கொங்கணச் சித்தர் பாடல்

 விநாயகர் துதி

கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்ற
செல்வியின் மேற் கும்மிதனைச் செப்புதற்கே - நல்விசய
நாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்ச
பாதம் வஞ்ச நெஞ்சினில்வைப் போம்.

கும்மி

சத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த
உத்தமி மேற் கும்மிப் பாட்டுரைக்க
வித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை
சித்தி விநாயகன் காப்பாமே.

சரஸ்வதி துதி

சித்தர்கள் போற்றிய வாலைப் பெண் ணாமந்த
சத்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்
தத்தமி தோமென ஆடுஞ் சரஸ்வதி
பத்தினி பொற்பதங் காப்பாமே.

சிவபெருமான் துதி

எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின்
தங்கையின் மேற்கும்மி பாடுதற்குக்
கங்கை யணிசிவ சம்புவாஞ் சற்குரு
பங்கயப் பொற்பதங் காப்பாமே.

சுப்பிரமணியர் துதி

ஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி
வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்கு
மானைப் பெண் ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும்
மால்முரு கேசனுங் காப்பாமே.

விஷ்ணு துதி

ஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குக்
காண்டீப னாம்பணி பூண்டவன் வைகுந்தம்
ஆண்டவன் பொற்பதங் காப்பாமே.

நந்தீசர் துதி

அந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குச்
சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும்
நந்தீசர் பொற்பதங் காப்பாமே.

நூல்

தில்லையில் முல்லையி லெல்லையு ளாடிய
வல்லவள் வாலைப் பெண் மீதினிலே
சல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்
தொல்லை வினை போக்கும் வாலைப் பெண்ணே!

மாதா பிதாகூட இல்லாம லேவெளி
மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்று
பேதைப்பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று
புகுந்தா ளிந்தப் புவியடக்கம்

வேதமும் பூதமுண் டானது வும்வெளி
விஞ்ஞான சாத்திர மானதுவும்
நாதமுங் கீதமுண் டானது வும்வழி
நான் சொல்லக் கேளடி வாலைப் பெண்ணே!

முந்தச் செகங்களுண் டானது வும்முதல்
தெய்வமுந் தேவருண் டானதுவும்
விந்தையாய் வாலையுண் டானது வும்ஞான
விளக்கம் பாரடி வாலைப் பெண்ணே!

அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்
அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்
தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி
பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம்.

ஆதியி லைத்தெழுத் தாயினாள் வாலைப்பெண்
ஐந்தெழுத் துமென்று பேரானாள்
நாதியி னூமை யெழுத்திவள் தானல்ல
ஞான வகையிவள் தானானாள்.

ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும்
ஓமென் றெழுத்தே யுயிராச்சு
ஆமிந் தெழுத்தை யறிந்துகொண் டுவிளை
யாடிக் கும்மி யடியுங்கடி.

செகம்ப டைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்
சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்
உகமு டிந்தது மஞ்செழுத் தாம்பின்னும்
உற்பன மானது மஞ்செழுத்தாம்.

சாத்திரம் பார்த்தாலுந் தானுமென்ன வேதந்
தானுமே பார்த்திருந் தாலுமென்ன?
சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு
சொல்லை யறிந்தல்லோ காணவேணும்

காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்
காரிய மில்லையென் றேநினைத்தால்
காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்
காரிய முண்டு தியானஞ் செய்தால்.

ஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி
வாயனு மைந்தா மெழுத்துக்குள்ளே
வாயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயிந்த
வாலையு மைந்தா மெழுத்துக்குள்ளே.

அஞ்செழுத் தானதும் எட்டெழுத் தாம்பின்னும்
ஐம்பத்தோர் அட்சரந் தானாச்சு
நெஞ்செழுத் தாலே நினையா மலந்த
நிசந்தெ ரியுமோ வாலைப் பெண்ணே

ஏய்க்கு தேய்க்கு தஞ்செழுத் துவகை
எட்டிப் பிடித்துக் கொளிரண்டெழுத்தை
நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி
நிலையைப் பாரடி வாலைப் பெண்ணே!

சிதம்பர சக்கரந் தானறி வாரிந்தச்
சீமையி லுள்ள பெரியோர்கள்
சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே
தெய்வத்தை யல்லோ அறியவேணும்.

மனமு மதியு மில்லாவி டில்வழி
மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள்
மனமு றுதியும் வைக்கவே ணும் பின்னும்
வாலை கிருபையுண் டாகவேணும்.

இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்
தீமட்டு திந்த வரி விழிக்கே
கனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்
கருவைச் சொல்லுவேன் கேளுங்கடி.

ஊத்தைச் சடலமென் றெண்ணா தேயிதை
உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே;
பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே.

உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி;
அச்சுள்ள விளக்கு வாலையடிஅவி
யாம லெரியுது வாலைப் பெண்ணே!

எரியு தேஅறு வீட்டினி லேயதில்
எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லை;
தெரியுது போக வழியுமில் லைபாதை
சிக்குது சிக்குது வாலைப் பெண்ணே!

சிலம்பொ லியென்னக் கேட்டுமடிமெத்த
சிக்குள்ள பாதை துடுக்கமடி;
வலம்புரி யச்சங்க மூது மடிமேலே
வாசியைப் பாரடி வாலைப் பெண்ணே!

வாசிப் பழக்க மறியவே ணுமற்று
மண்டல வீடுகள் கட்டவேணும்;
நாசி வழிக்கொண்டு யோகமம் வாசியும்
நாட்டத்தைப் பாரடி வாலைப் பெண்ணே!

முச்சுட ரான விளக்கினுள் ளேமூல
மண்டல வாசி வழக்கத்திலே
எச்சுடராகி யந்தச் சுடர்வாலை
இவள் விட வேறில்லை வாலைப் பெண்ணே!

சூடாமல் வாலை யிருக்கிற தும்பரி
சித்த சிவனுக்குள் ளானதால்
வீடாமல் வாசிப் பழக்கத்தைப் பாருநாம்
மேல்வீடு காணலாம் வாலைப் பெண்ணே!

மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்
விளக்கில் நின்றவன் வாணியடி
தாய்வீடு கண்டவன் ஞானியடிபரி
தாண்டிக் கொண்டான்பட் டாணியடி.

அத்தியி லேகரம் பத்தியி லேமனம்
புத்தியி லேநடு மத்தியிலே
நெற்றி சதாசிவ மென்றுசொன் னேனுன்றன்
நிலைமையைப் பாரடி வாலைப் பெண்ணே!

அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும்
வழுத்தி னேன்ஞானப் பழத்திலே
கழுத்தி லேமயேஸ் வரனு முண்டுகண்
கண்டு பாரடி வாலைப் பெண்ணே!

அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சிய ரேநிதம்
கொஞ்சி விளையாடும் வஞ்சியரே!
நெஞ்சிலே ருத்திரன் சூழிருப் பானவன்
நேருட னாமடி வாலைப் பெண்ணே!

தொந்தியி லேநடுப் பந்தியி லேதிடச்
சிந்தையிலே முந்தி யுன்றனுடன்
உந்தியில் விண்ணுவுந் தாமிருப் பாரிதை
உண்மையாய்ப் பாரடி வாலைப் பெண்ணே!

ஆலத்தி லேயிந்த ஞாலத்தி லேவருங்
காலத்தி லேயனு கூலத்திலே
மூலத்தி லேப்ரமன் தானிருந் துவாசி
முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே.

தேருமுண்டு ஐந்நூறும் ஆணியுண் டேஅதில்
தேவரு முண்டுசங் கீதமுண்டே
ஆருண்டு பாரடி வாலைத் தெய் வம்மதில்
அடக்கந் தானடி வாலைப் பெண்ணே!

ஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில்
உள்ளே நிலைக்கார ரஞ்சுபேராம்;
அன்புட னேபரி காரர்க ளாறுபேர்
அடக்கந் தானடி வாலைப் பெண்ணே!

இந்த விதத்திலே தேகத்தி லேதெய்வம்
இருக்கையில் புத்திக்க றிக்கையினால்
சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்
சாகிறதேதடி வாலைப் பெண்ணே!

நகார திட்டிப்பே ஆன தினால் வீடு
வான வகார நயமாச்சு;
உகார முச்சி சிரசாச் சேஇதை
உற்றுப் பாரடி வாலைப் பெண்ணே!

வகார மானதே ஓசையாச் சேஅந்த
மகார மானது கர்ப்பமாச்சே;
சிகார மானது மாய்கையாச் சேஇதைத்
தெளிந்து பாரடி வாலைப் பெண்ணே!

ஓமென்ற அட்சரந் தானுமுண் டதற்குள்
ஊமை யெழுத்து மிருக்குதடி;
நாமிந்தெ ழுத்தை யறிந்து கொண் டோம்வினை
நாடிப் பாரடி வாலைப் பெண்ணே!

கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை
வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்
எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காய
மென்றைக்கி ருக்குமோ வாலைப் பெண்ணே!

இருந்த மார்க்கமாய்த் தானிருந்து வாசி
ஏற்காம லேதான டக்கவேணும்;
திரிந்தே ஓடி யலைந்துவெந் துதேகம்
இறந்து போச்சுதே வாலைப் பெண்ணே!

பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில்
பூவில்லாப் பிஞ்சும் அனேகமுண்டு
மூத்த மகனாலே வாழ்வுமுண் டுமற்ற
மூன்றுபே ராலே அழிவுமுண்டு!

கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற
கற்பை யளித்தவ ரேவாழ்க!
சிற்பர னைப்போற்றிக் கும்மிய டிகுரு
தற்பர னைப்போற்றிக் கும்மியடி.

அஞ்சி னிலேரண்டழிந்ததில் லையஞ்
சாறிலே யுநாலொ ழிந்ததில்லை;
பிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது
பேணிப் போடலாம் வாலைப் பெண்ணே!

கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட் டானிரு
காலில்லா நெட்டையன் முட்டிக் கிட்டான்;
ஈயில்லாத் தேனெடுத் துண்டுவிட் டானது
இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே!

மேலூரு கோட்டைக்கே ஆதர வாய்நன்றாய்
விளங்கு கன்னனூர்ப் பாதையிலே
காலூரு வம்பலம் விட்டத னாலது
கடுந டையடி வாலைப் பெண்ணே!

தொண்டையுள் முக்கோணக் கோட்டையி லேயிதில்
தொத்திக் கொடிமரம் நாட்டையிலே
சண்டைசெய் துவந்தே ஓடிப்போ னாள்கோட்டை
வெந்து தணலாச்சு வாலைப் பெண்ணே!

ஆசை வலைக்குள் அகப்பட்ட தும்வீட
அப்போதே வெந்தே அழிந்திட்டதும்
பாச வலைவந்து மூடிய தும்வாலை
பாதத்தைப் போற்றடி வாலைப் பெண்ணே!

அன்ன மிருக்குது மண்டபத் தில்விளை
யாடித் திரிந்ததே ஆண்புலியும்
இன்ன மிருக்குமே யஞ்சுகி ளியவை
எட்டிப் பிடிக்குமே மூன்று கிளி;

தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது
மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும்
ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தை
இருந்து விழிப்பது பாருங்கடி.

மீனு மிருக்குது தூரணி யிலிதை
மேய்ந்து திரியுங் கலசா வல்;
தேனு மிருக்குது போரையிலே யுண்ணத்
தெவிட்டு தில்லையே வாலைப் பெண்ணே!

காகமிருக்குது கொம்பிலே தான்கத
சாவ லிருக்குது தெம்பிலேதான்;
பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம்
பார்த்ததால் தெரியுமே வாலைப் பெண்ணே!

கும்பிக் குளத்திலே யம்பல மாமந்தக்
குளக்க ருவூரில் சேறு மெத்த;
தெம்பி லிடைக்காட்டுப் பாதைக ளாய் வந்து
சேர்ந் தாராய்ந்துபார் வாலைப் பெண்ணே!

பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரண்டு
கெண்டை யிருந்து பகட்டுதடி;
கண்டிருந் துமந்தக் காக்கையு மேயஞ்சி
கழுகு கொன்றது பாருங்கடி!

ஆற்றிலே யஞ்சு முதலைய டியரும்
புற்றிலே ரண்டு கரடியடி;
கூற்றனு மூன்று குருடன டிபாசங்
கொண்டு பிடிக்கிறான் வாலைப் பெண்ணே!

முட்டை யிடுகு தொருபற வைமுட்டை
மோசம் பண்ணு தொருபறவை;
வட்டமிட் டாரூர் கண் ணியிலி ரண்டு
மானுந் தவிக்குது வாலைப் பெண்ணே!

அட்டமா வின்வட்டம் பொட்டலி லேரண்டு
அம்புலி நிற்குது தேர்மேலே;
திட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம்
செந்தண லானதே வாலைப் பெண்ணே!

முக்கோண வட்டக் கிணற்றுக்குள் ளேமூல
மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் தில்வாலை
அமர்ந்தி ருக்கிறாள் வாலைப் பெண்ணே!

இரண்டு காலாலொரு கோபுர மாம்நெடு
நாளா யிருந்தே அமிழ்ந்து போகும்;
கண்டபோ துகோபு ரமிருக் கும்வாலை
காணவு மெட்டாள் நிலைக்கவொட்டாள்.

அஞ்சு பூதத்தை யுண்டுபண் ணிக் கூட்டில்
ஆறா தாரத்தை யுண்டு பண்ணிக்
கொஞ்ச பெண்ணாசை யுண்டு பண்ணி வாலை
கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள்.

காலனைக் காலா லுதைத்த வளாம்வாலை
ஆலகா லவிட முண்டவளாம்;
மாளாச் செகத்தைப் படைத்தவ ளாமிந்த
மானுடன் கோட்டை இடித்தவளாம்.

மாதாவாய் வந்தே அமுதந்தந் தாள்மனை
யாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள்
ஆதர வாகிய தங்கையா னாள்நமக்
காசைக் கொழுந்தியு மாமியானாள்.

சிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை
செங்காட்டுச் செட்டியைத்தா னுதைத்தாள்;
ஒருத்தியாகவே சூரர்த மைவென்றாள்
ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள்.

இப்படி யல்லோ இவள் தொழி லாமிந்த
ஈனா மலடி கொடுஞ்சூலி;
மைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த
வயசு வாலை திரிசூலி.

கத்தி பெரியதோ யுறைபெரி தோவிவள்
கண்ணு பெரிதோ முகம் பெரிதோ?
சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான்
சற்றே சொல்லடி வாலைப் பெண்ணே!

அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல
அப்படி வாலை பெரிதானால்
பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல
பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி

மாமிச மானா லெலும்புமுண் டுசதை
வாங்கி ஓடு கழன்றுவிடும்;
ஆமிச மிப்படிச் சத்தியென் றேவிளை
யாடிக் கும்மி அடியுங்கடி.

பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் விளையாதென்று
கண்டுகொண் டுமுன்னே அவ்வைசொன் னாளது
வுண்டோ வில்லையோ வாலைப் பெண்ணே!

மண்ணுமில் லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்
வாசமில் லாமலே பூவுமில்லை;
பெண்ணுமில்லாமலே யாணுமில் லையிது
பேணிப்பாரடி வாலைப் பெண்ணே!

நந்தவனத்திலே சோதியுண் டுநிலம்
நித்திய பேருக்கு நெல்லுமுண்டு;
விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்
விட்ட குறைவேணும் வாலைப் பெண்ணே!

வாலையைப் பூசிக்கச் சித்தரா னார்வாலைக்
கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்;
வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத் தாரிந்த
விதந்தெ ரியுமோ வாலைப் பெண்ணே!

வாலைக்கு மேலான தெய்வமில் லைமானங்
காப்பது சேலைக்கு மேலுமில்லை;
பாலுக்கு மேலான பாக்கியமில் லைவாலைக்
கும்மிக்கு மேலான பாடலில்லை.

நாட்டத்தை கண்டா லறியலா குமந்த
நாலாறு வாசல் கடக்கலாகும்;
பூட்டைக் கதவைத் திறக்கலா கும்இது
பொய்யல்ல மெய்யடி வாலைப் பெண்ணே!

ஆணும்பெண் ணும்கூடி யானதனாற் பிள்ளை
ஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்;
ஆணும்பெண் ணுங்கூடி யானதல் லோபேதம்
அற்றொரு வித்தாச்சு வாலைப் பெண்ணே!

இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே
என் வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவே;
அன்றைக் கெழுத்தின் படிமுடி யும்வாலை
ஆத்தாளைப் போற்றடி வாலைப் பெண்ணே!

வீணாசை கொண்டு திரியா தேயிது
மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு
காணாத வாலையைக் கண்டுகொண் டாற்காட்சி
காணலா மாகாய மாளலாமே.

பெண்டாட்டி யாவதும் பொய்யல்ல வோபெற்ற
பிள்ளைக ளாவதும் பொய்யல்லவோ?
கொண்டாட்ட மான தகப்பன்பொய் யேமுலை
கொடுத்த தாயும் நிசமாமோ?

தாயும் பெண் டாட்டியுந் தான்சரி யேதன்யம்
தாமே யிருவருந் தாங்கொடுத்தார்;
காயும் பழமுஞ் சரியா மோஉன்றன்
கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப் பெண்ணே!

பெண்டாட்டி மந்தைமட்டும்வரு வாள்பெற்ற
பிள்ளை மசானக் கரையின் மட்டும்;
தெண்டாட்டுத் தர்மம் நடுவினி லேவந்து
சேர்ந்து பரகதி தான் கொடுக்கும்.

பாக்கிய மும்மகள் போக்கிய மும்ராச
போக்கிய மும்வந்த தானாக்கால்
சீக்கிரந் தருமஞ் செய்யவேண் டுங்கொஞ்சத்
திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும்.

திருப்பணி களைமு டித்தோ ருஞ்செத்துஞ்
சாகாத பேரி லொருவரென்றும்
அருட்பொ லிந்திடும் வேதத்தி லேயவை
அறிந்து சொன்னாளே வாலைப் பெண்ணே!

மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்
மெல்லிய ரோடு சிரிக்கும்போது
யுத்தகா லன்வந்து தான்பிடித் தால்நாமும்
செத்த சவமடி வாலைப் பெண்ணே!

ஏழை பனாதிக ளில்லையென் றாலவர்க்
கிருந்தா லன்னங கொடுக்க வேண்டும்;
நாளையென் றுசொல்ல லாகா தேயென்று
நான்மறை வேத முழங்குதடி.

பஞ்சை பனாதி யடியாதே யந்தப்
பாவந் தொலைய முடியாதே;
தஞ்சமென் றோரைக் கெடுக்கா தேயார்க்கும்
வஞ்சனை செய்ய நினையாதே.

கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்
காணாத வுத்தரம் விள்ளாதே;
பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற
பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே.

சிவன்ற னடியாரை வேதிய ரைச்சில
சீர்புல ஞானப் பெரியோரை
மவுன மாகவும் வையா தேயவர்
மனத்தை நோகவும் செய்யாதே.

வழக்க ழிவுகள் சொல்லா தேகற்பு
மங்கையர் மேல்மனம் வையாதே;
பழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை
பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே!

கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்
கொலைக ளவுகள் செய்யாதே
ஆடிய பாம்பை யடியா தேயிது
அறிவு தானடி வாலைப் பெண்ணே!

காரிய னாகினும் வீரியம் பேசவும்
காணா தென்றவ்வை சொன்னாளே;
பாரினில் வம்புகள் செய்யா தேபுளிப்
பழம்போ லுதிர்ந்து விழுந்தானே.

காசார் கள்பகை செய்யா தேநடுக்
காட்டுப் புலிமுன்னே நில்லாதே;
தேசாந்த ரங்களுஞ் செல்லா தேமாய்கைத்
தேவடி யாள்தனம் பண்ணாதே.

தன்வீ டிருக்க அசல்வீடு போகாதே
தாயார் தகப்பனை வையாதே;
உன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில்
ஓடித் திரிகிறாய் வாலைப் பெண்ணே!

சாதி பேதங்கள் சொல்லுகி றீர்தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ?
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு.

பாலோடு முண்டிடு பூனையு முண்டது
மேலாக காணவுங் காண்பதில்லை;
மேலந்த வாசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்
வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள்.

கோழிக் கறுகாலுண் டென்றுசொன் னேன்கிழக்
கூனிக்கு மூன்றுகா லென்று சொன்னேன்;
கூனிக்கி ரண்டெழுத் தென்றுசொன் னேன்முழுப்
பானைக்கு வாயில்லை யென்று சொன்னேன்.

ஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேனம்
மானைக்குப் பானைக்கு நிற்குமேல் சூல்
மாட்டுக்குக் காலில்லை யென்றுசொன் னேன் கதை
வகையைச் சொல்லடி வாலைப் பெண்ணே!

கோயிலு மாடும் பறித்தவ னுங்கன்றிக்
கூற்று மேகற் றிருந்தவனும்
வாயில்லாக் குதிரை கண்டவ னுமாட்டு
வகைதெ ரியுமோ வாலைப் பெண்ணே!

இத்தனை சாத்திரந் தாம்படித் தோர்செத்தார்
என்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்;
செத்துப்போய்க் கூடக் கலக்கவேண்டு மவன்
தேவர்க ளுடனே சேரவேண்டும்.

உற்றது சொன்னக்கா லற்றது பொருந்தும்
உண்டோ உலகத்தி லவ்வைசொன்னாள்;
அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
அவனே குருவடி வாலைப் பெண்ணே!

பூரண நிற்கும் நிலையறி யான்வெகு
பொய்சொல்வான் கோடிமந் திரஞ்சொல்வான்
காரண குருஅ வனுமல் லவிவன்
காரிய குருபொ ருள்பறிப்பான்.

எல்லா மறிந்தவ ரென்றுசொல் லயிந்தப்
பூமியி லேமுழு ஞானியென்று
உல்லாச மாக வயிறு பிழைக்கவே
ஓடித் திரிகிறார் வாலைப் பெண்ணே!

ஆதிவா லைபெரிதானா லும்அவள்
அக்காள் பெரிதோ சிவன்பெரிதோ!
நாதிவா லைபெரி தானா லும்அவள்
நாயக னல்ல சிவம்பெரிது.

ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல்
அண்டாது மற்ற வியாதியெல்லாம்
பேயும் பறந்திடும் பில்லிவினாடியில்
பத்தினி வாலைப்பெண் பேரைச் சொன்னால்.

நித்திரை தன்னிலும் வீற்றிருப் பாளெந்த
நேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்;
சத்துரு வந்தாலும் தள்ளிவைப் பாள்வாலை
உற்றகா லனையுந் தானுதைப்பாள்.

பல்லாயி ரங்கோடி யண்டமு தல்பதி
னான்கு புவனமும் மூர்த்திமுதல்
எல்லாந் தானாய்ப் படைத்தவ ளாம்வாலை
எள்ளுக்கு ளெண்ணெய்போல் நின்றவளாம்.

தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும் மித்தமிழ்
செய்ய எனக்குப தேசஞ்செய்தாள்
நேசவான் வீரப் பெருமாள் குருசாமி
நீள் பதம் போற்றிக்கொண் டாடுங்கடி.

ஆறு படைப்புகள் வீடு கடைசூத்ர
அஞ்செழுத் துக்கும் வகையறிந்து
கூறு முயர்வல வேந்த்ரன் துரைவள்ளல்
கொற்றவன் வாழக்கொண் டாடுங்கடி!

ஆடுங்கள் பெண்டுக ளெல்லோ ருமந்த
அன்பான கொங்கணர் சொன்ன தமிழ்
பாடுங்கள் சித்தர்க ளெல்லோ ரும்வாலை
பரத்தைப் போற்றிக்கொண் டாடுங்கடி

சித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி
தேவர்கள் வாழி ரிஷிவாழி
பத்தர்கள் வாழி பதம்வா ழிகுரு
பாரதி வாலைப்பெண் வாழியவே!

காகபுசுண்டர் காவியம்

 காப்பு

கணபதியே அடியாகி அகில மாகிக்
காரணத்தின் குருவாகிக் காட்சி யாகிக்
குணபதியே கொங்கைமின்னாள் வெள்ளை ஞானக்
குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞானக்
கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற
காரணத்தின் வடிவாகிக் கருத்துள் ளாகிப்
பணியரவம் பூண்ட சிவ வாசி நேர்மை
பாடுகின்றேன் காவியந்தா னெண்ணிப் பாரே.


நூல்

எண்ணியெண்ணிக் காவியத்தை எடுத்துப் பாராய்;
எந்நேரங் காமசிந்தை யிதுவே நோக்கும்
பண்ணிபன்றி பலகுட்டி போட்டா லென்ன
பதியானைக் குட்டியொரு குட்டி யாமோ?
சண்ணியுண்ணி யிந்நூலை நன்றாய்ப் பாரு
சக்கரமும் மக்கரமும் நன்றாய்த் தோணும்;
தண்ணி தண்ணி யென்றலைந்தால் தாகம் போமோ?
சாத்திரத்தி லேபுகட்டித் தள்ளி யேறே.


புகட்டினாள் தசதீட்சை மகிமை தன்னைப்
பூரிப்பா லெனக்களித்தே அகண்டந் தோறும்
சகட்டினாள் சகலசித்து மாடச் சொன்னாள்
சந்திரபுட் கரணிதனில் தானஞ் சொன்னாள்
பகட்டினா ளுலகமெல்லாம் முக்கோணத்திற்
பரஞான சிவபோதம் பண்பாய்ச் சொன்னான்
அகட்டினா லைவர்களை யீன்றா ளம்மன்
அந்தருமை சொல்லவினி அடியாள் கேளே.


கேளப்பா ஈசனொரு காலந் தன்னிற்
கிருபையுடன் சபை கூடியிருக்கும் போது
வாளப்பா மாலயர் தம் முகத்தை நோக்கி,
வந்தவா றெவ்வகையோ சென்ற தேதோ
கோளப்பா செயகால லயந்தா னெங்கே?
குரு நமசி வாயமெங்கே? நீங்க ளெங்கே?
ஆளப்பா ஐவர்களு மொடுக்க மெங்கே?
அறுத்தெனக்கு இன்னவகை யுரைசெய் வீரே.


இன்னவகை ஈசரவர் கேட்கும் போதில்
எல்லோரும் வாய்மூடி யிருந்தா ரப்போ
சொன்னவகை தனையறிந்து மார்க்கண் டேயன்
சொல்லுவான் குழந்தையவன் கலக லென்ன
அன்னைதனை முகம்பார்த்து மாலை நோக்கி
அரிகரி! ஈசர்மொழிக் குரைநீர் சொல்வீர்;
பின்னைவகை யாருரைப்பார் மாயை மூர்த்தி
பேசாம லிருந்துவிட்டால் மொழிவா ரெங்கே?


எங்கென்று மார்க்கண்ட னெடுத்துச் சொல்ல
என்ன சொல்வா ரேகவெளிச் சிவனை நோக்கிக்
கங்கைதனைப் பூண்டானே! கடவு ளோனே!
காரணமே! பூரணமே! கண்ணே! மின்னே!
சங்கையினி யேதறிவேன் மகுடச் சோதி
சந்திரனைப் பூண்டிருந்து தவம்பெற் றோனே!
மங்கையிடப் பாகம்வைத்த மகுடத் தோனே!
மாமுனிகள் ரிஷிசித்தர் அறிவார் காணே.


அறிவார்கள் ரிஷிசித்தர் முனிவோ ரையா!
அரகரா! அதுக்குக்கோ ளாறென் றக்கால்
பொறியாகப் புசுண்டமுனி சொல்வா ரையா!
போயழைக்கக் கோளாறி வசிட்ட ராகும்
நெறியாக இவ்வகைநா னறிவே னையா!
நிலைத்தமொழி புசுண்டரலால் மற்றோர் சொல்லார்;
புரிவாரு மிவ்வளவென் றுரைத்தார் மாயர்
பொருள் ஞானக் கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார்.


மகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே!
வரலாறு நீயெவ்வா றறிவாய் சொல்வாய்;
சுகட்சியுடன் கருதிப்பார் யுகங்கள் தோறும்
சூட்சமிந்த மாலோன்றன் வயிற்றிற் சேர்வான்
அகட்சியுடன் ஆலிலைமே லிருப்பா ரையா!
அப்போதே இவரிடத்தி லெல்லா ஞானம்
இகழ்ச்சியுட னிவற்குப்பின் எவரோ காணேன்
இவ்வார்த்தை நானறியே னவரைக் கேளீர்.


கேளுமென்றான் மார்க்கண்டன் சிவன்தா னப்போ
கிருபையுட னிவ்வளவுமறிவா யோடா?
ஆளுகின்ற ஈசனுநா மறியோ மிந்த
அருமைதனை நீயறிந்தா யருமைப் பிள்ளாய்!
காளகண்டர் மாயோனைச் சொல்வீ ரென்றார்
கருவேது நீயறிந்த வாறு மேது!
பாளுகின்ற முப்பாழுந் தாண்டி நின்ற
பரஞான சின்மயமுன் பகர்ந்தி டீரே.


பரமான பரமகயி லாச வாசா!
பார்த்திருப்போ மாலிலைமேற் பள்ளி யாகித்
தரமான புசுண்டமுனி யந்த வேள
சக்கரத்தைப் புரளவொட்டார் தவத்தி னாலே
தூரமாக எவ்வாறோ திரும்பப் போவார்
சூட்சமதை நாமறிவோம் பின்னே தோதான்
வரமான வரமளித்த சூரன் வாழ்வே
வசிட்டர்போ யழைத்துவரத் தகுமென் றாரே.


தகுமென்ற வார்த்தைதனை யறிந்தே யீசர்
தவமான வசிட்டரே புசுண்டர் சாகை
அகமகிழ அங்கேகி அவர்க்கு ரைத்தே
அவரையிங்குச் சபைக்கழைத்து வருவா யென்ன
செகமான செகமுழுது மாண்ட சோதி
திருவடிக்கே நமஸ்கரித்துத் திரும்பி னார்பின்
உகமானந் தனையறிந்தும் அரனார் சொன்ன
உளவுகண்டார் புசுண்டரெனுங் காகந் தானே.


காகமென்ற வேடமதாய் விருட்ச மீதிற்
காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர்
ஏகமதா யெட்டான வசிட்ட ரே! நீர்
எங்குவந்தீர்? வாரும் என்றே இடமு மீயத்
தாகமுடன் ஈசரும்மை யழைக்கச் சொன்னார்.
சங்கதியைத் தங்களிடஞ் சாற்ற வந்தேன்!
பாகமுடன் எட்டான விவரந் தன்னைப்
பத்துமெய்ஞ் ஞானபொரு ளருள்பெற் றோரே.


பெற்றோரே யென்றுரைத்தீர் வசிட்ட ரே! நீர்
பிறந்திறந்தே எட்டாங்காற் பிறந்து வந்தீர்!
சத்தான சத்துகளு மடங்கும் காலம்
சக்கரமுந் திரும்பிவிட்டாற் சமயம் வேறாம்
சித்தான பஞ்சவர்க ளொடுங்கும் போது
சேரவே ரிஷிமுனிவர் சித்த ரோடு
முத்தாகப் பஞ்செழுத்தி லொடுக்க மாவார்
முத்துமணிக் கொடியீன்றாள் முளைத்திட் டீரே.


முளைத்திட்டீ ரித்தோடெட் டுவிசை வந்தீர்
முறையிட்டீ ரிவ்வண்ணம் பெருமை பெற்றீர்!
களைத்திட்டுப் போகாதீர் சொல்லக் கேளும்;
கண்டமதில் விடம்பூண்டார்க் கலுவ லென்ன?
கிளைத்திட்டுப் போனக்கால் மறந்து போவார்
கிளர்நான்கு யுகந்தோறு மிந்தச் செய்கை
பிழைத்திட்டுப் போவமென்றா லங்கே போவோம்
பேய்பிடித்தோர் வார்த்தைசொல்ல நீர்வந் தீரே.


வந்தீரே வசிட்டரே! இன்னங் கேளும்;
வளமைதான் சொல்லிவந்தேன் வேடம் நீங்கி
இந்தமா மரக்கொம்பி லிருந்தே னிப்போ
திதுவேளை யெவ்வளவோ சனமோ காணும்
அந்தமோ ஆதியோ இரண்டுங் காணார்
அவர்களெல்லாம் ரிஷியோகி சித்த ரானார்
சந்தேக முமக்குரைக்கப் போகா தையா!
சாமிக்கே சொல்லுமையா இதோவந் தேனே.


வந்தேனே யென்றுரைத்த வாறு கொண்டு
வசிட்டருமே வாயுலர்ந்து காலும் பின்னி
இந்தேனே முனிநாதா! சரணங் காப்பீர்
என்றுசிவன் சபைநாடி முனிவர் வந்தார்.
மைந்தனையே யீன்றருளுங் கடவுள் நாதா!
மாமுனிவன் வாயெடுக்கப் புசுண்டர் சொல்வார்;
சிந்தனைசெய் ஈச்சரனே வந்தேனையா
சிவசிவா இன்னதென்று செப்பி டீரே?


செப்புமென்ற புசுண்ட முனி முகத்தை நோக்கிச்
சிவன் மகிழ்ந்தே ஏது மொழி செப்பு வார்கேள்;
கொப்புமென்ற யுகமாறிப் பிறழுங் காலம்
குரு நமசி வாயமெங்கே பரந்தா னெங்கே?
அப்பு மெந்தப் பஞ்சகணத் தேவ ரெங்கே?
அயன்மாலும் சிவன்மூவ ரடக்க மெங்கே?
ஒப்புமிந்த யுகமாறிப் பிறந்த தெங்கே?
ஓகோகோ முனிநாதா வுரைசெய் வீரே!


உரையென்றீ ருந்தமக்குப் புத்தி போச்சு;
உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு
பரையென்றால் பரைநாடி நிலைக்க மாட்டீர்;
பரமசிவன் தானமென்னும் பேரும் பெற்றீர்;
இரையென்றால் வாய்திறந்து பட்சி போல
எல்லோரு மப்படியே இறந்திட் டார்கள்;
நிறையென்ற வார்த்தைகளைச் சொன்னே னானால்
நிசங்கொள்ள தந்தரங்கள் நிசங்கொள் ளாதே?


கொள்ளாமற் போவதுண்டோ மவுன யோகி;
கோடியிலே உனைப்போல ரிடியோ காணேன்;
உள்ளாக ரிடியொருவ ரில்லா விட்டால்
யுகவார்த்தை யாருரைப்பார் யானுங் காணேன்;
விள்ளாமற் றீராது முனிவனே! கேள்;
மெஞ்ஞான பரம்புகுந்த அருள் மெய்ஞ் ஞானி;
தள்ளாமற் சபையிலுள்ளோர் ரெல்லார் கேட்கச்
சாற்றிடாய் முனிநாதா! சாற்றிடாயே?


சாற்றுகிறே னுள்ளபடி யுகங்கள் தோறும்
தமக்குவந்து சொல்லுவதே தவமாய்ப் போச்சு;
மாற்றுகிறேன் கணத்தின்முன் னுரைத்துப் போனேன்;
வாதாட்ட மெனதாச்சே இனியென் சொல்வேன்?
சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போலத்
திரும்பினது போலாச்சு யுகங்கள் தோறும்;
ஆற்றுகிறா னந்தமது ஆகும் போது
அரகரா அந்நேரம் நடக்கை கேளே.


கேளப்பா நடந்தகதை சிவமே யுண்மை
கொடியாகச் சக்கரங்கள் திரும்பும் போது
பாளப்பா தசநாதம் மவுனம் பாயும்;
பரமான மவுனமது பரத்திற் சாடும்;
ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும்
இருந்தசதா சிவமோடி மணியில் மீளும்
கேளப்பா இதுகேளா யெவருஞ் செல்வார்
ஓகோகோ அண்டமெல்லாங் கவிழ்ந்து போமே.


கவிழ்ந்துபோ மப்போது அடியே னங்கே
கருத்துவைத்துத் தியானமொரு தியான முண்டு
தவழ்ந்துபோங் காலமப்போ நிறுத்து வேன்யான்
சமையமதி லக்கினிபோல் தம்பங் காணுஞ்
சிவந்தவண்ணம் நீலவுருச் சுடாவிட் டேகும்;
சிவ சிவா அக்கினிபோற் கொழுந்து வீசும்;
நவந்துஅத னருகேதான் சென்று நிற்பேன்;
நகரமுத லஞ்செழுத்தும் வரக்காண் பேனே.


காண்பேனே நாகரமது மகாரம் புக்கும்
கருத்தான மகாரமது சிகாரம் புக்கும்
தேண்பேனே சிகாரமது வகாரம் புக்கும்
சிவசிவா வகாரமது யகாரம் புக்கும்
கோண்பேனே யகாரமது சுடரிற் புக்கும்
குருவான சுடரோடி மணியிற் புக்கும்
நாண்பான மணியோடிப் பரத்திற் புக்கும்
நற்பரந்தான் சிவம்புக்குஞ் சிவத்தைக் கேளே.


கேளப்பா சிவமோடி அண்டம் பாயும்
கிருபையா யண்டமது திரும்பிப் பாயும்
கோளப்பா அண்டமது கம்பத் தூண் தான்
குருவான தசதீட்சை யொன்று மாச்சு
மீளப்பா தம்பமது விளங்கு மஞ் செய்கை
மேலுமில்லை கீழுமில்லை யாதுங் காணேன்;
ஆளப்பா நரைத்தமா டேறு வோனே!
அன்றளவோ வின்றளவோ அறிந்தி லேனே.


அறிந்திலே னென்றுரைத்த புசுண்ட மூர்த்தி!
அரகரா உன்போல முனியார் காணேன்;
தெரிந்திலே னென்றுரைத்தார் மனங்கே ளாது
சிவனயந்து கேட்கவும்நீ யொளிக்க வேண்டா;
பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை
பூரணத்தா லுள்ளபடி புகழ்ந்து சொல்லும்
பரிந்திலேன் மிகப்பரிந்து கேட்டே னையா!
பழமுனியே கிழமுனியே பயன்செய் வாயே.


பழமுனிவ னென்றுரைத்தீர் கடவு ளாரே!
பருந்தீபதம்பத்தைப் பலுக்கக் கேளும்;
குழுவுடனே தம்பமதில் யானும் போவேன்
கோகோகோ சக்கரமும் புரண்டு போகும்;
தழும்பணியச் சாகரங்க ளெங்குந் தானாய்ச்
சத்தசா கரம்புரண்டே யெங்கும் பாழாய்
அழகுடைய மாதொருத்தி தம்பத் துள்ளாய்
அரகரா கண்ணாடி லீலை தானே.


லீலைபொற் காணுமுகம் போலே காணும்
நிலைபார்த்தால் புருடரைப்போற் றிருப்பிக் காணும்;
ஆலைபோற் சுழன்றாடுங் கம்பத் துள்ளே
அரகரா சக்கரங்க ளாறுங் காணும்
வாலைபோற் காணுமையா பின்னே பார்த்தால்
மகத்தான அண்டமது கோவை காணுஞ்
சோலையா யண்டமதிற் சிவந்தான் வீசும்
சிவத்திலே அரகரா பரமுங் காணே.


பரத்திலே மணிபிறக்கும் மணியி னுள்ளே
பரம்நிற்குஞ் சுடர்வீசும் இப்பாற் கேளும்;
நிரத்திலே சடமதனில் யகாரங் காணும்
நிச்சயமாம் யகாரமதில் வகாரங் காணும்
வரத்திலே வகாரமதிற் சிகாரங் காணும்
வரும்போலே சிகாரத்தில் மகாரம் காணும்
நரத்திலே மகாரத்தில் நகாரங் காணும்
நன்றாமப் பூமியப்போ பிறந்த தன்றே.


பிறந்ததையா இவ்வளவு மெங்கே யென்றால்
பெண்ணொருத்தி தூணதிலே நின்ற கோலம்
சுறந்ததையா யிவ்வளவும் அந்த மாது
சூட்சமதே அல்லாது வேறொன் றில்லை;
கறந்ததையா உலகமெல்லாங் காமப் பாலைக்
காலடியிற் காக்கவைத்துச் சகல செந்தும்
இறந்ததையா இவ்வளவுஞ் செய்த மாது
எங்கென்றா லுன்னிடத்தி லிருந்தாள் கன்னி.


இடப்பாக மிருந்தவளு மிவளே மூலம்
இருவருக்கும் நடுவான திவளே மூலம்
தொடக்காக நின்றவளு மிவளே மூலம்
சூட்சமெல்லாங் கற்றுணர்ந்த திவளே மூலம்
அடக்காக அடக்கத்துக் கிவளே மூலம்
ஐவருக்குங் குருமூல மாதி மூலம்
கடக்கோடி கற்பமதில் நின்ற மூலம்
கன்னியிவள் சிறுவாலை கன்னி தானே.


கன்னியிவ ளென்றுரைத்தார் புசுண்டமூர்த்தி
கர்த்தரப்போ மனஞ்சற்றே கலங்கி னார்பின்
மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித் திந்த
மார்க்கத்தி லிருப்பதுவோ மவுனப் பெண்ணே!
உன்னிதமா யுன்கருணை யெங்கே காண்போம்
ஓகோகோ ஐவருந்தான் வணங்கினார்கள்
கொன்னியவள் வாக்குரையாள் சிவமே கன்னி
கொலுமுகத்தில் நால்வரும்போய் வணங்கி னாரே.


வணங்கியவர் வாய்புதைந்து நின்றார் பின்னே
மாதுகலி யாணியென வசனித் தார்கள்
வணங்கினார் தேவரொடு முனிவர் தாமும்
மற்றுமுள்ள தேவர்களும் நவபா டாளும்
வணங்கினா ரட்டகசந் திகிரி யெட்டும்
வாரிதியுஞ் சேடனுமா லயனு மூவர்
வணங்கினார் மிகவணங்கித் தொழுதா ரப்போ
வாலையவள் மெய்ஞ்ஞானம் அருளீ வாளே.


அருளீவாள் திருமணியை மாலை பூண்டாள்
அரகரா சின்மயத்தி னீறு பூசிப்
பொருளீவா ளவரவர்க்கும் ஏவல் சொல்லிப்
பொன்றாத பல்லுயிர்க்கைக் கிடங்கள் வேறாய்த்
தெருளீவாள் சிவயோகந் தெளிவ தற்குச்
செயலுறுதி யாகவல்லோ தெரிய வேண்டித்
திருளீவாள் தாயான சிறிய வாலை
சிவசிவா சூட்சம்பூ ரணமு முற்றே.


பூருவத்தில் நடந்தகதை இதுதான் என்று
புகன்றுவிட்டுப் புசுண்டருந்தம் பதிக்குச் சென்றார்;
காரணத்தி லேவகுத்தே னிந்த ஞானங்
கம்பமணி வாலைகொலுக் கூட்டமப்பா
நாரணத்தில் நின்றிலங்கும் மவுன வாலை
நாட்டினாள் சிவராச யோகங் கேளு
ஆரணத்தி பூரணத்தி யருள்மெய்ஞ் ஞானி
ஆதிசத்தி வேதமுத்தி யருள் செய்வாளே.

காகபுசுண்டர் உபநிடதம்

காப்பு

ஆதியெனை யீன்ற குரு பாதங் காப்பு;
அத்துவிதம் பிரணவத்தி னருளே காப்பு;
நீதியா மாரூட ஞானம் பெற்ற
நிர்மலமாஞ் சித்தருடைப் பாதங் காப்பு;
சோதியெனப் பாடிவைத்தேன் முப்பத் தொன்றிற்
துரியாதீ தப்பொருளைத் துலக்க மாகத்
தீதில்லாக் குணமுடைய பிள்ளை யானார்
சீவேச ஐக்யமது தெரியுந் தானே.


நூல்

தானென்ற குருவினுப தேசத் தாலே
தனுகரண அவித்தை யெல்லாந் தவறுண்டேபோம்;
வானென்ற சுவானுபவ ஞான முண்டாம்;
மவுனாதி யோகத்தின் வாழ்க்கை யெய்தும்;
நானென்ற பிரபஞ்ச வுற்பத் திக்கு
நாதாநீ தக்யானம் நன்றா யெய்தும்;
கோனென்ற கொங்கணவர் தமக்குச் சொன்ன
குறிப்பான யோகமிதைக் கூர்ந்து பாரே.


பாருநீ பிரமநிலை யார்தான் சொல்வார்?
பதமில்லை யாதெனினும் பவ்ய மில்லை
சேருமிந்தப் பிரமாணந் தானு ணர்ந்து
தெரிவிக்கப் படாதருளிற் சிவசொ ரூபம்;
ஊருகீன்ற காலத்ர யங்க ளாலே
உபாதிக்கப் பர தத்வ முற்பத் திக்கும்
சாருமிந்த வுபாதான காரணத்தின்
சம்பந்த மில்லாத சாட்சிதானே.


சாட்சிசத்தா யதீதகுணா தீத மாகிச்
சட்சுமனத் தாலறியத் தகாது யாதும்
சாட்சியதே யேதுசா தனமுந் தள்ளிச்
சகலவந்தர் யாமித்வ சர்வ பூத
சாட்சியினை யிவ்வளவவ் வளவா மென்று
தனைக்குணித்து நிர்ணயிக்கத் தகாது யோகம்
சாட்சியதே ஞாதுர்ஞான ஞேய ரூபஞ்
சத்தாதி பிரமாதி தானே சொல்வாம்.


சொல்லுமெனக் கேட்டுகந்த மாணாக் காவுன்
தூலகா ரணப்பிரமந் துரியா தீதம்
அல்லுமல்ல பகலுமல்ல நிட்க ளங்கம்
அம்சோகம் அசபாமந் திரத்தி யானம்
செல்லுமவ னேநானென் றபிமா னிக்குச்
சித்திவிர்த்தி நிரோதகமாம் யோகத் தாலே
வெல்லறிஞர் பலபோக விர்த்தி யோகி
விவேகதியா னாதிகளே மேலாம் பிர்மம்.


பிர்மசுரோத் ராதிஞானேந் திரிய மைந்தும்
பேசுதர்க்க வாக்காதியிந் திரிய மைந்தும்
கர்மமெனுஞ் சத்தாதி விடய மைந்தும்
கரணாதி நான்குபிரா ணாதி யைந்தும்
வர்மமிவை யிருபத்து நான்குங் கூடி
வருந்தூல சரீரவிராட் டெனவே சொல்லும்
தர்மவத்தைச் சாக்கிரபி மானி விசுவன்
தனக்குவமை யாங்கிரியா சத்தி தானே.


சத்தியுடன் ரசோகுணந்தான் நேத்ரத் தானம்
தனிப்போக மிதனோடே சார்ந்த ஆன்மா
வெற்றிபெறும் சீவாத்மா அகார மாச்சு
விவகார சீவனிதை விராட்டென் பார்கள்;
வித்தையெனு மவித்தையிலே பிரதி விம்பம்
விலாசமிந்தத் தூலசூக்க விருத்தி யாச்சு;
தத்வமசி வாக்குச்சோ தனையி னாலே
தான்கடந்து சூட்சுமத்திற் சார்ந்து கொள்ளே.


கொள்ளடா ஞானேந்திரி யங்க ளைந்து
கூடினவை கர்மேந்திரி யங்க ளைந்து
தள்ளடா பிராணாதி வாயு வைந்து
சார்வான மனம்புத்தி தானி ரண்டு
விள்ளடா பதினேழு தத்து வங்கள்
விர்த்தியெனுஞ் சூட்சுமமாம் இரண் கர்ப்பத்
துள்ளடா அபிமானி சைதன்ய னாகுஞ்
சொப்பனா வத்தையெனச் சொல்லும் நூலே.


நூலான சாத்மிகமாம் அகங்கா ரத்துள்
நுழைந்தவிச்சா சக்தியல்லோ நுணுக்க மாச்சு?
காலான கண்டமெனுந் தானத் துள்ளே
கலந்திருக்கும் போகமல்லோ இச்சா போகம்?
நாலான ஆன்மாவே அந்த ரான்மா
ஞானமிந்தப் படியறிந்தா லுகார மாச்சு;
தூலமெனுஞ் சூட்சுமத்தைக் கடந்து நின்று
சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்பு தானே.


தானல்யாகக் கிருதமெனுஞ் சரீரத் துக்குத்
தானமதே இதயமா ஞான சத்தி
வானமதே அகங்காரம் வித்தை யாகில்
வருஞ் சுழுத்தி யபிமானி பிராக்ஞ னாகும்
கோனிதற்கே ஆனந்த போக மாகும்
கூடுகின்ற ஆன்மாவே பரமான் மாவாம்
கானிதற்குப் பரமான்மா சீவ னிந்தக்
காரணமே மகாரமெனக் கண்டு கொள்ளே.


கொள்ளுமந்தப் பொருள்தானே சத்து மல்ல
கூறான அசத்துமல்ல கூர்மை யல்ல
உள்ளுநிரா மயமல்ல சர்வமய மல்ல
உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏக மாச்சு;
தள்ளுகின்ற பொருளல்ல தள்ளா தல்ல
தான்பிரம ரகசியஞ்சந் தான முத்தி
விள்ளுமந்தப் படிதானே வேத பாடம்
விசாரணையாற் சமாதிசெய்ய விட்டுப் போமே.


விட்டுப்போம் சமுசார வியாபா ரங்கள்
விடயசுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு;
தொட்டுவிட லாகாது ஞான மார்க்கந்
துரிய நிலை நன்றாகத் தோன்று மட்டும்
எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்
தெண்ணமெனுந் தியானத்தா லெய்தும் முத்தி;
தட்டுகின்ற சீவத்வம் தனக்கில் லாமற்
சமாதியுற்றால் நாமதுவே சாட்சாத் காரம்.


சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம்
தத்வாதி வாசனைகள் தாமே போகும்;
சூட்சாதி பிராந்தியெனும் மாயா சத்தி
தொடராமற் சேர்வதுவே சொரூப ஞானம்;
தீட்சையினாற் பிரமாண்டம் பிண்டாண் டங்கள்
சிருட்டி முதல் யாவற்றுந் தெரியும் நன்றாய்;
காட்சியென்ன ஏகவத்து வொன்றல் லாமற்
காண்பதெல்லாம் வியர்த்தமெனக் கண்டு கொள்ளே.


கண்டு பார் மூடமெனும் அஞ்ஞா னிக்குக்
காணாது சீவான்மா பரமான் மாவும்;
தொண்டுபட்டுக் குருமுகத்தில் விசேட மாகச்
சுருதியெனும் வேதாந்தம் அப்பிய சித்தே
உண்டுமனு பவஞானங் கிர்த்யா கிர்த்யம்
யோகிதனக்கு ஏதேனுந் தேவை யில்லை;
விண்டுசொல்வோம் நதிகடக்க வோட மல்லால்
விடயத்தாற் சாதனங்கள் வீணா மென்றே.


வீணல்லோ சாதனப்ர யோச னங்கள்
மெய்ஞ்ஞான அபரோட்சம் வந்த போது?
வீணல்லோ வேதபா டத்தி னிச்சை
வியோமபரி பூரணத்தில் மேவி நின்றால்?
வீணல்லோ இருட்டறையிற் பொருளைக் காண
விளக்கதனை மறந்தவன்கை விடுதல் போலும்
வீணல்லோ தியானதா ரணைக ளெல்லாம்?
மெய்பிரகா சிக்கும்வரை வேணுந் தானே.


வேணுமென்றா லெள்ளுக்கு ளெண்ணெய் போலும்
வித்தினிடத் தடங்கிநின்ற விருட்சம் போலும்
காணுகின்ற பூவிலுறை வாசம் போலும்
கன்றாவின் பாலிலுள்ள நெய்யைப் போலும்
தோணுமயில் முட்டையின்மேல் வன்னம் போலும்
தூலமதிற் சூட்சுமந்தான் துலங்கி நிற்கும்;
ஆணவத்தாற் சாதனத்தை மறந்தாயானால்
அபரோட்ச ஞானமுத்தி யரிது தானே.


அரிதில்லை பிரமவியா கிருத சீவன்
ஐக்கியமெனுஞ் சந்த்யானம் அப்ய சித்துச்
சுருதிகயிற் றால்மனமாம் யானை தன்னை
சுருக்கிட்டுச் சிக்கெனவே துறையிற் கட்டிக்
குருவுரைத்த சிரவணத்தின் படியே நின்றால்
குதியாகு பிரபஞ்ச கோட்டிற் றானும்
திரிவதில்லை திரிந்தாலும் மதமி ராது;
சீவவை ராக்யமெனுந் திறமி தானே.


திரமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம்
திருசியசூன் யாதிகளே தியான மாகும்;
சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம்
சாதனையே சமாதியெனத் தானே போகும்;
வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம்
வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்;
அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான்
அஞ்ஞான மவனிடத்தி லணுகா தென்னே.


என்னவே அஞ்ஞானி உலகா சாரத்
திச்சையினாற் றர்மாத்த வியாபா ரங்கள்
முன்னமே செய்ததன்பின் மரண மானால்
மோட்சமதற் கனுபவத்தின் மொழிகேட் பீரேல்
வின்னமதா யாங்கார பஞ்ச பூத
விடயவுபா திகளாலே மேவிக் கொண்டு
தன்னிமைய இலிங்கசரீ ரத்தோ டொத்துச்
சதாகாலம் போக்குவரத் தாகுந் தானே.


தானிந்தப் படியாகச் சீவ ரெல்லாஞ்
சகசபிரா ரத்வவசத் தாகி னார்கள்;
ஏனிந்தக் கூரபிமா னத்திலே னாலே
இத்தியாதி குணங்களெல்லாம் வியாபிக் கும்பார்
வானிந்து போன்மெலிந்து வளர்ந்து போகும்
வர்த்திக்கு மஞ்ஞானம் மாற்ற வேண்டி
நானிந்தப் பிரமவுபா சனையைப் பற்றி
நாட்டம்வைத்தே வித்தையெல்லாம் நாச மாச்சே.


ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம்
அந்தந்தப் பிரளயத்துக் கதுவாய் நின்றேன்;
மூச்சப்பா வோடவில்லை பிரமா தீத
முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவிற் சென்றேன்;
கூச்சப்பா வற்றபிர்ம சாட்சாத் காரம்
குழிபாத மாகியகோ சரமாய் நின்றேன்;
பேச்சப்பா சராசரங்க ளுதிக்கும் போது
பின்னுமந்தப் புசுண்டனெனப் பேர்கொண்டேனே.


பேர்கொண்டேன் சொரூபசித்தி யனேகம் பெற்றேன்
பெரியோர்கள் தங்களுக்குப் பிரிய னானேன்
வேர்கண்டே னாயிரத்தெட் டண்ட கூட
வீதியெல்லா மோர்நொடிக்குள் விரைந்து சென்றேன்
தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன்;
சாத்திரவே தங்கள்வெகு சாயுங் கண்டேன்;
ஊர்கண்டேன் மூவர்பிறப் பேழுங் கண்டேன்;
ஓகோகோ இவையெல்லாம் யோகத் தாட்டே.


யோகத்தின் சாலம்ப நிராலம் பந்தான்
உரைத்தாரே பெரியோர்க ளிரண்டா மென்றே;
ஆகமத்தின் படியாலே சாலம் பந்தான்
அநித்யமல்ல நித்தியமென் றறைய லாகும்;
சோகத்தைப் போக்கிவிடும் நிராலம் பந்தான்;
சூன்யவபிப் பிராயமதே சொரூப முத்தி;
மோகசித்த விருத்திகளைச் சுத்தம் பண்ணி
மம்மூட்சு பிரமைக்ய மோட்ச மென்னே.


மோட்சசாம் ராச்யத்தில் மனஞ்செல் லாத
மூடர்களுக் கபரோட்சம் மொழிய லாகா;
சூட்சமறிந் தாலவனுக் கனுசந் தானம்
சொரூபலட்ச ணந்தெரியச் சொல்ல லாகும்;
தாட்சியில்லை சாதனைத் துட்ட யத்தில்
சட்சேந்த்ரி யாநாதா தீத மாகும்;
மூச்சுலயப் படுவதல்லோ பிரம நிட்டை
மூலவிந்து களாதீத மொழிய லாமே.


மொழிவதிலே அகாரமெனும் பிரண வத்தின்
மோனபிரா ணாதியதே நாத மாச்சு;
தெளியுமிந்த ஓங்காரத் தொனிவி டாமற்
சிற்ககனத் தேலயமாய்ச் சேர்க்க வேணும்;
ஒளிதானே நிராலம்பம் நிர்வி சேடம்
உத்கிருட்ட பரமபத வுபகா ரத்தான்
வெளியோடே வெளிசேர்ந்தால் வந்து வாச்சு
விரோதசத் ராதியெலாம் விருத்த மாச்சே.


விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்;
விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம்
ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன்
உலகமெலாந் தானவ துண்மை யாகும்;
நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா
நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக்
கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம்
கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே.


பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம்
பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம்
தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும்
சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு;
சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்;
திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்;
காப்பதற்கு நடுநாடி யூடே சென்று
கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே.


கண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம்
கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்;
விண்ணான பெருவெளிக்கு ளீன மானால்
விமோசனமாம் நிராலம்ப மெனத்தான் சொல்லும்;
ஒண்ணான யோகமல்லோ இந்த நிட்டை
உபதேசம் பெற்றவர்க்கே உண்மை யாகும்;
அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம்?
அசபாமந் திரத்யானம் அறைகின் றேனே;


அறைகின்றேன் அசபையெனும் பிராணான் மாவை
அகண்டபரா பரத்தினுள்ளே ஐக்யஞ் செய்யக்
குறைவில்லை ஓங்கார மூல வட்டக்
குண்டலியாய் நின்றிடத்திற் குணாதீ தந்தான்
நிறைகின்றேன் நாசிகா ரந்த்ர வாயு
நீக்காம லேகமாய் நிர்ண யித்துப்
பறைகின்றே னட்சரசா தனமுந் தள்ளிப்
பந்தமற்ற மாமோட்சப் பதிபெற் றேனே.


புதிபுருவத் தடிமுனைக்கீழ் அண்ணாக் கென்னும்
பவள நிறம் போன்றிருக்குந் திரிகோ ணந்தான்
துதிபெறுசிங் குவையுபத்த சுகந்தி யாகச்
சுபாவசா தனையினால் மவுன மாச்சு;
விதிவிகிதப் பிராரத்வ கர்மம் போச்சு;
விடயபோ கத்தினிச்சை விட்டுப்போச்சு;
மதியெனுமோர் வாயுவது அமிர்த மாச்சு;
வத்துவதே காரணமா மகிமை யாச்சே.


மகிமையென்று யோகசா தனையி னாலே
மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை யாச்சே;
அகமகமென் றாணவத்தை நீக்க லாச்சே;
அத்துவிதப் பிரமசித்தா னந்த காரம்
சகளாதீ தங்கடந்து களாதீ தத்தில்
சாதித்தேன் தன்மனமாய்ச் சார்ந்து போச்சு;
பகலிருளில் லாதவெளிக் கப்பா லாச்சு;
பந்தமற்ற மாமோட்சப் பதம்பெற்ற றேனே.


பெற்றதனைச் சொல்லிவிட்டேன் வடநூல் பாடை
பிரிந்து முப்பத் தொன்றினிலே பிரம ஞானம்
தத்துவத்தைச் சொல்லிவைத்தேன் யோகி யானால்
சாதனைசெய் வானறிவான் சைதன் யத்தில்
முத்தியடை வானதிலே நிருத்தஞ் செய்வான்
மும்மூட்சுத் துவமறிந்த மூர்த்தி யாவான்
நித்யமெனு முபநிடதப் பொருள்தான் சொல்லும்
நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே.