பெரும்பாணாற்றுப்படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரும்பாணாற்றுப்படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெரும்பாணாற்றுப்படை

 பெரும்பாணாற்றுப்படை - உரை – வைதேகி

பாடியவர் – கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடப்பட்டோன் – தொண்டைமான் இளந்திரையன்
திணை – பாடாண் திணை
துறை – ஆற்றுப்படை
பா வகை – அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள் – 500  

தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்.  (தொல்காப்பியம், புறத்திணையியல் 29).

ஆற்றுப்படை: ஆற்றுப்படை என்பது ஒரு கொடையாளியிடம் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர் வந்த வறியோர்க்கு அவ்வள்ளலிடம் சென்று தாம் பெற்றவாறு அவர்கள் பெறுமாறு வழிப்படுத்தல்.  இப்பாடலில், ஒரு பாணர் மற்றொரு பாணரிடம், தான் பரிசு பெற்ற மன்னனிடம் சென்று பரிசு பெறும் முறையைக் கூறுகின்றார்.  சங்க நூல்கள் பதினெட்டில் நான்கு பாணர்கள் பற்றி இருப்பது, சங்க காலத்துப் பாணர்களின் சிறப்பை வெளிப்படுத்துகின்றது.

புலவர்:   கடியலூர் என்ற ஊரினர் இப்புலவர் பெருமான்.  ‘உருத்திரனுக்குக் கண் போன்ற சிறந்த முருகன்’ என்னும் பொருட்டாக, இது முருகனைக் குறிக்கும் பெயர் என்றும் இவர் சைவ சமயத்தினர் ஆதலும் கூடும் என்றார் மறைமலையடிகள்.  தொல்காப்பிய உரையில் பேராசிரியர் இவர் அந்தணர் எனக் குறிப்பிட்டுள்ளார்.  இவர் தான் பட்டினப்பாலையையும் எழுதியவர்.  இவர் எழுதிய அகநானூறு 167, குறுந்தொகை 352 ஆகிய பாடல்களும் நமக்குக் கிடைத்துள்ளன.

பாட்டுடைத்தலைவன்:   தொண்டைமான் இளந்திரையன்.  இவன் சோழர் குலத்தினன்.  இவனை சோழர் குலத்துப் பிற மன்னரிலும் ஏனைய இரண்டு வேந்தர்களை விடவும் சிறந்தவன் என்கின்றார் கடியலூர் உத்திரங்கண்ணனார்.  இம்மன்னன் காஞ்சிபுரத்திலிருந்து அரசாட்சி புரிந்தவன்.  இம்மன்னன் எழுதிய பாடல் ஒன்று புறநானூற்றில் கிடைத்துள்ளது (185).  ஒரு மன்னன் எவ்வாறு திறமையுடன் ஆட்சி புரிய வேண்டும் என வலியுறுத்தும் பாடல் அது. 

பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரும்பாண், பெரிய பாண் எனப் பொருள்படும்.  பெரிய பாணாவது, பெரும் பண்.  அஃதாவது பெரிய பாட்டு.  அக்காலத்துப் பாட்டுக்களைப் பாடுவதற்கெனத் தனி வகுப்பினராய்ச் சிலர் பிரிந்திருந்தனர்.  அவருள் பெரிய யாழைத் தாங்கி அதன் நரம்புகளை வலித்து அதன் இசையோடு ஒன்ற இனிது பாடுவோரே பெரும்பாணர் ஆவர்.  பாணரை அவர் பண்பால் பாண் என்றுக் கொண்டு அவரை ஆற்றுப்படுத்தியதால் பெரும்பாணாற்றுப்படை எனப் பெயர் அமைத்தனர். 

கதைச்சுருக்கம்:   வறுமையினால் வருந்தும் ஒரு பாணனிடம், இளந்திரையனிடம் பரிசு பெற்றுத் திரும்பிய இன்னொரு பாணன் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல். முதலில், தான் பெற்ற பரிசுகள் பற்றிக் கூறுகின்றான். திரையனின் சிறப்பைக் கூறுகின்றான் அடுத்து. போகும் வழியில் ஆறலை கள்வர்கள் துன்புறுத்த மாட்டார்கள், இடியும் தாக்குதல் செய்யா, பாம்பும் கொல்லுதல் செய்யா, காட்டு விலங்குகளும் துன்பம் செய்யா என்றெல்லாம் கூறுகின்றான். நெடிய வழியில் செல்லும் உப்பு வணிகர்கள் பற்றின விவரங்கள் உள்ளன. வணிகர்கள் செல்லுவதற்குச் சுங்கம் பெற்றுக் காவல் வழங்கும் வழிகள் உள்ளன என்றும் அறிகின்றோம். காட்டில் வாழும் எயினரின் விருந்தோம்பல், குறிஞ்சி மக்களின் இயல்பு, கோவலர் குடியிருப்பும் அவர்கள் கொடுக்கும் உணவும், முல்லை நில மக்களின் விருந்தோம்பல், மருத நில மக்களின் விருந்தோம்பல், கரும்பாலையில் கரும்புச் சாறு பெறுதல், நெய்தல் மக்களின் விருந்தோம்பல், அந்தணரின் விருந்தோம்பல், நீர்ப்பெயற்று என்னும் கடற்கரை ஊரின் கலங்கரை விளக்கு, திருவெஃகாவின் திருமால் கோயில், காஞ்சிபுரத்தின் சிறப்பு, இளந்திரையனின் சிறப்பு, அவனுடைய போர் வெற்றி, அவையில் வீற்றிருக்கும் மன்னனைப் போற்றும் முறை, மன்னன் பாணர்களுக்குத் தரும் அரிய பரிசுகள் ஆகியவற்றை நாம் இப்பாடலில் காணலாம்.

பாணனது யாழின் வருணனை

அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகிப்
பகல் கான்று, எழுதரு பல் கதிர்ப் பருதி
காய் சினம் திருகிய கடுந்திறல் வேனில்,
பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி
வள் இதழ் மாமலர் வயிற்றிடை வகுத்ததன்   5
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சைப்
பரியரைக் கமுகின் பாளை அம் பசும் பூக்
கரு இருந்தன்ன, கண்கூடு செறி துளை
உருக்கியன்ன, பொருத்துறு போர்வைச்
சுனை வறந்தன்ன இருள் தூங்கு வறுவாய்ப்   10
பிறை பிறந்தன்ன பின் ஏந்து கவைக்கடை,
நெடும் பணைத் திரள் தோள் மடந்தை முன்கைக்
குறுந்தொடி ஏய்க்கும், மெலிந்து வீங்கு திவவின்
மணி வார்ந்தன்ன, மாஇரு மருப்பின்
பொன் வார்ந்தன்ன, புரி அடங்கு நரம்பின்   15

தொடை அமை கேள்வி இடவயின் தழீஇ,  (1-16)

பொருளுரை:  அகன்ற இருண்ட வானில், பரவிய இருளை விழுங்கிப் பகல் பொழுதை உலகத்தில் தோற்றுவிக்கும் பல கதிர்களையுடைய ஞாயிறு, மிகுந்து சுடுகின்ற கடிய வலிமையுடைய முதுவேனில் காலத்தில், பசிய இலைகளை உதிர்த்த பருத்த அடியை உடைய பாதிரி மரங்களின் பெரிய இதழை உடையதாகிய வண்டுகளையுடைய மலர்களின் உட்புறத்தை ஒக்கும் நிறம் ஊட்டப்பெற்ற தோலினையும், பருத்த அடியினையுடைய கமுகின் பாளையாகிய அழகிய பசிய மலர் விரியாமல் கருவாய் இருத்தலை ஒத்த இரண்டு கண்ணும் கூடின செறிந்த துளையினையும், உருக்கி வார்த்தாற்போல் பொருந்திய போர்வையையும், சுனை வற்றி இருண்டு இருந்தாற்போன்ற நாக்கு இல்லாத வாயினையும், முதல் பிறை பிறந்து பின் ஏந்தியிருப்பது போல் பிரிவு உடைய கடைப்பகுதியையும், நெடிய மூங்கிலை ஒத்த திரண்ட தோளினையுடைய பெண்ணின் முன்னங்கையில் உள்ள குறிய வளையலை ஒக்கும் நெகிழ வேண்டிய இடத்தில் நெகிழ்ந்தும் இறுக வேண்டிய இடத்தில் இறுகியும் உள்ள வார்க்கட்டினையும், நீலமணி ஒழுகினால் ஒத்த கருமை நிறத்தையுடைய பெரிய தண்டினையும் உடைய, பொற்கம்பியை வார்த்தாற்போல் முறுக்கு அடங்கின நரம்பின் கட்டமைத்த யாழை இடது பக்கத்தில் அணைத்து,

குறிப்பு:  புறநானூறு 135, 308, பெரும்பாணாற்றுப்படை 15, சிறுபாணாற்றுப்படை 34 – பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்.  கேள்வி (16) – யாழிற்கு ஆகுபெயர். வார்தல் –  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  அகல் இரு விசும்பில் – அகன்ற இருண்ட வானில், பாய் இருள் பருகி பகல் கான்று எழுதரு பல் கதிர்ப் பருதி – பரவிய இருளை விழுங்கி பகல் பொழுதை உலகத்தில் தோற்றுவிக்கும் பல கதிர்களையுடைய ஞாயிறு, காய் சினம் திருகிய கடுந்திறல் வேனில் – மிகுந்து சுடுகின்ற கடிய வலிமையுடைய முதுவேனில் காலத்தில், பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி – பசிய இலைகளை உதிர்த்த பருத்த அடியை உடைய பாதிரி மரங்களின் (பராஅரை – அளபெடை), வள் இதழ் மா மலர் வயிற்றிடை வகுத்ததன் உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை – பெரிய இதழை உடையதாகிய வண்டுகளையுடைய மலர்களின் உட்புறத்தை ஒக்கும் நிறம் ஊட்டப்பெற்ற தோலினையும் (புரை – உவம உருபு), பரியரைக் கமுகின் பாளை அம் பசும் பூக்கரு இருந்தன்ன கண்கூடு செறி துளை – பருத்த அடியினையுடைய கமுகின் பாளையாகிய அழகிய பசிய மலர் விரியாமல் கருவாய் இருத்தலை ஒத்த இரண்டு கண்ணும் கூடின செறிந்த துளையினையும், உருக்கியன்ன பொருத்துறு போர்வை – உருக்கி வார்த்தாற்போல் பொருந்திய போர்வையையும், சுனை வறந்தன்ன இருள் தூங்கு வறுவாய் – சுனை வற்றி இருண்டு இருந்தாற்போன்ற நாக்கு இல்லாத வாயினையும், பிறை பிறந்தன்ன பின் ஏந்து கவைக்கடை – முதல் பிறை பிறந்து பின் ஏந்தியிருப்பது போல் பிரிவு உடைய கடைப்பகுதியையும், நெடும் பணைத் திரள் தோள் மடந்தை முன்கைக் குறுந்தொடி ஏய்க்கும் – நெடிய மூங்கிலை ஒத்த திரண்ட தோளினையுடைய பெண்ணின் முன்னங்கையில் உள்ள குறிய வளையலை ஒக்கும், மெலிந்து வீங்கு திவவின்  – நெகிழ வேண்டிய இடத்தில் நெகிழ்ந்தும் இறுக வேண்டிய இடத்தில் இறுகியும் உள்ள வார்க்கட்டினையும், மணி வார்ந்தன்ன மாஇரு மருப்பின் – நீலமணி ஒழுகினால் ஒத்த கருமை நிறத்தையுடைய பெரிய தண்டினையும் உடைய, பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் தொடை அமை கேள்வி – பொற்கம்பியை வார்த்தாற்போல் முறுக்கு அடங்கின நரம்பின் கட்டமைத்த யாழை (கேள்வி – ஆகுபெயர் யாழிற்கு), இடவயின் தழீஇ  – இடது பக்கத்தில் அணைத்து (தழீஇ – அளபெடை)

பாணனது வறுமை

வெந்தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது,
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போலக்,   20
கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்

புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண! (17-22)

பொருளுரை:  மிகுந்த சுடுதலை உடைய கதிரவனுடன் நிலவு வலிமையுடன் திரியும் குளிர்ந்த கடல் சூழ்ந்த உலகில் பரிசில் அளிக்கும் புரவலர்களைப் பெறாது, பெய்கின்ற மழை துறந்தபின் எழுந்த மஞ்சு சூழ்ந்த மலையில் பழுத்த மரத்தைத் தேடித் திரியும் பறவைகளைப் போல் வருந்தி அழும் சுற்றத்துடன் ஓரிடத்தில் தங்காமல் ஓடித் திரியும், பொலிவு அழிந்த உடலை உடையவனாக, நீ கற்ற கல்வியை வெறுத்துக் கூறுகின்ற வாயினையுடைய பாணனே!

குறிப்பு:  பழ மரமும் புள்ளும்:  புறநானூறு 173 – பழுமரம் புள் இமிழ்ந்தன்ன, புறநானூறு 370 – பழுமரம் உள்ளிய பறவை போல, பெரும்பாணாற்றுப்படை 20 – பழுமரம் தேரும் பறவை போல, பொருநராற்றுப்படை 64 – பழுமரம் உள்ளிய பறவையின், மதுரைக்காஞ்சி 576 – பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல. 

சொற்பொருள்:  வெந்தெறல் கனலியொடு – மிகுந்த சுடுதலை உடைய கதிரவனுடன், மதி வலம் திரிதரும் – நிலவு வலிமையுடன் திரியும், தண் கடல் வரைப்பில் – குளிர்ந்த கடல் சூழ்ந்த உலகில், தாங்குநர்ப் பெறாது – புரவலர்களைப் பெறாது, பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்து – பெய்கின்ற மழை துறந்து எழுந்த மஞ்சு சூழ்ந்த மலையில், பழுமரம் தேரும் பறவை போலக் கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து  திரிதரும் – பழுத்த மரத்தைத் தேடித் திரியும் பறவைகளைப் போல் வருந்தி அழும் சுற்றத்துடன் ஓரிடத்தில் தங்காமல் ஓடித் திரியும் (கல்லென் – ஒலிக்குறிப்பு),  புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண – பொலிவு அழிந்த உடலுடன் கற்ற கல்வியை வெறுத்துக் கூறுகின்ற வாயினையுடைய பாணனே (பாண – அண்மை விளி)

பரிசு பெற்றோன் தன் செல்வ நிலையை எடுத்துரைத்தல்

பெருவறம் கூர்ந்த கானம் கல்லெனக்
கருவி வானம் துளி சொரிந்தாங்குப்,
பழம் பசி கூர்ந்த எம் இரும்பேர் ஒக்கலொடு   25
வழங்கத் தவாஅப் பெருவளன் எய்தி,
வால் உளைப் புரவியொடு வயக்களிறு முகந்துகொண்டு

யாம் அவணின்றும் வருதும்; (23-28)  

பொருளுரை:  பெரிதாக மிகுந்து வறண்ட காட்டில், பெரும் ஒலியுடன் இடி மின்னல் முதலிய தொகுதிகளுடன் முகில்கள் மழையைப் பெய்தாற்போல், தொன்று தொட்டுப் பசி மிகுந்த எம்முடைய மிகப் பெரிய சுற்றத்தாருடன் நாங்கள் பிறர்க்குக் கொடுத்தும் குறையாத பெரும் செல்வத்தைப் பெற்று, வெள்ளை நிறத் தலையாட்டம் என்ற அணிகலனை உடைய குதிரைகளுடன் வலிமையுடைய களிற்று யானைகளையும் வாரிக்கொண்டு, நாங்கள் அவன் ஊரிலிருந்து வருகின்றோம். 

குறிப்பு:  இரும்பேர் ஒக்கல் – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 – கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை – புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 – மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 – கரிய பெரிய சுற்றத்தார், பொ. வே. சோமசுந்தரனார் உரை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அகநானூறு 301 – மிகப் பெரிய சுற்றத்தார்.  கருவி வானம் (23) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள்.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58). கூர்– கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

சொற்பொருள்:  பெருவறம் கூர்ந்த கானம் – பெரிதாக மிகுந்து வறண்ட காட்டில், கல்லெனக் கருவி வானம் துளி சொரிந்தாங்கு – பெரும் ஒலியுடன் இடி மின்னல் முதலிய தொகுதிகளுடன் முகில்கள் மழையைப் பெய்தாற்போல், பழம் பசி கூர்ந்த எம் இரும்பேர் ஒக்கலொடு – தொன்று தொட்டுப் பசி மிகுந்த எம்முடைய மிகப் பெரிய சுற்றத்தாருடன் (இரும்பேர் – ஒருபொருட்பன்மொழி), வழங்கத் தவாஅ – நாங்கள் பிறர்க்கு கொடுத்தும் குறையாத (தவாஅ – அளபெடை), பெருவளன் எய்தி – பெரும் செல்வத்தைப் பெற்று (வளன் – வளம் என்பதன் போலி), வால் உளைப் புரவியொடு வயக்களிறு – வெள்ளைப் பிடரி மயிரையுடைய குதிரைகளுடன் வலிமையுடைய களிற்று யானைகளையும், வெள்ளை நிறத் தலையாட்டம் என்ற அணிகலனை உடைய குதிரைகளுடன் வலிமையுடைய களிற்று யானைகளையும், முகந்துகொண்டு யாம் அவணின்றும் வருதும் – வாரிக்கொண்டு நாங்கள் அவன் ஊரிலிருந்து வருகின்றோம்

திரையனது சிறப்பை அறிவித்தல்

….. …. ………. நீயிரும்,

இருநிலம் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந்நீர்த்   30
திரைதரு மரபின் உரவோன் உம்பல்,
மலர்தலை உலகத்து மன் உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
இலங்கு நீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின்,   35
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்,
பல்வேல் திரையற் படர்குவிர் ஆயின்,

கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம்! (28-38)

பொருளுரை:  நீங்களும், பெரிய நிலத்தை அளந்துகொண்ட திருமகளை மருவாக மார்பில் கொண்ட, கடல் நீர் நிறத்தையுடைய திருமாலுக்குப் பின் வந்தவன், அக்கடலின் அலைகள் கொணர்ந்து மரபையுடைய சோழன் குடியில் பிறந்தவனாகிய, அகன்ற இடத்தையுடைய உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைக் காக்கும் முரசு முழங்குகின்ற சேர சோழர் பாண்டியர் என்ற மூவருள்ளும் விளங்குகின்ற நீரையுடைய கடலில் பிறந்த சங்கில் யாவராலும் புகழப்படும் வலம்புரிச் சங்கை ஒத்த குற்றம் தீர்ந்த தலைமையினையும், மறத்தைப் போக்கின அறத்தை விரும்பின செங்கோலையும் உடைய, பல வேல் படைகளையுடைய திரையனிடம் செல்ல எண்ணினீர் ஆயின், கேள் அவனுடைய தன்மையை!  உன் துன்பம் கெட்டு ஒழிவதாக!    

குறிப்பு:  அல்லது கடிந்த (36) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மறத்தைப் போக்கின, ச. வே. சுப்பிரமணியன் உரை – தீமையை நீக்கி.  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

சொற்பொருள்:  நீயிரும் – நீங்களும், இரு நிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கடை – பெரிய நிலத்தை அளந்துகொண்ட திருமகளை மருவாக மார்பில் கொண்ட கடல் நீர் நிறத்தையுடையவனுக்குப் பின் வந்தவன்,  அந்நீர்த் திரைதரு மரபின் உரவோன் உம்பல் – அக்கடலின் அலைகள் கொணர்ந்து மரபையுடைய சோழன் குடியில் பிறந்தவனாகிய, மலர்தலை உலகத்து மன் உயிர் காக்கும் முரசு முழங்கு தானை மூவர் உள்ளும் – அகன்ற இடத்தையுடைய உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைக் காக்கும் முரசு முழங்குகின்ற சேர சோழர் பாண்டியர் என்ற மூவருள்ளும், இலங்கு நீர்ப் பரப்பின் வளை மீக் கூறும் வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் – விளங்குகின்ற நீரையுடைய கடலில் பிறந்த சங்கில் யாவராலும் புகழப்படும் வலம்புரிச் சங்கை ஒத்த குற்றம் தீர்ந்த தலைமையினையும், அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் – மறத்தைப் போக்கின அறத்தை விரும்பின செங்கோலையும் உடைய, பல்வேல் திரையன் படர்குவிர் ஆயின் – பல வேல் படைகளையுடைய திரையனிடம் செல்ல எண்ணினீர் ஆயின், கேள் அவன் நிலையே – கேள் அவனுடைய தன்மையை, கெடுக நின் அவலம் – நின் துன்பம் கெட்டு ஒழிவதாக (கெடுக – வியங்கோள் வினைமுற்று)

திரையனது ஆணை

அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப்பொருள் வெளவும் களவு ஏர் வாழ்க்கைக்   40
கொடியோர் இன்று அவன் கடியுடை வியன் புலம்;
உருமும் உரறாது, அரவும் தப்பா,
காட்டு மாவும் உறுகண் செய்யா,

வேட்டு ஆங்கு, அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கிச்,

சென்மோ இரவல! சிறக்க நின் உள்ளம்! (39-45)

பொருளுரை:  வழியில் செல்பவர்கள் கதறும்படி அவர்களைத் தாக்கி அவர்கள் கையில் உள்ள பொருட்களைக் கைப்பற்றும் களவுத் தொழிலே உழவுபோலும் வாழ்க்கைத் தொழிலாக உடைய கொடுமையுடையோர் இல்லை அவனுடைய பெரிய நாட்டில். இடியேறும் இடியாது. பாம்புகளும் கொல்லுதலைச் செய்யா. காட்டு விலங்குகளும் வருத்தம் செய்யா.  நீ விரும்பியபடியே இளைப்பாறி, விரும்பின இடத்தில் தங்கிச் செல்வாயாகப் பொருள் பெறச் செல்பவனே!  உன் நெஞ்சம் சிறப்பு அடையட்டும்!!

சொற்பொருள்:  அத்தம் செல்வோர் அலறத் தாக்கி – வழியில் செல்பவர்கள் கதறும்படி அவர்களைத் தாக்கி, கைப்பொருள் வெளவும் களவு ஏர் வாழ்க்கைக் கொடியோர் இன்று அவன் கடியுடை வியன் புலம் – அவர்கள் கையில் உள்ள பொருட்களைக் கைப்பற்றும் களவுத் தொழிலே உழவுபோலும் வாழ்க்கைத் தொழிலாக உடைய கொடுமையுடையோர் இல்லை அவனுடைய பெரிய நாட்டில், உருமும் உரறாது அரவும் தப்பா – இடியேறும் இடியாது பாம்புகளும் கொல்லுதலைச் செய்யா, காட்டு மாவும் உறுகண் செய்யா – காட்டு விலங்குகளும் வருத்தம் செய்யா, வேட்டு ஆங்கு அசைவுழி அசைஇ – நீ விரும்பியபடியே இளைப்பாறி (அசைவுழி  – உழி ஏழாம் வேற்றுமை உருபு, அசைஇ – அளபெடை), நசைவுழி தங்கி சென்மோ இரவல – விரும்பின இடத்தில் தங்கிச் செல்வாயாகப் பொருள் பெறச் செல்பவனே (நசைவுழி – உழி ஏழாம் வேற்றுமை உருபு, மோ – முன்னிலையசை), சிறக்க நின் உள்ளம் – உன் நெஞ்சம் சிறப்பு அடையட்டும் (சிறக்க – வியங்கோள் வினைமுற்று)

உப்பு வணிகர் செல்லும் நெடிய வழி

கொழுஞ்சூட்டு அருந்திய, திருந்து நிலை ஆரத்து,
முழவின் அன்ன முழுமர உருளி,
எழூஉப் புணர்ந்தன்ன பரூஉக்கை நோன் பார்,
மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன,
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்  50
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்
கோழி சேக்கும் கூடுடைப் புதவின்,
முளை எயிற்று இரும்பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி,
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த   55
விசி வீங்கு இன் இயம் கடுப்பக் கயிறு பிணித்துக்
காடி வைத்த கலனுடை மூக்கின்,
மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்பக்
கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த
படலைக் கண்ணிப் பருஏர் எறுழ்த் திணிதோள்,   60
முடலை யாக்கை, முழு வலி மாக்கள்
சிறு துளைக் கொடு நுகம் நெறிபட நிரைத்த,
பெருங் கயிற்று ஒழுகை மருங்கில் காப்பச்
சில்பத உணவின் கொள்ளை சாற்றிப்

பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி, (46-65)

பொருளுரை:  விளிம்பால் சூழப்பட்டுத் திருந்திய நிலையையுடைய ஆரத்தை (சக்கரத்தின் நடுப்பகுதியிலிருந்து அதன் விளிம்பிற்குச் செல்லும் மரக்கட்டைகளை) உடைய, மத்தளம் போன்று முழுமரத்தால் கடைந்த உருளியினையும் (சக்கரத்தையும்), இரண்டு கணைய மரங்களைச் சேர்த்தாற்போன்ற பருத்த சட்டங்களையும் உடைய, மழைக்காலத்தில் மலை முகிலைச் சுமந்தாற்போல், புல்லினால் செய்த பாய் வேய்ந்த, செல்லும் வழியை அறுக்கும் வண்டியில், யானைகள் புகாது இருக்கக் காக்கின்ற தொழில் புரிவோர் பரண் மேல் கட்டிய குடிலை ஒப்ப இருக்கும் கூட்டையுடைய குடிலின் வாயிலில், மூங்கிலின் முளைபோலும் தந்தத்தை உடைய கரிய பெண் யானையின் முழந்தாளை ஒக்கும் துளையைத் தன்னிடத்து உடைய உரலை அசையும்படித் தூக்கி, நாடக மகளிர் ஆடும் களத்தில் வாரால் இறுக்கமாகப் பிணித்துக் கட்டிய இனிய முழவை ஒத்த, கயிற்றால் சுற்றிக் கட்டிய ஊறுகாய்ப் பானையை உடைய மரப்பகுதியின் மேல் (மூக்கணையின் மேல்) அமர்ந்து, கையில் குழந்தையை வைத்திருந்த பெண் எருத்தை முதுகில் அடிப்ப, மரக்கிளையில் மலர்க்கொத்துக்களை உடைய வேம்பின் சிறப்பு மிகுந்த இலைகளை இடையில் இட்டுக் கட்டிய தழை கலந்த மாலையினையும், பருத்த அழகிய வலிமையான இறுகின தோளினையும், முறுக்குண்ட உடலையும், மிகுந்த வலிமையையும் உடைய மக்கள், சிறிய துளையினை உடைய வளைந்த நுகத்தில் கட்டின பெரிய கயிற்றை உடையவனவாகிய வண்டிகள் செல்லும் இடத்தில் அதனைக் காவல் காத்துச் செல்ல, உப்பாகிய உணவின் விலையைக் கூறி, பல எருதுகளையுடைய உப்பு வணிகர்கள் ஊர்தோறும் செல்லுகின்ற நீண்ட வழி. 

குறிப்பு:  அறைவாய்ச் சகடம் (50) – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  ‘அறைத்துச் செல்லும் வாயையுடைய’ எனினுமாம், ‘வாய் அறை சகடம் என மாறி வழியை அறுத்துச் செல்லும் சகடம்’ எனினுமாம், அறைவாய்ச் சகடம், அகநானூறு 301 – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ‘ஒலியினைச் செய்யும் வாயினுடைய வண்டி’, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘அறுத்து அமைத்த வாயையுடைய சகடம்’.  மூக்கின் (57) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மூக்கு – சகடத்தின் முன்னர் நுகத்தடி பிணைக்கப்பட்ட மரம்.  இக்காலத்திலும் மூக்கணை என்றே வழங்குதல் அறிக.  எறுழ் – எறுழ் வலி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 92).

சொற்பொருள்:  கொழுஞ்சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து – வட்டையால் சூழப்பட்டுத் திருந்திய நிலையையுடைய ஆரத்தை உடைய, முழவின் அன்ன – மத்தளம் போன்ற (முழவின் – இன் சாரியை), முழு மர உருளி – முழுமரத்தால் கடைந்த உருளியினையும், எழூஉப் புணர்ந்தன்ன பரூஉக்கை நோன் பார் – இரண்டு கணைய மரங்களைச் சேர்த்தாற்போன்ற பருத்த சட்டங்களையும் உடைய (எழூஉ – அளபெடை, பரூஉ – அளபெடை), மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன – மழைக்காலத்தில் மலை முகிலைச் சுமந்தாற்போல், ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம் – புல்லினால் செய்த பாய் வேய்ந்த செல்லும் வழியை அறுக்கும் வண்டி, வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப – யானைகள் புனத்தில் புகாது இருக்கக் காக்கின்ற தொழில் புரிவோர் பரண் மேல் கட்டிய குடிலின் வாயிலில், கோழி சேக்கும் கூடுடைப் புதவின் – கோழிகள் இருக்கும் கூட்டையுடைய குடிலின் வாயிலில், முளை எயிற்று இரும்பிடி முழந்தாள் ஏய்க்கும் துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி – மூங்கிலின் முளைபோலும் தந்தத்தை உடைய கரிய பெண் யானையின் முழந்தாளை ஒக்கும் துளையைத் தன்னிடத்து உடைய உரலை அசையும்படித் தூக்கி (முழந்தாள் – முழங்கால் முட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள உறுப்பு), நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து – நாடகம் ஆடும் மகளிர் ஆடும் களத்தில் வாரால் இறுக்கமாகப் பிணித்த முழவை ஒப்பக் கயிற்றால் கட்டி (கடுப்ப – உவம உருபு), காடி வைத்த கலனுடை மூக்கின் – ஊறுகாய்ப் பானையை உடைய மரப்பகுதியின் மேல் அமர்ந்து, மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்ப – கையில் குழந்தையை வைத்திருந்த பெண் எருத்தை முதுகில் அடிப்ப (மகடூஉ- அளபெடை), கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த – மரக்கிளையில் மலர்க்கொத்துக்களை உடைய வேம்பின் சிறப்பு மிகுந்த இலைகளை இடையில் இட்டுக் கட்டிய (ஏடு – மேன்மை), படலைக் கண்ணிப் பருஏர் எறுழ்த் திணிதோள் முடலை யாக்கை முழு வலி மாக்கள் – தழை கலந்த மாலையினையும் பருத்த அழகிய வலிமையான இறுகின தோளினையும் முறுக்குண்ட உடலையும் மிகுந்த வலிமையையும் உடைய மக்கள், சிறு துளைக் கொடு நுகம் நெறிபட நிரைத்த பெருங் கயிற்று ஒழுகை மருங்கில் – சிறிய துளையினை உடைய வளைந்த நுகத்தில் கட்டின பெரிய கயிற்றை உடையவனவாகிய வண்டிகள் செல்லும் இடத்தில், காப்ப – காவல் காக்க, சில்பத உணவின் கொள்ளை சாற்றி – உப்பாகிய உணவின் விலையைக் கூறி, பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி – பல எருதுகளையுடைய உப்பு வணிகர்கள் ஊர்தோறும் செல்லுகின்ற நீண்ட வழி

வம்பலர் கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டுவழி

எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக,
மலையவும் கடலவும் மாண்பயம் தரூஉம்,
அரும்பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள்
அடிபுதை அரணம் எய்தி படம் புக்குப்
பொரு கணை தொலைச்சிய புண்தீர் மார்பின்,   70
விரவு வரிக் கச்சின் வெண்கை ஒள் வாள்,
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்கச்
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவுடைக்
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ்த்தோள்,
கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி,   75
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்,
தடவு நிலைப் பலவின் முழு முதற் கொண்ட
சிறு சுளைப் பெரும்பழம் கடுப்ப, மிரியல்
புணர்ப்பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்   80
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்

வில்லுடை வைப்பின் வியன் காட்டு இயவின்; (66-82)

பொருளுரை:  பகல் பொழுதில் செல்பவர்களுக்குப் பாதுகாவலாக, மலையில் உள்ளனவும் கடலில் உள்ளனவுமாகிய மாட்சிமையுடைய பயனைத் கொடுத்துப் பெறுவதற்கு அரிய பொருளைப் பெற்றுத் தம் சுற்றத்தாரை பயன்பெறச் செய்யும், திருத்தமாகத் தொடங்கிய செயலையும் செய்யும் வினையில் வலிய முயற்சியையும் உடைய, அடியை மறைக்கின்ற செருப்பை அணிந்து, சட்டை அணிந்து, ஆறலை கள்வர்களின் அம்புகளைக் கெடுத்த, அந்த அம்புகள் பட்ட புண்கள் தீர்ந்த மார்பினையும், வரியுடைய கச்சையினையும், வெள்ளைக் கைப்பிடியை உடைய ஒளியுடைய வாள் மலையில் ஊர்ந்து செல்கின்ற பாம்புபோலப் பூணப்பட்டு ஒரு பக்கத்தில் தொங்க, உடைவாள் சொருகப்பட்டு இறுக்கமாகக் கட்டிய உடையும் கரிய வில்லின் வலிமையை அகற்றிய அகன்ற வலிமையுடைய தோளினையும், கடம்பில் இருக்கும் முருகனை ஒத்த வலிமையினையும், வேலினையுடைய பெரிய கைகளையும் உடைய, ஓடாத புதியவர்கள் (வழியில் செல்லும் வணிகர்கள்), வளைந்த நிலைமையை உடைய பலா மரத்தின் அடிப்பகுதியில் குலைகொண்ட சிறிய சுளைகளை உடைய பெரிய பழங்கள் போன்று உள்ள மிளகின் ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிய (முதுகின் இருபுறமும் சம அளவு கட்டிய சுமையைத் தாங்கிய), தழும்பு அழுந்தின வலிமையான முதுகினையும், நிமிர்ந்த செவியையும் உடைய கழுதைகளுடைய திரளுடன் செல்லும், சுங்கம் உடைய பெரிய வழியின் பிரிவுகள் உடைய வழியைக் காக்கும், வில்லுடைய ஊர்களையுடைய அகன்ற காட்டு வழியில்,

குறிப்பு:  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம். உரியியல் 26).  எறுழ் – எறுழ் வலி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 92).  அடிபுதை அரணம் (69) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காலை மூடிய செருப்பு, காலை மூடாத செருப்பின் வேறு எனத் தெரிய அடிபுதை அரணம் என்றார்.  அடிபுதை அரணம் அணிவார் தமிழ் நாட்டார் அல்லாத புறநாட்டு வம்பலர் ஆதலும் அறிக.  அரணம் எய்தி – மறைக்கின்ற செருப்பைக் கோத்து, அரணத்தால் நடந்து எனினுமாம்.

சொற்பொருள்:  எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக – பகல் பொழுதில் செல்பவர்களுக்கு பாதுகாவலாக, மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம் அரும் பொருள் அருத்தும் – மலையில் உள்ளனவும் கடலில் உள்ளனவுமாகிய மாட்சிமையுடைய பயனைத் கொடுத்துப் பெறுவதற்கு அரிய பொருளைப் பெற்றுத் தம் சுற்றத்தாரை பயன்பெறச் செய்யும் (தரூஉம் – அளபெடை), திருந்து தொடை நோன் தாள் – திருத்தமாக தொடங்கிய செயலையும் செய்யும் வினையில் வலிய முயற்சியையும் உடைய, அடி புதை அரணம் எய்தி – அடியை மறைக்கின்ற செருப்பை அணிந்து, படம் புக்கு – சட்டை அணிந்து, பொரு கணை தொலைச்சிய – ஆறலை கள்வர்களின் அம்புகளைக் கெடுத்த, புண் தீர் மார்பின் – அந்த அம்புகள் பட்ட புண்கள் தீர்ந்த மார்பினையும், விரவு வரிக் கச்சின் – பொருந்திய வரியுடைய கச்சையினையும், வெண்கை ஒள் வாள் – வெள்ளைக் கைப்பிடியை உடைய ஒளியுடைய வாள், வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க – மலையில் ஊர்ந்து செல்கின்ற பாம்புபோல பூணப்பட்டு ஒரு பக்கத்தில் தொங்க (பாம்பின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது.  ஐந்தாம் வேற்றுமை உருபு), சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ்த்தோள் – உடைவாள் சொருகப்பட்டு இறுக்கமாகக் கட்டிய உடையும் கரிய வில்லின் வலிமையை அகற்றிய அகன்ற வலிமையுடைய தோளினையும், கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி – கடம்பில் இருக்கும் முருகனை ஒத்த வலிமை, உடம்பிடித் தடக்கை – வேலினையுடைய பெரிய கைகள், ஓடா வம்பலர் – ஓடாத புதியவர்கள் (வழியில் செல்லும் வணிகர்கள்), தடவு நிலைப் பலவின் முழு முதற் கொண்ட – வளைந்த நிலைமையை உடைய பலா மரத்தின் அடிப்பகுதியில் குலைகொண்ட, சிறு சுளைப் பெரும்பழம் – சிறிய சுளைகளை உடைய பெரிய பழங்கள், கடுப்ப – போன்று (உவம உருபு), மிரியல் புணர்ப்பொறை தாங்கிய – மிளகின் ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிய, வடு ஆழ் நோன் புறத்து – தழும்பு அழுந்தின வலிமையான முதுகினையும், அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு – நிமிர்ந்த செவியை உடைய கழுதைகளுடைய திரளுடன், வழங்கும் – செல்லும், உல்குடைப் பெருவழி – சுங்கம் உடைய பெரிய வழி, கவலை காக்கும் – பிரிவுகள் உடைய வழியைக் காக்கும், வில்லுடை வைப்பின் வியன் காட்டு இயவின் – வில்லுடைய ஊர்களையுடைய அகன்ற காட்டு வழியில் 

எயினர் குடிசை

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த,
பூளை அம் பசுங்காய் புடை விரிந்தன்ன,
வரிப்புற அணிலொடு கருப்பை ஆடாது,   85
யாற்று அறல் புரையும் வெரிந் உடைக் கொழுமடல்,
வேற்றலை அன்ன வைந்நுதி நெடுந்தகர்,

ஈத்து இலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை; (83-88)

பொருளுரை: நீண்ட அடிப்பகுதியை உடைய இலவமரத்தின் அசையும் கிளைகளில் காய்த்த பஞ்சினையுடைய அழகிய பசுமையான காயினது முதுகு வெடித்து விரிந்து பஞ்சு தோன்றினாற்போன்ற வரியை முதுகில் உடைய அணிலுடன் எலியும் நுழையாதபடி, ஆற்றின் அறலை ஒக்கும் பின் பகுதியை உடைய கொழுத்த மடலினையுடையதும் ஆகிய வேலின் முனை அன்ன கூர்மையான முனை உடைய, உயர்ந்த மேட்டினையும் ஈந்தின் இலையால் வேய்ந்த முள்ளம்பன்றியின் முதுகுபோலும் புறத்தினையுடைய குடிசையில்,

குறிப்பு:  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

சொற்பொருள்:  நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த – நீண்ட அடிப்பகுதியை உடைய இலவமரத்தின் அசையும் கிளைகளில் காய்த்த, பூளை அம் பசுங்காய் – பஞ்சினையுடைய அழகிய பசுமையான காய் (பூளை – பஞ்சு), புடை விரிந்தன்ன வரிப்புற அணிலொடு – முதுகு வெடித்து விரிந்து பஞ்சு தோன்றினாற்போன்ற வரியை முதுகில் உடைய அணிலுடன், கருப்பை ஆடாது – எலியும் திரியாதபடி, யாற்று அறல் புரையும் – ஆற்றின் அறலை ஒக்கும் (புரை – உவம உருபு), வெரிந் உடை கொழு மடல் – பின் பகுதியை உடைய கொழுத்த மடலினையுடையதும் ஆகிய, வேல் தலை அன்ன – வேலின் முனை அன்ன, வைந்நுதி – கூர்மையான முனை உடைய, நெடுந்தகர் – உயர்ந்த மேட்டினையும் (தகர் – மேட்டு நிலம்), ஈத்து இலை வேய்ந்த – ஈந்தின் இலையால் வேய்ந்த, எய்ப்புறக் குரம்பை – முள்ளம்பன்றியின் முதுகுபோலும் புறத்தினையுடைய குடிசையில்

புல்லரிசி எடுத்தல்

மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி,
ஈன் பிணவு ஒழியப் போகி நோன் காழ்   90
இரும்புதலை யாத்த திருந்து கணை விழுக்கோல்
உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி,
இருநிலக் கரம்பைப்படு நீறு ஆடி,

நுண் புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர், (89-94)

பொருளுரை:  மானின் தோலில் செய்த படுக்கையில் பிள்ளையுடன் முடங்கிக் கிடக்கும் பிள்ளையை ஈன்ற பெண்ணைத் தவிரப் பிறர் சென்று, பூண்தலையில் கட்டப்பட்ட திருந்திய திரட்சியுடைய சீரிய கோலினையும் உளி போலும் வாயை உடைய கடப்பாரையால், கீழ் மேலாகப் புரளும்படிக் குத்தி, கரிய கரம்பை நிலத்தில் எழுந்த புழுதியைத் துழாவி, மெல்லிய புல்லரிசியை எடுத்துக் கொண்ட வெள்ளைப் பற்களைக் கொண்ட எயிற்றியர்

குறிப்பு:  பிணவு (90) – பெண்.  பெண்ணும் பிணாவும் மக்கட்குரிய (தொல்காப்பியம், மரபியல் 61).  சுரை (92) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாரைக்கு (கடப்பாரைக்கு) ஆகுபெயர் என்க.

சொற்பொருள்:  மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி ஈன் பிணவு ஒழியப் போகி – மானின் தோலில் செய்த படுக்கையில் பிள்ளையுடன் முடங்கிக் கிடக்கும் பிள்ளையை ஈன்ற பெண்ணைத் தவிர பிறர் சென்று, நோன் காழ் இரும்புதலை யாத்த திருந்து கணை விழுக்கோல் உளிவாய்ச் சுரையின் – பூண்தலையில் கட்டப்பட்ட திருந்திய திரட்சியுடைய சீரிய கோலினையும் உளி போலும் வாயை உடைய கடப்பாரையால், மிளிர மிண்டி – கீழ் மேலாகப் புரளும்படிக் குத்தி (மிண்டி – குத்தி), இரு நிலக் கரம்பைப்படு நீறு ஆடி – கரிய கரம்பை நிலத்தில் எழுந்த புழுதியைத் துழாவி, நுண் புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர் – மெல்லிய புல்லரிசியை எடுத்துக் கொண்ட வெள்ளைப் பற்களைக் கொண்ட எயிற்றியர் (எயிற்றியர் – எயினர் பெண்கள்)

எயிற்றியர் அளிக்கும் உணவு

பார்வை யாத்த பறை தாள் விளவின்   95
நீழல் முன்றில் நில உரல் பெய்து,
குறுங்காழ் உலக்கை ஓச்சி, நெடுங்கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டித் தொல்லை
முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி,
வாராது அட்ட, வாடூன் புழுக்கல்,   100
வாடாத் தும்பை வயவர் பெருமகன்,
ஓடாத் தானை ஒண் தொழிற் கழற்கால்
செவ்வரை நாடன் சென்னியம் எனினே,
தெய்வ மடையின் தேக்கு இலைக் குவைஇ, நும்

பைதீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவிர்; (95-105)

பொருளுரை:  பார்வை மான் கட்டியதால் தேய்ந்த அடிப்பகுதியையுடைய விளாம்பழ மரத்தின் நிழலையுடைய வீட்டு முற்றத்தில், நிலத்தில் பதித்து வைத்த உரலில் அப்புல்லரிசியைப் பெய்து குற்றி, ஆழ்ந்த கிணற்றில் ஊறிய உவரி நீரை முகந்து, பழைய விளிம்பு இல்லாத வாயை உடைய பானையில் வார்த்து, முரிந்த அடுப்பில் ஏற்றி, வெட்டாது சமைத்த கருவாட்டைக் குழம்பாக உள்ள சோற்றை, “வாடாத தும்பை மலர்கள் சூடின மறவர்களின் தலைவனான, புறமுதுகு இடாத படையினையுடைய, விளங்கும் தொழில்களையுடைய வீரக்கழல் அணிந்த செவ்விய மலை நாட்டை உடைய மன்னனின் பாணர்கள் நாங்கள்” என நீங்கள் கூறினால், கடவுளுக்கு இட்டு வைத்த பலிபோல் தேக்கின் இலையில் குவித்து அவர்கள் தர, உங்கள் பசுமை தீர்ந்த சுற்றத்துடன் மிக்க உணவை நீங்கள் பெறுவீர்கள்.

குறிப்பு:   நற்றிணை 167-6 – பயன் தெரி பனுவல் பை தீர் பாண.  பார்வை (95) – நச்சினார்க்கினியர் உரை – பார்வை மான், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பார்வை மான், மானைக் காட்டி மானைப் பிடித்தற் பொருட்டு வளர்க்கப்பட்ட மான் என்க, பார்வை – ஆகுபெயர், நற்றிணை 212-1 – பார்வை வேட்டுவன் படுவலை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பார்வை ஒன்றனை வைத்து வேட்டுவன் அமைத்த வலை.  கழகத் தமிழ் அகராதி – பார்வை விலங்கு என்பது விலங்கைப் பிடிக்க பழகிய விலங்கு.  பார்வை:  பார்வை வேட்டுவன் நற்றிணை 212-1, 312-4, பார்வைப் போர் – கலித்தொகை 95-17, பார்வை யாத்த – பெரும்பாணாற்றுப்படை 95, பார்வை மடப் பிணை 20-4.  பைதீர் (105) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பசுமை தீர்ந்த.  பைதீர் பாணரொடு (மலைபடுகடாம் 40) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘பை – பசுமை, ஈங்கு செல்வமுடைமையின் மேற்று.  செல்வத்தை பசுமை என்றும் நல்குரவைக் கருமை என்றும் கூறுதல் மரபு.  இனி, பை இளமை எனக் கொண்டு இளமை தீர்ந்த பாணர் எனினுமாம்’.  பைதீர் பாண (நற்றிணை 167-6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வருத்தமில்லாத பாணனே, ஒளவை துரைசாமி உரை – வருத்தமுடைய பாணனே.  வாடாத் தும்பை (101) – வாடாத தும்பை மலர்கள், பொன்னால் செய்த தும்பை எனவும் கொள்ளலாம், வாடாத் தாமரை – பொன்னால் செய்த தாமரை (புறநானூறு 126, 319), வாடா மாலை – பொன்னினால் செய்த மாலை (நற்றிணை 90-5, புறநானூறு 364-1).

சொற்பொருள்:  பார்வை யாத்த பறை தாள் விளவின் நீழல் முன்றில் – பார்வை மான் கட்டியதால் தேய்ந்த அடிப்பகுதியையுடைய விளாம்பழ மரத்தின் நிழலையுடைய முற்றத்தில் (பார்வை  – ஆகுபெயர் மானிற்கு), பறை – தேய்ந்த, முன்றில் – இல் முன், நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), நில உரல் பெய்து குறுங்காழ் உலக்கை ஓச்சி – நிலத்தில் பதித்து வைத்த உரலில் அப்புல்லரிசியைப் பெய்து குற்றி, நெடுங்கிணற்று வல் ஊற்று உவரி தோண்டி – ஆழ்ந்த கிணற்றில் ஊறிய உவரி நீரை முகந்து, தொல்லை முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி – பழைய விளிம்பு இல்லாத வாயை உடைய பானையில் வார்த்து முரிந்த அடுப்பில் ஏற்றி, வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல் – அரியாது சமைத்த கருவாட்டைக் குழம்பாக உள்ள சோற்றை, வாடாத் தும்பை வயவர்  பெருமகன் – வாடாத தும்பை மலர்கள் சூடின மறவர்களின் தலைவன், ஓடாத் தானை ஒண் தொழிற் கழற்கால் செவ்வரை நாடன் – புறமுதுகு இடாத படையினையுடைய விளங்கும் தொழில்களையுடைய வீரக்கழல் அணிந்த செவ்விய மலை நாட்டை உடையவனுமான, சென்னியம் எனினே – நாங்கள் பாணர்கள் எனக் கூறினால் (சென்னியம் – தன்மைப் பன்மை), தெய்வ மடையின் தேக்கு இலைக் குவைஇ – கடவுளுக்கு இட்டு வைத்த பலிபோல் தேக்கின் இலையில் குவித்து (குவைஇ – அளபெடை), நும் பைதீர் கடும்பொடு – உங்கள் பசுமை தீர்ந்த சுற்றத்துடன், பதம் மிகப் பெறுகுவிர் – மிக்க உணவை நீங்கள் பெறுவீர்கள்

பாலை நிலக் கானவர்களின் வேட்டை

மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின்,
வான் மடி பொழுதில் நீர் நசைஇக் குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கிப்
புகழா வாகைப் பூவின் அன்ன,
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும்  110
அரை நாள் வேட்டம் அழுங்கின், பகல் நாள்,
பகுவாய் ஞமலியொடு பைம்புதல் எருக்கித்
தொகுவாய் வேலித் தொடர் வலை மாட்டி,
முள் அரைத் தாமரைப் புல் இதழ் புரையும்
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்குஅற வளைஇ,   115
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்

அருஞ்சுரம் இறந்த அம்பர், (106-117)

பொருளுரை:  மானின் அடிச்சுவடு அழுந்திக் கிடக்கின்ற மயங்குவதற்கு (வழி அறியாது வருந்துவதற்கு) காரணமான வழிகளின் அருகில், மழை பெய்தல் தவிர்ந்த காலத்தில் நீரை விரும்பித் தோண்டிய பள்ளங்களைச் சூழ்ந்த மூடிய குழிகளின் அகத்தில், மறைந்து ஒடுங்கி, அகத்திப் பூவை ஒத்த வளைந்த கொம்பினையுடைய பன்றியின் நீர் உண்ண வரும் வரவைப் பார்த்திருந்த, நடு இரவில் வேட்டையாட இயலாத வேளையில் எஞ்சிய அரை நாளில், பிளந்த வாயை உடைய நாய்களுடன் பசுமையான புதர்களை அடித்து, குவிந்த இடத்தையுடைய வேலியில் ஒன்றோடு ஒன்று சேர்த்துக் கட்டிய வலைகளை இட்டு, முள்ளைத் தண்டில் கொண்ட தாமரையின் மலர்களின் புற இதழ்களை ஒக்கும் நீண்ட செவியையுடைய சிறிய முயல்களை, அவை தப்பித்து ஓட முடியாதபடி சூழ்ந்து, கொடியத் தன்மையுடைய காட்டு மக்கள் கூடித் தின்னுகின்ற அரிய பாலை நிலத்தைக் கடந்ததன் பின் அவ்விடத்தில்,

குறிப்பு புகழா வாகை (109) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புகழா வாகை அகத்திக்கு வெளிப்படை.  வாகையாயின் புகழப்படும் என்பது கருத்து.  வாகை வெற்றிப் புகழ்க்கு அடையாளப் பூவாதல் அறிக.  ‘கடவுள் வாகை’ என்றார் பதிற்றுப்பத்தில் (பாடல் 66).  பேராசிரியர் கு.வெ. பாலசுப்ரமணியன் விளக்கம் – புகழைக் குறிக்கும் வாகை அல்லாத வாகை மரத்தை குறித்தது.  தொகுவாய் (113) – நெடுநல்வாடை 65 – தொகுவாய்க் கன்னல். 

சொற்பொருள்:  மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின் – மானின் அடிச்சுவடு அழுந்திக் கிடக்கின்ற மயங்குவதற்கு (வழி அறியாது வருந்துவதற்கு) காரணமான வழிகளின் அருகில், வான் மடி பொழுதில் நீர் நசைஇக் குழித்த அகழ் சூழ் பயம்பின் அகத்து – மழை பெய்தல் தவிர்ந்த காலத்தில் நீரை விரும்பித் தோண்டிய பள்ளங்களைச் சூழ்ந்த மூடிய குழிகளின் அகத்தில் (வான் – ஆகுபெயர் முகிலுக்கு, நசைஇ – அளபெடை), ஒளித்து ஒடுங்கி – மறைந்து ஒடுங்கி, புகழா வாகைப் பூவின் அன்ன – அகத்திப் பூவை ஒத்த (பூவின் – இன் சாரியை), வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும்  – வளைந்த கொம்பினையுடைய பன்றியின் நீர் உண்ண வரும் வரவைப் பார்த்திருந்த, அரைநாள் வேட்டம் அழுங்கின் – நடு இரவில் வேட்டையை நீக்கினார்களாயின், பகல் நாள் – எஞ்சிய அரை நாளில், பகுவாய் ஞமலியொடு பைம்புதல் எருக்கி – பிளந்த வாயை உடைய நாய்களுடன் பசுமையான புதர்களை அடித்து, தொகுவாய் வேலித் தொடர் வலை மாட்டி – குவிந்த இடத்தையுடைய வேலியில் ஒன்றோடு ஒன்று சேர்த்துக் கட்டிய வலைகளை இட்டு, முள் அரைத் தாமரைப் புல் இதழ் புரையும் நெடுஞ்செவிக் குறுமுயல் – முள்ளைத் தண்டில் கொண்ட தாமரையின் மலர்களின் புற இதழ்களை ஒக்கும் நீண்ட செவியையுடைய சிறிய முயல்களை (புரை – உவம உருபு), போக்கு அற வளைஇ – தப்பிக்க முடியாதபடி சூழ்ந்து (வளைஇ – அளபெடை), கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும் – கொடியத் தன்மையுடைய  காட்டு மக்கள் கூடித் தின்னுகின்ற, அருஞ்சுரம் இறந்த அம்பர் – அரிய பாலை நிலத்தைக் கடந்ததன் பின் அவ்விடத்தில்

எயினரது அரணில் பெறும் பொருட்கள்

…… ……….. ………. பருந்து பட,
ஒன்னாத் தெவ்வர் நடுங்க, ஓச்சி,
வைந்நுதி மழுங்கிய புலவுவாய் எஃகம்
வடி மணிப் பலகையொடு நிரைஇ, முடிநாண்   120
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்;
ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின்,
வரைத்தேன் புரையும் கவைக்கடைப் புதையொடு,
கடுந்துடி தூங்கும் கணைக்காற் பந்தர்த்
தொடர் நாய் யாத்த துன்னருங் கடிநகர்;   125
வாழ் முள் வேலிச் சூழ் மிளைப் படப்பைக்
கொடு நுகம் தழீஇய புதவின், செந்நிலை
நெடு நுதி வயக்கழு நிரைத்த வாயில்
கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின்,
களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன,   130
சுவல் விளை நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி,
ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்

வறைகால் யாத்தது வயின்தொறும் பெறுகுவிர்; (117-133)

பொருளுரை:  ஊனை உண்ணுவதற்குப் பருந்துகள் வந்து இருக்குமாறு பகைவர்கள் அஞ்ச அவர்களைத் தாக்கி, கூரிய முனை மழுங்கின புலவு நாறும் வாயை உடைய வேலை வடித்துச் செய்யப்பட மணிகள் கட்டின கேடயத்துடன் வரிசையாக வைத்து, மேற்பகுதியில் கட்டிய கயிற்றையுடைய வில்லைச் சாற்றி வைத்த அம்புகள் இருக்கும் அகன்ற வீடுகளையும், ஊகம் புல்லால் வேய்ந்த உயர்ந்த மதிலையும், மலையில் உள்ள தேன் இறால் ஒக்கும் பிரிவுகள் உடைய அடியினுடைய அம்புக் கட்டுடன் பருத்த தூண்களையுடைய பந்தலில் கடிய ஓசையுடைய துடிகள் தொங்கும், சங்கிலியால் நாயைக் கட்டி வைத்துள்ள நெருங்க முடியாத காவலை உடைய வீட்டினையும், உயிர் வாழ்கின்ற முள்ளையுடைய வேலியினையும் காவற்காட்டினையுடைய பக்கத்தையும் , வளைந்த கணையமரம் கொண்ட கதவினையும், செம்மையாக நிற்கின்ற நிலையினையும் உயர்ந்த முனையையுடைய வலிமையான கழு என்ற கூர்மையான ஆயுதங்களும் உடைய கொடிய வில்லையுடைய எயினருடைய அரணில் நீங்கள் தங்கினால், உவர் நிலத்தில் வளர்ந்த ஈந்தினது விதையைக் கண்டாற்போன்ற மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த சமைத்த சோற்றை, நாய் கடித்துக் கொண்டுவந்த சங்கு போன்ற முட்டைகளை உடைய உடும்பின் பொரியலால் மறைத்ததனை, ஒவ்வொரு இல்லத்திலும் நீங்கள் பெறுவீர்கள். 

குறிப்பு பட்டினப்பாலை 78 – கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி நடுகல்லின் அரண் போல, பட்டினப்பாலை 167 – காழ் ஊன்றிய கவி கிடுகின், முல்லைப்பாட்டு 41 – பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து, பெரும்பாணாற்றுப்படை 119-120 – எஃகம் வடி மணிப் பலகையொடு நிரைஇ.  பெரும்பாணாற்றுப்படை 131-133 – நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின் வறைகால் யாத்தது வயின்தொறும் பெறுகுவிர், மலைபடுகடாம் 176 – முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ.  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

சொற்பொருள்:  பருந்து பட ஒன்னாத் தெவ்வர் நடுங்க ஓச்சி – ஊனை உண்ணுவதற்குப் பருந்துகள் வந்து இருக்குமாறு பகைவர்கள் அஞ்சத் தாக்கி, வைந்நுதி மழுங்கிய புலவுவாய் எஃகம் வடி மணிப் பலகையொடு நிரைஇ – கூரிய முனை மழுங்கின புலவு நாறும் வாயை உடைய வேலை வடித்துச் செய்யப்பட மணிகள் கட்டின கேடயத்துடன் வரிசையாக வைத்து (நிரைஇ – அளபெடை), முடி நாண் சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர் – தலையில் (மேற்பகுதியில்) கட்டிய கயிற்றையுடைய வில்லைச் சாற்றி வைத்த அம்புகள் இருக்கும் அகன்ற வீடுகளையும் (முடி நாண் – வினைத்தொகை), ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின் – ஊகம் புல்லால் வேய்ந்த உயர்ந்த மதிலையும், வரைத் தேன் புரையும் கவைக்கடைப் புதையொடு – மலையில் உள்ள தேன் இறால் ஒக்கும் பிரிவுகள் உடைய அடியினுடைய அம்புக் கட்டுடன் (புரை – உவம உருபு), கடுந்துடி தூங்கும் கணைக்கால் பந்தர் – பருத்த தூண்களையுடைய பந்தலில் கடிய ஓசையுடைய துடி தொங்கும் (பந்தர் – பந்தல் என்பதன் போலி), தொடர் நாய் யாத்த துன் அருங்கடி நகர் – சங்கிலியால் நாயைக் கட்டி வைத்துள்ள நெருங்க முடியாத காவலை உடைய வீட்டினையும் (துன்னுதல் – நெருங்குதல்), வாழ் முள் வேலி சூழ் மிளைப் படப்பை – உயிர் வாழ்கின்ற முள்ளையுடைய வேலியினையும் காவற்காட்டினையுடைய பக்கத்தையும் (படப்பை – பக்கம்), கொடு நுகம் தழீஇய புதவின் – வளைந்த கணையமரம் கொண்ட கதவினையும் (தழீஇய – அளபெடை), செந்நிலை நெடு நுதி வயக்கழு நிரைத்த வாயில் – செம்மையாக நிற்கின்ற நிலையினையும் உயர்ந்த முனையையுடைய வலிமையான கழு என்ற கூர்மையான ஆயுதங்களும் (பகைவரைக் குத்துதற்குக் கழு வைத்தார் – நச்சினார்க்கினியர்), கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின் – வளைந்த/கொடிய வில்லையுடைய எயினருடைய (காட்டில் வாழ்பவர்கள்) அரணில் தங்கினால், களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன சுவல் விளை நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி – உவர் நிலத்தில் வளர்ந்த ஈந்தினது விதையைக் கண்டாற்போன்ற மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த சமைத்த சோற்றை, ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின் வறை கால் யாத்தது – நாய் கடித்துக் கொண்டுவந்த சங்கு போன்ற முட்டைகளை உடைய உடும்பின் பொரியலால் மறைத்ததை (வறை – பொரிக்கறி), வயின்தொறும் பெறுகுவிர் – ஒவ்வொரு இல்லத்திலும் நீங்கள் பெறுவீர்கள்

குறிஞ்சி நில மக்களின் இயல்பும் தொழிலும்

யானை தாக்கினும், அரவு மேல் செலினும்,
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்,   135
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை,
வலிக்கூட்டு உணவின் வாட்குடிப் பிறந்த,
புலிப் போத்து அன்ன, புல் அணல் காளை,
செல் நாய் அன்ன கருவில் சுற்றமொடு,
கேளா மன்னர் கடி புலம் புக்கு,   140
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி,
இல் அடு கள் இன் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி,
மடிவாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச்
சிலை நவில் எறுழ்த்தோள் ஓச்சி வலன் வளையூஉப்,   145
பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை,

முரண்தலை கழிந்த பின்றை, (134–147)

பொருளுரை:  யானை தன்னைத் தாக்க வந்தாலும், நீல நிறத்தையுடைய வானில் வலிமையுடன் இடியேறு இடித்தாலும், கர்ப்பம் கொண்ட பெண்ணும் அவற்றிற்கு அஞ்சாமல் வாழும் மறத்தினையுடைய வாழ்க்கையினையும், தங்கள் வலிமையால் கொள்ளை அடித்து உண்ணும் உணவுடைய, வாளால் தொழில் செய்யும் குடியில் பிறந்த, ஆண் புலியை ஒத்த, சிறிய தாடியையுடைய அந்நிலத்தின் தலைவன், தான் குறித்த விலங்கின் பின் செல்கின்ற நாய் அதைத் தவறாமல் கொள்வது போன்று, தன் சொல் கேளாத பகைமன்னரின் காவலுடைய நிலத்திற்குக் கொடிய வில்லையுடைய தன் காவலாளர்களுடன் சென்று அதிகாலையில் அவர்களுடைய பசுக்களைப் பற்றிக் கொண்டுவந்து, அவற்றைக் கள்ளுக்கு விலையாகக் கொடுத்து, தம் இல்லத்தில் நெல்லால் செய்த கள்ளினை உண்டு, வளமான மன்றத்தில் வலிமையுடைய ஏற்றினை அறுத்துத் தின்று, தோலை மடித்துப் போர்த்திய வாயையுடைய தண்ணுமை முரசு தங்கள் நடுவே முழங்க, வில் செலுத்துவதைப் பயின்ற இடத்தோளை எடுத்து வலப்பக்கத்தில் வளைந்து, பகல் பொழுதில் மகிழ்ச்சியுடன் ஆடுகின்ற மடியாதிருக்கும் இருக்கை உடைய, பொருதலை உடைய இடத்தைக் கடந்த பின்னர்,

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரவுக் காலத்தே ஆன் கொணர்ந்தது பகற்காலத்தே உண்டு ஆடி மகிழும் இருக்கை என்க.  கரு வில் (139) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கருமை ஈண்டுக் கொடுமையின் மேற்று.  மதவிடை கெண்டி (143) – ச. வே. சுப்பிரமணியன் உரை – வலிமையுடைய ஆட்டுக்கிடாயைக் கொன்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலிமையுடைய ஏற்றை அறுத்துத் தின்று.  கள்வர்கள்  தின்றல்: அகநானூறு 97 – நிரை பகுத்து இருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் கொலை வில் ஆடவர், அகநானூறு 129 – கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர், அகநானூறு 265 – இன் சிலை எழில் ஏறு கெண்டிப் புரைய நிணம் பொதி விழுத்தடி நெருப்பின் வைத்து எடுத்து அணங்கரு மரபின் பேஎய் போல விளர் ஊன் தின்ற வேட்கை நீங்கத் துகள் உற விளைந்த தோப்பி பருகித் குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்,  அகநானூறு 309 – கடுங்கண் மழவர் அம்பு சேண் படுத்து வன் புலத்து உய்த்தெனத் தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து, மலைபடுகடாம் 143 – மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி.  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).  எறுழ் – எறுழ் வலி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 92).

சொற்பொருள்:  யானை தாக்கினும் அரவு மேல் செலினும் – யானை தன்னைத் தாக்க வந்தாலும் பாம்பு தன் மேல் ஊர்ந்து சென்றாலும், நீல்நிற விசும்பின் வல்ஏறு சிலைப்பினும் – நீல நிறத்தையுடைய வானில் வலிமையுடன் இடியேறு இடித்தாலும் (நீல் – கடைக்குறை), சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை – சூல் கொண்ட பெண்ணும் அவற்றிற்கு அஞ்சாமல் வாழும் மறத்தினையுடைய வாழ்க்கை, வலிக்கூட்டு உணவின் –  தங்கள் வலிமையால் கொள்ளை அடித்து உண்ணும் உணவுடைய, வாட்குடிப் பிறந்த – வாளால் தொழில் செய்யும் குடியில் பிறந்த,  புலிப்போத்து அன்ன – ஆண் புலியை ஒத்த, புல் அணல் காளை – சிறிய/பொலிவு இல்லாத தாடியையுடைய அந்நிலத்தின் தலைவன், செல் நாய் அன்ன கரு வில் சுற்றமொடு – தான் குறித்த விலங்கின் பின் செல்கின்ற நாய் அதைத் தவறாமல் கொள்வது போன்று கொடிய வில்லையுடைய தன் காவலாளர்களுடன், கேளா மன்னர் கடிபுலம் புக்கு நாள் ஆ தந்து – தன் சொல் கேளாத பகைமன்னரின் காவலுடைய நிலத்திற்குச் சென்று அதிகாலையில் அவர்களுடைய பசுக்களைப் பற்றிக் கொண்டுவந்து, நறவு நொடை தொலைச்சி – அவற்றைக் கள்ளுக்கு விலையாகக் கொடுத்து (நறவு – ஐகாரம் கெட முற்று உகரம் பெற்று நறவு என்றாயிற்று), இல் அடு கள் இன் தோப்பி பருகி – தம் இல்லத்தில் நெல்லால் செய்த கள்ளினை உண்டு, மல்லல் மன்றத்து மத விடை கெண்டி – வளமான மன்றத்தில் வலிமையுடைய ஏற்றினை அறுத்துத் தின்று, மடிவாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்ப – தோலை மடித்துப் போர்த்திய வாயையுடைய தண்ணுமை முரசு தங்கள் நடுவே முழங்க, சிலை நவில் எறுழ்த்தோள் ஓச்சி வலன் வளையூஉ – வில் செலுத்துவதைப் பயின்ற இடத்தோளை எடுத்து வலப்பக்கத்தில் வளைந்து (வளையூஉ – அளபெடை), பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை – பகல் பொழுதில் மகிழ்ச்சியுடன் ஆடுகின்ற மடியாதிருக்கும் இருக்கை உடைய, முரண்தலை கழிந்த பின்றை – பொருதலை உடைய இடத்தைக் கடந்த பின்னர்

கோவலர் குடியிருப்பு

…        ……….  ……..       மறிய
குளகு அரை யாத்த குறுங்கால் குரம்பைச்
செற்றை வாயில் செறிகழிக் கதவின்,
கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின்,   150  
அதளோன் துஞ்சும் காப்பின் உதள,
நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில்,
கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும்
இடுமுள் வேலி எருப்படு வரைப்பின்,
நள் இருள் விடியல் புள் எழப் போகிப்   155
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி,
ஆம்பி வால்முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீந்தயிர் கலக்கி, நுரை தெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ,
நாள் மோர் மாறும் நல்மா மேனி   160
சிறு குழை துயல்வரும் காதில், பணைத்தோள்,
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்,
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்,
எருமை நல் ஆன் கருநாகு பெறூஉம்,   165
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின்,
இருங்கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன,

பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்; (147-168)

பொருளுரை:  ஆட்டுக்குட்டிகள் தின்னுவதற்காக அவற்றிற்கு ஏற்ற இலைகள் கட்டப்பட்ட குறிய கால்களையுடைய குடிசையின் சிறு தூறுகளையுடைய வாயிலையும், மரக்கம்புகளால் செய்த கதவினையும், வரகுக் கற்றையால் வேய்ந்த மரக்கம்புகளை மேல்பகுதியில் கொண்ட சேக்கையில் தோல் படுக்கையில் படுப்பவன் வசிக்கும் காவல் உடைய இடத்தையும், கிடாய்களைக் கட்டிய நெடிய கயிறுகளைத் தொடுத்த குறிய தறிகளை உடைய முற்றத்தில், வளைந்த முகத்தையுடைய செம்மறி ஆட்டுடன் வெள்ளாடுகள் கிடக்கும், இட்ட முள்ளினையுடைய வேலியினை உடைய ஊரில், இருள் நீங்குகின்ற விடியற்காலையில் பறவைகள் துயில் எழும்பொழுது சென்று, புலியின் முழக்கம்போல் முழக்கத்தையுடைய மத்தினை ஒலிக்கும்படி இழுத்து, குடைக்காளானுடைய வெள்ளை அரும்புகளை ஒத்த குவிந்த அரும்புகளையுடைய உறையினால் இறுகத் தோய்த்த இனிய தயிரைக் கடைந்து, வெண்ணெய் எடுத்து, தயிரின் புள்ளிகள் தெறித்த வாயை உடைய மோர்ப்பானையைத் தலையில், மெல்லிய சுமட்டின் மேல் வைத்துச் சென்று, புதிய மோரை விற்கும், நல்ல மாமை நிறத்தையுடைய மேனியையும், தாளுருவி என்னும் சிறு அணிகலன் அசையும் காதினையும், மூங்கில் போன்ற தோளினையும், குறியதாக அறல் உடைய மயிரை உடைய ஆயர் குடும்பத்தின் பெண், மோர் விற்றதால் பெற்ற நெல் முதலியவற்றால் சுற்றத்தார் யாவரையும் உண்ணச் செய்து, நெய்யை விற்கின்ற விலைக்குப் பசும்பொன்னை வாங்காதவளாக, எருமைகளையும் நல்ல பசுக்களையும் கன்றுகளையும் வாங்கும் சீழ்க்கை அடிக்க மடித்த வாயையுடைய இடையர் குடியிருப்பில் நீங்கள் தங்குவீர் ஆயின், பெரிய சுற்றமாகிய நண்டின் பார்ப்பை (குஞ்சை) ஒத்த பசிய தினை அரிசியால் ஆக்கிய சோற்றைப் பாலுடன் பெறுவீர்கள்.  

குறிப்பு:  கற்றை (150) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரகு வைக்கோல் கற்றை.   நுரை தெரிந்து (158) –   நச்சினார்க்கினியர் உரை – வெண்ணெய்யை எடுத்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெண்ணெய்யை எடுத்து, நுரையாலே பதம் தெரிந்து எனினுமாம். சிறு குழை (161) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாளுருவி என்ற அணிகலன்.  நெய் தெரி இயக்கம்:  நற்றிணை 12 – நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும்.

சொற்பொருள்:  மறிய குளகு அரை யாத்த குறுங்கால் குரம்பை – ஆட்டுக்குட்டிகள் தின்னுவதற்காக அவற்றிற்கு ஏற்ற இலைகள் கட்டப்பட்ட குறிய கால்களையுடைய குடிசை (மறிய – மறியினையுடைய, ஆறாவதன் பன்மை உருபு), செற்றை வாயில் – சிறு தூறுகளையுடைய வாயில், செறி கழி கதவின் – மரக்கம்புகளால் செய்த கதவினையும், கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின் அதளோன் துஞ்சும் காப்பின் – வரகுக் கற்றையால் வேய்ந்த மரக்கம்புகளை மேல்பகுதியில் கொண்ட சேக்கையில் தோல் படுக்கையில் படுப்பவன் வசிக்கும் காவல் உடைய இடத்தையும் (சாம்பு – சேக்கை, படுக்கை, அதள் – தோல்), உதள நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில் – கிடாய்களைக் கட்டிய நெடிய கயிறுகளைத் தொடுத்த குறிய தறிகளை உடைய முற்றத்தில் (உதள் – கிடாய், முன்றில் – இல் முன்), கொடு முகத் துருவையொடு வெள்ளை சேக்கும் – வளைந்த முகத்தையுடைய செம்மறி ஆட்டுடன் வெள்ளாடுகள் கிடக்கும், இடுமுள் வேலி எருப்படு வரைப்பின் – இட்ட முள்ளினையுடைய வேலியினை உடைய எரு மிகுந்த இடத்தில், நள் இருள் விடியல் புள் எழப் போகி – இருள் நீங்குகின்ற விடியற்காலையில் பறவைகள் துயில் எழும்பொழுது சென்று, புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி – புலியின் முழக்கம்போல் முழக்கத்தையுடைய மத்தினை ஒலிக்கும்படி இழுத்து, ஆம்பி வால் முகை அன்ன கூம்பு முகிழ் உறை அமை தீந்தயிர் கலக்கி – குடைக்காளானுடைய வெள்ளை அரும்புகளை ஒத்த குவிந்த அரும்புகளையுடைய உறையினால் இறுகத் தோய்த்த இனிய தயிரைக் கடைந்து, நுரை தெரிந்து – வெண்ணெய்யை எடுத்து, புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ – தயிரின் புள்ளிகள் தெறித்த வாயை உடைய மோர்ப்பானையைத் தலையில் மெல்லிய/அழகிய சுமட்டின் மேல் வைத்துச் சென்று (இரீஇ – அளபெடை), நாள் மோர் மாறும் – புதிய மோரை விற்கும், நல்மா மேனி – நல்ல மாமை நிறத்தையுடைய மேனி, சிறு குழை துயல்வரும் காதில் – தாளுருவி என்னும் சிறு அணிகலன் அசையும் காதினையும், பணைத்தோள் – மூங்கில் போன்ற தோளினையும், குறு நெறிக் கொண்ட கூந்தல் – குறியதாக அறல் உடைய மயிரை உடைய, ஆய்மகள் – ஆயர் குடும்பத்தின் பெண், அளை விலை – உணவின் கிளை உடன் அருத்தி – மோர் விற்றதால் பெற்ற நெல் முதலியவற்றால் சுற்றத்தார் யாவரையும் உண்ணச் செய்து, நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள் – நெய்யை விற்கின்ற விலைக்குப் பசும்பொன்னை வாங்காதவளாக, எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் – எருமைகளையும் நல்ல பசுக்களையும் கன்றுகளையும் வாங்கும் (பெறூஉம் – அளபெடை), மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின் – சீழ்க்கை அடிக்கும் மடித்த வாயையுடைய இடையர் குடியிருப்பில் நீங்கள் தங்குவீர் ஆயின், இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பு அன்ன பசுந்தினை மூரல் – பெரிய சுற்றமாகிய நண்டின் பார்ப்பை (குஞ்சை) ஒத்த பசிய தினை அரிசியால் ஆக்கிய சோற்றை (ஞெண்டின் – ஞெண்டு நண்டு என்பதன் போலி), பாலொடும் பெறுகுவிர் – பாலுடன் பெறுவீர்கள்

முல்லை நிலக் கோவலரின் குழலிசை

தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன்அடி,
விழுத்தண்டு ஊன்றிய மழுத்தின் வன் கை,   170
உறிக் கா ஊர்ந்த மறுப்படு மயிர்ச்சுவல்,
மேம்பால் உரைத்த ஓரி, ஓங்கு மிசைக்
கோட்டவும் கொடியவும் விரைஇக் காட்ட
பல்பூ மிடைந்த படலைக் கண்ணி,
ஒன்று அமர் உடுக்கைக் கூழ் ஆர் இடையன்   175
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி,
அம் நுண் அவிர் புகை கமழக் கைம்முயன்று,
ஞெலிகோல் கொண்ட பெருவிறல் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின்
இன் தீம் பாலை முனையின், குமிழின்   180
புழற்கோட்டுத் தொடுத்த மரல் புரி நரம்பின்
வில்யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி
பல்கால் பறவை கிளை செத்து ஓர்க்கும்

புல் ஆர் வியன் புலம் போகி, (169-184)

பொருளுரை:  செருப்பு விடாமல் அழுத்தியதால் வடு ஆழ்ந்த வலிமையான அடியினையும், பசுக்களுக்கு வருத்தம் செய்யும் தடியை உடைய கோடரித் தழும்பு இருந்த வலிய கையினையும், இரண்டு பக்கங்களிலும் உறியினையுடைய காவடிக் கம்பு மேலே இருந்ததால் உண்டாகிய தழும்பு நிறைந்த மயிருடைய தோளினையும், பிற பாலினும் சிறப்பான பசுவின் பாலைத் தடவிய மயிரினையும், உயர்ந்த உச்சியுடைய மரக்கிளைகளில் உள்ளனவும் கொடிகளில் உள்ளனவுமாகிய காட்டில் உள்ள பல்வேறு மலர்களையும் கலந்து, நெருக்கமாகக் கட்டிய மாலையினையும், ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய பால் சோற்றை உண்ணுகின்ற இடையன், கன்றுகளை விரும்பும் ஆனிரைகளுடன் காட்டில் தங்கி, அழகிய நுண்ணிதாக விளங்கும் புகை எழும்படி, கையால் கடைந்த கோலினால் உண்டாக்கிய, பெரிய வெற்றியையுடைய கடைக் கொள்ளியால் துளை இட்ட கரிய துளையுடைய குழலால் எழுப்பின மிகவும் இனிய பாலை என்னும் பண்ணைத் தான் வெறுத்து, அதன் பின் குமிழ மரத்தின் உள்துளையுடைய கிளையில் வளைத்துக் கட்டின மரலின் கயிறாகிய நரம்புடைய யாழை இசைக்கும், விரலால் மீட்டி எழும் குறிஞ்சி என்னும் பண்ணை, பல கால்களை உடைய வண்டுகள் தம் இனத்தின் ஓசை எனக் கருதி செவி கொடுத்துக் கேட்கும் புல் நிறைந்த அகன்ற நிலத்தைக் கடந்துபோய்,

குறிப்பு பெரும்பாணாற்றுப்படை 181-182 – மரல் புரி நரம்பின் வில் யாழ் இசைக்கும், மலைபடுகடாம் 430-431 – தளிரொடு மிடைந்த காமரு கண்ணி திரங்கு மரல் நாரில் பொலியச் சூடி, புறநானூறு 264 – மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு.  விழுத்தண்டு (170) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பசுக்களுக்கு வருத்தஞ் செய்யும் தடி.  மரீஇய (169) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விடாமல் கிடந்த.

சொற்பொருள்:  தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி – செருப்பு விடாமல் அழுத்தியதால் வடு ஆழ்ந்த வலிமையான அடியினையும் (மரீஇய – அளபெடை), விழுத் தண்டு ஊன்றிய மழுத்தின் வன் கை – பசுக்களுக்கு வருத்தம் செய்யும் தடியை உடைய கோடரித் தழும்பு இருந்த வலிய கையினையும், உறிக் கா ஊர்ந்த மறுப்படு மயிர்ச்சுவல் – இரண்டு பக்கங்களிலும் உறியினையுடைய காவடிக் கம்பு மேலே இருந்ததால் உண்டாகிய தழும்பு நிறைந்த மயிருடைய தோளினையும், மேம்பால் உரைத்த ஓரி – பிற பாலினும் சிறப்பான பசுவின் பாலைத் தடவிய மயிரினையும், ஓங்கு மிசைக் கோட்டவும் கொடியவும் – உயர்ந்த உச்சியுடைய மரக்கிளைகளில் உள்ளனவும் கொடிகளில் உள்ளனவுமாகிய, விரைஇ – கலந்து (அளபெடை), காட்ட பல் பூ மிடைந்த படலைக் கண்ணி – காட்டில் உள்ள பல்வேறு மலர்களையும் நெருக்கமாகக் கட்டிய மாலையினையும், ஒன்று அமர் உடுக்கை – ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழ் ஆர் இடையன் – பால் சோற்றை உண்ணுகின்ற இடையன், கன்று அமர் நிரையொடு – கன்றுகளை விரும்பும் ஆனிரைகளுடன், கானத்து அல்கி – காட்டில் தங்கி, அம் நுண் அவிர் புகை கமழ – அழகிய நுண்ணிதாக விளங்கும் புகை எழும்படி, கைம்முயன்று ஞெலிகோல் கொண்ட பெருவிறல் ஞெகிழிச் செந்தீத் தோட்ட– கையால் கடைந்த கோலினால் உண்டாக்கிய பெரிய வெற்றியையுடைய கடைக் கொள்ளியால் துளை இட்ட (தோட்ட – துளையிட்ட), கருந்துளைக் குழலின் – கரிய துளையுடைய குழலால் எழுப்பின, இன் தீம் பாலை முனையின் – மிகவும் இனிய பாலை என்னும் பண்ணைத் தான் வெறுத்து (இன் தீம் – ஒருபொருட் பன்மொழி), குமிழின் புழற்கோட்டுத் தொடுத்த மரல் புரி நரம்பின் வில்யாழ் இசைக்கும் – குமிழ மரத்தின் உள்துளையுடைய கிளையில் வளைத்துக் கட்டின மரலின் கயிறாகிய நரம்புடைய யாழை இசைக்கும் (வில்யாழ் – வில் வடிவமான யாழ்), விரல் எறி குறிஞ்சி – விரலால் மீட்டி எழும் குறிஞ்சி என்னும் பண்ணை, பல்கால் பறவை கிளை செத்து ஓர்க்கும் – பல கால்களை உடைய வண்டுகள் தம் இனத்தின் ஓசை எனக் கருதி செவி கொடுத்துக் கேட்கும், புல் ஆர் வியன் புலம் போகி – புல் நிறைந்த அகன்ற நிலத்தைக் கடந்துபோய்

முல்லை நிலத்து உழுது உண்பாரது ஊர்களில் கிடைப்பன

………               ……….. முள் உடுத்து
எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில்,   185
பிடிக்கணத்து அன்ன குதிர் உடை முன்றில்
களிற்றுத் தாள் புரையும் திரிமரப் பந்தர்
குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி,
நெடுஞ்சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்,
பருவ வானத்துப் பாமழை கடுப்பக்   190
கரு வை வேய்ந்த கவின் குடிச் சீறூர்
நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன,
குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றிப்
புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன,
அவரை வான் புழுக்கு அட்டிப் பயில்வுற்று,   195

இன்சுவை மூரல் பெறுகுவிர்; (184-196)

பொருளுரை:  உயிர் வேலியான முட்செடிகள் சூழ்ந்த காடுகள் (மரங்கள், செடிகள், புல் முதலிவை உடைய காடுகள்) வளர்ந்த தொழுக்களையுடைய நிலத்தில், பெண் யானையின் கூட்டம் நின்றாற்போன்று நிற்கும் வரகு குதிர்களையுடைய முற்றத்தையும், களிற்று யானையின் காலை ஒக்கும் வரகு முதலியற்றைத் திரிக்கும் திரிகை உடைய பந்தலையும், சிறிய வண்டியின் உருளையுடன் (சக்கரத்துடன்) கலப்பையையும் சார்த்தி வைக்கப்பட்டதால் உயர்ந்த சுவர் தேய்ந்த புகை சூழ்ந்த கொட்டில்களையும், கார்காலத்தில் வானில் பரவிய முகிலை ஒத்த வரகின் வைக்கோலால் வேய்ந்த அழகான குடியிருப்பையுடைய சிறிய ஊர்களில், நெடிய கொத்துக்களையுடைய பூளையின் மலர்களை ஒத்த குறிய அடிப்பகுதியையுடைய (தாளினையுடைய) வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை, நிறத்தையுடைய கொத்துக்களை உடைய வேங்கையின் மலர்களைக் கண்டாற்போல், அவரை விதையின் பருப்பைத் துழாவியதால் இனிதாகிய சுவையுடைய சோற்றை நீங்கள் பெறுவீர்கள்.

குறிப்பு:  பூளையின் சிறு பூ வரகுச் சோற்றுக்கு உவமை.  வேங்கையில் மலர்கள் அவரையின் விதைக்கு உவமை.

சொற்பொருள்:  முள் உடுத்து எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில் – உயிர் வேலியான முட்செடிகள் சூழ்ந்த காடுகள் (மரங்கள், செடிகள், புல் முதலிவை உடைய காடுகள்) வளர்ந்த தொழுக்களையுடைய நிலத்தில், பிடிக்கணத்து அன்ன குதிர் உடை முன்றில் – பெண் யானையின் கூட்டம் நின்றாற்போன்று நிற்கும் தானியக் குதிர்களையுடைய முற்றம் (கணத்து – கணம், அத்து சாரியை, முன்றில் – இல் முன்), களிற்றுத் தாள் புரையும் திரிமரப் பந்தர் – களிற்று யானையின் காலை ஒக்கும் வரகு முதலியற்றைத் திரிக்கும் திரிகை உடைய பந்தல் (புரை – உவம உருபு, பந்தர் – பந்தல் என்பதன் போலி), குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி நெடுஞ்சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் –  சிறிய வண்டியின் உருளையுடன் (சக்கரத்துடன்) கலப்பையையும் சார்த்தி வைக்கப்பட்டதால் உயர்ந்த சுவர் தேய்ந்த புகை சூழ்ந்த கொட்டில்களையும் (குறுஞ்சாடு – சிறிய வண்டி), பருவ வானத்துப் பா மழை கடுப்ப – கார்காலத்தில் வானில் பரவிய முகிலை ஒத்த (கடுப்ப – உவம உருபு), கரு வை வேய்ந்த கவின் குடிச் சீறூர் – வரகின் வைக்கோலால் வேய்ந்த அழகான குடியிருப்பையுடைய சிறிய ஊர்களில், நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன – நெடிய கொத்துக்களையுடைய பூளையின் மலர்களை ஒத்த (பூவின் – இன் சாரியை), குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி – குறிய அடிப்பகுதியையுடைய (தாளினையுடைய) வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை, புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன – நிறத்தையுடைய கொத்துக்களை உடைய வேங்கையின் மலர்களைக் கண்டாற்போல், அவரை வான் புழுக்கு அட்டிப் பயில்வுற்று இன்சுவை மூரல் பெறுகுவிர் – அவரை விதையின் பருப்பைத்  துழாவியதால் இனிதாகிய சுவையுடைய சோற்றை நீங்கள் பெறுவீர்கள் (பயில்தல் – துழாவுதல்)

மருத நிலத்தைச் சேர்ந்த முல்லை நிலம்

………………………………………………….ஞாங்கர்க்
குடி நிறை வல்சிச் செஞ்சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டிப்,
பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்புமுக முழுக் கொழு மூழ்க ஊன்றித்,   200
தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை
அரிபுகு பொழுதின் இரியல் போகி,
வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன,
வளர் இளம் பிள்ளை தழீஇக், குறுங்கால்
கறை அணல் குறும்பூழ் கட்சிச் சேக்கும்   205

வன்புலம் இறந்த பின்றை, (196-206)

பொருளுரை:  அந்நிலத்திற்கு மேல், அக்குடியிருப்பு நிறைந்த உணவையுடைய, செம்மையான சாலாக உழுகின்ற உழவர்கள், உழவிற்கு நன்று நடந்து பயின்ற பெரிய எருதுகளை முற்றத்தில் பூட்டிப், பெண் யானையின் வாயை ஒத்த வளைந்த வாயை உடைய கலப்பையினால் வளைய உழுது விதைத்த பின், இடையே களைகளைக் களைக்கொட்டுச் செலுத்தி நீக்கிய தோட்டத்திலிருந்து, அறுவடைப் பருவம் வரும்பொழுது, அங்கு எழும் உழவர்களின் ஆரவாரத்திற்கு அஞ்சி, வெள்ளை நிறத்தையுடைய கடம்பின் நறுமணமுடைய மலர்களை ஒத்த வளரும் தங்கள் பிள்ளைகளைத் தழுவி, குறுங்காலையும் கரிய கழுத்தையும் உடைய காடைகள் முல்லை நிலத்திற்குப் போன பின்,     

குறிப்பு:   சால் (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உழவர்கள் ஒருமுறை உழுவதை ஒரு சால் உழவு என்பர் புதவில் (198) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டு முன்றிலுக்கு ஆகுபெயர்.  எருதுகளை முன்றிலிடத்தே நுகம் பூட்டிக் கொண்டு செல்வார் என்றவாறு.  உடுப்பு முகம் (200) – உடும்பு முகம், கொழுவிற்கு உவமை, மென்தொடர் வன்தொடராயிற்று.

சொற்பொருள்:  ஞாங்கர் – அந்நிலத்திற்கு மேல், குடிநிறை வல்சி – அக்குடியிருப்பு நிறைந்த உணவையுடைய, செஞ்சால் உழவர் –  செம்மையான சாலாக உழுகின்ற உழவர்கள், நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி – உழவிற்கு நன்று நடந்து பயின்ற பெரிய எருதுகளை முற்றத்தில் பூட்டி, பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில் உடுப்புமுக முழுக் கொழு மூழ்க ஊன்றி – பெண் யானையின் வாயை ஒத்த வளைந்த வாயை உடைய கலப்பையின், (உடுப்புமுக – உடும்புமுக உடுப்புமுக என மென்தொடர் வன்தொடராயிற்று), தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை – வளைய உழுது விதைத்த பின் இடையே களைகளைக் களைக்கொட்டுச் செலுத்தி நீக்கிய தோட்டத்தை (துளர் – களைக்கொட்டு, துடவை – தோட்டம்), அரிபுகு பொழுதின் – அறுவடைப் பருவம் வரும்பொழுது, இரியல் போகி – ஆரவாரத்திற்கு அஞ்சிச் சென்று, வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன வளர் இளம் பிள்ளை தழீஇ – வெள்ளை நிறத்தையுடைய கடம்பின் நறுமணமுடைய மலர்களை ஒத்த வளரும் பிள்ளைகளைத் தழுவி (தழீஇ – அளபெடை), குறுங்கால் கறை அணல் குறும்பூழ் கட்சிச் சேக்கும் வன்புலம் இறந்த பின்றை – குறுங்காலையும் கரிய கழுத்தையும் உடைய காடைகள் முல்லை நிலத்திற்குப் போன பின் (குறும்பூழ் – காடை , கட்சி – காடு, கூடு, சேக்கை),

மருத நிலக் கழனிகளில் காணும் காட்சிகள் – நாற்று நடுதல்

……………………………………………………….மென்தோல்
மிதி உலைக் கொல்லன் முறி கொடிற்று அன்ன
கவைத்தாள் அலவன் அளற்று அளை சிதையப்
பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பின்,
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின்,   210
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்

முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில், (206-212)

பொருளுரை: மென்மையான தோல் துருத்தியை அமுக்கி ஊதி உலையில் தொழில் செய்கின்ற கொல்லனின் முறிந்த குறட்டினை ஒத்த, பிளவு உடைய காலையுடைய நண்டின் சேற்றில் உள்ள பொந்து) பாழ்படும்படி, பசிய கோரைப்புல்லை குத்தி எடுத்த கொம்பினையுடைய கரிய ஆனேறுகள் தம்மில் போரிடும் இடம் அகன்ற வயலில், உழாமல் நுண்மையான சேற்றினைச் சமம்படும்படி மிதித்த உழவர்கள் முடியாகக் கிடக்கின்ற நாற்றை நட்ட நெடிய நீரையுடைய வயலில்,

குறிப்பு:   மென்தோல் (206) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொல்லன் துருத்திக்கு ஆகுபெயர், காலாலே மிதித்துத் துருத்தியை ஊதச் செய்தலை இன்றும் காணலாம்.  அகநானூறு 202 – குருகு ஊது மிதி உலை, குறுந்தொகை 172 – உலை வாங்கு மிதி தோல், பெரும்பாணாற்றுப்படை 207 – மென்தோல் மிதி உலைக் கொல்லன்.  முறி கொடிற்று அன்ன கவைத்தாள். 

சொற்பொருள்:  மென்தோல் மிதி உலைக் கொல்லன் முறி கொடிற்று அன்ன – மென்மையான தோல் துருத்தியை அமுக்கி ஊதி உலையில் தொழில் செய்கின்ற கொல்லனின் முறிந்த கொடிற்றை ஒத்த (கொடிறு – குறடு, முறிகொடிற்று – வினைத்தொகை), கவைத்தாள் அலவன் அளற்று அளை சிதைய – பிளவு (பிரிவு) உடைய காலையுடைய நண்டின் சேற்றில் உள்ள முழை (பொந்து) பாழ்படும்படி (அலவன் – நண்டு), பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பின் கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் – பசிய கோரைப்புல்லைக் குத்தி எடுத்த கொம்பினையுடைய கரிய ஆனேறுகள் தம்மில் போரிடும் இடம் அகன்ற வயலில், உழாஅ நுண்தொளி நிரவிய வினைஞர் –  உழாமல் நுண்மையான சேற்றினைச் சமம்படும்படி மிதித்த உழவர்கள் (தொளி – சேறு, உழாஅ – அளபெடை), முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில் – முடியாகக் கிடக்கின்ற நாற்றை நட்ட நெடிய நீரையுடைய வயலில்

நெல் விளைதற் சிறப்பு

களைஞர் தந்த கணைக்கால் நெய்தற்
கள் கமழ் புதுப்பூ முனையின், முட்சினை
முகை சூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக்   215
கொடுங்கால் மாமலர் கொய்து கொண்டு, அவண
பஞ்சாய்க் கோரை பல்லின் சவட்டிப்
புணர் நார்ப் பெய்த புனைவு இன் கண்ணி,
ஈருடை இருந்தலை ஆரச் சூடிப்
பொன் காண் கட்டளை கடுப்பக் கண்பின்   220
புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்,
இரும்பு வடித்தன்ன மடியா மென் தோல்
கருங்கை வினைஞர் காதல்அம் சிறாஅர்,
பழஞ்சோற்று அமலை முனைஇ, வரம்பில்
புது வை வேய்ந்த கவி குடில் முன்றில்,   225
அவல் எறி உலக்கைப் பாடு விறந்து, அயல
கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம்,

நீங்கா யாணர் வாங்கு கதிர்க் கழனிக் (213-228)

பொருளுரை:  களை பறிப்போர் தந்த திரண்ட அடிப்பகுதியுடைய நெய்தல் செடியின் தேன் மணமுடைய புதிய பூக்களை வெறுத்ததால், முள்ளையுடைய கிளைகள் கொண்ட அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடைய மடிந்த வாயையும் வளைந்த காம்பினையும் உடைய முள்ளியின் கரிய பூவைப் பறித்துக் கொண்டு, அவ்விடத்தில் உள்ள கோரைப்புல்லைப் பற்களால் மென்று கிழித்து முடிச்சு உடைய நாரால் கட்டின இனிய மாலையை, ஈர் உடைய கரிய தலையில் நிரம்ப அணிந்து, பொன்னை உரைக்கும் உரை கல்லை ஒப்பச் சம்பங்கோரையின் சிறுகாயில் தோன்றிய தாதை அக்காயை முறித்து அப்பிக் கொண்ட மார்பினையும், இரும்பைத் தகடு ஆக்கினாற்போல் உள்ள சுருக்கம் இல்லாத மெல்லிய தோலையும் உடைய, வலிய கையால் தொழில்  செய்பவர்களின் விருப்பமுடைய அழகிய சிறுவர்கள் பழைய சோற்றின் கட்டியை வெறுத்ததால், எல்லையில் புதிய வைக்கோலால் வேய்ந்த கவிந்த கூரையுடைய குடிலின் முற்றத்தில் அவலை இடிக்கின்றனர்.  இடிக்கும் உலக்கையின் மிகுந்த ஓசையால், அருகில் இருக்கும் வளைந்த வாயையுடைய கிளிகள் தமக்கு உண்டாகிய பகைமையாக அதை எண்ணி அஞ்சும் இடையில்லாத புதுவருவாயினையுடைய வளையும் கதிர்கள் உடைய வயலில்,  

குறிப்பு  அகநானூறு 172 – இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரும்பை உருக்கி வார்த்தியற்றினாற் போன்ற வன்மையான கையையுடைய குறவன்.   இரும்பு வடித்தன்ன மடியா மென் தோல் கருங்கை வினைஞர் (221-222) – நச்சினார்க்கினியர் மற்றும் பொ. வே. சோமசுந்தரனார் உரைகள் – இரும்பைத் தகடாக்கினாலொத்த திரையாத மெல்லிய தோலினையும் உடைய, வலிய கையால் தொழில் செய்வார்.  விறந்து (226) – விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 347).  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  களைஞர் தந்த கணைக்கால் நெய்தற் கள் கமழ் புதுப் பூ முனையின் – களை பறிப்போர் தந்த திரண்ட அடிப்பகுதியுடைய நெய்தல் செடியின் தேன் மணமுடைய புதிய பூக்களை வெறுத்ததால், முள் சினை முகை சூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக் கொடுங்கால் மாமலர் கொய்து கொண்டு – முள்ளையுடைய கிளைகள் கொண்ட அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடைய மடிந்த வாயையும் வளைந்த காம்பினையும் உடைய முள்ளியின் கரிய பூவைப் பறித்துக் கொண்டு, அவண பஞ்சாய்க் கோரை பல்லின் சவட்டிப் புணர் நார்ப் பெய்த புனைவு இன் கண்ணி – அவ்விடத்தில் உள்ள கோரைப்புல்லைப் பற்களால் மென்று கிழித்து முடிச்சு உடைய நாரால் கட்டின இனிய மாலையை, ஈருடை இருந்தலை ஆரச் சூடி – ஈர் உடைய கரிய தலையில் நிரம்ப அணிந்து, பொன் காண் கட்டளை கடுப்ப  – பொன்னை உரைக்கும் உரை கல்லை ஒப்ப (கடுப்ப – உவம உருபு), கண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின் – சம்பங்கோரையின் சிறுகாயில் தோன்றிய தாதை அக்காயை முறித்து அடித்துக் கொண்ட மார்பினையும், இரும்பு வடித்தன்ன மடியா மென் தோல் – இரும்பைத் தகடு ஆக்கினாற்போல் உள்ள சுருக்கம் இல்லாத மெல்லிய தோலையும் உடைய, கருங்கை வினைஞர் காதல் அம் சிறாஅர் – வலிய கையால் தொழில்  செய்பவர்களின் விருப்பமுடைய அழகிய சிறுவர்கள் (சிறாஅர் – அளபெடை), பழஞ்சோற்று அமலை முனைஇ – பழைய சோற்றின் கட்டியை வெறுத்து (முனைஇ – அளபெடை), வரம்பில் புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் – எல்லையில் புதிய வைக்கோலால் வேய்ந்த கவிந்த கூரையுடைய குடிலின் முற்றத்தில்  (முன்றில் – இல் முன்), அவல் எறி உலக்கைப் பாடு விறந்து – அவலை இடிக்கும் உலக்கையின் மிகுந்த ஓசையால், அயலகொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம் – அருகில் இருக்கும் வளைந்த வாயையுடைய கிளிகள் தமக்கு உண்டாகிய பகைமையாக எண்ணி அஞ்சும் (வெரூஉம் – அளபெடை), நீங்கா யாணர் வாங்கு கதிர்க் கழனி – இடையில்லாத புது வருவாயினையுடைய வளையும் கதிர்கள் உடைய வயலில்

நெல் அரிந்து கடா விடுதல்

கடுப்புடைப் பறவைச் சாதி அன்ன,
பைது அற விளைந்த பெருஞ் செந்நெல்லின்   230
தூம்புடைத் திரள் தாள் துமித்த வினைஞர்,
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்,
பலி பெறு வியன்களம் மலிய ஏற்றிக்
கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து, ஆடும்
துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல்,   235
சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின்,
குழுமு நிலைப் போரின் முழு முதல் தொலைச்சிப்
பகடு ஊர்பு இழிந்த பின்றைத் துகள் தப,
வையும் துரும்பும் நீக்கி பைது அற
குடகாற்று எறிந்த குப்பை, வடபால்   240
செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றுந்

தண் பணை தழீஇய தளரா இருக்கைப், (229-242)

பொருளுரை:  கடுக்கும் தன்மையுடைய குளவித் திரளை ஒத்த, பசுமை இல்லாதவாறு முற்றின பெரிய செந்நெல்லின், உள்துளை உடைய திரண்ட தாளை (செடியின் காலை) அறுத்த உழவர்கள், பாம்புகள் இருக்கும் மருத மரத்தின் உயர்ந்த கிளைகளால் உண்டான நிழலில் கடவுளுக்குப் பலி கொடுக்கும் அகன்ற களங்களில் மிகவும் நிறைய வைக்கோலைப் போராக வைத்துள்ளனர். கூட்டமாகிய தம் சுற்றத்துடன் ஒழுங்காக இணைந்து நின்று துணங்கைக் கூத்தாடும் அழகிய பூதங்கள் ஆடையை உடுத்தி நின்றவை போல, சிலந்தியின் வெள்ளை நூல் சூழ்ந்த பக்கத்தினையுடைய, பலவாகிய திரண்ட போர்களையுடைய பெரிய அடியை இழுத்து விரித்து, கடாவிட்டுப் போனபின், குற்றமில்லாது வைக்கோலையும் துரும்பையும் நீக்கி, ஈரம் உலர, மேல்காற்றில் கையால் தூவின நெற்குவியல், வடக்கில் உள்ள செம்பொன் நிறமுடைய மேரு மலையைப்போன்று தோன்றும், மருத நிலம் சூழ்ந்த அசையாத குடியிருப்புகளில்,

சொற்பொருள்:  கடுப்புடைப் பறவைச் சாதி அன்ன – கடுக்கும் தன்மையுடைய குளவித் திரளை ஒத்த, பைது அற விளைந்த  பெருஞ் செந்நெல்லின் – பசுமை இல்லாதவாறு முற்றின பெரிய செந்நெல்லின், தூம்புடைத் திரள் தாள் துமித்த வினைஞர் – உள்துளை உடைய திரண்ட தாளை (செடியின் காலை) அறுத்த தொழில் செய்பவர்கள், பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் – பாம்புகள் இருக்கும் மருத மரத்தின் உயர்ந்த கிளைகளால் உண்டான நிழலில் (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி – பிச்சை பெறும் (அல்லது கடவுளுக்குப் பலி கொடுக்கும்) அகன்ற களங்களில் மிகவும் நிறைய வைக்கோல் போராக உயர்த்தி, கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து  ஆடும் துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல் – கூட்டமாகிய தம் சுற்றத்துடன் ஒழுங்காக இணைந்து நின்று ஆடும் துணங்கைக் கூத்தையுடைய அழகிய பூதங்கள் ஆடையை உடுத்தி நின்றவை போல, சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின் – சிலந்தியின் வெள்ளை நூல் சூழ்ந்த பக்கத்தினையுடைய, குழுமு நிலைப் போரின் முழு முதல் தொலைச்சி – பலவாகிய திரண்ட போர்களையுடைய பெரிய அடியை வாங்கி விரித்து, பகடு ஊர்பு இழிந்த பின்றை – கடாவிட்டுப் போனபின், துகள் தப வையும் துரும்பும் நீக்கி – குற்றமில்லாது வைக்கோலையும் துரும்பையும் நீக்கி, பைது அற – ஈரம் உலர, குடகாற்று எறிந்த குப்பை – மேல்காற்றில் கையால் தூவின நெற்குவியல், வடபால் செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றும் – வடக்கில் உள்ள செம்பொன் நிறமுடைய மேரு மலையைப்போன்று தோன்றும், தண் பணை தழீஇய தளரா இருக்கை – மருத நிலம் சூழ்ந்த அசையாத குடியிருப்புகளில் (தழீஇய – அளபெடை) 

மருத நிலத்து ஊர்களில் பெறும் உணவுகள்

பகட்டு ஆ ஈன்ற கொடு நடைக் குழவிக்
கவைத்தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்,
ஏணி எய்தா நீள்நெடு மார்பின்,   245
முகடு துமித்து அடுக்கிய பழம்பல் உணவின்
குமரி மூத்த கூடு ஓங்கு நல் இல்,
தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
ஊரா நற்றேர் உருட்டிய புதல்வர்,
தளர் நடை வருத்தம் வீட அலர் முலைச்   250
செவிலி அம் பெண்டிர்த் தழீஇ பால் ஆர்ந்து,
அமளித் துஞ்சும் அழகுடை நல்இல்,
தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை
மல்லல் பேர் ஊர் மடியின், மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி,   255

மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்; (243-256)

பொருளுரை:  எருதுகளுடன் கூடிய பசுக்கள் ஈன்ற வளைந்த கால்களை உடைய கன்றுகளைக் கட்டின இரட்டைக் கயிற்றால் தொடுத்த தறிகள் (தூண்கள்) இருக்கும் பக்கத்தையும், ஏணியால் எட்ட முடியாத மிக உயர்ந்த நடுப் பகுதியையும், மேல்பகுதியைத் திறந்து உள்ள சொரிந்த பழைய நிறைய நெல்லினை உடைய, அழியாத் தன்மையுடைய முதிர்ந்த நெற்கூடுகள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும், தச்சர்களின் சிறுவர்கள் விரும்புமாறு அழகாய்ப் பண்ணின குழந்தைகளின் நல்ல விளையாட்டுத் தேரை உருட்டி, தளர்ந்த நடையால் தங்களுக்கு உண்டான வருத்தம் நீங்கும்படி, பெரிய முலைகளை உடைய செவிலித் தாயாகிய அழகிய மகளிரைத் தழுவிப் பாலை நிரம்ப உண்டு, தமது படுக்கையில் புதல்வர் துயில் கொள்ளும் அழகிய நல்ல இல்லங்களையும், பழைய பசி அறியாத அசையாத குடியிருப்புகள் உடைய வளம் மிகுந்த ஊரில் நீங்கள் தங்குவீர்கள் ஆயின், தொழிலில் அலுக்காத உழவர் தந்த வெள்ளை நெல்லின் சோற்றை, மனையில் வாழும் கோழிப் பெடையினால் சமைத்த பொரியலோடு பெறுவீர்கள்.

குறிப்பு  செவிலி (251) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செவிலியர்.  பன்மைக்கண் ஒருமை மயங்கிற்று.  குழவி (243) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).  நடை – காலுக்கு ஆகுபெயர்.

சொற்பொருள்:  பகட்டு ஆ ஈன்ற கொடு நடைக் குழவி கவைத்தாம்பு தொடுத்த – எருதுகளுடன் கூடிய பசுக்கள் ஈன்ற வளைந்த கால்களை உடைய கன்றுகளைக் கட்டின இரட்டைக் கயிற்றால் தொடுத்த, காழ் ஊன்று அல்குல் – தறிகள் இருக்கும் பக்கத்தையும், ஏணி எய்தா நீள்நெடு மார்பின் – ஏணியால் எட்ட முடியாத மிக உயர்ந்த நடுப் பகுதியையும், முகடு துமித்து அடுக்கிய பழம்பல் உணவின் – மேல்பகுதியைத் திறந்து உள்ள சொரிந்த பழைய நிறைய நெல்லினை உடைய, குமரி மூத்த  கூடு ஓங்கு நல் இல் – அழியாத் தன்மையுடைய முதிர்ந்த நெற்கூடுகள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும், தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த – தச்சர்களின் சிறுவர்கள் விரும்புமாறு அழகாய்ப் பண்ணின (சிறாஅர் – அளபெடை),  ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர் – குழந்தைகளின் ஊர்ந்துச் செல்லாத நல்ல விளையாட்டுத் தேர் (வெளிப்படை),  தளர் நடை வருத்தம் வீட – தளர்ந்த நடையால் தங்களுக்கு உண்டான வருத்தம் நீங்கும்படி, அலர் முலைச் செவிலி அம் பெண்டிர்த் தழீஇ பால் ஆர்ந்து – பெரிய முலைகளை உடைய செவிலித் தாயாகிய அழகிய மகளிரைத் தழுவிப் பாலை நிரம்ப உண்டு (தழீஇ – அளபெடை), அமளித் துஞ்சும் – தமது படுக்கையில் புதல்வர் துயில் கொள்ளும், அழகுடை நல் இல் – அழகிய நல்ல இல்லங்களையும், தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை மல்லல் பேர் ஊர் மடியின்– பழைய பசி அறியாத அசையாத குடியிருப்புகள் உடைய வளம் மிகுந்த ஊரில் நீங்கள் தங்குவீர்கள் ஆயின், மடியா வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி – தொழிலில் அலுக்காத உழவர் தந்த வெள்ளை நெல்லின் சோற்றை, மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – மனையில் வாழும் கோழிப் பெடையினால் சமைத்த பொரியலோடு பெறுவீர்கள் 

ஆலைகளில் கருப்பஞ்சாறு அருந்துதல்

மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து,
அணங்குடை யாளி தாக்கலின், பல உடன்
கணம் சால் வேழம் கதழ்வுற்றாங்கு,
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை   260
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்,

கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின்; (257-262)

பொருளுரை:  முகில்கள் விளையாடும் மூங்கில் வளர்கின்ற பக்கமலையில், தம்மை வருத்தும் யாளி என்னும் விலங்கு தாக்குதலால், பல ஒன்றாகக் கூடி யானைகள் கலங்கிக் கதறினாற்போல, எந்திரம் ஒலிக்கும், ஆரவாரிக்கும் மாறாத ஓசையுடைய, கரும்புச் சாற்றைக் கட்டியாகக் காய்ச்சும் புகைசூழ்ந்த ஆலைதோறும் கரும்பின் இனிய சாற்றை விருப்பமுடையவர்களாக நீங்கள் பருகுங்கள்.

குறிப்பு:   பெரும்பாணாற்றுப்படை – 259-260 – கணம் சால் வேழம் கதழ்வுற்றாங்கு எந்திரம் சிலைக்கும்.  புறநானூறு 322 – கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது இருஞ்சுவல் வாளை பிறழும்.  ஐங்குறுநூறு 55 – கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்.  கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின் (262) – நச்சினார்க்கினியர் உரை – கரும்பினது இனிய சாற்றை முற்படக் குடித்துப் பின்னர் கரும்பின் கட்டியைத் தின்பீராக, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரும்பின் இனிய சாற்றை விருப்பமுடையீர் பருகுமின்.   கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  விசயம் (261) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கருப்பஞ்சாறு, கரும்பின் சாறு, கட்டியுமாம், சருக்கரையுமாம்.  கரும்பு ஆலை – மலைபடுகடாம் 119 – அறை உற்று ஆலைக்கு அலமரும் தீம் கழைக் கரும்பே, மலைபடுகடாம் 340 – மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக் கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும், பெரும்பாணாற்றுப்படை 261 – விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும் கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின், பட்டினப்பாலை 9 – கார்க் கரும்பின் கமழ் ஆலை, பரிபாடல் 1-14 – சாறுகொள் ஓதத்து இசையொடு. ஆளி (பொருநராற்றுப்படை 139) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரிமா, அரிமாப் போன்ற வேறொரு விலங்கென எண்ணவும் இடமுள்ளது.  ஆளி – அகநானூறு 78, 252, 381, நற்றிணை 205, புறநானூறு 207, குறிஞ்சிப்பாட்டு 252, பெரும்பாணாற்றுப்படை 258, பொருநராற்றுப்படை 139.

சொற்பொருள்:  மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து – முகில்கள் விளையாடும் மூங்கில் வளர்கின்ற பக்கமலையில், அணங்குடை யாளி தாக்கலின் – தம்மை வருத்தும் யாளி தாக்குதலால், பல உடன் கணம் சால் வேழம் கதழ்வுற்றாங்கு – பல ஒன்றாகக் கூடி யானைகள் கலங்கிக் கதறினாற்போல, எந்திரம் சிலைக்கும் – எந்திரம் ஒலிக்கும், துஞ்சாக் கம்பலை – ஆரவாரிக்கும் மாறாத ஓசையுடைய, விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும் – கரும்புச் சாற்றைக் கட்டியாகக் காய்ச்சும் புகைசூழ்ந்த ஆலைதோறும் (அடூஉம் – அளபெடை), கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின் – கரும்பின் இனிய சாற்றை விருப்பமுடையவர்களாக நீங்கள் பருகுங்கள் (மிசைமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

வலைஞர் குடியிருப்பு

வேழ நிரைத்து வெண்கோடு விரைஇத்
தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த,
குறியிறைக் குரம்பை பறியுடை முன்றில்,   265
கொடுங்காற் புன்னைக் கோடு துமித்து இயற்றிய
பைங்காய் தூங்கும் பாய் மணல் பந்தர்,
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றிப்
புலவு நுனைப் பகழியும் சிலையும் மானச்
செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும்   270
மையிருங் குட்டத்து மகவொடு வழங்கி
கோடை நீடினும் குறைபடல் அறியாத்
தோள்தாழ் குளத்த கோடு காத்திருக்கும்

கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பின், (263-274)

பொருளுரை:  வேழக்கோலை வரிசையாக வைத்து வெள்ளை மரக்கொம்புகளை இடையிடையே கலந்து, தாழை நாரால் கட்டி, தருப்பைப் புல்லால் வேயப்பட்ட குறிய இறைப்பகுதியையுடைய குடிலின், மீனை நீரிலிருந்து வாரி எடுக்கும் கூடைகள் உடைய முற்றத்தில், வளைந்த அடியையுடைய புன்னை மரங்களின் கொம்புகளை வெட்டி இட்ட பசிய காய்கள் தொங்கும் பரந்த மணலுடைய பந்தலில் இளையவர்களும் முதியவர்களும் சுற்றத்துடன் கூடி, புலால் நாற்றம் உடைய முனையினை உடைய அம்பையும் வில்லையும் ஒப்ப உள்ள சிவந்த வரியினையுடைய கயல்களுடன், பசிய இறாப் பிறழும் கரிய பெரும் ஆழ்ந்த குளங்களில் பிள்ளைகளுடன் மீனைப் பிடித்து, கோடைக்காலம் நீட்டித்து நின்றதாயினும் வற்றுதல் அறியாத, ஒருவர் கையை மேலே கூப்பி நீரின் நிலையைக் காட்டும் பொழுது கையை மறையச் செய்யும் ஆழமான குளங்களின் கரையைக் காவல் காத்திருக்கும், வளைந்த முடிச்சுகளை உடைய வலையால் மீன் பிடிப்பாருடைய குடியிருப்பில் தங்குவீர்கள் ஆயின், 

குறிப்பு:   மையிருங் குட்டத்து (271) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மையிருங்குட்டம் என்றது கரிய பெரிய ஆழமான குளம் என்றவாறு.  குளத்தின் இயல்களைத் தொகுத்துக் கூறியவாறு உணர்க.  கொடுமுடி (274) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வளைந்த முடிகளையுடைய, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – கொடிய (கெட்டியான) முடிச்சுக்கள்.  முடித்து (264) – முடிதந்து என்பதன் விகாரம் (நச்சினார்க்கினியர் உரை).  துவன்றி – துவன்று நிறைவாகும் (தொல்காப்பியம், உரியியல் 34).

சொற்பொருள்:  வேழ நிரைத்து வெண்கோடு விரைஇ – வேழக்கோலை வரிசையாக வைத்து வெள்ளை மரக்கொம்புகளை இடையிடையே கலந்து (விரைஇ – அளபெடை), தாழை முடித்து – தாழை நாரால் கட்டி (தாழை – ஆகுபெயர் நாருக்கு), தருப்பை வேய்ந்த குறியிறைக் குரம்பை பறியுடை முன்றில் – தருப்பைப் புல்லால் வேயப்பட்ட குறிய இறைப்பகுதியையுடைய குடிலின், மீனை நீரிலிருந்து வாரி எடுக்கும் கூடைகள் உடைய முற்றத்தில் (இறை – வெளிச்சுவருக்கு வெளியே இருக்கும் கூரை, தருப்பை – குசைப்புல்), (முன்றில் – இல் முன்), கொடுங்கால் புன்னைக் கோடு துமித்து இயற்றிய பைங்காய் தூங்கும் பாய் மணல் பந்தர் – வளைந்த அடியையுடைய புன்னை மரங்களின் கொம்புகளை வெட்டி இட்ட பசிய காய்கள் தொங்கும் பரந்த மணலுடைய பந்தலில் (பந்தர் – பந்தல் என்பதன் போலி), இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி – இளையவர்களும் முதியவர்களும் சுற்றத்துடன் கூடி, புலவு நுனைப் பகழியும் சிலையும் மான – புலால் நாற்றம் உடைய முனையினை உடைய அம்பையும் வில்லையும் ஒப்ப (மான – உவம உருபு), செவ்வரிக் கயலொடு – சிவந்த வரியினையுடைய கயல்களுடன், பச்சிறாப் பிறழும் – பசிய இறாப் பிறழும் (பச்சிறா – பண்புத்தொகை), மை இருங் குட்டத்து மகவொடு வழங்கி – கரிய பெரும் ஆழ்ந்த குளங்களில் பிள்ளைகளுடன் மீனைப் பிடித்து, கோடை நீடினும் குறைபடல் அறியாத் தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும் – கோடைக்காலம் நீட்டித்து நின்றதாயினும் வற்றுதல் அறியாத ஒருவர் கையை மேலே கூப்பி நீரின் நிலையைக் காட்டும் பொழுது கையை மறையச் செய்யும் குளங்களின் கரையைக் காத்திருக்கும், கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பின் – வளைந்த முடிச்சுகளை உடைய வலையால் மீன் பிடிப்பாருடைய குடியிருப்பில் தங்குவீர்கள் ஆயின்

வலைஞர் குடியில் பெறும் உணவு

அவையா அரிசி அம்களித் துழவை   275
மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றிப்
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம்புற நல் அடை அளைஇத் தேம்பட,
எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி,
வல்வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த,   280
வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி,

தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்; (275-282)

பொருளுரை:  குற்றாத அரிசியினால் சமைத்த அழகிய களிக் கூழை அகன்ற வாயையுடைய தட்டில் உலறும்படி ஆற்றி, பாம்பு இருக்கின்ற புற்றில் உள்ள புற்றாஞ்சோற்றை ஒக்கும், பொலிவு பெற்ற புறப்பகுதியுடைய நல்ல முளையை இடித்து அதனை அதில் கலந்து, இனிமை கூடும் பொருட்டுப் பகலும் இரவும் இரண்டு முறை போக்கி, வலிய வாயினையுடைய தாழியில் இளமை நீங்கும்படி முற்றிய வெந்நீரில் வேகவைத்து பன்னாடையால் வடிகட்டி விரலால் அலைத்துப் பிழிந்த கள்ளை, பச்சை மீனைச் சுட்டதனுடன் பசியால் தளர்ந்தவிடத்து நீங்கள் பெறுவீர்கள்.

குறிப்பு  பெரும்பாணாற்றுப்படை 275 – அவையா அரிசி, அகநானூறு 394 – அவைப்பு மாண் அரிசியொடு, சிறுபாணாற்றுப்படை 193 – உலக்கை இரும்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி.  குரும்பி – பெரும்பாணாற்றுப்படை 277-278 – பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம்புற நல் அடை, அகநானூறு 8 – ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த குரும்பி, அகநானூறு 72 – மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம் பொன் எறி பிதிரின் சுடர வாங்கிக் குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை இரும்பு செய் கொல் எனத் தோன்றும், அகநானூறு 307 – பெருங்கை எண்கினம் குரும்பி தேரும் புற்றுடைச் சுவர.  பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் (277) – நச்சினார்க்கினியர் உரை – பாம்பு கிடக்கின்ற புற்றின்கண் கிடைக்கும் புற்றாம் பழஞ்சோற்றை ஒக்கும், J.V. Chelliah’s translation – look like white ants’ nests where serpents live, Dr. A. Dakshinamurthy’s translation – resembles the shell of termites inside the snake holes.   நல் அடை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெல்லடையும் பாடம், அடை முளை

சொற்பொருள்:  அவையா அரிசி அம் களித் துழவை – குற்றாத அரிசியினால் சமைத்த அழகிய களிக் கூழ், மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி – அகன்ற வாயையுடைய தட்டில் உலறும்படி ஆற்றி (மலர்வாய் – வினைத்தொகை, பிழா – அகன்ற வாயுடைய தட்டு), பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் – பாம்பு இருக்கின்ற புற்றில் உள்ள புற்றாஞ்சோற்றை ஒக்கும், பூம்புற நல் அடை அளைஇ – பொலிவு பெற்ற புறப்பகுதியுடைய நல்ல முளையை இடித்து அதனை அதில் கலந்து (அளைஇ – அளபெடை), தேம்பட எல்லையும் இரவும் இரு முறை கழிப்பி – இனிமை கூடும் பொருட்டுப் பகலும் இரவும் இரண்டு முறை அரிக்காமல் வைத்து (தேம் தேன் என்றதன் திரிபு), வல்வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த – வலிய வாயினையுடைய தாழியில் இளமை நீங்கும்படி முற்றிய (சாடி – தாழி, வழைச்சு – இளங்கள் நாற்றம்),  வெந்நீர் அரியல் விரல் அலை நறும் பிழி – வெந்நீரில் வேகவைத்து நெய்யரியால் (பன்னாடையால்) வடிகட்டி விரலால் அலைத்துப் பிழிந்த கள்ளை, தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் – பச்சை மீனைச் சுட்டதனுடன் பசியால் தளர்ந்தவிடத்து நீங்கள் பெறுவீர்கள்

காலையில் நீர்ப்பூக்களைச் சூடிப்போதல்

பச்சூன் பெய்த சுவல்பிணி பைந்தோல்,
கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த,
நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ,   285
கொடுவாய் இரும்பின் மடிதலை புலம்பப்
பொதி இரை கதுவிய போழ்வாய் வாளை
நீர் நணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்
நீத்துடை நெடுங் கயம் தீப்பட மலர்ந்த
கடவுள் ஒண்பூ அடைதல் ஒம்பி,   290
உறைகால் மாறிய ஓங்கு உயர் நனந்தலை
அகல் இரு வானத்துக் குறை வில் ஏய்ப்ப,
அரக்கு இதழ்க் குவளையொடு நீலம் நீடி,
முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கை
குறுநர் இட்ட கூம்பு விடு பன்மலர்   295

பெருநாள் அமையத்துப் பிணையினிர் கழிமின்; (283-296)

பொருளுரை:   பசிய இறைச்சியை இட்டு வைத்த தோளில் கோத்த பசிய தோலினையுடைய மீனைப் பிடிக்கும் திறமையுள்ள பாணனின், மேல்பகுதியில் இறுக்கக் கட்டிய நீண்ட மூங்கில் கோலாகிய தூண்டில் நடுங்கும்படி, கயிற்றில் கட்டப்பட்ட வளைந்த வாயினையுடைய தூண்டிலின் மடித்த தலை இரையின்றித் தனிக்கும்படி, அத் தூண்டிலின் இரும்பு மறையப் பொதிந்த இரையைக் கவ்வி அகப்படாத பிளந்த வாயையுடைய வாளை மீன், நீர்க்கு அருகில் உள்ள பிரம்பின் அசையும் நிழலைப் பார்த்து அஞ்சுகின்ற, நீந்துவதற்கு ஏற்றாற்போல் உள்ள பெருங்குளத்தில், நெருப்புப் பட (நெருப்புபோல்) மலர்ந்த, கடவுள் விரும்புவதற்கு உரிய ஒளியுடைய தாமரை மலர்களைப் பறித்துச் சூடுதலைச் செய்யாது, பெய்தல் ஓய்ந்த ஓங்கி உயர்ந்த அகன்ற இடத்தையுடைய வானத்தில் தோன்றும் குறை வில்லாகிய இந்திரவில்லை ஒப்ப உள்ள அரக்கு இதழ்க் குவளையொடு நீலப்பூக்களும் மலர்ந்து, ஒன்றுக்கொன்று மாறுபடும் பிற மலர்களும் மிகுந்த முதிய நீரையுடைய பொய்கைகளில், பூப்பறிப்பவர்கள் உங்களுக்கு இட்ட குவிதல் நெகிழ்ந்த பல மலர்களையும், பெரிதாகிய காலை வேளையில் நீங்கள் சூடிச் செல்லுங்கள்.

குறிப்பு:   குறைவில் (292) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறைவில்லாகிய இந்திர வில்.  இனி வானவில் சில செவ்விகளில் ஓரிடத்தே ஒரு பகுதி தோன்றி மற்றோரிடத்தே ஒரு பகுதி தோன்றாமலும் இடையிடையே இற்றுப் போயும் காணப்படுதல் இயல்பாகலின் குறை வில் என்றார் எனினுமாம்.  பச்சூன் (283) – பசுமை + ஊன்.  பாணரும் மீனும்:  அகநானூறு 196 – வராஅல் துடிக் கண் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடி வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து, அகநானூறு 216 – நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள், குறுந்தொகை 169 – பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல, ஐங்குறுநூறு 47 – முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த, ஐங்குறுநூறு 48 – வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த, ஐங்குறுநூறு 49 – பாண்மகள் சில் மீன் சொரிந்து,  ஐங்குறுநூறு 111 – பாணன் சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇச் சினைக் கயல் மாய்க்கும், புறநானூறு 348 – மீன் சீவும் பாண் சேரி, மதுரைக்காஞ்சி 269 – மீன் சீவும் பாண் சேரியொடு, பெரும்பாணாற்றுப்படை 284-285 – கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  இரும்பின் – அகநானூறு 36 – பகுவாய் வராஅல் பல் வரி இரும் போத்துக் கொடுவாய் இரும்பின் கோள் இரை துற்றி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரும்பு என்றது தூண்டிலின் முள்ளினை.

சொற்பொருள்:  பச்சூன் பெய்த சுவல்பிணி பைந்தோல் – பசிய இறைச்சியை இட்டு வைத்த தோளில் கோத்த பசிய தோலினையுடைய , கோள்வல் பாண்மகன் – மீனைப் பிடிக்கும் திறமையுள்ள பாணனின், தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க – மேல்பகுதியில் இறுக்கக் கட்டிய நீண்ட மூங்கில் கோலாகிய தூண்டில் நடுங்கும்படி, நாண் கொளீஇ கொடுவாய் இரும்பின் மடிதலை புலம்ப – கயிற்றில் கட்டப்பட்ட வளைந்த வாயினையுடைய தூண்டிலின் மடித்த தலை இரையின்றித் தனிக்கும்படி (கொளீஇ – அளபெடை), பொதி இரை கதுவிய போழ்வாய் வாளை – அத் தூண்டிலின் இரும்பு மறையப் பொதிந்த இரையைக் கவ்வி அகப்படாத பிளந்த வாயையுடைய வாளை மீன், நீர் நணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – நீர்க்கு அருகில் உள்ள பிரம்பின் அசையும் நிழலைப் பார்த்து அஞ்சும் (வெரூஉம் – அளபெடை), நீத்துடை நெடுங் கயம் – நீந்துவதற்கு ஏற்றாற்போல் உள்ள பெருங்குளத்தில், தீப் பட மலர்ந்த கடவுள் ஒண் பூ அடைதல் ஒம்பி – நெருப்புப் பட (நெருப்புபோல்) மலர்ந்த, கடவுள் விரும்புவதற்கு உரிய ஒளியுடைய தாமரை மலர்களைப் பறித்துச் சூடுதலைச் செய்யாது, உறைகால் மாறிய ஓங்கு உயர் நனந்தலை அகல் இரு வானத்து குறை வில் ஏய்ப்ப – பெய்தல் ஓய்ந்த ஓங்கி உயர்ந்த அகன்ற இடத்தையுடைய வானத்தில் தோன்றும் குறை வில்லாகிய இந்திரவில்லை ஒப்ப (ஓங்கு உயர் – ஒருபொருட் பன்மொழி), அரக்கு இதழ்க் குவளையொடு  நீலம் நீடி – சாதிலிங்கம் போன்ற இதழையுடைய குவளைப் பூக்களுடன் நீலப்பூக்களும் மலர்ந்து, முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கை – ஒன்றுக்கொன்று மாறுபடும் பிற மலர்களும் மிகுந்த முதிய நீரையுடைய பொய்கைகளில், குறுநர் இட்ட கூம்புவிடு பன்மலர் – பூப்பறிப்பவர்கள் உங்களுக்கு இட்ட குவிதல் நெகிழ்ந்த பல மலர்களையும், பெருநாள் அமையத்துப் பிணையினிர் கழிமின் – பெரிதாகிய காலை வேளையில் சூடிச் செல்லுங்கள் (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி) 

அந்தணரது உறைவிடங்களில் பெறுவன

செழுங்கன்று யாத்த சிறுதாட் பந்தர்
பைஞ்சேறு மெழுகிய படிவ நல்நகர்,
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது,
வளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும்   300
மறை காப்பாளர் உறைபதிச் சேப்பின்
பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்
வளைக்கை மகடூஉ வயின் அறிந்து அட்ட,
சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தம்   305
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புறு பசுங்காய்ப் போழொடு கறி கலந்து,
கஞ்சக நறுமுறி அளைஇப் பைந்துணர்
நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த

தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்; (297-310)

பொருளுரை:   பருத்த கன்றைக் கட்டிய சிறிய கால்களையுடைய பந்தலையும், சாணத்தால் மெழுகிய கடவுளை வழிப்படும் நல்ல இல்லங்களையும், மனைகளில் வாழும் கோழிகளுடன் நாய்களும் தங்காமல், வளைந்த வாயினையுடைய கிளிக்கு வேதத்தை ஒப்பிக்கக் கற்பிக்கும் வேதத்தைக் காப்பவர்கள் வாழும் ஊருக்கு நீங்கள் சென்றால், பெரிய நல்ல வானத்தில் வடக்கில் விளங்கும் அருந்ததியை ஒக்கும் கற்பையும், நறுமணமுடைய நெற்றியையும், வளையல் அணிந்த கைகளையும் உடைய பெண், பதம் அறிந்து ஆக்கிய, கதிரவன் அடைந்த வேளையில் பறவையின் பெயரைப் பெற்ற நெற்சோற்றினையும், சிவந்த பசுவின் நறுமணமான மோரிலிருந்து எடுத்த வெண்ணெய்யில் கிடந்து வெம்மையுற்ற மாதுளையின் பசிய துண்டுக்களையும், மிளகுப்பொடி கலந்து, கறிவேப்பிலை இலைகளைச் சேர்த்து, பசிய கொத்துக்களை உடைய நெடிய மரமாகிய மாவினது நறுமணமான வடுக்களைப் பலவாக இட்டுச் செய்த அழகு மிக்க ஊறுகாயினையும், வேறு பல உணவுகளையும் நீங்கள் பெறுவீர்கள்.  

குறிப்பு:   பறவைப் பெயர்ப்படு வத்தம் (305) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கருடன் சம்பா என்னும் பெயருடைய நெல் என்றவாறு, நச்சினார்க்கினியர் உரை – இராசான்னம் என்னும் பெயர்பெறுகின்ற நெல் என்றவாறு.  ஆகுதி பண்ணுவதற்கு இந்த நெல்லுச் சோறே சிறந்ததென்று இதனைக் கூறினர்.  இனி மின்மினி நெல் என்பாருமுளர்.  இப்பெயர் வழக்கமின்மையும் ஆகுதிக்குச் சிறவாமையும் உணர்க.  வடமீன், சிறுமீன், சாலினி – அருந்ததி, the star Alcor, புறநானூறு 122 – வடமீன் புரையும் கற்பின் மட மொழி அரிவை, ஐங்குறுநூறு 442 – அருந்ததி அனைய கற்பின், கலித்தொகை 2 – வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள், பெரும்பாணாற்றுப்படை 303 – சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல், பரிபாடல் 5 – கடவுள் ஒரு மீன் சாலினி.

சொற்பொருள்:  செழுங்கன்று யாத்த சிறு தாள் பந்தர் – பருத்த கன்றைக் கட்டிய சிறிய கால்களையுடைய பந்தலையும் (பந்தர் – பந்தல் என்பதன் போலி), பைஞ்சேறு மெழுகிய படிவ நல்நகர் – சாணத்தால் மெழுகிய கடவுளை வழிப்படும் நல்ல இல்லங்களையும், மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது – மனைகளில் வாழும் கோழிகளுடன் நாய்களும் தங்காமல், வளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் – வளைந்த வாயினையுடைய கிளிக்கு வேதத்தை ஒப்பிக்கக் கற்பிக்கும், மறை காப்பாளர் – வேதத்தைக் காப்பவர்கள், உறைபதிச் சேப்பின் – தங்கும் ஊருக்கு நீங்கள் சென்றால், பெருநல் வானத்து வடவயின் விளங்கும் சிறுமீன் புரையும் கற்பின் – பெரிய நல்ல வானத்தில் வடக்கில் விளங்கும் அருந்ததியை ஒக்கும் கற்பையும் (புரை – உவம உருபு), நறுநுதல் வளைக்கை மகடூஉ – நறுமணமுடைய நெற்றியையும் வளையல் அணிந்த கைகளையும் உடைய பெண் (மகடூஉ- அளபெடை), வயின் அறிந்து அட்ட – பதம் அறிந்து ஆக்கிய, சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தம் – ஞாயிறு அடைந்த வேளையில் பறவையின் பெயரைப் பெற்ற நெற்சோற்றினையும், சேது ஆ நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து உருப்புறு பசுங்காய்ப் போழொடு – சிவந்த பசுவின் நறுமணமான மோரிலிருந்து எடுத்த வெண்ணெய்யில் கிடந்தது வெம்மையுற்ற மாதுளையின் பசிய காயினுடனும், கறி கலந்து – மிளகுப்பொடி கலந்து, கஞ்சக நறு முறி அளைஇ – கறிவேப்பிலை இலைகளைச் சேர்த்து (அளைஇ – அளபெடை), பைந்துணர் நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த தகைமாண் காடியின் – பசிய கொத்துக்களை உடைய நெடிய மரமாகிய மாவினது நறுமணமான வடுக்களைப் பலவாக இட்டு அழகு மாட்சிமைப்பட்ட ஊறுகாயும், வகைபடப் பெறுகுவிர் – பல வகை உணவுகளை நீங்கள் பெறுவீர்கள்

நீர்ப்பெயற்று என்னும் ஊரின் சிறப்பு

வண்டல் ஆயமொடு உண்துறைத் தலைஇப்
புனல் ஆடு மகளிர் இட்ட பொலங்குழை
இரை தேர் மணிச்சிரல் இரை செத்து எறிந்தெனப்
புள் ஆர் பெண்ணைப் புலம்பு மடற் செல்லாது
கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த   315
வேள்வித் தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனின் பைபயத் தோன்றும்

நீர்ப்பெயற்று எல்லைப் போகிப் (311-319)

பொருளுரை:   விளையாட்டுக் கூட்டத்துடன் குடிக்கும் நீருடைய துறையில் நீராடுகின்ற மகளிர் போட்டு விட்டுப் போன பொன்னால் செய்த காதணியினை உணவைத் தேடும் நீலமணி நிற சிச்சிலிப் பறவை (மீன்கொத்திப் பறவை) தனக்கு இரை என்று எண்ணி எடுத்துக்கொண்டு, பறவைகள் நிறைந்திருக்கும் பனையின் தனித்த மடலில் போகாமல், நூல் கேள்வி உடைய அந்தணர்கள் செய்தற்கரிய கடனாகச் செய்த நட்ட தூணின் மேல் இருந்து, யவனர்களின் கப்பல் கூம்பின் மீது இட்ட அன்ன விளக்குப் போலவும், உயர்ந்த வானில் உள்ள வைகறையில் தோன்றும் வெள்ளி மீன் போலும் மிக்க ஒளி இல்லாது மெல்ல மெல்லத் தோன்றும் நீர்ப்பாயற்றுறை என்னும் ஊரின் எல்லையில் சென்று,

குறிப்பு:  யவனர் ஓதிம விளக்கின் (314-315) – நச்சினார்க்கினியர் உரை ‘சோனகர் கூம்பின் மேலிட்ட அன்ன விளக்குப் போல’, பொ. வே. சோமசுந்தரனார் உரை ‘யவனர் தங்கள் மரக்கலக் கூம்பில் ஓதிம விளக்கிடுதல் பெற்றாம்’.   பைபய (318) – வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – மெல்ல மெல்ல, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒளி விட்டு விளங்காது. யவனர் – அயோனியா என்ற கிரேக்க நாட்டின் பகுதியிலிருந்து வருபவர்களை இச்சொல் குறித்தாலும் இது பின்னால் வந்த ரோமானியர், துருக்கர், எகிப்தியர் ஆகியோரையும் குறித்திருக்கலாம் எனச் சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சொற்பொருள்:  வண்டல் ஆயமொடு உண் துறைத் தலைஇ புனல் ஆடு மகளிர் இட்ட பொலங்குழை – விளையாட்டுக் கூட்டத்துடன் குடிக்கும் நீருடைய துறையில் நீராடுகின்ற மகளிர் போட்டு விட்டுப் போன பொன்னால் செய்த காதணியினை (தலைஇ – அளபெடை), இரை தேர் மணிச்சிரல் இரைசெத்து எறிந்தென – உணவைத் தேடும் நீலமணி நிற சிச்சிலிப் பறவை (மீன்கொத்திப் பறவை) தனக்கு இரை என்று எண்ணி எடுத்துக்கொண்டு, புள் ஆர் பெண்ணைப் புலம்பு மடற் செல்லாது – பறவைகள் நிறைந்திருக்கும் பனையின் தனித்த மடலில் போகாமல், கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வித் தூணத்து அசைஇ – நூல் கேள்வி உடைய அந்தணர்கள் செய்தற்கரிய கடனாகச் செய்த நட்ட தூணின் மேல் இருந்து (அசைஇ – அளபெடை), யவனர் ஓதிம விளக்கின் – யவனர்களின் கப்பல் கூம்பின் மீது இட்ட அன்ன விளக்குப் போலவும், உயர்மிசைக் கொண்ட வைகுறு மீனின் பைபயத் தோன்றும் – உயர்ந்த வானில் உள்ள வைகறையில் தோன்றும் வெள்ளி மீன் போலும் மிக்க ஒளி இல்லாது மெல்ல மெல்லத் தோன்றும் (மீனின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, பைபய – பையப்பைய பைபய என மருவியது), நீர்ப்பெயற்று எல்லைப் போகி – நீர்ப்பாயற்றுறை என்னும் ஊரின் எல்லையில் சென்று  (நீர்ப்பெயற்று – நீர்ப்பாயற்றுறை என்பதன் மரூஉ)

கடற்கரைப்பட்டினம்

……………………………………………….. பாற்கேழ்
வால் உளைப் புரவியொடு வடவளம் தரூஉம்   320
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை,
மாடம் ஓங்கிய மணன் மலி மறுகின்,
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்,
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின்,
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா   325
ஏழகத் தகரோடு எகினம் கொட்கும்
கூழ் உடை நல்இல் கொடும்பூண் மகளிர்
கொன்றை மென் சினைப் பனி தவழ்பவை போல்,
பைங்காழ் அல்குல் நுண் துகில் நுடங்க,
மால் வரைச் சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும்   330
பீலி மஞ்ஞையின் இயலி கால
தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப, உயர்நிலை
வான் தோய் மாடத்து வரிப்பந்து அசைஇக்
கை புனை குறுந்தொடி தத்த பைபய
முத்த வார்மணல் பொற்கழங்கு ஆடும்   335

பட்டின மருங்கின் அசையின், (319-336)

பொருளுரை:   பால் போன்ற வெள்ளை நிறத்தையும் வெள்ளைப் பிடரி மயிரையும் உடைய குதிரைகளுடன் வடதிசையில் உள்ள பொருட்களைக் கொண்டு வந்து தருகின்ற கப்பல்கள் சூழ்ந்து இருக்கும் கடற்கரைப் பகுதிகளும், மாடங்கள் உயர்ந்து இருந்த மணல் மிகுந்த தெருக்களையும், நெய்தல் நில மக்கள் மிக்கு வாழ்கின்ற பலவேறு தெருக்களையும், தொழில் புரிபவர்களால் காக்கப்பட்ட மிகவும் உயர்ந்த பண்டசாலைகளையும், நெல்லிற்கு உழும் எருதுகளுடன் பசுக்கள் நெருங்காவாய், ஆட்டுக் கிடாய்களுடன் நாய்களும் சுழன்று திரியும், சோறுடைய நல்ல வீடுகளையும், வளைந்த அணிகலன்களை உடைய பெண்கள், கொன்றையின் அரும்புகள் உடைய மெல்லிய கிளைகளில் பனி தவழ்வது போல் பசிய மணிகள் கோத்த வடங்கள் உடைய அல்குலில் கிடக்கின்ற மெல்லிய ஆடை அசைய, பெரிய பக்கமலையில் மகிழ்ச்சியுடன் ஆரவாரிக்கும் தோகையுடைய  மயில்கள் போல் உலவி, காலில் உள்ள செம்பொன்னால் செய்த சிலம்புகள் ஒலிக்க, மேல் நிலைகள் வானைத் தீண்டுகின்ற மாடத்தில், வரிப்பந்தை அடித்து இளைத்து, கையால் புனைந்த சிறிய வளையல்கள் அசையும்படி மெல்ல மெல்ல, முத்தை ஒத்த நிறத்தையுடைய நீண்ட மணலில் பொன்னால் செய்த கழலைக் கொண்டு விளையாடும் பட்டினத்தில் இளைப்பாறுவீராயின்,

குறிப்பு:   வரிப் பந்து –நற்றிணை 12 – வரி புனை பந்தொடு – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, ஒளவை துரைசாமி உரை – வரிந்து புனையப்பட்ட பந்தொடு, திருமுருகாற்றுப்படை 68 – வரிப் புனை பந்தொடு – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார்  உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தோடு, கலித்தொகை 51 – வரிப் பந்து – நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து, பரிபாடல் 9 – வரிப் பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரியினையுடைய பந்து, பெரும்பாணாற்றுப்படை 333 – வரிப்பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து.  முத்தைப் போன்ற மணல்:  புறநானூறு 53, முத்த வார் மணல், பெரும்பாணாற்றுப்படை 335 – முத்த வார் மணல், கலித்தொகை 136 – முத்து உறழ் மணல்.  நளி (321) – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 25). வார்தல் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  பாற்கேழ் வால் உளைப் புரவியொடு வட வளம் தரூஉம் – பால் போன்ற வெள்ளை நிறத்தையும் வெள்ளைப் பிடரி மயிரையும் உடைய குதிரைகளுடன் வடதிசையில் உள்ள பொருட்களைக் கொண்டு வந்து தருகின்ற (தரூஉம் – அளபெடை), நாவாய் சூழ்ந்த நளி நீர் படப்பை – கப்பல்கள் சூழ்ந்து இருக்கும் கடற்கரைப் பகுதிகளும் (படப்பை – பக்கம்), மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின் – மாடங்கள் உயர்ந்து இருந்த மணல் மிகுந்த தெருக்களையும், பரதர் மலிந்த பல் வேறு தெருவின்  – நெய்தல் நில மக்கள் மிக்கு வாழ்கின்ற பலவேறு தெருக்களையும், சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின் – தொழில் புரிபவர்களால் காக்கப்பட்ட மிகவும் உயர்ந்த பண்டசாலைகளையும், நெல் உழு பகட்டொடு துன்னா – நெல்லிற்கு உழும் எருதுகளுடன் பசுக்கள் நெருங்காவாய், ஏழகத் தகரோடு எகினம் கொட்கும் – ஆட்டுக் கிடாய்களுடன் நாய்களும் சுழன்று திரியும், கூழ் உடை நல் இல் – சோறுடைய நல்ல வீடுகளையும், கொடும் பூண் மகளிர் – வளைந்த அணிகலன்களை உடைய பெண்கள், கொன்றை மென் சினைப் பனி தவழ்பவை போல் பைங்காழ் அல்குல் நுண் துகில் நுடங்க – கொன்றையின் அரும்புகள் உடைய மெல்லிய கிளைகளில் பனி தவழ்வது போல் பசிய மணிகள் கோத்த வடங்கள் உடைய அல்குலில் கிடக்கின்ற மெல்லிய ஆடை அசைய, மால் வரைச் சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் பீலி மஞ்ஞையின் இயலி – பெரிய பக்கமலையில் மகிழ்ச்சியுடன் ஆரவாரிக்கும் தோகையுடைய மயில்கள் போல் உலவி, கால தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப – காலில் உள்ள செம்பொன்னால் செய்த சிலம்புகள் ஒலிக்க, உயர்நிலை வான் தோய் மாடத்து – மேல் நிலைகள் வானைத் தீண்டுகின்ற மாடத்தில், வரிப்பந்து அசைஇ – வரிப்பந்தை அடித்து இளைத்து (அசைஇ – அளபெடை), கை புனை குறுந்தொடி தத்தப் பைபய – கையால் புனைந்த சிறிய வளையல்கள் அசையும்படி மெல்ல மெல்ல, முத்த வார் மணல்  பொற்கழங்கு ஆடும் – முத்தை ஒத்த நிறத்தையுடைய நீண்ட மணலில் பொன்னால் செய்த கழலைக் கொண்டு விளையாடும், பட்டின மருங்கின் அசையின் – பட்டினத்தில் இளைப்பாறுவீராயின்

பட்டினத்து மக்களின் உபசரிப்பு

……………………………………………… முட்டு இல்,
பைங்கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம்பூத் தூஉய செதுக்குடை முன்றில்,
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின்   340
ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டிப்
பல்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது,
நெல்மா வல்சி தீற்றி பன்னாள்
குழி நிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏற்றைக்

கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவீர்; (336-345)

பொருளுரை:   முட்டுக்கள் இல்லாத பைங்கொடி அசையும் கள் உண்பவர்கள் நுழையும் வாயிலில், சிவந்த மலர்கள் தூவப்பட்ட தூய்மை செய்யப்பட முற்றத்தில் கள்ளைச் சமைத்த மகளிர் வட்டில் கழுவுவதால் வடிந்து சிந்தின சில நீர் பொழிந்த குழம்பில், ஈரத்தையுடைய சேற்றில் புரளும் கரிய பலவாகிய குட்டிகளையுடைய அடர்ந்த மயிரையுடைய பெண் பன்றிகளுடன் புணர்ச்சியை விரும்பிப் போகாமல், நெல்லை இடித்த மாவு ஆகிய உணவினைத் தின்னப் பண்ணின பற்பல நாளும், குழியில் நிறுத்திப் பாதுகாத்த ஆண்பன்றியின், கொழுத்த கொழுப்புடைய தசையுடன் களிப்பு மிகுந்த கள்ளைப் பெறுவீர்கள். 

குறிப்பு  செதுக்கு உடை முன்றில் (338) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மண் வெட்டியாலே புல் முதலியவற்றைச் செத்தி தூய்மை செய்யப்பட்ட முற்றம்.  பாயம் (342) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மனவிருப்பம், பாசம் என்னும் வடமொழி பாயம் என்று நின்றது.

சொற்பொருள்:  முட்டு இல் பைங்கொடி நுடங்கும் பலர் புகு வாயில் – முட்டுக்கள் இல்லாத பைங்கொடி அசையும் கள் உண்பவர்கள் நுழையும் வாயிலில், செம்பூத் தூஉய செதுக்கு உடை முன்றில் – சிவந்த மலர்கள் தூவப்பட்ட தூய்மை செய்யப்பட முற்றத்தில் (தூஉய – அளபெடை, முன்றில் – இல் முன்), கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின்– கள்ளைச் சமைத்த மகளிர் வட்டில் கழுவுவதால் வடிந்து சிந்தின சில நீர் பொழிந்த குழம்பில், ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டிப் பல் மயிர்ப் பிணவொடு பாயம் போகாது – ஈரத்தையுடைய சேற்றில் புரளும் கரிய பலவாகிய குட்டிகளையுடைய அடர்ந்த மயிரையுடைய பெண் பன்றிகளுடன் புணர்ச்சியை விரும்பிப் போகாமல், நெல் மா வல்சி தீற்றிப் பன்னாள் – நெல்லை இடித்த மாவு ஆகிய உணவினைத் தின்னப் பண்ணின பற்பல நாளும், குழி நிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏற்றை – குழியில் நிறுத்திப் பாதுகாத்த ஆண்பன்றியின், கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவீர் – கொழுத்த கொழுப்புடைய தசையுடன் களிப்பு மிகுந்த கள்ளைப் பெறுவீர்கள் 

ஓடும் கலங்களை அழைக்கும் கடற்கரைத் துறை

வானம் ஊன்றிய மதலை போல,
ஏணி சாத்திய ஏற்று அருஞ் சென்னி,
விண்பொர நிவந்த வேயா மாடத்து,
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி,
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும்   350

துறை பிறக்கு ஒழியப் போகி, (346-351)

பொருளுரை:   வானம் வீழாதபடி முட்டுக் காலாக ஊன்றி வாய்த்த ஒரு பற்றுக்கோல் போன்ற ஏணி சாத்தியதாகியும் ஏறுவதற்கு அரிய மேல் பகுதியையுடைய விண்ணைத் தொடும்படியாக உயர்ந்த வேயாத மாடத்தில் (கலங்கரைவிளக்கத்தில்), நெகிழ்ந்து பெருநீர்ப் பரப்பாகிய கடலில் திசை மாறி ஓடும் கப்பல்களை அழைக்கும் நீர்ப்பாயற்றுத் துறைமுகம் பின்னே இருக்கப் போய்,

குறிப்பு:   அகநானூறு 255 – நீகான் மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய.  ஞெகிழி (349) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விளக்கு நெகிழ்ந்து பெருநீர்ப் பரப்பாகிய கடலிலே திசை திருப்பி ஓடும் மரக்கலன்களை அழைக்கும்; நெகிழி ஞெகிழி என நகரத்திற்கு ஞகரம் போலியாய் வந்த வினையெச்சமாகக் கொண்டு திசை தப்பி ஓடும் மரக்கலத்திற்கு இரங்கி நெகிழ்ந்து கரையும் விளக்கம் என்பதன்கண் நயம் தோன்றுதல் உணர்க, ச. வே. சுப்பிரமணியன் உரை – கலங்கரை விளக்கம் மனம் நெகிழ்ந்து மரக்கலன்களை அழைக்கின்றது, நச்சினார்க்கினியர் உரை – இது நாம் சேரும் துறையன்று என்று நெகிழ்ந்து வேறொரு துறைக்கண் ஓடும் மரக்கலம்.  ஞெகிழி என்பதனை கடைக் கொள்ளியெனக் கொண்டு ‘அதனை எரித்துக் கொளுத்தின இலங்கு சுடர் என்பாருமுளர்’ என்பர் நச்சினார்க்கினியர்.

சொற்பொருள்:  வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்று அருஞ் சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத்து – வானம் வீழாதபடி முட்டுக் காலாக ஊன்றி வாய்த்த ஒரு பற்றுக்கோல் போன்ற ஏணி சாத்தியதாகியும் ஏறுவதற்கு அரிய மேல் பகுதியையுடைய விண்ணைத் தொடும்படியாக உயர்ந்த வேயாத (குடிசையைப் போன்று வேயாது) மாடத்தில், இரவில் மாட்டிய இலங்கு சுடர் – இரவு வேளையில் கொளுத்தின விளக்கு, ஞெகிழி உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் துறை பிறக்கு ஒழிய போகி –  நெகிழ்ந்து பெருநீர்ப் பரப்பாகிய கடலில் திசை மாறி ஓடும் கப்பல்களை அழைக்கும் நீர்ப்பாயற்றுத் துறைமுகம் பின்னே இருக்கப் போய்

தோப்புக் குடிகளில் நிகழும் விருந்தோம்பல்

……………………………………………….கறை அடிக்
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும்,
வண்தோட்டுத் தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பைத்
தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின்   355
தாழ்கோட் பலவின் சூழ் சுளைப் பெரும்பழம்,
வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர்க்
கவை முலை இரும்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும்
குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம்,
திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும்,   360
தீம்பல் தாரம் முனையின், சேம்பின்

முளைப்புற முதிர் கிழங்கு ஆர்குவிர்; (351-362)

பொருளுரை:   உரல் போன்ற அடியினையுடைய மலையை ஒத்த யானையின் உடம்பை ஒத்த பெரிய தோட்டினையுடைய தென்னையின் உலர்ந்த மடலினை வேய்ந்த, மஞ்சளுடைய முற்றத்தினையும் மணம் கமழும் தோட்டங்களையும் உடைய, தோப்புக் குடிகளுடைய தனித்தனியாக அமைந்த இல்லங்களில் நீவீர் தங்கினீராயின், தாழ்ந்த குலைகளையுடைய பலாவினது சக்கை சூழாத சுளை மட்டுமே சூழ்ந்த பெரிய பழத்தையும், விழுது இல்லாத தாழையாகிய தென்னையின் இனிய இளநீரையும், பிரிவுடைய முலையையுடைய பெண் யானையின் கன்னத்தில் உள்ள கொம்புகளை (தந்தங்களை) ஒக்கும், குலையில் இருந்து முதிர்ந்த வளைந்த வெள்ளைப் பழங்களையும் திரண்ட அடியினையுடைய பனை மரத்தின் நுங்குடன் வேறு இனிய பல உணவுப் பண்டங்களையும் , மிக்க உண்டு வெறுத்தால், முளையைப் புறத்தில் உடைய வள்ளி முதலிய கிழங்குகளை உண்ணுவீர்கள்.

குறிப்பு:   நற்றிணை 97-9 – தண்டலை உழவர் தனி மட மகளே.  முளைப்புற முதிர் கிழங்கு (362) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முளையுடையதாக முதிர்ந்த கிழங்கு உண்ணற்கு இனிதாகலின் முளைப்புற கிழங்கு என்றார்.  தாழைக் குழவி (357) – பிள்ளை குழவி கன்றே போத்தெனக் கொள்ளவும் அமையும் ஓரறி உயிர்க்கே (தொல்காப்பியம். மரபியல் 24).  யானை மருங்குல் ஏய்க்கும் வண்தோட்டுத் தெங்கின் வாடு மடல் (352-353) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யானையின் உடல் சருச்சரையுடைமையால் தெங்கின் வாடு மடலுக்கு உவமை என்க.  நச்சினார்க்கினியர் உரை – யானையின் உடம்பையொக்கும் சருச்சரையுடைத்தாகிய தெங்கு. கறையடி யானை – அகநானூறு 83-3,142-9, புறநானூறு 39-1, 135-12, 323-6, பெரும்பாணாற்றுப்படை 351.

சொற்பொருள்:  கறை அடிக் குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும் வண்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த – உரல் போன்ற அடியினையுடைய மலையை ஒத்த யானையின் உடம்பை ஒத்த பெரிய தோட்டினையுடைய தென்னையின் உலர்ந்த மடலினை வேய்ந்த (உறழ் – உவம உருபு), மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை –  மஞ்சளுடைய முற்றத்தினையும் மணம் கமழும் தோட்டங்களையும் உடைய (முன்றில் – இல் முன், படப்பை – பூந்தோட்டம்), தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின் – தோப்புக் குடிகளுடைய தனித்தனியாக அமைந்த இல்லங்களில் தங்கினீராயின், தாழ்கோட் பலவின் சூழ் சுளைப் பெரும்பழம் – தாழ்ந்த குலைகளையுடைய பலாவினது சக்கை சூழாத சுளை மட்டுமே சூழ்ந்த பெரிய பழத்தையும், வீழ் இல் தாழை குழவித் தீம் நீர் – விழுது இல்லாத தாழையாகிய தென்னையின் இனிய இளநீரையும், கவை முலை இரும்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும் – பிரிவுடைய முலையையுடைய பெண் யானையின் கன்னத்தில் உள்ள கொம்புகளை (தந்தங்களை) ஒக்கும்,  குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம் – குலையில் இருந்து முதிர்ந்த வளைந்த வெள்ளைப் பழங்களையும், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும் தீம் பல் தாரம் – திரண்ட அடியினையுடைய பனை மரத்தின் நுங்குடன் வேறு இனிய பல உணவுப் பண்டங்களையும், முனையின் – வெறுத்தால், சேம்பின் முளைப்புற முதிர் கிழங்கு ஆர்குவிர் – முளையைப் புறத்தில் உடைய வள்ளி முதலிய கிழங்குகளை உண்ணுவீர்கள்

ஒதுக்குப்புற நாடுகளின் வளம்

……………………………………………பகற் பெயல்
மழை வீழ்ந்தன்ன மாத்தாட் கமுகின்
புடை சூழ் தெங்கின் முப்புடைத் திரள்காய்
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரச், 365
சோறு அடு குழிசி இளக, விழூஉம்
வீயா யாணர் வளங்கெழு பாக்கத்துப்
பல்மரம் நீள் இடைப் போகி, நல்நகர்
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம்,  370

நாடு பல கழிந்த பின்றை, (362-371)

பொருளுரை:   பகலில் பெய்யும் மழைகால் விழுந்தாற்போல் தோன்றும் பெரிய தண்டினையுடைய கமுகு மரங்களின், பக்கத்தில் சூழ்ந்த மூன்று புடைப்புகளையுடைய திரண்ட காய், வழியில் செல்லும் புதியவர்களின் மிக்க பசி தீரும்படியும், அவர்கள் சோற்றைச் சமைக்கின்ற பானைகள் அசையும்படியும் விழும் கெடாத புது வருவாயினை உடைய செல்வம் பொருந்தின பாக்கத்தில் (சிற்றூரில்), பல மரங்கள் வளர்ந்த இடத்திற்குச் சென்று, நல்ல நகரங்களில் விண்ணைத் தொடும் மாடங்களுக்கு விளங்கும் மதில் சூழ்ந்த, வள்ளிக் கூத்தினை ஆடுவதற்குக் காரணமான வளமை பலவற்றையும் தருகின்ற நாடுகள் பலவற்றையும் கடந்த பின்னர்,

குறிப்பு  வாடா வள்ளியின் (370) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘வாடா வள்ளி’ வள்ளிக் கூத்திற்கு வெளிப்படை.  கொடியில்லாத வள்ளி என்றவாறு.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  பகற் பெயல் மழை வீழ்ந்தன்ன மாத்தாள் கமுகின் – பகலில் பெய்யும் மழைகால் விழுந்தாற்போல் தோன்றும் பெரிய தண்டினையுடைய கமுகு மரங்களின், புடை சூழ் தெங்கின் முப்புடைத் திரள்காய் – பக்கத்தில் சூழ்ந்த மூன்று புடைப்புகளையுடைய திரண்ட காய், ஆறு செல் வம்பலர் காய் பசி தீர – வழியில் செல்லும் புதியவர்களின் மிக்க பசி தீரும்படியும், சோறு அடு குழிசி இளக – அவர்கள் சோற்றைச் சமைக்கின்ற பானைகள் அசையும்படியும், விழூஉம் – விழும் (அளபெடை), வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து – கெடாத புது வருவாயினை உடைய செல்வம் பொருந்தின பாக்கத்தில் (சிற்றூரில்), பல் மரம் நீள் இடைப் போகி – பல மரங்கள் வளர்ந்த இடத்திற்குச் சென்று,  நல் நகர் விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த – நல்ல நகரங்களில் விண்ணைத் தொடும் மாடங்களுக்கு விளங்கும் மதில் சூழ்ந்த, வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் நாடு பல கழிந்த பின்றை – வள்ளிக் கூத்தினை ஆடுவதற்குக் காரணமான வளமை பலவற்றையும் தருகின்ற நாடுகள் பலவற்றையும் கடந்த பின்னர் (வாடா வள்ளி – வள்ளிக்கூத்திற்கு வெளிப்படை, தரூஉம் – அளபெடை)

திருவெஃகாவின் சிறப்பும் திருமால் வழிபாடும்

…………………………………………..நீடுகுலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு,
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்,
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்க்
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்   375
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூக்
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்,
நிழல் தாழ் வார் மணல் நீர்முகத்து உறைப்பப்
புனல் கால் கழீஇய பொழில்தொறும், திரள் கால்   380
சோலைக் கமுகின் சூல் வயிற்றன்ன,
நீலப் பைங்குடம் தொலைச்சி, நாளும்
பெரு மகிழ் இருக்கை மரீஇ சிறுகோட்டுக்
குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்குச்
சுறவுவாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல்,   385
நறவு பெயர்த்து அமைத்த நல் எழில் மழைக்கண்,
மடவரல் மகளிரொடு பகல் விளையாடிப்
பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெருந்துறைச்
செவ்வி கொள்பவரோடு அசைஇ, அவ்வயின்   390
அருந்திறற் கடவுள் வாழ்த்திச் சிறிது நும்

கருங்கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின்; (371-392)

பொருளுரை:  நீண்ட குலைகளையுடைய காந்தள் உடைய அழகிய பக்கமலையில் யானை கிடந்தாற்போல் பாம்பு அணையாகிய படுக்கையில் துயில் கொண்ட திருமாலின் திருவெஃகாவில், கதிரவனின் கதிர்கள் நுழையாத குயில்கள் நுழைந்து செல்லும் சோலையில், குறிய அடியினையுடைய காஞ்சி மரத்தைச் சூழ்ந்த நீண்ட கொடியினையும் பசிய இலைகளையுமுடைய குருக்கத்தியின் பொலிவில்லாத புறத்தினையும் வரிகளையுமுடைய மலர்கள், கரிய சட்டியில் அப்பம் விற்பவர் பாகுடன் வேண்டுவன கூட்டிச் சேர்க்கப்பட்ட நூல் போல் சூழ்ந்து கிடக்கின்ற அப்பம் பாலில் கிடந்தாற்போல், நிழல் கிடந்த நீண்ட மணலில் உள்ள குழிகளில் உள்ள நீரில் மிக விழும்படி, நீர் முன்பு நிறைந்து கழுவிய சோலைகள்தோறும், அங்குள்ள திரண்ட அடியையுடைய கமுகின் சூல் கொண்ட வயிற்றை ஒத்த, நீலக் குப்பிகளில் உள்ள கள்ளை முற்றிலும் உண்டு, நாள்தோறும் பெரிய மகிழ்ச்சியுடைய இடத்தில் தங்கி, சிறிய வளைவையுடைய பிறை நிலாவை பாம்பு தீண்டினாற்போல், சுறா வடிவில் அணிகலன்கள் சேர்ந்த வண்டுகள் சூழும் ஒளியுடைய நுதலினையும், தேனைப் பெயர்த்துக் கண் வடிவில் அமைத்தாற்போல் அழகையும் குளிர்ச்சியையும் கொண்ட கண்களையுமுடைய, மடப்பமுடைய பெண்களுடன் பகலில் விளையாடி, பெறுவதற்கு அரிய பழமையுடைய புகழை உடைய மேல் உலகை ஒக்கும், தவறாமல் நீர் வரும் மரபின்படி பூக்கள் மிக்கத் துறையில், இளவேனில் காலத்தின் செவ்வியை நுகர்பவர்களுடன் இளைப்பாறி அங்குள்ள அரிய வலிமையுடைய கடவுளை வாழ்த்தி, சிறிது நும்முடைய கரிய தண்டினையுடைய இனிய யாழை இயக்கி அவ்விடத்து நின்று நீவீர் செல்லுங்கள்.

குறிப்பு:   நீலப் பைங்குடம் (382) – நீல நிறம் அமைந்த பையாகிய குடம்.  இது தோற்பை.  இதனைப் பச்சைக் குப்பி என்பர்.  மதுரைக்காஞ்சி – கள்ளின் இரும்பைக் கலம்.  நறவு பெயர்த்து அமைத்த நல் எழில் மழைக்கண் (386) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேனை உருப்பெயர்த்து கண் வடிவில் அமைத்தாலொத்த நன்றாகிய அழகினையுடைய குளிர்ச்சியுடைத்தாகிய கண்ணை உடைய, நறவம் பூவினை உருப்பெயர்த்துக் கண் வடிவிலமைத்தாற் போன்ற நல்லெழில் மழைக்கண் எனினுமாம். அகநானூறு 19 – நறவின் சேயிதழ் அனைய ஆகிக் குவளை மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை, பரிபாடல் 8-75 – நயவரு நறவு இதழ், மதர் உண்கண்.  சுறா சுறவு என வந்தது. ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  திருவெஃகா – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காஞ்சியில் உள்ள திருமால் திருப்பதி.  திருமாலின் நூற்றெட்டுத் திருப்பதிகளில் இதுவும் ஒன்று. வார்தல் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  நீடு குலைக் காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு – நீண்ட குலைகளையுடைய காந்தள் உடைய அழகிய பக்கமலையில் யானை கிடந்தாற்போல், பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் – பாம்பு அணையாகிய படுக்கையில் துயில் கொண்ட திருமாலின் திருவெஃகாவில், வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர் – கதிரவனின் கதிர்கள் நுழையாத குயில்கள் நுழைந்து செல்லும் சோலையில், குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடி பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ – குறிய அடியினையுடைய காஞ்சி மரத்தைச் சூழ்ந்த நீண்ட கொடியினையும் பசிய இலைகளையுமுடைய குருக்கத்தியின் பொலிவில்லாத புறத்தினையும் வரிகளையுமுடைய மலர்கள், கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த  இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல் – கரிய சட்டியில் அப்பம் விற்பவர் பாகுடன் வேண்டுவன கூட்டிச் சேர்க்கப்பட்ட நூல் போல் சூழ்ந்து கிடக்கின்ற அப்பம் பாலில் கிடந்தாற்போல் (வட்டம் – ஆகுபெயர் அப்பத்திற்கு), நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப – நிழல் கிடந்த நீண்ட மணலில் உள்ள குழிகளில் உள்ள நீரில் மிக விழும்படி, புனல் கால் கழீஇய  பொழில்தொறும் – நீர் முன்பு நிறைந்து கழுவிய சோலைகள்தோறும் (கழீஇய – அளபெடை),  திரள் கால் சோலைக் கமுகின் சூல் வயிற்றன்ன – சோலையில் இருக்கும் திரண்ட அடியையுடைய கமுகின் சூல் கொண்ட வயிற்றை ஒத்த, நீலப் பைங்குடம் தொலைச்சி – நீலக் குப்பிகளில் உள்ள கள்ளை முற்றிலும் உண்டு, நாளும் பெருமகிழ் இருக்கை மரீஇ – நாள்தோறும் பெரிய மகிழ்ச்சியுடைய இடத்தில் தங்கி (மரீஇ – அளபெடை), சிறு கோட்டுக் குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்கு – சிறிய வளைவையுடைய பிறை நிலாவை பாம்பு தீண்டினாற்போல், சுறவுவாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் – சுறா வடிவில் அணிகலன்கள் சேர்ந்த வண்டுகள் சூழும் ஒளியுடைய நுதலினையும் (சுறவு – சுறா சுற என்றாகி உகரம் ஏற்றது), நறவு பெயர்த்து அமைத்த நல் எழில் மழைக்கண் – தேனைப் பெயர்த்துக் கண் வடிவில் அமைத்தாற்போல் அழகையும் குளிர்ச்சியுமுடைய கண்களையுடைய, நறவ மலர்களைப் பெயர்த்துக் கண் வடிவில் அமைத்தாற்போல் அழகையும் குளிர்ச்சியுமுடைய கண்களையுடைய (நறவு – ஐகாரம் கெட முற்று உகரம் பெற்று நறவு என்றாயிற்று), மடவரல் மகளிரொடு பகல் விளையாடி – மடப்பமுடைய பெண்களுடன் பகலில் விளையாடி, பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும் – பெறுவதற்கு அரிய பழமையுடைய புகழை உடைய மேல் உலகை ஒக்கும், பொய்யா மரபின் பூ மலி பெருந்துறை – தவறாமல் நீர் வரும் மரபின்படி பூக்கள் மிக்கத் துறையில், செவ்வி கொள்பவரோடு அசைஇ – இளவேனில் காலத்தின் செவ்வியை நுகர்பவர்களுடன் இளைப்பாறி (அசைஇ – அளபெடை), அவ்வயின் அருந்திறற் கடவுள் வாழ்த்தி – அங்குள்ள அரிய வலிமையுடைய கடவுளை வாழ்த்தி, சிறிது நும் கருங்கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின் – சிறிது நும்முடைய கரிய தண்டினையுடைய இனிய யாழை இயக்கி அவ்விடத்து நின்று நீவீர் செல்லுங்கள்  (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

கச்சி மூதூரின் சிறப்பு

காழோர் இகழ் பதம் நோக்கி கீழ,
நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளம்
கடுஞ்சூல் மந்தி கவரும் காவில்,   395
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின்,
திண் தேர் குழித்த குண்டு நெடுந்தெருவில்,
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்க்
கடைகால் யாத்த பல் குடி கெழீஇக்
கொடையும் கோளும் வழங்குநர்த் தடுத்த   400
அடையா வாயில், மிளை சூழ் படப்பை,
நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றிச்
சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்,   405
இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத் தொழுதிக்
கொழுமென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக்கூறும் பலாஅப் போல,
புலவுக் கடல் உடுத்த வானம் சூடிய
மலர்தலை உலகத்துள்ளும் பலர் தொழ,   410

விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர்; (393-411)

பொருளுரை:   யானையைச் செலுத்தும் பரிக்கோலை உடையவர்களின் நிலைமையைப் பார்த்து, கீழே வைக்கப்பட்ட நெடிய தும்பிக்கைகளையுடைய யானைகளுக்கு இடும் பொருட்டு நெய் சேர்த்து மிதித்த கவளங்களை முதல் கருப்பத்தை உடைய பெண் குரங்கு எடுத்துக் கொண்டுபோய் உண்ணுகின்ற சோலையினையும், களிற்று யானைகளின் சினத்தை அடக்கிய வெளிற்றுத் தன்மை இல்லாத தறிகளையும் (தூண்களையும்), திண்மையான தேர்கள் பலகால் ஓடிக் குழி உண்டாக்கிய நீண்ட தெருக்களையும், படையிடத்து கெடுதலை அறியாத வலிமை மிகுந்த, பெரிய புகழின் எல்லையை மறைத்த, பல மறக்குடிகள் பொருந்தப்பட்டு, கொடுத்தலும் கொள்ளலும் ஆகிய வணிகத்தொழிலை அங்கு இயங்குவோரை இயங்காமல் தடுத்தற்குக் காரணமான கடைவீதியையும் உடைத்ததாய், பரிசில் வேண்டி வருவோர்க்கு அடைக்காத வாயிலையும், காவற்காடு சூழ்ந்த பக்கங்களையும் உடைய, நீல நிறத்தையும் வடிவினையுமுடைய திருமாலுடைய கொப்பூழ் ஆகிய நான்முகனைப் பெற்ற பல இதழ்களையுடைய தாமரையின் கொட்டைபோல் அழகுடன் தோன்றி, செங்கல்லால் செய்யப்பட்ட உயர்ந்த படைவீட்டைச் சூழ்ந்த மதிலினையும், இழும் என்னும் ஓசையுடைய திரண்ட பறவைகளின் கூட்டமுடைய, கொழுவிய மெல்லிய கிளைகளையுடைய பூவாமல் காய்க்கும் மரங்களின் உள், பழத்தின் பருமையாலும் இனிமையாலும் உயர்வாக எண்ணப்படும் பலா மரத்தை ஒத்த (பறவைகள் பலா மரத்திற்கு வருவதுபோல் அவ்வூருக்கு மக்கள் வருவர்), புலால் நாற்றமுடைய கடல் சூழ்ந்த வானம் கவிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்துள், பலர் தொழும்படி விழாக்களினால் சிறப்பையுடைய பழைய ஊர்களையுடைய,

குறிப்பு  கொடையும் கோளும் வழங்குநர்த் தடுத்த (400) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொள்வாரும் கொடுப்போரும் நிறைந்து இயங்குவாரைத் தடை செய்யும் அங்காடியினையும் உடைத்ததாய், இனி வழிச் செல்வோரையும் தன் புதுமையால் தடுக்கும் அங்காடி எனினுமாம்.  கோளி (407) – பூக்காமல் காய்க்கும் மரங்கள்.

சொற்பொருள்:  காழோர் இகழ் பதம் நோக்கி – யானையை செலுத்தும் பரிக்கோலை உடையவர்களின் நிலைமையைப் பார்த்து, கீழ நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளம் கடுஞ்சூல் மந்தி கவரும் காவில் – கீழே வைக்கப்பட்ட நெடிய தும்பிக்கைகளையுடைய யானைகளுக்கு இடும் பொருட்டு நெய் சேர்த்து மிதித்த கவளங்களை முதல் கருப்பத்தை உடைய பெண் குரங்கு எடுத்துக் கொண்டுபோய் உண்ணுகின்ற சோலையினையும், களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின் – களிற்று யானைகளின் சினத்தை அடக்கிய வெளிற்றுத் தன்மை இல்லாத தறிகளையும் (வெளிறு இல் – வைரம் பாய்ந்த, மிக உறுதியான, கந்து – தறி, தூண்), திண் தேர் குழித்த குண்டு நெடுந்தெருவின் – திண்மையான தேர்கள் பலகால் ஓடிக் குழி உண்டாக்கிய நீண்ட தெருவினையும்,  படை தொலைபு அறியா மைந்து மலி – படையிடத்து கெடுதலை அறியாத வலிமை மிகுந்த, பெரும் புகழ்க் கடைகால் யாத்த பல் குடி கெழீஇ  – பெரிய புகழின் எல்லையை மறைத்த பல மறக்குடிகள் பொருந்தப்பட்டு (கெழீஇ – அளபெடை), கொடையும் கோளும் வழங்குநர்த் தடுத்த – கொடுத்தலும் கொள்ளலும் ஆகிய வணிகத்தொழிலை அங்கு இயங்குவோரை இயங்காமல் தடுத்தற்குக் காரணமான கடைவீதியையும் உடைத்ததாய், அடையா வாயில் – பரிசில் வேண்டி வருவோர்க்கு அடைக்காத வாயிலையும், மிளை சூழ் படப்பை – காவற்காடு சூழ்ந்த பக்கங்களையும் உடைய (படப்பை – பக்கம்), நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்  – நீல நிறத்தையும் வடிவினையுமுடைய திருமாலுடைய கொப்பூழ் ஆகிய (நீல் – கடைக்குறை), நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த் தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி – நான்முகனைப் பெற்ற பல இதழ்களையுடைய தாமரையின் கொட்டைபோல் அழகுடன் தோன்றி, சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின் – செங்கல்லால் செய்யப்பட்ட உயர்ந்த படைவீட்டைச் சூழ்ந்த மதிலினையும், இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத் தொழுதி – இழும் என்னும் ஓசையுடைய திரண்ட பறவைகளின் கூட்டமுடைய (இழுமென் – ஒலிக்குறிப்பு), கொழு மென் சினைய  கோளியுள்ளும் – கொழுவிய மெல்லிய கிளைகளையுடைய பூவாமல் காய்க்கும் மரங்களில் வைத்தும், பழம் மீக்கூறும் பலாஅப் போல – பழத்தின் பருமையாலும் இனிமையாலும் உயர்வாக எண்ணப்படும் பலா மரத்தை ஒத்த (பலாஅ – அளபெடை, பறவைகள் பலா மரத்திற்கு வருவதுபோல் அவ்வூருக்கு மக்கள் வருவர்), புலவுக் கடல் உடுத்த வானம் சூடிய உலகத்து உள்ளும் – புலால் நாற்றமுடைய கடல் சூழ்ந்த வானம் கவிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்து உள்ளும், பலர் தொழ விழவு மேம்பட்டபழவிறல் மூதூர் – பலர் தொழும்படி விழாக்களினால் சிறப்பையுடைய பழைய ஊர்களையுடைய

இளந்திரையனின் போர் வெற்றி

அவ்வாய் வளர்பிறை சூடிச் செவ்வாய்
அந்தி வானத்து ஆடுமழை கடுப்ப,
வெண்கோட்டு இரும்பிணம் குருதி ஈர்ப்ப,
ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து அவியப்   415
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல,
அடங்காத் தானையோடு உடன்று மேல்வந்த
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்துக்

கச்சியோனே கைவண் தோன்றல்!   420

நச்சிச் சென்றோர்க்கு ஏமம் ஆகிய (412-421)

பொருளுரை:   அழகிய இடத்தையுடைய வளரும் பிறையைச் சூடிச் சிவந்த இடத்தையுடைய அந்திப்பொழுதின் செவ்வானத்தில் அசையும் முகில்களை ஒப்ப உள்ள வெள்ளை மருப்புகளையுடைய (தந்தங்களையுடைய) கரிய யானைப் பிணத்தைக் குருதியாகிய ஆறு இழுத்துக்கொண்டு போகும்படி, துரியோதனன் முதலிய நூறு பேரும் போர்க்களத்தில் அழியும்படி, பெரிய போரில் வெற்றிபெற்ற, கொடிஞ்சி உடைய உயர்ந்த தேரினையுடைய, தொலையாத போரினையுடைய பாண்டவரைப் போன்று, அடங்காத படையுடன் சினந்து வந்த, தன் ஏவலுக்கு ஒத்துக்கொள்ளாத பகைவர் தோன்றும்போது வெற்றிக்களிப்புடன் ஆரவாரித்தவன், காஞ்சிபுரத்தில் உளன் ஆவான், வழங்கும் தன்மைகளில் தலைமை சான்ற தொண்டைமான் இளந்திரையன். தன்னை விரும்பி வந்தவர்களுக்கு பாதுகாவலாக இருப்பவன்.

சொற்பொருள்:  அவ்வாய் வளர்பிறை சூடிச் செவ்வாய் அந்தி வானத்து ஆடுமழை கடுப்ப – அழகிய இடத்தையுடைய வளரும் பிறையைச் சூடிச் சிவந்த இடத்தையுடைய அந்திப்பொழுதின் செவ்வானத்தில் அசையும் முகில்களை ஒப்ப (கடுப்ப – உவம உருபு), வெண்கோட்டு இரும்பிணம் குருதி ஈர்ப்ப – வெள்ளை மருப்புகளையுடைய (தந்தங்களையுடைய) கரிய யானைப் பிணத்தைக் குருதியாகிய ஆறு இழுத்துக்கொண்டு போகும்படி, ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய – துரியோதனன் முதலிய நூறு பேரும் போர்க்களத்தில் அழியும்படி, பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்  – பெரிய போரில் வெற்றிபெற்ற கொடிஞ்சி உடைய உயர்ந்த தேரினையுடைய (கொடிஞ்சி – தாமரை வடிவில் உள்ள ஓர் உறுப்பு), ஆராச் செருவின் ஐவர் போல – தொலையாத போரினையுடைய பாண்டவரைப் போன்று அடங்காத் தானையோடு உடன்று மேல்வந்த ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து  ஆர்த்து – அடங்காத படையுடன் சினந்து வந்த தன் ஏவலுக்கு ஒத்துக்கொள்ளாத பகைவர் தோன்றும்போது வெற்றிக்களிப்புடன் ஆரவாரித்து, கச்சியோனே கைவண் தோன்றல் நச்சிச் சென்றோர்க்கு ஏமம் ஆகிய – காஞ்சிபுரத்தில் உளன் ஆவான் வழங்கும் தன்மைகளில் தலைமை சான்ற தொண்டைமான் இளந்திரையன் தன்னை விரும்பி வந்தவர்களுக்கு பாதுகாவலாக இருப்பவன்

அரசனது முற்றச் சிறப்பு

அளியும் தெறலும் எளிய ஆகலின்,
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட,
நயந்தோர் தேஎம் நன்பொன் பூப்ப,
நட்புக்கொளல் வேண்டி நயந்திசினோரும்,  425
துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும்,
கல்வீழ் அருவி கடற் படர்ந்தாங்குப்
பல்வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமையச் செவ்வரை,
வெண்திரை கிழித்த விளங்கு சுடர் நெடுங்கோட்டுப்   430
பொன் கொழித்து இழிதரும் போக்கு அருங் கங்கைப்
பெருநீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மரப் பாணியில் தூங்கியாங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச்

செவ்வி பார்க்கும் செழுநகர் முற்றத்துப் (422-435)

பொருளுரை:   இரக்கமும் சினமும் எளியவை ஆகையால், தன்னுடன் போரிட்டவர்களின் மன்றங்கள் மக்கள் இல்லாது ஆகும்படி பாழ்பட்டு அழியவும், தன்னை விரும்பியவர்களின் நாடுகள் பொன் நிறைந்து திகழவும், இவற்றைக் கண்டு, அவன் நட்பை வேண்டி விரும்பினவர்களும், அவனுடைய வலிமையைத் துணை ஆகக் கருதிய வேறு உதவி இல்லாதவர்களும், மலையிலிருந்து விழும் அருவி கடலை நோக்கி சென்றாற்போல், பலவேறு காரணங்களால் பணிந்த மன்னர்கள், தேவர்கள் இருக்கும் உச்சிகளையுடைய சிவந்த இமய மலையில், வெள்ளையாகவும் ஒளியுடனும் உயர்ந்த மலை உச்சியிலிருந்து பொன்னை அடித்துக் கொண்டு இறங்கும், கடத்தற்கு அரிய கங்கை ஆற்றில் உள்ள பெரிய நீரை கடக்கும் மக்கள், அங்கு ஒரு தோணி வருவதை ஆவலுடன் எதிர்பார்த்து சோர்ந்து இருந்தாற்போல், கெடாத செல்வங்களுடன் (திறையுடன்) திரண்டு உரிய காலம் பார்த்திருக்கும் வளநகர் முற்றத்தில்,

குறிப்பு:   இமையவர் (429) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இமைத்தல் இல்லாத இமையினையுடைய தேவர்கள்.  இமய மலையின் உச்சியில் தேவர்கள் உறைவர் என்பது மரபு.  புறநானூறு 62 – இமையா நாட்டத்து நாற்ற உணவினோரும் ஆற்ற அரும் பெறல் உலகம்.  துவன்று – துவன்று நிறைவு ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 36).

சொற்பொருள்:  அளியும் தெறலும் – இரக்கமும் சினமும், எளிய ஆகலின் – எளியவை ஆகையால்,  மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட – தன்னுடன் போரிட்டவர்களின் மன்றங்கள் மக்கள் இல்லாது ஆகும்படி பாழ்பட்டு அழியவும் (தேஎம் – அளபெடை), நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப – தன்னை விரும்பியவர்களின் நாடுகள் பொன் நிறைந்து திகழவும் (தேஎம் – அளபெடை), நட்புக்கொளல் வேண்டி நயந்திசினோரும் – தன்னுடைய நட்பை வேண்டி விரும்பினவர்களும், துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும் – அவனுடைய வலிமையைத் துணை ஆகக் கருதிய வேறு உதவி இல்லாதவர்களும், கல்வீழ் அருவி கடற் படர்ந்தாங்கு – மலையிலிருந்து விழும் அருவி கடலை நோக்கி சென்றாற்போல், பல்வேறு வகையின் பணிந்த மன்னர் – பலவேறு காரணங்களால் பணிந்த மன்னர்கள், இமையவர் உறையும் சிமையச் செவ்வரை – தேவர்கள் இருக்கும் உச்சிகளையுடைய சிவந்த இமய மலையில், வெண்திரை கிழித்த விளங்கு சுடர் நெடுங்கோட்டு – வெள்ளையாகவும் ஒளியுடனும் உயர்ந்த மலை உச்சியில், பொன் கொழித்து இழிதரும் – பொன்னை அடித்துக் கொண்டு இறங்கும், போக்கு அருங் கங்கை பெருநீர் போகும் இரியல் மாக்கள் – கடத்தற்கு அரிய கங்கை ஆற்றில் உள்ள பெரிய நீரை கடக்கும் மக்கள், ஒரு மரப் பாணியில் தூங்கியாங்கு – அங்கு ஒரு தோணி வருவதை ஆவலுடன் எதிர்பார்த்து சோர்ந்து இருந்தாற்போல் (தூங்கியாங்கு – சோர்ந்து இருந்தாற்போல), தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ – கெடாத செல்வங்களுடன் திரண்டு (குழீஇ – அளபெடை), செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து – உரிய காலம் பார்த்திருக்கும் வளநகர் முற்றத்தில்

திரையன் மந்திரிச் சுற்றத்தோடு அரசு வீற்றிருக்கும் காட்சி

பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும்
கருங்கைக் கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த,
கூடத் திண் இசை வெரீஇ மாடத்து
இறை உறை புறவின் செங்காற் சேவல்,
இன்துயில் இரியும் பொன் துஞ்சு வியல்நகர்க்   440
குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல் செய் மண்டிலம் பாரித்தாங்கு,
முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும்,
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி,
இடைத்தெரிந்து உணரும் இருள்தீர் காட்சிக்   445
கொடைக்கடன் இறுத்த கூம்பா உள்ளத்து,

உரும்பு இல் சுற்றமோடு இருந்தோற் குறுகிப், (436-447)

பொருளுரை:   பெரிய தும்பிக்கையை உடைய யானைக்கு, வளைந்து இருக்கும் பூணை அதன் மருப்பில் (தந்தத்தில்) சேர்க்கும் வலிய கைகளை உடைய கொல்லன், சுத்தியலால் இரும்பில் இடித்த வலிய ஒலிக்கு அஞ்சி, இறப்பின்கண் வாழும் சிவந்த கால்களையுடைய ஆண் புறாவின் இனிய துயிலை நீக்கும், வளமை உடைய பெரிய அரண்மனையில், கீழ் கடலாகிய எல்லையில் கடல் நீர்க்கு நடுவில் பகற்பொழுதைச் செய்யும் கதிரவன் தன் கதிர்களைப் பரப்பித் தோன்றினாற்போல் தோன்றி, முறையாக வேண்டுபவர்களுக்கும் குறை இரந்தவர்களுக்கும், அவர்கள் வேண்டுவதற்கு ஏற்றாற்போல் அளித்து, தன்னால் விரும்பட்டவர்கள் கூறாமலேயே அவர்களின் உள்ளத்தில் உள்ளதை அறிந்து அருளும் நல்ல காட்சியை உடையனாகக் கொடுத்தலை மன்னன் செய்ய, கொடுமை இல்லாத அமைச்சர் சுற்றத்துடன் இருந்தவனை நீவீர் அணுகி,   

குறிப்பு முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடைமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

சொற்பொருள்:  பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும் கருங்கைக் கொல்லன் – பெரிய தும்பிக்கையை உடைய யானைக்கு வளைந்து இருக்கும் பூணைத் மருப்பில் (தந்தத்தில்) சேர்க்கும் வலிய கைகளை உடைய கொல்லன், இரும்பு விசைத்து எறிந்த கூடத் திண் இசை வெரீஇ – சுத்தியலால் இரும்பில் இடித்த வலிய ஒலிக்கு அஞ்சி (வெரீஇ – அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது), மாடத்து இறை உறை புறவின் செங்காற் சேவல் இன்துயில் இரியும் – மாடத்தின் இறப்பின்கண் (சுவருக்கு அப்பால் நீளும் கூரைக்கு அடியில் உள்ள இடம்) உறைகின்ற சிவந்த கால்களையுடைய புறாவின் சேவல் இனிய துயிலை நீக்கும், பொன் துஞ்சு வியல்நகர் – வளமை உடைய பெரிய அரண்மனையில், குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண் பகல் செய் மண்டிலம் பாரித்தாங்கு – கீழ் கடலாகிய எல்லையில் கடல் நீர்க்கு நடுவில் பகற்பொழுதைச் செய்யும் கதிரவன் தன் கதிர்களைப் பரப்பித் தோன்றினாற்போல், முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் – முறையாக வேண்டுபவர்களுக்கும் குறை இரந்தவர்களுக்கும், வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி – வேண்டுவதற்கு ஏற்றாற்போல் அளித்து, இடைத்தெரிந்து உணரும் இருள்தீர் காட்சி – தன்னால் விரும்பட்டவர்கள் கூறாமலேயே அவர்களின் உள்ளத்தில் உள்ளதை அறிந்து அருளும் நல்ல காட்சியை உடையனாக (இருள்தீர் – மனக்கலக்கம் இல்லாமல், நல்லபடியாக), கொடைக்கடன் இறுத்த – கொடுத்தலைச் செய்ய, கூம்பா உள்ளத்து உரும்பு இல் சுற்றமோடு இருந்தோற் குறுகி – கொடுமை இல்லாத அமைச்சர் சுற்றத்துடன் இருந்தவனை அணுகி (உரும்பு – கொடுமை) 

பாணன் – அரசனைப் போற்றும் வகை

பொறி வரிப் புகர் முகம் தாக்கிய வயமான்
கொடுவரிக் குருளை கொள வேட்டாங்கு,
புலவர் பூண்கடன் ஆற்றிப் பகைவர்   450
கடிமதில் எறிந்து குடுமி கொள்ளும்
வென்றி அல்லது வினை உடம்படினும்,
ஒன்றல் செல்லா உரவுவாட் தடக்கை
கொண்டி உண்டித் தொண்டையோர் மருக!
மள்ளர் மள்ள மறவர் மறவ!   455
செல்வர் செல்வ செரு மேம்படுந!
வெண்திரைப் பரப்பின் கடுஞ்சூர் கொன்ற
பைம்பூண் சேஎய் பயந்த மாமோட்டுத்
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு,
தண்டா ஈகை நின் பெரும்பெயர் ஏத்தி   460
வந்தேன் பெரும வாழிய நெடிது என,
இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பிக்
கடன்அறி மரபின் கைதொழூஉப் பழிச்சி,

நின் நிலை தெரியா அளவை அந்நிலை, (448-464)

பொருளுரை:   புள்ளியும் வரியுமுடைய வண்டுகள் மொய்க்கும் முகத்தை உடைய யானையைக் தாக்கிய சிங்கம், அதன்பின் புலிக்குட்டியைக் கொள்ள விரும்பினாற்போல, புலவர்களுக்கு அணிகலன்களைக் கொடுத்து, பகைவர்களின் காவல் அமைந்த மதில்களை அழித்து, மன்னர்களின் பொன் முடி முதலியவற்றை எடுத்துக் கொண்டு, அம்மன்னர்கள் பணிய உடன்பட்டாலும் அதற்கு மனம் பொருந்துதல் நிகழாமைக்குக் காரணமான, வலிய வாளையுடைய பெரிய கையினையும் பகைவர்களின் நிலத்தில் கொண்ட கொள்ளையாகிய உணவினையும் உடைய தொண்டையோர் குலத்தில் தோன்றியவனே! போர் மறவர் மதிக்கும் போர் மறவனே! கொடியோர்க்குக் கொடியவனே! செல்வரும் மதிக்கும் செல்வமானவனே! போரில் வெற்றி அடைபவனே! வெள்ளை அலைகளையுடைய கடலில் சென்று கடிய சூரனைக் கொன்ற பசிய அணிகலன்களை உடைய முருகனைப் பெற்ற, பெரிய வயிற்றினையும் துணங்கைக் கூத்தினையும் அழகினையும் உடைய கொற்றவையைக் கடவுள்கள் புகழ்ந்தாற்போல், விடாத கொடையினையுடைய உன்னுடைய பெரும் பெயரைப் புகழ வந்தேன் பெருமானே, நீ நீடு வாழ்வாய் என, இடப்பக்கத்தில் தழுவுதலை உடைய பேரியாழை இயக்கும் முறைப்படி இயக்கி, யாழில் உறையும் கடவுளுக்கு முறைப்படி இயற்றிக் கையால் தொழுது, புகழ்ந்து, உன்னுடைய நிலையினை அறிவதற்கு முன்னமே,

குறிப்பு:   கொற்றவை – கடுஞ்சூர் கொன்ற பைம்பூண் சேஎய் பயந்த மாமோட்டு துணங்கை அம் செல்விக்கு (அடிகள் 457-459), திருமுருகாற்றுப்படை 258 – வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ (கொற்றவை சிறுவ – முருகன்), அகநானூறு 345 – கான் அமர் செல்வி.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  பழிச்சும் – பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள (தொல்காப்பியம், உரியியல் 86). குருளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (மரபியல் 1, தொல்காப்பியம்).

 சொற்பொருள்:  பொறி வரிப் புகர் முகம் தாக்கிய வயமான் – புள்ளியும் வரியுமுடைய வண்டுகள் மொய்க்கும் முகத்தை உடைய யானையைக் தாக்கிய சிங்கம் (பொறி வரி – புள்ளியும் வரியும் உடைய வண்டு, புகர் முகம் – யானை, அன்மொழித்தொகை, ஆகுபெயருமாம்), கொடுவரிக் குருளை கொள வேட்டாங்கு – பின் புலிக்குட்டியைக் கொள்ள விரும்பினாற்போல (கொடுவரி – வளைந்த கோடு, புலி, பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, ஆகுபெயருமாம்), புலவர் பூண்கடன் ஆற்றி – புலவர்களுக்கு அணிகலன்களைக் கொடுத்து, பகைவர் கடிமதில் எறிந்து – பகைவர்களின் காவல் அமைந்த மதில்களை அழித்து, குடுமி கொள்ளும் வென்றி – மன்னர்களின் முடி முதலியவற்றை எடுத்துக் கொண்டு, அல்லது வினை உடம்படினும் ஒன்றல் செல்லா – அம்மன்னர்கள் பணிய உடன்பட்டாலும் அதற்கு மனம் பொருந்துதல் நிகழாமைக்குக் காரணமான, உரவுவாள் தடக்கைக் கொண்டி உண்டி – வலிய வாளையுடைய பெரிய கையினையும் பகைவர்களின் நிலத்தில் கொண்ட கொள்ளையாகிய உணவினையும் உடைய, தொண்டையோர் மருக – தொண்டையோர் குலத்தில் தோன்றியவனே (தொண்டை நாடு – ஆற்காடு, செங்கல்பேட்டை, நெல்லூர், காஞ்சிபுரம் பகுதிகளைக் கொண்டது), மள்ளர் மள்ள – போர் மறவர் மதிக்கும் போர் மறவனே, மறவர் மறவ – கொடியோர்க்குக் கொடியவனே, செல்வர் செல்வ – செல்வரும் மதிக்கும் செல்வமானவனே, செரு மேம்படுந – போரில் வெற்றி அடைபவனே, வெண்திரைப் பரப்பின் கடுஞ்சூர் கொன்ற பைம்பூண் சேஎய் பயந்த – வெள்ளை அலைகளையுடைய கடலில் சென்று கடிய சூரனைக் கொன்ற பசிய அணிகலன்களை உடைய முருகனைப் பெற்ற (சேஎய் – அளபெடை), மாமோட்டு துணங்கை அம் செல்விக்கு – பெரிய வயிற்றினையும் துணங்கைக் கூத்தினையும் அழகினையும் உடைய  கொற்றவைக்கு, அணங்கு நொடித்தாங்கு – கடவுள்கள் புகழ்ந்தாற்போல், தண்டா ஈகை நின் பெரும்பெயர் ஏத்தி வந்தேன் பெரும – விடாத கொடையினையுடைய உன்னுடைய பெரும் பெயரைப் புகழ வந்தேன் பெருமானே, வாழிய நெடிது என – நீ நீடு வாழ்வாய் என, இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி – இடப்பக்கத்தில் தழுவுதலை உடைய பேரியாழை இயக்கும் முறைப்படி இயக்கி, கடன் அறி மரபின் கைதொழூஉ – யாழில் உறையும் கடவுளுக்கு முறைப்படி இயற்றிக் கையால் தொழுது (தொழூஉ – அளபெடை), பழிச்சி – புகழ்ந்து, நின் நிலை தெரியா அளவை அந்நிலை – உன்னுடைய நிலையினை அறிவதற்கு முன்னமே

பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல்

நாவல் அம்  தண்பொழில் வீவு இன்று விளங்க,   465
நில்லா உலகத்து நிலைமை தூக்கி,
அந்நிலை அணுகல் வேண்டி, நின் அரைப்
பாசி அன்ன சிதர்வை நீக்கி,
ஆவி அன்ன அவிர்நூற் கலிங்கம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇக்   470
கொடுவாள் கதுவிய வடு ஆழ் நோன்கை
வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங்குறை
அரி செத்து உணங்கிய பெருஞ் செந்நெல்லின்
தெரிகொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல்,
அருங்கடித் தீம் சுவை அமுதொடு பிறவும்,   475
விருப்புடை மரபின் கரப்புடை அடிசில்,
மீன் பூத்தன்ன வான்கலம் பரப்பி,
மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து,
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி,

மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும் (465-480)

பொருளுரை:   நாவல் மரங்களால் பெற்ற குளிர்ந்த உலகம் கெடுதல் இன்றி விளங்கும்படி, நிலையில்லாத இந்த உலகத்தில் நிலையில்லாதவற்றை ஆராய்ந்து, நீ நின்ற நிலையினின்றும் தன்னை அணுகுவதற்கு விரும்பி உன்னை அழைத்து, உன்னுடைய இடையில் கிடந்த பாசியின் வேரை ஒத்த பாழ்பட்ட ஆடையை நீக்கி, ஆவியை (பால் ஆவியை) ஒத்த விளங்குகின்ற நூலால் செய்த ஆடையை, மிகப் பெரிய சுற்றத்துடன், ஒருசேர உடுக்கச் செய்து, வளைந்த அரிவாளைக் கொண்ட வடு அழுத்தின கையையுடைய சமையல்காரன் ஆக்கின பல இறைச்சியின் கொழுத்த தசையும், அரித்து ஈரம் போக உலரவைத்த பெரிய செந்நெல்லின் தேர்ந்தெடுத்த அரிசியால் ஆக்கின திரண்ட நெடிய சோறும், அரிய காவல் செய்து போற்றிய இனிய சுவையுடைய அமிழ்தம் போன்ற உண்டிகளும் பிறவும் ஆகிய, பார்த்தவர்கள் விரும்பும் முறைமையுடைய மூடி வைத்தலுடைய உணவுகளை, இரவில் விண்மீன்கள் மலர்ந்தாற்போல் வெள்ளிக் கிண்ணங்களைப் பரப்பி, உங்கள் யாவரையும் தாய் தன் மக்களைப் பார்க்குமாறு பிள்ளை முறை பிள்ளை முறையாகப் பார்த்து, முகத்தை இனிது காட்டி, அமையாத விருப்பத்துடன் தானே எதிர் நின்று ஊட்டி, இருண்ட வானின் திங்களைப் போன்ற,

குறிப்பு  இரும்பேர் ஒக்கல் – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 – கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை – புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 – மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 – கரிய பெரிய சுற்றத்தார், பொ. வே. சோமசுந்தரனார் உரை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அகநானூறு 301 – மிகப் பெரிய சுற்றத்தார்.  பொழில் – பரிபாடல் 5 – நாவலந் தண்பொழில் வட பொழில் (நாவலந்தீவின் வடபகுதி).  கதுவிய (471) – வளைந்த அரிவாளை பற்றியதால் ஏற்பட்ட வடு.

சொற்பொருள்:  நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க – நாவல் மரங்களால் பெற்ற குளிர்ந்த உலகம் கெடுதல் இன்றி விளங்கும்படி (பொழில் – உலகம்), நில்லா உலகத்து நிலைமை தூக்கி – நிலையில்லாத உலகத்தில் நிலையில்லாதவற்றை ஆராய்ந்து, அந்நிலை அணுகல் வேண்டி – நீ நின்ற நிலையினின்றும் தன்னை அணுகுவதற்கு விரும்பி உன்னை அழைத்து, நின் அரைப் பாசி அன்ன சிதர்வை நீக்கி – உன்னுடைய இடையில் கிடந்த பாசியின் வேரை ஒத்த பாழ்பட்ட ஆடையை நீக்கி (பாசி – ஆகுபெயர் பாசியின் வேர்க்கு), ஆவி அன்ன அவிர் நூற் கலிங்கம் – ஆவியை (பால் ஆவியை) ஒத்த விளங்குகின்ற நூலால் செய்த ஆடையை, இரும்பேர் ஒக்கலொடு – மிகப் பெரிய சுற்றத்துடன்  (இரும்பேர் – ஒருபொருட்பன்மொழி), ஒருங்கு உடன் உடீஇ – ஒருசேர உடுக்கச் செய்து (உடீஇ – அளபெடை), கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங்குறை – வளைந்த அரிவாளைக் கொண்ட வடு அழுத்தின கையையுடைய சமையல்காரன் ஆக்கின பல இறைச்சியின் கொழுத்த தசையும் (கதுவிய – பற்றிய, பிடித்த), அரி செத்து உணங்கிய பெருஞ் செந்நெல்லின் – அரித்து ஈரம் போக உலரவைத்த பெரிய செந்நெல்லின், தெரிகொள் அரிசி திரள் நெடும் புழுக்கல் – தேர்ந்தெடுத்த அரிசியால் ஆக்கின திரண்ட நெடிய சோறும், அருங்கடித் தீம்சுவை அமுதொடு பிறவும் – அரிய காவல் செய்து போற்றிய இனிய சுவையுடைய அமிழ்தம் போன்ற உண்டிகளும் பிறவும் ஆகிய, விருப்புடை மரபின் கரப்புடை அடிசில் – பார்த்தவர்கள் விரும்பும் முறைமையுடைய மூடி வைத்தலுடைய உணவுகளை, மீன் பூத்தன்ன வான்கலம் பரப்பி – இரவில் விண்மீன்கள் மலர்ந்தாற்போல் வெள்ளிக் கிண்ணங்களைப் பரப்பி, மகமுறை மகமுறை நோக்கி – உங்கள் யாவரையும் தாய் தன் மக்களைப் பார்க்குமாறு பிள்ளை முறை பிள்ளை முறையாகப் பார்த்து, முகன் அமர்ந்து – முகத்தை இனிது காட்டி (முகன் – முகம் என்பதன் போலி), ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி – அமையாத விருப்பத்துடன் தானே எதிர் நின்று ஊட்டி, மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும் – இருண்ட வானின் திங்களைப் போன்ற

பரிசு வழங்குதல்

ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி,
உரவுக் கடல் முகந்த பருவ வானத்துப்
பகற் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்குப்
புனை இருள் கதுப்பு அகம் பொலிய பொன்னின்   485
தொடை அமை மாலை விறலியர் மலைய
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல்
வளை கண்டன்ன வால் உளைப் புரவி,
துணை புணர் தொழில நால்குடன் பூட்டி,
அரித்தேர் நல்கியும் அமையான் செருத்தொலைத்து   490
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஒழித்த
விசும்பு செல் இவுளியொடு பசும்படை தரீஇ,

அன்றே விடுக்கும் அவன் பரிசில், (481-493)

பொருளுரை:   உலவும் வண்டுகள் ஒலிக்காத தீயிடத்தில் கிடந்து மலர்ந்த பொற்றாமரையை, நீண்ட கரிய மயிரிடத்தில் அழகுபெறச் சூட்டி, வலிமையுடைய கடலில் நீரை முகந்துகொண்ட பருவ காலத்து முகிலினின்றும் பகற்காலத்தில் பெய்கின்ற துளியின்கண் மின்னல் ஓடினாற்போல், புனைந்த கரிய மயிர் அழகு ஆகும்படி, பொன்னினால் செய்த சேரக்கட்டின மாலையை ஆடும் பெண்கள் சூட, குதிரை நூலைக் கற்றோர் புகழ்ந்த மாண்புடையனவாய, திருமாலின் பாற்கடலில் சங்கைக் கண்டாற்போன்ற வெள்ளை நிறப் பிடரி மயிரையுடைய ஒன்றாகத் தொழில் செய்வன ஆகிய குதிரைகள் நான்கினை ஒருசேரப் பூட்டி, காற்றினை ஒத்த தேரைக் கொடுத்தும் அமையான் ஆகி, தன்னுடன் போரில் தோற்ற பொருந்தாத பகைவர்கள் புறமுதுகு இட்டபோது விட்டுப் போன விண்ணிலே பறப்பதுபோன்று விரைகின்ற குதிரைகளுடன், புதிய குதிரைச் சேணமும் தந்து, நீவீர் சென்ற நாளே பரிசில் தந்து விடுவான்.

குறிப்பு:   புறநானூறு 69 – ஆடு வண்டு இமிராத் தாமரை.  ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை (481) – பறக்கும் வண்டுகள் ஊதாத மலரான தீயில் கிடந்து உருவாக்கிய பொற்றாமரை, வெளிப்படை.  அரித்தேர் (490) – நச்சினார்க்கினியர் உரை – பொன்னால் செய்த தேர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொன்னால் செய்த தேர், காற்றை ஒத்த தேர் என்பாருமுளர்.  மின்னல் நிமிர்ந்தாற்போல்:  மின்னு நிமிர்ந்தன்ன – அகநானூறு 124, 158, நற்றிணை 51, புறநானூறு 57, மின்னு நிமிர்ந்தாங்கு – பெரும்பாணாற்றுப்படை 484, மின்னு நிமிர்ந்தனைய – மதுரைக்காஞ்சி 679.  

சொற்பொருள்:  ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை – உலவும் வண்டுகள் ஒலிக்காத தீயிடத்தில் கிடந்து மலர்ந்த பொற்றாமரையை, நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி – நீண்ட கரிய மயிரிடத்தில் அழகுபெறச் சூட்டி, உரவுக் கடல் முகந்த பருவ வானத்துப் பகற்பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்கு – வலிமையுடைய கடலில் நீரை முகந்துகொண்ட பருவ காலத்து முகிலினின்றும் பகற்காலத்தில் பெய்கின்ற துளியின்கண் மின்னல் ஓடினாற்போல், புனை இருள் கதுப்பு அகம் பொலிய – புனைந்த கரிய மயிர் அழகு ஆகும்படி, பொன்னின் தொடை அமை மாலை விறலியர் மலைய – பொன்னினால் செய்த தொடுத்த மாலையை ஆடும் பெண்கள் சூட, நூலோர் புகழ்ந்த மாட்சிய – குதிரை நூலைக் கற்றோர் புகழ்ந்த மாண்புடையனவாய, மால் கடல் வளை கண்டன்ன வால் உளைப் புரவி – திருமாலின் பாற்கடலில் சங்கைக் கண்டாற்போன்ற வெள்ளை நிறப் பிடரி மயிரையுடைய குதிரைகள், துணை புணர் தொழில – ஒன்றாகத் தொழில் செய்வன, நால்குடன் பூட்டி – நான்கினை ஒருசேரப் பூட்டி (நால்கு – நான்கு என்னும் எண்ணுப்பெயர் திரிசொல்), அரித்தேர் நல்கியும் அமையான் – காற்றினை ஒத்த தேரைக் கொடுத்தும் அமையான், செருத்தொலைத்து ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஒழித்த விசும்பு செல் இவுளியொடு – தன்னுடன் போரில் தோற்ற பொருந்தாத பகைவர்கள் புறமுதுகு இட்டபோது விட்டுப் போன விண்ணிலே பறப்பதுபோன்று விரைகின்ற குதிரைகளுடன், பசும்படை தரீஇ – புதிய குதிரைச் சேணமும் தந்து (தரீஇ – அளபெடை), அன்றே விடுக்கும் அவன் பரிசில் – நீவீர் சென்ற நாளே பரிசில் தந்து விடுவான்

இளந்திரையனது மலையின் பெருமை

……………………………………………….இன்சீர்க்
கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல்,
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின்,   495
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின்,
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில்,
செந்தீப் பேணிய முனிவர், வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கும்,
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே! (493-500)

பொருளுரை:   இனிய தாளத்தில் கின்னரம் என்னும் பறவைகள் பாடும் கடவுள்கள் உறையும் மலைச் சரிவில், மயில்கள் ஆடும் மரம் நெருங்கின இள மரங்கள் உடைய காட்டினையும், ஆண் குரங்குகள் பாய்ந்து உதிர்த்த மலர்கள் சிந்தின காட்டினையும், பெண் குரங்குகள் அவ்விடத்தில் கிடக்கும் குப்பையை வாரும், மானும் புலியும் துயில் கொள்ளும் முற்றத்தில், சிவந்த தீயைக் கைவிடாமல் காக்கும் முனிவர்கள், வெள்ளைத் தந்தங்களை உடைய ஆண் யானைகள் முறித்துக் கொண்டு வரும் விறகினால் வேள்வியைச் செய்யும், ஒளியுடன் விளங்கும் அருவிகளையுமுடைய, வேங்கட மலையை ஆளும் உரிமையுடையவன்.

குறிப்பு:  புறநானூறு 247 – மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்.

சொற்பொருள்:  இன்சீர்க் கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல் – இனிய தாளத்தில் கின்னரம் என்னும் பறவைகள் பாடும் கடவுள்கள் உறையும் மலையில், மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் – மயில்கள் ஆடும் மரம் நெருங்கின இள மரங்கள் உடைய காட்டில், கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின் – ஆண் குரங்குகள் பாய்ந்து உதிர்த்த மலர்கள் சிந்தின காட்டையுடைய, மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில் – பெண் குரங்குகள் அவ்விடத்தில் கிடக்கும் குப்பையை வாரும் மானும் புலியும் துயில் கொள்ளும் முற்றத்தில் (முன்றில் – இல் முன்), செந்தீப் பேணிய முனிவர் – சிவந்த தீயைக் கைவிடாமல் காக்கும் முனிவர்கள், வெண்கோட்டுக் களிறுதரு விறகின் வேட்கும் – வெள்ளைத் தந்தங்களை உடைய ஆண் யானைகள் முறித்துக் கொண்டு வரும் விறகினால் வேள்வியைச் செய்யும் (வேட்கும் – வேள்வி செய்யும்), ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே – ஒளியுடன் விளங்கும் அருவிகளையுடைய வேங்கட மலையை ஆளும் உரிமையுடையவன் (அருவிய – குறிப்புப் பெயரெச்சம், கிழவோனே – ஏகாரம் அசை)