ஐங்குறுநூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐங்குறுநூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஐங்குறுநூறு

 ஐங்குறுநூறு – உரையுடன்  – வைதேகி

தமிழ் உரை நூல்கள்:
ஐங்குறுநூறு – ஔவை துரைசாமி – தமிழ் மண் பதிப்பகம், சென்னை
ஐங்குறுநூறு – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை
ஐங்குறுநூறு – தி. சதாசிவ ஐயர் – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
ஐங்குறுநூறு – ஐங்குறுநூறு – புலியூர் கேசிகன், பாரி நிலையம், சென்னை

குறிஞ்சித் திணை – புணர்ச்சியும் புணர்ச்சி நிமித்தமும்

முல்லைத் திணை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

மருதத் திணை – ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தற்  திணை – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலைத் திணை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

குறிஞ்சித் திணையில் அடிக்கடி வரும் சொற்கள்:  வரை (mountain), மலை, குன்று, சாரல் (mountain slope), அடுக்கம் (mountain range), கிளி, ஏனல் (தினை), அவணை (millet field), தினை, இறடி (millet),  இருவி (millet stubble), தாள் (stubble), குரல் (millet spikes), தட்டை (stubble) – and also bamboo rattle to chase parrots – வெதிர் புனை தட்டை, குளிர், தழல் (gadgets used to chase parrots), கவண், தினை, புனவன் (mountain farmer), குறவன்,  கானவன், கொடிச்சி, கழுது, இதண், மிடை  (Platform in the millet field), ஓப்புதல் (chase parrots and other birds that come to eat the grain), குறவன், கொடிச்சி, யானை, குரங்கு, மஞ்ஞை (peacock), புலி, பாம்பு, பன்றி (wild boar), வரை ஆடு,  அருவி, சுனை, பலாமரம், பலாப்பழம், சந்தன மரம், மா மரம், பணை (bamboo), வேங்கை மரம், அகில் மரம், மாமரம், குறிஞ்சி, குவளை, காந்தள், தேன், வண்டு, சுரும்பு, ஞிமிறு, தும்பி (honeybee), மஞ்சு, மழை (word is used for both cloud and rain), பெயல் (rain), ஐவனம் (wild rice)

மருதத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள்:  வயல், பழனம் (pond), கழனி, குளம்,  வாளை மீன், கெண்டை மீன் , ஆமை, உழவர், அரிநர், நெல், மாமரம், ஞாழல் மரம் , நொச்சி மரம், கரும்பு, நீர்நாய்  (otter), ஆம்பல் (white waterlily), தாமரை, பொய்கை, கயம் (pond), குருவி, கோழி, சேவல்,  கழனி, கொக்கு, காரான் (buffalo), காஞ்சி மரம்,  மருத மரம், அத்தி மரம், எருமை, முதலை, களவன் (நண்டு)

முல்லைத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள் – புறவு (முல்லை நிலம்), இரலை மான், முயல், ஆ (பசு), கன்று, மழை, முல்லை, காயா, கொன்றை, தோன்றல், தேர், பாகன், மாரி, பித்திகம், கோவலர், ஆயர் (cattle herders), ஆடு, குழல், மஞ்ஞை (peacock),  குருந்தம், மழை

 நெய்தற் திணையில்  அடிக்கடி வரும் சொற்கள் –   கடல், கடற்கரை, பரதவர், மீன், சுறா, முதலை, திரை (wave), அலை, கானல் (கடற்கரை சோலை),  திமில் (boat), அம்பி (boat), சேரி (settlement) , புன்னை, ஞாழல், தாழை, கைதல், கைதை (screwpine), உப்பு, உப்பங்கழி (backwaters, salty lakes), மணல், எக்கர் (மணல் மேடு), அலவன் (நண்டு), அடும்பு (a creeper with beautiful pink flowers), நெய்தல் ஆம்பல் (white waterlily), கோடு, வளை (conch shell), வலை, குருகு, நாரை, அன்றில்

பாலைத் திணையில்  அடிக்கடி வரும் சொற்கள்  –  அத்தம் (harsh path), சுரம் (wasteland), எயினர் (tribes living in the wasteland), வழிப்பறி கள்வர், பல்லி, ஓதி, ஓந்தி (big garden lizard), பாதிரி (summer blooming flower), கள்ளி (cactus), யா மரம், ஓமை மரம், குரவம், கள்ளிச்செடி, கோங்கு மரம்,  ஞெமை, இருப்பை மரம், வேம்பு, யாமரம், உகாய், கழுகு, கடுஞ்சுரம், அருஞ்சுரம் (harsh wasteland), செந்நாய் (red fox), யானை, புலி, மூங்கில், பதுக்கை (leaf heap, usually a shallow grave), நெல்லி, நெறி (path), ஆறு (path), வேனிற்காலம்,  பரல் கற்கள், இறத்தல் (கடப்பது)

ஐங்குறுநூறு  (87 பாடல்கள்) – 1, 2, 17, 18, 22, 32, 43, 45, 50, 71, 74, 80, 87, 90, 91, 92, 99, 100, 101, 113, 121, 126,134, 141, 163, 165, 192, 193, 194, 196,  202, 203, 209, 211, 213, 243, 247, 249, 253, 258, 264, 272, 274, 277, 281, 282, 285, 287, 289, 297, 300, 303, 304, 306, 311, 313, 322, 323, 328, 334, 341, 342, 343, 349, 352, 354, 357, 365, 371, 372, 373, 374, 375, 376, 378, 379, 380, 394, 399, 412, 413, 435, 446, 453, 490, 492, 493

.
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வாழி ஆதன்! வாழி அவினி!
நெல் பல பொலிக, பொன் பெரிது சிறக்க,
என வேட்டோளே யாயே, யாமே,
நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க,
பாணனும் வாழ்க, என வேட்டேமே.

பாடல் பின்னணி – தலைவன் பரத்தமையை மேற்கொண்டான். பின்னர் அது தீய ஒழுக்கம் என்று தெளிந்தவனாகத் தன்னுடைய இல்லத்திற்குள் புகுகின்றான். தலைவி ஊடல் கொள்ளாது அவனை ஏற்றுக் கொள்கின்றாள். தலைவன் தோழியிடம், “நான் தீநெறிச் சென்ற காலத்தில் எவ்வாறு இருந்தீர்கள்?” என்று கேட்க, தோழி தலைவியின் சிறப்பைக் கூறுமாறு அவனிடம் இந்த அடிகளைக் கூறுகின்றாள்.

பொருளுரை:   வாழ்க ஆதன்! வாழ்க அவினி! நெல் நிறைய விளையட்டும், செல்வம் கொழிக்கட்டும், என்று என் தோழி விரும்புகின்றாள். மொட்டுக்களையுடைய காஞ்சி மரங்களும், சிறிய சினை மீன்களுடைய செல்வம் நிறைந்த ஊரன் ஆகிய தலைவன் வாழ்க, அவனுடைய பாணனும் வாழ்க என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்.

குறிப்பு:  ஆதன்அவினி – சேர மன்னர்கள்.  உள்ளுறை – பழைய உரை: பூவும் புலாலும் ஒக்க விளையும் ஊரன் என்றது குலமகளிரைப் போலப் பொது மகளிரையும் ஒப்புக் கொண்டொழுகுவான் என்பதாம்.  யாமே (3) – ஒளவை துரைசாமி உரை – யாமே எனப் பன்மை வாய்பாட்டாற் கூறியது, ஆயத்தாரையும் உளப்படுத்தற்கு. இலக்கணக் குறிப்பு:  பொலிக, சிறக்க, வாழ்க – வியங்கோள் வினைமுற்றுக்கள், நனைய – பெயரெச்சம், சினைய – பெயரெச்சம், வேட்டோள் – வேட்டாள் என்பது வேட்டோள் எனத் திரிந்தது, யாணர் ஊரன் – யாணர் புதியது ஆகுபெயரால், செல்வ வருவாய் குறித்தது, யாமே – ஏகாரம் பிரிநிலை, யாயே – ஏகாரம் தேற்றம், பாணனும் – உம்மை இறந்தது தழுவியது; இழிவு சிறப்புமாம், வேட்டோளே – ஏகாரம் அசை நிலை, வேட்டேமே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்: வாழி ஆதன் வாழி அவினி – வாழ்க ஆதன் வாழ்க அவினி (ஆதன், அவினி – இவை சேர மன்னர்களின் பெயர்கள்), நெல் பல பொலிக – நெல் நிறைய விளையட்டும், பொன் பெரிது சிறக்க – செல்வம் கொழிக்கட்டும், என வேட்டோளே யாயே – இவ்வாறு விரும்புகின்றாள் என் தோழி, யாமே – நாங்கள், நனைய காஞ்சி – மொட்டுக்களையுடைய காஞ்சி மரங்கள், சினைய சிறு மீன் – சிறிய சினை மீன்கள், யாணர் ஊரன் – செல்வம் பொருந்திய ஊரன் ஆகிய தலைவன், வாழ்க – வாழ்க, பாணனும் வாழ்க – அவனுடைய பாணனும் வாழ்க, என வேட்டேமே – என்று அவளுடைய தோழியரான நாங்கள் விரும்பினோம்

ஐங்குறுநூறு 2, ஓரம்போகியார்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வாழி ஆதன்! வாழி அவினி!
விளைக வயலே, வருக இரவலர்,
என வேட்டோளே யாயே, யாமே,
பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண் துறை ஊரன் கேண்மை
வழி வழிச் சிறக்க, என வேட்டேமே.

பொருளுரை:   வாழ்க ஆதன்! வாழ்க அவினி! வயல்களில் விளைச்சல் சிறக்கட்டும், இரவலர் வரட்டும் என்று விரும்பினாள் என் தோழி.  பல இதழ்களையுடைய நீல மலர்கள் நெய்தல் மலர்களைப் போல் தோன்றும் குளிர்ச்சியான துறையின் ஊரன் என் தோழியோடு கொண்டுள்ள ஆழ்ந்த நட்பு என்றும் தழைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – சிறப்புடைய கருங்குவளையுடனே சிறப்பில்லாத நெய்தல் நிகர்க்கும் ஊரன் என்றது, குலமகளிருடனே பொதுமகளிர் இகலும் ஊரன் என்றவாறு.  பல்லிதழ் (4) – ஒளவை துரைசாமி உரை – அகரம் கெட்டு ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ (தொல்காப்பியம், எழுத்து 160) என்றதனால் லகரம் இரட்டித்து பல்லிதழ் என முடிந்தது.  இலக்கணக் குறிப்பு:  விளைக, வருக, சிறக்க – வியங்கோள் வினைமுற்றுக்கள், வேட்டோள் – வேட்டாள் என்பது வேட்டோள் எனத் திரிந்தது, யாமே – ஏகாரம் பிரிநிலை, exclusion, யாயே – ஏகாரம் தேற்றம், certainty, வயலே  ஏகாரம் அசை நிலை, வேட்டோளே – ஏகாரம் அசை நிலை, வேட்டேமே – ஏகாரம் அசை நிலை.  பல்லிதழ் (4) – ஒளவை துரைசாமி உரை – அகரம் கெட்டு ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ (தொல்காப்பியம், எழுத்து 160) என்றதனால் லகரம் இரட்டித்து பல்லிதழ் என முடிந்தது.  இலக்கணக் குறிப்பு:  விளைக, வருக, சிறக்க – வியங்கோள் வினைமுற்றுக்கள், வேட்டோள் – வேட்டாள் என்பது வேட்டோள் எனத் திரிந்தது, யாமே – ஏகாரம் பிரிநிலை, யாயே – ஏகாரம் தேற்றம், வயலே  ஏகாரம் அசை நிலை, வேட்டோளே – ஏகாரம் அசை நிலை, வேட்டேமே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   வாழி ஆதன் வாழி அவினி – வாழ்க ஆதன் வாழ்க அவினி, விளைக வயலே – வயல்களில் நிறைய விளைச்சல் அமையட்டும், வருக இரவலர் – பிச்சை வேண்டி வருபவர்கள் வரட்டும், என வேட்டோளே யாயே – என்று விரும்பினாள் என் தோழி, யாமே – நானே, பல் இதழ் நீலமொடு – பல இதழ்களையுடைய நீல மலர்கள், நெய்தல் நிகர்க்கும் – நெய்தல் மலர்களைப் போல் தோன்றும், தண் துறை ஊரன் – குளிர்ச்சியான துறையைக் கொண்ட ஊரன், கேண்மை – தொன்மையான நட்பு, தோழமை, நட்பு, வழி வழிச் சிறக்க என வேட்டேமே – என்றும் தொடர்ந்து சிறக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்

ஐங்குறுநூறு 17, ஓரம்போகியார்மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
புதர் மிசை நுடங்கும் வேழ வெண் பூ
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன்,
புதுவோர் மேவலன் ஆகலின்,
வறிதாகின்று, என் மடங்கெழு நெஞ்சே.

பொருளுரை:   புதர்களின் மேலே அசையும் வேழத்தின் வெள்ளை மலர்கள் வானத்தில் பறக்கும் குருகுகளைப் போன்று தோன்றும் ஊரின் தலைவன் பரத்தையரை விரும்பிச் செல்கின்றான்.  அதனால் என் மட நெஞ்சம் வருந்துகின்றது.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முட் புதரிலே நின்று அதன் மேல் அசையும் மணமற்ற இழிந்த வேழ வெண்பூ தூயதான வானத்தில் பறக்கும் சிறந்த அன்னம் போலக் காணப்படுதல் போன்று இவனுக்கும் இழிகுலத்தில் தோன்றி நடிக்கும் பரத்தையர், தூயவரும் சிறந்தவருமாகிய குலமகளிர் போலக் காணப்படுகின்றனர் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு:  குருகின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, நெஞ்சே – ஏகாரம் அசை நிலை. 

சொற்பொருள்:   புதர் மிசை நுடங்கும் – புதர்களின் மேலே அசையும், வேழ வெண் பூ – வேழத்தின் வெள்ளை மலர்கள், விசும்பு ஆடு குருகின் தோன்றும் – வானத்தில் பறக்கும் குருகுகளைப் போன்று தோன்றும், ஊரன் – ஊரில் உள்ளவன், புதுவோர் மேவலன் ஆகலின் – புதிய பெண்களை விரும்புவதால், வறிதாகின்று என் மடங்கெழு நெஞ்சே- என் மடமையுடைய நெஞ்சு வருந்துகின்றது

ஐங்குறுநூறு 18, ஓரம்போகியார்மருதத் திணை – தலைவி தலைவனின் தூதுவர்களிடம் (வாயில்களிடம்) சொன்னது
இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்,
பொருந்தும் மலரன்ன என் கண் அழப்
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே?

பொருளுரை:   தண்டாங்கோரைப்புல் போன்ற நெட்டிக்கோரையுடன், நாணலும், கரும்பினைப் போல் அசைகின்ற வயலை உடைய ஊரன், பிரிய மாட்டேன் என்று கூறியபின்,  பொருந்தும் மலர்களைப் போல் உள்ள என் கண்கள் அழுமாறு என்னைப் பிரிந்து விட்டான்.

குறிப்பு:  உள்ளுறை  – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வேழமானது தன்னைப் போன்ற பயனற்ற தண்டாங்கோரையோடும் நெட்டிக்கோரையோடும் சுழன்றாற் போன்று இழிந்த பரத்தையர் தம் தோழியரோடு குலமகளிரைப் போலத் தருக்கித் திரிகின்றமையால் தலைவன் அவர் மயக்கிற்பட்டுத் தன் உறுதிமொழியையும் தப்பி ஒழுகாநின்றான் என்பதாம்.  பொருந்தும் மலர் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  மணம் பொருந்திய தாமரை மலர், ஒளவை துரைசாமி உரை – அழகிய மலர், அ. தட்சிணாமூர்த்தி உரை – இணைந்த மலர்கள்.  இலக்கணக் குறிப்பு:  அன்ன – உவம உருபு, கரும்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருள் தந்தது, என்றே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   இருஞ்சாய் – தண்டாங்கோரைப்  புல், அன்ன – போல்,  செருந்தியொடு – நெட்டிக்கோரையுடன்,  வேழம் – நாணல்,  கரும்பின் அலமரும் – கரும்புப்போல் ஆடும்,  கழனி – வயல்,  ஊரன் – ஊரில் உள்ளவன்,  பொருந்தும் மலரன்ன – பொருந்தும் பூக்களைப்போல், அழகிய மலர்களைப் போல், தாமரை மலர்களைப் போல், என் கண் அழ – என் கண்கள் அழுமாறு, பிரிந்தனன் அல்லனோ – பிரிந்தான் அல்லவா, பிரியலென் என்றே – பிரியமாட்டேன் என்று கூறியபின்

ஐங்குறுநூறு 22, ஓரம்போகியார்மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அள்ளல் ஆடிய புள்ளிக் களவன்
முள்ளி வேர் அளைச் செல்லும் ஊரன்.
நல்ல சொல்லி மணந்து, இனி
நீயேன் என்றது எவன் கொல் அன்னாய்?

பொருளுரை:   சேற்றில் விளையாடும், புள்ளிகளை உடைய நண்டுகள் முள் செடியின் வேர்களில் உள்ள சிறிய பொந்துகளில் ஒளிந்துக்கொள்ளும் நாட்டவன் நம் தலைவன்.   நல்ல சொற்கள் கூறி, என்னுடன் இணைந்தான்.   உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்று என்னிடம் சொன்னான்.   இப்பொழுது பிரிந்துப் போய் விட்டான்.  அவன் சொன்னது என்ன ஆயிற்று?

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சேற்றில் அளைந்த நண்டு அச்சேற்றோடு அளையில் செல்லுமாறுபோல இவனும் ஊரவர் தூற்றும் பழி தன் மேலதுவாகவே நாணாது பரத்தையர் இல்லின்கண் செல்கின்றான் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு:  வேரளை – ஏழாம் வேற்றுமை, கொல் – அசைநிலை.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்:   அள்ளல் – சேறு,  ஆடிய – விளையாடிய,  புள்ளிக் களவன் – புள்ளியுடைய நண்டு (களவன், கள்வன் = நண்டு), முள்ளி வேர் – முள் செடியின் வேரில்,  அளை – ஒளிந்துக் கொள்ளும் இடம்,  செல்லும் – செல்லும்,  ஊரன் – ஊரன், நல்ல சொல்லி மணந்து – நல்ல வார்த்தைகள் சொல்லி என்னுடன் இணைந்தான்/என்னை மணந்தான்,  இனி – இனி, நீயேன் என்றது – உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்று சொன்னது, எவன் கொல் அன்னாய் – என்ன ஆயிற்று

ஐங்குறுநூறு 32, ஓரம்போகியார்மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னதுதலைவனின் தூதுவர்களாக வந்த தலைவனின் நண்பர்களும் பாணரும் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! மகிழ்நன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு, எழு நாள்
அழுப என்ப அவன் பெண்டிர்,
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே.

பொருளுரை நீடு வாழ்வாயாக தோழி!  இதைக் கேட்பாயாக! என் கணவன் ஒரு நாள் நம்முடைய இல்லத்திற்கு வந்ததற்கு, அவனுடைய பரத்தையர் தீயில் பட்ட மெழுகைப் போன்று விரைய உள்ளம் உருகி ஏழு நாட்கள் அழுதார்கள் என்று கூறுகின்றனர்.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசை நிலை, மெழுகின் – ‘இன்’  ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, உறழ்ச்சிப் பொருளில் வந்ததுமாம், ஞெகிழ்வனர் – முற்றெச்சம், நெகிழ் என்பது ஞெகிழ் ஆனது முதற்போலி, வந்ததற்கு – குவ்வுருபு பொருட்டுப் பொருள் தந்தது, விரைந்தே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  அம்ம – கேட்பாயாக என்ற பொருளில் வந்த ஓர் இடைச்சொல், வாழி – அசை நிலை, நீடு வாழ்வாயாக, தோழி –  தோழி, மகிழ்நன் ஒரு நாள் நம் இல் வந்ததற்கு – தலைவன் ஒரு நாள் நம்முடைய இல்லத்திற்கு வந்ததற்கு, எழு நாள் அழுப என்ப அவன் பெண்டிர் – அவனுடைய பெண்கள் ஏழு நாட்கள் அழுதார்கள் என்று கூறுகின்றனர், தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் – தீயில் பட்ட மெழுகைப் போன்று உள்ளம் உருகினார்கள், விரைந்தே – விரைவாக

ஐங்குறுநூறு 43, ஓரம்போகியார்மருதத் திணை – தலைவி  தலைவனிடம் சொன்னதுஅவன் பாணனுடன் வந்தபொழுது
அம்பணத்தன்ன யாமை ஏறிச்
செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும்
யாணர் ஊர! நின்னினும்
பாணன் பொய்யன், பல் சூளினனே.

பொருளுரை:   அளவை அன்ன இருக்கும் தாய் ஆமையின் முதுகில் ஏறும் செம்பு போன்ற சிவந்த நிறமுடைய குட்டிகளை உடைய செழிப்பான ஊரனே, உன்னை விட உன் பாணன் அதிகப் பொய் சொல்லுபவன்.  உறுதி மொழிகளையும் கூறும் சூது உடையவன்.

குறிப்பு:  மருதத் திணையில் பாணர்கள் தலைவனின் நண்பர்கள். தலைவன் பரத்தையிடம் செல்லும் பொழுது தலைவி ஊடல் கொள்வாள். பாணன் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே தூது செல்வான்.  இலக்கணக் குறிப்பு:  யாணர் ஊர – யாணர் புதியது ஆகுபெயரால், செல்வ வருவாய் குறித்தது, அன்ன – உவம உருபு, சூளினனே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   அம்பணத்தன்ன – அளவை அன்ன,  மரக்கால் போல்,  யாமை – ஆமை,  ஏறி – ஏறி,  செம்பின் அன்ன – செம்பு நிறமுள்ள, பார்ப்பு – குட்டிகள்,  பல துஞ்சும் – சில தூங்கும், யாணர் – புது வருவாய், ஊர – ஊரன்,  நின்னினும் – உன்னை விட,  பாணன் பொய்யன் – உன் பாணன் பொய் சொல்பவன், பல் சூளினனே – உறுதி மொழிகளைக் கூறும் சூது நிறைந்தவன்

ஐங்குறுநூறு 45, ஓரம்போகியார்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது – தலைவி கூறுவதைப் போல் தோழி தலைவனிடம் சொன்னது
கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து,
வேனில் ஆயின் மணி நிறங்கொள்ளும்
யாறு அணிந்தன்று நின் ஊரே,
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந, என் கண்ணே.

பொருளுரை:   தலைவா!  உன்னுடைய ஊரில் உள்ள ஆறு, குளிர் காலத்தில் குளிர்ந்த கலங்கிய நீரைக் கொண்டு வருகின்றது.  கோடைக் காலத்தில் அது நீலமணியின் நிறத்து நீரைக் கொண்டு அழகுடன் விளங்குகின்றது.  ஆனால் என் கண்களோ, நீ என்னை விட்டு அகன்றதால், எல்லாக் காலங்களிலும் பசலை நிறத்தைக் கொண்டுள்ளன.

குறிப்பு:  பழைய உரை – கலங்குதலும் தெளிதலும் உடைத்தாகிய யாற்றின் இயல்பும் பெறாது என்றும் பசந்தே ஒழுகுகின்றாள் இவள் என்பதாம்.  இப்பாடல் தோழியின் கூற்றாக அமைந்துள்ளது, ஒளவை துரைசாமி உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரைகளில்.  ஒளவை துரைசாமி தன்னுடைய உரையில் ‘இதனைத் தலைவி கூற்றாகக் கோடற்கும் இயைபுண்டு என அறிக’ என்கின்றார்.  தி. சதாசிவ ஐயர் உரை – தாயத்தின் அடையா (பொருளியல் 24) என்னுஞ் சூத்திர விதிபற்றித் தலைவிக் கண்ணைத் தோழி தன் கண்ணாகக் கூறினாள்.   உ. வே. சாமிநாதையர் உரை – என் கண் என்றாள் ஒற்றுமைப்பற்றி தோழி தலைவி உறுப்பினைத் தன் உறுப்பென்றல் மரபாதலின்.  ஒன்றித் தோன்றுந் தோழி மேன (தொல். அகத்திணையியல் 42) என்பதனால் தோழி கூற்றும் தலைவி கூற்றாகும் எனக் கூறுவர் பேராசிரியர்.  குறுந்தொகை 236ஆம் பாடலின் தமிழண்ணல் உரை – இது நாடக வழக்கு.  வழக்கறிஞர் கட்சிக்காரராக தம்மை எண்ணிப் பேசுவது போன்றது.  தலைவி கூற்று எனற்பாலது சிறிது மிகைப்படின், பண்பு கருதி தோழி கூற்றென வகுத்துள்ளனர்.  தோழியாகவே தோன்றும் உண்மைப் பாத்திரமாகவும் தலைவியின் குரலாக ஒலிக்கும் நிழற்பாத்திரமாகவும் இருவகைப்பட இருப்பதைப் பகுத்தறிய வேண்டும்.  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – அகநானூறு 362 – நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின் இன்றிப் பொழுதும் யான் வாழலனே, நற்றிணை 124 – புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை யானும் ஆற்றேன், நற்றிணை  175 – என் பசலை மெய்யே, நற்றிணை  178 – அவர்த் தெளிந்த என் நெஞ்சே, நற்றிணை 191 – என் நோக்கினளே அன்னை, நாளை மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின் அணிக் கவின் உண்மையோ அரிதே, நற்றிணை 211 – யார்க்கு நொந்து உரைக்கோ யானே …… துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?, கலித்தொகை 18 – என் தோள் எழுதிய தொய்யிலும், கலித்தொகை 70 – எம் புதல்வனை மெய் தீண்டப் பொருந்துதல் இயைபவால், குறுந்தொகை 236- தந்தனை சென்மோ நீ உண்ட என் நலனே, ஐங்குறுநூறு 45 – பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே.  இலக்கணக் குறிப்பு:  அணிந்தனவால் – ஆல் – அசைநிலை, கண்ணே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   கூதிர் ஆயின் – குளிர் காலமானால், தண் கலிழ் தந்து – குளிர்ந்த கலங்கிய நீரைக் கொண்டு வந்து, வேனில் ஆயின் – கோடை ஆனால், மணி நிறங் கொள்ளும் – நீலமணி நிறமாகும், யாறு – ஆறு,  அணிந்தன்று – அழகு செய்கின்றது, அணிகின்றது, நின் ஊரே – உன்னுடைய ஊர், பசப்பு அணிந்தனவால் – பசப்பு அடைந்தன, மகிழ்ந – தலைவா, என் கண்ணே – என் கண்கள்

ஐங்குறுநூறு 50, ஓரம்போகியார்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது  
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர!
தஞ்சம் அருளாய் நீயே, நின்
நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே.

பாடல் பின்னணி:   மனையின் நீங்கிப் பரத்தையிடத்துப் பல நாட்கள் தங்கி வந்த தலைவனுக்குத் தோழி சொல்லியது

பொருளுரை:  வஞ்சிக் கொடி தழைக்கும் புது வருவாயை உடைய ஊரனே, நானும் இவளுடைய பெற்றோரும் தோழியரும் மிகவும் வருந்துகின்றோம்.  இவள் மீது கருணைக்காட்டு.  உன்னைத் தன் நெஞ்சில் வைத்திருக்கும் இவள் அழுகின்றாள்.

குறிப்பு:   துணையோர் செல்வமும் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின்னைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாழும் இயல்புடைய சுற்றத்தார் செல்வமும்.  இலக்கணக் குறிப்பு:  யாணர் ஊர – யாணர் புதியது ஆகுபெயரால், செல்வ வருவாய் குறித்தது, இவளுமார் – ஆர் இசைநிறை, இவளும் – உம்மை உயர்வு சிறப்பு, அழுமே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   துணையோர் செல்வமும் – தோழியரும் பெற்றோரும்,  யாமும் – நானும்,  வருந்துதும் – வருந்துகின்றோம்,  வஞ்சி – வஞ்சிக் கொடி, (Tinospora Cardifolia) அல்லது இலுப்பை மரம் (Glabrous mahua of the Malabar coast, Bassia malabarica),  ஓங்கிய – தழைக்கும்,  யாணர் ஊர – புது வருவாயையுடைய ஊரனே,  தஞ்சம் அருளாய் நீயே – தயவு செய்து உன் கருணையைக் காட்டு,  நின் – உன்னை,  நெஞ்சம் பெற்ற – நெஞ்சில் வைத்திருக்கும்,  இவளுமார் அழுமே – இவள் அழுகின்றாள்

ஐங்குறுநூறு 71, ஓரம்போகியார்மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது – அவன் பரத்தையுடன் சென்றதை அறிந்தபின் சொன்னது
சூது ஆர் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்து
நின்வெங் காதலி தழீஇ நெருநை
ஆடினை என்ப புனலே, அலரே
மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந,
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே?

பொருளுரை:   தலைவா, நேற்று நீ   உட் துளையுடைய அழகிய சிறு வளையல்களை அணிந்த, நீ விரும்பும், வஞ்சகம் பொருந்திய காதலியைத் தழுவி, ஆற்றில் விளையாடினாய் என்று கூறுகின்றனர்.  ஊரில் வம்புப்பேச்சு தொடங்கி விட்டது.  அதை மறைக்க முடியுமா?  கதிரவனின் ஒளியை புதைக்க முடியுமா?

குறிப்பு:  சூது ஆர் (1) – ஒளவை துரைசாமி உரை – சூது, சூதாடுவோர் இயக்கம் காய். தொடியின் மூட்டுவாய் அச்சூதாடுகாய் போறலின், சூதென்றது ஆகுபெயர்.  உள்ளே புழையுடைய என்றும் உண்டு.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வஞ்சகம் பொருந்திய காதலி.  இலக்கணக் குறிப்பு:  ஒல்லுமோ – ஓகாரம் எதிர்மறைப் பொருளது, என்ப – பலரறி சொல், ஒளியே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   சூது  – உட் துளை, ஆர் – அழகிய,  குறுந்தொடி – சிறு வளையல்கள்,  சூரமை நுடக்கத்து – வளைந்த அசைவுடைய, வஞ்சகம் பொருந்திய, நின்வெங் காதலி – நீ விரும்பியக் காதலி,  தழீஇ – தழுவி,  நெருநை – நேற்று,  ஆடினை என்ப – விளையாடினாய் என்கின்றனர், புனலே – ஆற்றிலே,  அலரே – பழி எழுந்தது,  மறைத்தல் ஒல்லுமோ – மறைக்க முடியுமோ,  மகிழ்ந – மருத நிலத்தின் தலைவனே,  புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே – சூரியனின் ஒளியை புதைக்க முடியுமா

ஐங்குறுநூறு 74, ஓரம்போகியார்மருதத் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது
விசும்பு இழி தோகைச் சீர் போன்றிசினே,
பசும் பொன் அவிர் இழை பைய நிழற்றக்,
கரை சேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள், தண் நறும் கதுப்பே.

பொருளுரை:   அவளுடைய பொன் நகைகள் ஒளியைப் பரப்ப, கரையில் உள்ள மருத மரத்தில் ஏறி, அவள் ஓடையில் பாய்ந்து நீராடினாள்.  பாய்ந்த பொழுது அவளுடைய நறு மணம் மிகுந்த அழகிய கூந்தல், வானத்திலிருந்து இறங்கும் மயிலின் தோகையைப்போன்று காட்சி அளித்தது.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  போன்றிசினே – இடைச்சொல் அடியாகப் பிறந்த முற்றுவினைத் திரிசொல், ஏகாரம் அசை நிலை, கதுப்பே – ஏகாரம் அசை நிலை.  கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு என்ப (தொல். உரியியல் 23).

சொற்பொருள்:   விசும்பு – வானம், இழி – இறங்கும், வடியும்,  தோகை – மயிலின் தோகை,  சீர் – அழகு,  போன்று – போன்று,  பசும்பொன் – புதிய பொன் நகை,  அவிர் – ஒளி,  இழை – நகை,  பைய – மெதுவாக,  நிழற்ற – ஒளி நிறைந்த,  கரைசேர் –  கரையில் உள்ள, மருதம் – மருத மரம்,  ஏறி – ஏறி, பண்ணை – ஆறு,  பாய்வோள் – பாய்ந்தாள்,  தண் – குளிர்ச்சியான,  நறும் – நறுமணம், கதுப்பு – கூந்தல்

ஐங்குறுநூறு 80, ஓரம்போகியார்மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
புலக்குவெம் அல்லேம், பொய்யாது உரைமோ,
நலத்தகு மகளிர்க்குத் தோள் துணை ஆகித்,
தலைப் பெயல் செம் புனல் ஆடித்,
தவ நனி சிவந்தன மகிழ்ந, நின் கண்ணே.

பொருளுரை:   பெரும!  யாம் வெறுக்க மாட்டோம்.  பொய் கூறாது நடந்ததை நடந்தபடி கூறுவாயாக. அழகில் தகுதியுடைய பரத்தையர்க்கு, தோளால் தழுவுவதற்கு உரிய துணை ஆகி, முதல் முறையாகப் பெய்த மழையினால் சிவந்த நிறமாகிய ஆற்று நீரில் நீ விளையாடியதால், உன்னுடைய கண்கள் மிக மிகச் சிவந்துள்ளன.

குறிப்பு:  தலைவன் பரத்தையோடு நீராடினான் என ஐயுற்ற தலைவி புலந்து சொல்லியது.  இலக்கணக் குறிப்பு:  புலக்குவெம் – தன்மைப் பன்மை, அல்லேம் – தன்மைப் பன்மை, உரைமோ – மோ முன்னிலையசை, தவநனி – ஒரு பொருட்பன்மொழி, தவ – மிகுதிப்பொருள் தரும் உரிச்சொல்,  நனி – மிகுதிப்பொருள் தரும் உரிச்சொல், கண்ணே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:   புலக்குவெம் – வெறுப்போம், அல்லேம் – மாட்டோம், பொய்யாது – பொய்  கூறாது, உரைமோ – கூறுவாயாக, நலத்தகு மகளிர்க்கு – அழகில் தகுதியுடைய பெண்களுக்கு (பரத்தையர்க்கு), தோள் துணை ஆகி – தோளால் தழுவுவதற்கு உரிய துணை ஆகி, தலைப் பெயல் செம் புனல் ஆடி – முதல் முறையாகப் பெய்த மழையினால் சிவந்த நிறமாகிய ஆற்று நீரில் விளையாடியதால், தவ நனி சிவந்தன – மிக மிகச் சிவந்தன, மகிழ்ந – பெரும, நின் கண்ணே – உன்னுடைய கண்கள்

ஐங்குறுநூறு 87,  மருதத் திணை – பரத்தை தலைவனிடம் சொன்னது
பகன்றைக் கண்ணிப் பல் ஆன் கோவலர்
கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்
யாணர் ஊர! நின் மனையோள்
யாரையும் புலக்கும், எம்மை மற்று எவனோ?

பொருளுரை:   பல பசுக்களையுடைய பகன்றை மாலையை அணிந்த இடையர்கள், கரும்பைக் கோலாக பயன்படுத்தி  மாங்கனிகளை உதிர்க்கும் புது வருவாயுடைய ஊரனே!   உன் மனைவி எல்லோரையும் வெறுப்பவள்.  என்னை மட்டும் விட்டு வைப்பாளா?

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கோவலர் கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும் யாணர் ஊர என்றது, இனிய உணவாகிய கரும்பினையே இன்னாமை செய்யும் குணிலாக மாற்றிக் கொண்டு இனிய மாவின் கனியை உதிர்த்தது போல நின் மனையாட்டி என்னுடைய இனிய செயல்களையே இன்னாச் செயல்களாகத் திரித்து கொண்டு என்னைத் தூற்றிப் பொல்லாங்கு செய்வாளாயினள் என்பது, புலியூர் கேசிகன் உரை – கரும்பைக் கைக்கொண்ட கோவலர், அதனைச் சுவைத்தும் இன்புற்றதோடும் அமையாராய், அதனையே குறுந்தடியாகக் கொண்டு எறிந்து மாங்கனியையும் உதிர்க்கும் வளமுடைய ஊரன் என்றது, இவ்வாறே தலைவனும் பரத்தையரை நுகர்ந்து இன்புற்றபின் அவரையே இகழ்ந்துக் கூறித் தலைவியை தெளிவித்து அவளையும் அடையும் இயல்பினன் என்று கூறுகின்றாள்.  இலக்கணக் குறிப்பு:  மற்று – அசை நிலை, வினை மாற்றின்கண் வந்தது, எவனோ – ஓகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   பகன்றை – சிவதை மலர், சீந்தில் மலர், Indian jalap, கண்ணி – மாலை, பல்ஆன் கோவலர் – பல மாடுகளையுடைய இடையர்கள், கரும்பு குணிலா – கரும்பை குறும் தடியாக (பயன்படுத்தி), மாங்கனி உதிர்க்கும் – மாங்கனிகளை உதிர்க்கும்,  யாணர் ஊர – புது வருமானம் உடைய ஊரில் உள்ளவனே, நின் மனையோள் – உன் மனைவி,  யாரையும் புலக்கும் – எல்லோரையும்  வெறுப்பாள், எம்மை மற்று எவனோ – என்னை மட்டும் விட்டு வைப்பாளா?

ஐங்குறுநூறு 90, ஓரம்போகியார்மருதத் திணை – பரத்தைதலைவியின் தோழியர் கேட்குமாறு தலைவனிடம் சொன்னது
மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன கொல்?
வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான் கொல்?
அன்னது ஆகலும் அறியாள்,
எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயே.

பொருளுரை:   தலைவனின் தன்மையை வண்டுகள் பெற்றுக் கொண்டனவா? அல்லது வண்டுகளின் தன்மையைத் தலைவன் பெற்றுக் கொண்டானா?  இதை அவள் அறியவில்லை.  அறியாது, என்னை வெறுத்துப் பேசுகின்றாள், அவனுடைய மனைவி.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  கொல் – ஈரிடத்திலேயும் ஐயப் பொருட்டு வந்த இடைச்சொல், அறியாள் – அறியாளாய், முற்றெச்சம், தாயே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   மகிழ்நன் – தலைவன், மாண் குணம் – சிறந்த தன்மையை , வண்டு கொண்டன கொல் – வண்டுகள் பெற்றனவா, வண்டின் மாண் குணம் – வண்டின் சிறந்தத் தன்மையை, மகிழ்நன் கொண்டான் கொல் – தலைவன் பெற்றுக்கொண்டானா, அன்னது ஆகலும் அறியாள் – அவ்வாறு உள்ள அதை அறியவில்லை அவள்,  எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயே – என்னை வெறுத்துப் பேசுகின்றாள் அவன் மனைவி

ஐங்குறுநூறு 91, ஓரம்போகியார்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து
வெறி மலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும்,
கழனி ஊரன் மகள் இவள்,
பழன வெதிரின் கொடிப்பிணையலளே.

பொருளுரை:   வளைந்த கொம்புகளையுடைய கரு நீல ஆண் எருமை, மிக்க நறுமணமுள்ள, குளத்தில் வளரும் வெள்ளை ஆம்பலின் மலர்களைச் சிதைக்கும் வயல்கள் நிறைந்த ஊரனின் மகள் இவள்.  வயலில் உள்ள கரும்பு மலர்களை மாலையாகப் பின்னி அணிந்துள்ளாள்.

குறிப்பு:  மருதத்துள் குறிஞ்சி.  நெறி மருப்பு எருமை (1) – ஒளவை துரைசாமி உரை – முடங்கிய கொம்புகளையுடைய எருமை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடையிடையே நெறித்துவிட்டாற்போன்று வரி வரியாக அமைந்த கொம்பினையுடைய எருமை, புலியூர் கேசிகன் உரை – வளைந்த கொம்பு, தி. சதாசிவ ஐயர் உரை – திருகிய கொம்பு.  வெதிர் (4) – ஒளவை துரைசாமி உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மூங்கில், அ. தட்சிணாமூர்த்தி உரை- கரும்பு.  மருதத் திணை – உ. வே. சாமிநாதையர் உரை –  திணை மயக்குறுதலுள் மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாற்றங்கொள்ளப்படாத கரும்பின் பூவாற் செய்யப்பட்ட நெடிய மாலையுடையவள் என்பதால் பேதையென்றவாறு அறிக.  எருமைப் போத்து வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும் ஊரன் என்றது, நல்ல தன்மையை ஆராயாது கெடுக்கும் ஊரானாதலால் நினக்கு ஈண்டு வருதல் பொருந்தாது என்பதாம்.  இலக்கணக் குறிப்பு:  வெதிர் – ஆகு பெயரால் அதன் மலர்க்காயிற்று, பிணையலளே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  நெறி மருப்பு – வளைந்த கொம்புகள், எருமை – எருமை,  நீல இரும் – நீல கருமையான, போத்து – ஆண் எருமை, வெறி மலர் – மிகுந்த நறுமணம்,  பொய்கை ஆம்பல் – குளத்தின் ஆம்பல்  (அல்லி மலர்),  மயக்கும் – சிதைக்கும், கழனி ஊரன் மகள் இவள் – வயலை உடைய ஊரனின் மகள் இவள், பழன வெதிரின் – வயலின் கரும்பின் (மலர்களை), கொடிப்பிணையலளே – மாலையாக அணிந்துள்ளாள்

ஐங்குறுநூறு 92, ஓரம்போகியார்மருதத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
கருங்கோட்டு எருமைச் செங்கண் புனிற்று ஆக்
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும்,
நுந்தை நும்மூர் வருதும்,
ஒண் தொடி மடந்தை நின்னை யாம் பெறினே.

பொருளுரை:   ஒளியுடைய வளையல்களை அணிந்தப் பெண்ணே!  உன் தந்தையின் இல்லத்தில் கரிய கொம்புகளையும் சிவந்த கண்களையும் உடைய, அண்மையில் ஈன்ற தாய் எருமை, தன் அன்புக் கன்றுக்கு பால் சுரந்துக் கொடுக்கும்.  நான் உன் ஊருக்கு வருவதானால், அது உன்னைப் பெண் கேட்பதற்குத் தான்.

குறிப்பு:  மருதத்துள் குறிஞ்சி.மருதத் திணை – உ. வே. சாமிநாதையர் உரை –  திணை மயக்குறுதலுள் மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எருமை புனிற்றா தன் அன்புடைய குழவிக்கு ஊறுமுலை மடுக்கும் என்றது, என் அன்பிற்குரிய நின்னை நான் விரைந்து மணந்து நன்கு தலையளி செய்வேன் என்பது, புலியூர் கேசிகன் உரை – ‘தலைவியின் தாய் தன் மகள் மீதுள்ள பேரன்பினால் தமர் மறுத்தவிடத்தும் அறத்தொடு நின்று மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவள்’ என்னும் உறுதியைப் புலப்படுத்தவே அவ்வூர்க்கண் கன்று ஈன்ற எருமையும் தன் கன்றுக்கு ஊறுமுலை மடுக்கும் அன்பு மிகுதியைச் சுட்டிக் கூறினன் எனலாம். ‘பெறினே வருதும்’ என்றது ‘பெறுவதானால் வரைவொடு வருவோம்’ என உரைத்து தோழியது ஒத்துழைப்பை விரும்பியதாம்.  இலக்கணக் குறிப்பு:  குழவிக்கு – ‘கு’ ‘வ்’ உருபு பொருட்டு என்னும் பொருள்பட வந்தது, மடந்தை – அண்மை விளி, யாம்  – தன்மைப்பன்மை, பெறினே – பெறின்  செயின் என்னும் எச்சம், ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   கருங்கோட்டு – கருமையானக் கொம்புகளும்,  எருமைச் செங்கண் – சிவந்தக் கண்களையும் உடைய எருமை,  புனிற்று – குட்டி ஈன்றது,  ஆ – பெண் எருமை, காதல் குழவிக்கு – விருப்பமுள்ள கன்றுக்கு,  ஊறு முலை மடுக்கும் – மடுவில் ஊறும் பாலைக் கொடுக்கும், நுந்தை – உன் தந்தை,  நும்மூர் – உன்னுடைய ஊர்,  வருதும் – வருவதானால், ஒண் தொடி – ஒளியுடைய வளையல்கள்,  மடந்தை – பெண்,  நின்னை யாம் பெறினே – உன்னை மணம் செய்துகொள்வதற்கே

ஐங்குறுநூறு 99, ஓரம்போகியார்மருதத் திணை – தலைவன் சொன்னது
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி எருமை கதிரொடு மயக்கும்,
பூக்கஞல் ஊரன் மகள் இவள்,
நோய்க்கு மருந்தாகிய பணைத் தோளோளே.

பொருளுரை:   வயலில் வளரும் பாகல் கொடியிடையே எறும்புகள் கூடு கட்டி வாழும்.  அங்கு உள்ள எருமைகள் பாகல் கொடியையும், நெற் கதிரையும் சேரச் சிதைக்கும், பூக்கள் நிறைந்த வளமான ஊரனின் மகள் இவள்.  இவளின் பருத்த தோள்கள் தான் என் நோய்க்கு மருந்தாகும்.

குறிப்பு: பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை (1) – ஒளவை துரைசாமி உரை – பழனங்களில் உள்ள பாகற்கொடி இலைகளில் முயிறுகள் உறைகின்ற கூடுகள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பழனத்தின்கண் படர்ந்த பாகற் கொடியின்கண் முயிற்று எறும்புகள் மொய்த்து இயற்றிய கூடு.  நற்றிணை 180 – பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வயல் அருகிலிருக்கின்ற பலா மரத்தின் இலைகளைக் கூடாக்கி முயிறுகள் முட்டையிட்டு நெருங்கியுறைகின்ற கூடுகள், ஒளவை துரைசாமி உரை – பழனக் கரையினின்ற பலாமரத்தில் வாழும் முயிறுகள் கூடியமைத்த கூடு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முயிறு மூசு குடம்பையை நெற்கதிரோடு எருமை மயக்குமென்றது, யான் செய்த கொடுமையையும் அவர்கள் தன் மேல் காதலித்துக் கூறியவற்றையும் சிதைத்து தன் பக்கத்தில் நின்றாள் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு:  கஞல்ஊரன் – வினைத்தொகை, பணைத்தோள் – உவமத்தொகை, தோளோளே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   பழனப் பாகல் – வயலில் வளரும் பாகற்காய் கொடி, முயிறு – எறும்புகள்,  மூசு – கூடி,  குடம்பை – கூடுகள்,  கழனி எருமை – வயலில் உள்ள எருமைகள்,  கதிரொடு மயக்கும் – நெற்கதிரோடு சேரச் சிதைக்கும், பூக்கஞல் – பூக்கள் நிறைந்த, ஊரன் – ஊரன், மகள் – மகள், இவள் – இவள்,  நோய்க்கு மருந்தாகிய –  நோய்க்கு மருந்து ஆகுவள், பணைத் தோளோளே – பருத்த தோள்களை உடையவள், மூங்கிலை ஒத்த தோள்களை உடையவள்

ஐங்குறுநூறு 100, ஓரம்போகியார்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
புனலாடு மகளிர் இட்ட ஒள் இழை
மணலாடு சிமையத்து எருமை கிளைக்கும்,
யாணர் ஊரன் மகள் இவள்,
பாணர் நரம்பினும் இன் கிளவியளே.

பொருளுரை:   நீராடும் பெண்கள் நீராடும் முன் தம் அணிகலன்களைக் கரையில் உள்ள மணலில் புதைத்து வைப்பர்.  காற்று வீசுவதால் அங்கு மணல் மேடுகள் உருவாகும்.  எருமைகள் தன் கொம்பால் அதைக் கிண்டி நகைகளை வெளிப்படுத்தும். அத்தகைய புது வருவாயுடைய வளமான ஊரனின் மகள் அவள். அவள் சொற்கள் பாணனின் யாழிசையை விட இனிமையானவை.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புனலாடு மகளிர் சிமையத்து இட்டு மறந்த இழையைக் கிளைத்துப் புலப்படுத்தினாற் போன்று, தலைவி நீ பண்டு களவுக் காலத்தே செய்து மறந்த நலன்களையெல்லாம் எடுத்துக் காட்டி நின்னைப் பாராட்டுகின்றனள் என்பது.  இலக்கணக் குறிப்பு:  நரம்பு – நரம்பிடத்தில் உள்ள இசையைக் குறித்தலின் ஆகுபெயர், கிளவியளே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   புனல் ஆடு மகளிர் – நீரில் (ஆற்றில் அல்லது குளத்தில்) விளையாடும் பெண்கள், இட்ட –  புதைத்து வைத்த,  ஒள் இழை – ஒளியுடைய நகைகள், மணல் ஆடு – காற்றினால் நகரும் மணலின், சிமையத்து – மேடுகளை,  எருமை கிளைக்கும் – எருமை கிண்டி தோண்டும்,  யாணர் – புது வருமானம் உள்ள வளப்பமான, ஊரன் – ஊரன் மகள் இவள் – ஊரன் மகள் இவள், பாணர் நரம்பினும் – பாணர்களின் யாழிசையை விட,  இன் கிளவியளே – இனிய சொற்கள்

ஐங்குறுநூறு 101 அம்மூவனார் – நெய்தற் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னை வாழி! வேண்டன்னை! உதுக்காண்!
ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று, நின் மகள்
பூப்போல் உண்கண் மரீஇய
நோய்க்கு மருந்தாகிய கொண்கன் தேரே.

பொருளுரை:   அன்னையே, வாழ்க!  நான் சொல்வதைக் கேள்!  அங்கே பார்! உன் மகளின் பூப்போன்ற மை இட்ட கண்களில் தோன்றிய பசலை நோயைத் தீர்க்கும் மருந்தாகிய நெய்தல் நிலத் தலைவனின் தேர், ஊர்ந்து, மேலும் கீழும் அசைந்து, அழகிய அடும்புக்கொடிகளைச் சக்கரத்தால் அறுத்து, நெய்தல் மலர்களைச் சிதைத்துக்கொண்டு வந்தது.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரையாசிரியர் – தேர் அடும்பு பரிய அதனை ஊர்ந்து இழிந்து நெய்தலை மயக்கி வந்தது என்றது, களவில் கூட்டம் வெளிப்பட்ட பின்பும் வரையாது பிரிந்தான் என்று அலர் கூறுவார் வருந்த வந்தான் என்றவாறு.  இலக்கணக் குறிப்பு:  அன்னை – ஈரிடத்திலேயும் விளி, உது – இடைச்சுட்டு, பாசடும்பு – பண்புத்தொகை, ஊர்பு – செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம், இழிபு – செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம், நோய்க்கு மருந்து – குவ்வுருபு பகைப்பொருட்டு, தேரே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   அன்னை – அன்னை, வாழி – வாழ்வாயாக, வேண்டன்னை – நான் சொல்வதைக் கேள், உதுக்காண் – அங்கே பார்,  ஏர்கொடி – அழகியக் கொடி,  பாசடும்பு – பசிய அடும்பு, பரி – விரைவாக, ஊர்பு – நகரும், இழிபு – மேலும் கீழும், நெய்தல் – குவளை மலர்கள், மயக்கி – சிதைத்து, கலந்து, வந்தன்று – வந்துள்ளது,  நின் மகள் – உன்னுடைய மகள், பூப்போல் – பூப் போன்ற,  உண்கண் – மை உண்ட கண்கள், மரீஇய – தோன்றிய,  நோய்க்கு மருந்தாகிய – பசலை நோய்க்கு மருந்து ஆகிய, கொண்கன் – தலைவன்,  தேரே – தேர்

ஐங்குறுநூறு 113 அம்மூவனார் – நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! நென்னல்
ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார் பெண்டென மொழிய, என்னை
அது கேட்ட ‘அன்னாய்’ என்றனள் அன்னை,
பைபய, ‘எம்மை’ என்றனென் யானே.

பொருளுரை:   நீடு வாழ்வாயாக தோழி!  இதைக் கேட்பாயாக!  உயர்ந்து வரும் அலைகளும், வெள்ளை மணலும் உடைய கடற்கரைத் துறைவனின் ‘பெண்டு ஆனாள் இவள்’ என நேற்று ஊரார் என்னைப் பழித்துப் பேசினார்கள்.  அன்னை என்னை நோக்கி, ‘அது உண்மையா?’ எனக் கேட்டாள்.  நான் மெல்ல ‘அது சரி தான்’ (நான் தான்) எனக் கூறினேன்.

குறிப்பு:   உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – ஓங்குதிரை வெண்மணற் கரையை உடைக்கும் என்றதனால், ஊரில் எழுந்த அலர் இவ்வொழுக்கத்தினை சிதைப்பதாயிற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடல் திரை கரையகத்து வெண்மணலைச் சிதைப்பது போன்று, ஊரவர் கூறும் அலர்மொழி என் வெள்ளை மனத்தைச் சிதையாநிற்கும் என்றாள்.  பைபய எம்மை என்றனென் யானே –  ஒளவை துரைசாமி உரை – ஊரார் கூறும் அலர்க்கு பொருளாயினர் தலைமக்கள் இருவருமாகலின் ‘எம்மை’ என்றாள், தோழியை உளப்படுத்தற்கு எம்மை என்றாள் என்றலும் உண்டு, ‘யாம் எம்மை என்றனன்’ என இயைக்க, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெம்மை – மெல்ல மெல்ல இது கொடுமை என்று என்னுள்ளேயே சொல்லிக் கொண்டேன் காண் என்பது.  இலக்கணக் குறிப்பு:  அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசை நிலை, யானே – ஏகாரம் அசை நிலை

சொற்பொருள்:  அம்ம – கேட்பாயாக என்ற பொருளில் வந்த ஓர் இடைச்சொல், வாழி – அசை நிலை, நீடு வாழ்வாயாக, தோழி –  தோழி, நென்னல் – நேற்று,  ஓங்கு திரை – உயர்ந்த அலைகள்,  வெண்மணல் – வெள்ளை மணல்,  துறைவற்கு – துறைவனுக்கு (நெய்தல் நிலத் தலைவனுக்கு),  ஊரார் – ஊர் மக்கள்,  பெண்டென – பெண் என, மொழிய – கூற,  என்னை – என்னைப் பற்றி, அது கேட்ட – அதனைக் கேட்ட (என் தாய்), அன்னாய் –  அத்தன்மை உடையவளா (நீ), என்றனள் அன்னை – என்றாள் என் தாய்,  பைபய – மெதுவாக,  எம்மை – நான் தான், என்றனென் – என்றேன்,  யானே – நான்

ஐங்குறுநூறு 121, அம்மூவனார்,  நெய்தற் திணை – பரத்தை அல்லது தலைவியின் தோழி தலைவனிடம் சொன்னது
கண்டிகும் அல்லமோ கொண்க, நின் கேளே,
முண்டகக் கோதை நனையத்
தெண் திரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே.

பொருளுரை:   நெய்தல் நிலத் தலைவனே!  நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன்.  முள்ளிச் செடியின் மலர்களால் பின்னப்பட்ட மாலையை அணிந்துக் கொண்டு, அது நனையுமாறு தெளிந்த கடல் நீரில் பாய்ந்து விளையாடினாள்.

குறிப்பு:  நெய்தலுள் மருதம்.  இலக்கணக் குறிப்பு:  கண்டிகும் – தன்மை வினைமுற்று திரிசொல், இகும் தன்மை அசைநிலை, கொண்க – விளி, கேளே – ஏகாரம் தேற்றம், நின்றோளே – ஆகாரம் ஓகாரமானது செய்யுள் விகாரம், ஏகாரம் அசை நிலை

சொற்பொருள்:   கண்டிகும் அல்லமோ – கண்டேன் அல்லவா, கொண்க – நெய்தல் நிலத்தலைவன்,  நின் கேளே – உன் உறவினளை, முண்டகக் கோதை – முள்ளிச் செடியின் மலர்களால் பின்னப்பட்ட மாலை, நனைய – நனைய, தெண் திரை – தெளிந்த அலைகள்,  பௌவம் – கடல், பாய்ந்து நின்றோளே – பாய்ந்து ஆடினாள்

ஐங்குறுநூறு 126, அம்மூவனார்நெய்தல் திணை – பரத்தை அல்லது தலைவியின் தோழி தலைவனிடம் சொன்னது
கண்டிகும் அல்லமோ கொண்க, நின் கேளே,
உண்கண் வண்டினம் மொய்ப்பத்,
தெண் கடல் பெருந்திரை மூழ்குவோளே.

பொருளுரை:  நெய்தல் நிலத் தலைவனே!  நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். வண்டுகள் தன்னுடைய மையிட்ட கண்களைக் குவளை மலரென்று எண்ணி மொய்த்ததால், அவ்வண்டுகளை நீக்குவதற்கு, தெளிந்த கடலின்பெரிய அலைகளில் மூழ்கினாளே!

குறிப்பு:  நெய்தலுள் மருதம். இலக்கணக் குறிப்பு:  கண்டிகும் – தன்மை வினைமுற்று திரிசொல், இகும் தன்மை அசைநிலை, கொண்க – விளி, கேளே – ஏகாரம் தேற்றம், நின்றோளே – ஆகாரம் ஓகாரமானது செய்யுள் விகாரம், ஏகாரம் அசை நிலை

சொற்பொருள்:  கண்டிகும் அல்லமோ – கண்டேன் அல்லவா, கொண்க – நெய்தல் நிலத்தலைவன்,  நின் கேளே – உன் உறவினளை, உண்கண் வண்டினம் மொய்ப்ப – மையிட்ட கண்களை வண்டுகள் மொய்த்ததால், தெண் கடல் – தெளிந்த நீரையுடைய கடல், பெருந்திரை மூழ்குவோளே – பெரிய அலைகளில் மூழ்கினாள்

ஐங்குறுநூறு 134, அம்மூவனார்நெய்தல் திணை – தலைவி பாணனிடம் சொன்னது
காண்மதி பாண! இருங்கழிப்
பாய் பரி நெடுந் தேர்க் கொண்கனோடு
தான் வந்தன்று, என் மாமைக் கவினே.

பொருளுரைகாண்பாயாகப் பாணனே! என்னுடைய கருமை அழகானது, பெரிய உப்பங்கழியிடத்து பாய்ந்து செல்லும் குதிரைகள் பூட்டிய நெடிய தேரினையுடைய என் தலைவன் வந்ததும், தானாகவே என்னிடம் வந்து விட்டது.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  மதி – முன்னிலையசை, பாண – விளி, பாய் பரி  – வினைத்தொகை, கவினே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   காண்மதி பாண – காண்பாயாக பாணனே,  இருங்கழி  – பெரிய உப்பங்கழி, கருமையான உப்பங்கழி, பாய் பரி – பாயும் குதிரைகள், நெடுந்தேர் – நெடிய தேர், கொண்கனோடு – என் தலைவனோடு, தான் வந்தன்று – அது வந்தது, என் மாமைக் கவினே – என் கருமை அழகு, என் மாந்தளிர் நிறமுடைய அழகு

ஐங்குறுநூறு 141, அம்மூவனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண் துளி வீசிப்
பயலை செய்தன பனி படு துறையே.

பொருளுரை:  மணல் மேடுகளில் ஞாழல் மரங்களும் செருந்தி மரங்களும் நறுமணத்தைப் பரப்புகின்றன. குளிர்ந்த கடற்கரைத் துறையின் நீர்த் துவலைகள் என் மீது விழுந்தன.  என் மேனி பசலை அடைந்தது.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  பயலை – பசலை என்பதன் போலி, துறையே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   எக்கர் – மணல் மேடு,  ஞாழல் – ஞாழல் மரங்கள், (Heritiera Littoralis,  Looking Glass Tree), செருந்தியொடு – செருந்தி மரங்களுடன், (Ochna squarrosa ), கமழ – நறுமணத்தை பரப்புகின்றன, துவலை – நீர்த் துளிகள்,  தண்துளி – குளிர்ந்த துளிகள், வீசி – வீசி,  பயலை – பசலை,  செய்தன – செய்தன,  பனிபடு துறையே – குளிர்ந்த கடற்கரைத் துறையில்

ஐங்குறுநூறு 163, அம்மூவனார்நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும்
துறைவன் துறந்தெனத், துறந்து என்
இறை ஏர் முன் கை நீக்கிய வளையே.

பொருளுரை:  பெரிய கடலின் கடற்கரையில் சிறுவெண் காக்கை பெரிய உப்பங்கழியின் நீர்த் துவலையின் ஒலியில் உறங்கும் நெய்தல் நிலத் தலைவன் என்னைத் துறந்ததால், என்னுடைய இறை பொருந்திய அழகிய முன் கையைத் துறந்து நீங்கின என் வளையல்கள்.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காக்கை இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும் என்றது, காக்கை தன் மீது துவலை வீசி ஓவென இரையும் பேரொலியையும் பொருளாக மதியாமல் இனிதே உறங்குமாறு போல, நம் பெருமானும் இவ்வூரவர் கூறும் அம்பலும்  அலம் பொருளென மதியாமல் தன் மனைக்கண்ணே கவலையின்றி உறைகின்றான் என்பது.  இலக்கணக் குறிப்பு:  வளையே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   பெருங்கடல் கரையது – பெரிய கடலின் கடற்கரையில், சிறுவெண் காக்கை – சிறுவெண் காக்கை (sea gull), இருங்கழித் துவலை ஒலியில் – பெரிய உப்பங்கழியின் நீர்த் துவலையின் ஒலியில், துஞ்சும் – உறங்கும், துறைவன் – கடற்கரையின் தலைவன், துறந்தென – என்னைத் துறந்ததால், துறந்து என் இறை ஏர் முன் கை நீக்கிய வளையே – என் இறை பொருந்திய அழகிய முன் கையைத் துறந்து நீங்கின என் வளையல்கள்

ஐங்குறுநூறு 165, அம்மூவனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பெருங்கடல் கரையது சிறுவெண்காக்கை
ஆர் கழிச் சிறுமீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல், என்
நிரை ஏர் எல் வளை கொண்டு நின்றுதுவே.

பொருளுரை:   சிறிய வெண் காக்கைகள் பெரிய கடற்கரையின் கரையில் உள்ள உப்பங்கழியில் உள்ள சிறிய மீன்களை நிறைய உண்ணும் துறையின் தலைவன் என் காதலன். அவன் சொன்ன சொற்கள் என் அடுக்கிய, அழகிய, ஒளி மிகுந்த வளையல்களைக் கழன்று விழச் செய்தன.

குறிப்பு:  நெய்தலுள் மருதம்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை- சிறுவெண்காக்கை நீர் குறைந்த கழிக்கண் உள்ள சிறு மீனை அருந்தும் துறைவன் என்றதனால், நீர்மை குன்றிய பரத்தையர் சேரியுள்ளும் பொய்ச்சூள் புரிந்து புல்லியாரை நயந்து ஒழுகுகின்றாள் என்பது.  இலக்கணக் குறிப்பு:  நின்றதுவே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   பெருங்கடல் – பெரிய கடல்,  கரையது – கரையின்,  சிறுவெண்காக்கை – சிறுவெண்காக்கை – sea gull, ஆர் கழி – உப்பு நீர் குளம்,  சிறுமீன் – சிறிய மீன்,  ஆர மாந்தும் – நிறைய உண்ணும்,  துறைவன் – துறைவன் – நெய்தல் நிலத் தலைவன்,  சொல்லிய சொல் – சொன்ன சொற்கள்,  என் – என்,  நிரை – அடுக்கிய, ஏர் – அழகான, எல் வளை – ஒளிரும் வளையல்களை,  கொண்டு நின்றுதுவே – கவர்ந்து கொண்டன, கழன்று விழச்செய்தன

ஐங்குறுநூறு 192,  அம்மூவனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கோடு புலம் கொட்பக் கடல் எழுந்து முழங்கப்
பாடு இமிழ் பனித் துறை ஓடு கலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென, நெகிழ்ந்தன
வீங்கின மாதோ தோழி, என் வளையே.

பொருளுரைதோழி! சங்குகள் கடற்கரையில் சுழல, கடல் அலைகள் ஆரவாரம் செய்ய, ஒலி மிகுந்த துறையிலிருந்து, விரைந்து செல்லும் கப்பல்கள் செலுத்தப்படும் குளிர்ந்த துறையின் துறைவன் என்னைப் பிரியும் பொழுது என் வளையல்கள் நெகிழ்கின்றன.  அவன் வரும் பொழுது என் கைகள் பருத்து வளையல்கள் செறிவு அடைகின்றன.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பரதவர், கடல் கோடு புலங் கொட்ப எழுந்து முழங்கவும், அதனாலே அலைகள் ஆரவாரிக்கும் பனித்துறையிலே மரக்கலத்தை அஞ்சாமல் செலுத்தினாற் போன்று, நம்பெருமானும், அலர் தூற்றிய நொதுமலர் மனச் சுழற்சி எய்தவும், நம் சுற்றத்தார் மகிழ்ச்சி பொங்கி தன்னை எதிர் கொண்டழைக்கவும், நம் இல்லத்தே இன்னியங்கள் முழங்கவும் வரைவொடு புகுந்தான் என்பது.  வீங்கின (4) – ஒளவை துரைசாமி உரை – வீங்குதல் உடல் பூரித்துத் தடுத்தலால், தன்னிலையில் பெருகி விரிந்து காட்டுதல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கையின்கண் கிடந்தது விம்முவனவாயின, தி. சதாசிவ ஐயர் உரை – வளை இறுகின.  இலக்கணக் குறிப்பு:  கொட்ப – செய்தென என்னும் வினையெச்சம், முழங்க – செய்தென என்னும் வினையெச்சம், மாதோ – மாது, ஓ – அசை நிலைகள், வளையே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   கோடு – சங்கு, புலம் கொட்ப – கரையில் சுழல, கடல் எழுந்து முழங்க – கடல் அலைகள் ஆரவாரம் செய்ய, பாடு இமிழ் –  ஒலி மிகுந்த, பனித்துறை – குளிர்ந்த துறையில், ஓடு கலம் உகைக்கும் – விரைந்து செல்லும் கப்பல்கள் செலுத்தப்படும்,  துறைவன் – நெய்தல் நிலத் தலைவன், பிரிந்தென – பிரியும் பொழுது, நெகிழ்ந்தன – நெகிழ்ந்தன, வீங்கின – பருத்தன, மாதோ – அசைச் சொல், தோழி – தோழி, என் வளையே – என் வளையல்கள்

ஐங்குறுநூறு 193,  அம்மூவனார்,  நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது (சங்கை அறுத்து வளையல் செய்வார்கள்)
வலம்புரி உழுத வார் மணல் அடைகரை
இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும்
துறை கெழு கொண்க! நீ தந்த
அறை புனல் வால் வளை நல்லவோ தாமே?

பொருளுரை:   வலம்புரிச் சங்குகள் தோண்டும் நீண்ட மணல் நிறைந்த, இருட்டை விலகச் செய்யும்  ஒளி மிகுந்த முத்துக்கள் நிறைந்த கடற்கரைத் தலைவனே!  நீ அவளுக்கு முழங்குகின்ற அலைகள் கொண்டுத் தந்த சங்கினால் செய்த வளையல்களைத் தந்தாய்.  இவை நீ  அவளுக்கு முன்பு  தந்ததைப் போன்றவையா?

குறிப்பு:  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – இலங்குகதிர் முத்தம் இருள் கெட இமைத்தல் போல, நின் வரைவால் இவள் மேனி வேறுபாடுகண்டு அலர் கூறுவாரால் உளதாகும் வருத்தம் நீங்குமென அலர் அச்சம் கூறி தோழி வரைவு கடாயவாறு.  இலக்கணக் குறிப்பு:  அடைகரை – வினைத்தொகை, இலங்குகதிர் – வினைத்தொகை, அறைபுனல் – வினைத்தொகை, கடலைக் குறித்தலின் அன்மொழித் தொகையுமாம், நல்லவோ – ஓகாரம் எதிர்மறை, தாமே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  வலம்புரி – வலம்புரிச் சங்கு,  உழுத – தோண்டிய,  வார் மணல் – மணலுடைய நீண்ட கடற்கரை,  அடைகரை – மணல் அடையும் கரை,  இலங்கு கதிர் – ஒளியுடைய கதிர்,  முத்தம் – முத்துக்கள்,  இருள் கெட – இருள் நீங்குமாறு,  இமைக்கும் – ஒளித் தரும்,  துறை கெழு கொண்க – நெய்தல் நிலத் தலைவனே,  நீ தந்த – நீ கொடுத்த,  அறை – முழங்குகின்ற, புனல் – ஓடும் நீர்,  வால் வளை – வெள்ளை வளையல்கள்,  நல்லவோ தாமே – நல்லவை தானா

ஐங்குறுநூறு 194,   அம்மூவனார்நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கடல் கோடு அறுத்த அரம் போழ் அவ்வளை
ஒள் தொடி மடவரல் கண்டிகும் கொண்க!
நன் நுதல் இன்று மால் செய்தெனக்
கொன் ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே.

பாடல் பின்னணி:  பகற்குறிக்கண் வந்து தலைவியோடு அளவளாவிச் செல்கின்ற தலைவனிடம் தோழி, ‘களவொழுக்கம் தாயால் அறியப்பட்டது.  இனி அவள் தலைவியை இல்லத்தில் சிறை வைப்பாள்’ என்று கூறி வரைவு (திருமணம்) வேண்டுகின்றாள்.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு: மடவரல் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, கண்டிகும் – முன்னிலை வினை, இகும் முன்னிலை அசைச் சொல், கடுத்தனள் – கடி என்னும் உரிச் சொல்லடியாகத் தோன்றிய வினைமுற்று, நிலையே – ஏகாரம் அசை நிலை.

பொருளுரை:   நெய்தல் நிலத் தலைவனே! அரத்தால் பிளந்து செய்யப்பட்ட அழகிய சங்கு வளையல்களையும் ஒளியுடைய தொடியையும் அணிந்த என் தோழியைப் பார்.  அவளுடைய நல்ல நெற்றி இன்று ஒளி இழந்து விட்டது.  அதைப் பார்த்து, இது அஞ்சும்படியானது என்று அன்னை ஐயமுற்றாள்.

சொற்பொருள்:  கடல் கோடு – கடல் சங்கு,  அறுத்த – அறுத்த,  அரம் – அரம்,  போழ் – பிளந்து,  அவ்வளை – அழகிய வளையல்கள், ஒள் தொடி – ஒளியுடைய வளையல்கள்,  மடவரல் கண்டிகும் – மடமையுடைய பெண்ணைப் பார்,  கொண்க – நெய்தல் நிலத் தலைவனே, நன் நுதல் – நல்ல நெற்றி,  இன்று – இன்று,  மால் செய்தென – ஒளி இழந்து விட்டது என, கறுத்து விட்டது என,  கொன் ஒன்று – அஞ்சும்படி இது ஒன்று என்று,  கடுத்தனள் – ஐயமுற்றாள்,  அன்னையது நிலையே – இது அன்னையின் நிலை

ஐங்குறுநூறு 196,   அம்மூவனார்நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கோடு ஈர் எல்வளைக் கொழும் பல் கூந்தல்
ஆய் தொடி மடவரல் வேண்டுதி ஆயின்,
தெண் கழி சேயிறாப் படூஉம்
தண் கடல் சேர்ப்ப! வரைந்தனை கொண்மோ.

பொருளுரை:   சிவந்த இறால் மீன்களைக் கொண்ட தெளிந்த நீரையுடைய உப்பங்கழியையுடைய கடற்கரையின் தலைவனே! சங்குகளை அறுத்து செய்த ஒளி மிகுந்த வளையல்களையும், தழைத்த கூந்தலையும் உடைய தலைவியை வேண்டினாய் ஆயின்,  நீ அவளை மணந்துக் கொள்.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கழியிடத்தே சேயிறாப் பிடிக்க விரும்பும் பரதவர் அதற்குரிய வலை முதலியன வீசி அம்மீனைப் பிடித்துக் கோடல் போன்று நீயும் எம்பெருமாட்டியைச் சான்றோரை விடுத்து மகட் பேசித் திருமணம் புரிந்து கொள்க என்பது.  இலக்கணக் குறிப்பு:  மடவரல் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, வரைந்தனை – முற்றெச்சம், சேயிறா – பண்புத்தொகை, கொண்மோ – மோ முன்னிலை அசை

சொற்பொருள்:  கோடு – சங்கு,  ஈர் – அறுத்து,  எல் வளை – ஒளி மிகுந்த வளையல்கள், கொழும் பல் கூந்தல் – தழைத்த கூந்தல், ஆய் தொடி – அழகிய வளையல்கள், மடவரல் – மடப்பமுடையப் பெண்,  வேண்டுதி ஆயின் – வேண்டினாய் ஆயின்,  தெண் – தெளிந்த, கழி – உப்பங்கழி, சேயிறா – சிவப்பு நிறமுடைய இறா,  படூஉம் – இருக்கும்,  தண்கடல் – குளிர்ந்தக் கடல், சேர்ப்ப – கடற்கரைத் தலைவனே,  வரைந்தனை கொண்மோ – திருமணம் செய்துக் கொள்

கபிலரின் பாடல்கள்  – 201-210 – இவை ‘அன்னாய்ப் பத்து’ என்ற தலைப்பில் உள்ளவை.   இவற்றில் சில, தலைவி தன் தோழியிடம் கூறும் பாடல்கள். சில, தோழி தலைவியிடம் கூறும் பாடல்கள். ‘அன்னாய்’ என்று சொல் அன்புடன் ‘அம்மா’ என்று இன்றும் நாம் இள வயது பெண்களிடம் சொல்வதைப் போன்றது.

ஐங்குறுநூறு 202, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகன் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற,
நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே.

பொருளுரை:  நீடு வாழ்வாயாகத் தோழி!  நான் கூறுவதைக் கேட்க வேண்டுகின்றேன். நெடுமலை நாட்டவனான நம் தலைவன் ஊர்ந்து வரும் தேரை இழுத்து வரும் குதிரைகள்,  நம் ஊர் அந்தணச் சிறுவர்களைப் போல் குடுமித் தலைகள் உடையவை.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு: மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், மாவே – ஏகாரம் அசை நிலை.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்:  அன்னாய் வாழி – அன்னையே வாழ்வாயாக, வேண்டு அன்னை  – நான் கூறுவதை கேட்க வேண்டுகின்றேன்,  நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகன் போல – நம் ஊர் அந்தணச்  சிறுவன் போல், தாமும் குடுமித் தலைய  – தாமும் குடுமித் தலையை உடையன, மன்ற – அசைச் சொல், நெடுமலை நாடன் – பெரிய மலையின் நாடன், ஊர்ந்த மாவே – தேரில் கட்டி ஊர்ந்து வந்தக் குதிரைகள்

ஐங்குறுநூறு 203, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நம் படப்பை
தேன் மயங்கு பாலினும் இனிய, அவர் நாட்டு
உவலை கூவல் கீழ
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே.

பொருளுரை:  நீடு வாழ்வாயாகத் தோழி!  நான் கூறுவதைக் கேள்.  நம் தோட்டத்து தேன் கலந்த பாலை விட இனிப்பானது அவருடைய நாட்டில் உள்ள குழிகளில் இலைகளுக்கு அடியில் உள்ள, மான் குடித்து எஞ்சிய கலங்கிய நீர்.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு: கலிழி – கலுழி என்பதன் திரிபு, தேன் மயங்கு – தேனோடு மயங்கிய, மூன்றாம் வேற்றுமைத் தொகை, நீரே – ஏகாரம் அசை நிலை.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்:  அன்னாய் வாழி – அன்னையே வாழ்வாயாக, வேண்டு அன்னை – நான் கூறுவதை கேட்க வேண்டுகின்றேன்,  நம் படப்பை – நம் தோட்டத்து, தேன் மயங்கு பாலினும் – தேன் கலந்த பாலை விட,  இனிய – இனிய, அவர்நாட்டு – அவருடைய நாட்டு, உவலை – காய்ந்த இலைகள், கூவல் – குழி,  கீழ – கீழ்,  மான் உண்டு – மான் குடித்து,  எஞ்சிய – மிஞ்சிப் போன, கலிழி நீரே – கலங்கிய நீர்

குறுந்தொகை 204, மிளைப்பெருங்கந்தனார்குறிஞ்சித் திணை – தலைவனிடம் தோழன் சொன்னது
“காமம், காமம்” என்ப, காமம்
அணங்கும் பிணியும் அன்றே, நினைப்பின்
முதைச் சுவல் கலித்த முற்றா இளம் புல்
மூது ஆ தைவந்தாங்கு,
விருந்தே காமம், பெருந்தோளோயே.  5

பாடல் பின்னணி:  காம நோயால் வேறுபட்டு மெலிந்த தலைவனைத் தோழன் இடித்துரைத்தது.

பொருளுரை:  பெரிய தோள்களை உடைய நண்பனே!  “காமம் காமம்” என்று அதை அறியாதவர்கள் இகழ்ந்து கூறுவார்கள்.  காமம் வருத்தமும் நோயும் இல்லை. நினைக்கும்பொழுது, பழைய கொல்லையில் உள்ள மேட்டு நிலத்தில், முற்றாத இளைய புல்லை ஒரு முதிய பசு நாவால் தடவி இன்புற்றாற்போல், அக்காமம் புதிய இன்பத்தை உடையதாகும்.

குறிப்பு:  குறுந்தொகை 136 – மிளைப் பெருங்கந்தனார், குறிஞ்சித் திணை- தலைவன் தோழனிடம் சொன்னது, காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே யானை குளகு மென்று ஆள் மதம் போலப் பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே.  காமம் காமம் என்ப (1) – உ. வே. சாமிநாதையர் உரை – காமம் காமம் என்று அதனை அறியார் இகழ்ந்து கூறுவர், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – காமம் காமம் என்று உயர்த்திக் கூறுவர், தமிழண்ணல் உரை – காமம் காமம் என்று ஏதோ இழிவும் வெறுப்பும் தோன்றக் கூறுவார்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – காமநோய் காமநோய் என அதன் இயல்பு அறியார் அதற்கு அஞ்சி மெலிவர், இரா. இராகவையங்கார் உரை – தாழ்த்துச் சொல்ல வேண்டியது ஒன்றைக் காமம் காமம் என எடுத்துச் சொல்வர்.  அணங்கு (2) – உ. வே. சாமிநாதையர் உரை – வருத்தம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தீண்டி வருத்தும் தெய்வம், தமிழண்ணல் – தெய்வம் வருத்துவது போல் தாக்கி மனத்துயரை உண்டாக்குவது.  பெருந்தோளோயே (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெருந்தோளோய் என்றது அவன் ஆண்மையை நினைவூட்டி, நின் ஆண்மைக்கு தக மனவடக்கம் உடையை அல்ல என்று இகழ்ந்தவாறு என்க.  உ. வே. சாமிநாதையர் உரை – அறிவுடையார்பால் காமம் தோன்றாது என்றும், அறிவின்றி மனத்தின் வழியே செல்வார்க்கு அது விருந்தாவது என்றும் புலப்படுத்தி இடித்துரைத்தான்.  பெருந்தோளோயே – ஏகாரம் அசை நிலை

சொற்பொருள்:  “காமம் காமம்” என்ப – “காமம் காமம்” என்று அதை அறியாதவர்கள் இகழ்ந்து கூறுவார்கள், காமம் அணங்கும் பிணியும் அன்றே – காமம் வருத்தமும் நோயும் இல்லை, தீண்டி வருத்தும் கடவுளும் இல்லை, நினைப்பின் – நினைக்கும்பொழுது, முதைச் சுவல் – பழைய கொல்லையில் உள்ள மேட்டு நிலத்தில், கலித்த முற்றா இளம் புல் – முற்றாத இளைய புல்லை, மூது ஆ தைவந்தாங்கு – முதிய பசு நாவால் தடவி இன்புற்றாற்போல், விருந்தே காமம் – அக்காமம் புதிய இன்பத்தை உடையதாகும், பெருந்தோளோயே – பெரிய தோள்களை உடைய நண்பனே

குறுந்தொகை 205,  உலோச்சனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்குப்,
பொலம் படைப் பொலிந்த வெண் தேர் ஏறிக்
கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப
இனிச் சென்றனனே இடு மணல் சேர்ப்பன், 5
யாங்கு அறிந்தன்று கொல் தோழி, என்
தேங்கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?

பாடல் பின்னணி:  வரைவிற்கு பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்ததால் தலைவி ஆற்றாள் என வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது.

பொருளுரை:  மின்னலையும் இடியையும் மழையையும் உண்டாக்கும் முகில்கள் வானில் மிதக்கின்றன.  கடல் நீர் அலைகளால் கலங்குகின்றது.  என்னுடைய தலைவன் தங்க அணிகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளைத் தேரை கடற்கரையில் செலுத்திக்கொண்டு போகின்றான். அவனுடைய தேர்ச் சக்கரம் அலைகளின் நீர்த் துளிகளால் நனைந்து மேலும் கீழும் ஆடிச் செல்லும்.  அப்பொழுது, அன்ன பறவை தன் சிறகுகளை அசைத்துப் பறப்பது போன்று தோன்றும் அத் தேர்.  காற்று மணலை கரையில் கொண்டு வந்து சேர்க்கும் நெய்தல் நிலத்தின் தலைவன் போவதை என் தேன்மணம் கமழும் நெற்றி எவ்வாறு அறிந்தது தோழி?  அதில் பசலைப் படர்ந்தது.

குறிப்பு:  சென்றனனே – ஏகாரம் அசை நிலை, பசப்பே – ஏகாரம் அசை நிலை.  கருவிய (1) – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய.  படை (3) – உ. வே. சாமிநாதையர் உரை – தட்டு, பக்கத்தில் அமைத்த பலகைகளுமாம்.

சொற்பொருள்:  மின்னுச்செய் – மின்னலுடன், கருவிய – இடியும் சேர்ந்து பெய்யும், பெயன் – மழை,  மழை – மேகம்,  தூங்க – தொங்க,  விசும்பு – ஆகாயம்,  ஆடு – பறக்கும்,  அன்னம் – அன்னம்,  பறை நிவந்தாங்குப் – சிறகுகளை மேலும் கீழும் ஆட்டி பறந்ததுப் போல்,  பொலம்படை – பொன் அலங்காரம்,  பொலிந்த வெண் தேர் – அழகிய வெள்ளை தேர்,  ஏறி – ஏறி,  கலங்கு கடல் – கலங்கும் கடல் நீர்,  துவலை – நீர்த் துவலை,  ஆழி – தேர்ச் சக்கரம்,  நனைப்ப – நனைத்து,  இனிச் சென்றனனே – அவன் போய் சென்றான்,  இடுமணல் – (காற்று கொண்டு வந்து) இடும் மணல்,  சேர்ப்பன் – நெய்தல் நிலத்தின் தலைவன்,  யாங்கு – அதனை, அறிந்தன்று கொல் தோழி – எவ்வாறு அறிந்தது தோழி? என் – என், தேங்கமழ் – தேன் மணம் கமழும்,  திருநுதல் – அழகிய நெற்றி,  ஊர்தரும் பசப்பே – படர்ந்தன பசலையை

ஐங்குறுநூறு 209, கபிலர்குறிஞ்சி திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நீ மற்று
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்,
கொண்டல் அவரைப்  பூவின் அன்ன
வெண் தலை மா மழை சூடித்
தோன்றல் அனாது அவர் மணி நெடுங்குன்றே.

பொருளுரை:  நீடு வாழ்வாயாகத் தோழி! நான் கூறுவதைக் கேட்க வேண்டுகின்றேன். நான் அவரை மறக்க வேண்டும் என்று நீ கூறுகின்றாய்.  கீழ்க்காற்றால் மலரும் அவரைப் பூக்கள் போன்ற வெள்ளை மேகங்கள் அலங்கரிக்கும் மலை உச்சியை உடைய, அவருடைய நீலமணியைப் போன்ற மலை என் கண்ணை விட்டு அகலாது நிற்கின்றது.  அவரை நான் எப்படி மறக்க முடியும்?

குறிப்பு:  உள்ளுறை – புலியூர் கேசிகன் உரை – மழை பெய்தற்குக் கால்வீழ்த்த இருட்சியால் தான் மறையப் பெறாது விளங்கித் தோன்றும் அவர் மணி நெடுங்குன்றம் என்றது, என்ன தான் நாணும் அச்சமும் கொண்டு யான் அடக்கி மறைத்தற்கு முயலினும் என் உள்ளத்துத் துயரம் என்னை நலிவிப்பதனால் புறத்தும் வெளிப்படத் தோன்றி விடுகின்றது என்பது.  இலக்கணக் குறிப்பு:  மற்று – வினை மாற்றில் வந்தது, வேண்டுதி – முன்னிலை வினைமுற்று, பூவின் – இன் சாரியை, அவர் – பண்டறி சுட்டு, அன்ன – உவம உருபு, நெடுங்குன்றே – ஏகாரம் அசை நிலை.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்:  அன்னாய் வாழி – அன்னையே வாழ்வாயாக, வேண்டு அன்னை – நான் கூறுவதை கேட்க வேண்டுகின்றேன்,  நீ மற்று யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின் – நான் அவரை மறக்க வேண்டும் என்று நீ வேண்டுகின்றாய் ஆயின், கொண்டல் – கீழ்க்காற்று, அவரைப் பூவின் அன்ன – அவரைப் பூக்கள் போல, வெண் தலை – வெள்ளைத் தலை, மாமழை – பெரிய மேகங்கள்,  சூடித் தோன்றல் ஆனாது – சூடினார்ப் போல விடாமல் தோன்றும், அவர் மணிநெடுங்குன்றே – அவருடைய நீலமணியைப் போன்ற (sapphire) உயர்ந்த மலை

ஐங்குறுநூறு 211,  குறிஞ்சித் திணைகபிலர்  – தோழி தலைவியிடம் சொன்னது
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன,
வயலை அம் சிலம்பின் தலையது
செயலையம் பகைத்தழி வாடும், அன்னாய்.

பொருளுரை:   தோழியே! உழுந்த மாவை நெய்யில் கலந்து நூலாகத் திரித்தாற்போல் தோன்றும் வயலைக் கொடிகளையுடைய மலை உச்சியில் உள்ள அசோக மரத்தின் தழையால் செய்த ஆடை வாடி விடும்.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு: உழுந்து – ஆகுபெயர், உழுத்த மாவிற்கு ஆயிற்று, அன்னாய் – விளி.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்:  நெய்யொடு மயக்கிய – நெய்யுடன் கலந்த,  உழுந்து நூற்றன்ன – உழுந்த மாவின் நூலைப் போன்று ,  வயலையம் – வயலைக் கொடிகள் நிறைந்த (purslane creeper) அழகிய,  சிலம்பின் தலையது – மலைச் சிகரம்,  செயலையம் – அசோக மரங்கள், பகைத்தழி  – இலைகள் மாறி,  வாடும் – வாடும்,  அன்னாய் – தோழியே

ஐங்குறுநூறு 213, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நறுவடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த
ஈர்ந்தண் பெருவடுப் பாலையில் குறவர்
உறை வீழ் ஆலியல் தொகுக்கும் சாரல்
மீமிசை நல் நாட்டவர் வரின்,
யான் உயிர் வாழ்தல் கூடும், அன்னாய்.

பொருளுரை:   தோழி! நறுமணமுள்ள பெரிய மா வடுக்கள் காம்பு அறுந்து, மழைத் துளிகளுடன் கீழே உதிர்ந்து விடும்.  அவற்றைப் பாலை நிலத்து மலை நாட்டவர் மலைச் சரிவில் ஆலங்கட்டியை குவித்து வைத்தது போல் குவித்து வைப்பார்கள்.  உயர்ந்த உச்சியையுடைய நல்ல நாட்டவன் என்னை மணம் புரிய வந்தால் தான் நான் உயிரோடு இருப்பேன்.

குறிப்பு:  மூக்கு (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காம்பு.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இற்றுவீழும் வடியினைக் குறவர் தொகுப்பர் என்றது, பாலை நிலத்தின்கண் வெம்பி வீழும் வடுக்களைத் தொகுக்கும் குறவர் போன்று நம்பெருமானும் யான் துயரத்தாலே நைந்து இறந்துபடும் எல்லைவரை வாளாவிருந்து அவ்வெல்லைக்கண் வரைதற்கு வர முயல்வாயாயினன் எனத் தலைவனை பழித்தபடியாம்.  இலக்கணக் குறிப்பு:  இறுபு – செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம், மீமிசை – ஒருபொருட் பன்மொழி, அன்னாய் – விளி.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

சொற்பொருள்:  நறு வடி – நறுமணமுள்ள மா வடு, மாஅத்து –  மாமரத்தின், மூக்கு இறுபு – காம்பு அறுந்து, உதிர்த்த – உதிர்ந்த, ஈர்ந்தண் – ஈரமான குளிர்ச்சியான, பெரு வடு – பெரிய மா வடு,  பாலையில் குறவர் – பாலை நிலத்தின் குறவர்கள், உறை – மழை, வீழ் – விழும், ஆலியல் – ஆலங்கட்டி போல, தொகுக்கும் – குவித்து இருக்கும், சாரல் – மலைச் சரிவு, மீ மிசை – உயர்ந்த உச்சி, நல் நாட்டவர் வரின் – நல்ல நாட்டவர் வந்தால், யான் – நான், உயிர் வாழ்தல் கூடும் அன்னாய் – உயிர் வாழ்வேன் தோழி

ஐங்குறுநூறு 243, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி செவிலியிடம் சொன்னது
கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி
அறியா வேலன் வெறி எனக் கூறும்
அது மனம் கொள்குவை அனை, இவள்
புது மலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே.

பொருளுரை அன்னையே!   இவளுடைய புதிய மலரைப் போன்ற ஈரக் கண்கள் வருந்தியதால் ஏற்பட்ட பசலை நோயைப் பற்றி அறியாத வேலன், மிளகு வளரும் மலையின் கடவுளான முருகனை வாழ்த்தி, அவனால் இது ஏற்பட்டது என்றுக் கூறி வெறியாட்டம் நிகழ வேண்டும் என்று கூறுவதை நீயும் ஏற்றுக் கொள்கின்றாய்.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு: அனை – அன்னை என்பதன் தொகுத்தல் விகாரம், நோய்க்கே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி – மிளகு வளரும் மலையின் கடவுளான முருகனை வாழ்த்தி, அறியா வேலன் வெறி எனக் கூறும் – தலைவனால் ஏற்பட்டது என்பதை அறியாத வேலன் வெறியாட்டம் என்று கூறுவதை,  அது மனம் கொள்குவை  – அவன் கூறுவதை ஏற்றுக்கொள்கின்றாய், அனை – அன்னை, இவள் – புது மலர் மழைக்கண் – இவளுடைய புதிய மலரைப் போன்ற ஈரக் கண்கள், புலம்பிய நோய்க்கே – வருந்தியதால் ஏற்பட்ட பசலை நோய், தனிமையுற்றதால் ஏற்பட்ட பசலை நோய்

ஐங்குறுநூறு 247 – கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது  

அன்னை தந்தது ஆகுவது அறிவென்,
பொன் நகர் வரைப்பின் கன்னம் தூக்கி
முருகென மொழியும் ஆயின்,
அரு வரை நாடன் பெயர் கொலோ அதுவே.

பொருளுரைஉன்னுடைய வளமை மிக்க இல்லத்தில், உன் கையில் தாயத்தைக்கட்டி, முருகனின் கோபத்தைத் தணிப்பதற்கான சடங்குகளைச் செய்ய உன் தாய் ஏன் வேலனை அழைத்தாள் என்று புரிகின்றது.  ஒரு வேளை உன்னுடைய  அரிய மலை நாட்டுக் காதலனின் பெயர் முருகனோ?

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  அதுவே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  அன்னை தந்தது – உன் அன்னை தந்தது,  ஆகுவது அறிவென் – எதனால் என்று புரிகின்றது,  பொன் நகர் – வளமை மிக்க இல்லம், அழகிய இல்லம்,  வரைப்பின் – வீட்டின் எல்லை,  கன்னம் தூக்கி – தாயத்தைக் கட்டி,  முருகென மொழியும் ஆயின் – முருகன் தான் கரணம் என்று,  அருவரை நாடன் – அரிய மலை நாட்டவன்,  பெயர் கொலோ அதுவே – பெயர் அதுவாக இருக்குமோ?

ஐங்குறுநூறு 249 – கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பெய்ம்மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு
முருகென மொழியும் வேலன், மற்று அவன்
வாழிய, இலங்கும் அருவிச்
சூர்மலை நாடனை அறியாதோனே.

பொருளுரை  புதிதாகப் பெய்த மணலில் கழங்குக் காய்களை வைத்துச் சடங்குகள் செய்து, தாயிடம் “உன் மகளின் நோய் முருகனால் ஏற்பட்டது” என்று கூறுகின்றான் வேலன்.  அவன் வாழ்க.  சிறப்பான அருவிகளை உடைய அச்சம் தரும் மலைகளையுடைய நாடவனான உன் காதலனை வேலன் அறியவில்லை.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  மற்று – அசை நிலை, வாழிய – இகழ்ச்சிக் குறிப்பு, அறியாதோனே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  பெய்ம்மணல் – புதிதாக பெய்த மணல், வரைப்பின் – மலையகத்தில், இல்லத்தில், கழங்குபடுத்து – கழங்குகளைப் பரப்பிக் குறி பார்த்து, அன்னைக்கு – தாயிடம்,  முருகென மொழியும் – இந்த நோய் முருகனால் ஏற்பட்டது எனக் கூறும், வேலன் – முருகன் பூசாரி, மற்று அவன்  வாழிய – அவன் வாழ்க, இலங்கும் – விளங்கும், அருவி – அருவிகள், சூர் – அச்சம் தரும், வருத்தும் தெய்வங்களையுடைய,  மலை நாடனை –  மலை நாடவனை, அறியாதோனே – அறியாதவன்

ஐங்குறுநூறு 253, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
குன்றக் குறவன் சாந்த நறும் புகை
தேங்கமழ் சிலம்பின் வரையகம் கமழும்
கானக நாடன் வரையின்,
மன்றலும் உடையள் கொல் தோழி, யாயே?

பொருளுரை:   மலையில் வாழும் குறவன் சந்தன மரத்தின் கட்டைகளை எரிப்பதால் நறுமணமான புகை, தேனின் மணத்தையுடைய மலைச் சரிவிலும் மலையிலும் பரவும் காடுகளை உடைய நாட்டவன், என்னை மணந்து கொள்வான் ஆயின், என் தாய் திருமண விழாவை நடத்துவாளா தோழி?

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சாந்தம் நறும்புகை இயல்பாகவே சிலம்பின்கண் கமழும் தேன் மணத்தோடு விரவிக் காடெல்லாம் கமழ்ந்து அக் காட்டினூடே இருக்கும் தீ நாற்றத்தை மாற்றுவது போன்று, எம் பெருமான் வரைதலானே உண்டாகும் சிறப்பு நம் சுற்றத்தார் செய்யும் மன்றச் சிறப்பொடு விரவி நாடெங்கும் பரவி ஊரில் உண்டாகிய அம்பலையும் அலரையும் அழிக்கும் என்பது.  இலக்கணக் குறிப்பு:  கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், யாயே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  குன்றக் குறவன் – மலையில் வாழும் குறவன், சாந்த நறும் புகை – கொளுத்திய சந்தனத்தின் நறுமணமான புகை, தேங்கமழ் சிலம்பின் – தேனின் மணம் (இனிமையான மணம்) கமழும் மலைச் சரிவில்,   வரையகம் கமழும் – மலை முழுக்க கமழும், கானக நாடன் – காடுகளை உடைய நாட்டவன், வரையின் – மணந்து கொள்வான் ஆயின், மன்றலும் – திருமண விழாவையும், உடையள் கொல் தோழி – நடத்துவாளா தோழி, யாயே – தாய்

ஐங்குறுநூறு 258, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி 
குன்றக் குறவன் காதல் மடமகள்,
அணி மயில் அன்ன அசை நடைக் கொடிச்சியைப்,
பெருவரை நாடன் வரையும் ஆயின்,
கொடுத்தனெம் ஆயினோ நன்றே,
இன்னும் ஆனாது, நன்னுதல் துயரே.

பொருளுரை:   குன்றக் குறவனுடைய அன்புடைய மகளாகிய, மயிலைப் போன்ற சாயலையும் அசைந்த நடையையுமுடைய என் தோழியை, பெரிய மலைநாடன் திருமணம் புரிய விரும்புவானாயின், நாம் அவளை அவனுக்குக் கொடுத்தோம் ஆயின் நல்லது.  நாம் மறுத்தோம் ஆயின், அழகிய நெற்றியையுடைய இவளுடைய துயரம் குறையாது மிகும்.

குறிப்பு:   இலக்கணக் குறிப்பு:   அன்ன – உவம உருபு, a comparison word, நன்னுதல் – அன்மொழித்தொகை, ஆயினோ – ஓகாரம் அசை நிலை, நன்றே – ஏகாரம் அசை நிலை, துயரே – ஏகாரம் அசை நிலை.  குன்றக் குறவன் காதல் மடமகள் (1) – தி. சதாசிவ ஐயர் உரை – குன்றக்குறவனின் காதல் மடமகள், ஒளவை துரைசாமி உரை – குன்றக் குறவனுடைய அன்புடைய மகள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நம் குன்றில் உறையும் குறவர் தலைவனாகிய நம் பெருமானுடைய பேரன்பிற்குப் பாத்திரமான இளமகள்.

சொற்பொருள்:  குன்றக் குறவன் காதல் மடமகள் – குன்றக் குறவனுடைய அன்புடைய மகள், அணி மயில் அன்ன அசை நடைக் கொடிச்சியை – மயிலைப் போன்ற சாயலையும் அசைந்த நடையையுமுடைய என் தோழி,  பெருவரை நாடன் வரையும் ஆயின் – பெரிய மலைநாடன் திருமணம் புரிய விரும்புவானாயின், கொடுத்தனெம் ஆயினோ நன்றே – நாம் அவளை கொடுத்தோம் ஆயின் நல்லது, இன்னும் ஆனாது நன்னுதல் துயரே – நாம் மறுத்தோம் ஆயின் அழகிய நெற்றியையுடைய இவளுடைய துயரம் குறையாது மிகும்

ஐங்குறுநூறு 264, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
இளம் பிறையன்ன கோட்ட கேழல்,
களங்கனியன்ன பெண்பால் புணரும்,
அயம் திகழ் சிலம்ப! கண்டிகும்,
பயந்தன மாதோ, நீ நயந்தோள் கண்ணே.

பாடல் பின்னணி:  பகற்குறிக்கண் வந்த தலைவனிடம் தோழி வரைவு கடாயது.

பொருளுரை:   இளம்பிறையை ஒத்த கோட்டுடைய (தந்தங்களையுடைய) ஆண் பன்றி களாப்பழத்தின் நிறமுடைய பெண் பன்றியைப் புணர்கின்ற, நீர் விளங்கும் மலைநாடனே! நீ விரும்பும் இவளின் கண்கள் பசலை அடைந்துள்ளன.  இதைக் காண்பாயாக!

குறிப்பு:   மேற்கோள்: அகநானூறு 322 – பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி.  உள்ளுறை:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கேழல் செவ்வி அறிந்து பிணவைப் புணரும் என்பது, கீழ்ச் சாதி விலங்கினங்களின்பால் இயல்பாகவே காணப்படுகின்ற அளியுடைமைதானும் நின்பாற் கண்டிலேம் என்பது.  இலக்கணக் குறிப்பு:  கண்டிகும் – இகும் முன்னிலை அசைச் சொல், மாதோ – மாது, ஓ அசை நிலைகள், expletives, கண்ணே – ஏகாரம் அசை நிலை.  பயந்தன (4) – ஒளவை துரைசாமி உரை – எதுகை நோக்கிப் பசந்தன என்பது பயந்தன என்றாயிற்று.

சொற்பொருள்:  இளம் பிறையன்ன கோட்ட கேழல் – இளம்பிறையை ஒத்த கோட்டுடைய (தந்தங்களையுடைய) ஆண் பன்றி, , களங்கனியன்ன பெண்பால் புணரும் – களாப்பழம் போன்ற நிறமுடைய பெண் பன்றியைப் புணர்கின்ற, அயம் திகழ் சிலம்ப – நீர் விளங்கும் மலைநாடனே, கண்டிகும் – காண்பாயாக, பயந்தன – பசலை அடைந்தன, மாதோ – மாது, ஓ அசை நிலைகள், நீ நயந்தோள் கண்ணே – நீ விரும்பும் இவளின் கண்கள்

ஐங்குறுநூறு 272, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னதுதலைவன் கேட்கும்படியாக
கரு விரல் மந்திக் கல்லா வன்பறழ்,
அரு வரைத் தீம் தேன் எடுப்பி அயலது
உரு கெழு நெடும் சினைப் பாயும் நாடன்,
இரவின் வருதல் அறியான்,
“வரும் வரும்” என்பள் தோழி, யாயே.

பாடல் பின்னணி:  இரவுக் குறியைச் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் தலைவன் வந்து நீங்குகின்றான்.  மறுநாள் பகற்குறி இடத்தை அடைகின்றான்.  தலைவியும் தோழியும் அங்கு இருக்கின்றனர்.  அவன் ஒதுங்கி நிற்கின்றான்.  அவன் வந்ததை உணர்ந்த தலைவி, அவனுக்குத் தன்னுடைய மன நிலையை உணர்த்துவதற்காகத் தோழியிடம் கூறுவது போல் கூறுகின்றாள்.

பொருளுரை:   கருமையான விரலையுடைய பெண் குரங்கினுடைய, மரக் கிளைகளில் தாவுவது போன்ற தொழிலைக் கற்காத வலிமையான குட்டி அரிதான மலையில் உள்ள தேன் கூட்டைக் கலைத்து விட்டு, அருகில் உள்ள நீண்ட கிளையின் மீது குதிக்கும் நாட்டவன் என் காதலன்.  அவன் இரவில் வருவதில்லை.  ஆனால் என் தாய், ‘அவன் வருவான், வருவான்’ என்று கூறுகின்றாள்.

குறிப்பு:  உள்ளுறை – புலியூர் கேசிகன் உரை – மந்தியின் வன்பறழ் தலைவனாகவும், தேன் தலைவியோடு பெரும் காம இன்பமாகவும், தேனீக்கள் சுற்றத்தாராகவும், பறழ் சினையிற் பாய்ந்தது தலைவன் தமர்க்கு அஞ்சி தப்பியதாகவும், யாய் வரும் என்றது அதனைக் கேட்டு கூறியதாகவும் கொள்ளுக.  அஃதாவது இன்பம் மறந்து உயிர் தப்பினாற் போதும் என்று ஓடிச் செல்லுதல் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு:  கல்லா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், வரும் வரும் – அடுக்குத்தொடர், யாயே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  கரு விரல் மந்தி – கருமையான விரலையுடைய பெண் குரங்கு, கல்லா – மரக் கிளைகளில் தாவுவது போன்ற தொழிலைக் கற்காத, மன வளர்ச்சி அடையாத, வன் பறழ் – வலிமையான குட்டி, அரு வரை – அரிதான மலை,  தீம் தேன் – இனிய தேன், எடுப்பி – உடைக்கும்,  அயலது – அருகில்,  உரு கெழு – அச்சம் தரும்,  நெடும் சினை – உயர்ந்த மரக்கிளை,  பாயும் – தாவும்,  நாடன் – நாட்டினன், இரவின் வருதல் அறியான் – இரவில் வருவதில்லை, வரும் வரும் என்பள் – அவன் வருவான் வருவான் என்கின்றாள், தோழி  – என் தோழியே, யாயே – என் தாய்

ஐங்குறுநூறு 274, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மந்திக் கணவன் கல்லாக் கடுவன்
ஒண் கேழ் வயப்புலி குழுமலின், விரைந்து, உடன்
குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன்
சென்றனன், வாழி தோழி, என்
மென் தோள் கவினும் பாயலும் கொண்டே.

பொருளுரை:   நீடு வாழ்வாயாகத் தோழி!  பெண் குரங்கின் கணவனான முரட்டு ஆண் குரங்கு, ஒளியும் நிறமும் உடைய வலிமையான புலி உருமுவதைக் கேட்டு உயர்ந்த மலையின் பக்க மலைக்குத் தாவி ஓடும் நாட்டவன், என்னிடமிருந்து விலகிச் சென்று விட்டான்.  அவன் போகும் பொழுது, என்னுடைய மென்மையான தோள்களின் அழகையும் என் உறக்கத்தையும் தன்னோடு கொண்டு போய் விட்டான்.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நம்பெருமான் பிரிந்தானாக என்னலும் உறக்கமும் என்னைக் கைவிட்டுப் போயினகாண், என் வேறுபாடு கண்டு இவ்வூர் அலர் தூற்றுமே என்றும், எம்பெருமான் எப்பொழுது வருகுவன்? வராது தங்கிவிடுவானோ? வாரான் ஆயின் எவ்வாறு உய்குவன்? என்ன எண்ணி எண்ணி வருந்துகின்றேன் என்பது,  புலியூர் கேசிகன் உரை –  புலியின் குழுமலுக்கு அஞ்சிக் கடுவன் குன்றின் உயர்ந்த பக்கத்தே ஓடும் நாடும் என்றது, யான் அவனை வரைவு முடுக்கற் பொருட்டுப் படைந்துக் கூறிய, ‘யாய் அறிந்தினள்’ ‘வேற்று வரைவு வருதலுண்டு’ என்னும் சொற்களைக் கேட்டு அஞ்சினனாக, அவன் விரைந்து பொருள்தேடி வருதற்பொருட்டு வேற்றுநாடு நோக்கிச் சென்றனன் என்றதாம்.  இலக்கணக் குறிப்பு:  கல்லா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், மந்திக் கணவன் – நான்காம் வேற்றுமைத் தொகை, கொண்டே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  மந்திக் கணவன் – பெண் குரங்கின் கணவன், கல்லாக் கடுவன் – முரட்டு ஆண் குரங்கு (அறியாமையுடைய ஆண் குரங்கு), ஒண் கேழ் – ஒளிப் பொருந்திய நிறமுடைய, வயப்புலி – வலிமையானப் புலி, குழுமலின் – முழங்குவதால், விரைந்து – விரைந்து, உடன் – உடனே, குன்று உயர் அடுக்கம் கொள்ளும் – உயர்ந்த மலையின் பக்க மலைக்குத் தாவி ஓடும்,  நாடன் – நாட்டவன், சென்றனன் – சென்று விட்டான், வாழி தோழி – வாழ்த்துக்கள் தோழி, என் மென் தோள் – என்னுடைய மென்மையானத் தோள்களின், கவினும் – அழகையும், பாயலும் கொண்டே – உறக்கத்தையும் கொண்டுச் சென்றான்

ஐங்குறுநூறு 277, கபிலர்குறிஞ்சித் திணை –  தோழி தலைவனிடம் சொன்னது
குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
குன்ற நாட! நின் மொழிவல் என்றும்
பயப்ப நீத்தல் என் இவள்
கயத்துவளர் குவளையின் அமர்த்த கண்ணே.

பொருளுரை:  குன்ற நாடனே!  உன்னுடைய மலையில் குறவரின் வீட்டு முற்றத்தில் மிருகங்கள் உரசும் பாறையில் பெண் குரங்கு ஒன்றும் ஆண் குரங்கு ஒன்றும் துள்ளிக் குதித்து விளையாடுகின்றன.  உன்னிடம் நான் ஒன்று கேட்க வேண்டும்.  ஆழமான குளத்தில் வளரும் குவளை மலர்களைப் போன்ற என் தோழியின் அழகிய கண்கள், நீ நீங்கியதால் பசலை அடைந்தன.  அவ்வாறு நீ அவளைப் பிரிந்து செல்வதற்குக் காரணம் யாது?

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  கல்லா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், மொழிவல் – தன்மை ஒருமை வினைமுற்று, கண்ணே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  குறவர் – மலையில் வாழும் குறவன்,  முன்றில் – வீட்டு முற்றத்தில்,  மா தீண்டு துறுகல் – மிருகங்கள் உரசும் பாறை, கல்லா மந்தி – மடமையுடைய பெண் குரங்கு,  கடுவனோடு – ஆண் குரங்கோடு,  உகளும் – விளையாடும், குன்ற நாட – குன்ற நாடனே,  நின் மொழிவல் – உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்,  என்றும் – என்றும், பயப்ப – பசலை அடைய,  நீத்தல் என் – நீ நீங்குதல் எதற்காக,  இவள் –  இவள், கயத்து வளர் – குளத்தில் வளரும்,  குவளையின் – குவளை மலர்களைப் போன்ற, அமர்த்த கண்ணே – பொருந்தின கண்கள்

ஐங்குறுநூறு 281, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது
வெள்ள வரம்பின் ஊழி போகியும்
கிள்ளை வாழிய பலவே, ஒள் இழை
இரும்பல் கூந்தல் கொடிச்சி
பெருந்தோள் காவல் காட்டியவ்வே.

பொருளுரை:  இந்தக் கிளிகள் நூறாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம் முடிந்தாலும் வாழட்டும், ஒளியுடைய நகையை அணிந்த, கருமையான அடர்ந்த கூந்தலையும், பெரிய தோட்களையும் உடைய குறிஞ்சி நிலத்தின் பெண்ணைப் புனத்தைக் காவல் புரிய வைத்தனவால்!

குறிப்பு:  பதிற்றுப்பத்து 63 – ஆயிர வெள்ள ஊழி, பதிற்றுப்பத்து 90 – ஊழி வெள்ள வரம்பின ஆக. வெள்ள வரம்பின் ஊழி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெள்ளம் வரம்பின் ஊழி என்றது வெள்ளம் என்னும் பேரண்ணை தமக்கு அளவாகக் கொண்ட ஊழிகள் பற்பல என்றவாறு, ஒளவை துரைசாமி உரை – பேரண்ணை வரம்பாக உடைய ஊழியாகிய காலம் முடியுனும் முடியாது நெடிது வாழுமாக என்றவாறு.  இலக்கணக் குறிப்பு:  வாழிய – வியங்கோள் வினைமுற்று, பலவே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  வெள்ள வரம்பின் ஊழி போகியும் – நூறாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம் முடிந்தாலும், கிள்ளை வாழிய பலவே – கிளிகள் பல் ஊழிக்காலம் வாழட்டும், ஒள் இழை – ஒளியுடைய நகைகள், இரும்பல் கூந்தல் – கருமையான அடர்ந்த கூந்தல், கொடிச்சி – குறிஞ்சி நிலத்தின் பெண், மலையில் வாழும் பெண், பெருந்தோள் – பெரிய தோள், காவல் – காவல், காட்டிய – தோற்றுவித்தன, அவ்வே – அவை

ஐங்குறுநூறு 282, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
சாரல் புறத்த பெருங்குரல் சிறு தினைப்
பேரமர் மழைக் கண் கொடிச்சி கடியவும்
சோலைச் சிறு கிளி உன்னும் நாட!
ஆர் இருள் பெருகின, வாரல்,
கோட்டுமா வழங்கும் காட்டக நெறியே.

பாடல் பின்னணி:  இரவுக்குறியில் வந்து மீளும் தலைவனிடம் தோழி வரைவு வேண்டுகின்றாள்.

பொருளுரை:   மலைச் சரிவில் உள்ள நிலத்தில் கொத்துக்களாகச் சிறு தினை வளர்ந்துள்ளது.  அதை உண்ணுவதற்குச் சோலைக் கிளிகள் வரும்.  அவற்றைப் பெரிய அமர்ந்த ஈரமானக்  கண்களையுடையக் குறிஞ்சி நிலப் பெண் விரட்டுவாள்.  அவை மீண்டும் வர நினைக்கும்.  அத்தகைய நாடனே!  அடர்ந்த இருள் மிகுந்துள்ளது. காட்டு வழிகளில் தந்தங்களையுடைய யானைகள் திரியும். நீ அந்த வேளையில் வராதே.

குறிப்பு:  உள்ளுறை – புலியூர் கேசிகன் உரை – கொடிச்சி கடியவும் சோலைச் சிறு கிளிகள் தினையையே உன்னும் நாட என்றது, காவலர் கவனமாகக் காத்து ஒழுகவும், களவு ஒழுக்கத்தையே நீயும் விரும்பாநின்றாய் என்பதாம்.  கிளி தான் மடமையானது.  வரும் துயர் பற்றி நினையாதது.  நீயுமோ அவ்வாறு அறியாமையுடையை? என்பது.  இலக்கணக் குறிப்பு:  வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று, நெறியே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  சாரல் புறத்த – மலைச் சரிவில் உள்ள நிலத்தில், பெருங்குரல் – பெரியக் கொத்துக்கள்,  சிறுதினை – சிறிய தினை, பேரமர் – பெரிய அமர்ந்த, மழைக் கண் கொடிச்சி – ஈரமுடைய கண்களையுடைய மலைப் பெண், குளிர்ச்சியுடைய கண்களையுடைய  மலைப் பெண், கடியவும் – விரட்டவும், சோலைச் சிறு கிளி – சோலையில் உள்ள சிறுக் கிளிகள், உன்னும் நாட – நினைக்கும் நாடனே, ஆர் இருள் பெருகின- மிகுதியான இருள் கூடிவிட்டது, அடர்ந்த இருள் கூடிவிட்டது, ,  வாரல் – வராதே, கோட்டு மா – தந்தங்களையுடைய யானைகள், வழங்கும் – திரியும், காட்டக நெறியே – காட்டு வழிகளில்

ஐங்குறுநூறு 285, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பின் இரும் கூந்தல் நல் நுதல் குறமகள்
மெல் தினை நுவணை உண்டு தட்டையின்
ஐவனச் சிறுகிளி கடியும் நாட!
வீங்கு வளை நெகிழப் பிரிதல்
யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே?

பொருளுரை:   பின்னிய அடர்ந்த கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய குறவனின் மகள் தினை மாவை உண்டு, ஐவன நெல்லைப் பாதுக்காக்க தட்டையால் கிளிகளை விரட்டும் நாடனே, இறுக்கமாக இருந்த இவளுடைய வளையல்கள் இப்பொழுது வழுக்கி விழுகின்றன.  இவளை இவ்வாறு துறக்க எப்படி உன்னால் முடிகின்றது?  

குறிப்பு:  உள்ளுறை – புலியூர் கேசிகன் உரை – குறமகள் தினைமாவை உண்டபடி, ஐவனம் படியும் கிளிகளைக் கடியும் நாட என்றது, இவளும் நீ முன் செய்த தண்ணளியை மனங்கொண்டு தன்னை வருத்தவரும் காமநோயினைப் பிறர் காணாதவாறு, தன் பொறுமையால் காத்து வருகின்றாள் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு:  ஐவனச் சிறு கிளி – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை, வல்லுநையோ – ஓகாரம் அசைநிலை, துறந்தே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  பின் இரும் கூந்தல் – பின்னிய அடர்ந்த ( அல்லது கருமையான) கூந்தல்,  நல் நுதல் – அழகிய நெற்றி,  குறமகள் – மலைக்குறவனின் மகள், மெல்தினை – மெல்லிய தினை,  நுவணை – மாவை,  உண்டு – உண்டு,  தட்டையின் – தட்டையான மூங்கில் கிலுக்கினால், ஐவன – மலை அரிசி,  சிறுகிளி – சிறிய கிளி,  கடியும் – விரட்டும்,  நாட – நாட்டவனே, வீங்கு வளை – இறுக்கமான வளையல்கள், நெகிழ – வழுக்கி விழ, பிரிதல் – பிரிந்து செல்லுதல், யாங்கு வல்லுநையோ – எவ்வாறு நீ இப்படி செய்ய முடியும், ஈங்கு இவள் துறந்தே – இங்கு இவளை நீ துறந்து

ஐங்குறுநூறு 287, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நெடு வரை மிசையது குறுங்கால் வருடை
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட!
வல்லை மன்ற, பொய்த்தல்
வல்லாய் மன்ற, நீ அல்லது செயலே.

பொருளுரை:  தினையை உண்ண வரும் கிளிகள் குறுகிய கால்களையுடைய மலை ஆடுகளைப் பார்த்து அஞ்சும் மலை நாடனே!  நீ பொய் சொல்லுவதில் வல்லவன்.  ஆனால் துன்பம் விளைவிக்க மாட்டாய்.

குறிப்பு:  உள்ளுறை – பழைய உரை – தமக்கு ஓர் இடையூறும் செய்யாத நெடுவரைக்கண்ணே வாழும் வருடையைத் தினை மேய்கின்ற கிள்ளை வெரூஉம் நாட என்றது, எம் சுற்றத்தார் வரைவிற்கு இடையூறு செய்யார் என்பது அறியாது வெருவுகின்றாய் என்பதாம்.  இலக்கணக் குறிப்பு:  பொய்த்தல் – தொழிற்பெயர், வல்லை – முன்னிலை உடன்பாட்டு வினைமுற்று, வல்லாய் – முன்னிலை எதிர்மறை வினைமுற்று, செயலே – செயல் தொழிற்பெயர், ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்: நெடு வரை – உயர்ந்த மலை, மிசையது – மேல், குறுங்கால் வருடை – குறுகிய கால்களையுடைய மலை ஆடுகள், தினை பாய் கிள்ளை – தினையை உன்ன வரும் கிளிகள், வெரூஉம் – அச்சம் கொள்ளும், நாட – நாடனே, வல்லை – வல்லமை உடையை, மன்ற – உறுதியாக, அசைநிலை, பொய்த்தல் வல்லாய் – நீ பொய் சொல்லுவதில் வல்லவன், மன்ற – அசை, நீ – நீ, அல்லது செயலே – துன்பம் செய்வது இல்லை

ஐங்குறுநூறு 289, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது 
கொடிச்சி இன்குரல் கிளி செத்து அடுக்கத்துப்
பைங்குரல் ஏனல் படர் தரும் கிளியெனக்
காவலும் கடியுநர் போல்வர்
மால் வரை நாட! வரைந்தனை கொண்மோ.

பொருளுரை  மலை நாடனே!  குறிஞ்சி நில மகளான கொடிச்சியின் இனிய குரலை தம்மை ஒத்த கிளியின் குரல் என்று நினைத்து, மலை அடுக்கத்தில் வளரும் பசுமையான தினைக் கதிர்களையுடைய தினைப் புனத்திற்கு கிளிகள் வரும் என எண்ணி இவளுடைய உறவினர்கள் இவள் தினைப் புனத்தைக் காவல் செய்வதிலிருந்து இவளை நீக்குவார்கள்.  அதனால்  விரைவில் வந்து இவளை திருமணம் செய்து அழைத்துக் கொண்டு செல்வாயாக.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொடிச்சியின் குரலைத் தம் இனமாகிய கிளியின் குரல் என்று கருதி ஏனலிலே கிளி படரும் என்றது, குறிப்பாகத் தலைவி தினை காத்தாற்குச் செல்லின் நின் போல்வார் அவளைக் கருதி ஆண்டு வருதலும் கூடும் என்று கருதியே அவளை இத்தொழிலில் விடார் ஆயினர் என்பது.  இலக்கணக் குறிப்பு:  கிளி – கிளியின் குரலுக்கு ஆகுபெயர், காவலும் – உம்மை சிறப்பு, எச்ச உம்மையுமாம், வரைந்தனை – முன்னிலை வினைமுற்று, கொண்மோ – மோ முன்னிலை அசை.

சொற்பொருள்:  கொடிச்சி – மலை நாட்டுப் பெண்,  இன்குரல் – இனிய குரல்,  கிளி – கிளி, செத்து – நினைத்து, அடுக்கத்து – அடுக்கு மலையில்,  பைங்குரல் –  பசுமையான தினைக் கதிர்,  ஏனல் – தினை,  படர் தரும் – வந்து சேரும்,  கிளியென – கிளியின் குரல் என்று,  காவலும் கடியுநர் போல்வர் – காவல் காப்பதிலிருந்து நீக்குவார்கள் போல் உள்ளது,  மால் – உயர்ந்த, வரை நாட – மலை நாடனே,  வரைந்தனை கொண்மோ – இவளை மணந்து அழைத்துச் செல்

ஐங்குறுநூறு 297 கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை,
பூக்கொய் மகளிரின் தோன்றும் நாட!
பிரியினும் பிரிவது அன்றே,
நின்னொடு மேய மடந்தை நட்பே.

பாடல் பின்னணி:  தோழி வரைவு கடாயது.

பொருளுரை  மலர்கள் விரிந்துள்ள வேங்கை மரத்தின் பெரிய கிளைகளில் தங்கி இருக்கும் மயில்,  பூப்பறிக்கும் மகளிரைப்போல் தோன்றும் நாடனே!  நீ பிரிந்தாலும் பிரியத்தக்கது இல்லை உன்னுடன் பொருந்திய இந்த மடந்தையின் நட்பு.

குறிப்பு:  உள்ளுறை:  புலியூர் கேசிகன் உரை – மலர்ந்த வேங்கைச் சினைக்கண் இருக்கும் மயில், மகளிர் போலத் தோன்றும் நாட என்றது, நீயும் புரியாய்  எனினும் புரிவான் போலத் தோன்றுகின்றனை என்பதாம்.  இலக்கணக் குறிப்பு:  தோகை – ஆகுபெயர், மகளிரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, பிரிவது – வினையாலணையும் பெயர், நட்பே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை – மலர்கள் விரிந்துள்ள வேங்கை மரத்தின் பெரிய கிளைகளில் இருக்கும் மயில், பூக்கொய் மகளிரின் தோன்றும் நாட – பூப்பறிக்கும் மகளிரைப்போல் தோன்றும் நாடனே,  பிரியினும் பிரிவது அன்றே – நீ பிரிந்தாலும் பிரியத்தக்கது அன்று, நின்னொடு மேய மடந்தை நட்பே – உன்னுடன் பொருந்திய மடந்தையின் நட்பு

ஐங்குறுநூறு 300, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கொடிச்சி கூந்தல் போலத் தோகை
அம் சிறை விரிக்கும் பெருங்கல் வெற்பன்
வந்தனன், எதிர்ந்தனர் கொடையே,
அம் தீம் கிளவி பொலிக நின் சிறப்பே.

பாடல் பின்னணி:  தலைவன் வரைவு வேண்ட, தலைவியின் குடும்பத்தார் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டனர் என்னும் நற்செய்தியை அவளிடம் கூறுகின்றாள் தோழி.

பொருளுரைகுறிஞ்சி நிலப் பெண்ணின் கூந்தலைப் போன்று உள்ள தன் அழகிய சிறகுகளை விரித்து ஆடும் மயில்களை உடைய பெரிய மலை நாடன் வந்தான், உன்னைப் பெண் கேட்பதற்கு.  நம் குடும்பத்தார் உன்னை அவனுக்குத் தருவதற்கு ஒத்துக்கொண்டனர். அழகிய இனிய சொற்களையுடையவளே!  பொலிவு அடையட்டும் உன்னுடைய சிறப்பு.

குறிப்பு:  உள்ளுறை – புலியூர் கேசிகன் உரை – கொடிச்சி கூந்தல் போல மஞ்ஞை சிறகை விரிக்கும் வெற்பன் என்றது, நின் மகிழ்ச்சிக்கு தகுந்தவாறு தமரும் மகிழ்ச்சியோடு அவனுக்கே நின்னை கொடை நேர்ந்தனர் என்பது.  இலக்கணக் குறிப்பு:  அம் தீம் கிளவி – அன்மொழித்தொகை.

சொற்பொருள்:  கொடிச்சி  – குறிஞ்சி நிலப் பெண், கூந்தல் போலத் தோகை – கூந்தல் போன்ற தோகையுடைய, அம் சிறை – அழகிய சிறகுகளை, விரிக்கும் – விரிக்கும், பெருங்கல் வெற்பன் – பெரிய மலையின் தலைவன், வந்தனன் – வந்தான், எதிர்ந்தனர் – ஏற்றுக்கொண்டனர், ஒத்துக்கொண்டனர் (உன் பெற்றோர்கள்), கொடையே – (உன்னை அவனுக்கு) தருவதற்கு, அம் தீம் கிளவி – அழகிய இனியச் சொற்களை உடையவளே, பொலிக நின் சிறப்பே – உன் சிறப்பு பொலியட்டும்

ஐங்குறுநூறு 303, ஓதலாந்தையார்பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
புதுக் கலத்தன்ன கனிய ஆலம்
போகில் தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம்,
தண்ணிய இனியவாக,
எம்மொடுஞ் சென்மோ, விடலை நீயே.

பொருளுரை:   பாலை நிலத் தலைவனே!  புதிய மண் பாத்திரத்தைப் போல் (சிகப்பாக) உள்ள ஆல மரத்தின் இனிய பழங்களை உண்ண வரும் போகில் பறவைகள், பாலை நிலத்தின் கடுமையான வெப்பத்திற்கு அஞ்சி அம்மரத்தை விட்டு விலகாமல் அங்குத் தங்கியிருக்கும்.  அப்படிப்பட்ட செல்வதற்கு அரிய (கடினமான) வழியில் என் தோழியுடன் நீ சென்றால், குளிர்ச்சியும் இனிமையும் உனக்குக் கிடைக்கும்.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கனியுடைய ஆலமரம் பறவையின் செலவைத் தடுத்துத் தன்பால் இருத்திக் கொள்ளும் வேனில் என்றது, எம் பெருமாட்டியை உடன் கொண்டு போகாய் எனின் அவள் ஒருதலையாக நின் செலவினைத் தடுத்து தன்பால் இருத்திக்கொள்வள் என்பது.

சொற்பொருள்:  புதுக் கலத்தன்ன – புது மண் பானையைப் போல்,  கனிய – பழங்களையுடைய, ஆலம் – ஆல மரம், போகில் – போகில் என்ற வகைப்  பறவைகள்,  தனைத் தடுக்கும் – அதைத் தடுக்கும்,  வேனில் – கோடைக் காலம்,  அருஞ்சுரம் – செல்வதற்கு அரிய (கடினமான) பாலை நிலம்,  தண்ணிய – குளிர்ந்த, இனியவாக – இனியவாக,  எம்மொடுஞ் சென்மோ – என் தோழியுடன் சென்றால், விடலை – பாலை நிலந் தலைவனே, நீயே – நீ

ஐங்குறுநூறு 304, ஓதலாந்தையார்பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
ஆன் நீர்ப் பத்தல் யானை வெளவும்
கல் அதர்க் கவலை செல்லின், மெல்லியல்
புயல் நெடும் கூந்தல் புலம்பும்,
வயமான் தோன்றல்! வல்லாதீமே.

பொருளுரை:  அறியாமையுடைய இடையர்கள் தங்களின் பசுக்கள் நீர் குடிப்பதற்காகக் கோலினால் பள்ளங்களைத் தோண்டுவார்கள்.  அதில் நிறையும் நீரை யானைகள் குடிக்கும்.  பல பிரிவுகள் உள்ள அந்த மலைப் பாதையில் நீ சென்றால், வளமான நீண்ட கூந்தலை உடைய என் தோழி தனிமையால் வருந்துவாள்.  குதிரைகள் உடைய தலைவனே!  நீ அவ்வாறு  வல்லமையுடன் செல்லாதே.

குறிப்பு:  உள்ளுறை – புலியூர் கேசிகன் உரை – கோவலர் நீரை யானை வௌவிக் கொண்டு அவரை நலிவுக்கு உட்படுத்தலே போல, இவள் நலனையும் பசலை பற்றிப் பறித்து வௌவிக் கொண்டு, இவளைப் பெரிதும் நலியச் செய்யும் என்பது,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கோவலர் கோல் கொண்டு அரிதின் முயன்று தோண்டிய குழியின் நீரை அயன்மையுடைய காட்டு யானைகள் கவர்ந்து கொள்ளுதற்கிடமான கல்லதர் என்றது, நீ இவளைப் பிரிந்து செல்லின் இவளது ஒப்பற்ற பேரெழில் பசலைப் பாய்ந்து அழியும் என்றது. கோவலர் குந்தாலி முதலியன இன்றிக் கோலாலே தோண்டிய குழியின் நீர் என்றது, கொள்வாரும் கொடுப்பாருமின்றி நீயிரே நும்முள் தலைப்பட்டு மேற்கொண்ட காதல் வாழ்க்கை என்பது.  ஆன் உண்ணாது யானை உண்ணும் என்றது நீ நுகராமல் பசலை உண்டழிக்கும் என்றது.  இலக்கணக் குறிப்பு:  மெல்லியல் – அன்மொழித்தொகை, நெடுங்கூந்தல் – அன்மொழித்தொகை, தோன்றல் – விளி, an address, வல்லாதீமே – முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல், ஏகாரம் அசை நிலை.  புயல் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழைக்கால்.

சொற்பொருள்:  கல்லாக் கோவலர் – அறியாமையுடைய இடையர்கள், கோலின் தோண்டிய – கோலினால் தோண்டிய, ஆன் – பசு, நீர்ப் பத்தல் – நீர் நிறையும் பள்ளம், யானை வெளவும் – யானைக் குடிக்கும், கல் அதர் – மலைப் பாதை அல்லது கல் நிறைந்த வழி, கவலை – பிரிவுகள் உடைய வழி, செல்லின் – சென்றால், மெல்லியல் – மென்மையான என் தோழி, புயல் நெடும் கூந்தல் – மேகம் போன்ற கரிய நீண்ட கூந்தல், புலம்பும் – தனிமையில் வருந்தும், வயமான் – குதிரைகள் உடைய, தோன்றல் – தலைவனே, வல்லாதீமே – நீ வல்லமை இல்லாது இருப்பாயாக

ஐங்குறுநூறு 306, ஓதலாந்தையார்பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வெல் போர்க் குரிசில்! நீ வியன் சுரம் இறப்பின்,
பல் காழ் அல்குல் அவ்வரி வாடக்
குழலினும் இனைகுவள் பெரிதே
விழவு ஒலி கூந்தல் மாஅயோளே.

பொருளுரை:   போரினை வெல்லும் தலைவனே!  அகன்ற காட்டிற்கு நீ சென்றால், மணிகள் கோத்தச் சரங்களை அணிந்த அல்குலில் உள்ள அழகிய வரிகள் வாட, இவள் பெரிதும் வருந்துவாள்.  குழலைக் காட்டிலும் அதிகமான ஒலியுடன் அழுவாள், விழாக்களின் நறுமணத்தைக் கொண்ட அடர்ந்த கூந்தலையுடைய இந்தக் கருமையான பெண்.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  வெல்போர் – வினைத்தொகை, குரிசில் – விளி, குழலினும் – உம்மை சிறப்பு, பெரிதே – ஏகாரம் அசை நிலை, தேற்றம், மாஅயோளே – அளபெடை, ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   வெல் போர்க் குரிசில் – போரினை வெல்லும் தலைவனே, நீ வியன் சுரம் இறப்பின் – அகன்ற காட்டிற்கு நீ சென்றால், பல் காழ் அல்குல் அவ்வரி வாட – மணிகள் கோத்த சரங்களை அணிந்த அல்குலில் உள்ள அழகிய வரிகள் வாட (அல்குல் – இடை, இடைக்கு கீழ் உள்ள பகுதி), குழலினும் – குழலைக் காட்டிலும்,  இனைகுவள் – வருந்துவாள், பெரிதே – பெரிதாக, மிகவும், விழவு ஒலி கூந்தல் – விழாக்களின் நறுமணத்தைக் கொண்ட அடர்ந்த கூந்தல், மாஅயோளே – கருமையான பெண்

ஐங்குறுநூறு 311, ஓதலாந்தையார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்,
ஆர் இடைச் செல்வோர் ஆறு நனி வெரூஉம்
காடு இறந்தனரே காதலர்,
நீடுவர் கொல், என நினையும் என் நெஞ்சே.

பொருளுரை:    வேங்கை மரத்தின் மலர்களைப் பறிப்பவர்கள் பஞ்சுரம் என்னும் பாலைப் பண்ணில் பாடினாலும், கடினமான வழியில் செல்பவர்கள் மிக்க அஞ்சும் இடமான காட்டுக்குச் சென்ற என் காதலர், அங்கு அதிக நாட்கள் தங்கி விடுவாரோ என்று நினைக்கின்றது என் நெஞ்சு.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வேங்கை கொய்யுநர் செவிக்கு இனியவாகினும் பாலைப் பண்ணைப் பாடுதலாலே வழிச் செல்வோர்க்குப் பாலை நிலத்தின் கொடுமையே தோன்றி அவரைப் பெரிதும் அச்சுறுத்தல் என நற்செய்தியே கூறவும் அவருடைய கொடுமையே என் நினைவில் வந்து வருந்துகின்றது என்பாள்.  இலக்கணக் குறிப்பு:  வெரூஉம் – அளபெடை, வேங்கை – மலருக்கு ஆகியமையால் ஆகுபெயர், இறந்தனரே – ஏகாரம் அசை நிலை, கொல் – ஐயப் பொருட்டு வந்த இடைச்சொல், நெஞ்சே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  வேங்கை கொய்யுநர் – வேங்கை மரத்தின் மலர்களைப் பறிப்பவர்கள், பஞ்சுரம் விளிப்பினும் – பஞ்சுரம் என்னும் பாலைப் பண்ணில் பாடினாலும், ஆர் இடைச் செல்வோர் – கடினமான வழியில் செல்பவர்கள், ஆறு நனி வெரூஉம் – வழியில் மிக்க அஞ்சும், காடு இறந்தனரே காதலர் – காட்டுக்குச் சென்ற காதலர், நீடுவர் கொல் என – அங்கு அதிக நாட்கள் தங்கி விடுவாரோ என்று, நினையும் என் நெஞ்சே – நினைக்கின்றது என் நெஞ்சு

ஐங்குறுநூறு 313, ஓதலாந்தையார்பாலைத் திணை – தலைவியின் தாய் செவிலித் தாயிடம் சொன்னது
தெறுவது அம்ம நும் மகள் விருப்பே
உறு துயர் அவலமொடு உயிர் செலச் சாஅய்ப்
பாழ் படு நெஞ்சம் படர் அடக் கலங்க,
நாடு இடை விலங்கிய வைப்பின்
காடு இறந்தனள், நம் காதலோளே.

பொருளுரை:   நெஞ்சு மிகுந்த வருத்தத்தால் சுடுகின்றது.  பெரும் துயரத்துடன்,  உயிரே போகும் படியான துன்பத்துடன் நாம் மெலிந்து நோயுடன் இருக்குமாறு நம்மை விட்டு அகன்று,  தன் காதலனுடன் சென்று விட்டாள் நம் மகள்.  நம் அன்புக்குரியவள் நாடுகளுக்கு இடையே உள்ள காட்டைக்  கடந்து சென்று விட்டாள்.

குறிப்பு:  நாடு இடை விலங்கிய வைப்பின் (4) – ஒளவை துரைசாமி உரை – நாட்டின் இடையே இனிது சென்று சேர்தற்கு இயலாதவாறு மாறாய்க் காடு பரந்து கிடக்கும் இடம்.  இலக்கணக் குறிப்பு:  நும் மகள் – சுட்டு, விருப்பே – ஏகாரம் பிரிநிலை, உறு துயர் – உறு என்றது மிகுதிப்பொருள் உணர்ந்து வரும் உரிச்சொல், சாஅய் – அளபெடை, காதலோளே – ஏகாரம் அசைநிலை.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).  செவிலி – ஆய்பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாயெனப்படுவாள் செவிலியாகும் (தொல்காப்பியம், களவியல் 34).  தெறுவது (1) – ஒளவை துரைசாமி உரை – துன்பம் செய்வது, யான் அவள் மேல் வாய்த்த காதல் என்னால் தெறப்படுவது என்றவாறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நும்மகள்பால் நுமக்கு உண்டாகும் அவா நும்மால் அழிக்கப்படற்பாலது.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  தெறுவது – சுடுகின்றது, அம்ம – அசைச் சொல், நும் மகள் விருப்பே – உன் மகளின் விருப்பம், உறுதுயர் அவலமொடு – பெரும் துயருடனும் வருத்தத்துடனும், உயிர்செல – உயிர் செல்லும்படி,  சாஅய் – மெலிந்து, மிகவும் துயருற்று, பாழ்படு நெஞ்சம் – துன்பப்படும் நெஞ்சம், படர்  – நோய்,  அடக் கலங்க – வருந்தி கலக்கமுற, நாடு இடை – நாடுகளுக்கு இடையே, விலங்கிய வைப்பின் – விலக்கிய இடத்தில், காடு இறந்தனள் – காட்டைக் கடந்தாள், நம் – நம், காதலோளே – அன்புக்கு உரிய  மகள்

ஐங்குறுநூறு 322, ஓதலாந்தையார்பாலைத் திணை  – தலைவன் சொன்னது
நெடுங்கழை முளிய வேனில் நீடிக்
கடுங்கதிர் ஞாயிறு கல் பகத் தெறுதலின்
வெய்ய வாயின முன்னே, இனியே,
ஒண்ணுதல் அரிவையை உள்ளுதொறும்,
தண்ணிய வாயின, சுரத்திடை ஆறே.

பொருளுரை:   உயர்ந்த மூங்கில்கள் உலருமாறு வேனில் நீடுதலால், மிகுந்த வெப்பத்தையுடைய கதிர்களுடைய ஞாயிறு கற்கள் பிளக்குமாறு காய்வதால், முன்பு வெம்மையாயிருந்தது பாலை நிலத்தின் வழி.  இப்பொழுது அவளை நினைக்கும் பொழுதெல்லாம் அது குளிர்ச்சியாக உள்ளது.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  இனியே – ஏகாரம் அசை நிலை, கல்பக – கல்லும் என்பதன் உம்மை தொக்கது, ஆறே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   நெடுங்கழை – உயர்ந்த மூங்கில், முளிய – காய, வேனில் – வேனில் காலம்,  நீடி – நீடித்து, கடுங்கதிர் ஞாயிறு – மிக்க வெப்பத்தையுடைய ஞாயிறு, கல் பகத் தெறுதலின் – கற்கள் பிளக்குமாறு எரிந்ததால், வெய்ய ஆயின – வெப்பமாக இருந்தது,  முன்னே – முன்பு, இனியே  – இப்பொழுது, ஒண்ணுதல் அரிவையை உள்ளுதொறும் – ஒளி பொருந்திய நெற்றியை உடைய இளம் பெண்ணை எண்ணும் பொழுதெல்லாம், தண்ணிய வாயின – குளிர்ச்சி  அடைந்தது, சுரத்திடை ஆறே – பாலை நிலத்தின் வழி

ஐங்குறுநூறு 323, ஓதலாந்தையார்பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வள் எயிற்றுச் செந்நாய், வயவுறு பிணவிற்குக்
கள்ளியங் கடத்தினைக் கேழல் பார்க்கும்,
வெஞ்சுரக் கவலை நீந்தி
வந்த நெஞ்சம், நீ நயந்தோள் பண்பே.

பாடல் பின்னணி:  சுரத்தின்கண் தலைவியின் தன்மையை நினைத்ததால் வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது.

பொருளுரை:   என் நெஞ்சே!  கூரிய பற்களையுடைய செந்நாய், கர்ப்பமுடைய தன் பெண் நாய் உண்ண வேண்டி, கள்ளி மரங்களுடைய காட்டில் பன்றியைத் தேடும், வெம்மையான சுரத்தின் கவர்த்த வழிகளைத் தாண்டி வந்தன, நீ விரும்பும் பெண்ணின் பண்புகள்.

உள்ளுறை:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – செந்நாய் தன் பிணவின் பொருட்டு முள்ளுடைய கள்ளியங் காட்டினூடே பதுங்கிக் கிடந்தது கேழல் வேட்டையாடுதல் போன்று யாமும் நம் ஆருயிர்க் காதலியோடு இருந்து அவள் இயற்றும் அறத்திற்கு ஆக்கஞ் செய்தற்பொருட்டு இவ்வெஞ் சுரக் கவலை நீந்தி செல்லா நின்றோம்.  இச் செயலும் நன்றே என்று நெஞ்சினை ஊக்கினான் என்பது.  இலக்கணக் குறிப்பு:  வயவு –  வயா என்பது வயவு ஆயிற்று, பிணை – பிணா பிணவாயிற்று, நெஞ்சம் – விளி, பண்பே  – பால் பகா அஃறினைப் பெயர், ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   வள் எயிற்றுச் செந்நாய் – கூரிய பற்களையுடைய செந்நாய், வயவுறு பிணவிற்கு – கர்ப்பமுடைய தன் பெண் நாய்க்கு, கள்ளியங் கடத்தினைக் கேழல் பார்க்கும் – உண்ணுவதற்கு வேண்டி கள்ளி மரங்களுடைய காட்டில் பன்றியைத் தேடும், வெஞ்சுரக் கவலை நீந்தி வந்த  – வெம்மையான சுரத்தின் கவர்த்த வழிகளைத் தாண்டி வந்தன, நெஞ்சம் – நெஞ்சமே, நீ நயந்தோள் பண்பே – நீ விரும்பும் பெண்ணின் பண்புகள்

ஐங்குறுநூறு 328, ஓதலாந்தையார்பாலைத் திணை  – தலைவன் சொன்னது
நுண் மழை தளித்தென நறுமலர் தாஅய்த்
தண்ணியவாயினும் வெய்ய மன்ற,
மடவரல் இன் துணை ஒழியக்
கட முதிர் சோலைய காடு இறந்தேற்கே.

பொருளுரை:   மடப்பம் பொருந்திய இனிய துணைவியைப் பிரிந்து, சுரத்தையும் பழமையான சோலைகளையுடைய காடுகளையும் கடந்து வந்த எனக்கு, நுண்ணிய மழைத் துளிகள் பெய்து, நறுமணமான மலர்கள் பரவி இருக்கும் இந்த இடம், குளிர்ச்சியுடையதாக இருந்தாலும், வெப்பமாகவே தோன்றுகின்றது.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  தளித்தென – தளித்தது என, தொகுத்தல் விகாரம், தாஅய் – அளபெடை, தண்ணியவாயினும் – உம்மை இழிவு சிறப்பு, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், மடவரல் – அன்மொழித்தொகை, இறந்தேற்கே – ஏகாரம் அசை நிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  நுண் மழை தளித்தென – நுண்ணிய மழை விழுந்ததால், நறு மலர் – நறுமணமுடைய மலர்கள், தாஅய் – பரவி, தண்ணியவாயினும் – குளிர்ச்சியாக இருந்தாலும், வெய்ய – வெப்பமாக உள்ளது, மன்ற – அசை, மடவரல் இன் துணை – மடப்பம் பொருந்திய இனிய துணைவி, அழகு பொருந்திய இனிய துணைவி, ஒழிய – பிரிந்து, கட – பாலை நிலம், முதிர் சோலைய காடு – பழமையான சோலைகளையுடைய காடு, இறந்தேற்கே – கடந்த எனக்கு

ஐங்குறுநூறு 334, ஓதலாந்தையார்பாலைத் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! சிறியிலை
நெல்லி நீடிய கல் காய் கடத்திடைப்
பேதை நெஞ்சம் பின் செலச் சென்றோர்,
கல்லினும் வலியர் மன்ற,
பல் இதழ் உண்கண் அழப் பிரிந்தோரே.

பொருளுரை:   நீடு வாழ்வாயாக தோழி! கேட்பாயாக, சிறிய இலைகளையுடைய நெல்லி மரங்கள் நெடிதாக வளர்ந்த மிகுந்த வெப்பத்தினால் கற்கள் சுடும் பாலை நிலத்தின்கண், அறியாமையுடைய என் நெஞ்சம் தலைவரின் பின் சென்றது.  பல இதழ்களையுடைய மலர்களைப் போன்ற மையிட்ட என் கண்கள் அழும்படி என்னைப் பிரிந்த அவர் உறுதியாக கற்பாறையைவிட வலியவர்.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், வாழி – அசை நிலை, சிறியிலை – சிறிய இலை அல்லது சிற்றிலை என்பதன் திரிபு, கல்லினும் – உம்மை உயர்வு குறித்தது, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், பிரிந்தோரே – ஏகாரம் அசை நிலை, மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  கல் காய் கடத்திடை (2)  – தி. சதாசிவ ஐயர் உரை – கற்கள் சுடும் காட்டிடை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலைகள் சுடாநின்ற பாலைக் கானத்தின்கண்.

சொற்பொருள்:   அம்ம – கேட்பாயாக, வாழி தோழி – நீடு வாழ்வாயாக தோழி, சிறியிலை நெல்லி நீடிய – சிறிய இலைகளையுடைய நெல்லி மரங்கள் நெடிதாக வளர்ந்த, கல் காய் கடத்திடை – மலைகள் சுடும் பாலை நிலத்தின்கண், கற்கள் சுடும் பாலை நிலத்தின்கண், பேதை நெஞ்சம் பின் செலச் சென்றோர் – அறியாமையுடைய என் நெஞ்சம் பின்னால் செல்ல சென்ற தலைவர், கல்லினும் வலியர் மன்ற – உறுதியாக கற்பாறையைவிட வலியவர், பல் இதழ் உண்கண் அழப் பிரிந்தோரே – பல இதழ்களையுடைய மலர்களைப் போன்ற மையிட்ட கண்கள் அழும்படி பிரிந்தவர்

ஐங்குறுநூறு 341,  ஓதலாந்தையார்பாலைத் திணை –  தலைவி தோழியிடம் சொன்னது 
அவரோ வாரார், தான் வந்தன்றே,
குயில் பெடை இன் குரல் அகவ
அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே.

பொருளுரை:   தலைவர் இன்னும் வரவில்லை. ஆனால் இளவேனில் பருவம் வந்து விட்டது. பெண் குயில் தன் இனிய குரலில் பாடுகின்றது. நுண்ணியக் கரு மணலையுடைய ஓடை நடுங்குகின்றது.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  அவரோ – ஓகாரம் அசை நிலை, இரக்கக்குறிப்புமாம், வந்தன்றே – ஏகாரம் அசை நிலை, கேழ் – நிறப்பண்பு குறிக்கும் உரிச்சொல் திரிபு (ஒளவை துரைசாமி உரை), பொழுதே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  அவரோ வாரார் – அவர் வரவில்லை,  தான் வந்தன்றே – ஆனால் இள வேனில் வந்து விட்டது,  குயில் பெடை – பெண் குயில்,  இன் குரல் – இனியக் குரல்,  அகவ – பாட,  அயிர் – நுண்ணிய,  கேழ் – கருமையான,  நுண் – நுண்ணுய,  அறல் – ஓடை,  நுண்மணல், நுடங்கு – நடுங்குதல்

ஐங்குறுநூறு 342, ஓதலாந்தையார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வாரார், தான் வந்தன்றே,
சுரும்பு களித்து ஆலும் இரும் சினைக்
கருங்கால் நுணவம் கமழும் பொழுதே.

பொருளுரை:   தலைவர் இன்னும் வரவில்லை.  ஆனால் இள வேனில் வந்து விட்டது.   வண்டுகள், பெரியக் கிளைகளையுடைய நுணா மரங்களின் நறுமணமான மலர்களில் உள்ள தேனைக் குடித்து விட்டு மகிழ்வுடன் பாடுகின்றன.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:   அவரோ – ஓகாரம் அசை நிலை, இரக்கக்குறிப்புமாம், வந்தன்றே – ஏகாரம் அசை நிலை, நுணவம் – நுணா என்பது ‘அம்’ சாரியை பெற்றது, பொழுதே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  அவரோ வாரார் – அவர் வரவில்லை, தான் வந்தன்றே – ஆனால் இள வேனில் வந்து விட்டது, சுரும்பு களித்து ஆலும் – தேனைக் குடித்து விட்டு மகிழ்வுடன் பாடும் வண்டுகள், இரும் சினை – பெரியக் கிளைகள் உடைய, கருங்கால் – கரிய அடிப்பகுதியை உடைய, நுணவம் – நுணா மரம், கமழும் பொழுதே – மலர்ந்து கமழும் பொழுது

ஐங்குறுநூறு 343, ஓதலாந்தையார்பாலைத் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வாரார், தான் வந்தன்றே,
திணி நிலைக் கோங்கம் பயந்த
அணி மிகு கொழு முகை உடையும் பொழுதே.

பொருளுரை:  தலைவர் இன்னும் வரவில்லை.  ஆனால் இள வேனில் வந்து விட்டது.   திண்மையான கோங்க மரத்தின் மிகவும் அழகான பெருத்த அரும்புகள்  மலர்ந்துள்ளன.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  அவரோ – ஓகாரம் அசை நிலை, இரக்கக்குறிப்புமாம், வந்தன்றே – ஏகாரம் அசை நிலை, பொழுதே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   அவரோ வாரார் – அவர் வரவில்லை, தான் வந்தன்றே – ஆனால் இள வேனில் வந்து விட்டது, திணி நிலை – திண்மையான நிலை, கோங்கம் – கோங்க மரங்கள், பயந்த – ஈன்ற, அணி மிகு – மிகுந்த அழகு,  கொழு முகை – பெருத்த அரும்புகள், உடையும் பொழுதே – மலருகின்ற பொழுது

ஐங்குறுநூறு 349, ஓதலாந்தையார்பாலைத் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வாரார், தான் வந்தன்றே,
பொரிகால் மாஞ்சினை புதைய
எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே.

பொருளுரை:  தலைவர் இன்னும் வரவில்லை.  ஆனால், பொரிந்த (சொரசொரப்பான) அடிப்பகுதியை உடைய மாமரத்தின் கிளைகள் மறையும்படி, தீ வெளிப்படுத்துவது போன்ற ஒளியை வீசும் இளமை உடைய தளிர்களைத் தோற்றுவிக்கும் இளவேனில் பருவம் வந்து விட்டது.

குறிப்பு:  எரிகால் – தி. சதாசிவ ஐயர் உரை – நெருப்பைக் கக்கும், அ. தட்சிணாமூர்த்தி உரை – நெருப்பை உமிழும்.  எரிகால் இளந்தளிர் (3) – ஒளவை துரைசாமி உரை – மாவின் தளிர் தீக்கொழுந்து போல நிறமும் ஒளியும் கொண்டு தோன்றலின் ‘எரிகால் இளந்தளிர்’ என்றார்.

சொற்பொருள்:   அவரோ வாரார் – அவர் வரவில்லை,  தான் வந்தன்றே – ஆனால் இள வேனில் வந்து விட்டது, பொரிகால் மாஞ்சினை புதைய – பொரிந்த (சொரசொரப்பான) அடிப்பகுதியை உடைய மாமரத்தின் கிளைகள் மறையும்படி, எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே – தீ வெளிப்படுத்துவது போன்ற ஒளியை வீசும் இளமை உடைய தளிர்களைத் தோற்றுவிக்கும் பருவம் (காலல், கான்றல் – கக்கல்)

ஐங்குறுநூறு 352, ஓதலாந்தையார்பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப்பிணர்ப்
பெருங்கை யானை இருஞ்சினம் உறைக்கும்
வெஞ்சுரம் அரிய என்னார்,
வந்தனர் தோழி, நம் காதலோரே.

பொருளுரை:  தோழி!  பிழை இல்லாமல் அம்பினை செலுத்தும் மறவர்கள், தங்கள் வில்லினின்று எய்திய அம்பினால் உயிர் நீத்தவர்களின் பீடும் பெயரும் எழுதப்பட்ட நடுகல் போன்று, மிகுதியான சொரசொரப்புடைய பெரிய தும்பிக்கையுடைய யானைகள் மிகுந்த சினம் கொண்டு மிகுதியாக இருக்கும் பாலை நில வழிகள் கடத்தற்கு அரியன என்று நினையாராய் நம் தலைவர் வந்து விட்டார்.

குறிப்பு:   விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).  விழுத்தொடை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விழுமம் சீர்மை, அதாவது நன்மை என்னும் பொருள் குறித்து நின்றது.  விழுப்பிணர் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டு விழுமம் சிறப்புப் பொருள் குறித்து நின்றது, புலியூர்க் கேசிகன் – மிகுதியான சொரசொரப்பு.  இலக்கணக் குறிப்பு:  அன்ன – உவம உருபு, a comparison word, என்னார் – என்னாராய், முற்றெச்சம், காதலோரே – ஏகாரம் அசை நிலை.  தொடை (1) – அ. தட்சிணாமூர்த்தி உரை – அம்பு, தொடுக்கப்படலின் அம்பு தொடையாயிற்று, அன்றியும் ஒன்றன்பின் ஒன்றாக எய்யப்படுத்தலின் தொடையாயிற்று என்றுமாம்.  உறைக்கும் (3) – ஒளவை துரைசாமி உரை – உறு என்னும் மிகுதி பொருட்டாய உரிச்சொல் அடியாகப் பிறந்த பெயரெச்சவினை.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:   விழுத்தொடை மறவர் – பிழை இல்லாமல் அம்பினை செலுத்தும் மறவர்கள், வில்லிடத் தொலைந்தோர் – வில்லினின்று எய்திய அம்பினால் உயிர் நீத்தவர்கள், எழுத்துடை நடுகல் அன்ன – பீடும் பெயரும் எழுதப்பட்ட நடுகல் போன்று, விழுப்பிணர்ப் பெருங்கை யானை – மிகுதியான செதும்புடைய (மிகுதியான  சொரசொரப்புடைய, மிகுதியான சருச்சரையுடைய)  பெரிய தும்பிக்கையுடைய யானை, இருஞ்சினம் – மிகுந்த சினம், உறைக்கும் – மிகுதியாக இருக்கும், வெஞ்சுரம் அரிய என்னார் – பாலை நில வழிகள் கடத்தற்கு அரியன என்று நினையாராய், வந்தனர் – வந்து விட்டார், தோழி – தோழி, நம் காதலோரே – நம் தலைவர்

ஐங்குறுநூறு 354, ஓதலாந்தையார்பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை,
மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும்,
அரிய சுரன் வந்தனரே,
தெரி இழை அரிவை நின் பண்பு தர விரைந்தே.

பொருளுரை:  ஆராய்ந்து அணிந்த அணிகலன்களையுடைய பெண்ணே!  உன்னுடைய நல்ல பண்புகள் அவரை இங்குச் செலுத்த, நம் தலைவர், அன்புடைய பெண் நாயைப் புணர்ந்த ஆண் செந்நாய், குட்டியையுடைய பெண் மானைக் இரையாகக் கொள்ளாமல் நீங்கும் கடத்தற்கரிய பாலை நில வழிகள் வழியாக விரைந்து வந்துவிட்டார்.

குறிப்பு:  பண்பு தர (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நினது பெண்மை நலமே நினக்குத் தூதாகி அழைத்து வர, தி. சதாசிவ ஐயர் உரை – நினது பன்பைத் தர. இலக்கணக் குறிப்பு:  சுரன் – சுரம் என்பதன் போலி, வந்தனரே – ஏகாரம் அசை நிலை, விரைந்தே – ஏகாரம் அசை நிலை.  உள்ளுறை:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாலை நிலத்தே இவ்வாறு அருட் பண்பின் செயலைச் செந்நாயின்பாற் கண்ட நம் பெருமானும், அருட் பண்பு மேலிடப்பட்டு நின்னை நினைந்து, நினக்கு அளி செய்ய அரிய சுரன் என்றும் கருதாமல், விரைந்து வந்தார்.   

சொற்பொருள்:  ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை – அன்புடைய பெண் நாயைப் புணர்ந்த ஆண் செந்நாய், மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும் – குட்டியையுடைய பெண் மானைக் இரையாகக் கொள்ளாமல் நீங்கும், அரிய சுரன் – கடத்தற்கரிய பாலை நில வழிகள், வந்தனரே- வந்துவிட்டார், தெரி இழை அரிவை – ஆராய்ந்து அணிந்த அணிகலன்களையுடைய பெண்ணே, நின் பண்பு தர  – உன்னுடைய நல்ல பண்புகள் அவரை இங்கு செலுத்த, உன்னுடைய அழகை நீ மீண்டும் பெற, விரைந்தே – விரைந்து வந்துவிட்டார்

ஐங்குறுநூறு 357, ஓதலாந்தையார்பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
குரவம் மலர, மரவம் பூப்பச்,
சுரன் அணி கொண்ட கானம் காணூஉ,
அழுங்குக செய்பொருள் செலவு என, விரும்பி நின்
நலம் கலிழ் மாமை கவின
வந்தனர் தோழி, நம் காதலோரே.

பொருளுரை:  தோழி!  குரவ மரங்கள் மலர, கடம்ப மரங்கள் பூக்க, வழிகள் அழகுற்ற காட்டினை நோக்கி, மேலும் பொருள் ஈட்டுவதற்கு உரிய செலவைத் தவிர்த்து, உனக்கு அருள் செய்யும் விருப்பத்துடன், உன்னுடைய அழகு ஒழுகும் மாமை நிறம் மீண்டும் அழகுற, வந்துவிட்டார் நம் தலைவர்.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  சுரன் – சுரம் என்பதன் போலி, காணூஉ – (காணூஉ – அளபெடை, செய்யூ என்னும் வாய்பாட்டு வினையெச்சம், குரவம் – குரா என்பது அம் என்னும் சாரியை பெற்று குரவம் ஆனது, மரவம் – மரா என்பது அம் என்னும் சாரியை பெற்று மரவம் ஆனது, காதலோரே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  குரவம் மலர – குரவ மரங்கள் மலர, மரவம் பூப்ப – கடம்ப மரங்கள் பூக்க, சுரன் அணி கொண்ட கானம் காணூஉ – வழிகள் அழகுற்ற காட்டினை நோக்கி, அழுங்குக செய்பொருள் செலவு என – மேலும் பொருள் ஈட்டுவதற்கு உரிய செலவைத் தவிர்த்து, விரும்பி – உனக்கு அருள் செய்யும் விருப்பத்துடன், நின் நலம் கலிழ் மாமை கவின – உன்னுடைய அழகு ஒழுகும் மாமை நிறம் மீண்டும் அழகுற, வந்தனர் – வந்துவிட்டார், தோழி – தோழி, நம் காதலோரே – நம் தலைவர்

ஐங்குறுநூறு 365, ஓதலாந்தையார்பாலைத் திணை – தலைவன் மாந்தளிரிடம் சொன்னது
கண மா தொலைச்சித் தன் ஐயர் தந்த
நிண ஊன் வல்சிப் படுபுள் ஓப்பும்
நலம் மாண் எயிற்றி போலப் பல மிகு
நன்னலம் நயவர உடையை,
என் நோற்றனையோ மாவின் தளிரே?

பொருளுரை:  மாமரத்தின் தளிரே!  கூட்டமாக உள்ள மான்களைக் கொன்று, தன் அண்ணன்மார் கொணர்ந்த கொழுப்புடைய ஊனாகிய உணவின் மீது  விழும் பறவைகளை விரட்டும் வேட்டுவர் தங்கையான மாட்சிமையுடைய என் காதலி போல, பெரிதும் விரும்புவதற்குக் காரணமான மிகுந்த அழகை உடையை! என்ன தவம் செய்தாயோ நீ!

குறிப்பு:   கண மா (1) – உ. வே. சாமிநாதையர் உரை – கூட்டமான மான்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூட்டமாகிய விலங்குகள்.  மாவின் தளிரே (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாமரத்தினது காட்சிக்கினிய மாந்தளிரே, தி. சதாசிவ ஐயர் உரை – மாவினது தளிரே.  இலக்கணக் குறிப்பு:  நோற்றனையோ – ஓகாரம் அசை நிலை, தளிரே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  கண மா தொலைச்சித் – கூட்டமாக உள்ள மான்களைக் கொன்று, தன் ஐயர் தந்த நிண ஊன் வல்சி – தன் அண்ணன்மார் கொணர்ந்த கொழுப்புடைய ஊனாகிய உணவு, படுபுள் ஓப்பும் நலம் மாண் எயிற்றி போல – விழும் பறவைகளை விரட்டும் வேட்டுவர் தங்கையான மாட்சிமையுடைய என் காதலி போல,  பல மிகு நன்னலம் நயவர உடையை – பெரிதும் விரும்புவதற்குக் காரணமான மிகுந்த அழகை உடையை நீ, என் நோற்றனையோ – என்ன தவம் செய்தாயோ, மாவின் தளிரே – மாமரத்தின் தளிரே

ஐங்குறுநூறு 371, ஓதலாந்தையார்பாலைத் திணை – மகட் போக்கிய தாய் சொன்னது
மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர் நெடும் குன்றம் படுமழை தலைஇச்
சுர நனி இனிய ஆகுக தில்ல,
அற நெறி இதுவெனத் தெளிந்த என்
பிறை நுதல் குறுமகள், போகிய சுரனே.

பொருளுரை:   பாலை நிலத்து மறவர்களின் கொட்டுகள் முழங்கும் ஒலியைக்கேட்டு மயில்கள் நடனம் ஆடும் மிக்க உயர்ந்த மலைகளில்,  மேகங்கள் மழையைச் சொரிந்து, காட்டுப் பாதைகள் மிகவும் இனிமையாக ஆகட்டும்.  எது அறம் என்று தெளிவாக உணர்ந்த, பிறையைப் போன்ற நெற்றியை உடைய என் சிறிய மகள் போகும் வழிகள் அவை.

குறிப்பு:  படுமழை (2) – ஒளவை துரைசாமி உரை – பெயல் கருதி முழங்கும் கருமுகிலைப் படுமழை என்ப.  இலக்கணக் குறிப்பு:  தலைஇ – அளபெடை, நனி – உரிச்சொல், தில்ல – தில்  விழைவின்கண் வந்த இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, சுரனே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  மள்ளர் கொட்டின் – பாலை நில மறவர்களின் கொட்டு முழங்கும் ஒலியைக்கேட்டு,  மஞ்ஞை ஆலும் – மயில்கள் ஆடும், உயர் நெடும் குன்றம் – உயர்ந்த நெடிய மலைகள், படுமழை தலைஇ – மேகங்கள் மழையைச் சொரிந்து, பெரிய மழையைக் கொட்டி, சுர நனி – காட்டுப் பாதைகள் மிகவும், இனிய ஆகுக – இனிமையாக ஆகட்டும், தில்ல – அசைச் சொல், அறநெறி இது வெனத் தெளிந்த  – அற நெறி என்னவென்று தெரிந்த,   என் பிறை நுதல் குறுமகள் – என்னுடைய பிறைப் போன்ற நெற்றியை உடைய மகள், போகிய சுரனே – போன பாலை நிலம்

ஐங்குறுநூறு 372, ஓதலாந்தையார்பாலைத் திணை  – தலைவியின் தாய் சொன்னது
என்னும் உள்ளினள் கொல்லோ, தன்னை
நெஞ்சு உணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு,
அழுங்கல் மூதூர் அலர் எழச்,
செழும் பல் குன்றம் இறந்த, என் மகளே?

பொருளுரை:  அவள் நெஞ்சு ஏற்றுக் கொள்ளுமாறு தகுந்த சொற்களைக் கூறி உறுதிமொழிகளைக் கூறிய இளைஞனுடன், பேரொலியையுடைய பழைய ஊரில் அலர் எழுமாறு, வளமுடைய பல மலைகளைத் தாண்டிச் சென்ற என்னுடைய மகள் என்னை நினைத்தாளா?

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  உண – உண்ண என்பதன் விகாரம், காளை – உவமை ஆகுபெயர், மகளே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  என்னும் உள்ளினள் கொல்லோ – என்னை நினைத்தாளா, தன்னை நெஞ்சு உணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு – அவள் நெஞ்சு ஏற்றுக் கொள்ளுமாறு தகுந்த சொற்களைக் கூறி உறுதிமொழிகளைக் கூறிய இளைஞனுடன், அழுங்கல் மூதூர் அலர் எழ – பேரொலியையுடைய பழைய ஊரில் அலர் எழுமாறு, செழும் பல் குன்றம் இறந்த – வளமுடைய பல மலைகளைத் தாண்டிச் சென்ற, என் மகளே – என்னுடைய மகள்

ஐங்குறுநூறு 373, ஓதலாந்தையார்பாலைத் திணை  – தலைவியின் தாய் சொன்னது
நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக,
புலிக் கோள் பிழைத்த கவைக் கோட்டு முது கலை
மான் பிணை அணை தர ஆண் குரல் விளிக்கும்
வெஞ்சுரம் என் மகள் உய்த்த,
அம்பு அமை வல்வில் விடலை தாயே.

பொருளுரை:  புலியால் கொள்ளப்படுவதிலிருந்து தப்பிய கவைத்த கொம்பையுடைய ஆண் மான் ஒன்று, தன் பெண் மானை அணைப்பதற்காக, தன்னுடைய குரலால் அழைக்கும் வெப்பமுடைய பாலை நிலத்திற்கு என் மகளை கொண்டு சென்ற, அம்புடன் கூடிய வலிய வில்லையுடைய இளைஞனின் தாய்.

குறிப்பு:  சில உரை நூல்களில், இறுதி வரி, ‘வம்பு அமை வல்வில் விடலை தாயே’ என்று உள்ளது.  இலக்கணக் குறிப்பு:  எய்துக – வியங்கோள் வினைமுற்று, கோள் – முதனிலை திரிந்த தொழிற்பெயர், அணைதர – ஒரு சொல் நீர்மைத்து, தாயே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  நினைத்தொறும் கலிழும் – நினைக்கும்பொழுதெல்லாம் அழும், இடும்பை எய்துக – துயரத்தை அடையட்டும், புலிக் கோள் பிழைத்த கவைக் கோட்டு முது கலை மான் பிணை அணை தர ஆண் குரல் விளிக்கும் – புலியிடமிருந்து தப்பிய கவைத்த கொம்பையுடைய ஆண் மான் ஒன்று தன்னுடைய பெண் மானை அணைப்பதற்காக தன்னுடைய குரலால் அழைக்கும், வெஞ்சுரம் – வெப்பமுடைய பாலை நிலம், என் மகள் உய்த்த – என் மகளை கொண்டு சென்ற, அம்பு அமை வல்வில் விடலை தாயே – அம்புடன் கூடிய வலிய வில்லையுடைய இளைஞனின் தாய்

ஐங்குறுநூறு 374, ஓதலாந்தையார்பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
பல் ஊழ் நினைப்பினும் நல்லென்று ஊழ,
மீளி முன்பின் காளை காப்ப,
முடி அகம் புகாக் கூந்தலள்,
கடுவனும் அறியாக் காடு இறந்தோளே.

பொருளுரை:  கூற்றுவனை ஒத்த வலிமையுடைய அவளுடைய தலைவன் அவளைப் பாதுகாக்க, கொண்டையாக முடிக்காத குட்டை முடியையுடைய என் மகள் ஆண் குரங்காலும் அறிய முடியாத காட்டிற்குச் சென்றாள்.  இதைப்பற்றிப் பலமுறை நினைத்தாலும் எனக்கு இது நல்லதாகவே தோன்றுகின்றது.

குறிப்பு:   அகநானூறு 92 – மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின், நற்றிணை 194 – மந்தியும் அறியா மரம் பயில், திருமுருகாற்றுப்படை 42 – மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து.  இலக்கணக் குறிப்பு:  காளை – உவமை ஆகுபெயர், கடுவனும் – உம்மை உயர்வு, இறந்தோளே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  பல் ஊழ் நினைப்பினும் நல்லென்று ஊழ – பலமுறை நினைத்தாலும் நல்லதாகவே தோன்றுகின்றது, மீளி முன்பின் – கூற்றுவனை ஒத்த வலிமையுடைய, காளை காப்ப – அவளுடைய தலைவன் அவளை பாதுகாக்க, முடி அகம் புகாக் கூந்தலள் – கொண்டையாக முடிக்காத குட்டை முடியையுடையவள், கடுவனும் அறியாக் காடு இறந்தோளே – ஆண் குரங்காலும் அறிய முடியாத காட்டிற்குச் சென்றாள்

ஐங்குறுநூறு 375, ஓதலாந்தையார்பாலைத் திணை – மகட் போக்கிய தாய் சொன்னது
இது என் பாவை பாவை, இது என்
அலமரு நோக்கின் நலம்வரு சுடர் நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி, என்றிவை
காண்தொறும் காண்தொறும் கலங்க,
நீங்கினளோ என் பூங்கணோளே.

பொருளுரை:  பொம்மையைப் போன்ற என் மகளின் பொம்மை இது.  கிளியை எடுத்து வளர்த்த கிளியை ஒத்த என் மகள்.  அவளது பார்வை சுழலும் பார்வை.  அவளது அழகிய நெற்றி ஒளியுடையது.  அவள் விட்டுச் சென்ற பொம்மையையும் கிளியையும் பார்க்கும் பொழுதெல்லாம் நான் கண் கலங்குகின்றேன்.  பூப்போன்ற கண்களையுடைய என் மகள் என்னை விட்டுப் போய் விட்டாள்.

குறிப்பு:   இலக்கணக் குறிப்பு:  பாவை பாவை – முன்னது தலைவிக்கு உவமையாகு பெயர், பின்னது விளையாட்டுப் பாவை, பைங்கிளி எடுத்த பைங்கிளி – முன்னது தலைவிக்கு ஆகுபெயர், பின்னது அவள் வளர்த்த கிளி, பூங்கணோளே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  இது என் பாவை – இது என் பொம்மைப் போன்ற மகளின், பாவை – பொம்மை,  இது என் – இது என், அலமரு நோக்கின் – சுழற்சிப் பொருந்தியப் பார்வை,  நலம்வரு சுடர் நுதல் – அழகிய ஒளியுடைய நெற்றி, பைங்கிளி எடுத்த பைங்கிளி – பைங்கிளியை எடுத்து வளர்த்த பைங்கிளி (என் மகள்),  என்றிவை – இவை, காண்தொறும் காண்தொறும் கலங்க – காணும் தோறும் நான் அழுகின்றேன், நீங்கினளோ – என்னை விட்டு விட்டு போய் விட்டாளே,  என் பூங்கணோளே – பூவைப் போல கண்களையுடைய என் மகள்

ஐங்குறுநூறு 376, ஓதலாந்தையார்பாலைத் திணை  – தலைவியின் தாய் சொன்னது
நாள்தொறும் கலிழும் என்னினும், இடை நின்று
காடுபடு தீயின் கனலியர் மாதோ,
நல் வினை நெடு நகர் கல்லெனக் கலங்கப்,
பூப் புரை உண்கண் மடவரல்
போக்கிய புணர்த்த அறன் இல் பாலே.

பொருளுரை:  நாள்தோறும் அழும் என்னைவிட, காட்டில் எழுந்த தீயில் பட்டு அழியட்டும், நன்றாக கட்டப்பட்ட எங்கள் இல்லம் ஆரவாரத்துடன் வருந்த, மலர் போன்ற மையிட்ட கண்களையுடைய என்னுடைய இளைய மகளை நீங்குமாறு செய்த, அறம் இல்லாத தீவினையானது.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  கனலியர் – வியங்கோள் வினைமுற்று, மாதோ – மாது, ஓ அசை நிலைகள், கல் – ஒலிக்குறிப்பு சொல், மடவரல் – அன்மொழித்தொகை, போக்கிய  – செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அறன் – அறம் என்பதன் போலி, பாலே – ஏகாரம் அசை நிலை

சொற்பொருள்:  நாள்தொறும் கலிழும் என்னினும் – நாள்தோறும் அழும் என்னைவிட, இடை நின்று காடுபடு தீயின் கனலியர் – காட்டில் எழுந்த தீயில் பட்டு அழிவதாக, மாதோ – அசை நிலை, நல் வினை நெடுநகர் கல்லெனக் கலங்க – நன்றாக கட்டப்பட்ட எங்கள் இல்லம் ஆரவாரத்துடன் வருந்த, பூப் புரை உண்கண் மடவரல் – மலர் போன்ற மையிட்டு கண்களையுடைய என்னுடைய இளைய மகள், போக்கிய புணர்த்த – நீங்குமாறு செய்த, அறன் இல் பாலே – அறம் இல்லாத தீவினை/ஊழ்

ஐங்குறுநூறு 378, ஓதலாந்தையார்பாலைத் திணை – மகட் போக்கிய தாய் சொன்னது
செல்லிய முயலிப் பாஅய சிறகர்
வாவல் உகக்கும் மாலையாம் புலம்பப்
போகிய அவட்கோ நோவேன், தேமொழித்
துணையிலள் கலிழும் நெஞ்சின்
இணையேர் உண்கண் இவட்கு நோவதுமே.

பொருளுரை:  மாலைப் பொழுதில், வௌவால்கள் முயன்று தாவிப் பறக்கும் வேளையில், என்னைத் தனிமையில் ஆழ்த்திவிட்டுச் சென்ற என் மகளுக்காக நான் வருந்த மாட்டேன். ஆனால் என் மகளை நினைத்துத் தவித்து அழும், இனிய சொற்களையுடைய, அழகிய ஒத்த கண்களில் மையிட்ட அவளுடைய தோழிக்காக நான் வருந்துகின்றேன்.

குறிப்பு:   இலக்கணக் குறிப்பு:  பாஅய – அளபெடை, தேமொழி – அன்மொழித்தொகை, சிறகர் – சிறகு என்பதன் போலி, நோவதுமே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  செல்லிய – செல்ல, முயலி – முயன்று, பாஅய சிறகர் வாவல் உகக்கும் – தாவிப் பறக்கும் சிறகையுடைய வௌவால்கள், மாலையாம் – மாலைப் பொழுதில், புலம்பப் போகிய அவட்கோ நோவேன் – என்னை தனிமையில் ஆழ்த்திய அவளுக்காக நான் வருந்த மாட்டேன், தேமொழி – இனிய சொற்களையுடையவள், துணையிலள் – தன் தோழியை இழந்தவள், கலிழும் நெஞ்சின் – அழும் நெஞ்சையுடைய, இணை, ஏர் உண்கண் – அழகிய மையிட்ட கண்கள், இவட்கு நோவதுமே – இவளுக்காக வருந்துகின்றேன்

ஐங்குறுநூறு 379, ஓதலாந்தையார்பாலைத் திணை – மகட் போக்கிய தாய் சொன்னது
தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியில்
இனிது ஆம் கொல்லோ, தனக்கே பனி வரை
இனக் களிறு வழங்கும் சோலை
வயக்குறு வெள்வேல் அவர் புணர்ந்து செலவே?

பொருளுரை:   என்னுடைய மகளுக்கு, தன்னுடைய விருப்பமான தோழியர் சூழ நல்ல ஒரு திருமணத்தை அனுபவிப்பதை விட இனிமையானதா, ஒளிரும் வெள்ளிய வேலையுடைய அவளுடைய தலைவனுடன், யானைக் கூட்டங்கள் உலவும் குளிர்ந்த மலைச் சோலை வழியே செல்வது?

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசை நிலை, தனக்கே – ஏகாரம் அசை நிலை, செலவே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  தன் அமர் ஆயமொடு – தன்னுடைய விருப்பமான தோழிகளுடன், நன் மண – நல்ல திருமணம், நுகர்ச்சியில் – அனுபவிப்பதில், இனிது ஆம் கொல்லோ – இனிமையானதா, தனக்கே – அவளுக்கு, பனி – குளிர், வரை – மலை, இனக் களிறு வழங்கும் சோலை – கூட்டமாக யானைகள் உலவும் சோலை, வயக்குறு வெள் வேல் அவர் புணர்ந்து செலவே – விளங்கும் வெள்ளிய வேலை உடைய தலைவனுடன் செல்லுவது

ஐங்குறுநூறு 380, ஓதலாந்தையார்பாலைத் திணை  – செவிலித்தாய் சொன்னது
அத்தம் நீள் இடை அவனொடு போகிய,
முத்து ஏர் வெண்பல் முகிழ் நகை மடவரல்
தாயர் என்னும் பெயரே வல்லாறு
எடுத்தேன் மன்ற யானே,
கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே.

பொருளுரை:   நீண்ட பாலை வழியில் அவனுடன் சென்ற, முத்து போன்ற பற்களையுடைய, புன்னகையையுடைய, மடமைப் பொருந்திய என்னுடைய மகளுக்கு, தாய் என்ற பெயரை மட்டுமே இயன்றவரை நான் பெற்றேன்.  தலைவனுக்கு மனைவி ஆகுமாறு அவளைக் கொடுத்தவர்கள் அவளுடைய தோழியர்.

குறிப்பு:   ஒளவை துரைசாமி உரை – ஆயத்தோர் என்றது தோழியை, இது முன்னிலை புதுமொழி.  கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே (5) – அ. தட்சிணாமூர்த்தி உரை, ஒளவை துரைசாமி உரை – அவளை அவனுக்கு உரியவளாகக் கொடுக்கும் பேறு பெற்றோர் அவள் ஆயத்தோரே, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நற்பெயரைத் தோழிமாரே எனக்கு வழங்கினார்கள்.  முத்தைப் போன்ற பற்கள்: அகநானூறு 27 – முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 – இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 – முத்து ஏர் வெண்பல், கலித்தொகை 64 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏய்க்கும் வெண்பல், கலித்தொகை 131 – முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 – எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 – முத்த முறுவல்,  பொருநராற்றுப்படை 27 – துவர் வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 – நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 – முத்து உறழ் முறுவல்.  செவிலித்தாய் – ஒளவை துரைசாமி உரை – ‘தாயெனப் படுவோள் செவிலியாகும்’ என்றதனால் தாயர் என்னும் பெயரே என்றும், தாயாவாள் தலைமகளின் அருமறை அறிந்து அறத்தொடு நிலை வகையால் மணம் புணர்த்தும் மாண்பினளாகத் தான் அது பெறாமையால் வருந்துகின்றமையின், வல்லாறு எடுத்தேன் என்றும், உண்மைத் தாயர் எனப்படுதற்கு உரியோரென்பாள்.  இலக்கணக் குறிப்பு:  அவனொடு – ஒடு உடனிகழ்ச்சி (ஒருங்கு நிகழ்தல்), ஏர் – உவம உருபு, மடவரல் –  அன்மொழித்தொகை, பெயரே – ஏகாரம் அசை நிலை, பிரிநிலை, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், ஆயத்தோரே – ஏகாரம் அசை நிலை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  அத்தம் நீள் இடை அவனொடு போகிய – நீண்ட பாலை வழியில் அவனுடன் சென்ற, முத்து ஏர் வெண்பல் முகிழ் நகை மடவரல் – முத்து போன்ற பற்களையுடைய புன்னகையையுடைய மடமைப் பொருந்திய என்னுடைய மகள், தாயர் என்னும் பெயரே – தாய் என்ற பெயரை மட்டுமே,  வல்லாறு எடுத்தேன் யானே –  இயன்றவரை நான் பெற்றேன், மன்ற – அசை நிலை, கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே – தலைவனுக்கு மனைவி ஆகுமாறு கொடுத்தவர்கள் அவளுடைய தோழியர்

ஐங்குறுநூறு 394, ஓதலாந்தையார்பாலைத் திணை  – தலைவியின் தாய் சுற்றத்தார்க்கு சொன்னது
மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த
அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற,
வெஞ்சுரம் இறந்த அம் சில் ஓதிப்
பெரு மட மான் பிணை அலைத்த
சிறு நுதல் குறுமகள் காட்டிய வம்மே.

பொருளுரை:  மாண்பு இல்லாத கொள்கையுடன் கலக்கத்தினையுடைய துயரைச் செய்த அன்பு இல்லாத அறன் இப்பொழுது அருளையுடையதாயிற்று.  வாருங்கள்! வெப்பமான பாலை நிலத்தைக் கடந்த, அழகான மென்மையான கூந்தலையுடைய, பெரிய மடமையுடைய பெண் மானின் நோக்கையும் வென்ற, சிறிய நெற்றியையுடைய, என்னுடைய மகளை உங்களுக்குக் நான் காட்டுகின்றேன்.

குறிப்பு:   இலக்கணக் குறிப்பு:  அறன் – அறம் என்பதன் போலி, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், அம் சில் ஓதி – அன்மொழித்தொகை – அன்மொழித்தொகை, மான்பிணை – உவமை ஆகுபெயர், வம்மே – வம் முன்னிலைப் பன்மை வினைமுற்று, மே முன்னிலையசை,  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  மாண்பு இல் கொள்கையொடு – மாண்பு இல்லாத கொள்கையுடன்,  மயங்கு துயர் செய்த – கலக்கத்தினையுடைய துயரைச் செய்த, அன்பு இல் அறனும் – அன்பு இல்லாத அறன்,  அருளிற்று – அருளையுடையதாயிற்று, மன்ற – ஓர் அசைச் சொல், வெஞ்சுரம் இறந்த – வெப்பமான பாலை நிலத்தைக் கடந்த, அம் சில் ஓதி – அழகிய சிலவாகிய கூந்தல், பெரு மட மான் பிணை அலைத்த – பெரிய மடமையுடைய  பெண் மானின் பார்வையையும் வென்ற, சிறு நுதல் – சிறிய நெற்றி, குறுமகள் – இளையவள், காட்டிய – காட்டுகின்றேன், வம்மே – வாருங்கள்

ஐங்குறுநூறு 399, ஓதலாந்தையார்பாலைத் திணை – மகட் போக்கிய நற்றாய் கூறியது 
நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம் மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ, மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?

பொருளுரை:   “உன்னுடைய வீட்டில் என் மகளுடைய சிலம்பு கழிக்கும் நோன்பை நடத்தினாய்.  என்னுடைய வீட்டில் அவளுடைய திருமணத்தை நடத்தலாம்” என்று  வெற்றி வேலையும் குற்றமில்லாது விளங்கும் வீரக் கழல்களையும் காலில் அணிந்த, பொய்யில் வல்லவனான அந்த இளைஞனின் தாய்க்கு நீங்கள் சொன்னால் என்ன?

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  கழீஇய – அளபெடை, கழி – முதனிலைத் தொழிற்பெயர், மற்றே – மற்று, ஏ அசைநிலைகள், காளை – உவமை ஆகுபெயர், தாய்க்கே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும் – உன்னுடைய வீட்டில் சிலம்பு கழிக்கும் நோன்பைச் செய்தாலும், எம் மனை – என்னுடைய வீட்டில், வதுவை நன்மணம் கழிகென – என்னுடைய வீட்டில் திருமணத்தை நடத்த, சொல்லின் எவனோ – சொன்னால் என்ன ஆகும், மற்றே – மற்றது, வென்வேல்  – வெற்றி வேல், மையற விளங்கிய கழலடி – குற்றமில்லாது விளங்கும் கழல்களை அணிந்த கால்கள், பொய் வல் காளையை – பொய் சொல்லுவதில் வல்லவனான இளைஞனை, ஈன்ற தாய்க்கே – பெற்ற தாய்க்கு

ஐங்குறுநூறு 412, பேயனார்முல்லைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
காயா, கொன்றை, நெய்தல், முல்லை,
போது அவிழ் தளவொடு, பிடவு அலர்ந்து, கவினிப்
பூ அணி கொண்டன்றால் புறவே,
பேர் அமர்க் கண்ணி! ஆடுகம் விரைந்தே.

பொருளுரை:  பெரிய அமர்ந்த கண்களை உடையவளே!  முல்லை நிலத்தில் காயா, கொன்றை, குவளை, முல்லை மற்றும் தளவ அரும்புகள் பிடவத்துடன் மலர்ந்து, முல்லை நிலத்தை அழகுபடுத்தியுள்ளன.  நாம் அங்கு விளையாடலாம்.  விரைந்து வா.

குறிப்பு:   இலக்கணக் குறிப்பு:  தளவொடு – ஒடு உடனிகழ்ச்சி (ஒருங்கு நிகழ்தல்), கொண்டன்றால் – ஆல் அசைநிலை, புறவே – ஏகாரம் அசை நிலை, பேர் அமர்க் கண்ணி – விளி, விரைந்தே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  காயா – காயா (ironwood flowers), கொன்றை – சரக்கொன்றை (laburnum flowers), நெய்தல் – குவளை  (blue water lilies), முல்லை – முல்லை (jasmine), போது – அரும்புகள், அவிழ் – திறந்து,  தளவொடு – தளவமோடு (golden jasmine), பிடவு – பிடவுடன் (wild jasmine, bedaly-nut vine), அலர்ந்து – மலர்ந்து,  கவினி – அழகுடன், பூ – மலர்கள், அணி கொண்டன்றால் – அழகுபடுத்தியுள்ளன, புறவே – முல்லைக்காடு, பேர் அமர் – பெரிய பொருந்திய,  கண்ணி – கண் உடையவள்,  ஆடுகம்  –  நாம் விளையாடலாம், விரைந்தே – விரைந்து வா

ஐங்குறுநூறு 413, பேயனார்முல்லைத் திணை – தலைவியிடம் தலைவன் சொன்னது
நின் நுதல் நாறும் நறுந்தண் புறவில்,
நின்னே போல மஞ்ஞை ஆலக்,
கார் தொடங்கின்றால் பொழுதே,
பேரியல் அரிவை, நாம் நயத்தகவே.

பொருளுரை:   பெரும் நற்பண்புகளை உடைய பெண்ணே!  உன்னுடைய நெற்றியின் நறுமணம் நாறும் குளிர்ந்த முல்லை நிலத்தில் உன்னைப் போல் மயில்கள் ஆட, கார்ப்பருவம் தொடங்கி விட்டது இப்பொழுது, நாம் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி இன்புற்று இருக்க.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு – தண்புறவு – வினைத்தொகை, தொடங்கின்றால் – ஆல் அசைநிலை, பொழுதே – ஏகாரம் அசைநிலை, பேரியல் அரிவை – விளி, நயத்தகவே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  நின் நுதல் நாறும் நறுந்தண் புறவில் – உன்னுடைய நெற்றியின் நறுமணம் நாறும் குளிர்ந்த முல்லை நிலத்தில், நின்னே போல மஞ்ஞை ஆல – உன்னைப் போல் மயில்கள் ஆட, கார் தொடங்கின்றால் பொழுதே – கார்ப்பருவம் தொடங்கி விட்டது இப்பொழுது, பேர் இயல் அரிவை – பெரும் நற்பண்புகளை உடைய பெண்ணே, நாம் நயத்தகவே – நாம் ஒருவரை ஒருவர் விரும்பி இன்புற்று இருக்க

ஐங்குறுநூறு 435,  பேயனார் முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நன்றே காதலர் சென்ற ஆறே,
நிலன் அணி நெய்தல் மலரப்
பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே.

பொருளுரை:   உன்னுடைய காதலர் சென்ற வழி நல்ல வழி.  அங்கு நிலத்தை அழகுப்படுத்தும்படி குவளை மலர்கள் மலர்ந்துள்ளன.  பொன் போன்ற நிறமுடைய அழகிய கொன்றை மலர்களும்,  பிடவ மலர்களும் அங்கே உள்ளன.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  நன்றே – ஏகாரம் தேற்றம், ஆறே – ஏகாரம் அசை நிலை, நிலன் – நிலம் என்பதன் போலி, பொலன் – பொன் என்பதன் போலி, உடைத்தே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  நன்றே காதலர் சென்ற ஆறே – உன் காதலர் சென்ற வழி நல்ல வழி,   நிலன் அணி – நிலத்தின் அழகு,  நெய்தல் மலரப் – குவளை மலர,  பொலன்அணி – பொன் போன்ற நிறமுடைய அழகிய,  கொன்றையும் (laburnum) பிடவமும் (wild jasmine, bedaly) உடைத்தே. – கொன்றையும் பிடவமும் கொண்டது

ஐங்குறுநூறு 446, பேயனார்முல்லைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள
நல்ல காண்குவ மாஅயோயே!
பாசறை அரும் தொழில் உதவி நம்
காதல் நல் நாட்டுப் போதரும் பொழுதே.

பொருளுரை:   மாமை நிறமுடையவளே! பாசறையில் தங்கி, கடுமையான போர்த் தொழிலை முடித்து விட்டு, காதலுக்குரிய நம்முடைய நல்ல நாட்டிற்குத் திரும்பி வந்து உன்னுடைய கூந்தலானது மேலும் புதுமணம் கொள்ளும்படியாக நல்லதை நிகழ்த்திக் காண்போம்.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  மாஅயோயே – அளபெடை, ஏகாரம் அசை நிலை, பொழுதே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  முல்லை நாறும் – முல்லையின் மணமுடைய,  கூந்தல் கமழ் கொள – கூந்தல் நறுமணம் கொள்ள, நல்ல – நல்லது, காண்குவம் – நாம் காண்போம்,  மாஅயோயே – மாமை நிறமுடையவளே, மா நிறத்துப் பெண்ணே, பாசறை – போர், அருந்தொழில் – கடினமானத் தொழில், உதவி – உதவி, நம் – நம், காதல் – காதல், நல் நாட்டு – நல்ல நாடு, போதரும் பொழுதே – வரும்பொழுது

ஐங்குறுநூறு 453, பேயனார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும்
வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண்,
கார் தொடங்கின்றால் காலை, அதனால்
நீர் தொடங்கினவால், நெடுங் கணவர்
தேர் தொடங்கின்றால் நம் வயிநானே.

பொருளுரை:   பள்ளங்கள் தோறும் தேரைகள் ஒலிக்கின்றன.  மேலே பறவைகள் விரும்பத்தக்க குரலில் ஒலிக்கின்றன.  அங்கே பார்.  மழைக் காலம் தொடங்கி விட்டது போல் தோன்றுகின்றது.  அதனால் என் நீண்ட கண்களில் இருந்து நீர் வடிகின்றது. என் கணவரின் தேர் நம்மை நோக்கி வரத் தொடங்கவில்லை.

குறிப்பு:  தொடங்கின்றால் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தொடங்கிவிட்டது.  தொடங்கின்றால் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரத் தொடங்குதல் இல்லை.  இலக்கணக் குறிப்பு:  தொடங்கின்றால் – ஆல் அசை நிலை, தொடங்கினவால் – ஆல் அசை நிலை, வயினானே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  அவல் தொறும் – பள்ளங்கள் தோறும், தேரை தெவிட்ட – தேரைக் கத்த,  மிசை தொறும் – மேலே, வெங்குரல் – விரும்பத்தக்க குரலில், புள்ளினம் ஒலிப்ப – பறவைகள் ஒலித்தன, உதுக்காண் – அங்கே பார், கார் தொடங்கின்றால் காலை –  மழைக்காலம் தொடங்கி விட்டது,  அதனால் நீர் தொடங்கினவால் – பிரிவால் என் கண்களில் நீர் வடிகின்றது, நெடும் – நீண்ட  (நெடுங் கண் நீர் தொடங்கினவால்), கணவர் தேர் தொடங்கின்றால் நம் வயிநானே – என் கணவருடைய தேர் நம்மை நோக்கி வரத்  தொடங்கவில்லை

ஐங்குறுநூறு 490, பேயனார்முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
அம் தீம் கிளவி தான் தர எம் வயின்
வந்தன்று மாதோ காரே ஆவயின்,
ஆய்தொடி அரும் படர் தீர,
ஆய் மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.

பொருளுரை:   பாகனே!  அழகிய இனிய சொற்களைப் பேசும், அழகிய தொடி அணிந்த என் காதலியை நான் அடையும்பொருட்டுக் கார்காலம் வந்துள்ளது.  அவளுடைய வருத்தும் அரிய நோய் நீங்குமாறு அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட உயர்ந்த தேரை வேகமாகச் செலுத்துவாயாக!

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  மாதோ – மாது, ஓ – அசை நிலைகள், காரே – ஏகாரம் அசை நிலை,  அம் தீம் கிளவி – அன்மொழித்தொகை, ஆய்தொடி – அன்மொழித்தொகை – அன்மொழித்தொகை, கடவுமதி – மதி முன்னிலையசை, விரைந்தே – ஏகாரம் அசை நிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

சொற்பொருள்:  அம் தீம் கிளவி – அழகிய இனிய சொற்கள், தான் தர – தான் தர, எம் வயின் வந்தன்று – என்னை அடைய வந்தது, மாதோ – அசைச் சொல், காரே – மழை, ஆவயின் – இந்த வேளையில், ஆய்தொடி – அழகிய தொடி, தேர்ந்த தொடி, அரும் படர் தீர – பெரும் துயரம் தீர, ஆய் மணி – அழகிய மணிகள், நெடுந்தேர் கடவுமதி விரைந்தே – உயர்ந்த தேரை விரைவாக ஓட்டு

ஐங்குறுநூறு 492,  பேயனார்முல்லைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
நின்னே போலும் மஞ்ஞை ஆல, நின்
நன்னுதல் நாறும் முல்லை மலர,
நின்னே போல மா மருண்டு நோக்க,
நின்னே உள்ளி வந்தனென்
நன்னுதல் அரிவை, காரினும் விரைந்தே.

பொருளுரை:   மயில்கள் உன்னைப் போல் நடனம் ஆடுகின்றன.  முல்லை மலர்கள் உன் நெற்றியைப் போன்று நறுமணத்துடன் மலர்ந்துள்ளன.  மான்கள் உன்னைப்போன்ற மருண்ட பார்வையைக் கொண்டுள்ளன.  நான் உன்னை நினைத்தபடியே, மழைக் கால மேகத்தை விட விரைவாக  ஓடி வந்தேன்.

குறிப்பு:  இலக்கணக் குறிப்பு:  அரிவை – விளி, விரைந்தே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  நின்னே போலும் – உன்னைப் போன்ற,  மஞ்ஞை – மயில்,  ஆல – நடனம் ஆட, நாறும் – நறுமணம் கொண்ட,  முல்லை – முல்லை,  நன் – அழகிய,   நுதல் – நெற்றி,   மா – மான்,  மருண்டு – மருண்ட பார்வை, உள்ளி – நினைத்து,  அரிவை – பெண்ணே, கார் – மேகம்,  விரைந்தே – விரைந்து

ஐங்குறுநூறு 493, பேயனார்முல்லைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
ஏறு முரண் சிறப்ப, ஏறு எதிர் இரங்க,
மாதர் மான் பிணை மறியொடு மறுகக்
கார் தொடங்கின்றே காலை
நேர் இறை முன்கை, நின் உள்ளியாம் வரவே.

பொருளுரை:   மழைக் காலம் தொடங்கி விட்டது.  காளை மாடுகள் கத்துகின்றன. அதற்குப் பதிலாக இடி இடிக்கின்றது. அழகிய ஆண் மான் ஒன்று தன் துணையுடனும் குட்டியுடனும் குதித்து விளையாடுகின்றது.  நேரான முன் கைகளையுடைய உன்னை நினைத்தபடி நான் வந்தேன்.

குறிப்பு:  ஏறு முரண் சிறப்ப ஏறு எதிர் இரங்க (1) – ஒளவை துரைசாமி உரை – ஏறு முன்னது ஆனேறும் பின்னது இடியேறுமாம்.  ஏறுகள் மாறுபாடு மிக்குச் சிலைக்க, அவற்றிற்கு எதிராக விசும்பில் இடியேறு முழங்க.  இடியொலி கேட்டு அச்சுற்ற ஏற்றினம் குளிர் மிகுதியால் முரண் மிக்குச் சிலைத்தலின், ஏறு முரண் சிறப்ப என்றார்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – முரண் சிறந்து நின்ற ஆனேற்றுக்கும் தனக்கும் ஏறு என்னும் பெயர் பொதுவாகலினாலும் நிற்றலானும் இடியேறு அவ்வானேற்றின் எதிர் முழங்கிற்று எனத் தற்குறிபேற்றமாக ஓதினர்.  மாதர் (2) – ஒளவை துரைசாமி உரை – காதல், உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை-  அழகிய.  இலக்கணக் குறிப்பு:  தொடங்கின்றே – ஏகாரம் அசை நிலை, நேர் இறை முன்கை – அன்மொழித்தொகை, யாம் – தன்மைப் பன்மை, வரவே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  ஏறு முரண் சிறப்ப – காளை மாடுகள் ஒலிக்க, ஏறு எதிர் இரங்க – இடி பதிலாக இடிக்க, மாதர் – அழகிய, மான் – ஆண் மான், பிணை – பெண் மான், மறியொடு – குட்டியோடு, மறுக – விளையாட, கார் தொடங்கின்றே காலை – மழைக் காலம் தொடங்கிய பொழுது, நேர் இறை முன் கை – நேரான முன் கைகள், நின் உள்ளி யாம் வரவே – உன்னை நினைத்து நான் வந்தேன்