிப்புரை :

`ஏழிலும்` என உருபு விரிக்க. இதனுள் வந்த மூன்று தொடர்களும் முறையே ஒன்றற்கொன்று காரணமாம் பொருள்களை உணர்த்தி நின்றன.
இதனால், வாசி யோகம் சத்தியைக் காணுதற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 68

உணர்ந்தெழு மந்திரம் ஓம்எனும் உள்ளே
மணந்தெழு மாகதி யாகிய தாகும்
கொணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்தெழும் காணும்அக் காமுகை யாமே.

பொழிப்புரை :

உயிர் உணர்ந்து உணர்ந்து மேன்மேல் உயர்தற் குரிய மந்திரம் `ஓம்` என்பது எனச்சொல்லப்படும். உணர்வால் இறையொடு கூடி மேன்மையுறுகின்ற முடிந்த பேறாகிய வீடுபேறும், பிறவும் அதனாலே கிடைக்கும். உயிரை இவ்வாறு மேல்நிலைக்குக் கொண்டு செல்கின்ற கள்வனும், கள்வியுமாகிய சிவனும், சத்தியும் இணைந்து நிற்றலும், அதனால் விரைய விளங்கும். அங்கு முன்னர்க் காணப்படுபவள் சிவனிடத்துப் பெருவிருப்புடையளாகிய சத்தியே.

குறிப்புரை :

``எனும்`` என்பது செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தி நின்றது. ``உள்`` என்றது உணர்வை, `கணத்து` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. இறுதியில் உள்ள ``எழும்`` என்பதில், செய்யும் என்முற்று பலர்பாலில் வந்தது. ஆரிடவமைதி ``காணும்`` என்றது முன்னர்த் தோன்றுதலை.
இதனால், `வாசியோகம் பிரணவயோகமாயவழிச் சத்தியை எளிதில் அடைவிக்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 69

ஆமது அங்கியும் ஆதியும் ஈசனும்
மாமது மண்டலம் மாருத மாதியும்
ஏமது சீவன் சிகைஅங் கிருண்டிடக்
கோமலர்க் கோதையும் கோதண்ட மாகுமே.

பொழிப்புரை :

`ஆதி` எனப்படுபவளாகிய சத்தியும், `ஈசன்` எனப் படுபவனாகிய சிவனும் வழிபாட்டிற்கு மிகச்சிறந்ததாகச் சொல்லப் படுகின்ற வேள்வித்தீ, யோகத்தில் சிறப்பிடம் பெற்று நிற்கும் சந்திர மண்டலம், வாயு முதலிய பூதங்கள் என்னும் இவைகளாய் நின்று உயிருக்கு நலம் செய்கின்றனர். அவ்விடத்தில், சத்தி, யோகியரது உடம்பில் தோன்றுகின்ற நரை முதலியவை அங்ஙனம் தோன்றாது அகலச் சிகை கறுத்தல் முதலிய இளமைத் தன்மைகள் தோன்றும்படி அவரது ஆஞ்ஞைத் தானத்தில் விளங்கி நிற்பாள்.

குறிப்புரை :

``ஆதியும், ஈசனும்`` என்பவற்றை முதலில் எழுவாயாக வைத்து, `மாருதம், ஆதியுமாய்` என ஆக்கம் வருவித்து, `ஏமம் ஆகின்றனர்` என முடிக்க. `ஆம் அதுவாகிய அங்கி` என்க. இதனுள் ``அது`` என்றது வேள்வித் தீயைக் குறித்த பண்டறி சுட்டு. `மா மண்டலம், மது மண்டலம்` எனத் தனித்தனிச் சென்று இயையும். மது, இங்கே அமுதம். பூதங்களில் மாருதத்தை ஆதியாகக் கூறினார். யோகத்திற்கு அது சிறந்ததாதல் பற்றி. `ஏமம்` என்பது இடைக் குறைந்து நின்றது. இதன்பின் உள்ள ``அது``, பகுதிப் பொருள் விகுதி. ``சீவன்`` என்பது, சொல்லுவாரது குறிப்பால், யோகத்தில் நிற்கும் சீவனைக் குறித்தது. `சீவனது சிகை` என்க. கோ - தலைமை; இஃது ஒரு சொல் தன்மை எய்தி நின்ற, `மலர்க் கோதை` என்பதனுடன் இரண்டாவதன் பொருள்படத் தொக்குநின்றது. கோதண்டத்தில்` என உருபு விரித்துக் கொள்க.
இதனால், அனைத்துமாய் நின்று காத்துவருகின்ற சத்தி சிவன் என்பாருள் சத்தி யோகத்தில் விளங்கிநின்று நலம் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 70

ஆகிய கோதண்டத் தாகும் மனோன்மனி
ஆகிய ஐம்ப துடனே அடங்கிடும்
ஆகும் பராபரை யோடப் பரைஅவள்
ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே.

பொழிப்புரை :

`மேன்மைத் தானம்` எனப்படுவதாகிய ஆஞ்ஞை யில் சத்தி விளக்கமுற்றுத் திகழும் நிலையில் அது முதல் மூலாதாரம் ஈறாக நிற்கின்ற ஐம்பது எழுத்துக்களும் அவளிடத்தே செயலற்று அடங்கிவிடும். அஃது எவ்வாறெனின், சுத்த மாயையினின்றும் விருத்திப்படுகின்ற நால்வகை வாக்குகளில் அவ் எழுத்துக்களுக்கு முதல் நிலைகளாகிய `பைசந்தி, சூக்குமை` என்னும் வாக்குகளாய் நிற்றலோடு, ஐந்தொழிலையும் தன்னுடையனவாக உடையவள் அவளேயாதலின்.

குறிப்புரை :

`மனோன்மனி` என்பது, `சத்தி` என்னும் அளவாய் நின்றது. `மனோன்மனிபால்` என ஏழாவது விரிக்க. `ஐம்பதும்` என்னும் முற்றும்மை தொகுத்தல் பெற்றது. உடனே - ஒருசேர. பைசந்தி சூக்குமை வாக்குகளை முறையே `பராபரை, பரை` என்றல் வழக்கு. பராபரை - பரை அபரை இருதன்மையும் உடையது. எழுத்துக்கள் அடங்கவே. உயிரினது பல தலைப்பட்ட உணர்வு அடங்கிச் சத்தியையே உணர்ந்து நிற்றல் பெறப்பட்டது. ஆஞ்ஞையில் விளங்கி நிற்கும் சத்தியது விருப்பம், அவ்வுயிரினது உணர்வைத் தன்பால் அடக்கிக் கொள்ளுதலே யாதலின், அவளது விருப்பத்திற்கு மாறாகப் பிறி தொன்று நிகழ மாட்டாமை பின்னிரண்டடிகளால் விளக்கப்பட்டது.
இதனால், (கோமலர்க் கோதை கோதண்டம்) ஆதலின் (முன்னை மந்திரம்) பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 71

தானிகழ் மோகினி சார்வான யோகி
போன மயமுடை யார்அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவந்
தானாம் பரசிவம் மேலது தானே.

பொழிப்புரை :

சிவசத்தி தனக்கு இடமாகக் கொள்கின்ற குண்டலினி சத்தி, அவளைச் சார்பாகக் கொண்டு விளங்கும் யோகினி சத்தி என்னும் இவர்கள் நீங்கத் தாம் தூயராய் நிற்போரே ஆதி சத்தியைத் தலைப் படுவர். அவரது உணர்வில் அவையேயாய்க் கலந்து நிற்கின்ற ஆதி சிவமாம் நிலையை அடைகின்ற பரசிவம் அந்நிலைக்கு மேலுள்ளது.

குறிப்புரை :

எனவே, `அந்தப் பரசிவத்தின் சத்தியாகிய பராசத்தியும் மேற்சொல்லிய அனைத்திற்கும் மேல் உள்ளது` என்றவாறு. முதற்கண் ``தான்`` என்றது, முன்னை மந்திரத்திற்கூறிய மனோன்மனியை. குண்டலியும் பந்தமாதல் பற்றி ``மோகினி`` என்றார். யோகினி - யோகத்தைப் பயப்பிக்கின்றவள். அடி, சிவனடி. ஆதி சத்தியை இங் ஙனம் கூறுதல் வழக்கு. `முன்னர்க் கூறப்பட்ட ஆதி சத்திக்கு முதலாகிய சிவம், என்பது தோன்ற, ``அச்சிவம்`` எனச் சுட்டிக் கூறினார். பரசிவ பராசத்திகளின் இயல்பை இவ்வாறு எடுத்துக் கூறியது, அவர்களை அடைதலின் அருமை யுணர்த்தற்கு. ஈற்றில் உள்ள தான், ஏ அசைகள்.
இதனால், சத்தி சிவங்களின் உண்மை நிலையின் அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 72

தானந்தம் மேலே தருஞ்சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி யாம்பொற் றிருவோடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
ஆனவை ஓம்எனும் அவ்வுயிர் மார்க்கமே.

பொழிப்புரை :

ஆதி சத்தி, யோகியரது உச்சியிலும், அதற்கு மேலுள்ள பன்னிரண்டு அங்குலமாகிய நிராதாரத்திலும் குண்டலி சத்தியோடு அவட்கு முன்னவளாம்படி வைத்துச் சொல்லப்படும் வியட்டிப் பிரணவநிலைகளே பிரணவ யோக நெறியாகும்.

குறிப்புரை :

``தான்`` என்றது மேலே போந்த ஆதி சத்தியை. அந்தம்- முடி; தலை. தலைக்குமேல் உள்ள நிராதாரத்தையே இங்கு, ``சிகை`` என்றார். `அந்தமும் அதன்மேலே தரும் சிகையும் ஆகிய இவற்றுடன் ஆனந்த மோகினியாம் திருவோடு மோனையில் ஆக வைத்து மொழிதரு கூறு` என்க. தரும் - சொல்லப்படுகின்ற. அசுத்த மாயையாகிய மோகினியினின்று பிரித்தற்குக் குண்டலினியை ``ஆனந்த மோகினி`` என்றார். பொன் திரு - பொன்போலச் சிறந்த சத்தி. `மோனை` எனினும், `முதல்` எனினும் ஒக்கும். `கூறு` என்பது தொகையால் ஒன்றாகலின், ``கூறது`` என்றார்; `அது`, பகுதிப்பொருள் விகுதி. உயிர் மார்க்கம் - உயிர்ப்பு நெறி; யோக நெறி. யோக நெறி களுள் குண்டலினியைப் பொதுவே செயற்படுத்தலும், அவளைப் பிராசாத முறையாற் காணுதலும் ஒன்றின் ஒன்று ஏற்றமாவன என மேலெல்லாம் கூறிவந்தவற்றோடு, பிராசாத கலைகளை ஆதி சத்திக்குப் பொருந்திய இடமாக வைத்துச் செய்யப்படுதல் மிகச் சிறந்ததாதல் இதனுட் கூறப்பட்டதாம்.
இதனால், சத்தியை அடைதற்கும் பிரணவகலைகளில் அவை யேயாய்க் கலந்து அவற்றைச் செயற்படுத்துபவள் சத்தி என்பதை உணர்ந்து செய்யும் சத்தி யோகமே மிக மேலானதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 73

மார்க்கங்கள் ஈன்ற மனோன்மனி மங்கலி
யார்க்கும் அறிய அரியாள் அவளாகும்
வாக்கும் மனமும் மருவஒன் றாவிட்டு
நோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாமே.

பொழிப்புரை :

ஆதி சத்தி, பலவகைப்பட்ட யோக நெறிகளையும் அவரவரது பக்குவத்திற்கு ஏற்ப அமைத்து வைத்தவள்; நிலையான மங்கலத்தை உடையவள்; ஆதலின், அவள் யார்க்கும் அறிதற்கரிய வளாவாள். ஆயினும் பாச ஞானம், பசுஞானம் என்னும் இரண்டும் ஒருசேர நீங்கும்படி விட்டுப் பதிஞானத்தால் அறிகின்ற பெரியோர்க்கு அவரது அறிவுக் கறிவாய் அவள் விளங்குவாள்.

குறிப்புரை :

``மார்க்கம்`` என்பதற்கு, `சமயங்கள்` என உரைத்தல் இவ்விடத்திற்கு இயைபற்றதாம். `மனோன்மனி, மங்கலி` என்னும் பயனிலைகட்கு, மேல்நின்ற ``தான்`` என்பது எழுவாயாய்வந்து இயைந்தது. அறிவரிதாவதும், நுண்ணறிவாவதும் அவளது உண்மை இயல்பாம். ஆகவே, தடத்த நிலையில் அவரவரது பக்குவத்திற்கு ஏற்ப அறியப்படுவாள் என்பது ``மார்க்கங்கள் ஈன்ற`` என்பதனால் பெறுதும். `வாக்கு, மனம்` என்பன முறையே பாச ஞானமும், பசு ஞானமும் ஆதலைச் சிவ ஞானபோத ஆறாம் சூத்திர உரையான் அறிக. `ஒன்றாய் விட்ட` என்பதும் பாடம் அன்று. ``பெருமை`` என்றது அதனையுடைய பதிஞானத்தை. பதிஞானமே வியாபக ஞானமாதல் அறிக. பெருமையுடைய ஞானத்தைப் பெற்றோரே பெரியராதல் உணர்க.
இதனால், பல்வகையான யோகங்களாலும் அடையப்படுவது சத்தியின் தடத்த நிலையேயாதல் கூறி, `அவைவாயிலாக ஞான நெறியை அடைய முயல்க` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 74

நுண்ணறி வாகும் நுழைபுலம் மாந்தர்க்கு
பின்னறி வாகும் பிரானறி(வு) அத்தடம்
செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத்
தன்னெறி யாமது சன்மார்க்க மாமே.

பொழிப்புரை :

மக்கட்கு ஐம்புலன்களில் செல்லுகின்ற அறிவு சுதந்திர அறிவாகவே தோன்றும்; ஆயினும், சிவனுடைய அறிவு அவர் தம் அறிவை அவற்றின் பின்னே இருந்து செலுத்துகின்ற அறிவாய் நிற்கும். (அஃது இல்லையாயின், எவரது அறிவும் ஒன்றிலும் நுழைய மாட்டாது. ஆகவே, உயிர்களின் அறிவு இறைவனது அறிவின் வழி யவேயன்றிச் சுதந்திரம் உடையன அல்ல). இங்ஙனம் சிவனது அறிவாய காட்டினை (காட்சிக்குத் துணையாவதை) அறிவதே செந்நெறியாம். இனிச் சிவனை அடைய விரும்புவோர்க்கு அவனது அறிவாலே அவனை அறிதலே தக்க நெறியாம்.

குறிப்புரை :

``நுண்ணறிவு`` என்பது, `இயற்கையில் நுண்ணிதாய்ப் புலன்களில் நுழையும் அறிவு` எனப்பொருள் தந்து நின்றது. இவ்விடத்து நின்ற ``ஆகும்`` என்பது `போலும்` என்னும் பொருளது. நுழை புல மாந்தர்க்கு அவர்தம் அறிவு நுண்ணறிவாகும்; ஆயினும் பிரான் அறிவு பின்னறிவாகும்` எனக்கூட்டி, வேண்டும் சொற்கள் வருவித்து உரைக்க. தடம் - வழி. அத்தடம் - அவ்வாறு உணரும் நெறி. தன் நெறி - தன்னாலே தன்னை அறியும் நெறி. `தன்னெறியாவது` என்பது பாடம் அன்று. சன்மார்க்கம் - நல்ல வழி; நன்மையைத் தரும்வழி. எனவே, பிறவெல்லாம் தீமையைத் தருவனவாயின. தீமையாவது பாசங்களையும், உயிரையும் இன்பப் பொருளாக அடைவித்தல். இங்ஙனமாகவே, `பாசஞான பசுஞானங்களை நீக்கிப் பதிஞானத்தால் உணரவரினும்` அது கொண்டு பதியாகிய சிவனை உணராது, பாசங்களையும், உயிரையும் உணர்தல் துன்பந் தரும் நெறியாதல் வலியுறுத்தப்பட்டதாம். இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், மேற்கூறிய பதிஞானத்தது சிறப்பும், அதனால், பயன் எய்துமாறும் கூறி, மேற்குறித்த ஞானநெறி பற்றி அறியற் பாலவை இனிதுணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 75

சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமும்
துன்மார்க்க மானவை யெல்லாம் துரந்திடும்
நன்மார்க்கத் தேவரும் நன்னெறி யாவதும்
சன்மார்க்கத் தேவியும் சத்திஎன் பாளே.

பொழிப்புரை :

ஒன்றாக அமைந்த நன்னெறி ஏனை தீநெறிகள் பலவற்றையும் போக்கிவிடும்; அந்நன்னெறிக்கு முதல்வராய கடவுள ராயும், அவரால் தோற்றுவித்துக் காக்கப்படும் அந்நன்னெறியாயும், அந்நன்னெறியால் அடையப்படும் அருட் சத்தியாயும் உள்ளவள், தலைமை பற்றி, `சத்தி` என்று, அடைகொடாது யாவராலும் சொல்லப்படுகின்ற சிவசத்தியேயாவாள்.

குறிப்புரை :

``சன்மார்க்கமாக`` என்றது, ``தான் ஒன்றே முழு நன் னெறியாக` என்னும் குறிப்பினதும், `சமைதரு` என்றது, `இயற்கையில் அமைந்த` என்னும் குறிப்பினதுமாயின, ``சமைதரு மார்க்கமும்`` என்னும் உம்மை, சிறப்பு. ``துன்மார்க்கமானவை`` என்றது, முழுத் தீமை முதலாகச் சிறிதே தீமையுடையது ஈறாக உள்ள ஏனை எல்லா நெறிகளையும், `மேற்குறித்த முழு நன்னெறி முதலியவாகக் கூறிய மூன்றுமாயிருப்பவள் சிவசத்தியே எனக் கூறிய அதனால், `அவ்வொன்றாய நன்னெறி சிவநெறியே` என்பது பெறப்பட்டது.
``முன்னெறி யாகிய முதல்வன், முக்கணன்
றன்னெறி யேசர ணாதல் திண்ணமே``
(திருமுறை - 4)
என அப்பரும் அருளிச் செய்தார். நன்னெறியாவது சிவநெறி` எனவே, அதற்கு முதல்வராவார் சதாசிவர், மகேசுவரர், உருத்திரர் முதலியோ ராதல் பெறப்பட்டது. அவர் சிவநெறியைத் தோற்றுவித்தலாவது, தம்பால் கேட்டற்கு உரியவர்கட்கு அதனை அறிவுறுத்தல். அதனைக் காத்தலாவது, ஆசிரிய மாணாக்கர் முறையால் வழிவழியாக விளங்கி வரச் செய்தல். சிவசத்தி நன்மார்க்கத் தேவர் முதலாக நிற்றல் கூறுவார், அந் நன்மார்க்கத்துச் சிறப்பினை முதற்கண் எடுத்துக் கூறினார்.
இதனால், சத்தி, மேற்கூறிய செந்நெறி முதலியனவாய் நின்று உயிர்கட்கு அருள்புரிதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 76

சத்தியும் நானும் சயம்புவும் அல்லது
முத்தியை யாரும் முதல்அறிவா ரில்லை
அத்திமேல் வித்திடின் அத்தி பழுத்தக்கால்
மத்தியில் ஏற வழியது வாமே.

பொழிப்புரை :

`சத்தியும், யானும், சிவமும்` என்னும் மூவர் தவிர, வீடுபேற்றினை அதன் முதல் பற்றி அறிபவர் ஒருவரும் இல்லை. முதுகந் தண்டாகிய எலும்பின்கண் பிராண வாயுவைக் கும்பித்தால், அவ் எலும்பு பக்குவப்பட்டு, அந்தப் பிராணவாயு சுழுமுனையூடே மேல் ஏறிச் செல்லுதற்கு ஏற்றதாகும்.

குறிப்புரை :

`இதுவே முத்தி முதல்` என்பது குறிப்பெச்சம். `திருவருள் பெற்றோர்க்கு இது விளங்கும்` என்பார், அப்பேறு பெற்ற தமது பெருமை தோன்ற, ``யானும்`` என்றார்.
``முதல்முன் ஐவரின் கண்ணென் வேற்றுமை
சினைமுன் வருதல் தெள்ளி தென்ப`` 1
என்பதனால், `முதற்கண் அறிவாரில்லை` என ஏழாவது விரிக்க. முதல் - வேர். வியப்புச் சுவை நயம் பற்றி, ``அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கால்`` என ஓதினாராதலின், ``அத்தி`` என்பதற்கு, `எலும்பு` என்பதும், ``மேல்`` என்பதற்கு, `கண்` என்பதும், `பழுத்து அக்கால்` என்பதும் பொருளாதல் விளங்கும். வித்திடுதல் நிலத்திலாதலின், ``அத்திமேல்`` என்றது, `அத்தியது அடிக்கண்` என்றதாம். ``அக்கால்`` எனப்பின்னர் சுட்டிக்கூறலின், வித்து என்றது அக்காலினை (பிராணவாயுவை) யாயிற்று. யோகத்திற்கு முதலாவது பிராணன் ஆதலின், அதனை `வித்து` என்றார். ``மத்தி`` என்பது ஆகுபெயராய் நடுநாடியாகிய சுழுமுனையைக் குறித்தது.
இதனால், முன்னர்ச் சத்தியை அடைந்து, பின் அவள் வழியாகச் சிவத்தை அடைவதாகிய முத்திக்கு வழி யோகம் என்பது கூறப்பட்டது. முத்திக்கு முடிநிலை வழியாகிய ஞானம் சத்தியேயாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 77

அதுஇது என்றவ மேகழி யாதே
மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்
பதிமது மேவிப் பணியவல் லார்க்கு
விதிவழி தன்னையும் வென்றிட லாமே.

பொழிப்புரை :

வீடுபேற்றைத் தரும் வழியாவது `அது` என்றும் `இது` என்றும், சொல்லும் வழியில் எல்லாம் சென்று வாழ்நாளை வீணே கழிக்காமல், ஒருநெறியாய் உறுதிப்பட்ட மனத்துடன் சிவ சத்தியையே முத்தியைத் தரும் முதல்வியாகத் துணிந்து அவளை யோக நெறியால் சந்திர மண்டலத்திற் சென்று வணங்க வல்லவர்க்கு, வினை வழியாகிய பிறப்பு நெறியைக் கடக்கும் அப்பயனும் கூடும்.

குறிப்புரை :

பதி - இடம். மது, இங்கே அமுதம்; அஃது அதனை யுடைய சந்திரனை உணர்த்திற்று. `மதுப்பதி` எனப் பின்முன்னோக்கி உரைக்க. ``விதி`` என்றது வினையை. வினை வழி - வினையால் உளதாகும் வழி.
இதனால், சத்தி யோகமே வீடுபேற்றைத் தருவதாதல் கூறப்பட்டது சத்தியும், சிவமும் வேறல்ல ஆதலின், `சத்தியோகம், சிவயோகம்` என்பன வேறு வேறாகாமை அறிக.

பண் :

பாடல் எண் : 78

வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் றன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.

பொழிப்புரை :

யாவரது ஆற்றலையும், எப்பொருளது ஆற்றலை யும் வெல்லும் பேராற்றலை உடையவளாகிய சிவ சத்தியினது உண்மை நிலையைத் தவத்தால் உணர வல்லவர்க்கு` விதியின் வழி யாகிய பிறப்பு, அப்பிறப்பிற்கு முதலாகிய `வினை, எனப்படுகின்ற அந்தப் பெரியகட்டு, அதனால், வந்து சார்ந்து மயக்குகின்ற ஐம் புலன்கள் என்னும் இவ்வனைத்துத் தீமைகளையும் வெல்லுதல் கூடும்.

குறிப்புரை :

இது சொற்பொருட் பின்வருநிலை, ``விழைபுலன்`` என்றது, `ஆசையை விளைத்து மயக்குகின்ற புலன்` என்னும் குறிப்பினதான உடம்பொடு புணர்த்தல். ``தன்னை`` என ஒருமையாற் கூறியது, `ஒருகாலத்து வருவது ஒன்றேயாயினும், ஒவ்வொன்றும் அத்தன்மையது` என்றற்கு. காம இன்பத்தை, ஒருகாலத்தே ஐம்புலனும் நுகரப்படுவதாகக் கூறுதல் விரைவு பற்றியாதலின், அதனிடத்தும், ஐம்புலன்கள் நுகரப்படுதல் ஒரு காலத்து ஒன்றேயாம் என்க. மங்கை தன் மெய்யுணர்வார்க்கும் அவளது ஆற்றல் உளதாம் ஆதலின் மேற்கூறிய எல்லாம் அவர்க்குக் கூடும் என்பார், ``வென்றிடு மங்கைதன் மெய்யுணர்வோர்க்கே`` என்றார்.
இதனால், மெய்யுணர்வே தீமை அனைத்தையும் முற்றப் போக்குவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 79

ஓரைம்ப தின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரமது
தாரங் குழலாளும் அப்பதி தானும்முன்
சாரும் பதம்இது சத்திய மாமே.

பொழிப்புரை :

தொன்று தொட்டு வழிவழியாகச் சத்தி சிவர்களைப் போற்றிவருகின்ற மரபு, ஐம்பதெழுத்துக்களின் அதிதேவரிடத்து அவர்கள் நிற்கின்ற முறைமையில் வைத்தேயாம். சத்தியும், சிவமும் முதற்கண்ணே சார்ந்திருக்கும் இடம் அவ் எழுத்துக் களும், அவற்றின் அதிதேவருமாம். இஃது உண்மையான ஒன்று.

குறிப்புரை :

`ஆதலின் இது மரபாயிற்று` என்பது குறிப்பெச்சம். எழுத்துக்களை வழிபடுமிடத்துச் சத்தியும், சிவமும் அவற்றின் அதி தேவர் வழியாய்ப் பயன்தருதலை உணர்தற்கு, ``ஓர் ஐம்பதின்மரும்`` என அருளினார். எழுத்துக்கள் அவற்றின் அதிதேவர் வழியாகவே பயன்தருதலை,
``எண்ணில வோங்காரத் தீசர் சதாசிவராம்
நண்ணிய விந்துவோடு நாதத்துக் - கண்ணிற்
பகர்அயன்மா லோடு பரமனதி தெய்வம்
அகரஉக ரம்மகரத் தாம்`` 1
என்பதனானும் உணர்க. சத்தி சிவ வழிபாட்டிற்கு எழுத்துமுறை சிறந்ததாதல் பற்றி அகாரம் முதலிய எழுத்துக்கள் முறையானே தொடர்ந்து வர அமையும் மந்திரங்களை, ``மாலா மந்திரம்`` எனச் சிறந்தெடுத்துப் போற்றுவர். பரம் - கடன்.
இதனால், சத்தி சிவ வழிபாட்டிற்கு எழுத்துமுறை (பீஜாக்கர மரபு) சிறந்ததாதல் கூறப்பட்டது. சத்தி வழிபாடு பற்றிக்கூறுவார், ஒப்புமை பற்றிச் சிவ வழிபாட்டினையும் உடன்வைத்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 80

சத்தியி னோடு சயம்புவும் நேர்படில்
வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத் தொருவரும்
சித்தது மேவித் திருந்திடு வாரே.

பொழிப்புரை :

சத்தியும், சிவமும் ஒருவர்க்கு உண்மையாற் கிடைப்பார்களாயின், எல்லாப் பயன்களும் அவற்றுக்கு உரிய காரணங்கள் இல்லாமலேயும் விளைந்து விடும். ஆதலால், அப் பொழுது ஐம்பத்தோர் அக்கரங்களின் அதிதேவர்களும் அச் சத்தி சிவங்களின் வழிபட்டபொழுது அவர்கள் உயிரினிடத்தும் கொடுமை நெறியின் நீங்கிச் செம்மையின் நிற்பவராவர்.

குறிப்புரை :

சத்தி சிவங்கள் எப்பொருளிலும் எக்காலத்தும் நீங்கி நிற்றல் இல்லையாகலின், ``நேர்படில்`` என்றது, பொதுமையானன்றி, உண்மையாற் கிடைத்தலையாயிற்று. ஆகவே, ``அத்தகையாகிய`` என்றதும், உண்மையால் நிற்கும் சத்தி சிவங்கட்கு ஆதாரமாதலை யாயிற்று. `தகையர் ஆகிய` எனற்பாலதனை ஆகுபெயரால், `தகையாகிய` என்றார். ``அத்தகையராய் மேவித் திருந்திடுவார்` என்பது கருத்தாயிற்று. மேல், ``ஓரைம்பதின்மருள்`` எனக்கூறி, இங்கு, ``ஐம்பத்தொருவரும்`` என்றது இரண்டும் மரபாதல் பற்றியாதலின், மலைவின்மை அறிக. ``சித்து`` என்றது உயிரை. ``வித்தது, சித்தது`` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி. அத்தகையராய்த் திருந்துத லாவது, உலகியல் உணர்வை எழுப்பாது, மெய்ந்நெறி உணர்வை எழுப்புதல். இவர் இங்ஙனம் திருந்துதலை வலியுறுத்தற்கே முதலிரண் டடிகள் கூறப்பட்டன. வித்தின்றியே விளைதல், வினை முதலிய பிற நிமித்தங்கள் இன்றி அருளே நிமித்தமாக விளைதல். தெளிவு பற்றி எதிர்காலத்தை ``விளைந்தன`` என இறந்தகாலமாக்கிக் கூறினார்.
இதனால் எழுத்து முறை வழிபாட்டால் மேற் (1215) கூறிய மங்கைதன் மெய்யுணர்வு பிறத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 81

திருந்து சிவனும் சிலைநுத லாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்த
அருந்திட அவ்விடம் ஆரமு தாக
இருந்தனர் தானம் இளம்பிறை யென்றே.

பொழிப்புரை :

மெய்நெறியில் விளங்குகின்ற சத்தியும், வந்து பொருந்திய வானவர்கள் தம்மை வணங்கித் துதிக்க, அவர்கள் பருகுதற்கு அந்த இடம் அரிய அமுதம் சுரக்கும்படி சந்திரமண்டலமே தமக்கு இடம் என்று சொல்லி, அங்கு வீற்றிருக்கின்றார்கள்.

குறிப்புரை :

`வந்து பொருந்திய` என்பது, `தாம் இருக்கின்ற அந்தச் சந்திரமண்டலத்தில் வந்து பொருந்திய` என்பதாம் அவ்வாறு பொருந்துவோர் யோகியர். அவர்யோகத்தால் அவ்விடத்தில் உயர்ந்து செல்லுதலின், அவரை வானவரோடு ஒப்பித்து, அப்பெயராற் கூறினார். `அவர் அருந்திட` எனத் தோன்றா எழுவாய் வருவித்து, அத் தொடரை, ``அமுது ஆக`` என்பதனோடு முடிக்க. ஆக - உண்டாக. ``அவ்விடம்`` ``அங்கு`` எனச் சுட்டுச் சொற்கள் செய்யுளில் முன் வந்தன `அவ் இடம் ஆக` என, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. இடையிரண்டடிகள் சிவனும் சத்தியும் தேவர்கள் போற்ற அவர்கள் பொருட்டு ஆலகால விடத்தை உண்டவர்` என, மற்றும் ஒரு நயம் தோன்ற வைக்கப்பட்டன. `இருந்தனள் தான் அங்கு` என்பது பாடம் ஆகாமை அறிக.
இதனால், சிவனும், சத்தியும், ஞானயோகிக்குச் சந்திர மண்டலமாகிய ஏழாந்தானத்திருந்து மெய்யுணர்வைத் தந்து, அது வழியாகச் சிவானந்தத்தை நுகர்வித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 82

என்றும் எழுகின்ற ஏரினை எய்தினோர்
தன்றது வாகுவர் தாழ்குழ லாளொடு
மன்றரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதிநின் றாளே.

பொழிப்புரை :

என்றும் யோக நெறியால் குண்டலி வழி மேல் ஏறும் முயற்சியில் இடைவிடாது நிற்பவர், சத்தியைத் தலைப்பட்டு, முடிவில் அவளது உடைமையேயாய்விடுவர். இனி அச்சத்திதான் யோகியர்க்கு அவர் பொருந்தும் தானந்தோறும் விளக்கொளி, விண்மீன், திங்கள், கங்கை என்னும் இவைகளாய் ஏற்ற பெற்றியில் விளங்குவாள்.

குறிப்புரை :

ஏர் - எழுச்சி; எழுகின்ற முயற்சி. `தனது` என்பது எதுகை நோக்கி விரிந்தும், திரிந்தும் நின்றது. தனது - அவளது உடைமை. `சிவானந்த வெள்ளம்` என்பது தோன்ற ``மன் தரு கங்கை`` என்றார். மன் தருநிலைபேற்றைத் தருகின்ற (புலப்படுத்துகின்ற) [மாதவர்க்கு, என்னும் நான்கனுருபு தொகுத்தல் பெற்றது.] விளக் கொளி முதலிய நான்காய் விளங்குதல் முறையே இருதயம் நெற்றி, உச்சி, உச்சிக்குமேல் பன்னிரண்டங்குலம் என்னும் இடங்களிலாம். `சோதியாய்` என ஆக்கம் வருவித்துக்கொள்க.
இதனால், ஞான யோகியர்க்குச் சத்தி படிமுறையால் விளங்கும் காட்சி வகை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 83

நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய துள்ளொளி யாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடும் ஞானங்கள் தோன்றிடுந் தானே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு ஏற்ற பெற்றியில் விளங்குகின்றவ ளாகிய சத்தியை உண்மையாகத் தலைப்பட்டு அவளோடு ஒன்றுதலாவது, உள்ளொளியாகிய பதிஞானத்தால் உணர்தலேயாம். அவ்வாறு உணர்ந்தோர், இனத்தால் பசுக்களேயாயினும், அவர் வேண்டிய யாவும் வந்து நிறையும், மற்றும் மெய்யுணர்வு வகைகளும் விளங்கும்.

குறிப்புரை :

`நின்றவளாகிய நேரிழை` என்க. அருள்பெறாத மருள் நிலையது எளிமையும், பின்னர் அவர்பெறும் அருள்நிலையின் அருமையுமாகிய நயம்தோன்ற, ``பிராணிகள்`` என்றாராயினும் `பிராணனை வழிப்படுத்திய யோகியர்` என்பதே பொருளாகக் கொள்க. கேட்டல், சிந்தித்தல் முதலிய வகையானும், அவற்றின் விரியானும் ஞானங்கள் பலவாதல் அறிக.
இதனால், சத்தியின் உண்மைக் காட்சி முறையும், அக்காட்சியும் பயன்களும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 84

தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி
ஈன்றிடும் ஆங்கவள் எய்திய பல்கலை
மான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்
சான்றது வாகுவர் தாம்அவ ளாயுமே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு ஞானங்கள் தோன்றும்பொழுது; சிவமும், சத்தியுமே அவரவர் விரும்பித் தொழுகின்ற தெய்வங்களாய் நின்று அருள்புரிகின்ற உண்மை விளங்கும். சிவசத்தியே அவரவரது பக்குவ நிலைக்கு ஏற்ப மேற்கூறிய தெய்வங்களையே முதற் பொருளாகக் கூறும் பற்பல சமய நூல்களைப் படைத்தவாறும் புலப் படும். தாம் (மேற்கூறிய ஞானங்களைப் பெற்றோர்) சத்தியும் சிவ முமேயாய்விட்ட அந்நிலையிலும் அவ்விருவரும் தமக்கு இன்றி யமையாத உயிர்த் துணைவராய் நின்று உதவுதலும் காணப்படும்.

குறிப்புரை :

`ஞானங்கள் தோன்றும் பொழுது` என்பது இயை பினால் கொள்ள நின்றது. வேண்டுருவாதலில், வேண்டுதல் பிறர் உடையதும், உருவாதல் பின்வரும் சத்தி சிவங்களுடையது மாயின. ``ஈன்றிடும்`` என்றது, `ஈன்றமை புலனாகும்` என்றவாறு. எய்திய - மேற்சொல்லிய உருவங்களைப் பொருந்திய. ``பல்கலை`` என்பதில் இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. `எதிர்வந்து சான்றாகுவர்` என்பது, `உதவி புரிந்து நிற்றல் இனிது காணப்படும்` என்பதாம். முத்தி யின்பத்தையும் சத்தியும், சிவனும் அம்மை அப்பராய் நின்று நுகர் விக்கவே உயிர் நுகர்வதாக, `அறியாதார் சிலர்க்கு முத்தி நிலையில் சத்தி சிவரது உதவி வேண்டாத ஒன்று` என்னும் மயக்கம் உண்டாதல் போல, உண்மை ஞானிகட்கு உண்டாதல் இல்லை` என்பதை இறுதி யடியிற் கூறினார். இதனால், ஞானத்தின் பயன்கள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 85

ஆயும் அறிவுங் கடந்(து) அணு வோரணி
மாயம தாகி மதோமகி ஆயிடுஞ்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயம் தாம்நெறி யாகிநின் றாளே.

பொழிப்புரை :

பொருள்களை அறிதலில் மனத்தினும் நுண்ணிய தாகிய அறிவையும் கடந்து, சிறுமையில் அணுவுக்கு அணுவாயும், பெருமையில் மகத்துக்கு மகத்தாயும் நிற்கின்றவளும், உயிர்களால் எட்ட ஒண்ணாதவளும் ஆகிய சிவசத்தி, உயிர்கள் விரும்புகின்ற எல்லா நெறிகளுமாய் நின்று அருள் புரிகின்றாள்.

குறிப்புரை :

``அணோ ரணீ, மகதோ மகி`` (கடோபநிடதம்) என்னும் வடசொற்றொடர்கள் தற்பவமாயின; மாயம், இங்கு, வியப்பு. `ஆயிடும் அரிவை` என இயையும்.
இதனால், `சிவசத்தி அணுவுக்கு அணுவாயும் மகத்துக்கு மகத்தாயும் நிற்க வல்லளாதலின், வேண்டுருவாகிய தூய்நெறி ஈன்றிடுகின்றாள்` என மேலதன்கண் ஐயமறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 86

நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும்
குறியது கூடிக் குறிக் கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு பலப்பல நெறிகளாய் நின்று உயிர்களுக்கு அருள்புரிகின்ற சத்தியை ஒருவனாகிய சிவனின் வேறாகாதவளாக அறிந்து அவளை அச்சிவனோடு ஒன்றவைத்தே அவரையே பொருளாகப் பொருந்திக் குறிக்கொண்டு எண்ணும் அறிவுத்திறன் படைத்தவரே, அவ்வறிவால் அம்மை யப்பராகிய அவ்விருவரிடையே அடங்கி ஆனந்தம் எய்துவர்.

குறிப்புரை :

குறி, குறிக்கப்பட்ட பொருள். `குறியதுவாக` என ஆக்கம் வருவித்துக்கொள்க. குறிக்கொண்டு நோக்குலாவது அயராது எண்ணுதல்.
இதனால், சிவ சத்தியது உண்மை நிலையை அறிந்து அழுந்தி நிற்பவரே உண்மை ஞானியராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 87

ஆமயன் மால்அரன் ஈசன்மேல் ஆம்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமயன் நாளும் தெனாதெனா என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே.

பொழிப்புரை :

சுவாதிட்டானம் முதலிய ஆதாரங்களில் முறையே பொருந்தியிருக்கும் அயன், மால், உருத்திரன், மகேசுவரன் என்னும் இவர்கட்கு மேல் உள்ள `விந்து` நாதம்` என்பவற்றுக்குரிய சதா சிவனும், அவனுக்கு மேற்பட்ட சத்தி, வியாபினி, சமனை, உன்மனை என்னும் நால்வரும் ஆகிய ஒன்பதுபேர் நிலைகளிலும் யோக நெறி யால் பொருந்தியவழி ஆன்மா இன்ப மயனாய்த் தேனுண்ட வண்டு அக்களிப்பினால் இசைபாடித் திரிவதுபோலுந் தன்மையை அடைவான்.

குறிப்புரை :

`மாலாங் கதி` என்பது பாடம் அன்று. கதி - தானம்: இடம். `ஒன்பதும்` எனத் தொகை கூறவே, `மேலாங்கதி நான்கு` என்பது பெறப்பட்டது. `தேமயனாய்` என ஆக்கம் வருவிக்க. மா - வண்டு. எய்தல், எய்தப்பெறுதல்.
இதனால், சிவ, `சத்தியைப் பிரணவ யோகத்தால் தலைப் படுதல் சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 88

வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களும்
கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும்
வந்தனை செய்யும் வழிநவில் வீரே.

பொழிப்புரை :

சத்தியையும், சிவனையும் அடைய விரும்புவர் யாராயினும் அவர்களை வழிபட்டு அடைதல் அல்லது, பிறிதொரு வழியாலும் அடைய வல்லுநரல்லர். ஆதலின், மக்களில் அவர்களை அடைய விரும்பும் நல்லீர், நீவிரும் அதன் பொருட்டு அவர்களை வழிபடுதலையே நெறியாகக் கொண்டு பயிலுங்கள்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலிற் கொண்டு, ``வந்தடி போற்றுவர்`` என்பதை இரண்டாம் அடியின் இறுதியிற் கூட்டி, அதன் பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து உரைக்க. இந்து - சந்திரன்; இவனும் வடக்கிற்குத் தலைவன். வந்தனை செய்தலையே `வழி` என்றார் ஆகலின், அவ்விடத்துப் பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். நவிலுதல் - பயிலுதல்.
இதனால், சிவன், சத்தி இவர்களை வழிபாட்டினால் அல்லது அடையலாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 89

நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபம்
கவற்றிய கந்தம் கவர்ந்தெரி தீபம்
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை யாமே.

பொழிப்புரை :

சத்தியைச் சிவனது ஆற்றலாக அறியும் அறிவில்லா தவர் சத்தியை வேறாகவும், சிவனிற் பெரியவளாகவும் கருதி அவளையே வழிபடினும், அவ்வழிபாடு தூய முறையில் அமைந் திருப்பின், சத்தியையேயன்றிச் சிவனையும் உவப்பிக்கும்.

குறிப்புரை :

`கள், ஊன் முதலியன கொண்டு செய்யும் வாம முறை வழிபாடு சத்தி சிவரை உவப்பியாது` என்பார், நன் மந்திரம் முதலிய நற்பொருள்களை எடுத்தோதிப் பிறிதொன்றையும் கூறாதொழிந்தார். கவற்றுதல், விருப்பத்தை மிகுவித்து மனத்தை மறுகச் செய்தல். கவர்தல், நெய்யை உண்ணுதல்,. `பயிற்றுதல்` என்பது, ``தேற்றா ஒழுக்கம்`` என்பதுபோல இங்குத் தன்வினையாயிற்று. `பயிற்றும் பூை\\\\u2970?` என இயையும். அவி - படையற் பொருள். ``சோதி`` என்றது, சிவனை. `சோதிக்கும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. இதனுள், உயிரெதுகை வந்தது.
இதனால், `சத்தி வழிபாடும் தூயதாய வழிச்சிவ வழிபாடாய்ப் பயன் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 90

தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத் தொருவன் உலப்பிலி
பூங்கிளி தாங்கும் புரிகுழலாள் அன்று
பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.

பொழிப்புரை :

உலகத் தோற்றத்திற்கு முன்னும், ஒடுக்கத்திற்குப் பின்னும் ஒருவனேயாய் உள்ள சிவன், உலகைத் தொழிற்படுத்தி நிற்குங் காலத்தில், சத்தியை ஒருபாற் கொண்டு அவளோடு உடனாய் இருவராயே நிற்கின்றான், ஆதலின், மாணவகனே, நீ சிவனோடு சத்தியையும் உடன் வைத்தே வழிபடு.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் வைத்து உரைக்க. தாங்குதலும் உவகை என்க. தரித்தல், நிலைபெறுதல், `தன்னைத் தாங்குவார் பிறரின்றித் தானே நிலைபெறுகின்றான்` என்றற்கு, ``தரித்த`` என்றார். ``பராபரன்`` என்றது, ``பராபரன் ஆயது`` எனக் குறிப்பு வினைப்பெயராய், ``பாங்குடன் ஏற்ப`` என்பதனோடு முடிந்தது. ஓங்கிய காலம், உலகம் விரிந்த காலம்; இஃது அதன் தொடக்க நிலையைக் குறித்தது. ``ஒருவன்`` என்பது பின்னும் சென்று இயையும். ``உலப்பிலி`` எனவே, உலகம் உலந்தமை பெறப்பட்டது. சிவன் `பூங்கிளி தங்கும்` என்பது பாடமன்று. சத்தியோடு கூடினவனாய் நின்றே உலகைச் செயற்படுத்தலின், அவனை அவ்வாற்றானே வழிபடுதல் வேண்டும் என விளக்கியவாறு, `சத்தியோடு` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. `சத்தியோடே போற்று` என ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டி உரைக்க.
இதனால், சிவனைச் சிலர் சத்தியை நீக்கி வழிபடுதலும் கூடாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 91

பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர்
அங்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள்
நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை
விற்கொடி மாதை விரும்பி விளங்கே.

பொழிப்புரை :

மாணவனே, நீ, துவண்ட தோற்றத்தால் கொடி போலுதல் கொண்டு, நிறம் பற்றி, `பசுங்கொடி` என்றும், பயன் பற்றி, `நற்கொடி` என்றும், அழகு பற்றி `ஒளிக்கொடி` என்றும், புகழப் படுபவளும், மெய்யுணர்ந்தோரது அன்பிற்குத் தலைவியும், மூன்று கண்களை உடையவளும் ஆகிய பராசத்திக்கு அன்பு செய்து மேம்படு; அழகிய கொடிபோல்பவராகிய கலைமகளும், திருமகளும் உன் பாதங்களைப் போற்றுவார்.

குறிப்புரை :

முதலடியை ஈற்றிற் கூட்டி உரைக்க. `பொற்கொடி மாதர்` என்பது பின்னர்க் கூறப்பட்ட மாதோடு உடன் எண்ணப்படு வாரைக் குறித்தது. இவ்வாறன்றி இயைபில்லாத மக்கட் பெண்டினர் எண்ணுதல் கூடாமையானும்` அங்ஙனங் கொண்டுரைப்பின் வாம நெறியாமாகலானும் அது பொருந்தாமை யறிக. `பராசத்தியை வழிபடினும் கல்வியின் பொருட்டும், செல்வத்தின் பொருட்டும் கலைமகளையும், திருமகளையும் வழிபடுதல் இன்றியமையாது போலும்` என ஐயுற்றமாணாக்கனை, `பேரன்புடைப் பெருமக்கட்குப் பராசத்தியே அனைத்தையும் தருவாள்` எனத் தெளிவித்தவாறு.
இதனால், சிவசத்தி வழிபாடு ஒன்றே அனைத்துப் பயன்களையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 92

விளங்கொளி யாய விரிசுடர் மாலை
துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக்
களங்கொள் மணியுடன் காம வினோதம்
உளங்கொள் இலம்பியம் ஒன்று தொடரே.

பொழிப்புரை :

விளங்குகின்ற விளக்குப் போல்பவளும், மிக்க ஒளியுடைய மணி மாலைகள் அசையும் மார்பினை உடையவளும் ஆகிய பராசத்தி, செறிந்த இருள் மறையும்படி கண்டத்தில் நீல மணியைக் கொண்டு விளங்கும் சிவனுடன் இன்ப விளையாடலைக் கருதுகின்ற, நாணம் பொருந்திய ஒரு தோற்றத்தையும் நினைத்து வழிபடு.

குறிப்புரை :

`வழிபடின் இன்பத்தைப் பெறுவாய்` என்பது குறிப் பெச்சம். இன்பத்திற்காகவும் பிறதேவியரை வழிபட வேண்டுவ தில்லை என்றபடி. மணியையுடையவனை, ``மணி`` என்றார். இலம்பியம், நாணத்தால் தலை இறைஞ்சிய தோற்றம்.
இதனால், சத்தி வழிபாடு இன்பத்தையும் அளித்தல் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 93

தொடங்கி உலகினில் சோதி மணாளன்
அடங்கி யிருப்பதென் அன்பின் பெருமை
விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
ஒடுங்க உமையொடும் ஓருரு வாமே.

பொழிப்புரை :

பாம்பை அணிந்த விரிந்த சடையில் பெரிய கங்கை நீர் ஒரு புல்நுனியில் நீர்போல் அடங்கியிருக்கச் சிவன் சத்தியோடு இரு திறமும் ஒருவடிவிலே அமைய நிற்கின்றான். உலகில் பிறந்து அறிவு தொடங்க நின்ற நாள் முதலாக அவனது அழகிய அந்த மணக் கோலத்திலே அடங்கி நிற்பதே எனது அன்பின் பெருமையாகும்.

குறிப்புரை :

`அதனால், இன்பம் முதலிய எந்த உறுதிப்பொருளிலும் எனக்குக் குறை இல்லை; உலகீர், நீவிரும் அவ்வாறு அடங்கி நின்று அனைத்துப் பயனையும் பெறுவீர்` என்பது குறிப்பெச்சம். `மணாளன் பால்` எனத்தொகுக்கப்பட்ட உருபை விரித்துக்கொள்க. `கங்கை பாம்பணிந்த சடையில் ஒடுங்க` என்றது ஓர் இன்ப நயம். `பாம்பையும், கங்கையையும் அடக்கின ஆற்றலுடையவன்` என்பது உண்மைப் பொருள். விடம், ஆகுபெயர். `ஒடுங்கி` என்பது பாடம் அன்று.
இதனால், சிவனைச் சத்தியோடு உடனாகக் கண்டு வழிபடுவார் எய்தாத பயன் இல்லை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 94

உருவம் பலஉயி ராவல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடின்
புரிவளைக் கைச்சினம் பொன்னணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே.

பொழிப்புரை :

பல உடம்புகளும், அவற்றில் உள்ள பல உயிர் களுமாய் நிறைந்து நிற்கின்ற சிவன் உயிர்களுக்குப் பல வேறு வடிவினனாய்க் காட்சியளித்தலை ஆராயின், அவையெல்லாம் அவன் தனது சத்தியோடு மணந்து மகிழ்கின்ற அருள் நாடகமே.

குறிப்புரை :

``பல`` என்பது ``உருவம்`` என்பதற்கு முன்னும் சென்று இயைந்தது. எளியனாய்க் காட்சிப்படுதலை, தெருவம் புகுதலாகக் கூறினார். ``இறைவன்`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது. `மகிழ்வனவாகிய மாயம்` என்க, அருவனாய் நிற்கின்ற சிவன் உருவனாய் விளங்குதல் சத்தியினாலே என்றவாறு.
இதனால், சிவன் உருவங் கொள்ளுதல் சத்தியால் என்பது கூறுமுகத்தால், சத்தியை மறத்தல் கூடாமை வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 95

மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்
தாயம் புணர்க்கும் சலதி அமலனைக்
காயம் புணர்க்கும் கலவியுள் மாசத்தி
ஆயம் புணர்க்கும்அவ் வியோனியு மாமே.

பொழிப்புரை :

உயிர்களின் பொருட்டுப் பலப்பல நாடகங்களைத் திருவுளத்துக் கொள்கின்ற சிவனது திருவடியாகிய உரிமைப் பொருளை உயிர்களுக்கு கூட்டுவிக்கின்ற நடிகையாகிய சிவசத்தி அச்சிவனை உருவம் உடையவனாகச் செய்தற்கு, அவனோடு கூடுகின்ற கூட்டத்திலே அவனுக்கு உருவத்தைக் கொடுத்தலேயன்றிப் பல்வேறு இனங்களாக அமைக்கின்ற பிறப்பு வகைகளாயும் நிற்பாள்.

குறிப்புரை :

`மாயம் புணர்ப்பவனுக்கு ஏற்ற மாயா வல்லபை` என்பார், சத்தியை, ``சலதி`` என்றார். `சல நதி` என்பது பாடம் ஆகாமையறிக. ``அமலன், மாசத்தி`` என்பன சுட்டுப் பெயரளவாய் நின்றன. சத்தி சிவனை மணத்தலால் சிவனுக்கு உருவம் உண்டாதலே யன்றிப் பல்வேறு பிறப்பு வகைகளும் அமைகின்றன என்பதாம். `அவ்வியோனி` என்னும் தற்பவ மொழியில் இடைநின்ற இகரம் குற்றியலிகரத்தின் இயல்பினதாய் அலகு பெறாமல் நின்றது.
இதனால், சத்தி சிவனை மணத்தலால் உளதாகும் மற்றொரு பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 96

உணர்ந்தொழிந் தேன்அவ னாம்எங்கள் ஈசனைப்
புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யானை
அணைந் தொழிந் தேன்எங்கள் ஆதிதன் பாதம்
பிணைந்தொழிந் தேன்தன் அருள்பெற்ற வாறே.

பொழிப்புரை :

உயிர்களால், `அவன்` என்று சேய்மைச் சுட்டாகப் பொதுவே உணரப்படுபவனாகிய எங்கள் தலைவனாகிய சிவனை நான், `அவன் அன்ன அருமையினன்` என முதற்கண் உணர்ந்தேன். பின்னர் அவன் உலக முதல்வியாகிய சத்தியை யுடைய சத்திமா னாதலை அறிந்து அவனை அணுகினேன். அதன்பின்னர் அவனோடு ஒன்றினேன். முடிவாக ஒருஞான்றும் அவனை விட்டு விலகாத நிலைமையனாயினேன். இவையே நான் சிவனது திருவருளைப் பெற்ற முறைமை.

குறிப்புரை :

`நீவிரும் அவ்வாறே பெற்றுய்ம்மின்` என்பது குறிப் பெச்சம். ``புவனாபதியார்`` என்னும் உயர்வுப்பன்மை ஒருமையோடு மயங்கிற்று. `ஈசற் புணர்ந்தொழிந்தேன்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
இதனால், `சிவனைச் சத்தி வழியாகவே பெறுதல் கூடும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 97

பெற்றாள் பெருமை பெரிய மனோன்மனி
நற்றாள் இறைவனே நற்பய னேஎன்பர்
கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப்
பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.

பொழிப்புரை :

இறைவனைப் போற்றுபவர், `நல்ல திருவடிகளை உடைய இறைவனே` என்றும், `அடியார்கட்கு மிக நல்ல பயனாய் உள்ளவனே` என்றும் அழைத்துப் போற்றுவர். அந்தத் திருவடிகளும், பயனுமாய் இருக்கின்ற பெருமையைப் பெற்றுள்ளவள் உயர்பெருந் தேவியாம் சத்தியே, இறைவனைப் பற்றிக்கூறும் நூல்களைக் கற்றுணர்ந்தவன் அறியும் பொருளாகிய இதனை அறிய வல்லவர்கட்கு இறைவனது அருளுலகத்தை அடைதல் சிறப்புப் பயனாகும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் வைத்தும், `அப் பெருமை பெற்றாள்` எனமாற்றியும் உரைக்க. நல்தாள், துன்பம் துடைத்து இன்பத்தைப் பொழியும்தாள். கற்றான் அறியும் கருத்தும் இதுவேயாதலை வேறுபோலக் கூறினார், அதனது அருமை தோன்று தற்கு, திருவருளை, `சிவன்தாள்` என்றல் வழக்கு. அருளுலகம், சுத்தமாயா புவனமாகிய அபரமுத்தித் தானங்கள். சிறப்புப் பயனாவது, அவருக்கே உரியதாய்ப் பிறருக்கு உரித்தாகாதது.
இதனால், சத்தியை உணரவல்லவரே உண்மை ஞானத்தைப் பெறுபவராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 98

தனிநா யகன்றனோ டென்நெஞ்சம் நாடி
இனியாள் இருப்பிடம் ஏழுல கென்பர்
பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக்
கனியா நினைவதென் காரண அம்மையே.

பொழிப்புரை :

ஒப்பற்ற தலைவனாகிய சிவனோடே எனது நெஞ்சத்தை விரும்பி இனியவளாய் இருக்கின்ற சத்தி ஏழுலகத்திலும் நிறைந்திருப்பவளே. ஆயினும், எனக்குத் தாயாகிய அவளை நான் நல்ல புதுமலர்களைக் கையில் கொண்டு உண்ணுவது உள்ளங்கை நெல்லிக்கனியாகவே.

குறிப்புரை :

`இனியார்` என்பது பாடம் அன்று. ``பனியால்`` என்றது, `குளிர்ச்சியோடு` என்றவாறு. காரண அம்மை - ஈன்ற தாய். `அம்மையை` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. `அம்மையைப் போது கை ஏந்தி நினைவது கனியா`` எனக் கூட்டுக.
இதனால், சத்தி பெரியவளும், அரியவளுமாயினும், வழி படுவார்க்கு எளியளாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 99

அம்மனை அம்மை அரிவை மனோன்மனி
செம்மனை செய்து திருமக ளாய்நிற்கும்
இம்மனை செய்த இருநில மங்கையும்
அம்மனை யாகி அமர்ந்துநின் றாளே.

பொழிப்புரை :

சிவனுக்கு அழகிய மனைவியும், உயிர்களுக்குத் தாயும் ஆகிய சத்தி, உயிர்களின் பல்வேறு நிலைகளிலும் அவற்றிற்கு ஆதாரமாய் நின்று, வேண்டுவனவற்றை வழங்குபவளாயும் இருப்பாள். அதனால், இன்று நமக்கு ஆதாரமாய் நிற்கின்ற நிலமகளும் அந்தச் சிவசத்தியாகவே எனக்குத் தோன்றுகின்றாள்.

குறிப்புரை :

``செம்மனை, இம்மனை`` என்பவற்றில், நிலைக்களம் ``மனை`` எனப்பட்டது. ஈற்றில் உள்ள அம்மனை, அனைவர்க்கும் தாயாகிய சத்தியைக் குறித்தது.
``பரஞானத் தால்பரத்தைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார்``. 1
என்னும் முறைபற்றி, ``இருநில மங்கையும் அம்மனையாகியமர்ந்து நின்றாள்`` என்றாள்.
இதனால், சத்தி அனைத்து ஆதார ஆதேயங்களுமாய் நிற்றல் முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 100

அம்மையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அம்மையும் அத்தனும் ஆரறிவார் என்னை
அம்மையொ டத்தனும் யானும் உடனிருந்
தம்மையொ டத்தனை யான்புரிந் தேனே.

பொழிப்புரை :

உலகத்தாயும், தந்தையுமாகிய சத்தியும், சிவனும் என்பால் அன்புவைத்து எனக்கு ஆவன செய்தலல்லது, என்னைப் பெற்ற தாய் தந்தையர்தாம் என்னை எந்த அளவில் அறிந்து எனக்கு என்ன செய்யவல்லுவர்! ஆகையால், உண்மைத் தாயாகிய சத்தியும், தந்தையாகிய சிவனும், மகனாகிய யானும் மட்டும் ஒன்றி யிருந்த காலத்து யான் அவ்விருவரையே விரும்பி அவரிடம் அயரா அன்பு உடையவனாயினேன்.

குறிப்புரை :

`அதனால், அளவிலா ஆனந்தத்தையும் பெற்றேன்` என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடிக்கு, `அம்மையும் அத்தனுந் தாம் என்னை யாராக அறிவர்?` என உரைக்க. `உயிர்களே தம்மில் ஒன்றற்கு ஒன்று யாதும் செய்து கொள்ளல் இயலாது` என்பது முதல் இரண்டடிகளில் விளக்கப்பட்டது. அதனானே, உயிர்கட்குப் பெத்தம், முத்தி ஆகிய எக்காலத்தும் சத்தியும், சிவனுமே பரம ஆதாரமாதல் விளக்கப்பட்டதாம். இம்மந்திரம் முத்தி பஞ்சாக்கரப் பொருளதாய் நிற்றலை நுனித்துணர்ந்து கொள்க.
இதனால், உயிர்கட்குப் பரம ஆதாரம் இது என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஏரொளி உள்எழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னால்எழும் நாதமாம்
ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே.

பொழிப்புரை :

தன்னுள்ளே ஏரொளி எழப்பெறுவதாகிய தாமரை மலர் நான்கிதழ்களை யுடையது. அவ் ஏரொளியாவது, சுத்த மாயையினின்றும் தோன்றும் வாக்கேயாம். அவ்வொளி பல கூறுகளாய் வளர்ந்து உடம்பெங்கும் குறைவின்றி நிறையப் பெற்ற பின், உடலாகிய சக்கரம் (யந்திரம்) ஏரொளிச் சக்கரமாய்விடும். அப்பொழுது ஐம்பூதங்களில் ஒளிப் பொருளாகிய தீ, அச்சக்கரத்தின் நடுவிலே அணையாது நின்று ஒளிர்வதாம்.

குறிப்புரை :

`எழப்பெறுவதாகிய தாமரை` எனவே, `அதுவே ஏரொளி தோன்றுவதாகிய முதலிடம்` என்பது பெறப்பட்டது. இது `மூலாதாரம்` என்பதும், இதன் இயல்பும் முன்னையதிகாரத்தில் விளக்கப்பட்டன. இவற்றைத் தோற்றுவாய் செய்யவே, `பிற ஆதாரங்களின் இயல்பையும் ஈண்டு நினைவு கூர்க` என்றதாயிற்று. விந்துவினால் - `விந்து` என்னும் காரணப் பொருளால், `அவ் ஏரொளிக் கலை`எனச் சுட்டினை மாற்றி யுரைக்க. ``எங்கும்`` என்றது, `உடலெங்கும்` என்னும் பொருளதே யாதலின், `ஏரொளிச் சக்கரமாய் அமைவது உடம்பே` என்பதுபோந்தது. போதரவே, அஃது அங்ஙனம் அமையுமாற்றைப் புறத்துக் கண்டு வழிபடும் முறை இனி இங்குக் கூறப்படுவது என்பது விளங்கும். ``அந்நடு`` என்றது `அதன் நடு` என்றவாறு. `உடலாகிய சக்கரத்தின் நடுவே தீ நிற்கும்` எனவே, `புறத்து வரையப்படும் சக்கரத்தின் நடுவில் அக்கினிக்குரிய `ஹ்ரூம்` என்னும் பீசாக்கரம் அடைக்கப்படும் என்பது புலனாம்.
இதனால், இவ்வதிகாரப் பொருள்கட்குத் தோற்றுவாய் செய்யப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன
வன்னி எழுத்தவை வானுற ஓங்கின
வன்னி எழுத்தவை மாபெருஞ் சக்கரம்
வன்னி எழுத்திடு மாறது சொல்லுமே.

பொழிப்புரை :

தீயின் பீசாக்கரங்களே ஏனைய பூத அக்கரங்கள் எல்லாவற்றினும் சிறந்து நிற்கும். அதனால், அவை வானத்தையும் அளாவி நிற்கும். அவற்றையே `சக்கரம்` என்று கூடச் சொல்லி விடலாம்; அவற்றைச் சக்கரத்துள் இடும் முறை இங்குச் சொல்லப்படும்.

குறிப்புரை :

பிரணவத்தோடு கூடி நிற்றல் பற்றிப் பன்மையாக ஓதப் பட்டது. மூன்றிடத்தும் `அவையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல் பெற்றது. ``சொல்லும்`` என்றது `சொல்லப்படும்` என்றவாறு.
இதனால், மேல், ``அந்நடு வன்னி`` என்றதன் சிறப்புக் கூறப்பட்டது. இச்சிறப்பு, ஒளிச் சக்கரமாகிய இயைபு பற்றிக் கொள்ளப்படுவது என்க.

பண் :

பாடல் எண் : 3

சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்
சொல்லிடும் அப்பதி அவ்வெழுத் தாவன
சொல்லிடு நூறொடு நாற்பத்து நால்உருச்
சொல்லிடு சக்கர மாய்வரும் ஞாலமே.

பொழிப்புரை :

``விந்துவினால் எழும் நாதம்`` என்புழிச் சொல்லப் பட்ட சுத்த மாயை வாக்காக விருத்திப்படுமிடத்துப் பன்னிரு பிராசாத கலைகளாயும் விருத்திப்படுவதாம். அக்கலைகளே சிவமாயும் விளங்கும். அவைகளை, நூற்று நாற்பத்து நான்கு அறைகளில் அமைக்க, மேற்கூறிய ஏரொளிச் சக்கரம் தோன்றுவதாம்.

குறிப்புரை :

நாதம் - வாக்கு. அதன் கலைகளையும் நாதம் என்னும் பெயராற் கூறினார். ``எழுத்து`` என்றதும் அதனை. பிராசாத கலைகள் முன்னைத் தந்திரத்தில் சொல்லப்பட்டன. `அவ்வெழுத்து அப் பதியாவன` என மாறிக் கூட்டுக. `பதியும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. சிவசத்தியால் நேரே இயக்கப்படுதலால், `சிவமும் ஆவன` என்றார். நூற்று நாற்பது அறைகள் அமையுமாறு பின்னர்க் காட்டப்படும்.
இதனால், ஏரொளிச் சக்கரத்தின் வடிவு பொதுமையிற் கூறி, அது திருவருளைப் பெறுதற்கு வாயிலாதற் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மேல்வரும் விந்துவும் அவ்வெழுத் தாய்விடும்
மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல்வரும் அப்பதி அவ்வெழுத் தேவரின்
மேல்வரு சக்கர மாய்வரும் ஞாலமே.

பொழிப்புரை :

உயிரெழுத்துக்களின் ஈற்றில் ஓதப்படும் விந்து வாகிய `அம்` என்பது தனிஓர் எழுத்தாய் நிற்பினும், அகரம் முதலிய பிற உயிர்களோடு கூடி நிற்றலும் உடைத்து, முடிவில் உள்ள நாதமாகிய `அ;` என்பதும் அத்தன்மையது. சக்கரங்களில் முதற்கண் உள்ள அறையில் எந்த எழுத்து உள்ளதோ, அந்த எழுத்துக்குரிய கலையின் சக்கரம் அதுவாகும். அவ்விடத்து அச்சக்கரம் அக்கலைக்குரிய பிண்டமாதலேயன்றி அண்டமாயும் விளங்கும்.

குறிப்புரை :

``அவ்வெழுத்து`` மேற்சொல்லப்பட்ட கலைக்குரிய எழுத்து, அவை பின்னர் அறியப்படும். `சக்கரமே ஞாலமாய் வரும்` என மாற்றிக் கொள்க.
இதனால், ஏரொளிச்சக்கர எழுத்துக்கள் சிலவற்றின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடும் அப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்த எழுத்தே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரம் பல உலகங்களாயும் அமையும் பெருமையது. அதில் உள்ள விந்து நாதங்களும் அன்ன. அதனால் அச்சக்கரத்தில் இருக்கும் எழுத்துக்களை அறிவுடையோர் சிவமேயாக எண்ணுதலில் தலைப்படுவர்.

குறிப்புரை :

`எழுத்தை அப்பதியாக யோசித்தலில் ஞாலம் ஆயிடும்` என்க. மூன்றாம் அடியில் ``ஞாலம்`` என்றது அறிவுடையோரை. இதனால், ஏரொளிச் சக்கரத்தின் எழுத்துக்களைச் சிவமாக எண்ணுதல் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்தது சக்கர மாக
விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.

பொழிப்புரை :

சுத்த மாயையினின்றும், விருத்திப் பட்ட எழுத்துக்கள் முதற்கண் `நாதமும், விந்துவும்` என்னும் சூக்கும, சூக்குமாசூக்கும நிலைகளாய் நின்று, பின்னரே தூலமாயினவாம். அந்த எழுத்துக்களால் சக்கரங்கள் அமையுமிடத்து ஒடுக்க முறையில் முதற்கண் பிருதிவி சக்கரமும், அதன்மேல் அப்பு சக்கரமும் நிற்கும்.

குறிப்புரை :

`விந்துவும் நாதமும் ஆய்` என ஆக்கம் வருவித்து முடிக்க. ``விந்துவும், நாதமும்`` என்றது ஒடுக்கமுறை. விந்துவே, `பைசந்தி` எனவும், நாதமே `சூக்குமை அல்லது பரை` எனவும் சொல்லப்படும். விரிந்தநிலை மத்திமையும், வைகரியும், இச் சக்கரங்கள் அமையுமாற்றைப் பின்னர்க் காண்க. இதனால், ஏரொளிச் சக்கரத்தின் பகுதிகள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

அப்பது வாக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ் அன லாயிடும்
அப்பினில் அப்புறம் மாருத மாய் எழ
அப்பினில் அப்புறம் ஆகாச மாமே.

பொழிப்புரை :

மேற்சொல்லிய அப்புசக்கரத்தின்மேல் தேயுசக்கரம், அதன்மேல் வாயுசக்கரமும், அதன்மேல் ஆகாய சக்கரமும் அமையும்.

குறிப்புரை :

முதலடி அனுவாதம், இம் மந்திரத்தில் அப்புவை அடியாக எடுத்தமையின்யாவும் அதன்மேல் உள்ளனவாக ஓதினார்.
இதனால், அவை மற்றும் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

ஆகாச அக்கர மாவது சொல்லிடில்
ஆகாச அக்கரத் துள்ளே எழுத்தவை
ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம்
ஆகாச அக்கரம் ஆவ தறிமினே.

பொழிப்புரை :

ஆகாய பீசத்தைச் சொல்வதனால், ஆகாய சக்கரத்தில் அமைந்த எழுத்துக்கள் யாவும் அந்த ஆகாய பீசமாகவே ஆய்விடும். அதனால், ஆகாய சக்கரம் சிவானந்தத்தைப் பயக்கும் ஆற்றலுடையதாம்.

குறிப்புரை :

``சொல்லிடில்`` என்பது காரணப்பொருளில் வந்தது. இறுதிக்கண் இவ்வாறு கூறவே, ஏனைய பூத எழுத்துக்களைச் சொல் வதனால், அவ்வச்சக்கரத்தில் உள்ள எழுத்துக்களும் அவ்வாறாய்ப் பயன் தருதல் கொள்ளப்படும்.
இதனால், முன்னை இருமந்திரங்களில் எய்திவற்றிற்கு மேலும் ஒரு சிறப்புநிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அறிந்திடும் சக்கரம் ஐயைந்து விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி ஓர்க்கும்
அறிந்திடும் அப்பக லோன்நிலை ஆமே.

பொழிப்புரை :

இங்கு அறியப்பட்டு வரும் ஏரொளிச் சக்கரம், வரிசைக்கு ஐந்தாக ஐந்துவரியில் இடப்படும், இருபத்தைந்து புள்ளி களால் அமைவது. (எனவே அப்புள்ளிகளை நேர்க் கோடுகளால் இணைக்கத் தோன்றும் நானான்கு (4X4=16) பதினாறு அறை களால் அமைதல் பெறப்பட்டது.) அவ் அறைகளில் உயிரெழுத்துப் பதினாறும் நாதம் முதலாக அடைக்கப்படும். இவ்வாறாக அமையும் இச்சக்கரம் பொதுவே சிவசூரியனால் விளக்கப்படுவது.

குறிப்புரை :

``நாதம் முதலா`` என்றது ஒடுக்கமுறைபற்றி. உயிரெழுத் தின் ஈற்றில் நிற்கும் விசர்க்கத்தை `நாதம்` என்றும், அதன் அயலில் நிற்கும் அநுசுவாரத்தை `விந்து` என்றும் குறிப்பிடுதல் வழக்கு. பதி - பதம்; அறை. ஓர்க்கும் - பதிகளில் வைத்து நினைக்கப்படும். இருபத் தைந்து புள்ளிகளால் பதினாறு அறையுள்ள சக்கரம் அமைக்குமாறு:-
இதனால் ஏரொளிச்சக்கரத்தின் பகுதி வடிவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும்
எம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும்
இரும்முதல் நாலும் இருந்திடு வன்னியே
இரும்முத லாகும் எழுத்தவை எல்லாம்.

பொழிப்புரை :

மாதுருகாட்சரங்களில் அகாரம் முதலிய ஆறு எழுத்துக்களும் சிவன் எழுத்துக்களும் ஏகாரம் முதலிய ஆறு எழுத் துக்கள் சத்தி எழுத்துக்களும், இவற்றுக்கு இடையே உள்ள நான்கு எழுத்துக்கள் அங்கி எழுத்துக்களும் ஆகும். ஆதலின், உடலெழுத் துக்கள் பலவும் இந்த உயிரெழுத்துப் பதினாறனுள்ளே அடங்கிநிற்கும்.

குறிப்புரை :

உயிரெழுத்துக்களில் ஆறாவது எழுத்தினையே `இரு` எனத் தமிழ்முறையாற் குறித்தார். இதில் மூன்றாம் எழுத்தெதுகை வந்தது. நான்காம் அடியில், ``முதல்`` என்று, `முதன்மையான எழுத்து` என்றதாம். இரண்டாம் அடியின் முதற்சீரை முதலடியின் முதற்சீரே போலவும், மூன்றாம் அடியின் முதற்சீரை நான்காமடியின் முதற்சீரே போலவும் ஓதுவன பாடம் ஆகாமையறிக. உடலெழுத்துக்கள் பலவும் உயிரெழுத்துக்களில் அடங்கும் எனவே, அவ்வுயிரெழுத்துப் பதினாறினாற்றானே ஏரொளிச் சக்கரம் ஆக்கப்படும் என்றதாயிற்று, அங்ஙனம், அச்சக்கரம் அமையுமாறு:-

எழுத்துக்களின் வைப்பு முறையில் ஏழாவது முதலாகப் பத்தாவது முடிவாக உள்ள அந்நான்கு எழுத்துக்களை அம்முறை யானே அடைத்தல் வேண்டுமாயினும், நாயனார் அவற்றை அங்கி எழுத்துக்களாக ஈற்றில் வைத்து ஓதினமையின் அவைகளை மேற் காட்டிய முறையானே அடைத்தல் வேண்டும். மேல் (1240) ``சொல்லிடு விந்துவும் ஈராறு நாதமாம்`` என்றமையால், ஆதி எழுத்தாய அம்முதல் ஆறும், அம்மை எழுத்தாய ஏமுதல் ஆறும் ஆகிய பன்னீரெழுத்துக்களையும் முறையானே அகார கலை முதலிய பிராசாத கலை பன்னிரண்டிற்குரிய பன்னிரு கலைக்கும் உரிய எழுத்துக்களாகக் கொள்ளல் வேண்டும்` ``மேல்வரும் அப்பதி அவ்வெழுத் தேவரின் மேல்வரு சக்கரமாய்வரும்`` (1241) என்றமையால், மேற்காட்டியவாறு இருபத்தைந்து புள்ளிகளால் பிறந்த பதினாறு அறைகளையுடைய சக்கரம் பன்னிரண்டு வரைந்து, அவை ஒவ்வொன்றின் முதல் அறையிலும் அ ஆ முதலிய பன்னிரண்டு எழுத்துக்களையும் முறையானே வைத்து ஏனைய எழுத்துக்களையும் முறையானே அடைத்து, எல்லாச் சக்கரங்களிலும் இங்குக் காட்டிய வாறே நான்காம் வரிசையில் ஏழாம் உயிர் முதலிய நான்கனையும் அடைத்து முடிக்க. அகாரம் முதற்கண் நின்றது முதலிய சக்கரங்கள் பன்னிரண்டும், முறையானே அகார கலா சக்கரம், உகார கலா சக்கரம் முதலாக உன்மனா கலாசக்கரம் இறுவாய்ப் பன்னிரு பிராசாத கலா சக்கரங்களாய் விளங்கும். பிராசாத கலைகள் பன்னிரண்டில் வியாபினிக்கும், சமனைக்கும் இடையே வியோம ரூபினி முதலிய நான்கு கலைகள் அடங்கி நிற்கும். ஆதலால், எல்லாச் சக்கரங்களிலும் நான்காம் வரிசையில் உள்ள ஏழாம் உயிர் முதலிய நான்கு கலைகட்கும் உரிய எழுத்துக்களாகக் கருதிக்கொள்க.
பன்னிரண்டு சக்கரங்களிலும் உள்ள அறைகள் அனைத்தும் கூடி, (12X16=192)நூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் ஆயினும், ஏழாம் உயிர் முதலிய நான்கெழுத்துக்கள் உள்ள(4X12=48) நாற்பத் தெட்டு அறைகளை எண்ணாது விடுப்ப, எஞ்சிய அறைகள் (12X12 =144)நூற்று நாற்பத்து நான்காய் வரையறைப்படும். அதனையே மேல் (1240)``சொல்லிய நூறொடு நாற்பத்து நால்உரு`` என்றார்.
இன்னும், ``விரிந்த எழுத்து, அப்பதுவாக`` என்னும் மந்திரங்களில் (1243, 44) அகார கலை முதலிய பன்னிரு கலைகளும் பிருதிவி முதலிய ஐம்பூதங்களில் நிற்கும் எனக் கூறினமையாலும், பிருதிவி முதலிய பூதங்கள் நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளாகவும் கருதப்படும் ஆதலாலும், அகார கலை முதலிய நான்கு கலைகளும் நிவிர்த்தி முதலிய நான்கு கலைகளிலும், அர்த்த சந்திரன் முதலிய நான்கு கலைகளும் சாந்தியதீத கலையிலும் நிற்க, சத்தி முதலிய நான்கு கலைகள் சாந்தியதீத கலைக்கு மேல் உள்ள மந்திர கலையில் நிற்கும் ஆதலாலும் அவற்றின்மேல் முறையானே அப்பன்னிரு சக்கரங் களையும் அமைத்தல் வேண்டும்.
இதனால், ஏரொளிச் சக்கரத்தில் அடைக்கப்படும் எழுத்துக் களது தொகையும், முறையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்தவை ஆறது அந்நடு வன்னி
எழுத்தவை அந்நடு அச்சுட ராகி
எழுத்தவை தான்முதல் அந்தமு மாமே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரத்தில் அடைக்கப்படும் எழுத்துக் கள் நூற்று நாற்பத்து நான்கும் மந்திர கலை உளப்பட ஆறு வட்டங் களில் நிற்பனவாம். அவ் ஆறுவட்டங்களின் நடுவே அமைந்த இடமே ஏரொளிச் சக்கரத்தின் நடுவிடமாக, அவ்விடத்திலே முதற்கண் (1238) கூறிய வன்னி பீசமாகிய `ஓம் ரம்` என்பதுபொறிக்கப்படும். அவ் விடத்து நிற்கும் பிரணவமும், பீசமுமாகிய அவையே சிவசோதி சொரூபமாய் ஏரொளிச் சக்கரத்தில் உள்ள அனைத்து எழுத்துக் களிலும் தனது ஆற்றலால் வியாபித்து நிற்கும்.

குறிப்புரை :

முதற்றொட்டு இதுகாறும் கூறிவந்த ஏரொளிச் சக்கரத் தின் முழு வடிவம் இங்குத் தனியாகக் கொடுக்கப் பட்டிருத்தல் காண்க.
இதனால், ஏரொளிச் சக்கரத்தின் ஒளி எழுத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அந்தமும் ஈறும் முதலா னவைஅற
அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின்
அந்தமும் இந்துகை ஆருட மானதே.

பொழிப்புரை :

உடலெழுத்துக்களில் கவர்க்கமாதி ஐவருக்கத்தின் ஈற்றெழுத்துக்களும், யகாராதி சகாராதி (‹) வருக்கங்களின் ஈற்றெழுத்துக்களும் அவ்வவ் வருக்கத்தின் முதலெழுத்துக்களோடு கூடி அனாகத சக்கரத்தோடே நீங்கி யொழிய, விசுத்தி, ஆஞ்ஞை என்னும் இறுதி இரண்டாதாரங்களிலே உயிரெழுத்துப் பதினாறனோடு மற்றிரண்டெழுத்துக் கூடப் பதினெட்டெழுத்தே நிற்றலால், எல்லா உயிர்கட்கும் புகலிடமாகிய பரசிவனும் ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பன்னிரண்டு எழுத்துக் கடந்து நிற்பவனாகவே எண்ணப்படுகின்றான். அதனால், யோகத்தின் முடிவும் சந்திர மண்டலத்தையும் கடந்து துவாதசாந்தத்தை அடைவதே யாகின்றது.

குறிப்புரை :

`முதலானவற்றொடு` என உருபு விரிக்க. முன்னை மந்திரத்தில் `எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்`` என்றதனானே, ``அப்பதினெட்டு`` எனப்பட்டவை எழுத்துக்களாதல் பெறப்பட்டது. இறுதி ``அந்தம்`` இரண்டு முறையே சிவனையும், யோகத்தின் முடிவை யும் உணர்த்தின. பன்னிரண்டைக் கடந்தவனை, பதின் மூன்றாவதில் நிற்பவனாகக்கூறினார். கை - பக்கம்; இடம். நாத காரியமாவன் ஐம்ப தெழுத்துக்களாக, அவற்றுட் சிலவற்றானே ஏரொளிச் சக்கரம் அமை யும் என்றது என்னை? என்னும் ஐயத்தினை, முன்னிரண்டடிகளால் காரணங் காட்டி அறுத்தருளினார். பதின்மூன்றாந் தானமே துவாத சாந்தம்; அங்கே உள்ள பரவெளியே பரசிவன் விளங்கும் இடம்.
``ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க உந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற`` 1
என்றார் திருவுந்தியாரிலும். பதின்மூன்றாந் தானத்தில் நிற்றலை எடுத்தோதியது பன்னிரண்டு எழுத்துக்களைக் கடந்தவனாக எண்ணப் படுதலை உணர்த்தற்கு. ஈற்றடியால். ஆதார யோகத்தோடு நின்றொழி யாது, நிராதாரத்தின்வழி மீதானத்துச் செல்லுதலின் இன்றியமை யாமையைக் குறித்தார்.
இதனால், இவ்வதிகாரத்தின் கண்ணது, ஓர் ஐயம் அறுக்கப் பட்டது. முதற்றொட்டு இதுகாறும் வந்த மந்திரங்களின் வழி, அமையும் சக்கர வடிம் தனியாகக் காட்டப்பட்டிருத்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 13

ஆஇன மானவை முந்நூற் றறுபதும்
ஆஇனம் அப்பதி னைந்தின மாய்உறும்
ஆஇனம் அப்பதி னெட்டுட னாய்உறும்
ஆஇனம் அக்கதி ரோன்வர வந்தே.

பொழிப்புரை :

ஐம்பதெழுத்துக்களில் ஏரொளிச் சக்கரத்தில் உள்ள அவ்வுயிரெழுத்துக்கள் பன்னிரண்டுமே முந்நூற்றறுபது நாள்களாகிய ஆண்டும், பதினைந்து நாள்களாகிய பக்கமும், ஆறும், பன்னிரண்டும் ஆகிய இருதுக்களும், மாதங்களும் என்று இவை அனைத்துமாய் நிற்கும். அவற்றிற்கு அச்சிறப்பு, சிவ சூரியனது தோற்றத்தால் ஆனதாம்.

குறிப்புரை :

அ இனம் - அகரம் முதலிய உயிரெழுத்துக்கள் தொடை நோக்கி அகரம் நீட்டல் பெற்றது. எனவே, மேல் (1246) ``அறிந்திடும் அப்பகலோன் நிலையாமே`` என்றதனை வலியுறுத்தியவாறாயிற்று. வலியுறுத்தவே, பிராசாத யோகிகட்கு இச்சக்கர பாவனா முதிர்ச்சியே காலக் கணக்காய் அமைதல் கொள்க.
இதனால், ஏரொளிச்சக்கர எழுத்துக்கள் பற்றியதோர் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

வந்திடும் ஆகாச ஆறது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்ப திராசியும்
வந்திடும் நாளது முந்நூற் றறுபதும்
வந்திடும் ஆண்டும் வகுத்துறை அவ்விலே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரமே மேற்கூறிய சிவசூரியன் தோன்றும் ஆகாச வழியாகும். அதனால், அதன்கண் உள்ள எழுத்துக் களே அச்சூரியன் இயக்கத்தால் அமைகின்ற நாழிகைகளும், அந் நாழிகையால் ஆம் நாட்களும், அந்நாட்களால் ஆம் மாதங்களும், அம் மாதங்களின் நாள் முந்நூற்றறுபதால் அமைகின்ற ஆண்டும் ஆகும்.

குறிப்புரை :

``அது`` என்றது ஏரொளிச் சக்கரத்தை. செய்யுள் நோக்கி, நாழிகைக்குரிய `அறுபது` என்பதும், இராசிக்குரிய `பன்னிரண்டு` என்பதும் ஆகிய எண்ணுப் பெயர்கள் தொகுக்கப் பட்டன. ``இராசி`` என்றது மாதத்தை. `அக்கரமே வந்திடும் நாழிகை அறுபதும், வந்திடும் நாளது முப்பதும். இராசிபன்னிரண்டும் வந்திடும் நாளது முந் நூற்றறுபது வந்திடும் ஆண்டுமாகிய அவ் வில்லாக வகுத்துரை` எனச் சொற்களை விரித்தும் மாறிக் கூட்டியும் பொருள் உரைத்துக்கொள்க. வில் - ஒளி; என்றது, `சோதிட வகை` என்றவாறு.
இதனால், மேற்கூறிய சிறப்புப்படும் வகையெலாம் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 15

அவ்வினம் மூன்றும்அவ் ஆடது வாய்வரும்
கெவ்வினம் மூன்றும் கிளர்தரு ஏறதாம்
தவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம்
இவ்வினம் மூன்றும் இராசிகள் எல்லாம்.

பொழிப்புரை :

இராசிகள் பன்னிரண்டில் இடபம் முதல் நான் கினை முதற் கூறாகவும், விருச்சிகம் முதல் நான்கினைக் கடைக் கூறாகவும், எஞ்சிய நான்கையும் இடைக் கூறாகவும் பகுத்து, அக்கூறுகளை முறையே `மேட வீதி, மிதுன வீதி, இடப வீதி` எனக் கொள்க. இராசிகள் பன்னிரண்டும் இங்ஙனம் இம் மூன்று வீதிகளாய் அமைவனவாம்.

குறிப்புரை :

``அவ்வினம்`` - முதலாய்சிறந்து நிற்கும் அக்கூட்டம். `கவ்வினம்` என்பது விகாரமாயிற்று. கவ்வுதல், தனை அடுத்திருத்தல். தவ்வினம் - தவிர்ந்தன; எஞ்சியன, `இனம்` என்றது தமக்கு ஒரு முதல் உடையவற்றை. எனவே, அம் முதலோடு கூட நான்கிராசி ஒரு கூறுபடும் என்க. `வீதி` என்பது, `சூரியன் செல்லும் வழி` என்பர்.
இதனால், மேலவை பற்றியதொரு முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

இராசியுட் சக்கரம் எங்கும் நிறைந்தபின்
இராசியுட் சக்கரம் என்றறி விந்துவாம்
இராசியுட் சக்கரம் நாதமும் ஒத்தபின்
இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பன்னிரு சக்கரங் களும் முறையே மேடம் முதலிய பன்னிரண்டு இராசியுள் நிற்பன வாகக் கருதித் தியானிக்கப்படும். அத்தியானம் பன்னிரண்டாம் ராசி முடியச்சென்று முற்றின், தியானிப்பவன் விந்து வெளியைப் பெற்ற வனாய்த் திகழ்வான். அவன் பின்னும் அந்தத் தியானத்திலே அழுந்தி நிற்பின், நாத ஒலியைக் கேட்பவனாகவும் ஆவான். பன்னிரு சக்கரங் களும் பன்னிரண்டு இராசிக்குள் நிற்பனவாகக் கருதும் கருத்திற்கு இதுவே பயனாகும்.

குறிப்புரை :

``எங்கும் நிறைந்தபின்`` எனவும் ``ஒத்தபின்`` எனவும் போந்த அனுவாதத்தால், அங்ஙனம் நிறைவுறும்படித்தியானித்தலும், ஒத்தலும் பெறப்பட்டன. `விந்துவாம் என்றறி` எனமாற்றிக் கொள்க. பிராசாத கலைகள் பலவாயினும், இடைநிற்கும் விந்து நாத கலைகளையே சிறந்தனவாகக் கூறுவர். அக்கலைகள் அனுபவத்தில் முறையே ஒளியாயும், ஒலியாயும், தோன்றும் என்க.
இதனால், ஏரொளிச் சக்கரத் தியான முறையும், அதன் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 17

நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெலாம்
நின்றிடும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில்
நின்றிடும் அப்புறம் தாரகை யானதே.

பொழிப்புரை :

தம்மை அடுத்து நிற்கும் எழுத்துக் காரணமாகத் தாமும் விந்துவாய் நிற்கின்ற, ஏரொளிச் சக்கர எழுத்துக்கள், அன்ன காரணத்தானே நாதமாயும் நிற்கும். அவ்வெழுத்துக்களை அங்ஙனம் தியானித்தலில் சிறிதும் திரியாது நிற்பின், அந்நிலையின்பின் மேற்கூறிய ஒளிக்காட்சி விண்மீன்போலப் புலப்படும்.

குறிப்புரை :

`உயிரெழுத்துப் பதினாறனுள் ஈற்றில் நிற்கும் இரண் டெழுத்துக்கள் முறையே விந்து நாதங்களாய் நிற்கும்` என்பது முன்பே கூறப்பட்டது. அவற்றைத் தங்கீழ்ப் பெற்றவழி ஏனை உயிரெழுத் துக்கள், உயிர்மெய்யெழுத்துக்கள் எல்லாம் அங்ஙனமே விந்துவும், நாதமுமாய் நிற்கும் என்பதை இங்கு முதல் இரண்டு அடிகளில் எடுத் தோதினார். இரண்டாம் அடியின் பொருள், `நாதம் ஓங்கும் எழுத்துடன் (கூடி) அதுவாயும் நின்றிடும்` என்பதாம். நின்றிடும் அப்பதி - மனம் நிலைபெற்று நிற்கின்ற அந்த அறைகளில். அவ் வெழுத்தே வருதல், அந்த எழுத்தே தியானிக்கப்படுவனவாய் நிகழ்தல். நின்றிடும் அப்புறம் - நிற்கும் அந்நிலைக்குப்பின் `ஆகும்` எனற்பாலது, தெளிவு பற்றி, ``ஆனது`` எனப்பட்டது. ஒலியனுபவம், ஒளியனுபவம் இரண்டுமே நிகழுமாயினும் பரியதாய் முதற்கண் நிகழும் ஒளி யனுபவத்தையே சிறந்தெடுத்து ஓதினாராதலின், ஒலி யனுபவத்தை விலக்கிற்றிலர் என்க.
இதனால், மேற்கூறிய பயன்களுள் ஒன்றன் நிலை வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

தாரகை யாகச் சமைந்தது சக்கரம்
தாரகை மேலோர் தழைத்ததோர் பேரொளி
தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.

பொழிப்புரை :

மேற் கூறியது காரணமாக ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பன்னிரு கலா சக்கரங்களைப் பன்னிரு விண்மீன்கள் என்று கூறலாம். ஆயினும் அவற்றின் தியான முதிர்ச்சியில் விண்மீனினும் மிக்க பேரொளி ஒன்று மேலே உள்ளமை புலனாகும். ஆதலால், அந்த விண்மீன்போல நிற்கும் ஒளிக்காட்சியை இடைவிடாது காணுதல் அப்பேரொளி சிறிதுசிறிதாக மிக்கு விளங்குதற் பொருட்டாம்.

குறிப்புரை :

``சமைந்தது`` என்றது ஒப்புமை வழக்கு. `ஓர் பேரொளி தழைத்தது` என மாற்றிக்கொள்க. ``மேலே தழைத்ததோர் பேரொளி`` என்றே பாடம் ஓதலுமாம். `சந்திரனும், பகலோனுமாய்` என ஆக்கம் விரிக்க. வருதல் - புலனாதல். அடுக்கு, இடைவிடாமைப்பொருட்டு. `கண்டது வர` என மேலே கூட்டி முடிக்க.
இதனால், ஒளிக் காட்சி முதிர்வு தியான முதிர்ச்சியாதலால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக்
கண்டிடு வன்னிக் கொழுந்தள வொத்தபின்
கண்டிடும் அப்புறங் காரொளி யானதே.

பொழிப்புரை :

மேற்கூறியவாற்றாற் கண்டு தியானிக்கின்ற சக்கரத்தின் பயன் விந்துவாகிய ஒளிக்காட்சியின் வளர்ச்சியே. அவ்வளர்ச்சியோடுகூட அதற்குத் தக நாத ஒலியும் மிக மிகக் கேட்கப்படும், அவ்விரண்டனாலும் ஆன்மாவின் உள்ளொளியாய் அதனுட் கரந்து நின்ற சிவமும் அனுபவப் பட்டுவரும். அன்னதொரு சிவானுபூதிக்குப்பின் ஆன்மாவைத் தன்னுள் அடங்கக்கொண்டு விரிந்துள்ள சத்தி ஒளியாகிய நீல ஒளி காட்சிப்படுவதாம்.

குறிப்புரை :

`வளர்வது` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி. கண்டிடும் நான்கில் இடை இரண்டும் `அனுபவித்திடும்` என்னும் பொருளன. இறுதியது, `கண்டிடப்படும்` என்னும் பொருளது. இஃதொன்றும் முற்று; ஏனையவை எச்சம். ``வன்னி`` என்றது `ஒளி` என்றவாறு. `காரொளியானது கண்டிடப்படும்` என்க. ``எழுந்திட, ஒத்தபின்`` என்ற அனுவாதங்களால், எழுதலும், ஒத்தலும் பெறப் பட்டமை அறிக. ஒத்தல், விந்து நாதங்களின் வெளிப்பாட்டுக்குச் சமமாதல். `அப்புறக்காரொளி` என்பது மெலிந்து நின்றது. விந்து ஒளியை வளர்த்தலேயன்றிச் சிவஒளி சத்தி ஒளிகளையும் முறை யானே பயக்கும். இதனானும் இச்சக்கரம் ஏரொளிச் சக்கரமாதல் காண்க.
இதனால், ஒளிக் காட்சி முதிர்வின்பின் நிகழ்வன இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும்
பாரொளி நீரொளி சாரொளி காலொளி
வானொளி ஒக்க வளர்ந்து கிடந்த பின்
நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.

பொழிப்புரை :

யோக முதிர்ச்சியில் நீல ஒளியாய்க் காணப்படும் சத்திஒளி பூதாகாயத்தின் மேற்பட்ட பராகாயமாய் உலகத்தைத் தன்னுட் கொண்டு பரந்து நிற்றலாலே ஐம்பெரும் பூதங்கள் முதலிய பொருள்கள் பலவும் பயன் தரும் பொருளாய்ச் சிறந்து விளங்கு கின்றன. அச்சத்தி ஒளியூடே அதனினும் நுண்ணிய சிவமாகிய மெய்ப் பொருள் ஒன்றுபட்டு அச்சத்தி ஒளி உள்ள பொருள்களில் எல்லாம் தானும் உடன் நிறைந்து நிற்கின்றது.

குறிப்புரை :

`அதனை மறத்தல் கூடாது` என்பது குறிப்பெச்சம். அண்டம் - ஆகாயம். `அண்டமாய்` என ஆக்கம் விரிக்க. பொதிந்து - பொதிதலால். `உலகெங்கும் பொதிந்து` என மாற்றுக. விளக்கத்தையே இங்கு, `ஒளி` எனப் பன்முறையும் ஓதினார். சார் - யாதானும் ஒன்றைப் பற்றியே நிற்பதாகிய நெருப்பு. நேர்மை - நுண்மை. மூன்றாம் அடி உயி ரெதுகை.
இதனால், மேற்கூறிய சத்தி ஒளியது சிறப்பும், அதனோடு உடனிலையாய் நிற்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 21

நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்
நின்ற இவ் அண்டம் நிலைபெறக் கண்டிட
நின்ற இவ் அண்டமும் மூல மலமொக்கும்
நின்ற இவ் அண்டம் பலமது விந்துவே.

பொழிப்புரை :

மேற் கூறியவாறு சத்தியாகிய பராகாயம் பல அண்டங்கள் முதலிய எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கிப் பரந்து நிற்பது, அவை நிலைபெறுதலைச் செய்தற் பொருட்டாம். இனி அவ்வண்டம் முதலிய பொருள்கள் மாயையின் விளைவுகளாய் உயிர்கட்குச் சிவத்தை மறைத்துத் தம்மையே காட்டி நிற்றலால், அவற்றை அவ்வாற்றாற் செயற் படச் செய்யும் சத்தியும் ஓராற்றால் ஆணவ மலத்தோடு ஒப்பதாம்.

குறிப்புரை :

உம்மை இரண்டனுள் முன்னது சிறப்பு; பின்னது இறந்தது தழுவிய எச்சம். அவற்றுள் சிறப்பும்மையைப் பிரித்து, `நின்றதும்` எனக்கூட்டி உரைக்க. `அண்டம் நின்றதும் நிலைபெறக் கண்டிட` என முடியும். ``இவ்வண்டம்`` மூன்றனுள் இடையது ஒன்றும் பராகாயம்; ஏனையவை பௌதிக அண்டங்கள். பலம் - பயன்; விளைவு; `காரியம்` என்றவாறு. ``விந்து பலமதே; ஆதலின் சத்தியும் மூல மலம் ஒக்கும்` எனக் கூட்டி முடிக்க. இச்சத்தி இவ்வாற்றால் திரோ தானகரி எனப்படுதலும் அங்ஙனமாதற்குப் பயன் மூல மலத்தைப் போக்குதலும் ஆதல் வெளிப்படை. மாயையையும் இங்கு ``விந்து`` என்றே போயினார். அதனுள் வியாப்பியமாம் ஒற்றுமை பற்றி.
இதனால், சத்தியது வியாபகத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விதையதாம்
விந்திற் குறைந்திட்டு நாதம் எழுந்திடில்
விந்துவை எண்மடி கொண்டது வீசமே.

பொழிப்புரை :

`ஏரொளிச் சக்கரம் எல்லா உலகங்களையும் அடக்கி நிற்கும்` என்பது விளக்குதற்கு இது முதல் நான்கு மந்திரங்களால் உலக உற்பத்தி முறையை உணர்த்துகின்றார்.
`விந்து, நாதம்` என்ற இரண்டு தத்துவங்கள் உலகிற்கு அடி நிலையாய் உள்ளன. அவை யிரண்டும் முதற்கண் நிற்றல் போலத் தனித்து நில்லாது சமமாய்க் கலந்து கீழ்வருமாயின், அங்ஙனம் கலந்த அக்கலப்பே உலகத்திற்கு முதலாய் நிற்கும். பின்பு விந்து மிகுதியாக நாதம் குறைந்து நிற்க வேண்டில், அங்ஙனம் நிற்றற்கும் நாதத்தினும் விந்துவை எண்மடங்கு மிகுதியாகக் கொண்ட ஒருநிலை முதலாக அமையும்.

குறிப்புரை :

ஒப்பற்ற தனிப்பெரும் பொருளாகிய சிவம் உலகத்தை எண்ணாது இயல்யாய் நிற்கும் நிலையில் `சிவம்` என்னும் ஒரு பொருளேயாய் நிற்கும். பின் அது உலகத்தைத் தோற்றுவிக்க எண்ணும் பொழுது` தானும், தன் சக்தியும்` என இருகூறுபட்டு நிற்கும். அவ் இரு கூற்றுள் சிவத்திற்கும், சத்திக்கும் முறையே `நாதம், விந்து` என்பனவும் பெயராம். ஆகவே, நாதத்தினின்றே விந்து தோன்றுவ தாம். அத் தோற்றத்தின்கண் நாதமும், விந்துவும் முறையே தனித்தனி நின்று, பின் இரண்டும் சமமாய்க் கூடி நிற்கும். அந்நிலைக்குச் `சதாசிவம்` அல்லது `சாதாக்கியம்` என்பது பெயர். பின்னர், விந்துக் கூறு மிகுதியாக நாதக் கூறு குறைந்த ஒரு நிலை உளதாம். அதற்கு, `ஈசுரம்` அல்லது `மகேசுரம்` என்பது பெயர். அம் மகேசுரத்திலிருந்து விந்து குறைய நாதம் மிகுந்த ஒரு நிலை தோன்றும். அதற்கு `வித்தை` என்பது பெயர். இங்ஙனம் `நாதம், விந்து, சாதாக்கியம், மகேசுரம், வித்தை` என்னும் ஐந்து நிலைகள் அமைந்த பின்னரே, உலகம் பலப் பல வகையில் வியத்தகத் தோன்றுவனவாம். ஆகவே, அவ் அனைத்துத் தோற்றங்கட்கும் முதலாய் அமையும் ஐந்து நிலைகளையே இம்மந்திரத்திற் கூறினார் என்க.
``ஒக்க விழுந்திடில்`` என்றதனால் அவை இரண்டும் முன்னர்த் தனித் தனி நின்றமை பெற்றாம். ``எழுந்திடில்`` என்பது `எழுந்திடல் வேண்டுமாயின்` எனப் பொருள் தந்தது. ``எண்மடி`` என்றது, மிகுதி கூறியவாறு. மூன்று, நான்காம் அடிகள் முறையே வித்தை மகேச்சுரங்களைக் குறித்தமையும், ஐந்து நிலைகளையும் சொற் பல்காது செய்யுட்கேற்பச் சுருங்கி வர ஓதி முடித்தமையும் அறிக. விந்துவை முற்கூறியது ஒடுக்க முறைபற்றி. `விதை, வீசம், (பீசம்) என்னும் பொருட்சொற்கள் `முதனிலை` என்னும் பொருளவாய் நின்றன. இங்கும் இனி வருகின்றவற்றுள்ளும், `விதை` என்னும் இடங்களில் எல்லாம் `விரை` என்றே பாடம் ஓதுவாரும் உளர்.
இதனால், உலகத்திற்கு முதல் முதனிலையாகிய ஐந்து பொருள்கள் கூறப்பட்டன. இவை ஐந்தும் இறைவனாகிய சிவ னுக்கும், அவனுக்கு அவ்வந் நிலைகளில் இடமாய் நிற்கும் சுத்த மாயையின் விரிவுகட்கும் பொது என உணர்க. நாத விந்து நிலை வேறு பாட்டிற்குக் காரணம் முறையே சிவனது சத்தியின் `ஞானம், கிரியை` என்னும் வேறுபாடேயாம். உலகில் ஆண் பெண் கூறுகளாய சுக்கில சோணிதங்களையும் `விந்து, நாதம்` என்னும் பெயர்களால் கூறுப. ஆதலின் இம்மந்திரம் கருவுற்பத்தியாகிய வேறொரு பொருளையும் நயம்படக் தோற்றுவித்து இப்பொருட்குப் பின்னிரண்டடிகள் கருவுற்பத்திக்குச் சோணிதம் குறைதல் நலமாதலைக் குறிக்கும்.

பண் :

பாடல் எண் : 23

வீசம் இரண்டுள நாதத் தெழுவன
வீசமும் ஒன்று விரிந்திடும் மேலுற
வீசமும் நாதம் எழுந்துடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே.

பொழிப்புரை :

சிவத்தினின்றும் தோன்றும் உலக முதல்கள் இரண்டு உள்ளன. அவற்றுள் ஒன்று மேலாய் நிற்கும். (எனவே, மற்றொன்று கீழாய் நிற்பதாம். ) சிவத்தினின்றும் தோன்றும் அவ் இரு முதல்களும் முதற்கண் தனித்து நின்றவாறு நில்லாது சமமாய்க் கூடி நின்ற, பின்பே சுத்தமாயை பல உலகங்கட்கு முதலாய் நின்று, அவையாய் விரியும்.

குறிப்புரை :

``இரண்டு`` என்றது நாதவிந்துக்களையும், `மேலுற விரிந்திடும்` என்றது நாதத்தையும் என்க. இங்கு, ``நாதம்`` இரண்டும் `சிவம்` என்னும் பொருளவாய் நின்றன, ``வீசமும்`` என்னும் உம்மைகள் சிறப்பு. இறுதியதைப் பிரித்து விந்துவும்` எனக் கூட்டுக. ``விந்து`` இங்கு, சுத்த மாயை `விந்துவும் வீசமாய் விரிந்தது` என ஆக்கம் விரிக்க. காண் உம் அசைகள். `விரைந்திடும், நாதமும்` என்பன பாடம் அல்ல.
இதனால், மேற்கூறிய ஐந்தனுள் சிலவற்றது இயல்பு வகுத்துக் கூறப்பட்டது. அவற்றுள் சாதாக்கியத்தது இன்றியமையாமை வலியுறுத்தப்பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 24

விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத் தளவு
விரிந்தது உட்பட்ட எட்டெட்டு மாகில்
விரிந்தது விந்து விதையது வாமே.

பொழிப்புரை :

சுத்த மாயையே அனைத்தையும் வியாபித்து நிற்ப தாகலின், அதனை அறியாதார், `முக்குண வடிவான பிரகிருதி ஒன்றே உலகிற்கு முதனிலை` எனக் கூறும் கூற்று உண்மையன்றாய் ஒழிந்தது. சுத்த மாயை வித்தை முதலாக நாதம் முடிய விரிந்துநின்று அறுபத்து நான்கு கலைகளாகச் சொல்லப்படுகின்ற நூல்களையும் தன்னுட் கொண்டு நிற்குமாயின், சுத்த மாயையே வியாபகமானது; அதுவே உலகிற்குப் பெரு முதல்நிலை.

குறிப்புரை :

உம்மைகள் சிறப்பு. முதலில் உள்ள ``விந்துவும்`` என்பதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. இதனுள், ``வீசம்`` (பீசம்) என்றது, சாங்கியர் முதலிய பலருங் கூறும் முதனிலையைக் குறித்தது. அதுபற்றிக் கூறுவோரது கூற்று வீழ்தலை, அதுவே வீழ்தலாகக் கூறினார். `உட்பட்ட எட்டெட்டுமாய் விரிந்ததாகில்` எனவும், `அதுவே விதையாம்` எனவும் மாற்றுக. `எட்டெட்டுமாய்` என ஆக்கம் வருவிக்க. `உட்கட்ட` என்பதும், `அளவினில்` என்பதும் பாடம் அல்ல. ``அறுபத்துநான்கு கலைகளும்`` என்றது. `சொல்லுலகம் அனைத்தும்` என்றவாறு. இதனாலும், `சொல்லுலகம் ஆகாய பூதத்தின் காரியமே` என்றொழியும் சாங்கியர் முதலியோரது கூற்றுக்களை மறுத்தார். ``ஆகில்`` என்பது, ``நீரின் றமையா துலகெனின்`` 1 என்பதிற்போலத் தெளிவுப் பொருள்தந்தது.
இதனானே, பிற மதத்தார் கூறும் கூற்றுக்களை மறுத்து மேற் கூறியவை வலியுறுத்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 25

விதையது விந்து விளைந்தன எல்லாம்
விதையது விந்து விளைந்த உயிரும்
விதையது விந்து விளைந்தவிஞ் ஞானம்
விதையது விந்து விளைந்தவன் தாளே.

பொழிப்புரை :

சுத்த மாயை முதனிலையாக நிற்பவே பலவகை உலகங்களும், அவற்றுள் வாழும் பல உயிரினங்களும், அவற்றுள் வாழும் பல உயிரினங்களும், சவிகற்ப ஞானமும் உளவாவன. ஆயினும் அவை அங்ஙனம் உளவாதல் அம்மாயை சிவசத்தியை நிலைக்களமாகக் கொள்ளுதலாலேயாம்.

குறிப்புரை :

நான்கிடத்தும், `விந்து விதையதுவாகவே` என மாற்றி ஆக்கமும், தேற்றேகாரமும் விரித்துரைக்க. ``உயிர்`` என்றது அவற்றின் பிறப்பாகிய உடம்பை. சவிகற்ப ஞானம் உண்டாதல் சொல்லுலகத்தாலாம். ஈற்றடியில், `விளைந்த` என்னும் வினைப்பெயர் அகரம் தொகுத்தலாயிற்று. அப்பெயர் அத்தொழில் மேல் நின்றது. `அவன் தாட்கண்ணேயாய்` என இறுதியில் உருபும், ஆக்கமும் விரிக்க.
இதனால், மேலவற்றைப் பிறவாற்றால் வலியுறுத்தி, சுத்த மாயை முதனிலையாதல் சுதந்திரமாய் அன்று; சிவசத்தியின் வழியே யாம் என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

விளைந்த எழுத்தவை விந்துவும் நாதம்
விளைந்த எழுத்தவை சக்கர மாக
விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்
விளைந்த எழுத்தவை மந்திர மாமே.

பொழிப்புரை :

காரணகாரியங்கட்கு உள்ள ஒற்றுமையால் விந்து நாதங்களின் காரியமாகிய எழுத்துக்கள் பலவும் விந்து நாதங் களாகவே கொள்ளப்படும். அத்தன்மையவான எழுத்துக்களாலே எல்லாச் சக்கரங்களும் அமைதலின், அச்சக்கரத் தியானத்தால் அவை உடம்பினுள் மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் நின்று உடம்பை யும் விந்து நாதமயமாக்கி, ஆன்மாவையும் மந்திரான்மாவாகச் செய்யும்; அஃது எவ்வாறெனில் எழுத்துக்கள்தாமே மந்திரமாய் உருப் பெறுதலின்.

குறிப்புரை :

`நாதமும்` என்னும் எண்ணும்மையைத் தொகாது வைத்தோதுதல் பாடம் அன்று. ``ஆக`` என்ற வினையெச்சம் காரணப்பொருளில் வந்தது. `தியானத்தால்` என்பது ஆற்றலால் வந்தது. ``நிற்கும்`` என்பது, தன் காரியத்தையும் தோற்றுவித்துநின்றது. ஈற்றில் `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. சக்கரங்களின் இயல்பாகப் பொதுப்படக் கூறினாராயினும், சிறப்புடைய இவ் ஏரொளிச் சக்கரத்தின் இயல்பு உணர்த்துதலே கருத்து.
இதனால், இச்சக்கரத்தால் எய்தும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

மந்திரம் சக்கர மானவை சொல்லிடில்
தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாம்
தந்திரத் துள்ளும் இரேகையில் ஒன்றில்லை
பெந்தம தாகும் பிரணவம் உன்னிடே.

பொழிப்புரை :

`மந்திரம், சக்கரம்` என்பவற்றின் உண்மையைச் சொல்லுமிடத்து, அவைகளைக்கூறும் நூல்களின் கருத்து, `நாதமாகிய உண்மை எழுத்து ஒன்றே சோதி மண்டலமாம்` என்பதே. ஆகையால், அவ்வுண்மை எழுத்துக்களை உணர்த்தும் கருவிகளாகிய ஆகாய ஒலியையும், அதற்கு அறிகுறியாய் உள்ள வரிவடிவத்தையும் மிகச் சிறப்பித்துக் கூறும் அந்நூன்மொழிகள் முகமனாய் (உபசாரமாய்) அமைவனவே. இதனை, உணர்ந்து பரமபந்தமாய் உள்ள பிரணவத்தைத் தியானிப்பாயாக.

குறிப்புரை :

`தியானிப்பின் அது வேறாய்ப் புலப்பட்டுப் பந்தியா தொழியும்` என்பது கருத்து. உள் எழுத்து - உண்மையெழுத்து. அதனை ``ஒன்று`` என்றது வகைபற்றி. ``ஒன்றே`` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. வரிவடிவைக் கூறவே, அவற்றால் அறியப்படும் ஒலிவடிவும் பெறப்பட்டது. ``ஒன்றில்லை`` என்றது, `உண்மை ஒன்றில்லை` என்றதாய், உபசாரமாதலை உணர்த்திற்று. ஒன்று - சிறிது. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தல் பெற்றது. ``இல்லை`` என்பதன்பின் `ஆதலின்` என்பது எஞ்சி நின்றது.
இதனால், மந்திரம், சக்கரம் என்பவற்றது உண்மை கூறிப் பிரணவத் தியானம் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை
தன்னிட்ட டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே.

பொழிப்புரை :

தியானத்தின் பொருட்டு வரையப்பட்ட அறை களில் பொருந்தி விளங்கும் எழுத்துக்கள் அவ் அறைகளின் எல்லைக் கோடுகளைக் கடந்து ஒன்று மற்றொன்றிற் செல்வதில்லை. ஆகை யால், தியானிப்பவன் அவைகளைத் தனக்கு இயல்பாயுள்ள மறதி யாகிய தடை அற்றொழிய, அவ் அறைகளின் வழியே நின்று நினைக்கும் நிலையுடையனாயின், மேற்சொல்லிய உண்மை மந்திரத்தை நேரே காணுதல் கூடும்.

குறிப்புரை :

`உன்ன` என்பதன் ஈற்று அகரமும், `பின்னி, பன்னி` என்பவற்றின் ஈற்று இகரமும் தொகுத்தலாயின. `உன் வட்டம்` என இயைத்து வினைத்தொகை யாக்கலுமாம். தன் இட்டு - தன்னைக் கீழ்ப்படுத்தி.
இதனால், வரிவடிவங்கள் உபசாரத்தால் `மந்திரம்` எனவும், `சக்கரம்` எனவும் கூறப்படுகின்றன என்றமை பற்றி, அதன் கண் உறுதி நெகிழலாகாது என்பது கூறப்பட்டது. நெகிழின் பயன் விளையாது; நெகிழாத வழியே பயன் விளையும் என்றவாறு.

பண் :

பாடல் எண் : 29

பார்க்கலு மாகும் பகையறு சக்கரம்
காக்கலு மாகும் கருத்தில் தடம்எங்கும்
நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள்
ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

மேற்கூறிய முறைகளை அறிய வல்லவர்க்கு மந்திரங்களின் உண்மைக் காட்சியைக் காணுதலும், புறப்பகை அகப் பகைகளை நீக்குவதாய சக்கரத்தை நழுவ விடாது பற்றி அதனாற் பயன் அடைதலும், இருந்த இடத்திலிருந்தே எவ்விடப் பொருளையும் அகத்தில் காண்டலும், நுண்ணியவற்றிலும் நுண்ணிதாகிய சிவத்தைக் தன்னிடத்திலே பெறுதலும் கூடும்.

குறிப்புரை :

பார்த்தலுக்குச் செயப்படு பொருள் மேல் நின்று வந்தது. `கருத்தில் நோக்கல்` என இயையும். தடம் - வழி; இடம் ஆகு பெயர். நுணுக்கற்ற நுண்பொருள் - தன்னினும் நுணுகியது ஒன்றில்லாத நனி நுண்பொருள்.
இதனால், மேலதன்கண் நெகிழ்வின்றி நிற்றலால் வரும் பயன்கள் பல கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 30

அறிந்திடுஞ் சக்கரம் ஆதி எழுத்து
விரிந்திடுஞ் சக்கரம் மேலெழுத் தம்மை
பரிந்திடுஞ் சக்கரம்பார் அங்கி நாலும்
குவிந்திடுஞ் சக்கரம் கூறலு மாமே.

பொழிப்புரை :

ஏரொளிச்சக்கரத்தில் உள்ள எழுத்துக்கள் மேல் ``அம் முதல் ஆறும்`` என்னும் மந்திரத்தில் (1247) கூறியபடி முதலில் ஆறும், ஈற்றில் ஆறும், இடையில் நான்கும் ஆகிய எழுத்துக்கள் முறையே `சிவன், சத்தி, அக்கினி` என்னும் மூவருக்கும் உரியன ஆதலின், அவை முத்திறமும் கூடிநிற்கும் இச்சக்கரத்தின் பெருமை சொல்லில் அடங்குவதோ!

குறிப்புரை :

`நாலும் அங்கி; பார்` என மாற்றி இருதொடராக்கி உரைக்க. ``நாலும்`` என்றது `மேற்கூறியவாறு` என நினைவுறுத்திய வாறு.
இதனால், இச்சக்கரத்தின் பெருஞ்சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

கூறிய சக்கரத் துள்எழு மந்திரம்
ஆறியல் பாக அமைந்து விரிந்திடும்
தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண
மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரத்தில் உள்ள எழுத்துக்களாகிய மந்திரங்கள், சிற்றறிவினார் மதித்து விரும்பும் `தம்பனம், வசியம், மோகனம், ஆகருடணம், உச்சாடனம்` என்னும் ஐந்தோடு `மாரணம்` என்பதும் கூட ஆறாகின்ற மாறுபட்ட செயல்களை நல்லனவாக மதித்து விரும்புகின்றவர்கட்கு அவ்வாறே வேறுபட்டனவாகவும் அமைந்து விரிந்துநிற்கும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை இறுதியில் வைத்துரைக்க. `அவ் ஆறியல்பாகவும்` என்னும் சுட்டும் எச்ச உம்மையும் தொகுத்தலாயின. தம்பனம் முதலியவற்றின் இயல்புகள் முன்னைத் தந்திரத்திற் சொல்லப்பட்டன. `மாறு மதித்து` என இயையும். மாறுபட்டனவற்றை, ``மாறு` என்றார்.

பண் :

பாடல் எண் : 32

மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் மங்கனல் ஒக்கும்
மதித்தங் கெழுந்தவை மாரண மாகில்
கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே.

பொழிப்புரை :

மேற்கூறிய அம் மந்திரங்கள் அவரவரது பக்குவத் திற்கு ஏற்ப, ஒருத்தியே ஆய அருட்சத்தியாயும், அளவற்றவளாய திரோதான சத்தியாயும் நிற்கும். அச்சத்திகள் பலவுமாகின்ற பராசத்தி நீறுபூத்த நெருப்பு போல்பவள். ஆதலின், அம்மந்திரங் களால் உலகப் பயன்கள் கைகூடுமாயினும், பிறரை நலிய எண்ணு கின்ற தம்பனம் முதலியவைகளைச் சிறப்பாக மாரணத்தைப் பெரிதாக மதித்து அவற்றைச் செபித்தால் அவை சீற்றம் அடையும்; அதனால், அவ் இழி பயன்கள் கைகூட மாட்டா.

குறிப்புரை :

அருட்சத்தி, பராசத்தி இவர்களையே ``அம்மை`` என்றார், சிறப்பு நோக்கி. மாமாது - பெரியவள்; என்றது எண் பற்றி. ``ஆகும்`` என்பது எச்சம். மங்கி உள்ள அனல் அதன் இயல்பு அறியாது தீண்டினாரைச் சுடுமாதலின், அது அம்மையின் இயல்பறியாது தீங்கிற்குத் துணைபுரிய வேண்டி அணுகுவாரை ஒறுக்கின்ற பராசக்திக்குத் தொழில் உவமையாயிற்று. ``ஆகில்`` என்பதை, ``மதித்தங் கெழுந்தவை`` என்றதனோடும் கூட்டுக. ``காரணமாகில்`` என்பது பாடம் அன்று. கொதித்து அங்கு எழுந்து - அவ்விடத்துக் கொதித்து எழுதலால். பின்னர், ``கூடகிலா`` என்றே ஒழிந்தாராயினும், அவற்றிற்கு எதிரானவை விளைதல் இதனால் பெற்றாம். இங்ஙனமாயினும் சிறுபான்மை அப்பயன்கள் அப்பொழுதைக்கு நலமாய் விளைதலும், மேல், ``ஆறியல்பாக அமைந்து விரிந்திடும்`` என்றதனாற் பெறுதும்,

பண் :

பாடல் எண் : 33

கூடிய தம்பனம் மாரணம் வச்சியம்
ஆடியல் பாக அமைந்து செறிந்தடும்
பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்
தேடிஉள் ஆகத் தெளிந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரத்தின் சிறப்பை ஆராய்ந்து அதனை, `இம்மை மறுமை நலங்களைப் பயக்கும் திருவருளின் வாயில்` என்பதாக உள்ளத்திலே தெளிந்து, அவ்வாற்றால் அதனை மேற்கொள்பவர்க்கு, மேலே கூறிய தம்பனம் முதலிய ஆற்றல்கள் விளையாட்டின் தன்மையாக அவர்களிடம் தாமேவந்து பொருந்தி நிற்கும். அதனால், அவர்களைக் கெடுக்க எண்ணுகின்ற பகைவரும் அவர் இருக்கும் திருவருளாகிய பாசறைக்குள் புகமாட்டாதவராவர்.

குறிப்புரை :

`ஆதலின், அவர் அவைபற்றி இச்சக்கர வழி பாட்டினைச் செய்யார்` என்பது குறிப்பெச்சம். தம்பனம் முதலிய ஆறனுள் மூன்றை எடுத்தோதிப் பிறவற்றை உபலக்கணத்தால் தழு வினார், வச்சியம் - வசியம்; ஆரியச்சிதைவு, ``ஆடியல்பாக அமைந்து செறிந்திடும்`` என்றதனால், உயர்ந்தோரும் சிலவிடத்து உலகரை மகிழ்வித்தற்கு மாரணம் ஒழிந்தவற்றைப் பிறர்க்குத் தீங்கு பயவாத வகையில் சிறுபான்மை செய்தல் பெறப்படும். ``பகைவரும் வந்துறார்`` என்றேபோயினாரேனும், `பகைவரது மந்திர வலிகளும், அவரால் ஏவப்படும் தீய தெய்வங்களும் புகமாட்டா` என்பதும் கொள்க.

``ஆதி மந்திரம் அஞ்செழுத் தோதுவார் நோக்கும் மாதி ரத்தினும் மற்றைமந் திரவிதி வருமே`` 1
என்ற சேக்கிழார் திருமொழி இங்கு ஆழ்ந்து உணர்தற்கு உரியது. இம் மூன்று மந்திரங்களாலும், ``ஏரொளிச் சக்கர வழிபாடு தம்பனம் முதலிய இழி பயன்களையும் பயப்பதாயினும், அஃது உயர்ந்தோர்க்கு ஆகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

தெளிந்திடுஞ் சக்கர மூலத்தி னுள்ளே
அளிந்த அகாரத்தை அந்நடு வாக்கிக்
குளிர்ந்த அரவினைக் கூடிஉள் வைத்து
அளிந்தவை அங்கெழும் ஆடிய காலே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரத்துள் அகார கலா சக்கரத்தை மூலா தாரத்தில் கருதிக் குண்டலினியோடு பொருந்த வைத்துத் தியானத்தைத் தொடங்க, கலா சக்கரங்கள் பலவும் பிராணாயாமத்தால் முறையே அருளுருவாய் முதிர்ந்து பயன் தரும்.

குறிப்புரை :

`சக்கர அகாரத்தை` எனக் கூட்டுக. அளித்தல் இரண்டிடத்தும் அருளுருவாதல். ஆடுதல், அசைதல், இயங்கல். `நாடிய கால்` என்பது பாடமாயின் `நளிந்தவை` எனப்பாடம் ஓதுக. நளிதல் - செறிதல். குளிர்ச்சி, உறக்கத்தைக் குறித்தது. ``வைத்து`` என்றதனை, `வைக்க` எனத் திரிக்க. ``வைக்க`` என்றே போயினா ராயினும், `வைத்துத் தொடங்க` என்றலே கருத்தாதல், பின்னர் ``எழும்`` என்பதனால் பெறப்படும். `காலால்` என்னும் மூன்றனுருபு தொகுத்தலாயிற்று. `காலால் எழும்` என உடம்பொடுபுணர்த்து ஓதியதனால், `பிராணாயாமம் செய்ய` என்பது கூறியதாம்.
இதனால், ஏரொளிச் சக்கரத்தின் தியான முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்
ஆலித் தெழுந்தமைந் தூறி யெழுந்தவாய்ப்
பாலித் தெழுந்து பகையற நின்றபின்
மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே.

பொழிப்புரை :

கால், அரை, முக்கால், ஒன்று என இங்ஙனம் பல வகையால் வரையறுக்கப்பட்ட மாத்திரைகளின் படி அகாரம் முதலிய கலைகள் மந்திரங்களாக உச்சரிக்கப்பட்டுத் தோன்றிப் பொருந்தி அழுந்தி நின்று வளர்ந்து தம் தம் பயனைத் தந்து மேற்போய் பிறவி யாகிய பகை நீங்கும்படி முற்றி நிற்குமாயின், ஏரொளிச் சக்கரத்தில் உள்ள அம்மந்திரங்களை அம் முறையானே மாறி நிற்கக் கொண்டு செபிக்கின்ற அவர்களுக்கு அம்மந்திரங்கள் அவர்களை மிகவும் விரும்புகின்றனவாய் அமையும்; `அஃதாவது அவர்க்குக் கைவந்து நிற்கும்` என்பதாம்.

குறிப்புரை :

``காலரை முக்கால் முழுது`` என்றது, `பல்வேறு வரையறையானவை` என்றவாறு. பிராசாதகலைகளின் மாத்திரை யளவை `பிராசாத சட்கம்` முதலிய நூல்களிற் காண்க. ஆலித்து - ஒலித்து; ஒலிக்கப்பட்டு, ஒலிக்கப்படுதல் சக்கரத்தில் உள்ள எழுத்துக் களின் வழியாம். ``மாலுற்ற`` என்றது முற்று. `மந்திரம் மாறிக்கொள் வார்க்கு மாலுற்ற` என்க.
இதனால், `ஏரொளிச் சக்கர மந்திரங்களை மாத்திரை பிறழாது உச்சரித்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப்
பண்டைஉள் நாவில் பகையற விண்டபின்
மன்றுள் நிறைந்த மணிவிளக் காத்ஞிளி
என்றும் இதயத் தெழுந்து நமவே.

பொழிப்புரை :

பிராசாத கலைகளுக்குரிய மந்திரங்களாகக் கொள்ளப்பட்ட ஏரொளிச் சக்கர எழுத்துக்கள் இறைவன் எழுத் தாகவே ஆகி, யோக முறைப்படி உள்நாக்கில் மாறுபாடு நீங்க ஒலிக்கப் பட்ட பின்னர், முத்திக்கு நேரே வாயிலாகிய திருவைந்தெழுத்து இருதயத்திலே தோன்றி, அவ்வம்பலத்தில் நிறைந்து நிற்கின்ற, சிவமாகிய தூண்டாவிளக்காய் என்றும் ஒளிவிட்டு விளங்கும்.

குறிப்புரை :

பண்டை - பண்டை நெறி. `பண்டையின்` என ஐந்தன் உருபு விரிக்க. பகை - மாறுபாடு. `இன்றும்` என்பது பாடம் அன்று. `விண்டபின் நம எழுந்து ஆயிடும்` என முடிக்க. ``நம`` என்பது, திருவைந்தெழுத்தை முதற்குறிப்பாற் கூறியவாறு. பிராசாத யோகம் முதிர்ந்தவர்க்குத் திருவைந்தெழுத்து மந்திரம் எளிதில் பயன்தரும் என்றவாறு.
இதனால், ஏரொளிச்சக்கரத்தின் முடிந்த பயன் கூறப்பட்டு.

பண் :

பாடல் எண் : 1

அறிந்த பிரதமையோ டாறும் அறிந்து
அறிந்த அச்சத்தமி மேலவை குற்ற
அறிந்தவை ஒன்றுவிட் டொன்றுபத் தாக
அறிந்த வலமது வாக நடத்தே.

பொழிப்புரை :

முற்பக்கம் (பூர்வ பக்கம்) பிற்பக்கம் (அபர பக்கம்) என்னும் இருபக்கங்களில் உள்ள பதினைந்து திதிகளையும் அவ்ஆறு திதிகளாகப் பிரிக்கும் முறையில் சக்கரத்தை அமைத்து, உவாக்களோடு கூடப் பதினாறு திதிகட்கும் பதினாறு உயிரெழுத்துக்களில் அகாரத்தைக் கடையுவாவிற்கும், (அமாவாசைக்கும்) பதினாறாவது உயிரெழுத்தைத் தலையுவாவிற்கும் (பௌர்ணிமைக்கும்) உரியவாக வைத்து, ஏனையவற்றை ஆகாரம் முதலாக நேர்முறையில் முற்பக்க பிரதமை முதலியவற்றிற்கு உரியவாக எண்ணியும், பதினைந்தாம் உயிர் முதலாக எதிர்முறையில் பிற்பக்கப் பிரதமை முதலியவற்றிற்கு உரியவாகவும் கொண்டு, முதல் அறை ஒன்றில் மட்டும் அகாரத்தை யும், அடுத்து உள்ள அறைகளில் முறையே வலமாக ஆகாரம் முதல் பதினைந்தாம் உயிர்முடிய ஓர் எழுத்தை இவ்விரண்டு அறைகளிலும், பதினாறாம் உயிரெழுத்தை மட்டும் ஓர் அறையிலும் அடைக்க, (14X2) இருபத்தெட்டும், இரண்டும் ஆக முப்பது அறைகள் நிரம்ப, ஆறு அறைகள் நடுவில் வெற்றிடங்களாய் நிற்கும். அவற்றிற்கு நடுவில் `ஓம் பம்` என்னும் பிரணவ பீசங்களையும், அவற்றின் கீழ்த் தொடங்கி, `பைரவாய நம` என்னும் ஆறெழுத்துக்களை ஆறு அறைகளிலும் எழுதச்சக்கரம் நிரம்பியதாம். இரண்டிரண்டாய் உள்ள ஆகாரம் முதலியவற்றை அமாவாசை தொடங்கி அகரத்தை அடுத்த ஆகாரம் முதலியவற்றை ஒன்றுவிட்டு ஒன்றான அறைகளில் நேரே முற்பக்கப்பிரதமை முதலியவாக ஓர் எழுத்தைப்பத்துருச் செபித்துப் பௌர்ணிமை முடிவில் நடுவில் உள்ள பிரணவ பீசங்களோடு மூலமந்திரத்தைப் பத்துருச்செபித்து அமாவாசை முதல் பௌர்ணிமை முடிய ஒவ்வொரு நாளும் இவ்வாறு வழிபாடு செய்தல் வேண்டும். பின்பு பௌர்ணிமை தொடங்கிப் பிற்பக்கப் பிரதமை முதல் ஒவ்வொருநாளும் பதினைந்தாம் உயிர் முதலாக எதிர் முறையில் அவ்வாறே ஒன்றுவிட்டொன்றாக ஒவ்வோர் எழுத்தையும் பத்துருச் செபித்து, முடிவில் மேற்கூறியவாறு நடுவில் உள்ள மந்திரத்தைச் செபித்து வழிபாடு செய்ய வேண்டும். வழிபடும் நாளில் அன்றைய திதிக்குரிய எழுத்து முதலாகத் தொடங்கி அதற்கு முன்னுள்ள எழுத்தில் வந்து முடியவே செபித்தல் வேண்டும். எழுத்துக்களை முதலில் பிரணவத்தையும், ஈற்றில் மகாரத்தையும் கூட்டி உச்சரித்தலேமுறை. பதினைந்தாம் உயிரைமட்டும் ஹகாரத்தின் மேல் ஏற்றி `ஹம்` எனக்கூறல் வேண்டும். அகாரம் ஒழிந்த பிற உயிர்களையும் ஹகாரத்தின் மேல் ஏற்றிக் கூறுதல் வடமொழி வழக்கு.

குறிப்புரை :

வயிரவர் எந்நாளும் பாதுகாப்பவராதல் பற்றி, ``கால பைரவர்`` எனப்படுதலின், கதிரளவை, (சௌரமானம்) மதியளவை (சாந்திரமானம்) இரண்டிற்கும் பொதுவான திதிக்காலத்தை ஒட்டி வழிபடுதல் வேண்டும் என்பது இம் முறையால் அறிந்து கொள்ளப் படும். ``வலமாக`` என்றாரேனும் அது முற்பக்கத்தில் என்பது எழுத்து முறையாற் பெறப்படுதலின், பிற்பக்கத்தில் எதிர் முறையால் இடமாகச் செல்ல வேண்டும் என்பது உணர்ந்து கொள்ளப்படும். நடுவில் பிரணவம், பீசம், மூலமந்திரம் இவற்றை எழுதுதல் பொது முறையானே கொள்ளப்படும். `நடவே` என்பது பாடம் அன்று. இங்ஙனம் கூறப்பட்ட இச்சக்கர அமைப்பினைக் காண்க.
மேல் வை குற்ற - பின்னர்ப் பொருந்தியுள்ள எழுத்துக்கள். இவற்றை `சத்தமி முதலாக` என்றமையின், ஒரு வரிசையில் ஆறு எழுத்துக்கள் உள்ளமை விளங்கும்.
இதனால், வயிரவச் சக்கரத்தின் அமைப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நடந்த வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாடல் ஆமே.

பொழிப்புரை :

இச்சக்கரத்தில் விளங்கும் வயிரவ மூர்த்தி, சிறப்பாகச் சூல கபாலங்களை ஏந்திய வேக வடிவத்தினர். அதனால், அவர் தம் அடியவரை வென்ற பகைவரைத் தாம் போர்ச்சூழ்ச்சி அற்றவராகச் செய்து, அவர்தம் உயிரையும் போக்கித் தமது வெற்றிக்கு அறிகுறியாக அவர்களது உயிர் நீங்கிய உடலங்களைப் பந்துபோல எறிந்து வீர விளையாட்டுச் செய்தருளுவார்.

குறிப்புரை :

கண், இங்கே, அறிவு. ``பகைவர்`` என்றது அடியவர் தவச் செயலுக்குப் பகையாய் நிற்பவரை.
``ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்`` 1
என்னும் திருக்குறள் உரையில் பரிமேலழகரும், ``ஒன்னார், உவந்தார்`` எனப்பட்டவரை, ``தம் அறத்&#

பண் :

பாடல் எண் : 3

ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டங்கு
ஆமே தமருக பாசமும் கையது
ஆமே சிரத்தொடு வாளது கையே.

பொழிப்புரை :

நரசிங்கன், திரிவிக்கிரமன் இவர்களது தோலைப் போர்த்துள்ள ஆதி வயிரவர் மேற்கூறிய சூல கபாலங்களைச் சிறப்பாக ஏந்தி விளங்குவார். இனித் தமருகம், பாசம், வெட்டப்பட்ட தலை, வாள் என்னும் இவைகளையும் அவர் கொண்டிருப்பார்.

குறிப்புரை :

`ஆகம் மேவ\\\" என்பது குறைந்து நின்றது. ஆகம் - உடம்பு; தோல்; ஆகுபெயர். \\\"ஆகம்\\\" என்றதனை வயிரவருடைய தாக்கி, திருமேனியில் எலும்பு முதலியவைகளை விரும்பிப்பூண்ட என உரைத்தலுமாம். இதில் பூணுதற்குச் செயப்படுபொருள் ஆற்றலால் கொள்ளப்படும். இரண்டாம் அடி முதலிய மூன்றனையும் \\\"ஆமே\\\" என்பவற்றோடு முன்னே கூட்டி முடிக்க. அவ்விடத்து முதற்கண் நின்றது வயிரவரது செயலாம்.
இதனால், வயிரவரது கையில் உள்ள படைக்கலம் முதலியவை கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

கையவை ஆறும் கருத்துற நோக்கிடு
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்ய ருளத்தில் துலங்குமெய் உற்றத்தாப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

பொழிப்புரை :

ஆறுகைகளும் நெஞ்சில் விளங்கும் படி நினைக்கப் படுகின்ற திருமேனி செந்நிறம் உடையதாக விளங்குகின்ற வயிரவ மூர்த்தியினது, தூயவர் உள்ளத்தில் துலங்கி நிற்பதாகிய வடிவம், உனது நெஞ்சிலும் உள்ளதாகக் கருதி, மாணவகனே, நீ வஞ்சனை யற்ற, மெய்யான அன்போடு அக்கடவுளை வழிபடுதலைச் செய்.

குறிப்புரை :

`செய்தால் பகைவரை அழிக்கும் பயன் உனக்குக் கிட்டுவதாகும்` என்பது குறிப்பெச்சம். பொய் - வஞ்சனை. அஃதாவது உறுதிப்பாடு இன்மை. மேலே குறிப்பால் உணர்த்திய வயிரவ மூர்த்தி ஆறு கைகளை உடையவர் என்பது இங்கு வெளிப்படையாக உணர்த்தப்பட்டது. இதனை, இந்நூலாற் பெறுதும். பெறவே, மேற்கூறிய படைக்கலம் முதலியவைகளில் சூலம், தமருகம், வாள் என்பன வலக்கைகளிலும், பாசம், கபாலம், வெட்டப்பட்ட தலை என்பன இடக்கைகளிலும் இருத்தல் புலனாகும்; தலையும், கபாலமும் பிரமனுடையனவே. அவை முறையே தலையைக் கிள்ளினமையை யும், அதன் ஓட்டில் எங்கும் சென்று குருதிப்பலி ஏற்றமையையும் நினைப்பிக்கும். நோக்கிடு மெய், வினைத்தொகை. `செம்மையாக` என ஆக்கம் வருவிக்க. `வயிரவன் மெய்` என இயையும்.
இதனால், வயிரவத் தியான முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பூசனை செய்யப் பொருந்திஓர் ஆயிரம்
பூசனை செய்ய அதுஉடன் ஆகுமால்
பூசனை சாந்துசவ் வாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.

பொழிப்புரை :

வயிரவ வழிபாட்டினைச் செய்ய விரும்பினால், மேற்கூறிய வயிரவச் சக்கரத்தினை மேற்கூறிய வகையில் ஓர் ஆயிரம் நாள் வழிபடல் வேண்டும். வழிபடின் அச்சக்கர வழிபாட்டின் பயன் கூடுவதாகும். அவ்வழிபாட்டினை, சந்தனம், சவ்வாது, புனுகு, நெய் என்னும் இவைகளைச் சிறப்பாகக் கொண்டு செய்து. அது நிறை வெய்திய பின் பகைவர்பால் உங்கள் பகையைப் புலப்படுத்திக் கொள்ளுங்கள்.

குறிப்புரை :

`அவ்வாறு செய்தால் வெற்றி கிடைக்கும்` என்பது குறிப்பெச்சம். வாம மார்க்கத்தை விரும்புவார் இதன் இரண்டாம் அடியை `மதுவுடன் ஆகுமால்` எனப் பாடம் ஓதுவர்.
இதனால், வயிரவ வழிபாட்டு முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய ஆறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகும் கருத்தே.

பொழிப்புரை :

ஒரு வரிசையில் ஆறு அறைகளை உடைய சக்கர வழிபாட்டின் பயன் கிடைக்கப்பெறின் பகைவர்பால் நீ கருதிய மாறுபாட்டுச் செயல் நீ நினைத்தவாறே முடியும். இனித்தம்பனம் முதலிய அறு செயல் ஆற்றலை அடைய விரும்பி இவ்வழிபாட்டினைச் செய்யின் அவ்விருப்பமும் இதனால் நிறைவுறும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் வைத்து உரைக்க. `கலகமும் வேண்டியவாறு ஆயிடும்` என்க. மெய் - சித்தி. `ஏரொளிச் சக்கரத்திற் கூறப்பட்ட ஆறுபயன்கள் இதனாலும் கிடைக்கும்` என்றற்கு அதனையும் இறுதிக்கண் கூட்டிக் கூறினார்.
இதனால், இச்சக்கரத்தின் பயன் பலவும் முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக இட்டிடின் மேலதாக்
காண்பதம் தத்துவம் நால்உள் நயனமும்
நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே.

பொழிப்புரை :

`சாம்பவி மண்டலம்` என்னும் பெயரினதாகிய சக்கரத்தின் அமைப்பினை யாம் சொல்லின், வரிசைக்கு எட்டு அறைகளாக எட்டு வரிசையில் அறுபத்து நான்கு அறைகளைக் கீறி, அவற்றின் நடுவில் நான்கு அறைகளை, `சிவம், சத்தி, நாதம், விந்து` என்னும் நான்கும் அருவத் திருமேனிகளாகக் கருதி, அவற்றையே அச்சக்கரத்தின் கண்களாக வைத்து, அனைத்தையும் முற்ற நோக்குதல் வேண்டும். அப்பொழுதே அச்சக்கர வழிபாட்டினை நாம் அறிந்தவராவோம்.

குறிப்புரை :

`மண்டலம், சக்கரம்` என்பன ஒருபொருட் சொற் களாதலின், `சாம்பவி மண்டலச் சக்கரம்` என்பது இருபெயரொட்டு. `இட்டிடின் காண்பதம்` என இயையும். மேல் என்றது இரட்டுற மொழிதலாய், உள்ளிடத்தையும், மேலிடத்தையும் உணர்த்தி, இரண்டாவது பொருளில் `தத்துவம்` என்பதனோடு இயைய, \\\"நால்\\\" என்பது காண்பதம் என்பதனோடும் சென்றியைந்தது. தத்துவம் நாலாக என ஆக்கம் வருவிக்க. `உள்ளே நயனமும் கண்டு` எனக் காணுதலை நயனத்திற்குங் கொள்க. நாடு - நாடுதல்; வழிபடுதல்; முதனிலைத் தொழிற்பெயர்.

பண் :

பாடல் எண் : 2

நாடறி மண்டலம் நல்லஇக் குண்டத்துள்
கோடற வீதி கொணர்ந்துள் இரண்டழி
பாடறி பத்துடன் ஆறு நெடுவீதி
ஈடற நாலைந் திடவகை ஆமே.

பொழிப்புரை :

நாடறிந்த மண்டலமான இந்த நல்ல சக்கரத்தில் வளைதல் இல்லாது நேராய்ச் செல்லும் வீதிகளை நாற்புறத்தும் அமைத்து, அவற்றில் ஒவ்வொரு வீதிக் குள்ளாலும் நடுவில் இரண்டிரண்டு அறைகளை இடைவெளியாகவிடுக. `நெடிய வீதி` எனப்பட்டவைகளில் உள்ள அறைகள் பதினாறாகும். இங்ஙனம் ஆனபின் வீதிக்குள் அமைந்த அறைகளின் எண்ணிக்கையும், உட்சுற்றில் உள்ள அறைகளின் எண்ணிக்கையும் தனித்தனி இருபதாம்.

குறிப்புரை :

பாடு அறி - படுதல் (உண்டாதல்) அறியப்பட்ட. பத்து, ஆறு என்பன அறைகள். ஈடேறுதல் - இடையீடின்றி வலம் செல்லல். `நடுவீதி` என்பதும். `ஏடற என்பதும் பாடம் அல்ல.

பண் :

பாடல் எண் : 3

நாலைந் திடவகை உள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நந்நால் இலிங்கமா
நாலுநற் கோணமும் நண்ணால் இலிங்கமா
நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே.

பொழிப்புரை :

இருபது அறைகளை உடைய ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிவட்டமாய் நிற்கும். நல்ல வீதிகள் நான்கிலும் திசைக்கு நான் காகப் பதினாறு இலிங்க உருவங்கள் இருக்க, நடுவில் உள்ள நான்கு அறை களிலும் அவ்வாறே நான்கு இலிங்கங்கள் நடுவில் உள்ள ஓர் இலிங்கத் துடன் நான்கு தாமரை மலர்களோடு நடுவொரு தாமரை மலரில் இருக்கும்.

குறிப்புரை :

பெருந்திசை பற்றிப் பதினாறே கூறினும், கோணத்திசை நான்கிலும் நான்கு இலிங்கங்கள் கொள்க. நள் - நடு; இதனைக் கோணத்திற்கும் கூட்டி, `நள் நாலு கோணமும் நள் நால் இலிங்கமா` என்க. இதனானே, நடுவிலும் ஓர் இலிங்கம் இருத்தல் கொள்ளப்படும். இதனால், இலிங்கங்கள் அனைத்தும் இருபத்தைந்தாகும். இது சதாசிவமூர்த்தியே மாகேசுர மூர்த்தி தம் இருபத்தைந்து ஆதலை விளக்கும். \\\"அவ்வாறே\\\" என்பதனை, \\\"கோணமும்\\\" என்றதன் பின்னர்க் கூட்டுக. கோணமும் அவ்வாறே `நண்ணலையுடையது` என ஒரு சொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 4

ஆறிரு பத்துநால் அஞ்செழுத் தஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறிநீர் உம்மில் சிவாய நமஎன்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.

பொழிப்புரை :

எட்டு எட்டு(8X8) அறுபத்து நான்கு அறைகள் உள்ள இச்சக்கரத்தில் சுற்று வீதியில் உள்ளவை இருபத்தெட்டு, நடு வில் உள்ளவை நான்கு ஆக முப்பத்திரண்டுடன் திசைக்கு இரண்டாக நான்கு திசைகளிலும் இடைவெளியாக நிற்கும் அறைகள் எட்டுக் கூட அறைகள் நாற்பது. நடுவு நான்கு அறைகளின் நடுவையும் ஓர் அறை யாகக் கொள்ள, கூடிய அறைகள் நாற்பத் தொன்று இவைகளில்.
உடலெழுத்துக்களில் ஐவருக்கத்து இருபத்தைந்தையும் இருபத்தைந்து இலிங்கங்கட்கும் உரிய எழுத்துக்களாக நடுவண் ஐந்தில் தென்கிழக்கு முதலாகத் தொடங்கிப் பின் மேற்கு முதலாக வலஞ்சென்று இலிங்கங்கட்கு அணியவான கீழ் அறைகளில் அடைத்தல் வேண்டும். பின்னர் யகரமாதி நான்கு, ‹ கரமாதி நான்கு ஆக எட்டினையும் சுற்று வீதியில், இடைவெளியாக உள்ள எட்டு அறைகளில் மேற்கு முதல் வலமாக அடைத்து, உட்சென்று வெற்றிடமாய் உள்ள எட்டு அறைகளில் முறையே, `ள, க்ஷ, ஓம், சி, வா, ய, ந, ம` என்னும் எட்டு எழுத்துக்களையும் அடைத்து நிரப்பிச் செபித்தல் வேண்டும். செபிக்கின் குறையின்றி வாழலாம்.

குறிப்புரை :

ஆறு + இருபது + நால் + அஞ்சு = முப்பத்தைந்து. இரண்டாவது அஞ்சு, திருவைந்தெழுத்து, `வேறு உருவாகக் கொண்டு` என ஒருசொல் வருவிக்க. உம்மில் கூறுமின் - வாய்க்குள் மெல்லெனச் செபியுங்கள். அஞ்செழுத்துக்களையே எடுத்துக்கூறினாராயினும் ஓங்காரமும் இயல்பாகக் கொள்ளப்படும்.
ஐவருக்கத்தது இருபத்தைந்து எழுத்துக்களும் மகேசுர எழுத்துக் களாய் நிற்றல் வெளிப்படையாக அறியப்படவே, பிரணவத் தோடு கூடிய திருவைந்தெழுத்து, சதாசிவ எழுத்தாதல் குறிப்பால் அறியப்படும். இவை இருதிறத்தனவும் இங்ஙனமாகவே, இவற்றிற்கு இடைநிற்கும் யகாராதி பத்தும் ஆன்ம எழுத்துக்களாய் ஆன்மாவை மகேசுரர், சதா சிவர் இருவர்களிடை வைத்துக் கீழ் நின்று மேல் ஏற்றுவனவாம் என்க.
ஏரொளிச் சக்கரம் பிரணவயோக சக்கரமாய் முழுவதும் உயிரெழுத்துக்களாலே அமைதலும், இது சாம்பவ யோக சக்கரமாய் முழுவதும் உடலெழுத்துக்களாலும் திருவைந்தெழுத்தாலும் அமைதலும் கண்டு கொள்க.
இவை நான்கு மந்திரங்களாலும் சாம்பவி மண்டலச் சக்கரத்தின் அமைப்புக் கூறப்பட்டது. இவ்வாற்றால் அமைந்த இச்சக்கர வடிவைக் காண்க.
இதில் உள்ள எழுத்துக்களைக் ககாரம் முதலாக ஒவ்வொன் றனையும் பத்துப் பத்து உருச் செபித்து, முடிவில் திருவைந் தெழுத்தையும் அவ்வாறு செபித்தல் ஒருவட்டமாகும் என்பது மேலை அதிகாரத் தொடர்ச்சியால் விளங்கும். ஏரொளிச் சக்கர வழிபாடு ஞானசாதனமும், இது போக சாதனமும் ஆகும் என்க. இம் மந்திரத்துள், \\\"குறைகளும் இல்லையே\\\" என்றது போகம் பற்றிய குறிப்பேயாம்.

பண் :

பாடல் எண் : 5

குறைவதும் இல்லை குரைகழல் கூடும்
அறைவதும் ஆரணம் அவ்வெழுத் தாகில்
திறம்அது வாகத் தெளியவல் லாருக்
கிறவில்லை என்றென் றியம்பினர் காண.

பொழிப்புரை :

வேதத்தால் மூலமந்திரமாகச் சொல்லப்படுவதும் திருவைந்தெழுத்தேயாதலின், அதனை அவ்வாறே தெளிய வல்லவர்கட்கு உலகப் பயன்களிலும் யாதும் குறைதல் இல்லை. வழிநிலைக் காலத்தில் `இறப்பு` என்பது இல்லாமல், சிவபெருமானது ஒலிக்கும் வீரக்கழலை யணிந்த திருவடியும் கிடைக்கும் என்று, அறிந்தோர் பன்முறையும் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

குறிப்புரை :

இரண்டு, மூன்றாம் அடிகளை முதலிற் கொண்டு, \\\"இறவில்லை` என்பதனைக் \\\"குறைவதும் இல்லை\\\" என்பதன் பின் கூட்டி உரைக்க. `குரைகழலும்` என்னும் சிறப்பும்மை தொகுத்த லாயிற்று. அடுக்குப்பன்மைப்பொருட்டு.

பண் :

பாடல் எண் : 6

காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்
காணுங் கனகமும் காரிகை யாமே.

பொழிப்புரை :

ஐம்புல நுகர்ச்சியவாக உலகில் காணப்படுகின்ற பல பொருள்களும், நினைக்கின்ற பலதெய்வங்களை வழிபடுதல், போற்றப்படுகின்ற திவ்ய தலங்களில் வாழ்தல், பெருகி ஓடுகின்ற நதி முதலிய புண்ணிய தீர்த்தங்களில் மூழ்குதல் ஆகியவற்றால் வரும் பயன்களும் நுகர்ச்சியும் நல்ல அறிவும், கவலையற்ற உறக்கமும், எல்லாம் தானேயாய் நிற்கும் பொன்னும் ஆகிய எல்லாம் இச் சாம்பவி மண்டலச் சக்கர வழிபாட்டினால் கிடைக்கும்.

குறிப்புரை :

\\\"தெய்வம்\\\" முதலிய மூன்றும் அவற்றால் ஆம் பயனைக் குறித்தன. பொன் உண்டாயின் எல்லாம் உளவாம்` என்பது பற்றி \\\"தானாகக்காணும் கனகம்\\\" என்றார். காரிகை - சாம்பவி; என்றது அவளுக்குரிய இச்சக்கரத்தை. `காரிகையால் ` என்னும் உருபு தொகுத்தலாயிற்று.
இவை இரண்டு மந்திரங்களாலும் சாம்பவி சக்கர வழிபாடு எல்லாப்பயனையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேஆகப்
போமே அதுதானும்? போம்வழி யேபோனால்
நாமே நினைத்தன செய்யலும் ஆகும்
பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்து எஞ்ஞான்றும் நன்மைக்கு ஏதுவாம் வழி உண்டாகவே செய்யும். அதனையே தெளிந்து வல்லாராதல் யாருக்குக்கூடும்! கூடுமாயின், நினைத்தவற்றை முடித்தல்கூடும். உலகில் நமக்குப் பகைவரும் இலாரவர்.

குறிப்புரை :

`ஆம் வழியே ஆக ஆம்` என முன்னே கூட்டி முடிக்க. போதல், மூன்றிடத்தும் `கைவருதல்` என்னும் பொருட்டு \\\"போமே\\\" என்பதில் ஏகாரம் வினாப் பொருளது. `தாமே` எனற்பாலதனை, \\\"நாமே\\\" எனத் தன்மையில் வைத்து ஓதினார். `ஒருவரது பகை` என ஆறாவது விரிக்க. `பகையும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 8

பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்தை ஓதுபவரிடத்தில் பகை, பெரியோர் இகழும் இகழ்ச்சி, இருவினை, பொருந்தாச் செயல்கள், இடையூறு என்பவை இல்லையாம். நாள்தோறும் நன்மைகளே விளையும். அம்மந்திரமே மலத்தை முற்றக் கழுவித் தூய்மையைத் தரும் நீராம்.

குறிப்புரை :

பணிந்தவர் - பணியப்பட்டவர். `தம்மால்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். \\\"நாணாளும் நன்மைகள் ஆகும்\\\" என்பதை, \\\"தகையில்லை\\\" என்பதன்பின் கூட்டி உரைக்க. மூன்றாம் அடி உயிரெதுகை.
இவை இரண்டு மந்திரங்களாலும், `முத்தியைத் தருவதாகிய திருவைந்தெழுத்து மந்திரத்தைப் போகம் வேண்டுவார் கணித்தல் பொருந்துமோ` எனப் பேரறிவில்லாதார்க்கு இச்சக்கரம் பற்றி எழும் ஐயம், `திருவைந்தெழுத்து எல்லாவற்றையும் தரும்` எனக் கூறி நீக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஆரும் உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே
ஆரும் அறியாத ஆனந்த ரூபம்ஆம்
பாரும் விசும்பும் பகலும் மதியதில்
ஊரும் உயிரும் உணர்வது மாமே.

பொழிப்புரை :

மண்ணும், விண்ணுமாகிய எல்லா இடத்திலும், பகலும், இரவுமாகிய எல்லாக் காலத்திலும் வாழ்தலை யுடைய எல்லா உயிரும், அவற்றின் உணர்வுமாய் இருப்பது திருவைந்தெழுத்து. அதனால், எதனை வேண்டுவோரும் அந்த மந்திரத்தை ஓதலாம். ஓதுவதால் உலகில் பிறர் அறிந்திலாத விடய இன்பமும், இறை இன்பமும் மிகவும் உளவாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. \\\"அஞ்செழுத்து\\\" என்பது தாப்பிசையாய் இடைநின்றது. ஆனந்த ரூபம் - இன்பமே உருவாம் நிலை. இன்பம் இருவகை இன்பத்திற்கும் பொதுவாய் நின்றது. \\\"மதியதில்\\\" என்பதிலும் தொகுக்கப்பட்ட எண்ணும்மையை விரிக்க. ஊர்தல் - உலாவுதல்; வாழ்தல்.
இதனால், மேலதனை முடிந்தது முடித்தலாகக் கூறி, அது வலியுறுத்தப்பட்டது.
இம்மந்திரத்தின் பின் முன்பு \\\"ஆதார ஆதேயம்\\\" என்னும் அதிகாரத்துட் போந்த. \\\"உணர்ந்தெழு மந்திரம்\\\" என்னும் மந்திரம் சிறிது வேறுபடப் பதிப்புக்களில் காணப்படுதல் மிகையாகும்.

பண் :

பாடல் எண் : 1

ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்
சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை
ககாராதி மூவித்தை காமிய முத்தியே.

பொழிப்புரை :

மேல் (1158) \\\"தக்க பராவித்தை\\\" என்னும் மந்திரத்தில் சொல்லப்பட்ட `ஷ்ரீவித்தை` எனப்படும் பராவித்தையை மேற்கொள்ள மாட்டாத மெலியோர்க்கு அமைந்தது இச்சக்கரம் என்பது உணர்த்துதற்கு முதல் நான்கு மந்திரங்களால் ஷ்ரீ வித்தையின் இயல்பே கூறுகின்றார். ககாரத்தை முதலில் உடைய ஐந்தெழுத்துக் களும் பொன்னிறம் உடையன; ஹகாரத்தை முதலில் உடைய ஆறெழுத்துக்களும் செந்நிறம் உடையன; ஸகாரத்தை முதலில் உடைய நான்கெழுத்துக்களும் தூய வெண்ணிறம் உடையன. ககாரத்தை முதலில் உடையது முதலிய இம்மூன்று வித்தைகளும் `போகம், மோட்சம்` என்னும் இரு பயன்களையும் தருவனவாம்.

குறிப்புரை :

ககாரத்தை முதலில் உடைமை பற்றி இவ்வித்தை (ஷ்ரீவித்தை) `காதி வித்தை` என்றும் சொல்லப்படுகின்றது.
ககாரதி ஐந்தாவன: `க, ஏ, ஈ, ல, ஹ்ரீம்` என்பன. ஹகாரத்தையே தமிழ் முறையால், \\\"அகாரம்\\\" என ஓதினார். ஹகாராதி ஆறாவன; `ஹ, ஸ, க, ஹ, ல, ஹ்ரீம்` என்பன. ஸகாரத்தையே அவ்வாறு \\\"சகாராதி\\\" என்றார். ஸகாராதி நான்காவன; `ஸ, க, ல, ஹரீம்` என்பன. இப்பதினைந்தெழுத்தின் தொகுதி, `பஞ்ச தசாட்சரி` எனப்படும்.
சத்திக்குரிய மந்திரங்களில் தலையானதாகக் கொள்ளப் படுவது, `லலிதா திரிசதி தோத்திரம்` என்னும் முந்நூறு நாமங்கள் கொண்ட கோவை. அந்நாமங்கள் இங்குக் காட்டிய எழுத்துக்களில் ஒவ்வொன்றை முதலாகக் கொண்டு ஓரெழுத்திற்கு இருபதாக (15X20)முந்நூறு உள்ளன. எனவே, அவற்றின் முதலெழுத்துக் களின் தொகுதியே இப்பஞ்ச தசாட்சரியாம்.
இப் பதினைந்தெழுத்தும் இம்மந்திரத்திற் சொல்லப்பட்ட வாறு மூன்று பகுதிகளாகக் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியும் `ஹ்ரீம்` என்பதை ஈற்றில் கொண்டு நிற்றல் அறியத் தக்கது. இம்மூன்று பகுதிகளும் முறையே, `வாக்பவ கூடம், காமராஜ கூடம், சத்தி கூடம்` எனப்படுகின்றன. இம் மந்திர மாலையின் பெருமை. இப்பகுதிகளின் பெருமை. இவ் வெழுத்துக்களின் பெருமை முதலி யவை இம்மாலையின் பூர்வ பாகம், `வரிவஸ்யாரகசியம்` என்னும் நூல் முதலியவற்றில், பலவாகச் சொல்லப்படுகின்றன. இவற்றிற்கு முதல் நூல், `திரிபுரை` என்னும் சத்திக்குரிய உபநிடதமாகிய திரிபுரோபநிடதமாம்.
`இப் பஞ்ச தசாட்சரி மந்திரம் காயத்திரியின் மற்றொரு வடிவம்` எனவும், இன்னும், `பொதுவாக யாவராலும் அறிந்து சொல்லப்பட்டு வரும் காயத்திரியினும் இது மிக மேலானது` எனவும், `காயத்திரியை வெளிப்படையாகக் கூறும் வேதம், இதனை அவ்வாறு கூறாமல், மிக மறை பொருளாகச் சில சங்கேத (குறியீட்டு)ச் சொற் களால் கூறுகின்றது எனவும், இங்ஙனமாகவே, இவ் எழுத்துக்களைக் கொண்ட லலித திரிசதி தோத்திர வழிபாடே எல்லா வழிபாட்டின் பயனையும் தந்து, `ஸர்வ பூர்த்திகரி` யாகின்றது எனவும் கூறுவர். இம்மந்திர வழிபாட்டிற்குரிய ஷ்ரீ சக்கரம் பற்றி மேற்குறித்த பரா வித்தை கூறிய இடத்தில் சொல்லப்பட்டது. `ஷ்ரீ0` என்பது இலக்குமி பீசம் எனவும், இதனை இவற்றோடு கூட்டி சோடசாட்சரியாகக் கொள்வது மிக உயர்ந்தோர்க்கு உரியது எனவும் கூறுவர். இவ் அக்கரத்தை நாயனார் புவனாபதி சக்கரத்திற்குக் கூறுகின்றார்.
`வாக்பவ கூடம்` முதலிய மூன்று பகுதிகளில் நிறங்கள் வரிவஸ்யரகசியத்தில் முறையே, `பிரளய கால அக்கினியின் நிறம், கோடி சூரியப்பிரகாச நிறம், கோடி சந்திரப்பிரகாசநிறம்` எனச் சொல்லப்பட்டன. அவற்றை நாயனார் இங்குக் கூறியவாற்றோடு இயைவனவாகக் கொள்ளுதலே ஏற்புடைத்து, `கண்ட` என்பது இங்கு, `காணிய` எனத்திரிந்து நின்றது. காமிய முத்தி, உம்மைத் தொகை. `போலும்` என்பது உரையசை. இவற்றைத் தருவனவற்றை ஒற்றுமை பற்றி இவையாகவே கூறினார்.
இதனால், சத்தி வழிபாடாகிய ஷ்ரீவித்தைக்குரிய சிறந்த பஞ்ச தசாட்சர மந்திரத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓரில் இதுவே உறையும் இத் தெய்வத்தைத்
தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோணம் மாவின்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயந் தானே.

பொழிப்புரை :

மாணவகனே, யான் உனக்கு ஒரே முடிவைச் சொல்லுகின்றேன்; கேள்; உண்மையை ஆராயுமிடத்து மேற்கூறிய பதினைந்தெழுத்து மந்திரமே மந்திரங்களில் தலையாயது. இம்மந்திரத் திற்குரிய தேவிதன் பெருமையை ஆராயின் இவளையன்றித் தெய்வம் வேறில்லையாம். இம்மந்திரத்தைக் கொண்ட `ஷ்ரீசக்கரம்` எனப் படுகின்ற முக்கோணச் சக்கரமே பேரின்பமாகிய வீட்டின்பக் கடலாயும் விளங்கும். இன்னும் ஆழ்ந்து நோக்கின், ஷ்ரீசக்கரமே மெய்யுணர்ந்தோர் காணும் சிவன் வடிவாகிய சிதாகாசமாம்.

குறிப்புரை :

\\\"யானொன்று செப்பக் கேள்\\\" என்பதை முதலிற் கொள்க. \\\"இதுவே\\\" என்றது, மேற்கூறிய ககாராதி பதினைந்தெழுத்துக் கூடிய மந்திரத்தை, \\\"இத்தெய்வம்\\\" என்றது, `இதன் தெய்வம்\\\" என்றவாறு. பிறிது - பிறிது தெய்வம். வாரி - கடல் `திரிகோணம் மா இன்ப வாரியாம் முத்தியும்` எனக்கூட்டுக. `மனமின்ப` என்பது பாடம் ஆகாமை அறிக.
உம்மை, சிறப்பு, காயம் - சரீரம், சிவனுக்குச் சரீரமாவது சிதாகாசமேயாதலை அறிக. `சிதாகாயம்` எனப்பாடம் ஓதினுமாம். திரிகோணங்களால் ஆகின்ற ஷ்ரீசக்கரம் ஆதார ஆதேயம், என்னும் அதிகாரத்தில் காட்டப்பட்டது.
இதனால், மேற்கூறிய மந்திரத்தின் சிறப்பும், அதனோடு தொடர்புடையவற்றது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே
ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகம் பராசத்தி யாகச் சிவன்உரு
யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே.

பொழிப்புரை :

பராசத்தியாய் உள்ளது ஒன்றே; அதுவே பரசிவத்திற்கு வடிவம். அந்தச் சத்திக்கு வடிவம், `பராவித்தை` எனப்படும் ஷ்ரீவித்தை. அந்த வித்தையால் முத்தி, சித்தி இரண்டும் உளவாம். இனிப் பராசத்தி ஒன்றேயாயினும் சிவன் அங்கியாய் நிற்கச் சத்தி அவனுக்கு அங்கமாய் நிற்றல் உண்மையால், எட்டாய்ப் பிரிந்து நிற்றல் உண்டாகின்றது.

குறிப்புரை :

\\\"ஏக பராசத்தி\\\" என்றது உடம்பொடு புணர்த்தல், \\\"அங்கமே\\\" என்னும் ஏகாரம் பிரித்துக் கூறப்பட்டது, எட்டுப் பிரிவாவன; பரை, ஆதி, விந்து, மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள்` என்னும் நிலைகளாம். `சிவன் அங்கியாகத் தான் அங்கமாதல் உண்மையின்` என்றமையால், `சிவனது சங்கற்பமே இங்ஙனம் பிரிதற்குக் காரணம்` என்பது பெறப்பட்டது.
\\\"எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்\\\" 1
என்ற சிவஞானசித்தியை நோக்குக. `சிவன் உருவாம் யோகம் பராசத்திக்கு உண்மையில் எட்டாம` என்க. `சிவகுரு` என்பது பாடம் அன்று. யோகம் - தொடர்பு. `பராசத்தியே ஏனை ஏழுமாம்` என்றற்கு அதனையும் உடன் கூட்டி எண்ணினார்.
இதனால், ஷ்ரீவித்தைக்குரிய தெய்வமாகிய சத்தியது இயல்பு தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகும் நாதாந்தத் தெட்டும் கலப்பித்த (து)
ஒட்டாத விந்துவும் தான்அற் றொழிந்தது
கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.

பொழிப்புரை :

பராசத்தி வழிபாடாகிய பராவித்தையால், அச்சத்தி பேதங்களாகிய மேற்கூறிய எட்டும் அட்டாங்க யோகத்தின் வழியே படிநிலைகள் எட்டினையும் அடையச்செய்து, முடிவில் நாதாந்தத்தில் சேர்க்கும். அதன்பின் பரசிவத்தை அடைதற்குத் தடையாய் உள்ள விந்து நாதங்களும் அகன்றொழியும். (ஒழியவே பரசிவத்தைக்கூடிப் பரானந்தம் எய்தலாம்.) இத்தகைய பராவித்தை அறிவாலும், ஆற்றலாலும் கீழ் நிலையில் உள்ளோர்க்கு இயலாததாம்.

குறிப்புரை :

கட்டு - நிலை. அவை எட்டாவன; ஆறு ஆதாரம், சகத்திரதாரம், நிராதாரம் என்பன, `யோகத்தால் கட்டாகும் எட்டும் கலப்பித்தது நாதாந்தத்துக் கலப்பித்தது` என்க. `சத்தி யோகத்துக் கலப்பித்தது` எனவே, பராவித்தையைக் கிரியையளவில் மட்டுமின்றி, யோக நிலையில் கொண்டு செய்தவழியே பெரும்பயன் உளதாதல் கூறப்பட்டதாம். `அப்பெரும்பயனும் முத்தியே` என்பார், \\\"ஒட்டாத விந்துவும் தான் அற்றொழிந்தது\\\" என்றார். நாதத்தால் வரும் ஞானத்தை \\\"வைந்தவ ஞானம்\\\" என்றே கூறுவராகலின், `நாதமும் அற்றொழிந்தது` என்னாது, `விந்துவும் அற்றொழிந்தது` என்றார்.
\\\"ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே\\\" 1
என்னும் சிவஞான சித்தியை இங்கு நினைவு கூர்க.
\\\"ஒழிந்தது\\\" என்பது வினைப்பெயர். அது, \\\"கிட்டா தொழிந்தது\\\" என்பதனோடு முடிந்தது. ஷ்ரீசக்கர வழிபாட்டின் முறையும், பயனும் கூறும்முகத்தால் அதனது சிறப்புணர்த்தி, அது மெலியோர்க்குக் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஏதும் பலமாம் இயந்திரரா சன்னடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச் செம்பில் சட்கோணந் தான்இடே.

பொழிப்புரை :

இதுமுதலாகவே புவனாபதிசக்கரம் கூறுகின்றார். வழிபடுவோர்க்கு எப்பயனையும் தருவதாய், `இயந்திரராசன்` எனப்படுகின்ற புவனாபதி சக்கரத்தை எந்தத் துதியினாலேனும் துதித்து, அதனை வழிபடும் முறையைக் குருவின் உபதேசத்தால் அறிந்து. நீ இயல்பாகச் செய்துவருகின்ற கர நியாச அங்க நியாசங்களை இவ்வழிபாட்டிற்கு ஏற்பச்செய்து, பிறவி நீக்கத்தைச் சிறப்பாக விரும்பி, செப்புத்தகடு ஒன்றில் முதலில் அறுகோணச் சக்கரத்தை வரை.

குறிப்புரை :

பலம் ஆம் - பயன் விளைதற்கு ஏதுவாய, `இயந்திர ராசன்` என ஆண்பாலாகக்கூறியது வடமொழி மதம். `இதனைப் புவனாபதியாகவே கருதுக` என்றற்கு, \\\"அடி ஓதி\\\" என்றார். அங்க நியாசமே கூறினாராயினும் கரநியாசமுங் கூறுதல் கருத்தாம். `அவைகளை இதற்கேற்பச் செய்க` என்றது, `இச் சக்கரத்தில் அடைக்கப்படும் பீசங்களாலே செய்க` என்றபடி. அவற்றை வருகின்ற மந்திரங்களில் காண்க.

பண் :

பாடல் எண் : 6

சட் கோணந் தன்னில் சிரீம்இரீம் தானிட்டு
அக்கோணம் ஆறின் தலையில்இரீங் காரம்இட்
டெக்கோண முஞ்சூழ் எழில்வட்டம் இட்டுப்பின்
மிக்கீரெட் டக்கரம் அம்முதல் மேல்இடே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு வரையப்பட்ட அறுகோணச் சக்கரத்தின் அறைகளில் `ஸ்ரீம், ஹ்ரீம்` என்னும் பீசங்களைப் பொறித்து, அச்சக்கரத்தின் ஆறுமூலைகளின் மேலும், `ஹ்ரீம்` என்னும் பீசத்தை மட்டும் எழுதி, எல்லா மூலைகளும் உள்ளே அடங்கும்படி அவற்றைச் சுற்றி வட்டம் ஒன்று வரைந்து, அவ்வட்டத்திற்கு வெளி யில் திக்கிற்கு ஒன்றாக எட்டுத் தாமரையிதழ் தோன்ற அமைத்து, அவ் இதழ்களின் கீழே வட்டத்தில் வடக்குமுதல், திக்கிற்கு இரண்டாக உயி ரெழுத்துப் பதினாறனையும் அகாரம் முதலாக முறையானே எழுதுக.

குறிப்புரை :

\\\"சட்கோணந் தன்னில்\\\" என்ற ஒருமையால், \\\"சட் கோணம்\\\" என்பது ஆகுபெயராய், அவற்றாலாய சக்கரத்தைக் குறித்த தாம். \\\"இட்ட இதழ்கள்\\\" எனப் பின்னர் அனுவதித்துக் கூறலால், அவற்றை இடுதல் இங்குக் கொள்ளப்பட்டது. `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல் பெற்றது. மிகுதல் உயர்தலாதலின், அஃது உயி ரெழுத்தை உணர்த்தி நின்றது. உயிரெழுத்து என்றே கூறினாராயினும், விந்துவொடு கூட்டியே கொள்க. முதலடியில் இனவெதுகை வந்தது.

பண் :

பாடல் எண் : 7

இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே
அட்டஹவ் விட்டிட் டதன்மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
இட்டுவா மத் (து) ஆம் கிரோம்என் மேவிடே.

பொழிப்புரை :

சக்கரத்தைச் சூழ்ந்த வட்டத்திற்கு வெளியில் உள்ள இதழ்களின் இடைநிலம் எட்டிலும் எட்டு ஹகார மெய்யை உகார உயிர் புணர்த்து எழுதி, அவ் இதழ்கள் எட்டிலும் பொருந்தி நிற்க, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றைப் பொறித்து, இதழ்களின் இடப்பக்கங்களில் `ஆம், க்ரோம், என்னும் பீசங்களை எழுதுக.

குறிப்புரை :

\\\"அதன் மேலே\\\" என ஒருமையாற் கூறியது, ஒற்றுமை நயங்கொண்டு. இங்ஙனம் கூறுதலை, `சாதியொருமை` என்பர். \\\"மேலே விட்டு\\\" என்றது, `மேலே ஏற்றி` என்றவாறு. `இதழ்களின் மேலே கிட்டும் படி இட்டு` என்க. `மேவ` என்பது ஈறு குறைந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 8

மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை யுடைய குரோம்சிரோம் என்றிட்டுத்
தாவில் இரீங்காரத் தால்சக் கரஞ்சூழ்ந்து
பூவை புவனா பதியைப்பின் பூசியே.

பொழிப்புரை :

பொருந்திய சக்கரத்தின் வெளியே உள்ள இதழ்களின் வலப்பக்கங்களில் எங்கும் வரிசையாக, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றை எழுதி, எல்லாவற்றையும் கேடில்லாத ரீங்காரத்தால் வளைத்து முடித்தபின், அம்மையாகிய புவனாபதியை வழிபடு.

குறிப்புரை :

\\\"பின்\\\" என்பதனை, \\\"சூழ்ந்து\\\" என்றதன் பின்னர்க் கூட்டுக. இச்சக்கரத்திற்குச் சொல்லப்பட்ட பீசாட்சரங்கள், `ஷ்ரீம், ஹரீம், ஹு 0, க்ஷோம், ஸ்ரோம், ஆம்` என்னும் ஆறுமேயாதலால், கர நியாச அங்க நியாசங்களும் இவற்றானே செய்யப்படும் என்க. அங்ஙனம் செய்யுங்கால் கரநியாசத்தைக் தர்ச்சனி (பெருவிரல்) முதலாக முறையே ஐந்து விரல்களிலும், ஆறாவதாக அகங்கை புறங்கைகளிலும் நியசிக்க. அங்க நியாசம் இருதயம் முதலாகச் செய்யப்படுதல் இயல்பு.
இவை நான்கு மந்திரங்களாலும் புவனாபதி சக்கரத்தை அமைக்கும் முறை கூறப்பட்டது. இங்ஙனம் அமைந்த சக்கர வடிவைக் காண்க.

பண் :

பாடல் எண் : 9

பூசிக்கும் போது புவனா பதிதன்னை
ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிப் பிராணப்பிர திட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியான மதுசெய்யே.

பொழிப்புரை :

புவனாபதி யம்மையை வழிபடும் பொழுது முதலில் மனத்தைக் காமாதி குற்றங்களின் நீங்கித் தூய்மையுடை யதாகப் பண்ணி, அகத்தில் அவளது உருவத்தை நினைவுகூர்ந்து, பின்பு வெளியில் கும்பம், (நிறை குடம்) விம்பம், (திருவுருவம்) இச் சக்கரம் என்பவைகளில், அவ்வம் மறைமொழிகளால், (மந்திரங் களால்) ஆவாகனம், (வரவழைத்தல்) தாபனம், (இருத்துதல்) சந்நிதானம், (முகநோக்கம்) சந்நிரோதனம், (வேண்டிக்கோடல்) என்பவை களால் விளக்கம் பெற நிறுத்திப்பின் உபசாரங்கள், (முகமன்கள்) பலவும் செய்து முடித்து, அவளது ஒளிமிக்க வடிவம் மனத்திலே நன்கு பொருந்தும்படி தியானித்து நில்.

குறிப்புரை :

\\\"அகத்தில்\\\" என்பது தாப்பிசையாய் இடை நின்றது. அகத்தினில் ஆவாகனம் - நினைவுகூர்தல். புறத்தினில் ஆவாகனம் - வரைவழைத்தல். பிராணப் பிரதிட்டை - உயிர் கொடுத்து நிலைப் பித்தல். என்று, ஆவாகனம் முதலிய நான்கையும் உணர்த் திற்று. இவை புறத்திலாதல் வெளிப்படை. அதனால், இவை செய்யப்படும். இடங்களாகிய கும்பம் முதலியனவும் பெறப்பட்டன. \\\"பேசி\\\" என்பதற்குச் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. \\\"பிரதிட்டை செய்து\\\" என்றே போயினாராயினும், பின்னர்ச் செய்யப் படும் உபசாரங்கள் ஆற்றலால் விளங்கும். அவை அபிடேகம், (திருமுழுக்கு) அலங்காரம், (ஒப்பனை. இஃது ஆடை, அணிகலம், சந்தனம், பூமாலை, இவைகளை அணிந்து அழகுசெய்தலாம்.) தூபம், (நறும்புகையிடுதல்) தீபம், (பல விளக்குவகை காட்டல்) நிவேதனம், (நைவேத்தியம் - படையல்கள்) அருச்சனை, (மலரிடல்) நிருத்தம், (ஆடல்) கீதம், (பாடல்) வாத்தியம், (பல்லியம்) பிரதட்சிணம், (வலம் வரல்) நமஸ்காரம், (அடிபணிதல்) பிரார்த்தனை, (வேண்டுகோள்) என்பன. `செபம்` (மந்திரம் கணித்தல்) என்பது இவற்றுடனே கொள்க. தேசு, ஆகுபெயர்.
இதனால், புவனாபதி அம்மையது வழிபாட்டு முறை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 10

செய்ய திருமேனி செம்பட் டுடைதானும்
கையில் படைஅங் குசபாசத் தோடபயம்
மெய்யில் அணிகலன் ரத்தின மாம்மேனி
துய்ய முடியும் அவயவத் தோற்றமே.

பொழிப்புரை :

புவனாபதி யம்மைதன் வடிவில் விளங்குவன செம்மை நிறம், செம்பட்டு உடை , கைகளில் அங்குசம், பாசம் என்னும் படைக்கலங்களும், அபய வரதங்களும், அவயங்களில் அவ்வவற் றிற்கு ஏற்ற அணிகலன்கள் தலையில் இரத்தின கிரீடம் என்பவாம்.

குறிப்புரை :

\\\"அபயம்\\\" என்றதனால், வரதமும் உடன் கொள்ளப் படும். மெய், அவயவம் இவை ஆகுபெயர்கள். \\\"இரத்தினமாம் மேனி\\\" என்றது \\\"இரத்தினஉருவான` என்றவாறு. தோற்றம் உடைய வற்றை, \\\"தோற்றம்` என்றார்.
இதனால், புவனாபதி தியானத்திற்கு அவளது வடிவு கூறப் பட்டது. மேல் பராவித்தை கூறியவிடத்தில் (1158) அம்மைதன் வடிவம் வேறாகக் கூறப்பட்டிருத்தலை நோக்குக.

பண் :

பாடல் எண் : 11

தோற்போர்வை நீக்கித் துதித்தடைவில் பூசித்துப்
பாற்போ னகம்மந் திரத்தால் பயின்றேத்தி
நாற்பால \\\"நாரதா யைசுவா கா` என்று
சீர்ப்பாகச் சேடத்தை மாற்றியபின் சேவியே.

பொழிப்புரை :

புவனாபதிக்கு முறைப்படி வழிபாடு செய்யும் பொழுது, மேலாடையை எடுத்து அரையில் கச்சு போலக் கட்டிக் கொண்டு செய்தல் வேண்டும். நிவேதனம் பால் அடிசிலேயாம். நிவே திக்கும் மந்திரம் `ஓம் நாரதாயை சுவா:\\\" என்பது, இம் மந்திரத்தால் நான்கு திசைகளிலும் நிவேதனம் செய்தல் வேண்டும். வழிபாடுயாவும் முடிந்தபின்பு பாரங்முக அர்க்கியத்தால் அம்மையை முகம் மாற்றிய பின்பே நிர்மாலிய நிவேதனத்தைக் கைக்கொள்ளல் வேண்டும்.

குறிப்புரை :

தோல் - உடம்பு; ஆகுபெயர். \\\"பால் போனகம்\\\" என்ற மையால், வாம மார்க்க நிவேதனங்கள் கூடாவாயின. \\\"மந்திரத்தால் பயின்றேத்தி\\\" என்பதை, துதித்து என்பதன்பின் கூட்டுக. நான்கு திசைகளிலும் நிவேதித்தல் கூறினமையால், விம்பத்திலும் அம்மையை நான்கு முகம் உடையவளாகக் கொள்ளுதல் பெறப்பட்டது. பாகம் - சமைக்கப்பட்ட பொருள். நிர்மாலியத்தையே \\\"சேடம்\\\" (எஞ்சியது) என்றார். அதனைக் கொள்ளுதலைச் சேவித்தலாகக் கூறியது மரபு பற்றி.
இதனால், புவனாபதி வழிபாட்டிற்கு, முன்னர் எய்திய வற்றின் மேல் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 12

சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாபனத்தால்
பாவித் திதய கமலம் பதிவித்தங்
கியாவர்க்கு மெட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேமி நினைந்த தருமே.

பொழிப்புரை :

`சேடம்` எனப்படுகின்ற நிவேதப் பொருளைக் கைக்கொள்வதற்குமுன், கும்ப விம்ப சக்கரங்களில் நிறுவப்பட்ட தேவியை ஒடுக்கிக் கொள்ளுதற்குரிய மந்திரம் கிரியை பாவனை களால் இருதயத்தில் ஒடுக்கி, யாவர்க்கும் அணுகுதற்கரிய மேலான இச்சக்கரத்தை நீ வைப்புப்பொருள் போல உள்ளத்திலே மறவாது வை; பின்பு இது நினைத்தவற்றை யெல்லாம் உனக்குக் கொடுக்கும்.

குறிப்புரை :

`பராங்முக அர்க்கியத்திற்குப் பின் இதுவும் செய்க` என்றற்கு, `சேவிப்பதன்முன்` என மீட்டுங் கூறினார். உத்வாபனம் - மீட்டுக் கொள்ளுதல். இதனை, `உத்வாகனம்` என்றல் பிழை. இஃது இதற்குரிய மந்திரம் முதலியவற்றைக் குறித்த ஆகுபெயர். \\\"பாவித்து\\\" என்றது, `இருதயத்துள் ஒடுக்கி` என்றவாறு, \\\"இதய கமலம் பதிவித்து\\\" என்றது, பின்னர் மறவாது ஊன்றிக்கொள்ளுதலை. `தேவியைப் பதிவித்து, இயந்திர ராசனைச் சேமி` என்க. \\\"நினைந்த\\\" என்பது அஃறிணைப் பன்மை வினைப்பெயர். `நினைந்தது` என்பது பாடம் ஆகாமை அறிக.
இதனால், இச்சக்கர வழிபாட்டினை நிறைவு செய்யும் முறை கூறி முடிக்கப்பட்டது. பலர்க்குப் பயன்படுதல் பற்றி, \\\"இயந்திர ராசன்\\\" எனப்பட்ட இதன் வழிபாட்டில் இதனைக் கூறியதனால், ஏனைச் சக்கரங்களின் வழிபாட்டிற்கும் இஃது உரியதாதல் அறியப் படும்.

பண் :

பாடல் எண் : 1

நவாக்கரி சக்கரம் நான்உரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக் கரியாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி அக்கிலீம் சௌம்முதல் ஈறே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கரத்தின் இயல்பை நான் உனக்குச் சொல்லுமிடத்து, ஒன்பதெழுத்துத் தொகுதியில் ஒவ்வொன்றும் ஒன்பதெழுத்தாகின்ற முறையால் ஒன்பதெழுத்துக்கள், `எண்பத்தோ ரெழுத்து` என்னும் தொகை பெறும்படி ஒன்பதெழுத்தாய் நிற்கும் அத் தொகுதியாவது `ஸௌம்` என்னும் முதலினையும், `க்லீம்` என்னும் இறுதியையும் உடையது.

குறிப்புரை :

இம் முதல் ஈறுகளை உடைய எழுத்து அனைத்தையும் வருகின்ற மந்திரத்தால் அறிக. தொகுதியைச் சுட்டுதற்கு, `நவாக்கரம்` என்னாது \\\"நவாக்கரி\\\" என்றார். \\\"முதல் ஈறே\\\" என்றது எதிர் நிரனிறையாதல் வருகின்ற மந்திரத்தாற் பெறப்படும்.
இதனால், நவாக்கரி சக்கரம் அமையுமாறு தொகுத்துக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 2

சௌம்முதல் அவ்வொடும் ஔவுடன் ஆம்கிரீம்
கௌவுமும் ஐமும் கலந்திரீம் சிரீம்என்
றொவ்வில் எழும்கிலீம் மந்திர பாதமாச்
செவ்வுள் எழுந்து சிவாயநம என்னவே.

பொழிப்புரை :

`ஸௌம்` என்பது `முதல்` என மேற்கூறிய அவற்றோடு, `ஔம், ஆம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ‹்ரீம்` என்பவை முறையே தொடர்ந்தபின் `க்லீம்` என்பதை மந்திரத்தின் முடி வெழுத்தாக வைத்து, ஒவ்வொரு முறையும், `சிவாய நம` என்று சொல்; நவாக்கரி சக்கர வழிபாடு கைவரும்.

குறிப்புரை :

``அவ்`` என்பது வகர ஈற்றுச் சுட்டுப் பெயர். விந்துவை நோக்கிப் பன்மையாகக் கூறினார். `ஔம்` என்பதை இங்கு `ஹௌம்` என ஓதல் வேண்டாமை அறிக. `கௌம், ஐம்` என்பவற்றில் செய்யுள் நோக்கி விந்துவிற்கு முன் ஓர் உகரம் தந்தும், எண்ணும்மை கொடுத்தும் ஓதினார். `கலந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று. ஒவ்வில் - பொருந்தில்; என்றது, `பொருந்தியபின்` என்றவாறு. முதற்கண் உள்ள எழுத்துத் தலையாய் நிற்றலின் ஈற்றெழுத்தை, ``பாதம்`` என்றார். செவ்வுள் எழுந்து - செம்மையான நெறியில் முயன்று. `நவமே` எனற்பாலது, `நவே` எனக் குறைந்து நின்றது. நவம் - நவாக்கரமாம். `நமஎன்னே` என்றே பாடம் ஓதுதல் அந்தாதிக்கு ஒவ்வாமை அறிக.
இதனால், நவாக்கரி சக்கரத்திற்குரிய. நவாக்கரங்கள் முழுதும் எடுத்தோதப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

நவாக் கரியாவதும் நானறி வித்தை
நவாக் கரியுள்எழும் நன்மைகள் எல்லாம்
நவாக் கரிமந்திரம் நாவுளே ஓத
நவாக் கரிசத்தி நலந்தருந் தானே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கர வழிபாடும் நான் சிறந்த ஒன்றாக அறிந்த வழிபாடாம். அதனால், நலங்கள் பல விளையும். ஆதலின், நவாக்கரி மந்திரத்தை நாம் புடைபெயரும் அளவாகக் கணித்தால், அம்மந்திரத்திற்குரிய சத்தி எல்லா நன்மைகளையும் தருவாள்.

குறிப்புரை :

`நவாக்கரியின் உள்நின்று எழும்` என்க. அஃதாவது `நவாக்கரி வழிபாடு ஏதுவாக` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 4

நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை உம்மைவிட் டோடிச்
சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கர வழிபாட்டினால் பெருநன்மை யைத் தருவதாகிய அனுபவ ஞானமும் அதற்கு ஏதுவாகிய கலா ஞானமும் வலியுற்று நிலைபெறும். அதற்கு முன்னே உம்முடைய வலிய வினைகள் உம்மை நோக்காது விட்டு ஓடிவிடும். `அஃது எவ்வாறு` எனில், இவ்வழிபாட்டினால், வேண்டுவார் வேண்டுவதைத் தருகின்ற சிவனது திருவருள் கைவந்து, உமக்குத் துன்பத்தைத் தரஇருந்த அந்தத் தீய வினைகளை ஓட்டும் ஆதலால்,

குறிப்புரை :

`சிரமம்` என்பது, இடைக்குறைந்து, `சிரம்` என நின்றது. செய்வது, இனிச் செய்யக்கடவது; இது சாதி யொருமை. உம்மை, சிறப்பு. ``அகற்றி வாய்த்திடும்`` என்பதை, `வாய்த்து அகற்றிடும்` என மாற்றி முடித்து, இறுதியில் `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. முதல் அடி இன எதுகை.
இவை இரண்டும் மந்திரங்களாலும் நவாக்கரி வித்தையும் ஷ்ரீவித்தையோடு ஒத்த சிறப்புடையதாய்ப் பயன்தருதல் பொது வகையிலும், சிறப்பு வகையிலும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கண்டிடும் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கு மளவே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கரத்தை வெள்ளி, பொன், செம்பு என்னும் இவற்றுள் ஒன்றாலான தகட்டிலே அமையுங்கள்; பின்பு மனத்திலும் அதனை ஊன்றி நினையுங்கள். அங்ஙனம் நினைத்தலால் உள்ளத்தில் நிலைபெறுகின்ற அச்சக்கரம் உம்மை நோக்கி வருகின்ற வினைகளை வெல்லவும், உலகத்தை வெற்றிகொள்ளவும் நீவிர் நினைப்பீராயின் நினைத்த அளவிலே அப்பயன்களை உங்களுக்குத் தரும்.

குறிப்புரை :

`சக்கரத்தை வெள்ளி முதலியவற்றில் கண்டிடும்; உள்ளே கொண்டிடும்; நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே வென் றிடும்; தருவிக்கும்` எனக் கூட்டிமுடிக்க. இதில் இனவெதுகை வந்தது.
இதனால், நவாக்கரி சக்கரத்தை அமைத்தற்காம் பொருள் களும், அவற்றால் ஆம் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் அந்தமும்
நினைத்திடும் நெல்லொடு புல்லினை உள்ளே
நினைத்தி (டு) அருச்சனை நேர்தரு வாளே.

பொழிப்புரை :

உன்னத் தக்க க்லீம் என்பவற்றை ஈறாக உடைய நவாக்கரங்களை அங்ஙனமே வைத்து உன்னப்படுகின்ற சக்கரத்தின் முதலெழுத்துமுதல் ஈற்றெழுத்து முடிய, இச்சக்கர சத்தி தன்னுள்ளே விரும்புகின்ற செந்நெல், அறுகம் புல் என்பவற்றை நீயும் மனத்திலே கொண்டு அவற்றைக்கொண்டு அருச்சனை செய். அப்பொழுது உனது அருச்சனையை அச்சத்தி ஏற்றுக்கொள்வாள்.

குறிப்புரை :

மூன்றாம் அடியில் ``நினைத்திடும்`` என்பதற்கு எழுவாய் வருவித்துக் கொள்க. `நேர்தருவாள்`` என்பது, `நேர்ந்து மேற்குறித்த பயன்களைத் தருவாள்` என்றவாறு.
இதனால், இச்சக்கர வழிபாட்டிற்கு ஆவதொரு சிறப்புமுறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நேர்தரு மந்திர நாயகி யானவள்
யாதொரு வண்ணம்? அறிந்திடு பொற்பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.

பொழிப்புரை :

வழிபடுவார்க்கு நேர் வந்து அருள் புரிகின்ற அந்தச் சக்கர சத்தி என்ன நிறத்தை உடையவள்? அழகிய தேவியாகிய அவள் மேகம்போலும் நிறத்தை உடையவள். இதனை அறிந்து அவள்பால் உனது அன்பு செல்லும் வண்ணம் நீ நட; அப்பொழுது நீ நினைத்தவை யெல்லாம் உனக்குக் கைகூடும்.

குறிப்புரை :

`திரிகை` என்பது கடைக்குறைந்து நின்றது. திரிகை - சக்கரம். ``யாதொரு வண்ணம், கார்தரு வண்ணம்`` என வினாவும், விடையும் தாமே கூறினார். `யாதொரு வண்ணம்` என வினாவி அறிந் திடு` என்று உரைப்பினும் ஆம். ``கார்தரு`` என்பதில் தரு உவம உருபு.
இதனால் இச்சக்கரசத்தியது தியானவண்ணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் கண்ணிய நாளும்
படர்ந்திடும் நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடும் வண்ணம் அடைந்திடு நீயே.

பொழிப்புரை :

இச்சக்கர சத்திபால் நீ அன்புசெய்து ஒழுகினால் நீ இவ்வுலகில் நினைக்கின்ற நன்மைகள் எல்லாம் நினைத்தபடியே முடியும்; கூற்றுவன் உன்னைக் கொண்டுபோவதற்குக் குறித்துவைத்த நாளும் அங்ஙனம் கொண்டுபோகாமலே கடந்துவிடும். உனது பெயர் உலகெங்கும் பரவும்; உனது உடம்பின் நிறம் பகலவனது விரிந்து வீசுகின்ற கதிர்கள் போல விளங்குவதாகும். இப்பயன்களை யெல்லாம் இவ்வகையில் நீ எய்துவாயாக.

குறிப்புரை :

``கண்ணிய`` என்பதனை, `எண்ணிய` எனவும் ஓதுவர். `வண்ணம் கதிர்போல அடைந்திடும்` எனக்கூட்டுக.
இதனால். இச்சக்கர வழிபாட்டின் இம்மைப் பயன் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.

பொழிப்புரை :

பொன், வெள்ளி, நவமணிகள் ஆகிய பொருள்கள் யாவும் குறைவின்றி உன்பால் வந்துசேரும்; நல்வினை யாலன்றிச் சிவனது அருளால் ஆம் செல்வங்கள் கிடைக்கும். தேவர்கள் பதவியும் தாமாகவே வரும்; இவையெல்லாம் இங்ஙனம் ஆமாற்றை அறிந்து இச்சக்கர வழிபாட்டினை நீ செய்.

குறிப்புரை :

``அருளும்`` என்பது எச்சம். அருளால் வரும் செல்வம் வினையால் வரும் செல்வம் போல மயக்கம் செய்யாமையால் `அச்செல்வமே இதனால் கிடைக்கும்` என்றார். ``அறிந்திடு`` என்றது, தன் காரியம் தோன்ற நின்றது.
இதனால், இவ்வழிபாட்டின் இம்மை மறுமைப் பயன் இரண்டும் ஒருங்கு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடு வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வாளை முயன்றிடும் நீரே.

பொழிப்புரை :

மெய்யறிவுடையோர் உண்மை அமரர்களாதல் பொருட்டு அறிந்து வழிபடுகின்ற தேவதேவனும், வானத்தைப் பிளந்துகொண்டு கீழே பாய்ந்த வலிய ஆகாய கங்கையைச் சடையில் சூடிக்கொண்டவனும் ஆகிய சிவபிரான் பணிகின்ற சத்தியை நீவிர் வழிபட்டு மேற்கூறிய பயன்களைப் பெறுங்கள்.

குறிப்புரை :

அமரர் - இறவாதவர், இப்பெயர் மார்க்கண்டேயர் போலும் சிவனடியார்கட்கே உண்மையில் பொருந்தும் ஆதலின், சிவபெருமானை, ``அறிந்திடுவார்கள் அமரர்களாகத் தெரிந்திடு தேவன்`` என்றார். வானோர் - வானுலகில் உள்ளவர். `வானோராகிய தேவர்கள்` என்க. `வானத்து வன்புனல்` என்றவாறு. சடையில் புல் நுனிமேல் துளியளவாக மலர் போலும்படி எளிதில் ஏற்றமை தோன்ற, ``சூடி`` என்றார். முரிதல் - வளைதல்; இங்கு, பணிதலைக் குறித்தது. நாயக நாயகி பாவம் பற்றி இன்பச்சுவை தோன்றச் சிவன் உமைதன் ஊடலைத் தீர்க்க அவளை அடிபணிவதாகப் புனைந்துரை கூறும் இலக்கிய மரபினை இங்குச் சத்திதன் பெருமை புலப்படுதற்கு எடுத்தாண்டார். ``முரிந்திடுவானை`` என்பது பாடம் ஆகாமை அறிக.
இதனால், சத்திதன் பெருமை கூறும் முகத்தால், மேற்கூறிய பயன்கள் உளவாதல் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பாரணி யும்இரீம் உன்சிரீம் ஈறாம்
தாரணி யும்புகழ்த் தையல்நல் லாளைக்
காரணி யும்பொழில் கண்டுகொள் வீரே.

பொழிப்புரை :

நீங்கள் வழிபடுகின்ற நவாக்கரி சக்கரத்தின் வகை ஒன்பதில் \\\"ஹ்ரீம்\\\" என்பது முதலாகவும், `ஷ்ரீம்` என்பது இறுதி யாகவும் அமையும் வகை சிறந்ததாகும்.

குறிப்புரை :

இதனைப் பின்னர்க் காட்டப்படும் சக்கரத்தில் கண்டு கொள்க. \\\"சக்கரம்\\\" என்பதில் ஏழனுருபு விரிக்க, வண்ணங்கள் - எழுத்துக்கள். பார் - நிலம், என்றது சக்கரம் அமைந்த தகட்டினை. அணிதல் - அழகு செய்தல். `இவ்வகைச் சக்கரம் மிக அழகாக அலங் கரிக்கப்படும்\\\" என்பது இதனால் விளங்கும். உம்மை, முற்றுப் பொருட்டாய் நிலமுழுதும் எனப்பொருள் தந்தது. `பொழிலின்` என ஒப்புப் பொருளில் வந்த ஐந்தன் உருபு விரிக்க. பொழில் போலுதல், தண்ணிய திருவருளைத் தந்து இன்புறுவித்தல்.
இதனால், இச்சக்கர வகைகளுள் ஒன்று சிறந்ததாதல் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

கண்டுகொள் ளும்தனி நாயகி தன்னையும்
மொண்டுகொள் ளும்முக வச்சியம தாயிடும்
பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்
நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே.

பொழிப்புரை :

மேற்கூறிய வகைச் சக்கரத்தின் வழியே ஒப்பற்ற அச்சத்தியைக் காணுங்கள். கண்டால், முகந்து கொள்ளலாம் போலும் முக வசீகரம் உங்கட்கு உண்டாகலாம். அநாதி பரஞ்சுடராகிய சிவபெருமானும் நீவீர் காணநின்று, அழிவற்ற அவளைத் தன்பால் எடுத்து வைத்துக்கொள்வான்.

குறிப்புரை :

பண்டு கொள்ளுதல் - அநாதியாம் தன்மையைக் கொண்டிருத்தல். பரமாய பரஞ்சுடர் - மேலானவற்றிற்கெல்லாம் மேலான சுடர். ஈற்றடி இன எதுகை.
இதனால், மேற்கூறிய வகையின் வழிபாட்டினால் சிவபரஞ்சுடரது காட்சியும் எய்துதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்
நாடுடை யார்களும் நம்வச மாகுவர்
மாறுடை யார்களும் வாழ்வது தான்இலை
கூறுடை யாளையும் கூறுமின் நீரே.

பொழிப்புரை :

நீங்கள் பெறத் தக்க பேறுகட்கெல்லாம் உரிய வளாகிய சத்தியின் பெருமையை அறிந்து வழிபட்டால் மன்னரும் நம் வசப்படுவர்; பகைவர்கள் சீவித்திரார். ஆதலின், சிவனது ஒரு கூற்றைத் தனதாக உடைய அவளை நீவிர் துதியுங்கள். இரண்டாம் அடி உயிரெதுகை.

குறிப்புரை :

எண்ணுதல் - ஆய்ந்தளித்தல். இது தன் காரியம் தோன்ற நின்றது.
இதனால், அனைத்துப் பேற்றையும் சத்திதர வல்லளாதல் தெரிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை
ஆறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வெனல்
மாறுமின் வையம் வரும்வழி தன்னையும்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.

பொழிப்புரை :

சத்தி எல்லா உலகங்களையும் உடையளாதலை அறிந்து துதியுங்கள்; அதனால், உலகின் சில பகுதிகட்குத் தலைவ ராயுள்ள தேவர்களது வாழ்வுவேண்டும் என்னும் ஆசை நீக்குங்கள்; பின்னும், மீள மீள இவ்வுலகில் பிறக்கும் நிலையையும் நீங்குங்கள். முடிவாக அச்சத்தியது திருவடியைச் சேர்ந்து மயக்கமெல்லாம் அற்றுத் தெளிவு பெறுங்கள்.

குறிப்புரை :

`அமரர்களது அண்டத்து வாழ்வு` எனக் கூட்டுக. ஆறுதல் - தணிதல்; நீங்குதல். வாழ்வு எனல் - வாழ்வு வேண்டும் என விரும்புதல்.
இதனால், இவ் வழிபாட்டினை முத்தியை விரும்பிச் செய்தல் சிறந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

சேவடி சேர்ந்து செறிய இருந்தவர்
நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்
பூவடி இட்டுப் பொலிய இருந்தவர்
மாவடி காணும் வகையறி வாரே.

பொழிப்புரை :

சத்தி தன் திருவடியில் சேர்ந்து நீங்காது இருக்க எண்ணினவர் அவளது மந்திரத்தை நாவிற்குள்ளே சொல்லித் துதிப்பர். புறத்திலே மலர்களை அவளது திருவடியிலே தூவி விளக்கம் பெற்றிருப்பவர், அவளது பெருமை பொருந்திய திருவடிகளைத் தரிசிக்கும் வழியை அறிந்தவராவர்.

குறிப்புரை :

`சேர` என்பது பாடம் அன்று.
இதனால், அருச்சனையிலும் செபம் சிறந்ததாதல் கூறப் பட்டது. சக்கர வழிபாட்டில் செபமே முதன்மையாதல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 16

ஐம்முத லாக அமர்ந்தெழு சக்கரம்
ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்
ஐம்முத லாகி யவற்றுடை யாளை
மைம்முத லாக வழுத்திடு நீயே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கர வகைகளுள் `ஐம்` என்பதை முதலாகப் பொருந்திச் செல்லுகின்ற சக்கரம் அந்த `ஐம்` என்பது முதலாகப் பொருந்திப் பின்பு, `ஹ்ரீம்` என்பதை ஈற்றில் உடைய தாகும். அந்த `ஐம்` என்பதை முதலாகக் கொண்ட அனைத் தெழுத்துக்களையும் தன்னுடையனவாக உடைய அந்தச் சக்கர சத்தியையே உன்னுடைய அறியாமையைப் போக்கும் தலைவியாக அறிந்து நீ துதிசெய்.

குறிப்புரை :

`துதித்தால், உனது அறியாமை நீங்கி மெய்யறிவு பிறக் கும்` என்பது கருத்து. மை - இருள்; மலம். `அதற்கு முதல்வி` என்றது, `அதனை ஏற்றவழியால் கழுவுபவள்` என்றவாறு. மேலை மந்திரத்தில் \\\"வகை\\\" என்பதில் உள்ள ஐகாரமே இதில் ஆதியாகக் கொள்ளப் பட்டது. `அவர்க்குடையாளை` என்பது பாடம் ஆகாமை அறிக.
இதனால், `இச்சக்கர வழிபாடு அஞ்ஞானத்தைப் போக்கும்` என்பது உணர்த்தி, மற்றொரு வகையின் சிறப்பு வகுத்துக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 17

வழுத்திடும் நாவுக் கரசிவள் தன்னைப்
பகுத்திடும் வேதம்மெய் யாகமம் எல்லாம்
தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை
முகத்துளும் முன்னெழக் கண்டுகொ ளீரே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கர சத்தி சிவாகமங்கள் கூறும் வாகீசுவரியாம், `வேதம்` என்றும், `ஆகமம்` என்றும் இவ்வாறு பலவாகப் பகுத்துச் சொல்லப்படும் நூல்கள் அனைத்தையும் தனது ஒரு நாவினாலே எளிதிற் சொல்ல வல்லவளாகிய இச்சத்தியை நீங்கள் உங்கள் வாக்கிலும் விரையத் தோன்றும் வண்ணம் வணங்குங்கள்.

குறிப்புரை :

`வணங்கினால் கலா ஞானமும் நிரம்பவரும்` என்பது கருத்து. `உங்கள் முகத்துளும்` என்பது ஆற்றலால் வந்தது. வாயை `முகம்` என்றல் வடமொழி வழக்கு. \\\"முன்\\\" என்றது, `விரைய` என்ற வாறு. முதலடி உயிரெதுகை. இவ்விரு மந்திரங்களிலும் `வகுத்திடும்` என்றேயும் பாடம் ஓதுப.
இதனால், மேற்கூறிய மலநீக்கத்தோடு கலாஞான நிறைவும் மேலைச் சக்கர வழிபாட்டால் உளதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம்
மன்றினுள் வித்தையும் மானுடர் கையதா
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.

பொழிப்புரை :

மேற்சொல்லிய வகையில் அறியப்பட்ட இச்சக்கரத்தினை நாவில் பதித்துக்கொண்டால், இதற்குக் கொள்ளப் பட்ட இந்த எழுத்துக்களேசிவனது எழுத்துக்களாய் விடும். அதனால், திருவம்பலத் தியானமாகிய தகர வித்தையும் மக்களுக்குக் கைவர, ஞானசத்தி பதிதலால், இவ்வழிபாட்டைச் செய்பவனும் உலக மாயையை வெல்லுபவனாவான்.

குறிப்புரை :

``மானுடர்`` என்பது வேறு முடிபு கொண்டு பொதுமை யுணர்த்தி நிற்றலின், ``வென்றிடும்`` என்பது பால்வழு ஆகாதாயிற்று. வெல்லுதற்கு `இவன்` என்னும் எழுவாய் வருவித்துக்கொள்க. சத்தி சிவத்தின் வேறன்மை, `கொண்ட இம்மந்திரம் கூத்தன் எழுத்தாம்`` என்ற இதனானும் நன்கறியப்படும். இஃது அறியாதார் சத்தியை வேறு நிற்பவளாக மயங்கி, ஏற்றங் கூறி மகிழ்வர். இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், இச்சக்கரவித்தையே தகர வித்தையின் பயனையும் தருவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

மெல்லிய லாகிய மெய்ப்பொரு ளாள்தனைச்
சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும்
பல்லிய லாகப் பரந்தெழு நாள்பல
நல்லிய லாக நடந்திடுந் தானே.

பொழிப்புரை :

மெய்ப்பொருளாம் இயல்பினளாகிய இச்சத்தியை இங்குக் கூறிய இம்மந்திரத்தின் வழியே பற்றி அவ்வழிபாட்டில் நில்லுங்கள். பல்வேறு வகையினவாய் மிக்குச் செல்லுகின்ற உங்கள் நாள்கள் பலவும் நல்ல நாள்களேயாய்ச் செல்லும்.

குறிப்புரை :

முதலடியை, `மெய்ப்பொருளாகிய மெல்லியலாள் தனை` என மாற்றிக்கொள்க. பல்லியல்பு, இருவினைகளுக்கு ஈடாகப் பல்வேறான எண்ணமும், செயலும், நுகர்ச்சியும். நல்லியல்பு, எல்லாம் திருவருட் செயலாகத் தோன்றுதல் அங்ஙனம் தோன்றின் வினைப் பயன்கள் வாதியாமையோடு, தீமை தானும் நன்மையாச் சிறக்கும்.1
இதனால், இவ்வழிபாட்டினால்வினைப்பயன்களால் தாக்குண்ணாமை கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள்கள் [தானும்
கடந்திடும் கல்விக் கரசிவளாகப்
படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே.

பொழிப்புரை :

இச்சக்கர சத்தி வாகீசுவரி யாதலின், இவளது அருள் கிடைக்கப் பெற்றவனுக்கு அவன் வேண்டிய நன்மைகள் யாவும் அவன் சொன்ன அளவிலே அங்ஙனமே முடியும். வழக்கும் செய்யுளுமாய்த் தொடர்கின்ற சொற்கள் அனைத்தையும், அவற்றின் பொருளோடு அவன் முற்ற உணர்ந்தவனாவான். விரிந்துகிடக்கின்ற இவ்வுலகில் ஓரிடத்தும் அவனுக்குப் பகையாவர் இல்லை. (நண்பரும் உறவினருமே உளராவர் என்பதாம்.)

குறிப்புரை :

``கல்விக் கரசிவ ளாக`` என்பதனை முதலில் கொண்டு உரைக்க. `அரசி` என்பதன் இகரம் தொகுத்தலாயிற்று. ``படர்ந்திடும் பார்`` என்றது, `பிரபஞ்சம்` என்பதன் பொருள்பற்றிக் கூறியவாறு. கூறவே ஓரிடத்தும் பகையில்லாமை கூறியதாயிற்று. கல்வியைக் கரை கண்டவர்க்கு, `யாதானும் நாடாம் ஊராம்` 1 என்பது ஈற்றடியாற் கூறியவாறு.
இதனால், வாகீசுவரி வழிபாட்டினால், மேன்மைச் சொல்லும், நிறைபுலமையும் உளவாதல் கூறப்பட்டது. மேன்மைச் சொல்லை, `நாவசைத்தால் நாடசையும்` என்று குறிப்பர்.

பண் :

பாடல் எண் : 21

பகையில்லை கௌம்முதல் ஐம் அது ஈறாம்
நகையில்லை சக்கரம் நன்றறி வார்க்கு
மிகையில்லை சொல்லிய பல்லுரு வெல்லாம்
வகையில்லை யாக வணங்கிடுந் தானே.

பொழிப்புரை :

இனி, `கௌம்` என்பதை முதலாகவும், `ஐம்` என்பதை இறுதியாகவும் கொண்ட சக்கரத்தின் பெருமையை நன்கு அறிந்து வழிபடுகின்றவர்கட்கு இவ்வுலகில் வெளிப்படையாய் வருகின்ற பகைவரும், மறைவாக நின்று புறங்கூறுபவரும் இலராவர். (நண்பரும், உறவினருமாய் நெஞ்சாரப் புகழ்கின்றவரே உளராவர் என்றபடி.) மேலும் பல்வேறு வகையினவாய உயிர்களும் இவனை எதிர்க்க வழியில்லாமல் பணிந்து நடக்கும். யான் சொல்லிய இவை மிகையாதல் இல்லை; உண்மையேயாம்.

குறிப்புரை :

`ஐம் அது ஈறாம் சக்கரம் நன்றறிவார்க்கு` என்பதனை முதலிற் கொள்க. `சொல்லிய மிகை இல்லை` என் மாற்றி, இறுதிக்கண் வைத்து உரைக்க. ``உரு`` என்றது, அவற்றோடு கூடிய உயிரை. அரிமா, புலி முதலிய கொடு விலங்குகள் பாம்பு முதலிய நச்சுயிர்கள் முதலிய பலவும் அடங்குதற்கு, ``பல் உரு`` என்றார். இவை `பணிந்து நடக்கும்` என்பதனால், தம் கட்டளைப்படியே நடத்தல் பெறப்பட்டது.
இதனால், மற்றொரு வகைச் சக்கர வழிபாட்டின் சிறப்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடும் நல்லுயி ரானவை யெல்லாம்
கலங்கிடும் காம வெகுளி மயக்கம்
துளங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே.

பொழிப்புரை :

மும்மலங்களால் வருந்துகின்ற பல உயிர்களுள் பக்குவம் எய்தப் பெற்ற உயிர்கள் சத்திதன் பெருமையை உணர்ந்து அவளை வணங்கும். அவ்வணக்கத்தின் பயனாக அவைகளைப் பற்றியுள்ள, `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் முக்குற்றங்களும் நீங்கும். அவை நீங்கவே `அவற்றால் உண்டாகும்` என நூல்கள் சொல்லிய வினைகளும் இல்லையாம்.

குறிப்புரை :

``நலங்கிடும்`` என்றது உயிர்களின் பொது வியல்பு உணர்த்தியது. `காமம் முதலியவை கலங்கிடும்` எனவும், `வினை துளங்கிடும்` எனவும் முன்னே கூட்டி முடிக்க. முதலடி உயிரெதுகை; ஈற்றடி இனவெதுகை. `துலங்கிடும்` என்பது பாடமாயின், அதனை நேரே காமம் முதலியவற்றிற்கு முடிபாக்கி, `வினை கலங்கிடும்` எனக் கூட்டி முடிக்க.
இதனால், `சத்தியை இச்சக்கர வழியாக வழிபடுதல் பக்குவர்க்கே உண்டாம்` என்பதும் அதனால் அவர்க்கு உளவாம் பயனும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 23

தானே கழறித் தணியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனு மாமே.

பொழிப்புரை :

பக்குவ முதிர்ச்சியால் சத்தியை வழிபடுபவன், தனது தவற்றைத் தானே திருத்தியமையவும், தான் ஆய்ந்துணர்ந்த வற்றைப் பிறருக்குச் செவியறிவுறுக்கவும் வல்லனாய், இறைவனது ஒப்பற்ற நடனத்தை எஞ்ஞான்றும் காண்பவளாகிய சத்தியையும் தானே விரும்பி வழிபட்டுச் சமயத் தலைவனாயும் விளங்குவான்.

குறிப்புரை :

கழறுதல் - இடித்துத் திருத்தல். தணிதல் - அடங்குதல். நினைத்தல், இங்கு அதன் காரியம் தோன்ற நின்றது. எஞ்ஞான்று மாவது படைப்பிற்கு முன்னும், காப்புக் காலத்தும், அழிப்பிற்குப் பின்னும் எனவும், இடையறாமை எனவும் வரும் இரண்டுமாம். அவ்வாறு காண்பவள் சத்தியன்றிப் பிறர் இன்மையின் அவளை, `தனி நடம் தானே கண்டவள்` என்றார். எனவே, அவள், நடிப்பவனின் வேறல்லளாதல் உணரப்படும். படவே, அவளை வணங்குதலால் இப்பயன்கள் உளவாதல் தெளிவு. தானே வணங்குதல், பிறர் வலிசெய்ய வேண்டாது, தானே இயல்பால் வணங்குதல்.

பண் :

பாடல் எண் : 24

ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
தாமேசகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே.

பொழிப்புரை :

தானே எல்லாமாய் நிற்கின்ற சத்தி, அனைத்துயி ராகியும் நிற்கின்றாள். எல்லாப் பொருள்களும் தம் தன்மையில் தாமேயாயும், சத்தியின் வியாபகத்தால் தம்மை ஈன்ற அவளாகியும் நிற்கும். ஆகையால் பக்குவன் அவளை வணங்கிய வழியே வினை நீக்கமும், தவப் பேறும் ஆகிய பயன்களை எய்துவான்.

குறிப்புரை :

`அம்மையும்` என்னும் உம்மையைப் பிரித்து ``அனைத் துயிர்`` என்பதனோடு கூட்டி, `ஆகிய அம்மை அனைத்துயிரும் ஆம்` எனவும், `சகலமும் தாமே ஆம், ஈன்ற அத் தையலும் ஆம்` எனவும், `ஆதலின் அவள் அடிபோற்றி வணங்கிடினே வினைகளும் போம்; புண்ணியன் ஆகும்` எனவும் கூட்டி உரைக்க. புண்ணியம், இங்கு தவம்.

பண் :

பாடல் எண் : 25

புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடும்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே.

பொழிப்புரை :

சத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவன் உலக முழுவதும், தவமிகுதியால் வரும் பெருமையுடையவானகவும், அருளுடைமையால் இனியவனாகவும், அனைவர்க்கும் உரியவனாய் விளங்குவான்.

குறிப்புரை :

`பெருமை, தவத்தினாலாயது` என்பதும், `இனிமை அருளால் ஆயது` என்பதும் தோன்றுதற்கு வேறு வேறு தொடராக வைத்து ஓதினார். அமர்தல் - அமைதல். அமர்ந்திருத்தல், ஒரு சொல் நீர்மையது.
இவை மூன்று மந்திரங்களாலும் அவர்க்கு வரும் பயன்களே வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

தானது கம்இரீம் கௌமது ஈறாம்
நானது சக்கரம் நன்றறி வார்க்கெலாம்
கானது கன்னி கலந்த பராசத்திக்
கேனது! வையம் கிளரொளி யானதே.

பொழிப்புரை :

தானே சக்கரமாகின்ற முதலெழுத்து `க்ரீம்` என்பதும், ஈற்றெழுத்து `கௌம்` என்பதுமாக அமைகின்ற அந்தச் சக்கரமே ஞானத்தை விரும்புவார்க்கு நான் சொல்வது. அது சத்திக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற நல்ல சோலையாய் விளங்கும். ஆயினும், அதில் வேறறக் கலந்து நிற்கின்ற அவளுக்கு அஃது எதன்பொருட்டு வேண்டும்! உலகம் ஒளி பெற்று விளங்குவதே அதன்பயன்.

குறிப்புரை :

பல அக்கரங்கள் உள்ள சக்கரங்கள் முதற்கண் உள்ள எழுத்தின் சக்கரமாகவே கூறப்படுதலின், முதலெழுத்தை, `தான் அதுவாவது` என்றார். `க்ரீம்` என்பதை, `கம்` என்வும், `இரீம்` எனவும் செய்யுள் நோக்கிப் பிரித்து ஓதினார். `நான் சொல்வது` என ஒருசொல் வருவிக்க. `கன்னிக்கு` என்னும் நான்கனுருபு தொகுத்தலாயிற்று. `அது கன்னிக்குக் கான்` என்க. ஆதலுக்கு `அதனால்` என்னும் வினை முதல் வருவிக்க. ஒளியாவதும் ஞானமே. ``ஆனதே`` என்பதன் பின், `பயன்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
இதனால், நவாக்கரி சக்கரத்தின் வகை ஒன்றனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரின்
களிக்கும் இச் சிந்தையிற் காரணங் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம்உண் டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

இச்சக்கத்தில் நின்று ஞானத்தை வழங்குகின்ற சத்தி ஒருவனது உள்ளத்தில் நிலைபெறுவாளாயின், அவனது உள்ளம் அவனையும் அறியாமல் ஒரு களிப்பினை யுடையதாகும். தன் அடியவரைப் பல்லாற்றானும் நன்னிலையில் வைத்துக் காக்கின்ற இச்சத்தியது பெருமையை அறிந்து இவளை அடைகின்றவர்கட்கு இது பற்றிய ஆராய்ச்சியில் இதனைக் காரணங் காட்டித் தெளிவிப்ப தாகிய அருள்மழையுடன், பொருட் செல்வத்தையும் இவள் உண்டாக்குவாள்.

குறிப்புரை :

ஒளிக்கும் - ஒளியைச் செய்யும். களித்தலுக்கு, `அது` என்னும் எழுவாய் வருவிக்க. ஈற்றடியை இதன் பின் கூட்டுக. இச் சிந்தை - இது பற்றிய சிந்தனை. தெளிக்கும் மழை, கருணை மழை.

பண் :

பாடல் எண் : 28

அறிந்திடுஞ் சக்கர அற்சனை யோடே
எறிந்திடும் வையத் திடரவை காணின்
மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்வான்
பொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே.

பொழிப்புரை :

உண்மையை நோக்குமிடத்து, இங்கு அறியப் படுகின்ற இச்சக்கர வழிபாட்டினால் உலகத்துன்பங்கள் அழிக்கப் படும். பிணங்குகின்ற அரசனும் இணங்கி வணங்குதல் செய்வான். தீக்குணத்தை உடைய உள்ளம் அஃது இன்றித் திருந்தும்.

குறிப்புரை :

``எறிந்திடும்`` என்பது செயப்பாட்டு வினைப் பொருட்டாய் நின்றது. ``காணின்`` என்பதை முதலிற் கூட்டி உரைக்க. பொறிதல், பொறியோடு கூடியதாய் இருத்தல். பொறி, தீப்பொறி. `புகையில்லையாம்` அஃதாவது, `தணிந்து குளிரும்` என்க. `அருச்சனை` என்பது பாடம் ஆகாமை அறிக.

பண் :

பாடல் எண் : 29

புகையில்லை சொல்லிய பொன்னொளி உண்டாம்
குகையில்லை கொல்வ திலாமையி னாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம்
சிகையில்லைச் சக்கரஞ் சேர்ந்தவர்க் காமே.

பொழிப்புரை :

மேற் சொல்லியவாறு தீக்குணம் அகலும்; முன்பு யோக நிலையிற் சொல்லிய பொன்போலும் உடல் ஒளியும் உண்டாகும். பகை யாதும் இல்லாமையால், அரண்தேட வேண்டுவ தில்லை. இப்பயன்களைப்பெற உலகருக்கு வகை இல்லை. தனக்கு மேல் ஒன்றில்லாத இச்சக்கர வழிபாட்டினை மேற்கொண்டவர்க்கே இவை கிடைப்பனவாம்.

குறிப்புரை :

தொடர்பு தோன்ற, ``புகையில்லை`` என அனு வதித்தார். ``குகை`` என்றது, `கரந்துறையும் இடம்` என்றவாறு. அஃறிணையும் அடங்க, ``கொல்வது`` எனப் பொருளாக வைத்துப் பொதுப்பட ஓதினார். கொல்வது, சாதி யொருமை. இதனைத் தொழிற் பெயராக வைத்து, `பாவம் இன்மையால் நரகம் இல்லையாம்` எனவும் உரைப்ப. ``சிகை`` என்று, மேல் உள்ளதனைக் குறித்ததாம். சிகை யில்லையாகிய சக்கரம் என்க. `சேர்ந்தவர்தாமே` என்பது பாடமன்று.

பண் :

பாடல் எண் : 30

சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர்
காய்ந்தெழும் மேல்வினை காணகி லாதவர்
பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

பொழிப்புரை :

இச் சக்கர வழிபாட்டினை மேற் கொண்ட வரிடத்தில் மிக விரைந்து எழுகின்ற உள்ளொளியாகிய ஞானம் உலகில் பலராலும் அறியப்படும். ஆதலின், ஆணவத்தால் விளையும் அறியாமையும், திரிபுணர்வும் கெடும். அதனால் இவர்கள் எட்டுத் திசைக்கும் விளக்குப்போல்பவரும், தம்மை வந்து வருத்துகின்ற ஆகாமிய வினை தோன்றப்பெறாதவரும் ஆவர்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. `திசைக்கு` என நான்காவது விரிக்க. மாறுஒளி - திரிந்த உணர்வு. ``மாய்ந்தது`` என்பதை இதனோடும் கூட்டுக. முதலடி இனவெதுகை.
இவை நான்கு மந்திரத்தாலும் இச்சக்கர வழிபாட்டின் பயனே கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

ஒளியது ஹௌம்முன் கிரீமது ஈறாம்
களியது சக்கரம் கண்டறி வார்க்குத்
தெளியது ஞானமும் சிந்தையும் தேறப்
பளியது பஞ்சாக் கரமது வாமே.

பொழிப்புரை :

ஒளியை உடையதாகிய `ஹௌம்` என்னும் பீசத்தை முதலிலும், `க்ரீம்` என்னும் பீசத்தை இறுதியிலும் கொண்ட, களிப்பைத் தருவதாகிய அச்சக்கரத்தின் உண்மையை நன்குணர்ந்த வர்கட்குத் தெளிவாகிய ஞானமும் தோன்ற, அதனை உள்ளமும் பற்ற, அதனால், அச்சக்கரம் எல்லா ஞானத்திற்கும் இடமாயுள்ள திருவைந்தெழுத்துமாய் விடும்.

குறிப்புரை :

கண்டறிதல், ஒருபொருட் பன்மொழி. தெளி, முதனிலைத் தொழிற்பெயர். \\\"தேற\\\" என்பது \\\"ஞானம்\\\" என்பத னோடு இயையுங்கால் `உண்டாக` எனப் பொதுமையில் நிற்பதாம். `பள்ளி` என்பது இடைக் குறைந்து நின்றது. பள்ளி - இடம். `பள்ளி யாகிய பஞ்சாக்கரம்` என்க. `பஞ்சாக்கரமதுவும்` என்னும் சிறப்பு உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால், நவாக்கரி சக்கரத்தின் மற்றொரு வகையினது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

ஆமே சதாசிவ நாயகி யானவள்
ஆமே அதோமுகத் துள்அறி வானவள்
ஆமே சுவைஒளி ஊறோசை கண்டவள்
ஆமே அனைத்துயிர் தன்னுள்ளும் ஆமே.

பொழிப்புரை :

`சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை` என்னும் மூன்று மாயைகளினின்றும் மூவகைக் கருவிகளைத் தருபவளாகிய சத்தி, அக்கருவிகளைப்பெறும் உயிர்களாய் நிற்றலே யன்றி, இச் சக்கரத்துள்ளும் இதுவேயாய் நிற்பாள்.

குறிப்புரை :

``ஆமே`` ஐந்தில் முதல் மூன்றும், இறுதி ஒன்றும் இச்சக்கரத்துள் நிற்றலையும், ஏனையது அது அதுவாதலையும், குறித்தன. சதாசிவ நாயகி - சதாசிவனுக்கு நாயகி; மனோன்மனி. அறிவானவள், வித்தியேசுரனுக்கு நாயகியானவள், வித்தியேசுவரி. சுவையொளி ஊறோசை கண்டவள், சீகண்டனுக்கு நாயகியாகிய உமை. அதோமுகம் - கீழிடம். இஃது இடவாகுபெயராய் அசுத்த மாயையை உணர்த்திற்று. இதனைக் கூறவே முன்னர்ச் சுத்த மாயையும், பின்னர்ப் பிரகிருதி மாயையும் கொள்ளக் கிடந்தன. ``சுவையொளி ஊறோசை``, ஆன்ம தத்துவம் அனைத்திற்கும் உபலக்கணம். பிரகிருதி மாயையில் ஆன்ம தத்துவத்தைக் கண்டமை கூறவே, அசுத்த மாயையில் வித்தியா தத்துவத்தைக் கண்டமையும், சுத்த மாயையில் சிவ தத்துவத்தைக் கண்டமையும் பெறப்பட்டன. காணுதல் - தோற்றுவித்தல் ஈற்றடியில், ``தன்னுள்`` என்றது, சக்கரத்துள் என்றவாறு. ``சட சித்துக்கள் அனைத்திற்கும் முதல்வியாய் நிற்கும் சத்தி இச்சக்கரத்தில் விளங்குவள்` என்றவாறு.
இதனால், `இச்சக்கரத்தின் தெய்வம் இது` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 33

தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்
டென்னுளு மாகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீரனல் காலுளும் வானுளும்
கண்ணுளும் மெய்யுளும் காணலு மாமே.

பொழிப்புரை :

இச்சக்கரத்தில் நின்றும், உலக முழுதையும் தன்னுடையதாகக் கொண்டும், என் உள்ளத்திலும் இருந்தும் எல்லாப் பொருளும் தன்னிடத்தில் அடங்க நிற்கின்ற சத்தி, பஞ்ச பூதங்களின் உள்ளும், என் கண்ணின் உள்ளும், உடம்பின் உள்ளும் காணக் கூடியவளாகின்றாள்.

குறிப்புரை :

கண்ணுட் காணப்படுதல் புறக்காட்சியாலும், உடம்புட் காணப்படுதல் அகக் காட்சியாலுமாம். ஆகவே `உயிர்களின் அகத்தும், புறத்தும் காணப்படுகின்ற இவளை நீவிரும் இவ்வழிபாட்டி னால் காண்பீராக` என்றதாயிற்று. பின்னிரண்டடிகள் இனவெதுகை.
இதனால் அத்தெய்வத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

காணலு மாகும் கலந்துயிர் செய்வன
காணலு மாகும் கருத்துள் இருந்திடில்
காணலு மாகும் கலந்து வழிசெயல்
காணலு மாகும் கருத்துற நில்லே.

பொழிப்புரை :

சத்தியின் துணையாலே உயிர்கள் செயற்பட்டு வரும் முறைகளை உணரலாம். `எப்பொழுது` எனின், அவள் உனது உள்ளத்தில் விளங்கும்பொழுது. அப்பொழுதே அவள் உயிர்களுக்கு உய்யும் வழியைச்செய்து வருதலையும் உணரலாம். ஆதலின், இவ்வுணர்வுகளைப் பெற நீ உனது உள்ளம் அவளிடத்திற்பொருந்தும் வகையில் நிற்பாயாக.

குறிப்புரை :

இரண்டாம் அடி நான்காம் அடிகளில் ``காணலுமாகும்`` என்றவை அனுவாதம். ``உயிர் செய்வன`` என்றது வினைவழி ஒழுகு தலையும், ``வழிசெயல்`` என்று பக்குவம் வருவித்தலையுமாம். கலக்கப்படுதல், கருத்துள் இருத்தல் முதலியவற்றிற்கு வேண்டும் `சத்தி` என்பது முன்னை மந்திரத்தினின்றும் வந்தியைந்தது.
இதனால், `அச்சத்தியை ஒருதலையாகத் தியானிக்க` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக்
கொண்டிடும் வையம் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.

பொழிப்புரை :

சத்தியது தியானத்தால் ஏழுலகங்களில் ஒன்றைச் சுட்டியறியும் ஏகதேச உணர்வு நீங்கப்பெற்று, அனைத்தையும் ஒன்றாகக் காண்கின்ற வியாபக உணர்வு வரப் பெற்ற உயிர் அவ்வுணர்வானே தனது வியாபகத்தையும் உணர்வதாகும். அதனால், முக்குண வயப்படுதலும், வினைத் தொடக்கும் ஒழியும். அஃது ஒழியவே, அவ்வுயிர் மெய்ப்பொருளைத் தலைப்படும்.

குறிப்புரை :

`உள்ளம் - உயிர். வையம் எங்கும் கலந்து தானாகக் கொண்டிடும்` எனக் கூட்டுக. கொள்ளுதல் - அகப்படுதல்; என்றது அகப்பட்டிருத்தலை உணர்தலை. முக்குண வயப்படுதலினின்றும் நீங்குதலாவது, பிராரத்துவத்தை நுகர்தலும், அதனால் ஆகாமியத்தைச் செய்யாமையுமாம். ``வல்வினை`` என்று சஞ்சிதத்தை. `மூவினைத் தொடக்கும் அறச் சீவன் முத்தனாம்` என்றபடி, முதலடி இனவெதுகை.
இதனால், அந்தத் தியானத்தால் வரும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

மெய்ப்பொருள் (ஔம்)முதல் (ஹௌம)து ஈறாக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம்
தற்பொரு ளாகச் சமைந்தமு தேச்சரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே.

பொழிப்புரை :

சத்தி `அமுதேசுவரி` என்னும் பெயருடன், மெய்ப் பொருளை உணர்த்தும் `ஔம்` என்னும் பீசம் முதலாகவும், `ஹௌம்` என்னும் பீசத்தை ஈறாகவும் பொருந்திக் கைப்பொருள்போலத் தப்பாது பயன்தருகின்ற சக்கரத்தைத் தனது பொருளாகக் கொண்டு நன்மையைத் தருகின்ற ஒருபொருளாய் அதன் நடுவில் இருக்கின்றாள்.

குறிப்புரை :

நன்மை - பயன். இனவெதுகையும், ஆசெதுகையும் வந்தன.
இதனால், நவாக்கரி சக்கரத்தின் மற்றொரு வகையும், அதற்குரிய தெய்வமும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 37

தாளதி னுள்ளே சமைந்தமு தேசுவரி
காலது கொண்டு கலந்துற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமும் கேடில்லை காணுமே.

பொழிப்புரை :

இச்சக்கரத்திலே தனது திருவடி பொருந்த நிற்கின்ற அமுதேசுவரி வாசி யோகத்தால் வெளிப்படத் தோன்றும்படி பிராண வாயுவை அவள்பாற் கலக்கச் செய்யின், ஒவ்வொரு நாளும் புதுமைகள் பல தோன்றும். உடம்பும் அழிதலை யொழிந்து நிலை நிற்கும். ஆதலின், அங்ஙனம் செய்யப்படும் யோக முறையை வல்லார் வாய்க் கேட்டு, அதனை மேற்கொள்வாயாக.

குறிப்புரை :

`சமைந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அமுதேசுவரி` என்னும் பெயரானே, அவள் `சகத்திராரம்` எனப்படு கின்ற சந்திர மண்டலத்தில் வீற்றிருந்து அமுதத்தைப் பொழிபவள் என்பது பெறப்பட்டமையின், வாளா, ``வீசிடில்`` என்றொழிந்தார். `அமுதேசுவரி கலந்துற, காலதுகொண்டு வீசிடில்` எனக் கூட்டுக. ``கேள் அது`` என்பதனை இறுதியில் வைத்து உரைக்க. காண், உம் அசைகள்.
இதனால், `அச் சக்கர தெய்வத்தை யோக நெறியாலே தலைப்படுக` என்பது கூறப்பட்டது. இரண்டாமடி உயிரெதுகை.

பண் :

பாடல் எண் : 38

கேடில்லை காணும் கிளரொளி கண்டபின்
நாடில்லை காணும் அந் நாள்முதல் அற்றபின்
மாடில்லை காணும் வரும்வழி கண்டபின்
காடில்லை காணும் கருத்துற் றிடத்துக்கே.

பொழிப்புரை :

பேரொளிப் பொருளாகிய அமுதேசுவரியை மேற்கூறியவாறு கண்டபின் காண விரும்பவேண்டுவது ஒன்றும் இல்லை; உடம்பிற்கு அழிவும் இல்லை. அழிவு இல்லாமையால், நாள் முதலிய பாகுபாடுகளையுடைய காலம் நீங்கினமையின், காலத்தோடு கூடியே தம் பயனைத் தருகின்ற இடப்பாகு பாடுகளும் இல்லையாம். இனி முற்கூறிய பேரொளியால் உயிரினது குறிக்கோள் பொருந்திய இடத்திற்குச் செல்லும் வழி நன்கு காணப்படுதலின், அதன்பின் அவ்வழியை மூடி மறைக்கும் வினைக்காடு இல்லையாம்.

குறிப்புரை :

``கிளரொளி கண்டபின்`` என்பது தாப்பிசையாய் இடை நின்றது. நாடு, முதனிலைத் தொழிற்பெயர். ``அற்றபின், கண்டபின்`` என்ற அனுவாதத்தால், அறுதலும், காணுதலும் தாமே பெறப்பட்டன. மாடு - பக்கம்; இட வேறுபாடு. செல்லுதலை ``வருதல்`` என்றது, இட வழுவமைதி. கருத்து - குறிக்கோள். `உற்ற` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. `உற்ற இடத்துக்கு வரும் வழி` என மேலே கூட்டுக. இதனுள்ளும் `காண், உம்` என்பன அசைநிலைகள்.
இதனால், மேற்கூறிய யோகக் காட்சியால் உளவாம் பயன்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 39

உற்றிட மெல்லாந் உலப்பிலி பாழாகிக்
கற்றிடமெல்லாம் கடுவெளி யானது
மற்றிட மில்லை வழியில்லை தானில்லை
சற்றிட மில்லை சலிப்பற நின்றிடே.

பொழிப்புரை :

கிளரொளியாகிய அமுதேசுவரியைக் கண்டபின் அக்காட்சி சலித்தற்குச் சிறிதும் இடனில்லாதபடி உறைத்து நில். நின் றால், காணப்பட்ட இடங்கள் யாவும் அழிவற்ற பாழாய், கற்ற நூல்கள் தாமும் வெற்ற வெளியாய் அவ்விடத்திற்குப் பயன் செய்யாதவை யாய்விடும். அங்ஙனம் ஆகாத இடங்களும், நூல்களும் இல்லை யாம். அதனால், அவளிடத்தினின்றும் விலகிச் செல்லுதற்கு ஏதுவே யில்லை. இனி, விலகிச்செல்ல, `தான்` என்று ஒரு முதலும் இல்லையாம்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில்வைத்து உரைக்க. `உற்ற, கற்ற` என்பவற்றது ஈற்று அகரம் தொகுத்தலாயின. உறுதல் - எதிர்ப்படுதல். பாழாதல், காட்சிப்படாதொழிதல். நூலை. `புலம்` என்பவாகலின், அதனை இங்கு ``இடம்`` என்றார். கடுமை - மிகுதி. கடு வெளி - வெளியாந் தன்மையை மிக உடையவெளி. `ஆகும்` என்னும் எதிர்காலம் துணிவுபற்றி இறந்தகாலமாயிற்று. ``மற்றிடம் இல்லை`` என எதிர்மறுத்தும் கூறினார், வலியுறுத்தற் பொருட்டு. ``வழியில்லை`` என்ற காரண மொழிக்கு, விலகுதலாகிய காரிய மொழி ``சலிப்பற`` என்பதனால் பெறப்பட்டது. தான் இலனாதலும், தன்னை உணரும் நிலை நீங்குதலேயாம்` சத்தியை ஒழித்துத் தன்னையும், பிறவற்றையும் உணரின் துன்பமாம் ஆதலின், வரம்பில் இன்பத்தில் அவை இலவாயின. `சற்றிடம் இல்லையாக` என ஆக்கம் வருவித்து உரைக்க.
இதனால், `மேற்கூறிய காட்சியில் அசைவற நின்று, பெரும் பயன் எய்துக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும்
நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட
நின்றிடும் மேலை விளக்கொளி தானே.

பொழிப்புரை :

அமுதேசுவரியைச் சலிப்பின்றிக் காணின், நிலை பெற்றுள்ள ஏழ் கடல், ஏழ் நிலம் முதலியயாவும், அலைவின்றி நிலைத்த அவ்வுள்ளத்தில் நினைத்தவாறே ஆகும். முடிவாக கிளரொளி யாகிய அச்சத்தி ஒழிவின்றித் தன்னிடத்தில் நிலைபெற்று நிற்கும்.

குறிப்புரை :

மூன்றாம் அடி தாப்பிசையாய் முன்னும். பின்னும் சென்று இயைந்தது. ``புவி`` என்றது தீவுகளை. `நினைத்தவாறே ஆம்` என்றது, `அவற்றைக் காக்கவும், அழிக்கவும் அவற்றைத் தன் விருப்பப்படி பயன்படுத்தவும் வல்லனாம்` என்றவாறு. மேலை விளக்கொளி - மேற் கூறப்பட்ட விளக்கொளி; `மேலிடமாகிய சந்திர மண்டலத்தில் விளங்கும் விளக்கொளி` என்றுமாம்.
இதனால், அக் காட்சியின் பயன் வேறும் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 41

விளக்கொளி (ஸௌம்)முதல் (ஔம)து ஈறா
விளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும்
விளக்கொளி யாகிய மின்கொடி யாளை
விளக்கொளி யாக விளங்கிடு நீயே.

பொழிப்புரை :

விளக்கொளி போல்வதாகிய `ஸௌம்` என்னும் பீசம் முதலும், `ஔம்` என்னும் பீசம் ஈறும் ஆகி நிற்பின் அச் சக்கரம் விளக்கொளிச் சக்கரமாம். அது மெய்ப்பொருளாயே நிற்கும். எல்லா வற்றையும் விளக்கியருள்கின்ற ஒளியாகிய சத்தியை அச்சக்கரத்தில் விளக்கொளி வடிவமாகவே நீ கருதி வழிபடு.

குறிப்புரை :

காரணப் பொருளில் வந்த \\\"ஈறாக` என்பது \\\"ஆகும்\\\" என்பதனோடு முடிந்தது. மூன்றாம் அடியில் உள்ள விளக்கொளி, வினைத்தொகை. விளங்கிடு - அறிந்திடு. இங்ஙனங் கூறவே, இச்சக்கரத்தின்மேல் விளக்கை வைத்தலும் பொருந்துவதாயிற்று.
இதனால், நவாக்கரி சக்கரத்துள் ஒன்றன் முறைமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 42

விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடு மெல்லிய லானது வாகும்
விளங்கிடு மெய்நின்ற ஞானப்பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.

பொழிப்புரை :

விளங்கி நிற்பதாக மேலைமந்திரத்திற் சொல்லப் பட்ட மெய்ப்பொருளை இன்னதெனக் கூறின், அது சிவ சத்தியேயாம். தானே விளங்குந் தன்மையுடையதும், மெய்ம்மையானதும், அறிவே வடிவாய் உள்ளதும் ஆகிய அந்தப்பொருளை உணர்பவர்களே ஞானம்பெற்றவராவர்.

குறிப்புரை :

மேலை மந்திரத்துள், \\\"மெய்ப்பொருள்\\\" எனவும், \\\"மின்கொடியாள்\\\" எனவும் வேறுவேறு போலக் கூறப்பட்டவை அங்ஙனமாகாது ஒன்றேயாதலை முன்னிரண்டடிகளில் விளக்கிப் பின் னிரண்டடிகளில் அப்பொருளின் சிறப்புணர்த்தினார். \\\"விளங்கிடும், வரும்\\\" என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, \\\"மெய்ப் பொருள்\\\" என்னும் ஒருபெயர் கொண்டன. \\\"மேல்\\\" என்றது மேல் நின்ற இடத்தை. `வந்த` எனற்பாலதனை, \\\"வரும்\\\" என்றதும், `தாமே` எனற்பாலதனை \\\"தானே\\\" என்றதும் வழுவமைதி. மெய்ம்மையும். ஞானமும் ஆதல் கூறவே. ஆனந்தம் ஆதலும் கொள்ளப்படும். சத்தி அஃறிணையாகவும் கூறப்படுதல் பற்றி எழுவாயை, `ஆனது` எனக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 43

தானே வெளியென எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளியது வானவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே அனைத்துள அண்ட சகளமே.

பொழிப்புரை :

மேற்கூறிய மெய்ப்பொருளாகிய ச்ததி, தான் ஒருத்தியே பூதாகாயமாகி எங்கும் நிறைந்தும், பராகாயமாகி எல்லா வற்றிற்கும் மேலாகியும் நிற்பாள். தானே எல்லாப் பொருளையும் தோற்றுவித்து அழிப்பவளாவாள். தானே பலவாயுள்ள அண்டங் களையும் தனது வடிவமாக உடையவளாவாள்.

குறிப்புரை :

பூதாகாயமாய் நிற்கும் நிலைமை கூறவே, பராகாய மாய் நிற்கும் நிலையும் கொள்ளப்பட்டது. சகளமாய் நிற்பவளை, \\\"சகளம்\\\" என்றார்.
இவை இரண்டு மந்திரங்களாலும் அச்சக்கர தெய்வத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே.

பொழிப்புரை :

அளத்தற்கு அரிய பொருளாய் அனைத்து அண்டங்களிலும் பரவி நிற்பவளும், உடம்பினுள்ளே தானே பரவெளியை அமைத்துள்ளவளும் ஆகிய சத்தியது தன்மைகள் பலவற்றை ஓம குண்டத்தில் பலர் மந்திரம் கிரியை பாவனைகளால் காண்பார்களாயினும், உடம்பினுள்ளே அவள் பொருந்தி நிற்கும் நிலையை அவர் அறிதல் இல்லை.

குறிப்புரை :

பரவெளியை அமைத்தமையாவது, தியானத்தானங் களாகிய ஆதார நிராதாரங்களை நிறுவினமை. `கண்டவள் குணம்` என இயைக்க. கண்டம் - வரையறைப்பட்டது. இங்கு, உடம்பு சத்தியைக் கிரியை முறையால் உணரும் உணர்வோடே அமைந்து, யோக முறையால் உணர்தலை மேற்கொள்ளாது ஒழிவாரை நோக்கி இவ்வாறு இரங்கிக் கூறினார் என்க.
இதனால், அச்சத்தியைக் கிரியை முறையால் வழிபடுதலோடு ஒழியாது, யோக முறையால் தலைப்படுதல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

கலப்பறி யார் கடல் சூழுல கெல்லாம்
உலப்பறி யார் உட லோடுயிர் தன்னைச்
சிலப்பறி யார் சில தேவரை நாடித்
தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே.

பொழிப்புரை :

சிவ சத்தி இருக்க அவளை வணங்காமல் சில தேவர்களை நாடிச் சென்று வணங்குதலால், தலை இருந்தும் அஃது அற்றொழிந்த உடலை உடையார்போல ஆகி விட்டவர்கள் தாம் அடையத் தக்க பொருள் எது என்பதனையும், உலகம் அழிவது என்பதனையும் வாழும் பொழுதே உடலோடு கூடிய தம் உயிரை நல்வழியிற் செயற்படச் செய்வதனையும் அறிவாரல்லர்.

குறிப்புரை :

``கலப்பு`` என்னும் தொழிற்பெயர் ஆகுபெயராய், கலக்கப்படும் பொருளை உணர்த்திற்று. சிலைப்பு - ஒலிப்பு. செயற் படாதிருத்தலை, `பேசாதிருத்தல்` எனக் கூறும் வழக்குப் பற்றிச் செயற் படுதலை `ஒலிப்பு` என்றார். நாடுதல். அதன் காரியம் தோற்றி நின்றது. தலைப் பறி - தலையது நீக்கத்தை உடையது.
``கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணஙகோத் தலை`` 1
என்றதனை நினைவு கூர்க.
இதனால், சத்தியை அணுகாதவர் எய்தும் குற்றம் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 46

தானே எழுந்தஅச் சக்கரம் சொல்லிடின்
மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்
தேனே இரேகை திகைப்பற ஒன்பதில்
தானே கலந்த வரைஎண்பத் தொன்றுமே.

பொழிப்புரை :

ஒன்ப தெழுத்துக்களால் இயல்பாக அமைந்த சக்கரத்தின் இயல்பைக் கூறின், நெடுக்காகப் பத்துக் கோடும், குறுக்காகப் பத்துக்கோடும் இட்டு, ஒன்பதிற்றொன்பது (9X9) எண்பத்தொன்றா கின்ற அறைகளை அறிவாயாக.

குறிப்புரை :

``மானே, தேனே`` என்பன மகடூஉ முன்னிலை. இதுவும் நூல் வழக்கு. ``மதி`` என்பதனை இறுதிக்கண் கூட்டுக. ``வரை, இரேகை`` என இருகாற்கூறி, நெடுக்கும் குறுக்கும் கொள்ள வைத்தார். ஈற்றடியில், `வானே கலந்த` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும். இங்ஙனம் இச்சக்கரம் அமையுமாறு காண்க:-

பண் :

பாடல் எண் : 47

ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம்
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்
என்றியல் அம்மை எழுத்தவை பச்சையே.

பொழிப்புரை :

மேற்கூறிய சகக்ரத்தின் இயல்பை இன்னும் சொல்லும்பொழுது, வெற்றியைக் கொண்ட அதன் வடிவமாகிய அறைகளின் நிறம் பொன்மை; அழுந்த இடப்பட்ட கோடுகளின் நிறம் செம்மை. ஞாயிற்றைப் போல ஒளிவிட்டு விளங்கும் சத்தி வடிவ மாகிய எழுத்துக்களின் நிறம் பச்சை.

குறிப்புரை :

அறைகள் சதுர வடிவினவாயினும் `சக்கரம்` எனப் படுதல் பற்றி, ``வட்டம்`` என்றார். மதி வட்டம், வினைத்தொகை. செம்மையில் -செம்மை நிறத்தில். என்று - சூரியன்.
இவை இரண்டு மந்திரங்களாலும் சக்கரவடிவு கூறப்பட்டது.
இவ்வடிவினைக் காண்க.

பண் :

பாடல் எண் : 48

ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய
வாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின்
காய்ந்தவி நெய்யுட் கலந்துடன் ஓமமும்
ஆய்ந்தவி ஆயிரம் ஆகுதி பண்ணுமே.

பொழிப்புரை :

பொருந்திய மர உரியில் (மரப் பட்டையில்) எழுதப்பட்டுப் பொருந்திய எழுத்துக்களை மேற்சொல்லிய எண்பத் தோர் அறைகளில் அடைத்த பின்பு, வெண்ணெய் அப்பொழுது காய்ந்து அடங்கியதனால் உண்டான நெய்யில் நன்கு ஆய்ந்த அரிசியால் முறைப்படி அடப்பட்ட சோற்றைக் கலந்து ஆயிரமுறை ஆகுதியால் ஓமம் பண்ணி வழிபடுங்கள்.

குறிப்புரை :

``ஏய்ந்த`` என்பது, ``மரம்`` என்பதனோடு முடிந்தது. `உரித்தற்குப் பொருந்திய மரம்` என்றபடி. `எழுதிய வாய் வாய்ந்த` என்க. ``பெண்`` என்றது சத்தியை. அது மேலை மந்திரத்திற் கூறிய வாறு அவளது வடிவாய் நிற்கும் எழுத்திற்கு ஆகுபெயர். `ஆய்ந்த` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. ``நூலாக் கலிங்கம்`` என்பதிற் போல, ``ஆய்ந்த`` என்னும் பெயரெச்சம் அவிக்குக் காரணமாகிய அரிசிக்கு உரித்தாய், ஒற்றுமை பற்றி அவிக்குப் புணர்க்கப்பட்டது. `ஆய்ந்த அவியை, காய்ந்து அவிந்த நெய்யுள் உடன் கலந்து ஆகுதி ஆயிரத்தால் ஓமம் பண்ணும்` எனக் கூட்டுக.
இதனால், இச்சக்கரத்தை வழிபடும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 49

பண்ணிஅப் பெண்ணைப் பரப்பற நீபிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமும் நான்முகன் ஒத்தபின்
துண்ணென மேயநற் சொக்கனு மாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய முறையில் ஓமம் செய்து அச்சத்தியை நீ மெல்லப் பிடித்தால், கணக்கிட்டுக் கூறப்பட்ட நாள்களுக்குள்ளே நன்மை உண்டாகும். ஒமத்தைச் செம்மையாக வளர்த்தமையால், `பிரமனுக்கு நிகரான பிராமணனாயினான்` என்ற புகழை உலகத்தார் சொல்லும் அளவிற்கு இவ்வழிபாட்டில் சிறந்து நின்றபின், விரைவில் அவன் மிக உடல் அழகு பெற்றும் விளங்குவான்.

குறிப்புரை :

`பண்ணிய பொன்னை` என்பதும், `துண்ணென நேயநற் சேர்க்கலு மாமே` என்பதும் பாடம் அல்ல. எண்ணிய நாள், ஒருமண்டலம்; நாற்பத்தெட்டுநாள். இதனை வழக்குப் பற்றிக் கொள்ள வைத்தார். `நான்முகனோடு` என உருபு விரிக்க. சொக்கு - அழகன்.
இதனால், இவ்வழிபாடு பயன் தரும் காலம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
ஆகின்ற கப்பூரம் ஆகோ சனம்நீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேரநீ வைத்திடே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கரத்திற்கு ஆகும் பொருள்கள், `சந்தனம், குங்குமப்பூ, மான்மதம், கண்ணேறு போதற்கு ஏதுவான கருஞ்சாந்து, சவ்வாது, புனுகுசட்டம், நெய், கோரோசனை, நீர்` என்னும் ஒன்பதுமாம். இவற்றை ஒருங்கு கூட்டி வைத்துக்கொண்டு வழிபாட்டினைத் தொடங்குவாயாக.

குறிப்புரை :

இவை ஆட்டுதல், பூசுதல், அணிவித்தல் முதலாக ஏற்ற பெற்றியாற் பயன்படுவன என்க.
இதனால், `இவ்வழிபாட்டிற்குச் சிறப்பாகவேண்டும் பொருள்கள் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 51

வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடின்
கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத்
தச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே.

பொழிப்புரை :

இச்சக்கரத்தில் வைத்துத் தியானிக்கப்படும் பொன் போன்றவளாகிய சத்தியுடன் பொருந்தத்தக்க சிறந்த வழிபாடு யாது என ஆராயின், சத்தியை மிக இளைவளாகவும், அவளுக்கு உரிய மந்திரம் இவ் எழுத்துக்களேயாகவும் கொண்டு, தேவிதன் ஆயிர நாமங்களால் ஆயிரமுறை அருச்சனை செய்தல் என அறிவாயாக.

குறிப்புரை :

`பொன்னுடன் பொருந்தும் மாதவம்` என ஒருசொல் வருவிக்க. `தைத்து` என்பது \\\"தச்சு\\\" எனப் போலியாயிற்று. கைச் சிறு - மிகச் சிறிய. தைத்தல் - உள்ளத்தில் பொருத்துதல். `சமைந்த இம் மந்திரம் இதுவாக` என மாற்றிக் கொள்க. இது, இந்நிலை; தேவி இளை யளாய் விளங்கும்கோலம். `ஆயிரம் ஆயிரம் எனச் சிந்தி` என்க. சிந்தி - சிந்தித்து உணர். இன எதுகையும், ஆசெதுகையும் வந்தன.
இதனால், `இச்சக்கரத்தைத் தேவியது ஆயிர நாமத்தால் ஆயிர முறை அருச்சிக்க` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 52

சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தாய் கரங்கள் இருமூன்றும் உள்ளன
பந்தமா சூலம் படைபாசம் வில்அம்பு
முந்தை (கீலீம்)எழ முன்னிருந் தாளே.

பொழிப்புரை :

வழிபடுவோரது உள்ளத்திலே ஒளி விட்டு விளங்கு பவளாய், `க்லீம்` என்னும் பீசத்தை முதலில் வைத்துக் கணிக்க அங்ஙனம் கணிப்பவர்களது கண்முன் தோன்றிநின்று அருளுகின்ற சத்தியாகிய எம் தாயது ஆறு கைகளிலும் உள்ளவைகளில் படைகள் ஆவன, விடாது பறறிய `சூலம், பாசம், வில், அம்பு` என்பன.

குறிப்புரை :

ஏனை இருகரங்கள் அபயமும், வரதமுமாதல் நன் கறியப்பட்டது. ஈற்றடியை முதலடியின் பின்னர்க் கூட்டுக. `எந்தை` என்பதும், `உள்ளது` என்பதும் பாடம் அல்ல. `இருமூன்றிலும்` என உருபு விரித்து, \\\"படை\\\" என்பதை அதன் பின்னர்க் கூட்டி உரைக்க.
இதனால், நவாக்கரிசக்கரத்துள் ஒன்றில் விளங்கும் சத்தியது வடிவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 53

இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர்
இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே
இருந்த கரம்இரு வில்லம்பு கொண்டே.

பொழிப்புரை :

வழிபடுவோனுக்கு எதிரே மேற்கூறிய சக்கரத்தில் சக்கர தேவியைச் சூழ்ந்து ஒவ்வொருத்திக்கு எண்மராக அறுபத்து நால்வர் சூழ எண்மர் சத்திகள் இருப்பர். அவர்கள், கையில் வில்லும் அம்பும் கொண்டிருப்பர்.

குறிப்புரை :

அவ் எண்மர் வாமை முதலியோராவர். `அறுபத்து நால்வரும் எண் வகையாய் உள்ள எண்மர்கன்னிகள் இருந்தனர்`1 என்க. `இருந்த கரம் இரண்டில் வில் அம்பு கொண்டு` என்றவாறு. இருந்த அனைத்துக் கரம் நான்கு, `எதிர் சக்கரத்தே` என்பது முதலாகத் தொடங்கி, மேற்கூறியவாறு முடித்து, \\\"இருந்தனர் சூழ\\\" என்பதனை வேறு தொடராக்கியுரைக்க.
இதனால், மேற்கூறிய சத்தியது பரிவாரங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 54

கொண்ட கனங்குழை கோமுடி ஆடையாய்க்
கண்டஇம் மூர்த்தம் கனல்திரு மேனியாய்ப்
பண்டமர் சோதிப் படரித ழானவை
உண்டங் கொருத்தி உணரவல் லாருக்கே.

பொழிப்புரை :

மணிகளால் கனமான குழை, அரசு முடி நல்ல ஆடை இவைகளை உடையதாய்க் காணப்படுகின்ற இவ்வடிவம் நெருப்புப் போன்றதாய் இருக்க, இயல்பாகவே பல இதழ்களை யுடைய விளக்கம் மிக்க தாமரைமலர் இருக்கையில் எழுந்தருளியிருக் கின்ற ஒருத்தி, தன்னை உணரவல்லவர்க்குத் தன் இருப்புத் தோன்ற நிற்பாள்.

குறிப்புரை :

படர்தல் - பலவாய் விரிதல்.
இதனால், அச்சத்தியது உருவச் சிறப்பு சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 55

உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற்
கலந்திருந் தெங்குங் கருணை பொழியும்
மணந்தெழும் ஓசை ஒளியது காணும்
தணந்தெழும் சக்கரம் தான்தரு வாளே.

பொழிப்புரை :

உணர வல்லார்க்கு உள்ளவள் ஆகின்ற அச் சத்தியை உள்ளே உணர்ந்து காணின், அவள் எங்கும் தானாய்க் கலந்து அருள்மழையைப் பொழிவாள்; (எவ்விடத்திலும் அவ் அடியவ னுக்குத் தடையின்றி அருளுவாள் என்றபடி.) அவள் அங்ஙனம் அருளும்பொழுது அவளோடு கூடி இனிய ஓசையும், அழகிய ஒளியும் தோன்றும். அவளும் அச்சக்கரத்தினின்றும் வெளிப்பட்டு வருவாள்; வந்து, வேண்டும் வரங்களைத் தருவாள்.

குறிப்புரை :

ஓசையாவன தோத்திரங்களாலும், வாக்கியங்களாலும் ஆவன. இரண்டாம் அடி உயிரெதுகை.
இதனால், அச்சத்தி வழிபடுவார்க்கு முன்னின்று அருளுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 56

தருவழி யாகிய தத்துவ ஞானம்
குருவழி யாகுங் குணங்களுள் நின்று
கருவழி யாகுங் கணக்கை அறுத்துப்
பெருவழி ஆக்குமப் பேரொளி தானே.

பொழிப்புரை :

மேலெல்லாம் `பேரொளி` எனச் சொல்லப்பட்ட சத்தி, வீடுபேற்றைத் தரும் வழியாகிய உண்மை ஞானம் ஆசிரியர் வழியாகப் பெருகும் செயலிடமாக விளங்கி நின்று, பிறவிக்கு ஏது வாகும் அவை தோன்றுகின்ற முறைமையை அழித்து, மேலான நெறி யாகிய அருளை வழங்குவாள்.

குறிப்புரை :

செயலை, \\\"குணம்\\\" என்றார். கணக்கு - வரையறை; நியதி.
இதனால் அவளால் ஞானமும் எய்துதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 57

பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர்
சீரொளி யாகித் திகழ்தரு நாயகி
காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம்
பாரொளி யாகிப் பரந்துநின் றாளே.

பொழிப்புரை :

பொதுவாக, `பேரொளி` எனக் குறிக்கப்படுகின்ற, பெரிய ஒளிகட்கெல்லாம் பெரிய ஒளியாகிய சிவனது சிறப்புப் பொருந்திய ஒளியாய்த் திகழ்கின்றமையால் அவனுக்கு நாயகியாய், இயல்பிலே நீல நிறம் உடையவளாகிய சத்தி, பூமியின் நிறமாகிய பொன்னிறம் உடையவளாய்ப் பூமியில் எங்கும் நிறைந்து நிற்கின்றாள்.

குறிப்புரை :

`ஆகையால், அவளை இச்சக்கரத்தில் பொன்னிறம் உடையவளாகக் கருதுதலும் பொருந்தும்` என்பதாம்.
இதனால், அச்சத்தியது தியானத்திற்கு ஆவதொன்று கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 58

பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி
பரிந்தருள் கொங்கைகள் முத்தார் பவளம்
இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே.

பொழிப்புரை :

உடம்பிற்கு வெளியே நீட்டியுள்ள இருகைகள் இரு தாமரை மலர்களை ஏந்தியிருக்க, உடம்பிற்கு உள்ளே அடக்கியுள்ள இரு கைகள் யாதும் ஏந்தாதே விளங்க, உயிர்கட்குத் தாயாகி அருளு கின்ற தனங்கள் முத்து மாலையும், பவழ மாலையும் உடையனவாக, உடுத்தியுள்ள ஆடை மிகச் சிறந்த ஆடையாய் மணிகளால் பொதியப்பட்டு அவள் மாட்டு இருந்தது.

குறிப்புரை :

``ஏந்தி`` என்பதனை, `ஏந்த` எனத் திரிக்க. `யாதும் ஏந்தாதவை` என்பதை விளக்க, ``கொய்தளிர்ப்பாணி`` என இயல்பு கூறி யொழிந்தார். அவை அபய வரதங்களாதல் இயல்பாக அறியப் பட்டது. ``பாணி, பவளம்`` என்பவற்றின் பின் `ஆக` என்பன வரு விக்க. பின்வரும் `ஆக` என்பதற்கு, `பொருந்த` என்பது பொருள். பொதிந்தன்று - பொதிந்தது. இதனுள் உயிரெதுகை வருக்க எதுகை களுடன் மூன்றாமெழுத்தெதுகை வந்தது.
இதனால், அவளது வடிவச் சிறப்பு வேறு சிலவும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 59

மணிமுடி பாதம் சிலம்பணி மங்கை
அணிபவ ளன்றி அருளில்லை யாகும்
தணிபவர் நெஞ்சினுள் தன்னரு ளாகிப்
பணிபவர்க் கன்றோ பரகதி யாமே.

பொழிப்புரை :

தலையில் இரத்தின கிரீடத்தை அணிபவளும் பாதத்தில் சிலம்பை அணிபவளும் ஆகிய இச்சத்தியையன்றித் `திருவருள்` என்பது வேறில்லை. ஆகவே, பிற தெய்வங்களின் மேல் செல்லும் அவா அடங்கித் தன்னை நினைப்பவர் நெஞ்சினுள்ளே தான் தனது இயல்பாகிய அருளோடு விளங்கிப் பின்னும் பலவாற்றால் தன்னை வழிபடுவார்க்கு அன்றோ இவள் மேலான கதியாயும் நிற்பாள்!

குறிப்புரை :

`தலையில்` என்பது ஆற்றலால் விளங்கிற்று. ``அணிபவள்`` என்பதை ``மணிமுடி`` என்றதன் பின்னர்க் கூட்டுக. தணிதலுக்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. ``அணிபவள்`` முதலிய மூன்றனையும், `அணிந்தவர்` என்பது முதலாகப் பிறிது பொருள்படப் பாடம் ஓதுவாரும் உளர்.
இதனால், அவளது வடிவச் சிறப்புச் சில கூறி, அவளே பரகதியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 60

பரந்திருந் துள்ளே அறுபது சத்தி
கரந்தனர் கன்னிகள் அப்படிச் சூழ
மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச்
சிறந்தவர் ஏத்தும் (சிரீம்)தன மாமே.

பொழிப்புரை :

இச்சத்தி, தன்னை வழிபடுவோனது உள்ளத்திலே நிறைந்திருந்து, அறுபத்து நால்வரும், எண்மரும் ஆகிய சத்திகள் மேற்கூறப்பட்டவாறு (1353) தன்னைச் சூழ்ந்திருக்க, பரந்த இரு கைகளில் இருதாமரை மலர்களையும் மேற்கூறியவாறு (1358) ஏந்தி, உயர்ந்தவர்கள் துதிக்கின்ற `ஷ்ரீம்` என்னும் பீசத்திற்குரிய திருமகளாய் நின்று செல்வத்தையும் அளிப்பாள்.

குறிப்புரை :

அறுபத்து நான்கில், `அறுபது` என்னும் பேரெண் ணினை மட்டுமே கூறி நினைவுறுத்தார். மேற்கூறியவைகளை மீளவும் நினைவுகொள்ளச் செய்தது, அவற்றை நன்கு தியானிப்பித்தற்கு. கரத்தல் - அடங்குதல்; கீழ்ப்படிதல். `கிரீம் ஆகிய தனம்` என்க. ``தனம்`` என்றது அதனைத்தரும் திருமகளை உணர்த்திற்று. இங்ஙனம் உணர்த்தி நிற்கக் கூறியது, வழிபடுபவனக்குச் செல்வத்தைத் தருதலை உணர்த்தற்கு. இச்சக்கரத் தலைவியாகின்ற சத்தி, இதன் ஒரு பகுதியாகிய ஷ்ரீம் ஆகிநின்று அருளுதற்கு ஐயமில்லை என்றவாறு. உயிரெதுகையும்,மூன்றாமெழுத்தெதுகையும் வந்தன.
இதனால், பரகதியாய் நிற்கும் அவள் செல்வத்தையும் தருதல் கூறி, ஐயமறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 61

தனமது வாகிய தையலை நோக்கி
மனமது ஓடி மரிக்கில்ஓ ராண்டில்
கனமவை அற்றுக் கருதிய நெஞ்சம்
தினகர னாரிடச் செய்திய தாமே.

பொழிப்புரை :

சத்தியை `ஷ்ரீம்\\\' பீச வழிச் செல்வத் தலைவியாக வைத்து, மனம் பற்றித் தியானித்து வந்தால், ஓராண்டிற்குள் அம்மனம் செல்வத்தில் உள்ள பற்றாகிய சுமை நீங்கப்பெற்று, ஞான சூரியனாகிய சிவனிடத்திற் செல்லும் செயலை உடையதாகும்.

குறிப்புரை :

`ஸ்மரிக்கில்\\\' என்பது, \\\"மரிக்கில்\\\" எனத்தற்பவ மாயிற்று. `சுமை\\\' என்றது, வேண்டாததாதல் பற்றி. நேரே திருமகளை வழிபடுவார்க்கு மேலும் மேலும் அச்செல்வத்தில் பற்று மிகுமாகலின், அதனை விட வேண்டுவார் செல்வத்தின் பொருட்டும் சிவ சத்தியையே திருமகளாக வைத்து வழிபடல் வேண்டும் என்றவாறு.
இதனால், இச்சத்தி தரும் செல்வத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 62

ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர்
பேர்கின்ற பேரொளி யாய மலரதாய்ப்
போகின்ற பூரண மாக நிறைந்தபின்
சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.

பொழிப்புரை :

பக்குவம் முதிர்தற்கு முதலாய் உள்ள மூலாதாரத் தாமரையினின்றும் வளர்ந்து செல்கின்ற மூலாக்கினி, சுவாதிட்டானம் முதலியமற்றை ஆதாரங்களில் உள்ள தாமரை மலர்களில் பொருந்திச் சென்று, அவற்றிற்கு மேலும் போகின்ற பூரண ஒளியாய் நிறைந்த பின்பு, அவ்வக்கினி யோகியின் உடம்பு முழுதுமான மண்டலமாய் நிற்கும்.

குறிப்புரை :

`அப்பொழுது மனம் பற்றற்றதாகும் ஆதலின், அம்முறையானே சத்தியைத் தியானிக்க\\\' என்பது குறிப்பெச்சம். `போகின்ற பேரொளி\\\' என்பது பாடம் அன்று.
இதனால், பற்றறுதியை விரும்புவார் சிவ சத்தியை வழிபட வேண்டுதல், மேலும், யோக நெறியால் வழிபடின், விரையப் பயன் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 63

ஆகின்ற மண்டலத் துள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத் தறுவகை யானவள்
ஆகின்ற ஐம்பத் தறுசத்தி நேர்தரும்
ஆகின்ற ஐம்பத் தறுவகைச் சூழலே.

பொழிப்புரை :

வழிபடுவோன் ஆக்கம் பெறுதற்கு ஏதுவாகிய இச் சக்கரத்தில் வீற்றிருக்கும் சிவசத்தி, மாதுருகாட்சரம் ஐம்பத்தொன்றும், வியட்டிப் பிரணவமாகிய சூக்கும அக்கரம் ஐந்தும் ஆகிய ஐம்பத்தாறு அட்சரங்கட்கும் தலைவியாகிய முழுமுதல்வி. பிற சத்திகள் யாவரும் தனித்தனி இடங்களையுடைய அவற்றுள் ஒவ்வொன்றற்கே முதல்வியராவர்.

குறிப்புரை :

`ஆகவே, இச்சத்தியை வழிபட எல்லாப் பயன்களும் எய்தும்\\\' என்பதாம். `ஐம்பத்தாறு\\\' என்பது தொகைக் குறிப்பாய் அக்கரங்களை உணர்த்திற்று. ஐம்பத்தாறும் வகையேயாக, அவற்றின்வழி விரியாய்ப் பிறக்கும் எழுத்துக்கள் அளவில ஆதலின், \\\"ஐம்பத்தறு வகை\\\" என்றார். \\\"சத்தி\\\" என்பது அஃறிணையாய் ஒரு கால் பன்மையும் உணர்த்துமாதலின், \\\"ஐம்பத்தறு சத்தி\\\" என ஓதினார். நேர்தரல்,பொருந்துதல். சூழல் - இடம்; என்றது, சக்கர அறைகளை.
இதனால், சிவ சத்தியது முழுமுதல் தன்மையை விளக்கி மேலது தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 64

சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமா
ஆங்கணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கிய கையவை தார்க்கிளி ஞானமாய்
ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே.

பொழிப்புரை :

அவளது அழகிய மேனி சுற்றிலும் ஒளி வீசி விளங்குவது. அதில் கேசாதி பாதம் அணியப்பட்ட அணிகள் முத்தாலாகியன. கீழ் இரண்டு கைகளில் கிளியும், ஞான முத்திரையும், உயர எடுத்த இரண்டு கைகளில் பாச அங்குசங்களும் விளங்கும்.

குறிப்புரை :

``மேனியும்`` என்னும் உம்மை, சிறப்பு. ``அழகிய மேனி`` என்பதை முதலிற் கூட்டி உரைக்க. பாசத்தைக் கூறவே, அங்குசமும் பெறப்பட்டது.
இதனால், வருகின்ற மந்திரத்திற் கூறப்படும் பயனுக்கு ஏற்புடைய வடிவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 65

பாசம தாகிய வேரை அறுத்திட்டு
நேசம தாக நினைத்திரும் உம்முளே
நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டில்
காசினி மேலமர் கண்ணுத லாக்குமே.

பொழிப்புரை :

சத்தியை மேற்கூறிய வடிவினளாக உங்கள் உள்ளத்தில் அன்போடு தியானியுங்கள்; துன்பங்கள் யாவும் ஒழியும்; ஐந்தாண்டிற்குள்ளே, பிறவிக்கு முதலாகிய மலங்களைப் போக்கி, `பூமியிலே காணப்படும் சிவன்\\\' என்னும் நிலையை நீங்கள் அடையச் செய்வாள்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலிற் கொள்க. வேராதல் பிறவிக்கு. `கண்ணுதலாகுமே\\\' என்பது பாடம் அன்று. மேல், (1361) `ஓராண்டில் தினகரனாரிடச் செய்தியதாம்\\\' என்பது சிவயோக சித்தியைக் கூறியதும் இது சிவமாந் தன்மைப் பெருவாழ்வைக் கூறியதும் என்க.
இதனால், பிறிதொரு பயன் பற்றிய வழிபாடு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 66

கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
பண்ணுறு நாதம் பகையற நின்றிடில்
விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்காரம்
மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.

பொழிப்புரை :

அருட் சத்தியின் அருள் கிடைத்தற்குரிய வழியில் நாதமும் ஒத்து நிற்கும்படி நிற்க வேண்டில், சிவசோதி விளங்கும்படி சத்தியை வழிபடுதற்குரிய சக்கரம் ஹ்ரீங்கார சக்கரமேயாம்.

குறிப்புரை :

இச்சக்கரம் முன்னை யதிகாரத்திற் கூறிய புவனாபதி சக்கரமே. அதிகாரம் வேறாய வழியும் அதனைக் கூறியது, அதன்வழி நின்று அருளாகிப் பின் இங்குக் கூறிய சிவமாதலை எய்துக என்றற்கு. கண் - கண்ணோட்டம்; அருள்.
இதனால், ஒரு பயன்கருதி மேற்போந்ததொன்று மறித் துணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 67

மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்
கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும்
விண்டகத் துள்ளே விளங்கி வருதலால்
தண்டகத் துள்ளவை தாங்கலு மாமே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கரத்துள் விளக்குப் போல ஒளி விட்டுத் தோன்றுகின்ற சத்தியை உள்ளத்திலே கண்டு, பின் இடை யறாது தியானித்திருங்கள். அத்தியானத்தில் அவள் மேலும் விளக்கு முற்று வருதலால், சுழுமுனையில் உள்ள ஆதாரங்களில் நிகழும் அனுபவங்களை நீங்கள் முறையானே பெற்று உயரலாம்.

குறிப்புரை :

விண்டு - தனது இயல்பைப் புலப்படுத்தி. தண்டு - முதுகந்தண்டு; அஃது ஆகுபெயராய்ச் சுழுமுனை நாடியை உணர்த்திற்று. `நவாக்கரி சக்கரங்களை முறையாக வழிபட யோகம் படிமுறையால் முதிர்ந்து பயன்தரும்\\\' என்றவாறு.
இதனால், நவாக்கரி சக்கர வழிபாட்டின் பயன் ஒன்று கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 68

தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்
தோங்கி யெழுங்கலைக் குள்உணர் வானவள்
ஏங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திட
வாங்கிய நாதம் வலியுட னாகுமே.

பொழிப்புரை :

உந்தித் தானம் தாங்கியுள்ள தாமரை மலராகிய ஆதார சக்கரத்தினின்றும் வளர்ந்தெழுவதாகிய பிராசாத கலை களுக்குள் அறிவு வடிவாய் நிற்கின்ற சத்தி, பிராசாத யோகி வருந்தும் படி வருகின்ற அவனது பிறப்பை நீக்க எண்ணி, அங்ஙனமே நீக்குத லால், அவனைத் தன்வழிப்படுத்திவந்த நாதம் அவனது வழிக்குத் துணையாய் அவன் வயமாகும்.

குறிப்புரை :

உந்தித் தானச் சக்கரம், மணிபூரகம். அது மேதா கலைத் தொடக்கமாதலின் அதனையே பிராசாத கலை ஓங்கி எழும் இடமாகக் கூறினார். ஈற்றடியிற் கூறியது. மேல் (1366) ``நாதம் பகையற`` என்றதேயாதலை நோக்குக.
இதனால், மேற்கூறிய வழிபாட்டினால் வாசியோக மேயன்றிப் பிராசாத யோகமும் கைவருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 69

நாவுக்கு நாயகி நன்மணி பூண்ஆரம்
பூவுக்கு நாயகி பொன்முடி ஆடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அன்றமர்ந் தாளே.

பொழிப்புரை :

நாதத்திற்குத் தலைவியாகிய வாகீசுவரி நல்ல மாணிக்கத்தால் ஆகிய ஆபரணத்தையும், ஆரத்தையும் அணிந்தவள். செந்தாமரை மலராம் இல்லத்திற்குத் தலைவியாகிய திருமகள் பொன் னாலாகிய முடியையும், ஆடையையும் கொண்டவள். பாடல் களுக்குத் தலைவியாகிய கலைமகள் பால்போலும் வெண்ணிறம் பெற்றவள். பசுக்களாகிய உயிர்கள் அனைத்திற்கும் தலைவியாகிய சிவசத்தி படைப்புக் காலந்தொட்டே இவரிடத்து இருந்து அருள் புரிகின்றாள்.

குறிப்புரை :

அவரவர் தோற்றப் பொலிவுகளை எடுத்துக் கூறியது, அவர்க்கிடையே உள்ள தார தம்மியங்களைக் குறிப்பாற் கூறி, சிவசத்தி அவர் எல்லாரிடத்தும் உள்நின்று பல செயல்களையும் ஏற்ற பெற்றி யால் அவர்வழி நிகழ்வித்தலை உணர்த்தற்கு. `அங்கமர்ந் தாளே\\\' என்பது பாடம் ஆகாமை அந்தாதிக்கு ஏலாமையான் அறியப்படும்.
இதனால், வேறு வேறு தேவியர் வழி பெறப்படும் பயன்களும் சிவ சத்தியால் தரப்படுவவேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 70

அன்றிரு கையில் அளந்த பொருள்முறை
இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை
மன்றது காணும் வழியது வாகவே
கண்டங் கிருந்தவர்க் காரணி காணுமே.

பொழிப்புரை :

பிரமசாரியாய் இருந்தபொழுது இரு கைகளிலும் இருந்தது பொருள்களின் இயல்பை அளந்து காணும் நூல் எழுதப்பட்ட சுவடி. யோகியாய்விட்ட இன்று இரு கைகளிலும் இருப்பது தூய கமண்டலம். இவ்வாறு படி முறையான ஆச்சிரம ஒழுக்கத்தில் நிற் பதையே இறைவன் நடனம் புரியும் அம்பலத்தை உள்ளபடி காணும் முறையாகக் கொண்டு, அங்ஙனமே கண்டு அங்கு இருப்பவரை அனைத்துக்கும் காரணியாகிய சத்திதான் கடைக் கணித்திருப்பாள்.

குறிப்புரை :

இருகைகளிலும் இருப்பனவாகக் கூறியது. அதனைப் போற்றிக் கொண்டமையைக் குறித்தவாறு. அம்பலத்தை உள்ளபடிக் காணுதலாவது, புருவ நடுவில் உணர்ந்திருத்தல்.
இதனால், சக்கரம் முதலிய சத்தி வழிபாட்டிற்கு ஒழுக்க முறை துணையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 71

காரணி சத்திகள் ஐம்பத் திரண்டெனக்
காரணி கன்னிகள் ஐம்பத் திருவராய்க்
காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்கும்
காரணி தன்னரு ளாகிநின் றாளே.

பொழிப்புரை :

எப்பொருட்கும் காரணியாகிய சிவ சத்தி, பிற சத்திகளாய்க் கன்னியராய் உள்ள ஐம்பத்திருவராய்ச் சக்கரங்களுள் மறைந்து தனது இயல்பான அருள் வெளிப்பட நிற்கின்றாள்.

குறிப்புரை :

``காரணி`` என்பன பலவும் சொற்பொருட் பின்வரு நிலையாய் நின்றன. சத்திகள் ஐம்பத்திருவராவார், ஐம்பத்தோர் அச்சக்கரங்கட்கும், ஓங்காரத்திற்கும் உரியவர் என்க.
இதனால், எந்த அக்கரங்கள் எந்த வகையில் அமைந்த சக்கர மாயினும் அதில் நின்று அருள்புரிபவள் சிவ சத்தியே என்பது உணர்த்து முகத்தால், நவாக்கரி சக்கரங்களும் அன்னவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 72

நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடில்
கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டில்
கொண்ட விரதம்நீர் குன்றாமல் நின்றிடில்
மன்றினில் ஆடும் மணியது காணுமே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கரத்தில் நிற்கின்ற சத்தி உங்கள் உள்ளத்தில் நிலைபெறும் வகையில் நீங்கள் ஒழுகினால், உங்களைக் கண்டுகொண்டிருந்த ஒளியாகிய சத்தி ஓராண்டில் உங்கட்கு வெளிப் படுவாள். அதற்குப் பின்னும் நீங்கள் அவ்வொழுக்கம் சிறிதும் குறையாதபடி கடைப்பிடித்து நின்றால், மேற்கூறிய அம்பலத்தில் நடிப்பவன் உங்கட்குக் காணப்படுவான்.

குறிப்புரை :

இதன்கண் இனவெதுகை வந்தது.
இதனால், உறுதியான ஒழுக்கம் படிமுறையில் பயனை மேன் மேலாகத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 73

கண்டஇச் சத்தி இருதய பங்கயம்
கொண்டஇத் தத்துவ நாயகி யானவள்
பண்டை அவாவுப் பகையை யறுத்திட
இன்றென் மனத்தில் இனிதிருந்தாளே.

பொழிப்புரை :

எல்லா உயிரையும் காண்கின்றவளும், எனது உள்ளத் தாமரையை இடமாகக் கொண்டு இருக்கின்ற மெய்ப் பொருளானவளும் ஆகிய இச்சத்தி, தொன்று தொட்டு வருகின்ற எனது `அவா` என்கின்ற பகையை அறுத்து அருள் செய்தற் பொருட்டே என் உள்ளத்தில் இனிது வீற்றிருக்கின்றாள்.

குறிப்புரை :

`ஆதலின், அவளை நீங்களும் உங்கள் உள்ளத்துள் இருக்கச் செய்தால் உங்கட்கும் அவ்வாறு அருள் செய்வாள்` என்பது குறிப்பெச்சம்.
``இன்பம் இடையறா தீண்டும் அவாஎன்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்`` 1
என்ப ஆகலின், அவாவே பெரும்பகையும், அதனைப் போக்குதல் முதற்பயனும் ஆயின. `அவா` என்பதன் ஈற்றில் ஓர் உகரம் கூட்டி ஓதினார். இதனை, `பண்டைய ஆயு` எனவும், `பண்டைய வாயு` எனவும் தாம் வேண்டுமாறே ஓதி, அவற்றிற்கு ஏற்ப உரைப்ப. இதனுள்லும் இனவெதுகை வந்தது.
இதனால், இச்சத்தி வழிபாடு ஆசையை அறச்செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 74

இருந்தஇச் சத்தி இருநாலு கையில்
பரந்தஇப் பூக்கிளி பாசம் மழுவாள்
கரந்திடு கேடகம் வில்லம்பு கொண்டங்
குரந்தங் கிருந்தவள் கூத்துகந்தாளே.

பொழிப்புரை :

என் உள்ளத்தில் இருக்கின்ற இவளே எட்டுக் கைகளை உடையவளாயும், அக்கைகளில், `தாமரை மலர், கிளி, பாசம், மழு, வாள், எதிர்வரும் கருவியைத் தடுக்கின்ற கேடகம், வில், அம்பு` என்ற இவைகளை ஏந்தி வீரநடனம் புரிபவளாயும் விளங்குவாள்.

குறிப்புரை :

கைகளின் பரப்பை அவற்றில் உள்ள படைக்கலங்கள் மேல்வைத்து ஓதினார். `பரந்த இருநாலுகையில்` எனக் கூட்டினும் ஆம். உரம் இங்கு, வீரம். இதன்பின் உள்ள `தங்க` என்பதன்ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. இவ் அடியில் மோனை ஈற்றயற்சீரின் இறுதி அசைக்கண் வந்தது.
இதனால், நவாக்கரி சக்கர சத்தியது மற்றொரு வடிவு வேறுபாடு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 75

உகந்தனள் பொன்முடி முத்தார மாகப்
பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து
தழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய வீர சத்தி பச்சை நிறங்கொண்டவள்; பொன்முடியை விரும்பிக் கவித்தவள்; ஆரமாகப் பரந்த முத்துக் களையும், பவளங்களையும் அணிந்து, பட்டாடை உடுத்து, புடை பரந்த கொங்கைகளின்மேல் இரத்தினக் கச்சு அணிந்து, மிகவும் பொலிவுடன் விளங்குவாள்.

குறிப்புரை :

`தான் பச்சையாம்` என்பதை முதலிற் கொள்க. அவ்வாறின்றி முதற்கண் எழுவாய் வருவித்துரைத்தலுமாம். தான், மேற்கூறப்பட்டவள். `பச்சையம்மன்` என ஒரு தேவி தமிழ்நாட்டில் இருத்தல் இங்கு நினைக்கத்தக்கது. `பச்சையம்மாள், பச்சையப்பன்` என்னும் பெயர்கள் இவளை ஒட்டியே மக்களுக்கும் இடப்படுகின்றன. இது மூன்றாமெழுத்தெதுகை பெற்றது.
இதனால், மேற்கூறிய சத்தியது வடிவழகு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 76

பச்சை இவளுக்குப் பங்கிமார் ஆறெட்டு
கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால்
கச்சணி கொங்கைகள் கையிருங் காப்பதாய்
எய்ச்ச இடைச்சி இனிதிருந் தாளே.

பொழிப்புரை :

பச்சை நிறம் உடைய இச்சத்திக்குப் பொதுமைப் பாங்கியர் நாற்பத்தெண்மரும், அணுக்கப்பாங்கியர் எண்மரும் சேர்ந்து பணிவிடை புரிந்து வருதலால், அவர்கள் எம்மருங்கும் பெரிய காவலாய் இருக்க இவள் பெருமையோடு வீற்றிருக்கின்றாள்.

குறிப்புரை :

மேல் (1363) `ஐம்பத்தறு சத்திகள்` எனப்பட்டார் இங்ஙனம் நாற்பத்தெண்மரும், எண்மருமாய்ப் பிரிந்து நிற்கின்றார் என்க. எண்மர், முதற்கண்நிற்கும் அகாரத்திற்கும். இறுதி இரண்டெழுத் திற்கும் சூக்கும பஞ்சாக்கரத்திற்கும் உரியவராகக் கொள்ளுதல் பொருந்தும். கொச்சையார் - கொஞ்சிப் பேசும் சொற்களை யுடையவர். இப்பெயரும், ``கச்சணி கொங்கைகள்`` என்றதும் பாங்கிமார்களையே. ``கொங்கைகள்`` என்ற பன்மை மகளிர் மேலது. கை - பக்கம்; என்றது திசைகளை எனவே, எட்டுத் திசைக்கும் எண்மர் உளர் எனவும், ``ஆறெட்டு`` என்றதனால், `அவருள் ஒருத்திக்கு அறுவர் துணை, யாவர்` எனவும் கொள்க. `எய்த்த` என்பது ``எச்சை`` எனப்போலியாயிற்று.
இதனால், இச்சத்தி தனது முதன்மை தோன்ற வீற்றிருக்கும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 77

தாளதி னுள்ளே தயங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்து `கம் ஜம்` என்று
மாலது வாக வழிபாடு செய்துநீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.

பொழிப்புரை :

நாவடியில் பொருந்திய ஒளிவடிவாய் விளங்கு கின்ற சத்தியைப் பிராண வாயுத் துணையாக, `கம், ஜம்` என்று செபிக்கும் செபத்தால் தலைப்பட்டு அன்போடு வழிபட்டு, அதன் பயனாக மிக்க ஒளியுடைய உடம்போடு வானத்தில் இயங்கும் (ஆகாய கமனம் செய்யும்) ஆற்றலைப் பெறுவாயாக.

குறிப்புரை :

அந்தாதி நயம் வேண்டி, சிறுபான்மை லகரத்திற்கு ளகரம் போலியாகும் முறைமையை மேற்கொண்டு. `தாலது` எனற் பாலதனை, ``தாளது`` என ஓதினார். `கம்` என்பதும் ஆகாயத்திற்குரிய பீசமாகும். `ஜம்` என்பது ஜகத்துக்குத் தலைவியாம் ஜகதா தேவிதன் பீசம். இவற்றைச் செபித்து இவளை வழிபடவே வான்வழி இயங்கும் ஆற்றல் உண்டாவதாம். `ஜம்` என்னாது, `ஐம்` என்ப பொதுப்பட ஓதுதல் பாடமாகாது. இனி, `கம்ஜம்` என்பதன் கருத்து அறியாதார். `கலந்து கொள்` எனப் பாடம் வேறாக ஓதுவர். மிக்க ஒளியது நிறம் வெண்மையாகலின், ``பாலதுபோலப் பரந்து`` என்றார். முதலடி இனவெதுகை.
இதனால், இச்சத்தியை ஒரு சிறப்புப் பயன் கருதி வழிபடும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 78

விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக் கண்ணமர் கூபம் கலந்து வருதலால் பண்ணமர்ந் தாதித்த மண்டல மானது தண்ணமர் கூபம் தழைத்தது காணுமே.

பொழிப்புரை :

நன்கமைந்த சூரிய மண்டலமானது பிராணவாயு கும்பிக்கப்பட்டுத் தங்கியிருக்கின்ற, கொப்பூழின் அடியாகிய சுவாதிட் டானத்திற்கும், இருதயத்திற்கும் இடைக்கண் உள்ள மணிபூரகத்திலும் கலந்து நிற்றலால், குளிர்ச்சியுடைய அந்த மணிபூரகமும் சிறந்து நிற்கின்றது.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் கூட்டி உரைக்க. ``ஆங்கு`` என்றது, `அவ்விடங்கட்கு` எனப் பொருள்தந்தது. சூரியமண்டல மாவது, `மணிபூரகம், அநாகதம்` என்னும் இரண்டு ஆதார எல்லைக் குட்பட்ட பகுதி. அஃது அன்னதாதலாலே நீர்மண்டலமாய் உள்ள மணி பூரகமும் சிறப்பதாயிற்று` என்றவாறு. நீர்மண்டலமே இன்னதாயிற்று என்றதனால், பிற மண்டலம் அதனால் சிறப்படைதல் கூறவேண்டா வாயிற்று. `ஞாயிற்று மண்டலத்தாலே யாவும் நலமுறுகின்றன` என்றவாறு. இங்ஙனமாகவே மேற்கூறியவாறு வானில் இயங்கும் வன்மை பெற்றவர் நலம்பல எய்துவர் என்பதாம். நீர்மண்டலமாயதை, ``கூபம்`` என்றார்.
இதனால், மேற்கூறிய பயனைப் பெற்றாரது சிறப்புக் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 79

கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள
தாபத்துச் சத்தி தயங்கி வருதலால்
ஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்து
பாபத் தறுக்கப் பரந்தன சூலமே.

பொழிப்புரை :

சூரிய மண்டலத்துச் சத்தியின் கூறு மணிபூரக சத்தி யோடு கலந்து நிற்றலால், மணிபூரக சத்திக்குப் பத்து முகங்கள் உள்ளன வாம். பத்து முகங்கள் உளவாகவே கைகள் இருபது உள்ளன. பாபத்தை அறுப்பது சூலம் ஆதலால், சூலங்கள் பல கைகளில் உள்ளன.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலிற் கூட்டி உரைக்க. `ஆபத்தைப் போக்குகின்ற கைகள்` என்க. `பாபத்தை` என்னும் ஐகாரம் தொகுத்தலாயிற்று. `பாசம் அறுக்க` என்பது பாடம் அன்று.
இதனால், ``தழைத்தது`` என மேற்கூறிப்பட்ட ஆதாரத்தில் விளங்கும் சத்தியது வடிவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 80

சூலந்தண் டொள்வாள் சுடர்பர ஞானமாம்
வேலம்பு தமருகம் மாகிளி வில்செண்டு
காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.

பொழிப்புரை :

மேற்கூறிய சத்திதன் கைகள் இருபதில் மேற்கூறிய வாறு பல சூலங்களுடன், `தண்டு, வாள், நெருப்பு, மேலான ஞான மாகிய வேல், அம்பு, தமருகம், கிளி` வில், செண்டு, தாமரை மலர், பாசம், மழு, கத்தி, சங்கு என்பன உள.

குறிப்புரை :

சுடர், ஆகுபெயர். குவிந்த - குவிந்தன; சேர்ந்தன. `கை எண்ணதில் சேர்ந்தன` என்க. எண் - தொகை. சூலமல்லாது இங்குக் கூறப்பட்டவை பதினான்கு. அபயமும், வரதமும் இயல்பாக உள்ளன. ஆகவே, எஞ்சிய நான்கு கைகளிலும் சூலமே உளவாதல் மேலை மந்திரத்தால் பெறப்பட்டது. செண்டு, ஓர் ஆயுதம். `கொண்டு` என்பது பாடம் அன்று. இரண்டாமடியில் முதல் இரு சீர்களை வகையுளி செய்து கொள்க.
இதனால், மேற்கூறிய சத்தியின் கைகளில் உள்ளவை கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 81

எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்
எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராய்
எண்ணிய பூவித ழுள்ளே யிருந்தவள்
எண்ணிய எண்ணம் கடந்துநின் றாளே.

பொழிப்புரை :

தியானத்திற்குப் பொருந்திய சுவாதிட்டானம் முதலிய நான்கு ஆதாரங்களில் உள்ள தாமரையிதழ்கள் நாற்பத்து நான்கில் அமர்ந்திருக்கும் நாற்பத்து நான்கு சத்திகளோடும் தானும் நாற்பத்து நான்கு சத்தியாய் அந்த நாற்பத்து நான்கு இதழ்களிலும் வீற்றிருக்கின்ற சிவ சத்தி, அவ்வாதாரங்களில் வைத்துத் தியானிக் கின்ற தியானத்தைக் கடந்தவளாவாள்.

குறிப்புரை :

`அஃதாவது, ஆஞ்ஞை முதலிய மேல் நிலங்களில் இருப்பவள்\\\' என்பதாம், எண் - எண்ணம்; முதனிலைத் தொழிற் பெயர். அஃது எண்ணத்திற்கு உரிய இடத்தை உணர்த்திற்று. \\\"சத்திகள்\\\" இரண்டில் முன்னது, சத்திகளைப் பெற்று நின்றவரைக் குறித்த முகமனுரை. அவர்களை அஃறிணை போலவே கூறியதும் இதுபற்றி. மேல் நிலத்தில் உள்ள சத்தி, கீழ்நிலங்களில் உள்ள தெய்வங்களிடமாக நின்று அருள்புரியும் முறை கூறியவாறு.
இதனால், இச்சக்கர வழிபாட்டில் நிகழும் பல தியானங் கட்குப் பயன் தருபவள் சிவசத்தியாதல் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 82

கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்தணி முத்துப் பவளம் கச்சாகப்
படர்ந்தல்குற் பட்டாடை பாதச் சிலம்பு
மடந்தை சிறியவள் வந்துநின் றாளே.

பொழிப்புரை :

கீழ் நிலங்களைக் கடந்து மேல் நிலத்தில் இருப் பவளாகிய அச் சத்தி அடியவர் பொருட்டு, தலையிற் கவிக்கும் முடி பொன்னால் இயன்றதும், காதில் அணியும் தோடு மாணிக்கத்தால் இயன்றதும், கழுத்து முதலியவற்றில் தொடரப் பொருந்திய அணிகள் முத்துக்களால் இயன்றனவும், கச்சுப் பவளத்தால் இயன்றதும், அரையில் உடுத்திய உடை பட்டினால் இயன்றதும், பாதத்தில் அணிவது சிலம்புமாக, இளம் பெண்ணாய்க் கீழ் நிலங்களிலும் வந்த நிற்கின்றாள்.

குறிப்புரை :

``பொன் முடி, மாணிக்கத்தோடு`` முதலியவற்றை. `முடி பொன், தோடு மாணிக்கம்` முதலியனவாக மொழிமாற்றி, எல்லா இடங்களிலும் `ஆக` என்பதை இயைத்துக் கொள்க. `அல்குல் ஆடைபட்டு` எனக் கூட்டுக. பாதம் ஆகுபெயர். ``மடந்தை சிறியவள்`` என்பது இருபெயரொட்டு. `சிறியவளாய்` என ஆக்கம் வருவிக்க. சிறியவள், வாலை. ``சிறியவளாய்`` என்பதை, `சிறீயினில், குமீறியில், கமீறியில்` என்பனவாக வேறு வேறு ஓதி, `அவ்வப் பீசாக்கரத்தில் வந்து நின்றாள்` எனவும் பொருள்கொள்வர். கும் - க்ரோம்.
இதனால், மேலைச்சத்தி கீழ் நிலங்களில் இளையவளாய் நிற்றலும், அவளது வடிவமும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 83

நின்றஇச் சத்தி நிரந்தர மாகவே
கண்டிடு மேரு அணிமாதி தானாகிப்
பண்டைய வானின் பகட்டை அறுத்திட்டு
ஒன்றிய தீபம் உணர்ந்தாற்குண் டாமே.

பொழிப்புரை :

படிமுறையால் மேருவின்மேல் ஏறிச் சென்று, முடிவாகப் பார்க்கின்ற அதன் உச்சியில் அணிமா ஆதி அட்ட சித்திகளும் கைவந்தவனாய் நின்று, பழைய வெளியிடத்தில் உள்ள புறக் கவர்ச்சிகளை ஒதுக்கித் தள்ளி அவ்விடத்தில் பொருந்திய ஒளியை உணர்ந்து நிற்பவனுக்கு, மேற் சொல்லிய சத்தி இடையறாது உடன் நிற்றல் உளதாகும்.

குறிப்புரை :

இரண்டாம் அடி முதலாகச் சென்று, ``உண்டாம்`` என்பதனை முதலடியின் இறுதியிற் கூட்டி உரைக்க. இதன்கண் இன எதுகை வந்தது.
இதனால், மேற்கூறிய சத்தி, என்றும் உடனாகப்பெறும் பயனைப் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 84

உண்டோர் அதோமுகம் உத்தம மானது
கண்டஇச் சத்தி சாதாசிவ நாயகி
கொண்ட முகம்ஐந்து கூறுங் கரங்களும்
ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானவே.

பொழிப்புரை :

சதாசிவனது சத்தியாகிய சதாசிவைக்கு (அவனைப் போலவே) யாவரும் காண உள்ள முகங்கள் ஐந்து. எனினும், ஆறாவதாக அதோமுகம் ஒன்றும் (அங்ஙனமே) உண்டு. மேலான அந்தமுகமே, மேல் ``சிறியள்`` (வாலை - 1382) எனப்பட்ட சத்தி. இனிச் சதாசிவைக்கு முகம் ஆறானதற்கு ஏற்பக் கரங்களும் ஒருமுகத்துக்கு இரண்டாகப் பன்னிரண்டு ஆயின.

குறிப்புரை :

``சதாசிவ நாயகி கொண்ட முகம் ஐந்து`` என்பதனை முதலில்வைத்து. அதன்பின், `எனினும்` என்பது வருவிக்க. `உத்தம மான அது` என்பதில் ஓர் அகரமும், `அதுவே` என்னும் ஏகாரமும் தொகுத்தல் பெற்றன. ``கொண்ட`` என்பதற்கு. `யாவரும் அறியக் கொண்ட` என்பது ஆற்றலால் வந்தது. `ஒன்றுக்கு` என நான்கவாது விரிக்க.
மூன்று நால் - பன்னிரண்டு ஈற்றடி எண்ணலங்காரமாயும் நின்றது. இரண்டாம் தந்திரத்துள், `சிவனுக்கு அதோமுகம் ஒன்று உண்டு` என்பதும், `அதுவே நிலவுலகத்தார்க்கு முருகன் முதலாக வந்து அருள் புரிவது` எனவும் கூறியவாறே 1 இங்கும் கூறப்பட்டமை நோக்கத் தக்கது. இதனுள்ளும் இன எதுகை வந்தது.
இதனால், மேல் நிலச் சத்தியது முழு நிலையின் பகுதியே கீழ் நிலத்திற்கு வந்து அருளுவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 85

நன்மணி சூலம் கபாலம் கிளியுடன்
பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும்
கன்மணி தாமரை கையில் தமருகம்
பொன்மணி பூணாரம் பூசனைக் கானவே.

பொழிப்புரை :

சதாசிவையின் கைகளில், `நல்ல ஒலியை எழுப்பு கின்ற மணி, சூலம், கபாலம், கிளி, பாம்பு, மழு, கத்தி, பந்து, தாமரை மலர், தமருகம்` என்னும் இவைகள் இருத்தலாலும், பொன்னாலும், மணியாலும் ஆகிய அணிகலன்கள், மாலைகள் என்பவற்றை அவள் அணிந்திருத்தலாலும் அவனது கூறாகிய சத்திகளது வழிபாட்டிலும் இவை கொள்ளப்படும் பொருள்களாயின.

குறிப்புரை :

``பன் மணி`` என்றது நாகத்திற்கு அடை. `ஆகும் தாமரை` என இயையும். ஆகும் - ஏந்துதற்குப் பொருந்திய, கன்மணி தாமரை - மாணிக்கக் கல்போலும் செந்தாமரை மலர். மணி முதலிய பத்துடன், அபயமும், வரதமும் கூடக் கைகள் பன்னிரண்டாதல் அறிக. பூணும், ஆரமும் மேனியில் அணியப்படுவன. `பூசனை யானதே` என்பது பாடம் அன்று.
இதனால், மேற்கூறிய சத்திகள் பலரது வடிவுகள் அவ்வாறானமைக்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 86

பூசனைக் கன்னிகள் எண்ணைவர் சூழவே
நேசவண் சத்திகள் நாற்பத்து நேரதாய்க்
காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவர்
மாசடை யாமல் மகிழந்திருந் தார்களே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கரங்களின் அடியில் சதுரமாய் உள்ள `பூபுரம்` என்பதின் நான்கு மூலைகளிலும் ஒரு மூலைக்குப் பதின் மராக, வழிபடுதற்குறிய நாற்பதின்மர் தேவியர் சூழப் பொருந்தி யிருப்பவர்கள், அருள்வடிவாகிய சிவசத்திக் கூறுகள் தங்களிடம் சேர்ந்திருத்தலாலே, இடையூறின்றி, மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள்.

குறிப்புரை :

`கன்னிகள், சத்திகள்` என்பவற்றை அடிமாற்றி ஓதுதல் பாடமன்று. ``காசினிச் சக்கரத்துள்ளே`` என்பதை முதலில் வைத்தும், ``கலந்தவர்`` என்பதை முதலடியின் இறுதியிற் கூட்டியும் உரைக்க.
இதனால், நவாக்கரி சக்கரங்களின் பூபுரத்தில் தேவியர் பலர் இருத்தல் கூறப்பட்டது. ``நேசவண் சத்திகள் நாற்பத்து நேரதா - மாசடையாமல் மகிழ்ந்திருந்தார்களே`` என்றது, இவர்கட்கும் சிவசத்தியது அருள் இன்றியமையாததனை நினைவுறுத்தியவாறு.

பண் :

பாடல் எண் : 87

தாரத்தி னுள்ளே தயங்கிய சோதியைப்
பாரத்தி னுள்ளே பரந்துள் ளெழுந்திட
ஏரது ஒன்றி எழுந்த மனோமயம்
காரது போலக் கலந்தெழும் மண்ணிலே.

பொழிப்புரை :

மேற்கூறிய பூபுர தேவியர்பால் விளங்குகின்ற ஒளிவடிவான சிவசத்தியை உடன்பின் அகத்திலே ஆதாரங்களில் தியானிக்கின். எழுச்சி பெற்றுப் புற விடயங்களின் மேல் செல்லுகின்ற மனம், நிலத்திற் கலந்த நீர் அந்நிலத்தின் தன்மையதே ஆனாற் போலத்தியானிப்போனது தன்மைக்கு மாறாகாமல் அவனோடே பொருந்தி நிற்கும்.

குறிப்புரை :

தாரம் - ஆதாரம், இது மேற்கூறிய சக்கரங்களுக்கு உரியதாயப் பூபுரத்தைக் குறித்துப் பின் அவற்றில் உள்ள தேவியர்களைக் குறித்தது. பாரம் - பருவுடல். ``பரந்து`` என்பதை, `பரக்க` எனத் திரிக்க. `மண்ணிலே காரது போலக் கலந்தெழும்` என மாற்றிக் கொள்க. கார் - மேகம்; அது நீருக்கு ஆயிற்று. `தாரம் மூலாதாரம்` எனவும், `சோதி அதன் கண் உள்ள தீ` எனவும் கொண்டு, `யோகமுயற்சியால் மனோலயம் உளதாம்` என்பதே இம்மந்திரத்திற்குப் பொருளாக உரைப்பாரும் உளர். அது, மேல் பலவிடத்துங் கூறப்பட்டதன் மேலும், இவ்விடத்திற்குச் சிறிதும் பயனுடைத் தாகாமை அறிக.
இதனால், இச்சக்கர வழிபாட்டில் சிவ சத்தியை மறவாமை வேண்டுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 88

மண்ணில் எழுந்த மகார உகாரங்கள்
விண்ணில் எழுந்த சிவாய நமஎன்று
கண்ணில் எழுந்தது காண்பரி தன்றுகொல்
கண்ணில் எழுந்தது காட்சி தரஎன்றே.

பொழிப்புரை :

பிருதிவி மண்டலமாகிய மூலாதரத்தினின்று பிரணவமாகிய சூக்கும எழுத்தாய்ப் புறப்பட்ட நாதம், பின் வளர்ச்சி யுற்று ஆகாச மண்டலமாகிய ஆஞ்ஞையில் `சிவாய நம` என்னும் தூல எழுத்தாய் வெளிப்பட்டு, அதற்குப் பின் கண்ணில் ஒளி வடிவாயும் என்னிடத்துப் பதிந்து நின்றது. ஆதலின் ஒளிக்காட்சி ஒருவராலும் காணப்படாதது அன்று; மற்றும் அது தன்னைக் காணுலுறுவார்க்குக் காட்சி தரவேண்டும் என்றே முன் வரும் இயல்புடையது.

குறிப்புரை :

`விண்ணில் சிவாய நம என்று எழுந்து கண்ணில் எழுந்தது` என்க. பூபுர சத்திகட்கு உள்ளாயிருக்கும் சிவ சத்தியது காட்சி நாத தரிசனத்தின் வழிக் கூடும் என உணர்த்தியவாறு. தோற்ற முறைபற்றி, `அகார உகார மகாரம்` என்றலேயன்றி, ஒடுக்கமுறை பற்றி `மகார உகார அகாரம்` என்றலும் கூடுமாதலின், `மகாரம் உகாரங்கள்` என்றார். மோனை நயம் வேண்டாது, `அகார உகாரங்கள் ` என்றேயும் பாடம் ஓதுப. கொல், அசை.
இதனால், மேல், ``தாரத்தினுள்ளே தயங்கிய சோதி`` எனப் பட்ட சத்தியைத் தரிசிக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 89

என்றங் கிருந்த அமுத கலையிடைச்
சென்றங் கிருந்த அமுத பயோதரி
கண்ட கரம்இரு வெள்ளிபொன் மண்டைவாய்க்
கொண்டங் கிருந்தது வண்ண அமுதே.

பொழிப்புரை :

சூரிய மண்டலமாகிய விந்துத் தானத்தில் உள்ள சிவசத்தி, தன்னிடத்தில் காணப்படும் கரங்களில் இரண்டில் வெள்ளி யாலான மண்டையிலும், பொன்னாலான மண்டையிலும் வைத் திருப்பது அழகிய அமுதமே.

குறிப்புரை :

`அதனை அவள் அடியவர்க்கு அள்ளிவழங்குவாள்` என்பது குறிப்பு. விந்துத் தானத்தில் அமுதம் உளதாதல் பற்றி அதனை ``அமுத கலை`` என்றார். `தானம் அமுதம்; தானும் அமுத பயோதரி; அவற்றுக்குமேல் அவள் இரு கைகளில் அமுத பாத்திரத்தைக் கொண்டுள்ளாள்; அவள் தன் அடியவர்க்கு அமுதத்தை வழங்கத் தடை என்னை` என்பது நயம். `கரத்தில்` என உருபுவிரிக்க. `இரு மண்டைவாய்` என இயையும். அமுதத்திற்கு அழகு வெண்மை. இஃது இன எதுகை பெற்றது.
இதனால், ஆஞ்ஞையில் உள்ள சத்தியை அடைவோர் அமுதுண்ணப் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 90

அமுதம தாக அழகிய மேனி
படிகம தாகப் பரந்தெழும் உள்ளே
குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெழுமும தாகிய கேடிலி தானே.

பொழிப்புரை :

ஆம்பல் போலும் வாயிடத்துக் குளிர்ந்த முத்துப் போலும் நகைபொருந்தி விளங்கும் அந்நிலையினளான, அழிவற்ற அச்சத்தி, தன் அடியவர்க்குச் சந்திர மண்டலத்து அமுதம் உளதாகும் படி தனது அழகிய மேனி படிகம்போல்வதாகக் கொண்டு அவர்தம் அகத்தே நிறைந்து விளங்கி நிற்பாள்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. குமுதமும், முத்தும் உவம ஆகுபெயர்கள். கெழுமுதல் - பொருந்துதல். ``அது`` நான்கில், முன்னைய மூன்றும் பகுதிப் பொருள் விகுதிகள்; இறுதியது `அந்நிலை` என்னும் பொருட்டு. `கெமுதமுது` என்பது பாடம் அன்று. நான்காமடி மூன்றாமெழுத்தெதுகை பெற்றது. இரண்டாமடியும் அன்னதுபோலும்!
இதனால், அச்சத்தி அவர்க்கு அமுதம் வழங்குமாறு கூறப் பட்டது. இதனுள் அவளது திருக்கோலமும் உடம்பொடு புணர்த்தலால் கொள்க.

பண் :

பாடல் எண் : 91

கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும்
நாடிலி கன்னிகள் நாலொன் பதின்மரும்
பூவிலி பூவித ழுள்ளே யிருந்திவர்
நாளிலி தன்னை நணுகிநின் றார்களே.

பொழிப்புரை :

வியட்டியாய் நின்ற சிவ சத்திகள் முப்பத்தறுவரும், அவரைத் தேட வேண்டாது தம்மிடத்தே பொருந்தப் பெற்ற தேவியர் முப்பத்தறுவரும் ஆகப் பூபுரத்தை யிடமாகக் கொண்டு விளங்கும் தாமரைமலர்களின் இதழ்களில் உள்ள இவர்கள் நாள் வரையறையின்றி எந்நாளும் வழிபடுகின்ற அடியவன்பால் பொருந்தி நிற்பார்கள்.

குறிப்புரை :

``முப்பத்தறுவர்`` எனவே, இவர்கள் தத்துவங்களைச் செலுத்துவோராதல் பெறப்படும். படவே, இவர்களது விளக்கத்தைப் பெற்றோன் தத்துவத் தொடக்கின் நீங்குதல் விளங்கும். பின்னிரண் டடிகளில் உயிரெதுகை வந்தது.
இதனால், நவாக்கரி சக்கர வழிபாட்டை வாழ்நாளளவும் செய்ய, மாயைத் தொடக்கு நீங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 92

நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்துள் இருந்திடக்
கொண்டது ஓராண்டு கூடி வருதற்கு
விண்ட ஔகாரம் விளங்கின அன்றே.

பொழிப்புரை :

இயல்பாக உள்ளத்தில் உள்ள, நிரம்பிய விளக் கொளியாகிய சத்தி, நவாக்கரி சக்கரத்தில் கட்புலனாம் விளக்கொளி யாய் விட்டது. இனி அவ்வொளி உள்ளத்திலும் தோன்றி விளங்குதற்கு வேண்டப்பட்ட காலம் ஓராண்டு. அப்பயன் கைக்கூடுதற்குத் துணை யாகவே மேற்கூறப்பட்ட ஔகாரம் முதலிய பீசாக்கரங்கள் அச் சக்கரத்தில் விளங்கி நிற்கின்றன.

குறிப்புரை :

`நின்றதாகிய வன்னி` என இயையும். வன்னி, ஆகுபெயர். `கண்டதாகிய சோதியாயிற்று` என்க. கொண்டது. வேண்டப்பட்டது. `ஔகாரம்`` என்றது, `அது முதலாகிய அக்கரங்கள்` எனப் பொருள் தந்தது. `கூடி வருகைக்கு அவை விளங்கின` எனவே, ஓராண்டுக் காலம் அவற்றைக்கணிக்க` என்றதாயிற்று. முதலடி இனவெதுகை.
இதனால், அவ்வழிபாட்டினை ஓராண்டுச் செய்வார் பெரும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 93

விளங்கிடு வானிடை நின்றவ ரெல்லாம்
வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக
நலங்கிளர் நன்மைகள் நாரண னொத்துச்
சுணங்கிடை நின்றவை சொல்லலு மாமே.

பொழிப்புரை :

ஒளிவிட்டு விளங்குகின்ற வானுலகத்தில் உள்ள தேவர் யாவரும் வழிபடுகின்ற நவாக்கரி சக்கரம் மக்கள் உள்ளத்தில் நிலைபெற்ற பின் அதனால் உண்டாகும் இன்பம் மிகுகின்ற நன்மைகள் பரம பதத்தில் இருக்கும் மாயோனுக்கு உள்ள நன்மைகளை ஒக்குமாயின், அவற்றின் பெருமைகளை வினைத்துன்பத்தில் நின்று கொண்டு சொல்ல இயலுமோ!

குறிப்புரை :

``மன்னுயிர்`` என்றது தலைமை பற்றி மக்களுயிரைக் குறித்தது. ``ஆக`` என்பதை `ஆனபின்` எனவும் ``ஒத்து`` என்பதை. `ஒக்கின்` என்வும் திரித்துக் கொள்க. ``நாரணன்`` ஆகுபெயர். சுணங்கு - நலிவு. ஒன்று, மூன்று அடிகள் உயிரெதுகை பெற்றன.
இதனால், இச்சக்கர வழிபாடு போகத்தை மிகத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 94

ஆமே அதோமுகம் மேலே அமுதமாய்த்
தானே உகாரம் தழைத்தெழும் சோமனும்
காமேல் வருகின்ற கற்பக மானது
பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.

பொழிப்புரை :

பிரணவ கலைகளுள் உகாரகலை மிகுந்து ஓங்கி முற்றுகின்ற சந்திர மண்டலம் நெற்றிநடு முதலாகிய மேல் நிலங்களில் அமுதமாய், கீழ்நோக்கியுள்ள ஆயிர இதழ்த் தாமரையாய் விளங்கும். சோலைகளில் வெளிநிற்கின்ற கற்பகத் தருபோலும் சிவசத்தி, அச்சந்திர மண்டலத்தின் கீழுள்ள தாமரை மலர்களில் தேவியர் பலராய் விளங்குவாள்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து, ``மேலே அமுதமாய் அதோமுகம் ஆம்` எனக் கூட்டி உரைக்க. `தானேயாய்` என ஆக்கம் வருவிக்க. தானேயாதல், மிகுந்திருத்தல், அகார கலை பிரணவத்தின் தொடக்கமாக உகாரகலையே அதன் எழுச்சியாதல் அறிக.
சத்தி எழுந்தருளியிருத்தற்குச் சிறந்தது சோலையாதலின், அவளை அவ்விடத்து வெளிநிற்பவளாகக் கூறினார். இது சிறப்பாகக் கடம்பாடவியைக் குறிக்கும் என்பர். ``கற்பகம்`` என்றது உருவகம். சந்திர மண்டலத்தில் நேரே விளங்குகின்ற சிவசத்தி. கீழ் ஆதாரங்களில் தேவியர் பலரிடமாக விளங்குவாள் என்றபடி. முதலிரண்டடிகளில் இது குறிப்பால் உணர்த்தப்பட்டது. இரண்டாமடி இன எதுகைபெற்றது. `தாமே` என்பது பாடமன்று.
இதனால், `ஆதார யோக முறையால் சத்தியை அடைக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 95

பொற்கொடி யாரிடைப் பூசனை செய்திட
அக்களி யாகிய ஆங்காரம் போயிடும்
மற்கட மாகிய மண்டலந் தன்னுளே
பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.

பொழிப்புரை :

ஆதாரங்களில் விளங்கும் சாதன தேவியரைச் சிவச் சத்தியுடன் கூட வழிபடின், போக்குதற்கரிதாகிய அகங்காரம் நீங்கும். அங்ஙனம் வழிபட்டவன் அகங்காரத்தினின்று நீங்கி, நிறைந்த அமுதக்குடம்போலும் சந்திர மண்டலத்தில் சாத்திய தேவியாகிய சிவசத்தியைத் தலைப்படுவான்.

குறிப்புரை :

``பொற்கொடியாளுடன்`` என மேற்போந்ததனை அனு வதித்ததனால், பூசிக்கப்படுவார் சாதன தேவியராதல் பெறப்பட்டது. அகரம், பண்டறிசுட்டு. ``அக்களியாகிய ஆங்காரம்``, இருபெய ரொட்டு. மத் கடமாகிய மண்டலம், சந்திர மண்டலம் சத்தியத்தை, ``பின்`` என்றார்.
இதனால், ஆதார தேவியரது வழிபாட்டின் இன்றியமை யாமை கூறிப்பட்டது. இரண்டாம் அடி இன எதுகை.

பண் :

பாடல் எண் : 96

பேதை இவளுக்குப் பெண்மை அழகாகும்
தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்
மாதை இவளுக்கு மன்னும் திலகமாக்
கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே.

பொழிப்புரை :

பெண்ணாகக் காணப்படுகின்ற இச் சத்திக்கு அங்ஙனம் காணப்படுதலே ஏற்புடைத்து. இவளுக்குத் தலைவனாய் உள்ள சிவன் அங்ஙனம் தலைவனாதலேயன்றித் தந்தையாயும் நிற்கும் இயல்புடையவனாவான். அழகியாய் உள்ள இச்சத்திக்கு இப்பூ மண்டலமே நெற்றித் திலகமாய் நிற்க, எண்ணிறந்த சத்திகள் சூழ்ந்து பணி செய்ய, இவள் உயரிய ஆசனத்தில் வீற்றிருக்கும் பெருமையுடையள்.

குறிப்புரை :

`அப்பெண்மையே` எனச் சுட்டுவருவித்துத் தேற்றே காரம் விரிக்க. `பெண்மையே ஏற்புடைத்தாம்` என்றது, சிவத்தின் வழிநிற்பவளாதல் குறித்து. எனினும், இவளும், சிவனும் உலகத்துப் பெண்டிரும் ஆடவரும்போல இருவேறுபட்டவர்கள் அல்லர்` என்றற்கு, ``தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்`` என்றார். தாணு - தலைவன். தாணு தாதையுமாய் நிற்கும்` என மாறிக் கூட்டுக. மாது - அழகு. ஐகாரம் சாரியை. அழகு இயற்கையாலும், செயற்கையாலும் உள்ளது. அவற்றுள் செயற்கை `அழகில் பூமியே திலகமாகின்ற அத்துணைப் பெரியாள்` என்பதை மூன்றாம் அடியிலும், பிறர் யாவரும் இவளுக்குக் கீழ்பட்டவர்களே` என்பதை நான்காம் அடியிலும் குறித்தார். குவிதல் - இங்கு, உயர்தல், `குவிந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 97

குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்
பரந்தித ழாகிய பங்கயத் துள்ளே
இருந்தனர் காணும் இடம்பல கொண்டே.

பொழிப்புரை :

சிவ சத்தியின் கூறாகிய முப்பத்திருவர் சத்திகள் தலைமை பெற்று நிற்கின்றனர். அவர்கள் வழிப்பட்டு முப்பத்திருவர் தேவியர் ஒழுகுகின்றார்கள். இவ்இருதிறத்தாரும் ஒரு தாமரை மலரில் சூழ விரிந்தபல இதழ்களில் இடம் பெற்று இருக்கின்றனர்.

குறிப்புரை :

இங்குக் கூறிய தாமரை மலர் மேற்காட்டிய சக்கரங் களில் உள்ளனவாம். அவற்றின் இதழ்கள் எட்டாகும். அவற்றில் அகம், நுனி, இருபுறம் என்பவற்றால் இடங்கள் முப்பத்திரண்டாம். அம் முப்பத்திரண்டிலும் தேவியர் முப்பத்திருவர் இருக்க, அவர் களிடமாகச் சத்திகள் முப்பத்திருவரும் உளர் என்க. இம்முறை ஆதார பங்கயங்கட்கும் பொருந்துவதாம். `பரந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. இதன் கண் மூன்றாமெழுத்தெதுகை வந்தது.
இதனால், சிவசத்திகளும், அவர்கள் வழியொழுகும் தேவியரும் சக்கரங்களிலும், உடம்பகத்து ஆதாரங்களிலும் நின்று பயன் தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 98

கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக்
கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால்
இன்றென் மனத்துள்ளே இல்லடைந் தாளுமே.

பொழிப்புரை :

சிவனது விளக்கமாம் சத்திகளையும், அவள்வழி நிற்கும் தேவியரையும் பல சக்கரங்களிலும் உடம்பினுள் ஆதார பங்கயங்களிலும் வழிபட்டுக் கொண்டிருப்பவர்கள், உலகத்திற்குக் காரணமாய் உள்ள முதற்பொருளைக் கண்டிருப்பார்கள். அம்முதற் பொருளை வேதங்களும் எங்கும் சென்று தேடி அலைகின்றன. ஆயினும் இஃது இன்று எனது உள்ளத்தையே இல்லமாகக் கொண்டு அதனை ஆளுகின்று.

குறிப்புரை :

``கூத்தன் ஒளியினை`` என்பதையும், காரணத்துள்ளது` என்பதையும் அவ்வவ் வடியின் முதலிற் கூட்டி யுரைக்க. காரணத்து - காரணமாகின்ற நிலையில், நான்காமடி இன எதுகை பெற்றது.

பண் :

பாடல் எண் : 99

இல்லடைந் தானுக்கும் இல்லாத தொன்றில்லை
இல்லடைந் தானுக் கிரப்பது தானில்லை
இல்லடைந் தானுக் கிமையவர் தாமொவ்வார்
இல்லடைந் தானுக்கில் லாததில் லானையே.

பொழிப்புரை :

இல்லத்தைத் திறமையாக ஆளுகின்ற துணை வியைப் பெற்றால், அவளுக்கேயன்றி, பெற்ற அவனுக்கும் இல்லாத நன்மை ஒன்று இல்லை. (எல்லா நன்மைகளும் குறைவின்றி உள வாம்.) அதனால், அவன் பிறரிடம் சென்று இரந்து பெற வேண்டுவது யாதும் இல்லை. ஆகவே, இன்ப நுகர்ச்சியில் தேவரும் அவனுக்கு நிகராகார். ஆதலின், `இல்லாதது` என்பது யாதும் இல்லாதவனாகிய சிவனையே அவனுக்கு உவமிக்க.

குறிப்புரை :

இல் - இல்லாள். `மனமாகிய இல்லத்தை நன்முறையில் ஆண்டு துணைபுரியும் அளவில் சிவ சத்தி தன் அடியவனுக்கு வாழ்க்கைத் துணைவிபோல்வாள்` என்பது பற்றி, ``இல்லதென் இல்லவள் மாண்பானால்`` எனவும், ``இல்லாளகத்திருக்க இல்லாத தொன்றில்லை`` எனவும் போந்த உலகியல் முறையை எடுத்தோதி, சத்தியது அருள் கிடைக்கப் பெறுதல் பெரும்பேறாதலை விளக்கினார். ஈற்றில் வருவித்து உரைத்த `உவமிக்க` என்பது சொல்லெச்சம்.
இவை இரண்டு மந்திரங்களாலும் மேற்கூறியோரை, மேற் கூறிய இடங்களில் வழிடுதலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 100

ஆனை மயக்கும் அறுபத்து நால்தறி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்ஒளி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்அறை
ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே.

பொழிப்புரை :

ஐம்புலன்களாகிய யானைகளையும் மயங்கி அடங்கச் செய்து கட்டி வைக்கும் அறுபத்து நான்கு தறிகளாயும், இடப வாகனத்தில்மேல் வருகின்ற தலைவனாகிய சிவபிரானிடத்தில் உள்ள அறுபத்து நான்கு சத்திகளாயும் விளங்குவன. பிரணவத்தை முதலாகக் கொண்ட பிராசாத மந்திரத்தின் அக்கரங்கள் அடங்கிய சக்கரத்தில் உள்ள அறுபத்து நான்கு அறைகள். அவ் அறைகளை யுடைய சக்கரத்தை வழிபட்டால், மத யானையும் வணங்கும் கடவுள் தன்மையைப் பெறலாம்.

குறிப்புரை :

``ஆனை`` நான்கில் இரண்டாவதை, `ஆன்+ஐ` எனப் பிரித்துப் பொருள்கொள்க. ஏனைய மூன்றும் சொல் ஒன்றாயினும் வேறு வேறு பொருளைக் குறித்தலின் சொற்பின் வருநிலை. இரண்டாம் அடி, மடக்கு. முதலடியில், உள்ள ஆனை. உருவகம். மூன்றாம் அடியில் உள்ள ஆனை உவம ஆகுபெயராய் அதனோ டொத்த ஓங்காரத்தைக் குறித்தது. நான்காம் அடியில் உள்ளது அஃறிணை இயற்பெயராய், ஆற்றலால், மதங்கொண்ட யானையைக் குறித்தது. கோடுதல் - வளைதல்; வணங்குதல். `ஆனையும், அதன் கொம்பும் அறுபத்து நாலு அறைகளில் அடங்கிவிடும்` என்பது நயம். ``அறுபத்து நால்`` என்பது அதன் வழிபாட்டின்மேல் நின்றது. அதில் உள்ள `இல்` ஏதுப் பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு. அறுபத்து நான்கு அறைகளும் அறுபத்து நான்கு சத்திகளாதல் இரண்டாமடியில் கூறப்பட்டது. இச்சக்கரம் எட்டெழுத்துக்களால் ஆவதாகலின், `அட்டாட்சரி சக்கரம்` எனவும் அவை பிராசாத அட்சரங்கள் ஆதலின், `பிராசாத சக்கரம்` எனவும் சொல்லப்படும். அஃது, கீழே தனியே தரப்பெற்றுள்ளது.
இதனுள், அக்கரங்கள் இடந் தொட்டு வலமாகச் செல்லும் வரிகளை முறையே நோக்கினும், மேற்றொட்டுக் கீழாக வரும் வரிகளை முறையே நோக்கினும் ஒருவகையாகவே இருத்தல் அறியத் தக்கது. அதனால், அவ் அக்கரங்களை ஒருமுறை இடமிருந்து வலமாகவும், மறுமுறை மேற்றொட்டுக் கீழாகவும் மாறிமாறி நோக்கிக் கணித்து வழிபடின் பயன் கூடும்.
இதனை, இத்தந்திரத்தின் முடிவாக இறுதிக்கண் அனைத்தும் அடங்கக் கூறினார் என்க.