நான்மறை

அனைத்து சமய புனித நூல்கள் (முதலும் வழியும்)

திருமந்திரம் - விளக்கவுரையுடன்

குறிப்பு: இந்த விளக்கவுரை ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது. நான்மறை-க்கு இதன் விளக்கவுரையில் மாற்றுக்கருத்து உண்டு. ஏற்பவர் அவர் சொந்த பொறுப்பில் ஏற்கிறார். 

பன்னிரு திருமுறைகளில் திருமூலர் எழுதிய திருமந்திரம் 10ம் திருமுறையாகும். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.  யோகிகள் பல்லாண்டு காலம் உயிர் வாழ்ந்திருப்பார் என்பது நூற் கொள்கை. திருமூலர் ஒரு யோகி. ஆகவே அவர் தான் கற்ற வித்தையை உலகிற்குக் கூறுகின்றார். உடல் வேறு, உயிர்வேறு. இவையிரண்டும் ஒன்று சேர்ந்து இருந்தால் தான் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருட்களையும் அடைய முடியும் என்ற அந்த உபாயத்தைத் திருமூலர் நமக்குக் கூறுகின்றனர். திருமந்திரம் ஒன்பது பகுதிகளாக உள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஒரு தந்திரம் எனப் பெயர் பெறும். திருமூலர் காலத்துத் தமிழகத்தில் சைவசமயம் இருந்த நிலைமையை உணர இச் செய்திகள் பொருந்துணை புரிய வல்லவை.

பரகாயப் பிரவேசம் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பது அதன் பொருள். அதாவது ஓர் உயிர் தான் குடியிருக்கும் உடலை விட்டு நீங்கி, மற்றோர் உடம்பினுள் நுழைந்து, அவ்வுடம்பிற்கு ஏற்றவாறு செயல் படுதல். விக்கிரமாதித்தன், ஆதிசங்கரர், அருணகிரிநாதர் ஆகியோர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த செய்திகளை நாம் படிக்கிறோம். அதுபோல் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய திருமூலரும் மூலன் என்பவனின் உடம்பில் புகுந்து ஆகமப் பொருளைக் கூறியுள்ளார். உயிர் வேறு, உடல் வேறு என்ற தத்துவத்திற்குக் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை ஓர் உதாரணமாக விளங்குகிறது.

கயிலாய மலையில் நந்தி தேவரின் உபதேசத்தைப் பெற்ற யோகியார் ஒருவர், அவர் அட்டமா சித்தி பெற்றவர். அவர் அகத்தியரிடத்துக் கொண்டு நட்பால் பொதியமலை நோக்கி வந்தார். திருவாவடுதுறையை அடைந்தார். ஆங்கு இறைவரை வணங்கினார். அப்பதியினின்று அகன்று போகும் போது காவிரியாற்றின் கரையில் பசுக்கூட்டம் அழுவதைப் பார்த்தார். அப்பசுக்கள் மேய்க்கும் மூலன் என்ற இடையன் இறந்து கிடந்தான். யோகியார் அப்பசுக்களின் துன்பத்தைப் போக்க எண்ணினார். தாம் பயின்ற சித்தியினால் அம்மூலன் என்பவனின் உடலில் தம் உயிரைப் புகுத்தினார். பசுக்கள் மகிழ்ந்தன. திருமூலர் மாலையில் அப்பசுக்கூட்டங்களைக் கொண்டு அவற்றின் இருப்பிடங்களில் செல்லச் செய்தார். அவை வழக்கம் காரணமாகத் தம் வீடுகளுக்குச் சென்றன. திருமூலர் ஓரிடத்தில் நின்றார். மூலன் என்ற இடையனின் மனைவி தன் கணவன் இன்னும் வரவில்லையே என்று தேடிக் கொண்டு சென்றாள்! தன் கணவன் போல நின்ற யோகியாரைப் பார்த்தாள். அவர்க்கு ஏதோ நேர்ந்து விட்டது என்று எண்ணி அவரைத் தம் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றாள். முடியவில்லை. அதனால் மனம் கவன்று அவள் இல்லம் திரும்பினாள். அன்று இரவு கழிந்தது. மறுநாள் அவள் தன் கணவனின் நிலையைப் பலரிடம் உரைத்தாள். அவர்கள் திருமூலரிடம் சென்றனர். அப்போது திருமூலர் யோகத்தில் இருக்கக் கண்டு அவரை மாற்ற இயலாது என்று மூலனின் மனைவியிடம் உரைத்தனர். அவள் பெரிதும் துன்பம் அடைந்தாள்.

யோகத்தினின்று எழுந்து யோகியார் தாம் வைத்திருந்த உடலைத் தேடிப் பார்த்தார். அது கிடைக்கவில்லை. தம் யோகவன்மையால் இறைவரின் உள்ளத்தை உணர்ந்தார். சிவாகமப் பொருளைத் திருமூர் வாக்கால் கூற வேண்டும் என்பது இறைவரின் திருவுள்ளம். அதனால் தம் உடல் இறைவரால் மறைக்கப்பட்டது என்பதை அறிந்தார். திருமூலர் சாத்தனூரிலிருந்து சென்றபோது இடையர் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்க்கு அவர் உண்மையை உரைத்து, திருவாவடுதுறையை அடைந்து இறைவரை வணங்கிக் கோயிலுக்கு மேற்கில் உள்ள அரசமரத்தின் கீழ் சிவராச யோகத்தில் இருந்து மூவாயிரம் ஆண்டுகளில் மூவாயிரம் செய்யுளை இயற்றினார். பின் இறைவரது திருவடி நிழலை எய்தினார்.

முதல் தந்திரம்

யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை, காம அடக்கம், அந்தணர் ஒழுக்கம், அரசன் கடமை, அறஞ்செய்தலின் சிறப்பு, அன்பை வளர்த்தல், பிறர்க்கு உதவி செய்தல், கற்றோரிடமிருந்தும், நூல்களில் இருந்தும் அறிவை வளர்த்தல், மனத்தை விருப்பு வெறுப்புக்களிற் செல்ல விடாமை போன்ற அறிவுரைகள் தரப்பட்டுள்ளன.

இரண்டாம் தந்திரம்

அகத்தியர் தென்னாடு போந்தமை, சிவனுடைய எட்டு வீரச் செயல்கள், லிங்கத்தின் தோற்றம், தக்கயாகம், பிரளயம் பற்றி புராணக் கதைகள் குறிக்கப்பட்டுள்ளன. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் சிவனுடைய ஐந்தொழில்களும், சக்தி, சிவன் விளையாட்டால் உண்டான ஜீவர்கள், விஞ்ஞானகலர், சகலர், பிரளயாகலர் என்னும் மூவகையினர் என்பதும் அவருள் மதிக்கத்தக்கவர் யாவர் என்பது விளக்கப்பட்டுள்ளன. கோவில்களை அழிப்பது தீது சிவநிந்தை தீது, அடியார் நிந்தை தீது, பொறையுடைமை, பெரியாரைத் துணைக் கோடல் என்பன குறிக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் தந்திரம்

இப்பகுதி முழுவதும் யோகத்தைப் பற்றியது. ஆனால் பதஞ்சலி கூறும் யோக முறையன்று. இயமம் முதலிய எண்வகை யோகமுறைகளும் அவற்றால் அடையும் பயன்களும் பிறவும் கூறப்பட்டுள்ளன.

நான்காம் தந்திரம்

மந்திர சாத்திரம் அல்லது உபாசனா மார்க்கத்தைப் பற்றியது. அஜபா மந்திரம், சபாலி மந்திரம் கூறப்பட்டுள்ளன. திரு அம்பலச் சக்கரம், திரிபுரச் சக்கரம், ஏரொளிச் சக்கரம், பைரவச் சக்கரம், சாம்பவி மண்டலச் சக்கரம், புவனாபதிச் சக்கரம், நவாஷர் சக்கரம் என்பவை பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன.

ஐந்தாம் தந்திரம்

சைவத்தின் வகைகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் இவைகளும் கூறப்பட்டுள்ளன. புறச் சமயங்கள் கண்டிக்கப்படுகின்றன. உட் சமயங்கள் ஏற்கப்படுகின்றன.

ஆறாம் தந்திரம்

உயிர் நாடியாக உள்ளவை சிவ குரு தரிசனம். அவனது திருவடிப் பேறு, ஞானத்தில் பொருள் தெரிபவன், தெரியப்பட்ட பொருள், துறவு, தவம், அருளில் இருந்து தோன்றும் ஞானம், தக்கவர் இலக்கணம், தகாதவர் இலக்கணம், திருநீற்றில் பெருமை என்பவையாகும்.

ஏழாம் தந்திரம்

ஆறு ஆதாரங்கள், ஆறு லிங்கங்கள், சமய சிறப்புப் போதனை, ஐம்புலன்களை அடக்கும் முறை, குருவின் வருணனை, கூடா ஒழுக்கம் முதலியன பேசப்பட்டுள்ளன.

எட்டாம் தந்திரம்

சித்தாந்தத்தின் விளக்கம், காரிய காரண உபாதிகள், புறங்கூறாமை சிவ நிந்தை ஒழிப்பு, உண்மை பேசல், ஆசையை ஒழித்தல் முதலியவை கூறப்பட்டுள்ளன.

ஒன்பதாம் தந்திரம்

குரு, குருமடம், குரு தரிசனம், வைணவ சமாதி, ஸ்தூல, சூக்கும, அதிசூக்கும பஞ்சாட்சரங்கள் பேசப்பட்டுள்ளன. இறைவனது நடன வகைகள் முதலியனவும் ஞானம் மலர்தல், ஞானத்தின் சிறப்பும் கூறப்பட்டுள்ளன.

10ம் திருமுறையில் திருமூலரால் பாடப்பட்ட  3047 பாடல்களும் அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

பொருள் : துதிக்கையோடு கூடிய ஐந்து கைகளையுடையவனும், யானை முகத்தையுடையவனும், இளம் பிறைச் சந்திரனைப் போன்ற தந்தத்தை உடையவனும், சிவனது குமாரனும், ஞானச் சிகரமாக விளங்குபவனும் ஆகிய விநாயகக் கடவுளை அறிவினில் வைத்து அவன் திருவடிகளைத் துதிக்கின்றேன்.

பாயிரம்

1.  கடவுள் வாழ்த்து

அஃதாவது கடவுளின் பெருமையைக் கூறி ஏத்துதல்

1. ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றனுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந்து எட்டே.

பொருள் : ஒரு பொருளாகிய சிவனே, இனிமையான சத்தியோடு இரண்டாயும், பிரமன், விஷ்ணு, உருத்திரன் என்று மூன்று நிலைகளில் நிற்பவனாயும், நான்கு புருஷார்த்தங்களை உணர்ந்தவனாயும், மெய், வாய், கண், மூக்கு செவியாகிய ஐந்து இந்திரியங்களை வென்றவனாயும், மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களில் விரிந்தவனாயும் அதற்கு மேல் ஏழாவது இடமாகிய சகஸ்ரத்தின் மேல் விளங்குபவனாயும், நிலம், நீர், தீ, காற்று, விண், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களையும் உணர்ந்து அவற்றில் கலந்து விளங்குகிறான். இந்த எண்களுக்கு வேறு பொருள் கூறுவாரும் உளர்.

2. போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்குஒரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

பொருள் : இனிமையான உயிரில் பொருந்தியிருக்கும் தூய்மையானவனும் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனும் மேலே சொல்லாப் பெற்ற திசைகளுள் தெற்குத் திசைக்குரிய இயமனை உதைத்தவனும் ஆகிய இறைவனைப் புகழ்ந்துபாடி நான் உரைக்கின்றேன்.

3. ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்கநின்று உன்னியான் போற்றி செய் வேனே.

பொருள் : உடனாய் நின்றவனும் அழிவில்லாத தேவர்கள் ஆடையில்லாதவன் என்று பரவும் தலைவனும், பக்கத்திலுள்ள திருமால் முதலிய தேவர்கள் அறிய முடியாத மேலோனும் ஆகிய இறைவனை நான் அணுக்கமாக இருந்து அனுதினமும் வழிபாடு செய்வேன். நக்கன் தத்துவங்களைக் கடந்தவன்; மலமில்லாதவன்; மாசில்லாதவன் என்று பொருள் கூறுவாரும் உளர்.

4. அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந்து ஏத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

பொருள் : அகன்ற சீவர்களுக்கு மெய்ப்பொருளானவனும், ஆகாய மண்டலத்துக்கு வித்துப் போன்றவனும் அடைக்கலமான இடத்தில் என்னைச் செல்லவிட்டவனும் ஆகிய இறைவனை, பகலிலும் இரவிலும் வணங்கிப் பரவி, மாறுபாடு உடைய இவ்வுலகில் நான் அறியாமை நீங்கி நின்றேன்.

5. சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார்இங்க யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

பொருள் : சிவபெருமானோடு ஒப்பாகவுள்ள கடவுள் புறத்தே உலகில் எங்குத் தேடினும் இல்லை. இனி, அவனுக்கு உவமையாக இங்கு அகத்தே உடம்பிலும் எவரும் இல்லை. அவன் அண்டத்தைக் கடந்து நின்றபோது பொன்போன்று பிரகாசிப்பான். செந்நிறம் பொருந்திய ஊர்த்துவ சகஸ்ரதளத்தாமரையில் விளங்குபவன் ஆவான். (அவன் அன்பர்களின் நெஞ்சத் தாமரையில் உறைபவன் என்பது மற்றோர் சாரார் கருத்து)

6. அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன்அன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவன்அன்றி மூவரால் ஆவதுஒன்று இல்லை
அவன்அன்றி ஊர்புகு மாறுஅறி யேனே.

பொருள் : சிவனைக் காட்டிலும் மேம்பட்ட தேவர்கள் ஒருவரும் இல்லை. அவன் அல்லாது செய்கின்ற அருமையான தவமும் இல்லை. அவனை அல்லாது பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை. அவனையல்லாது வீடு பேறு அடைவதற்குரிய வழியை அறியேன்.

7. முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாய்உளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே

பொருள் : பொன்னைப் போன்ற சகஸ்ரதளத்தில் விளங்குபவனே, பழமையாகவே சமமாக வைத்து எண்ணப்படும் பிரமனாதி மூவர்க்கும் பழமையானவன். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தலைமகன். அவனை யாரேனும் அப்பனே என்று வாயார அழைத்தால் அப்பனாக இருந்து உதவுவான். போதகத்தான் - உள்ளமாகிய தாமரை மலர்மீது உள்ளவன் என்பது ஒரு சாரார் கருத்து.

8. தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

பொருள் : தாழ்ந்த சடையையுடைய சிவன் தீயைக் காட்டிலும் வெம்மையானவன்; அன்பர்க்கு நீரைக் காட்டிலும் குளிர்ச்சியானவன்; குழந்தையினும் நல்லவன்; பக்கத்தில் இருப்பவன்; அவனிடம் அன்பு செய்வர்க்குத் தாயைக் காட்டிலும் கருணை புரிபவன். இவ்வாறு இருந்தும் இறைவனது கருணையை அறிபவர் இல்லை.

9. பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வார்இல்லை தானே.

பொருள் : பொன்னால் செய்யப்பெற்ற அழகான சடை என்று கூறுமாறு அவன் பின்புறம் விளங்க இருப்பவன். அவனது திருநாமம் நந்தி என்பதாகும். என்னால் வணங்கத் தக்கவன் உயிர்கட்கு எல்லாம் தலைவனாகிய சிவன். ஆனால் அப் பெருமானால் வணங்கத் தக்கவர் பிறர் எவரும் இல்லையாம். நந்தி - பிறப்பு இல்லாதவன்.

10. தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடுஅங்கி ஞாயிறும் திங்களும்
தானே மறைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே.

பொருள் : சிவனாகிய தானே இப்பூவுலகத்தைத் தாங்கிக் கொண்டு ஆகாய வடிவினனாக உள்ளான். அவனே சுடுகின்ற அக்கினியாகவும் சூரியனாகவும் சந்திரனாகவும் உள்ளான். அவனே அருள் பொழியும் சத்தியனாய் இருக்கின்றான். அவனே விசாலமான மலையாகவும் குளிர்ச்சியான கடலாகவும் உள்ளான். இப்பாடலுக்குத் திருவருள் ஆக அம்மையே இவ்வாறு இருக்கிறாள்  என ஒரு சாரார் பொருள் கூறி யுள்ளனர்.

11. அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதும்ஒன்று இல்லை
முயலும் முயலில் முடிவும்மற் றாங்கே
பெயலும் மழைமுகில் பேர்நந்தி தானே.

பொருள் : தூரத்திலும் பக்கத்திலும் எமக்கு முன்னோனாகிய இறைவனது பெருமையை எண்ணினால் ஒத்ததாகச் சொல்லக் கூடிய பெரிய தெய்வம் பிறிதொன்றிலை முயற்சியும் முயற்சியின் பயனும், மழைபொழிகின்ற மேகமும் அவ் இறைவனேயாகும். அவன் பெயர் நந்தி என்பதாகும்.

12. கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என்று அறியகில் லார்களே.

பொருள் : நெற்றிக் கண்ணையுடைய சிவன் ஒப்பற்ற அன்போடு அழியாதிருக்கவும் எண்ணற்ற தேவர்கள் இறந்தாராக, மண்ணிலும் விண்ணிலும் வாழ்கின்ற பலரும் இச்சிவனே அழியாதிருக்க அருள்புரிபவன் என்று இவர் அறியாதிருக்கின்றனரே என் பேதைமை !

13. மண் அளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண் அளந்து இன்னும் நினைக்கிலார் ஈசனை
விண்அளந் தான்தன்னை மேல்அளந் தார்இல்லை
கண்அளந்து எங்கும் கடந்துநின் றானே.

பொருள் : மண்ணை அளந்த மாயவன், அவனது உந்திக் கமலத்தில் உதித்த பிரமன் முதலாய தேவர்களும் சிவனை எண்ணத்தில் அகப்படுத்தி நினையாது இருக்கின்றனர். ஆகாயத்தில் விரிந்து விளங்குபவனை மண்ணுலகோர் கடந்து சென்று அறிய முடியவில்லை. ஆனால் அவன் கண்ணில் கலந்தும் எங்கும் கடந்தும் விளங்குகின்றான்.

14. கடந்துநின் றான்கம லம்மல ராகி
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புரம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.

பொருள் : சிவன் சுவாதிட்டமான மலரிலுள்ள பிரமனைக் கடந்துள்ளான். மணிபூரகத் தானத்திலுள்ள எமது மாயனாகிய விஷ்ணுவைக் கடந்துள்ளான். அவ் இருவர்க்கு மேல் அநாகதச் சக்கரத்திலுள்ள உருத்திரனைக் கடந்துள்ளான். இம் மூவரையும் கடந்து சிரசின் மேல் நின்று எங்கும் கண்காணித்துக் கொண்டுள்ளான்.

15. ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்து ஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.

பொருள் : சிவன் உலகினைப் படைப்பவனாயும் அழிப்பவனாயும் உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும், அவற்றைக் கடந்து நிறைந்து விளங்குகிறான். திருவருள் சோதியாகயும் குவிதல் இல்லாத இயல்போடு ஊழைச் செலுத்துபவனாயும் படைத்துக் காத்து அழித்து உயிர்களுக்கு வினையை ஊட்டுவிப்பான்.

16. கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே.

பொருள் : நரம்பு பொருந்திய கொன்றை மலரை அணிந்த சுருண்ட சடையையும் அழகு நிறைந்த ஒளியோடு கூடிய நெற்றியையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனுமாகிய சிவனை அமரரும் தேவர்களும் குற்றத்தில் பொருந்தி என்ன என்று பாராட்டிக் குணத்தை  நாடுவார் ? நாடமாட்டார்.

17. காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
மாயம் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசம் கலந்தொரு தேவன்என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிரில்லை தானே.

பொருள் : ஸ்தூல உடம்பும், சூட்சும உடம்பும் ஆகிய இரண்டும் ஒன்றாகக் கலந்த இருப்பினும் மாலை சம்பந்தமுடைய சூக்கும உடம்பில்தான் கானமானது மிகுந்திருக்கும் அக்கானம் அல்லது நாதவழியே மனம் பதிந்து ஆன்மா தன்னை ஒளி வடிவமாகக் காணினும் உடலை விட்டு ஆகாய வடிவினனாகிய சிவனோடு கொள்ளும் தொடர்புக்கு நிகரில்லை கத்தூரி - கானம்.

18. அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே.

பொருள் : வட திசைக்குத் தலைவனாகச் செய்து அளகாபுரி அரானைச் செல்வத்துக்குத் தலைவனாகச் செய்த நிறைந்த தவத்தின் பயனைக் கருத்தில் கொண்டு, அவ்வாறு வடதிசையைப் போற்றி நீயும் சேமிப்பைக் பெருக்கினால் இவ்வடதிசைக்குத் தலைவனாக நீயும் ஆகலாம் என்று சொல்பவன் எமது தலைவனாவான்.

19. இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே.

பொருள் : வடக்குத் திசைக்குத் தலைவன் விஷய வாசனைக்கு இடமான ஏழு ஆதாரங்களையும் அழித்துப் பாழ் நிலமாக்கினவன். அவன் பழமையாகவே எல்லாம் அறிபவன். பாவங்களைப் போக்கடிக்கின்ற பலியினைக் கொள்ளும் வடதிசையை இடமாக்கிக் கொண்ட இவரது உண்மையான தவத்தை நோக்கி அத்தவம் செய்வோரையே இடமாக்கிக் கொண்டு எழுந்தருளி யிருக்கின்றான். முதுபதி - சுடுகாடு.

20. முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் மலையது தானே.

பொருள் : இறப்பையும் பிறப்பையும் கருவில் உதிக்கும் முன்பே வரையறை செய்து சிவன் பொருந்தியுள்ள நியதியை அறியின் அது விளக்கம் மிக்க கண்மலருக்கு மேல் உள்ள சிரசாகும். அவ் இறைவனது உருவம் ஒளியும் ஒலியுமாகும். இதைத் திருக் கயிலாய மலையாகும் என்று சிலர் கூறுவர்.

21. வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தஎம்
கோனைப் புகுழுமின் கூடலும் ஆமே.

பொருள் : ஆகாயத்திலுள்ள மேகம் போன்ற கரிய திருமால் பிரமன் தேவர் முதலியோரது இழிந்த பிறவியை நீக்குகின்ற ஒப்பற்றவனும், ஆணவமாகிய காட்டு யானையைக் கதறும் படி பிளந்த எம் தலைவனுமாகிய சிவனைத் துதியுங்கள். அவனை அணைந்து உய்யலாம்.

22. மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.

பொருள் : தியானப் பொருளாக மனத்தில் தோன்றுகின்ற மாயநாடனாகிய சிவன், சீலர் நினைத்ததை அறிவான் என்ற போதும் இவர்தாம் நினையாது இருக்கின்றனர். கடவுளுக்கு என்னிடத்துக் கருணையில்லை என்று சொல்லுவர். இறைவன் தன் கருணைக்கு இலக்கு ஆகாமல் தப்ப நிற்பவர்க்கும் கருணை வழங்கி நிற்கின்றான். அவன் கருணை இருந்தவாறு என்னே !

23. வல்லவன் வன்னிக்கு இறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே.

பொருள் : சர்வ வல்லமையுடையவனும், அக்கினி தேவனைக் கடலின் மத்தியில் நிலைக்கச் செய்த நீதியுடையவனும் ஆகிய இறைவனை இல்லை என்று கூற வேண்டா. படைத்தல் முதலியவற்றைச் செய்கின்ற கடவுளர்க்கும் தலைவனாய், இரவும் பகலும் ஆன்மாக்களுக்கு அருள் செய்து கொண்டிருக்கின்றான்.

24. போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி
தேற்றுமின் என்றும் சிவனடிக்கே செல்வம்
ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.

பொருள் : போற்றிக் கூறியும் புகழ்ந்து பாடியும் நின்மலனாகிய சிவனது திருவடியை இடைவிடாது தாரகமாகக் கொண்டு தெளியுங்கள். சிவபெருமான் திருவடிக்கே நம் செல்வமெல்லாம் உரியது என்று எண்ணிப் புறம்பொருளில் மயங்கிக் கிடக்கின்ற மனத்தை மாற்றி நிற்பவரிடத்தில் சிவன் நிலைபெற்று நிற்பான்.

25. பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.

பொருள் : பிறவாதவனும், யாவற்றையும் ஒடுக்குபவனும், பேரருள் உடையவனும், அழிவில்லாதவனும் எல்லோர்க்கும் இடையறாது இன்பத்தை நல்குபவனும் ஆகிய சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் நீங்கள் அவனடி மறவாதவர்களாய் அஞ்ஞானம் நீங்கி ஞானப்பேறு
அடையலாம். துறப்பிலி - இடையீடு இல்லாதவன், விருத்தம் - இடையூறு.

26. தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
உடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே

பொருள் : ஆன்மாக்களை என்றும் தொடர்ந்து நின்ற சிவனை எப்பொழுதும் வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் எங்கும் வியாபித்து உள்ளவனும் விசாலமான உலகமுழுவதும் கடந்து நின்றவனும் சகஸ்ரதன கமலத்தின் மேல் உடனாய் இருந்தவனும் ஆகிய சிவனது திருவடிப் பேறுகிட்டும். கமலகம் மலர்மேல் உட்கார்ந்திருந்தான் மலர்மிசை ஏகினான்

27.சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியின் உள்ளே புகுந்துநின் றானே.

பொருள் : சேர்க்கையின் இடம் என்று சொல்லப்படும் சுவாதிட்டான மலரின் கீழ் ஒளிபொருந்திய முகத்தையுடைய இறுதியில்லாத இறைவனது கருணை நமக்கே உரியது என்று அப்பெருமானைத் தினந்தோறும் வழிபடுவோரது புத்தியில் தானே புகுந்து பெயராது நின்றான். சந்தியெனத்தக்க - அந்தியில் தோன்றும் செவ்வான நிறத்தையுடைய என்னுமாம்.

28. இணங்கிநின் றான்எங்கும் ஆகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே.

பொருள் : எவ்விடத்தும் நீக்கமற நிறைந்துள்ளவனாகிய சிவன் ஆன்மாவோடு பொருந்தியுள்ளான். எல்லாக் காலத்தும் இருப்பவனாகிய பெருமான் மாறுபட்ட தன்மையில் உள்ளான். தேவர் உலகை ஆளும் சிவன் தனக்கெனச் செயலின்றி உள்ளான். அவன் தன்னை வழிபடுவோர்க்கு வழித்துணையாக உள்ளான்.

29. காணநில் லாய்அடி யேற்குஉறவு ஆருளர்
நாணகில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே.

பொருள் : சிவத்தை விட்டு மாறிய நினைவு இல்லாத அடியார் மனத்திடை ஆணிவேர் போல் எழுந்தருளியிருப்பவனே ! சீவயாத்திரை முழுவதும் உதவக் கூடியவர் உன்னையன்றி வேறு உறவு யார் உள்ளார் ? ஆகையால இறைவனே அடியேனுக்கு ஞான கோசரப் பொருளாய் விளங்க வேண்டும். அப்போது நான் உன்னைத் தலைவனாக ஏற்றுக் கொள்ள வெட்கப்படமாட்டேன்.

30. வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான்நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை
நான்இன்று அழைப்பது ஞானம் கருதியே.

பொருள் : ஆகாயத்தில் விளங்கித் தானே பொழியும் மழையைப் போன்று இறைவனும் தானே வலியவந்து அருளைப் பொழியும் என்று சிலர் தயக்கம் கொள்வர். பசுவின் கன்று பால் கருதித் தன் தாயை அழைப்பது போல, என் நந்தியை நான் இப்போது அழைப்பது ஞானம் கருதியேயாம்.

31. மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

பொருள் : இறைவன் பூவுலகில் வாழ்கின்றவர்க்கு மானிட வடிவில் வெறிப்பட்டருளுவான். புவர்லோக வாசிகளுக்கு ஆகாய வடிவினனாக ஒளிவடிவில் வெளிப்பட்டு அருளுவான். சுவர்லோக வாசிகளுக்கு அவ்வண்ணமே தேவவடிவில் வெளிப்பட்டு அருளுவான். சித்திகளை விரும்பினவர்க்குச் சித்தனாக நின்று அருளுவான் நிறைவு பெற்ற மனத்தின் இடமாக நாதத்தை வெளிப்படுத்துபவனாகிய அவனுக்கு அறிவினிடமாக நின்று நான் அன்பு பூண்டிருந்தேன்.

32. தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீர்உலகு ஏழையும்
தாவு பிரான்தன்மை தானறி வார்இல்லை
பாவு பிரான்அருள் பாடலும் ஆமே.

பொருள் : சிவன் தேவர்கள் அனைவர்க்கும் தலைவன். அவன் மானிடர்க்கும் தலைவன். அவன் சீவ கோடிகளிடம் திசை எட்டு மேல், கீழ் எனப் பத்துப் பக்கங்களிலும் நிறைந்துள்ளான், அவனே விரிந்த நீரால் சூழப்பெற்ற ஏழு உலகங்களையும் கடந்து உள்ளான். இவனுடைய தன் ஒருவரும் அறிபவர் இல்லை. இவ்வண்ணம் வியாபித்துள்ள இறைவனது அருளை எம்மால் எவ்வாறு பாடமுடியும்

33. பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்லவல் லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.

பொருள் : தொன்று தொட்டே இவ்வுலகில் கடவுளர் பலர் உளர் அக்கடவுளர் வழிபாட்டுக்குக் கிரியை விதிகள் ஏற்படுத்தி உண்மைப் பொருளை உணரார் ஆயினர். துதித்துப் பல தோத்திரப் பாடல்களைப்  பாடவல்லாரும் சிவத்தோடு கலந்திருந்து பெறும் உண்மை அறிவைப் பெறாதவராய் உளர். மனத்தினுள் அமைதியின்றி வாடுகின்றார்கள்.

34. சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.

பொருள் : சிவபெருமான் தேவர்க்கு அருளிய உண்மை நெறி, கலவைச் சாந்தில் வீசுகின்ற கஸ்தூரியின் மணம் போலச் சிவ மணம் வீசும். அவ்வுண்மை நெறி செல்ல அருமையான சுடர் போன்ற ஒளியினை நல்கும் அவனது ஆயிரம் திருநாமங்களையும் நடக்கும் போதும் இருக்கும் போதும் எப்போதும் பரவிக் கொண்டிருக்கிறேன். சாந்து - கலவைச் சந்தனம்.

35.ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவும்  ஆமே.

பொருள் : பிறர் படைக்காத சன்மார்க்க நெறியில் விளங்கும் சிவனைப் போற்றுங்கள். போற்றிப் புகழுங்கள். அவ்வாறு புகழ்ந்தான் ஈசான திக்குக்கும் சிரசில் கிழக்கு முதலாகவுள்ள அஷ்டதள கமலத்தை நிமிரும்படி செய்வன். அவ்வாறு உங்களது ஈசான முகம் விளங்கவும் ஆகும். மேல்திசை - உச்சி இங்கு விளங்குவது ஈசானமுகம்.

36. அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரிசு ஈசன் அருள்பெற லாமே.

பொருள் : உயிருக்குத் தந்தையை இறைவனைத் தெவிட்டாத அமுதம் போன்றவனை, தனக்கு ஒப்பில்லாதவனை, வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் வள்ளலை, ஊழியைச் செய்கின்ற முதல்வனை எவ்வகையாயினும், வழிபடுங்கள். வழிபட்டால் அவ்வகையே இறைவனது அருளையே பெறலாகும்.

37. நானும்நின்று ஏத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்
வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து
ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.

பொருள் : நாள்தோறும் இறைவனை நானும் நிலையாக இருந்து வழிபடுவேன். அக்கினி போன்ற திருமேனியை யுடைய இறைவனும் வெளிப்பட்டு நின்றான். அவன் வானத்தில் கலைகள் நிறைந்த சந்திரனைப் போல உடல் இடமாக மகிழ்ந்து ஊன் பொருந்திய உடலில் சகஸ்ரதள கமலத்தில் பிராண ரூபமாய் இருக்கிற விதம் இதுவாகும்.

38. பிதற்றொழி யேன்பெரி யான்அறி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே.

பொருள் : பெரியவனும் அரியவனும் ஆகிய சிவனைத் தோத்திரம் செய்வதை விடமாட்டேன். ஒரு தாயின் வயிற்றில் பிறவாதவனும் உருவமுடையவனுமாகிய சிவனைத் தோத்திரம் செய்வதை விடமாட்டேன். எங்களுடைய பெருமையான சிவனைத் தோத்திரம் செய்வதை விடமாட்டேன். எப்போதும் தோத்தரித்துக் கொண்டு இருக்கும் நானே பெரிய தவம் செய்பவனானேன். இந்நான்கு நெறியினையும் முறையே சீலம், நோன்று, செறிவு, அறிவெனக் கூறுவர்.

39. வாழ்த்தவல் லார்மனத்து உள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என்று இறைஞ்சியும்
ஆத்தம்செய்து ஈசன் அருள்பெற லாமே.

பொருள் : வாயாரப் புகழ்ந்து வாழ்த்தவராது மனத்தினுள் விளங்கும் சோதியும் குற்றங்களைப் போக்கும் தீர்த்தம் போன்றவனும் அவ் ஆகாய மண்டலத்தில் வெளிப்படுகின்ற தேவ தேவனாகிய இறைவனைத் துதித்தும் எம் தலைவனே என்று வணங்கியும் நேசித்து வந்தால் அவ் இறைவனது அருளைப் பெறுதல் எளிதாகும். ஆத்தன் - நண்பன் எனப்படுவன்.

40. குறைந்து அடைந்த ஈசன் குரைகழல் நாடும்
நிறைந்து அடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்
மறைஞ்சுஅடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே.

பொருள் : சீவர்களின் குறையை நினைந்து சென்று இறைவனது ஒலிக்கின்ற திருவடியை நீங்கள் நாடுங்கள். அது பூரணமாகப் பெற்ற சிவந்த பொன் போன்ற ஒளியினை ஒத்திருக்கும். வஞ்சனை கொண்டு பிடிவாதம் செய்யாமல் அத்திருவடியை வணங்குவார்க்கு உள்ளத்தே புகுந்து வணங்கும் சிவன் உடம்பைப் புறம் என்று உணர்த்துவான். ஏக்கற்றவர் - ஆசையால் தாழ்ந்தவர்.

41. சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடைப் போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

பொருள் : திருப்பாற் கடலில் சீறி எழுந்த நஞ்சை உண்டருளிய மகாதேவனைத் திருத்தம் செய்த விளைநிலம் போன்ற மனத்தில் வைத்து வணங்க வல்லார்க்கு நாத ஒலி காட்டி (ஒளி பொருந்திய நெற்றியை யுடைய) உமையொரு பாகனும் அவர் மனத்தில் பெண்மானைக் கண்ட ஆண்மானைப் போன்று கூடி நின்றான்.

42. போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே.

பொருள் : சிவனிடம் அடைக்கலம் புகுந்து தோத்திரம் செய்வார்பெறும் பயனாவது நான்கு முடிகளையுடைய பிரமன் படைத்தபடியே மீளமீளப் படைக்கும் மாயையோடு கூடி சம்சாரப் பந்தத்தில் உழல்பவராயினும் திரட்சியான தோள்களையுடைய உமாதேவியின் தலைவனான் சிவன் வந்து பொருந்தலாம்.

43. அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரன்அடி செய்துஅங்கு ஒதுங்கவல் லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்து நின்றானே.

பொருள் : இறைவனது திருவடியைப் புகழ்ந்து பாடி, அன்பினால் கசிந்துருகி, இடைவிடாது திருவருமைச் சிந்தித்து ஞானத்தை நிலைக்கும்படி செய்து அங்கே நிலைத்திருப்பவர்க்கு அவரது மனத்தைச் செம்மை செய்து பூரணமாக நிறைந்திருப்பான். திரு ஐந்து எழுத்தை தூய மனத்துடன் இடையறாது வழுத்தி எனினுமாம்.

44. போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.

பொருள் : தேவர்கள் சுழுமுனையில் விளங்கும் ஏகபாத சிவனை வாழ்க என்று வாழ்த்துவார்கள். அசுரர்கள் அவனை வாழ்க என்று வாழ்த்துவார்கள். மனிதர்கள் அவன் திருவடி வாழ்க என்று கூறுவார்கள். நான் அவனை வணங்கி என் அன்பினுள் விளங்குமாறு நிலைபெறச் செய்தேன். இன்பம். பொருள், அறம், வீடு, இவைகளை முறையே மேற்கண்டவர்கள் விரும்பி வழிபடுவர் என்லாம்.

45. விதிவழி அல்லதுஇல் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே.

பொருள் : கடல்சூழ்ந்த உலகம் இறைவன் விதித்த முறையின்படி நடப்பதன்றி வேறு முறையால் அல்ல. இவ்விதிமுறைக்கு நாம் அடையும் போகம் விரோதம் இல்லை. சோதி வடிவான் இறைவனும் நாடோறும் துதிவழியாக வீட்டு நெறியை அளிக்கும் சிவ சூரியன் ஆவான்.

46. அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
புந்தி வண்ணன்எம் மனம்புகுந் தானே.

பொருள் : இறைவனையே சிந்தித்திருக்கும் வண்ணம் மனம் திருந்திய அடியார்கள் செம்மேனி யம்மானே எப்பொருளுக்கும் இறைவனே மங்கள வடிவினனே என்று தொழ, பழமையானவனே, முதல்வனே, மேலானவனே என் நான் தொழ ஞானசொரூபியாய் எம் மனத்தில் எழுந்தருளியிருந்தான்.

47. மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நின்இன்பம் தானே

பொருள் : இல்லறத்திலிருந்து இறைபணி செய்பவர் பெரிய தவத்தை உடையவர்க்கு ஒப்பாவர். இடைவிடாது தியானத்தில் இருப்பவர், இறைவனது அன்பினுள் பொருந்தியிருப்பர். பனை மரத்தில் உள்ள பருந்து உணவெடுக்க வெளியே வரும் நேரத்தைத் தவிர பனையிலே ஒடுங்கியிருப்பது போல உலகில் ஈடுபட வேண்டிய நேரத்தில் ஈடுபட்டு மற்ற நேரங்களில் சிவ சிந்தனையில் ஈடுபடாதவர்க்கு இறையின்பம் கிட்டாது. பழத்தையுடைய பனைமரத்தின்மேல் பருந்து இருந்தாலும் பழத்தை நினைப்பதில்லை; இழிந்த பொருள்களை உண்ண நினைக்கும்.

48. அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே.

பொருள் : அடியார்கள் வணங்கும் தேவதேவனை என்னுடைய சிரசால் வணங்கி அப்பெருமானை நினைந்து, பூமியில் உள்ளார்க்கு அருளும் மேலானவனாகிய எந்தையை அணையாத விளக்கு என்று எண்ணிப் பொருந்தியிருந்தேன்.

49. நரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத்து ஒருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடந்துஎய்த லாமே.

பொருள் : பழமையான சீவன் பாசம் ஆகியவற்றுக்கு நாதனாகிய சிவனை நினைந்து, பசு என்று பாசம் என்றும் சொல்லப்பெறுகின்றவற்றின் இயல்பை அறிந்து சிவனோடு ஒன்று கூடவல்லார்க்கு அலை போன்று வரும் பசுக்கள் செய்யும் பாவமாகிய கடலை நீந்தி, பசு பாசங்களைக் கடந்து முத்திக் கரையை அடையலாம். பசு கட்டப்பட்ட சீவன், உயிர். பாசம் - தளை (ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலம்)

50. சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்று
ஆடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நான்இன்று அறிவது தானே.

பொருள் : இறைவனது திருவடியைச் சிரசில் சூடிக் கொள்வேன். மனத்தில் வைத்துப் போற்றுவேன். தலைவன் என்று பாடுவேன். பல மலர்களை அர்ச்சித்து வணங்கி நின்று கூத்தாடுவேன். அவ்வாறு ஆடி, அவனே தேவதேவன் என்று விரும்புவேன். நான் இன்று அவனைப் பற்றி அறிந்து செய்வது இவ்வளவு ஆகும்.

2. வேதச் சிறப்பு (வேதத்தின் பெருமை)

51. வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.

பொருள் : வேதத்தில் சொல்லப்படாமல் விட்டுப் போன நீதி ஒன்றும் கிடையாது. நாம் ஓதத்தக்க நீதிகள் எல்லாம் வேதத்தில் உள்ளன. அதனால் அனுபூதிமான்கள் தர்க்க வாதத்தை விடுத்து எல்லாப் பொருளும் நிரம்பிய வேதத்தை ஓதியே முத்தி அடைந்தார்கள். திருக்குறளே செந்தமிழ் மறை என்று கழகப் பதிப்பில் கண்டுள்ளது. ஆனால் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற வடமொழி வேதங்களைப் பற்றி தான் ஆசிரியர் கூறுகின்றார்.

52. வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

பொருள் : வேதங்களை ஓசையளவில் எடுத்தும் படுத்தும் சொல்கின்றவன் அவற்றை அறிந்தவன் ஆவான். வேதத்தை உரைத்த இறைவன் பிரமப் பொருள் விளங்கவும், அவன் அந்தணர் வேள்வி செய்வதன் பொருட்டும், உண்மைப் பொருளை உணர்த்தவும் வேதத்தைக் கூறியருளினான். ஆரிய வேதம் உரைத்தவன் பிரம்மா.

53. இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குஉணர் வாய்உணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குஉரு வாகிய வேதியர்  சொல்லும்
கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.

பொருள் : மந்திர வடிவான அழகிய வேதத்தில் உள்ளத்தை உருக்குகின்ற உணர்வாய் உணரப்படுகின்ற வேதத்தினில் விளங்கி, அச்சத்தை விளைவிக்கும் கம்பீரத் தொனியுடைய வேத மந்திரங்களாய், சூக்கும நிலையில் நின்றவன் முக்கண்ணையுடைய சிவபெருமான் ஆவான். இருக்கு என்று  சொல்லப்படுகின்ற சுலோகங்களையுடையது ஆரிய வேதம்.

54. திருநெறி யாவது சித்துஅசித்து அன்றிப்
பெருநெறி யாய் பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

பொருள் : தெய்வீக நெறியாவது, அறிவு அறியாமையற்ற வீடு பேறாய் உள்ள இறைவனை எண்ணி, குருவால் உணர்த்தப்பெறும் நெறியாய்ச் சிவத்தைப் பொருந்தும் ஓர் ஒப்பற்ற நெறியாகும். இந் நெறியினையே சிறப்பாக வேத முடிவான உபநிடதம் கூறும். தெய்வீக நெறியாவது குரு அருளால் சிவனடி சேர்ப்பிக்கும் நெறி என்று உபநிடதம் கூறும்.

55. ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.

பொருள் : ஆறு அங்கங்களாக ஆராயப் பெற்று வரும் வேதத்தை அருளிச் செய்தவனை உடம்பின் பகுதியாகக் கொண்டு அவனது இயல்பை உணர்வார் இல்லை. தம்மின் வேறான அங்கமாக வைத்து வழிபட்டு, பிறகு தமது இஷ்ட காமியங்களைப் பெருக்கிக் கெடுகின்றார்களே. ஆறங்கமாவன; சிட்சை, கற்பகம், வியாகரணம், சந்தோவிசிதி, சோதிடம், நிருத்தம் என்பன.

56. பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே.

பொருள் : பாடல்களும், அவற்றுக்கான இசையும், அலைந்து ஆடுகின்ற ஆடல் மகளிரின் ஆட்டமும் நீங்காத உலகில் வேதநெறி காட்டும் உண்மை நெறிநில்லார், வேள்வி செய்யும் விருப்பம் உடையவராய் விரதமில்லாதவர் ஆவர். அவர் புறத்தே சென்று மாறுபாடுற்று அழிகின்றனர். பாட்டும் இசையும் ஆட்டமும் இறைவனது உண்மையை உணர அமைக்கப் பெற்றவை. இவ்வுண்மையை உணராமல் புறத்தோற்றத்தில் மயங்கிக் கெடுவதாகக் கூறுகின்றார்.

3. ஆகமச் சிறப்பு (ஆகமத்தின் பெருமை)

57. அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

பொருள் : கரிய நிறமுடைய உமாதேவியை இடப்பாகத்தில் உடையவன், அருளிச் செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. வணக்கத்தைச் செய்து பிரணவர் முதல் மகாளர் ஈறாக அறுபத்தறுவரும் ஐந்தாவது முகமாகிய ஈசான முகத்திலிருந்து அவற்றின் பொருளைக் கேட்டனராம். உமாபாகன் இருபத்தெட்டு ஆகமங்களை அறுபத்தாறு பேர்களுக்கு ஈசான முகத்திலிருந்து உபதேசித்தருளினான். ஐந்து முகங்களாவன; சத்தியோபாதம், வாம வேதம், அகோரம், தற்புருடம், ஈசானம் என்பனவாம்.

58. அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.

பொருள் : இறைவன் ஆன்மாக்கள்மீது வைத்த கருணையால் கூறியருளிய ஆகமங்கள் எண்ணுவதற்கு இயலாது. இருபத்தெட்டுக் கோடியே நூறாயிரமாகும். இவற்றின் வழி தேவர்கள் இறைவனது பெருமையைச் சொன்னார்கள். நானும் அவ்வழியைப் பின்பற்றி அப் பொருளை வணங்குகிறேன். இந்த எண் ஆகமத்திலுள்ள கிரந்தங்களைக் குறிக்கின்றன. கிரந்தங்கள் - சூத்திரங்கள்.

59. பண்டிதர் ஆவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.

பொருள் : அறிஞர் என்பவர் பதினெட்டு மொழிகளும் தெரிந்தவர். அத்தகையோர் ஆகமம் கூறும் உண்மையை நன்றாக அறிவர். அறிஞர்கள் அறிந்த பதினெட்டு மொழிகளும் அண்டங்களுக்கு முதல்வனாகிய சிவன் வெளிப்படுத்திய அறத்தைச் சொல்லுவனவாம். பதினெட்டு மொழிகளிலும் சிவன் சொன்ன அறமே உள்ளது.

60. அண்ணல் அருளால் அருளும்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
எண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.

பொருள் : இறைவன் கருணையால் அருளிச் செய்த தெய்வத் தன்மை பொருந்திய ஆகமம், வானுலக வாசிகளாகிய தேவர்களுக்கும் அனுபவத்துக்கு வாராதது. அவற்றைக் கணக்கிடின் எழுபது கோடியே நூறாயிரமாகும். அவ்வாறு கணக்கிட்டு அறிந்தாலும் அனுபவன் இன்றேல் அவை நீரின்மேல் எழுத்துப் போலப் பயன்படாது போகும். ஆகமத்தை அனுபவமின்றி அறிந்தால் பயனில்லை.

61. பரனாய் பராபரம் காட்டில் உலகில்
தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.

பொருள் : மிக மேன்மையானவனாய்ப் பரஞானம் அபரஞானம் ஆகிய இரண்டையும் அறிவித்து, உலகைத் தாங்குபவனாய் சிவ புண்ணியத்தைத் தான் அருள் செய்யும்போது அரனாய், தேவர்கள் வணங்கி வழிபடும் சிவபெருமான் அறிவாய் ஆகமத்தில் விளங்குகின்றான். பராபரம் - பரஞானம், அபரஞானம். பரஞானம் - சிவஞானம், அபரஞானம் - கலைஞானம்.

62. சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.

பொருள் : சிவமாகிய பரம்பொருளிடமிருந்து சத்தியும் சதாசிவமும் மனத்துக்கு உவந்த மகேசர் உருத்திரர் தவத்தைச் செய்த திருமால் பிரமன் ஆகியோர் அவரவர் அறிவில் விளங்கிய ஒன்பது ஆகமங்களும் எங்களது குருநாதனாகிய நந்தியெம் பெருமான் வழிமுறையாகப் பெற்றவையாகும். பரமசிவத்திடமிருந்து பெற்ற ஆகமத்தைக் குருநாதனாகிய நந்தியெம் பெருமான் பெற்றான்.

63. பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்
மற்றுஅவ் வியாமளம் ஆகும்கா லோத்தரம்
துற்றநல் சுப்பிரம் சொல்லு மகுடமே.

பொருள் : குருபரம்பரையில் பெற்ற ஆகமங்கள் காரணம், காமிகம், பொருந்திய நல்லவீரம், உயர்ந்த சிந்தியம், வாதுளம், மேலும் தந்திர சாத்திரமாகிய யாமளம், நன்மையாகும் காலோத்திரம், மேற்கொண்டு ஒழுகவல்ல நல்ல சுப்பிரம், சொல்லத் தகுந்த மகுடம் என்ற ஒன்பது மாகும். 1. காரணம், 2. காமிகம், 3. சிந்தியம், 4. சுப்பிரம், 5. வீரம், 6. மாதுளம், 7. காலோத்திரம், 8. மகுடம், 9. யாமளம். இவையே நந்தியெம்பெருமான் பெற்ற ஒன்பது ஆகமங்களாகும்.

64. அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

பொருள் : இறைவன் அருளால் வந்த சிவாகமங்கள் கணக்கற்ற கோடிகளாகத் தொகுத்துச் சொல்லப்பட்டிருப்பினும், இறைவன் சொன்ன உண்மைப் பொருளை உணராவிடின் அவை அனைத்தும் நீர்மேல் எழுத்துப் போலப் பயனற்றவையாகும்.

65. மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.

பொருள் : மழைக் காலமும் கோடைக் காலமும் பனிக்காலமும் இலயப்பட்டு நின்று, ஏரியும் வறட்சியடைந்திருக்கும் ஊழிக்காலத்து, வடமொழியையும் தமிழ் மொழியையும் ஏக காலத்து உபதேசித்து, சிருஷ்டி தொடங்குமுன் பராசத்திக்குச் சிவபெருமான் அருள் புரிந்தான்.

66. அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே.

பொருள் : ஆன்மாக்களைப் பந்தத்தினின்றும் நீக்கும் முறைமையினையும் பந்தத்தில் விடுகின்ற முறைமையினையும் கண் இமைத்தல் ஒழிந்து உயிர்போகின்ற முறைமையினையும், தமிழ்சொல் வடசொல் ஆகிய இரண்டாலும் உணர்ந்துகின்ற சிவனை உணர முடியுமோ? முடியாது. பந்தமும்வீடும் அருளுகின்ற சிவனை ஆகம அறிவினால் அறிய முடியாது.

4. குரு பாரம்பரியம் (குரு மரபு)

67. நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோடு எண்மரும் ஆமே.

பொருள் : திருநந்தி தேவனது அருளைப் பெற்ற குரு நாதர்களை ஆராயின் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நால்வரும் சிவயோக மாமுனிவரும் திரு அம்பலத்தில் திருக்கூத்தைத் தரிசித்த பதஞ்சலி வியாக்ரபாதர் ஆகியோரும் என்னோடு எட்டுப் பேர்கள் ஆவார்கள். சிவனிடம் உபதேசம் பெற்ற குருநாதர் எண்மராவர்.

68. நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவது என்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.

பொருள் : சிவனது அருளால் குருநாதன் என்ற தகுதியை அடைந்தோம். அவனது அருளால் மூலாதாரச் சக்கரத்தில் விளங்கும் உருத்திரனை நாடினோம். உலகில் சிவனது அருள் எல்லாவற்றையும் செய்யும் அவன் வழிகாட்ட மூலாதாரத்திலிருந்து மேலேறிச் சிரசின் மேல் நிலை பெற்றிருந்தேன். இரண்டாம் அடிக்குப் பொருளாக இறந்த மூலனுடைய தேகத்தில் புகுந்ததைக் கூறுவர்.

69. மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துரு காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே.

பொருள் : திருமந்திரம் உபதேசம் பெற்ற வழிமுறையாவது மாலாங்கள், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கட்டுத்தறி போன்று அசையாதிருக்கும் காலாங்கி, கஞ்ச மலையனோ ஆகிய இவ் எழவரும் என்வழி வந்த மாணக்கர்களாம். திருமூலருடைய ஏழு மாணவர்கள். ஆவடுதுறையில் உடன் இருந்தவர்கள். இவர் துறவிகள்.

70. நால்வரும் நாலு திசைக்குஒன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்றது எல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதர்ஆ னார்களே

பொருள் : சனகாதி நால்வரும் நான்கு திக்குகளுக்கு ஒரு நாதராய், அந்நால்வரும் தாம் பெற்ற பல்வேறு வகை அனுபவங்களைக் கொண்டு அவர் தாம் தாம் பெற்ற அனுபவத்தைப் பிறர்க்கு  எடுத்து அருளி, அந்நால்வரும் மேன்மையுடையவராய் குருநாதர் ஆனார்கள்.

71. மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

பொருள் : சிவயோக, மாமுனி, பதஞ்சலி, வியாக்கிர பாதர் ஆகிய மூவருக்கும் சனகாதியர் நால்வர்க்கும் சிவபெருமான் உபதேசம் செய்தது இறப்பையும் பிறப்பையும் நீங்கும்படி செய்யும் பெருமையுடைய நெறியாகும். செழுமையான சோம சூரியாக்கினி வடிவான பெருமான் குறைந்த பெருமையைக் கெடுப்பவன் அல்லன். நால்வர்க்கு அருளியது துறவு நெறி. மூவர்க்கு அருளியது அருள் நெறி இரு நெறியிலும் பிறவிநீக்கம் ஒன்றே குறிக்கோள். இரு நெறியையும் இணைப்பதே திருமூலர் நெறி.

72. எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே.

பொருள் : எட்டுத் திக்குகளிலும் பெருமழை பெய்தாலும் வளர்ச்சியைத் தரும் அருள்மிகு கடன்களைச் செய்யுங்கள் என்று சிவபெருமானது சிறந்த குளிர்ச்சியான பவளம் போலும் சிவந்த சடையிடம் காதல் கொண்டு பொருந்தியிருந்த சனகாதி நால்வர்க்கும் அருள் புரிந்தான். சடைமுடியில் அழுந்துதல்- யோகியர் இரவில் விளங்கும் செவ்வொளியில் அழுந்தி யிருத்தல்.

5. திருமூலர் வரலாறு (ஆசிரியர் வரலாறு)

(திருமூலர் மாணாக்கர்களுக்குத் தம் வரலாறு கூறுதல்)

73. நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து
அந்தி மதிபுனை அரனடி நாள்தொறும்
சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற் றேனே.

பொருள் : என் குருநாதனாகிய நந்தியின் இரு திருவடிகளையும் என் சிரசின்மேல் கொண்டு அறிவினுள்ளே நிறுத்தி வணக்கம் செய்து, முச்சந்தி வீதியில் பொருந்திய மதிசூடிய சிவ பெருமானது திருவடியினைத் தினந்தோறும் தியானித்துத் திருமந்திரமாகிய ஆகமத்தைச் சொல்லத் தொடங்குகிறேன். அந்தி  முச்சந்தி, வளரும் தன்மையுள்ள மதி எனினுமாம்.

74. செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பிடல் எழுகோடி யுகம்இருந் தேனே.

பொருள் : சிவ ஆகமம் கூற வல்லவன் என்னும் அத் தகுதியைப் பெற்றும், அத் தகுதியை அருளும் குருநாதரின் திருவடியைப் பெற்றும், சிரசின் மேல் குறைவே யில்லாத ஆகாயப் பெருவெளியில் ஒப்பற்ற ஒளி அணுக்களின் அசைவினைத் தரிசித்தபின் ஒப்பில்லாத ஏழு ஆதாரங்களும் விளங்குமாறு பொருந்தியிருந்தேன்.

(பொன்னம்பலமும் ஆருயிர்களின் நெஞ்சத் தாமரையும் எனப் பொருள் கொள்வாரும் உளர்)

75. இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் சொல்வியைச் சேவித்து அடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

பொருள் : இந்திரனே ! இங்ஙனம் ஏழு ஆதாரங்களையும் பொருந்தி இருந்ததற்குரிய காரணத்தைக் கேட்பாயாக. அங்குப் பொருந்திய புவனங்களுக்குத் தலைவியாகிய அருமையான தவத்துக்குரிய செல்வியைச் சிதாகாயப் பெருவெளியில் பத்தியினாலே அவளை அடைந்து தரிசித்தபின் நான் அவளுடன் திரும்பினேன். இந்திரன் என்பவர் மாணாக்கர்களுள் ஒருவர். நான் தென்னாட்டில் வந்து தங்கியிருப்பதற்குரிய காரணம் யாதெனில் இங்குத்  தவஞ்செய்யும் அருந்தவச் செல்வியை வணங்குதற்கேயாம் என்றும் பொருள் கொள்ளலாம்.

76. சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேன்நின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுகூட னேஉணர்ந் தோமால்.

பொருள் : சாதாக்கியத் தத்துவத்தையும் முத்தமிழ் மொழியையும் வேதத்தையும் பெரிதும் நுகர்ந்திருந்தேன். அவ்வாறு அப்பொருள்களை நுகர்ந்த காலத்தில் நன்மையைத் தருவதான உணவின்றி இருந்தேன். அதனால் மனம் தெளிந்து பாராமுகமாய் இருந்தமையின் உண்மைப் பொருளை உணர்ந்தேன்.

படைப்புக் காலத்தில் சதாசிவனுடைய தத்துவமாகிய சாதாக்கிய தத்துவத்தினின்றும் வெளிப்பட்டது தமிழ் வேதம் என்க. மித+அசனி = மிதாசனி = அளவாய் உண்போன்.

77. மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியன் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

பொருள் : மாலாங்கனே ! இத்தென் திசைக்கு யான் வந்த காரணம் என்னவெனில் நீலநிறமான் திருமேனியையும் நேர்மையான அணிகளையும் உடைய சிவகாமி அம்மையோடு, மூலாதாரத்தை இடமாகக் கொண்டு சதாசிவம் முடிய நடத்தருளும் ஐந்தொழிற் கூத்தினது இயல்பினை விளக்கும் வேதத்தை உலகினார்க்குச் சொல்ல வந்தேன்.

78. நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவன்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

பொருள் : நேர்மையான அணிகளையுடைய சத்தி மேலான சிவானந்த வல்லி என்னும் திருநாமம் உடையவள். என்னுடைய பிறவியின் காரணத்தை வேரொடு களைந்து ஆட்கொண்டவள். எல்லையற்ற சிறப்பினை யுடையவள். சிவபெருமானோடு திருவாவடுதுறையுள் எழுந்தருளியிருப்பவள். அவளுடைய திருவடியைச் சேர்ந்திருந்தேன். அதாவது இடையறாது நினைந்திருந்தேன்.

79. சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்துறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவ நாமங்கள் ஓதியே.

பொருள் : சிவமங்கைதன் பங்கனாகிய சிவபெருமானைக் கூடியிருந்தேன். சிவனுக்குச் சிறப்பாக உடைய திருவாவடுதுறைக்கண் கூடியிருந்தேன். அத்திருக்கோவிலின் மேல்பாலுள்ள திரு அரசமரத்து நிழலில் கூடியிருந்தேன். சிவபோதி - சிவன் கோவிலில் உள்ள அரசு. சிவனது திருநாமத்தைச் சிந்தித்தருந்தேன்.

80. இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.

பொருள் : இவ்வுடம்பினுள் எண்ணற்ற காலம் தங்கியிருந்தேன். இரவும் பகலும் அற்ற சுயம்பிரகாச வெளியில் தங்கியிருந்தேன். தேவர்களும் துதிக்கும்படியான இடத்தில் பொருந்தியிருந்தேன். என் குருநாதராகிய நந்தியின் இரு திருவடிக்கீழ் அமர்ந்திருந்தேன்.

81. பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னைநான் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநான் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யும் ஆறே.

பொருள் : பின்னும் தயங்கிநின்று ஏன் பிறவியைப் பெறுகிறார்கள் ? அவர்கள் முற்பிறவிகளில் நன்றாக முயன்று தவம் செய்யாதவர்களாம் நான் நல்ல தவம் செய்தமையின் தன்னைப் பற்றித் தமிழில் ஆகமம் செய்யும் வண்ணம் எனக்கு நல்ல ஞானத்தை அளித்து இறைவன் பிறவியைக் கொடுத்தருளினான். திருமந்திரம் - தமிழ் ஆகமம்.

82. ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகத்தனுள்
ஞானப்பால் ஊட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.

பொருள் : ஞானத் தலைவியாக உள்ள சத்தியோடு கூடிய சிவநகர் புகுந்து ஊனம் ஒன்றில்லாத ஒன்பது முடிவுகளுடன் கூடிய சந்திப்பில், தோத்திரமாகிய அபிஷேகத்தைச் செய்து இறைவனைப் பூசித்து நான் நல்ல அரசமரத்தில் கீழ் இருந்தேன். நந்தி நகர் - ஆவடு துறை.

83. செல்கின்ற வாறறி சிவன்முனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.

பொருள் : திருக் கைலாயத்திலிருந்து செல்லுகின்ற வழியில் சிவனை நினைந்து மன்மதனை வெல்கின்ற ஞானத்தில் மிகுந்த முனிவராக முப்பத்து முக்கோடி தேவர்கள் அசுரர்கள் மானுடர்கள் ஆகியோர் தம்மிடம் சூக்குமமாயுள்ள விண் வழியாக இவ்வுலகுக்கு யான் வந்தேன். சிவமுனி - சிவமுன்னி, சிவன் அடியினை நினைந்து.

84. சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே.

பொருள் : உள்ளத்தின் கண்ணே சிறந்து விளங்குகின்ற நூல்களில் மிகச் சிறந்த தாகச் சொல்லப்பெற்ற வேதத்தின் உடலாகிய சொல்லையும் அவ்வுடலுள் ஒத்திருந்து உற்பத்தியாகின்ற பொருளையும் இறைவன் கருணையால் எனக்கு இங்கு உணர்த்தி யருளினான்.

85. நான்பெற் றஇன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

பொருள் : நான் இறைவனைப் பற்றி நினைந்து அடைந்த இன்பத்தை இவ்வுலகமும் அடைவதாக ஆகாயத்தை இடமாகக் கொண்ட அறிவு சொரூபமான சிவத்தைப் பற்றிச் சொல்லப் போனால், அது உடலைப் பற்றி உணர்வாகவுள்ள மந்திரமாகும். அவ்வுணர்வை அடிக்கடி முயன்று பற்றிக் கொண்டால் சிவம் வந்து உங்களிடம் பொருந்தி விடும்.

86. பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின்று ஓதலும் ஆமே.

பொருள் : பிறப்பு இறப்பு இல்லாத நாதனை, நந்தி யென்னும் திருநாமம் படைத்தவனைச் சிறப்புகளோடு ஆகாய மண்டலவாசிகள் கரங்கூப்பித் தொழுது, நெஞ்சினுள் மறவாதவராய் மந்திரமாகிய மாலையால் பத்தியோடு பொருந்தியிருந்த ஓதவும் கூடும். சிவன் பிறவா யாக்கைப் பெரியோன் ஆதலின் பிறப்பிலி முதல்வன் எனப்படுவன். அவனை நந்தியென்னும் திருப்பெயரான் அழைப்பர்.

87. அங்கிமி  காமைவைத் தான்உடல் வைத்தான்
எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும்
தங்கிமி காமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.

பொருள் : உடலை அளித்த இறைவன் உடலில் அக்கினியை மிகாமல் அளவுடன் வைத்தருளினான். பூலோகம் முதலிய ஏழ் உலகங்களையும் அழியாதவாறு அக்கினியை வைத்தான். குழப்பமில்லாமல் இருக்கத் தமிழ் ஆகம மாகிய திருமந்திரத்தை வைத்தான். எல்லாப் பொருளும் இந்நூலின் கண் அடங்குமாறு செய்தான். உடல் அங்கி சடராக்கினி, கடல் அங்கி - வடவாமுகாக்கினி.

88. அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன்என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந்தானே.

பொருள் : இறைவனது திருவடியையும் திருமுடியையும் காண்போம் என்று கருதி முயன்ற பிரமனும் திருமாலும் ஆகிய இருவரும் உருவத்தைக் காணாது மீளவும் பூமியில் கூடி, அடி கண்டிலேன் என்று திருமால் கூற, திருமுடியைக் கண்டேன் என்று பிரமன் பொய்யை உரைத்தான்.

89. பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே

பொருள் : இடபமும் மானும் மழு ஆயுதமும் பிரிவில்லாமல் கொண்ட மேலான பரம்பொருளின் கற்பனையாகவுள்ள இவ்வுலகில் எங்களது குருநாதனாகிய நந்தி ஒழிவனைக் கொடுத்து அடியவன் முடிமீது தன் மேலான திருவடியையும் சூட்டி யருளினான். பெற்றம் - அறம், மான் - கருணை, மழு - வீரம் இவைகளை உணர்த்தும் சரம் - அசைவன, அசரம் - அசையாதன.

90. நேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

பொருள் : அறியப்படும் பொருளையும் அறிகின்ற அறிவையும் மாயையின் விவரங்களையும், சுத்த மாயையில் விளங்கும் பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை ஆகிய சத்தியின் கூட்டத்தையும் அவ்வித சத்திகளில் விளங்கும் சிவத்தையும், சொரூப சிவத்தின் பிரபாவத்தையும் ஆகிய முழுவதையும் இந்நூலில் விளக்கியுள்ளேன். மாயை - அசுத்த மாயை; மாமாயை - சுத்த மாயை. பரைஆயம் - சத்தியின் கூட்டம்; அகோசர வீயம் - சொரூப சிவன்.

91. விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானம் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பிற் கயிலை வழியில்வந் தேனே.

பொருள் : அகோசர விந்து நிலையைச் சொல்லப் போனால் அதுபரம் என்று பேருடன் கூடிய அறிவு மயமான சோதியாகும். அவ் ஆனந்த நந்தி எம்பெருமான் அளவில்லாத பெருமையுடையவன். அசைவற்றிருக்கும் அந்த ஆனந்த நடராஜமூர்த்தி யினது ஆணையின் வண்ணம் சிறப்பு மிக்க திருக்கயிலையினின்றும் இவ்விடம் வந்தேன். நந்தி மரபில்யான் வந்தேன் எனினுமாம். சொற்போந்து உபதேசம் பெற்று. கயிலை வழி  நந்தி பரம்பரை.

92. நந்திஅரு ளாலே மூலனை நாடிப்பின்
நந்திஅரு ளாலே சதாசிவன் ஆயினேன்
நந்திஅரு ளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்திஅரு ளாலே நானிருந் தேனே.

பொருள் : நந்தியாகிய சிவபெருமான் திருவருளால் மூலன் உடம்பினுள் புகுந்தேன். பின்னும் அந்த நந்தியின் அருளால் சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் ஆகலின் இத்தமிழ் ஆகமத்தை ஓதினேன். அவன் அருளாலேயே திருவடிப் பேரின்பமாகிய அம்மையினை இம்மையே பெற்றுள்ளேன். அந்த நந்தியங் கடவுள் திருவருளால் இவ்வுலகத்து இருந்துள்ளேன்.

93. இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே.

பொருள் : அளவில்லாத மந்திரங்களில் சிவன் எழுந்தருள்வன். பொருந்தியுள்ள மூலத்திடத்தும் ஓம் என்னும் மூலமந்திரத்தினிடத்தும் இருப்பன். ஞாயிறும் திங்களும் ஒளி வீசும்படி ஆருயிர்களின் உடம்பகத்துக் காணும் மயிர்க்கால் தோறும் அருள் ஒளி தோன்றும். அதனால் அங்குச் சிவன் உறைந்தருள்வன். அருகுகின்ற என்பது அருக்கின்ற எனத்திரிந்து நின்றது அருகுதல் - பொருந்துதல்.

94. பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.

பொருள் : எந்நாளும் அவன் அருள் துணையால் நிகழும் பேரன்பால் நந்தியங் கடவுளைச் சிவசிவ என்று இடையறாது ஏத்துகின்றேன். இரவும் பகலும் நெஞ்சத்து அவனையே இடையறாது நினைதலாகிய பரவுதலைச் செய்கின்றேன். அவன் திருவடியைப் பெறவே முயல்கின்றேன். அவன் ஒரு பெற்றியாய் என்றும் அழியா அறிவொளியாய் எவற்றையும் ஒளிர்விக்கும் ஆற்றல் ஒளியாய்த் திகழும் ஓங்கொளி வண்ணன். எம் தலைவன். திருமூலர் சோதிப் பிழம்பாய் உள்ள இறைவனை எப்போதும் நினைந்தும் பேசியும் வந்தார்.

6. அவை யடக்கம்

(அவையடக்கம் கூறலாவது அண்ணலின் பெருமையும் தன் சிறுமையும் கருதி அடக்கமாகக் கூறுதல்)

95. ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.

பொருள் : எம் சிவபெருமானது பெருமையை அறிவார் யார் ? அவனது அகலத்தையும் நீளத்தையும் கொண்ட பரப்பினை யாரே அறிய வல்லார் ? தனக்கென நாமமும் உருவமும் இல்லாத பெரிய சுடரினது வேரினையும் அறியாது அதைப் பற்றிப் பேசுகின்றேன்.

96. பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே.

பொருள் : சிவனது புகைழப் பாடுகின்றார் நெறியில் சென்று பாட அறியேன். இனி பக்தி மேலீட்டான் ஆடுகின்றவர் நெறியில் சென்று ஆடவும் அறியேன். போகத்தினால் நாடுகின்றவர் நெறியில் சென்று நாடவும் அறியேன். ஞானத்தால் தத்துவ விசாரணை செய்து ஆராய்கின்றவர் நெறியில் நின்று ஆராயவும் அறியேன். இவை நான்கும் முறையே சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நான்மைத் திருத்தொண்டின் குறிப்பாகும்.

97. மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.

பொருள் : நிலைபேறுடைய வேத வாக்கினாலும், ஓதுபவர் சுரத்திலுள்ள இனிய நாத ரூபமாக எழுகின்ற ஈசனைச் சூக்குமத்திலிருந்து தூல உலகைச் சிருட்டித்த நான்முகனும் எண்ணிக் கொண்டிருக்கும் அப்பெருமானை நம்மால் உணர முடியுமோ ? முடியாது. வாய்மொழி - வேதம்.

98. தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
இத்துடன் வேறா யிருந்து துதிசெயும்
பத்திமை யால்இப் பயன்அறி யாரே.

பொருள் : சிவபெருமான் குருவாய் எழுந்தருளி வந்து தத்துவ ஞானத்தை உரைத்தது திருக் கைலையின் அடிவாரத்திலாகும். வீடு பேற்றினை விரும்பியிருந்த முனிவர்களும் தேவர்களும் இத்தத்துவ ஞானத்தை வேறாக இருந்து ஓதும் தன்மையால் இதன் பயனை அறிய மாட்டாதவர் ஆயினர்.

7. திருமந்திரத் தொகைச் சிறப்பு

(திருமந்திரப் பாடல்களின் எண்ணிக்கையும் பெருமையும்)

99. மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
க்ஷகாலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.

பொருள் : திருமூல நாயனார் அருளிச் செய்த மூவாயிரம் தமிழும் உலகம் உய்ய நந்தி அருளியதாகும். ஒவ்வொரு நாளும் வைகறைப் பொழுதிலும் மற்றைய பொழுதுகளிலும் சிவக்கோலத்துடன் எழுந்து பொருளுணர்ந்து ஓதுவார் திருவருள் கைவந்தவராவர்.

100. வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே.

பொருள் : திருமந்திரமாகிய நல்லு நூலில் வைத்த தன்மை ஒன்பது தந்திரவகையாம். இம்மூவாயிரமும் முடிவான முத்தி நிலையைக் கூறுவது புத்தி பூர்வமாகச் சொன்ன மூவாயிரம் ஆகிய இவைதாம் பொதுவும் சிறப்புமாக அமைந்து ஓதுவார்க்கு நன்மை பயக்கும் முதல் ஐந்து தந்திரங்கள் பொது. பின் நான்கு தந்திரங்கள் சிறப்பு, நான்கு பொது, ஐந்து சிறப்பு என்ற கருத்தும் நிலவுகிறது.

8. குருமட வரலாறு (அஃதாவது மூலன் மரபு உரைத்தல்)

101. வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரை
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

பொருள் : ஏழு திருமடங்களும் நிலைபெற்ற நன்னெறியினைப் போதிப்பனவே. அவற்றுள் சிறந்து காணப்படுவது திருமூலர் திருமடமாகும். அதன்வழி இவ் ஒன்பது தந்திரங்களும் அவற்றிற்குரிய மூவாயிரம் திருமந்திரமும் வெளிப்போந்தன. இவற்றைத் திருமூலராகிய சுந்தரர் அருளிச் செய்தார். அதனால் இதற்குச் சுந்தர ஆகமம் எனவும் ஒரு திருப்பெயருண்டு.

102. கலந்தருள் காலாங்கர் தம்பால்அ கோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.

பொருள் : இறைவன் திருவருளால் மெய்யுணர்வு கைவந்த வழிவழித் தவத்தோர் காலாங்கர், அகோரர், மாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர், போக வேதர், திருமூலர் என ஏழு தமிழ் முனிவர் ஆவர், நிராமயம் - குற்றமின்மை.  இவ்வேழு மாடங்களும் சித்த மார்க்கத்தைப் போதிப்பன.

9. திருமூர்த்திகளின் சேட்டகனிட்ட முறை

(அஃதாவது, மும்மூர்த்திகளாகிய பிரமன், விஷ்ணு, ருத்திரன் ஆகியோரது இயல்பு)ஜியேஷ்ட-சேட்ட, கனிஷ்ட-கனிட்ட, மூத்த இளைய என்பனவாம்.

103. அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரிஅயற்கு ஆமே.

பொருள் : எல்லையில்லாத இளமைப் பருவமும், எல்லையில்லாத அழகும், எல்லையற்ற இறுதியும், அளவு செய்கின்ற காலமும், ஆகிய நான்கையும் நன்கு ஆராயின், ஆன்மாக்களுக்குச் சுகத்தைச் செய்யும் சங்கரன் ஒருவாற்றலும் குறைவு இல்லாதவன். தன் அடியாரால் சொல்லப் பெறும் எல்லையற்ற பெருமை யெல்லாம் திருமாலுக்கும் பிரமனுக்கும் ஆகுமோ ? ஆகாது.

104. ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித்து உலகம் பிணங்குகின் றார்களே.

பொருள் : மூலாதாரத்திலுள்ள ருத்திரனும், நீலமணி போன் வண்ணத்தையுடைய திருமாலும், சிருஷ்டிக்குக் காரணமாயுள்ள சுவாதிட்டான மலரில் இருக்கும் பிரமனும், ஆராயுமிடத்து இம் மூவரும் தொடர்பினால் ஒருவரே என்று துணியமாட்டாராய் வேறு வேறாகக் கருதி உலகவர் மாறுபட்டுப் பேசுகிறார்களே. என்னே இவரது அறியாமை !

105. ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது
நீசர் அதுஇது என்பர் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூர்அறிந் தார்களே.

பொருள் : சிவன் இருவினைக்கு ஏற்ப உடம்பினைப் படைத்துக் காத்து அழிக்கும் முத்தேவர் ஆட்சிக்கு அப்புறம் உள்ளான். அம்மூவர் உண்டாவதற்குக் காரணமான மூலப் பொருளாகிய சிவனே உலகில் பெரிய தெய்வமாகும். மாசுடையோர் தெய்வர் அது என்றும் இது என்றும் மயங்குவாராய்ப் பிதற்றுகின்றனர். மாசில்லாத தூய்மை யுடையயோர் மூலமாகிய சிவனே பரம்பொருள் என்று உணர்ந்திருந்தனர்.

106. சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடுஒன்று ஆகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.

பொருள் : சிவனாதிய முதல்வன் மூவராகவும், ஐவராகவும் திருச்சிற்றம்பலமான சபையில் சிறந்து விளங்குவான். அச்சபையானது ஆறு ஆதாரங்களும் மகேசுவர சதாசிவம் பொருந்திய இரண்டும் கவிழ்ந்த சகஸ்ரதளம் ஒன்றும் நிமிர்ந்த சகஸ்ரதளம் ஒன்றுமாகப் பத்தாகும். அவற்றில் விந்தும் நாதமும் விளங்க அந்நிலையில் சபை முதலாகவுள்ள அவனுக்குச் சங்கரன் என்பது பெயராகும்.

107. பயன்அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர்அவ் வானவர் ஆலே.

பொருள் : சீவர்கள் அடையும் பயனை அறிந்து சிந்திக்கும் அளவில் பிரமனும் திருமாலும் சிவனுக்கு வேறானவர் அல்லர். அவர் மூன்று கண்களையுடைய சிவனது வழி நின்று முத்தொழிலைச் செய்பவராம். ஆதலின் அத் தேவரால் மேன்மை அடையுங்கள். வயன் - பயன்.

108. ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றேனே.

பொருள் : அழியாத தன்மை பெற்ற தேவர்கள் சூழ்ந்துள்ள திருச்சபையில் பால் போன்ற நிறமுடைய பெருமானை நான் வணங்கவும், நீ திருமாலுக்கு முதல் தொழிலாகிய சிருஷ்டி செய்யும் பிரமனுக்கு ஒப்பாவாய். ஆதலின் பூவுலகில் போதகாசிரியனாக இருந்து திருவடி ஞானத்தைக் கொடுத்தருள்க என்று அருளினான். பூவுலகில் போபோதாகாசிரியனாக இருந்து அருளைப் பரப்புக என்று இறைவன் திருமூலருக்கு அருளினான்.

109. வானவர் என்றும் மனிதர்இவர் என்றும்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் வேறில்லை
ஊனர்ந் தோரை உணர்வது தானே.

பொருள் : தேவர்கள்  என்றும் மனிதர்கள் என்றும் உள்ள இவர்கள், தேன் துளிர்க்கும் கொன்றை மலரையுடைய சிவனது அரளால் அன்றி, தாமே பொருந்தி, உணரும் தெய்வம் வேறொன்றும் இல்லை. மூவராகவும் ஐவராகவும் இவர்களின் வேறாகவும் உடலில் விளங்கும் சிவன் ஒருவனே என்பதை அறிவதாகும்.

110. சோதித்த பேரொளி மூன்றுஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித்து அவரை பிதற்றுகின் றாரே.

பொருள் : ஒளி விடுகின்ற பேரொளிப் பிழம்பாகிய சிவன், பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராகவும், பிரமன், விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐவராகவும் நின்ற தொன்மைக் கோலத்தை அறியாதவராகிய மூடர்கள் முறைமையாக உருத்திரன் திருமால் பிரமன் என்று வேறு வேறாகக் கருதி அவர்களைப் பேசுகின்றார்களே ! என்னே அவரது பேதைமை.

111. பரத்திலே ஒன்றாய்உள் ளாய்புற மாகி
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.

பொருள் : மேன்மையான நிலையில் ஒப்பற்ற சிவமாய், எல்லாவற்றிலும் உள்ளும் புறமுமாகி, விருப்பத்தை உண்டாக்குவதில் திருமாலாய் சிருட்டித்தலில் பிரமனாகி, தகுதிக் கேற்ப ஒருவனே பலப்பல தேவராகத்தான் விளங்காதவாறு மறைவாக ருத்திரனாக நின்று சங்காரத் தொழிலையும் செய்வான்.

112. தானொரு கூறு சதாசிவன் எம்இறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொடு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே.

பொருள் : சிவபரம்பொருளின் ஒரு கூறாகிய சதாசிவனாகிய எம் தலைவன், ஆகாயக் கூற்றில் பொருந்தி எல்லாத் தத்துவங்களிலும் ஊடுருவியும் வேறாயும் உள்ளான். அவனே உடலுள் பிராண ரூபமாகவுள்ள தலைவனாவான். அவனது மற்றொரு கூறு அசைவு ரூபமாக உள்ளது. சலமயன் தண்ணியனுமாம்.

10th Thirumurai | Thirumoolar | Thirumandiram | Panniru Thirumurai | திருமந்திரம் | முதல் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்

முதல் தந்திரம் (காரண ஆகமம்)

1. உபதேசம்

(குரு சீடனுக்குக் கூறும் வாசகம் உபதேசமாகும். குரு உபதேசத்தால் அருட்கண் விழிப்படையும் என்க)

113. விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே

பொருள் : இறைவர் பரம ஆகாயத்தினின்று இறங்கித் தாம் ஆட்கொள்ளத் திருவுளம் பற்றியிருக்கும் ஆன்மாக்களது மலபரிபாகத்திற்கு ஏற்றவாறு திருமேனி தரித்துத் தமது குளிர்ந்த பாதத்தை மலப் பிணிப்பு மீண்டும் அணுகாது பாதுகாக்கைக்குத் தலைக்காவலாய் வைத்து உயிர்க்கு உயிராய் நின்று மனத்தைக் கசியச் செய்து உவமையற்ற திருவருட் பார்வையால் முத்தி நெறிகளைக் குறிப்பாற்காட்டிப் பாசத்தை நீக்கினார்.

114. களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.

பொருள் : நெற்றிக் கண்ணாகிய எமது சிவபெருமான் மலப்பிணிப்பால் மூடப்பட்டிருந்த ஆன்மாக்களின் அருட் கண்ணைத் திறக்கச் செய்து, பாசத்தை அறுத்து அஞ்ஞான இருள் அணுகாத தனது அருள் ஒளியைக் காட்டிப் பளிங்கின் இயல்பதாகிய ஆன்மாவில் சிவமாகிய பவளத்தைப் பதித்தான்.

115. பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணு கிற்பசு பாசம் நிலாவே.

பொருள் : இறைவனும், பாசத்தாற் கட்டுண்ட ஆன்மாவும், பாசமும் என நூல்கள் கூறும் முப்பொருள்களில் இறைவனைப் போலவே ஆன்மாவும் பாசமும் அனாதியாம். இம்முப்பொருள்களும் அனாதியாயினும் பசுவும் பாசமும் முதல்வனைச் சென்று அணையவாம். ஆனால் திருவருள் அணுகில் பசுத் தன்மையும் பாசமும் நிற்க மாட்டா. (நீங்கிவிடும் என்பதாம்.)

116. வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயில்இருந்த குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய்எழுஞ் சூரிய னாமே.

பொருள் : மூங்கிலின் கண் நிறைந்த நெருப்பைப் போல் எமது தேகமாகிய கோவிலிலும் வீற்றிருக்கும் சிவபெருமான், தாயைவிட அதிக அன்போடு, எம்மைப் பந்தித்திருக்கும் மும்மலங்களையும் போக்கும் கிருபா மேகம் போன்ற ஞான ஆதித்தியனாம். (நந்தியெம் பெருமான் பக்குவம் பெற்ற நிலையில் தானே தோன்றிச் சீவரது மல இருளைப் போக்குவான் என்ற கருத்தும் கொள்க)

117. சூரிய காந்தமும் சூழ்பஞ்சம் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சாநிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.

பொருள் : சூரியகாந்தக் கல்லானது தானே அதைச் சூழ்ந்திருக்கும் பஞ்சைச் சுடமாட்டாது. அதுபோல் ஆன்மா ஆனவன் தானே தன்னைப் பந்தித்திருக்கும் மலங்களைச் சுடமாட்டான். ஞாயிற்றின் சந்நிதி மாத்திரையானே சூரிய காந்தக் கல்லின்கண் உள்ள நெருப்பு விளங்கி அதைச் சூழ்ந்திருக்கும் பஞ்சைச் சுடுவதுபோல் ஆசாரிய மூர்த்தியாய் எழுந்தருளிவரும் சிவபெருமான் சந்நிதி மாத்திரையான் ஆன்மாவின் கண் ஞான நெருப்பு விளங்கி அவனைப் பந்தித்திருக்கும் மலத்தை நாசம் செய்யும் !

118. மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித்
தலங்கள்ஐந் தால்நல் சதாசிவ மான
புலம்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலன்களைந் தான்உள் நயம்தான் அறிந்தே

பொருள் : ஐந்தாவது அண்டத்தில் வீற்றிருந்து சதாசிவன் என்னும் திரு நாமத்தையுடையவனாய் ஐந்தாவது அண்டத்தில் இருப்பவனாயினும் தேகமாகிய அம்பலத்திலும் நடனம் செய்பவனாகிய இறைவன் பஞ்ச கலா சோதனையால் ஆன்மாக்களின் அதிதீவிர பக்குவத்தை யறிந்தே பிறவித் துன்பத்துக்கு ஏதுவாகிய மலங்கள் ஐந்து பிரகாரமாயிருக்குமென்று விளக்கி அவைகளை நாசம் செய்து முத்தி யடையச் சாதனமாக ஒரு லட்சியத்தைக் காட்டுவான். (நந்தி - இறைவன்)

119. அறிவுஐம் புலனுட னேநான்ற தாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போல
குறியறி விப்பான் குருபர னாமே.

பொருள் : வழியறியாது கடற்சூழலில் அகப்பட்டு மயங்கும் ஒருவனைப் போல் ஆன்மா  ஐம்புலனிற் சுழன்று மழக்கமெய்தி நிற்கும். அவனுக்குச் சிற்றறிவாகிய ஆன்மபோதம் பேரறிவாகிய இறை விறைவில் அழிந்தது போல் ஆகும்படி முத்தி அடைதற்குச் சாதனமாகப் பரம குருவாகிய சதாசிவன் ஒரு லட்சியத்தைக் காட்டுவான்.

120. ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பலகர் ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்புஎரி சார்ந்தவித் தாமே.

பொருள் : பசுவின் பாலினிடமிருந்து நீரைப் பிரிக்கின்ற அன்னப்பறவை போல, சிதா காயப் பெருவெளியில் ஆடுகின்ற அம்பலவனது ஒப்பற்ற ஆட்டமே சீவர்களிடமிருந்து வினையைப் பிரித்து விடும். அதனால் தீமை காரணமாகக் கருவி கரணங்களில் பொருந்திய பாவ புண்ணியங்கள் எல்லாம் ஏழு பிறவியிலும் வறுத்த வித்து முளைக்காதது போலப் பயன் தாராவாம்.

121. வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட டிருப்பர் சிவயோகி யார்களே.

பொருள் : பிறவித் துன்பத்துக்கு வித்தாகிய புலன் கரணங்களின் சக்தியைக் கெடுத்து வியாக்கிரபுரமாகிய புருவ மத்தியில் சுத்த அவத்தையில் துரிய நிலை எய்திச் சகல பற்றுக்களும் அற்றுப் புலன்களும் உயிரும் உடம்போது பொருந்தி நிற்பினும் அவைகளால் உபதேசிக்கப் பெறாது சிவயோகிகள் செத்தவர்களைப் போல் இருப்பார்கள்.

122. சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துன்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாராது அவன்பதிபோக
நவயோக நந்தி நமக்களித் தானே.

பொருள் : சிவயோகம் என்பது சித்துப் பொருள்கள் இவை சடப் பொருள்கள் இவை என்று விவேகத்தினால் அறிந்து சிரசால் சென்று அடையும் சிவராஜ யோகத்தை அறிந்து அங்குக் காணும் சிவவொளியுள் புகுந்து நின்று, வேறு வகையான தீமைதரும் யோகத்தை மேற்கொள்ளலாம் அவனுடைய பதியாகிய பரமாகாய மண்டலத்தில் நின்று உய்யும்படியாக தோழமை நெறியை நந்தியெம் பெருமான் நமக்கு அளித்தருளினன்.

123. அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே.

பொருள் : தான் எவ்விடத்தும் நீக்கமின்றி நிற்கும் உண்மையையும் வானோரும் அறியாத சிவலோகத்தையும் கனக சபையின் கண் நடிக்கும் சீபாதத்தையும், பேரின்பத்தை அளிக்கும் சிதாகத்தையும் சிவபெருமான் கடாட்சித்தார்.

124. வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே.

பொருள் : மனவெளியில் பரவெளியும் ஆன்மாக்களின் அன்பில் சிவபிரான் அன்பும் ஆன்ம பிரகாசத்தில் அருட்பிரகாசமும் போய்க் கலந்த விதத்தை அறிந்தவர்களே சிவசித்தர்களாம்.

125. சித்தர சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவுந்தம் முன்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.

பொருள் : சிவசித்தர்கள் சிவலோகத்தை இப்பூமியின் கண்ணே தெரிசித்தவர், நாத நாதாந்தங்களையும் தம்முள் உணர்ந்தவர்கள். பிறப்பு இறப்பு, மலர், நோய் அற்றவர்கள், மேம்பாடு உடைய பரமுத்தி அடைந்தவர்கள். அவர்கள் முத்தியடைந்த நிலை முப்பத்தாறு தத்துவங்களையும் சோபானமாகக் கொண்டு கடந்து சென்று அவைகளுக்கு அப்பாற்பட்ட சிவத்தை அடைந்ததாகும் சோபானம் - படிக்கட்டு.

126. முப்பதும் ஆறும் படிமுத்தி ஏறியாய்
ஒப்பிலா ஆனந்தத்து உள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து
அப்பரி சாக அமர்ந்திருந் தாரே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களையும் முத்திக்கு ஏற சோபானமாய் உள்ள படிகளாக கொண்டு அவைகளின் வழி சென்று அவைகளுக்கு அப்பாலுள்ள உவமையற்ற பேரானந்தமாகிய சோதியிற் கலந்து வாக்குக்கு எட்டாத சிவபெருமானைத் தரிசித்து, தம் இயல்பையும் உணர்ந்து சிவவியாபகத்துள் அடங்கிச் சிவமேயாய்ச் செயலற்று இருப்பார்கள் சிவ சித்தர்கள்.

127. இருந்தார் சிவமாகி எங்கும் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்கு
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே.

பொருள் : சிவசித்தர்கள் சிவமாந்தன்மை எய்தி எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பர். எல்லாம் சிவன் செயல் என்று யாவற்றையும் தரிசித்துக் கொண்டு இருப்பர். மூன்று காலங்களின் தன்மைகளை உணர்ந்து இருப்பர். அவர்கள் தங்களுக்கு என் ஒருசெயலின்றி இருப்பர்.

128. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடித்திடஞ்
சோம்பர் கண்டார்அச் சுருதிக்கண் தூக்கமே

பொருள் : மேலை மந்திரத்தில் ஓதப்பெற்ற சோம்பல் நிலை எய்திய சிவயோகிகள் இருப்பது பரநாத வெளியில்; அவர்கள் நிலைபெற்றிருப்பது ஒளியாய் இருக்கின்ற கனகசபையின் கண்ணே; அவர்கள் அறிவு இருப்பது சுருதிகட்கு அப்பாற்பட்ட இடத்தில்; அவர்கள் சுருதிகளை ஓதி உணர்ந்தது ஆனந்த நித்திரை எய்து வதையே சித்தர்கள் நாதாந்த நிலையில் பேரின்பம் எய்தியிருப்பர்.

129. தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.

பொருள் : தங்கள் உள்ளத்தே சிவலோகத்தையும், சிவத்தோடு அத்து விதமாய் பொருந்தி நிற்பதாகிய யோக நிலையையும் இவ்வாறு பொருந்தி நிற்றலால் அனுபவிக்கும் சிவபோகமாகிய பேரின்பத்தையும் தூங்காமல் தூங்குவதாகிய ஆனந்த நித்திரையில் கண்டார்கள். இவர்கள் எய்திய நிலையானது மனவாக்குக்கு எட்டாதது. ஆதலான் எவ்வாறு சொல்வது ?

130. எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வாறு அருட்செல்வன் ஆதிஅரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே

பொருள் : தன் அறிவுக்கு எட்டியபடி இறைவனை எந்தெந்த விதமாக எண்ணி ஒருவன் வணங்குகிறானோ, அந்தந்த விதமாய் நின்று பயனை அளிப்பவன் ஆதிபகவனே. அவன் தான் உவமையற்ற கனக சபையின் கண்ணே உமாதேவிகாண நடனம் செய்யும் சிதாகாயத்தில் செழிப்பாய் பிரகாசிக்கும் மாணிக்க மாணியாம். சிவபெருமான் ஆன்மாக்களின் பக்குவத்திற்கேற்ப அருள் புரிவான்.

131. மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப் பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே.

பொருள் : மாணிக்க மணியுள் மரகதச் சோதியாயும் மரகத மாடமாயும் விளங்கும் உயர்ந்த கனக சபையின் கண்ணே உமாதேவி காண நடனம் செய்யும் சிதாகாயத்தில் செழிப்பாய் பிரகாசிக்கும் மாணிக்க மணியாம். சிவபெருமான் ஆன்மாக்களின் பக்குவத்திற்கேற்ப அருள் புரிவான்.

132. பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே

பொருள் : இவ்வுலகத்தில் தங்களை விட்டு நீங்காத ஞான நெறியையும் இவ்வுலகத்திலும் இன்னும் பிறவாமையாகிய மேலான பயனையும், ஒப்பற்ற கனக சபையினின்றும் நீங்காத முத்திப் பேற்றையும், உலகத்தாரோடு பேசாத பெருமையும் ஆகிய இவைகளை, முதல்வனைக் கனக சபையின்கண் வழிபட்டவர்கள் பெற்றார்கள்.

133. பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையும் கேட்டிருந் தார்புரை அற்றே.

பொருள் : எம் சிவபெருமானைப் போன்று அண்டத்திலும் அணுவிலும் நிறைந்து, அவற்றின் அருமையும் பெருமையையும் ஒரு சேர உணர்ந்து அறிபவர் யார் ? அந்தச் சாதகர் மன ஒருமைப்பாட்டுடன் ஆமையைப் போல ஐம்பொற்களையும் புறத்தே செல்லாது உள்ளுக்கு இழுத்துக் கொண்டு பெருமை சிறுமையாகிய இரண்டையும் குற்றமின்றிச் சாதகர்கள் உணர்ந்திருந்தார்கள்.

134. புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலத்தசத் தாமே.

பொருள் : குற்றமற்ற பாலில் நெய் கலந்தாற் போல் சலனமற்ற சிந்தையுள் அத்துவிதமாய் நிற்கும் சற்குருவானவர் சொல்வது யாதெனில் பேச்சு அற்று மௌன நிலையில் நிற்கும் தெளிவடைந்த உயிரானது வாழுதற்கு இடமாகிய உடம்பு நாசமானால் எல்லையில்லாத அருட் சோதியில் கலந்த சத்தாகும்.

135. சத்தமுதல் ஐந்தும் தன்வழித் தான்சாரில்
சித்திக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித்து ஆண்டுகொள் அப்பிலே.

பொருள் : சத்தமாதி விஷயங்கள் ஆன்மாவை உபாதிக்காமல் தங்கள் இனமாகிய அசத்தைச் சேர்ந்த வழி உணர்த்த உணரும் சித்தாகிய ஆன்மாவுக்கு உணர்த்தும் சித்தாகிய இறைவன் திருவடியைவிடச் சேரும் இடம் வேறு உண்டோ ? இல்லை. இதுபோல் சிதாகாயத்தில் சுயம் சோதியாகிய திருவருளில் ஆன்மப் பிரகாசம் சேரும். இவ்வுண்மை கடல் நீரில் கண்டு கொள்க.

136. அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிஅத ஒன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

பொருள் : கடல்நீரில் நுட்பமாயுள்ள உவர்ப்பானது சூரியனது வெப்பத்தால் உப்பு என்னும் பேரைப் பெற்று உருவத்தை எய்தியதானது மீளத் தண்ணீரில் சேர்ந்த வழி அதனோடு அத்துவிதமாய்க் கலந்து நிற்றல் போல் ஆன்மா ஆனவன் சிவபிரான் விவாபகத்துடன் அடங்கி அத்துவிதமாய் நிற்பான்.

137. அடங்குபேர் அண்டத்து அணு அண்டம் சென்றங்கு
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே.

பொருள் : பெரிய உலகில் நிறைந்துள்ள சட அணுக்கள் ஆகாயத்தில் சென்று அங்கு வேறிடத்தைப் பற்றி நின்றதில்லை. இதுவல்லாமல் வேறு உண்மை யுளதோ ? இல்லை. இது போல் ஒவ்வொரு உடலின் கண்ணும் உள்ள ஆன்மாவும் முத்திக்கரை எய்தின் சிவபிரான் திருவடியையே பற்றி உறுதியாய் நிற்கும்.

138. திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகம்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.

பொருள் : நூல்களை ஆராய்ந்து அறியின் சிவத்தன்மை எய்துதல் என்பதும், ஆராய்ந்தறிந்த விஷயத்தைச் சிந்தித்துப் பார்க்கில் சிவலோகம் என்பதும், சிந்தித்து உணர்ந்ததைச் சொல்லில் ஆன்மாக்கள் முடிவிற் சென்றடையும் குறிக்கோள் ஆவதும், புகலிடமாவதும், முப் பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்ந்தவர்களுக்குச் சிவபிரான் திருவடியே என்பதாம்.

139. தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருமேனி செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.

பொருள் : குருவின் திருமேனியைத் தரிசித்தலும், அவர் திருநாமத்தை விதிப்படி உச்சரித்தலும், அவர் அருளும் உபதேசமொழியைக் கேட்டலும், அவர் உருமாகிய மந்திரத்தைச் சிந்தித்தலுமே, கலங்கிய சமாதி நிலையைத் தெளியச் செய்வனவாம்.

140. தானே புலன்ஐந்தும் தன்வசம் ஆயிடும்
தான் புலன்ஐந்தும் தன்வசம் போயிடும்
தா÷ன் புலன்ஐந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தன்னைச் சந்தித்தே

பொருள் : ஆன்மாவானவன் ஐம்புலன்களின் வேறாவான் தன்னைக் கண்டு எமது இறைவனாகிய சிவபெருமானைத் தரிசித்தால் ஐம்புலன்களும் அவன் வசமாகி அவன் செலுத்தும் வழியிற்புக்கு அவன் திருப்பும் வழிகளிலே திரும்பும். அவனை மீறி ஒருசிறிதும் சேட்டியா. (ஆன்மா தத்துவங்களை விட்டுச் சிவத்தைப் பொருந்தின போத புலன்களின் சேட்டை அறும்.)

141. சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் பாதமே.

பொருள் : ஐம்புலன்களும் என் வசப்படியன் நான் தரிசிப்பது சிவபிரான் திருவடியாகிய திருவருளையே; சிந்தனை செய்வது அவர் செவ்விய திருமேனியாகிய பஞ்சாட்சரத்தையே; என் வாக்காற் புகழ்வது அவர் திருநாமத்தையே என்புத்தியை விட்டு நீங்காமல் நிற்பது அவர் அருளிய சிவஞான உபதேசம் இவையன்றி வேறொன்றையும் நான் காண்பதில்லை.

142. போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினர்
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதத் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.

பொருள் : சிவஞானத்தை அருளும் எமது இறைவனாகிய நின்மல சிவபிரானை ஞானகிகள் தங்கள் அறிவின் கண்ணே வைத்து, அவன் திருநடனத்தால் கண்கள் இன்பம் எய்தவம், தேவம் துதிக்கவும் மேலான் சிதாகாயத்தை அடைந்தார். (குரு நாதன் உபதேசப்படி நந்தியை அறிவினில் தியானித்தவர் நாத சம்மியம் கிட்டி ஆகாய மண்டலத்தில் விளங்குபவர்).

2. யாக்கை நிலையாமை

(யாக்கை நிலையாமையாவது உடம்பினது நிலையாமை. திருவள்ளூர் போன்று நிலையாமை கூறிப்பின் அறம் கூறுவார் ஆசிரியர்)

143. மண்ணொன்று கண்டீர் இருவினைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீயனைச் சேர்ந்து
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ஆவபோல்
எண்ணின்ற மந்தர் இறக்கின்ற வாறே.

பொருள் : மாயையாகிய மண் ஒன்று உள்ளது. அதனின்றும் தோன்றி குரு வினையால் விளைந்த உடம்பாகிய பாத்திரம், அப் பாத்திரம் சுடப்பட்ட போது வலிமையாகக் காணப்பட்டிருந்தது. சுடப்படாத பாண்டம் ஆகாயத்திலிருந்து மழைநீர் பெய்த போது கரைந்து மண்ணாவது போல் எண்ணற்ற மக்கள் உடம்பு அழிந்து கெடுகின்றனர்.

144. பண்டம் பெய்கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.

பொருள் : வினை போகங்களை அளவிட்டு வைக்கப்பட்ட உடம்பு வினை போகங்களை அனுபவித்து நீங்கியபின், சுக போகங்களை உடனிருந்து அனுபவித்த மனைவியும் மக்களும் கூட வரமாட்டார். உயிரோடு வாழ்ந்த காலத்துக் கடைப் பிடித்த விரதத்தின் பயனும் ஞானமும் அன்றி, வேறு எவையும் இறந்தோருடன் கூடச் செல்வது இல்லை.

145. ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

பொருள் : உடல் விழுந்தபின் எல்லாம் ஒன்றுகூடி ஓலமிட்டு அழுது, அதுவரையிலுள்ள பெயரை மாற்றிப் பிணம் என்ற பெயரைச் சூட்டி, தூதுவளை நிறைந்த சுடுகாட்டில் கொண்டு போய்க் கொளுத்திவிட்டு, இவ்வண்ணம் ஒருவர் இருந்தார் என்ற எண்ண மின்றி நீரினில் மூழ்கிவிட்டு நீங்கினார்கள்.

146. காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள
பாலுள் பருங்கழி முப்பத்தி ரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புகஅறி யாதே.

பொருள் : உடம்பாகிய வீட்டுக்குக் கால்கள் இரண்டு. உச்சி உத்தரமாகிய முதுகுத்தண்டு ஒன்றுள்ளது. பக்கத்தில் போடப்பட்டுள்ள விலா எலும்பாகிய சாற்றுக் கழிகள் முப்பத்திரண்டு உள்ளன. இவை யெல்லாம் மூடப்பெற்ற தசையாகிய கூரை ஒரு காலத்தில் பிரியும். பிரிந்தால் உயிர் அதனுள் முன்போல் புக அறியாது.

147. சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக் குப்பலி காட்டிய வாறே.

பொருள் : கபம் மேலோடியது; பல பிறவிகளில் செய்யப்பட்ட வினைகளின் தொடர்புகள் ஒழிந்தன. உடம்பு நீங்கியது. பழு எலும்பு வலி கெட்டது. மூக்கினில் கைவைத்துப் பார்த்து உயிரியக்கம் இல்லாமையை உணர்ந்து ஆடையால் மூடிக் கொண்டு போய், காக்கைக்குப் பலியிட்டு இறுதிக் கடனைச் செய்தனர். சீக்கை - சிலேட்டுமம். காக்கைக்குப் பலி - வாய்க்கரிசி போடுதல்.

148. அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

பொருள் : நல்ல முறையில் பக்குவமாகச் சமையல் பண்ணி வைத்தனர். அவ்வாறு சமைத்த அறுசுவை உணவை வீட்டுக்குத் தலைவன் உண்டார். மனைவியோடு குலாவியிருந்தார். இடப்புறம் நெஞ்சம் சிறிது வலிக்கிறது என்று மனைவியிடம் கூறினார். சொன்ன பிறகு கீழே படுத்தவர் அப்படியே கிடந்து இறந்து ஒழிந்தார். மந்தணம் கொள்ளுதல் - உடல் உறவு கொள்ளுதல்.

149. மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே.

பொருள் : சிறப்புடைய தலைமகன் மாடிவீடு கட்டி மகிழ்ந்திருந்தான். அவன் பலர் காணப் பல்லக்கில் அமர்ந்து சென்றான். அவன் பொது இடத்தில் இயல்புடைய மூவர்க்கும் புத்தாடை வழங்கினான். உயிர் பிரிந்த பின் மக்கள் அப்பா என்று அழைக்கவும் அவன் மீண்டிலன்.

150. வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.

பொருள் : நிச்சயதார்த்தம் பண்ணித் திருமணம் செய்து கொண்ட அக் கணவனது காதலும் கசந்து, அவரது நினைப்பையும் உரிமை மனைவியர் பின்னர் மறந்து விடுவர். அவர் இறந்தபின் பாடையில் வைத்து பொருத்தமாகப் புலம்பியழுது, பற்றினையும் சுட்டெரித்துப் பிண்டம் போட்டார்களே, என்ன பரிதாபம்.

151. கைவிட்டு நாடிக் கருத்தழிந்து அச்சற
நெய்பட்டுச் சோறுண்ணும் ஐவரும் போயினர்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.

பொருள் : நாடி பார்ப்பவர். இனிப் பயனில்லையெனக் கைவிட்டுவிட, நினைவு கெட்டு உயிர்ப்பு இயக்கம் நீங்க, நெய்யிட்டுப் பிசைந்த சோற்றைச் சுவைக்கும் நாக்கு முதலிய பஞ்சேந்திரியங்கள் செயலிழந்தன; மைபூசிய கண்ணையுடைய மனைவியும் செல்வமும் இவ்வுலகத்து இருக்க, உடலை விட்டு உயிர்போக விடை கொள்ளும் முறை இதுவாகும்.

152. பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைந்தன
துன்புறு காலத் துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே

பொருள் : உடம்பாகிய பந்தல் பிரிந்தது; உயிர் நிலையாகிய களஞ்சியம் கட்டு விட்டுப் போயிற்று உடம்பிலுள்ள ஒன்பது வாயில்களும் ஒரு சேர அடைபட்டன. துன்பத்தைத் தருவதாகிய கால முடிவு விரைவாக வந்தடைய அன்புடையவர்களாகிய சுற்றத்தாரும் பிறரும் அழுது நம்மை விட்டு அகன்றார்கள்.

153. நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.

பொருள் : நாட்டுக்குத் தலைவனும் நம்முடைய ஊருக்குத் தலைவனுமாக உள்ளவன் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாடையில் இறந்த பின் ஏறிக் கொண்டு நாட்டிலுள்ளவர் இறுதிக் கடன் செலுத்தப் பின்னே வரவும், பாடைக்கு முன்னே பறை கொட்டவும், நாட்டின் தலைமகன் காட்டுக்குச் செல்கின்ற முறை இதுவாம்.

154. முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே

பொருள் : தொண்ணுற்றாறு தத்துவங்களும் நன்றாகச் செய்யப் பெற்ற மதில் சூழ்ந்த கோயிலில் வாழ்பவராவர். செம்மையாகச் செய்யப்பட்ட மதிள் சூழ்ந்த கோயில் நிலை கெட்ட பின் அக்கோயிலில் வாழ்ந்த அனைவரும் ஓடிப் போயினர். உடம்பு அழியத் தத்துவங்கள் முதலியன நீங்கும்.

155. மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம் தேறிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர் வாங்கியே வைத்தகன் றார்களே.

பொருள் : தேன் பிலிற்றும் மலர்களை அணிந்த கூந்தலையுடைய மனைவியும், செல்வமும், வீடும், இவ்வூரின் கண்ணே தங்கிவிட, உயிர் நீங்கிய உடம்பைப் பாடையில் வைத்து, ஊருக்குப் பொதுவாகப் புறத்தே யுள்ள சுடுகாட்டை நோக்கி எடுத்துச் சென்று மயக்கத்தோடு பாடையினின்றும் எடுத்துச் சிதையில் வைத்து விட்டுச் சென்றார்கள்.

156. வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்
எச்சக லாநின்று இறைக்கின்ற வாறே.

பொருள் : மேலே சொன்னவாறு சுடுகாட்டில் வைத்து எல்லோரும் நீங்கியதைக் கண்டும் மக்கள், உயிர் உடலை விட்டு நீங்காது என்று தாம் தேடும் அருமையான பொருள்களில் மயக்கமுற்று அதனைத் தேடுவதற்கு அலையும் மக்கள் மேன்மை நீங்க நின்று வருந்து கின்றார்களே. அச்சு - உயிர்.

157. ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட்டு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே.

பொருள் : ஆரவாரம் செய்து கொண்டு எழுகின்ற உறவினரும் மனைவியும் மக்களும், ஊருக்குப் புறம்பே யுள்ள நீர்த்துறை வரை வந்து நீங்குவர்; அவ்வாறு நீங்கிய பின் வாழ்வுக்கு அடியாகவுள்ள தலையினை மறைத்துப் பின்னர்த் தீயினை மூட்டி நீரில் தலை மூழ்குவார்கள் நீதியில்லாதவர். (சுடுகாட்டில் செய்யும் இறுதிச் செயல் கூறியவாறு.)

158. வளத்திடை முற்றதோர் மாநிலம் முற்றுங்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடம்உடைந் தால்அவை ஒடென்று வைப்பார்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.

பொருள் : ஒப்பற்ற உலக முழுவதும் வளப்ப மிக்க இடைப் பிரதேசமாகிய முன்னிடத்து கருப்பை யாகிய குளத்தினது சுரோணிதமாகிய மண்ணைக் கொண்டு பிரமனாகிய குயவன் படைத்தலைச் செய்தான். மண்ணாலாகிய குடம் உடையுமாயின் அதன் பகுதியாகிய ஓடானது உதவும் என்று வைத்திருப்பர். உடல் உடைந்தால் ஒரு கணப்பொழுதும் வீட்டில் வைக்க மாட்டார்கள். (உடம்பின் இழிவு கூறியவாறு.)

159. ஐந்து தலைப்பறி ஆறு சடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே.

பொருள் : இவ்வுடம்பில் ஐந்து இந்திரியங்களும் ஆறு ஆதாரங்களும் உள்ளன. எலும்பு இணைப்புகள் முப்பது. அவற்றைச் சார்ந்துள்ள பொருத்துகள் பதினெட்டு. இவற்றின் மீது போர்த்தப் பெற்ற பந்தலும் ஒன்பது வரிசையாகவுள்ள எலும்புகள் பதினைந்து, இவையெல்லாம் சேர்ந்த உடம்பு தீயில் வெந்து கிடந்தது. அதற்குமேல் உயிரின் நிலையை நம்மால் அறிய முடியவில்லை.

160. அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைப்பெய்து கூழ்அட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.

பொருள் : சுரோணிதமாகிய அத்திப் பழத்தையும் சுக்கிலமாகிய அறைக்கீரை வித்தையும் கிளறிக் கருப்பையாகிய உலையில் இட்டு கருவாகிய கூழைச் சமைத்தனர். சுரோணிதமாகிய அத்திப் பழத்தைச் சுக்கிலமாகிய அரைக்கீரைவித்து உண்டு சிசுவாய் வளர்ந்து பின் அமுது சமைத்தவர், இறுதியில் சுடுகாட்டுக்குச் சென்றனரே.

161. மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளியே

பொருள் : உடம்பாகிய வீட்டுக்கு உச்சிக் கூரை இல்லை. கீழே குறடும் இல்லை. ஆனால் இரண்டு கால்கள் உள்ளன. நடுக்கால் ஒன்று உள்ளது. இவ்வாறுள்ள கூரையை ஓலையினால் வேய்ந்தவர் இடையே வரிச்சுக் கழி போட்டுக் கட்டாமல், அழகுபடச் செய்த ஒரு வெண் கோயிலாகும். (நடு நாடியாகிய சுகுமுனையின் பிராணனைச் செலுத்தாமையால் உடம்பு அழிந்து கெடுகிறது.)

162. கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலயமும் அற்றது அறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்களே.

பொருள் : உயிர் நடனம் செய்த உடம்பாகிய கூடம் அப்படியே கிடந்தது. முன் உயிர் இருந்த காலத்துள்ள அழகு இப்போது அவ்வுடம்பில் இல்லை. அசைந்து ஆடிக் கொண்டிருந்த பிராண ஓட்டமும் நின்றது. அவ்வாறு பிராணன் நீங்குதலும் உற்றார் உறவினர் ஒப்பாரி வைத்து அழுகின்றனர். நெருப்பை உண்டாக்கி அதில் உடலைச் சுட்டெரித்து விடுகிறார்கள்.

163. முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண்டு ஆன்டினில்
கெட்டது எழுபதில் கேடறி யீரே.

பொருள் : மீன் முட்டையைப் போல் கருப்பையில் பதியும் உடம்பு பத்து மாதங்களில் வெளி வந்தது. இவ்வுடம்பு ஏதாவது விருப்பப்படி அமைந்தது அல்ல. அறிவிலிகளே ! பிறந்து பன்னிரண்டு ஆண்டுகளில் அது உலக வாசனை பொருந்தும் இடமாக இருந்தது. எழுபது ஆண்டுகளில் மடிந்தது. இந் நிலையாமையை அறிவீராக.

164. இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்
முடிஞ்சது அறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.

பொருள் : உடம்பாகிய அகல் இருக்க, உயிராகிய தீபவொளியைக் காலன் கொண்டு சென்றான். அறிவில்லாதவர்கள் உடம்பு அழியும் உண்மையை அறியாது அரற்றுகின்றனர். பிறப்பாகிய விடிவும், இறப்பாகிய இருளும் மாறி மாறி வரும் என்பதை உலகினர் அறியாது. நிலையற்ற உடம்பை நிலையென்று பற்றிக் கிடந்து வருந்துகிறார்களே.

165. மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர்படர்ந்து ஏழா நரகிற் கிடப்பர்
சூடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே.

பொருள் : விரிந்த கொன்றை மாலை அணிந்தவனும், மாயைக்கு ஆதாரமானவனுமாகிய சிவன் படைத்த உடம்பிலும் உயிரிலும் கலந்து விளங்கும் உருவத்தை வணங்காமல், குடர்கிழிய விருப்பம் மிக்க சுற்றத்தார் கதறுமாறு துன்பம் பெருகி ஏழு வகையான நரகத்தில் வாடிக் கிடப்பர். (உடம்பில் விளங்கும் சோதியை வணங்காமல் அறிவில்லாதவர் நரகில் கிடந்து வாடுவர்.)

166. குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டு
இடையும்அக் காலம் இருந்து நடுவே
புடையும் மனிதனார் போக்கும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே.

பொருள் : வெண்கொற்றக் குடையும் குதிரையும் செங்கோலும் கொண்டு, நாற்புறமும் மக்கள் சூழ்ந்து வர நடுவில் செல்லும் போதே அழிவு உண்டாகும் காலத்தில் அத்தலைவனது பிராணன் இடம் வலமாகச் சுழன்று நின்றுவிடும் முடிமன்னராய் நால்வகைச் சேனை புடைசூழச் சென்றாலும் பிராணன் நீங்குவதைத் தடுக்க முடியாது.

167. காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே.

பொருள் : உடம்பாகிய தோற்பையில் இருந்து வினைமுடிவு பெறச் செய்து, வினைப் பயனை ஊட்டிக் கொண்டிருந்த உயிராகிய கூத்தன் வெளிப்பட்டுப் போனபின் இவ்வுடம்பாகிய கூட்டைக் காக்கை கொத்தினால் என்ன ? கண்டவர்கள் பழித்தால் என்ன ? உடம்பைச் சுட்டெரித்த பின் எலும்பின்மேல் பாலைத் தெளித்தால் என்ன ? பலர் பாராட்டிப் பேசினால் என்ன ?

3. நிலையாமை

(செல்வ நிலையாமையாவது, புறச் செல்வமாகிய மாடுமனை முதலியவற்றின் நிலையாமை)

168. அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவம் அன்றே.

பொருள் : அருள்புரியும் அரச பதவியும், யானைப் படையும், தேர்ப்படையும் பொருட் குவியலும் ஆகியவற்றைப் பிறர் கவர்ந்து செல்வதற்கு முன், தெளிந்த உயிரோடு நிலையான செல்வத்தையுடைய இறைவனை அடைந்தவுடன், பிறகு அவன் பெரி தவத்தையும் விரும்பாது வெருவுவான். உயிருடன் உள்ள போதே சிவனைச் சேரின் மாதவம் வேண்டா.

169. இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனை
பெயற்கொண்டால் போலப் பெருஞ்செல்வ மாமே.

பொருள் : வானத்தில் இயங்குகின்ற ஒளியுடைய சந்திரன் ஒளி குறைந்து இருளாவது போலத் தளர்ச்சியுறும் செல்வம் குறைந்து இல்லையாவதை யாரும் சொல்லத் தேவையில்லை. ஆதலால் தேவதேவனாகிய இறைவனைப் பொருள் மயக்கம் நீங்கி நாடுங்கள். மழை மேகம் போலப் பெருஞ்செல்வம் உண்டாகும். இறைவனே நிலையான செல்வம் ஆகும்.

170. தன்னது சாயை தனக்குத் வாதுகண்டு
என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.

பொருள் : தன்னோடு பொருந்திய நிழல் தனக்கு உதவாதது கண்டும் அறிவில்லாதவர்கள் தமக்கு வேறாகவுள்ள செல்வம் தமக்கு உதவும் என்று எண்ணுவார்கள். உடலோடு ஒன்றாக வந்தது உன்னுடைய உயிர். எனினும் உயிர் போகும்போது உடல் அழிந்து போகும். அகக்கண் இடமாக விளங்குகிறது நிலையான ஒளி. அதனை உடம்பு உள்ளபோதே நாடிக் கொள்ளுங்கள்.

171. ஈட்டிய தேன்பூ மணங்கண்டு இரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.

பொருள் : பூவினது மணத்தை ஆராய்ந்து கண்டு அதனுள் பொருந்திய தேனைச் சேகரித்த வண்டு, எடுத்துக் கொண்டு வந்து ஒரு மரக்கிளையில் அடையாக வைக்கும். வண்டினை விரட்டிவிட்டு வலிமையுடையவர் அத்தேனை எடுத்துச் செல்ல, அது காட்டிக் கொடுத்து நீங்கிவிடும். செல்வம், உடையானுக்குப் பயன்படாமையோடு தீமையும் செய்யும்.

172. தேற்றித் தெளிமின் தெளிந்தநீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலும் ஆமே.

பொருள் : செல்வம் நிலையாமையை நன்கு அறிந்து தெளியுங்கள். தெளிந்தவர்கள் மீண்டும் பயம் கொள்ளாதீர்கள். ஆற்று வெள்ளம் போல் பெருகிவரும் செல்வத்தைக் கண்டு கலங்கி மயங்காமல், உங்களது பொருட் பற்றினை நீத்து மேலான செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள். உயிரை உடலினின்றும் கூறு செய்கின்ற கூற்றுவன் வரும்போது கடத்தலும் கூடும்.

173. மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.

பொருள் : மகிழ்ந்து அனுபவிக்கின்ற பரம்பரைச் சொத்தும், தாமே முயன்று ஈட்டிய பொருளும், ஆற்றுப் பெருக்கில் சென்று உடனே கவிழ்கின்ற படகைப் போன்றன. அழிந்து போகின்ற உடம்புக்கு ஒரு நிலை பேறாகச் சேமித்து வைத்துள்ளதை உணர்ந்து பெருக்கிக் கொள்ள உலகவர் அறியார்.

174. வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரும் அளவுஏது எமக்கென்பர் ஒண்பொருள்
மேவும் அதனை விரிவுசெய் வார்கட்குக்
கூவும் துணையொன்று கூடலும் ஆமே.

பொருள் : உயிர்க்கு உதவியில்லாத வாழ்வுக்குரிய பொருளும் மனைவியும் மக்களும் உடன் பிறந்தாரும் எமக்கு அளவற்றவர் இருக்கின்றனர் என்று உலகவர் கூறுவர். ஆனால் இவற்றை விட்டு உற்ற இடத்து உதவும் ஒளிப் பொருளான சிவத்தை நினைந்து அச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்வார்க்கு கூவி அழைத்துக் கொள்ளும் மேலான செம்பொருளை அடைதல்கூடும்.

175. வேட்கை மிகுந்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

பொருள் : உலகவாழ்வில் ஆசை பெருகிற்று; உண்மைப் பொருளை அறிபவர் யாரும் இல்லை; உடம்பை நிலையாக நிறுத்தும் கழுமுனையாகிய தறி ஒன்று உள்ளது. ஆனால் அதற்கு அழிக்கின்ற வழி ஒன்பது உள்ளன. உறவு முறையை நிலைநாட்டிய தாயாரும் சுற்றத்தாரும் வந்து வணங்கிய பின் சுடுகாட்டைக் காட்டிக் கொடுத்து நீங்கிவிடுவர்.

176. உடம்போடு உயிரிடை விட்டோடும் போது
அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர்
சுடும்பரி சத்தையும் குழகி லாரே.

பொருள் : உடம்பைவிட்டு உயிர் இடையிலே விட்டுச் செல்லும் போது வெல்லும் வகை ஒன்றுமில்லை. இறைவனை எண்ணுங்கள் உயிரை உடம்பினின்றும் வேறுபடுத்தும் பரிசினை நல்கும் உண்மையான எம தூதர்கள் வேதனைப்படுத்தும் பரிசினைக் கருதமாட்டார்கள்.

4. இளமை நில்லாமை

(அஃதாவது வாலிபத் தன்மை மாறும் இயல்பினது)

177. கிழக்கெழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே.

பொருள் : கிழக்கே வானத்தில் உதயமாகிய நன்றாக விளங்கிய சூரியன், மேற்கில் மறைவதைக் கண்டும் அறிவில்லாத மக்கள் இளமை நிலையாமையை உணரார். அதே போன்று இளங்கன்று சில நாளின் வளர்ந்து மூப்படைந்து இறப்பதைக் கண்டும் அகன்ற உலகிலுள்ளோர் இந்த இளமை நிலையாமையை உணரமாட்டார்.

178. ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளங்கின் சுடர்அறி யாரே.

பொருள் : பல ஆண்டுகள் அறியாமையில் கழிந்தோடின. உயிர்த்தந்தையாகிய இறைவனை யாரும் தங்கள் உடலில் நிலைபெறச் செய்து அவனது அகண்ட ஒளியில் புகுந்து பேரறிவைப் பெறுவார் இல்லை; நீண்ட காலம் உலகில் வாழும் பேறு பெற்றிருப்பினும் தூண்டுகின்ற விளக்கின் சுடர்போன்ற இறைவனை உலகவர் அறியாதவர்களாக உள்ளனர்.

179. தேய்ந்தற்று ஒழிந்த இளமை கடைமுறை
ஆயந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே.

பொருள் : இளமையானது நாள்தோறும் சிறிது சிறிதாகத் தேய்ந்து கடைசியில் இற்று ஒழிந்தது. மூப்பு எய்திய பின் அருமையான காரியங்கள் செய்ய முடியாதனவாகும். ஆதலால் உயிர் செழுமையான உடலில் இருக்கும் போதே கங்கையாறு பாய்ந்து மறைந்த பரவிய சடையையுடைய சிவபெருமானை ஆராய்ந்து பொருந்துங்கள். நந்தி - இறைவன்.

180. விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும்
கரும் பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே.

பொருள் : மென்மையான பெண்கள் கரும்பைப் பிழிந்து கடைசியில் வருகின்ற சாற்றினைப்போல, இளமைக் காலத்தில் என்னை இனிமையாக விரும்புவர். அத்தகையான, தாமரை மொட்டுப் போன்ற முலையினையும், அழகிய அணியையும் உடைய பெண்களுக்கு, இளமையில் கரும்பைப் போன்று இனிமையாகவும் முதுமையில் எட்டிக்காய் போன்று கசப்பாகவும் ஆயினேன்.

181. பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்துஅண்டம் ஊடறுத் தான்அடி
மேலும் கிடந்து விரும்புவன் நானே.

பொருள் : பாலன் என்றும் இளையன் என்றும் முதியோன் என்றும் உள்ள பருவ காலங்கள் மாறுபடுவதை உலகோர் அறியவில்லை. ஆனால் இவ்வுலகத்தைக் கடந்து அதற்கு மேலாக உள்ள அண்டங்களையும் ஊடறுத்து நிற்கின்ற இறைவனது திருவடியை மேன்மேலும் பொருந்தி நான் அன்பு செய்வேன்.

182. காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதும்
சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய் தானே.

பொருள் : நாள்தோறும் காலையில் எழுந்தவர்கள் மாலையில் உறக்கத்துக்குச் செல்வதும் வாழ்நாள் குறைவதும் போதும் ! அவ்வாறு வாழ்நாளைக் குறைக்கின்ற உருத்திர மூர்த்தி கோபமுடையவன். ஆகிலும் பொருந்த நினைப்பவர்க்கு இன்பம் அருளுகின்றான்.

183. பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.

பொருள் : பருமையான ஊசி போன்ற ஐந்து இந்திரியங்களும் ஒருபை போன்ற உடம்பினுள் உள்ளன; பறந்து சென்று தீயனவற்றைப் பற்றி உண்ணும் காக்கை போன்றவை இந்த ஐந்து இந்திரியங்களுமாகும்; ஐந்து இந்திரியங்களும் சிரசின்மேல் பனிப்படலம் போல விளங்கும் ஒளியில் தலைப்பட்டு அமையுமாயின் ஐந்து இந்திரியங்களைக் கொண்ட உடம்பின் நினைவு நீங்கிவிடும்.

184. கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.

பொருள் : தண்ணிய சந்திரனும் வெம்மையான சூரியனும் உலகவரின் உடம்பினுள் இருந்து வாழ்நாளை அளந்து கொண்டிருப்பதை யாரும் அறியவில்லை. ஆகாயப் பேறு அடைபவரையும் விளையுள்பட்டு அழிபவரையும் சூரிய சந்திரர்கள் முப்பது ஆண்டில் பிரிந்து விடுகின்றனர்.

185. ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.

பொருள் : பொருந்திய பதினாறு கலைகளும் உடனாய் நிற்றலைக் கண்டும், கீழானவர்கள் தலைவழியே சென்று மேல்-விளங்கும் இறைவனைச் சிந்திக்கின்றிலர். சினக்கின்ற காலனாகவுள்ள உருத்திரன் மீண்டும் கருப்பையில் வைத்தபின் அதில் போய் மீண்டும் பிறவியில் வீழ்வர். இவர் மனமயக்கம் ஒழியாதவராவர்.

186. எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இமையினால் ஏத்துமின்
எய்திய நாளின் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே.

பொருள் : பிராசாத நெறியே சென்று சந்திர மண்டலம் விளங்கிய காலத்து, இளமை நிலைக்காதிருக்கும் போது, துதிப்பாடல்களால் சிவனைப் புகழ்ந்து பாடுங்கள். அவ்வாறு ஏத்திப் பிராண இயக்கம் நடைபெறுவதை உணராமல் அப்போது தியானத்தில் பொருந்தியிருந்து உண்மையை நான் உணர்ந்தேன். (இளமையிலேயே இறைவனை ஏத்தி வழிபட்டுச் சித்தி பெற வேண்டும்).

5. உயிர் நிலையாமை

(அஃதாவது, உயிர் உடம்பில் நில்லாமை)

187. தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மான்அடி ஏத்தார்
அழைக்கின்ற போதுஅறி யார்அவர் தாமே.

பொருள் : துளிர்க்கின்ற செம்மையான தளிரையும் குளிர்ச்சியான மலரையும் உடைய பூங்கொம்பிலே, தோற்றுகின்றவையெல்லாம் சருகாக மாறுதலைக் கண்டும், தவறுதலன்றி உயிருள்ள போதே இறைவனது திருவடியை ஏத்த மாட்டார்கள். அவர்கள் எமனிடமிருந்து அழைப்பு வந்த போது இறைவனை ஏத்துவதற்கு அறிய மாட்டாதவர் ஆவர்.

188. ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே.

பொருள் : பிரமனாகி ஐவர்க்கும் தொழில் செய்வதற்கு உடம்பாகிய ஒரு நிலம் விளைந்து கிடந்தது. ஐவரும் அவ்வுடம்பினை ஓம்பி உயிர்க்கு வினைப் போகத்தை ஊட்டி வருவார்கள். இவர்களுக்குத் தலைவனாகிய சிவனிடமிருந்து வினை நுகர்வு முடிவில் இறுதிச் சீட்டு வருதலும், இவர்கள் அவ்வுடம்பாகிய விளை புலத்தை ஓம்பாது கழிந்தனர். ஐவர் பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐவர்.

189. மத்தளி ஒன்றுள தாளம்இ ரண்டுள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
அத்துள்ளே வாழும் அரசன் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.

பொருள் : மண்ணாலாகிய உடம்பு ஒன்று உண்டு அதில் உச்சுவாச நிச்சுவாசமாகிய தாளங்கள் இரண்டு உள்ளன. அதனுள் வாழ்கின்ற சீவனாகிய அரசனும் அங்கு வீற்றிருக்கின்றான். அங்குள்ள சீவன் உடம்பை விட்டு நீங்கினால் கோயிலாகிய உடம்பு மீண்டும் மண்ணாய் விட்டது.

190. வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விøளாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.

பொருள் : சிரசின்மேல் ஈசான திக்கில் விளங்குபவனும் வாக்கு உருவாமாக இருந்து கொண்டு நடிப்பவனும் வெந்து போகின்ற உடம்பினுள்ளே விளையாடும் நம் தீயாகவுள்ளவனுமாகிய இறைவன் அழுகின்ற உடம்பாயுள்ளான் என்ற தன்மை அறியாதவர், உடம்பினைத் தாங்குகின்ற அருமையான சீவனையும் அறியாதவராவர்

191. சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால்அளக் கின்றது அறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.

பொருள் : சிவசூரியன் உடம்பில் கீழும் மேலும் சூழவுள்ள எட்டுத் திசைகளிலும் சென்று அறிவான். அவன் உணர்வு மயனாக இருந்து உடம்பில் வியாபித்த அறிதலை உலகவர் அறியவில்லை இந் நிலவுலகில் வாழ்கின்ற மக்கள் நான் என்னும் அகங்காரம் கெட்ட ஞானியரிடம் அவன் கலக்கின்ற மாயத் தன்மையும் உணர மாட்டார், என்னே அறியாமை ?

192. மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறுங் கருமயிர் வெண்மயி ராவது
ஈறும் பிறப்பும்ஒ ராண்டெனும் நீரே.

பொருள் : சிக்கல் அறுத்து ஒழுங்குபடுத்தி நெய்யப் பெற்ற பட்டாடை கிழிந்து ஒழியும் அவ்அழியும் தன்மையை உலகவர் நன்றாக உணரவில்லை. அதுபோன்று கூறப் பெறுகின்ற கரியமயிர் நரை மயிராவதும் பூமியில் இறப்பதும் பிறப்பதும் சிறு பொழுது தாம் என்று நீவிர் உணருங்கள்.

193. துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமல் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சொன் றனவே.

பொருள் : சுழுமுனை யாகிய அகப்பை இடம்பெற்ற உடம்பாகிய பானைக்கும் விந்துவாகிய அரிசி ஒன்றேயாம். உடம்பினுள் சோம சூரியாக்கினியாகிய அடுப்புக்குப் பிராணன் முதலிய ஐவகை வாயுக்களும் விறகாகும். அடுத்து வீணாக்காமல் விந்து சக்தியைக் கொடுத்து மதி யமுதத்தைப் பெறுங்கள் வரையறுக்கப் பெற்ற நாட்கள் வீணாகக் கழிக்கின்றனவே.

194. இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்றுஒளி
கண்புற நின்ற கருத்துள்நில் லானே.

பொருள் : இன்பத்தை நாடுகின்ற வண்டு, கூட்டமான மலர்களின் மேல்சென்று, மணம் நிறைந்த தேனை உண்பது போல, சீவன் அகத் தாமரையில் இன்பத்தை நாடி நினைத்தாலும் சோம சூரியாக்கினியாகிய ஒளியில் விளங்கும் சிவன் புறத்தே செல்லும் மனத்தில் விளங்க மாட்டான்.

195. ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும் அதென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.

பொருள் : பிறவியில் இன்பம் ஆகின்ற நெறியை விரும்பி ஒழுக்கத்தில் நில்லுங்கள். இனி மேலாம் நிலம் அல்லாது ஒளி மண்டலத்தை விரும்பி இறைவனை ஏத்துங்கள். மானிடராய்ப் பிறக்கும் நல்லூழைப் பெற்ற அருமையானவருக்கு, சொல்லப் போனால் விதியாக் கூறவேண்டியது என்ன உள்ளது.

196. அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போருதொரு
தவ்விக்கொடு உண்மின் தலைப்பட்ட போதே.

பொருள் : வஞ்சனை பேசி அறம் அழிய நடவாதீர்கள். கொடியோராகிப் பிறர்பொருளைக் கவராதீர்கள். செம்மையுடையோனாகிச் சிறப்பாக உண்ணும்போது, யாரேனும் நாடிவரின் ஓர்அகப்பை உணவு கொடுத்துப் பின் உண்ணுங்கள்.

6. கொல்லாமை

(ஓர் உயிரை உடம்பினின்றும் பிரிக்காமை)

197. பற்றாய் நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.

பொருள் : பற்றுக் கோடாகிய சிறந்த குருவின் பூசைக்கும் பலவகை மலராக உள்ளது கொல்லாமையாகும். கண்மலரின் ஒளியே நல்ல மாலையாகும். அசைவற்ற மனமே சிறந்த தீபமாகும். இவை யனைத்துங் கொண்டு பூசிக்கின்ற உயிர் விளங்கும் இடம் சிரசின் உச்சியாகும், சிவகுரு பூசைக்குச் சிறப்பான மலர், கொல்லாமையாகும். அகப் பூசைக்கும்ப புறப்பொருள் தேவையில்லை.

198. கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.

பொருள் : கொல் என்றும் குத்து என்றும் சொல்லிய விலங்கை யொத்த மக்களைக் காலனது ஏவலர் வலிமையான கயிற்றால் கட்டி, செல் என்று நில் என்றும் அதட்டி, அனல் கக்குகின்ற நரகத்தில் நெடுங்காலம் நிற்க என்று ஆணையிடுவர்.

7. புலால் மறுத்தல் (புலால் உண்ணாமை)

199. பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்தலை தூதுவர்
சொல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி முறித்துவைப் பாரோ

பொருள் : பொல்லாத புலால் உணவை உண்ணும் கீழ்மக்களை யாவரும் காணும் வண்ணம் எமதூதர்கள் கறையானைப் போன்று பற்றி அரித்துப் பின் அனல் கக்குகின்ற நரகத்தில் முதுகைக் கீழ்ப் புறமாகக் கிடத்தி வைப்பர்.

200. கொலையே களவுகள், காமம், பொய்கூறல்
மலையான பாதக மாம்அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத்து இருத்தலே

பொருள் : கொலை, களவு, காமம், பொய் பேசுதல் ஆகியவை பஞ்ச மா பாதங்களாகும். அப்பாவங்களை நீக்கி, சிரசின் மேல் திருவடி சூடி இன்பம் அடைந்தோர்க்கு இப்பாவங்களும் அவற்றால் வரும் துன்பங்களும் இல்லையாம். இவர்கள் பேரின்பத்தில் திளைத்திருத்தலும் ஆகும்.

8. பிறன்மனை நயவாமை (பிறன் மனைவியை விரும்பாமை)

201. ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.

பொருள் : அன்புடைய மனைவி வீட்டில் இருக்கவும், பிறரால் காக்கப்பட்ட மனைவியை விரும்பும் காமுகர், வீட்டில் காய்த்துப் பழுத்துள்ள பலவின் கனியை உண்ணாமல், காட்டில் பழுத்துள்ள ஈச்சம் பழத்தைப் பொறத் துன்பப்படுவது போலாம். (பிறர் மனைவியை நாடுவது அறியாமையாகும்.)

202. திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென்று எண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம்இல் லாத புளிமாங் கொம்பேறிக்
கருத்துஅறி யாதவர் காலற்ற வாறே.

பொருள் : செப்பமாக வளர்த்த மரத்தினின்றும் பெற்ற இனிய மாம்பழத்தைச் சேமிப்புப் பொருளாக எண்ணி அறையில் வைத்துவிட்டு, தகுதியில்லாத புளியம் பழத்துக்காகப் புளியங் கிளையில் ஏறி, ஆலோசனை யில்லாதவர் பிராணசத்தி குறைவுற்று வருந்துகின்றாரே !

203. பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள் கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள் கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள் கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.

பொருள் : பொருளில் பற்றுடையோரும், அறிவை மறைத்து ஆளுகின்ற அறியாமையாகி இருளில் தோன்றிய மின்வெளிபோன்ற சிறு அறிவைப் பெரிதென்று மதித்திருப்போரும் மருண்ட பார்வை உடைய பெண்ணிடம் மயக்கம் கொள்வார்கள். அவ்வாறு மயங்கிய மனத்தை மாற்ற முடியாதவராவர்.

9. மகளிர் இழிவு (பொது மகளிர் இழிவு)

204. இலைநல லாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் வீரே.

பொருள் : இலை முதலியவற்றால் அழகாயுள்ள எட்டிமரம் குலையாகப் பழுத்திருந்தாலும் அக்குலையில் கவர்ச்சியுடைய தாகிய பழத்தைப் பறித்து உண்ணலாகாது. அது போல முலை நலத்தினால் கவர்ச்சியைக் காட்டிப் புன்முறுவல் செய்வார் மேல் அவரது கவர்ச்சியில் ஈடுபடாமல் விலகிவிட வேண்டும். அவ்வாறு அவர்பால் செல்லும் மனத்தினையும் கடிய வேண்டும்.

205. மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே.

பொருள் : பிறர்மனை செல்வோர் அம்மனைக்குரிய மாதரை நாடினால், மலைச் சுனையில் புகுகின்ற நீர் மூழ்குவாரைச் சுழிக்குள் சிக்க வைத்தல் போல, காமச் சுழலில் சிக்க வைத்துவிடும். கனவுபோல அம்மாதர் மாட்டுச் சிறிது சுரக்கின்ற அன்பை நனவு போல உண்மையானது என்று விரும்புதல் கூடாது.

206. இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும்
மயலுறும் வானவர் சாரஇரும் என்பார்
அயலுறுப் பேசி அகன்றொழிந் தாரே.

பொருள் : அழகு பொருந்திய வாழ்க்கையுடைய இளம் பெண் யானையை ஒத்த பெண்கள் மழையைக் கண்ட புல் போலத் தளிர்த்திருந்த போதிலும் தேவரை யொப்பார் வந்து பொருந்த, முன்னமே புணர்ந்தவரை வெளியே இரும் என்று சொல்வார் மேலும் குறிப்பு மொழியால் வெளியேறச் சொல்லி நீங்கிப் போவர்.

207. வையகத் தேமட வாரொடும் கூடியென்
மெய்யகத் தோடும் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெரு வேம்பது வாமே.

பொருள் : உலகில் மங்கையொடு கூடுவதால் என்ன பயன் விளைந்து விடும் ? மெய்ப்பொருளை அகத்தே உணர்ந்த ஞானியரும் விதியாகக் கூறுவது அதுவேயாகும். அம்மங்கையர் கூட்டம் புறத்தே ஆலைக் கரும்பின் சாறு போல உள்ளது. கொள்கலமாகவுள்ள அகத்தே பெரிய வேம்பு போன்றதாம்.

208. கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில்
ஆழ நடுவர் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைத்தவர் போகின்ற வாறே.

பொருள் : சுக்கிலத்தை மாதரின் பாசி படிந்த கருக்குழியில் ஆழநடுவராய் இன்புறுவார்களைத் தடைபடுமாறு பிணித்துத் தடுக்காவிட்டால் மறைமுகமாகச் செல்லும் சிறுவாயிலில் நுழைந்தாவது போய் அழிந்து விடுவர்.

(இவ்வைந்து மந்திரங்களும் பரத்தையர் பற்றியன என்று கொள்ளுதல் பொருத்தமாகும்)

10. நல்குரவு (வறுமை)

209. புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப் பட்டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்டம் இல்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே

பொருள் : உடுத்திய ஆடை கிழிந்து பயனற்றது போல வறுமை யுடையோர் வாழ்க்கையும் பயனற்றுப் போய் விட்டது. அடையப் பட்ட சுற்றத்தார்களும் அன்பின்றி விலகிவிட்டார். கொடுக்கல் வாங்கல் ஒன்றும் இல்லை. உற்சாகம் இல்லை. நாட்டில் இருப்பவராயினும் நாட்டோடு ஒட்டிய கம்பீர நடையில்லை.

210. பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும் பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.

பொருள் : பொழுது விடிகின்றதே என்று வயிற்றை நிரப்புவான் வேண்டி, அவ் வாழ்க்குத் தேவைப்படும் அருமையான பொருள்களைத் தேடுவோர்களே ! எக்குழியை நிரப்பினாலும் இறைவனது பொருள்சேர் புகழைப் பாடுங்கள். பிறவிக்குக் காரணமாகிய வினை நீங்கினால் வயிற்றுக்குழி நிரம்பிவிடும்.

211. கற்குழி தூரக் கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.

பொருள் : உலகவர் வயிற்றுக் குழியை நிரப்புவதற்குப் பொன்னைத் தேடுவார்கள். அவ்வயிற்றுக் குழியைக் குறையாது நிரப்புவது யவர்க்கும் கடினமானது. அக்குழியைத்  தூர்க்கும் திருவடி ஞானம் பெற்றிபின் பிறவிக்குக் காரணமான வினையும் நீங்கி அவ்வயிற்றுப் பிணியும் நீங்கும்.

212. தொடர்ந்தெழு சுற்றம் வினையினும் தீய
கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொர காலத்து உணர்விளக்கு ஏற்றித்
தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.

பொருள் : பிறவிதோறும் தொடர்ந்து வருகின்ற சுற்றங்கள் வினையைக் காட்டிலும் தீமை செய்வன. வாழ்நாளைக் கடந்து உயிர் உடலைவிட்டு நீங்குவதற்கு முன்னே உலகப் பொருளை விட்டு மாறுபட்டு உண்மைப் பொருளை நாடி நீங்காதிருந்து பிறவிக் குழியைத் தூர்ப்பதோடு பசிப் பிணியையும் போக்கலாம்.

213. அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே.

பொருள் : ஆறு அத்துவாவின் வழியாக உயிர்க் கூட்டம் வினைகளை ஈட்டின. மெய் முதலிய ஐம்பொறிகளும் சுவை முதலிய பொருளின் மேல் சென்று உயிருக்கு எண்ணற்ற துன்பங்களைக் கொடுத்தன. பல கொடிய வினைகள் வாழ்க்கையை வேதனைப் படுத்தின. வாழ்க்கையை வெறுத்த வறுமையாளன் வறுமை நீங்க ஈசனை வேண்டியிருந்தான்.

ஆறு அத்துவா - வன்னம், பதம், மந்திரம், தத்துவம், கலை, புவனம், ஆகிய ஆறு வழிகள்.

11. அக்கினி காரியம் (தீ ஓம்புதல்)

214. வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேத முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே

பொருள் : குற்றமில்லாத மேன்மையான வானத்தில் வாழ்பவரும் நிலத்தில் வாழ்பவரும், திசைகளில் வாழ்பவர்களும் திசைகளுக்குரிய திக்குப் பாலகர்களும், வேதத்தை முதலாகக் கொண்டு அந்தணர் வேள்வி செய்யின் நலமுறுவார்கள்.

215. ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாம்அறி வாலே தலைப்பட்ட வாறே.

பொருள் : வேள்வியினைச் செய்யும் வேதம் ஓதும் அந்தணர் சுவர்க்கத்தை விரும்பி அக்கினி காரியம் செய்து, தானம் கொடுத்து, உணவை உட்கொள்வார், தங்களுடைய விதியைத் தாங்களே நிச்சயம் செய்யும் மெய்ந் நெறியை உணர்ந்தவர் தங்களுடைய அறிவைச் சிரசின் மேல் செலுத்திவாழ்வர்.

216. அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததன் உட்பொரு ளான
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.

பொருள் : இல்லறத்திலுள்ள அந்தணர் புறத்தே ஓம்பும் அக்கினியின் தத்துவத்தை அகத்தே உணர்ந்து மனைவியோடு கூடிச் செய்து, அதன் உண்மைப் பொருளை உணர்ந்து சிவசக்தியாக எண்ணி யாமத்தில் இக்கிரியை செய்வதே பொருந்துகின்ற துணையான மேன்மையான ஒரு நெறியாகும். (அங்கியுள் அங்கி - காருக பத்தியம்; ஆண் பெண் கூட்டுறவு).

217. போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.

பொருள் : ஆண், பெண் சேர்க்கையை விரும்பி அருளை எண்ணிப் புரிந்தால், குண்டலினி விளங்கி மேலேறியும் சிற்சத்தி இருள் நீங்கி ஒளிபாயும் விளங்கும். இந்நிலை எய்தாது சுக்கில கரோணிதக் கலப்பால் விளைந்த ஆணும் பெண்ணுமாகிய பறவைகள் மாற்றம் அடைந்து இரண்டும் மயக்கத்தை அடைகின்றன.

218. நெய்நின்று எரியும் நெடுஞ்சுடரே சென்று
மைநின்று எரியும் வகையறி வார்கட்கு
மைநின்று அவிழ்தரும் அத்தின மாம்என்றும்
செய்நின்ற செல்வம் தீயது வாமே.

பொருள் : ஆண்பெண் கூட்டுறவினால் உண்டாகும் உணர்வோடு மேலே சென்று, புருவ மத்தியில் விளங்கும் சுடரின் தன்மையை அறிவார்க்கு, மலம் நீங்குதலாகிய அந்நாள் நன்னாளாம். எப்போதும் உடலில் நிலைபெற்ற செல்வமாகிய சிவன் அந்த அக்கினியேயாம்.

219. பாழி அகலும் எரியும் திரிபோல்இட்டு
ஊழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினைசுடும் ஆமே.

பொருள் : யோனி குண்டத்துள் உள்ள அக்கினியைத் தீப்பந்தம் போல் மேலெழும்படி செய்தால், அடைகின்ற வினைகளும் நோய்களும் முடிவு எய்தி நீங்கும். கீழேயுள்ள அக்கினி மேலே நிலைபெற்றால் வினை முதலியவை கெடும். அவற்றைத் தாங்கியுள்ள வினைகளைச் சுட்டு மேலும் அவை ஏற்படாமல் காக்கும்.

220. பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த
வருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத்து இன்பம் வரஇருந்து எண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே.

பொருள் : பொன்னும் மணியும் கேட்டினைத் தரும் முன்னே அருளிச் செய்த அருமையான ஞானச் செல்வத்தை அளித்த தலைவனாகிய சிவனை நாடுங்கள். மேலான சிவாக்கினி சிரசின் மேல் உதிப்பதை நினைந்து, ஞானச் செல்வத்தை நாடி அக்கினி காரியம் செய்கின்றார்கள்.

221. ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற
கண்சுட ரோன்உலகு ஏழும் கடந்தஅத்
தண்சுடர் ஓமத் தலைவனும் ஆமே.

பொருள் : ஒளிவடிவானவனும் அழிவில்லாத தலைவனும், ஒளிமிக்க சுடராகி என் உள்ளத்தில் எழுந்தருளியிருக்கின்ற கண் ஒளியானவனும், ஏழு உலகங்களையும் கடந்த அக்குளிர்ந்த சுடராகியவனும் ஆகிய சிவன் ஓமத் தலைவனாகிய - இயமானனும் ஆவான். இயமானன் - வேள்வித் தலைவன்.

222. ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி வினைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே.

பொருள் : உடலின் சகல அக்கினி காரியத்துக்கும் சிவன் மறைந்து இருந்து உதவுகிறான். அவன் இறந்த பிறகு சாரமாகிய சூக்கும உடலிலும் பொருந்தி விளங்குவான். நெய்யப் பெற்ற ஆடை, உரம் பெறுவது போல் வாசனா ரூபமான வினைகள் சிக்குண்டு கடல் போல் பெருகி விடுகின்றன. ஆன்மா சிவத்தை நோக்கிச் சிந்தனையைக் கடைவதாயே சப்திக்கின்ற நாத ஒலி உண்டாகி வினை கெடும் கோமத்து - ஆன்மா.

223. அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து
அங்கி இருக்கும் வகையருள் செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழ்அத வாமே.

பொருள் : அக்கினியைச் சிரசுக்குக் கொண்டு செல்லும் திறமுடையவர் வைதீக அக்கினியைக் காருக பத்தினியோடு கூட வளர்த்தவராவர். மறுமையில் பிரமலோகம் முதலியவற்றில் தங்கி இளைப்பாறவும் இம்மையில் மேல் ஓங்குகின்ற புகழும் அவர்க்கு உண்டாகும். அக்கினி காரியம் செய்பவர் இம்மை இன்பத்தோடு மறுமையிலும் இன்பம் பெறுவர்.

12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் ஒழுகும் முறை)

224. அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தம நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.

பொருள் : அந்தணராகிய அறவோர் பிறப்பை அறுக்கும் தொழிலை யுடையவர். முன்னே சொன்னவாறு  அக்கினி காரியம் செய்து, மூன்று வேளைகளிலும் தவறாது தங்களுக்குரிய தவமாகிய நல்ல செயலைச் செய்துவிட்டு, ஒத்து எண்ணிச் சடங்கு செய்வோராவர்.

225. வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்களே.

பொருள் : வேதத்தின் முடிவான உபநிடதத்தின் உண்மையை அறிய விருப்பத்தோடு தத்துவமசி என்ற முப்பது அறிவின் முடிவான ஓங்காரத்துள் பொருந்தி, நாதம் கடந்ததாய், உபநிடதத்தின் உச்சியாய், அறிவுக்கு அப்பாலாய் விளங்கம் தலைவனை, இதுதான் முடிவு என்று எண்ணாது முப்பதத்தையும் கடந்து துரிய நிலையில் விளங்குவோராவர்.

226. காயத் திரியோ கருதுசா வித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம்ஆங்கு உன்னி
நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.

பொருள் : காயத்திரியாய்க் கருதுகின்ற சூரியனாகிய சாவித்திரியை அதற்குரிய மந்திரத்தை எண்ணிச் செபிக்க அந்தணர் விரும்புவர். அன்பாகிய தேரில் ஏறிச் சென்று சிவமாகிய நேயப் பொருளோடு பொருந்தியவராய் தனு கரண புவன போங்களாகிய மாயா காரியங்களை விரும்பாது வென்று விளங்குவர்.

227. பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான கிரியை யிருந்து
சொரூபமது ஆனோர் துகளிர்பார்ப் பாரே.

பொருள் : முத்தி நெறியான பிரணவத்தைத் தெளிந்து குரு உபதேசம் பெற்று, மகாவாக்கியம் உணர்த்தும் அத்துவித நெறியில் அகவழி பாட்டில் இருந்து, பிரம சொரூபம் ஆயினோர் குற்றமற்ற அந்தணர்கள், பிரணவத்தை எண்ணி அமர்ந்திருப்பவர் பிரம சொரூபம் பெறுவர்.

228. சத்திய மும்தவம் தான்அவன் ஆதலும்
எய்த்தரும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டா யுணர்உற்று
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.

பொருள் : மெய்ப்பொருளை அகத்தில் நோக்கித் தற்போதம் இழந்து, இளைப்பினைத் தரும் இந்திரியங்களைப் புலன்களின் வழிச் செல்லாது தடுத்தும் இருவினை ஒத்த உயிர்களாய் ஞானம் பெற்று, பந்தத்தை நீக்கிப் பிரமம் ஆவர். பிரணவத்தை உணர்ந்தோர் கட்டின்றிப் பிரமமாவர்.

229. வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தம் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தம் கேட்டவர் வேட்கைவிட் டாரே.

பொருள் : வேத முடிவான உபநிடதத்தை அறிய விரும்பிய அந்தணர் வேதாந்தத்தைக் கேட்டும் தம் ஆசையை விட்டாரில்லை. ஆசையை விட்ட இடமே வேதத்தின் முடிவாம்.வேதாந்தத்தின் பொருளை உணர்ந்து கேட்டவர் ஆசையை விட்டவர் ஆவார். ஆசையற்ற இடமே வேதாந்தம் ஆகும். ஒழிந்த இடம் என்பது ஒழிந்திடம் என்று திரிந்து நின்றது.

230. நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலது அந்தணர் காணும் நுவலிலே.

பொருள் : சொல்லுமிடத்துப் பூணூல் அணிந்து சிகை வைத்திருந்தால் அந்தண்மை ஆகுமோ ? பூணூல் பருத்திப் பஞ்சு; சிறிய சிகை உரோமமாம்; இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளையும் ஒன்றாக்கி உணர்வதே மறை முடிவு அதன் பயின் பிரம நாடி சிறந்து சிரசில் ஞானம் பிறக்கும். சொல்லுமிடத்துப் பூணூலைத் தரித்த அந்தணர் உணர்வார். நூலும் சிகையும் பூணூலைத் தரித்த அந்தணர் உணர்வார். நூலும் சிகையும் பூண்பதோடு அவற்றின் உண்மையையும் அறிய வேண்டும்.

231. சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட்டு ஓரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.

பொருள் : மெய்ப்பொருள் அறிவின்றி, தன்னை உணரும் ஞானமும் இன்றி, மனத்தோடு பொருந்திய விடய வாசனைகளை நீத்து உண்மையை உணர்கின்ற உணர்வுமின்றி, மெய்யான பத்தியுமின்றி, மேலான பொருள் ஒன்று உண்டு என்ற நினைவின்றி, அறியாமை நிறைந்த மூடர் அந்தணர் ஆவாரோ; ஆகமாட்டார்.

232. திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாம் தூய்மறை யோர்க்கே

பொருள் : மேன்மையான பிரணவ நெறியில் அறிவு அறியாமையின்றி, குரு உபதேசத்தினாலே திருவடியைப் பொருந்தி, பிரணவ நெறியில் செல்வதால் புறக்கிரியைகளை விட்டிருக்கும் தூய்மையான அந்தணர்க்கு ஒளியுடன் பொருந்தி நிற்றல் உண்டாம். தூய்மையான அந்தணர் ஒளியோடு பொருந்தி நிற்பர்.

233. மறையோர் அவரே மறையவர் ஆனால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
குறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்று
அறிவோர் மறைதெரிந்து அந்தணர் ஆமே.

பொருள் : வேதங்களைப் பொருளுணர்ந்து ஓதுபவரே அந்தணராவார். ஆனால் மறையவரது வேதாந்தம் உண்மையாகத் தூய்மையுடையது. வேதமல்லாத மற்றைய குறையுடைய நூல்களைக் கற்றல் ஆரவாரத்துக்கேயாம் என்று அறிந்து ஒதுக்குபவர். மறையோதிய அந்தணராவார். அந்தணர் பிற நூல்களைக் கல்லாது வேதத்தையே ஓதுவர்.

234. அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.

பொருள் : எல்லா உயிர்களிடத்தும் அருள் உள்ளங் கொண்ட அருமையான வேத முடிவாகிய சிவத்தை இடைவிடாது நினைக்கும் அந்தணர் அடைகின்ற வளமான பூமி வளமை குன்றுதல் இல்லை. அந்நாட்டு அரசனும் நல்லவனாவான். காலை மாலையாகிய இருவேளைகளிலும் ஆகுதி செய்வார்கள்.

235. வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே

பொருள் : வேதாந்த நெறியில் நிராசையாக நின்று ஞானம் அடைய ஊழ் இன்றியவர், நாதாந்த முத்திபதம் எய்துவர். அறிவான் முடிவாம் ஞானம் உண்டாகிப் பரத்தைச் சேர்ந்து அடைந்தால் நாதாந்த முத்தியோடு இவ்வுலகில்சித்திகளும் பெறுவர். பரன்பால் அடையின் முத்தியோடு சித்தியும் கிட்டும்.

236. ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
கென்று வணங்கும் திருவுடை யோரே.

பொருள் : பிராணனும், உச்சுவாச நிச்சுவாசங்களும் அடங்கிய காலத்து, மகிழ்ச்சியாக இருந்து நன்மையே பல பேசிக் கொண்டிருந்தாலும் மேலான முத்தியைப் பெறும் செல்வர்கள் யாவற்றையும் கடந்து விளங்கும் சிவத்தையே நாடுவர். சிவத் திருவுடையோர் மேலான முத்தி அடைவர்.

237. தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணியப் போகனாய்
ஓம்மேவு ஓர்ஆ குதிஅவி உண்ணவே.

பொருள் : இறைவனை எண்ணிட அகப்பற்று புறப்பற்று ஆகிய இரண்டும் தானே நீங்கும். அகங்காரம் அறுபட்டு விடும். பின்னர் எது ஒன்றையும் தேடாது, பூவிலே பொருந்திய பிரமனைப் போலப் புண்ணியத்தை விரும்பியவனாய், ஆகுதி செய்யப்படும் அவியை உண்ணவே பிரணவம் பொருந்தும். ஆகுதி உண்ணவே பற்றுக்கள் நீங்கும்.

13. இராச தோடம் (அரசனுக்குரிய குற்றம்)

238. கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகநில் லானே.

பொருள் : கல்வி அறிவு இல்லாத அரசனும் இயமனும் ஒருங்கு வைத்து எண்ணப்படுவர். ஆனால் கல்வி அறிவு இல்லாத அரசனைக் காட்டிலும் இயமன் மிகவும் நல்லவன். கல்வியில்லாத அரசன் அறத்தின் வழி ஆராயாமல் கொல் என்று ஆணையிடுவான். அறத்தின் வழி நிற்கும் நல்லவரை இயமன் நெருங்க மாட்டான்.

239. நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி அவநெறி நாடானேல்
நாள்தோறும் நாடு கெடமூட நண்ணுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே.

பொருள் : நாள்தோறும் அரசன் தன் நாட்டில் நன்னெறியினை முறையாக ஆராய்ந்து, அவன் நீதி முறைமையைக் செய்யாவிடின் நாள்தோறும் நாட்டின் வளம் குன்ற நாட்டு மக்களிடையே அறியாமை பொருந்தும். நாள்தோறும் அரசனது செல்வமும் குறைந்து கொண்டே வரும்.

240. வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாகுமே.

பொருள் : வேடத்துக்குரிய நெறியில் அகமும் புறமும் ஒத்து நில்லாதார் வேடத்தை மட்டும் பூண்டு கொண்டு என்ன பயன் ? ஆனால் வேடத்துக்குரிய நெறியில் பொருந்திவாழ்பவரது வேடம் உண்மையான வேடமாகும். வேடத்துக்குரிய நெறியில் நில்லாதவரை வலிமை மிக்க அரசன் தண்டனை முதலியவற்றால் வேடத்துக்குரிய நெறியில் நிற்கச் செய்தால் அது வீடு பேற்றை அளிக்கு வழியாகும்.

241. மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடுஒன்று இலனாகும் ஆதலால் பேர்ந்துணர்ந்து
ஆடம் பரநூல் சிகையறுத் தால்நன்றே.

பொருள் : அறியாமை கெடாதவர் சிகை, பூணூல் முதலிய வேடங்களைக் கொண்டால் மண்ணுலகத்தில் உள்ளவர் வாடுவர். பெருவாழ்வு வாழ்கின்ற அரசனும் பெருமை இல்லாதவன் ஆவான். ஆதலால் வேடத்தின் உண்மையை மீண்டும் ஆராய்ந்து அறிந்து ஆடம்பரமாக அணியும் பூணூலையும் சிகையையும் களைந்துவிடுதல் நாட்டுக்கும் அரசனுக்கும் நன்மையாம்.

242. ஞானம் இலாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.

பொருள் : ஞானத்தை அடையாதவர் சடையும் சிகையும் பூணூலும் பெற்று, ஞானிகளைப் போல நடிக்கின்றவர்களை, ஞானிகளைக் கொண்டே இவரது உண்மையினை அரசன் சோதித்து ஞானம் பெறும்படி செய்தால் நாட்டுக்கே நன்மை உண்டாகும்.

243. ஆவையும் பாவையும் மற்றுஅற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே.

பொருள் : பசுவையும் மகளிரையும் மற்றும் அறநெறியில் நிற்பவரையும் தேவரும் வணங்கத்தக்க உண்மையான தவ வேடத்தாரையும் அரசன் காத்தற்கு உரியவன். அவன் காக்கவில்லையாயின் அவன் மறுமையில் நித்திய நரகத்தை அடைவான்.

244. திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில்ஒன்று ஆமே.

பொருள் : மேன்மையான மறுமைக்குரிய முத்தியும், இம்மைக்கு உரிய செல்வமும் வேண்டினால் அரசன் எப்போதும் நாட்டில் அறத்தையே நிலை நாட்ட வேண்டும். சிறந்த கடலால் சூழப் பெற்ற உலகில் வாழ்கின்ற மக்கள் ஆகியோர் செய்கின்ற நல்வினை தீவினைப் பயன் யாவும், சொல்லப்புகின் அரசனுக்கு நன்மையோடு தீமையினும் ஆறில் ஒரு பங்கு உண்டாகும்.

245. வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
போந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாங்கொள்ளப்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே.

பொருள் : அரசன் உலகைக் காப்பது மிக நன்றாய் இருக்கிறது. அங்குள்ள மக்களும் அரசனைப் போன்றே இருப்பர். மாறு கொண்டு இவனது நாட்டைப் பிற நாட்டான் கைப்பற்றவும், பிற நாட்டைத் தான் போரிட்டுக் கைப்பற்றவும் இவன் விளைவு அறியாது பாய்கின்ற புலி போன்ற கொடியவனாவான். அரசன் யுத்த வெறி பிடித்து அலைவது குற்றமாகும்.

246. கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

பொருள் : பிராணனது இயக்கத்தைத் தடுத்து, மூலாதாரத்திலுள்ள மூலக்கனலைச் சிரசின்மேல் செலுத்தி, அங்குக்காணும் பால் போன்ற வெண்ணிற ஒளியைக் கொண்டு மதிமண்டலம் அறிந்து அங்கு உண்டாகும் ஆனந்தத் தேனைப் பருகாதவராய் ஆனந்தம் விளைக்கும் என்று மயக்கம் கொண்டு கள்ளினை உண்ணும் மருட்சியாளரை மேலும் இப்பழக்கத்துக்கு ஆளாகாதபடி செய்த அரச தர்மமாகும்.

247. தத்தம் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமும்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வது அவ் வேந்தன் கடனே.

பொருள் : தத்தமக்குரிய சமயநெறியில் நில்லாதவர்களைச் சிவன் அருளிய ஆகம முறைப்படி, அப்பெருமான் மறு பிறப்பில் அத்தகைய தண்டனையைக் கொடுத்துத் திருத்தும். இப் பிறப்பிலேயே தக்க தண்டனை கொடுத்துத் திருத்துவது அரசனது கடமையாகும்.

14. வானச் சிறப்பு (மழையின் பெருமை)

248. அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே.

பொருள் : அமுதத்தைப் போன்று வளப்பத்தைத் தருகின்ற மழைப் பெருக்கால், சுவையையுடைய பல மரங்கள் உலகத்தில்மேல் உண்டாகும். பாக்கு, இளநீரையுடைய தென்னை, கரும்பு, வாழை, அமுது அளிக்கும் சமாதி நிலைக்கான எட்டி முதலியன உண்டாகும். காஞ்சிரை - சமாதிக்குரிய மூலிகை.

249. வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே.

பொருள் : சிரசாகிய மலையினின்றும் பெருகி வரும் ஒளிமயமான ஆகாய கங்கையை உரைப்பதற்கு உரையில்லை. அது மனமண்டலத்தில் அன்பினால் ஊறும் பிருதிவிக் கலப்பின் மையால் நுரையில்லை அழுக்கில்லை யாதலின் தெளிந்த தன்மையுடைய நீர் எந்தையாகிய பாவங்களைப் போக்குகின்ற ஆறு அகண்டமாதலின் கரை இல்லை.

15. தானச் சிறப்பு (பிறர்க்கு இயன்றளவு கொடுத்தலின் பெருமை)

250. ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

பொருள் : யாவராயினும் கொடுங்கள்; அவர் உயர்ந்தோர் இவர் தாழ்ந்தோர் என்று கருதாதீர். வருவிருந்து பார்த்திருந்து உண்ணுங்கள். பழமையைப் போற்றாதீர்கள். இம்மை மறுமையில் விருப்பம் உடையவரே ! மிக வரைந்து உண்ண வேண்டா. காகங்கள் உண்ணும் காலத்தில் பிற காகங்களை அழைத்து உண்பதை  அறியுங்கள். பழமையைப் போற்றாமையாவது அருமையுடைத்துது என்று பாதுகாவாமை.

16. அறஞ்செய்வான் திறன் (இல்லையென்னாது ஈவாரது தன்மை)

251. தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்
தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்
தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்
தாமறி வார்க்குத் தமர்பர னாமே.

பொருள் : தம்மை அறிவார் இறைவன் திருவடியை வணங்குபவர் ஆவர். தம்மை அறிபவரே அறம் செய்யும் நெறியில் நின்றவராவர். தம்மை அறிபவரே உண்மையை உணர்பவர் ஆவர். தம்மை அறிவார்க்கு இறைவனே உறுவினனாக உள்ளான்.

252. யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொடு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.

பொருள் : உண்ணுவதற்கு முன்னே இறைவனுக்குப் பச்சிலை கொண்டு பூசித்தல் யாவர்க்கும் ஆகும். அவ்வாறே பசுவுக்கு ஒரு வாயளவு புல் கொடுத்தல் யாவருக்கும் ஆகும். அதே போல் உண்பதற்கு முன்னே சிறிதளவு பிறர்க்குக் கொடுத்தல் ஆகும். இல்லையெனில் பிறர்மனம் நோகாதவாறு இனிமையாகப் பேசுதல் யாவர்க்கும் ஆகும் எல்லோரும் செய்யக் கூடிய எளிமையான அறம் கூறியவாறு.

253. அற்றுநின் றார்உண்ணும் ஊணே அறன்என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கொடு கூவல் குளத்தினில்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே.

பொருள் : இருவகைப் பற்றும் அற்று நின்ற சிவஞானியாருக்கு அளிக்கும் உணவே அறம் என்று நூல்கள் கூறும் அங்ஙனமிருந்தும் கல்வியால் உண்டான அறிவு விளங்கும் மனிதர்கள் பார்த்திருந்து கிணற்றங் கரையிலோ குளத்தங் கரையிலோ தங்கியுள்ள சிவஞானியாரை அழைத்துவந்து உண்பிக்கும் பயன் அறியவில்லையே. பற்றற்ற ஞானியரை உண்பிப்பதே சிறந்த அறமாகும்.

254. அழுக்கினை ஒட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ் சீரே.

பொருள் : அறம் செய்யா உள்ளத்தை உடையோரே ! காமம் வெகுளி மயக்கம் ஆகிய அழுக்கினை அகற்றி அறிவினைப் பெருக்கவில்லையே செல்வம் தழுவிய நாளில் அறமும் செய்யவில்லை. உலக நோக்கில் காலத்தைக் கழித்து என்ன செய்யப் போகிறீர். இவ்வுடல் எரிந்து அழியும் பாது அறஞ்செய்யாது காத்தவை என் ஆகும் ? சிந்தியுங்கள்

255. தன்னை அறியாது தான்நலன் என்னாது இங்கு
இன்மை அறியாது இளையர்என்று ஓராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மையின் நல்ல தவஞ்செய்யும் நீரே.

பொருள் : சர்வ வல்லமையுடன் உயிரை உடலினின்றும் பிரிக்கும் காலன்; உன்னுடைய நிலையை அறியாது; நீ நல்லவன் என்றும் கருதாது; இங்கு உனக்குற்ற வறுமையும் உணராது; நீ வயதில் இளையவன் என்று கருதிடாது; ஆதலால் நீர் காலன் வந்து உயிரைக் கொண்டு போவதற்கு முன் உடலை நிலை பேறாகச் செய்யும் நல்ல தவத்தினைச் செய்யும்.

256. துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறியாரே.

பொருள் : துறந்தோர்க்கு இவ்வுலகில் ஒருவித உறவும் இல்லை. இறந்தவர்க்கு இவ்வுலகப் பொருள்களினால் எவ்வித இன்பமும் இல்லை. இம்மையில் அறஞ் செய்யாது மறந்தவர்க்கு வழித் துணையாக ஈசன் வருவதில்லை. இம் முத்திறத்தினரும் அறத்தினைச் செய்யும் முறையை அறிய மாட்டார்.

257. தான்தவம் செய்வதாம் செய்வத்து அவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வ மென்று நமன்வரு வானே.

பொருள் : அறிவையே தெய்வமாகக் கருதும் மனிதர்கள் முற்பிறப்பில் செய்த தவத்தின் வழி தாம் தவஞ் செய்து மேன்மையடைவர். உடம்பே தெய்வமென்று கருதி வாழ்கின்ற உயிர்க் கூட்டம் நான் தெய்வமென்று இயமன் வருவகை அறியாது அழிவர். மான் - புத்திமான். உடம்பைப் பெரிதெனப் பேணி அறம் செய்யாதவர் அழிவர்.

258. திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக்கேடில் புகழோன்
விளைக்கும் தவம்அறும் மேற்றுணை யாமே.

பொருள் : நம்மை ஆழ்த்துகின்ற வினையாகிய கடலில் இருந்து கரையேறுவதற்குரிய தோணியாக இருந்து நமக்கும் நமது சுற்றத்தார்க்கும் களைப்பினைப் போக்கிக் காக்கும் இரு வழிகள் உள்ளன. அவை அழியாப் புகழினையுடைய அச்சிவத்தினைப் பற்றி நின்று ஆற்றப் பெறும் தவம் ஒன்று; இல்வாழ்க்கை பற்றி நின்று செய்யும் அறம் மற்றொன்று இவையே மறுமைக்குத் துணையாவன. முத்திக்குரிய வழி அறமும் தவமும் ஆகும்.

259. பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக்கு அல்லது
உற்றுஉங்க ளால்ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.

பொருள் : பற்றுக்கோடு அதுவேயாய் நின்ற மெய்ப்பொருளை உலகில் குறை கூறாதவனாய் அறநெறி அல்லது பிறநெறியில் செல்லாது பொருந்தி நீங்கள் பிறர்க்குக் கொடுத்த ஒன்றுமே துணையாகும். அதுவே சிவம் வைத்த முத்தியடைதற்குரிய வழியாகும்.

17. அறஞ்செயான் திறம் (தருமம் செய்யாதவரது இயல்பு)

260. எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஓட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண்டு ஈட்டிய மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே.

பொருள் : பொருந்திய நல்ல அறங்களைச் செய்யாதவரது செல்வம் எட்டி மரத்தினது பெரிய பழம் பழுத்து விழுந்து பயன் படாது கிடந்தது போலாம். வட்டி வாங்கி ஈட்டி உலகில் பிறர்பொருளைக் கவர்ந்திடும் வஞ்சனையுடைய பாதகர்கள் செல்வத்தின் பயனை அறியாதவராவர்.

261. ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே

பொருள் : பல ஆண்டுகள் கழிந்தன; பலப்பல ஊழியும் சென்றன எத்தனையோ மனக் கோட்டைகளை தகர்ந்தன; வாழ்நாளும் குறைந்து, சத்து நீங்கின. சக்கைபோலப் பிழியும் துன்பத்தைத் தருகின்ற தம் உடம்பு பயனற்று அழிவதைப் பார்த்தும் உலகினர் அறத்தின் மேன்மையினை அறியாது உள்ளனரே !

262. அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையும்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.

பொருள் : உலகில் பலர் அறம் இன்னதென்று அறிகிலர். அறத்தின் பயனாக விளங்கும் இறைவன் திருவடியை எண்ணும் முறைமையையும் அறியவில்லை. சிவநகருக்குப் பக்கமாகிய சொர்க்காதி நிலைகளையும் அறியார். உலகாயதர் போன்றோர் கூறும் பொய்மொழிகேட்டு இவ்வுலகப் பொருளை விரும்பிப் பாவ காரியங்களைச் செய்வார். அதனால் பிறப்பு இறப்பாகிய பகையைப் பொருந்தி நின்றார்கள்.

263.  இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமம்செய் யாதவர் தம்பால தாகும்
உரும்இடி நாகம் உரோணி கழலை
தருமம்செய் வார்பக்கல் தாழகி லாவே

பொருள் : இருமலும் சோகையும் கோழையும் சுரமும் ஆகியவை தருமம் செய்யாதவரைச் சென்று அடையும். மரணம் விளைக்கும் மின்னுலும் இடியும் பாம்புக் கடியும் தொண்டை நோயும் வயிற்றுக் கட்டியும் ஆகியவை தருமம் செய்பவர் பக்கம் அணுகா.

264. பரவப் படுவான் பரமனை ஏத்தார்
இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயார்
கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே.

பொருள் : உலகாயத மதத்தின் போதனையால் தம் புகழை விரும்பி நிற்பார் இறைவனை வழிபடமாட்டார். இனி, தம்மை நோக்கி வந்து யாசித்தவர்களுக்குச் சிறிதும் கொடுக்க மாட்டார் வழிப்போக்கர் தங்கச் சரீரப் பிரயாசை கொண்டு குடத்தினால் நீர்விட்டுச் சோலைகளை வளர்க்கவும் செய்யார். இத்தகைய நல்ல எண்ணம் கொண்டவர்களே ! நரகத்தில் நிலையான வாசம் விரும்பியுள்ளீர்களோ ? நல்நெஞ்சினீர் - வஞ்சப் புகழ்ச்சி.

265. வழிநடப் பாரின்றி வானோர் உலகம்
கழிநடப் பார்நடந் தார்கரும் பாரும்
மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு
ஒழிடப் பார்வினை ஓங்கி நின்றாரே.

பொருள் : அறவழியில் நடப்பவராக இல்லாமல் தேவருலக இன்பம் நீங்கும் வண்ணம் தீயவழியில் நடப்பவர் இருள் சூழ்ந்து உலகமாகிய நரகத்தில் நடப்பவராவர். காமம் வெகுளிமயக்கம் ஆகிய குற்றங்களைக் களைந்து அவற்றினின்றும் நீங்கிச் சன்மார்க்கத்தில் நிற்பவர். வினை கடந்து நின்றவராவர்.

266. கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும்ஒன்று இன்றி
மெலிந்த சினத்தினினுள் வீழ்ந்துஒழிந் தாரே.

பொருள் : எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுபவர் இறைவனது திருவடியை காண்பர் விரக்திகொண்டு உலகினை விட்டுத் துணிவுடன் தவம் செய்தவர் மாயுச்சிய நிலையை அடைவர். உலக நிலையில் நின்று அறன் அருளின்றி மாள்வர். காலனுடைய சினத்துக்கு ஆளாகிப் பயத்தைத் தரும் நரகில் வீழ்ந்து அழிவர்.

267. இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே.

பொருள் : உலகில் இன்பமும் துன்பமும் ஆகிய இரண்டும் பொருந்தியிருப்பது, முற்பிறப்பில் அவரவர் செய்த அறச் செயலுக்கும் மறச் செயலுக்கும் ஏற்ப அமைந்த தாகும். அறத்தினால் இன்பம் அடைதலைக் கண்டு வைத்தும் கொடுப்பது அறியாப் பேதைகள் அன்பில்லாத சிந்தையுடையராய் அறத்தினை அறிய மாட்டார்.

268. கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடுவல்ல செய்துஇன்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யின் பசுவது வாமே.

பொருள் : கேட்டினையும் ஆக்கத்தினையும் ஊட்டச் செய்கின்ற கேடில்லாத இறைவன் நேர்மையற்ற செயலைச் செய்து இன்பம் பெற அனுமதிக்கவும் மாட்டான். ஆகவே, தக்கார்க்கு இடுதலையும் வறியார்க்கு ஒன்று ஈதலையும் நினையுங்கள். (பிறர் இன்பம் கெடும் படியாக நடப்பது மிருகத் தனமாகும்)

269. செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் பேற்றிப் புலராமல்
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.

பொருள் : சிலருக்கும் பலருக்கும் வாழ்வு தருகிறோம் எனத் தருக்கும் அற்ப அறிவுடையாரை, அவரது அழிகின்ற செல்வத்தைக் கருதி வாழ்த்தி வாடாமல், அழியாத செல்வமாகிய வீடு பேற்றினை அளிக்கும் இறைவனைக் கருதி வாழ்த்துங்கள் வில்லானான் எய்த அம்பு இலக்கினைத் தவறாது அடைவது போல உங்களது வறுமையைத் தவறாது போக்கி இன்பம் தருவான்.

18. அன்புடைமை (இறைவன்பால் கொள்ளும் அன்பை உடைமை)

270. அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

பொருள் : அனுபவம் இல்லாதவர் அன்பாகிய சத்தியும் சிவமாகிய அறிவும் இரண்டு பொருள் என்பர். அன்பின் முதிர்வினால் தோராகிய எல்லோரும் உணர்வதில்லை. அன்பு தான் சிவத்தை விளங்கும்படி செய்கிறது என்பதை எல்லோரும் உணர்ந்தபின் அன்பே வடிவாய்ச் சிவமாந்தன்மை எய்தியிருந்தார்.

271. பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுகொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.

பொருள் : பொன்னினும் பிரகாசமுடைய புலித்தோலின் மஞ்சள் ஒளியில் விளங்குபவன்; பளிச்சென்று பிரகாசிக்கும் சிற்றொளியையுடைய பிறையானது, பொருந்தியிருந்த வெண்ணீற்று ஒளியில் திகழ்பவர் இத்தகைய கூத்தனுக்கு என்னுடைய பேரன்பு  கலந்திருந்தது.

272. என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகங்குழை வார்க்கின்ற
என்போன் மணியினை எய்தஒண் ணாதே

பொருள் : எலும்பையே விறகாகக் கொண்டு உடம்பின் தசையை அறுத்து நெருப்பிலிட்டுப் பொன்னைப் போலக் காய்ச்சி வறுத்தாலும், அன்போடு உருகி மனம் நெகிழ்வார்க்கு அல்லது என்னைப் போல இறைவனை அடைய முடியாது.

273. ஆர்வர் உடையவர் காண்பார் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே.

பொருள் : மிக்க அன்புடையவர் இறைவனை உணர்வர். அன்பினால் உண்டாகும் மனம் நெகிழ்வுடையார் விந்து நாதமாகிய திருவடிகளைச் சிரசில் சூடுவர். சம்சாரமாகிய சுமையைத் தாங்கி வருந்துபவர் பிறவியாகிய சாகரத்தில் உழல்வர். அன்பில்லாத அவர் துன்பமாகிய காட்டகத்தே நெறியறியாது திண்டாடுவர். கொங்கு - காடு.

274.என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன் புருக்கி பெருந்தகை நந்தியும்
தன்அன்பு எனக்கே தலைநின்ற வாறே.

பொருள் : பலபேசி என்ன பயன் ? அன்பினால் மனத்தை உருக்கி இறைவனை ஏத்தி வழிபடுங்கள். தலையாய் அன்பினால் மனத்தை உருக்கித் தலைவனை நாடுங்கள். அவ்வாறு நாடிய எனக்குப் பெருமையுடைய குரு நாதனும் பாசத்தைப் போக்கி தனது கருணையை என்னிடத்துக் காட்டும் வகை இவ்வாறாம்.

275. தானொடு காலம் சயம்புஎன்று ஏத்தினும
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.

பொருள் : சிவன் தானே ஒருவனாய் நின்ற நாளில் சுயம்பு என்று எண்ணி வழிபடின், வானத்தில் ஒரு காலத்தில் பொருந்தி வழிபடுவார்க்கு உற்ற துணையாய் இருக்கும். தேனையொத்த இன்பந் தரும் சத்தியை ஒரு பக்கத்தில் உடையவனாகப் பொன்னொளியில் விளங்கும் சிவன் தானே ஒரு நிறத்தைப் பெற்று எனது அன்பு வலையில் அகப்பட்டு நின்றான்.

276. முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை
அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார்
வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில்
அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே.

பொருள் : உலகினைப் படைத்து எல்லா இன்பங்களையும் அமைத்தருளிய இறைவனிடம், அன்பினைச் செலுத்தி எல்லா உயிர்க்கும் தலைவனாகிய இறைவனை அறியாமல் கெடுகின்றனர். உறுதியைத் தந்து இவ்வுலக வாழ்வில் அன்பைப் படைத்த பெருமான் அகண்ட உலகமாகவும் உள்ளான். சிவன் போகமாகவும் புவனமாகவும் உள்ளான்.

277. கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன்என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை யாருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.

பொருள் : கருத்திலே பொருந்துகின்ற உருக்கு முகத்துப் பிரகாசிக்கும் செம்பொன்னைப் போன்ற சோதி வடிவானவனை நினைத்தும் அமைத்து வைத்தும் அவனையே தலைவன் என்று ஏத்தியும், உள்ளத்தில் அன்பு கொண்டு அவனை யார் அருள் வேண்டினாலும் தேவர் தலைவனாகிய அப்பெருமான் அவ் வொளியில் நின்று சிவவொளியைப் பெருகச் செய்வான்.

278. நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசுஅறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரான்என்று
நச்சியே அண்ணலை நாடுகி லாரே.

பொருள் : உயிர்களின் வினைக்கீடாக நாளும் இறப்பையும் பிறப்பையும் அமைத்தவன் வைத்த முறைமையினை அறிந்திருந்த மக்கள் உலக போகத்தில் விருப்பத்தைச் செலுத்துவர். எந்தை எம்பிரான் என்று விரும்பி அண்ணலாகிய சிவனை நாடவில்லை.

279. அன்பின்உள் ளான்புறத் தான்உட லாயுள்ளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.

பொருள் : தன்னை அறியும் அறிவு கொண்டவரிடம் அவ் அன்பில் நின்றருளுவான். தன்னில் நிற்பது போலவே பிறரிடம் நிற்பவனும் அவனே. அன்பே உடலாக உள்ளவன். உலகத் தோற்றத்துக்கு முன்னும் உலக அழிவுக்குப் பின்னும் அழியாது நிற்பவன். ஆத்ம விசாரணை செய்யும் முனிவர்க்கும் அவனே தலைவன். அவனிடம் யாரொருவர் அன்பு கொண்டாரோ அவரிடம் நிலையாகப் பொருந்தும் அரிய பொருளாயுள்ளவன். அன்பின் வழி அணுகுவோர்க்கு அவன் துணையாக இருந்து உய்விப்பான்.

19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (அன்பே சிவமாவது என்பதை அறிவாரைச் சிவன் அறிவான்)

280. இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே.

பொருள் : உயிர்கள் தன்மாட்டு அன்பு செய்தலை இகழ்ந்ததையும் மெய்யன்பு கொண்டிருந்தலையும் இறைவன் அறிவான். மேலோனாகிய அத்தலைவன் அதற்கேற்ப மகிழ்ந்து அருள் செய்வான். தன் மாட்டுத் தளிர்த்து வரும் அன்பினைப் புரியவல்லார்க்கு மகிழ்ச்சி கொண்டு அன்பு செய்யும அளவுக்கு அருளை வழங்குவான்.

281. இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே.

பொருள் : மக்கள் பேரின்பம் அடையப் பிறவியில் இயல்பான பல சாதனைகளைக் கொடுத்த இறைவன், துன்பம் நிறைந்த பிறப்பில் இவர் எத்தொழிலைச் செய்தாலும் செலுத்துகின்ற அன்பில் கலக்க ஆதியாகிய பெருமான் முன்னே அமைத்துக் கொடுத்த பிறவியானது முடிவடையும்.

282. அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணிஐந்து ஆடும் துடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.

பொருள் : அன்பு பொருந்திய சிந்தையின் மேல் விளங்கும் சிவமாகிய ஒளி, இன்பம் வழங்குகின்ற கண்ணையுடைய இச்சத்தியோடு அன்பரை ஏற்று அருள்புரியத் திருவுளங் கொள்வான். அவ்வாறு ஏற்கத் திருவுளங் கொண்டமையின் வலைபோன்ற ஐம்பொறிகளின் தொடர்பு அறுபட்டு நீங்கும். அப்பொழுது நன்மை பெற்ற சிந்தையை நீங்கள் இறைவன் பால் தொடர்பு கொண்டு துன்புறு கண்ணியை அகற்றி நில்லுங்கள்.

283. புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு
உணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுஇது வாமே.

பொருள் : சிற்றின்பத்தில் மகளிர்மேல் வைத்த அன்புபோல், சிரசின் மேல் உதிக்கும் பரிச உணர்வில் மனம் பதிவுண்டு இருக்க வல்லார்க்கு, உணர்வு கெட்டு நாதத்தோடு பொருந்தித் துவாத சாந்த வெளிக்குச் சென்று கூடலும், அங்குப் பெறும் பேரின்பம் இங்குப் பெற்ற சிற்றின்பம் போல இருக்கும்.

284. உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்துஅறி வார்இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.

பொருள் : முன் மந்திரத்தில் கூறியவாறு பேரின்பத்தில் திளைத்திருந்தாரோடும் விளங்கும் சோதியாகிய இறைவனைச் சித்திகளை யுடையவர் என்று ஆராய்ச்சியினால் அறிந்து விட முடியாது. ஆனால் அடியார்கள் பத்தியோடு அவன் அருளாலே அவனை வணங்க அவர்கட்கு வீடு பேற்றை அளித்து அவர்கள் முன்பு விளங்கித் தோன்றினான்.

285. கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.

பொருள் : வாசனைதரும் கொன்றைப் பூப்போன்ற மஞ்சள் ஒளிக்கிரணத்தை உடையவனைக் கண்டேன். காரிருளாகிய ஆணவமான யானையைக் கிழிஞூததவனுடைய திருவடிகளைக் கண்டேன். மூலாதாரக் கமலத்தில் விளங்குபவனைக் கண்டேன் எனது அன்பில் அவனது திருவடிகள் விளங்குவதை நான் கண்டேன்.

286. நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று
உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத்து இடைநின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே.

பொருள் : நம்பத் தகுந்தவனும் எல்லாப் பொருளாகவும் உள்ளான் என்று வானுலகில் தேவர்கள் போற்றும் தலைவனும் இன்பவடிவானவனும், சீவர்களது இன்பத்தில் பொருந்தி மகிழ்கின்ற அன்பு வடிவானவனும் ஆகிய இறைவனை யாரும் அறிய முடியவில்லை. இரதித்தல் - சுவைத்தல்; மகிழ்தல்.

287. முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி
அன்பில் அவனை அறியகி லாரே.

பொருள் : நந்தியாகிய இறைவன் இன்பத்தால் வந்த பிறப்பும் இறப்பும் இல்லாதவன். முன்பு அவனை வணங்கிப் பிறப்பு இறப்பு அறியாத ஞானியர், அன்பினால் இறைவனை வழிபட்டு நாங்கள் அவனை உணர்ந்திருக்கின்றோம்  என்பர். அங்ஙனமிருந்தும் ஏனையோர் அவனை உணர்ந்து பிறப்பு இறப்பைப் போக்கிக் கொள்ள அறியவில்லையே !

288. ஈசன் அறியும் இராப்பக லும்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று இருந்து செயலற்று இருந்திடில்
ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே.

பொருள் : இரவும் பகலும் இடைவிடாது அவனை அன்பினுள் வைத்துப் போற்றுபவர்களை இறைவன் அறிவான். ஆதலால் நாம் ஒளிபெற்று ஒளியில் நின்று நம்கென ஒரு செயலின்றியிருப்பின் இறைவன் எழுந்தருளி வந்து நம்மிடை பிரிப்பின்றி உடன் உறைவான்.

289. விட்டுப் பிடிப்பதுஎன் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாய் பெருமையை
எட்டும்என் ஆருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.

பொருள் : மேலாகிய ஒளிவடிவாகிய இறைவனை விடுவதும் மீண்டும் பிடிப்பதும் எதற்காக ? அவனைச் சிக்கெனப் பற்றிக் கொண்டு அவன் வழியே நான் செல்வேன். அங்ஙனம் எல்லையில்லாப் பெருமையைப் பெறுவேன். எனது உயிருக்குயிராய்க் கலந்து நின்ற இறைவனை இனிமையாகக் கலப்பதே நீராடலாகும்.

20. கல்வி (சிவானுபவத்தைத் தரும் கல்வி)

290. குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந்து உள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகும் கல்விகற் றேனே.

பொருள் :  உடல்வந்த காரணத்தை அறிந்தேன். உயிர் அந்த உடலோடு பொருந்திச் செறிந்துள்ளதை அறிந்தேன். அதனால் தேவ தேவனாகிய இறைவனும் எவ்விதமான தடையுமின்றி என் மனத்தைத் தனக்கு இடமாக்கிக் கொண்டான். உவர்த்தல் இல்லாத மிகுகின்ற அனுபவ அறிவைப் பெற்றேன்.

291. கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரை செய்யுங்
கற்றி காட்டக் கயல்உள வாக்கும்

பொருள் : உண்மைக் கல்வி கற்றவர் சிந்தித்துப் பார்க்கும் போது அவர்கள் கருத்தில் ஞானக் கண் புலனாகியது. அவர்கள் அவ்வாறு புலனாகும் உண்மையைச் சிந்தித்துப் பிறர்க்கு உரைப்பர் கல்தூண் போன்று சலனமற்றிருந்து பிறர்க்கு உணர்த்தி அவர்களது ஞானக் கண்ணை விளங்கும்படி செய்வர். கற்றறி - கல்+தறி = கற்றூண். கயல்- மீன். கண்ணுக்கு ஆயிற்று.

292. நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின் செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன்று இலாத மணிவிளக்கு ஆமே.

பொருள் : எடுத்த உடலில் உயிருள்ள போதே உடல் நிலையாமையை உணர்ந்து உயிர்க்கு உறுதிபயக்கும் நிலையான போருளான இறைவனுடைய ஞானத்தைப் பெற முயலுங்கள். உங்களுடைய பாவங்கள் நீங்கி விடும். சொல்லில் வழுவின்றி இறைவனை ஏத்துங்கள். அவ்வாறு ஏத்தினால் ஒப்பிட்டுக் கூற முடியாத சுய சோதியான சிவன் விளங்கித் தோன்றுவான்.

293. கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்துமின் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே.

பொருள் : உண்மையில் பிரணவ அறிவில்லாத உலகியல் கல்வி கற்றவர்கள் பிரணவத்தினின்றும் விலகிய வழியில் செல்கின்றனர். உலகியல் பற்றுடையோர் குண்டலியின் ஆற்றலைப் பெருக்காமல் வீணாக்குகின்றனர். இரவும் பகலும் இறைவனை நினைந்து வழிபாடு செய்யுங்கள். இரசவாதம் செய்யப்பெற்ற பொன்போலக் குண்டலினி ஆற்றலால் அழியா உடல் (பிரணவ தேகம்) அமையும்.

294. துணைஅது வாய்வரும் தூயநற் சோதி
துணைஅது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணைஅது வாய்வரும் தூயநற் கந்தம்
துணைஅது வாய்வரும் தூயநற் கல்வியே.

பொருள் : இறைவழிபாடு செய்வார்க்குத் தூய்மையான சோதி துணையாக வரும். நல்ல பிரணவம் அவர்களுக்குத் துணையாக விளங்கும். சுக்கிலம் கெடாது தூய்மையுற்று உடலுக்கு உறுதுணையாய் ஒளியாகி நிற்கும். பிரணவக் கல்வியே பிறவியில் துணையாய் இருந்து வீடு பேற்றை அளிக்கும்.

295. நூல்ஒன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பால்ஒன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
கோல்ஒன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மால்ஒன்று பற்றி மயங்குகின் றார்களே.

பொருள் : உடம்பிலுள்ள சுழுமுனை நாடியைப் பற்றிச் சிரசின் உச்சிடல் பிரமரந்திரம் செல்ல மாட்டாதார், காம விகாரம் கொண்டால் சிவ யோகத்தில் பயன் கிட்டாது கெடுவர். முதுகந்தண்டைப் பற்றிச் சிரசின் மேல் சென்றவரிடம் இந்திரியங்கள் சேட்டை செய்யா. இதனை அறியாமல் கீழேயுள்ள தத்துவங்களின் இயல்பில் மயங்கி நன்மை அறியாமல் கெடுகின்றனர்.

296. ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே.

பொருள் : சுழுமுனையின் மேல் சென்றவர்க்குத் துன்பம் களையும் சிவம் நாத தத்துவத்தில் வெளிப்படுவான். நாதத்தில் விளங்கும் சிவன் பரிசுத்தமான ஒளியை வீசிக் கொண்டிருக்கும். அவ்வாறு பொருந்திய சந்திர மண்டலம் விளங்கப் பெற்றவர்க்கு, தகுதிவாய்ந்த மனம் பொருந்துகின்ற சுழுமுனை நூலேணியாகும்.

297. வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உலகு ஏழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.

பொருள் : ஞானம் பெற வாயிலாகப் பிறவி நோய்க்கு மருந்தாக இருந்த நூலேணி பற்றியோர் முன்பு அவ்வாறு பற்றாதவர் கழிக்கப்பட்ட துணையாகும். பெருமையில் சிறந்தவனாகிய சிவபெருமான் சிந்தையின் பழைய நிலையை ஒழிக்கத்தக்க துணையாவான். தேவ சொரூபம் பெற்று ஏழ் உலகங்களுக்குச் செல்லும் வழித்துணையாகவும் உள்ளான்.

298. பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிறண கிளரொளிவானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.

பொருள் : வாழ்வில் பற்றுக்கோடாக ஒரு தெய்வத்தை வழிபட வேண்டில் மேலான சிவபெருமானையே பற்றி வழிபடுங்கள். முழுமுதல் கடவுளாகிய அவனது அருளைப் பெற்று விட்டால் எல்லாம் இனிது முடி எய்தும். உபாயத்தில் வல்ல மிகுந்த தேசுடைய தேவர்கள் அனுபவக் கல்வியடையோரைக் காட்டிலும் பேரின்பம் பெற்று நின்றாரோ ? இல்லை.

299. கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து
உடலுடை யான்பல ஊழிதோ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்இருந் தானே.

பொருள் : பரந்த கடலைத் தனக்குச் சொந்தமாக உடையவன். அதே போன்று உயர்ந்த மலையையும் உடையவன். ஐம்பூதங்களையும் தனக்குத் திருமேனியாக உடையவன். இப்பூதங்கள் அழிந்து மாறுபடும் போது பல தடவைகளிலும் ஒளியே வடிவான இடபத்தில் விளங்கும் தேவதேவன். தன்னையே நினைந்து தமக்குரிய இடத்தை அமைத்துக் கொண்டவர் உள்ளத்தின் ஒளியில் அவனிருந்து அருளுவான்.

21. கேள்வி கேட்டமைதல் (வல்லோர் பால் சென்று கேட்கத் தக்கனவற்றைக் கேட்டு, மனம் அடங்கியிருத்தல்)

300. அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.

பொருள் : நீதிகளைக் கேட்டும் அந்தணர்களது அறிவுரைகளைக் கேட்டும், பாவங்கள் இவையெனக் கூறும் நீதி நூல்களைக் கேட்டும், தேவ உபாசனைக்குரிய மந்திரங்களைக் கேட்டும், பிற சமய நூல் கேட்டும், பொன் என்று உரைக்கப் பெறுகின்ற திருமேனியையுடைய எம் பெருமானது தன்மையினைக் கேட்டும் சிவகதி தானே பெற்றதாம்.

301. தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே.

பொருள் : எல்லாத் தேவர்களுக்கும் தலைவனான் சிவபெருமானும் ஒளியான திருமேனியை உடையவனும் ஆகிய இறைவனை எவர் ஒருவர் அறிபவர் ? அவ்விதம் ஒளியாக அறிந்தபின் சிவத்தை உணர்த்தும் நூல்களைக் கற்று அறிவியுங்கள். பின் கற்றவற்றையும் கேட்டவற்றையும் சுய அனுபவத்தில் வைத்து உணருங்கள். சுய அனுபவத்தில் உண்மையை உணர்ந்தவர் நிட்டை கூடிச் சிவத்துடன் பொருந்தி உயர்ந்தோராவர்.

302. மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்பது  அரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே.

பொருள் : மாட்சிமையுள்ள சிவனை வேண்டினால் திருமால் பணி செய்வான். சிவனுக்குப் பணி செய்தால் பிரமனும் ஏவல் வழி நடப்பான். சிவன் ஆணைவழி நிற்போர் தேவர் ஆகவும் ஆவர். சிவத்தின் ஆணையை அறிந்து பணி செய்தலின் பயன் திருவடிக்கண் நீங்காத பற்றாகும்.

303. பெருமான் இவனென்று பேசி இருக்கும்
திருமா னிடர்பின்னைத் தேவரும் ஆவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.

பொருள் : தலைவன் இவனே என்று பேசிக் கொண்டிருக்கின்ற உண்மை ஞானம் பெற்ற மனிதர்கள் பிறகு தேவராவர். அருமையான மாதவத்தனாகிய எங்கள் சிவபெருமான் மனிதராய்த் தேவராய் மேல் நிலைக்கு எய்திவரும் மேலான தவமுடையார்க்கு உவந்து அருள் செய்வான்.

304. ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி
நேசமும் ஆகும் நிகழ்ஒளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.

பொருள் : இறப்பும் பிறப்பும் இறைவன் வினைவழி அருளுவான். இத்தன்மையினை அறிந்து பிறர்க்கு உரைத்தும் தானே பேசியும் களிப்புற்று அன்பு செலுத்தி இருங்கள். அவன் சிவசோதியாய் இருந்து சுவாதிட்டானமாகிய மலரில் விந்துவாகிய மணத்தில் பொருந்தி அருளிக் கொண்டிருக்கிறான். கந்தம் - விந்து.

305. விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம் தாமே.

பொருள் : சிவனது பெருமையும் அதனைப் பற்றிய கேள்வியும், அக்கேள்வியால் உண்டான் ஞான ஒழுக்கமும் மனத்தில் சிந்திக்கின்ற காலத்து, நிலையில் திரியாது அடங்கியிருப்பின், தேவர் தலைவனாகிய இறைவனும் குறைவின்றி அளவற்ற காலம் அருள் புரிபவன் ஆவான்.

306. சிறியார் மணற் சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை
அறியாது இருந்தார் அவராவர் அன்றே.

பொருள் : உலகத் தொடர்பால் இறை அனுபவம் உண்டாகும் என்று சொல்வது சிறு குழந்தைகள் (சிறுவீடு கட்டி) மணலால் சோறு சமைத்து உண்டு மகிழ்வது போலாம். சுட்டியறிய முடியாத சிவனது அகண்ட வியாபகத் தன்மையை உணராதார் தம்முடைய ஆன்ம சொரூபத்தையும் அறியாதவர் ஆவர் அல்லவா ?

307. உறுதுணை யாவது உயிரும் உடம்பும்
உறுதுணை யாவது உலகுறு கேள்வி
செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கின் பிறப்பில்லை தானே.

பொருள் : உடம்புக்கு உற்ற துணையாக இருப்பது உயிராகும். உயிருக்கு துணையாக இருப்பது உலகில் ஞானியர்பால் பெறுகின்ற கேள்வியாம். அக்கேள்வியால் சிவனது திருவடியைப் பற்றி எண்ணியிருத்தலே தக்க துணையாகும். இத்தகைய பெறுதற்குரிய துணையைப் பற்றிக் கேட்பின பிறப்பு இல்லையாகும்.

308. புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம்
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு ஆமே.

பொருள் : புகழ்ந்து பேசப் பெறுகின்ற பிரமன் விஷ்ணு உருத்திரன் ஆகியோர்க்கும் பழமையானவன் எம் இறைவனாவான். தன்னை இகழ்ந்து கூறுகின்றவர்க்குத் துன்பத்துக்கு இடமாக இருப்பவன். ஆதியாகிய எம் தலைவனை மகிழ்ச்சியுடன் அவனது பெருமையை உணராது விலகி நின்றவர்க்கு, அவன் கல்லில் செதுக்கிய பசுவைப் போலப் பயன்பட மாட்டான்.

309. வைத்துணர்ந் தான்மனத் தொடுவாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றோடொன்று ஒவ்வாது
அச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சுஉணர்ந் தார்க்கே நணுகலும் ஆமே.

பொருள் : ஆன்மாக்கள் இடமாகத் தனது சத்தியைப் பதிப்பித்தருளிய சிவன், அச்சத்தியால் மனத்தொடு வாக்கையும் அவற்றோடு பொருந்தி யிருந்து உணர்கின்றான். அவனது வடிவம் ஒன்றுக்கொன்று மாறுபட்டது. எனினும் உடம்பாகிய அச்சிலிருந்து மனத் திட்பமாகிய ஆணி கழன்று உருக் குலைந்த காலத்து, ஆதியாகிய சிவனை விரும்பி நின்றவர்க்கே அவனை நெருங்கி அனுபவிக்கலாகும்.

22. கல்லாமை (கற்றும் சிவானுபவம் பெறாமை)

310. கல்லா தவரும் கருத்தறி காட்சியை
வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணுகி லாரே.

பொருள் : ஆசிரியர்பால் சென்று முறையாகக் கற்காமல் பண்டைய தவத்தால் அவர்களது கருத்தில் தெய்வக் காட்சியை உணர வல்லாராயின், அவர்கள் இறைவன் அருளால் அனுக்கிரகம் செய்யப் பெற்றவராவர். இத்தகையோர் (அனுபவமுடையோர்) உலகைப் பற்றாமல் சிவத்தைப் பற்றி நிற்பர். முறையாகக் கல்வி கற்றோரும், கல்லாதவராகக் கருதப்பட்டவர் பெற்ற அனுபவத்தை அடைவதில்லை.

311. வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே.

பொருள் : சிவத்தின் அருளைப் பெற்றவர்கள் உண்மைநெறி ஒன்று என்று எண்ணி அந்நெறியே வாழ்கின்றார்கள். சிவத்தின் அருளைப் பெறாதவர்கள் உலகில் பலநெறி உள என்று கூறுவர். ஆனால் எங்களது இறைவனே எல்லா நெறியாயும் உள்ளான். கல்லாதவர்கள் இவ்வாறு கலந்திருக்கும் இயல்பை அறிய மாட்டார்கள்.

312. நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.

பொருள் : நிலையில்லாதவற்றை நிலையுடையனவாகவும் நிலையில்லாத உடம்பை நிலையுடையதாகவும் நெஞ்சில் எண்ணுபவர்களே ! எல்லா உயிர்கட்கும் இறைவனே தாரகமாயினும் உண்மை உணராதார் நெஞ்சில் அறியப் படாதவனாகவே உள்ளான்.

313. கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்
கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே.

பொருள் : இறைவழி நிற்கும் ஆற்றல் இல்லேன். அதனால் வினைத் துயரங்களுக்கு ஆளானேன். சிவத்துடன் பொருந்தி நிற்கும் சிவநெறியைக் கற்கவில்லை. அறியாமையால் மயக்கம் செய்வனவற்றைப் பயில்பவனாக உள்ளேன். வழங்கும் வள்ளலாகிய பெருமானை மனத்தினுள் தியானிக்க வல்லேன் அல்லேன். புறம்பே நின்று உலகானுபவத்தில் திளைப்பவனாக நான் உள்ளேன்.

314. நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.

பொருள் : சீவன் எடுத்த உடம்பில் நினைத்திராது பிரிந்துவிடும் என்ற உண்மையை உணர்ந்து, சிவத்தின் அருளைப் பெற்றவர் தான தருமம் செய்தும் துறவறம் பூண்டும் ஒழுகினார். உலகில் அருளைப் பெறாதவராகிய கீழ்மக்கள் கொடிய வினையால் வினையும் துயரத்தை அனுபவிப்பர்.

315. விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ள கலந்துஅங்கு இருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்று
எண்ணி எழுதி இளைத்துவிட் டாரே.

பொருள் : பரம ஆகாயத்தினுள் விளைந்த சிவமாகிய விளங்கனி கண்ணினுள்ளே கலந்து அவ்விடத்து இருந்தது. உலகியலைப் பெரிதாக மதித்து அதில் வாழ்ந்து கொண்டு, புத்தியூகத்தால் பலவாறாக இறை நிலையை எழுதி வீணாயினரே !

316. கணக்கறிந் தார்க்குஅன்றிக் காணஒண் ணாது
கணக்கறிந் தார்க்குஅன்றிக் கைகூடா காட்சி
கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.

பொருள் : ஞான சாதனையை அறிந்தவர்க்கு அன்றிச் சிவமாகிய விளங்கனியைப் பெற முடியாது இச் சாதனையை அறிந்தவர்க்கு அன்றிக் காட்சி கைகூடாது. ஞான சாதனையை அறிந்து உண்மைப் பொருளைக் கண்டு பொருந்தி நிற்கும் வித்தையை அறிந்தவர் உண்மையான கல்வி கற்றவராவர்.

317. கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லாராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே.

பொருள் : கற்று அனுபவம் இல்லாத மூடரைக் காணவும் கூடாது. அவரது வார்த்தையைக் கேட்பதும் கடமை ஆகாது. அனுபவம் இல்லாத மூடரைக் காட்டிலும் எழுத்து வாசனையில்லாதவர் நல்லவராம். அனுபவம் இல்லாதவர் கருத்தில் இறைவனை உணர மாட்டார்.

318. கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.

பொருள் : நூல்களைக் கற்றும் அன்பவ ஞானம் இல்லாத தீய குணமுடையோர் தீமையைத் தருவதாகிய ஆணவம் கன்மம் மயை யாகிய சுற்றத்தை விடமாட்டார். இவர்கள் குற்றத்தை அறிந்து நீக்கிக் கொள்ளாத மூடர்களாவர். மேலும் பல திசைகளிலுள்ள அறிஞர்களோடு கூடி உண்மை உணரா அறிவிலிகள் ஆவார்கள். ஆனால் சிவஞானம் பெற்றுச் சிவத்தினிடம் அன்பு கொண்டு நிற்போரே கணக்கறிந்தவராவர்.

319. ஆதிப் பிரான்அ மரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந் தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பம் உள்நின்ற
சோதி நடத்தும் தொடர்வுஅறி யாரே.

பொருள் : யாவர்க்கும் தலைவனாகிய முதல்வன் தேவர்க்கும் மங்காத ஒளியாய்த் திகழ்கின்றான். ஒளி பெற்ற அடியார் நாடும் பெரிய கடவுளாய் இருக்கின்றான். அப்பெருமானைக் கற்றறிந்துவிடுவோம் என்று கூறுவார். அவர்கள் உள்ளேயே இருக்கின்ற சோதி எவ்வாறு நடத்திக் கொண்டிருக்கிறது என்பதனை அறியார்கள்.

23. நடுவு நிலைமை

(நடுவு நிலைமை என்பதற்கு, சிரசின் மேல் விளங்கும் ஒளியில் நிற்றல், நடுவாகிய சுழுமுனையில் நிற்றல், சிவசத்திக்கு இடையே நிற்றல், சூரிய சந்திரனாகிய இரு கண்களுக்கு மேல், புருவ நடுவில் நிற்றல், எல்லா உயிர்களிடமும் அந்தண்மை பூண்டு ஒழுகல் எனப் பல பொருளும் பொருந்தும்)

320. நடுவுநின் றார்க்குஅன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே

பொருள் : நடுவாகிய சகஸ்ரதளத்தில் விளங்கும் ஒளியை அறிந்து நில்லாதவர்க்கு ஞானம் கிட்டாது நடுவாகிய சகஸ்ர தள ஒளியில் நிற்போர்க்கு நரகம் கிடையாது. அவ்வாறு நடுவுநின்றார் நல்ல தேவ வடிவு பெறுவர். சம்பிரதாய முறையில் நடுவு நின்ற அடியார் வழியால் நானும் பயின்று நின்றேன்.

321. நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
நடுவுநின் றார்சிலர் ஞானிகள் ஆவோர்
நடுவுநின் றான்நல்ல நம்பனும் ஆமே.

பொருள் : சகஸ்ர தள ஒளியில் நல்ல மேக வண்ணத்தனாகிய திருமால் நின்றான். அதில் நான்கு வேதங்களையும் உணர்ந்த பிரமன் இருந்தான். அதிலே சில ஞானிகள் ஆவோரும் இருந்தனர். அதில் யாவரும் நம்பத்தக்க சிவனும் விளங்கி நின்றான்.

322. நடுவுநின் றார்சிலர் ஞானிகள் ஆவர்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர்
நடுநின் றார்சிலர் நம்பனும் ஆவர்
நடுவுநின் றார்ஒரு நானும்நின் றேனே.

பொருள் : இப் பிறவியிலேயே ஞானிகளாக வேண்டிய சிலரும் சிரசின் மேல் உச்சியில் பொருந்தியிருந்தனர். அவ்வாறு சகஸ்ரதளத்தில் பொருந்தி யிருந்தவரில் சிலர் தேவர்கள் ஆவார்கள். அவருள் வேறு சிலர் சிவமாந் தன்மை எய்துவர். அவ்வழியிலே நானும் சகஸ்ரதள ஒளியில் நிலை பெற்றுள்ள அடியார் கூட்டத்தோடு கலந்து நின்றேன்.

323. தோன்றிய எல்லாம் துடைப்பனை அவனன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.

பொருள் : உலகில் தோன்றி எல்லாவற்றையும் அழிக்க வல்லவன் இறைவனாகிய சிவபெருமான். சகஸ்ரதள ஒளியில் நிற்பவரே எப்போதும் நன்றிக் கடப்பாடு உடையவராக விளங்கினார். அவர் இறைவனது இரு திருவடிகளையும் பெற வேண்டும் என்று முயன்றிருந்தார். மேலும் அவர்கள் முதல்வனது திருநாமத்தைப் பற்றிக் கொண்டு போக நித்திரையில் இருந்தார்கள் (முயன்று என்பது மூன்று எனத் திரிந்தது).

24. கள்ளுண்ணாமை (கள் உண்ணாதிருத்தல்)

324. கழுநீர் பசுப்பெறின் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தம் காயம் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே

பொருள் : பசுக்கள் அருந்துவதற்குக் கழுநீர்ப் பெற்றால் பிறகுளந்தோறும் சென்று நீரைத் தேடி அருந்தா. கழுநீரை விரும்பித் தாகத்தால் களைத்துத் தம்முடைய உடம்பினை சிவானந்தமாகிய மதுவாகும். இம்மதுவை அருந்தாமல் முழுநீர் மயமான மதுவை உண்பர் ஒழுக்கத்தின் நீங்கியவர். என்னே அறியாமை !

325. சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்
ஒத்துச் சிவானந்தம் ஓவாத தேறலைச்
சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க்காலே.

பொருள் : சித்தத்தைச் சிவன்பால் வைத்து உருகச் செய்து, சிவ சமாதியில் பொருந்தி, சிவானந்தம் நீங்காத மதுவினை, சுத்தநிலையில் அனுபவிக்கச் சிவானந்தம் நீங்காது, அதை விட்டுச் சிவன் நினைவின்றி நிற்றலும் இருத்தலும் கிடத்தலும் கீழ்நிலையாகும். நிற்றல் நித்தலெனத் திரிந்தது.

326. காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்
மாமல மும்சம யத்துள்ள மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தம் தேறல் உணர்வுண்டே

பொருள் : காமமும் கள்ளும் கீழ்மக்களுக்கே யாகும். ஆணவ மலமும் சமயத்தை உள்ளவாறு உணராது மயக்கத்தை விளைக்கும். கெட்டுப் போகும் புத்தி உண்டாகும். மேலோர்க்குச் சிவபெருமானது இரு திருவடி இணைப்பால் பெறும் பிரணவ மயமான சிவானந்தத் தேனாகிய உணர்வு உள்ளது.

327. வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக் கள்ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக்கு உள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.

பொருள் : சத்தி வழிபாட்டினர் தேவிக்குத் திருப்தி செய்வதாய்க் கூறித் தாங்கள் மதுவுண்டு அழிபவராவர். காம வாழ்வில் உள்ளோர் காமமாகிய போதையிலிருந்தே கலங்கி நிற்பர். மகாதேவா என்னும் ஓமத்தைச் செய்வோர் சிரசின் மேல் வெளிப்படும் ஒளிக்குள்ளே தமது உணர்வை நிறுத்தி மகிழ்ந்திருப்பர். சிவநாம மகிமையை அறிந்து அனுபவிப்பவர் அப்பொழுதே சிவனை அணுகும் இன்பம் பெறுவர். நாமத்தோர் - நாம சங்கீர்த்தனம் செய்வோர்.

328. உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளண்மை நாதன் அருளினான் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே.

பொருள் : வேதாகமம் உணர்த்தும் உண்மையை விளங்க மாட்டாதார் பசு பாசம் பதி ஆகியவற்றை அறிய மாட்டார். அவர் விரும்பியவற்றை யெல்லாம் அளிக்கும் சிவபெருமானது அருளைத் துணையாகக் கொண்டு வாழமாட்டார். தெளிந்த உண்மையான சிவபோகத்தில் அவர் நிலைபெற மாட்டார். புறத்தேயுள்ள நீர்க் கள்ளை அருந்துவோர் உண்மையை உணர மாட்டார்.

329. மயக்குஞ் சமய மலமன்னும் மூடர்
மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.

பொருள் : மயங்கச் செய்கின்ற சமயக் குற்றங்களைப் பொருந்திய மூடர்கள் சமயத்தின் பேரால் மயக்கத்தைத் தருகின்ற மதுவினை அருந்துவார்கள். இப்பெரிய மூடர்கள் நல்ல வழியை ஆராய்ந்து அறியார்கள். மயக்கத்தைக் கொடுக்கின்ற மகா மாயையும் மாயையின் இருப்பிடமாகும். மயக்கத்தினின்றும் தெளிந்தாலும் வாமாசார வழிபாடு மீண்டும் மயக்கத்தைத் தருமே தவிர சிவானந்தத்தை நல்காது.

330. மயங்கும் தியங்கும் கள்வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.

பொருள் : உண்டாரை மயங்கச் செய்வதும் மாண்டாரை நினைந்து கவலச் செய்வதும் ஆகிய கள் உண்மையை அழிக்கும். இயங்கிக் கொண்டிருக்கிற பெண் இன்பத்தை நாடி அடையத் தூண்டும் இங்ஙனமாகிய கள்ளை உண்பார் நல்ல ஞானத்துத் தலைப்பட்டார். அவர்களுக்கு என்று இடையறாது விளங்கும் சிவானந்தத் தேறல் கிட்டுமோ ? கிட்டாது (ஏகாரம் எதிர்மறைப் பொருளானது)

331. இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.

பொருள் : இரவு பகல் என்று பேதமற்று தன்னை மறந்த சாக்கிர அதீத நிலையில் இருந்து, வேறு எண்ணமற்றுச் சிவானந்தத் தேனை உலகவர் அருந்தமாட்டார். இரவும் பகலும் இல்லாத திருவடி இன்பத்தில் திளைத்து, இரவும் பகலும் உள்ள அசுத்த மாயை சுத்த மாயை இரண்டையும் அகற்றி நின்றேன்.

332. சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே.

பொருள் : சத்தியை அடைய விரும்பிச் சாகத் மதத்தின் (வாமத்தோர்) மதுவை உண்பர். மதுவுண்டு தம்மை மறந்திருத்தலால் அவரது அறிவுச் சத்தி கெடுகிறது. சத்தி என்பது சிவஞானத்தை அறிந்து அதில் நிலைபெற்று, சத்திய ஞான ஆனந்தத்தை அடைதலாம்.

333. சத்தன் அருள்தரின் சத்தி அருள்உண்டாம்
சத்தி அருள்தரின் சத்தன் அருள்உண்டாம்
சத்தி சிவமாம் இரண்டும்தன் உள்வைக்கச்
சத்தியும் எண்சித்தித் தன்மையும் ஆமே.

பொருள் : சத்தியை உடையவனாகிச் சிவன் அருள் புரில்தால் சத்தியின் அருள்கிட்டும். சத்தி அருள் புரிநதால் சிவனது அருள் உண்டாகும். சத்தி சிவமாகிய இரண்டும் விளங்கும் விந்து நாதங்களை உணர்ந்து பொருந்தியிருக்க, அவர்களுக்குச் சத்தி வடிவம் உண்டாகி அட்டமா சித்திகளும் தாமே வந்தடையும்.

334. தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே
மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்
சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே.

பொருள் : சிவானந்தமாகிய தேன் முப்பத்தூறு தத்துவங்களையும் கடக்கச் செய்து, தத்துவங்களே தான் என்று மயங்கின அறிவை நீக்கிச் சிவமாய், உபாயத்தால் அடையலாம் என்று எண்ணிச் செய்யப்பெறும் பொய்த் தவங்களினின்றும் நீக்கியருளி, உண்மையான சிவபோகத்துள் செலுத்தி, உண்மையாய்த் தோன்றிய உலகம் இல்லாதது ஒழியும்படி செய்து மேலான ஆனந்தம் சிந்திக்கும்படி செய்யும்.

335. யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று
ஆகும் மதத்தால் அறிவழித் தாரே.

பொருள் : சிவயோகியர் பிராணனை வசப்படுத்தி, சந்திர மண்டலத்தில் சிவானந்தத்தை அருந்துபவர். அட்டமா சித்திகளை விரும்புபவர் கள்ளினைக் குடித்து மூடராக ஆசைப்பட்டு, உண்டாகும் பற்றினால் உள்ள அறிவையும் இழந்தார்கள்.

336. உண்ணீர் அமுத முறும்ஊ றலைத்திறந்து
எண்ணீர் குரவன் இணையடித் தாமரை
நண்ணீர் சமாதியின் நாடிநீ ரால்நலம்
கண்ணாற் றொடேசென்று கால்வழி காணுமே.

பொருள் : மரணத்தை மாற்றும் ஒளி ஊற்றைத் திறந்து அனுபவிக்க மாட்டீர். சிவகுருவின் திருவடியை எண்ணி நிற்க மாட்டீர். சமாதியில் சிவ சோதியை விரும்பிப் பொருத்த மாட்டீர். அருள் நீர்ப் பெருக்கால் நன்மை தரும் கண்ணின் காரியமாகிய ஒளி நெறி பற்றிச் சென்று, பிராணன் செல்லும் வழியை (சுழுமுனை வழியை) அறியுங்கள்.

இரண்டாம் தந்திரம் (காமிக ஆகமம்)

1. அகத்தியம் (உடம்பில் விளங்கும் நாதம், இந்த அக்கினி உடம்பைத் தாங்கிக் கொண்டும், உண்பதைச் சீரணித்துக் கொண்டும் உள்ளது என்க. இதன் சொரபம் நாதமாகும்)

337. நடுவுநில் லாதுஇவ் வுலகம் சரிந்து
கெடுகின்றது எம்பெரு மான்என்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிர்என் றானே.

பொருள் : எவ்வுயிர்க்கும் நாயகனான இறைவனே ! இவ்வுலகில் வாழ்கின்ற சீவர்கள் சுழுமுனை மார்க்கத்தில் பொருந்தி நில்லாது உலக முகமாகக் கீழ்நிலைப்பட்டுப் பிராண சக்தியை இழக்கின்றார்கள் என்று ஆசிரியர் வேண்ட, இறைவன், மூல நடுவிலுள்ள சொரூபமான நாதமே நீ சென்று, விரைந்து கெடுகின்ற சீவரது சிரசின் முன்பக்கமாகப் பொருந்திக் காப்பாயாக என்றருளினான்.

338. அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயம்செய் மேல்பால் அவனொடும்
அங்கி உதயம்செய் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே

பொருள் : அக்கினி கலையின் சொரூபமாகிய நாதத்தைச் சிரசின் முன்பக்கம் விளங்கச் செய்யும் சாதகனாகிய அகத்தியன், அதனைப் பின்புறம் பிடரிப்பக்கம் விளங்கச் செய்பவனாய், அது பரவிச் சிரசின் இடப்பக்கம் விளங்கும் தவமுனியாகி சிரசு எங்கும் நிறைகின்ற வளப்பம் மிக்க ஒளியானவன்.

2. பதிவலியில் வீரட்டம்எட்டு

(இறைவன் வீரத்தால் அட்ட இடங்கள் எட்டு. அவையாவன; திருவதிகை, திருக்கடவூர், திருக்கொறுக்கை, வழுவூர், திருக்கோவாலூர், திருப்பறியலூர், திருக்கண்டியூர், திருவிற்குடி என்பனவாம் இங்கு நடந்தன வாகவுள்ள புராணக்கதைகளுக்கு ஆசிரியர் தத்துவ விளக்கம் கொடுத்தருளுகிறார்.)

339. கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்
வருத்தம்செய் தூன்என்ற வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.

பொருள் : சீவர்களது கருத்திலே இருக்கின்ற அந்தகன் போன் அறியாமையாகிய அசுரன் உயர்ந்த உலகத்திலுள்ள உயிர்களையெல்லாம் துன்பம் செய்கிறான் என்று தேவர்கள் இறைவனை வேண்ட, அவன் சுடர் விடுகின்ற ஞானமாகிய சூலத்தைக் கொண்டு அறியாமையாகிய அசுரனை அழித்தருளினான் (அந்தகாசுர சங்காரத்தில் தத்துவம் உணர்த்தியவாறு)

340. கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடித்திட்டுத் தான்அங்கி யிட்டு
நிலைஉல குக்குஇவன் வேண்டுமென்று எண்ணித்
தலையை அரிந்திட்டுச் சந்திசெய் தானே.

பொருள் : சுவாதிட்டானச் சக்கரத்தில் விந்து நாசம் செய்து கொண்டிருந்த பிரமனை விந்து நீக்கம் செய்வதைத் தடுத்து இறைவன் அக்கினி காரியத்தால் சீவர்கள் விந்து செயம் பெறுமாறு செய்து உலகம் நிலைபெறப் பிரமனது சிருட்டியும் வேண்டும் என்று கருதி, அவன சேட்டையை நீக்கி உலக இன்பத்துக்குப் பொருந்துமாறு அருளினான். (நான்முகனின் சிரசைக் கொய்ததன் தத்துவம் உணர்த்தியவாறு)

341. எங்கும் பரந்தும் இருநிலம் தாங்கியும்
தங்கும் படித்துஅவன் தாள்உணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே.

பொருள் : எங்கும் வியாபித்தும் அகன்ற உலகுக்கு ஆதாரமாய் இருந்தும், எல்லாம் சென்று ஒடுங்குவதற்கு இடமாயுள்ள இறைவனது திருவடியை உணர்ந்த பக்குவப்பட்ட சீவர்கள் போகம் செய்யும் காலத்து பிரமனின் சேட்டை கெட, மணிபூரகத்திலிருந்து கொண்டு கவர்ச்சியைத் தந்து கொண்டு இருக்கும் திருமாலினது கவர்ச்சியைப் போக்கி யருளினான். (பிரச கபாலத்தில் குருதியை ஏற்றதன் தத்துவம் உணர்த்தியவாறு)

342. எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்ற
அங்க முதல்வன் அருமறை ஓதிபால்
பொங்கும் சலந்தரன் போர்செய் நீர்மையன்
அங்கு விரற்குறித்து ஆழிசெய் தானே.

பொருள் : என்னுடைய உயிரில் விளங்கும் உடம்புக்கு நாயகனும் நாத தத்துவத்துக்குரிய சதாசிவ மூர்த்தியும் ஆனவனிடத்து நீரை முகமாகவுடைய அபானனாகிய சலந்தராசுரன்  கீழ் நோக்குதலாகிய போரினைச் செய்ய அவ்வாறு அது கீழ் நோக்காது யோக சாதனை பால் மேற் சென்று கலந்து சகஸ்ரதளம் வட்டமாக விரியுமாறு சீவர்களுக்குப் பெருமாள் அருள் புரிந்தான். (சலந்தராசுரன் சங்காரத்தின் தத்துவம் உணர்த்தியவாறு)

343. அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார்அறி வாரே.

பொருள் : நீரை அணிந்துள்ள சிவந்த சடையினையுடைய பழமையானவன், மூன்று கோட்டைகளை அழித்தான் என்று அறிவில்லாதவர்கள் கூறுவார்கள். மூன்று கோட்டைகளை அழித்தலாவது ஆணவம் கன்மம் மாயையாகிய மூன்று மலங்களை அழித்தலாம். அவ்வாறு கோட்டையை அழித்ததை யாரே அறியவல்லார் ? (திரிபுர சங்காரத்தின் தத்துவம் உணர்த்தியவாறு)

344. முத்தீக் கெளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரிஅரன் ஆவது அறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே.

பொருள் : மூன்று தீயினை எழுப்பி நாதத்தை வெளிப்படுத்தும் அக்கினி காரியத்துள் யானை போன்ற காரிருளைக் கிழித்து வெளிப்படும் ஒளி இறைவனாக ஆகின்றதை யாரும் அறியவில்லை. குறி கணம் கூடி பல தேவர்களும் அத்தீயில் சிவன் வெளிப்பட்ட போதும் மறைந்து ஒழிந்தனர். (கயமுகாசூர சங்காரத்தின் தத்தும் உணர்த்தியவாறு)

345. மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்து அங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.

பொருள் : மூலாதாரத்திலிருந்து சுழுமுனை நாடி வழியாகக் கிளம்பி மேலெழுகின்ற மூர்த்தியை, பிரமரந்திரமாகிய மேல் துவாரத்தில் ஊர்த்துவ திருஷ்டியால் பார்த்துச் சுழுமுனையில் பொருந்தி எமனை வெகுண்டு, அக்கினி காரியம் செய்தால் உடம்பாகிய உலகைக் கடந்து சகஸ்ரதளமாகிய ஊரில் அழியாதிருக்கலாம். (திருக்கடவூர் எம சங்காரத் தத்துவம் உணர்த்தியவாறு)

346. இருந்த மனத்தை இசைய இருத்தி
பொருந்தி இலிங்க வழியது போக்கி
திருந்திய காமன் செயலழித்து அங்கண்
அருந்தவ போகம் கொறுக்கை அமர்ந்ததே.

பொருள் : நலமாயிருந்த மனத்தைச் சிவனோடு சேர்த்து வைத்து குறிவழி செல்லாது தடுத்து, தீமை செய்யாதவாறு விந்து நீக்க மாகிய காமனது செயலைக் கெடுத்து அவ்விடத்து வாழ்க்கைத் துணையுடன் பொருந்தியிருந்தே கொறுக்கை இருந்த தாகும். திருக்கொறுக்கை என்ற தலத்தில் மன்மதனைத் தகனம் செய்த தத்துவம் உணர்த்தியவாறு.

3. இலிங்க புராணம் (இலிங்க மாவது, தோற்ற ஒடுக்கங்களுக்குக் காரணமாகிய அருட் குறி புராணமாவது அதன் பழமை)

347. அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்திசெய் தானே.

பொருள் : சிவபெருமானது திருவடியைச் சென்று அடைவேன் என்று சக்தியானவள் அவனையே நோக்கி, சரீரத்தின் உச்சியாகிய சிரசில் விளங்கும் சிற்சக்தியாகி, சிவனை அடைய உறுதியான தவத்தைப் புரிந்து, ஒளி மண்டல வாசிகள் காண முறையாக அருச்சனைப் புரிந்து வழி பட்டாள்.

348. திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை
அரியனென்று எண்ணி அயர்புற வேண்டா
பரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே.

பொருள் : திரிந்து கொண்டிருக்கின்ற மும்மலக் கோட்டையை அழித்த பெருமானை அடைவதற்கு அருமையானவன் என்று நினைந்து சேர்ந்து போக வேண்டா. அவ் இறைவன் அன்புடையார்க்குப் பொய்யானவன் அல்லன். அவன் சீவர்களிடம் கருணையோடு பொருந்தித் தகுதி நோக்கி அருள் புரிவான்.

349. ஆழி வலங்கொண்டு அயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுடர் ஆதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அவ்வழி
வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே.

பொருள் : சுவாதிட்டான மணிபூரகச் சக்கரங்களிலே இடங்கொண்ட பிரமனும் திருமாலும் ஆகிய இருவரும் முறையாக மூலாதாரத்தைச் சுற்றிவர அங்கு ஒளிமயமாக விளங்கும் உருத்திர மூர்த்தியும் அம்முறையே திருமாலுக்குச் சகஸ்ரதளச் சக்கரத்தில் விளங்க அருள் செய்தான். சுவாதிட்டானத்திலிருந்து உற்பத்தியைப் பெருக்காது மேலே சென்ற பிரமனுக்கும் ஒளியினை நல்கினான்.

350. தாங்கி இருபது தோளும் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்துஅம ராஎன்று அழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே.

பொருள் : இந்திரியங்களும் புலன்களுமாகிய இருபது தோள்களும் தாங்கி விசாலமான மலையைத் தன் முயற்சியால் எடுத்த புருஷனாகிய இராவணனது ஒப்பில்லாத ஆற்றலை, அவ்விடத்து அழித்துத் தன் சிறுமை உணர்ந்து தேவா காப்பாற்று என்று அவன் வேண்டியபின் நீங்காத பத்தியை நிலைபெறுமாறு செய்தான் அனாதி மலரகிதனான சிவபெருமான்.

351. உறுவது அறிதண்டி ஒண்மணற் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தின் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.

பொருள் : தனக்கு உறுவதைக் காரண காரியத்தோடு அறியவல்ல சீவனாகிய சண்டீசன், வெண்மையான ஒளியாகிய மணலைச் சேர்த்து, பிறவி அறும் வகையில் ஞானேந்திரியமாகிய ஐந்தும் பசுக்களையும் புறப்புலன்களில் மேயாது தடுக்க, மாயையால் உண்டான உடம்பாகிய தந்தை பொறாது பகை கொண்டு கெடுக்க, வெகுண்டு அக்கினி கலையாகிய வாளால் இடைபிங்கலையாகிய இருகால்களையும் தொழிற்படாமல் செய்து சிவத் தொண்டன் ஆனான்.

352. ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகஎன் றானே.

பொருள் : மனம் ஒருமைப்பட்ட தேவர்கள் எல்லோரும் சிவபெருமானிடம் ஓடி வந்து, முகவாட்டத்துடன் வருத்தத்தோடு சரணடைந்து நாடி, இறைவனே போற்றி என்று வணங்க, ஒப்புயர்வற்ற புகழையுடைய சிவபெருமான் எழுந்து மேலே வந்து சேருங்கள் என்று அருளினான். (ஆலகால விஷம் தேவர்களைத் துரத்தியதாக உள்ள புராணத் தத்துவம் உணர்த்தியவாறு)

4. தக்கன்வேள்வி

(தக்கன் வேள்வியாவது, ஆண் பெண் கூட்டுறவாகும். சிவ பெருமானை நினைந்து செய்யாமையால் விந்து செயமாகிய பயனைப் பெறாமல் கூட்டுறவாகிய வேள்வி சிதைந்தது)

353. தந்தை பிரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.

பொருள் : ஆண்பெண் கூட்டுறவாகிய தக்க யாகத்தைச் சிவபிரான், தன்னை நினையாமல் செய்தமையால் கோபங் கொண்டான். காமாக்கினியால் தகிக்கப்பட்டு விந்து நீக்கம் உண்டாக, தேவர்கள் எண்ணியவாறு விந்து செயமாகிய பூசையின் பயனைப் பெறவில்லை பெருமான் வெகுண்டவுடனே தேவ காரியச் சிதைவு உண்டாகி அவர்கள் வெறியேறினர்.

354. சந்தி செயக்கண்டு எழுகின் றரிதானும்
எந்தை இவனல்ல யாமே உலகினில்
பந்தம்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்
அந்தமி லானும் அருள்புரிந்த தானே.

பொருள் : ஆண் பெண் சேர்க்கையைச் செய்வதற்குத் தருக்கி எழுகின்ற திருமாலும், உலகினில் படைக்கின்றவன் சிவனல்ல நாமே தான் என்றான். அதனால் கட்டினை விளைவிக்கின்ற பாசக் கடலில் ஆழ்ந்து வருந்திய பின் சிவனை நோக்கித் தவம்புரிய முடிவில்லாத பெருமானும் விஷ்ணு தத்துவம் மேலே விளங்கும்படி அருள் செய்தான். (எழுகின்றஅரி என்பது எழுகின்றரி எனத் திரிந்தது)

355. அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள்
அப்பரி சேஅங்கி அதிசய மாகிலும்
அப்பரி சேஅது நீர்மையை உள்கலந்து
அப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.

பொருள் : முன்னே முறையே பிரமனும் காம காரியமாகிய தக்கயாகத்துக்குத் தானே தலைவனெனத் தருக்கினான். அதனால் காமாக்கினி மூண்டெழுந்த போதிலும், அவ்வகையே அதன் தன்மையில்  பொருந்தி, சிவபெருமான் முறையாக ஆரவாரத்தோடு விளங்குகின்றான்.

356. அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேஅவ ராகிய காரணம்
அப்பரி சுஅங்கி உளநாளும் உள்ளிட்டு
அப்பரி சாகி அலர்ந்திருந் தானே

பொருள் : அவ்வண்ணம் பிரமன், திருமால் முதலிய தேவர்கள், அத்தன்மையைப் பெற்றதற்குக் காரணம் சிவபெருமானே யாம். அவ்வாறு அக்கினி கலையுள்ளே விளங்கும் வரை அவ் அக்கினி கலையில் சிவபெருமான் நீக்கமற நிறைந்து விளங்கியிருந்தான்.

357. அலர்ந்திருந் தான்என்று அமரர் துதிப்பக்
குலந்தரும் கீழ்அங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரம்இது சென்று கதுவ
உவந்த பெருவழி ஓடிவந் தானே.

பொருள் : அமரர்கள் எல்லாம் ஆகாய பூத நாயகனான சிவபெருமானே எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்று உணர்ந்து வேண்ட, ஆறு ஆதாரங்களில் கீழான மூலாதாரத்திலுள்ள அக்கினி கலை சுழுமுனை வழியாக மேலெழ, சிவந்த மேலான ஒளியானது சகஸ்ர தளத்தைச் சென்று பற்ற, இதுவே வழிபடும் மகிழ்ச்சிக்குரிய பெருவழி என்று சிவன் விரைந்து வந்தருளினான்.

358. அரிபிர மன்தக்கன் அருக்கன் உடனே
வருமதி வாலை வன்னிநல் இந்திரன்
சிரமுக நாசி சிறந்தகை தோள்தான்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.

பொருள் : திருமால் பிரமன் தக்கன் சூரியனுடன் வருகின்ற சந்திரன் நாமகள் அக்கினி நல்ல இந்திரன் ஆகியோர் சிரம், முகன், மூக்கு, கை, தோள், ஆகியவற்றைச் சிவனருள் பொருந்தாமையால் இழந்து பின் நல்லோராயினர்.

359. செவிமந் திரஞ்சொல்லும் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
செவிமந் திரம்செய்து தாமுற நோக்கும்
குவிமந் திரம்கொல் கொடியது வாமே.

பொருள் : செபிக்கத்தக்க மந்திரங்களைச் சொல்லிச் சிவனருள் பெற்ற தேவர்கள், வாயிட்டுக் கூற முடியாத பிரணவத்தால் மூலா தாரத்திலுள்ள அக்கினியைத் தூண்டி நாதம் உண்டாகச் செய்து, தாம் பொருந்த நோக்கும் மனத்தை ஒருமைப் படுத்தும் மகா மந்திரம் கொடுமையானது ஆகுமா ? ஆகாது.

360. நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லார் புரத்தை விளங்குஎரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.

பொருள் : நல்லாரது உடம்பிலுள்ள ஒன்பது துவாரங்களாகிய குண்டங்களும் சிறந்து இன்புறு, பல தேவர்கள் அடியேங்கட்கு இரங்கி அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளக் கொடிய அசுரர் அழியும் வண்ணம் பிரணவமாகிய வில்லினால் ஆணவாதி மும்மலங்களை எரித்து அருளினான்.

361. தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளிந்தாங்கு அடைவதுஎம் ஆதிப் பிரானை
விளிந்தான் அதுதக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங்கு அருள் செய்த தூமொழி யானே

பொருள் : சினந்து பின்னர் அருள்புரிந்த நாத சொரூபியான சிவபெருமானே, தன்னை நினையாது இயற்றிய காம வேள்வியை அழியுமாறு செய்தான். ஆனால் இன்ப வடிவமாகிய அப்பெருமானை அன்பு செலுத்தி அடைய வேண்டும். அதனால் நூல் வல்லார் கூறும் மயக்க நெறி பற்றிக் கலங்காதே.

5. பிரளயம்

(பிரளயம் என்பதற்கு அழிவு என்று பொருள். அழிவினைச் செய்து அருளுபவன் சிவன் என்பத இங்குக் கூறப்பெறும்.)

362. கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்து
இருவரும் கோஎன்று இகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின்று அருள்புரிந் தானே.

பொருள் : கருவிடும் எல்லையே மூடிக்கொண்டு எழுகின்ற மணிபூரகத்திலுள்ள நீர் மண்டலத்தில், பிரம விஷ்ணுக்களாகிய இருவரும் தம்முள் மாறுபட மணிபூரகத்தானத்திலுள்ள அறிவு மயமான சூரியன் மேலெழுந்து சிவசூரியனாகி அருமையான உச்சியின் மேல்நின்று இருவருக்கும் அருள்புரிந்தான்.

363. அலைகடல் ஊடுஅறுத்து அண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்தலை மேற்கொண்டு
உலகார் அழற்கண்டு உள்வீழாது ஓடி
அலைவாயில் வீழாமல் அஞ்சல்என் றானே.

பொருள் : சிவன் கடல் பிரதேசமாகிய மணிபூரகத் தானத்தினின்றும் பிளந்தும் கொண்டு, அண்டத்தின் எல்லையை அடைந்து சகல தத்துவ நாயகர்களுக்கும் தானே தலைவன் என்ற பெயரை வகிக்கும் திறனுடையவனாகி, உலகில் உள்ளோர். காமாக்கினியில் வீழாது தான் சென்று துன்பமாகிய அலைமோதும் பிரபஞ்சத்தில் அழுந்தாமல் அஞ்சேல் என்று அருள் செய்தான்.

364. தண்கடல் விட்ட தமரரும் தேவரும்
எண்கடல் சூழ்எம் பிரான்என்று இறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழுந்து அப்புறம்
கண்கடல் செய்யும் கருத்தறி யாரே.

பொருள் : குளிர்ச்சி பொருந்திய மணிபூரகமாகிய கடலினைக் கடந்த அறிவு மயமான சூரியனை அமரத்துவம் பெற்றோரும் ஒளிமண்டல வாசிகளும் சிரசின்மேல் எட்டுத் திக்கும் கடல் போன்று பரந்து விளங்கும் ஒளிமயமான சிவன் என்று வணங்கி ஏத்துவர். ஆகாயத்தைக் கடல் போன்று செய்த அப்பெருமான் சிரசின் மேலும் சென்று, அகக் கண்ணுக்குப் பரவெளியாகக் காட்சி தருவதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

365. சமைக்கவல் லானைச் சயம்புஎன்று ஏத்தி
அமைக்கவல் லார்இவ் உலகத்து ளாரே
திகைத்ததெண் ணீரில் கடல்ஒலி ஓசை
மிகைக்கொள் அங்கி மிகாமைவைத் தானே.

பொருள் : எல்லாத் தத்துவங்களையும் படைப்பவனைத் தனக்கு ஒரு படைப்பவன் இல்லாதவன் என்று துதித்துத் தங்களிடம் வியாபகப்படும் முறையில் அமைத்துக் கொள்பவர் இவ்வுலகத்து உள்ளவரே ஆவர். பொங்கிய நீரில் கடலொளி போன்ற நாதம் மேம்பட்டுப் பரவக் காமாக்கினியை மிகாதவாறு அச்சுயம்பு மூர்த்தி வைத்தான்.

366. பண்பழி செய்வழி பாடுசென்று அப்புறம்
கண்பழி யாத கமலத்து இருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென்று அச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே.

பொருள் : பண்பினைக் கெடுக்கின்ற காமச் செயலாகிய வழிபாட்டினைச் செய்துகொண்டு, சுவாதிட்டானச் சக்கரத் தில்இருக்கின்ற நட்பைக் கொடுக்கின்ற பிரமனைத் தேடியடைந்து அவனது சிரமானது ஆகாயத்தை பழிக்காதவாறு பிரசா விருத்தியாகிய சேட்டையினை ஏற்றருளினான்.

6. சக்கரப் பேறு

(சக்கரப் பேறாவது ஆணையால் பெற்ற செல்வம் ஆகும். சிவபெருமானிடம் திருமால் சக்கரம் பெற்ற வரலாற்றின் தத்துவம் இங்குக் கூறப் பெறும்.)

367. மால்போ தகன்என்னும் வண்மைக்குஇங்கு ஆங்காரம்
கால்போதம் கையினோடு அந்தரச் சக்கரம்
மேல்போக வெள்ளி மலைஅம ராபதி
பார்போகம் ஏழும் படைத்துஉடை யானே.

பொருள் : மயக்கத்தைத் தருபவன் என்னும் உணர்வாகிய விஷ்ணு தத்துவத்துக்கு, இவ்விடத்து உலகானுபவம் அறுபட அழகிய சுழுமுனை வழியாக மணிபூரகத்திலுள்ள உணர்வு சகஸ்ர தளமாகிய வட்டத்தை அடைய வெள்ளொளியில் விளங்கும் தேவாதி தேவனாக பூமி முதலாக ஏழ்உலக இன்பங்களையும் படைத்து அவற்றை அளிப்பவனாக விளங்குகின்றான்.

368. சக்கரம் பெற்றுநல் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைத் தரிக்கஒண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே.

பொருள் : முற்கூறிய சக்கரத்தைப் பெற்றுக் குடர் விளக்கம் செய்த திருமாலாகிய தாமோதரனும் பெற்று சக்கரத்தைத் தாங்க முடியாமல், மேலான சிவபெருமானை விருப்பத்துடன் வழிபாடும் செய்ய, தனது வியாபக சத்தியை ஒரு கூறு செய்தளித்துத் தாங்கும்படி செய்தான்.

369. கூறது வாகக் குறித்துநற் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சக்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.

பொருள் : பகிர்ந்து கொடுப்பதற்காக அமைத்து நல்ல சக்கரத்தைத் திருமாலுக்கு ஒரு பகுதியைக் கொடுத்தான். அவ்வாறே தனது சக்திக்கும் பகிர்ந்து கொடுத்தான். இவ்வாறு பகிர்ந்து திருமாலுக்கும் சக்திக்கும் தனது திருமேனியைத் தந்தருளினான்.

370. தக்கன்தன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்தன் வேள்வியில் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைச் சசிமுடி மேல்விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே

பொருள் : பிரசாவிருத்திக் கிரியையாகிய தக்கனது யாகத்தை அழித்தருளிய வீரப்பத்திரன் மேல் அவ்வேள்வியில் திருமாலும் ஆணையாகிய சக்கரத்தை அவ்வீரனது பிறைமுடியில் செலுத்த காம வாயுவின் வேகத்தால் அக்கினி சத்தியாகப் பயன் கிட்டாது போயிற்று (வீரபத்திரர் தக்கண் வேள்வியைத் தகர்த்தருளினார் என்பதன் தத்துவம் உணர்த்தியவாறு).

7. எலும்பும் கபாலமும்

(எலும்பும் கபாலமும் என்பன எலும்பும் மண்டை ஓடும் ஆம். ஆனால், அவை உருவத்தையும் அறிவையும் அறிப்பன. பிரம விஷ்ணுக்கள் எலும்புகளைச் சிவன் அணிந்துள்ளான் என்பதன் தத்துவம் உணர்த்தப் பெறுகிறது.)

371. எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவர் ஆதி
எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில்
எலும்பும் கபாலமும் இற்றுமண் ஆமே.

பொருள் : பேரூழிக் காலத்தில் எலும்பையும் மண்டையோட்டையும் ஏந்திக் கொண்டு எழுந்த சிவன், மணிமுடி தரித்த திருமால் முதலிய தேவரது உருவமாகிய எலும்பையும் அறிவாகிய மண்டை யோட்டையும் சூக்குமத்தில் தாங்கவில்லை யெனில் பிறவிக்கு வரும்போது மக்களது பழைய உருவமும் அறிவும் தொடர்பின்றிப் போகும்.

8. அடிமுடி தேடல்

(அடிமுடி தேடலாவது சிவனது அடியையும் முடியையும் தேடல். சிவன் சோதிப் பிழம்பாதலின் அடியையும் முடியையும் ஆணவத்தோடும் ஆசையோடும் சென்று வழிபட்ட பிரம விஷ்ணுக்களால் காண முடியாதது என்பது இப்பகுதியில் விளக்கியவாறு)

372. பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றுகின் றாரே.

பொருள் : பிரமனும் திருமாலும் சிவ வியாபகத் துட்பட்டிருந்தும் தங்களது அறியாமையால் அவ்விருவரும் தாங்களே தலைவர் என்று அகங்கரிக்க, மேலான சிவன் சோதிப் பிழம்பாய் முன்னே தோன்றவும் அப் பேரொளியாகிய சிவனது அடியையும் முடியையும் உணராது தேடுவராயினர்.

373 ஆமேழ் உலகுற நின்றஎம் அண்ணலும்
தாமேழ் உலகில் தழல்பிழம் பாய்நிற்கும்
வானேழ் உலகுறும் மாமணி கண்டனை
நானே அறிந்தேன் அவன்ஆண்மை யாலே.

பொருள் : ஆகின்ற ஏழ்உலகங்களும் பொருந்துமாறு விளங்கிய எம் தலைவனும், தாமே ஏழு உலகிலும் நிறைந்து அக்கினி வடிவில் வியாபித்துள்ளான். ஆகாய பூதத்தில் ஏழு உலகிலும் விளங்கும் நீலகண்டனை அவனது அருளால் ஒன்றுபட்டுப் பிரம விஷ்ணுக்களால் காணமாட்டாதவனை நான் அறிந்தேன்.

374. ஊனாய் உயிராய் உணர்வுஅங்கி யாய்முன்னம்
சேணாய்வா னோங்கித் திருவுருவாய் அண்டத்
தாணுவும் ஞாயிறும் தண்மதி யும்கடந்து
ஆள்முழுது அண்டமும் ஆகிநின் றானே.

பொருள் : சிவபெருமானாய் உடம்பாய் உயிராய் அதனுள் நின்ற உணர்வாய் அக்கினியாய், பிரம விஷ்ணுக்களாலும் அறியாத காலத்துத் தூரப் பொருளால் ஆகாய மளவும் ஓங்கி விளங்கும் சோதி உருவாய், அண்டங்களுக்கு ஆதாரமான ஸ்தம்பத்தையும் அவற்றைச் சுற்றி வரும் சூரிய சந்திரனையும் கடந்து ஆளுகின்ற அண்டங்கள் முழுமையுமாக விளங்கி நின்றான்.

375. நின்றான் நிலமுழுது அண்டத்துள் நீளியன்
அன்றே அவன்வடிவு அஞ்சினர் ஆய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றாம் கழலடி நாடஒண் ணாதே.

பொருள் : நிறைந்து நின்ற சிவன் சர்வ அண்டங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு தான் உயர்ந்து நின்றனன். சிவன் பேரொளியாக நீண்டு நின்ற காலத்து அவனது திருமேனியைக் கண்டு அஞ்சினவராய், அச் சோதியை ஆராயச் சென்ற பிரம விஷ்ணுக்களாகிய இருவரும் சிவனது திருமுடியானது ஆராயுந்தோறும் வளர்ந்து கொண்டே மேற்செல்ல, நன்மை தருவதாகிய அச்சிவனது அருளைப் பெறாதவராயினர்.

376. சேவடி ஏத்தும் செறிவுடை வானவர்
மூவடி தாஎன் றானும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செப் பிரமனும்
தாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே.

பொருள் : செம்மையான திருவடியைப் புகழ்கின்ற கூட்டமான தேவரும் மூன்று அடி தா என்று மகாபலியிடம் கேட்ட திருமாலும் முனிவரும் கீத வடிவான மந்திரங்களைக் கொண்டு விரும்பியதைச் செய்யலாமென்ற பிரமனும்  சுற்றி அலைந்து அவனைச் சேரமுடியுமா ? முடியாது.

377. தானக் கமலத் திருந்த சதுமுகன்
தானக் கருங்கடல் வாழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொருள் தன்மைய தாமே.

பொருள் : சுவாதிட்டானச் சக்கரத்திலுள்ள நான்முகனும், மணிபூரகத் தானமாகிய கருமையான கடலில் வாழ்கின்ற திருமாலும் ஊன் பொதிந்த உடம்பினுள்ளே உயிர்போல் உடனாய் உணர்கின்ற முன்மூளை பின் மூளையாகிய தானங்களில் அதிட்டித்துள்ள சதாசிவமூர்த்தியாகுமா ? ஆகாது.

378. ஆலிங் கனஞ்செய்து எழுந்த பழஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்கண்டு
ஆலிங் கனஞ்செய்து உலகம் வலம்வரும்
கோலிங் கம்அஞ்சுஅருள் கூடலு மாமே.

பொருள் : எல்லாவற்றிலும் கலந்தெழுகின்ற மேலான சுடர்ப் பொருள் ஆன்மாக்களின் உய்திக்காக இங்கே அமைக்கப் பெற்ற உண்மை நெறியை அறிந்து, எல்லாத் தத்துவங்களிலும் கலந்தும் கடந்தும் நிற்கின்ற மேலான பஞ்ச சாதாக்கியத்தின் அருளைப் பெறலாம்.

379. வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத்து எம்போல் அரனை அறிகிலர்
ஆள்கொடுத்து இன்பம் கொடுத்துக் கோளாகத்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே.

பொருள் : தமக்கு ஒளியைக் கொடுத்த சிவபெருமானை வணங்கிய தேவர்கள் அடிமையாகக் கொடுத்து எம்மைப் போல் இறைவனை அறியவில்லை. தன்னையே எமக்கு ஆளாகக் கொடுத்தும் சிவ போகத்தை அருளியும் நாங்கள் உய்தி பெறும் வண்ணம் வலிமையான திருவடியைத் தந்தருளிய இறைவனைப் பொருந்தாதவராயினர்.

380. ஊழி வலஞ்செய்துஅங்கு ஓரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது தாஎன
ஊழிக் கதிரோன் ஒளியைவெண் றானே.

பொருள் : ஊழியைச் செய்கின்ற உருத்திர மூர்த்தியை ஆராய்ந்து அறிகின்ற சிவனுக்கு, பிரம பட்டத்தோடு வாழ்கின்ற இப்பிரமன் வெளிப்பட்டு நின்று, விரும்பப்படுகின்ற என்னுடைய சிரசில் தாங்கள் விதிக்கும் கட்டளையைத் தாரும் என்று பிரமன் வேண்ட, ஊழியைச் செய்கின்ற சிவன் பேரொளிப் பிழம்பாய் விளங்கி நின்று சிருட்டித் தொழிலை அருளினான்.

9. சர்வ சிருஷ்டி

(சர்வ சிருஷ்டி என்பது, எல்லாவற்றையும் படைத்தல் என்றபடி. சர்வ சங்கார காலத்தில் எல்லாவற்றையும் ஒடுக்கிய சிவனே மீண்டும் அம்முறையே படைப்பான் என்பது இங்குக் கூறப் பெறும்.)

381. ஆதியோடு அந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தொன்றத் தோன்றுமாம்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.

பொருள் : முதலும் முடிவும் இல்லாத மேலான பரம்பொருள், அறிவு மயமாகப் பிரிப்பின்றியுள்ள பராபரையான சோதியினிடம் பரன் தோன்றத் தீமையில்லாத பரை தோன்றும், அப் பரையினிடமாக விளங்குகின்ற நாதம் தோன்றும்.

382. நாதத்தில் விந்துவும் நாதவித் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்
வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே.

பொருள் : முற்கூறிய நாதத்திலிருந்து விந்துவும் சுத்த மாயையில் தோன்றிய நாத விந்துக்களில் சிவன் என்றும் சத்தி என்று பிரிந்து ஞானம் என்றும் செயல் என்றும் பிரிந்து முறையே உண்டாதலால் உலகைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற சங்கற்பமாகிய இச்சை காரணமாக அனைத்தும் சுத்த மாயையினின்றும் தோன்றுவனவாம்.

383. இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள இருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.

பொருள் : தத்துவங்கள் தோன்றுவதற்கு இடமாகிய சத்தி பராசத்தியினிடமாகத் தோன்றி, நவரத்தினம் போன்ற பிரகாசத்துடன் ஆன்மாவில் கலந்து வியாபகமாய் இருக்கும். ஆற்றலோடு தொழில் செய்கின்ற அச்சத்தியில் பெருமையைக் கூறப் புகில் அளவிடற் பாலதாகும்.

384. தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்து சத்திஓர் சாத்து மானாமே.

பொருள் : எண்ணத்துக்கு அப்பாற்பட்ட சிவசோதி எண்ணத்துக்கு உட்பட்டு வரும் சத்தியாய் இச்சை காரணமாக உண்டாகிய நாதத்தைப் பொருந்திய விந்துவாய், ஐந்தொழில் பாரத்தினை ஏற்று நடத்தும் சதாசிவ மூர்த்தி நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ஆகிய ஐந்துக்கும் சார்வாகிய சத்தியாகவும் ஒப்பற்ற சத்தியை உடையவனாகவும் உள்ளான்.

385. மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீரும் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.

பொருள் : அசுத்த மாயையினின்றும் ஆகாயமாகிக் காற்றுத் தோன்றி வளர்ந்திடும் நெருப்பினின்றும் நீரும் பொருந்திக் கடினத் தன்மையுடைய நிலமாய் பஞ்சீகரண நியாயத்தில் ஒன்றில் ஐந்து தன்மைகளுக்கும் கலந்து ஐம்பெரும் பூதங்களாய் பூ என்று வியாகிருதியில் பிரபஞ்சம் உண்டாகும். (கான் நெருப்பு.)

386. புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்
புவனம் படைப்பான்அப் புண்ணியன் தானே.

பொருள் : பிரபஞ்சத்தைப் படைத்தருளுவது சிவசத்தியாகும். அவர்கட்குப் பிரமன் விஷ்ணு உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் ஆகிய ஐவர்கள் புத்திரர்கள் ஆவார்கள். அவ்வாறு படைக்கும் சிவசத்தி சொரூபமான பொருளே நான்முகனாய் பிரபஞ்சத்தைப் படைத்து இதம் செய்யும் புண்ணிய மூர்த்தியாகும்.

387. புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்ந்திடும் சத்தியும்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே

பொருள் : சிவன் அறிவு மயமாய் எல்லாப் புவனங்களிலும் பொருந்தி குளிர்ச்சி பொருந்திய மாயா காரியப் பொருளைக் காத்தருளுவர். சத்தியும் கண்ணோட்டமுடன் (இரக்கம்) எல்லாவற்றும் கலந்து, தாங்கும் தன்மையதாய் வியாகிருதியில் விரிந்து எழுவான்.

388. நீரகத்து இன்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைப்பிறப் பாமே.

பொருள் : நீர்ப் பிரதேசமான மணிபூரகத்தில் புருஷனுக்கு இன்பம் உண்டாகும். அக்கினி விளங்கும் அநாகதமாகிய நெஞ்சினுள் ஒளிவீசும் கிரணங்கள் உண்டாகும். அவ்வாயு விளங்கும் விசுத்தியில் ஆராய்த்தக்க உயிர்ப்புநிலை பெற்றிருக்கும் ஆகாய பூதகுணமாகிய நாதம் சத்தியைத் தந்து கொண்டிருக்கும். நீர் மண் இடையேயுள்ள சுவாதிட்டானமே உற்பத்திக் குரிய இடமாகும்.

389. உண்டுஉல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டுஇவ் வுலகம் படைக்கும் பொருளே.

பொருள் : உலகம் ஏழினையும் உண்டு உமிழ்ந்த திருமால் உடனாய், எல்லா அண்டங்களில் வாழும் தேவர்களுக்குத் தலைவனும் முன்னோனுமாகிய சிவபெருமான் உலகினைப் படைக்கும் நான்முகனோடும், பழமையாகவே இவ்வுலகம் படைக்கின்ற மெய்ப் பொருளாகும்.

390. ஓங்கு பெருங்கடல் உள்ளறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்கும் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதவுணர்ந் தானே.

பொருள் : பெருகுகின்ற கடற்பிரதேசமாகிய மணிபூரகத்திலுள்ள திருமாலுடன் சிரசின்மேல் அழகான வெள்ளொளியில் விளங்கும் பராபரனாகிய சிவபெருமானும் பூரிக்கின்ற சுவாதிட்டானச் சக்கரத்திலிருக்கின்ற பிரமன் அவ்விடத்து உடம்போடு உயிரைப் புணர்த்துகின்ற தன்மையை உணர்ந்திருந்தான்.

391. காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்
பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாய்உல காய்அமர்ந் தானே.

பொருள் : சிருஷ்டி காரணமாகிய சிவபெருமான் அன்பினால் எல்லாப் பொருளோடும் கலந்திருப்பவன். திருமாலாய் உடம்பின் நடுப்பாகமாகிய உந்திக் கமலத்தில் இருப்பான்.  அவனே புவனங்களை அன்பில் சிருஷ்டி செய்யும் நான்முகனாய் உள்ளான் அப்பெருமானே சொற்பிரபஞ்சமாயும் பொருட் பிரபஞ்சமாயும் உள்ளான்.

392. பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு
அயன்ஒளி யாயிருந்து அங்கே படைக்கும்
பயன்எளி தாம்வய ணந்தெளிந் தேனே.

பொருள் : எல்லாப் பயன்களையும் எளிமையாக நல்கும் பெரிய மாணிக்கத்தை விளங்கச் செய்ய நன்மை தரும் சிவன் ஒருவன் உளன்.  அப்பெருமான் பிரமனுக்கும் ஒளியை நல்கிப் படைத்தல் தொழிலை மூலாதாரத்திலிருந்து செய்கிறான். அவன் துணை கொண்டு பயனை எளிமையாக அடையும் காரணத்தை அறிந்தேன். (வயணம் - காரணம்)

393. போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்து
ஆக்கமும் சிந்தையது ஆகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திமையொடும்
தாக்கும் கலக்கும் தயாபரன் தானே.

பொருள் : அழிப்பும் படைப்பும் சிவனருளால் நிகழும் காப்பும் ஆகிய முச்செயல்களையும் நினைக்கின்ற காலத்தில், சிரசைச் சூழவுள்ள எட்டுத் திசைகளிலும் மூலாதாரத்தினின்று மேலே வந்த செவ்வொளி மோதிப் பரவும்.

394. நின்றுயி ராக்கும் நிமிலன்என் ஆருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்துய ராக்கும் உடற்குத் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே.

பொருள் : உலகுயிர்களோடு பொருந்தி நின்று பக்குவம் செய்யும் மலமில்லாத சிவன், என்னுடைய அருமையான உயிருக்கு வளமாம் தன்மையைச் செய்து என் உடம்பில் பொருந்தி முன்னே துன்பத்தைக் கொடுத்த உடம்புக்குத் துணையாய் நடு நாடியின் உச்சியில் உயிர்ப்பாய் நன்மை செய்து கொண்டு இருக்கின்றான்.

395. ஆகின்ற தன்மையின் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துஉட லாய்உளன்
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.

பொருள் : பிரபஞ்சம் உண்டாதற் பொருட்டுப் பாம்பை அணிந்த கொன்றை வேந்தனும் உருகுகின்ற சிவந்த பொன்போன்ற மேலான அழகிய திருமேனியை யுடையவனும் ஆகிய சிவன், பிறவிக்குச் செல்கின்ற சீவன் வாழும் உடலாயும் உள்ளான். அவன் சீவனைச் சிவமாக்கி ஆளுகின்றவன் ஆவான். (அக்கு - உருத்திராட்சமுமாம்)

396. ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்றும் ஆமே.

பொருள் : ஒருவனாகிய சிவனும் ஒருத்தியாகிய சத்தியும் விளையாடல் செய்தார்கள். அவ் இருவரது விளையாட்டு எல்லாம் செய்ய வல்லது சூரிய கதி மாறுபட்டால் உண்டாகும் பருவ காலங்களுக்கு  ஏற்ப விளையும் பயன்களும் உலகில் வேறாக இருக்கும். அதே போன்று அருள் பதிவின் மாறு பாட்டால் உண்டாகும். பக்குவத்துக்கு ஏற்ப விளையும் பயன்களும் உலகில் வேறுபடும்.

397. புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத்து அண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேன்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.

பொருள் : புவனங்களுக்கு அதிபதியான உருத்திரனிடம் புகுந்து உலகை அழிக்கின்ற செயலைச் சிவன் அறிவான். அவன் பந்தங்களால் சுற்றப்பட்ட உலகினைத் திருமாலிடம் பொருந்திக் காக்கின்ற செயலை அறிவான். சுவாதிட்டான மலர்மேல் உறைகின்ற செயலை அறிவான். சுவாதிட்டான மலர்மேல் உறைகின்ற பிரமனிடம் பொருந்திச் சிருஷ்டித் தொழிலையும் அவன் அறிவான். அவ்வாறு அறிகின்ற சிவனது ஆட்சிக்கு அடங்கியே அவரவர் தொழில்களைச் செய்கின்றனர்.

398. ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவரும்
காரிய காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லார்விந்து விற்பிறந்து
ஆணவம் நீங்காது அவரெனல் ஆகுமே.

பொருள் : ஆணவ மலத்தை உடையவராகிய பிரமனாதி ஐவரும் தகுதிபற்றி மேலுள்ளவர் காரண ஈசர் என்றும் கீழ் உள்ளவர் காரிய ஈசர் என்றும் சொல்லப் பெறுவர். இறைவன் விரும்பிய வண்ணம் நடைபெறும் ஐந்தொழிலால் சுத்த மாயையில் தோன்றி, ஆணவ மலர் முற்றிலும் நீங்காதவர்கள் என்றே சொல்லப் பெறுவர்.

399. உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாம்
மற்றைய மூன்று மாயோ தயம்விந்து
பெற்றவன் நாதம் பரையிற் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல்வினை யாட்டிதே.

பொருள் : மாயையாகிய சத்தி ஒன்றாயிலும் அது சுத்த மாயை, அசுத்த மாயை, பரகிருதி மாயை என்று மூன்றாக உள்ளது. ஏனைய சாதாக்கியம், மகேசுவரம், சுத்தவித்தை ஆகிய மூன்றும் சுத்த மாயையின் காரியமாகும். விந்துவைப் பெற்ற நாதமானது பரையினின்றும் தோன்றுவதால், பரையோடு சிவனது பழமையான விளையாட்டே இச்சிருஷ்டி முதலியனவாகும்.

400. ஆகாயம் ஆதி சதாசிவ ராதிஎன்
போகாத சத்தியுள் போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
ஆகாயம் பூமி காண அளித்தலே.

பொருள் : ஆகாயம் முதலிய ஐம்பூதங்களை இயக்கும் சதாசிவர் முதலிய ஐவரும் என்றும் உள்பொருளாகிய மாயா சத்தியுள் பொருந்தி என் உடம்பிலும் உயிரிலும் தொழில் புரிகின்றனர். பெருமை பொருந்திய சதாசிவ மூர்த்தி யானவர் ருத்திரன் விஷ்ணு பிரமன் ஆகியோராய் விண்ணும் மண்ணும் ஆகிய உலகங்களை தோன்றும்படி செய்வார்.

401. அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாம்அவள் தானே
அளியார் சதாசிவம் ஆகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே.

பொருள் : கருணை நிரம்பிய முக்கோணப் பீடத்தில் விந்துவினில் மையப் புள்ளியில் விளங்கும், கருணையுள்ளமும் மண்டல நாயகியுமான அவளே, அனுக்கிரகம் புரியும் சதாசிவ மூர்த்தியாகிப் பொருந்தியிருப்பாள். அவளே அருளோடு கூட ஐந்தொழில்களையும் சீவகர்கள் மாட்டுச் செய்பவள் ஆவாள். திரிபுரை - அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய மும்மண்டல நாயகி.

402. வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமும் ஆமே.

பொருள் : கச்சணிந்த தனங்களை யுடைய சதாசிவ நாயகி மங்கலப் பொருளாயும் எல்லாவற்றுக்கும் காரணமாயும் படைத்தலாதி செயலில் கலந்தவளாயும் உள்ளாள். அவளே பிரணவ சொரூபியாயும் வேதப் பொருளாயும் தேவரை மயக்கும் திரோதான சத்தியாயும் பூரணமாய் சந்திர ஞானமும் அனுபவ ஞானமும் உடையவளாயும் உள்ளாள்.

403. நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங்கு இயங்கும் அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே.

பொருள் : சதாசிவரோடு பிரிப்புற்று நின்ற மகேசுரன் கீழே சென்று அங்குத் தொழில் செய்யும் உருத்திரனாகவும் திருமாலாகவும் ஆண் பெண் சேர்க்கையைச் செய்கின்ற சுவாதிட்டானச் சக்கரத்திலுள்ள பிரமன முதலியோராகவும் ஒன்றுபட்டிருந்தான்.

404. ஒருவனு மேஉலகு ஏழும் படைத்தான்
ஒருவனு மேஉலகு ஏழும் அளித்தான்
ஒருவனு மேஉலகு ஏழும் துடைத்தான்
ஒருவனு மேஉலகு ஓடுஉயிர் தானே.

பொருள் : சிவனாகிய ஒருவனே (சதாசிவன் என்ற பதியாகிக்) காரியக் கடவுளரோடு பொருந்தி ஏழ் உலகங்களையும் படைக்கிறான். அவ்வாறே அவன் ஏழ் உலகங்களையும் காக்கிறான். அப் பெருமானே ஏழ் உலகங்களையும் ஒடுக்குகிறான். அவனே உலகமாகவும் உயிராகவும் உள்ளான்.

405. செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறை
மஞ்சார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியார் கூடி ய கூட்டத்தும்
மைந்தர் பிறவி அமைத்துநின் றானே.

பொருள் : செந்தாமரை நிறம் போன்ற தழல் நிறத்தையுடைய எமது தலைவனாகிய உருத்திரன் மேகம் போன்ற நிறமுடைய திருமால் மயக்கம் செய்கின்ற உலக பந்தத்தும், பூங்கொத்துகளை அணிந்த மாதரது கூட்டத்தும் பொருந்தி, வலிய உலக உற்பத்தியை அமைத்தருளுகின்றான்.

406. தேடும் திசைஎட்டும் சீவன் உடல்உயிர்
கூடும் பிறவிக் குணம்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம் உள்ளத்து ளேநின்று
நாடும் வழக்கமும் நான் அறிந் தேனே.

பொருள் : எட்டுத் திசையிலும் தேடி அலைகின்ற சீவனுக்கு உடம்போடு உயிர் கூடிப் பிறக்கும்படி அமைந்த சிவபெருமான் கன்னியரும் காளையருமாக  இருந்து ஊடு கின்றவரது உள்ளத்தில் எழுந்தருளி நின்று, விருப்பம் செய்கின்ற வழக்கத்தையும் நான் அறிந்தேன்.

407. ஓர்ஆய மேஉலகு ஏழும் படைப்பதும்
ஓர்ஆய மேஉலகு ஏழும் அளிப்பதும்
ஓர்ஆய உலகு ஏழும் துடைப்பதும்
ஓர்ஆய மேஉலக கோடுஉயிர் தானே.

பொருள் : சிவசத்திக் கூட்டமே ஏழ் உலகங்களைப் படைப்பதும், அக் கூட்டமே ஏழ் உலகங்களையும் காத்து நிற்பதும், அதுவே ஏழ் உலகங்களையும் காத்து நிற்பதும், அதுவே ஏழ் உலகங்களை அழிப்பதும், அக்கூட்டமே உலகோடு உயிரை இணைத்து நிற்பதுமாகும்.

408. நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடும் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென்று இசையும் இருவருக்கு
ஆதி இவனே அருளுகின் றானே.

பொருள் : நாதனாகிய சிவபெருமான் ஒருவனும் சீவர்களுக்கு நன்மையைச் செய்கின்ற மகேசுவர சதாசிவரும் சுத்தமாயை அசுத்தமாயை ஆகிய இரண்டிலும் ஒளி மண்டலத்திலிருந்து காரண நிலையை அமைக்கின்றனர். அவ் ஆணைவழி என்ன தொழில் செய்ய வேண்டும் என்று விரும்பி நிற்கும் பிரம்ம விஷ்ணுக்களுக்கு ஆதியான சிவனே ஆற்றலை அளிக்கின்றான்.

409. அப்பரிசு எண்பத்த நான்குநூறு ஆயிரம்
மெய்ப்பரிசு எய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரிசு எய்திப் புகலும் மனிதர்கட்கு
இப்பரி சேஇருள் மூடிநின் றானே.

பொருள் : மேலே காட்டிய முறையில் எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதங்களிலும் உண்மையாகப் பொருந்தி உயிர்க்குயிராய் விளங்குவான். இதனைப் பொய்யானது என்று கூறும் மக்களை இத்தன்மையிலேயே ஆணவவல்லிருளில் ஆழ்த்துகின்றான்.

410. ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
போதித்த வானொலி பொங்கிய நீர்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின்  விந்துவின் உற்றாதே.

பொருள் : சூரியன், சந்திரன்அங்கி முதலிய அட்டதிக்குப் பாலர்கள் போதனை செய்யும் நாதர் நிரம்பிய ஆகாயம் பெருகுதலையுடைய நீர், நிலம், வாதனை செய்யும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தமாகிய தன் மாத்திரைகள், வாக்கு, பாதம், பாணி, பாயுரு உபத்தியமாகிய கன்மேந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம் அகங்காரமாகிய அந்தக் கரணங்கள் எல்லாம் சொல்லப் பெற்ற மகேசுரர் விளங்கும் விந்து மண்டலத்தில் சூட்சுமமாய் அமைக்கப்பட்டுள்ளன.

10. திதி (ஸ்திதி - திதி - காத்தல்)

(சிவனது நிலை சிறப்பு நிலை. அவனே உலகுக்கு அருள் புரியும் நிலையில் சதாசிவனாக உள்ளான். சதாசிவ மூர்த்தியே பிரமனாய்ப் படைக்கிறான் என்று முன்னர்க் கூறப்பட்டது. இப்பகுதியில் சதாசிவ மூர்த்தியே திருமாலாய் உலகைக் காக்கிறான் என்பது கூறப் பெறுகிறது.)

411. புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே.

பொருள் : அனுக்கிரகத்தைச் செய்யும் சதாசிவ மூர்த்தியே வெளியாகவும் இருளாகவும் எல்லாவற்றிலும் கலந்துள்ளான். அவனே ஞானியர்க்குப் புகழத்தக்க பொருளாகவும், அஞ்ஞானியர்க்கு இகழத்தக்க பொருளாகவும் உள்ளான். அவன் உடலாகவும் உயிராகவும் உள்ளான். அவ்வாறு கலந்து நின்ற அவனே மகத் என்ற புத்தி தத்துவத்தில் பொருந்தியிருக்கிறான்.

412. தானே திரையொடு தேவரு மாய்நிற்கும்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே கடல்மலை ஆதியு மாய்நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே.

பொருள் : சதாசிவ மூர்த்தியேஎல்லாத் திசைகளிலும் வியாபித்துத் தேவர்களாக நிற்பான். அவனே ஆகாயக் கூற்றில் பொருந்தியவனாகையால் உடலாகவும் உயிராகவும் பொருந்தி உடலின் தத்துவத்திலும் உயிரின் தத்துவத்திலும் விளங்குகின்றான். அவனே கடலாகவும் மலையாகவும் இவை போன்ற பிற அசையாதனவற்றிலும் உள்ளான். அதனால் சதாசிவ மூர்த்தியே தலைவனுமாவான்.

413. உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையார் பெருவழி அண்ணல்நின் றானே.

பொருள் : சிரசின்மேல் பொருந்திய ஒளிமயமான ஆகாயத்தில் விளங்கும் அனுக்கிரக மூர்த்தி, உடலாயும் உயிராயும் உலகமதாகியும், அவனே கடலாயும் இருண்ட மேகமாய் மழைநீர் பொழிபவனாயும், இவற்றிற்கு மத்தியில் உள்ளவனாய் அழியாதவனாய் எங்கும் நிறைந்திருப்பவனாய் விளங்கி நின்றானே.

414. தேடும் திசைஎட்டும் சீவன் உடலுயிர்
கூடு மரபிற் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தமது உள்ளத்து ளேநின்று
நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே.

பொருள் : எட்டுத் திசையிலும் தேடி அலைகின்ற சீவனுக்கு உடம்போடு உயிர் கூடிப் பிறக்கும்படி அமைத்த சிவபெருமான் கன்னியரும் காளையருமாக இருந்து ஊடுகின்றவரது உள்ளத்தில் எழுந்தருளிய நின்று விருப்பம் செய்கின்ற வழக்கத்தையும் நான் அறிந்தேன்.

415. தானொரு காலம் தனிச்சுட ராய்நிற்கும்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும்
தானொரு காலம் தண்மழை யாய்நிற்கும்
தானொரு காலம்தண் மாயனும் ஆமே.

பொருள் : சதாசிவ மூர்த்தியே உலகை அழிக்க வேண்டும் போது ஒப்பற்ற சூரியனாகி, மழை இல்லாமையைச் செய்து அழிப்பான். அவனே சூறாவளிக் காற்றாய் அழிவினைச் செய்வான். அவனே ஒரு சமயம் பெருமழையைப் பெய்வித்துப் பிரளயத்தை உண்டாக்குவான். அவனே ஒரு சமயம் திருமாலாய் இருந்து உலகினைக் காப்பவனாகவும் உள்ளான்.

416. அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புறு ஐந்தில் அமர்ந்துநின் றானே.

பொருள் : முன்னே கூறிய மூர்த்தியே உயிராற்றலில் விளங்கும் அன்பு அறிவு அடக்கம் ஆகிய பண்புகளாய் உள்ளான். இன்பத்துக்கும் இன்பக் கூட்டுறவுக்கும் காரணமாக உள்ளான். அவன் கால எல்லை வகுத்தவனாகவும் அதனை முடிப்பவனாகவும் உள்ளான். அவனே நன்மையைச் செய்ய சுத்த மாயா தத்துவ மாகிய நாதம், விந்து, சாதாக்கியம், மகேசுரம், சுத்தவித்தை ஆகிய ஐந்தில் பொருந்தி ஐம்பூத காரியங்களைச் செய்கிறான்.

417. உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமும் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே.

பொருள் : அப்பெருமானே உலகினை மாயை யினின்றும் தோன்றச் செய்பவன் ஆவான் அவனே உயிர்களுக்குப் பிறவியைக் கொடுத்தருள்பவன் ஆவான். பேரண்டமாகிய பெரியமிடாவும் சிற்றண்டமாகிய குடமும் உடம்பாகிய கலயமும் ஏனையவற்றை அவன் குயவனைப் போன்று மண்ணாகிய மாயை யினின்றும் படைத்தருளுவான்.

418. உள்ளுயிர்ப் பாய்உட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியான் இலங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேஉட லுள்பரந்து
தள்ளுயி ராவண்ணம் தாங்கிந்ன் றானே.

பொருள் : நந்தி எம் பெருமான் உள்ளே மூச்சுக் காற்றாய் அது நடைபெறுவதற்குத் துணைபுரிய உடலாயும் உள்ளான். அவன் தத்துவங்களோடு கூடாத உயிர்கள் ஆகாயத்தை இடமாகக் கொண்டு ஒளி மயமாய் விளங்குபவன். எனினும் அவனே உள்ளே அசைவினை உண்டாக்குகிற உணர்வாய் உடலினுள் பரவி உயிரை வெளியேற்றி விடாமல் கால எல்லைவரை தொழிற்படுத்திக் கொண்டு உள்ளான்.

419. தாங்கருந் தன்மையும் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே.

பொருள் : அவ்வாறு உயிர்களை உடலைவிட்டு நீங்காது தாங்கிய நிலையிலும், தான் பல் உயிர்களாகிய அவற்றைக் கால எல்லையில் உடம்பினின்றும் பிரிந்த நிலையிலும், அவற்றைக் காப்பதற்கு அவனைத் தவிரவேறு எவரும் இல்லை. மேல் வருகின்ற ஏழ் பிறப்புக்கும் துரியாதீதமாகிய அந்நிலையில் ஆகாய பூத நாயகனான அச் சதாசிவனே தாங்கிக் கொண்டுள்ளான்.

420. அணுகினும் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே.

பொருள் : எல்லா உயிரிடத்தும் பொருந்தி யிருக்கும் இறைவனைப் புறத்தே சென்று தேடினாலும் அவர்க்குத் தூரமாயிருப்பவன். அவரவர் இடமுள்ள அக்கினி கலையைத் தூண்டி அத்துடன் பிரமரந்திரம் சென்று அணுகினாலும் அவன் அருளை வழங்குவான். உலகின்மீது பலபிறவி எடுத்து இறைவனை வணங்கினாலும் அப்பிறவி தோறும் உயிர்களுக்குச் சேவை செய்தாலும் எம்பெருமான் மேன்மையான உடம்பினைக் கொடுத்தருளுவான்.

11. சங்காரம்

(சங்காரம் - அழித்தல்) ஐந்தொழில் அருட் செயல்களில் சங்காரமும் ஒன்றாகும். இளைப்பாற்றல் பொருட்டாதலின் என்க. சிவனே உருத்திரனாய் சங்காரம் செய்கிறான் என்பது அறிக.)

421. அங்கிசெய்து ஈசன் அகலிடம் சுட்டது
அங்கிசெய்து ஈசன் அலைகடற் சுட்டது
அங்கிசெய்து ஈசன் அசுரரைச் சுட்டது
அங்கிஅவ் ஈசற்குக் கைஅம்பு தானே.

பொருள் : அக்கினியைப் பெருகச் செய்து இறைவன் பரந்த உலகத்தை அழித்தருளினான். அதே போன்று அக்கினியால் அவன் அலைகடலை வற்றச் செய்தான். அக்கினியால் இறைவன் அசுரரை அழித்தருளினான். அவ் அக்கினியே இறைவனுக்கும் கையிலே விளங்கும் அம்பாகும்.

422. இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்தம்
நிலையன்று அழித்தமை நின்றுணர்ந் தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மானிலம் தான்வெந் ததுவே.

பொருள் : தினப்பிரளயம், மத்தியப் பிரளயம், மகாப் பிரளயம் ஆகிய மூன்றனுள் கற்பத்தின் முடிவில் வரும் பிரளயம் ஒன்றாகும். இவ்வுலகங்களின் நிலை அன்று அழிந்தவற்றை நான் ஞானக் கண்ணால் கண்டேன். கற்பமுடிவில் உலையிலிட்ட அரிசி கீழும் மேலுமாகச் சுழலுவது போல இவ்வுலகம் சுழலும், அப்போது குறிஞ்சி முதலிய பெரிய நிலம் வெந்து ஒழியும் (தினப் பிரளயம் - உறக்கம். நடுப்பிரளயம் - இறப்பு. மகாப் பிரளயம் சீவ வர்க்கம் ஒரு சேர அழிதல் (கற்பமுடிவு).

423. பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாம்
குதஞ்செய்யும் அங்கி கெளுவிஆ காசம்
விதம்செய்யும் நெஞ்சில் வியப்பு இல்லைதானே.

பொருள் : சீவர்களுக்குப் பக்குவத்தைச் செய்கின்ற பூமியும் பனிநிறைந்த மலை எட்டும் மகிழ்ச்சியை உண்டாக்குகின்ற ஏழு கடல்களின் பெருக்கம் முதலிய எல்லாம் கொதிக்கும் படி செய்கின்ற அக்கினியை மூட்டி, வெட்ட வெளியாக்குவாரது நெஞ்சில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

424. கொண்டல் வரைநின்று கிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி இருந்துஎண் திசையாதி
ஒன்றின் பதஞ்செய்த ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே.

பொருள் : சிரசின் மேலுள்ள ஒளி மண்டலத்திலிருந்து கீழே இறங்கிய ஆதி சக்தி, உடம்பைச் சுற்றியுள்ள ஒளி மயமான அண்ட கோசத்தில் பொருந்தி யிருந்து திரோதான சத்தியோடு கூடிச் சீவர்களைப் பக்குவப் படுத்திப் பிரணவமாகிய மூலாதாரத்திலுள்ள குண்டத்தின்மேல் எழுகின்ற அக்கினியை மீண்டும் தன்னோடு ஒடுக்கிக் கொண்டு சிவபெருமான் விளங்கினான்.

425. நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமும் சாக்கிரா தீதமாம்
சுத்தசங் காரம் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.

பொருள் : நித்த சங்காரம் என்பது உறக்கத்தில் ஒன்றும் அறியா திருத்தலாம். அமைத்த சங்காரம் என்பது கருவி கரணங்கள் சுழன்ற நிலையாம். சுத்த சங்காரமாவது செயலின்றி ஒன்றும் விளங்காமல் நிற்கும் நிலை. சிவனருளில் பொருந்தச் செய்வதே உண்மையான சங்காரமாகும்.

426. நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாள் சங்காரமாம்
சுத்தசங் காரம் மனாதீதம் தோய்வித்தல்
உய்த்தசங் காரம் சிவனருள் உண்மையே.

பொருள் : நித்த சங்காரமாவது தூல சூக்குமமான இரு உடல்களையும் சீவன் தொட்டுக் கொண்டிருத்தல். இப்படியாக அமைத்த சங்காரம் மாயையைப் பொருந்திய சங்காரமாகும். சுத்த சங்காரம் என்பது மனம் அதீதத்தில் சென்று சேட்டையின்றி இருக்கச் செய்தல், அப்போது சிவனருளில் தோய்விக்கச் செய்தலே உண்மையான சங்காரமாகும்.

427. நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல்
வைத்தசங் காரம் கேவலம் ஆன்மாவுக்கு
உய்த்தசங் காரம் சிவமாகும் உண்மையே.

பொருள் : நித்த சங்காரம் பிறவித் துன்பத்தைப் போக்கினால் மனம் கருவிகள் ஒத்த சங்காரத்தில் உடலும் உயிரும் பிரிந்திருக்கும் நிலை உண்டாகும். இவ்வாறு அமைத்து வைத்த சங்காரம் ஆன்மாவுக்குச் சுத்த கேவல நிலையாம். சிவமாந் தன்மை அளித்த சங்காரமே உண்மை சங்காரமாகும்.

428. நித்தசங் காரமும் நீடுஇளைப் பாற்றுதல்
வைத்தசங் காரமும் மன்னும் மனாதியில்
சுத்தசங் காரமும் தோயாப் பரனருள்
வைத்தசங் காரமும் நாலாம் மதிக்கிலே.

பொருள் : நித்த சங்காரமாவது நீண்ட உறக்கத்தில் வைப்பதாகும். அமைத்து வைத்த சங்காரமும் மனம் முதலிய கரணங்கள் அடங்கியிருக்கும்படி செய்தல். சுத்த சங்காரமும் கூடக் கருவிகளினின்றும் நீங்கிப் பரனருளில் கூடாதிருத்தலாம். மதித்துச் சொன்னால் கருவிகளினின்றும் நீங்கிப் பரனருளல் தோய்ந்து விளங்கும்பட செய்தல் நான்காவது சங்காரமாகும்.

429. பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.

பொருள் : பாழாகிய சிவத்தை முதலாகக் கொண்டு தோன்றும் ஆன்மப் பயிரானது, அது தனுகரணாதிகளோடு கூட்டப் பெற்றபின் திரும்பவும் அடங்கினாலும் பண்டை நிலை எய்தாது. இது முடிவைத் தராத சங்கார மாதலின் இச் சீவர்கள் மாலயன் செயலுக்கு உட்பட்டுப் பிறப்பு இறப்பில் உழல்வர். ஆணவ மலர் வலிமை கெட்டு வறுத்த வித்துப் போல் பாழும் பயிரான போது அச்சிவத்தின் வியாபகத்தில் அடங்கியிருக்கும்.

430. தீயவைத்து ஆர்மின்கள் சேரும் வினைதனை
மாயாவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந்து எங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தான்உணர்வு ஆரவைத் தானே.

பொருள் : சேர்கின்ற வினைகளைச் சுட்டுவிடுகின்ற வண்ணம் சிவன்பால் ஆர்வத்தைப் பெருக்கி நில்லுங்கள். இவ்வாறு அழியும்படி செய்கின்றவன் வாழ்கின்ற இடமாகிய சகஸ்ரதளம் ஒன்றுள்ளது. அவ்விடத்தை உடம்பில் வைத்தான். கலந்து சிந்திப்பதற்கு உடம்பைச் சூழ ஒளிக் கற்றைகளை அமைத்தருளினான். அங்கே உணர்வு பொருந்துமாறு அருளினான்.

12. திருரோபவம்

(திருரோபவம் என்பது மறைப்பாகும். மகேசுவரன் சிவனது ஆணையைத் தாங்கிச் சீவர்கள் அறியா வண்ணம் வினை போகங்களை ஊட்டு கின்றான். இவ்வாறு ஊட்டுவித்துச் சீவரது வினையைக் கழித்தலின் இதுவும் அருட் செயலே யாகும்.)

431. உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட்டு ஓரடி நீங்கா ஒருவனை
உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவுஅறி யாதே.

பொருள் : உயிருக்கு உயிராக இருக்கும் ஒருவனும் மன மண்டலத்தில் உள்ளே எழுகின்ற பேரொளிப் பிழம்பானவனும் நெஞ்சத்தை விட்டுச் சிறிதும் நீங்காத பெருமானும் ஆகிய ஒப்பற்ற தலைவனை நெஞ்சத்தில் உடனாய் அவன் வீற்றிருப்பினும் நெஞ்சம் மல மறைப்பினால் அப்பெருமான் இன்ன தன்மையன் என்று உணராததாகும்.

432. இன்பப் பிறவி படைத்த இறைவனும்
துன்பம்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொளவி இசைந்துறு தோல்தசை
முன்பிற் கௌவி முடிகுவது ஆக்குமே.

பொருள் : இன்பம் பெறுவதற்குரிய பிறவியைத் தந்தருளிய இறைவன் துன்பத்தைத் தருகின்ற பந்தத்தைச் சீவர்களுக்கு அமைத்தருளினான். அவன் சீவர்களை எலும்போடு சேர்த்து, பொருந்திய, தோலாலும் தசையாலும் வன்மை பொருந்தப் பண்ணி, தூய்மைப் படுத்தி முத்தியைக் கொடுத்தருளுவான்.

433. இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசுஅறி யாரே.

பொருள் : ருத்திரன் திருமால் இன்பத்தை அமைத்த பிரமன் ஆகிய மூவரும் வந்து உடன்கூடி, இறைவன் அமைத்துக் கொடுத்த பெருமையுள்ள இயந்திரமான சரீரத்தில் இரகசியமாக அவ் இறைவன் வைத்த தன்மையினை அறிய மாட்டார்கள். (இறைவன் - சதாசிவ மூர்த்தி.)

434. காண்கின்ற கண்ணொளி காதல்செய் ஈசனை
ஆண்பெண் அலிஉரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயல் அணை யாரே.

பொருள் : காணுகின்ற கண்ணில் ஒளியாக இருந்து அருள்புரிகின்ற ஈசனும், ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் விளங்கும் ஆதியாகிய சிவனை, உண்பதற்குப் பயன்படும் நாவின்வழி மனத்தைச் செலுத்தி, சிரசின் மேலுள்ள ஆகாய மண்டலத்தில் உண்டாகிற இயற்கையான தடாகத்தில் உடன் உறைதலைப் பொருந்தாராயினர். அலி என்பது ஈண்டு அருவுருவத் திருமேனி.

435. தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும்
சுருளும் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின்று இருட்டறை யாமே.

பொருள் : தெளிவுடைய உயிர்களுக்கும் ஒளி மண்டல வாசிகளுக்கும் இன்பத்தை நல்குகின்ற தன்மையைச் செய்யும் ஆதியாகிய சதாசிவனும் சொற்பப் பிரகாசம் பொருந்திய தூவெண்மதியும் இருளும் கெடும்படியாக வல்லிருளாய் இருக்கும் சீவரது அண்ட கோசத்தில் மறைப்பினைச் செய்து கொண்டிருப்பான்.

436. அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன்று ஒவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகம் தானாய்க்
கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.

பொருள் : தத்துவங்களும் ஓசை முதலிய தன்மாத்திரைகளும் சொல்லப் பெறுகின்ற ஆசையும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்ட பல்வேறு உருவங்களும் உலக முழுவதும் தானாய் மறைதலைச் செய்கின்ற இறைவனே மறைப்புச் சத்தியை அருளுவான். இவற்றைத் திருவுள்ளத்தால் சிவபெருமான் கண்டருள்வன். அரைக்கின்ற அருள் - மறைப்பு.

437. ஒளித்துவைத் தேன்உள் ளுறவுணர்ந்து ஈசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடும் ஈண்டே
களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட்டு இறைஞ்சினுள் வேட்சியும் ஆமே.

பொருள் : நான் இறைவனை அகத்தே உணர்ந்து போற்றி வைத்து வழிபட்டேன். அப்பெருமான் அப்பொழுதே காட்சியில் வெளிப்பட்டு அருளை நல்குவான். இனி மகிழ்ச்சியோடு அன்பு என்னும் பெருங்குணம் வெளிப்பட்டு அவனைப் புறத்தே வழிபாடு செய்தாலும் அவனுக்கு விருப்பமாம்.

438. நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங்கு இயங்கி அரன்திரு மாலவன்
நன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராகி இசைந்திருந் தானே.

பொருள் : எல்லாவற்றையும் தானே மறைத்து நின்ற மகேசுரன் கீழ்முகங்கொண் செயற்பட்டு உருத்திரன், திருமால், நன்மைøய் செய்யும் சுவாதிட்டான மலரிலுள்ள பிரமன் என்று மூவரோடும் கலந்திருக்கின்றான்.

439. ஒருல்கிய பாசத்துள் உத்தம சித்தின்
இருங்கரை மேலிருந்து இன்புறு நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்குஅற லாமே.

பொருள் : ஒடுங்கிய பாசநிலையில் சிவனாகிய பெரிய கரையின் மேல் சீவர்கள் இருந்து ஆன்ம அனுபவம் விழைந்து பிறவியாகிய அருங்கரையை நாடாத தன்மையில் சங்கு ஓசையோடு வரும் ஆகாய கங்கையின் கரையைப் பொருந்தினால் மாசினை நீங்கப் பெறலாம். (கங்கை அருங்கரை - திருவருளின் எல்லையில்லாத துணை. உத்தம சித்தன் - தலையாய சிவபெருமான்.)

440. மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ணம் ஆகிநின் றானே.

பொருள் : மண் ஒன்றே சட்டி பானை முதலிய நல்ல பாத்திரங்களாகும். அதுபோன்று யோனி தேங்கட்கு எல்லாம் அகத்தேயுள்ள ஒருவனே காரணமாகும். கண்ணாகில் இந்திரியம் புறப்பொருள் பலவற்றைக் கண்டாலும் தன்னைக் காணாது அது போன்று பெருமானும் எல்லா யோனி பேதங்கட்குக் காரணமாயினும் சீவக் காட்சிக்குப் புலப்படாது நிற்பான். (யோனிகள் - நிலம், முட்டை, கருப்பை, அழுக்கு என்னும் நால்வகைப் பிறப்புகள்.)

13. அனுக்கிரகம்

(அனுக்கிரகம் - அருளல். சிவனது ஆணையைத் தாங்கிச் சதாசிவன் சீவர்களைப் பிறப்பினில் செலுத்தி மலநீக்கம் பெற அருள் புரிகிறான் என்பது இப்பகுதியில் கூறப்பெறும்.)

441. எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை
கட்டி அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே.

பொருள் : எட்டுத் திசையும் வீசுகின்ற காற்றோடு, வட்டமாகச் சூழ்ந்துள்ள கடல், நெருப்பு, பூமி, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் ஒன்று சேர்ந்து, உயிர் தாங்கும் இடமாகிய உடம்போடு உயிரைச் சேர்த்தும் பிரித்தும் வைப்பான் சதாசிவ மூர்த்தி யாவான். ஒட்டு - திருவடிப்பேறு கண்ணுதல் நினைப்பளவானே ஐந்தொழில் புரியும் அண்ணல் எனலுமாம். கடல் இங்கு நீரைக் குறிக்கும்.

442. உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சும் அவனே சமைக்கவல் லானே.

பொருள் : சிரசின் மேல் பிரமரந்திரத்தில் நீங்கி விளங்கும் நாதத்தை விரும்பி இன்பத்தைப் பெறுவார்க்கு இறப்பு இல்லை. மேலான விரிந்த சுடராகவுள்ள அக்கினி சூரியன் சந்திரன் ஆகிய மூன்றையும் உலகினுக்கு அச்சதாசிவ மூர்த்தியே இணைத்துச் சீவர்கள் உய்ய அருள் புரியவல்லான்.

443. குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்துற்றது எல்லாம் வனைவன்
குசவனைப் போல்எங்கள் கோனநந்தி வேண்டில்
அசைவில் உலகம் அதுஇது வாமே.

பொருள் : குசவன் தண்டச் சக்கரத்தில் பிடித்து வைத்த மண்ணை, அவன் மனத்தில் எண்ணியவாறு செய்வான். குசவனைப் போன்று எங்கள் சதாசிவ மூர்த்தி நினைத்தால் சடத்தன்மை யுடைய உலகம் சடத்தை விட்ட ஆன்மாவாக மிளிரும்.

444. விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉலகு ஆக்கும்
கொடையுடை யான்குணம் எண்குண மாகும்
சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.

பொருள் : ஒளியை வாகனமாக உடையவனாகவும், மாறுபட்ட செயலை யுடையவனாகவும் மிகுந்த புவனாபதிகளை யுடையவனாகவும் உள்ள சதாசிவ மூர்த்தி, தன் விருப்பப்படி உலகைப் படைத்தருளுவான். வேண்டுவார்க்கு வேண்டுவதே ஈயும் தன்மையுடைய அவன் குணம் எண்குணமாகும். ஒளிக் கிரணங்களை வீசிக் கொண்டிருக்கும் அப்பெருமான் சீவரது சிந்தையில் பொருந்தியிருந்தான். (ஆனேற்றை ஊர்தியாகவும் உயர்த்துங் கொடியாகவும் உடையவன் சிவன் என்றும் பொருள் கொள்ளலாம்.)

445. உகந்துநின் றேபடைத் தான்உலகு ஏழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.

பொருள் : இறைவன் (சீவர்கள் வாழ வேண்டுமென்று) ஏழ் உலகங்களையும் விரும்பிப் படைத்தருளினான். அவ்வாறே பல பிரளயங்களை விரும்பிச் செய்தருளினான். நிலம் முதலிய ஐந்து பூதங்களையும் விரும்பித் தோற்றுவித்தருளினான். விரும்பி நின்றே உயிரிலும் உடலிலும் பொருந்திச் சீவகோடிகளுக்கு உதவினான்.

446. படைத்துஉடை யான்பண்டு உலகங்கள் ஏழும்
படைத்துஉடை யான்பல தேவரை முன்னே
படைத்துஉடை யான்பல சீவரை முன்னே
படைத்துஉடை யான்பர மாகிநின் றானே.

பொருள் : பழமையாகவே ஏழு உலகங்களையும் சிருட்டி செய்து அவற்றை உடைமையாகக் கொண்டான். அங்குப் பலதேவர்களைப் படைத்து அவர்களை ஆண்டு கொண்டான் அவனே பல சீவர்களைச் சிருட்டிக்கு விடுத்துத் தேவரோடு சம்பந்தப் படுத்தி ஆட்கொண்டான். அவ்வாறு படைத்து ஆட்கொண்ட அவன் தலைவனாக உள்ளான்.

447. ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தனன் தாங்கிநின் றானே.

பொருள் : ஆதி சத்தியோடு கூடிய சதாசிவன் ஐம்பெரும் பூதங்களைப் படைத்தருளினான். குற்றமில்லாத பல ஊழிகளை உயிர்களின் நன்மைக்காக அவன் செய்தான். எண்ணற்ற தேவர்களை அவன் சிருட்டிக்கு விட்டான். இவ்வாறு அவன் சிருட்டியைச் செய்ததோடு அவற்றுக்கு ஆதாரமாகவும் இருந்தான். ஆதி - அம்மை; அம்மையுடன் கூடிய சிவபெருமான்; ஆதிபகவன்.

448. அகன்றான் அகலிடம் ஏழும்ஒன் றாகி
இவன்தான் என்நின்று எளியனும் அல்லன்
சிவன்தான் பலபல சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே.

பொருள் : இறைவன், அகன்ற இடமாக உள்ள இவ்வுலகம் ஏழுடனும் ஒன்றாகப் பொருந்தியும் இவற்றைக் கடந்தும் உள்ளான். இவ்வாறு இவன் உடனாயிருப்பினும் எளிமையில் காட்சிப் படுபவன் அல்லன். சிவனே பலவாகவுள்ள சீவரிடம் வியாபித்து அவனை விரும்பினவருக்கு அவரவரிடம் பொருந்தி உபதேசம் செய்தருளுவான்.

449. உள்நின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்நின்று விரும்பும் விழுப்பொருள்
மண்நின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்நின்ற மாமணி மாபோத மாமே.

பொருள் : உள்ளே எழுகின்ற சோதியானது உயிர் பொருந்தி நிற்கும் ஓர் உடலாகவும் விண்ணுலகிலுள்ள தேவர்கள் விரும்புகின்ற மேலான பொருளாகவும் மண்ணுலகத்தில் பக்குவம் பெற்ற மேலோர் புகழும் திருமேனியாகவும் கண்ணிலே விளங்குகின்ற மணியாகவும் பெரிய ஞானமாகவும் உள்ளது. (மாமணி என்பதற்குத் திரு ஐந்தெழுத்து எனவும் பொருள் கொள்ளலாம்.)

450. ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலும் கடத்திலே
நீரினிற் பால்போல் நிற்கின்ற நேர்மையைச்
சேராமற் காணும் சுகம்அறிந் தேனே.

பொருள் : யாவரும் அறிய முடியாத அண்டத்திலுள்ள திருவுருவை பூமி முதலாகப் பொருந்திய சரீரத்தில், நீரினில் பால்கலந்து பால்போல் நிற்கும் தன்மையை அயர்ச்சியை அடையாமல் பார்த்துக் கொண்டிருக்கும் இன்பத்தை நான் பெற்றேன். சேராமல் - மறந்துவிடாமல் சுகம் பேரின்பம்.

14. கர்ப்பக் கிரியை

(கர்ப்பத்தில் செய்யப்படும் தொழில் கர்ப்பக் கிரியை எனப்படும். இறைவன் சீவர்களைக் கருப்பையில் இருந்து காக்கும் முறைமை இங்குக் கூறப்பெறும்.)

451. ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்சு
ஆக்குகின் றான்அவன் ஆதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்து
ஆக்குகின் றான்அவன் ஆவது அறிந்தே.

பொருள் : இறப்பின் போது பிரிந்த இருபத்தைந்து தத்துவங்களைத் தோற்றுவிக்கின்றான். ஆதியாகிய அவ் இறைவன் அருமையான் உயிரைத் தத்துவங்களோடு சேர்க்கிறான். அவன் மாதாவின் கருப்பையில் பொருந்தி உயிர்களுக்கு உதவுகிறான். அவன் உடல் வளர்ச்சிக்குத் தேவையை அறிந்தே எல்லாம் செய்கின்றான்.

452. அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.

பொருள் : யோகியர் அறிகின்ற மூலாதாரத்தின் மேல் நெருப்பும் நீரும் செறிந்துள்ள ஞானபூமியில், திருவடியைப் பதித்து, பொறையுடனுள்ள இனிமையான உயிரைக் கருவில் புகும் வண்ணம் எண்ணிக் கருவினின்றும் நீங்குகின்ற பத்து மாதகால வரையறையை அதற்கு இறைவன் நியமித்தருளினான்.

453. இன்புறு காலத்து இருவர்முன்பு ஊறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத்து அமைத்துஒழிந் தானே.

பொருள் : சிதாகாயத்தில் விளங்கும் இறைவன், தலைவன் தலைவியுமாகிய இருவர் இன்புற்ற போது, சீவன் விட்டுச் சென்ற வினையை அனுபவிப்பதற்கான துயரம் பொருந்திய உடம்பில் பக்குவம் அடையும் காலத்தையும் சீவன் பூமியில் தங்க வேண்டிய கால எல்லையையும் இருவரும் அன்போடு கூடிய காலத்தே அமைத்தருளினான். (முன்பு ஊறிய - அநாதியே ஆன்மாவைப் பற்றியுள்ள.)

454. கருவை ஒழிந்தவம் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்தும்மற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.

பொருள் : கருவை நீங்கினவர் அறிந்த இருபத்தைந்து தத்துவங்களும் ஆண் உடம்பில் தங்கி உருவாவதை மற்றையோர் அறிய மாட்டார். அக்கரு பின் பெண்ணின் கருப்பையை நாடி அடைந்த ஆணும் பெண்ணுமாகிய இரண்டு உருவமாக ஓடிப் பாய்ந்தது. (வெண்ணீர் - சுக்கிலம்; செந்நீர் - சுரோணிதம். கருவை ஒழிந்தவர் ஞானியர்)

455. விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல்ஐந்து ஈரைந்தோடு ஏறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளிந்ததே.

பொருள் : ஆண் பெண் சேர்க்கையில் யோனிவிரிந்து இலிங்கத்தினின்றும் சுக்கிலம் விழுந்தது. நீங்கிய புருடன் என்ற தத்துவம் தன் மாத்திரைகள் ஐந்தும் ஞானேந்திரியம் ஐந்தும் கன்மேந்திரியம் ஐந்துடன் கூடி, தன்மாத்திரைகளினின்றும் தோன்றிய நீர் முதலான ஐந்து பூதம் போற்றுதலுக்கு உரிய நான்கு அந்தக் கரணங்களுடன் நீங்கிய நெற்றியின் உச்சியுள் ஒளிந்தது. (ஞானேந்திரியம் அறிதற்கருவி. கருமேந்திரியம் - செய்தற்கருவி)

456. பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவும்
கூவி அவிழும் குறிக்கொண்ட போதே.

பொருள் : பூவினில் உள்ள வாசனையைப் பொருந்திய காற்றும் உலகில் எங்கும் பரவித் தங்கியிருப்பது போல் கருப்பையில் பொருந்திய கருவினில் மெல்ல நீண்ட தனஞ்சயனம் என்னும் வாயுவும் குறிப்பிட்ட காலத்தில்  இரைந்து கொண்டு உள்ளே செல்லும். (நீள் வாயு - தனஞ்சயன்)

457. போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடான்எனில் பன்றியு மாமே.

பொருள் : அருவமாய்ப் போகின்ற புரியட்டக சரீரமும், உள்ளே புகுகின்ற தச வாயுக்களும் காமாதி அஷ்ட விகாரங்களும் இவற்றுள் அமிழ்ந்துள்ள புருடனும், நவத்துவாரங்களும், குண்டலியாகிய நாதமும் பன்னிரண்டு விரற்கடை செல்லும் பிராணனாகிய குதிரையும் இறைவனாகிய பாகன் செலுத்தாவிடில் பன்றியைப் போல் இழிந்த பிறப்பாய்விடும்.

458. ஏற எதிர்க்கில் இறையவன் தானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் தானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே

பொருள் : கூட்டுறவின் போது சுக்கில் சுரோணித கலப்பில் சுக்கிலம் எதிர்த்துச் சென்றால் பிறக்கும் குழந்தை இறையவனைப் போன்றிருப்பான். சுரோணிதம் மாறி எதிர்த்துவரின் அப்போது பிறக்கும் குழந்தை திருமாலைப் போன்றிருப்பான். சுக்கில் சுரோணிதமாகிய இரண்டும் சமமாகப் பொருந்தினால் அப்போது பிறக்கும் குழந்தை பிரமனைப் போன்றிருப்பான். மூவரது தன்மையும் பொருந்தியிருந்தால் பேரரசனாய்ப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆளுவான்.

459. ஏய்அங்கு அலந்த இருவர்தஞ் சாயத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயம் கலந்தது காணப் பதிந்தபின்
மாயம் கலந்த மனோலய மானதே.

பொருள் : பல புலன்களில் பொருந்தி வருந்தின ஆண் பெண்ணாகிய இருவரது வண்ணத்தில் வெளியாகிற கரு உருவாகும் என்றபடி, பல பிறவியில் பல உடம்பில் பொருந்திய அக்கரு நன்றாகப் பதிந்த பிறகு மயக்கம் பொருந்திய இருவரது மனமும் ஒருமைப் பாடுற்றது. மனோயம்-உள்ளத்து ஒற்றுமை.

460. கர்ப்பத்துக் கேவலம் மாயாள் கிளைகூட்ட
நிற்கும் துரியமும் பேதித்து நினைவுஎழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயம்
சொற்புறு தூய்மறை வாக்கினாம் சொல்லே.

பொருள் : கருப்பையில் அறியா நிலையிலுள்ள சிசுவுக்கு மாயை தத்துவங்களைச் சேர்க்க, அமைந்து நிற்கும் பேருறக்க நிலை நீங்கிச் சிசுவுக்கு நினைவு உண்டாக வலிமைமிக்க மாயையின் காரியமாகிய அராகாதி எட்டுக் குணங்களும் சுத்த மாயையினின்றும் தோன்றும் நால்வகை வாக்கினின்று சொல்லும் ஆகும்.

461. என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
நண்பால் ஒருவனை நாடுகின் றேனே.

பொருள் : எலும்புகளால் பின்னி நரம்புகளாகிய கயிற்றால் வரிந்து கட்டி, இரத்தத்தோடு கூடிய இறைச்சியால் திருத்தமாக வீட்டை அமைத்து இன்பத்தையுடைய உயிர் தாங்கும் உடம்பினைச் செய்த இறைவனிடத்து ஓங்கும் காதலால் ஒப்பற்ற அப் பெருமானைத் தேடுகின்றேன்.

462. பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்
இதஞ்செய்யும் ஒத்துஉடல் எங்கும் புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.

பொருள் : சீவர்களைப் பக்குவஞ் செய்யும் பால் வண்ணனாகிய சூரியப் பிரகாசம் போன்ற மேனியையுடைய சதாசிவன் உடலில் எங்கும் நீக்கமற நிறைந்து நன்மையைச் செய்வான். குதத்தானத்திலிருந்து தூண்டி நடத்தும் மூலாக்கினியின் வேகத்தைத் தணிப்பதற்காக இன்பம் பெறும்படியான நியதியை அமைத் தருளினான்.

463. ஒழிபல செய்யும் வினையுற்ற நான
வழிபல நீராட்டி வைத்தெழு வாங்கி
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.

பொருள் : பழியான காரியங்களைச் செய்கின்ற பாசத்தில் கட்டுப்பட்ட கருவை, பலவாகிய சுழல்களினின்றும் எடுத்து அழியாது காப்பாற்றினான். மேலும் வினை பொருந்திய காலத்தே பலவகையாகத் தூய்மையாக்கிச் சிசுவை மேலெழும்படி செய்து வினையை நீங்கும்படி இறைவன் செய்வான்.

464. சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றும்அவ் யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.

பொருள் : ஆண் பெண் கூட்டுறவால் சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளை நிறமான சுக்கிலமும் அவ்வாறே யோனியினின்றும் தோன்றும் செந்நிறமான சுரோணிதமும் எட்டு விரற்கடையளவு புறப்பட்டு நான்கு விரற்கடையளவு உள்ளே போகும். அப்போது பஞ்சபூத அக்கரங்களாகிய ஐந்து அகரமாகிய நாதமும் உகரமாகிய விந்துவும் மகரமாகிய மாயையும் சேர்ந்து எட்டுச் சாண்அளவு உடம்பு சிசுவுக்கு உண்டாகும்.

465. போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆகம் கொணர்ந்த கொடைத்தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மேகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே.

பொருள் : இன்பத்துள் பொருந்திய இறைவனும் கருவில் உடம்பைத் தந்த கொடைச் செயலால் ஆண் பெண் கூட்டுறவால் முப்பத்தொரு தத்துவங்களைச் சேர்ந்து இருவரது மயக்க நிலையில் ஒரு கருவாகிய முட்டையைத் தந்தருளினான்.

466. பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்
பிண்டத்துள் ஊடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நரத்து அமர்ந்திருந் தானே.

பொருள் : பிண்டமாகிய இவ்வுடம்பினுள்ளே அறியாமை நிறைந்த புலன்கள் ஐந்தும் உடம்பில் தோன்றி உடம்பு அழிந்தபோது அவையும் செயலற்று அழிந்தன. உடம்பைச் சுற்றியுள்ள அண்ட கோசத்தின் உள்மேயுற்ற சீவனும் அவ்வாறே பக்குவம் பெற்ற போது தன் செயலற்று நாத தத்துவத்தில் ஒடுங்கும். (பேதைப்புலன் - அறிவற்ற புலன்)

467. இலைப்பெறி யேற்றி எனதுடல் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துடன் ஆட்டி
நிலைப்பொறி முப்பது நீர்மை கெளுவி
உடலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.

பொருள் : இறைவன் மாயையால் உண்டாக்கிய உடம்பைத் துலாக்கோல் போல் செலுத்தும் சிவ தத்துவத்தில் அகர உகர மகர விந்து நாத மாகிய பிரணவத்தில் கருவை இயக்கி சீவனை நிலைக்க வைக்கும் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும், புருட தத்துவம் நீங்கிய வித்தியா தத்துவம் ஆறும் சீவனது இயல்புக்கு ஏற்பக் கூட்டி உடம்பாகிய பொறியில் ஒன்பது துவாரங்களையும் அமைத்தருளினான். (உலைப்பொறி - சரீரம்)

468. இன்புற்று இருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது துளை விளைந்தது தானே.

பொருள் : சிற்றின்பத்தில் ஈடுபட்டிருந்த தாயும் தந்தையுமாகிய இருவரும் மனமொன்றி வைத்த மண்ணாலான துன்பமயமான குடத்துள்ளே சேர்ந்தவன் ஆன்மா ஒருவனே. அத்துடன் ஒன்பது வாயில்களாகிய நீர்ச்சாலும் புரியட்டமாகிய எட்டும் ஞானேந்திரிய கன்மேந்திரிய மாகிய பத்தும் ஆக பதினெட்டுக் கலசமும் அந்தக் கருப்பையாகிய சூளையில் வெந்து பக்குமாயின.

469. அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும்
பிறியீர் அதனில் பெருகுங் குணங்கள்
செறியீர் அவற்றினுள் சித்திகள் இட்டது
அறியஈ ரைத்தினுள் ஆனது பிண்டமே.

பொருள் : உடம்பினுள் கொளுந்திய ஆறு துன்பங்களையும் அறியாது உள்ளீர். அங்கு மனத்தினுள்ளே பெருகிக் கொண்டிருக்கும் தாமத இராசத சாத்துவிகமாகிய குணங்களினின்றும் பிரியாதுள்ளீர். அங்குச் சித்திகள் அமைவதைப்பொருந்தாதீர். உணரின் பத்து மாதங்களில் ஆகியது இப்பிண்டமாகும். ஆறுதுன்பங்களாவன; பேறு, இழவு, துன்பம், பிணி, மூப்பு, சாக்காடு என்பன.

470. உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.

பொருள் : உடலை மாயை யினின்றும் தோற்றுவித்தவாறும் உடம்பினுள் உயிரை அமைத்து உறுதியான ஆயிர இதழ்த் தாமரையோடு கூடியசிரசில் அக்கினியில் இறுதிநிலை வைத்த இறைவனைச் சுழுமுனையில் கூடினேன்.

471. கேட்டுநின் றேன் எங்கும் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுநின் றான்முதல் யோனி மயன்அவன்
கூட்டுநின் றான்குழம் பின்கரு வையுரு
நீட்டிநின்று ஆகத்து நேர்பட்ட வாறே.

பொருள் : எவ்விடத்தும் தனக்கொரு கேடில்லாத ஒளிவடிவமான பெருமான் கருவுக் கெல்லாம் கருவாயிருந்து ஆதி சிருட்டியை அருளுகிறான். அப் பெருமான் குழம்பான கருவைச் சீவனோடு சேர்ப்பிக்கின்றான். அதனை உருவாக நீட்டி உடனாய் நின்று உடம்பில் எழுந்தருளியுள்ளதை அடியேன் கேட்டு நின்றேன்.

472. பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபம் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.

பொருள் : பூப்போன்ற யோனியும் மொட்டுப் போன்ற லிங்கமும் பொருந்த மலர்ந்தபின், சுக்கில சுரோணிதக் கலப்பால் ஒளி மயமான சீவ அணு உண்டாகும். நீரிடை எங்கும் பரந்து நின்ற குமிழியின் நிழல் போன்று புரியட்டக சரீரத்திலுள்ள சீவ அணு உடம் பெங்கும் கலந்து விடும். குமிழி-சீவ அணு எட்டு - புரியட்டக சரீரம். காவுடைத் தீபம் - கரு.

473. எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னும் காயப்பை
கட்டி அவிழ்த்திடும் கண்ணுதல் காணுமே.

பொருள் : முற்கூறிய எட்டனுள் மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து இந்திரியங்களும், அவற்றோடு தொடர்புடைய மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்று அந்தக்கரணங்களும் ஆகும். அவற்றோடு சேர்ந்த ஆசா பாசங்களும் ஏற்ப உண்டாகிய உடம்பைப் பெருமானே முதலில் சேர்த்துப் பின்னர் அவிழ்த்து விடுவான், நீங்கள் அதனைக் காணுங்கள்.

474. கண்ணுதல் நாமம் கலந்துஉடம்பு ஆயிடைப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாக வருத்துவைத் தானே.

பொருள் : இறைவனது நாமமாகிய பிரணவத்தைக் கலந்து, உடம்பினில் நாதம் விளங்குமாறு செய்து, பசுத் தன்மையும் நீங்குமாறு நான்கு இதழ்களையுடைய மூலாதாரச் சக்கரத்தினால் உணர்த்தப்படும் பரப்பு அனைத்தையும் பிருதிவி தத்துவத்திலிருந்து தொடங்குகின்ற நியதியை வைத்துள்ளான். (கண்ணு ல் நாமம் - நமச்சிவாய)

475. அருளல்லது இல்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்ற போதுஇரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.

பொருள் : சத்தியின்றிச் சிவன் இல்லை. இனிச் சிவன் இன்றிச் சத்தியும் இல்லை. ஆதலால் அச்சிறப்பான உயிர்க்கு உடம்பைத் தருகின்றபோது, இரு செவிலித்தாய் மாட்டு வைக்கும் அன்பை அமைத்து அருளினான். (இருகைத்தாயர் - குண்டலினி சத்தி, சிற்சத்தி ஆகிய இருதாயர், கிரியையும் ஞானமும் விளங்க இருவரின் உதவியும் சீவனுக்குத் தேவை என்க)

476. வகுத்த பிறவியின் மாதுநல் லாளும்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்ற தோர் மாண்பது வாமே.

பொருள் : அவரவர் வினைக் கீடாக வகுக்கப் பெற்ற பிறவியில் நல்ல சத்தியும் சத்திக் கேற்ற சோதி வடிவான இறைவனும், பல வகைத் திறத்தினுள்ள உணர்வு மயமான பல உயிர்கட்கு எல்லாம் வகை செய்யுமாறு அவ் அவற்றின் உயிர்க்கு உயிராய் நிற்கின்ற சிறந்த பொருளாகும்.

477. மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக்
காண்பதுஆண்பெண் அலிஎயனும் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தான் அச்சோதிதன் ஆண்மையே

பொருள் : பெருமையோடு வளர்க்கின்ற ஒளியாகிய உயிரை ஆணாகவோ பெண்ணாகவோ அலியாகவோ காண்பது கற்பனையாகும். அது தாய் தந்தையின் தன்மையைக் கொண்டிருக்கும். அவ்வாறாகும் உயிருக் கேற்ற உடம்பினைப் படைத்தல் அச் சோதியாகிய இறைவனது வல்லமை யாகும். உயிருக்கு ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை. உடம்பில்தான் ஆண் பெண் வேறுபாடாகும்.

478. ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூண்இரண்டும் ஒத்துப் பொருந்தில் அலியாகும்
தாள்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

பொருள் : கூட்டுறவின் போது ஆண் பண்பு மிகுந்தால் சிசு ஆணாகும். பெண் பண்பு மிகுந்தால் சிசு பெண்ணாகும். ஆண் பெண் குணம் சமமாகில் சிசு அலியாகும். பெண்ணின் நீக்க நிலைக்கும் கடந்த பூமானாகில் உலகை ஆளத்தக்க குழவியாகும். கூட்டுறவின் போது தாழ்ச்சி மனப்பான்மையிருந்தால் சுக்கிலம் பாய்வது நின்றுவிடும். (தாள் - முயற்சி, பாண் - தாழ்ச்சி)

479. பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந்து இவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே.

பொருள் : சுக்கிலமானது ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்று கடை ஓடி விழுந்தால் பிறக்கும் குழந்தையின் ஆயுள் நூறாண்டாகும். நான்கு விற்கடை ஓடிவிழுந்தால் ஆயுள் எண்பதாகும். சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவினை நன்றாக உணர்ந்து இவ்வகையாக ஓடி விழும்படி செய்யும் யோகிக்குச் செலுத்த முடியும்.

480. பாய்கின்ற வாயுக் குறையில் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
காய்கின்ற வாயு நடுப்படில் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே.

பொருள் : சுக்கிலத்தைச் செலுத்துகின்ற வாயு குறையுமானால் குழந்தை குட்டையாக இருக்கும். அவ்வாறு செல்லுகின்ற வாயு மெலிந்திடின் குழந்தை முடமாகும். அவ்வாயு தடைப்படின் குழந்தை கூனாகும். ஆராயின் பெண்களுக்குச் செலுத்துகின்றவாயு இல்லை.

481. மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வைத்த குழவிக்கே

பொருள் : தாயின் வயிற்றில் கருவாய் அமைந்த குழந்தைக்கு அவள் வயிற்றில் மலம் மிகுமானால் அக்குழந்தை மந்தபுத்தி உள்ளவனாவான். அவ் வயிற்றில் நீர் மிகுந்தால் அக் குழந்தை ஊமையாகும். மலம்நீர் இரண்டும் அங்கு மிகுமாயின் அக்குழந்தை குருடாம்.

482. குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.

பொருள் : போக காலத்தில் ஆண்மகனிடம் பிராணன் சூரிய கலையில் (வல நாசியில்) இயங்குமாயின் ஆண் குழந்தையாகும். அப்போது சந்திர கலையில் (இட நாசியில் இயங்குமாயின் பெண் குழந்தையாம். சுக்கிலத்தைச் செலுத்தும் பிராண வாயுவோடு அபானன் என்னும் மலக் காற்று எதிர்த்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும். சூரிய கலை சந்திரகலை ஒத்து இயங்கினால் குழந்தை அலியாகும்.)

483. கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே.

பொருள் : பிராணவாயு, புணரும் இருவருக்கும் ஒத்து இயங்குமாயின் கருவுட் கொண்ட குழந்தையும் அழகாக இருக்கும். அக் காலத்து இருவர்க்கும் பிராணவாயு தடுமாறினால், பெண்ணுக்குக் கரு உண்டாதற்கான வாய்ப்பு இல்லையாம்.

484. கோல்வளை உந்தியில் கொண்ட குழவியும்
தால்வலை யுள்ளே தயங்கிய சோதியாம்
பல்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.

பொருள் : பெண்ணினது கருப்பாசயத்தில் ஏற்றுக் கொண்ட குழந்தையும் அண்ணாக்கினுள்ளே விளங்கும் சோதி போன்றதாம். அஃது ஆணாகவோ பெண்ணாகவோ வளர்ந்து சூரியனது பொன்னுருவைப் போன்று வளர்ச்சி யுற்றுப் பூரணமான உருவத்தைப் பெறும். (தால்வளை - அண்ணத்தின் கண்ணதாம் தொளை)

485. உருவம் வளர்ந்திடும் ஒண்திங்கள் பத்தில்
பருவமது ஆகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே அருவமது
ஆவதுஇங்கு ஆர்அறி வாரே.

பொருள் : உருவமானது நியதியான பத்து மாதங்கள் கருப்பையில் வளரும், பக்குவம் உண்டாகவே அச்சிசு பூமியில் பிறந்து வளரும், மாயை யாகிய வளர்ப்புத் தாயோடு பொருந்தி வளர்ந்திடும். ஆனால் அவ்வுடம்பினுள் பொருந்திய உயிர் வடிவமில்லாதது என்பதை யார் அறிவார் ? (ஒருவரும் அறிய மாட்டார்)

486. இட்டான் அறிந்திலன் ஏற்றவன் கண்டிலன்
தட்டான் அறிந்தும் ஒருவர்க்கும் உரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மைஎவ் வாறே

பொருள் : வித்திட்ட தந்தையும் என்ன குழந்தை என்பதை அறியவில்லை. அதனை ஏற்றுக்கொண்ட தாயும் அந்த விவரத்தை அறியவில்லை. காரணத்துக் கேற்பக் காரியம் செய்யும் பிரமனாகிய தட்டானும் அறிந்தவனாயினும் ஒருவருக்கும் சொல்லவில்லை. அந்நியதியை அமைத்துக் கொடுக்கும் சதாசிவனும் அங்கேயிருக்கிறான். என்னே இம்மாயையின் மயக்குந் தன்மை இருந்தவாறு ! (தட்டான் - சிவன் என்றும் சிலர் பொருள் கொள்வர்.)

487. இன்புற நாடி இருவரும் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே.

பொருள் : இன்ப நாட்டத்தை விரும்பிய இருவர் கூட்டத்துத் துன்பம் பொருந்தும் பாசத்தில் தோன்றிய சிசு துன்பத்தில் வளர்ந்த பின்னர் மேன்மை பெற விரும்பி உலகில் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியுள்ள பழமைக்கும் பழமையான இறை வனைப் பொருந்த நாடி ஏத்தலுமாகும்.

488. குயிற்குஞ்சு முட்டையைக் காக்ககைக்கூட்டு இட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லைப் போக்கில்லை ஏன்என்பது இல்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.

பொருள் : குயிலின் முட்டையைக் காக்கையின் கூட்டில் வைத்தால் சந்தேகமின்றிக் காக்கை வளர்ப்பது போன்று இயக்கமில்லாமலும் போக்கில்லாமலும் ஏன் என்று வினவாமலும் தாயும் மயக்கத்தினால் உடம்பை வளர்க்கின்ற முறை இதுவாம். (காக்கைக் கூட்டில் குயில் முட்டையிடும் என்பதைக் குறிக்கின்றார்.)

489. முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதற்புத் லாய்ப்பல  மாய்நின் றளிக்கும்
அதற்கது வாய்இன்பம் ஆவது போல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.

பொருள் : தாவரமானது முதலில் கிழங்காய் இருந்தது. முளையாய் முளைக்குப்பின் அதன் புதராய், பின் பழமாய்ப் பயனைத் தரும். அதுவே அத்தாவரத்திற்கு இன்பமாக அமைவது போன்று எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பயன் அளிப்பதே ஆதியாகிய குறைவனுக்கு இன்பமாம்.

490. ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை
ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்ல மாதேவன்
தானே அறியும் தவத்தின் உள்ளே.

பொருள் : மற்றைய தேவர்களைக் காட்டிலும் பெருமை உடையவன் ஆகிலும் எம் இறைவனாகிய பரமேசுவரன் ஊன் உடலிலுள்ள குற்றங்களிலும் தான் கலந்து அற்றினூடே விளங்குகின்றான். அப்படிப்பட்ட தேவதேவனை வானோர்களாலும் அறிய முடியாமல் மக்களே தாம் தங்கள் தவ வலிமையால் காண முடியும்.

491. பரத்திற் கரைந்து பதித்தநற் காயம்
உருத்தரித்து இவ்வுடல் ஓங்கிட வேண்டித்
திரைக்கடல் உபபுத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்கும் திருவுரு ளாலே.

பொருள் : மேலான பரம்பொருளினிடத்துச் சூக்குமமாய் ஒடுங்கிய நல்ல உடம்பு மீண்டும் பக்குவத்துக்கேற்பப் பயனை அடைய வேண்டி அலை கடலில் சூரிய வெப்பத்தால் உப்புத் திரண்டு உருவம் அடைவது போல இறைவனது அருளால் மீண்டும் தூல உடம்பு கருவில் உருவாகிறது.

15. மூவகைச் சீவ வர்க்கம்

(மூவகைச் சீவ வர்க்கம்  என்பது விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்றபடி விஞ்ஞானகலர் ஆணவமலர் ஒன்று மட்டும் உடையவர். பிரளயகலர் ஆணவம் கன்மம் என இருமலமுடையவர். சகலர் ஆணவம், கன்மம், மாயையென மும்மலமுடையவர்.)

492. சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி
ஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டிச்
சுத்தமது ஆகும் துரியம் புரிவித்துச்
சித்தம் புகுந்து சிவமயம் ஆக்குமே.

பொருள் : சத்தியும் சிவனும் விளையாட்டாக உயிரைச் சூக்கும சரீரத்தில் பொருத்தி, சுத்தமும் அசுத்தமுமாகிய இரு மாயையுள் கூட்டுவித்து, சுத்தமாகிய மேலாம் நிலத்தை எய்துவித்து, சீவர்களது சித்தத்தில் விளங்கித் துரிய நிலையில் சீவரூபம் பெற அருளும்.

493. விஞ்ஞானர் நால்வரும் மெய்ப்பிரள யாகலத்து
அஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம்
விஞ்ஞானர் ஆதியர் வேற்றுமை தானே.

பொருள் : தெளிந்த ஞானமுடையோராகிய விஞ்ஞானகலர் நால்வகையினரும் பிரளயா காலத்தில் அந்த ஞானத்தைப் பெறும் பிரளயகலர் மூவகையினரும், உலக வாழ்வில் பொருந்தி அறியாமையுடைய சகலர் மூவகையினருமாக விஞ்ஞானகலராதிய மூவகைச் சீவவர்க்கமும் பத்துப் பிரிவினதாகும்.

494. விஞ்ஞானர் கேவலத் தார்அது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசராம் சார்ந்துளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே.

பொருள் : விஞ்ஞானகலர் ஆணவ மலர் மட்டும் உடையோராகிய தன்னலம் விட்டவரும், ஆன்ம ஞானம் உடையவராகிய அட்ட வித்தியே சுரபதம் சார்ந்தோரும், உயர்ந்த ஞானமுடையோராகிய ஏழு கோடி மந்திரேசுரரும் உண்மையான ஞானமுடையோராகிய  ஆணவமல வாசனையும் விட்டு நின்றவருமாக நால்வகையினராம்.

495. இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகும் நூற்றெட்டு ருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.

பொருள் : விஞ்ஞானகலரில் பக்குவம் குறைந்தோர் உடலுடன் கூடியிருந்தபோத சீவன் முத்தி அடையாமல் அடுத்த பிறவியில் சிவனை அடைவர். அவ்வளவே இருமலமுடைய இரண்டாவது பிரிவினரான பிரளயகாலர், இரண்டு பிறவிகளில் நூற்றெட்டு உருத்திரர் பதமடைவர் என்பர். மாயையின் வலிமையால் பிணிக்கப்பட்ட சகலர் மும்மலம் கெடாது உள்ளவராவர்.

496. பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட்டு இரண்டிடை ஊடுற்றார் சித்துமாய்
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத்து அமிழ்ந்து சகலத்து ளாரே.

பொருள் : மும்மலமுடைய சகலரில் சிலர் சித்தாகிய சிவத்தைப் பேணி ஞானமும் வடிவான சிவமாயினர். ஞானமும் கிரியையும் ஒத்துச் சதாசிவ நிலையில் பற்றி நின்றவர், ஞான வடிவாய் மும்மலங்களைக் கடந்து மேல் நிற்பவராவர். ஞானமும் கிரியையும் ஒத்து மும்மலத்தை நீக்க மாட்டாதார் நாத தத்துவம் வெளிப்படாமல் சகல ராவார்.

497. சிவமாகி ஐவகைத் திண்மலம் செற்றோர்
அவமாகச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக் கொண்டாரே.

பொருள் : சிவமாகி ஐவகையான வலிமையுள்ள மலங்களையும் வென்றவர். வீண்போகாத சித்தராய் முத்தி பெற்று அழியாத நிலையில் இருப்பர். பசுபாசத் தன்மைகள் நீங்கப் பெற்றவராய் அவர் பிறவியினின்றும் நீங்குவர். அவர் சிவனது ஒன்பது நிலையையும் விரும்பிக் கொண்டவராவர்.

498. விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.

பொருள் : விஞ்ஞானகலர் ஆணவமாகிய ஒரு மலர் மட்டும் உடையவர் (அணு சதாசிவர்) விஞ்ஞானரைப் போன்று சுத்த மாயையில் உள்ள பிரளயாகலர் இருமலம் உடையவர். (அட்ட வித்தியேசர் முதலியோர்) கருவிகொண்டு உணரும் சகலரும் அஞ்ஞானத்தால் அறிவில்லாதவராவர். இம்மூவகையிலும் உள்ள உயிர் வருக்கங்கள் உத்தம மத்திம அதமமான தகுதி என்று ஒவ்வொரு பிரிவிலும் மும்மூன்றாய் ஒன்பது வகையுள்ளன.

499. விஞ்ஞான கன்மத்தால் செய்யகங் கூடி
அஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக்கு
எஞ்ஞான செய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.

பொருள் : விஞ்ஞானகலர் மேலான ஞான கன்மத்தினால் உள்நின்று உணர்த்தப் பெற்றும், பிரளயகாலர் உள்நின்று உணர்த்தப் பெறாமையால் சுத்த வித்தியா மண்டலங்களை அடைந்தும், சகலர் ஞானம் படிப்படியாகப் பெற மாயா சரீரத்தைக் கொண்டு மீளமீள வந்து பிறந்தும், உண்மை ஞானத்தைப் பெற்றுச் சிவ சாயுச்சியம் பெறுதல் உறுதியாம். சுவர்யோனி - தேவப் பிறப்பு

500. ஆணவம் துற்ற அவித்தா நனவற்றோர்
காணிய விந்துவாம் நாத சகலாதி
ஆணவம் ஆதி யடைந்தோர் அவரன்றே
சேணுயர் சத்தி சிவதத் துவம் ஆமே.

பொருள் : ஆணவம், செறிந்துள்ள அஞ்ஞானத்தை நனவிலும் நீங்கியவர், விந்து நாதம் ஆகியவற்றைச் சகல நிலையில் (தேகத்துடனே) காண முடியும். ஆணவம் முதலான மலங்களைப் பொருந்திய சகலர்களோ மிக மேலான சிவ தத்துவ மண்டலங்களை மல நீக்கம் பெற்ற பின்னரே அடைவர்.

16. பாத்திரம்

(பாத்திரம் - கொள்கலன். அஃதாவது அறவழியில் ஈட்டிய பொருளைச் சேம வைப்பாக வைக்கும் இடமாகும். அதற்கு உரியவர் சிவ ஞானியராவர்)

501. திலமத் தனைபொன் சிவஞானிக்கு ஈந்தால்
பலமுத்தி சித்தி பரபோக மும்தரும்
நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்
பலமும்அற் றேபர போகமும் குன்றுமே.

பொருள் : எள் அளவு பொன்னைச் சிவஞானிக்குக் கொடுத்தால் அதன் பயன் மறுமைக்கு முத்தியும் இம்மைக்குச் சித்தியும் போகமும் உண்டாகும். பூமியளவு பொன்னை அஞ்ஞானிகளுக்குக் கொடுத்தால் பயனும் இல்லை; மறுமை இன்பமும் இல்லை. (பரபோகம் - திருவடிப் பேறு)

502. கண்டிருந்து ஆருயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந்து ஆருயிர் கொள்ளும் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்குஅருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரும் ஆமே.

பொருள் : காலம் வரும் வரை பாத்திருந்து உயிரைக் கவர்ந்து செல்லும் காலனை, செலுத்தியிருந்து ஏற்றுக் கொள்ளும் எண் குணத்தானும் நன்றாக அவனது உயிர்க்கு உயிராந் தன்மையை உணர்ந்தார்க்கு அருள்புரியும் நாதனு மாகிய இறைவனை அவன் விளங்கும் விந்து நாத மண்டலங்களில் சென்றுணர்ந்தவர் சிலர் ஒளி மண்டல வாசிகளாவர்.

503. கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து
மெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யான்அடி
நெய்விட் டிலாத இடிஞ்சலும் ஆமே.

பொருள் : நான் தாய் வயிற்றில் கருவாய் இருந்தபோது சிவஞானத்தையே பற்றியிருந்தேன். மெய்ப் பொருளாம் இறைவனது திருவடியை உடம்போடு கூடியிருந்த போதும் நீங்காதிருந்தேன். பின் பொய்யாகிய உடம்பை விட்டு ஒளி மயமான திருவடியை நான் தேடுவேன். அது நெய்விட்டு எரியாத தூண்டா விளக்காகும்.

504. ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளை யோனே.

பொருள் : போகப் பொருள்கள் வருவன வரும். அவை நீங்குவன நீங்கும். கழிக்கப் பெறும் வினைகள் கழியும். அனுபவிக்க வேண்டி வருவன வந்து சேரும். ஆகையால் இவற்றை இறைவன் காட்டியருளக் கண்டிருப்பவனே அவன் ஆணையின் வண்ணம் செயலாற்றுகின்ற முதல் தகுதி உடையவன் ஆவான்.

17. அபாத்திரம்

(பாத்திரம் அல்லாதது அபாத்திரம், சற் பத்திரத்திற்கு ஈவது பயனுண்டு என்று முன் கூறிய ஆசிரியர் அசற் பாத்திரத்திற்கு ஈவதில் பயனில்லை என்று இங்குக் கூறுகிறார்.)

505. கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது
காலம் கழிந்த பயிரது ஆகுமே.

பொருள் : அழகான வறட்டுப் பசுவுக்குக் குனிந்து நிமிர்ந்து பசுந்தழையிட்டு பாலைக் கறந்து குடிப்பது போலாகும், ஒழுக்கமும் விரதமும் இல்லாதவர்க்கு ஈவது மேலும் பருவம் தப்பிச் செய்த பயிரையும் போலப் பயனற்றதாகும். வறட்டை - கன்று ஈனாப்பசு. (மலட்டுப் பசு)

506. ஈவது யோக இயம நியமங்கள்
சார்வது அறிந்துஅன்பு தங்கும் அவர்க்குஅன்றி
ஆவது அறிந்துஅன்பு தங்கா தவர்களுக்கு
ஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே.

பொருள் : (ஈவ-ஈவது) யோகத்துக்குத் தவிர்க்க வேண்டியவைகளையும் கொள்ள வேண்டியவைகளையும் அறிந்து அன்புடையார்க்கே தானம் செய்ய வேண்டும். அவ்வாறன்றிச் சார்பறிந்து அன்பு கொள்ளாதவர்க்குத் தானம் செய்வது பெரிய தவறாகும் என்று உலகவரே அறிந்து கொள்ளுங்கள். யோகம் - மனவொடுக்கம்; இயமம் - தீமை அகற்றல்; நியமம் - நன்மை ஆற்றல்.)

507. ஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும்
காமாதி விட்டோர்க்கும் தரல்தந்து கற்பிப்போன்
போமா நரகில் புகான் போதங் கற்கவே

பொருள் : பஞ்சமா பாதகன் நல்லோர்க்குக் கொடுப்பதன் நன்மையை அறியாது கெடுவான். ஆனால் குற்றமற்ற ஞான குருவுக்கும் தூய்மையான பெரியோர்க்கும் காமம் வெகுளி மயக்கம் ஆகிய மூன்றையும் நீங்கினோர்க்கும் அவரவர்க்குக் கொடுத்து அவ்வந் நிலையிலே நிற்கச் செய்பவன் ஞானத்தைப் பெற்றமையால் பஞ்சமா பாதகன் ஆழும் நரகில் புகமாட்டான்.

508. மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவன்என்றே அஞ்சலி அத்தனால்
எண்ணி இறைஞ்சாதார்க்கு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.

பொருள் : மண்மலை போன்று அத்துணை பெரிய பொருளைக் கொடுத்தாலும் சிவனே முன்னின்று அருளுகின்றான் என்று கூப்பிய கையினனாய் எண்ணி வணங்காதருக்குக் கொடுத்த புரவலரும் ஏற்ற இரவலருமாகிய இருவரும் ஏழு வகையான நரகங்களில் அழிந்து உழல்வர்.

18. தீர்த்தம்

(தீர்த்தம் - புகை நீர். புறத்தே காவிரியிலும் கங்கையிலும் தீர்த்தம் உள்ளது போல அகத்தேயும் மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரை தீர்த்தம் உள்ளது. இங்குள்ள தீர்த்தத்தை அறிந்து ஆடவேண்டும் என்கிறார்.)

509. உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின்று ஆடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.

பொருள் : மன மண்டலம் சூழவுள்ள உடம்பில் மூலாதாரம் முதலாகச் சகஸ்ரதளம் ஈறாகவுள்ள இடங்களில் ஏழுதீர்த்தங்கள் உள்ளன. தாம் செய்த வினை நீங்க இவ்விடங்களில் பொருந்தி ஆட மாட்டார், நேர்மை இல்லாத  மனம் உடைய அறிவில்லோரே, பூமியில் பள்ளத்திலுள்ள தீர்த்தங்களையும் மலை மேட்டிலுள்ள சுனைகளையும் தேடி அலைவர்.

510. தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே.

பொருள் : தெளிந்த ஞான முடையாரது சிந்தையில் விளங்கும் சிவன் திருக்கோயில் வழிபாடு செய்பவர்க்குக் குளிர்ச்சியுள்ள பொருளாய்க் காட்சியளிப்பான். காம நெறியில்  ஈடுபடுவார்க்கு அடைய முடியாதவனாக உள்ளான். பிராணாயமாய் பயிற்சியாளர்க்கு அவனை ஒரு சமயம் அடைதலும் கூடும்.

511. உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதோர் பத்துள்ளாமே.

பொருள் : மன மண்டலத்துள்ளே உணருகின்ற ஒப்பற்ற பொருளை, கூடா வொழுக்குடைய கள்ள மனமுடையார் கலந்தறிய மாட்டார். நீர்ப் பிரதேசத்தை விரும்பிப் பாய்ச்சுகின்றவரது தீய செயலானது பள்ளத்திலுள்ள நீரை நீர்ச்சால் கொண்டு மேட்டுக்கு இறைப்பது போலப் பயனற்றதாம். நீர்ச்சால் துவாரங்களோடு இருந்தால் நீரை மேலேற்றிப் பயன்பெற முடியாது.

512. அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதம் சென்று வலங்கொள்
மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்
பொறியார் புனல்மூழ்கப் புண்ணியர் ஆமே.

பொருள் : ஒளி மண்டல வாசிகள் ஆகாய மண்டலத்தில் செறிந்துள்ள விந்து மண்டலத்தை அடைந்து ஆதியாகிய சிவபெருமானை அறிவார். காமக் கலையைத் தடுத்துச் செயம் பெறுவதால் பொருந்தும் பிரணவ கோஷத்தோடு வரும் கங்காப் பிரவாகத்தில் பொறிகளையுடைய சீவர்கள் நீராடவே புண்ணியர் ஆவர்.

513. கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்
உடலுற்றுத் தேடுவார் தம்மைஒப் பாரிலர்
திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்று
உடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.

பொருள் : கடலில் பொருளைப் போட்டு விட்டு அதனைக் குளத்தினில் காண்பவர் நீர்ப்பையாகிய கடலில் விந்து நீக்கத்தைக் கெடுத்து அதனை நெற்றிப் பிரதேசமாகிய குளத்தினில் ஒளியாகப் பெறுவாரை ஒப்பாக மாட்டார். அவ்வாறு ஆகாய பூத நாயகரான சதாசிவரின் அருளாலே சென்று உடம்பில் புகுந்து மேற்சென்றமையை அறிய மாட்டார். (நந்தி - சிவபெருமான்)

514. கலந்தது நீரது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீரது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்அனல் காற்றது வாமே.

பொருள் : உடம்பில் கலந்த நீரானது (உணர்வானது) சிவன் தாமத குணவயப்பட்ட போது கீழ்நிலையில் கருமையாகப் புலப்படும். உடம்பில் கலந்த நீரானது இராசத குணநிலையில் கீழேயுள்ள மூலவாயு நெற்றிக்கு வந்தபோது மாதுளம் பூப்போன்ற செஞ்சோதியாகத் தோன்றும். கலந்த நீரானது சாத்துவிக நிலையில் சிதாகாயத்தை அடைந்த போது வெண்ணிற ஒளியாகத் தோன்றும் அவ்வாறு கலந்த நீரானது அக்கினியின் பிரகாசமும் காற்றின் இயக்கமும் பொருந்தியே உள்ளது.

19. திருக்கோயில் இழிவு

(திருக்கோயில் இழிவு என்பது, திருக்கோயிலுக்குச் செய்யும் இழிவு என்றபடி. திருக் கோயிலுக்குச் செய்யும் இழிவால் வரும் கேடு இங்குக் கூறப்பெறும்.)

515. தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசுநிலை கெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.

பொருள் : கோயிலில் உள்ள அருவுருவத் திருமேனியாகிய இலிங்கத்தைப் பிடுங்கி வேறோர் இடத்தில் வைத்தால் வைப்பதன் முன்னம் ஆட்சி அழியும். பிடுங்கி வைத்தவன் இறப்பதற்கு முன்னே தொழு நோயால் பீடிக்கப் படுவான். இவ்வாறு என்னுயிர்க் காவலனாகிய சிவபெருமான் கூறியருளினான். (பேர் நந்தி - முழுமுதற் பெருங் கடவுள்)

516. கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.

பொருள் : கட்டுவிக்கப் பெற்ற நிறைந்த மதிலில் ஒரு கல்லைப் பெயர்த் தெடுத்தால் அத்தீமை மகுடாபிஷேகம் செய்விக்கப் பெற்ற மன்னரை வெட்டி வீழ்விக்கச் செய்யும். முனிவரது தவத்தை முடிவு பெறாமல் செய்யும். கல்லைப் பெயர்த்தவர் வேதியராக இருந்தாலும் அவர்களையும் வெட்டி வீழ்த்தும்படி செய்யும். இது சிவனது ஆணையாகும். (விண்ணவன் - பரவெளியாகிய சிவபெருமான்.)

517. ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.

பொருள் : இயமனை உதைத்தவனாகிய இறைவன் எழுந்தருளியுள்ள கோயில்களில், வேதாகமங்களில் விதிக்கப் பெற்ற நித்திய நைமித்திய வழிபாடுகள் தப்புமாயின் பொறுக்க முடியாத நோய் மிகுந்து, பூமியில் மழை குறைந்து, போற்றுதற்கு அருமையான அரசரும் போர் செய்யும் திறமையில் குன்றுவர்.

518. முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளம்குன்றும்
கன்னம் களவு மிகுந்திடும் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே.

பொருள் : முதல்வனுடைய திருக்கோயில் பூசைகள் நடவாமல் தடைப் படுமாயின் அரசருக்குத் தீமைகள் உளவாம். மழைநீர் வளப்பம் குறையும். உலகில் கன்னக் கோல் கொண்டு செய்யும் களவு மிகும் என்று அருமையான நந்தி எடுத்துக் கூறினான்.

519. பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.

பொருள் : தகுதிபெறாத பெயரளவில் உள்ள பிராமணன் சிவபெருமானுக்குப் பூசை செய்தால், போர் மேல் செல்லும் மன்னர்க்குப்  பொல்லாத வியாதி உண்டாம். உலக முழுவதும் வியாபித்துள்ள நாட்டில் பஞ்சமும் உண்டாகும் என்று சிறப்பு மிக்க நந்தியெம் பெருமான் ஆராய்ந்து கூறியருளினான்.

20. அதோமுக தெரிசனம்

(சதாசிவ மூர்த்தி ஈசானம், தற்புருடம், அகோரம், வாம தேவம், சத்தியோபாதம் என ஐந்து முகங்கள் உள என்று ஆகமம் கூறும். இவையன்றிக் கீழ் நோக்கி முகம் ஒன்றுண்டு, அதுவே அதோமுகம், அதனைத் தரிசித்தல் அதோமுக தெரிசனமாம்.)

520. எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவள மேனி அறுமுகன் போயவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

பொருள் : எம்பெருமானே ! இறைவா ! நாங்கள் வருந்துவது முறையோ என்று ஒளிமண்டல வாசிகளாகிய வானவர்கள் இருள் மண்டல வாசியாகிய அசுரனது வலிமையைப் பற்றி முறையிட, அழகிய பவழம் போன்ற மேனியை யுடைய அறுமுகனே ! நீ நாம் அளிக்கும் சேனையுடன் சென்று அத் ÷ தவர்களின் பகையை அழித்து வருக என்று கூறியருளிய இறைவனே தற்பரனாக உள்ளான்.

521. அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வார்இல்லை
உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே.

பொருள் : வெண்மையான தலை மாலையை அணிந்த விரிந்த சடையையுடைய சிவபெருமானுக்கு அண்டங்களையும் எட்டுத் திசைகளையும் தாங்கிக் கொண்டுள்ள அதோமுகத்தின் கழுத்துக் கருமையாக உள்ள உண்மையை அறிகின்றவர் யாரும் இல்லை. அவர் நஞ்சுண்டதால் கண்டம் கறுத்தது என்பர் அறிவிலாதார்.

522. செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச் செய்வன்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.

பொருள் : கருமை நிறம் பொருந்தி விளங்கும் கண்டத்தை யுடைய பெருமான், செழுமையான கடல் சூழ்ந்த உலகில் பொய்யான கதை பேசிப் புகழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் உண்மையான தத்துவத்தைப் பற்றிப் பேசுவார்களாயின் தேவரும் தொழும் தகுதியை அவர்கட்கு அருளுவான். இவ்வுலகினைப் படைத்த அவன் பொய்யினையும் மெய்யினையும் அறிவான்.

523. நந்தி எழுந்து நடுவுறு ஓங்கிய
செந்தீக் கலந்துள் சிவனென நிற்கும்
முந்திக் கலந்தங்கு உலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுகன் ஆமே.

பொருள் : மூலாதாரத்திலுள்ள உருத்திரன் சுழுமுனை வழியாக மேலெழுந்து சிரசின் மேல் செவ்வொளியுள் கலந்து சிவன் என்ற பேருடன் நிற்கும். அப்போது முன்னைய நிவர்த்தியாதி புவனங்களில் இயல்பை மாற்றி வெற்றி கண்டு மேலெழுந்து நிற்கும். இவ்வாறு செய்வது முடிவினைச் செய்கின்ற சிவனது அதோமுக மாகும்.

524. அதோமுகம் கீழ்அண்ட மான புராணன்
அதோமுகம் தன்னோடும் எங்கும் முயலும்
சதோமுகத்து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோமுகன் ஊழித் தலைவனும் ஆமே.

பொருள் : அதோமுகம் என்பது கீழே பிரணவமாகிய அண்டத்தில் பழமையாக உள்ளது. அது சூக்கும உடலில் எங்கும் செல்லும் ஆற்றலை யுடையது. சத்தாகிய ஓம் என்னும் பிரணவ வடிவாயுள்ள ஒளி பொருந்திய பராசத்தியுடன் கூடிய பிரனும் அதோ முகனாயும் ஊழியைச் செய்பவனாயும் உள்ளான்.

525. அதோமுகம் மாமல ராயது கேளும்
அதோமுகத் தால்ஒரு நூறாய் விரிந்து
அதோமுகம் ஆகிய அந்தமில் சத்தி
அதோமுகம் ஆகி அமர்ந்திருந் தானே.

பொருள் : கவிழ்ந்த முகமுடைய பெரிய மலராகிய விந்தையைக் கேளுங்கள். சிரசில் கவிழ்ந்துள்ள சகஸ்ர தளத்திலிருந்து நூறு நாடிகள் கீழ் நோக்கி விரிந்து, கவிழ்ந்துள்ள நாடித் தொகுதிகளிலுள்ள அழிவில்லாத சத்திகளுடன் அதோ முகமாகிப் பொருந்தி இறைவனும் நின்றான்.

21. சிவ நிந்தை (சிவ நிந்தையாவது, சிவனே முழுமுதல் என்று உணராது நித்தித்தல்)

526. தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளிவுறு வார்அம ராபதி நாடி
எளியனென்று ஈசனை நீசர் இகழில்
கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே.

பொருள் : மேலோர் தெளிந்த ஞானத்தால் சிந்தையினிடத்துத் தேவ உலக அதிபனாகிய சிவனை நாடி அருள் பெறுவர். அவ்வாறு இருக்கச் சிவன் எளிமையானவன் என்று கீழோர் இகழ்வாராயின் கிளியானது பூனையின் கீழ்ப்பட்டுக் கெடுவது போலாகும்.

527. முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்க்கு அல்லது தாங்கஒண் ணாதே.

பொருள் : உலர்ந்து போன தேவரும் அசுரரும் எல்லாரும் காமத்தால் கெட்டுப் போனவர்களாம். அவர்கள் உடம்பில் அதோ முகத்தில் விளங்கும் உண்மைப் பொருளை உணரமாட்டார்கள். அன்பினால் கசிந்து அமுதம் போல் சுரக்கும் ஆதியாகிய பிரானை உடம்பெங்கும் தேக்கி உண்பவர்க்கன்றித் தாங்க முடியாதாகும்.

528. அப்பகை யாலே அசுரரும் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.

பொருள் : அசுரரும் தேவரும் ஈசுவர நிந்தையினால் தீராப் பகை கொண்டு உய்தி பெறாது இடையே அழிந்தனர். ஈசுவரனிடம் எவ்வாறு பகை கொள்ளினும் அவனை அடைய முடியாது. ஈஸ்வரனைப் போலியாகவாவது பகை செய்யினும் தீமை ஒன்று பத்தாக வளரும். (இறைவனை - முழுமுதற் சிவனை.)

529. போகமும் மாதர் புலவி அதுநினைந்து
ஆகமும் உள்கலந்து அங்குஉள ராதலில்
வேதிய ராயும் விகிர்தன்நாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்புஒழி வாரே.

பொருள் : வேதியராகப் பிறந்தும் பெண்களது போகத்தையும் ஊடலையும் எண்ணி மார்பிலும் சிந்தையிலும் கலந்துளராதலாலும் நாம் பிரமன் என்கின்ற தர்மத்து உளராதலாலும் இறைவனைப் பற்றிய எண்ணத்தைச் சிந்தையில் கொள்ள மாட்டார். (நாமே பிரமம் என்போர் ஈசனை எண்ணாது இகழ்வர்.)

22. குரு நிந்தை (குரு நித்தையாவது, குருவைப் பழித்தலாம். குருவைப் பழித்தலும் அடாத செயல் என்க. குருவைப் பழித்தவர் எய்தும் துன்பம் இங்குக் கூறப் பெறும்.)

530. பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தார்அவர்
பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே.

பொருள் : கீழ்மக்கள் ஞானம் பெற்றவரையும் பேண மாட்டார்கள். இவர் உடனிருந்தவரையும் வருந்தும்படி சொல்லுவர். கற்றறிந்தோரிடம் பொருந்தியவரே ஞானம் பெற்றோர் ஆவர். இவரன்றி யார் இப் பேற்றினைப் பெற முடியும் ?

531. ஓரெழுத்து ஒருபொருள் உணரக்  கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங்கு ஓர்உகம்
பாரிடைக்  கிருமியாய்ப் பழகுவர் மண்ணிலே.

பொருள் : ஓம் என்ற பிரணவத்தின் பொருளைச் சீடன் உணரும்படி செய்த பெருமை பெற்ற நாதத்தை எழுப்பித் தந்த குருவை மனம் நோகும்படி செய்தவர் ஊர் சுற்றித்திரியும் நாயாகப் பிறந்து பிறகு ஒரு யுகம் பூமியில் புழுவாய்க் கிடப்பர்.

532. பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தம் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.

பொருள் : இல்லற ஞானிகளும் தத்துவ ஞானிகளும் மனம் வருந்தக் கேடு செய்தவரது பொருளும் உயிரும் ஒரு வருடத்தில் நீங்கி விடும். இது உண்மை. சதாசிவத்தின் மேல் ஆணை. (பத்தினி பத்தர்கள் என்பதற்குக் கற்புடைப் பெண்டிர் என்று சிலர் பொருள் கொள்வர்.)

533. மந்திரம் ஒரெழத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொத்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்களாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

பொருள் : ஓரெழுத்து ஒரு மொழியாகிய பிரணவத்தை உபதேசித்த பெரிய தவத்தையுடைய குருவை மனம் வருந்தும் வண்ணம் தீமை புரிந்தவர், இழித்து ஒதுக்கப் பட்ட நாயாய் நூறு பிறவிகள் எடுப்பர். பின்னு தாழ்ந்த பிறப்பெடுத்து மண்ணில் மடிவர்.

534. ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.

பொருள் : சிவனடியார் மனம் கலங்கினால் தேசமும் நாடும் பிற சிறப்புகளும் அழியும். இந்திரனது ஆட்சி பீடமும் பெரிய மன்னரது ஆட்சி பீடமும் நாசமாகும். இது நம் சிவபெருமான் மேல் ஆணையாகும்.

535. சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே.

பொருள் : சன்மார்க்கத்தைப் போதித்த நல்லாசிரியரின் முன்பாகப் பொய் கூறினால் முன்பு பெற்றிருந்த தவமும் கெட்டு, ஆசாரியிடம் பெற்ற ஞானோபதேசமும் தங்காது. பழமையாக உபதேசிக்கப்பட்ட நெறியையும் மறந்து ஆன்ம வளர்ச்சிக்குரிய பிற நெறியும் போய் வறுமையும் உண்டாகும்.

536. கைப்பட்ட மாணி தானிடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்பேன் விதிபோன்றும்
கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்
கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞானிக் கொப்பே.

பொருள் : கையில் அகப்பட்ட பெருமையுடைய மாணிக்கத்தைக் கைவிட்டு காலில் பட்ட கல்லை எடுத்துச் சுமப்பானின் வினையைப் போலவும், கையிலுள்ள நெய், பால், தயிர், உணவு இருக்க, தனக்கு நன்மை தராத கையளவு பிட்டு உண்பான் போலவும் ஆகும். ஞானியரோடு கருமம் செய்வானை எண்ணுதல் (ஞானத்தை விட்டுக்  கிரியையினைச் செய்வதாகும்.)

23. மயேசுர நிந்தை (மகேசுரரைப் பூசை செய்பவர் மயேசுரர். அவரை நிந்தை செய்வது மயேசுர நிந்தை. சிவனடியாரைப் பழிப்பார் அடையும் தீமை இங்குக் கூறப்பெறும்.)

537. ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயம்ஏற்று உண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாம்தாம் விழுவது தாழ்நரகு ஆகுமே.

பொருள் : சிவத்தை வழிபடும் அடியார்கள் உலகியல் நெறிக்கு மாறுபட்டவர். சிவனடியார் பசி வந்துற்றபோது பிச்சை எடுத்து உண்பவர். அத்தகைய அடியாரை வெறுக்கத்தக்க வகையில் வசை மொழிந்தவர் மிகத் தாழ்மையான நரகத்தில் வீழ வகை செய்து கொண்டவராவர்.

538. ஞானியை நிந்திப் பவனும் நலன்என்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வார் அவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே.

பொருள் : சிவஞானியைத் தூற்றுபவனும், நல்லவன் என்று ஞானியைப் போற்றுபவனும் முறையே கொடிய வினையும் நல்ல வினையும் நீங்குவர். அச்சிவஞானியை அடைந்த பொழுதே சிவபோகம் சித்திக்கும். (இருவினைஎம் நீங்கியபின் பேரின்பம் கிட்டும் என்றபடி.)

24. பொறையுடைமை (பொறை யுடைமையாவது, பொறுத்தலை உடைமை, உடம்பிலுள்ள அமுதம் வற்றி அழியாமல் பொறுத்தல் பொறை நிலை என்க)

539. பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றாது ஒழிவது மாகமை யாமே.

பொருள் : மெய்ந்நெறி பற்றி வழுவாமல் நிற்கும் யோகியர் நெஞ்சில் மெய்ப் பொருளோடு கூட வேண்டுமென்ற எண்ணமாகிய பல்லி ஒன்றுள்ளது. அது மூக்கையும் நாக்கையும் முற்றுகை யிட்டு அவற்றைச் செயலும்படி அப்பொழுது மாறி நின்று இருளில் செலுத்துகின்ற மன மண்டலத்தில் உலராது அமுதத்தைப் பெருகச் செய்வது மிக்க பொறுமையாகும்.

540. ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன்
ஞாலத்து இவன்மிக நல்லன்என் றாரே.

பொருள் : பால் போன்ற வெண்ணிற ஒளியில் விளங்கும் சிவனது திருவடியை வணங்கி உய்தி பெறுவதற்காக அவனது கொலு மண்டபத்தைச் சூழ்ந்துள்ள அழிவில்லாத தேவர்களிடம், பொறுமையுடைய இந்த ஞானி திருமாலுக்கும் ஆதிப் பிரமனுக்கும் தலைவன்; உலகத்துக்கும் மிகச் சிறப்புடையவன் என்று சிவபெருமான் அருளிச் செய்தான். (உலாப்பிலி - அழிவில்லாத சிவன். இப்பாடல் சிறு மாறுதல்களுடன் 108 ஆம் பாடலாக வந்துள்ளது.)

541. ஞானம் விளைந்தவர் நம்மிடம் மன்னவர்
சேனை வளைந்து திசைதொறும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை வளைந்தருள் எட்டலும் ஆமே.

பொருள் : மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றவர் சீவர்களுக்கு மன்னராவர். அத்தகைய ஞானியைக் கருவி கரணங்களாகிய சேனை சூழ்ந்து அவர் ஏவல் வழி நிற்ப அவரது உடம்பை மாற்றிப் படைக்கும் தேவ தேவனை அவர் ஏனை வழி நீத்து ஞானத்தால் அணுகி அருள் கூட முடியும்.

542. வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யானும் பயிற்றி பதம்செய்யும்
கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு
எல்லையி லாத இலயம்உண் டாமே.

பொருள் : ஆன்மாக்களின் பக்குவத்துக்குத் தக்கவாறு அவரது உடலிலும் உள்ளத்திலும் பலவாறாக இன்ப துன்பங்களை நுகர்வித்துச் சிவபெருமான் பக்குவம் செய்வான். மூலாதாரத்தினின்று ஆதார நிராதாரக் கலைகளிலும் ஆடுகின்ற அக்கூத்தப் பெருமானுக்கு அக் கூத்தின் பயனாக அளவில்லாத ஒருமைப்பாடு உண்டாகும். (கொல்லை - மூலாதாரமே.)

25. பெரியாரைத் துணைக்கோடல்

(பெரியாரைத் துணைக் கோடலாவது ஞானியரைத் துணையாகப் பெறுதல். பெரியாரது கூட்டுறவு நன்மையைப் பயக்கும்.)

543. ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லார்ஒலி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லார்க்குஅருள் தேவர்பி ரானொடும்
கூடவல் லார்அடி கூடுவன் யானே.

பொருள் : தலயாத்திரை செய்வாரோடு சேர்ந்து யானும் தலயாத்திரை செய்வேன். பாடுகின்றவர் ஒலியைச் செவி வழியே கேட்டு இன்புற்று வாழ்வேன். அகத்தே தேடி அடைய வல்லார்க்கு அருளுகின்ற மகாதேவனோடும் பொருந்தும் வல்லமையுடையவர் திருவடியை யானும் பொருந்தியிருப்பேன், (ஓடவல்லார் - சரியை யாளர்; பாடவல்லர் - கிரியை யாளர்; தேடவல்லார் - யோகியர்; கூடவல்லார் - ஞானியர்)

544. தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத்து அங்குஅன்பு வைத்தது இலையாகும்
நீஇடர்ப் பட்டிருந்து என்செய்வாய் நெஞ்சமே
போமிடத்து என்னொடும் போதுகண் டாயே.

பொருள் : கொழு கொம்பில்லாமல் துவண்டு தீயிடைப்பட்ட தளிர்போல் வாடினும் மனவுறுதியுடையோர் பெருமையுடைய (நன்மையைத் தரும் மனத்தினிடம் அன்பு வைத்து அதன் வழிச் செல்வதில்லை. மனனே ! நீ தனியே துன்பப் பட்டிருந்து என்ன செய்யப் போகிறாய் ? இறைவனை நாடிப் போகும் போது என்னோடு வருவாயாக.)

545. அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியார் உடன்கூடல்  பேரின்பம் ஆமே.

பொருள் : உண்மையை அறியும் பெரியோர் தேவதேவனை விரும்பி அவனிடம் பொருந்தி யிருப்பர். இவர் ஆன்ம தத்துவம் வித்தியா தத்துவம் கடந்து சிவ தத்துவத்தில் விளங்குவர் நன்னெறியில் நின்றொழுகி அடைந்தார்க்கும் உபதேசிக்கின்ற யான் எனது என்னும் செருக்கறுத்த பெரியோருடன் கூடியிருத்தல் பேரின்பமாகும். (தத்துவம் - மெய்யுணர்வு)

546. தார்சடை யான்தன் தமராய் உலகினில்
போர் புகழா எந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளம் தேவர்க்கு அருள்செய்யும்
கோவடைந்து அந்நெறி கூடலும் ஆமே.

பொருள் : பெரியோருடன் கூடினவர் நீண்ட கிரணங்களை யுடைய சிவபெருமான் உறவினராய், உலக நடையில் ஒழுகுபவர்களால் புகழப் படாதவனான் என் ஐயனின் திருவடியை அடைவர். வாய் பேசாமல் மௌனமாய் ஆன்மாவில் அரனைத் தியானிப்பார்க்கு அருள் புரிகின்ற சிவனை அடைந்து அச்சிவநெறியில் இரண்டறக் கலத்தலும் அப்பெரியார் கூட்டத்தால் அமையும்.

547. உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
படையார் அழல்மேனிப் பதிசென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலம்என் றாரே.

பொருள் : எல்லாமுடைய சிவனது அடியார்க்கு அடியாராய் உள்ளவரிடம் கூடி, சிவச் சோதியில் பொருந்திச் சிவபுரத்தில் புகுந்தேன். சிவபுரத்தில் கடைவாயிலில் பொருந்தி நின்றவர் என்னைப் பார்த்ததும் சிவபெருமானிடம் விண்ணப்பிக்க, சிவபெருமான் என்னை அழைத்து வருமாறு பணிக்கக் கடைவாயில் காப்பாளர் அபய முத்திரை காட்டி அழைத்தனர். (ஓலம் - அடைக்கலமொழி)

548. அருமைவல் லோன்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.

பொருள் : பெரியாரைக் கூட வல்ல அருமையானவன் கலை ஞானத்துள் விளங்கியிருப்பான். பெருமை யுடைய ஞானத்தைப் பெற்றவனோ பிறவிச் சூழலினின்றும் நீங்கப் பெறுவான். உரிமையோடு பழகும் தன்மையில் வல்லவன் சிவபெருமானை அகத்தே உணர்ந்து அழிவின்றி வாழ்வான். நான் அருமையும் பெருமையும் உரிமையும் உடைய பெரியோரது துணையைப் பெறும் பேறு பெற்றேன். (கலைஞானம் - திருமுறை உணர்வு)

மூன்றாம் தந்திரம்

10th Thirumurai | Thirumoolar | Thirumandiram | Panniru Thirumurai | திருமந்திரம் | மூன்றாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்

1. அட்டாங்க யோகம் (வீர ஆகமம்)

(அட்டாங்க யோகம் என்பது இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று எட்டுவகை உறுப்புக்களைக் கொண்ட யோகம் என்றபடி, அறவாழ்வைக் கூறிப் பின் இறையுண்மை கூறிய ஆசிரியப் பெருந்தகை அவ் இறைவனை அடைதற்குரிய நெறிவகைகளைக் கூறத் தொடங்குகிறார்.)

549. உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமம் செய்தானே.

பொருள் : பலவாறாகப் பேசப்பெற்று வந்த பிராணன் என்ற ஒன்று இழுக்கப் பெற்றும், அது பன்னிரண்டு விரற்கடை கண்டத்துக்குக் கீழும் கண்டத்துக்கு மேலும் இயங்குமாறும் நினைந்து, அட்டாங்க யோகத்தை எடுத்துரைத்தே குருநாதன் முறையாகத் தீமையைப் போக்குவதற்கும் நன்மையைப் பற்றுவதற்கும் வழிவகை செய்தருளினான்.

550. செய்த இமயம் நியமம் சமாதிசென்று
உய்யப் பராசத்தி உத்தர பூருவம்
எய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த உரைசெய்வன் இந்நிலை தானே.

பொருள் : முற்கூறியவாறு உரைசெய்த இயம நியம ஒழுக்கங்களில் நின்று சமாதி பொருந்தி உய்தி பெறவும், முன்னின்று வழிகாட்டிப் பின்னின்று தூங்கிக் கொண்டிருக்கும் பராசக்தியின் துணையை அடையவும் கவச நியாசங்கள் முத்திரைகளை அறிந்து ஒழுகவும் ஆகிய இம்முறையில் யான் கூறிச செல்வேன். (இயமம் - புலனடக்கல்; நியமம் - ஒழுக்க நெறி நிற்றல், சமாதி - தன்னை மறந்திருத்தல்)

551. அந்நெறி இந்நெறி என்னாதுஅட் டாங்கத்து
அந்நெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
புன்னெறி  யாகத்தில் போர்க்கில்லை யாகுமே.

பொருள் : இறைவனை அடைவதற்கு அதுநெறி இது நெறி என்று தடுமாறாமல் அட்டாங்க யோக நெறியிலே நின்று சமாதி கூடுமின். அவ்வாறு அந்நெறி சென்று பொருந்தினவர்க்கு ஞான யோகம் கைகூடிச் சிவப்பேறு எய்தலாம். அவ்வாறு ஞானம் கூடாவிட்டாலும் பிறவிக்கு வரும் நெறியில் வந்து உடம்பில் பொருந்துவது இல்லையாகும். அட்டாங்க யோகநெறி நின்று சமாதி கூடினவர்க்குப் பிறவியில்லை.

552. இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே.

பொருள் : இயமம் நியமம் பலவகைப்பட்ட ஆசனம், நன்மையைத்தரும், பிராணாயமம், பிரத்தியாகாரம் வெற்றி மிக்க தாரணை, தியானம், சமாதி ஆகியவை நல்வினையுடையோர்க்குக் கிட்டும் எண்வகை உறுப்புக்களைக் கொண்ட யோக நெறியாகும். (பிராணாயாமம் - பேச்சினை அடக்குதல். தாரணை - தரித்தல் அயம் - நல்வினை.)

2. இயமம்

(இயமமாவது தீயனவற்றைச் செய்யாமல் ஒழுகுதல், இயமத்தை முதலில் கூறி எஞ்சிய உறுப்புக்களை முறையே அடுத்துக்கூறுவார் ஆசிரியர்.)

553. எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்ம்மின்என் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே.

பொருள் : எட்டுத் திக்குகளிலும் சூழ்ந்தெழுந்து பெருமழை பெய்தாலும் குளிர்ச்சியைத் தருகின்ற இயமங்களைத் தவறாது செய்யுங்கள் என்று சிவபெருமான் கொழுமை மிக்க பவளம் போன்ற குளிர்ந்த தன் சடையோடே பொருந்திய சனகாதி நால்வருக்கும் அருளிச் செய்தான். (நால்வர், சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்.)

554. கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கள்காமம்
இல்லான் இயமத்து இடைநின்றானே.

பொருள் : ஓருயிரைக் கொல்லாதவனும், பொய் கூறாதவனும், திருடாதவனும், ஆராய்ச்சியுடையவனும், நல்லவனும், பணிவுடையவனும், நீதி வழுவாதவனும், பகிர்ந்து கொடுத்து உண்பவனும், குற்றமில்லாதவனும், கள்ளும் காமமும் இல்லாதவனுமாகிய தன்மை உடையவனே இயமஒழுக்கங்களில் நிற்பவன் ஆவான்.

3. நியமம் (நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுகுதல்)

555. ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியை
பாதியுள் மன்னும் பராசக்தி யோடுடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே.

பொருள் : ஆதியானவனை, நாத வடிவானவனை, ஒளி வடிவானவனை, மூலாதாரத்தில் அக்கினி மயமாகவுள்ளவனை, சித்தினிடம் பிரிப்பின்றி யிருக்கும் பராசக்தியோடு உயிரோடு  உடனாய் உறையும் தர்மத்தை உணர்ந்து ஒழுகுபவனே நியமத்தன் ஆவான். (பாதியுள்-திருமேனிக் கண் ஒரு பதியிதல் எனினுமாய்)

556. தூய்மை அருள்ஊண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமிஈர் ஐந்தும் நியமத்த னாமே.

பொருள் : தூய்மை, கருணை, சுருங்கிய உணவு, பொறுமை, நேர்மை, வாய்மை, உறுதியுடைமை யாகியவற்றை வளர்த்தலும், ஏனைய காமம், களவு கொலை யாகியவற்றைத் தீமையெனக் காண்டலுமாக நியமநெறியில் நிற்பவன் பத்துக் குணங்களைக் கொண்டவனாவான். (நேமி-நியமத்தை உடையவன், காதல் உயிரின் மாட்டும் காமம் உடம்பின் மாட்டும் செல்வன.)

557. தவம்செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன்தன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகம்சிவ பூசைஒண் மதிசொல்ஈர் ஐந்தும்
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.

பொருள் : தவம், செபம், மகிழ்வு, தெய்வ நம்பிக்கை, கொடை, சிவவிரதம், முப்பொருள் உண்மை கேட்டல், வேள்வி, சிவபூசை, சோதி தரிசனம், என்று சொல்லப்பெற்றபத்தையும் உயர்வாகக் கடைப்பிடிப்பவன் நியம நெறியில் உள்ளவனாவான்.

4. ஆதனம்

(ஆதனம் - இருக்கை யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறையைப் பற்றியும் அவற்றால் உண்டாகும் பயனைப் பற்றியும் இங்குக் கூறப்பெறும்)

558. பங்கயம் ஆதி பரந்தபல ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திகம் எனமிகத்
தங்க இருப்பத் தலைவனும் ஆமே.

பொருள் : பத்மாசனம் முதலாகப் பரந்துபட்ட ஆசனங்கள் பல அங்கு உள்ளன. அவ்ஆசன வகைகளுள் எட்டு முக்கியமாகும். சோர்வு இல்லாமல் சுவத்திகம் என்ற சுகாசனத்தில் பொருந்தி இருக்கத் தலைவனாவான். சாதாரணமாக உட்காருவதுதான் சுகாசனமாகும்.

559. ஓரணை அப்பதம் ஊருவின் மேல்ஏறிட்டு
ஆர வலித்துஅதன் மேல்வைத்து அழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமெனல் ஆகுமே.

பொருள் : ஒருபக்கம் அணைந்த காலைத் தொடையின்மேல் ஏறும்படி செய்து மிக இழுத்து வலப்பக்கத் தொடையின் மேல் இடக்காலையும், இடப்பக்கத் தொடையின்மேல் வலக்காலையும் வைத்து, அழகாகக் கைகளை மலர்த்தித் தொடையின்மேல் வைக்க உலகம் புகழ் பத்மாசனம் ஆகும், (ஊரு - தொடை)

560. துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளில் அங்கைகளை நீட்டி
உரிய இடும்உடல் செவ்வே இருத்தி
பரிசு பெறுமது பத்திரா சனமே.

பொருள் : குற்றமில்லாத வலக்காலை இடப்பக்கம் தொடையின் மேல் விளங்கும்படி வைத்து அருமையான முழங்கால்களின் மேல் அழகிய கைகளை நீட்டி, தளர்கின்ற உடம்பைச் செம்மையாக இருத்தி நன்மையைப் பெறுவது பத்திராசனமாம்.

561. ஒக்க அடியிணை ஊருவில் ஏறிட்டு
முக்கி உடலை முழங்கை தனில் ஏற்றித்
தொக்க அறிந்து துளங்காது இருந்திடில்
குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே.

பொருள் : பத்மாசனத்தில் கூறியதுபோல் பாதங்கள் இரண்டையும் தொடையின்மேல் மாறி ஏற்றி, முக்கி உடம்பை முழங்கைவரை தூக்கி நிறுத்தி, உடம்பின் பாரம் கைகளில் தங்குவதற்கான சமநிலை தெரிந்து அசையாதபடி இருந்தால் குக்குட ஆசனம் செய்தலும் கூடும். (குக்குடம் - கோழி, குக்குட - ஆசனம் - கோழி இருக்கை)

562. பாத முழந்தாளில் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந்து அழகுறக்
கோதில் நயனம் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.

பொருள் : பாத நுணிகளைப் பூமியில் ஊன்றி முழங்காலில் நீட்டி, அன்போது வாயைப் பிளந்து கொண்டு, அழகு பொருந்தக் குற்றமற்ற கண்களை நாசி, காக்கிரம் என்னும் புருவ நடுவில் வைத்திருப்பது புகழ் அமைந்த சிம்மாசனம் என்று சொல்லப்படும். (கொடிமூக்கு-மூக்கு நுனி.)

563. பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி
செத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாம்முது ஆசனம், எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே.

பொருள் : பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம் சுகாதனம் என்று ஓரேழும் மேலானவையாம். பழமையான ஆசனங்கள் இவற்றோடு நூற்று இருபத்தாறும் அவற்றின் மேலும் பல ஆசனங்களாம். தத்துவப் பிரகாசம் என்ற நூலில் ஆசனங்களில் பெயரும் அமைக்கும் முறையும் கூறப்பட்டுள்ளன. திருமூலநாயனார் ஓதி யருளிய இருக்கை எட்டேயாம். எனினும் பிறர் கொள்கைகளைக் கூறும் முறையில் பிறவும் கொள்ளப்பட்டன.

5. பிராணாயாமம்

(பிரணாயாமமாவது பிராணனைக் கட்டுப்படுத்தல். மேலே கூறிய ஆசனவகையில் ஏதாவது ஒன்றில் இருந்து பிராணாயமப் பயிற்சி செய்யவேண்டும். பிராணாயாமம் ஆசனம் போன்று பல்வேறு வகைத்து)

564. ஐவர்க்கு நாயகன் ஆவ்வூர்த் தலைமகன்
உய்யக் கொண்டேறும் குதிரைமற்று ஒன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.

பொருள் : ஐம்பொறிகளுக்கு நாயகனும் அவ்உடம்புக்குத் தலைவனுமாகிய ஆன்மா, உய்திபெற்று மேல் செல்லுவதற்கு மனத்தோடு பிராணனாகிய குதிரை ஒன்றுள்ளது. அது தேகத்தை விட்டு அகண்டத்தைப் பற்றி நின்றோர்க்கு வசப்பட்டு நிற்கும். மெய்யுணர்வில்லாது கண்டத்தைப்பற்றி நின்றோர்க்குப் பிராணன் வசப்படாமல் கீழே தள்ளிவிடும் (குதிரை - பிராணவாயு)

565. சூரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகுஅறி வார்குஇல்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.

பொருள் : மனமாகிய ஆரியன் மிகவும் நல்லவன். அவன் ஓட்டுகின்ற பிராணன், அபானன் ஆகிய குதிரைகள் இரண்டு உள்ளன. அவற்றை வெளியே விட்டு உள்ளே நிறுத்தும் திறமையை அறிபவர் இல்லை. பிராண செயம் பெற்ற குருநாதனின் அருள் கிட்டினால் பிராணன் அபானன் ஆகிய குதிரையைச் சேர்த்துப் பிடிக்கப் பிராண செயம் அமையும். (குதிரை இரண்டு - இடைகலை, பிங்கலை, ஆரியன் - பெருமை மிக்க மனம்.)

566. புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே

பொருள் : பறவையை விட வேகத்துடன் கூடிய பிராணனின் வழி சிரசை நோக்கிச் சென்றால் கள்ளுண்ணாமலேயே மகிழ்ச்சியுண்டாகும். உடலில் சோர்வு நீங்கும். சுறுசுறுப்புடனும் இருக்கும். பிராணனும் மனமும் சிரசில் பாயும் மனமுடையோர்க்கு இவ்வுண்மையைச் சொன்னோம். (புரவி - பிராணவாயு.)

567. பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கில் பிறப்புஇறப்பு இல்லை
பிராணன் மடைமாறிப் பேச்சுஅறி வித்துப்
பிராணன் நடைபேறு பெற்றுண்டீர் நீரே

பொருள் : நாமரூப பேதமான பிரபஞ்சத்தை எண்ணாதவற்கு மனமும் பிராணனும் அடங்கி, பிராணன் ஒடுங்கின் பிறப்பு இறப்பு இல்லை. சிவன் தனி வியக்தியில் வைகி வாக்கு உதித்துப் பிராணனும் நிலை மாறி, பிராணன் ஒடுங்காத போது பிறப்பு இறப்பில் படுவீர்.

568. ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்து இரண்டது ரோசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.

பொருள் : பதினாறு மாத்திரை காலஅளவு இடப்பக்கமுள்ள நாசித் துவாரத்தில் காற்றை உள்ளுக்கு இழுத்தால் பூரகமாம். அறுபத்து நான்கு மாத்திரை அளவு இழுத்த காற்றை உள்ளே நிறுத்தல் கும்பகமாம் முப்பத்திரண்டு மாத்திரை கால அளவு வலப்பக்கம் நாசித்துவாரத்தில் காற்றை மெல்லன விடுதல் ரேசகமாம். முன்னே சொல்லிய முறைக்கு மாறாக வலப்பக்கம் நாசித் துவாரத்தில் காற்றை இழுத்து நிறுத்தி இடப்பக்கம் நாசித் துவாரத்தில் விடுதல் வஞ்சனையாம்.

569. வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு அளியனும் ஆமே.

பொருள் : சாதகர் காற்றை இழுத்துத் தன் வசப்படுத்தி அடக்கியிருந்தால், உடம்பு பளிங்கு போன்று மாசின்றித் தூயதாய் அது முதுமை எய்தினும் இளமைத் தன்மை உண்டாகும். இதனைத் தெளிய குருவின் அருளையும் பெற்றுவிட்டால் அவர் உடம்பானது காற்றைவிட மென்மை யுடையதாகி, எங்கும் செல்லும் ஆற்றல் பெற்று மேன்மையடைவர்.

570. எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவில்லை
அங்கே பிடித்துஅது விட்டன வும்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே.

பொருள் : நீ எங்கே இருந்தாலும் இடப்பாக நாசியாகிய இடைகலை வழியாகவே பூரகம் செய்வாயாக அங்கே அவ்வாறு பூரிக்க உடம்புக்கு அழிவில்லை . அங்கே கும்பகம் செய்து அப்பிராணன், சொல்லும் அளவு மேற் சொல்ல சங்கநாதம் உண்டாகி மேன்மை அடையலாம்.

571. ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வார்இல்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே.

பொருள் : இடைகலை பிங்கலை வழியாக இழுத்துப் பூரித்து, காற்றை உள்ளே கும்பகம் செய்யும் முறையைத் தெரிந்தவர் இல்லை. அவ்வாறு காற்றைக் கும்பகம் செய்யும் முறையைத் தெரிந்தவர் காலனைக் கடக்கும் இலட்சியத்தை உடையவராவர்.

572. மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தால்உட் பதிவித்து
மாலாகி உந்தியுள் கும்பித்து வாங்கலே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.

பொருள் : முறையான காற்று தொண்டை மூலாதாரம், விலா ஆகியவற்றில் நிரம்பும்படி செய்து, மறு பகுதியான இரசேகத்தால் (விடுதலால்) அவயவங்களை ஒன்றோடு ஒன்று பதியும்படி செய்து, விருப்பத்தோடு வயிற்றில் கும்பகம் செய்து இருக்கவே நீலகண்டப் பெருமான் அருளைப் பெறலாகும்.

573. வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத்து இரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டும்
ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.

பொருள் : இடைகலை வழியாகப் பதினாறு மாதிரை பூரகம் செய்து, விரும்பத்தக்க பிங்கலையின்கண் பாதுகாப்புற்ற முப்பத்து இரண்டு மாத்திரை இரேசகம் செய்து, பூரித்தலும் இரேசித்தலுமாகிய வேள்வியால் அறுபத்துநான்கு மாத்திரை சூம்பகம் செய்ய உண்மை விளையும்

574. இட்டது அவ்வீடு இளகாது இரேசித்துப்
புட்டிப் படத்தச நாடியும் பூரித்து
கொட்டிப் பிராணன் அபானனும் கும்பித்து
நட்டம் இருக்க நமனில்லை தானே.

பொருள் : ஆக்கப்பட்டதாகிய இவ்வுடம்பு தளர்ச்சியடையாமல் இரேசகம் செய்து, பத்து நாடிகளும் விம்முமாறு காற்றினை உள்ளே இழுந்து நிரப்பி, பிராணனும் அபானனும் சேரப்பெற்று நேராக நிமிர்ந்திருக்க எம பயம் இல்லையாம். (நட்டம் இருக்க - நிலை நிறுத்த எனினுமாம்)

575. புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

பொருள் : உயிர்ப்பாய்ப் புறம்போந்து புக்குத்திரிகின்ற வாயுவை முறையான கும்பகத்தினாலே உள்ளே தூய்மை செய்தால் உறுப்புக்களில் இரத்த ஓட்டம் பாய்ந்து சிவந்து நிற்கும். தலைமுடி, மயிர்கறுத்து விளங்கும். கிரணங்களால் சூழப்பெற்ற ஆத்மன் உடலில் நிலைபெற்று நிற்பான், உடலும் அழியாது என்றபடி.

576. கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளின்கோல அஞ்செழுத்து ஆமே.

பொருள் : உடம்பை இடமாகக் கொண்ட பிராண சத்தி, குழந்தையாக இருந்தபோது பன்னிரண்டு விரற்கடை நீளம் சென்றும் புகுந்தும் இருந்தனர். வயதான போது தொண்டைக்கு மேலே சிரசில் செல்லும் நான்கு விரற்கடையைத் துண்டித்துவிட்டு எட்டு விரற்கடை அளவே தொழிற்படுகின்றனர். மேலே தடை செய்யப்பட்ட நான்கு விரற்கடையும் தொழிற்படுமாறு செய்துகொண்டால் சாதகர் பஞ்சாக்கர சொரூபமாவர்.

577. பன்னிரண் டானைக்குப் பகல்இரவு உள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இரவு இல்லையே.

பொருள் : பன்னிரண்டு விரற்கடை செயற்படும் பிராணனாகிய சூரியனுக்குப் பகல் என்று இரவு என்றும் காலங்கள் உள்ளன. மூக்கிலிருந்து தொண்டை வழியாகக் கீழ் நோக்கிப் பாய்வதால் சிரசிலுள்ள ஆன்மா அறியவில்லை. கீழ்முகம் செல்லாது மேல்முகம் கொண்ட பிராணனை ஆன்மா அறிந்தபின், பிராணனாகிய சூரியனுக்குப் பகல் இரவு என்ற காலங்கள் இன்றி எப்போதும் பிரகாசிக்கும். (பாகன் - ஆன்மா).

6. பிரத்தியாகாரம்

(புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே பிரத்தியாகாரமாம். இது அடயோகம், இலயயோகம், இலம்பிகாயோகம், மந்திரயோகம், இராஜ யோகம், சிவயோகம் என்ற பிரிவுகளுக்கு ஏற்ப வேறுபடும் அட்டாங்கயோகத்தில், இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் என்பன பூர்வபட்சம் என்றும், பிரத்தியாகாரம் தாரணை, தியானம், சமாதி என்பன உத்தரபட்சம் என்றும் கொள்ள வேண்டும். பூர்வம் முன்நிகழ்வது; உத்தரம்-பின் நிகழ்வது.)

578. கண்டுகண்டு கருத்துற வாங்கிடின்
கொண்டு கொண்டு உள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந்து எங்கும் பழமறை தேடியை
இன்றுகண்டு இங்கே இருக்கலும் ஆமே.

பொருள் : புறத்தே சென்று ஓடுகின்ற மனத்தை அகத்தே பொருந்துமாறு செய்துவிடின், அக்காட்சியைக் கொண்டு சிறிது சிறிதாக  இருள் நீங்கி ஒளி பெறலாம். முன்பு விரும்பி எங்கும் பழைய வேதங்களால் தேடப்பெற்ற பொருளை எடுத்த இவ்வுடலில் அகத்தே கண்டு இருத்தல் கூடும்.

579. நாபிக்கும் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்தரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டு ஈசன் குடியிருந் தானே

பொருள் : உந்திக்குக் கீயே பன்னிரண்டு அங்குலத்தில் மூலதாரத்தில் உள்ள குண்டலியை மேல்எழுப்பும் மந்திரமாகிய பிராசாத மந்திரத்தை ஒருவரும் அறியவில்லை. அவ்வாறு எழுப்பும் மந்திரத்தை அறிந்த பின்னர் சிவன் நாத மயமாகச் சிரசின் மேல் விளங்கி நிற்பான். இது ஓம் என்ற மந்திரத்தைக் குறிக்கிறது.

580. மூலத்து இருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக்கு இருவிரல் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்எழும் செஞ்சுடர்
ஞாத்து நாபிக்கு நால்விரல் கீழதே.

பொருள் : மூலதாரத்துக்கு இருவிரல் அளவு மேலுள்ளதும் முன்பக்கம் பார்வையுடையதும் வெளிப்படுத்தும் தன்மையுடைய குறிக்கு இரண்டு விரல் அளவு கீழே உள்ளதுமான இடத்தில் வட்டமிட்டுக் கொண்டுள்ள குண்டலினியுள் எழுகின்ற செஞ்சுடர், உடம்பில் உந்திக் கமலத்துக்கு நான்கு விரல் அளவு கீழே யுள்ளது. (செஞ்சுடர் - உச்சித்துளைவழி, பிரமரந்தி மார்க்கம்)

581. நாசிக்கு அதோமுகம்  பன்னிரண்டு அங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மா யோகம் வந்து தலைப்பெய்தும்
தேகத்துக்கு என்றும் சிதைவில்லை யாகுமே.

பொருள் : நாசிக்குக் கீழ் பன்னிரண்டு அங்குல அளவிலுள்ள இதயத்து நீ மனத்தை இழுத்து வைத்துச் செஞ்சுடரை நினைப்பாய் ஆயின் அட்டமா சித்திகளும் ராஜயோகமும் வந்து கூடும். இத்தியானம் தேகத்துக்கு எப்பொழுதும் தீமை செய்யாததாகும். இதை அநாகதம் என்பர். (அகவழிபாடு - மானத பூசை.)

582. சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடின்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்டுமின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதிய தன்னுடல் உன்மத்தம் ஆமே.

பொருள் : இரு மின்னற் கொடி பின்னி ஓடுவது போன்ற ஒளி தோன்றினால் குற்றமில்லாத  மேலான ஆனந்தம் என்றே எண்ணுங்கள். நேர்மை விளங்கும் கண்டத் தானத்தில் (கழுத்துப் பிரதேசத்தில்) நிலவொளி தோன்றிடின் பிரத்தியாகாரப் பயிற்சி செய்த சாதகனது உடலில் ஆனந்தப் பரவசம் உண்டாகும். (இரேகைச் சுடரொளி - கீற்றுப் போன்ற ஒளி என்பாரும் உளர்)

583. மூலத் துவாரத்தை முக்காரம் இட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லும் கருத்து இதுதானே.

பொருள் : மூலாதாரத்தை ஆகுஞ்சனம் என்ற முத்திரையால் அடைத்துக் கொண்டிரு பிரமரத்தின் மேல் மனத்தைப் புறம் விழித்தபடி இரு இதுதான் காலத்தை வெல்லும் உபாயமாகும். (ஆகுஞ்சனம் - குதத்தை மேலெழும்படி அடைத்திருத்தல்.)

584. எருவிடும் வாசற்கு இருவிரல் மேலே
கருவிடும் வாசற்கு இருவிரல் கீழே
உருவிடும் சோதியைஉள்கவல் லார்க்குக்
கருவிடும் சோதி கலந்துநின் றானே.

பொருள் : மலங்கழிக்கும் வாயிலாகிய குதத்துக்கு மேலே இருவிரலும், கருவுண்டாகும் வாயிலாகிய கோசத்துக்கு இருவிரல் கீழுள்ள இடத்தில் உருப்பெறும் குண்டலினியை நினைக்க வல்லார்க்கு கருவிடும் மகேசுரன் சோதிவடிவில் கலந்துள்ளான்.

585. ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துஉணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துஉணர் உன்னல் கரைதல் உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.

பொருள் : சுழுமுனையில் மலத்தின் காரியமாகிய இருளால் உண்டாகும் அவத்தையை (நிலை வேறுபாட்டை)யும் புருவ நடுவில் விளங்கும் சோதியினின்றும் பிரித்துள்ள நிலை வேறுபாட்டினையும ஒழித்து உணர்வு மயமான ஒளியை நினைத்து உருகி மனத்தை  ஒருமைப் படுத்தல் பிரத்தியாகாரப் பெருமையாம். (ஒருக்கால் - சுழுமுனை)

586. புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணம்
திறப்பட்டு நிச்சயம் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.

பொருள் : வெளியே சென்ற வாயுவை மீளவும் புக முடியாதபடி திறமையாக உள்ளொளியில் பொருத்தி நின்றால் உள்ளம் வலுவடைந் துள்ளதாம், அப்போது பெருந் தகுதியுடைய இறைவனும் அவ்வொளியில் நிலைபெற்றுப் புறப்பட்டுப் போகாதவனாய் விளங்குவான்.

587. குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடும்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென்று உணரில்
அறிப்புற காட்சி அமரரும் ஆமே.

பொருள் : குறித்து நிறுத்தலாகிய பிரத்தியாகரத்தில் உலகம் முழுவதுமே இருந்த நிலையிலிருந்து அறியப்படும். வெறுக்கத் தக்க அறியாமையாகிய இருளை நீங்கி வேறுபாட்டினைச் செய்யும் சிவனை நாடுங்கள். சிவத்தை விரும்புகின்ற சிறப்புற்ற சிந்தையில் உறுதியாக உணர்ந்தால் சிவஞானம் பொருந்திய தேவருமாவர்.

7. தாரணை

(தாரணையாவது, தரிக்கச் செய்தல், பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல் என்க.)

588. கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்காட்டி
வீணாத்தண்டு ஊடே வெளியுறத்  தானோக்கிக்
காணாக்கண் கேளாச் செவிஎன்று இருப்பார்க்கு
வாணான் அடைக்கும் வழிஅது வாமே.

பொருள் : கோணுதல் இல்லாத மனத்தை ஐõலந்திர பந்தம் முதலியவற்றால் கீழ் நோக்காது தடுத்து நடு நாடியின் வழியாகச் செல்லும் பிராணனுடன் மனத்தையும் பொருத்தி ஆகாயத்தின் இடை பார்வையைச் செலுத்தி, காணாத கண்ணுகம் கேளாத செவியுமாக இருப்பார்க்கு வாழ்நாளாகிய ஆயுள் அழியாமல் அடைக்கும் உபாயமாகும்.

589. மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடும்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.

பொருள் : மலைபோன்ற சிரசினிடை ஆகாயகங்கை எப்போதும் பாய்ந்து கொண்டேயிருக்கின்ற சுழுமுனை நாடியின் வழியாகச் சென்று, பரநாத ஒலிகூடிய சிற்சபையில் ஆனந்தக் கூத்தாடும் அகலாத ஆனந்தத்தை  நல்கும் சோதியைத் தரிசித்தேன்.

590. மேலை நிலத்தினாள் வேத்துப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பார்நந்தி ஆணையே.

பொருள் : சிரசின்மேல் எழுந்தருளியுள்ள சிற்சத்தி மாற்றத்தைச் செய்யும் தேவியாவாள், மூலாதாரத்தில் குண்டலினியாகிய கிரியா சத்தியோடு பொருந்திய மூர்த்தியைத்தாரணைப் பயிற்சியால் அம்மூர்த்தியைச் சிரசின்மேல் எழுந்தருளப் பண்ணிச் சிற்சக்தியுடன் சேரும்படி செய்தால் வயதில் முதிர்ந்தவனும் வாலிபன் ஆவான் பார்த்தறிக. இது நந்தியின் ஆணையாகும்.

591. கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்ட இனிதுள் நிறுத்தி
மடைவாயில் கொக்குப்போல் வந்தித்து இருப்பார்க்கு
உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே.

பொருள் : மூலாதாரத்தை அடைத்து அங்குள்ள காம வாயு அல்லத அபானனை மேலே செல்லும்படி செய்து நடுவழியான சுழுமுனையின் மேல் மனத்தைப் பொருத்தி நீரோடும் மடைவாயிலில் காத்திருக்கும் கொக்குப் போல நாட்டத்தை விடாமல் இருப்போர்க்கு, தேகம் சிதையாமல் ஊழிக்காலம் வரை இருக்கலாம்.

592. கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கம்
கலந்த உயிரது காலது கட்டின்
கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.

பொருள் : உடலில் உயிர் கலந்துள்ள கால எல்லையை அறியின் அக்கால எல்லை பிராணன் இயக்கத்தால் அமைந்துள்ளது. அத்தகைய உயிரில் பிராணனது இயக்கத்தைக் கட்டி நிறுத்திவிட்டால் உயிருடன் பொருந்திய காலமும் அழிவின்றுட நிற்கும். ஆயுள் நிலைத்து நிற்கும் என்றபடி.

593. வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்நிற வாவிடின் கோழையும் ஆமே.

பொருள் : வாய்திறவாமல் மௌனமாக இருப்பவரது மன மண்டலத்தில் பிராணனாகிய செல்வம் ஒன்றுள்ளது. அங்ஙனமின்றி வாய்திறந்து பேசிக் கொண்டிருப்பவர் பிராணனை வெளியிட்டு வீணாக்குபவர். பேசாத மௌனியர் மதிமண்டலத்தில் பிராணனைச் செலுத்திச் சோதியை அறிகின்றனர். சகஸ்ரதளமாகிய செப்பினைத் திறந்து பார்க்க வல்லமையற்றவர்கள் கோழைத்தனம் உள்ளவராவர். (கோய்-நகை வைக்கும் செப்பு)

594. வாழலும் ஆம்பல காலும் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில்
ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி  பெரியதோர் பள்ளி அறையிலே.

பொருள் : உள்ளத்தினின்றும் இறங்கி ஊடறுத்துச் செல்லுகின்ற வாயுவை வெளியே போகாதபடி நடு நாடியின்கண் செலுத்தின்ஏழு சாளரங்களையும் இரண்டு பெரிய வாயில்களையும் கொண்ட தேவர் கோயில் பெரிய வாயில்களையும் கொண்ட தேவர் கோயிலில் பெரிய பள்ளி அறையிலே பலகாலம் வாழலாம். (ஏழு சாலேகம் - கண்இரண்டு, காதுஇரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று; ஆக ஏழு துவாரங்கள். இரண்டு பெருவாய்-எருவாய், கருவாய். பாழி- உடல்; பள்ளி அறை - சகஸ்ரதளம், ஓய்வுபெறும் இடம்)

595. நிரம்பிய ஈரைந்தில் ஐந்தவை போனால்
இரங்கி விழித்திருந்து என்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கொட்டை பொதியலும் ஆமே.

பொருள் : புலன்களைத் துய்த்து நிரம்பிய ஞானேந்திரிய கன்மேந்திரியமாகிய பத்தில் ஞானேந்திரியங்கள் ஐந்தும் நீங்கினால் அறிவிலியே ! நீ வருந்தி இருந்தும் என்ன பயனைப் பெறமுடியும்? ஆனால் இந்திரியங்களின் எல்லையைத் தாண்டி நிற்பவர்க்கு, மனமாகிய குரங்கை உடம்பினில் சேட்டையின்றி இருக்கச் செய்ய முடியும். (ஈரைந்து - தசவாயு என்று சிலர் கொள்வர். கொட்டை கோட்டை என்றும் பாடம்.)

596. முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க்கு என்ன பிரமாணம்
முன்னூறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயும் இடிகரை நிற்குமே.

பொருள் : முன்னமே வந்து பிறந்தார் அனைவரும் தாரனைப் பயிற்சி இன்மையால் அழிந்து ஒழிந்தனர். பின்னே வந்தவர் அழியமாட்டார் என்பதற்கு என்ன பிரமாணம் ? அவ்வாறு அழிகின்றவர் அடையும் நிலைகளைப் பேசினால் அவை அளவற்றனவாகும். என்ன வியப்பு ! ஆற்றில் இடிந்து கரைகின்ற கரை போன்று நாளும் அழிகின்ற உடம்பு அழியாது நிற்குமோ ? (இடிகரை - அழியும் தேகம்)

597. அரித்த உடலைஐம் பூதத்தில் வைத்து
பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.

பொருள் : ஐம்பொறிகளால் அரிப்புண்ட உடலை ஐம்பூதங்களில் வைத்து, அப்படிப்பட்ட ஐம்பூதங்களில் சத்தம் முதலான தன் மாத்திரைகளில் போகும்படியாக ஆராயப் பெற்ற மனம் முதலிய அந்தக் கரணங்கள் நாதத்தில் ஒடுங்க ஆன்மா தற்பர மாகிய சிவனோடு பொருந்தியிருப்பதே தாரணையாகும்.

8. தியானம்

(தியானம் என்பது இடைவிடாது நினைந்திருத்தல். இடையீடுபட்டு எண்ணுவது தாரணை. இடையீடுபடாது எண்ணுவது தியானம். தியானம் எத்தனை வகையென்றும், அதனை எவ்வாறு செய்து பழக வேண்டும் என்றும் இங்கு ஆசிரியர் கூறுகிறார்.)

598. வரும்ஆதி  ஈர்எட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னும்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.

பொருள் : முன்னே தாரணைப் பகுதியில் பத்தாவது மந்திரத்தில் கூறியபடி அமைந்த தியானமாவது, ஒப்பற்ற புத்தியும் புலனும் நீங்கியிருத்தலாம். அது உருவோடுகூடிய சத்தியை மேலாக எண்ணுதலாகிய பரத்தியானம் என்றும் ஒளி பொருந்திய சிவனை எண்ணுதலாகிய சிவத்தியானம் என்றும் இருகூறாக யோகத்தில் கூறப்பெறும்.

599. கண்நாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துள்
பண்ஆக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.

பொருள் : கண், நாக்கு, மூக்கு, செவியாகிய ஞானேந்திரியங்கள் கூடுமிடத்தில், நாதத்தை உதிக்கச் செய்யும் பழமையான பொருள் ஒன்றுள்ளது அது அண்ணாக்குப் பிரதேசத்தில் எல்லையற்ற பேரொளியைக் காட்டி, மனம் புறவழிச் செல்லாமல் தடுத்து நம்மைப் பிழைக்கச் செய்தது இவ்வண்ணமாம்.

600. ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்
கண்õரப் பார்த்துக் கலந்தங்கு இருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிட ஓடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலும ஆமே.

பொருள் : ஒன்றாகிய ஞானக்கண்ணில் பொருந்திய சோதியை இருகண்களையும் பொருந்திப் பார்த்து அங்கே சலனமில்லாமல் பொருந்தியிருந்தால் ஆகாய கங்கை நன்கு புலப்படும். முறையில் சிதாகாயப் பெருவெளியில் பொருந்தி நிற்கப் பண்ணாமல் நின்ற சுயம்பு மூர்த்தியைப் பார்க்கலுமாகும்.

601. ஒருபொழுத உன்னார் உடலோடு உயிரை
ஒருபொழுது உன்னார் உயிருள் சிவனை
ஒருபொழுது உன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழுது உன்னார் சந்திரப் பூவையே.

பொருள் : உடலோடு கலந்துள்ள உயிரை ஒரு பொழுதும் நினையார்கள்; உயிருக்கு உயிராக விளங்கும் சிவனை ஒரு போதும் எண்ணார்கள்; சிவன் எழுந்தருளியிருக்கின்ற சிந்தையையும் ஒருபொழுதும் எண்ணமாட்டார்கள். என்னே இவர்கள் அறியாமை. (சந்திரப்பூ-ஆஞ்ஞையுள்ள சந்திரன்  போன்ற வெண்ணிறஒளி)

602. மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினந்து விளக்கினைச் செல்ல நெருங்கி
அனைத்து விளக்கும் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.

பொருள் : மனத்தில் விளங்கும் ஒளியை மாட்சியைப் பெறும்படி மேலே செலுத்திச் சினமாகிய அக்கினியைப் போகும்படி செய்து, யாவற்றையும் விளக்கி நிற்கும் சிவ ஒளியைச் சுழுமுனை என்ற திரியைத் தூண்டி நடத்த மனத்துள் விளங்கும் சிவம் என்றும் மங்காத விளக்காகும்.

603. எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறி வார்இல்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.

பொருள் : எண்ணாயிரம் ஆண்டுகள் யோகம் பயின்றாலும் கண்ணில் சோதியாக இருந்து விளங்குபவனைக் கண்டு அறிபவர்கள் யாரும் இல்லை. மன மண்டலமாகிய உள்ளத்தில் ஒளி பொருந்தும்படி பார்ப்பவர்க்கு, கண்ணாடியில் உருவத்தைக் காண்பது போல உள்ளத்தில் கலந்திருப்பதைக் காணலாம்.

604. நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே.

பொருள் : இரண்டு கண்பார்வையையும் நடுமூக்கில் பொருத்தி வைத்திடில் சோர்வும் இல்லை. உடம்புக்கும் அழிவில்லை, மனத்தின் ஓட்டம் இராது. அறியும் தன்மை இராது. தான்  என்ற முனைப்பும் இராது புறத்தே செல்லும் அறிவுத் திறனும் இராது. அவன் சிவனாகலாம். (மனை - உடல்.)

605. நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டு
உயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயர்அற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே.

பொருள் : இரண்டுகண் பார்வையையும் நாசி காக்கிரம் என்ற பருவ நடுவில் வைத்து, உயர்தலினின்றும் தாழாத பிராணனை உள்ளே அடக்க, துன்பத்தைத் தரும் மனமாதியை நீக்கி யோக நித்திரை செய்வார்க்கு எடுத்த இவ்வுடல் பயனைத் தருவதாகும். பிரபஞ்சம் பிணிக்கும் என்ற பயமும் இல்லையாம். நாசியில் உயர்ந்த இடம் புருவ மேடு சாதகர் தியானம் செய்யும் போது கண்பார்வையைப் புருவநடுவில் செலுத்தியிருக்க வேண்டும்.

606. மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்கஒண் ணாதே.

பொருள் : மணி, கடல், யானை, புல்லாங்குழல், மேகம், அழகியவண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் ஆகியவற்றின் நுண்ணொலிகள் பத்தும் தியானத்தில் அடங்கியிருப்பவர்க்கன்றி வேறுயாராலும் அறிய ஒண்ணாது. இதுவே திருச்சிலம்போசை என்ப.

607. கடலொடு மேகம் களிறுஒடும் ஓசை
அடஎழும் வீணை அண்டர்அண் டத்துச்
சுடர்மனு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடம்அறி யோகிக்குஅல் லால்தெரி யாதே.

பொருள் : கடல், மேகம், யானை, ஆகியவற்றின் ஓசையும் கம்பி இறுக்கத்தால் வீணையில் எழும் நாதமும், ஆகாயத்தில் அமைந்துள்ள வேத கோஷம், புல்லாங்குழல், சுருங்கிய வாயினையுடைய சங்கு ஆகியவற்றின் ஓசையும் திடமாக அறியவல்ல யோகியர்க்கன்றி ஏனையோரால் அறியமுடியாது. கடலோசை முதலியன வன்மையான ஓசை என்றும் வீணைஓசை முதலியன மென்மையான ஓசை என்று அறிக.

608. ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
ஓசை அதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே.

பொருள் : இறைவனது இயல்பும், தேவர் குழாச் சேர்க்கையும், பாசத்தின் இயக்கமும், பாசத்தை விட்ட உயிராய் நிற்பதும் நாதமாகும். அதனை உணர வல்லார்க்கு பூவினில் வெளிவரும் கந்தம் போல ஈசன் நாதத்தில் விளங்குகிறான் என்பது புலப்படும்.

609. நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.

பொருள் : நாத தத்துவம் முடிந்த இடத்திலே பராசக்தி யுள்ளான். அங்கு நல்ல யோகத்தின் முடிவு உள்ளது. நாத முடிவில் நம் மனத்தில் பதிவது அவ்விடத்தில் நீலகண்டப்பெருமான் விளங்குவான். ஓசை முடிந்த இடமே திருவருள் வெளிப்படும் இடம்.

610. உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.

பொருள் : ஆறு ஆதாரங்களில் தோன்றுகின்ற ஐவகை அக்கினியும் வணங்குகின்ற பிரகாசத்தோடு கூடிய நீல ஒளியை அகன்று, இயக்குகின்ற பஞ்ச தன்மாத்திரைகளில் ஒன்றாகிய சததம் ஒடுங்க, பொன்னொளியில் விளங்கும் இறைவனது திருவடியை அடையலாம், ஆறு ஆதாரங்களாவன; மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவநடு என்பனவாம்.

611. பள்ளி அறையில் பகலே இருளில்லை
கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம்
ஒள்ளிது அறியிலோ ரோசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவுஇல்லை தானே.

பொருள் : இந்திரியங்கள் ஓய்வு பெறுகின்ற பள்ளி அறை என்ற பரஅவத்தையில் (பரை நிலையில்) ஒளியேயன்றி இருளில்லை ஒளியேயுள்ள அறையான படியால் வேறு அக்கினி கொளுத்தாமல் காக்கலாம். ஒளியை உடையதாகிய இந்நிலையை அறியில் இது தியானத்தில் எய்தப் பெறுவது ஆகும். இருளே இல்லாதபடியால் விடிவே இல்லை. (பள்ளி அறை - உள்ளம் கொள்ளி அறை - சுடுகாடு எனினும் ஆம்)

612. கொண்ட விரதம் குறையாமல் தான்ஒன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் மாறி பிரியாது இருக்குமே.

பொருள் : சந்திரமண்டலமும் அமைக்க வேண்டுமென்று மேற் கொண்ட குறிக்கோளுக்குக் குறைவு வராமல் தான் ஒன்றுபட்டு, முதுகு தண்டிலுள்ள சுழுமுனை நாடி வழியாக மேல் நோக்கி ஏறிச்சென்ற யோகிக்கு அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திரமண்டலம் ஆகிய மூன்றும் பொருந்தும் வகையில் வளர்ந்தபின் எடுத்த தேகம் உலகம் உள்ளவரை சீவனை விட்டு அகலாது. (மண்டலம் மூன்று - வாத, பித்த, சிலேத்துமமுமாம்)

613. அவ்வவர் மண்டலம் ஆம்பரிசு ஒன்றுண்டு
அவ்வவர் மண்டலத்து அவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டலம் ஆயம்மற் றோர்க்கே.

பொருள் : அவ்வவர் மண்டலத்தினால் ஆகின்ற தன்மை ஒன்றுள்ளது. அக்கினி, சூரிய, சந்திர மண்டலங்களுக்குப் பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகியோர் தலைவராம். அவ்வவரது ஆட்சி அவ் வம்மண்டலத்தில் இருப்பின் அவ்வவரது மண்டலம் மற்றவர்க்கு உதவி செய்யும் கூட்டமாகும்.

614. இளைக்கின்ற நெஞ்சத்து இருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றிலும் ஒன்றித்
துளைப்பெரும் பாசம் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே.

பொருள் : உலகப் பொருளில் மயங்கித் தவிக்கின்ற உள்ளமாகிய இருட்டறையில்தான் உதயமாகின்ற மூன்று மண்டலங்களுள் பொருந்திப் பிரமரந்திரத்துளை வழியாகச் சிவத்தினிடம் பெருங்காதல் கொண்டு ஆராய்ந்து மேற்சென்றால் துன்பம் நீங்கிச் சிரசின் மேல் விடியற்காலம் போல வெளிச்சத்தைக் காணலாம். (துருவிடுதல் - ஆராய்தல். மார்கழி ஏற்றம் - அருணோதயம், மார்கழித்திங்கள் திருவாதிரைத் திருநாளாகும். திருவாதிரை சிவபிரானுக்குச் சிறப்புடையது.)

615. முக்குணம் மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலம்இடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே

பொருள் : தாமத இராசத சாத்துவிகம் என்ற முக்குணங்களாகிய இருள்நீங்க மூலாதாரத்திலுள்ள அபானனை மேலெழும்படி செய்து, வலப்புற சூரிய கலையை இடப்புறமுள்ள சந்திர கலையோடு பொருந்தும்படி அதிகாரையில் ஒரு நாழிகை பயின்றால் உயிரை உடம்பில் அழியாது சிவன் வைப்பான். (உயிர்நிலை- உடல்)

616. நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே
மடலித்த வாணிக்கு இருவிரல் உள்ளே
கடலித்து இருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.

பொருள் : அசைவினை உண்டாக்கிக் கொண்டிருக்கும் உந்திச் சக்கரத்துக்கு நான்கு விரல் மேலே ஊர்த்துவ முகமாய் மேலே செல்லும் வாக்கு வெளிப்படும் தொண்டைச் சக்கரத்துக்கு இரண்டு விரற்கடை கீழேயுள்ள அநாகதச் சக்கரத்தில் கடல்முழக்கம் போன்று பொங்கி எழுகின்ற ஒலியினைத் தியானிக்க வல்லவர்கள் உடம்புக்கு உரியவனாகிய ஆன்மாவை அறிந்தவராவார்.

617. அறிவாய்அசத் தென்னும் ஆறாறு அகன்று
செறிவான் மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

பொருள் : அறிவான் ஆன்மா, அறிவில்லாத முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கி, செறிந்துள்ள மாயையை அருளாலே கெடுத்து, சிவனோடு நீங்காதிருக்கும் அருள் சத்தியாகிவிடும் பேற்றைச் சிவநெறியில் முறைப்பட்ட அன்பரே அவ்வுண்மையை உணர்ந்தோராவர்.

9. சமாதி (சமாதியாவது, உயிரும் இறைவனும் ஒன்றி நிற்றல்)

618. சமாதி யமாதியில் தான்செல்லக் கூடும்
சமாதி யமாதியில் தான்எட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க்கு அன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.

பொருள் : இயமம் முதலியவைகளைக் கடைப்பிடித்து சமாதிவரை செல்லும் முறைமையைச் சொல்லக் கேட்டால், இயமம் முதல் சமாதிக்கு முன்னுள்ள அங்கங்கள் கடைப்பிடிக்கப்படின், எட்டாவதான சமாதி கைகூடும். இவ்எட்டு உறுப்புக்களையும் நியமமாகச் செய்து வருபவர்க்கு அட்டாங்க யோகத்தின் இறுதி உறுப்பான சமாதி கைகூடும்.

619. விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்
சந்தியி லான் சமாதியில் கூடிடும்
அந்தமி லாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியும் தோன்றிடும் தானே.

பொருள் : ஒளியும் ஒலியும் சிரசின் மேல் சகஸ்ரதளத்தில் மிகுந்து விளங்கினால், யோகமான சமாதியில் சீவன் பொருந்தி யிருக்கும். அப்போது இறுதியில் ஞான சொரூப மானசிவம் அழகிய சோதியாக வெளிப்படும். (விந்து - உடல் உரஅமிழ்து. நாதம் - உயிர்ப்பு ஓசை மேரு - புருவமத்தி)

620. மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலயம் ஆமே.

பொருள் : நினைத்தலைச் செய்யும் மனம் எங்கே உள்ளதோ அங்கே பிராண வாயுவும் உண்டு. மனம் நினைக்கவில்லை யானால் பிராணவாயுவின் அசைவும் உண்டாகாது. அம்மனத்துள்ளே நினைப்பதைவிட்டு மகிழ்ந் திருப்பார்க்கு நினைக்கும் மனமே நினையாத மனமாகி அடங்கிவிடும். (மன் - நினைத்தல்)

621. விண்டலர் கூபமும் விஞ்சத்து அடவியும்
கண்டுணர் வாகக் கருதியிருப் பார்கள்
கெண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே.

பொருள் : பிளந்து வெளிப்படும் ஒளியாகிய நீர்ஊற்றையும் அதில் சிவமாகிய அறிவுக் காட்டையும், தரிசித்து உணர்வு மயமாக எண்ணியிருப்பவர்கள் செழுமையான சிரசாகிய மாலையில் பிராணனாகிய குதிரையைச் செலுத்தி மனமாகிய கயிற்றைக் கொண்டு கட்டிவிடுவார்கள். (செழுங்கிரி - புருவநடுமுனை; ஆக்கினையின் உச்சி.)

622. மூல நாடி முகட்டலகு உச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பீர்கள்
மேலை வாசல் வெளியிறக் கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லை

பொருள் : சிவத்தை நாடிச் சிரசின் உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் கண்ணறிவு, காதறிவு, மூக்கறிவு, நாக்கறிவு ஆகிய நான்கு அறிவும் பொருந்தும் வண்ணம் இருப்பவர்களே ! விரிந்த சகஸ்ர தளத்துக்கு மேலே அகண்டத்தைத் தரிசித்தபின் உங்களுக்குக் காலன் என்ற சொல்லுங்கூடக் கனவிலும் இல்லை.

623. மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்கும் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.

பொருள் : பிருதிவி முதலிய ஐந்து மண்டலங்களும் அகரமுதல் உன்மனி ஈறாகவுள்ள கலைகள் பன்னிரண்டும் ஆதாரச் சக்கரங்களிலுள்ள அட்சரங்களை இடமாகக் கொண்டுள்ள தேவதைகள் நாற்பத்தெட்டும் கருத்து மாத்திரமாக நிராதாரத்தில் (சாந்தியதீத கலையில்) கண்டு, எங்கும் வியாபகமாயுள்ள திருவடியைப் பொருந்தி அனுபவிப்பான் சிவயோகி.

624. பூட்டொத்து மெய்யில் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற அந்நிலம் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே.

பொருள் : பூட்டைக் கருவியைப் போல உடம்பில் கீழும் மேலுமாகச் செல்லும் வாயுவை தேடுதலுற்ற பிரமரந்திரத்தால் பொருந்தச் சேர்த்து, தேடியலைதலை விட்டு விழித்தபடி இருப்பார்க்கு, சிவக் கனியோடு அசைவற்றிருக்கலாம். (பூட்டை - கிணற்றுராட்டினம் நயனத்திருப்பார்க்கு இடையறாது எண்ணி இருப்பார்க்கு.)

625. உருஅறி யும்பரிசு ஒன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமுது உண்டார்
அருவரை ஏறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாம்மனம் தீர்ந்துஅற்ற வாறே.

பொருள் : எங்கள் ஆன்ம சொரூபத்தை அறியும் சிறப்பான முறை ஒன்று உள்ளது. (அதனை யான் சொல்லுவேன்). தேவர்கள் கருவுண்டாகும் இடத்தில் பொருந்தி இன்பத்தைப் பெற்றனர். அதனால் சிரசின் உச்சியில் சென்று அமுத பானம் செய்யாதவர். ஆகவே மனம் அடங்கச் சிரசின் மேலிடத்தில் பொருந்துவதே சொரூபத்தை அறிதலாம். திருப்பாற்கடலைக் கடைந்த செய்தியைக் கூறுவாரும் உளர்.

626. நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை ஆக்கி அருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.

பொருள் : நம்பத் தகுந்தவனும் முதல் பொருளானவனும், நான்கு வேதங்களை ஓதியவனும் செம்பொன்னின் உள்ளே விளங்கும் சோதி போன்றவனுமாகிய சிவனிடம் அன்பினைப் பெருக்கி ஆசையை அடக்கிப் போய் சகஸ்ர தளத்தில் பொருந்தி நின்று சாதகர் நிட்டைகூடியிருந்தார்.

627. மூலத்து மேலது முச்சது ரத்தது
கால் அத்து இசையில் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே

பொருள் : குண்டலினி நான்கு இதழ்களோடு கூடிய மூலாதாரத்திலுள்ள முக்கோணவடிவமானது. அது அபானன் சத்திகெட்டுப் பிராணனோடு சேர்கின்ற இடத்தில் பெருமைமிக்க அர்த்த சந்திரனில் நெற்றிக்கு நடுவேயுள்ள வடிவத்தில் அர்த்தசந்திரன் முதல் உன்மனி ஈறாகவுள்ள கலைகளாக விளங்கும்.

628. கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே

பொருள் : சீவ சங்கற்பங்களைவிட்டு மூலக் கனலோடு மேற்சென்று சிற்பத் திறம் நிறைந்த இப்புவனங்களை யெல்லாம் படைத்துக் கொடுத்த பேரொளி அழகனாகிய பரமசிவத்தை, தேடி மதி மண்டலத்தோடு பொருந்தி, தான் என்றும் சிவமென்றும் பேதமாகாதது, சாந்தம் பொருந்திய சமாதியாகும். (தற்பரமாதல் என்பது ஆன்வா பேதமற்றுச் சிவத்தோடு நிற்றல்)

629. தலைப்பட்டு இருந்திடுத் தத்துவம் கூடும்
வலைப்பட்டு இருந்திடும் மாதுநல் லாளும்
குலைப்பட்டு இருந்திடும் கோபம் அகலும்
துலைப்பட்டு இருந்திடும் தூங்கவல் லார்க்கே.

பொருள் : மேற்கூரிய வண்ணம் வாழ்க்கையை மாற்றியவரிடம் ஆன்மா நன்கு விளங்கும் ஆன்மா சிவத்தைச் சார்ந்திருத்தலால் திருவருட் சத்தியும் அங்கே பிணைந்து நிற்கும். அருட்சத்திக்கு எதிரமான் காமக் குரோதத்தின் அகன்று விடும் சமாதி கூடினவர்க்கு நடுமை நிலைமை தானே வந்துவிடும். (துவைப்பட்டிருத்தல் - நடுவு நிற்றல்)

630. சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனும் ஆகுமாம்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந்து அன்புறு வாரே.

பொருள் : ஒளியோடு கூடிய ஒப்பற்ற சுடர்வடிவமாக நின்ற சிவமும், ஆதியாகிய சத்தியும் உள்ளே விளங்குகின்ற மலமற்ற ஆன்மாவும் சமாதியில் ஒன்றேயாகும். படைப்புக்கு முதல்வனாகிய பிரமனும் நீல மேனியையுடைய திருமாலும் ஆதிமுதல்வனாகிய சிவத்திடம் அடி பணிந்து அவனிடம் என்றும் நீங்கா அன்பு எய்துவர்.

631. சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகம்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில்
சமாதிதான் இல்லைதான் அவன் ஆகில்
சமாதியின் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.

பொருள் : சமாதியில் இருப்பவர்க்குப் பல யோகங்கள் சித்திக்கும் எப்போதும் இறைவனோடு ஒன்றியிருக்கின் சமாதிகள் வேண்டாம். ஆன்மாவாகிய தான் சிவமேயானால் சமாதி தேவை யில்லாததாகும். சமாதியினால் அறுபத்து நான்கு கலை ஞானங்களும் வந்து பொருந்தும். (சமாதி - நிஷ்டை)

இயமம் (தீது அகற்றல்)

(அஃதாவது அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்பு என்பதாம்)

632. போதுஉகந் தேறும் புரிசடை யான்அடி
யாதுஉகந் தார்அம ராபதிக் கேசெல்வர்
ஏதுஉகந் தான்இவன் என்றருள் செய்திடும்
மாது உகந்து ஆடிடும் மால்விடை யோனே.

பொருள் : சகஸ்ரதளத்தை விரும்பி எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது திருவடியை, எல்லாவற்றாலும் விரும்பியவர் விண்ணுலகை அடைவர். உமை காண நடனம் புரியும் இடப வாகன மூர்த்தி இச் சாதகன் எதை விரும்பி வந்தான் என்று அதனை அருள் புரியும்.

நியமம் (நன்றாற்றல்)

633. பற்றிப் பதத்து அன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந்து ஆங்கே கருதும் அடர்கட்கு
முற்றெழுந்து ஆங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றும் சிவபதம் சேரலும் ஆமே.

பொருள் : திருவடியைப் பற்றிநின்று அதனிடம் அன்புகொண்டு சிவத்தின் புகழையே கற்றுக் கேட்டிருந்து அங்கு அவ்வண்ணமே சிந்தித்து இருப்பார்க்கு முனிவர்கள் அனைவரும் எழுந்து எதிர்கொண்டு அழைக்கத்தெளிந்த சிவபதம் சேர்தலும் கூடும். (சிவபதம் - சிவன் திருவடி)

ஆதனம் - இருக்கை

634. வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்துஅம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவம் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.

பொருள் : சிவபெருமானை நோக்கி வருந்தித் தவம் செய்து தேவஉலகுக்கு அரசனாய், தேவ உலகம் செல்லக்கூடிய தகுதியுடையவன் இவன் என்று சொல்லும்படி குளிர்ச்சியைத் தரும் முரசம் வேய்ங்குழலும் ஒலிக்க இறைவன் அருளால் இவ்வுலகிலிருந்து இன்பம் அடைவர். (தண்முழவம் - தண்ணுமை - மத்தளம்)

பிராணாயாமம் (வளிநிலை)

635.செம்பொன் சிவகதி சென்றுஎய்தும் காலத்துக்
கும்பத்து அமரர் குழாம்வந்து எதிர்கொள்ள
எம்பொன் தலைவன் இவனாம் எனச்சொல்ல
இன்பக் கல்வ இருக்கலும் ஆமே.

பொருள் : செம்பொன்னின் ஒளியையுடைய சிகதியை அடைகின்ற காலத்தில் பூரண கும்பத்துடன் கூடியதேவர் கூட்டம் வந்து எதிர் கொண்டழைக்க எங்களுடைய பொன் மண்டலம் என்று புத்தி மண்டலத் தலைவன் இவனாம் என்று அனைவரும் பாராட்ட இன்பச் சேர்க்கையுள் இருக்கலாம்.

பிரத்தியாகாரம் (தொகைநிலை)

636. சேருறு காலம் திசைநின்ற தேவர்கள்
ஆர்இவன் என்ன அரனாம் இவன்என்ன
ஏர்உறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
கார்உறு கண்டணை மெய்கண்ட வாறே.

பொருள் : சிவகதியைப் பெறுங்காலத்துத் திக்குப் பாலர்களாகிய தேவர்கள் இவன் யார் என்று கேட்க, சிவபெருமான் நாமே இவன் என்று சொல்ல அழகுமிக்க தேவர்கள் அனைவரும் எதிர்கொண்டு அழைக்க கருமைநிறம் பொருந்திய கண்டத்தையுடைய சிவபெருமானைச் சாதகர் நேரில் தரிசித்தவராவர்.

தாரணை (பொறைநிலை)

637. நல்வழி நாடி நமன்வழி மாற்றிடும்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இவ்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.

பொருள் : நாத சம்மியத்தை நாடி எமனிடம் செல்கின்ற வழியை மாற்றுகின்ற பிரணவ உபாசகரும் குறையாத கொடையில் வழிவழி வந்தவரும் ஆகிய இவ் யோகியர்களுக்குத் தேவலோகத்திலுள்ள எட்டுத்திக்குகளுக்குச் சென்றாலும் தேவலோகம் பூலோகம் போன்று தெரிந்த வழியாக இருக்கும்.

தியானம் (நினைதல்)

638. தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதமும்
தாங்கவல் லார்க்கும் தன்னிடம் ஆமே.

பொருள் : அறிதுயில் கொள்ளும் திருமாலுக்கு ஏழ் உலகங்களை மீண்டும் படைக்க வல்ல பிரமனுக்கும் வலிமையால் அழித்து அசையாது நிற்கும் உருத்திரனுக்கு அமுதம் உண்டு திளைத்துத் தாங்கிக் கொண்டிருக்கும் தேவர்களுக்கும் சிவகதியைப் பெற்றவரே இடமாகும்.

சமாதி (நொசிப்பு)

639. காரிய மான உபாதியைத் தான்கடந்து
ஆரிய காரணம் எழுந்துதன் பாலுற
ஆரிய காரண மாய தவத்திடைத்
தார்இயல் தற்பரம் சேர்தல் சமாதியே.

பொருள் : ஆன்மாக்களுக்கு ஆணவ மல மறைப்பால் விளைந்த உபாதி ஏழையும் கடந்து, ஆரியனான சிவத்தினது உபாதி ஏழையும் பொருந்தி, பரம்பரையாக வரும் சுத்தமாயை, கெட, தவத்தில் இயக்கும் தன்மையதான பொருளைச் சேர்தலே சமாதியின் பயனாம்.

11. அட்டமாசித்தி

பரகாயப் பிரவேசம்

(அட்டமாசித்தி - எட்டுப் பெரிய சித்திகள் யோகப்பயனாலும் ஈசன் அருளாலும் கிட்டுவன. அவையாவன: அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன.

அணிமா - அணுப்போன்று சூக்குமமாதல். மகிமா - மலை போன்று பெரிதாதல்; கரிமா - கனமாதல்; இலகிமா - பஞ்சைப்போல் இலேசாதல். பிராப்தி எல்லாப் பொருளை யும் தன்பால் தருவித்தல்; பிராகாமியம் - விருப்பம் போல் தடையின்றி எல்லா இன்பங்களையும் பெற்றிருத்தல்; ஈசத்துவம் - தத்துவங்களை விருப்பப்படி நடத்தல்; வசித்துவம் - தத்துவங்களில் கலந்திருத்தல்.

பரகாயப் பிரவேசமாவது பிராகாமியம். அஃதாவது வேண்டும். உடம்பை எடுத்துக் கொண்டு சுகம் அனுபவித்தல். இனி, மேலான உடம்பில் புகல் என்ற பொருளும் கண்டுகொள்க.)

640. பணிந்துஎண் திசையும் பரமனை நாடித்
துணிந்துஎண் திசையும் தொழுதுஎம் பிரானை
அணிந்துஎண் திசையிலும் அட்டமா சித்தி
தணிந்துஎண் திசைசென்று தாபித்தவாறே.

பொருள் : மனம் ஒருமைப்பட்டு எட்டுத் திக்குகளிலும் மேலான பொருளாகிய பரமனை, அவனே பரம்பொருள் என்று ஆராய்ந்து துணிந்து, அவ்எட் டுத்திசைகளிலும் எம்பெருமானை வணங்கி, எண்திசையினும் அட்டமாசித்திகள் தாமே அடையுமாறு பெற்று எங்கும் அட்டமாசித்திகள் நிலை பெறுவித்தவாறாகும்.

641. பரிசறி வானவர் பண்பன் அடியென
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரியது எனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தேனே.

பொருள் : ஒளி மண்டல வாசிகளின் பக்குவத்துக்கு ஏற்ப வழங்கும் பண்பாளன் திருவடியே சரண் என்ன குற்றமற நாடி மிகத் தூய்மையான பரவெளியைக் கண்டேன். ஆதலால் அடியேனுக்கு அருமையான பொருள் பிறிதொன்றில்லை; அட்டமா சித்திகளை அடியேனுக்கு விரும்பி யருளி அப்பெரு மான் பிறவியை நீக்கியருள் செய்தான். (துரிசறகாமம் வெகுளி மயக்கமாகிய முக்குற்றம் நீங்க.)

642. குரவன் அருளிற் குறிவழி மூலப்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறொட்டாஞ் சித்தியே.

பொருள் : குருவின் அருளினால் மூலாதாரத்திலுள்ள குண்டலினி சத்தி சீவசத்தியுடன் பொருந்திக் குறிவழி பாய்வதைத் தடுத்து நல்ல தருணத்தை உண்டாக்கி, தியான முறையில் சாம்பவி, கேசரியாகிய இரு நாட்டத்தில் ஏதேனும் ஒன்று சேர, பெரிய சிவகதியைப் பெற்று அதன் பேறாகிய அட்டமா சித்திகளையும் அடையலாம்.

641. பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரியது எனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தேனே.

பொருள் : ஒளி மண்டல வாசிகளின் பக்குவத்துக்கு ஏற்ப வழங்கும் பண்பாளன் திருவடியே சரண் என்ன குற்றமற நாடி சிகத் தூய்மையான பரவெளியைக் கண்டேன். ஆதலால் அடியேனுக்கு அருமையான பொருள் பிறிதொன்றில்லை. அட்டமா சித்திகளை அடியேனுக்கு விரும்பி யருளி அப்பெருமான் பிறவியை நீக்கியருள் செய்தான். (துரிசறகாமம் வெகுளி மயக்கமாகிய முக்குற்றம் நீங்க.)

642. குரவன் அருளிற் குறிவழி மூலப்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.

பொருள் : குருவின் அருளினால் மூலாதாரத்திலுள்ள குண்டலினி சத்தி சீவசத்தியுடன் பொருந்திக் குறிவழி பாய்வதைத் தடுத்து, நல்ல தருணத்தை உண்டாக்கி, தியான முறையில் சாம்பவி, கேசரியாகிய இரு நாட்டத்தில் ஏதேனும் ஒன்று சேர, பெரிய சிவகதியைப் பெற்று அதன் பேறாகிய அட்டமா சித்திகளையும் அடையலாம்.

643.  காயாதி பூதம் கனல்கால மாயையில்
ஆயாது அகல அறிவொன்று அனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.

பொருள் : ஆகாயம் முதலான பூதங்களும் கலை காலம் மாயையாகிய தத்துவங்களும் ஆகிய இவற்றில், ஆய்ந்து தோயாது அகல, ஆன்ம அறிவானது பொருந்தி அனாதியே நீங்காத சத்தினைக் கூடினால் அழியாமல் மேன்மையான சரீரத்தைப் பொருந்தலாம்.

644. இருபதி னாயிரத்து எண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாம்அந்த யோகம்
தரும்இவை காய உழைப்பாகும் தானே
அரும்இரு நான்காய் அட்டமா சித்திக்கே.

பொருள் : பொருந்திய கன்ம யோகம், இருபதினாயிரத்து எண்ணூறு பேதங்களை யுடையது. இவ்வாறு வந்தவை உடல் உழைப்பு ஆகும். அருமையான இவை அட்டாங்க யோகத்துள் அடங்கி எண் சித்திகளை அளிக்க வல்லனவாம்.

645. மதிதனில் ஈராறாய் மன்னும் கலையின்
உதய மதுநா லொழியவோ ரெட்டுப்
பதியும் ஈராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே.

பொருள் : சந்திர நாடியாகிய இடைகலையில் பன்னிரண்டு அங்குல அளவாய் இழுக்கப் பெறும் பிராணனில் பிங்கலை வழியாக வெளிப்படுதல் நாலங்குல அளவு போக எட்டங்குல அளவு உள்ளே தங்கும். இதனைப் பன்னிரண்டு ஆண்டுகள் உலகப்பற்றை விட்டுக் கவனித்து வந்தால் உறுதியான அட்டமா சித்திகளை அடையலாம். (ஈராறு-இரண்டும் ஆறும்; எட்டு - உம்மைத் தொகை)

646. நாடும் பிணியாகும் நம்சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடுஒன்றி னால்வாயாச் சித்தியே தத்தின்
நீடும் துரம்கேட்டல் நீண்முடிவு ஈராறே.

பொருள் : நம்முடைய உறவினர் சூழ இருப்பின் நம்மை நாடுவது பந்தமாகும். மிக்க கலை ஞானம், நுண்ணறிவு, நிறையறிவு ஆகிய இவற்றால் அட்டமாசித்திகள் அடையா. பேதமாகப் பெருகிய ஒலியினைப் பன்னிரண்டு கேட்டாலே சித்தியைத் தருமாம். (நீண்முடிவுஈராறு - யோகாப்பியாச காலம் பன்னிரண்டு வருடங்கள்.)

647. ஏழா னதில்கண்டு வாயுவின் வேகியாம்
தாழா நடைபல யோசனை சார்ந்திடும்
குழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதில் தான்பர காயமே.

பொருள் : நாத தரிசனம் கிட்டியவர் ஏழாண்டில் சண்டமாருதம் போல் செல்லும் வேகத்தை உடையோராவர். நடைதளராமல் பல யோசனை செல்லும் வன்மை கிட்டும். சூழ்ந்த எட்டாம் ஆண்டில் நரை என்றும் மூப்பு என்றும் தோன்றா. தங்குதலையுடைய ஒன்பதாம். ஆண்டில் பரகாயப் பிரவேசமாம்; (அஃதாவது அழியாத உடல் உண்டாகும்) ஏழு, எட்டு, ஒன்பது ஆண்டுகளில் அமையும் பயன் கூறியவாறு.

648. ஈரைந்தில் பூரித்துத் தியான உருத்திரன்
ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி
சீர்ஒன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று
ஏர்ஒன்று வியாபியாய் நிற்றல ஈராறே.

பொருள் : பத்தாண்டு தியான சத்தியால் கீழே போகும் சத்திகளை மேலே நிரப்பிக் கொண்டு உருத்திரன் போன்று சாதகர் விளங்குவார். பதினோராண்டில் எட்டு என்று எண்ணப்பட்ட சித்தி உண்டாம். சிறப்புப் பொருந்திய மேலேழ் உலகங்களிலும் கீழேழ் உலகங்களிலும் சென்று பன்னிரண்டு ஆண்டில் எங்கும் சென்று அழகுடன் நிறைந்து நிற்கும் தகுதி சாதகர்க்கு உண்டாகும்.

649. தானே அணுவும் சகத்துதன் நோன்மையும்
தானாக் கனமும் பரகாயத் தேகமும்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத உண்மையும் வியாபியு மாம்எட்டே.

பொருள் :  தானே அணிமாவும் உலகம் போன்று பெருமையுடைய மகிமாவும், அளவிடமுடியாத கனம் உடைமையான கரிமாவும் எல்லாவற்றையும் அடக்கியும் அமையாத ஆகாயம் போன்று இலேசான இலகிமாவும், அழியாத உடலை அடைதலாகிய பிராத்தியும், பரகாயத்தை அடையும் ஆற்றலாகிய பிராகாமியமும் அமையாத உண்மையாகிய ஈசத்துமும் வியாப்பியமாகிய வசித்துவமும் ஆகிய எட்டுச் சித்திகளும் அடையலாம்.

650. தாங்கிய தன்மையும் தான்அணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை
ஆங்கே எழுந்துஓம் அவற்றுள் எழுந்துமிக்கு
ஓங்கி வரமுத்தி முந்திய வாறே.

பொருள் : சிவயோகியாகிய தான் அணுத்தன்மை எய்திப் பல உயிர்களையும் தாங்கிய காலத்தும், அவற்றை வாங்கி ஒடுக்கிய காலத்தும் ஓர் மாற்றமும் இல்லை, சித்தி பெற்ற உயிர்களாகிய அவற்றுள் அப்போதே மேலெழுந்த ஓம் என்னும் நாதம் ஊர்த்துவ சகஸ்ர தளத்தை அடைந்து எழுந்து சென்ற விதமே முத்தி முற்பட்டவாறாம்.

651. முந்திய முந்நூற்று அறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முதல் ஆயிடச்
சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வார்வலர்
உந்தியுள் நின்று உதித்தெழும் ஆறே.

பொருள் : சூரிய உதயம் முதல் முன்னூற்று அறுபது விநாடியும் அமைய வந்ததாகிய நாழிகை காலத்தை ஆகாயம் முதலாகக் கொண்டு இடமும் எண்ணப்படுகின்ற இரவுக் காலத்தை மண் முதலாகக் கொண்டு அறியவும் வல்லவர் உந்திக்காலத்தில் நிற்கும் சூரியன் உதித்து மேல் எழுதலை அறிவார். ஒருநாழிகைக்கு 60 விநாடி பகல் 30 நாழிகை. 6030 = 1800 வினாடி, ஒவ்வொரு பூதத்திற்கும் 1800/5 = 360 விநாடி என்க. இதேபோல் இரவுக்கும் கொள்க, இது பழையமுறை இப்போது நாழிகை என்பது 24 நிமிஷம் அதாவது ஒருமணிக்கு 2 1/2 நாழிகை.

652. சித்தம் திரிந்து சிவமய மாகியே
முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத் தோரே.

பொருள் : சித்தம் புறத்தே செல்லாமல் மாறுபட்டுச் சிவமாகி, வீடு பேற்றை ஆராய்ந்து அடைந்த பிரணவ உபாசகர் சிவத் தோடு கூடிய முத்தர்கள் ஆவார்கள். அவர் பஞ்சேந்திரியங்களின் தொடர்பில்லாதவர்கள். ஆகையால் அகத் தூய்மை பெறலாம். அவர்கள் அறிவு ஆகாயத்தில் தத்துவங்களை விட்டுச் சிவத்துடன் பொருந்திநிற்பர்.

653. ஒத்தஇவ் ஒன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் ஒன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்தஇவ் ஒன்பதில் மிக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்ததே.

பொருள் : தம்முள் மிகாமலும் குறையாமலும் ஒன்பது வாயுக்களும் ஒத்து இயங்குவன இவ்ஒன்பது அல்லாத பத்தாவதாக உள்ள தனஞ்சயன் என்னும் வாயு ஒத்து இயங்கும் இவ்ஒன்பதிலும் கூடியிருக்கவே உடலோடு உயிரும் நீங்காதிருக்கும்.

654. இருக்கும் தனஞ்சயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில வாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.

பொருள் : தனஞ்சயன் என்னும் வாயு ஏனைய வாயுக்கள் இயங்கும் நாடிகளிலும் பொருந்தியிருக்கும், அஃது இருநூற்று இருபத்து மூன்றாவது புவனமாகிய அநந்தை என்ற மண்டலத்தில் பொருந்தியிருக்கும். இந்தக் காற்று பொருந்தியில்லாவிடில் இவ்வுடல் வீங்கி வெடித்துப் போகும். 224 என்ப புவனங்களின் தொகை.

655. வீங்கும் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமும் கூனும் முடமதாய்
வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே.

பொருள் : வீங்கும் வயிற்றுக்கட்டி, சிரங்கு, குட்டம், வீக்கவியாதிகள், சோகை, காலில் வாதம், கூனமுடம், கண்ணில் பொருந்தி வீங்கும் வியாதிகள் பலவும் தனஞ்சயன் திரிபால் உண்டாவன.

656. கண்ணில் வியாதி உரோகம் தனஞ்சயன்
கண்ணில்இவ் ஆணிகள் காசம் அவனல்லன்
கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே.

பொருள் : ஆராயுமிடத்தில் தனஞ்சயன் என்னும் வாயு திரிபு அடையின் வியாதியாம், கண்களில் உண்டாகும் ஆணிகள் காசம் முதலிய நோய்கள் தனஞ்சயன் திரிபால் வருவன அல்ல. கண்ணினிடம் கூர்மன் என்ற வாயு பொருந்தாவிடில் கண்ணில்நோய் உண்டாகி ஒளியும் இல்லையாம். (கண்ணுதல் - ஆராய்தல், ஆணி - பூ; காசம் - படலம்)

657. நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி அளவும் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங்கு உணர்ந்திருந் தாரே.

பொருள் : கண்கள் இருதயம் ஆகிய இவற்றில் நாடியின் ஓசையுள்ளது. சிறுதுடியால் அமையும் ஒலி உண்டாக்குகின்ற சுடருடைய சோதியை தேவர்கள் தலைவர்களாகிய உருத்திரன், விஷ்ணு, பிரமனும் இடைவிடாது அங்குப் பொருந்தி உணர்ந்திருந்தனர். (துடி என்றது தூடி என்று நீண்டு நின்றது.)

658. ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோர் ஓரிடம்
ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்கு
ஒன்பது வாசல் உலைநல மாமே.

பொருள் : கண்முதலிய ஒன்பது துவாரங்களையுடைய உடம்பில் இடை முதலிய ஒன்பது நாடிகள் ஒடுங்குவதற்குரிய சுழுமுனையாகிய இடம் ஒன்றுள்ளது. அவ்விடத்தில் அவை ஒடுங்கியிருக்கத் தவம் செய்ய வல்லார்க்கு ஒன்பது வாயில் களையுடைய உலைக்களமாகிய உடல் நன்மை எய்தும். ஈற்றடியை ஒன்பது காட்சி இலை பலவாமே என்று படைபேதமாகக் கொண்டு உணர்வுகள் அளவிறந்து தோன்றும் என்று பொருள் கூறுவாரும் உளர்.

659. ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு முனைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அருவழி யோர்க்கே.

பொருள் : சிறந்த குண்டலினியாகிய அங்கியின் கீழே சுழுமுனை நாடியைச் செல்வச் செய்து, வாங்கிச் சூரிய கலையில் இயங்கும் பிராணனைச் சந்திர கலையில் ஓடும்படி செய்து ஏழ் உலகங்களையும் தாங்கிட  யோக நெறி நிற்போர்க்குச் சொன்னோம்.

660. தலைப்பட்ட வாறுஅண்ணல் தையயை நாடி
வலைப்படட் பாசத்து வன்பிணை மானபோல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செயதால்ய
விலைக்கண்ண வைத்தோர் வித்தது வாமே.

பொருள் : பிரமரந்திரத்தால் விளங்கும் சிவசத்தியை நாடி, வலையில் அகப்பட்டு எங்கும் செல்லாமல் நிற்கும் மானைப் போல சந்திரகலை சூரிய கலையில் செல்லாமல் பிராணனைச் சூழு நிறுத்தினால் விளைவிக்கு  உண்ணுவதற்கும் சேமித்து வைத்த வித்துப் போலப் பயனாகும்.

661. ஓடிச்சென்று அங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியின் உள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென்று அங்கே தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.

பொருள் : மூலாதாரத்திலிருந்து சகஸ்ரதளத்தை விரைந்து அடைந்து சிவமாகிய ஒரு பொருளைத் தரிசித்தோர் அங்குள்ள நாடியின் உள்ளே நாதத்தை வெளிப்படுத்துவர். மேலும் ஆராய்ந்து அங்கே உண்டாகின்ற அமுதத்தையும் பருகி உடலாகிய பாசறையிலுள்ள காமாதி அறுபகைவர்களைச் சிறைப்படுத்துவர்.

662. கட்டிட்ட தாமரை ஞானத்தின் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
கட்டிட்டு நின்று களங்கனி யூடுபோய்
பொட்டிட்டு நின்று பூரண மானதே.

பொருள் : சகஸ்ர தளத்தோடு பிணிக்கப்பட்ட சுழுமுனை நாடியில் சீவர்களை உலகமுகப்படுத்திக் கொண்டிருந் தவாமை முதலான ஒன்பது சத்திகள் சீவர்கள் பக்குவப்பட்ட பின்னர் தம் செயலாற்றுப் பராசக்தியுடன் பொருத்தி அமைந்தனர். அப்போது மூலாதாரத்தில் செயற்படுத்திக் கொண்டிருந்த குண்டலினி தொண்டைச் சக்கரத்தின் வழியாகச் சென்று அஞ்øஞ்ச் சக்கரத்தை அடைந்து பூரண சத்தியாக விளங்கியது.

663. பூரண சத்தி எழுமூன்று அறையாக
ஏரணி கன்னியர் எழுநூற்றுஅஞ்சு ஆயினர்
நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும்
காரண மாகிக் கலந்து விரிந்ததே.

பொருள் : பராசத்தியே ஏழ கன்னிகளாக இச்சை ஞானம் கிரியையாகிய பேதத்தால் இருபத்தொன்றாக அழகு மிக்க அக்கன்னியர் ஐம் பெருந் தொழிலுக்கும் நூற்றைந்து கன்னியராயினர். நாராயணன், பிரமன், உரத்திரன் , மகேஸ்வரன், சதாசிவனாகிய ஐவருக்கும் காரணமாகிய அவர்களோடு கலந்து விரிந்து நின்றனன்.

664. விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
கரந்துள் எழுந்து கரந்துஅங்கு இருக்கில்
பரந்து குவிந்தது பார்முதல் பூதம்
இரைந்தெழு வாயு இடத்தினில் ஓங்கே.

பொருள் : இவ்வாறாக விரிந்து பின்னர் ஒடுங்கிப் பலவகை போகங்களையும்  விளையச் செய்த இப்பராசக்தி  மறைந்து சிவத்தினுள் சிறந்து தோனறிப் பின் ஒடுங்கியிருப்பின் பூமி முதலிய பூதங்களும் பரந்து பின் ஒடுங்கிவிடும். ஆதலால நீ மேல் எழுகின்ற நாதத்தில் ஓங்கி விளங்குவாயா. (இரைந் தெழு வாயு (ஓசையுடன் மேலெழும் உயிர்ப்பு உயிர்ப்பு பிராணவாயு.)

665. இடையொடு பிங்கலை என்னும் இரண்டும்
அடைபடும் வாயுவும் ஆறியே நிற்கும்
தடையவை ஆறேழும் தண்சுடர் உள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.

பொருள் : நாதத்தில் ஒடுங்கியவர்க்கு இடைபிங்கலை அடைபட்டுச் சுழுமுனை திறக்கும். சுவாசம் அவர்க்கு மெத்தென இயங்கும். ஆறு ஆதாரங்களும் ஏழு சத்திகளும் நீங்கிச் சந்திரமண்டலத்தில் புருவ நடுவில் விந்துத்தானத்தில் நீ ஒடுங்குவாயாக.

666. ஒடுங்கி ஒடுங்கி உணர்ந்துஅங்கு இருக்கில்
அடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி மட்ங்கிடும் மன்னுயிர் உள்ளே
நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே.

பொருள் : மனம் ஒருமைப்பட்டுப் புருவ நடுவில் இருப்பின் பிராணன் அப்போது கட்டுப்பட்டு நின்றுவிடும். புறநோக்கின்றி அகமுகமாக நோக்கும் உயிரினுள்ளே நடனம் புரியப் பெருமானும் தன்னை அறியச் செய்வான்.

667. நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி உடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிடு
மாடி ஒருகை மணிவிளக்கு ஆனதே.

பொருள் : சுழுமுனை பாயும் இடத்தில் விளங்கும் நாத ஒலியுடன் சென்று அங்கு நிøபெற்றுள்ள சிவசத்தியைப் பொருந்தி பாசறையிலுள்ள இருளாகிய பகைவரைக் கட்டுகின்ற பெருமை பொருந்திய சுழுமுனையே தூண்டாவிளக்காயிற்று.

668. அணிமாதி சித்திகள் ஆனவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாயம் மேவல்
அணுத் தன்ஐ எங்கும் தானாதல் என்றுஎட்டே.

பொருள் : அணிமா முதலான சித்திகளைச் சொல்லுமிடத்து அணுவில் அணுவாதலும், பெரியதில் பெரிதாதலும் அசைக்க இயலாத கனமுடையதாதலும் புகைபோல இலே சாதலும் மேலுள்ள ஆகாயத்தைத் தொடுதலும், எல்லாப் பூதங்களிலும் வியாபித்து எழுதலும் உயிர்கட்கு எல்லாம் கருத்து ஆதலும், எல்லாவற்றையும் வசியம் செய்து எங்கும் தானாக இருத்தலும் ஆகிய எட்டாகும்.

669. எட்டாகியசித்தி ஓரெட்டு யோகத்தால்
கிட்டாப் பிராணனே செய்தால் கிடைத்திடும்
ஒட்டா நடுநாடி மூலத்துஅனல் பானு
விட்டான் மதியுண்ண வும்வரும் மேலதே.

பொருள் : அட்டமா சித்திகளும் அட்டாங்க யோகத்தால், அடக்கி ஆளமுடியாத பிராண வாயுவை அடக்கி யாண்டால் அடையப் பெறும். மூலாதாரத்திலுள்ள குண்டலினியானது சுழுமுனை நாடி வழியாகச் சென்று அக்கினி மண்டலம் சூரிய மண்டலம் ஆகியவற்றைக் கடந்தால் மேலுள்ள சந்திரமண்டல அமுதம் புசிக்கக் கூடும்.

670. சித்திகள் எட்டன்றிச் சேர்எட்டு யோகத்தால்
புத்திகள் ஆனவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண்சித்தி தானாம் திரிபுரைச்
சத்தி அருள்தரத் தான்உள வாகுமே.

பொருள் : பயிலப் பெறுகின்ற அட்டாங்க யோகத்தால் முற்கூறப் பட்ட அட்டமா சித்திகள் அன்றி, ஞானங்களாக உள்ளவை எல்லாம் வெளிப்படும். எண்வகைச் சித்திகளும்  தானே யாகிய திரிபுரைச் சத்தி கருணையின் தரத்தால் சித்தியும் புத்தியும் உண்டாம்.

அணிமா (நுண்மை)

671. எட்டுஇவை தன்னோடு எழிற்பரம் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகம் சேர்தலால்
இட்டமது உள்ளே இறுக்கல்பர காட்சி
எட்டு வரப்பும் இடந்தான்நின்று எட்டுமே.

பொருள் : இந்த எட்டுச் சித்திகளுடன் எல்லாம் வல்ல பரஞானமும் கைவரப் பெற்றவர்களே சித்தராவர். இவர்கள் சிவலோகத்தை அடைதலால் இவர்கள் இஷ்டப் பொருளான சிவத்தைக் கண்டு அழுந்தி யிருப்பார்கள். எட்டினை வரம் பாகவுடைய சித்திகள் இவர்களிடம் தாமே வந்தடையும். (இறுக்கல் - ஒடுங்குதல்)

672. மந்தரம் ஏறும் மதிபானுவை மாற்றிக்
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்
தந்தின்றி நற்காமிய லோகம் சார்வாகும்
அந்த உலகம் அணிமாதி யாமே.

பொருள் : மலை என்கிற சிரசில் சந்திர சூரிய கனல்களை மாற்றி அடித்த மூளை போலச் சுழுமுனையை யாக்கி விந்து (சுக்கிலம்) நீக்கமின்றி இருக்க வல்லார்க்கு நரம்பின்றிய பிரணவதேகம் பெற்று விரும்பிய நல்ல உலகத்தை அடைவர். அவ்வுலகம் அணிமாதி சித்திகளை அளிக்கவல்லதாம். கந்து - அடித்த முளை.

673. முடிந்துஇட்டு வைத்து முயங்கில் ஓராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனும்
தணிந்த அப்பஞ்சினும் தான்நொய்ய தாகி
மெலிந்துஅங்கு இருந்திடும் வெல்லஒண் ணாதே.

பொருள் : விந்து நீக்கமின்றிச் சேமித்து வைத்து ஓர்யாண்டு யோக முயற்சியில் ஈடுபட்டால் நூல்களால் புகழ்ந்து கூறப்பட்ட அணிமா சித்த கைவசமாகும். கைவரப் பெற்ற சித்தனும் மெலிந்த நுட்பமான பஞ்சைக் காட்டிலும் நுண்மையாய் மெலிந்து இருப்பான். அவனை வெல்லமுடியாது. ஓர் ஆண்டு என்பது சூரிய வட்டமான சௌரமான வருடம் அன்று. வியாழவட்டமான பன்னிரண்டு ஆண்டு என்ற படி (இந்நிலை ஓராண்டில் கைகூடும் என்பாரும் உளர்.)

இலகிமா (மென்மை)

674. ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற ஐயாண்டின் மாலகு வாகுமே.

பொருள் : ஆக்கத்தை அளிக்கின்ற பராசத்தியுடன் மூலாதாரத்தினின்றும் மேலே தான் சொல்லுகின்ற எல்லாத் தத்துவங்களிலும் அச்சத்தியே ஆதாரமாய், செல்ல வேண்டிய காலங்கள் தன் வழிப்பட்டு நிற்பின் செல்லுகின்ற ஐந்து ஆண்டுகளில் மேன்மையான இலகிமா சித்திக்கும்.

675. மாலகு வாகிய மாயனைக் கண்டபின்
தான்ஒளி யாகித் தழைத்தங்கு இருந்திடும்
பால்ஒளி யாகிப் பரந்துஎங்கும் நின்றது
மேல்ஒளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.

பொருள் : இலகிமா சித்தி பெற்று அழகிய தலைவனைத் தரிசித்த பிறகு தான் ஒளியாய் விளங்கி அந்தப் பரஞ்சோதியில் திளைத்திருப்பான். இவ் வண்ணம் பால் போன்ற ஒளிப்பொருளாய் எங்கும் பரந்து நின்ற ஆன்மா எல்லாவற்றுக்கும் மேலாகிய ஒளிப் பொருளான சிவபரம்பொருளைத் தரிசிக்கும். (மாலகுவாகிய - பெருமையுள்ள மென்மை வடிவினனான். மயானை - முழுமுதற் சிவனை.)

மகிமா (பருமை)

676. மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாள்உடன்
தத்பொரு ளாகிய தத்துவம் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடும் ஓராண்டின்
மைப்பொருளாகும் மகிமாவ தாகுமே.

பொருள் : உண்மை ஞானத்தை உணர்த்தியருளிய அருட்சத்தியுடன் தத் என்று குறிக்கப்படும் சிவம் கூட, மறைந்த பொருளான மகிமாவானது ஒரு வருடத்தில் உள்ளங் கையிலுள்ள பொருள்போலக் கலந்திடும்.

677. ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவதும் இல்லையாம்
மேல்நின்ற காலம் வெளியுற நின்றபின்
தான்நின்ற காலங்கள் தன்வழி யாகுமே.

பொருள் : இடை பிங்கலை என்னும் இரு நாடிகளைப் பொருந்தி அமையும் சுழுமுனை சிரசின் மேலே சென்று விளங்கும் போதுள்ள ஒளியைக் கண்டபின், அழிகின்ற ஆயுட்காலங்கள் அழிவதும் இல்லையாம். இனிவரக் கூடிய ஆயுட்காலத்திற்கு வெளியே தான் நின்றபின் எஞ்சியுள்ள காலதத்துவம் அனைத்தும் தன் வழியாம்.

678. தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்
தன்வழி யாகத் தழைத்திடு வையகம்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்
தன் வழி தன்னருள் ஆகிநின் றானே.

பொருள் : மகிமாசித்தி பெற்றவன் வாயிலாக ஞானம் செழித்தோங்கும். அவன் வாயிலாக உலகம் துயர் தீர்ந்து செழுமை பெறும். அங்ஙனம் தன் வாயிலாகச் செழுமையுற்ற பொருள் எல்லாம் தன் வசப்பட்டு நிற்கத் தான் சிவனருள் வசப்பட்டு நின்றான்.

பிராத்தி (விரும்பியது எய்தல்)

679. நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாம்
கொண்டவை ஓராண்டு கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்தியது ஆகுமே.

பொருள் : பராசத்தியுடன் தூலமாய்க் காணப்பட்ட உலகப்பொருள்கள் எல்லாம் சூக்குமமாய் ஒடுங்கி நின்றன. அத்தகைய சூக்குமமான ஒளிப் பொருள்களைக் கண்டு ஓராண்டு தாரணை செய்யின் தாரணையில் வெளிப்பட்ட சித்தியே வேண்டுவன அடையச் செய்யும். (பூதப்படை உலகப் பொருட்கள்.)

கரிமா (விண் தன்மை)

680. ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின் பூவில் பரப்பவை காணலாம்
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவதும் இல்லையே

பொருள் : அத்தகைய மின்னொளியைக் கண்ட பின்னர் விரிந்த சகஸ்ரதளக் கமலத்தில் உலகப் பொருளின் விரிவைக் காணலாம். அப்போது மேவுகின்ற கால தத்துவம் புறம்பாக நின்றது. கழிகின்ற காலங்கள் அதனால் கழியமாட்டா.

681. போவது ஒன்று இல்லை வருவது தானில்லை
சாவது ஒன்று இல்லை தழைப்பது தானில்லை
தாமதம் இல்லை தமரகத் தின்ஒளி
யாவதும் இல்லை அறிந்துகொள் வார்க்கே.

பொருள் : மின்னொளி கண்டவர் பிற இடத்துக்குச் செல்ல வேண்டியதில்லை போவது இன்மையால் வருவதும் இல்லை. இறப்பதும் இல்லை. இறப்பு இன்மையால் பிறப்பும் இல்லையாகும். தாமதம் ஆதிமுக்குணங்கள் இல்லை. உண்மை உணர்வார்க்குப் பிரமரந்திரத்தின் உள் தொளையாகிய சுழுமுனையில் விளங்கும் பலவேறுபட்ட ஒளிகளும் இல்லையாகும்.

682. அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூதப் படையவை எல்லாம்
குவிந்தவை ஓராண்டு கூட இருக்கில்
விரிந்த பரகாயம் மேவலும் ஆமே.

பொருள் : அத்தகைய பராசக்தியுடன் ஆன்மா பொருந்தியிருந்தால் தத்துவக் கூட்டங்களை அமைக்கும் பூதப்படைகள் எல்லாம் நீங்கிவிடும். மனம் குவிந்து  பராசக்தியுடன் ஓராண்டு இருந்தால் விரிந்த பரகாயப் பிரவேசம் செய்தலுமாம் (பிரகாயப்பிரவேசம் - கூவிட்டுக் கூடுபாய்தல்)

பிராகாமியம் (நிறைவுண்மை)

683. ஆன விளக்கொளி யாவது அறிகிலர்
மூல விளக்கொள் முன்னே உடையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடுஎளி தாநின்றே.

பொருள் : ஆன்மாவிடம் தன்னை விளக்கிக் காட்டும் ஒளி அடைந்திருத்தலை அறியமாட்டார். அவர்கள் மூலாதாரத்தில் மூலக்கனலை உடையவர்கள் அதனை எங்கும் விளங்கும் ஒலி ஒளியாகத் தரிசித்திருப்பார்க்கு சிரசுக்கு மேல் விளங்கும் சிவ ஒளியும் அதனால் வீடும் எளிதாம் (பிராகாமியம் - வியாபகம்பெறு விருப்பம்.)

ஈசத்துவம் (ஆட்சியன் ஆதல்)

684. நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாம்
கொண்டவை ஓராண்டு கூடி இருந்திடில்
பண்டைய ஈசன் தத்துவம் ஆகுமே.

பொருள் : சீவர்களிடம் என்றும் நிலை பெற்றுள்ள சிவ சத்தியுடன் சூக்கும, திருஷ்டிக்குப் புலப்படும் ஒளி அணுக்கள் எல்லாவற்றையும் சிரசுக்கு மேலுள்ள விந்து மண்டலத்தில் வெவ்வேறு வகை ஒளி பாய்வதை ஓராண்டு ஆட்சி செய்வாய். ஆனால் பழமையான உடலில் பொருந்திய சதாசிவ  தத்துவம் அமையும்.

685. ஆகின்ற சந்திரன் தன்னொளி யாய்அவன்
ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவன் ஆமே.

பொருள் : வளர்கின்ற சந்திரனது ஒளியை நெற்றி நடுவில் விளங்கப் பெறுபவன் அச்சந்திரனைப் போன்று தண்ணளியுடையவன் ஆவான். வளர்கின்ற சந்திரகலை பூரணத்துவம் பெற்றிடில் சந்திரகலை விளங்கப் பெற்ற சீவன் சதாசிவ நிலை பெறுவான்.

686. தானே படைத்திட வல்லவன் ஆயிடும்
தானே அளித்திட வல்லவன் ஆயிடும்
தானே சங்காரத் தலைவனும் ஆயிடும்
தானே இவன்என்னும் தன்மையன் ஆமே.

பொருள் : ஈசத்துவம் பெற்றவர் படைத்தல் தொழிலைச் செய்ய வல்லவராவர். அவரே காத்தலைச் செய்பவராவர். அவரே அழித்தலையும் செய்ய வல்லவர். அவரே தமக்குத் தாமே ஒப்பாகும் தன்மை உடையவர் ஆவர். சதாசிவ ரூபம் பெற்றவர் முத்தொழிலையும் செய்யும் தன்மையைப் பெறுவர்.

687. தண்மைய தாகத் தழைத்த கலையினுள்
பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வன்மைய  தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே.

பொருள் : குளிர்ந்த கிரணங்களுடன் கூடிய சந்திரகலையில் விளங்கும் ஒளியில் பலவாறாகக் காணும் பஞ்சபூத அணுக்களை ஓராண்டுக் காலம் வெவ்வேறாகக் காணாமல் பால் வண்ணனது நீல ஒளியைக் கண்டால் மெய்ப்பொருளான மேன்மையான ஆன்மா சிரசில் மேல் ஒளியாக விளங்கும்.

வசித்துவம்

688. மெய்ப்பொரு ளாக விளைந்தது ஏதுஎனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவம்
கைப்பொரு ளாகக் கலந்தஉயிர்க்கு எல்லாம்
தற்பொரு ளாகிய தன்மையன் ஆகுமே.

பொருள் : உண்மையைப் பொருளாகத் தாரணை முதலிய சம்மியத்தால் உண்டாகியது எது என்றால் நல்ல பொருள் என்று பாராட்டப் பெறும் வசீகரிக்கும் தன்மையாம். தன் விருப்பப்படி நடக்கச் செய்யும் உயிர் வருக்கத்துக் கெல்லாம் சிவமேயான தன்மையனாகச் சாதகன் ஆவான். (தற்பொருள் - சிவன்.)

689. தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
பொன்மைய தாகப் புலன்களும் போயி
நன்மைய தாகிய நற்கொடி காணுமே.

பொருள் : சிவமாந் தன்மை பெற்றுச் சிறப்புற்ற சித்தன் மகா சூக்குமமாகிய தனது ஆன்மாவை அறியின், பொன்னொளியுடன் கூடிய ஒளி உடலைப் பெற்றுப் புலன்களின் சேட்டையினின்றும் விடுபட உலகுக்கு நன்மையைச் செய்கின்ற நல்ல சதாசிவ நாயகியைக் காண்பான். (நன்மை-திருவடிப்பேறு நற்கொடி - திருவருள்)

690. நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி யாதும் அறிந்திடில் ஓராண்டு
பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வரும்
கற்கொடி யாகிய காமுக னாமே.

பொருள் : நல்ல கொடிபோன்ற நன்மையைச் செய்யும் சதாசிவநாயகி தன்னுடன் அக்கொடி போன்ற சத்தியைத் தன்னிடத்தில் நிலை பெற்றுள்ளதாக ஓராண்டு தியானிப்பவன் பொன்னொளியாகிய புவனங்களில் நினைத்த மாத்திரத்தில் சென்று வருகின்ற செவ்வொளி போன்ற காமேசுரனது இயல்பினைப் பெறுவான் கல்-மாணிக்கம்.

691. காமரு தத்துவ மானது வந்தபின்
பூமரு கந்தம் புவனமது ஆயிடும்
மாமரு உன்னிடை மெய்த்திடு மான்அனாய்
நாமரு வும்ஒளி நாயகம் ஆனதே.

பொருள் : எல்லாவற்றையும் வசீகரிக்கும் தன்மை வந்த பின்னர் சகஸ்ர தளத்தில் வாசனையாகத் தங்கியுள்ள தன்மாத்திரை உருவமான ஒளிகள் அதனதன் தன்மைக்கேற்பப் புவனங்களாய் விரிந்து நிற்கும் மகத்துப் போன்ற பெருமையுடையாய் ! அருட் சத்தியானது வசித்துவம் கைவரப் பெற்றவரிடம் விளங்கும் சத்தியோடு பேதமின்றி வாக்கு ரூபமான ஒளித் தன்மை பெற்று நாயகன் என ஆகும்.

692. நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங்கு இருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டபின்
பேயக மாகிய பேரொளி காணுமே.

பொருள் : எல்லாவற்றுக்கும் தலைமையான சிவச் சோதியைத் தரிசித்த பின்னர், அவ் வொளியே தாய்வீடாகக் கொண்டு மகிழ்ச்சியுடன் அங்கு வீற்றிருப்பான். எல்லாப் புவனங்களிலும் சென்று கண்டபின் உடலுள் பேய்கள் போன்ற காமக் குரோதிகள் வாழும் ஏனைய புவனங்களுக்காகச் சித்தி பெற்றவன் சொல்ல விரும்பமாட்டான். (ஏகாரம் - எதிர்மறை காணுமே-காணமாட்டான்.)

693. பேரொளி யாகிய பெரிய அவ்எட்டையும்
பாரொளி யாகப் பகைப்பறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே.

பொருள் : பேரொளிப் பிழம்பான இறைவனை உலக ஒளியைக் காணுதல் போல நடுக்கமின்றிக் கண்டவன் ஆன்ம ஒளியுடன் பூமண்டலம் முழுவதும் விசுவ வியாபியாய் ஒரே ஒளிமயமான பிராண ஒளியைக் காணுவான். (எட்டு-அஷ்ட மூர்த்த வடிவமான இறைவன்.)

694. காலோடு உயிரும் கலக்கும் வகைசொல்லின்
காலது அக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்ஞாற்று ஒருபத்து மூன்றையும்
காலது வேண்டிக் கொண்டஇவ் வாறே.

பொருள் : சுழுமுனை நாடியில் உயிர் எவ்வாறு கலந்துள்ளது என்பதைச் சொல்லின் சுழுமுனையில் மின்னொளி போன்று விளங்கும் பராசத்தியின் ஒளியுடனாகும். சுழுமுனையில் தொடர்புள்ள ஐந்நூற்றுப் பதின்மூன்றையும் சுழுமுனையில் வேண்டி உயிர் கலந்திருக்கும் தன்மை இதுவாம். காலது 513-பிராணவாயு வியாபிக்கும் நாடிகளின் தொகை நாயகி-சத்தி.

695. ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிரம் முந்நூற் றொடு ஐஞ்சுள
ஆறது ஆயிரம் ஆகும் அருவழி
ஆறது ஆயிரம் வளர்ப்பது இரண்டே

பொருள் : அமிர்தத்தைப் பெருக்குகின்ற சிரசினுள் நிரோதினி கலையுள்ளது அமுதத்தைப் பெருக்கி மாற்றத்தைச் செய்வதற்கு வழியாக ஆயிரத்து முன்னூற்று ஐந்து நரம்புத் தொகுதிகள் உள்ளன. மேல் நிøயிலுள்ள சகஸ்ரதளத்துக்குச் செல்ல இது வழியாகவுள்ளது. இதனை வழியாகக் கொண்டு உயிரை வளர்ப்பது சிவ சத்தியாகிய இரண்டுமாம்.

696. இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண்டு எழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய்த்
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே.

பொருள் : சிவதத்துவத்தில் சிறந்து விளங்கும் மனோன்மணியாகிய சதாசிவ நாயகி இடை பிங்கலையாகிய இருநாடிகளின் மேல் சிரசுக்குச் சென்று விளங்குவøத் சொல்லின் இரண்டு நாடிகளும் சகஸ்ரதளத்தை அடைந்து விரியுமுன் ஐம்பத்தொரு அட்சரங்களால் உணர்த்தப் பெறும் ஆறு ஆதாரங்களைக் கடந்ததாய்த் திரண்டுள்ளது. அந்நிலையில் சாதகனின் காலத்தைக் கடக்கச் செய்வதும் ஐம்முகங்களோடு கூடிய சதாசிவனின் நாயகியாகும்.

697. அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது ஆயுத மாவது
அஞ்சது அன்றி இரண்டது ஆயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே.

பொருள் : பத்துத் திசைகளும் பத்து முகங்களையுடைய சதாசிவ நாயகிக்கு, பிராணன் முதலிய பத்து வாயுக்களும் பத்து ஆயுதங்களாம். ஐம்முகச் சத்திக்கு அவையன்றிக் கவிழ்ந்த சகஸ்ரதளம் நிமிர்ந்த சகஸ்ரதளமாகிய இரண்டும் ஆயுதங்களாகும். அச்சத்தி உருவமற்ற நிலையில் தசவாயுக்களையும் திக்குகளையும் கடந்த வெளியாகவும் விளங்கும்.

698. ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண்டு ஊர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்துளும் உன்னே.

பொருள் : அகண்ட வியாபகமான ஏக பராசக்தி சுழுமுனை நாடியில் பொருந்தி ஏறும் வகை சொல்லின் கவிழ்ந்த சகஸ்ரதளத்தை நிமிர்ந்த சகஸ்ர தளமாக மாற்றியமைத்து, காலத்தைக் கடக்கச் செய்ய உதவும் என்பதை நினைவு கூர்வாயாக.

699. முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் ஐம்பத்து ஒன்றுடன் அஞ்சுவாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே.

பொருள் : சிரசின் முன்பக்கத்தில் விளங்கும் ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் அமர்ந்துள்ள பரையுடன் முன்னோக்கிப் பாயும் வாயு முடியும் வகையைச் சொல்லப் போனால் முன்னாக விளங்கிய ஐம்பத்தொரு அட்சரங்களையுடைய ஆறு ஆதாரங்களை இயக்கிக் கொண்டு இருந்த ஐம்முகச்சத்தி பராசத்தியாக மாறினபோது முன்னர் விளங்கிய வாயு அடங்கும் வகையாகும்.

700. ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரும் வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐந்நூற்று முப்பதொடு ஒன்பது
மாய்வரும் வாயு வனப்புள் இருந்தது.

பொருள் : ஆராய்ச்சியினால் அடையமுடியாத ஒப்பற்ற பரையுடன் ஆராய்வதற்குரிய வாயுவின் அளவை அறிந்து சொல்லப் போனால் ஆகிவருகின்ற வாயு ஒரு நாளைக்கு ஐந்நூற்று முப்பத்தொன்பதாகக் குறைந்து வளமான பராசத்தியினிடம் இலயமடையும் சுவாச இயக்க காலத்தை நீடித்தால் ஆயுள் பெருக்கம் உண்டாகிறது என்கிறார்.

701. இருநிதி யாகிய எந்தை இடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே.

பொருள் : பெருஞ் செல்வமாகிய ஒளிமண்டலம் தாண்டி விளங்கும் சிவனிடத்து, செல்வமாகவுள்ள மூச்சுக் காற்று இயங்கும் தன்மையில் இருநூற்று முப்பத்தெட்டாகக் குறைந்து அது பிரணவத்தில் நடக்கும். நாதத்தை முதல் ஒலி வடிவம் என்றும் விந்துவை ஒலி முதல் எனவும் கூறுவர்.

702. எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற்று இருபத்து ஒன்பா னதுநாலாய்
எழுந்துடன் அங்கி இருந்தது இவ்வாறே.

பொருள் : மூலாதாரத்திலிருந்து எழுகின்ற சோதியுள் விளங்கும் பராசத்தியினிடம் சுழுமுனை வழிபாய்கின்ற மூச்சுக் காற்றின் இடத்தைச் சொன்னால் எழுநூற்று இருபத்தொன்பது நாடிகளிலும் கலந்துள்ளது. நான்கு இதழ்களையுடைய மூலாதாரத்திலுள்ள அக்கினியே இவ்வாறு சோதியாய் வெளிப்படுகிறது. (நாலாய் - பலவாறாய்)

703. ஆறது கால்கொண்டு இரதம் விளைத்திடும்
ஏழது கால்கொண்டு இரட்டி இறக்கிட
எட்டது கால்கொண்டு இடவகை ஒத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.

பொருள் : ஆறாவது கலையாகிய நிரோதினி சக்தியை நெற்றியின் மேற்பாகத்தில் தியானித்தால் புகைபோன்ற நிறம் விளையத் தொடங்கும். ஏழாவது கலையாகிய நாதகலை ஒளியை வியக்தமாகத் தெரிவித்துச் சந்திரகலையைப் பெருக்கிச் சாதகனை இருமடங்கு ஆனந்தத்தில் அழுந்தும்படி செய்து எட்டாவது இடமாகிய நாதாந்தத்தில் மனம் எண்ணுவதை விட்டு உணர்தல் என்ற நிலையில் ஒன்றிய போது ஒன்பதாவது நிலையாகிய சத்தி கலையில் உடலை இயக்கி வந்த பிராணவாயு அடங்கியது.

704. சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானும் தலைப்படும் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாம் சகமுகத்து
உந்தி சமாதி யுடையொளி யோகியே.

பொருள் : சந்திரன் சூரியன் ஆன்மாவாகிய மூன்றும் விளங்கும் நிமிர்ந்த சகஸ்ரதளத்தில், சந்திரகலை விளங்கும் இயல்பினை உலகில் உயிருடன் வாழும் போதே சிவஒளியைச் சிவஒளியுடன் பொருந்திச் சமாதிநிலை பெற்ற யோகியே சுழுமுனை உச்சியிலே உணர்ந்து உணர்ந்து சிமாந்தன்மை பெறுவான். (தற்பரன் - ஆன்மா, தாணு - துண்போன்று விளங்கும் சிவன்.)

705. அணங்குஅற்ற மாதல் அருஞ்சன நீவல்
வணங்குற்ற கல்வி மாஞானம் மிகுத்தல்
சிணுங்குற்ற வாயர் சித்திதூரம் கேட்டல்
நுணங்கல் திரோதல்கால் வேகத்து நுந்தலே.

பொருள் : ஆசை அழிதல், பந்து மித்திரர்களிடமிருந்து விலகியிருந்தல், பணிவைத்தரும் சிவ ஞானம் பதி ஞானம் வலுத்தல் சுருங்குதலை யுடைய வாயினராதல். அஃதாவது பேச்சுக் குறைதல். அனுக்கிரக நிக்கிரக சக்திபெறுதல். தூரத்தில் நடப்பவை கேட்டல், நுட்பமாய் மறைந்திருத்தல், காற்றை மேலே செலுத்துதல். (பிராண செயம் பெறுதல்) (சிணுங்குற்ற வாயர் - சித்தர்.)

706. மரணம் சரைவிடல் வண்பர காயம்
இரணம் சேர்பூமி இறந்தோர்க்கு அளித்தல்
அரணம் திருவுரு ஆதல்மூ ஏழாம்
கரன்உரு கேள்வி கணக்கறிந் தோனே.

பொருள் : இறப்பையும் மூப்பையும் கடத்தல், வளப்பமான பரகாயப் பிரவேசம் செய்யும் ஆற்றலைப் பெறுதல், பொன்னுலகத்தை இறந்தவர்க்கு அளிக்கும் வல்லமை பெறுதல், பாதுகாப்பான பிரணவதேகம் பெறுதல், மூண்டு எழுகின்ற சிவசூரியனைப் பற்றிய கேள்வி ஞானம் பெறுதல் (சூரியன் என்பது, சித்தர் வழக்கில் அறிவினைக் குறிக்கும்) இத்துணை தன்மைகளையும் யோகிய அறிந்தோன் ஆவான். யோகியர் பேறு கூறியவாறு. (சிறை - சரீரம், அரணன் - பரமசிவன்.)

707. ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகர்அறி வாறே.

பொருள் : கடல்சூழ்ந்த உலகத்தைச் சுற்ற வலமாக வந்து, கால் வருந்த தல யாத்திரை செய்தும் அடையும் பயன் ஒன்றும் இல்லை. அன்போடு இறைவனைக் கண்டு இன்பம் பெறுபவர் தலைவன் எங்கும் உள்ளான் என்று உணர்ந்து வழிபட்டுப் பயன் எய்துவர். (நகர் - திருக்கோவில்.)

708. மூல முதல்வேதா மால்அரன் முன்நிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாவித்த சத்தி பரைபரன் பாதமே.

பொருள் : மூலாதாரத்துக்கு மேல் சுவாதிட்டானத்தில் பிரமனும் மணிபூரகத்தில் திருமாலும் அநாகதத்தில் உருத்திரனும் விளங்க, அதற்கு மேல் நெற்றி முதல் சிரசுவரை வியாபகமுள்ள சிவாம்சமான சதாசிவனும், சதாசிவநிலைக்கு மேலுள்ள பரவிந்து பெருமை மிக்க பரநாதம் நாதந்தமும் கடந்து அருள்வழங்கும் சிவ சத்தியின் திருவடியாம்.

709. ஆதார யோகத்து அதிதே வொடும்சென்று
மீதான் தற்பரை மேவும் பரனொடு
மேதாதி ஈரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தம்மீ தானந்த யோகமே.

பொருள் : ஆதாரங்களுக்குரிய பிரமனாதி அதி தேவதையோரும் பொருந்திச் சென்று மேன்மையான பரை பொருந்தும் பரனோடு மேதை முதலாகப் பதினாறு கலைகளாகிய பிரசாத நெறியில் மேல்விளங்கும் ஒளியில், வாக்கும் மனமும் சிறந்து எண்ணமற்று நிற்கின்ற நிலையே ஆனந்த யோகமாம். (யோகம் - ஒடுக்கம்.)

710. மதியமும் ஞாயிறும் வரதுடன் கூடத்
துதிசெய் பவர்அவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே.

பொருள் : இடைபிங்கலை இணைந்துள்ள சுழுமுனை உச்சியில் சிவனைத் துதித்து வணங்குபவர் பழமையிலே தேவரானவர். பிராசாத நெறியில் முறைப்படி உண்மைப் பொருளை நாடிச் செல்லும் அவ் வடியார்களுக்கு நிலையான வீடு பேற்றை அளிக்கும் பரமனும் உடனின்று அருளுவான்.

711. கட்டவல் லார்கள் கரந்தெங்கும் தானாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
நட்டறி வார்க்கு நமனில்லை தானே.

பொருள் : பிராணனைக் கட்ட வல்லவர்கள் எங்கும் மறைந்து நின்று எவ்விடத்திலும் விளங்க வல்லவர்கள். தேன் மிகுந்த தாமரையாகிய சுவாதிட்டானம் மூலாதாரத்தில் சேர்க்கையை உண்டு பண்ணிப் பிரமரந்திரத்தில் மோதச் செய்து பொறியறிவு நீங்கிச் சுழு முனையில் நின்று அங்கு நடம்புரியும் சிவனை அறிந்திருப்பார்க்கு எமனில்லை. (பொட்டு-உச்சிக்குழி)

12. கலை நிலை

(கலைநிலை - கலை நிற்கும் நிலை. சந்திரகலை, சூரியகலை, அக்கினிகலை ஆகியவை உடம்பில் விளங்கும் முறை கூறப்பெறும் குருவருளால் சந்திர சூரிய கலைகளைச் சேர்த்து அக்கினிக்கலையில் சிவன் பொருந்தி நிற்கும் நிலையும் இப்பகுதியில் காண்க. சந்திரகலை அகரம் முதல் உன்மனிவரை பதினாறாகும். அக்கினி கலையாகிய சுழுமுனையில் சீவன் பொருந்தி யிருக்கும் போது பிராணன் இலயமடைந்து ஒளி மண்டலம் விளங்கும்.)

712. காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் விழிசெய்த கண்ணுற நோக்கிடில்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
காதல் வழிசெய்து காக்கலும் ஆமே.

பொருள் : காமத்துக்கே காரணமாய்ச் சுவாதிட்டானத்திலிருந்து வழி செய்து கொண்டிருந்த நெற்றிக் கண்ணையுடைய பெருமானை அன்பு செலுத்திக் கண்கள் இரண்டையும் சேர்த்து மேலே பார்த்தால் அன்பின்வழி கங்கை போன்ற ஒளிப்பிரவாகம் பெருகும். அவ்வாறு அன்பு செய்வதால் உடம்பில் பொருந்திய உயிரை அழியாது காக்கலுமாகும்.

இடைகலை பிங்கலை நாடிகளைக் கங்கை யென்றும் யமுனை யென்றும், சுழுமுனையை அந்தர் வாகினியான சரஸ்வதி என்றும் யோக நூல்கள் கூறும்.

713. காக்கலும் ஆகும் கரணங்கள் நான்கையும்
காக்கலும் ஆகும் கலைபதி னாறையும்
காக்கலும் ஆகும் கலந்தநல் வாயுவும்
காக்கலும் ஆகும் கருத்துற நில்லே.

பொருள் : மனம், புத்தி, சித்தம், அகங்காரமாகிய அந்தக்கரணங்கள் நான்கையும் பாச வழிச்சொல்லாமல், பதிவழிச்செலுத்திக் காத்தலுமாகும். அந்தக் கரணங்கள் நன்மை செய்வதால் சந்திரகலை பதினாறும் வியாபகம் பெறுமாறு காக்கலாம். பாச இயக்கத்துக்குக் காரணமான மனம் சிவ ஒளியைப் பற்றி நின்றபோது பிராணனும் சிவ ஒளியில் சென்று லயமடையும், ஆகவே உன்னுடைய கருத்தை அகண்டமான ஆகாயத்தில் பதித்து நிற்பாயாக.

714. நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
அலைஅற வாகும் வழியிது வாமே.

பொருள் : சுழுமுனையில் செல்லும் வாயு நிலைபெற நின்றது, அது காற்றில்லாத இடத்திலுள்ள விளக்கொளி போலும் அசையாமல் மலைபோலும் நின்றது. சந்திரகலை பதினாறில் சிவசத்தி பொருந்தியுள்ளதை அறியில் மனம் அலையாது நிற்கும் வழி இதுவேயாகும். மலைவு அறவாகும் என்பதும் பாடம். (மலைவு - மயக்கம்)

715. புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியும்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றில் ஏறியே வீற்றிருந் தானே.

பொருள் : எங்கும் நிறைந்து நிற்கும் பூத நாயகனை, சிறு வழிகளாகிய நாடிகளில் மாறிச் செல்லாமல் பிராணன் நடு நாடியில் ஒன்றி நிற்க வாய்த்தபோது, கிரணங்களாகிய சடையோடு கூடிய அச் சங்கரநாதன் விந்து மண்டலமாகிய இடபத்தில் ஏறி அமர்ந்திருந்தான். (சடை - திருவாதிரைநாள்; தாங்கும் இடமுமாம்)

716. இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு வொளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடும் சாதகன் ஆமே.

பொருள் : சமாதியில் பொருந்தியிருக்கும் காலத்தைச் சாதகர் உணரார். பெருக இருக்கின்ற காலப் பெருமையை எதிர்நோக்கி சுழுமுனையில் ஒன்று பட்டிருக்கின்ற பிராணன் ஒளி பொருந்திய பரவொளியாகிய சகஸ்ரதளத்தைப் பொருந்த செருக்கின்றி இருப்பவன் சாதகனாம்.

717. சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே.

பொருள் : இவ் வண்ணம் சாதகமான அத் தன்மையை ஆராய்ந்து பெரிய தவமான வழிபாட்டை நீங்கள் செய்யுங்கள். அவ்வாறு செய்து பிராணனைக் கபாலத்திலுள்ள ஆயிரஇதழ்த் தாமரையின் உள்ளாகப் புகச் செலுத்தினால் இரசவாதம் செய்வோர் உபயோகிக்கும் வாத குளிகை போன்று உடலில் விளைந்துள்ள குற்றங்களை அகற்றி விடும். செம்புபொன்னாதல் (வேதகம்), போல ஆவியும் சிவனாக விளங்கும்.

718. கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉன் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானே பங்கய மாகத்
தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே.

பொருள் : அங்ஙனம் விளைந்து கிடந்த பயன் இம்மை இன்பம், மறுமை இன்பம், வீடாகிய மூன்றாம். உள்நாடியான சுழுமுனையை நோக்கிச் சென்ற சீவனைச் சகஸ்ர தளத்தில் பொருந்திய அச்சோதி மூலமாகிய சிவத்துடன் தொடர்ந்து அடங்கியதாம்.

719. தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்துஎம் உள்ளே இருந்திடும்
வானோர் உலகுஈன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகிச் சிவாலயம் ஆகுமே.

பொருள் : இவ்வாறு தனக்கு ஓர் ஆதாரமின்றித் தான் பிறவற்றுக்கு ஆதாரமாயுள்ள பராசக்தி இவ்வுடலில் வழி செய்து கொண்டு எமக்குள்ளாகவே இருப்பாள். தேவர் உலகையும் பெற்ற தாயாகிய பராசக்தி விரும்பி இடங் கொள்ள இன்பத்தை உண்டாக்கும் ஒளியில் அமிழ்ந்து திளைத்த சிவயோகியின் உடம்பு சிவாலயமாகும். சாதகனது உடம்பு சிவாலயமாகும்.

720. திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலும் ஆமே.

பொருள் : விளங்கும் வண்ணம் நிறைந்து நிற்கும் பிராணன் ஒடுங்கும் முறையை யாரும் அறிய வில்லை. பிராணன் ஒடுங்கும் முறையை அறிந்தபின் வாயு இலயமடைந்த ஆகாய மண்டலத்தில் விளங்கலாம். பிராணவாயுவை அடக்கும் முறையினை அறிந்தபின் சிவபெருமான் அவ்வாயுவின் மேலதாய்த் திகழ்ந்து விளங்குவான்.

729. நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே.

பொருள் : நூறு நாடிகளும் அறுபது தாத்துவிகங்களும் ஆறத்து வாவும் பிங்கலையைப் பற்றி இயங்கியும், அவை  இடைகலையைப் பற்றி இயங்கியும் வர அவை சாதனையால் தூய்மை பெற்று மாறி அமைய, சாதகர் இவற்றைக் கடந்து மேல் நிலைக்குச் செல்வர்.  (ஈற்றடிக்கு வரையறுக்கப்பட்ட நூறு ஆண்டினையும் மாறும்படி நீண்டநாள் எய்துவர் என்று பொருள் கொள்வாரும் உளர்)

730. சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியார் னத்திலே வாத்தியம் கேட்கலாம்
தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சென்னோம் சதாநந்தி ஆணையே.

பொருள் : சந்திர கலையைச் சூரிய கலையில் பொருந்துமாறு சாதனை செய்தால் மத்தியானத்தில் பிரணவகோஷம் கேட்கலாம். இன்பத்தைத் தரும் சிவ நடனத்தைக்கண்டு களிக்கலாம். இறைவன் மேல் ஆணையிட்டு இதனைச் சொன்னோம். (மத்தியத்தானம் மத்தியானம் என்றாயிற்று.)

731. திறத்திறம் விந்துத் திகழும் அகாரம்
உறப்பெற வேநினைத்து ஓதும் சகாரம்
மறிப்பது மந்திரம் மன்னிய நாதம்
அறப்பெற யோகிக்கு அறநெறி யாமே.

பொருள் : மிகத் தூய்மையான ஒளியுடன் கூடிய அகாரம் பொருந்தும்படி நினைந்து சாரத்தை ஓதுங்கள். அவ்வாறு அம்சம் என்று மனனம் செய்வதே மந்திரமாகும். அவ்வாறு முழுமையாக எண்ணிப் பெறும் நாதமே யோகிக்கு வழிபாட்டுக்குரிய மூர்த்தியாகும். (மறித்தல் - ஸ்மரித்தல் அல்லது மனனம் செய்தல். இதுவே அம்சவித்தை என்றும் அசபை என்று பெயர் பெறும்.)

732. உந்திச் சுழியின் உடனே பிராணனைச்
சிந்தித்து எழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித்து எழுப்பச் சிவன்அவன் ஆமே.

பொருள் : உந்திக் கமலத்திலுள்ள பிராணனை (சூரியனை) உடனே, அம்சம் என்ற மந்திரப் பொருளான சிவத்தை நினைத்து எழுப்பி முன்புறம் புருவ நடுவில் தியானித்து நிறுத்தி, பின் மேலிருந்து கீழே நினைந்து அபானனை எழுப்பச் சிவனாவன். (முகடு-உச்சித்தொளை என்பர் சிலர்.)

733. மாறா மலக்குதம் தன்மேல் இருவிரல்
கூறா இலிங்கத்தின் கீயே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசம் கொண்டது காணுமே.

பொருள் : நீங்காத மலம் பொருந்திய எருவாய்க்கு இரண்டு விரற்கடை மேலும், வாயிட்டுச் சொல்லமுடியாத பாலுணர்வைத் தரும் குறிக்கும் கீழேயும் உள்ள மூலாதாரத்தில் தியானம் செய்யுங்கள். உடம்பையே வழியாகக் கொண்டு சீவர்களை நடத்தும் சிவம் அங்குள்ளது. சம்பிரதாயத்தால் உணர்த்தப்படும் உபதேசத்தைப் பெற்று முன் கூறியவற்றைக் காணுங்கள்.

734. நீல நிறவடை நேரிழை யாளொடும்
சாலவும் புல்லிச் சதமென்று இருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனும் ஆவர் பராநந்தி ஆணையே.

பொருள் : நீலவொளியில் விளங்குகின்ற சத்தியுடன் முழுவதும் பொருந்தி, அவளையே அடைக்கலம் என்று இருப்பார்க்கு உலகோர் காணும் வகையில் நரைதிரை மாறி இளமைத் தோற்றம் அமையும் இது சிவனது ஆணையாகும்.

735. அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டம் கறுத்த கபாலியும் ஆமே.

பொருள் : கருவாய் செயலற்று இருந்தால் மனிதனும் எவ்வித இழப்பும் இல்லை. உடம்பு மெலிவால் சத்துவகுணம் மேலிட்டுப் பிராணனைச் செயிக்க முடியும். உணவு குறையின் மேல் நிற்றலுக்கு வழி பலவுண்டு யோகநெறி நிற்போர் நீலகண்டப் பெருமானாவர்.

736. பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்து அடுத்து ஏகிடல்
வண்டுஇச் சிக்கும் மலர்க்குழல் மாதரார்
கண்டுஇச் சிக்கும் காயமும் ஆமே.

பொருள் : உடம்பில் பொருந்தியுள்ள மூலாதாரச் சக்கரத்திலுள்ள காம வாயுவைச் சிரசின்மேல் சகஸ்ரதளத்துக்கு அனுப்பும் பயிற்சியைச் செய்துவந்தால் வண்டுகள் விரும்பும் நறுமணமுள்ள பூக்களை அணிந்துள்ள பெண்கள் பார்த்து விரும்பும் அழகிய வடிவைப் பெறுவர்.

737. சுழலும் பெரும் கூற்றுத்  தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள்ள அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளும் தெற்றுளும் நிற்றலும் ஆமே.

பொருள் : காலத்தை உருண்டு ஓடச் செய்கின்ற எமனை முன்பு வெகுண்டு பிரகாசம் பொருந்திய புணர்ச்சியில் மூலாதாரத்திலுள்ள அதோமுகச் சக்கரத்தில் விளங்கும் சிவனது ஒலிக்கின்ற திருவடியைக் கண்டால் அப்பொழுதே இவ்வுலகிலும் மேல் உலகிலும் வாழலாம். நெற்றி நடுவில் காணப்படும் முக்கோணம் தேர் போல் காணப்படுதலால் இரதம் என்று குறிக்கப்பட்டதாகச் சிலர் பொருள் கொள்வர்.

738. நான்கொண்ட வன்னியும் நாலு கலைஏழும்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே.

பொருள் : நான் தரிசித்த அக்கினி கலையாகிய சிவம் சந்திரன் சூரியன் அக்கினி தாரகையாகிய நான்கு கலைகளிலும், ஏழு ஆதாரங்களலும் தான் கண்ட பிராணனாய் உடல் முழுவதும் உடலில் வெளிப்பட்ட உணர்வே அமுதமாக, சீவன் இன்பம் பெற்று வளர்கின்ற முறையில் துணைபுரியும்.

739. ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீர்கொள் நெல்லில் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப் பலகோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்கே.

பொருள் : ஆகுஞ்சன முத்திரையில் வெளிப்படும் வேத சத்திரை நீ அன்போடு ஏற்றுக்கொண்டு வேளாண்மையில் நெல்லினை விதைப் பண்டமாகவும் உணவுப் பண்டமாகவும் சேமித்து வைப்பது போல் அளவுற்ற பயிற்சியால் இருளுக்கும் ஒளிக்கும் நடக்கும் போரில் இருள் கீழ்ப் படுத்தப்பட்டு ஒளிச் சேமிப்பு உண்டாய் அங்கே ஒடுங்குவாயாக. ஊழ் கொண்ட மந்திரம். அசாபமந்திரம். சனவேதசத்தி - திரோதாயி அவர்கள், ஆகும்+சனவே+சத்தி என்று பிரிப்பர்.

14. கால சக்கரம்

(காலம் சக்கரம் போல முடிவின்றி மாறி மாறி வருவதாகலின் கால சக்கரம் எனப்பட்டது. மக்களின் கால எல்லையும் அதனைக் கடக்கும் உபாயமும் இங்குக் கூறப்பெறும்.)

740. மதிவட்ட மாக வரைஐந்து நாடி
இதுவிட்டுஇங்கு ஈராது அமர்ந்த அதனால்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்
அதுவிட்டுப் போமாறும் ஆயலுற் றேனே.

பொருள் : சந்திர மண்டலத்திலுள்ள வியாபினி முதலிய ஐந்து கலைகளின் இயல்பை அறிந்து, இவற்றை நீங்கிச் சிரசின் மேல் துவாதசாந்தப் பெருவெளியில் அமர்ந்தமையால் சிவ சத்தியின் சங்கற்பத்தால் அருளும் வகையும், அக்கால சத்தியின் ஆளுகையை விட்டுக் கடக்கும் நிலையையும் ஆராயலுற்றேன். (மாறும்+அது என்பதை மாறும்+மது எனப் பிரித்து, மது-அமுதம் என்று பொருள் கூறுவாரும் உளர்.)

741. உற்றறிவு ஐந்தும் உணர்ந்தறிவு ஆறுஏழும்
கற்றறிவு எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றுஅழி யாது அழிகின்ற வாறே.

பொருள் : சத்தம் முதலாகிய ஐம்புலன்களைப் பொருந்தி அறியும் அறிவும், ஐவகைக் கருவிபற்றிய அறிவை வேறாக இருந்து அறியும் ஆறாவது அறிவும், பொருள்களின் நலன் தீங்குகளைப் பற்றிய ஆராச்சியுடைய ஏழாவதாகவுள்ள அறிவும், கல்வியினால் பெற்ற எட்டாதவராக உள்ள அறிவும், அவ் எட்டுடன் தம் அனுபவம் பற்றிய அறிவும் சேர்ந்த போது உள்ள ஒன்பதாவது அறிவும், ஒன்பது வகை அறிவுக்குக் காரணம் சிவசத்தி என்றறிந்து அதனைப் பிரியாத நிற்கும் பதிஞானமாகிய பத்தாவது அறிவுமாகிய பலவகையான அறிவன் தார தம்மியத்தை அறிந்து ஒழுகாது நிற்பதால் காலம் அறுதியிட்டுப் பட்டு மக்கள் அழிகின்றனர்.

742. அழிகின்ற ஆண்டுஅவை ஐ அஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றுஎன்பது ஆகும்
கழிகின்ற காலறு பத்திரண்டு என்பது
எழுகின்ற ஈர்ஐம்பது எண்ணற்று இருந்தே.

பொருள் : மக்கள் அழிகின்ற காலம் இருபத்தைந்து ஆண்டு முதல் இருபத்தெட்டு ஆண்டுவரை ஓர்எல்லையும், சொல்லப்படுகின்ற முப்பது முதல் முப்பத்துமூன்றுவரை ஓர் எல்லையும் ஆகும். பின் செல்கின்ற காலம் அறுபது முதல் அறுபத்திரண்டு வரை ஓர் எல்லை என்றபடி. இனி நூறாண்டுக்கு ஓர் எல்லையும் அதற்கு மேல் வருவனவற்றுக்கு எல்லையும் இல்லையாம். மக்கள் ஆயுளில் நான்கு கண்டங்கள் உள்ளன.

743. திருந்து தினம் தினத்தி னொடு நின்று
இருந்தறி நாளொன்று இரண்டுஎட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்குஅறிந்து ஓங்கி
வருந்துதல் அன்றி மனைபுக லாமே.

பொருள் : திருந்திய நாளாகிய பிறந்த நாளும், அதனோடு பொருந்தி நிற்கின்ற ஜென்ம நட்சத்திரம் கூடிய நாள் ஒன்றும், பின் ஜென்ம நட்சத்திர தினத்தோடு பதினாறு நாள்கள் கூட்டப் பதினேழாம் நாளும், ஆறு நாள்கள் கூட்ட ஏழாம் நாளும் ஆகியவை தவிர, பொருந்திய நாள்களை ஆராய்ந்து அறிந்து வருத்தமின்றி யோகப் பயிற்சி தொடங்குவதற்குரிய நாளாகும்.

744. மனைபுகு வீர்உம் அகத்திடை நாடி
எனஇரு பத்தஞ்சும் ஈராறு அதனால்
தனைஅறிந்து ஏறட்டுத் தற்குறி யாறு
வினை அறி யாறு விளங்கிய நாலே.

பொருள் : உம்முடைய உள்ளத்தின்கண் விரும்பி ஞானயோகம் செய்யப் புகுவீர் ! இருபத்தைந்து தத்துவங்களும் பன்னிரு இராசியில் செல்லும் சூரியனாகிய அறிவால் தன் உண்மையை அறிந்து பக்குவப்பட்டு, சிவன் விளங்கும் ஆறு ஆதாரங்கள் கிரியை செய்யும் வழிகளென அறிந்து அவற்றைக் கடந்தபோது சிவம் சத்தி நாதம் விந்துவாகிய நான்கே விளங்குமாம்.

745. நாலும் கடந்தது நால்வரும் நால்ஐஞ்சு
பாலம் கடந்தது பத்துப் பதின் அஞ்சு
கோலம் கடந்த குணத்தண்டு மூவிரண்டு
ஆலம் கடந்ததொன்று ஆர்அறி வாரே.

பொருள் : உருவங்கள் நான்கையும் கடந்து அருவுருவம் அருவம் ஆகிய ஒன்பது வடிவங்களாக விளங்கி, நெற்றியைக் கடந்து இருபத்தைந்து ஆன்ம தத்துவங்களால் விளங்கும் குறியைக் கடந்ததாய், அவற்றில் பொருந்தும் குண கஞ்சுகமாய், நச்சுத் தன்மையுடைய வினையை ஈட்டுகின்ற ஆறு ஆதாரங்களைத்தாண்டிய ஆன்மாவாகிய சூரியனை யாரே அறிய வல்லார்.

746. ஆறும் இருபதுக்கு ஐ ஐஞ்சு மூன்றுக்கும்
தேறும் இரண்டும் இருபத்தொடு ஆறுஇவை
கூறும் மதிஒன் றினுக்குஇரு பத்தேழு
வேறு பதியங்கள் நாள்விதித் தானே.

பொருள் : ஆறு ஆதாரங்களில் நாற்பத்தெட்டு இலக்கங்கள் அமைந்த பதுமங்களை அறியுங்கள் இரண்டாகிய சூரியன் இருபத்தாறால் அமைவதாக உள்ளது என்று கூறும் அகரமாகிய சந்திர வட்டம் இருபத்தேழாகும். இனிவேறு வகையாகவும் நாட்கணக்கை விதித்துள்ளான்.

747. விதித்த இருபத்தெட் டொடுமூன்று அறையாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தறி பத்தெட்டுப் பாரா திகள்நால்
உதித்தறி மூன்றிரண்டு ஒன்றில் முறையே.

பொருள் : முறையான இருபத்தெட்டு இலக்கத்தை அக்கினி சூரியன் சந்திரன் ஆகிய மூன்று கண்டங்களில் காணுங்கள். அதில் முப்பத்திமூன்று தத்துவங்களையும் தொகுத்து அறியுங்கள். பத்துஎட்டு என்பவற்றைப் பூமிமுதலாகப் பொருந்தி அறிந்து கொள்ளுங்கள். அவை நான்கு மூன்று இரண்டு ஒன்றாகவுள்ள முறைமையை அறியுங்கள். (இவ்விருபாடல்களிலும் கூறிய பயிற்சி முறையை ஆசிரியர் வாய் கேட்டறிக.)

748. முறைமுறை ஆய்ந்து முயன்றில ராகில்
இறையிறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரணம் மற்றொன்றும் இல்லை
பறையறை யாது பணிந்து முடியே.

பொருள் : உபதேச முறைப்படி முயற்சி செய்யாவிடில், இறைவனோடு தொடர்பு கொள்ளுதல் யாவர்க்கும் அருமையாம். மறைவாகச் சொல்லியது உபதேசப்படி பெற வேண்டும். என்பதே யன்றி வேறொன்றில்லை. தம்பட்டம் அடிக்காமல் வணங்கிப் பெற்றுக் கொள்வாயாக ! பயிற்சி முறையைக் குருவினிடம் உபதேசக் கிரமத்தில் பெறவேண்டும். (பறையறையாது - வெளிப்படுத்தாமல்.)

749. முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சல் இருக்க விளக்குஎரி கொண்டு
அடிந்து அனல் மூளக் கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலும் ஆமே.

பொருள் : மறைத்து வைத்தமை அறியாமல் முயற்சி செய்யும் அறிவிலிகள் நிமிர்ந்த சகஸ்ரதளமாகிய அகலைக் கொண்டு ஒளியைப் பெற்று, இருளைக் கடிந்து சிந்தனையாகிய தைலத்தை விட்டுச் சுழுமுனையைத் தூண்டிப் பிரகாசப் படுத்தும் திறமையைக் குரு காட்டிய முறையில் பெறுவாராயின் அழிகின்ற உலகினில் அழியாது இருக்கலாம். (இடிஞ்சில்-அகல், சகஸ்ரதளம்)

750. நண்ணு சிறுவிரல் நாணாக மூன்றுக்கும்
பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடும்
சென்னியில் மூன்றுக்கும் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே.

பொருள் : பொருந்தும் சிறுவிரலை நாணாக, ஒரு கையிலுள்ள மூன்று விரல்களோடு மற்றொரு கையிலுள்ள மூன்று விரல்களையும் கண்களிலும் புருவத்திலும் நெறித்துப்பிடிக்கின் பிராணன் அபானன் ஆகியவை மார்பிடை ஒத்து நிற்கும். அதனால் சிரசில் அக்கினி சூரியன் சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களும் ஒத்தி நிலைபெறும். அங்குக் காணும் ஒளியில் சித்திரம் போல் அசையாது நினைந்து நில்லுங்கள்.

751. ஓவிய மான உணர்வை அறிமின்கள்
பாவிகள் இத்தின் பயன்அறி வார்இல்லை
தீவிலை யாம்உடல் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.

பொருள் : அழகான உணர்வை அறிந்து கொள்ளுங்கள். பாவிகள் இதன் பயனை அறிகின்றார் இல்லை. தீவினைக்குக் காரணமான இவ்வுடலில் மூன்று மண்டலங்களும் சுழுமுனை நாடியில் பொருந்திச் சகஸ்ரதளத்தில் விளங்கி நிற்கும். (இத்தின்-இதன்)

752. தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டலம் மூன்றும் மகிழ்ந்துடல் ஒத்திடும்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே.

பொருள் : வீணாத் தண்டமாகிய முதுகு தண்டோடு பிணைந்து சென்று பிரமசந்திரத்தை அடைந்த யோகிக்குச் சோம சூரிய அக்கினியாகிய மண்டலங்கள் மூன்றும் ஒத்து உடற்கண் மகிழும்படியாகப் பொருந்தி யிருக்கும், இவ் உண்மையைக் கண்டவர்களே மெய்ஞ்ஞானிகள். இதனை அறியாதார் வினையால் விளைந்த உடம்பு அழியுமாறு மாறுபட்டுக் கெடுகின்றனர்.

753. பிணங்கி அழித்திடும் பேறது கேள்நீ
அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே.

பொருள் : நீ மாறுபட்டு உடம்பு அழியும் பயனைக் கேட்பாயாக ! சூரியனாகிய அறிவு குண்டலியின் வழி காம காரியம் செய்யின் வணங்குதற்குரிய வாழ்வு கெட்டு, நாய் மலம் உண்ணுவதில் விருப்பம் கொள்வது போலக் காமச் செயலில் விருப்பம் கொள்வர். தம் உடல் நாயுண்ணச் சுமந்து திரிந்த தன்மையராய் மாள்வர் என்பது வேறொருபொருள்.

754. சுழல்கின்ற வாறுஇன் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடும் தன்னுள் இலாமல்
கழல்கண்டு போம்வழி காணவீல் லாற்குக்
குழல்வழி நின்றிடும் கூத்தனும் ஆமே.

பொருள் : காம வயப்பட்டு அலைவதனால் சகஸ்ரதளத்துக்கு மேல் விளங்கும் திருவடியினை உணர முடியவில்லை. தன் ஒளியில், மேல் நில்லாமல் கீழேயுள்ள அக்கினி மண்டலத்தினால் அழிகின்றனர். திருவடியின் சிலம்பு ஓசையை அறிந்து அதன்வழியாகச் செல்பவனுக்கு சுழுமுனை நாடியில் கூத்தப் பெருமான் விளங்குவான்.

755. கூத்தன் குறியில் குணம்பல கண்டவர்
சாத்திரந் தன்னைத்  தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந்து உள்ளே அனுபோக நோக்கிடில்
ஆத்தனு மாகி அலர்ந்திரும் ஒன்றே.

பொருள் : நாத சம்மியம் செய்வதால் விளையும் பயன் பலவற்றையும் கண்டவர் மெய்ந்நூற் பொருளை உணர்ந்து அனுபவிப்பர். அவ்விதமாக உள்ளே தியானம் செய்திருப்பின் அவன் விருப்பமுடையவனாகிச் சாதகரும் தானும் வேறின்றி ஏகனாய் விளங்குவான்.

756. ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும்
சென்றிடு முப்பதும் சேர இருந்திடில்
குன்றிடைப் பொன்திகழ் கூத்தனும் ஆமே.

பொருள் : முன்மந்திரத்தில் கூறியவாறு இறைவனுடன் பிரிப்பின்றிப் பொருந்தி நிற்பவரது ஆயுள் வளர்வதோடு அழிவும் இல்லை என்பதைக் கேட்பாயாக ! உலக நலம் கொண்ட பூரக, ரேசக, கும்பகமாகியவற்றால் வாழ்நாள் குறையும் அவ்வாறு பூரக ரேசக கும்பகமற்று முப்பது நாழிகை சமாதி செய்பவனின் சகஸ்ரதளத்திலுள்ள பொன் ஒளியில் கூத்தன் விளங்குவான். மெய்-தத்துவம்.

757. கூத்தவன் ஒன்றிடும் கூர்மை அறிந்தங்கே
ஏததுவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடின்
சாத்திட நூறு தலைப்பெய்ய லாமே.

பொருள் : கூத்தை உடலில் நடத்தும் பிராணன் சூக்குமமாக அடங்கும் நிலையை அறிந்து, அவ்விடத்தில் அகர உகரத்தைப் பொருத்தி அட்டதள கமலத்தை விளங்கச் செய்வர். அட்ட தளகமலத்தில் விளங்கும் சிவனைக் கண்டு இன்புற்றிருப்பின் எடுத்த உடம்பில் சொல்லப் பெற்ற நூறாண்டுகாலம் வாழலாம்.

758. சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரம் கட்டுறக் காண்பார்கள்
சோத்துடல் ஆயிரம் சேர இருந்தவர்
மூத்துடன் கோடி யுகமது வாமே.

பொருள் : சொல்லப் பெற்ற நூறாண்டு கூடியவர், இவ்வுடலையே ஆயிரம் ஆண்டுகட்குக் குலையாதவண்ணம் காப்பார்கள். இவ்வண்ணம் உடம்போடு கூடி ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர் பலயுகம் அறிவால் முதிர்ந்து வாழலாம். (மூத்து-அறிவில் முதிர்ந்து ஊழி - யுகமுடிவு; உலகமுடிவு)

759. உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று
அகங்கோடி கண்டுள் அயர்வறக் காண்பார்கள்
சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்கு
உகங்கோடி கண்டங்கு உயர்உறு வாரே.

பொருள் : அங்ஙனம் பல நாட்களைக் கண்டு தளர்ச்சி யின்றி இருந்து மனத்தால் முடிந்த பொருளாகிய சிவத்தை எண்ணி இடையறாது தியானிப்பவர் சிவம் என்றும் தான் என்றும் இரண்டாக அறியாமல் ஏகமாய் உணர்ந்து அங்கே உறைந்து அங்கே நீண்ட காலம் வாழ்ந்து உயர்வினை அடைவார். சிவங்கோடி - சிவமே முடிந்த இடமாக.

760. உயருறு வார்உல கத்தொடும் கூடிப்
பயனுறு வார்பலர் தாம்அறி யாமல்
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமல்
கயலுறு கண்ணியைக் காணகி லாரே.

பொருள் : இங்ஙனம் சிவமாந்தன்மை எய்தி உயர்ந்தவரே உலகத்தோடும் கூடிப் பயனை அடைந்தவர் ஆவர். பலர் இவ் உண்மையை அறிந்துகொள்ள மாட்டாமையால்  கன்மங்களை மேலும் மேலும் ஈட்டுவாராயினர். சிலர் இத்தகைய பேற்றை அடைய வேண்டு மென்ற விருப்பம் இல்லாமையால் மீன் போன்று எப்போதும் இமைக்காத கண்ணினையுடைய பராசத்தியை அறியாதவராயினர்.

761. காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
நாணகி லாதார் நயம்பேசி விடுவர்கள்
காணகி லாதார் கழிந்த பொருளெலாம்
காணகி லாமல் கழிக்கின்ற வாறே.

பொருள் : பரையொளியைப் பெறாதவர் பிறவிப்பயன் எய்தாமல் வீணேகழிவர். வெட்கம் இலாதவர் அனுபவமின்றிசசாத்திர நயங்களைப் பேசுவர். பரையொளியைப் பெறாதார் தத்துவப்  பொருள் அனைத்தும் காண முடியாமையால் சேவை செய்யாமல் விலகி விடுகின்றனர்.

762. கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலும் ஆகும்
கழிகின்ற உள்ளே கருத்துற நோக்கில்
கழியாத அப்பொருள் காணலும் ஆமே.

பொருள் : பந்தப் படுத்தும் உலகப்பொருளைப் புறக் கண்ணால் காணாதவர் நீங்குகின்ற அப்பொருளின் தன்மையை அகக் கண்ணால் அறியமுடியும். நீங்குகின்ற பொருளின் உள்ளே மன ஒருமைப்பாட்டுடன் பார்த்தால் எப்பொரு ளிலும் இருந்து நீங்காத சிவனைத் தரிசிக்கவும் கூடும் (கழிகின்ற பொருள் சீவன்; கழியாத பொருள் சிவன்)

763. கண்ணன் பிறப்பிலி காண்நந்தி யாய்உள்ளே
எண்ணும் திசையுடன் ஏகாந்தன் ஆயிடும்
திண்ணென்று இருக்கும் சிவகதியா நிற்கும்
நண்ணும் பதம்இது நாடவல் லார்கட்கே.

பொருள் : முக்கண்ணை யுடையவனும் பிறப்பில்லாதவனும் குருவானவனுமாகிய நந்தியெம் பெருமானை உயிரின் உள்ளாக ஆராய்ந்து காண்க. எண்ணப்பட்ட  பத்துத் திக்குகளில் இருப்பதோடு தனித்தும் உள்ளது புலப்படும். உறுதியைத் தரும் சிவகதி கிட்டு ஆராயவல்ல யோகியர்க்கு அடையும் பயன் இதுவேயாகும். (சிவன்நிலை - சிவனுக்கு அடிமையாம் நிலை. முக்கண்ணன்; அன்பு அறிவு ஆற்றல்கள் இயல்பாக விளங்கும் சிவன் நந்தி - சிவபெருமான்.)

764. நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி  யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கள் கூறலும் ஆமே.

பொருள் : இவ் வண்ணம் நந்தி யெம் பெருமானை அறிய வல்லார்க்கு ஆயுள் எல்லை அகன்றுவிடுவதால் அழிவில்லை. அறியல்ல வர் மக்களின் தலைவராவர். ஆராய்ச்சி செய்பவர் கண்ட உண்மை இதுவாகும். பெருமானைக் கூட வேண்டுமென்ற விருப்புடையோர்க்கு இவ்வுண்மையைச் சொல்லுதலும் ஆகும்.

765. கூறும் பொருளிது அகார உகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறும் மகாரம் குழல்வழி ஓடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே.

பொருள் : தகுதியுள்ள சீடருக்கு உணர்த்த வேண்டிய பொருள் அகார உகாரமாம் தெளியும் அகார உகாரங்கள் மனத்துள் நிலைபெற்றால், உணர்த்தும் மகாரம் சுழுமுனையாகிய குழலின் வழியே உயரச்சென்று நாத மாக அமைய மாயையின் காரியமான ஆறு ஆதாரங்களும் சேட்டையற்றுச் சிவமும் விளங்கித் தோன்றும்.

766. அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு
அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன்இவன் ஆகுமே.

பொருள் : சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் இடத்தை யாரும் அறிய மாட்டார். அப்பெருமான் ஓசை ஒளி மயமாய் எழுந்தருளி யிருக்கும் இடத்தை உணர்வார்க்கு அவன் உள்ளத்தை விட்டு அகலாது விளங்குவான். அவ்வாறு அவனைக் காணில் சிவமேயாவர்.

767. அவன்இவன் ஆகும் பரிசுஅறி வார்இல்லை
அவன்இவன் ஆகும் பரிசது கேள்நீ
அவன்இவன் ஓசை ஒளியினுள் ஒன்றிடும்
அவன்இவன் வட்ட மதாகிநின் றானே.

பொருள் : சிவன் தானாகும் தன்மையை அறிவார் யாரும் இல்லை. அவ்வாறு சிவமாகும் தன்மையை நீ கேட்பாயாக. சிவன் ஆன்மாவின் சூக்கும வாக்கிலும் சூக்கும ஒளியிலும் பொருந்தும். சிவன் இவனது ஆகாயக்கூற்றில் விளங்குவான். சிவன் சீவனது ஒலி ஒளியினுள் பொருந்தி யிருப்பான்.

768. வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடம் சேர அறிகிலீர்
ஒட்டி இருந்துள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே.

பொருள் : ஆதாரச் சக்கரங்களாகிய வட்டங்கள் ஏழும் உம்முள்ளே மலரும். அங்கு மேன்மை உடையவனாகிய சிவன் இருக்கும் இடத்தை அடைய அறியீர்கள். உபாயத்தினால் சிவனுடன் பொருந்தி நிற்க, கரும்பின் கட்டி போன்ற இன்பம் இருக்கும் இடத்தை நீவரும் அறியலாம்.

769. காணலும் ஆகும் பிரமன் அரியென்று
காணலும் ஆகும் கறைக்கண்டன் ஈசனைக்
காணலும் ஆகும் சதாசிவ சத்தியும்
காணலும் ஆகும் கலந்துடன் வைத்ததே.

பொருள் : முன் மந்திரத்தில் கண்ட முறையால் உள்ளே ஆதார மலர்களில் பிரமன் என்றும் திருமால் என்றும் காணலாம். நீலகண்டன் மகேசுவரன் ஆகியோரையும் அவ்வாறே காணவும் கூடும். இனி சதாசிவ சத்தியையும் காணலாம். உன்னுடைய உயிரிலும் உடம்பிலும் இக்கடவுளர் எல்லாம் பொருந்தியுள்ளதைக் காணலாம்.

15. ஆயுள் பரீட்சை

(ஆயுள் பரீட்சை-வாழ்நாளை அறிவதற்குரிய தேர்வு அஃதாவது, பிராணன் இயக்கத்தை அறிந்து ஆயுட்கால எல்லையை முடிவு செய்த.ஞூ பிராண இயக்கம் நீண்டு செல்லுமாயின் ஆயுள் குறையும். குறைந்து செல்லுமாயின் ஆயுள் நீளும். பிராண சேமிப்பு ஆயுள் நீடிப்புக்கு இன்றியமையாதது என்க.)

770. வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தமம் மிக்கிடில் ஓராறு திங்களாம்
அத்தம் மிகுத்திட்டு இரட்டியது ஆயிடில்
நித்தல் உயிர்க்குஒரு திங்களில் ஓசையே.

பொருள் : தலையில் அமைத்த கை பருத்துமின்றிச் சிறுத்துமின்றி அனலாய்த் தோன்றினால் நன்மையாம். பருத்துத் தோன்றினால் ஆறு மாதங்களில் இறப்பு உண்டாகும். கையானது இரண்டு பங்கு பருத்துத் தோன்றினால் எந்நாளும் ஒரு மாதத்துக்குள் இறப்பு உண்டாகும். பிராணனுக்கு ஓசை உண்டாதலின் பிராணனை ஓசை என்றே கூறினார். உயிர்ப்ப ஓசையின் அளவைச் சிலர் குறிக்கின்றனர்.

771. ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை உணர்ந்த உணர்வுஇது வாமே.

பொருள் : உள்ளத்தில் உண்டாகும் சூக்குமை முதலிய வாக்குகள் ஈசனோடு ஒப்பானவையாகும். நாதத்தைக் கடந்தவர் ஈசனை நினைந்து நாதாந்தத்தில் இருப்பர். நாதாந்தத்தில் இருப்பவர் நெஞ்சில் ஈசனும் ஓசையால் உணர்ந்த உணர்வாக விளங்குவான். (ஓசை - உயிர்ப்பு; இறந்தவர் - உயிர்ப்பை அடக்கியவர். ஓசை இறந்தவர் (மனம் அடங்கப் பெற்றவர்).

772. ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமேல் உறைகின்ற நன்மை அளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமே உலகில் தலைவனும் ஆமே.

பொருள் : அழிகின்ற நால்அங்குல வாயுவைக் கண்டு அழியாமல் பொருந்தும்படி செய்யின் உள் நாக்கு மேல் அமையும் சகஸ்ரதளம் விரிந்து நன்மையைச் செய்யும். சகஸ்ரதளம் தங்கும் ஞானம் நிலைபெறும். அவ்வாறு ஞானம் பெற்றவரே உலகத்தலைவராவர். (போதகம் - திருவடி உணர்வு)

773. தலைவ னிடம் வலம் சாதிப்பார் இல்லை
தலைவ னிடம்வல மாயிடில் தையல்
தலைவ னிடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவ னிடம்வலம் தன்வழி நூறே.

பொருள் : தலைவன் வாழ்கின்ற இடக்கண் பார்வையை வலக்கண் பார்வையோடு பொருந்தும் வகை அறிவார் இல்லை. இடக் கண்ணை  வலக் கண்ணோடு பொருந்தினால் ஒளியாகிய சத்தி விளங்கும். இச் சாதனையால் ஞானேந்திரியங்கள் ஐந்தும் தன்வழிப் பட்டமையின் இவரது வாழ்நாள் நூறாண்டாகும். (இடக்கண்-சிவன்; வலக்கண்-சத்தி, இடம் வலம் சாதிப்பார் என்பதைப் பிராணாயாமத்தைச் சரியாய்ச் செய்து முடிப்பவர் எனப்பொருள் கொள்வாரும் உளர்.)

774. ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும்
தேறிய ஏறிற் சிறக்கும் வகைஎண்ணில்
ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்
தேறியே நின்று தெளிஇவ் வகையே.

பொருள் : ஆறு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் எண்பது ஆண்டு வாழலாம். ஏழு விரற்கடை அளவு சுவாசம் வெளிப்படுவதை எண்ணினால்  அறுபத்திரண்டாய் ஆயுட் காலம் அமைந்ததையும், ஆராய்ந்து நின்று இவ்வகையாகத் தெளிவாயாக . சுவாச அளவு நீடிப்பதில் ஆயுட்குறைவும், சுவாச அளவு குறைவதில் ஆயுள் நீடிப்பு உண்டாம்.

775. இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அவ்வகை ஐம்பதே என்ன அறியலாம்
செவ்வகை ஒன்பதும் சேரவே நின்றிடின்
முவ்வகை யாம்அது முப்பத்து மூன்றே.

பொருள் : இவ்வகையான எட்டு விரற்கடை சுவாசம் நீண்டு இயங்குமாயின் அவ்வகை ஆயுள் ஐம்பது ஆண்டுகள் என அறியலாம். செம்மையாக ஒன்பது விரற்கடை சுவாசம் சேரஇயங்குமாயின் மூத்து அழியும் காலம் முப்பத்து மூன்று ஆண்டுகளாம்.

776. மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில்
எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்
ஐம்மூன்றும் ஓட அகலவே நின்றிடில்
பன்மூன்றொடு ஈராறு பார்க்கலும் ஆமே.

பொருள் : பத்து விரற்கடை சுவாசம் முடிவு பெற நின்றிடில் இருபத்தெட்டு ஆண்டுகள் வாழலாம். பதினைந்து விரற்கடை ஓடி நிற்குமாயின் இருபத்தைந்து ஆண்டுகள் வாழலாம்.

777. பார்க்கலும் ஆகும் பகல்முப் பதுமாகில்
ஆக்கலும் ஆகும்அவ் ஆறிரண்டு உள்ளிட்டுப்
போக்கலும் ஆகும் புகலற ஒன்றெனில்
தேக்கலும் ஆகும் திருத்திய பத்தே.

பொருள் : பகல் முப்பது நாழிகைகளும் சூரியனைச் சந்திரன் பகுதியில் சேர்த்து நிற்பின் சிரசின் ஈசான திக்கில் உணர்வை உதிக்கச் செய்யலாம். அப்போது சுழுமுனையில் சுவாசம் போதலைச் சாதிக்கலாம். இதனால் அகர உகரமாகிய இருகலைகளும் செம்மையுற்றுப் பத்தாகிய அக்கினி கலைவிளங்கும் இதனைப் பார்க்கக் கூடும். (அ-எட்டு, உ இரண்டு தமிழ் எண்கள் இரண்டும் சேர்ந்து பத்து.)

778. ஏயிரு நாளும் இயல்புற ஓடிடில்
பாயிரு நாலும் பகையற நின்றிடும்
தேய்வுற மூன்றும் திகழவே நின்றிடில்
ஆயுரு வாறுஎன்று அளக்கலும் ஆமே.

பொருள் : முற்கூறியபடி பொருந்திய இரு நாள்களிலும் சுழுமுனையில் பிராணன் இயங்கில், கீழ் நோக்குதலையுடைய அபானனும் வியாபகமான சந்திரனும் சீவனுக்குப் பகையாக இல்லாமல் உதவுவான். இவ்வாறு கீழ்நோக்கும் சத்தியைக் குறைத்து மூன்று நாட்கள் நிலைபெறில் ஆயுள் நீடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?

779. அளக்கும் வகைநாலும் அவ்வழியே ஓடில்
விளக்கும் ஒருநாளும் மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகைஐந்தும் தூய்நெறி ஓடில்
களக் மறமூன்றில் காணலும் ஆமே.

பொருள் : இங்ஙனம் அளக்கும் வகையால் நான்கு நாள்கள் சுழுமுனை வழியே பிராணன் இயங்கினால் விளக்கத்தைச் சிவம், சத்தி, விந்து, நாதம் ஆகிய நான்கும் உண்மையாகக் காணலாம். விளக்கமான முறையில் ஐந்து நாட்கள் தூய்மையான இவ்வழியில் இயங்குமாயின் களங்கமின்றிச் சிவம்சத்தி ஆன்மாவாகிய மூன்றையும் காணலாம்.

780. காணலும் ஆகும் கருதிய பத்துஓடில்
காணலும் ஆகும் கலந்த இரண்டையும்
காணலும் ஆகும் கலப்பற மூவைந்தேல்
காணலும் ஆகும் கருத்துற ஒன்றே.

பொருள் : முன்னே விளக்கியபடி பத்து நாட்கள் சுழுமுனையில் அறி பொருந்தியவர்க்கு, தன்னுடன் பொருந்திய சிவம் சத்தியை அறியலாம். அவ்வண்ணம் கலந்த தன்மையும் விட்டுப் பதினைந்து நாட்கள் சுழுமுனை அறிவில் பொருந்தியவர் சீவம் ஒன்றே எண்ணத்தில் காண்பர்.

781. கருதும் இருபதில் காணஆ றாகும்
கருதிய ஐ ஐந்தில் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடன்ஆறு காணில்
கருதும் இரண்டெனக் காட்டலும் ஆமே.

பொருள் : கருதப்படுகின்ற இருபது நாட்கள் சுழுமுனையில் நிலைபெறின் ஆகாயக் கூறிலிருந்து ஆறு ஆதாரங்கள் அறியப்படும். அவ்வாறு இருபத்தைந்து நாட்கள் இயங்கினால் ஐம்பூத ஆகாயத்தில் பூதாகாயமும் குணமய ஆகாயமும் கீழ்படுத்தப்பட்டுத் தேயுவும் வாயுவும் ஆகாயமுமாகிய மூன்று விளங்கும். மேலும் இருபத்தாறு நாட்கள் இயங்கினால் கருதுகின்ற தேயுவும் ஆகாயமும் ஆகிய இரண்டும் சிறப்புறும்.

782. காட்டலும் ஆகும் கலந்திரு பத்துஏழுடல்
காட்டலும் ஆகும் கலந்தெழும் ஒன்றெனக்
காட்டலும் ஆகும் கலந்திரு பத்தெட்டில்
காட்டலும் ஆகும் கலந்த ஈரைந்தே.

பொருள் : முற் கூறியவாறு சுழு முனையில் இருக்கும் ஞானி இருபத்தேழு நாட்கள் அவ்வாறு இருப்பின், சோதிவடிவாகிய சிவத்தைப் பிறர்க்கு உணர்த்தல் கூடும். அவ்வாறு இருபத்தெட்டு நாட்கள் சுழுமுனையில் பொருந்தியிருப்பின், பத்தாவது நிலையான ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் விளங்கும் ஆன்மாவைப் பிறர்க்கு உணர்த்தல் கூடும்.

783. ஈர் ஐந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பார் அஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்
வாரம்செய் நின்ற வகை ஆறுஅஞ்சு ஆமாகில்
ஓர்அஞ்சொடு ஒன்றுஒன்று எனஒன்று நானே.

பொருள் : பத்தும், ஐந்தும், ஆறும், எட்டுமாகிய இருபத்தொன்பது நாட்களும், உலகோர் அஞ்சும்படி பகைசெய்யும் இந்நாட்கள், யோகியர்க்குப் பத்து நாட்கள் போலத் தோன்றும், அன் பினைப் பெருக்குகின்ற வகையில் இறைவனோடு  கலந்திருக் கின்ற முப்பது நாட்களும், ஓர் ஐந்தோடு ஒன்றும் ஒன்று மாகிய ஏழு நாட்கள் கழிந்தன போலத் தோன்றும், (வாரம்-அன்பு மேல்நிலையில் பொருந்தி யிருப்பவர்க்குக் காலம் செல்லுவதே தெரியாது.)

784. ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத்து ஒன்றாகில்
கன்றிய நாளும் கருத்துற மூன்றாகும்
சென்றுயிர் நாலெட்டும் சேரவே நின்றிடின்
மன்றியல் பாகும் மனையில் இரண்டே.

பொருள் : இறைவனுடன் பொருந்திய நாள்கள் முப்பத்தொன்றாயின், சிறுமையைச் செய்யும் நாள்கள் மனத்தில் மூன்று நாள்கள் போல யோகியர்க்குத் தோன்றும். இறைவனுடன் சென்று உயிர் முப்பத்திரண்டு நாள்கள் பொருந்தி நின்றிடின் உலக நடையினர்க்குரிய இரண்டு நாள்கள் சென்றது போலத் தோன்றும் (கன்று - சிறுமை)

785. மனையில்ஒன்று ஆகும் மாதமும் மூன்றும்
சுனையில் ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையுற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற  தலைவனும் ஆமே.

பொருள் : மூன்று மாதங்களும் சிவமும் ஆன்மாவும் பேதமற ஒன்றாயினார்க்கு, சகஸ்ரதளத்தில் சூக்கும வாக்கு விளங்கும் படி செய்தனன் நந்தியெம் பெருமான். யாதொரு கிரியையும் இன்றிப் பரம ஆகாயத்தில் நிமிர்ந்து நின்றவர்க்கு தன்னுடன் பொருந்தி நின்ற சிவமேயாதல் கூடும். (மாதமும் மூன்றும்-முப்பத்து மூன்று நாட்கள் எனச்சிலர் பொருள் கொண்டனர். நந்தி- சிவபெருமான்.)

786. ஆரும் அறியார் அளக்கின்ற வன்னியை
ஆரும் அறியார் அளக்கின்ற வாயுவை
ஆரும் அறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரும் அறியா அறிவுஅறிந் தேனே.

பொருள் : பரவெளியில் சூக்கும நிலையில் கலந்துள்ள அக்கினியாகிய பூதத்தை யாரும் அறியார். கலந்துள்ள வாயு பூதத்தை யாரும் அறியமாட்டார். எல்லாவற்றையும் ஒடுக்கியிருக்கின்ற சிவத்தை யாரும் அறியார். மற்றவர் அறிந்து கொள்ள முடியாத அறிவை நான் சிவத்துடன் பொருந்தி உணர்ந்தேன்.

787. அறிவது வாயுவொடு ஐந்துஅறி வாய
அறிவா வதுதான் உலகுயிர் அத்தின்
பிறிவுசெய் யாவகை பேணியுள் நாடின்
செறிவது நின்று திகழும் அதுவே.

பொருள் : வாயுவோடு கூடி ஐந்து தன்மாத்திரைகளை அறியும் அறிவாகிய சிவம் அறிவாகும். அச்சிவமே உலகுயிர் அனைத்தின் அறிவுமாம். ஆதலின், சிவத்தைப் பிரித்து வேறாகக் காணாமல் ஒன்றாய்க் காணின், அப்பொருளாகிய சிவமே உயிரோடு பொருந்தி நின்று எல்லாப் பொருளையும் விளக்கத்தானும் விளங்கும். (அத்தின் - அனைத்தின், செறிந்து - நிறைந்து.)

788. அதுஅரு ளும்மரு ளானது உலகம்
பொதுஅரு ளும்புக ழாளர்க்கு நாளும்
மது அரு ளும்மலர் மங்கையர் செல்வி
இது அருள் செய்யும் இறையவன் ஆமே

பொருள் : அச்சிவம் அருளிச்செய்த உலகம் அஞ்ஞானியர்க்கு மயக்கத்தைத் தருவதாகும். ஞானியர்க்கு நாள் தோறும் சுட்டறிவின் நீங்கிய  பொது அறிவை நல்கும். இன்பத்தை நல்கும் சகஸ்ரதளத்தில் விளங்கும் பராசக்தி இப்பேற்றை ஞானியர்க்குக் கூட்டி வைப்பான். அதனால் ஞானியர் சிவமேயாவர்.

789. பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க்கு அகலும் மதியே.

பொருள் : சிருஷ்டியைக் கருதிய பெருமையுடைய நந்திக்குப் பிறப்பு இன்றிக் காண்பவரது அழகிய உடம்பு பழமையான இடமாம். இவ்வுண்மையை உணர்ந்தவர்க்கு ஆசை நீங்கும், பின் ஆசைக்குக் காரணமான பாசங்களை வருந்தும்படி செய்யும் அகன்ற அறிவு விளங்கும். (நந்தி - சிவன்)

16. வார சரம்

(வாரம் - நாள், சாரம் - பிராணன் இயக்கம். இன்னின்ன நாளில் இன்னின்ன நாடி வழியாகப் பிராணன் இயங்க வேண்டும் என்ற முறையைக் கூறுவது இப்பகுதியாகும்.)

790. வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறைஇடம்
தெள்ளிய தேய்பிறை தான்வலம் ஆமே.

பொருள் : வெள்ளி, திங்கள், புதன் கிழமைகளில் இடைநாடி வழியாகச் சுவாசம் இயங்க வேண்டும். ஒண்மையான சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளின் வலநாடி வழியாக இயங்க வேண்டும். அழகிய வியாழக்கிழமை வளர்பிறை நாளில் இடை கலையில் விளங்கவேண்டும். அழிகின்ற தேய்பிறை நாளில் வியாழக்கிழமை வலநாடியில் இயங்கவேண்டும்.

791. வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக்கே ஊனம் இலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே.

பொருள் : வெள்ளி திங்கள் விளங்குகின்ற புதன் கிழமைகளில் இடை நாடியில் சுவாசம் தள்ளி இயங்குமாயின் ஒளிபொருந்திய உடம்புக்கு அழிவில்லையென்று வள்ளலாகிய குரு நாதன் நம்மனோர்க்கு மகிழ்ச்சியோடு உபதேசித்து அருளினான்.

792. செவ்வாய் வியாழம் சனிஞாயி றேஎன்னும்
இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்டு
அவ்வாறு அறிவார்க்குஅவ் ஆனந்த மாமே.

பொருள் : செவ்வாய், தேய்பிறை வியாழன், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில், சரத்தை வலப்பக்கத்தில் அறிகின்ற யோகி இறைனாவான். இந்நாள்களில் சரம் மாறி இயங்கும் தன்மையை அறிந்து வலப்பக்கத்தில் ஓட விட்டு அம்முறையில் அறிகின்றவர்களுக்கு ஆனந்தம் உண்டாகும்.

793. மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரன்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.

பொருள் : சந்திரனும் சூரியனும் இடை பிங்கலை நாடிகளில் மாறி மாறி இயங்கும். அப்போது இடைகலை வழியாக ஏறிப் பிங்கலை வழியாக இறங்கியும், பிங்கலை வழியாக ஏறி இடைகலை வழியாக இறங்கியும், பிராணன் நடு நாடியில் ஊர்ந்து செல்லும், பிராணனின் சிவன் பொருந்தியதை ஆராய்ந்து தெளிந்து அறியுங்கள். (உக்கிரன் - சிவன் (வீரபத்திரன்) ஊறும் உயர் வளரும் உயிர்.)

794. உதித்து வலத்துஇடம் போகின்ற போது
அதிர்த்துஅஞ்சி ஓடுத லாம்அகன்று ஆரும்
உதித்துஅது வேமிக ஓடிடும் ஆகில்
உதித்த இராசி உணர்ந்துகொள் உற்றே.

பொருள் : பிராணன் வலப்பக்கம் உதித்து இடப்பக்கம் மாறிச் செல்லுகின்றபோது, ஒருபுறம் கனமாகவும் மற்றொருபுறம் இலேசாகவும் இளைத்து ஓடுதலாகும். தோன்றிய அப்பிராணன் அகன்றும் தணிந்தும் ஓடுதல் நீங்கிப் பொருந்த ஒரு நாடியில் மிகுதியாக ஓடுமாயின் தோன்றிய இராசியை பொருந்தி மிகுதியாக ஓடும் நாடியைக் கொள்வாயாக (இராசி - ஒழுங்கு)

795. நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென்று இன்பணி சேர
முடி கின்ற தீபத்தின் முன்உண்டுஎன் றானே.

பொருள் : சரியான சுழுமுனையில் பொருந்தி யில்லாமல் இடமாகவோ வலமாகவோ ஓடி, பாய்கின்ற வாயுவை யோகியானவன் பொருந்தி நாடிகள் ஒத்து இயங்குகின்ற புருவ நடுவில் இனிமையைத் தரும் குண்டலினியைச் சேரச் செய்தால் நடுநாடியின் உச்சியில் தீப்பிரகாசம் அமையும் என்று நந்தி அருளினான். (இன்பணி - இனிமையைத்தரும் குண்டலினியாகிய பாம்பு. அந்தணன் - சிவபெருமானைக் குறிக்கும் என்பாரும் உளர்.)

796. ஆயும் பொருளும் அணிமலர் மேலது
வாயு விதமும் பதினாறு உளவலி
போய்அம் மனத்தைப் பொருகின்ற ஆதாரம்
ஆயுவும் நாளும் முகுர்த்தமும் ஆமே.

பொருள் : ஆராய்த்தக்க பொருளான சிவமும் அழகிய கண்மலர்களுக்கு மேலாக உள்ளது. அச்சிவனை நினைந்து சுவாச கலையை மாறச் செய்யின் பதினாறு கலைகளையுடைய சந்திரன் விளங்கும் அக்கலை வலிமையாகச் சென்று மனத்தை அழிக்கின்ற ஆதாரமாக ஆயுளும் நாளும் தியான காலமான முகூர்த்தமுமாக அமைகின்றது. (முகூர்த்தம் - 3 3/4 நாழிகை; 1 1/2 மணி நேரம் கொண்ட காலம்)

17. வார சூலம் (வார சூலம் - கிழமை தோஷம் பயணத்துக்கு உரிய தோஷம் இங்குக் கூறப்பெறும்)

797. வாரத்தில் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே.

பொருள் : நாள்களில் சூலம் வருகின்ற திசையைக் கூறுமிடத்து திங்களும் சனியும் கிழக்கே சூலமாகும். செவ்வாயும் புதனும் வடக்காகும். ஞாயிறும் வெள்ளியும் மேற்கு ஆகும். இத்திக்குகளில் இக்கிழமைகளில் பயணம் செல்லலாகாது. (சூலம் -முத்தலை - வேல்.)

798. தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
அக்கணி சூலமும் ஆமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.

பொருள் : வியாழக்கிழமை சூலதிசை தெற்காகும். சூலம் இடப்பக்கமாகவும் பின்பக்கமாகவும் இருக்கப் பயணம் செல்வது நன்மையாம். வலப்பக்கமும் முன்பக்கமும் இருக்கச் செல்லின் மேலும் மேலும் பயணத்தின் தீய வினைவுகள் உண்டாகும். சூலத்தில் செல்லுவதால் உண்டாகும் தீமை கூறியவாறு. (அக்கணி - எலும்புமாலை சூட்டப்பெற்ற.)

18. கேசரி யோகம்

(கேசரி என்பது ஆகாயம் அல்லது சிங்கம் என்று பொருள், யோகம் என்பது சேர்க்கை. கேசரி யோகமாவது, சிங்கத்தைப் போன்று மேல் நோக்கிப் பார்வையைச் செலுத்தியிருப்பதாகும். இந்த யாகத்தால் சாதகர் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலைப் பெறுவார்)

799. கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்டம் இருக்க நமனில்லை தானே.

பொருள் : பிராணன் கீழே இறங்கி வராமல்அண்ணாக்கில் கட்டி, பின் அபானன் குதம் வழியாகவோ குறிவழியாகவோ போகாமல் குதத்தைச் சுருக்கி நிறுத்தி, பின், இரண்டு கண் பார்வைகளையும் ஒன்றாக்கி, அடுத்து மனத்தைச் சுழுமுனை வழியாகப் பாயும் பிராணனில் நிறுத்தியிருக்க உடலைத் தாண்டின நிலைக்குச் சென்றமையால் காலத்தைக் கடக்கலாம்.

800. வண்ணான் ஒலிக்கும் சதுரப் பலகைமேல்
கண்ணாறு மோழை படாமல் கரைகட்டி
விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.

பொருள் : சிவயோகி நாதத்தால் மோதி முன்புறமுள்ள மூளையில் இருகண் பார்வைகளையும் மாறிமாறிப் பார்ப்பதனால் உண்டாகும் கரையின் எல்லைக்குள் இரு கரைகளின் ஊடே ஆகாயத்தில் உண்டாகும் ஒளியைக் கொண்டு சகஸ்ரதளத்தை நரப்பினால் நெற்றிக்கு மேலே நிமிர்ந்து பார்க்கச் சீவனின் குற்றமான இருள்விலகிப் பரிசுத்தமாகும். (வண்ணான் - சீவன்.)

801. இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்கச் சோரவும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்கு
இறக்கவும் வேண்டாம் இருக்கலும் ஆமே.

பொருள் : இடைகலை பிங்கலை நாடிகளின் வழிப் பிராணன் இயங்குவதை மாற்றி, சுழுமுனை வழியாகப் பிராணனைச் செலுத்த வல்லார்க்கு இறப்பின்றி அழியாமல் இருக்கக் கூடும். (உறக்கத்தை நீக்குதலாவது - விடியலில் எழுதல். உண்டி, உறக்கம், பயம், இன்பம் ஆகிய நான்கும் உயிர்ப் பண்புகள் துதிக்கை - சுழுமுனை)

802. ஆய்ந்துரை செய்யில் அமுதம்நின்று ஊறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே.

பொருள் : ஆராய்ந்து சொல்லுமிடத்துச் சாதனையில் அமுதம் நிலைபெற்று ஊறும் அது வருகின்றபொழுது நன்கு அமைந்து ஒலித்தலைச் செய்யும். பெருகி ஒலித்தலைச் செய்யில் சந்திர மண்டலமாய் விளங்கி ஒலித்தலைச்செய்து அது பாதுகாக்கும் என்றவாறு.

803. நாவின் நுனியை நடுவே விசிறிடில்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லைச் சதகோடி பூனே.

பொருள் : சாதகர் நல்லாசனத்தில் அமர்ந்து நாக்கின் நுனியை அண்ணாக்கின் மேல் உரசி யிருப்பின் சீவனும் சிவனும் மூவரும் அங்கே தோன்றும். மூவரோடு ஏனைய முப்பத்துகள் மரணமில்லாமல் வாழலாம். இஃது அடயோக முறை சிவிறிடல் என்றும் பாடம் விசிறியின் அடிப்பகுதி முப்பத்து முக்கோடி தேவர் என்றும் சிலம் பொருள் கொள்வர்.

804. ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வானூறல் பாயும் வகையறி வார்இல்லை
வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்
தேனூறல் உண்டு தெளிலும் ஆமே.

பொருள் : ஊனுடலால் அறியப்படும் அறிவெல்லாம் பொருந்தி அமையும் இடமாகிய சிரசின் உச்சிமேல் ஆகாய மண்டலம் விளங்கும் தன்மையை அறிபவர் இல்லை. ஆகாய மண்டலத்தைப் பெருக்கி அறிபவர்க்கு இல்லை. ஆகாய மண்டலத்தைப் பெருக்கி அறிபவர்க்கு அமுதத்தை உண்டு தெளிவினை அடையலாம். ஊன் ஊறம் - சுக்கிலம். வான் ஊறல் (மதி); தேன் ஊறல் - அமுதத்தின் சுவை (சுடுக்கை) வான் ஊறல் - கங்கை (அமுதம்) பாம்பு - குண்டலியாற்றல். கங்கை, மதி, பாம்பு, கடுக்கை என்னும் நான்கும் இறைவன் முடிமேல் உள்ளன.

805. மேலைஅண் ணாவின் விரைந்துஇரு காலிடில்
காலனும் இல்லை கதவம் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே

பொருள் : மேலை அண்ணாக்குப் பிரதேசத்தில் சாதனையால் பிராண அபானனாகிய இருவாயுக்களையும் பொருந்தும் படி செய்யின், தேகத்திற்கு அழிவு இல்லை. பிரமப்புழை திறந்து சாதகர் மேலே செல்வர். உலகத்தார் அறியும் ஆணையாம். இருகால் என்பதற்கு இருமூக்கின் வழியாகவும் வரும் உயிர்ப்பினை (பிராணவாயு) என்று சிலம் பொருள் கொள்வர்.

806. நந்திமுதலாக நாமேலே ஏறிட்டுச்
சிந்தித்து இருக்கில் தரணி முழுதாளும்
பந்தித்து இருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித்து இருப்பவர் தீவினை யாளரே.

பொருள் : இம்முறையில் சிவனை முன்னிட்டுக் கொண்டு நாவினை அண்ணாக்கினுள்ளே ஏறும்படி செய்து, அங்கே நடு நாடியின் உச்சியில் சந்தித்திருப்பின் அச்சாதகர் உலகமுழுதும் ஆள்வார். உடலோடு பின்னிக் கிடக்கும் அறிவு நீங்கி, சிவனை எண்ணியிருப்பவரே உண்மையான அக்கினி காரியம் செய்தவராவார். அதாவது இப்பயிற்சி இல்லாதவர் தீவினையாளர் என்றபடி.

807. தீவினை யாடத் திகைத்தங்கு இருந்தவர்
நாவினை நாடின் நமனுக்கு இடமில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை யாடிய தீங்கரும்பு ஆமே

பொருள் : தீய வினைகள் தங்களை வெற்றி கொள்ள அறிவு மயங்கியிருந்த சீவர்கள் நாவால் செய்யும் சாதனையால் நாடினால் நமனுக்கு வேலயில்லை. பரந்த வினைகளை ஆராய்ந்து அவற்றின் பயன் இன்மையை அறிந்தவர் தெய்வப் பணியைச் செய்து அதன் இனிமையைச் சுவைத் திருப்பார். செந்தமிழ் மறைப்பாட்டினை ஆராய்ந்து இடையறாது ஓதி அதன் முழுப் பயனையும் மேற்கொண்டவர் சிவத்துடன் கூடிப் பேரின்பமுறுவர் என்று கூறுவாரும் உளர்.

808. தீங்கரும் பாகவே செய்தொழில் உள்ளவர்
ஆங்கரும் பாக அடையதா ஏறிட்டுக்
கோங்கரும் பாகிய கோனை நிமிர்ந்திட
ஊன்கரும் பாகியே ஊனீர் வருமே.

பொருள் : இனிய கரும்பை யொத்த வினையைச் செய்பவர் சுழுமுனை நாடியாம் கரும்பைப் பெற நாவினை மேலே ஏற்றி, நடு நாடியின் கோணலை ஒழுங்குபெறச் செய்ய ஊன் உடலிலேயே அமுதத்தைக் காண்பர். (கோணலை - வளைவை ஊனீர் - உடல் அமிழ்து. கோங்குஅரும்பு - பாம்பின்தலை; குண்டலி.)

809. ஊனீர் வழியாக உண்ணாவை ஏறிட்டுத்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தரி வீரே.

பொருள் : நாவின் வழியாக உண்ணாக்கை மேலே செலுத்தி, அதனால் ஊற்றெழுந்து வரும் அமுதத்தைப் பருகிச் சிவாய நம எனச்சிந்தித்து இருப்பார்க்கு காத்தலைச் செய்கின்ற ஒளி நீர்ப்பிரவாகம் போல் முகத்தின் முன் பெருகும். அவ் ஆகாய கங்கையைப் பெற்று அறிந்து கொள்ளுங்கள். (சிவாய நம; சி-ஒளி; வ-ஆற்றல்; ய-ஆகாயத்தையும் ஆன்மாவையும், ந-மறைப்பு, ம-மலம் இவைகளைக் குறிக்கும் என்பர்.)

810. வாய்ந்தளித்து உள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந்து உள்ளே படிக்கதவு ஒன்றிட்டுக்
கோய்ந்தறிந்து உள்ளுறை கோயிலும் ஆமே.

பொருள் : சிவத்தைப் பொருந்தி உள்ளத்தில் வழிபாடு செய்தவர்க்கு மலத்தைச் சுட்டெரிக்கும் அருள் சத்தி ஒலி ஒளி வடிவில் வெளிப்பட்டருளுவான். அத்தகைய ஒலி ஒளி வடிவில் மனம் பதிவுற்றுக் கீழ் இறங்காது சாலந்தர பந்தனம் அமைத்து அங்குக் குவிந்து அறிந்து தியானிப்பார்க்கு எடுத்தவுடல் சிவாலயமாகும். கூய்ந்து அறிந்து எனவும் பாடம் (கூய்ந்து - நிர்மலமாகி)

811. கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளும்
தீயினும் தீயரத் தீவினை யாளர்க்கே

பொருள் : அகக் கோயிலலையே வாசகமாகக் கொண்டு வாழும் சீவர்கள் அனைத்து உலகுக்கும் தாயினும் மிக்க கருணையுடைய வராவர். சிலர் இவரைச் சினந்தாலும் நன்மையே செய்வர். ஆனால் சினந்தவரில் தீய வினை செய்தவர்க்குத் தீயைக் காட்டிலும் கொடியராய் அழித்துவிடுவர்.

812. தீவினை யாளர்தம் சென்னியின் உள்ளவன்
பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்தம் பாவகத்து உள்ளவன்
மாவினை யாளர்தம் மதியின்உள் ளானே

பொருள் : சிவன் மூலாக்கினியை எழுப்பி யோகம் செய்பவர் சிரத்தில் இருப்பவன். அவன் சகஸ்ரதளத்தில் உணர்பவருக்குப் பொன்னொளி மண்டலத்தில் விளங்குவான். இடைவிடாது பாவனை செய்வாருக்கு அவன் பாவகப் பொருளாய் விளங்குபவன். பெருவினையாகச் சிவயோகம் புரிவோர்க்கு அவரது அறிவில் செறிந்து விளங்குபவனாய் உள்ளான்.

813. மதியின் எழுங்கதிர் போலப் பதினாறாய்ப்
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே.

பொருள் : சந்திரனிடமிருந்து கலைகளைப் போன்று பதினாறு இதழ்களை யுடைய விசுத்திச் சக்கரத்திலிருந்து பொருந்திய உடம்பாகிய மனையில் இருநூற்று இருபத்து நான்கு புவனங்களிலுமாகி, நடக்கின்ற உடம்பில் ஒளிக்கதிர்களைப் பரப்பி, தத்துவங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படாதவாறு சிவன் பொருந்தி யிருந்தான்.

814. இருந்தனள் சத்தியும் அக்கலை சூழ
இருந்தனள் கன்னியும் அந்நடு வாக
இருந்தனள் மான்நேர் முகநிலவு ஆர
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.

பொருள் : சித்ரூபிணியாகிய பராசத்தியும் விசுத்திச் சக்கரத்திலுள்ள கிரணங்களில் அமைந்துள்ளாள். அவள் அக்கிரணங்களின் நடுவாக விளங்குகிறாள். அவளே ஆன்ம தத்துவத்திலும் சந்திரனாக விளங்கினாள் இவளேதான் போகத்தில் பொருந்தி இன்பம் பொழிபவனாக உள்ளான்.  (விசுத்திசிடறு அறிவு மயமாகிய சிவனுக்கு ஏற்ப ஆற்றல் மயமான சத்தியும் அமைந்து நிற்கும்.)

815. பொழிந்த இருவெள்ளி பொன்மண் அடையில்
வழிந்துஉள் இருந்தது வான்முதல் அங்குக்
கழிந்தது போகாமல் காக்கவல் லார்க்குத்
கொழுந்துஅது வாகும் குணமது தானே.

பொருள் : ஆகாயம் முதலாகிய பராசக்தி பெய்த வெண்மையான சுக்கிலத்திலும் பொன்மயமான சுரோணிதத்திலும் பொருந்தி அவை தொழிற்படும் சுவாதிட்டானச் சக்கரத்தில் உள்ளான். அங்கு ஆற்றல் கழியாது பாதுகாக்கும் திறமையுடையார்க்கு அதுவே உடலைக் காக்கும் பச்சிலை மருந்தாகும். முன் மந்திரங்களில் கண்டவிசுத்திச் சக்கரத்தின் பயன் அதுவாகும். (வெள்ளி - அமுதம் என்றும், பொன்மண். பூதலம் என்றும் பொருள் கொள்வாகும் உளர்.)

816. குணமது வாகிய கோமள வல்லி
மணமது வாக மகிழ்ந்தங்கு இருக்கில்
தனமது வாகிய தத்துவ ஞானம்
இனமது வாக இருந்தனன் தானே.

பொருள் : காம செயத்தை அளிக்கும் கொடிபோன்ற குண்டலினி சத்தி, ஆகாய மண்டலத்தில் சிவத்துடன் சேர்க்கை யுற்று மகிழ்ச்சியுடன் விளங்கினால், அட்டமாசித்திகளை அளிக்கும் உண்மை ஞானம் உண்டாகும். குண்டலினியின் இனமாகிய சிற்சித்தியுடன் அறிவுமயமான சிவனும் அறிவில் விளங்குவான். தத்துவஞானம்-இறைவி, மணம்அதுவாக ஈசனுடன் கூடி எனினுமாம்.

817. இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே.

பொருள் : விசுத்திச் சக்கரத்தின் கீழே ஓடிக் கொண்டிருந்த பிராணன் கண்டத்திலிருந்து உள்முகமாக மேல் நோக்கிச் செல்லும். உடலைத் தாங்கி வீணாத்தண்டைவிட்டுத் தாண்டி ஆகாயத்தை அடைந்து, கவிழ்ந்த சகஸ்ர தளத்தை நிமிர்ந்த சகஸ்ர தளமாக்கி விளங்கும்படி செய்தால் சந்திர மண்டலம் வளர்ச்சி பெற்றுப் பூமண்டலத்தில் நெடிது வாழலாம்.

818. மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலக் காதனும் கூத்தொழிந் தானே.

பொருள் : மதிமண்டலத்தில் மனத்தைப் பிணிக்கும் ஒட்டியாண பீடத்தைக் கண்டு மனத்தை அங்கேயே நினைந்து கீழ் நிலையில் செல்லாமல் நிறுத்தி, பழமையான ஆனந்த மயகோசத்தில் மகா சூரியப் பிரகாசம் விளங்க, குண்டத்தை அணிந்த கூத்தப் பெருமானும் அசைவற்று விளங்குவான். (கூத்தொழிதல் - ஐந்தொழில் நீங்குதல்)

819. ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமரும்
கழிகின்ற வாயும் காக்கலும் ஆகும்
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்
பழிகின்ற காலத்துப் பையகற் றீரே.

பொருள் : முற்கூறிய சாதனையால் விசுத்திக் சக்கரத்துக்குக் கீழே சென்று ஒழிகின்ற வாயு அண்ணாக்கின் வழிமேலே சென்று தங்கும் அம்முறையில் வாயுவைக் கழியாது காக்கக் கூடும். அதனால் ஒளியானது நிலைகொண்டு வழிகின்ற காலத்தில் சகஸ்ரதளத்தில் விளங்கும் திருவடியைப் புகழ்கின்றபோது உடம்பாகிய பையை விட்டு நில்லுங்கள்.

820. பையனின் உள்ளே படிக்கதவு ஒன்றிடின்
மெய்யினின் உள்ளே விளங்கும் ஒளியதாம்
கையினுள் வாயுக் கதித்தங்கு எழுந்திடின்
மையணி கோயில் மணிவிளக்கு ஆமே.

பொருள் : உடம்பினுள் மூலாதாரக் கதவாகிய குதத்தை (எருவாயை) இறுகப் பிடித்தால், உடம்பினுள்ளே ஒளி விளங்குமாம். நாடியினுள் அபானன் உக்கிரமாக மேலெழுந்தபோது மலங்களோடு கூடிய சீவன் பிரகாசம் பொருந்தியதாய் விளங்கும்.

821.விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி
நலங்கிடுங் கண்டத்து நாடியின் உள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலும் ஆமே

பொருள் : மூல பந்தத்தால் அமைந்தவாயு மேல்எழுவதை நினைந்து, கசக்குதலினால் சுருங்குகின்ற விசுத்திச் சக்கரத்தின் மேல் வணங்கத் தக்க சந்திர மண்டலம் விளங்க, அக்கினி சூரிய மண்டலங்கள் சுருங்கிட நின்ற இத்தன்மையைச் சொல்லவா வேண்டும்.

822. சொல்லலும் ஆயிடும் மாகத்து வாயுவும்
சொல்லலும் ஆகும் அனல்நீர்க் கடினமும்
சொல்லலும் ஆகும் இவைஅஞ்சும் கூடிடில்
சொல்லலும் ஆம்தூர தெரிசனந் தானே

பொருள் : ஆகாய பூதத்தில் வாயு பூதம் உள்ளதைச் சொல்லக்கூடும் மேலும் அக்கினி நீர் நிலம் ஆகியவை அங்குக் கூறலுமாம். ஆகாயம் முதலாகிய ஐம்பூதங்களும் ஒளி மயமாக ஆகாயத்தில் பொருந்தியிருப்பதைச் சொல்லக்கூடும். அவ்வாறு கண்டவர் தூர திருஷ்டியுடையவர் ஆவார். (மாகம் - ஆகாயம்; கடினம் - நிலம், வேறு சிலர் மண் நீர்க்கடினமும் எனப்பாடம் கொண்டு மண், நீர், தீ எனப்பொருள் கொண்டனர் கடினம் - ஈண்டுத்தீ.)

823. தூர தரிசனம் சொல்லுவன் காணலாம்
காராருங் கண்ணி கடைஞானம் உட்பெய்து
ஏராரும் தீபத்து எழிற்சிந்தி வைத்திடின்
பாரார் உலகம் பகன்முன்ன தாமே.

பொருள் : தூர திருஷ்டியைப் பற்றிச் சொல்லுவதை உங்கள் அனுபவத்தில் காணலாம். மேகத்தைப் போன்று அருள் வழங்கும் கண்ணையுடைய பராசக்தியைப் பொருந்துவதால் உண்டாகும் ஞானத்தை உள்ளே நிறுத்தி, அழகு நிறைந்த சிவத்தினிடம் சிந்தையை வைத்திருந்தால் பூமிமுதலான உலகங்கள் பகலில் காணப்படுவதுபோல் நன்குவிளங்கும்.

824. முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே
பன்னெழு வேதப் பகல்ஒளி உண்டென்னும்
நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்
தன்னெழு கோயில் தலைவனும் ஆமே.

பொருள் : முன்னே எழுகின்ற உந்திக் கமலத்துக்குப் பன்னிரண்டு விரற்கடை கீழேயுள்ள மூலாதாரத்தில் பன்னிஎழுகின்ற வேதம் சூரியனாகிய புருடன் விளங்குவதாகக்கூறும் கீழேயுள்ள குண்டலினியைப் பந்தித்து மேலே செலுத்துவதில் நன்றாக எழுகின்ற நாதமாகிய அறிவில் மனம் பந்தித்து இருப்பின் ஆன்மாவாகிய தன்னிடம் எழுகின்ற கோயிலில் சிவம் பிரகாசிக்கும்.

19. பரியங்க யோகம்

(பரியங்கம் - கட்டில், யோகம் - சேர்க்கை, கட்டிலில் பெண்ணோடு கூடியிருந்து செய்யும் போகத்தை யோகமாக்குதல் பரியங்க யோகமாகும்.)

பெற்ற சிற்றின்பமே பேரின்ப மாய் அங்கே
முற்ற வரும்பரிசு உந்தீபற
முளையாது மாயை என்று உந்தீபற - திருவுந்தியார்

இதுவே ஒளியை அடைவதற்குரிய குறுக்கு வழி என்கிறார், திபேத்திய குருமார்களில் சிறந்தவராக விளங்கிய நரோப்பா அவர்கள்.

825. பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையும் சாத்திக்
காயக் குழலி கலவியோ குங்கலத்து
ஊசித் துளையுறத் தூங்காது போகமே.

பொருள் : பூசத் தகுந்த வாசனைத் திரவியங்கள் எல்லாம் ஆடவன் உடம்பில் பூசிக்கொண்டு மலர்ந்த மணம் நிறைந்த மாலையை அணிவித்து, பெண்ணோடுகலவியிலே பொருந்தி மனமானது பிரமரந்திரமாகிய உச்சியை நினைந்திருக்க போதும் தளராது இன்பம் காலத்திலும் இறைவனை எண்ணியிருக்க வேண்டும்.

826. போதத்தை யுன்னவே போகாது வாயுவும்
மேகத்த வெள்ளியும் மீளும் வியாழத்தில்
சூதுஒத்த மென்முலை யாளும்நற் சூதனும்
தாதிற் குழைந்து தலைகண்ட வாறே.

பொருள் : முன்மந்திரத்தில் கூறியவாறு பிரமரந்திரத்தில் விளங்கும் பேரறிவுப் பொருளை நினைவில் கொண்டு போதும் புரியின் காம வாயு நிறைந்து தொழிற்படாது. அப்போது நீர்த் தன்மையுடைய சுக்கிலமும் சுரோணிதத்தில் கலக்காது மீளும். சூதாடு கருவியை யொத்த தனங்களையுடைய பெண்ணும் உடம்பாகிய தேரினை நடத்தும் ஆணும் தம்மில் பொருந்திய கூட்டுறவால் விளைந்த சுக்கில சுரோணிதங்கள் விந்து நாதங்களாக மாற்றம் பெற்றுச்சிரசில் பொருந்தும் (சூரன் - தேர்ப்பாகன்)

827. கண்டனும் கண்டியும் காதல்செய் யோகத்து
மண்டலம் கொண்டுஇரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
தண்டொரு காலும் தளராது அங்கமே.

பொருள் : தலைவனும் தலைவியும் விரும்பிப் புணரும் யோகத்து, அக்கினி மண்டலம் சூரிய மண்டலங்களைக் கடந்து சந்திர மண்டலத்தில் இருவரும் சிரசின் மேலேயுள்ள வெளியை அறிவர். உடலாகிய வண்டியை மேலும் மேலும் செலுத்துவதால் மதிமண்டலத்தில் ஆகாய கங்கை யாகிய ஒளியைப் பெருக்கிட அங்கீதத்தில் தண்டு ஒரு போதும் தளர்ச்சியடையாது.

828. அங்குஅப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம்
அங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமல் பரிகரித்துத் தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனும் ஆமே.

பொருள் : அவ்விடத்தில் அப்புணர்ச்சியின் காரணமான காமாக்கினி, உடம்பில் விந்துவை நீக்கம் செய்கின்ற போகத்தில் அது கெடாமல் பாதுகாத்து, யோகத்தினால் மாற்றி விந்து  ஜெயம் பெற்றவன் தலைவனானவன். வேறுசிலர் அங்கப் புணர்ச்சி எனக் கொண்டு பரி அங்கியோகம் எனப் பொருள்கூறுகின்றனர். பங்கப்படாமல் என்பதற்கு நாதவிந்துக்கள் கெடாமல் என்பர்.

829. தலைவனும் ஆயிடும் தன்வழி ஞானம்
தலைவனும் ஆயிடும் தன்வழி போதும்
தலைவனும் ஆயிடும் தன்வழி யுள்ளே
தலைவனும் ஆயிடும் தன்வழி அங்சே.

பொருள் : அங்ஙனமாகிய தலைவன் ஆன்மாவை அறிந்தவனாகின்றான். அவன் விரும்பிய சிவயோகம் தானே வந்தமையும் அவன்தன்னை வசப்படுத்தி ஆளும் தலைவனாவான். அவன் விருப்பப்படி பஞ்சபூதங்கள் முதலியன நடக்கும்.

830. அஞ்சி கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவது ஒன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளாது என்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே.

பொருள் : ஐந்து நாழிகைக்கு மேல் ஆறாவது நாழிகையில் துணைவி துணைவனுடன் பொருந்தி உறக்கங் கொள்வான். ஐந்து நாழிகை கொண்ட பரியங்க யோகம் மனம் நிறைவோடு இனித்தேவையில்லை என்னும்படி செய்தது. கடிகை - நாழிகை.

831. பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇல் யோகம் அøந்தவர்க்கு அல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனம் கொங்கை
உருவித் தழுவ ஒருவர்க்கு ஒண்ணாதே.

பொருள் : பரியங்க யோகத்தில் ஐந்து நாழிகை அருமையாக இருப்பவர்க்கு அல்லாமல், நழுவுகின்ற வளையலை அணிந்த முன் கையை யுடையவளும் விஷய வாசனை பொருந்திய சூரியசந்திரர்களாகிய தனங்களையும் உடைய குண்டலினி சத்தியை கடந்து மேற்செல்ல ஒருவராலும் முடியாது. கைச்சி - கையை உடையவன்.

832. ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர்என்னில்
விண்ணார்ந்த கங்கை விரிசடை  வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்ததே.

பொருள் : அடைவதற்கு அருமையான இவ் யோகத்தை அடைந்து அறிவித்தவர் யார் என்றால் வேதகங்கையைத் திருமுடி மேல் வைத்தவனாகிய சீகண்டருத்திரனாவான். நாதத்தோடு கூடிய ஒளியினை ஐந்து நாழிகைவரையில் எண்ணாமல் எண்ணி நுகர்ந்திருந்தான்.

833. ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும்
வாய்ந்த குழலிக்கும் மன்னர்க்கும் ஆனந்தம்
வாய்ந்த குழலியோடு ஐந்து மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமும் சோர்வில்லை வெள்ளிக்கே.

பொருள் : இவ் யோகத்துக்குப் பொருந்திய வயது பெண்ணுக்கு இருபது ஆணுக்கு முப்பதுமாகும். அப்போது பொருந்திய பெண்ணுக்கும் மன்னனாகிய ஆணுக்கும் ஆனந்தமாம். பொருந்திய அப்பெண்ணோடு ஐம்பொறிகளும் மலர் மனம் முதலியன அழிந்திடும் சுக்கிலத்துக்கு அழிவில்லை.

834. வெள்ளி உருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
வள்ளியுண் ணாவில் அடக்கிவைத் தாரே.

பொருள் : வெண்ணிறமாகிய சுக்கிலம் உருகிப் பொன்னிறமாகிய சுரோணிதத்தில் (நாதத்தில்) கலக்காமல்  மறைந்துள்ள தட்டானாகிய சிவன் கரியாகிய அருளை நல்கிப் பக்குவம் செய்தார். நெருப்பு ஆகிய அக்கினி கலை உண்டாக ஊது குழலாகிய சுழுமுனை வழியே சென்று பொன்னாகிய சந்திரனைச் செப்பு ஆகிய உள் நாவில் விளங்க வைத்தார்.

835. வைத்த இருவரும் தம்மின் மகிழ்ந்துடன்
சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினென் கணத்துக்கும்
வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே.

பொருள் : இவ்வண்ணம் விந்து நீக்கமின்றிப் புணரும் இருவரும் தம்மில் இன்புற்று, காம வசப்படாமல் தேவ காரியமாக நினைத்துச் செய்கின்ற ஆனந்த நிலையில் பத்துத்திசைகளுக்கும் பதினெட்டுவகைத் தேவர்களுக்கும் தலைவனாக உள்ள சிவசூரியன் விளங்குவான். இப்பரியங்கப் பயிற்சி கைவந்த இருவரும் வெங்கதிரோன்போல் விளங்கும் என்று சிலர் கூறுவர்.

836. வெங்கதி ருக்கும் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கோர் ஆனந்தம்
தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனம்
திங்களிற் செவ்வாய் புதைந்திருந் தாரே.

பொருள் : விருப்பத்தைத் தருகின்ற சூரியனுக்கும் சனிப்பித்தலைச் செய்யும் கருவாய்க்கும் இடையில் சிறந்த பெண்ணைப் புணருகின்ற ஆண்மகன் ஆனந்தமடைகிறான். இருவரது புணர்ச்சியில் சுரோணிதவழிச் சுக்கிலம் பாயாமல் சந்திர மண்டலத்தில் விளங்கும் செந்நிறம் பொருந்திய வாக்கின் சத்தியாகிய நாதத்தில் திளைத்திருந்தனர்.

837. திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்
கருத்தழ காலே கலந்தங்கு இருக்கில்
வருத்தமும் இல்லையாம் மங்கை பங்கற்கும்
துருத்தியில் வெள்ளியும் சோரா தெழுமே.

பொருள் : பரியங்க யோகத்தால் - புதனாகிய அறிவைச் சந்திர மண்டலத்தில் வைப்பதாகிய நன்மையைச் செய்வார்க்கு வியாபகக் கருத்துக்கள் பொருந்த அங்கு இருந்தால், பெண்ணுடன் பொருந்துவார்க்குத் துன்பமும் இல்லையாம். உடம்பில் விந்து நீக்கமின்றி ஊர்த்துவ ரேதக அமையும்.

838. எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றிட்டால்
மெழுகுகுரு கும்பரி செய்திடும் மெய்யே
உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே.

பொருள் : சுவாதிட்டானத்திலுள்ள காமாக்கினியை மூலாதார வழிப்புருவ நடுவுக்கு கொண்டு சென்றால் அனலின்முன் மெழுகு போன்று சாதகர்க்கு உடம்பு காணாதொழியும் சோதியைக் கண்டபிறகு உழுதலாகிய செயல்இல்லை. புருவ நடுவைத் தாண்டித் துவாத சாந்தப் பெருவெளியை அறிந்த பேர்க்கு உடல் கீழே விழுகின்றதில்லை.

839. வெளியை அறிந்து வெளியின் நடுவே
ஒளியை அறியின் உளிமுறி யாமே
தெளிவை அறிந்து செழுநந்தி யாலே
வெளியை அறிந்தனன் மேலறி யேனே.

பொருள் : ஆகாயத் தானத்தை அறிந்து, அங்கு விளங்கும் பொன் ஒளியை அறியில் உள்ளம் வேறுபடாமல் தெளிவான ஞானத்தைப் பெற்றுச் செழுமையான சிவனருளால் பரமான ஆகாயத்தை அறிந்திருந்தேன். அதற்கு மேல் யான் ஒன்றும் அறியவில்லை.

840. மேலாம் தலத்தில் விரிந்தவர் ஆரெனின்
மாலாம் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலா நிலத்தின் நடுவான அப்பொருள்
மேலாய் உரைத்தனர் மின்னிடை யாளுக்கே.

பொருள் : ஒன்றிற்கு ஒன்று மேலாக விளங்கும் தலங்களில் விளங்குகின்றவர் யாரென வினவில், திருமால், பிரமன், ருத்திரன், முதலியோர் ஆவர். துரிய பூமியில் விளங்கும் சிவமாகிய பெரும் பொருள் பராசத்தியை விட மேலே உள்ளது என்று கூறினார். (நாலா நிலம் - துரியம்.)

841. மின்னிடை யாளும் மின் னாளனும் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லிரேல்
மண்ணிடைப் பல்லூழி வாழலும் ஆமே.

பொருள் : மின் ஒளியில் விளங்கும் சத்தியும் அவளை ஆள்பவனாகிய சிவனும் ஆகிய இருவரையும் கூட்டத்துடன் பொன்னொளி கொண்ட ஆகாயத்தில் நிலைபெறும்படி செய்து, அக்கூட்டத்திடை ஆன்மாவாகிய தன்னையும் காணவல்லிரேல், இவ்வுலகத்து நீங்கள் நெடுங்காலம் வாழலாம்.

842. வாங்கல் இறுதலை வாங்கலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகுஅறி வார்இல்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளரும்
ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே.

பொருள் : வெளிமுகமான காம வாயுவை உள்ளுக்கு இழுத்துச் சுக்கிலம் கெடும்படி செய்தலும், அவ்வாறு உள்ளுக்கு இழுத்த காமவாயுவை ஊர்த்துவ முகமாக்குதலாகிய உபாயத்தை அறிவார் இல்லை. அவ்வாறு மாற்றம் செய்யும் உபாயத்தை அறிந்த வரும் வளர்ச்சிபெற்ற தன்னைச் சிவத்திடம் ஆகுதி பண்ணின வராவார். (விரகு - வழிவகை; உபாயம்.)

843. உதம்அறிந்து அங்கே ஒருசுழிப் பட்டால்
கதம் அறிந்து அங்கே கபாலம் கறுக்கும்
இதம் அறிந்து என்றும் இருப்பாள் ஒருத்தி
பதம் அறிந்து உம்முளே பார்கடித் தாளே.

பொருள் : ஆத்ம ஆகுதி பண்ணிப் பிரமப்புழையின் மேலான சகஸ்ர தளத்தில் பொருந்தினால் அவ்வழியிலே மண்டையிலுள்ள உரோமம் கறுக்கும். சீவனுக்குச் செய்ய வேண்டிய நன்மையைக் கருதிக்கொண்டு பராசக்தி விளங்குவாள். பக்குவத்தை உம்மிடம் அறிந்து உம்மிடமுள்ள பிருதிவிச் சக்கரத்தின் காரியத்தை அவள் மாற்றியருளுவான். (இதம் - செல்வி, கதம் - மார்க்கம், பதம் - பக்குவம், பார் - ஆதாரங்கள்)

844. பாரில்லை நீரில்லை பயங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே

பொருள் : சகஸ்ரதளமாகிய தாமரை ஒன்றுள்ளது, சிதாகாயத்தில் விளங்குவதால் பூமியும் நீரும் இல்லை. சகஸ்ரதளமாகிய இத்தாமரை மலர்ந்தது. பூவாகவே உள்ளமையால் மொட்டும், மேலிருந்து வந்தமையால் வேரும் இல்லை. அங்குக் காணப்படுகின்ற ஒளி ஒன்றுள்ளது. அகண்டமான மையின் குறிப்பிட்ட இடம் இல்லை. நாதத்துக்குக் காரணமான இச்சகஸ்ரமலர் எங்கும் படர்ந்துள்ளமையின் அதற்கு அடியும் நுனியும் இல்லை. (பங்கயம் சகசிர அறை ; தார் - அரும்பு. கேள்வி - ஞானம்)

20. அமுரி தாரணை

(அமுரி - வீரியம், தாரணை - தரித்தல், அமுரிதாரணை - யாவது வீரியத்தை உடம்பில் தரிக்கும்படி செய்தல். குடிநீர், சிவநீர், வானநீர், ஆகாய கங்கை, அமுத நீர், உவரி, தேறல், மது, கள், மலை நீர் என்பன வெல்லாம் அமுரியைக் குறிக்கும் பல சொற்களாம். சந்திரன் தூலத்தில் வீரியமாகவும், சூக்குமத்தில் ஒளியாகவும், பரத்தில் ஆன்மாவின் சாட்சியாகவும் உள்ளது - யோகசிகோ உபநிடதம் நீர்அமுரியைச் சிறுநீர் என்று கல்பநூல் கூறும். பரியங்க யோகத்தின்  பின் இப்பகுதி அமைந்திருப்பதால் அப்பொருள் இங்குப் பொருந்துவது காண்க.)

845. உடலிற் கிடந்த உறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற்று ஏற்றம்இட் டால்ஒக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலும் ஆமே.

பொருள் : உடம்பினின்றும் நீங்காமல் உறுதியைப் பயப்பதாகவுள்ள உணர்வு நீரானது கடலின் அருகே சிறு கிணறு தோண்டி ஏற்றமிட்டு  இறைத்தலை ஒத்திருக்கும். உடலில் வேறொரு வழியாகக் கீழ்ப்போவதை மேலே செலுத்தினால் உயிர் வருந்தாமல் பாதுகாக்கலாம். உப்பு நீரையுடைய கடலுக்கு அருகே தோண்டி எடுக்கின் நன்னீர் இருப்பது போன்று சிறுநீர் வாயிலுக்கு அருகே அமுரி இருக்கும் என்க.

846. தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனம்ஒன்று இல்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகமது ஆமே.

பொருள் : தெளிந்த இந்தச் சிவநீரைக் கொண்டால் ஓராண்டு சாதனத்தில் ஒளியைக் காணலாம். கெடுதல் இல்லாதது இது காற்றுடன் கலந்து மேலேறும். எட்டு ஆண்டுகளில் மனம் கீழ்நோக்குதலைத் தவிர்த்து மேலே நிற்கும். மகிழ்ச்சியை விளைவித்துக் கொண்டிருக்கும். உடம்பு பொன்போன்று பிரகாசிக்கும். சிவநீர் - அமுரி, அமுதநீர் வளியுறு எட்டின் - பிராணவாயு.

847. நூறும் இளகும் நுகரும் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே.

பொருள் : அவ்வாறு அருந்தும் சிவநீரானது கீழேயுள்ள குறியை நெருக்குவதாலும் பிழிதாலாலும் அதன் தன்னை கெட்டு மேலேறும் உயிரை உடம்பில் நீடிக்கச் செய்ய இதைவிட மேலான மருந்து வேறில்லை. மக்கள் இச் சூட்சுமத்தை உணர்ந்து தெளிந்து சிரசில் பாயச் செய்து கொண்டால் நரைத்த உரோமம் கறுப்பாகும் மாற்றத்தைக் காணலாம். நூறு மிளகு அளவு எனக்கொண்டு ஒருநளைக்கு ஒரு மிளகு விழுக்காடு நூறு நாளைக்கு உண்ணுதல் வேண்டும் எனவும் கூறுவர்.

848. கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனும்அங்கு இல்லையே.

பொருள் : அறிவில்லாத மக்கள் சிறுநீர்க் குழாய் அருகில் உள்ள சுக்கிலத்தைக் கழிக்க வேண்டும் என்பர். சத்தற்ற முதல் நிலையையும் முதிர்ந்த நிலையையும் அகற்றி அருந்த வல்லார்க்கு உரோமம் நரைத்தலும் தோல் சுருங்குதலும் மாறும். அவ்வாறு நீரை உடம்பில் அமைக்க வல்லார்க்கு எமபயம் இல்லையாம். (கானல் உவரி  - உப்பங்கழி நீர். வரைதல் - நீக்குதல்)

849. அளக நன்னுத லாய்ஓர் அதிசயம்
களவு காயம் கலந்த இந்நீரில்
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளும் கபாலமே.

பொருள் : அழகிய கூந்தலையுடைய பெண்ணே ! ஒரு வியப்பு. உடம்பில் மறைமுகமாகச் சென்று (உணர்வாகிய) இந்நீர் சிரசை அடையுங்காலத்து, மிளகு, நெல்லிப் பருப்பு, கஸ்தூரிமஞ்சள், வேப்பம் பருப்பு ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து முழுகி வருவீராயின் உடம்பு மேன்மையாவதோடு உரோமம் கருமையாகும். இத்துடன் கடுக்காய்த் தூளும் சேர்த்தால்பஞ்ச கல்பம் என்பர்.

850. வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென்று அறிவார் அகலிடம்
சேதி மருந்திது சொல்லஒண் ணாதே.

பொருள் : வீரியத்தால் உண்டானபடியால் வீர மருந்தென்றும், ஆகாய வெளியில் சோதியாக அமைவதால் தேவர்கள் மருந்தென்றும் பெண்ணால் அடையப்படுவதால் நாரிமருந்தென்றும் என் குருநாதன் அருளிச் செய்தான். இதனைத் தொன்மையான மருந்தென்று யோகியர் அறிவர். இது விரிந்த சோதி மயமானது. இதனைச் சாமானியருக்குச் சொல்லலாகாது.

21. சந்திர யோகம்

(சந்திர யோகம் என்பது சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம் என்றபடி புறத்தே சந்திரன் சூரியன் அக்கினி முதலிய ஒளிப்பொருள்கள் இருப்பன போன்று அகத்தேயும் உண்டு.)

851. எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்தும் கலைபோல ஏறி இறங்குமாம்
துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே.

பொருள் : சந்திர கலை தூல உடலில் இருந்து சூக்கும உடலுக்கு ஏறியும் சூக்கும உடலில் இருந்து தூல உடலுக்கு இறங்கியும் வரும். இது புறத்திலுள்ள சந்திரன் ஒரு பட்சத்தில் வளர்வதும் மற்றொரு பட்சத்தில் தேய்வதும் போல் அமையும் சந்திர கலை விளக்கத்தால் சூக்கும உடல் தூய்மை பெறுவதற்கேற்பத் தூல உடலும் தூய்மை பெறும் (பக்கம் - பட்சம்)

852. ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈரெட்டோடு ஆறிரண்டு ஈரைந்துள்
ஏகின்ற அக்கலை எல்லாம் இடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே.

பொருள் : உடம்பினுள் ஆகின்ற சந்திரன் சூரியன் அக்கினியாகிய மூன்றுக்கும் முறையே பதினாறு, பன்னிரண்டு, பத்தாக இயங்குகின்ற கலைகள் எல்லாம் நடு நாடியான சுழுமுனை வழி இயங்கச் செய்கின்ற யோகி அறிந்த அறிவேயாகும். சந்திரகலை 16, சூரியகலை, 12 அக்கினிகலை 10.

853. ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலங்கினார் ஞாலம் கவர்கொளப்
பேறாங் கலைமுற்றும் பெருங்கால் ஈரெட்டு
மாறாக் கதிர்கொள்ளும் மற்றங்கி கூடவே.

பொருள் : பன்னிரண்டு கலைகளையுடைய சூரியனைச் சந்திரனோடு சேர்க்கப் பயின்றவர் உலகம் உவக்கும் பேற்றினை எய்துவர். பெருங்கால் என்ற சந்திரகலை பதினாறும் அக்கினி கலை சேரவே சூரியகலை அடங்கப் பெற்று விளங்கும்.

854. பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொடு ஆறும் உயர்கலை பான்மதி
ஒத்தநல் அங்கியது எட்டெட்டு உயர்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே.

பொருள் : சூரியகலை உயர்ந்து செல்லும் அளவு பன்னிரண்டு ஆகும். வெண்மதிக்கலை உயர்ந்த அளவு பதினாறாம். சூரியகலையும் சந்திரகலையும் பொருந்திய அக்கினி கலையின் வியாபகம் அறுபத்து நான்காகும். அவ்வாறாகக் கலைகள் நின்றமையை அறிந்து கொள்ளுங்கள். இங்குக் கூறியவை உயர் கலைகள் சிரசுக்குமேல் எல்லாக் கலைகளும் கருவாக அறுபத்திநான்கு  கலைகளாக உள்ளன.

855. எட்எட்டு அனலின் கலையாகும் ஈராறுள்
சுட்டப் படும்கதி ரோனுக்கு சூழ்கலை
கட்டப் படும்ஈர் எட்டாம் மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடுஒன்று ஆகவே.

பொருள் : அக்கினியில் கலைகள் அறுபத்து நான்கும், சூரியனுக்கும் சூழ்ந்துள்ள கலைகள் பன்னிரண்டு என்று சுட்டி அறியப்பெறும். விந்து செயத்தால் அமையும் சந்திரகலை பதினாறாகும். இக்கலைகள் எல்லாம் ஒன்றையொன்று பொருந்தியிரா.

856. எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றும் கலையென்ப
கட்டப் படும்தார கைகதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொடு ஆறும் கலாதியே.

பொருள் : அறுபத்தி நான்கும், பன்னிரண்டும் பதினாறும் முறையே அக்கினி, சூரியன் விந்து நீக்கமற்ற சந்திரன் ஆகியவற்றின் கலைகள் என்பர். இவை கட்டப்படும் மூலாதாரத்திலுள்ள நட்சத்திரத்துக்கு நான்கு கலைகள் உள்ளன. இவ்வாறு கட்டப்பட்ட தொண்ணூற்றாறும் கலைகளாகும். சுட்டிட்ட சோமன் என்பதற்கு அமாவசையில் திங்களின் கதிர் ஒடுங்கியிருப்பதால் சுட்ட சோமன் எனக்கூறப்படும் என்பது ஒரு சாரார் கொள்கை.

857. எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலம்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணிநிற் பாரே.

பொருள் : சோம சூரிய அக்கினியாகிய எல்லாக்கலைகளும் இடைபிங்கலை நடு நாடியின் வழியே தொடர்புடையன. அவற்றின் இயல்பான கீழ் நோக்குதலைத் தடுத்துச் சிரசின்மேல் சகஸ்ரதளத்தில் சேரும்படி செய்தலால், நல்ல யோகியர் சிவத்தியானத்தில் பொருந்தியிருப்பார். (இடநாடி - இடகலை. வலநாடி - பிங்கலை; நடுநாடி சுழுமுனை)

858. அங்கியில் சின்னக் கதிர்இரண்டு ஆட்டத்துத்
தங்கிய தாரகை யாகும் சசிபானு
வங்கிய தாரகை யாகும் பரையொளி
தங்கு நவசக்ரம் ஆகும் தரணிக்கே.

பொருள் : கீழேயுள்ள அக்கினியில் குறைவினையுடைய இடைபிங்கலைகளின் அசைவில், பொருந்தி ஒளியாகும் சந்திரசூரியர்கள் நாதத்தைச் செய்கின்ற பிரணவமாக மேலே சென்றபோது விளங்கும் அவ்வொளியே, பரையொளி விளங்கும் மேன்மையான சக்கரமாகப் பூமியில் விளங்கும்.

859. தரணி சலங்கனல் கால்தக்க லானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே.

பொருள் : நிலம், நீர், தீ, காற்று, சிறந்த ஆகாயம், அழகிய சூரியன், அருமையான சந்திரன், அக்கினி மாறுபாட்டைச் செய்யும் சீவ ஒளியாகிய ஒன்பதும் பிரணவமாகிய பெரு நெறியாகும் அங்கி (சிவவேள்வித்தீ)

860. தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவனர் பக்கத்துத்
தாரகை பூவிற் சகலத்து யோனிகள்
தாரகை தாரகை தானாம் சொரூபமே.

பொருள் : சந்திரன் தேய்பிறையை அனுசரித்துக் கீழ்முகமான போது மூலாதாரத்திலுள்ள ஒளி பிரகாசம் அடையும் சந்திரன் வளர்பிறையை அனுசரித்து  மேல்முகமான போது மூலாதாரத்திலுள்ள ஒளி பிரகாசம் இராது. மூலாதாரத்திலுள்ள ஒளியில் எல்லா யோனிகளும் உள்ளன. மூலாதாரச் சக்கரத்துக்குக் காரணமான அகவொளியே சகல சீவர்களின் சொரூபமாகும். தாரகைகளே உலகில் சகல உற்பத்திக்கும் காரணம்.

861. முற்பதின் ஐஞ்சின் முளைத்துப் பொருத்திடும்
பிற்பதின் ஐஞ்சில் பெருத்துச் சிறுத்திடும்
அப்பதின் ஐஞ்சும் அறியவல் லார்கட்குச்
செப்பரி யான்கழல் சேர்தலும் ஆமே.

பொருள் : சந்திரனது கிரணங்கள் முதல் பதினைந்து நாள்களில் சிறிது சிறிதாக வளர்ந்து பெருத்துப் பூரணத்தை அடையும் பிற் பதில் ஐந்தில் சிறிது சிறிதாகத் தேய்ந்து பருத்த நிலையினின்றும் குறைந்து விடும். அகரச்சுட்டால் உணர்த்தும் வளர்பிறையை அறிய வல்லவர்கட்கு அளவிட்டுக் கூற முடியாத பெருமை யுடைய சிவனது திருவடியை அடைதலுமாகும்.

862. அங்கி எழுப்பி அருங்கதிர் ஊட்டத்துத்
தங்கும் சசியால் தாமம்ஐந்து ஐந்தாக்கிப்
பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்
திங்கள் கதிர்அங்கி சேர்கின்ற யோகமே.

பொருள் : மூலத்தீயை எழுப்பி அருமையான சூரிய மண்டலப் பெருக்கத்தில் விளங்கும் சந்திர மண்டலத்தால் அகர, உகர, மகர, விந்து நாதமாகிய ஐந்தும் விரிந்த பிரயையுடையதாய் ஒளியான பிரணவம் விளங்கும். அதனால் ஐம்புலவழி போகாது சந்திரன் சூரியன் அக்கினியாகிய மூன்றும் சேர்கின்ற போதும் அமையும்.

863. ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள்
கன்றிய காலன் கருத்துழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி வாரே.

பொருள் : ஒன்றுபட்ட சந்திர கலைகள் பதினாறும் உடம்பின்கண் பொருந்த நிற்கின்ற ஒளிநிலை கண்டும் தாழ்வானவர்கள் உண்மையை நினைக்கின்றிலர். அதனால் அவர்கள் சினங்கொள்ளும் எமன், உடம்பினின்றும் உயிரைப் பிரிக்க எண்ணம் வைத்தபின் அவ் எண்ணப்படி சென்று இறப்பு என்னும் சுழியில் வீழ்வர். இத்தடுமாற்றமாகிய மயக்கத்தினின்றும் விடுபடார். நீதர்கள் - நீசர்கள்.

864. அங்கி மதிகூட லாகும் கதிரொளி
அங்கி கதிர்கூட ஆகும் மதியொளி
அங்கி சசிகதிர் கூடஅத் தாரகை
தங்கி அதுவே சகலமும் ஆமே.

பொருள் : ஆண் குறியிலுள்ள சந்திரன் மூலாக்கினியோடு பிரமரந்திரம் நோக்கிச் சென்றால் சூரிய ஒளி கிட்டம், மூலாதாரத்திலுள்ள அக்கினியையும் மணிபூரகத்திலுள்ள சூரியனையும் ஒன்றாகச் சேர்ப்பதில் சந்திரன் ஒளி அமையும். இவ்விரண்டு ஒளியும் பிரமரந்திரத்தில் ஒன்றானால் சோம சூரியாக்கினி கூடிய பிரணவம் அமையும். அந்நிலையே சகலமும் ஆம்.

865. ஈராறு பெண்கலை எண்ணிரண்டு ஆண்கலை
பேராற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்தம் ஆனதே,

பொருள் : பன்னிரண்டு கலைகளையுடைய சூரியன் பெண், பதினாறு கலைகளையுடைய சந்திரன் ஆண், இவ்விரண்டும் புறத்தே செல்லாமல் பிடித்து நிறுத்தி, முகத்துக்கு முன்தோன்றும் ஒளியில் கலப்பித்தால் தெவிட்டாத திருவடி இன்பம் நிலைத்த இன்பமாக விளங்கும். (சூரியன் ஆண், சந்திரன் பெண் என்று மற்றொரு சாரார் பொருள் கொள்கின்றனர்.)

866. காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் காலை வலத்திட்டு
பேணியே இவ்வாறு பிழையாமல் செய்விரேல்
ஆணி கலங்காதுஅவ் ஆயிரத்து ஆண்டே.

பொருள் : மாட்சிமையுடைய சந்திரனாகிய இடக்கண் பார்வையைச் சூரியனாகிய வலக்கண் பார்வையோடு குரு காட்டிய நெறியில் பொருந்தியும், தோன்றுகின்ற சூரியனாகிய வலக்கண் பார்வையை இடக்கண் பார்வையோடு பொருந்தியும் இம்முறையில் நின்று வழுவாமல் பாதுகாத்து வந்தால் ஆயிரம் ஆண்டு இவ்உடம்பாகிய ஆணி கெடாது நிலைபெறும். (மூக்கின் வழி இயங்கும் மூச்சுக்காற்றைக் குறிப்பதாக ஒரு சாரார் பொருள் கொள்கின்றனர்.)

867. பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்கும்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே.

பொருள் : சீவகலை ஒன்பதில் சகஸ்ரதளத்துக்குச் சென்ற போது சிரசில் நாதம் முழங்கும். அந்நாதத்தில் தேவாதி தேவனான சிவபெருமான் களிப்புடன் பொருந்துவான். இந்நிலைக்கு முன்னே சூரிய சந்திரர்கள் வலப்புறம் இடப்புறமும் சிறு தீப ஒளிபோல் விளங்குவர். சூரியன் புறப்படுமுன் சங்கோசை மக்களை எழுப்புவது போல் ஞானசூரியன் எழுமுன் நாதம் உதித்து முன்னேவிளங்கும் (ஒன்பதில் - ஒன்பது துவாரங்களையுடைய தேகத்தில் என்று பொருள் கொண்டு அத்துவாரங்களில் வழியாகத் தோன்றும் ஓசைகள் என்று சிலர் கூறுவர்.)

868. கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவன் உள்ளே பொதிமழை நிற்கும்
அதிரவன் அண்டப் புறஞ்சென்று அடர்ப்ப
எதிரவன் ஈசன் இடமது தானே.

பொருள் : சூரிய சந்திர இயக்கத்தில் காலம் அளவிடப் படும். இருவரும் ஒன்று சேர்ந்த பிரணவ நிலையில் சிவசக்தி விளங்குவதால் அமுதும் பெருகும் அருள் நிலையுள்ளது நாத சம்மியம் செய்பவன் நாதத்தோடு கூடி அண்டத்தின் எல்லையாகிய துவாத சாந்தத்துக்குச் சென்று நெருங்க அவ்விடத்தில் ஈசனும் நேராக எதிர்ப்பட்டு விளங்குவான்.

869. உந்திக் கமலத்து உதித்தெழும் சோதியை
அந்திக்கு மந்திரம் ஆரும் அறிகிலார்
அந்திக்கு மந்திரம் ஆரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந்தானே.

பொருள் : மணிபூரகத்தில் வெளிப்படுகின்ற சேதியை, அடைந்து பிரணவத்தின் உண்மையை யாரும் அறியவில்லை . யாவராயினும் அடைந்து பிரணவத்தை அறிந்தபின் அவர்க்குச் சிவ ஒளிக்கு முன்னே சீவ ஒளி பிரகாசித்து நிற்கும். ஆறு இடங்களுக்கும் உரியவை முறையே 1 ஓம், 2. ஓம் நமச்சிவய; 3. நமசிவய; 4. சிவாயநம; 5. சிவயசிவ; 6. சிவசிவ என்பவையாகும்.

870. ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல்
வேதியன் அங்கே வெளிப்படுந் தானே.

பொருள் : உண்மைப் பயன் ஒன்றும் அறியமாட்டார். அவ்வுண்மையைப் பிறர் எடுத்துச் சொன்னாலும் தாமே படித்தாலும் உணராத அறிவிலிகள், சந்திரகலையின் ஆதியையும் முடிவையும் சேர்க்கத் திறம் பெற்றீர்ஆகில் இரச குளிகை போன்று மாற்றத்தைச் செய்யும் சிவமும் அங்கே வெளிப்பட்டு விடும். (ஆதியும் அந்தமும் - சுவாசம் உதித்தலும் ஒடுங்குதலும்)

871. பாம்பு மதியைத் தினலுறும் பாம்பது
தீங்கு கதிரையும் சோதித்து அனலுறும்
பாம்பு மதியும் பகைதீர்த்து உடன்கொளீஇ
நீங்கல கொடானே நெடுந்தகை யானே.

பொருள் : குண்டலினியாகிய பாம்பு சுவாதிட்டானத்தில் பொருந்திச் சந்திர கலை வளர வொட்டாது விந்துநீக்கம் செய்து கொண்டுள்ளது. அக்குண்டலினியில் ஆற்றல் தீமை தரும் மணி பூரகத்திலுள்ள சூரியனையும் அசைத்து வெப்பத்தினைச் செய்து கொண்டிருக்கும். குண்டலினியையும் சந்திரனையும் பகைமைத் தன்மை நீங்கும்படி சிரசின்மேல் உடனாகக் கொண்டால், பெருங்கருணையாளனான சிவபெருமான் சாதகனை விட்டு நீங்கமாட்டான்.

872. அயின்றது வீழ்வள வும்துயில் இன்றிப்
பயின்ற சகிவீழ் பொழுதில் துயின்று
நயந்தரு பூரணை உள்ள நடத்தி
வியந்தரு பூரணை மேவும் சசியே.

பொருள் : குண்டலினியோடு சென்ற சந்திரன் சிரசின் மேல்நிற்கும் அளவும் உறங்காது அதனைக் கவனித்தும் அப்படியாக நின்ற சந்திரன் கீழே இறங்கிய போதும் உறங்கியும், நன்மையைத் தரும் ஒளியை உள்ளத்தில் நிலைப்பித்தால், விரிவினைச் செய்யும் சந்திரன் பூரணமாகச் சாதகனிடம் விளங்கும் பூரணை - நடுநாடி.

873. சசிஉதிக் கும்அள வும்துயி லின்றிச்
சசிஉதித் தானேல் தனதுஊன் அருந்திச்
சசிசரிக் கின்ற வும்துயி லாமல்
சசிசரிப் பின்கட்டன் கண்துயில் கொண்டதே.

பொருள் : சந்திரன் சிரசில் உதிக்குமளவும் காலை எழுந்ததும் தியானம் செய்து சந்திரன் உதித்த பிறகு தன் உணவை உட்கொண்டு சந்திரன் சிரசில் சஞ்சாரம் செய்யும் வரை துயிலாதிருந்து, சந்திரன் சிரசை விட்டுக் கீழ் இறங்கியதும் இது காறும் கட்டி நிறுத்தினவன் உறங்கலாம் (கட்டன் ஒளியைக் கட்டி நிறுத்தினவன்.)

874. ஊழி பிரியாத இருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பார்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழவல் வார்இச் சசிவன்ன ராமே.

பொருள் : ஊழிக்காலம் உயிர் பிரியாதிருக்கின்றயோகியர் நாழி கையைக் கருவியாகக் கொண்டு எமனது வாழ்நாளை அளந்து விடுவார்கள். இவர்கள் உலகில் பஞ்ச இருத்தியம் செய்யும் சதாசிவமூர்த்தியாவர். உலகில் ஆணவமற்றுச் சித்தை முதலாகக் கொண்டு கண்ணொளி பெற்றவராய் விளங்குவர். பஞ்சகிருத்தியம் - ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல் அருளல் என்பனவாம்.

875. தண்மதி பானுச்சிச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண்மதி வீழ்வுஅள விற்குஅணம் இன்றே.

பொருள் : குளிர்ச்சி பொருந்திய சந்திரன் உச்சியாகியவழியில் சென்று உலகினரால் மதிக்கப் பெற்ற இறப்பு நிகழ்வு எதிர்வு ஆகிய முக் காலங்களையும் அவற்றின் காரணங்களையும் உணர்ந்து பூரண நிலா மண்டலத்தைக் கண்டபின் அதிலிருந்து விளைந்து விளங்கும் அமுதத்துக்குக் குறைவில்லை.

876. வளர்க்கின்ற ஆதித்தன் தன்கலை ஆறும்
தளர்கின்ற சந்திரன் தன்கலை ஆறும்
மலர்ந்தெழு பன்னிரண்டு அங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யார்அறி வாரே.

பொருள் : மேஷம் முதல் கன்னியா ராசிவரையுள்ள ஆறுகலைகள் வளர்வதிலும், உடலாட்சிக்கான அகரம், உகரம், மகரம், விந்து, அர்த்தசந்திரன், நிரோதினியாகிய ஆறுகலைகள் குறைவதிலும், சுவாசம் நான்கு விரற்கடை கழிவுறாமல் பன்னிரண்டு விரற்கடை விரிந்தோடி விரிந்து நிறைந்தமை யாரே அறியவல்லார் ? சூரியன் கலைகள், மேஷம் ரிஷபம், மிதுனம் கடகம், சிம்மம், கன்னி என்பன.

877. ஆம்உயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
போம்வழி எங்கும் போகாது யோகிக்குக்
காமுறவு இன்மையின் கட்டுண்ணும் மூலத்தில்
ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே.

பொருள் : ஆகின்ற உயிர்க்குக் குறைகின்ற மதி நாளாவது விந்து கழிகின்ற வழியாலாம். யோகியர்க்குக் காமத் தொடர்பு இல்லை. யாதலின் விந்து நழுவாது. மூலாதாரத்தில் கட்டுப்பட்டு விடும். ஆகவே நீங்கள் பிரணவம் விளங்கும் மதிமண்டலத்தில் உணர்வினைச் செலுத்தி ஏத்துமின்.

878. வேறுறச் செங்கதிர் மெய்க்கலை ஆறொடும்
சூறுற நான்கும் தொடர்ந்துற வேநிற்கும்
ஈறில்கி னன்கலை ஈர்ஐந்தொ டேமதித்து
ஆறுட் கலையுள் அகல்உவா வாமே.

பொருள் : சிரசில் வலப்பாகத்தில் மேஷ ராசி முதல் கன்னியாராசி வரை விளங்கும் சூரியன்கலை ஆறுடன் கீழுள்ள மூலாதாரத்திலுள்ள நான்கு கலைகளும் கலந்தே நிற்கும் அறிவுப் பொருளான் சூரியன். அக்கினி கலைபத்துடன் சந்திரன் விளக்கும் துலாம் முதல் மீனராசி வரையில் அறிவு பதிந்த போது சந்திரன் பௌர்ணமி நாளாக விளங்கும். (சூறு - கீழ்ப்புறும்; இனன் - சூரியன்)

879. உணர்வித்து சோணி உறவினன் வீசும்
புணர்வித்து வீசும் கதிரிற் குறையில்
உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே.

பொருள் : உணர்வினாலான விந்து சுரோணிதத்துடன் உறவு கொள்ளின் சூரியன் மிக்க ஒளி வீசும். ஆனால் சூரியனது ஆற்றல் குறையின் புணர்ச்சியாலான விந்து ஒளியாகச் சிரசின்மேல் வீசும் ஒளிமயமான உணர்வும் (சூக்கும உடம்பும்) தூலமான உம்பும் ஒத்து நிற்கில் ஒளிமயமான உணர்வும் (சூக்கும உடம்பும்) தூல உடம்பும் யோகிக்கு ஒரு காலத்தும் நீங்கா.

880. விடாத மனம்பவ னத்தொடு மேவி
நடாவு சிவசங்கின் நாதம் கொளுவிக்
கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே.

பொருள் : புறம் போகாத மனம் காற்றோடு இடப்புற மூளையில் பொருந்தி, யாவற்றையும் நடத்துகின்ற சிவசங்கின் தொனியைக் கேட்டு, ஐம்புல ஆசையில் செல்லாது அடங்கி நிற்கும். அவ்வாறு பிரணவத்தில் கட்டப்படாதன வாயின் சாதகர்இன்பமாகிய அமுதத்தைப் பருகமாட்டார்.

881. அமுதப் புனல்வரும் ஆற்றங் கரைமேல்
குமிழிக் குள்சுடர் ஐந்தையும் கூட்டிச்
சமையத்தண்டு ஓட்டித் தரிக்கவல் லார்க்கு
நமம்இல்லை நற்கலை நாள்இல்லை தானே.

பொருள் : சந்திர மண்டலப் பிரவாகம் பிடரிக்கண்ணிலிருந்து பாய்ந்து விளங்கும் சகஸ்ரதளத்தில் அதன் கரணிகை குமிழ் போன்று உயர்ந்து நிற்பதில் சிவம், சத்தி, நாதம், விந்து, சீவன் ஆகிய ஐந்து சுடர்களையும் ஒன்றுபடுத்தி, மூலாக்கினியை வீணாத்தண்டில் செலுத்திக் காண்பவர்க்கு இறப்பு இல்லாமையோடு ஒளிபெருகும் காலம் என்று ஒன்று இல்லையாம். ஆறு - ஒளிப் பிரவாகம்.

882. உண்ணீர் அமுதம் உறும்ஊறலைத் திறந்து
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர்ச் சமாதி அமர்ந்துதீ ராநலம்
கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே.

பொருள் : அனுபவிக்கத் தகுந்த அமுதம் ஊறும் ஊறலைத் திறந்து பிரபஞ்சக் கலப்பால் மாறுதல் இல்லாத ஒப்பற்ற சூரியசந்திரர்கள் பொருந்திய சகஸ்ரளத்தை அடைய தெளிவான நீரினுள் இருப்பது போன்ற உணர்வுடன் சமாதியில் நிலைத்து, முடிவில்லாத ஆனந்தத்தை விளைவிக்கும் கண்ணில் விளங்கும் சிவம் உணர்த்தும் வழியில் நின்று பிராண இயக்கத்தை மாற்றுங்கள்.

883. மாறு மதியும் மதித்திரும் மாறின்றித்
தாறு படாமல் தண்டோடே தலைப்படில்
ஊறு படாதுஉடல் வேண்டும் உபாயமும்
பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே.

பொருள் : கீழ்நோக்குதல் இல்லாத சந்திரகலையை மாறுபடாமல் போற்றியிருங்கள். பிரிவுபடாமல் வீணாத் தண்டினூடே சகஸ்ரதளத்தை அடைந்தால், உடம்பு அழியாது வேண்டிய யோக உபாயங்களும் சிதறாது கிட்டும். இன்பம் உலகில் எங்கும் பெருகும்.

நான்காம் தந்திரம். (சித்த ஆகமம்)

1. அசபை

(அசபை என்பது செபிக்கப் படாமலே பிராணனோடு சேர்ந்து இயங்கும் மந்திரம் என்றபடி. இதுவே மந்திரம் என்றும், பிரணவம் என்றும் கூறப் பெறும். மூச்சுக் காற்று ஹ என்ற ஒலியுடன் வெளிப்படுகிறது ஸ என்று ஒலியுடன் உள் நுழைகிறது. இம் மந்திரத்கை எல்லா உயிர்களும் செபிக்கின்றன.)

884. போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.

பொருள் : புகழ்ந்து சொல்லப் படுகின்ற ஞானத்தை இடைவிடாது நினைத்துக் கொண்டிருக்கிறேன். மனத்தில் உலக நாயகனாகிய சிவன் திருவடியைத் தெளிகின்றேன். சேவடி யடையும் சிவயோக நெறியை உங்களுக்குச் சொல்லுகின்றேன். எம் பெருமானாகிய சிவபரம்பொருளின் ஓரெழுத்து மந்திரத்தை ஓதுகின்றேன். (ஓரெழுத்து - ஓம் என்பது. இதுவே அசபா மந்திரம் பிரணவத்தை எண்ணுவதே தவிர ஜெபிப்பது இல்லையாதலின் அசபை என்க.)

885. ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்து அங்கு இருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே.

பொருள் : அகரமாகிய ஓரெழுத்தால் உலகமெல்லாம் பரவி அது அதுவாய் விளங்கி, உகரம் என்ற இரண்டாவது பாதத்தால் உடம்பினுள் பொருந்திச் சிவசத்தியாய் மூன்றாவது பாதமாகிய மகரத்தால் தோன்றுகின்ற ஒளிப்பொருளை மாயையால் மயக்கத்தைப் பொருந்தும்படி செய்தது. (அகரம் - சாக்கிரம், உகரம் - சொப்பனம், மகரம் - சுழுத்தி. ஓம் - அ+உ+ம்.)

886. தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றும்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்
தேவர் உறைகின்ற திருஅம் பலமென்றும்
தேவர் உறைகின்ற தென்பொது வாமே.

பொருள் : தேவர்க்கும் மூவர்க்கும் மற்று யாவர்க்கும் பெருமானாகிய முழுமுதற் சிவன் என்றும் உறைகின்ற திருவிடம் சிற்றம்பலம் என்ப. இதனையே சிதம்பரம் எனவும் கூறுவர். இதனையே திருஅம்பலம் எனவும் கூறுவர். இவை எல்லாம் அழகிய அம்பலம் என்னும் தென்பொதுவேயாகும்.

887. ஆமே பொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத்து அனவரத தாண்டவம்
ஆமே பிரளயம் ஆகும்அத் தாண்டவம்
ஆமேசங் காரத்து அருந்தான் டவங்களே.

பொருள் : பொன்னம்பலத்தில் என்றும் இடையறாது நிகழும் திருக்கூத்து ஐவகைக் குறிப்பாகும். தாண்டவம் சீவர்களை முன்னேற்றப் புரியும் அருட் செயலாகும். அவை 1. அற்புதக் கூத்து  - சிருஷ்டிக்கின்ற நடனம், 2. ஆனந்தக் கூத்து - இன்பம் தருகின்ற நடனம், 3. அனவரதக் கூத்து - சுவாச இயக்க நடனம், 4. ஊழிக் கூத்து - தூக்கத்தைச் செய்யும் நடனம், 5. பேரொடுக்கக் கூத்து - தன்பால் அணைத்துக் கொள்வதற்குரிய நடனம். தாண்டவம் - பிறப்பு அறச் செய்கின்ற கூத்து.

888. தாண்டவ மான தனியெழுத்து ஓரெழுத்து
தாண்டவ மானது அனுக்கிரகத் தொழில்
தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரம்
தாண்டவக் கூத்துத் தமனியம் தானே.

பொருள் : தாண்டவமான ஒப்பற்ற எழுத்து பிரணவம், அத்தாண்டவம் அனுக்கிரத்தையே முதல் தொழிலாகக் கொண்டு இயங்குவது. அஃது எல்லாவற்றிலும் மேலாக நின்ற தற்பர சிவநிலையாகும். அக் கூத்துப் பொன்னம்பலத்துள் நிகழ்வதாகும்.

889. தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலம் தானே.

பொருள் : சிவபரம் பொருளாகிய பரஞ்சோதி தத்துவ ரூபமாக விளக்கப் பட்டவைகளில் கலந்துள்ளது. அதுவே பிரணவத்தின் உறுப்புகளான அகர உகர கலைகளாயும் உள்ளது. தத்துவங்களை இயக்குவதற்குத் தானே ஒளி தருவது. அது வேறு ஆதாரமின்றித் தன்னையே தனக்கு ஆதாரமாயும் கொண்டுள்ளது. (தராதலம் - பூமி ஆதாரம் என்பது. தத்துவம் - மெய்ப்பொருள்.)

890. தாரதல மூலைக்குத் தற்பர மாபரன்
தராதலம் வெப்பு நமவா சியவாம்
தராதலம் சொல்லில் தான்வா சியவாகும்
தராதல யோகம் தயாவாசி யாமே.

பொருள் : ஆதாரமாகிய மூலாதாரத்தில் தற்பரமாக எழுந்தருளியுள்ள சிவம் அக்கினி மண்டலத்தில் நமசிவாய என நிற்கும். மேல் ஆதாரமாக விளங்கும் ஒளி மண்டலத்தைச் சொல்லப் போனால் நவாசிய என்றமையும். அதற்கு மேல் விளங்கும் சகஸ்ரதள ஆதாரத்தில் யவாசியாம்.

891. ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா இடம்என்ப
ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்த மாமே.

பொருள் : அகரம் சிவமாகவும், உகரம் சிவையாகவும் ஆகும். இவை இரண்டும் சுட்டறிவுக்கு எட்டாத துணைப் பொருள்கள். ஆதலால் அறிய இடம் என்ப. அறிவுருவாம் முழுமுதல் ஐந்தொழில் திருக்கூத்து அடங்கிய பெரும்பொருள் ஆகும். இறவாத இன்ப நிலையமாக இயங்குவது சிவகதியேயாம். மரங்கள் - மேலாம் மெய்ப் பொருள்கள். சிற்பரம் - மேலாம் அறிவுரு. சிவகதி - இன்பநிலையம்.

892. ஆனந்த மூன்றும் அறிவுஇரண்டு ஒன்றாகும்
ஆனந்தம் சிவாய அறிவார் பலரில்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்கட்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படும் தானே.

பொருள் : இறவாத இன்ப நிலையம் அகர உகர மகரங்களென்னும் மூன்றுமாம். அறிவு ஆற்றல், அறிவு என அறிவு இரண்டாம். அறிவாற்றல் - ஆணை; சத்தி. அறிவு - சிவம். இவற்றுடன் யகரம் ஒன்று கூட்ட அறிவு (சிவய) மூன்றாகும். இம் மூன்றனையும் திருவருள் துணையால் அறிவார் பலரில்லை; சிலரேயாவர். இறவாத இன்பத்தினை அதனுடன் சேர்ந்து அறிய வல்லார்க்கு அவ் இன்பம் ஒளியாது வெளிப்படும் என்க.

893. படுவது இரண்டும் பலகலை வல்லார்
படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே.

பொருள் : இணைந்திருக்கும் அம்ச மந்திரம் (சிவ) இரண்டும் புரிவார் பல்கலை வல்லவராவர். அம்ச மந்திரம் இரண்டும் அறிவும் ஆணையுமாகக் கூறலாம். அறிவே சிவம் ஆணையே சித்தி இவ்விரண்டின் விரிவே ஓங்கார பஞ்சாட்சரங்கள். இம்முறை குறிப்பதே சங்காரத் தாண்டவர். இத்தாண்டவத்தின் முறைமையால் எல்லா இடங்களிலும் சிவப்பேறு பரவும் என்க. (வாறு - பேறு - சிவப்பேறு. சங்காரம் பேரொடுக்கம்)

894. வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்டுறை புன்னையும்
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள்
வாறே பொதுவாகும் மன்றின் அமலமே.

பொருள் : இவ்வாறே சதாசிவ மூர்த்தியால் அருளிச் செய்யப்பட்டது. வேத நெறி சைவ நெறிக்கு மாறுபடாத கமம் ஆகும். இவ்வாறு சிவகதியில் வளப்பம் மிகுந்த துறையை அடையின் பாச நீக்கம் உண்டாகும். சைவ ஆகமங்களால் கூறப்பட்ட உண்மை இவ்வாறுள்ளது. இதுவே எல்லோரும் சென்றடையும் பொதுச் சபையாகவும், அதன் கண்விளங்கும் நின்மல சிவமாகவும் உள்ளது. (வண்டுறை - வண்+துறை = வளப்பான முறை. புன்னையு - புல்+நையும் = பாம் கெடும். அமலம் - நிதன் மலசிவம். நெறி நூல் - வேதம். துறைநூல் - ஆகமம்.)

895. அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
அமலம் திரோதாயி யாகும்ஆ னந்தமாம்
அமலம்சொல் ஆணவம் மாயை காமியம்
அமலம் திருக்கூத்தங்கு ஆமிடம் தானே.

பொருள் : நின்மல சிவமே பதிபசு பாசங்களுக்குத் தாரகம் என்று கூறும். நின்மல சிவமே மறைப்புக்கும் ஆனந்தத்துக்கும் தாரகமாம் நின்மல சிவமே சொல்லப்பட்ட ஆணவம் மாயை கன்மத்துக்குத் தாரகம். நின்மல சிவம் விளங்குவது சங்காரத் தாண்டவம் செய்யும் இடமாகும். (திருரோதாயி மறைப்பாற்றல்)

896. தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மலை யாய் நிற்கும்
தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.

பொருள் : அச்சிவமே சிவசத்தி பிரிப்பின்றி நிற்றலால் சத்திக்குத் தலைவனாக உள்ளான். தான் விளங்கும் அருள் மலையாகவும் அவனே உள்ளான். தான் பிறவற்றோடு கலந்திருந்தாலும் அவனே உள்ளான். தான் பிறவற்றோடு கலந்திருந்தாலும் தன் சுபாவம் குன்றாது நிற்கிறான். தன்னை ஒருவர் ஏலப்படுவார் இன்றித் தானே தனக்குத் தலைவனாய் விளங்குகிறான்.

897. தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.

பொருள் : அடிமையாகிய உயிருலகம், உடைமையாகிய உயிரல் உலகம் அனைத்திற்கும் என்றும் பொன்றாத் தலைவனுமாய் நின்றருள்பவன் தற்பரக் கூத்தன். அவனே என்றும் ஒன்று போல் விளங்கும் நிலைப் பொருளாகிய சற்பாத்திரமாவான். மணத்தூளாகிய பேருணர்வுத் தாளிணை என்னும் தாமரை போலும் திருவடியை உடையவனாக விளங்குபவனும் அவனேயாவன்.

898. இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
இணையார் கழலிணை ஈர்ஐஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே.

பொருள் : அவனது திருவடியே அகரமாகிய பெரும் பொருளாம். அப் பெரும்பொருளே யகரமாகிய ஆன்மாவில் விளங்கும். அதுவே ஐம்பத்தோர் எழுத்துக்களாம். அதுவே எல்லா மந்திரங்களுக்கும் தலைவனாக உள்ளது. (எட்டெழுத்து அ - ஈரைந்து - பத்து - ய. ஐம்பத்தொன்று - ஆசிரியர் காலத்தில் வழங்கப்பட்ட தமிழ் எழுத்துக்களின் எண் 51. தமிழ் எண்கள் 8-அ 10-ய. ஏழாயிரம் - இறைவனது ஆற்றல்களைக் குறிக்கும் ஒரு பேரெண்.)

899. ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி
ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே.

பொருள் : ஏழாயிரமாய்க் கூறப்பட்ட மந்திரங்கள் இருபது முப்பது என்ற எண்ணிக்கையிலுள்ள எழுத்துக்களால் ஆனவை. ஏழாயிர வகையான மந்திரங்களும் ஏழு முடிவில் பொருந்து வனவாய் ஏழாயிரம் பிரிவில் எண்ண முடியாத பேதங்களாக விரியும். ஏழு முடிகளையுடைய மந்திரங்கள் எல்லாம் இரண்டு ஆகிய விந்து நாதத்தில் முடிவனவாம்.

900. இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணம் தானே.

பொருள் : அசபையாகிய பிரணவமே ஏழாயிர மந்திரங்களாகும். அசபையாகிய மந்திரம் எத்தன்மையதாக இல்லை ? அசபையே  சிவனது வடிவாக உள்ளது. அசபையே இவ்வாறு எல்லா மாய் உள்ளது அசபையே மந்திரமாகவும் மந்திரப் பொரு ளாகவும் உள்ளது.

901. தானே தனக்குத் தகுநட்டம் தானாகும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடந் தானே.

பொருள் : சிவ என்னும் ஈரெழுத்தும் ஒப்பில்லாத சிறந்த திருக்கூத்தாகும். அவையே அகர உகரங்களாகவும் நிற்கும். மேலும் உலகத் தோற்ற ஒடுக்கங்களுக்கு முதற் காரணமாயுள்ள மாயைக்கு அடிப்படை மந்திரமாயுள்ள இரீங்கார மந்திரமும் அதுவேயாம். (ரீம் - மாயையின் பீச மந்திரம்.)

902. நடம்இரண்டு ஒன்றே நளினம தாகும்
நடம்இரண்டு ஒன்றே நமன்செய்யும் கூத்து
நடம்இரண்டு ஒன்றே நகைசெயா மந்திரம்
நடம்சிவ லிங்கம் நலஞ்செம்பு பொன்னே.

பொருள் : நடனம் இரண்டில் சங்காரத் தாண்டவம் அருள் பற்றினது; ஆனபடியால் நன்மையைச் செய்வதாகும். மற்றொன்றாகிய அற்புதத் தாண்டவம் பிறவியில் செலுத்தலால் நமனுக்கு வேலை கொடுக்கும் கூத்து சங்காரத் தாண்டவமே உலகோர் பழிப்புக்கு ஆளாகாத பிரணவ மந்திரமாகும். இத்தாண்டவப்  பயன், எடுத்த உடம்பு செம்பு பொன்னாவது போல் சிவகாரமாய் விடும். (அற்புதத் தாண்டவம் - ஆன்மாக்களைப் பிறவியிற் செலுத்தும். (சங்காரத் தாண்டவம் - பிறவியினின்றும் ஆன்மாக்களை மீட்கும்.)

903. செம்பொன் ஆகும் சிவாய நமஎன்னில்
செம்பொன் ஆகத் திரண்டது சிற்பரம்
செம்பொன் ஆகும் ஸ்ரீயும் கிரீயுமெனச்
செம்பொன் ஆன திருஅம் பலமே.

பொருள் : சிவாய நம எனத் திரு ஐந்தெழுத்து ஓதினால் செம்பின் குற்றம் நீங்கிப் பொன்னாவது போல் உயிரின் குற்றமாகிய ஆணவம், கன்மம், மாயை கெட்டுத் தூய்மை பெறும். அப்போது உயிரின் அறிவு மயமான பரம் அமையும் ஸ்ரீம், கிரீம் என்று ஜெபித்தாலும் அவ்விதமே உடம்பு பொன்னாகும். செம்பு பொன்னானது போல் திரு அம்பலம் சமைந்த போது உயிரின் குற்றம் நீங்கிச் சிவாகாரமாய் விளங்கும். (சிரீயும் கிரீயும் - சத்த பீச மந்திரங்கள்.)

904. திருஅம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்
திருஅம் பலமாக ஈராறு கீறித்
திருஅம் பலமாக இருபத்தைஞ் சாக்கித்
திருஅம் பலமாகச் செபிக்கின்ற வாறே.

பொருள் : திரு அம்பலமாக விளங்கும் சிறப்பான சக்கரத்தைச் சபை அமைக்கக் குறுக்கும் நெடுக்குமாக முறையே ஆறு ஆறு கோடுகள் இட்டு அதனை இருபத்தைந்து அறைகளாக்கி அந்த இருபத்தைந்து அறைகளிலும் முறையாகப் பஞ்சாட்சரம் அமைத்துச் செபிக்கவும்.

905. வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே.

பொருள் : சிவாய நம சிவாயநம என்ற முறையில் வலிமையாக எண்ணிச் செபித்தால் பிறப்பில்லாது ஒழியும். அவ்வாறே வளர்ச்சியைத் தருகின்ற திருக் கூத்துத் தரிசனம் காணலாம் அப்போது ஆன்மா மலமற்றுப் பொன்போல் விளங்கும் (வாறு - பேறு, வலிமை, ஆறு.)

906. பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும்
பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கில்
பொன்னாகும் வல்லோர்க்கு உடம்புபொற் பாதமே.

பொருள் : சிவாயநம என்ற பொன் போன்ற மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லலாகாது இப்பொன் போன்ற மந்திரம் உதட்டளவில் ஒலியின்றி எண்ணத்தக்கது. இந்த மந்திரத்தை எண்ணும்போது உடம்பு பொன்னாகும். திருவடிப் பேறு கிட்டும். (கிஞ்சுகம் - சிவப்பு. இங்குச் செந்நிறமுடைய உதட்டுக்கு ஆயிற்று புகை - சுவாசம்)

907. பொற்பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும்
பொற்பாதத்து ஆணையே செம்புபொன் ஆயிடும்
பொற்பாதம் காணத் திருமேனி ஆயிடும்
பொற்பாத நன்னடம் சிந்தனை சொல்லுமே.

பொருள் : பொற்பாதம் திருவடி தரிசனம் கிட்டும் பஞ்சாட்சர செபத்தால் சிறந்த ஆசாரியனாகச் சீடர்கள் உண்டவர். சிவ அனுக்கிரகத்தால் சீடனின் மலக் குற்றம் நீங்கும். பொற்பாதத்தைக் காணத் தக்க உடம்பாயிடும். திருவடி நடனச் சிந்தனையை உபதேசியுங்கள் பஞ்சாட்சர செபத்தால் சிறந்த ஆசாரியனாகலாம்.

908. சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவார் நயத்துட னேவரும்
சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே.

பொருள் : சொல்லப் படுகின்ற வேறோர் உடம்பில் புகுந்து அங்குள்ள இன்பத்தைப் பெறலாம். இவரிடம் வசீகரத் தன்மை இருப்பதால் அழகிய பெண்கள் விரும்பித் தொடருவர். இவர்கள் சொன்னால் உலகினர்க்கு ஆசாபாசம் நீங்கும். இவை திருக் கூத்தினால் அடையும் பயன்கள்.

909. சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலும்மேல்
சூக்கும மான வழியிடைக் காணலாம்
சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்
சூக்கும மான சிவனதுஆ னந்தமே.

பொருள் : மானசீகமாக எண்ணப்படுகின்ற ஆயிரம் உரு செபித்தாலும் மேலுள்ள நுண்மையான உச்சித் தொளை வழியயும் காணலாம். வாசனா ரூபமாகப் பந்தித்துள்ள  வினைகளைக் கெடுக்கலாம். சூக்குமமான சிவானந்தம் விளையும் (சூக்குமவழி - பிரமரந்திரம்)

910. ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென்று அறைந்திட
ஆனந்தம் ஆனந்தம் ஆஈஊஏஓம் என்று அறைந்திடும்
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சுமது ஆயிடும்
ஆனந்தம் ஆனந்தம் அம்ஹ்ரீம்அம்க்ஷம் ஆம்ஆகுமே,

பொருள் : சீவன் உச்சித் தொளையைக் கடந்து சிவனோடு ஒன்றிய நிலையைச் சொல்வது ஆனந்தம். இவ்வாறு சிவனின் சமஷ்டித் தன்மயும் சீவனின் வியஷ்டித் தன்மையும் பிரித்தறிய முடியாதபடி இருக்கும் இடத்தை அடைவது அதைவிட ஆனந்தம். இவ்வைந்தும் ஒன்றிய நாதாந்தம் அமைந்த போது ஆனந்தமாம். இந்த வித்து எழுத்துக்களான இவை ஐந்துமே சிறந்த ஆனந்தத்தை அளிப்பன. (முன்னர் உள்ள குற்றெழுத்துக்களைச் சிவமாகவும், பின்னர் உள்ள நெட்டெழுத்துக் களைச்)

911. மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ள
மேனி இரண்டும் மிக்கார்அ விகாரியாம்
மேனி இரண்டும் ஊஆஈஏஓ என்று
மேனி இரண்டும் ஈஓஊஆஏ கூத்ததே.

பொருள் : தூல உடம்பும் சூக்கும உடம்பும் ஒன்றுக் கொன்று தடையாக இராமல் அவை மிகுந்து ஒளி பொருந்தி விகாரப் படாமல் நின்றால் தூல சூக்கும உடல் இரண்டும் விளங்கி அவையே திருக் கூத்தாகும். சொல்லுருவம் என்பது மந்திர உருவம். பொருளுருவம் என்பது உறுப்புக்களோடு கூடிய திருவுருவம். இவை இருவேறு வகையாக சிவாயநம, நமசிவய எனவும் வழங்கப் பெறும்.

912. கூத்தே சிவாய நமமசி வாயிடும்
கூத்தே ஈஊஆஏஓம் சிவாய நம வாயிடும்
கூத்தே ஈஊஆஏஓம் சிவயநம வாயிடும்
கூத்தே இஊஆஏஓம் நமசிவாய கோளொன்று மாறே.

பொருள் : சிவயநம என்னும் செந்தமிழ்த் திருமறை ஐந்தெழுத்தால் ஆகிய திருக்கூத்து ஆருயிர்களை உருகிக் குழைவிக்கும். இக் குழைவினையே சிவனின் ஒப்படைப்பாகிய ஆத்தும நிவேதனம் என்ப. சிவயநம  நமசிவாய என்னும் நுண்மையும் பருமையும் ஆகிய இருவகை ஐந்தெழுத்துடன் மேற்கூடிய நெட்டெழுத்து ஐந்தினையும் இணைத்துக் கணித்து வழிபடுதலே செந்நெறிக் கொள்கை என்க.

913. ஒன்றிரண்டு ஆடவோர் ஒன்றும் உடனாட
ஒன்றினின் மூன்றாட ஓரேழும் ஒத்தாட
ஒன்றினில் ஆடவோர் ஒன்பதும் உடனாட
மன்றினில் ஆடனான் மாணிக்கக் கூத்தே.

பொருள் : திருச்சிற்றம்பலச் சிவனார் செய்தருளும் திருஐந்து எழுத்தானாம் திருக் கூத்தினுள் மாணிக்கக் கூத்தென்பதும் ஒன்று. அக் கூத்தானே உலகுயிர்கள் ஆடும் உண்மை இதன்கண் காணப்படும். ஐந்துபூதங்கள் சூரியர் சந்திரர் அக்கினி மும்மூர்த்திகள் இவைகளை இணைத்துப் பலவாறாகக் கூறுவர். அசபை கூறப்புகுந்த இதன்கண் அஞ்செழுத்தருட் கூத்தும் கூறியருளினார். (அசபையும் ஐந்தெழுத்தும் முறையே நுண்மையும் பருமையும் என்னும் இணைவால் என்க)

2. திருஅம்பலச் சக்கரம்

(சக்கரம் என்பது கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக இட்டு எழுத்துக்களைக் கட்டங்களில் அடைத்து வழிபடுவதற்குரியது திரு அம்பலச் சக்கரம் என்றால் சிதாகாயப் பெருவெளியில் ஆனந்தக் கூத்தாடும் பெருமான் சத்தியோடு மந்திர வடிவமாய் நின்று நிலவும் சக்கரம் என்க.)

914. இருந்தஇவ வட்டங்கள் ஈராறி ரேகை
இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று
இருந்த மனையொன்றில் எய்துவன் தானே.

பொருள் : இருந்த இச்சக்கரங்களில் பன்னிரண்டு கோடுகளைக் குறுக்கும், பன்னிரண்டு கோடுகளை நெடுக்கமாக இட்டு அமைந்த கட்டங்கள் 121 ஆகும். அமைந்த இச்சக்கரத்தின் நடுக்கட்டத்தில் சிவன் பொருந்துவன். (ஈராறுபத்து ஒன்று என்பது 2610+1 = 121. சிவன் - சிவ அட்சரமாகிய சி.)

915.தான்ஒன்றி வாழிடம் தன்எழுத் தேயாகும்
தான்ஒன்றும் அந்நான்கும் தன்பே ரெழுத்தாகும்
தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்
தான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே.

பொருள் : சிவமாகிய தான்பொருந்தி விளங்கும் இடம் தனக்குரிய எழுத்தாகிய சிகரமாகும். தான் பொருந்துவதற்கு இடமாயிருக்கும் ஏனைய வய நம என்னும் நான்கு எழுத்துக்களும் தன் பெயரினை உணர்த்தும் எழுத்துக்களாகும். சிவம் பொருந்தி யுள்ள அமைப்பில் நாற்கோணத்தில் சூழவுள்ளனை தன் அஞ்செழுத்தாகும். சிவமாகிய தான் ஏனைய எழுத்துக்களுடனும் பொருந்தி நிற்கும்.

916. அரகர என்ன அரியதொன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப்பு அன்றே.

பொருள் : அரகர என்னும் நாமத்தைப் பயின்றவர்க்கு எல்லாம் எளிமையில் முடியும்; அவ்வளவு பெருமை யிருந்தும் மனிதர்கள் அரகர என்று வணங்கிப் பயன் அடையவில்லை. அவர் அழியாத ஒளியுடல் பெறுவர். மேலும் வினை இன்மையால் பிறப்பு இல்லை.

917. எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரம் பான்மொழி யாலே.

பொருள் : எமது தலைவன் வாழும் இடம் மேற்குறித்த சக்கரத்தில் நான்கு திசைகளிலும் நான்கு கோணங்களிலும் உள்ளது. இந்த எட்டு இடங்களிலும் பஞ்சாட்சரம் பொருந்தும். ஓம் நமசிவய என்னும் ஆறெழுத்து அரு மறையும் பதினான்கு உலகங்களும் ஒளியும் ஒலியும் ஆகிய எல்லாம் திருவருள் தங்குதலினின்று தோன்றின. இந்த எண்களுக்கு வேறு பொருளும் கூறுவர்.

918. மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவல் லாருயிர் காக்கவல் லாரே.

பொருள் : சிவனும் சிவையும் ஒட்டி யுறையும் வழிவகை அறியின் விட்ட எழுத்தாகிய வ விடாத எழுத்தாகிய சி இவ்விரண்டும் மா முதல் என்னும் உண்மை வெளியாகும். மா முதல் - மகாகாரணம். இவ் இரு பெரும் எழுத்தாகிய சிவ என்னும் செந்தமிழ்த் தனிமறையினை இடையறாது கணிக்கவல்லார் தம்முயிர் திருவடியிற் கூடிப் பேரின்பம் எய்தும் நிலையினைப் பேண வல்லவர் ஆவர்.

919. ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தஇத் தூலம்போய்
ஆலய மாக அறிகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்திருந் தானே.

பொருள் : கோயிலாக அமர்ந்த பஞ்சாட்சரம், கோயிலாக இருந்த இத்தூல நிலைமாறி, கோயிலாக எண்ணுகின்ற ஒளியை முதலாகவுடைய சூக்குமத்தில் சிவன் கோயில் கொண்டிருந்தான். இவற்றுள் பருமையாகிய நமசிவய என்பதன் மேல் நுண்மையாக அறிகின்ற சிவயநம என்னும் அதுவே திருக்கோவிலாக அமர்நதிருந்தான் என்க. இந்நிலை இரண்டும் முறையே உலகியலைப் பெரியதாகவும், வீட்டி யலைப் பெரியதாகவும் கொள்ளும் குறிப்பினவாகும்.

920. இருந்த இவ்வட்டம் இருமூன்றுஇ ரேகை
இருந்த அதனுள் இரேகை ஐந்தாக
இருந்த அறைகள் இருபத்துஐஞ் சாக
இருந்த அறையொன்றில் எய்தும் அகாரமே.

பொருள் : இருந்த இச்சக்கரம் ஆறுகோடுகளை உடையதாக, அதனுள் கட்டங்கள் ஐந்தாக, அவற்றுள் ஐ ஐந்து கட்டங்கள் இருபத்தைந்தாக, அங்கு ஒரு நடுக்கட்டத்தில் அகாரம் பொருந்தும். (அகரம் சிவபெருமானின் அடையாள எழுத்தாகும்.)

921. மகார நடுவே வளைத்திடும் சத்தியை
ஓகாரம் வளைத்திட்டு உம்பிளந்து ஏற்றி
அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்
நகார வகாரநற் காலது நாடுமே.

பொருள் : இதன்கண் திருஅம்பலச் சக்கரம் எழுத்துமுறை அமைப்பினால் தலை, கண், கால் முதலிய உறுப்புக்களோடு அமைந்த ஓர் ஆள் வடிவமாகத் தோன்றுமுறை ஓதப் பெற்றுள்ளது. இதில் சிதம்பரச் சக்கர நடுவில் ஈசனை மனித உருவமாகக் காணும் முறை கூறப்பட்டுள்ளது. குருமுகமாகத் தீட்சை பெற்றுச் சாதனம் செய்தால் சூக்கும சிவாலயம் அமையும் என்பதாம்.

922. நாடும் பிரணவம் நடுஇரு பக்கமும்
ஆடும் அவர்வாய் அமர்ந்தங்கு நின்றது
நாடும் நடுவுள் முகம்நம சிவாய
ஆடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே.

பொருள் : விரும்பும் பிரணவத்தை ஆஞ்ஞையில் நடுவாக இருபக்கமும் பொருந்திய சிவாக்கினியான ஒளியைக் கொண்டு நோக்குங்கள். அது அசைவினை உண்டாக்கும் சாதகரது வாயில் பொருந்தி நின்றது. அப்போது அண்ணாக்கினுள்ளே உண்டாவது நமசிவாயமாம். பின் வெளியில் சிரசைக் குழவுள்ள பகுதியில் விளங்குவது சிவாய நம என்பது.

923. ஆயும் சிவாய நமமசி வாயந
ஆயும் நமசிவா யயநம சிவா
வாயுமே வாய நமசியெனும் மந்திரம்
ஆயும் சிகாரம் தொட்டந்தத்து அடைவிலே.

சிவாயநம
மசிவாயந
நமசிவாய
யநமசிவா
வாயநமசி

பொருள் : சிவாய நம என்னும் மந்திரத்தை நான்கு முறை எழுத்துக்களை மாற்றியமைக்கும் நிலை ஓதப்படுகின்றது அந்நான்கும் ஈற்றிலிருந்து முறையே  ஒவ்வோர் எழுத்தும் முதலெழுத்தாக எழுதுதல் வேண்டும். அங்ஙனம் எழுதின் திரு அம்பலச் சக்கரம் இருபத்தைந்திலும் திரு ஐந்தெழுத்து அமைந்திருக்கும்.

924. அடைவினில் ஐம்பதும் ஐஐந்து அறையின்
அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துடும்பத்தொன்றும் அமர்ந்ததே.

பொருள் : வரிசையாகிய க்ஷ காரம் நீங்கிய ஐம்பது எழுத்துக்களையும் இருபத்தைந்து அறைகளில் அறை ஒன்றுக்கு ஈரெழுத்தாக அடைத்துப் பிரணவ வட்ட மகாரத்தில் க்ஷல்வை அடைப்பின் ஐம்பத்தோர் அட்சரங்களும் முறையாக அடைபட்டுவிடும். ஐம்பத்தொரு கிரந்த அட்சரங்களும் அடைக்கப்படும் விதம் கூறியவாறு.

925. அமர்ந்த அரகர வாம்புற வட்டம்
அமர்ந்த அரிகரி யாம்அத னுள்வட்டம்
அமர்ந்த அசபை யாம்அத னுள்ளவட்டம்
அமர்ந்த ரேகையும் ஆகின்ற சூலமே.

பொருள் : சக்கரத்தின் வெளி வட்டத்தில் ஹரஹர என்றும், அதனை எடுத்த உள்வட்டத்தில் ஹர ஹர என்றும், அதனை எடுத்த உள்வட்டத்தில் ஹரிஹரி என்றும், அதற்கு அடுத்த உள்வட்டத்தில் ஹம்சம் என்னும் அசபையும், சக்கரத்தின் இரேகைகள் முடிவில் சூலமும் இடுக. சக்கரத்தின் புறத்தே இவ்வாறு அமைக்க வேண்டும் என்பதாம்.

926. சூலத் தலையினில் தோற்றிவும் சத்தியும்
சூலத் தலையினில் சூழும்ஓங் காரத்தால்
சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து
ஆலப் பதிக்கும் அடைவதும் ஆமே.

பொருள் : முத்தலை வேலாகிய சூலத்தின் முனையில் சிவையின் எழுத்தாகிய வகரம் அமைத்தல் வேண்டும். அச் சூலத்தைச் சூழ ஓங்காரம் அமைத்தல் வேண்டும். சூலத்தின் இடை வெளியில் திரு ஐந்தெழுத்தை அமைத்தல் வேண்டும். அதுவே இறையாகிய சிவத்தின் நிலைக்களமாகும். (இறை - பதி)

927. அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகாரம் ஒகாரமது ஐந்தாம்
அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம்
பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே.

பொருள் : அப் பஞ்சாட்சரமே அ,இ,உ,எ,ஒ ஆகிய ஐந்தாம். இதனைச் சக்கர வட்டம் மேல் வட்டத்து இடை வெளியில் இடுக. அதைச் சூழ நம் பேரான, சிவ சிவ என்ற எழுத்துக்களை வட்டம் சூழ அமைக்கவும் சூலத்து இடை வெளியில் அ,இ,உ,எ,ஒ இட்டுச் சூழ ஒரு வட்டமிட்டுச் சிவ சிவ அமைக்கலாம் என்க.

928. பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
சேர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின்
நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.

பொருள் : திருப் பெயராகப் பெற்ற நமசிவய, என்பதே சிவ மூல மந்திரமாகும். மற்றை எழுத்துக்கள் உள் வட்டம் வெளி வட்டங்களில் முன்னைத் திருப் பாட்டில் குண்டமுறை போல் திகழ்வனவாகும். இதுவே சம்பத்தைத் தரும் முறையான சக்கரமாகும்.

929. இயலும்இம் மந்திரம் எய்தும் வழியின்
செயலும் அறியத் தெளிவிக்கு நாதன்
புயலும் புனலும் பொருந்துஅங்கி மண்விண்
முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே.

1. பிருதிவி நாற்கோணம்  ல
 
2. அப்பு பிறைவட்டம்   வ

3. தேயு முக்கோணம்  ர

4. வாயு அறுகோணம்  ய

5. ஆகாயம் வட்டம்  அ

பொருள் :  முறையான இம்மந்திரம் அடையும் நெறியில் அதன் கிரியையும் அறியும்படியாகத் தெளிவு படுத்திய குருநாதன் காற்று, நீர், பொருந்திய தீ, நிலம், ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களுக்கு உரியவாகிய பீசங்களையும் முயலும் பஞ்சாக்கரத்தின் மூலம் அடையுங்கள் என்று அருளினான். பஞ்சாக்கரம் தொழிற்படும் போது பஞ்சபூத பீசாக்கரங்களும் அவைகளின் உருவங்களும் தேவைப்படும் என்க.

930. ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும்
ஏறிட்டு அதன்மேலே விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாய நமவென்னக்
கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.

பொருள் : ஐம்பது எழுத்தாக அமைக்கப் படும் காலத்து உயிரினத்தில் ஆறாவது எழுத்து ஊ பதினான்காவது எழுத்து ஒள எட்டு என்பது அ ஆகும். அதன்மேல் ஒளியும் ஒலியும் கணிக்குமாறு கூட்டுதல் வேண்டும். சிவயநம என இடையறாது கணித்துக் கொண்டிருந்தால் மும்மலங்களும் பிளவுபட்டு இன்னலுற்றுப் புலம்பி அகலும். (சத்தி ஒளி, விந்து. சிவன் ஒலி, நாதம். ஆதியில் தமிழ் எழுத்துக்கள் ஐம்பது ஆகும்.)

931. அண்ணல் இருப்பது அவள் அக் கரத்துள்ளே
பெண்ணின்நல் லாளும் பிரான்அக் கரத்துள்ளே
எண்ணி இருவர் இசைந்துஅங்கு இருந்திடப்
புண்ணிய வாளர் பொருளறி வார்களே.

பொருள் : முன்னர் கூறிய ஸெள என்பதில் தலைவனாகிய சிவமும் இருப்பன். உமாதேவியும் அப்பிரான் அக்கரத்தில் சிறந்து விளங்குவாள். இவ்விதமாகச் சிவசத்தி ஈசானத்தில் பொருந்தியிருப்பதைப் புண்ணிய சீலர்கள் நாதமாக விளங்குவதை அறிவார்கள் (அ+உ என்பதை ஒள ஆகி ஸகரத்தைச் சேர்க்க ஸெள ஆயிற்று என்றபடி) சிவயசிவ என்பதைக் குறிப் பதாக மற்றொரு சாரார் கூறுவர்.

932. அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே.

பொருள் : அகரத்தை எழுதி, அதன்மேல் அர என்பது எழுதி, அதன்மேல் இ எழுதிப் பார்க்கில் சிவலிங்கமாம் சிவலிங்கம் அருவம், உருவம் என்னும் இரண்டிற்கும் காரணமாம். இது அருவுருத் திருவுரு என்று ஓதப் பெற்றுள்ளது. (அ - அறிவு; அர தொழில்; இ - இன்பம். ம கரத்தை இட்டு உச்சித் தொளையின் கண் உயிர்ப்புச் செல்லுவதை உணர்ந்தபின் அங்குத்தொம் என்ற ஒலி கேட்கும்.)

933. அவ்வுண்டு சவ்வுண்டு அனைத்தும்அங்கு உள்ளது
கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வார்இல்லை
கவ்வுண்வு நிற்கும் கருத்தறி வாளர்க்குச்
சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே.

பொருள் : அகரமும் சகரமும் அங்குண்டு, இவ்விரண்டும் சிவம், சிவை என்னும் அத்தன் அன்னையைக் குறிக்கும். ஈண்டுக் கூறப்படும் அகரம் அடியையும், சகரம் சடையையும் கொண்டு நிற்கும் திருவுள்ளப் பெற்றி அறிவார் இல்லை. அத்தன்மையின் மெய்ம்மையினை அறியும் அடியவர்க்கு அச்சகரத்தின் வண்ணமாம் சதாசிவன் தோன்றும். (சவ்வுண்ட சத்தி ச என்னும் பீச மந்திரத்தின் சத்தி. கவ்வுண்டு கலந்து)

934. அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழுத் தாகிய அக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே.

பொருள் : நந்தியாகிய சிவபெருமான் திரு ஐந்து எழுத்தாகவே அமர்ந்து அருளினன். அஞ்சு சொற்களின் முதலெழுத்துக்களாகிய அஞ்சு எழுத்துக்களால் ஆகியது பஞ்சாக்கரம். இந்த ஐந்து எழுத்துக்களாலேயே சக்கரங்கள் அமைக்கப்படும். அதனுள் அமர்ந்து உறைபவன் விழுமிய முழுமுதற் சிவன். (அஞ்செழுத்தின் விரிவு வருமாறு; சி - சிறப்பு; வ-வனப்பு; ய-யாப்பு; ந - நடப்பு; ம - மறைப்பு)

935. கூத்தனைக் காணுங் குறிபல பேசிடில்
கூத்தன் எழுத்தின் முதலெழுத்து ஓதினார்
கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணும் குறியது வாமே.

பொருள் : கூத்தனாகிய சிவபெருமானைக் காணும் நெறிகள் நான்காகப் பேசப்படினும், அவன் திரு ஐந்தெழுத்தின் முதலெழுத்தாகிய சிவ என்பதனைச் சிறந்து எடுத்து ஓதம் மெய்யடியார் கூத்தப் பெருமானுடன் பிரிவின்றிக் கலந்த புணர்ப் பிணராவர். இதுவே திருவடிசேரும் பெரு நெறியாகும்.

936. அத்திசைக் குள்நின்ற அனலை எழுப்பியே
அத்திசைக் குள்நின்ற நவ்எழுத்து ஓதினால்
அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை
அத்திசைக் குள்ளுறவு ஆக்கினள் தானே.

பொருள் : அகர கலை விளங்கும் திசையாகிய மூலாதாரத்திலுள்ள மூலக்கனலை எழுப்பி, அத்திசையில் விளங்கும் நகாரத்தை அறிந்து ஓதினதால், அந்தத் திசையில் மறைந்து கிடந்த சிவனை அந்தத் திசையில் சிந்தித்து நின்று உறவாக்கிக் கொண்டேன். நகரம் தூலப் பஞ்சாக்கிரமாகிய நமசிவாயவைக் குறிக்கும்.

937. தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேலுற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதிடத்
தானே அளித்ததோர் கல்லொளி யாமுமே.

பொருள் : சிவபெருமான் தானாகவே அளித்தருளும் தூமாயை என்னும் குண்டலியினை ஆராய்ந்தால், சிவம் தானாகவே மேல் நிலையில் வைத்திடும். அதுபோல் மகரமாகிய ஒலியினை ஓதிட முழுமாணிக்க ஒளியாகிய சிவபெருமான் தோன்றுவன். (கல் - மாணிக்கம். தையல்-குண்டலினி. மகாரம் - நாதம். கல்லொளி - மாணிக்க சோதி.)

938. கல்லொளி யேயென நின்ற வடதிசை
கல்லொளி யேயென நின்ற இந்திரன்
கல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக்
கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே.

பொருள் : சிவபெருமான் வடதிசையிலுள்ள திருக்கயிலாய மலையைத் தனக்கு உறைவிடமாகக் கொண்டவன். அங்கு அவன் புண்ணிய வேந்தனாகக் போகம் அருளுகிறான். அவனுக்குரிய செந்தமிழ் மந்திர ஐந்தெழுத்தின் முதலெழுத்துச் சிகரம். இது வைர ஒளி போன்று திகழ்வது இதனைக் குன்றின் மேல் இட்ட விளக்கெனக் காட்டினான். (இந்திரன் - வேந்தன்; சிவபெருமான்; மருத நிலக்கடவுள். இந்திரன் இந்திரியத்தை அவித்தவன்; பொறிவாயில் ஐந்து அவித்தவன் சிவன்.)

939. தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்
தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவன் ஆமே.

பொருள் : எழுத்துக்கள் தோன்றுவதற்குரிய பண்பமைந்த ஒலியாகிய அருட்சுடரும் சிவனே. அவ் எழுத்துக்களால் ஆகிய அறிவு நூலாம் மறையும் அவனே. எல்லா நற்பண்புகளுமாய் நிற்பவனும் அவனே. தானாகத் தோன்றிய உள்ளங்கவர்கள்வனும் அவனே. (மறையவன் - கள்வன்; தானே எழுகுணம் - நாதம்)

940. மறையவ னாக மதித்த பிறவி
மறையவ னாக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத்து உள்நிறகப் பெற்ற
மறையவன் அஞ்செழுத்து தாம்அது வாகுமே.

பொருள் : ஆண்டவன் ஆரூயிர் அனைத்தையும் தன்வண்ணம் ஆக்குவன். அதன் பொருட்டு மானுடப் பிறவியை மதித்து அருளினான். அவ் வுண்மையை உணர்ந்து செந்நெறி ஒழுகி மறையவனாக மதித்திடக் காண்பர். அந்நிலை எய்துவதற்குத் திரு ஐந்தெழுத்தின் உள்ளீடாய் நிற்பவன் சிவன். அந்த ஐந்தெழுத்து ஓதுவார் சிவமாகி வாழ்வர். (அஞ்செழுத்து  - சிவயநம. சிவமாதல் - சிவனுக்கு அடிமையாதல்)

941. ஆகின்ற பாதமும் அந்நவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்
ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே.

பொருள் : அன்பாகிய உலகியலும் அருளாகிய வீட்டியலும் சிவன் திருவடியால் ஆகுவன. அத்திருவடிக்கண் நகரம். கொப்பூழின் கண் மகரம். இரு தோளின்கண் சிகரம் - வாயின் கண்வகரம். திருமுடியின் கண் யகரம். இம்முறையாக அம்பலவாணரின் அருமுறைத் தமிழ்த்திரு அமைப்பர். (சுடர் திருமுடி.சி சீ என நீண்டது)

942. அவ்வியல் பாய இருமூன்று எழுத்தையும்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடில்
பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.

பொருள் : முன்னர்க் கூறிய இயல்பை அறிந்து இரண்டாகவும் மூன்றாகவும் உள்ள பஞ்சாட்சரத்தை அறிந்தவர்களிடம் செம்மையாகிய இயல்போடு சிவபரம்பொருள் விளங்கும் ஒகரமாகிய பிரணவமாய் உணர்ந்து ஒளிபொருந்த தியானிக்கில் அக்கரங்களாலான பாவின் தன்மையாய் அஃதாவது நாத மயமாய் எங்கும் வியாபித்து நின்றான். இரண்டு மூன்று எனப்பிரிந்து நம என்பவை விடத்தக்கவை. சிவாய என்பவை கொள்ளத் தக்கவை. (ஓ - ஒ ஆயிற்று.)

943. பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓமென்று எழுப்பே.

பொருள் : அவ்வுண்டு என்பது முதல் இதுவரையும் சிவ மந்திரங்கள் விளக்கப்பட்டன. இவை எல்லா உயிர்கட்கும் வேண்டும் வரந்தரு மந்திரமாகும். அம் மந்திரம் பிறவியாகிய பெரும் பகையை நீக்கும். ஓம் என்று உள்ளன்புடன் கணிக்கத் திருவருள் ஆற்றல் கைகூடும். (எழுப்பவே என்பது எழுபே என்று திரிந்து நின்றது. துரந்திடும் - நீக்கும்)

944. ஓமென்று எழுப்பிதன் உத்தம நந்தியை
நாமென்று எழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென்று எழுப்பிஅவ் வாறுஅறி வார்கள்
மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.

பொருள் : ஓம் என முதற்கண் ஓசையை எழுப்புதல் வேண்டும். பின்பு நவசிவய என்னும் தமிழ் மந்திரத்தை நவிலுதல் வேண்டும். இதன்கண் நடுவெழு திருவிளக்குச் சிகரமாகும். சிவயநம என்று ஓதுவதே திருவடி சேர வழியாகும். இவ்வுண்மையை அறிபவர்கள் திருச்சிற்றம்பலம் கண்டு என்றும் இன்புற்றிருப்பார்கள். (மாமன்று - திருச் சிற்றம்பலம்)

945. ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்துஐந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வார்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத்து ஓரெழுத்து உள்நிற்கப்
யாகொன்றி நிற்கும் பராபரன் தானே.

பொருள் : திரு அம்பலச் சக்கரத்தில் அமைக்கப்படும் எழுத்துத் திரு ஐந்தெழுத்தாகும். இந்த ஐந்தெழுத்தும் ஐந்து சொற்களின் முதல் எழுத்தாகும். அவை அச்சொற்களின் மூலம் விளக்கமுறும். இந்த ஐந்தெழுத்தின் பொருளாக விரிவனவேயாம் ஐம்பத்தோர் எழுத்தும் இவ் அனைத்தையும் உள்நின்று உய்க்கும் முழுமுதல் சிவ பெருமான் ஒருவனேயாம்.

946. பரமாய் அஞ்செழுத்து உள்நடு வாகப்
பரமாய நவசிவ பார்க்கில் மவயரசி
பரகாய சியநம வாம்பரத்து ஓதில்
பரமாய வாசி மயநமாய் நின்றே.

பொருள் : எவ்வகை மந்திரங்களுக்கும் முதன்மை வாய்ந்ததாய்த் தாயாய்த் திகழும் திரு ஐந்தெழுத்துள் நடுவாள் விளங்குவது ய கரமாகும். இந்த ஐந்தெழுத்து; யநவசிம, மவயநசி, சியநமவ, வசிமயந - என நான்கு வகையாகக் கணிக்கப் படும். இங்ஙனம் எழுத்துக்களை நிலைமாறிக் கணித்தல் பொருள் உண்மை நன்கு புலனாய்ப் பதிதற்கே யாம். ஐந்து எழுத்துள் நடு - யகரம்.

947. நின்ற எழுத்துகள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துகள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துகள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.

பொருள் : பஞ்சாட்சரமாய் நின்ற எழுத்துக்களே பூதங்களை இயக்குவனவாம். அங்கு அமைந்துள்ள எழுத்துக்கள் பஞ்சாட்சரத்தின் சொரூபத்தை உணர்த்துவன. சக்கரத்திலுள்ள எழுத்துக்கள் முறையாக நின்றால் பஞ்சாக்கர சொரூபமான சிவமும் அவைகளில் சிறந்து விளங்குவான். (ந - பிருதிவி; ம - அப்பு; சி - அக்கினி. வ-வாயு; ப-ஆகாயம். பஞ்சாட்சரமே வடிவமாகக் கொண்டு சிவன் விளங்குவான்.)

948. நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே.

பொருள் : அழிவில்லாத திருஅம்பைச் சக்கரத்தினால் எல்லா உலகமும் நிலை பெறுகின்றன. இத்திரு அம்பலச் சக்கரத்து நிலை பேறாகவுள்ள சிவபெருமானை அச் சக்கர வழிபாட்டினால் நந்தியெம் பெருமான் ஆன்கன்றின் வாயிலாகப் பால் பெறுவது போல் பெற்றுக் கொண்டனன். குன்றிடை நிற்பார் நிலைத்த கொள்கை போல் திருஅம்பலச் சக்கரத்தினால் பெறும் பேறு நிலைத்த பேறாகும். மாய நன்னாடன் மாயா காரியமாகிய நல்ல நாட்டின் தலைவனும் நடந்து வோனும் ஆகின்றவன். (இத்திரு அம்பலச் சக்கரத்தைப் பூசித்து நந்திதேவர் கயிலையில் காவல் தலைமை எய்தினார் என்பர்.)

949. கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து
கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்துஐந்தும்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.

பொருள் : திரு அம்பலச் சக்கரத்தால் பெறப்படும் நன்மைகள் பல. அவற்றுள் படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிற் பெயராகும். மேலும் கூத்தப் பெருமான் தன் திருவுருவினைக் கீழிருந்து மேல் நோக்கின் நமசிவய எனவும், மேலிருந்து கீழ் நோக்கின் சிவயநம எனவும் வழங்கும் செந்தமிழ்த் திரு ஐந்தெழுத்தின் சீருமாகும்.

950. வெளியில் இரேகை இரேகையில் அத்தலை
சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி
நெளிதரும் கால்கொம்பு நோவித்து நாதம்
தெளியும் பிரகாரம் சிவமந் திரமே.

பொருள் : திரு அம்பலமாகிய பரவொளியில் சக்கரக் கீற்றுக்கள் இல்லை. திரு அம்பலச் சக்கரத்துள் கீற்றுக்கள் உண்டு. குற்றமற்ற உகரம் தீயின் அடையாளம். நெளிவு சேர்ந்த கோடு ஒளியாகிய விந்துவாகும். நெளிவு இல்லாத நேர்க்கோடு ஒலியாகிய நாதமாகும். இவற்றைத் தெளியும் போது சிவ என்னும் மந்திரமாகும். இரேகை கீற்று.

951. அகார உகாய சிகார நடுவாய்
வகாரமோடு ஆறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன்சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்துநின் றானே.

பொருள் : அகர உகரம் ஓங்காரத்தைக் குறிக்கும். சிகர வகரம் திரு ஐந்தெழுத்தைக் குறிக்கும். இவை ஓம் நமசிவய என ஆகும். இவற்றை ஆறெழுத்து மந்திரம் என்ப. சிவசிவ என்று இடையறாது உயிர்ப்புடன் எண்ணிக் கொண்டிருக்க ஓங்கார முதற் பொருளாகிய சிவபெருமான் தோன்றியருள்வான்.

952. அற்ற இடத்தே அகாரமது ஆவது
உற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்த பொன்போலும் குளிகையே.

பொருள் : துயிலற்ற இடமாகிய புருவ நடுவின்கண் வெளிப்பட்டுத் தோன்றுவது அகரமாகும். அந்த அகரம் நேர்ந்த இடத்து முழுமுதற் சிவத்தைக் கண்டிடச் செய்யும். ஆருயிர்களின் மாசு அகற்றிய விழுச்சுடர் மெய்ப்பொருளாகிய சிவன் செம்பின் குற்றமாகிய களிம்பு அகற்றிப் பசும் பொன்னாக்கும் குளிகையை ஒப்பன். (போலும் ஒப்பில் போலி)

953. அவ்வென்ற போதினில் உவ்வெழுத்து ஆவித்தால்
உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும்
மவ்வென்று என்னுள்ளே வழிப்பட்ட நந்தியை
எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.

பொருள் : அகரத்துடனே உகரத்தையும் ஒலித்தால் அடியார் நடுவுள் இருக்கும் குறிப்பினை உணர்த்துவதாகிய உவ்வென்ற வீடுபேறு பிரிவின்றி எய்தும், மகர நிலையாகிய  மனத்தின் கண் விளங்கும் நந்தியாகிய சிவம் என்னை முன்னின்று வழிப்படுத்தும். எம் தந்தையாகிய சிவபெருமான் புரியும் அருளிப் பாட்டை எச் சொல்லால் எடுத்து இயம்புவேன். (உவ்-நடு இடத்தைக் குறிக்கும் அடையாளம், பிரணவத்தின் உச்சரிப்பைக் குறிக்கின்றது இப்பாடல்.)

954. நீரில் எழுத்துஇவ் வுலகர் அறிவது
வானில் எழுத்தொன்று கண்டறிவார் இல்லை
யாரிவ் எழுத்தை அறிவார் அவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே.

பொருள் : நீர்மேல் எழுத்துப் போல் இவ்வுலகியல் அறிவு நிலையற்றதாகும். சிதாகாய மண்டலத்தில் விளங்கும் பிரணவமாகிய ஓர் எழுத்தைக் கண்டு, அதன் அறிவைப் பெறுபவர் யாரும் இல்லை. யார் ஒருவர் இவ் எழுத்தை அறிந்தாரோ அவர் பிரமனால் தலையில் எழுதப்படும் எழுத்தை மீளவும் அடைய மாட்டார்கள். அதாவது மீண்டும் பிறக்க மாட்டார்கள்.

955. காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலம் நடுவுற முத்திதந் தானே.

பொருள் : உயிர்ப்பு ஆறுநிலைக் களங்களுள் நடுவாகிய நெஞ்சத் தின் கண்நிற்ப, பெரு வெளியில் தோன்றிய ஓங்காரம் ஐம்பத்தோர் எழுத்துக்களாகிய சொன் மாலையின் நடுமணியாக விளங்கும் மேலும் மறைகளின் நடுவாக விளங்கும் திரு ஐந்தெழுத்தே சிவமூல மந்திரமாகும். அதனை இடையறாது நாட வீடு பேறு ஆகும். (நாட - சிந்திக்க.)

956. நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியவொண் ணாதது
தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே.

பொருள் : கொப்பூழின் கீழ் மூலத்திடத்துத் திகழும் ஒன்று நல்ல எழுத்தாகிய ஓங்காரம் சிவசிவ என்கிலாத் தீவினையாளர் இதன் பயனை அறிகின்றிலர். இது படைப்போன் முதலாகிய தேவர்களாலும் அறிதற்கு அரியது அம்மையோடு சிவபெருமான் ஆண்டுச் சிறந்திருந்தனன். (நாவி - நாபி, கொப்பூழ். பாவிகள் - தீவினையாளர். ஓவியர் - படைப்போன் முதலிய தேவர்கள்.)

957. அவ்வொரு சவ்வென்ற சரனுற்ற மந்திரம்
அவ்வொரு சவ்வென்றது ஆரும் அறிகிலர்
அவ்வொரு சவ்வென்றது ஆரும் அறிந்தபின்
அவ்வொரு சவ்வும் அனாதியும் ஆமே.

பொருள் : அகரமும் சகரமும் அரனுக்குரிய மந்திரமாகும். மகரத்துடன் கூடிய சகரம் - சம். இதனை யாரும் அறிகிலர். அகரத்துடன் கூடிய சகரமாகிய ச, என்னும் மறையினை எல்லாரும் அறிந்தபின் அகர சகரங்கள் தொன்மையனவாகும். (அனாதி - தொன்மை. இதனை அசபை என்பர். அசபை - அசபா பிக்கப்படாதத் (அசம்))

958. மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியின் உள்ளே உதயம்பண் ணாநிற்கும்
சந்திசெய் யாநிற்பர் தாமது அறிகிலர்
அந்தி தொழுதுநோய் ஆர்த்துஅகன் றார்களே.

பொருள் : திரு ஐந்தெழுத்தே வழிபாட்டு முதன்மை மந்திரம். அதனை நெஞ்சத்தினிடத்து உயிர்ப்புடன் கணிக்க மலர் வழிபாடு அருச்சனையாகும். கொப்பூழின் உள்ளே உயிர்ப்புடன் கணிக்க ஓம வேள்வியாகும். புறத்தே சந்தி செய்கின்றவர் இவ்வுண்மையினை உணரார்.  சந்தியாதேவியை வழிபடுவதாகக் கூறிக் கொண்டு வீண் ஆரவாரம் செய்து உண்மையினின்றும் நழுவினவர்கள் ஆகின்றனர்.

959.  சேவிக்கு மந்திரம் செல்லும் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே.

பொருள் : தொழுகை மந்திரம் யாண்டும் கணிக்கப்படும். அம் மந்திரத்திற்கு உயிரினைப் போன்று நிற்பது ஆறு நிலைக்கள மந்திரமாகுமாம். நெஞ்சத் தாமரைக்குள் நிலைபெறு மந்திரம் எது என்று குற்றமற ஆராயின் ஆருயிருக்கு உயிராகிய திரு ஐந்து எழுத்தாகும். அவை ஐம் பொறிகளாகிய மதயானைகளை அடக்க வல்ல அங்கசமாகும்.

960. அருவினில் அம்பரம் அங்கெழு நாதம்
பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி யகார சிகார நடுவாய்
உருவிட ஊறும் உறுமந் திரமே.

பொருள் : கண்ணுக்குப் புலனாகாத பரவெளியில் தோன்றுவது நாதம். அவ்விதம் பெருகி நிற்கின்ற ஒலியிடை நிலவுவது ஒளியாகிய விந்து ஆன்மாவாகிய யகாரத்தைச் சிகாரமாகிய இருகண் பார்வைக்கும் நடுவாய் கொண்டு தியானிக்கச் சபியாத பிரணவம் சிறந்து விளங்கும்.

961. விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
அந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாமே.

பொருள் : விந்துவும் நாதமும் அருளால் பொருந்தி உடன்கூடித் திங்களுடன் தலைப்படுமாயின் ஆயிர இதழ்த் தாமரைப் பரவெளியினின்று ஊற்றெழும் அமிழ்தம் வந்து வெள்ளம் போன்று இடையறாது பெருகும். அவ்விடத்துத் திரு ஐந்தெழுத்து மந்திரமே ஆகுதியாகும். (சந்திரன் - இடைதலை அங்குதி மந்திரம் - அப்போது உண்டாகும் உறுதிப்பாடு.)

962. ஆறெழுத்துஓதும் அறிவார் அறிகிலர்
ஆறெழுத்து ஒன்றான ஓதி உணரார்கள்
வேறெழுத்து இன்றி விளம்பவல் லார்கட்கு
ஓரெழுத் தாலே உயிர்பெற லாமே.

பொருள் : ஆறெழுத்து (ஓம் நமசிவய) மந்திரத்தை ஓதும் அறிவுடையவர்கள், இதனால் அமையவேண்டிய உண்மை நிலையை உணரவில்லை. பஞ்சாட்சரத் தியானத்தால் ஓரெழுத்தாகிய (ஓம் பிரணவத்தை உதிக்கச் செய்யவில்லை. பிரணவத்துடன் வேறுஎழுத்துக்கள் சேர்க்காமலே பிரணவ வித்தையை அறிவார்க்குப் பிரணவத்தாலேயே உயிரின் விளக்க காணலாம்.)

963. ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் வீரே.

பொருள் : எழுத்துக்கள் எல்லாம் முதற்கண் அங்காத்தலில் உண்டாகும் அகரத்தோடு உயிரெழுத்துக்கள் பினைந்தும் பழமையான மெய்யெழுத்துக்கள் முப்பத்தைந்தும் அவற்றோடு சேர்த்து எழுத்துக்கள் ஐம்பத்தொன்றாகும்.  சோதியை உண்டாக்கும் அகர கலையில் ஏனைய எழுத்துக்களும் சூக்கும மாய் இடம் பெற்றுள்ளன. நாத எழுத்தாகிய உகரத்தை அத்துடன் சேர்த்து அறியுங்கள். (பழைய தமிழ் எழுத்துக்கள்  16+35=51)

964. விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவி பதினாறு கலையதாம்
கந்தர வாகரங் கால்உடம்பு ஆயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே.

பொருள் : சுழியாகிய விந்துவினின்று எழுத்தோசை தோன்றும். அவ் எழுத்து ஐம்பத்தொன்று என்ப. அவ் எழுத்துக்களின் முதல்வி திருவருள் ஆற்றலாகும். அவள் பதினாறு கலையாக விளங்குவள். இத் ஐம்பத்தோர் எழுததும் அம்மையின் வடிவமாக அமைக்கப்படும்.

965. ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்
ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.

பொருள் : ஓங்காரத்துடன் கூடிய ஐம்பத்தோர் எழுத்துக்களால் ஆகியதே பொதுவும் சிறப்புமாகக் கூறப்படும் தொன்மைத் தமிழ் மறையும் முறையும் என்ப மறையை வேதம் எனவும், முறையை ஆகமம் எனவும் கூறுப. இவ் எழுத்துக்களால் ஆகிய பயனை உணர்ந்த பின் இவையனைத்தும் ஒடுங்கி ஐந்தெழுத்தே நின்று நிலவி முதன்மையுறும் என்க.

966. அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினான்
அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே.

பொருள் : நமசிவாய என்ற ஐந்து எழுத்துக்கள் முறையே பிரதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை உற்பத்தி செய்தன. அருவமான உயிர்களுக்கு இப்பூதங்களுடன் பொருந்தி வாழ அவற்றுக்கேற்ற யோனியில் சிருஷ்டியைச் செய்தருளினான். இவ்விரிந்த உலகை ஐம்பூத மயமாக இருந்து தாங்கினான். இத்தகைய ஐந்தெழுத்தாலே உயிர்கள் ஊடேயும் விளங்கி நின்றான். இறைவன் உயிர்களுக்குச் செய்யும் உபகாரம் கூறப்பட்டது.

967. வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்ததொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே.

பொருள் : விகிர்தனாகிய இறைவனது திருநாமத்தை மனம் சோர்வு அடையாமல் ஓதுவார் இன்ப மயக்கத்திலிருந்து தெளிந்து எழலாம். தலைவனாகிய சடாதரன் ஆன்மாக்களைச் சார்ந்துள்ள வினைகளும் அவற்றால் உண்டாகும் துன்பங்களும் நீங்கப் பிரணவ தொனியினால் என்னுடன் வாருங்கள் என்று அழைப்பான். (புரிடையோன் - திருவாதிரை நாளை விரும்புவோன். சடை - திருவாதிரை நாள்.)

968. உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்
விண்ணின்று அமரர் விரும்பி அடிதொழ
எண்ணின்று எழுத்துஅஞ்சும் ஆகிநின் றானே.

பொருள் : சிவன், அடியவர் உண்ணும் முடிவிலா அமிழ்தம் ஆவான். கால தத்துவம் கடந்த நித்தியப் பொருளாயும் இசை பொருந்திய வேதப் பொருளாயும் பாடலாயும் விளங்குவான். ஆகாய மண்டலத்திலுள்ள தேவர்கள் வணங்க ஆராயுமிடத்துப் பஞ்சாட்சரமாகிய நமசிவாய வடிவமாகவும் இருப்பான்.

969. ஐந்தின் பெருமையே அகவிடம் ஆவதும்
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.

பொருள் : விரிந்த உலகமாகச் காட்சி யளிப்பது நமசிவாய என்ற ஐந்து எழுத்தின் பெருமையாகும். தேவாலயம் விளங்குவதும் ஐந்தெழுத்தின் பெருமையாலேயாம். அறவழியிலே நீதி நிலை பெறுவதும் ஐந்தெழுத்தின் பெருமையாலேயாம். பஞ்ச பூதங்களிலும் விளங்கி அவன் அவற்றின் காவலனாக உள்ளான். (கோயிலில் கருப்பக்கிரகம் - சிகாரம்; அர்த்த மண்டபம் வகாரம்; யகாரம் நந்திபீடம்; நகாரம் - நடராச சபை; மகாரம் - பலிபீடம்.)

970. வேரெழுத் தாய்விண்ணாய் அப்புறமாய் நிற்கும்
நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குள்ள
சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்து
ஓரெழுத்து ஈசனும் ஒண்சுட ராமே.

பொருள் : அகரமாயும் ஆகாயமாயும் அதற்கு மேலுள்ள நாதமாயும் உள்ளான். மகாரமாகவும் நகாரமாகவும் உள்ளான். பெருமை மிக்க சிகாரமாய் அக்கினியாய் உயிரான யகாரமாய் உள்ள பிரணவ சொரூபமாய் இருப்பன் சிவன். (நீர் எழுத்து ம; நிலஎழுத்து - ந; சி - அக்கினி; உயர் - ய)

971. நாலாம் எழுத்துஓசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே.

பொருள் : (நமசிவய) உலகம் சத்தி மயமாய் உள்ளது. வகரமாகிய சத்தியில் இவ்வுலகம் ஒடுங்கியது. நாலாம் எழுத்தாகிய வகாரத்தைப் செபிப்பவருக்கு அதுவே ஆதாரமாய் நின்று மேன்மையான நெறியினைக் காட்டும். சிவாய நம என்பதில் நாலாம் எழுத்தாகிய ந எனக் கொண்டு பொருள் கூறுவாரும் உளர்.

972. இயைந்தனள் ஏந்திழை என்னுளம் மேனி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயந்தனை யோரும் பதமது பற்றும்
பெயர்ந்தனன் மற்றும் பிதற்றுஅறுத் தேனே.

பொருள் : முன்னம் கூறிய சத்தி ஆன்மாவாகிய என்னுடைய உள்ளத்தை விரும்பிப் பொருந்தினான். அதனையே விரும்பி அங்கே அமர்ந்தனன். நாம் சிவத்துக்கு அடிமை என்ற பயனை ஆராய்ந்து தெளியுங்கள். பிரணவமான பதத்தைப் பற்றுங்கள். உலகப் பற்றை நீங்கினேன். வேறு பிதற்றல்களையும் ஒழித்தேன். தெளிந்த ஞானம் பெற்றேன்.

973. ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினை
ஓமத்தி லேயுதம் பண்ணும் ஒருத்திதன்
நாம நமசிவ என்றிருப் பாருக்கு
நேமத் தலைவி நிலவிநின் றாளே.

பொருள் : சீவர்கள் உயிர்வாழத் தானியத்தில் பொருந்தி அன்னமயமாகப் பக்குவமாகச் செய்ததை, ஓம குண்டமாகிய வயிற்றுத் தீயில் ஆகுதி பண்ணுகின்ற சத்தியின், நாமமாகிய நமசிவ என்று தான் அற்று நிற்பார்க்குக் கிரியையைத் தூண்டும் குண்டலினி சத்தி விளங்குவாள். துணையாவாள் எனினுமாம்.

974. பட்ட பரிசே பரமஞ் செழுத்ததின்
இட்டம் அறிந்திட்டு இரவு பகல்வர
நட்டமது ஆடும் நடுவே நிலையங்கொண்டு
அட்டதே சப்பொருள் ஆகிநின் றாளே.

பொருள் : பூர்வ புண்ணியத்தால் கிடைத்த பரிசே மேலான சிவாய நம என்னும் ஐந்தெழுத்தாம். இவ் ஐந்து எழுத்தில் ஆன்மாக்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு இரவு பகலாக நடுவே இடங்கொண் சிவன் நடிப்பான். அவனே அஷ்டமூர்த்தமாகவும் உள்ளான். (எண்பொருள் ; நிலம், நீர், தீ, காற்று, வான், திங்கள், ஞாயிறு ஆருயிர் என்பன. இட்டம் - தியான உறைப்பு)

975. அகாரம் உயிரே உகாரம் பரமே
மகார மலமாய் வருமுப் பதத்தில்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்
யகாரம் உயிரென்று அறையலும் ஆமே.

பொருள் : (அ - உயிராயும், உ-பரமாயும், ம - மலமாயும், பிரணவம் இவ்வாறு மூன்று பதங்களில் வரும். சி - சிவமாய், வ-வடிவுடைய சத்தியாய், ய-உயிராயும் சொல்லுமாகும்.)

976. நகார மகார சிகார நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஓகார முதற்கொண்டு ஒருக்கால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே.

பொருள் : நமசிவய என்பதன் கண் சிகரம் நடுவாகும். இரண்டு வளி என்பது இடப்பால், வலப்பால் மூச்சு. இஃது உயிர் அடையாளாமிகய யகரத்தைச் குறிக்கும். இவ் ஐந்துடன் ஓமொழியை முதற்கொண்டு உள்ளன்புடன் ஒருமுறை ஓதினால் மகாரமாகிய நாத மெய்க்குத் தலைவனாகிய சிவபெருமான். ஓதுவார் நெஞ்சை இடமாகக் கொண்டு எழுந்தருள்வான்.

977. அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி ஆதி அகம்புக லாமே.

பொருள் : தேகமாகிய காட்டில் இந்திரியங்களாகிய ஐந்து யானைகள் வாழ்கின்றன. அவ்விதமான இந்திரியங்களாகிய யானைகள் அடக்க ஐந்தெழுத்தாகிய நமசிவாய என்பது அங்குசம் போன்றது அவ் ஐந்தெழுத்தாகிய எழுத்து ஐந்தனைக் கொண்டு ஒருசேர அடக்க வல்லார்கட்கு ஐந்துக்கும் முதலாய ஆன்மாவிடம் புகமுடியும்.

978. ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற்றி மகராதி
நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்
சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.

பொருள் : நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதி யாக்கல், அப்பால் ஆக்கல் ஆகிய ஐந்து திருவருள் ஆற்றல்களால் செலுத்தப்படுவன அகர முதலிய எழுத்துக்கள். நமசிவய என்பதைச் சிவயநம எனக் கணித்தல் வேண்டும். மகர முதல்வனாகிய நந்தியை மூலத்திடத்து நாடித் திருவருளோடும் சேர்த்து வழிபடுவார்க்குப் புறச் சடங்குகள் வேண்டா.

979. மருவும் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த போகமும் ஞானமும் ஆகும்
தெருள்வந்த சீவனார் சென்றுஇவற் றாலே
அருள்தங்கி அச்சிவமம் ஆவது வீடே.

பொருள் : பொருந்திய சிவய என்னும் மூன்று எழுத்துக்களும் முறையே அறிவும் செறிவும் ஆவியுமாகும். அறிவு ஞானம். செறிவு யோகம். ஆவி-உயிர். யோகம் என்பது உயிர் திருவருளுடன் கூடுதல். அஃதாவது முழுமுதற் சிவத்தை அகத்தே திருவுருவிற் கண்டு வழிபடுதல். இந்நிலை அருமருந்தன்ன நிலையாகும். திருவடியுணர்வு கைவரப் பெற்ற உயிர் இம்முறை யுணர்ந்து வழிபடத் திருவருளுடன் உயிர் கூடிய நிலையில் அவ்வுயிர் சிவம் என்று அழைக்கப்படும். அதுவே வீடாகும். (பின் பேறு என்பது சிவத்துடன் கூடுதலாகும்.)

980. அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்
நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே.

பொருள் : ஐந்து மலங்குளம் நீங்குதற்குத் திரு ஐந்தெழுத்தின் உண்மை அறிந்து ஓதி ஒழுகுதல் வேண்டும். அப்பொழுது சிவபெருமான் நெஞ்சத்திடத்து நிறைந்து வெளிப்படுவன. அந் நெஞ்சத்தில் பிறவிக்கு வித்தாகிய தீய நினைவுகள் தோன்றா. இவ்வுடம்பும் விரும்பும் நாள் வரையும் அழியாதிருக்கும். இந்நிலையே நமக்கு நிலைத்த புகலிடமாகச் சொல்லப் பெறும். (அஞ்சு+உக = அஞ்சு மலங்கள் நசிக்க. அம்+சுகம் - இன்பம் தரும் என்பது மற்றொரு பொருள்.)

981. சிவாயவொடு அவ்வே தெளிந்து உளத்து ஓதச்
சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்
சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே.

பொருள் : சிவய என்பதனோடு முதலாய சிவ என்னும் அவ்விரண்டு எழுத்தையும் கூட்டிச் சிவயசிவ எனத் தெளிந்து உள்ளன்புடன் ஓதுதல் வேண்டும். சிவயசிவ என்பதே சிவபெருமானின் மந்திர வுருவாகும். இவ்வுண்மையினைத் தெளிய வல்லார்கள் சிவசிவ என்று சிறந்திருப்பார்கள்.

982. சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுறு நாடி
ஒகார முடனே ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்துநின் றானே.

பொருள் : சிவய நம என்னும் திரு ஐந்தெழுத்தையும் ஓ மொழியுடன் ஓதுதலும் உண்டு. அங்ஙனம் ஓதுவாரையும், உலகமே உருவமாகக் கொண்டு நடத்தும் சிவபெருமான் திருவுளங் கொண்டு நிற்பன். ஓம் நமசிவய என உலகியலும், இத் திருப்பாட்டில் ஓம் சிவயநம என வீட்டியலும் ஓதப் பெறுகின்றன. உலகியலை வேத நெறியெனவும், வீட்டியலை ஆகம நெறியெனவும் கூறுவர்.

983. நம்முதல் ஓர்ஐந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முதல் உள்ளே தெளிவல் லார்கட்குத்
தம்முதல் ஆகும் சதாசிவத் தானே.

பொருள் : விரும்பிய கருமங்களைச் செய்ய நமசிவாய என்ற மந்திரத்தைக் கொள்ளவும். அந்த முதலாகிய உருத்திரர் வலியவினைகளைச் செய்து முடிப்பார். சிகாரத்தைத் தம்முள்ளே தெளிய வல்லார்கட்குச் சதாசிவரே நம் முதலான உருத்திரை இயக்கித் தொழிற் படுத்துவார். உலகத்தில் காரியங்கள் கைகூட ந முதலாக ஓதவேண்டும். சி முதலாக ஓதினால்õ முத்தி இன்பம் கிட்டும்.

984. நவமும் சிவமும் உயிர்பர மாகும்
தவமொன்று இலாதன தத்துவம் ஆகும்
சிவம்ஒன்றி ஆய்பவர் ஆதர வால்அச்
சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே.

பொருள் : தோழமையால் சிவத்தைப் பொருந்தின போது உயிர் பரமாக விளங்கும். சிவத்தைத் தோழமையால் கொள்ள, உடலை வருத்தும் தவங்கள் வேண்டாமையோடு ஆன்மா சிவத்துடன் சார்ந்து பரமாதல் தன்மை அமையும். சிவத்துடன் பொருந்தி உணர்பவர். அருளால் அச்சிவமே தான் என்ற தெளிவு உண்டாயிற்று. (நவம் - தோழமை, தத்துவங்களைக் கூடியபோது உயிருக்கு ஆன்மா என்றும், நீங்கிய போது பரம் என்றும் பெயர்.)

985. கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குஉறவு ஆவார்கள்
தேடி அதனைத் தெளிந்தறி யீரே.

பொருள் : எட்டும் இரண்டும் அகர உகரம். இவை உயிரும் இறையும் என்று கூறப்படும். எட்டும் இரண்டும் கூடுங்கால் பத்தாகும். பத்தென்பது யகரம். அஃதுயிர், உயிர் சிவத்துடன் ஒன்றி ஒரு மனப்பட்டு நாடப்படும் நந்தியை நாடித் திருவடியுணர்வினுள் வைத்தால் வாடுதலைச் செய்விக்கும் ஐம்புலனும் சிவத்தைத் தேடுதலுக்குத் துணை செய்யும். இங்ஙனம் தேடு நிலையைத் தெளிந்துணர்க.

986. எட்டும் இரண்டும் இனிதுஅறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.

பொருள் : எட்டும் இரண்டும் பத்து. இதன் அடையாளம் ய யகரம் உயிர். உயிரின் அடையாளக் குறி. இவற்றை யாவரும் இனிதறிய மாட்டார். இதை யறிவல்ல அறிவிலார் இருமூன்று நான்கு கூட்டும் கணக்குப் போல் பத்தென்பர். சிவபெருமான் திருவடியே பத்தென்பதாகும். செந்நெறியில் கூறப்படும் பருமை நுண்மையாகிய திரு ஐந்தெழுத்து பத்தாகும். (சிவக்குறி - சிவக் கொழுந்து - சிவலிங்கம்)

987. எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி
இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டும்இட்டுச்
சிட்டஞ்சு எழுத்தும் செபிசீக் கிரமே.

பொருள் : குறுக்கும் நெடுக்குமாக எட்டு வரைகள் கீறப்பட்டால் அதன்கண் அறைகள் நாற்பத்தொன்பது அமையும். இதன்கண் நடுவரையில் சிகரம் பொறிக்கப்படுதல் வேண்டும். சுற்றிலுமுள்ள நாற்பத்தெட்டு அறைகளிலும் எஞ்சிய எழுத்துக்களை அடைத்து மேன்மையான ஐந்தெழுத்தை விரைவில் செபிப்பாயாக.

988. தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆனஇம் மூவரோடு ஆற்றவர் ஆதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் செய்சிவ சக்கரந் தானே.

பொருள் : நிருதி முதலிய அட்டதிக்குப் பாலகர்கள் பைரவர் எண்மர், நந்தி முதலிய சிவ கணங்கள் எண்மர் ஆகிய இம் மூவகையினரும் வழிப்படுத்துபவர்கள். அகரம் முதல் உயிர் எழுத்துக்களும் விந்து நாத எழுத்துக்களும் ஆகிய சேனையும் சிவ சக்கரமாகும். இந்த தேவர்களுக்குப் பதிலாக வேறு தேவர்களின் பெயர்களை வேறு சிலர் கூறுவர்.

989. பட்டனம் மாதவம் ஆறும் பராபரன்
விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.

பொருள் :  சிவ சக்கரத்தினுள்ளே சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நான்கு நெறி நற்றவன் ஆற்றுவிக்கும். சிவபெருமான் திருவடிக்குத் தம்மை ஒப்புவித்தவர்கள் முழுமுதலே நமசிவய என வழுத்துவர். எவ்வளவு காலமும் சிவன் திறமே பேசுவர். அவன் திருவடியினையே உணர்வர். இவையன்றி வேறொன்றும் அறியார். (பட்டணம் - சிவசக்கரம். எட்டணை - எள்+தனை.)

990. சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடுஒன்று ஆன
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.

பொருள் : சிவன் மூவராகவும் ஐவராகவும் திருச்சிற்றம்பலமான சபையில் விளங்குவார். அந்தச் சபையானது ஆறு ஆதாரங்களும் மகேசுர சதாசிவம் பொருந்தியதாய்க் கவிழ்ந்துள்ளன. அவற்றின் விந்துவும் நாதமும் விளங்க அந்நிலையில் அதற்குச் சங்கரன் என்று பெயர். (சங்கரன் - உயிருக்கு இதம் செய்பவன். சவை - சபை. இந்த எண்ணுப் பெயர்களுக்கு வேறு பொருள் கூறுவாறும் உளர்.)

991. வித்தாம் செகமய மாக வரைகீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்
உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலைதொகும்
பத்தாம் பிரம சடங்குபார்த்து ஓதிடே.

பொருள் : விந்து மயமான சந்திர கலையைப் பிருதிவியிலிருந்து கணக்கிட்டு, விருப்பமுள்ள சந்திரகலைகள் பதினாறையும் நிலை நிறுத்திக் கொண்டு பிறகு மறுபகுதியான பன்னிரண்டு கலைகளில் விளங்கும் சூரியனைச் சேர்க்கப் பத்தான அக்கினி கலைகள் அமையும். இது பிரமத்தை அறியும் கிரியை என்று பஞ்சாட்சரம் ஓதவும். (வித்து - விந்து உத்தாரம் - பங்கு)

992. கண்டெழுந் தேன்கம லம்மலர் உள்ளிடை
கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்
பண்டழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமவென வாமே.

பொருள் : நெஞ்சத் தாமரை யினிடத்துச் சிவபெருமானைக் கண்டெழுந்தேன். அகத்துள் ஒற்றித்து ஒண்மை கொண்டுள்ளேன். சிவசக்கரத்தின் பண்பகலாது அம்முறையைக் கைக்கொண்டு அடிமையாம். உறவெய்தி நமசிவய வாழ்க என வாழ்த்துவோமாக.

993. புண்ணிய வானவர் பூமழை தூவிநின்று
எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக்
கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.

பொருள் : சிவ உலகத்தில் வாழும் சிவ புண்ணியப் பேறு பெற்றவானவர்கள் அகமலர்ந்த அன்பின் அடையாளமாக முகமலர்ந்து மணங்கமழும் முழுநெறி மலர்கள் தூவி நின்று தொழுவர். சிவபெருமான் திருவடியிணைகளைச் சிவசிவ என இடையறாது வழுத்திச் சேர்வர். நமசிவய என்றும் திருஎழுத்தைக் கண்போன்று கருதிக் கணிப்பர். கணித்துக் கலந்து நின்று களிப்பர். (கணித்தல் - செபித்தல்)

994. ஆறெழுத் தாவது ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுள
பேதிக்க வல்லார் பிறவியறி றார்களே.

பொருள் : ஆறு எழுத்துக்களால் ஆயது ஆறு சமயங்கள் என்பர். ஒவ்வோர் எழுத்தையும் நான்கு பாகுபாடு செய்ய ஆறுக்கும் இருபத்து நான்கு எழுத்தாகும். இவ் இருபத்து நான்கு எழுத்தும் காயத்திரி என்ப. காயத்திரியின் முன் சேர்ந்து மொழியும் எழுத்து ஓங்காரம். அவ் ஓங்காரத்து அறிவதாகிய உண்மை காண வல்லார் பிறவா பெருவாழ்வு எய்துவர். (சாவித்திரி - காயத்திரி. 24 எழுத்துக்கள் கொண்டது. தலை எழுத்து - பிரணவம். பேதிக்க. பிரித்தறிய.)

995. எட்டினில் எட்டறை யிட்டு அறையிலே
கட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச் சுட்டி
இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டு
மட்டும் உயிர்கட்கு உமாபதி யானுண்டே.

பொருள் : ஓர் கண் எட்டு வீடமைத்து, இவ்வீடுகளைச் சூழ ஓ மொழியமைத்து வழிபடின் உயிர்கள் எய்தும் முடிந்த எல்லையாகிய பெருமுதல் அங்கு வெளிப்படும். (உமாபதி - சிவபெருமான்)

996. நம்முதல் அவ்வொடு நாவினர் ஆகியே
அம்முதல் ஆகிய எட்டிடை யுற்றிட்டு
உம்முதல் ஆகவே உணர்பவர் உச்சிமேல்
உம்முதல் ஆயவன் உற்றுநின் றானே.

பொருள் : நமசிவாய என்ற தூல பஞ்சாட்சரத்துடன் தியானம் செய்து, அகரம் முதலாகிய எட்டு அறைகளை அறிந்து அவற்றின் இடையே பொருந்தி, உகரத்தை முதலாகக் கொண்டு உணர்பவரின் உச்சியில் உகரமாகிய சத்தியின் தலைவன் பொருந்தி நிற்பான்.

தம்பனம்

997. நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகம்
துன்று மெழுமையுள் பூசிச் சுடரிடைத்
தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே.

பொருள் : நிலையான அரசம் பலகைமேல் நேராகப் பொருத்த மகரத்தை முதலாக மாற்றி எழுதிப் பனை ஓலையில் அவ்வாறே அடைத்து சாதகன் பொருந்தும் தேன் மெழுகை ஓலையுள் பூசிச் சுடரில் சிறிது வெதுப்பத் தம்பன கன்மமாகும். (தம்பனம் - கட்டுதல் அரசமரம் மெய்யுணர்வு விளங்குவதற்கு நிலைக்களமாகும்.)

மோகனம்

998. கரண இரளிப் பலகை யமன்திசை
மரணம்இட்டு எட்டின் மகார எழுத்திட்டு
வரணமில் ஐங்காயம் பூசி அடுப்பிடை
முரணிற் புதைத்திட மோகன மாகுமே.

பொருள் : கொன்றை மரப் பலகையைக் கருவியாகக் கொண்டு யமன் திசையாகிய தெற்குத் திசையில் அப் பலகையை அமைத்துத் தீமையாகிய பகையை ஒழித்தற்கு மாரக மந்திரத்தை எழுதி எட்டில் மகாரம் மட்டும் இட்டு மறைப்பற்ற ஐங்காயத்தைப் பூசி அடுப்பில் தலை கீழாகப் புதைத்தால் மோகன சத்தியுண்டாம். (நசி என்றது மரண மந்திரம். ஐங்காயம் - சுக்கு, மிளகு, கடுகு, உள்ளி, காயம் ஆகிய ஐந்து. மோகனம் - மயங்க வைத்தல்)

உச்சாடனம்

999. ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாசப் பலகையில்
காங்கரு மேட்டில் கடுப்பூசி விந்துவிட்டு
ஓங்காமல் வைத்திடும் உச்சா டனத்துக்கே.

பொருள் : அவ்விடம் வடமேற்குப் புலமாகிய வாயுதிக்கில் ஐயனார் கோயிலில் தொழும் படியாகப் புரசப் பலகையில் காரீயத் தகட்டில் நஞ்சு பூசி விந்துவாகிய வட்டம் அமைத்து அதன்மேல் ஓங்காரம் சூழ உச்சாடனத்திற்கு இடவும். (உச்சாடனம் - ஏவுதல்; பேயோட்டுதல்.)

மாரணம்

1000. உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச்சோலை யில்பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட
அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே.

பொருள் : நண்பகற் போதில் ஒளி உடைத்தாகிய தென் கிழக்கு மூலையில் பச்சையான பனைஓலையில் ஐங்காயத்தைத் தடவி முச்சந்தியிலோ சுடுகாட்டிலோ புதைத்து வைத்திட பகையை அழிக்கும் மாரணமாக. அஃது அமையும் (மாரணம் - ஏவலால் செய்யும் கொலை, வசியம்)

1001. ஏய்ந்த அரிதரம் ஏட்டின்மே லேபூசி
ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்திட்டு
வாய்ந்தோர் வில்லம் பலகை வசியத்துக்கு
ஏய்ந்தவைத்து எண்பதி னாயிரம் வேண்டிலே.

பொருள் : பொருந்த அரிதாரம் ஏட்டின் மேலே தடவி அகாரஉகாரங்களை எழுதி, வசியத்துக்குப் பொருந்தி வில்வப் பலகையில் வைத்து எண்பதினாயிரம் உருச் செய்க. (அரிதாரம் - தாளகம்)

ஆகர்ஷணம்

1002. எண்ணாக் கருடனை ஏட்டில் உகாரமிட்டு
எண்ணாப் பொன்னாளில் எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி
எண்ணா எழுத்தோடுஎண் ணாயிரம் வேண்டிலே.

பொருள் : எண்ணப்படுகின்ற ஆகர்ஷண முறையாவது ஏட்டில் உகாரத்தையிட்டு, எண்ணுதற்கு அருமையான வியாழக் கிழமைகளில் வெள்ளிப் பொடிப் பூசி, வெண்ணாவல் பலகையில் வைத்து மேற்கு நோக்கி பிரணவத் தியானம் எண்ணாயிரம் செய்க. (கருடணை - என்றும் பாடம். ஒப்பாம் நிலைமை - என்று பொருள்.)

3. அருச்சனை

(அருச்சனை என்பது பூசை அல்லது தேவாராதனை. இங்கு இயந்திரத்திலே மந்திர வடிவிலே இறைவனை எழுந்தருளச் செய்து தியானித்தில் கூறப்பெறும்.)

1003. அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

பொருள் : இயந்திரத்தில், மந்திர வடிவில் எழுந்தருளச் செய்து தாமரை, நீலோற்பலம், செங்கழுநீர், அழகிய கருநெய்தல், மணம் விரியும் பாக்குப்பூ மாதவி, மந்தாரம், தும்பை, மகிழம்பூ, புன்னை மல்லிகை, சண்பகம், பாதிரி, செவ்வந்தி ஆகிய பதினான்கு வகையான நறுமணமிக்க பூக்களைக் கொண்டு வழிபாடு செய்வாயாக. (மாதவி - குருக்கத்தி; வகுளம் - மகிழம்பூ; அருச்சனை - வழிபாடு. இவற்றில் நால்வகைப்பூக்களும் உண்டு என்க.)

1004. சாங்கம தாகவே சந்தொடு சந்தனம்
தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்
பாங்கு படப்பனி நீரால் குழைத்துவைத்து
ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே.

பொருள் : புனுகு கஸ்தூரி முதலிய சாந்துடன் சந்தனம், மணமிகுந்த குங்குமம், பச்சைக் கருப்பூரம், வயிரம் ஏறிய அகில், ஆகிய இவற்றுடன் அளவாகப் பனி நீர் சேர்த்துக் குழைத்து அவற்றை அணிய வேண்டிய இடங்களில் முறையாக அணிந்து அன்புடன் வழிபடுவாயாக. (சாங்கம் - முறைமை - இவை வாசனைத் திரவியங்கள்.)

1005. அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்
இன்புட னேவந்து எய்திடும் முத்தியே.

பொருள் : அன்புடனே அமுதத்தை நிவேதித்து, பொன்னொளி தரும் விளக்கு ஏற்றி வைத்துத் திக்கு பந்தனம் செய்து தூப தீபம் கொடுத்து வழிபடுவோர் இம்மைப் பேறும் மறுமை முத்தியும் பெறுவர். (அமதம் - தளிகை. இனம்பற்றி மணியும் இயமும் இயம்புக. செந்தமிழ் மாமறைத்திரு முறை ஓதுக. இயம் - வாத்தியம்.)

1006. எய்தி வழிப்படில் எய்தா தனஇல்லை
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமுன்
எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்.
எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே.

பொருள் : இவ்வண்ணம் எய்தி வழிபட்டால் தாமே வந்து எய்யாத பேறுகள் இல்லை. இவ்வாறு வழிபடின் இந்திரனுடைய செல்வமும் பெற்று எண்வகைச் சித்திகளும் உண்டாகும். இனி இவ்வழிபாட்டால் மறுமைக்கு முத்தியும் சித்திக்கும். வழிப்படில் என்பது செந்நெறிச் செல்வர்கள் சென்ற நெறிப்படியே சென்று வழிபடுதல் என்றாகும்.

1007. நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்
மண்ணியே நைவேத் தியம்அனு சந்தானம்
நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபமென்னும்
மன்னும் மனம்பவ னத்தொடு வைகுமே.

பொருள் : இவ்வண்ணம் எய்திப் பூசிப்பவர்தானே வந்தணையும் பிறர் மனைவியையும் விரும்பாதவராய் இந்திரியங்களை வென்றவராவர். இவரது தூய்மையான நிவேதனம், இடைவிடா யோகம். பொருந்திய பஞ்ச அங்க நமஸ்காரம் பொருந்தும் செபம் ஆகியவை பொருந்தும் மனம் பிராணனோடு நிலை பெற்று நிற்கும். மனம் அடங்க வாயு அடங்கும் என்க. முழங்கை இரண்டு, முழந்தாள் இரண்டும், நெற்றி ஒன்று ஆக ஐந்து உறுப்பும் நிலத்தே படும்படி புரியும் வணக்கம் (மண்ணிய - நான்கு சமைத்த எனினுமாம்)

1008. வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர்
வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை அற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே.

பொருள் : சிவபெருமானுக்கு மீளா அடிமை யானவர்கள் முனைப்பொடு செய்யும் இருவினைகளையும் வேண்டார். பயன் வேண்டிச் செய்யும் கன்மங்களையும் விரும்பார். சிவயோகமாகிய செறிவு நிலையில் உள்ளார். எவ்வினையும் விரும்பார். தலையன்பு வாய்ந்தவராகிய அறிவு நிலையில் உள்ளாரும் பணியே அன்றிப் பிறப்புக்கு வித்தாகிய வினைகளை விரும்பார். பின் இரண்டடியும் செறிவும் அறிவும் குறிப்பதால் முன் இரண்டும் அடியும் முறையே சீலமும் நோன்பும் முறைப்பனவாகக் கொள்க.

1009. அறிவரு ஞானத்து எவரும் அறியார்
பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள்
நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்
எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.

பொருள் : சிவயோகம் அறிவு ஒன்றாலேயே அடையத் தக்கது என்பதைக் கிரியை வழி நிற்போர் உணர்வதில்லை. அவர்கள் நாட்டம் எல்லாம் புறத்தேயுள்ள மூர்த்திப் பூசைத் திரவியம் மந்திரம் செபம் ஆகியவற்றால்தான் அலைந்து கொண்டிருக்கும். நியதிக்கு உட்பட்டுக் கிடைத்த உடம்பினுள் ஒரு நெறிய மனத்தோடு காணில் பிரகாசம் பொருந்தி மணிக்கு உள்ளே விளங்கும் ஒளிபோல இறைவனைக் காணலாம்.

1010. இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம்
அருள்அறி யாமையும் மன்னும் அறிவு
மருளிவை விட்டெறி யாமை மயங்கும்
மருளும் சிதைத்தோர் அவர்களாம் அன்றே.

பொருள் : வெளியும் இருளும் போல் நெஞ்சமும் மயக்கம் தருவதாய் அறியாமையும் உயிரில் கலந்திருக்கும் ஆருயிரின் அறிவு அறியாமையை விட்டொழிக்கும் ஆற்றல் உடையதன்று. அதனால் மயங்கும். திருவருள் துணையால் அறியாமையை அகற்றியவர் சிவவழிபாட்டினராவர். (இருளும் வெளி - இருளோடு கூடிய ஆகாயம் எறியாமை - நீங்காமை)

1011. தான்அவ னாக அவனேதான் ஆயிட
ஆன இரண்டில் அறிவன் சிவனாகப்
போனவன் அன்பிது நாலாம் மரபுறம்
தான்அவன் ஆகும்ஒ ராசித்த தேவரே.

பொருள் : தான்சிவன் சிவன்தான் என இரண்டன் வழி தன்னைச் சிவமாகக் காண்பன். சித்திடம் காதல் கொண்டு தன் அறிவைச் சிவ அறிவில் ஒன்று படுத்தி நாலாம் நிலையாகிய சாயுச்சிய நிலையை அடையும் மார்க்கம் இது வாகும். இச்சித்தி பெண்ணை சிவஞானிகள் தம்மைச் சிவம் நடத்தும் என்று தாம் ஒன்றையும் சிந்தியாதவர்களாய் இருப்பர்.

1012. ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள்கண்டத்து ஆயிடும்
பாங்கார் நகாரம் பயில்நெற்றி உற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதம்மே லாகுமே.

பொருள் : உந்திக்குக் கீழ் எந்நாளும் நிலை பெற்றிருப்பது சுவாதிட்டானத்திலுள்ள அணையா நெருப்பான அக்கினி கலையாகும். இந்தி அக்கினியைச் சிவாக்கினியாக்கச் சிவத்தியானம் செய்தால் சீவர்களை விட்டு அகலாத குண்டலினி சத்தி கண்டத் தானத்தில் வந்து பொருந்துவாள். அழகிய ஒளியுடன் கூடிய நகாரம் சுவாதிட்டானத்தினின்றும் நெற்றியை இடமாகப் பொருந்தும். இந்த இடத்திலிருந்து விந்து நாதங்கள் (ஒளி, ஒலி) உதித்து மேலே செல்லும்.

1013. நமவது ஆசனம் ஆன பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமவற ஆதி நாடுவது அன்றாம்
சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே.

பொருள் : சிவக் கொழுந்தாகிய சிவலிங்கத்தின் இருக்கையாகிய ஆவுடையார் நம என்னும் எழுத்துக்களாகும். அவ் இருக்கை உயிரே (உயிர் அடையாளம்) ஆவுடையாருக்கு மேலுள்ள தூண் ஒத்துக் காணும் ஒளிப்பகுதி சிவ என்னும் எழுத்துக்களாகும். இச்சிவமே வேண்டும் சித்திகளை அருள்வதாகிய இறையாகும். (மானோம் - பெரிய விடுதலை, ஆசனம் - ஆவுடையார்)

1014. தெளிவரு நாளில் சிவஅமுது ஊறும்
ஒளிவரு நாளில் ஓர்எட்டில் உகளும்
ஒளிவரும் அப்பதத்து ஓர் இரண்டு ஆகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே.

பொருள் : உடல் தான்அல்ல என்று தெளிந்த அந்நாளில் சீவனுடைய அண்டத்தில் சிவ ஒளி பிரகாசிக்கும். ஒளிவரும் காலத்தில் அது சந்திர கலையாக விளங்கும். ஒளி வரும்போது பிரிப்புற்றிருந்த சீவனுடைய நிலை சிவத்தோடு ஒன்றாயின் சீவ ஒளி சிவ ஒளியுடன் கலந்து விளங்கும். (எட்டில் உகளும் ஒலி - அகாரத்தில் விளங்கும் ஆன்ம ஒளி.)

4. நவகுண்டம்

(நவகுண்டமாவது மந்திர சித்தி பெற்றவர் அவர் வேண்டும் தொழிலுக்கு ஏற்பக் குண்டம், அமைத்து, அதற்குரிய திரவியத்தால் ஓமம் செய்யும் ஒன்பது வகைக் குண்டம். ஒன்பது குண்டம் - சதுரம், யோனி, பிறை, முக்கோணம், வட்டம், அறுகோணம், பதுமம், அட்ட கோணம், வர்த்துவம் என்பன. அதைக் கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, ஈசானியம் ஈசானியத்திற்கும் கிழக்குக்கும் நடுவு ஆகிய ஒன்பது இடங்களிலும் ஆம். இப் பகுதியில் புறத்தே வழிபடுவது போன்றே அகத்தே வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது.)

1015. நவகுண்டம் ஆனவை நான்உரை செய்யின்
நவகுண்டத்து உள்ளெழும் நற்றீபம் தானும்
நவகுண்டத்து உள்ளெழும் நன்மைகள் எல்லாம்
நவகுண்டம் ஆனவை நான்உரைப் பேனே.

பொருள் : அனல் ஓம்பும் குண்டங்கள் ஒன்பது. அதன் தன்மையைச் சொல்லுமிடத்து அதன்கண் சிவமாகிய பேரொளிப் பிழம்பு தோன்றா நிற்கும். எல்லா நன்மைகளும் அவ் அனல் ஓம்புதலால் உண்டாகும். அதன் விளக்கத்தை இனிக் கூறுவாம்.

1016. உரைத்திடும் குண்டத்தில் உள்ளே முக்காலும்
நகைத்தெழு நாற்கோணம் நன்மைகள் ஐந்தும்
பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே
மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே.

பொருள் : சொல்லப்படுகின்ற குண்டத்தில் முப்போதும் சிவக் காதலினால் பிருதிவி மயமான நாற்கோணம் மகிழ்ச்சியினைத் தரும். அதனால் சிருட்டியாகி ஐந்தொழில்களும் நன்மையாம். ஆணவாதி மும்மலங்களும் சிவானுக் கிரகத்தால் கெடும். மூலாதாரத்திலிருந்து கடந்தும் விளங்கும். அதன் விளைவு சொல்ல முடியாது (ஊர்த்துவம் -மேல்.)

1017. மேலெறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள்
கால்அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பார்அறிந்து அண்டம் சிறகற நின்றது
நான்அறிந்து உள்ளே நாடிக்கொண் டேனே.

பொருள் : மேல்நிலை அறிந்து ஆருயிர்க்கு உள்ளேயே வெளிசெய்தருளிய சிவனை, உயிர்ப்பாகிய மூச்சுப் பழக்கத்தால் உள்ளேயே நாடுக. அப்பொழுது சிவமாகிய செஞ்சுடர் விளங்கும் தாங்கும் நிலைக் களங்களை ஆராய்ந்தால் பரவெளி என்னும் ஆகாயம் ஏதொரு தாக்குதலும் இன்றி நின்றது விளங்கும். இவ் உண்மைகளை அருளால் நான் அறிந்து அகத்துள் நாடிக் கொண்டேன். (கால் - பிராணவாயு சிறகற - ஆதாரம் இன்றி.)

1018. கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய்
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்
இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.

பொருள் : இக் குண்டத்தினுள் அனலோம்பும் அந்தணர் அவ் ஆற்றலால் உள்ளெழும் ஒளியாய்த் திகழ்வர். அத்தன்மையால் பதிநான்கு என்னும் எண்ணுள் அடங்கிய உலகங்கள் எல்லாவற்றையும் ஆக்கி, நிறுத்தி, அழிக்கும் வலிமை உண்டாகும். விரிந்த அண்டங்கள் எங்கணும் விரிந்து நிலவியுள்ள பண்டைச் செந்தமிழ் அறிவு நூல்களின் பொருளெல்லாம் திருவருள் துணையால் இந்நாள் இரு நூலாக எடுத்துரைத்தேன். (நூல் - திருமந்திரம்)

1019. எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.

பொருள் : முறையான அமைக்கப்பட்ட அனற்குண்டத்துள் பதினாறு இதழ்களில் உரிய எழுத்துக்கள் வரையப்படும். கொழுந்து விட்டெரியும் அச்சுடரினைக் காணும் பேற்றினர்பால் மிக்க கொதிப்புடன் தோன்றும் தீவினைகள் சேரமாட்டா. (கலைகள் - அட்சரங்கள்)

1020. கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும்
பாடிய பன்னீர் இராசியும் அங்குஎழ
நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.

பொருள் : முந்திச் சந்திப்புக்களோடு கூடிய முக்கோணத்துள் கூத்தப் பெருமான் ஆற்றியருளும் ஐந்தொழிலும் அகம் புறமாய் நிற்கும். சிறப்பித்துச் சொல்லப்படும் பன்னிரண்டு கலையுள்ள உயிர்ப்பும் அங்குத் தோன்றும். அந்நிலையினை எண்ணிப் பார்ப்பார்க்குச் சிவனொளி தோன்றும்.

1021. நற்சுட ராகும் சிரமுக வட்டமாம்
கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளிற்
பைச்சுடர் மேனி பதைப்புற்று இலிங்கமும்
நற்சுட ராய்எழு நல்லதென் றானே.

பொருள் : நல்ல அனற்சுடர் உச்சியும் முகமும் வட்டமாக அமைந்திருக்கும். அச்சுடரே கைமேல் பயன் தருதற்குரிய ஒன்றாகும். அதனை இடையறாது கருதுவார்க்கு அழகிய உடம்பு அசைவற்று இருக்கும். அவ்வாறு இருப்பார்க்குச் சிவலிங்கம் ஒளிப்பிழம்பாக விளங்கும். இதுவே நன்னெறி என்று அருளினள். (கருத்துற்றகை - தியானிப்பவர் கையில்.)

1022. நல்லதென் றாளே நமக்குற்ற நாயகம்
சொல்லதென் றாளே சுடர்முடி பாதமோ
மெல்லநின் றானை வினவகில் லாதவர்
கல்லதன் றாளையும் கற்றும் வின்னாளே.

பொருள் : நம் உயிர்க்கு உயிராக விளங்கும் திருவருள் அம்மை அனலோம்பும் முறைமை நல்லது என்று அருளினாள். திருந்தெழுத்துமே அருமறையாகிய உபதேசம் என்று அரளினாள். அவளே திருவடி நிலையாக மென்மையுற்று நின்றனள். அவ் அம்மையின் உண்மைத் தன்மையை உணராதவர் கலைகளையும் அதற்கு அடியாகிய மறைகளையும் உணர்ந்தவராயினும் அம்மையும் வேறாகவே நிற்பன். (நாயகம் - அம்மை; வின்னாள் - வேறானவள்)

1023. வின்னாஇ ளம்பிறை மேவிய குண்டத்துச்
சொன்னால் இரண்டும் சுடர்நாகம் திக்கெங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே.

பொருள் : ஒளியையே நாவாகவுடைய இளம்பிறை போல் அமையப் பெற்ற அனற் குண்டத்துச் சிறப்பித்துச் சொல்லப்படும் சிவனும் சிவையும் எல்லாத் திசைகளிலும் சுடர்விட்டு விளங்குவர். முதுகுந் தண்டாகிய மேருவின் இடத்தில் அச்சிவச் சுடர் பல்வகையாகத் தோன்றும். அச் சுடர் ஆருயிரின் அகத்து நிலை கொண்டு விளங்கும். (நாகம் - மேரு)

1024. இடங்கொண்ட பாதம் எழிற்சுடர் ஏக
நடங்கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்குச்
சகங்கொண்ட கையிரண்டு ஆறும் தழைப்ப
முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.

பொருள் : அனற் குண்டத்தை இடமாகக் கொண்ட அழகிய திருவடிச்சுடர் ஒப்பில்லாத என்றும் மாறாத திருக்கூத்து இயற்றும் தன்மையாகும். உலகெலாம் விளங்கும் பன்னிரண்டு கலைகளும் நாளும் பெருகத் திருமுகம் கொண்டருளிய செஞ்சுடர் முக்கணப் பராகும். (கை-கலை.)

1025. முக்கணன் தானே முழுச்சுடர் ஆயவன்
அக்கணன் தானே அகிலமும் உண்டவன்
திக்கணன் ஆகித் திகைஎட்டும் கண்டவன்
எக்கணன் தானுக்கும் எந்தை பிரானே.

பொருள் : இயற்கைப் பேர் அன்பு அறிவு ஆற்றல்கள் உடைய சிவன் முக்கண்ணன் என்று அழைக்கப் படுவான். முக்கண்-திங்கள் ஞாயிறு தீ. திங்கள் என்பது அன்பாகிய இடக்கண், ஞாயிறு என்பது ஆற்றலாகிய வலக்கண், தீ என்பது அறிவு ஆகிய நெற்றிக்கண். அம்முக்கண்ணன் எப்பொருட்கும் அந்தத்தைச் செய்பவன். அதனால் அகிலமும் உண்டவன் எனப்படுபவன். அவனே எட்டுத் திசைகளிலும் நீக்கமற நிறைந்து நிற்பவன். உலகோர் கண்ணன் என்றுஎவனைக் கூறுகின்றனரோ அவனுக்கும் இறைவனாவான். அவனே எந்தை என்க.

1026. எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங்கு இருத்தலான்
மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே.

பொருள் : எம் தந்தையாகிய கடவுளுக்குச் சுடரே திருவுரு அவ்வுரு ஆறு வட்டமாகத் திகழ்ந்து நின்றது. அவ்வட்டத்தினின்றும் அறுமுகக் கடவுள் தோன்றினன். அவனைக் கந்தக் கடவுள் என்றும் வழங்குவர். கந்தக் கடவுளும் சிவபெருமானும் பிரிப்பின்றிக் கலந்து விளங்குகின்றனர். அதனால் தந்தையும் மைந்தனும் ஒருபுடை யொப்பு முறை சாற்றுவர். (கந்தன் ஒன்று பட்டவன்.)

1027. மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள்
ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண்டு ஒன்று பதைத்தெழு
நாட்டும் சுரரிவர் நல்லொளி தானே.

பொருள் : ஓம குண்டத்தில் ஓமம் செய்யுங்கால் ஓதப் பெறும். ஓ மொழி மந்திரத்தின் அகர உகர மகரமாகிய மூன்றும் வெளிப்பட்டு இலங்கும். தீ வினையை வாட்டும் தன்மை வாய்ந்த ஞாயிறு திங்கள், தீ ஆகிய முச்சுடரும் அத்தீவினைகள் பதைத்து எழும்படி நாட்டப் பெறும். அங்ஙனம் நாட்டப் பெறுவார் ஒளியுருவினர் ஆவார்.

1028. நல்லொளி யாக நடந்துல கெங்கும்
கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்
சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெல்லாம்
கல்லொளி கண்ணுள மாகிநின் றாளே.

பொருள் : திருவருள் ஒளி உலகமெங்கும் நடந்து நன்மையருளும்; உயிர்க்குஉயிராய் உணர்வொளியாகக் கலந்து உள்ளுறையும்; ஆசான் அருளிய குருமொழி கொண்டு ஒழுகுவார்க்கு நிலைபெற்ற ஒளியாய்க் கண்ணுள்ளும் நிற்கும். அதுவே திருவருள் என்க. (சொல்லொளி குருமொழி. கல்லொளி - உணர்வொளி.)

1029. நின்றஇக் குண்டம் நிலையாறு கோணமாய்ப்
பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறும்
கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழு
விண்ணுளம் என்ன எடுக்கலு மாமே.

பொருள் : ஓம குண்டம் அறுகோணமாய் அமைக்கப்படும். இவ் அமைப்பு மூலாதாரம் முதலாகச் சொல்லப்படும் ஆறு நிலைக் களங்களையும் குறிக்கும். ஒலி உலகுக்கு முன் முதலாய வட்டம் ஓ மொழி என்க. தொடர்ந்து தோன்றுவனவும் சேர்ந்து தத்துவங்கள் முப்பத்தாறு என்ப. இவைகள் கலந்தெழுப் பெரு வெளியிலும் உள்ளதாம்படி காண்டலும் ஆகும். (ஒலியுலகு - சத்தப் பிரபஞ்சம்)

1030. எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக்
கடுத்த முகம்இரண்டு ஆறுகண் ஆகப்
படித்துஎண்ணும் நாவெழு கொம்பொரு நாலும்
அடுத்தெழு கண்ணானது அந்தமி லாற்கே.

பொருள் : சிவ என்னும் எழுத்திரண்டினையும் ஒத்துத் துலங்கும் அம்மையப்பர் திருமுகங்கள் இரண்டு. ஒவ்வொரு முகத்திலும் கண்கள் மூன்று. ஆகக் கண்கள் ஆறு மெய்யுணர்வினர் நாவின் கண் இடையறாது படித்தெழு கொழும்கொம்பாயுள்ளது. சிவசிவ என்னும் நாலெழுத்தாகும். முடிவு பேறில்லாத முழு முதற்சிவனை அடையும் திருவடிப் பேற்றினர்க்கு அதுவே மெய்யுணர்வுக் கண்ணாகும்.

1031. அந்தமில் லானுக்கு அகலிடம் தானில்லை
அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை
அந்தமில் லானுக்கு அடுத்தசொல் தானில்லை
அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே.

பொருள் : முடிவு பேறில்லாத சிவனைப் போன்று ஆன்மாவும் முடிவு பேறு இல்லாததே அவ் ஆன்மாவுக்கு உரியதாகக் கொள்ளப்படும் இடம் ஒன்றும் இல்லை. அந்த ஆன்மாக்கள் அளவிறந்தன. அவைகளைத் தனி முறையில் குறிக்கும் சொல் ஏதும் இல்லை. சார்பு முறையில் யகரம் என்ப. யகரம் என்பது யாப்பு என்றாகும். (யாப்பு - கட்டு. இஃது உடலுடனும் அருளுடனும் பிணிப்புறும் தன்மையாகும். பத்து என்பது தமிழ் எண்ணால் எழுதினால் யகரமாகும். அந்தமில்லான் - ஆன்மா.)

1032. பத்திட்டுஅங்கு எட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகவும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.

பொருள் : பத்து, எட்டு, ஆறு, நாலு முதலிய இதழ்களையுடைய தாமரை போல் அமைக்கப்படுவது மூலம் முதலிய நிலைகள். அதற்குமேல் ஓம குண்டத்தில் மலர்ந்தெழு தாமரை கட்டுற்று நின்ற கலந்த உடம்பு என்ப. இவ்வுடம்பகத்து நின்ற உயிர் திருவருளாகிய பார்ப்பதியைப் பொருந்தியுள்ள தென்க. எட்டு அகரமெனவும் கூறுவதுண்டு; ஓம குண்டத்தின் மேல் விரிந்துள்ள தீ மண்டலம் எனவும் கூறுப.

1033. பார்ப்பதி பாகன் பரந்தகை நால்ஐஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே.

பொருள் : அம்மையப்பராய் விளங்கும் சிவபெருமான் ஐந்து திருமுகங்களுடன் விளங்குங்கால் அவனைவிட்டு விலகாத அம்மையும் ஐந்து திருமுகங்களுடன் விளங்குவள். இவ் இருவர்க்கும் திருவுடம்பு ஓருடம்பாய் திகழும். அப்போது முகம்பத்து, கண்முப்பது, செவி இருபது, கை இருபது, திருமுடி பத்து, திருவடி இரண்டு என்னும் (62) எண்களை இத்திருப்பாட்டுக் குறிக்கின்றது. இறுதியிலுள்ள இருபத்தஞ்சே என்பதை இருபது தஞ்சே எனப் பிரித்தல் வேண்டும். ஆருயிர்கட்கு இத்திருவுருவே தஞ்ச மென்கே. (தஞ்சே-தஞ்சம். இருபது - இருவகை ஐமுகம்.)

1034. அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐஐந்தும்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங்கு இருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.

பொருள் : ஐந்து திருமுகங்களோடு கூடிய அருளோன் நிலையாகிய சதாசிவத் திருமேனியும் அதன் விரிவாகிய இருபத்தைந்து என்னும் ஏனைச் சிவத் திருவுருவங்களும், அழகு மிக்கதாகிய ஓம குண்டங்களும் மலர்ந்துள்ளன. அதன்கண் எழும் பரஞ்சுடர் செம்பஞ்சு போலும் ஒளிமிக்கதாகிய பேரொளிப் பிழம்பாகும். அத்தகைய அருமையான ஒளி பிழம்பினைக் கூடுவதே வீடு பேறாகும். !

1035. முத்திநற் சோதி முழுச்சுடர் ஆயவன்
கற்றுற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்றற நாடிப் பரந்தொளி யூடு போய்ச்
செற்றற்று இருந்தவர் சேர்ந்திருந் தாரே.

பொருள் : வீடு பேற்றை அருள்பவனும், என்றும் ஒருபடித்தாய் பேரொளிப் பிழம்பாய் உள்ளவனுமாய சிவன் ஐயம் திரிபறச் செந்தமிழ்த் திருமுறையும் சித்தாந்தமும் ஒளியுணர்ந்து ஒழுகும் மெய்யடியார் உள்ளத்துள் மிக்கு விளங்குவான். உற்ற பற்றறும் வழிவகைகள் யாதென்று எண்ணி அதன்வழி, ஒழுகுதல் வேண்டும். அவ் வழியாவது செய்யும் செயலெல்லாம் சிவன் செயல் என்னும் உண்மை கண்டு நடத்தல். அது வழிநடப்பார் வெளிச்சத்தின் துணையாக நடக்கின்றோம் என்று எண்ணுவதை ஒக்கும். இறைவனை மறவாது காமம் முதலிய குற்றம் கடிந்திருந்தவர் அவன் திருவடியிற் கலந்து இன்புறுவர்.

1036. சேர்ந்த கலையஞ்சும் சேரும்இக் குண்டமும்
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.

பொருள் : நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதி யாக்கல், அப்பாலாக்கல் என்று செல்லப்படும் ஐங்கலையும் சேர்ந்தது ஆகும் ஓம குண்டம். ஐங்கலை என்பது ஐவகைத் திருவருள் ஆற்றல்கள். நிறைந்த திசைவிளக்கமும் அங்கே காணப்பெறும். பரந்த நில முதலிய ஐம்பூத உண்மையும் அங்கே புலனாகும். இவற்றைத் திரு நோக்கம் செய்வது செஞ்சுடர்ச் சிவபெருமான். உலக உண்மை உணர்ந்து பற்றற்றவர் அச் சிவபெருமான் திருவடியிற் கலந்து இன்புறுவர்.

1037. மெய்கண்ட மாம்விரி நீர்உலகு ஏழையும்
உய்கண்டம் செய்த ஒருவனைச் சேருமின்
செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே.

பொருள் : புலனாம்படி வரையறை செய்யப்பட்ட கடலாற் சூழப்பட்ட உலகங்கள் ஏழு. அவ் ஏழையும் உய்யுமாறு வரையறை செய்த ஒப்பில்லா முழுமுதலைச் சேருங்கள். வரையறை செய்யப்பெற்ற அறிவினால் உணர்வார் தேவரே யாவர். அவர்கள் நிலையில்லாததும் எல்லைப் படுத்தப்பட்டது. இல்லாததுமாகிய மெய்ப் பொருளாம் சிவத்துடன் கலந்திருப்பர்.

1038. கலந்திரு பாதம் இருகர மாகும்
மலர்ந்திரு குண்ட மகாரத்தார் மூக்கு
மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி
உணர்ந்திரு குஞ்சிஅங்கு உத்தம னார்க்கே.

பொருள் : ஓம குண்டத்து விளங்கும் இறைவன் திருவுருவினை வருமாறு கருதுதல் வேண்டும். செம்மைநிறம் பொருந்திய திருமுகமும் குழிந்த குங்கும நிறமாகிய மூக்கும், நெற்றிக் கண்ணோடு கூடிய முக்கண்ணும் நீண்ட கரிய தலைமயிரும்,இரண்டு திருக்கைகளும், இரண்டு திருவடிகளும் உடைய ஒரு பெரும் பொருளாகக் கருதுக.

1039. உத்தமன் சோதி உளனொரு பாலானாய்
மத்திம னாகி மலர்ந்தங்கு இருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே.

பொருள் : பெரியோனாகிய சிவபெருமான் பேரொளியாய் இருப்பான். அவன் கட்டிளைஞனாய் காளையாய் விளங்கித் தோன்றுவன், மேற்குத் திக்கிலும் பரந்து சூழ்ந்த விடத்துத் திருவருள் உருவாய்த் திகழ்வான். அச் சிவனார்க்குத் திருவுருவாய் அம்மையும் அமைவள்.

1040. கொடியாறு சென்று குலாவிய குண்டம்
அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படிஏழ் உலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே.

பொருள் : ஓம குண்டத்தின் கண் வரையப்பட்ட கோட்டின் வழியே சென்று விளங்கும் அடிப்பகுதியில் இருகோணம் முதலும் முடிவும் ஒத்துள்ள பான்மையாக  வரைக. முறையாக ஏழ் உலகும் நிறைந்திருக்கும் பேரொளிப் பிழம்பாகிய சிவனைச் சோர்வு அறாது அகக்கண் கொண்டு நோக்குவார் செல்வன் கழலேத்தும் செல்வம் எய்தியவராவர்.

1041. மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
சாதன மாகச் சமைந்த குருவென்று
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பரிந்தது பார்த்தே.

பொருள் : இறவாப் பெருஞ் செல்வமாக விளங்கும் ஓமத் தீயினைப் பயிற்ச் முறையாகச் சமைந்த அறிவிப்பு முறையென்று கொள்ள உலகெலாம் ஆளும் சிவபெருமான் பேரருளோடு ஆழ்ந்து நோக்கியருள்வன். (யோதனம் - அறிவிப்பு)

1042.பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தமு தாகவே ஆய்நதறி வார்இல்லை
காத்துடல் உள்ளே கருதி இருந்தவர்
மூத்துடன் கோடிய யுகங்கண்ட வாறே.

பொருள் : எல்லா இடங்களிலும் நிறைந்து விளங்குகின்ற பேரொளியை நமக்கு எஞ்ஞான்றுமுள்ள திருவருள் துணை என்று அறிவாரிலர். அப் பேரொளியினை ஓம குண்டத்து அவியாது காத்து அதன் வழியாகச் சிவபெருமானை எண்ணியிருந்தவர் மெய்யுணர்வு பழுத்து உடல் கெடாது கோடிக் கணக்கான ஊழிகள் கண்டு வாழ்வர். (ஆத்தம் - துணை)

1043. உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும்
பகங்கண்டு கொண்ட இப் பாய்கரு ஒப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே.

பொருள் : தொன்மை தொட்டுப் போற்றி வருகின்ற ஒன்பது திருவருள் ஆற்றலைக் குறிக்கும் ஒன்பது ஓம குண்டமும் அகத் தவத்தராகிய யோகிகள் அகத்தே வளர்த்துப் பயிலுவர். கருவுக்கு அங்சி வாழும் அவர்களின் பிறப்பு நீங்குவது ஒப்ப இவ்வுலகப் பிணிப்பும் நீங்கும். அங்ஙனம் நீங்க இவ் ஓமப் பயிற்சி துணையாகும்.

1044. சாதனை நாலு தழல்மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளையாறு பூநிலை
போதனை போதுஐஞ்சு பொற்கய வாரணம்
நாதனை நாடு நவகோடி தானே.

பொருள் : நாற்கோணம், முக்கோணம், அர்த்தசந்திரன், வட்டம், அறுகோணம், அட்டகோணம், பதுமம், யோனி, நீள்வட்டம் ஒவ்வொன்பதும் நாதனை நாடும் ஒன்பது கோணமுடைய குண்டங்களாம். (குண்டங்களைப் பரியாயமாக மறைத்துக் கூறியவாறு.)

5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம்

(சத்தி பேதமாவது, சத்தியே கலைமகள், அலைமகள், மலை மகளாகவுள்ள பேதம். திரிபுரை - மும்மண்டல நாயகி இவளே பரமேஸ்வரனோடு அபின்னமாகப் பிரிப்பின்றியிருந்து பஞ்ச கிருத்தியம் செய்ய வல்லவன். இதனைப் பற்றி விரிவாகப் பேசுவது இப்பகுதி என்க.)

1045. மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமையை உள்ளொளி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவாந் திரிபுரை யாங்கே.

பொருள் : காரிய உலகு உடல் பொருள்களுக்குக் காரணமாகிய மாமாயையும், அக்காரிய மாயையும் ஒளியாகிய வைந்தவமும் செவி ஓசையும், ஓமொழியும் அதன் உள்ள ஒளியாகிய எழுத்துக்களும் அறுபகைக்கு உடனாகும் அறுகோடி மாயையின் ஆற்றல்களும் தாமே இயங்கும் தன்மையவல்ல. மந்திர உருவமாகிய திருவருள் ஆற்றல் இவற்றை இயைந்து இயக்குகின்றது. அதனால் அவை இயக்க இயங்கும் பொருளாகும். அவ் ஆற்றலே திரிபுரை என்று வழங்கப்படும். அவ்வாறு இயைந்து இயக்கினும் அவ் ஆற்றல் பொருள் தன்மையால் வேறாகும். அறுகோடி வகையாயுள்ள மந்திரங்கள் என்றலும் ஒன்று. சத்தி தன் மூர்த்திகளாம் என்பதற்குச் சத்தியின் எழுத்துவங்கள் என்றலும் ஒன்று (வயிந்தவம் - விந்து. ஓ மாயை - பிரணவம்)

1046. திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமாது தானே.

பொருள் : திரிபுரை யானவள் அக்கினி, சூரியன், சந்திரன் என்ற மூன்று கண்டங்களாக விளங்குபவள். பேரழுகு வாய்ந்தவள், ஆகாய வடிவானவள். உலகைப் பரிந்து காக்கும் செவ்வொளியுள் உள்ளவள். நாரணனுக்குத் திதித் தொழிலை நடத்த மாயா உருவை வழங்கியவள். பலவாகிய நிறத்தையுடையவள். மகேசன் சத்தியாகிக் கருநிறத்தில் விளங்குபவள். சதாசிவ சத்தியாகி நினைப்பவர் மனத்தில் விளங்குபவள். இவ்வாறாகத் திரிபுர தேவி ஒருத்தியே பல சத்திகளாக விளங்குகிறாள். ஒன்பது திருப் பெயர்களும் ஒன்பது ஆற்றல்களைக் குறிப்பினவாகும். (ஸ்திதி - திதி - காத்தல்.)

1047. தானா அமைந்தஅம் முப்புரம் தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே.

பொருள் : இயல்பாகவே அமைந்த முப்புரங்களில் தானே மூவுருவும் ஓர் உருவாம் தன்மையுடையவள். தானே பொன் செம்மை வெண்ணிறத்தை உடையவள். போகத்தையும் மோட்சத்தையும் கல்வியையும் அளிப்பவளாக விளங்கும் வெண்ணிறத் தலைவி கலைமகள் கல்வியையும், பொன்னிறத் தலைவி திருமகள் போகத்தையும் செந் நிறத்தலைவி உமாதேவி முத்தியையும் அளிப்பாள் என்க.

1048. நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள்
பல்கும் பரவிந்து பாரண்ட மானவை
நல்கும் பரைஅபி ராமி அகோசரி
புல்கும் அருளும்அப் போதந்தந் தாளுமே.

பொருள் : திரிபுரை நாதத்தையும் நாதம் கடந்து நாதாந்த நிலையையும் தந்தருளுவாள். பரவிந்துவாக இருந்து பெருகுகின்ற உலகம் முதலான அண்டங்களை நல்குவாள். பரையும் அபிராமியும் அகோரியும் ஆகிய அன்னை அன்போடு தழுவி அருளுவாள். பின் அறிவினை வழங்கி ஆட் கொள்வாள். (அபிராமி - பேரழகி; அகோரி - வாக்குக்கும் மனத்துக்கும் அப்பாற் பட்டவள்.)

1049. தாளணி நூபுரம் செம்பட்டுத் தானுடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.

பொருள் : அழகிய காலணி சிலம்பு; செம்பட்டு உடை; கச்சு கொங்கையில் அணி செய்வது; மலர் அம்பு; கரும்பு வில்; எழுச்சியைத் தரும் அங்குச பாசமும், அழகிய கிரீடத்தையும் கருமையான நீலநிறக் குண்டலத்தையும் உடைய தேவிக்கு ஆம். இராஜேஸ்வரியின் உருவம் கூறியவாறு.

1050. குண்டலக் காதி கொலைவிற் புருவத்துள்
கொண்ட அரத்த நிறமன்னு கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.

பொருள் : குண்டலங்களைக் காதில் அணிந்தவள்; கொல்லும் தன்மையுள்ள வில் போன்ற வளைந்த புருவத்தை உடையவள்; செந் நிறத் திருமேனி கொண்டு விளங்குபவள். தோளணியையும் கழுத்தணியையும் ஒளி விடுகின்ற முடியினையும் சந்திரனையும் உடைய சண்டிகா தேவி நான்கு திசைகளையுடைய உலகங்களைக் காப்பவளானாள்.

1051. நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை
நன்றறி கண்டிகை நாற்கால் கரீடணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.

பொருள் : உயிர் உய்யக் கலந்து நிற்கும் அம்மை திரிபுரை யாவாள். நிலைபெற்ற தொன்மையள். குறையாத அழகுடையவள். இவள் சீர்களின் சிரசுக்கு மேலுள்ள சிகையில் விளங்குபவள். நன்றாக அறியும் கண்களையுடையவள். நான்கு திசை இடங்களில் உள்ளவற்றைத் தன்பால் இழுக்கும் செயல் புரிபவள். சுத்த தாமரையாகிய சகஸ்ரதளத்தில் விளங்கும் சுத்த வித்தியா தேவியாகும் (நாற்காற் கரீடணி என்பதற்கு யானைவாகனம் உடையவள் எனினுமாம்)

1052. சுத்தவம்பு ஆரத் தனத்தி சுகோதயள்
வத்துவம் ஆய்ஆ ளும்மாசத்தி மாபரை
அத்தகை யான மனஆரணி தானுமாய்
வைத்தஅக் கோல மதியவள் ஆகுமே.

பொருள் : தூய்மையான கச்சினையும் மாலையையும் அணிந்தவள்; இன்ப ஊற்றாகும் இயல்பினள்; பொருளாகக் கொண்டு சீவர்களை ஆட்கொள்கின்ற பெரிய சத்தி; பராபரை; அவ்வாறான மனமாகிய காட்டில் வசிப்பவள்; தானேயாகப் படைத்துக் கொண்ட வடிவத்தையுடைய ஞான சொரூபியாக ஆவாள் அல்லது தானேயாக விளங்கும் சந்திர மண்டலம் ஆவாள்.

1053. அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.

பொருள் : திருவருள் ஆற்றலை உணராத தேவர்களும் இலர். திருவருள் துணையின்றிச் செய்யும் சீரிய தவமும் இல்லை. அவள் துணையின்றி அருந்தவப் பேற்றால் படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் செய்யும் ஐங்கடவுளராலும் ஆவதொன்று இல்லை. அவள் தன் அருள் துணையில்லாமல் திருவடிப் பேறு கைகூடச் செய்யும் செந் நெறியும் இல்லை. (ஊர் - முத்தியுலகம்)

1054. அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அறிவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே.

பொருள் : திருவடி உணர்வு கைவந்த மெய்கண்டார் அருள் அம்மையின் திருவுருப் பேரின்பம் என்பர். அறிவுதரு எனவும் கூறுவர். ஐந் தொழிலும் அவளது விழைவாகிய திருவுள்ளம் என்பர். விழுமிய முழுமுதற் சிவனும் அவளிடமாகக் கொண்டு திகழ்பவன் என்பர். சத்தி, சிவம் வேறின்றி உள்ள நிலையைக் கூறிற்று இம்மந்திரம்.

1055. தான்எங்கு உளன்அங்கு உளதுதையல் மாதேவி
ஊன்எங் குளஅங்கு உள்ளுயிர்க் காவலன்
வான் எங் குளஅங் குளேவந்தும் அப்பாலாம்
கோன் எங்கும் நின்ற குறிபல பாரே.

பொருள் : சிவமாகிய தான் எங்கு உள்ளதோ அங்கு உள்ளது தையலாகிய பராசக்தி. ஊனலாகிய உடல் எங்கோ அங்கு உயிர்க்குயிராகிப் காவலனாக இருப்பவள். ஆகாயம் எங்கெங் உள்ளதோ அங்கு அங்கு எல்லாமும் அதற்கு அப்பாலாம் பரவெளியிலும் விளங்கும் அவ்வாறு தலைவனாகத் தேவியே நின்ற குறிப்புகளை ஆராய்ந்து அறிக. வந்தும் அப்பாலாம் என்பதற்கு மந்த மாருதம் என்றும் பாடபேதம் உள்ளது. (மந்தமாருதம் - தென்றற் காற்று)

1056. பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனே
பராசத்தி புண்ணிய மாகிய போகமே.

பொருள் : பராசத்தியே பலவகையாலும் மேன்மை வாய்ந்தவள். யாவற்றையும் தாங்கும் ஆதார சத்தியாய் நின்ற தன்மையை உணர்க. எங்கும் பரவுகின்ற சத்தியும் அவளே. எல்லா ஊழிகளிலும் ஆருயிர்களைக் காக்கும் ஆற்றல் உடையவளும் அவளே. புண்ணிய பயனைத் தந்தருளும் வாழ்வும் அவளேயாம்.

1057. போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகஞ்செய்து ஆங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகஞ்செய்து ஆங்கே அடியவர் நாள்தொறும்
பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.

பொருள் : சீவர்களுக்குப் போகத்தை ஊட்டுபவன். குண்டலினி சத்தியோடு பொருந்திச் சீவர்களுக்குப் பரிபாகத்தைச் செய்து பராசத்தியாய் நிற்கும் அடியார்களுக்கு நாள்தோறும் வளர்கின்ற ஒளியுடலை அளித்துப் பரிபாகம் உண்டாகும்படி செய்யும் கொழு கொம்பாகவும் விளங்குவாள். பராசத்தியே போகத்தையும் ஞானத்தையும் கொடுப்பவள் ஆவாள்.

1058. கொம்புஅனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பிஎன் உள்ளே நயந்துவைத் தேனே.

பொருள் : கொம்பு போன்று துவளும் இடையினை யுடையானை, குவிந்த அழகிய மார்பினையுடைய மங்கையை, மணங்கமழ்கின்ற மலர் சூடிய கூந்தலை யுடையாளைச் சிவவுலகத்துள்ளார். இடையறாது சிந்தித்துத் தொழும் செல்வியைச் செம்மையான பவழம் போலும் திருமேனியையுடைய இளநங்கையை மும்மைக்கும் பெருந்துணை யென்று உறுதியாக நம்பி மிக விரும்பி என் உள்ளத்துள் வைத்தேன். (சிறுமி - கௌரி)

1059. வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பராபரைச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலையவ ளாமே.

பொருள் : உலகில் உண்டு பண்ணி வைத்த பொருளும் அவற்றோடு பொருந்திய உயிர்க்கூட்டமும், பத்துத் திசையிலும் நிறைந்து காக்கும் பத்து முகங்களை உடையவளும் பரையும் பராபரையும், அந்தக் கரணம் நான்கனையும் செயல்படுத்துபவளும் ஆகிய தேவி ஸ்ரீ வித்தைக்கும் தலைவியாம். ஸ்திரீ தேவதையால் கிடைக்கும் ஞானத்துக்கு வித்தை என்றும் புருஷ தேவதையால் கிடைக்கும் ஞானத்துக்கு கல்பம் என்று பெயர்.

1060. தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.

பொருள் : திருவருள்ளம்மை அண்ணாந்து ஏந்திய வனமுலையினையுடைய தையலாகிய தலைவி. அவளே கெடாத நற்றவஞ் செய்யும் செந்நெறித் தோகை. மறைமுறை முதலாகிய உறுதி நூல்களும் இலக்கண இலக்கிய முதலிய எழில் நூல்களும் உலகுய்ய உள்நின்ற உணர்த்தியருளிய என்றும் ஒரு படித்தாம் கன்னியவாளும் அவளே என்னுள்ளம் அவள்பால் நிலைபெற்று நிற்பதன் பொருட்டு வெளிப்பட்டு நின்றனள். (மறை - வேதம். முறை - ஆகமம்)

1061. நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந்து ஏழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றெனோடு ஒன்றிநின்று ஒத்து அடைந்தாளே.

பொருள் : நிறைந்து நின்ற அத் திருவருள் அம்மை சிறந்த அறிகலன்களை உடையவள். அழிவில்லாத நிறைந்த முழுக் கலைகளுடன் என நெஞ்சத்து வீற்றிருந்தனள். அவளே எல்லா உலகினரும் வந்து எளிதாகத் தொழும்படி பொன்னம்பலத்தின்கண் பொருந்தி நின்றனள். மனோன்மனி எனவும் மங்கலம் உடையவள் எனவும் அழைக்கப் படுபவளும் அவளே அவள் சிவத்துடன் வேறு அற ஒன்றி நின்று யாண்டும் ஒத்து உறைந்தனள் என்க.

1062. உணர்ந்துட னேறிந்கும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையும் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பாளே.

பொருள் : ஆருயிர்கட்கு விளக்கும் கருவியாக அமைந்து சிவத்துடன் கூடி உடனாய் நிற்பவள். அக வொளியாய் விளங்குவாள். மலர் சூடிய கூந்தலையுடைய மங்கையும் அத்திருவுருவுள் விளங்கும் சிவமுடன் ஒன்றாய் வெளிப்பட்டு அருள்வள். அப்பொழுது அவ் அம்மையைத் தூய மனத்துள் நாடி முயல்வார்க்கு அவள் நன்னிலையை நல்கி யருள்வள். (கணிந்தெழுதல் - நாடி முயலுதல். கதி - நன்னிலை)

1064. அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே.

பொருள் : அனைத்து உயிர்களிடத்தும் சமமான தலையணி செய்யும் பெண் பிள்ளை பேரின்பம் பேரழகி மெய்யடியார் உள்ளம் புளியம் பழமும் தோடும் ஒன்றாயிருந்தும் ஓட்டுப் பற்றின்றி நிற்பது போல் உலகியலில் பற்றின்றி நிற்கும். அந்நிலையினை நோக்கி உண்மையினைத் தெளிவிப்பள். உயிரின் அழியாத் தன்மையினையும் சிவனுடன் கூடும் பேரின்ப நிலையினையும் காட்டுவள். அதன்பின் திருவடியுணர்வு வண்ணமாய் நம்மை ஆக்குவள். அம் முறையில் அடியேனையும் உய்யக் கொண்டாள் என்க.

1065. உண்டில்லை என்றது உருச்செய்து நின்றது
வண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தம்மொடு
மண்டல முன்றுற மன்னிநின் றாளே.

பொருள் : உலகோர் உண்டு என்றும் இல்லை என்றும் கூறிய சத்தியே, சூக்குமத்தைத் தூலமாகச் செய்து வளப்பம் பொருந்திய தில்லை மன்று என்று கூறப்பெறும் சிற்றம்பலத்தில் நிலைபெற்று நின்றது. ஆன்மாவின் பந்த மோட்சங்களுக்குக் காரணம் அறிவுருவான சிவத்தினிடம் உள்ளது என்பதையும் உலகோர் அறிவதில்லை. ஆன்மாக்களது மூன்று மண்டலங்களிலும் நிலைபெற்று விளங்கினாள்.

1066. நின்றாள் அவன்தன் உடலும் உயிருமாய்ச்
சென்றான் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுள் புகுந்துணர் வாகியே
நின்றாள் பரஞ்சுடர் ஏடுஅங்கை யாளே.

பொருள் : சிவபெருமானின் உடலும் உயிருமாக என்றும் நிற்பவள் திருவருள் அம்மை. மெய்யடியார்களைச் சிவனிலையில் சேர்ப்பிக்கும் வனப்பாற்றலாகிய அருளம்மை என் நெஞ்சத்தால் கலப்பால் ஒன்றாய்ப் பொருள் தன்மையால் வேறாய் உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாய்ப் புகுந்து நின்றனள். பேருணர்வாகவே நின்றனள். பேரொளி யாகவும் நின்றனள். செந்தமிழ் மறையும் முறையும் வரைந்த திருஏடு அங்கையில் உள்ளவள். (அவன் சிவபெருமான் - பராசத்தி - வனப்பாற்றல்.)

1067. ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்புவெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம் சொல்லுமே.

பொருள் : வாக்கு ரூபத்தில் விளங்குபவள். எங்களது இறைவி மூன்று கண்களையுடையவள். படிகம் போன்ற தூய வெண்ணிறத்தாள். வெண் தாமரையில் விரும்பி இருப்பவள். நாத மயமாய் விளங்குபவள். இவளைச் சிரசில் அணியுங்கள். புகழ்ந்து இவளைத் துதியுங்கள்.

1068. தோத்திரம் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிடும்
பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும்பு
ஆர்த்திடும் பூம்பிள்ளை ஆருமாய் ஆதிக்கே.

பொருள் : திருமுறைகளை ஓதிப் புகழ்ந்து தொழுக. இரண்டு திருவடிகளையும் பேறு வாய்க்குமாறு ஏத்தி என்றும் வழிபடு நெறியில் உரைத்து நிற்க. தோட்டியும் கயிறும், கரும்பு வில்லும், பூங்கணையும், உடையவள் அம்மை. சிவமெய்யினின்றும் சிவை மெய் தோன்றினமையால் ஆதித் திருவருளுக்கு அவள் பிள்ளை முறையுமாம். (சிவை சத்தி; மெய் - தத்துவம் வழிபடும் ஆறு இரும் - வழிபாடு செய்யும் நெறியில் நில்லுங்கள்.)

1069. ஆதி விதமிகத் தண்தந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பல்காற் பயிற்வீரல்
சோதி மிகுந்துமுக் காலமும் தோன்றுமே.

பொருள் : சிவபெருமானின் ஆதித் தொழிலாகிய படைப்புச் பெருகச் செய்தவள் குளிர்ச்சி பொருந்திய நீர்ப்பிரதேசத்திலுள்ள திருமாலின் தங்கையாகிய நாராயணி. அந்நேரிழிழையின் திருப் பெயராகிய நமசிவய என்னும் தமிழ் ஐந்தெழுத்து அருள் மந்திரத்தை முøயாக எட்டிதழ்த தாமரை அதன் மத்தியில் அமைக்கப் பலமுறை உருவேற்றத் திருவருள் ஒளி  பெருகும். அது பெருக, அகக்கண் திறந்து முக்காலவுணர்ச்சியும் கைகூடும். இதனை யோகக் காட்சி என்ப.

1070. மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே.

பொருள் : அகரம் முதல் உன்மனை ஈறாகவுள்ள பதினாறு கலைகளையும் வடிவமாக உடையவள். வேதம் முதலாகவுள்ள நூல்களில் பரமாகவும் அபரமாகவும் புகழ்ந்து பேசப்பட்டவள். சீவர்களின் இருப்புக்கு ஆதாரமாய் விளங்குபவள். நாதம் நாதாந்தத்தில் விளங்கும் சிவத்துக்கு இவளே அருட் சத்தியும் ஆவாள்.

1071. அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் நானே.

பொருள் : மெய்ப் பொருளைத் தனக்கே உரிமையாகப் பெற்ற அருள் வழங்கும் தன்மையுடைய சகல புவன நாயகியான திரிபுரை மயக்கத்தைத் தரும் பிரபஞ்சத்தைப் பற்றிய சீவர்களது சித்தத்தை மாற்றி, நிலையான பந்தமற்ற புவனங்களைப் பொருந்திய திருவடியை நான் வணங்குவேன். மனிதர்காள் ! இவ்வுண்மையை அனுபவத்தில் கண்ட நீங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்ல முன் வாருங்கள்.

1072. ஆன வராக முகத்தி பதத்தினள்
ஈன வர்ஆகம் இடிக்கும் முசலத்தோடு
ஏனை உழுபடை இடிக்கும் வெண்ணகை
ஊன மறஉணர்ந் தார்உளத்து ஓங்குமே.

பொருள் : தேவியைச் சூழவுள்ள சப்த மாதர்களில் ஒருத்தியான வராகி என்பவள் வராக முகத்தோடு கூடிய அடையாளத்தை உடையவள். இழிந்தோர் உடலை இடித்து வருத்துகின்ற உலக்கையோடு, மற்றை கலப்பை ஏந்திய கைகளையும் வெண்மையான நகையினையும் உடையவள். அவள் குற்றமற்ற ஊனுடலைக் கடந்து தியானிப்பவர் உள்ளத்தில் சிறந்து விளங்குபவள். தேவியைத் தண்ட நாயகியாக வணங்குவார்க்கு வெற்றியை அளிப்பாள் என்பதாம். (வராகம் - பன்றி.)

1073. ஓங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகிய ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.

பொருள் : ஓ மொழிக்கு உரியவளாகிய பெண்பிள்ளை என்றும் நீங்காத மரகத மாகிய பச்சை நிறத்தை யுடையவள். எழுச்சியுடையவளாய் அருளோன் ஆண்டான் அரன் அரி அயன் என்னும் ஐவர் நிலைகளையும் படைத்து ஐவரையும் தொழிற் படுத்தும் ஆற்றலள். ரீங்காரத்துள்ளே இனிதிருந்தனள் என்க. ரீங்காரம் மாயையின் வித்தெழுத் தென்ப. தேனுண்டு மயங்கி வீழும் வண்டொலியை ஒத்திருப்பதும் காண்க. (ஆங்காரி - எழுச்சி யுடையவள்.)

1074. தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயிர்வித்துத் தந்த பதினாலும்
வானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே.

பொருள் : தானே எல்லாவற்றிற்கும் தலைவியென நின்ற பராசத்தி ! தானே வாக்கு ரூபமாக விளங்கும் பதினான்கு வித்தைகளும் தேவ லோகங்களையும் மன மண்டலத்தையும் நுண்ணறிவையும் கடந்த நாதாந்தமும் தானே சிவகதியை அளிப்பவளும் ஆவாள். பதினான்கு வித்தைகள்; வேதம் 1, அங்கம் 6, நியாயம் 1, மீமாம்சை 1, மிருதி 1, புராணம் 1 ஆக 14.

6. வயிரவி மந்திரம்

(வயிரவி - வயிரவக் கடவுளின் சக்தி. வயிரவியை நினைவு கூர்வது வயிரவி மந்திரம்.)

1075. பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி
தன்னில் ஆகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும்
சொல்நிலை சோடம் அந்தம்என்று ஓதிடே.

பொருள் : பன்னிரண்டு கலைவடிவான ஆதி வயிரவி இடமிருந்து அகாரமாகிய ஓசையும் மாயையாகிய ஒளியும் கூட்டி நினைந்து நோக்கக் கலை பதினான்காகும். இப்பதினான்கும் புகழ்ந்து சொல்லப்படுகின்ற அம்மையின் இருப்பிடம். திங்ககளின் கலை பதினாறும் செல்வியின் சிறந்த இருப்பிடமாகும். (சோடசம் - பதினாறு)

1076. அந்தப் பதினாலும் அதுவே வயிரவி
முந்து நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தை கமலத்து எழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகின்றாளே.

பொருள் : வயிரவியின் இருப்பிடம் முன் ஓதிய பதினான்கு கலையாகும் முதல்நடு இறுதியாகத் திகழ்பவள். நெஞ்சத் தாமரையிடத்து விளங்கும் பேராற்றல்; அந்தமும் ஆதியும் ஆகி நின்றவள். இஃது ஒடுக்கத்தையும் தோற்றத்தையும் செய்விக்கும் உரிமை உடையவள் என்ப.

1077. ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணித் தோரே.

பொருள் : வயிரவியாகிய பேராற்றலி னிடத்துப் படைப்போன் காப்போன் துடைப்போனாகிய முத் தேவரும் அடங்குவர். தோன்றி மறையும் மண்முதற் பூதங்கள் அங்கே ஒடுங்கும், இப் பூதங்களுடன் இயைந்து வினைக்கும் ஈடாக உலவும் தொன்மை வாய்ந்த ஆருயிர்கள் உண்மை உணர்ந்து இப் பிறப்பினிற் சாராது அம்மையாகிய வயிரவியைச் சார்தல் வேண்டும். உடலைச் சாராது வயிரவி அம்மையின் திருவடியைச் சார்வோர் புண்ணியப் பேற்றினையுடைய பெரியோராவர்.

1078. புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தைதன் தென்னனும் ஆமே.

பொருள் : ஆருயிர்களுக்கு இன்ப வாழ்வு நல்கும் இயல்பினால் புண்ணியன் என்பர். ஆக்க நிளைக்கள மாதலின் நந்தி என்பர் இயற்கைத் தூயோனாதலின் புனிதன். குறைவிலா நிறைசெல்வன். ஆதலின் திருவாகும் என்பர். விண்மீனாகிய நாட்கள் இருபத்தேழும், அவை சூழ்ந்த நடுவில் திகழும் திங்களும், விறகு முதலியன பற்றி ஒளிதரும் தீயும் ஞாயிறும் ஆகிய இப்பொட்கள் முடிந்த முடிவாக விளங்கும் பேரறிவுப் பொருளாகிய தென்னன் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் சிவபெருமான் திருவுள்ளத்தால் ஆக்கப் பெற்றன. (தென்னன் - சிவன்; தென்பாண்டி நாட்டான். திருவாசகம்.)

1079. தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும்
பொன்னங் கிரியில் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு
உன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே.

பொருள் : அழகிய சிவபெருமான், திருநந்தியாகிய காவலனாவான், அவனொடும் திருவெள்ளிமலையில் அனைத்துலகும் காத்தருளும் பெண் யானை யனைய அம்மை வீற்றிருக்கின்றாள். திருவடிப்பேர் உன்னித் திருமுறைகளை நாளும் இடையறாது ஓதி நிற்பார்க்கு அந்தம் ஆகிய பகவன் என்னும் அண்ணலோடு உறைந்து திரிபுரை ஆரருள் புரிவள்.

1080. ஓதிய நந்தி உணரும் திருவருள்
நீதியின் வேத நெறிவந்து உரைசெய்யும்
போதம் இருபத்து எழுநாள் புணர்மதி
சோதி வயிரவி சூலம்வந்து ஆளுமே.

பொருள் : மறைநூல் அருளால் ஓதியருளிய சிவபெருமானை அவன் அருளால் உணருங்கள் மறைவழியே முறை அருளினன். நாண்மீன இருபத்தோழையும் பொருந்தும் திங்களை அம்மையாகிய வயிரவியும் தன்கையில் திகழும் முத்தலை வேலாகிய சூலத்தால் உலகனைத்தையும் காத்தருள்வள்.

1081. மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை
கல்லியல் ஒன்பது காணும் திருமேனி
பல்லியல் ஆடையும் பன்மணி தானே.

பொருள் : இயற்கையாகவே பேரிரக்கம் வாய்ந்த மெல்லியல் ஆவள். ஆருயிர்களின் வினைக்கு ஈடாக வஞ்சித்தலும் தண்டித்தலும் உடையவள். எனினும் உண்மையான நோக்கமும் திருவடி உணர்வு சேர் கலைஞானிகள் ஓதுகின்ற முள்முருக்கம் பூ நிறம் போன்ற நிலைத்த செம்மை நிறமுடையவள், அவள் மாணிக்க மணியொத்த செந்நிறம் வாய்ந்த திருமேனியுடையவளும் அவளே, அவள் கரையிற் பலமணிகள் சேர் பொன்னாடை யுடையவள். (விடமி-தண்டிப்பவள்.)

1083. பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக்காதி உழைக்கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.

பொருள் : பலமணிகள் அழுத்திய ஒளிமிக்க பல உறுப்புக்களையுடைய திருமுடியும் புகழ்ந்து சொல்லப்படும் மணிகள் இழைத்த குண்டலம் அணிந்த காதும் உடையவள். மான் போலும் கண்ணையுடையவள். நல்ல விளக்கமுள்ள ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்றையும் கண்களாக உடையவள். பொன்போல் விளங்குகின்ற தீ வண்ணத்தம்மை மிகவும் களிப்புறுகின்றாள்.

1084. பூரித்த பூவிதழ் எட்டினுக்கு உள்ளேயோர்
ஆரியத் தாள்உண்டுஅங்கு எண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.

பொருள் : செழிப்பான தாமரை இதழ் எட்டினுக்குள் அருமை மிக்க தாளுண்டு. அங்கே மாறா ஆற்றலும் அருளும் மிக்க கன்னியர் எண்மர் உறைவர். அவர்கள்பால் தோன்றும் கலை முதல்வியர் அறுபத்து நால்வர் ஆவர். அவர்கள் அனைவரும் திருவருள் ஆற்றலைச் சார்ந்து உண்மை உணர்ந்து திகழ் பவராவர்.

1085. கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவனி பராசக்தி
அண்டமோடு எண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுள் பூசனை யாளே.

பொருள் : ஆராய்ந்து எடுக்கப்பெற்ற சிலம்பும், வலம்புரிச்சங்கும், சக்கரமும் உடையவள்; எட்டுத் திசைகளிலும் நிறைந்திருப்பவள்; முதல்வி; திருவருளாற்றல்; பல்வேறு அண்டங்களையும் பல்வேறு திசைகளையும் படைத்து ஆருயிர்களுக்கு அளித்துக் காக்கும் திருவருட்ச்செல்வி; அன்பர்களின் நெஞ்சத்தாமரையின்கண் அவர்கள் ஆர்வமுடன் செய்யும் வழிபாட்டை ஏற்றுக்கொள்ள எழுந்தருளும் அம்மை.

1086. பூசனை கெந்தம் புனைமலர் மாகொடி
யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும்
வாசம்இ லாத மணிமந் திரயோகம்
தேசம் திகழும் திரிபுரை காணே.

பொருள் : வழிபாட்டிற்கு வேண்டிய மணப் பொருள்களும், அழகிய மணமுள்ள பூக்களும், சிறந்த புதிய ஆடைகளும், நெடுந் தொலைவுக்குக் கேட்கும் ஐவகையான இயக்க முழக்கமும் சொல்லுதற்குரிய தலையான திரு ஐந்தெழுத்து ஆகிய மந்திரமும் கூடிச் செய்யும் பூசையினை ஏற்றருளும் ஒலி மிகுந்த திரிபுரையாவாள். (இயம்-வாத்தியம் தோற்கருவி தொளைக்கருவி, நரம்புக்கருவி தாளக்கருவி மிடற்றுக்குருவி என ஐந்து.)

1087. காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணும் தலைவிநற் காரணி காணே.

பொருள் : காணுகின்ற பலபல தெய்வங்கள் வெவ்வேறு அணிகலன்களாகத் தோன்றும் பொன் போலத் தேவியின் பேதமாக விளங்கிடும். பெருமையாகப் போற்றும் சிவனும் பிரமனும் திருமாலும் பிற தெய்வங்களாக விளங்குவது சகத்துக்குக் காரணமாகிய தேவியால்தான் என்று அறிவாயாக.

1088. காரணி மந்திரம் ஓதுங் கமலத்துப்
பூரண கும்ப விரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடுஅங்கு உரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமும் ஆமே.

பொருள் : ஆதிமந்திரம் அஞ்செழுத்து என்னும் உண்மையால் அக்காரண மந்திரத்தை இடையறாது ஓதும் மெய்யடியார்களது நெஞ்சத் தாமரையின்கண் உட்கொளல், நிறுத்தல், விடுதல் என்னும் உயிர்ப்புப் பயிற்சிக்குத் துணையாக திருவருள் அம்மை எழுந்தருள்வள். அங்ஙனம் எழுந்தருளும்போது நாரணி என்னும் பெயர் பெறுவள் சிவபெருமான் அருளிச் செய்த மறைநூலின் முதலும் முடிவுமாய் விளங்குவதும் திருவருள்அம்மையேயாம். (பூரகம் - மூச்சை உட்கொளல்; கும்பதும் - நிறுத்தல்; இரேசகம் - வெளிவிடுதல் நந்தி - சிவபெருமான்)

1089. அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரை செய்யும்
செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு
நந்தி இதனை நவம்உரைத் தானே.

பொருள் : அந்தத்தைச் செய்யும் கடவுளாகிய சிவபெருமான் நடுவிரலாகவும், படைத்தலைச் செய்யும் ஆதியாகிய நடப்பாற்றல் சிறு விரலாகவும் கொண்டு ஓதும் உலகியல் நமசிவாய என்று ஆகும். இம்முறையினை ஊன நடனம் என்ப. இதனை மாற்றி உரை செய்தலாவது சிறுவிரல் முதல் பெருவிரல் ஈறாகச் சிவநயம் என்று ஆகும். இதுஞான நடம் என்ப. இந்த ஐந்து எழுத்தும் இம்முறை வைப்பும் செந்தமிழுக்கே உடைய சிறப்பென்பது விளங்கச் செந்தமிழாதி தெளிந்து என்று ஓதியருளினார்.

1090. உரைத்த நவசத்தி ஒன்று முடிய
நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம்செய் தானே.

பொருள் : சொல்லப்பட்ட சத்திகளுள் ஒன்றாகிய மனோன்மனியை முடியின் மேலும், ஏனைய சத்திகள் வரிசையாகச் சிரசைக் சூழவும் அமைய எண்ணிப் பிரசாத கலைகளில் உடம்பில் விளங்கும் எட்டுக் கலைகளை முன்னே பேசிய நந்தி, ஏனைய எட்டும் நிரம்பினதாய் உயிரில் விளங்கும்படி ஒழுங்கு செய்தான்.

1091. தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற
ஏமத்து இருளற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள்எழு நுண்புகை
மேவித்து அழுதொடு மீண்டது காணே.

பொருள் : மணம் கமழும் மலர் கூடிய நீண்ட கூந்தல யுடையவள்; பேரருள் வாய்ந்த கண்ணை யுடையவள்; ஆருயிர்களின் அக இருளைக் கடிந்தோட்டும் பேரொளிப் பிழம்பாம் இளங்கொடிக் கன்னி; அகத்தே கொப்பூ ழின்கண் அஞ்செழுத்தால் வளர்க்கப்படும் ஓமப்பெருஞ்சுடர்; அதன் அகத்தெழும் நறுமண நுண்புகை; அத்தகைய திருவருள் ஆற்றல் நமக்கு வேண்டும் எல்லா நலமும் மேவுவித்து அருளமுது ஊட்டிக் காத்தது என்க.

1092. காணும் இருதய மந்திர முங்கண்டு
பேணும் நமஎன்று பேசும் தலைமேலே
வேணு நடுவு மிகநின்ற ஆகுதி
பூணு நடுஎன்ற அந்தம் சிகையே.

பொருள் : சொல்லும் இருதய மந்திரப்பொருள் உணர்ந்து, சிரசின் மேலுள்ள பீடத்தில் வீற்றிருக்கும் திரிபுரை தேவிக்கு  நம என்று நமஸ்காரத்தைச் செய்க ! மூங்கில் குழாய் போன்றுள்ள நடுநாடியின் வரியாக உச்சியில் பொருந்தி உன்னுடைய ஆகுதியை ஏற்பாள். உச்சியின் நடுவே விளங்குவது சிகாமந்திரம் என்று அறிவாயாக.

1093. சிகைநின்ற அந்தக் கவசங்கொண்டு ஆதிப்
பகைநின்ற அங்கத்தைப் பாரென்று மாறித்
தொகைநின்ற நேந்திர முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வகுத்தலும் ஆமே.

பொருள் : முதன்மையாய் விளங்கும் கவசமாகிய காப்புச் சட்டையை ஓதி உடம்பினைக் காத்தருள் என்று வேண்டுக. மீட்டும் அறிவுப் பொறியினைக் காட்டுக. அறிவுப்பொறி சின்முத்திரை சூலம் யோனி என்னும் இரண்டும் வருத்தலும் கூறப்படும். இவ்விரு மந்திரப் பாட்டுக்களிலும் ஆறங்க மந்திரங்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன.

1094. வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறிப்
பொருத்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரல்இரண்டு உள்புக்குப் பேசே.

பொருள் : சூலம் யோனி என்னும் முத்திரைகள் இரண்டும் கைவிரல்களைச் சிறிது வருத்தத்துடன் அமைத்தல் வேண்டும். சிறு விரல்களை ஒன்றன்மேல் ஒன்றாக மாறி வைத்து அணி விரலை நீட்டிப்பிடித்து அமைப்பது சூல முத்திரையாகும். இவற்றுடன் நடுவிரல் இரண்டும் உட்புகு மாறு அமைப்பது யோனி முத்திரையாகும்.

1095. பேசிய மந்திரம் இராகம் பிரித்துரை
கூசமி லாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராணன் உபதேசம் ஆகைக்குக்
கூசியவிந்து வுடன் கொண்டு கூடவே.

பொருள் : சிறப்பித்துக் கூறப்படும் சிகார மந்திரத்தில் சிகரத்தைப் பிரித்தல் சகரமாகும். இம் மெய்யெழுத்து மேற் சேரும் எழுத்தின்மையால் கூடமில்லாத சகரம் என்றாயிற்று. அச் சகரத்தின் மேல் இரகத்தையும் கூசி விந்துவாகிய மகரத்தையும் கூட்டினால் (ச்+இ+ம்) சிம் என்று ஆகும். இஃது உயிர்ப் புப்பழக்கத்திற்குரிய மந்திரமாகும். பேசிய மந்திரம் சி இது பிரணாயாமம் சித்திக்கும் முறை.

1096. கூடிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.

பொருள் : ஓதப்பெறும் மந்திரக்கிழவன் உயிர்ப்புப் பயிற்சிக்குக் கொள்ளும் சிம் என்பவற்றுள் பரந்து செல்லும் ஓசையுடைய சகரத்துடன் மகரமும் சேரச் சம் என்றாகும். இதனைச் சங்கு முத்திரை என்ப இம்முத்திரை அருள் அம்மையாரின் இருப்பிடமாகும். இதன் கண் அம்மை எழுந்தருளி விளங்குவள். (கூவிய-சொன்ன-உருப்போட்ட)

1097. நின்ற வயிரவி நீலி - நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய  உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.

பொருள் : நிலைபெற்ற வயிரவி நீல நிறமுடையவள் இரவில் சஞ்சரிப்பவள். இராசத தாமத சாத்விகம் ஆகிய முக்குணங்களும் அடங்கிய உள்ளத்துத் தானே வலியச் சென்று அருள் வழங்கும் தலைவி. தேவதேவனாகிய சிவபெருமானது ஏவல் வழி நன்மையை அருள்பவன். ஆதலால் உலகத்தில் நீங்கள் அவளைப் புகழ்ந்து விரும்புங்கள். ஒன்றும் இரண்டும் என்பதற்கு அன்பு அறிவு ஆற்றல்கள் (இச்சை, ஞானம், கிரியை) எனினுமாம்.

1098. சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்
நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொடு ஆய்நிற்கும் ஆதி முதல்வியே.

பொருள் : சிவனார் மொழிந்த வேதம் இயங்குவன நிற்பன ஆகிய உலகம் இவற்றின் முதலாகிய ஐம்பூதங்கள் நான்கு திசைகள் ஆகியவை யாவும் முக்கண்ணியன் வடிவே விரும்பும் இருள்வெளியாயும் தோற்றுகின்ற ஆன்ம சமஷ்டியாயும் உள்ள ஒளிப்பிழம்பு ஆயவள். இவை யாவற்றுக்கும் ஆற்றலை அளிக்கும் தலைவியும் ஆவாள்.

1099. ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகிற் பிறவிகள் நாசமாம்
ஓத உலவாத கோலம்ஒன்று ஆகுமே.

பொருள் : நடப்பாற்றலைச் செய்யும் வயிரவி, எல்லாம் ஈன்றெடுத்தும் என்றும் கன்னியாய் இருப்பவள். சிவபெருமானுக்கு உடல் உயிராயவள். அறியாமை நிறைந்த உலகினார் அவளை அன்புடன் வழிபட்டால் பிறவி அகலும். ஓதுதற்கரிய மெய்யுணர்வே திருமேனியாக வுடையவள். உலவாத கோலம் - அழிவற்ற தேகம்.

1100. கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமுது ஆனந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.

பொருள் : அழகிய கூந்தலையும் புருவத்தையும் உடையவள், குவளை மலரையொத்த கண்ணை யுடையவள். நீங்கா மகிழ்ச்சியைத் தருகின்ற பேரழகினள். சிவபெருமான் எல்லாம் கடந்தவர். நாமுய்யும் பொருட்டுத் தடையிலா ஞானமாகிய அம்மையை உருவாகக் கொண்டு எழுந்தருளுவர் அதனால் அவரை வெளிப்படுத்தியது திருவருள் ஆற்றல் என்பர்.

1101. வெளிப்படு வித்து விளைவுஅறி வித்துத்
தெளிப்படு வித்துஎன் சிந்தையின் உள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படு வித்துஎன்னை உய்யக்கொண் டாளே.

பொருள் : சிவத்தை வெளிப்படச் செய்து அதனாலாம் பயனையும் உணர்த்தி தெளிவுதந்து என்னுடைய சிந்தையினுள்ளே களிப்பூட்டி கிரணங்களோடு விளங்குகின்ற பரஞ்சோதிப் பெருமானை ஒளிமிகும்படி செய்து அடியேனை ஆட்கொண்டருளினாள்.

1102. கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள்
கண்டனள் எண்ணென் கலையின்கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.

பொருள் : உலகு உய்தற்பொருட்டு அருள் அம்மையார் கொண்டருளிய திருக்கோலத் திருவுருவங்கள் பலகோடி என்பர். அறுபத்து நாலும் கலைகளையும் தோற்றுவித்தனன். அவற்றுள் வெளிப்பட்ட நூற்சுவடி வரிசைகளையும் வெளிப்படுத்துவித்தனள். அதுபோல் ஞாயிறு திங்கள் நீ என்னும் மூன்று ஒளியுடைய பொருள்களையும் படைத்தருளினள். உச்சித் தொளையின் மேலுள்ள அருள்வெளியும் தானேயாம். வள் தையல் நல்லாள் ஆவள்.

1103. தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே.

பொருள் : தையல் நாயகியும் உச்சித் தொளையில் தவசிகளுக்கு விளங்கு முதல்வியும் அருட்பார்வையால் பிரபஞ்சத்தால் மயக்கத்தை அகற்றும் மனோன்மணியுமாகிய தேவியை மெதுவாக நின்று தோத்திரம் செய்து பணியுங்கள். பணிந்து பின் கொடிய பிறவி உங்களைச் சாராது.

1104. வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய கடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயெனது உள்ளத்து இனிதுஇருந் தாளே.

பொருள் : மூங்கிலை யொத்த தோள்களை யுடையவள்; மணமுள்ள பூவை அணிந்தவள். பிறையும் அணியும் பூண்டவள்; தூய சடைமுடியுடைய யுடையவள்; சூலத்தை உடையவள்; அழகினள். அடியேன் உள்ளத்தும் பொருந்தி எனக்கும் இன்பம் தந்து கொண்டிருக்கின்றனள்.

1105. இனியதென் மூலை இருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனள் சார்வு படுத்து
நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.

பொருள் : இன்பம் விளங்கும் மூலாதாரத்தில் வாசம் செய்யும் வாலைப் பெண் தன் நிகரற்ற ஏக நாயகி, தன்னைச் செலுத்துவார் யாரும் இல்லாத் தலைவி, என்னுடைய மனச் சேர்வுகளை அகற்றி அவற்றினின்றும் வேறுபடுத்தித் தனியனாகினள். என்மனம் தன்னடிக்கண் நன்றாகப்படும் வண்ணம் செய்து அடியேனை விரும்பி நின்றாள்.

1106. நாடிகள் மூன்று நடுஎழு ஞானத்துக்
கூடி யிருந்த குமரி குலக்கன்னி
பாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி
ஊடக மேவி உறங்குகின் றாளே.

பொருள் : இடைபிங்கலை சுழுமுனையாகிய மூன்றனுள் நடுவிலுள்ள நாளம் போன்ற சித்ரணி நாடியில் பொருந்தியிருந்த வாலை பல சத்திகளைக் கொண்டு விளங்குபவள். அவள் காலணியோடு கூடிய அழகிய திருவடி அசைவால் உண்டாகும் நாதத்தோடு உள்ளத்தில் பொருந்தி அமைதியோடு இருக்கின்றாள்.

1107. உறங்கும் அளவில் மனோன்மணி வந்து
கறங்கும் வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
உறங்கஐ யாஎன்று உபாயம்செய் தாளே.

பொருள் : நான் அவளோடு பொருந்தி யோக உறக்கம் கொள்ளும் போது மனோன்மணி எழுந்து வந்து ஒலிக்கின்ற வளையலை யணிந்த கையால் என் கழுத்தை நன்றாகத் தழுவி, விளங்கு கின்ற ஒளியோடு கூடிய அவளுடைய சத்தியை எனது வாயிலில் இட்டு உறங்காதே ஐயா என்று உபாயத்தைச் செய்தருளினாள்.

1108. உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்து
அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்துச்
சுவாவை விளக்கும் சுழியாகத் துள்ளே
அவாவை அடக்கிவைத்து அஞ்சல்என் றாளே.

பொருள் : அடியேனுக்கு உபாயங்களை அளித்தருளும் மனோன்மணி என் உள்ளத்து எழும் காமாதி பகைவர்களால் உண்டாகும் கேடுகளை நீங்கி, இறைவனிடம் நீங்காத அன்பு உண்டா கும்படி செய்து, நாய்போல் அலைகின்ற மனத்தை விளக்கி நிற்கும் சுழுமுனை நடுவுள் ஆசையை அடக்கி வைத்து அஞ்சேல் என்று அபயம் கூறினாள். (சுழியகம் - நனவுக்களம்; விழிப்புநிலை; சாக்கிரத்தானம், புருவநடு, சுவா-நாய்.)

1109. அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே.

பொருள் : உயிரை உய்விக்கும் அழகிய நமசிவய என்னும் இரு மொழியினை அருள்வள் திருவருள் அம்மை. அவளே அதற்கு உரிய நானெறியாம் நற்றவப்பேற்றினை நல்குபவள். புகழ்மொழி தரும் பொற்பினள்; சிறந்த மாறாத பண்புகளாம் அணியருள்பவள். தன் திருவடியே புகல் என்று கருதிப் போற்றும் புண்ணியர்க்கு என்று பேரின்பம் பயக்கும் இனிய சொல்லையருளும் இறைவி அவள் என்று நவின்றனர்.

1110. ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
காரியல் கோதையள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரியென் உள்ளம் குலாவிநின் றாளே.

பொருள் : புண்ணியம் செய்தவர்களால் ஆராயப்பெறும் அருந்தவப் பெண்பிள்ளை. கருமையான கூந்தலை யுடையவள், ஐந்தொழிற்கும் காரணமானவள்; நாராயணி; உடல் உயிர் உலகு ஆகியவற்றை ஒடுக்கும் கோரமானவள். அவள் என்னுடைய உள்ளத்தில் மகிழ்ச்சியோடு பொருந்தியிருந்தாள். (நாரணன் - சிவன். நாரணி - சிவை. கோரி - ஒடுக்குங் காலத்து எடுக்கும் கோர உருவம் உடையவன்.)

1111. குலாவிய கோலக் குமரியென் னுள்ளம்
நிலாவி யிருந்து நெருநாடன் அணைந்தும்
உலாவி இருந்துணர்ந்து உச்சியின் உள்ளே
கலாவி இருந்த கலைத்தலை யாளே.

பொருள் : நாதத்தை வெளிப்படுத்தும் அழகிய குமரி என்னுடைய உள்ளத்தில் விளங்கியிருந்து நெடுநாள் பொருந்தி யிருந்தும் உச்சியில் உலாவியிருந்து உணர்ந்து கலந்து விளங்குகின்ற சந்திர கலைகளைத் தனது தலையிலே உடையவள் ஆவாள். அழகிய குமரி உள்ளத்தில் பொருந்திச் சிரசில் விளங்குபவளாக உள்ளாள்.

1112. கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும்
சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே.

பொருள் : வாலறிவாம் திருவுருவில் அறிவு அடையாளமாகிய நெற்றிக் கண்ணை யுடையவள் சிவன். அவன் ஆருயிர்களுக்குக் கண் போன்றவன். அவன் இடப்பால் வீற்றிருந்து அருளும் முலை மங்கை திருவருள் அம்மை அவளுடன் சிவன் கலந்து நிற்கின்றனன். பொன் மலையை வில்லாகக் கொண்டவன். அவனது நாட்டத்தையே அம்மை நோக்கியருளித் துவளும் அழகிய இடையினை யுடையவள். அவ் அம்மை உள்ளத்து உறைந்தனள்.

1113. இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்
பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.

பொருள் : முதல்வி என்னுள்ளம் பொருந்தி நால்விரல் அளவினதாகிய உயிர்ப்புடன் சேர்ந்து, மூலக்கனலை எழுப்பிப் பயிற்சியால் செம்மையுற்ற நடு நாடியில் சேர்ந்து உடன் கலந்து இருந்தனள். அவன் அருளால் அருந் தவத்தை எய்து வித்தனள். அவளே ஆதி என்னும் இறைவியாவள்.

1114. ஆதி அனாதி அகாரணி காரணி
சோதிய சோதி சுகபர சுந்தரி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதிஎன் உள்ளத்து உடன்இயைந் தாளே.

பொருள் : தொடக்க நடப்பாற்றலாகிய ஆதியும், தொன்மை வனப்பாற்றலாகிய அனாதியும், தனக்கொரு காரணம் இல்லாதவளும் தான் எல்லாவற்றிற்கும் காரணமாம் உள்ளவளும், ஒளிக்குள் ஒளியாய்த் திகழ்பவளும், பேரின்பம் அருளும் அழகிய முதல்வியும், இனிய அமைதி தருபவளும் மனத்தின்கண் சிவநினைப்பை நிலைபெறச் செய்பவளுமாகிய மனோன்மணியும், மங்கலகுண முடையவளும் ஆகிய இறைவி திரு ஐந்தெழுத்தை உயிருக்கு உயிராய் நின்று ஓதுவித்து உடனாக இருந்தருளினள்.

1115. இயைந்தனள் ஏந்திழை என்உள்ளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
அயன்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றும் பிதற்றுஅறுத் தாளே.

பொருள் : முதல்வி என் உள்ளம் பொருந்தி, எளியோன் நமசிவ என்னும் தமிழ் மறையை மேற்கொண்டு ஒழுகும் பரிபாகமாகிய செவ்வியை விழைந்தனள். அதனை ஓதுவித்தனள் அப்பொழுதே நிலையிலாப் பொருள்களின் பற்றுக்களையும் நீக்கியருளினள். மேலும் பிறப்புத் துன்பத்தையும் அறுத்து அருளினள்.

1116. பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முற்றி அருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே.

பொருள் : உண்மை அறியாது தர்க்க வாதம் புரிந்து காலத்தை வீணாக்கி ஏழை மனிதர் கெடுகின்றனர். ஆனால் அவள் முயற்சியினால் வீடு பேற்றை அளிக்கும் முழுமுதல் தலைவி. மீனைப்போன்று இமையா நாட்டம் மூன்றோடும் ஒலியை உண்டாக்கும் செவ்வாயும் கருணை விழிகின்ற திருமுகமும் நம்முள் விளங்கும்படி உள்ளவள். (கழற்றிகழ்-கயல்+திகழ்.)

1117. உள்ளத்து இதயத்து நெஞ்சத்தொரு மூன்றுள்
பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது
வள்ளல் திருவின் வயிற்றினுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.

பொருள் : எண்ணம் மனம் இறுப்பு என்னும் மூன்றும் முறையே சித்தம் மனம் புத்தி என வழங்கப்படும். இம் மூன்றும் முதல்வி இயைந்து இயைக்க இயங்குவன. அதனால் ஆண்டு உறைகின்றனள் என்ப. இடப்பால். வலப்பால் நடு நாடி என்னும் மூன்றனுள் பிள்ளைத் தடமெனப் பேசப்பெறும் நடுநாடியினுள் அகவொளி தோன்ற அருளியவளும் அவளே. வள்ளலாகிய சிவபெருமான் திருவடி யுணர்வாகிய அகத்தினுள் காரண மாயையின்கண் மறைந்து நின்று அதைக் கொண்டும் ஒளியருளும் திருவுள்ளம் சேர் அம்மை கன்னித் தெய்வமாகும்.

1118. கன்னியுங் கன்னி அழிந்திலள் காதலி
துன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குள
என்னேஇம் மாயை இருளது தானே.

பொருள் : சத்தியும் கன்னித் தன்மை அழியாதவள் காதலியாய்ச் சிவத்தோடு பொருந்தி ஐந்து மக்களைப் பெற்றனள். தூய மொழியாகிய நாத சொரூபி. வேதங்களால் புகழ்ந்து கூறப் பெற்ற சிவனும் அங்குளன் இத்தகையான மாயையானது இருளாகவும் விளங்கியது என்ன ஆச்சரியம் ! (ஐவர், அயன், அரி, அரன், ஈசன், சதாசிவன். சிவசத்தியே சிருட்டிக்குக் காரணம்)

1119. இருளது சத்தி வெளியதுஎம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வம்என்று எண்ணில்
அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.

பொருள் : சத்தி இருள்மயமானது ஞான வெளியில் விளங்குவது சிவம். புண்ணியர்க்குப் பொருளாவது சிவத்தோடு கலந்திருக்கும் சிவபோகத்தில் விளையும் இன்பம். இங்ஙனமாகத் தெளிந்த சிந்தையராய் நாதத்தை வழிபடில் எம் ஆதிப்பிரானாகிய சிவம் நாதத்தை இடமாகக் கொண்டு அருள் செய்யும் சத்தியின் நிறம் கறுப்பு.

1120. ஆதி அனாதியும் ஆய பராசக்தி
பாதி பராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதும்என் உள்ளத்து உடன்முகிழ்த் தாளே.

பொருள் : தொடக்கமும் தொன்மையும் ஆகிய திருவருள் செம்பெருளுõம் சிவனுடன் செம்பாதி உடம்பினள் ஆவள். சிவவுலகத்து வீற்றிருப்பவள். அழகும் அமைதியும் மனத்தை இயைந்து இயக்கலும் நன்மைப்பாடும் உடைய அம்மை நமசிவய என நாவழுந்த ஓதும் நம்மகத்து உடன் உறைந்து அருள்வள்.

1121. ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதியில் வேதமே யாம்என்று அறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பன்
ஆதியென்று ஓதினள் ஆவின் கிழத்தியே.

பொருள் : சொல்லிய முறையில் உயர்வாகிய கலை பிரணவமே என்று அறியாது மக்கள் உளர். சத்தியானவள் சாதியும் அவற்றால் விளையும் பேதமும் தத்துவங்களுமாய் நிற்பன் என்று ஆன்ம நாயகி எனக்கு உபதேசித்தருளினாள். (ஆவின் கிழத்தி - உயிர்க்கு உயிராகிய அம்மை.)

1122. ஆவின் கிழத்திநல் ஆவடு தண்துறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந்து ஏத்திடும்
தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை
மேவும் கிழத்தி வினைகடிந் தாளே.

பொருள் : ஆருயிர் அனைத்தையும் அடிமையாகக் கொண்டருளும் உடையாள். நாவுக்கு அரசியார் ஆவடு துறையில் எழுந்தருளியிருப்பவள். பொருள்சேர் புகழாம் நன்மையினை மெய்யன்பர்கள் போற்றும் அருளோனாகிய சதாசிவக் கடவுளின் மனைவியாவாள். திருவடிப் பேரின்பத்து நல்லாரைக்கூட்டுவிக்கும் சிவமங்கை. எங்கும் பொருந்தி உரிமை பூண்டருளும் முதல்வி. இவளே ஆருயிர்களின் வினையை அகற்றினள். நாவின் கிழத்தி - வாணி.

1123. வினைகடிந் தார்உள்ளத்து உள்ளொளி மேவித்
தனைஅடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
எனைஅடிமை கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியும் ஆமே.

பொருள் : வினைப்பயனைக் கெடுத்தார் உள்ளத்து உள்ளொளியாக எழுந்தருளியிருந்து தன்னைச் சரணாக வந்து அடைந்தோர்களுக்கெல்லாம் உண்மைப் பொருளாக நிற்பள். அடியேனை வழிவழியாக அடிமை கொண்ட ஏந்திழை, ஈசனும் அவளுக்குக் கணவனுமாகிய சிவத்தைப் பார்க்கும் போது அநாதியாவாள். சிவத்தை நோக்க சத்தி முந்தியவள்.

1124. ஆதி அனாதி அகாரணி காரணி
வேதமது ஆய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற
சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும்
பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே.

பொருள் : தேவி முதலாயும் பழமையாயும் தனக்கு ஒரு காரணம் இல்லாதவளாயும் தான் எல்லாவற்றுக்கும் காரணமாயும் உள்ளவள். வாக்கு தேவியாக இருந்து வேதியர்க்கு வேத ஆராச்சியைக் கொடுத்தனள். நிலைத்து நின்ற சோதியாய்ப் பரஞ்சுடராகிய சிலத்துக்கு உருவமாய் நிற்பள். பாதி மேனியாவாள். பன்னிரண்டு இராசிகளை யுடைய சூரியன் போன்ற ஒளியை யுடைய ஆதிசத்தியாவாள். (சத்தியே சிவனுக்கு வடிவம் என்பதாம்.)

7. பூரண சத்தி

1125. அளந்தேன் அகலிடத்து அந்தமும் ஈறும்
அளந்தேன் அகலிடத்து ஆதிப் பிரானை
அளந்தேன் அகலிடத்து ஆணொடு பெண்ணும்
அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே.

பொருள் : திருவருள் துணையால் விரிந்த நிலவுகத்துக்குரிய ஒடுக்கமும் தோற்றமும் சார்பு அளவையான் அளந்தேன். அதுபோல் ஒருவனே தேவன். அவனே ஆதிப்பிரான். அவனையும் உணர்ந்தேன். ஆண் பெண் என்னும் இரண்டின் தன்மைகளையும் ஆய்ந்தேன். அவன் திருவருளாகிய சிவசத்தியின் உண்மையினையும் உணர்ந்தேன்.

1126. உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பகமாமே.

பொருள் : ஆண்டவனைத் தோற்றுவிக்கும் அருள் ஆற்றலாகிய சத்தியின் மெய்ம்மையை உணர்கிலர். அவ் அம்மைகூட அவர் எங்கும் நிறைந்தருளினர். சிவ வழிபாடு இயற்றும் சிவ புண்ணியப் பேறுடையாரின் திருக் கூட்டங்களைத் தன் திருவருள் பேற்றில் ஆழ்த்தி யருளிய கன்னியாவள். கொண்டு வந்த முறையே உள்ளத்தால் ஒடுக்கமும் செய்வள். (கும்பகம் - நிறைவு)

1127. கும்பக் களிறுஐந்தும் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும்
இன்பக் கலவி இனிதுறை தையலும்
அன்பிற் கலவியுள் ஆயொழிந் தாரே.

பொருள் : மத்தகம் பொருந்திய யானையை யொத்த புலன்கள் ஐந்தும், அப்புலன்களை அடுத்துச் செலுத்தும் மனமும், அவற்றைக் கருவியாகக் கொண்டு ஒற்றித்துக் காணும் ஆன்மாவும் திருவடி அன்பினால் கலந்து அடங்கின. புதுமையாகக் காணப்படும் மணி திகழ்கின்ற திருமுடியினையுடைய சிவபெருமானும், அவனுடன் ஆருயிர் இன்புறுதற்பொருட்டுக் கலந்து இன்புற்றுறையும் தையலாகிய திருவருள் அம்மையும், ஆருயிர் புரிந்துள்ள அன்பினால் அவ்வுயிர்களுடன் வறறக் கலந்து நின்றனர்.

1128. இன்பக் கலவியில் இட்டெழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பராசத்தி என்னம்மை தானே.

பொருள் : இன்பக் கூட்டத்தில் செலுத்தி அங்கே எழுகின்ற ஆனந்தத்தில் நுழைய வல்லவன் எங்கள் தந்தையாகிய சிவனும் துன்பமயமான சுக்கில சுரோணிதச் சேர்க்கையில் விருப்பங்கொண்டு என்பிற் பராசக்தியும் உள்ளாள். ஆன்மாக்களின் விருப்பதத்துக்கேற்ப இன்பத்தில் செலுத்தி உடனிருந்தருளுவாள் சத்தி.

1129. என்னம்மை என்னப்பன் என்னும் செருக்கற்று
உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன்
மன்னம்மை யாகி மருவி உரைசெய்யும்
பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.

பொருள் : உடலுறுவால் வந்த தாயும் தந்தையும் உற்பத்திக்குக் காரணம் என்னும் மயக்கம் நீங்கி நினைவாயாக. அந்த வித்தியா மண்டலத்தில் (சுத்த மாயையில்) அம்மையும் ருத்திரரும் அங்குள்ளார். இந்த அம்மை, என்றும் நிலைபெற்று உன்னைப் பொருந்தி நாதத்தை அளித்தருளுவாள். அவள் விளங்கும் ஒளி மண்டலமே நந்தி என்ற பேரினை உடையது சீவர்களுக்கு உண்மையான அம்மை அப்பன் சிவசத்தியே யாம்.

1130. தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மேல் இருப்பதொரு நூறு தானுள
பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள்
நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே.

பொருள் : உலகினைப் படைத்தற் பொருட்டுத் திருமாலின் குளிர்ந்த கொப்பூழ்த் தாமரையின்கண் தோன்றியவன் நான்முகன். அத்தாமரை நிலை உயிர்களிடத்து மூலத்தின் மேல் கூறப்படும். அதற்கு நூறு இதழ்கள் உண்டு. நெஞ்சத்தாமரை மேல் உறைகின்ற உணர்வுச் சொல்லி எழுந்தருளினள். அவள் எழுந்தருள்வதும் தூய நாவின்கண் உறைகின்ற நாவரசியின் ஆணையேயாம்.

1131. ஆணையை மாய்வருந் தாதுள் இருந்தவர்
மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை அறிந்தபின்
தாணைய மாய தனாதனன் தானே.

பொருள் : மெய்ம்மையாக அன்பர் அகத் தாமரையின்கண் வீற்றிருப்பவர் அம்மையப்பராவர். மிகுதியாகத் தோன்றும் ஐயம்திரிபு முதலிய குற்றங்களை அகற்றி மனத்தை ஒருமுகப் படுத்தி முதலோசையின் உயிர்ப்பாய் விளங்கும் முழுமுதலை உணர்ந்தபின் திருவடியின்பம் கிடைக்கல் பெறும். அது கிடைக்கப் பெற்றார் அத் திருவடிக்கு இருக்கையாவர். (ஆணையம் - உண்மை; தாதுள் - ஆதாரத் தாமரையுள்.)

1132. தானே எழுந்தஇத் தத்துவ நாயகி
வானேர் எழுந்து மதியை  விளக்கினள்
தேனார் எழுகின்ற தீபத்து ஒளியுடன்
மானே நடமுடை மன்றறி யீரே.

பொருள் : கருணை மிகுதியால் தானே மூலாதாரத்திலிருந்து எழுந்த தத்துவ நாயகி ஆகாய மண்டலத்தில் புலப்படும்படி விளங்கி, மதி மண்டலத்தைப் பிரகாசம் பெறும்படி அமைத்தனள். செந்தேனைப் போன்று இடையறாத விருப்பத்தில் எழுகின்ற தீப சோதியில் பராசக்தி நடனம் செய்யும் சிற்றம்பலம் என்று அறியுங்கள்.

1133. அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்து
அறிவான மங்கை அருளது சேரில்
பரியா அறிவறி வார்உளம் பேணும்
நெறியாய சித்த நிறைந்திருந் தாளே.

பொருள் : பஞ்ச தன்மாத்திரைகளை அறியும் ஞானேந்திரியம் ஐந்தும் இந்திரியங்கள் இல்லாது அறியும் அருட்சத்தியைச் சேர்ந்தால் நீங்காத அறிவினை அறிவார். அங்ஙனம் அருட் சத்தியை விடாதுபற்றி நிற்போரிடம் அவளும் பொருந்தி அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்வாள். அருட் சத்தியைச் சேர்ந்தால் விரும்பிய எல்லாம் பெறலாம்.

1134. இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை நாடி
அரவம்செய் யாமல் அருளுடன் தூங்கப்
பருவம்செய் யாததோர் பாலனும் ஆமே.

பொருள் : நினைப்பும் மறப்பும் இல்லாமற் செய்யும் திருவடியுணர்வு இடத்து அருள் விளையாட்டு நிகழ்த்தும் ஆருயிர்க் குழலியை ஆராயின், அவ்வுயிர் ஐந்தெழுத்து உணர்வாகவே நிற்கும். வேறு எவ்வகை ஓசையும் எழாது. அருளுடனே தங்கி நிற்கும் அவ்வுயிர் என்றும் இளமை நீங்காது ஒருபடித்தாக இருக்கும். அதனால் பருவம் செய்யாத பாலன் என்றார். (குரவம் - விளையாட்டு; பருவம் - இளமை முதல் முதுமை வரையுள்ள நிலைவேறுபாடு.)

1135. பாலனும் ஆகும் பராசத்தி தன்னோடு
மேலனு காவிந்து நாதங்கள் விட்டிட
மூலம தாமெனும் முத்திக்கு நேர்படச்
சாலவு  மாய்நின்ற தற்பரத் தானே.

பொருள் : நீங்கா இளமை பெற்ற ஆருயிர் திருவருள் அம்மையுடன் நாத விந்துக்கள் என்று பேசப்பெறும் ஓசையும் ஒளியும் ஆகி முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து செல்ல முழுமுதற் சிவபெருமான் திருவடியைக் தலைக்கூடும். அவ்வாறு நிறைந்த திருவருளைச் செய்யும் அம்மை முழு முதல்வி. தற்பரத்தாள் - முழு முதல்வி. சீவர்கள் விந்து நாதங்களைக் கடந்து சென்றபோது பராசக்தி விளங்குவாள்.

1136. நின்ற பராசத்தி நீள்பரன் தன்னொடு
நின்றறி ஞானமும் இசைசையு மாய் நிற்கும்
நன்றறி யும்கிரி யாசத்தி நண்ணலே
மற்றன வற்றுள் மருவிடுந் தானே.

பொருள் : நாதாந்தத்தில் நிலை பெற்றிருந்த பராசத்தி அநாதி நித்தியனாக விளங்கும் சிவத்துடன் ஒன்றியபோது அவளே சீவர்களுடன் பொருந்திய இச்சையாகவும் ஞானமாகவும் இருப்பள். முன்னர்க் கீழ் நோக்குதலுடன் கூடிய கிரியா சத்தி நல்லவற்றை உணர்ந்த அங்கு நிற்கும்போது இம்மூவரும் பொருந்திய சபையில் சபைக்குரிய சிவமும் பொருந்திவிடும், சித்தம் சிவமாதலே முத்தி நிலை.

1137. மருவொத்த மங்கையும் தானும் உடனே
உருவொத்து நின்றமை ஒன்றும் உணரார்
கருவெத்து நின்று கலக்கின போது
திருவொத்த சிந்தைவைத்து எந்தைநின் றானே.

பொருள் : மலர் மனம்போன்று அடங்கித் தோன்றும் சிவனும் அருளும் ஓர் உருவாய் ஒத்து நீற்கும் உண்மையினை உணரார். கருவுக்கு உயிராய் நின்று அக் கருவினைத் தொழிற்படுத்தியபோது எந்தையாகிய சிவபெருமான் அவ்வுயிர் தன் திருவடியைச் சேர வேண்டுமென்று திருவுள்ளங் கொண்டு நின்றனன். தவமிருந்து மகப் பெறுவர் பெற்ற ஞான்றே தக்க மணவாளரை நாடுதல் இதற்கு ஒப்பாகும்.

1138. சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்தி
விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமொடு ஆதிய தாம்வண்ணத் தாளே.

பொருள் : அன்பர்கள் சிந்தையில் உலவும் சிவசத்தி விந்து நாதங்களாக விரிந்தனள். அச்சத்தி சந்திரமண்டலத்துக்கு உரியவள்; ஆறு ஆதாரங்களையும் கொண்டு விளங்குபவள் சத்துவகுணம் உடையவள். அகரம் முதலாகவுள்ள ஐம்பத்தோர் அட்சரங்ளிலும் வசிப்பவள் ஆவள் (வண்ணம் - எழுத்து)

1139. ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழியறி வாரில்லை
தேறி யிருந்துநல் தீபத்து ஒளியுடன்
ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே.

பொருள் : திருவடி யுணர்வு நிறைந்து அடங்கி யிருந்த திரு முலையை உடையவள். சிவனும் சிவையும் பொருளால் ஒன்றாய் தோற்றத்தால் பிரிப்பில்லாத வேறுபாடற்ற இரண்டாய் விளங்கும் நிலைமையை அறிபவர் இல்லை. திருவடியே நிலை பேறான புகலென்று தெளிந் திருந்து மெய்யுணர்வு விளக்கமாய்த் திகழும் ஆருயிர்கட்குப் பேரின்பமாம் இன்னமிழ்தாய் அதுவும் வற்றா வூற்றாய் அருளம்மை வீற்றிருப்பள். ஆறியிருந்த-சிவத்துள் அடங்கியிருந்த.

1140. உடையவன் அங்கி உருத்திர சோதி
விடையவன் ஏறி விளங்கி இருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து
அடையது வாகிய சாதகர் தாமே.

பொருள் : உலகியற் பொருள்களை உடைமையாகவும் ஆருயிர் இனங்களை அடிமையாகவும் என்றும் உடையவன் சிவன் அவனே தீயினும் ஒளி கொடுக்கும் அரனாக வுள்ளவன் ஆனேறாகிய அறத்தினை ஊர்பவன். சிறந்து மேல் நிலத்து விளங்கும் மெய்ப்பொருள். அறிவு, ஆற்றல், அன்புகளில் கடையவராய் உள்ளார் இவ்வுண்மையினை அறியார். திருவருள் துணையால் அருட் கண்ணே கண்ணாகக் கொண்டு சிறப்புறக் காணும் நல்லார் தூய நெஞ்சத்துள் அவன் விளங்கியருள்வன். இவ்விளக்கம் உடையாரை அடயோகப் பயிற்சியினர் என்பர்.

1141. தாமேல் உறைவிடம் ஆறிதழ் ஆனது
பார்மேல் இதழ்பதி னெட்டிரு நூறுள
பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே.

பொருள் : திருவருள் ஆற்றல் திங்கள் மண்டிலத்தும் ஞாயிற்று மண்டிலத்தும் உறையும் நிலையினை மேலிடத்து உறையும் நிலையினை மேலிடத்து உறையென்பர். திங்கள் மண்டிலத்தின் இதழ் கீழ் நோக்கியும் ஞாயிற்று மண்டிலத்தின் இதழ் மேல்நோக்கியும் நிற்பன. இவையே மாறிதழ்கள் என்று சொல்லப் பெறுவன. நிலத்தின் மேல் அத்திருவருள் தங்குவதற்குப் பதினெட்டு இதழும் இரு நூற்று  இதழ்களும் ஆகிய தாமரைகள் உள்ளன. ஆப்பூமேல் உறைவதற்குப் புண்ணியமாக எழுந்தருளினள். முறைமேல் நின்று நிறையும் பைங்கொடி போன்ற அருளம்மை. (பார்-முன்னதுநிலம்; பின்னதுமுறை)

1142. பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத்
திண்கொடி யாகத் திகழ்தரு சோதியாம்
விண்கொடி யாகி விளங்கி வருதலால்
பெண்கொடி யாக நடந்தது உலகே.

பொருள் : அழகிய கொடிபோன்ற அருள் அம்மையும் சிவன் திருவுருக்கொண்டு விளங்கும் பொருட்டு ஆற்றல்மிக்க தொடர்ந்த பேரொளிப் பிழம்பாவாள். அவள் விண்ணிலே காணப் படும் மின்னற் கொடி போன்ற விளங்கிவருகின்றனள். அதனால் உலகனைத்தும் பெண்கொடி வண்ணமாய் நடந்து பிறங்குவ வாயின (பிறங்குதல் - பொலிந்து விளங்குதல்.)

1143. நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப்
படர்ந்தது தன்வழி பங்கயத் துள்ளே
தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே.

பொருள் : திருவருளால் நடந்து வரும் உலகத்து இதழ் ஒன்பது கொண்ட தாமரை உளது. அதன்கண் வீற்றிருப்பார் ஒன்பதில் ஆற்றலர்கள். இவரை நவசத்தி என்பர். அகத் தாமரையாகிய நிலைக் களங்களில் நிகழும் நிகழச்சிகள் திருவருள் ஆணை வழி நிகழ்வன. உச்சித் தொளை வழி ஒள்ளொளியைத் தொடர்வதும் ஆகும்.

1144. அடுக்குத் தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்கும் தாமரை இல்லகத்து உள்ளது
மடுக்கும் தாமரை மத்தகத் தேசெல
முடுக்கும் தாமரை முச்சது ரத்தே.

பொருள் : ஆருயிரை அடுத்திருக்கும் நெஞ்சத்தாமரை (அனாகதம்) ஆதியையுடைய சிவபெருமானின் உறைவிடம் நெஞ்சினின்றும் மேல் உயர்த்தும் நிலைக்களம் இல்லகமாகிய மிடறாகும். உயிர் அமிழ்தாகிய வித்துமடுக்கும் தாமரை புருவ நடுவாகும். அப்புருவ நடுவில் ஆருயிரைச் செல்லுமாறு முடுக்கும் தாமரை மூலாமாகும். மூலம் - மூலாதாரம். அடுக்கும் தாமரை = ஆஞ்ஞை எடுக்கும் தாமரை-விசுத்தி; மடுக்கம் தாமரை - அனாகதம். முடுக்கும் தாமரை - மணிபூரகம்.

1145. முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற
எச்சது ரத்தும் இருந்தனள் தானே.

பொருள் : முச்சதுரமாகிய மூலத்திடத்து எழுந்த சுடர் எங்கும் இடம் பெற்று விளங்கும்படி செல்லவும், அழகிய பெருமை மிக்க இவ்வொளி எய்தும் படியும் எல்லா இடங்களிலும் திருவருள் அம்மை நிறைந்திருந்தனள். பூரகத்தினின்று எவ்விடத்துக்கும் சத்தி பரவுதலால் முளைச் சுடர் எனப்பட்டது. (கைச்சதுரம் - பிரமரந்திரம்.)

1146. இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்ப்
பரந்தன வாயு திசை திசை தோறும்
குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி
நடந்தது தேறல் அதோமுகம் அம்பே.

பொருள் : புலம் பத்தாகலின் அம்மையும் பத்து திருமுகங்களுடன் வீற்றி இருந்தனன். அம்மையின் உயிர்ப்பே ஆருயிர்க்குக் காற்றாக வழங்கலின் காற்றாக எங்கும் விரவி இருந்தனள். அருளொளி அத் திருமுகத்தின்கண் திரண்டு பொலிந்து விளங்கிற்று. அத்திருமுகத்து ஒளியின் துணையால் அம்புபோல் விரைவாய் இன்பம் பொழியும் கீழ்முகநோக்கி ஆருயிர் நடந்தது.

1147. அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மணி
கொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவிய
செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.

பொருள் : கணையொத்த கண்ணையும் கொம்பொத்த இடையையும் பிற அழகுகளையும் உடைய திருவருள் அம்மை நறுமணம் கமழுகின்ற செம்பொன் திமேனியுடன் சிவ பெருமானை நோக்கி ஆருயிர்கட்கு ஆம் இன்ப மொழி நயமுற நாடொறும் நவில்கின்றனள். அம்மை சிவபெருமானுடன் ஆருயிர்கட்கு அருமறை பகர்கின்றனள் என்பதும் ஒன்று.

1148. நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி
துகிலுடை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமும் அண்ட முழுதும் செம்மாந்தும்
புகலும்முச் சோதி புனையநிற் பாளே.

பொருள் : எல்லோராலும் புகழ்ந்து பேசப்பெறும் பெரும் பொருள் கடவுள். தமிழ் நான்மறையின் உள்ளுறையாற்றல். அவ் திசைகளையே மெல்லுடை ஆடையாக உடையவள். இருநிலமே திருவடியாக வுடையவளும் அவளே. அண்டமுதலாகச் சொல்லப்பெறும் எல்லா இடங்களிலும் ஓங்கி நிமிர்ந்து சிறப்பித்துச் சொல்லப்படும் ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்றினுக்கும் ஒளியருளும் அழகிய பேரொளிப் பிழம்பாய்த் திகழ்பவளும் அவளே.

1149. புனையவல் லாள்புவ னத்துஇறை எங்கள்
வனையவல் லாள் அண்ட கோடிகள் உள்ளே
புனையவல் லாள்மண் டலத்தொளி தன்னைப்
புனையவல் லாளையும் போற்றியென் பேனே.

பொருள் : எங்கள் புவனாதிபதி யாகிய இறைவனைத் தன்மேனியின் ஒரு பாகத்தில் புனைய வல்லாள். அண்ட கோடிகளையும் சங்கற்ப மாத்திரத்தில் உள்ளேயே மாற்றத்தைச் செய்பவள். எல்லா மண்டலத்து ஒளியையும் தன்னிடம் கொண்டவள். எல்லாவற்றையும் தாங்கி யுள்ளவளை வணங்குவேன்.

1150. போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென்
ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை
சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை
கூற்றம் துரக்கின்ற கொள்பைந் தொடியே.

பொருள் : அடியேனது அன்புக்கு இலக்கான புவனாபதி அம்மையைப் போற்றி என்பேன். அடியேனது அருந்தவத்தின் ஆற்றலுள் நிற்கும் பெண்பிள்ளை. எனது கோபத்தன்மையை மாற்றிச் சிற்றம்பலத்துள் விளங்கும் செவ்வொளி மயமானவள். எமனை விரட்டும் வலிமையள் ஆவள். கோள் கொள் என நின்றது. புவனாபதி அம்மையை வணங்கினால் கூற்றத்தை வெல்லலாம்.

1151. தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்று
அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே.

பொருள் : அழகிய வளையல் அணிந்த திருக்கையை யுடையாள் திருஅருள் அம்மை. அவளே இன்ப ஊற்றாம் திருவினள். அழகிய திரிபுரை மங்கை; சலமகள்; அவளே திருவடி சேர்வார் துன்ப வினைகளை எல்லாம் அகற்றி அருள்பவள். சூரியனுக்கும் ஒளி அளிப்பவள் அவளே. அவள் அடியார் வினைகளை அறக் கெடுத்து அவர்களைத் திருவடியுணர்வில் ஈடுபடுத்தும் ஆதியாவாள். (செடி - துன்பம்)

1152. மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி
பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி
புல்லிசைப் பாவையைப் போகத் துரந்திட்டு
வல்லிசைப் பாவை மனம்புகுந் தானே.

பொருள் : மென்மையும் இனிமையும் வாய்ந்த திருமொழியினை உடையவள். அருள் வெளியில் விளங்கும் மெல்லிய பூங்கொடி பல உயிர்களோடும் இயைந்து இயக்கும் இயல்பினள். நற்பயன தரும் நல்லாள். புன்னெறியுள் செல்லும் போக் கினை விலக்கி மேலாம் நன்னெறிக்கு உய்க்கும் நங்கை திருவருள் அம்மை. அவள் எளியேன் உள்ளத்தில் வீற்றிருந்தனள். (வியோமம் - வானம்.)

1153. தாவித்த அப்பொருள் தான்அவன் எம்இறை
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பராசத்தி மேலொடு கீழ்தொடர்ந்து
ஆவிக்கும் அப்பொருள் தானது தானே.

பொருள் : எம் இறைவனாகிய சிவபெருமான் உலக உடல்களைப் படைத்தருள உறுதி செய்தபோது பாவித்தலாகிய திருவுள்ளங் கொண்டனன். உடனே திருவருள் அவனுடன் பொருந்தி முனைத்து நின்றனள். மேலோடு கீழாக இறைவனுடன் தொடர்ந்தது போல் உயிரிலும் பொறிபுலன் கரணங்களிலும் தொடர்ந்து நின்றனள். பாவித்த திருவுளங்கொண்டு. (தாவித்த-நிச்சயித்த அப்பொருள் - கருவிகள்.)

1154. அதுஇது என்பர் அவனை அறியார்
கதிவர நின்றதோர் காரணம் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது உள்ளார்கள் தேர்ந்துஅறி யாரே.

பொருள் : சிவத்தை அறியாதவர் பல தேவர்களைப் பயன் கருதி வழிபடுவர். முத்திப் பேறு கிடைத்தற்குரிய மூலகாரணமாகிய பொருள் இது எனக் காணார். இன்பத்தேன் நிறைந்த மணங்கமழும் பூச்சூடிய கூந்தலையுடைய அம்மையால் ஆவது இது என்று அறியார்கள். இவர்கள் தெளிவு பெறாதவர்களே. பராசத்தியின் பெருமையை உணர்ந்து வழிபடவேண்டும்.

8. ஆதார ஆதேயம்

(ஆதாரம் - இடம்; ஆதேயம் - இடத்தில் உள்ள பொருள்; சத்தி இரண்டாயும் உள்ளாள்.)

1155. நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு
தானிதழ் ஆனவை நாற்பத்து நாலுள
பாலிதழ் ஆனவள் பங்கய மூலமாய்த்
தானிதழ் ஆகித் தரித்திருந் தாளே.

பொருள் : நாலிதழ் கொண்டது மூலம். ஆறிதழ் கொண்டது கொப்பூழ் தொண்ணூறு இதழ் கொண்டது மேல்வழிறு. நாற்பது இதழ் கொண்டது நெஞ்சகம். பதினாலு இதழ் கொண்டது மிடறு பத்திதழ் கொண்டது புருவநடு. இவையணைத்தும் தாமரைப் பூவாக உருவகிக்கப்படும். திருவருள் அம்மை இவ்விடங்களில் நின்று இயக்குவள்.

1156. தரித்திருந் தாள்அவள் தன்னொளி நீக்கி
விரித்திருந் தான்அவள் வேதப் பொருளைக்
குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்து
மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே.

பொருள் : திருவருள் அம்மை சிவனையே நோக்கி நின்றனள். அவன் திருவுளப்படி வேதாகமப் பொருள்களை விரித்தருளினள். ஐந்தொழில்களையும் உள்ளக் குறிப்பால் உஞற்றியருளினள். தோற்றுவித்தருளினமை போன்று ஒடுக்குங்காலத்து அவற்றை முறையே ஒடுக்கியருளினள். அதனால் அவ் அம்மை மாது நல்லாள் என வழுத்தபடுகின்றாள்.

1157. மாதுநல் லாளொடும் மணாளன் இருந்திடப்
பாதிநல் லாளும் பகவனும் ஆனது
சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.

பொருள் : மாது நல்லாளாகிய திருவருள் தன் மணாளனாகிய சிவன் தன் மெய்யினில் செம்பாதி கொள்ள இடங்கொடுத்து, பாதி நல்லாள் ஆயினள். சிவனும் பகுப்புடையான் என்னும் பொருளில் பகவன் ஆயினன். அத்தகைய அறிவுப் பேரொளி நல்லாளைத் தம் ஆருயிர்த்துணையாகக் கொள்ள வல்லாரின் பிறவித்துன்பம் தீரும். அவ்அம்மை அருட்பெரும் வெளியாகும்.

1158. வெள்ளøட் யான்இரு மாமிகு மாமலர்க்
கள்ளடை யார்அக் கமழ்குழ லார்மனம்
அள்ளடை யானும் வனத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகம் பிறவிப்பெண் ஆமே.

பொருள் : திருவருள் வெளியில் உறைபவன் சிவன். அவன் மிக்க கருமையும் தேனும் மணமும் நிறைந்த பூவும் விளங்கா நின்ற மருள் மாதர் உள்ளத்தால் அள்ளிக் கொள்ளும் தன்மையன் அல்லன். ஆயினும் அச் சிவனும் அருள் மாதரால் தோற்றுவிக்கப்பட்டோன். அருள் மாதருக்கு அரை யுடம்பு நல்கிய அப்பன்.

1159. பெண்ணொரு பெண்ணை புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண்ணுடை ஆண்என் பிறப்பறிந்து ஈர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே.

பொருள் : திருவருள் ஆற்றலாகிய பெண் திருவருளையே திருவுருவாகக் கொண்டு திகழும் சிவனாகிய பெண்ணைக் கலந்திடும். ஆருயிர்களின் அறியாமையாகிய பேதைமையை அகற்றும் திருவருள் ஆற்றலாகிய பெண்ணின் எண்ணமாகிய நடுவுள் அவ் ஆற்றலைத் திருமேனி யாகவுடைய ஆணாகிய சிவனும் தோன்றி நின்றனன். என் பிறப்பகற்றும் செவ்வி யறிந்து தன் திருவடிக்கு ஆக்குகின்ற அருளே திருமேனி யாகவுடைய சிவபெருமானின் உண்மை உணர்ந்தால் குறியால் உணரப்படும் ஆண் பெண் என்ற பேச்சு அற்று விடும்.

1160. பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை
மாச்சற்ற சோதி மனோன்மனி மங்கையாங்
காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந்து
ஆச்சற்றெ னுள்புகுந்து ஆவிக்கும் தானே.

பொருள் : சிவன் பேச்சற்ற இடத்தில் உணரும் நற் பொருளாவன். அப் பெருந்தகை இயல்பாகவே மாகன்ற பேரறிவுப் பேரொளி. மனோன்மணி மங்கையாகிய பகையற்ற பேராற்றல் பேரொளி அச்சிவனை மணந்தனள். அவள் எளியேனுள் புகுந்து தானே களிப்பிக்கச் செய்வாள் ஆயினாள்.

1161. ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மனி
பாலித்து உலகில் பரந்துபெண் ஆகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஆலித்து ஒருவன் உகந்துநின் றானே.

பொருள் : ஆருயிர்களின் அன்பிற்கு ஈடாகக் களிப்பிக்கச் செய்யும் கன்னி அரிய மனோன்மணி. அவன் உலகில் பெரும் பயனை அருளி நீக்கமற நிறைந்து நிற்கும் பெண்ணாவள். அவளே ஐந்தொழில் புரியும் அருள் தலைவி. அவளே மறை முதல்வி அவளை இடப்பாகத்துப் பெற்ற ஒப்பில்லாத சிவன் உயர்ந்து நின்றனன்.

1162. உலந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோடு
உகந்துநின் றான்நம் உழைபுக நோக்கி
உகந்துநின் றான்இவ் உலகங்கள் எல்லாம்
உகந்துநின் றான்அவன் தன்தோள் தொகுத்தே.

பொருள் : நம்பியாகிய சிவன் அழகிய நெற்றிக் கண்ணுடன் உயர்ந்து நின்றனன். அவன் ஆருயிர்கள் தன் திருவடியில் புகவேண்டும் என்னும் அருள் நோக்கத்தால் அவ்வுயிர்களிடத்தும் முதன்மை பெற்றிருந்தனன். அனைத்து உலகங்கட்கும் அவனே தலைவனாய் நின்றனன். இவை யனைத்தும் திருவருள் அம்மையின் திருத் தோள் புணர்ந்தமையால் வந்தன. அதனால் அம்மையை அணைந்து உயர்ந்து நின்றான் என்பர்.

1163. குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழ
புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்துச் சொல்லகில் லேனே.

பொருள் : விம்முகின்ற தனங்களை யுடையவளும் மெல்லிய இடையினை யுடையவளும், புள்ளிகள் விரவிய தேமலையுடையவளும் தூய்மையான மொழியினை யுடையவளும் மயில் தோகை போன்ற அழகிய திருவடிகளையும் உடைய பாவை போன்ற பராசத்தியைச் சேர்ந்தமையால் உண்டான குறிப்பைச் சொல்ல முடியாது.

1164. சொல்லஒண் ணாத அழற்பொதி மண்டலம்
சொல்லஒண் ணாது திகைத்தங்கு இருப்பர்கள்
வெல்லஒண் ணாத வினைத்தனி நாயகி
மல்லஒண் ணாத மனோன்மணி தானே.

பொருள் : அக்கினி மண்டலம் விளங்கும் காமபீடத்தின் வல்லபத்தை யாராலும் அளவிட்டுச் சொல்ல முடியாது. அளந்து அறிய முடியாமல் திகைப்புடன் மக்கள் அங்கு உள்ளனர். வினைப் போகத்தை வெல்ல அரிதாகும்படி ஒப்பற்ற நாயகி அமைத்துள்ளாள். இப்படிப்பட்ட ஆற்றலுடன் கூடிய சத்தியாகிய மனோன்மணியைப் பந்தித்துச் செயல் படாது நிறுத்த முடியாது.

1165. தானே இருநிலம் தாங்கிலிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரைத் தண்கடற் கண்ணே.

பொருள் : திருவருள் அம்மையே இருநிலமாகவும் பூதங்களைத் தாங்கும் விண்ணாகவும் தீ ஞாயிறு திங்கள் என்று முச்சுடராகவும் நீருக்கு முதலாம் மழையாகவும் நிற்பள். அவளே பண்டு வடஎல்லையாக அமைந்த இமயமலையாக நிற்பன் இம்மலை அதற்கு முன் கடலின் கண் அமிழ்ந்திருந்தது. அது தென்கடல் கோளால் மேலெழுந்தது.

1166. கண்ணுடை யாளைக் கலந்தங்கு இருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணாப்
பண்ணுடை யார்கள் பதைப்பற்று இருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.

பொருள் : நெற்றிக் கண்ணையுடைய பராசக்தியைக் கூடி மதிமண்டலத்துக் களித்த ஞானிகள் மண்ணுலகத்தவராயினும் அவர்களை மனிதர்கள் என்று கருதவேண்டா. தெய்வகுணம் பொருந்தியவர்கள் ஆவார்கள். பதைப்பின்றி இருந்து அவர்கள் ஆகாய மண்லை வாசிகளைச் சூக்கும சிருஷ்டியினால் கண்டிருப்பர். நெற்றிக் கண்ணை உடையாளைக் கலந்திருப்பவர்க்கு நெற்றிக்கண் தொழிற்படுவதால் தேவ தரிசனம் பெறலாம் என்பதாம்.

1167. கண்டுஎண் திசையும் கலந்து வருங்கன்னி
பண்டுஎண் திசையும் பராசத்தி யாய்நிற்கும்
விண்டுஎண் திசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டுஎண் திசையும் தொழநின்ற கன்னியே.

பொருள் : திருவருள் எட்டுத் திசைகளிலும் உள்ள உலகுடல் கருவிகளைக் கருதிய அளவானே தோற்றமுறக் கண்டு அவற்றுடன் கலந்து இயக்கும் கன்னி. அவள் உலகத் தோற்றத்துக்கு முன் கருவுற்ற தாய்போல் சூலியாக நிற்பள். அப்போது அவள் வனப்பாற்றல் என்று பெயர் பெறுவள். அவள் திருவடியை எண்புலத்துள்ளாரும் நறுமலர் கைக் தொண்டு இயற்றித் தொழுவர். அத் தொழுகையை ஏற்றுத் துணையருள் புரிய இணையிலாக் கன்னியாக அவள் நின்றனள்.

1168. கன்னி ஒளியென நின்றஇச் சந்திரன்
மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி யிருப்பிடம் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசத்தி யாமே.

பொருள் : திங்கள் போன்ற நெற்றியை யுடையவள், பேரொளி சேர் திருவருள் அம்மை நிலை பெற்றிருக்கும் வளமனை ஆருயிர்களின் நெற்றியாகும். அவள் செந்நிறம் உடையவள். கலைகள் பதினாறாகும். யாவரும் பாராட்டிப் புகழ எழுந்தருளியிருப்பவள் திருவருள் அம்மையே.

1169. பராசத்தி என்றென்று பல்வகை யாலும்
தராசத்தி யான தலைப்பிர மாணி
இராசத்தி யாமள ஆகமத் தாளாகும்
குராசத்தி கோலம் பலவுணர்ந் தேனே.

பொருள் : பராசத்தி பலவகையிலும் எல்லாவற்றையும் என்றென்றும் தாங்கி நிற்கும் சத்தியாய் முதன்மையான அளவையாக இருப்பவள். இரவின் கண் விளங்கும் சத்தியாய் உருத்திர யாமளம் என்னும் ஆகமத்தால் உணர்த்தப்படுபவள். குருவாக வருகின்ற சத்தியின் வடிவங்கள் பலவற்றையும் உணர்ந்தேன். வியாமள ஆகமம் சத்திவழிபாட்டை உணர்த்தும் ஆகமம்.

1170. உணர்ந்துஉலகு ஏழையும் யோகினி சத்தி
உணர்ந்துஉயி ராய்நிற்கும் உள்ளத்தின் ஈசன்
புணர்ந்தொரு காலத்துப் போகமது ஆதி
இணைந்து பரமென்று இசைந்துஇது தானே.

பொருள் : சிவனும் அருளுடன் ஒருகாலத்து இணைந்து ஆருயிர் வாழ்வுறப் போகநிலையாகிய வாழ்வு நிலையில் பரம் என்று இருந்தனன். அப்பரத்துடன் இசைந்த பராசத்தி தன் ஈசன் ஆகிய சிவம் திருவுள்ளம் கொள்ள யோகினி சத்தியாகிய நடப்பாற்றலால் ஏழ் உலகங்களையும் உணர்ச்சியால் தோற்றுவித்தது. தோற்றுவித்த ஏழ் உலகங்களாகிய எழுவகைப்பிறப்பு உயிர்கட்கும் உயிர்க்குயிராய் நின்றதும் அவ்வாற்றலுக்குரிய அம்மையாகும்.

1171. இதுஅப் பெருந்தகை எம்பெரு மானும்
பொதுஅக் கல்வியும் போகமும் ஆகி
மது அக் குழலி மனோன்மணி மங்கை
அதுஅக் கல்வியுள் ஆயுழி யோகமே.

பொருள் : இஃது என்று சுட்டப்பெறும் அம்மையும் பெருந்தகையாகிய சிவனும் கல்வியும் அதன்பயனும் போன்று பொருந்தியிருந்தனர். தேன் நிறைந்த மலர் சூடிய மனோன்மணி மங்கை என்னும் அம்மை ஆருயிர்கள் கற்கும் கல்வியும் அதன் பயனுமாய் நிற்பன்.

1172. யோகநற் சத்தி ஒளிபீடம் தானாகும்
யோகநற் சத்தி ஒளிமுகன் தெற்காகும்
யோகநற் சத்தி உதர நடுவாகும்
யோகநற் சத்திதான் உத்தரந் தேரே.

பொருள் : சிவனுடன் விட்டுப்பிரியாத திருவருள் ஆற்றல், ஒளி விளங்கும் இருக்கையாகிய பீடமாகும். அவ்ஆற்றலே திருவுருவின் திருமுகமாகும். அம்முகம் தென்முகம் நோக்கியதாகும். அவ் ஆற்றலே வயிறாகும், அதுவே நடுவாகும். அவ் ஆற்றலே திருவடியாகும். அத்திருவடியே உயர்வற உயர்ந்த சிறப்பாகும்.

1173. தேர்ந்தெழு மேலாம் சிவன்அங்கி யோடுற
வார்ந்தெழு மாயையும் அந்தம தாய்நிற்கும்
ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிட
கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.

பொருள் : திருவருளம்மை (சத்தி) பேரொளிப் பிழம்பாம் சிவத்தினுள் ஒடுங்கும் அதுவே பேரொடுக்கநிலை. அந்நிலையில் மாயாகாரியங்களும் தம் முதற்காரணமாகிய மாயையின் கண் ஒடுங்கும். அம்மாயை திருவருள் ஆற்றலின்கண் ஒடுங்கும். இதுபோல் உலகத் தோற்றத்தின்கண் சிவத்தின் நின்றும் அருளாற்றல் வெளிப்படும். அது வெளிப்பட்டதும் மாயையின் கண் சொல்லுறுப்பாகத் தோன்றும் ஓசையும் ஒளியுமாகிய நாத விந்துக்கள் அம்மையின் நினைவாற்றலால் தோன்றும். அவை தொழிற்படுமாறு, அழகிய வளையல் அணிந்த அம்மையும் அப்பன் இடமாக நின்று முனைந்து எழுகின்றனள்.

1174. தானான ஆறுஎட்ட தாம்பரைக் குள்மிசை
தானான ஆறும்ஈ ரேழும் சககலை
தானான விந்து சகமே பரமெனும்
தானாம் பரவா தனையெனத் தக்கதே.

பொருள் : பரையாகிய திருவருள் மூலமுதலாகும் ஆறு நிலைக்களங்களும், அகத்தவமாகிய எட்டு யோக நிலைகளும், தனக்கு இடம் என்று கொண்டருள்வள். அதுபோல் அறுவகை வழிகளும் பதினான்கு உலகங்களும் தானாகக் கலந்திருப்பாள். கலைவடிவாகச் சயைமப்பட்ட உலகிற்கு முதலாம் விந்துவும் தானாக நிற்பள். பரமனாகிய நாதமும் தானாம். இத்திருவருள் திருவடிப் பேற்றை அப்பொழுது காட்டாமல் மறைத்தலின் மறைப் பாற்றல் எனத் தக்கதென்றனர்.

1175. தக்க பராவித்தை தானிரு பானேழில்
தக்கெழும் ஓர்உத் திரம்சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண்சத்தி வெண்ணிற முக்கண்ணி
தொக்க கதையோடு தொன்முத் திரையாளே.

பொருள் : மிகவும் சிறந்த திருவருளின் கலையைப் பயிலுதண்கு ஏற்ற நாள் முக்கூட்டாகிய பரணி நாளாகும். பண்டைக் காலத்தில் கார்த்திகையை முதல் நாளாகக் கொண்டு எண்ணியுள்ளார்கள். அதனால் பரணிநாள் இருபத்தேழாம் நாளாயிற்று. அத்திருவருள் கலையைப் பயில்வார்க்கு ஒப்பில்லாத விடை பகரவே வெளிப்பட்டுத் தோன்றுவள். அவள் எட்டுச் சத்திகளை யுடையவள். அவள் வெள்ளிய நிறமுடையவள். அவளே மூன்று கண்களையும் உடையவள். அவளே அமைந்த காரணத்துடன் அரிய பழமையான முத்திரையையும் உடையவன் (உத்திரம் - விடை)

1176. முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள்
தத்துவ மாய்அல்ல வாய சகலத்தள்
வைத்த பராபர னாய பராபரை
சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே.

பொருள் : அன்பு அறிவு ஆற்றல்களை விளக்கும் மூவகை முத்திரைகளுள் முடிந்த முத்திரையாகிய அறிவு முத்திரையுடையவள், அருளம்மை. தத்துவமாகிய உலக உடல்களுடன் கலப்பால் ஒன்றாய், பொருள் தன்மையால் வேறாய் உதவுதலால் உடனாய் எல்லாமாய் யிருப்பவளும் அவளே. அவன் அருள் செய்தற் பொருட்டுச் சிவ பெருமானுக்குச் திருமேனியாக உடையவள். நடப்பாற்றலாகிய ஆதிசத்தியும் வனப்பு ஆற்றலாகிய இன்பச் சத்தியும் சிவனை விட்டுப் பிரிந்து நில்லாதவர். அதனால் அவ்விருவரும் சிவனை மணக்கின்றனர் என்றனர்.

1177. கொங்குஈன்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னி
பொங்கிய குங்குமத் தோளி பொருந்தினள்
அங்குச பாசம் எனும்அகி லம்கனி
தங்கும் அவள்மனை  தான்அறி வாயே.

பொருள் : திருவருளம்மை மணம் கமழ்கின்ற கொம்பு போலும் இடையினையுடையாள். குரும்பை போன்ற திருமுலையை உடையவளும் அவளே. அவளே அருள் விளக்கத்துடன் திகழும் கன்னி, குங்கும நிறத்தினையுடையவள், தோட்டியும் கயிறும் உடைய திருக் கையினை யுடையவளும் அவளே. அவள் அடியார் அகத் தாமரையின்கண் வீற்றிருப்பவள். இவற்றை அடியவர்க்கு அத்திருவருள் உணர்த்த உணர்ந்து ஒழுகும் தன்மை அவர்க்கு எய்தும். அவர்தம் நெஞ்சகமே அம்மை உறையும் உறையுளாகும்.

1178. வாயு மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமும் ஆமே.

பொருள் : சீவர்களின் உட்சுவாச நிசுவாசத்தையும் மனத்தையும் கடந்து விளங்கும் மனோன்மணி பேய்களையும் பல்வேறு கணங்களையும் தமக்கு ஏவலாகப் பெற்றவள். ஆராய்ச்சி அறிவைக் கடந்த சிவனுக்கு மனோன்மணி தாயாகவும், மகளாகவும், மனைவியாகவும் உள்ளாள்.

1179. தாரமும் ஆகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகும் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே.

பொருள் : பராசத்தி சிவத்துக்கு மனைவியும் ஆவள். சத்தி தத்துவமாய் நின்று நாதவிந்துகளைத் தோற்றுவிக்கவும் செய்வள். சிவத்தோடு ஒன்றிய நிலையில் அனைத்துக்கும் பரமகாரணியாகவும் சிருஷ்டியை நினைந்து பிரிந்தபோது சிவத்தின் காரியமும் ஆவள். இத்தகைய புணர்ப்பினை உடையாள் நிறைந்த விந்து சத்தி பொருந்தியுள்ள பழமைக் கெல்லாம் பழமையானவள். அண்டங்களின் அளவாகப் பிரிந்துள்ள திசைகள் பத்தையும் உடைமையாகக் கொண்டவள்.

1180. பத்துமுகமுடை யாள்நம் பராசத்தி
வைத்தனன் ஆறங்க நாலுடன் தான்வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள்எம் நேரிழை கூறே.

பொருள் : திருவருள் அம்மை பத்துத் திருமுகங்களை உடையவள். அவள் பேரருள் என்னும் பெயருடைய பராசத்தி யாவள். அவளே திருநான்மறையும் கருவியாம் ஆறு உறுப்புக்களும் ஆருயிர் உய்ய ஓதுவித்தனள். அவளே அத்தனாகிய சிவனுக்கு அருள் திருமேனியாதலால் தாங்குவதாகிய ஆதாரம் ஆகின்றனள். ஒடுங்கும் போது அருள் அத்தனுள் ஒடுங்குதலால் தாங்கப்படுவதாகின்றது. இம் முறையாகத்தான் அதுவாம் தன்மையில் சிவனும் அருளும் என்றும் பிரிப்பின்றி நின்று அருள் செய்வர்.

1181. கூறிய கன்னி குலாய புருவத்தள்
சீறிய னாய்உல கேழும் திகழ்ந்தவள்
ஆரிய நங்கை அமுத பயோதரி
பேருயி ராளி பிறிவறுத் தாளே.

பொருள் : திருவருள் அம்மை என்றுளம் கன்னி என்று கூறப்படுபவள். அவள் விளங்கும் புருவத்தள். சிறந்தவளாக ஏழ் உலகும் விளங்குபவள். மேலானவள். அமுதம் நிறைந்த தனங்களை யுடையவள். அவள் அனைத்துயிரையும் அருள் காரணமாகக் காக்கின்றவள். அவள் ஆருயிரினின்றும் பிரிய வேண்டிய மல மாயை கன்மங்களைப் பிரிவித்தனள்.

1182. பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதை
குறியொன்றி நின்றிடும் கோமளக் கொம்பு
பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே
அறிவொன்றி நின்றனள் ஆருயி ருள்ளே.

பொருள் : திருவருள் ஆருயிர்களை விட்டுப் பிரியாது நிற்கும் பெருந்தகை அம்மை. இரக்கமுள்ள தாய். அகவழிபாடு செய்யும் அன்பர்கள் குறிக்கும் குறிப்பில் பொருந்தி நிற்கும் இளமையும் அழழும் மென்மையும் வாய்ந்த கோமளக் கொம்பும் அவளே. அறிகருவியுடன் ஒத்து நின்று அவற்றைத் தொழிற்படுத்தி ஆருயிர்கட்கு உயிர்க்கு உயிராய் நின்று அவ்வுயிர்களின் அறிவுக்கு அறிவாய் இருப்பவளும் அவளே.

1183. உள்ளத்தின் உள்ளே உடனிருந்து ஐவர்தம்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே.

பொருள் : வள்ளலாகிய பராசக்தி மனத்தினுள் உடனாய் இருந்து ஐம்பொறிகள் செய்யும் கள்ளத் தனத்தை ஒழித்து, உயிரோடு கலந்து, தவநெறி மேற்கொள்ளக்கூடிய உண்டான இன்பத்தில் என்னை மயக்கி விரும்பச் செய்தாள்.

1184. புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்து
இருந்த இலக்கில் இனிதிருந் தாளே.

பொருள் : விரும்பி அருள்புரிகின்ற போகசத்தி மனத்துள் இருந்து இன்பம் அளிப்பதையாரும் அறியார். அவ்வாறு பொருந்தியிருந்த புதல்வியாகிய சத்தி மலரும் மணமும் போல் சிவத்தோடு பொருந்தி இனிமையாக வீற்றிருந்தாள்.

1185. இருந்தனள் ஏந்திழை என்னுளம் மேவித்
திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந்து உன்னி
நிரந்தர மாகிய நிரதி சயமொடு
பொருந்த விலக்கில் புணர்ச்சி அதுவே.

பொருள் : அடியேன் உள்ளத்தைப் பொருந்தித் திருவருள் அம்மை இருந்தனள். நாமெல்லாம் இறைவன் திருவடிப் பேரின்பமாகிய எல்லை யில்லாத வியத்தகு இன்பத்தைப் பெற்று என்றும் ஒன்று போல் வாழ சிவபெருமானுடன் அம்மை பொருந்தியிருப்பாள். அதனால் ஆருயிர்க்கும் பிரிவில்லாப் பேரின்பம் உண்டு. (எல்லை யில்லாத வியத்தகு இன்பம் - நிரதிசயானந்தம்.)

1186. அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே.

பொருள் : அது வேண்டும் இது வேண்டும் என்னும் ஆசையினை விட்டு, அவளைப்புகழ்ச்சி செய்து இடைவிடாது தியானித்தால் விதிக்கப்பட்ட வினைகளையும் வென்று விடலாம். சந்திர மண்டலவாசியாகிய அம்மை சொன்ன மண்டலங்கள் மூன்றாகும். சிவயநம எனச் சிந்தித்தலே விதியை öவ்லலும் மதியாகும். (மதிமலரான் - செந்தாமரைப் பீடத்தாள் எனினுமாம்.)

1187. மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம்
ஏன்றுள ஈராறு எழுகலை உச்சியில்
தோன்றும் இலக்குற ஆகுதல் மாமாயை
ஏன்றனள் ஏழிரண்டு இந்துவோடு ஈறே.

பொருள் : மோகினியாகிய உணர்வுமெய் - அசுத்தமாயை. காலம் நியதி கலை என்னும் மூன்று பிரிவினையுடையது. அவை பன்னிரண்டாகக் காணப்பெறும்கலைமுடிவில் காணப்படும். இதற்குக் குறிக்கோளாக இருப்பது மாமாயை என்னும் தூமாயை இவற்றைப் பதினாலு கலையாகவும் பன்னிரண்டு கலையாகவும் ஏற்றனள் அம்மை.

1188. இந்துவின் நின்றொழு நாதம் இரவிபோல்
வந்துபின் நாக்கின் மதித்தெழு கண்டத்தில்
உந்திய சோதி இதயத்து எழும்ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறது தானே.

பொருள் : இந்துவாகிய தூமாயையின் நின்றெழும் முப்பத்தாறாம் மெய்யாகிய ஒலி-நாதம் நிறையுயிர் அகத்து பகலவன் போல் கதிர் ஒளியாகத் தோன்றிச் செவியில் பொருந்துமாறு நாக்கில் எழும். அதன் முன்னிலையாகிய கண்டத்தில் வெளித்தள்ளும் மிடற்று ஓசையாக நிற்கும். அதன் முன்னிலையாகிய நினைவு ஓசை திங்கள் நிலவு ஒத்து இருக்கும். இதற்கு முன்னிலையாகிய அண்ணோசை ஒன்று உண்டெனினும் இவைபோல் ஒப்பில் வைத்துக் கூற முடியாமையால் இதுவே ஈறு என்றார்.

1189. ஈறது தான்முதல் எண்ணிரண்டு ஆயிரம்
மாறுதல் இன்றி மனோவச மாய் எழில்
தூறது செய்யும் சுகந்தச் சுழியது
பேறது செய்து பிறந்திருந் தாளே.

பொருள் : முடிந்த முடிவாகிய திருவருள்மை முதல்வியாவாள். அவள் இருக்கை பதினாறாயிரம் இதழ்களை யுடையதாய் மாறுதல் இல்லாமல் அன்பர் மனத்து அடங்குவதாய் அழகிய மதி மண்டலத்தாமரையாகும். இதுவே சிறந்த நறுமணம் கமழும் விந்துவாகும். இதனால் உயிர்கட்குப் பேறருளிக்காட்சிப் புலனாம் உருவுடனும் தோன்றியிருந்தனள் என்பது புலனாம்.

1190. இருந்தனள் ஏந்திழை ஈறதி லாகத்
திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றிசெய்து ஏத்தி
வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே.

பொருள் : திருவருள் அம்மை முடிவாக மதிமண்டலத்தில் இருந்தனள். எல்லா உலகங்களிலும் அவரவர் வினைக்கு ஈடாகப் பிறந்துவாழும் உயிர்கள் முயன்று வழிபட்டுச் செந்நெறி முறைப்படி ஒழுகிப் பேரின்பம் எய்தி வாழ மங்கை நல்லாளும் எழுந்தருளி இருந்தனள்.

1191. மங்கையும் மாரனும் தம்மொடு கூடிநின்று
அங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கைநல் லாளும் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்குசெய் தாரே.

பொருள் : சத்தியும் சிவனும் பொருந்தி நின்று யானைத் துதிக்கை போன்ற பிரணவத்தின் உச்சியிலிருந்து சிருஷ்டிக்க எண்ணிச் சீவர்களுக்கு உடலுக்குவேண்டியதையும் உயிருக்கு வேண்டியதையும் கணித்தனர். பார்வதியும் ஐந்து குமாரர்களுடன் தங்களது சத்தியோடு சேர்த்து உலகத்துக் கானபடைத்தல் ஆதித் தொழில்களைச் செய்தனர்.

1192. சடங்கது செய்து தவம்புரி வார்கள்
கடந்தனின் உள்ளே கருதுவர் ஆகில்
தொடர்ந்தெழு சோதி துளைவழி ஏறி
அடங்கிடும அன்பினது ஆயிழை பாலே.

பொருள் : புறத்தே வேள்வி முதலிய சடங்குகள் செய்து தவம் புரியும் நன்னெறியாளர் அகத்தேயும் அவ்வழி பாட்டைப் பயில் வராயின் உயிர்க்கு உயிராகிய திருவருள் அம்மை பேரொளியாகத் தோன்றுவள். அவ்வருள் ஒளியைத் துணையாகப் பற்றி மேற்சென்று அன்பின்கண் அடங்குதல் வேண்டும். அங்ஙனம் அன்பின்கண் அடங்கி நிற்பார் அம்மையார் திருவடியைச் சேர்வர். (கடம் - தேகம்)

1193. பாவித் திருக்கும் பனிமலர் ஆறினும்
ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி
சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம்
மூலத்து மேலது முத்தது வாமே.

பொருள் : அக நிலைக்களங்களாகிய ஆறுஆதாமும் தாமரை மலர்களாக அமைத்துக் கொள்ளப்படும் அவற்றுடன் பொருந்திக் களித்திருக்கும் அந்நிலையும் திருவருள் அம்மையைச் சேரச் செல்வார்க்கு நீக்குதல் வேண்டும். அந்நிலையினையும் நீக்கி மேல் ஓங்குதல் வேண்டும். அங்ஙனம் செய்தற்குத் துணையாம் மந்திரம் நமசிவய என்பதாகும். இதுவே முத்துப்போன்று தனிமுதல் தமிழ்மந்திரமாகும்.

1194. முத்து வதனத்தி முகந்தொறும் முக்கண்ணி
சத்தி சதிரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என்னுளம் மேவிநின் றாளே.

பொருள் : முத்துப்போலும் அருளொளி வீசும் திருமுகத்தினையுடையவள். ஒவ்வொரு திருமுகத்தும் மும்மூன்று திருக்கண்களை யுடையவள். அறிவாற்றலள். திறமைமிக்கவள் உயிர்கள் உய்யும் பொருட்டு அருளால் திருமேனி கொள்பவள். விரிந்த திருச்சடையினை யுடையவள். பத்துக்கரத் தினையுடையவள். சிவபெருமான் ஒரு கூற்றில் மாறாது விளங்கும் ஒப்பிலா வளையலை அணிந்தவள். வியத்தகு காரணமாயுள்ளவள். அத்தகைய திருவருள் அம்மை எளியேன் உள்ளம் பொருந்தியருளினள்.

1195. மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ்எரி
தாவிய நற்பதத் தள்மதி யங்கதிர்
மூவரும் கூடி முதல்வியாய் முன்நிற்பார்
ஓவினும் மேலிடும் உள்ளொளி யாமே.

பொருள் : பொருந்திய மண்டலங்கள் மூவினுக்கும் உரிய தெய்வங்களாகக் கருதப்படுவோர் தீ, திங்கள், ஞாயிறு என்பபடுவர். இம் மூவரும் முதல்வியாரின் திருமுன் அவர்திரு ஆணையை வேண்டிய நிற்பர். அம் முதல்வியாரின் திருவருள் ஒளி இடையறாது விளங்கிக் கொண்டிருக்கும். திருவருள் ஒளிகண் மூடிய காலத்தும் அகத்து விளங்கும் ஆதலின் ஓவினும் என்றார்.

1196. உள்ளொளி மூவிரண்டு ஓங்கிய அங்கங்கள்
வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடும்
கள்ளவிழ் கோதை கலந்தவுடனே நிற்கும்
கொள்ள விசுத்திக் கொடியமு தாமே.

பொருள் : திருவருள் அம்மை அகத்தே ஒளியோடு காணப்படும் ஆறு நிலைக் களங்களுக்கும் ஒளி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல்வியாகப் பொருந்துவள். பொருந்தி அந்நிலைக் களங்களுக்குரிய  தெய்வங்களுடன் தேன்வழியும் கொன்றை மாலை அணிந்துள்ள சிவபெருமான் வழிக்கலந்து உடனாய் நிற்பள். அவளே மிகவும் இயற்கைத் தூய்மை எய்தியவள்.

1197. கொடியதுஇ குருவுள் இருப்பப்
படியது வாருணைப் பைங்கழல் ஈசன்
வடிவது ஆனந்தம் வந்து முறையே
இடுமுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே.

பொருள் : ஒழுங்காய் அமைந்த சிறந்த வரைகளுள் குருவுருவாம் திருவருள் உள்ளிருத்தலால் பொருந்திய நிறம் விளங்குகின்ற பொற்கழல் அணிந்த சிவபெருமானின் திருவுருவம் பேரின்பம் ஆகும். அத்திருவுருவாய் விளங்கும் அம்மை ஆறு ஆதாரங்களுக்கு முதல்வியாவாள்.

1198. ஏந்திழை யாளும் இறைவர்கள் மூவரும்
காந்தாரம் ஆறும் கலைமுதல் ஈரெட்டும்
ஆந்த குளத்தியும் மந்திரர் ஆயவும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.

பொருள் : திருவருள் அம்மையும் அவர் ஆணைவழி இயங்கும் அயன், அரி, அரன் என்னும் கடவுளர் மூவரும் அறுவகை ஓசையும், பதினாறு கலைகளும், தீ நெறிச் செலுத்தாது, நன்னெறிச் செலுத்தும் புருவநடு ஆணையும், மறைமொழி ஆராய்வும் கொண்டவனாய்ச் சார்ந்தவர் வழிபட்டேத்தும் தன்மையளாய் வீற்றிருந்தனள். (குளம்-நெற்றி; புருவ நடு.)

1199. சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே.

பொருள் : சத்தியென்று ஓதப்பெறும் பெண்பிள்ளை தோன்றாத் துணையாவாள். அவள் ஆருயிர்கள் எல்லாம் நன்னெறி நான்மை பயின்று நாயனடி கலைக்கூடப் பெறுதற்குத் துணை புரிபவள். அவ்வம்மை வீடு பேறு அளிக்கும் மேன்மையள். அவள் திருவடியில் சேர்ப்பிக்கும் பேரன் பாகிய பத்தியினைப் பாழாக உகுத்த அறிவிலாதவர், நாய்போல் பயனின்று மறை மொழிந்து கதறுகின்றார்கள்.

1200. ஆரே திருவின் திருவடி காண்பார்கள்
நேரே நின்றுஓதி நினையவும்வல் லார்க்குக்
காரேர் குழலி கமல மலரன்ன
சீரேயும் சேவடி சிந்தைவைத் தாளே.

பொருள் : திருவாகிய பராசத்தியின் திருவடியைக் காண்பவர் யார் ? அவளை ஒளியில் கண்டு புகழ்ந்து தியானம் செய்பவர்க்கு கருமை நிறமுள்ள கூந்தலை உடையவள் தனது சிவந்த தாமரை மலர்போன்ற பெருமை நிறைந்த திருவடியை அருளச்செய்வாள்.

1201. சிந்தையில் வைத்துச் சிராதிபி லேவைத்து
முந்தையில் வைத்துத்தம் மூலத்திலே வைத்து
நிந்தையில் வையா நினைவதியே வைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.

பொருள் : சத்தியைப்பற்றிய கருத்துக்களைச் சிந்தனையில் அகலாது வைத்து, சிரத்தில் ஆதியான புருவ மத்தியில் தொடங்கி, ஒளிமுகமாக முன்னிலைப்படுத்திக் கொண்டு, மூலத்தில் வைத்தும், உலக விஷயங்களை நினையாமல் அவளையே சிந்தித்து, திருமுறை நூல்களைப் பண்ணோடும் ஓதி அமைதி வடிவாய் இன்புற்று வாழ்வீராக ! சிரசாதி என்பது சிராதி எனத்திரிந்து நின்றது.

1202. சமாதிசெய் வார்க்குத் தான்முத லாகிச்
சிவாதியி லாரும் சிலைநுத லாளை
நவாதியி லாக நயந்தது ஓதில்
உவாதி அவளுக்கு உறைவிலே தாமே.

பொருள் : சமாதியாகிய ஒடுக்கத்தில் பயில்வார்க்குத் திருவருள் அம்மையே முதல்வியாவாள். அவள் விற்போலும் நெற்றியை உடையவள். அவளே சிவத்தில் பொருந்தியிருப்பவள். ஒன்பது திருவுருவங்களாகக் கோலங்கொண்டு அருள் செய்யும் அம்மையும் அவளே. அவ்வுருவில் விரும்பிய தொன்றை வழிபடில் அத்திருவுருவே எவ்வகைத் திரிபும் இல்லாத அம்மை அருள் புரிவதற்கு ஆகும் உறையுள் என்ப உறையுமிடம் அதுவாõகும்.

1203. உறைபதி தோறும் முறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாடொறும் நண்ணி
மறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும்
இறைதினைப் போதினில் எய்திடலாமே.

பொருள் : திருவருள் அம்மை உயிர்கள் உய்தற்பொருட்டு, அகத்துப் போல் புறத்தும் திருக்கோயில் கொண்டுள்ளாள். அக்கோயில்கள் தோறும் சென்று மணங் கமழ்கின் பூச் சூடியுள்ள அம்மையை நாள் தோறும் வழிபட்டு  நமசிவய என்னும் மந்திரத்தை ஓதும் மெய்யடியார்களுக்கு நான்கு உருவங்களாக உள்ள இறைவன் திருவருளும் விரைவில் எளிதில் எய்தும்.

1204. எய்திட லாகும் இருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
கைதவம் இன்றி கருத்துறும் வாறே.

பொருள் : மேற்கூறிய வழிபாட்டு முறையில்லாதார் இருவினையின் பயனை எய்தி இளைப்பர். மாந்தளிர் போலும் திருமேனியும் குமரிப் பருவம், என்றும் நீங்கா இளமையும், அருள் பொழியும் கண்ணும் உடைய திருவருள் அம்மையை இனிய பாடல்களோடு வஞ்சனை யில்லாமல் வழிபடுக. இதுவே அம்மையை மனத்தில் இருத்தும் வகையாகும், (கைதவம் - வஞ்சகம், பொய், துன்பம்.)

1205. கருத்துறங் காலம் கருது மனமும்
திருத்தி இருந்தவை சேரு நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மண்மேல்
இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே.

பொருள் : வழிபடும் கால முறையைக் கருதுக. சத்தியின் திருவடிகளைச் செவ்விய நெஞ்சில் நினைக. வழி பாட்டுக்குரிய இடத்தை நாடுக. ஒப்பில்லாத அவ் அம்மையை உள்ளூர நினைந்து போற்று. போற்றவே  சிவபெருமானின் எட்டுக் குணங்களும் அவள் அருளால் உங்களை எளிதாக வந்தடையும்.

1206. ஆமையொன்று ஏறி அகம்படி யான்என
ஓம்என்று ஓதிஎம் உள்ளொளி யாய்நிற்கும்
தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்
சோம நறுமலர் சூழநின் றாளே.

பொருள் : ஆமைபோன்று ஐம்புலன்களை அடக்கி சத்தியின் துணையால் அவைகளை நல்வழிப்படுத்துக. யான் அம்மைக்கு அடிமையென உறுதியாக எண்ணுக. ஓம் என்னும் தமிழ்மறையை ஓதுக. அப்போது அம்மை உள்ளொளியாக நின்றருள்வள். அத்தகைய நறுமலர் சூடிய கூந்தலையுடைய அம்மையைக் கண்டபின் திங்கள் சூடிய அறிவருள் நிலை தோன்றும்.

1207. சூடிடும் அங்குச பாசத் துளைவழி
கூடும் இருவளைச் கோலக்கைக் குண்டிகை
நாடும் இருபத நன்னெடு ருத்திரம்
ஆடிடும் சீர்புனை ஆடக மாமே.

பொருள் : தோட்டியும் கயிறும் வழியாகப் போடப் படும் பெரிய வளையல்களும், நீர்க்கரகமும், நல்லார் நாடும் இரண்டு திருவடியும் அரசன் நாமமாகிய ஐந்தெழுத்து ஓதும் திருவாயும் கொண்டு பொன் மன்றில் திருவருள் அம்மை ஆடிடும். (உருத்திரம் - உருத்திரமந்திரம் ஈண்டு ஐந்தெழுத்து)

1208. ஆயமன் மால்அரன் ஈசன் சதாசிவன்
தாமடி சூழநின்று எய்தினார் தம்பதம்
காமனும் சாமன் இரவி கனலுடன்
சோமனும் வந்தடி குடநின் றாளே.

பொருள் : பிரமன், திருமால், ருத்திரன், மகேசன், சதாசிவன் ஆகியோர் சத்தியின் திருவடியைச் சூழத் தத்தம் பதவியைப் பெற்றனர். காமனும் அவன் தம்பியாகிய சாமனும் சூரியனும் அக்கினியுடன் சந்திரனும் அம்மையின் அருள் பெற்றுத் தங்கள் தங்கள் நிலையினை எய்தினர்.

1209. சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை
நாடி நடுவிடை ஞானம் உருவநின்று
ஆடும் அதன்வழி அண்ட முதல்வியே.

பொருள் : முழு முதல்வியாகிய அம்மை இளம்பிறை சூடியவள். சூலத்தைக் கைக்கொண்டவள். கபாலமாகிய மண்டை ஓட்டையும் ஏந்தியவள். என்றும் ஒரு படித்தாம் இளங்கொடி. இயல்பாகவே மலம் இல்லாதவள். சிறந்த அணிகலன் களை அணிந்தவன். நடுநாடியாக உள்ளவள். காளையை வாகனமாக உடையவள். மெய்யுணர்வே உருவானவள். அவள் ஆட்டத்தில் வழி அண்டம் அனைத்தும் நின்றாடும்.

1210. அண்டமுதலாய் அவனிபரி யந்தம்
கண்டதுஒன்று இல்லைக் கனங்குழை அல்லது
கண்டனும் கண்டியும் ஆகிய காரணம்
குண்டிகை கோளிகை கண்டத னாலே.

பொருள் : ஆகாயக் கூறான அண்ட முதல் பூமி தத்துவம் வரை பொற் காதணியுடைய பராசத்தியைத் தவிர வேறு நிலையான இடம் பெற்றவர் இல்லை. சிவனும் சத்தியமாகிய காரணம் பெண்ணும் ஆணுமாகப் படைப்பதற்காகவே யாம். (குண்டிகை - ஆண்தன்மை; கோளிகை - பெண்தன்மை.)

1211. ஆலம்உண் டான்அமுது ஆங்கவர் தம்பதம்
சாலவந்து எய்தும் தவத்துஇன்பம் தான்வரும்
கோலிவந்து எய்தும் குவிந்த பதவையோடு
ஏலவந்து ஈண்டி இருந்தனன் மேலே.

பொருள் : சத்தி, ஆலகாலம் உண்ட சித்துக்கு அமுதம் ஆவாள். அவர் அடையும் பதவியாவாள். நிரம்பவந்து பொருந்தும் தவத்தால் வரும் இன்பமாகத் தானே வருவாள். அத்தகைய சத்தி ஆதாரங்கள் தோறும் கோலிவந்து அடையப்பெறும் குவிந்த வழியாகிய சுழுமுனையோடு பொருந்தவத்து செறிந்த உச்சியின் மேல் விளங்கினள். (பதவை-வழி.)

1212. மேலாம் அருந்தவம் மேல்மேலும் வந்தெய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலா நளினநின்று ஏத்திநட் டுச்சிதன்
மேலாம் எழுத்தினள் ஆமத்தி னாளே.

பொருள் : உயர்ந்த பெருந்தவம் வந்து கைகூட வேண்டி காடும் மலையும் கால் நோவ நடந்து வீணாகக் கழிவர். அவ்வாறன்றிக் கண்ணிமைப் பொழுதினுள் அருந்தவம் கைகூடும் வழியாதெனில் இரைக்குடராகிய ஆமத்தின்கண் சத்தி தங்கியுள்ளாள். அவளை மூலமாகிய நாலிதழ் தாமரையின் கண் நாடி வழிபட்டு உச்சிக்குமேல் உடன்கூடி உறைத்து நின்ற ஓமொழியை உன்னுதலே முறையாம்.

1213. ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினள்
ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
நாம் நமசிவ என்றுஇருப் பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே.

பொருள் : இரைக்குடலில் தங்கும் சோற்று வண்ணத்தாள் கொப்பூழின் கண் செய்யப்படும் ஓமத்தினிடத்தும் பொருந்தி யிருந்தனள். அவள் ஒப்பில்லாத சத்தியாவாள். அவள் திருப்பெயர் நமசிவ என்னும் நான்மறையாகும். அம்மறையை மறவா நினைவுடன் வழுத்துவார்க்கு அம்மை மாறாத உறுதித் துணையாவாள். விட்டு நீங்காமல் விளங்கி நிற்பாள். (ஓமம் - அக்கினிகாரியம் நெய்யால் செய்யும் வேள்வி.)

1214. நிலாமய மாகிய நீள்படி கத்தின்
சிலாமய மாகும் செழுந்த ரளத்தின்
சுலாமய மாகும் சுரிகுழற் கோதை
கலாமய மாகக் கலந்துநின் றாளே.

பொருள் : சத்தி நிலவும் பளிங்குக்கல் போன்ற வெண்ணிறத்தினள். வட்டமாகிய திரண்ட முத்துப் போன்றவள். நெளிந்த நீண்ட கூந்தலை யுடையவள். ஐங்கலை வண்ணமாய் இருப்பவள். ஆருயிர் உலகுடல் அனைத்துடனும் கலந்து நின்றனள். ஐங் கலைகளாவன; நீக்கல், நிலைப் பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல்

1215. கலந்துநின் றாள்கன்னி காதல னோடும்
கலந்துநின் றாள்உயிர் கற்பனை எல்லாம்
கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாம்
கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே.

பொருள் : திருவருட்கன்னி, காதலனாகிய சிவபெருமானுடன் கலந்து நின்றாள். ஆருயிர்கள் நாடும் நாட்டத்துள் எல்லாம் கலந்து நின்றாளும் அவளே. கலைநூல்கள் மெய் உணர்வு நூல்கள் எல்லாவற்றிலும் கலந்திருந்தனள். காலமும் ஊழியும் நாள்களுமாகிக் கலந்து நின்றவளும் அவளே.

1216. காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்றாகும் கூட இழைத்தனன்
மாலின் மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம் தாமே.

பொருள் : அம்மை சீவர்களுக்குக் காலதத்துவமாய் உள்ளவள் எங்கும் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் அனுகூலமுடையவள். பிரிப்பின்றி விளங்கும் கலப்பினைச் செய்தவள். உமை; மூலாதாரச் சத்தியாகிய குண்டலினி. சண்டிகை மந்திரத்தில் விளங்குபவள். இவள் காக்கின்ற சிவத்துக்கு ஒருபாகமாய் உள்ளவள்.

1217. பாகம் பராசத்தி பைம்பொன் சடைமுடி
ஏகம் இருதயம் ஈரைந்து திண்புயம்
மோக முகம்ஐந்து முக்கண் முகந்தோறும்
நாகம் உரித்து நடஞ்செய்யும் நாதர்க்கே.

பொருள் : திருவருள் அம்மை, பொன் போலும் திருச்சடை முடியினையும், ஒன்றாம் திருவுள்ளத்தினையும், பத்துத்திருத்தோள்களையும் வேட்கை விளைவிக்கும் ஐந்து திருமுகங்களையும் முகந்தோறும் மூன்று திருக் கண்களையும் யானையுரி போர்த்த போர்வையினையும் உடையரால் எந்நாளும் நள்ளிருளில் நட்டம் செய்யும் சிவபெருமானார்க்கு ஒருபாசம் ஆனவள். அவளே பேரறிவுப் பேராற்றல் என்னும் பராசத்தியாய் இருப்பவள்.

1218. நாதனும் நால்ஒன் பதின்மரும் கூடிநின்று
ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உளஅவை
வேதனும் ஈர்ஒன்ப தின்மரும் மேவிநின்று
ஆதியும் அந்தமும் ஆகிநின் றாளே.

பொருள் : சிவபெருமானும் முப்பத்தாறு தத்துவங்களும் மெய்யடியார்கள் அனைவரும் கூடிநின்று நினைவுற ஓதும் இயக்கம், ஆட்சி, நடுக்கம், விளக்கம், தோன்றுவித்தல் முதலிய ஐந்தொழில் புரியும் திருமுகங்கள் ஐந்தும் அயனும் பதினெட்டுத் தெய்வ கணங்களும் ஆகிய யாவருடனும் திருவருள் அம்மை பொருந்தி யிருந்தனள். அவளே எல்லா உலகங்களுக்கும் ஆதியும் அந்தமும் ஆகிநின்றாள்.

1219. ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள்
ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள்
ஆகிநின் றாளுடன் ஆகிய சக்கரத்து
ஆகிநின் றான்அவன் ஆயிழை பாடே.

பொருள் : மாயா காரியவுலகம் தோன்றும் நாள் முதற்கண் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றும் தோன்றும். இவற்றுள் அகர உயிராக நிற்பவள் அம்மையாகும். அவளுக்கு உடனாம் பொறியமைப்பாகிய சக்கரமாக  அமைந்து நின்றான் சிவன். அஃது ஆயிழை பக்கமாகும் (கலை- அட்சரம், பாடு-பக்கம்)

1220. ஆயிழை யாளொடும் ஆதிப் பரமிடம்
ஆயதொர் அண்டவை யாறும் இரண்டுள
ஆய மனந்தொறு அறுமுகம் அவைதனில்
ஏயவார் குழலி இனிதுநின் றாளே.

பொருள் : திருவருள் அம்மையுடன் ஆதியாகிய சிவன் இடமாய் இருப்பது சக்கரம். சக்கரம்- யந்திரம்; அண்டவை. அச்சக்கரம் எட்டு இதழ்களையுடையதாய் இருக்கும். அவ் எட்டு இதழ்களுள் மனத்திற்கு வாய்த்த ஆறு இதழ்களில் மணங்கமழ்கின்ற கூந்தலையுடைய அம்மை இனிது வீற்றிருக்கின்றனள். (முகம் - இதழ்.)

1221. நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட
இன்றென் அகம்படி ஏழு உயிர்ப்பெய்தும்
துன்றிய ஓர்ஒன் பதின்மரும் சூழலுள்
ஒன்றுயர் ஓதி உணர்ந்துநின் றாளே.

பொருள் : நேரிழையாகிய திருவருள்அம்மை அகத்தே நேர்பட நின்றனள். அதனால் பத்துக் காற்றாகிய உயிர்ப்பினுள் உயிர்க்காற்று, மலக்காற்று, வீங்கற்காற்று மூன்றும் ஒழித்து எஞ்சிய ஏழும் இயங்கும். அம்மையுடன் நெருங்கிய ஒன்பது ஆற்றல்களும் சூழ்ந்து வளிங்கும். உயர்வற உயர்ந்த ஒன்றாகிய சிவபெருமானை ஆருயிர்கட்கு உணர்த்த ஓதி நின்றனள். அருளம்மை ஓதி நின்றது தமிழ் மறையும் முறையுமாகும். (மறை - வேதம் முறை - ஆகமம்.)

1222. உணர்ந்தெழு மந்திரம் ஓம்எனும் உள்ளே
மணந்தெழும் ஆங்கதி யாகிய தாகும்
குணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்தெழும் காணும்அக் காமுகை யாமே.

பொருள் : அகத்தே உணர்ந்தெழும் மந்திரம் ஓம் என்று சொல்லும். அம்மந்திரத்தினுள்ளே பொருள்விளக்கமாகத் தோன்றும் ஆகும் நிலையும் கைகூடும். மேன்மைப் பண்புகள் அனைத்தும் இயல்பாகவே அமைந்துள்ள மறைபொருளாகிய சிவனும் சிவையும் பிறவக்கூடி ஆருயிர்களுடன் கலந் தெழுவர். இவ்வாறு எழும்படி காண்பது உயிர்கள் மாட்டு மிக்க விருப்பமுள்ள அம்மையினால் ஆகும். (கணந்து - கலந்து.)

1223. ஆமது அங்கியும் ஆதியும் ஈசனும்
மாமது மண்டல மாருதம் ஆதியும்
ஏமது சீவன் சிகையங்கு இருண்டிடக்
கோமலர்க் கோதையும் கோதண்ட மாகுமே.

பொருள் : ஒளிக்கும் ஒளியருளும் பேரொளிப் பிழம்பாகிய சுடரும் நடப்பாற்றலாகிய ஆதியும், அவ் ஆதியை உடலாகவுடைய ஆண்டானும் திங்கள் மண்டலமும், காற்று முதலாகியதும் காவலாகிய உயிரெழுத்தும் உயிர் எழுத்துக்கு ஒலிதரும் சிகையாகிய நாதமும், நடுநாடியாகிய கோதண்டமும் இருண்ட கூந்தலின்கண் சிறந்த மலர்சூடிய திருவருள் அம்மையான் இயங்கும். (சீவன் சிகை - உயிர் அட்சரம் கோதண்டம் - சுழுமுனை)

1224. ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி
ஆகிய ஐம்ப துடனே அடங்கிடும்
ஆகும் பராபரை யோடுஅப் பரையவள்
ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே.

பொருள் : நடுநாடியின்கண் விளக்கமுறும் மனோமன்மணியானவள் ஐம்பத்தோர் எழுத்துக்களுள் அடங்குவள். அவளே பேரறிவுப் பேராற்றலுடன் பெரும் பொருளாவள். அவள் படைத்தல் முதலிய ஐந்தொழிலுக்கும் உரியவள் ஆவள்.

1225. தானிகழ் மோகினி சார்வான யோகினி
போன மயமுடை யார்அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவம்
தானாம் பரசிவம் மேலது தானே.

பொருள் : திருவருள், ஆருயிர்களின் அன்பை இயக்கும் மோகினி, அவளே சார்ந்த யோகினியாகிய காளி, பிறப்பு அற முயலும் பெரியோர் அம்மையின் திருவடியைப் போற்றுவர். எழுவகைப் பிறப்பினுள் மேலான மக்கட் பிறப்பு உயிரின்கண் மிக்கு விளங்குவது சிவம். அச்சிவம் தானாக விளங் குவது பரசிவம். அதற்கும் மேலாக விளங்குவது திருவருள் அம்மையாகும்.

1226. தானந்த மேலே தருஞ்சிகைதன்னுடன்
ஆனந்த மோகினி அம்பொன் திருவொடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
ஆனவை யோமெனும் அவ்வுயிர் மார்க்கமே.

பொருள் : முடின் கண்ணும் மேலாக விளங்கும் அம்மை உயிர் எழுத்துக்கு உயிர்ப்பு நல்கும் சிகையாகிய நாதத்துடன் பேரின்பம் தரும் அன்பியாவள். அன்பி-மோகினி. அழியாத திருவடிச் செல்வத்துடன் முதற்கண் வைத்த முதல்வியாவள். சொல்லப்படும் கூறுடையதானவை ஓமெனும் எழுத்தாம். அவ் எழுத்தின் வழிப்பயில்வார் உயிர்மார்க்கம் செல்பவராவர்.

1227. மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி
யார்க்கும் அறிய அரியாள் அவளாகும்
வாக்கும் மனமும் மருவிஒன் றாய்விட்ட
நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே.

பொருள் : உலகினர் உய்ய சமயநெறிகளை வகுத்த உமாதேவி தனது பதியுடன் பிரிப்பற்று விளங்குவள். யாவர்க்கும் அறிவதற்கு அருமையானவள். வாக்கும் மனமும் பொருந்தி ஒன்றான போது அவரது நுண்ணறிவில் விளங்கும் பெருமையினை யுடையவள். மார்க்கங்கள் தாசமார்க்கம் சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம் சன்மார்க்கம்.

1228. நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப்
பின்னறி வாகும் பிரான்அறிவு அத்தடம்
செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத்
தன்னெறி யாவது சன்மார்க்கம் ஆமே.

பொருள் : மிகக்கூரிய புலன்களைக் கொண்டு அறியும் மாந்தரின் அறிவு பின் அறிவாகும். கருவிகளை விட்டுப் பிரானுடன் ஒன்றிக் கருவிகள் இல்லாது அறியும் அறிவைப் பெறுவது செந்நெறியாகும். சிவத்துடன் பொருந்தி அடையப்படுவதே ஆன்மா அடையவேண்டிய நெறியாகும். இதுவே சன்மார்க்க மாகும்.

1229. சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமும்
துன்மார்க்க மானவை எல்லாம் துரந்திடும்
நன்மார்க்கத் தேவரும் நன்னெறி யாவதும்
சன்மார்க்கத் தேவியும் சத்தியென் பாளே.

பொருள் : சன்மார்க்கமாக அமைந்த நெறி, தூய நெறிகள் அல்லாத எல்லாவற்றையும் அகற்றிவிடும். நன்மார்க்கத்தால் நல்லொழுக்கம் ஆம். அச் சன்மார்க்கத்தைக் காட்டிய தேவியும் சத்தியேயாகும். (மார்க்கம் - முறைமை; ஒழுங்கு)

1230. சத்தியம் நானும் சயம்புவும் அல்லது
முத்தியை யாரும் முதல்அறி வாரில்லை
அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கால்
மத்தியில் ஏற வழியது வாமே.

பொருள் : சத்தியும் ஆன்மாவும் இவை இரண்டையும் உடைய சிவமும் ஆகிய மூன்றும் அல்லது முத்தி நிலையின் முடிவை அறிவார் ஒருவரும் இல்லை. உடம்புக்குள் உயிரை இணைத்து வைத்தால் அவ்வுடம்பு முதிர்ந்தால் நடுத்தண்டின் வழியாகச் சென்று உயிர்ப்பு உயரும். (உயிர்ப்பு - பிராணவாயு, அத்தி -அகரம், வித்து-மகரம், அத்திபழுத்தால் - சரீரம் பண்பட்டால்.)

1231. அதுஇது என்றுஅவ மேகழி யாதே
மதுவிரி பூழங்குழல் மங்கைநல் லாளைப்
பதிமது மேவிப் பணியவல் லார்க்கு
விதிவழி தன்னையும் வென்றிட லாமே.

பொருள் : அது இது என்று வாழ்நாளை வீணாகக் கழிக்காமல் தேன்வழியும் பூச்சூடியுள்ள கூந்தலையுடைய மங்கை நல்லாளைத் திங்கள் மண்டலத்து அமிழ்த வழியே சென்று வணங்க வல்லார்க்குப் பிறப்பு இறப்புக்கு உட்படுத்தும் விதி வழியையும் வென்றிடுதல் கூடும்.

1232. வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைப்புலன் தன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.

பொருள் : வெற்றியை யுடைய மங்கையாகிய பராசத்தியை உண்மையாக உணர்வார்க்கு விதியை வெல்லலாகும். வினைக்கூட்டங்களை வெல்லலாகும். ஐம்புல ஆசையையும் வெல்லலாம். பராசத்தியை உணர்வார்க்கு ஆகாமிய சஞ்சித கன்மங்களை வெல்லமுடியும்.

1233. ஓர்ஐம் பதின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரமிது
மாரன குழலாளும் அப்பதி தானும்முன்
சாரும் பதமிது சத்திய மாமே.

பொருள் : மிகப்பழங்காலத்துத் தமிழ் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றாக வழங்கப்பட்டன. அதற்குரிய தெய்வளங்களும் ஐம்பத்தொருவர் ஆவர். அவருள் ஒன்றி நின்றதும் அம்மையின் மெய்யுணர்வேயாகும். இம்முறைமை வழிவழியாக வருவது. கடவுளும் அங்ஙனம் வந்ததாகும். மலர்சூடிய கூந்தலையுடைய அம்மையும் அவள்தன் கணவனாகிய சிவபெருமானும் வந்து பெருந்தும் நிலையும் இதுவேயாகும். இஃது உண்மையாகும்.

1234. சத்தியி னோடு சயம்புவும் நேர்படில்
வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத்து ஒருவரும்
சித்தது மேவித் திருந்திடு வாரே.

பொருள் : சத்தியோடு சிவன் சேர்ந்தால் மூலப்பொருள் இன்றியே சங்கற்பத்தினாலேயே எல்லாம் தோன்றின. தோன்றவே அவற்றிற்குரிய கடவுளரும் தோன்றினர். இக்கடவுளரும் சித்தாகிய அறிவினை மேவிச் செம்மையுறுவர்.

1235. திருந்துசிவனும் சிலைநுத லாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய்து ஏத்த
அருந்திட அவ்விடம் ஆரமுத ஆக
இருந்தனள் தான்அங்கு இளம்பிறை என்றே.

பொருள் : இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதலே திருந்துதல் ஆகும். அங்ஙனம் திருந்திய சிவனும் சிலையாகிய விற்போலும் நெற்றியையுடைய அம்மையும் எழுந்தருளியிருக்கும் வெள்ளி மலையிற் சென்று வானவர்கள் போற்றி முறையிட்டுத் தொழ ஆண்டவன் அக்கொடிய நஞ்சினை எடுத்து அருந்தவும் தேவர்கள் அமிழ்தத்தை யுண்ணவும் அம்மை ஆரருள் புரிந்து இனிதாகக் குளிர்வித்து இருந்தனள்.

1236. என்றும் எழுகின்ற ஏரினை எய்தினார்
அன்றது ஆகுவர் தார்குழ லாளொடு
மன்றரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதிநின் றாளே.

பொருள் : என்றும் வளர்ந்தோங்கும் திருவருள் அழகினை எய்தினார் அப்பொழுதே அவ்வழகின் வண்ணமாகுவர். நடப்பாற்றலாகிய தார்குழளொடும், மதியொடும், வணங்கும் மாதவரோடும், தொடர்ந்து காணப்படும் பேரொளிப்பிழம்பாக அம்மை நின்றனள். (ஏர் - அழகு)

1237. நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய உள்ளொளி யாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே.

பொருள் : திருவருள் அம்மை நடப்பாற்றலுடன் நேர்பட நின்றனள். அவ்வருள் காட்டக் காணும் உள்ளொளியால் அஃது உணரப்படுவது. அவ்வடியின் கீழ்ச் சென்ற ஆருயிர்களின் நாட்டத்தில் வேண்டியவைகள் வந்து எளிதாகப் பொருந்தும் திருவடியுணர்வுகளும் தோன்றிடும்.

1238. தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி
ஈன்றிடும் ஆங்கவள் எய்திய பல்கலை
மான்தரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்
கான்றது வாகுவர் தாம்அவள் ஆயுமே.

பொருள் : அம்மை நன்னெறிச் செல்வார் அன்புகூர்ந்து விரும்பும் திருவுருவோடு தோன்றியருள்பவள். அவள்பல வேறுகலைகளையும் உணர்த்துவித்துப் படைத்தருள்வள். மான் போலும் கண்ணையுடைய அம்மையும் மாரனாகிய சிவபெருமானும் மெய்யடியார் முன் தோன்றி யருள்வர். அங்ஙனம் தோன்றி யருள்வதும் சிவபெருமானும் அம்மையும் பொருளால் ஒருவராயிருக்கும் உண்மையான் என்க.

1239. ஆயும் அறிவும் கடந்தணு ஆரணி
மாயம தாகி மதோமதி ஆயிடும்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயம தாநெறி யாகிநின் றாளே.

பொருள் : அம்மை ஆராய்வும் அறிவும் கடந்த நுண்ணியல்பானவள். அவள் கச்சுப் பூட்டபெற்ற கொங்கையையுடையவள். அவளே சொல்லமுடியாத மருட்சியுடன் மதோன் மத்தியாவள். அவள் செந்நிறம் வாய்ந்த அம்மை. அவளே சிவ்பேரின்ப அழகி. அவள் அன்பு நெறியில் அகப்படும் திருவாய் நின்றனள்.

1240. நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும்
குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே.

பொருள் : திருநெறியாகிநின்ற அம்மையைப் பின்னல் திருச்சடையையுடைய பிஞ்ஞகனோடும் பொருளால் பிரித்துப் பேசாமல் அம்மையின் குறிப்பின் வழிக் கூடி வேறொரு குறிப்பின்றி, அதுவே குறிப்பாகக் கொண்டு நோக்குவார் நல்லவராவர். அவர்தம் அறிவு அம்மையுடன் அடங்கி அருள் அறிவாகவே நிற்கும். பிஞ்ஞகன் - பின்னலையுடையவன்.

1241. ஆம்அயன் மால்அரன் ஈசன்மா லாங்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமயன் ஆளும் தெனாதென என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே.

பொருள் : அம்மையின் ஆணைபெண்ணுத் தொழில் புரியும் அயன், அரி, அரன், ஆண்டான் என்னும் ஆருயிர் இனமாம் அவர்கள் விரும்பும் நிலையினை அருளவும் மிகவும் சிறப்புத் தன்மை பொருந்திய ஒன்பது ஆற்றல்களும் ஒன்று கூடவும் தீரா இன்ப வடிவினனாகிய சிவபெருமான் திருநோக்கம் கொண்டனன். கொள்ளவே தென்னாதென எனத் தேன் உண்ணவந்து மொய்க்கும் ஆருயிர் வண்டினங்களின் நிலைக் களமாகிய ஒலி மெய்வடிவம் எய்திற்று என்பர்.

1242. வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களும்
கொந்தணி யுங்குழ லாள்ஒரு கோனையும்
வந்தனை செய்யும் வழிநவில் வீரே.

பொருள் : பூங்கொத்தணிந்த கூந்தலையுடைய அம்மையுடன் கோனாகிய சிவபெருமானையும் இன்ப நாட்டமே மிக்குடைய வானவர்களும் பொருள் நோக்கமே மிக்குடைய தானவர்களும் திங்கள் முதலாகச் சொல்லப்படுகின்ற எண்டிலக் காவர்களும் பயன் வேண்டிவந்து திருவடி போற்றுவர். (தானவர் - அசுரர்; வித்தியாதரர்.)

1243. நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபம்
கவற்றிய கந்தம் கவர்ந்துஎரி தீபம்
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே.

பொருள் : இடைவிடாது கூறப்பெறும் நல்ல மந்திரமும், நல்ல மலரும், தூபமும், கவர்ச்சியைத் தரும் வாசனைப் பொருளும், இருளைப் போக்கும் தீபமும் கொண்டு உலகில் பார்ப்பதிக்குச் செய்யப்பெறும் பூசையானது வேள்வியில் இடும் அவியை ஏற்கும் இறைவனுக்குரிய அர்ச்சனையாக அமையும். சத்தியை விட்டு அகலாத சத்தன் ஆதலின் பார்வதி பூசை பரமனுக்கு ஆயிற்று.

1244. தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பிலி
பூங்கிளி தங்கும் புரிகுழ லாள்அன்று
பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.

பொருள் : சத்தியை ஒருபால் கொண்டு உலகைத் தாங்கிய சிவன், அவளால் வந்த ஆக்கத்தால் உலகில் நிலைபெற்று ஒப்பற்றவனாகவும், அழியாதவனாகவும் உள்ளான். அழகிய கிளியை ஏந்திச் சுருண்ட சடையைத் தரித்த சாமுண்டியாகிய பார்வதி அன்று பாங்குடன் பரனை ஒரு பால் கொண்ட பராசத்தி ஆனமையால் அவளை வழிபடுவாயாக.

1245. பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர்
அற்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள்
நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை
விற்கொடி மாதை விரும்பி விளங்கே.

பொருள் : கரிய கொடிபோலும் நிறம் வாய்ந்த உமையம்மையை, ஆருயிர்கள் மாட்டு நீங்கா ஆர்வம் பூண்ட முதல்வியை, நல்ல கொடிபோலும் இடையினையுடைய எழிலியை மூன்று திருக்கண்களையுடைய மூப்பியை, தொடர் ஒளி விளங்கும் துணைவியைச் சூழ வரும் பொன்போல் விளங்கும் பணிப்பெண்கள் திருவடி தொட்டு வழிபடுவர். நீயும் அங்ஙனம் வழிபடுவாயாக.

1246. விளங்கொளி யாய விரிசுடர் மாலை
துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக்
களங்கொள் மணியுடன் காம வினோதம்
உளங்கொள் இலம்பியம் ஒன்று தொடரே.

பொருள் : மிக்கு விளங்குகின்ற ஒளியோடு கூடிய மலர் மாலையும், விரிசுடர் வாய்ந்த மணிமாலையும் விளங்கும் பராசத்தி, இருளைப் போக்கத் திருநீல கண்டம் விளங்குகின்ற சிவபெருமானுடன் மனத்தே காம விளையாட்டுக் கொள்கையில்லாத தோணித் தன்மையொத்த புணையாவாள். அவருடைய திருவடியைத் தொடர்ந்து வழிபடுவாயாக. (இலம்பியம் - உபதேசமொழி)

1247. தொடங்கி உலகினில் சோதி மணாளன்
அடங்கி இருப்பதென் அன்பின் பெருமை
விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
ஒடுங்கி உமையொடும் ஓருரு வாமே.

பொருள் : உலகினில் ஒளியினைத் தொடங்குவித்து அதற்கும் ஒளிகொடுத்து விளங்கும் சிவபெருமான் திருவருளின் கண் அடங்கியிருப்பது ஏன் ? அதுதான் பேரன்பாகிய காதலின் பெருமை பரந்த அடர்ந்த பெருஞ்சடைமேல் வருகின்ற கங்கையாள் நடப்பாகிய மறைப்பாற்றல் ஆவள். அவள் உமையாள் என்னும் வனப்பாகிய உறைப்பாற்றலின் கண் ஒடுங்குவள். ஆதலால் கங்கையும் உமையும் காணில் ஒருத்தியே.

1248. உருவம் பலஉயி ராய்வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடில்
புரிவளைக் கைச்சிஎம் பொன்னணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே.

பொருள் : இறைவன் அனைத்து உயிர்களையும் வடிவாகக் கொண்டு விளங்குவதை நின்றாக ஆராயின் ஒலிக்கின்ற வளையலையணிந்த பொன் ஒளியில் விளங்கும் மாதை இறைவன் மகிழ்ச்சியோடு பொருந்தி உலகைப் படைத்தான் என்பது கற்பனையாம். (உபசாரமாம்) அறிதற்கரியன எனினுமாம்.

1249. மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்
தாயம் புணர்க்கும் சலநதி அமலனைக்
காயம் புணர்க்கும் கலவியுள் மாசத்தி
ஆயம் புணர்க்கும்அவ் வியோனியும் ஆமே.

பொருள் : வளரும் திருச்சடையுடைய சிவபெருமான் மாயாகாரியமாகிய உலக உடல் கலன் ஊண் முதலியவற்றை இயைந்து இயக்கிப் படைத்தருள்வன். அவனே திருவடிப்பேற்றைச் சாரும் கூட்டுறவை நல்கியருள்வன். மறைப்பு ஆற்றலாகிய சலநதியை தாங்குபவனும் அவனே. இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய இறைவன் உயிர்களுக்கு வினைக்கு ஈடாக உடலை அளித்துக் கூட்டுவிப்பன் இவையனைத்தும் திருவருளோடு கூடிய கூட்டங் காரணமாக நிகழ்வன.

1250. உணர்ந்து ஒழிந் தேன்அவன் நாம்எங்கள் ஈசனைப்
புணர்ந்துஒழிந் தேன் புவ னாபதி யாரை
அணைந்துஒழிந் தேன்எங்கள் ஆதிதன் பாதம்
பிணைந்துஒழிந்த தேன்தன் அருள்பெற்ற வாறே.

பொருள் : எங்கள் ஆண்டவனை அவனருளால் உறுதியாக உணர்ந்தேன். அவளே புவனமாகிய உலக முதல்வன். அவனைப் புணர்ந்தேன்; அணைந்தேன்; எங்கள் ஆதியையுடைய முழுமுதல்வனைப் பின்னிக் கிடந்தேன். இவையணைத்தும் திருவருள் தரப் பெற்றவாறு என்க. (பிணைந்து - கலந்து.)

1251. பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணி
நற்றாள் இறைவனே நற்பயனே என்பர்
கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப்
பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.

பொருள் : நவசத்திகளுள் பெருமை பெற்றவள் மனோன்மணியாவாள். அவளைத் துணையாகக் கொண்டவர் இறைவனது திருவடியே அழிவில்லாத நற்பயனுடையது என்பர். கற்ற கல்வியின் பயனாகிய கருத்தை அறிவார்கட்கு அவன் திருவடியாகிய பொன்னொளி விளங்கும் மண்டலத்தை எய்துதல் ஒப்பற்ற பேறாம். இறைவன் திருவடியை அடைதலே கல்வியின் பயன் என்பதாம்.

1252. தனிநா யகன்த னோடு என்நெஞ்சம் நாடி
இனியார் இருப்பிடம் ஏழுலகு என்பர்
பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக்
கனியாய் நினைவதென் காரணம் அம்மையே.

பொருள் : குளிரால் மலர்ந்த அழகிய பூக்களைக் கையேந்திக் கனிந்த உள்ளத்துடன் அம்மையின் திருவடியை நினைந்து தொழுங் காரணத்தால் ஒப்பில்லாத முழுமுதல்களை என் நெஞ்சம் நாடுவதாயிற்று. அதன் பயனாக இனியார் என்னும் பெயர் சிவபெருமானுக்கு எய்துவதாயிற்று. அவ் இனியார் உறையும் உறையுள் ஏழுலகுக்கும் அப்பால் என்பர்.

1253. அம்மனை அம்மை அரிவை மனோன்மணி
செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்றும்
இம்மனை செய்த இன்னில மங்கையும்
அம்மனை யாகி அமர்ந்து நின்றானே.

பொருள் : உச்சி வீட்டுக்கரிய அம்மை மனோன்மணி என்ப. அவளே செம்பொருள் திருவடியின் உறையுளைச் செய்த திருமங்கை யாய் நிற்பள். அவள் இம்மனையாகிய இவ்வுடலைத் தந்தருளிப் பெருமைமிக்க நிலமடந்தை என்னும் பெயர் பூண்டனள். அவனே அழகிய அன்னையாய் ஆதியாய் யாண்டும் பொருந்தி நின்றனள். அவ் அருளம்மை தந்தருளிய ஒருமனை யாகிய ஓர் உடம்பிலேயே பிறப்பற முயலுதல் வேண்டும்.

1254. அம்மையும் அத்தவனும் அன்புற்றது அல்லது
அம்மையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை
அம்மையொடு அத்தனும் யானும் உடனிருந்து
அம்மையொடு அத்தனை யான்புரிந் தேனே.

பொருள் : உடல் உற்பத்திக்குக் காரணமான தாயும் தந்தையும் காதலால் ஒருவருக்கொருவர் உறவு கொண்டதே தவிர, என்னை அவர்கள் அறியமாட்டார்கள். சிவனும் சத்தியும் ஆன்மாவின் ஒன்றுபட இருந்ததில் என்னை எஞ்ஞான்றும் பிரியாத அம்மையையும் அத்தனையும் தொழுது நான் உய்ந்தேன்.

9. ஏரொளிச் சக்கரம்

(ஏர் - எழுச்சி ஏரொளிச்சக்கரம் மேல் நோக்கிய ஒளி வடிவான சக்கரம். மூலாதாரத்திலுள்ள அக்கினி எங்கும் வியாபித்து அனைத்தையும் தன்னுள் அடக்கித்தான் ஒன்றோயாம் நிற்கும் நிலை.)

1255. ஏரொளி உள்ளெழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னால்எழு நாதமாம்
ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே.

பொருள் : மூலாதாரத்தில் முளைத்தெழுகின்ற நான்கு இதழ்களையுடைய தாமரை மிக்க ஒளி வடிவினதாம் தூலவிந்து மாற்றி அமைக்கப்படுவதால் எழுகின்ற ஒளிசிரசில் நாதமாக அமையும். எழுகின்ற அக்கலை சிரசில் படர்ந்து எங்கும் நிறைந்த பின் அதன்நடுவில் அக்கினிமயமான சிவம் விளங்கும்.

1256. வன்னி ஏழுத்தவை மாபலம் உள்ளன
வன்னி எழுத்தவை வானுற ஓங்கின
வன்னி எழுத்தவை மாபெரும் சக்கரம்
வன்னி எழுத்திடு வாறுஅது சொல்லுமே.

பொருள் : சுடர்ச் சக்கரத்து எழுத்துக்கள் மிக்க வலுவைத்தருவன. அவ் எழுத்தே வானுற ஓங்கும் வழியும் வகுத்தன. அவ் எழுத்துக்களே மிகப்பெரும் சக்கரத்து அமைந்தன. அவ்எழுத்து அமைக்கும் முறையும் சொல்லப்படும். (வன்னி எழுத்து - ஏரொளிச் சக்கர எழுத்து.)

1257. சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்
சொல்லிடும் அப்பதி அவ்எழுத் தாவன
சொல்லிடும் நூறொடு நாற்பத்து நாலுரு
சொல்லிடு சக்கர மாய்வரு மேலதே.

பொருள் : கூறப்படும் விந்துவும் பன்னிரண்டு உயிர்ப்புக்களையுடையது. உயிர்ப்பு - பிராணன் அதன் தலைமை எழுத்து வடிவாகிய நாதமாகும். அவ் ஓசை வழியாக உலகம் தோன்றிடும் முறைமைக்குப் பன்னிரண்டும் பன்னிரண்டும் உறழ நூற்று நாற்பத்தி நான்கு அறைகள் உள்ள சக்கரம் தோன்றும். இது முதல் ஆறு மந்திரங்கள் வரை ஐம்பூதங்களின் உற்பத்தி கூறப்படுகிறது.

1258. மேல்வரும் விந்துவும் அவ்எழுத் தாய்விடும்
மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல்வரும் அப்பதி அவ்எழுத் தேவரின்
மேல்வரும் சக்கர மாய்வரும் ஞாலமே.

பொருள் : உச்சியளவும் சென்ற விந்துவும் நாதஓசையால் வெளிப்படும் அதனால் அது, நாத எழுத்தாகிய அகரமாகத் தோன்றும், அகர எழுத்துடன் கூடிச் சுழல மேற்கூறிய சக்கரம் உலகமாய் விரியும். பிருதுவி தத்துவம் கூறியவாறு.

1259. ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடும் அப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்தது எழுத்தே.

பொருள் : நூற்று நூற்பத்தி நான்கு அறைகளோடு கூடிய சக்கரமே உலகமாக விரிந்தது. உலக முதலாக நிற்பதும் நாதவிந்துகளாகும். ஞாலமும் யோசனையாகிய ஒரு நீட்டல் அளவையைக் கொண்டது. ஞாலமாக விரிவதற்குக் காரணமாக உள்ளது ஓசை என்க.

1260. விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்தது சக்கரமாக
விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.

பொருள் : எழுத்தாக விரிந்தது விந்துவும் நாதமும், சக்கரமாக எழுந்ததும் அவ் எழுத்துக்களே, அவ் எழுத்தின் சுழற்சியால் நிலம் விரிந்தது. அந்நிலத்தின் மேல் தோன்றுவது நீராகும். அகரகலை விரிவில் பிருதிவி அப்பு மண்டலங்கள் அமையும் என்பதாம்.

1261. அப்புஅது வாக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ்அனல் ஆயிடும்
அப்பினில் அப்புறம் மாருத மாய்எழ
அப்பினில் அப்புறம் ஆகாச மாமே.

பொருள் : நீராக அச்சக்கரம் விரிந்தது. அதன் பிறகு நீரினில் அக்கின் தத்துவம் விளங்கும். அக்கினிக்குப் பிறகு காற்றுத் தத்துவம் அமைய அதன்பிறகு ஆகாசத் தத்துவம் அமையும். இவ்வாறு நீரிலிருந்து ஒவ்வொன்றாய்த் தோன்றின.

1262. ஆகாம அக்கரம் ஆவது சொல்லிடில்
ஆகாச அக்கரத்து உள்ளே எழுத்தவை
ஆகாச அவ்எழுத்து ஆகிச் சிவானந்தம்
ஆகாச அக்கரம் ஆவது அறிமினே.

பொருள் : வெளியின் அடையாளமாகிய எழுத்தைக் கூறுமிடத்து ஆகாச அக்கரத்துள்ளே நிறைகின்ற நாத அக்கரத்துள்ளே நிறைகின்ற நாதவிந்துக்களாகிய வித்து எழுத்துக்களுமாகிய ஆகாச எழுத்தே சிவப்பேரின்பம் ஆவதறிக. இதுகாறும் திருப்பாட்டுக்களால் கூறிய ஐம் பூதங்களுக்குரிய எழுத்துக்கள் முறையே ல,வ,ர,ய,அ என்பன.

1263. அறிந்திடும் சக்கரம் ஐ அஞ்சு விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அவ்எழுத்து அப்பதி யோர்க்கும்
அறிந்திடும் அப்பக லோன்நிலை யாமே.

பொருள் : அறியப்பட்ட இச்சக்கரம் பத்து ஒளி வட்டத்தால் ஆயது இதை நாதம் முதலாகக் கொண்டு அறிக. அந்தந்த மண்டல நாயகர்கள் அங்குளர் என்று அறியவும். இறுதியாகவுள்ளது சிவசூரியனாகும் என்று அறிக. பத்தாவன; மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை, சூரியன், சந்திரன், அக்கினி, தாரகை என்று பத்து நிலைகளை அறிக அவைகளையும் கடந்தபோது சிவம் விளங்கும் என்பதாம்.

1264. அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும்
அம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும்
இம்முதல் நாலும் இருந்திடு வன்னியே
இம்முதல் ஆகும் எழுத்தலை எல்லாம்.

பொருள் : அந்த முதன்மையான ஆதாரங்கள் ஆறும் ஆதி எழுத்துக்கு உரியனவாகும். அவை அம்மை எழுத்தாகும், அதீத முதலான நான்கும் இருநடு என்ப. இரு நடு என்பது இரண்டுக்கும் நடு என்பதாகும். எனவே, மூலம் கொப்பூழ் மேல்வயிறு, என்னும் மூன்றனுள் நடுவாக உள்ள கொப்பழ் என்க. இது அனலுக்கு இடமாகும், இக் கொப்பூழிலிருந்து எல்லா எழுத்துக்களும் தோன்றும்.

1265. எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்தவை ஆறது அந்நடு வன்னி
எழுத்தவை அந்நடு அச்சுட ராகி
எழுத்தவை தான்முதல் அந்தமும் ஆமே.

பொருள் : மூலாதாரம் முதலாகச் சொல்லப்படும் எழுத்துக்கள் நூற்று நாற்பத்து நான்கும், அந்தந்தச் சக்கரங்களில் அமைந்துள்ளன. நடுவாக ஆறு எழுத்துமாகும். அவற்றுள் நடுவாகக் காணப்படுவது அனலாகும். எழுத்துக்கள் முதலும் முடிவும் ஆவன.

1266. அந்தமும் ஈறு முதலா னவையற
அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின்
அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே.

பொருள் : மேற்கூறிய அந்தமும் ஈறும் முதலானவை நீங்க, நெஞ்சம் மிடறு என்னும் ஈரித்தும் உள்ள எழுத்துக்கள் பதினெட்டாகும். பன்னிரண்டாம் நிலை எனப்படும் துவாதசாந்த அதீதத்தின் எழுத்துப்பதின் மூன்றாகும். அதன்மேல் திங்கள் மண்டிலம். அதன் மேல் அறியும் நிலையுளது.

1267. ஆவினம் ஆனவை முந்நூற்று அறுபதும்
ஆவினம் அப்பதின் ஐந்தின மாயுறும்
ஆவினம் அப்பதி னெட்டுடன் ஆயுறும்
ஆவினம் அக்கதி ரோன்வர வந்தே.

பொருள் : ஆவினம் - (அவ்+இனம்) அதன்வகை பகலவன்வகையாகத் தோன்றும் நாள்கள் முந்நூற்றுபது மாத்தின் இருகூறு பதினைந்து தினம் இது பிறையல்லது பக்கம் எனக் கூறப்படும். திங்கள் பன்னிரண்டும் கார் முதலாகச் செல்லப்படும் பருவம் ஆறும் ஆகிய பதினெட்டு இவை எல்லாமாகப் பொருந்துகின்ற கால எண்ணிக்கைகள் கால மெய்யினைப் படைத்தருளும் காலகாலனாகிய சிவபெருமானால் ஆவன. அதனால் அவன் சிவக் கதிரோன் எனப்படுவன். அக்கதிரோன் வர இவை எல்லாம் வந்தன் என்க.

1268. வந்திடும் ஆகாசம் ஆறது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்பதி ராசியும்
வந்திடு நாளது முந்நூற் றறுபதும்
வந்திடு ஆண்டு வகுத்துரை அவ்வியே.

பொருள் : வான்வமியாகக் கணக்கிடும் நாழிகை முப்பதும், பன்னிரு மனைகள் எனப்படும் இராசியும், இவற்றான் வரும் நாள்கள் முந்நூற்றறுபதும் அவ்விதியின்படி கணக்கிடப்படும் என்க. அவ்விதியே என்பது அவ்வியே எனத்திகரம் குறைந்து நின்றது. சூரியவீதி அமையும் முறை கூறியவாறு.

1269. அவ்வின மூன்றும்அவ் ஆடது வாய்வரும்
எவ்வின மூன்றும் கிளர்தரு ஏறதாம்
சவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம்
இவ்வின மூன்றும் இராசிகள் எல்லாம்.

பொருள் : அவ்வின மாகிய மூன்றும் ஆடாகிய மேஷவீதியும் எவ்வின மூன்றும்-விளக்கமிக்க ஏறாகிய ரிஷபவீதியும், செவ்வினமூன்றும் - தழைத்து விளங்கும் தண்டாகிய மிதுனவீதியும் எனப்பன்னிரு மனைகளும் பகுக்கப்படும். அவைவருமாறு (மேட வீதியில் இடபம், மிதுனம், கடகம், சிம்மம், என் நான்கு அடங்கும்) (இடப வீதியில் மீனம், மேஷம், துலாம், கன்னி என நான்கும் அடங்கும்) (மிதுனவீதியில் கும்பம், மகரம், தனுசு, விருச்சிகம் எனநான்கும் அடங்கும்) இந்த முறை வைப்பில் வேறுபாடுகளும் உள.

1270. இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்தபின்
இராசியுள் சக்கரம் என்றறி விந்துவாம்
இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்தபின்
இராசியுள் சக்கரம் நின்றிடு மாறே.

பொருள் : மூலாதார முதல் சக்கரங்கள் எங்கும் நிறைந்தபின் இதனை இராசிச் சக்கரம் என்று கூறுவர். இச்சக்கரம் விந்து என்னும் ஒளியால் நிலைபெறும். இவ்விந்துவும் நாதமும் அகவோசை புறவோசைகளால் ஒத்த இடத்து இராசியுள் சக்கரம் செவ்வே இயங்கும்.

1271. நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெல்லாம்
நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரின்
நின்றிடும் அப்புறம் தாரகை யானதே.

பொருள் : விந்து முதலாகக் கூறப்படும் எழுக்கள் எல்லாம் நாதம் உள்ளிருந்து ஒலிப்பிக்க ஒலிக்கும் அவ்வம் மனைக்குரிய எழுத்துக்கள் வரின் ஆங்கு நிற்கும். அதன்பின் தாரகை என்னும் நாள்கள் நிற்கும். மூல முதல்நிலைகள் ஆறினுக்கும் மனைகள் இவ்விரண்டாகும். நாள்கள் நட்சத்திரம் நாலரையாகும்.

1272. தாரகை யாகச் சமைந்தது சக்கரம்
தாரகை மேலோர் தழைத்தது பேரொளி
தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.

பொருள் : சக்கரம் நட்சத்திர வடிவாகச் சமைந்தது அந்த நட்சத்திரங்களுக்கு ஒளி கொடுத்துக் கொண்டு செழித்த சிவ ஒளி மேலாக நிற்கின்றது. இந்த நட்சத்திர சக்கரத்தில் சந்திரனும் சூரியனும் வர, நட்சத்ரவடிவமான எழுத்து முறையாகக் காணப்பட்டது.

1273. கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக்
கண்டிடு வன்னிக் கொழுந்தன ஒத்தபின்
கண்டிரும் அப்புறம் காரொளி யானதே.

பொருள் : காணப்படும் நட்சத்திர சக்கரங்கள் விந்துவினால் உண்டாவதாகும். அந்த விந்துவின் மேல் நாதமும் தோன்றும். அந்த நாதத்தின் மேல் அழல் வண்ணனாகிய சிவஒளி தோன்றும், இவையனைத்தும் ஒத்தபின் செம்மேனி எம்மானின் ஒரு பங்காகிய அம்மையின் காரொளி தோன்றும் இவ்வொளி எல்லாவற்றையும் இயக்கும்.

1274. காரொளி ஆண்டம் பொதிந்துஉலகு எங்கும்
பாரொளி நீரொளி காரொளி காலொளி
வானொளி ஒக்க வளர்ந்து கிடந்துபின்
நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.

பொருள் : அந்தக் கரிய ஒளியானது அண்டத்தை உள்ளிட்டு உலகு எங்கும் நிறையும் பாரொளியும் நீரொளியுமாகிய இரண்டும் அடங்குவதற்கரிய சாரொளியாகத் தீயொளியுமாகிய, அதனையும் அடக்கிக் கொண்டிருக்கும் கால் ஒளியாகிய காற்றொளியும், அதனையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் மேலொளி யாகிய வானொலியும் ஆகிய இவை எல்லாமும் மூலதாதர முதலாகத் தோன்றிய ஐம்பூத மண்டலங்களினும் நிறைந்து நிற்பதால அழகிய ஒளியாய் எங்கும் நிறைந்து நிற்கும் என்பது கருத்தென்க.

1275. நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்
நின்றஇவ் அண்டம் நிலைபெறக் கண்டிட
நின்றஇவ் அண்டமும் மூல மலம்ஒக்கும்
நின்றஇவ் அண்டம் பலமது விந்துவே.

பொருள் : பேரண்டங்களும் விரிந்த பல உலகங்களும் நிலைத்து நிற்கின்றன. ஊழி முடிவுவரை இவைகள் நிலைபெறக் காண்கின்றோம். இவைகளும் ஒருவகையான மூலமலத்துடுன் ஒக்கும். இவ்வண்டம் முதலியன நிறை பெறுவதற்கு அடிப்படை வலுவாக உள்ளது

1276. விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விரையதாம்
விந்திற் குறைந்திடு நாதம் எழுந்திடில்
விந்துவை எண்மடி கொண்டது வீசமே.

பொருள் : விந்து நாதம் என்னும் இரண்டு சமமாகக் கலந்தால் அவை அண்டத்துக்கு வித்து என்பர். விந்துவானது குறைந்து நாதமானது அதிகரித்துத் தோன்றுமானால் அது மந்திரவித்து என்பர். கூடும் முறைமை விந்துவை விடநாதம் எட்டுமடங்கு கூடுதல் என்பர். வீசம்- தற்போது 1/16 பாகம் நூல் எழுந்தகாலத்து எண்மடங்கு போலும்.

1277. வீசம் இரண்டுள நாதத்து எழுவன
வீசமும் ஒன்று விரைந்திடு மேலுற
வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே.

பொருள் : நாதத்தில் நின்று தோன்றுவன மந்திர வித்துக்கள் இரண்டு அவற்றுள் ஒன்று மேலோங்கும்படி விரைந்து செல்லும் வித்து நாதமும் மேலோங்கி எழுந்து ஒத்துடன் நின்றபின் அவைபரந்து விளங்கும். (வீசம் - விதை)

1278. விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத்தும் அளவினில்
விரிந்தது உட்கட்ட எட்டெட்டும் ஆகில்
விரிந்தது விந்து விரையது வாமே.

பொருள் : விந்து விரிந்த காலத்து வித்தாகிய பீசம் மறையும் அந்த விந்துவும் நாதத்து அளவினில் விரியும். உள்ளே அடங்கும் உயிர்ப்பு அறுபத்து நான்கு மாத்திரையாகும். அவ்வாறு விரிந்த விந்து அனைத்து உலகுக்கும் வித்தும் ஆகும்.

1279. விரையது விந்து விளைந்தன எல்லாம்
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்தவிஞ் ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் தானே.

பொருள் : தோன்றிய உலகங்கள் அனைத்தும் விந்து என்னும் காணரத்தின் உண்டாவன விந்துவால் விளைந்த உடலகத்து உயிரையும் சிவன் சேர்த்துவைப்பன். விந்து காரணமாக இவை எல்லாம் விளைந்தனஎன்ப. அந்த விந்து காரணமாக மேலான அறிவு உண்டாகும். மேலான அறிவு மெய்யுணர்வு.

1280. விளைந்த எழுந்தது விந்துவும் நாதமும்
விளைந்த எழுத்தது சக்கர மாக
விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்
விளைந்த எழுத்தவை மந்திர மாமே.

பொருள் : எழுத்துக்களுக்கு முதலாக விளைந்தது விந்துவும் நாதமும் அப்படி விளைந்த எழுத்தாகிய விந்துவும் நாதமும் சக்கரமாகும். அந்த எழுத்துக்களே மந்திரமாகும். உடம்பின் அகத்து - ஆறுநிலைக்களங்களுள்.

1281. மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில்
தந்திரத்து உள்ளெழுத்த ஒன்றுஎரி வட்டமாம்
கந்தரத் துள்ளும்இ ரேகையில் ஒன்றில்லை
பந்தமது ஆகும் பிரணவம் உன்னிடே.

பொருள் : தந்திரமாகிய வழிவகைகளால் அகத்தே எழுந்து தோன்றும் வட்டவடிவமான எரி ஒன்று உண்டு. இதுவே மந்திர சக்கரமெனச் சொல்லப்படும். கழுத்தளவிலும் அகத்தே வரிவடிவின்றி ஒலிவடிவேயாம். இவற்றிற்கெல்லாம் முன்னாக ஓமொழி பிணிப்புள்ளதாகும். அதனை முதன்மையாகக் கொண்டு அகவழிபாடாகிய தியானத்தைப்புரிவாயாக, கழுத்திடத்தை வெளிநிலை எனவும் கூறுவர். (தந்திரம்-ஆகமம் உன்னுதல் - தியானித்தல்)

1282. உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை
தன்னிட்டு எழுந்த தகைப்பறப் பின்னிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே.

பொருள் : அகவழிபாடாகப் புரியப்படும் ஓமொழி வட்டத்தில் பொருந்தித் தோன்றும் மந்திரம், கலந்துள்ள சக்கரத்தின் கண் வரையப்படுதல் தவறுதல் இல்லை. அம் மந்திரத்தை ஒட்டி எழுந்த தடை நீங்க அதன்பின் நிற்கும்படி சொல்லப்பட்ட மந்திரத்தை ஆராய்தலுமாம்.

1283. பார்க்கலும் ஆகும் பகையறு சக்கரம்
காக்கலும் ஆகும் கருத்தில் கடமெங்கும்
நோக்கலும் ஆகும் நணுக்கற்ற நுண்பொருள்
ஆக்கலும் ஆகும் அறிந்துகொள் வார்க்கே.

பொருள் : பிறப்பு இறப்புக்களாகிய பழம் பகையை அகற்றும் தன்மை வாய்ந்த சக்கரத்தை அன்புடன் நோக்குதலும் ஆகும். விரிந்த கருத்தின்கண் அமைத்துக் காத்தலுமாகும். சோர்வின்றி அதன் பாலே நோக்கல் நோக்கமாகிய தியானத்தைப் புரிதலும் ஆகும். அவ்வுணர்விற் காணும் நுண் பொருளை ஆக்கலாகிய அழுந்தி அறிதலைப் புரிதலுமாகும். (அழந்தியறிதல் - அனுபவித்தல்; துய்த்தல்.)

1284. அறிந்திடும் சக்கரம் ஆதி எழுத்து
விரிந்திடும் சக்கரம் மேலெழுத்து அம்மை
பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும்
குவிந்திடும் சக்கரம் கூறலும் ஆமே.

பொருள் : மேற்கூறிய முறையான் அறியப்படும் சக்கரம் ஆதியையுடைய சிவபெருமானின் எழுத்தாகிய சிகரமாகும். அதன் மேலெழுத்து அம்மை எழுத்தாகிய வகரமாகும். மற்றைய இடங்களில் நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு பூதங்களின் எழுத்தாகும். அலை முறையே ல வ ர ய என்ப.

1285. கூறிய சக்கரத்து உள்ளெழு மந்திரம்
ஆறியல் பாக அமைந்து விரிந்திடும்
தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரணம்
மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.

பொருள் : மேற்குறித்த சக்கரத்துள் தோன்றும் மந்திரம் ஆறு இயல்பு ஆகும். அங்ஙனம் அமைந்து விரியும் இவ் ஆறனுள் மாரணம் ஒழிந்த ஐந்தும் பகைமையை வெல்லுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஆறுவகையான; தம்பனம், மோகனம், உச்சாடனம், வித்துவேசணம், மாரணம், வசியம்.

1286. மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் அங்கனல் ஒக்கும்
மதித்தங்கு எழுந்தவை காரணம் ஆகில்
கொதித்தங்கு எழுந்தலை கூடகி லாவே

பொருள் : அனைத்துயிர்க்கும் நீங்கா அருள் புரிகின்றவள் என்று மதிக்கப்படும் அம்மையும் குறித்த சக்கரத்தின் முதல்வியாகும். அந்த அம்மையைப் பயில்வார்க்குப் பகையை வெல்லத் துணைசெய்யும் அழகிய அனலை ஒத்து அவள் காணப்படுவாள். அம்மை காரணமாக உடனெழும் ஐம்பூதங்களும் தொழில் செய்யுமாதலின். அவள் ஆணையின்றி அவை எத்தொழிலையும் செய்யவல்லனவாகா.

1287. கூடிய தம்பனம் மாரணம் வசியம்
ஆடியல் பாக அமைந்து செறிந்திடும்
பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்
தேடியுள் ளாகத் தெளிந்துகொள் வார்க்கே.

பொருள் : தனக்குள்ளேயே தேடித் தெளிந்து கொண்ட அன்பர்க்கு சேர்ந்த தம்பனம், மாரணம், வசியம் ஆகியவை இயல்பாகவே வந்து பொருந்தும். இவர்கள் இருப்பிடத்தில் பகை வரும் வந்து சேரார். பாடி என்பதற்குச் சரீரம் என்று பொருள் கொள்வாரும் உளர்.

1288. தெளிந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே
அளித்த அகாரத்தை அந்நாடு வாக்கிக்
குளிர்ந்த அரவினைக் கூடியுள் வைத்து
வளிந்தவை அங்கெழு நாடிய காலே.

பொருள் : மூலாதாரத்தில் தெளிவாகக் காணப்படும் சக்கரத்தினுள்ளே எல்லா எழுத்துக்கும் துணைசெய்யும் அளியையுடைய அகரம் நடுவாக எழுதப்படும் வட்டவடிவமான குண்டலினி ஆற்றல் அரவு வட்டமிட்டது போன்று காணப்படும். அதனை மனங்கூடி அங்ஙனம் அமைத்து வழிபடுவாராயின் நாடியது எளிதாகக் கைகூடும்.

1289. கால்அரை முக்கால் முழுதெனும் மந்திரம்
ஆலித்து எழுந்துஅமைந்து ஊறி எழுந்ததாய்ப்
பாலித்து எழுந்து பகையற நின்றபின்
மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே.

பொருள் : கால், அரை, முக்கால், முழுமை என்னும் மாத்திரைகளையுடைய மந்திரங்களை முறையாக ஒலிக்க, அவ்ஓசை எழுந்தன. பின்பு அது சக்கரத்துக்குப் பொருந்த அமைத்தது. மேலும் ஊறித்திகழ்ந்து முழங்கும். கருதிய பயனைக் கைகூடச் செய்தபின், அம்மந்திரத்தினை முறைப்படி மாற்றி ஒலிக்க உணர்ந்தவர்களுக்கு வேறு கருதிய பயனும் கைகூடும்.

1290. கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப்
பண்டையுள் நாவில் பகையற விண்டபின்
மன்று நிறைந்த மணிவிளக் காயிடும்
இன்றும் இதயத்து எழுந்து நமஎனே.

பொருள் : மேற்குறித்த மந்திரம் ஒலித்து வேண்டுவ பெற்று அமைந்த பின், அதன் செயல் அறுதியாகக் கூத்தன் எழுத்தாம் சிவ என்பதை உதடு அசையாமல் உள் நாவில் பண்டைப் பகையாகிய ஆணவம் அறும் பொருட்டு ஒலித்தபின், பொன்னம்பலத்தின்கண் விளங்கும் மணி விளக்காய் உள்ளம் பொலிவுறும். அத்தகைய உள்ளத்தில் நம எனக் கூட்டிச் சிவயநம என ஒலிப்பாயாக.

10. வயிரவச் சக்கரம்

(வயிரவர் சிவனது கோர மூர்த்தங்களுள் ஒன்று பகை முதலிய இடையூறுகளைப் போக்க இவரை உபாசிப்பது வழக்கம். இவருக்குரிய சக்கரம் வயிரவச் சக்கரம் ஆம்.)

1291. அறிந்த பிரதமையோடு ஆறும் அறிஞ்சு
அறிந்தஅச் சத்தமி மேல்இவை குற்றம்
அறிந்துஅவை ஒன்றுவிட்டு ஒன்றுபத் தாக
அறிந்து வலமது வாக நடவே.

பொருள் : வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு ஆதாரங்களிலும் அஷ்டமி நீங்கலாக நவமியில் நெற்றிக்கு மேலும், ஏகாதசியில் வலக்காதுக்குப் பக்கமும், திரியோதசியில் பிடரிப்பக்கமும் பௌர்ணமியில் இடது காது பக்கமும் ஆக பத்து இடங்களில் வயிரவரை அறிந்து சிரசில் வலப்பக்கமாகத் தியானிக்கவும்.

1292. நடந்த வயிரவன் சூல கபாலி
நடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாட லாமே.

பொருள் : மேற்கூரிய முறைப்படி நடந்து வயிரவக் கடவுளினது துணையை வேண்டி அவர் சூலத்தை உடையவரென்றும், கபாலத்தை உடையவரென்றும் மனங்கொண்டு பகைமேற்செல்லுதல் வேண்டும். அங்ஙனம் செய்வார் பகை வென்று பகைவன் கருத்தையும் கண்ணையும் போக்கி அவன்தன் உயிரினைத் தொட்டுண்ணும் போழ்து மிக எளிதாக அவன்தன் உடலைப் பந்தாடல் ஒத்துப் பந்தாடலாம்.

1293. ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டுஅங்கு
ஆமே தமருக பாசமும் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே.

பொருள் : ஆன்மாக்களின் பக்தியை ஏற்றுக் கொண்டு அவை விரும்பும் வண்ணம் திருவருள் பாலிக்கின்ற முதன்மை வாய்ந்த வயிரவர், இரண்டு கைகளில் கபாலமும் சூலமும் ஏந்தி, தமருகத்தையும் பாசத்தையும் மற்றும் இரண்டு கைகளில் தண்டிப்பதற்கு மேற்கொண்டவராய் மேலும் ஐந்து ஆறாம் கைகளில் சிரசும் வாளும் ஏந்தி நிற்பர் என்றவாறு. (ஆ - ஆன்மா. தமருகம் - உடுக்கை. பாசம் - கயிறு. கபாலம் - மண்டையோடு)

1294. கையவை யாறும் கருத்துற நோக்கிடும்
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்யர்உ ளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

பொருள் : ஆறு கைகளையும் அவற்றில் பொருந்திய ஆயுதங்களையும் மனம் பொருந்தித் தியானிக்கவும், அவனது திருமேனி செம்மை நிறமாக விளங்கும். அவன் மிகத் தூய்மையானவர் உள்ளத்தில் விளங்குவன். மெய்யான ஒளியைப் பொருந்தி உடலைக் கடந்து நீ பூசிப்பாயாக. வயிரவருக்குக் கைகள் ஆறு அவர் சிவப்பு நிறம்.

1295. பூசனை செய்யப் பொருந்திஓர் ஆயிரம்
பூசனை செய்ய மதுவுடன் ஆகுமால்
பூசனை சாந்து சவாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.

பொருள் : ஓராயிரம் உருச் செபித்துப் பூசிக்கவும். பூசனைக்கு நல்ல தேனை விரும்பிப் படையுங்கள். பூசனைக்குச் சாந்து, சவ்வாது, புனுகுச் சட்டம் ஆகியவற்றைச் சாத்தி நீர் பகை நீக்கம் வேண்டும். (பூசனை - சாத்துப்படி செய்தலை எனினும் ஆம்.)

1296. வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய வாறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகும் கருத்தே.

பொருள் : நாம் விரும்பும் வண்ணம் பகைவருக்குள் கலகமும் உண்டாகி விடும். விரும்பிய சட்கர்ம வித்தையை உண்மையாகப் பெற்றபின் விரும்பிய வழிகள் யாவும் பெற நீ நடப்பாயாக. அப்போது உனக்கு வேண்டிய எல்லாம் சித்திக்கும்.

11. சாம்பவி  மண்டலச் சக்கரம்

(சாம்பவி - சிவசத்தி. சிவசத்தி விளங்கும் சிவலிங்கத் திருமேனி நிறைந்துள்ள சக்கர மாதலின் சாம்பவி சக்கரம் எனப்பட்டது.)

1297. சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக விட்டிடன் மேலதாம்
காண்பதம் தத்துவ நாலுள் நயனமும்
நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே.

பொருள் : சாம்பவி மண்டலச் சக்கரத்தின் அமைப்பைச் சொன்னால், ஆகின்ற இதழ்கள் எட்டாக அமையின் மேலானதாகக் காணப்படுகின்ற இதழ்களில் விந்து, நாதம், சிவம், சத்தி ஆகிய நான்கனுள் விந்துவை நயனமாக நாம் அறிந்தோமானால் நாட்டார்கள் நம்மை வழிபடும் பேறு உண்டாகும்.

1298. நாடறி மண்டலம் நல்லஇக் குண்டத்துக்
கோடறி வீதியும் தொடர்ந்துள் இரண்டழி
பாடறி பத்துடன் ஆறு நடுவீதி
ஏடற நால்ஐந்து இடவகை யாமே.

பொருள் : நாடு அறிந்த சாம்பவி மண்டலமாகிய இக் குண்டத்துத் திரிவு முதலிய வேறுபாடுகள் அகல இரண்டு பக்கங்களிலும் வீதிகள் அமைத்துச் சிறந்ததாகக் காணப்படும் எட்டிதழ் நடுவிலுள்ள பதினாறு வீதிகளுள் இதழ்கள் அகல நான்கு மூலைகளும் அவற்றின் இடை இடம் நாலும் நடு இடமும் ஆம்.

1299. நால்ஐந்து இடவகை உள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நல்ல இலிங்கமாய்
நாலுநற் கோணமும் நந்நால் இலிங்கமாய்
நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே.

பொருள் : இருபது வரைகளைக் கொண்டது இச்சக்கரம். அதில் நடுவில் உள்ள வீதியில் நல்ல இலிங்க வடிவாயும் நான்கு நாற்கோணங்களிலும் நந்நான்கு இலிங்கமாயும் இடைவெளி நான்கிலும் நான்கு பூக்களும் நடுவிலும் அவ்வாறே பூவும் அமைக்க.

1300. ஆறிரு பத்துநால் அஞ்செழுத்து அஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறு நிருமல சிவாய நமவென்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.

பொருள் : நடுவீதியில் சகாரம் முதல் க்ஷகாரம் வரையுள்ள முப்பத்தைந்து மெய்யெழுத்துக்களையும் சிவாய நம என்று அஞ்செழுத்துக்களையும் வேறாகவுள்ள நிறத்திலே வலமாக எழுதுக. அதுவே தூய்மையான சிவாய நம என்று தெளிமின். தெளிந்த பின் கூறுக. அவ்வாறு கூறினால் சாதகர்க்கு ஒரு குறையும் இல்லை.

1301. குறைவதும் இல்லை குரைகழற் கூடும்
அறைவதும் ஆரணம் அவ்எழுத்து ஆகித்
திறமது வாகத் தெளியவல் லார்க்கு
இறவில்லை என்றென்று இயம்பினர் காணே.

பொருள் : சிவய நம எனக் கூறுவார்க்கு எவ்வகைக் குறையும் நேராது. ஒலிக்கும் வீரக்கழல் அணிந்தி திருவடியைக் கூடுதலுமாகும். இவ் வுண்மையினை அறைவதும் மறை நூலாகும். அதனால் மறை நூல் முறை நூலாகிய வேதாக மங்களும் அவ் ஐந்து எழுத்தால் ஆவன. இவ் உண்மையினைத் தெளிய வல்லார்க்கு இறப்பில்லை என்று செந்நெறிச் செல்வர்கள் கூறினர்.

1302. காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்
காணும் கனகமும் காரிகை யாமே.

பொருள் : புறத்தே காணப்படுகின்ற பொருளும் அகத்தே கருதிய தெய்வமும், போற்றுகின்ற ஊரும் பெருகிய புண்ணிய தீர்த்தமும், உணவும், உணர்வு உறக்கமும், முயற்சியின்றித் தானாகவே வந்தடையும் பொன்னும் ஆகிய எல்லாம் இச்சாம்பவியால் ஆகும்.

1303. ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேயாகப்
போமே அதுதானும் போம்வழியே போனால்
நாமே நினைத்தன செய்யலு மாகும்
பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.

பொருள் : ஐந்தெழுத்தும் தோன்றுவதற்கு இடனாம் நாதமாகிய ஓசை வழியேயாக, போகும் மேலிடமாகிய உச்சித் தொளை வழியாகச் சென்றால் நாம் நினைத்த எச்செயலையும் மறை ஆற்றலால் செய்தலும் ஆகும். நிலவுலகில் ஒருவரும் பகையாகார். அப்பார் மேல் எனும் பாடத்திற்கு, துறக்கவுலகாம் முதலிய உலகங்களிலும் பகையில்லை என்க.

1304. பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாள்நாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே.

பொருள் : சாம்பவி மண்டலத்தை வணங்குபவரிடம் பகையில்லையாம். நகைப்பிற்குரிய நிகழ்ச்சிகளும் இடம் பெறா. நாள்தோறும் நன்மைகள் உளவாம். தீவினைகளும் அவற்றால் உண்டாகும் பிறவிச் சக்கரமும் இல்லையாகும். தடையில்லை. தானும் சலம் போலத் தன்மையாக இருப்பர். சாம்பவிச் சக்கரத்தை வணங்குபவர் பிறவி அற்றவராதலோடு சாந்த குண சீலராய் இருப்பர்.

1305. ஆரும் உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே
யாரும் அறியாத ஆனந்த ரூபமாம்
பாரும் விசும்பும் பகலும் மதியதி
ஊனும் உயிரும் உணர்வது வாமே.

பொருள் : யாவரும் சாம்பவியை அஞ்செழுத்தாலே செபிக்கலாம். அதனால் எவரும் அறியாத ஆனந்த வடிவம் உண்டாகும். பிருதிவி முதல் ஆகாயமாயும் சூரிய சந்திர மண்டலமாயும் மேலான உடம்பில் உயிராயும் உயிரில் உணர்வாயும் அச்சாம்பவி விளங்கும்.

1306. உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே
அணைந்தெழும் ஆங்கதன் ஆதியது ஆகும்
குணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்தெழும் காணும்அக் காமுகை யாலே.

பொருள் : சிவாய நம என்று எண்ணுவார்க்கு உள்ளே உந்தியிலிருந்து சிரசு முடிய பிரணவம் உதித்தெழும். அப் பிரணவமே பஞ்சாக்கர வடிவமான இறைவனின் முதல் நிலையாகும். சிவனும் சத்தியும் நாதவிந்து தத்துவங்களிலிருந்து உடலைக் கொண்டு வரும். சத்தி சிவத்தை நோக்கிய போது தத்துவங்கள் விந்துவிலும் விந்து நாதத்திலும் ஆக இலயமடையும்.

12. புவனபதி சக்கரம்

(புவனைக்குரிய சக்கரம் புவனாபதி சக்கரம். புவனை என்பது சத்திக் குரிய பெயர். புவனைக் குரிய எழுத்துக்களும், சக்கரமும், உபாசனையும், பூசையும் இங்குக் கூறப்பெறுகின்றன. )

1307. சுகராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகராதி ஓராறு அரத்தமே போலும்
சகராதி ஓர்நான்கும் தான்சுத்த வெண்மை
ககராதி மூவித்தை காமிய முத்தியே.

பொருள் : திருமூலர் வட்ட எழுத்து வழங்கிய மிகப் பழங்காலத்து இருந்தவர் அவர் காலத்துத் தமிழின்கண் ஐம்பத்தோர் எழுத்து வழங்கியிருந்தன. அதனால் இங்ஙனம் ஓதியருளினார். ககர எழுத்து முன்னம் ஐந்தினமாக வழங்கி வந்தது. இதனைக் கவ்வருக்கம் என்பர். இவ்வெழுத்துப் பொன்மை நிறம் என்பர். அகராதி ஓராறும் என்பது ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ என்பன. இவை செம்மை நிறம் என்ப. சகர இனம் நான்கும் தூய வெண்மை நிறம் என்ப. க,அ,ச என மூவகையாகக் கூறப்படும். இம் மூவகை மந்திரமும் விரும்பிய வாழ்வினைத் தரும்.

1308. ஓரில் இதுவே உரையும்இத் தெய்வத்தைத்
தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோண மனம்இன்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயம் தானே.

பொருள் : ஆராயும் இடத்தில் யான் உரைக்கும் உரையும் இதுவேயாகும். தேறுமிடத்து இம்மந்திர வடிவமான புவனேசுவரியைத் தவிர தெய்வம் பிறிதில்லை. நான் ஒன்று சொல்லக் கேட்பாயாக. வாரி போன்ற முக்கோணத்தில் மனம் நித்தியானந்தத்தையும் அகண்டத்தையும் விரும்பின், அதுவே சிவனது வடிவம் என்று அறியும்.

1309. ஏக பராசத்தி ஈசற்குஆம் அங்கமே
யாகம் பராவித்தை யாமுத்தி சித்தையே
ஏகம் பராசத்தி யாகச் சிவகுரு
யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே.

பொருள் : ஒன்றாகிய பராசத்தியே இறைவனுக்கு அங்கமாவாள். அவளது திருமேனி வித்தையாம். அது முத்தியையும் சித்தியையும் தருவதாம். பராசத்தி ஒருத்தியே யாயினும் சிவகுரு வோடு பொருந்தி நிற்பதில் அவள் எட்டுச் சத்தியாக உண்மையில் உள்ளாள்.

1310. எட்டா கியசத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகு நாதாந்தத்து எட்டும் கலப்பித்தது
ஒட்டாத விந்துவும் தானற்று ஒழிந்தது
கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே.

பொருள் : இந்த எட்டு வகையாகிய சத்திகளும் அட்டாங்கங்களையுடைய யோகத்துக்கு அங்கமாகும். நாதாந்தம் கைவரப் பெற்றவர்க்கு இவ் எட்டும் கலப்பித்தல் அமையும். விருப்பத்தையும் விளைவித்துப் போகத்தில் செலுத்தும் வீரியமும் அற்று ஒழிந்தது. சிற்றின்பத்தில் நாட்டமுடைய கீழான மக்களுக்கு அடைய ஒண்ணாதது ஆயிற்று.

1311. ஏதும் பலமாம் இயந்திரா சன்அடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச்செம்பிற் சட்கோணம் தானிடே.

பொருள் : எல்லாப் பயனையும் தருமாறு இயந்திர ராசனாகிய புவனாபதிச் சக்கரத்தின் திருவடியாம் அதனை அறிந்து அவள் மந்திரத்தைக் குருவினால் அடைந்து, அதனை உடலில் நிறுத்திப் பயிலவும் ஆன்மா உடலில் மந்திராத்துவா ஆக நிலைபெற அங்கங்களைச் சிவஅங்கங்களாக நியசித்து உன் பிறவிசேர் கெடுமாறு செப்புத் தகட்டில் ஆறு கோணம் இடுவாயாக. (நியாசம் - தொடுதல்.) இந்த இராசன் எனப்பாடங் கொண்டு சந்திர மண்டலத்து அதிபதி எனப் பொருள் கொள்வாரும் உளர்.

1312. சட்கோணம் தன்னில் ஸ்ரீம்ஹிரீம் தானிட்டு
அக்கோணம் ஆறின் தலையில்ரீங் காரமிட்டு
எக்கோண மும்சூழ எழில்வட்டம் இட்டுப்பின்
மிக்கீர்எட்டு அக்கரம் அம்முதல் மேலிடே.

பொருள் : அந்த அறுகோணத்தில் ஸ்ரீம் ஹிரீம் என்ற பீசங்களை எழுதி அக்கோணம் ஆறின் உச்சியிலும் ஹிரீங்காரம் இட்டு எல்லாக் கோணங்களையும் சூழ அழகிய வட்டம் எழுதி, பின்பு அதன் மேல் பதினாறு உயிர் எழுத்துக்களையும் அகர முதலாக எழுதுக.

1313. இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே
அட்டஹவ் இட்டுஅதில் மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோசிரோம்
இட்டுவா மத்துஆங்கு கிரோங்கொன்று மேவிடே.

பொருள் : எழுதிய தாமரை இதழ்களில் நடுவிலுள்ள வெளியில் எட்டி ஹ என்னும் எழுத்தையும் உ என்னும் எழுத்தையும் சேர்ந்து ஸ்ரீ எழுதி அணுக. இதழ்களுக்கு மேலே கிரோம் கிரோம் என்பனவற்றை எழுதி அதன் இடப்பாகத்தில் ஆம் கிரோம் என்று விரும்பி எழுதுக.

1314. மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை அடையவே குரோங்கிரோங் கென்றிட்டுத்
தாவில்ரீங் காரத்தால் சக்கரம் சூழ்ந்து
பூவைப் புவனா பதியைப்பின் பூசியே.

பொருள் : விரும்பி எழுதிய சக்கரத்தின் மீது வலப்பாகத்தில், மாலை மாதிரியாக கிரோம் கிரோம் என்றிட்டு குற்றமற்ற ஹிரீம் என்னும் பீசத்தால்  சக்கரத்தைச் சூழ்ந்து புவனாபதி சத்தியைப் பூசிப்பாயாக. புவனாபதிச் சக்கரம் அமைக்கும் முறை கூறியவாறு.

1315. பூசிக்கும் போது புவனா பதிதன்னை
ஆசற்று அகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிய பிராணப் பிரதிட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியானம் அதுசெய்யே.

பொருள் : பூசிக்கும் போது புவனாபதியைக் காமாதி குற்றம் நீங்கிய மனத்தினில் நிலை பெற வேண்டும் என்று வேண்டி அதற்குரிய மந்திரங்களைச் சிந்தித்து உயிர் கொடுத்து அங்கே நிறுத்தி ஒளி விளங்கும்படி தியானம் செய்வாயாக. புவனாபதியின் அசல் பூசை கூறியவாறு.

1316. செய்ய திருமேனி செம்பட்டு உடைதானும்
கையிற் படைஅங் குசபாசத் தோடுஅபயம்
செய்யில் அணிகலன் இரத்தின மாமேனி
துய்ய முடியும் அவயவத்தில் தோற்றமே.

பொருள் : சிவந்த மேனியை உடையவளாய்ச் செம்பட்டுடை உடுத்து, கையினில் அங்குசம் பாசம் அபயவரதத்தையும் கொண்டு திருமேனியில் அணிகலன்களையும் இரத்தின ஆபரணங்களையும் தாங்கித் தூய்மையான கிரீடத் தோடு வடிவு கொண்டு தோன்றுவள். (அபய வரதம் - அஞ்சற்க என்னும் அடையாளம்.)

1317. தோற்போர்வை நீக்கித் துதித்தடைவிற் பூசித்துப்
பாற்பே னகமந் திரத்தால் பயின்றேத்தி
நாற்பால நாரதா யாசுவ காஎன்று
சீர்ப்பாகச் சேடத்தை மாற்றிப்பின் சேவியே.

பொருள் : அரைக்கு மேலுள்ள மேலாடையை நீக்கி முறையாகப் போற்றி வழிபடப் பாற்சோறு அமைத்துக் குழைத்த லாகிய நிவேதனம் பண்ணி, நாற் புறத்தும் நாரதாயா சுவாகா என்று சிறப்புப் பொருந்தியன சாத்தி எடுத்த மாலை முதலியவற்றை மாற்றிப் பின் தொழுவாயாக. தோற் போர்வை மேல் வேட்டி (பால் போனகம் - பாயாசம்)

1318. சேவிப் பதன் முன்னே தேவியைஉத் வாகனத்தால்
பாவித்த இதய கமலத்தே பதிவித்துஅங்கு
யாவர்க்கும் எட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேவி நினைந்தது தருமே.

பொருள் : நைவேத்திய பிரசாதத்தை உண்பதற்கு முன்னே தேவியை உன்னிடம் கலந்திருப்பவளாக் கண்டு இதய கமலத்தில் பதித்துக் கொண்டு அங்கு யாவராலும் கண்டறிய ஒண்ணாத இயந்திர ராசனை நீ மனத்துள் கொண்டு வழிபடுவாயாக. பின் நீ நினைத்ததை எல்லாம் தருவாள். (உத்வாகனத்தால் - இதயத்தில் ஒடுக்குவதால். இயந்திர ராசன் - புவனாபதி.)

13. நவாக்கரி சக்கரம்

(நவாக்கரி - நவ+அக்கரி = ஒன்பது அட்சரம். நவாக்கரி சக்கரம் என்பது அட்சரங்களைப் பீசமாககக் கொண்ட தேவி மந்திரம் அமைந்த சக்கரம். ஓர் எழுத்தே ஒன்பது எழுத்தாகவும் மாறி அமையும் வகையில் எண்பத்தொரு வகையாகவும் விரியும்.)

1319. நவாக்கரி சக்கரம் நானுரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி அக்கிலீ சௌமுதல் ஈறே.

பொருள் : வியத்த தன்மை வாய்ந்த வ கரமென்னும் ஓரெழுத்துக்கு உரியவள் திருவருள் அம்மை. அவளுக்குரிய நவாக்கரி சக்கரத்தை யான் ஓதப் புகுந்தால் அந்த நவாக்கரி எண்பது வகையாக எழுத்து மாறுதலால் காணப்படும். நவாக்கரி எழுத்து முதற்கண் கிலீம் என்பதும் முடிவில் சௌ என்பதும் ஆகும். (நவ - ஒன்பது - புதுமை)

1320. சௌமுதல் அவ்வொரு ஹெளட னாங்கிரீம்
கௌவுள் உடையுளும் கலந்திரீம் கிரீமென்று
ஒவ்வில் எழுங்கிலி மந்திர பாதமாச்
செவ்வுள் எழுந்து சிவாய நமஎன்னே.

பொருள் : முதற்கண் சௌ, ஒள, ஹெள, கிரீம், கௌ, ஐ, இரீம், சிரீம், கிலீம் ஆகிய இவை ஒன்பதும் மந்திர உறுப்பாகக் கொண்டு செம்மையாக உள்ளெழுந்த முறையில் சிவயநம எனக் கணிப்பாயாக. ஆதி மந்திரம் அஞ்செழுத்தென்பதும் அதனை உயிராகவும் ஏனைய மந்திரங்களை உடல் உறுப்பாகவும் கொண்டு வழிபடுக. (செவ்வுள் - செவ்வையாக.)

1321. நவாக்கரி யாவது நானறி வித்தை
நவாக்கரி உள்ளெழும் நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திர நாவுளே ஓத
நவாக்கரி சத்தி நலந்தருந் தானே.

பொருள் : நவாக்கரி யாவது நான் அறிந்த ஸ்ரீ வித்தையாகும். இதில் நன்மைகள் அனைத்தும் விளையும். இதனை நாவுள் வைத்து நினைக்கவே நவாக்கரி சத்தி நன்மைகளை அருளுவாள். நாவுளே ஓத - வாய் திறந்து உச்சரியாது நாப்புடை பெயரும் அளவில் உச்சரிக்க.

1322. நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை உம்மை விட்டோடும்
சிரந்தரு தீவினை செய்வது அகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடும் காணே.

பொருள் : ஞானமும் கல்வி முதலாகிய நலம் எல்லாம் தரும். கொடுமையைத் தரும் (சஞ்சிதம்) பழவினைகள் உம்மை விட்டு நீங்கும். இப்பிறவியில் அறியாமையால் ஈட்டப்படும் தலையான (ஆகாமியம்) வினைகளை நீக்கி வரங்களை அருளும். அங்ஙனம் அழியும்படி செய்யப் பேரொளிப் பிழம்பாகிய சிவன் வந்து வாய்த்திடுவன்.

1323. கண்டிடும் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே.

பொருள் : சக்கரத்தை வெள்ளி, பொன், செம்புத் தகடுகளில் அமைக்கவும். மனத்திலும் தியானியுங்கள். அப்படிச் செய்யின் உங்களுக்கு அமைய உள்ள வினைகளை வென்றுவிடலாம். ஒரு மண்டலம் வழிபட்டு வர திருவருள் துணையால் வெற்றிகள் உண்டாகும். மேலும் அச்சக்கரத்தை நினைத்த அப்பொழுதே எல்லா நலமும் பெருகும். (மண்டலம் - 7 வாரம்). இப்போது 40 நாள் என்பர்.

1324. நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறு
நினைத்திடும் நெல்லொடு புல்லினை யுள்ளே
நினைத்திடும் அருச்சனை நேர்தரு வாளே.

பொருள் : ஸ்ரீம் முதலாகக் கொண்டு கிலீம் ஈறாகத் தியானியுங்கள் அவ்வாறு தியானிக்கும் போது ஆதியாக உள்ளது ஈறாக அமையும். மஞ்சள் கலந்த அரிசியும் அறுகம் புல்லும் கொண்டு தியானித்து வழிபாடு செய்யுங்கள். உங்களது அருச்சனையை உகந்து வெளிப்பட்டு அருள்வாள்.

1325. நேர்தரும் அத்திரு நாயகிய ஆனவள்
யாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.

பொருள் : உங்களுக்கு வெளிப்பட்டு அருள் வழங்கும் பராசத்தி எவ்விதமான நிறமுடையவள் உணர விரும்பின் அழகிய காயாம்பூவைப் போலக் கரிய வண்ணமாகும். அவ் வண்ணம் தொழுவார்க்கு நினைத்தவை கைகூடும். அவள் உன்னை விரும்பும் படி நடந்து கொள்வாயாக. (நார் - அன்பு.)

1326. நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே.

பொருள் : இந்த உலகில எல்லா நன்மைகளும் உண்டாகும். காலன் நமக்குரிய ஆயுளாக எண்ணிய நாள்களும் கடக்கும். எங்கும் பரந்து செல்லும் சூரியனது கதிரைப் போலப் புகழும் பரவும். ஆதலால் பராசத்தி உன்னிடம் பொருந்தும் வகையில் நீ நடப்பாயாக.

1327. அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.

பொருள் : பொன் வெள்ளி நவரத்தினம் முதலியவை தாமே வந்து அடையும். பராசத்தியின் அருளும் ஞானமும் வரும். தேவர்கள் வாழ்வு சித்திக்கும். நீ அவனை அடையும் வகையை அறிந்து கொள்வாயாக.

1328. அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வானை முயன்றடு வீரே.

பொருள் : மக்கள் அமரர்கள் ஆவதற்காகச் சிவனை அறிவார்கள். அதனை அறிந்த தேவர்களுக்குத் தேவ தேவனாகிய பரமேஸ்வரன் அருள் செய்யும் பாய்கின்ற கங்கையைச் சூடி, அதன் வேகத்தை மாற்றியருளிய பரமேஸ்வரனை அடைவதற்கு நீ முயல்வாயாக.

1329. நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பாரணி யும் ஹிரீ முன்நீம் ஈறாந்
தாரணி யும் புகழத் தையல்நல் லாள்தன்னைக்
காரணி யும்பொழில் கண்டுகொள் ளீரே.

பொருள் : நீங்கள் வணங்குவதற்குரிய சக்கரத்தில் பொருந்திய எழுத்துக்கள் உலகம் புகழும் ஹிரீம் முதலாக நீம் ஈறாக உள்ளதாம். இதனை வழிபட்டு மாலையை அணிந்து புகழோடு கூடிய பராசத்தியை மேகம் போன்ற மண்டலத்தில் கண்டு கொள்ளுங்கள்.

1330. கண்டுகொள் ளும் தனி நாயகி தன்னையும்
மொண்டுகொ ளும்முக வசியம தாயிடும்
பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்
நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே

பொருள் : ஒப்பற்ற நாயகியாகிய சத்தியைத் தரிசியுங்கள். அள்ளிப் பருகும் படியாக முகப்பொலிவு உண்டாகும். மேன்மையான பரசிவம் மஞ்சமாகத் தாங்கும் நிலை பேறுடைய சத்தியைப் பழமையாகப் போற்றி மனத்துள் கொள்ளுங்கள். (வசியம் - கவர்ச்சி)

1331. பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்
நாடுடை யார்களும் நம்வச மாகுவர்
மாறுடை யார்களும் வாழ்வது தானிலை
கூறுடை யாளையும் கூறுமின் நீரே.

பொருள் : நீங்கள் எய்தும் பேறாகவுள்ள சத்தியின் பெருமையை எண்ணில் நாட்டை யுடைய மன்னரும் நம்வசம் ஆகுவர். நமக்குப் பகையானவர்களும் வாழ்வதும் இல்லை. ஆதலால் இறைவனை ஒரு கூற்றிலே யுடையவனைத் தோத்திரம் செய்யுங்கள்.

1332. கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை
ஆறுமின் அண்டத்து அமரர்கள் வாழ்வென
மாறுமின் வையம் வரும்வழி தன்னையும்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.

பொருள் : எட்டுத் திசைகளுக்கும் தலைவியாகிய நவாக்கரி சத்தியைத் தோத்திரம் செய்யுங்கள். அண்டங்களில் வாழ்கிற அமரர்கள் வாழ்வ எம்மாத்திரம் என அதில் வைத்த ஆசையை அறுங்கள். மீண்டும் பிறந்து இப்பூமியில் வரும் வழியை மாறுங்கள். நாயகியின் சிவந்த திருவடித் துணையைப் பற்றித் தெளிவு பெறுங்கள்.

1333. சேவடி சேரச் செறிய இருந்தவர்
நாவடி யுள்ளே நவின்றுநின்று ஏத்துவர்
பூவடி யிட்டுப் பொலிய இருந்தவர்
மாவடி காணும் வகையறி வாரே.

பொருள் : அம்மையின் திருவடியை இடைவிடாது நினைத்து இருந்தவர் நா அசையாது உள்ளே செவித்துக் கொண்டிருப்பர். அவ்வாறு தங்களது அசல் பார்வையைச் செலுத்தி விளங்க இருந்தவர் பெருமையுடைய திருவடியைக் காண்பவராவர்.

1334. ஐம்முத லாக வளர்ந்தெழு சக்கரம்
ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்
அம்முத லாகி அவர்க்குஉடை யாள்தனை
மைம்முத லாக வழுத்திடு நீயே.

பொருள் : ஐகாரத்தை முதலாகக் கொண்டு வளர்ந்தெழுவது நவாக்கரி சக்கரம். அந்த ஐகாரம் முதலாகவும் இரீம் ஈறாகவும் வரைவர். அகர முதலாக விளங்கும் சிவபெருமானுக்கும் உடையாளாக விளங்கும் முழு முதல்வியை மையாகிய மாயைக்கும் முதல்வியாக வழுத்துவாயாக.

1335. வழுத்திடு நாவுக் கரசிவன் தன்னைப்
பகுத்திடும் வேதமெய் ஆகமம் எல்லாம்
தொகுத்தொரு நாவிடை சொல்லவல லாளை
முகத்துளும் முன்னெழக் கண்டுகொள் ளீரே.

பொருள் : வணங்கப்பெறும் வாகீசுவரியான சத்தியை வேதாக மங்கள் எல்லாம் பகுத்து ஓதும். அவை அனைத்தையும் சேர்த்து நம் நாவால் பயில அதற்கு அருள்புரியு வல்லாள். அன்பர்களது திருமுகமும் அருள்பொலிவோடு முற்பட்டுத் தோன்றும் கண்டு கொள்வீர்களாக.

1336. கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம்
மன்றினுள் வித்தையும் மானுடர் கையதாய்
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.

பொருள் :  இவ்வாறுள்ள சக்கரத்தை ஒருவன் நாவில் எழுதிடில் கொண்ட இம் மந்திரமானது கூத்தப்பெருமானது வடிவமாகும். பொன்மன்றில் விளங்கும் சபாவித்தையும் மக்கள் கையதாகி மெல்லியலாகிய நவாக்கிரி கருணை பொருந்துதலால் உலகத்தையே வெல்லலாம்.

1337. மெல்லியல் ஆகிய மெய்ப்பொரு ளாள்தன்னைச்
சொல்லிய லாலே தொடர்ந்தங்கு இருந்திடும்
பல்லிய லாகப் பரந்தெழு நாள்பல
நல்லியல் பாலே நடந்திடும் தானே.

பொருள் : மென்மையான இயல்பினையுடைய உண்மைப் பொருளாகியவளைக் குரு உபதேசப்படி விடாது பற்றித் தியானித்திருங்கள். இன்ப துன்பக் கலப்புடைய நாள்கள் பலவும் நல்ல இன்ப நாள்களாகவே அமைந்துவிடும்.

1338. நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள் தானும்
நடந்திடும் கல்விக்கு அரசுஇவ னாகப்
படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே.

பொருள் : நன்மைகள் எல்லாம் இவன் நாவினால் சொன்னபடி நடக்கும். இவன் சொன்னவாறு சொல்லுக்குரிய பயனும் தொடர்ந்துவிடும். வாகீஸ்வரியே இவன்நாவில் உள்ளமையால் எல்லாக்கல்வியும் பொருந்தி நாவரசாக விளங்குவான். பரந்த உலகில் பகையும் இல்லாது போகும்.

1339. பகையில்லை கௌமுதல் ஐயது ஈறா
நகையில்லை சக்கரம் நன்றறி வார்க்கு
மிகையில்லை சொல்லிய பல்லுரு எல்லாம்
வகையில்லை யாக வணங்கிடும் தானே.

பொருள் : பகையைக் கெடுக்கும் கௌ முதல் ஐ ஈறாகவுள்ள சக்கரத்தை நன்றாக அறிபவர்க்கு பிறர் பழித்தலும் இல்லை. பற்பல வடிவங்களாகக் காணப்படுவன எல்லாம் இவருக்கு வேறாக இல்லை. ஆதலின் வேறு வகையின்மையாக எல்லாம் இவரை வணங்குவனவாம்.

1340. வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடு நல்லுயி ரானவை எல்லாம்
நலங்கிடும் காம வெகுளி மயக்கம்
துலங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே.

பொருள் : தத்துவ நாயகியை எல்லோரும் வணங்குவர். ஆதலால் அந்த நால்வர் எல்லாம் அவளிடம் பொருந்தி யிருப்பர். காமம் வெகுளி மயக்கமாகிய முக்குற்றங்களும் நீங்கிவிடும். எண்ணிய கருமம் கைகூடி விளங்கும். (நலங்கிடுதல் - ஒன்றுபடுதல்)

1341. தானே கழறித் தணியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனும் ஆமே.

பொருள் : தனக்கு மேல் பிறரின்றித் தானே பேசி அடங்குபவனாய், தான் ஒருவனே நினைத்தவண்ணம் ஒளிக்காமல் பேசுபவனாய், தானே பேரூழிக் காலத்தில் சிவனது சங்காரத் தாண்டவம் கண்டவனையும், தானே வழிபட்டு வணங்கித் தலைவனுமாய் ஆவான்.

1342. ஆமே அமைத்துயிராகிய அம்மையும்
தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடிற்
போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே.

பொருள் : எல்லா உயிர்களும் ஆகியவள் அம்மையே யாகும். எல்லாவற்றையும் பெற்றெடுத்த அழகு நிரம்பிய அன்னையும் ஆவாள், அவளது திருவடியைப் போற்றி வணங்கினால் நம்முடைய வினைகளும் போய்ப் புண்ணியன் ஆகலாம். (புண்ணியம் - இறைபணி)

1343. புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங்கு இருந்திடும்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே.

பொருள் : உலகமெங்கும் பொருந்திப் புண்ணியனாகி, மதிக்கத் தக்கவனாக அனைவருடன் கலந்து விளங்குவான். கருணை நிறைந்தவனாக உலக முழுவதும் மிகவும் இனியனாக அமர்ந்திருந்தான். அண்ணித்தல்  இனித்தல். இத்தன்மைகளை உடையவன் சிவபெருமான் என்க.

1344. தானது கிரீம் கௌவது ஈறாம்
நானது சக்கரம் நன்றறி வார்க்கெல்லாம்
கானது கன்னி கலந்த பராசக்கதி
கேளது வையங் கிளரொளி யானதே.

பொருள் : சக்கரத்தின் பீசமானது கிரீம் முதல் கொள ஈறாகும். அது நானாகவுள்ள சக்கரம் என்று அறிபவர்க் கெல்லாம் அஞ்ஞான மயமான காட்டில் இருள் மயமாகக் கலந்திருந்த அழியாத பராசத்தி உறவாகி அறிவான நிலையில் ஒளியாக எல்லா உயிர்களிடமும் விளங்குகின்றாள்.

க்+இரீம்=கிரீம்  என்றாயிற்று

(சக்கரம் வரைபவர் எழுத்துக்களை மாற்றியும் வரைவர். அது மரபாகும் பராசத்தி - பேரறிவுப் பேராற்றல் பெற்றவள்.)

1345. ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்
களிக்கும் இச் சிந்தனையில் காரணம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே.

பொருள் : ஒளி செய்கின்ற பராசத்தி மனத்தில் எழுந்தருளினால் களிக்கும் மனத்தில் உண்மைப் பொருளினை விளக்கித் தெளிவினைத் தரும் மழையுடன் செல்வத்தையும் உண்டாக்கும். இவளை அறிந்து கொள்வார்க்கு இங்ஙனம் அருள்புரியும். உபாசகன் விருப்பப்படி மழைபெய்து வறுமை நீங்கும் எனினுமாம்.

1346. அறிந்திடும் சக்கரம் அருச்சனை யோடே
எறிந்திடும் வையத்து இடரவை காணின்
மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யும்
பொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே.

பொருள் : அருளால் அறிந்து கைக் கொண்டொழுகும் நவாக்கரி சக்கரத் தினை வழிபடுவாயாக. அஃது உலகத் துன்பங்கள் அனைத்தையும் நீக்கும். சிறையில் அடைத்துத் தண்டம் செய்யும் மன்னனும் வலியவந்து வழிபடுமாறு செய்யும். உள்ளத்தைக் கலங்க வைக்கும் எவ்வகைத் துன்பங்களும் உளவாகா. எறிந்திடும்-விலக்கும். (புகை-துன்பம். காவல் மறித்திடும் - சிறையில் வைத்திடும்.)

1347. புகையிலை சொல்லிய பொன்னொளி யுண்டாம்
குகையில்லை கொல்வது இலாமையி னாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம்
சிகையில்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே.

பொருள் : நவாக்கரி சக்கர வழிபாடு உடையவர்கட்குப் புகையாகிய துன்பம் இல்லை. அகத்தவத்தோராகிய யோகிகளுக்கு உண்டாகும் கடவுள் காட்சியாம் பொன்னொளி அகத்தே காணப்படும். அத்தகையோர் கொலையும் புலையும் விடுத்த சிவ நிலையினராதலின் அவர்கட்குப் பிறவி யில்லை. மன்னுயிரை யெல்லாம் வேறுபாடு இல்லாமல்ஒக்கப்பார்த்து அவர் புரியும் கடவுள் தொண்டுக்கு முடிவில்லை. (குகை - கருப்பாசயம். இகை-முடிவு.)

1348. சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர்
காய்ந்தெழு மேல்வினை காண்கி லாதவர்
பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

பொருள் : தியானித்தவர் ஒளியுடல் பெற்று விளங்குவார். சினந்து எழுகின்ற ஆகாமிய வினைகளைக் காணாதவர் ஆவர். இவரிடம் பரவி எழுகின்ற உள்ளொளி அவர் வாழும் பிரதேசத்தில் படர்ந்தது. அதனால் அப்பகுதியினரிடம் பரவிய இருள் மயமான அஞ்ஞானம் கெட்டு ஒளி பெற்று ஞான மயமானவர்களாக விளங்கினர்.

1349. ஒளியது ஹெளமுன் நிரீமது ஈறாம்
களியது சக்கரம் கண்டறி வார்க்குத்
தெளிவது ஞானமும் சிந்தையும் தேறப்
பணிவது பஞ்சாக் கரமது வாமே.

பொருள் : ஒளியுடையதாகிய ஹெள என்பதை முதலிலும் கிரீம் என்பதை ஈற்றிலும் வரைந்து, திருவருட் களிப்பை உண்டாக்கும் அச்சக்கரத்தை வழிபடுவார்க்குத் தெளிந்த மெய்யுணர்வும் தெளிந்த நாட்டமும் கைகூடும். பின் செந்தமிழ்த் திருவைந்தெழுத்தினை உருவேற்றி முழுமுதற் சிவபெருமானை வழிபாடு புரிவாயாக.

1350. ஆமே சதாசிவ நாயகி யானவள்
ஆமே அதோமுகத்துள்அறி வானவள்
ஆமே சுவைஒளி ஊறுஓசை கண்டவள்
ஆமே அனைத்துயிர் தன்னுளும் ஆமே.

பொருள் : சதாசிவ மூர்த்திக்கு அனுக்கிரக சத்தியாக விளங்குபவள் இவளே. இவளே கீழ் நோக்கிய சக்தியாக உயிர்களைச் செலுத்துபவள் ஆவாள். இவள் சுவை ஒளி ஊறு ஓசையாகிய இவற்றை அறியும் அறிவாகத் துணைசெய்பவள். இவளே அருவநிலையில் எல்லா உயிர்களையும் தன்னிடம் அடக்கிக் கொண்டவள் ஆவள். நாற்றம் என்னும் ஐந்தாவது அறிவையும் கொள்க.

1351. தன்னுளும் ஆகித் தரணி முழுதுங்கொண்டு
என்னுளும் ஆகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீர்அனல் காலுளும் வானுளும்
கண்ணுளும் மெய்யுளும் காணலும் ஆமே.

பொருள் : எல்லா உலகங்களையும் கொண்ட ஈசானமூர்த்தி வடிவுடன் என்னுள்ளும் இடம் பெற்று விளங்கினன். அவளை மண்ணிலும் நீரிலும் ஒளியிலும் காற்றிலும் ஆகாய மண்டலத்திலும் கண்ணின் கருமணிப் பார்வையிலும் உடலிலும் காணலாம். மெய்ப் பொருளாகிய சிவனார் திருவுள்ளத் திருப்பவளும் அவளே என இவ்வகையாகக் கூறுதலும் ஒன்று.

1352. காணலும் ஆகும் கலந்துயிர் செய்வன
காணலும் ஆகும் கருத்துள் இருந்திடின்
காணலும் ஆகும் கலந்து வழிசெயக்
காணலும் ஆகும் கருத்துற நில்லே.

பொருள் : சத்தி உயிரோடு கலந்து நின்று உயிர்களுக்குச் செய்யும் உதவியைக் காணலாம். அவளை அடைய வேண்டும் என்ற ஒரே விருப்புடன் கூடி நிற்பவரிடம் சிவபோதம் இன்மையால் காணலுமாகும். அங்ஙனம் உயிர்க்கு உயிராக இருக்கும் அவள் வழியே உயிர்கள் தொழிலாற்றுவதைக் காணலாகும். ஆகையால் அவளிடம் என்றும் பிரியாத வண்ணம் கருத்துப் பொருந்தி நிற்பாயாக.

1353. நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக்
கொண்டிடும் வையம் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.

பொருள் : சாதகர்க்கு ஏழுலகமும் ஒன்றாகக் கலந்து விளங்கும் எல்லா உயிர்களிடமும் பொருந்தித் தானாகக் காண்பர். பூமியிலுள்ள எல்லா இயல்புகளையும் உள்ளவாறு அறிவர். உயிர்கள் வலிய எய்திய வினைகளை விலக்கும் உண்மைப் பொருளாகவும் நிற்பர்.

1354. மெய்ப்பொருள் ஒளமுதல் ஹெளவது ஈறாக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம்
தற்பொரு ளாகச் சமைந்தமு தேஸ்வரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே.

பொருள் : உண்மைப் பொருளாகிய ஒள முதல் ஹெள ஈறாகவுள்ள எழுத்துக்கள் விளக்கமாக அமைந்த சக்கரத்தில் சிவம் விளங்க எழுந்தருளிய அமுதேஸ்வரி நன்மையைத் தரும் பொருளாக உடலின் நடுவில் இருந்தாள்.

1355. தாதளதின் உள்ளே சமைந்தமு தேஸ்வரி
காலது கொண்டு கலந்துற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமும் கேடில்லை காணுமே.

பொருள் : முன் மந்திரத்தில் சொன்னவாறு மூலாதாரம் முதல் பிரமந்திரம் வரை சோதியாக விளங்கும் அமுதேஸ்வரியுடன் மூல வாயுவை மேலே கொண்டு வந்து பொருந்தும்படி செய்யின் நாள்தோறும் புதுமைகளைக் கண்டபின் சாதரது உறவாகிய உடலுக்கு அழிவில்லையாம்.

1356. கேடில்லை காணும் கிளரொளி கண்டபின்
நாடில்லை காணும் நாண்முதல் அற்றபின்
மாடில்லை வரும்வழி கண்டபின்
காடில்லை காணும் கருத்துற்று இடத்துக்கே.

பொருள் : கெடாது நிலைத்திருக்கும் திருவருள் ஒளியைக் கண்டபின் நாடு முதலிய வேற்றுமை இல்லை. கால வரையறையைக் கடந்தபின் முன்பின் கீழ்மேல் என்ற இடப்பாகுபாடுகளும் இல்லை. திருவருள் கைவந்து எய்தச் சீலம் முதலிய நானெறிகளைக் கண்டபின் பிறவித் துன்பங்கள் உளவாகா. ஆதலின் திருவருள் இடத்தில் உள்ளன்பபைச் செலுத்துவாயாக.

1357. உற்றிடம் எல்லாம் உலப்பில்பா ழாக்கிக்
கற்றிடம் எல்லாம் கடுவெளி யானது
மற்றிடம் இல்லை வழியில்லை தானில்லைச்
சற்றிடம் இல்லை சலிப்பற நின்றிடே.

பொருள் : தான் வந்துற்ற இடமாகிய உலகமெல்லாம் தோன்றாதவாறு பாழாக்கி அவ்வுலகத்தில் கண்டறிந்த யாவும் வெட்ட வெளியாயிற்று தானே எங்கும் நிறைந்திருத்ததலின் வேறு இடமில்லை. ஆதலின் சஞ்சரித்தலுக்குரிய இடம் சிறிதும் இல்லை. ஆதலின் அசையாது அனுபவத்தில் நிலைபெறுவாயாக. ஆருயிர் திருவருள் வலத்தால் சிவமாந்தன்மை எய்தும். அப்போதுள்ள நிலையாகும் இது.

1358. நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானே
நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட
நின்றிடும் மேலை விளக்கொளி தானே.

பொருள் : சாதகர்க்கு ஏழ்கடலும் முன் நிற்கும். ஏழு உலகங்களும் முன்நிற்கும் மனத்தினால் நினைத்தவை எல்லாம் இவன் முன்னே வந்து நிற்கும். சத்தி தன்னிடத்து நிலை பெறக் காண்பவர்க்கு சிரசின் மேல் விளங்கும் ஒளிகள் அமைந்து நிற்கும். அண்டத்தில் உள்ளவற்றை யெல்லாம் பிண்டத்தில் காணலாம் என்கிறார்.

1359. விளக்கொளி ஸெளமுதல் ஈறா
விளக்கொளி சக்கரம் மெய்ப்பொரு ளாகும்
விளக்கொளி யாகிய மின்கொடி யாளை
விளக்கொளி யாக விளங்கிடு நீயே.

பொருள் : விளக்கு கின்ற ஒளியாக விளங்கும் சௌ முதல் ஒள ஈறாக வுள்ள பீசங்களை யுடைய நவாக்கிரி சக்கரம் உண்மைப் பொருளாகும். அதில் விளங்கும் மின்கொடி போன்றவளை விளங்குகின்ற ஞானத்தை உடையவனாகி அறிந்து நீ விளங்குவாயாக.

1360. விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடு மெல்லிய லானது வாகும்
விளங்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.

பொருள் : இதனால் விளங்கும் மேல்வருகின்ற உண்மையை உணர்த்தப் புகுந்தால் எங்கும் விளங்கும் சத்தியேயாகும் இவ்வாறு விளங்குகின்ற உண்மை ஞானப்பொருளை உணர்ந்தவரே உணர்ந்தவராவர்.

1361. தானே வெளியென எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளியது வானவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே அனைத்துள அண்ட சகலமே.

பொருள் : தானே ஆகாயம் போல உருவின்றி வியாபகமாய் நின்றவள். தானே பரம ஆகாயமாய் நின்றவள். தானே எல்லாப் பொருளுமாகி அவை அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டவள். எல்லா அண்டங்களும் தானேயானவள். சத்தியின் ஐந்தொழில் ஆற்றல் கூறியவாறு.

1362. அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருபெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தில் நின்ற கலப்பறி யார்களே.

பொருள் : அண்டங்கள் அனைத்திலும் அளத்தற்கு அருமையாக  இருப்பவள். பிண்டமாகிய உடலில் ஞானம் விளங்கும் பெருவெளியைத் தனக்கு இடமாகக் கொண்டவள். ஓமம் செய்யும் ஓம குண்டத்தால் பல நன்மைகளைப்பெற்றாலும் கண்டத்துக்கு மேல் விளங்கி நிற்கும் நிலைபெற்ற கலப்பினை அறியாதவராக உள்ளனர்.

1363. கலப்பறி யார்கடல் சூழ்உலகு எல்லாம்
உலப்பறி யாருடன் ஓடுயிர் தன்னைச்
சிலப்பறி யார்சில தேவரை நாடித்
தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே.

பொருள் : கடல் சூழ்ந்த உலக மெல்லாம் சத்தி கலந்திருத்தலை உணரார்கள். உடலோடு கூடிய உயிர் ஒருநாள் உடலை விட்டுப்பிரியும் என்பதை அறியார்கள். சிறு தெய்வத்தை நாடினமையால் நாதத்தினை அறியார் இவ் வண்ணம் நடப்பது அவரது தலை எழுத்தாம்.

1364. தானே எழுந்த அச்சக்கரம் சொல்லிடின்
மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்
தேனே இரேகை திகைப்பற ஒன்பதில்
தானே கலந்த வறை எண்பத் தொன்றுமே.

பொருள் : மானே ! சுயம்புவாகத் தோன்றிய அச் சக்கரத்தைப்பற்றிச் சொல்லின் மதிக்கத் தகுந்த கோடுகள் குறுக்கும் நெடுக்குமாகப் பத்துக்கீறி அமைத்தபின், தேன் போன்றவளே ! இரேகைக்கு உட்பட்ட அறைகள் ஒன்பதாகத் தானே குறுக்கும் நெடுக்குமாக விளங்கும் அறை எண்பத் தொன்றாகும்.

1365. ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம்
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்
என்றியல் அம்மை எழுத்தலை பச்சையே.

பொருள் : பொருந்திய சக்கரத்தைப்பற்றிச் சொல்லும் போது கட்டங்களுக்கு வெளியான மதிமண்டலம் பொன் நிறமாம். கட்டங்களில் அடிப்படையாக அமைந்துள்ள ரேகைகள் சிவப்பு நிறமாக இருக்கும். கருணையுடைய சத்தியினது அட்சரங்கள் அடைக்கும் கட்டங்கள் பச்சை நிறமாகும்.

1366. ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய
வாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின்
காய்ந்தவி நெய்யுள் கலந்துடன் ஓமமும்
ஆம்தலத்து ஆமுயிர் ஆகுதி பண்ணுமே.

பொருள் : பொருந்திய மரப்பட்டையில் எழுதிய இப்பெண்ணாகிய சத்தி பீசங்களை எண்பத்தோர் அறைகளில் அடைத்தபிறகு அவிசை நெய்யுடன் கலந்து ஆராய்ந்து எடுக்கப்பட்ட இடத்தினின்று ஓமம் செய்தபின் பிராணாகுதியும் செய்க. அவிசு உப்பின்றி வெண் பொங்கல் நமசிவய மந்திரத்தை எழுத வேண்டுமென்று கூறுவாரும் உளர்.

1367. பண்ணிய பொன்னைப் பரப்பற நீபிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின்
துண்ணென நேயநற் நோக்கலும் ஆமே.

பொருள் : இயந்திரத்தில் அமைக்கப்பட்ட பொன்னை யொத்த சத்தியை நிதானமாக நீ சிக்கெனப் பற்றுக. தியானிக்கத் தொடங்கிய நாளிலேயே இன்பம் உண்டாகும். பொருந்திய புகழும் யாக கர்த்தாவாகிய பிரமனை ஒத்த பிறகு விரைவில் நேயப் பொருளாகிய சிவத்தொடு நன்றாகச் சேர்தலுமாகும்.

1368. ஆகின்ற சநதனம் குங்குமம் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
ஆகின்ற கற்பூரம் ஆகோ சனநீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேரநீ வைத்திடே.

பொருள் : அரைத்த சந்தனச் சாந்து குங்குமப்பூ, கஸ்தூரி, மணம் பரவுகின்ற பல வாசனைகளின் கூட்டு, சவ்வாது, புனுகு, நெய் ஆகின்ற பச்சைகற்பூரம், பசுவில் கோரோசனை, சேர்க்கின்ற ஒன்பது பொருள்களையும் ஒன்றுசேர்த்த நீர் சக்கரத்துக்குச் சாத்துவாயாக. (1) குங்குமம், (2) கத்தூரி (3) சாந்து (4) சவ்வாது (5) புழுகு (6) நெய் (7) கற்பூரம் (8) கோரோசனம் (9) நீர்.

1369. வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில்
கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத்
தச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே.

பொருள் : சத்தியோடு மனத்தை வைக்கும் தவத்தைச் செய்வதால் உள்ளே எழுகின்ற முதிராத இளங் கொங்கையுடைய வாலைப் பெண்ணைப் பொருந்தி நவாக்கரியாக விளைந்த இம் மந்திரத்தை ஆயிரம் கணக்கான உரு சிந்திப்பாயாக (தச்சு - வசியம்)

1370. சிந்தையின் உள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது
பந்தமா சூலம் படைபாசம் வில்லம்பு
முந்தை கிலீம்எழ முன்னிருந் தாளே.

பொருள் : மனத்தில் விளங்குகின்ற ஒளி வடிவான எம் தாயும் தந்தையுமாகிய நவாக்கரி தேவிக்குக் கைகள் ஆறு உள்ளன. அவற்றில் மழு, சூலம், தோட்டி, பாசம், வில்அம்பு, ஆகிய ஆயுதங்களுடன் முதல் கிலீம் பீசத்தையுடைய தேவி உபாசனை முன்பு வெளிப்படுவாள். (மழு-தீப்பந்தம்)

1371. இருந்தனம் சத்திகள் அறுபத்து நால்வர்
இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே
இருந்த கரம்இரு வில்லம்பு கொண்டே.

பொருள் : யோகினி சத்திகள் அறுபத்து நால்வர் இருந்தனர். கன்னிகள் எண்மர் இருந்தனர். இரு கைகளிலும் வில்லும் அம்பும் கொண்டு, யோகினி சத்திகள் சக்கரத்தை நோக்கியவராய்ச் சூழ இருந்தனர்.

1372. கொண்ட கனகம் குழைமுடி யாடையாய்க்
கண்டஇம் மூர்த்தம் கனல்திரு மேனியாய்ப்
பண்டமர் சோதிப் படரிதழ் ஆனவள்
உண்டு அங்கு ஒருத்தி உணரவல் லாருக்கே.

பொருள் : பொன்னாலாகிய காதணி, கிரீடம், ஆடை முதலியவைகளுடன் கண்ட இம்மூர்த்தல் கனல் திரு மேனியாய் பழமையாகவே சோதியைத் தனது இருப்பிடமாகக் கொண்டு விளங்குபவள் என்று அறிவார்க்கு வெளிப்பட்டு அருள்வாள். கண்ட இம்முத்தம் எனவும் பாடம்.

1373. உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கில்
கலந்திருந்து எங்கும் கருணை பொழியும்
மணந்தெழும் ஓசை ஒளியது காணும்
தணந்தெழு சக்கரம் தான்தரு வாளே.

பொருள் : இவ் வண்ணம் அறிந்து மனத்தினுள்ளே ஒப்பற்ற சத்தியைத் தரிசித்தால் அவள் எவ்விடத்தும் நீக்கமற நிறைந்த கருணை பொழிவாள். பின் எங்கும் கலந்துள்ள நாதமும் ஒளியும் ஆகிய பிரணவம் தோன்றும். உடலைத் தாண்டிய ஊர்த்துவ சகஸ்ரதளம் விளங்க அருள் செய்வாள். தணந்து-நீங்கி, (அஃதாவது சக்கரத்தினின்றும் வெளிப்பட்டு.)

1374. தருவழி யாகிய தத்துவ ஞானம்
குருவழி யாகும் குணங்களுள் நின்று
கருவழி யாகும் கணக்கை அறுத்துப்
பெருவழி யாக்கும் பேரொளி தானே.

பொருள் : பேரொளிப் பிழம்பாகிய பராசத்தி, உண்மையை விளக்கும் தத்துவ ஞானத்தைச் சிவர்களின் குருமண்டலத்திலிருந்து விளங்கும்படி செய்வாள். சீவர்களிடம் இறைமைக் குணங்கள் விளங்கும்படி நின்று கருவின் வழிப்பட்டுப் பிறக்கும் செயலை அகற்றி, பெரிய வழியாகிய வீட்டு நெறியை அருளுவாள்.

1375. பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர்
சீரொளி யாகித் திகழ்தரு நாயகி
காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம்
பாரொளி யாகிப் பரந்துநின் றாளே.

பொருள் : பேரொளிப் பிழம்பாகிய பெருங் சுடராய் மேலான ஒளியாகி விளங்குகின்ற தலைவி கருமையான ஒளி போன்ற கன்னியாகிப் பொன்னிறத்தோடு பூமி தத்துவத்தில் ஒளியாக எங்கும் விரிந்து நின்றாள்.

1376. பரந்த கரும்இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி
பரிந்தருள் கொங்கைகள் முத்தார் பவளம்
இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே.

பொருள் : அம்மையின் மேலே தூக்கிய இருகரங்களில் தாமரையும் குமுதமும் ஏந்தி அபய வரதமாகிய இருகரங்களும் கொய்கின்ற தளிர்போலும் அழகுடையனவாய் விரும்பியருளும் தனங்கள் முத்தும் பவளமும் நிறைந்து நல்ல மணி பொதிந்த ஆடையுடன் விளங்கும் அன்றே.

1377. மணிமுடி பாதம் சிலம்பணி மங்கை
அணிபவள் அன்றி அருளில்லை யாகும்
தணிபவர் நெஞ்சினுள் தன்னருள் ஆகிப்
பணிபவர்க்கு அன்றோ பரிகதி யாமே.

பொருள் : மாணிக்கம் பதித்த திருமுடியும் சிலம்பணிந்த திருவடியும் உடைய மங்கை செந்நிறப் பொருள்கள் அணிவதன்றிக் கருமை நிறம் வாய்ந்த பொருள்கள் அணிபவள் அல்லள். பேரன்பு பூண்டு ஒழுகும் மெய்யடியார் நெஞ்சினுள் அருளால் விளங்கித் தோன்றுவள். தொழுது வணங்கும் தொண்டர்க்குத் திருவடிப் பேறு நல்குவள்.

1378. பரந்திருந்து உள்ளே அறுபது சத்தி
கரந்தன கன்னிகள் அப்படிச் சூழ
மலர்ந்திரு கையின் மலரவை ஏந்திச்
சிறந்தவர் ஏத்தும் சிறீம்தன மாமே.

பொருள் : சக்கரத்தின் பரந்த இடங்களின் உள்ளே ஆற்றல்கள் அறுபதும் காணப்படும் ஆற்றல்கள் - சத்திகள். திருவருட் கன்னிகள் எண்மரும் சூழ மறைந்திருப்பர். விரிந்த இரு கைகளிலும் தாமரையும் குமுதமும் தாங்குவள். சிறந்த தொண்டர்கள் ஓதும் சிரீம் என்னும் வித்தெழுத்துத் திருவடிச் செல்வத்தை நல்கும்.

1379. தனமது வாகிய கையலை நோக்கி
மனமது ஓடி மரிக்கிலோர் ஆண்டில்
கனமவை யற்றுக் கருதிய நெஞ்சம்
தினகரன் ஆரிட செய்திய தாமே.

பொருள் : திருவருட் செல்வமாகிய அம்மையை மறவா மனத்தான் திரு ஐந்தெழுத்து ஓதி நோக்கினால் மன அடக்கம் எளிதாக வந்து வாய்க்கும். அடங்கிய மனத்துடன் ஓராண்டு பயின்றால் ஆசைப் பளுவாகிய பற்று நீங்கித் திருவருளால் எண்ணி எல்லாம் கைகூடும். சிவச் சுடராம் தினகரனார் திருவடிப்பேறே அவர் விழையும் செய்தியாகும்.

1380. ஆகின்ற மூலத்து எழுந்த முழுமலர்
போகின்ற பேரொளி யாய மலரதாய்ப்
போகின்ற பூரண மாக நிறைந்தபின்
சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.

பொருள் : மூலத்திடத்துத் தோன்றும் பெரிய தாமரைமலர் திருவருள் ஆற்றலாகிய அம்மை வீற்றிருந்தருள வாய்ந்த நறுமலர். அம்மலரின்கண் ஆருயிர்புரியும் அன்பிற்குத் தக்கவாறு திருவருள் பெருகும் பெருகியபின் செந்தழல் மண்டலமாம் சிவத்தின் திருவடியைச் சேர்ப்பிக்கும்.

1381. ஆகின்ற மண்டலத்து உள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத்து அறுவகை யானவள்
ஆகின்ற ஐம்பத்து அறுசத்தி நேர்தரு
ஆகின்ற ஐம்பத்து அறுவகை சூழலே.

பொருள் : மேற்கூறிய இச்சுடர் மண்டலத்துள்ளே விரும்பி உறைபவள் திருவருள் அம்மை. உயிரும் மெய்யுமாம் ஐம்பத்தோர் எழுத்தும் வித்தெழுத்து ஐந்தும் ஆகிய ஐம்பத்தாறு எழுத்துக்களையும் இயக்குபவளும் அவளே. அவற்றை இயக்கும் ஆணை யளும் அவளே. அலைகளை இயக்கும் அதிதேவதைகளுக்கு நடுவில் இருப்பவளும் அவளே.

1382. சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமாய்
ஆங்கணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கிய கையவை தார்கிளி ஞானமாய்
ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே.

பொருள் : சுடர்போன்ற முடியும் பாதமும் எங்கும் பரந்தெழுகின்ற சோதியாய் அவ்விடத்து முத்துப்போன்ற வெண்ணிற மேனியை உடையவளாய்த் தாங்கிய கைகளில் மஞ்சள் வரை யையுடைய பைங்கிளியும் ஞானமுத்திரையுமாக மேல் ஏந்திய கைகளில் பாசமும் அங்குசமும் கொண்டு விளங்குவாள்.

1383. பாசம தாகிய வேரை யறுத்திட்டு
நேசம தாக நினைத்திரும் உள்முளே
நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டில்
காசினி மேலமர் கண்ணுதல் ஆகுமே.

பொருள் : அம்மையின் திருவருளால் பாசமாகிய பற்றுக்கள் அனைத்தையும் அறுத்திட்டுப் பேரன்பால் திருவடியை இடையறாது நெஞ்சுளே நினைந்திரும். இப்பயிற்சி ஐந்தாண்டு நிறைவதன்முன் தீமைகள் அனைத்தும் தாமே அகன்றொழியும். நிலவுலகில் கண்ணுதல் திருவருள் கைவரப்பெற்று மெய்யடியாராகத் திகழ்வீர்.

1384. கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
பண்ணுறு நாதம் பகையற நின்றிடில்
விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்கார
மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.

பொருள் : பராசத்தியின் அருளைப் பெறும் வழியாகிய தடையற்ற நாத தரிசனம் தன்னுள் அமையுமாகில் ஆகாயமண்டலத்தில் உள்ள சோதி விளங்க ஹிரீங்காரப் பீசத்துக்குரிய சத்தி மண்டலம் அமையும். (வனப்பாற்றல் - பராசத்தி. நடப்பாற்றல் - திரோதான சத்தி.)

1385. மண்டலத்து உள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்
கண்டகத்து உள்ளே கருதி யிருந்திடும்
விண்டகத்து உள்ளே விளங்கி வருதலால்
தண்டகத்து உள்ளவை தாங்கலும் ஆமே.

பொருள் : நவாக்கரி சக்கரமாகிய ஒளி மண்டலத்துள் மிக்கு எழுகின்ற விழுச்சுடராகிய அம்மையை அருளால் கண்டு நெஞ்சுள்ளே இடையறாது நினைமின். அவ் அம்மையின் திரு அருளால் களங்க மொழியும். மாசு அகற்றி அம்மை விளங்கி வருதலால் நடு நாடியினுள் அம்மையுடன் ஆருயிரும் விளங்கித் தோன்றும்.

1386. தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்து
ஓங்கி எழுங்கலைக்கு உள்ளுணர் வானவள்
ஏங்க வரும்பிறப்பு எண்ணி அறுத்திட
வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே.

பொருள் : தாங்கிய விசாலமான உந்திக் கமலத்து ஓங்கி மேலே எழுகின்ற பிரணவத்துக்கு உணர்வாக உள்ளவள் வருந்தவரும் பிறவியை நினைத்து நீக்கி விட. அடங்கியிருந்த நாதம் வலிமையுடன் மேலோங்கி விளங்கும் நாபித் தடமலர் (மண்டலம் - மணிபூரகம். ஓசைமெய்  - நாத தத்துவம்)

1387. நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்
பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே.

பொருள் : நல்ல மணிகளை ஆபரணமாகவுடைய வாகீசுவரியும் பொன்முடியும் பொன்னாடையும் தரித்த இலக்குமியும் கவிதை பாடும் ஆற்றலை அளிக்கும் வெண்ணிற ஒளியில் விளங்கும் சரஸ்வதியும் ஆன்மாக்களின் நாயகியுமான மனோன்மணி சகஸ்ரதளத்தில் எழுந்தருளியிருந்தாள்.

1388. அன்றிரு கையில் அளந்த பொருள்முறை
இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை
மன்றது காணும் வழியது வாகவே
கண்டுஅங்கு இருந்தவர் காரணி காணுமே.

பொருள் : சத்தியை வழிபடுமுன் இடைகலை பிங்கலையால் வெளியே சென்று பொருளை அளந்த முறையாக, சத்தியை வழிபட்டபின் இவ்விரண்டுமே வெளிச்செல்லாது இரண்டு வெண்ணிற அமுதகலசங்களாக, சிற்றம்பலத்தைத் தரிசிக்க வழியாவதை அறிந்து அங்கு இருந்தவர் தத்துவங்களை இயக்கிக் கொண்டிருக்கும் காரணியைக் காண்பவர் ஆவர்.

1389. காரணி சத்திகள் ஐம்பத்து இரண்டெனக்
காரணி கன்னிகள் ஐம்பத்து இருவராய்க்
காரணி சக்கரத்து உள்ளே கரந்தெங்கம்
காரணி தன்னருள் ஆகிநின் றாளே.

பொருள் : காரணிகளாகிய அட்சரசத்திகள் ஐம்பத்திரண்டென காரணியாக அவற்றை இயக்கும் கன்னிகள் ஐம்பத்து இருவராக காரணி விளங்கும் சிற்றம்பலத்தில் வெளிப்பட்டும் மற்றைய தத்துவங்களில் மறைந்தும் இருந்து, காரணி தன் அருளாலே சீவர்களுக்கு வெளிப்பட்டு நின்றாளே.

1390. நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடில்
கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டில்
கொண்ட விரதநீர் குன்றாமல் நின்றிடின்
மன்றினில் ஆடும் மணியது காணுமே.

பொருள் : சர்வ காரணியாக விளங்கும் இச்சத்தியை சகஸ்ரதளத்தில் நிலைபெறக் கண்டு, ஓராண்டுச் சாதனையில் ஒளிமயமான பராசத்தி உன்னை விட்டு அகலாமல் இருப்பாள். நீங்கள் எடுத்துக் கொண்ட விரதம் குறையாமல் இருப்பின் பிறகு பரம ஆகாயத்தில் விளங்கும் சிவ சூரியனைக் காணலாம்.

1391. கண்டஇச் சத்தி இருதய பங்கயம்
கொண்டஇத் தத்துவ நாயகி யானவள்
பண்டையவ் வாயுப் பகையை அறுத்திட
இன்றென் மனத்துள் இனிதிருந் தாளே.

பொருள் : திருவருள் அம்மை நான்காம் நிலையாகிய நெஞ்சத் தாமரையின்கண் வீற்றிருந்தருள்வாள். அங்ஙனம் வீற்றிருந்தருளப் பட்டவர் அவள் தம் அருள்துணையால் நான்காம் பூதமாகிய காற்றினை வெல்லுவர். அம்மை உள்ளத்தின் கண் உயிர்க்கு உயிராய் இனிது இருந்தனள்.

1392. இருந்தஇச் சத்தி இருநாலு கையில்
பரந்தஇப் பூங்கிளி பாச மழுவாள்
கரந்திடு  கேடதும் வில்லம்பு கொண்டங்கு
குரந்தங்கு இருந்தவள் கூத்துகந் தாளே.

பொருள் : இந்த சத்தி தனது எட்டுக் கைகளிலும் விரிந்த பூ, கிளி, பாசம், மழு, வாள், தடுக்கும் தன்மையுள்ள கேடயம், வில், அம்பு, ஆகியவைகளைத் தாக்கி, ஆரவாரத்துடன் இருந்து கூத்தையும் விரும்பி நடித்தாள். 1. பத்மம் - விவேகம், 2. கிளி - நாதத்தொனி, 3. பாசம்-ஏகாக்கிரகசித்தம் உடைமையில் ஆசை. 4. மழு-ஒளி, 5. வாள் - அதர்ம நாசகம், 6. கேடயம் - தீமையைத் தாங்கி நிற்றல். 7. வில் - ஆத்மரூபலட்சியம், 8. பாணம் - சிவாத்ம ஐக்கிய பாவனை. இவை சத்தி நடனத்தின் தத்துவார்த்தமாகும்.

1393. உகந்தனள் பொன்முடி முத்தார மாகப்
பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
மலர்ந்தெழு கொங்கை மணிக்கச்சு அணிந்து
தழைந்தங்கு இருந்தவள் தான்பச்சை யாமே.

பொருள் : திருவருள் அம்மை பொன்முடியையும் முத்து மாலையையும் விழைந்தவள். நிறைந்த பவழ மாலையையும் செம்பட்டையும் பூண்டவள். அண்ணாந்து ஏந்திய வனமுலைகளின் கண் கச்சுப் பூண்டவள். ஆருயிர் இன்புற்றுய்ய மலர்ந்த திருமுகத்துடன் திகழ்ந்திருந்தனள். அவள்தன் திருமேனி பச்சை நிறமாகும்.

1394. பச்சை இவளுக்குப் பாங்கிமார் ஆறெட்டு
கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால்
கச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்
எச்ச இடைச்சி இனிதிருந் தாளே.

பொருள் : பச்சை நிறமுடைய இவளுக்குச் சத்திகள் நாற்பத்தெட்டும் மழலை மொழி பேசும் தோழியர் எண்மரும் எப்போதும் கூடிவருதலால் கச்சணிந்த கொங்கையோடு இருபுறமும் காவலை உடையவளாய் இளைத்த இடையினையுடையாள். இனிது வீற்றிருந்தாள்.

1395. தாளதின் உள்ளே தாங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்துகொள் என்று
மாலது வாக வழிபாடு செய்துநீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.

பொருள் : மூலத்திலே தாங்கியே சோதி வடிவாகிய சத்தியை சுழுமுனை மார்க்கமாகக் கலந்துகொள் என்று விருப்பம் அவ்வாறே யாக மூலவாயுவை மேலே செலுத்தி நீ காதலனைக் கூடச் செல்லும் காதலியைப் போல ஆகாயவீதிக்குச் செல்க.

1396. விண்ணவர் நாபி இருதயம் ஆங்கிடைக்
கண்ணமர் கூபம் கலந்து வருதலால்
பண்ணமர்ந்து ஆதித்த மண்டல மானது
தண்ணமர் கூபம் தழைத்தது காணுமே.

பொருள் : புருவ நடுவின்கண் மதிமண்டலத்து அமிழ்தம் தங்கியுள்ளது அது மந்திர உருவால் மேல்வயிறு நெஞ்சம் இவ்விரண்டிற்கும் மேலிடமாகிய கழுத்தின் கண் வந்து தங்கும் அதனால் அக் கழுத்திடத்தை அமிழ்தக் கிணறு என்று அறைவர். இதனால் உடம்பகத்துள்ள ஞாயிற்று மண்டலம் குளிர்ச்சி எய்தும்.

1397. கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள
தாபத்துச் சத்தி தயங்கி வருவதால்
ஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்து
பாசம் அறுக்கப் பரந்தன சூலமே.

பொருள் : அமிழ்தக் கிணற்றினுள் சத்தி தண்ணளிபொருந்திய பத்துத் திருமுகங்களோடு கூடியவள். அவளால் ஞாயிற்று மண்டலத்தின் வெப்பம் வேண்டிய அளவாக விளங்குகின்றது. ஆருயிர்கட்கு இடருற்ற பொழுதெல்லாம் அவ்இடரை யகற்றி நலமுறுத்தித் திடமுடன் வாழச் செய்யும் திருக் கைகள் இருபதென்ப. முத்தலை வேலாகிய சூலம் ஆவிகளது மும்மல அழுக்கை அகற்ற எங்கும் விரிந்து திகழ்கின்றது.

1398. சூலம்தண்டு ஒள்வாள் சுடர்பறை ஞானமாய்
வேல்அம்பு தமருகம் மாகிளி விற்கொண்டு
காலம்பூப் பாசம் மழுகத்தி கைகக்கொண்டு
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.

பொருள் : சூலம், தண்டு, ஒளிபொருந்திய வாள், ஒளிதரவல்ல ஞான வடிவாகிய வேல், அம்பு, தமருகம், பெருமையுள்ள கிளி, வில்தாங்கி, காலம்பூ, பாசம், மழு, கத்தி ஆகியவைகளைக் கைகளில் ஏந்தி அழுகிய சங்கு, அபயவரதம் விளங்கும் கைகளை எண்ணுவாயாக.

1399. எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்
எண்ணமர் கன்னிகள் நாற்பத்து நால்வராம்
எண்ணிய பூவிதழ் உள்ளே இருந்தவள்
எண்ணிய எண்ணம் கடந்துநின் றாளே.

பொருள் : விரும்பத் தகுந்த நாற்பத்து நான்கு ஆற்றல்க் தம்மைச் சூழ வீற்றிருக்கும் அருளாற்றலர் நாற்பத்து நால்வராவர். இவர்கள் நடுவுள் கழுத்தாகிய விசுத்தியின் இடமாக வீற்றிருந்தருளும் திருவருள் அம்மை நினைப்பைக் கடந்து நீங்காது நிற்கும் நிலையினள் ஆவள்.

1400. கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்தணி முத்து பவளம்கச் சாகப்
படர்ந்தல்குல் பட்டாடை பாதச் சிலம்பு
மடந்தை சிறியவள் வந்துநின் றாளே.

பொருள் : திருவருள் அம்மை அழகிய பன்மணி குயின்ற பொன்னார் நன்முடியினள். மாணிக்கத் திருத்தோடு அணிந்தவள். முத்தினாலும் பவழத்தினாலும் ஆய அணி அணிந்தவள். முத்தும் பவழமும் கரையில் கோத்த கச்சுப்பூண்டவள். இடையில் பட்டாடை உடுத்தவள். திருவடிக்கண்சிலம்பு பூண்டவள். மடந்தை வடிவில் வந்து நின்றாள்.

1401. நின்ற இச் சத்தி நிரந்தர மாகவே
கண்டிடு மேரு அணிமாதி தானாகும்
பண்டைய ஆனின் பகட்டை அறுத்திட
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்குண் டாமே.

பொருள் : இவ்வாறு நின்ற சத்தி இடையீடு இன்றி காணப்படும் மேருவாய் அணிமாதி சத்தியாகி பழைய சாத்திர அறிவு முதலியவற்றை அகற்றிவிடப் பொருந்திய சோதியை உணர்ந்தார்க்கு அறிவு உண்டாகும். (ஆனின் பகடு - ஆன்மாவின் பாசம்.)

1402. உண்டோர் அதோமுகம் உத்தம மானது
கண்டஇச் சத்தி சதாசிவ நாயகி
கொண்ட முகம்ஐந்து கூறும் கரங்களும்
ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானதே.

பொருள் : அருளோன் என்று செல்லப்படும் சதாசிவக் கடவுளின் கீழ் நோக்கிய திருமுகம் அம்மையின் திருமுகமாகும். அத் திருமுகமே சிறந்த தாகும். அவ்ஆற்றல் சேர் அம்மையே சதாசிவ நாயகி ஆவள். இத் திரு முகத்தோடு சேர்ந்து சதாசிவக் கடவுளுக்குத் துணைவியாகிய அம்மைக்கு ஐந்து திருமுகங்கள் உண்டு. ஐந்து திருமுகங்களுக்கும் பத்துத் திருக்கைகள் உண்டு (1+2+3+4=10.)

1403. நன்மணி சூலம் கபாலம் கிளியுடன்
பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும்
கன்மணி தாமரை கையில் தமருகம்
பொன்மணி பூணாரம் பூசனை யானதே.

பொருள் : நல்லமணி, சூலம், கபாலம், கிளி ஆகியவற்றோடு பல மாணிக்கங்களை யுடைய பாம்பு, மழு, கத்தி, பந்து, ஆகியவையும் சத்தியின் கரங்களில் உண்டு. மாணிக்கம் போன்ற தாமரை, தமருகம், கையில் ஆம், இவைகளுடன் பொன்னாலும் மணியாலும் அலங்கரிக்கப்பட்டவள். திருக்கைகள் பத்திலும் காணப்படும் பொருள்கள் கூறப்பட்டன.

1404. பூசனைச் சத்திகள் எண்ஐவர் சூழவே
நேசவன் கன்னிகள் நாற்பத்து நேரதாய்க்
காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவள்
மாசடை யாமல் மகிழ்ந்திருந் தார்களே.

பொருள் : பூசனைக்குரிய திருவருள் அம்மை கன்னிப்பெண்கள் நாற்பதின்மர் சூழ வீற்றிருப்பவாள். இக்கன்னிப் பெண்களைச் சூழ ஆற்றல் மிக்க நாற்பதின்மர் சூழ்ந்திருப்பர். இவற்றிற்கு நடுவே உலகச் சக்கரம் அமைந்திருக்கும் அச்சக்கரத்துள் வழிபாடு செய்வார்க்குக் குற்றமடையாமல் அம்மை எழுந்தருளியிருப்பள். (உலகச் சக்கரம் காசினிச் சக்கரம். பூப்பிரத்தான யந்திரம்)

1405. தரத்தின் உள்ளே தங்கிய சோதியைப்
பாரத்தின் உள்ளே பரந்து எழுந்திட
வேரது ஒன்றிநின்று எண்ணு மனோமயம்
காரது போலக் கலந்தெழு மண்ணிலே.

பொருள் : பிரணவத்தினுள்ளே விளங்கிய சோதியைச் சுமையாகிய உடலில் இருந்து உடலைக் கடந்து எழுந்திட அதுவே தனக்கு ஆதாரம் என்று உணர்ந்து அதை எண்ணி மனோலயம் பெறுவார்க்கு மண்ணினின்றும் நீரை முகந்தெழும் மேகம்போல் பராசத்தி சிரசில் வெளிப்படுவாள்.

1406. மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்
விண்ணில் எழுந்து சிவாய நமவென்று
கண்ணில் எழுந்தது காண்பரிது அன்றுகொல்
கண்ணில் எழுந்தது காட்சிதர என்றே.

பொருள் : சுவாதிட்டானச்சக்கரத்தில் நிலை கொண்டிருந்த அகர உகாரங்கள் சகஸ்ர தளத்தை அடைந்து சிவாயநம என்று அகக் கண்ணுக்குப் புலனாகும்படி விந்து நாதங்களாக வெளிப்பட்டன. அது காண்பதற்கு அருமையானது அன்று அந் நாதம் எழுந்தது சாதகனுக்குக்  காட்சி கொடுத்துத் தன் திருவடியில் வைத்துக் கொள்ளவேயாம்.

1407. என்றுஅங்கு இருந்த அமுத கலையிடைச்
சென்றுஅங்கு இருந்த அமுத பயோதரி
கண்டம் கரம்இரு வெள்ளிபொன் மண்ணடை
கொண்டங்கு இருந்தது வண்ணம் அமுதே.

பொருள் : புருவ மத்தியில் காணப்படும் திங்கள் மண்டலத்துள் வீற்றிருந்து அருளும் அம்மை அமுத முலையினள். அவளுடைய திருக்கழுத்து வெண்ணிறம், திருக்கை பொன்னிறம் அத் திருக்கையினிடத்து மண்ணலாகிய கமண்டலம் விளங்கும். அத்திருவருள் அம்மையின் நிறம் வெண்மை நிறமாகும். (வெள்ளி - சுக்கிலம், பொன் - சுரோணிதம் என்று பொருள் கொள்வாரும் உளர்.)

1408. அமுதம தாக அழகிய மேனி
படிகம தாகப் பரந்தெழும் உள்ளே
குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெமுதம தாகிய கேடிலி தானே.

பொருள் : நீலோற்பலமும் முத்தும் கலந்த குளிர்ச்சி பொருந்திய ஒளியில் ஆனந்த மயமாக விளங்கும் அழிவில்லாத பரமேஸ்வரி அமுதம் போன்ற அழகிய மேனியோடு வெண்ணிற ஒளியாக வெளிப்பட்டருள்வாள்.

1409. கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும்
நாடிலி கன்னிகள் நால்ஒன் பதின்மரும்
பூவிலி பூவிதழ் உள்ளே இருந்தவர்
நாளிலி தன்னை நணுகிநின் றார்களே.

பொருள் : கேடில்லாத முப்பத்தாறு சத்திகளும் நாடுதற்கு அருமையான முப்பத்தாறு தோழியர்களும், பிறப்பில்லாதவர்களும் சூழ இருப்பவர்களுமாகிய இவர்கள் காலவரையறையைக் கடந்து நின்ற அம்மையைச் சூழ நின்றார்கள் (பூவிலி - தோற்றம் இல்லாதவள்.)

1410. நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்துள் இருந்திடக்
கொண்டது ஓராண்டு கூடி வருகைக்கு
விண்டஒள காரம் விளங்கின அன்றே.

பொருள் : நெஞ்சத் தாமரையின்கண் எஞ்சாது விளங்கும் சிவபெருமானும், மேலே கூறிய திருவருள் அம்மையைச் சுடர் உருவாய் அன்பர்கள் உள்ளத்து அமைத்திடலால் அவர்கட்கு ஓர் ஆண்டில் கைகூடி அருள்வன். அக்காலத்து ஒளகாரம் முதலிய வித்தெழுத்துக்கள் விளங்கும் என்க. (வன்னி - சிவன். கூடிவருகை - சித்தியாதல்.)

1411. விளங்கிடு வானிடை நின்றலை எல்லாம்
வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக
நலங்கிளர் நன்மைகள் நாரணன் ஒத்துச்
சுணங்கிடை நின்றவை சொல்லலும் ஆமே.

பொருள் : விளங்குகின்ற வானத்தில் நிலைபெற்றுள்ள அண்டங்களில் வாழும் உயிர்கள் எல்லாம் மண்ணுலகில் வாழும் உயிர்களைப் போலச் சாதகரை வந்து வணங்கும். நாராயணனை ஒத்துப் பெறும் இன்பங்களைத் துன்பம் தரும் நோய் நிறைந்த இங்கு இருந்து சொல்ல முடியுமா ? முடியாது.

1412. ஆமே ஆதோமுக மேலே அமுதமாய்த்
தாமே உகாரம் தழைத்தெழும் சோமனும்
காமேல் வருகின்ற கற்பக மானது
பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.

பொருள் : கீழ் நோக்கியுள்ள திங்கள் மண்டிலத்தின் மேல் அமிழ்தமயமாய்த் தோன்றும் எழுத்து உகரமாகும். அதன் கண்திங்களும் செழித்து விளங்கும். முற்கூரிய கடம்பவனத்தில் எழுந்தருளியுள்ள திருவருளம்மை நெஞ்சத்தாமரையில் எழுந்தருளும் அழகிய கொடி போலும் அம்மையாகும். (கா - சோலை; கடம்பவனம்.)

1413. பொற்கொடி யாளுடைப் பூசனை செய்திட
அக்களி யாகிய ஆங்காரம் போயிடும்
மற்கட மாகிய மண்டலம் தன்னுள்ளே
பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.

பொருள் : பொற்கொடி போன்ற பராசத்தியை வழிபட்டால், அச்செருக்கினைத் தரும் அகங்காரம் போய்விடும். நிலை பெற்ற பெருவெளியாகிய பரம ஆகாயத்தில், பின்னியகொடி போல் விளங்கும் பேதையைக் காணலாம். சத்தி வழிபட்டால் அகங்காரம் நீங்கும். மற்கடம் - மன்கடம் - நிலைபெற்ற பெருவெளி.

1414. பேதை இவளுக்குப் பெண்மை அழகாகும்
தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்
மானத அவளுக்கு மண்ணும் திலகமாய்
கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே.

பொருள் : பேதையாகிய பராசக்திக்கு எல்லா உயிர்களையும் பேணும் பெண்மையே அழகாகும். இவ் வம்மைக்குச் சிவம் தந்தையாகும். மாதரசியாகிய இவளுக்கு மண்ணுலகம் சிறிய திலகமாய்ப் பல சத்திகள் சூழ மேலே குவிந்த இடத்தில் விளங்குவாள்.

1415. குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்
பரந்திதழ் ஆகிய பங்கயத் துள்ளே
இருந்தனள் காணும் இடம்ல கொண்டே.

பொருள் : கூடியிருக்கும் ஆற்றல் செல்விகள் முப்பத்திருவர், இவர்கட்கு அகமாகச் சூழ்ந்துவரும் கன்னிப் பெண்கள் முப்பத்திருவர் ஆவர். இவர்கள் அனைவரும் சூழ்ந்துவர இடப்பால் திகழும் விரிந்த இதழ்களையுடைய நெஞ்சத்தாமரையின்கண் வீற்றிருந்தருளும் அம்மை மூலமுதலாகிய ஆறுநிலைக் களங்களையும் கொண்டு தோன்றியருள்வாள்.

1416. கொண்டங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினைக்
கண்டங்கு இருந்தனர் காரணத்து உள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்கும் தேடுமால்
இன்றுஎன் மனத்துளே இல்லடைந்து ஆளுமே.

பொருள் : கூத்தனார் ஒளியினைக் கொண்டு அங்கு எழுந்தருளியிருக்கும் திருவருள் அம்மையை அகத்தவம் உடையோர் கண்டிருந்தனர். கூத்தனாரும் திருவருள் அம்மையாகிய சிவகாமியா ரும் கலந்த கலப்பால் உலகுடல் பொருள்கள் எல்லாம் காரியப்பட்டுத் தோற்றுகின்றன. தொன்மைச் செந்தமிழ்த் திரு நான்மறைகள் எல்லாம் அம்மையின் அடியிணையை எல்லா இடங்களிலும் தேடுகின்றன. அத்தகைய அம்மை என் உள்ளத்தைக் குடியிருப்பாகக் கொண்டு என்னை ஆண்டு அருளினள் என்க.

1417. இல்லடைந் தானுக்கும் இல்லாதது ஒன்றில்லை
இல்லடைந் தானுக்கு இரப்பது தானில்லை
இல்லடைந் தானுக்கு இமையவர் தாம்ஒவ்வார்
இல்லடைந் தானுக்கு இல்லாதுஇல் ஆனையே.

பொருள் : என்று நிலைத்த மாறாத இல்லாகிய திருவருள் அம்மையின் திருவடியைப் பெற்றவர் இல்லடைந்தவர் ஆவர். அத்தகைய திருவடி இல்லடைந்தார் யாண்டும் எவரிடத்தும் ஒன்றினையும் இரவார். அத்தகையோர்க்கு விண்ணாட்டில் வாழும் வினைப் பயன்சேர் இமையவரும் ஒப்பாகார். தாழ்ந்தவரேயாவர். அவர்கட்குக் கிடைத்தற்கரிய பொருள் என்று ஏதும் இல்லை. அதற்குக் காரணம் அவர்கள் புகலிடமாக ஆருயிர்க்குத் தலைவனாம் சிவபெருமானையே கொண்டிருத்தலான் என்க.

1418. ஆனை மயக்கும் அறுபத்து நால்தறி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்ஒளி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்அறை
ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே.

பொருள் : ஆன் ஆகிய உயிருடன் கலக்கும் உச்சித் தொளைக்கு மேல் சொல்லப்படும் அருளாணையாகிய நிலைக்களத்தினின்றும் மேல்நோக்கி எழுந்து விரியும் கதிர்கள் அறுபத்து நான்கு. ஓ மொழி உருவாகும் சிவபெருமான் ஆனை எனப்படுவான். ஆன்+ஐ= உயிர்கள் தலைவன் அவன் அவ் ஒளிகட்கு உள்ளொளியாக விளங்குவன். அச்சிவபெருமான் அவ்வொளிக் கதிர்களாகிய அறையில் வீற்றிருந்தருள்வன். சிவபெருமானும் மூல முதலா எழுந்து அப்பால் வரையும் செல்லும் திருவருள் ஆற்றலாகிய ஒலிக்களையும் அவ்வொலிக்கதிர்களூடு தோன்றியருளும்.

ஐந்தாம் தந்திரம் - (வாதுளாகமம்)

1. சுத்த சைவம்

(இயற்கைச் செந்நெறி)

(சுத்த சைவமாவது சடங்குகளில் நில்லாது தலைவனையும் தன்னையும் தளையையும் அறிந்து, தளையின் நீங்கித் தலைவன் திருவடிச் சார்பு பெறுதல். சைவம் சுத்தசைவர், அசுத்த சைவம், மார்க்க சைவர், சுடுஞ்சுத்த சைவம் என நால்வகையாம்.)

1419. ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடின்
மேருவும் மூவுல காளி இலங்கெழும்
தாரணி நால்வகைச் சைவமும் ஆமே.

பொருள் : ஊரையும் ஊர் அடங்கிய உலகத்தையும் ஒரு சேரப் படைக்கின்ற பேரறிவாளனாகிய இறைவனது பெருமையை அளவிட்டுக் கூறப்புகின், மேருமலையும், மூவுலகங்களையும் ஆளுகின்ற இறைவனிடமிருந்து தோன்றிய பூமியும் நால்வகைச் சைவமும் ஆகிய இவற்றின் பெருமைக்கு ஒப்பாகும்.

1420. சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கண்டு
சித்தும் அசித்தும் சேர்வுறா மேநீத்தும்
சுத்தம் அசுத்தமும் தோய்வுறாமே நின்று
நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே.

பொருள் : அழிவில்லாததும் அழிவுடையதும் இரு தன்மையும் கலந்ததும் ஆகியவை எவை என்பதை அறிந்து, அறிவும் அறியாமையும் சேராமல் விட்டும், சுத்த மாயை, அசுத்தமாயை ஆகிய இரண்டிலும் பொருந்தாமல் நின்று, அழியாப் பொருளான பரமே பார்த்திருப்பது சுத்த சைவர்க்கு ஆகும்.

(சத்து - சிவன், அசத்து - மாயை, உடல்; சதசத்து - ஆன்மா, உயிர், சித்து - ஞானம்; அசித்து - அஞ்ஞானம்.)

1421. கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
சொற்பத மேவித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.

பொருள் : கற்கத் தக்கனவற்றைக் கற்று, பதினாறு கலைகளையுடைய சந்திர கலைகளை அறிந்து சிவயோகம் பயின்று, அதில் முன்னாக விளங்கும் அகர உகர மகர விந்து நாதங்களின் அறிவை முறையாக அறிந்து, பிரணவ பதம் உணர்த்தும் சாந்தியதீனத கலையைப் பொருந்தி உயிரின் மாயா சார்பான குற்றத்தை விட்டு, மேலான சிவத்தைக் கண்டு உறைபவர் சைவசித்தாந்தர் ஆவார். (துரிசு - குற்றம்.)

1422. வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்த போதாந்த மாதுப் புனஞ்செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.

பொருள் : வேதாந்தமாவது சுத்த சைவ சித்தாந்தமாம். இந்நெறி நிற்போரே நாதவடிவமாகிய சிவத்தைத் தரிசித்த சலனம் அற்றவராவர். தத்துவ முடிவை ஞானமயமாகப் பண்படுத்த நாதமுடிவில் நிறைவுற்று விளங்கும் சிவம் அறியப்படு பொருளாவர். விளக்கம்; சுத்த சைவ சித்தாந்தமே வேதங்களின் முடிவு . (பூதாந்தம் - பூதங்களின் முடிவு போதாந்தம் - ஞானமுடிவு . புனம் செய்ய - ஐம்புலக் காட்டினைப் பண்படுத்த.)

2. அசுத்த சைவம் (மீ இயற்கைச் செந்நெறி)

(அசத்த சைவமானது, திருவேந்தரித்துச் சரியை கிரியையாகிய இரு நெறியில் நிற்பார் நிலையைக் கூறுவது.)

1423. இணையார் திருவடி ஏத்தும் சீரங்கத்து
இணையார் இணைக்குழை ஈரணை முத்திரை
குணமார் இணைக்கண்ட மாலையும் குன்றாது
அணைவாம் சரியை கிரியையி னார்க்கே.

பொருள் : தமக்குத் தாமே ஒப்பாகிய நூலுணர்வு, நுகர் உணர்வுகளாகிய இரண் திருவடிகளையும் தொழும் தன்மையர் உடம்பு சிறப்புடம்பாகும். அவர்கட்கு இரண்டு குண்டலங்கள் காதணியாகக் காணப் பெறும் திருநீறும், திரு ஐந்து எழுத்தும் அறிவடையாள அங்கையும், நற்பண்பு வாய்ந்த தலையினும் மார்பினுமாகிய இரண்டு சிவமணி மாலைகளும் குறையாது என்றும் பொருந்துவனவாகும். இத்தகையோர் சீலத்தர் நோன்பினர் என்று அழைக்கல் பெறுவர். (சீர் அங்கம் - சிறப்பு உடம்பு. சரியை - உடம்பினால் இறைவனை வழிபடுவது; கிரியை - உடம்பினாலும் மனத்தினாலும் வழிபடுவது.)

1424. காதுப்பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்து
ஓதும் திருமேனி உட்கட்டு இரண்டுடன்
சோதனை செய்து உபதேச மார்க்கராய்
ஓதி இருப்பார் ஒருசைவர் ஆகுமே.

பொருள் : காதினில் பொன்னால் செய்யப்பட்ட இரண்டு கடுக்கன்களை அணிந்து கொண்டு, சொல்லப்பட்ட சிவ வேடத்தில் இடையில் ஓர் ஆடையும் அதன்மேல் ஓர் ஆடையும் உடையராய் அத்துவா சோதனை செய்து உபதேசம் பெற்றவராய் சைவ ஆகமங்களைப் பாடம் சொல்லிக் கொண்டிருப்பவர் ஒருவகைச் சைவராவர். உட்கட்டு இரண்டுடன் என்பதற்குச் சிவமணிவடமாகிய உட்பட்டு இரண்டு என்று பொருள் கொள்வாரும் உளர். (சோதனை செய்து - அத்துவா சோதனை செய்து - இது நிர்வாண தீக்கையில் செய்யக் கூடியது.)

1425. கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமாம்
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.

பொருள் : நாவலம் தீவு முதலிய நிலவுலகங்கள் ஒன்பது பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவ் ஒன்பது கண்டங்களையும் இறையுறை திருப்பதிகளாகக் கண்டு வழிபட்டு வலஞ்செய்து வந்தவர் அங்ஙனம் விளங்கும் சிவபெருமானின் அருவம் நான்கு, உருவம் நான்கு, அருவுருவம் ஒன்று ஆகிய ஒன்பது திருமேனிகளையும் கண்டவராவர். இவர்களே வேறுபட்ட பல அண்டங்களையும் அருட்காட்சியால் கண்டவராவர். இவர்கள் கடுஞ்சுத்த சைவர் என அழைக்கப்படுவர். கண்டங்கள் ஒன்பது என்பதற்கு வேறு வகையாகப் பொருள் கொள்வாரும் உளர்.

1426. ஞானி புவியெழு நன்னூல் அனைத்துடன்
மோன திசையும் முழுஎண் எண் சித்தியும்
ஏனை நிலவும் எழுதா மறைஈறும்
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே.

பொருள் : ஞானியராவார் பூமியில் தோன்றுகின்ற ஞான நூல்களுடன் மௌன நிலையையும் முழுமையாக எண்ணப்பட்ட அட்டமாசித்திகளையும், பிற உலகங்களின் அறிவையும் உபநிடத அறிவையும் சிவத்தையும் தன்னையும் உணர்ந்து நிற்கும் ஆற்றலுடன் விளங்குவர். (எழுதாமறை - வேதங்கள். எண்எண் சித்திகள் என்பதற்கு அறுபத்து நான்கு கலைகள் எனப்பொருள் கொள்வாரும் உளர்.)

3. மார்க்கசைவம் (மெய்யுணர்வுச் செந்நெறி)

(மார்க்க சைவமானது, சைவ மார்க்கத்தில் நின்று வேதாந்த, சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து, ஆன்ம போதங் கெட்டுச் சிவ போகத்தில் திளைத் திருப்பார் நிலையை விளக்குவது.)

1427. பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம்
நன் மார்க்க சாதனம் மாஞான சாதனம்
துன்மார்க்க சாதனம் தோன்றாத சாதனம்
சன்மார்க்க சாதன மாம் சுத்த சைவர்க்கே.

பொருள் : பொன்கட்டிய உருத்திராக்க மாலையும் திருநீற்றுப் பூச்சாகிய சாதனமும் சிறப்புமிக்க ஐந்தெழுத்து ஓதுதலாகிய ஞான சாதனமும், துன்மார்க்கரோடு சேராமல் நல்லடியாரோடு சேர்ந்து இருத்தலாகிய சாதனமும் சுத்த சைவநெறி பற்றியவர்க்குச் சன்மார்க்க ஒழுக்கமாகும்.

1428. கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின
ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன்
பாடுறு சுத்தசை வப்பத்தன் நித்தனே.

பொருள் : குற்றம் நீங்கிய ஞானி ஒளிவிடுகின்ற ஞானத்திற்கு அரசாவான். துன்பமில்லா வேதாந்த சித்தாங்களிடையே தோன்றும் ஞானமுடையோன். உண்மையான முத்திப் பேற்றினை உணர்ந்தவன். மேன்மை பொருந்திய சுத்த சைவத்திலே பத்தி யுடையவன். அழிவில்லாதவன். சுத்த சைவன். வேதாந்த சித்தாந்த நுண்பொருளை அபேதமாக உணர்ந்தவன்.

1429. ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு
மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன்று
ஆக முடிந்த அருஞ்சுத்த சைவமே.

பொருள் : ஆகமங்கள் ஒன்பது, இவ்ஒன்பது ஆகமங்களே விரிந்து இருபத்தெட்டு ஆகமங்கள் ஆயின. அவை சைவம், ரௌத்திரம், ஆரிடம் என்ற மூன்று வகையாக ஆகி, பரபரப்பற்ற வேதாந்த முடிபாம் சித்தாந்த உண்மை சுத்த சைவர்க்கு ஒன்றாக முடிந்ததாம்.

1430. சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓரேழும்
சத்தும அசத்தும் தணந்த பராபரை
உய்த்த பராபரை யுள்ளாம் பராபரை
அத்தன் அருட்சத்தி யாய்எங்கும் ஆமே.

பொருள் : அசுத்தமாகிய புலம்பின்கண் நனவு கனவு உறக்கம் என்னும் மூன்றும், சுத்தமாகிய புரிவின்கண் நனவு கனவு என் இரண்டும், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்னும் இரண்டும் ஆகிய ஏழும் நிலைப்பதாகிய காரணமாயையும், நிலயாததாகிய காரியமாயையும் நீங்கிய பராபரையாகிய திருவருள் ஆருயிரோடு பொருந்தியும் உயிர்க்கு உயிராகியும் நிற்பவள் ஆவள். அவளே அத்தன் அருளாற்றலாகிய அன்னையாவள். அவளே எங்கும் நிறைந்து நின்று வெற்றையும் இயக்குபவள் ஆவள். (புலம்பு - கேவலம், புரிவு - சுத்தம். ஐந்துநிலைகளாவன ; ஜாக்கிரம் - நனவு, சொப்பனம் - கனவும், சுழுத்தி - உறக்கம், துரியம் - பேருறக்கம், துரியாதீதம் உயிர்ப்படங்கள் என்பனவாம்.)

1431. சத்தும் அசத்தும் தணந்தவர் தானாகிச்
சித்தும் அசித்தும் தெரியாச் சிவலோகமாய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார்
சித்தியும் அங்கே சிறந்துள தானே.

பொருள் : சத்து அசத்துக்களாகிய காரண காரிய மாயைகளை மலம் அற்றமையால் வேறுபடுத்துணரும் இயல்பு அகன்றவராவர். சிற்றுணர்வும் சட்டுணர்வும் இல்லாச் சிவன் நிறைவில் அடங்கிச் சிவனே தானாகி வீடு பேற்றின்கண் இறவாத இன்ப இறைவியுள் அடங்கினவராவர். அவர்க்குப் பெரும் பேறும் சிறந்து விளங்கும். (சிவோகம் - சிவநிறைவில் உறைவதல். சிவோகம் பாவனையில் உடல் நினைவு இல்லை தான்என்ற அறிவு இல்லை என்க. சத்தியே தானாகவுள்ள ஞானிகள் எல்லாம் வல்ல சித்தராவர் என்பதாம்.)

1432. தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே.

பொருள் : உண்மைச் சைவர்கள் உள்ளுற நினைத்து மேற்கொண்டு ஒழுகவேண்டிய வழி வகையான பொருள்கள் எட்டு அவையாவன; ஆருயிர், இயற்கைப் பேரறிவுப் பெரும் பொருள், அருளோனாகிய சதாசிவன், இறை, உயிர், தளை, தொன்மையாகிய ஆணவ மலம், வீடுபேறு என்பன. சுத்த சைவர் இவ் எட்டுப் பொருட்களைப்பற்றிச் சிந்திப் பதைவீடு பேற்றிற்கு உபாயமாகக் கொண்டுள்ளனர். (பதி, பசு, பாசம் - இறை, உயிர், தளை.)

1433. பூரணம் தன்னிலே வைத்தற்ற அப்போதம்
ஆரணம் அந்தம் மதித்து ஆனந் தத்தோடு
நேரென ஈராறு நீதி நெடும் போதும்
காரண மாம்சுத்த சைவர்க்குக் காட்சியே.

பொருள் : ஆருயிர், நிறைவாம் சிவத்துள் அடங்குதலாகிய முற்றுணர்வு எய்துதலும் பண்டைத் தன்முனைப்பாகிய சிற்றுணர்வு அறும். அதுவே மறை முடிவாம். பேரின்பத்துடன் கலந்து, பன்னிரண்டாம் நிலையில் பெறப்படும் சிவநுகர்வு முறையாக எய்தும். இவை யனைத்தும் சுத்த சைவர்க்குக் காட்சியாம். (ஈராறு - பன்னிரண்டு - துவாத சாந்தப் பெருவெளி)

1434. மாறாத ஞான மதிப்பற மாயோதும்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறிநிற்றல்
கூறாகு ஞானி சரிதை குறிக்கிலே.

பொருள் : மெய் கண்டார் எல்லையற்ற என்றும் ஒருபடித் தாயிருக்கிற திருவடி யுணர்வு கைகூடுதலால் பிறப்புக்கு வித்தாம் பெரிய யோகங்களைப் பொருளாகத் தெரிய ஒட்டாது தம் உள்ளத்தைத் தெளிவித்துச் சிவனிலையமாக்குவர். முழுதுணர்பேறான சீவனையே நாடுதலாகிய பாவனைபேணி அந்நெறியில் உறைத்து நிற்றல் அறிவிற்சீலம் என்ப்படும் ஞானத்திற் சரியையாகும்.

1435. வேதாந்தங் கண்டோர் பிரமலித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்தம் அல்லாத சித்தாந்தங் கண்டுளோர்
சாதா ரணமன்ன சைவர் உபாயமே.

பொருள் : வேதாந்தத்தை உணர்ந்தவர் பிரம வித்தையை அறிந்தவர் ஆவர். நாத தரிசனம் செய்தவர் நன்மைகளில் மகிழாமலும் தீமைகளில் சோர்வுறாமலும் நிற்கும் பரமஹம்சயோகிகள் ஆவர். வேதாந்தக் கொள்கைக்கு வேறான சித்தாந்த அனுபவம் உடையோர் இயற்கையை அறிந்து உபாயத்தினால் சிவத்தைச் சேர்வர். விளக்கம்; வைராக்கியத்தால் பிரமத்தை அடையலாம் என்று வேதாந்தம் கூறும். அன்பினால் சிவத்தை அடையலாம் என்று சித்தாந்தம் சிவயோகம்; பாவனையால் சிரசில் நாத தரிசனம் செய்து நாதத்தை அடைவது.

1436. விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்
எண்ணினைச் சென்றணு காமல் எணப்படும்
அண்ணலைச் சென்றணு காபசு பாசமே.

பொருள் : வானத்தை இடமாகக் கொண்டு பொழிகின்ற பெரிய மேகங்களும் அவ் வானத்தைப் போய் எட்டாது. கண்ணிணாற் காணப்படும் பல காட்சிப் பொருள்களும் கண்ணினைச் சென்று பொருந்தா. அவை போல நாடுதலாகிய பாவனைக்கு அப்பால் பட்ட தென்னும் சிவபெருமானாகிய அண்ணலை யான் என்னும் சிற்றறிவும் எனதென்னும் சுட்டறிவும் பசு பாசங்கள் சென்றணுகா.

1437. ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராகார நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தால்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.

பொருள் : பொன்னும் மணியும் போல் பொருள் ஒன்றே என்னும் தன்மையும் இருளும் ஒளியும் போல் வேறு என்னும் தன்மையும் இல்லாமல், உடலுயிர்கண் அருக்கன் அறிவொளிபோல் வேறன்மையாகிய புணர்ப்பாய் நின்று திருவருளால் அன்பு செய்யப்படும் சிவனைச் சித்தி நிபாதமாகிய திருவருள் வீழ்ச்சியால் சென்று சிவமாம் பெருவாழ்வைப் பெற்றுப் பேரின்பம் உறுதல் சித்தாந்தப் பெரும் பேறாகும்.

(ஒன்று - ஏகான்மவாதம் இரண்டு - துவிதம் ஒன்றாக நின்று - சுத்த அத்துவிதம்)

4. கடுஞ் சுத்த சைவம் (மெய்கண்டார் செந்நெறி)

(ஞான நிலையில் ஆடம்பரமின்றித் தான் அவனாய் நிற்கும் நிலையை எடுத்து ஓதுவது இவ் அதிகாரத்திலாம். கடுஞ் சுத்த சைவர் உபாயமான கிரியைகளை விட்டு ஞானமே பெரியதெனக் கருதிச் சாயுச்சியம் பெறுவர்.)

1438. வேடம் கடந்து விகிர்தன்தன் பால்மேவி
ஆடம் பரமின்றி ஆசாபா சம்செற்றுப்
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.

பொருள் : புற வேடங்களில் விருப்பமின்றி இறைவனைச் சார்ந்து, உலகியல் ஆடம்பரம் இல்லாது ஆசையையும் பற்றையும் நீத்து, பிறவித் துன்பத்தைத் தரும் பாசமும் சீவ போதமும் பாழாக, தொலைக்கும் சிவஞானம் பெற்றோரே  சுத்த சைவராவர். (வேடம் - விபூதி, உருத்திராக்கம், காதணி முதலிய புறச்சாதனம் விகிர்தன் - சிவன்; ஆசாபாசம் - ஆசை, பாசம்.)

1439. உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்து
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாத் தனையுறல் சித்தாந்த மார்க்கமே.

பொருள் : ஐம் பூதங்களால் ஆன யாக்கையும், ஆறு கோடி மாயாசத்திகள் என்று சொல்லப்படும் செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண் பிறந்த மானம், மாணா வுவகை ஆகிய அறுவகைக் குற்றங்களும், ஐவகைப் புலன்களும் இவற்றிற்கு நிலைக் களமான காரண மாயையும் ஒழிக்க வேண்டுவனவாய புலம்பினைச் செய்த பழமலரும் அருளால் துடைத்து, உறுதியாகத் தன்னை உணர்ந்து, தலைவனையுறுதல் சித்தாந்த சைவச் செந்நெறிச் சீர்மையாகும்.

1440. சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல்
முத்தல் பதப்பொருள் முத்திவித் தாமூலம்
அத்தகைய ஆன்மா அரனை அடைந்தற்றால்
சுத்தச் சிவமாவ ரேசுத்த சைவரே.

பொருள் : பரமேசுவரனால் அருளிச் செய்யப்பட்ட ஆகமங்களில் கூறப்பெறும் பத முத்திரைகளைச் சாராது, முத்தர் கண்ட பிரணவப் பதத்தால் உணர்த்தப் படுவதே மேலான பரமுத்திக்கு மூலம். இதனை உணர்ந்த ஆன்மா பிரணவப் பொருளான இறைவனை அறிந்து உலக பந்தங்களை விட்டால் சுத்த சிவமாம் பேறு பெறுபவரே சுத்த சைவராவர்.

1441. நான் என்றும் தான்என்றும் நாடிநான் சாரவே
தான் என்று நான் என்று இரண்டிலாத் தற்பதம்
தான் என்று நான்என்ற தத்துவம் நல்கலால்
தான்என்றும் நான்என்றும் சாற்றகில் லேனே.

பொருள் : அறிபவனாகிய நான் என்றும், அறியப்படு பொருளாகிய சிவம் என்றும் ஆராய்ந்து சிவத்தை நான் சேரவே, சிவன் சீவன் என்ற இரண்டற்ற தற்சிவம், தானே நான் என்ற உண்மையை உணர்த்தியதால், பின்னர் அறியப்படுபொருள் என்றும் அறிபவன் என்றும் பிரித்தறிய முடியாத பெருநிலையை எய்தினேன்.

1442. சாற்றரி  தாகிய தத்துவம் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.

பொருள் : சொல்ல ஒண்ணாத இறைநிறைவில் அடங்குவதாகிய மெய்ம்மை கைகூடினால் தன்வழி ஈர்க்கும் புலன் ஐந்தும் திருவருளால் ஆருயிரின் வழிச்சென்று அடங்கிடும். அதன்பின் திருவடிப் பேருணர்வாம் விளக்கொளி ஒளிர்ந்து நிற்கும். நிற்கவே தான் ஆதலாகிய பரசாயுச்சியப் பேறு பதியும். (பரசாயுச்சியம் - உயர்வற உயர்ந்த ஒரு பெருநலம்)

5. சரியை (சீலம்)

(நாடும் நகரமும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுதலும், ஆலய வழிபாடு செய்தலும் சரியை நெறியாம்.)

1443. நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்று
ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலத்து
ஓர்ந்திடும் சுத்த சைவத்து உயிரதே.

பொருள் : திருவடிப் பேற்றிற்கு நேர்வழியாய் உள்ள நான்கினுள் நேர்திடும் அடிப்படைச் சீலம் என்னும் சரியை நெறி இத்தன்மைத்து என்று ஆய்ந்தவர் கந்துரு காலங்கி முனிவரும், கஞ்ச மலையமான் முனிவரும் என்க. அந்த இருவரையும் நோக்கித் திருமூலர் அருளுகின்றார். இச்சீலம் இந்நிலவுலகத்துத் தனி முதற் சிவ நெறியாகிய சுத்த சைவத்துக்கு ஆராய்ந்து கடைப்பிடிக்கும் உயிராம் என்க. (உயிர் - நானெறித் தொண்டு.)

1444. உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை
உயிர்க்குஒளி நோக்கல் மகாயோக பூசை
உயிர்ப்பெறும் ஆவா கனம்புறப் பூசை
செயிற்கடை நேசம் சிவபூசை யாமே.

பொருள் : உயிர்க்கு உயிராக இறைவன் கலந்திருத்தலை உணர்தல் சிறந்த ஞான பூசையாகும். உயிருக்கு ஒளி தருகின்ற பொருளாக இறைவனைக் காண்டல் மேன்மையான யோக பூசையாகும். புறத்தே மூர்த்தியினிடத்து பிராணப் பிரதிட்டையாகிய ஆவாகானம் செய்தல் புறப் பூசையாகும். புறத்தே செய்யின் சிவபூசை ஞானத்தை நோக்கக் கடை நேசமாமே.

1445. நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மான் என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்மினே.

பொருள் : நாடு நகரம் நல்ல திருக்கோயில் ஆகியவற்றைத் தேடி அலைந்து அங்கங்கே சிவன் வீற்றிருக்கின்றான் என்று பாடுங்கள். பாடுவதோடு பணியுங்கள். அவ்வாறு பணிந்த பிறகு ஒருமைப்பட்ட நெஞ்சத்தை இறைவன் தனக்குக் கோயிலாகக் கொள்வன். இப்பாட்டில் சரியா பூசையைப் பற்றிக் கூறுகின்றார்.

1446. பத்தர் சரிதை பாடுவோர் கிரியையார்
அத்தகு தொண்டர் அருள்வேடத்து ஆடுவோர்
சுத்த இயமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானம் சென்றெய்து வோர்களே.

பொருள் : பத்தர் ஆலய வழிபாடு முதலிய செய்யும் சரியை வழியில் நிற்போர். விபூதி முதலிய சிவசாதனங்கள் அணிந்து சிவவேடந்தாங்கிய அடியார் கிரியை வழியில் நிற்போர். தூய இயமம் முதலிய அட்டாங்க யோக உறுப்புக்களை உணர்ந்து அவ்வழியில் நிற்போர் சுத்த யோகியர் ஆவர். சித்தர் சிவத்தைத் தன்னில் கண்டு, தான் அதில் ஒன்றி நிற்போராவர்.

(புத்தர் -சரியையாளர்; தொண்டர் - கிரியை யாளர்; சாதகர் யோகிகள்; சித்தர் - சிவஞானிகள்.)

1447. சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவர் ஆயினோர்
சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே.

பொருள் : உண்மையான ஞானம் பெற்றவர் அவனே தானாகியவர்கள்.அட்டாங்க யோக நெறியில் நின்று சமாதியடைந்தோர் யோகிய ராவர். ஆராய்ந்த கிரியையுடையோர் சிவபூசை தவறாமல் செய்பவர். கிரியை நெறியில் நிற்பவர் தலயாத்திரை புரிபவராவர்.

1448. கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை
அரிய சிவனுரு அமரும் அரூபத்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத்து உயர்பூசை யாமே.

பொருள் : கிரியை, யோகம், கிளர்ச்சியைத் தரும் ஞானம் ஆகிய பூசை முறையே அறிதற்கு அருமையான  சிவனது உருவத்தையும் அருவத்தையும் பொருந்தும். உபாசகரின் பக்குவத்துக்கு ஏற்பத் தேர்ந்து கொள்ளும் பூசை உரிமையான நேயப் பொருளுக்குச் செய்யும் உயர்ந்த பூசையாம்.

(கிரியையாளரும் யோகிளும் செய்வது உருவபூசையாகும். ஞானபூசை என்பது அருவப் பூசையாகும்.)

1449. சரியாதி நான்கும் தருஞானம் நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து
மருளாகும் மாந்தர் வணங்கவைத் தானே.

பொருள் : சரியை முதலிய நான்கினாலும் பெறுகின்ற ஞானம் நான்கும் விரிவாகவுள்ள வேதாந்த சித்தாந்தத்தால் அடையப்படுகின்ற ஆறு விதமான முடிவினை உண்மைப் பொருளானதாகிய நந்தி யெம்பெருமான் குரு மண்டலமாகிய பொன்னகர் அடைந்து மயக்க அறிவினைக் கொண்ட மக்கள் வணங்கி அறிவைப் பெற வைத்தனன். ஞானம் நான்கு; சரியை, கிரியை, யோகம், ஞானம் இவைகளால் பெற்ற ஞானம்.

(வேதாந்தம் ஆறு; காபிலம், காணாதம், பாதஞ்சலம், அட்சபாதம், வியாயம், ஜைமினியம் என்பன.)

1450. சமையம் பலசுத்தித் தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி
சமைய நிருவாணம் கலாசுத்தி யாகும்
அமைமன்று ஞானமார்க் கம்அபி டேகமே.

பொருள் : சமைய தீட்சையால் ஆன்மாவில் பதிந்துள்ள  மலக்குற்றங்களை அகற்றி ஆணவ மலத்தின் வலிவைக் குறைத்தல் விசேட தீட்சையால் சிவத்தின் துணைகொண்டு அமையப்பெற்ற மந்திரங்களால் மும்மலத்தின் அறிவைக் குறைத்தல். சமையத்தில் உள்ள நிருவாண தீட்சையால் கலைகளின் மலக்குற்றங்களை அகற்றி, அவ்வக் கலையிலுள்ள ஆன்மாக்களை மேலுள்ள கலைகளுக்குச் செல்லத் தகுதிப்படுத்தலாகும். அபிடேகமாவது திருவருட்சத்தி நிலைபெறப் போதித்து நிலபெறுத்தலேயாகும். இம்மந்திரம் சைவத்திலுள்ள தீக்கைகளை விவரிக்கின்றது சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம்.

6. கிரியை (நோன்பு)

(மலரிட்டு வணங்கி இறைவனை அகத்தும் புறத்தும் பூசித்தல் கிரியையாகும்.)

1451. பத்துத் திசையும் பராமொரு தெய்வமுண்டு
எத்திக்கு இலர்இல்லை என்பதின் அமலர்க்கு
ஒத்துத் திருவடி நீழல் சரணெனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.

பொருள் : பத்துத் திசைகளிலும் பரசிவம் வியாபித்துள்ளது. எத்திசையிலும் இல்லாதவர் எப்போது இலர் என்பதால் அத்தகைய மலமில்லாதவர்க்குப் பணிந்து, திருவடியை அடைக்கலம் என்று உறுதியாகக் கொள்ள, மேன்மேலும் தாவி வருகின்ற வினையாகிய கடல் இவ்ஆன்மாவைச் சாராது. இவ்வுண்மையை அனுபவத்தில் காண்பாயாக. எங்கும் நிறைந்த பரசிவமே தெய்வம் என்று சரண் அடைந்தால் வினை சாராது என்பதாம்.

1452. கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது
தேனமர் பூங்கமழ் சேரஒண் ணாதே.

பொருள் : காட்டின்கண் எங்கணும் நிறைந்து மணம் கமழும் சந்தனமும், வானளாவ நிறையும் வண்ணம் சிறந்த மலர்களும் சாத்தி வணங்கினாலும், கொல்லாமலும் கொன்றதைத் தின்னாமலும் இருப்பதாகிய செந்நெறியொழுகிச் சிவனை நினைப்பதாகிய திருவுடையார்க்கன்றி திருவருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதம் கிட்டாது. (சத்தி - திருவருள், நிபாதம் - நினறாய்ப்பதிதல், வீழ்ச்சி ஊனினை  நீக்கி - சரீர அபிமானம் விட்டு அல்லது மாமிச உணவை விட்டு.)

1453. கோனக்கன் தாயே குரைகழல் ஏத்துமின்
ஞானக்கன் றாகிய நடுவே உழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழும்
மானக்கன்று ஈசன் அருள்வள்ள மாமே.

பொருள் : மேன்மையான பசுங்கன்றைப்போல ஒலிக்கும் கழலையுடைய திருவடியைப் போற்றுங்கள். அப்போது ஞானத்தை நல்கும் சுழுமுனை நடுவே தோன்றும். தேவர் உலகக்கன்றாகிய வானவர் வந்து உம்மை வணங்குவார்கள். பெருமை பொருந்திய இடப வாகனத்தையுடைய இறைவன் திருவருளைத் தாங்கும் பாத்திர மாகுங்கள்.

1454. இதுபணிந்து எண்டிசை மண்டிலம் எல்லாம்
அதுபணி செய்கின் றவள்ஒரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி ஈசன்
பதிபணி செய்வது பத்திமை காணே.

பொருள் : மேல் ஓதிய முறைமைகளை வணங்கி ஏற்றுக் கொண்டு எட்டுத் திசைகளால் சூழப்பெறும் உலக உடல்பொருள் நிறை மண்டிலங்களை யெல்லாம் படைத்து அளித்து அழித்து மறைத்து அருள் செய்யும் ஐந்தொழிலுடைய அம்மையை ஒரு கூற்றிலே உடையவன் சிவன். மாந்தர் செய்யத் தகுந்த இறைபணி சிவப் பணியேயாம். இச்சிவப்பணியே நோன்பாளராகிய கிரியையினம் செய்யும் சிவபத்தித் திருப்பணியாகும்.

1455. பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குருவரு ளால்சிவம் ஆகுமே.

பொருள் : பத்தியுடையோன் தூய மந்திரம் முதலியவற்றை நினைந்து அவ்வாறு நடந்து பழகி , சுத்தமாயை என்ற அருள் சத்தியால் குற்றமற்ற மெய்போகத்தில் அமைத்த நெறியில் பொருந்தி தன்னையும் தலைவனையும் உணர்கின்ற ஞானத்தினால் சித்தம் குருமண்டலப் பிரவேசத்தால் சிவமாக அமையும்.

1456. அன்பின் உருகுவன் நாளும் பணிசெய்வன்
செம்பொன் செய்மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவது எனக்கருள்
என்பினுள் சோதி இலக்குகின் றானே.

பொருள் : சித்தம் சிவமாய சிவபக்தன் எல்லையிலாத் தலைவன்பால் உருகுவன். அவன் எந்நாளும் அடிமைப்பணி செய்து ஒழுகுவான். பொன்போலும் திருமேனியும் செந்தாமரை அனையதிருவடியும் உடையவன் சிவன். அவன் அடியேன் முன்நின்று அருமறை யருளத் திருவடி யுணர்வு கைவந்த ஒரு மெய்யடியாரை ஊர்ந்து செறிந்த அறிவொளியால் விளங்கியருள்வன்.

7. யோகம் (செறிவு)

(யோகமாவது, மூலாதாரத்திலுள்ள குண்டலினியோடு கூடிய பிராணனைத் துவாத சாந்தத்தில் விளங்கும் சிவத்தோடு சேர்த்துப் பொருந்தி யிருத்தல். இவ்வாறு சேர்த்துத் தியானம் செய்தால் ஒளி விளங்கும். )

1457. நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச்
சொறியினும் தாக்கினும் துண்ணென் றுணராக்
குறியறி வாளர்க்குக் கூடலும் ஆமே.

பொருள் : ஆசான் அருளிய அருமறைவழியே ஒழுகி அகத்தலமாகிய யோகத்தில் பொருந்தி ஆ முதலியவற்றைக் கட்டுத்தறி (தூண்) மாறுதல் இன்றி இருந்தாற்போல் தம் உடம்பை இருத்தித் தினவு முதலியன உடம்பில் தோன்றினும் சொறியாமலும், காற்று மழை மின்னல் இடி முதலியன உடம்பில் மோதினும் அசையாமலும் இருந்து கருதிய குறியாம் சிவத்தை அறிவார்க்கு அருளால் அச்சிவத்துடன் கூடலுமாகும்.

1458. ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லால்
ஊழிதோ றூழி உணரவும் தானொட்டான்
ஆழி அமரும் அரிஅயன் என்றுளார்
ஊழி முயன்றும்ஓர் உச்சியு ளானே.

பொருள் : ஊழிதோறூழி பலவரினும், என்றும் ஒருபடித்தாய் நின்று நிலவும் முழு முதற்சிவனை அவன் அருட்கண்ணால் உணர்ந்தவர்க்கு அல்லாமல் பலவூழி கண்டாலும் தம் அறிவால் அச்சிவனைக் காணமுடியாது. சக்கரப் படையைத் தாங்கும் அரியும் அயனும் பலவூழி முயன்றும் காண ஒண்ணாமல் நீங்கி மறைந்து நின்றனன். (ஓருச்சி ஒருவி என்பதன் திரியு ஒருவி - நீங்கி.)

1459. பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக்கு உள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுதறி யாமே.

பொருள் : மலரின் கண் மணம் பொருந்தி யமைவது போல் ஆருயிரின் கண்ணும் அன்னை அத்தனாம் சிவமணம் பூத்தமைந்தது. அவ் அமைவினையுடையார் புனைந்த சித்திரம் போல் அச்சிவனையே உணர்ந்தறிவர். அப்படி அறிகின்றவர் புனுகு பூனை அணைந்த நடுத்தறி போன்று அசையாதிருப்பவர். (நாவி - புனுகுப்பூனை)

1460. உய்ந்தனம் என்பீர் உறுபொருள காண்கிலீர்
கந்த மலரில்  கலக்கின்ற நந்தியைச்
சிந்தை யுறவே தெளிந்தருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.

பொருள் : உயர்ந்தோம் என்று சொல்வீர்; ஆனால் யோகத்தால் உள்ளே உறுகின்ற பொருளைக் காணமாட்டீர். மணங்கமழும் நல்லார் தம் நெஞ்சத்தாமரையில் கலக்கின்ற நந்தியை உங்கள் உள்ளம் பொருந்தத் தெளியுங்கள். தெளிந்தால் இருள் நீங்கும். இருள் நீங்கினால் நுண்ணுடலாகிய கருவுறாது தோன்றும் முதற்பிறவியை ஒழிப்பதற்கு அத்தெளிவு அழியாக் காரணமாகும். வித்து காரணம்.

1461. எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா
வழித்தலைச் சோமனோடு அங்கி அருக்கன்
வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே.

பொருள் : இலக்கண இலக்கியங்களும் இவற்றின் விரிவான அறுபத்து நான்கு கலைகளும், பழித்தற்கு இடமாகிய சுட்டுணர்வாகும். அச்சுட்டுணர்வாகிய பாசத்தினால் தொடரும் பிறவியும் நீங்காத முறைமை வாய்ந்த இடப்பால் நரம்பாகிய திங்களும் வலப்பால் நரம்பாகிய ஞாயிறும் நடுப்பால் நரம்பாகிய தீயும் அருளான் அமையும் நிலைகளையுணர்வர். அவ்வுணர்வால் முதன்மையான செந்நெறிச் செல்லும் மேன்மை எய்தும்.

1462. விரும்பிநின் றேசெய்யில் மேய்த்தவ ராகும்
விரும்பிநின் றேசெய்யின் மெய்யுரை யாகும்
விரும்பிநின் றேசெய்யின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெய்யில் விண்ணவன் ஆகுமே.

பொருள் : சிவத்தை விரும்பி நின்று செயல் செய்யும் நல்லோர் உண்மைத் தவத்தவராவர். அவ்வாறு ஒழுகின் குருவருள் அருமறை கைகூடும். அதுபோல் செய்யின் அஃது இறப்பில் தவமாகிய உண்மைத் தவமாகும். மேலும் கைக் கோலின் தூய விண்ணுலக நேராட்சியுடைய சிவனென மதிக்கப்படுவன். (அருமறை - குருமொழி)

1463. பேணிற் பிறவா உலகருள் செய்திடும்
காணில் தனது கலவியு ளேநிற்கும்
நாணில் நரக நெறிக்கே வழிசெயும்
ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே.

பொருள் : அகத்தவமாகிய யோக நெறியைப் பேணி ஒழுகுவார் மீண்டும் பிறப்பதற்கு வாயில் இல்லாத தூய சிவவுலகை எய்துவர். இவ்வுலகே பிறவா உலகெனப்படும். அருட் கண்ணாற் காண்பார் சிவபெருமான் வேறு அறக்கலந்து நிற்கும் கலவியுள் நிற்பர். இத்தவ ஒழுக்கிற் செல்ல நாணமுறுவார் இருள் உலகு எய்தி இன்னல் உறுவர். சிவன் உடம்பினுள் அவ்வுடம்பு நிலைத்து நிற்பதற்கு வேண்டும் சூட்டினை அருள்வன். அத்தகைய சிவபெருமானே சார்ந்தாரைக் காக்கும் தலைவன் ஆவான்.

1464. ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர்
எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்தன் இவன்என்றே அன்புறு வார்களே.

பொருள் : நேர்மையான செங்கோல் அரசர்கள், உண்மையான வேதநெறி விளக்கிய முனிவர்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் இவ்வுண்மை உணராது அழிந்து ஒழிந்தார்கள். இவ் யோகத்தை அறிந்த எண்ணற்ற சித்தர்களும் தேவர்களும், பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் பெருமையாகப் பரசிவத்தைத் தவிர உயிருக்கு நன்மை செய்பவர் வேறு இல்லை என்று அடி பணிந்தார்கள்.

1465. யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர்
ஆகத் தருகிரி யாதி சரியையாம்
தாகத்தை விட்ட சரியையொன் றாம்ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.

பொருள் : யோகம், கிரியை, சரியை ஆகிய மூன்று நெறிகளையும் கொண்டு மேன்மையுறுவர் யோகிவர் ஆவர். அவ்வாறாகத் தருவன கிரியையில் கிரியை, கிரியையில் சரியை ஆகியவாம். ஆசையை விட்ட சரியை ஒன்றாகும். அவ்வாறு விளங்கும் ஒளிமண்டல சிவாதித்தன் பத்தியில் சிறந்துஅன்பு கொண்டேன். (ஆதித்தன் - சிவசூரியன்.)

1466. யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே உற்ற பரோதயம்
யோகஅபி டேகமே ஒண்சித்தி யுற்றலே.

பொருள் : செறிவு நிலையாகிய யோகத்தில் சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம் என் நான்கு நிலைகள் உள்ளன. அவை முறையே சிவநுழைவு, சிவநோன்மை, சிவ நுண்மை, சிவ நுகர்மை என அழைக்கப் பெறும், யோகத்தில் சமயம், பல வகையான யோக முறைகளை நினைத்தல், யோகத்தில் விசேடம் எட்டு உறுப்புடன் கூடிய யோகம், யோகத்தில் நிருவாணம் முழுமுதற் சிவம் தோன்றல் (யோகத்தில் அபிடேகம் - சித்திபெறுதல். உறுதல் - உறல்; உற்றல் என மிகுந்தது.)

8. ஞானம் (மெய்யுணர்வு)

(ஞானம் என்பது பதி அறிவு, ஞானம், நேயர், ஞாதுரு என்ற மூன்றும் கெட்டு ஒன்றான நிலையே ஞானம் எனப்பெறும் ஆதலால் ஞானமே வீடு பேற்றுக்கு வாயிலாகும்.)

1467. ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவா
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.

பொருள் : ஞானத்தில் சிறந்த அறநெறி நாட்டில் இல்லை. ஞானத்தைக் கொடுக்காத சமயநெறியும் நல்லது அன்று. ஞானத்துக்குப் புறம்பானவை நல்ல வீடு பேற்றை அளிக்காது. ஞானத்தில் சிறந்து விளங்குபவரே மக்களில் மேலோர் ஆவர். ஞானமே வீடு பேற்றிற்கு வாயிலாதலின் சிறந்தது என்பதாம். (நாட்டில்லை - நாட்டில் இல்லை)

1468. சத்தமும் சத்த மனனும் தகுமனம்
உய்த்த உணர்வும் உணர்த்தும் அகந்தையும்
சித்தம் என்று இம்மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே.

பொருள் : நாதமும் நாதவடிவான மனமும் தக்க அம்மனம் தந்த புத்தியும் புத்தியை உணர்த்தும் அகங்காரமும் ஆகிய சித்தம் என்ற இம்மூன்றும், அது சிந்திக்கின்ற செயலும் அவற்றால் விளையும் நாதமும் கடந்த ஞானியர் பெற்ற நெறியே சன்மார்க்கம் ஆகும்.

1469. தன்பால் உலகும் தனக்குஅரு காவதும்
அன்பால் எனக்குஅரு ளாவது மாவன
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே.

பொருள் : சீவனது சித்தத்தில் அமைத்துள்ள சங்கற்ப உலகமும் தனது சூழ்நிலையில் புறத்தே அமைந்துள்ள உலகமும் அன்பினால் எனக்கு அருளாக அமைந்தன என்பர் ஞானிகள். இவ்வகையான ஞானமும் அதனால் அமையும் சிவபாவனையும், பின்னர் அறியப்படுபொருள் ஆகிய சிவத்தையும் பெற்றிடுவர். (சிவோகம் - அவனே தானே ஆகிய நெறி. பின்பால் - சிவோகம் பாவனை கைவந்த பின். நேயர் - சிவம்.)

1470. இருக்கும் சேம இடம்பிரம மாகும்
வருக்கம் சராசர மாகும் உலகம்
தருக்கிய ஆசாரம் எல்லாம் தருமே
திருக்கமில் ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே.

பொருள் : மாறுபாடு இல்லாத சிவஞானத்தை திருவருளால் தெளிந்து உணர்ந்தோர் சிவஞானியர் ஆவர். அவர் ஒடுக்கமாகிய நிட்டைகூடியிருக்கும் இடம் சிவன் எழுந்தருளியிருக்கும் இடமாகும். இயங்குதினை நிலைதிணையாகிய கூட்டம் அனைத்தும் அவர்களுக்கு உலக உறவாகும். மேம்பாடு மிக்க ஒழுக்கம் அனைத்தும் தாமே வந்து எய்தும்.

(செருமி இருக்கும் - மறைந்திருக்கும், ஆசாரம் - ஒழுக்கம், திருக்கிலா - மாறுபாடு இல்லாத)

1471. அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியும் குணமும் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே.

பொருள் : சிவத்தை அறியும் அறிவும், சிவத்தில் அடங்கும் அடக்கமும், சிவத்தைப் பற்றும் தலையன்பும் உள்ளவர் கேடில்லாத சிவவுலகத்தில் வாழ்வோராவர். அவர்கள் தம் புற அடையாளச் சிவப்பண்பும் ஒலிக்கும் கழல் அணிந்துள்ள சிவபெருமான் திருவடிகளை நீங்கா நிலையைக் றிப்பனவாகும். அவர்கள் பால் அடங்கியிருக்கும் திருவடி யுணர்வு காற்று முதலியவற்றின் துணையால் நீரில் உண்டாகும் ஒலிபோல் செந்நெறிச் செல்லும் துணையால் வெளிப்படும்.

1472. ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
ஏனம் விளைந்தெதி ரேகாண் வழிதொறும்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
ஊனம் அறுத்துநின்று ஒண்சுடர் ஆகமே.

பொருள் : ஞானம் முதிர்ந்து எழுகின்ற எண்ண நிலையில் கருவி யாகிய நாதம் தோன்றி முகத்தின் முன் எங்கும் இளம்பிறை மண்டலத்தின் ஒலியைத் தரிசித்து உடலின் இழிதகைமையை உணர்ந்து உடலைக் கடந்து ஒளி மிக்க சோதியாகும். ஞானியர் உடலின் இழிதகைமையை உணர்ந்து ஒளியேதாம் என்று அறிவர். (ஒண்சுடர் - சிவம்.)

1473. ஞானிக்கு உடன்குணம் ஞானத்தில் நான்குமாம்
மோனிக்கு இவை ஒன்றும் கூடாமுன் மோகித்து
மேனிற்ற லாம்சத்தி வித்தை விளைத்திடும்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே.

பொருள் : ஞானிக்கு உடனாய தன்மையாக ஞானத்தில் ஞானம், ஞானத்தில் யோகம், ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் கிரியை, ஞானத்தில் சரியை ஆகிய நான்கும் ஆகும். அனுபவம் முதிர்ந்து பிரணவ சத்தியான மௌனிக்கு இலைஒன்றும் தேவையில்லை. முன்னே பரவசமடைந்து மேல் சந்திர மண்டல ஒளியில் விளங்கும். சத்தி ஞானத்தை அளித்துவிடும். அவ்வாறன்றி ஆதாரங்களில் பொருந்தி யோகம் புரிவோர்க்குச் சரியையும் கிரியையுமேயாகும்.

1474. ஞானத்தின் ஞானாதி நான்குமாம் ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நான்எனது என்னாமல்
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.

பொருள் : சிவஞானிக்கு ஒதப்பட்ட அறிவில் அறிவு முதலிய நான்கும் உள்ளன. அறிவில் அறிவாகிய ஞானத்தின் ஞானமே யான், எனது என்னும் செருக்கு அறல். ஞானத்தில் யோகம் முப்பத்தாறு மெய்யுங்கடந்த அருள் வெளியில் காணும் சிவஒளி ஞானத்தில் கிரியையே திருவடிப் பேற்றினை நாடுதல். மெய் - தத்துவம். ஞானத்தில் சரியை என்பது திருவடிப் பேற்றினைத் திருமுறைச் செல்வர் நவில நன்கினிது கேட்டல்.

1475. நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயர் கரைஞானம் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.

பொருள் : பெற்ற ஞானத்தில் ஞானாதி நான்கும் கைவரப் பெற்றவன் புண்ணியத்தால் அடையும் நற் பயனையும், பாவத்தாலவரும் தீய பயனையும் கடந்து நிற்பவன் ஆவான். பெருமையான நேயப் பொருளின் ஞான வரம்பைக் கண்டவன், திண்மையான மலக் குற்றங்கள் அற்றவனும் சிவ முத்தனும் சித்தனுமாவான். (சிவமுத்தன் - சிவப்பேற்றை அடைந்தவன். சித்தன் - அறிவின் எல்லையைக் கண்டவன், ஞானி - ஞானத்தின் எல்லையைக் கண்ட சிவ முத்தனும் சித்தனும் ஆவான்)

1476. ஞானச் சமயமே நாடும் தனைக் காண்டல்
ஞான விடேசமே நாடு பரோதயம்
ஞானநிர் வாணமே நன்றறி வான்அருள்
ஞானஅபி டேகமே நற்குரு பாதமே.

பொருள் : சிவ ஞானத்திலும் நிகழும் நால்வகைத் தீக்கையும் வருமாறு; சிவ நுழைவு என்பது சிவனைக் காணும் முறையால் தன்னைக் காண்பது சிவநோன்மை என்பது மேலாம் சிவத்தோற்றம் காண்பது. சிவ நுண்மை என்பது வாலறிவனாகிய சிவபெருமானின் திருவருள் வீழ்ச்சி. சிவ நுகர்மை என்பது திருவருள் ஆசான் திருவடியினை மறவாமை. (நுழைவு - சமயம்; நோன்மை - விசேடம்; நுண்மை - திருவாணம்; நுகர்மை - அபிடேகம்; திருவருள் வீழ்ச்சி - சத்திநிபாதம், நிபாதம் - நன்றாய் பதிதல், பரோதயம் பரம்+உதயம், சிவம் தோன்றல். நன்றறிவான் அருள் - சிவனருள், நற்குரு -சிவகுரு.)

9. சன்மார்க்கம் (காதன்மை நெறி)

(சன்மார்க்க மாவது, நன்னெறி அல்லது ஒளிநெறி, சன்மார்க்கத்தில் தான் அவனாம் தன்மை எய்தலாம்.)

1477. சாற்றும் சன் மார்க்கமாம் தற்சிவத் தத்துவத்
தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.

பொருள் : சொல்லப்பெறும் சன்மார்க்கமாவது தற்பதம் பொருளான சிவத்தின் உண்மை வடிவங்களான நாதவிந்துக்களில் விளங்கும் சுடரைக்கண்டு, சினத்தை விட்டுச் சிவயோகத்தில் நிலைத்த சித்த முடையவராய்க் காலனை வென்ற இறைவனது திருவுள்ளக் குறிப்பை உணர்ந்தவர் பற்றும் நெறியாம்.

1478. சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி நன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்துவைத் தானே.

பொருள் : சைவத்துக்குப் பெருமையைத் தரும் ஒப்பற்ற தலைவனாகிய சிவன் ஆன்மாக்கள் உய்தி பெறும் வண்ணம் அமைத்த ஒளிநெறி ஒன்றுண்டு. அதுதான் தெய்வச் சிவநெறியாகிய சன்மார்க்கம். அதனைச் சேர்ந்து உய்தி பெறுமாறு இவ்வுலகில் உள்ளார்க்கு அமைத்துக் கொடுத்தான்.

1479. தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யும் குவலயத் தோர்க்குத்
தருமுத்திச் சார்பூட்டும் சன்மார்க்கம் தானே.

பொருள் : தெரிசிக்கவும் பூசிக்கவும் தியானிக்கவும் தீண்டவும் புகழவும் திருவடிநிலையைச் சிரமேல் சூடவும் குருபத்தி செய்யும் மெய்யன்பர்களுக்குச் சன்மார்க்கம் முத்தியை அடையத் துணைபுரியும்.

1480. தெளிவறி யாதார் சிவனை அறியார்
தெளிவறி யாதார் சீவனும் ஆகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.

பொருள் : சன்மார்க்க நெறியின்கண் ஒழுகித் திருமுறைவழியாக முப்பொருளின் மெய்ம்மை தெளியாதவர் சிவனை உணரார். சிவனை உணராமையினால் உயிர்ப்பயன் எய்தார். பயன்எய்தார் ஆகவே அறிவுடைப் பொருளும் ஆகார். மெய்ம்மை தெளியாதவர் சிவன் திருவடிகளைக் கூடிச் சிவமாம் பெருவாழ்வு எய்தார். மெய்ம்மை தெளியாதார் பிறப்பு அறார்; சிறப்பும் உறார்.

1481. தான்அவ னாகித் தான்ஐந்தூம் மலம்செற்று
மோனம தாம்மொழிப் பால்முத்த ராவதும்
ஈனமில் ஞானானு பூதியில் இன்பமும்
தான்அவ னாய்அற்ற லானசன் மார்க்கமே.

பொருள் : சுத்த ஆன்மாவாகிய தான் சிவமே யாகித் தன்பால் பொருந் திய ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகிய ஐம்மலங்களையும் நீக்கி, மோனம் என்ற பெயரினையுடைய ஒரு மொழியான பிரணவத்தை அடைந்து முத்தான்மா ஆவதும், குற்றமில்லாமல் ஞான அனுபவத்தில் இன்பம் அடைவதும். தான் சிவமாகத் தன்னிலை கெடல் சன் மார்க்கமாம். தான் அவனாதல் சன்மார்க்கத்தால் அடையலாம். (அனுபூதி - அனுபவம்)

1482. சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமும்
சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமும்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கம் தரிசனம்
எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.

பொருள் : சன்மார்க்கத்தர்களது முகமே சிவன் உறையும் பீடம் என்பதும், அவர்களது இடமே கோயில் என்பதும், அவர்களது கூட்டத்தைக் காண்பதே சிவதரிசனம் என்பதும் எம்மார்க்கத்தில் உள்ளோர்க்கும் கூறுகின்றேன்; கேட்பீர்களாக.

1483. சன்மார்க்க சாதனம் தான்ஞான ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதையர்க் காய்நிற்கும
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கம் தான்அவ னாகும்சன் மார்க்கமே.

பொருள் : சன்மார்க்க சாதனமாவது சிவத்தை அறியும் ஞானமாகும். சன்மார்க்கம் ஒழிந்த ஏனைய சாதனம் அறிவில்லாதவர்க்கு ஆகும். தீமை தரும் மார்க்கத்தை விட்டுத் துரியத்தில் பொருந்திக் குற்றம் நீங்கினவர், சன்மார்க்கந்தான் அவனாகும் நன்னெறியை உணர்ந்தவராவர்.

1484. சன்மார்க்கம் எய்த வரும்அருஞ் சீடர்க்குப்
பின்மார்க்கம் மூன்றும் பெறஇயல் பாம்என்றால்
நன்மார்க்கம் தானே சிவனொடு நாடவே.
சொன்மார்க்கம் என்னச் சுருதிகைக் கொள்ளுமே.

பொருள் : சன்மார்க்கத்தை அடைய வருகின்ற அருமையான சாதகர்க்கு ஏனைய மூன்று மார்க்கங்களும் பெறுவது இயல்பாதலின் சிவனொடு பொருந்தும் நன்மார்க்கமே வேண்டுவது ஆகும். இதுவே பிரணவ மார்க்கம் என வேதம் கூறியது என்று கடைப்பிடிக்கவும். ஏனைய மூன்று; சகமார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாசமார்க்கம்.

1485. அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமும்
தன்னொடும் கண்டவர் சன்மார்க்கத் தோரே.

பொருள் : தனக்கு வேறாய்ப் பாசம் உண்டு என்றும், பாசத்தால் இன்பம் உண்டு என்றும், அக்கன்மம் காரணமாகப் பிறப்பு இறப்புக்களாகிய அவத்தைகள் உண்டு என்றும், அவத்தைக்கு ஏதுவான மூலப்பிர கருதி உண்டு என்றும் இவைகளை அறியும் அறிவு உண்டு என்றும், இவைகளின் பேதங்களையும் ஆன்மாவையும் கண்டு ஆராய்பவர் சன்மார்க்க நெறியில் நிற்பவரேயாவர்.

1486. பசுபாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிப்
கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்து
ஒசியாத உண்மைச் சொரூபஉ தயத்துற்று
அசைவானது இல்லாமை யானசன் மார்க்கமே.

பொருள் : ஆன்மாவைப் பாசத்தினின்றும் பிரித்து, பதியோடு சேர்த்து, கனியாத மனத்தை நன்றாகக் கனிய வைத்து, கெடாத மெய்ப்பொருள் தோற்றத்துள் பொருந்தி அசையாதபடி சமாதி கூடியிருத்தலே சன்மார்க்கமாம். (சொரூப உதயம் - ஆன்மாவின் இயற்கை உருவம்.)

1487. மார்க்கம்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம்சன் மார்க்கமே யன்றிமற்று ஒன்றில்லை
மார்க்கம்சன் மார்க்க மெனும்நெறி வைகாதோர்
மார்க்கம்சன் மார்க்க மாம்சித்த யோகமே.

பொருள் : சன்மார்க்கத்தில் உள்ளோர் அடைய வகுக்கும் மார்க்கம் சன்மார்க்கமாகிய மார்க்கமின்றிப் பறிதொன்றில்லை. மார்க்கமாகிய சன்மார்க்க நெறியே மார்க்கம் யோகசித்திகளைத் தரும் நன்னெறியாம். சன்மார்க்கமே ஞானத்தைத் தரும் மார்க்கமாம். இதனைச் சிவயோகம் எனவும் கூறுவர்.

10. சக மார்க்கம் (தோழமை நெறி)

(சகமார்க்கமாவது தோழமை நெறியாம். சகமார்க்கத்தில் நிற்போர் சிவ ரூபத்தைப் பெறுவர்.)

1488. சன்மார்க்கம் தானே சகமார்க்க மானது
மனமார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது போராப் பிறந்துஇறந்து
உன்மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே.

பொருள் : ஞான நெறியானது தோழமை நெறியாகவே அடையப்படுவது. இராஜ மார்க்கமாகிய இது பின் வீடு பேற்றையும் சித்தியையும் தருவதாம். இவையல்லாத பிற்பட்ட நெறிகள் நீங்காப் பிறப்பையும் இறப்பையும் தந்து ஞானத்தை நினைத்து நினைத்து வருந்தச் செய்பவை. ஆருயிர்களைத் தோழமை நெறியில் இருத்துதற்கு இருந்து காட்டியவர்நம்பி ஆரூரர். பின்மார்க்கம் - மேலே கூறிய நான்கு மார்க்கங்கள் அல்லாதது. (உன் - அலைகிற)

1489. மருவும் துவாதச மார்க்கம்இல் லாதார்
குருவும் சிவனும் சமயமும் கூடார்
வெருவும் திருமகள் வீட்டில்லை யாகும்
உருவும் கிளையும் ஒருங்குஇழப் பாரே.

பொருள் : சிரசின் பன்னிரண்டு அங்குலத்தில் பொருந்துகின்ற மார்க்கத்தை அறியாதவர், துவாத சாந்தத்திலுள்ள குரு மண்டலமாகிய ஒளி மண்டலத்தையும், அங்கு விளங்கும் சிவத்தையும் இவற்றை உணர்த்தும் சமயத்தையும் அறியாதவர் ஆவர். இவரது இல்லத்தில் இலக்குமி தங்காமல் அகன்றுவிடும். தனது உருவத்தையும் சுற்றத்தையும் விட்டு இறந்துபடுவர்.

1490. யோகச் சமாதியின் உள்ளே அலிடம்
யோகச் சமாதியின் உள்ளே உளரொளி
யோகச் சமாதியின் உள்ளே உளசத்தி
யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே.

பொருள் : தோழமை நெறியாகிய சகமார்க்கத்தில் சமாதியாகிய நிஷ்டையில் இரப்போர்க்கு, அவர் உள்ளத்தின்கண் திருவருட்கண்ணால் பரந்த உலகங்கள் காணப்படும். அதுபோல் உள்ளொளியாகிய பேரொளி தோன்றும். அவ்வுள்ளத்தின்கண் திருவருள் அம்மை காட்சியருள்வள். இச்சமாதியில் உயர்ந்தோர். அனைத்துச் சித்தியும் அடைவர். அவர்களே சித்தர் என்பபடுவோர். (யோகசமாதி - சகமார்க்கம்)

1491. யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகுமால்
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியில் புருடார்த்த சித்தியது
ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே.

பொருள் : யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகும். யோகத்தால் சிவ சாரூபம் பெற்று விளங்குவார். அதனால் அவர் பூவுலகில் அடையப்பெறும் அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அடைந்தவராவர். அழியாத யோகிக்கு யோகமும் போகமும் பொருந்துவனவாம்.

1492. ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெடல் ஆம்சக மார்க்கமே.

பொருள் : ஆதார சோதனையால் நாடிசுத்தி அமைந்து, மேதை முதலான பதினாறு கலைகளில் விளங்கும் ஆகாயமும் அவற்றால் விளங்கும் ஒளியும் புலனாகும். அறிவின் ஆலயம் என்ற ஆன்மாவில் புலன்களும் பொறிகளும் புத்தியும் தம்முடைய இயல்பான கீழ் இழுக்குந் தன்மையை விட்டு நிற்பதே சகமார்க்கமாகம்.

1493. பிணங்கிநிற் கின்றவை ஐந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயிர்மன வாளால்
கணம்பதி னெட்டும் கருதும் ஒருவன்
வணங்கவல் லான்சிந்தை வந்துநின் றானே.

பொருள் : ஆன்மாவைக் கீழ்நோக்கில் அழைத்துச் செல்லுகின்ற ஞானேந்திரியங்கள் ஐந்தையும் பின்னர் மனம் என்னும் கூரிய வானால் வருத்தித் துன்புறுத்துவேன். அப்போது பதினெண் கணங்களும் கருதுகின்ற ஒருவனும் வணங்கத் தக்கவனும் ஆகிய இறைவன் சிந்தையில் பொருந்தி நின்றான்.

(ஐந்து இந்திரியங்களையும் அடக்கும் யோகியின் சிந்தையில் இறைவன் பொருந்தி நிற்பான்.)

கணம் பதினெட்டு : அமரர், சித்தர், அசுரர், சைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பசாசர், அந்தரர், முனிவர், உரகம் ஆகாய வாசியர், போக பூமியர் எனப் பாகு பட்டன பதினெண் கணமே.

1494. வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மையன் ஆகும்
உளங்கணிந்து உள்ளம் உகந்திருப் பார்க்குப்
பழங்கனிந்து உள்ளே பகுந்துநின் றானே.

பொருள் : வளமான கனியைப் போன்ற கனிவையுடைய செம்மையாளர்க்கு நல்ல கனியைப்போன்று இன்பந்தரும் உண்மைப் பொருளாகும். மனங்கனிந்து உள்ளே மகிழ்ந்திருப்பவர்க்கு பழங்கனிந்துள்ளேயிருக்கும் காற்றினை நீக்கி எடுப்பது போல இவரைத் தத்துவங்களினின்றும் நீக்கித்தானும் உடனிருந்தான். சகமார்க்கத்தில் நிற்போரைத் தத்துவங்களினின்றும் நீக்கி உடனிருந்தருளுவான் இறைவன்.

(திருவடிப் பேரின்பம் பழங்கனிய அம் மெய்யடியார்க்கு அதனைப் பகிர்ந்து கொடுத்து உடன் நின்றருள்வன் அச்சிவன் எனினுமாம்.)

11. சற்புத்திர மார்க்கம் (மகன்மை நெறி)

(சற்புத்திர மார்க்கமாவது கிரியை நெறியாகும். பூசித்தல் முதலியன இந்நெறிக்குரிய அங்கங்களாம்.)

1495. மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில்
தாவிப்ப தாம்சக மார்க்கம் சகத்தொழில்
ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்
தேவியோடு ஒன்றல் சன்மார்க்கத் தெளிவதே.

பொருள் : தோழமை நெறியாகிய சகமார்க்கத்தை நிலை நிறுத்துவது மகன்மை நெறியாகிய சற்புத்திர மார்க்கமாகும். சகமார்க்கமாகிய அகத்தவமும் மனைத்தவமும் ஆகிய இரண்டும் காதன்மை நெறியாகிய சன்மார்க்க அடிப்படையாகும். (அகத்தவம் - யோகம், மனைத்தவம் - சகத்தொழில். இம்மந்திரம் சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் ஒன்றுக்கொன்று அடிப்படை என்று கூறுகிறது.)

1496. பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட்டு அன்னமும் நீசுத்தி செய்தல்மற்று
ஆசற்ற சற்புத் திரமார்க்கம் ஆகுமே.

பொருள் : பூசனை செய்தல், பாராயணம் செய்தல், இறைவனது புகழைச் சொல்லி வணங்குதல், குறிப்பிட்ட மந்திரங்களைக் கூறிச்சிந்தித்தல், குற்றமற்ற தவ ஒழுக்கங்களை மேற்கொள்ளல், உண்மை பேசுதல், காமாதி அறுபகை நீங்குதல், அன்போடு அன்னபாவனை செய்தல் ஆகிய இவ்எட்டும் குற்றமற்ற சற்புத்திர மார்க்கத்திற்குரிய உறுப்புக்களாம்.

1497. அறுகால் பறவை அலர்தேர்ந்து உழலும்
மறுகா நரையன்னம் தாமரை நீலம்
குறுகா நறுமலர் கொய்வன கண்டும்
சிறுகால் அறநெறி சேர்கி லாரே.

பொருள் : ஆறுகால் பறவையான வண்டானது தேன் சேகரிக்கப் பலமலர்களை நாடி அலையும். அலையினும் வெள்ளை அன்னமானது தாமரையை விட்டுக் கவர்ச்சியான நீலோற்பல மலரை அடையாது. அதுபோலக் கிரியையாளர் மணமிகு மலர்களைப் பறித்துச்சிவனை வழிபடுவது கண்டும், ஏனையோர் சிறுபொழுதேனும் வழிபடாது பிறவழிச் சென்றுகெடுகின்றவர்களே.

1498. அருங்கரை யாவது அவ்வடி நீழல்
பெருங்கரை யாவது பிஞ்ஞகன் ஆணை
கருங்கரை ஏகின்ற மன்னுயிர்க்கு எல்லாம்
ஒருங்குஅரை யாய்உல கேழின்ஒத் தானே.

பொருள் : பிறவிப் பெருங்கடலுக்கு அருமையான கரையாவது திருவடி நீழலே, பெரிய கரையாவது அரன் ஆணையின் வண்ணம் அமைதலே திருவடியாகின்ற கரைக்குச் செல்லுகின்ற நிலைபெற்ற உயிர்கட்கு எல்லாம் ஒரே அரசாய் ஏழு உலகினும் ஒத்து விளங்கியவன் இறைவன் ஆவான். (அருங்கரை - சம்சாரக் கடலுக்குக்கரை. வரும் கரை - எழும் பிறப்புக்கள். அரையாய் - இறைவனாய்.)

1499. உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி
வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயனது வாகும்
பயந்து பிரிக்கில்அப் பான்மையன் ஆமே.

பொருள் : திருவேடப் பொலிவால் உயர்ந்தும், சிவனடியார் திருவடிகளைப் பணிந்தும், அதனால் உள்ளம் உவந்தும், திருஐந்தெழுத்தினை அகம்தழுவியும், அதனால் வியப்புற்றும் சிவபெருமான் திருவடிக்கே திருத்தொண்டு செய்வோம் என்பாரே மகன்மை நெறியினராவர். அப்பணியினை அன்புடன் செய்யுங்கள். பிறவிக்கு அஞ்சிப் பெருமான் அடிகளைச்சேரும் பெரும் பேறு அதுவாகும். அன்பும் அச்சமுங்கொண்டு அவன் திருவடியினை நெஞ்சத்து அமைத்துத் தொழுதால் சிவபெருமானும் அவ் ஆருயிரினை முன்னின்று தாங்குபவன் ஆவான்.

1500. நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத்
துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறும்
சென்று வெளிப்படும் தேவர் பிரானே.

பொருள் : நான்நின்று தொழுவேன். அழகிய பிரானைக் கிடந்து என்றும் தொழுவேன். ஆதலால் நீங்களும் அழகிய பரஞ்சோதியாகிய இறைவனைப் பொருந்திய மலர்கொண்டு தொழுது வழிபடுங்கள். அவ்வாறு தொழும் போது தேவதேவனாகிய சிவபெருமான் தொழுவார்தம் சிந்தனையில் வெளிப்பட் டருள்வான்.

1501. திருமன்னும் சற்புத்திர மார்க்கச் சரியை
உருமன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்
கருமன்னு பாசம் கைகூம்பத் தொழுது
இருமன்னு நாடோறும் இன்புற்று இருந்தே.

பொருள் : கிடைத்தற்கரிய மக்கள் யாக்கை பெற்ற உலகவரே ! கேளுங்கள், மகன்மை நெறிக்கண் ஒழுகுவார்க்கு வீடுபேறு எளிதின் எய்தும். பிறவிக்கு வித்தாகிய ஆணவ மல பாசம் இம்மகன்மை நெறியினரைக் கண்டு செயலற்று ஒடுங்கும். அதனால் நாள்தோறும் திரு ஐந்தெழுத்து ஓதித் தொழுது இன்புற்றிருங்கள். (மகன்மை நெறி - சற்புத்திர மார்க்கம், கைகூம்ப - செயலற்று ஒடுங்கி. கை - செயல்)

12. தாச மார்க்கம் (அடிமை நெறி)

(தாசமார்க்கமாவது திருக்கோயிலில் சென்று தொண்டு செய்வது.)

1502. எளியனல் தீபம் இடல்மலர் கொய்தல்
அளிதின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.

பொருள் : அடியார்க்கு எளியனாய் ஒழுகுதல், திருக்கோவில்களில் நல்ல விளக்கிடுதல், திருநந்தவனத்தில் மலர் கொய்தல், அன்புடன் மெழுகல், திருஅலகிடுதல், திருமுறைத் திருப்பதிகம் பாடியபடி பொருள்சேர் புகழை ஓதி வாழ்த்தல், திருக்கோவிற்கண் உள்ள அசையாமணி போன்ற விளக்க மிக்க பெரிய மணிகளை அடித்தல், திருமுழுக்குக்கு வேண்டிய திருத்தநீர் முதலியன கொணர்தல் இன்னும் திருக்கோவில் திருத்தொண்டு பலவும் புரிதல் அடிமை நெறி என்ப. (பளி - பள்ளி என்பதன் இடைக்குறை தளி - திருக்கோயில். பள்ளி - திருக்கோயில்)

1503. அதுஇது ஆதிப் பரம்என்று அகல்வர்
இது வழி என்றங்கு இறைஞ்சினர் இல்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடும்
அதுஇது நெஞ்சில் தணிக்கின்ற வாறே.

பொருள் : ஆதிப்பரம் அது இது என்று ஐயுற்றுத் தெளியாது நீங்குவர். வாய்மைச் செந்நெறி இது என்று தெளிந்து வேந்தனாம் சிவபெருமானை வழிபட்டுத் தெளிந்தார் இல்லை. தமிழ்த் திருமாமறை, திருமுறை வழியே உண்மை கண்டு ஓர்ந்து செந்நெறிச் சென்று சிவபெருமானை நாடுங்கள். அதுவே உள்ளத்தில் தோன்றும் ஐயுறவை அகற்றித் திருமுறை - தமிழ் ஆகமம், விதிவழி  - தமிழ் வேதம்.

1504. அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும்
வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்ததே.

பொருள் : திருவருள் துணையால் திங்களாகிய இடகலையையும் ஞாயிறாகிய பிங்கலையையும் அடக்குவன். அடக்கி எந்நாளும் ஒப்பில்லாத சிவபெருமானின் திருவடிகளை நாடுவன். தேவர் முதல்வனாகிய அச்சிவபெருமானையே நாள்தோறும் வணங்குவேன். அவ்வாறு வணங்கும் திறங்கள் எல்லாம் நால்வகை மார்க்கத்தில் அடங்கும்.

1505. அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி
உன்னுவர் உள்மகிழ்ந்து உள்நின்று அடிதொழக்
கண்ணவன் என்று கருதும் அவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.

பொருள் : தேவர்கள் பரசிவத்தை ஆயிரம் நாமங்கள் கூறி அருச்சித்துத் தியானிப்பர். ஆனால் அவர்களை விடுத்து உள்ளம் மகிழ்ந்து திருவடியை மனத்தில் எண்ணித் தொழுது, கண் போன்றவன் என்று கருதி நிற்கும் அடியார்கட்கு நாதமயமான இறைவன் அவரது பேரன்புக்கு வெளிப்பட்டு அருளுவான்.

1506. வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லாம் மனம்பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடத்து அண்ணலை
நேசத் திருத்த நினைவுஅறி யாரே.

பொருள் : வாசித்தாலும் பூசித்தாலும் சிறந்த மலர்களைக் கொய்து கொணர்ந்தாலும் சொன்னால் கல்வீழ்ந்த பாசிக்குளம் போன்று தெளிவில்லாதது மனம். ஆதலின் இவர்கள் குற்றமற்ற சோதியாகிய நீலகண்டப் பெருமானை அன்பினால் இடைவிடாது மனத்தில் இருந்த நினைவு அறியாதவரேயாவர். குளத்தில் கல்வீழ்ந்தபோது பாசி அகலும்; பின்னர் பாசிமூடும், அதுபோல மனம் பூசை முதலியன செய்தகாலத்துத் தெளியும், பின்னர் மூடத்தைப் பெறும்.

13. சாலோகம்

(சிவனுலகம்)

1507. சாலோகம் ஆதி சரியாதி யிற்பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் சரியையால்
மாலோகம் சேரில் வழியாகும் சாரூபம்
பாலோகம் இல்லாப் பரன்உரு வாமே.

பொருள் : சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நால்வகை முத்திகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நெறிகளால் அமையும். அவற்றுள் சரியை நெறிபற்றி நிற்போர் இறைவன் வாழும் உலகத்தை அடைந்து அவனுடைய சமீபத்தில் அமைவர். அத்தகைய உலகில் சாமீபத்தை அடைந்தவர் அவனது உருவத்தைப் பெறுவர். இவர் இறைவனைப் போன்ற ஒளி உருவைப் பெற்று இப்பரந்த உலகில் இல்லாமல் எங்கும் நிலைபெறும் பரம் உருவாமே.

 (சரியையால் சாலோகம் பெறலாம் என்றது இம்மந்திரம்.)

1508. சமயம் கிரியையில் தன்மனம் கோயில்
சமய மனுமுறை தானே விசேடம்
சமயத்து மூலம் தனைத்தேறல் மூன்றாம்
சமயாபி டேகம் தானாம் சமாதியே.

பொருள் : சமயத்தைப் பற்றி நிற்போர் செய்யத்தகும் முதல் கிரியை தன்னுள்ளத்தில் வழிபடு கடவுளை வைத்தல், சமயத்தில் விசேடம் என்பது அவ்வழிபடு கடவுளுக்குரிய மந்திரத்தை உன்னுதல். சமயத்திலுள்ள மூலமந்திரத்தின் தத்துவம் தெளிதல் மூன்றாவதாகிய நிர்வாண தீட்சையாகும். வழிபடு கடவுளை நினைந்து சமாதி கூடல் சமயத்துக்குரிய அபிடேகமாம்.

14. சாமீபம் (சிவன் அண்மை)

(சாமீபம் - இறைவன் சமீபத்தில் உறைதல்.)

1509. பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்
பாசம் அருளான தாகும் இசை சாமீபம்
பாசம் சிரமான தாகும் இச் சாரூபம்
பாசம் கரைபதி சாயுச் சியமே.

பொருள் : சாலோக முத்தியில் பாசத் தன்மை கெடாமல் நின்று பிறவியைத் தரும். சாமீபத்தில் பாசம் பந்தப் படுத்தாமல் அருளாய் நிற்கும். சாரூபத்தில் பாசமானது மேலும் மேன்மையைத் தரும் சாயுச்சியத்தில் பாசமானது முழுதும் கரைந்து பதியை அடைவிக்கும்.

(விளக்கம் : சாலோகம் - இறைவனது உலகத்தில் இருத்தல், சாமீபம் - சமீபத்தில் உறைதல், சாரூபம் - உருவம்பெறதல், சாயுச்சியம் - இரண்டறக்கலத்தல்.)

(சாலோகம் முதலிய மூன்றும் பத முத்திரைகள், சாயுச்சியம் - பர முத்தி.)

15. சாரூபம் (சிவனுரு வாதல்)

(சாரூபம் - இறைவன் உருவம் பெறுதல்)

1510. தங்கிய சாரூபம் தானெட்டாம் யோகமாம்
தங்கும் சன்மார்க்கம் தனில்அன்றிக் கைகூடா
அங்கத் துடல்சித்தி சாதனர் ஆகுவர்
இங்கிவ ராக விழிவற்ற யோகமே.

பொருள் : நிலைபெற்ற சாரூபம் என்பது யோகத்தின் எட்டாவது உறுப்பான சமாதியில் அமைவது தங்கிய ஞானநெறி பற்றி நின்றார்க்கன்றிக் கைகூடாதாகும். இந்நெறியால் உறுப்போது கூடிய சரீரசித்தி கைவரப் பெறுவர். இங்கு இவரது உடல் குற்றமற்ற யோகத்தால் திருத்தி அமைக்கப்படும். யோக மார்க்கத்தால் சாமீபம் இட்டும் என்றது இம்மந்திரம்.

1511. சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலம தாகும் சராசரம் போலப்
பயிலும் குருவின் பதிபுக்க போதே
கயிலை இறைவன் கதிர்வடி வாமே.

பொருள் : உலகத்தில் ஒப்பில் ஒருமலை என்று சொல்லப்படும். பொன்மலையினைச் சார்ந்த இயங்குதிணையும் நிலைத் திணையுமாகிய பொருள்கள் எல்லாம் அப்பொன்வண்ணம் ஆதல்போல், சிவகுரு வீற்றிருக்கும் திருவூர் புகுந்தபோதே கயிலைமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் இயற்கை அறிவொளி வடிவம் ஆவன், மெய்கண்டானாகிய மாணவன். (சயிலம் - கயில மலை.)

16. சாயுச்சியம் (சிவனாதல்)

 (சாயுச்சியம் - இறைவனோடு இரண்டறக் கலத்தல்)

1512. சைவம் சிவனுடன் சம்பந்த மாவது
சைவம் தனையறிந் தேசிவம் சாருதல்
சைவம் சிவம்தன்னைச் சாராமல் நீவுதல்
சைவம் சிவானந்தம் சாயுச் சியமே.

பொருள் : சிவனாம் நிலையில் முதல்நிலை சைவம் சிவனுடன் தொடர்புற்று நிற்றல். இரண்டாம் நிலை அந்நெறியின் உண்மை உணர்ந்து சிவன் அண்மையில் சார்ந்து நிற்றல். மூன்றாம் நிலை சார்ந்து நிற்றலைக் கடந்து முழுநீறு பூசிய முனிவர் போன்று வேறன்மையாக விரவி நிற்றல். இந்நிலையே சைவத்தின் கண் ஓதப்படும். சிவனார் திருவடிப் பேரின்பம் என்னும் சாயுச்சியமாகும்.

1513. சாயுச் சியம்சாக் கிராதீதம் சாருதல்
சாயுச் சியம்உப சாந்தத்துத் தங்குதல்
சாயுச் சியம்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியமனத்து ஆனந்த சத்தியே.

பொருள் : விழிப்பின்கண் தன்னை மறந்திருத்தல் சாயுச்சியம் அடைதல், விருப்பு வெறுப்பு அற்ற உபசாந்த நிலையில் உள்ளவரும் சாயுச்சியம் பெற்றவரே. சிவத்துடன் இலயமாதல் எல்லையற்ற ஆனந்தத்தில் திளைத்திருப்பதாகிய சாயுச்சியமே. (சாக்கிராதீதம் - விழிப்பில் தன்னை மறந்திருத்தல் உப சாந்தம் - விருப்பு வெறுப்பு அற்ற நிலை)

17. சத்தி நிபாதம் (திருவருள் நன்கு பதிதல்)

மந்தம்

(சத்தி நிபாதம் - சத்தி நன்கு பதிதல். ஆன்மாவை விளக்கம் உறாது பந்தித்திருந்த மலசத்திகள் வீழ்தொழிந்து அருளைப் பெருக்கும் சத்திகள் பதித்தல். அருள் பதிவுக்கு ஏற்ப அறிவு பிரகாசிக்கும் என்ப. இதில் நான்கு நிலைகள் உள்ளன. 1) மந்தம் - அற்ப அறிவினைப் பெற்றவன், 2) மந்ததரம் - மந்தமாக இருந்து மந்திரங்களை உபாசிப்பவன், 3) தீவிரம் - யோகப் பயிற்சி செய்வோன் 4) தீவரதரம் - ஞான மார்க்கத்தை அனுசரிப்பவன்.)

1514. இருட்டறை மூலை யிருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி யவனை மணம்புரிந் தாளே.

பொருள் : அறியாமையாகிய இருள் சூழ்ந்த இவ்வுடலகத்து அறியாமையை நீக்கி அறிவை விளங்கும் திருவருட் குமரி மூலையில் இருப்பார் போன்று மறைந்து உறைந்தனள். அறிவுக்கண் விளங்காமல் குருடாக இருந்த ஆருயிர்க் கிழவனைக் கூடுதல் கருதி, அவனுக்கு ஏற்பட்ட குருடாகிய அறியாமையை அகற்றிச் சிவபெருமானின் எண்கணங்களையும் வண்ணமுறக் காட்டித் தன்மாட்டே பேரன்பு கொள்ளுமாறு மயக்கி, அவன்பால் சிவமணம் கமழும் படிதான் கூடியிருந்தனள். (இருட்டறை - அஞ்ஞான இருள்படர்ந்த சரீரம். குமரி திருவருட்சத்தி குருட்டுக்கிழவன் - ஞானக்கண் இல்லாத ஆன்மா மணம்புரிந்தாள் - தங்கினாள்.)

1515. தீம்புல னான திசையது சிந்திக்கில்
ஆம்புல் னாயறி வார்க்குஅமு தாய்நிற்கும்
தேம்புல னான தெளிவறி வார்கட்குக்
கோம்புல னாடிய கொல்லையு மாமே.

பொருள் : சிவனடியின்பம் எய்துவதற்குரிய நிலையினை எண்ணில் அந்நிலை திருவடி யுணர்வாய் அவ்வுணர்வினை உணர்வார்க்கு இறவா  இன்பநுகர்வாம் சிவ அமிழ்தாய் நிற்கும். இத்தகைய இனிய உணர்வாகித் தெளி அறியுடையவர் கட்குக் கோப்புலனாகிய சிவஞானம் எண்ணியவாறே ஐம்புலன் நுகர்வு இன்பம் தரும் புறத்துப் பூங்காஒத்து அகத்துதிகழும், (கோம்புலன் - கோப்புலன் உயர்ந்த ஞானம் கொல்லை - பூங்கா.)

1516. இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள்நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்
பொருள்நீங்கா இன்பம் புலம்பயில் தானே.

பொருள் : பழ மலமாம் இருளைப் பிறைமதிபோல் நீக்கி, அதன் பொருட்டு அவ்வுயிர்க்கு நேர்ந்த பல பிறவிகளையும் கொடுத்துக் கடத்தி, ஆதியாகிய நடப்பாற்றல் திருவருள் நீங்காவண்ணம் உடன்நின்றருளும். அருளவே அவ்வுயிர் உன்மத்தம் அகலாத வானவர் கோனாகிய சிவபெருமானுடன் கூடி என்றும் நிலத்திருப்பதாகிய பேரின்பம் நுகரும். உயிர் நிலைக் களமாம் உடம்பாகவும் அவ்வருள் திகழும்.

1517. இருள்சூழ் அறையில் இருந்தது நாடில்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந்த தாற்போல்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
அருள்சூழ் இறைவனும் அம்மையும் ஆமே.

பொருள் : இருட்டறையில் விளக்கொளியால் பொருளைக் காண்பது போல அஞ்ஞான இருள் படர்ந்த சரீரத்தில் திருவருட் சத்தியின் ஒளியால் சிவமாகிய பொருளைக் காணலாம் என்றது இம்மந்திரம்.

மந்தரம்

1518. மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினையறுத்து இன்பம் விளைத்து
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
அருள்திகழ் ஞானம் அதுபுரிந் தாளே.

பொருள் : திருவருள் அம்மை ஆருயிர்கள் தன்மாட்டு விருப்பம் கொள்ளும்படி அவ்வுயிர்களை மயக்கிக் கூடினள். அவளே அவ்வுயிர்கள் பழமலப் பிணிப்பால் மாயையின்கண் மயங்கிக் கிடந்த மயக்கினை நீங்கி யருளினள். அச்சுறுத்தி வினைகளை அறுத்துத் திருவடி யின்பத்தினை விளைவித்தவளும் அவளே. அவளே ஞானக்கண் பெறாது அகக்கண்குருடாயிருந்த குருட்டினை நீக்கியருளினன். எய்தற்கரிய நன்மைகள் பலவற்றையும் காட்டித் திருவருள் வண்ணமாகிய சிவஞானத்தினைப் பதித்தருளியவளும் அவளே. அங்ஙனம் செய்தருளியவள் வனப்பாற்றலாகிய திருவருள் அம்மை.

1519. கன்னித் துறைபடித்து ஆடிய ஆடவர்
கன்னித் துறைபடித்து ஆடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந்து ஆடுங் கருத்துண்டேல்
பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.

பொருள் : புறத்தே செந்தமிழ் நாட்டுத் தென்கோடி முனையாகிய கன்னியாகுமரி என்னும் கன்னித்துறைதிருத்தநீர் படிந்து ஆடியவர் அத்துடன் அமைந்து விடுகின்றனர். அஃது அகத்தே விளங்கும் திருவருள் நெறியாகிய கன்னித்துறை படிந்தாடுதற்கு வழியென்று நினைத்து ஆண்டுச் சென்று பயிலும் கருத்துடையர் அல்லர். அத்திருவருள் நெறிச் செல்லும் கருத்துண்டாகுமானால் அவர் பிறவாப்பெருநெறிப்பற்றிப் பிறப்பற்றுச் சிறப்புற்று வாழ்வர். (கன்னித் துறை - சத்தி பொருந்துதலுக்கு உரிய வழி).

1520. செய்யன் கரியன் வெளியன்நற் பச்சையன்
எய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
மைவென்று அகன்ற பகடுரி போர்த்தவெங்
கையன் சிவனென்று காதல்செய் வீரே.

பொருள் : படைத்தல் காத்தல் துடைத்தல் மறைத்தல் ஆகிய உலகியல் தொழில் நான்கிற்கும் கொள்ளும் திருமேனியின் நிறம் முறையே செம்மை, கருமை, வெண்மை, பசுமை என்ப. இறைவன் இந்நிறங்களை மேற் கொள்ளுகின்றனன் என்னும் உண்மையைப் பொருந்த உணர்ந்தவர் அவன் திருவடியினை அடைவர். எய்வர் - எய்துவர் (இடைக் குறை) அவனே அறியாமைச் சார்பாகத் தோன்றிய தன் முனைப்பாகிய யானையை நகத்தால் உரித்துப் போர்த்தனன். மழுவாகிய தீயினைக் கையில் தாங்கியவனும் அவனே. அதனால் அவன்பால் பேரன்பு கொள்ளுங்கள். (செய்யன் - அயன்; கரியன் - அரி; வெளியன் - அரன்; பச்சையன் - ஈசன்.)

1521. எய்திய காலங்கள் எத்தனை யாயினும்
தையலும் தானும் தனிநா யாகம்என்பர்
வைகலும் தன்னை வணங்கும் அவர்கட்குக்
கையிற் கருமம்செய் காட்டது வாமே.

பொருள் : உலகினுக்கு எத்தனை ஊழிகள் செல்லினும் சிவையும் சிவனும் ஒப்பில்லாத முழுதன்மையர் ஆவர். நாள்தோறும் தம்மை வணங்கும் மெய்யடியார்கட்கு உண்மை அறிவு இன்ப அடையாளத் திருக்கையால் காட்டிருள்வர். அடையாளக் காட்டு அதுவுமாகும். இதுவே சின்முத்திரை; பொறி. (கருமம்செய் காட்டு - யோகம் செய் என்று கூறுவது போலும்.)

1522. கண்டுகொண் டோம்இரண் டும்தொடர்ந்து ஆங்கொளி
பண்டுபண்டு ஓயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடும் மலர்வார் சடையண்ணல்
நின்றுகண் டார்க்கிருள் நீங்கிநின் றானே.

பொருள் : ஞாயிறும் திங்களும் ஆகிய ஒளியிரண்டும் பழமையாக ஒன்றை ஒன்று தொடர்ந்து வரினும் அவை இளைப்புறும். ஆனால் பரனாகிய பரஞ்சுடர் என்றும் ஒன்று போல் இருப்பன். வண்டு மொய்க்கும் கொன்றை மலர்மாலையணிந்து நீண்ட திருச்சடையுடைய சிவபெருமான் திருவடிகளை நன்னெறிக்கண் நின்று வழிபடுவோர்க்கு அவன் எழுந்தருளி இருள்நீக்கி ஆண்டு அருள்வன்.

தீவிரம்

1523. அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில்
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி யுணர்விக்கும்
உள்நிற்ப தெல்லாம் ஒழிய முதல்வனைக்
கண்ணுற்று நின்ற கனியது வாகுமே.

பொருள் : சிவபெருமான் உடைமையாகிய தோட்டம் ஒன்றுள்ளது. அத்தோட்டம் ஆருயர்களின் உடம்பாகும். அதன்கண் பொருந்தியிருக்கின்ற பெண்பிள்ளை திருவருள் ஆற்றல் ஆவள். அளவில்லாத எழுவகையாகத் தோன்றும் பிறப்பு உயிர்க்கு அத் திருவருள் உணர்வினை விளக்கும். உடம்பு அகத்துள்ள கருவிக் கூட்டங்களும் கருமக் கூட்டங்களும் ஆகிய அனைத்தினையும் அத்திருவருள் அகற்றி யருள்வள். அகற்றவே முழுமுதலாகிய விழுமிய சிவக்கனி கண்ணுறப் பொருந்தி நிற்கும் (எண்ணிக்கும் - எண்ணைக் கடக்கும் அளவிறக்கும்.)

1524. பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை யறுக்கும் வழிபடø வைக்கும்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.

பொருள் : குறப்பெண்ணாகிய வெள்ளிமலை மலையாள் - திருவருள் அம்மை செந்தமிழ்த் திருமுறை வழியே சிறப்புடன் பூசனை புரியும் மெய்யடியார்க்கு அவர்களுடைய பிறப்பை அறுப்பாள். நானெறிப் பெருந்தவத்தை நல்குவாள். அறியாமையான நிகழும் சிவனை மறக்கும் மறப்பை அறுப்பாள். சிவயநம என்னும் திரு ஐந்தெழுத்தைக் கணித்து இடையறாது வழிபட வைப்பாள். (குறப்பெண் - குறிஞ்சி நிலப்பெற் - பார்வதி.)

1525. தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன்
பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்
ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்
தூங்கொளி நீலம் தொடர்தலும் ஆமே.

பொருள் : எட்டுத் திசைக்கும் தலைவனோடு கூடி விளங்கும் திருவருள் அம்மையை உள்ளத் தாமரையினிடத்து இடையறாது உன்னுங்கள். மணங் கமழ்கின்ற மலர் சூடிய கூந்தலை யுடைய திருவருள் அம்மையின் திருவடிகளை வழிபடும் மெய்யன்பர்களுக்கு நீங்கா ஒளி நீலமாகிய திருவருள் பதிந்து தொடர்ந்து அருள் புரியும் (திருவருள் வீழ்ச்சி - சத்திநிபாதம். நீலம் - திருவருள் தாங்குமின் - நினையுங்கள்)

1526. நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவன்
அணுகியது ஒன்றறி யாத ஒருவன்
அணுகும் உலகெங்கும் ஆவியும் ஆமே.

பொருள் : மேலே கண்ட வகையில் சத்தியின் அருளி பெற்றவனை அடைந்த பிறர்க்கு ஞானம் அமையும். அவனை வணங்கின் அவனும் பல மலர்களைத் தூவி வழிபடுவன். அத்தகைய மேலோன் தன்னைப் பணிவாரைக் கண்டு செருக்குக் கொள்ளாமல் சமத்தவ நிலையில் நிற்பன். அவன் உலகெங்கும் சென்று வரும் ஆற்றலைப் பெறுவான். சத்தி நிபாதத்தில் தீவிரத்தில் உள்ளோர் இயல்பு. தீவிர பக்குவிகள் எங்கும் சென்று ஞானம் நல்குவர்.

தீவிரதரம்

1527. இருவினை நேரொப்பில் இன்னருள் சத்தி
குருவென வந்த குணம்பல நீக்கித்
தருமெனும் ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலத் தீர்ந்து சிவனவன் ஆமே.

பொருள் : நல்வினை தீவினையாகிய இரண்டும் சமமாக ஒத்தகாலத்தில் இனிமையான அருள் சத்தி குரு மண்டலத்தில் விளங்கி, ஆன்மப் பிரகாசம் அடைவதற்கு இடையூறான குணங்களைப் போக்கியருள்வாள் என்னும் அறிவால் தன்முனைப்பால் செய்யும் செயலற்றிருப்பின் மும்மலங்களும் கெட்டுச் சிவமாய் விளங்குவான். இருவினை ஒப்பாவது நன்மையில் உவப்பும் தீமையில் வெறுபபும் இன்றியிருத்தல். தன் செயல் அறுதலாவது, எல்லாம் சிவன் செயல் என்றிருத்தல். தீவரதர பக்குவிகள் தமக்கென ஒரு செயலுமின்றி யிருப்பர்.

1528. இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை உன்னி
அரவம்செய் யாமல் அவளுடன் சேரப்
பரிவொன்றி லாளும் பராபரை தானே.

பொருள் : நினைப்பும் மறப்பும் இல்லாமற் செய்யும் திருவடியுணர்வு இடத்து அருள் விளையாட்டு நிகழ்த்தும் ஆருயிர்க்குழலியை ஆராயின் அவ்வுயிர் ஐந்தெழுத்து உணர்வேயாக நிற்கும். வேறு எவ்வகை ஓசையும் எழாது, அருளுடனே தங்கிநிற்கும் அவ்வுயிர் என்றும் இளமை நீங்காது ஒரு படித்தாக இருக்கும் பராபரையாகிய அவளும் அன்போடு இவனைப் பொருந்தி வாழ்வாள்.

1529. மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும்
சால விளக்கும் தனிச்சுடர் அண்ணலுள்
ஞானம் விளக்கிய நாதன்என் உள்புகுந்து
ஊனை விளக்கி உடனிருந் தானே.

பொருள் : மாலைக் காலத்தில் இருட்டைப் போக்கி ஒளியை நல்கும் திருவிளக்கும், அது போன்ற மதியமும், பகலில் அது போன்று ஒளியை நல்கும் ஞாயிறும் விளக்கம் தருமாறு அவற்றுக்கு விளக்கம் அருளும் தனிச்சுடர் அண்ணலாகிய சிவபெருமான் ஆருயிர்களுக்கு உயிர்க்குயிராய் உள்நின்று தானே முழுமுதல் தலைவன் என அருளி என் உள்ளே புகுந்து நின்றவனும் அவனே. அதனோடு உடனாய் நின்றவனும் அவ÷. (ஊனை - சரீரத்தை)

18. புறச்சமய தூஷணம் (பிறநெறிப் பீழை)

(புறச்சமய தூஷணம் - புறச்சமய நிந்தனை. புறத்தே இறைவனைக் காணவேண்டும் என்று கூறும் சமயம் புறச் சமயமாகும். புறச்சமயம் பிறவி நீங்கும் வழியினை தெரிவிக்க மாட்டாது.)

1530. ஆயத்துள் நின்ற அறுசம யங்களும்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.

பொருள் : கூட்டமாக உள்ள ஆறு சமயங்களும், உடம்பினுள் விளங்கும் இறைவனைக் காண உதவி செய்யா. அதனால் அச்சமயங்களைப் பற்றி நிற்போர் மயக்கத்தைத்தரும் குழியில் விழுவர். மேலும் அவர் மனைவி மக்களாகிய தளையில் கட்டுண்டு தவிப்பவராவர்.

1531. உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலர்உறை மாதவன்
பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.

பொருள் : ஆருயிரின் நெஞ்சினுள்ளே மறைந்து எங்கும் நீக்கமற நிறைந்து நின்றவன், வள்ளலாகிய முதல்வன். அவன் உச்சிக்கு அப்பால் அருள் வெளியில் காணப்படும் ஆயிர இதழ்த் தாமரையில் வீற்றிருந்தருளும் அம்மையோடு கூடிய அப்பன், அவன் ஒன்பது ஓட்டைகளை யுடைய நிலையில்லாத இவ்வுடலில் புகுந்து நின்றனன். இங்கிருந்து ஆருயிர்களின் செல்வி நோக்கி வெளிப்படுவன். கள்ளத்தலைவனாகிய மறையோன், அவனது மெய்ம்மைக் கருத்தினை எவரும் எளிதாக அறிய மாட்டார்கள் என்க.

1532. உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.

பொருள் : உயிரின் இடமாக இருந்து அறிவு செம்மையுற்ற ஞானகட்கு அவரின் உயிரின் இடமாக இருந்து அருள்புரிவன்; உயிருக்கு அந்நியமாய் இருந்து உயிர்களை நடத்துகிறான் என்ற பேதஞானமுடைய பக்தனுக்கு வேறாக வெளியில் நின்று அருள் வழங்குவான் எமது இறைவன். உள்ளும் புறமும் இல்லையென்ற நாத்திகர்களுக்கு இரண்டிடத்தும் இல்லாதவனாகிறான்.

1533. ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே.

பொருள் : முக்கூற்று புறச்சமயத்துள் குறிப்பாக ஆறுவகைச் சமயம் வருமாறு. பைரவம், சமணம், பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம், உலகாயதம், சூனியவதாம் என்பன. இச்சமயங்களில் நின்றவர் சமயங்கடந்த சிவத்தைக் காண்கிலர். இச்சமயத்தாரால் கூறப்படும் பொருளும் அவன் அல்லன். இவ் வுண்மையினை ஆராய்தற் பொருட்டு நல்லாருடன் ஆராயுங்கள். ஆராய்ந்து தெளியுங்கள். தெளிந்த பின் நுமக்குத் திருவடியாகிய நிலைத்த பேரின்பம் எய்துதல் ஆகும். (நல்லார் - சித்தாந்த சைவர்.)

1534. சிவமல்லது இல்லை அறையே சிவமாம்
தவமல்லது இல்லை தலைப்படு வார்க்கிங்கு
அவமல்லது இல்லை அறுசம யங்கள்
தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யும் நீரே.

பொருள் : இவ்வுலகத்தில் சிவத்தைக் காட்டிலும் எங்கும் நிறைந்த மேலான பொருள் இல்லை என்று செப்புவாயாக, ஆன்மாவில் மறைந்துள்ள சிவத்தை அறிந்து அனுபவத்தைப் பெற்றுச் சிறப்படைதலே தவமே தவிர பிற இல்லை. இவ்வுண்மையை அறியாமல் சமயத் துறையில் புகுந்து சிறக்க விரும்புவார்க்கு ஆறு சமயங்களும் வீணானவையாகும். தவத்தின் பயனை அளிக்கவல்ல உங்கள் குரு மண்டலத்தில் விளங்கும் சிவத்தைச் சார்ந்துய்யுங்கள். தவமானது, தன்னுள் மறைந்த பொருளைக் காணச் செய்யும் முயற்சி.

1535. அண்ணலை நாடிய ஆறு சமயமும்
விண்ணவ ராக மிகவும் விரும்பும்
உள்நின்று அழியும் முயன்றிலர் ஆதலான்
மண்ணின்று ஒழியும் வகையறி யார்களே.

பொருள் : இறைவனைத் தேடி ஆறு உள் சமய நெறி நின்றோரும் விண்ணவர் ஆவதற்கு மிகவும் விரும்பி மயக்கத்துள் பட்டு அழிவர். ஆவர் தேவ தேவனாகிய இறைவனை அடைய முயற்சி செய்யாதவர் ஆதலின் பிறவி நீங்கும் உபாயம் அறியாதவர் ஆவார். விண்ணவர் பதம் மீண்டும் பிறவியைத் தரும். (ஏம் - மயக்கம்.)

1536. சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்
பவகதி பாசப் பிறவியொன் றுண்டு
தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்
அவகதி மூவரும் அவ்வகை யாமே.

பொருள் : சிவநெறியே மேலான நெறி, ஏனையவை பிறவியைத் தரும் நெறிகள். அவற்றைச் சாரின் மலத்தால் உளதாம் பிறவியாகிய ஒன்று உண்டு. தன் அகத்தே சிவ ஒளி தோன்றில் தவநெறியாம். பிரமன் விஷ்ணு உருத்திரர் ஆகிய மூவரும் பிறவியை நல்கும் அவநெறியினரேயாம்.

1537. நூறு சமயம் உளவா நுவலுங்கால்
ஆறு சமயம்அவ் ஆறுள் படுவன
கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா
ஈறு பரநெறி இல்லாம் நெறியன்றே.

பொருள் : சொல்லப் போனால் பல நூற்றுக் கணக்கான சமயங்கள் உளவாம். ஆறு சமயங்களும் அவ்வகையுள் அடங்கிவிடும். கூறப்பெறும் சமயங்கள் மேற் கொண்ட நெறிகளைக் கடந்த முடிவையுடையது சிவநெறி. இதுவே வீடு பேற்றை அளிக்கும் நெறியாகும்.

1538. கத்தும் கழுதைகள் போலும் கலதிகள்
சுத்த சிவன்எங்கும் தோய்வற்று நிற்கின்றான்
குற்றம் தெளியாதார் குணங்கொண்டு கோதாட்டார்
பித்தேறி நாளும் பிறந்திருப் பாரே.

பொருள் : பொருள் அறியாமல் கத்துகின்ற கழுதைகள் போன்றவர்கள் வீணர்கள் தூய்மையான சிவன் எங்கும் நீக்கம் அறநிறைந்து நிற்கின்றான். எனினும் தம்மிடம் குற்றம் நீங்காதார் அவனிடமுள்ள பெருமைக் குணங்களைப் பாராட்ட மாட்டார். உண்மை உணராது மயக்கம் அடைந்து பிறந்து இறந்து உழல்வார். (கோதாட்டுதல் - பாராட்டுதல்)

1539. மயங்குகின் றாரும் மதிதெளிந் தாரும்
முயங்கி இருவினை முழைமுகல் பாச்சி
இயங்கிப் பெறுவரேல் ஈறது காட்டில்
பயங்கெட்டு அவர்க்கோர் பரநெறி யாமே.

பொருள் : ஞான சாஸ்திரங்களை ஓதித் தெளிந்தாரும், ஓதாது பத்திமார்க்கத்தில் நின்றாகும், இருவினை நுகர்ந்து சுழுமுனை நாடியின் வழியே சென்று முடிவான பிரமரந்திரத்தில் ஓடி அருளைப் பெறுவரேல் அச்சந்தவிர்ந்து நிற்போர்க்கு ஒருமேலான நெறியாகும்.

1540. சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்தி
தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயக்கிய மானுட ராம்அவர்
காயம் விளைக்கும் கருத்தறி யார்களே.

பொருள் : முழுமுதற் சிவம், மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் ஆதலின் தொலைவில் உள்ளோன். அவன் அருள் கண்ணால் காணும் தவமுடையார்க்கு உயிர்க்கு உயிராய் வெளிப்படுதலின் நெருக்கமாக உள்ளவனும் ஆவான். இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன் ஆதலின் பிணியிலன். அவன் திருப்பெயர் நந்தி, இயல் பாகவே தூய்மையாகிய வாலறிவினன். அவனை ஒருமனப் பட்ட நெஞ்சினராய் அசையாது நின்று இடையறாது நோக்கவல்லார்க்குப் பிறப்பறும்; சிறப்புறும் திருவடிப் பேரின்பம் எய்தும், பிறப்பு இறப்புக் உட்பட்டு உடம் பால் விளையும் துன்ப நிலையை அறியாது அதுவே இன்ப மென மயங்குவோர் மாயவன் மயக்கிற்பட்ட மருண்ட மாந்தராவர்.

1541. வழியிரண் டுக்கும்ஓர் வித்தது வான
பழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழியறி வாளன்தன் சொல்வழி முன்னின்று
அழிவழி வார்நெறி நாடகில் லாரே.

பொருள் : நற்கதியாகிய முறையை அறிந்து வாழ்பவர்க்கும், அறியாது வாழ்பவருக்கும் வினைப் போகமாகிய உடம்வு வித்தாம். பூமியின்கண் வாழ்ந்து மீண்டும் பிறப்பையும் இறப்பையும் பெறுதல் பழியாகும். பிராணனைப் பிரமப்புழைக்குச் செலுத்தும் உபாயத்தைக் கற்பிக்கும் குரு வழிநின்று, தம்மை அகண்டா காரத்தில் ஒன்றுபடுத்திக் கொள்ளும் நெறியை விரும்பவில்லையே.

1542. மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர்
நாதம தாக அறிவயப் படுநந்தி
பேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில்
ஆதியும் அந்நெறி யாகிநின் றானே.

பொருள் : பெரிய தவமுடையார் அனைவரும் மகாதேவனாகிய பரசிவனைத் தம்மைச் செலுத்துபவன் என்று வணங்குவர். அவன் குரு மண்டலத்தில் நாதவடிவாக வெளிப்படுவதனால் அறியப்படத் தக்கவன். அந்த சப்த உணர்வே அவன் என்று வணங்குவாயாகில் அம் முதல்வனும் அந் நெறிக்கண் வெளிப் பட்டு அருள்வன்.

1543. அரநெறி அப்பனை ஆதிப் பிரானை
உரநெறி யாகி உளம்புகுந் தானைப்
பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரனறி யாவிடில் பல்வகைத் தூரமே.

பொருள் : எல்லாச் சமயங்கட்கும் தலைவனை, யாவற்றுக்கும் முன்னோனை, பக்தியினால் விரும்புவோரின் மன மண்டலத்தில் விளங்குவோனை, மேலான மார்க்கத்தை நாடிய பக்தர்களின் சித்தம் விரும்பித் தேடியபோது அவன் அறிந்து வெளிப்படாவிடில் சமய உண்மை அறிவதற்கு அருமையாகும்.

1544. பரிசறி வானவன் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேற்றில் திகழும்
துரிசற நீநினை தூய்மணி வண்ணன்
அரிதவன் வைத்த அறநெறி தானே.

பொருள் : சீவர்களுக்கு அளிக்க வேண்டிய பரிசை அறிந்தவன், விரும்பின வரை ஆதரிக்கும் பண்பை உடையவன், ஒளிமயமானவன். வானவர் பெற்றுள்ள பேறுகளுக் கெல்லாம் அவனே பெரிய தலைமையாக வுள்ளவன். உன்னுடைய சந்தேக புத்தியை விட்டு நினைப்பாயாக, தூய்மையான ஒளிக்கல் போன்ற சோதியை உடையவன். அவன் வைத்த தர்ம மார்க்கமாவது அருமையானதாகும்.

1545. ஆன சமயம் அதுஇது நன்றெனும்
மாய மனிதர் மயக்க மதுஒழி
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த உருவது வாமே.

பொருள் : சமயங்களில் அது நல்லது என்று கூறும் மயக்கத்தையுடைய மனிதரது மயக்கச் சூழலை விட்டு அகல்வாயாக, நாதாந்தத்தில் விளங்கும் சிவத்தை நாடுங்கள். மலமாயாகன்மங்களுடன் கலந்துள்ள ஊனுடலைக் கடந்துள்ள பிரணவ தேகத்தைப் பெறுவீர்கள்.

1546. அந்நெறி நாடி அமரரும் முனிவரும்
செந்நெறி கண்டார் சிவனெனப் பெற்றார்பின்
முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்
சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே.

பொருள் : மேலே சொன்ன நாத மார்க்கத்தை அறிந்து அடைந்த தேவர்களும் முனிவர்களும், செம்மையாகிய நெறி இதுவே என்று கண்டு சிவமாம் பேறு பெற்றார்கள். அப்படியிருக்க மக்கள் வகுத்த வேறு நெறிகளை நாடி முதல்வனது அருளைப் பெறாதார் செல்லுகின்ற நெறியில் சொல்லாமல் திகைக்கின்றவாறு என்னே !

1547. உறுமாறு அறிவதும் உள்நின்ற சோதி
பெறுமாறு அறியின் பிணக்கொன்றும் இல்லை
அறுமாறு அதுவான அங்கியுள் ஆங்கே
இறுமாறு அறிகிலர் ஏழைகள் தாமே.

பொருள் : நாம் அடையத்தக்க நெறியாக அடைவதும், உயிர்க்கு உயிராக நிற்கின்ற சோதியைப் பெறுதற்குரிய நெறியில் நின்று அறியில் யாதொரு மாறுபடும் உண்டாகாது. நம்முடைய மலகன்மங்கள் நீங்குவதற்குரிய வழியாக உள்ள செந்தீயுள் நின்று தற்போதும் கழிவதை மக்கள் அறிகின்றலர். இவர் அறிவில்லாதவர் தாமே.

1548. வழிநடக் கும்பரிசு ஒன்றுண்டு வையம்
கழிநடக் குண்டலர் கற்பனை கேட்பர்
சுழிநடக் கும்துய ரம்அது நீக்கிப்
பழிநடப் பார்க்குப் பரவலும் ஆமே.

பொருள் : இறைவனை அடைய வகுத்த வழி மேலே சொன்ன வழி ஒன்றேயாகும். உலக இன்பத்தில் மிகவும் நாட்டங் கொண்டு நடப்பவர் பிறர் கூறும் கற்பனைகளைக் கேட்பர். பிறவிச் சுழியில் அகப்பட்டு நடக்கும் துன்பத்தை நீக்கி, உலக இன்பத்தைப் பழித்த நடப்பவர்க்குப் பிறரல் புகழவும் ஆகும்.

1549. வழிசென்ற மாதவம் வைகின்ற போது
பழி செல்லும் வல்வினைப் பற்றறுத்து ஆங்கே
வழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்டு
உழிசெல்லில் உம்பர் தலைவன்முன் ஆமே.

பொருள் : மேலே உணர்த்திய சிவநெறி பற்ற அத்தவம் நிலை பெற்ற போது, பழிபாவங்களில் செலுத்தும் வலிமையான வினைத் தளைகளை அறுத்து, அவ்வினை வழியே செல்லும் தீவினை யாளரையும் புறக்கணித்து நீங்கி, பிரமரந்திரத் தொளைவழி செல்லின் தேவ தேவனாகிய சிவன் வெளிப்படுவான்.

19. நிராகாரம்

(நிராகாரம் - வடிவின்மை, அருவம். இங்கு அருவமான உயிர் உணர்வில் அருவமான இறைவன் உணர்வாய்க் கலந்திருக்கும் தன்மையைக் கூறுவது)

(நிராசாரம் என்று தலைப்பிட்டு அல் ஒழுக்கம் என்று பொருள் கொள்வர் ஒரு சாரார்.)

1550. இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றவர் சாத்திரம் ஓதி
அமையறிந் தோம்என்பர் ஆதிப் பிரானும்
கமையறிந் தாருள் கலந்துநின் றானே.

பொருள் : இமயமலை போன்ற அசைவற நின்ற தேவர்கள் அவர்கள் நிலைமைக்கு ஏற்றவாறு ஆறு சமயங்கள் பெற்றனர். அவற்றிற்குரிய சாத்திரங்களாகிய பொருள் நூல்களை ஓதினர். அடைதற்காய் அமைந்த நிலையினை அறிந்தோம். என்பர். ஆதிப் பிரானாகிய சிவபெருமானும் பிழைபொறுக்கும் தன்மையராய்ப் பொறுமையுடன் ஒழுகுவாருடன் கலந்து நின்றருள்வான்.

1551. பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
ஏங்கி உலகில் இருந்தழு வாரே.

பொருள் : தாரும் கண்ணியும் ஆக முறையே மார்பினிடத்தும் தலையினிடத்தும் கொன்றைப் பூவால் அமைந்தவற்றைச் சூடி விளங்கும் திருச் சடையினையுடைய சிவபெருமான் திருவடிகளை மறவாது உளங்கொண்டு தாங்கும் மெய்யடியார்கள் இவ்வுலகில் தமக்குத் தாமே ஒப்பாக விளங்குவர். சிவபெருமானை நினையாமல் செந்நெறியை நீங்கித்தாம் புன்னெறியிற் செல்லும் புரையாகிய குற்றத்தினை எண்ணாதவர் செய்வது இன்னதென்று அறியாமல் இவ்வுலகில் ஏங்கி இருந்து அழுவர்.

1552. இருந்தழு வாரும் இயல்புகெட் டாரும்
அருந்தவம் மேற்கொண்டங்கு அண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பிலி தானே.

பொருள் : உலகில் இருந்து சூழ்நிலை காரணமாக வருந்தி அழுகின்ற வரும் நல்ல நிலையிலிருந்த அதனை இழந்து வருந்துவோரும் அண்ணலாகிய சிவத்தை நினைத்து அருந்தவம் மேற்கொண்டால் அவரவர்க்குரிய இன்னல்களைப் போக்கி வருந்தாமல் செய்து தேவதேவனும் பிறப்பில்லாதவனுமாகிய சிவன் பெரிய தகுதியை அளித்தருளுவான்.

1553. தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் தான்உண்பர்
காரறி வாளர் கலந்து பிறப்பர்கள்
நீரறி வார்நெ மாமுகி லாமே.

பொருள் : குற்றமாகிய தூர்வையைக் குணமென அறிந்து தம்மனம் போல ஒழுகுபவர் யாண்டும் உள்ளுறு துணையாக நிற்கும் அம்மை யப்பரின் நினைப்பில்லாதவராவர். நிலையாத உலகமே பெரிதென மயங்கி அவ்வழி ஒழுகுவார் உலகப் பயனை நுகர்ந்து பிறப்பர். அறியாமை வயப்பட்டுத் தம் முனைப்புடன் ஒழுகுவார் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து இன்னல் உறுவர். திருவடி உணர்வாகிய அருள்நீர் அறிவார் அத்திருவடி உணர்வாக நின்று திருவருள் வண்ணமாவர்.

1554. அறிவுடன் கூடி அழைத்தோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்தும்
குறியது கண்டும் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.

பொருள் : அறிவோடு கூடி அறிந்து அனுபவிப்பதோர் தோணியாகிய சிவம், வினைகளுக்குச் சேமிப்பான இடமாகிய காரண சரீரத்தை அழிக்கும் தூணாகாரமான சோதியின் இயல்லை அறிந்திருந்தும், கொடிய வினைக் கூட்டத்தை உடையார் சிவபெருமானது திருவடியைப் பொருந்த நினைக்கவில்லையே. (பறி - மீன்பிடிக்கும் கருவி, குறி - தூண் போன்ற சோதி. தோணி - சிவத்தின் திருவடி.)

1555. மன்னும் ஒருவன் மருவு மனோமயன்
என்னின் மனிதர் இகழ்வர்இவ் ஏழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே.

பொருள் : நிலைபெற்ற ஒப்பில்லாத சிவபெருமான் அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைந்த வடிவோடு பொருந்தி விளங்கும் மனோமயன் ஆவன். இவ் உண்மையினை மெய்யடியார்கள் கூறக்கேட்கும் மக்கள் அதனைப் பொருட்படுத்துகின்றார் இல்லை. பொருட்படுத்தாது இகழ்வார் தாழ்ந்த அறிவினை உடையவர் ஆவர். அவ்வழிச் செல்லாமல் சிவபெருமானை மனங்கொண்டு நெருங்கித் தொழுங்கள். தொழுதால் ஒப்பில்லாத அவன் அப்பொழுதே வெளிப்பட்டருள்வன். அருளவே அவன் திருவடியயைக் கூடி இன்புறலாம்.

1556. ஓங்காரத்து உள்ளொளி உள்ளே உதயமுற்று
ஆங்காரம் அற்ற அனுபவம் கைகூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழித் தார்களே.

பொருள் : ஓங்காரத்தின் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் அறும். அறவே சிவனடி இன்ப நுகர்வு கைகூடும். இந்நிலைமை கைகூடாதவர் தங்கட்கு இறப்பு உண்டென எண்ணார். எனவே பிறவாமையைச் சார்வுறார். இத்தகையோர் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.

20. உட்சமயம்

(உட்சமயமாவது சீவனுள் விளங்கும் சிவச் சோதியை அறியச் செய்தல். இதனை ஒளிநெறி அல்லது சன்மார்க்கம் என்பர்.)

1557. இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமயங்கள் ஆறும்தன் தாளிணை நாட
அமைஅங்கு உழல்கின்ற ஆதிப் பிரானே.

பொருள் : தேவர்களையும் சீவர்களாகிய எம்மையும் பழமையாகவே தனுகரணங்களைத் தந்து உலகில் பொருந்தி அனுபவிக்கும்படி வைத்தவன் மிகப் பழமையானவன். அகச் சமயங்கள் ஆறும் தனது திருவடியை நாட அமைய அவற்றில் கலந்து நின்று வியாபித்திருப்பவனே முதல்வனாவான்.

இவ் வுண்மையறியாது சிலர் அச்சமயங்களில் நின்று மேல்நோக்காது உழல்கின்றனர் எனினுமாம். (இமையவர் - இமயமலைவாசிகள். அறு உட்சமயங்களாவன. சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணாபத்தியம், கௌமாரம் என்பன.)

1558. ஒன்றது பேரூர் வழியாறு அதற்குள
என்றது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயைஒத் தார்களே

பொருள் : ஒரே ஊருக்குச் செல்ல ஆறுவழிகள் உள்ளன. அது போல ஆறு சமயங்களும் ஒரே பொருளை அடைய வுள்ளன. இது நன்று அது தீது என்று சொல்பவர்கள் மலையைப் பார்த்துக் குரைத்த நாயைப்போல ஒரு பயனையும் எய்தார்.

1559. சைவப் பெருமைத் தனிநா யகன்தன்னை
உய்ய உயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம்செய்
வையத் தலைவனை வந்தடைந்து உய்மினே.

பொருள் : பெருமை வாய்ந்த சைவ சமயத்துக்கு ஒப்பற்ற தலைவனை, சீவர்கள் உய்யும் வண்ணம் உயிர்க்கு உயிராய் இருக்கின்ற ஒளிவடிவான குருநாதனை, உண்மை உணர்வு பெற்றார்க்கு அன்பனை, இன்பம் தருகின்ற உலக முதல்வனை வந்து அடைந்து உய்தி பெறுவீர்களாக.

1560. சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியில்
பவனவன் வைத்த பழிவழி நாடி
இவனவன் என்பது அறியவல் லார்கட்கு
அவனவன் அங்குள தாம்கடன் ஆமே.

பொருள் : சிவபெருமான் சீவர்கள் உய்திபெறுமாறு அமைத்த நெறியில் கடவுளாகிய அவன் வைத்த பழமையான வழியே சென்று இச்சீவனே சிவன் என்று உணரவல்லார்க்கு அவ்வச் சமயத்திலும் உள்ள அப்பெருமான் அங்குத் தோன்றுவது அதன் கடமையாம்.

1561. ஆமாறு உரைக்கும் அறுசம யாதிக்குப்
போமாறு தானில்லை புண்ணியம் அல்லதங்கு
ஆமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும்
போமாறுஅவ் ஆதாரப் பூங்கொடி யாளே.

பொருள் : அங்ஙனம் சீவர்கள் உய்தி பெறும் வண்ணம் அமைக்கப் பட்ட ஆறுசமய உச்சிக்குச் சீவர்கள் தாமாகப் போகும் வழிதான் இல்லை. அவர் செய்த புண்ணியமே அங்கு அவ்வழியை அமைப்பதாகும். அங்ஙனம் சீவர்கள் மேலேறிச் செல்லத் தாங்கி நிற்பது திருவருளின் ஆற்றலாகும்.

1562. அரன்நெறி யாவது அறிந்தேனும் நானும்
சிவநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி யுள்ளக் கடல்கடந்து ஏறும்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.

பொருள் : அரனை அடைவதற்குரிய வழியாவதை அறிந்தேன். ஆகிய நானும் வேறு சில நெறிகளைத் தேடித் திரிந்த அக்காலத்து வன்மை மிக்க நெறியில் எண்ணமாகிய கடலைக் கடந்து ஏறுவதற்கு மேன்மையான நெறியாக நின்றது ஒப்பற்ற சுடரேயாம்.

1563. தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
பேந்து புனைந்து புணர்நெறி யாமே.

பொருள் : ஆராய்ச்சியாலும் அனுபவத்தாலும் சிவனே பரம்பொருள் எனத் தெளிந்தடைந்த சிவநெறி புறச்சமய நெறி நின்றவர் ஆராய்ந்து மீண்டும் வந்தடைந்த பெருநெறியாம். அகச் சமயத்துள் பொருந்தியவரும் அவரவர் பக்குவத்துக்கேற்ப அனுபவம் பெற அந்தந்த அண்டங்களுக்குச் செல்ல அருளும் நெறி அந்தந்த முத்திகளில் நின்று மீண்டும் வந்த பொருந்தி உய்திபெறும் நெறியாம். திருநாவுக்கரசர் இதற்குத்தக்க சான்றாவார்.

1564. ஈரு மனத்தை இரண்டற வீசுமின்
ஊரும் சகாரத்தை ஓதுமின் ஓதியே
வாரும் அரன்நெறி மன்னியே முன்னியத்
தூரும் சுடரொளி தோன்றலும் ஆமே.

பொருள் : புறப்பொருளில் செல்லும் மனத்தை அகப்பொருளாகிய சிவத்தைப் பொருந்துமாறு நிறுத்துங்கள். பஞ்சாட்சரத்தை ஓதுங்கள். அரனுடைய நெறியைப் பொருந்தி இச்சாதனையைச் செய்து வாருங்கள். நெற்றிக்கு முன்னே செந்நிறம் பொருந்திய ஒளி தோன்றலும் ஆகும்.

1565. மினற்குறி யாளனை வேதியர் வேதத்து
அனற்குரி யாளனை ஆதிப் பிரான்தன்னை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்
நயக்குறி காணில் அரன்நெறி யாமே.

பொருள் : யோகக் காட்சியினர்க்கு மின்னல்போன்ற ஒளியில் வெளிப்படுபவனை, அந்தணர் ஓம்பும் வேள்வித் தீயில் வெளிப்படுபவனை, முழுமுதற் கடவுளை, எவ்வுருவில் நினைத்தாலும் அவ்வுருவில் வெளிப்படுபவனை பரஞானத்தில் ஒளிமயமாகக் காணில் அதுவே அரன் நெறியாகிய சைவ நெறியாம்.

1566. ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை வகைநின்ற அரன்நெறி
பாயந்துணர் வார்அரன் சேவடி கைதொழுது
ஏய்ந்துணர் செய்வதோர் இன்பமும் ஆமே.

பொருள் : ஆராய்ந்து ஒளி நெறியே சிறந்தது எனத் தெளியாத ஆன்மாவின் ஆற்றல் பலவாகும். அவர் சேர்ந்து அறியாவண்ணம் நின்ற அரன்நெறி, புகுந்து உணர்வார் அரனது திருவடியைப் பற்றி நின்று, பொருந்தி உணர்வது ஒப்பற்ற இன்பமாகும்.

1567. சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுதத குருநெறி ஒன்றுண்டு
செய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத் துளார்க்கு வகுத்துவைத் தானே.

பொருள் : கொலையும் புலையும் விடுத்த செந்நெறியாகிய சைவத்தின் பெருமைமிக்க ஒப்பில்லாத முதல்வன் நந்தியெம் பெருமான். அவன் ஆருயிர்கள் அனைத்தும் திருவடி பெற்று உய்யுமாறு வகுத்தருளிய குருநெறி ஒன்றுண்டு. அதுவே தெய்வச் சிவனெறி. அந்நெறியாகிய சன்மார்க்கத்தைச் சேர்ந்து ஒழுகி உய்யும்படி நிலவுலகத்து உள்ளார்க்குச் செந்தமிழால் வகுத்தருளினன். தெய்வச் சிவனெறி எனினும் சன்மார்க்கமெனினும் ஒன்றே.

1568. இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகும் எங்கள் பேர்நந்தி
எத்தவம் ஆகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்ஒல்லை ஊர்புக லாமே.

பொருள் : இத்தவம் நல்லது அத்தவம் நல்லது என்று பேதஞானம் படைத்த அறிவிலிகளைக் கண்டால் எங்கள் சிவபெருமான் நகை செய்யும் எந்தத்தவமாக இருந்தால் என்ன ? அல்லது எங்கே பிறந்தால் என்ன ? அபேதமாக நின்று உணர்வார்க்கு முத்தியாகிய ஊரை அடைதல் கூடும்.

1569. ஆமே பிரான்முகம் ஐந்தொடும் ஆருயிர்
ஆமே பிரானுக்கு அதோமுகம் ஆறுள
தானே பிரானுக்கும் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே.

பொருள் : சதாசிவம் முகங்கள் ஐந்தொடும் எல்லா உயிர்களிடமும் பொருந்தி விளங்கும், அப்பிரானுக்கு இந்த ஐந்து முகங்களோடு கீழே அதோமுகம் என்ற ஒன்றும் சேர்ந்து ஆறுமுகங்கள் உள்ளன. சிவத்தை அறிந்து வழிபடுவார்க்குச் சதாசிவம் போல் ஆறு முகங்களும் ஒன்றாய் விடும். சிவத்தை அறிந்து வழிபடாத போது அதோமுகம் கீழ்நோக்கியே செலுத்தும்.

1570. ஆதிப் பிரான்உலகு ஏழும் அளந்தவன்
ஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப்பு இலாமையின் நின்ற பராசக்தி
ஆதிக்கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

பொருள் : அம்மையோடு கூடிய அப்பனாகிய சிவபெருமான் உலகை அளந்த மாலாகவும், அம்மாலின் நிறம் போலும் ஒலியுடைய கடலாகவும், அக்கடல் சூழ் உலகில் வாழும் பல்÷ வறு உயிர்களாகவும், கலப்பால் ஒன்றாய் நிற்பன், அவன் வனப்பாற்றலாகிய திருவருள் அம்மையுடன் பிரிப்பின்றி மரமும் காழ்ப்பும் போல ஒருவனே இரு நிலையுமாய் நிற்பன். அவ்அம்மையே நடப்பாற்றலாகிய ஆதியும் நிற்பன். அவ்அம்மையே நடப்பாற்றலாகிய ஆதியும் ஆவள். அவளே ஒடுக்கத்தைச் செய்யும் ஆண்டவனும் ஆவள். அவளே ஒடுக்கத்தைச் செய்யும் ஆண்டவனும் ஆவள். ஆதி - நடப்பாற்றல். ஆதிக் கண் - சிருஷ்டி ஆரம்பத்திலும் அந்தமும் ஒடுங்கும் காலத்திலும்.

1571. ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி
ஆய்ந்தறிந் தேன்அவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேன்இம்மை அம்மைகண் டேனே.

பொருள் : தற்போத முனைப்பால் ஆராய்ந்து அறிவார்கள் அமரர் தந்தருவர் முதலியோர். ஆராய்ச்சியால் அறிய முடியாவகை நின்ற அரனெறியான சைவத்தை, அவன் திருவடியை வழிபடும் பேறு பெற்றமையால் ஆராய்ந்து உணர்ந்தேன். அதனால் இப்பிறப்பிலேயே மறுமை இன்பத்தினைப் பெற்றேன். அன்போடு சிவனைப் பரவினால் பிறவி நீங்கும்.

1572. அறியஒண் ணாதுஅவ் வுடம்பின் பயனை
அறியஒண் ணாத அறுவகை யாக்கி
அறியஒண் ணாத அறுவகைக் கோசத்து
அறியஒண் ணாததோர் அண்டம் பதிந்ததே.

பொருள் : உடம்பைப் பெற்றபயன் இறைவனை அறிவதே என்பதை அக்கள் அறியவில்லை. அறியமுடியாமல் ஏகாமாயுள்ள ஆகாயத்தை ஆறு ஆதாரங்களில் இயங்கும்படி வைத்து அறியமுடியாத வகையாக ஆறு கோசங்களில் அனுபவம் பெறச்செய்து ஆகாய மயமான சிவம் அறியவொண்ணாமல் அண்டமாய் உள்ளது.

10th Thirumurai | Thirumoolar | Thirumandiram | Panniru Thirumurai | திருமந்திரம் | ஆறாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்

ஆறாம் தந்திரம்

1. சிவகுரு தரிசினம்

(தம்முதல் குருவுமாய்த் தோன்றல்)

(சிவகுரு தரிசனமாவது உள்ளத்தில் உறையும் சிவனைக் காண்டல். அக்குருநாதன் பிரணவ உபதேசத்தால் குற்றங்களை நீங்கச் செய்து உண்மை இயல்புகளை உணர்த்துவார். இது சத்தியோ நிர்வாண தீட்சை எனப்பெறும்.)

1573. பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச்
சுத்த வரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு வாமே.

பொருள் : பத்தியை உண்டாக்கி, திருவடியை வணங்கச் செய்து பிரணவ உபதேசத்தால் குற்றங்களை நீங்கச் செய்து சத்தும் அசத்தும் சதசத்துமான பொருள்களின் உண்மை இயல்புகளை உள் நின்று உணர்த்தியமையால், சித்தத்தில் உள்ள இறைவனே குரவானவன்.

மந்திரம் கிரியை பாவனையற்றது, பிரணவ உபாசகருக்கு அசத்தாகிய பாசமும், சதசத்தாகிய பசுவும், சத்தாகிய சிவமும் விளங்கும்.

சிவகுருவாக எழுந்தருளி வருபவன் உறுதியாக விழுமிய  முழுமுதற் சிவனேயாவன்.

1574. பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு
நேசித்த காயம் விடுவித்த நேர்நேரே
கூசற்ற முத்தியில் கூட்டலா நாட்டத்தது
ஆசற்ற சற்குரு அம்பல மாமே.

பொருள் : ஆணவத்தால் மறைப்புண்டு கிடந்து சீவனை மாயா மலத்தைக் கூட்டி ஆணவத்தை அகற்றி, உடலே தான் என்றிருந்த ஆசையை அறுத்து, நேருக்கு நேரே நிலைகுலையாத முத்தியால் கூட்டுவதற்கு உபகாரப்படுவது, உபாசகனின் ஒளி மண்டலத்தில் விளங்கும் உருவமற்ற சத்குருவாம். சற்குருவின் அருளால் பாசநீக்கம் பெற்று முதல் நிலைக்குச் செல்லலாம்.

1575. சித்திகள் எட்டோடும் தண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சித்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.

பொருள் : அணிமாதி சித்திகள் எட்டுடனும், சாதகனைச் சிவமாகச் செய்த பக்குவ நிலையும், வாமாதி எண் சத்திகளால் பந்திக்காத தூய்மையும் யோகத்தால் உண்டாகும் ஆற்றலும் மந்திரங்களைத் தியானிப்பதால் விளையும் ஞானமும் இறைவன்பால் உண்டாகும் அன்பும் ஆகிய எல்லாம், சிவகுருவின் அருளால் நடைபெறும்.

1576. எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண்டு இங்கே அளித்தலால்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களுக்கு உட்பட்ட உலகங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட சிவன், இவ்வுலகத்தில் தென்நாடுடைய சிவனேயாய்த் திகழ்கின்றனன். அவன் நல்லாராகிய சிவஞானிகள் உள்ளத்து மிக்க அருள் செய்தல் போல் ஏனையார்க்கும் செய்தற் பொருட்டுப் புறத்தே, தம் முதல் குருவுமாய்த் தோன்றி அருள்வன். அதனால் எல்லாரையும் இப்பிறப்பு ஒன்றிலேயே உய்யக் கொண்டருள்வன். அதனால் புகழமைந்த நற்குரு இறய்கைச் சிவனே.

1577. தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாய் உனக்குண்டு உரையாலே
மூவாப் பசுபாசம் மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே.

பொருள் : தேவனும் சுத்த குருவாகவும் உள்ள சிவன் ஆகமத்துள் எல்லாம் பதி பசு பாசம் என்று மூன்றாகக் கருதுவது அறிந்து உபதேசத்தாலே அழிவற்ற சீவனது பாசத்தை நீக்கியே குருபரன் அன்புகொண்டு முத்தியின்கண் யாவையும் அருளும். சிவன் அன்புகொண்டு சீவரது தகுதிக்கேற்பக் குருவாக வந்து முத்தி அருளும்.

1578. சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மை செய்து
அத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணான் நமர்என்பர் புண்ணியர்
அத்தன் இவனென்று அடிபணி வாரே.

பொருள் : சுத்த சிவனே சீவர்களிடம் கருணை கொண்டு குருவாக வந்து மலக்குற்றத்தினை நீக்கி, அத்துணை புரியும் அருளினைக் காணாது அறிவிலிகள், பொய் மிகுந்த புவன போகங்களையே பொருளெனக் கண்டறியும் பாசம் பற்றியவர். குருவை நம்மவர் என்று தம்மோடு ஒப்பவைத்து எண்ணுவர். சிவபுண்ணியமுடைய ஞானியர் சிவனே இவன் என்று அடிபணிந்து வணங்குவர்.

1579. உண்மையிற் பொய்யை ஒழித்தலும் உண்மைப்பார்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்அரன்
வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்
அண்ணல் அருளன்றி யாரறி வாரே.

பொருள் : ஞானத்தால் பொய்மை நீக்குதலும், பிருதிவி தத்துவத்தின் வலிமையும், சிவமாகிய அவ் அரனது உபகாரமும், அறுபத்து நான்கு கலைகளால் வரும் மயக்க அறிவும் அண்ணலின் சத்தி பதியாவது யார் அறியமுடியும் ? குருவருளால் அஞ்ஞானம் நீங்கி இறைவனது உபகாரம் விளங்கும்.

1580. சிவனே சிவஞானி ஆதலால் சுத்த
சிவனே எனஅடி சேரவல் லார்க்கு
நவமான  தத்துவ நம்முத்தி நண்ணும்
பவமானது இன்றிப் பரலோகம் ஆமே.

பொருள் : சிவனே சிவஞானியாக அமைவதால், தனக்கு உபதேசம் செய்யும் குருவைச் சிவனென்று எண்ணித் திருவடியை அடைவார்க்கு, சிவத்தினது தோழமையும் நல்ல முத்தியும் பொருந்தும். அவர் பிறப்பின்றி மேலான சிவலோகத்தைச் சென்றடைவர். சிவகுருவை வழிபட்டார்க்குப் பிறப்பு இல்லை.

1581. குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித்து ஓரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் அற்றதோர் கோவே.

பொருள் : எனது குரு மண்டலத்தில் விளங்கும் நந்தி குருவே சிவம் என உபதேசித்தான். குரு மண்டலமே சிவனுமாய் உயிருக்குத் தலைவனுமாய் உள்ளது. குருமண்டலமே வாக்கு உணர்வைக் கடந்து விளங்கம் அரசனாகும். இத்தகைய பெருமையுடைய குருமண்டலத்தில் சிவம் உள்ளிருந்து விளங்குவதைச் சாமானியர் அறியாதவராக உள்ளார்.

1582. சித்த யாவையும் சிந்தித்து இருந்திடும்
அத்தம் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்தம் யாவையும் திண்சிவம் ஆனக்கால்
அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே.

பொருள் : அத்தனாகிய சிவபெருமான் தன் திருவருளால் சீவர்களுக்கு உள்நின்று உணர்த்தி யருள்வன். அதனால் எண்ணமாகிய சித்தம் யாவற்றையும் உள்ளவாறு உணர்ந்து இருந்திடும். அம்முறையில் எண்ணமானது இடையறாது. சிவத்தையே நாடுதலால் எண்ணம் முதலிய கருவிகள் அனைத்தும் சிவக் கருவியாகச் சிறக்கும். அத்தனாகிய சிவபெருமானும் அச்சீவன் தானாகவே அமர்ந்திடுவன்.

1583. தான்நந்தி சீர்மையுள் சந்தித்த சீர்வைத்த
கோன்நந்தி எந்தை குறிப்பறி வாரில்லை
வான்நந்தி யென்று மகிழும் ஒருவற்குத்
தான் நந்தி அங்கித் தனிச்சுடர் ஆமே.

பொருள் : சிவமாகிய தானே விளங்கும் சிறப்பான குரு மண்டலத்துள் பொருந்துவதால் அமையும் பெருமையை வைத்த தலைவனாகிய நந்தி பெருமானது குறிப்பை உணர்வார் இல்லை. ஆகாயத்தில் குருமண்டலத்தில் விளங்குபவன் என்று மகிழ்ந்திருப்பார்க்கு, முன்னர் அக்கினி மண்டலத்தில் விளங்கிய அரசனே ஒப்பற்ற சிவ சூரியனாம்.

1584. திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளாது அருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடில் ஓர்ஒண் ணாதே.

பொருள் : வாராத செல்வமாகிய திருவடிப்பேறும் வீடும் அவ் அவற்றின் சிறப்புக்களும் மயக்கம் உறாவண்ணம் அருளுதலும் மெய்ப்பொருள் உணர்த்திப் பொய்ப் பொருளின் மயக்கறுத்தலும் அம் மெய்ப் பொருளை உள்ளவாறு உணர்த்தும் திருநான்மறையின் முடிவும் அம்முடிபால் பெறப்படும் சித்தாந்த நுண்ணுணர்வும் சிவகுரு வடிவெடுத்துச் சிவபெருமான் அருளாவிடின் ஒருவராலும் உணர ஒண்ணாது என்க.

1585. பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கும் வித்தாம் சிவோகமே சேர்தலான்
முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை
சித்தி யருள்தரில் தான்எளி தாமே.

பொருள் : சிவத்தினிடம் பத்தியும் அதனால் ஞானத்தைப் பெற வேண்டும் என்ற வைராக்கியமும் வீடுபேறடைய சாதனங்களாம். அவற்றால் சிவமேதான் என்ற பாவனை முதிர்ந்து வீடு பேற்றிற்கு ஏதுவான ஞானம் தோன்றி, அந்த ஞானப்பயிர் சத்தியின் அருளால் எளிதாக வளர்ந்து முத்தி கிட்டு. (வைராக்கியம் - விஷயங்களில் பற்றின்மை)

1586. பின்எய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்எய்த வைத்த முதல்வனை எம்இறை
தன்எய்தும் காலத்துத் தானே வெளிப்படும்
மன்எய்த வைத்த மனமது தானே.

பொருள் : இவ்வுலகில் நான் வீடுபேறு அடைவதற்காக அமைத்த இன்பப் பிறப்பை, முன்னமே எனக்கு உதவிய முதல்வனாகிய இறைவனை ஞானத்தில் அடையுங்காலத்தில் அவன் என்னிடமாகத்தானே வெளிப்படுவான். அங்ஙனம் எனது தலைவனை அடையத்துணை செய்தது என்னுடைய மனமேயாம்.

1587. சிவமான ஞானம் தெளியஒண்சித்தி
சிவமான ஞானம் தெளியஒண் முததி
சிவமான ஞானம் சிவபரத்தே ஏகச்
சிவமான ஞானம் சிவானந்தம் நல்குமே.

பொருள் : சிவமாக்கும் திருவடியுணர்வு சிவஞானம் எனப்படும். சிவஞானம் எனினும் திருவருள் எனினும் ஒன்றே, அத்திருவருளால் ஆருயிர்களின் அறிவு தெளிவுபெறும். அறிவு தெளியச் சிறந்த சித்திகள் கைகூடும். பற்று அறுதியாகிய வீடும் எய்தும். இவற்றால் சிவம் தானாதல் என்னும் சீரும் பொருந்தும். அத்திருவருளே தவலில் சிவ இன்பமாகும். (தவலில் - குற்றமற்ற)

1588. அறிந்துணர்ந்த தேன்இவ் அகலிடம் முற்றும்
செறிந்துணர்ந்து ஓதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
பிறந்தொழிந் தேன்இப் பிறவியை நானே.

பொருள் : திருவருள் துணையால் உலகியல் உண்மை முற்றும் அறிந்துணர்ந்தேன். சிவன் திருவடிக்குப் பேரன்பு வைத்துத் திருமுறையும் சித்தாந்த நூல்களும் ஓதியுணர்ந்து திருவருள் பெற்றேன் சிவனடி நினைக்கும் சிறந்த அறிவில்லாரின் பெரு வாழ்வையும் மறந்து ஒழிந்தேன். அதனால் சிறப்பில்லார் தம் திறத்துச் சேர்வை நீங்கிற்று. நீங்கவே பிறவியினின்று விடுபட்டேன். (மதி மாண்டவர் - அறிவு அறை போகியவர்.)

1589. தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத்து எல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.

பொருள் : வினைக்கு ஈடாகப்பெற்ற உடல் முதலியவற்றைச் சுமக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவனாகிய இறைவன் எவ்வாறு சீவர்களோடு பொருந்தி இருக்கின்றான் என்பதை எவ்வகையிலும் அறியார். சீவர்கள் அறியா வகை பிரிக்கின்ற தடைகளை நீக்கி எல்லா உயிர்களையும் தன் கருவில் கொண்ட இறைவனை நான் கண்டு கொண்டேன்.

2. திருவடிப்பேறு

(திருவடி - திருவருள், கால் என்பது குண்டலினி, சத்தி, அது சிரசை நோக்கிப் பாய்வதே அருள். அவ்வாறு சிரசின் மேல் பொருந்தி யிருப்பதே திருவடிப்பேறு.)

1590. இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்திடும் ஈசரைப் பாசத்துள் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத்து உவந்ததே.

பொருள் : திருவருள் வலத்தால் ஒத்து எழும் அன்பின்கண் அந்த அன்புருவாக விழைந்து எழும் சிவபெருமானை மேலும் மேலும் முறுகி வளரும் அன்பின்வழிச் சென்று தொழுவர். தொழவே, சிவபெருமான் சிவகுருவாக வந்து மும்மலங்களை அகற்றுவர். அகற்றி உச்சியின்கண் திருக்கையினைப் பொருந்துமாறு வைத்து அருளுவர். அருளவே அவர்தம் திருவடி சீவர்களின் உள்ளத்து இடனமைத்து வெளிப்பட்டு அமரும்.

1591. தாள்தந்த போதே தலைதந்த எம்இறை
வாள்தந்த ஞான வலியையும் தந்திட்டு
வீடு அந்தம் இன்றியே ஆள்கென விட்டு அருள்
பாடுஇன் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.

பொருள் : எம் தலைவனாகிய சிவபெருமான் தன் திருவடிகளை எம் உள்ளத்தே பதித்த பொழுது இது காறும் பொறி புலன்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த எமக்கு அவைகள் அடிமைப் படும்படியான தலைமையையும் தந்தருளினன். அறியாமையை ஈரும் வாளாகிய திருவடி உணர்வையும் தந்தருளினன். திருவருளால்  தன் திருவடிகளை வெளிப்படுத்திச் சிவகுருவாய் எழுந்தருளிவந்து எம்முடி மேல் வைத்தருளினன்.

1592. தான்அவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்நந்தி
தான்அடி முற்சூட்டித் தாபித்தது உண்மையே.

பொருள் : என்னைச் சிவம்வந்து ஆட்கொண்டு அவனாகச் செய்தபோது சிவசொரூபமாக நான் ஆனபோது முன்னர்ச் சிவமாக விளங்கிய அயன், அரி, அரன், மகேசுவரன் ஆகிய நான்கு சொரூபங்களும் என்னை விட்டு அகற்றப்பட்டன. இதர அடையாளங்களான அருவச் சதாசிவம் விந்து நாதம் சத்தி ஆகியவைகளை என்னிடம் சிறப்பாக விளங்கும்படி செய்து தனது திருவருளை முன்னமேயே பெற்றவன் என்ற உண்மையைத் தாபித்து அருளினன் நந்தி.

1593. உரையற்று உணர்வற்று உயிர்பரம் அற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்கும் கடந்த
சொரூபத்த இருத்தினன் சொல்இறந் தோமே.

பொருள் : அனுபவ நிலையில் பேச்சற்று, உணர்வு கெட்டு, தான் என்ற நிலை அறியாமல் தெளிந்த நீர் போல அசைவில்லாமல் இருக்கும் சிவமாம் தன்மையும் கெட்டு நான்கு வாக்கினால் உதிக்கும் நாதத்தைக் கடந்த எல்லையற்ற தனது சொரூபத்துடன் ஒன்றாக்கினன். அதனால் பிறப்பு இறப்புக்கு எல்லையான பிரணவத்தைக் கடந்து விட்டோம்.

1594. குரவன் உயிர்முச் சொரூபமும் கைக்கொண்டு
அரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி நந்தி பேச்சற்று
உருகிட என்னைஅங்கு உய்யக்கொண் டானே.

பொருள் : தீட்சை செய்ய அமைந்தகுரு சீடனின் தூல சூக்கும காரண உடல்களில் உள்ள காரணமான தடைகளை நீக்கி, அரிய உயிரைக் குருவினிடம் பொருந்தும்படி செய்து யாவருக்கும் தலைவனான சிவத்துடன் மௌன யோகத்தில் விளங்கிடப் பொருந்தி என்னை ஆண்டு கொண்டருளினன். குரு பிரணவ சமாதியில் பொருந்தும் படி அருளினான்.

1595. பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதி கடன்மூன்றும் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.

பொருள் : முன்னிலையில் அமைந்த குரு மௌன ஆனந்தமாகிய பேரின்பத்தில் எனது பசுகரங்களை அழித்து என்னிடம் அகண்ட அறிவாகிய சிவத்தைப் பதிப்பித்து என்னை நான் அறியாமல் செய்து, வெப்பமற்ற சந்திர மண்டல ஒளியில் மனம் வாக்கு காயம் ஆகிய மூன்றையும் கைக்கொண்டு அவற்றால் அடைந்த பெருமைகளைஅழித்துத் திருவடிகளைச் சூட்டி என்னிடத்தில் நிலை பெற்றனன்.

1596. இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும் மெய்காட் டியவாறும்
விதிவைத்த வாறும் விளம்பஒண் ணாதே.

பொருள் : எனது ஆத்மாவிலும் பார்வையிலும் எனது சிரத்தின் மீதும் திருவருளைப் பதிவித்த பராபரனாகிய குருவானவர், கீழ் முகமாகச் சுருண்டு கிடந்த குண்டலினியை ஊர்த்துவ கதியாக அமைத்தருளியதும், விந்து நாதங்களை உணர்த்தியருளியதும், எம்முறையில் விந்து நாதங்கள் தொழிற்படுமோ அம்முறையில் உணர்த்தி யருளியதும் பிறருக்கு எடுத்துச் சொல்ல முடியாததாகும்.

1597. திருவடி வைத்தென் சிரத்துருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக்
கருவழி ஆற்றிடக் கண்டுகொண் டேனே.

பொருள் : என்னுடைய சிரசின் மீது திருவடியைச் சூட்டி, அருளால் பார்த்து, எங்குமாயிருக்கும் பெரிய வடி வினைத்தந்த பெரிய பெருமானை, குருவடிவில்வந்த தலை வனை, எம்முடைய அரசனை பிறவி உண்டாகும்வழி உலர்ந்து போகக் கண்டு கொண்டேன். பரிசமும் நோக்கமும் ஞான தீட்சையாகும்.

1598. திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலர மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.

பொருள் : திருவடியுணர்வு ஆருயிர்களை மும்மலப் பிணிப்பினின்றும் செம்மையுற விடுவிக்கும். அவ்வுணர்வே கிடைத்தற்கரிய திருவருட் சித்திகளை எய்துவிக்கும் அதுவே சிவவுலக வாழ்வினைச் சேர்ப்பிக்கும் அவ்வுணர்வே சிவமாம் பெருவாழ்வையும் கூட்டுவிக்கும்.

1599. மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
மால்வைத்த சிந்தையை மாயமது ஆக்கிடும்
பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
தான்வைத்த வாறு தப்பித்த வாறே.

பொருள் : மேல்ஓதிய திருவருள் ஆணையின்வழி ஆருயிர்கள் செம்மையுற ஒழுகாவிட்டால், பண்டைப் பழவினைகளாகிய எஞ்சுவினைகள் உள்ளத்தை மயக்கி ஆசைக்குழியுள் வீழ்த்திப் பிறப்பு இறப்பிற் படுத்தி மாயமதாக்கும். பால்போலும் பிறையினைச்சூடியருளிய திருமுடியையுடைய அறிவுப் பேரொளிப் பெருமானாகிய சிவபெருமான் திருவடி சூட்டியவாறும், செந்நெறிக்கண் நிற்பித்தவாறும் திருவருளே.

1600. கழலார் கமலத் திருவடி என்னும்
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானும்
குழல்சேரும் என்னுயிர்க் கூடும் குலைத்தே.

பொருள் : ஒலிக்கின்ற கழல் பொருந்திய கமலத்தில் விளங்கும் திருவடிநிழலை அடையப்பெற்றேன். திருமாலும் காணமுடியாத வெம்மை பொருந்திய அக்கினி மண்டலத்தில் உள்ள ருத்திரமூர்த்தியும் என்னுடைய உடல்பற்றை அழித்துச் சுழுமுனை உச்சியில் ஒளி பொருந்திய சிவமாக அமைந்தது.

1601. முடிமன்ன ராகின்மூ வுலகமது ஆள்வர்
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.

பொருள் : முடிசூடிய மன்னராயின் மூன்று உலகங்களையும் ஒரு சேர ஆளுவர். ஆராயின் சிவனடியாராகிய மன்னர்கள் பெறும் இன்பத்துக்கு அளவே இல்லை. முடிமன்னராக உள்ள தேவர்களும் இறைவனுக்கு வழிவழி ஆட்செய்யும் குடி மன்னராயின் குற்றம் நீங்கி நின்றோர் õவர். இறைவன் முடிமன்ன ராயின் என்பதும் பாடம். அப்போது குற்றியலுகரமும் ஒற்றும் நீக்கி 12 எழுத்துக்கள் சரியாக உள்ளன.

1602. வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே எரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தேன் அவ்வேதத்தின் அந்தமே.

பொருள் : நான் என் மன மண்டலத்துள் இறைவனது திருவடிளான விந்து நாதங்களைப் பதித்துக் கொண்டேன். அதனால் பொய்யை மெய்போன்று காட்டி அக் கினியைத் தூண்டி நடத்தும் புலன்வழிச் செல்லாமல் மனத்தை மீட்டு, இளைத்தவனாகிய நான் படும் இருவினைத் துயரினை மாற்றி, அவ் வேதத்தின் முடிவாகிய ஞானானந் தத்தை அடைந்தேன. (வேதத்தின் அந்தம் - தத்துவமசி, அஃதாவது நீ எதை நினைக்கிறாயே அது ஆகிறாய் என்பது).

1603. அடிசார லாம்அண்ணல் பாதம் இரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளைக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

பொருள் : நன்னெறிச் செல்வார் திருவருள் துணையால் திருவடி சேர்வர். பண்டைப் பழஅடியாராகிய முழு நீறு பூசிய முனிவர்கள் சிவபெருமான் திருவடியிரண்டினையும் தம் முடிவுக்கு அணியாக அணிந்தனர். படி முறையான் ஏற்றமாக எய்தும் இன்ப நிலையினராகிய அடியாருள் இணங்கி வாழும் இன்பவெள்ளத்துள் மூழ்குதலே நன்னெறிச் செல்வார் கொள்கையாகும் (நன்னெறி - சன்மார்க்கம்)

1604. மந்திரமாவதும் மாமருந்து ஆவதும்
தந்திர மாவதும் தானங்கள் ஆவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே.

பொருள் : நினைப்பவனைக் காக்கும் மந்திரமாவதும், பிறவி நோய்க்கு மருந்தாவதும், திருவருளைப் பெறக்கூடிய கிரியையாவதும் அடைந்தார் பெறும் பயன் எய்தும் புண்ணியத்தலங்கள் ஆவனவும் வீடு பேற்றை அளிக்கும் மேன்மையான நெறியாவதும் எந்தையாகிய சிவபெருமானது இரு திருவடிகளேயாம்.

3. ஞாதுரு ஞானஞேயம் (காண்பான் காட்சி காட்சிப்பொருள்)

(ஞாதுரு - காண்போன். ஞானம் - காணும் அறிவு; ஞேயம் காணப்படும் பொருள். இங்குக் காண்பவன் ஆன்மா; காண்பது சிவஞானம்; காணப்படும் பொருள் சிவம்.)

1605. நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்காரம் நீங்கி அதன்நிலை நிற்கவே
நீங்கா அமுத நிலைபெற லாமே.

பொருள் : ஆன்மா என்றும் நீங்காத சிவானந்தமாகிய சிவத்திடம் பொருந்தி நிற்க, அநாதியே பற்றியுள்ள ஆணவமலம் அறிவை மறைக்காது அங்ஙனம் மறைப்பினும் தன் முனைப்பு நீங்கி அச்சிவானந்த நிலையில் நிற்கவே, என்றும் தன்னை விட்டு நீங்காத பேரின்பமாகிய அமதத்தில் நிலை பெறலாம்.

1606. ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவுஅறி வாரே.

பொருள் : அறியப்படும் பொருள் சிவம் என்று துணிந்து அவ்வழி நிற்போர்க்கு ஞானத்துக்குரிய மற்றவைகளும் பொருந்தி நிற்கும். அங்ஙனம் அறியப்படும் பொருளான சிவத்தை ஆன்மா அறிந்து அதுவாகவே அமைவது வீடாகும். ஞேயப் பொருளாகிய சிவத்தைப் பிரியாத சத்தியை உணர்ந்தவர் இக்கூட்டத்தால் விளைந்த மெய்ஞ்ஞான அறிவை அறிவார்.

1607. தானென்று அவனென்று இரண்டாகும் தத்துவம்
தானென்று அவனென்று இரண்டும் தனிற்கண்டு
தானென்ற பூவை அவனடி சாத்தினால்
நானென்று அவன்என்கை நல்ல்தொன்று அன்றே.

பொருள் : உண்மைப்பொருள் தான் என்ற ஆன்மாவும் அவன் என்ற சிவமும் ஆக இரண்டு உள்ளன. தன்னையும் அவனையும் தன்ஒளியில் கண்டு தானாக விளங்கும் சகஸ்ரதள உணர்வை, அவன்விளங்கும் நிமிர்ந்த சகஸ்ர தளத்துக்கு மாற்றினால், நான் என்றும் அவன் என்றும் வேறுபடுத்திக்காணும் உணர்வு மாறி நானே அவன் என்று கூறுவது நல்லது ஒன்றல்லவா ?

1608. வைச்சன ஆறாறும் மாற்றி என வைத்து
மெச்சப் பரன்தன் வியாத்துவம் மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சங் கெடுத்தென்னை யாண்டனன் நந்தியே.

பொருள் : சிவனுக்கு உபகாரமாக வைத்து முப்பத்தாறு தத்துவங்களின் தொழிலையும் மாற்றி என்னை நிலைபெறச் செய்து உலகவர் பாராட்டும் வண்ணம் பரனது வியாபகத்துள் இருத்தி, அவ் அனுபவத்தில் நிலைபெறச் செய்து சிவமாக்கி, என்னை ஆட்கொண்டருளினான் என் குருநாதனாகிய சிவன்.

1609. முன்னை அறிவுஅறி யாதஅம் மூடர்போல்
பின்னை அறிவுஅறி யாமையைப் பேதித்தான்
தன்னை அறியப் பரனாக்கித் தற்சிவத்து
என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே.

பொருள் : சிவதீக்கை பெறுமுன் அறியவேண்டிய உண்மைகளை அறியாதிருந்த அறிவிலார்க்குச் சிவதீக்கைக்குப் பின் அறிவு அறியாமையென்னும் இரண்டினையும் சிவன் அழித்தனன். தன்னையாகிய சீவனை அறிய அச்சீவனைச் சிவமாக்கினன். ஆக்குதலும் சிவத்துடன் கூடி சீவன் தன்னையும் சிவத்தையும் காணும். அவ்வாறு காணும்படி அருளினன் சிவபெருமான்.

1610. காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணா எனவந்து காட்டினன் நந்தியே.

பொருள் : கட்பொறியால் காணாத காட்சியுடன், செவிப்பொறியால் கேளாத கேள்வியும் மாறுபடாத சிவனந்தமும் கூடிப் பிரியாத சேர்க்கையும் நாணமில்லாத பற்றும் நாதாந்தத்தில் விளங்கும் அறிவும் நந்தியெம் பெருமான் காண்பாயாக எனக் காட்டியருளினான்.

1611. மோனம்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மேனம்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனம்கை வந்துஊமை யாமொழி முற்றுங்காண்
மோனம்கை வந்துஐங் கருமமும் முன்னுமே.

பொருள் : வாய் வாளாமை யாகிய மோனம் கைவந்தோர்க்கு, திருவடிப்பேறும் கிட்டும். அவர்க்குச் சித்தியாகிய திருவருள் நிலையும் கைகூடும். அவர்க்குச் சொல்சிறந்து மறையாகிய சிகரம் கைகூடும். இதனை அசபாமறை என்பர். இத்திறத்தார்க்கு ஐந்தொழிலும் ஆண்டவன் அருளால் செய்தல் கூடும். (ஊமையா மொழி - பேசாத மந்திரம், இதனை அசபமந்திரம் என்றும் கூறும். ஊமை எழுத்து - பிரணவம்; ஐங்கருமம் - ஐந்தொழில்கள்.)

1612. முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்
வைத்த கலைகால் நான்மடங் கால்மாற்றி
உய்த்தவத் தான் அந்தத்து ஒண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்துஇற வாரே.

பொருள் : சிவதீக்கையுற்ற நன்னெறிச் செல்வம் பொறியாகிய முத்திரை மூன்றினாலும் இடப்பால், வலப்பால், நடுநாடியாகிய மூன்றிலும் செல்லும் உயிர்ப்பினால் வீணாக வெளியாகும் நால்விரல் அளவினை உள்நிறுத்தல் செய்வார். அங்ஙனம் செய்யும்படி பழக்கிய பேரின்பச் சிவகுரு பாதத்தே நிலைபெறுவர். அதனால் அவர் மலப்பிணிப்பு அறும். அவர்கள் பிறந்திறக்கும் பொருந்துன்பப் பெற்றியினின்று நீங்குவர்.

1613. மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானி
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.

பொருள் : முன் ஓதிய காண்பான் காட்சி காட்சிப்பொருள் என்னும் மூன்றும் திருவருட் பொறிச் சிறப்பால் உள்ளங் கொள்கின்ற சிறந்த மெய் யுணர்வுடையோன் சிவ பெருமான் புரிந்தருளும் திருக்கூத்தினைத் திருவருட் கண்ணாற் கண்டு அம்மெய்ப் பொருளின் திருவடியிற்புகுவன். புகுந்த காரணத்தால் பருவுடம்பாகிய மூலப்பகுதியின் காரியங்கள் புடம் போட்ட பொன் போலவும் வேதித்த செம்பு போலவும் ஞானத்தின் திருவுருவாகும். அவனே சிவஞானி (பொறி - முத்திரை.)

4. துறவு

(துறவு - அன்பினால் இறைவனைப்பற்றி இயல்பான முறையில் பாசங்களின் நீங்குதல் அறிவினால் ஆராய்ச்சி செய்து பற்றின் நீங்குதல் அவா அறுத்தலின் பின்னர் கூறப்பெறும்.)

1614. இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்கும் தவங்கண்ட சோதிப் பிரானை மறப்பில
ராய்நித்தம் வாய்மொழி வார்கட்கு அறப்பதி
காட்டும் அமரர் பிரானே.

பொருள் : ஒருவருக்கு இறப்பும் பிறப்புமாகிய ஆற்றொணாத் துன்பத்து இரு தன்மையும் நீங்கி இறைவனுக்கு அடிமையாகிய மெய்யுணர்வு பெறுதலே தமிழகத்துக்குத் துறவும் தவமும் ஆகும். அந்நெறியினை உடங்கியைந்து உணர்த்தியருளியவன் சிவபெருமான். அவன் திருவடி யிணையை மறவாதவராய் அவன்பால் பத்தராய் அவனையே பன்னிய நூல்தமிழ் மாலையால் பாடுவார்கட்கு அறப் பதியாம் சிவவுலகினைத் தந்தருள்வன் அமரர் பிரானாகிய சிவபெருமான். (வாய் மொழிவார் - துதிப்பவர்; அறப்பதி - முத்தியுலகம்.)

1615. பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
மறந்து மலஇருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்
துறந்த உயிர்க்குச் சுடரொளி யாமே.

பொருள் : பல்வேறு ஆற்றல்களையுடைய ஆணவ மலமாகிய பேதைமையினால் பிறந்தும் இறந்தும் சிவத்தை மறந்தும் அல்லலுறும் ஆருயிர்களின் மலஇருள் நீங்கும்படி உயிர்க்கு உயிராய் மறைந்து நின்று செவ்வி வருவித்து வெளிப்படுவன் சிவன். அவ்வாறு வெளிப்படுங்காலத்துச் சிவகுரு எனப்படுவான். சிவகுருவாய் வந்து திருமுறை வழித்தீக்கை செய்து ஆருயிர்களை ஆட்கொள்வான். ஆட்கொண்ட காலத்து அவ்வுயிர் சிவத்தைப் பேணும். அகத்துணைவெய்தும். அவ்வுயிர் அதனால் அருட்சுடர் பொலிவோடு திகழும்.

1616. அறவன் பிறப்பிலி யாரும் இலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.

பொருள் : நியதியை உடையவன்; அனாதியே உள்ளவன்; அதனால் தனியன். அவன் தங்கும் இடம் எல்லாத் தத்துவங்களும் சுட்டெரிக்கப்பட்ட இடம். அவன் ஏற்பது சீவபோகம், ஆதலால் அவன் துறவி என்பதை அறியுங்கள். பற்றுக்களை நீத்தவரைப் பிறவியைப் போக்கும் பித்தனாவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

1617. நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்
நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு
நெறியின் நெருஞ்சில்முள் பாயகி லாவே.

பொருள் : அனாதியான இறைவன் சீவர்கள் அடைய வேண்டிய நெறியையும் நெருஞ்சில் முள்போல ஒதுக்கித் தள்ள வேண்டிய செயலையும் படைத்துள்ளான். அறவழியில் நில்லாமல் தவறினால் நெருஞ்சில் முள் குத்துவது போன்ற துன்பத்தை அடைவர். ஆனால் அறிவழி தவறாமல் ஒழுக வல்லார்க்கு வழியில் நெருஞ்சில்முள் குத்துவது  போன்ற துன்பங்கள் அடைய மாட்டா.

1618. கேடும் கடமையும் கேட்டுவந்து ஐவரும்
நாடி வளைந்தது நான்கட வேன்அலேன்
ஆடல் விடையுடையஅண்ணல் திருவடி
கூடும் தவம் செய்த கொள்கையன் தானே.

பொருள் : சிவ குருவால் ஆட்கொள்ளப்பட்ட உயிர் பிறப்பு இறப்புத் துன்பங்களையும் அத்துன்பங்களினின்றும் விடுபடுதற்குரிய சிவவழிபாடும் அக்குருவால் கேட்டு மகிழ்ந்தது. மகிழவே ஐம்புல ஆசைகள் அகன்றன. அதனால் ஐம்புலக் கள்வர் பற்றிப் பிடித்துச் செய்யும் துன்பங்கட்கு அவ்வுயிர் கடமைப்படாமல் நீங்கிற்று. அதனால் அத்தகைய உயிர் வெற்றிப்பாடு அமைந்த ஆனேற்றை யுடைய அண்ணலாகிய சிவபெருமான் திருவடியைக் கூடும். தாவில் தவஞ் செய்யும் தலைமையினையும் ஆயும்; எய்தும்.

1619. உழவன் உழஉழ வானம் வழங்க
உழவன் உழவினில் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ஒக்கும் என்றிட்டு
உழவன் அதனை உழஒழிந் தானே.

பொருள் : ஞான சாதனை செய்பவன், மேலும் மேலும் சாதனையை விரும்பிச் செய்ய, ஆகாய மண்டலம் விளங்க ஞான சாதனையில் அமைந்த நீலோற்பல ஒளி ஞான சாதனை செய்தவன் இது அருள் சத்தியின் ஒளி என்று கண்டு ஞான சாதகன் மேலும் சாதனையற்று அருளில் நாட்டம் கொண்டு விளங்கினான்.

1620. சேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாள்துறந் தார்க்குஅவன் நண்பன் அவாவிலி
கார்துறந் தார்க்குஅவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.

பொருள் : இயல்பாகவே பற்றும் வெறுப்பும் இல்லாதவன். கூற்றுவன் நாள் என்ற காலத்தைக் கடந்தவருக்கு அவன் நண்பன். எல்லாவற்றையும் உடைமையால் அவன் ஆசையற்றவன். அஞ்ஞானமாகிய இருளைவிட்டு ஒளி பெறுவோர்க்குத் தனது நெற்றிக் கண்ணால் அனுக்கிரகம் செய்வான். பூமி தத்துவம் என்ற பாலுணர்ச்சியைத் துறந்தவர்க்கே தனது திருவடியைத் தந்து அருளுவான்.

1621. நாகமும் ஒன்று படம்ஐந்து நாலது
போகம்உள் புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம்விரித்து ஆட்டொழிந்து
ஏகப் படம்செய்து உம்பிட மாமே.

பொருள் : ஆருயிர்கட்கு நாகம் போலும் உடம்பு ஒன்று அதன் ஐந்து படம்போலும் ஐம்பொறிகள். அப்பொறிகள் வழியாக அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நாற்பயன்களையும் உயிர் நுகரும், உளப் புற்றாகிய உடம்பினது அகத்துப் பொருந்தி நிறைந்து நிற்பன் சிவன். நுண்மை முன்மையாகிய உடம்பு இரண்டினுள்ளும் படமாகிய பொறி வழிச்சென்று ஆடும் செயலறப்பாடஞ் செய்தலாகிய தகுதி உண்டாக்கி அச்சிவபெருமான் அவ்உடம்பினை இடமாகக் கொண்டருள்வன். (நுண்மை - சூக்குமம், முன்னை - காரணம்)

1622. அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்
இவன்தான் எனநின்று எளியனும் அல்லன்
சிவன்தான் பலபல சீவனும் ஆகும்
நயன்தான் வரும்வழி நாமறி யோமே.

பொருள் : அம்மையுடன் கூடிய அப்பனாகிய சிவனும் பற்றற்றார் வழிக்கு முதல்வன் ஆவன். அவன் இன்ன தன்மையன் என்றிசைக்கும் எளியனும் அல்லன். சிவன் தாளாகிய திருவருள் ஆருயிர்கட்கு ஏற்றவாறு பலவாக அமைந்து செவ்வி வருவிக்கும். நயமாகிய திருவடியுணர்வு திருவருள் உணர்வான் உணரத்தக்கது. நாம் என்னும் அகச் செருக்கு உள்ளவரையும் அவ்வுயிர் ஆணவமுனைப்பு உடையது அம்முனைப்பால் சிவனை உணரமுடியாது என்பதாம், நாம்அறியோம் என்பது.

1623. தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பற் குழலியின் கஞ்சுளிப் பட்டது
வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையில்
கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே.

பொருள் : உடலைக் கடந்தபோது கண்முதலிய ஒன்பது வாயில்களால் வரும் அறிவு விடுபட்டது. சந்திரமண்டலத்தில் அமைந்த தொனியில் சம்மியம் செய்தபோது தேகமாகிய சட்டையின் அனுபவன் முடிவுள்ளது. பிரபஞ்சம் இனித்த நிலை மாறிக் கசப்பாயிற்று. உடøச் செலுத்திய ஆன்மாசிரசின் உச்சியில் தலைவன் வாழும் ஊர்த்துவ சகஸ்ர தளத்தில் விளங்கியதே.

5. தவம்

(தவமாவது தன்னுள் மறைந்துள்ள பொருளைக் காணச் செய்யும் முயற்சி, அஃது இடையறாது இறைவனை எண்ணியிருத்தலால் கைகூடும்.)

1624. ஒடுங்கி நிலைபெற்ற உத்தம் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனும்அங்கு இல்லை
இடும்பையும் இல்லை இரப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

பொருள் : சிவத்தினிடம் மனத்தை வைத்து நிலைபெற்ற உத்தமர்களின் உள்ளமானது, உலகிலுள்ள எத்தகைய துன்பத்தையும் கண்டு அஞ்சுவதில்லை. அத்தகையாவர் எமனுக்கும் பயப்படுவதில்லை. அவர்களுக்குத் துன்பமும் இல்லை. இரவு பகல் என்ற வேறுபாடும் இல்லை. பிற பொருளின் மேல் பற்று நீத்தவர்க்கு விளைகின்ற பயன் வேறொன்றும் இல்லை.

1625. எம்ஆ ருயிரும் இருநிலத் தோற்றமும்
செம்மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவர்க்கு அல்லாது
இம்மா தவத்தின் இயல்பறி யாரே.

பொருள் : எமது அரிய உயிர் உடலோடு புணர்ப்பதாகிய பிறப்பும், அது உடம்போடு கூடி அனுபவிப்பதற்கு இடமாகிய உலகப்படையும், சிறப்பான தவத்தின் மேன்மையும் சிவனது அருள் பெற்றவர்க்கு அல்லால் இப்பெரிய தவத்தின் தன்மையை அறியமாட்டார். தவமுடையோர் வினைவழியே பிறப்பும் சூழ்நிலையும் ஆகும் என்று அமைதி பெறுவர்.

1626. பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகிய மாதவம் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.

பொருள் : உயிர் உய்யுமாறு உயிர்க்கு உயிராகிய உடையவனால் தரப்பட்ட உடலுக்கும் உழையாமல், பிச்சை எடுத்துண்ணும் பலர் பிறப்பு இறப்புக்களால் ஏற்படும் பெரும் துன்பத்தை அறியார். சிவபெருமான் திருவடியை மறவாமையே பெருந்தவம். அப் பெருந்தவம் செய்தார் சிறப்பாகிய வீடு பேற்றுடன் வேண்டிய இம்மை மறுமைச் செல்வங்களும் பெறுவர். அவர்களே பிறப்பினை யறுக்கும் சிவபுண்ணியப் பெருமை பெற்றவராவர். (பிச்சை - தவஉணவு. பிச்சை செய்மாந்தர் - தவசிகள்.)

1627. இருந்து வருந்தி எழில்தவம் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க என்றே
இருந்துஇந் திரனே எவரே வரினும்
திருந்தும்தம் சிந்தை சிவனவன் பாலே.

பொருள் : தனித்திருந்து சிவப்பேற்றை அடைய அரிதின் முயன்று அழகிய தவத்தினை இயற்றும் மனவுறுதி பூண்டோரை மனத்தை மாற்ற வேண்டும் என்றே சூழ்ந்திருந்து இந்திரனோ பிறதேவரோ யார் வந்தாலும், மயங்காமல் தம்முடைய மனத்தைச் சிவத்தின்பால் உறுதியாக வைத்துத் திருந்தியிருப்பார். (பெருந்தன்மை - வைராக்கியம்)

1628. கரந்தும் கரந்திலன் கண்ணுக்கும் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்
அருந்தவர்க்கு அவ்வால் அணுகலும் ஆகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.

பொருள் : பக்குவன் அடைந்த ஆன்மாக்களால் விரைந்து தொழப்படும் வெண்மதியில் விளங்குபவன் தவம் இல்லார்க்கு மறைந்தும் தவம் உடையோர்க்கு வெளிப்பட்டும் உள்ளான். அகக் கண்ணுக்கே யன்றிப் புறக் கண்ணுக்குத் தோன்றாதவன். பரந்த ஒளிக் கிரணத்தையுடையவன். பசும்பொன் போன்ற நிறமுடையவன். அரிய தவத்தை உடையவர்க்கு அல்லாமல் மற்றவரால் அனுகுவதற்கும் முடியாதவன்.

1629. பின்எய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்எய்த வைத்த முதல்வனை எம்இறை
தன்எய்தும் காலத்துத் தானே வெளிப்படும்
மன்எய்த வைத்த மனமது தானே.

பொருள் : ஆன்மாக்கள் பின்னால் அடைய வேண்டிய இன்பப் பிறப்பை முன்னால் நியதியாகவைத்த முதற்பொருளாகிய எமது இறைவனை ஆன்மா தன்னை அறியப் புகும்போது தானே வந்து அடையும். அவ்வாறு உயிருக்குத் தலைவனை அடையச் செய்தது மனத் திட்பமேயாம்.

1630. அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்தெழும் பூசலுள் பட்டார் நடுவே
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்துஅழி யாதிருந் தார்தவத் தாரே.

பொருள் : சூழ்ச்சி மிக்க அமைச்சரும், பெருமைமிக்க யானைக் கூட்டங்களும் ஆற்றல்மிக்க அரசரும் பகைத்தெழுந்து செய்தபெரும் போரில் இருதிறத்தாரும் எண்ணிறந்தாராய் மாண்டனர். அப்போர் நடுவில் நின்று காண்போர்க்கு நிலையாமை உணர்ச்சியும், திருவடி உணர்வும் சிவப்பேற்றின்கண் ஆத்தமாகிய நேயமும் இயல்பாக சிவப் பேற்றின்கண் ஆத்தமாகிய நேயமும் இயல்பாக உண்டாகும். அந்நோக்கல் நோக்காகிய கருத்தினை மறந்து அழியாதிருந்தார் இறவாத நற்றவன் செய்தோராவர். (அத்தம் என்பது ஆத்தம் என்றாயிற்று. அத்தம் - சமயம்.)

1631. சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தஅப் பார்வை பசுமரத்து ஆணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட்டு ஓடுமே.

பொருள் : உண்மை நாட்டமின்றிப் பொருள் கருதி நூல்களைப் படித்துப் பிதற்றித் திரியும் பொய்ப் பெருமைகளை விட்டு அகன்று நீங்கள் மாத்திரையாகிய ஒரு நொடிப் பொழுதேனும் உயிர் உணர்வு வெளிமுகப்படாது அகமுகப்பட்டுச் சிவனை அவனருளால் நோக்குங்கள். அங்ஙனம் நோக்கினால் அப் பார்வை யுணர்வு பசுமரத்து ஆணி போல் உயிரின்கண் பதிந்து விளங்கும். அவ்விளக்கத்தால் தொன்று தொட்டுப் பிணித்துவரும் பிறவி நீங்கி ஓடும்.

1632. தவம்வேண்டு ஞானம் தலைப்பட வேண்டில்
தவம் வேண்டா ஞானம் சமாதிகை கூடில்
தவம் வேண்டாம் அச்ச கசமார்க்கத் தோர்க்கு
தவம் வேண்டா மாற்றம் தனையறி யாரே.

பொருள் : ஞானம் பெறவேண்டுமாயின் தவம் வேண்டும். ஞானசமாதி கூடிய பின்னர் அதற்குரிய சாதனை வேண்டியதில்லை. இல்லறத்திலிருந்து யோகம் பயில்வோர்க்கு, சமாதி பெறுதற்குரிய தவம் வேண்டியதில்லை. நான் தவம் வேண்டாஎனக் கூறும் உண்மையினை உலகினர் அறியார்.

6. தவதூஷணம்

(தவதூஷணம்  - தவநிந்தை, அஃதாவது புறநோக்கை விட்டு அகநோக்குக் கொண்டவர்க்குப் புறத்தே செய்யும் கிரியை ஒன்றும் வேண்டா என்று கூறுவது.)

1633. ஓதலும் வேண்டாம் உயிர்க்குயிர் உள்உற்றால்
காதலும் வேண்டாம் மெய்க்காயம் இடம்கண்டால்
சாதலும் வேண்டாம் சமாதிகை கூடினால்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.

பொருள் : உயிர்க்குயிராகிய பொருளை உள்ளே பெற்றபின் கற்று அறிய வேண்டியது ஒன்றும் இல்லை. உண்மைப் பொருளான சிவத்தை எடுத்த உடலில் கண்டால் அன்பு செய்தலும் வேண்டா. தன்மை மறந்த சமாதி நிலைகிட்டிய பின் இறத்தலும் வேண்டியதில்லை. மனத்தைப் புலன் வழியாகப் போகாமல் தடுத்து நிலை நிறுத்தும் ஆற்றல் பெற்றவர்க்குப் பிற இடங்களுக்குச் சென்று தவம் செய்ய வேண்டியது இல்லை.

1634. கத்தவும் வேண்டாம் கருத்தறிந்து ஆறினால்
சத்தமும் வேண்டாம் சமாதியை கூடினால்
சுத்தமும் வேண்டாம் துடக்கற்று நிற்றலால்
சித்தமும் வேண்டாம் செயலற்று இருக்கிலே.

பொருள் : மெய்ந்நூற் பொருள்களின் உண்மைக் கருத்தறிந்து அடங்கினால் வெளிப்படையாக அச்சொற்றொடர்களை எடுத்தும் படுத்தும் கத்துதலாகிய முயற்சிகள் வேண்டா. சமாதி கைகூடினால் வேதம் ஓதுதலாகிய சத்தமும் வேண்டா. ஆணவத் தொடக்கு அற்றவர்க்கு வேறுதுப்புறவுகள் வேண்டா. உயிர்ச் செயலற்று உடையான் செயலாக இருப்பின் ஒன்றைத் தூக்கி நாடுதலாகிய சித்தமும் வேண்டா.

1635. விளைவுஅறி வார்பண்டை மெய்த்தவம் செய்வார்
விளைவுஅறி வார்பண்டை மெய்யுரை செய்வார்
விளைவுஅறி வார்பண்டை மெய்யுறம் செய்வார்
விளைவு அறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே.

பொருள் : உடம்பு எடுத்த பயன் உடம்பினுள் உடையானைக் கண்டு வழிபடுதல். இவ்வுண்மையினை யுணர்ந்தார் நன்னெறி நான்மைத் தவம்புரிபவர் ஆவர். அதுபோல் மெய்யுரையாகிய குரு மொழி கொள்வார் உடம்பின் பயன் உணர்ந்தோர் ஆவர். மெய்யறமாகிய சிவ புண்ணியம் செய்வாரும் உண்மை உணர்ந்தோரே. இவ்வுண்மை உணர்ந்தோர் விண்ணிலும் மண்ணிலும் வாழ்வார்; அனைவரினும் மிக்கோராவர்.

1636. கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைந்து
ஊடில் பலவுல கோõர்எத் தவரே.

பொருள் : திருவருளோடு கூடிச் சிவத்தைப் பேணுவதாகிய தவத்தைச் செய்து அவன் திருவடியைக் கண்டு கொண்டேன். அந்தத் தவவழியே சென்று சிவ நிலையையும் கண்டேன். முன்னாக இவ்உண்மை உணர்ந்தவர் உடல் வருந்தும்படியாகத் தவம் செய்வார். ஐம்புலன்களையும் வென்றவர் பலவுலகப் பண்பினராவர். வெல்லாது ஊடி நிற்பவர் ஒரு தவமும் உடையவர் ஆகார்.

1637. மனத்துரை மாகடல் ஏழுங்கை நீந்தித்
தவத்திடை யாளர்தம் சார்வத்து வந்தார்
பவத்திடை யாகார் அவர்பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலும் ஆமே.

பொருள் : மனத்தில் சங்கற்பத்தாலாகிய பெரிய கடலாகவுள்ள ஏழினையும் கடந்து தவமுடையோர் வழி சார்ந்து அவரோடு இணங்கியிருப்பார் பிறப்புக்கு வரமாட்டார். பன் அத்தவமுடையோர் ஏவலைக் கேட்டு நடந்தால் சிவத்தைத் தம்முகத்தின் முன்னர்க்கண்டு சிவப்பேறு அடைதலும் கூடும். (
ஏழ்கடல் - எழுவகைப்பிறப்பு)

1638. மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற ஈர்த்துஐப்
புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்
தவத்திடை யாறுஒளி தன்ஒளி யாமே.

பொருள் : மனமாகிய உறையுளில் செறிக்கப்பட்ட ஞானவாளை உருவி பிரபஞ்ச வாசனையை விட்டு, சிவத்துடன் அநந்யமாகப் பொருந்தி ஞானேந்திரயங்கள் ஐந்தும் விஷயங்களைப்பற்றி வெளிச் செல்வதைத் தடுத்தால் தவத்திடை காணும் சிவஒளியே தன்னொளியாகும்.

1639. ஒத்து மிவும் நின்றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் எனும் பதம்
சத்தான செய்வது தான்தவந் தானே.

பொருள் : சீவர்களது அறிவினில் பொருந்தி நின்றானை உணர்வது, சிவக்காதலை உண்டாக்கும். மேலும் அடியார் பணிந்து நாள் தோறும் தொழுகின்றமையால் முத்தியும் கிட்டும். அவ்வாறு பிரபஞ்ச நோக்கை முனிகின்றவன் என்ற சொல்லை உண்மைப் படுத்துவதே தவமாம்.

1640. இலைதொட்டுப் பூப்பறித்து எந்தைக்குஎன் றெண்ணி
மலர்தொட்டுக் கொண்டேன் வரும்புனல் காணேன்
தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளம்
தலை தொட்டுக் கண்டேன் தவங்கண்ட வாறே.

பொருள் : பத்திரங்களை எடுத்தும் பூவினைக் கொய்தும் எம் இறைக்கு ஆகும் என்று நினைத்து, மலர்களைத் தொடுத்துக் கொண்டிருந்தேன். அவ்வாறு பூமாலையைச் சாத்தி வழிபட்டுக் கொண்டிருந்தாலும் கண்களில் இன்பநீர் பெருகக் காண்கிலம். செந்தமிழ்வேத ஆகமங்களைத் தலைசிறந்த மெய்ந்நூலாகக் கொண்டு திரு ஐந்தெழுத்தை ஓதினேன். வழிபாட்டுப் பாடல்களைப் பாடினேன். இதுவே நற்றவன் எனக் கண்டேன்.

1641. படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்கு
இடர் அடை யாவண்ணம் ஈசன் அருளும்
இடர் அடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்
உடம் அடை செய்வது ஒருமனத் தாமே.

பொருள் : படர்ந்த ஒளிக்கிரணத்தை உடைய தவத்தைச் செய்த அன்பர்க்கு, துன்பம் வாரா வண்ணம் இறைவன் காத்தருள்வான், துன்பத்தை வாரா வண்ணம் செய்தவரது உண்மைத்தவத்தை ஆராயின் உடம்பை மீண்டும் பெருமை செய்வது அவரது மன ஒருமைப்பாட்டினால் ஆகும்.

1642. ஆற்றிற் கிடந்த முதலைக்கண்டு அஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக்கு எதிர்ப்பட்ட  தன்ஒக்கும்
நோற்றுத் தவம்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.

பொருள் : நூலை அறியாதவராய்ப் பொறுமையோடு தவஞ் செய்யாதவர் வயிற்றுக்கு இரைதேடி வருந்தி அலைவது ஆற்றிலேயுள்ள முதலைக்கு அஞ்சி ஓடி அண்மையில் ஈன்ற கரடிக்கு முன்னே அடைந்து வருந்துதலை ஒக்கும். நூலைக் கற்றறிந்து தவம் செய்தலே துன்பம் நீங்கும் வழி.

1643. பழுக்கின்ற வாறும் பழம்உண்ணும் ஆறும்
குழக்கன்று துள்ளியக் கோணியைப் பல்காற்
குழக்கன்று கொட்டிலில் கட்டவல் லார்க்குள்
இழக்காது நெஞ்சத் திடஒன்று மாமே.

பொருள் : நற்றவம் முதிர்ச்சியடையுமாறும், அத் தவத்தின் பயனை நுகருமாறும் இளங்கன்று ஒத்துத் துள்ளித் திரிகின்ற நெஞ்சினைப் பலமுறை அடக்கும் வன்மையுடையார் இனிமேல் கோணியாகிய உடம்பினுள் புகும் தன்மையையும் உணரவல்லார் ஆவர். அவர்க்கு மெய்ம்மை தோன்றும். இளங்கன்றாகிய பசுவின் மனத்தை அடக்கவல்லார்கட்கு நெஞ்சத் திடம் உண்டாகும்; பிறப்பும் நேராது.

1644. சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தம் சிவானந்தம் சேர்ந்தோர் உறவுண்டாய்
சித்தம் சிவகாம வேசித்தி முத்தியாம்
சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே.

பொருள் : சித்தம் இடையறாது சிவத்தை நினைந்து சிவமாகவே அவருக்குச் செய்ய வேண்டிய தவம் ஒன்றும் வேண்டா. அவ்வாறு சித்தம் சிவமாகிப் பேரானந்தம் பொருந்திய அடியார் உறவும் உண்டானால் அவர்களது சித்தம் சிவமாய்ச் சித்தியும் முத்தியும் உண்டாம். ஆகையால் சித்தமானது சிவமாவதே பூர்வம் செய்ததவத்தின் பயனாம். சித்தம் இடையறாது சிவனை எண்ணிச் சிவமாதலே தவம் என்பதாம்.

7. அருளுடைமையின் ஞானம் வருதல்

(அருள் - நாத விந்துவாகிய திருவடி. அருள் உடைமையின் ஞானம் வருதலாவது, நாதவிந்துவாகிய திருவடி பொருந்தியபோது ஞானம் விளங்குதல்).

1645. பிரான் அருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரான் அருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரான்அரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரான்அரு ளிற்பெருந் தெய்வமும் ஆமே.

பொருள் : சிவபெருமானின் திருவருள் உண்டானால் செல்வன் கழல் ஏத்தும் செல்வம் உண்டாகும். அதுபோல் திருவடியுணர்வும் உண்டாகும். அத்திருவருளால் அறிவினுள் அறிவாம் பேராப் பெருநிலையும் உண்டாகும். அதுபோல் சிவமாம் பெருவாழ்வும் எய்தும்.

1646. தமிழ்மண் டலம்ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகம் திரிவர்
அவிழு மனமும்எம் ஆதி அறிவும்
தமிழ்மண் டலம்ஐந்தும் தத்துவம் ஆமே.

பொருள் : சரியை வழிநற்போர் தமிழ்மண்டலமும் அதனைச் சார்ந்த கன்னடம், மலையாளம், துளுவம், தெலுங்கு ஆகிய மண்டலங்களிலுமுள்ள தலங்களை அடைந்து வழிபடுவதில் அவர்களிடம் மறைந்துள்ள ஞானம் வெளிப்படும் என்று சுற்றித்திரிவர். ஞானிகள் இவ்வுண்மையைத் தமது தேகத்தில் உணர்ந்து ஒன்றான சிவமே பலவான சத்திகளாக விளங்குகிறது என்று அறிந்து எவரும் செல்லாமல் இருந்த இடத்திலேயே அகண்ட வழிபாட்டைச் செய்து பெரும் பயனை அடைகின்றனர்.

1647. புண்ணிய பாவம் இரண்டுள் பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர்அறுத்து அப்புறத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே.

பொருள் : புண்ணியம் என்றும் பாவம் என்றும் இவ்வுலகில் இரண்டு உள்ளன. இவை வினை காரணமாக இன்ப துன்பமாகப் பொருந்துகின்றன என்ற உணர்வார் சில ஞானிகள். இவ்வாறு உணர்ந்து இவற்றுக்குக் காரணமான வினையாகிய வேரினை அறுத்தால் அதன் பின்னர் நீங்களும் வினை நீங்கி வெளிப்படும் அண்ணலை ஆராய்ந்து அறிவீர்கள்.

1648. முன்னின்று அருளும் முடிகின்ற கலத்து
நன்னின்று உலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின்று அருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின்று எனக்கொரு முத்திதந் தானே.

பொருள் : வினைகள் முடிகின்ற காலத்தில் சிவம் தனது சத்தியைப் பதிப்பித்து ஆண்டருளும். அந்நிலை வாராத இடைக்காலத்தில் உயிருக்குயிராய் நின்று வினைகளை ஊட்டி நிற்கும். சிவனுக்குப் பின்னே நின்றருளிப் பிறவியை நீக்கிவிடும். அவனே முன்தோன்றி வீடு பேற்றை அளிப்பவன் ஆவான்.

1649. சிவனரு ளாற்சிலர் தேவரும் ஆவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோடு ஒப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூறில்அச் சிவலோகம் ஆமே.

பொருள் : சிவத்தின் அருளால் சிலர் தேவ வடிவம் பெறுவர். சிவத்தின் அருளால் சிலர் தெய்வத்தன்மை பெறுவர். சிவத்தின் அருளால் சிலருக்கு வினை சேராமை பொருந்தும். சிவத்தின் அருளைச் சொல்லப்போனால் மேலே கண்ட மூவரும் சிவலோக வாசிகளே யாவர்.

1650. புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.

பொருள் : அம்மையும் அப்பனுமாக ஓர் உடம்பில் விளங்கும் சிவபெருமான் புண்ணியன் என்று அழைக்கப்படுவான். யாவர்க்கும் தந்தையாய் உள்ளவன் ஆதலால் அவன் எந்தை எனப்படுவான். அவனே யாவரையும் தூய்மைப்படுதலால் அவன் புனிதமாயுள்ளான். நல்லார் அத்தகையோன் திருவடியைத் திரு ஐந்தெழுத்து ஓதியும் போற்றி மந்திரம் புகன்று மலர்தூவித் தொழுதும் சேர்வர். அப்படிச் சேர்தலால் அவர்பால் திருவிளக்குச் சுடராகிய சிவஞானம் விளைந்தது. தலைமைப்பாடு அமைந்த சிவபெருமான் திருவருள் பெற்றபோதே மண்ணவர் பிறப்பற்றுச் சிறப்புறுவதும் சிவ உலகத்தாராகிய வானவர் ஆவதும் நிகழும்.

1651. காயத்தோர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவையுணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆமே.

பொருள் : உடம்பாகிய தேரினுள் புகுந்து மனமாகிய தேரோட்டி சேர்ந்து வைக்க, மாயத் தேராகிய இவ்வுலகத்தில் மயங்கும் உயிரினங்கள் திருவடியன்பாகிய தேரேறிச் சிவபெருமான் திருவருளைப் பெற்றால் ஆயமாகிய சிவனடியார் திருக்கூட்டத்துடன் விரவி உயர்வற உயர்ந்த சிவமாம் பெருவாழ்வை எய்தும்.

1652. அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.

பொருள் : மெய்யடியார்கள் சிவவுலகத்தே தோன்றுவர். அச்சிவ உலகத்துக்குரிய தூய உடலுடன் இருப்பர். அவ் வுலகத்தின் கண் சிவனை வழிபடும் அருந்தவம் ஆற்றுவர். அச்சிவ உலகத்தே நின்று இறையருள் நேர்படின் சிவன் திருவடியினைக் கூடுவர். அச்சிவ உலகத்திலேயே திருவருள் இன்பத்தினை எய்துவர்.

1653. கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம்
சதிகொண்ட சாக்கி எரியின் வடிவாம்
எரிகொண்ட ஈசன் எழில்படி வாமே.

பொருள் : சூரியனைக் கண்ட சூரிய காந்தக்கல் நெருப்பின் வடிவமாகும். சந்திரனைக் கண்ட சந்திரகாந்தக் கல் முத்துப் போன்ற நீரில் வடிவாகும். சக்கியோடு மோதும் முக்கியைக் கொண்ட சக்கிமுக்கி தீயினை உண்டாக்கும் அக்கினி வடிவம். ஆனால் அக்கினி மண்டலத்தைத் தன்னுள் இழுத்துக்கொண்ட சிவன் அக்கினியின் தன்மையை விட்டு அழகான சந்திரன் ஒளிமயமாக விளங்குவான். சக்கிமுக்கிக் கல்லை நெருப்புக்கல் என்பர்.

1654. நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெரு மான் என்று
கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்ல
வீடும் அளவும் விடுகின் றிலேனே.

பொருள் : நாடுதலாகிய சிந்தித்தலும் உறவாகிய முழுநேயமும் கொண்டு எங்கள் நந்தியாகிய சிவபெருமானை அவன் அருள் விளக்கத் துணையால் தேடுவேன் தேடிச் சிவபெருமான் என்று கூடுவேன். கூடி இடையறாது நினைக்கும் நினைவாகிய ஒலிக்கும் ஆண்மைக்கழல் அணிந்துள்ள திருவடிக்கே செல உடம்பை விட்டு உயிர் நீங்கும் வரை திருவடியைப் பற்றுதலாகிய திரு ஐந்து எழுத்த ஓதுதலை நீங்கேன்.

8. அவவேடம் (போலிக் கோலம்)

(அவ வேடம் - பயனற்ற சின்னம் அகம்புறம் ஒத்தில்லாமல் வேடம் புனைவது பயனின்றாகும்.)

1655. ஆடம் பரங்கொண்டு அடிசில்உண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.

பொருள் : கூடா ஒழுக்கத்தினராய்த் தவவேடங் கொண்டு பிறரை அஞ்சுவித்துத் திரிவார்க்குப் பயன் ஆடம்பரமான சோறு கறி உண்பதேயாம். பேதைகளே ! பிறப்பின் பயன் இதுவோ ? சிவனார் திருவுருவினைக் கண்டவுடன் மெய்ம் மறந்து ஆடியும், பொய்யில்லாத திருமுறை பாடியும் இன்பக் கண்ணீர் பெருக்கி அழுதும், மகிழ்ச்சி மேலீட்டால் அரற்றியும் இம்முறையாகத் தேடியும் காணுங்கள். இதுவே பிறவிப்பயன்.

1656. ஞானம்இல் லார்வேடம் பூண்டுஇந்த நாட்டிடை
ஈனம தேசெய்து இரந்துண்டு இருப்பினும்
மான நலங்கெடும் அப்புவி யாதலால்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.

பொருள் : திருவடி உணர்வில்லாக் கீயோர் சிவக்கோலம் பூண்டு சிறந்த தென்னாட்டகத்துக் கூடாஒழுக்கம் புரிந்து பிறரை வஞ்சித்து ஏதும் உøழாது இரந்துண்டிருப்பர். அவர் அவ்வாறு இருப்பதால் நாட்டின் பெருமையும் நன்மையும் கெட்டழியும். ஆகையால் அப்பொருந்தா வேடத்தாரை அவ்வேடத்தை நீக்கச் செய்து நாட்டுக்கு நன்மையும் இன்பமும் வாய்க்கும்படி செய்வது நல்லோர் கடனாகும்.

1657. இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்துள்ள
நன்செயல் புன்செய லால்அந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடொறும் நாட்டினன்
மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே.

பொருள் : இன்பமும் துன்பமும் நாட்டுமக்கள் செய்த நல்வினை தீவினையால் நாட்டிற்கு ஆகும் என்று கூறுவர். ஆதலால் அரசன் இதனை நன்கு ஆராய்ந்து நாள்தோறும் நாட்டில் அவ்வேடத்தாரை நல்வழிப் படுத்துமாயின் உலகம் வாழும்.

1658. இழிகுலத் தோர்வேடம் பூண்பர் மேலெய்த
வழிகுலத் தோர்வேடம் பூண்பர் தேவாகப்
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.

பொருள் : தாழ்ந்த குலத்தில் தோன்றியவர்கள் மேல்நிலை அடைய வேடம் கொள்வர். வழிவழி அடிமை செய்யும் குலத்தில் வந்தவர் தெய்வநிலை அடைவதற்காக வேடம் கொள்வர். பழிக்கத் தக்க செயலைச் செய்யும் குலத்தில் வந்த பாழான சண்டாளர்கள் வேடம் பூணில் கழிக்கத்தக்க குலத்தவர்கள் ஆவர். ஆதலால் நீக்கத் தக்கவராம்.

1659. பொய்த்தவம் செய்வார் புகுவார் நரகத்துப்
பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகார்
பொய்த்தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கியம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.

பொருள் : தவத்தைப் பொய்ம்மையாகச் செய்பவர் இருளுலகம் புகுந்து இன்னல் உறுவர். பொய்த்துவம் செய்வார் புண்ணியர் ஆகார். பின் அதற்குப் பயன் மெய்த்தவம் போன்று நடிப்பதால் நிலையிலா உலக இன்பம் பொருந்தாவழியில் சிறிதுண்டாம். அவ்வளவே அத்தவப் பயன் உண்மையும் திருவடி உணர்வும் மேற்கொள்வதால் மெய்த்தவப் பயன்கள் நிலைக்கும்.

1660. பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே.

பொருள் : வயிறார உண்பது ஒன்றே பயன் என்று கருதிப் பொய்யாகத் தவ வேடம் புனைவர். உண்மையாகத் தவவேடம் பூண்டோர் உயிர் பிரியாதிருக்கக் கைப்பிச்சை ஏற்பர். பொய்யான வேடத்தை மெய்யான வேடம் போலப் பூண்டாலும் வேடத்தின் உண்மையும் மேன்மையும் உணரின் அதுவே அவர் உய்தி பெறுதற்குரிய வேடமாகும்.

9. தவ வேடம்

(தவவேடம் - தவத்துக்குரிய சின்னம், விபூதி, உருத்திராக்கம், குண்டலம் முதலியன தவத்துக்குரிய சின்னங்களாம்.)

1661. தவமிக் கவரே தலையான வேடம்
அவமிக் கவரே அதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகார்அவ் வேடம்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கஒண் ணாதே.

பொருள் : திருவடி யுணர்வுக்கு வாயிலாகிய நற்றவமிக்கவரே தலையான சிவக்கோலம் உடையவராவர். தவமில்லாத அவமாகிய பாவச் செயல் மிக்கவரே கொடுங் கொலைக்குச் சிறிதும் நடுங்காத வனவேடராவர். சிவக்கோலமாகிய தவக்கோலம் மிக்கவரே அக்கோலத்தைத் தாங்கும் தகுதியினராவர். மற்றவர்கள் அக்கோலத்தைத் தாங்கும் தகுதியுடையவர் அல்லர்.

1662. பூதி அணிவது சாதனம் ஆதியில்
காதணி தாம்பிர குண்டலம் கண்டிகை
ஓதி யவர்க்கும் உருத்திர சாதனம்
தீதில் சிவயோகி சாதனம் தேரிலே.

பொருள் : சிவ அடையாளங்களுள் முதன்மை வாய்ந்தது திரு வெண்ணீறு இத்திருவெண்ணீறு உடம்பில் பல்வேறு இடங்களில் அணியப்படுவது. செம்பொன்னால் ஆக்கிய குண்டலங்கள் இரண்டு காதுகளில் காணப்படும். வண்டனைய வடிவச் சிவமணிகள் முப்பத்திரண்டு கொண்டு கண்டிகை மார்பிடத்துக் காணப்படும். இவையே சிவ அடையாளங்களாகும். குற்றமற்ற செறிவு நிலையாகிய சிவயோகிக்கும் இவையே அடையாளங்களாம் சொம்பொன் தாமிரம்.

1663. யோகிக்கு இடுவது வுட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றும் சடையதொன்று
ஆகத்து நீறனி ஆங்குஅக் கபாலம்
சீகத்து மாத்திரை தின்பிரம் பாகுமே.

பொருள் : உட்கட்டாகிய கோவணமும் கஞ்சுளியாகிய போர்வையும் திருச்சடையின்கண் மயில் இறகாலாகிய குல்லாவும் முழுவுடம்பும் அணியும் திருவெண்ணீறும் கையில் மண்டையோடும் அழகிய வலந்திருக்கையில் பிரப்பங்கோலும் சிவயோகியின் அடையாளங்களாகும்.

1664. காதணி குண்டலம் கண்டிகை நாதமும்
ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை
ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம்
ஏதமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே.

பொருள் : காதணியாகிய குண்டலமும் சிவமணியாலாகிய கண்டிகையும், ஓசை எழுப்பும் திருஐந்தெழுத்தும், வெண்சங்கும், மண்டையாகிய சட்டியும், திருநீற்று மடலும், பாதக்குறகும் சிவயோகிக்குரிய அழகிய இருக்கையும், யோகபட்டமும், யோத்தண்டும் என்னும் பத்தும் அடையாளங்களும் சிவயோகியர்க்கும் உரியனவாம்.

10. திருநீறு (திருநீறு - விபூதி, விபூதி என்பது ஒளியை நினைவு படுத்தும் சாதனம்)

1665. நூலும் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர்
ஓரொன்று இரண்டெனில் ஓங்காரம் ஓதலே.

பொருள் : பூணூலையும் சிகையையும் அணிந்திருந்தும் அவற்றின் உண்மையை மூடர்கள் அறிவதில்லை. பூணூல் என்பது வேதாந்தத்தைக் குறிப்பது. நுட்பமான குடுமி என்பது வேதாந்த ஞானத்தை உணர்த்துவது. பிரமத்தின் பால் இரண்டற்று ஒன்றினை அத்தண்மையுடையோர் பரமும் உயிரும் ஒன்றென்று பார்ப்பார். அவ்விதம் ஒன்றாகாது நின்றவர் ஓங்காரம் ஓதில் ஒன்றாவர்.

1666. கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சார்வரே.

பொருள் : சிவபெருமான் பூசும் கவசத் திருநீற்றை ஒளிகெடாமல் பூசி மகிழ்வராயின்  பண்டைய வினைகளும் உங்களிடம் தங்கா. சிவகதியும் உங்களிடம் வந்து பொருந்தும், ஆனந்த மயமான திருவடியை அடையலாம். (கங்காளன் - எலும்பு மாலை அணிந்தவன்; சிவன் எலும்பில் சோதியை வெளிப்படுத்தும் சக்தியுள்ளது.)

1667. அரசுடன் ஆல்அத்தி ஆகும்அக் காரம்
விரவு கனலில் வியனுரு மாறி
நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர்குலம் ஆமே.

பொருள் : அரசு, ஆல், அத்தியின் சமித்துக்கள், வேள்வித் தீயில் பொருந்தி உருவம் மாறி விபூதியாகும். உருவம் இல்லாதவனும் மலம் இல்லாதவனும் ஆகி சிவத்தின் திருவடியை உணர்ந்து அனுபவிக்கும் நியதி உடையவர் உருவ மற்றம் பெற்ற பிரமத்தியானத்தினால் உயர் குலத்தோராவர், காரம் - காரியம் - திருநீறு, நீதர் நீதியை உடையவர்.

ஞான வேடம்

(ஞான வேடமாவது, ஞானப் பேற்றினை விரும்பி மேற்கொள்ளும் வேடம். அருள் ஞான சாதனம் என்று உணர்ந்து பூணுதலாம்.)

1668. ஞானம்இ லார் டவடம் பூண்டும் நரகத்தர்
ஞானம்உ ளார்வேடம் இன்றெனில் நன்முத்தர்
ஞானம்உள தாக வேண்டுவோர் நக்கன்பால்
ஞானம்உள வேடம் நண்ணிநிற் போரே.

பொருள் : உண்மைச் சிவஞானம் இல்லாதவர் உண்மைச்சிவ ஞானியர் போல் வேடந் தாங்கினால் நரகத்தை அடைவர். உண்மைச் சிவஞானம் உடையோர் சிவஞானியர்க்குரிய வேடத்தைத் தாங்கா விடினும் நல்லமுத்தர்களே யாவார்கள். சிவஞானப் பேறு உண்டாக வேண்டு மென்ற விருப்பமுடையோர் சிவத்தினிடம் என்று நீங்காத பேரொளியைப் பொருந்தி நிற்பர்.

1669. புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத் தோர்வேடம் பூணார் அருள்நண்ணித்
துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்
பின் ஞானத் தோர்ஒன்றும் பேசகில் லாரே.

பொருள் : இழிந்த ஞானமுடையோர் ஞானிகள் வேடத்தைத் தாங்கினாலும் அதனால் ஆவதொரு பயனும் இல்லை. நல்ல ஞான முடையோர் திருவருளில் தோய்ந்து வேடம் பூண்பதில் விருப்பமற்று இருப்பர். திரிபு உணர்ச்சியுடையோர் சமயக் காழ்ப்பு உடையோர் ஆவர். பின்பு அனுபவமுள்ள ஞானிகள் சமயக்காழ்ப்பு உடையோரிடம் வாது செய்ய விரும்பார். சிவஞானிகள் வேடத்தில் விருப்பமின்றி மவுனமாய் இருப்பர்.

1670. சிவஞானி கட்கும் சிவயோகி கட்கும்
அவமான சாதனம் ஆகாது தேரில்
அவமாம் அவர்க்கது சாதன நான்கும்
உவமானம் இப்பொருள் உள்ளுற லாமே.

பொருள் : சிவஞானிகளுக்கும் சிவயோகிகளுக்கும் ஆராயின் பயனற்றதான புறச்சாதனங்கள் ஆகா. அவர்களுக்குத் திருநீறு, உத்திராக்கம், சடைமுடி, அஞ்செழுத்து ஆகிய நான்கு புறச்சாதனங்களும் வீணேயாகும். அவர்கள் உவமிக்க ஒண்ணாத பொருளை உள்ளே பொருந்தி வாழலாம்.

1671. கத்தித் திரிவர் கழுவடி நாய்போல்
கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.

பொருள் : செப்பிடு வித்தைக்காரர்கள் கழுமரத்தின் அடியில் இருக்கும் நாய் போலக் கத்தித் திரிவார்கள். மேலும் கழுகுபோல ஏமாளிகளைப் பிடுங்கித் திரிவார்கள். ஆனால் சிவஞானிகளோ ஐம்பொறிகளும் உடலும் நுகர்ச்சிக்குத் தக்கனவாக ஒத்திருந்தும் போகங்களை விரும்பாமல் செத்தாரைப் போலத் திரிவார்.

1672. அடியார் அவரே அடியார் அலாதார்
அடியாரும் ஆகார்அல் வேடமும் ஆகார்
அடியார் சிவஞானம் ஆனது பெற்றோர்
அடியார் அலாதார் அடியார்கள் அன்றே.

பொருள் : அருள் இயக்கத் தன்முனைப்பற்று அதன்வழி இயங்கும் சிவமெய்உணர்வினர் மெய்யடியார் ஆவர். அத்தகுதியில்லார் அடியாரும் ஆகார். அவர் கொள்ளும் கோலம் சிவக் கோலமும் ஆகாது. திருவடியுணர்வு பெற்றோர் மெய்யடியார் ஆவார். அடியார் தன்மை யில்லாதவர் ஒருகாலமும் மெய்யடியார்கள் ஆகார்.

1673. ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாம்
தானுற்ற வேடமும் தற்சிவ யோகமே
ஆன அவ் வேடம் அருண்ஞான சாதனம்
ஆனதும் ஆம்ஒன்றும் ஆகா தவனுக்கே.

பொருள் : சிவஞானிக்கு நம்பியாரூரர் போன்று திருமணக் கோலம் ஒத்த அழகிய கோலமும் தோற்றத்தாலும் பயனாலும் நன்மையேயாம். கொண்ட அத்திருவேடமும் சிவயோக வேடமேயாம். மேலும் அத்திருக்கோலம் அருள் ஞானத் துணையுமாகும். சிவஞானம் கைவரப் பெறாதார் கொள்ளும் கோலம் ஒருவகையானும் பொருந்தாதென்க.

1674. ஞானத்தின் நாற்பதம் நண்ணும் சிவஞானி
தானத்தில் வைத்த தனிஆல யத்தனாம்
மோனத்தன் ஆதலின் முத்தனாம் சித்தனாம்
ஏனைத் தவசி இவனெனல் ஆகுமே.

பொருள் : சிவஞானி ஞானத்தில் ஞானமாகிய நான்காம் மார்க்கம் பொருந்தும். அகண்டமான சிவம் இவனுடலை ஆலயமாகக் கொண்டு விளங்குவதால் ஞானியின் தேகமே ஒப்பற்ற சிவாலயமாகும். சிவஞானி பிரணவ உபாசனை உடையவன் ஆதலின் முத்தனாகவும் சித்தனாகவும் விளங்குவான். ஏனைய தவத்தர்களின் நிலை எல்லாம் இவனிடம் உள்ளமையால் அவரெல்லாம் இவனைப் போன்றவர் ஆவரோ ? ஆகமாட்டார் என்றபடி.

1675. தானன்றித் தன்மையும் தான்அவ னாதலும்
ஏனை அச்சிவ மான இயற்கையும்
தானுறு சாதக முத்திரை சாத்தலும்
மோனமும் நந்தி பதமுத்தி பெற்றதே.

பொருள் : தற்போதம் நீங்கிய தன்மையும், மற்றும் தான் சிவமேயாகி விளங்குதலும் உலகிலுள்ள எப்பொருளுக்கும் உரிய முக்காலத்தையும் அறியும் ஆற்றலும், பக்குவ சீவர்களுக்குப் பார்வையாலோ பரிசத்தாலோ ஞானத்தை வழங்குதலும் பிரணவசித்தியும் சிவபதவி அடைந்தோர்க்கு உரியனவாம்.

12. சிவ வேடம்

(சிவ வேடமாவது சிவனுக்கு அடிமை என்று உணர்ந்திருப்போர் கொள்ளும் வேடம். இவ்வேடத்தார் தமக்கென ஒரு செயலற்றார் என்க.)

1676. அருளால் அரனுக்கு அடிமைய தாகிப்
பொருளாம் தனதுடல் பொற்பதி நாடி
இருளானது இன்றி இருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தாரே.

பொருள் : திருவருளால் சிவனுக்கு உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணித்து அடிமையாகி, பொருளாகிய தனது உடலுக்கு மேல் விளங்கும் பொன்னொளி மயமான அண்ட கோசத்தை உணர்ந்து, இருள் நீங்கித் தம்செயல் அற்றவரே தெளிந்த அடிமை பூண்ட சிவ வேடத்தார் ஆவர்.

1677. உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா
உடல்கழன் றால்வேடம் உடனே கழலும்
உடல்உயிர் உண்மையென்று ஓர்ந்துகொள் ளாதார்
கடலில் அகல்பட்ட கட்டைஒத் தாரே.

பொருள் : உடலிற் காணப்படும் வேடமாகிய திருக்கோலம் உயிரினைப் பொருந்தி உயிரினுக்குத் துணையாகாது. உடல் உயிரை விட்டு  நீங்கினால் அவ்வேடமும் உடனே நீங்கும். உடலின்கண் தங்கும் உயிர் அழிவில்லாத உண்மையான மன்னுயிராகும். இத்தகைய உண்மையினை உணர்ந்து கொள்ளாதார் உடலிற்பட்ட மரக்கட்டை இடையறாது அங்கும் இங்கும் அலைவது போன்று பிறவிப்பெருங்கடலினை நீந்தமாட்டாது பிறந்து இறந்து உழன்று அதனுள் அழுந்துவர்.

1678. மயலற்று இருளற்று மாமனம் அற்றுக்
கயலுற்ற கண்ணியர் கையிணைக் கற்றுத்
தயலற்று அவரோடும் தாமே தாமாகிச்
செயலற்று இருப்பார் சிவவேடத் தாரே.

பொருள் : ஆணவமல காரியமான மயக்கத்தை விட்டு, அதன் விளைவான இருளையும் அகற்றி, வலிமையுள்ள மனம் எண்ணுதலை விட்டு, கயல்மீனைப் போன்ற கண்களையுடைய பெண்களால் கையால் தழுவப் பெறுதலையும் நீங்கி, மயக்க மற்றவரோடு இணங்கி, தமக்கெனச் செயலின்றி இருப்பார் சிவ வேடத்தர் ஆவர்.

1679. ஓடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடம்கொண்டு என்செய்வீர் வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடும்இன் பப்பொருள் சென்றுஎய்த லாமே.

பொருள் : மனிதர்களே ! பிராண ரூபமாக உங்களிடம்  ஓடிக் கொண்டிருக்கும் குதிரையைக் கடிவாளங் கொண்டு உறுதியாகப் பற்றி நிறுத்துங்கள். வேடத்தை மட்டும் தாங்கி என்ன செய்வீர்கள் ? வீணான வேடத்தை விடுங்கள். நம் தலைவன் நந்தி தங்கியுள்ள குரு மண்டலத்தில் மனத்தைச் செலுத்துங்கள். நீங்கள் தேடுகின்ற இன்பப் பொருளான சிவத்தைச் சென்றடையலாம். (குதிரை - பிராணன். குசை கடிவாளம்.)

13. அபக்குவன் (கொய்க்குரு)

அபக்குவன் - தகுதியில்லாதவன்

1680. குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.

பொருள் : அறியாமையை அறிவனால் போக்கும் குருவினைக் கொள்ள மாட்டார். அறியாமையை நீக்காத குருவினைக் கொள்வர். அது குருடனும் குருடனும் சேர்ந்து குருட்டுத் தனமாக ஆடி இரு குருடர்களும் அறியாமையால் குழியில் விழுவது போலாம். ஞானமில்லாத குரு ஞானத்தை உபதேசிப்பது ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்டுவது போலாம். இருவரும் கெடுவர்.

1681. மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.

பொருள் : மனிதன் எண்ணுவது எல்லாம் பிரதிபலித்துக் கொண்டிருப்பது காரண சரீரம். எண்ணங்கள் நிறைந்த மனம் உடையவர் காரண சரீரத்தின் நிழலைக்கூட அணுகி அனுபவிக்கமாட்டார். எண்ணங்களால் உண்டாகிய வினைப் பயன்களை மாற்றிக் கொள்ளவும் அறியார். அறியாமையால் மீண்டும் காலவழியை இச்சித்துப் போய் எண்ணங்களைப் பெருக்கிப் கொள்கின்றனர்.

1682. ஏய்எனில் என்என மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரம்நின்று ஊறிடும்
தாய்முலை யாவது அறியார் தமருளோர்
ஊன்நிலை செய்யும் உருவிலி தானே.

பொருள் : மக்கள் ஏய் என்று கூப்பிட்டால் என்ன என்று கூட பதில் கூற மாட்டார்கள். இது உலக இயல்பு. சிசுவின் வாயில் தாயின் முலையை வைக்க அமுதம் ஊறும். ஆனால் எவ்வாறு தாயின் முலையில் அமுதம் ஊறுகிறது என்பதை நம்மவர் அறிவதில்லை. அவ்வாறு அமுதம் பெய்து ஊனில் உயிரை நிலைக்கச் செய்பவன் உருவில்லாத சிவனேயாம்.

1683. வாயொன்று சொல்லி மனமொன்று சிந்தித்து
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
நீயென்றிங்கு உன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங்கு என்னைப் பிறர்தெளி யாரே.

பொருள் : உறுதி கொண்ட பெருந் தன்மையுடையோனே ! வாய் ஏதோ ஒன்றைச் சொல்லவும், மனம் வேறொன்றைச் சிந்திக்கவும் நீ மற்றொன்றைச் செய்யாதே முக்கரண சுத்தியோடு இருப்பின் நீசிவாக்கினையைப் பெற்றவன் என்று நான் கூறுவேன். அவ்வாறு தெளிந்த பின்னர் என் கூற்று பித்தன் கூற்று என்று பிறர் கூறமாட்டார். பக்குவம் இல்லாதவர் முக்கரண சுத்தியோடு இருக்கமாட்டார்.

1684. பஞ்சத் துரோகத்துஇப் பாதகர் தம்மை
அஞ்சச் சமயத்துஓர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய்து இப்புலி வேறே விடாவிடில்
பஞ்சத்துள் ஆய்புவி முற்றும்பா ழாகுமே.

பொருள் : பொய், கொலை, களவு, கள், காமம் என்னும் ஐம்பொரும் பாவங்களும் அஞ்சாது நெஞ்சார இயற்றுவோர். நம்பகக் கேடுசூழ் பெரும் பாதகராவர். அவர்களையும் ஏனையோடும் அவ்வாறு செய்து பாதகர் ஆகாவண்ணம் அஞ்சி ஒழுகும்படி தண்டித்தல் வேந்தன் கடனாகும். அத்தண்டமாவது அக்கொடியோரை நாடு கடத்தலேயாம். அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டினில் மழைபெய்யாமல் விளைவு குன்றிப் பஞ்சமுண்டாகும். (துரோகம் - நம்பகக் கேடு.)

1685. தவத்திடை நின்றவர் தாம்உண்ணும் கன்மம்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றுஅறி யாவதர் எல்லாம்
பவத்திடை நின்றேதார் பாடது வாமே.

பொருள் : சிவனை மறவாமல் செந்தமிழ் திருஐந்தெழுத்தை ஓதி ஒழுகும் பெருந்தவத்திடை நின்றவர் உடம்புள்ள துணையும் ஊழ்வினை நுகர்வு நீங்கா. ஆதலால் அத்தவத்தோர்க்கு அந்நுகர்வு உடலோடு நின்றுவிடும். அவர் உள்ளத்தின்கண் நின்று நிலைபெறும் மாறில் நுகர்வு சிவநுகர்வேயாம். இவ்வுண்மையினைச் செருக்கறாத் தேவரும் அறியார். நற்றவமாகிய சிவவழிபாட்டில் நின்று அறியமாட்டாதவர் எல்லாரும் பிறப்பிடை நின்று துன்புறுவர்.

1686. கன்றலும் கருதலும் கருமம் செய்தலும்
தின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும்
பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்
என்றிலை இறைபால் இயற்கை அல்லவே.

பொருள் : நற்றவத்தால் சிவத்தை யுற்றவர்பால் செருக்குக் கொண்டு சினத்தாலும், நட்பு உறவு கருதுதலும், பயன்கருதிச் செயல் செய்தலும், முனைத்துத் தின்றலும், சுவைத்தலும், தீமை செய்தலும், முறையின்றித் தாழ்த்தலும், உயர்த்தலும், தற்பெருமை கூறுதலும் ஆகிய நிகழ்ச்சிகள் மறந்தும் உண்டாகா. காரணம் யாதெனில் இவையாவும் சிவன்பால் இன்மையால் என்க.

1687. விடிவது அறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியதோர் உண்ணிமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே.

பொருள் : அனுகூலமானதை அறிய மாட்டார். பரவெளியைக் காணமாட்டார். அனுகூலமான பரவெளியில் பார்வையைச் செலுத்த மாட்டார் காவலுடன் கூடிய கண்ணிமைகளைப் புறநோக்கிலிருந்து தடுத்து நிறுத்துங்கள். அகநோக்கை அறியுங்கள் தொடர்ந்துவரும் துர்ப்பாக்கியத்தைத் தவிர்க்கும் ஒளியாகச்சிவம் விளங்கும்.

1688. வைத்த பசுபாசம் மாற்று நெறிவைகிப்
பெத்தம் அறுமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்
தத்துவம் முன்னித் தலைப்படாது அவ்வாறு
பித்தான சீடனுக்கு ஈயப் பெறாதானே.

பொருள் : அனாதியே ஆன்மாவோடு பிணிக்கப் பெற்ற ஆணவமலத்தை மாற்றுகின்ற வழியினைப் பொருந்தி, மலக்குற்றம் நீங்க முத்தியில் விருப்பனாகி உலகஇயலில் மாறுபட்டு, உண்மைப் பொருளை நாடி மேன்மையடையாவண்ணம் உறுதியில்லாத சீடனுக்கு ஞானத்தைக் கொடுக்கலாகாது.

1689. மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகையோரான்
துன்னிய காமாதி தோயும் தொழில்நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்புஇறப்பு அஞ்சாதான்
அன்னியன் ஆவான் அசற்சீடன் ஆமே.

பொருள் : நிலையான ஆணவம் ஆதி ஐம் மலங்களையும் நீங்கும் வகையை ஆராயன். பொருந்திய காமம் முதலானவற்றில் மூழ்கும் தொழிலினின்றும் பிரியான். பொய் கலந்து பேசுபவன் பிறப்பு இறப்புகளுக்கு அஞ்சாதவன். இவன் தீட்சைக்குரிய சீடன் அல்லன் என்று தள்ளத்தக்கவன் ஆவான். (மலம் ஐந்து - ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி, காமாதியாவன: காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆம்.

14. பக்குவன் (மெய்க்குரு)

(பக்குவன் - தகுதியுடையவன். குரு உபதேசப்படி ஒழுகுபவன். பக்குவம் உடையவன் ஆவான்.)

1690. தொழுதறி வாளர் சுருதிகண் ணாகப்
பழுதறி யாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தவரே.

பொருள் : வழிபாடு செய்யும் பக்குவமுள்ள சீடர் வேதாகம முறை உணர்ந்து, குற்றமே அறியாத மேலான குருவை நாடி அறிவார். இவர் நல்முத்தியை விரும்பும் அறிவுடையவர். மற்றைய முத்தியை விரும்பாத உலக நிலையில் உள்ளவர் அழிந்து போகும் வழியைத்தான் அறிவர். முத்தியை விரும்பும் பக்குவமுடையவர் நல்ல குருவை நாடி உபதேசம் பெறுவர்.

1691. பதைத்தொழிந் தேன்பர மாவுனை நாடி
அதைத்தொழிந் தேன்இனி யாரொடும் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர
உதைத்துடை யாய்உகந்து ஆண்டரு ளாயே.

பொருள் : சிவபெருமானே ! பிறப்புத் துன்பங் கண்டு அஞ்சிப் பதறினேன். உன் திருவடியை நாடி இடைவிடாமல் அலைந்தேன். அறியாதார் உடம்பினை இனியாரென்று கூறுகின்றனர். அவ்வுடம்புடன் கூடேன். அறியேனின் இருவினைகளையும் சிதைத்து மனக்கவலை தீரப் பிறப்பினை உதைத்து அடியேனை உவந்து ஆண்டருள்வாயாக.

1692. பதைக்கின்ற போதே பரம்என்றும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக்கு ஈயலு மாமே.

பொருள் : பிறப்பு இறப்புகளில் படும் துன்பத்தை நினைக்கின்ற போதே உள்ளம் பதைக்கின்றது. மேலாகிய சிவனைச் சேரும் திருவடியுணர்வைப் புருவ நடுவினின்றும் நோக்கி அந்நோக்கத்திற்கு இடையூறாக உலகியலிற் செல்லும் மனத்தைத் தடுத்து நிறுத்திச் சிவன் திருவடியில் இடையறாது சேர்க்கின்ற மெய்யன்பர் அருமறை பெறுதற்கு உயிராவர். (அருமறை - உபதேசம், குருமொழி திரு ஐந்தெழுத்து.)

1693. கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடல் ஆவி யுடன்ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே.

பொருள் : கொண்டால் நல்ல குருநாதனைக் கொள்க. உன்னிடம் உடமையாகக் கருதப்பட்ட பொருளையும் உனது உடலையும் உனது உயிரையும் காணிக்கையாகக் கொடுக்க என்னளவு காலமும் இடைவிடாமல்  அவர் காட்டிய வழியிலே நின்று தெளிந்து உணரச் சிவபதம் தானே விளையும்.

1694. சோதி விசாகம் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தானென்று
நீதியுள் நேர்மை நினைந்தவர்க்கு அல்லது
ஆதியும் ஏதும் அறியகி லானே.

பொருள் : உலகோர் கொள்ளும் முறைமையுள் அருமறை கொள்ள சோதி, விசாகமும் முதலிய நட்சத்திரங்களும் தேள் நண்டு முதலிய ராசிகளும், திங்கள் முதலிய கிழமைகளும் சிறந்தனவாக நினைப்பவர்க்கல்லது அதன் முதலும் காரணமும் அறியவொண்ணா என்க. (சோதி - சுவாதி நட்சத்திரம் தேள் - விருச்சிகராசி, நண்டு - கடகராசி, ஓதியநாள் - சொல்லப்பட்ட சுப வாரங்கள். ஆதியும் ஏதும் - முதலும் காரணமும்.)

1695. தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
விழலார் விறலாம் விளையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே.

பொருள் : குரு உபதேசம் பெற்ற பெரிய மணியைப் போன்ற தூய்மையான சிந்தையில் ஒளி பொருந்திய இறைவன் எழுந்தருளிய போதே, விருப்பமுடையாரது வலிமை மிக்க வினைநீங்க இறைவனது திருவடிஎன்னும் நாதவுணர்வு பெற்று அருளைப் பெறலாம். தொழில் என்பது - குரு சீடனுக்குக் காட்டில் கொடுத்த உபாயம்.

1696. சாத்திக னாய்ப்பர தத்துவவந் தானுன்னி
ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி
சாத்தவல் லான்அவன் சற்சீட னாமே.

பொருள் : அறிவும் அமைதியுமாகிய தலைமைக்குணம் உடையவனாய் உண்மைப் பொருளாகிய சிவனடியை மறவாமல் நினைந்து கடவுள் உண்டெனும் கொள்கை வேறுபாடு உடைய நெறிகளின் அடிப்படைத் தோற்றத்தை மேற்கொண்டு எல்லையின்றிப் பிணித்துவரும் பிறவியினுக்கு அஞ்சிச் செந்நெறியாகிய அற நெறியின் கண் உறைந்து நிற்க வல்லான் நன்மாணவன் ஆவான். (சாத்திகனாய் சத்துவ குணம் உடையவனாய். ஆத்திக் பேத நெறி - கடவுள் உண்டென்னும் பல சமயங்கள்)

1697. சத்தும் அசத்தும்எவ் வாறெனத் தான்உன்னிச்
சித்தை உருக்கிச் சிவனருள் கைகாட்டப்
பத்தியின் ஞானம் பெறப்பணிந்து ஆனந்தச்
சந்தியில் இச்சை தருவோன்சற் சீடனே.

பொருள் : உலகில் நித்தியமாய் அழியாத பொருள் எவை அநித்தியமாய் அழியும்பொருள் எவை என்று தான் சிந்தித்து உணர்ந்து, சிவத்தையே சிந்தித்துச் சிவத்தின் சத்தி பதியப்பெற்றுச் சிவத்தை உணர்த்த உணர்த்த நித்தியப் பொருளான சிவத்தினிடம் சிவஞானத்தைப் பெறப்பணிந்து ஆனந்தமே வடிவான சிவசத்தியின் இச்சைக்குத் தக்கவாறு தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்பனே நல்ல சீடனாவான்.

1698. அடிவைத்து அருளுதி ஆசானஇன்று உன்னா
வடிவைத்தம் மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட்சத்தி யாலே
அடிபெற்ற ஞானத்தன் ஆசற்று ளோனே.

பொருள் : குருநாதனே ! இன்று தங்களது திருவடியைச் சூட்டி அருளும் என்று குருவினது வடிவத்தைத் தம்முடைய சிரசின் மேல் தியானிக்க வஞ்சனையுடைய பிறவியைக் கோபிக்கின்ற அருட்சத்தியால் அருள்பெற்ற ஞானமுடையோனே குற்றம் நீங்கிய சீடன் ஆவான்.

1699. சீராடு ஞானத்தின் இச்சை செலச்செல்ல
வாராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதக நான்கும்தன் பால்உற்றோன்
ஆராயும் ஞானத்த னாம்அடி வைக்கவே.

பொருள் : சீடன் சிறப்புப் பொருந்திய அனுபவ ஞானத்தில் விருப்பம் மிக்கு, இதுவரை கண்டறியாத காதல் குருபரனான சிவத்தின்பால் உண்டாக, இதுகாறும் அமையப்பெறாத சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற நான்கும் தன்னிடம் அமையப்பெற்றோன் திருவடி தீட்சைக்குப் பிறகு ஞானத்தின் அனுபவத்தை ஆராய்பவன் ஆவான்.

1700. உணர்த்தும் அதிபக் குவர்க்கே உணர்த்தி
இணக்கில் பராபரத்து எல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்கு உத் தரபச்சி மங்கொண்டு
உணர்த்துமின் ஆவுடை யாள்தன்னை உன்னியே.

பொருள் : உணர்த்துவதும் சத்திநிபாதம் மிக்குஉடைய வர்க்கேயாகும், பசுக்களுக்கே உதவும் பராசத்தியை நினைந்து, ஒன்றோடும் பற்றில்லாத பராபரமாகிய சிவத்தின் எல்லைக்குச் சீடனைக் கொண்டு சென்று கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய இடங்களை அறிவியுங்கள்.

1701. இறையடி தாழ்ந்துஐ வணக்கமும் எய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோடு
அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி யாமே.

பொருள் : உபதேச குருவின் திருவடிகளை வணங்கி, ஐந்துவகையான வணக்கங்களைச் செய்து, ஆன்மாவின் குறையைக் கூறி, அழியாத குணத்தை அளிக்கும்படி சீடன் வேண்டிப் போற்ற குருவானவர், சிறைப்பட்டு உடலையே உண்மையென்று நம்பியுள்ள மாணவ ! நீ அகண்ட சிவமாவாய் என உணர்த்தி, சிவ அறிவுடன் ஆன்ம அறிவையும் ஒன்றுபடுத்தும் நெறியை அறிவிப்பவனே சன்மார்க்க பஞ்சாங்கம், ஷாடங்கம், அஷ்டாங்கம் அங்கம் உறுப்பு, கைகள் 2, கால்கள் 2, தலை 1, காது 2, நெஞ்சு 1, ஆக எட்டு உறுப்புக்களும் நீலந்தோய வணங்கல் அஷ்டாங்க வணக்கம்.

1702. வேட்கை விடுநெறி வேதாந்தம் ஆதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்கும் தலையினான் சற்சீட னாமே.

பொருள் : ஆசையை விடுகின்ற நெறியே வேதாந்த மாதலால், உலக வாழ்வுக்குத் துணை புரிகின்ற புலன்வழிச் செல்லுகின்ற பெறிகளை மாற்றி, சித்தாந்தச் செந்நெறியிலே சென்று விருப்பத்தை விடுகின்ற சிறந்த வேதாந்தியான குருவின் திருவடிகளில் வணங்குகின்ற தலையினை உடையவனே சிறந்த பக்குவமுள்ள சீடனாவான்.

1703. சற்குணம் வாய்மை தயாவிவே கம்தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானம் தெளியத் தெளிவுஓர்தல்
அற்புத மேதோன்றல் ஆகும்சற் சீடனே.

பொருள் : நன்னெறி நன்மாணாக்கனுக்குரிய பத்துத் தன்மைகளும் முறையே வருமாறு; நற்பண்பு, வாய்மை, இரக்கம், நல்லறிவு, பொறுமை, குருவின் அடி நீங்காமை, உண்மை அறிவின்பப் பெரும் பொருள் உணர்வு, தெளிவு, ஓர்வு, அருள் நிகழ்ச்சி என்பன. இவை முற்றவும் உடைய மெய் உணர்வினனே நன்மாணவன் ஆவான்.

ஏழாம் தந்திரம் - (காலோத்திர ஆகமம்)

1. ஆறு ஆதாரம்

1704. நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம்கண்டு ஆங்கே முடிந்து முதல்இரண்டும்
காலங்கண் டான்அடி காணலும் ஆமே.

பொருள் : அக நிலைகள் ஆறும் வருமாறு: நான்கு இதழ்கள் உள்ள மூலமும் (மூலாதாரம்), ஆறு இதழ்கள் உள்ள கொப்பூழும் (சுவாதிட்டானம்), பத்து இதழ்கள் உள்ள மேல்வயிறும் (மணிபூரகம்), பன்னிரண்டு இதழ்கள் உள்ள நெஞ்சமும் (அனாகதம்), பதினாறு இதழ்கள் உள்ள மிடறும் (விசுத்தி), இரண்டு இதழ்கள் உள்ள புருவநடுவும் (ஆஞ்ஞை), ஆகிய ஆறு இடங்களும் ஆறு ஆதாரங்கள் எனப்படும். இந்நிலைக் களங்களின் நினைந்து வழிபடக் காலத்தைத் தோற்றுவித்துத் தொழிற்படுத்தும் சிவபெருமானின் திருவடி காணலாகும்.

1705. ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
மேதாதி நாதாந்த மீதாம் பராசக்தி
போதா லயத்துஅ விகாரந் தனிற்போத
மேதாதி ஆதார மீதான உண்மையே

பொருள் : ஓசைமெய்யாகிய நாத தத்துவத்தின்கண் பன்னிரு கலைகளோடு கூடியது சூரிய மண்டலம்; பதினாறு கலைகளோடு கூடியது திங்கள் மண்டலம் நிலமுதல் நாதம் ஈறாகச் சொல்லப்பட்ட முப்பத்தாறு மெய்களும் மேலாகப் பேராற்றலாகிய திருவருள் அம்மை வீற்றிருந்தருள்வன். இயற்கை உணர்வின் இருப்பிடமாகிய தனிமுதற் சிவன் அதற்குமேல் காணப்படுவன். இவற்றிற்கு எல்லாம் சார்பு நிலைக்களமாக வுள்ளதும் அச்சிவனேயாவன்.

1706. மேல்என்றும் கீழ்என்று இரண்டறக் காணுங்கால்
தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும்
பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம்
கார் ஒன்று கற்பகம் ஆகிநின் றானே.

பொருள் : மேல் கீழ் என்னும் பாகுபாடுகள் நீங்கி ஆராயுமிடத்துத் தான், யான், நீ என்னும் மூவிடப் பெயர்களும் அவன், அவள், அது என்னும் திணைபாற் பெயர்களும் கூடிப் பெயர்த்தன்மை ஆறாகும். நிலவுலகம் எங்கணும் பரந்து நிறைந்த முழுமுதற் தனிப்பொருளாம் சிவன் வேண்டாமை கொடுத்தலின் காரும், வேண்டக் கொடுத்தலின் கற்பகமும் ஆகி நின்றருள்கின்றனன். மேகத்தையும் கற்பகமரத்தையும் ஒப்பாகக் கொடுப்பவன் என்க: (கேட்காமல் கொடுப்பது - மேகம் கேட்டுக் கொடுப்பது - கற்பகம்)

1707. ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட்டான் தான்சக மார்க்கமே.

பொருள் : ஆறு ஆதாரங்களையும் திருவருள் துணையால் கண்டு மேல்நோக்குதல் நாடிசுத்திகளாகும். சுத்தி - உண்மை ஓர்தல். மேதை முதல் ஏழ்முதற்பொருள்களும் பதினாறு கலைகளும் கலந்த கலப்பும், பரவெளிப்பரப்பும் அறிவு நிலையத்துள் காணப்படும் ஐம்புலன் அந்தக் காரணம் நான்கு ஆகியவைகளுள் ஆய்தல் சீலநிலையைத் தூண்டுதல். இவை தோழமை நெறியாகும், ஏழ்முதற் பொருள்கள்; சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்பன. (செந்நீர் - இரத்தம்; வெண்ணீர் - சுக்கிலம்) சாதாரணம் - ஜீவ இயல்வு.

1708. மேதாதி யாலே விடாதுஓம் எனத்தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாதுஆர மாகவே தானெழச் சாதித்தால்
ஆதாரஞ் செய்போக மாவது காயமே.

பொருள் : பதினாறு கலைப் பிராசாதத்தால் இடையறாது ஓமெனத் தூண்டி ஆறு நிலைக்களங்களையும் ஆறு வழிகளையும் சிவகுருவின் திருவருள் துணையால் செவ்வையுறத் திருத்தினால் உடம்பின்கண் வழிபடுதற்கு இயைபு உண்டாகும். மூலாதாரம் முதல் வழிபாடு இயற்றினால் அங்ஙனம் வழிபடுவார்க்கு வரும் நுகர்வு சிவநுகர்வேயாகும். (பிராசாதம் - ஒருவகை மந்திரம், ஆறுதத்துவாக்கள் சோதனை (மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை) தாது ஆரமாக - மூலாதாரம் முதலாகக் கொண்டு.)

1709. ஆறந்த மும்கூடி யாரும் உடம்பினில்
கூறிய ஆதார மற்றும் குறிக்கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத்து ஓரெழுத்து ஆமே.

பொருள் : சொல்லும் பொருளும் ஆகிய வழிகள் ஓராறு. அவை முறையே எழுத்து மொழி மறை எனவும், உலகு கலன் (தத்துவம்) கலை எனவும் கூறுவர். இவற்றான் இயங்குவது உடம்பு. இதன்கண் மூலமுதல் ஆறு நிலைகலங்களிலும் வழிபடும் முறைமைகளைக் குறிக்கொண்டு போற்றுமின், அமைந்துள்ள எழுத்துக்கள் ஐம்பதன் மேல் அமுதூறும் மூலாதாரத்து எழுத்து ஒன்று உண்டு. அது பிரணவம். திருமூலர் காலத்தில் உயிர்எழுத்தும் மெய்யெழுத்தும் ஐம்பதாகும்.

1710. ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல்
போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே.

பொருள் : தோற்றும் பருவுடம்பு அழிகின்ற உடலாகும். தோன்றா நுண்ணுடல் இதன் கண்ணின்று உயிருடன் ஏகும் உடம்பாகும். இவற்றுக்குரிய எழுத்துக்கள் ஐம்பதாகும். தத்துவமாகிய உடம்புக்கு வழிகள் ஆறும் உறுப்புக்களாகும்.

1711. ஆயு மலரின் அணிமலர் மேலது
ஆய இதழும் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
மேய அறிவாய் வினைந்தது தானே.

பொருள் : மூலாதாரங்களின் வைத்து ஆராயுமலர்களின் மேலானது அழகிய பதினாறு இதழ்களையுடைய மிடற்றின் கண்மலராகும். அங்கு வழிபடும் தூய அறிவு சிவப்பேரின்பமாய்த் திகழும். அவ்வறிவு சிவ அறிவினுள் அடங்கிச் சிவ அறிவாய் விளங்கும். இதழ்பதினாறு விசுத்தி.

2. அண்டலிங்கம் (உலக சிவம்)

(அண்டம் - உலகம், இலிங்கம் - குறி, அண்டலிங்கம் - உலகமே சிவனது அடையாளம்.)

1712. இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே.

பொருள் : அம்மையப்பரின் அடையாளமாகிய சிவலிங்கமே எல்லாத் திசைகளிலும், எல்லாக் கலைகளும் எல்லா உலகுமாகும். இவ்வுண்மையினை நுண்ணுணர்வினரே அறிவர். ஏனையோர் அறியார். அம்மை ஆற்றலாகவும் அப்பன் பொருளாகவும் திகழ்வர். ஆதலால் எப்பொருளை எடுத்துக் கொண்டாலும் ஆற்றலும் ஆற்றலின் நிலைக்களமுமாக ஒவ்வொன்றும் இரு திறப்படும். இது கதிரும் கதிரவனும் போன்ற நிலையாகும். எங்கும் நிறைந்து நீக்கமற நிற்கின்ற சிவனும் சத்தியும் எல்லாப்பொருளையும் இயைந்து இயக்குகின்றமையின் எல்லாம் சிவன் எனப்படும்.

1713. உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவமாய்
உலகில் எடுத்தது சத்தி குணமாய்
உலகம் எடுத்த சதாசிவன் தானே.

பொருள் : சதாசிவனாகிய முழுமுதல் தனைவிட்டு நீங்கா ஆணையாகிய சத்தியே வினைமுதற் காரணமாகக் கொண்டு உலகினைக் கருத்தளவானே படைத்தருள்கின்றனன். அதனால் சத்தியே உலகின் காரணம், உலகின் வடிவம், உலகின் குணம் என ஏற்றிக் கூறுவர்.

1714. போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம்
ஏகமும் நலகி இருக்கும் சதாசிவம்
ஆகம அத்துவா ஆறும் சிவமே.

பொருள் : அன்பியல் வாழ்கையாகிய போகமும், அருளியல் வாழ்க்கையாகிய முத்தியும், முறையே அவற்றின் பயனாகிய சிற்றின்பமாகிய புத்தியும், பேரின்பமாகிய சித்தியும், சித்திக்குரிய வழிவகை கூறும் திருமூலர் போன்ற செந்தமிழ் ஆகமும், அவற்றின் கண் காணப்படும் அருஞ்சைவர் தத்துவம் முப்பத்தாறும், அதற்கு அப்பாலாகத் திகழும் ஒப்பில் ஒரு முதலாம் சதாசிவமும் ஆகம நூலிற் காணப்படும் அத்துவா ஆகிய வழிகள் ஆறும் சிவபெருமானேயாம். (அத்துவா - கதியடைக்கும்வழி, சதாசிவம் சிவத்தின் தடத்த நிலை. இஃது அருவத்துக்கும் உருவத்துக்கும் உள்ள இடைநிலை.)

1715. ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் ஈசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்று
ஆர்த்தனர் அண்டங் கடந்து அப் புறநின்று
காத்தனன் என்னும் கருத்தறி யாரே.

பொருள் : எண்ணற்ற தேவர்கள் எம் சிவபெருமானை வழிபட்டனர். மணத்தினை ஏந்திவரும் தென்றலைப் போன்ற வள்ளல் என்று வாழ்த்தினர். மகிழ்ச்சி பொங்க ஆரவாரித்தனர். ஆனால் அப்பெருமான் அண்டங்களைக் கடந்து நின்று காக்கின்றான் என்ற உண்மையினை அறியார். இரண்டாம் அடிக்கும் பஞ்ச பூதங்களையே தன்னுருவாகக் கொண்ட சகுண பரசிவம் என்று பொருள் கொள்வாரும் உளர். நிர்க்குண சிவத்தைத் தேவர்கள் அறியார்.

1716. ஒண்சுட ரோன்அயன் மால்பிர சாபதி
ஒண்சுட ரான இரவியோடு இந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்கும் தேவர்கள்
தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே.

பொருள் : ஒளிமிக்க சுடர் வடிவாகிய அக்கினியும் பிரமனும் திருமாலும் தேவகுருவும், ஒளி வடிவான சூரியனோடு இந்திரனும் ஆகியவர்களிடம் கண்ணீர் ஒளி போலக் கலந்து நின்றும், ஏனைய தேவர்களிடம் உணர்வைப் பெருக்கும் சந்திர ஒளி போன்றும் எவ்விடத்தும் நீக்கமற நிறைந்து சிவம் விளங்கும். சிவம் சிறந்த தேவர்களிடம் கண்ணொளி போன்றும் ஏனைய தேவரிடம் உணர்வு போன்றும் உள்ளான் என்பதாம்.

1717. தாபரத் துள்நின்று அருளவல் லான்சிவன்
மாபரத் துண்மை வழிபடு வாரில்லை
மாபரத் துண்மை வழிபடு வாளர்க்கும்
பூவகத்து உள்நின்ற  பொற்கொடி யாகுமே.

பொருள் : அறிவில் பொருளாகிய மண் முதலியவற்றினின்றும் சிவபெருமான் தன்னை வழிபடுவோர்க்கு அருள்புரிபவன். அவன் முழுமுதற் கடவுளானவன். அத்தகையே மெய்ப் பொருளை வழிபடுவாரில்லை. அவ்வுண்மை யோர்ந்து வழிபடுவார்க்கு உச்சியின் மேற் காணப்படும் ஆயிரஇதழ்த் தாமரை யின்கண் வீற்றிருந்தருளும் திருவருள் அம்மையின் பேரருள் உண்டாம். தாபரம் - அசையாப் பொருள் (ஸ்தாவரம்), (மாபரம் - பெருமையுள்ள சிவம், பூவகம் - சகசிலமர்; பொற்கொடி - சிவசத்தி.)

1718. தூவிய விமானமும் தூலமது ஆகுமால்
ஆய சதாசிவம் ஆகுநற் சூக்குமம்
ஆய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

பொருள் :  மிக உயர்ந்துதாகய சிவலாயத்தைப் பற்றி அறிந்து கொள்பவருக்கு, கருவறையின் மேலுள்ள விமானமே தூயலங்கமாகும். கருவறையின் உள்ளிருக்கும் சிவலிங்கம் நல்ல சூக்கும லிங்கமாகும். இலிங்கத்து முன்னுள்ள பலிபீடமும் நந்தியும் சிவலிங்கமென அழைக்கப்பெறும். (அரன் நிலை - ஆலயம், பத்திரம் - ஆனேறு; நந்தி; ரிஷபம்.)

1719. முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும்அக் கொடி சிலைநீறு கோமளம்
அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்ததின் சாதனம் பூமண லிங்கமே.

பொருள் : முத்து, மாணிக்கம், பவழம், திருவுருச் செதுக்கிய மரக்கொம்பு, பளிங்கு முதலிய வெண்கற்கள், திருவெண்ணீறு, மரகதம் சிவபெருமானை முடி முதலாகக் கொண்டு செந்தமிழின்கண் வரையப்பெற்ற திருமந்திரம் போன்ற ஆகம அருள் நூற்கள், திருவமுது அமுது முதலாகிய அரிசி ஆகிய பத்தும் அழகிய தூய்மையாக்கும் மணமுள்ள சிவலிங்க வழிபாட்டிற்கு உரிய இலிங்கம் அமைக்கும் கருவித்துணைப் பொருள்களாகும். சாதனம் துணைப் பொருள்.

1720. துன்றும் தயிர்நெய் பால்துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல்இர தம்சலம்
வன்திறல் செங்கல் வடிவுடை வில்வம்பொன்
தென்தியங்கு ஒன்றை தெளிசிவ லிங்கமே.

பொருள் : கட்டித், தயிர், நெய், பால் தூய்மையான பசும் சாணத்துடன், விளக்கிய செம்பு, அக்கினி, பாதரசம், சங்கு, நன்றாக வெந்த செங்கல், அழகான வில்வம், பொன் ஆகியவற்றுள் அழகு விளங்கும் ஒன்றைச் சிவலிங்கமாகக் கொள்க. பால், சலம் ஆகியவற்றைக் கலசத்துள் பெய்து வழிபடலாகும். (சலம் - நீர், சலஞ்சலம் என்னும் சங்கு; இரதம் - இரசலிங்கம், வில்வம் - வில்வப்பழம் அல்லது வில்வமரத்தால் செய்யப்பட்ட இலிங்கம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பயனுண்டு.)

1721. மறையவர் அர்ச்சனை வண்படி கந்தான்
இறையவர் அர்ச்சனை யேயபொன் னாகும்
குறைவிலா வசியர்க்குக் கோமள மாகும்
துறையுடைச் சூத்திரர் தொல்வாண லிங்கமே.

பொருள் : வளமான படிகலிங்கம் அந்தணர் பூசிக்கத்தக்கது. பொன்னாலாகிய இலிங்கம் மன்னர் அருச்சிக்கத் தக்கது. குறைவில்லாத வருவாயுடைய வைசியர்க்கு வழிபடத்தக்கது மரகதலிங்கமாகும். தொண்டு நெறியிலுள்ள வேளாண் தொழிலுடையோர்க்கு வாண லிங்கமாகும்.

1722. அதுவுணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி
எதுஉண ராவகை நின்றனன் ஈசன்
புதுஉணர் வான புலனங்கள் எட்டும்
இது உணர்ந்து என்னுடல் கோயில் கொண்டானே.

பொருள் : முன்னே சொன்ன முறையில் சிவனை இலிங்கத் திருமேனியில் உணர்ந்தோன் அவனது வியாபகத் தன்மையை அதனுள் நாடி, எவ்வகையாலும் உணரமுடியாது நின்ற ஈசன், உண்மை உறவால் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டிலும் வியாபகமாகக் கலந்திருத்தலை உணர்ந்தபோது என் உடம்பைக் கோயிலாகக் கொண்டு அருளினான். (புது உணர்வு - தற்போதம் கெட்டு உண்மை அறிவு மிகுதல்.)

1723. அகலிட மாய்அறி யாமல் அடங்கும்
உகலிட மாய்நின்ற ஊனதன் உள்ளே
பகலிட மாம்முனம் பாவ வினாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் தானே.

பொருள் : முன்னம் ஈட்டிய பாவங்களைப் போக்குபவனும் அனைத்தும் ஒடுங்குவதற்கு இடமாய் நின்ற புண்ணியனுமாகிய சிவமே அகன்ற பிரபஞ்சமாய் அவற்றுள் பிறர் அறியாமல் கலந்திருக்கும். அது நாடியவர்க்கு அழிகின்ற உடம்பினுள்ளே ஒளி செய்யும் பொருட்டு இடமாகக் கொண்டது. உகலிடம் - அழிதற்கு இடம்.

1724. போது புனைசூழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும்
ஆதியுற நின்றது அப்பரி சாமே.

பொருள் : ஆதார மாலையை அணிந்திருக்கும் திருவடி பூமியாகும். ஒளிபொருந்திய கங்கையைச் சூடிய திருமுடி ஆகாயமாகும். இறைவன் யாவற்றுள்ளும் கலந்திருக்கும் முறையில் அவனது உடல் ஆகாயமானது. இதுவே ஆதிபகவானாகிய சிவம் அண்டத்தைத் திரு மேனியாகத் தரித்து நின்ற தன்மையாகும்.

1725. தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரைபொரு நீரது மஞ்சன சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை
கரையற்ற நந்திக் கலையும்திக் காமே.

பொருள் : நிலமாகவுள்ள சத்தி பீடத்தின்போல் விளங்கும் இலிங்கம் (பாணம்) ஆகாயத்தை அளாவி நிற்பதாம். அலைமோதுகின்ற கடலே திருமஞ்சனசாலையாகும். மலையின்மேல் விளங்கும் மேகமே திருமஞ்சன தீர்த்தம். வானத்தின் சிறு ஒளியாகப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களே அண்டலிங்கத்துக்குரிய மாலையாகும். அளவிடுவதற்கு அரிய சிவத்துக்கு ஆடை எட்டு திக்குகளும் ஆகும்.

3. பிண்டலிங்கம் (உடற் சிவம்)

(பிண்டம் - உடம்பு; பிண்டலிங்கம் என்பது உடம்பே லிங்கம் என்றபடி.)

1726. மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கைவடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.

பொருள் : மானிடர் உடம்பின் வடிவமே சிவலிங்கம். மானிடர் உடலும் உடலைச் சூழவுள்ள பகுதியும் அறிவு ஆகாயம், மானிடர் உடல் சதாசிவரின் உருவத்திருமேனி. மானிடர் உடம்பிலுள்ள அசை வெல்லாம் கூத்தப் பெருமானின் நடனமேயாம். சிவ லிங்கமாவது உடம்பில் கால் முதல் அரை வரையில் பிரம பீடம் உடல் பகுதி கத்தி பீடம். தலை பாணம் என்ற வகையில் உடம்பு சிவலிங்கம். தலைபாகம் சிதம்பரம். உடல்பாகம் சதாசிவம். கால்பாகம் திருக்கூத்து.

1727. உலந்திலர் பின்னும் உளரென நிற்பர்
நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்
புலந்தரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக வலந்தரு
தேவரை வந்திசெய் யீரே.

பொருள் : இறந்தவர் இறந்தே போனார் என்பதற்கு இடனின்றி  வினைக்கு ஈடாக மீண்டும் பிறக்கின்றனர். அவர்கள் உடம்பு தோற்ற முறையில் நீரின்று நிலம் தோன்றும் என்பதாகக் குறிக்கவே ஐம்பூதச் சேர்க்கையால் ஆகியது என்பது விளங்கும். இப்பிறப்பினை வெல்வது சிவபெருமான் திருவடி வணக்கத்தால் ஆகும். நிலம்தரு நீர் நிலம் உற்பத்திக்குக் காரணமான நீர்.

1728. கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில் கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொள் டாற்போல் தலைவன்என் உட்புக
வாயில் கொண்(டு) ஈசனும் ஆளவந் தானே.

பொருள் : உடல் வந்த போதே உடம்பினுள் குடிபுகுந்த ஐந்து பூத நாயகர்களும். அவரவர் தொழிற் படும் நுழைவாயிலில் நின்று உயிருக்கு வேண்டிய அறிவை வழங்கியருளுவர். தாய் மனையிற் புகுமாறு போல விருப்புடன் தலைவன் என் உள்ளத்தில் புகுதலும் அவ்வாயில்களைத் தனதாக்கிக் கொண்டு சிவம் ஆண்டருளினான்.

 தெய்வம்-பூதம்-பொறி-புலன்

1. பிரமன்-மண்-மூக்கு-மணம்

2. விஷ்ணு-நீர்-நாக்கு-சுவை

3. உருத்திரன்-தீ-கண்-ஒளி

4. மகேசுரன்-காற்று-தோல்-ஊறு

5. சதாசிவன் ஆகாயம் செவி ஓசை

(கன்னற நினைந்து ஆ மனை புகுவது போன்று என்றும் மூன்றாம் அடிக்குப் பொருள் கொள்ளலாம்.)

1729. கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை
வாயில்கொண் டான் அடி நாடிகள் பத்துள
பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில்கொண் டான்எங்கள் மாநந்தி தானே.

பொருள் : மக்கள் யாக்கையினைத் திருக்கோவிலாகக் கொண்டு எழுந்தருளினன் சிவன். மிகுதியான மறை நூல்களைத் தன்னை யடையும் வழி காட்டியாகக் கொண்டான். திருவடி சேர்வார் நாடிகள் பத்தினையும் தூய்மை செய்தல் வேண்டும். புலன் ஐந்தும் தம்பின் வரச் சிவனை வழிபடுதல் வேண்டும். அவ்வாறு வழிபடும்போது சிவன் நாடிகளையும் இடமாகக் கொண்டு அருள்புரிவான்.

4. சதாசிவ லிங்கம் (உலக முதற் சிவம்)

1730. கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண்டு எட்டுப் பரந்தெழும்
தேடு முகம்ஐந்து செங்கையின் மூவைந்து
நாடும் சதாசிவம் நல்லொளி முத்தே

பொருள் : திருவருளோடு கூடிய திருவடி இரண்டும் பூமியின் மேலாக; புகழ்ந்து பாடப் பெற்ற பத்துக் கைகள் திக்குகள் எல்லாம் பரந்து எழுவதாக எங்கும் பார்க்கின்ற முகங்கள் ஐந்தாக, சிவந்த கண்கள் பதினைந்தாக. நல்ல ஒளி பொருந்திய முகத்தின் நிறத்துடன் கூடிய சதா சிவத்தைத் தியானியுங்கள். ஐந்து முகங்களாவன: சத்தியோ சாதம். வாம தேவம் அகோரம். தத்புருடம். ஈசானம் என்பன.

1731. வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே.

பொருள் : அயன், அரி, அரன், ஆண்டான், மேம்பட்ட ஐம்முகன் விந்து நாதம் இவற்றை இயைந்து இயக்கும் திருவருள் ஆற்றல். அத்திருவருள் ஆற்றலை மரமும் காழ்ப்பும் போல் விட்டு நீங்காதிருக்கும் சிவன் ஆகிய அத்தனையும் பொதுவாகச் சதாசிவன் எனப்படும். (மீதான ஐம்முகன் மகேசனுக்கு மேற்பட்ட சதாசிவன்.)

1732. ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்
ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.

பொருள் : சதாசிவமாகிய சத்தியினிடம் நிவிருத்தி. பிரதிட்டை வித்தை. சாந்தி. அதீதை ஆகிய கலைகள் இடம்பெறும். இவ்வைந்து கலைகள் இடமாகச் சிவ சூரியன் எழ, அதன் கிரணம் உள்ளும் வெளியும் சூழ அண்ட கோசம் நிறைந்து விளங்கும் ஒளியில் எட்டுத் திசைகளும் மேல் கீழ் என்ற இரண்டு திசைகளும் பொருந்தி ஒரே ஒளி மயமாக விளங்கும்.

1733. அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக்குள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.

பொருள் : பத்துத் திசைகளோடு கூடிய அண்ட கோசத்தில் சிட்சை கற்பம். வியாகரணம். சந்தோபிசிதம். நிருத்தம். சோதிடம் ஆகிய ஆறு சாத்திர அறிவும், அமைந்துள்ளது. அங்கு இருக்கு யசுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களின் அறிவும் உண்டு. அங்குப் பொருந்திய சரியை. கிரியை. யோகம். ஞானம் என்ற மார்க்கங்களோடு சமய அறிவும் அடங்கும்.

1734. சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துள
சமயத்து எழுந்த இராசி ஈராறுள
சமயத்து எழுந்த சரீரம்ஆ றெட்டுள
சமயத்து எழுந்த சதாசிவத் தானே.

பொருள் : சித்தாந்த சைவத்தில் கூறப்படும் நிலைகள் பத்து. இவற்றுள் ஐந்து. அவத்தைகள் மேல் நோக்கியும் ஐந்து அவத்தைகள் கீழ்நோக்கியும் உயிர் சென்று வருங்கால் நிகழ்வன. மேலும் உயிர்ப்புக் கலைகள் பன்னிரண்டுள்ளன. அயன், அரி, அரன், ஆண்டான் அருளோன், அன்னை என்னும் திருமேனிகள் ஆறு. பூதம். ஐந்து, ஞாயிறு, திங்கள், ஆரூயிர் மூன்று ஆகிய வடிவங்கள் எட்டு. இவை யனைத்தும் பூண்டருள்வோன் சதாசிவனேயாவன்.

1735. நடுவு கிழக்குத் தெற்குஉத் தரமேற்கு
நடுவு படிகநற் குங்கும வன்னம்
அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே.

பொருள் : சதாசிவக் கடவுளுக்கு ஓதப்பெறும் திருமுகங்கள் ஐந்து. அந்த ஐந்து முகங்களும் முறையே உச்சி கிழக்கு தெற்கு, வடக்கு, மேற்கு என்னும்புலன்கள் ஐந்தும் நோக்கி விளங்குகின்றன. புலன்கள் - திசைகள். இந்த ஐந்து திருமுகங்களின் வண்ணங்கள் முறையே வருமாறு. உச்சிமுகம் பளிங்குநிறம். கிழக்கு முகம் குங்கும நிறம். தெற்கு முகம் நீலவருணம். வடக்குமுகம் செவ்வரத்த நிறமாகும். மேற்கு முகம் பால் நிறமாகும். இத்திருமுகங்கள் ஐந்தும் அடியேற்கு அருளுதற்பொருட்டுக் கொண்டனவாகும்.

1736. அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள
அஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுள
அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.

பொருள் : ஐந்து திருமுகங்களும் பதினைந்து திருக்கண்களும் பத்துத் திருக்கைகளும். பத்துத் திருப்படைகளும் கொண்டு திகழ்கின்ற நம்பியாகிய சதாசிவக் கடவுள் அடியேன் நெஞ்சுள் புகுந்து நிறைந்து நின்றருளினன்.

1737. சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவமிக்க தாபர சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவதத்துவ முப்பத் தாறே.

பொருள் : அருளோன் நிலமண்டிலம் சத்தியாகவும் வான் மண்டிலம் சதாசிவமாகவும் விளங்கி வீற்றிருந்து அருள்வான் சத்தி சிவமாம். இருவரும் நிலத் திணை இயங்குதிணை ஆகிய இரண்டன் கண்ணும் இயைந்து இயக்குவர். சத்தி உருவம். சதாசிவம் அருவுருவம். நிலமுதல் சத்தி சிவம் ஈறாகத் தத்துவம் முப்பத்தாறாகும். இந்த முப்பத்தாறு மெய்களும் அருஞ் சைவர்களுக்கு உரிய பொருண்மையாகும். மெய்-தத்துவம். தத்துவம் முப்பத்தாறு.

1738. தத்துவ மாவது அருவம் சராசரம்
தத்துவ மாவது உருவம் சுகோதயம்
தத்துவம் எல்லாம் சகலமு மாய் நிற்கும்
தத்துவம் ஆகும் சதாசிவம் தானே.

பொருள் : சத்தி சிவ மெய்கள் உருவமும் உள்ளுறை அருவமும் ஆகத் திகழும். இயங்குதினை நிலைத்திணை உலகங்கள் முற்றும் விரிந்து விளங்கும். இன்பம் தோற்ற வூற்றாய் எழுவதும் சத்தி சிவமாகும். எல்லா மெய்களும் சத்தி சிவம் இரண்டின் கலப்பு இயக்கத்தால் இயங்குவன. தத்துவம் எல்லாம் சதாசிவன் என்று அழைக்கப்படும்.

1739. கூறுமின் ஊறு சதாசிவன் எம்இறை
வேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய் நிற்கும்
ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடு
மாறுசெய் வான் என் மனம்புகுந் தானே.

பொருள் : உள்ளத்தே ஊறுகின்ற சதாசிவனாகிய எம்இறையை ஏத்துங்கள். வேறு வகையாகக் கூறும் நூல்களால் அறியப்படாது கடந்து விளங்குவான். தாம் மேலேறு வதற்காகப் புகழ்தலைச் செய்யும் தேவரோடு மாறுபட்டு நிற்பான். அத்தகையவன் எளியேனாகிய என்மனத்தில் புகுந்து விளங்கினான். கூறுமின் நூறு எனக் கொண்டு 108 நாமங்களால் துதியுங்கள் எனவும் கூறலாம். (108க்கு நூறு என்றும். 1008க்கு ஆயிரம் என்றும் கூறுவது மரபு.)

1740. இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத்
தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனனே.

பொருள் : இருள் பொருந்திய கழுத்தும் வலக்கையில் ஏந்திய மழுவும் சுருண்ட செஞ்சடைக் கண் ஒளி விடுகின்ற பிறைச் சந்திரனும் அருள் பொழிகின்ற சிந்தையை யுடைய எம் ஆதியாகிய சதாசிவமூர்த்தியைத் தெளிந்த என் உள்ளத்தில் தெளிந்திருந்தேன்.

1741. சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் காற்றிடில்
உத்தமம் வாமம் உரையத்து இருந்திடும்
தத்துவம் பூருவம் தற்புரு டன்சிரம்
அத்தரு கோரம் மருடத்துஈ சானனே.

பொருள் : சீவர்களுக்கு அருள் பொழிவதற்காகச் சத்தி விளங்கி நிற்கும் ஐம்முகங்களைப் பற்றிச் சொல்லின் வடக்கு நோக்கிய வாம தேவ முகம் உத்தம மானது. இஃது உரையின்றி மௌனமாக இருந்திடும். கிழக்கு நோக்கிய தற்புருட முகம் உடலிலுள்ள தத்துவங்களை இயக்குவது சிரத்தைப் போன்றது தெற்கு நோக்கிய முகமாகிய அகோரம். சிரசின் முடியில் வட கீழ்த்திசை நோக்கி விளங்குவது ஈசானமுகமாம். (தெற்கில் அகோரம் தென்கிழக்கு ஈசனே எனவும் பாடம். வாதேவம் - விளக்கம். சத்தியோசாதம்-தோன்றுவித்தல். தற்புருடம்-ஆட்சி. அகோரம் - நடுக்கம். ஈசானன்-இயக்கம்.)

1742. நாணுநல் ஈசானன் நடுவுச்சி தானாகும்
தாணுவின் தன்முகம் தற்புருட மாகும்
காணும் அகோரம் இருதயம் குய்யமாம்
மாணுற வாமம்ஆம் சத்திநற் பாதமே.

பொருள் : நாண்போன்ற ஈசானத்தைச் சிரசின் நடுவில் நியசிக்க வேண்டும். தாணுவினது தற்புருடத்தை முகத்தில் நியசிக்க வேண்டும். காணுகின்ற அகோரத்தை இதயத்தில் நியசிக்க வேண்டும். மாட்சிமையுடைய வாமத்தைக் குறியில் நியசிக்க வேண்டும். சத்தியோ சாதத்தை நல்ல பாதங்களில் நியசிக்க வேண்டும். (நியசித்தல் - தொடுதல். சுட்டுதல்)

1743. நெஞ்சு சிரம்சிகை நீள்கவ சம்கண்ணாம்
வஞ்சமில்விந்து வளர்நிறம் பச்சையாம்
செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும்
செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே.

பொருள் : இருதயம் சிரசு. சிகை. கவசம். நேத்திரம் ஆகியவை அங்கங்களாம். இவற்றைக் குறிக்கின்ற மந்திரங்கள் வஞ்சனை யில்லாமல் சீவர்களுக்கு அறிவு விளக்கம் தரும் சுத்த மாயையாகும். இவற்றின் நிறம் பச்சையாகும். உடம்பெல்லாம் ஒளிமயமானபோது செவ்வொளியில் சத்தி மின்னோளி போன்று விளங்குவாள். சதாசிவரிடமுள்ள பத்து ஆயுதங்களும் உதய கால சூரியனை ஒத்துப் பிரகாசிக்கும்.

1744. எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
விண்ணிற் பரைசிரம் மிக்க சிகையாதி
வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணுங் கிரியை பரநேத் திரத்திலே.

பொருள் : ஆராயின் இதயமந்திரம் இறைவனுக்கு ஞான சத்தியாகும். சிரமந்திரம் ஆகாயத்தில் விளங்கும் பராசத்தியாகும். சிகாமந்திரம் ஆதி சத்தி. அழகுடைய கவசமந்திரம் பல நிறங்களையுடைய இச்சாசத்தியாம். நேத்திரம் கிரியாசத்தியாம்.

1745. சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும்
சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும்
சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவன் தானே.

பொருள் : திருவருள் ஆற்றல் நாற்கோணமாகிய மூலத்தினிடத்து நீர்போல் இடையறாது இயக்கிக் கொண்டிருக்கும். அத்திருவருளே கொப்பூழின்கண் மால்போல் கிடந்து உற்றுழி இயக்கும். இந்நிலை அறு கோணமாகும். அத்திருவருளே நெற்றிப் புருவநடுவில் வட்ட நிலையத்தில் நின்று ஆணை செலுத்திக்கொண்டிருக்கும். இக்குறிப்புத்தோன்றவே செந்தமிழ் ஆன்றோர் தொன்று தொட்டு நெற்றிப் புருவ நடுவில் வட்டமாகப் பொட்டு இடுவதை மரபாகக் கொண்டுள்ளனர். திருவருள் ஆற்றலின் நடுவே சிவன் வடிவமாகும். சந்தனம். குங்குமம் சாந்து ஆகிய மூன்றா லிடும் பொட்டு முப்பண்பின் அடையாளமாகும். திரு நீற்றுப் பொட்டுச் சிவனார் எண்குண அடையாளமாகும்.

1746. மான் நந்தி எத்தனை காலம் அழைக்கினும்
தான் நந்தி அஞ்கின் தனிச்சுட ராய்நிற்கும்
கால் நந்தி உந்தி கடந்து கமலத்தில்
மேல் நந்தி ஒன்பதின் மேவிநின் றானே.

பொருள் : மகத்துவம் மிக்க சதாசிவரை எவ்வளவு காலம் தொழுதாலும் அவர் பஞ்சப் பிரமமாகவே விளங்குவர். அவர் மூல வாயுவாக எழும்பி ஆதாரங்களைக் கடந்து ஊர்த்துவ சகஸ்ர தளத்தின் மேல் சென்றபோது ஒன்பது நிலைகளிலும் பொருந்தி விளங்குவார்.

1747. ஒன்றிய வாறும் உடலின் உடன்கிடந்து
என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது
தொன்தலைக்கு ஏறத் திருந்து சிவனடி
நின்று தொழுதேன்என் நெஞ்சத்தின் உள்ளே.

பொருள் : சிவபெருமான் மேல் ஓதிய முறையான் உலகத்துடன் பொருந்தி அவ்வுலகினை இயக்குகின்றனன். அதுபோல் உடலுடனும் உயிருடனும் பொருந்தி அவ்வுடல் உயிர்களை இயைந்து இயக்குகின்றனன். இவை அவனது பேரருள் பெருமாண்பாகும். அத்தகைய சிவனடி நம்முடிமேல் சூட்டப்பெறுதலால் அழகிய தலை எனப்படும் தென் தலையாகும்.

1748. உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்
கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே.

பொருள் : உலகனைத்தும் ஒளிப் பொருளாய் விளங்கும் பரசிவத்தை உணர்ந்தேன். அவனைச் சீவர்களாகிய நாம் உய்யும் வண்ணம் பூமி தத்துவத்துக் கொண்டு வந்தேன். என் மனமாகிய கோயிலில் புனிதனாகிய இறைவனைக் கூடினேன். அத் தூய்மையே உருவானவன் என்றும் நாதரூபமாய்க் காட்சி அளித்துக் கொண்டிருந்தான். சிவ சூரியனைப் பாட்டினால் நான் பணிய அவன் ஒளியினால் என்னுடன் ஒன்றியிருந்தான்.

1749. ஆங்கவை மூன்றினும் ஆரழல் வீசிடத்
தாங்கிடும் ஈரேழு தான்நடு வானதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆமென
ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே.

பொருள் : மூவகை உலகினும் சிவச்சுடர் வீசுகின்றது. அதன்மேல் ஈரேழ் உலகினும் அச்சிவன் நடுவணதாகிய அறிவுப் பெருவெளியாக நின்றருள்பவன். அவனே உலகினைப் படைத்தலால் ஆதியாகவும் மீண்டும் தன்பால் ஒடுக்குதலால் அந்தமாகவும் விளங்குகின்றனன். மேலும் ஆருயிரின் உடம்பகத்துத் திருவருள் நிலையாம் திங்களுமாகும்.

1750. தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாய்
தன்மேனி தானாகும் தற்பரம் தானே.

பொருள் : ஆருயிர்களின் உடம்புகள் சிவலிங்கமாகவே நின்றிடும் அதுபோல் அச்சிவலிங்கத்து உள்ளும் புறமுமாய் நிறைந்து நிற்கும் சதாசிவமாகும். உடம்பே தனி முதல்சிவன் உடம்பே சிவன் திருவடிப் பேரின்பம். உடம்பே சிவமெய்யாகும். உடம்பே ஒப்பில் முழுமுதல். இத்திருமந்திரம் ஆருயிரின் இடையறாச் சிவன் நினைப்பால் அவ்வுடம்பு உள்ளம் உணர்வு. உணர்வில் உளதாம் இன்பம் எல்லாம் சிவனேயாகும் என்பதை வலியுறுத்துகின்றது.

1751. ஆரும் அறியார் அகாரம் அவனென்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
மாறி எழுந்திடும் ஓசைய தாமே.

பொருள் : மேதா கலையாகிய அகரத்தைச் சிவம் என்று யாரும் அறியமாட்டார். அர்க்கிச கலையாகிய உகரத்தால் குறிக்கப்படும் சக்தி எல்லாப் பொருளிடத்தும் கலந்து நிற்பதாம். இவ்விதமான சிவமும் சத்தியும் பொருந்தி உலகமாய் மாறி இச் சிவசத்தி சிரசைத் தாண்டினபோது நாதஒலி உண்டாகும் படி செய்தது.

1752. இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்துஉள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.

பொருள் : சதாசிவ லிங்கத்துக்குரிய பீடம் அல்லது அடிப்பாகம் ஓங்காரம். இலிங்கத்தின் நல்ல கண்டம் மகாரம். இலிங்கத்தின் வட்டமாகிய பகுதி உகாரம். இலிங்கத்தின் பாணம் அகாரமும் நிறைந்த விந்து நாதமும் ஆகும். சிவலிங்கத் திருமேனி அகர உகர மகர விந்து நாதமாகிய பிரணவமாம்.

5. ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவம்)

(ஆத்ம, லிங்கமாவது ஆன்மாவே இலிங்கமாதல்)

1753. அகார முதலா அனைத்துமாய் நிற்கும்
உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம் தாமே.

பொருள் : அகரமாகிய சிவம் எல்லாவற்றிற்கும் முதலாய் எல்லாவற்றோடும் கலந்தும் இருக்கும். உகாரமாகிய சத்தி எல்லாவற்றிற்கும் முதலாய் அவை உயிர் பெற்று நிற்க உதவும். இவ்வாறு அகாரம் சிவம் என்றும் உகாரம் சத்தி என்றும் அறியின் அகார உகாரங்களே இலிங்க வடிவமாம் என்பது விளங்கும்.

1754. ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து ஆதிபீட நாமே
போதாஇ லிங்கப் புணர்ச்சிய தாமே.

பொருள் : அண்ட கோசத்தில் உருவமான சிருட்டிக்குக் காரணமாயும், அதனுள் நிலைத்தாயும் உள்ள விந்துவும் மேதை முதலான சோடச கலைகளாகிய நாதமும் அடுக்கு அடுக்காய் விரிந்தன. ஆதாரமான விந்து உயர்ந்ததான நாதத்தை இடமாகக் கொண்டு நிலை பெற்றுள்ளது. இவ்வகையான உயர்ந்து செல்லுவதில் விந்து நாதங்களின் புணர்ச்சியுள்ளது.

1755. சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவமாகும் தாபரம் தானே.

பொருள் : திருக்கோவில்களில் நிலைபெற்ற இலிங்கம் தாபர இலிங்கம், (தாபரம் - ஸ்தாவரம் - அசையாப்பொருள்) அந்த இலிங்கம் சத்தியும் சிவமும் ஆகும். அடியார் கூட்டம் சங்கமம் ஆகும்.

(சங்கமம் - அசையும் பொருள்) மெய்யடியார் திருக்கோலங்களும் சத்தி சிவமாகும். சத்தி சிவம் இரண்டையும் இணைத்து ஓதுங்கால் சதாசிவம் எனப்பெறும். தானே தனிமுதல் சத்திசிவம் இரண்டும் இணைந்த சதாசிவம் என்ப.

1756. தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம்
பூரேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
தானேர் எழுகின்ற அகாரமது ஆமே.

பொருள் : மூலத்திடத்து என்றும் அழகோடு தானாக எழுந்து ஒளி வீசுகின்ற சிவச்சுடரைக் காணலாம். தூய மாயையின் கூறாக அம்மூலத்திடத்து எழுகின்ற ஐம்பது எழுத்துக்களின் தொகையாகிய ஓங்காரமும் அம் மூலத்தேயாம். ஆயிரம் இதழ்த் தாமரையின் நிலைக்களமாகிய உச்சித் துளைமேல் சிவசத்தியிடன் சேர்ந்து விளங்குவது. அகார முதல்வனாகிய சிவபெருமானாகும்.

1757. விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
விந்துவ தேபீட நாதம் இலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்த கருஐந்தும் செய்யும் அவைஐந்தே.

பொருள் : ஒளியும் ஒலியும் ஆகிய விந்து நாதங்கள் பொருந்தும் சிவலிங்கம், விந்து பீடமாகும்; நாதம் இலிங்கமாகும். இவ் விரண்டையும் சார்புக் கடவுளாகக் கொண்டு அருளோன், ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் ஐம்பெரும் தெய்வ நிலைகள் தோன்றின. இவ் ஐந்தினையும் ஐந் தொழிற்கு வேண்டிய கருவென்ப, கரு காரணம், இவ் ஐவரின் வாயிலாக ஐந்து தொழில்கள் நிகழ்கின்றன. அத்தொழில் முறையே அருளல், மறைத்தல், துடைத்தல், காத்தல், படைத்தல் என்ப.

1758. சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மா
சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்
சத்தநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்
சத்திநல் ஆன்மாச் சதாசிவம் தானே.

பொருள் : சத்தி வடிவாகக் கொள்ளப்படும் சிவ லிங்கத்தினிடத்துப் பீடம் ஆவி நிலையாகும். கழுத்தினை ஒத்த பீடத்தின் குழி திருவடி உணர்வாகிய சிவ ஞானமாகும். மேல் தோன்றும் இலிங்கம் சிவ மெய்யாகும். எவற்றினுக்கும் உயிர்க்குயிராம் பேராவி பரமாத்மா, சதாசிவமாகும்.

1759. மனம்புகுந்து என்னுயிர் மன்னிய வாழ்க்கை
மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது
நலம்புகுந்து என்னொடு நாதனை நாடும்
இனம்புகுந்து ஆதியும் மேற்கொண்டவாறே.

பொருள் : ஆருயிர்களின் உள்ளத்தின்கண் சிவபெருமான் திருவருளால் புகுந்து நிலைபெற்ற திருவடி வாழ்க்கையை அருளினான். அதனால் பேரின்பப் பெருவாழ்வு பொழிவதாயிற்று. அந்த இன்ப நன்மையின் நாட்டத்துடன் ஆருயிரையும் சிவனையும் அருளால் நாடுவர். அந்த நாட்டத்தின் பயனாக உடம்பாகிய வீட்டினுள் ஆதியாகிய சிவன் புகுந்து ஆண்டு கொண்டனன்.

1760. பராபரன் எந்தை பனிதமதி சூடி
தராபரன் தன்னடி யார்மனக் கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும்
அராபரன் மன்னி மனத்துஉறைத் தானே.

பொருள் : மேலானவற்றுக்கும் மேலானவனும் எம்தந்தை போல்வானும் குளிர்ந்த பிறையைச் சூடினவனும் உலகனைத்தையும் தாங்குபவனும் தம் அடியார் மனக்கோயிலின் உச்சியில் விளங்குபவனும் தேவர்கள் சித்தினுள் ஒளிமயமாக விளங்கும் குண்டலினியின் தலைவனுமாகிய அரன் என் மனத்துள் நீங்காது எழுந்தருளினான்.

1761. பிரான்அல்ல நாம்எனில் பேதை உலகம்
குரால்என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்
அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே.

பொருள் : பசுவின் தன்மையுடைய என்மனத்தைக் கோயிலாகக் கொண்ட ஈசனும் பாம்பு தங்கிய சடையும் அக்கினியும் நீரும் பொருந்தியவனும் செய்கின்ற புண்ணியம் அனைத்தும் ஆகியவனுமாகிய அவன் தலைவன் அல்ல நாமே தலைவன் என்று கூறுவது அறியாமையுடையோர் கூற்றாகும். (குரால் - பசு)

1762. அன்றுநின் றான்கிடந் தான்அவன் என்று
சென்றுநின்று எண்டிசை ஏத்துவம் தேவர்கள்
என்றுநின்று ஏத்துவன் எம்பெரு மான்தன்னை
ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே.

பொருள் : சிவன் அன்று அங்கு நின்றான், இங்குக் கிடந்தான் என்று எட்டுத் திசைகளிலும் திரிந்து போய்த் தேவர்கள் வணங்கு வார்கள். அவன் என் உயிர்க்கு உயிராய் என் உள்ளத்தில் பொருந்தி நின்றான். அத்தகைய எம்பெருமானை என்றைக்கும் வணங்கிக் கொண்டிருப்பேன்.

6. ஞான லிங்கம் (உணர்வுச் சிவம்)

1763. உருவும் அருவும் உருவோடு அருவும்
மருவு பரசிவன் மன்பல் உயிர்க்கும்
குருவு மெனநிற்கும் கொள்கையன் ஆகும்
தருவென நல்கும் சதாசிவன் தானே.

பொருள் : உருவும் அருவும் அருவுருவம் என்று மூன்று வகையான திருமேனி கொள்ளும் பரசிவன் நிலைபெற்ற பல உயிர்களுக்கும் குருவாக நிற்கும் தன்மையுடையவன் ஆகும். அவனே சதாசிவமாய்க் கற்பகமரம் போல வேண்டுவார்க்கு வேண்டியதை வழங்கி யருளுவான்.

1764. நாலான கீழது உருவம் நடுநிற்க
மேலான நான்கும் அருவம் மிகுநாப்பண்
நாலான ஒன்றும் அருவுரு நண்ணலால்
பாலாம் இவையாம் பரசிவன் தானே.

பொருள் : சதாசிவக் கடவுள் ஒன்பது திருமேனிகளை உடையவன். உருவம் நான்கு; இவைகீழ்ப்படி என்ப, அருவம் நாலும் மேற்படி என்ப; நடுப்படி அருவுருவம் ஒன்று என்ப; இவையனைத்தும் பரமசிவன் அருளிற் கொள்ளும் நினைப்பு உருவமாகும்; இவைமுறையே அயன், அரி, அரன், ஆண்டான் எனவும் அருளோன் எனவும், ஒளி, ஓசை அன்னை அத்தன் எனவும் கூறுப (அருளோன் - சதாசிவன்.)

1765. தேவர் பிரானைத் திசைமுக நாதனை
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
ஏவர் பிரான்என்று இறைஞ்சுவார் அவ்வழி
யாவர் பிரானடி அண்ணலும் ஆமே.

பொருள் : தேவர் அனைவர்க்கும் நாதனும் நான்கு திசைகளிலும் முகமுடைய தலைவனும் உருவமூர்த்திகள் நால்வரையும் செலுத்துபவனும், உருவுக்கும் அருவுக்கும் இடையேயுள்ள அருவுரு மூர்த்தியும் ஆகிய சதாசிவரை யார் பெருமான் என்று வணங்குகின்றாரோ அவ்விடத்திலே பிரானாகிய சதாசிவர் தோன்றுவார். அவ்வாறு அவரது திருவடியை அணுகுதலும் கூடும்.

1766. வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற
ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்டகை யானொடும் கன்னி உணரினும்
மூண்டகை மாறினும் ஒன்றது வாமே.

பொருள் : ஆண்டு, மாதம், நாள் ஆகியவற்றைச் செய்கின்ற, சிவ சூரியனாகிய சதாசிவரோடு சத்தியை வழிபடினும் இருவரையும் வேறு வேறு உருவாக ஓருருவாகத் தியானிக்கினும் பயன் ஒன்றேதான். ஆதலின் வினை நீங்கும்படி இவ்வாறு தொழுதேன்.

1767. ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாதெய்வம் நின்மலர் எம்இறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.

பொருள் : ஆதியான மேலான தெய்வமாகிய சதாசிவரே, அவரவர் ஆகாய மண்டலத்தில் விளங்குபவர். அவர் சோதியாக அடியார்கள் வணங்கும் பெருந் தெய்வமாகும். ஒவ்வொருவரின் அண்ட ஆகாயத்தில் நீதிவடிவாக விளங்கும் பெருமையுடைய தெய்வமாகும். அவர் யாவருடைய உடலையும் இடமாகக் கொள்ளினும் நின்மலர். இத்தகைய எமது இறையின் ஒரு பாதியில் பராசத்தி உள்ளாள்.

1768. சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
சுத்த சிவபதம் தோயாத தூவொளி
அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்
ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே.

பொருள் : சத்திக்கு மேல் பராசத்தி விளங்கும் அண்ட கோசத்திலுள்ள வெளியில் தூய்மையான சிவபதம் உண்டு இங்கு ஏனைய தத்துவங்களில் தோய்வின்றி நிற்கின்ற வெளி உள்ளது. அத்தன் திருவடி விளங்கும் இவ்வெளிக்கும் அப்பாலுக்கு அப்பாலாயும் ஒத்ததாயும் இருக்கும் சிவத்தின் உண்மையான நிலை.

1769. கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும்
எழுந்திடம் காணில் இருக்கலும் ஆகும்
பரந்திடம் காணில் பார்ப்பதி மேலே
திரண்டெழக் கண்டவன் சிந்தையு ளானே.

பொருள் : ஞானலிங்கமாகிய ஒளிமயமான சதாசிவரை அறியில் உலகமெல்லாம் அங்குச் சூக்குமமாய் விளங்குவது தெரியும். எழக்கூடிய வல்லமை இருக்குமாயின் என்றும் அழியாது இவ்வுலகில் இருத்தலும் கைகூடும். தத்துவங்களை விட்ட ஆன்மாவை உறுதியாகம் பற்றினால் சத்தி உருவில் அமைந்த சிவம் சிந்தையுள் விளங்கும்.

1770. எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறைசொல்லின் ஞானமாம்
சந்தித்து இருந்த இடம்பெருங் கண்ணியை
உந்தியின் மேல்வைத்து உகந்துஇருந்தானே.

பொருள் : எந்தையாகிய சிவபெருமானும் என் அம்மையாகிய பெருமாட்டியும் மணியொளிபோலப் பிரிப்பின்றிக் கலந்து கூடிய கூட்டமும் முற்படக் கூறி முறை இயம்பின் திருவடி உணர்வாகிய சிவஞானமாகும். இருவரும் கூடியிருந்த நிலைக்களம் கொப்பூழாகிய சுவாதிட்டான மாகும். அதற்கு மேலெனப்படும் நெஞ்சமாகிய அநாகதத்தின்கண் பெருங்கண்ணியை உடன் வைத்து மாறிலாத உவப்புடையவன் ஆனான். கூட்டம் - ஒரு பாகத்தமர்ந்த சேர்க்கை.

1771. சத்தி சிவன்விளை யாட்டாம் உயிராகி
ஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டிச்
சுத்தம தாகும் துரியம் பிறிவித்துச்
சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே.

பொருள் : சத்தி சிவத்துடன் விளங்கும் தகுதிக்கேற்ப உயிரின் நிலை விளங்கச் செய்து அதற்கேற்ப சுத்த மாயை அசுத்தமாயை என்ற கூட்டத்தில் சேர்த்து உயிர் பக்குவமானபோது சுத்த மாயையில் விளங்கும் (துரியம்) ஒளி மண்டலத்தை உணர்த்தி அதனைக் கடக்கும்படி செய்து சிவனின் சித்தத்தில் சிவம் தங்கிச் சிவனைச் சிவனுறையும் கோயிலாக்கும்.

1772. சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவமுமாம் சிவன்சத் தியுமுõகும்
சத்தி சிவமின்றித் தாபரம் வேறில்லை
சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே.

பொருள் : இப்பூமி சிவ சத்திகளின் விளையாட்டாகும். உருவமுடைய சத்தி அறிவான சிவமாம். அறிவான சிவன் உருவான சத்தியுமாம். சத்தி சிவமின்றி உடலுடைய உயிர்கள் ஒன்றும் இல்லை. சத்தியே தேவைப்பட்ட விதம் சமைந்து எக்காலத்தும் உருவத்தைப் பெறும். சிவத்துக்கு உருவம் சத்தி என்பதாம்.

7. சிவலிங்கம் (சிவகுரு)

1773. குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே.

பொருள் : ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்ட இவ்வுலகமும் நீரும், தீயும், காற்றும் (வெளியும்) வரிசையாக விளங்கும் விளக்கம் சிவனாவேயாம். இவை எல்லாமாய்ச் செறிந்த சிவனை நாம் ஒரு குறியில் வைத்து வழிபடுதல் வேண்டும். அங்ஙனம் வழிபடுவதும் அவன்தன் திருவருள் துணையாலேயாம். இவ்வுண்மை அறியகில்லேனே.

1774. வரைந்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்துஅவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே.

பொருள் : அச்சிவபெருமானை ஒரு குறியில் கண் வைத்து வழிபடும் வகை ஒன்று உண்டு. அது திரு ஐந்து எழுத்தால் ஆகும். செம்பொற்குடத்து நிரைத்துவைத்த தெண்ணீரும் மருமலரும் அங்கையில் ஏந்திப் புகழ்ந்து மொழியப்படும் நந்திநாமம் நமச்சிவாய என்னும் செந்தமிழ்த் திருமறை ஓதித் திருவடியிலிட்டு வழிபடுதல் என்பதேயாம். இங்ஙனம் வழிபடு உணர்வின்கண் உணர வல்லார்க்குப் புரிசடையோனாகிய சிவபெருமான் அவரைவிட்டு நீங்கி எங்கும் போகான்.

1775. ஒன்றெனக் கண்டோம் ஈசன் ஒருவனை
நன்றென்று அடியிணை நான்அவ னைத்தொழ
வென்றுஐம் புலமும் மிகக்கிடந்து இன்புற
அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே.

பொருள் : எம்முதல்வனாகிய சிவபெருமான் ஒருவனே உலகுக்கு முழுமுதல் என அருளால் உணர்ந்தோம். அவனை நன்னெறி நான்மையும் எய்தத் தொழுதலே நன்றென்று அவன் திருவடியிணையைப் புனலும் பூவும் கொண்டு போற்றி மறை புகன்று நனவிலும் கனவிலும் மனமுறத் தொழுதனம். அங்ஙனம் தொழுதமையால் ஐம்புலனும் மிகக் கிடந்து இன்புறும்படி அப்பொழுதே ஆதிப்பிரான் அருள் செய்தனன். புலன்கள் ஆண்டவன் திருஆணை வழியே நிகழ்வன.

1776. மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.

பொருள் : மாலின் கொப்பூழில் தோன்றிய அயனும். அம் மாலாகிய அரியும், அரனும், ஆண்டானும் பயனருளும் அருளோனாகிய ஐம்முகனும் மேலாம் விந்து நாதங்களும் நன்மையருளும். சத்திசிவன் வடிவங்களும். நிறைந்த குறை விலாஇன்பப் பயனுக்கு வாயிலாகிய பாடிப் பிரவிப் பணியும் பணியாம். நல்தவத்தைத் தந்த தருளும் நந்தி யெம்பெருமானே. சிவலிங்கமும் ஆவன்.

1777. மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
ஆவி எழும்அள வன்றே உடலுற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கிற் பரகதி தானே.

பொருள் : மூலா தாரத்திலிருந்து நடுநாடி வழியாகச் செல்லுகின்ற செவ்வொளியோடு கூடி ஆவி எழுகின்ற அளவுவரை உடம்பிலுள்ள ஆதார கலைகளிலும் உடம்பை நீங்கிய நிராதார கலைகளிலும் பொருந்துவதும். நீங்குவதுமாக மனத்தை நிறுத்திப் பழகுவதில் மேலான சிவகதி விளையும்.

8. சம்பிரதாயம் (பண்டைய முறை)

1778. உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி
கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே.

பொருள் : முன்னிலையில் அமைந்த குரு உடல் பொருள் ஆவி மூன்றையும் சீடன் நீரோடு தத்தம் செய்ய ஏற்றுக் கொண்டு, படர்ந்த வினையால் வரும் பற்றினை அறும்படி கண்ணினால் நோக்கி, சீடனது சிரசில் கைவைத்து, திருவடி ஞானத்தை விளக்கியருளி நுட்பமான உணர்வை எழுப்பி விரைவில் கட்டினையுடைய பிறவியை அறுத்தருளினன்.

1779. உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான
வியவார் பரமும்பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே
உயலார் குருபரன் உய்யக் கொண்டானே.

பொருள் : உயிரும் உடம்பும் ஒளி பொருளான வியப்புப் பொருந்திய பரமும். பின்பொருந்தியுள்ள பிராணனும் இவற்றை இயக்குகின்ற சிவமும் சத்தி ஆகியவற்றை அறிந்து, உய்யும் வண்ணம் குருநாதன் ஆட்கொண்டருளினான். (சிவன் - காரண குரு. குருபரன் - காரிய குரு.)

1780. பச்சிம திக்கிலே வைத்தஆ சாரியன்
நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள்
உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே.

பொருள் : சிவகுருவானவர் வடக்கு நோக்கி அமர்வார். சிவ தீட்சை பெறுவோராகிய மாணவர் மெய்கண்டார் எனப்படுவார். அவர் சிவகுருவின் இடப்பாலாகிய மேற்குபக்கம் அமர்வார். மேற்குத் திக்குப் பச்சிமம் எனப்படும். அந்நிலையில் சிவகுருவானவர் நாடோறும் மாணவரை நினையும்படி ஆணை ஈந்தது சிவசிவ என்னும் செந்தமிழ் மறையே. அச்சிவன் உறையுமிடம் உச்சிக்குக் கீழும் உள் நாக்குக்கு மேலும் ஆகும். அந்தச் சிவனை விட்டு நீங்காத சீவனுக்கும் கனவில் உயிர்ப்பு அடங்கலாகிய சாக்கிரத்தே அதீதத்øத் புரியும் தவநிலையும் அதுவேயாம். அந்நிலையில் பிறப்பு வழி உண்டாகிறது.

1781. பெட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவேனை
ஒட்டடித்து உள்ளமர் மாசெலாம் வாங்கிப்பின்
தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே.

பொருள் : விரும்பியவாறு அனுபவம் இன்றி வாய் ஞானம் பேசிக் கொண்டிருந்த என்னை, என்னிடத்திலுள்ள குற்றங்களையெல்லாம் அகற்றி, பின்னர்க் குருநாதனாகிய தன்னையும் சீடனாகிய என்னையும் துலாத்தட்டு நேராதல் போலச் சமன் செய்தான். நாணய மாற்று நடந்து வியாபாரம் சித்தித்தது.

1782. தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்து பிணக்கறுத்து எல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்டேனே.

பொருள் : உலகில் வாழ்கின்ற பல உயிர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவம். உடனாய் இருக்கின்ற இயல்பினை உலகவர் சிறிதும் அறியார். சுத்த மாயையின் மாறுபாட்டைப் போக்கி, எல்லாவற்றையும் கருவாகக் கொண்ட சிவத்தை நான் கண்டு கொண்டேன்.

1783. கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு
நாடி அடிவைத்து அருள்ஞான சத்தியால்
பாடல் உடலினில் பற்றற நீக்கியே
கூடிய தானவ னாம்குளிக் கொண்டே.

பொருள் : வினைக்கு ஈடாக உடல் பொருளோடு கூடிய உயிரை உய்விக்க வேண்டும் என்று எண்ணங் கொண்டு, தனது ஞான சத்தியால் விந்து நாதங்களாகிய திருவடியை விரும்பிப் பதிப்பித்துப் பெருமையில்லாத உடம்பின் பற்றினை அறுத்து, சிவம் சீவனில் கலந்து மறைந்து அவனே தானாய் நிற்கும்.

1784. கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக்
கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக்
கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் எனஒன்றும் கூறகி லானே.

பொருள் : அடியேனைப் பக்குவம் வந்த போது அடிமையாக ஏற்றுக் கொள்ள எண்ணங் கொண்டான். எனது உயிர் பொருள் உடம்பின் கருவிக்கூட்டம் ஆகியவற்றை அவன தாக ஆக்கிக் கொண்டான். எல்லா வல்லமையையும் தந்தவனே எடுத்துக் கொண்டான். அவ்வாறு கொடுத்தவன் கொள்ளுதலால் என்னிடம் உள்ளவற்றை எடுத்துக் கொண்டான் என்று. கூறுவதற்கில்லை (காயக்குழாம் - தூல சூக்கும காரண சரீரங்கள்)

1785. குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை
பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே.

பொருள் : குறியாகக் கொள்கின்ற உடம்பும் உடம்பை யுடைய சீவனும் கூடி, நெறிப்பட இயங்கும் பிராணன் நிலை பெற்ற சீவன். இயமன் நீக்குகின்ற உடம்பை எடுத்துக்கொண்ட தன்மையை, உடம்போடு கூடியிருக்கும்போதே அறிந்து பிறிக்காதார் பேய்போல் அலைபவர் ஆவர்.

1786. உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்
உணர்வுடை யார்கண் உணர்ந்துகண் டாரே.

பொருள் : முன் மந்திரத்தில் கூறியவாறு தமது சீவனான ஒளியை உணரும் தன்மை உடையார்க்கு எல்லா சூக்கும உலகங்களும் விளங்கும். அத்தகைய உணர்வுடையார் இவ்வுலகை அனுபவப் பொருளாகக் காணாமல் சாட்சியாகக் காண்பதால் எவ்வகையான துன்பமும் அவர்க்கு இல்லை. இங்ஙனம் உணர்வுடைய ஞானிகள் உலகை அறிந்தபோது அவர்கள் தம்மையும் தலைவனையும் உணர்ந்தவராவர்.

1787. காயப் பரப்பில் அலைந்து துரியத்துச்
சால விரிந்து குவிந்து சகலத்தில்
ஆயஅவ் ஆறாறு அடைந்து திரிந்தோர்க்குத்
தூய அருள்தந்த நந்திக்கு என் சொல்வதே.

பொருள் : உடல் பரப்பில் அலைந்து, துரிய நிலையில் ஒளி மண்டலத்தில் மிகவிரிந்து சிவத்துடன் பொருந்திக் குவிந்து சகல நிலையில் முப்பத்தாறு தத்துவங்களுடன் பொருந்தியிருந்த சீவருக்குதூய்மையான தனது அருள் சத்தியைப் பதிப்பித்த நந்தியெம்பெருமானை என்ன சொல்லி வாழ்த்த முடியும்.

1788.  நானென நீயென வேறில்லை நண்ணுதல்
ஊனென ஊனுயிர் என்ன உடனின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென இன்பம் திளைக்கின்ற வாறே.

பொருள் : நான் என்றும், நீ என்றும், நீ வந்து அடைதல் என்றும் வேறு பிரித்து உணரக்கூடிய நிலை இல்லை. உடம்பும் உடம்பிலுள்ள உயிரும் போல நாம் உடனாயிருக்க ஆகாயத்தில் இறைவன் வேறாக இருப்பதாக எண்ணின் ஆகாய மண்டலவாசிகள் வந்து பொருந்தி நின்று மனிதர்கள் நுகர்கின்ற இன்பங்களைத் தேன்போலச் சுவைத்து அழுந்தியிருப்பார்கள்.

1789. அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவனிவன் ஆமே.

பொருள் : இறைவனைத் துவைத பாவனையில் வணங்கும் சரியை கிரியை வழி நிற்போர் அவனை அறிய மாட்டார். காணப்படுபவனைக் காண்பவன் அறிந்தால் அது இரு பொருளாக இல்லாமல் ஒரே பொருளாகக் காண்பவனும் காட்சியும் ஒன்றிவிடும். இவ்விதமாகச் சரியை வழி நிற்போரும் அநந்நியமாக உணரில் காணப்படு பொருளான சிவமும் காண்பானும் ஒன்றாகச், சீவனார் சிவனாய் விடுவார்.

1790. நானிது தானென நின்றவன் நாடோறும்
ஊனிது தானுயிர் போலுணர் வானுளன்
வானிரு மாமுகில் போற்பொழி வானுளன்
நானிது அம்பர நாதனும் ஆமே.

பொருள் : நான் இந்தச் சீவனே என்று உள்ளங் கொள்பவனாகிய சிவன், உடலாகிய இதனைத் தான் எனவே எப்போதும் கருதும் உயிர்போல உளன். அவன் வானத்தில் பரவும் பெரிய மேகம் போலக் கருணையைப் பொழிபவனாக உள்ளான். அதனால் நான் ஆகாய நாயகனாக ஆயினேன்.

1791. பெருந்தன்மை தானென யானென வேறாய்
இருந்ததும் இல்லைஅது ஈசன் அறியும்
பொருந்தும் உடல்உயிர் போல்உமை மெய்யே
திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே.

பொருள் : பெருந்தன்மையுடைய தான் என்னும் சிவனும் யான் என்னும் சீவனும் வேறாக ஒருபோதும் இருக்கவில்லை. அத்தன்மையை இறைவன் இயல்பாகவே அறிவான். உண்மையாகவே உயிர்களைத் திருத்த மடையச் செய்கின்ற சிவபெருமான் உம்மை உடல் உயிர்போலப் பிரிப்பின்றிப் பொருந்தி யிருப்பான்.

9. திருவருள் வைப்பு (திருவருள் வைப்பு - திருவடி பதிதல். திருவடியாவன: சூரிய சந்திர கலைகள்.)

1792. இருபத மாவது இரவும் பகலும்
உருவது ஆவது உயிரும் உடலும்
அருளது ஆவது அறமும் தவமும்
பொருவது உள்நின்ற போகமது ஆமே.

பொருள் : சீவர்கள் அறிய வேண்டிய நெறி சூரிய நெறி, சந்திரநெறி என இரண்டாம். இத்தகைய சூரிய கலை, சந்திர கலை விளங்கவே உயிருக்கு உருவமான உடல் அமைந்தது. அருள் என்ற தெய்வ சத்தியை பெற சந்திர நெறி பற்றியவர்க்கு அறமும், சூரிய நெறி பற்றியவர்க்குத் தவமும் அமைந்துள்ளன. இவ்விரு நெறியினும் மனத்தின் பண்பிற்கேற்பப் போகப் பொருள்கள் உடலுக்கு அமையும்.

1793. காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்
ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே.

பொருள் : ஊனக் கண்ணால் காண்பதற்கு அருமையானவன். மனத்தால் பாவித்து அறியவும் அருமையானவன். குரு மண்டலத்தில் விளங்கும் நந்தியும் பரிசிப்பதற்கும் அணுகுவதற்கும் தூரத்தில் உள்ளவனாகத் தோன்றுவான். அவனையே வேண்டிக் கிடப்பார்க்கு அகநோக்கில் விளக்கொளி போலத் தோன்றுவான். அப்போது அவனையே செறிந்திருத்தலால் உள்ளத்திலிருந்த அஞ்ஞானம் நீங்குமாம்.

1794. குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே.

பொருள் : விளக்கொளி கண்டு நின்றபோது அகக்காட்சியில் உலகிலுள்ள உயிர்ப்பொருள் எல்லாம் கருவாய்த் தோன்றும். வெறுக்கத்தக்க ஆணவ இருள் நீங்கினால் உயிர்க்குயிராய்க் கலந்திருக்கும் பரசிவன் உண்மையைக் காணலாம். அவ்வாறு அவனிடம் செறிந்த சிந்தையை ஆராயின், ஞானமே உருவான காட்சி உண்டாகித் தேவ உருவம் சித்திக்கும்.

1795. தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறை
ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமெனச்
சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.

பொருள் : ஞானத்தின் திருவுருவைத் தெளிந்து அறியாமையால் காலங்கள் வீணே கழிந்தன. எங்கள் சிவனாகிய தலைவன் தன் சொரூப நிலையினின்றும் பெயர்ந்து குருவாக வந்து காட்டிக் காண்பான். அவ்வாறு உண்மை அறிவே துணையாகப் பொருந்தி உணர்வாரிடம் சார்ந்து விளங்கும் பெருமை யுடையவன் சிவன்.

1796. தானே அறியும் வினைகள் அழிந்தபின்
நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல்
ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின்
தேனே யனையன்நம் தேவர் பிரானே.

பொருள் : ஆருயிரின் இருள்சேர் இருவினையும் அருளால் அழிந்த பின் அவ்வுயிர் தன்னைத் தானே திருவருள் துணையால் அறியும். மல கன்ம மாயைகளை அவ்வுயிர் அறியாது. அவ்வாறு இருப்ப, நந்தியாகிய சிவபெருமான் அவற்றை அறிவது எங்ஙனம் ? அவன் அறியான். அறியான் ஈண்டு அனுபவியான். உள்ளம் உருகித் தொழுது உணரப்படும் உணர்வாகிய சிவனை உணர்ந்தபின் தேனே அனைய சிவபெருமானின் திருவடி யின்பத்தை உயிர் துய்க்கும்.

1797. நான்அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
வான்அறிந் தார்அறி யாது மயங்கினர்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறி யான்பின்னை யார்அறி வாரே ?

பொருள் : உடல் தோன்றிய போதே ஒளியாய் உயிர்ப்பாய் உள்ள ஈசனை நான் அறிந்தே யிருந்தேன். ஆகாய மண்டல வாசிகள் இவ் வுண்மையை அறியாமல் மயங்கி இருந்தனர். தேகத்தின் உள்ளே உயிர்ப்பின் இயக்கத்தை நடத்துகின்ற ஒளிமிக்க சுடராக்கிய இறைவன் தான் அறியவில்லையெனில் பின்னை யாரே அறிந்து உபகாரம் செய்ய முடியும் ?

1798. அருள்எங்கு மான அளவை அறியார்
அருளை நுகர்அமு தானதும் தேரார்
அருள்ஐங் கருமத்து அதிசூக்கம் உன்னார்
அருள்எங்கும் கண்ணானது ஆர்அறி வாரே.

பொருள் : அருளே எங்குமாய் உள்ளது என்ற தன்மையை உலகவர் அறியார். அருளை அறிவோர்க்கு அது அமுதம் போல இனிமையைத் தரும் என்பதனையும் சிந்தித்துத் தெளியார். சத்தியே மிக சூக்குமமாய்ச் சிருட்டியாதி ஐந்தொழிலுக்கும் ஏதுவானது என்பதனை எண்ணிப் பார்ப்பதில்லை. அருள்சத்தி கண்ணாயிருந்து அனைத்தையும் ஒரு சேரக் காண்டலையும் உணரார்.

1799. அறிவில் அணுக அறிவது நல்கிப்
பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டு
அறிவது ஆக்கி அடியருள் நல்கும்
செறிவொடு நின்றார் சிவம்ஆயி னாரே.

பொருள் : திருவடி உணர்வாகிய அறிவில் ஆருயிர்கள் பொருந்த அச்சிவன் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவினை அருளினன். அந்நிலை எய்துதற்குரிய பயில்வு கைக்கொள்ளும் பொருட்டுப் பொறிவழி விருப்பினை உயிர்க்குப் புகுத்தினன். தானும் அவ்வுயிரினோடு புணர்ந்து நின்றனன். அவ்அருளின் வழித் திருவடி உணர்வு பெற்றுத் திருவருள் நிறைவில் நிலைத்து நின்றார் அச்சிவமாகவே இருப்பர்.

1800. அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு
அருளில் அழிந்துஇளைப் பாறி மறைந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என்நந்தி அகம்புகுந் தானே.

பொருள் : அருட்சத்தியால் பிறந்து வளர்ந்து, அருளால் அழிந்து இளைப்பினை நீங்கி மறைந்துள்ள சீவனை ஒளிமயமான ஆனந்தம் பெறச் செய்து, பின்னர் தானே எழுந்தருளி எனது குரு மண்டலத்தை விளங்கச் செய்தான்.

1801. அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி
அருளால் அடிபுனைந்து ஆர்வமும் தந்திட்டு
அருளான் ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என்நந்தி அதும்புகுந் தானே.

பொருள் : திருவடி மறவாச் சீரிய நினைவே அழியா அமிழ்தப் பெருங்கடலாகும். அக்கடலின்கண் திரு அருளால் ஆட்டுவித்து அத்திரு அருளாலேயே திருவடியினைச் சூட்டி, மறவாப் பேரன்பும் வழங்கி, அத்திருவருள் பேரன்பினையும் உண்பித்து, அத் திருவருளாலேயே அச் சிவன் ஆருயிரின் அகம் புகுந்தான்.

1802. பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின்
நேசத்தை விட்டது அருள்அந்த நேசத்தில்
கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே.

பொருள் : என்னைப் பாசத்தில் பொருத்தி அனுபவிக்கச் செய்தது அருள். அந்தப் பாசத்தைப் பற்றாகக் கொண்ட என்னை அதிலிருந்து வேறுபடுத்தியது அருள். அந்தப் பாசத்தில் பற்று விட்டவுடன் நேயப்பொருளாகிய சிவத்துடன் பொருந்தும்படி செய்தது அருள். காண்பானும் காட்சிப் பொருளும் கூடிய கூட்டத்தில் காட்சிப் பொருளோடு பிரிப்பின்றி நிலைபெறச் செய்ததும் அருளாகும்.

1803. பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள் தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்துஎன் உளம்புகுந் தானே.

பொருள் : பிறவிக்குக் காரணமாகிய இருளைப் போக்கி, ஒளியினைத் தந்த பெருங் கருணையாளனும், சிவனை இன்பத்தில் ஆழ்த்தி மறக்காத வண்ணம் சத்தியைப் பதிப்பதித்து அருளிய பெரிய பிரானாகிய சிவனும், உதவுவதால் குறையாத தன்மையுடைய கடல் போன்ற - தண்ணளியாளனும் மேலான பொருள்களுக்கு எல்லாம் மேலானவனும் ஆகிய இறைவன், அவனை விரும்பியதால் உறவாக வந்து என்து உள்ளம் புகுந்தான்.

1804. அகம்புகுந் தான்அடி யேற்குஅரு ளாலே
அகம்புகுந் தும்தெரி யான்அருள் இல்லோர்க்கு
அகம்புகுந்து ஆனந்த மாக்கிச் சிவமாய்
அகம்புகுந் தான்நந்தி ஆனந்தி யாமே.

பொருள் : சிவபெருமான் திருவருளால் அடியேன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி அங்குப் புகுந்தனன். திருவருள் கைவரப் பெறாதார்க்கு அகம் புகுந்தும் அவரால் உணர்வதற்கு அரியன். உள்ளம் புகுந்து கண், எண்ணம், அறிவமைதி எல்லாம் சிவத் தொடர்பாக ஆக்குதலால் எல்லாம் சிவ இன்பமாகவே திகழும் . சிவமாக்கி ஆருயிர்களை ஆளும் முறையால் ஆனந்தி என்னும் பெயர் சிவனுக்கு ஆயிற்று.

1805. ஆயும் அறிவோடு அறியாத மாமாயை
ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும்
ஆய பலஇந் திரியம் அவற்றுடன்
ஆய அருள்ஐந்து மாம்அருட் செய்கையே.

பொருள் : ஆராய்கின்ற அறிவு மயமான ஆன்மாவோடு அறியப்படாத மகா மாயையையும், மாயா காரியமாகிய அந்தக் கரணங்களையும் தோன்றும் ஐம்பூதங்களையும் ஆகின்ற இந்திரியக் கூட்டங்களையும், அவற்றோடு பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசத்தி, ஞானாசத்தி, கிரியாசத்தி ஆகிய ஐந்து சத்திகளையும் பொருந்தியது இறைவனது திருவருட் செயலாம்.

1806. அருளே சகலமும் ஆய பவுதிகம்
அருளே சராசர மாய அமலமே
இருளே வெளியே யெனும்எங்கும் ஈசன்
அருளே சகளத்தன் அன்றிஇன் றாமே.

பொருள் : அனைத்திற்கும் தாங்கும் நிலைக்களமாய்த் திருவருள் நிற்றலின் பூத காரிய முதல் அனைத்தும் அருளேயாம். இயங்குதிணை நிலைத்திணை ஆகிய எல்லாவற்றின் வாழ்க்கைகளும் அருளாலேயே நிகழ்வனவாகும். இருளும் வெளியுமாகிய அறியாமையும் அறிவும் தொழிற்படத் துணை நிற்பதும் அருளே. அவ் அருளே சிவபெருமானுக்குத் துணைவியாய்த் திருமேனியுமாய் நிற்கும். அதனால் அருள் உருவானவன் சிவன். அருள் அன்றிச் சிவன் இல்லை. (பவுதிகம் பூதகாரியம். சகளத்தன் - மாயையாற் திருமேனி கொண்ட சிவபிரான்.)

1807. சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
தவமான ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறா
நவம்அவை யாகி நடிப்பவன் தானே.

பொருள் : சிவமாகிய அறிவும், சத்தியாகிய ஆற்றலும், ஒலியும், ஒளியும், அருளோனும், ஆண்டானும், அரன், அரி, அயன் என்னும் மூவரும் ஆகிய ஒன்பதின்மரும் உலகுயிர் நிகழ்ச்சியின்பொருட்டு வேண்டப்படுவர். அவ் ஒன்பது திருக்கோலங்களும் முழுமுதற்சிவன் ஒருவனே திருவருளாற் கொண்டு நடிப்பன்.

1808. அருட்கண்இ லாதார்க்கு அரும்பொருள் தோன்றா
அருட்கண்உ ளோர்க்குஎதிர் தோன்றும் அரனே
இருட்கண்ணி னோர்க்குஅங்கு இரவியும் தோன்றாத்
தெருட்கண்ணி னோர்க்குஎங்கும் சீரொளி யாமே.

பொருள் : திருவருட்கண் வாய்க்கப்பெறாதார்க்கு உண்மை அறிவு இன்ப உருவினனாகிய சிவபெருமான் தோன்றான். அரும்பொருள்-சிவன். அருட்கண் உள்ளோர்க்கு ரன் எதிர் தோன்றுவான். கண்குருடாகிய இருட்கண்ணினோர்க்கு யாவர்க்கும் வெளிச்சமாகிய ஞாயிறும் தோன்றாது அஞ்ஞாயிறு குருடு நீங்கித் தெளிந்த கண்ணுடையார்க்குச் செவ்வகையாகத் தோன்றும். அதுபோல் சிவனும் அருட்கண்ணினர்க்குத் தோன்றுவன்.

1809. தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைந்திடும்
தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்
தானே வியாபித் தலைவனும் ஆமே.

பொருள் : சிவத்தின் சத்தியே தனுகரண புவன போகங்களைப் படைக்கும். சத்தியே படைத்தவற்றைக் காக்கும். அதுவே காத்தவற்றை அழிக்கும். அழித்தவற்றை ஓய்வு கொடுத்துக் கரந்திடும். அதுவே இவைகளுடன் முத்தியையும் அளிக்கும். அத்தகைய அருளோடு கூடினவனே வியாபகப் பொருளுக்கு எல்லாம் மேலான தலைவனாக உள்ளான். சத்தியோடு கூடிய சிவனே ஐந்தொழிலைச் செய்து தலைவனாக உள்ளான்.

1810. தலையான நான்கும் தனதுஅரு வாகும்
அலையா அருவுரு வாகும் சதாசிவம்
நிலையான கீழ்நான்கு நீடுரு வாகும்
துலையா இறைமுற்று மாய்அல்லது ஒன்றே.

பொருள் : மேன்மையான சிவம், சத்தி, நாதம், விந்து ஆகிய நான்கும் சிவத்துக்குரிய அருவ நிலையாகும். நீங்குதல் இல்லாத அருவுருவம் சதாசிவமாகும். நிலைபெறுவதற்கு உரியவான மகேசுவரம், அரன், அரி, பிரமன் ஆகிய நான்கும் நீடிய உருவ நிலைகளாம். அழியாத இவ் ஒன்பதுமாம் இவற்றைக் கடந்து நின்று இவற்றை இயக்குவதாயும் உள்ள பரசிவம் ஒன்றேயாம்.

1811. ஒன்றது வாலே உலப்பிலி தானாகி
நின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலை
துன்றி அவைஅல்ல வாகும் துணையென்ன
நின்றது தான்விலை யாட்டென்னுள் நேயமே.

பொருள் : ஒப்பற்ற தன்மையால் கேடில்லாத சிவம் தானேயாய் நின்றதுபோல, உயிர்க்கு உயிர்களோடு பொருந்தி அவற்றின் தன்மை யின்றாய் நிற்கும். ஆனால் என்னுள்ளத்தே நேயப் பொருளாய சிவம் துணையென்று கூறும் வண்ணம் உடன்நின்று செலுத்தியதுதான் விளையாட்டாகும்.

1812. நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு
ஆயக் குடிலையுள் நாதம் அடைந்திட்டுப்
போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு
வீயத் தகாவிந்து வாக விளையுமே.

பொருள் : அன்பினால் நிலைபெற்றுள்ள நின்மல சிவன் சித்தியோடு கூடி அதனைத் தொழிற்படுத்தவே சுத்தமாயையினின்றும் நாதம் தோன்றி, விரிந்து நிவிருத்தியாதி பஞ்சகலைகளாகக் கூடி அழிவில்லாத விந்துவாக விளையும்.

1813. விளையும் பரவிந்து தானே வியாபி
விளையும் தனிமாயை மிக்கமா மாயை
கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்
அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே.

பொருள் : அனைத்துமாய்ப் பரவிந்து வடிவில் நிலைத்திருக்கும் சத்தியே எல்லாத் தத்துவங்களிலும் நிறைந்துள்ளான். அவனிடமிருந்தே அசுத்த மாயையும் மேலான சுத்த மாயையும் விளையும் இவ்விரு வகையான மாயையில் தேவக்கூட்டமும், விதந்து சொல்லப்பட்ட பிரணவமும் அதன் பேதமான மந்திரங்களும் நான்கு வேதங்களும் அளவற்ற அண்ட கோடிகளும் தோன்றும். பரவிந்துவிலிருந்து சொற்பிரபஞ்சம் பொருட் பிரபஞ்சம் முதலியவை ஆகின்றன.

10. அருள் ஒளி

1814. அருளில் தலைநின்று அறிந்துஅழுந் தாதார்
அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளின் பெருமை அறியார் செறியார்
அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே.

பொருள் : திருவருளே துணையென்றும் உணர்ந்து அதன் வழிநின்று தன் செயல் அறாதவர் திருவருள் இயக்கத்தில் பொருந்த மாட்டார். அவர் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரேதாயி ஆகிய ஐம்மலங்களையும் நீங்க மாட்டார். அருளின் பெருமையை அறியாதவர் அதனுள் அழுந்தமாட்டார். திருவருளால் தோன்றி அருளே கண்ணாக அறிபவரே அறிந்தவராவர்.

1815. வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
ஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்தி
பேரா யிரமுடைப் பெம்மான்பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.

பொருள் : மீண்டும் பிறவிக்கு வாராத நெறியினை அருளிய குருநாதன் சிவனாவான். அந்நந்தியாகிய சிவபெருமான் இன்பம் தெவிட்டாத அமுதத்தை நல்கினான். ஆயிரம் திருநாமங்களையுடைய பெருமானது பெயர் ஒன்றாகிய சிவ என்பதால் இன்பம் தெவிட்டாத திருவருட்கடலில் தோய்ந்து ஆடுக என்றனன். (ஆராஅமுது - சிவானந்தம் பேரொன்று - சிவ என்பது.)

1816. ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையைக்
கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே.

பொருள் : ஆனந்தத்தினால் ஆடியும் பாடியும் கண்ணீர் மல்கியும் அலறியும், சிவனது பேரியல்பினைத் தேடிக் கண்டு கொண்டேன். கண்டு பொருந்திய போதே உருவமற்ற ஒளியை நல்கி அவன்தன் அருளால் என்னூடு மேல் கீழ் உள் என்ற பாகுபாடு அற்று விளங்கினான்.

1817. உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும்
பற்றிய மாயாப் படலம் எனப்பண்ணி
அத்தனை நீயென்று அடிவைத்தான் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.

பொருள் : ஆணவ மலத்தால் உண்டான பிறப்பும், பிறப்பால் உற்ற மாயா காரியங்களும், இடையே வந்து பற்றிய பொய்க் கூட்டம் என்று உணர்த்தி, நீ இவற்றை நீங்கினாய் என்று திருவடி ஞானம் தந்தருளினான் குருநாதன். அதனால் இதுகாறும் கற்றவை விட்டேன். அவனருளால் கிட்டிய நாதத்தை நான் பணிந்து அதன் வழி நின்றேன். குருநாதன் அருளால் பாசஞானம் நீங்கிப் பதிஞானம் அமையும்.

1818. விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குமடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.

பொருள் : ஞானவிளக்கை ஏற்றி, எல்லையில்லாப் பரம்பொருளை அறியுங்கள். பரம்பொருளின் திருமுன் மல மாயா கன்மங்களாலாகிய உடம்பின் துன்பம் நீங்கும். பேரொளியை வெளிப்படுத்தும் ஒளி உடையார்கள் சிவ ஒளியும் தன் ஒளியும் கலந்து விளங்குவார்கள்.

1819. ஒளியும் இருளும் ஒருகாலும் தீர
ஒளியு ளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும்
ஒளியிருள் கண்டகண் போலவே றாயுள
ஒளியிருள் நீங்கும் உயிர்சிவம் ஆமே.

பொருள் : ஒளியும் இருளும் எந்தக் காலத்திலும் கெடஒளியில் கலந்திருப்பவர்க்கு அல்லவா அருள் ஒளியும் நீங்காது ! புறக்கண் எதையும் இருளில் அறியாது ஒளியில் அறிவதுபோல, புறக்கண்ணுக்கு வேறான அகக்கண் விளங்கும் அண்டகோச அறிவில் இருள் அகன்று உயிர் ஒளி பெறில் சிவமாம்.

1820. புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி
நிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கி
அறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்த
திறம்ஏதென்று எண்ணித் திகைத்திருந் தேனே.

பொருள் : ஆணவத்தால் புறஉலகில் திரிந்து கொண்டிருந்த எனக்கு உன்னுடைய பொன் ஒளியில் விளங்கும் நாதத்தை அளித்து, எனது அண்டகோச ஒளியில் புகுந்து என்னை மலம் அற்றவனாகச் செய்து, என்னுடைய அறவாழ்வில் புகுந்து எனக்குக் கிட்டுதற்கு அரிய அமுதைக் கொடுத்த திறம் என்ன என்று எண்ணி மயங்கியிருந்தேன். (பொற்கழல் - புத்தி தத்துவத்தில் விளங்கும் நாதம்)

1821. அருளது என்ற அகலிடம் ஒன்றும்
பொருளது என்ற புகலிடம் ஒன்றும்
மருளது நீங்க மனம்புகுந் தானைத்
தெருளுறும் பின்னைச் சிவகதி தாமே.

பொருள் : அருள் என்ற பரவெளி ஒன்றும், மெய்ப்பொருள் என்ற புகுமிடம் ஒன்றும் வேறு என்ற மயக்கம் நீங்க, மனத்துள் புகுந்த பேரொளியைச் சிவமெனத் தெளியுங்கள். பின்னர்ச் சிவகதி உண்டாகும். சிவசத்தி உண்மை உணர்ந்தபோது சிவகதி உண்டாம்.

1822. கூறுமின் நீர்முன் பிறந்திங்கு இறந்தமை
வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும்
பாறணி யும்உடல் வீழலிட்டு ஆருயிர்
தேறுஅணி வோம்இது செப்பவல் லீரே.

பொருள் : சிவம் இவ்வுலகில் பிறந்து இறந்த கதை இருந்தால் சொல்லுங்கள். செத்துப் பிறக்கின்ற பிற தெய்வங்களை மெய்ப்பொருள் என்று கருதுவதை விட்டுவிடுங்கள். பருந்து வட்டமிடும் உடலை வீழச்செய்து அருமையான உயிர் தெளிவடையச் செய்வோம். இவ்வுண்மையைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லுங்கள்.

11. சிவபூசை

1823. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.

பொருள் : உள்ளமாகிய மனமண்டலம் சிவன் உறையும் கருவறையாகும். ஊனாலாகிய உடம்பு ஆன்மாவின் ஆற்றலைக் குறைத்து வைத்துள்ள இடமாகும். வள்ளலாகிய தலைவனைச் சென்று வழிபடுவதற்கு வாய் கோபுர வாசலாகும். நன்றாக அறிந்து தெளிவு பெற்றவர்க்குச் சீவனே சிவலிங்கம். இவ்வாறு அறிந்து வழிபடுவார்க்கு வஞ்சனையைச் செய்யும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் பெரிய ஒளிபொருந்திய விளக்காகும்.

1824. வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே.

பொருள் : வேள்வியில் இடப்பட்ட நிவேதனத்தை ஏற்கின்ற விரிந்த கிரணத்தையுடைய சிவபெருமானுக்கு, நிவேதிக்கத் தக்க பொருள் நம்மிடம் இல்லை. காலையிலும் மாலையிலும் நிவேதிக்கும் பொருளாவன, மனத்தை மகிழச் செய்யும் பாடலாகிய உணவாம். அதனை நிவேதிப்போம். அதுவே அவர்க்குப் பால் நிவேதனமாம்.

1825. பான்மொழி பாகன் பராபரன் தானாகும்
ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து
மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
சீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே.

பொருள் : பால்போன்ற இனிய மொழியையுடைய பராசத்தியின் பாகனாகிய பராபரனாகும் ஐம்முகமான சதாசிவ மூர்த்தியைச் சிரசில் நிலைபெறுத்தி, உச்சிமுகத்தை ஈசான முகமாகச் சுழுமுனையில் தியானித்து, சீலமான  முகத்தைச் செய்ய சிவமாவர்.

1826. நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனைகழல் ஈசனைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே.

பொருள் : சிவத்தை நினைத்துக் கொண்டிருப்பதும் சிவத்தைப் பற்றிப் பிறர்க்கு எடுத்துரைப்பதுமாகிய இருவழிகள் அல்லாமல் நாத சொரூபமான சிவத்தைக் கண்டு களிக்க வல்லவர் நீரினை முகமாகவுடைய சுவாதிட்டானத்தில் விளங்கும் மூலவாயுவை எழுப்பிச் சிவத்தைப் பரிச யோகத்தால் அடையத் தக்கவராவர்.

1827. மஞ்சன மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டொடும்
அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சித் தார்களே.

பொருள் : அபிஷேகத்திலும் அலங்காரத்திலும் விளங்கிய தேவர்களது நெஞ்சத்தில் இறைவன் இடைவிடாது வீற்றிருப்பதற்குக் காரணம், பஞ்ச கவ்வியமும் சோடச உபசாரத்துடன் நமஸ்கார முத்திரையுடன் பக்தர்களோடு கலந்து வழிபட்டமையாலாம்.

1828. புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே.

பொருள் : சிவபூசையாகிய புண்ணியம் செய்வார்க்குப் பொருந்தும் நீரும் பூவும் உண்டு. அண்ணலாகிய சிவம் அவ்வித பூசனை செய்வார்க்கு அருள் வழங்கி நிற்கும். கணக்கற்ற பாவிகள் எமது தலைவனாகிய சிவத்தைப் பொருந்த அறியாமல் வீணே கழிகின்றனர்.

1829. அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்
ஒத்தமெய்ஞ் ஞானத்து உயர்ந்தார் பதத்தைச்
சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே
முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே.

பொருள் : சிவனது ஒன்பது தீர்த்தத்திலும் ஆடித் திளைக்கும் பரிசினைக் கேட்பாயாக. அவ்வாறு பொருந்தி உண்மை ஞானம் பெற்று உயர்ந்தோர் திருவடியைத் தூய்மையாகக் கழுவித் தெளித்துக் கொள்ள வீடு பேறு கிட்டும் என்று நம் மூலன் மொழிந்ததாம்.

1830. மறப்புற்று இவ்வழி மன்னிநின் றாலும்
சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி
மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே.

பொருள் : தேவர் பெருமானே ! அபுத்தி பூர்வமாக ஞானிகளின் உறவு கிட்டினாலும், சிறப்பான பூவையும் நீரையும் நான் திருந்தும்படி வெளிப்படுத்தி, மறவாமல் உன்னை வழிபடுகின்ற தன்மையை, மிகுதியாகப் பெறுவதற்கு அருள்புரிவாயாக, சிவனை மறவாது வழிபட வேண்டும்.

1831. ஆரா தனையும் அமரர் குழாங்களும்
தீராக் கடலும் நிலத்துஉம தாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான்திரு நாமமும்
ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே.

பொருள் : ஆயிரம் திருநாமங்களையும் சிவனது சிறப்புத் திருநாமமாகிய சிவசிவ என்பவற்றையும் தியானிக்கும் வகையால் எம் ஆதிப்பிரான் விளங்குவான். அப்போது வழிபாடுகளும் தேவர் கூட்டமும், அலை ஓயாத கடலும் நீங்கள் வாழ்கின்ற நிலத்தில் உங்கள் ஏவல்வழி நிற்கும்.

1832. ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணம்தொழத்
தான்அந்த மில்லாத் தலைவன் அருளது
தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர்
பார்ஐங் குணமும் படைத்துநின் றானே.

பொருள் : அமரர் கூட்டங்கள் பால், தயிர், வெண்ணெய், நெய்மோர் என வரும் ஆன் ஐந்தும் சிவபெருமான் திருமுடிக்கு ஆட்டித் தொழுவர். அங்ஙனம் ஆட்டுவதும் என்றும் அழிவில்லாது நின்று நிலவும் சிவபெருமான் திருவருளேயாம். தேன் ஒழுகும் மலரினுள் மணநிறைவு தெளிந்ததொரு பொருளாவதுபோல, சிவபெருமானும் ஐம்பூதப் பண்பாகவும் கலப்பால் விளங்குவன். பூதப்பண்புவருமாறு நாற்றம், சுவை, ஒளி, ஓசை என்பன. (தேநீர், கோமம் ஏற்புடையனவாகா.)

1833. உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி
மழைக்கொண்ட மாமுகில் மேற்சென்று வானோர்
தழைக்கொண்ட பாசம் தயங்கிநின்று ஏத்தப்
பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே.

பொருள் : நன்னிலத்தில் காணப்படும் பூவும் புனலும் கைக் கொண்டு மழை மேகத்தின் மேற்கொண்டு பெருகிய அன்புடன் கைதொழுது வணங்க, தவறுதல் இன்றிச் சிவபெருமான் திருவருள் கைகூடும் என்க. (உழை - பூமி. தழைக்கொண்ட - சுற்றியுள்ள - பிழைப்பின்றி - தவறாமல்.)

1834. வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார்
அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே.

பொருள் : திருச்சடையின்கண் கடல்போலும் வெள்ள நீரைத் தாங்கும் நந்தியாகிய சிவபெருமான் திருவடிக்கு நிறைந்த கடல்போலும் அன்புள்ள நெஞ்சத்துடன் பூ முதலியன சுமந்துகொண்டு வந்து கடல் போலும் கள்ளங் கவடுகளை அகற்றி வழிபடும் சிவப்புண்ணியப் பேறிலாதார் துன்பக் கடலுள் அழுந்துவர்.

1835. கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள்
பழிப்படு வார்பல ரும்வழி வீழ
வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே.

பொருள் : உப்பங்கழியைச் சாரும் கடல் ஒலியினையும் அடக்கி மீதெழும் திருமுறைத் திருப்பாட்டு முழக்கங்களோடு மெய்யடியார்கள் மலர் கொண்டு வழிபடுவர். வழிபாட்டிற்குத் தகுதியில்லாத மொட்டனைய பொருள்களை விலக்கி விடுவர். அறியாமையினால் சிவனை மறந்து தீநெறிக்கண் செல்லும் தீராப்பழி தீரும் வண்ணம் நல்லார் இணக்கத்தால் வழிபடுவோரின் உச்சியின்மேல் பொருந்தி வெளிப்பட்டு அருள்புரிவன்.

1836. பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்குஅரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர
வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே.

பொருள் : பயன் தரக்கூடிய அறிவு ஒன்றும் உள்ளது. பயனை அறிந்தும் பலகாலும் மலரைத் தூவி வழிபட்டவர்க்கு, சிவன் தானே வரவினைச் சொல்லும். கண்கள் மூன்றுடைய சிவனது திருவடியைச்  சார்தலும், அதுவே வழியாக  எப்போதும் வெளிப்பட்டு  நின்றான்.

1837. ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று
ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன்
மூர்த்தியை மூவா முதலுரு வாய்நின்ற
தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே.

பொருள் : இறைவனாகிய சிவபெருமான் திருவடியைப் பன்மலர் தூவித் திருமுறை ஓதிப் பேரன்பின் பெரு முழக்குடன் வழிபடுவர். அத்தகைய இன்பத் திருவுருவினை, அழிதல் இல்லாத வினைமுதற்காரணனை, ஆருயிர்களின் மலப் பிணிப்பினின்று தீர்த்தருளி அவ்வுயிர்களை ஆட் கொள்ளும் தூயோனை நன்னெறிப் புகாதார் யாரும் வழி பட்டுனரார்.

1838. தேவர்க ளோடுஇசை வந்துமண் ணோடுறும்
பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.

பொருள் : தேவர்களோடு கலந்து, பிருதிவி தத்துவத்தில் பொருந்திய சுவாதிட்டான மலரிலிருந்து ஆகாய கங்கையாக மேல் எழும் உணர்வில் வெளிப்படும் பரிசுத்த மூர்த்தியை பிரமன், விஷ்ணு, உருத்திரன் என்ற மூவரோடு கலந்தும் வேறாயும் விளங்கும் முதல்வனும் ஆகிய சிவன் அருளும் முறையினை யார் அறிந்து எண்ண வல்லவர்கள் ?

1839. உழைக்கவல் லோர்நடு நீர்மலர் ஏந்திப்
பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி
இழைக்கொண்ட பாதத்து இனமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.

பொருள் : முதல்வனø நினைக்க வல்லோர் சுவாதிட்டான மலரிலிருந்து சுழுமுனை வழியாக மேல்நோக்கிப் பாயும் உணர்வாகிய நீரை ஏந்தி, தவறின்றி இறைவனது பெரிய தவத்தை விரும்பி, இரு கண் மலர்களைச் சேர்த்தலால் தோன்றும் திருவடியைப்பற்றி மழையைப் பொழியும் மேகம் போன்ற ஒளியில் பொருந்தி நில்லுங்கள்.

1840. வென்று விரைந்து விரைப்பணி என்றனர்
நின்று பொருந்த இறைபணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடில்
கொண்டிடும் நித்தலும் கூறிய அன்றே.

பொருள் : ஐம்புலன்களையும் வென்று, நறும்புகையும் நெய்யொளியும் காட்டும் சிவப்பணியினைச் செய்யும் தொண்டர்கள் நேர் நின்று அன்பார் மனம் பொருந்த இறைபணி கைகூட நிறைந்த பூவும் புனலும் தூவித் திருமுறை வழிப்போற்றித் தொடர் புகன்று தொடுமின். இவ்வாறே நாள்தோறும் வழிபாடு செய்வீராக.

1841. சாத்தியும் வைத்தும் சயம்புஎன்று ஏத்தியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலக்கிட்டு அகத்துஇழுக்கு அற்றகால்
மாத்திக்கே செல்லும் வழியது வாமே.

பொருள் : ஆடை, அணிகலன், வெண்ணீறு, சாந்து, பூ, முதலியன சாத்தியும் திருவுறு முதலியன அமைத்து நிலை நாட்டியும், இயற்கைத் தனிப் பெருங்கடவுள் என்று ஏத்தியும், அங்ஙனமே நாளும் தொடர்ந்து தொழுதும் சிவனை அவனருளால் உணர்கிலார் பலர். ஆத்தியாகிய ஆசைகளை ஒழித்து அதன்வழியாக மல அழுக்கு அற்ற இடத்துப் பெரிய வீடுபேற்றிற்குச் செல்லும் வழியுண்டாகும். அதுவே சிவ வழிபாட்டுப் புண்ணியப் பேறென்க. (மாதிக்கு - பெரிய விடுபேறு. ஆத்தி - ஆர்த்தி என்பதன் திரிபு).

1842. ஆவிக்  கமலத்தில் அப்புறத்து இன்புற
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
தாவிக்கு மந்திரம் தாமறி யாரே.

பொருள் : ஆன்மாவின் கமலமாகிய சகஸ்ர தளத்தின் மேலாக இன்பம் உண்டாகுமாறு பொருந்திய, எங்கும் விளங்கும் விரிந்த ஒளிக்கிரணத்தையுடைய நந்தியை மந்திர சாதனை செய்து கொண்டு சிவம் விளங்கும் நாதாந்தத்தில் பொருந்தும் மந்திரம் உலகினர் அறியார்.

1843. காண்ஆகத் துள்ளே அழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்தறி வாரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே.

பொருள் : சாண் அளவு உடம்பினுள்ளே மறைந்து கிடந்த மாணிக்கத்தைக் காணும் அளவு அதன் உண்மை யியல்பை அறிவார் இல்லை. அதனைப் போற்றி வளர்த்து நினைய வல்லார்க்கு மாணிக்கச் சோதியாக மனத்தே புகுந்து விளங்குவான். எண்சாண் அளவு உடம்பு என்க.

1844. பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ள
வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே.

பொருள் : பெருந்தன்மை யுடைய நந்தியும் மாறுபாட்டைச் செய்யும் இருளைப் போக்கும் சக்கரப் படையை உடையவனும் பேரருளால் என் மனத்தை இடமாகக் கொண்டு எழுந்த தருளியவனும் வேண்டுவார்க்கு வேண்டியதை அருளும் தன்மை உடையவனும் ஆகிய சிவனை, ஆகாய மண்டல வாசிகளாகிய தேவர்கள் தாங்கி நின்றார்கள்.

1845. சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்தி
சமையநிர் வாணம் கலாசுத்தி யாகும்
அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே.

பொருள் : சமைய தீட்சையால் மாயா மலத்தானாகிய சரீரசுத்தி எய்தத் தன் செயல் அற்றிடும். விசேஷ தீட்சையால் மந்திர சுத்தி உண்டாகும். சமையத்தில் சிறந்த நிர்வாண தீட்சையால் கலா சுத்தியாகும். அமைதி பொருந்திய சிவஞானம் உடையார்க்குச் செய்வது ஆச்சர்ய ஆபிஷேகமாம்.

1846. ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லது
ஊழில் உயிரை உணரவும் தான்ஒட்டா
ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்
ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே.

பொருள் : ஊழிதோ றூழி பலவரினும் என்றும் ஒருபடித்தாய் நின்று நிலவும் முழுமுதற் சிவனை, அவன் அருட்கண்ணால் உணர்ந்தவர்க்கு அல்லாமல் பல ஊழி கண்டாலும் தம் அறிவால் அச் சிவனைக் காண முடியாது. சக்கரப் படையைத் தாங்கும் அரியும் அயனும் பல ஊழி முயன்றும் காண ஒண்ணாது நீங்கி மறைந்து நின்றனன். (ஒருவி - நீங்கி)

12. குரு பூசை

(குரு மண்டல பூசை குரு பூசை எனக் கூறப்பட்டது. சதாசிவ லிங்க வழிபாட்டில்  சதாசிவரை லிங்க வடிவில் கிரியை வழி பூசையை விளக்கினார். சிவ பூசை தலைப்பில் சதாசிவரை அருவமாக ஈசான முகத்தில் வழிபடுவதை விளக்கினார். இத்தலைப்பு ஒளி வடிவில் எங்கும் உள்ள சிவத்தை வழிபடும் முறை கூறுகின்றது.  ஒன்பதாம் தந்திரம் அற்புதக் கூத்து இதன் தொடர்பாகும்.)

1847. ஆகின்ற நந்தி அடித்தா மரைப்பற்றிப்
போகின் றுபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல்
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே.

பொருள் : கலப்பால் எல்லாமாய் நிற்கும் திருவாணை நந்தியின் திருவடிக் தாமரையினைப் பற்றுக் கோடாகக் கொண்டு, ஆருயிர் திருவடிப் பேற்றினை எய்துதற்கு உரிய அருமறையாகிய உபதேசம் திருஐந்து எழுத்தாகும். அதனை அருளால் அருளிச் செய்பவன் சிவகுரு ஆவான். அவனைப் பூசிக்கும் பூசை குரு பூசையாகும். அப்பூசையினையும் அகத்தே ஆறுநிலைக் களங்களில் செய்யும் வழிபாட்டினையும் அருஞ்சைவர் மெய்யாகப் பெறப்படும் முப்பத்தாறு தத்துவங்களுக்குமேல் செல்லுகின்ற மாறா அழகினையுடைய விழுமிய முழுமுதற் சிவனையும் இடையறாது அடியேன் வழிபடுவேன்.

1848. கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது
தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே.

பொருள் : மண்ணும் விண்ணும் ஆகிய எங்கணும் நறுமணம் கமழும் சந்தனமும், அத்தகைய சிறந்த மணம் கமழும் நறுமலரும் கைக்கொண்டு நாளும் வழிபட்டாலும், தம்மை அடிமை என்று கொண்டு கொல்லாமலும் கொன்றதைத் தின்னாமலும் இருப்பதாகிய செந்நெறி யொழுகிச் சிவனை நினைப்பதாகிய சத்திநிபாதம் கிட்டாது. சத்தி - திருவருள்; நிபாதம் - நன்றாய்ப் பதிதல்; வீழ்ச்சி.

1849. மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை
ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயலறல் தானே.

பொருள் : பொருந்திய ஞானத்தில் சிறந்திருந்தால் மெய்ப்பொருள் காட்சியாம். அவ்வழி ஞானத்தில் பொருந்தி நிற்றலே அர்ச்சனை. இடையறாது அகத்தே வழிபாடு செய்யின் அதுவே சிறந்த வழிபாடு ஆகும். அவ்வாறு திருவடி அடைதலே தன் செயலற்று இருத்தலாகும்.

1850. உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை
விச்சிமின் விச்சு விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே.

பொருள் : காலை, நண்பகல், மாலையாகிய மூன்று வேளைகளிலும் இறைவனை விரும்புங்கள். விரும்பி நமசிவாய என்ற அவனது திரு நாமமாகிய விதையினைத் தெளியுங்கள். அந்த விதை அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய மும்மண்டலத்திலும் விளைந்து பயிராவதை விரும்பி நில்லுங்கள். இவ்வாறு வளர்ந்ததே நந்தி என்ற பெயரையுடைய தலைவனாகும்.

1851. புண்ணிய மண்டலம் பூசைநா றாகுமாம்
பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம்
எண்ணிலிக்கு ஐயம் இடில்கோடி யாகுமால்
பண்ணிடில் ஞானிஊண் பார்க்கில் விசேடமே.

பொருள் : சிவத்தலங்களில் சிவபூசை செய்தல் நூறு மடங்கு உயர்ந்த தாகும். தவம் பண்ணுவார் சந்நிதியில் சிவபூசை செய்தல் ஆயிர மடங்கு உயர்ந்ததாம். இனி எவற்றிலும் எண்ணமில்லாத சிவயோகிக்குப் பிச்சையிடில் கோடி மடங்கு உயர்ந்ததாகும். ஆனால் சிவஞானிக்கு உணவளித்து உண்ணுவதைப் பார்த்தால் அது மிகவும் விசேடமாகும்.

1852. இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை
வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.

பொருள் : இடமூக்கு வலமூக்குகளில் உயிர்ப்பு நடக்குங்கால் சிவவழிபாடு செய்யின் அதன் பயன் அசுரர்க்கு வாரியமாகிய பயனாகும். இவை இரண்டின் வழியின்றி நடுநாடிக்கண் உயிர்ப்பு அடங்கியுள்ள ஒருமையுடன் சிவ வழிபாடு செய்யின், அதன் பெரும் பயன் பூசை செய்யும் சிவபுண்ணியர்க்கேயாம். இப்பூசையே செப்பரும் பூசையாகும். (இந்து - இடகலை. பானு - பிங்கலை.)

1853. இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர்
விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.

பொருள் : திங்களும் ஞாயிறும் அதன்வழித்தாம் விந்துவும் நாதமும் திகழ்கின்ற ஆறு நிலைக் களங்களுக்கும் அப்பாற்பட்ட மேலிடத்தே நாட்டத்தினை நிறுத்தி, நனவில் உயிர்ப்பு அடங்கினார் ஒத்து சிவனிறைவில் ஒடுங்கிச் சிவபெருமானை வழிபடும் சிவபூசையே திருவடி சேர்க்கும் நற்பூசையாகும். (சாக்கிராதீபம் - அறிதுயில். சாக்கிரமும் சொப்பனமும் அல்லாத நடுநிலைமை.)

1854. மனபவ னங்களை மூலத்தான் மாற்றி
அனித உடல்பூத மாக்கி அகற்றிப்
புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத்
தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே.

பொருள் : மனம் பிராணன் ஆகியவற்றை மூலவாயு மேல் செல்வதால் மாற்றி, அநித்தியமான உடலை அவற்றின் காரணமான பூதங்களிலும், பூதங்களை அவற்றின் காரணமான தன் மாத்திரையிலும் ஒடுக்கி, சிவனருளில் தோய்ந்திருந்து, இன்ப நுகர்ச்சியோடு செய்யப் பெறும் தனிப்பூசையே சதாசிவமூர்த்திக்கு உரியதாம்.

1855. பகலும் இரவும் பயில்கின்ற பூசை
இயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப்
பகலும் இரவும் பயிலாத பூசை
சகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே.

பொருள் : சூரியகலை சந்திரகலை இயங்கும்போது செய்கின்ற பூசையானது, இயல்பாகவுள்ள ஈசனுக்கு இணைந்த மலராக மட்டும் அமைய, சூரிய சந்திர கலைகள் இயங்காமல் அக்கினிகலையில் (சுழுமுனையில்) இயங்கும்போது செய்யும் பூசையைத் தாழ்ந்த ஒளிக் கிரணங்களையுடைய ஈசன் முழுவதும் விரும்பி ஏற்றுக் கொள்வான்.

1856. இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்குஅற ஆனந்தத் தேறல் பருகி
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே.

பொருள் : முன்னே கூறியவாறு இரவுபகல் என்ற பேதமற்று சாக்கிராதீத்தே நின்று, வேறு எண்ணமற்றுச் சிவானந்தத் தேனைப் பருகி, இரவும் பகலும் இல்லாத திருவடியின்பத்தில் திளைத்து இரவும் பகலும் உள்ள அசுத்த மாயை சுத்தமாயை இரண்டையும் அகற்றி நின்றேன்.

13. மகேசுவர பூசை

1857. படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே.

பொருள் : சித்திரம் போன்று அமைந்த மாடங்களையுடைய கோயிலில் உள்ள இறைவனுக்கு ஏதேனும் நைவேத்தியம் செய்தால் நடக்கின்ற மாடக்கோயிலாக விளங்கும் சிவனடியார்க்கு வந்து அமையா. ஆனால் நடமாடும் கோயிலாகவுள்ள சிவனடியார்க்கு ஏதேனும் கொடுத்தால் அது மாடக் கோயிலில் உள்ள இறைவனுக்குத் திருப்தி அளிப்பதாகும். அதாவது அடியார்க்குச் செய்யும் பூசை இறைவனுக்குச் செய்யும் பூசையாகும்.

1858. தண்டுஅறு சிந்தை தபோதனர் தாம்மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்று
எண்திசை நந்தி எடுத்துரைத் தானே.

பொருள் : தீமையில்லாத சிந்தையுடைய தவத்தினையுடைய செல்வர்கள் தாம் மகிழ்ச்சியோடு உண்டது மூன்று புவனங்களும் முழுமையும் உண்டதாகும். அவர்கள் ஏற்றுக் கொண்டது மூன்று புவனங்களும் ஏற்றுக் கொண்டதாம் என்று எட்டுத் திசைகளுக்கும் தலைவனாகிய நந்தி எடுத்துக் கூறினான். உண்டது உணவு, கொண்டது ஆடை என்றுள்ள வேறுபாட்டை அறிக.

1859. மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.

பொருள் : ஒரு மாத்திரையாகிய அகரத்தில் பொருந்தி உறைகின்ற யோகிக்குக் கொடுத்த அருமையான பொருள் மும்மூர்த்திகளுக்கும் மூவேழு தலைமுறையினர்க்கும் அர்ப்பணித்ததாகும். அதனைத் தெளிந்து கொள்வீராக.

1860. அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில்தன்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என்
பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயம் தானே.

பொருள் : ஆயிரம் நகரம் அந்தணர்க்கு அளித்தால் ஆகும் பயன் என்ன ? ஆயிரம் கோயில்கள் கட்டி முடித்தலால் என்ன பயன் ? சொல்லப் பெறுகின்ற ஞானி ஒரு பகல் உண்ணும் உணவால் விளையும் பயனுக்கு ஒப்பாகாது என்பது உண்மை. (அகரம்-ஊர்; பார்ப்பனச் சேரி.)

1861. ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்
கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்
நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.

பொருள் : ஆற்றுப் படுத்தும் வேள்வியினைச் செய்யும் அருமறை நூல்வல்லார் என்று கூறப்பெறும் அந்தணர் கோடிபேர் உண்பதில் திருநீற்றினை நிறையப் பூசும் தொண்டர் ஒருவருக்கு உணவு அளிக்க வேண்டும் என்று நினைவதில் உள்ள பயன் இல்லை. அவ்வாறு அந்தணர்க்கு அளிப்பது பேறு என்றால் அது ஒரு சிறு அளவு பேறாகும். வேள்வியினைப் புரியும் அந்தணர்க்கு அளிப்பதைவிட நீற்றினைப் பூசும் தொண்டர்க்கு அளிப்பது மேலானது.

1862. ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.

பொருள் : திருஐந்தெழுத்து ஓதித் திருநீறு அணியுங்கள் ஏறுடையாய் எனவும், இறைவா எனவும், எம்பிரான் எனவும் உள்ளன்பால் ஓதுவர். அவ்வாறு ஓதித் திருவெண்ணீறு அணியும் மெய்யடியார்கள் இயங்கும் தேவர்கள் ஆவர். அம்மெய்யடியார்களை ஒருவர் ஆறணி செஞ்சடை அண்ணலாகிய சிவபெருமான் இவர்களே என்று நினைதல் வேண்டும். அங்ஙனம் நினைந்து அம் மெய்யடியார்களைச் சிறப்பாக வழிபடுபவர்கட்கு முத்திற வினைகளும் மூளா என்க. முத்திரை வினைகளாவன: சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்பனவாம்.

1863. சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
நான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப்
பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே.

பொருள் : சிறந்த ஒளிமண்டல நினைவைக் கொண்டு தன் சந்நிதியில் இட்டுச் சென்ற பெரிய நந்தி என்று பேசப் பெயறும் ஒளிக்கிரணங்கள் விளங்கும் சடாதாரியை நான் மிகவும் நைந்துருகித் தோன்றும் அளவு கூறுவதற்காக நந்தியாகிய சிவனது நாமத்தைத் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருப்பேன்.

1864. அழிகதவு இல்லா அரன்அடி யாரைத்
தொழுகை ஞாலத்துத் தாங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழு வையகத்து ஓர்இன்பம் ஆமே.

பொருள் : அழியும் தன்மையில்லாத அருட்பண்புகளை மேற்கொண்டொழுகும் சிவனடியாரை இவ்வையத்துள்ள மெய்யடியார் கண்ணிற் காணும் சிவன் எனக் காதலால் தொழுவர். அதனால் அவர்கள்பால் பண்டே புல்லிய மலஇருள் நீங்கும். தொழாத நாள் இல்லையென்று சொல்லும்படி அம்மெய்யடியார்களைச் சிவன் எனவே நாடித் தொழுது எழ ஒப்பில்லாத சிவப் பேரின்பம் பின்னை என்னாமல் அப்பொழுதே உண்டாம்.

1865. பகவற்குஏ தாகிலும் பண்பில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழி
அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தாரே.

பொருள் : அம்மைக்கு ஒரு கூறு பகுத்து அளித்ததனால் அப்பனாகிய சிவபெருமான் பகவன் என்று அழைக்கப்பட்டான். அவனை உணர்தற்கு வேண்டும் உலகியல் பண்புகள் ஏதும் இலராகிலும் மெய்யடியார்கள் மாட்டுப் பூண்டுள்ள அளவிறந்த அன்பாகிய மத்தராய் நின்று பூசனைக்கு வேண்டிய முகமனாகிய சிறப்புடன் வழிபாடு செய்வர். அவ்வழிபாட்டின் பயனாய் ஊழி ஊழியாக நின்று உள்ளத்தை அதற்கே ஈந்தவராய் வேறு ஆராய்வு எதுவுமின்றி அடங்கி நிற்பர்.

1866. வித்தக மாகிய வேடத்தர் உண்டஊன்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடில்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.

பொருள் : திருத்தமாகிய வேடத்தையுடைய மகேசுவரர் அருந்திய உணவு, உருத்திரன் பிரமன் திருமால் ஆகிய மூவரும் அருந்திய பெருமையுடையதாம். சித்தம் தெளிந்தவர் மிச்சத்தை உண்டால் முத்தி உண்டாகும் என்று நம்மூலன் மொழிந்த உண்மையாகும். இது திருமூலர் ஆணை மொழியாகும்.

1867. தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ்வினை தீர்க்கும்அப் பொன்னுலகு ஆமே.

பொருள் : சிவனடியார் வழிபாட்டின் அன்பில் ஒருசிறிதும் குறைபாடு இலராய், மேலும் மேலும் சிவத்தைப் பேணும் இறப்பில் தவத்தால் ஆழச்செய்யும் ஏறுவினை அகன்று ஒழிய மெய்யடியார் திருவடியினை வழிபட்டு மண்ணில் பிறந்தார் எய்த வேண்டிய பெரும்பயனை எய்துவர். மேலும் அந்த ஏறுவினை நீங்கினமை போன்று அருவினையாகிய எஞ்சுவினையுடன் போழ்வினையாகிய ஏன்றவினையும் அருளால் தாக்காது நீக்குவர். அவர்கள் வாழும் இடமே சிவவுலகு ஆகும். (ஆழ்வினை - ஆகாமியம்; அருவினை சஞ்சிதம்; போழ்வினை - பிராப்தம்)

14. அடியார் பெருமை

1868. திகைக்குரி யானொரு தேவனை நாடும்
வகைக்குரி யானொரு வாது இருக்கில்
பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.

பொருள் : திசைகளை உரிமையாகக் கொண்ட ஒரு பரம்பொருளை நாடுகின்ற தன்மையுடைய அடியார் நீங்காது இருப்பின் அந் நாட்டில் பகை செய்வதற்கு ஒருவரும் இல்லையாகும். அந் நாட்டில் பருவ மழை முøறாகப் பெய்யும். அந்நாட்டில் விளையும் பொருளின் விலை தரமாய் இருக்குமாம். அடியார் வாழும் நாடு வளமாக இருக்கும்.

1869. அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலோடும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுலக கத்தே அரனடி கூடுவர்
அவ்வுலக கத்தே அருள்பெறு வாரே.

பொருள் : மெய்யடியார்கள் சிவவுலகத்தே தோன்றுவர். அச்சிவ உலகத்துக்குரிய தூயவுடலுடன் இருப்பர். அவ்வுலகத் தின்கண் சிவனை வழிபடும் அருந்தவம் ஆற்றுவர். அச்சிவவுலகத்தே நின்று இறையருள் நேர்படின் சிவன்திருவடியைக் கூடுவர். அச் சிவவுலகத்திலேயே திருவருள் இன்பத்தினை எய்துவர். (அவ்வுலகம் - சிவவுலகம்)

1870. கொண்ட குறியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்தினுள்
உண்டெனில் நாம்இனி உய்ந்தொழிந் தோமே.

பொருள் : நாம் மேற்கொண்ட ஒளிமண்டலத்தில் எட்டுக் குலமலைகளின் உச்சியும், கீழ் உலகிலுள்ள நாகர்களும் அண்டங்களில் வாழும் தேவர்களும் ஆதிப்பரம் பொருளும் எட்டுத் திசைகளிலுள்ள அனைவரும் வந்து என் கையகத்தில் உள்ளார்கள் என்றால் நாம் இனி உய்தி பெற்றோம்.

1871. அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரமும் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்
கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே.

பொருள் : ஏழு உலகங்களும் எல்லையற்ற ஆகாயமும் உயிர்களும் உலகிலுள்ள நிற்பன அசைவனாகிய யாவும் அவற்றின் குண விசேடங்களும் பழமையான வேதங்களும், படைத்தல், காத்தல் முதலான தொழில்களும் அவை முறையாக நடக்கும்படி காணுகின்ற சிவனும் என்னிடம் அன்றி இல்லையாம்.

1872. பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்
உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிரும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.

பொருள் : பெண், ஆண், பேடு என்ற பாகுபாடு உடையது அல்ல. அண்ட கோசத்தால் மூடியிருக்கும்போது உள்நின்ற சோதியை ஒருவராலும் அறிய இயலாது. அது கண் ஆகிய கருவியின்றிப் பார்க்கும். காதாகிய கருவியின்றிக் கேட்கும். சோதிக்குள் சோதியாய் விளங்கும் இறைவன் பெருமையை ஆராய்ந்து அறிந்ததே மூத்த ஞானமாம். (அன்பர்கள் - அகண்ட அறிவுடையவர்.)

1873. இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிசெல்வர் வானுலகு ஆள்வர்
புயங்களும் எண்டிசை போதுபா தாள
மயங்காப் பகிரண்ட மாமுடி தானே.

பொருள் : ஓவாது சுழலும் இவ்வுலகினில் சிவபெருமானின் திருவடியுணர்வு கைவரப் பெற்ற சிவனடியார்கள் செந்நெறியிற் செல்வர்; சிவ உலகை ஆள்வர். அச் சிவபெருமான் திருத்தோள்கள் புலம் எட்டிலும் நலம்புரிய எட்டாயின. போதாகிய அவன் திருவடித் தாமரை பாதாளம் ஏழினுக்கும் அப்பால் - திருமுடிவெளியில் நிகழும் புற அண்டங்களுக்கும் அப்பாலாம்.

1874. அகம்படி கின்றநம் ஐயனை ஓரும்
அகம்படி கண்டவர் அல்லலில் சேரார்
அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம்
அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே

பொருள் : உள்ளத்தில் விளங்கும் சிவனை எண்ணி மனம் அடங்கப் பெற்றவர் துன்பத்தில் தோயார். ஆதலின் அகங்காரம் அடங்கப் பெற்று உள்புகுந்து இறைவனை அறிகின்ற உள்ளம், தன் முனைப்பு அடங்கப் பெற்று புரி அடக்கமாகிய சூக்கும உடலை அழித்தலும் கூடும்.

1875. கழிவும் முதலும் காதல் துணையும்
அழிவும தாய்நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியும்என் ஆவி உழவுகொண் டானே.

பொருள் : சொல்லுக்கு அடங்காத பெருமையும் எல்லையில்லாத முதன்மையும், தன்னின் நீங்காத திருவருள் அம்மையாம் காதல் துணையும் பேரொடுக்கப் பெருமானுமாய் நின்ற காரணக் கடவுளை வழிபடுதலும் பெருள்சேர் புகழ் கூறுதலும் அவன் அருள் தொழில் ஐந்தின் பொருண்மை மொழிதலும் பணியாகக் கொண்ட அடியேன் உயிரை உழவு நிலமாகக் கொண்டு ஆண்டவன் இயக்குகின்றனன்.

1876. என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேர்எழுத் தாமே.

பொருள் : என் தாயோடு என் அப்பன் ஏழேழ் பிறப்பும் அநாதியே சிவனுக்கு அடிமை என்று எழுதிக் கொடுத்த அடிமை ஓலையை ஒன்றாக நின்று உலகம் அனைத்தையும் படைத்த முதல்வன் எழுதினான். மேகவண்ணனாகிய திருமால் சாட்சிக் கையெழுத்திட்டான். (நேரெழுத்து - சான்றெழுத்து. சுந்தரர் வரலாற்றை ஒப்பிட்டுக்கொள்க.)

1877. துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பால்பட்ட ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே.

பொருள் : இறைவன் ஐயமின்றித் தன்னையே நம்முதல் என்று துணிந்து வழிபட்டவர் நெஞ்சில் பொருந்தி உறைவன். தன்னை வணங்குவோர் உள்ளத்தில் பொருந்திய விருப்பத்தை நிறைவேற்றி வைப்பான். தன்னையே அணியாகக் கொண்டவர் உள்ளத்தில் உறையும் அம் முதல்வனை எண்ணிக் கொண்டே இருப்பவர் இடையில் கைவிட முடியுமோ ? முடியாது. (கணித்தல் - எண்ணுதல்)

1878. தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும்
பலமிசை செய்யும் படர்சடை யோனே.

பொருள் : தாழ்ந்த திருச்சடையை யுடைய நந்திஎம் பெருமான் தலையால் வணங்கும் சிவவுலகத்தினர்க்குத் தன் திருவடியை அவர்தம் முடிமேல் சூட்டியருளினன். திருவடி யொன்றே அகந்தழுவி மெய்ப்பணி செய்வார்க்கு மல கன்மம் நீங்கிய தூமாயை உலகத்தும் இன்பப் பயன் அருள்வன். அவனே படர்சடைச் சிவபெருமான் ஆவன். (மிலைமிசை மிசை மிலை - தலையில் அணியும்படி.)

1879. அறியாப் பருவத்து அரன்அடி யாரைக்
குறியால் அறிந்தின்பம் கொண்டது அடிமை
குறியார் சடைமுடி கட்டி நடப்பார்
மறியார் புனல்மூழ்க மாதவம் ஆமே.

பொருள் : அறியாத காலத்தில் சிவனடியாரை வேடத்தால் அறிந்து, தொண்டு செய்து இன்பத்தைப் பெற்றது அடிமையின் தன்மையாம். வேடத்தையுடைய அடியார் ஒளிக்கிரணங்களையுடைய சடை ஒளி நீங்காவண்ணம் கட்டிக் கொண்டிருப்பர். அவ்வாறு தடுத்துக் கொண்டுள்ள அடியார் திருவடி உணர்வில் பொருந்துவது பெரிய தவமாகும்.

1880. அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பால் பெருமை இலயமது ஆமே.

பொருள் : மேல் ஓதிய சிவனடியாரை அடைந்து அவர்க்கு அன்பும் பணியும் இன்புறச் செய்வார் சிவபெருமான் திருவடியை நெருங்கவும் வல்லராவர். மேலும் அம் மெய்யடியாரைத் தொடர்ந்து நாடுபவர் சிறந்தோராவர். அவர்பால் முழுப் பெருமையும் தங்கும் சிவனடியார் வாயிலாகவே தாயிலாச் சிவனை எய்தலாம். (அவன் - சிவனடியார். இலயதாமே - அடங்குமே.)

1881. முன்னிருந் தார்முழுது எண்கணத் தேவர்கள்
எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்து
எண்இரு நாலு திசைஅந் தரம்ஒக்கப்
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.

பொருள் : முன்னேயுள்ள பதினெண்கணத் தேவர்கள் முற்றும் எல்லையற்ற அன்பினால் இப்பெரிய பூமிக்கண் வருவார்கள். அவரது வரவால் பூமியினது எட்டுத்திசையும் ஆகாயம் போன்று மிளிர, பன்னிரண்டு காத எல்லை வரை உள்ளவர்க்கு நன்மை உண்டாகும்.

1882. சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்
அவயோகம் இன்றி அறிவோர்உண் டாகும்
நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்
பவ யோகம் இன்றிப் பரலோகம் ஆமே.

பொருள் : சிவன் திருவடியை மறவா நினைவுடையோன் சிவயோகியாவன். சிவன் நிறைவில் அழுந்தித் தற்செயல் அற்றுச் செய்வனவெல்லாம் சிவன் செயலாய்ப் புரிபவன் சிவஞானி யாவான். அத்தகையோர் வாழும் நாடு சிவநாடு ஆகும். அந் நாட்டில் மெய்யுணர்வு  உடையோர் வாழ்வர். அங்குக் கேட்டைத் தரும் தீவினைகள் ஏதும் நிகழா. ஆண்டு அருளால் எய்தும் புதுமை உண்டாகும். மேலும் எவ்வகையான நன்மையும் பெருகும். ஆண்டு வாழ்வோர் மீண்டும் பிறவார். சிவவுலகம் உறுவர்.

1883. மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன்
மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன்
மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள்
மேலுணர் வார்சிவன் மெய்யடி யார்களே.

பொருள் : சிவபெருமான் திருவாணையால் உயிர்கட்கு உலகு உடல்களைப் படைத்துக் கொடுத்தனன் அயன். அதுபோல் காத்தனன் அரியும். எனினும் அவர்கள் உணர்வெல்லாம் படைத்தல் காத்தலாகிய தொழில் மேல் என்று உணர்ந்து உவகையுற்று நிற்கும். அதனால் சிவனை உணரார். இந்நிலவுலகத்து வாழும் மெய்யடியார் விரும்பியுணர்வது சிவனையே. அதனால் அவர்கள் சிவனடியார்கள் என்று எவராலும் என்றும் வழுத்தப் பெறுவர்.

15. போசன விதி (ஊண் முறை)

1884. எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு
கட்ட அடிசில் அமுதென்று எதிர்கொள்வர்
ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்
விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே.

பொருள் : உலகில் எட்டுத் திசையிலும் இறைவன் அடியார்க்கு அளித்த உணவை அவர்கள் அமுதம் என்று விரும்பி ஏற்றுக் கொள்வர். ஏனெனில், உடம்பாகிய ஒரு நிலத்தைப் பொருந்தி அதனைப் போற்றுபவர். அவ்வாறு அதனைப் போற்றாமல் பாழாய்க் கிடக்க விரும்ப மாட்டார். (விட்டுக் கிடக்கில் - நீங்கி இருந்தால்)

1885. அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர்
உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப்
பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து
இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே.

பொருள் : அச்சிவன் உடம்பினுள் உயிர்க்கு உயிராக விளங்கும் அருளை உணர்ந்தவர் உச்சிப்போதில் உள்ளத்தில் அமர்ந்திருக்கும் தலைவனுக்கு, பிச்சை ஏற்று உண்டு பேதமில்லா ஞானம் வரப்பெற்று, ஆசையை விட்டு, தனிமையாகச் சகஸ்ரதளத்தில் பொருந்தி இருப்பர். அடியார் ஒருபோது பிச்சை ஏற்று உண்டு ஏகாந்தத்து இருப்பர்.

16. பிட்சா விதி

1886. விச்சுக் கலம்உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார்
இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.

பொருள் : விந்துவாகிய விதையைச் சேமிக்க உடம்பாகிய பாத்திரம் உண்டு. விதையினை விதைப்பதற்குரிய பாதுகாவலான சகஸ்ரதளமாகிய நிலம் ஒன்று உள்ளது. ஆஞ்ஞைச் சக்கரமாகிய உச்சிக்கு முன்பு தியானமாகிய உழவு அமைந்தது. அச்சமின்றி ஊர்த்துவ சகஸ்ரதளமாகிய அந்நிலத்தில் பொருந்தி சமாதியாகிய பயனைப் பெற மாட்டாதார் விருப்பத்துக்காக வெளியே சென்று பிச்சை யேற்றுத் திரிகிறார்களே, என்ன பாவம் !

1887. பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில்
பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப்
பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே.

பொருள் : சிவபெருமான் படைப்போனாகிய அயன் மண்டையோட்டை ஆருயிர்கட்குக் காட்டிப் பிச்சை ஏற்பான் ஆயினான். சிவன் தன்னைவிட்டு நீங்காச் சிவையின் வழி முப்பத்திரண்டு அறமும் இடைவிடாது செய்வித்துக் கொண்டிருக்கின்றான். அங்ஙனம் இருப்பவும் இரப்பதற்குக் காரணம் ஈவோரெல்லாம் அருளாளர் நிலையாகவும் இரப்போரெல்லாம் ஆண்டான் நிலையாகவும் கருதுதல் வேண்டும் என்னும் குறிப்பு. பிரமன் சிரங்காட்டி இரப்பது பிரமனிலும் தான் உயர்ந்தோன் எனவும் உலப்பிலோன் எனவும் உலகத்துக்கு உணர்த்த என்க.

1888. பரந்துலகு ஏழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர்கள் எற்றக்கு இரக்கும்
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே.

பொருள் : நீக்கமற நிறைந்து உலகு ஏழையும் படைத்த இறைவனை உலகவர் இரந்து உண்பவன் என்று எள்ளி நகையாடுவர். அவன் எதற்காக இரக்கின்றான் ? இடைவிடாது தன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் அடியார்கள், அவர்கள் உண்ணும் ஊண் தன் திருவருளால் வழங்கப்படுவதென்னும் மெய்மை உணர்த்த உணர்கின்றனர்.

1889. வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்
தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொரஇருந் தான்புக லேபுக லாக
வரஇருந் தால்அறி யான்என்ப தாமே.

பொருள் : இறைவன் தன்னை வந்து அடைவார் செய்யும் முயற்சியில் உடன்நின்று உதவுவான். நல்ல மெய்யடியார்க்குத் தன்னை இன்பவடிவில் தர இருந்தான். அடியார்களுக்கு அடைக்கலமாகப் பொருந்த இருந்தான். இவ்வாறெல்லாம் வரவை எதிர்நோக்கியிருந்தால் அறியாதவன் என்று கூறலாமோ ?

1890. அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
தங்கார் சிவனடி யார்சரீ ரத்திடைப்
பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்
தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.

பொருள் : சிறு தீயினை யொத்த பசி, அவா, வெகுளி முதலான குற்றப் பாடுகளில் சிவனடியார்கள் ஒரு சிறிதும் மனம் பொருந்தார். உடம்பு உடைமை முதலியவற்றில் பற்றுக் கொண்டு அவற்றை இறைவன் உடைமையெனவும் தமக்கு அவனால் கொடுக்கப் பெற்ற இரவல் எனவும் கொள்ளவேண்டிய உண்மையை மறந்து தம்மை மதித்து மனம் பொங்கிச் செருக்குறார். துறக்க உலகம் சிவவுலகம் முதலிய எவ்வுலகத்தும் உள்ள நிலையிலா இன்பத்தையும் கொள்ளார்; உள்ளார்; சிவன் திருத்தாளே  தலைப்படுவர்.

1891. மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்
கையதும் நீண்டார் கண்டத்தலைக் கேசெல்வர்
ஐயம் புகாமல் இருந்த தவசியார்
வையகம் எல்லாம் வரஇருந் தாரே.

பொருள் : உள்ளுணர்வாய் உண்மையாய்த் திகழும் திருவடியுணர்வு கைவரப் பெற்ற தெளிவுடையார்கள் சிவஞானி எனப்படுவர். அவர்கள் திருவடி இயக்கத்தால் மனையறம் புரியும் மாண்புசேர் நல்லார் வாழ் மனைத்தலைச் சேர்வர். அங்ஙனம் சேர்தல் அவர் நல்வழியான் ஈட்டிய பொருளை நல் உளத்தோடு நல்லுரை நவின்று நன்றாற்றி நல்கும் தானத்தைப் பெற்றுப் பயனீதற் பொருட்டு ஆகும். இதுவே அவர் மனைத்தலை சென்று பிச்சை உண்பதாம். வேறுசில சிவஞானிகள் தாம் தங்குமிடத்தே தங்கியிருப்பர். முன் தங்குமிடத்தே கொண்டுவந்து பணிந்து படைப்பர். அதனையும் ஏற்று அருள்புரிவர்.

17. முத்திரை பேதம்

(முத்திரை - கருவி கரண அறிவை மாற்றி முதல் நிலைக்குச் செல்வதற்குரிய உபாயம். பேதம் - வகை, சாம்பவி, கேசரி என்பன முத்திரை பேதமாம்.)

1892. நாலேழு மாறவே நண்ணிய முத்திரை
பாலான மோன மொழியில் பதிவித்து
மேலான நந்தி திருவடி மீதுய்யக்
கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே.

பொருள் : பதினொரு கருவிகளும் சீவபோத வழியினின்று சிவபோத வழியில் மாறவே வந்த முத்திரை அமுதூறும் பிரணவத்தில் அழுந்துவித்து எல்லாவற்றிற்கும் மேலான சிவனது திருவடியை அடைவிக்க ஆரவாரம் அடங்கி மேலான முத்திப்பேறு உண்டாகும்.

(நாலேழு - உம்மைத் தொகை பதினொன்று: ஞானேந்திரியம் 5, கன்மேந்திரியம் 5, மனம் 1, ஆகப்பதினொன்று)

1893. துரியங்கள் மூன்று சொருகுஇட னாகி
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி கேசரி உண்மை
பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே.

பொருள் : மூன்று வகையான துரியங்களும் அடங்கும் இடமாகி, அருமையாகப் பேசுகின்ற நாவின் செயலை அடக்கி, பொருந்திய சாம்பவியும் கேசரியும், உண்மையைப் பெருக்கி ஞானம் விளங்கும் முத்திரைகளாம். (துரியம் - உறக்கநிலை.)

சாம்பவியாவது, கண்பார்வையை நாசித் துவாரங்களின் பக்கமாய் மார்பகம் வரை பார்த்துப் பழகுதல். கேசரியாவது, புருவ மத்தியில் தொடங்கி அகநோக்கில் சிரசின் உச்சியை நோக்கிப் போதல்.

1894. சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம்
ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை
ஓம்பயில் ஓங்கிய உண்மைய கேசரி
நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே.

பொருள் : சாம்பவி யாவது குருநாதனது அருட்பார்வையை விளைவிப்பதாம். அது தொடர்ந்து வருகின்ற பிறப்பினை நீக்கி அருளமுதம் வழங்கும் முத்திரையாகும். பிரணவத் தியானத்தோடு பொருந்தியிருக்கின்ற கேசரியாவது சிவயோகியாகிய நாம் பயிலக் கூடிய உண்மையான ஞான முத்திரையாகும். சாம்பவி, அருளை அளிப்பது, கேசரி, ஞானத்தை நல்குவது, அருள் பெற்ற பின் ஞானம் உண்டாகும்.

1895. தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்
ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால்
ஏனைச் சிவமாம் சொரூபம் மறைத்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.

பொருள் : கண்டத்திடத்து அருளோனாகிய சதாசிவன் வீற்றிருந்தருள்வன். திருவடியுணர்வாகிய சிவஞானத்தினால் அகத்தினுள் உணர்வுக்கு உணர்வாய் நற்சிவன் தோன்றுவான். வாய்வாளாமையாகிய மோனத்தினுள் சிவமாம் உருவம் மறைந்திடும். இதுவே மோன முத்திரை. முடிந்த முடிபாகிய வீடுபேறும் இதுவே. (மோனத்து முத்திரை மவுனம்.)

1896. வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே
ஆக்கும்அச் சுத்தத்தை யார்அறி வார்களே.

பொருள் : செயலும் தன்மையாகிய மௌனம் இருவகைப்படும். ஒன்று வாய், மற்றொன்று மனம். இவ்விரண்டும் ஒருங்கு செயலாற்றினால் பயன் உண்டு. வாய்மட்டும் பேசாதிருந்தால் ஊமையே. இரண்டும் ஒன்றுபட்டால் அருளில் அழுந்திய தூய உயிராகும். திருவருள்  உடன் நின்று ஆக்கும் அத்தூய்மையின் உண்மையினை அறிவார் யார் ? ஒருவரும் இவர் என்பதாம்.

1897. யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம்
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
ஆகத் தகும்வேத கேசரி சாம்பவி
யோகத்துக் கேசரி யோகமுத் திரையே.

பொருள் : எண்பெரும் இருத்திகளாகிய சித்திகள் யோக முத்திரை என்ப. ஒப்பில்லாத உண்மை உணர்வு அடையாளத்தை ஆராயுமிடத்துத் திருநான் மறையின்கண் வகுக்கப் பெற்ற முறையான் ஒழுகிக் கடவுளருளால் கைவரும் கேசரி, சாம்பவி யோகத்துக் கேசரி முதலிய முத்திரைகள் அடங்கிய யோக முத்திரையாகும்.

(இருத்தி - சித்தி. ஏகத்த - ஒப்பற்ற.)

1898. யோகிஎண் சித்தி அருளொலி வாதனை
போகி தன் புத்தி புருடார்த்த நன்னெறி
ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை
ஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே.

பொருள் : அகத்தவமாகிய யோகத்தால் பெறும் எண்சித்தியுள்ளவன் திருவருள் உயிர்ப்பாகிய அருள் மூச்சுடைய வாதனாவன். யோக நிலையிலுள்ளார் புத்திக்குமேல் உணரும் நன்னெறியின்கண் உளராகுவர். இவையே உண்மையாகும். இதுவே மூலமுதல் ஆறுநிலைக் களங்களிலும் நின்றருள்பவன் சிவன் என்று துணியும் செம்மை கண்டு உடனாகக் கூடி எதிர்நிற்கும் பண்பாகும். எதிர் நிற்றல் ஏற்றுக்கொள்ளுதல். (வாதனை - செம்பைப் பொன்னாக்கும் செய்கை.)

1899. துவாதச மார்க்கமென் சோடச மார்க்கமாம்
அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும்
தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
நவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே.

பொருள் : யோகநெறியில் கூறப்பெறும் பன்னிரு கலைப்பிராசாத நெறியே பதினாறு கலைப் பிராசாத நெறியாகும். இதனால் ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் ஆகியவை காமாதி அறுபகை வழிச் செல்லாமல் அவற்றின் விருப்பத்தைவிட்டு நிற்கும். இதுவே கேடற்ற வேதாந்த சித்தாந்தத் தன்மையாம். இறைவனைத் துணையாக மனத்துடன் சிந்தித்தல் நல்ல சுத்த சைவமாகும்.

1900. மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை
ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை
தேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரை
கானிக்கும் முத்திரை கண்ட சமயமே.

பொருள் : மேல் ஓதிய மோனமுத்திரை நல்லுயிராகிய முத்தர்க்கு உரியது. நாதராகிய சிவ குருவினர்க்கு உரியது ஞான முத்திரை. செம்பொருள் துணிவாம் சித்தாந்தச் செந்நெறியாளர் முத்திரை ஆன்சுரை முத்திரையாகும். (ஆன் சுரை முத்திரை - தேனுமுத்திரை பசுமமுத்திரை.)

1901. தூநெறி கண்ட சுவடு நடுஎழும்
பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும்
மேல்நெறி கண்டது வெண்மதி மேதினி
நீல்நெறி கண்டுள நின்மலன் ஆமே.

பொருள் : தூய நெறியாகக் காணப்பெறும் உச்சித் துளைவழி மேல் திகழும் ஆயிரம் இதழ்த் தாமரை அருள் வழியாகும். அருளால் அந்நெறி அழுந்திக் காண்பவரின் உள்ளமும் உடலும் பொன் வண்ணமாய்த் திகழும். மேல் நெறியாகக் காணப்படுவது திங்கள் மண்டிலமாகும். மேற்செல்லும் உயிர்ப்பு வழி கண்டவர் உள்ளம் மலர் அகன்று நலம் உற்று நிலைநின்ற தூய்மையாகும். (சுவடு பிரமரந்திரம். பூநெறி - உச்சித் தாமரை. நீநெறி. பிராணவாயு மேற்செல்லும் நெறி.)

18. பூரணக் குகை நெறிச் சமாதி.

(பூரணம் - முடிவு - குகை - இடம். முடிவின் பின் எய்தும் பயன்.)

1902. வளர்பிறை யில்தேவர் தம்பாலின் முன்னி
உளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித்
தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
உளதுறும் யோகிய உடல்விட்டால் தானே.

பொருள் : யோகி வளர்பிறையில் உடலை விட்டு நீங்கினால் திங்கள் மண்டிலத்தே சென்று தங்குவன். செல்லும் வழியில் துறக்க உலகத்தும் ஞாயிற்று உலகத்தும் பதிர் உலகத்தும் தங்கித் தங்கிச் செல்லன். (பிதிர்பதம் - உடலை விட்டு உயிர் பதிர்ந்து நிற்கும் பதம்.)

1903. தான்இவை ஒக்கும் சமாதிகை கூடாது
போன வியோகி புகலிடம் போந்துபின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே.

பொருள் : மேல் ஓதியவாறு சமாதி கை கூடாமல் உடலை விட்டுப்போன யோகி நிலையான சிவனடிப் புகலிடம் புகாமல் மீண்டும் பிறக்க நேரின் நற்சார்பில் வந்து பிறந்து வினை நீங்கி, அருளின் சார்வாகி நிலையான புகலிடம் புகும் மாயோகி ஆவன். (புகலிடம் போந்து கன்மத்துக்கு ஈடாகப் பதவி யடைந்து.)

1904. தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கி
ஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்து
தானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன்
ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே.

பொருள் : அங்ஙனம் புவியில் பிறந்த யோகி ஏனை உலகோர் போன்று உண்டு உடுத்து உழைத்து சிவயோகி செல்லும் தூமாயையின்கண் முன்போல் சிவயோகி ஆவதன்முன் இவ்வுடலின்கண் சித்தி கைவரப் பெற்றுத் திகழ்வன். அதற்கு நிலைக் களமாகிய இவ்வுடலே தாய் உடலாகும். புவியோர் நெறி - கன்ம மார்க்கம்.

1905. சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்
தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடிச்
சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர்
புவலோகம் போற்றும்நற் புண்ணியத்தோரே.

பொருள் : சிவயோகியாகிய ஞானியர் உடல் சிதைந்து நீங்கினால் சிவவுலகம் சென்று பின் நிலவுலகம் வந்து, பிறந்து நிறைந்த சிவயோக ஞானத்தால் திருவடி சேர்ந்து நிலை யின்பம் பெற்று நீடுவாழ்வர். புவ உலகம் முதலிய அனைத்துலகும் சிவயோக ஞானியரைப் போற்றும். அதனால் போற்றுநர்க்குப் புண்ணியப் பேறும் உண்டாகும். (புவலோகம் - ஒளிமண்டலம். சொர்க்கத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்ட உலகம்.)

1906. ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்
தானற மோனச் சமாதியுள் தங்கியே
தானவன் ஆகும் பரகாயம் சாராதே
ஊனமில் முத்தராய் மீளார் உணர்வுற்றே.

பொருள் : குற்றமற்ற திருவடி உணர்வ பெற்ற ஞானியாதற் பொருட்டுச் சிவயோகியராகிச் செறிவுநெறி நின்றவர் உடல் விட்டால் தான்என்னும் உயிர்த்தன்மை நீங்க உரையற்ற, உலக உணர்வு அற்ற உணர்த்தும் உணர்வுடன் நிறைவுற்ற (மோன சமாதி) அருளில் தங்கித் தானவன் ஆகுவர்; வேறோர் உடற்கண் புகுதார்; பழுதற்ற நல்லு யிராவர். இயற்கையும் முற்றுமாம் இன்ப உணர்வு எய்தி என்றும் மீளாது இன்புறுவர். (முத்தர் - நல்லுயிர்; ஞானியர்)

1907. செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்
செத்துநீர் சேர்வது சித்தினைக்கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே.

பொருள் : உலகியலை மறந்தவர் செத்தார் எனப்படுவர். அவர்பெறும் பயன் யாதென்று கேட்டால் ஆணவமலம் கெட்டுப் பேணுபணி தொட்டு அருள் தன்மை வாய்ந்து சிவனடியைச் சேர்வது. அச்சிவனடி கூடிய பின்னும் அன்னார் நிலவுலகத்தில் இருத்தலும் கூடும். அங்ஙனம் இருந்தார் மும்மலமற்ற செம்மலாயிருப்பர். அவர்கள் செம்பொருளாகிய சிவமாகவே விளங்குவர். அவர்களே சித்தர் என்று அழைக்கப்படுவோர் ஆவர்.

1908. உன்னக் கருவிட்டு உரவோன் அரன்அருள்
பன்னப் பரமே அருட்குலம் பாலிப்பன்
என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானி
தன்இச்சைக்கு ஈசன் உருச்செய்யும் தானே.

பொருள் : பிரணவ யோகத்திலிருந்து பிரணவத்துக்குரிய சர்வ வல்லமையுள்ள சித்தின் அருளைப் பலகாலும் சிந்திக்க. பரசிவமே அச்சிவ ஞானிக்குச் சத்தியின் கூட்டத்தை அருளுவான். அங்ஙனம் பெற்ற அருளை எத்தகைய பக்குவமுள்ள சீடர்க்கும் வேண்டி அளிக்கும் ஞானி, தன் விருப்பத்துக்கு ஏற்பச் சீடனை ஈசன் உருவாக அமைத்தருளுவான்.

1909. எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்
தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம்
அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல்
இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே.

பொருள் : நீக்கமற நிறைந்து எங்குமாய் விளங்கும் சிவத்தின் அருள் நடுவுள் பொருந்தியிருக்கும் சிவஞானிக்கு எங்கும் சிவம் தோன்றும். அங்கு அங்கேயுள்ள நிலம் முதலிய பூதங்களை விழுங்கி அவற்றுள் கலந்திருக்கும் ஆகாயம் போல ஈசன் உருப்பெற்ற ஞானி உடல் பிரக்ஞைவிட்டு எல்லாவற்றிலும் கலந்திருப்பார். ஈசன் உருப்பெற்ற ஞானி எங்குமாய் எல்லாவற்றையும் அறிவார்.

19. சமாதிக் கிரியை.

(சமாதிக்கிரியை - ஞானி உடலை விட்டபின் செய்ய வேண்டிய சடங்கு.)

1910. அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு
வந்துநாய் நரிக்குஉண வாகும் வையகமே.

பொருள் : அழிவில்லாத சிவஞானியின் உடல் தீயில் வெந்து கெடுமானால் நாட்டு மக்கள் எல்லாம் சுர நோயினால் பீடிக்கப் பட்டு வருந்துவர். கவனிப்பாரின்றி அழுகி நாய் நரி உண்ணுமாயின் நுட்பமான உட்பகை மூண்டு நாட்டு மக்கள் அழிந்து நாய் நரிக்கு உணவு ஆவர். (ஞானியின் உடல் சமாதி செய்யப்பட வேண்டும் என்பதாம்.)

1911. எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்
அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.

பொருள் : அளவிடுதற்கரிய திருவடியுணர்வு கைவரப்பெற்ற சிவஞானியரின் திருவுடல் எரியில் இடப்படின் அது சிவபெருமான் திருக்கோயிலின் கண் தீயிட்டதை ஒக்கும். அப்பெரும் பாவத்தால் மண்ணினில் மழை விழாது. அதனால் நீங்கா வற்கடமாம் பெரும் பஞ்சமும் உண்டாகும். அளவிலா மன்னரும் தத்தம் அரசினையும் இழப்பர்.

1912. புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே.

பொருள் : சிவஞானியின் திருமேனியைப் புதைத்துத் திருக்கோவில் அமைப்பது பெரும் சிவபுண்ணியமாகும். அப்படிச் செய்யாமல் தீயின்கண் இட்டால் நாட்டுக்குப் பெரும் அழிவு உண்டாகும். மேலும் அத்திருமேனி ஓம்புவாரற்று மண்ணில் கிடந்து அழியின், நாட்டின் அழகு எல்லாம் பாழ் பட்டு நாடும் வீழ்ச்சியும். தணியா வெப்பும் தீயும் பிணியும் பிறவும் மண்ணுலகம் எங்குமாகிப் பெருந்துன்பம் உண்டாகும்.

1913. அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய்து இருத்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.

பொருள் : அளவிடப் படாத சிவஞானி திருவடிப்பேறாம் அருளை அடைந்தக்கால் அவர்தம் திருவுடலை நிலவறையாகிய குகை செய்து அவற்றின் கண் அமைத்தல் வேண்டும். அங்ஙனம் அமைத்தக்கால் அறிவாற்றல்களால் மிக்க அழகு பெற்ற வேந்தரும் நிலவுலகத்தில் வலமும் நலமும் குலமும் சேர்மாந்தரும் முடிவிலாப் படியிலா வடிவுடை ஆரருள் இன்பம் பெற்று வாழ்வர். (நிலவறை - சமாதி குகை.)

1914. நவமிகு சாணாலே நல்லாழம் செய்து
குவைமிகு சூழஐஞ் சாணாகக் கோட்டித்
தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே.

பொருள் : நிலவறைப் படுக்கும் குகையின் அளவு வருமாறு ஆழம் ஒன்பது சாண். அகலமாகிய சுற்றளவு ஐந்து சாண். மூன்று சாண் அகலத்தில் முக்கோணம். இத்தகைய முறைப்படி அமைக்கும் குகை. தாமரை இருக்கையாகிய பதுமாசன மாகும். சிவஞானியின் உடலைப் பதுமாசனமாக இருத்துக என்பதாம்.

1915. தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரின்நற் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்ளே.

பொருள் : சமாதி செய்விப்போன் வீட்டின் பக்கம், நடைச் சாலையின் பக்கம், குளக்கரை, ஆற்றின் நடுப்பகை, பூந்தோட்டம், நகரில் நல்ல பூமி, நினைத்தற்கு அருமையான காடு, உயர்ந்த மலைச்சாரல் ஆகிய இந்நிலம்தான் குகைக்கு உரிய இடங்களாகும்.

1916. நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்
பொற்பமா ஓசமும் மூன்றுக்கு மூன்றுஅணி
நிற்பவர் தாம் செய்யும் நேர்மையை தாமே.

பொருள் : நல்ல குகை நாற்புறமும் காலடியால் ஐந்தடி அகலமும், நிற்கின்ற உயரம் ஒன்பது அடி நேராக அமைய, அழகமைந்த குகையின் குறுக்களவு மூன்றுக்கு மூன்றாக, அணுக்கமாக உள்ளோர் செய்யும் முறையாகும். (ஓசம் - கோயில் அல்லது குகை. பஞ்சாங்க பாதமாய் - ஐந்து அங்கங்கள் நிலத்தில் பதியும்படி வணங்குவதற்கு இடமுள்ளதாய்.)

1917. பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்துஅதன் மேல்ஆ சனம்இட்டு
முஞ்சிப் படுத்துவெண் ணீறுஇட்ட தன்மேலே
பொன்செய் நற்சுண்ணம் பொதியலும் ஆமே.

பொருள் : ஐவகை உலோகங்களையும் ஒன்பது வகை மணிகளையும் குகையில் பரப்பி மிகுதியாகப் போட்டு அதன்மேல் ஆசனத்தை அமைத்து, தருப்பையைப் பரப்பி திரு வெண்ணீற்றை நிறையப் போட்டு அதன்மேல் பொற்சுண்ணப்பொடியைப் போதலுமாம். (முஞ்சி - தருப்பை பொற்சுண்ணம் - மஞ்சள் முதலிய பொருளைச் சேர்த்து இடித்த பொடி.)

1918. நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக்
கள்ளவிழ தாமம் களம்பம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபவன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.

பொருள் : குகைநடுவில் நால்வட்டம் அமைத்து, அதன்மேல் தேன் நிறைந்த மலர்மாலைகள், சந்தனக் கலவை, கத்தூரி முதலிய மணக்கூட்டுக்கள், சாந்து, புனுகு, பன்னீர் சேர்த்துத் தக்கவாறு பொதிதல் வேண்டும். பின் சிறந்த நறும்புகையும் விரும்பி மகிழ்ந்து இடுவீர்களாக. (நள்குகை - குகை நடுவில்.)

1919. ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்துப்
போதறு சுண்ணமும் நறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடு வீரே.

பொருள் : சொல்லப் பெறுகின்ற திருவெண்ணீற்றுப் பூச்சாகிய சட்டையை மேலே இட்டு, ஞானியின் உடலை ஆசனத்தின் மேல் அமர்த்தி மலர், அறுகம்புல், வாசனைப்பொடி, திருவெண்ணீறு ஆகியவை அணிவித்து குகையின் மீது வைத்து நாற்புறமும் மண்ணை விரிந்து சமன் செய்வீராக. (குப்பாயம் - சட்டை உத்தூளம் - பூச்சு)

1920. விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம்இள நீரும்
குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே.

பொருள் : மேல் ஓதியபடி அமைத்தபின் சாருமணை பொருந்த வைத்து, அதன்மேல் பாவாடை விரித்து, இலை அமைத்துப் பொன்போல் பொரித்த கறிவகைகளும் போனகமாகிய திருவமுதும் இளநீரும் சிவகுருவின் முன்னிலையில் படையுங்கள். அத்திருவுருமுன் குழைமுகப் பார்வை தரித்தலாகிய நைவேத்தியம் கண்டபின் மேற்கட்டியமைத்து வேண்டுவ செய்வீராக. (போனகம் - சோறு. மேல்வட்டம் - மேல்நிலை)

1921. மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே.

பொருள் : திருவெண்ணீற்றையும் வாசனைப் பொடியையும் மேலே சொரியும் தருப்பைப் புல் வில்வம் மலர் கொண்டு பாத்தியம், ஆசமனம், அர்க்கியம் கொடுத்து நிலத்தின்மேல் மூன்றுக்கு மூன்று அடி மேடை செய்யுங்கள். அலங்காரம் செய்தபின் உபசாரம் செய்ய வேண்டும்.

1922.ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றைக் தாபித்து
மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலில் சோடசம் காண்உப சாரமே.

பொருள் : மேடை மீதினில் அரசங்கன்று அல்லது சிவலிங்கம் ஆகிய இவற்றுள் ஒன்றைத் தருவித்து சமாதியின் மேன்மையான சந்நிதி வடக்கு நோக்கி யேனும் கிழக்கு நோக்கி யேனும் அமைய, அன்போடு பதினாறு வகை உபசாரம் செய்க.

சிறப்பு பதினாறாவன; 1. திருமஞ்சனம் 2. நறுமலர். 3. மணக்கூட்டு. 4. நறும்புகை 5. உறுஞ்சுடர் 6. குளிர்நீர் 7. திருவமுது 8. தூசு. 9. அடைக்காய். 10. கண்ணாடி. 11. குடை 12. கவரி. 13. ஆலவட்டம் 14. விசிறி. 15. ஆடல். 16. வாத்தியம் என்பன.

(ஆதனம் - சமாதிக் குகையின் மேல் உள்ள வேதிகை.)

20. விந்துற்பனம்

(விந்து உற்பனம் - விந்துவின் தோற்றம். இப்பகுதியில் அண்டத்துக்குக் காரணமான விந்துவும், பிண்டத்துக்குக் காரணமான விந்துவும் கூறப்பெறும்.)

1923. உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும்
உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியில் பிரமாதி கள்மிகு சத்தி
கதியில் கரணம் கலைவை கரியே.

பொருள் : விந்து என்று சொல்லப்படும் தூமாயை தோற்றத்தில் சிறந்த குண்டலியும், பெருவெளியில் மாயாகாரியமான வைந்தவம் ஒன்பதும், அவற்றின் முறையால் அயன் முதலிய ஒன்பதின்மரும் திருவருள் முறையாகக் கரணங்கள், கலைகள், வைகரி முதலிய ஓசைகள் ஆகிய எல்லா ஆக்கப்பாடுகளும் தோன்றும். (ஆக்கப்பாடு - காரியம். குடிலில் பரமாகாயத்தில் வயிந்தவம் ஒன்பான் - விந்து மாயாகாரியம் ஒன்பது. கதியில் - முறையாக)

1924. செய்திடும் விந்துபே தத்திறன் ஐ ஐந்தும்
செய்திடும் நாதபேதத்திற னால்ஆறும்
செய்திடும் மற்றவை ஈர்இரண் டில்திறம்
செய்திடும் ஆறுஆறு சேர்தத் துவங்களே.

பொருள் : விந்துவின் காரியத்தால் பிரமன். விஷ்ணு - உருத்திரர். மகேஸ்வரர். சதாசிவராகிய ஐவரும் ஐந்து கொத்தாக உடலிற் பொருந்தித் தொழிற்படுவர். நாதபேத காரணத்தால் அது ஆறு வகையாகப் பிரியும். இவ்விதம் அமைவதால் உருவமூர்த்திகளான பிரமன் விஷ்ணு உருத்திரர் மகேஸ்வரர் ஆகிய நால்வர்பால் மற்ற தத்துவங்கள் பொருந்தும். இவற்றின் விரிவே உடலைப் பற்றியும் உயிரைப் பற்றியுமுள்ள முப்பத்தாறு தத்துவங்களாம்.

1925. வந்திடு பேத மெலாம்பர விந்துமேல்
தந்திடு மாமாயை வாகேசி தற்பரை
உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி
விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே.

பொருள் : பரவிந்துவில் தோன்றும் மாமாயை மேலோதிய இருபத்தைந்து சிவவடிவங்களையும் தந்திடும். மேலும் வாகேசி தற்பரை. செலுத்தும் குடிலை இன்புறுத்தும்; குண்டலி என்னும் விந்துவில் பொருந்தித் தோன்றும். (ஏமுறு - இன்பம் பொருந்திய. மேவா - மேவி)

1926. விளங்கு நிவர்த்தாதி மேலக ராதி
வளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்து
களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே.

பொருள் : விளங்குகின்ற நிவிருத்தியாதி கனல் அகாராதி கலையில் பொருந்தும். வளமை மிக்க உகாரம் மகாரத்துள் அடங்கும். விந்து குற்றமில்லாத நாத முடிவை எய்தி அந்தக் கரணமாகிய மனமாதி யவற்றுள் அந்தம் அடையும்.

1927. அந்தமும் ஆதியும் ஆகிப் பராபரன்
வந்த வியாபி எனலாய அந்நெறி
கந்தம தாகிய காரண காரியம்
தந்துஐங் கருமமும் தான்செய்யும் வீயமே.

பொருள் : காரண காரியமாகிய முதல் விளைவுகளுக்கு எண்ணத் துணையாய் நிற்கும் முழுமுதற் சிவன் பராபரன் எனப்படுவன். அவன் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் வியாபியாவன். அந்நிலையில் மணஞ்சேர் காரண காரிய முதல்வராய்த் திருத்தொழில் ஐந்தினையும் இடையாறாது புரிவன். இவையே அவன்தன் அளவில் பெருமையாம். (வீயம் - வியம் - பெருமை)

1928. வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும்  பாரிப்பக்
காயஐம் பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புறக் ஆகுமே.

பொருள் : பெருமை உடைத்தாகிய விந்துவின் ஆற்றலால் அகண்டமும் அண்டமும் ஆகிய அனைத்து ஆக்கப்பாடுகளும் உண்டாவன. ஆகாயம் முதலிய ஐம்பூதம் உள்ளிட்ட முப்பத்தொரு மெய்களும் தூமாயை யாகிய  விந்துவின் காரியம் போன்ற படங்குடில் ஆனாற்போலும் வளர்ச்சியன்று பால் தயிரானாற் போன்ற திரிபு. இதனைத் தூவாமாயை என்பர். இவை தூமாயையின் கீழ்ப் பகுதியாகும். இவ்விந்து முப்பத்தாறு மெய்களுக்கும் அகம்புறம் என்ப விந்து எனினும் காரண மாயை எனினும் ஒன்றே. (விந்து - வித்து - காரணம். அகண்டம் - எல்லையற்றது. அண்டம் எல்லையுடையது. இவ்விரு நிலைகளிலும் விந்து மண்டலம் உள்ளது.)

1929. புறம்அகம் எங்கும் புகுந்துஒளிர் விந்து
நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை
உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்
திறனொடு வீடுஅளிக் கும்செயல் கொண்டே.

பொருள் : மேல் ஓதியவாறு விந்து புறம் அகம் எங்கும் விரவி ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. விந்துவின் நிறம் வெண்மை நாதத்தின் நிறம் செம்மை. அறிவு ஆற்றல்களால் ஆருயிர்களை மகிழ்விக்க மகிழும் சத்தி சிவம் இரண்டிற்கும் முறையே விந்து நாதம் பதிந்த நிலைக்களமாகும். (பதிவு - நிலைப்பு. பதிவு பாதம் என்றாயிற்று உயிர்க்கு உயிராய் உணர்விற்கு உணர்வாய் உள்நின்று பேறு அருளும் அருளிப்பாடு கொண்டே இவை யனைத்தும் நிகழ்கின்றன.)

1930. கொண்டஇவ் விந்து பரமம்போல் கோதற
நின்ற படம்கட மாய்நிலை நிற்றலின்
கண்டக லாதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே.

பொருள் : உடலுக்கு வெளியே யுள்ள ஒளி நிலையே குற்றமில்லா ஆடையும் குடமும் உருக்கொண்டு நிற்றல் போல் நிலைöற்ற பஞ்ச கலைகள் ஆதிய காரணத்தினின்று காரியமாகிய பிரபஞ்சம் அனைத்துமாய் விரிந்து மாமாயையாகும். நூல் காரணம்; ஆடை காரியம்; மண் காரணம்; குடம் காரியம். அதுபோல கலைகள் முதலியவை காரணம். (பிரபஞ்சம் - காரியம்)

1931. அதுவித்தி லேநின்றுஅங்கு அண்ணிக்கும் நந்தி
இதுவித்தி லேஉள வாற்றை உணரார்
மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்
பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே.

பொருள் : அகண்டத்தில் வித்தாக விளங்கித் தோன்றும் சிவமே பிண்டத்தில் விந்துவாக உள்ள முறைமையை மக்கள் உணரார். இன்பம் பொருந்திய சுவாதிட்டான மலரில் அன்ன ரூபமாக உள்ளவனே பரமாகாயத்தில் விளங்கும் புண்ணியனாகிய சிவனாகும். தாமரைமீது  மகிழ்ந்து அமரும் அன்னத்தைப் போன்று போகம் ஈன்ற புண்ணியனாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றனன். அது போன்று பொன்னம் பலத்தின் கண்ணும் நின்று அருள்கின்றனன்.

1932. வித்தினில் அன்றி முளையில்லை அம்முளை
வித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறில்லை
அத்தன்மை யாரும் அரன்நெறி காணுமே.

பொருள் : வித்தில் அன்றி வேறிடத்தில் முளையில்லை. அதனால் அம்முளை விதத்தில் இருந்தல்லாமல் வேறிடத்திலிருந்து தோன்றுதல் இல்லை. வித்தும் முளையும் ஒன்றைவிட்டு ஒன்று இல்லாமையால் இரண்டையும் ஒரு பொருளாகக் கருத வேண்டும். அது போன்றே விந்துவும் சிவமும் ஆகும்.

1933. அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத்
திருந்தும் உடல்மன மாம் கூறு சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதமது ஆகுமே.

பொருள் : உண்ட உணவுகள் உயிர் பொருந்துவதற்குரிய உடல், மனம், கழியும் மலம் என்று மூன்று பகுதியாகும். திருந்தும் உடலும் மனமும் ஆகிய இருபகுதிகளும் சேர்ந்து முன்னால் உண்ட உணவின் சாரத்தால் அமைந்து இருந்தன. உணவின் தன்மைக்கேற்ப உடலோடு உள்ளமும் அமைகிறது. சாத்துவிக உணவு நல்ல உடலுறுதியும், மன அமைதியும் தந்து யோகம் பயில உதவும்.

1934. இரதம் முதலான ஏழ்தாது மூன்றில்
உரிய தினத்தில் ஒருபுல் பனிபோல்
அரிய துளிவிந்து வாகும்ஏழ் மூன்றின்
மருவிய விந்து வளரும்கா யத்திலே.

பொருள் : இரதமாகிய சாரம் முதலாகச் சொல்லப்படும் ஏழ் முதற் பொருள்களால் ஆக்கப்பட்டது. இவ்வுடல். தாது-முதற் பொருள். அவ்ஏழும் வருமாறு: சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை, வெண்ணீர் என்பன. இவற்றுள் சாரம், செந்நீர், வெண்ணீர் ஆகிய மூன்றும் ஒரு நாள் ஒருபுற் பனிபோல் திரளும். இத்திரட்சியே விந்து எனப்படும். இவ்விந்து ஏழு மூன்றாகிய இருபத்தொரு நாள்வரை உடம்பில் வளரும்.

1935. காயத்தி லேமூன்று நாளில் கலந்திட்டுக்
காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே.

பொருள் : அதன்பின் மூன்று நாள் காறும் பரந்து கலந்து முன் உடல் விந்துவாக இருந்த அது மனவிந்துவாக மாறும். அதனைக் கலையாகிய அறிவு விந்துவாக அமைத்துச் சிவன் திருவடியுணர்வாய் நீங்காது. நின்றோர்க்கு அவ்விந்துவும் நீங்கா. பற்று அறாமையின் உலக மயக்கில் ஈடு படுவோர்க்கு அவ்விந்து மனத்துடன் அழியும். இதனையே கனவிற் கழிதல் என்ப. (நேயத்தை நாடிச் செல்வார்க்கு விந்து செயமும் மாயத்தை நாடிச் செல்வார்க்கு விந்து நீக்கமும் உண்டாகும்.)

1936. அழிகின்ற விந்து அளவை அறியார்
கழிகின்ற தன்னையுட் காக்கலும் தேரார்
அழிகின்ற காயத்து அழிந்துஅயர் உற்றோர்
அழிகின்ற தன்மை அறிந்தொழி யாரே.

பொருள் : அழிகின்ற விந்துவின் அளவை அறியமாட்டார். இறந்து அழிகின்ற தன்னை உள்ளே காத்துக் கொள்ளுதலையும் தெளியமாட்டார். அழிகின்ற உடலில் அழிந்து சோர்விற்றோர் அழிகின்ற தன்மையை அறிந்தும் விந்து நீக்கத்தினின்றும் ஒழியார். விந்து கழிவதால் வாழ்நாளும் உடலும் பாழாகும். ஏனெனில் பன்மடங்கு இரத்தமே மாறி ஒரு துளி வீரியம் ஆகிறது.

21. விந்து ஜயம் - போக சரவோட்டம்

(விந்துஜயம் - விந்துவைக் காத்தலால் உண்டாகும் செயம். போக சரவோட்டம் - போக காலத்தில் அமையும் பிராண இயக்கம்.)

1937. பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.

பொருள் : நம்மை விரும்பிப் பார்க்கும் பெண்களை நாம் பாராமல் அகன்று சென்று, ஆராய்கின்ற மனம் உருக மூலக் கனலை எழுப்பி, கண்ணின் வழியாகச் சென்று பார்க்கும் விருப்பம் பாழாக, மூலமாகிய புருவ நடுவில் கண்ணைச் சேர்க்கின்ற யோகியே சிவயோகியாம். பார்க்கின்ற மாதரைப் பாராதிருத்தல், மனம் உருக மூலக்கனலை எழுப்புதல். ஊர்த்துவ சிருஷ்டியால் புருவ நடுவை நோக்கியிருத்தல் ஆகிய மூன்றும் காமத்தை வெல்வதற்குரிய சாதனங்களாம்.

1938. தானே அருளால் சிவயோகம் தங்காது
தானேஅக் காமாதி தங்குவோ னும்உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடங்கெடும்
ஊனே அவற்றுள் உயிர்ஓம்பா மாயுமே.

பொருள் : காம மிகுதியில் பொருந்தினால் திருவருளால் வரத்தக்க சிவ யோகம் பொருந்தாது. அக்காமம் முதலியவற்றுள் பொருந்துவோனும் மனவலி இழந்து அஞ்சுவான். இனி உடம்பும் தன் இயல்பு கெடும். உடம்பில் உள்ள தாதுக்கள் உயிரைப் பாதுகாக்காமல் அழியும்.

1939. மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில்
ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள்
ஏயாஎன் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டு
ஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே.

பொருள் : மாதர் வசப்பட்டுச் சென்று இவர் கூட விரும்பினால் தொடர்ந்து மாறி மாறி வருகின்ற பூர்வம் அபரம் என்ற இருபக்கத்தில் பூர்வம் என்ற வளர்பக்கத்தில் பொருந்தாத முதல் எட்டு நாட்கள் கூடிய இன்பமானது துன்பமாம். பூர்வ பக்கத்தில் பின் ஆறு நாள்களும் கூடுவதற்கு ஆகுமாம் (பூர்வபக்கம் - வளர்பிறை அபரபக்கம் தேய்பிறை.)

1940. ஆறுஐந்து பன்னொன்றும் அன்றிச் சகமார்க்கம்
வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடு
ஏறும் இருபத் தொருநாள் இடைத்தோங்கும்
ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே.

பொருள் : யோகநெறி நிற்போர் வளர்பிறைப் பக்கத்தில் முன் ஆறு நாட்களும் தேய்பிறைப் பக்கத்தில் பின் ஐந்து நாட்களும் ஆக பதினொரு நாட்களையும் நீக்கி ஏனைய நாட்களில் கூடலாம். இவரின் வேறாய சரியை கிரியை நெறி நிற்போர் மாதர் பூப்பு எய்திய பின்னை, கருப்பாசயத்தில் உள்ள இதழ் வளர்ந்து கொண்டேவரும் இடைப்பட்ட இருபத்தொரு நாட்களில், பூப்புத் தொடங்கிய ஆறு நாட்களுக்குப் பின்னுள்ள அக்காலத்தில் கூடலாம்.

1941. செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமே
எய்யும் கலைகாலம் இந்து பருதிகால்
நையுமிடத்து ஓடி நான்கா நூல்நெறி
செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே.

பொருள் : மங்கை நல்லாரை மவுதற்குப் பொருந்திய நற்பொழுது இரவுப் பொழுதேயாகும். அவ் இரவுப்பொழுதிலும் எட்டு முழுத்தம் வாய்ப்புடைத்தென்ப. விந்துவைக் கருப்பையில் தங்கவிடும் காலம் ஞாயிறு திங்களைத் தன்னுள் அடக்குவதான வலப்பால் மூக்கில் உயிர்ப்புச் செல்லுங்காலம். நல்ல காம நூலின் முறைப்படி மருவுதல் செய்க. ஒருகால் இடப்பால் மூக்கில் உயிர்ப்புச் செல்லின் அதனை மாற்றி வலப்பால் விடுக்க. (இருநாள் முகூர்த்தம் - இரவு காலம்.)

1942. விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ளைப்போல்
நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ணப்
படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்
கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே.

பொருள் : பேரன்பாகிய காதல் மங்கையினிடத்து மகப்பேறு ஒன்றே கருதிச் சிற்றின்பம் பற்றுக்களை அறவே விட்டு விரைந்து ஓடும் உயிர்ப்பினை அமைதிப் படுத்திக் கரணங்களைத் திருத்திய கருத்துட் கொண்டு மன எழுச்சியுடன் நடுக்கமின்றிப் பொறி புலன் பத்தும் ஒத்துப் பொருந்தக் கருப்பையில் விந்துவிடும் முறைமையே விழுமிது என்க.

1943. கொண்ட குணனே நலமேநற் கோமளம்
பண்டை உருவே பகர்வாய் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும் போதில்
கண்ட காரணம் உட் செல்லக்கண் டேவிடே.

பொருள் : சிறப்பெனக் கொண்ட நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு, என்னும் பெண்மைக் குணம் நான்கும் இயற்கை அன்பு செயற்கை அன்புகளால் ஏற்படும். நன்மையும் மருவும் பருவமாகிய இளமையும் (பேரிளம் பெண்) மணந்த ஞான்றுள்ள கட்டுக் குலையா வடிவமும் மும்மையும் பயக்கும் செம்மை வாயாகிய பவழமும் மலை நேர் பொலியும் முலையும் வாய்ந்து திகழாநின்ற மங்கை நல்லாரை மருவிப் புணர அன்புள்ளத்தை இன்புறச் செலுத்தும்போது கல்வி முறைகளை நன்கு கருதிச் செலுத்துவாயாக.

1944. விட்டபின் கர்ப்பஉற் பத்தி விதியிலே
தொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாழ்நாள் சாம்நாள் குணம் கீழ்மைசீர்ப்
பட்ட நெறியிதுஎன்று எண்ணியும் பார்க்கவே.

பொருள் : மேல் ஓதியவாறு கூடிக் கருப் பதித்தபின் கருப்பத்தோற்ற முறையானே பின் அம் மகவுக்கு வரக்கூடிய காலக் கணக்குகளை நன்கு உன்னி வாழ் நாள் நிலைமையும் சாநாள் நிலைமையும் சிறந்து குணனும், சிறவாக் குணனும் கீழ்மைக் குணனும் முதலிய எல்லாவற்றையும் தாங்கள் கூடிய கூட்டத்தாலும் ஓடிய உயிர்ப்பினாலும் உய்த்துணர்ந்து நோக்குதல் வேண்டும்.

1945. பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும்
மூப்புற்றே பின்னாளில் ஆம்எல்லாம் உள்ளவே.

பொருள் : முற்கூறியவண்ணம் பார்த்து, உலகத் தொடர்பின்றிக் கருப்பையில் பெற்று, கச்சினை வருத்தும் தனங்களையுடைய பெண்ணின்றும் நீக்கியே, உலகில் சேர்க்கப்பெற்று அச்சிசு இரண்டு மாதங்கள்கூட வாழாமல் நீங்கினும், மூப்படைந்து பின்னாளில் நீங்கினும் எல்லாம் எண்ணுதற்கு ஆகும்.

1946. வித்திடு வோர்க்குஅன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்குஅன்றி மிக்கோர் அறிவில்லை
வித்தினில் வித்தை விதற உணர்வரேல்
மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே.

பொருள் : வித்தினை விதைப்பவர்க்கு அல்லாது விதையாதவர்க்குப் பயன்இல்லை. வித்தின் (விந்துவின்) பயனை அறிந்து ஒளி செய்வார்க்கு அல்லாது அறிவும் இல்லை. விந்துவே ஒளியாக மாறுகிறது என்று சலனமின்றி உணர்வாராயின் தயிரில் இருந்த வெண்ணெய் போல உயிரில் இருந்த சிவக்கனியாகும். (மத்து - தயிர்.)

1947. கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்துளன் ஈசன் கருஉயிரோடும்
கருத்தது வித்தாய்க் காரண காரியம்
கருத்துறு மாறுஇவை கற்பனை தானே.

பொருள் : கருத்தினில் பிரமலிபி. ஆயுள் முதலிய யாவும் ஈசன் கருவில் பதியும் உயிரோடு கருத்தில் அமைத்துத் தானும் உள்ளான். அவ்வாறு கருத்தில் உள்ளதே வித்தாகப் புறத்திலே உள்ளதைக் காரண காரியமாகக் கருத்தில் கொள்வது கற்பனையாகும். கரு பதியுங் காலத்தில் மேல்விளைவு எல்லாம் அமைந்துள்ளன.

1948. ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும்
அழியாப் பிராணன் அதிபலஞ் சத்தி
ஒழியாத புத்தி தபஞ்செப மோனம்
அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே.

பொருள் : என்றும் நீங்காத உள்ளத்தின் ஒளிமண்டலம் உடலுடன் சார்ந்து நிற்க, நிற்கின்ற அழியாப் பிராணனும் அளவில் ஆற்றலும் குறைவற்ற புத்தி விலாசமும் தவமும் செபமும் பிரணவ சித்தியும் அழியாத எண்வகைச் சித்திகளும் தூலவிந்து வற்றில் அடைத்தக்கனவாம்.

1949. வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்
துற்ற சுழியனல் சொருகிச் சுடருற்று
முற்று மதியத்து அமுதை முறைமுறை
செற்றுண் பவரே சிவயோகி யாரே.

பொருள் : தூலவிந்து வற்றிப் போகும்படி மூலாதாரத்திலுள்ள குண்டலினியாகிய நெருப்பைப் பெருக்கி, விந்து கீழ் நோக்காதவாறு தடுத்து மேலே ஏற்றுவதால் அமையும் (பிரமரந்திர) ஞானக்கினியில் பொருந்தி அங்குள்ள ஒளியை அடைந்து பூரண சந்திர மண்டல அமுதைப் பல தடவை பெருக்கி உண்பவரே சிவயோகியாவர். (சுற்றிசுழி - ஆஞ்ஞை)

1950. யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே.

பொருள் : பண்டைப் பயிற்சி கொண்ட வுளத்தால் வேட்கை உற்றாலும் விந்துவினை வெளிவிடாது. உள்ளடக்கி நுகர்ந்து இன்புறும் நன்மையரும் உளர். அவர்கள் வருமாறு: யோகியும் ஞானியும் தலையாய சித்தனும் தலையாய யோகியும் தலையாய ஞான முதல்வனும் ஆவர்.  இவ் ஐவர்களும் எஞ்ஞான்றும் விந்துவினை மைந்துடன் காக்கும் தலைமையர் ஆவர்.

1951. அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணும் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்து
உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே.

பொருள் : அகத்தவ யோகியர்க்கு ஏனையோர்க்கு உயிர்க்குயிராய்த் திகழும் அண்ணலாகிய சிவபெருமான் உடலாயத் திகழ்வன். அங்ஙனம் திகழ்வதால் விந்து மாயையாகிய அனற் பிழம்பும் மண்ணிடை வீணாக் கழிப்பின் மாயச் செய்யும் உயிர் விந்துவாகிய அனற்பிழம்பும் கருதப்படும் மூலக் கனலுடன் கூடிக் கலந்து, ஒப்பில் பேரொளிப் பிழம்பாய்ச் சுடர்விட்டு, அகத்து அமிர்தாகி யோகிக்குத் தாவில் அறிவாகும் என்ப. கண்ணுங்கனல் மூலாக்கினி.

1952. அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்
பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரியச்
செறிவாய் இருந்து சேரவே வாயுமே.

பொருள் : மக்கள் விந்துவின் அருமையும் பெருமையும் அறியாது கெடுகின்றமையின் என்றும் இந்திரியங்கள் வசப்பட்டு மனம் அழிந்து உடலழிந்து வருந்துகின்றார்கள். ஞானமே சொரூபமாய் நனவில் துரியாதீதத்தில் சிவத்தோடு செறிந்து பொருந்த கீழுள்ள வீரியம் ஊர்த்துவ முகம் கொண்டு ஒளியாகித் தூலவிந்து அழிந்துவிடும்.

1953. மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக்
காதலது ஆகிய காமம் கழிந்திடும்
காதலும் இல்லை சதகோடி ஆண்டினும்
சோதியின் உள்ளே துரிசறும் காலமே.

பொருள் : பெண்களைக் கொல்லும் எமன் என்று நினைக்க, காதலால் விளைவதாகிய காமம் நீங்கும் காமக் கழிவு இல்லாமையால் இறப்பும் இல்லை. நூறு கோடி ஆண்டுகள் சிவச் சோதியில் கலந்து ஆணவக் குற்றம் நீங்கும் காலமாகும். காமக் கழிவின்றேல் நூறு கோடி ஆண்டுகள் வாழலாம்.

1954. காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலம் கடந்தழிந் தான்விந்து செற்றவன்
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பறி யாரே.

பொருள் : விந்துவை (வீரியத்தை) வென்றவன் காலத்தை வென்றவன். விந்துவை அழித்தவன் காலத்தால் வெல்லப்பட்டு அழிந்தவனாவான். விந்துவை வென்று விளங்கும் காலங்களில் குண்டலினியாகிய சத்தி மூலவாயுவில் பொருந்தி மேலெழும் இன்பத்தை அறியமாட்டார்.

1955. கலக்கு நாள் முன்னாள் தன்னிடைக்காதல்
நலத்தக வேண்டில்அந் நாரி யுதரக்
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை
விலக்கு வனசெய்து மேலணை வீரே.

பொருள் : காலத்தால் கருத்தொத்த இருவரும் மருவி வாழ விரும்பினால் கூடுவதற்குத் தகுதியெனக் கருதும் நாளின் முதல் நாளில் காதற் பெரும் பயனும் நன்றாதற் பொருட்டுக் காதலியின் மலக்குடலில் தங்கும் மலத்தை அகற்றி, வாத பித்தம் ஐ என்னும் மூன்றினையும் இருக்க வேண்டிய முறையில் இருக்கச் செய்து நன் முறையாகக் கூடி இன்புறுவீராக.

1956. மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால்
மாலா னதுமாள மாளும் அவ்விந்துவே.

பொருள் : மூலம் முதலாகச் சொல்லப்படும் ஆறு நிலைகளுக்கும் அப்பாலுள்ள தூவெளி மேனிலம் எனப்படும். அங்கு விந்துவும் நாதமும் தோன்றும். அவற்றை நாடுநாடி வழியாக நடத்தி அகத்தவ ஆசான் கூறி அருளியபடி செய்து அவ்விந்துப் பாலாகிய அமிழ்தத்தினைப் பருகுவராயின் அவர் பற்றறப் பற்றினாராவர். அவர்க்குப் பிறப்பிற்கு ஏதுவாம் மருள் முற்றும் மாயும். அவ்விந்துவும் அடங்கும். (மாலானது - போகமானது. மாளும் - கட்டுப்படும்.)

1957. விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாசமும் நாதத்தால் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.

பொருள் : தூலவீரியம் விளையும் முறையும், அவ்வீரியம் முதிர்ந்து நிற்பதனால் எய்தும் பயன் முழுதும் அறியாதார் அடையும் அழிவும், அறிந்தவர் விந்துவை அடக்கி ஆள்வதால் அடையும் சிறப்பும், அதனால் பெருகிய நாதமும் அதன் வகையும் ஆகியவற்றை ஆராய்ந்து அறிவோர்க்கு விந்து செயம் ஆகும்.

1958. விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கிய னாலே நயந்தெரிந்து
அந்தமில் பானு அதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.

பொருள் : விந்து என்று சொல்லப் படுகின்ற உயிர்வாழ் வித்தினைப் பொருந்திய மூலத்திடத்து விளங்கும் மூல அனலால் செம்மையுறச் செய்து, கொப்பூழ் முதல் நெஞ்சம் வரையுள்ள ஞாயிற்று மண்டிலத்துக்கு வலப்பால் நாடிவழியாக ஏற்றி, அதன்மேல் நெஞ்சமுதல் நெற்றி வரையுள்ள திங்கள் மண்டிலத்துக்கு இடப்பால் நாடி வழியாக ஏற்றி, அத்திங்கள் மண்டிலச் சார்புறத் தண்மையும் வெண்மையுமிக்க வண்மை அமுதமாகும். (வீசம் - வித்து)

1959. அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள
அமுதப் புனலோடி அங்கியின் மாள
அமுதச் சிவயோகம் ஆதலால் சித்தி
அமுதப் பிலாவனம் ஆங்குறும் யோகிக்கே.

பொருள் : அமுதமாகிய சந்திர மண்டலத்துள்ள விந்துவில் (ஒளியில்) உடற்கண் தோன்றிய விந்து (வீரியம்) கலந்து கெட உடம்பு முழுதும் அமுதப் புனல் பரவி சிவாக்கினியில் இலயிக்க அமுத மயமான சிவபோகம் விளையும் ஆதலால், சிவயோகிக்கு அமுதப் பெருக்கமாகிய சித்தி பொருந்தும். (பிலாவனம் - முழுக்காட்டுதல். திளைத்தல்)

1960. யோகம்அவ் விந்து ஒழியா வகையுணர்ந்து
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்
போகம் சிவபோகம் போகிநற் போகமா
மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே.

பொருள் : யோக நெறியால் விந்து அழியாதவாறு புணர்ந்து, ஆணும் பெண்ணுமாகிய இரு உடலும் கலந்தாலும் விந்து நழுவிப் பெண்ணிடத்துப் போகாமல் அமையும் போகமே சிவபோகமாம். இவ்வாறு நல்ல முறையில் போகத்தில் மாதர் ஆசையைத் தீர்க்க மாட்டார்கள் மூடர்கள். என்னே அறியாமை.

1961. மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து
காதலி னால்விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிராசை கைக்கொண்டே வாடுவர்
காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே.

பொருள் : யோக நெறியில் நிற்பவர் மாதரோடு புணர்ந்தாலும் அவ்விந்துவைக் காதலினால் விடமாட்டார். மாதர்களோ யோகியர்களை உயிர்போலக் கருதி ஆசை கொண்டு வருந்துவார்கள். சொல்லப்புகின் நெடுநாள் பழகிய காதலரைப்போல அப்பொழுதே உயிர்க் காதல் கொள்வர்.

1962. சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்
ஏற்றிய மூலத் தழலை எழுமூட்டி
நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடு
ஆற்றி அமுதம் அருந்தவிந் தாமே.

பொருள் : முன்னே கூறிய சத்தியால் விந்து செயம் உண்டாகும். தூண்டிய மூலாதாரத்திலுள்ள கனலை மேலேறச் செய்து, நாற்புறமும் சிதறிப் போகாவண்ணம் வீணாத்தண்டூடே சப்த உணர்ச்சியில் ஒன்றச் செய்து அமுதம் உண்ண ஒளி மண்டலம் ஆகும்.

1963. விந்துவும் நாதமும் மேலக் கனல்மூல
வந்த அனல் மயிர்க் கால்தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவம்அக மாகவே
விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே.

பொருள் : சிரசின் மேலே விந்துவும் நாதமும் (ஒளியும் ஒலியும்) உயர்ந்து பொருந்த, வந்த மூலக் கனலின் வெப்பம் மயிர்க்கால் தோறும் நிறைய நம் சிந்தனை ஆன்ம போகத்தை விட்டுச் சிவோகம் பாவனையில் நிலைப் பெற, உண்மையான உடம்பில் விந்து (வீரியம்) வற்றிவிடும். (சிவ+அகம் - சிவோகம் - சிவன் நான்)

1964. வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பான்
வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே.

பொருள் : விதையைக் குத்தி அரிசியாக்கி உண்பவன் விதையாலாகிய பயனை அறியமாட்டான். விதையைக் குத்தி உண்ணாமல் விதையை வறுத்து உண்பவன் விதையைக் குத்தி உண்பானைப் போலவே தவிர வேறல்லாதவன். இவ்விரண்டு அல்லாத மூன்றாமவன் விதையைக் குத்தி உண்ணாமல் விதையை விதைத்து விதையின் பயனைப் பெருக்கிக் கொண்டவன் ஆவன்.

1965. அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு
மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு
மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட
வன்னத் திருவிந்து மாயும்கா யத்திலே.

பொருள் : உண்ணும் நல்லுணவால் ஏற்படும் விந்து தன் உடம்பு அகத்தே யோகப் பயிற்சியால் அடங்கும் வகையினைக் கண்டு, உயிர் நெடுநாள் நிலைபெறுமாறு அவ் விந்துவினைக் கீழ் நோக்கவொட்டாது மேலேற்றி மின்னல் போலத் தோன்றி மாயும் இவ்வுடம்பு அகத்து விந்து நாதம் இரண்டினையும் ஒன்று கலந்து உடம்பகத்து ஆக்க. அழகினையுடைய காரண காரியமாகிய இருவகை விந்துவும் உடம்பின்கண் கட்டுப்படும்.

1966. அன்னம் பிராணன்என் றார்க்கும் இருவிந்து
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்ன மாம்உருத் தோன்றும்எண் சித்தியாம்
அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே.

பொருள் : உண்ணும் நல்லுணவால் ஏற்படும் விந்து தன் உடம்பகத்தே யோகப் பயிற்சியால் அடங்கும் வகையினைக் கண்டு உயிர் நெடுநாள் நிலைபெறுமாறு அவ்விந்துவினைக் கீழ்நோக்க ஒட்டாமல் மேலேற்றி மின்னல் போலத் தோன்றி மாயும் இவ்வுடம்பு அகத்து விந்து நாதம் இரண்டினையும் ஒன்று கலந்து உடம்பகத்து ஆக்க, அழகினையுடைய காரண காரியமாகிய இருவகை விந்துவும் உடம்பின்கண் கட்டுப்படும்.

1967. நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவை
சென்று பராசத்தி விந்து சந்தன்னை
ஒன்ற உரைக்க உபதேசம் தானே.

பொருள் : பஞ்சாக்கரத்தில் முதன்மையாக உள்ள சிகாரம் இரு கண்களில் அக்கினித் தன்மையோடு பிரகாசிக்கும் கலையாக, பிரணவத்திலுள்ள மகாரம் தொண்டையைக் கடந்து வெளியான போது அ உ ம மூன்றும் ஒன்றாக, அவை பராசத்தி நிலையமாகிய புருவ நடுவில் சென்று பொருந்துவதால் அமையும் விந்து செயத்தினைப் பொருந்துமாறு உரைப்பதே உபதேசமாகும்.

1968. தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லை
வானே உயர்விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே.

பொருள் : சிவகுரு அருளிச் செய்யும் சிவய நம என்னும் தமிழ்மறை தானே உபதேசமாகும். சிவபெருமான் தன் கலப்பில்லாத ஒரு பொருளும் இல்லை. தூமாயை யினின்றும் வெளிவந்த கலைகள் பதினான்கு என்ப. மானாகிய மனம் சிவசிவ என வழுத்தும் நினைவால் செவ்வை  யுற்றடங்க அதன்பின் இறுப்பாகிய புத்தியும் அடங்க ஆருயிர் சிவத்து அடங்க அதுவே சிவகதியாகும்.

1969. விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே.

பொருள் : விந்து நாதம் என்னும் இரண்டும் கட்டற்று விளைய விளைந்தது உயர்திணை. வினைக்கீடாக ஆணையால் தோன்றிய இயங்குதிணையாகிய பல உயிர்கட்கு உள்ளும் ஆறறிவு நிரம்பப் பெற்றது உயர்திணை. மன்னுயிர்கள் எல்லாவற்றிற்கும் அந்தமும் ஆதியுமாகிய அருந்தமிழ் மந்திரம் இரண்டு. அவை முறையே சிவசிவ நமசிவய என்ப. இம்மந்திரவலியால் விந்துவைக் கட்டுப்படுத்தியவருக்குச் சிவோகமே விளையும். (சிவோகம் - சிவன் திருவடிக்கீழ் உறைந்து பேரின்பம் நுகர்தல்.)

1970. வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப்
பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே.

பொருள் : விந்துவை மீண்டும் முளையாதவாறு வறுக்கும் முறைமையும் எங்கும் உலாவும் மனத்தைத் தடுத்து நிறுத்தலால் அமையும் வெற்றியைத் தரும் முறையும் அதனை உயர்ந்து செல்லுகின்ற சகஸ்ரதளத்தில் கொண்டு செலுத்திப் பக்குவம் செய்கின்ற முறைமையும் அக்கொடிய வினைகளைப் போக்கும் நாளில் வரும். (அத்திப்பழம் - உடல்.)

1971. விந்துவும் நாதமும் மேவியுடன் கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
சுந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்
அங்குஉதி மந்திரம் ஆகுதி யாகுமே.

பொருள் : விந்துவும் நாதமும் அருளால் பொருந்தி யுடன் கூடித் திங்களுடன் தலைப்படுமாயின் ஆயிரஇதழ்த் தாமரைப் பரவெளியினின்று ஊற்றெழும் அமிழ்தம் வந்து வெள்ளம் போன்று இடையறாது பெருகும். அவ்விடத்துத் திருஐந்தெழுத்து மந்திரமே ஆகுதியாகும். (அங்குதி மந்திரம் - அப்போது உண்டாகும் உறுதிப்பாடு.)

1972. மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே.

பொருள் : இணைவிழைச்சாகிய காமத்தை விரும்பினால் மனத்தொடு பொருந்திய நிலையான எண்ணமும் மனம் கூடி உணரும் ஓசையும் என்று சொல்லப்படுகின்ற இக்கூட்டத்தால் எழுந்து சொல்லுகின்ற சொல் கனத்த இரதமாகிய பயன் இல்லதாகும். இணைவிழைச்சு (ஆண் பெண் போக விருப்பம்)

1973. சத்தமும் சத்த மனமும் மனக்கருத்து
ஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர்
மெய்த்துஅறி கின்ற இடம் அறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே.

பொருள் : கண் நாக்கு மூக்குச் செவி மெய் என்னும் அறிதற் கருவி ஐந்தும் ஈண்டுச் சத்தமென்னும் சொல்லாற் பெறப்படும். அவ் ஓசையை வெளிப்படுத்தத் துணைபுரியும் மனமும் அம்மனக்கருத்து ஒத்து அறிகின்ற புலன்களும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்ந்து யார் இயக்க இயங்குகின்றன என்னும் இயற்கை மெய்ம்மையினை அறியார். உண்மைச் சிவன் அருளால்  இவை இயங்குகின்றன என்று அறிய வல்லார்க்கு அவ்வறிவாகவே அத்தனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருள்வன். அதுவே அவனது தூய இருக்கையாகும்.

1974. உரம்அடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய தன்முலை மேவிய கீழ்அங்கி
கருமலை மீமிசை கைக்கீழிற் காலாம்
விரவிய கந்தரம்  மேல்வெளி யாமே.

பொருள் : உடலைத் தாங்கும் உறுதியான பாதம் நிலம் ஆகும். பாத்திலிருந்து கொப்பூழ் வரை நீராகும். கொப்பூழில் இருந்து மார்புவரை தீயாகும் மார்பிலிருந்து தோள்வரை காற்றாகும். கழுத்துக்கு மேல் வான வெளியாகும். இம் முறையாக உடம்பின்கண் ஐம்பெரும் பூதநிலை நிற்பன காண்க.

22. ஆதித்தநிலை - அண்டாதித்தன்

(ஆதித்தன் - சூரியன். அண்டாதித்தன் - அண்டத்தில் விளங்கும் சூரியன். சூரியன் அண்டத்தில் விளங்கும் நிலையைக் கூறுவது.)

1975. செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்கும் தவமே.

பொருள் : சூரியன் முதலான ஒளி உருவுடைய தேவர்கள் வெண்மேகம் சூழ்ந்த மேரு மலையை வலம் வருவதற்குரிய காரணம், ஒளி வடிவான எமது ஈசனாகிய  இறைவனது இரு திருவடிகளின் ஒளி தம் ஒளியாக வேண்டும் என்பதே. கிரி வலம் வந்து வணங்குவதே அவர் செய்யும் தவமாம்.

1976. பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம்
புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன்
இகலற ஏழுல கும்உற வோங்கும்
பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே.

பொருள் : சூரியனே திருமால் ஆவன். உயிர்கள் அனைத்துக்கும் நிலைக்களனாக விளங்கும் புண்ணிய நாதனாகிய சிவனும் ஆவன். பகைமை நீங்கி ஏழுலகங்களும் தழைத்து ஓங்கச் செய்யும் சூரியனே எல்லா உயிர்களுக்கும் முதற் பொருளும் ஆவன்.

1977. ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும்
சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.

பொருள் : ஆதித்தனாகிய சிவஞாயிறைச் சோதியாகிய உலக ஞாயிறு ஆயிரம் திருப்பெயர்களை வாயாரப் புகன்று வழிபட, அஞ்ஞாயிற்றினுள் அளவில் சுடரொளியாய் அவன் விளங்குவன். அச்சிவன் திருப்பெயரை மறையவராயினும் வானவராயினும் காதலால் ஓதுவராயின் சிவனருள் அன்பு செழித்துப் பழுக்கின்றவாறாகும் சிவன் திருப்பெயர் நமசிவய என்ப.

(ஆதித்தன் - சிவசூரியன்; சோதி - அண்டச் சூரியன். ஆதியில் சிவபிரானிடத்தில்)

1978. தானே உலகுக்குத் தத்துவ னாய்நிற்கும்
தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும்
தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும்
தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.

பொருள் : மேலோதிய சிவபெருமா÷ உலகினுக்கு என்றும் ஒரு படித்தாய் நிற்கும் மெய்ப்பொருளாவன். அவனே உலகியல் நடத்தற் பொருட்டுத் தையலாகிய திருவருளாயும், அவனே ஆருயிர்கட்கு இடையறா இன்பருளச் சம்புவாய் நிற்பன். அவனே தண் சுடராகிய திருவருட் பேரொளியாய் நிற்பன். (தத்துவமாய் - மெய்ப்பொருளாய். தையல், சம்பு - சத்தி, சிவம், நேர்மின் ஆற்றல் எதிர்மின் ஆற்றல். தண்சுடர் - அருள் ஒளி)

1979. வவையமுக் கோணம் வட்டம் அறுகோணம்
துலையிரு வட்டம் துய்ய விதம்எட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம்
மலைவுற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே.

பொருள் : வலையம், முக்கோணம், வட்டம், அறுகோணம், துலை, இருவட்டம் ஆகிய அறுவகை அடையாளங்களால் மூலமுதல் ஆறிடங்களுள் அவற்றின் துய்ய தன்மையை ஆராயின், சுழன்று கொண்டிருக்கும் வட்டத்தில் பதினாறு இதழ்த் தாமரை காணப்பெறும் அதன்கண் நெஞ்சத்திடத்து செவ்விதாக ஞாயிறு தோன்றும். இது விசுத்தியில் சூரியன் உதிக்கும் முறை கூறிற்று.

1980. ஆதித்தன் உள்ளி லானமுக் கோணத்தில்
சோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம்
கேத முறுங்கேணி சூரியன் எட்டில்
சோதிதன் நீட்டில் சோடசம் தானே.

பொருள் : மேல்ஓதியவாறு ஞாயிற்றுக்குரிய நிலைக்களனாகிய முக்கோணத்தில் யாவற்றையும் விளக்கித் திகழ்கின்றவன் பகலவன். பகலவன் என்றாலும் சூரியன் என்றாலும் ஒன்றே. அவனது நாலாங்கால் குற்றந்தரும் கேணி போன்றாகும். பகலவனுக்கு உரியன எட்டிதழ்த் தாமரை, பதினாறு இதழ்த் தாமரை என்ப. குற்றந்தரும் கேணி என்பது திங்களின் நாலாங்கால் இறக்கும் தன்மையான் நேருவது (சோடசம் - பதினாறு).

1981. ஆதித்த னோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்குகி லீரே.

பொருள் : சூரியனோடு உலக அறிவு கெட்டது. உலக அறிவைப் பற்றிய சூக்குமை பைசந்தி மத்திமை வைகரியாகிய வாக்குகள் பிதற்றி ஓய்ந்தன. இவ்வண்ணம் அண்ட கோசத்தில்பராசக்தி நிலை பெற்று உணர்த்து கின்ற வேதம் கூறும் அனுபவப் பொருளை நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்கள்.

1982. பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி
யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.

பொருள் : சுவாதிட்டானத்துக்குக் கீழுள்ள மூலாதாரத்தினின்றும் மேல் வருவது சூரியன் வரும் வழியாகும். அது யோகியர் அல்லாத பிறரால் காணமுடியாத அருமையான பொருளாகும். அவ்வாறு யாராலும் காணமுடியாத சூரியன் நீருக்குரிய மணி பூரகத்துக்கும் தீயினுக்குரிய அநாகதத்துக்கும் இடையில் உதிப்பவன் ஆவான்.

1983. மண்ணை இடந்துஅதின் கீழொடும்
விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்
கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே.

பொருள் : முன்னர்க் கூறியவாறு அச்சூரியன் மண்ணீரலில் இருந்து சுவாதிட்டானம் வந்து அங்கு அதைப் பிளந்து மூலாதாரம் சென்று அங்கிருந்து ஆகாயக் கூறான ஆஞ்ஞையில் பிளந்து உடலுக்கு வெளியே சோதியாய் நின்றிடும். இருகண்பார்வையும் கொண்ட ஆஞ்ஞையில் களிப்பூட்டுகின்ற ஆனந்தத்தால் நாம் தியானிக்கும் உரிமைக்கு உடனாய் நின்றனன். பூகோள அறிவின்படி பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் இரவு பகல் தோன்றுவதும் சூரியனைப்பூமி சுற்றி வருவதால் ஓர் ஆண்டு ஆவதும் நாம் படிக்கிறோம். (அவ்வாறு பொருள் கொள்ளினும் அமையும்.)

1984. பாரை இடந்து பகலோன் வரும்வழி
யாரும் அறியார் அருங்கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழ்என்பர்
ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே.

பொருள் : உலகம் ஞாயிற்றைச் சுற்றி வருகின்றது. ஆனால் ஞாயிறு உலகைச் சுற்றி வருவதாகச் கூறுவோர் உண்மை உணராத வராவர். அவ்வுண்மையினை நுண்ணுணர்வினரே உணர்வர். தாழ்ந்த நிலையினர் பொருட்டுச் செய்யப்பட்ட நூலையே உயர்ந்த நூலாகக் கருதிச் சிலர் ஞாயிறு திருமலையினைச் சுற்றி வருகிற தென்பர். உயர்ந்தோர் உச்சித் துளைவாயிலாக ஞாயிற்றைக் காணும் முறையிற் காண்பர். ஞாயிற்றைப் பகலவன் எனவும் பகலோன் எனவும் கூறுவர். (திரன் - சிவபெருமான். ஊரை - ஈசன் இருக்கும் புருவமத்தி ; உச்சித் தாமரை)

23. பிண்டாதித்தன்

(பிண்டாதித்தன் - உடம்பில் விளங்கும் ஆதித்தன்.)

1985. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.

பொருள் : நிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தல் ஆகிய செயல்களைச் செய்யும் போது இளம் யானை வடிவினனாகிய பிரணவக் கடவுள் என்னுடைய கருத்தில் எப்போதும் இருந்தனன். இதனால் மலங்களைச் செற்று வீணாத்தண்டில் உணர்வு கீழ் நோக்காமல் மேல் நோக்கி எழ, வெல்லுதலைச் செய்கின்ற விரிந்த கிரணங்களையுடைய சூரியன் வெளிப்படுவன்.

1986. ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்த
னோடே அடங்குகின் றாரே.

பொருள் : சூரியன் மேலெழுந்து சென்று அடங்கும் இடமாகிய ஈசான திக்கைக் கண்டு, அங்கிருந்து மேற்சென்று ஊர்த்துவ சகஸ்ரதளத்தை அடைந்து அங்குள்ள ஒளியில் நிற்க வல்லவரே தம்மை உணர்ந்தவராவர். இவ்வுண்மையை உணராது பிதற்றும் உலகவர் எல்லாம், கீழுள்ள சூரியனை மேலெழச் செய்ய வகை அறியாது மாய்ந்து ஒழிபவரே யாவர்.

1987. உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து
சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை
சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு
உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.

பொருள் : சூரியன் மூலாதாரத்திலிருந்து உருவிக்கொண்டு புறப்பட்டு உலகமாகிய உடலை வலம் வந்து, சொருகிக் கிடக்கும் இடமாகிய ஈசான திக்கை அறிவார் யாரும் இல்லை. அங்ஙனம் அறிகின்ற அறிவுடையோர்க்கு என் உள்ளத்திலுள்ள அன்பு அவர்பால் உருகி எழும்.

24. மன ஆதித்தன் (மண ஆதித்தன் - மன மண்டலத்தில் விளங்கும் சூரியன்.)

1988. எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்
எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப
விரிகதிர் உள்ளே இயங்கும்என ஆவி
ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே.

பொருள் : வெப்பக் கதிரை வீசும் ஞாயிறும் தட்பக்கதிரை வீசும் திங்களும் மேல் கீழாய் நேரொக்கத் தோன்றும் காலம் உவா எனப்படும் உவா- முழுநிலா, அங்ஙனம் விரிந்து எறிக்கும் கதிரினுள் ஆருயிர் இயங்கும். (அமாவாசைக்கும் உவா என்று பெயர்.)

1989. சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை
அந்த இரண்டு உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே.

பொருள் : சந்திரகலை என்று சொல்லப்பெறும் இடகலையும் சூரிய கலையென்று சொல்லப்பெறும் வலப்பால் கலையும் முறையாக இயங்கிக் கொண்டிருப்பின்  நற்றவமாம். சிவ பூசைக்கு உற்ற அமைவாம் என்க. சூரிய கலையின்கண் சந்திரகலை பொருந்தி நிகழுங்காலம். பூசனைப் பொழுதாம் என்க. அக்கனல் நடு நாடி வழியாகச் செல்லுங்கால் சிந்தை தெளிவுண்டாகும். இவரே சித்தம் சிவமாக்கப் பெற்ற திருவினர். இவரே சிவமாய் அமர்ந்திருப்பார்.

1990. ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி
ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர்
ஆகும் அருக்கன் அனல்மதியோடுஒன்ற
ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே.

பொருள் : பிங்கலை யாகிய வலப்பால் உயிர்ப்பு எனப்படும் ஞாயிறும் அனலாகிய தீயும், திங்களாகிய இடப்பால் உயிர்ப்பும் கலையெனப்படும் நடுநாடியும் ஆகிய நான்கும் கலை என்று அழைக்கப்படும். அருக்கனாகிய வலப்பால் உயிர்ப்பும், மூலத்தீயும், திங்களாகிய இடப்பால் உயிர்ப்பும் நடு நாடிக்கண் கூடிப் பொருந்த மேலோதிய நிறைநிலா ஆகும் என்று அறிக. அகத்தே காணும் நிறைநிலா என்பது திங்கள் அமிழ்தத் தீஞ்சுவை வெண்ணிலா என்க. இதற்கு இடம் நெற்றிப் புருவம் என்க.

1991. ஈர்அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி
ஓர் அண்டத்  தார்க்கும் உணரா உணர்வது
பேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்றது
ஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே.

பொருள் : அனல் மண்டலத்தையும் சூரிய மண்டலத்தையும் கடந்து விளங்கிய சந்திர மண்டல ஒளி ஓர் அண்டம் என்ற அனல் மண்டலத்தில்  காம உணர்வோடு வாழும் மக்கள் ஒருவருக்கும் புலப்படாததாகும். சிரசுக்கும் மேல் விளங்கும் பிரமாண்டத்தில் உயர்ந்து செல்லும் ஒளியாய் நின்றவர் யாவர் ? அந்நிலையை அடைந்த அவரே அவ்வொளியை அறியத்தக்கவர் ஆவர்.

1992. ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்
ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லை
முன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார்
இன்பம் இலார்இருள் சூழநின் றாரே.

பொருள் : மனமண்டலத்துள் சூரியன் பிருதிவியாதி ஒன்பது நிலைகளிலும் பொருந்தி உடம்பாகிய உலகத்தை வலம் வரும். இவ்வகையான ஒன்பது தத்துவங்களும் ஈசனது சத்தி நிலையாகும் என்பதை அறிபவர் இல்லை. முன்னர் இவ்வகையான ஒன்பதிலும் ஆன்மா பொருந்தி உள்ளதாயினும் சிவத்தின் அருள் இல்லாதவர் இன்பம் இல்லாதவராய் இருள் சூழ்ந்த அண்ட ஆகாயத்தைப் பெற்றுள்ளனர். (ஒன்பது - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், அக்கினி, தாரகை.)

25. ஞானாதித்தன் (ஞானித்தன் - ஞானசூரியன்)

1993. விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்து
அந்த அபரம் பரநாத மாகியே
வந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்து
உந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே.

பொருள் : விந்து ஒன்றே தூலமாகிய அபரம் என்றும் சூக்குமமாகிய பரம் என்றும் இரண்டாக விரிந்து, அந்தத் தூலவிந்துவே மேல் நோக்கியபோது பரநாதமாகி மேலான நிவிருத்தியாதி பஞ்ச கலைகளில் வந்து ஞான சூரியனின் அருணோதயம் என்று சொல்லுமாறு உள்ளத்தில் மேலெழுந்து தோன்றும். விந்துவே தூலமாகிய அபரநிலையில் வீரியம் என்றும் சூக்கும மாகிய பரநிலையில் ஒளி என்றும் ஆகிறது. (அருணோதயம் - சூரியனது தோற்றம்.)

1994. உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்
தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால்
வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்கு
உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே.

பொருள் : உள்ளமாகிய மன மண்டலத்தில் அருணோதயம் போன்று எழுகின்ற ஓசையே தெளிந்த பரநாதத்தின் செயலாதலின் வள்ளலாகிய சிவனருளால் வைகரியாதி வாக்குகள் பரவிந்துவோடு கூடிப் பஞ்ச கலைகளிலிருந்து தோன்றும் உள்ளத்து எழுகின்ற நாதமே அருணோதயமாகும்.

1995. தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும்
மூவர் பிரான்என முன்னொரு காலத்து
நால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும்
மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே.

பொருள் : தேவ தேவனாகிய சிவன் சுற்றியுள்ள எண்திசைகளிலும் மேல் கீழ் என்ற இரண்டு பக்கங்களிலுமாகப் பத்துத் திசைகளிலும் வெளிப்படுவான். பழமையான காலத்தில் இவனை மூவர் பிரான் என்றும் பிற்காலத்தில் வந்தவர் பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன் என்ற நால்வர்க்கும் நடு நாயகமாய் உள்ளவன் என்றும் உரைத்தனர். ஆனால் வானோர்கள் இவனையே தங்கள் தலைவன் என்று கூறுவர். (மூவர் பிரான் என்றது வேதகாலத்திலும், நால்வர் பிரான் என்றது ஆகம காலத்திலும் ஆம்.)

1996. பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை
மையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறு
செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்
கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே.

பொருள் : புவனங்கள் அனைத்துக்கும் தலைவனும் எந்தையுமாகிய சிவம் கற்பனைப்பொருள் அல்ல உண்மையில் உள்ளவனேதான். மைபோன்ற இருளை நீக்குகின்ற சந்திரன் அக்கினி சூரியன் ஆகியவை அண்டகோசத்தில் கீழ் முகமாகச் செயல்பட்டபோது  உண்டான இருளை நீக்குகின்ற ஞானச் செல்வனாகிய சதாசிவன் என்னுடைய வீணாத் தண்டின் இருளை அகற்றக் கீழிருந்து மேல்வரை கலந்திருந்தான்.

1997. தனிச்சுடர் எற்றித் தயங்கிருள் நீங்க
அனித்திடும் மேலை அருங்கனி ஊறல்
கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்
நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.

பொருள் : ஒப்பற்ற சிவ ஒளியானது நிறைந்த அண்டகோசஇருளை நீங்கச் செய்து, பெறுதற்குரிய கனியினின்றும் ஊறுவதாகிய தேன்போலும் இனிய அமுதம் சுரக்கச் செய்யும். கனிந்த சுடர் போன்று நின்று கயிலாயபதி நிறைந்த சுடர்போல் என சிரசின் மேல் விளங்கும் தன்மையுமாவான். (அளித்திடும் என்பது எதுகை நோக்கி அனித்திடும் என்றாயிற்று.)

1998. நேரறி வாக நிரம்பிய பேரொளி
போரறி யாது புவனங்கள் போய்வரும்
தேரறி யாத திசையொளி யாயிடும்
ஆரறி வாரிது நாயக மாமே.

பொருள் : அனுபவ ஞான வடிவாக ஆன்மாவினிடம் நிரம்பியுள்ள பேரொளியாகிய பிழம்பு (சிவம்) தங்கு தடையின்றி எல்லாப்  புவனங்களிலும் வியாபித்து நிற்கும். சூரிய ஒளி படராத இடத்திலும் இவ்வொளி படர்ந்து நிற்கும். இதுவே அனைத்துக்கும் தலையானது என்பதை யார் அறிவார்.

1999. மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்
கண்டிடத் துள்ளே கதிரொளி ஆயிடும்
சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும்
நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.

பொருள் : மண்தலமாகிய நிலவுலகத்துள்ளே விளங்கித் தோன்றும் ஒளியுடையது ஞாயிறு. இதுவே மூலத்திடத்து விளங்கும் ஞாயிறு வாகும். அதுவே மிடற்றினிடம் என்று சொல்லப்படும் விசுத்தியின் கண் கதிர்காலும் ஒளியாய்த் திகழும். அவ்வொளி எல்லாத் திசைகளிலும் உலாவி விளங்கும். திருவருளால் நின்ற இடத்திலே நின்று திருவடி உணர்வால் எல்லாம் காண்பார்க்கு இவ் உண்மை எளிதிற் புலனாம்.

2000. நாபிக்கண் நாசிநயன நடுவினும்
தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத்
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரு மாக உணர்ந்திருந் தாரே.

பொருள் : ஆருயிர் உறையும் சீரிய உலகத்துக் கொப்பூழ், கண், நாசி, புருவ, நடு, உச்சித்துளை என்று சொல்லப்படும் ஐந்திடத்தும் உயிருக்கும் உயிராய் அறிவுக்கு அறிவாய் ஒளி கொடுத்தருளும் சிவ பெருமானைத் தூமாயையின்கண் வீற்றிருக்கும் அரன், அரி, அயன் என்று சொல்லப்படும் மூவருமாக மெய்யுணர்ந்தோர் உணர்ந்திருந்தார் என்க. (தூபி - உச்சித்துளை.)

26. சிவாதித்தன் (சிவாதித்தன் - சிவசூரியன்)

2001. அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்
சென்றிடு ஞானச் சிவப்பிர காசத்தால்
ஒன்றும் இருசட ராம்அரு ணோதயம்
துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.

பொருள் : சிவ ஒளிக்கு மாறுபட்ட பாச இருளும் அதனால் விளையும் அஞ்ஞானமும், சிவம் பிரகாசித்தபோது நீங்கி அதனுள் ஒடுங்கும். பெரிய சூரியன் எழுச்சிக்கு முன்னுள்ள அருணோதயத்தால் நெருங்கிய இருள் விலகுதல் போலத் தொலைந்தது; சிவசூரியன்முன் அஞ்ஞானத்தின் ஆற்றல் குன்றியது.

2002. கடம்கடம் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே.

பொருள் : நீருள்ள குடங்கள் தோறும் சூரியன் தோன்றினாலும் அவன் அக்குடத்துள் அடங்குமாறு மூடி வைத்தாலும் அவற்றில் அடங்கமாட்டான். அத்தன்மைபோல, நீலகண்டப் பெருமான் விரும்பி எழுந்தருளிய உயிரில் அடங்கியிருந்தும் அத்தன்மையதாகும். சிவசூரியன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

2003. தானே விரிசுடர் மூன்றும்ஒன் றாய்நிற்கும்
தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்
தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன்
தானே வெளியொளி தானிருட் டாமே.

பொருள் : சிவமாகிய தானே விரிந்த கிரணங்களையுடைய சூரியன், சந்திரன், அக்கினியாகிய மூன்றும் இயைந்த ஓர் ஒளியாக விளங்கும், தன்மையை நிரூபிக்கும். தானே அறிவற்ற உடலில் அறிவுடைய உயிரிலும் பிறப்பின்றிக் கலந்துள்ளான். தானே ஆகாயமாயும் அதன் ஒளியாயும் இருப்பதோடு இருளாயும் உள்ளான்.

2004. தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும்
வையம் புனல்அனல் மாருதம் வானகம்
சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்
ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே.

பொருள் : தெய்வத் தன்மை பொருந்திய ஒளியுடன் கூடிய சிவாக்கினியும், சூரியனும், சந்திரனும், பூமியும், நீரும், நெருப்பும், காற்றும், விண்ணும் ஆகிய எட்டும், சிவன் உறையும் திருமேனிகளாம். இத்திருமேனிகளைத் தாங்கியிருக்கின்ற பல உயிர்களும் சத்தியே சாதர் முதலிய ஐவர்க்கும் செறிவுடைய இருதயம் முதலிய ஆறு அங்கங்களுக்கும் இடமாகும்.

(ஐவர் (பஞ்சப்பிரமம்) - சத்தியோ சாதர், வாமதேவர், அகோரர், தற்புருடர், ஈசானர் ஆகிய ஐவர்; ஆறு அங்கங்களாவன; இருதயம், சிரசு, சிகை, கவசம், நேத்திரம், அஸ்திரம்.)

27. பசு இலக்கணம் (பிராணன்)

(பசு என்றால் கட்டப்பட்டது என்பது பொருள்)

2005. உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
பன்னு மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே.

பொருள் : (தியானித்த அளவில் உணரப்படுகின்ற ஏக நாயகனை, பன்னிப் பன்னிப் பேசும் வேதங்கள் இடைவிடாது சொல்லிக் கொண்டிருக்கும் பரம் பொருளை, என் உள்ளத்து விளங்கும் தூண்டா விளக்கானவனை அம்ச ரூபன் என்று அறிந்து கொண்டேன்.)

2006. அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில்
துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம்
தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால்
பின்ன மடஅன்னம் பேறணு காதே.

பொருள் : சீவ வாழ்வில் இரண்டு அன்னங்கள் உள்ளன. இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாதனவாம். அவற்றுள் தன்னிலையில் நிற்கும் சிவமாகிய அன்னம் தனக்கு வேறாயது என்று எண்ணினால் வேறுபட்ட அறியாமையோடு கூடிய சீவனாகிய அன்னத்துக்கு என்றும் சிவப்பேறு கிட்டாதாகும். (ஆற்றங்கரை - உலகவாழ்வு, அன்னம் இரண்டு. சிவன், சீவன் பேறணுகாது - தான்வேறு என்று எண்ணிக் கொண்டு இருக்கும் அளவும் முத்தி அடையாது.)

28. புருடன்

2007. வைகரி யாதியும் மாயா மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச்
செய்கரி ஈசன் அனாதியே செய்ததே.

பொருள் : வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை ஆகிய வாக்குகளும், மாயை, முதலான மலங்களும், பொய்யான போகங்களை நுகர்விக்கு புருடன் முதலான வித்தியா தத்துவமும், பிறப்பை ஒழிக்கும் ஞானமும் ஆகிய இவற்றைச் சாட்சியாயுள்ள ஈசன் ஆன்மாக்கள் செயற்பட்டு, உய்தி பெறும் பொருட்டு அனாதியே அமைத்தருளியதாம்.

2008. அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

பொருள் : அணுவுக்கும் அணுவாயுள்ளதை ஆயிரம் கூறு செய்து அவ் ஆயிரத்தில் ஒரு கூற்றினை நெருங்க வல்லார்க்கு அணுவுக்கு அணுவானவனும் ஆதிப் பிரானும், மிகச் சூக்குமம் ஆனவனும், ஆகிய பரம்பொருளை அடையலும் ஆகும். (அணு - ஆன்மா; நுண்மை, ஆயிரம் கூறிடலாவது நுணுகி ஆராய்தல். ஆன்மாவில் விளங்கும் சிவத்தை நுணுகி ஆராய்வார்க்கு நெருங்குதலும் கூடும்.)

2009. படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய
இடர்கொண்ட பாச இருளற ஓட்டி
நடர் கொண்ட நல்வழி நாடலும் ஆமே.

பொருள் : விழுது ஊன்றி விரிவாய்ப் படர்ந்திருக்கும் ஆலமரத்தின் தன்மை முற்றும் அதன் வித்தின்கண் அடங்கியிருப்பது போல், திருவருள் ஒளியினைக் கொண்டு அணுவாகிய ஆருயிர் உய்யச் செந்நெறியைத் தன் திருவுள்ளத்தில் அமைத்தனன் சிவன் அத்திருவருளின் துணையால் அந் நன்னெறியிற் சென்று எந்நாளும்  துன்பத்தை மிகுவிக்கும் பாச இருளை முற்றாக ஓட்டுதல் வேண்டும். ஓட்டி அகத்தும் புறத்தும் ஐந்தொழிற்கூத்து இயற்றியருளும் திருவடிசேர் திருநெறியை நாடுவது நாடற்கரிய பெரு நன்மையாகும். (நடர் - அம்பலக் கூத்தர்.)

2010. அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்று கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே.

பொருள் : மிகவும் நுண்மையாகிய அணுவாம் உயிரினுள் சிவபெருமானும், அச்சிவபெருமான் இடமாக ஆருயிரும் வேறு அறக் கலந்து நிற்கும் கலப்புச் சொல்லொணாது என்க. ஆயினும் திருவருட் கண்ணால் அஃது உணர்தல் வேண்டும். அங்ஙனம் உணராதார். செந்நெறிக்குச் சேயராவர். சிவபெருமான் ஒப்பில்லாதவன். அவன் எங்கும் எல்லையின்றிக் கலந்து நிற்கின்றான். அம்முறையால் அவனே இயங்கு திணையும் நிலைத்திணையும் ஆகிய எல்லாப் பொருள்களும் என்று நல்லாரால் சொல்லப் படுகின்றனன். (கணு - பேதம், தணிவு எல்லை.)

29. சீவன்

2011. மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே.

பொருள் : உடலின்கண் பொருந்திய சீவனது வடிவத்தை அளவிட்டுச் சொன்னால் பசுவின் மயிர் ஒன்றை நூறாகப் பிளந்து அதிலுள்ள ஒன்றை ஆயிரம் கூறாக்கினால் உயிரின் வடிவம் பசுவினது உரோமத்தை ஓர் இலட்சம் கூறிட்டதற்கு ஒப்பு ஆகும்.

2012. ஏனோர் பெருமையன் ஆயினும் எம்மிறை
ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.

பொருள் : எம் இறைவன் ஏனைய தேவர்களைவிடப் பெருமை உடையவன் ஆயினும் தனது எளிவந்த கருணையால் உடம்பினுள் உயிராகக் கலந்தும் விளங்குவான். தேவர்களால் அளவிட்டு அறியமுடியாத தேவதேவன் ஆயினும் ஆன்மா தான் செய்யும் தவத்தின் அளவாகத் தானே அறியும்.

2013. உண்டு தெளிவன் உரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணமில்லை யாயினும்
பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்
கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே.

பொருள் : யோகத்தைப் பயின்று தெளிந்த குரு உபதேசம் செய்ய யோகத்தில் பொருந்திப் பயில்வதற்குள்ள நற்பண்புகள் இல்லாதவராயினும், பழைய வாசனையால் பயின்ற சிவன் பின்னை அனுபவத்தைத் தம்முள்ளே பெற்றுச் சிவரூபம் பெறுவர். குரு உபதேசத்தால் பழைய வாசனை தூண்டப் பெற்று இப்பிறவியில் யோகசித்தி உண்டாகும்.

2014. மாயா உபாதி வசத்தாகும் சேதனத்து
ஆய குருஅரு ளாலே அதில்தூண்ட
ஓயும் உபாதியோடு ஒன்றின்ஒன் றாதுஉயிர்
ஆய துரியம் புகுந்தறி வாகவே.

பொருள் : உயிர் மாயையின் காரியமாகிய துன்பங்களில் தோய்ந்தும் தானும் அதன் வசமாகும். ஞானமே வடிவாக விளங்கும் குருவின் அருளால் சேதனத்தில் தூண்ட மாயா உபாதிகள் ஒன்றினும் பொருந்தாது உயிரின் செயல் ஒடுங்கும். பயிற்சி வசத்தால் துரிய நிலையில் புகுந்த ஞானமே வடிவாக விளங்கும். மாயா உபாதி - மாயா காரியமான தனு கரண புவன போகங்களால் உண்டாகும் துன்பம். குருவருள் - சிவோகம் பாவனை செய்து சிவப்பேறு எய்திய ஞானாசாரியன் திருவருள்; குரு அருளால் மாயா உபாதிகள் நீங்கி ஞானம் உண்டாகும்.

30. பசு (பசு - கட்டப்பட்ட உயிர்)

2015. கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போலும்
மற்றைப் பசுக்கள் வறன்பசு தானே.

பொருள் : வேத ஆகமங்களை நிரம்பக் கற்ற உயிர்கள் பொருள் அனுபவர் இன்றிப் புலம்பிக் கொண்டு திரிந்தாலும், அரச செல்வாக்கைப் பெற்றுள்ள உயிர்கள் தமக்குரிய விருது கட்டிக்கொண்டு தெரிந்தவர் போலத் திரிந்தாலும், முதிர்ந்த அனுபவம் உடையவரது ஒரு சிறிது ஞானமே உலகத்துக்குப் பயன் தரும். மற்றையோரது வாய்வேதாந்தம் வறட்டுப் பசுபோல் உலகுக்குப் பயன்படாது. (பசுக்கள் - வினையினால் கட்டுண்ட உயிர்கள். கொற்றம் - அரசு. குறி - அரசு மரியாதைக்கு உரிய அடையாளம். பால் - ஞானம் வாய் வேதாந்தம் பேசுவோர் உலகுக்குப் பயன்படார். )

2016. கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென்
எல்லைக் கடப்பித்து இறைவன் அடிகூட்டி
வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே.

பொருள் : ஐம்புலக் காட்டினுள் தம்புலம் அறியாது மேயும் பசுக்களாகிய ஆருயிர்களை வருமாறு செய்வதன்றி வேறென் செய்வது ? திருவருள் உடனாய் நின்று உடல், கலன் உலகு ஊண் முதலியவற்றின்கண் வைத்துள்ள பற்றின் எல்லையினைக் கடப்பித்துத் திவடியிற்கூட்டி இன்புறுவிக்கும் அச்செயலே நல்லதாகிய வல்ல அருஞ்செயல் செய்வதாகும். அத்திருவருள் அவ்வாறு செய்தருளத் திருவுள்ளங் கொண்ட பின்புதான் பண்படா விளை நிலமாகிய ஐம்புலக் கொல்லையினை இவ்வாறு செய்யும் திருக்குறிப்பினை ஆருயிர்கள் உணர்தல்கூடும். அதற்குமுன் ஏதும் அறியா இயல்பினவாகும்.

31. போதன் (போதன் - அறிஞன், சிவஞானத்தை அனுபவத்தில் கண்டவன்.)

2017. சீவன் எனச்சிவன் என்னவே றில்லை
சீவ னார்சிவ னாரை அறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே.

பொருள் : சீவன் எனவும் சிவனெனவும் இரு பொருளாக இருக்கவில்லை. சீவனார் சீவத் தன்மையில் உள்ளவரையில் சிவனை அறிய முடியாது. சீவனார் சிவத்தன்மை மாறி அகண்ட ஞானம் பெற்ற பிறகு சீவன் என்ற பெயரைப் பெறாது சிவம் என்ற பேரைப் பெற்று விளங்கும்.

2018. குணவிளக் காகிய கூத்தப் பிரானும்
மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்
பணவிளக் காகிய பல்தலை நாகம்
கணவிளக் காகிய கண்காணி யாகுமே.

பொருள் : அறிவொளியாய் விளங்கும் நடராசப் பெருமானும் மனத்தை விளக்காகக் கொண்டு வாழ்கின்ற உயிர்களுக்கு எல்லாம் பல்தலை நாகத்தின் படத்தில் உள்ள நாகரத்தினம் போல் உயிர்க்கூட்டங்களுக்கு விளக்கம் தரும் மேற்பார்வையாளர் ஆகும். பணம் - படம். படத்திலுள்ள நாகரத்தினம் பாம்புக்கு பக்குவம் வந்தபோது ஒளியைத் தரும். அது போன்று கூத்தப் பெருமான் பக்குவம் வந்தபோது ஒளியை நல்குவான்.

2019. அறிவாய் அறியாமை நீங்கி யவனே
பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன்
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்
செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே.

பொருள் : சிவத்தை (அகண்ட அறிவை) விடயமாகக் கொண்டு தம் அறியாமை நீங்கினவனே பஞ்சேந்திரியங்களால் கூட்டியறியும் அறிவை விடுத்து எங்கெங்கும் உள்ளவற்றை அங்கு அங்கு இருந்து காணும் அறிவைப் பெற்றவன் ஆவான். அவனே அறிவுருவாய் எல்லா உயிர்களிடத்தும் அறிவாய் நின்று அறிவன்; அறிவில் பொருந்தி நின்ற அச்சீவனும் ஆவான்.

2020. ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்
ஆறாறுக்கு அப்புறம் ஆகிநின் றானே.

பொருள் : அருஞ்சைவர் தத்துவம் முப்பத்தாறும் இன்னின்ன என்னும் மெய்ம்மை அறியாதிருந்த அடியேனுக்கு மிகவும் சிறந்த நந்தி யெம்பெருமான் திருவருளால் அறிவிற்கு அறிவாய் நின்று அறிவித்தருளினன். அம்முப்பத்தாறின் தன்மைகளைத் திருவருளால் அறிந்தபின் அம்முப்பத்தாறு மெய்களுக்கும் அப்பால் நின்றருள்பவன் சிவபெருமான் ஆவன் என்னும் மெய்ம்மை புலப்பட்டது என்க.

2021. சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார்
அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார்
தவமான செய்து தலைப்பறி கின்றார்
நவமான தத்துவம் நாடகி லாரே.

பொருள் : சிவத்தோடு பிரிப்பின்றி விளங்கும் திருவருளில் நின்றறிந்து தெளியமாட்டார் கேட்டினைச் செய்யும் ஐம் மலங்களும் எவ்விதம் தம்மிடம் பொருந்துகின்றன என்பதையும் அறியமாட்டார். உடம்பை வருத்தித் தவங்கள் பல செய்தங்கள் அறிவைப் பாழாக்குகின்றனர். தோழமை நெறியில் விளங்கும் சிவத்தை ஆராயமாட்டார். என்னே அறியாமை ! சிவத்தின் அருளைத் தோழமை நெறி நின்று நாட வேண்டும்.

2022. நாடோறும் ஈசன் நடத்தும் தொழில்உள்ளார்
நாடோறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடோறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்
நாடோறும் நாடார்கள் நாள்வினை யாளரே.

பொருள் : நாளும் வினை செய்வோர் நாள்தோறும் இறைவன் உயிர்களாகிய நமக்குச் செய்யும் அருட்செயல்களை எண்ணார் நம் வினைக்கேற்ப இன்ப துன்பங்களை நளினமாக அவன் ஊட்டுவதையும் அறியார். இறைவன் நல்லவர்களுக்கே நாள்தோறும் அருள் வழங்குதலால் வினை செய்பவர்கள் நாள்தோறும் இதை எண்ண மாட்டார்கள். இறைவன் செய்யும் உபகாரத்தை நல்லறிஞர் உணர்வர்.

32. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை

2023. ஆக மதத்தன ஐந்து களிறுன
ஆக மதத்தறி யோடுஅணை கின்றில
பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றுஅறி யோமே.

பொருள் : மிக்க மதம் பொருந்திய ஐந்து இந்திரியங்களாகிய யானைகள் உள்ளன. அவை உடலில் களிப்பினை நல்கும் சந்திர மண்டலமாகிய கட்டுத்தறியில் அணைந்து பொருந்துவதில்லை. இவற்றை அடக்க முயலும் ஆன்மாவாகிய பாகனும் இளைத்து ஐம்பொறிகளின் வல்லமையும் குறைந்தபிறகு யோக நெறியால் திருந்துதல் என்பதை நான் அறியவில்லை. (களிறு - இந்திரியங்கள். இந்திரியங்கள் செம்மையாய் இருக்கும்போதே யோகம் செய்தல் வேண்டும். இளைத்தபின் யோகம் சித்தியாது.)

2024. கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன்
திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா
எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழிநட வாதே.

பொருள் : கருத்துடைய நல்ல நூல்களைப் பலகாலும் கற்றுணர்ந்து பிராணனது இயக்கத்தை ஆன்மாவாகிய பாகன் மாற்றித் திருத்தலும், வேகமாகப் பாய்கின்ற இந்திரியங்களாகிய குதிரைகள் திகைத்து நிற்குமே தவிர ஏவியவுடன் பாய்ந்து செல்ல மாட்டா. பிடரியின்கண் நன்கு ஏறியிருந்து மிகவும் தூண்டி நடத்தினாலும் அக் குதிரைகள் முன்னே சென்று வழிச் செல்லமாட்டா. யோகப் பயிற்சியின்றி ஐம் புலன்களை அடக்குவது முடியாததொன்று யானையும் வருத்தம் உறாமல் வழிக்கு வருவதில்லை.

2025. புலம்ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்
நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து
குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம்வந்து போம்வழி ஒன்பது தானே.

பொருள் : ஐம்பூதங்களாகிய இடங்கள் ஐந்து ஞானேந்திரியங்களாகிய பறவைகள் ஐந்து. அவை சென்று பற்றும் தன் மாத்திரைகளாகிய புலன்கள் ஐந்து கன்மேந்திரியங்கள் ஐந்து. அவற்றின் செயல்களாகிய வசனாதிகளும் ஐந்து மாயையாகிய குலம் ஒன்று, அறிவாகிய கோலைக் கொண்டு அவற்றைச் செலுத்துகின்ற ஆன்மாவாகிய மேய்ப்பான் ஒருவன் உண்டு. அவன் வருந்திப் போகும்வழி உடம்பினுள் ஒன்பதாகும்.

2026. அஞ்சுள சிங்கம் அடவியல் வாழ்வன
அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும்
அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே.

பொருள் : உடம்பாகிய காட்டில் இந்திரியங்களாகிய சிங்கங்கள் ஐந்துள்ளன. அவ் ஐந்தும் புறம் சென்று புறப்பொருளைப்பற்றி அகம் வந்து சேரும் விஷயங்களைப் பற்றி நிற்கும் மனத்தையும் விஷயங்களில் ஈடுபடும் கருவிகளையும் செல்லவொட்டாது அடக்கி நிறுத்தி விட்டால் தவறாது இறைவனை அடைதலும் ஆகும். மனம் பொறிவழி செல்லாது தடுத்துவிட்டால் இறைவனை அடையலாம். சிங்கம் இந்திரியம், உகிர் - நகம் (செல்லுதல்) எயிறு - பல் (பற்றுதல்)

2027. ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்
ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்து சினத்தொடே நின்றிடில்
ஐவர்க்கு சிறைஇறுத்து ஆற்றகி லோமே.

பொருள் : ஐந்து இந்திரியங்களாகிய அமைச்சரும் அவர்கட்கு அடங்கித் தொண்ணூற்றாறு தத்துவங்களாகிய ஏவலாளரும் உள்ளனர். அந்த அமைச்சர் ஐவரும் அவர்வழி வந்த தத்துவக் கூட்டமாகிய பிள்ளைகளும் நம்மை ஆளக் கருதுவார்கள். அந்த ஐவரும் ஐவகையான தாபத்தோடே செயல்படின் நம்மால் அந்த ஐவருக்கும் கையுறை கொடுத்துச் சமாளிக்க முடியாது.

2028. சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்
சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள
வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்லநின் றோடும் குதிரைஒத் தேனே.

பொருள் : தினந்தோறும் சுயம் சோதியாகப் பிரகாசிக்கும் சிவத்தைத் தோத்திரிக்கும் வன்மையுடையேன் அல்லேன். திருவருள் அம்மையும் அங்கிருப்பதைச் சொல்ல வல்லேன் அல்லேன். இந்திரியங்களையும் அவற்றின் வயப்பட்டு அலையும் மனத்தையும் வெல்லும் ஆற்றல் உடையேன் அல்லேன். கொல்லுவதற்குக் கொண்டு செல்லும் குதிரைமேல் ஏறியவனை ஒத்தேன்.

2029. எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறை
எண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும்
எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்
எண்ணிலி இல்லதோர் இன்பமது ஆமே.

பொருள் : இவ்வுடல் அளவிட முடியாத தொளைகளை உடையதாகும். மனமானது கணக்கற்ற தொளைகளையுடைய உடல் இன்பத்தைத் தேடி ஓடுமாயின் குற்றம் விளையும். உயிரானது மனவழிச் சென்று கணக்கற்ற தொளைகளையுடைய உடல் இன்பத்தை நாடாமல் இருக்குமாயின் எண்ணமற்ற உள்ளத்தில் ஓர் இன்பம் உண்டாகி நிற்கும். (மனம் பொறிவழி நாடாமல் இருக்குமாயின் எண்ணமிலா இன்பம் எய்தலாம்.)

2030. விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
துதியின் பெருவழி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே.

பொருள் : கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ள மக்களுக்கு அவரவர் புண்ணிய பாவத்துக்கு ஏற்ப வாழ்க்கை அமையும். சிவத்தைத் துதித்துப் பெருமையான வல்லமை பெற்றவர்க்குப் பழமையான வானுலகம் அமையும். சந்திர மண்டல வல்லமைக்கு ஏற்ப மானிடர் வாழ்க்கை உள்ளது. அட்டமா சித்திகளை அடைவதே அழகான நிதியின் பெருவலியாகும்.

33. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை.

2031. சூட்டம் ஒருமுழம் உள்ளம் அரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்பல பரவன் வலைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே.

பொருள் : சந்திரமண்டலமாகிய குளம் ஒரு முழம் அகலமும் அரைமுழம் (ஒரு சாண்) ஆழமும் உள்ளது. வட்ட வடிவமாக அமைந்த அக்களத்தில் விஷய வாசனைகளாகிய மீன்கள் வாழ்கின்றன. சிவபெருமானாகிய வலைஞன் வலையைக் கொண்டு வீசினான். அவ்வலையில் மீன்கள் அகப்பட்டுக் கொண்டன. யாம் இனிப் பிறவித்துன்பம் நீங்கினோம். (பரதவன் - பரவன் என இடைக் குறைந்தது. இங்குக் குளம் என்றது சிரசின் பகுதியாகும்.)

2032. கிடக்கும் உடலில் கிளர்இந் திரியம்
அடக்க லுறும்அவன் தானே அமரன்
விடக்கிரண்டு இன்புற மேவுறு சிந்தை
நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே.

பொருள் : அறிவற்றுக் கிடக்கும் உடலில் கிளர்ந்து எழுகின்ற இந்திரியங்களை அடக்க வல்லவனே அமரன் ஆவான். உடம்பின்கண் அருந்துதல் பொருந்துதல் ஆகிய இரண்டு இன்பங்களிலும் மனம் பொருந்தி நிற்கும் அளவும் உடம்பில் சுவாச இயக்கம் இருந்துகொண்டே இருக்கும். இரண்டு இன்பமாவன: உணவை அருந்துவதிலும், பெண்ணைப் பொருந்துவதிலும் உண்டாகும் இன்பம். இவ்விரண்டும் விருப்பம் உள்ளவரை பிராண செயம் உண்டாகாது. விடக்கு - உடல். நடக்கும் அளவு - பிராணவாயு இயங்கும்வரை.

2033. அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவுஅறிந் தேனே.

பொருள் : இந்திரியங்கள் ஐந்தையும் அடக்க வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்வார்கள் அறிவில்லாதவர்கள். அவ்வாறு ஐந்தையும் அடக்கிய தேவர்களும் இல்லை. ஐந்தையும் அடக்கிவிட்டால் அறிவற்ற சடப்பொருளாகும் என்று கருதி ஐந்தையும் அடக்காமல் இயங்கச் செய்கிற உபாயத்தை உணர்ந்து கொண்டேன். (புலனடக்கம் என்பது அவற்றைத் தீய வழியிற் செலுத்தாமல் தூய வழியில் செலுத்துதல் ஆகும்.)

2034. முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.

பொருள் : இந்திரியங்களாகிய மும்மத யானைகள் பிளிறிக் கொண்டு எழுகின்றன. அவற்றை அடக்க அறிவாகிய கோட்டையை வைத்தேன். ஆனால் அவை அக் கோட்டையினின்றும் தப்பியோடி வெளியே கேடு தரும் புலன்களில் மண்டி உடம்பாகிய கரும்பை அழித்துத் திமிர்கொண்டு அலைகின்றன.

2035. ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.

பொருள் : பிரணவமாகிய ஐந்தில் ஒடுங்கினால் நாதாந்தரமாகிய அகலிடம் அமையும். இதுவே மேலான தவமாகும். இதுவே சிவபதமுமாகும். இதில் ஒடுங்கி நின்றவாரே அருளுடையார் திரு ஐந்தெழுத்தை ஓதினால் இவை யாவும் சித்தியாகும் என்பதாம்.

2036. பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம்
பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம்
அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே.

பொருள் : நிரம்பப் பேசி என்ன பயன் ? கானல் நீரைப் போன்று தோன்றி மறையும் உலகை நினைந்து என்ன பயன் ? பரவலாக விரிந்துள்ள பொருளுக்கெல்லாம் வித்தாக உள்ளம் இருக்கிறது. உலகப் பொருளை மிருதியும் நினைக்கில் உலகைப் பற்றி சிந்தனை மிகுதியும் பெருகிவிடும். அவற்றை நினையாது சிவத்தை நினையில் உலகப் பொருள் அங்குச் சுருங்கிவிடும். இதனை ஆராய்ந்து தெளிவார்க்கு இவ்வளவுதான் உண்மைப் பொருளாகும்.

2037. இளைக்கின்ற வாறு அறிந்து இன்னுயிர் வைத்த
கிளைக்குஒன்றும் ஈசனைக் கேடில் புகழோன்
தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கத்
துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே.

பொருள் : பாசவழி நீங்கிப் பெருமை பெற்ற சீவன் பொறிவழிச் சென்று கெடுகின்றமையை அறிந்து, இனிய உயிர்கட்காக அடியார் கூட்டத்தை வைத்து அவரோடு பொருந்தியிருக்கும் ஈசனிடம் பாசத்தினின்றும் விடுபட்ட மனத்தினது ஐவகைச் சேட்டைகளையும் ஒடுக்கி நிற்க, ஐம்பொறியாகிய தொளை வழிச் சென்றது பிரமரந்திரமாகிய தொளையில் இன்பத்தைப் பெற்று ஓய்ந்திருக்கும்.

2038. பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி
சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டு
வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில்
வேய்ந்துகொள் மேலை விதியது தானே.

பொருள் : ஐம்பூதங்களில் தூலத் தன்மை மாறிச் சூக்குமமான ஐவகை ஒளிகளாய், சார்ந்து விளங்கும் ஊர்த்துவ சகஸ்ர தளமாகிய தறியினில் கட்டப்பெறும் பேற்றை அடைவாயாக. ஆனந்த சக்தி உன்னிடம் பதியில் இதுவே முடிவானது என்று சிரசின்மேல் சூடிக் கொள்வாயாக. இதுவே மிகப் பழமையான நெறியாகும்.

2039. நடக்கின்ற நந்தியை நாடோறும் உன்னில்
படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே.

பொருள் : எல்லா உயிர் வகையிலும் பொருந்தி இயக்குகின்ற சிவத்தை நாள்தோறும் தியானிப்பதால், எல்லாப் பொருளிடத்தும் சென்று பற்றும் மனத்தை மிகவும் மெதுவாக ஒடுக்கி, ஊர்த்துவ சகஸ்ர தளத்தைக் குறியாகக் கொண்டு அதன் வழியே மனம் பதிவுண்டால் சிரசிலுள்ள இடப்பாக மாகிய வடக்கும் வலப்பாகமாகிய தெற்கும் வளர்ந்து மனக் கோயிலாக அமையும். வடபெருங்கடலும் தென் பெருங்கடலும் நடங்கொள் இடமாகக் கொண்டருளும் சிவபெருமான் திரு ஐந்தெழுத்து எண்ணுபவர் சிந்தையே திருக்கோவிலாகக் கொண்டருள்வன் எனவும் பொருள் கொள்ளலாம்.

2040. சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழவதில் தாங்கலும் ஆமே.

பொருள் : முன்னே கூறிய சாதனையில் சில நாழிகைகள் சில நாட்கள், பின் பல நாட்கள் சென்றன. அதனால் உலகப் பொருள் எல்லாம் நீர் மேல் எழுத்துப்போல் அழிவனவாகத் தோன்றின. இவ்வகையே புலன்களின்மேல் செல்லும் விருப்பத்தினை விரைந்து விடுங்கள். பின் மலை போன்ற துன்பம் வந்தாலும் தாங்க முடியும்.

2041. போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்
போற்றிசெய் மீட்டே புலன்ஐந்தும் புத்தியால்
நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே.

பொருள் : தூயோனாகிய சிவபெருமான் திருமேனியைப் போற்றி இசைத்துத் தொழுங்கள். சிவன் நினைவாகிய சிறந்த அறிவினால் புலன்களைப் புன்னெறியதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி ஒழுகச் செய்யும் பெரு நிலம் வாய்க்கும். அந்நலத்தால் நாற்றிசைக்கும் முன்னையும் பின்னையுமாக விளங்கும் அனைத்து உயிர்க்கும் முழுமுதல்வன் சிவன். அவனே நாதனாகவும் விளங்குவன். அச் சிவபெருமானைக் கண்டு தொழுக. அதனால் அவன் திருவடிக்கண் ஒடுங்குதலும் நிலைபெறும் என்க.

2042. தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
வரிக்கொண்ட மைசூழ் வரையது வாமே.

பொருள் : உடம்பினுள் தாங்கிக் கொண்டிருக்கும் உள்ளத்தினால் உடம்பை அரித்துத் தின்னுகின்ற ஐம்பொறிகளாகிய கள்வரை யாரும் உணரவில்லை. நகைக்கின்றவாறு உலக விஷயங்களில் சில பலவற்றைப் பேசிக் கொண்டிருப்பின், உயர்ந்துள்ள அண்டகோசம் கரிய இருளால் சூழப்பட்ட எல்லையாகவேதான் இருக்கும். (சிவபெருமான் கொண்டருளும் அருள் திருமேனியைச் சகளம் என்பர். சகளம் - நிலைக்களம்)

2043. கைவிட லாவதுஒன்று இல்லை கருத்தினுள்
எய்தி அவனை இசையினால் ஏத்துமின்
ஐவ ருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடுஐய புலன்களும் ஐந்தே.

பொருள் : ஐம்பொறிகளை அடக்கி விட்டால் விடவேண்டியது ஒன்றும் இல்லை. அகத்தினுள் பொருந்தி யிருக்கும் பரம்பொருளை இயல்பான முறையில் தொழுங்கள். இல்லை மேல் ஐம்பொறிகளின் விருப்பத்தில் விளைந்த பொய்யினையே பொருந்தும் புலன்கள் ஐந்து புறத்தே கவர உள்ளன. (இறைவனை அகத்தே எண்ணியிருந்தால் புறத்தேயுள்ள ஐம்புல ஆசைகள் தோன்றா.)

34. அசற்குரு நெறி (அசற்குரு - சன்மார்க்கம் அறியா குரு)

2044. உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஓ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.

பொருள் : சிவ உணர்வு இல்லாத மூடனும், உண்மைப் பொருளை ஆராயாதவனும், சிக்கலின்றி வேத ஆகமங்கள் உணர்த்தும் நெறியினைக் காணாதவனும், அடக்கமில்லாதவனும், பிறரை நிந்திப்போனும், ஆன்மபோதம் உடையவனும் ஆகிய இவர் அசற்குரு ஆவர். (கணு - முடிச்சு; வேதாகமங்களின் மறைபொருள். அணுவின் குணம் - சீவபோதம், இவ் அறுவகையினரும் சன்மார்க்கம் உபதேசிக்கும் நெறியில்லாதவர் ஆவர்.)

2045. மந்திர தந்திர மாயோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்
சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு
அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே.

பொருள் : மந்திர தந்திரம் மாட்சிமையுடைய யோகம் ஞானமுடன் பாசம் முத்தி ஆகியவற்றைக் கண்டு உணர்ந்திருப்பாரை மனத்தினால் நினைத்தும் உண்மை ஞானம் பெறச் செய்யாமல் வயிற்றுப்பாட்டுக்குக் குருடராய்த் திரியும் குருமார்கள் அசற்குரு ஆவர்.

2046. ஆமாறு அறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன்அசத் தாகும் குரவனே.

பொருள் : பேரின்பத்தை அடைதற்குரிய உபாயத்தை அறியாதவனும், அறிவில்லாதவனும் அறிவில்லாத செயலைச் செய்பவனும் காமம் முதலிய ஆறு பகைகளை நீங்கப் பெறாத கீழ் மகனும், பாவிகளுக்கு மெய்யை உணர்த்தாது பொய்யை உணர்த்துபவனும் ஆகிய அறிவற்றவன் சிறந்த குரு ஆக மாட்டான். அவன் அசற்குருவேயாகும். (மூடன் - நன்மை தீமைகளை அறியாதவன். அதிமூடன் - நன்மை தீமைகளை அறிந்தும் தீமை செய்பவன்.)

2047. கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால்
தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும்
நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றே
முற்பாலே நந்தி மொழிந்துவைத் தானே.

பொருள் : உலக வாழ்வு பற்றிய எண்ணங்களை நீக்காமல் மந்திர உபதேசம் செய்தால் சிவபாகம் சிறந்து வெளிப்படாமல் சுருங்கி நிற்கும். சிவத் தியானமும் உலக போகமும் ஒன்றுக்கொன்று முரணானது பற்றித் தீமையும் விளையும். இத்தகைய குருமார்கள் வாழும் நாட்டுக்கும் அரசனுக்கும் தீங்குவரும் என்று முன்னமே சிவபெருமான் திருவாய் மலர்ந்து அருளினான். உலக யோகத்தில் திளைப்பவர் நல்ல குரு ஆகார்.

2048. குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்
குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே.

பொருள் : கண்ணில்லாதவர்க்குக் கோலைக் கொடுத்து வழிகாட்டிச் செல்லும் கண்ணில்லாதவர், வழிக்கு மாறுபட்ட பழைய குழியிலே முன்னே விழுவார்கள். அதற்குப் பின்பு அவரைப் பின்பற்றி வந்த குருடரும் அந்தக் குழியிலே விழுவார்கள். அதுபோல ஞானத்தை உணராத சீடரும் அசற்குருவோடு சேர்ந்து முன்பின் இல்லாமல் ஒருசேர அஞ்ஞானத்தில் விழுவார்கள். (சிவஞானம் போதிக்கும் குரு அகக் கண் உடையவராய்க் காமத்தை வென்றவராய் இருக்க வேண்டும்.)

35. சற்குரு நெறி (சற்குரு - சத்தை உணர்த்தும் குரு)

2049. தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே.

பொருள் : சிவகுருவாக எழுந்தருளிவந்து தலையளிபுரியும் சிவனும் அதற்கு வழித்துணையாக நிற்கும் குலகுருவும் கருத்தில் ஒருவரே யாவர். சிவபெருமானின் திருவடிகளைத் தந்தருள்பவனே மெய்க் குரவன். மெய்க் குரவன் எனினும் சற்குரு எனினும் ஒன்றே. திருவடிகளைத் தந்தருளித் தன்னையும் உண்மையாக அறிவிப்பவன் மெய்க்குரு. தாளை அருளித் துவாதீதமாகிய அப்பால் நிலைக்கண் ஆருயிரைச் சாரச் செய்பவன் குரு. திருவடிகளைத் தந்தபின் பாசம் துடைத் தருள்வன். அவன் என்றுமுள்ள மெய்ப் பொருளாவன். (சத்து - மெய்ப்பொருள்)

2050. தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
தவிரவைத் தான்பிற வித்துயர் தானே.

பொருள் : சிவகுருவாக எழுந்தருளிய சிவன் ஆருயிர்கட்கு அளித்தருளும் அருளிப்பாடுகள் பலவாம். அவை வருமாறு: தன்னடியார்களின் வினைகளை நீங்க அருளினன். தன்னடியார் கட்குக் கோள்கள் துன்புறுத்தாமல் அவர் ஏவும் தொழிலை இயற்ற அருளினான். நமனின் தூதுவர் கூட்டம் நணுகாது விலக வைத்தனன். பிறவிப் பெருந்துயர் நீங்க வைத்தனன்.

2051. கறுத்த இரும்பே கனகமது ஆனால்
மறித்துஇரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியில் வந்தணு கானே.

பொருள் : கருமை நிறம் வாய்ந்த இரும்பு வேதிப்பான் தொழிலால் செம்பொன் ஆகும். அங்ஙனம் செம்பொன் ஆனபின் மீண்டும் இரும்பாகாது. அவ்வகை போன்று செவ்வி வாய்ந்த பொழுது சிவகுரு எழுந்தருள்வன். குறித்த அப்பொழுதே குருவருள் கிட்டும். அக்குருவருள் பெற்றவன் மீண்டும் பிறவிப் பெருங்கடலில் வந்து பொருந்தான்.

2052. பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலமற நீக்குவோர்
ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப்
பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே.

பொருள் : திருவருளால் சிவ பெருமானுடன் தன்னையும், அன்பினால் ஆராய்ந்து அருளால் பாசத்தை நீங்கியவரும், ஏனை யார்க்கும் அவ் அருளாலேயே மலமற நீக்குபவரும் மெய்க்குரவராவர். அங்ஙனமின்றி நல்லறிவு சிறிதும் இல்லாது மாயப் போர்க்கு மனம் இரங்குவோர் கோழையாகும் புல்லியராவர். அவர் ஒரு ஞான்றும் மெய்யுணர்வுக் குரவராகார். (பூசற்கு - கலகத்திற்கு)

2053. நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்ற
நேயத்தை நல்கவல் லோன்நித்தன் சுத்தனே
ஆயத்த வர்தத் துவம்உணர்ந் தாங்குஅற்ற
நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே.

பொருள் : இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய முழுமுதற் சிவன் அன்பரது அன்பு அகத் தாமரையில் அருளால் பிணைந்து நிற்பன். குற்றமற்ற தன்னை மெய் அன்பர்கட்குச் சுற்றமாகக் கொடுத்தருளும் துணைவன் என்றும் அழியா நிலைமையன்; இயற்கைத் தூய்மையன்; சிவமெய்யடியார் கூட்டத்துத் திரு அருளால் கூடி மெய்யுணர்வு கைவரப் பெற்றவர் தத்துவம் உணர்ந்தோராவர். அவரே மலப் பசை அற்றவரும் ஆவர். அத்தகையோர் பேரன்பினர். அவர்க்குத் திருவடிப்பேறு அளிப்பவனே நிலைபெற்ற மெய்க் குரவன் ஆவான்.

2054. பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே.

பொருள் : பொன்னாக்கும் மருந்து பரிசனவேதி எனப்படும். இதனைப் பொன்னாக்குவது எனப் புகலினும் பொருந்தும் உலகியற் பொருள்களில் இயைபுடைய பொருள்கள் எல்லாவற்றினும் பட்ட அளவானே அவை முற்றும் பொன்னாகிவிடும். அதுபோல் மெய்க் குரவனாகிய சிவகுருதொட்ட இடமெல்லாம் மும்மலம் அகன்று, ஆருயிர்க் கிழவர் செம்மலர் நோன்றாள் சேர்ந்து சிவகதி எய்திச் சிவனாகிச் சிவனடிக் கீழ் இருப்பர்.

2055. தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்பாடில்
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற
ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே.

பொருள் : சிவமே தானாக எழுந்தருளிய சற்குருவின் திருமுன்பு ஆன்மாவின் தன் உண்மை தோன்றுமாயின், ஆன்மாவே சிவத்தைப் பெருமைபெற அறிவதாகும். அவ் அறிவே உன் உடம்பினுள் இருக்கும் சிவம் என்று தேர்ந்து கொள்வாயாக.

2056. வரும்வழி போம்வழி மாயா வழியைக்
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழியே சென்று கூடலும் ஆமே.

பொருள் : வினைக்கீடாக வரும் வழியாம் பிறப்பும், போம் வழியாம் இறப்பும் எஞ்ஞான்றும் மாறா, மறையா, அழியா வழியாக நிற்கும். இவ்வழியினைப் பிறக்கும் கருவழி கண்டவர் காண்பர். இவ்வழியினைக் காணாதவர் அருளால் காணும் வழி பெரு வழி. அவ்வழி நந்தி முதல்வராய் நவின்று நாட்டியருளப் பட்ட நல்வழியாகும். அதுவே நன்னெறி; திருநெறி. அதனைச் சிவகுருவின் திருவருள் வழியே சென்று பொருள் பெறப் பெறுவதாகும்.

2057. குருஎன் பவனே வேதாக மங்கூறும்
பரஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை யின்றி உயிர்பாசம் நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே.

பொருள் : சிவகுரு என்று அழைக்கப்படுபவன் செந்தமிழ் மறைமுறையாம் வேதாகமம் சிறந்து எடுத்து ஓதும் பேரின்ப வடிவினன். அவ்வடிவு உடையவனாகிச் செவ்வி உயிரினுக்குச் சிவயோகம் சேர்ப்பித்து அருள்வன். அவ்வுயிர் திருவடியுணர்வு கைவந்தமையால் வேறோர் எண்ணமும் எண்ணுவதில்லை; அவ்வுயிரை அந் நிலையான் உயரச் செய்து பாசப் பசை அகற்றித் திருவடி நிழற்கீழ் வருவித்துப் பேற்றின்கண் நிலைப்பிப்பவன் சிவகுரு ஆவான்.

2058. சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்
சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்
சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்
அத்தன் அருட்குரு வாம்அவன் கூறிலே.

பொருள் : சத்தாகிய சிவமும் அசத்தாகிய மாயையும், சத்தோடு கூடிச் சத்தாகவும், அசத்தோடுகூடி அசத்தாகவும் உள்ள ஆன்மாவும் ஆகிய முப்பொருள்களின் இயல்புகளை உணர்த்திச் சித்தாகிய ஆன்மாவையும் அசித்தாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் சிவத்தோடு சேர்த்து சுத்த மாயையும் அசுத்த மாயையும் நீங்க இன்ப வடிவான பிரணவ உபதேசம் செய்யும் தலைவனே அருட்குரு என்று சொல்லப் பெறுவான். (சத்து - அழியாதது; அசத்து - அழிவுடையது. சதசத்து - ஆன்மா அழியாததாயினும் சார்ந்ததன் வண்ணமாய் இருப்பது. சித்து அறிவு. அசித்து - அறியாமை.)

2059. உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால்
பற்றறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம்மூன் றால்வாட்டித்
தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே.

பொருள் : உயிர்களுடைய பாச உணர்வினால் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகிய ஐம்மலங்களும் பொருந்தும், சிவபெருமானது திருவடியைப் பணிவதால் அவா நீங்கும். சிவப்பறை ஆதாரமாகக் கொண்டு ஆன்மாவைச் சுற்றியுள்ள பேத ஞானத்தைச் சீவதுரியம், சிவதுரியம், பரதுரியம் ஆகிய மூன்றினாலும் கெடுத்து, தத்பரம் என்ற மேலான சிவத்தைச் சார்வோர் சாதகராவர்.

2060. எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம்
வல்லார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச்
சொல்லா மலம்ஐந்து அடங்கியிட்டு ஓங்கியே
செல்லாச் சிவகதி சேர்தல்விளை யாட்டே.

பொருள் : எல்லா உயிர்களும் இன்பம் நுகர்தற்குரிய வலிமை மிக்க புலன் உணர்வோடு பொருந்த, வருங்காலத்து இறைவன் இறைவியோடு உள்ளத்தில் தோன்றவே சொல்லாமலே ஐம்மலச் சேட்டைகளும் அடங்கி உயிர் சிறந்து மீண்டுவாராநெறி அடைவித்தல் இறைவனுக்கு விளையாட்டாகும். முதல் இரண்டு அடிகளைப் பொருள் இயைபுக்கேற்பக் கொண்டு கூட்டுக.

2061. ஈனப் பிறவியில் இட்டது மீட்டூட்டித்
தானத்துள் இட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே.

பொருள் : இழிந்த பிறவியில் செலுத்தி, பின்பு அதனின்றும் மீட்டு வினைப் போகங்களை அருத்தி, பத முத்தியை அடையப் பண்ணி, பதவிகளின் போகங்களை அருந்தச் செய்து உயிர்களைப் பிறவிக்கடலில் ஆழ்த்துதலும், பின் சிவஞானத்தில் மீளச் செய்தலும் அதிலேயே நிலைபெறுத்தலும், வீட்டினைப் பொருந்தி மௌனம் என்ற பேசாப் பெருவாழ்வு அளித்தலும் ஆகியவை முத்தியை அளிக்கும் சிவனது செயலாம்.

2062. அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்
சித்தொடு அசித்துஅறத் தெளிவித்த சீவனைச்
சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்
சத்துடன் ஐங்கரு மத்திடும் தன்மையே.

பொருள் : சிவபெருமான் செய்தருளும் திருஐந்தொழிலின் திரு விளையாட்டிடம் ஆருயிர்களின் உடம்பாகும். அறிவுடையன இவை அறிவில்லன இவை, என ஆருயிர்கட்கு அறிவித்து அவ் அறிவினால் தெளிவிக்கப்பட்ட செவ்வி உயிரை மலம் நீக்கி அருளுகின்றனன். உண்மைப் பொருளாகிய தன் வண்ணம் ஆக்குகின்றனன். இவையே திரு ஐந்தெழுத்தின் சிறப்பால் பெறப்படும் பேரின்பப் பேற்றினுக்கு வாயிலாகிய திரு ஐந்தொழிலாகும்.

2063. ஈசத்து வங்கடந்து இல்லையென்று அப்புறம்
பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
தேசத்தை எல்லாம் தெளியவைத் தானே.

பொருள் : ஈசுவரத் தன்மையைப் பெறுவதற்குமேல் பேறு இல்லையென்று, அப்புறமாகி நின்ற சதாசிவ மூர்த்தியைப் பாசத்தில் உள்ளபோதே பற்றி நில்லுங்கள். பாசத்தின்கண் அவன் அன்போடு பொருந்தி யிருப்பினும் அதில் ஒட்டாத நின்மலன் ஆவன் அவன் தங்கியிருந்த பாச மயமான புவனங்களை ஒளிமயமாகச் செய்தான் (ஈசத்துவம் - தலைமைத் தன்மை)

2064. மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்
ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்தது
பேணிக்கொண்டு உண்டார் பிறப்பற்று இருந்தார்
ஊனுக்கு இருந்தார் உணராத மாக்களே.

பொருள் : சிவந்த மாணிக்க மாலையைப் போல ஒளிவிட்டு எழுகின்ற புருவ நடுவாகிய மண்டலத்தில், மாற்றுயர்ந்த பொன் போன்ற சிவம் பொருந்தி நின்று பேரின்பமாகிய அமுதினை விளையச் செய்தது. இதனைத் தெரிந்து விந்து செயத்தால் அமுதத்தைப் பெருகச் செய்து கொள்வரே பிறப்பற்றகனைய ஏனையோர் சோற்றுக்குக் கேடாய் வாழ்பவர் ஆவர்.

2065. அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க
இசைத்திடு பாசப்பற்று ஈங்குஅறு மாறே.
அசைத்துஇரு மாயை அணுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்றறி விப்போன் இறையே.

பொருள் : மலத்தொடு கூடிய ஆன்மா சீவத்தன்மை நீங்கவும், கூடப்பட்ட பாசபற்றுகள் அற்ற ஒழியவும், சுத்த மாயை அசுத்த மாயை ஆகிய இரு மாயைகளையும் நெகிழ்வித்து அணுவாகிய ஆன்மாவை அங்கே கூட்டியவனும், பிரணவ உபதேசம் செய்பவனும் இறைவன் ஆவான்.

2066. ஏறு நெறியே மலத்தை எரித்தலால்
ஈறில் உரையால் இருளை அறுத்தலான்
மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குருவாம் இயம்பிலே.

பொருள் : மூலாதாரத்திலிருந்து சிரசை நோக்கி ஏறும் பாதையில் உயிரைப் பிணிக்கும் மலத்தன்மையைச் சுட்டு எரித்து மேலே செலுத்தலாலும் முடிவற்ற நாத முழுக்கத்தால் இருளை அறுத்தலாலும், பசுவின் இயல்பான பாசத்தன்மை கெடும்படி வாட்டுதலாலும், வீட்டுலகை அடையுமாறு உபதேசிக்கும் பரசிவமே குருவாம். மலம் - பாசம், இருள் - பாசத்தால் உண்டான இருள் (அறியாமை) வீடு புக இரண்டும் தடையாம். பரமசிவமாகிய குரு பாசத்தையும் இருளையும் போக்கி ஒளியாகிய வீட்டினை நல்குவான்.

36. கூடா ஒழுக்கம் (கூடா ஒழுக்கம் - வஞ்சகச் செயல்.)

2067. கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களஒழிந் தாரே.

பொருள் : உலகவர் தாங்கள் செய்யும் நன்மை தீமைகளை மேற்பார்க்கும் அதிகாரி இல்லையென்று பலவிதமான வஞ்சகச் செயல்களைச் செய்வர். எல்லாரையும் மேற்பார்வை செய்யும் இறைவனாகிய கண்காணி இல்லாத இடமே இல்லை. உலகவர் இயற்றும் காரியங்களை மேற்பார்வை செய்து எங்கும் நிறைந்து விளங்குகின்ற இறைவனைக் கண்ணை இடமாகக் கொண்டு கண்டவர்கள் தாம் செய்யும் வஞ்சகத் தொழிலினின்றும் நீங்குவர்.

2068. செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்வன்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.

பொருள் : கருமை நிறம் பொருந்தி விளங்கும் நீலகண்டப் பெருமான் செழுமையாக கடல் சூழ்ந்த உலகில் பொய்யான வற்றையே பேசித்திரியும் மனிதர்கள் உண்மையானவற்றைப் பேசுவார்களாயின் தேவரும் தொழும் தகுதி வழங்குவான், இவ்வுலகினை படைத்த அவன் பொய்யையும் மெய்யையும் அறிவான்.

2069. பத்திவிற்  றுண்டு பகலைக் கழிவிடும்
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே.

பொருள் : திருவேடம் பூண்டு பக்தியுடையோர் போன்று ஏனையோர்க்கு அந்நெறிமுறைகளைப் போதித்து விலைபெற்று வாழும் வஞ்சகர் வீணாள் கழிப்பவர் ஆவார். அவரே பெரு மயக்கம் கொண்ட மத்தரும் ஆவார். அவருக்கே மறு பிறப்பும் உண்டு. பிறப்புக்கு அடிப்படையான எஞ்சுவினையை நெற்குத்தி உண்பது போல் சிவ குருவின் திருக்கடைக்கண் நோக்கால் எரிசேர் வித்தெனச் செய்தவர் பிறப்புகளைப் புலமாம் கருப்பையைப் பாழ் செய்தவராவர். அவரே சிவப் பித்தராவர். சிவ பித்தராவார் திருவடியுணர்வு கைவந்தோர், அப் பித்தர்கட்கே எஞ்ஞான்றும் பிறப்பில்லை என்க.

2070. வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லை
நடக்க உறுவரே ஞானமி லாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.

பொருள் : முன்னர்க் கூறிய பௌராணிகர் வடக்கே உள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவை பெருமை யுடையன என்பர். வடக்கே உள்ளது ஒன்றும் இல்லை. எனினும் அறிவில்லாதோர் பிறரை யெல்லாம் அங்குச் செல்லும்படி தூண்டுவர். வடக்கில் அடங்கிய தலம் எல்லாம் ஞானியின் உள்ளத்திலேயே அடங்கியுள்ளன. திருநாவுக்கரசரும் காரைக் காலம்மையாரும் வடக்கு நோக்கிச் சென்று பின்பு தெற்கில் வந்துதான் முத்தி பெற்றனர்.

2071. காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.

பொருள் : உயிரை உடலோடு சேர்த்து வைப்பவனும் உடலையே தான் வாழும் நாடாகக் கொண்டவனும் உடலுக்குள் இருந்து வெளிப்படும் குரு மண்டலத் தலைவனும் ஆகிய இறைவனைத் தேசம் எங்கும் தேடிப் புறத்தே அலைவார்கள். அவன் அவரவர் உடலில் பொருந்தி நிற்கும் உண்மையை உணரவில்லையே! (என்னே அறியாமை.)

2072. கண்காணி யாகவே கையகத் தேயெழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் தானே.

பொருள் : ஆருயிர்களின் உணர்வுக் கருத்தாம் கண்ணைச் சிறந்த இருப்பிடமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் மெய்க் காதலனாம் சிவபெருமான் நேரே காணும்படியாக நானெறி ஒழுக்கத்தில் கையகத்தே வந்து தோன்றியருள்வன். அது போன்றே கருத்தினுள்ளும் இருந்திடுவன். அது போன்றே உடன்கலந்து செந்நெறிச் செழுத்தித் திருவடிப் பெரும் பேற்றினுக்கு நீங்காது வழிகாட்டி யருள்வன்.

2073. கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை
மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை
தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை
என்னித ஈசன் இயல்புஅறி யாரே.

பொருள் : காமத்துக்குக் காரணமான கன்னியர் வலையில் வீழ்வோர் ஒரு வகையில் சிறைப்பட்டவர். வேதங்களை ஓதுபவர் ஒருவகையில் சிறைப்பட்டவர்; உடலை வருத்தித் தவம் செய்பவர் ஒரு வகையில் சிறைப்பட்டவர்; தத்துவ விசாரணையால் அனுபவமின்றித் தன்னையும் தலைவனையும் உணர முற்படுவோர் ஒரு வகையில் சிறைப்பட்டவர் ஆவர். இவ்வகையாக உள்ள நால்வரும் ஈசன் இயல்பு அறியதவராயினர்.

2074. காணாத கண்ணில் படலமே கண்ணொளி
காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி
காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.

பொருள் : ஒன்றையும் காணமாட்டாத படலத்தால் மறைப்புண்ட கண்ணுக்கு இருட்டே அதன் ஒளி. சிவ ஒளி எங்கும் வியாபித்திருந்தாலும் அவ்வொளி சாதாரண மக்களால் காணப்படாததாகவே உள்ளது. காணாதவர்கட்கு அகக் கண்ணாய் இருந்து காட்டும் பெரிய கண்ணொளியாகும் கடவுளை ஊனக் கண்ணால் காணாமல் ஞானக் கண்ணால் கண்டவர் தாம் புரியும் களவு ஒழுக்கத்தினின்றும் உய்ந்து ஒழிந்தார்.

2075. பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியும்தன் கண்ணொளி
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
சித்தம் தெளிந்தேன் செயல் ஒழிந்தேனே.

பொருள் : பித்தனுக்கு அந்நோயால் ஏற்பட்ட பிரகிருதியாகிய கிறுக்குத் தன்மை, தீர்ப்பான் தரும் தக்க மருந்தால் நீங்கப் பெறும். நீங்கவே நல்ல நிலைமையைப் போய் பொருந்துவன். அதுபோல் கண்ஒளியும் படலம் நீங்கக் காணும் இயற்கைத் தன்மை எய்தும். அந்நிலைபோல் நந்திக் கடவுள் ஆருயிர் கட்கு இருட் சார்பாம் மருள் நீங்கத் திருவருள் தந்தருள்வன். தரச் செவ்வி உயிர்களின் சித்தத் தெளிவினை எய்தும். அம்முறையில் அவனருளால் தெளிவெய்தினேன். தெளிவு எய்தவே செயல் ஒழிந்தேன் என்க. (பிரகிருதி - பித்த சுபாவம்)

2076. பிரான்மய மாகப் பெயர்ந்தன எட்டும்
பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார்
சுராமயம் முன்னிய சூழ்வினை யாளர்
நிராமய மாக நினைப்பொழிந் தாரே.

பொருள் : நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டும் சிவத்தினது உறுப்புகளாகும். இவை அவனது சக்திகள் ஆகும் என்பதை எண்ணி அஞ்ஞானமாகிய தூக்கத்தினின்றும் விழித்தலைச் செய்யார். கள் முதலியவற்றின் மயமாக ஆக எண்ணிய தீவினையாளர் இன்ப மயமான இறைவனது நினைப்பை ஒழிந்தாரானார்.

2077. ஒன்றுஇரண் டாகிநின்று ஒன்றிஒன் றாயினோர்க்கு
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்றுஇரண்டு என்றே உரைதரு வோர்க்கெல்லாம்
ஒன்றுஇரண் டாய்நிற்கும் ஒன்றோடுஒன் றானதே.

பொருள் : கலப்பினால் ஒன்றாய் பொருள் இயல்பால் சீவனும் சிவனும் என்று இரண்டாயும் நின்று சீவத்தன்மை கெட்டுச் சிவமாயினோர்க்கு, ஒன்று இரண்டு என்னும் பேத ஞானம் ஒருபோதும் வராது. அவ்வாறின்றி ஒன்று இரண்டு என்னும் பேத ஞானம் உடையவர் எல்லோருக்கும் அந்நியமாயுள்ளது (பிரிப்பின்றி உள்ளது) ஒன்று என்றும் இரண்டு என்றும் வேறு பிரித்து எண்ணும் நிலையில் வேறாகவே நிற்கும்.

2078. உயிரது நின்றால் உணர்வுஎங்கு நிற்கும்
அயர்அறி வில்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உணலும் ஒருங்கிக் கிடக்கும்
பயிரும் கிடந்துள்ளப் பாங்குஅறி யாரே.

பொருள் : உயிர்ப்பும் உயிர் ஆகாவாம். உயிர்ப்பு ஆகிய உயிர் நின்றால் அவ்வுடற்கண் உணர்வு எல்லா இடத்திலும் நிகழ்தல் வேண்டும். நினைப்பும் மறப்பும் உண்டாகா. உடலும் கீழ்விழாது. ஆகையால் உயிர்ப்பும் உடலும் ஒற்றுமையுற்று வாழும் வாழ்வு சிவபெருமானின் திருவுள்ளப் பாங்காகும். அவ்வுண்மையினைப் பலர் அறியார்.

2079. உயிரது வேறாய் உணர்வுஎங்கும் ஆகும்
உயிரை அறியில் உணர்வுஅறி வாகும்
உயிர்அன்று உடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே.

பொருள் : திருவருளால் உயிர் உடலின் வேறு என்னும் உண்மை ஏற்படின் உணர்வு சுட்டும் சிற்றும் கடந்து முற்றாய் எங்கும் ஆகும். அதுபோல் உயிரின் உண்மையை அவ்வருளால் அறியில் அவ் உணர்வே மெய்யுணர்வு ஆகும். உடலை நீங்கச் செய்வது உயிரன்று. அவ் உண்மையை அறிவிக்காமல் மறைத்து வைத்திருப்பதும். பெரும் பொருளே. இவ் உண்மைகள் அவன் அருளால் அன்றி உணரவாரா. (சுட்டும் - சுட்டுணர்வும். சிற்றும் - சிற்றுணர்வும் முற்றாய் முற்றுணர்வாய். அயரும் - மறைக்கச் செய்யும்.)

2080. உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நிலவாணி ஐந்தினுள் நேருற நிற்கும்
சிலவாணி யாகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை அறிவதே.

பொருள் : உலகம் நிலைபெறுவதற்குரிய அச்சாணி போன்றவனும் ஒளி பொருந்திய மேலான அறிவு சொரூபமானவனும் ஆகிய இறைவன் நிலம் முதலாகிய ஐம்பூதங்களின் தன்மையாய் அவற்றுள் உள்ளும் புறம்புமாகக் காணப்படுவன். சிலவாக்கு ரூபமான சக்தியுடன் பொருந்திய தேவர்களுக்குத் தலை வனை, தலையில்  வாக்கு ரூபமாக அறிவதே தன்னை அறியும் செயலாகும்.

2081. தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர்
ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
தேன்அந்த மாய்நின்ற சிற்றின்பம் நீஒழி
கோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே.

பொருள் : உலகப் பொருள் எல்லாவற்றுக்கும் ஒடுங்கும் இடமாகவுள்ள ஒப்பில்லா சுயம்சோதியும், உடல் உலக எல்லாமாய் நின்ற ஒளி பொருந்திய சுடரும் ஆகிய தலைவனது எல்லையற்ற கருணையால் விளையும் பேறு உனக்கு உண்டாகும். விருப்பத்தையும் பின் முடிவில் சோர்வினையும் நல்கும் சிற்றின்பத்தையும் நீ விடுவாயாக.

2082. உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை
நல்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே.

பொருள் : உனக்கு முதல்வனாய் உடம்பில் உயிர் நிலைபெறச் செய்த ஒளி மண்டலத்தில் விளங்கும் இறைவனது கருத்தை அறிவார் இல்லை. நல்ல முதல்வனாகிய சிவம் மிக்குத் தோன்றத் தனக்கெனப் பெயரின்றி அவனோடு ஒன்றி நின்றால் தன் முதலாகிய சிவத்தினது இயல்பு ஆகும். (கல்முதல் - கயிலை எனினும் ஆம்.)

2083. இந்தியம் அந்தக் கரணம் இவைஉயிர்
வந்தன சூக்க உடலன்று மானது
தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்
முந்துளம் மன்னும் ஆறாறு முடிவிலே.

பொருள் : இந்திரியங்களும் அந்தக்கரணங்களும் வந்தவனாகிய சூக்கும உடலும் உயிர் ஆகா. இவை மகத் தத்துவத்தினின்றும் தோன்றியவை. புருடனும், கலைகாலம், நியதி வித்தை, அராகம் ஆகிய ஐந்தின் கூட்டத்தால் பொருந்தும். அனாதியாக உள்ள ஆன்மாவானது முப்பத்தாறு தத்துவத்தின் முடிவில் நிலை பெற்றிருக்கும். (இந்தியம் - இந்திரியம், ஐவிதம் - கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை, சமாதி என்பாரும் உளர்.)

37. கேடு கண்டு இரங்கல் (கேடு கண்டு இரங்கல் - அழிவு கண்டு வருந்துதல்)

2084. வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி தீயின் முனிகின்ற வாறே.

பொருள் : ஒவ்வொரு கணமும் தம் வாழ்நாள் கழிகின்றதை அறியாத பாவிகள் வினையாகிய வித்தைச் சேமிப்பார். வினைப் போகத்தை அறுவடை செய்ய உடம்பாகிய நாற்றங்காலில் அவ்விதையை முளைக்கச் செய்வார். தமக்குற்ற வினைப் போகத்தால் வரும் துன்பத்தைச் சிறிதும் உணரமாட்டார். அவர் கொழுந்து விட்டு எரிகின்ற தீயில் கெடுகின்றது போலாகும்.

2085. போது சடக்கெனப் போகின் றதுகண்டும்
வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து
ஆதியை அன்பில் அறியகில் லார்களே.

பொருள் : வாழ்நாள் திடீரென்று முடிவதைப் பார்த்தும், மக்கள் சாதனையின்றி வாயினால் பேசி வாதிட்டு என்ன பயனைப் பெறுவது ? நேர்மையுள் இருந்து அகண்டமாகிய மலமற்ற சிவத்தினது திருவடியை வணங்கி, அனைத்துக்கும் முதலாகிய அவன்பால் அன்பாய்ப் பொருந்தும் நெறியை அறியும் ஆற்றல் இல்லாதவர்களாய் இருக்கிறார்கள்.

2086. கடன்கொண்டு நெற்குத்துக் கையரை
உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார்
தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே.

பொருள் : அறியா மக்கள் கடன் வாங்கியேனும் நெல்லைப் பெற்றுக் குத்தி உண்டு, கயவராகிய பொறிகளைத் திருப்தி செய்து உடம்பை வளர்த்து, அவ்வுடம்பே உயிரென மதித்துத் திரிவர். விசாலமான மலைச்சரிவில் நெருப்புப் பொருந்திய முருட்டுக் கட்டையில் ஏறி இவ்வுடல் கிடக்கும் என்பதை அறியார். அறிவில்லாதவர் இறைவனை நினைந்து போற்றாமல் உடலை நினைந்து போற்றிக் கெடுகிறார்கள்.

2087. விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்
உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.

பொருள் : அக்காலத்தில் சனகாதி நால்வர்க்குக் கயிலாயப் பதியில் இருந்து, பாதுகாத்த கல்லாலின் புடை அமர்ந்த அறக்கடவுளான குருநாதன் விரைந்து உபதேசித்து அருளிய சிவத்தை உணராமல், பழி மொழிகளைப் பேசும் மக்கள் தமது சீவபோதமே இயல்பாகக் கொண்டு ஒருப்பட்டு நின்றனர். சிவகுரு உபதேசித்த வழி நில்லாமல் தம் அறிவுவழி நின்று உலகவர் கெடுகின்றனர்.

2088. நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும்
என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும்
அன்றி உலகம் அதுஇது தேவுஎன்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே.

பொருள் : நிலையான புகழையும் நிறைந்த தவத்தின் பயனையும் எப்போதும் எமது இறைவன் அடியவர்க்கு அருளுவான். அஃதறிந்தும் உலகவர் முதற்கடவுள் அது என்றும் இது என்றும் பேசி நிலைகெடுதலால் குறைபட்டனர். தேவு - சிறுதெய்வம். சிறு தெய்வம் பெரும் பயனை அளிக்காது என்க. சிவம் விரும்பிய தெல்லாம் அளிக்கும் என்பதை உலகவர் அறியவில்லை.

2089. இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து
இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து
துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.

பொருள் : பிறவாப் பெருநெறி எய்துதற்குச் சிவபெருமான் மக்கட்பிறப்பை வகுத்தருளினன். அவ்வுயர்ந்த பிறப்பை எய்த ஆருயிர்கள் மீட்டும் அப்பிறப்பு இறப்பில் புகாமல் அந்த உடம்பு தன்னுடனே அரனார் மகனாராதல் வேண்டும். அதுவே இறவாத இன்பம் பிறப்பாகும். இன்பப் பிறப்பென்பது சிவனடி மறவா அன்புத் திருவுள்ளத்துடன் இருப்பது. அத்தகையாரே தொண்டராம் குணமிக்கராவர்.

2090. பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே

பொருள் : பெறுவதற்கு அருமையான மானுடப் பிறவியை இறையருளால் பெற்றிருந்தும், பெறுவதற்கு அருøமான சிவத்தினது திருவடியைப் போற்றாதவராயினார். பெறுவதற்கு அருமையான பிறவியைப் பெற்ற மாக்கள் எல்லாம் பெறுவதற்கு அருமையான இன்பப் பேற்றினை இழந்தனர்.

2091. ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத்
தீரு வருவதோர் காமத் தொழில்நின்று
மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே.

பொருள் : வேட்கையுடைய மனமும் அளவில்லாத இளமையும் அன்பும் ஆகிய இவை நல்லனவாகவுள்ள இன்பமான காலத்தில் மாற்றம் தருவதொரு உடலுறவு (பரியங்யோகம்) கொண்டு நிலைபெற்று மாதவனாகிய சிவத்தை  நினைந்து இன்பம் பெறாமல் பெறாமல் உலகவர் கெடுகின்றனர்.

2092. இப்பரி சேஇள ஞாயிறு போலுரு
அப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானை
இப்பரி சேகம லத்துறை ஈசனை
மெய்ப்பரி சேவினை வாதுஇருந் தோமே.

பொருள் : முன் மந்திரத்தில் கூறிய முறையில் இளஞ்சூரியன் போன்ற உருவம் அமையும். அவ்விதம் அக்கினி மண்டலத்துள் அமர்ந்த தலைவனும் இம் முறையில்  சுவாதிட்டான மூலாதாரங்களில் பொருந்தியிருக்கும் ஈசனும் ஆகிய இறைவனது உண்மைத் தன்மையை இதுவரை விசாரியாமல் இருந்தோம். என்னே அறியாமை.

2093. கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்து
ஆடவல் லார்அவர் பேறெது வாமே.

பொருள் : குரு காட்டிய இலட்சியத்தில் நிலைபெற்றுச் சிவனைக் கூடமாட்டார். சிவத்தை நாடி அடைய மாட்டாதவர். புத்தகங்களில் கண்ட நயத்தைப் பேசித்திரிவர். இறைவன் செய்த உபகாரங்களை எண்ணி அவன் புகழைப் பாட மாட்டார்கள். வீணாகக் களியாட்டம் ஆடவல்லவராகிய இவர்கள் அடையும் பயன் எதுவாகும் ?

2094. நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர்
நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும்
துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில்
அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே.

பொருள் : மனத்தில் நிறைந்து உயர்ந்து எழுகின்ற சோதியை நம்முடைய செம்பொருளாகிய சிவன் என்று நம் நாதனை நாள்தோறும் உறங்கும் வரைக்கும் துதியுங்கள். அங்ஙனம் துதிக்காவிடில் நமது ஐந்து இந்திரியங்களும் கட்டினை அறுத்துக் கொண்டு திரியும் யானை போலாகும்.

2095. மிருக மனிதர் மிக்கோர் பறவை
ஒருவர்செய்து அன்புவைத்து உன்னாதது இல்லை
பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்
திருமருவு மாதவம் சேர்ந்துஉணர்ந் தோரே.

பொருள் : விலங்கு, மனிதர், தேவர், பறவை ஒப்பற்ற இறைவன்பால் அன்பு பூண்டு நினையாதது இல்லை. ஞானத்தோடு பொருந்திய மாதவம் செய்த ஞானியர் எண்ணுதலோடு அமையாமல் சிவ அமுதத்தை உண்டு திளைப்பர்; மகிழ்ச்சியால் ஓடுவர். பூமியில் பிறந்ததனால் ஆகிய பயனைப் பெறுவர், மானுடர் அஃறிணையிற் பிறப்பினும் முற் பயிற்சியால் பிறப்புக்கு ஏற்றவாறு வழிபடுவர்.

2096. நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதயி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லை
ஆதி பயனென்று அமரர் பிரான்என்ற
நாதியே வைத்தது நாடுகின் றேனே.

பொருள் : நேர்மை யில்லாதவர் தமக்குக் கிடைத்த பொன்னைப் போற்றாமை போன்று சம்பிரதாய முறையில் இறைவனைச் சோதியாக அறிந்து போற்றுவாரில்லை. ஆனால் நான் அவனை நாம் பெறும் முதற் பயன் என்றும் தேவர்களுக்கும் மேலான தேவன் என்றும் அநாதி காலந்தொடங்கி மனத்துள் வைத்து அவனையே விரும்புகின்றேன். (நாதி - அநாதி என்பதின் முதற்குறை.)

2097. இரும்தேன் மலர்அளைந்து இன்புற வண்டு
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வருந்தேன் நுகராது வாய்புகு தேவை
அருந்தேனை யாரும் அறியகி லாரே.

பொருள் : மிக்க தேன் பொருந்திய மலரினைப் பொருந்தி மகிழ்வதற்காக, வண்டுகள் மிகுதியாகத் தேனைச் சேகரிக்கும் தன்மையை மக்கள் உணரார். சுற்றி வரும் வண்டு நுகராமல் வாயில் வலிய வந்து சொட்டும் தேனும் யாவராலும் பெறுவதற்கு அருமையான தேனும் போல்பவராகிய இறைவனை ஒருவரும் உணர மாட்டார். (தேன் - வண்டு. அருந்தேனை அருந்துகின்ற என்னை - இது நம் நாயனார் தம் நிலைமொழிந் தருளும் இடங்களுள் ஒன்று என்றும் பொருள் கொள்ளலாம்.)

2098. கருத்தறி யாது கழிந்தன காலம்
அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
ஒருத்தன்உள் ளான்உல கத்துயிர்க்கு எல்லாம்
வருத்திநில் லாது வழுக்குகின் றாரே.

பொருள் : இறைவனை அறியும் கருத்து இல்லாமல் இத்தனை காலமும் வீணே கழிந்தன. தேவர்க்குத் தலைவனாகிய அவன் அன்பினுள் உள்ளான். அவன் ஒருவனே உலகத்து உயிர்கள் அத்தனைக்கும் உயிர்க்குயிராய் உள்ளவன். அங்ஙனமிருந்தும் அறிவில்லாதவர் அவனைத் தங்கள் அனுபவத்தில் வருவித்துக் கொள்ளாமல் தவறி விடுகின்றார்கள்.

2099. குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தன நாள்களும் வீழ்ந்து கழிந்த
விதிர்த்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில்
கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.

பொருள் : வினைக்கு ஈடாக வரையறுக்கப்பட்ட நாள்களும் கழிந்தன. ஆகுல நீரராய்ப் பயனில மொழிந்தும் நயநில புரிந்தும் பொழுது போக்கி என் செய்தீர். கூற்றம் குதித்தோடிப் போய் ஆற்றல் வாய்ந்த சிவத்தப் பேணுதலாகிய நற்றவம் புரிகின்றிலீர். என் செய்வீர். ஆறுதலாகிய சுகனமர்ந்த அன்பினராய் ஆறுவகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானப்புகலினை எய்துவோர் ஆருயிர் கொகிக்கின்ற கூழ்ஒத்துக் காணப்படும் சிவபெருமான் திருவடியன்பில் துடுப்பு இடுதல் ஒத்து அணைந்து இன்புறும். (கொதிக்கின்ற கூழ் - சிவச்சோதி, துடுபிபிடல் - ஆன்மா ஒருமை அடைதல்)

2100. கரைஅருகு ஆறாக் கழனி விளைந்த
திரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின்
நரைஉரு வாச்செல்லும் நாள்கில வாமே.

பொருள் : தில்லைச் சிற்றம்பல நாதனை அணைய முயல்வார் மனம் அடங்கிய எல்லையாகிய கரையின்கண் திருவடிப் பேரின்பக் கழனியாகிய சிவப்பேறு ஆற்றுப் பெருவெள்ளம் போன்று விளைந்து திகழ்கின்றது. நல்லோர் திரைப் பருவமாகிய முதுமை எய்துவதன் முன் திருவருளால் இரண்டறக் கூடிக் கலந்து இன்புறுதற்கும் பொருந்தும் பெருந்தவம் புரிவாராயினர். அதனால்உணர் வுள்ளத்து எல்லையில்லாப் பேரின்பம் ஊறிப் பெருகுவதாயிற்று. இந் நன்னெறிக்கண் வாராத சில்லோர் நரைமுதிர் யாக்கையினராய்ச் சாநாள் எய்தி வருந்துகின்றனர். அத்தகைய நாள் நற்றவத்தோர்க்கு இல் லென்ப (திரை - தோல் சுருக்கம்.)

2101. வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து
இரவுஅறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை
அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று
விரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே.

பொருள் : உயிர் அனைத்தும் உடலோடு கூடித் தோன்றும் ஆதி சிருட்டியை அறிபவனும் அறியாமையை யுடைய அவ்வுலகத்தில் அதன் தன்மையை அறிபவனும் தானே எழுந்து விளங்கும் சோதியும் ஆகிய இறைவனைக் குண்டலினி யோகம் பயில்வோர் முன் விளங்கும் ஒரு தெய்வம் என்று அதனை அடைய வகை அறியாமலே அந்த இருளாகிய பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து மக்கள் கெடுகின்றனர்.

38. இதோபதேசம் (இதோபதேசம் - உயிருக்கு உறுதி பயக்கும் நன்மொழி.)

2102. மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.

பொருள் : இறைவனை மறந் தொழிகின்ற இவ்வுலகில் நிலையற்ற உடம்பு இறக்கும் காலத்தும் இறைவனை எண்ணுங்கள். வாழும்போது அலைந்து நிலை கலங்கிப்படும் துன்பங்களை எல்லாம் தீர்ப்பதற்காக மேன்மையான சிவ நெறியை எண்ணத்தில் கொண்டு நாடுவீராக. முதல் அடிக்கு மன்னா உலகமாகிய இம் மண்ணின் மீதுள்ள நிலையுறல் இல்லாத பிறவியை மறந் தொழியுங்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

2103. செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை
நல்ல அரநெறி நாடுமின் நீரே.

பொருள் : முடிந்த அளவு சித்தத்தைச் சிவன்பால் வையுங்கள் முடிந்த தன்மையால் உண்மைப் பொருளான சிவத்தையும் ஆத்மனையும் எடுத்துக் கூறுங்கள். இறைவன் ஒருவன் இல்லை என்று சிலம் சொல்லிக் கொண்டிருந்தாலும் எம்இறைவன் என்றும் உள்ளான். ஆதலால் சிவநெறியே தேடிப் பெறுங்கள். (வாய்மை - நித்திய பொருள். அவை ஆத்மனும் சிவனும் ஆம். பெரிதுளன் - நீக்கமற நிறைந்துள்ளவன்.)

2104. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.

பொருள் : குலமும் ஒன்றே; தெய்வமும் ஒன்றுதான். நல்லனவற்றையே எண்ணுங்கள். உமக்கு நமன் இல்லை, நீங்கள் வெட்கப்படாமல் சென்று அடையும் நெறியும் பிறிதில்லை. உங்கள் மனத்து இறை எண்ணம் நின்று நிலை பெற நீங்கள் நினைந்து உய்யுங்கள். திருமூலர் காலத்தில் தமிழ் நாட்டில் சைவ சமயமும் சிவ வழிபாடும் நிலை பெற்றிருந்தன என யூகிக்க முடிகிறது.

2105. போற்றிசெய் அந்தண் கயிலைப பொருப்பனை
நாற்றிசைக் கும்நடு வாய்நின்ற நம்பனைக்
காற்றிசைக் கும்கமழ் ஆக்கையைக் கைக்கொண்டு
கூற்றுதைத் தான்தன்னைக் கூறிநின்று உய்ம்மினே.

பொருள் : அழகிய செந்தண்மை வாய்ந்த திரு வெள்ளி மலைக்கண் வாழும் சிவபெருமானை, நெஞ்சமே போற்றி செய்வாயாக. நான்கு திசைகளுக்கும் நடுவிடமாகக் காணப்படும் தில்லைக் கண் மன்னிய பொன்னம்பலனாம் நம்பனை உயிர்ப்பினால் நடத்தப்படும் ஒன்பது தொளை சேர் இவ்வுடம்பினைக் கைக்கொண்டு கூற்றை உதைத்துத் தன் திருவடியைக் கொடுத்தருளும் ஏற்றூர்தி நீற்றுமேனியும் கொண்டு பெண்பாகமும் உடைய எம்மானை இடையறாது ஏத்தி ஐந்தெழுத்து ஓதி உய்யுங்கள்.

2106. இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்
எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று
அக்காலம் உன்ன அருள்பெற லாமே.

பொருள் : இவ்வுடலை நீத்து, இனி ஓர்உடலில் புகுந்து பிறவாத வண்ணம் உய்ந்து போகும் நெறியை விரும்புங்கள். எப்போது இவ்வுடல் நமக்கு வந்தது என்று அக்காலத்தை எண்ணி ஆராய்ந்தால் இறைவனது அருளைப் பெறலாம். சிவனை நாடினால் மலநீக்கம் பெற்றுப் பிறவி அறுதல் உண்டாகும்.

2107. போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன்அறி வான்உளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே.

பொருள் : சீவர்களின் விருப்பம் செல்லுகின்ற முறையில் உடனாகின்ற பொருளாகிய சிவன் பக்குவமாகின்ற காலத்தும் அறிந்து இன்பம் செய்பவனாகவும் உள்ளான். ஆதலால் இறக்கின்ற காலத்தும் அத் தலைவனையே நினையுங்கள். அப்பொழுது அப் பரம்பொருள் பிறவிக் கடலை நீந்தி அக்கரை சேர உதவும்.

2108. பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன்றும் இலாமையும் பேருல காமே.

பொருள் : உடம்பை விட்டுப் பிரிந்து செல்லுகின்ற இச்சீவன், இதனுள் வாழ்ந்த பயனைப் பெற வேண்டின் இறக்கும் போதாவது ஈசனை எண்ணுங்கள். அதனால் சிறப்போடு சிவநெறியும் தானே வந்து அடையும் பிறகு பிறப்பில்லாப் பேருலகம் கூடலாம். இறக்கின்ற காலத்திலாவது ஈசனை நினைக்க வேண்டும் என்று இப்பகுதியில் மூன்று தடவை வந்துள்ளது கண்டு, இதன் இன்றியமையாமை உணர்க.

2109. கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப்
பாடியுளே நின்று பாதம் பணிமின்கள்
ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுவது ஆமே.

பொருள் : அடியார் கூட்டத்தோடு நின்றும் தனித்து நின்றும் தொழுது, எமது இறைவனை உடலாகிய பாசறையுள் நின்று அவனது திருவடியைப் பணியுங்கள். கண்ணாடி போன்ற முகத்தின் முன்னுள்ள ஒளியில் நிலைபெற்று அறிவினால் தொழுபவர்க்கு, கன்றையுடைய பசு பாலைச் சொரிவது போலச் சிவ ஒளி சீவன்பால் பெருகி நிற்கும்.

2110. விடுகின்ற சீவனார் மேல்எழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவ ரோடே.

பொருள் : ஆவி நீங்கி ஆருயிர் மேலோங்கிப் போகும்போது சிவயநம என்று நாடுங்கள். அதுவே சிவபெருமானின் திருவடிகளை நாடுவதாகும். நாடுவது - சிந்திப்பது அப்படி நாடுவதால் அத்திருவடிச் சிறப்பால் நும் வினைகள் கெடுகின்றன. அழிவில்லாத புகழையுடைய அழகனாகிய சிவ பெருமான் உம்மை இமையவர் நடுவுள்இருக்குமாறு அருள்புரிகின்றான். (இமையவர் - மெய்யடியார்.)

2111. ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை அண்ணல் திருவடி
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.

பொருள் : திரு ஐந்தெழுத்து ஓதித் திருநீறு அணியுங்கால் ஏறுடையாய் எனவும், இறைவா எனவும், எம்பிரான் எனவும் உள்ளன்பால் ஓதுவர். அவ்வாறு ஓதித் திருவெண்ணீறணியும் மெய்யடியார்களை ஒருவர் ஆறணி செஞ்சடை அண்ணலாகிய சிவபெருமான் இவர்களே என்று நினைதல் வேண்டும். அங்ஙனம் நினைந்து அம் மெய்யடியார்களைச் சிறப்பாக வழிபடும் அவர்க்கு முத்திற வினைகளும் மூளா என்க. முத்திற வினைகளாவன: சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்பன.

2112. இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை
அன்புறு வீர்தவம் செய்யும்மெய்ஞ் ஞானத்துப்
பண்புறு வீர்பிற வித்தொழி  லேநின்று
துன்புறு பாசத்து உழைத்துஒழிந் தீரே.

பொருள் : பிறவித் தொழிலேயே நின்று பிறப்புத் துன்பத்தை மிகுவிக்கும் பாசப் பற்றாகிய ஆக்கைக்கே இத்தனை காலமும் உழைத்து இளைத்துக் களைத் மொழிந்தவர்களே அவனருளால் அறிந்தே இன்புறுங்கள். அவன் திருவடிக் கண்ணே இறவாத இன்ப அன்பு வேண்டிக் காதல் செய்யுங்கள். சிவத்தைப் பேணுதலாகிய தவத்தைப் புரியுங்கள். அதற்குரிய திருவடி யுணர்வுப் பண்புகளைப் பெறுவீராவீர்.

2113. மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின் றோர்க்கே.

பொருள் : அனைத்துயிரும் படிப்படியாகச் செவ்வி பெற்று மேற்கொள்ளத் தக்க அழிவில் மெய்த்தவம் ஒன்றுண்டு. அத்தவமே சிவத்தைப் பேணும் தவமாகும். இத்தவமே சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நான்மையாக நவிலப்படும். இப்பெருந்தவ வாயிலாக எய்தற்கரிய திருத்தாளும் ஒன்றுண்டு. அத் திருவடியைத் தலைப்படும். அறிவினுள் அறிவாம் மெய்ந்நெறியும் ஒன்று உண்டு. இவற்றை மேற்கொள்ளும் வண்ணம் விழைந்து நிற்பார் சிவக்கிழமையர் ஆவர். அந்நல்லார்க்கு எல்லாம் எளிதாகவும் இனிதாகவும் கைகூடும்.

2114. சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன்
பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும்
கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல காட்டிடும்
சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.

பொருள் : திருவருள் துணையால் திருவடி யுணர்வால் சேர்ந்தவர்க்கு ஆர்ந்த இன்பம் கொடுத்தருளும் செம் மேனி எம்மான் சிவபெருமான். நன்னெறி சென்று நாடாமல் நீங்கியவர் பேர்ந்தவராவர். அவர்க்குத் துன்பப் பிறவியைக் கொடுத்தருள்வன். நன்னெறி நான்மையில் அறிவில் அறிவு என்று சொல்லப்படும் மேல்நெறி சென்றவர் கூர்ந்தவர் ஆவர். அத்தகையோர்க்கே திருவடிகளைக் காட்டி அருள்வன். அவ் அருள்வழிச் சென்று சார்ந்தவர் தேவராகிய சிவபெருமானை உணர்ந்தவர் ஆவர்.

2115. முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி அதுவிரும் பாரே.

பொருள் : வீடு பேறாகவும், அதன் வாயிலாகிய ஞானமாகவும் ஞானத்துக்குத் துணை செய்யும் முத்தமிழ் ஓசையாகவும் உள்ள ஈசனை, எத்துணைக் காலமும் பலர் புறத்தில் பணிவர். ஆனால் பாலில் கலந்திருக்கும் நெய் போல் நின்மல சிவனும் அவருடன் மறைந்திருப்பான். அத் தன்மையான சோதிப் பிழம்பாகிய அவனை அகத்தே கண்டு வழிபட அறியார்.

2116. நியமத்த னாகிய நின்மலன் வைத்த
உகம்எத் தனையென்று ஒருவரும் தேறார்
பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால்
சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே.

பொருள் : தனுகரண புவன போகங்களை உயிர்களுக்கு நியமிக்கின்றவனாகிய நின்மல சிவன் அமைத்தருளிய காலம் எவ்வளவு என்று ஒருவரும் உணரமாட்டார். பிறப்பிலே வந்து படுவதைத் தவிர, சிவமாகிய பரம்பொருளின் பெருமையை உணராது கெடுகின்றார்.

2117. இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்
துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை
விஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னை
நஞ்சுஅற் றவர்க்குஅன்றி நாடஒண் ணாதே.

பொருள் : இங்குள்ள வாழ்வும் எவ்வளவு துன்பமும் ஆயினும், மரணம் வந்த காலத்தில் தூய செம்மணி போலும் பெருமானை விஞ்ஞானத்து உறையும் விகிர்தனே என்று நைந்து உருகிப் பற்றற்ற வர்க்கன்றி நின்னை அடைய முடியாது (அகிதம் - துன்பம்.)

2118. பஞ்சமும் ஆம்புவி சற்குரு பால்முன்னி
வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மை
அஞ்சுவன் நாதன் அருநர கத்துஇடும்
செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.

பொருள் : சன்மார்க்க குருவை நாடி வஞ்சகமுடையோர் அடைவராயின் உலகில் பஞ்சம் உண்டாகும். அவர்களைக் கண்டு இறைவனே அஞ்சுவான். கொடுமையான நரகத்தில் அவர்களை வைப்பன். வஞ்சகமின்றிச் செம்மையான ஒழுக்கத்து நிற்போரைக் காண்பதே எல்லாச் சித்திகளையும் அளிக்கும்.

2119. சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே.

பொருள் : அளவற்ற தேவர்கள் சிவனைக் கிரியை நெறிநின்று வழி பட்டனர். அவ்வாறு அவனை வழிபட்டு ஆகும் பயன் ஒன்றும் இல்லை. அவனை வழிபடும் நெறியான ஞான நெறியினை உபதேசிக்கும் சற்குருவை வழிபட்டால் சிவனைப் பெறலாம். சற்குரு வழிபாடு சிவகதி அடைவிக்கும்.

2120. நரரும் சுரரும் பசுபாசம் நண்ணிக்
கருமங்க ளாலே கழிதலில் கண்டு
குருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால்
பரம்என்றல் அன்றிப் பகர்ஒன்றும் இன்றே.

பொருள் : மக்களும் தேவரும் ஆகிய பசு வர்க்கம் பாசத்தைப் பொருந்தி வினைகளைச் செய்து அழிவதைப் பார்த்து குருவாகிய ஞானி பாசம் நீங்கினவனாய் இருப்பான் ஆகில், நீ பரத்தோடு கூடிப் பரமாவாய் என்று உபதேசிப்பதன்றிச் சீடனுக்குச் சொல்லக் கூடியது ஒன்றும் இல்லை. தத்துவமசி மகாவாக்கியமே பாச நீக்கத்துக்குரிய உபதேச மொழியாகும்.

2121. ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண் டவர்வினை போயற நாடொறும்
நீர்க்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின்
மேற்கொண்ட வாறுஅலை வீவித்து ளானே.

பொருள் : குருவாக எழுந்தருளி வந்து ஆட்கொண்டவர் ஒப்பற்ற சிவன். அவன்பால் அன்பு கொண்ட சீடரது வினைகள் நாள்தோறும் தேய்ந்து ஒழிய, நீரையுடைய நீண்ட செஞ்சடையை யுடைய  இறைவன், உருவம் கொண்டு எழுந்தருளிவந்து ஆட்கொண்ட முறையே வருத்தி வினையைக் கெடுமாறு செய்தான். சிவமே குருவாக எழுந்தருளிவந்து வினை கெடுமாறு அருளுவான்.

எட்டாம் தந்திரம் -(சுப்பிராமேம்)

1. உடலிற் பஞ்ச பேதம்

(உடலில் ஐவகை பேதமாவன: அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்பன.)

2122. காயப்பை ஒன்று சரக்குப் பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.

பொருள் : உடலாகிய அன்னமய கோசம் ஒன்று உண்டு. பல வினைகளாகிய சரக்கை யுடைய பிராணமய கோசம் என்று ஒன்று உண்டு. இவை அல்லாத வேறொரு மனோமய கோசம் ஒன்று உண்டு அறிவு விளங்கும் மனோமய கோசம் உடலைவிட்டு நீங்கினால் மாயப் பை ஆகிய இரு உடலும் மண்ணோடு மண்ணாய்க் கலந்துவிடும்.

2123. அத்தன் அமைத்த உடல்இரு கூறினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமான் ஆங்காரம் புரியப்பட்ட காயமே.

பொருள் : சிவபெருமான் அமைந்தருளிய தூலம் சூக்குமம் என இரு கூறாகிய உடலில் சுத்தமாகிய சூக்கும உடலைப்பற்றிச் சொல்லும்போது ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம், புத்தி மனம் அலங்காரம் என்னும் எட்டும் புரியட்ட சரீரமாகும்.

2124. எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்
ஒட்டிய பாசம் உணர்வுஅது வாகவே
கட்டி அவிழ்ந்துவிடும் கண்ணுதல் காணுமே.

பொருள் : முன்மந்திரத்தில் கூறிய எட்டினில் சப்தம் முதலிய தன் மாத்திரைகளிலிருந்து ஐந்து இந்திரியங்களும் ஆகும். அவற்றோடு பொருந்திய புத்திய முதலிய மூன்றும் உட்கருவிகளாம். இவற்றோடு சேர்த்த பாசத்தை உணர்வு மயமாக இருந்து சிவபெருமான் தூல உடலில் கூட்டியும் பிரித்தும் அருளுவான்.

2125. இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவ மலால்உடல் ஒன்றென லாமே.

பொருள் : உண்ட உணவின் சாரம் இரத்தம் மாமிசம், தோல், நரம்பு, பொருந்திய எலும்பு கொழுப்பொடு மூளை, பரந்துள்ள இந்திரியம் ஆகியவற்றாலாகிய பாழாம் காரியமான உருவமாகிய மயக்கம் தரும் உடலை ஒரு பொருள் என்று கூற முடியுமோ ? முடியாது. (அத்தி - அஸ்தி எலும்பு. உபாதி - காரியம்.)

2126. ஆரே அறிவார் அடியின் பெருமையை
யாரே அறிவார் அங்கவர் நின்றது
யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை
யாரே அறிவார் அடிக்காவல் ஆனதே.

பொருள் : சிவபெருமானுடைய திருவடிப் பெருமையை யார் அறிவார் ? உடலை இடமாகக் கொண்டு அவர் எழுந்தருளியிருப்பதை யார் அறிவார் ? அறுபது  பொதுத் தத்துவங்களோடும் எட்டுச் சிறப்புத் தத்துவங்களும் விளங்கும் இருவகை உடலையும் யார் அறிவார் ? அவர் மூலாதாரச் சக்கரத்திலிருந்து காப்பதை யார் அறியவல்லார் ?

2127. எண்சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்
கண்கால் உடலில் கரக்கின்ற கைகளில்
புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்ற
நண்பால் உடம்புதன் னால்உடம் பாமே.

பொருள் : எட்டுச் சாண் அளவாக எடுத்த உடம்பினுள் அமைந்த கண் கால் முதலிய உறுப்புக்களை அவ் வுடம்பில் மறைக்கின்ற ஒழுங்கில் நினைவழியாக அறுபத்தெட்டு உருவான ஆகாயக் கூற்றை ஒன்று சேர்க்கின்ற நட்பினால்  தூல உடம்பும் அதைத்  தாங்கிய சூக்கும உடம்பும் ஆம்.

2128. உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியாப் பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றது ஆரறி வாறே.

பொருள் : தூல உடம்புக்கும் தூலமல்லாத பிராணமய மனோமய விஞ்ஞானமய ஆனந்தமய மாகிய நாலு உடம்புக்கும் உயிராக விளங்குவது சீவனாகும். அச் சீவன் பரத்தோடு நீங்கு தலற்ற பிரமத்தில் (சிவத்தில்) ஒடுங்கும். அப்பிரமம் உடல் உயிரில் கலந்து வியாபித்திருப்பதைப் போன்று சீவன் ஐங்கோசங்களிலும் அடங்கியிருந்து தொழிற்படுவதையும் இவற்றை விட்டு நீங்கும் முறைமையையும் யார் அறிவார் ?

2129. ஆறுஅந்த மாகி நடுவுடன் கூடினால்
தேறிய மூவாறும் சிக்கென்று  இருந்திடும்
கூறுங் கலைகள் பதினெட்டும் கூடியே
ஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே.

பொருள் : வழிகள் ஆறுமுடியினை உடையன. அவை எழுத்து, சொல், மறை, தத்துவமாகிய மெய்கள் (உடல்) உலகம், கலைகள் என்று சொல்லப்படும். முற்கூறிய மூன்றும் சொல்லுலகு என்றும், பிற்கூறிய மூன்றும் பொருள் உலக என்றும் கூறப்படும். இவ்வழிகளின் நடுவாய்த் திகழும் மெய்ப்பொருள் சிவபெருமான். அச்சிவத்துடன் கூடினால் பதினெட்டும் கூடினார் வழி யொழுகும். (கூடுதல் - இடையறா திரு ஐந்தெழுத்தை எண்ணுதல்.)

2130. மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும்
பொய்யினில் சூக்குமம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.

பொருள் : புறம் தோன்றும்படி பொருந்தியுள்ள பருமை மிக்க பருவுடலையும், அகத்தே ஊன்றி உன்னும்படி அமைந்த நுண்ணுடலையும் உழைப்புக்கு விளக்கும் தரும் முதல் உடலையும் தருதற்குக் காரணமாயுள்ள மா மாயையைச் சிவபிரான் ஒடுக்குவன். அம் மாமாயை உடம்பு சிவபெருமான் திருவடிக்கீழ்  ஒடுங்கும். (முதலுடம்பு - காரண உடம்பு; உடம்பு - மாமாயை; முகத்தையும் - பொருத்தத்தையும்; மெய் - தூலசரீரம்; பொய் - சூக்கும சரீரம்.)

2131. காயும் கடும்பரி கால்வைத்து வாங்கல போல்
சேய இடம்அண்மை செல்லவும் வல்லது
காயத் துகிர்போர்வை ஒன்றுவிட்டு ஆங்குஒன்றிட்டு
ஏயும் அவரென்ன ஏய்ந்திடும் காயமே.

பொருள் : பகைவரைக் காயும் தன்மை வாய்ந்த பாய்மாவாகிய குதிரை அண்மை இடத்தில் மட்டும் அல்லாமல் மிகவும் தொலைவான இடத்துக்கும் மிகுந்த விரைவில் செல்லும் வன்மையுடையதாகும். அது போல் ஆருயிரும் தன்னை மூடியிருக்கும் துகிலால் ஆகிய போர்வையைப் போன்றுள்ள உடம்பை வினைக்கீடாக ஒன்று விட்டு ஒன்றைப் பற்றிப் பிறக்கும். துகிற் போர்வை பழுதூற்றல் அதனை நீக்கி விட்டு மற்றொரு போர்வையினை எடுத்துக் கொள்ளுதல் ஈண்டு ஒப்பாகும். இது உயிர் பல அண்டங்களில் பல பிறவிகளை வெகுவிரைவாக எடுக்கும் என்றது.

2132. நாகம் உடல்விரி போலும்நல் அண்டச
மாக நானாவில் கனாமறந் தல்லது
போகலும் ஆகும் அரன்அரு ளாலே கென்று
ஏகும் இடம்சென்று இருபயன் உண்ணுமே.

பொருள் : நாகப்பாம்பு தோலை உரித்துவிட்டுச் செல்லுதல் போலவும், முட்டையிலுள்ள குஞ்சு முட்டையைவிட்டு வெளிவருவது போலவும் கனவில் கண்டவற்றை நனவில் விளங்காது மறந்து விடுதல் போலவும் உடலைவிட்டு உயிர் போகும். சிவனது ஆணையால் உடலை விட்டுப் பிரிந்துபோய் அதன் தகுதிக்கேற்ப நல்வினை தீவினைகளைச் சொர்க்க நரகங்களைப் பொருந்தி உண்ணும். (அண்டசம் - முட்டையில் தோன்றுவன அல்லது உடம்பு
அல்லாதது.)

2133. உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன
கண்டு விடும்சுக்கம் காரண மாச்செலப்
பண்டு தொடரப் பரகாய யோகிபோல்
பிண்டம் எடுக்கும் பிறப்புஇறப்பு எய்தியே.

பொருள் : இத்தேகப் பயனை அனுபவித்து உடலை விட்டவர் சூக்கும சரீரத்தில் பொருந்தி நரக சொர்க்கப் பலனை அனுபவிப்பர். பழமையான வினை தொடர சூக்கும  சரீரத்தைப் பற்றி வந்து பர ஆகாயத்தில் சஞ்சரிக்கும் திறமை பொருந்திய யோகி மீண்டும் தன் உடலில் வந்து புகுவது போல் உடம்பை எடுத்துப் பிறந்தும் இறந்தும் பிறவிச் சக்கரத்தில் அலைக்கப் படுவர்.

2134. தான்அவ னாகிய தற்பரம் தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத்து அடைந்திடும்
ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.

பொருள் : அவனே தானாகிய அந்நெறி நின்று தத்பதப் பொருளைத் தன்னில் கண்டவன் பிறவிக்கு வரும் இயல்பான குண தர்மணத்தை மாற்றிப் பரமம் என்ற மேலான நிலை அடைவன். இவ்விதம் செய்யாத மற்றைய உயிர்கள் அவரவர் வினைப் போகங்களுக்குரிய பத நிலைகளைப் பெற்றுச் சொர்க்கம். நரகம் அடைந்தும் மீண்டும் நிலவுலகில் வந்தும் வருந்தும்.

2135. ஞானிக்கும் காயம் சிவமே தனுவாகும்
ஞானிக்கும் காயம் உடம்பே அதுவாகும்
மேல்நிற்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.

பொருள் : சிவத்தையே நினைந்திருப்பதால் ஞானியின் உடம்பு சிவதனுவாகும். தேவ தர்மத்தை மறந்திருத்தலால் ஞானிக்குரிய உடம்பு சிவத்தினுடையதாகும். சிரசின் மேல் சிந்தித்திருக்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும் உடம்பாகும். மோனம் என்ற பிரணவ யோகத்தை முடித்தவர் ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றுமான உடம்பு கெட்டு சிவசாயுச்சியம் பெறுவர்.

இந்நான்கும் முறையே அகவிடத்தார் ஆசாரத்தை அகலுதலும், தன்னை மறத்தலும், தன்நாமம் கெடுதலும், தலைவன் தாள் தலைப்படுதலும் ஆகிய திருநெறி நான்மைத் திருவாகும். இக்குறிப்பு முன்னம் அவனுடைய நாமங்கேட்டாள் என்னும் அப்பர் தேவாரத்துள் காண்க.

2136. விஞ்ஞானத் தோர்க்குஆ ணவமே மிகுதனு
எஞ்ஞானத்  தோர்க்குத் தனுமாயை தான்என்ப
அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனுவாகும்
மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.

பொருள் : தெளிந்த அறிவினையுடைய விஞ்ஞானகலர்க்கு ஆணவம் ஒன்றே உடம்பாகும். அறிவினைப் பெறும் தகுதியுடைய பிரளயகலர்க்கு மாயையே உடம்பாகும். அஞ்ஞானத்தோடு பொருந்திய சகலர்க்குக் கன்மத்தால் விளைந்த போக போக்கியப் பொருளே உடலாகும். உண்மையான சிவஞானிக்கு அகண்ட சிவமே உடம்பாக அமையும். ஞானிகளே ஆணவமாதி மலங்கள் நீங்கப் பெற்றுச் சிவதனுவைப் பெறுவர்.

2137. மலமென்று உடம்பை மதியாத ஊமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென்று இதனையே நாடி இருக்கில்
பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் அண்டத்தே.

பொருள் : இவ்வுடம்பு மலத்தால் ஆயது என்று உணர்ந்து இதனை ஒதுக்காத  அறிவிலிகள் இதுவே சிறந்த இடம் என்று எண்ணிக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றீர்கள். இவ்வுடம்பே நன்மை பயப்பது என்று கருதியிருப்பீர்களாயின் உங்களுக்கு மேலும் மேலும் இப்பூவுலகில் பிறவி வந்து கொண்டிருக்கும். பூத உடலை விட்டு நிற்பதே ஞான நெறியாகும்.

2138. நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே
அல்ல செவிசத்த மாதி  மனத்தையும்
மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே.

பொருள் : நல்ல வசனத்தைப் பேசும் வாக்கும் நல்லதையே நினைத்துச் சிந்தித்துத் தெளியும் மனம் முதலியனவும் உடையவரது  உள்ளத்தில் மலமில்லாத சிவன் மெல்ல விளங்கி அருளுவான். அவ்வாறு அல்லாதவற்றைக் கேட்கும் செவியும் பேசும் வாக்கு முதலியனவும் நினைக்கும் மனமும் மெல்லப் பெறுபவர் சிவம்பிரகாசியாது வாட்டமுறும் முகத்தை உடையோராவர். சிவத்தை நினைந்து பேசியிருப்பவர் இன்பமும், உலகத்தை நினைந்து பேசியிருப்பவர் துன்பமும் பெறுவர்.

2. உடல் விடல் (உடல் விடலாவது உடல் நினைவு விடல்)

2139. பண்ணாக்கும் காமம் பயிலும் வசனமும்
விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்
புண்ணாம் உடலில் பொருந்தும்  மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.

பொருள் : இன்பம் தரும் காமத்தை உண்டாக்குகின்ற பேச்சும், ஆகாயக் கூற்றில் செல்லும் பிராணனும், அங்கே உண்டாகும் ஓசையும், ஊன் பொதிந்த உடம்பில் பொருந்துகின்ற மனத்தையும், சிரசின் மேல் நிலை பெறச் செய்ய, உடம்பின் பிரக்ஞையும் மறந்துவிடும்.

2140. அழிகின்ற ஓர்உடம்பு ஆகும் செவிகண்
கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனக்கு உறுதுணை இல்லையே.

பொருள் : உடம்பை விட்டு ஆருயிர் நீங்கும் காலத்தில் செவி கண் முதலிய உறுப்புகள் செயலற்று அழியும். அக்காலத்துப் புரியும் நோன்பினாலும் தானங்களினாலும் எவ்வகையான துணையும் அவ்வுடலுக்கோ உயிருக்கோ வருவதில்லை. எனவே சிவபெருமானே உறுதுணையாவான்.

2141. இலையாம் இடையில் எழுகின்ற காமம்
முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத்
தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்
சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே.

பொருள் : இல்லையென்று சொல்லும்படியான மிகவும் நுணுகிய இடையையுடைய அழகமைந்த பெண்பால் கொண்ட அளப்பரும் காமத்தால் நெஞ்சம் உலைவுற்று மூழ்கித் துன்புறும். இவ்வுண்மை உணர்ந்து ஒழுகுவார் நெஞ்சத் திண்மையர் ஆவர். அவர்கள் உள்ளத்தில் தம் உடம்பு மின்னல் போன்று நிலையாது அகலும் என உணர்ந்து தம்முடலைச் சுமை யெனத் தாங்கித்திரிவர். அவர்களுடையகல் ஒத்த உறுதி யான சித்தம் சிவபிரானிடத்தே அழுந்தி நிற்கும் அதனால் அவர்கள் பேரின்பம் உறுவர்.

3. அவத்தை பேதம் - கீழால் அவத்தை

(அவத்தை பேதம் - சீவன் உடம்பில் வாழும்போது அடைகின்ற நிலை வேறுபாடு. இவை சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என ஐந்தாகும். சாக்கிரத்திலிருந்து கீழ்நோக்கித் துரியாதீதத்துக்குச் செல்லுதல் கீழால் அவத்தை (நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பு, அடங்கல்))

2142. ஐஐந்து மத்திமை யானது சாக்கிரம்
கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண் டிலாத புருடன்இத யம்சுழுனை
மெய்கண் டவன்உந்தி ஆகும் துரியமே.

பொருள் : இருபத்தைந்து கருவிகளுடன் சீவன் புருவ நடுவில் உள்ள போது விழிப்பு நிலையாகும். பழகிய பதிநான்கு கருவிகளுடன் சீவன் கழுத்தில் தங்கும்போது கனாநிலையை அடையும் என்பர். அழிவில்லாத புருடன். இதயத்தைப் பற்றியுள்ளபோது உறக்கமாகும். அழியாவனாகிய ஆன்மா உந்தியில் பொருந்தும்போது துரியமாகும்.

2143. முப்பதோடு ஆறின் முதல்நனா ஐந்தாகச்
செப்புஅதில் நான்காய்த்  திகழ்ந்திரண்டு ஒன்றாகி
அப்பதி யாகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் ளீரே.

பொருள் : சாக்கிரத்தில் முப்பத்தாறு தத்துவங்களுடன் சிவ தத்துவம் ஐந்துமாக அடுத்துச்சொல்லப் பெறுகின்ற கனவு நிலையில் மகேசுவரம் சாதாக்கியம் சத்தி சிவம் ஆகிய நான்கும், விளங்குகின்ற துரியத்தில் சத்தி சிவம் ஆகிய இரண்டும், துரியாதீதத்தில் சிவம் ஒன்றுமாக அச்சிவம் முதலாகத் தொழிற்படும். இவ்வாறு சுத்தவித்தை முதலாகச் சிவம் ஈறாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

2144. இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை
மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும் அந்தக்
கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
பந்தஅச் சாக்கரப் பாலது ஆகுமே.

பொருள் : ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் பத்தும் அவற்றின் விஷயங்களான சத்தாதி வசனாதி பத்தும் மறை பொருளாக உள்ள வாயுக்கள் பத்தும் மனம் முதலிய உட்கரணங்கள் நான்கும் இவற்றோடு கூடிய ஆன்மாவும் ஆக 35 ம் பந்தத்தைச் செய்கின்ற சாக்கிர அவத்தையின் கண்ணவாகும். பாடபேதம் : (அச்சக்கரம் - சரீரம்.)

2145. பாரது பொன்மை பசுமை உடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கறுப்பை உடையது
வானகம் தூமம் மறைந்துநின் றாரே.

பொருள் : மண்ணின் நிறம் பசும்பொன் நிறமாகும். நீர் வெண்ணிறமானது. நெருப்பு செந்நிறமானது, மேகம் போன்ற காற்று கருமை நிறமானது. ஆகாயம் புகை நிறமானது. இவ்வகையான நிறங்களில் ஐம்பூதங்களும் மறைந்து நிற்கும். முதல் மூன்று வெளிப்படத் தோன்றுவன. காற்று தொழிலால் புலனாவது. வானம் உயத்துணர்வல் புலனாவது அதனால் வானத்தை மறைந்து நின்றார் என ஓதினார்.

2146. பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை
ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமோடு
ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.

பொருள் : பூதம் ஐந்தும், பொறிஐந்தும் குற்றம் எய்துமாறு இருந்த புறநிலைக் கருவிகள் என்ப. இவற்றால் நிகழும் குணம் செயல்கள் மலம் காரணமாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு விரிந்த கருவிகள் அறுபது. ஆகக்கருவிகள் தொண்ணூற்றாறு என்ப, இவை ஜாக்கிர அவத்தைக்குரிய கருவிகள் 96 ஆகம். (தத்துவம் 36 தாத்துவிகம் 60 ஆக 96)

2147. இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை
படுபர சேனையும் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறும் நால்வர்
அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

பொருள் : ஆருயிர்கள் ஐம்பாடு எய்தும் இட வகைகள் ஐந்தென்ப அவை: நனவு, கனவு, உறக்கம் பேருறக்கம், உயிர்ப்பு, அடங்கல் என்ப. இவற்றுள் உயிர்ப்படங்கல் ஒழித்து, ஒழிந்து நான்கினும் உள்ள கருவிகளை உருவகமாக ஓதியருளுகின்றார். இருபத்தைந்து கருவிகள் யானையை ஒக்கும். பேசல், நடத்தல், கொடுத்தல், கழித்தல், இன்புறலின் கருவிகள் விரைந்து செல்லும் காலாட்களாகும். ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்பவற்றை மேற்கொள்ளும் கருவிகள் ஐந்தும் மிக விரைந்து செல்லும் குதிரைகளாகும். மிடற்றோசை உள்ளிட்ட ஓசைகள் நான்கும் அமைச்சரை ஒக்கும். இந் நான்கும் மடங்குதலே அப்பால் நிலையாகும். (ஓசைநான்கு நுண்மை, நினைவு, மிடறு, செவி என்ப.)

2148. உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குளின் றாரே.

பொருள் : பிராணமய கோசமும் மனோமய கோசமும் அன்னமய கோசத்தைத் தழுவி நின்ற உடம்பில் உள்ள உயிரின் இயல்பை அறியார். உடம்புக்கும் பிராணனுக்கும் உள்ள தொடர்பை அறியாதவர் மடத்தில் புகுந்த நாய் அலைவது போல மயங்குகின்றார்கள். (சைவர் மடத்தில தனக்கு வேண்டிய இறைச்சி எலும்பு முதலியன இல்லாமையால் நாய் மயங்குவது இங்கு உவமையாக வந்துள்ளது.)

2149. இருக்கின்ற வாறுஒன்று அறிகிலர் ஏழைகள்
மருக்கும்  அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்து
உருக்கொண்டு தொக்க உடல்ஒழி யாதே.

பொருள் : உண்மை யறிவில்லாத கோழையர் உடம்பகத்துத் தங்கியிருக்கும் தம் தன்மையை உணரமாட்டார். இவ்வுடம்பையே சிவநினைவால் திரு வெண்ணீறு, சிவமணி பூணலால் சிவனடியாராகிய நடமாடும் திருக்கோயில்களைச் சிவன் எனவே தேறி வழிபடலால் மாற்றிச் சிவ உடலாக அமைத்துக் கொள்ளலாம். அங்ஙனம் அமைத்துக் கொண்டால் பிறப்பு இறப்புகளை அறுக்கும் பெருமறை சிகரமாகும். இதனைப் பேசாமறை என்பர். இப்பேசாமறையே அசபை என ஓதப் பெற்றது. இதனால் இறப்பு - பிறப்புகளை ஒழிக்கலாம்.

2150. ஒளித்திட் டிருக்கும் ஒருபதி னாலை
அளித்தனன் என்னுள்ளே ஆரியன் வந்து
அளிக்கும் கலைகளி னால்அறு பத்து
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.

பொருள் : ஆருயிர் தோறும் ஒளிந்திருக்கும் ஒருபதி என்று ஓதப்பெற்றனன். அவன் ஆருளிய பொருளும் நெறியும் நந்நான்கு என்ப அவை முறையே அறம் பொருள் இன்பம் வீடு எனவும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனவும் கூறப்படும். இவற்றை அளித்தருளினன் என் உள்ளத்தின் உள்ளே ஆரியன் என்னும் ஆசானாய் எழுந்தருளினன். அத்தகைய சிவ குருவானவர் உள்ளிருந்து உணர்த்தும் கலைகள் அறுபத்து நான்கு அக்கலைகளின் வாயிலாக எண்ணத்தின் கருவியாகிய சித்தம் சிவம் திருவடியையன்றி வேறொன்றும் எண்ணாமல் ஒடுங்குமாறு செய்தருளினன். திருவடிப் புகலில் அடங்கி யிருக்குமாறும் அருள் புரிந்தனன். பதினாலு என்பதைப் பிராசாத கலைகள் என்றும் கொள்ளலாம்.

2151. மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும்
பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓர்ஒன்றாய்
உன்னின் முடிந்தது ஒருபூத சயமே.

பொருள் : மண்ணும், அதனில் பொருந்தி விரிந்து இருக்கும் நீரும் பொன்போற் காணப்படும் தீயும், புகழ் மிக்கதாகிய வளியும், புகழ்மிக்கதாகிய வானமும், நிலைபெற்றுள்ள மனம், இறுப்பு, எழுச்சி ஆகிய எட்டும் அவ் அவற்றின் தன்மையுடன் ஓர் ஒன்றாய் நினைத்து உண்மை ஓர்ந்தால் பூதவெற்றி நிறைவுற்ற தென்க.

2152. முன்னிக்கு ஒரு மகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர்மு னாள்இல்லை
கன்னியைக் கன்னியே காதலித் தானே.

பொருள் : முதல்பூதமான ஆகாயத்துக்கு ஓசை என்ற ஒரு மகன். அதனின்றும் உருக்கொண்ட காற்றுக்கு ஓசையும் ஊறுமான இருமக்கள். காற்றினின்றும் வந்த தீயினுக்கு ஓசை, பரிசம், உருவம் என்ற மூன்று பிள்ளைகள். பிறகான நீருக்கு ஓசை, பரிசம், உருவம், சுவை என்ற நான்கு பிள்ளைகள், கன்னியாகிய பூமாதேவிக்கு ஓசை பரிசம் உருவம், சுவை, நாற்றம் என்ற ஐவர் மக்களாகும். இவ்விதமான பிள்ளைகள் சிவத்துடன் சமவாயமான சிற் சித்தியிடம் முதலில் இல்லை. அவளே சிருஷ்டியைக் கருதியபோது ஐந்து பிரிவாகப் பிரிந்து அவைகளின் வேறாயும் அவைகளின் ஊடேயும் நின்றனள்.

2153. கண்டன ஐந்தும் கலந்தனதான் ஐந்தும்சென்று
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டைய தாகிப் பரந்து வியாக்கிரத்து
அண்டமும் தானாய் அமர்ந்துநின் றானே

கண்டகனவு ஐந்தும் எனவும் பாடம்

பொருள் : மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங்களால் பெற்ற காட்சி ஐந்தும், வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் ஆகிய கன்மேந்திரியங்களால் பெற்ற அனுபவம் ஐந்தும், மனம்  முதலிய அந்தக் காரணங்களால் நுகர்ந்தவை நான்கும் ஒருசேரக் கண்டபின் பழமையானதாகிய மேலான சாக்கிரநிலையில் பிரபஞ்சமும் தானாய் விளங்கும்படி நின்றான்.

2154. நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்து
ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.

பொருள் : மேலோதியவாறு நின்றார் நிற்க. அங்ஙனம் நில்லாதார் அனைவரும் இருவகைப் பொறிபத்தும் கலன் நான்குமாகிய  பதினான்கில் பொறி பத்தையும் விட்டுப் பொருந்திய எண்ணம், மனம், எழுச்சி இறுப்பு என்னும் அகப்புறக் கலன் நான்குடன் புறத்து மனை வாழ்க்கையின்கண் பயின்று வந்துள்ள பசைத் தொடர்பால் கழுத்தில் கனவு கண்டனர்.

2155. தானம் இழந்து தனிபுக்கு இதயத்து
மானம் அழிந்து மதிகெட்டு மாலாகி
ஆன விரிவுறி யாஅவ் வியத்தத்தில்
மேனி அழிந்து சுழுத்தியது ஆமே.

பொருள் : கனவின் நிலைக்களமாகிய கழுத்தை விட்டுக் கீழிறங்கி நெஞ்சத்தில் தனியே புகுந்து உலகியல் பெருமையும் அறிவும் அழிந்து உயிர் நிற்கும். அங்கு அவ்வுயிர்க்கு மயக்கம் ஒன்றுமே உடன் நிற்கும். அங்கு அமைதி, ஆட்சி, அழுந்தல் என்னும் மூன்று குணங்களும் (சத்துவம், இராஜசம், தாமதம்) வெளிப்படாமல் அடங்குநிலை அவ்வியத்தம். இதுவே உறக்க நிலையாகும். (உறக்கம் - சுழுத்தி, அவ்வியத்தம் - மூலப்பகுதி.)

2156. சுழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
விழுமப் பொருளுடன் மேவிநின் றானே.

பொருள் : உறக்க நிலைக் களமாகிய நெஞ்சத்தின் கண் எண்ணமும் உயிர்ப்பும் ஆளும் ஆகிய மூன்று கருவிகளும் தொழிற் படும். பேருறக்க நிலைக் களமாகிய கொப்பூழின்கண் உயிர்ப் பும் ஆளும் ஆகிய இரண்டு கருவிகள் தொழிற்படும். உயிர்ப்பு அடங்குதலாகிய குலத்திடத்து ஆள் மட்டும் தொழிற்படும் இங்கு ஆருயிர் ஆள் என்னும் கருவியுடன் கூடி மூலப்பகுதி என்னும் திரிபு உணர்ச்சிப் பண்பை நுகர்ந்து கொண்டிருக்கும் இவ்வுண்மை அவ்வுயிர் விழித்தெழுந்தபின் இன்புறத் துயின்றேன் என மொழிவதால் உணரலாம். அவ்வியத்தமாகிய மூலப்பகுதி மாறு பாட்டுணர்வைச் செய்யும்.

2157. தானத்து எழுந்து தருக்கு துரியத்தின்
வானத்து எழுந்துபோய் வையம் பிறகிட்டுக்
கானத்து எழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்து அவித்தைவிட்டு ஊமன்நின் றானே.

பொருள் : பேருறக்கமாகிய துரியத்தின்கண் ஆருயிர் எழுந்து தருக்குறும். உள்ளமானது எழுந்து உலகம் பின்னிடும் படியாக வேகமாகச் செல்லும் சென்று ஓசையுடன் மூலத்திடத்து ஊனமாகிய ஆருயிர் குறைவுடைத்தாகிய அறியாமைப் பண்பைச் செய்யும் மூலப்பகுதியின் செயலையும் விட்டு அம்மூலப்பகுதியுடன் மட்டும் தனித்து நிற்கும். (ஆருயிர் - உயிர்ப்பு. பிராணவாயு. ஊமன் - ஆன்மா.)

2158. ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது
நாமயம் அற்றது நாம்அறி யோமே.

பொருள் : பேச இயலாத எழுத்தாகிய மகாரத்தோடு பேசும் எழுத்துக்களாகிய அகார உகாரங்கள் பொருந்தில் ஆமைக்குள் அதன் உறுப்புக்கள் அடங்குவன போல் ஐந்து, இந்திரியங்களும் செயல்படாமல் அடங்கிவிடும். அப்போது ஆன்மா பிரணவத்தில் பொருந்தி ஒளிபெற்று விளங்கும். அப்போது அகங்காரம் கெட்டதை நாம் அறியமாட்டோம்.

(ஓம் - அ+உ+ம் தூலப்பிரணவம்

ம் - மெய்யெழுத்து (ஊமை எழுத்து) உயிரைச் சார்ந்து அன்றி ஒலியாது. அகர உகரங்கள் பேசும் எழுத்துக்கள்.

அ - ஆற்றல் - சக்தி உ - அறிவு - சிவம். ஊமை எழுத்து - (ம்) மலம்.)

2159. துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே
நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
தரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே.

பொருள் : பேருறக்கமாகிய துரியம் இருப்பது நனவாகிய சாக்கிரத் துள்ளேயாம். நரிகள் என்று சொல்லப்படும் அறிதற் கருவி ஐந்தும், செய்தற்கருவி ஐந்தும் அகக் கலன்கள் நான்கும் கூடிப் பதினான்கு என்ப. இக்கருவிகள் பதினான்கும் ஆருயிர் புறத்துப் பரவாமையான நுகர்ச்சியின்றி நஞ்சுண்டது  ஒத்து அடங்கின. அப்பொறிகள் புலன் கெள்ளும் புலன்கள் பத்தும் குதிரையை ஒத்துத் தொடர்பின்றிப் பறந்தது. உயிர்ப்பு அடங்கலாகிய துரியாதீதத்து நிகழும் நிலையில் இனிய நிலையினை இன்ன தன்மைத்தென்று சொல்ல ஒண்ணாதென்க.

2160. மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையில்
வேறாய மாயா தங்கர ணாதிக்குஇங்கு
ஈறாகா தேஎவ் வுயிரும் பிறந்துஇறந்து
ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே.

பொருள் : திருவடிப் பேறு எய்தும் அளவும் விட்டு நீங்காமல் ஒட்டி நிற்கும் மலம் ஐந்தும் மாறாமலம் எனப்பட்டன. இவை ஆருயிர்களின் ஐம்பாட்டினும் உடன் நிற்கும். இவை நீங்காமையால் மாயா காரியமாகிய உடல் கலன் முதலியவற்றை இன்னும் வேறாகப் பெறுதல் வேண்டும். ஆகையால் உடம்பின் ஈறு எய்துவதற் கில்லை. அதனால் எத்தகைய உயிரும் பிறந்து இறந்து ஆறாத வல் வினையால் அடியுண்டு துன்புறும்.

2161. உண்ணும்தன் ஊடாடாது ஊட்டிடு மாயையும்
அண்ணல் அருள்பெற்ற முத்தியது ஆவது
நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்து
எண்ணுறு ஞானத்தின் நேர்முத்தி எய்துமே.

பொருள் : நுகர்விக்கப் படவேண்டிய மாயாகாரியங்கள் திருவருள் எய்தும் வரையில் ஊட்டாமல் கழியா. சிவபெருமான் திருவருள் பெறுவது வீடு பேறாகும். மாயையை நண்ணுதல் இல்லாத உயிர்கள் பிறப்பு எய்தினும் அப்பிறப்பு திருவடி யுணர்வாகிய சிவஞானப் பிறப்பாகும். அப்பிறப்பின்கண் எண்ணத்தக்க திருவடி யுணர்வால் நேர்முத்தியாகிய மீளா ஆளாம் திருவடிப் பேறு எய்தும்.

2162. அதிமூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
திதமான கேவலம் இத்திறம் சென்று
பிரமாகா ஐஅவத் தைப்படு வானே.

பொருள் : ஆருயிர்க்கு ஆணவம் மிகுதலால் அதி மூடமாகிய உறக்கம் உண்டாகும். அதனால் அவ்வுயிர் இரு வினைக்கு ஈடான கன்மங்களையே நினைக்கும். நினைத்து நிலையான கீழ் ஐம்பாடு என்று சொல்லப்படும் கீழால் அவத்தையை எய்தும். இம்முறையாகச் சென்று சிறப்புநிலை இல்லாத ஐம்பாட்டினையும் எய்தும்.

2163. ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
நேசாய ஈசனும் நீடுஆண வத்தரை
ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே.

பொருள் : ஆசிரியர் முன்னே பாடம் கற்பிக்கும் போது உறங்கும் மாணவரை ஒளியுடைய பிரம்பால் ஆசிரியர் தட்டி எழுப்புவது போல, நேயப் பொருளான சிவபெருமானும் அநாதியாகவே ஆணவ மலத் தொடக்கு உடையோரைச் சுத்த மாயையால் ஒளியை உண்டாக்கி எழுப்பி அருளுவன்.

2164. மஞ்சொடு மந்தா கினிகுட மாம்என
விஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதி
எஞ்சலில் ஒன்றெனு மாறுஎன இவ்வுடல்
அஞ்சுணும் மன்னன்அன் றேபோம் அளவே.

பொருள் : மேகத்தொடு பொருந்திய ஆகாய கங்கை குடத்திலுள்ள நீரேயாம் என்பது அறிவில்லாதவன் மிக்க அறிவுடையோன் போலக் கூறும் கூற்று. அவ்வாறு குறை வில்லாத பிரமமும் ஆன்மாவும் ஒன்று என்பதற்கு மாறாக இவ்வுடலுக்கு நாயகனாகிய ஆன்மா பக்குவப்பட்டு நீங்கும் வரை ஐந்து அவத்தைக்கு உட்பட்டுக் கொண்டே யிருக்கும்.

2165. படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடிவுடை மாமநகர் தான்வரும் போது
அடியுடை ஐவரும் அங்குஉறை வோரும்
துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.

பொருள் : உடம்பைத் தனதாகக் கொண்டு ஆளும் ஆருயிர் இடையறாது ஓடிக் கொண்டே யிருக்கும். இயல்பு வாய்ந்த மனமாகிய குதிரை மீது ஏறி அழகு மிக்கதாகிய அகநகரின்கண் வலம் வருகின்றது. அப்பொழுது அறிதற் கருவியாகிய செவி முதலிய ஐந்தும் செய்தற்கருவி முதலிய பிறகருவிகளும் புடைபெயராது உறங்கிக்கிடக்கும். அவைகளின் பற்றுக் கோட்டுக்கு இடனாகத் துடித்துக் கொண்டிருக்கும் இயல்பு வாய்ந்த நெஞ்சம் துடியில்லம். அந்நெஞ்சத்தைப் பற்றி உறங்குகின்றனர். (துடியில்லம் - இதயத்தானம்)

2166. நேரா மலத்தை நீடுஐந்து அவத்தையின்
நேரான வாறுஉன்னி நீடு நனவினில்
தேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே.

பொருள் : புறக்கண்ணுக்குப் புலப்படாத மலத்தை சுத்த அவத்தையில் புலப்படும் வண்ணம் மலக் குற்றத்துக்குரிய காரணத்தை நினைந்து நின்மல சாக்கிரத்தில் கண்ணுக்குப் புலப்படாதிருந்த ஐம் மலங்களையும் அகக்காட்சியில் கண்டு, தம் முகத்துக்கு முன்னாக விளங்கும் சிவத்துடன் பிரியாது நிற்பதே அழியாத நிலையாகும்.

4. மத்திய சாக்கிர அவத்தை

(அஃதாவது மத்தியமாகிய புருவ நடுவில் சீவன் சாக்கிரம் ஆதிய ஐந்து அவத்தைப் படும். அவை சாக்கிரத்தில் சாக்கிரம், சாக்கிரத்தில் சொப்பனம், சாக்கிரத்தில் சுழுத்தி, சாக்கிரத்தில் துரியம், சாக்கிரத்தில் துரியாதிதம் என்பன. இவை விழிப்பிலுள் நிலைவேறு பாடேயாம்.)

2167. சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி
சாக்கிர சொப்பனம் தன்னிடை மாமாயை
சாக்கிரம் தன்னில் அழுத்திதற் காமியம்
சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே

பொருள் : நனவின் நனவு என்று சொல்லப்படும் நிலையில் திரோதாயி தொழிற்படுத்தும். திரோதாயி நடப்பாற்றல். இதுவே மறைப்பாற்றல். நனவினிடத்து நிகழும் கனவில்  தூமாயைத் தொடர்பினராவர். நனவின் உறக்கத்துக்குக் கன்மத் தொடர்பினராவர். நனவின் பேருறக்கத்துக்குத் தூவாமாயைத் தொழிலினராவர்.

2168. மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்
நேய இராகாதி ஏய்ந்த துரியத்துத்
தோயும் சுழுமுனை கனாநனா வும்துன்னி
ஆயினன் அந்தச் சகலத்துஉ ளானே.

பொருள் : தூவா மாயையானது உயிர்ப்பு அடங்கலாகிய துரியாதித நிலையில் உழைப்புக் கருவியாகிய கலாதியுடன் அடங்கிநிற்கும் பேருறக்கத்தின்கண் விழைவுக் கருவியாகிய அராதும் முனைக்கும். உறக்கமாகிய சுழுமுனையின்கண் உணர்வுக் கருவியாகிய வித்தை முனைத்துக்கூடும். கனவு நிலையில் உழைப்பு முனைத்துக்கூடி உடல் மெய்யாகிய மூலப்பகுதிக் கருவிகள் இருபத்தைந்துடன் தொழிற்படும். நனவு நிலையுடன் எல்லாக் கருவிகளுமாகிய முப்பத்தைந்து கருவிகளுடன் தொழிற்படும்.

2169. மேவிய அந்தகண் விழிகண் குருடனாம்
ஆவயின் முன்அடிக் காணு மதுகண்டு
மேவும் தடிகொண்டு செல்லும் வழிபெற
மூவயின் ஆன்மா முயலும் கருமமே.

பொருள் : பிறவியிலேயே குருடனும் இடையில் குருடானவனும் ஆகிய இருவரும் நடந்து செல்லும் போது முன்னே சென்ற நடைபாதையை அறிந்து பொருந்திய தடியைக் கொண்டு பாதையை அறிந்து நடப்பர். அவ்வாறே மூன்று வகையான உயிர் வருக்கங்களும் செயலில் பொருந்தும்.

2170. மத்திமம் ஒத்தி சிலந்தி வலயத்துள்
ஒத்துஅங் கிருந்து உயிருண்ணு மாறுபோல்
அத்தனும் ஐம்பொறி ஆடகத்துள் நின்று
சத்த முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே.

பொருள் : சிலந்தியானது அதுகட்டிய வலையின் நடுவுள் பொருந்தியிருந்து அங்கு அணுகி வரும் உயிரினங்களைப் பிடித்துத் தின்னுவது போல் சிவபெருமானும் ஐம்பொறி அறிவுகளும் வந்துபொருந்தும் மூளைப் பகுதியில் உடனிருந்து சத்த முதலாகிய புலன்கள் ஐந்தையும் நுகர்கின்றான். சிவன் மூளையில் ஆன்மாவுடன் இருந்து சத்த முதலிய புலன்களை நுகர்கின்றான்.

2171. வைச்சன வச்சு வகையிரு பத்தஞ்சும்
உச்சும் உடன்அணை வான்ஒரு வன்உளன்
பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று
நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே.

பொருள் : வைக்கவேண்டியவாறு இருபத்தைந்து தத்துவங்களைச் சாக்கிர நிலையில் வைத்து அவற்றையே உபாயமாகக் கொண்டு பொருந்தி எங்குமுள்ள சிவன் வியாபித்துள்ளான். பித்தன் என்றும் பெரியன் என்றும் பிறப்பில்லாதவன் என்றும் எப்போதும் விரும்பிப் போற்றி அவனருள் பெற்று நான் உய்து பெற்றேன்.

2172. நாலா றுடன்புருடன் நல்தத் துவமுடன்
வேறான ஐ ஐந்து மெய்ப்புரு டன்பரன்
கூறா வியோமம் பரம்எனக் கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்த தத்துவமே.

பொருள் : ஆன்ம தத்துவம் இருபத்து நான்குடன் புருடன் என்ற தத்துவத்துக்கு வேறாகவுள்ள இருபத்து ஐந்துடன் ஆன்மா பிரமம் சொல்லமுடியாத ஆகாயம் ஆகியவற்றை மேலான தத்துவங்களாகப் பிரமவாதிகள் கொண்டனர். இவ்வாறு வேறான இருபத்தெட்டும் வேதாந்தத்துக்குரிய தத்துவங்களாம். (வேறான ஐந்து பூதங்கள் 5, இந்திரியங்கள் 10, தொழில்கள் 10, ஆன்மா - 1, பிரமம் - 1, பரமாகாயம் - 1 ஆக 28. சைவ தத்துவம் 36.)

2173. ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை
கோலங்கொண்டு ஆங்கே குணத்துடன் புக்கு
மூலங்கொண்டு ஆங்கே முறுக்கிமுக் கோணிலும்
காலங்கொண் டான்அடி காணலும் ஆமே.

பொருள் : ஆன்மா பொருத்தமாக உடம்பினுள் இடை பிங்கலை நாடிகளில் முறையாகப் பொருந்தி அங்குச் சத்துவ குணத்துடன் புகுந்து மூலாதாரம் முதலாக அங்கு மும்முடிச்சுகளையும் கடந்து காலாதீதப் பொருளான சிவனது திருவடியைக் காணலாகும்.

2174. நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடும்
கூடிய காமம் குளிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே.

பொருள் : பத்து நாடிகளும் நன்மையைத் தருகின்ற பிராணன் முதலிய வாயுக்களும் மூலாதாரம் முதலாக மேலாகச் செல்லும் சுழுமுனையில் ஒடுங்கி இருந்திடும். காமக் கல்வியில் பெறும் ஆனந்த இரசமும் நன்மையை நாடிய மனமும் இவ்வுடலில் ஆம்.

2175. ஆவன ஆக அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இலங்கிழை யோனே.

பொருள் : ஆவன ஆகும். அழிவன அழியும், கழிவன கழியும், வருவன வரும். ஆகையால் காக்கின்ற இறைவன் ஆன்மாக்களுக்கு அனுபவத்தைக் கொடுத்துச் சாட்சியாகக் கண்டிருப்பவன். ஆதலால் தக்கவாறு செய்யும் கருணையாளன் ஆவான்.

2176. பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேனலத் துரியமும்
தத்துவ நாலேழ் எனஉன்னத் தக்கதே.

பொருள் : பத்து இந்திரியங்களோடு அவற்றின் தொழில்கள் பத்தும் நான்கு அந்தக் காரணங்களும், இவை பொருந்திய சிவனும் சிரசில் மோதும், பிராணனும் உண்மையான ஆகாயமும் மேல்முகத்தில் விளங்கும் பிரமமும் வேதாந்த தத்துவங்கள் இருபத்தெட்டு என்று எண்ணத்தக்கன வாகும்.

2177. விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒருபான்
தளங்கொள் இரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே.

பொருள் : விளக்கம் மிக்க முன்னூறுடன் முப்பதோடு பத்தாகிய முன்னூற்றைச் சேர்த்து அறு நூற்றை வலிமையுடைய ஆறை இரட்டிய முப்பத்தாறுடன் பெருக்க வரும் 21,600 சுவாசம் நடந்தால் ஆணவமாதி ஐம்மலங்களும் வணங்கி நீங்கும், மூலவாயு மேல் எழுந்து விளங்கும் போது தத்துவங்களும் அங்கங்கே நின்றுவிடும்.

2178. நாலொரு கோடியே நாற்பத்தெண் ணாயிரம்
மேலுமேர் ஐந்நூறு வேறாய் அடங்கிவிடும்
பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவை
கோலிய  ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே.

பொருள் : தத்துவங்களை வெவ்வேறாகப் பிரித்துக் கணக்கிட்டால், அவை நான்கு கோடியே நாற்பத்தொண்ணாயிரத்து ஐந்நூறு என்று சிறப்பாக அடங்கும். அவற்றைப் பகுத்துத் தொகுக்கின் தொண்ணூற்றாறுள் படும். அவைகளை மேலும் சுருக்கில் இருபத்தைந்துள் அடங்கும்.

2179. ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர்
ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கோ.

பொருள் : மாயையின் காரியமாகிற தத்துவங்கள் பொதுவகையால் தொண்ணூற்றாறு ஆகும். அருமையான சைவர் கொண்டுள்ளது முப்பத்தாறு தத்துவங்களாகும். இருபத்தெட்டு தத்துவங்கள் வேதாந்த சமயத்துக்கு உள்ளன. வைணவர்களுக்கு உள்ள தத்துவம் இருபத்து நான்காகும். மாயாவாதிக்குரிய தத்துவம் இருபத்தைந்தாம்.

2180. தத்துவ மானது தன்வழி நின்றிடில்
வித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
பொய்த்தவ மாம்அவை போயிடும் அவ்வழி
தத்துவம் ஆவது அகார எழுத்தே.

பொருள் : தத்துவங்களைத் தம்வழி அடங்கி நிற்கும்படி செய்யின்; மிகவும் சமர்த்தனாக விளக்கம் பெற்றிருக்கலாம். பிராண செயமடையாது ஏனைய பொய்யான நெறி அகன்றுவிடும். அதை உணர்த்தும் நெறி அகார எழுத்தறிவாகும்.

2181. அறிவொன் றிலாதன ஐஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீஎன்று அருள்செய்தார் நந்தி
அறிகின்ற நானென்று அறிந்து கொண்டேனே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மா பொருந்தாத போது அறிவில்லாதவை ஆகும். அவ்வாறு இருந்தும் அவற்றை அறிகின்ற என்னை நான் அறியாமல் இருந்தேன். என் குருநாதன் நீ அறியும் ஆற்றலுடையாய் என்று  அருள்செய்தான். அதனால் நான் அறிகின்றவன் என்பதை அறிந்து கொண்டேன்.

2182. சாக்கிர சாக்கிர மாதி தனில்ஐந்தும்
ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி
போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறு
நீக்கி நெறிநின்றுஒன்று ஆகியே நிற்குமே.

பொருள் : சாக்கிரத்தில், சாக்கிரம் முதலான அவத்தையில் சிவதத்துவம் ஐந்தும் பொருந்தும் அவைகளை மலத்தைக் காரணமாகவுடைய இந்த நனவு முதலிய ஐந்து அவத்தைகளினால் போக்கி, இவற்றோடும் பொய்யான முப்பத்தாறு தத்துவங்களையும் அகற்றி ஆன்மா பிரணவ நெறி நின்று சிவத்தோடு பொருந்தி நிற்கும்.

2183. ஆணவ மாதி மலம்ஐந்து அவரோனுக்கு
ஆணவ மாதிநான் காம்மாற்கு அரனுக்கு
ஆணவ மாதிமூன்று ஈசர்க்கு இரண்டென்ப
ஆணவம் ஒன்றே சதாசிவத்திற்கு ஆவதே.

பொருள் : பிரமனுக்கு ஆணவம், கன்மம், மாயை மாயேயம், திரோதாயி ஆகிய ஐம்மலங்களும் உள்ளன. திருமாலுக்கு ஆணவம் கன்மம் மாயை திரோதாயி ஆகிய நான்கு மலங்கள் உள்ளன. உருத்திரனுக்கு ஆணவம் கன்மம் திரோதாயி ஆகிய மூன்று மலங்கள் உள்ளன. மகேசுவரர்க்கு ஆணவமும் திரோதாயியும் உள்ளன. சதாசிவனுக்கு ஆணவம் மட்டும் உரியது.

5. அத்துவாக்கள்

(அத்துவா - வழி, அத்துவாக்கள் மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என ஆறாம். இவற்றுள் மந்திரம் பதம், வன்னம் சொற்பிரபஞ்சம் எனவும், புவனம் தத்துவம் கலை பொருட் பிரபஞ்சம் எனவும் பெயர் பெறும். இவை வினையை ஈட்டுவதற்கும் வினையை நுகர்வதற்கும் உரிய வழிகளாம்.)

2184. தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடி
மெய்த்தகு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினி
ஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்று
வைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே.

பொருள் : தத்துவங்கள் முப்பத்தாறு, மந்திரங்கள் ஏழ்வகையான முடிவுகளை உடையன. உண்மையில் வழங்கும் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றாகும். புவனங்கள் இருநூற்று இருபத்து நான்கு பதங்கள் எனப்படுபவை. எண்பத்தொன்று கலைகள் ஐந்து, இவை சிருஷ்டியில் வந்தவை. ஆறு அத்துவாக்களின் வகையும் தொகையும் கூறியவாறு.

2185. நாடிய மண்டிலம் மூன்றும் நலந்தெரிந்து
ஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும்
கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று
தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே.

பொருள் : உடலகத்தே நாடப்படும் மண்டிலங்கள் மூன்று சிவகுருவின் அருளால் அவற்றின் நன்மைகளை அறிந்து நிற்பாருடன் கலந்து நடப்பது இருபத்தைந்து மெய்களாகும். அவற்றுடனும் சிவகுருவின் அருமறையாம் உபதேச மொழியுடனும் சென்று காண்õபர்க்குக் கருவிகள் ஒன்றும் தோன்றா. அதனால் திகைப்புற்றிருந்தாரை யொப்பர்.

2186. சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி
ஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத்
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்துஅது
தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயவே.

பொருள் : நனவின் நனவினை முதற்கொண்டு பருவுடற்கண் உள்ள உச்சித் தொளையாகிய வெளிவரை நின்று அப்பால் அருள் வெளியின்கண் அருளப் பெறும் திருக்கூத்தினைக் கண்டு வழிபட்டு அதன்மேல் தூவா மெய்க்கண் காணப் பெறும் சிவமெய் ஐந்தும் உணர்வுறுவர். அத்தகையார்க்கு எல்லாம் சிவ வண்ணமாய்க்  காணப்பெறும்.

6. சுத்த நனவாதி பருவம் (அஃதாவது சகலநிலையில் சுத்தசாக்கிர முதலிய ஐந்து நிலைகள்.)

2187. நானவாதி தூலமே சூக்கப் பகுதி
அனதான ஐஐந்தும் விந்துவின் சத்தி
தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து
கனவா நனவில் கலந்ததுஇவ் வாறே.

பொருள் : நனவு முதலாகச் சொல்லப்படும் பருமைப் பகுதியே நுண்மையாம். பகுதியும். அத்தன்மையவாகிய இருபத்தைந்து மெய்களும் தூமாயை என்று சொல்லப்பெறும் மாமாøயினின்றும் போந்தன வாகும். அவற்றுடன் கலந்து தொழிற்படும். ஆருயிரின்நிலை தூநிலை யாகும். அந்நிலை நனவிற் கனவு போன்று காணப் பெறும். (விந்துவின் - மகாமாயையின்.)

2188. நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவுஓட நன்செய்தி யானதே.

பொருள் : சாக்கிரத்தில் (விழிப்பு நிலையில் துரியாதீதம் அடைந்தவர் குழந்தையைப் போலக் கிடப்பர். சாக்கிரத்தில் துரியநிலை அடைந்தவர் தவழும் குழந்தையைப் போல் சிறிது அறிவுள்ளவராவர். சாக்கிரத்தில் உடலை உறங்கச் செய்பவர் வளர்ந்த பிராயம் பெற்றவராவர். சாக்கிரத்தில் சொப்பன நிலையில் உள்ளவர் ஓடுதல் போன்ற செயலைச் செய்பவராவர்.)

2189. செறியுங் கிரியை சிவதத் துவமாம்
பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி
குறிதல் திருமேனி குணம்பல வாகும்
அறிவில் சராசரம் அண்டத் தளவே.

பொருள் : சாக்கிரத்தில் துரியாதீதம் சென்றவரிடத்துக் கிரியை சிறந்து விளங்குவதால் சிவ தத்துவம் உணரப்படுவதாக உள்ளது. அப்படிப் பட்டவர்களிடம் பிரிப்பின்றிச் செறிந்திருக்கும் சுகரூபமான யோகம் சிவத்தின் பேரருளாலேயாம். அவரிடம் சிறந்த கல்வியும் நல்ல திருமேனியும் நற்குணங்களும் காணப்பெறும். அவர்களுடைய அறிவில் அண்டகோசத்தில் அசைவனவும் அசையாதனவும் விளங்கும்.

2190. ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம்
ஏதம்இல் ஈசன்நல் வித்தியா தத்துவம்
போதம் கலைகாலம் நியதிமா மாயை
நீதிஈ றாக நிறுத்தினன் என்னே.

பொருள் : ஆதியாகிய பரசிவம் சிவம்சத்தி சதாசிவம் குற்றமில்லாத மகேசன் சுத்தவித்தை ஆகிய தத்துவமும், வித்தை கலை காலம் நியதி மாயை ஆகிய தத்துவமும் முறையையும் முடிவும் உடையனவாக அமைந்துள்ளான் என்று அறியாவாயாக. சுத்தவித்தை சிவதத்துவத்திலும் வித்தை வித்தியா தத்துவத்திலும் உள்ளன எனக்கொள்க.

2191. தேச திகழ்சிவம் சத்தி சதாசிவம்
ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம்
மாசகல் வித்தை நியதி மகாமாயை
ஆசில் புருடாதி ஆன்மாஈ றாறே.

பொருள் : ஒளிமிக்கசிவம் சத்தி சதாசிவம் மகேசன் சுத்தவித்தை இராகம் கலை காலம் குற்றமற்ற வித்தை நியதிமாயை குற்றமில்லாத புருடன் முதலாக ஆன்மதத்துவங்கள் ஈறாகத் தத்துவம் 36 ஆகும். (சிவத்துவங்கள் ஐந்தும், வித்தியா தத்துவங்கள் ஏழும் கூறப்பட்டுள்ளன எனவும் கொள்ளலாம்.)

2192. ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும்
தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.

பொருள் : ஆணவம் உமியை ஒக்கும் மாயை தவிட்டை ஒக்கும். கன்மம் முளையை ஒக்கும். ஆருயிர் அரிசியை ஒக்கும். உயிர் கலப்புத்தன்மையால் சிவனுடன் புணர்ப்பாய்ப் பிரிவின்றி நிற்பினும் அரிசியை ஒக்குமே யன்றிச் சிவனை ஒவ்வாது. திருவருளால் உன்னுடைய பாசங்களை விட்டுவிலகிச் சிறப்பருளும் சிவபெருமான் திருவடிப் பெருமையினைப் போற்றுவாயாக. (தண்டுலம் - அரிசி.)

2193. பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

பொருள் : பசுக்கள் பல நிறமுடையவையாயினும் அவைகளின் பால் ஒரே வெண்மை நிறமுடையதுதான். அப்பசுக்கள் பல வாயினும் மேய்ப்பான் ஒருவன்தான். அப்பசுக்களை மேய்ப்பவன் மேய்ப்பதை நிறுத்தினால் பசுக்கள் மேய்ப்பானைச் சூழ்ந்து கொண்டு அகலாது நின்றுவிடும். (பசுக்கள் - ஆன்மாக்கள். பால், தன்மை, ஆயன் - பசுபதி; சிவம்.)

2194. உடல்இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம்
அடலொன்று அகந்தை அறியாமை மன்னிக்
கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே.

பொருள் : உடலில் உள்ள கன்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் மனம் ஒளிமிக்க புத்தி சித்தம் வலிமை மிக்க அகங்காரம் ஆகிய அந்தக் காரணங்கள் அறியாமையைப் பொருந்திக் கெடும். அத்தகைய உயிரினது. மயக்கம் மேலும் பெருகினால் அவ்வுயிர் ஏழு நரகத்திலும் சென்று துயர் உறும். ஆன்மா அறியாமையோடு பொருந்தினால் உய்தி இல்லை.

2195. தன்தெரி யாத அதீதம்தற்கு ஆணவம்
சொல்தெரி கின்ற துரியம்சொல் காமியம்
பெற்ற சுழுத்திப்பின் பேசுறும் காதலாம்
மற்றது உண்டிக் கனவுநன வாதலே.

பொருள் : மூலாதாரத்தைப் புருடன் பொருந்திக் கிடப்பது தன்னை அறியாத துரியாதீத நிலையாகும். உந்தியைப் புருடன் அடையும் போதும் பிரணவம் விளங்கும் அகரக் கலையை விரும்பிப் பொருந்தி நிற்பான். இதயத்தில் புருடன் சுழுத்தியை அடையும்போது சொல்லப்பெற்ற காமிய வாசனையுடன் உள்ளான். மற்று அவ்வாசனையே அனுபவமாகக் கனவு நனவு நிலைகளில் ஆகும்.

2196. நனவில் கனவுஇல்லை ஐந்து நனவில்
கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி
தனலுண் பகுதியே தற்கூட்டும் மாயை
நனவில் துரியம் அதீதம் தலைவந்தே.

பொருள் : நனவிற் கனவில்லை யாதலின் அந்நனவின்கண் ஐம்பொறியும் செம்மையாகத் தொழிற்படும். நனவின் கண் கனவு நிகழாத உறக்கம் சுழுத்தி எனப்படும். அதில் மனம் முதலிய நுண்பொறிகள் தொழிற்படும். தன்னைச் சார்ந்துள்ள மாயை என்னும் மூலப் பகுதியின் நுகர்வே பேருறக்க நிலையாகும். நனவில் அப்பால் நிலை தன்னை வேறென உணரும்நிலை பொருந்தியதாகும். (அதீதம் - அப்பால்)

2197. ஆறாறில் ஐஐந்து அகல நனாநனா
ஆறாம் அவைவிட ஆகும் நனாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இதில்மாயை தானே

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களில் உடலின் சார்பான ஆன்ம தத்துவமும் புருடனும் ஆகிய இருபத்தைந்து தத்துவங்களும் நீங்கினால் சத்த சாக்கிரம் பொருந்தும் மேலுள்ள வித்தியா தத்துவத்தில் உள்ள ஆறும் முன்னுள்ள இருபத் தைந்தும் ஆகமுப்பத் தொன்றும் நீங்கினால் நனவில் கனவு பொருந்தும், இவைகளின் மேலுள்ள வேறான சிவ தத்துவம் ஐந்தும் கழன்ற போது சுழுத்தி அமையும். இந்நிலையில் எஞ்சியுள்ளது சுத்தமாயை ஒன்றேயாகும்.

2198. மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகிச்
சேயதே வலவிந் துடன் செல்லச் சென்றக்கால்
ஆய தனுவின் பயனில்லை யாமே.

பொருள் : பேருறக்க நிலையாகிய துரியத்தில் ஆளுடன மட்டும் ஆருயிர் நிற்கும், அதற்கும் அப்பால் அந் நிலையையும் கடந்து அப்பால் நிலையாகிய புலம்பின்கண் மாயையுடன் செல்லும. அவ்வாறு நிற்கும் நிலையில் மாயாகாரிய உடம்பு இருந்தும் வினை நிகழ்ச்சி இன்மையால் ஏதும் பயன் இல்லை. ஈண்டு கூறப்படும் ஆள் பொதுமை - நிலையென்க. (புருடன் - ஆன்மா. கேவலவிந்து - கேவல அவத்தையில் மாயையோடு.)

2199. அதீதத் துரியத்து அறிவனாம் ஆன்மா
அதீதத் துரியம் அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே.

பொருள் : அப்பால் நிலைப் பேருறக்கத்தின்கண் ஆருயிர் கருவிகளுடன் கூடாமல் தன்னளவாய் அறிவாய் நிற்கும். அந்நிலையிலேயே திருவருள் துணையால் உறுதியாக நின்றால் அப்பால் நிலையில் கிளர்ந்தெழுந்த அறிவாகிய ஆருயிர் முதிய அனல் என்று சொல்லப்படும் சிவ பெருமானாகிய பேரறிவுச் சுடரில் புணர்ந்து நிலையுறும். (அதீதத் துரியம் - அப்பால் நிலைபேருறக்கம். இயமானன் - ஆன்மா. முதிய அனல் - பழமையான சிவாக்கினி.)

2200. ஐஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஐஐந்தில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையின்
மெய்கண் டவன்உந்தி மேவல் இருவரே.

பொருள் : சாக்கிரத்தில் தொழிற்படும் கருவிகள் முப்பத்தைந்து கண்டத்தில் இருபத்தைந்து தத்துவங்களோடு தொழிற்படும் நிலையைக் கனா என்பர். பொய்யான உடலை இடமாகக் கொண்ட புருடனோடு பிராணன் சித்தம் ஆகிய மூன்றும் சுழுத்தியிலாகும். உடலை அறிந்த புருடனோடு பிராணன் ஆக இரண்டு உந்தியிலாதல் துரியம்.

2201. புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகந்தன்னில் மூன்று கனவு
புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி
புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே.

பொருள் : சாக்கிரத்தில் புருடனுடன் பொருந்துவன பஞ்ச தன் மாத்திரைகளும் மனம் புத்தி அகங்காரங்களும் சேர்ந்து எட்டாகும். சொப்பனத்தில் புருடனுடன் பொருந்துவன மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றாகும். சுழுத்தியில் புருடனுடன் புத்தியும் அகங்காரமும் கூடித் தொழிற்படும். துரியத்தில் புருடனுடன் அகங்காரம் ஒன்று மட்டும் பொருந்தித் தொழிற்படும். முன் மந்திரத்தில் தூல தேகத்தில் கீழாலவத்தையை விளக்கியவர் இங்குச் சூக்கும தேகத்தில் அமையும் கீழால் அவத்தையை விளக்குகின்றார். (புரியட்டகம் - சூக்குக தேகம்.)

2202. நனவில் நனவு புலனில் வழக்கம்
நனவிற் கனவு நினைத்தல் மறத்தல்
நனவிற் சுழுத்திஉன் நாடல் இலாமை
நனவில் துரியம் அதீதத்து நந்தியே.

பொருள் : சாக்கிரத்தில் நனவு நிலையில் புலன் அறிவு சிறப்பாக விளங்கும். புலன்களோடு தொடர்பு இன்றி அவற்றின் வாதனைகளுடன் கூடியிருப்பது சாக்கிரத்தில் கனவு நிலையாகும். அவ் வாசனைகளையும் மறந்து நிற்கும் போது சாக்கி சுழுத்தி அமையும். ஒன்றையும் பற்றிய நாட்டம் இல்லாமை சாக்கிரத்தில் துரியம். சாக்கிரத்தில் அதீதத்து சிவானுபவம் ஒன்றேயாம். (நினைத்தல் - கனவு, மறத்தல் - உறக்கம், நாடல் - பேருறக்கம், நாடல் இலாமை - உயிர்ப்பு அடங்கல், புலனில் வழக்கம் - ஐம்புலன் ஒடுக்கம்.)

2203. கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்
கனவினில் கண்டு மறத்தல் கனவாம்
கனவில் சுழுத்தியும் காணாமை காணல்
அனுமாதி செய்தலில்ஆன துரியமே.

பொருள் : கனவின்கண் நனவுபோல் காண்பது கனவின் நனவு கனவிற் கனவு கண்டு மறத்தலாகும். கனவின் உறக்கம் காணாமையாகும். கனவின் பேருறக்கம் அனுமாதியாகக் காண்டல். அனுமாதி உத்தேசம், உத்தேசம் என்பது பொருள் உண்மை மட்டும் கோடல், அஃதாவது எழுவாய்க் காட்சியினை ஒத்தல், உயிர்ப்பு அடங்கலின்கண் அவ்உத்தேசக் செயலும் இன்றி நிற்றல்.

2204. சுழுத்தி நனவுஒன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்தி கனவுஅதன் உண்மை கழுத்தியில்
சுழுத்தி அறிவுஅறி வாலே அழிகை
சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே.

பொருள் : சுழுத்தி என்று சொல்லப்படுவது உறக்கத்தில் கண் நனவு ஒன்றும் தோன்றாமை. உறக்கத்தில் கனவு ஆருயிரின்கண் தன் உண்மை மட்டும் தோன்றுதல் உறுக்கத்தில் உறக்கம் - சுட்டுணர்வும் சிற்றுணர்வும் அழிவெய்தல். அந்நிலை முற்றுணர்வால் ஏற்படுவதாகும். முற்றுணர்வு - சிவஞானம் உறுக்கத்தில் பேருறக்கம் சொற் கழிவாகிய பாழ் நிலையாகும் சொற்கழிவு - சொல்லுக்கு அடங்காதது.

2205. துரிய நனவாம் இதமுணர் போதம்
துரியக் கனவாம் அகமுணர் போதம்
துரியச் சுழுத்தி வியோமம் துரியம்
துரியம் பரமெனத் கோன்றிடும் தானே.

பொருள் : (துரியத்தில் நனவு என்பது இதத்தைத் தரும் சிவ உணர்வில் நிற்பது.)

துரியத்தில் கனவு என்பது சிரசுக்கு மேல் சிவனை அண்ட ஆகாயத்தில் அறிவதாகும். துரியத்தில் சுழுத்தி என்பது சிரசுக்கு மேலுள்ள நிராதார ஆகாயத்தில் பொருந்துவதாகும். துரியத்தில் துரியம் என்பது எல்லாத் தத்துவங்களையும் கடந்த போது தன்னைப் பரமாக அறிவதாகும்.

2206. அறிவுஅறி கின்ற அறிவு நனவாம்
அறிவுஅறி யாமை அடையக் கனவாம்
அறிவுஅறி அவ்அறி யாமை சுழுத்தி
அறிவுஅறி வாகும் ஆன துரியமே.

பொருள் : சிற்றறிவு திருவருளால் முற்றறிவின்கண் ஒடுங்கி நின்று அவ் அறிவினை அறிதல் அறிவின்கண் நனவாகும். அறிவிற் கனவு அவ் அறிவை அறிகின்றோம் என்னும் எண்ணமும் தோன்றாமல் அவ் அறிவின்கண் ஒடுங்குதல். அறிவுறக்கம் தன்னறிவு அவ் அறிவின்பின் செல்லுதலால் அவ் அறிவேயாய்த் தன்னை மறத்தலாகும். அறிவுப் பேருறக்கம் பரமாகிய சிவன் தோன்றுதலாகும்.

2207. தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு
ஞானம் தனதுரு வாகி நயந்தபின்
தான்எங்கு மாய்நெறி நின்றது தான்விட்டு
மேல்நந்தச் சூக்கம் அவைவண்ணம் மேலிட்டே.

பொருள் : பர ஆகாயம் போல் தான் எங்கும் பொருந்தும் நிலையை அடைந்தவன் ஐம் மலங்களினின்றும் விடுபட்டு ஞானமே தனது உருவாகச் சிவத்தை விரும்பி அடைந்தவன் தான் எங்குமாய் நிற்கும் தன்மையும் விட்டு மேலாக விளங்கும் சூக்கும நிலையான பிரணவ தேகத்தை அடைவான். (வன்னம் - எழுத்து.)

2208. ஐஐந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுழுத்தியாம்
மெய்யும்பின் சூக்கமும் மெய்ப்பகுதி மாயை
ஐயமும் தான்அவன் அத்துரி யத்தனே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களுள் இருபத்தைந்து நீங்கிய போது சாக்கிரமும், ஆறு நீங்கிய போது சொப்பனமும், ஐந்து நீங்கிய போது சுழுத்தியும் முடிவுறும். இவையே நனவில் நனவு கனவு சுழுத்தியாகும் பின்னர்த் தூலமும் சூக்குமமும் சுத்த மாயையில் ஆம். அத்துரிய நிலையில் தத்துவங்கட்குத் தலைமை தாங்குபவனாய்த் தான் அவனாய் நிற்பன். (எய்த்தல் - இளைத்தல். இதுவரை கூறியதை இங்குத் தொதுத்துக்கூறியவாறு.)

2209. ஈதென்று அறிந்திலன் இத்தனை காலமும்
ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின்
ஈதென்று அறியும் இயல்புடை யோனே.

பொருள் : இவ் வுண்மையை நான் இவ்வளவு காலமும் அறியவில்லை. இவ்வுண்மையை அறிந்தபின் வேறு அறியத்தக்க பொருள் ஒன்றும் இல்லை. அகண்ட வடிவான சிவமே முதல் என்றும் அஃது அறிவுக்கும் அறிவுரு என்றும் அறிந்தபின் அது தான் நாம் அடையும் பேறு என்று உணர்ந்த தன்மையன் ஆயினேன். சுத்த அவத்தையைத் தவிர அடைய வேண்டிய பேறு வேறொன்றும் இல்லை.

2210. உயிர்க்குஉயி ராகி உருவாய் அருவாய்
அயல்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்
நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி
இயற்பின்றி எல்லாம் இருண்மூட மாமே.

பொருள் : சிவம் எல்லா உயிரினங்களுக்கும் உயிராகவும் உருவமாகவும், அருவமாகவும், அயலாகவும் அயலில் இருந்து புணரும் பொருளாகவும், அறிவாகவும் எங்கும் நிறைந்த பொருளாகவும், விரும்பப்படுகின்ற சத்தியாகவும், நாதனாகவும், உலகம், உடல், கருவி ஆகியவற்றை இயக்காது ஒழியின் அவை அனைத்தும் அஞ்ஞானத்தால் அறிவு பெறாது போகும்.

2211. சத்தி இராகத்தில் தான்நல் உயிராகி
ஒத்துறி பாச மலம்ஐந்தோடு ஆறாறு
தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்
வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே.

பொருள் : ஈசன் அநாதியே ஆன்மாக்களைப் பற்றிய மலம் நீங்கும் வண்ணம் ஆன்மாக்களின் மேல் வைத்த கருணையால் சத்தியோடு பொருந்தி அவளுக்கு உயிராகி நின்று, அநாதியே பொருந்திப் பாசத்தை வினைவிக்கும் ஐம்மலக் கூட்டத்தையும் முப்பத்தாறு தத்துவ பேதங்களையும் படைத்து அவற்றை நுகர்தற்குரிய உட்கருவியும் உயிரோடு கூட வைத்தனன்.

2212. சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை
சாக்கிரா தீதம் துரியத்தில் தானுறச்
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான்விடாச்
சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே.

பொருள் : சாக்கிரா தீத நிலையில் ஆணவ மலமும் தன்னுண்மை என்ற ஆன்மாவும் உள்ளன. சாக்கிரா தீதத்துப் பொருந்திய ஒளியில் ஆன்மா பொருந்த சாக்கிரா தீதத்தில் பொருந்திய ஆணவம் நீங்கல் பெற்றுத் திருவருளைப் பொருந்தி நின்றால் பரத்தின் உண்மை இவர்களிடம் தங்கி நிலை பெறும். (சாக்கிரா தீதம் - அப்பால் நனவு.)

2213. மலக்கலப் பாலே மறைந்தது சத்தி
மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்
மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு
மலக்கலப்பு அற்றால் மதியொளி யாமே.

பொருள் : அநாதியே ஆன்மாவோடு மலம் கலந்திருப்பதால் சிவ தத்துவம் விளங்கும் மகாமாயை (சுத்தவித்தை) மறைந்து உள்ளனள். மலக்கலப்பால் தெளிவான ஞானம் விளங்கவில்லை. மலக்கலப்பால் சிவனும் மறைந்திருந்தான். ஆன்மாவினிடம் பொருந்திய மலக் குற்றம் அகன்றால் சுத்தவித்தை விளங்கும் மதிமண்டலம் ஒளிபெற்று விளங்கும். (ஆருயிர் - ஆன்மா, பேருயிர் - பரமான்மா.)

2214. திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே.

பொருள் : நன்மை தீமைகளைப் பிரித்தறியாத சிந்தையில் காமம் வெகுளி மயக்கம் ஆகிய சிங்கங்கள் மூன்று உள்ளன. விஷயங்களை மகிழ்ச்சியுடன் சென்று பற்றி வஞ்சகமாய் அவைகளை அடையும் முயற்சியில் ஈடுபடுத்தும் அந்தக் கரணங்களாகிய நரிக்குட்டிகள் நான்கு உள்ளன. வெளிப் பொருட்களை நுகரும் விஷயத்தில் வகை செய்த அனுபவிக்க முயலும் இந்திரியங்களாகிய ஆனைக் கன்றுகள் ஐந்து உள்ளன. புறத்தேயும் அகத்தேயும் செலுத்துகின்ற இரு தன்மைகள் நெஞ்சுக்கு உள்ளன.

2215. கதறு பதினெட்டுக் கண்களும் போகச்
சிதறி எழுத்திடுஞ் சிந்தையை நீரும்
விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால்
அதிர வருவதோர் ஆனையும் ஆமே

பொருள் : தச வாயுக்களும் புரியட்டகமும் பொருந்திய உடல் புற உலகில் அவாவிச் செல்ல, சிதறுண்டு எழுகின்ற மனத்தை நீங்கள் அவ்வாறு கேடுற்று உடல் அழியும் முன்னம் இறைவனை அடையும் உண்மை நெறியைப் பற்றி நின்றால் மேலே கண்ட பதினெட்டும் அதிர்ச்சியடைய, ஒப்பற்ற ஆன்மாவின் தலைவனாகிய சிவன் வெளிப்பட்டருளுவான். (ஆனை - ஆன்+ஐ = ஆன்மாவின் தலைவன்; சிவன்)

2216. நனவகத் தேயொரு நாலைந்தும் வீடக்
கனவகத் தேஉள் கரணங்க ளோடு
முனவகத் தேநின்று உதறியுட் புக்கு
நினைவகத்து இன்றிச் சுழுத்திநின் றானே.

பொருள் : நனவில் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களாகிய பத்தும் அவற்றின் விடயங்களாகிய பத்தும் நீங்க, கனவில் புகுந்து அந்தக் கரணங்களோடு முன் மூளையிலிருந்து சிந்திப் பதையும் மறந்து உள்ளமாகிய மன மண்டலத்தில் நிலை பெற்றால் நினைவும் இல்லாமல் ஆன்மா நின்மல சுழுத்தியில் பொருந்தும்.

2217. நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்
ஒன்றி உலகின் நியமாதிகள் உற்றுச்
சென்று துரியாதீ தத்தே சிலகாலம்
நின்று பரனாய் நின்மல னாமே.

பொருள் : இவ்வாறு நிற்கும் உயிர் ஆசான் திருவருளால் நனவில் பேருறக்கத்தனாய் உலகத்துடன் பொருந்திச் செய்ய வேண்டும். கடமைகளைச் செவ்வையாகச் செய்து நின்றால் அப்பால் நனவிற் செல்வது வாய்க்கும் அதன்கண் சில நாள் உறைத்து நிற்றல் வேண்டும். இயல்பாகிய பாசங்களின் நீங்கிய சிவபெருமானின் திருவடிப் பேற்றால் மலம் நீங்கித் தூய்மை எய்தும். இதுவே ஆருயிர் பரனாய் நின் மலனாம் நிலைமை எய்துவது என்க.

2218. ஆன்அவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத்
தான் உலகு உண்டு சதாசிவ மாசத்தி
மேனிகள் ஐந்தும்போய் விட்டுச் சிவமாகி
மோனம் அடைந்தொளி மூலத் னாமே.

பொருள் : தூயோனாக விளங்கிய அவ் ஆருயிர்க் கிழவன் ஈசன் என்று அழைக்கப் பெறுவன். அவ் உயிர் அப்பால் நிலையில் திருவடி யுணர்வாய்த் திகழும். சிவ உலக நுகர்வுகளை நுகரும், அருளோன் முதலாக அயன் ஈறாகச் சொல்லப்படும் தூமாயை அருள்விக்க வடிவங்களை எய்தும். திருவருளால் அவ் வடிவங்களை அகன்று தூய சிவனாகி ஞான வரம்பாம் மோனம் எய்திப் பேரறிவுப் பேரொளிப் பெரு முதல்வனாக விளங்குவான்.

2219. மண்டலம் மூன்றினுள் மாயநன் நாடனைக்
கண்டுகொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற
விண்டவர் தாமரை மேலொன்றும் கீழாக
அண்டமும்ல தானாய் அகத்தினுள் ஆமே.

பொருள் : உடம்பினுள் மும் மண்டலங்களில் மாயத்தைப் புரியும் பெருமானைத் தரிசித்துக் கொண்டு உள்ளே நினைந்து நீங்கி, மலர்ந்து விளங்குகின் ற சகஸ்ர தளத்தைக் கடந்து மேற் சென்ற போது அண்டம் யாவும் தானாகவே அகத்தினுள் விளங்கும்.

2220. போதறி யாது புலம்பின புள்ளினம்
மாதுஅறி யாவகை நின்று மயங்கின
வேதுஅறி யாவணம் நின்றனன் எம்இறை
சூதறி வாருச்சி சூடிநின் றாரே.

பொருள் : புள்ளினங்கள் என்று சொல்லப்படும் ஆருயிர்கள் செவ்வியாகிய போது அறியாமல் புலம்பின. திருவருள் ஆற்றலாம் மாதினை யறியாமல் நின்று மயங்கின. வேறு பிரித்துக் காண முடியாத நிலைமையாய் வேறறப் புணர்ந்து நின்றனன் சிவன். அவன் திருவடி யுணர்வால் இச்சூழ்ச்சி உண்மையை உணர்வோர் அப்பெருமானின் திருவடியைச் சூடிப் பேரின்பம் உற்றுத் திகழ்வாராயினர்.

2221. கருத்தறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே
பொருத்தறிந் தேன்புவ னாபதி நாடித்
திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை
பருத்தறிந் தேன்மனம் மன்னிநின் றேனே.

பொருள் : முன்மந்திரத்தில் கண்ட சிவம் விளங்கும் நுட்பத்தை அறிந்து ஆறு ஆதாரங்களையும் சோம சூரிய அக்கினியாகிய மும் மண்டலங்களையும் சேர்த்து ஒன்பது பிரிவுகளையும் உடலுள் பொருத்துதலை அறிந்தேன். புவனங்கள் அனைத்துக்கும் தலைவனான பரம்பொருளை நாடி ஒன்பது மண்டலங்களையும் திருத்தி அமைத்தேன். தேவாதி தேவனாகிய சிவனை அகத்தில் வருவிக்க அறிந்தேன். அவன் என் மனத்தையே பொருந்தி நிலையாக நின்றுவிட்டான்.

2222. ஆன் விளக்கொளி தூண்டும் அவன் என்னத்
தான விளக்கொளி யாம்மூல சாதனத்து
ஆன் விதிமூலத் தானத்தில் அவ்விளக்கு
ஏனை மதிமண்ட லம்கொண்டு எரியுமே.

பொருள் : உலகத்திலான விளக்கை எண்ணெய்த் திரியிட்டுத் தூண்டுகின்றவனது செயல்போல மூலாதாரத்திலுள்ள அக்கினி மண்டல ஒளி மூல சாதனையினால் ஆகும். அவ்வாறு தூண்டப்பட்ட மூலாதாரத்திலுள்ள அவ்வொளி, ஏனைய சூரிய சந்திர மண்டலங்கள் ஆகியவற்றைக் கொண்டு பிரகாசமாய் விளங்கும்.

2223. உள்நாடும் ஐவர்க்கு மண்டை ஒதுங்கிய
விண்நாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்துஐவர் கூடிய சந்தியில்
கண்நாடி காணும் கருத்ததுஎன் றானே.

பொருள் : உள் நாட்டமுடைய ஐம்பொறிகளை உடையார்க்கு மண்டைக்கு மேலாக விளங்கும் ஊர்த்துவ சகஸ்ர தளத்தில் ஆகாய மண்டலத்தை ஆராயப்புகின் மேல் நோக்கிய அகத்தில் ஐம்பொறிகளும் கூடிய சந்தியில் அது கண்ணால் சிந்தையில் நாடிக் காணும் தன்மையது என்றான்.

2224. அறியாத வற்றை அறிவான் அறிவான்
அறிவான் அறியாதான் தன்னறிவு ஆகான்
அறியா தவத்தை அறிவானைக் கூட்டி
அறியாது அறிவானை யார் அறி வாரே.

பொருள் : தன்னறிவால் சுட்டி உணரப்படாததாய தூமாயை முதலியவற்றைத் திருவருட் கண்ணால் காண்பவனே தெளிந்த அறிவுடையவன் ஆவன். அவற்றைத் தன் அறிவால் அறியுலுறுவான் அறியாவன் ஆவன். அறிவான்ஆகான் என ஓதினார். அறிவு விளங்காமல் புலம்புற்றிருந்த ஆருயிரை மாயா காரியங்களைக் கூட்டி ஐம்பாடுகளில் செலுத்தி மறைந்து நின்று அறிவித்து வரும் அவ் அருளுடையானை அவன் திருவருள் துணையின்றி எவர்தாம் அறிவர் இப்பாடு கீழ்ப்பாடு என்பர். (பாடு - அவத்தை, தன்னறிவு - ஆன்ம ஞானம்.)

2225. துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
அரியன தூடணம் அந்நன வாதி
பெரியன கால பரம்பின் துரியம்
அரிய அதீதம் அதீதத்த தாமே.

பொருள் : துரியம் எனப்படும் புரிவுக்காட்சி பேரறிவுப் பெருவெளியைக் காண்பதெனக் கூறினோம். வியோமம் - அறிவு வெளி, சொல்லப்படும் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பு , அடங்கல் முதலியன, தடையெனக் கழித்து நன்னடைக்குக் கொண்டுவர வேண்டிய தொன்று புரிவு - சுத்தம் காலங்கடந்த எங்கும் பரம்பிய பெரியனவாகிய புரிவு அருமை சேர் அப்பாலதாகும். (அதீதம் - அப்பால்)

2226. மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன்
மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்,
கேவல மாகும் சகலமா யோனியுள்
தோயும் மனிதர் துரியத்துள் சீவனே.

பொருள் : அசுத்த மாயையில் அறிவுடைய ஆன்மா அதன் பகுதிகளில் (31 தத்துவ அறிவில்) நிலை கொண்டுபொருந்தும் சுத்த மாயையில் ஆன்மா சிவ தத்துவத்தை அறிவதில் பொருந்தும் இவ்வுண்மையை அறியாத சகலர் கேவல அவத்தையை அடைந்து பல யோனிகளில் புக்கு உழல்வர். சுத்த அவத்தை (சுத்த மாயை)யில் பொருந்தியுள்ளவர் நின்மல துரியத்தைக் கண்ட சிவனாவர். நின்மல சாக்கிர நிலையை அடைந்தவருக்குப் பிறவி இல்லை.

7. கேவல சகல சுத்தம் (புலம்பு புணர்வு புரிவு)

(கேவலமாவது, கருவி கரங்களோடு கூடாமல் நிற்கும் நிலை. சகலமாவது கருவி கரணங்களோடு கூடி நிற்கும் நிலை, சுத்தமாவது கருவி கரணங்களை விட்டுத் தூயனாய் நிற்கும் நிலை)

2227. தன்னை அறிசுத்தன் தற்கேவ லன்தானும்
பின்னம் உறநின்ற பேத சகலனும்
மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்
துன்னுவர் தத்தம் தொழில்கள் வாகவே.

பொருள் : தன் உண்மையை அறிந்த சுத்தனும், தான் ஒன்றையும் அறியாமல் கிடக்கும் கேவலனும், இவர்களுக்கு வேறான பல வகைப்பட்ட பரிபாகமுள்ள சகலவனும், முறையே சத்தையும், அசத்தையும், சதசத்தையும் உடனாக, தத்தம் அறியும் திறனுக்குப் ஏற்பப் பொருந்தி நிற்பர். சத்து - சிவன்; அசத்து - மாயை; சதசத்து - ஆன்மா. ஆன்மா சத்தோடு கூடிச் சத்தாயும், அசத்தோடு கூடி அசத்தாயும் நிற்றலின் சத சத்தாம். ஆன்மா பக்குவத்துக்கு ஏற்ப. இம்மூன்று நிலைகளிலும் பொருந்தி நிற்கும்.

2228. தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.

பொருள் : தனக்குப் பகைவனும் நண்பனும் தானே ஆவான். அங்ஙனமே தனக்குரிய மறுமைப்பயனும் இம்மைப் பயனும் தன்னாலே ஆகும். தான் செய்த புண்ணிய பாவச் செயல்களின் பயனை அனுபவிப்பவனும் தானே யாவான். தனக்குத் தலைவனும் தானே ஆவான். ஆன்மாக்கள் செய்யும் வினைக் கேற்ப அனுபவமும் பயனும் உண்டாம்.

2229. ஆமுயிர் கேவலம் மாமாயை யின்நடந்து
ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்று
காமியம் மாமேய மும்கல வாநிற்பத்
தாம்உறு பாசம் சகலத்து ஆமே.

பொருள் : கேவல நிலையில கிடக்கின்ற உயிர் சுத்த மாயையில் பொருந்தி, பிறகு பக்குவமாகின்ற உயிர் மாயையின் தொடர்பால் விளக்கம் பெற, அறிவுற்று பண்டைய வினைப் பயன்களும் அவைகளை அடைவதற்குரிய மாயேயமாகிய தனுகரண புவன போகங்களும் பெற்றும், தாம் அடைந்த பாசத்தால் சகல நிலையை அடையும்.

2230. சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர்
நிகரில் மலரோன்மால் நீடுபல் தேவர்கள்
நிகழ்நரர் சீடம் அந்தமும் ஆமே.

பொருள் : சகல நிலையில் கருவிகளோடு கூடி வந்தவர் சகலர் ஆவார். அவர்கள் ஆகமங்களில் சொல்லப்பெறும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று வகையான மலங்களுடன் பொருந்தியவர்கள் ஒப்பில்லாத பிரமன் திருமால் பலவாக வுள்ள தேவர்கள் இவ்வுலகில் வாழ்கின்ற மக்கள் புழு ஈறாகச் சகலராவர். பிரமன்முதல் புழு ஈறாகப் பிறப்பு இறப்பில் பட்டவராதலின் சகலராவர்.

2231. தாவிய மாயையில் தங்கும் பிரளயம்
மேவிய மற்றது உடம்பாய்மிக் குள்ளன
ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட்டு உரத்திர ராமே.

பொருள் : அசுத்த மாயையில் தங்கியிருக்கும் பிரளயகாலர் பொருந்திய அந்த அசுத்த மாயையே உடம்பாக மற்றைய  மாயேயங்களை விட்ட தன்மையுடைய வராவர். அவர்கள் சிவத்தோடு பொருந்திய சீகண்டரும் நூற்றெட்டு உருத்திரர்களும் ஆவார்கள்.

2232. ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர்
ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர்
ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே.

பொருள் : பொருந்திய கேவல நிலையில் ஆணவமலம் ஒன்று மட்டும் உடைய விஞ்ஞானகலர். அவ்வாறு ஆகின்ற அனந்தாதியராகிய வித்தியேசுரர் எண்மரும் சப்த கோடி மகா மந்திரர்களும் மந்திரேசர்கள் பலரும் ஆவர்.

2233. ஆம்அவ ரில்சிவ னார்அருள் பெற்றுளோர்
போம்மலந் தன்னால் புகழ்விந்து நாதம்விட்டு
ஓம்மய மாகி ஒடுங்கலின் நின்மலம்
தோம் அறும் சுத்த அவத்தைத் தொழிலே.

பொருள் : முற்கூறிய விஞ்ஞானகலரில் மிகப் பக்குவம் பெற்றுச் சிவத்தினது அருளுக்குப் பாத்திரமானவர் வலி யொடுங்கிப் போகும் ஆணவ காரியமாகிய விந்து நாதங்களைக் கடந்து பிரணவ சொரூபமாகிச் சிவத்தின் ஒடுங்குதலால் மலக் குற்றமில்லாச் சுத்த நிலையை அடைவர்.

2234. ஓரினும் மூவகை நால்வகை யும்உள
தேரில் இவைகே வலம்மாயை சேர்இச்சை
சார்இய லாயவை தாமே தணப்பவை
வாரிவைத்து ஈசன் மலர்அறுத் தானே.

பொருள் : ஆராயின் ஞான சொரூப நிலையில் ஆன்மாக்கள் மூன்று வகையாவும் நான்கு வகையாகவும் உள்ளன. ஆராயும் போது இவை மாயையோடு பொருந்தி இச்சையைச் சாருகின்ற தன்மையால் ஆனவை. எனினும் பக்குவம் அடைந்த போது இச்சை முதலியவை எல்லாம் தாமே நீங்குவனவாம் அந்நிலையில் இறைவன் அருளைக் கூட்டி மலத்தைப் போக்கி அருளினான். விஞ்ஞானகலர்க்கு ஞானநிலையில் அருளைக் கூட்டி இறைவன் அருளுவான்.

2235. பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டகன்று
எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி
மெய்யாம் சராசர மாய்வெளி தன்னுட்புக்கு
எய்தாமல் எய்தும்சுத் தாவத்தை என்பதே.

பொருள் : நிலையற்ற மண்முதல் நாதம் ஈறாகவுள்ள முப்பத்தாறு தத்துவங்களின் அறிவையும் விட்டுநீங்கி, அவற்றுள் பற்றுச் சிறிதுமின்றி நீங்கவே எய்தப் பெறுகின்ற பொருளாகிய சிவமே தானாகி நித்தியமாய் சரம் அசரமான எங்குமாய்ப் பரவெளியுற்றும் கலந்து சென்று அடையாமலே தானே வந்து எய்தும் நிலையே சுத்தவத்தை எனப் பெறுவது தத்துவங்களை விட்டுப் பரவெளியில் கலந்திருக்கும் நிலை சுத்தமாகும்.

2236. அனாதி பசுவியாத்தி யாகும் இவனை
அனாதியில் வந்த மலம்ஐந்தால் ஆட்டி
அனாதியில் கேவலம் அச்சக லத்திட்டு
அனாதி பிறப்பறச் சுத்தத்துள் ஆகுமே.

பொருள் : அனாதியாகவே பசுத்துவத்தில் கட்டுப்பட்டிருக்கும் ஆன்மாவை அனாதியிலேயுள்ள ஐம்மலங்களில் உழலச் செய்து, அனாதியில் இருந்த கேவல நிலையினின்றும் நீங்கிச் சகலநிலையில் பொருந்துவித்து, அனாதியாகப் பற்றி வருகின்ற பிறவி நீங்க அவ்வான்மா சுத்தாவத்தையைப் பொருந் தினவன் ஆவான். அனாதி மிகப் பழமை. வியாத்தி அகண்டமான பொருளில் அடங்கி யிருத்தல்.

2237. அந்தரம் சுத்தாவத் தைகே வலத்தாறு
தந்தோர்தம் சுத்தகே வலத்தற்ற தற்பரத்
தின்பால் துரியத் திடையே அறிவுறத்
தன்பால் தனையறி தத்துவந் தானே.

பொருள் : பரவெளியை ஞானம் பற்றிச் சென்று அடைந்தவர் தமது சுத்த கேவல நிலையில் கடந்த தற்பல சிவத்தினிடம் சுத்த துரியத்தே தமது அறிவு பொருந்த ஆன்மாவாகிய தன்னிடம் சிவமாகிய பொருளை உணரும் உண்மையன் ஆவான்.

2238. ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்
மெய்கண்டு சுத்த அவத்தையில் வீடாகும்
துய்யஅவ் வித்தை முதன்மூன்றும் தொல்சத்தி
ஐயன் சிவன்சத்தி யாம்தோற்றம் அவ்வாறே.

பொருள் : பிருதிவி முதல் புருடன் ஈறாக இருபத்தைந்து தத்துவங்களும் ஆன்மாவில் ஒடுங்கும். ஆன்மாவும் சுத்தநிலை எய்தித் தன் உண்மையை உணர்ந்து வீட்டினை அடையும். சிவ தத்துவத்திலுள்ள சுத்தவித்தை மகேசுரம் சாதாக்கியம் ஆகிய மூன்றும் பழமையான சத்தியிலும் ஐயனாகிய சிவத்திலும் ஒடுங்கும். சிருஷ்டிக் கிரமத்தில் சிவனிடமிருந்து சத்தியும் ஏனையவும் அவ்வாறே தோன்றும்.

2239. ஐஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும்
மெய்கண்ட மேல்மூன்றும் மேவுமெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபாகத் தேகாண
எய்யும் படியடங்கும் நாலேழ் எய்தியே.

பொருள் : சுத்தவத்தையில் ஆன்மதத்துவம் 24, புருடன் 1, வித்தியதத்துவம் 6, ஆக 31 தத்துவங்களும் ஆன்மாவிடம் அடங்கி நிற்கும். உண்மையில் கண்டத்தில் விளங்கும் சுத்த வித்தையும் புருவநடுவில் விளங்கும் மகேசுரமும் சிரசுவரை விளங்கும் சதாசிவரும் ஆகிய மூன்றும் உண்மையான யோகத்தில் சுழுமுனைக்கு மேல் விளங்கும் சத்திசிவ பாகமாய்க் காணும்படி இருபத்தெட்டுத் தத்துவங்களும் அடங்கும் முறையில் அடங்கும்.

2240. அணவத் தார்ஒன்று அறியாத கேவலர்
பேணிய மாயைப் பிரளயா கலராகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலர்முப் பாசமும் புக்கோரே.

பொருள் : ஆணவ மலம் ஒன்றுமே உடையோராய் மாயை இன்மங்களை அறியாதவர் விஞ்ஞான கேவலர் ஆவார். ஆணவத்துடன் மாயையைப் பொருந்தினவர் பிரளயாகலர் ஆவர். காணுகின்ற உருவமுடையவராய் அக நோக்கம் பெறாமல் புற நோக்கம் உடையோராய் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்றும் பொருந்தியவர் சகலர் ஆவார்.

2241. ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப்
பேணிய மாயை பிரளயா கலருக்கே
ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே
காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே.

பொருள் : விஞ்ஞானகலரிடை உள்ள குற்றம் ஆணவ மலமாகும். மாயையைப் பற்றிக்கொண்டு நிற்பது பிரளயாகலரின் குற்றமாகும். ஆணவம் மாயை கன்மம் ஆகிய மூன்றையும் பற்றிக்கொண்டு நிற்பது சகலரின் மலக்குற்றமாகும்.

2242. கேவலம் தன்னில் கிளர்ந்தவிஞ் ஞாகலர்
கேவலம் தன்னில் கிளர்விந்து சத்தியால்
பூவயின் கேவலத்து அச்சக லத்தையும்
மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே

பொருள் : ஒருமலக் கட்டுடையார் தனி நிலையில் விளங்கிய விஞ்ஞான கலராவர்.. அந் நிலையில் தூண்டித் தொழிற்படுத்துவது அன்னை என்று சொல்லப்படும். விந்து சத்தியாகும். அந்நிலையில் அவ்வுயிர் உடல் முதலியவற்றையும் எய்தும். அவ்வுடல் மாமாயையில் தோன்றும் மந்திர உடலாகும். மெய்ம்மை - உடலின் தன்மை, கேவலம் - ஞானசொரூபம், ஞான நிலையில் விஞ்ஞானகலர் பராசத்தியைப் பொருந்தி நிற்பர்.

2243. மாயையில் மன்னும் பிரளயா கலர்வந்து
மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவ
மாய சகலத்துக் காமிய மாமாயை
ஏயமன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே.

பொருள் : இருமலக் கட்டினராகிய பிரளயகாலர் மாட்டு ஆணவமே மேலிட்டு நிற்பதால் ஏனைக் கன்மம் மாயைகள் உள்ளடங்கி நிற்கும். அதனால் அவை தோன்றாவகை நிற்க என ஓதினர். அவர் தமக்கு உடம்பும் தூமாயையினால் அமைந்ததாகும். எனவே அவர் இயற்றுங் கன்மங்களும் இருள்சேர் இருவினையும் கடந்த இறைபணியாகும். ஈண்டு உறைவோரும் இம் மெய்யினரும் நூற்றெட்டு உருத்திரர் என்ப.

2244. மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர்
அம்மெய்ச் சகலத்தர் தேவர் சுரர்நரர்
மெய்ம்மையில் வேதா விரிமிகு கீடாந்தத்து
அம்முறை யோனிபுக்கு ஆர்க்கும் சகலரே.

பொருள் : மூன்று மலங்களோடு கூடி அவற்றில் மயங்கி நிற்பவர் அவ் வுண்மையான சகல ஆன்மாக்கள் ஆவர். அவர்கள் தேவர் வானவர் மானுடர் மெய்மையில்லாத பிரமன் விரிந்து மிகுந்து கிடக்கும் புழு ஈறாக அம் முறையில் பிறிவிக் குழியில் பட்டுக் கட்டுப்படும் சகலராவர். (மெய்ம்மையில் வேதா - பரம்பொருளின் முடியைக் காணாமல் கண்டதாகப் பொய்யுரைத்த பிரமன். தேவர் முதல் புழு ஈறாக மும்மலமுடைய சகலர் பிறவிக்குழியில் பட்டுழல்வர்.)

2245. சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச்
சத்துஅசத்து ஓடத் தனித்தனி பாசமும்
மத்த இருள்சிவ னான கதிராலே
தொத்தற விட்டிடச் சுத்தஆ வார்களே.

பொருள் : சுத்தாவத்தையில் பொருந்திய சகலவர்க்க ஆன்மாக்கள், மும்மலங்களில் நித்தமாகிய ஆணவமும், அநித்தமாகிய மாயை கன்மங்களும் நீங்க இவைகளில் தனித்தனியாக நிலை பெற்ற ஆசையும், மயக்கம் பொருந்திய இருளும் சிவசூரியனின் ஒளியால் தொடர்பற நீங்கிடச் சுத்தர் ஆவார்கள். சுத்த நிலையை அடைந்த ஆன்மாக்கள் சிவசூரியன் ஒளியால் மும்மல இருளை நீக்குவர்.

2246. தற்றே வலம்முத்தி தானே தனிமையாம்
பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே.

பொருள் : தூய நிலையில் தான் தனித்து நிற்கும் வீடாகிய பற்றறுதி ஆருயிர் தனித்து நிற்பதாகும். இந்நிலையைத் தூய புலம்பு என்னலாம். தூயபுலம்பு - சுத்த கேவலம். தூய புணர்ப்பு உழைப்பு முதலாகச் சொல்லப்படும். தூவா மாயை யினின்று விலகுவதாம். தூயபுரிவாவது சொல்லப்படும் தூயபுலம்பும் புணர்ப்பும் தன்னுணர்வுக்கும் தோன்றாது ஒழிவது. இதுவே தன் தூய்மையாகும். உழைப்பு தலைமெய் சுத்தவத்தையில் மூன்று நிலையும் அவற்றின் பயனும் கூறியவாறு.

2247. அறிவின்றி முத்தன் அராகாதி சேரான்
குறியொன்றி லாநித்தன் கூடான் கலாதி
செறியும் செயலிலாண் தினங்கற்ற வல்லோன்
கிறியன் மலவியாபி கேவலம் தானே.

பொருள் : கேவல நிலையிலுள் ஆன்மா அறிவின்றியும், உடல் இல்லாதவனாகவும் அராகாதி குணங்களோடு பொருந்தாதவனாகவும், கொள்கை ஒன்றும் இல்லாதவனாகவும் என்றும் உள்ளவனாகவும் கலை முதலிய அசுத்த மாயையைக் கூடாதவனாகவும் தத்துவங்களோடு பொருந்திச் செயல் செய்யாதவனாகவும் போகம் நுகர அறியாதவனாகவும் இருந்தும் இல்லாதவன்; ஆண்வ மலத்தால் வியாபிக்கப் பட்டவனாகவும் உள்ளான். (நித்தன் - தோற்றக் கேடுகள் இல்லாதவன்.)

2248. விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்தத ஞான பரையும் தனுச்சத்தி
விந்துவின் மெய்ஞ்ஞான மேவும் பிரளயர்
வந்த சகலசுத் தான்மாக்கள் வையத்தே.

பொருள் : ஒளிமண்டலமும் அதனை மறைக்கும் மாயையும் அதனை வெளிப்படுத்தும் கிரியையும் அதனால் விளையும் ஞானமும்  உடம்பின் சக்திக் கேற்ப அமையும். விந்துமண்டல ஒளியில் உண்மை ஞானத்தைப்  பொருந்தும் பிரளயாகலர் உலகில் பிறவிக்கு வந்த சுத்தான்மாக்கள் ஆவர். பிரளயாகலராக இருந்தவர் பிறவிக்கு வந்து அடையும் பேற்றினைக் கூறியவாறு.

2249. கேவல மாதியின் பேதம் கிளக்குறில்
கேவல மூன்றும் கிளரும் சகலத்துள்
ஆவயின் மூன்று மதிசுத்த மூடவே
ஓவலில் லாஒன்பான் ஒற்றுணர் வோர்கட்கே.

பொருள் : கேவலம் முதலிய நிலைகளின் வேறுபாட்டைச் சொல்லுமிடத்து, கேவல கேவலம், கேவல சகலம், கேவல சுத்தம் என மூன்றும் கிளர்ச்சியுடைய சகலத்தில் சகல கேவலம், சகல சகலம், சகல சுத்தம் என அவ்விடத்து மூன்றும், மேலான சுத்தத்தில் சுத்த கேவலம், சுத்த சகலம், சுத்த சுத்தம் என மூன்றுடன் நிலைகளைப் பொருந்தி ஆராய்பவர்க்கு நீங்காத ஒன்பது வகையாகும்.

2250. கேவலத்தில் கேவலம் அதீதா தீதம்
கேவலத் தில்சக லங்கள் வயிந்தவம்
கேவத் திறசுத்தம் கேடில்விஞ் ஞாகலர்க்கு
ஆவயின் நாதன் அருண்மூர்த்தி தானே.

பொருள் : கேவலத்தில் கேவலம் எனப்படும் தூயபுலம்பு அப்பாலைக்கு அப்பாலாம். அப்புலம்பிற் புணர்வு தூமாயை நிலைக்களம். அப்புலம்பிற் பிரிவு குற்றமற்ற பேருணர்வாகிய விஞ்ஞானம். இந்நிலை ஒரு மலத்தராகிய விஞ்ஞானகலர் நிலை என்ப. அவ்விடத்து அவ்வுயிர் நாதனாகிய சிவபெருமான் விளங்கும் சீர்த்தவ உடம்பாகும். வயிந்தவம் - சுத்தமாயை தூயபுலம்பு சுத்த கேவலம்.

2251. சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம்
சகல சகலமே சாக்கிர சாக்கிரம்
சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை
சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே.

பொருள் : புணர்விற் புலம்பு கனவில் அப்பாலாகும். புணர்விற் புணர்வு நனவிற் கனவாகும் புணர்விற்புரிவு ஆருயிர் அருளுடன் கூடிநிற்கும் நிலை. தூய புணர்வின்கண் இம்மூன்று நிலையும் காண்க. பராவத்தை - அருள்நிலை.

2252. சுத்தத்தில் சுத்தமே தொல்சிவ மாகுதல்
சுத்தத்தில் கேவலம் தொல்லுப சாந்தமாம்
சுத்த சகலம் துரிய விலாசமாம்
சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே.

பொருள் : தூய புரிவில் புரிவு ஆருயிர் தொன்மையும் முன்மையும், நன்மையும், உண்மையும், அறிவும் இன்பமும் ஒருங்கமைந்த தொன்னாடுடைய சிவன் திருவுரு எய்தல். புரிவிற் புலம்புதற்பணியறுதலாகிய தவ ஒடுக்கம். புரிவிற் புணர்வு இன்பினில்மூழ்கும் இனிய உறைவிடமாம் துரிய விலாசம். (தூயதுரியம் - இன்பநிலையம்.)

2253. சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடுஞ்
சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே
சாக்கிரா தீதம் தனிற்சுகா னந்தமே
ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே.

பொருள் : நனவில் நனவு, நனவில் கனவு, நனவில் உறக்கம், நனவில் பேருறக்கம், நனவில் உயிர்ப்பு அடங்கல், ஆகிய ஐந்தும் துன்பில் இன்பாய் மன்னும் ஆணவம் கன்மம், மாயை, மாயை ஆக்கம், நடப்பாற்றல் ஆகிய ஐம்மலப் பிணிப்பும் மறையாது அகலும்.

2254. சாக்கிரா தீதத்தில் தானறும் ஆணவம்
சாக்கிரா தீதம் பிராவத்தை தங்காது
ஆக்கு பரோபாதி யாஉப சாந்தத்தை
நோக்கும் மலங்குணம் நோக்குதல் ஆகுமே.

பொருள் : முற்கூறியவாறு சாக்கிரா தீதத்தில் சிவத்தோடு பொருந்துதலால் ஆன்மாவின் ஆணவ மலக்குற்றம் அகலும். சாக்கிராதீதம் நாதாந்த மாகையால் நாததத்துவம் தங்காது போகும். பரோபாதியினால் உபசாந்தமாகிய நிறைந்த அமைதி கிட்டும் நாததத்துவத்தைப் பற்றி நிற்கும் ஆன்மா மலங்களையும் அவற்றால் விளையும் குணங்களையும் நோக்குமோ ? நோக்காது.

2255. பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
சுத்த அதீதமும் தோன்றாமல் தானுணும்
அத்தன் அருள்என்று அருளால் அறிந்தபின்
சித்தமும் இல்லை செயல்இல்லை தானே.

பொருள் : கட்டும் வீடும் நல்லோரால் பேணப்படும் துரியமாகிய ஒடுக்கமும், தூய்மையாகிய அப்பால் நிலையும் திருவருளால் ஒருசிறிதும் தோன்றாவாகும். தான் நுகர்ந்து கொண்டிருப்பது அத்தன் - சிவபெருமானின் திருவடியின்பம் என்று அருளால் அறிவன். அறிந்தபின் எண்ணமாகிய சித்தத்தின் இயக்கம் இல்லை. அஃது இல்லையாகவே வேறு எச்செயலும் இல்லை.

2256. எய்திய பெத்தமும் முத்தமும் என்பன
எய்தும் அரன்அரு ளேவினை யாட்டோடு
எய்திடு உயிர்சுத்தத் திடுநெறி என்னவே
எய்தும் உயிர்இறை பால்அறி வாமே.

பொருள் : உயிர்கள் அடையும் பெத்தமும் முத்தியும் சிவனது அருளால் அமையும். அச்சிவனது அருள் விளையாட்டோடு பொருந்தும் உயிர் இது சுத்தநிலைக்குச் செலுத்தும் நெறியாகும் என்று அடையும். அவ்வாறு அடையும் உயிர் இறைவனிடம் அறிவாய்த்திகழும்.

2257. ஐம்மலத் தாரும் மதித்த சகலத்தர்
ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தார்
ஐம்மலத் தார்சுவர்க் கந்நெறி யாள்பவர்
ஐம்மலத் தார்அர னார்க்குஅறி வோரே.

பொருள் : ஐம்மலமுடைய சீவர்கள் தம்மைத் தாமே மதித்த சகலத்தர் ஆவர். அவர்கள் ஐம்மலப் பாசத்தால் கட்டுண்டவராகிக் கொடிய வினைகளைத் துய்க்க வேண்டியவராக உள்ளார். இவர்கள் வீட்டுலகை விரும்பாமல் சொர்க்க நெறியை விரும்பிப் பெறுவர். இவர்கள் அரனாரை அறியாதிருப்பினும் அரனார் இவர்களை அறிந்தே யுள்ளார்.

2258. கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதிலுண்ணும் ஆசையும்
உரிய சுழுனை முதல்எட்டும் சூக்கத்து
அரிய கனாத்தூலம் அந்நன வாமே.

பொருள் : கேவலத்து அதீதத்தில் ஆன்மாக்களைப் பிறவிக்குச் செலுத்தச் சிவசத்தி மாயையைக் கலக்கச் செய்யும். பின்னர் துரிய நிலையில் அவ்ஆன்மாவுக்கு விருப்பவாசனைகளை உண்ணும் ஆசை உண்டாம். அவ் ஆன்மாவின் விருப்புக்கேற்ப பிரமரந்திரமும் அதைச் சூழவுள்ள எட்டு நிலைகளும் சூக்குமாக அமையும். பின்னர் குணம் என்ற மனோமய கோசம் இணைக்கப்பட்ட போது நனவு நிலையாகும்.

2259. ஆணவம் ஆகும் ஆதீதம்மேல் மாயையும்
பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம்
பேணும் கனவும் மாமாயை திரோதாயி
காணும் நனவில் மலக்கலப்பு ஆகுமே.

பொருள் : உயிர்ப்பு அடங்குதல் அல்லது அதீதம் என்று சொல்லப்படும் அப்பால் நிலைக்கண் ஆணவமட்டும் ஆருயிர்களைப் பிணித்து நிற்கும். பேருறக்கத்தின் கண் தூவாமாயை புணர்ந்து நிற்கும். உறக்கத்தின் கண் காமியம் என்னும் இருவினைகள் கூடி நிற்கும். கனவின்கண் தூமாயை கூடிநிற்கும். நனவின்கண் நடப்பாற்றலாகிய திருரோதாயியுடன் ஐம்மலமும் பிணிப்புற்றிருக்கும்.

2260. அரன்முத லாக அறிவோன் அதீதத்தன்
அரன்முத லாமாயை தங்கிச் சுழுனை
கருமம் உணர்ந்து மாமாயைக் கைகொண்டோர்
அருளும் அறைவார் சகலத்துற் றாரே.

பொருள் : அரன் முதலாக அறிவோனாகிய ஆருயர் அப்பால் நிலைக்கண் தங்கும். அரன் முதலாகக் கொள்ளும் மாயை பேருறக்கமாகும். உறக்கத்தில் கருமமாகும். கனவில் மாமாயையாகும் நனவில் மறைப்பொருளாகிய நடப்பாற்றல் மேலோங்கும். இந்நிலையே புணர்ப்பு நிலையாகும். (புணர்ப்பு - சகலம்)

2261. உருவுற்றுப் போகமே போக்கியம் துற்று
மருவுற்றுப் பூதம னாதியான் மன்னி
வரும்அச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக்
கருவுற் றிடுஞ்சீவன் காணும் சகலத்தே.

பொருள் : மாயாகாரியமான தேகத்தைப் பொருந்தி, எடுத்த தேகத்துக்கு ஏற்றவாறு போக போக்கியங்களை நுகர்ந்து பூதங்களைச் சார்ந்து மனம் முதலிய அந்தக்கரணங்களைப் பொருந்தி வருகின்ற கன்மங்களை அடைந்து சத்தம் முதலாகிய தன்மாத்திரைகளில் தங்கி, கருவை அடைந்த சீவன் சகலாவத்தையில் தோன்றும்.

2262. இருவினை ஒத்திட இன்னருள் சத்தி
மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக்
குருவினைக் கொண்டருள் சத்திமுன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.

பொருள் : ஞானமும் கிரியையும் ஒத்த விளங்கும் போது இன்பம் விளைக்கும் சிற்சித்தி பொருந்தி ஞான சொரூபமான சுத்தாவத்தை பொருந்தவே அதுசமயம் தக்க குருவினால் உணர்த்தும்படி செய்து திருவருட்சத்தி பொருந்தி மூலமலம் நீங்கி மீட்டும் பிறவியை அடையாமல் இருப்பதே சுத்தநிலையாகும்.

2263. ஆறாறும் ஆறதில் ஐ ஐந்து அவத்தையோடு
ஈறாம் அதீதத்  துரியத்து இவன்எய்தப்
பேறான ஐவரும் போம்பிர காசத்து
நீறார் பரம்சிவம் ஆதேய மாகுமே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களின் வழியாக இருபத்தைந்து நிலைகளையும் அவற்றின் ஈறாகிய நின்மல துரியாதீதத்தை இச்சீவன் அடைய, சுத்த தத்துவத்துக்குரிய சுத்தவித்தை மகேசுரம், சதாசிவம் விந்துநாதம் ஆகியஐந்தும் நீங்கும் பிரகாசத்தையுடைய சீவன் பரமாகிச் சிவத்தினிடம் உள்ளதாகும்.

2264. தன்னை அறியாது உடலைமுன் தான்என்றான்
தன்னைமுன் கண்டான் துரியம் தனைக்கண்டான்
உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடும் தானே.

பொருள் : உடம்பின் வேறாக ஆன்மாவாகிய தான்ஒருவன் உளன் என்பதை அறியாமல் தன் உடலையே தான் என்று மயங்கியிருந்தான். நிராதாரத்தில் உணர்வு சென்ற போதுதான் ஓர் ஒளிவடிவினன் என்பதை அறிந்தான். இவ்வுடலைத் தாங்கி நிற்பது ஒளிஎன்று கண்டான். அவ்வாறுள்ள ஒளி உடல் சித்துடன் ஒன்றாகவிடில் மீளவும் வந்து வினைக் கீடாக அவ் ஆன்மா பிறப்பான்.

2265. சாக்கிரந் தன்னில் அதீதம் தலைப்படில்
ஆக்கிய அந்த வயிந்தவம் ஆனந்தம்
நோக்கும் பிறப்புஅறும் நோன்முத்தி சித்தியாம்
வாக்கும் மனமும் மருவல்செய் யாவே.

பொருள் : நின்மல சாக்கிராதீதம் கூடுமானால் அதைத்தோற்று வித்த சுத்த தத்துவம் ஆனந்தத்தை விளைக்கும். எதிர்நோக்கியுள்ள பிறப்பு ஆறும், பெருமை பொருந்திய முத்தி கிட்டும் அந்த அதீத நிலையில் சூக்குமமான வாக்கும் மனமும் பொருந்தா.சாக்கிரத்தில் அதீதம் தலைப்பட்டவரிடத்து வாக்கும் மனமும் இல்லை.

2266. அப்பும் அனலும் அகலத்து ளேவரும்
அப்பும் அனலும் அகலத்து ளேவாரா
அப்பும் அனலும் அகலத்துள் ஏதெனில்
அப்பும் அனலும் கலந்ததுஅவ் வாறே.

பொருள் : நீரின் குணமாகிய தண்மையும் நெருப்பின் குணமாகிய ஒளியும் அகண்ட ஆகாயத்துள்ளே விளங்கும். ஆனால் அவற்றின் நெகிழ்ச்சியும் சுடுதல் தன்மையும் அங்கு இரா. விரிந்த ஆகாயத்தில் நீரும் நெருப்பும் ஏது என்று வினவினால் அப்புத் தன்மையும் அனலின் தன்மையும் கலந்து அவ்வாறாகும்.

2267. அறுநான்கு அசுத்தம் அதிசுத்தா சுத்தம்
உறும்ஏழு மாயை உடன்ஐந்தே சுத்தம்
பெறுமாறு இவைமூன்றும் கண்டத்தால் பேதித்து
உறும்மாயை மாமாயை ஆன்மாவி னோடே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவம் இருபத்துநான்கும் அசுத்தம். மிசிர மாயையோடு கூடிய வித்தியாதத்துவங்கள் ஏழும் சுத்தாசுத்தம். உடனாகிய சிவ தத்துவங்கள் ஐந்தும் சுத்தமாகும். இம்மூன்றையும் ஆன்மா அடையும் வண்ணம் மூன்று கண்டங்களாகப் பிரிந்து பிரகிருதிமாயை அசுத்தமாயை சுத்தமாயை ஆன்மாவினிடம் பொருந்தும்.

2268. மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏயும் உயிர்க்கே வலசகலத்து எய்தி
ஆய்தரு சுத்தமும் தான்வந்து அடையுமே.

பொருள் : அசுத்த மாயை செவிலித் தாயாகவும், சுத்தமாயை தாயாகவும் ஆக, இவைபொருந்தும் வகையில் பரசிவன் தந்தையாக அமைய ஆன்மா கேவல சகல நிலைகளை அடைந்து, ஆராய்ந்து தெளிவு பெற்ற போது சுத்த மாயையைப் பொருந்திச் சுத்தாவத்தையை அடையும் மாயை தாயாகவும் சிவன் தந்தையாகவும் அமைந்து ஆன்மாக்களைத் கேவல சகலங்களில் பொருந்திச் சுத்தநிலையை அடைவிக்கும்.

8. பராவத்தை

(பர + அவத்தை = பராவத்தை. இது பரை அல்லது சத்தியோடு கூடியுள்ள நிலை, இங்குப் பரைநிலையில் ஆன்ம அனுபவம் கூறப் பெறும்.)

2269. அஞ்சும் கடந்த அனாதி பரன்தெய்வம்
நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.

பொருள் : சிவ தத்துவமாகிய ஐந்தையும் கடந்த நிலையிலுள்ள அனாதியான பரனே தெய்வமாகும். இதுவே எல்லோரது மன மண்டலத்தில் பொருந்தியதாய் மலமற்றதாய் பிறப்பில்லாததாய் உள்ளது. இஃது அகண்ட பொருளான படியால் உடலினுள் இருந்த உயிரை வேறுபடுத்துவதற்காக மறைந்திருந்த உண்மையை நான் அறிந்தேன்.

2270. சத்தி பராபரம் சாந்தி தனிலான
சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து
சத்திய மாயை தனுச்சந்தி ஐந்துடன்
சத்தி பெறுமுயிர் தான்அங்கத்து ஆறுமே.

பொருள் : பராசத்தியே சுத்தமாயை, அசுத்தமாயையில் விரவித் தன்னிலை கெடாத சாந்தி கலையில் உள்ளது மேலான ஆனந்த நிலையில் அச்சத்தி ஒளிமயமாய் உள்ளது. அச்சத்தியே அசுத்தமாயையில் பொருந்தி உடம்பின் சத்திகளாகிய ஐந்துடன் சீவன் உடம்பால் பெறும் பயனுக்குக் காரணமாயும் உள்ளது. பராசத்தி சீவனுக்குச் செய்யும் உபகாரம் கூறியவாறு.

2271. ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்
ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்
ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக்கும் அப்பால் அரன்இனி தாமே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அறிவோரே அறிபவர் ஆவார். அக்கடந்த நிலையில் அவர் சத்தியின் அருளைப் பெறுபவர் ஆவார். அதனால் அவர்களுக்கு அங்கே எல்லா அறிவும் உண்டாகும். அப்போது அவர் சிவனோடு இனிதாய்ப் பொருந்தி யிருப்பார். தத்துவங்களைக் கடந்து சிவ சத்தியோடு பொருந்தியிருப்பவர் எல்லா அறிவும் உடையவர் ஆவார்.

2272. அஞ்சொடு நான்கும் கடந்துஅக மேபுக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு
நஞ்சுற நாடி நயம்செய்யு மாறே.

பொருள் : ஐந்த ஞானேந்திரியங்களும் நான்கு அந்தக்கரணங்களும் தத்தம் செயல் மடங்கி உள்ளத்தில் (மன மண்டலத்தில்) அடங்க ஐந்து இந்திரியங்களையும் அணிகலமாகக் கொண்டு உறக்கத்தை அடைகின்ற அறிவுமயமான ஆன்மா சிற்சத்தியோடு நீல ஒளியில் மனம் தொழிற்படாமல் நிற்பதில் இன்பத்தைத் துய்க்கும். (விஞ்சையர் வேந்தன் அறிவுடைய ஆன்மா. சத்தியின் நிறம் நீலம்.)

2273. உரிய நனாத்துரி யத்தில் இவளாம்
அரிய துரிய நனவாதி மூன்றில்
பரிய பரதுரி யத்தில் பரனாம்
திரய வரும்துரி யத்தில் சிவமே.

பொருள் : துரியம் என்று சொல்லப்படும் அப்பால் நனவில் ஆருயிர் தனித்து நிற்கும். அதனால் இவனாம் என்றருளினார். அப்பால் நனவு - துரிய சாக்கிரம். அத்தகைய அருமைவாய்ந்த அப்பால் நனவு, அப்பால் கனவு, அப்பால் உறக்கம் என்ற மூன்றினுள் பெருமை மிக்க அப்பாலுக்கு அப்பாலாம் பரதுரியத்தில் பரன் என்று சொல்லப்படும் திருவருளுடன் கூடி உறைபவனாம். இவற்றிற் கெல்லாம் மேம்பட்ட மாறுபாடு இல்லாத அப்பால் நிலைக்கண் தூய சிவனேயாவன். (இவனாம் - இந்த ஆன்மாவாம்.)

2274. பரமாம் அதீதமே பற்றறப் பற்றப்
பரமாம் அதீதம் பயிலப் பயிலப்
பரமாம் அதீதம் பயிலாத் தபோதனர்
பரமாகார் பாசமும் பற்றொன்றுஅ றாதே.

பொருள் : நின்மல சாக்கிரா தீத்தில் சிவன் தத்துவங்களை விட்டுப் பரமாகும். இவ்வகையான அதீதத்தில் பலகால் பழகப் பழகப் பரம் பொருந்தும். இவ்விதம் நிஷ்டை பொருந்தி அதீதத்தை அடையாதவர் பரமாக மாட்டார். அவரை விட்டுப் பாசமும் அதனாலாய பற்றும் நீங்கா.

2275. ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும்
வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின்
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.

பொருள் : ஆராச்சியால் அறியப்பட்டபோது மாயை உடலின் உள்ளும் உடலின் புறம்புமாய்ப் பொருந்தி யிருக்கும். நின்மல துரியாதீதத்தில் வாயுவும் மனமும் கடந்த நிலையில் மயக்கம் நீங்கினபோது தூய்மையான அறிவு சிவானந்தமாய் மேல்நிறைந்து மாயையை மூடும் பொருளாக அமைந்தது தானே.

2276. துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள்நின்று ஓலமிட் டன்றே.

பொருள் : துரிய மாகிய குதிரைமேல் இருந்த சீவனை மென்மையான பராவத்தையில் புகச் செய்து, இந்திரியங்களாகிய நரிகளை விரட்டிய நாதத்தைத் தரிசனம் செய்த அனுபூதிமான்களுக்கு உரியனவாகிய வினைகள் பந்திக்க மாட்டாமையால் நின்று ஓலமிட்டன.

2277. நின்றஇச் சாக்கிர நீள்துரி யத்தினின்
மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன்வடி வாமே.

பொருள் : முற்கூறியவாறு நின்ற சாக்கிரத்தில் அதீதம் புரியும் போத பரந்த ஆகாய பூத நாயகனான சபேசனும் சீவனுடன் கலந்து நிற்பான். சபேசன் சீவனுடன் பொருந்தி விளங்கும்போது மாயையாகிய இருள் விலகிவிடும். அப்போதே சீவனும் சிவன் போல் அகண்ட வடிவை அடைவான்.

2278. விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை ஈடான மாயை
பொருந்தும் துரியம் புரியில்தா னாகும்
தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே.

பொருள் : பொறிபுலன் கலன்முதலிய உறுப்புக்கள் விரிந்த இடத்து நனவினைப் பொருந்தும். மாயை விளக்குப் போன்று இருந்த இடத்தில் வலிமையோடு நிற்கும். நனவில் அப்பால் நிலைக்கு முன் நிலை வாய்க்குமிடத்து அருளால் ஆருயிர் தாமரையிலை நீர்போல் ஒட்டாது நிற்கும். இக்கருவிகள் எல்லாம் நனவின்கண் ஏற்படும் பேருறக்க நிலையில் விட்டு அகலாமல் ஒட்டிச் செயலற்று இருக்கும்.

2279. உன்னை அறியாது உடலைமுன் நான்என்றாய்
உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய்
தன்னை அறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே.

பொருள் : ஆன்ம ஒளியை அறியாமல் நீ தேகாத்ம புத்தியோடு முன் இருந்தாய். பின் ஆத்ம ஒளியை அறிந்து துரியத்தில் நின்றாய். தன்னுடைய இயல்பை அறிந்தும் சிவ வியாபகத்தில் பொருந்தவில்லை யென்றால் பிறவி நீங்காது. அவ்வாறு சிவத்தின் வியாபக்தில் அடங்கி விடுதலே மலமற்ற நிலையாகும்.

2280. கருவரம்பு ஆகிய காயம் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்புஇறப்பு உற்றார்
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
இருவரும் இன்றிஒன் றாகிநின் றாரே.

பொருள் : கருவின் எல்லைக்கு உட்பட்டது துரியத்திலுள்ள சூக்கும வித்தியா தேகம். பிறப்புக்குரிய காரணம் அகற்றப் படாதவரைச் சூக்குமமும் தூலமும் பொருந்திச் சீவர்கள் பிறவியில் பட்டுழல்வர். குருவின் சகாயத்தால் சிவத்துடன் பொருந்தும் அருளைக் கூடினவர் சூக்கும வித்தியா தேகத்தையும் தூல தேகத்தையும் விட்டுச் சிவ தத்துவத்தில் சிவத்தோடு ஒன்றாவர். இருவர் - தூல உடல், சூக்கும உடல்.

2281. அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆன கனவும்
அணுஅசை வில்பரா தீதம் சுழுத்தி
பணியில் பரதுரி யம்பர மாமே.

பொருள் : ஆருயிராகிய அணுவின் பேருறக்க நிலையாம்துரியத்தில் உண்டாகும். நனவும் ஆருயிரின் புடை பெயர்ச்சியில் உண்டாகும் கனவும், அப்புடை பெயர்ச்சியில் உண்டாகும் கனவும், அப்புடை பெயர்ச்சியின்கண் தன்னை இழப்பதாகிய உறக்கமும் பொருந்திய இடத்து அப்பால் நிலை எய்தும், எய்தவே சிவனுடன் ஒன்றாம் சிறப்பு எய்தும். இதுவே பரம் என ஓதப்பெற்றது. (அணு - ஆன்மா. பணியில் - பொருந்தினால்)

2282. பரதுரி யத்து நனவும் பரந்து
விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி
உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்
தெரியும் சிவதுரி  யத்தனு மாமே.

பொருள் : மேற் பேருறக்கமாகிய பரதுரிய நனவு எங்கும் பரந்து விரிந்த உலக நுகர்வுகளை உண்டல். அது போல் கனவுப் பயனும் நண்ணுகர்வு உண்மையாதலின் பர துரியக் கனவு மெய்ம்மை அமைதியாகும். கருவி கரண முதலிய உருவு மட்டும் அசைவின்றி இருக்கும் உறக்க நிலையும் நீங்க, ஆண்டு அருளாற் புலனாகும் ஒன்று. அதுவே சிவதுரிய நிலையாகும், அந்நிலை எய்தியவன் சிவ துரியத்தன் ஆவன்.

2283. பரமா நனவின்பின் பால்சக முண்ட
திரமார் கனவும் சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே
தரனாம் சிவதுரி யத்தனும் ஆமே.

பொருள் : மேல் நனவு என்று சொல்லப்படும் பரமா நனவின் அடுத்த நிலை மெய்ம்மையும் உறுதியும் உடைய மேற்கனவின் உலக நுகர்வுகளை உண்ணும். சிறந்த உறக்க நிலை நல்லுறுதி யாகும். பேருறக்க மேல் நிலை அமைதி நிறைதல். அதன் மேல்நிலை துறவாகும். இந்நிலை சிவ துரிய நிலையாகும். இந்நிலை எய்தினான் சிவதுரியத்தன் ஆவன். (தரனாம் - கைகூடப் பெற்றவன்)

2284. சீவன் துரியம் முதலாகச் சீரான
ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்தும்
ஓவும் பராநந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுவித்தநின் றானே.

பொருள் : சீவன் துரியம் முதலாக பெருமை பெற்ற சிவதுரியம் ஈறாகப் பத்து நிலைகளும் நீங்கும். மேலான சிவத்தின் நிறைவில் அடங்கியிருப்பது அந்தக்கரணம் நான்கையும் பொருந்திய வித்தியா தத்துவம் ஏழையும் விட்டு நின்றான்.

2285. பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்
பரம்பரன் மேலாம் பரநன வாக
விரிந்த கனாவிட்டுமேவும் சுழுமுனை
உரந்தரும் மாநந்தி யாம்உண்மை தானே.

பொருள் : பரம் சிவன் இரண்டற்கு மேல் பரமம். அப்பரத்திற்கு மேல் பரம்பரன். பரநனவு விரிந்த பரக்கனவு இவ்விரண்டும் ஆருயிர்களின் பிறப்புத் துன்பத்தை அகற்றும். அதற் மேல் பேரறிவுப் பெருமானாகிய பர நந்தியின் உண்மை நிலையினை எய்துவன்.

2286. சார்வாம் பரம்சிவம் சத்தி பரநாதம்
மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்
பாலாய்ப் பிரமன் அரிஅம ராபதி
தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே.

பொருள் : ஆராயின், உயிர்கட்குப் பற்றுக் கேடாக அருவநிலைகளான பரம், சிவம், சத்தி, பரநாதம், பரவிந்து, சதாசிவமும், இப்பால் உருவமூர்த்திகளான பிரமன், விஷ்ணு, தேவர் தலைவனான உருத்திரன் மகேசனும் ஆக பதின்மர் உளர். பரம் - சத்தி சிவன் பிரிப்பின்றி உள்ள நிலை, முன் மந்திரத்தின் விரிவு இங்குக் கூறியவாறு.

2287. கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும்
உலப்புஅறி யார்உடலோடுஉயிர் தன்னை
அலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார்
குறிப்பது கோலம் அடலது ஆமே.

பொருள் : முன் மந்திரத்தில் கண்ட திருமேனிகள் உயிர்களோடு ஒன்றியிருந்து இயக்குவதை உலகினர் அறியமாட்டார். கடலால் சூழப்பட்ட ஏழ் உலகங்களும் அழிந்து போவதையும் இவர்கள் அறியமாட்டார்கள். உடலோடு உயிர் பொருந்தியிருக்கும் தன்மையை அறிந்து இங்கு மேன்மை அடையமாட்டார். மேலே கண்ட திருமேனிகளைத் தியானிப்பது வலியுடைமை ஆகுமோ ? ஆகாது. (ஆமே - ஏகாரம் எதிர்மறை)

2288. பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்
தன்னை அறியில் தயாபரன் எம்இறை
முன்னை அறிவு முடிகின்ற காலமும்
என்னை அறியலுற்று இன்புற்ற வாறே.

பொருள் : குரு உபதேசத்தின் பின் விளங்கும் பெரிய தவத்தின் பயனாகிய வரவிந்து மண்டலத்தை உணரில் கருணாமூர்த்தியான எமது தலைவன் பழமையான சுட்டறிவு நீங்குகின்ற காலத்தில் என்னுடைய அகண்ட  வியாபகத்தை உணரும்படி செய்து, அதனால் நான் இன்பம் பெற்று உய்ந்தவாறு என்னே !

2289. பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
தன்னின் மறைந்தது தன்கர ணங்களே.

பொருள் : பொன்னால் செய்யப்பெற்ற நகையைக் காணும்போது பொன்னைப் பற்றிய காட்சியில்லை. பொன்னின் இயல்பைப் பார்க்கும் போது பொன்னால் செய்யப்பெற்ற நகையின் காட்சி பொன்னில் மறைந்தது. அதுபோல அந்தக் கரணங்கள் பகிர்முகமாக வியாபகம் பெற்றிருந்த போது ஆன்மாவின் காட்சியில்லை ஆன்மாவின் இயல்பை உணர்ந்தபோது அந்தக்கரணங்களின் வியாபகம் ஆன் மாவில் ஒடுங்கியது.

2290. மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே.

பொருள் : மரத்தால் செய்யப் பெற்ற யானைப் பதுமையைப் பார்க்கும்போது மரத்தைப் பற்றிய காட்சி இல்லை. வர்ணங்களை அகற்றிப் புறநிலையை மாற்றிப் பார்க்கும்போது யானையின் காட்சி மரத்தில் மறைந்தது. அது போலப் பார்த்தால் விளக்கம் பெற்ற பார் முதலிய பூதங்களைப் பார்க்கும்போது பரமானது காட்சிக்கு ஆவதில்லை. குருவருளால் பார்க்கும்போது பரமே காட்சியளித்துப் பார்முதல் பூதங்கள் பரத்தில் மறைந்தன.

2291. ஆறாறு ஆகன்று நமவிட்டு அறிவாகி
வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும்பின் முத்தியே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களைக் கடந்து, பஞ்சாட்சரத்தில் நம என்ற எழுத்துக்களைவிட்டு, பேரறிவாகி, தத்துவங்களுக்கு வேறாய் ஆன்மா யகாரமாய் விளங்கியபோது பரையின் இறுதியிலுள்ள ஒளியான தற்பரனாகிய சிவத்தில் பேறு நிறைந்த சிவாய என சிவசத்தியோடு அடங்கி நிற்றலே முத்தியாகும்.

2292.  துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதி
விரியப் பரையில் மிகும்நாதம் அந்தம்
புரியப் பரையில் பராவத்தா போதம்
திரிய பரமம் துரியம் தெரியவே.

பொருள் : பராவத்தையில் சாக்கிரம் முதலான ஐந்தும் கீழ்க்காணுமாறு ஆகும். பரையில் சொற் பிரபஞ்சத்துக்குக் காரணமான நாதம் தோன்றும்; சொப்பனத்தில் நாதம் ஒடுங்க பரையில் நின்மல சுழுத்தியாகிய உறக்கம் அமையும்; நின்மல சுழுத்தியில் அழுந்தாமல் மேல் விளங்கவே மேலான சிவதுரியம் பொருந்தும்.

2293. ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே.

பொருள் : பராவத்தை ஐந்தும் சகல நிலையில் சீவர்களுக்கு அருளால் பந்தம் நீங்கச் செய்து, சுத்தாவத்தையில் பொருந்தும்படி செய்யும் இந்நிலையில் பொருந்தும் பிரமந்திரத் துடிப்பினால் மனம் பதியச் சிவத்தை அடைவதற்குரிய பராவத்தையில் விருப்பம் உண்டாக, மாலைக் காலத்தில் நீல ஒளியின்முன் இருள் நீங்குவது போலச் சிரசின் முன்னுள்ள ஒளியில் ஐம்மலங்களும் நீங்கும். நந்தி - கதிர். பரை ஒளியில் மனம் பதிவுண்டபோது சிவதரிசனம் உண்டாகி மலம் நீங்கும்.

2294. ஐ ஐந்து மட்டுப் பகுதியும் மாயையும்
பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே.

பொருள் : அசுத்த மாயையில் உள்ள புருடனுடன் கூடிய ஆன்ம தத்துவங்கள் இருபத்தைந்தும் பொய்யாகுமாறு சுத்த மாயையில் தேகத்துக்குரிய ஆத்மன் கண்டு எல்லாப் பொருளும் அடையும்படியாய் அவைகளேயாய் அவற்றினின்றும் விலகியிருக்கவும் உய்தியைத் தருகின்ற பராவத்தையையே எண்ணிக் கொண்டிருத்தல் சுத்த நிலையாகும்.

2295. நின்றான் அருளும் பரமும்முன் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத்து ஆங்குச்செல் லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.

பொருள் : பண்டைய நற்றவத்தால் ஞானத்தில் விளங்கும் நாதனான சிவபெருமான் தான் ஆன்மாக்கள்மாட்டுச் செய்யும் அருளும் பரமும் அவர்கள் தன்மீது செலுத்தும் அன்புமாக நின்றான். ஆன்மாக்களோடு பிரிப்பின்றிக் கலந்து உருவத்தில் பொருந்தியிருந்தும் ஆன்மாக்களின் சாக்கிரம் முதலிய உபாதிகளில் பொருந்தாமல் இருந்தான். என்னைத் தூல சூக்கும உடல்களின் பிடிப்பிலிருந்து விடுவித்தும் என்னை விட்டு அகலாதவனாகவும் உள்ளான்.

9. முக்குண நிர்க்குணம் (முக்கணம் : - சாத்துவிகம், இராசதம், தாமதம். நிர்க்குணம் குணமற்ற தன்மை.)

2296. சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால்
வாயந்த இராசதம் மன்னும் கனவென்ப
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே.

பொருள் : அவத்தைகளில் பொருந்திய உயிர்க்கு நனவினில் சாத்துவ குணம் அமையும்; கனவு என்பது அதற்குரிய இராசதகுணம் பொருந்துதலாம். கருவிகரணங்களையும் செயற் படாது ஓய வைத்திடுதல் தாமத குணம் பொருந்திய சுழுத்தியாகும். இந்திரியங்களையும் அந்தக்கரணங்களையும் செயற்படாமல் அழித்திடும் நிலையே குற்றமற்ற துரிய மாகும். (உயிர் அவத்தைகளில் பொருந்தியிருக்கும்போதுள்ள குணங்களைக் கூறியவாறு.)

10. அண்டாதி பேதம் (அண்டாதி பேதம் - அண்டத்தின் வகை)

(மனிதனுடைய உடல் தொம்பைக்கூடு போன்ற ஒளி மண்டலத்தில் சூழப் பெற்றுள்ளது. பக்குவம் பெற்றபோது குஞ்சு முட்டையை உடைத்து வெளிச் செல்வதுபோல அண்டகோசம் என்ற பிரணவத்துள்ளாக வளர்ந்து பக்குவம் பெற்றபோது, மனிதன் பிரணவத்தைக் கடந்து வெளிச் செல்கிறான். அத்தகைய அண்டம் இங்கும் விளக்கப் பெறுகிறது. இவ் அண்டகோசத்துக்கு வெளியே உள்ளது பகிரண்டம்.)

2297. பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல்அள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும்அண் டாசனத் தேவர் பிரானே.

பொருள் : அண்டத்தை ஆசனமாகக் கொண்டு அதன்மேல் வீற்றிருக்கும் தேவாதி தேவனான சிவன், விரும்பிப் பெறும் பேரண்டத்தில் வெவ்வேறாகவுள்ள அண்ட கோசங்களில் திரை எறிகின்ற கடல் ஏழினும் உள்ள மணலின் அத்துணை அளவாக ஒளிக்கிரணங்களில் பொன் அணியில் பொன் செறிந்து பிரகாசிப்பது போல் பிரகாசிப்பான். (பொன் - சிவன்.)

2298. ஆனந்த தத்துவம் அண்டா சலத்தின்மேல்
மேனிஐந் தாக வியத்தம்முப் பத்தாறாய்த்
தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை
ஈனமி லாஅண்டத்து எண்மடங்கு ஆமே.

பொருள் : அண்ட கோசத்துக்குரிய ஆத்மன் அண்டத்தை ஆசனமாகக் கொண்டு ஆனந்தமாகத் தத்துவங் கடந்துள்ளான். ஆத்மனுக்கு உபகரிக்கும் நிமித்தம் சத்தியானவள் ஐந்தாக அண்டத்தினுள்ளே முப்பத்தாறு தத்துவங்களாய் அண்டத்தின் புறத்தில் சத்தி முடிவற்ற தத்துவங்களாகவும் அனந்த சத்தியாகவும் அண்டத்தின் எண்மடங்கு அளவுடையதாகவும் விளங்குகின்றது. மேனி ஐந்தாவன : சத்தியோசாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என்பன.

11. பதினோராம் தானமும் அவத்தை யெனக் காணல்

(பதினோராம் தானமாவது துவாதச கலையில் பதினோராவது கலையாகிய சமனை கலையாவன அகர முதல் உன்மனை ஈறாகப் பன்னிரண்டாகும். ஒவ்வொரு கலைக்கும் ஓர் இடம் உண்டு. சமனைக்குரிய இடம் சிரசின் மேலாகும். இங்கு அவத்தை ஆன்மா பொருந்தி யிருத்தல் அல்லது நிலை என்க.)

2299. அஞ்சில் அமுதும்ஓர் ஏழின்கண் ஆனந்தம்
முஞ்சில்ஓங் காரம்ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம்
கிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.

பொருள் : ஐந்தாவது கலையாகிய அர்த்த சந்திரனுக்குரிய இடமாகிய புருவநடு விழிப்படையின் அமுதமயமான சந்திர ஒளி பெருகும். சிரசினுள் ஏழாவது கலையாகிய நிரோதினி கலையை உணர்ந்தபோது ஆனந்தம் உண்டாகும். விந்து செயம் பெறுதலே பிரணவமாகும். ஒன்பதாவது கலையான சத்தியானது வஞ்சகத்தைச் செய்யின் பதினோராவது கலையாகிய உன் மனையை விளங்க ஒட்டாமல் ஆன்மாவைத் தேகேந்திரியங்களின் வழிச் செலுத்தும். மூலாதாரச் சக்கரத்திலுள்ள குண்டலினி சத்தியே கேட்டு அருள் புரிவாயாக. முஞ்சில் - தருப்பை. அழிவில்லாத எனினுமாம். முன்முருங்கின் பூவிதழ் போன்ற செவ்விய இதழையுடைய பெண் பிள்ளையே கேட்பாயாக எனினுமாம். (மகடூஉ முன்னிலை)

2300. புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே.

பொருள் : மன மண்டலத்தில் புருடத்துவத்துடன் அருவமான சிவ தத்துவம் ஐந்துமாக ஆறும் விளங்கும் நிலையே ஆன்மாவுக்குத் துரியாதீதமாகும். சுழுத்தி நிலையில் புரியட்டக சரீரம் விரிந்து விளங்கும். சாக்கிர சொப்பன நிலைகளில் அருமையான வித்தியா தத்துவம் எழும் அந்தக்கரணம் நான்கும் தொழிற்படும். சித்தம் - மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றும் அடங்கிய மன மண்டலம்.

2301. காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்
நாட்டி அழுத்திடின் நந்திஅல் லால்இல்லை
ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே.

பொருள் : முற்கூறிய பதினொரு தத்துவங்களும் உறவாகில் உடல் அமையும். இவைகளைச் செயல்படாமல் அழுத்திடில் விளங்குவது சிவமேயாகும். வீணாக அந்தக்கரணங்களின் வழிச் சென்று அலையாமல் நிற்பதே முறை என்று நீ உணர்வாயாக. (பின் சிவத்தின் வழி நிற்றலே உறுதி பயக்கும் என்று எண்ணுதல் நன்மையாகும்.)

12. கலவு செலவு

(கலவு - கலத்தல். செலவு - பிரிதல். கருவிகளோடு கலத்தலும் அவற்றோடு பிரிதலும் இங்குக் கூறப்படும்.)

2302. கேவலம் தன்னில் கலவச் சகலத்தின்
மேவும் செலவு விடவரு நீக்கத்துப்
பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.

பொருள் : கேவல அவத்தையில் விளங்கிய ஆன்மா கருவி கரணங்களோடு கலக்க அது சகல அவத்தையைப் பொருந்தும் கருவி கரணங்களை விட்டபோது அச்சகலம் பிரிதலை அடையும். இவ்விரண்டையும் விட்டு ஆன்மா தனது அகண்ட சொரூபத்தைப் பெறுதல் ஆகிய மூன்றாவதும் படருதல் இல்லாத தீமை நீங்கும். சாக்கிர அதீதத்தில் ஆன்மா பொருந்தி இருத்தலே சுத்தநிலையாம். ஆன்மா கருவி கரணங்களை விட்டு நீங்கி, அதீதத்தில் பொருந்தியிருத்தலே சுத்தநிலையாகும். (கேவல் + அவத்தை = கேவலாவத்தை - வடமொழி தீர்க்க சந்தி.)

2303. வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே.

பொருள் : முக்குற்றங்களில் ஒன்றாகிய சினத்தை முடிந்த அளவு அடக்கியிருங்கள். மனத்தை இயன்ற மட்டும் இறை நினைவில் நிறுத்துங்கள். இரவும் பகலும் சிவ நினைவில் சிவ ஒளி பெற்றுத் துரிய சமாதி பொருந்தில் கல்போன்ற உறுதியான பாச இருள் அகன்று பரமாகாய மண்டல ஒளியில் அமர்வீர். (பரமாகாயம் - பரம + ஆகாயம்.)

13. நின்மல அவத்தை

(நின்மல அவத்தை - மலம் தன் வலி ஒடுங்கிய நிலை. ஆன்மா சிவத்தைச் சார்ந்து, தன்னையும் மறந்து, வியாபகமாக இருக்கும் நிலை நின்மல அவத்தையாம்.)

2304. ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்
ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே.

பொருள் : ஆகாயமாகிய வாயில்லாக் கிணற்றுள்ளே உறையும் பிரணவ உபாசகரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய நிலைகள் ஐந்து உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியினுள்ளே நழுவாமல் அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ தேகத்துடன் மேலும் ஓர் ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வார்.

2305. காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம்
மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்
காலனும் இல்லை கருத்தில்லை தானே.

பொருள் : காற்றும் தீயும் நீரும் பூமியும் எல்லாவற்றிலும் கலந்து விளங்கும் ஆகாயமும் என்ற ஐந்தையும் மகேசனும் உருத்திரனும் திருமாலும் பிரமனும் உருவச் சதாசிவரும் முறையே இயக்கும் அதிபராவர் இவர்களை விட்டு இவர்களுக்கு மேல் உள்ள அருவச் சதாசிவம், விந்து, நாதம், சத்தி, சிவம் ஆகிய ஐந்தையும் பொருந்தும் ஆற்றல் உடையார்க்கு எமனும் இல்லை. உலகம் பற்றிய சங்கற்பமின்றித் திருவடிச் சார்பில் பொருந்தி நிற்பர். பூதங்களை இயக்கும் அதிபர்களின் பெயர் (வரிசைக் கிரமம்) மாறியுள்ளது.

2306. ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது
தான்மா மறையறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால்
ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே.

பொருள் : ஆன்மாவே சிவகுமாரன் ஆயினான் என்று பெயரிய வேதமானது கூறும் உண்மையினை உலகினர் அறியவில்லை. ஆனால் ஆன்மாவே சிவகுமாரன் நின்மல அவத்தையில் ஆன்மா என ஒன்று இல்லாமையால் சிவனுக்கு இவன் மைந்தன் என்று கூறுதலாம். அந்நிலையில் இருபத்தைந்து தத்தவங்களும் இல்லையாம். சிவகுமாரன் என்று கூறுவது தந்தைக்குள்ள தன்மையை மகன் பெறுவதால் ஆம்.

2307. உதயம் அழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின்
கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி
பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து
அதிசுப னாய்அனந் தான்அந்தி யாகும்.

பொருள் : ஒளி உதயமாதல், உலக சிந்தனையற்று அதனுள் அழுந்ததல், இந்திரியங்கள் ஓய்ந்து அடங்குதல் ஆகிய இம்மூன்றும் முறையே நின்மல சாக்கிரம் நின்மல சொப்பனம் நின்மல சுழுத்தியில் ஆகும். இவை பதிந்த  சித்துப் பொருளாகிய ஆன்மா தனக்குப் பற்றுக்கோடாக விளங்கும் துரிய நிலையில் மிகுந்த மங்கல வடிவினனாய் அழியாத பேறு எய்துவான். (நந்தான் - கெடான் எனினுமாம். சேதனன் - ஆன்மா. அனந்த ஆனந்தம் - முடிவிலா ஆனந்தம்.)

2308. எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே.

பொருள் : மாயேயமாகிய எல்லாத் தத்துவங்களும் சீவ ஒளியில் அடங்க, தத்துவங்களில் உள்ளும் புறம்பாகிய சீவஒளி தானாய் அது நன்மையைத் தரும் துரிய நிலை புரிந்தால் சுத்தான்மாவாகும். அப்போது அதுதீமையைத் தரும் முப்பத்தாறு தத்துவங்களுடன் கூடாது தனித்துவிடும். ஆன்மா ஞானமே வடிவாய்ச் சென்று அடைவதற்கு அருமையான சிவகதியைச் சென்றடையும்.

2309. காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்
தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே.

பொருள் : தீயினில் காய்ந்த இரும்பு தீயினை விட்டு அகன்றாலும் பொருந்திய தீயினது தன்மை இரும்பில் இருப்பது போல் பொருந்திய கரணங்கள் நீங்கி நிற்கும் நின்மல துரியத்தில் முன்னர் அவை நடத்திய கிரியா வாசனை ஆன்மாவை விட்டு அகலாது நிற்கும். நின்மல துரியத்திலும் ஆன்மாவினிடம் கிரியா வாசனை எஞ்சி நிற்கும்.

2310. ஆன் மறையாதி யாம்உரு நந்திவந்து
ஏனை அருள்செய் தெரிநனா அவத்தையில்
ஆன வகையை விடும்அடைத் தாய்விட
ஆன மலாதீதம் அப்பரந் தானே.

பொருள் : ஞானத்தைக் கொடுப்பதான மறையாதியான நாதம் வெளிப்பட்டு வந்து ஏனையவற்றைப் புலப்படுத்துகின்ற நனவு நிலையில் இவ் வகையான நாதத்தைக் கடந்து மேற் சொல்லுங்கள். அவ்வாறு நாதத்தைக் கடந்து நாதாந்த நிலையில் பொருந்தியபோது உண்டான மலமற்ற தன்மையே ஆன்மாபரமாகும் என்பதாம். ஆன்மா நாதாந்தம் பொருந்தியபோது பரமாந் தன்மை எய்தும்.

2311. சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச்
சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்து
அத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே.

பொருள் : முற்கூறியவாறு நாதவெளிப்பாடு பெற்றுச் சகலநிலையில் நின்மல துரியாதீதத்தில் பொருந்தினால் அவரை விட்டு, சித்தினது அருட்சத்தி நீங்காது. அந்த நாதத்தையே தியானப் பொருளாகக் கொண்டு, மனம் விரும்பும் உலக போகத்தின் வழிச் செல்லாமல் நாதாந்தம் சென்று சமாதி உற்று, சிவத்தோடு பொருந்துவதற்குத் திருவருட் சத்தியே அவர்கட்கு முதற் காரணமாகும். (ஆங்கணில் - அவ்விடத்தில்)

2312. வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டு
வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.

பொருள் : மாதொரு பாகனாய் இருக்கும் தன்மையால் உலக உயிர்களை ஆணும் பெண்ணுமாக இரு கூறு செய்தான். அர்த்தநாரியாய் ஒன்றாய் இருக்கும்போது அவனே என்னை உலகக் கவர்ச்சியினின்றும் மீட்டு அகண்ட சொரூபமாக்கி எங்கும் செல்லும் ஆற்றலை அளித்தான். மேலும் அவன் என்னைவிட்டு நீங்காத அருட் கேவலத்தில் பொருந்தி என்னைவிட்டு நீங்காத தந்தையாய் உடனிருந்தான்.

2313. கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரை
நிறஞ்சேர் ததிமத்தின் மலத்தே நின்றங்கு
அறங்காண் சுவர்க்க நரகம் புலிசேர்ந்து
கிரங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.

பொருள் : காற்றாடியின் ஓலையும் கொள்ளிக்கட்டையின் வட்டமும் கடலின் அலையும் அழகு நிறைந்த தயிரின் மத்தும் போல உயிர்மலத்தினால் சுழன்று, அவ்விடத்துத் தத்தம் புண்ணிய பாவத்துக்கு ஏற்பப் பொருந்தும் சொர்க்கம் நரகம் சேர்ந்து பூமியைக் கடந்து வருந்தி, உயிர் இறைவன் அருளை அடைந்தால் பிறப்பு இறப்பு நீங்கும். இறைவனது அருளைப் பெற்றால் உயிர்க்கூட்டம் பிறவிக்கு வாரா.

2314. தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும்அப் பாச பேதமும்
ஆன குணமும் பரான்மா உபாதியும்
பானுவின் முன்மதி போல்பட ராவே.

பொருள் : திருவருட் பேற்றால் ஆருயிர் தானே சிவமாந்தன்மை எய்தும். எய்தத் தொன்மையான மலமும் அம்மலத்தைப் போக்க அருளால் சேர்க்கப்பட்ட பாச வேறுபாடுகளுமாகிய ஐம் மலங்களும் நீங்கும். அதனால் ஏற்படும் குணங்களாகிய தீமைகளும் அகலும். உயிர்த்தன்மைத் தடையாகிய பரமான்மா உபாதியும் நீங்கும். இவை முற்றும் உடன் ஒருங்கு அகல்வதற்கு ஒப்பு ஞாயிற்றின்முன் திங்கள் நீங்குவதாகும். நீங்குதல் என்பது அடங்குதல்.

2315. நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்
உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே.

பொருள் : உலகமும் உடலும் ஒப்பெனக் கூறும் உண்மையான உடலகத்தும் நிலமுண்டு; நீருண்டு; நெருப்புண்டு; காற்றுண்டு; வெளியுண்டு; ஞாயிறுண்டு. அவற்றை இயக்கும் தெய்வங்களாகிய அயன், அரி அரன், ஆண்டான், அருளோன் என்பாரும் உளர். ஐம்பூத நிலையை முறையே மூலம், மேல் வயிறு, நெஞ்சம், கழுத்து, உச்சித்துளை என்ப. ஞாயிற்று மண்டிலத்தை அடிப்பகுதியிலும் திங்கள் மண்டிலத்தைப் புருவ நடுவிலும் கூறுப.

2316. ஆனைகள் ஐந்தும் அடங்கி அறிவென்னும்
ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாமே.

பொருள் : ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி, அறிவாகிய ஞானத்திரியைத் தூண்டி, காணும் சீவ ஒளியில் புகுந்து, ஊனாலாகிய உம்பைச் சோதி வடிவாகக் காண்பவர்க்கு சிவலோகம் ஏற வழி மிக எளிதாகும். சீவ ஒளியில் நிலைபெற்று உடலைச் சோதி மயமாகக் காண்பவர் முத்திநிலை எய்துவர்.

2317. ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்
தாடித் தெழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேதாக மங்களும்
நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே.

பொருள் : சந்திர கலையில் இயக்கம் பெறுகின்ற பிராணனும் அது மேல் செல்லுவதால் உண்டாகின்ற சிறுபறை முழக்கமும் ஒலிக்கின்ற வேதாகமங்களின் மூலமான இனிய நாதமும் எனது இடை நாடியில் சகஸ்ர தளத்தில் நான் கண்டு கொண்டேன். (ஆடையகால் - தூக்கிய இடத் திருவடி. சந்திரகலை சந்திரன் மனத்துக்கு அதிபர். தமருகம் - உடுக்கை. அசைக்கின்ற வாயு - சிலம்பொலி. தாடித்து - மிகுத்து (தடித்து).)

2318. முன்னை அறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவது அறிவாம்அஃ தன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே.

பொருள் : முந்திய பிறவிகளில் ஞானத்தினால் சாதகம் செய்த நற்றவம் காரணமாக, இப்போது எடுத்த பிறவியில் அவ்வறிவு பிரகாச முற்று விளங்கில், தனது இயல்பான அகண்ட வடிவத்தை அறியலாகும். இவ்வாறு தன்னை அறிதலே அறிவாகும். அஃது அல்லாமல் பிற அறிவினைப் பெற்றால் பேய் போலச் சொர்க்க நரகங்களில் அலைந்து பிறப்பு எடுக்க வேண்டியதாகும்.

2319. செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே.

பொருள் : திருவருளால் செயலற்றிருப்பதைச் சமாதி அல்லது நிட்டை என்பர். செயலற்றிருக்கச் சிவ இன்பம் ஆகும். செயலற்றிருப்போர் சிவயோகம் தேடார். அவர்கள் உலக நிலையிலா வாழ்வுடனும் கூடார். செயலற்றிருக்கும் திருவினர்க்கே சிவபெருமானின் பேரின்பச் செய்தி உண்டாகும். செயலறல் அகப்புறச் செயலறலாகும். ஆனால் ஆண்டான் அடியின்ப நுகர்வுச் செயலுண்டு. அது நிற்கும் நிட்டை.

2320. தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்
ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்து
ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.

பொருள் : திருவருளால் ஆருயிர்கட்குத தான் அவனாம் சமாதி கைகூடினால் ஐவகையான மலம் அறும் சிற்றுணர்வு என்னும் பசுத்தன்மை அகலும், புலால் புகர்தல், கொலை,களவு, கள், காமம், பொய் கூறல், சிவனை மறத்தல், சிவனடியாரை மறத்தல் என்னும் எண் பெருங்குற்றமும் ஒழிந்து சிவபெருமான் திருவடியை ஒன்று வோர்க்குக் குற்றமற்ற அவர்தம் நல்லுடல் சிவ வுலகத்தில் இருக்கும்.

2321. தொலையா அரனடி தோன்றும்அம் சத்தி
தொலையா இருளொளி தோற்ற அணுவும்
தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே.

பொருள் : ஆருயிர்கட்குச் செவ்வி வாய்த்ததும் திருவருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதம் எய்தம் எய்தவே, என்றும் பொன்றாச் சிவபெருமானின் திருவடி தோன்றும். ஒடுங்குதலாவது கெடுதல் எய்தாத மலமாகிய இருளும், சிற்றுணர்வாகிய உயிர்த்தன்மையும் தோன்றுதலாம் அணுவாகிய ஆரு யிர்க்குக் கேடில்லாத தொன்மையிலேயே உள்ள நன்னெறி நான்மையின் தொழிலும் அறிவும் உண்டு அதனால் கட்டு வீடென்று சொல்லப்படும் இருநிலையும் தோன்றும். அதற்கிடையில் ஆருயிர் அருளில் தோயும் (பெத்தம் - பந்த பாசங்களில் நிற்கும் நிலை. சத்திநிபாதம் - பக்குவம் பெற்ற ஆன்மாக்களிடம் திருவருள் பற்றுதல்)

2322. தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
தான்தரு ஞானம்தன் சத்திக்குச் சாதனாம்
ஊன்றல்இல் லாஉள் ளொளிக்குஒளி யாமே.

பொருள் : திருவருட் ஆருயிர்க்குத் தோற்றுவிக்கப்பட்ட கட்டும் வீடும் தோன்றும். அவற்றை அவ்வுயிர் மருண்டும் தெருண்டும் உணரும். பின் சிவபெருமான் அருள்கின்ற திருவடியுணர்வால் அவ்வுயிர் சத்திக்குச் சாதனன் ஆகும். அஃதாவது, அவ்வுயிர் அருள்வழி ஒழுகுவது ஊன்றி நின்று நிலைப்பதல்லாத உள்ளொளிக்குள் ஒளியாய சிவ ஒளிதோன்றும். (மான்று - மயங்கி. தெருண்டு - தெளிந்து)

2323. அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்தி
அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே.

பொருள் : தாமே அறியும் தன்மையில்லாத முப்பத்தாறு மெய்களும் ஆருயிரால் அறிகின்றன. அவ் வுண்மையினையும் அறிகின்ற என்னையும் அறியாதிருந்தேன். சிவபெருமான் அறியும் தன்மை உனக்குள்ள தென்று அருளால் அறிவித்தான். அதனால் நான் அறிகின்றேன் என்று அறிந்து கொண்டேன். இதன்கண் நம் மூலர் தம் முன்னிலையினை ஓதியருள் கின்றார்.

2324. தான்அவ னாகிய ஞானத் தலைவனை
வானவ ராதியை மாமணிச் சோதியை
ஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியை
ஊனமி லாள்தன்னை ஊனிடைக் கண்டதே.

பொருள் : மேல் ஓதியவாறு விளக்க விளங்கும் அறிவுள்ளது உயிரென உணர்ந்தோன் இரும்பைப் பொன்னாக்கும் இயைபுபோல், தன்னை அவனாக்கும் ஞானத்தலைவன் சிவன் என்பன். சிவ வுலக வாழ்வினர்க்கு முதல்வனும் அவனே. அளவிடப்படாத மாமணியாகிய செம்மணிச் சோதியை மாசிலா மெய்யுணர்வை நல்கும் இனிய வனப்பு மிகும் நல்லருள் ஆற்றலும் அவனே. ஒரு ஞான்றும் முழு முதல் தன்மையில் ஏதும் குறை பாடில்லாத சிவபெருமானை இவ் வுடம்பகத்தே அவன் காட்டக் கண்டு கொண்டேன் என்க.

2325. ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளியது எனலாகும் ஆன்மாவை யன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிய அருளே சிவானந்த மாமே.

பொருள் : சிற்றறிவாகிய ஒளியும் ஆணவமாகிய இருளும் இவற்றை விளக்கும் நடப்பாற்றலாகிய பரையும் அத்திருவருளால் தலையளிக்கத் தக்க ஆருயிரும் அருளால் உணரலாகும். அதன் மேலும் தலையளிப்பையும் அதனைப் புரியும் அருளையும், அவ்வருளால் எய்தும் தெருளையும் கடந்து திருவடியைத் தெளியத் துணை புரியும் வனப் பாற்றலாகிய திருவருளே சிவப் பேரின்பமாகும்.

2326. ஆனந்த மாகும் அரனருட் சத்தியில்
தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்து
ஊன்அந்த மாய்உணர் வாய்உள் உணர்வுறில்
கோன்அந்தம் வாய்க்கும் மகாவா கியமாமே.

பொருள் : சிவத்தினது அருட் சத்தில் ஆன்மா தன் வயமற்று அழுந்தில் ஆனந்தத்தையும் அடையும். உடலைக் கடந்து சமாதி செய்து உணர்வு மயமாய் உள் உணர்வில் கலந்து அகண்டமாய் நிற்கும் அறிவைப் பெற்றால் உடலின் தலைவனான் ஆன்மாவின் சுட்டறிவு முடிவுறும். இது மகாவாக்கியப் பொருளாகும்.

2327. அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்
அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே.

பொருள் : ஆன்ம ஞானமற்றுத் தாமதகுணம் பொருந்தியவர்களுக்கு ஞானோபதேசம் செய்ய வேண்டாம். பூர்வ சென்மம் காரணமாக இயல்பாகவே ஞானம் பெற்றவர்க்கும் அறிவிக்க வேண்டாம். ஆன்ம ஞானத்தைக் கல்வியினால் அறிந்தும் அனுபவம் கூடாமல் அறியாமையில் உள்ளவர்க்கே அவர்கள் அனுபவம் பெற்றுத் தம்முடைய எதார்த்த சொரூபத்தை அறிவார்.

2328. சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச்
சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச்
சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே.

பொருள் : சத்து அசத்து சதசத்து என்னும் பொருட்களில் தான் எனப்படுகிற ஆன்மா மற்றைய பொருட்களோடு கூடி, அறிவுப் பொருளாகவும் அறிவற்ற பொருளாகவும் பேரறிவுப் பொருளாகவும் நிற்கும். சுத்த மாயையும் அசுத்த மாயையும் தொடராத துரிய நிலையில், சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி ஆகிய மூன்று நிலைகளையும் பிரணவத்தையும் கடந்து மலங்களின் நீங்கிய சுத்தமுடையதாகும்.

2329. தானே அறியான் அறிவிலோன் தானல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்தென்று
ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே அறிந்து சிவத்துடன் தங்குமே.

பொருள் : ஆன்மா தானாகவே தனது உண்மைச் சொரூபத்தை அறியமாட்டான். ஆனால் அறிவில்லாதவனும் அல்லன். தன்னுடைய அறிவு அறிவும் அறியாமையும் உடையது என்று சொரூபத்தை அறிந்தபின் அறிவான். ஆனால் இவ்விரு தன்மைகளும் அருட் சத்திப் பதிவால் உண்டாக, ஆன்மா தன்னையும் அறிந்து தலைவனான சிவத்துடன் பொருந்திப் பேரின்பம் அடையும்.

2330. தத்துவ ஞானம் தலைப்பட் டவர்கட்கே
தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவே
தத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே.

பொருள் : முப்பத்தாறு மெய்களின் உண்மை உணரும் உணர்வு தலைப்பட்டவர்கட்கே திருவடியுணர்வாகிய அழியாத் தத்துவ ஞானம் கைகூடும் அத் திருவடியுணர்வு கைவந்தால் சிவனருளால் சிவனாவன். சிவனாகவே திருவடிக்கீழ் அமர்ந்து திருவடியின்பம் துய்ப்பன். தத்துவ ஞான ஆனந்தம் தான் தொடங்குமே - எனப் பிரித்துக்கொள்க.

2331. தன்னை அறிந்து சிவனுடன் தானாக
மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்
பின்அத சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னது ஞானத்து  முத்திரை நண்ணுமே.

பொருள் : திருவருளால் ஒருவன் தன் உண்மை நிலையினை அறிந்து, அச் சிவபெருமான் திருவடிக்கீழ் தங்கி நிலைப்பன். தங்கவே மலம் முதலியவற்றின் பிணிப்பு மறைப்பு துய்ப்பு முதலிய பண்புகள் அறும். அறவே பிறப்பும் அறும். அற்ற பின் கைகூடுவது உண்மைத் திருவடிப் பேறாகும். அப் பேற்றால் நன்னெறிப் பேரொளி நண்ணும். நண்ணவே என்றும் நன்மை பயப்பதாகிய திருவடி. உணர்வுப் பொறி பெற்ற திருவினராவர். (பொறி - முத்திரை).

2332. ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண்டு ஐங்கரு மத்துவித் தாதலால்
மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே.

பொருள் : சிவத்தின் திருமேனி ஞானமாகும். கிரியையில் அவன் நடு அங்கமாகவுள்ள இதயத்தில் உறைபவனாக வுள்ளான். உயிரின் இச்சையில் தனது இச்சையைப் பொருத்தி அந்த மேலான சிவம் உயிர்களிடம் ஒளியில் பொருந்தி, சிருஷ்டி யாதி ஐந்தொழில்களுக்கும் காரணமாக உள்ளதால் பிரணவ யோகிகள் அவன் அறிவுடன் பொருந்தித் தங்களது இச்சை கிரியைகளை விட்டு ஞான முத்திரையைப் பெற்றார்கள்.

2333. உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம்
உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே
உயிர்ச்செயல் அன்றிஅவ் வுள்ளத்து ளானே.

பொருள் : உயிர்க்குரிய அறிவு சத்தியப் பொருளது உயிர்க்குரிய அபிமானம் அதன் இச்சையாகும். உயிரின் செயல் உயிரோடு பிணிக்கப்பட்ட மாயையின் அளவாகும். இவை அனைத்தும் பரவிந்துவில் சூக்கும மாய் உள்ளன. இவைகளை உயிரோடு புணர்த்தியவன் எல்லாவற்றையும் புணர்த்தும் சிவமேயாகும். ஆதலால் உயிர்கள் செயல் அவற்றின் செயலாகாது; உள்ளத்திலுள்ள சிவத்தின் செயலாகும்.

2334. தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர்
கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு
அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே.

பொருள் : பழமையாகச் சிவமாந் தன்மை எய்திய சீவரது இச்சா ஞானக் கிரியைகள் நீங்காத சுசுத்தாசுத்த மாயா காரியங்களினால் நிகழ்வனவாகும். அச் சீவன் பழியில்லாத காரண காரிய தத்துவங்கள் பாழ்பட நிலைபேறான சாந்திய தீதகலையில் விளங்குபனான சிவனாவன். சாந்தியாதீத கலை வியாபகம் மற்ற கலைகள் அதனுள் வியாப்பியம்.

2335. இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லதம் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
சொல்வது சொல்லிடில் தூராகி தூரமென்று
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே.

பொருள் : நிலையில்லாக் காரியப் பொருளான மாயா வடிவங்களிலும் நிலையான காரணமான பரவிந்துவிலும் எல்லாவற்றிலும் கலந்து சிவன் தானாகி, பொருள் தன்மையால் இல்லதும் உள்ளதுமாய அப்பொருள்களின் வேறாயும் உள்ள சிவனை, வாக்குக்கு அப்பாலுக்கு அப்பாலாய் உள்ளவன் என்று விரைவில் சிவஞானத்தால் உணரின் அவன் உயிர்க்குயிராய் விளங்குவான்.

2336. உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி
உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே
உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே.

பொருள் : உயிர்களிடம் விருப்பத்தை உண்டாக்கி மாயையை இடமாகப் பொருந்தும்படி செய்யும் சத்தி, ஞானமான போது உயிரின் இச்சைகளை அழித்து நிற்கும். உயிர்களுக்கு இறைவன்பால் அன்பு உண்டாகச் செய்து உடனாய் இருத்தலால் உயிரானது உலக இச்சைகளை அழித்து மேலான சிவபதம் சேரும்.

2337. சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓர்ஒன்றி லார்ஐம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆருங்கண் டோரார் அவையருள் என்றே.

பொருள் : உயிரின் இச்சையை வாட்டிச் சிவமாம் பேறு பெற்றவர் உயிர்க்குற்றமாகிய ஐம்மலங்களையும் அகற்றினவராவர். அவ்விதம் சிவத்துடன் ஒன்றுதல் இல்லாதவர் உயிர்க் குற்றமாகிய ஐம்மலக் குற்றங்களையும் பொருந்தி இருளுடையவராக இருப்பர். இத்தகையோர் பூமியிலும் சொர்க்கத்திலும் நரகத்திலும் உழல்பவராக இருப்பர். இங்ஙனம் பிறந்து உழல்வது சிவ சக்தியினால் என்பதை பாரும் உணர்வதில்லை. சிவமாந்தன்மை எய்தியவர் சிவசத்தியினால் தன் உண்மை உணர்வர்.

2338. எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறையருள் தானே.

பொருள் : ஆருயிர்கள் தூமாயை தூவாமாயை என்னும் இரு மாயைகளிலும் அருளால் பொருந்திச் செய்பவன செய்யும். அது போல் பெரிய ஞான சத்தியைப் பொருந்தி அறிவு விளங்கப்பெறும் பெரிய நிலவுலக முதலாம் மூலப்பகுதியினைப் பொருந்தித் துய்ப்பன துய்க்கும். இவை யனைத்தும் திருவருளால் நிகழ்வனவாகும். (இரு மாயா சக்தி - சுத்தமாயை, அசுத்த மாயை, ஞாலசக்தி - பிரகிருதி மாயை. தூமாயை - சுத்தமாயை. தூவாமாயை - அசுத்தமாயை.)

2339. திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.

பொருள் : திருவடி யுணர்வால் திருத்த முற்றவர் இன்பமில்லாத துன்பம் நிறைந்த இருளுலகம் புகார். திருவடியுணர்வு - மெய்யுணர்வு, சிவஞானம். அத்தகைய உணர்வுடையார் நிலையிலா இன்பம் எய்தும் துறக்க உலகத்தையும் கான்ற சோறென ஒதுக்கித் தள்ளினர். அவர்கள் ஐம்மலக் கூட்டத்தையும் அறவே விட்டனர். மேலும் சிவமாய்த் திகழ்ந்தனர். அதனால் அவமாய பிறப்பினை விட்டனர். இவர்களே தங்கருமம் செய்யும் தவத் தோராவர். ஏனையோர் சிறப்பில்லாத பிறப்பு வினை செய்யும் அவத்தராவர்.

2340. அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவனரு ளாமே.

பொருள் : நல்லறிவு இல்லாதவர் எது பயனற்றது எது பயன் உள்ளது என்பதை அறியமாட்டார். நல்லறிவு உள்ளவர் பயனற்றதையும் பயனுள்ளதையும் பிரித்து உணர்வர். அவ்வாறு பிரித்து, அறிவினால் தெளிந்தால் சீவர்களுக்கு அமைத்த கேடும் நன்மையும் அவன் அருளால் ஆம் என்று உணர்வர். சீவர்களுக்கு நன்மையும் தீமையும் அமைப்பது அருளேயாகும்.

2341. அருளான சத்தி அனல்வெம்மை போலப்
பொருள்அவ னாகத்தான் போதம் புணரும்
இருள்ஒளி யாய்மீண்டு மும்மல மாகும்
திருவருள் ஆனந்தி செம்பொருள் ஆமே.

பொருள் : அருள் என்ற சிவசத்தி நெருப்பும் அதனை விட்டு நீங்காத வெப்பமும் போல அவன் பொருளாகத்தான் ஞானமாய்ப் பொருந்தும் ஆன்மாவினிடம் சிவசத்தி இருளாகவும் ஒளியாகவும் பிரிந்து பின் மும் மலங்களாக விரியும். சிவானந்தத்தை விளைக்கும் சத்தியே சிவமாகும்.

2342. ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்
பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
பேதித்துப் பேதியா வாறுஅருட் பேதமே.

பொருள் : சூரியன் உதிக்க வளரும் தாமரை முதலிய மலர்கள் பக்குவ மாறுபாட்டுக்கு ஏற்ப அவ்வவற்றின் தன்மை மாறுபட்டு, சூரியனது ஒளிக் கிரணங்களால் அம் மலர்கள் தொழிற்பட மலர்ந்தும் மலர்ச்சி புலப்படாதவாறுபோல, சத்தியில் அருட்பதிவால் உண்டாகும் மாறுபாடும் ஆகும். சூரியனது கிரணத்தால் மலர் விரிவது போலச் சத்தியின் பதிவால் சீவர்கள் மெத்தென ஒளிபெறுவர்.

2343. பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் புணர்போதும் போதமும் நாதமும்
நாத முடன்நாத நாதாதி நாதமும்
அதன் அருளின் அருள்இச்சை யாமே.

பொருள் : காணப்படும் உலகை வேற்றுமையாகவும் ஒற்றுமையாகவும் வேற்றுமையும் ஒற்றுமையாகக் காண்கின்ற தன்மையும் இயற்கை அறிவும் கல்வி கேள்விகளினால் ஆய அறிவும் ஞானமும் நாதமும் நாதத்தைத் தொடர்ந்து அதிநாதம் என்ற நாதாந்த நிலைபெறுதலும் ஆன்மாவுக்கு அருளில் அமைந்த இச்சா சத்தியின் கருணையாகும். (ஆதன் - ஆன்மா,) அதிநாதம், மகாநாதம், நாதாந்தம் என்பன ஒரு பொருளனவே.

2344. மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்
பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே.

பொருள் : பொய்யான யானைப் பதுமையை மனிதன் பொருந்தி ஆட்டும் செயல்போல், பரந்த பூதங்களைக் கொண்டு ஆடச் செய்து படைத்தல் முதலான தொழில்களால் பூமி சொர்க்கம் நரகம் முதலியவைகளுடன் கூடச் செய்து ஞானம் வரப்பண்ணுதல் உயிரை நிலைபெறச் செய்யும் சிவனருட் சத்தியின் செயலாகும்.

2345. ஆறாறு அகன்று தனையறிந் தானவன்
ஈறாகி யாவினும் இயலாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டுத் தன் உண்மையை அறிந்த ஆன்மாவானவன், எல்லா உயிர்களிடமும் செல்ல வல்லவனாயும் எல்லா உயிர்களையும் தன்னிடம் காண்பவனாயும் அவைகளின் வேறாயும் பரவெளியில் புகுந்து வீட்டை அடைவான். முன்னர் இருந்த மயக்கம் தேறித் தெளிவுற்று அருள்சத்தி பதியச் சிவமாவான்.

2346. தீண்டற்குரிய அரிய திருவடி நேயத்தை
மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.

பொருள் : தற்போதத்தினால் அடைவதற்கு அருமையான திருவடிப் பேற்றை முற்பிறவியின் தொடர்பாக இப்பிறவியில் அருள்கூட்ட அறிந்து, அந்நெறியில் சென்று மூலாதாரத்திலிருந்து மேலேறும் வாசியாகிய குதிரையில் ஏறி, ஆதாரங்களைக் கடந்து நிராதாரம் சென்று சிவனுடன் சார்தல் அமையும்.

2347. சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயந் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.

பொருள் : சிவத்தைச் சார்ந்தவர் சாரணர்களும் சித்தர்களும் சமாதி பொருந்தினவர்களும் ஆவார்கள். உண்மைச் சிவஞானத்தை உணர்ந்தவரும் சார்ந்தவர் ஆவார். சிவத்தின்பால் அன்பு கொண்டு சிவானந்தத்தை அனுபவிப்பவரும் சார்ந்தவராம். நாதமாகிய அருளில் விளங்குபவரும் சார்ந்தவராக இருப்பர். (சாரணர் - எங்கும் செல்லும் ஆற்றலுடன் உயிருக்கு உதவுபவர்.)

2348. தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்
தான் என்று அவன்என்று இரண்டற்ற தன்மையைத்
தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர்
தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.

பொருள் : ஆன்மாவாகிய தான்என்றும் சிவமாகிய அவன் என்றும் ஆக உண்மையைப் பொருள் இரண்டு என்று கூறுவர் சகலர். தான்என்று அவன் என்று இல்லாமல் ஒன்றான தன்மையை, அருட் கேவலத்தில் இருப்போர். தன்னைச் சிவத்துக்கு வேறான பொருள் என்று எண்ணமாட்டார். அவ்வாறு  ஆன்மா தற்போதம் கெட்டுச் சிவமே யாகத் தத்துவ சுத்தமாகும்.

2349. தன்னினில் தன்னை அறியம் தலைமகன்
தன்னினில் தன் ஐ அறியத் தலைப்படும்
தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்
தன்னினில் தன்ஐயும் சார்தற்கு அரியவே.

பொருள் : தன்னிடத்தே தன் உண்மையை அறியும் தத்துவசுத்தி பெற்ற ஆன்மா தன் உண்மையில் தனது தலைவனாகிய சிவத்தை அறிய அது வளர்ந்து தோன்றும். அவ்வாறு  தன்னிடத்தே  தன் உண்மையை அறிந்து பொருந்தானாகில் தன்னிடத்தே தனது தலைவனையும் அடைவதற்கு அருமையாகும். தலைப்படுதல் - வளர்தல்.

2350. அறியகி லேன்என்று அரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்ற நேர்பட்ட பின்னை
இருசுட ராகி இயற்றவல் லானும்
ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே.

பொருள் : மேல் ஓதியவாறு திருவருளால் யான் அறியகில்லேன் என்று நீயும் கவன்று அரற்றுதல் செய்ய வேண்டா. நன்னெறி நான்மை வழியே சென்றால் திருவருளால் சிவன் உனக்கும் நேர்படுவன். அவன் பின்பு அடியேனுக்கும் ஆருயிர் பேருயிர் என்ற இருசுடராய் இயைந்து இயக்கும் உண்மையினையும் புலப்படுத்துவன். அத்தகைய வல்லானாகிய சிவன் அடியேனை அவன் திருவடிக்கீழ் அடக்கி அடியேன் உள்ளத்து உள்ளாவான். (ஆருயிர் - ஆன்மா. பேருயிர் பரமான்மா. சிவன். இருசுடர் - சிவன், சீவன். ஒரு சுடர் - சிவன்.)

2351. மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உள்நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே
கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின் றானே.

பொருள் : மண் என்ற ஒரு பொருள் பானை சட்டி முதலிய பல பாண்டங்களாக ஆகிறது. அது போல இறைவன் ஒருவனே சகல சீவ வர்க்கங்களிலும் ஆகியுள்ளான். கண் ஒரு பொருளாக இருந்து உலகிடைப் பல பொருள்களைக் கண்டும் அதனை அவை காணா. அதுபோல உயிர்களின் தலைவனான இறைவனும் தான் எல்லாவற்றையும் அறிந்தும் தான் அவற்றால் அறியப்படாதவனாய் உள்ளான்.

2352. ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர்
தேம்புகின் றார்சிவன் சிந்தைசெய் யாதவர்
கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே.

பொருள் : சிவபெருமான் உயிர்க்கு உயிராய், உலகுக்கும் உயிராய் உள்நின்று, உலகு ஏழினையும் ஓம்பியருள்கின்றனன். அச்சிவ பெருமான் திருவடிக்கண் ஒருங்கிய மனத்தார் கூம்புகின்றா ராவர். அத்தகையாரை மெய்யடியார் எட்டுவான் குணத்து எம்மான் எனக் கூறுவர். சிவபெருமானின் திருவடிகளை நினையாதவர் தேம்புகின்றார் ஆவர். உள்ளத் தளர்ச்சி யில்லாதவர் இடையறாது நினைந்து சிவன் திருவடியைக் கொள்ளத் தளரார்.

2353. குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார்
குறிஅறி யார்கடம் கூடல் பெரிது
குறிஅறி யாவகை கூடுமின் கூடி
அறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே.

பொருள் : உயிர்க்கும் உயிராய் இருக்கும் சிவத்தைத் தன் உண்மை என்ற பரவிந்து மண்டலம் வெளிப்படாதபோது அறிய மாட்டார். இவ்விதம் தன் உண்மை அறியாதவர் உடம்போடு கூடிப் பல பிறப்பு எடுப்பர். சிவம் வேறு தாம் வேறு என்று எண்ணாமல் சிவத்தடன் அத்துவிதமாய் (பிரிப்பின்றி) நில்லுங்கள். அங்ஙனம் கூடிச் சுட்டியறிதல் இன்றி அதுவேயாக இருந்து ஹம்சம் ஆகலாம். ஹம்சம் - நான் அவன். சிவனோடு அத்துவித பாவனையில் இருந்தாம் ஹம்சம் ஆகலாம்.

2354. ஊனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம்
வானோர் தலைவி மயக்கத்து உறநிற்கத்
தானோ பெரிதுஅறி வோம்என்னும் மானுடர்
தானே பிறப்போடு இறப்பறி யாரே.

பொருள் : சிவானந்தத்தைப் பெறுவது உடலா உயிரா இவற்றுள் எது? ஆகாய ரூபிணியாகிய சத்தியோடு பொருந்தி இவை ஒன்றும் அறியாது இருப்ப, தாம் மிகவும் அறிகின்றோம் என்று கூறும் மக்கள் மேலும் மேலும் வரும் பிறப்பு இறப்பில் பொருந்தி அவை நீக்க அறியமாட்டார்.

14. அறிவுதயம் (அஃதாவது ஆன்மாவுக்குச் சுட்டறிவு இன்றி எல்லாவற்றையும் அறியும் அறிவு உள்ளது என்று அறிவது.)

2355. தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.

பொருள் : ஆன்மாவாகிய தன்னை அறிவுரு என்று அறிந்தால் கருவி கரணங்களோடு பொருந்தி மயங்க வேண்டிய கேடு வராது, தான் அறிவுரு என்பதை அறியாமல் ஆன்மா தனது அஞ்ஞானத்தால் கருவி கரணங்களோடு பொருந்திய பிறவியில் பட்டு உழல்கிறது. கருவி கரணமின்றித் தானே எல்லாவற்றையும் அறியவல்ல ஒளிவடிவு என்ற அறிவை ஞான சாதனத்தால் அறிந்தபின் தன்னை உலகோர் வணங்கும்படியான சிவ சொரூபமாகத்தான் இருந்தான்.

2356. அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று
சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்
பொங்குஆர் குழலியம் போற்றிஎன் றானே.

பொருள் : முன் மந்திரத்துக் கூறியவாறு அறிவுபெற்ற ஆன்மா அவ்விடத்து வலிமையும் பெருமையும் மிக்க பிரமன் அரி முதலான தேவர்கள் எல்லாம் வணங்க அரியாசனத்தில் சிவ பெருமானே வீற்றிருக்கிறான் என்று மதித்து சங்கினாலாகிய வளையலும் கால் சிலம்பும் ஓசையை எழுப்ப மிகுந்த கூந்தலையுடைய பராசத்தியும் போற்றி என்று கூறினாள்.

2357. அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
அறிவ வடிவென்று அருளால் உணர்ந்தே
அறிவு வடிவென்று அறிந்திருந் தேனே.

பொருள் : எவற்றையும் கருவி யில்லாது அறியும் ஆற்றல் உண்டு என்பதை அறியாதிருந்த என்னை, என்னுடைய இயல்பான சொரூபம் அறிவு தவிர வேறில்லை என்ற அவன் கருணையால் உணர்த்தினான். நான் அறிவு சொரூபன் என்று அவனது சத்தியால் உணர்த்தப்பட்டு உணர்ந்தபோது நான் அறிவு வடிவென்று அறிந்து கருவி கரணங்களை விட்டு அறிவாகவே இருந்தேன்.

2358. அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்ற என்றிட்டு
அறைகின் றனமறை ஈறுகள் தாமே.

பொருள் : ஆகாய மண்டலத்தில் மிகச் சூக்குமமாக உள்ளமையின் அறிவு எவ்விதமான தூல மாறுதலாலும் பாதிக்கப்படுவது இல்லை. அதனால் அதற்கு விருத்தியும் இல்லை.

ஆன்மாவாகிய அறிவுப் பொருளுக்குப் பேரறிவான சிவத்தையன்றி வேறு ஆதாரம் இல்லை. ஆதலால் அறிவுருவான ஆன்மா பேரறிவான சிவத்தை அறிய முற்படுகிறது என்று வேத முடிவான உபநிடதங்கள் கூறுகின்றன. ஆன்மா நித்தியப் பொருளாதலின் அதற்கு அழிவும் ஆக்கமும் இல்லை. பரனும் பரையும் அதற்கு ஆதாரம்.

2359. ஆயு மலரின் அணிமலர் தன்மேலே
பாய இதழ்கள் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகியே
போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே.

பொருள் : ஆராயப் பெற்ற ஆதார கமலங்களில் சிறந்த அனாகத சக்கரத்தின் மேல், பரவிய விசுத்திச் சக்கரத்தில் பதினாறு இதழ்கள் கண்டத்தில் உள்ளன. தூய்மையான ஆன்ம அறிவு சிவானந்தம் பொருந்தி, விசுத்திச் சக்கரத்தைக் கடந்து பேரறிவாய் அதனோடு கலந்து விளங்கும் ஆன்மா சிவத்தை அறியும் முறை கூறியவாறு.

2360. மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின் றாமை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே.

பொருள் : சிவ சிந்தனையில் இடைவிடாது நிற்பவரிடத்து வந்து சுத்தமாயா காரியமான நாத தத்துவத்தில் வெளிப்படுபவனை நினைந்தேன். அம்முதல்வனும் பொன்ஒளியில் திகழ்ந்து விளங்கினான். ஒப்பற்ற புகழினையுடைய பொன்னார் மேனியனைப் பிணைந்து நின்றேன். அவனும், நீ பெரியவன் என்று அருள் கூர்ந்தான்.

2361. அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின்
அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம்
அறிவுஅறி வாக அணிமாதி சித்தி
அறிவுஅறி வாக அறிந்தனன் நந்தியே.

பொருள் : ஆன்ம அறிவு பேரறிவின் வழியாயது என்று உணர்ந்து அதனிடம் அன்பு செலுத்துங்கள். அப்போது அகண்டாகாரம் வேரறிவுப் பொருளாய சிவமும் உங்கள் அறிவில் பொருந்துவான். உங்கள் அறிவு அவன் அறிவாக அமையின் அணிமாதி சித்திகள் தாமே பொருந்தும். அப்போது சிவன் உங்களது அறிவைத் தன்னறிவாகத் திருவுள்ளத்தில் கொண்டனன் என்பது விளங்கும்.

2362. அறிவுஅறி வென்றுஅங்கு அரற்றும் உலகம்
அறிவுஅறி யாமை யாரும் அறியார்
அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால்
அறிவஅறி யாமை அழகிய வாறே.

பொருள் : உலகோர் திருவருள் நாட்டமின்றி அறிவு அறிவென்று அரற்றுவர். எது அறிவு எது அறியாமை என மெய்ம்மையைப் பகுத்து உணரார். திருவருளால் உணரும் உயிர் அறிவு அறியாமை என்னும் இரண்டினையும் அருளால் கடந்து முற்றறிவு பெற்றுச் சிவமாம் பெருவாழ்வு எய்தும். அங்ஙனம் எய்தினால் அவ் அறிவு அறியாமை கடந்து சிவமாம் பெருவாழ்வு எய்திய அமைதற்கரிய திருவாம் பேரழகு புலனாம் என்க.

2363. அறிவுஅறி யாமையை நீவி யவனே
பொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின்
செறிவாகி நின்றவன் சிவனும் ஆமே.

பொருள் : அறிவையும் அறியாமையையும் நீங்கியவனே ஞானேந்திரியங்களைக் கடந்து அகண்டத்தில் ஒன்றானேபோது அவ்வறிவாய் அவ் அறிவினுள் அடங்கியவனாய் சிவஅறிவில் தான் நீக்கமற நிறைந்துள்ளவன் சிவனேயாவன். அறிவு அறியாமை நீங்கியவனே பேரறிவில் நீக்கமற நிறைந்து நிற்பன்.

2364. அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது
அறிவுடை யார்நெஞ்சு அருந்தவம் ஆவது
அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே.

பொருள் : திருவருளால் நல்லறிவுடையார் நெஞ்சம் அருள் வெளியாகும். அந்த நெஞ்சமே சிவ புண்ணிய அருந்தவ நிலைக் களமாகும். அவ் அறிவுடையார் நெஞ்சத்து மும்மையுலகத்துக்கும் அம்மையாகிய திருவருள் எனப்படும் ஆதி எழுந்தருள்வாள். பகவனாகிய சிவபெருமானும் அந்நல்லார் நெஞ்சத்தின்கண் தங்கியருள் கின்றனன். மும்மை உலகம் - அவன், அவள், அது என்னும் உலகம்.

2365. மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்
சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்
பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே.

பொருள் : திருமால், பிரமன், உருத்திரன் என மூன்று உருவாய் உடல் உற்பத்திக்குக் காரணமான சிவபெருமான், தூரத்தில் உள்ளவனாகவும் சமீபத்தில் உள்ளவனாகவும் சுவையுள்ள கரும்பானவனாகவும் அமுதமாகவும் ஆகி நின்று இனத்துக் கொண்டிருக்கின்றான். மும்மூர்த்திகளாக உள்ள இறைவன் ஞானிகளுக்குக் கரும்பாய் அமுதமாய் இருந்து இன்பம் நல்குகின்றான்.

2366. என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது
என்னையிட்டு என்னை உசாவுகின் றானே.

பொருள் : நான் பாச நிலையில் பந்தித்து இருந்தபோது என்னுடைய உண்மைச் சொரூபம் ஒளி (அறிவு) என்பதை அறியாதிருந்தேன். நான் ஒளி (அறிவு) வடிவினன் என்று அறிந்தபின் என்னை முன் பந்தித்திருந்த தத்தவங்களை (இருளை) நான் அறியவில்லை. அவ்விதம் நான் எனது உண்மைச் சொரூபத்தை அறிந்திருத்தலும் என்னுடைய முதல்வன் என்னுடன் இருந்தே எனது நிலையைக் கேட்டுக் கொண்டு இருக்கிறான்.

2367. மாய விளக்கது நின்று மறைந்திடும்
தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனன்றிடும்
சேய விளக்கினைத் தேடுகின் றேனை.

பொருள் : பெத்த நிலையில் உள்ளோர்க்கு ஆத்ம சொரூபம் தேகத்தோடு பொருந்தி யிருந்தும் விளங்காதவாறு மறைந்திருக்கும். ஞான நிலையில் உள்ளோர்க்கு ஆத்ம சொரூபம் விளங்கி ஒளிபெற்று நிற்கும். அது தேகத்தில் இருந்து சூட்டினை நல்கிக் கொண்டிருக்கும். அத்தகைய செம்மையான சோதி யாகிய விளக்கினைத் தேடுகின்றேன்.

2368. தேடுகின் றேன்திசை எட்டோடு இரண்டையும்
நாடுகின் றேன்நல மேஉடை யானடி
பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்
கூடுகின் றேன்குறை யாமனத் தாலே.

பொருள் : பத்துத் திசையின்கண்ணும் பரம்பொருளைப் பரிந்து தேடுகின்றேன். பொலம் ஒரு சிறிதும் இல்லா நலமே நிறைந்த சிவபெருமானைக் குறித்து அவன் திருவடியை நாடுகின்றேன். சிவபெருமானே நமக்கு வழித்துணையும விழத்துணையும் என்று பழுதில் செந்தமிழால் பாடிப் பரவுகின்றேன். அச் சிவபெருமானே பரம்பொருள்; அவனே ஆருயிர்த் துணை என்னும் உண்மை கண்டு அவன் திருவடியிற் கூடுகின்றேன். அதுவே நிறைமன வழிபடாகும். அத் திருக்குறிப்புக் குறையா மனம் என்பதனால் பெறப்படும். (திசை - புலம். பொலம் - தீமை.)

2369. முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னைப் பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தன்
மன்னிச் சிவமாக வாரா பிறப்பே.

பொருள் : முன்னை என்று ஓதப்படும் அனாதியின்கண் முதல் விளையாட்டாகிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் நுண்ணுடம்புக் பிறப்பில் பிறந்தோர், பின்பு ஐம்மலமும் அகலும் நிலையில் செவ்வி வாய்ந்தோர் ஆவர். அவர் திருவருளால் தம்மைத் தெரிவர். தெரிந்து தமக்குரிய பண்டைத் தலைவனாம் சிவபெருமானின் தாளிணையைச் சார்ந்த ஆளினராவர். இவர்கள் என்றும் பொன்றாது நின்று சிவமாக மன்னி வாழ்வர். அதனால் மீண்டும் பிறப்பினுக்கு வாராவர். (விளையாட்டத்து - பிறப்பினுள். மலம் வந்தவர் - மலபரி பாகம் வந்தவர்.)

15. ஆறு அந்தம்

(ஆறு அந்தம் - ஆறு முடிவுகள். அவை கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம், போதாந்தம், வேதாந்தம், சித்தாந்தம் என்பன.)

2370. வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
ஓதத்தகும்எட்டு யோகாந்த அந்தமும்
ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே.

பொருள் : வேதத்தின் அந்தமாகிய உபநிடதங்களின் கூற்றும், மேன்மையான சித்தாந்தமாகிய சிவாகம முடிவும், நாத தத்துவத்தின் முடிவும், சத்விசாரணையால் அமைந்த முடிவும், சொல்லத் தக்க அட்டாங்க யோக நெறியின் முடிவும், முதலாவதான பஞ்ச கலைகளின் முடிவும் ஆகிய இவையே ஆறு முடிவுகளாகும். நெறிகள் வேறு ஆயினும் அடையும் பொருள் ஒன்றேயாம்.

2371. அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்
அந்தம்ஓர் ஆறும அறிவார் அமலத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு
அந்தமோடு ஆதி அறியஒண் ணாதே.

பொருள் : மேல் ஓதிய ஆறு அங்கங்களும் திருவருளால் அறிபவர் எல்லையில்லாத தூயராவர். அதுபோல் ஆறு அந்தமும் அறிவார் மல மற்றவர் ஆவர். இவற்றின் உண்மைகளைச்  சிவகுரு வாயிலாக  அறியாதவர் இறப்புப் பிறப்பினையும் உலக ஒடுக்கத் தோற்றங்களையும் ஒரு சிறிதும் உணராதவர் ஆவார்.

2372. தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்
ஆனாத் துரியத்து அணுவன் தனைக்கண்டு
தேனார் பராபரம் சேர்சிவ யோகமாய்
ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே.

பொருள் : நான் பிரமம் என்னும் வேதாந்தமும் சிவன் நான் என்னும் சித்தாந்தமும், நீங்காத துரிய நிலையில் ஆன்மா தனது எதார்த்த சொரூபமான ஒளியைக் கண்டு இனிய மேலான பரம அபரமாக விளங்கும் சிவத்தோடு கூடுவதாய், ஆன்மா தன்னுடைய மலங்களை அகற்றி அட்டமாசித்தி அடைதலே பயனாகும். ஆன்மா துரியத்தில் பராபரத்தோடு பொருந்தி மல நீக்கம் பெற்றிருக்கும் என்பது வேதாந்த சித்தாந்த முடிவாம்.

2373. நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம்
சத்தம் முதல்ஐந்தும் தத்துவத் தால்நீங்கிச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து
அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே.

பொருள் : உயிர் இடைவிடாது சிவனோடு பொருந்தி நின்று நீண்டு செல்லும் மனமும் சத்தம், பரிசம், ரூபம், இரசம், கந்தம் ஆகிய புலன்களின் உண்மையை அறிந்துவிட்டு, சுத்தமாயை அசுத்தமாயைகள் பற்றாவகை எண்ணி, தலைவனாகிய முழுமுதற் பொருளை அடைதல் சித்தாந்த நெறியாகும்.

2374. மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்குஅப்பால்
மேவும் பரவிந்து நாதம் விடாஆறாறு
ஓவும் பொழுதுஅணு ஒன்றுஉள தாயே.

பொருள் : பொருந்திய அயன், அரி, அரன், ஆண்டான், அருளோன் அதற்கப்பால் பொருந்திய பரவிந்து, பரநாதமும் விட்டு, முப்பத்தாறு மெய்களும், கருத்தின்கண் நீங்கியபொழுது நிலைத்த ஆருயிரின் உண்மை நன்கு புலனாகும். விடா - விட்டு . ஓவும் - நீங்கும். நாதாந்தம் சென்றவர்க்குப் பிறவி இல்லை.

2375. உள்ள உயிர்ஆறாற தாகும் உபாதியைத் தெள்ளி
அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
உள்ள இருள்நீங்க ஓர்உணர் வாகுமேல்
எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே.

பொருள் : மெய்களின் ஆய்வு முறைமையினால் உண்மை கண்டுள்ள ஆருயிர் முப்பத்தாறு மெய்களின் பிணிப்பினின்றும் விடுபடும். பிணிப்பு உபாதி. விடுபட்ட தெளிவினால் நாதாந்தத்தைக் கடக்கும். அக இருள் அகல அருள் உணர்வு தோன்றும். தோன்றவே குறைபாடில்லாத நாத முடிவில் எய்தும் நல்லறிவு கைவந்து பொருந்தும். (மெய்கள் - தத்துவங்கள். செற்று - கடந்து.)

2376. தேடும் இயம நியமாதி சென்றகன்று
ஊடும் சமாதியில் உற்றுப் படர்சிவன்
பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.

பொருள் : ஞானியரால் உணர்த்தப்பெற்ற இயமம் நியமம் முதலிய எட்டு உறுப்புகளையும் கொண்ட அட்டாங்க யோக நெறி சென்று நீங்கி, சமாதியில் பொருந்தி, அங்கு விரிந்து விளங்கும் சிவத்துடன் பொருந்த, சீவன் தத்துவங்களை விட்டுப் பரமாகப் பற்றுக்களை நீங்கினபோது உபசாந்த நிலை பொருந்தும் என்பதே யோகத்தின் முடிவாகும். (பாடுற - அருகிற் சேர.)

2377. கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையில் ஆன நிவர்த்தாதி மேதாதிக்கு
உள்ளன வாம்விந்து உள்ளே ஒடுங்கலும்
தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.

பொருள் : குறிக்கொள்ளத் தக்கதான கலாந்தத்தைச் சொல்லுமிடத்து நீக்கல் முதலிய ஐந்து கலைகளும், கொழுப்பு முதலிய ஏழுவகைப் பொருட்களும் மாயையின்கண் ஒடுங்கும். அங்ஙனம் ஒடுங்கும் முறைமையை ஆய்தலும், ஆய்ந்து தெளிதலும் கலாந்தமாகும். கலைகள் ஐந்து நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பால் ஆக்கல் என்ப. பொருள்கள் ஏழு, சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்ப. (சப்த தாதுக்கள்.)

2378. தெளியும இவையன்றித் தேர்ஐங் கலைவேறு
ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு
அளியவ னாகிய மந்திரம் தந்திரம்
தெளிஉப தேசஞா னத்தொடுஐந் தாமே.

பொருள் : மேல் ஓதியவாறு கலாந்தம் தெளிவது அல்லாமல் வேறும் ஒருவகையால் குறிப்பதும் உண்டு. அந்தம் நீக்கல் முதலிய கலைகள் ஐந்தினையும் சிறப்பாகிய திருவருள் ஒளியுள் அமைத்தல் வேண்டும். அங்ஙனம் அமைத்து ஓரவல்லார கட்குச் சிவபெருமான் அளவில் பேரருள் புரிகின்றனன். அவை: மந்திரம், தந்திரம், தெளிவு, உபதேசம், ஞானம் என ஐந்தாகும். இந்த ஐந்தினையும் அருளே, மறைமுறை, ஆசான் சொல், மெய்ம்மை, தரும உணர்வு இவ் ஐங்கலை அந்தம் என்ப.

2379. ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்
ஆகும் அனாதி உடல்அல்லா மந்திரம்
ஆகும் சிவபோ தகம்உப தேசமே.

பொருள் : கலை என்னும் திருவருள் ஆற்றல் தொன்மையதாகும். இக்கலையே முறையும் மறையும் எனப்படும் ஆகம வேதங்களாகும். அம்முறை மறைவழியின் நிறையின் நீங்காது ஒழுகுதல் தந்திரமாகும். மனம் முதலிய கருவிகள் நீங்கி உணர்விற் கணிக்கும் ஒண்மையவாம் சிவசிவ மந்திரமாகும். சிவபெருமானைத் தெளிவிக்கும் சிவ குருவின் திருவார்த்தை உபதேசமாகும். (உபதேசம் - குருமொழி. மனாதி உடல் அல்லா மந்திரம் - காரண பஞ்சாட்சரம்)

2380. தேசார் சிவமாகும் தன்ஞானத் தின்கலை
ஆசார நேய மறையும் கலாந்தத்துப்
பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானே.

பொருள் : ஞானக்கலை என்பது அளவில் பேரொளிப் பகவனாகிய சிவபெருமானாகும். ஆன்றோரைப் பின்தொடர்ந்து ஒழுகுவது ஆசாரம் என்ப. அவ் ஒழுக்கத்தில் தலை நிற்கும் பேரன்பு நேயம் என்ப. இவ்விரண்டும் சொல்லப்படும் கலாந்தமாகும். இவ்வழி ஒழுகி, வாய் வாளாமையாகிய உரை உணர்வற்ற பெருநிலை யுற்றோன் பெருந்தகையாவன். மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் சிவபெருமான் ஆவன்.

2381. தான்அவ னாகும் சமாதி தலைப்படில்
ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது
ஞான மென்ஞேய ஞாதுரு வாகுமே.

பொருள் : ஆருயிர் பேருயிர்க்கண் ஒடுங்குதலே தான் அவனாகும் சமாதி நிலை என்ப. இந்நிலையினைத் தலைப்படுதலே கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம், போதாந்தம், சித்தாந்தம் என்ப. சிறந்த சித்தாந்தம் எனப்படுவது காட்சி, காணப்படும் பொருள் காண்போன் என்னும் முத்திற முடிவும் எத்திறமும் நீங்காது கொள்ளும் நிலைமைத்தாகும். ஞானம் - காட்சி. ஞேயம் காணப்படும் பொருள். ஞாதுரு - காண்போன்.

2382. ஆறந்த மும்சென்று அடங்கும்அந் நேயத்தே
ஆறந்த ஞேயம் அடங்கிடும் ஞாதுரு
கூறிய ஞானக் குறியுடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த உண்மையே.

பொருள் : மேலே கூறப்பெற்ற ஆறு அந்தங்களும் அந்நேயப் பொருளில் சென்று அடங்கும். ஆறு அந்தங்களால் அடையப் பெறும் நேயப் பொருளாகிய சிவத்தில் ஞாதுருவாகிய சீவன் அடங்கும். குருகாட்டிய நெறியில் நின்று சிவமல்லாத  ஏனைய தத்துவங்களை விட்டு நிற்க, தெளிந்த பிரணவ யோகத்தால் உண்மையான சிவானந்தம் உண்டாகும்.

2383. உண்மைக் கலைஆறுஓர் ஐந்தான் அடங்கிடும்
உண்மைக் கலாந்தம் இரண்டுஐந்தோடு ஏழ்அந்தம்
உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்து
உண்மைக் கலைசொல்ல ஓர்அந்தம் ஆமே.

பொருள் : மெய்ம்மைக்கலை பதினொன்று ஆகும். கலாந்தம் பதினேழாகும். உண்மையான கலையின்கண் முற்றுற நிற்பது நாதாந்தமாகும். இத்திருவருட் கலைகளைச் சிவகுரு அருளிச் செய்ய ஒப்பில் ஒரு முடிபாகும்.

2384. ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி யருளிய கோனைச் கருதுமே.

பொருள் : ஆன்மாக்களை இயக்கும் சத்தியாகிய குண்டலினியை நாதத்தின் தலைவனான சிவன் ஏற்றுக் கொண்டபின், அநேக தேவர்களை நடத்தும் எங்கள் பெருமையுடைய சிவன் திருவடிகளை முடிமேல் சூட்டி, அழிதல் இல்லாத வேதாந்த சித்தாந்தங்களின் சிறப்பை நாதத்தால் உணர்த்தி யருளிய சிவகுரு நாதனைக் கருதியிருங்கள்.

2385. கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப
அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில்
வருசமயப் புற மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.

பொருள் : வழிபடுகின்றவர்களின் வழிபாட்டுக்கு ஏற்ப சிவபெருமான் அருளிச் செய்த ஆகமங்களில் உணர்த்தப் பெறுகின்ற உண்மைச் சமயத்துக்குப் புறம்பாயுள்ள மாயை மகாமாயை ஆகியவற்றைக் கடந்ததே வேதாந்த  சித்தாந்தத்தால் உணர்த்தப் பெறும் உண்மையாகும். ஆன்மாக்களின் பக்குவத்துக்கு ஏற்பச் சமய முடிவுகள் அமையும்.

2386. வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை
போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய
நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே.

பொருள் : வேதாந்தம் சித்தாந்தம் ஆகிய இருநெறிகளும் வேற்றுமையில்லாத ஒரு தன்மையான குறிப்பினை யுடையனவாம். ஆன்ம அறிவின் முடிவே ஞானமாகும். யோகாந்தம் பொதுவாக ஞேயப்பொருளைக் காட்டும். நாதாந்த ஆனந்தமாய் இன்பத்தோற்றம் அளிக்கும் ஒலி உண்டாகும். பழமையான முத்திரையாவது பிரணவ சமாதியில் பொருந்தி யிருக்கத் தருவதாகும்.

2387. வேதாந்தம் தன்னில் உபாதிமே லேழ்விட
நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம்
மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன்
போதாந்த தற்பதம் போமசி என்பவே.

பொருள் : வேதாந்த நெறியில் சீவனுக்குரிய காரிய உபாதிகள் ஏழின் பிணிப்பு நீங்கவே, நாதாந்தத்தில் பசுத்தன்மை கெடுகின்ற (தொம்பதம் அமையும். மேலுள்ள காரண உபாதிகளாகிய ஏழையும் உடைய உண்மையான பரன் அறிவின் முடிவாகிய தற்பதம் ஆகும். பின்னர் இவ்விரண்டாகிய தன்மை நீங்கி ஒன்றாம் தன்மையான அசி பதம் பொருந்தும் தொம்பதம் - சீவன். தத்பதம் - சிவன். அசிபதம் - ஒன்றாக ஆகின்ற பதம். போமசி - போம் + அசி.)

2388. அண்டங்கள் ஏழும் கடந்துஅகன்று அப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளாம் உளஒளி
பண்டுறு நின்ற பராசத்தி என்னவே
கொண்டவன் அன்றிநின் றான்தங்கள் கோவே.

பொருள் : ஏழு அண்டங்களையும் கடந்து நீங்கி, அப்பால் விளங்கும் பேரொளிக்குள் உள்ள ஒளியினைப் பழமையாகவே பொருந்தி நின்ற பராசத்தி என்றே கொண்டவன் தனது சொரூப நிலையில் தனித்து நின்ற எங்கள் தலைவனாவான்.

2389. கோஉணர்த் தும்சத்தி யாலே குறிவைத்துத்
தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே
பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப
ஓஅனைத் துண்டுஒழி யாத ஒருவனே.

பொருள் : சிவத்தை உணர்த்தும் நாதசத்தியை இலட்சியமாகக் கொண்டு, தெய்வத்தால் அனுக்கிரகிக்கப்பட்ட கருமத்தையே தம் செயலாகச் செய்து, தோத்திரப் பாடல்களைக் கொண்டு அருச்சனை புரிய பிரணவத்தின் உறுப்புக்களாகிய அகார உகார மகார விந்து நாதங்களைக் கடந்து இவைகளை அடக்கிய சிவம் பொருந்தும்.

2390. ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனு மேயள் உணர்த்திநின் றூட்டி
அருவனு மாகிய ஆதரத் தானே.

பொருள் : ஒருவனாக இருந்து உலகை நடத்தும் சிவனை அறிய மாட்டாதவர், உயிரைப்பற்றிய உண்மையை அறிய மாட்டார். அவரவர் அனுபவிக்கும் போக போக்கியங்களுக்கு அவரவர் முன்னர்ச் செய்த நல்வினை தீவினையே காரணம் என்பதை உணரமாட்டார். அசுத்த மாயை சுத்த மாயையாகிய இவற்றால் கட்டுண்டிருப்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. ஏகனாய் விளங்கும் சிவபெரு மானே இவை எல்லாவற்றையும் ஆன்மாவின் உள்ளே நின்று உணர்த்தி அவ்வினை கழியுமாறு அருத்தி அருவப் பொருளாய் நின்று எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உள்ளான்.

2391. அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து
வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு
உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரனுறு தோயாச் சிவாநந்தி யாமே.

பொருள் : சிவன் அன்பர்களை இடமாகக் கொண்டு எழுந்தருளி, அவர்கள் பக்குவம் அடைய பல சத்திகளை அவர்களது ஆன்மாவினிடம் பொருத்தி வலிமையுள்ள சிவசங்கற்பத்துக்கு ஏற்ப அவை தொழிற்பட ஆன்ம சங்கற்பம் உருவத்தைப் பற்றாதபோது அச்சத்திகளின் செயல் நீங்கச் சிவானந்தம் விளைப்பன்.

2392. வேதாந்த தொம்பதம் மேவும் பசுஎன்ப
நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி
போதாந்த தற்பதம் போய்இரண்டு ஐக்கியம்
சாதா ரணம்சிவ சாயுச்சிய மாமே.

பொருள் : வேதாந்தத்தில் சொல்லப் பெறும் தொம்பரமானது. பசு என்னும் ஆன்மாவைக் குறிப்பதாகும் என்பர். நாதாந்தத்தில் பசுத் தன்மை இயல்பாகவே நீங்கி நின்ற நல்ல பதியே அறிவின் முடிவாகிய தத் என்னும் பதமாம். சீவனும் சிவமும் ஆகிய இரண்டும் இரண்டறக் கலத்தல் இயல்பாகச் சிவகாயுச்சியம் என்னும் அசிபதமாகும். வேதாந்தத்தில் சீவனும் சிவனும் ஒன்றாதலே சிவ சாயுச்சியமாகும்.

2393. சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும்
சிவமாம் சதாசிவன் செய்துஒன்றான் ஆனால்
நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே.

பொருள் : வேதாந்தம் சித்தாந்தமாகிய இரண்டு நெறிகளும் சீவன் சிவமாதலைப் பற்றிக் கூறுவனவேயாகும். நன்மையில்லாத பிரமன், திருமால், உருத்திரன், மகேசன் ஆகிய நால்வரும் சிவமாகும் தன்மையுடைய சதாசிவமூர்த்தியின் ஆணைவழி செய்த படைத்தலாதி தொழில்கள் முடிவுற்ற ஒன்றாகுமானால் வியக்கத்தக்க வேதாந்தம் ஞானம் தரும் சித்தாந்தமாகும்.

(அவ்வவ் இரண்டும் - வேதாந்தம் சித்தாந்தம் ஒழிந்த ஏனைய அந்தங்களும் எனப்பொருள் கொள்ளுதலும் உண்டு. அந்த நான்காவன: நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம் கலாந்தம் என்பன.)

2394. சித்தாந்த தேசீவன் முத்திசித் தித்தலால்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர்
சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.

பொருள் : சித்தாந்த சைவத்தில் சீவன் முத்திநிலை கைகூடுதலால் சித்தாந்த சைவநெறியில் நிலைத்து நிற்பவர்கள் முத்தி நிலையாகிய சிவப்பேற்றைப் பெற்றவராவர். சித்தாந்தம் வேதாந்தம் ஆகிய இரண்டு நெறிகளும் செம்பொருளான சிவத்தைக் குறித்தனவேயாதலின் சித்தாந்தமும் வேதாந்தமும் சிவத்தையே காட்டும். இவையிரண்டும் செம்பொருளைக் காணத் துணை புரியும்.

2395. சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும்
அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால்
நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம்
தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே.

பொருள் : சிவத்தைப் பரமாகவுள்ள சீவனில் உள்ளாகவும் வெளியாகவும் விளக்கும். குற்றமற்ற வேதாந்த நெறியும் - சிந்தாந்த நெறியும் ஒன்றானால் தோழமை கொண்ட துரியாதீதத்தில் விளங்கும் ஞானம் சிவமாகும். இத்தகைய சிவஞானத்தை உணர்ந்து கடைப்பிடிப்பவர். சிறந்த தத்துவ தரிசினிகளாவர்.

2396. தத்துவம் ஆகும் சகள அகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
தத்துவ மாகும் சீவன்தன் தற்பரம்
தத்துவ மாம்சிவ சாயுச் சியமே.

பொருள் : ஆன்மா வியாபித்துள்ள முப்பத்தாறு தத்துவங்களும் உருவமுடையனவாயும் உருவம் இல்லாதனவாயும் உள்ளன. இவைகளில் விந்து நாதமாகிய தத்துவங்களில் விளங்குபவர் சதாசிவராவார். சீவனின் நாதாந்த நிலையில் உள்ளது தற்பரம் என்ற மெய்ப் பொருளாகும். இந்நிலையை அடைதலே சிவ சாயுச்சியமாகும். சகளம் உருவம்; அகளம் - அருவம். உருவமும் அருவமுமாய் உள்ளவர் சதாசிவம். இவரே நாதவிந்துவில் விளங்குபவர். (தற்பரம் - சிவம்)

2397. வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன
நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே.

பொருள் : வேதங்களும் ஆகமங்களும் இறைவனாய் அருளிச் செய்யப் பெற்றவை. அவை உண்மையை உரைக்கும் நூல்கள் வேதம் பொதுவாகவும், ஆகமம் சிறப்பாகவும் உள்ளன. சிவபெருமானால் உணர்த்தப் பெற்ற அவைகளின் முடிவுகள் வேறுவேறானவை என்று சிலர் கூறுவர். தத்துவ தரிசனம் கண்ட பெரியோர்க்கு இவைகளின் வேறுபாடின்மை விளங்கும்.

2398. பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்
பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம்
விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே.

பொருள் : பரமாகிய சீவன் பெறும் சிவஆனந்தம் முழுவதும் பரானந்தமாகும். மேல் மூன்றாகவுள்ள பாழாகிய மாயையில் பொருந்தாத ஆனந்தமும் சாம்பவி கேசரிமுதலிய முத்திரைகளால் அடைகின்ற ஆனந்தமும் சிவ நடனத்தை இடைநாடியில் கண்டு களிப்பதால் வரும் ஆனந்தம் ஆகியவற்றை அடைந்த உள்ளம் பொலிவினையுடைய தாகும்.

2399. ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம்
ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில்
ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற
ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே.

பொருள் : கலாந்தம் இரண்டாகும் அவ்விரண்டும் நாதாந்தம் கலையந்தம் என்ப கலையந்தம் நீக்கலாகிய நிவர்த்தி முதல் ஐந்தாகும். இவ் ஐந்திற்கும் அரனே முழுமுதலாவான். அதனால் அரனே பஞ்சாந்தகனாம் என்ன அருளினர். இங்ஙனம் மறை யாகமம் முறையுற மொழிந்தனன் என்க. (பஞ்சாந்தகன் - தனித்தனியே ஐந்து கலைகளின் முடிவிடத்து இருப்பவன்.)

2400. அன்றாகும் என்னாதுஐ வகைஅந்தம் அன்னை
ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு
நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்றாடி பாதம் மருவலும் ஆமே.

பொருள் : ஐவகையான முடியாம் அந்தங்களும் மாறுபட்டதன்று. இவ்வுண்மையை வேதாந்த சித்தாந்தம் ஒன்றென விளங்கக் கூறும். அத்தகைய வேதாந்த சித்தாந்தத்தை முன்னிட்டு ஒழுகினால் யோகாந்தம் நேர்படும். அச்செறிவு நிலை ஏற்பட்டால் மன்றாடிபாதம் மருவலுமாம். மன்றம் ஐவகை யாகும். (ஆலங்காடு இரத்தினசபை, சிதம்பரம் - பொற்சபை; மதுரை - வெள்ளிசபை; திருநெல்வேலி - செம்புசபை; குற்றாலம் - சித்திரசபை என்பனவாம்.)

2401. அனாதி சீவன்ஐம் மலமற்றுஅப் பாலாய்
அனாதி அடக்கித் தனைக்கண்டு அரனாய்த்
தன்ஆதி மலம்கெடத் தத்துவா தீதம்
வினாவுநீர் பாலாதல் வேதாந்த உண்மையே.

பொருள் : மன்றாடி பாதம் பொருந்தும் பழமையான சீவன் ஐம்மலங்களும் கெட்டு அனாதியாகவுள்ள ஆன்மாவின் சுட்டறிவை அழித்துத் தன் உண்மையான பரநிலையைக் கண்டு சிவசொரூபமாய் தன் ஆதிமலமாகிய ஆணவம் நீங்கச் சகல தத்துவங்களையும் கடந்த நிலையில் நீர் பாலுடன் சேர்ந்து பாலாகவே இருத்தல் போலச் சீவன் சிவமாதல் வேதாந்தம் உணர்த்தும் உண்மையாகும்.

2402. உயிரைப் பரனை உயர்சிவன் தன்னை
அயர்வற்று அறிதொந் தத்தசி அதனால்
செயலற்று அறிவாகி யும்சென்று அடங்கி
அயர்வற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே.

பொருள் : ஆருயிரைப் பரனாகி திருவருளை எவர்க்கும் மேலாம் பரசிவனை மருளற்று தெருளுற்றுத் திருவருளால் செறிந்து காண்பாயாக நீ அதுவாகின்றாய் என்று கூறும் தொந்தத்தசிப் பெருங்கிளவியால் உன் செயலற்று அறிவாகியிருப்பாயாக. அறிவாகியும் திருவடிக்கீழ் அடங்கி நிற்பாயாக. இந்நிலையே மருளற்ற வேதாந் சிந்தாந்த அருள் மாண்பாகும். இவ்வுண்மை செந்தமிழ் மறை முடியாம் திருவாசகச் செழுந்தேனால் உணராலாம். (தொந்தத்தசி - துவம் + தத் + அசி = நீ சிவமாய் இருக்கிறாய்.)

2403. மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
சென்னிய தான சிவயோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்
துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே.

பொருள் : நிலைபெற்ற அது நான் என்னும் ஆழ்ந்த நினைவினால் அவனே தானாகி நிற்கும் நிலை சோகம் எனக் கூறப்படும் ஆழ்ந்த நினைவு - பாவனை. இக்குறிக்கோள் மாமறை யாளர்க்கு ஏற்படுவதாகும். அம்மறையாளர் முடி மணியாத் திகழும் அருண்மறை சிவோகம் எனப்படும். சிவோகம், சிவனுடன் கூடுதல். சிவோகம் இஃது என்று கூறத்தகும். இத்தகைய அரும் பொருள் சித்தாந்த மாமறையால் ஆராயப்படும் பொருளாகும். இப்பொருளை ஆராயும் எழில் நூல் ஆகமம் எனப்படும் சோகம் = ச+அகம், அது நான், சிவோகம் - சீவத்துடன் கூடுதல்.

2404. முதலாகும் வேத முழுதுஆ கமம்அகப்
பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு
முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து
அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆமே.

பொருள் : முதல் நூலாகிய வேதமும் முழுமுதல் நூலாகிய ஆகமமும் நல்லடியார் வாயிலாக முதல்வனாம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டனவாகும். இவ்விரண்டனுள் முதன்மையான வேதமும் முறைமுறையால் அமர்ந்த வேதாந்தமாகும். ஆகமம் நனிமிகச் சிறந்த சித்தாந்தமாகும்.

16. பதி பசு பாசம் வேறின்மை (அஃதாவது இறை உயிர் தளை ஆகியவற்றின் தொடர்பு)

2405. அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியில் பிறப்பறுந் தானே.

பொருள் : அறிவு அறிவு என்று சொல்லப்படும் ஆன்மா மிகத் தொன்மையானது ஆன்மாவுக்குத் தலைவனான சிவமும் ஆன்மாவைப் போன்று மிகத் தொன்மையானது ஆன்மாவைப் பிணித்துள்ள பாசம் தொன்மையானதே. பேரறிவுப் பொருளான சிவம் ஆன்மாவிடம் விளங்குமாயின் பாசம் நீங்கிப் பிறப்பு இல்லையாகும். பதி பசு பாசம் மூன்றும் தொன்மையானவை.

2406. பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தலால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

பொருள் : பிரமன் அரி உருத்திரன் மகேசன் சதாசிவர் முதலிய பெருந் தேவர்களை உள்ளிட்டுப் பசுக்கள் பல கோடியாகும். பசுக்களைப் பிணித்துள்ள ஆணவம் கன்மம் மாயை யாகிய மலங்கள் மூன்றாகும். ஆன்மா போதத்தை நீக்கி மலங்களை அகற்றினால் பசுக்கள் பதியினைப் பற்றி விடாது நிற்கும்.

2407. கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாடோறும் நோக்கித்
தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.

பொருள் : பாசத்தில் கட்டுண்டு கிடக்கின்ற உயிர்கள் காமியத்தோடு செய்த சரியை கிரியை யோகத்தால் அடைகின்ற சாலோக சாமீப சாரூபம் ஆகிய பயன்கள் மூன்றாகும். அவற்றின் முடிவாய் விளையும் ஞானத்தைப் பெற நாள்தோறும் தியானம் செய்து தொடர்பு சிறிதும் பற்றாமல் நிஷ்காமியமாய் வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் குடத்தின் உள்ளே வைத்திருந்த விளக்கை எடுத்து குன்றின்மேல் வைத்ததுபோலப் பிரகாசம் பெறுவீர்கள்.

2408. பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும்
கூசம்செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்
வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே.

பொருள் : ஆன்மாக்களின் ஆணவ மல வலிமை கெடக் கன்மத்தையும் மாயையையும் பொருத்தினவனும் விரிந்த கிரணங்களையுடைய நந்தியும் ஆகிய சிவபெருமானைப் பற்றுள்ளம் கொண்டு ஞானியர் நினைப்பர். அவ்வாறு நினைக்கும் தியான பலத்தால் மனம் கூசும் பாசத்தை நினைப்பது எவ்வண்ணம் ? பழமையாகவே தொடர்ந்து வந்துள்ள பாசத்தால் மீண்டும் சீவனை விடுவது எங்ஙனம் ?

2409. விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டோன் மேவுறான்
கட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே.

பொருள் : மந்திர சக்தியால் நீங்கிய விடம் தீண்டியவனை மீண்டும் பொருந்தாவாறு போல ஞானத்தால் பசுத்தன்மையும் பாசத் தன்மையும் விட்ட மெய்கண்டான் மீண்டும் அவற்றைப் பொருந்தான். தன்னைக் கேவல அவத்தையிலும் சகல அவத்தையிலும் பிணைத்திருந்து பாசத்தைச் சுட்டழித்து நின்மல துரியாததீதத்தை விழிப்பு நிலையில் அவ்வுண்மை ஞானி காண்பர்.

2410. நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே.

பொருள் : ஆராயப்படும் பதி, பசு, பாசம் பலவாக விரியும் என்றும் பொன்றாது ஒன்றுபோல் நின்று நிலவும் சிவபெருமானாகிய நித்தன் நிலையினை உள்ளவாறு அறிவார் இல்லை. தொன்று தொட்டுத் தென்பட்டும் படாதும் வருகின்ற முப்பொருள்களும் என்றும் ஒன்றுபோல் நிலைப்பதாகிய பதியின் நிலைமையும்  சார்பாகிய பசுவுக்கு நேர்ந்த பசுபாச நீக்கமும் திருவருளால் ஆராயத் தொடங்கிய சைவ நற்சீலர்க்கு நந்தியாகிய சிவபெருமான் விளங்குமாறு அளித்தருளினன்.

2411. ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்
ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

பொருள் : திருக்கோயிலில் மூலத் தானத்திலுள்ள சிவலிங்கம் அருளுடன் கூடிய சிவலிங்கமாம். அங்குள்ள வலிய ரிஷபம் பசுவாம். அங்கு ரிஷபத்துக்குப் பின்னே யுள்ள பலிபீடமே பாசமாகும். இவ்வுண்மை சிவாலயத்தின் அமைப்பை ஆராய்ந்து பார்க்க விளங்கும்.

2412. பதி பசு பாசம் பயில்லியா நித்தம்
பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப்
பதி பசு பாசத்தைப் பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில நிலாவே.

பொருள் : பதிபசு பாசம் ஆகியவற்றை உணர்த்தும் ஞான நூல்களை நாள்தோறும் ஆராய்ச்சி செய்து, பதி பசு பாச உண்மையை உணர்வோர்க்கு, நெறியினைக் காட்டி பதிப் பொருளானது பசு ஞானத்தையும் பாச ஞானத்தையும் பற்றறக் கெடுக்கும் பதி பசு பாசங்களைக் குறியீடாக் கொண்ட தியானத்தால் பசு ஞானம் பாச ஞானம் நிலைபெறா.

2413. பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.

பொருள் : பேருயிராகிய பதியும், ஆருயிராகிய பசுவும், அப்பசுவைப் பிணித்த பாசமும், அருளால் பாசம் நீங்கிய இடத்துப் பெறும் திருவடிப் பேறாகிய மேலைக் கதியும், சிவகுருவாய்ச் சிவபெருமான் எழுந்தருளி வந்து பசு பாசத்தை நீக்கியருளும் நீக்கமும் மெய்ம்மையாக் காட்டியருள்வது தனிப்பெரும் சைவமாம் சுத்த சைவத்தென்க. இத்தகைய தத்துவ ஞானமாகிய மெய்யுணர்வைத் தந்தருளிய வன்இயற்கை உண்மை அறிவு இன்ப மாநந்தியாகிய சிவபெருமானவன். அவன் திருவடிகளைச் செந்தமிழ்த் திருமுறை வழியாக வழிபட்டு உய்யும்படியாகவும் வைத்தருளினன்.

2414. அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆகும்
அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதிபடைப் பான்அங்கு அவற்றையே.

பொருள் : அறிவுடைய ஆன்ம வர்க்கம் விஞ்ஞானகலர், பிரளயகலர், சகலர் என மூவகைப்பட்டு எங்கும் உள்ளனர். இவ்வகையான ஆன்மாக்கள் எங்கும் இருக்க, எல்லாம் அறிந்த சிவன் அவைகளில் நிறைந்துள்ளான். ஆன்மாக்களின் தகுதியை அறிந்த சிவம் அவை அவைகளின் தகுதிக்கு ஏற்பப் படைத்தருளுவான்.

2415. படைப்புஆதி யாவது பரம்சிவம் சத்தி
இடைப்பால் உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்ய
படைப்பாதி தூய மலம்அப் பரத்திலே.

பொருள் : படைப்பில் தொடக்கமாவது பரம் சிவம் சத்தி ஆகியவற்றை இறைவன் உயிர்க் கூட்டங்களின் இடையே பொருத்தி, இவ்வுயிர்களை உறக்கத்தில் வைத்தலாகும். பின்னர்ப் படைப்புக்குரிய காரணத்தைத் தற்பரனாகிய சிவன் சங்கற்பத்தால் செய்ய, படைப்பின் முதல் நிலை சுத்த மாயையில் அப் பரத்தில் ஆகும்.

2416. ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவபர மேல்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மம்செய்வோன்
ஆகிய தூயஈ சானனும் ஆமே.

பொருள் : நுண்ணிய ஐந்தொழிலை விந்து, நாதம், சத்தி, சிவம், பரம் என்னும் மேல் ஐந்து நிலைகளாலும் ஆக்குவிப்பன். அந்த நுண்ணிய ஐந்தொழிலை அருளால் ஆக்குவிப்போன் தூய இயக்க முதலாகிய ஈசானன் ஆவான்.

2417. மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன்
மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி
ஆகும் படிபடைப் போன்அர னாமே.

பொருள் : இப்படைப்பாதி ஐந் தொழிலையும் சிவபெருமான் அருவம் நான்கு, அருவுருவம் ஒன்று, உருவம் நான்கு ஆக ஒன்பான் நிலைகளின் நின்று உன்முகமாகிய கருத்தால் இயற்றி அருளுகின்றனன். அந் நிலைகள் முறையே பரசிவம், பராசத்தி, பரநாதம், பரவிந்து எனவும், ஐம்முகன் எனவும், ஈசன், உருத்திரன், மால், அயன் எனவும் கூறப்படும். மாயா காரியமாகிய உலகினைப் படைத்து அருளுபவன் அரனாகிய சிவபெருமான் ஆவன். ஐம்முகன் - சதாசிவன்.

2418. படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும்
சடத்தை  விடுத்த அருளும் சகலத்து
அடைத்த அனாதியை ஐந்தென லாமே.

பொருள் : படைப்பும் காப்பும் இளைப்பாற்றும் பொருட்டுச் செய்யும் அழிப்பும் மறைப்பும் வாழும்பாது விளங்க அருளாலும் உடம்பை விட்டபின் நிகழும் அருளலும் என சிவபெருமான் சகலர்க்கு இணைத்த அனாதியான தொழிலை ஐந்து என்னலாகும்.

2419. ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாரு மாயையில் முப்பால் மிகுத்திட்டுஅங்கு
ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு
வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே.

பொருள் : குண்டலியாகிய மாமாயை யினின்று முப்பத்தாறு மெய்கள் சிவபெருமான் திருவுள்ளத்தால் தோன்றி விரியும். இம்முப்பத்தாறையும் படுக்குங்கால் உணர்த்து மெய் ஐந்து, உணர்வுமெய் ஏழு, உடல்மெய் இருபத்து நான்கு என்பனவாகும். இவற்றை முறையே, தூமாயை, தூவா மாயை, பகுதிமாயை எனக் கூறுவர். ஆருயிர்கட்கு முடிந்த முடிபாக வேண்டி கருவிகளையும் இவற்றாலேயே வகுத்தருளினன். பதி பசு பாசம் என்னும் உண்மைகளையும் தொடர்புகளையும் அருளால் உணரும் காலத்துப் பாசத்தினின்றும் பசு வேறாகும். வேறாகவே பதியினைச் சென்றெய்தும். எய்துவதே வீடு பேறாகும்.

2420. வீட்டுகும் பதிபசு பாசமும் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால்உணர்ந்து
ஆட்கு நரக சுவர்க்கத்தில் தானிட்டு
நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே.

பொருள் : பதியானது பசுவினை மலநீக்கத்தின் பொருட்டு மாயா காரியமாகிய பாசத்தின்கண் விருப்பம் உண்டாகச் செய்யும் அவ்வுயிர் உலகுடல் கலன்களில் விருப்பம் மீதூர இருவினை புரியும்படி ஆழ்த்தும். அதன்வாயிலாக ஆருயிர்கள் இருவினைகளைப் புரியும். அவற்றின் பயன்களாகிய இன்பதுன்பங்களை நுகர்விப்பதன் பொருட்டு அவ்வுயிர்களை முறையே துறக்க நிரயங்களில் இட்டு ஆழச் செய்யும். இவ்வகையாகப் பயன் துய்க்கும் காலங்கழியப் பிறப்பிற்கு ஏதுவாகிய நான் என்னும் முனைப்புத் தங்கும்படி நற்பாசமாகிய மறைப்பாற்றல் வந்து பொருந்தும் என்க மறைப்பாற்றல் - நடப்பாற்றல்; திரோதான சத்தி.

2421. நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம்
பண்ணி மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே.

பொருள் : மாயா காரிய உடம்புடன் கூடி நான் என்று முனைத்து நிற்றல் ஆணவப் பண்பாகும். அவ் ஆணவம் நீங்குதற் பொருட்டு மாயையின்கண் செலுத்தி இருவினைப் பயன்களையும் நடப்பாற்றல் ஊட்டுவதாகும். ஊட்டுவதனால் ஆணவ மலம் அகலும் அகலவே கருதப்படும்  அறிவிக்க அறியும் தன்மை வாய்ந்த சேதனனாகிய ஆருயிர்கள் மாட்டு வைத்த பேரருளினால்  அவ்வுயிர்க்கு அண்ணலாகிய சிவபெருமானின் திருவடி சேரும் வழிவகைகளையும் அவ்வாற்றல் தோன்றுவித்தருளும் இதையே உபாயமதாகும் என்றார்.

2422. ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோக மறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்
ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே.

பொருள் : நடப்பாற்றல் ஆருயிர்க் கிழவற்கு வினை மாயைகளைக் கூட்டல் வழிவகைக் மட்டு மன்றி, ஆணவ அழுக்கு நீங்கித் தூயனாதற் பொருட்டுக் கடும்பற்றாகிய மருள் நீங்குதற்கும் தூயனாதற்கும் இதுவே மூலமாகும். இதற்கு ஒப்பு அழுக்கேறிய அறுவை என்னும் ஆடையை மேலும் சாணி உவர் முதலிய அழுக்கினை ஏற்றிட அவ் அழுக்கினை அகற்றுவதாகும். இவ் அனைத்தும் அருட்பாசமாகிய நடப்பாற்றலால் நிகழ்வனவாகும்.

2423. பாசம் பயிலுயிர் தானே பரமுதல்
பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப
பாசம் பயிலப் பதிபர மாதலால்
பாசம் பயிலப் பதிபசு வாகுமே.

பொருள் : பாசத்துடன் பயின்றுவரும் ஆருயிர் முதல் பரமாகும். பரம் - சுமை. இயற்கையிலேயே சுமையுடையதாகும் என்ப. அப் பாசப் பிணிப்புச் சுமை யுடைமையால் அவ் வுயிர் பசு வெனப்பட்டது. ஆருயிர் பாசம் பயின்று தூயனாதற் பொருட்டுப் பதியும் அப் பசுவுடன் கலத்தலால் பதியும் பசுவாகும் என்ப. இது நோயாளிக்கு மருந்து கூட்டிக் கொடுப்போன் அம்மருந்துடனும் நோயாளியுடனும் தொடர்பு கொண்டிருப்பதை யொக்கும். ஆருயிர்க்குப் பாசத்தினப் பயிற்று வித்தற் பொருட்டுப் பதியும் பரமாக விளங்கும். பரம் - முதன்மை.

2424. அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும்  அருள்மேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே.

பொருள் : வேதப் பொருளின் உண்மையை தட்சிணாமூர்த்தியிடம் வினாவிய சனகாதி முனிவர்க்கு அருள் மேனி தாங்கிய பெருமான் சுட்டு விரலைப் பெருவிரலோடு சேர்த்துக் காட்டி ஞானமுத்திரையினால் உணர்த்தினார். சின்முத்திரையின் சூக்குமப் பொருளை உணராமையால் அவரது சிரத்தைத் தீண்டிச் தீட்சை செய்தருளுதலும் அம் மூர்த்தியை உணர்ந்து தமது உண்மையான ஒளி வடிவில் நிலைபெற்று நின்றனர். (அத்தம் - பொருள்.)

17. அடிதலை அறியும் திறங்கூறல் (அஃதாவது திருவடியைச் சிரசில் உணரும் தன்மை கூறல்.)

2425. காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
பாலொன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே.

பொருள் : காலும் தலையும் எவை என்பதை வீணர்கள் அறியவில்லை. கால் என்பது அக் குண்டலினி சத்தியாகும். மூலாதாரத்தில் குண்டலினி விளங்குவதற்குக் காரணம் அருள் என்று கூறுவர். ஒளி விளங்கும் ஞானமே பண்பு நிறைந்த தலையாகும். சத்தியானது அந்த ஞானமாகிய சிவத்தைக் காட்ட உயிர் வீடு பெறும்.

2426. தலைஅடி யாவது அறியார் காயத்தில்
தலைஅடி உச்சியில் உள்ளது மூலம்
தலைஅடி யான அறிவை அறிந்தோர்
தலைஅடி யாகவே தான்இருந் தாரே.

பொருள் : ஆருயிரின் உடம்பகத்துத் தலை உச்சியில் உள்ளது. அடி என்பது வழியாக உள்ளது. இவ் வுண்மையினை அருளால் அறியார். தலையடி என்பது சிவ என்னும் செந்தமிழ்ப் பெரு மறையாகும். இவ் அறிவை அறிந்தோர் சிவமாகவே இருந்து இன்புறுவர்.

2427. நின்றான் நிலமுழுது அண்டமும் மேலுற
வன்தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின்தான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்தாள் இணைஎன் தலைமிசை ஆனதே.

பொருள் : சிவபெருமான் நிலமும் அண்டமும் கீழும் மேலும் பொருந்தும் வண்ணம் பேரொளிப் பிழம்பாய் நின்றருளினன். அவ்வாறு அன்று நின்று அருளியது அசுரரும் அமரரும் உய்ந்திடும்படி ஆள்வதற்கேயாம். அவனே பின்பு உலகம் படைத்தருளினன். அவன் திருப்பெயர் நந்தியாகும். அவன் திருவடி அடியேன் தலையின்கண் அமர்ந்தது.

2428. சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
சிந்தையின் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லான்ஆகில்
எந்தையை யானும் அறியகி லேனே.

பொருள் : எனது உள்ளத்தினுள்ளே எனது தந்தையாகிய சிவத்தினது திருவடி உள்ளது எனது உள்ளமும் செயலற்று அடங்கி அவனது திருவடியில் வணக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. உள்ளத்தின் உள்ளும் புறம்புமாக வியாபித்திருக்கும் சிவன் என்னை அறிந்து உணர்த்தாவிட்டால் எனது தந்தையை நானும் அறிய முடியாதவனே யாவன். சித்தத்தைச் சிவன்பால் வைத்திருப்பார்க்கு அவன் விளங்கித் தோன்றுவான்.

2429. பன்னாத பாரொளிக்கு அப்புறத்து அப்பால்
என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம்
உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம்
சொன்னான் கழலிணை சூடிநின் றேனே.

பொருள் : சொல்லுதற்கு அருமையான ஆறாதார ஒளிக்குமேல் பரமா காயத்தில் எனது தலைவனாகிய சிவன் விரும்பி அங்கு எழுந்தருளியிருக்கும் இடமாம். மனத்தினாலேயே நினைந்து காணமுடியாத ஒளியையும் வாயினால் சொல்லி விளக்க முடியாத பிரணவத் தொனியையும் எனக்கு உணர்த்தினான். பின் நான் அவனது திருவடிகளான விந்து நாதங்களை எனது தலையில் சூடி நின்றேன்.

2430. பதியது தோற்றும் பதமது வைம்மின்
மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்
நதிபொதி யும்சடை நாரியோர் பாகன்
கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே.

பொருள் : பதிப்பொருள் விளங்கும் சிரசின்மேல் மனத்தைப் பொருத்துமின். சந்திரகலை விளங்கும்படி செய்து அங்கு இறைவனது திருவடியை நினைந்து ஏத்துமின். கங்கையைச்  சிரசில் அணிந்த அர்த்த நாரீசுவரன் முத்தி அருளும். அவனை வழிபடுகின்ற காலங்களில் கண்டு வழிபடுங்கள்.

2431. தரித்துநின் றானடி தன்னிட நெஞ்சில்
தரித்து நனி றான்அம ராபதி நாதன்
கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே.

பொருள் : சிவபெருமானின் திருவடிகளைப் பதம் வாய்ந்த விரிந்த மன நிலைக்கண் மாறாது நினையுங்கள். அப்படி நினைவார் மனத்து அவன் நீங்காது தங்கி நின்றருள்வன். அவன் இயல்பாகவே எங்கும் தங்கி நின்றருள்பவன். அவன் அனைவர்க்கும் நாதன் அமராபதியாகிய விண்ணவர் கோனுக்கு முதல்வன். கருதாதவரை வெறுத்து நின்றனன். சிந்தை சிவமாகச் செய்தனவே தவமாகத் திருவருளால் செவ்வி வாய்க்கும். பரிபாகம் உற்றாரைச் சிவன் தாங்கி நின்றனன்.

2432. ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள
தன்தாதை தாளும் இரண்டுள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய்ய வல்லார்கட்கு
இன்றேசென்று ஈசனை எய்தலும் ஆமே.

பொருள் : தாமரையாகிய சுழுமுனை ஒன்றுண்டு. அதன்கண் தாதுமிக்க அழகிய ஒள்ளிய மலரும் மூன்றுண்டு. அதற்குரிய தாள்களும் இரண்டுள. தாளிரண்டு இடப்பால் நரம்பு. வலப்பால் நரம்பு. மலர் மூன்று, மூன்று நரம்பும் கூடியமைந்த முடிச்சு. உடம்பகத்து மூலக் கனலால் நன்றாக வெதுப்பியபோது உள்ளம் செவ்வி வாய்க்கும். செவ்வி வாய்த்த வல்லார்கட்கு வாய்த்த அப்பொழுதே சிவபெருமானைச் சென்று தலைக் கூடுதலும் ஆகும்.

2433. கால்கொண்டுஎன் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கின் துயக்கறப்
பால்கொண்ட என்னைப் பரன்கொள்ள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்பஒண் ணாதே.

பொருள் : அடியேன் முடியில் சிவபெருமான் திருவடிகளைச் சூட்டியருளினன். சூட்டலும் கட்டற்றது. ஆணவக் கட்டறலும் மாயா காரியப் பொருள்களின் இடமாகவுள்ள நெஞ்சின் மயக்கம் நீங்கிற்று. மயக்கம் நீங்கவும் திருவடியுணர்வாகிய சிவஞானத்தை அடியேற்கு அளித்தருளினன். அவ் வுணர்வு பெற்ற என்னை மேலாம் தன் வண்ணம் ஆக்கத் திருவுளம் கொண்டருளினன். அதனால் ஆராஇன்பத் திருவிடி இணையின் மேல நிலையைப் பெற்றின் புற்றேன். அத்தகைய மேற் கொண்டு துய்க்கும் செம்மை நலம் சொல் இறந்ததொன்று.

2434. பெற்ற புதல்வர்போல் பேணிய நாற்றமும்
குற்றமுங் கண்டு கணங்குறை செய்யவோர்
பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச்
செற்றமி லாச்செய்கைக்கு எய்தின செய்யுமே.

பொருள் : தாம் பெற்று வளர்த்த மக்கள்பால் கொண்ட சம்பந்தத்தையும் அவர் செய்யும் குற்றத்தையும் உணர்ந்து அவரது குற்றத்தைப் பாராட்டாது குணத்தைக் கைக்கொள்ளும் பெற்றோர்பால் மற்று இறைவனும் உயிரின் தன்மைக்கேற்ப வெறுப்பில்லாத செயல்களுக்குப் பொருந்துமாற்றால் ஏற்றுக்கொண்டு தக்கவாறு செய்வான். (நாற்றம் - சம்பந்தம், கன்ம வாசனை, பற்றைய - பற்றாக உள்ள.)

18. முக்குற்றம் (காமம், வெகுளி, மயக்கம் ஆகியவை முக்குற்றங்களாகும்.)

2435. மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே.

பொருள் : காமம் வெகுளி மயக்கம் ஆகிய குற்றங்கள் மூன்று உள்ளன. அவை யாவும் உயிர்களுக்குத் துன்பத்தைத் தருவன. அதனால் உயிர்கள் தங்களது உண்மைச் சொரூ பத்தை அறியாமல் மாயா காரியமாகிய இருளில் ஆழ்ந்து மயங்கிக் கிடந்தன. காமம, வெகுளி, மயக்கம் ஆகிய முக் குற்றங்களினின்றும் விடுபட்டவர் பிறப்பு இறப்புக்களை நீக்கினவராவர். அவ்விதம் நீங்காதவர் அம் முக் குற்றங்களின் காரியமாகிய மாயையால் துன்பப்பட்டு அழிபவ ரேயாவர்.

(மான்றல் - மயக்கம். இருள் தூங்கலாவது. அறியாமையில் கிடத்தல்.)

2436. காமம், வெகுளி, மயக்கம் இவைகடிந்து
ஏமம் பிடித்திருந் தேனுக்கு எறிமணி
ஓமெனும் ஓசையின் உள்ளே உறைவதோர்
தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.

பொருள் : காமம் வெகுளி மயக்கம் ஆகிய முக்குற்றங்களையும் நீக்கி, பாதுகாவலான திருவடி பற்றியிருந்தேனுக்கு, மணியோசை போன்ற பிரணவத் தொனியினுள்ளே பொருந்துவதாகிய ஒளியினைத் தலைப்படுதல் கூடும். (காமம் - ஆசை; வெகுளி - சினம்; மயக்கம் அறியாமை; தாமம் - ஒளி; ஈண்டுச்சிவ ஒளி. ஏமம் சிவானந்தம்.)

19. முப்பதம் (தற்பதம், தொம்பதம், அசிபதம் ஆகியவை முப்பதங்களாகும்.)

(முப்பதம் - தத்+துவம்+அசி, தத்துவமசி)

2437. தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தினோன்
ஆகின்ற பராபர மாகும் பிறப்பற
ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே.

பொருள் : தோன்றி நீ என்ற பதம் அது என்ற பதத்தால் சூழ்ந்திருக்க, ஏற்றுக் கொள்ளப்பெற்ற ஆகிறாய் என்ற பதமும் ஆகிய இம் மூன்றோடும் பொருந்தினவன் பிறப்பு நீங்க அகண்டப் பொருளாவன். இவ்வாறு ஏற்றுக் கொள்ளப் பெற்றவன் இவ்வுடல் ஒழியச் சிவமாக ஆவான். (பராபரம் = பரம் + அபரம்)

2438. போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும்
ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு
பேதமும் நாதாந்தப் பெற்றியில் கைவிட்டு
வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.

பொருள் : திருவருளால் பெறும் நாதோபாசனையில் நின்று, பூதம் முதலாகச் சொல்லப் பெறும் தொண்ணூற்றாறு கருவி பேதங்களையும் நாதாந்த நிலையில் நீங்கி, வேதம் உணர்த்திய நீ என்ற பதமாகுதல் உண்மையான நிலையாகும்.

2439. தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம்
சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

பொருள் : தத்பதம் என்பதும் துவம்பதம் என்பதும் திருவருளால் பொருந்தி யிருப்பது அசிபதமாகும் எல்லாவற்றாலும் அறிவினால் அளவிட்டுக் கூறமுடியாத சிவபெருமான் பரையின் விளக்கத்தில் கற்பனையாக இல்லாமல் உண்மையாகவே அசிபத நிலையில் கலந்து அருளுகின்றான். (நேரிழையாள் - பரை.)

2440. அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்து
கணுஒன் றிலாத சிவமும் கலந்தால்
இணையறு பால்தேன் அமுதென இன்பத்
துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே.

பொருள் : சீவனும் பரமும் அசிபதத்தில் பொருந்தி, தங்குதடையற்ற சிவமும் கலந்தால் உவமிக்க இயலாத பாலும் தேனும் போன்று அவ் இன்பப் பொருளாய் வாய் பேசா மௌனத்தில் விளங்குவதாகும். ஆன்மா சிவத்தோடு கலந்திருக்கும் இன்பத்தை வாயினால் கூற முடியாது.

2441. தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும்
அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

பொருள் : தொம்பதம், திருவருளை நம்பி வாழும் வாழ்க்கையையுடைய ஆருயிராகும். தற்பதம், ஆருயிரைத் சிவத்துடன் கூட்டும் திருவருளாகும். ஆருயிரும் பேருயிரும் ஒன்றாய்க் கலந்து தோன்றும் நிலை சிவனாகும். இந்நிலையைச் சிறப்பு நிலை எனக் கூறுவர். சிறப்பு நிலையெனினும் சொரூப நிலையெனினும் ஒன்றே. அந்நிலையினை யுணர்த்தும் அச்சொல்லும் சிறப்புப் பெயரும் பொருட்கிளவியாகும். பெரும் பொருட் கிளவி மாவாக்கியம். ஆருயிர் செம்பொருளாகிய சிவனை அடைவதற்பொருட்டுச் சீர்த்தி மிக்க நந்திக் கடவுள் ஆண்டருள் கின்றனன்.

2442. ஐம்பது அறியா தவரும் அவர்சிலர்
உம்பனை நாடி உரைமுப்ப தத்திடைச்
செம்பர மாகிய வாசி செலுத்திடத்
தம்பர யோகமாய்த் தான்அவன் ஆகுமே.

பொருள் : ஆருயிர்கட்கு அகவை ஐம்பது ஆகியும் முப்பொருள் உண்மையினைத் தப்பின்றித் தெரியும் தன்மை வாய்த்து இலது. அதுபோல் சிலர் அறியாதவர் ஆவர். அவரும் அருள்நினைவால் தத்துவமசி என்னும் முப்பதத்தை நாடிப் பெறுவதாகிய சிவனை நாடும் வழியாக முப்பதத்திடைவாசியாகிய  உயிர்ப்பினைச் செலுத்தியிடச் செம்பர நிலைக்கு வழி அமையும். அவ்வழி தமக்குரிய சிவனுடன் கூடுவதாகிய யோகமாகும். இச்செறிவு வழியாக ஆருயிர் சிவத்துடன் கூடிச் சிவனாகும் வாசி செலுத்திட பிராணாயாமப் பயிற்சி செய்ய.

2443. நந்தி அறிவும் நழுவில் அதீதமாம்
இந்தியும் சத்தாதி விடவிய னாகும்
நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம்ஐந்து
நந்தி நனவாதி மூட்டும் அனாதியே.

பொருள் : நாத ஒலியை அறியும் ஆன்மாவின் நிலை நழுவில் சாக்கிராதீதம் பொருந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் சத்தம் முதலிய விஷயங்களைவிடப் பரமாகும். அப்பஞ்சேந்திரிய அறிவு மூன்றும் இரண்டும் ஒன்றும் நீங்கவே, சிவன் அனாதியாக நின்மல சாக்கிரம முதலியவற்றைக் கூட்டிச் சீவர்களைப் பக்குவம் செய்கிறான். இந்தியம் இந்திரியம்.

2444. பரதுரி யத்து நனவு படியுண்ட
விரிவிற் கனவும் இதன்உப சாந்தத்து
துரிய சுழுமுனையும் ஓவும் சிவன்பால்
அரிய துரியம் அசிபதம் ஆமே.

பொருள் : ஆன்மா மேலான நின்மல துரியத்தில் நனவு நிலையில் தங்கி விரியாத காலத்து நின்மல சொப்பனம் அமையும். இதில் அலையிலாச் சாகரம்போல் அசைவின்றி இருக்கும் நிலையே துரிய சுழுத்தியாகும். சிவத்தினிடம் பொருந்தினபோது அதுவும் நீங்கின நின்மல துரியமே அசிபதமாகும்.

20. முப்பரம்

(அஃதாவது, அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திரமண்டலம் ஆகிய மும் மண்டலங்களிலும் ஆன்மா நிற்கும் நிலை.)

2445. தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர்
மூன்று படிமண் டலத்து முதல்வனை
ஏன்ணெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி
நான்று நலம்செய் நலந்தரு மாறே.

பொருள் : என் உடம்பகத்துத் தோன்றி என்னுள்ளே வலம் கழித்து எழும் மண்டிலங்கள் மூன்றுள. அவை முறையே தீ மண்டலம், ஞாயிற்று மண்டிலம், திங்கள் மண்டிலம் எனச் சொல்லப்பெறும். இம்மூன்று மண்டிலத்து முழு முதல்வனாகிய சிவபெருமானைத் திருவருளால் ஏற்றுப் பொருந்தி இன்புற்றிருப்பம்; இளங்கொடியாகிய குண்டலினியை உயிர்ப்புப் பயிற்சியால் எழுப்பி அதனுடன் கலந்த நின்று உணர்ந்த காலத்தென்க. அக்காலத்து முழு நலமும் வந்து எய்தும்.

2446. மன்று நிறைந்தது மாபர மாயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்று நினைந்தெழு தாயென வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.

பொருள் : குண்டலினி சிரத்தைக் கடந்தபோது ஆகாயம் முற்றிலும் வியாபிப்பதாக உள்ளது. அது மிக மேம்பட்ட பொருளாக விளங்கும். அவளுடன் பொருந்திய சிவமும் அங்கு நின்ற எல்லாப் பொருளிலும் பூரணமாக நிறைந்திருந்தது. கன்று நினைந்து கதறியபோது ஓடி வரும் தாயைப்போன்று சீவன் நினைந்தபோது கருணை சுரக்கும் இறைவன் அருளியபின் அச்சீவன் குன்றின்மேல் இட்ட விளக்குப் போன்று பிரகாசம் பெறும்.

2447. ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்புரம்
கூறா உபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.

பொருள் : முப்பத்தாறு தத்தவங்களையும் கடந்து நிலையில் விளங்கும் அப்பரம் கூறாமல் கூறிய உபதேசத்தைச் சொல்லப்புகின் சிவபரம்பொருள் வேறாய் வெளிப்பட்டு குருமேனி தாங்கி அருளிய இன்பத்தைப் போற்றிப் பாதுகாத்துக் கொள்க என்பதாம்.

2448. பற்றறப் பற்றில் பரம்பதி யாவது
பற்றறப் பற்றில் பரனறி வேபரம்
பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றில் பரம்பர மாமே.

பொருள் : தத்துவங்களின் பற்று நீங்க அவை இலயமடையும் பொருளைப் பற்றில் விஞ்ஞான கலர் நிலையடைந்து ஆன் மாக்கள் சதாசிவராவார். அவ்வாறு பற்றி நீங்க நாதத்தைத் தொழுதால் நாத சொரூபமான சிவத்தின் அறிவே ஆன்மாவின் அறிவாகும். சீவபோதம் கெடச் சிவப்பற்று மிக மேம்பட்டவர்க்கே பழைய தத்துவங்களின் பற்று நீங்கி பற்றிக் கொண்டுள்ள சிவ அறிவு மிகுந்து ஆன்மா பரம் பரமாகுதல் கூடும்.

2449. பரம்பர மான பதிபாசம் பற்றாப்
பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப்
பரம்பர மான பரசிவா னந்தம்
பரம்பர மாகப் படைப்பது அறிவே.

பொருள் : திருவருளால் தொன்று தொட்டு வழிவழியாகத் தோன்றாத் துணையாக நின்றருளும் பதியினைப் பற்றினால் பாசம் பற்றாகும். யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீவருடைய சிவபெருமான் திருவடிகளைப் பற்றினார்க்கு அவன் எழுந்தருளி வந்து இன்புறுத்துவன். அதுவே மேலான திருவடியின்பமாகும். இவை அனைத்தினையும் திருவடியு ணர்வால் திருவருள் உந்துவதால் அறிவதே நிலைபெற்ற அறிவாகும்.

2450. நனவில் கலாதியாம் நாலொன்று அகன்று
தனியுற்ற கேவலம் தன்னில் தானாகி
நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயந்
தனையுற்று இடத்தானே தற்பர மாமே.

பொருள் : நனவுக் காலத்தே உழைப்பு, உணர்வு, உவப்பு, ஆள், மருள் என்னும் ஐந்தும் செயல் உறாது அகல ஆருயிர் நிற்கும் நிலை தனி நிலையாகிய புலம்பாகும். தன்னில் தானாக நின்று அகன்ற அந்நிலையில் உள்ளது அப்பால் நிலையாகும். அந்நிலையில் உணர்வுக்கு உணர்வாய் விளங்கப்படும் பொருள் சிவபெருமான் ஆவன். அச் சிவபெருமான் திருவடிகளைத் திருவருள் நினைவால் கொள்ள அவ்வுயிர் தற்பர சிவமாய்த் திகழும். உழைப்பு முதலியவற்றை முறையே கலை, வித்தை, அராகம், புருடன், மாயை எனவும் கூறு) (நாலொன்று - ஐந்து நேயந்தனை - சிவத்தை)

2451. தற்கண்ட தூயமும் தன்னில் விலாசமும்
பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத்
தற்பரன் கால பரமும் கலந்தற்ற
நற்பரா தீதமும் நாடுஅசு ராதியே.

பொருள் : தன்னைத் தூய்மையாகக் காண்டலும், தன்னிடத்து விரிவைக் காண்டலும் பின்னர் கருவிகரணங்களைக் கொண்ட ஆன்மாவின் நிலைமாறி, சிவனும் சீவனும் கலந்து, தத்துவங்களை விட்ட நல்ல பராதீத நிலையில் அகரத்தை ஆதியாகவுடைய பிரணவ சொரூபமான சிவத்தை நாடுவாயாக. (தற்பரன் - சிவன். காலபரம் - ஆன்மா.)

21. பரலட்சணம் (பரலட்சணம் - பரை ஒளியின் இயல்பு.)

2452. அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மா
மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே.

பொருள் : நின்மல துரியாதீத நிலையில் விளங்கும் நந்தி என்னும் சிவம் வியாபகமும் அறிவும் உடையது. ஆன்மா துரியாதீத நிலையில் தன்னறிவை இழந்தவனாக இருப்பான். ஆன்மாவின் சந்திர மண்டலம் விளங்கி ஆணவமாகிய இருளை விட்டுச் சிவத்தோடு ஒன்றாய்ப் பொருந்தினால் சிவம் உயிரில்  பதிந்து தனது வியாபகத்தையும்  அறிவையும் பதிக்கும்.

2453. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
போதம் உணர்தவர் புண்ணியத் தோரே.

பொருள் : முதலும் முடிவும் இல்லாத அறிதற்கு அரிய பெரும்பதி சிவபெருமான். அவன் பேரொளிப் பிழம்பாய் உள்ளொளியாய் விளங்கும் ஒள்ளியன். நல்லார்க்குத் தோன்றியும் பொல்லார்க்குத் தோன்றாமலும் நிற்க வல்லான். அதனால் அவன் அறமுறை குன்றியவன் அல்லன். அறமுறை - நீதி. யாண்டும் முறைமையோடே நிற்பன் என்றும் பொன்றாது நிலைப்பாடு உடையதாக இருக்கும் சிவஞான போத வடிவினன். அம்மேலான சிவஞான போதத்தை அருள் நினைவால் உணர்வோர் திருவருட் புண்ணியச் செல்வராவர்.

2454. துரியங் கடந்து துரியா தீதத்தே
அரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே
துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே.

பொருள் : நின்மல துரியத்தில் சீவன் பரைபோகத்தில் ஆழ்ந்து ஆணவ மலமற்று விளங்கும் நிலை கடந்து அது சுத்திபெறும் துரியாதீத நிலையில், அச்சீவர்களுக்கு வீடுபேற்றை அளிக்கப் பரவெளியில் நடனம் செய்யும் பெருந்தலைவனான சிவனைப் பிரணவச்சுனையில் துருவிக் காண்பவர்க்கு எவ்வகைப்பட்ட குற்றமும் இல்லையாம். (வியோகம் - வீடுபேறு.)

2455. செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல்
அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப்
பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.

பொருள் : செம்மையாகிய நாதத்தின் முன்னே வெண்மையாகிய விந்து தன்மை கெட்டு ஒடுங்குவதுபோல, அவ்வுண்மையான பரசிவத்தோடு சீவன் தன்முனைப்பற்று ஒடுங்க, பொய்யான உலகமுகத்து ஓடாத மனத்துடன் நிற்பதோடு எண்ணுவதையும் விட்ட பாழில் குண்டலினி நாத சத்தியாகிச் சிவமேரு என்ற பிரணவ உச்சியில் விளங்கும் தன் கணவனோடு ஒன்றாவாள்.

2456. வைச்ச கலாதி வருதத்து வங்கெட
வெச்ச இருமாயை வேறாக வேரறுத்து
உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்தென்னை ஆண்டனன் நந்தியே.

பொருள் : சிவமேருவில் நாத சித்தியோடு பொருந்திய சீவர்க்குக் கலைமுதலிய தத்துவங்கள் ஒடுங்க. எஞ்சியுள்ள சுத்த மாயை அசுத்த மாயையின் பிணிப்பு அடியோடு மீண்டும் முளையாவாறு நீங்க, துவாத சாந்தத்தில் உண்மைப் பொருளாகிய சிவசூரியன் விளங்க, அப்பெருமான் அச்சத்தை நீக்கி என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டு நிலைபெறச் செய்தனன்.

2457. என்னை அறிய இசைவித்த என்நந்தி
என்னை அறிந்துஅறி யாத இடத்துய்த்தப்
பின்னை ஒளியிற் சொரூம் புறப்பட்டுத்
தன்னை அளித்தான் தற்பர மாகவே.

பொருள் : என்னுடைய யதார்த்த சொரூபம் இத்தகையது என்று அறியும்படி செய்த நந்தியெம் பெருமான், என்னுடைய யதார்த்த சொரூபத்தை அறிந்ததும் இதுகாறும் செல்லாத பரவெளிக்கண் அறிவுடன் செல்லும்படி செய்து, பிறகு பிரணவ ஒளியில் ஆத்மசொரூபம் வேறாய் விளங்க, தனது சத்தியை அளித்துத் தற்பரமாகச் செய்தனன்.

2458. பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயு
நிரந்தர வளியோடு ஞாயிறு திங்கள்
அரந்த அறநெறி யாயது வாகித்
தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.

பொருள் : நுண்பூத நிலையில் விரிந்தும், பருப்பூத நிலையில் சுருங்கியும் நிலம் நீர் வாயு நிறைந்த காற்றுடன், சூரியன் சந்திரனாய்ச் செம்மையுடைய நெறியில் பயனாய், அகண்டமான ஆகாயத்தில் எல்லாவற்றையும் இறைவன் ஒருவனே தாங்கி நின்றனன்.

2459. சத்தின் நிலையினில் தானான சத்தியும்
தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல்
உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய்
நித்தம் நடத்தும் நடிக்கும்மா நேயத்தே.

பொருள் : அருவத் திருமேனி கொண்ட சிவத்தின் நிலையில் தானாக விளங்கும் சத்தியும் தற்பரையாய் நிற்கும். அப்பரையே பரனுக்கு உடலாகும். தனு கரணபுவன போகங்களைச் சீவர்களுக்குப் படைத்துக் கொடுக்க வேண்டும் என்ற சங்கற்பத்தால் ஞானசத்தி முதலிய பேதங்களாய், பெருமை மிக்க பரனிடத்து அகலா திருந்து சிருஷ்டியாகி ஐந்தொழில்களைச் செய்து நடித்தருளுவான்.

2460. மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள்
பாலிய விந்து பரையுள் பரையாகக்
கோலிய நான்கவை ஞானம் கொணர் விந்து
சீலமி லாஅணுச் செய்திய தாமே.

பொருள் : உடலுக்கு மேலும் கீழும் சூழுவுமாக இருந்து, மெய் வாய் கண் நாசி ஆகியவற்றைப் பாதுகாக்கின்ற விந்து சத்தியானது பரையுள் பரையாக, அருவமான  சிவம் சத்தி நாதம் விந்து ஆகிய நான்கின் ஞானத்தைப் பெறச் செய்து, ஆணவ மலத்தில் கட்டுண்டிருக்கும் சீவர்களை நடத்தும்.

2461. வேறாம் அதன்தன்மை போலும்இக் காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய்
ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே.

பொருள் : பரைஒளி வேறு வேறு இயல்புடையதாய் ஆறு ஆதார சக்கரங்களில் பொருந்தி ஆறுவகையான உபாதிகளை அளிப்பதால் வெவ்வேறு தத்துவங்களை மாயையால் சேட்டிக்கிறது. மாயை பிரகாசத்தைத் தூண்டுவதாய்ச் சிவனை அசைவித்து, சுவாசத்தை இயக்கி உணவை உண்பித்து உறக்கத்தையும் அடையச் செய்யும். ஆனால் மாயா காரியமான தத்துவங்களைக் கடந்து பர ஒளியில் பொருந்தியிருத்தலே ஆன்மா அடையத்தக்க பேறாம்.

2462. தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி
சிற்பரம் தானே செகமுண்ணும் போதமும்
தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்கு
அப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே.

பொருள் : தன்னுடைய பரம் என்ற நிலை ஒப்பற்ற பேரொளியில் நிலைபெற்றுள்ளது. அதுவே மேலான ஒப்பற்ற ஞானமும் தத்துவங்களை அழித்து நிற்கும் அறிவும் ஆகும். ஆன்ம போதம் நீங்கித் தன் ஒளியை மறந்து சிவப் பேரொளியில் புகுந்து சுட்டி அறியும் அறிவை விட்டு நிற்பதைவிட இங்கு ஒப்பாகச சொல்லக் கூடியது ஒன்று இல்லையாகும்.

2463. பண்டை மறைகள் பரவான் உடலென்னும்
துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக்
கண்டு பரனும்அக் காரணோ பாதிக்கே
மிண்டின் அவன்சுத்தம் ஆகான் வினவிலே.

பொருள் : பழமையான வேதங்கள் சிவத்துக்கு மேன்மையான ஆகாயமே உடல் என்று கூறும். சந்திரனைச் சூடிய பெருமான் விளங்கும் ஆகாயத்தில் துரியாதீத நிலையில் தன்னைக் கண்டு, அப்பர நிலையை அடைந்தவனும் சுத்த மாயைக்கே நெருங்கின் அவன் ஆராயின் சுத்தனாக மாட்டான்.

2464. வெளிகால் கனல்அப்பு மேலவுமண் நின்ற
தனியா இயதற் பரங்காண் அவன்தான்
வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
வெளியாய சத்தி அவன்வடி வாமே.

பொருள் : ஆகாயம் காற்று தீ பொருந்தும் மண் ஆகியவை இலயமாகும் கோயிலாகிய தற்பரமே அத்துரிய நிலையில் விளங்கும் சீவனாகும். ஆகாயம் காற்று தீ நீர் பொருந்தும் மண் ஆகியவற்றின் நிறைந்து நிற்கின்ற வெளியாகிய சத்தியமே அவன் வடிவாகும்.

2465. மேருவி னோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே.

பொருள் : நிலையில் திரியாது பொன்வண்ணமாக என்றும் ஒன்று போலப் பொன்றாது நின்றருளும் சிவனை மேரு என்பர் செந்தமிழர். அத்தகைய மேருவாகிய  சிவபெருமானை விரிந்த கதிர்களையுடைய பகலவன் மண்டிலமாகிய நெஞ்சத்தினிடத்து வஞ்சனையின்றி எஞ்சாமல் நிலைக்கின்ற அருந்தவ யோகியர்க்கு அந்நினைப்பாகிய சிறந்த தவத்தை அவர் செய்யின் ஆண்டுச் சிவனருள் வெளிப்பட்டுத் தானாக நிற்கும். நீங்க வேண்டிய நீர்மையும் இல்லை. அச் சிவபெருமானின் திருவாணையாகிய திருவருளின் மிக்கது பிறிதொன்றில்லை.

22. முத்துரியம் (முத்துரியம் - சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம்.)

2466. நனவாதி மூன்றினில் சீவ துரியம்
தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான்
நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம்
இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே.

பொருள் : சீவன் கேவல சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி ஆகியவற்றைக் கடந்து சீவதுரியத்தை அடையும். சீவனுக்கு ஆதியான பரமும் சகல சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி ஆகிய மூன்றையும் கடந்து பரதுரியத்தை எய்தும். சிவனும் பரனைப் போன்று நின்மல சாக்கிரமாதி குன்றைக் கடந்து சிவதுரியத்தை அடையும். இவ்வகையாகத் தொந்தத்தசி என்ற மகாவாக்கியம் விளக்கி நெறி அமையும். (ஈடு - நெறி.)

2467. தானாம் நனவில் துரியம்தம் தொம்பதம்
தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில்
ஆனாப் பரபதம் அற்றது அருநனா
வானான மேல்மூன்றும் துரியம் அணுகுமே.

பொருள் : ஆருயிர் தானாம் நனவில் பேருறக்கமாகிய துரியத்து நீ என்னும் முன்னிலைப் பொருளாய்த் தொம்பதமாக நிற்கும். ஆருயிரின் பேருறக்க நிலையில் பேசப்படும் நனவு, கனவு, உறக்கம் என்னும் மூன்றினில் நீங்காத அருட்பாடாம் பராவத்தை முடிந்த இடமாகும். அதுவே அந்நிலைக்குரிய அரிய நனவாகும். மிக மேலாகச் சொல்லப்படும் சிவ துரியத்து உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பு அடங்கல் வந்து பொருந்தும்.

2468. அணுவின் துரியத்து நான்கும துஆகிப்
பணியும் பரதுரி யம்பயில் நான்கும்
தணிவில் பரமாகிச் சாரமுத் துரியக்
கணுவில்இந் நான்கும் கலந்தஈர் ஐந்தே.

பொருள் : சீவன் விளங்கும் துரியத்தில் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் என நான்காகி, பணியும் பர துரியத்தில் பொருந்தும் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் ஆகிய நான்கும் மேலான பரமாகிப் பொருந்தும் சீவ பரசிவ சேர்க்கையில் சீவ துரியம் பரதுரியம் ஆகிய பொதுமையில் இருண்டும், சீவ பரதுரியத்திலுள்ள விரிவாகிய எட்டு நிலைகளுமாகப் பத்தாகும். (கணு - சேர்க்கை.)

2469. ஈர் ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள்
நேர்அந்த மாக நெறிவழி யேசென்று
பார்அந்த மான பராபத்து அயிக்கியத்து
ஓர்அந் மாம்இரு பாதியைச் சேர்த்திடே.

பொருள் : முன் மந்திரத்தில் கூறிய பத்து நிலைகள் பொருந்திய சீவபர சிவதுரியத்துள் சிவத்தை அடையும் பொருட்டு உபதேச முறைப்படி  நின்று, நிலம் முதலான தத்துவங்கள் முடிவடைகின்ற பராபரச் சேர்க்கையில் ஒரு முடிவை அடைவிக்கும் நாத விந்துக்களாகிய இரு திருவடிகளையும் சேர்த்து நிற்பாயாக.

2470. தொட்டே இருமின் துரிய நிலத்தினை
எட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப்
பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள்
தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே.

பொருள் : துரிய நிலையாகிய  அருள் நிலத்தினைத் தொட்டே இருங்கள் தொட்டிருத்தல் என்பது ஓவாது உணர்வில் உணர்த்திருத்தல். ஏனை யோர்க்கு எட்டாத நிலையில் உள்ள வனாயினும் உணர்வார்க்கு அவருணர்வில் எட்டும் ஒப் பிலா இறைவனைத் திருவருளால் உள்ளவாறு அறியுங்கள். அறிந்தால் பல்லும் நாவும் உதடும் பிறவும் கூடிப் பிறக்கும் தூய மாயாகாரியமாகிய சொல்லுக்கு எட்டாமல் நிற்குமவன் ஒப்பில்லாத மெய்ப்பொருளாகப் புணர்ந்து மெய்யின்பம் தந்தருள்வன். (பன்னா - பல்+நா. பல்லும் நாவும்.)

2471. அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்று
செறிவாய மாயை சிதைத்துஅரு ளாலே
பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

பொருள் : ஆன்மா அசத்தாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டுச் சித்துருவான பரமாய் சார்ந்திருந்த சுத்தமாயை அசுத்த மாயைகளை அருள் சத்தியால் (நாதத்தால்) சிதைத்து, அதன் விளைவான பிரிவில்லாத சிவ சத்திøப் பொருந்திடும் தன்மையை சிவநெறியில் ஈடுபட்ட அன்பர் நெறிகாட்டும் முடிவை அறிந்திருந்தனர்.

2472. நனவின் நனவாதி நாலாம் துரியம்
தனதுயிர் தொம்பதம் ஆமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யந்தற் பதமே.

பொருள் : சாககிரத்தில் நான்காம் நிலையாகிய துரியத்தில் தன்னுடைய உயிர் விளங்கும் தொம்பதம் என்ற ஒளி நிலை ஆவது போல வினைகளினின்றும் நீங்கிய சீவன், நின்மல சாக்கிரத்தை ஆதியாகக் கொண்ட நான்காம் நிலையாகிய நின்மல துரியம் அடைய, தானாகிய பரதுரியம் அமைந்து, அதனையும் கடந்த துரியாதீத்தில் தற்பதம் நின்ற நிலையை அடையும்.

2473. தொம்பதம் தற்பதம் சொன்முத் துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நல்தாமம்
அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

பொருள் : முத்துரியத்தில் தொம்பதம் என்றும் தற்பதம் என்றும் சொல்வதுபோல நம்பத் தகுந்த மூன்றாம் துரியமாகிய சிவ துரியத்து நல்ல பரமபதம் அழகிய உலகை நினையாத அதிசூக்கும நிலையாகும். அங்கு அப்பால் விளங்கும் செம்பொருள் ஆன்மாக்களை ஆட்கொண்டருளும் சிறப்பு மிக்க நந்தியாகும். (தாமம் - பரமபதம். ஒளி, முத்துரியம் கடந்து விளங்குவது ஆன்மாக்களை ஆட்கொள்ளும் சிவமாகும்.)

23. மும்முத்தி  (மும்முத்தி - சீவமுத்தி, பரமுத்தி, சிவமுத்தி.)

2474. சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓய்உப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய்
ஓவுறு தாரததில் உள்ளும்நா தாந்தமே.

பொருள் : சீவன் தன்னுடைய முத்தி நிலையைத் துரியாதீதத்தில் அடையும். ஆன்மா தன் செயலற்று அருளின் வழியே நிற்கும் நிலையே பரமுத்தியாகும். சிவமுத்தி என்பது சிவானந்தமாகும். மேற்கூறிய முறையில் மூன்று இடங்களிலும் சீவமுத்தி, பரமுத்தி, சிவமுத்தி என மூவகைப்பட்டு விளங்குவதாய்ப் பிரணவத் தொனியின் வழியே செயலின்றி நினைந்திருப்பின் நாதாந்தம் அமையும். (ஓவுறுதாரம் பிரணவம்.)

2475. ஆவது அறியார் உயிர்பிறப் பாலுறும்
ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும்
ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்று
ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே.

பொருள் : பிறவிப்பயனை அறியாதவராது உயிர் பிறவியில் வந்து அடையும் பிறவிப்பயன் இறைவனை வழிபடுதல் என்று அறிந்த உயிர், இறைவன் திருவருளை நாடிப் பயன்பெறும். புறத்தேயுள்ள உலகிலும் அகத்தேயுள்ள கருவி கரணங்களிலும் உயிருக்கே நன்மை அளிப்பது ஒன்றும் இல்லை என்பதை அறிந்து, உலகையும் கருவி கரணங்களையும் விட்டு நீங்கி நிற்கும் சிவத்துடன் பொருந்துதலே முத்தியாகும். (ஓவுதல் - நீங்குதல்.)

2476. சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத்
தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத்
துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்குச்
சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.

பொருள் : சிவத்தை நினைந்து சிவமாகி ஆணவம் கன்மம் மாயை யாகிய மும்மலங்களையும் தாமத இராசத சாத்விகமாகிய முக்குணங்களையும் அழித்து, தவத்தால் அடையும் மும்முத்தி என்ற அது நீ ஆகின்றாய் என்ற உபதேச நெறி நின்று, சோகம் பாவனை செய்வார்க்கு மலமில்லாச் சிவன் தானே வெளிப்பட்டருளினன். அது நீ ஆகின்றாய் என்பதே சோகம் என்னும் நெறியாகும்.

2477. சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும்
பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.

பொருள் : பொருளும் அருளும் போக்கில் மெய்ப்பொருளும் முறையே சித்தி, முத்தி, சிவமாம் சுத்தி என்று ஓதப்பெறும். இவைமுறையே தன்னைப்பற்றி வருவன, பிற உயிர்களைப்பற்றி வருவன, தெய்வத்தைப் பற்றி வருவனவாகிய மூவகைத் துன்பங்களையும் ஒழிப்பனவாகும். இம்மூன்றையும் தாபத்திரயம் என்பர். ஈண்டு இவற்றை முத்தீ என்று ஓதினர். இவை தொலையவே பேரின்பப் பேரருள் உருவாம் பேரறிவாற்றல் வெளிப்படும். அதன்மேல் செயல் அறலாகிய சமாதியும் கைகூடும். பின்னர்ப் பிணிப்பாகிய பெத்தத்தினை அறுத்தருளிய பெரும் பெருமான் வெளிப்பட்டுத் திருவடியை நல்கிப் பேரின்புறுத்துவன். அவனே முழுமுதல்.

24. முச்சொரூபம் (முச்சொரூபம் - சீவசொரூபம், பரசொரூபம், சிவ சொரூபம்)

2478. ஏறிய வாறே மலர்ஐந் திடைஅடைந்து
ஆறி ஞானச் சிவோகம் அடைந்திட்டு
வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்றுஅங்கு
ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே.

பொருள் : ஆணவத்தில் கட்டுண்டு கிடந்த உயிர்கள் பக்குமாதற் பொருட்டு, இறைவன் கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகியவற்றைக் கூட்டி ஆணவம் வலிகெட இருவினையொப்பு வந்த நிலையில் சிவோகம் பாவனை பண்ணி, மேலும் ஒரு நிலையாகச் சீவ பர, சிவ நிலைகளை அடைந்து நீங்கி, அங்கு இறுதியில் பழமையான பரம் பொருளின் உண்மையில் அவ்வுயிர்களை நிலைபெறச் செய்வான்.

2479. மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள
மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.

பொருள் : சகலர், பிரளயகாலம், விஞ்ஞானகலர் ஆகிய மூவர் வாழ்கின்ற இடம் பிரகிருதிமாயை, அசுத்த மாயை, சுத்த மாயை ஆகும். இவ்வகையான மூன்று மாயையிலும் முப்பத்தாறு தத்துவங்களும் தோன்றியுள்ளன. இம்மூன்று மண்டலங்களிலும் ஊடுருவி நிற்கும் ஆத்ம சோதியைக் கண்டபோதே எடுக்கவேண்டிய தேகத்தின் கணக்கு முடிவுறும்.

2480. உலகம் புடைபெயர்ந்து ஊழியும் போன
நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆரறி வாரே.

பொருள் : பேரொடுக்க மாகிய பேரூழிக் காலத்து உலகம் ஒடுங்கிற்று. அத்தகைய ஊழியும் பல கழிந்தன. விளங்குகின்ற ஆருயிர், அருள், அருளோன் என்னும் மூன்று அருள் வெளியில் ஒன்றாயின. இம்மூன்றையும் அன்பு, அருள், அருளோன் எனவும் கூறலாம். சீவன், பலம், சிவம் எனவும் கூறுப. பலவும் முறைப்படி சிவபெருமான் திருவடிக் கீழ் அடங்கி, கலப்பால் ஒன்றாயிருப்பினும் சிவபெருமானின் அளத்தற்கரிய அளவினையும் உரைத்தற்கரிய பெருமையையும் எவராலும் அளந்தறிந்து உரைக்க ஒண்ணா என்க. அதனால் ஒருவரும் அறியார் என்பது யாரறிவார் என்னும் குறிப்பால் பெறப்படும்.

2481. பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து
அருவாய் உருவாய் அருவுரு வாகிக்
குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை
உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே.

பொருள் : மாயா காரிய உருக்களை மலைமுதல் மண்ஈறாகவும் யானைமுதல் எறும்பு ஈறாகவும் கண்டு கருதப்படும் வேறுபாடுகளையே ஆருயிர்களுக்குக் காட்டியருள்கின்றனன் சிவன். அவன் எல்லாவற்றுடனும் கலந்து அருவாய் உருவாய் அருவுருவாய்த் தோன்றியருள்வன். அருளே திருமேனியாய்க் குருவாய் எழுந்தருளும் தனிப்பெரும் தலைவனும் ஆவன். மன்னும் பல உயிரோடும் கலந்து அவ்வவ் உயிராய் உருவாய் உடன் இருந்தருள்வன். அன்றாம் என்பது இந்நிலைமை சிவபெருமானுக்குத் தொன்மையிலேயே இயற்கையாக அமைந்த நன்மைப் பண்பாம் என்க. (பெருவாய் - பெரியதாய்.)

2482. மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து
மணிஎன லாய்நின்ற வாறுஅது போலத்
தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப்
பணிவித்த பேர்நந்தி பாதம்பற் றாயே.

பொருள் : வெண்பளிங்கானது மாணிக்கத்தின் முன் அதன் வண்ணம் பூரிப்புத் தன்மை ஆகியவற்றைப் பெற்று மாணிக்கம் என்னும் படியாக நின்றது போலத் தணிந்த தன்மையுடைய ஆன்மா சீவசொரூபம், பர சொரூபம், சிவ சொரூபம் என்ற சத்திகள் பொருந்திய போது, அவையேயாய் ஆகுமாறு செய்த பெருமையுடைய சிவனது திருவடிகளைப் பற்றி வாழ்வாயாக.

2483. கல்லொளி மாநிறம் சோபை கதிர்தட்ட
நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதும்
சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து
அல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே.

பொருள் : பளிங்கு போன்ற ஆன்மா மாணிக்கம் போன்ற சிவஒளியின் பிரகாசம் தோன்ற நன்மையைச் செய்கின்ற கண்மணியில் நாடி, ஒளி பொருந்தி தத்துவமசி என்னும் முப்பத்தினால் போதப்பாழ், சீவப்பாழி சிவப்பாழில் நின்று சொல்லாமல் அடைய முடியாத பிரணவத்தைக் கொண்டு, ஞானமுத்திரையின் முடிவில் பெறும் அனுபூதியால் அறியாமையாகிய இருள் நீங்கிப் பிறவி அறும். (முப்பதச் சொல் - தத்+துவம்+அசி = அது நீ ஆகிறாய்.)

2484. உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி
நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ்
விடம்தரு வாசலை மேல்நிற வீரே.

பொருள் : மாறுபட்ட தன்மையுடைய ஆயிர இதழ்த் தாமரையின் உள்ளே விளங்கும் சோதியை, செல்லுகின்ற மூலாதாரத்தினின்றும் எழும் நாதமானது அருளால் கிட்டுமாயின், அங்கே பொருந்தும் அமுதேஸ்வரி வெளிப்பட முன் அடைந்திருந்த மேல்வாசலைத் திறந்திருப்பீராக.

25. முக்கரணம் (முக்கரணம் - மனம், வாக்கு, காயம்)

2485. இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடல் உறும் அவ்வுரு வேறெனக்காணும்
திடமது போலச் சிவபர சீவர்
உடனுரை பேதமும் ஒன்றென லாமே.

பொருள் : திருவருளால் ஆருயிர் உடல், உணர்வு, உணர்த்துமெய் ஆகிய மூன்று இடங்களிலும் பொருந்தும். இம்மூன்றையே பருவுடல், நுண்ணுடல், முதலுடல் என்பனவற்றிற்குக் கூறினும் பொருந்தும். அவ் அருளாலேயே செவ்வி வாய்த்தற் பொருட்டு உரித்தெனக் கருதிய அம்மூன்றினையும் அவ்வுயிர் தனக்கு வேறெனக் காணும். அது போன்றும் அருளோன் அருள் ஆருயிர் போன்று சொல்லப்படும் சிவ பரசீவர்கள் உடனுறை வேறுபாடுகளும் ஒன்றெனல் ஆகும். (கடனுறு - உரியதான.)

2486. ஒளியை ஒளிசெய்து ஓம்என்று எழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவபதம் தானே.

பொருள் : ஒளியை உடைய கண்ணின் பார்வையை மேலும் ஒளி பெறுமாறு செய்து, பிரணவத் தியானத்தால் மூலாதாரத்திலிருந்து கனலை எழுப்பிச் சந்திரகலை சூரியகலை ஒன்றாகுமாறு சுழுமுனையில் சேர்த்து சிரசுக்கும் மேல் சகஸ்ரதள வெளியில் பொருத்தி, தியானம் முதிரச் சிவபதம் அமையும்.

2487. முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக்
கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி
மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக
ஒக்குமது உன்மனி ஓதுஉள் சமாதியே.

பொருள் : உள்ளம் உரை உடல் என்னும் மூன்று கருவிகளின் சோர்வினை அகற்றி ஆக வேண்டிய அருள்நிலையைக் கைக்கனி என்னும்படி தந்தருளினன். அவன் சிவபெருமானாகிய நந்தியாகும். ஆணை நிலையாகிய புருவ நடுவின்கண் விளங்கும் மனோன்மணி அங்கு நின்றும் மேலோங்க அதன்மேல் உன்மனையாகிய திருவருள் துணையாகும். அத் துணையால் ஒருமை உணர்ச்சி உண்டாகும். அவ்வுணர்ச்சியால் செயலற்ற திருநிலை எய்தும். இதனையே நிருவிகற்பசமாதி என்ப. இதனை ஒருமை ஒடுக்கம் என்ப.

26. முச்சூனிய தொந்தத்தசி

(சூனியம் - இன்மை, முச்சூனிய தொந்தத்தசி யாவது முப்பதமும் இன்மை. முப்பதம் நீங்கிய நிலையே பெருநிலை என்க.)

2488. தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம்
தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றலே
நிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின்
சொற்பத மாகும் தொந்தத் தசியே.

பொருள் : ஆது என்னும் தற்பதுமும் நீ என்னும் தொம்பதமும் தான் அது ஆகின்ற தென்னும் அசிபதமும் தொன்மையே யுள்ளன. இம் மூன்றும் மேல்நிலையாகிய துரியத்துத் தோற்றமும். இத் தோற்றத்தின்கண் நிற்பன ஆருயிரும் அருளாகிய பரமும் அருளோனாகிய சிவமும் என்னும் மூன்றின் சொற்பொருளாகும். இவையே தொந்தத்தசி என்ப. இதன்கண் தொம்பதமாகிய நீ தத்பதமாகிய அசி ஆகின்றாய் என்னும் பொருள் காணப்படும்.

2489.தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி
தொந்தத் தசிமூன்றில் தொல்தா மதமாதி
வந்த மலம்குணம் மாளச் சிவம்தோன்றின்
இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே.

பொருள் : தொந்தத்தசி என்ற மூன்றில் பழமையான கன்மமும் மாயையும் ஆணவமும், தொந்தத்தசி மூன்றில் பழமையான தாமதம் இராசதம் சாத்துவிகமும் ஆகிய மலமும் குணமும் கெட சிவன் தோன்றினால் பூரண நிலவின் முன் இருள் கெட்டு ஒளி உண்டாவது போல ஆன்மப் பிரகாசம் அமையும்.

2490. தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே
அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு
அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து
உந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே.

பொருள் : தொம்பதத்தோடு காணப்படும் அசிபதப் பொருளை வாசியாகிய உயிர்ப்பின் கண் தோன்றக் கண்டு முன் ஓதியவாறு அவத்தைகள் பத்தினையும் கருதுக. கருதி முடிவில்லாத அவத்தையை அவ்வாக்கியத்தில் செலுத்து முறையில்  வைத்து ஓதுதல் வேண்டும். அங்ஙனம் ஓதுங்கால் சிவத்தை முன்வைத்து ஓதுக. சிவத்தை முன்வைத்து ஓதுவது சிவயநம என்று ஓதுவதாகும்.

2491. வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து
உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து
அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே.

பொருள் : மேல்ஓதியவாறு சிவத்தை முன்வைத்து ஓதுதலான் ஆருயிரின் அறிவு அச்சிவத்தின் இயற்கை உண்மையறிவு இன்ப வடிவின்கண் செல்லும். அங்ஙனம் செல்லுமாறு செலுத்தி ஓமொழிச் செவியறிவுறூஉவாம் உபதேசத்தை மெய்யுணர்வால் களங்கமற்ற உள்ளத்தினிடத்துச் செலுத்தி விடும். அதன்பின் திருவருளால் சிவபெருமானின் திருவடியுணர்வினை உணர்ந்து அத்திருவடிக்கு என்றும் நீங்கா அடிமையாக அவ்வுயிர் நின்று இன்புறும்.

2492. தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம்
உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே.

பொருள் : மாயையில் தோன்றும் சீவனாகிய தொம்பதமும் மேலான பரையினிடத்து விளங்கும் பரமாகிய பதமும் விரும்பப்படுகின்ற சாந்தியில் பொருந்தும் ஆகிறாய் என்ற அசிபதமும் ஆகிய அவ்வாக்கியம் மேலான உரையாகும். அவ் வுரையான நீ அதுவாகிறாய் என்பதில் வாசியாகிய உணர்வு பொருந்தும்.

2493. ஆகிய அச்சோயம் தேவதத் தன்இடத்து
ஆகிய வைவிட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறிவு
ஆகிய சீவன் பரசிவன் ஆமே.

பொருள் : மேல்ஓதிய முப்பதங்களின் புணர்ப்பினை விளக்க அச்சோயமாகிய இவன் அவனே என்னும் முறைப்படி அவனே இத் தேவதத்தன் என்னும் பொருளின்கண் ஏற்படும் காலமும் இடமும் செய்தியும் நீங்கப் பெற்றால், அப் பெயர்க்குரிய பொருளாகிய உடம்பு காரணம் அளவாக நிற்கும். அக்காரண மாயையும் கடந்த நிலையில் தொந்தத்தசியாகிய முப்பதம் மெய்யுணர்வினைத் தரும். அதனால் ஆருயிர் அருள் அருளோன் என்னும் மூன்றும் பெறப்படும். அவ்வுயிர் அருளுடன் கூடி அருளோன் அடியிற் கலந்து முடிவிலா இன்பம் எய்தும். (சோயம் - இவன் அவனே. சோயந்தேவதத்தன் - அவனே தேவதத்தன். இது வேதாந்த பரிபாஷை. ஆதியில் பிரமசாரியாகவும், பிறகு இல்லறத் தானாகவும் அதன் பின்னர் துறவியாகவும் இருந்தவன் தேவதத்தன் ஒருவனேயாம் என்று விளக்கப்படுகிறது. உபாதானம் - முதற்காரணம்.)

2494. தாமதம் காமியம் ஆசித் தகுணம்
மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடு
ஆம்அறும் மவ்வும்அவ் வாய்உடல் மூன்றில்
தாமாம் துரியமும் தொந்தத் தசியதே.

பொருள் : அமைதி ஆட்சி அழுந்தலாகிய (சத்துவ, இராசத, தாமதங்கள்) முக்குணமும் ஆணவம் கன்மம் மாயையாகிய மும்மலமும் நிகழ்வது நீக்குவதுமாகிய செயல்கள் அகர உகர மகரங்களான் ஆகும். அவ் அகர கர மகரங்களே (அ+உ+ம்) பத்தாய் பகுத்த பாடுகளுள் மூன்றில் தாமாம் துரியம் தோன்றும். ஆண்டுத் தொம் தத் அசி என்னும் பதப்பொருள் முற்றுறும்.

27. முப்பாழ்

(முப்பாழ் - மாயைப்பாழ், போதப்பாழ், உபசாந்தப்பாழ் என்பன. மாயைப்பாழ், சீவப்பாழ், வியோமப்பாழ் எனவும் பெயர் பெறும். ஆன்ம தத்துவங் கடந்து நிற்றல் மாயைப் பாழ்; ஆன்ம போதம் கழல நிற்றல் போதப்பாழ் அல்லது சீவப்பாழ்; உபசாந்த நிலையில் பரவெளியில் நிற்றல் உபசாந்தப்பாழ் அல்லது வியோமப் பாழ்.)

2495. காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே.

பொருள் : மாயா காரியமாகிய வித்தியா தத்துவம் ஏழையும் ஞான விசாரணையால் அவை பொய் என்று அறிந்துவிட ஆன்ம சொரூபம் விளங்கும் தேகப் பிரக்ஞையும் காரணமாகிய சிவநிலைகள் ஏழையும் கண்டு நீங்க ஆன்ம அறிவும், காரிய காரணங்களாகவுள்ள வாசனைகளைக் கண்டபோது பொருந்திய உபசாந்தமும் நீங்கும். இம்மூன்று பாழினையும் நீங்கப் பிறவி அறும்.

2496. மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழெனச் சிவசத்தி யில்சீவன்
ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.

பொருள் : மாயப்பாழும் சீவப் பாழும் உபசாந்தப் பாழும் நிலைபெற்ற பரனது அறிவுக்கு அப்பாற்பட்ட முப்பாழ் என்னும்படி சிவசத்தியாகிய அருளில் சீவன் அடங்கி நிற்கும் மூன்று பாழ்நிலைகளாம். அத்தகைய தூய்மையான சிவ சொரூபத்தில் அடங்கி நிற்பதே தத்துவமசி வாக்கியத்தின் முடிவாகும். (வியாப்தம் - அடங்கி நிற்றல்.)

2497. எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும்
பதியெனும் நந்தி பதமது கூடக்
கதியெனப் பாழைக் கடந்துஅந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.

பொருள் : நாளும் ஆனேற்றினை உவந்து ஊர்ந்து உலகினுக்கு அருளும் ஒப்பில்லாத பதி சிவபெருமான் ஆவன். அவனே நந்தி என்று அழைக்கப்படுவன். அவனுடைய திருவடிகளைக் கூடுதற் பொருட்டு நிலையெனக் கருதிய மாயை, உயிர், அருள் என்னும் முப் பாழையும் கடந்து, அவை யனைத்தும் காரணம் பற்றிய கற்பனை என உதறி நீக்கி எஞ்சிய உருவற்ற பாழில் ஒடுங்குகின்றேன். (பாழ் - உருவில்லது. கற்பனை என்பது கற்பின் எனத் திரிந்து நின்றது. எதிரற - இணையில்லாமல்.)

2498. துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் என்றே துதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே.

பொருள் : செயலறலாகிய துரியம் அடங்கிய நிலையினைச் சொல்லுறும் பாழ் என்பர். சொல்லறல் - சொல்ல முடியாது ஆதல். அப்பாழை அறிவிலாதார் அறிதற்கரிய பெரும் பொருட்குப் பெரும் பொருளாம். பரம்பரம் என்பார்கள். அப்பாழ் அறிதற்கரிய பரம்பரம் என்றே துதிக்கும் அருளார் அருநிலமாகும். இவ்வுண்மையை அறிவார் யார் ? ஒருசிலரே என்க. அருநிலம் அப்பால் இடம். துரியாதீதம். (ஆதர் - அறிவில்லாதவர்.)

2499. ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு
வேறா கியபரை யாவென்று மெய்ப்பரன்
ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ
தேறாச் சிவாய நமவெனத் தேறிலே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களும் நீங்க, திரோதான மாகிய நகாரமும் மலமாகிய மகாரமும் நீங்கி, திருவருள் சத்தியாகிய பரை, என்றும் யகாரமாகிய ஆன்மாவை உண்மையான பரநிலையின் முடிவில் சிவசத்தியோடு சேர்ப்பிக்கும். ஆராயின் அதுவல்லவா ஆன்மாக்களால் அறியமுடியாத சிவாய நம என்பதன் கருத்தாகும். (ஆ என்று - பசு என்று.)

2500. உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்
உள்ள பரிசறிந் தோரும் அவர்கட்குப்
பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே.

பொருள் : உருவாகிய உடலையே உள்ளமாகிய உயிர் என்றும் உயிரையே உடலென்றும் தடுமாறிக் கூறுவர். அது கலப்பால் ஒன்றுபட்டுப் புணர்ந்து நிற்கும் நிலைமையால் கூறப்படுவதாகும். இவ்வுண்மையை அருளால் உள்ளவாறு ஓர்ந்து உணர்வார்கட்குப் பள்ளமாகிய கருப்பையினுள் புக்கு உருப்பெற்றுத் தோன்றி உழலுமாறில்லை. திடராகிய உலகினில் உறைந்து நிலவுமாறும் இன்று; பாழாகிய உருவற்ற நிலையில் வீழ்ந்து அழுமாறும் இன்று. ஆகவே உயிர் உடல் என்ற வேறுபாட்டு உரை உண்டாவதில்லை.

28. காரிய காரண உபாதி

(காரிய காரண உபாதி யாவன : சீவ உபாதி, பர உபாதிகள். உபாதி - பந்தம், கட்டு.)

2501. செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்
பற்றும் பரோபாதி ஏழும் பகருரை
உற்றிடும் காரிய காரணத் தோடற
அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.

பொருள் : முன் ஓதிய திருப்பாட்டின்கண் காரிய உபாதியாகிய சிவஉபாதி ஏழும் காரண உபாதியாகிய அருளுபாதி ஏழும் உள்ளவிடத்துத் தோன்றும் உபாதியாகிய வருத்தமும் அதனைச் சுட்டும் பெயர்களும் முற்றும் தோன்றாவறு அற்றொழிதல் வேண்டும். அற்றொழிந்தவிடத்து அவ்அணுவாகிய ஆருயிர் பற்றற்றார்க்கு என்றும் வற்றாப் பற்றாய் நிற்கும் பரசிவத்தின் அடியிணையைச் சாரும். சாரவே அச்சிவமாக நிற்கும். (சீவ உபாதி - காரிய உபாதிகள். பரோபதி - காரண உபாதிகள். அணுவன் - சீவன்.)

2502. ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறாய் நனவு மிகுந்த கனாநனா
ஆறாறு அகன்ற சுழுத்தி அதில்எய்தாப்
பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.

பொருள் : திருவருள் நினைவால் முப்பத்தாறு மெய்களால் ஏற்படும் காரிய வருத்தம் என்னும் உபாதிகள் நீங்கும். நீங்கவே சிறப்பு நனவாய் மிகுந்த கனவின்கண் நிகழும் நனவும் உண்டாம். அதுபோல் ஆறாறு நீங்கிய உறக்கம் வந்துறும். அவ் உறக்கமும் எய்தாத நிலைபெற்ற பேறாகிய திருவடியின் கண் சார்ந்து தொம்பதப் பொருளாகிய ஆருயிர் இன்புறும். பேசுமிடத்து இதுவே திருவடிப் பேறாகிய நிலம் என்ப. (பேறா நிலம் - முத்தி.)

2503. அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் சிவமாய் வருமுப் பதத்துச்
சிகாரம் சிவமே வகாரம் பரமே
யகாரம் உயிரென்று அறையலும் ஆமே.

பொருள் : உயிரெனக் குறிப்பதாய உடல்மெய் இருபத்து நான்கும் அகாரமாகும். பரமெனக் குறிப்பதாகிய உணர்த்து (சிவ) மெய் ஐந்தும் உகாரமாகும். மலமெனக் குறிப்பதாய உணர்வு மெய் ஏழும் மகாரமாகும். இம் முப்பத்தாறு மெய்களும் சிவரம் சிவமாகிய உயிர்க்குயிராய் வகரம் சிவபெருமானின் திருமேனியாய் யகரம் திருவருளின் கைப்படும் உயிராய்த் திகழும் என்க.

2504. உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று
அயிர்ப்புஅறும் காரணோ பாதி விதிரேகத்து
உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி
வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே.

பொருள் : உயிர்க்குயிராக நீக்கமற நிறைந்து அழிவல்லாது சோர்வினை நீக்கும் காரண உபாதிகள் உயிரின் பக்குவ நிலையில் உடனாய் நிற்கும் இறைவன் செய்யும் கருணையால் அல்லாமல் உயிர்களுக்கு நடுக்கத்தினைச் செய்யும் ஆணவத்தை நீக்குவது இயலாது. (அயிர்ப்பு - அயர்ப்பு - மயக்கம். உபமிதத்தல் - கருணைபுரிதல்.)

2505. காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு
காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொற்பதப்
பாரறும் பாழில் பராபரத் தானே.

பொருள் : காரிய உபாதி ஏழில் ஆணவ மலக் குற்றத்தால் பசுத் தன்மையுடைய சீவன் மயங்கி நிற்கும். காரணோபாதியாகிய ஏழில், சீவன் ஒளியை அறிவதில் மேலான சிவன் கலந்து நிற்கும். காரியமாகவும் காரணமாகவும் உள்ள இவை கற்பனை யாகும். அசிபதப் பொருளை உணர்ந்து அனுபவிக்கும்போது அது நீங்கினபாழில் மேலான பரன் உள்ளது (கடும்பசு - ஆணவத்தால் மோகத்தில் பற்றுள்ள சீவன். சொற்பதம் - அசிபதம்.)

29. உபசாந்தம்

(உபசாந்தம் - விருப்பு வெறுப்பு அற்றிருத்தல்.)

2506. முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்தத் தனதுப சாந்தமே.

பொருள் : சிவஞானமே வீடு பேறாகிய முத்தி அடைவதற்கு வாயிலாகும். சிவனிடத்தில் தன் முனைப்பின்றி அவனது திருவடிகளைப் பொருந்தி யிருத்தலே பத்தி செய்யும் வழியாகும். சிவத்தைப் பொருந்திச் சிவமாதலே எண்சித்தி பெறுவதற்கு வழியாகும். ஆன்மா விருப்பு வெறுப்பின்றி அடங்கி இருத்தலே சத்தியை அடைவதற்குரிய வழியாகும்.

2507. காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனைப் பற்றறப்
பாரண வும்உப சாந்தப் பரிசிதே.

பொருள் : காரிய வருத்தம் ஏழும் தூவா மாயையினுள் ஒடுங்கும். காரண வருத்தம் ஏழும் தூமாயையின்கண் ஒடுங்கும். காரிய காரண வருத்தங்களின் வாதனைப் பற்றாகிய பசையறத் திருவருள் பெருமை வந்து தலைப்படும். அது தலைப்படுதலே ஒடுக்க மென்னும் உபசாந்தமாகும். இவ் விளக்கமே அதன் பரிசாகும். (பாரணவும் - பெருமை பொருந்தும்)

2508. அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி
மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத்
தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே.

பொருள் : ஒடுக்கச் செயலறல் ஆகிய துரியமே ஆவித் தூய்மை யாகும். பொருந்திய நனவினில் அப்பால் சிவனருள் இன்பமாகும். நிலை பெற்ற ஆவிக் காட்சியாவது சிவபெருமானின் திருவடியுணர்வில் கூடுவதாகும். அவ் வுணர்வின்கண் ஒடுங்கி நிற்பது உபசாந்தமாகும்.

2509. ஆறாது அமைந்துஆண வத்தையுள் நீக்குதல்
பேறான தன்னை அறிதல்பின் தீர்சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே.

பொருள் : ஆன்மா முப்பத்தாறு தத்துவங்களது சேர்க்கையால் ஆணவமல பந்தத்தை நீக்கிக் கொள்ளுதல், கிடைத்தற்கரிய பேறான தனது இயல்பான சொரூபத்தை அறிதல், தன் உண்மை அறிந்தபின் தத்துவங்களின் நீங்கித் தூய்மை அடைதல், அளவிட்டுக் கூறமுடியாத சுகநிலை பெறல். ஒளிக்கெல்லாம் ஒளியினை நல்கும் சிவனிடம் அடங்கி நிற்றல் ஆகியவை தத்துவங்களின் மாறுபட்ட உபசாந்த மாகும். (குருபரன் - பேரொளிச் சிவன். வியாத்தம் - அடக்கம்.)

2510. வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப்போய்
ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத்
தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே
ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே.

பொருள் : தனக்குக் கிடைத்த உபசாந்தம் அமையச் சென்று, பொருந்திய சிவமாக ஆதலின் அச் சிவானந்தத்தில் அழுந்தி அந்நினைவு நீங்குதலும் மவுன நிலையாகிய சுக அனுபத்தோடு நின்று அதனையும் தீர்தல் என்பது உபசாந்த நிலை அமைவதற்கு வேண்டிய பத்துப் படிகளாகும். ஆணவம் அழிதல் முதலாக ஆனந்தத்தை ஒழிதல் ஈறாக உற்றவை உபசாந்தப் படி நிலைகளாகும்.

2511. பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த்
திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று
உரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன்
கரைகண் டானுரை அற்ற கணக்கிலே.

பொருள் : பரை ஒளியில் வியாபகத்தைப் பெற்று, பரத்துடன் பிரிப்பின்றி திரையற்ற ஆழ்கடல் நீரை ஒத்து நின்று, குருவின் உபதேசத்தை உணர்ந்து சிவானந்தத்தை அனுபவிக்கும் ஆன்மா பேச்சற்ற பேரானந்தத்தை அடைந்து பிறிவிக் கடலை நீந்தினவன் ஆவான். உபசாந்த நிலையில் ஆன்மா பெறும் அனுபவம் கூறியவாறு :

30. புரங்கூறாமை

(புறங்கூறாமையாவது புறத்தில் சென்று கூறாமை. அஃதாவது புறத்தில் பெருமையைக் கூறாமல் அகத்தில் அருமையைக் காணவேண்டும் என்பது. உபசாந்தம் பெற்றபின் புறம் செல்லல் கூடாது என்பது.)

2512. பிறையுள் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்
நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே.

பொருள் : சந்திரனில் காணப்பெறும் முயல்போன்ற கறையை எய்யும் பொருட்டு மணிகட்டிய வாளைக் கொண்டு செல்பவர்போல் திருநீலகண்டனைக் காண மாட்டாதவர் உப சாந்தநிலையை அறிவோம் என்று கூறித் திரிவர். இவர் வீண் ஆரவாரம் செய்பவரே யன்றி அகத்திலே அறியாதவர் ஆவர்.

2513. கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்
கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க
பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே
அருந்தா அலைகடல் ஆறுசென் றாலே.

பொருள் : வலிய தாளையுடைய கருடன் விசும்பு ஆறாகப் பறந்து கொண்டிருக்கிறது. ஆனால் மிகவும் ஆழமுள்ள புற்றில் வாழும் பாம்பு புடைபெயராது மூச்சு மடங்கி ஒடுங்கிக் கிடக்கின்றது. அதுபோல் நெஞ்சமே நீயும் அடங்கி நிற்கும் வழியை அருளால் அறிந்து அடங்குதல் வேண்டும். அம் முறையினை ஒரு சிறிதும் உணராமல் உணர்ந்தாரைப் போன்று நெஞ்சமே வீண்பெருமை பேசுகின்றாய். அதனால் ஆம்பயன் ஏதும் இன்று. ஆறு அலைகடலிற் சென்று ஆண்டே பிரித்தறிய வாராமல் அடங்கியிருப்பதுபோல அடங்கியிருப்பாயாக.

2514. கருதலர் மாளக் கருவாயில் நின்ற
பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை
மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்
தருவலர் கேட்ட தனியும்ப ராமே.

பொருள் : பகைவர் இறந் தொழிய போர்முனையில் நிலைபெற்ற போரைச் செய்வது அற்ப அறிவுடையோர் செய்யும் ஆண்மைத் திறனாகும். உபசாந்த நிலையில் பொருந்துதலை உடையவர் செய்யும் தவம் கைகூடினால் மக்கள் விரும்பிக் கேட்டவற்றை அளிக்கும் ஒப்பற்ற தேவராவர். (கருவாய் - போர்க்களம். மருவலர் அடங்க வல்லவர். தருவலர் - தர வல்லவர்.)

2515. பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும்
இணங்கிஎம் ஈசனே ஈசன்என்று உன்னில்
கணம்பதி னெட்டும் கழலடி காண
வணங்கெழு நாடிஅங்கு அன்புற லாமே.

பொருள் : சிவத்தை தவிர மற்றைய தேவர்கள்பால் பற்றுக் கொண்டு மாறுபட்ட கருத்தை அடையாதீர். எல்லா உலகங்களுக்கும் அவனே ஒப்புயர்வற்ற தனபி பெருங்கடவுள் என்று நினைத்து வழிபட்டால் பதினெண் கணத்த வரும் உமது அழகிய அடியைக் காண வணங்கி எழுவார்கள். அவ்வாறு இறைவனை நாடி இன்புறலாம்.

2516. என்னிலும் என்னுயி ராய இறைவனைப்
பொன்னிலும் மாமணி யாய புனிதனை
மின்னிய எவ்வுயி ராய விகிர்தனை
உன்னிலும் உன்னும் உறும்வகை யாமே.

பொருள் : என்னைக் காட்டிலும் எனக்கு இனிமை பயக்கும் இறைவனை, பொன்னைக் காட்டிலும் பிரகாசமுடைய தூய்மையனை, விளங்குகின்ற எல்லா உயிர்க்கும் உயிராயுள்ள விகிர்தனைப் பொருந்துமாற்றால் மனத்தைத் திருவடியில் பதித்து நினையுங்கள்.

2517. நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும்
வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுவத்து
ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே.

பொருள் : நிற்கும்போதும் உட்கார்ந்திருக்கும்போது படுத்துள்ள போதும் மல மில்லாச் சிவத்தைப் பொருந்தும் வகைகளில் வாயால் கூறுவாராகிலும், ஐம்புல ஆசைகளைக் கெடுத்து அவற்றினை ஒவ்வொன்றாய் அறியும் தன்மையைப் போக்கி, சிவத்தோடு உண்மையாகவே பொருந்தி ஐம்புல அறிவையும் ஒரு சேரப் பெறும் தன்மையைப் பெறுவீராக.

2518. நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும்
எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப்
பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை
விண்அறி வாளர் விரும்புகின் றாரே.

பொருள் : சீவர்களது உணர்வுக்கு உணர்வாயும் எல்லா உலகமாயும் ஏழ் உலகத்தவரும் எண்ணத்தகுந்த அறிவாகவுள்ள எனது பிரானும் தகுதி யுடையோரை அறிபவனும் ஆகிய இறைவனை, தியானத்தில் பொருந்தி யிருக்கும் ஞானியரை, வானுலகவாசிகள் உய்தி பெறுவதற்காக விரும்புகின்றார்கள்.

2519. விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னைக்
கண்ணற வுள்ளே கருதிடின் காலையில்
எண்உற வாகமுப் போதும் இயற்றிநீ
பண்ணிடில் தன்மை பராபர னாமே.

பொருள் : ஆகாய மாண்டல வாசிகளாலும் புறத்தே அறியமுடியாத பெருமானை, காலை வேளையில் கண் மலரால் புறத்தே காணாமல் அகத்தே பார்வையைச் செலுத்திக் கண்டு, எண்ணத் தகுந்த தொடர்பாக மூன்று வேளைகளிலும் இச்சாதனையை நீ செய்துவந்தால் மேலான பரனாந் தன்மை பெறுவாய்.

2520. ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்
பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன்
கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத போது புனைபுக ழானே.

பொருள் : சிவபெருமான் தன்னை ஒப்பாரின்றி ஏழ் உலகங்களிலும் வியாபித்துள்ளவன். அவனுடைய திருவடியைத் தஞ்சமாகக் கொண்ட பின்பு பேரருளை அளித்த பெருமை மிக்க வள்ளலுமாவாள். மாறுபாடில்லாத மனத்தை உடையவரது அறிவினுள் விளங்குபவன். வாடாத சகஸ்ரதள மலரைப் பொருந்தி நிற்கும் புகழை உடையவன் ஆவான். (பொன்றாத போது - வாடாத மலர் உள்ளத்தாமரை எனினுமாம்.)

2521. போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடி
ஏற்றியே தென்றும் எறிமணி தான்அகக்
காற்றின் விளக்கது காயம் மயக்குறும்
ஆற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.

பொருள் : எந்தையாகிய சிவபெருமானின் பொன்னான திருவடியைப் போற்றி என்று வழுத்தினேன். பின்பு திருவடியினை ஏற்றுதலாகிய பரவுதலைச் செய்தேன். செய்யவே அகத்தே ஓர் ஓசை உண்டாயிற்று. அவ்ஓசை உயிர்ப்புப் பயிற்சியால் அகத்துத் தொடர்ந்து எழும் அடிக்கும் மணியோசையாகும். அகவிளக்காய்த் தோன்றும் அவ்ஓசை உடம்பு எங்கணும் கலந்து நிற்கும். அத் தன்மையினையும் அதனால் விளங்கும் அருளாற்றலையும் அந்நாள் கண்டேன். (போற்றி - காத்தருள்வாயாக. இகர ஈற்று வியங்கோள்.)

2522. நேடிக்கொண்டு என்உள்ளே நேர்தரு நந்தியை
ஊடுபுக்கு ஆரும் உணர்ந்தறி வார்இல்லை
கூடுபுக்கு ஏறுலுற் றேன்அவன் கோலம்கண்டு
மூடிக்கண் டேன்உலகு ஏழும்கண் டேனே.

பொருள் : என்னுடைய அகத் தாமரையில் நான் இறைவனைத் தேடி அவன் அங்கு எழுந்தருளி யிருப்பதைக் கண்டு கொண்டேன். அவ்விதம் உடலில் விளங்கும் அவனை உட்புகுந்து காண்பார் இல்லை. எலும்புக் கூட்டைத் தாங்கி நிற்கும் பிரம தண்டத்தின் வழியாக உச்சித் தொளையை அடைந்தேன். அவனது கோலத்தைக் காண்ணை மூடிக் கண்டேன். அப்பொழுது உலகப் பொருள்கள் யாவும் கண்டேன்.

2523. ஆன புகழும் அமைந்ததோர் ஞானமும்
தேனும் இருக்கும் சிறுவரை ஒன்றுகண்டு
ஊனம்ஒன்று இன்றி உணர்வுசெய் வார்கட்கு
வானகம் செய்யும் மறவனும் ஆமே.

பொருள் : சிவத்தைப் புகழ்வதால் அமைவதான ஞானமும் சிவானந்தம் தேறலும் இருக்கும் புருவ மத்தியை அறிந்து, தேகத்தைக் கடந்து நிராதரத்தில் நினைவைப் பதித்தவர்க்கு ஆகாயத்தைத் தேகமாக்கும் வீரனும் அங்கு விளங்குவான். சிறுவரை - மேரு என்னும் பொன்மலையாகும். அதுவே புருவநாடு என்ப. புருவ நடுவினை மேரு என்றும், முதுகெலும்பினை மேருத் தண்டம் என்றும் கூறுப. (மேருமறவன் - உருத்திரன்.)

2524. மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்
தூய்மதி யாகும் சுடர்பர மானந்தத்
தாம்மதி யாகச் சகம்உணச் சாந்திபுக்கு
ஆம்மலம் அற்றார் அமைதிபெற் றாரே.

பொருள் : மண்டையின் ஆணைக்கண் விளங்கும் திங்களின் மதியிடத்துத் தாம் அறிவாய் நிலைநின்றவர் அகப்பெருந்தவத்தோராவர். தூயமதியாகத் தம்மதிக்கும் மதிகொடுப்பவன் பேரின்பமான சிவபெருமான் அவன். அவன்மதியே தம்மதியாக உலகினைத் தம் இடத்து இருப்பதாக நுகர் ஒழிவொடுக்கம் புகுந்த நினைவினர் ஒண்மையராவர். ஒழிவு - உபசாந்தம். அவரே மீண்டும் பிறப்புக்கு ஆம் பெருமலம் அற்றோராவர். திருவடிக்கீழ் அமைவுபெற்ற மெய்யன்பருமாவர். (மாமதியாம் - ஆஞ்ஞையிலுள்ள சந்திரனிடத்து உள்ளதாம்.)

2525. பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்டு
இதமுற்ற பாச இருளைத் துரந்து
மதம் அற்று எனதுயான் மாற்றிவிட்டு ஆங்கே
திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே.

பொருள் : சாலோகம் சாமீபம் சாரூபம் என்ற பதிமுத்தி மூன்றையும் குற்றமுடையவை என்று நீக்கி, போகத்தை அளிக்கவல்ல மாயா காரியமான இருளை விட்டு ஆணவமற்று எனது யான் என்னும் புறப்பற்று அகப்பற்று ஆகியவைகளை அறவே நீக்கி, அங்குச் சிவத்துடன் ஒன்றாய் நிலைத்திருப்பவர் சிவசித்த ராவர். (பரமுத்தி - சாயுச்சியம்.)

2526. சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துடன் தோய்ந்தும்தோ யாதவர்
முத்தர்அம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.

பொருள் : செந்தமிழ்சேர் முந்திய சித்தராவர் சிவ பெருமானை அருளால் உணர்விற் கண்டுணர்ந்த ஒண்மையர். அவன் திருவடி நினைவை விட்டு அகலாத சீரினர். தூமாயை தூவா மாயைகளுடன் தோய்ந்திருப்பினும் தாமரை இலை நீர்போல் ஒட்டுப் பற்றின்றி ஒருவனையே எண்ணும் மட்டில் அருள்சேர் திருவினர். திருவடிப் பேற்றினர். ஏனையாரைத் திருவடிப் பேற்றிற்கு ஆளாக்கும் நம்மூலரும் நால்வரும் போன்ற வாயிலினர். குண்டலிக் கண்ணும் அகத் தவத்தால் ஐந்தெழுத்தால் ஓமஞ்செய்யும் தூயர். இவர் அருளோ னாகிய சதாசிவத் தன்மையர் ஆவர். (சித்தர் - சிவத்தைக் கண்டவர். மூலத்துச்சத்தி - குண்டலினி.)

31. அஷ்டதள கமல முக்குண அவத்தை

(அஷ்டதள கமலம் - எட்டு இதழ்த் தாமரை, முக்குணம் - தாமதம், இராசதம், சாத்துவிகம். அவத்தை - நிலை.)

சீவன் சிரசைச் சூழவுள்ள எட்டிதழ்த் தாமரையில் முக்குணத்தால் பெறும் நிலை அஷ்டதள கமல முக்குண அவத்தையாகும்.

2527. உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு
மதிக்கும் குபேரன் வடதிசை ஈசன்
நிதித்துஎண் திசையும் நிறைந்துநின் றாரே.

பொருள் : கவிழ்ந்த சகஸ்ரதளமாகிய எட்டிதழ்த் தாமரையில் சூரியன் உதிக்கின்ற கீழ்த்திசையில் இந்திரனும், தென் கிழக்கு மூலையில் அக்கினியும், தென்திசையில் இயமனும், தென்மேற்குத் திசையில் நிருதியும், மேற்குத் திசையில் வருணனும் வடமேற்குத் திசையில் நல்ல வாயுவும், வடக்குத் திசையில் மதிக்கத்தக்க குபேரனும் வடகிழக்குத் திசையில் ஈசானரும் நியதி செய்யப்பட்டுச் சிரசைச் சூழ வீற்றிருந்தனர்.

2528. ஒருங்கிய பூவும்ஓர் எட்டித ழாகும்
மருங்கிய மாயா புரியதன் உள்ளே
சுருங்கிய தண்டின் சுழுமுனையின் ஊடே
ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.

பொருள் : நெஞ்சத் தாமரையானது சேர்ந்து காணப்படும் எட்டிதழ்த் தாமரையன்று இயம்பப்படும். பெருமைமிக்கதாகிய மாயாபுரி என்னும் இவ்வுடம்பகத்து முதுகந்தண்டாகிய சுழுமுனை நாடி மிகவும் நுண்ணியதாய் அமைந்துள்ளது. அத்தண்டினூடே அடங்கிய அறிவுப் பேரொளியினை அகத் தவத்தால், அருளால் ஆய்ந் தெழுங்கள். அதுவே உய்யும் வழியாகும். இனி அப்பேரொளிப் பிழம்பினை நினைந்து உய்ந்து ஆய்ந்து எழுங்கள் என்றலும் ஒன்று. (தண்டு வீணாத் தண்டு. அதாவது முதுகுத்தண்டு எலும்பு. சகஸ்ரதளத்தைச் சிலர் எட்டிதழ் தாமரை என்பர்.)

2529.மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர்
எட்டலர் உள்ளே இரண்டலர் உள்ளுரின்
பட்டலர் கின்றேதார் பண்டம் கனாவே.

பொருள் : நெஞ்சத் தாமரையின் விரிவினைப் பகுக்குங்கால் மூன்றாகப் பகுக்கப்படும். அவை முறையே இதழ், கொட்டை, கொட்டைநடு என்ப. கொட்டை - கர்ணிக்கை. இம்மூன்றினும் விட்டு நீங்காது தொன்மை உருவாக விளங்கும் மன்னும் ஆவி நிறைந்து நிற்கும். உலகமே உருவமாகக் கொண்டு திகழும் இறைவன் சோதி விரிசுடர் எனப்படுவன். அவனை விராட் எனவும் அழைப்பர். எட்டிதழ்த் தாமரையாகிய இதன்கண் கொட்டையும் நடுவும் அகமுள்ளனவாகும். அவ்விரண்டனுள்ளில் விளங்குவது ஆவியாகும்.

2530. ஆறே அருவி அகம்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.

பொருள் : அகத்தின்கண் அமுதப் பெருக்காகிய சிற்றாறு ஒன்று உண்டு. அவ்வாறு அருளால் போய் நிறையும் நெஞ்சம் குளமும் ஒன்றுண்டு. அங்குத் திகழ்வது அளவிடப்படாது சிவநிலையாகும். அதன் இயல்பும் நனிமிகு நுண்மையாகும். அங்குக் குவிந்த முலையினையுடைய அருள் அன்னையை ஒரு கூறாகக் கொண்டு சிறப்பாக வீற்றிருப்பவன் சிவபெருமான். அவனே தவலில் விழுப்பொருள் ஆவான். (தவலில் - கெடுதல் இல்லாத)

2531. திகையெட்டும் தேரெட்டும் தேவதை எட்டும்
வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
வகையெட்டும் நான்கும்மற் றாங்கே நிறைந்து
முகையெட்டும் உள்நின்று உதிக்கின்ற வாறே.

பொருள் : எட்டுத் திசைகளும், எட்டுத் திக்குப் பாலகர்களும் அத்தேவதைகளின் வாகனங்களும் அட் மூர்த்தமும் ஆக நின்ற ஆதிப் பிரானை, கன்மேந்திரியம் ஐந்து ஞானேந்திரியம் ஐந்து மனம் புத்தியோடு பன்னிரண்டும் பொருந்தி நிற்கில், கவிழ்ந்துள்ள எட்டிதழ்களை யுடைய தாமரை உள்ளிருந்து வெளிமுகமாய் மலர்ந்து விளங்கும்.

2532. ஏழும் சகளம் இயம்பும் கடந்தெட்டில்
வாழும் பரம்என்று அதுகடந்து ஒன்பதில்
ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில்
தாழ்வது வான தனித்தன்மை தானே.

பொருள் : எட்டிதழ்த் தாமரையில் கிழக்கு முதல் வடக்கு முடியவுள்ள ஏழு திக்குகளும் சீவன் பொருந்தும் உருவ நிலைகளாகும். பரம் என்ற நிலை எட்டாவதான ஈசான திக்கில் உள்ளது. நடுவாகிய ஒன்பதில் தத்துவங்களை முடிவு செய்யும் பரம அபரமான சதாசிவம் உள்ளது. மேல் நோக்கி நிமிர்வதில் பத்தாவதான நிலையில் ஆணவமற்ற ஆன்மா சிவத்துடன் பொருந்தி யிருக்கும் சிறப்பான நிலையாகும்.

2533. பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற ஊழிகள்
செல்லூழி அண்டத்துச் சென்றஅவ் ஊழியுள்
அவ்வூழி உச்சியுள் ஒன்றில் பகவனே.

பொருள் : உலகினுக்குப் பல ஊழிகளை அமைத்து வளர்ச்சியுறச் செய்பவன் சிவன். அவனே பகலோன் என்றும், இயைவன் என்றும் அழைக்கப்படுவன். நல்ல ஊழிகள் ஐந்தென்ப. அவை நீக்கல் முதலிய ஐவகைக் கலைகளில் நிகழும் ஐவகை ஒழுக்கமும் என்ப. இவை அண்டத்துச் செல்லும் ஊழிகளாகும். அவ்வூழியுள் ஒன்றுபவனும் சிவனே, ஊழி உச்சியினுள் ஒன்றுபவனும் சிவனே.

2534. புரியும் உலகினில் பூண்டஎட்டு ஆனை
திரியும் களிற்றொடு தேவர் குழாமும்
எரியும் மழையும் இயங்கும் வெளியும்
பரியும் ஆகாசத்தில் பற்றது தானே.

பொருள் : திருவருளால் உண்மை புரியும் உலகத்தினிடத்து எண்பேருருவாய்த் திகழ்பவன் சிவன். சுற்றித் திரியும் களிறுகளும் தேவர் கூட்டமும் தீயும் மழையும் இயங்குதற்கு வழியாகவுள்ள வெளியும் இவையனைத்திற்கும் இடம் தரும் அறிவுப் பெருவெளியும் அருளால் நோக்குவார்க்கு அறிவுப் பெருவெளியைப் பற்றாகக் கொண்டு நிகழ்வது புலனாகும். (எட்டானை - எண்வகை வடிவு உடையவனை.)

2535. ஊறும் அருவி உயர்வரை உச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
பூவின்றிச் சூடான் புரிசடை யோனே.

பொருள் : உயர்வரை உச்சியென்பது ஆணையிடமாகும். அதுவே நெற்றிப் புருவமாகும். அங்கு ஆறு முதலிய தோற்றரவு இல்லாமல் இடையறாது நீர் நிரப்பும் குளம் ஒன்றுண்டு. உலகியல் தாமரை சேற்றில் பூப்பது. ஈண்டுப் பேசப்படும் ஆயிர இதழ்த் தாமரை அருள் வெளியிற் பூப்பது. அதனால் அது சேற்றில் பூவாததாகும். மாலையில் தாங்குருவே போன்று காணப்படும் பின்னற் சடையினையுடைய சிவபெருமான் பேருவகை யோடும் இப்பூ அல்லாமல் வேறு பூச்சூடான் என்ப.

2536. ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வென்றும் இருந்தும் விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திருவுடை யோரே.

பொருள் : ஒன்றும் இரண்டும் ஆகிய மூன்றும் முக்கரணங்களாகும். அவை முறையே உள்ளம் உரை உடலென்ப. இவற்றை மனமொழி மெய்கள் என்ப. இம்மூன்றும் தம் வயப்பட்டு ஒடுங்கிய காலத்து எந்நிலத்து நின்றாலும் இருந்தாலும் புலன் வென்று  இருந்து புகழ்மெய்ப் பொருளை நாடுவர். அவர்கள் சென்றும் இருந்தும் சிவத்திருவுடையாரே யாவர்.

32. நவ அவத்தை நவ அபிமானி

(நவம் - ஒன்பது. அவத்தை - உணர்வு நிலைகள். சீவ சாக்கிரம், சீவ சொப்பணம், சீவ சுழுத்தி. பர சாக்கிரம், பரசொப்பனம், பரசுழுத்தி, சிவ சாக்கிரம், சிவ சொப்பனம், சிவசுழுத்தி ஆகிய ஒன்பதும் சீவனது நவாவத்தைகளாம். நவாவத்தை - நவ+அவத்தை. வடமொழி தீர்க்க சந்தி. நவாபிமானி - நவ+அபிமானி - வடமொழி தீர்க்கசந்தி.)

2537. தொற்பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன்
நற்பத விராட்டன்பொன் கர்ப்பன்அவ் யாகிர்தன்
பிற்பதம் சொல்இதையன் பிரசா பத்தியன்
பொற்புவி சாந்தன் பொருதுஅபி மானியே.

பொருள் : துவம்பத நிலையில் விசுவன், தைசதன், பிராஞ்ஞன் என்றும் நல்ல பதமாகிய தத்பத நிலையில் விராட்டன், இரணியகருப்பன், அவ்யாகிர்தன் என்றும், பிற்பதமாகிய அசிபத நிலையில் இதயன், பிரசாபத்தியன், சாந்தன் என்றும் சீவன் அழைக்கப் பெறுவான்.

2538. நவமாம் அவத்தை நனவாதி பற்றில்
பவமாம் மலம்குணம் பற்றற்று பற்றாத்
தவமான சத்திய ஞானப் பொதுவில்
துவமார் துரியம் சொரூபமது ஆமே.

பொருள் : சீவ பர சிவத்துக்குரிய சாக்கிரமாதி நிலைகள் ஒன்பது வகைப்படுதலால், பிறவிக்குக் காரணமான மலம் குணம் ஆகியவற்றின் பற்றை அறுத்து, பற்றுவதற்கு அருமையான தவத்தால் எய்தும் மாறுதலற்ற அறிவு மயமான ஆகாயத்தில், சீவ சிவ பேதமற்றுத் துரியம் பொருந்தில் அதுவே சீவனின் உண்மை நிலையாகும்.

2539. சிவமான சிந்தையில் சீவன் சிதைய
பவமான மும்மலம் பாறிப் பறிய
நவமான அந்தத்தில் நல்சிவ போதம்
தவமாம் அவையாகித் தான்அல்ல ஆகுமே.

பொருள் : சீவன் சிவனையே நினைந்து கொண்டுள்ளதால் சீவனது தனித்தன்மை அழிந்து, பிறப்புக்குக் காரணமான ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களும் போய் ஒழிய ஒன்பதாகக் குறிப்பிட்ட வகையின் இறுதியில் நல்ல சிவஞானம் தவத்தால் அடையும் பயனாகித் தான் என்பது இல்லாமல் சிவமாக விளங்கும். (பாறுதல் - அழிதல்)

2540. முன்சொன்ன ஒன்பானின் முன்னூறு தத்துவம்
தன்சொல்லில் எண்ணத் தகாஒன்பான் வேறுள
பின்சொல்ல லாகும்இவ் ஈரொன்பான் பேர்த்திட்டுத்
தன்செய்த ஆண்டவன் தான்சிறந் தானே.

பொருள் : முன்னர் சொன்ன துவம்பத நிலையில் விசுவன், தைசதன், பிராஞ்ஞன் என்றும் நல்ல பதமாகிய தத்பத நிலையில் விராட்டன், இரணியகருப்பன், அவ்யாகிர்தன் என்றும், பிற்பதமாகிய அசிபத நிலையில் இதயன், பிரசாபத்தியன், சாந்தன் ஆகிய ஒன்பது நிலையில் பொருந்திய தத்துவம், தன் சொல்லில் அமையாத வேறு ஒன்பது உள்ளன. இவ்வாறு முன்னே சொன்னதும், பின்னே உள்ள யாவர்க்கும் யாவைக்கும் வினைமுதற் காரணமாம் சிவபெருமான் ஆதி பராபரம் ஆவன். அவன் கலப்பால் பராபரையாய், சோதியாய், பரமாய், உயிராய், கலையாய், மாயை இரண்டாய், வீடாய், திருவடிப்பேறாய் விளங்குவன் ஆகிய பதினெட்டு நிலைகளையும் ஒழித்துவிட்டு, சீவர்களைத் தானாகச் செய்யும் சிவன், தனித்துச் சிறந்து விளங்கும்.

2541. உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரான்என்னும் பண்பினை நாடி
அகந்தெம் பிரான்என்பன் அல்லும் பகலும்
இகந்தனை வல்வினை யோடுஅறுத் தானே.

பொருள் : விரும்பப் படுவனவாகிய பதினான்கு வித்தைகளும் உயர்ந்தோர் பொருட்டு உணர்த்தியவன் சிவபிரான் என்றும் அவனது உண்மை நிலையை விரும்பி, இரவும் பகலும் உள்ளத்தில் எம்பிரான் என்று உணர்ந்து நிற்பன். இதனால் வலிய வினைகளோடு மூலத்தையும் அழித்து ஒழித்து அருளினான். அகத்து என்பது அகந்து என மெலிந்து நின்றது. வித்தைகள் பதினான்காவன: (வேதம் நான்கு; அங்கம் ஆறு; உபாங்கம் நான்கு. சிவனே இவற்றைப் பகர்ந்தான் என்பது மரபு.)

2542. நலம்பல காலம் தொகுத்தன நீளம்
குலம்பல வண்ணம் குறிப்பொடும் கூடும்
பலம்பல பன்னிரு கால நினையும்
நிலம்பல ஆறினன் நீர்மையன் தானே.

பொருள் : நீண்ட காலமாக நன்மை அடையத் தொகுத்துக் கூறியவை பல உள. அவற்றுக்குரிய தெய்வமும் பல வகையாகும். அவ்வாறு கூடுதலால் பெறும் பயனும் பலவாம். சொல்லப் பெறும் பகலிலும் இரவிலும் நினைந்து வழிபடுங்கள். அவ்வாறு நினைந்து அவ்வவ் இடங்களில் வழிபடுவார்க்கு அங்கங்கு நின்று அருள் புரியும் தன்மையன் ஆவான் சிவன்.

2543. ஆதி பராபரம் ஆகும் பராபரை
சோதி பரம்உயிர் சொல்லுநல் தத்துவம்
ஓதும் கலைமாயை ஓர்இரண்டு ஓர்முத்தி
நீதியாம் பேதம்ஒன் பானுடன் ஆதியே.

பொருள் : யாவர்க்கும் யாவைக்கும் வினைமுதற் காரணமாம் சிவபெருமான் ஆதி பராபரம் ஆவன். அவன் கலப்பால் பராபரையாய், சோதியாய், பரமாய், உயிராய், கலையாய், மாயை இரண்டாய், வீடாய், திருவடிப்பேறாய் விளங்குவன். இத்தகைய முறைமையுடன் கூடிய ஒன்பது வேறுபாட்டுடன் விளங்கி யருள்பவன் முழு முதல்வனாகிய சிவபெருமானே (ஆதி - முழுமுதல்வன்.)

2544. தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து
வேறா நரக சுவர்க்கமும் மேதினி
ஆறாப் பிறப்பும் உயிர்க்குஅரு ளால்வைத்தான்
வேறாத் தெளியார் வினைஉயிர் பெற்றதே.

பொருள் : உயிர்கள் ஆராய்ச்சி அறிவால் அடைய முடியாத உண்மைப் பொருளை அனுபவத்தில் அடையுமாறு செய்து, வேறாக நரகமும் சுவர்க்கமும் பூமியில் பிறப்பும் உயிர்களுக்கு அருள் காரணமாக அமைத்து வைத்தான். இவ்வுண்மையை உணராதார் வினையால் பிறப்பை அடைகின்ற உயிராகவே இருப்பர்.

2545. ஒன்பான் அவத்தையும் ஒன்பான் அபிமானி
நன்பால் பயிலும் நவதத் துவமாதி
ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
செம்பால் சிவமாதல் சித்தாந்த சித்தியே.

பொருள் : ஒன்பது விதமான அவத்தைகளில் சீவன் அபிமானித்து நின்று, அவ் ஒன்பது நிலைகளிலும் பொருந்தி நிற்கும். இவ் ஒன்பதைக் கடந்து சீவதுரியம், பரதுரியம் சிவதுரியங்களில் சிவத்தைப் பொருந்த செம்பொருளான சிவமாதல் சித்தாந்தத்தால் அடையும் செந்நெறியாகும். (அபிமானி - அதிதேவதை. முத்துரியம்: சீவ, பர, சிவ துரியங்கள். செம்பாற் சிவம் - செம்மையுடைய சிவம்.)

33. சுத்தா சுத்தம்

(சுத்தம் - தூய்மை; அசுத்தம் - தூய்மையின்மை. சுத்தாசுத்தமாவது அகத் தூய்மையும் அகத் தூய்மையின்மையுமாம். சுத்த+அசுத்தம்=சுத்தாசுத்தம் - வடமொழி தீர்க்கசந்தி.)

2546. நாசி நுனியினின் நான்குமூ விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை அம்மறை
கூசி இருக்கும் குணம்அது வாமே.

பொருள் : நாசி நுனியினின்றும் புறப்பட்டு வெளிப்போதரும் உயிர்ப்பு பன்னிரண்டு விரல் அளவு வரையில் ஓடும். அங்ஙனம் ஓடும் அவ் உயிர்ப்பின் இறுதிக்கண் விளங்கி அருள்பவன் சிவபெருமான். அஃது அவன் இருப்பிடம் என்னும் உண்மையை யாரும் அறியார். அங்ஙனம் இருப்பதாகப் பெருமறை பேசியிருக்கும் எனினும் அறுதியிட்டுக் கூற நாணியிருக்கின்றது. இதுவே அம்மறையின் குணமாகும்.

2547. கருமங்கள் ஒன்று கருதும் கருமத்து
உரிமையும் கன்மமும் முன்னும் பிறவிக்
கருவினை யாவது கண்டகன்று அன்பில்
புரிவன கன்மக் கயத்துள் புகுமே.

பொருள் : உயிர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் செய்பவனின் கருத்தையும் உரிமையையும் செய்வதையும் பொறுத்து அமைவதாய் உள்ளது. இவ்விதம் செய்வதால் பிறவிக்குக் காரணமான வினையாய் அமைவதை அறிந்து உரிமை கொண்டாடாமல் நீங்கி அன்பினால் செய்வன உயிர்களுக்குரிய கன்மத்தைத் தேய்ப்பதாகும்.

2548. மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லார்கட்குக்
காயமும் இல்லைக் கருத்தில்லை தானே.

பொருள் : மாயையாகிய திரைசீவர்களை மறைக்க மறைந்துள்ள ஈஸ்வரன், அம்மாயை யாகிய திரை அகன்ற போது அப்பொருளான ஈஸ்வரன் வெளிப்படும். மாயை நீங்கும் படி அப்பொருளில் மறையவல்ல உத்தம அதிகாரிகளுக்கு உடலும் இல்லை; மனமும் இல்லை என்பதாம்.

2549. மோழை யடைந்து முழைதிறந்து உள்புக்குக்
கோழை அடைக்கின்ற அண்ணல் குறிப்பினில்
ஆழ அடைத்தங்கு அனலில் புறஞ்செய்து
தாழ அடைப்பது தன்வலி யாமே.

பொருள் : தியானத்தினால் புருவமத்தியை யடைந்து, கபால வழியைத் திறந்து அதனுள் புகுந்து, கோழை வந்து அடைக்கின்ற இடத்தில் அண்ணல் ஒளி காட்டும் குறிப்பினில், கீழ்ப் போதலின்றி அடைத்து அங்கு உண்டாகும் அக்கினி கலையைப் பிரகாசப்படுத்தும் முறையில் மனம் தாழ்வான மாயைவழிச் செல்லாமல் நிறுத்துவதே தன்னுடைய சாதனா பலமாகும். (மோழை - புருவநடு.)

2550. காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேயென்றும் தேடித் திரிபவர்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.

பொருள் : உடலில் இருந்து கொண்டு சூக்கும தேகத்தோடு உறவு செய்து வைப்பவனை உடலின்கண் அக்கினி கலையில் விளங்கும் சிவத்தை, தேசங்களில் சென்று புறத்தே வழிபாடு செய்பவர் உடலில் சிவம் விளங்குவதை அறியாதவராவர்.

2551. ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூச மாம்இடம் ஆரும் அறிகிலார்
ஆசூச மாம்இடம் ஆரும் அறிந்தபின்
ஆசூச மானிடம் ஆசூச மாமே.

பொருள் : ஆசூசமாகிய தீட்டுத் தீட்டு என்று செப்புவர் அதன் உண்மை உயர்வறியா எண்மையர். அத்தீட்டு உண்டாகும் இடத்தின் ஒண்மையினை உணரார். அது கருப்பையின்கண் உண்டாவதாகும். அதனை அறிந்தபின் அதுவே திருவடிப்பேற்றுக்கு நேர்வாயிலாக வகுத்த மானிடப் பிறவியின் உடம்புக்குக் காரணமுதலாகும் என்னும் உண்மை புலனாகும். (ஆசூசம் - தீண்டல், சூதகம். ஆமிடம் - உண்டாகும் இடம்.)

2552. ஆசூசம் இல்லை அருநிய மத்தருக்கு
ஆசூசம் இல்லை அரனைஅர்ச் சிப்பவர்க்கு
ஆசூசம் இல்லையாம் அங்கி வளர்ப்போருக்கு
ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே.

பொருள் : தத்துவ ஞானத்தால் தன்னை உணர்ந்தவருக்கு அசுத்தம் என்பது இல்லை. எல்லாத் தத்துவங்களையும் சங்கரிக்கும் அரனை வணங்குவார்க்கு அசுத்தம் இல்லை. மூலாக்கினியைத் தூண்டி ஒளிபெறச் செய்யும் அக்கினிகாரியம் செய்வார்க்கும் அசுத்தம் இல்லை. மேலான வேதத்தை உணர்ந்த ஞானிக்கு அசுத்தம் என்பதே இல்லை.

2553. வழிபட்டு நின்று வணங்கும் அவர்க்குச்
சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட் டவர்க்கன்றிக் காணஒண் ணாதே.

பொருள் : அரனை வழிபாடு செய்து வணங்குவார்க்கு, உச்சிக்குழிக்கு மேலுள்ள ஊர்த்துவ சகஸ்ரதளம் சிறப்புற அமைந்து ஒளிபெருகி நிற்பதில் அகத்தூய்மை தொடங்கும். குழியில்பட்டு விந்து நீக்கம் செய்பவர் ஆதார நீராதார யோகங்களால் உணர்த்தும் குறிகளைப் பொருந்தார். வீணாத்தண்டினைப் பொருந்தியுள்ள அதோ முகத்தை ஊர்த்துவ முகமாக்கினவர்க்கின்றிச் சிவம் காணப்படாததாகும். (சுழி - உச்சிக்குழி. கழி - வீணாத்தண்டம்.)

2554. தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும்
தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை
தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத்
தூய்மணி தூயனல் தூயவும் ஆமே.

பொருள் : தூய்மணியாகிய செம்மணி சிவபெருமான், தூய அனல் புறத்தனலுக்கு முதலாய் அகத்தனலாய் நிற்கும் ஒளி என்னும் பூத முதலாம் தன் மாத்திரையாகும். புறத்தனல் தீயாகும். இவ்விரண்டின் முதலாகிய பாய அருளையும் தூய மாமாயையும் அருளால் அறிவார் பலரில்லை. முதல் அவ்விரண்டின் மூலமாகிய அருளையும் தூமாயையையும் அருளால் அறிவார்க்கு அவ்விரண்டும் முறையே நன்மையினாலும் தன்மையினாலும் தூயனவேயாகும். (தூரி - மூலம்).

2555. தூயது வாளா வைத்தது தூநெறி
தூயது வாளா நாதன் திருநாமம்
தூயது வாளா அட்டமா சித்தியும்
தூயது வாளாத் தூயடிச் சொல்லே.

பொருள் : முன்மந்திரத்தில் கூறித் தூய்மையான மணியில் விளங்கும் சிவன் வைத்த தூய்மையான நெறி கரும நிவாரணம் செய்யும் பொருட்டு அமைத்ததாகும். அவ்வாறான மணியைச் செழிப்பிக்க நாதன் திரு நாமமாகிய ஒளி வேண்டும். அம்மணி கருவிகளை ஓயச் செய்து அட்டமா சித்திகளை அளிக்கும். தூய மணி மௌனாட் சரத்தின் பீடமாகும். (வாளா - (1) கருமநிவாரனம். (2) பிரணவஒளி. (3) ஓய்வு (4) மௌனம்.)

2556. பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவர் அன்றிச்
சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்
மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே.

பொருள் : எமது ஐயனாகிய சிவபெருமான் விரும்பப்பெறும் விழுப்பொருளாகவும் புண்ணிய வடிவாகவும் உள்ளவன். அவனது அருளைப் பெறப் போற்றி நிற்கும் அடியவர் அல்லாதவர், சொர்க்கம் நரகம் பூமி எனச் சுழன்று வரும் பிறவித் தளையில் மயங்கின உள்ளம் உடையவராய் அசுத்தமுடையவராவர்.

2557. வினையாம் அசத்து விளைவது உணரார்
வினைஞானம் தன்னில் வீடலும் தேரார்
வினைவிட வீடுஎன்னும் வேதமும் ஓதார்
வினையாளர் மிக்க விளைவுஅறி யாரே.

பொருள் : மயக்கத்தில் உள்ள சீவர்கள் வினையால் அசத்தாகிய மாயை வலுவடைந்து அதன் பயனாக விளையும் துன்பச் சூழலை அறிய மாட்டார்கள். ஞானத்தை உணர்ந்து அதன்வழி நிற்பதில் கொடிய வினை நீங்குதலையும் தெளிந்து அறியமாட்டார். வினைகள் சீவர்களைப் பற்றாமல் நிற்பதில் முத்திநிலை உள்ளது என்று வேதம் கூறும் உண்மையை அறியமாட்டார். தீவினையால் பந்திக்கப்பட்ட சீவர்கள் அதன் காரணத்தையும் அதனால் விளையும் பயனையும் அறியமாட்டார்.

34. மோட்ச நிந்தை

(மோட்ச நிந்தை யாவது, வீடு பேறு இல்லை என்று இகழ்ந்து கூறுதல். இது கூடாது என்க.)

2558. பரகதி உண்டென இல்லையென் போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடு வார்கண்ட தோறும்
துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே.

பொருள் : வீடு பேறு உண்டு என்பதை இல்லை என்று மறுப்போர்கள், நரகத்தை அடைவது உலகவர் அறிவார்கள். மேலும் அவர் வீடுதோறும் சென்று பிச்சை எடுப்பர். அன்றாட உணவுக்காக அவர் குதிரையைப் போலத் தாவிச் சென்று அலையத் தொடங்குவர்.

2559. கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்து
ஆடவல் லார்அவர் பேறிது வாமே.

பொருள் : குரு காட்டிய நெறியில் நின்று இறைவனுடன் ஒன்றுபட மாட்டாதார், இறைவனிடம் நாட்டம் கொள்ளாதவராய் நூல்களிலுள்ள நயத்தினை. அலங்காரமாகப் பேசிக் கொண்டிருப்பர். இறைவன் ஆன்மாக்களுக்குச் செய்த உபகாரத்தை எண்ணிப் பாடவும் மாட்டார். அவ்வாறு பாடி ஆடுபவர் எய்தும் பேறு இவ்வாறு ஆகுமோ? அகாது. (இது ஆமே - இது ஆகுமோ? ஏகாரம் எதிர்மறை - ஆடவல்லார். குரு உபதேசப்படி இறைவனைக் கூடுபவர் என்றபடி.)

2560. புறப்பட்டுப் போகும் புகுதும்என் நெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைத் தெய்வம்என்று எண்ணி
அறப்பட்ட மற்றப் பதியென்று அழைத்தேன்
இறப்பற்றி னேன்இங்கி தென்என்கின் றேனே.

பொருள் : அகத்தே நின்று புறப்பட்டுப் போவதும் வருவதுமாகிய உயிர்ப்பினையும் நாட்டத்தினையும் திருவருளால் முறைப்படுத்தி ஒருமுகப்பட்ட எண்ணத்தால் முழுமுதற் சிவபெருமானை இறையாகிய பதி என்று எண்ணினேன். பற்றற்ற இடத்துப் பற்றற்று நிற்கும் சிவபெருமானைப் பதி என்று அழைத்தேன். சிற்றுணர்வும் சுட்டுணர்வுமாகிய யான், எனது என்னும் செருக்கு இற்றகலச் சிவபெருமான் திருவடியினைப் பற்றினேன். அவனும் இங்குற்றான். இஃது என் என்று அருளுகின்றனன். (இற - சீவபோதம் நீங்க.)

2561. திடரிடை நில்லாத நீர்போல ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்
கடலிடை நில்லாக் கலம்சேரு மாபோல்
அடல்எரி வண்ணனும் அங்குநின் றானே.

பொருள் : மேட்டு நிலத்தில் தங்காத நீரைப்போல, உடம்பினுள் பொருந்தி நில்லாமல் ஓடும் மனத்தில் அருளைக் கூட்டி வைத்து, கடலில் நில்லாமல் கடந்து செல்லும் கப்பல் கரை சேர்வது போல், பிறவிக் கடலில் நில்லாமல் சீவர்களைக் கரை சேர்ப்பதற்குத் தீவண்ணனாகிய சிவன் வெளிப்பட்டு நின்றான். சீவபோதம் கெட்டு நின்ற நிலையில் பிறவிக் கடலைக் கடப்பதற்கு இறைவன் தோணிபோல் உள்ளான்.

2562. தாமரை நூல்போல் தடுப்பார் பரத்தொடும்
போம்வழி வேண்டிப் புறமே உழிதர்வர்
காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள்
தீநெறி செல்வான் திரிகின்ற வாறே.

பொருள் : தாமரைக்கொடி, தடாகத்தைக் கடப்போரைத் தடுப்பது போலப் பரகதி இல்லை என்பார் தடுப்பர். அவர் பரத்தை அடைய வேண்டிய வழி புறத்தே உள்ளது என்று திரிவர். அடைவதற்குரிய வழியைக் காட்டினாலும் அவர்கள் அதனை உணராத மூடர்களாவர். அவர்கள் நன்னெறியை நாடாமல் தீயநெறியை நாடிக் கெடுகின்றனரே! என்னே பேதைமை!

2563. மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்
காடும் மலையும் கழனி கடந்தோறும்
ஊடும் உருவினை உன்னகி லாரே.

பொருள் : அஞ்ஞானத்தினால் மூடுதல் இல்லாமல் இருக்கும் ஞானியர் நந்தியெம் பெருமானைத் தம்முள்ளே நாடி இருப்பர். ஆனால் அஞ்ஞானிகள் காட்டிலும் மலையிலும் மருத நிலத்திலும் ஊடுருவி இருக்கும் ஒப்பற்றவனை நினையாமல் கெடுகின்றனர்.

2564. ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவர் குடக்கும் குணக்கும் குறிவழி
நாவினின் மந்திர மென்று நடுஅங்கி
வேவது செய்து விளங்கிடு வீரே.

பொருள் : இறந்த பிறகு சீவ யாத்திரை தொடங்குவது தெற்கு நோக்கி நரகத்துக்கும் வடக்கு நோக்கிச் சொர்க்கத்துக்கும் ஆகும். ஆனால் அழியாத அமரத்துவம் பெற்றவர் இலட்சியத்தை அடைய கிழக்கு நோக்கி நெற்றிக் கண்ணுக்கும் மேற்கு நோக்கிப் பிடரிக் கண்ணுக்கும் செல்வர். இவ்விரண்டுக்கும் இடையே நாவினுக்கு மேல் மந்திரப் பொருள் உள்ளது என்று நடுவிலுள்ள அக்கினி கலையைப் பிரகாசம் செய்து பொருந்தி விளங்குங்கள்.

2565. மயக்குற நோக்கினும் மாதவம் செய்வார்
தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
சினக்குறப் பேசின தீவினை யாளர்
தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே.

பொருள் : நன்னெறி நான்மை நற்றவமாகிய அழிவில் மாதவம் செய்வார் நன்னெறிக்கண் வந்து கூடுமாறு அருளால் நோக்கினும், தமக்குப் பொருந்துமாறு செவியறிவுறுக்கும் திருஐந்தெழுத்தின் திறத்தினைக் கொள்ளார். அவர் யாரெனின், பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிக்கும் சினமுடன் பேசும் தீவினையாளர். அவர்க்கு நீங்கா உறவாவது வல்வினையாகும். அதனையே எங்கும் தாங்கி நின்றார் ஆவர். (பேசின - உபதேசித்த தாரணை - மந்திரம்.)

35. இலக்கணாத் திரயம்

(லஷணா - இலக்கணை, திரயம் - மூன்று. இலக்கணையாவது ஒரு பொருளின் இலக்கணத்தை மற்றொரு பொருளுக்குத் தந்துரைப்பது. அதுவிட்ட இலக்கணை, விடாத இலக்கணை, விட்டும் விடாத இலக்கணை என மூன்று வகைப்படும். கங்கையில் கிராமம் உள்ளது என்றால் கங்கை என்ற பெயர் கங்கையை விட்டு அதன் கரையைக் குறிப்பது விட்ட இலக்கணை. கறுப்பு நிற்கின்றது, சிவப்பு ஓடுகின்றது என்றால் கறுப்பு சிவப்பு என்னும் பெயர்கள் அந்நிறத்தை விடாமல் அவற்றையுடைய குதிரையையும் சேர்த்துக் குறிப்பதால் விடாத இலக்கணை. அந்தத் தேவதத்தனே இவன் என்றால் தேவதத்தன் என்னும் பெயர் முன்கண்ட காலத்தையும் இடத்தையும் விட்டுத் தேவதத்தனை விடாமல் குறிப்பது விட்டும் விடாத இலக்கணையாகும்.)

2566. விட்ட இலக்கணை தான்போம் வியோமத்துத்
தொட்டு விடாதது உபசாந்தத் தேதொகும்
விட்டு விடாதது மேவும்சத் தாதியில்
சுட்டும் இலக்கணா தீதம் சொரூபமே.

பொருள் : விட்ட இலக்கணை ஆன்மா ஆகாயத்தில் செல்லும் என் பதில் அமைகிறது. விடாத இலக்கணை ஆன்மா உபசாந்தத்தில் பொருந்தும் என்பதில் அமைகிறது. விட்டும் விடாத இலக்கணை ஆன்மா சத்தம் முதலியவற்றைக் கேட்டல் முதலியன செய்யும் என்பதில் அமைகிறது. (இவை மூன்றும் ஆன்மாவில் பொருந்தும் பொது இலக்கணம்). அதன் உண்மை இலக்கணம் இம்மூன்று இலக்கணைக்கும் அப்பாற்பட்ட இலக்கணப் பொருளாய் அமையும்.

(இலக்கணைகளையும் அவை தத்தவ ஆராய்ச்சிக்குப் பயன்படும் முறையையும் கூறியவாறு.)

2567. வில்லின் விசைகாணில் கோத்துஇலக்கு எய்தபின்
கொல்லும் களிறுஐந்தும் கோலொடு சாய்ந்தன
வில்லுள் இருந்து எறிகூறும் ஒருவற்குக்
கல்கலன் என்னக் கதிர்எதி ராமே.

பொருள் : ஓங்கார வில்லும் நீங்கா ஒப்பில் திரு ஐந்தெழுத்து நாணும், பாங்கார் ஆருயிர் அம்புமாகக் கனிந்த திரு அருளால் கோத்துச் சிவனாகிய குறி எய்துமாறு எய்தபின், அஃதாவது ஆருயிரின் முனைப்புத் தன்மை அற்றது என்பதாம். அறவே செயலற்ற நிலையாகிய இல் சமாதி என்ப. அதனுள் இருந்து அறிவுப் பெருந்திருவாம் அருள் ஒளிமிகும். அவ்வுயிர்க்குச் செம்மணி ஒளிபோன்று சிவக்கதிர் உணர்விற்கு உணர்வாய்த் தோன்றியருளி இன்பூட்டும் என்க.

36. தத்துவமசி வாக்கியம்

(தத்துவமசி வாக்கியம் - தத்+துவம்+அசி என்ற மூன்று பதங்களைக் கொண்ட வாக்கியம். நான்கு வேதங்களிலும் நான்கு மகா வாக்கியங்கள் உள. அவற்றுள் இது சாம வேத மகாவாக்கியமாகும். அது நீ ஆகிறாய் என்பது இதன் பொருள். இது குரு சீடனுக்கு முன்னிலையாக உபதேசம் செய்வது.)

2568. சீவ துரியத்துத் தொம்பதம் சீவனார்
தாவு பரதுரி யத்தினில் தற்பதம்
மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பதம்
ஒலி விடும்தத் துவமசி உண்மையே.

பொருள் : சீவன் சீவதுரியத்தில் பொருந்தி, தத்துவங்களை விட்ட நிலை தொம்பதமாகும். அதன் மேலான பரதுரியத்தில் பரத்தோடு பொருந்திய நிலை தற்பதமாகும். இது சிவ துரியத்தில் பொருந்தி யிருப்பது அசி பதமாகிய உண்மை நிலையாம். சீவன் இதில் எல்லாத் தத்துவங்களும் நீங்கித் தத்துவ மசியால் பெறும் உண்மையான பேற்றை அடையும். (சீவன் பரமாய்ச் சிவமாதலே தத்துவமசி உண்மையாம். ஓவி விடும் - விட்டு நீங்கும்.)

2569. ஆறாறு அகன்ற அணுத்தொம் பதம்சுத்தம்
ஈறான தற்பதம் எய்துஉப சாந்தத்துப்
பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
ஈறான தொந்தத் தசிதத்வ மசியே.

பொருள் : அருஞ்சைவர் தத்துவம் ஆறாறும் நாமல்ல நம் உரிமையும் அல்லஎன உணர்ந்து பற்றறல் உண்மை காண் சுத்தமாகும். இந்நிலை தொம்பதச் சுத்தம் என்ப. ஒழி ஒடுக்கத்துத் தற்பத உண்மையாகும். திருவடிப் பேற்றினுக்குரிய ஆருயிர் இவற்றினின்றும் அகன்று சிவகுருவின் அருட்கொடையால் சிறப்பான நீ அது ஆகின்றாய் என்பதே தத்துவமசி என்னும் சொல்லுக்குரிய செம்பொருளாகும். (சீவன் நீங்கி - பசுத்துவம் ஒழிந்து. பிரசாதத்து - குருவின் கருணையினால்.)

2570. ஆகிய அச்சோயம் தேவதத் தன்இடத்து
ஆகிய விட்டு விடாத இலக்கணத்
தார்உப சாந்தமே தொந்தத் தசிஎன்ப
ஆகிய சீவன் பரன்சிவ னாமே.

பொருள் : அவனே இவன் என்னும் தேவதத்தனிடத்து, சொல்லப் பெறுவதாகிய விட்டுவிடாத இலக்கணை, தொந்தத்தசி என்ற முப்பதங்களிலும் உண்மையான சாந்தம் பெற்ற சீவனுக்கும் ஆகும். அவ்வாறாகிய சீவன் பரனாய சிவனாக ஆகும்.

2571. துவந்தத் தசியே தொந்தத் தசியும்
அவைமன்னா வந்து வயத்தேக மான
தவமுறு தத்துவ மசிவே தாந்த
சிவமாம் அதும்சித் தாந்தவே தாந்தமே.

பொருள் : துவந் தத் அசி என்னும் சொல்லே தொந்தத்தசியாம். அவற்றின் பொருள் உண்மைநிலை பெறுதற் பொருட்டு வந்த தன்மையுடையது, இவ்வுடம்பாகும். பெருமை மிக்க தவக்குறிப்பாம் தத்துவ மசி வேதாந்த விளக்கமாகும். சிவய நம என்பது சித்தாந்த விளக்கமாகும். சித்தாந்தம் வேதாந்தம் இரண்டும் செம்பொருளே.

2572. துரியம் அடங்கிய சொலல்றும் பாழை
அரிய பரம்என்பர் ஆகார்இது அன்றென்னார்
உரிய பரம்பர மாம்ஒன்று உதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே.

பொருள் : சீவ துரியத்தில் அடங்கிய சொல்வதற்கு இயலாத சீவப்பாழை, மேலான பரம் என்று கூறுவர் அதன் இயல்பை அறியாதார். இது பரநிலை அன்று என்பதை உணரமாட்டார். பரத்துக்கு மேலான பரமாகிய சிவம் உதிக்கின்றது. பூமி என்பதை யாரே அறியவல்லார்? அறியார் என்றபடி. முத்துரியம் கடந்த நிலையில் விளங்குவது சிவம்.

2573. தொம்பதம் தற்பதம் சொல்லும் அசிபதம்
நம்பிய முத்துரி யத்துமேல் நாடவே
உம்பத மும்பத மாகும் உயிர்பரன்
செம்பொரு ளான சிவம்என லாமே.

பொருள் : தொம்பதம், தற்பதம், சொல்லப்படும் அசிபதம் மேல் ஓதியவாறு சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் என முத்துரியமாகும். பொருந்தும் முப்பதமும் உயிர் அருள் செம்பொருளான சிவம் எனச் சிறப்புறச் சொல்லலும் ஆகும்.

2574. வைத்த துரிய மதில்சொரு பானந்தத்து
உய்த்த பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய்யுணர்வு
வைத்த படியே அடைந்துநின் றானே.

பொருள் : மூவகையான மேலோதி அமைத்த துரியத்தின்கண் உண்மை அறிவின்பமாகிய சொரூப ஆனந்தத்து உய்ப்பது ஓமொழி மறை என்க. அம்மறையினை ஏனைய நினைவுகளை விட்டிடப் பயின்ற உள்ளத்து நிலைநாட்டத் திருவடியுணர்வு கைகூடும். அது கை கூடவே சிவபெருமான் திருவடியின்பம் எய்தும்.

2575. நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்துப்
பினமாம் மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத்
தனதாம் சிவகதி சத்தாதி சாந்தி
மனவா சகங்கெட்ட மன்னனை நாடே

பொருள் : நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் ஐந்தையும் நாதமாகிய ஒலியின் முடியில் தங்க வைத்துவிடுக. அதன்பின் வேறுபாடுற்று நீங்கிய மலத்தையும் வைத்திடுக. அதன்பின்பு உண்மை உணர்தலாகிய சுத்த நிலையதாம் சிவனிலை வாய்க்கும். ஒலியாகிய நாதமுடிவின்கண் செயலற்று ஒடுங்கு நிலை சாந்த நிலையாகும். அந்நிலையின் நின்று மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் சிவபெருமான் ஆதலின் அவனை நாத முடிவில் வைத்து நாடுக. (நாடுதல் - சிந்தித்தல், பினமாம் - பின்னமாகிய, மனவாசகம் - மனமும் வாக்கும்.)

2576. பூரணி யாதது புறம்புஒன்று இலாமையின்
பேரணி யாதது பேச்சுஒன்று இலாமையில்
ஓரணை யாதது ஒன்றும் இலாமையில்
காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே.

பொருள் : இறைவனது எல்லையைக் கடந்து வேறு ஒரு பொருள் இல்லையாதலின் நாமம் இல்லாதது அதற்கு ஒரு செயலும் இல்லையாதலின் அது அகண்டமாய் என்றும் ஒரு தன்மைத்தாய் உள்ளது. அது வாக்கு இறந்து குணம் குறி ஒன்றும் இல்லையாதலின் கருத்தாலும் நெருங்க முடியாதது. உலகக் காட்சிக்கு வேண்டப்படும் காரணம் இல்லாமலே தன்னை விளக்கியருளும் பேரருளை உடையது.

2577. நீஅது ஆனாய் எனநின்ற பேருரை
ஆய்அது நான்ஆனேன் என்னச் சமைந்தறச்
சேய சிவமாக்கும் சீர்நந்தி பேரருள்
ஆய்அது வாய்அனந் தானந்தி ஆகுமே.

பொருள் : நீ அது ஆனாய் என்று குரு உபதேசித்தபடி அமைந்த மகாவாக்கியம் நாடிய அது நான் ஆனேன் என்று சீடன் பாவிக்கப் பாசம் முதலியவை நீங்கி, சிறப்பினையுடைய நந்தியனது அருளால் சேய்மையாகக் கருதப்பட்ட சிவமாக ஆக்கும். அவ்வாறாகி அதுவாய் அழிவினை அடையாத ஆனந்த சொரூபமாகும்.

2578. உயிர்பர மாக உயர்பர சீவன்
அரிய சிவமாக அச்சிவ வேதத்
திரியிலும் சீராம் பராபரன் என்ன
உரிய உரையற்ற ஓம்மய மாமே.

பொருள் : ஆருயிர் திருவருள் நினைவால் பரமாகிய திருவருள் நிலையினை எய்தும். அதன்மேல் சிவபெருமான் நிலையினை எய்தும். திரி போன்று அறிவுக்குப் பற்றுக் கோடாக விளங்கும். வேதத்தின் கண்ணும் சிவபெருமான் நிலையே சிறப்பு நிலையாகும். இந்நிலையினை உரையற்று உரைக்கும் நிலையில் மொழிவண்ணம் என்ப. (வேதத்திரி -அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று வேதங்கள். ஓமயம் - பிரணவ வடிவம்; இருக்கு, யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்கள் என்றும் கூறவர்.)

2579. வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
ஆய்நாசி உச்சி முதல்அவை யாய்நிற்கும்
தாய்நாடி ஆதிவாக் காதி சகலாதி
சேய்நாடு ஒளியெனச் சிவகதி ஐந்துமே.

பொருள் : வாய்நாசி புருவநடு நெற்றிநடு உச்சி ஆகியவற்றில் ஆகி, நாசி முதல் உச்சி முடிய பிரணவம் விளங்கும். தாய் நாடியான சுழுமுனையில் விளங்கும் நாதம் முதலாக சகலநிலையில் விளங்கும் தத்துவங்களும் சீவன் நாடுகின்ற ஒளியாக முன்னர்க் கூறிய ஐந்து இடங்களிலும் பிராண கலை பாய்ந்து சிவகதி அமையும்.

2580. அறிவு அறியாமை இரண்டும் அகற்றிச்
செறிவுஅறி வாய்எங்கும் நின்றசிவனைப்
பிறிவுஅறி யாது பிரான்என்று பேணும்
குறிஅறி யாதவர் கொள்அறி யாரே.

பொருள் : சுட்டி அறியும் அறிவு அறியாமை ஆகிய இரண்டையும் நீக்கி, அறிவுருவாய்ச் செறிந்து எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சிவனை, அவனை விட்டு நீங்காமல் எம் தலைவன் என்று விரும்பிப் போற்றும் குறியினை அறியாதவர், சிவத்தைத் தம்மிடம் பொருந்தும்படி செய்து கொள்ள அறியாதவர் ஆவர்.

2581. அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்பும் கலப்பும்
அறிவான் இருந்தங்கு அறிவிக்கின் அல்லால்
அறிவான் அறிந்த அறிவுஅறி யாமே.

பொருள் : உலகியல் அறிவுடையோர் காண்பன சுகநிலையைத் தரும் அப்புத் தத்துவத்தையும் அக்கினித் தத்துவத்தையும் ஆகும். ஆனால் தத்துவ ஞானிகள் சுகத்தைத் தரும் அப்புத் தத்துவம் எவ்வாறு இவ்வுடலில் கலந்துள்ளது என்பதை அறிவர். எல்லாவற்றையும் அறியும் சிவன் அங்குக் கலந்திருந்து புலப்படுத்தினால் அல்லாமல் சீவர்களது சிற்றறிவால் பேரறிவுப் பொருளை அறியமுடியாது. (அப்பு - நீர், வீரியம். அனல் - அக்கினி, மூலாக்கினி.)

2582. அதீதத்துள் ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மா
மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே.

பொருள் : சுட்டி அறியும் அறிவைக் கடந்து யாவற்றையும் ஒருசேர அறியும் திறமுடையவன் நந்தியெம்பெருமான். சுட்டி அறியும் கருவிகளை இழந்தபோது ஒன்றையும் அறியமாட்டாத அஞ்ஞான நிலையில் உள்ளவன் ஆன்மாவாகும். நிராதாரத்திலுள்ள சந்திர மண்டலம் விளங்கப் பெற்று அஞ்ஞான இருளை விட்ட பெருமை பெற்ற உயிர் இறைவனுடன் ஒன்றாம் சிவநிலையில் பொருந்தும். அந்நிலையில் அவ்வுயிர் பரம் என்ற பேரினைப் பெற்று விளங்கும்.

2583. அடிதொழ முன்னின்று அமரர்கள் அத்தன்
முடிதொழ ஈசனும் முன்னின்று அருளிப்
படிதொழ நீபண்டு பாவித்தது எல்லாம்
கடிதொழக் காண்என்னும் கண்ணுத லானே.

பொருள் : தேவ தேவனாகிய இறைவனது திருவடியைத் தொழ வேண்டி அவன் திருமுன்பு நின்று, முடியால் வணங்க இறைவனும் என்முன்னர் வெளிப்பட்டருளி எனது திருவடியை முறையாகத் தொழவேண்டி நீ பழமையில் நான் அது ஆனேன் எனப் பாவித்தது எல்லாம், சிறப்பாக இப்போது அமைவதை நீ காண்பாயாக என்று அருளியவன், நெற்றிக் கண்ணுடைய பெருமான் ஆவான்.

2584. நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
என்னுளம் வந்துஇவன் என்னடி யார்என்று
பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மலம் ஆகென்று நீக்கவல் லானே.

பொருள் : ஒளியே திருமேனியாக உடையவனும், இயல்பாகவே பாசங்களில் நீங்கியவனும், பிறப்பில்லாதவனுமாகிய இறைவன், எனது உள்ளத்தே எழுந்தருளி வந்து என்னை அவனது அடியவனாக ஏற்றுக் கொண்டு, பொன்னொளி வண்ண இடையவனும் சகல தேவர்களாலும் புகழப் பெறுகின்றவனுமாகிய பெருமான், நீ மலமற்று விளங்குவாய் என்று எனது மலங்களை நீக்கியருளினான்.

2585. துறந்துபுக்கு ஒள்ளொளி சோதியைக் கண்டு
பறந்ததுஎன் உள்ளம் பணிந்து கிடந்தே
மறந்தறி யாஎன்னை வானவர் கோனும்
இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே.

பொருள் : இறைவன் அருளிய பின்னர் நான் எனது பாசக் கூட்டமாகிய தத்துவங்களை விட்டு ஒண்மையான சோதியைக் கண்டு உள்ளமானது உடலைவிட்டு வேறாக எங்கும் செல்லவல்லதாயிற்று. எனினும் பணிவோடு அவனை மறவாதிருந்த என்னை இறைவன், நிலவுலகிலேயே மரணமின்றி நெடுநாள் வாழவைத்தான்.

2586. மெய்வாய்கண் மூக்குச் செவியென்றும் மெய்த்தோற்றத்து
அவ்வாய அந்தக் கரணம் அகிலமும்
எவ்வாய் உயிரும் இறையாட்ட ஆடலால்
கைவாய்இ லாநிறை எங்குமெய் கண்டதே.

பொருள் : மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் உடலில் பொருந்திய ஞானேந்திரியங்கள் ஐந்தும், அவைகளின் வழியான அந்தக்கரணம் நான்கும் பிற தத்துவங்களும் எவ்வகைப்பட்ட சீவ வருக்கமும் இறைவனது சங்கற்பத்தால் இயங்குவதால் அவன் இவற்றை இயக்குவதற்குரிய கையும் சொல்வதற்குரிய வாயும் இன்றி எங்கும் உடலாகவும் எங்கும் அறிவாகவும் நிறைந்த பூரணப் பொருள் என்பது காணப் பெறுகிறது. இறைவன் ஆட்ட உயிர்கள் ஆடுவதால் இறைவனே பூரணப் பொருளாம்.

37. விசுவக் கிராசம்

(விசுவம் - அகிலம், பிரபஞ்சம். கிராசம் - கவளம். விசுவக்கிராசம் - அகிலமும் கவளமாதல். இறைவனது பெரு நிலையில் எல்லாம் விழுங்கப் பெறும்.)

2587. அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரில் குமிழியைக் காணில்
எழுகின்ற தீயில்கர்ப் பூரத்தை யொக்கப்
பொழிகின்ற இவ்வுடல் போம்அப் பரத்தே.

பொருள் : ஆகாயத்தில் தோன்றும் நிழல் உருவம் ஆகாயத்தில் மறைவது போலவும், ஓடும் நீரில் உண்டாகும் நீர்க்குமிழி சிறிதுநேரம் உண்மை போல் விளங்கி அந்நீரில் மறைந்து விடுவது போலவும், உள்ள தன்மையைக் கண்டால், சுடர்விட்டு எழுகின்ற அக்கினியின் முன்னர்க் கர்ப்பூரத்தைப்போல, தூலமாகக் காணப்பெறும் இவ்வுடம்பு காணப்பெறாதாய்ப் பரத்தில் கரைந்து ஒடுங்குவது புலனாம்.

2588. உடலும் உயிரும் ஒழிவற ஒன்றில்
படரும் சிவசத்தி தாமே பரமாம்
உடலைவிட்டு இந்த உயிர்எங்கு மாகிக்
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.

பொருள் : தூல உடல் ஒளிமயமான உயிருடன் பிரிப்பின்றி ஒன்றுபடின், அப்போது அது பரநிலையை அடைந்து சிவசத்தியுடன் ஒன்றுபடும். உடலாகிய சிறை நீக்கப்பட்ட பிறகு உடலில் இருந்த உயிர் சிவம் எங்கும் விளங்குவது போல விளங்கிப் பருப் பூதத்திலும் நுண் பூதத்திலும் கலந்து சிவ வியாபகத்தில் நிற்கும்.

2589. செவிமெய்வாய் கண்மூக்குச் சேர்இந் திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்தும்
குவிவுஒன்று இலாமல் விரிந்து குவிந்து
தவிர்வுஒன்று இலாத சராசரம் தானே.

பொருள் : செவி, மெய், வாய், கண், மூக்கு ஆகிய அறிகருவிகளும் பக்குவப்படாத மனம் முதலிய அந்தக்கரணமும் புருடனும் ஆகி ஐந்தும் பொருந்தி நிலைபெறாமல், உலகமுகமாக விரிந்தும் குவிந்தும் உள்ளமையின் பிரபஞ்சமாகிய அசைவனவும் அசையாதனவும் தவிர்க்க முடியாததாகும்.

2590. பரன்எங்கும் ஆரப் பரந்துற்று நிற்கும்
திரன்எங்கும் ஆகிச் செறிவுஎங்கும் எய்தும்
உரன்எங்கு மாய்உலகு உண்டு உமிழ்க்கும்
வரன்இங்ஙன் கண்டுயான் வாழ்ந்துற்ற வாறே.

பொருள் : முழுமுதற் சிவபெருமான் யாண்டும் நீக்கமறச் செறிந்து நின்றருள்கின்றனன். செறிவு - நிறைவு. அவன் எங்கணும் நிலைபேறாய் உயிர்க்கு உயிராகவும் உறைந்தருள்கின்றனன். மேலும் தான் அழிவின்றி நின்று எங்குமாய் நிலவி, காரிய அழிவுபாடாம் உலகினை ஒடுக்கிப் பின் தோற்றுவித்தும் அருள்கின்றனன். திருவருளால் இவ்வுண்மைகளை உணர்ந்து அவன் திருவடிச் சிறப்புற்று அவன் அருளால் வாழ்ந்தனன் என்க. (நிறைவு வியாபகம். திரன் - உறுதி. வரன் - மேன்மையான செயல்.)

2591. அளந்து துரியத்து அறிவினை வாங்கி
உளம்கொள் பரம்சகம் உண்டது ஒழித்துக்
கிளர்ந்த பரம்சிவம் சேரக் கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே.

பொருள் : தத்துவ விசாரணையால் அளந்தறிந்து சிவ வியாபகமாகிய அகண்ட அறிவு பொருந்தும் துரிய நிலையைப் பற்றி, உள்ளம் நிலைபெறுவதானால் பரம் சகமுகமாய்ச் சென்று உண்ட போகங்களை ஒழித்து, தெளிந்த பரம் சிவத்தைப் பொருந்தும் வகையில் அடைந்தால், நிலைபெற்று விளங்கும் சிதாகாய வடிவினன் ஆவான். (துரியத்து அறிவு - சிவஞானம்.)

2592. இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப்
பரம்பர மான பரமது விட்டே
உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
இருந்தஎன் நந்தி இதயத்து ளானே.

பொருள் : கனலிடைக் காய்ந்த இரும்பு தன்மேல் பட்ட நீரை உள் இழுத்துக் கொள்வதைப் போல, என்னை உள்ளே கொண்டு மிக மேன்மையான பரமானது கீழ் நோக்குவதை விட்டு, வலுப்பெற முப்பாழ் ஒளியையும் விழுங்கி, விளங்கிய எனது நந்தி எம்பெருமான் இதயத்தில் இருக்கின்றான். (முப்பாழ் - பரத்தினுடைய சீவப்பாழ், சத்திப்பாழ், சிவப்பாழ்.)

2593. கரியுண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமும்முன் ஓதும் சிவமும்
அரிய துரியமேல் அகிலமும் எல்லாம்
திரிய விழுங்கும் சிவபெரு மானே.

பொருள் : வேழமாகிய நோய் உண்ட விளாங்கனிபோல் சீவனும் அதன் மேல் நிலையாகிய பரமும் சிவத்தின் முன் ஆகும். சீவன் துரிய நிலையை அடையுமாயின் சீவனது சுபாவத் தன்மை எல்லாம் சிவபெருமான் மாறும்படி செய்து தன்வயப்படுத்திக் கொள்ளும்.

2594. அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன்
தம்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன்
நந்தமை யுண்டுமெய்ஞ் ஞானமே யாந்தத்தே
நந்தி யிருந்தனன் நாமறி யோமே.

பொருள் : சகல தத்துவங்களுக்கும் முதலாகவும் முடிவாகவும் உள்ள பரனாகிய சிவபெருமான் அவரவர்களுடைய மேலான பரம் என்ற நிலையில் பொருந்தியுள்ளான். அவனிடம் அணுகியவர்க்குப் பரத்தின் கீழான தத்துவங்களை உண்டு, காண்பான், காட்சி, காட்சிப் பொருள் ஆகியவற்றின் முடிவில் நந்தியெம் பெருமான் எழுந்தருளியிருக்கும் உண்மையினை நம்மால் அறியமுடியாது. (நேயம் - சிவம். நேயாந்தம் - சிவதுரியம்)

38. வாய்மை

(வாய்மை - சத்தியம். பொய்ப் பொருளிலிருந்து நீங்கி மெய்ப் பொருளைச் சேர்தல் இங்கு பேசப் பெறும்.)

2595. அற்றது உரைக்கில் அருள்உப தேசங்கள்
குற்றம் அறுத்தபொன் போலும் கனலிடை
அற்றற வைத்துஇறை மாற்றற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் ஆகுமே.

பொருள் : அருள் உபதேசங்களால் மலம் நீங்கிய சீவனது இயல்பைக் கூறின், அனலிடையிட்டுக் குற்றத்தைப் போக்கிய பொன்னைப் போல்வதாகும். மலம் நீங்குமாறு இறைவனை மாறுதலின்றி மனத்தில் வைத்து தியானித்தால் இருளை நீக்கிய செழுமையான சுடராக விளங்கும்.

2596. எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு
எல்லாம் அறிந்தும் இலாபம்அங்கு இல்லை
எல்லாம் அறிந்த அறிவினை நான்என்னில்
எல்லாம் அறிந்த இறையென லாமே.

பொருள் : எல்லாவற்றையும் அறிகின்ற சிவமாகிய பேரறிவுப் பொருளை விட்டு, பிற உலகியல் பொருள் எல்லாவற்றையும் அறிந்தும் பயன் ஒன்றும் இல்லை. அவ்வாறு எல்லாவற்றையும் அறியும் பேரறிவுப் பொருளை நான் என்று பாவனைப் பயனால் உணரில் எல்லாம் அறிந்த சிவமாகச் சீவன் ஆகும் என்று கூறலாம்.

2597. தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
முலைநின்ற மாதுஅறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து
கலைநின்ற கள்வனைக் கண்டுகொண் டேனே.

பொருள் : சிரசில் பொருந்தியுள்ள மேருவின்மீது நின்று இடைவிடாது தியானம் செய்து, அருள் சுரக்கின்ற பார்வதி தேவியை ஒரு கூறாக உடைய பரமேஸ்வரனை யானும் ஊன் பொதிந்த தேக தர்மத்தைக் கடந்து, சந்திரகலையில் மறைந்து விளங்கும் பெருமானைக் கண்டு கொண்டேன். (மாதறிமூர்த்தி - அர்த்தநாரி.)

2598. தானே உலகில் தலைவன் எனத்தகும்
தானே உலகுக்குஓர் தத்துவ மாய்நிற்கும்
வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும்
ஊனே உருகிய உள்ளம்ஒன் றாமே.

பொருள் : திருவடியுணர்வு கைவரப்பெற்ற ஒருவர் உலக முதல்வர் எனப்படும் தகுதியினராவர். அவரே உலகினுக்கு மெய்ப்பொருள் உணர்த்தும் மெய்ம்மையரும் ஆவர். செந்தமிழ் மாமறைகள் வானே பொழிவிக்கும் வண்மை வாய்ந்தது. அம்மறையினால் மிகச் செய்யும் திரு ஐந்தெழுத்தைக் கணிப்பதால் ஊனே உருகிய உள்ளத்துள் உறையும் ஒப்பிலாச் சிவபெருமானுடன் ஒன்றாய் ஒடுங்கும்.

2599. அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்
இருளற்ற சிந்தை இறைவனை நாடி
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே.

பொருள் :  சிவபெருமான் திருவருள் கைவரப் பெற்றதன் காரணம் என் கொல் என ஆராயின், திருவருள் விளக்கால் சிந்தை இருள்கின்ற பின் அவ்வுள்ளத்தின்கண் இறைவனை நாடி அதுவே விருப்பமாக இருப்பதாகும். அவ் இறைவன் திருவருளால் மருளுற்ற சிந்தையை மாற்றுவர். அருமைப் பொருள் உற்ற திருவடியைப் போற்றுவர். பொருள் : என்றும் பொன்றாமல் நின்று நிலவும் மெய்ம்மை (அமரில் - விருப்பமாக இருந்தால்,)

2600. மெய்கலந் தாரோடு மெய்கலந் தான் என்னைப்
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந்து ஊழித் தலைவனு மாய்நிற்கும்
மெய்கலந்து இன்பம் விளைந்திடும் மெய்யர்க்கே.

பொருள் : மெய்ப் பொருளோடு கலந்திருப்பவரது ஊனிலும் உயிரிலும் பிரிப்பின்றி நிற்பவனும், பிரபஞ்சப் பற்று உள்ளவரிடம் சென்று அடையாதவனுமாகிய இறைவனை உய்யும் வகை அறிந்து நாடுபவரது பற்றுக்களை அழிப்பவனாய் நின்று அவரது உயிரிலும் உடலிலும் பொருந்தி இன்பத்தை விளைவிப்பவனாகவும் உள்ளான்.

2601. மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்
பொய்கலந் தாருள் புகுதாப் புனிதனை
கைகலந் தாவி எழும்பொழுது அண்ணலைக்
கைகலந் தார்க்கே கருத்துற லாமே.

பொருள் : மெய்யன்பினருடன் மிகவும் மெய்கலந்து விளங்குபவன் சிவன். பொய்க்கலப்பு உடையார்பால் ஒரு சிறிதும் புகுதல் செய்யாத ஒப்பில் ஒருவனாம் தூயோனை இடையறாது நினையுங்கள். அப்பயிற்சி மிகுதியால் ஆவி உடம்பினை விட்டு நீங்கி வெளி மேவுங்காலை அண்ணலாகிய சிவபெருமானைப் பண்ணமை திரு ஐந்தெழுத்தால் பரவி அவன் திருவடியிற் கலத்தல் செய்யுங்கள். அங்ஙனம் கலப்பாரே அவன் திருவடிக் கருத்தினை எய்தினோர் ஆவர். வாய்மைச் சிறப்பினை இதன்கண் காண்க.

2602. எய்திய காலத்து இருபொழு தும்சிவன்
மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும்
பொய்யும் புலனும் புகலொன்றும் நீத்திடில்
ஐயனும் அவ்வழி யாகிநின் றானே.

பொருள் : முன்மந்திரத்தில் கூறியவாறு சிரசில் பிராணன் மோது தலை அடைந்து பகலிலும் இரவிலும் சிவத்தை உடம்பில் பொருந்தும்படி நினைந்திருப்பின் சிரசின் மேல்உள்ள தலைவனாக விளங்குவான். பொய்யான பிரபஞ்ச நோக்கில் செல்லுதலையும் புலன்வழிச் செல்லுதலையும் விட்டு நிற்கில் தலைவனும் முன்கூறிய கபால வழியில் எதிர்ப்பட்டு விளங்குவான்.

2603. எய்துவது எய்தாது ஒழிவது இதுஅருள்
உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி
பொய்செய் புலன்நெறி ஒன்பதும் தாள்கொளின்
மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.

பொருள் : முன் இரு மந்திரங்களில் கூறியவாறு பிராண செயம் அமைவதும்  அமையாது போவதும் திருவருளைப் பொருத்ததாகும். இந்நெறி உத்தமமான நந்தியெம் பெருமான் சீவர்கள் உய்தி பெறும் பொருட்டு அருளிச் செய்ததாகும். பொய்யானவைகளுக்கு விளை நிலமான ஒன்பது துவாரங்களையும் அடைத்து நின்றால் மெய்யான ஆகாயம் புரவியைக் கொண்டு சீவ யாத்திரை செய்யலாம். (தாள் கொள்ளுதல் - தாழ்ப்பாள் இடுதல். மெய்யென் புரவியை - தேகத்தில் ஓடும் வாசியை.)

2604. கைகலந் தானைக் கருத்தினுள் நந்தியை
மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப்
பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப்
பொய்மொழிந் தார்க்கே புகலிட மாமே.

பொருள் : சுழுமுனை நாடியில் கலந்திருப்பவனும் சிந்திப்பார் மனத்துள் விளங்கும் நந்தியும், மனத்தோடு உடம்பிலும் பொருந்தினவனும் வேத முதல்வனும் பிரபஞ்சப் பற்றை விடாதவருக்கு அருள் செய்யாத நிமலனும் ஆகிய இறைவன் உடல் பற்றையும் பிரபஞ்சப் பற்றையும் விட்டவர்களுக்குத் தஞ்சம் அளிப்பவனாக உள்ளான்.

2605. மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டுஆரும் திறந்துஅறி வாரில்லைப்
பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டங்கு
அத்தாள் திறக்கில் அரும்பேற தாமே.

பொருள் : உண்மையான திருவடிகள் உள்ளத்தில் பொருந்தும்படி வைக்கின்ற நந்தியைச் சுழுமுனையாகிய தாழ்ப்பாளைத் திறந்து கொண்டு யாரும் அறிபவர் இல்லை. பொய்யினது மூலம் வைக்கப்பட்ட உடல்பற்றை நீ விட்டு, அங்குச் சுழுமுனையைத் திறந்துகொண்டால் அதுவே கிடைத்தற்கரிய பேறாகும்.

2606. உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின்
மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப்
பொய்யொன்றும் இன்றிப் புறம்பொலி வார்நடு
ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே.

பொருள் : உய்திபெற வேண்டின் சீவர்களாகிய நீங்கள் உணர்வினால் போற்றுங்கள். அப்போது மெய்யான இறைவன் அமைத்துக் கொடுத்த சன்மார்க்க நெறி விளையும். உறுதியுடன் பொய்யான உடலைக் கடந்து விளங்குவாரது சகஸ்ரதள கமலத்தில் எமது தலைவனும் அங்குச் சீவனுடன் பேதமின்றி விளங்குவான்.

2607. வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
தம்பால் பறவை புகுந்துஉணத் தான்ஒட்டாது
அம்புகொண்டு எய்திட்டு அகலத் துரத்திடில்
செம்பொன் சிவகதி சென்றுஎய்த லாமே.

பொருள் : மணம் கமழ்கின்ற சகஸ்ரதளமாகிய மலரில் சிவமாகிய கனி ஒன்றுண்டு. அக்கினி விஷய வாசனையாகிய பறவைகள் கொத்தித் தின்னுவதற்கு எட்டாததாகும். அவ்விஷய வாசனைகளாகிய பறவைகளைச் சீவ சத்தியை மேல்நோக்கச் செய்யும் அம்பால் எய்து அகலத் துரத்திடில் செம்பொன் ஒளியுடன் கூடிய சிவ சக்தியைச் சென்று அடையலாகும்.

2608. மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்
துயக்குஅறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால்
தியக்கம்செய் யாதே சிவன்எம் பெருமான்
உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே.

பொருள் : செந்நெறி ஒழுகும் செம்பொருள் துணிவினரை மயக்கம் செய்தற்பொருட்டு முனைந்தெழும் ஐம்புலப் பாசங்களை அருளால் அறுத்து அருளுபவன் சிவன். அவனே ஆருயிரின் தடுமாற்றப் பிறப்பின் கலக்கத்தையும் தவிர்த்தருளினன். அவன் திருவடியினைத் தொடருங்கள். அங்ஙனம் அளவிறந்த காதலுடன் தொடர்ந்தால் ஒரு சிறிதும் மயக்குவதைச் செய்யாமல் எம்பெருமானாகிய சிவன் ஆருயிர் உய்ந்து போமாறு அவ்வுயிர்களின் மனத்தை ஒருமைப்படுத்தியருள்வன்.

2609. மனமது தானே நினையவல் லாருக்கு
இனமெனக் கூறும் இருங்காயம் மேவல்
தனிவினில் நாதன்பால் தக்கன செய்யில்
புனிதன் செயலாகும் போதப் புவிக்கே.

பொருள் : சிவபெருமான் திருவடிகளை மனம் மாறாது பயிற்சி மிகுதியால் தானே நினையும் அத்தன்மை வாய்ந்த திருநெறி வல்லார்க்கு அவர்தம் அரும்பெரும் அறிவுத் தொண்டிற்குத் துணையாய் இனமாய் நிற்பது அவர்தம் தூய உடம்பேயாகும். அவ்வுடம்பு மேவும் ஒண்மையுடன் தனித்திருந்து சிவபெருமானைத் திருவருளால் உள்ளக் கிழியின் உருவெழுதி அத்தலைவன்பால் ஒப்புவித்தல் வேண்டும். அதுவே தக்கன் செய்யும் தவமாகும். அத்தவத்தினைச் செய்யில் தூயோனாகிய சிவன் தன் திருவடியுணர்வாம் அறிவு நிலத்தில் உய்ந்து போமாறு அருளிச் செய்வன்.

39. ஞானி செயல்

(ஞானி செயல் - தன் உண்மையை உணர்ந்த ஞானியினது செய்கை. ஞானியினது செயலாவது, வினையைக் கடிதல்.)

2610. முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர்
பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.

பொருள் : நன்மையைத் தராத ஐம்புலன்களின் தன்மை ஆராய்தலினால், நன்மையைத் தருகின்ற தன்னுண்மையை உணர்ந்த தத்துவ ஞானிகள், முற்பிறப்பில் செய்த பழவினைகள் வந்து உறுமாயின் அவற்றை அனுபவித்துக் கழிப்பர். பின் இறப்பில் செய்யும் வினைகளைக் கருதிச் செய்யாது அவற்றினின்றும் நீங்க முயற்சி செய்பவராவர்.

2611. தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே.

பொருள் : தன் உண்மையை உணர்ந்த தத்துவஞானிகள், பழவினையின் பந்தத்தைச் சிவ சிந்தனையால் விலக்கி விடுவார்கள். சிரசின் மேல் விளங்கும் சிவனது திருவருளால் மேல்வரும் வினையைத் தோற்றம் எடுக்காமலே அழித்துவிடுவர்.

2612. மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்குக் கெட்டவர் வாதனை தன்னால்
தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே.

பொருள் : சீவர்களின் மனம் வாக்கு காயம் ஆகிய முக்காரணங்களால் வன்மையான வினை வந்து பற்றும். சீவர்களின் முக்கரணங்களும் உலகியலைப் பற்றாமல் சிவனைப் பற்றினால் வலிய வினை வந்து பற்றுமாறு இல்லை. சாதனை தன்னால் மனம் வாக்கு செயல் கெட்டு மௌனமாய் இருப்பவர் தன்னை வினை பற்றாமல் மாற்றி அமைத்துக் கொள்ளும் ஞானியர் ஆவார்.

40. அவா அறுத்தல்

(அவா அறுத்தலாவது, பொருளின்மேல் செல்லும் ஆசையைப் போக்குதல். அவாவே பிறப்பு ஈனும் வித்தாதலால் அவாவை வெறுப்பது ஞானியர் கடனாகும்.)

2613. வாசியும் ஊசியும் பேசி வகையினால்
பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்எளி தாமே.

பொருள் : பிராணனையும் நடு நாடியையும் பற்றிப் பேசியும், பேசுவதோடு அவற்றை நெறிப்படுத்தும் முறையை அறிந்து பிறர்க்கு எடுத்துரைத்தும் ஒரு பயனையும் அடைய முடியாது. பொருள்மேல் செல்லும் ஆசையையும் மக்கள்மேல் செல்லும் பாசத்தையும் நீக்குங்கள். அவ்வாறு நீக்கின பிறகு ஈசுவரன் இருக்கும் இடம் எளிதாக உணரப்பெறும்.

2614. மாடத்து ளான்அலன் மண்டபத் தான்அலன்
கூடத்து ளான்அலன் கோயில்உள் ளான்அலன்
வேடத்து ளான்அலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்திதந் தானே.

பொருள் : இறைவன் வீட்டுச்சுவரில் உள்ள மாடங்களில் இருப்பவன் அல்லன். தனியே மண்டபங்களில் இருப்பவன் அல்லன். வீடுகளின் தனி அறையில் இருப்பவனும் அல்லன். ஆலயங்களில் இருக்கிறான் என்பதும் அல்ல. வேடம் பூண்டவர்களிடம் விளங்குவான் என்பதும் அல்ல. ஆனால் அவன் ஆசையை விட்டவரது உள்ளத்தில் உள்ளிருந்து கொண்டே அவரை இயக்கி முத்தியைத் தந்தருளுகிறான்.

2615. ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.

பொருள் : எவ்வகையான ஆசைகளாயினும் அவைகளை அறவே விட்டுவிடுங்கள். இறைவனோடும்கூட ஆசையைச் செலுத்தாது விடுங்கள். ஆசையைச் செலுத்தச் செலுத்த அவற்றால் உயிருக்குத் துன்பமே வரும் ஆசையை அறவே விட்டால் ஆனந்தம் உண்டாகும்.

2616. அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்றற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.

பொருள் : நுண் பூதங்களாகிய சத்தம், பரிசம், ரூபம், இரசம், கந்தம் ஆகிய ஐந்தும் சீவர்களை உலகமுகமாய்த் தூண்டித் துன்புறுத்துவன. இவை உடனிருந்து தீய வழியில் செலுத்துவதாய் உண்டாகின்ற பற்றுக்களைக் கெடுத்து, ஆசையை விட்டு, உண்மையான ஞானத்தை எட்டுவது சீவர்கள் தமது உண்மை நிலையை அறிய முற்படுவது ஆகும்.

2617. உவாக்கடல் ஒக்கின்ற ஊழியும் போன
துவாக்கட லுள்பட்டுத் துஞ்சினர் வானோர்
அவாக்கட லுள்பட்டு அழுந்தினர் மண்ணோர்
தவாக்கடல் ஈசன் தரித்துநின் றானே.

பொருள் : பருவகாலத்துப் பொங்கும் கடல்போன்று அளவின்றிப் பொங்கி உலகினை அழித்த நீருழிகள் பல கழிந்தன. இவற்றைக் கடலூழி என்ப. வானவர் முதலானோரும் இன்ப துன்பக் கடலுட்பட்டுப் பிறப்பதற்கே ஆளாகி அழுந்தினர். என்றும் பொன்றாப் பேரின்ப அருளாழியைச் சிவபெருமான் தாங்கி நின்றனன். பவுர்ணமியின் போது கடல் பொங்கும் என்பர்.

2618. நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துன்தொழில் அற்றுச் சுத்தமது ஆகலும்
பின்றுஐங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.

பொருள் : நெடுநாள் நீங்காமல் நின்ற இருவினையும் மும்மலப் பாசமும் அவைகளால் அமைந்த செயலும் பொருந்தும் இயக்கம் அற்றுத் தூய்மை பெறுதலும், பின்னர் சிருஷ்டியாதி ஐந்தொழிலையும் நீக்கி அருள் மயமாக்கி, ஆழ்ந்து நிற்கச் செய்தலே ஞானிகளது தூயநிலையாம். ஞானியர் இருவினை மும்மலப் பாசக் கட்டறுத்துத் தூய்மை பெற்று இருப்பர்.

2619. உண்மை உணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம்
பெண்மயல் கெட்டுஅறப் பேறட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
வண்மை அருள்தான் அடைந்துஅன்பில் ஆறுமே.

பொருள் : சீவன் தனது உண்மைச் சொரூபம் ஒளி மயம் என்று உணர்ந்து நிற்கில் அறிவுடன் கூடிய சித்தியும் முத்தியும் பொருந்தும். பெண் ஆசையை விட்டு நிற்கில் அட்டமா சித்திப் பேறுகள் கிட்டும். உறுதியான சிவப்பற்றுடைய ஞானி தனது தேகத்தை நழுவவிட்டால் சிவத்தின் அருள் நின்று பின் சிவத்தைச் சார்ந்துவிடுவர். (அன்பு-சிவம்.)

2620. அவன்இவன் ஈசன்என்று அன்புற நாடிச்
சிவன்இவன் ஈசன்என்று உண்மையை ஓரார்
பவன்இவன் பல்வகை யாம்இப் பிறவி
புவன்இவன் போவது பொய்கண்ட போதே.

பொருள் : சிவமாக இச்சீவன் ஆகவேண்டும் என்று இறைவனை அன்பினால் நாடி சிவனாகவே இவன் மாறிப் பதிநிலையை அடைகிறான் என்ற உண்மையை உலகவர் உணரமாட்டார். ஆனால் இச்சீவன் சிவனேயாகும். பலவகையான பிறப்புக்களை எடுத்துப் பல புவனங்களுக்குச் செல்வது உண்மையை உணராமல் பொய்ப் பொருளில் பற்றுக்கொண்டதேயாம். (பவன்-சிவன்)

2621. கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறுஇந்தப் பாரக முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டாது உலகம்
நொதிக்கின்ற காயத்து நூலொன்றும் ஆமே.

பொருள் : இப்பிரபஞ்சம் முழுவதும் சீவர்களுக்குத் துன்பந்தருகின்ற தூல உடலில் விடுவதும், அது நீங்குமாறு செய்வதும் மீண்டும் பிறவியில் சேர்ப்பதும் ஆகியவற்றை அமைத்துத் தருகின்ற பிரமனாதி ஐவரை அறிவுடையோர் விரும்பமாட்டார். அவர் வெறுப்பினைச் செய்கின்ற தூல உடலில் சூக்கும தேகத்துச் செல்லும் சுழுமுனையாகிய நாடியைப் பொருந்தி யுள்ளமையின் என்றபடி.

2622. உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரில் கலக்கின்ற நந்தியைச்
சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.

பொருள் : மேல்வரும் பிறவியை மாற்றி அமைக்கும் ஞானத்தைப் பெற்றுள்ளோம் என்பீர். அத்தகைய ஞானத்துக்கு அடிப்படை எது என்பதை அறியமாட்டீர். மூலாதாரத்தில் வீரிய சத்தியாகக் கலந்திருக்கின்ற உருத்திர மூர்த்தியைச் சிந்தனையால் கீழேயுள்ள அக்கினியை மேல் எழச் செய்து ஒளிமயமாய்க் கண்டால், முன் நோக்கியுள்ள பிறவியைப் போக்க மூல காரணமாக அமையும்.

41. பத்தியுடைமை

(பத்தியுடைமை யாவது அகண்ட சிவத்திடம் பத்தி கொள்வது.)

2623. முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தர் பரசும் பசுபதி தானென்றே.

பொருள் : சீவர்களுக்கு வீடு பேற்றை அளிக்கும் ஞான சொரூபமாகவும் மந்திர சொரூபமாகவும் உள்ள தலைவனும், அழியாத தேவர்களை நடத்துபவனும், தூய்மை யானவனும் தூய நெறியாகவும் விளங்கும் சோதியும் ஆகிய சிவபெருமான் பத்தர்களால் போற்றப் பெறும் பசுபதியும் ஆவான்.

2624. அடியார் அடியார் அடியார்க்கு அடிமைக்கு
அடியனாய் நல்கிட்டு அடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட
அடியான் இவன்என்று அடிமைகொண் டானே.

பொருள் : சிவத்தின் சந்தான பரம்பரையில் வந்த அடியார்மாட்டு, அடிமைக்கு அடியனாகி அவரிடம் அடிமைப்பட்டேன். அவ்வாறு அடியார் அருளால் திருவடி ஞானம் பெற என்னையும் அவன் அடியார்களுள் ஒருவனாக ஏற்றுக் கொண்டான்.

2625. நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
ஆர்இக் கடன்நந்தி ஆமாறு அறிபவர்
பாரில் பயனாரைப் பார்க்கிலும் நேரியர்
ஊரில் உமாபதி யாகிநின் றானே.

பொருள் : இறைவன் தன்னைச் சார்ந்தார்க்கு நீரைவிடக் குளிர்ச்சியைத் தருபவனும், பிரபஞ்சத்தைச் சார்ந்தார்க்கு நெருப்பைவிட வெம்மையைத் தருபவனும் ஆவான். யார் இம்முறைமையை இவ்வாறு செய்கின்றான் என்பதை அறியவல்லார்? அவன் உலகத்தில் பயன் அளிப்பவரைக் காட்டிலும் நேர்மையானவன். அத்தகையவன் நினைப்பவர் உள்ளத்தில் உமையோடு எழுந்தருளியுள்ளான். (கடன் முறைமை. நேரியர் - முறை தவறாதவர். ஊர் - சித்தம்.)

2626. ஒத்துஉலகு ஏழும் அறியா ஒருவன்என்று
அத்தன் இருந்திடம் ஆரறி வார்சொல்லப்
பத்தர்தம் பத்தியில் பாற்படில் அல்லது
முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரே.

பொருள் : ஏழு உலகத்தாரும் ஒருங்கு திரண்டு ஆராய்ந்தாலும் ஆராய முடியாத ஒப்பற்றவனாகிய என் தலைவன் எழுந்தருளியிருக்கும் இடத்தை யாரே அறிய வல்லார்? சொல்வாயாக! சிவத்தின் பால் பத்தி கொண்டு ஊர்த்துவ சகஸ்ரதளம் விழிப்படைந்த குருவை அடைந்து, அவரது சகாயத்தைப் பெற்றவர்க்கு அல்லாமல் முத்துப்போன்ற வெண்ணிற ஒளியில் விளங்குகின்ற அவளைக் காணலாம் என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.

2627. ஆன்கன்று தேடி அழைக்கும் அதுபோல்
நான் கன்றாய் நாடி அழைத்தேன்என் நாதனை
வான்கன்றுக்கு அப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன்கன்றான் நாடிவந்து உள்புகுந் தானே.

பொருள் : பசுவினது கன்று தாயை நாடிக் கதறி அழைப்பது போல, நான் கன்றின் தன்மையில் இருந்து என் தாயாகிய சிவத்தைப் பத்தியினால் கதறி அழைத்தேன். வான் உலக வாசிகளுக்கும் அப்பாற்பட்டு நிற்கும் மறைப்பொருள் ஊனில் கட்டப்பெற்றிருக்கும் என்னை விரும்பி என் உள்ளத்தில் எழுந்தருளியுள்ளான்.

2628. பெத்தத்தும் தன்பணி இல்லை பிறத்தலால்
முத்தத்தும் தன்பணி இல்லை முறைமையால்
அத்தற்கு இரண்டும் அருளால் அளித்தலால்
பத்திப்பட் டோர்க்குப் பணிஒன்றும் இல்லையே.

பொருள் : மல பந்தத்தில் உள்ள சீவர்கள் பிறக்கும் நியதியைக் கடவாதவர் ஆதலால், அவர்களாகச் செய்து கொள்ளும் முயற்சி பயனளிக்காமல் போகும். முத்தி நிலையில் உள்ளவர் இறைவனைத் தவிர வேறு ஒன்றும் நினையாத வராதலால் அவர்களது முயற்சியின்றியே வேண்டுவன பொருந்தும். தலைவனாகிய சிவத்துக்கும் மலபந்த முடையோர்க்குச் செய்யும் பிறவிப் பிணிப்பும் மல மற்றோர்க்குச் செய்யும் அருட் பிணிப்பும் ஆகியவை அருட்செயலாதலால் இறைவனைப் பத்தி பண்ணிக் கொண்டிருப்போர்க்குச் செயல் ஒன்றும் இல்லை.

2629. பறவையிற் கற்பமும் பாம்புமெய் யாகக்
குறவம் சிலம்பக் குளிர்வரை ஏறி
நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்
இறைவன் என்று என்மனம் ஏத்தகி லாவே.

பொருள் : காயம் கற்பமாக, குண்டலினி சத்தி உம்பில் விளங்கவும், நாத ஒலி கேட்க, சிரசின் உச்சியில் விளங்கும் ஒளி மண்டலத்தில் ஏறி, தேன்பிலிற்றும் சகஸ்ரதள மலரைக் கொண்டு நந்தியெம் பெருமானை வழிபடுவது அல்லாமல், பிற தெய்வத்தை இறைவன் என்று கருதி வழிபடுவதற்கு என் மனம் இடம் தராது. (காய கற்பம் - உடம்பை நெடிது வாழச் செய்வது.)

2630. உறுதுணை நந்தியை உம்பர் பிரானைப்
பெறுதுணை செய்து பிறப்பறுத்து உய்மின்
செறிதுணை செய்து சிவனடி சிந்தித்து
உறுதுணை யாய்அங்கி ஆகிநின் றானே.

பொருள் : சீவர்களுக்கு எப்போதும் உற்ற துணையாகவுள்ள நந்தியும், தேவர்களுக்குத் தலைவனும் ஆகியவனை துணைவனாகப் பெற்றுக் கொண்டு பிறப்பினை ஒழித்துக் கடைத்தேறுங்கள். அவனை நெருக்கமான துணைவனாகக் கொண்டு அவனது திருவடியைச் சிந்தித்து இருக்க, உற்ற துணைவனாய் ஒளி வடிவினனாக நின்று அருளுகின்றான்.

2631. வானவர் தம்மை வலிசெய்து இருக்கின்ற
தானவர் முப்புரம் செற்ற தலைவனைக்
கானவன் என்றும் கருவரை யானென்றும்
ஊன்அத னுள்நினைந்து ஒன்றுபட் டாரே.

பொருள் : ஒளி மண்டல வாசிகளாகிய தேவர்களை அடக்கி இருக்கின்ற, இருள் மண்டல வாசிகளாகிய அசுரர்களது முப்புரத்தை அழித்த தலைவனை, நாத மயமானவன் என்றும் வீரிய கோசத்தில் விளங்குபவன் என்றும் ஊன்பொதிந்த இவ்வுடம்புள் விளங்குபவன் என்றும் அறிந்து ஞானிகள் வழிபட்டார்கள். (கானவன் - கானத்தில் விளங்குபவன்.)

2632. நிலைபெறு கேடுஎன்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்கும்என் உள்ளம்
மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
உலையளும் உள்ளத்து மூழ்கிநின் றேனே.

பொருள் : குண்டலினி சத்தியை மூலாதாரத்தி னின்றும் எழுப்பிச் சகஸ்ரதளத்தில் சேர்க்கும் முறையை அறிந்து நிலைபெறுக அல்லது அறியாது கேடு சூழ்வாயாக என்று கருவி கரணங்களைப் படைத்துக் கொடுத்த தலைவனை நாடி, எனது உள்ளமானது ஒளி பெற்று விளங்கும். அவனைச் சிரமாகிய மலையிலும் நெற்றி நடுமுதல் பிரமப் புழைவரையுள்ள பகுதியிலும் விரிந்த சகஸ்ரதளமாகிய புறத்திலும் மூலாதாரமாகிய உலையிலும் மன மண்டலமாகிய உள்ளத்திலும் தியானித்து ஆழ்ந்திருந்தேன்.

42. முத்தியுடைமை

(முத்தியுடைமை - வீடு பேறு உடைமை. அஃதாவது விடுதலை பெறுதல். பத்தியினால் கிட்டுவது முத்தி. சீவன் முத்தியின் தன்மை இங்கு கூறப் பெறும்.)

2633. முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்
தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
பத்தியில் உற்றோர் பரானந்த போதரே.

பொருள் : முத்தி நிலையில் சிவபிரானது முழு அருளையும் சீவன் பெற்று, முப்பத்தாறு தத்துவங்களும் தனக்கு வேறெனக் கண்டு நீங்கி உண்மை உணர்ந்து, தனது கடமை இறைவனை நினைந்திருத்தலாகிய தவத்தைச் செய்தல் என, வினைகளின் நீங்கிய உண்மையான பத்தியில் ஈடுபட்டோர், மேலான சிவானந்தத்தைப் பெற்ற மெய்யறிவுடைய ஞானிகளாவார்.

2634. வளங்கனி தேடிய வன்தாள் பறவை
உளங்கனி தேடி உழிதரும் போது
களங்கனி அங்கியில் கைவிளக் கேற்றி
நலங்கொண்ட நால்வரும் நாடுகின் றாரே.

பொருள் : சிவமாகிய கனியை நாடிய வலிமை மிக்க தாளினையுடைய சீவனாகிய பறவை, மன மண்டலத்தில் விளங்கும் சிவமாகிய கனியை விரும்பிச் சிந்தித்திருக்கும் போது, கண்டத்துக்கு மேல் விளங்கும் அக்கினியில் சுழு முனையாகிய விளக்கை ஏற்றி, நன்மையைப் பெற்ற அந்தக் கரணங்களாகிய நால்வரும் தேகமற்ற இடத்தில் இன்பத்தை நாடுவாராயினர்.

43. சோதனை

(குருவருளால் உண்மை உணர்தல் சோதனையாகும்.)

2635. பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து
அம்மான் அடிதந்த அருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடுத்து எம்மைக் கரந்திட்டுச்
சும்மாது இருந்திடம் சோதனை யாகுமே.

பொருள் : யாவர்க்கும் மேலான பெருமையுடைய நந்தி உரையற்று நிற்கும் பேரின்ப நிலையில், அப்பெரியோனது அடிஞானத்தால் கருணைக் கடலில் படிந்தோம். எல்லாவிதமான மாயா சம்பந்தங்களையும் கடக்கச் செய்து அவற்றினின்றும் வேறுபடுத்திச் செயலற்று இருக்கும்படி செய்ததே சோதனையாகும்.

2636. அறிவுடை யானரு மாமறை யுள்ளே
செறிவுடை யான்மிகு தேவர்க்கும் தேவன்
பொறியுடை யான்புலன் ஐந்தும் கடந்த
குறியுடை யானொடும் கூடுவன் நானே.

பொருள் : இயல்பாகவே விளங்கும் உண்மைப் பேரறிவு உடையவன் சிவன். அவனே அருமறையாகிய திரு ஐந்தெழுத்தின் நிறைவாய் உள்ளவன். பெருந் தேவரென்று பேசப்படும் யாவர்க்கும் பெருந்தேவனாக வுள்ளான். புண்ணிய வடிவானவன். பொறிவாயில் ஐந்தவித்த புலவன். அப்பெருமான் திருவடிக்கண் அவன் திரு அருளால் அடியேன் அன்பால் கூடி இன்புறுவன். (குறியுடையான் - புலவன்.)

2637. அறிவுஅறிவு என்றங்கு அரற்றும் உலகம்
அறிவுஅறி யாமையை யாரும் அறியார்
அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால்
அறிவுஅறி யாமை அழகிய வாறே.

பொருள் : உலகேசர் திருவருள் நாட்டமின்றி அறிவு அறிவென்று அரற்றுவர். எது அறிவு எது அறியாமை என மெய்ம்மையைப் பகுத்து உணரார். திருவருளால் உணரும் உயிர் அறிவு, அறியாமை யென்னும் இரண்டினையும் அருளால் கடந்து முற்றறிவு பெற்றுச் சிவமாம் பெருவாழ்வு எய்தும். அங்ஙனம் எய்தினால் அவ்வறிவு அறியாமை கடந்து சிவமாம் பெருவாழ்வு எய்திய அடைதற்கரிய திருவாம் பேரழகு புலனாம் என்க.

2638. குறியாக் குறியினில் கூடாத கூட்டத்து
அறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றும்
செறியாச் செறிவே சிவமென லாமே.

பொருள் : சோதனைக்குப் பின் சுட்டறிவின்றி யாவற்றையும் ஒருசேர அறியும் அறிவினில், கீழான மலங்கள் சென்றடையாத சேர்க்கையில் அவனறிவே கண்ணாகக் கொண்டு தம் அறிவு கெட்டு ஏகாக்கிர சித்தத்துடன் நெறியாகவுள்ள மேலான நந்தியினது அருளுடன் ஒன்றுபட்டு, தான் என ஒன்றின்றிக் கலந்திருத்தலே சிவமாந் தன்மை எய்தலாகும்.

2639. காலினில் ஊறும் கரும்பினிற் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போலுளன் எம்இறை
காவலன் எங்கும் கலந்துநின் றானே.

பொருள் : எம் இறைவன் காற்றினில் பிரிக்க முடியாத பரிசமும், கரும்பினுள் பொருந்தியுள்ள இனிப்பும், பாலினுள் மறைந்துள்ள நெய்யும், பழத்தினுள் கலந்துள்ள இரசமும், பூவினுள் விரவிய மணமும் போலச் சீவர்களோடு உடனாய் உள்ளான். அவனே எல்லாவற்றிலும் கலந்தும் விளங்குகின்றான்.

2640. விருப்பொடு கூடி விகிர்தனை நாடிப்
பொருப்பகம் சேர்தரு பொற்கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே.

பொருள் : விருப்பத்தோடு விகிர்தனாகிய சிவபெருமானை நாடி இமயத்தைச் சேரும் உமையம்மை போல, விருப்புடன் இருக்கின்றவர் மனத்தில் எங்களது பெருமான் ஒளிவடிவாக விளங்கி நிலைபெறுவான்.

2641. நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ள
எந்தைவந் தான்என்று எழுந்தேன் எழுதலும்
சிந்தையி னுள்ளே சிவனிருந் தானே.

பொருள் : நந்திப்பெருமானாகிய சிவபெருமான் அப்பாலாம் நாப்பண் சேர் உறக்கத்து எழுந்தருளி வந்து அடியேன் அகம் படியினைக் கோவிலாகக் கொண்டருளினன். கொண்டதனால் அடியேனும் திருவிளக்கேற்றியதும் திருமனை புகுவார் போன்று எந்தை வந்தானென்று திருவருளால் எழுந்து நெல்லும் மலரும் தூவித் தொழுதேன். தொழுதலும் அடியேன் உள்ளத்தினுள்ளே அச்சிவபெருமான் திருந்த இருந்தருளினன். (அப்பால் உறக்கம் - துரிய சுழுத்தி; அறிதுயில்.)

2642. தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே.

பொருள் : உண்மை அறிவு இன்பப் பண்பாம் தன்மை வல்லானை, நற்றவத்துள் நடுநின்றருளும் நலத்தினை, அனைத்துயிர்க்கும் அகலாது நின்று ஆரருளால் நன்மை புரிந்து வரும் நல்லோனை, நடுநிலை குன்றாமல் நயம் புரிந்தருளும் நந்தியை, இருளும் மருளும் ஒரு சிறிதும் இல்லாத புனிதனை அன்புடன் நாடுங்கள். அங்ஙனம் நாடினால் அளவில்லாத ஆருயிர்களுள் நும்மைச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து, நுமக்குத் திருவடிப் பரிசினைச் சேர்த்தருள்வன்.

2643. தொடர்ந்துநின் றான்என்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்துநின் றான்நல்ல நாதனும் அங்கே
படர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தை
கடந்துநின் றல்வழி காட்டுகின் றானே.

பொருள் : சிவகுருவாய் எழுந்தருளி வந்து எனக்கு எய்திய அறுவழி ஆய்வு செய்தருளும் போது, அச்சிவபெருமான் உடனாந்தன்மையால் நல்ல நாதனாகி அங்கே தொடர்ந்து நின்றருளினன். ஒன்றாம் தன்மையில் ஆதிப்பெரும் பொருளாம் அவன் நீக்கமற நிறைந்து நின்றருளினன். எந்தையாகிய அவன் பொருள் தன்மையால் கடந்து நின்று திருவடி சேரும் அருட்பெரும் வழியைக் காட்டியருள்கின்றனன்.

2644. அவ்வழி காட்டும் அமரர்க்கு அரும்பொருள்
இவ்வழி தந்தையாய் கேளியான் ஒக்கும்
செவ்வழி சேர்சிவ லோகத்து இருந்திடும்
இவ்வழி நந்தி இயல்பது தானே.

பொருள் : அமரர்களுக்கும் அறிய ஒண்ணாத அரும்பொருளாம் சிவபெருமான் திருவடிப் பேற்றினுக்கு ஆம் அவ்வழியைக் காட்டியருள்கின்றனன். இவ்வழியாக இவ்வுலகத்து எனக்குத் தந்தை தாய் கேள் ஒத்துத் தோன்றாத் துணை புரிந்தருள்கின்றனன். அவன் செம்பொருள்; செம்மை நலம் புரியும் விழுப்பொருள்; செவ்வழியாய்ச் சென்று சேர்தற்குரிய சிவலோகமாகிய அம்மைக்கண் திருந்த இருந்திடும் அருள்பொருள். இம்முறைகளே நந்திப்பெருமானின் நல்லியல்புகளாகும். (கேளி - (கேள்). குற்றியலிகரம்).

2645. எறிவது ஞானத்து உறைவாள் உருவி
அறிவத னோடேஅவ் ஆண்டகை யானைச்
செறிவது தேவர்க்கும் தேவர் பிரானைப்
பறிவது பல்கணப் பற்றுவி டாரே.

பொருள் : சோதனைக்குப் பின் ஞானமாகிய வாளை உறையினின்றும் எடுத்து அஞ்ஞானமாகிய இருளைப் போக்குவதாகும். அவ்வாறு அருளிய பெருமையுடையவன் தன்னோடு இருப்பதை அறியவும் கூடும். அறிவதோடு தேவதேவனாகிய அவனை நெருங்கிப் பொருந்தவும் ஆகும். அப்போது அஞ்ஞான இருளில் செலுத்தும் பல கூட்டத்தினை நீங்குதலும் ஆகும்.

2646. ஆதிப் பிரான்தந்த வாள்அங்கை கொண்டபின்
வேதித்து என்னை விலக்கவல் லாரில்லை
சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம்
ஆதிக்கண் தெய்வம் அவன்இவ னாமே.

பொருள் : சிவகுருவால் உணர்த்திய ஞானமாகிய வாளை என்னுடைய மனமாகிய  கையில் எடுத்தவுடன், என்னை மாறுபடுத்தி நன்னெறியினின்றும் நீங்க வல்லார் யாரும் இல்லை. சிவமல்லாதவை அங்கு நிலைபெறா வண்ணம் ஞான விசாரணையால் என் மனத்தைச் சோதனை செய்வேன். அப்போது ஆதிமூர்த்தியாகிய சிவத்தைப் பொருந்திச் சிவமாக இவன் ஆகிறான்.

2647. அந்தக் கருவை அருவை வினைசெய்தல்
பந்தம் பணிஅச்சம் பல்பிறப் பும்வாட்டிச்
சிந்தை திருத்தலும் சேர்ந்தார்அச் சோதனை
சந்திக்கத் தற்பர மாகும் சதுரர்க்கே.

பொருள் : சிவகுருவானவர் பிறவிக்கு மூலமான பாசத்தையும் அருவமான மாயையையும், கன்மங்கள் செய்தலாகிய பந்தத்தையும், அவ்வாறு செய்யும்போது உண்டாகும் அச்சத்தையும், அச்சத்தால் வரும் பிறப்பையும் போக்கி, அச்சோதனையால் தீயநெறியில் செல்லும் சிந்தையைத் திருத்தலும் சீடர் நன்னெறியைச் சேர்ந்தார். அவ்வாறு சோதனை செய்யப் பெற்ற திறமை உடையவர்க்கே சிவத்தைச் சார்ந்து சிவமாதல் கூடும்.

2648. உரையற்றது ஒன்றை உரைத்தான் எனக்குக்
கரையற்று எழுந்த கலைவேட் டறுத்துத்
திரையொத்த என்னுடல் நீங்காது இருத்திப்
புரையற்ற என்னுள் புகும்தற் பரனே.

பொருள் : வாயினால் கூற முடியாத பிரணவ உபதேசத்தை எனக்கு அக உணர்வில் குருநாதன் உபதேசித்தருளினான். எல்லை கடந்த நூல் ஆராய்ச்சியில் உள்ள விருப்பத்தை ஒழித்து, அலைபோல் வந்தழியும் தன்மையுள்ள உடலை அழியாமல் இருக்கச் செய்து, குற்றம் நீங்கிய என்னிடத்தில் மேலான பரன் வந்து பொருந்தும். (உரையற்றது - பிரணவம்)

10th Thirumurai | Thirumoolar | Thirumandiram | Panniru Thirumurai | திருமந்திரம் | ஒன்பதாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்

ஒன்பதாம் தந்திரம் (மகுடாகமம்)

1. குருமட தரிசனம்

(குரு - ஒளி. மடம் - இடம். குருமட தரிசனமாவது, ஒளி விளங்கும் இடத்தைத் தரிசித்தல்.) 

2649. பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும்எம் ஈசன் தனக்கென்றே உள்கிக்
குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்
தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.

பொருள் : நைவேத்தியமும் அக்கினியில் பெய்யும் ஆகுதியும் பரந்து ஓம்த் தீயினின்று கிளம்பும் புகையும் வேத ஒலியும் ஆகிய எல்லாம் எமது சிவபெருமானைக் கருகிச் செய்வனவே என்று நினைந்து, குவிந்த மனத்துடன் குரு சொரூபமாக விளங்கும் ஒளி நிலையைத் தரிசித்தவர் இறைவனது திருவடியைப் பொருந்தி நின்று பிரபஞ்ச வெப்பத்தை விட்டு நிற்பர். ( பலி - அன்னம். அவி - ஓமத்தியில் இடும் நெய் முதலியவை.)

2650. இவன்இல்லம் அல்லது அவனுக்குஅங்கு இல்லை
அவனுக்கும் வேறுஇல்லம் உண்டா அறியின்
அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும்
அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.

பொருள் : சீவனது உள்ளத்தை விட்டுச் சிவன் உறைவதற்கு வேறு இடம் இல்லை. உண்மையை அறியின் சிவனுக்கு உறைவிடம் வேறு உண்டோ? அவ்வாறு அவனுக்கு உறைவிடம் இவனது உள்ளம் என்பதை நன்றாக அறிந்திருந்தும், அவன் வேறாய் உள்ளான் என்று அறியாமல் கூறுகின்றனர். என்னே அறியாமை ?

2651. நாடும் பெருந்துறை நான்கண்டு  கொண்டபின்
கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி
தேட அரியன் சிறப்பிலி எம்இறை
ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே.

பொருள் : அறிஞரால் விரும்பி அடையும் சகஸ்ரதளத்தை நான் அறிந்து கொண்ட பிறகு, ஆராய்ந்து அறியப்பட்ட சிவபெருமானது ஒளி ஒலியாகிய திருவடிகளை என்னுள் கண்டு கொண்டேன். தேடிக் காண ஒண்ணாதவனும் சிறப்பான மனமண்டலத்தையே ஆலயமாகக் கொண்டவனும் ஆகிய எமது இறைவன், எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் உலகமாகவும் உயிராகவும் உள்ளதை உணர்ந்தேன்.

2652. இயம்புவன் ஆசனத் தோடு மலையும்
இயம்புவன் சித்தக் குகையும் மடமும்
இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்
இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே.

பொருள் : இறைவன் எழுந்தருளியிருக்கும் ஆசனம் எது, மலை எது என்று கூறுவேன். சித்தமாகிய குகையும் குகை உள்ள இடமும் எவை என்பதையும் கூறுவேன். ஆறு ஆதாரங்களோடு அஞ்ஞானமாகிய காடு எது என்றும் கூறுவேன். இவற்றைப் பதினான்கு உலகிலும் உள்ளார்க்கு உரைப்பேன். இவைகளின் விளக்கம் அடுத்து வரும் மந்திரத்தில் கூறப்பெறும்.

2653. முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்
அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி
அகம்பர மாதனம் எண்ணெண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரந் தானே.

பொருள் : முகமானது ஞானியர் பொருந்தியிருக்கும் இடமாகும். பெருமை பொருந்திய மடம் முன்னுள்ள ஒளியாகும். மனத்தில் உண்டாகும் நல்ல எண்ணங்களே அடியார் கூட்டமாகும். பிறர்க்கு நன்மை செய்யும் எண்ணத்தைச் சிந்தித்து இருத்தலே நல்ல காட்சியாகும். சூக்கும உடம்பே மேலான ஆசனமாகும். அருவுருவான ஈசுவர நாமத்தைக் கணித்தல் கிரியை அல்லது செயலாகும். அறவாகாயமே அவர் ஒடுங்கியிருக்கும் குகையாகும். இதுவே அவரைத் தாங்கி நிற்பதாகும்.

2654. அகமுக மாம்பீடம் ஆதார மாகும்
சகமுக மாம்சத்தி யாதன மாகும்
செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும்
அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.

பொருள் : நினைவு அகலாவுள்ளம் சிவபெருமானுக்குப் பீடமாகும். அதுவே நிலைக்களமும் ஆகும். உலகினைத் தொழிற்படுத்தும் திருவருள் ஆற்றல் சிவபெருமானுக்குத் திருவுருவாகும். அத்திருவுருவின்கண் விளங்கித் தோன்றி உலகில் வெளிப்படுபவன் சிவபெருமானே. அவன் ஒருவனே தேவன். திருவருளால் உள்முகமாய்த் தேரும் நல்லறிவாளர்க்கு இவ்வுண்மைகள் நன்கு புலனாகும்.

2655. மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்
காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாசியே
தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்
ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே.

பொருள் : சுத்த மாயை, அசுத்த மாயை ஆகிய இரண்டும் ஆன்மாவை மறைக்க அதன் அறிவு விளங்காமல் நிற்கும். அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய ஐந்து திரைகளும் அகல, ஆன்மாவின் தூய்மையான ஒளி தோன்ற, அவ் ஆன்ம ஒளியில் நிலைபெற்ற ஆராய்கின்ற ஞானியார் காண்பான், காணப்படு பொருள், காட்சி ஆகிய மூன்றையும் கடந்து மேலாம் பிரணவ யோகத்தை அறிந்தவராவர்.

2. ஞானகுரு தரிசனம்

(அஃதாவது ஞானத்தைத் தரும் குருவைக் காண்டல். தனது ஒளி மண்டலத்தில் குருவைக் காண்பதே இப்பகுதியில் கூறப்பெறும். குரு மண்டல விழிப்பு என்பது புருவ மத்தியம் திறப்பது. பரமசிவமே குருவாய் அங்கு எழுந்தருளி அருள் செய்வான் என்க. ஆறாம் தந்திரத்தில் கூறிய சிவகுரு தரிசனம் சிவன் புறத்தே குருவாய் வந்து அருளுதலைக் கூறுவது.)

2656. ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலா அளித்திடும்
பேறாக ஆனந்தம் வேணும் பெருகவே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மாவில் ஒடுங்கினால் சிவன் வெளிப்பட்டு ஆன்மாவைத் தன்னுள் அடக்கிக் கொள்ளும். அந்நிலை அமைந்தபின் மேலான சிவப்பேறு கிட்டும். இதன் பயனாக ஆன்மா உலக இன்பத்தை விட்டுச் சிவானந்தத்தில் திளைத்துச் சிவபோகத்தைப் பெறும். (பேறு - சிவயோகம்.)

2657. துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய பரசிவம் யாவையும் ஆகி
விரிவு குவிவுஅற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேசஒண் ணாதே.

பொருள் : சீவதுரியம் பரதுரியம் சிவதுரியம் ஆகிய மூன்றும் கடந்து விளங்கும் அறிவுப் பேரொளியாகிய அருமையான பரசிவம் எல்லாமாய்ப் போக்கும் வரவும் இல்லாத இடத்திலுள்ள பெருமைமிக்க குருபதத்தின் தன்மையைப் பேச முடியாததாகும்.

2658. ஆயன நந்தி அடிக்குஎன் தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்
காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்
சேயன நந்திக்கென் சிந்தைபெற் றேனே.

பொருள் : தாய் போன்ற கருணையுடைய நந்தியைப் போற்றி வணங்க என் சிரசைப் பெற்றேன். வாய் போன்ற கோபுரவாயிலில் விளங்கும் நந்தியை வாழ்த்துவதற்கு வாயினைப் பெற்றேன். உலகினுக்கே பீசமாக உள்ள நந்தியை ஞான சாதனையால் காண்பதற்குப் போதிய அறிவைப் பெற்றேன். மனவுணர்வுக்கும் அப்பாலுள்ள நந்தியை உணர என்னுடைய சிந்தையைப் பெற்றேன். (ஆயன-ஆயன்ன-தாய் போன்ற.)

2659. கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்
குருவின் உருவம் குறித்தஅப் போதே
திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே.

பொருள் : கருட மந்திர உபாசகன் தனது ஆத்ம சக்தியினால் கருட மந்திரத்திற்குரிய கருடனை நினைத்தவுடனே, பெரிய விடம் தீர்ந்து நாகம் தீண்டியவன் மரணபயம் நீங்கி எழுவது போல, ஞான சாதகன் பேரொளிப் பிழம்பாகிய குருவினைத் தியானித்தவுடனே மும்மலங்களும் நீங்கிப் பேரொளிப் பிழம்பாக ஆவான்.

2660. அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு
அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன்இவன் ஆமே.

பொருள் : சிவகுருநாதன் நிலையாகவுள்ள இருப்பிடம் எது என்பதை உலகினர் யாரும் அறிந்து கொள்ளவில்லை. அவனது இருப்பிடம் சீவர்களிடந்தான் என்பதை ஞான விசாரணையால் அறிந்து கொள்வார்களுக்கு அப்பெருமானும் நிலையாக அவர்களது உள்ளத்தில் அமர்ந்து விடுவான். அங்ஙனம் தங்களிடம் சிவகுரு நாதனைக் காண்பவர் சிவமேயாக விளங்குவர்.

2661. தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்
மான்ற அறிவு மறிநன வாதிகள்
மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற
ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.

பொருள் : முகத்தின்முன் தோன்றிய ஒளியை அறிவதும் அறிந்தும் அறியாதிருப்பதும் ஆகிய, மயக்க அறிவு மாறிவரும் நனவு கனவு சுழுத்தியாகலாம். சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் ஆகியவற்றைக் கடந்த போது நனவாதி மூன்று நிலைகளும் நீங்கும். அப்போது திருவடியைப் புதுப்பித்த நந்தியாகிய குருநாதன் பிரணவ தேகத்தில் சீடனை விளங்குமாறு அருளுவான்.

2662. சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக்
கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்
பந்தம் இலாத பளிங்கின் உருவினள்
பந்தம் அறுத்த பரம்குரு பற்று.

பொருள் : திங்கள் மண்டிலத்தினூடு கூடிப் புருவநடுவாக இருக்கும் நறுமணம் கமழும் இரண்டிதழ்த் தாமரை மலரை நெருங்குதல் வேண்டும். நெருங்கி, ஆங்கு வீற்றிருக்கும் திருவருள் ஆற்றலாம் கன்னியைக் காணுதல் வேண்டும். அத்திருவருள் பளிங்கின் வண்ணத்தள் ஆவள். அத்திருவருளின் பெறவருந்துணையால் சிறந்த சிவஞான மெய்க்குருவின் திருவடி இணையினைப் பற்றுதல் வேண்டும். அதுவே பெரும் பேறென்க.

2663. மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழ
நிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச்
சினம்புகுந் தான்திசை எட்டும் நடுங்க
வனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே

பொருள் : மெய்யடியார்களின் தூய திருவுள்ளத்தின்கண் சிவபெருமான் புகுந்தருளினான். அங்ஙனம் புகுந்தருளியது ஏழுலகும் மகிழ்ந்து இன்புறும் பொருட்டேயாம். நீண்ட வான் உலகத்தைத் தாங்கிக் கொண்டு இந்த மாநிலத்தே புகுந்து அருளினன். ஆருயிர்களின் கொடுமை கண்டு எட்டுத் திசையும் நடுங்கும் வண்ணம் சினம் கொண்டருளினன். அவனே பேரொடுக்கப் பெரு வனத்தின்கண் புகும் பெரும் பொருளாவன். அவனுக்குரிய சிறந்தவூர் தென் தமிழ் வழங்கும் வடபால் உள்ள திருக்கயிலையாகும்.

2664. தானான வண்ணமும் கோசமும் சார்தரும்
தானாம் பறவை வனமெனத் தக்கன
தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில்
தாமாம் தசாங்கமும் வேறுள்ள தானே.

பொருள் : சீவன் அன்னமய கோசம் முதலிய ஐங்கோசங்களையே தான் என்று எண்ணி அடங்கியிருந்தது. அவை சீவனாகிய பறவை தங்குவதற்குரிய காடு என்று சொல்லத் தக்கவையாம். ஆனால், இவை தானல்ல தான் வேறு என்று சோடச கலை மார்க்கத்தினால் தனது உண்மை நிலை உணரலாம். இஃது அல்லாது இவ்வுண்மை உணர்வதற்குத் தச காரியம் விளக்கும் நெறியும் வேறு உள்ளது.

2665. மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்தி
உருவம் நினைக்க நின்று உள்ளேஉருக்கும்
கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்கு
அருவினை கண்சோரும் அழிவார் அகத்தே.

பொருள் : செவ்வி வாய்ந்த ஆருயிரைத் திருவருளால் மருவிய எங்கள் மா நந்தி பின்னைப் பிறவியில் பிரித்தறியான். அவனது திருவருள் திருவுருவை உணர்வின்கண் நினைக்க ஆருயிரின் தன்முனைப்பாகிய இருளை அத்திருவுரு கெடுக்கும். எல்லாவற்றிற்கும் காரணமாயிருக்கிற அச்சிவத்தின்கண் ஒடுங்கிக் காண வல்லார்க்கு இங்குச் சார நிற்கும் அருவினைகள் கண் சோர்ந்து அற்றழியும். இவ்வினைகட்கு அகமாக இருக்கும் மாயையும் அழியும்.

2666. தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னைப்
பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டு
நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்
தலைப்பட லாகும் தருமமும் தானே.

பொருள் : சிவஞானத் திருவருளால் மெய்ப்பொருளாம் சிவபெருமானைத் தலைப்படுதல் உண்டாகும். தத்துவன்-மெய்ப்பொருள். அத்தலைப் பாட்டினால் பலவகையாகக் கிளைக்கும் ஆசாபாசங்களை அறுத்து ஒழிக்கலாம். என்றும் பொன்றா நிலைமையுடன் திருவடிக்கீழ் நிலைபெற நாடுமின். நீங்கா நினைவுடன் இருப்பின் அவன் திருவடியைத் தலைப்படுதலாகும். அவன் போகம் ஈன்றருள் புண்ணிய வடிவினன் ஆவன். அறவாழி அந்தணன் ஆவன்.

2667. நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே.

பொருள் : குரு காட்டி வழி நின்று சாதகர் சிவனைச் சிந்தித்து இருப்பின் பெருமானும் அவரை நினைந் தருளுவான். அவ்வாறு அருள்புரியும் பொருட்டுப் புருவ மத்தியில் விளங்கும் சோதிப் பொருளை, சாதியாலும் அறிவாலும் தினையின் கூறு போன்ற சிறியவராக இருந்தாலும், இடைவிடாது சிந்திக்கின்ற மனத்துடன் அடைந்தால் அவர் பெருமையுடையவர் ஆவர். (சுனை-புருவ மத்தி.)

2668. தலைப்படுங் காலத்துத் தத்துவன் தன்னை
விலக்குறின் மேலை விதியென்றும் கொள்க
அனைத்துஉல காய்நின்ற ஆதிப் பிரானை
நினைப்புறு வார்பத்தி தேடிக்கொள் வாரே.

பொருள் : சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய சாதனை செய்யுங் காலத்தில், அவ்வழிபாடு தலைப்படுமாயின் அது தீயவினையினால் ஏற்பட்டது என்று அறிக. எனினும் எல்லாவற்றுக்கும் காரணமாயுள்ள ஆதியாகிய பெருமானைச் சோர்வின்றிச் சிந்தித்திருப்பவர் அவனது அன்பினைத் தேடிக் கொள்பவர் ஆவர்.

2669. நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கி
நிகழ்வுஒரீந் தார்எம் பிரானொடும் கூடித்
திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தியின் உள்ளே
புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.

பொருள் : சிவனை இடைவிடாது நினைந்து மெய்யுணர்வு பொருந்தினவர் அவனோடு பிரியாது இருப்பர். அவர்கள் எமது தலைவனுடன் பொருந்தி உலக வியாபாரத்தில் ஈடுபடாமல் இருப்பர். அவரது சிந்தனை உலக விஷயத்தைப் பற்றாதபடியால் உலகச் சிறப்பை விரும்பாதவர் ஆயினர். அவ்வாறு அவர்களுக்குப் புகழத்தக்க மெய்யுணர்வினை அளித்துப் பெருமான் அவருடன் ஒன்றாக விளங்கினான். (நகழ்வு-விலகுதல். நகழ்வு ஒழிதலாவது இடைவிடாது தொட்டுக் கொண்டிருத்தல்.)

2670. வந்த மரகத மாணிக்க ரேகைபோல்
சந்திடு மாமொழிச் சற்குரு கண்மார்க்கம்
இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே.

பொருள் : பச்சைக் கல்லின்மேல் சிவப்புக் கல்லைப் பொருந்தினால் மற்றோர் ஒளி வருவதுபோல, தக்க குருவால் உபதேசித்துப் பெற்ற சன்மார்க்கத்தில் சீடனிடம் மற்றோர் தகுதி வந்து பொருந்தும். இவ்வாறு பொருந்துவதில் உண்டாகும் ஒளியானது நெற்றியின் அடிப்பாகமாகிய புருவ மத்தியில் அழகிய சீவ ஒளிக்குள் விளங்கும் ஒளியாகும். (மாமொழி-பிரணவம். இலாடத்தின் மூலம் புருவ மத்தி.)

2671. உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது
மண்ணு நீரனல் காலொடு வானுமாய்
விண்ணு மின்றி வெளியானோர் மேனியே.

பொருள் : உண்ணுகின்ற வாயாகவும் உடலாகவும் உயிராகவும் பார்வையாகவும் ஞான குருவினிடம் சிவம் பொருந்தி விளங்கும். இனி, மண், நீர், நெருப்பு, வாயு ஆகாயமாகவும் ஆகாயமற்ற அறிவு உருவமாகவும் தேக தர்மத்தை விட்டு நிற்கும். ஞான குருவின் நிலை உள்ளது.

2672. பரசு பதியென்று பார்முழு தெல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்
பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு
உரிய பதியும்பா ராக்கி நின்றானே.
பொருள் : உலகம் முழுதும் தலைவன் என்று போற்றிப் புகழும் பரசிவத்தின் ஆணைவழிச் சிவசத்தியால் இவ்வுலகம் நடைபெறும். அவன் பெரிய ஆகாயத்தில் விளங்கி, தன்னை வணங்கும் அடியார்க்குத் தகுதியான ஆகாய வண்ணத்தையும் இவ்வுலகில் அளித்து விளங்கினான்.

2673. அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில்
தன்பர மல்லது தாமறியோம் என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே.

பொருள் : விரிந்தும் உயர்ந்தும் உலகங்கள் எல்லாம் ஆகாயத்தில் விளங்கும் சிவபெருமானது அருளால் நடைபெறுவது அன்றித் தாம் வேறொன்றும் அறியவில்லை என்று அறிவுடையோர் கூறுவர். இனி ஆகாய வாசிகளான தேவர்களும் அசுரர்களும் இத்தன்மையினைக் கண்டவர் அல்லர். ஆனால் அப்பெருமானது அருளைப் பெற்றிருந்தவரே அவனைக் கண்டவராவர்.

2674. கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே.

பொருள் : பசுத்தன்மையுடைய ஆன்மாக்களைப் பிறர் வணங்கும்படியான தலைவராக்கி, பிறகு நாவால் துதித்து வணங்கும்படி குருநாதன் அருள்புரிந்தான். ஆதலால் நாம் இனிமேல் பிற தெய்வத்தை வணங்க மாட்டோம். சிவம் ஒன்றாலேயே பிறதெய்வங்கள் அதிகாரங்களைப் பெற்று வகிக்கின்றன என்பதை அறிந்து தெளிந்தோம். நாமே இனி மக்களால் சென்று வணங்கும் பொருளாக ஆனோம். (கோ-ஆன்மா. கோவண மாக்குதலாவது தலைவனாக ஆக்குதல். தே-சிறுதெய்வம்.)

3. பிரணவ சமாதி

(பிரணவ சமாதி - ஓங்காரத்தில் ஒடுக்கம். பிரணவம் தூலம், சூக்குமம் என இரு வகைப்படும். அ உ ம என்ற எழுத்துக்களால் ஆகிய ஓம் என்பது தூலம். விந்து நாதமாக உணர்வது சூக்குமம். பிரணவத்தை உணர்ந்து நேயப் பொருளோடு அடங்கியிருத்தலே பிரணவ சமாதியாம்.)

2675. தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை
பாவித்த சூக்குமம் மேலைச் சொரூபப் பெண்
ஆலித்த முத்திரை ஆங்கதிற் காரணம்
மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.

பொருள் : பாரிய ஓமொழி தூலப் பிரணவமாகும். அதனால் பெறுவது பருவுடல் இன்பம். நுண்மை ஓமொழி நுண் உடற்குரிய இன்ப வாயிலாகும். மேலைச் சொரூபம் என்னும் இன்ப ஓமொழி காரணப் பிரணவமாகும். அது திருவருள் வீழ்ச்சிக்கு வாயிலாகும். அப்பிரணவம் கைக்குரியாம் முத்திரை வடிவாக இருக்கும். மா முதல் ஓமொழி மேலைப் பிரணவமாகும். இதுவே மாகாரண மெனவும் சொல்லப்படும். இது திருவடியுணர்வாம் வேதாந்த வீதியில் சேர்ப்பதாகும். (மேலைச்சொரூபப் பெண்-பராசக்தியின் வடிவமுமாம்.)

2676. ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.

பொருள் : ஓம் என்ற பிரணவத்துள்ளே உபதேசத்துக்குரிய ஒரு மொழி உதிக்கும். அஃது உருவையும் அருவையும் தன்னுட் கொண்டது. அதனுள் பல பேதங்கள் உள்ளன. இத்தகைய ஓம் என்னும் பிரணவத்தை அறிவதில் மேன்மையான முத்தியும் பொருந்தும்.

2677. ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதமும்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரா தீதத்து உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவன் பரசிவ னாகுமே.

பொருள் : அகண்டமான பிரணவத்துள்ளே ஐம்பூதங்கள் உண்டாயின. இதினின்றும் பஞ்சபூத விகாரத்தில் அசையும் உயிர்களும் அசையா உயிர்களும் தோன்றின. பிரணவத்தைக் கடந்த அதீதத்தில் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர் ஆகிய மூவகை உயிர் வருக்கங்களும் உள்ளன. அதனால் பிரணவம் உயிர்வாழ்வனவாகிய சீவர்களுக்கும் வியஷ்டியாகிய ஆன்மாக்களுக்கும் சமஷ்டியாகிய சிவத்துக்கும் உரிய நிலையாகும்.

2678. வருக்கம் சுகமாம் பிரமமு மாகும்
அருக்கச் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதார மெல்லாந்தன் மேனி
சுருக்கமில் ஞானம் தொகுத்துணர்ந் தோர்க்கே.

பொருள் : ஓமொழியின் இனமாகிய அகர உகர மகரங்கள் வருக்கம் எனப்படும். இவை இன்ப நிலையுமாகும். இறைவனுமாகும். அம்மூன்றன் தொகுப்பாகிய அருக்கம் சராசரமாகும். ஆண்மை மிக்க ஆதார நிலைகளின் உருவமெல்லாம் ஓங்காரமாகும். ஓங்காரத்தின் உண்மையுணர்ந்தோர் திருவடியுணர்வாம் நிறைஞானத் தொகுப்பு உணர்ந்தோராவர். (அ-பிரமன், உ-விஷ்ணு, ம-உருத்திரன்.)

2679. மலையுமனோ பாவம் மருள்வன வாவ
நிலையின் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம் சித்த மாகும்
நலமும் சன் மார்க்கத் துபதேசந் தானே.

பொருள் : நிலைபேறின்றி ஓவாது அலைந்து கொண்டேயிருக்கும் மனமும் உயிர்ப்பு மயங்குவதற்கு இடமாக உள்ளனவாகும். அந்நிலையில் மயக்கம் ஒழிப்பதற்குச் சிவகுருவின் விளக்கக் காட்சி எய்துதல் வேண்டும். அதுவே ஈண்டுத் தீபநெறி எனப்பட்டது. இவ்விளக்கத்திற்கு இடமும் சார்பும் உள்ளமும் தவமும் தூய்மையாதல் வேண்டும். அதுவே வாய்ப்புடையதாகும். சிவமறையாகிய நலம் நன்னெறிக்கண் செவியறிவுறுக்கும் அருமறையாகும். (அருமறை-உபதேசம். பவம்-பிராணன்.)

2680. சோடச மார்க்கமும் சொல்லும்சன் மார்க்கிகட்கு
ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழில்
கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்து
ஏறிய ஞானஞே யாந்தத் திருக்கவே.

பொருள் : பதினாறு கலை பிராசாத நெறி கூறும் சன்மார்க்கத்தில் உள்ளவர்க்கு, சிரசின்மேல் விளங்கும் துவாத சாந்த வெளியின் இறுதியும், பதினாறு கலைகளின் இறுதியான உன்மனியின் முடிவும் பிரணவமாகிய கோதண்டத்தையும் கடந்து, மேல் சென்று ஞான நிலையில் நேயப் பொருளின் முடிவில் இருத்தல் கூடும்.

4. ஒளி

(சிவன் ஒளிப்பொருள், சீவனும் ஒளிப்பொருள். சீவனாகிய ஒளிப்பொருள் சிவனாகிய பேரொளியை அறியில் பிறவி நீங்கும் என்று கூறுவது இப்பகுதி.)

2681. ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் அருவம் அறியில் அருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடன்இருந் தானே.

பொருள் : ஆன்ம ஒளியை அறிந்து நின்றால் உருவமாகிய உடல் நினைவு மறையும். மறையும் உடல் நினைவு இருக்குமாயின் மீண்டும் பிறப்பு வரும். ஆன்ம ஒளியில் மனம் உணரின் ஒளிமயமாகத் தோன்றும். ஒளியில் தோய்ந்து நிற்க அவ்வொளியும் உருகிச் சிவன் விளங்குவான்.

2682. புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்
அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்
பகல்ஒளி செய்ததும் அத்தா மரையில்
இகல்ஒளி செய்தெம் பிரான் இருந்தானே.

பொருள் : ஆன்ம சோதியை அறிந்து அதில் நிலைபெறும் ஆற்றல் உள்ளவர்க்கு உலகில் உள்ள எட்டுத் திசைகளிலும் தங்கு தடையின்றிச் செல்லும் ஆற்றல் கிட்டும். அவர்களது உள்ளத்தில் அகண்ட ஒளி பரவிப் புற இருளையும் மாற்றவல்லது. அது சகஸ்ரதளத் தாமரையிலே விளங்கிச் சூரியன் போன்ற பிரகாசத்தைச் செய்தது. மாறான மல இருளை நீக்கி ஒளியை நல்கி எம்பெருமான் அங்குப் பொருந்தியிருந்தனன்.

2683. விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி அருள
வளங்கொளி பெற்றது பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்துநின் றானே.

பொருள் : சோதி மயமான இறைவன் ஆன்மாவில் விளங்க, ஒளிமயமான அக்கினியும் விரிந்த கிரணங்களையுடைய சூரியனும் சந்திரனும் வளமான ஒளிகளாக ஆன்மாவில் பிரகாசித்தன. வளப்பம் மிக்க ஒளிமயமான ஆன்மா அடைந்தது என்ன எனில், பேரொளியான சிவன் ஆன்மாவை இடமாகக் கொண்டு கலந்து விளங்கியதேயாம்.

2684. இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே. 

பொருள் : விளங்குகின்ற ஒளியே திருமேனியாகவுடைய சிவன் ஒருபோதும் பிறக்காதவன். பிரகாசிக்கின்ற ஒளியை உடைய சூரியனும் சந்திரனும் அவனது கண்கள். வளப்பம் மிக்க ஞானஒளியை வீசுவதாகிய அக்கினியும் அவனது மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண்ணாகும். இவ்வாறாக விளக்கமான ஒளியைத் தருகின்ற மூன்றும் ஞானிகளின் உடலில் அமையும். (இலங்கு-இளங்கு-செய்யுள் விகாரம்)

2685. மேலொளிக் கீழதின் மேவிய மாருதம்
பார்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
நீர்ஒளி செய்து நெடுவிசும் பொன்றினும்
ஓர் ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே.

பொருள் : ஐம்பூதங்களுள் மேலாக நிற்கும் ஒளி விசும்பாகும். அவ்விசும்பினைத் தடவி வரும் ஒளிப்பொருள் காற்று. அக்காற்றின் பாலாய் விளங்கும் ஒளி தீ. நீருக்கு இடங்கொடுத்து எங்கணும் பரந்திருப்பது நிலம். அந்நிலத்தின்மேல் விளங்குவது நீர். மேல் ஓதிய பூதங்கள் ஐந்தும் ஓர் ஆற்றான் விளங்குவனவற்றை ஒளியென்று அருளினர். இவ்விளக்கம் முழுவதும் சிவபெருமான் திருவருளாலேயே யாகும்.

2686. மின்னியல் தூவொளி மேதக்க செவ்வொளி
பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி
துன்னிய ஆறொளி தூய்மொழி நாடொறும்
உன்னிய ஆறொளி ஒத்தது தானே.

பொருள் : மின்னலைப் போன்ற தூய்மையான ஒளி மாட்சிமையுடைய செந்நிற ஒளி, வேதங்களால் புகழ்ந்து கூறப்பெறும். மிகுந்த பரநிலையைப் பெற்ற ஆன்மாவின் ஒளி, ஆறு ஆதாரங்களில் பொருந்திய ஒளி ஆகியவற்றைத் தூய்மொழியான சிற்சித்தி நாள்தோறும் சீவர்கள் விருப்பத்துக்கேற்ப ஒரே சோதியாக அமையுமாறு அருளுவான். (தூவொளி-சிவம். செவ்வொளி-சத்தி.)

2687. விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்
உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற
வளங்கொளி எங்கும் மருவிநின் றானே.

பொருள் : சிவபெருமான் மேகத்தின்கண் மறைந்து இடை இடையே சிறு வரை தோன்றி விளக்கம் தரும் மின்னொளி போன்று ஆருயிர்களுடன் விரவி வேறற நின்று இடை இடையே அருள் விளக்கம் தந்தருள்கின்றனன். அருள்வழி நிற்கும் ஆருயிர்களின் அன்பு நிறை உள்ளத் தாமரையினை இடமாகக் கொண்டருள்பவன் சிவபெருமான். எங்கணும் உயிருக்கு உயிராய் உணர்வுக்கு உணர்வாய் வேறறப் பொருந்தி நின்றருள்பவன் சிவபெருமான்.

2688. விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி யார்அமு தாரநஞ் சாரும்
களங்கொளி ஈசன் கருதது மாமே.

பொருள் : விளங்குகின்ற ஒளியாகிய அவ்வான்மா தன் உண்மை அறியாமல் அஞ்ஞான மயமாய் இருளில் அழுந்தும். பிரகாசமான ஒளியையுடைய சிவன், வழிபடுவார்க்கு ஒளியைப் பெருக்கி நிற்பன். உப்பு நீர் பாயும், வழியில் வெளிப்படுத்தும் நஞ்சை அமுதாக ஏற்றுப் பொருந்தும். கண்டத்தை இடமாகக் கொண்ட இறைவனது சங்கற்பம் அவ்வாறு மாறச் செய்வதேயாகும்.

2689. இலங்கிய தெவ்வொளி அவ்வொளி ஈசன்
துளங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே ஒருங்குகின் றானே.

பொருள் : இயற்கையாய் என்றும் பொன்றாததாய் விளங்கும் உண்மை அறிவு இன்பப் பேரொளி எது? அதுவே சிவபெருமானின் அழிவில் பேரொளியாகும். அவ்வொளியின் அருட்கதிராய் நின்று ஒளிர்வது அருள் அறிவுப் பேராற்றலாகும். உளங்கொளியாவது அருள் நிறை ஆருயிராகும். விளங்குகின்ற இம்மூன்று ஒளியுமாக விரிந்த சுடரையுடைய சிவபெருமான் தோன்றி ஒளிக்குள் ஒளியாய் ஒருங்கி உடன் நின்று அருள்கின்றனன். (தூங்கு-நிலைபெற்று.)

2690. உளங்கொளி யாவதென்? உள்நின்ற சீவன்
வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
அளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே.

பொருள் : உள்ளும் கொள்ளும் ஒளியாக நிற்பது ஆருயிர். அவ்வுயிர்க்கு உயிராய் ஒளியாய் விளங்குவது வளப்பம் மிக்க சிவனொளி. அவ்வொளி மாமணிச் சோதியாகும். விளக்கமிக்க ஒளியாக மின்னி விளங்கும் தூய அறிவு விண்ணில் ஒடுங்கும். ஒடுங்கி வளம்பெற வழங்கும் ஒளிக்கதிர்க் கூட்டத்துள் நின்றருளினன் சிவன்.

2691. விளங்கொளி யான விகிர்தன் இருந்த
துளங்கொளிப் பாசத்துள் தூங்கிருள் சேரா
கலங்கொளி நட்டமே கண்ணுதல் ஆடி
உளங்கொளி உன்மனத் தோன்றிநின் றானே. 

பொருள் : விளங்குகின்ற ஒளியாகவுள்ள விகிர்தனாகிய சிவன் முன்னர் மிக்க ஒளியோடு கூடிய மாயையுள் வலிய இருள் பொருந்தாவாறு களங்கத்தோடு கூடிய இருளில் கண்ணுதலாகிய சிவன் நடிக்க விளங்குகின்ற ஒளியில் மன மண்டலத்தில் பொருந்தி நின்றான்.

2692. போது கருங்குழல் போல்நவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்தப் பால் உற்ற தூவொளி
நீதியின் அல்லிருள் நீக்கிய வாறே.

பொருள் : ஞான சாதனையால் ஆதியாகிய பரம்பொருளை அமரர் பிரானாகிய உருத்திர சோதியோடும் சிரசின் உச்சியில் விளங்கும் சகஸ்ரதள மலரிடைச் சென்று அடைந்தவர் ஆன்ம சோதியும் அண்டத்து அப்பாலுற்ற பேரொளிப் பிழம்புமாவர். இம்முறையில் ஆதியாகிய பரம்பொருள் சீவர்களை மாயையைக் கடக்கச் செய்யும்.

2693. உண்டில்லை என்னும் உலகத் தியல்பிது
பண்டில்லை என்னும் பரங்கதி உண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறின்
விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.

பொருள் : இவ்வுலகவர் உலகுக்குக் காரணேசுவரன் ஒருவன் உண்டு என்றும் இல்லை என்றும் கூறும் கொள்கையில் உள்ளனர். ஆன்மாவுக்கு மேலான ஒன்று பழமையில் இல்லை என்று கூறுவார்க்கு மேலான சிவகதி இருக்கக் கூடுமோ? அவ்வாறு இருப்பதைக் கண்டதில்லை என்று கூறவாறுங்கூட அறிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு முற்படின், ஆகாய மயமான தில்லையாகிய மன மண்டலத்தில் விளக்கமான ஒளியாக இறைவன் விளங்குவதைக் காணலாம்.

2694. சுடருற ஓங்கிய துள்ளொளி ஆங்கே
படருறு காட்சிப் பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசி
உடலுறு ஞானத் துறவிய னாமே.

பொருள் : சுடர்பொருந்துமாறு உயர்ந்த ஒண்மையான ஒளிவடிவாக, சாதகனது அக நோக்கில் ஆங்கே படர்ந்து விரிந்து சூரியன் போன்று ஈசன் காட்சியளிப்பான். அவ்வொளியால் அடர்ந்துள்ள மாயையின் இருளை வேறுபடுத்தினால், உடலோடு கூடியிருந்து ஞானத்தால் சாதகன் உலகைத் துறந்தவன் ஆவான்.

2695. ஒளிபவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ளச்செம்பொன் ஆதிப்பிரானும்
களிபவ ளத்தினன் காரிருள் நீக்கி
ஒளிபவ ளத்தென்னோ(டு) ஈசன்நின் றானே.

பொருள் : ஒளியை நல்கும் பவளம் போன்ற திருமேனியையுடையவனும் அதன்மேல் வெண்ணிற ஒளிபடிந்தவனும், முதிர்ந்த பவளம் போன்ற செம்பொன் நிறமுடைய ஆதிப்பிரானும் ஆகிய சிவன் மூலாதாரத்திலிருந்து களிப்பினை நல்கும் பவள நிறத்தினனாக விளங்கிக் கருமையான பாச இருளை நீக்கி ஒளிபெற்ற பவள நிறத்தினனாய் என்னோடு ஈசன் பொருந்தியிருந்தான். திருவெண்ணீறு பூசியவன் எனினுமாம்.

2696. ஈசன்நின் றான்இமை யோர்கள்நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றித் திகைத்தழைக் கின்றனர்
பாசம்ஒன் றாகப் பழவினைப் பற்றுற
வாசம்ஒன் றாமலர் போன்றது தானே.

பொருள் : ஆகாய மண்டலத்தில் இறைவன் இருந்தனன். அங்கேயே தேவர்களும் இருந்தனர். அப்படியிருப்பினும் அவர்கள் ஒளியின்றி மக்களைப் பூமியை நோக்கிச் செலுத்துபவராக உள்ளனர். இருவினை ஒப்பு வரவே ஈசன் அருளால் பழைய வினையோடு புதுவினையும் அடியோடு நீங்க, மலர் பக்குவமானபோது வெளிப்படும் மணம் போலச் சீவன் வியாபகம் அடையும்.

2697. தானே இருக்கும் அவற்றின் தலைவனும்
தானே இருக்கும் அவன்என நண்ணிடும்
வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்
பானாய் இருக்கப் பாவலும் ஆமே.

பொருள் : தேவர்களை மக்களை உலகில் செலுத்துபவராயினும் தேவர்களுக்கும் தலைவனாய்ச் சிவபெருமான் அங்கு இருப்பான். சீவர்களுக்கு முத்தியை அளித்துத் தன்னோடு பொருந்தும்படி செய்பவன் அவனன்றி வேறில்லை. பெருமையுடைய இப்பெரிய நிலத்து அச்சிவமே ஆகாய வடிவில் நிலை பெற்றுள்ளது. அப்போது சீவன் பரனாய் இருக்க எங்கும் வியாபகம் பெறுதலும் ஆகும். (பானாய்-பரனாய் செய்யும் விகாரம்.)

5. தூல பஞ்சாக்கரம்

(தூல பஞ்சாக்கரம் அல்லது தூல ஐந்தெழுத்தாவது சிவாயநம ஆகும். சிவாயநம என மானசீகமாகச் செபித்தால் சூக்கும அசைவுகள் ஆகாயத்தில் பொருந்தி குலாதாரம் முதலாக நிற்கும் நமசிவய என்ற தேவனைத் தேகத்தில் பொருந்துமாறு செய்துவிடும். நவசிவய என்பது உடம்பில் நிற்கும் நிலையாம். கிரியை முறையில் நமசிவாய என்பதைத் தூல பஞ்சாக்கரம் என்று கூறுவர். வேத நெறியில் உள்ள புறவழிபாடு நமசிவாய ஆகும். ஆகம நெறியில் தியானத்திற்கு உரியது சிவாய நம ஆகும். (சிவாயநம-சூட்சுமம் என்றும், நமசிவாய-ஸ்தூலம் என்றும் பொதுப்படக் கூறுவர்.)

2698. ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே.

பொருள் : ஓங்காரத்துடன் கூடிய ஐம்பத்தோர் எழுத்துக்களால் ஆகியதே பொதுவும் சிறப்புமாகக் கூறப்படும் தொன்மைத் தமிழ்மறையும் முறையும் என்ப. மறையை வேதம் எனவும் முறையை ஆகமம் எனவும் கூறுப. இவ் எழுத்துக்களால் ஆகிய பயனை உணர்ந்தபின் இவையனைத்தும் ஒடுங்கி ஐந்தெழுத்தே நின்று நிலவி முதன்மையுறும் என்க. ஐம்பது எழுத்துக்களாவன: அகரம் முதலாக க்ஷகாரம் முடியவுள்ள கிரந்த எழுத்துக்கள் ஐம்பதாம்.

2699. அகாரம் முதலாக ஐம்பத்தொன் றாகி
உகாரம் முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந் தேறி
நகார முதலாகும் நந்திதன் நாமமே.

பொருள் : எழுத்துக்கள் அகாரம் முதலாக ஐம்பத்தோர் எழுத்துக்களாகி உகாரம் முதலாக நிலைபெற்று நின்று மகாரத்தில் இறுதியடைந்து தேய்ந்து தேய்ந்து மேல்சென்று நகாரத்தை முதலாகவுடைய நந்தியின் நாமம் நமசிவாய ஆகும். திருமூலர் காலத்தில் தமிழில் உயிர் 16, மெய் 35 ஆக 51 எழுத்துக்கள் இருந்தனவாக ஒரு சாரார் கூறுகின்றனர்.

2700. அகாராதி யீரெட் டலர்ந்த பரையாம்
உகராதி சத்தி உள்ளொளி ஈசன்
சிகாராதி தான்சிவம் ஏதமே கோணம்
நகாராதி தான்மூல மந்திரம் நண்ணுமே.

பொருள் : திருவருள் கலப்பால் தோன்றும் அகரமுதலிய உயிர் எழுத்துக்கள் பதினாறு. உகராதி சிவபெருமானின்  திருவருள் ஆற்றலாகும். அவ்வாற்றல்களின் உள்ளொளியாய் விளங்குபவனும் சிவனே. சிகர முதலாக ஓதப்பெறும் சிவயநம சிவவேதம் என்று சொல்லப்படும் திருவடியுணர்வாகும். இவ்வுணர்வினைப் பெறும் உரிமை வாய்ந்த ஆருயிர் கோணம் எனப்படும். நகரமுதலாக ஓதப்படும் நவசிவய மூலமந்திரம் எனப்படும். இவற்றால் திருவடிப்பேறு எய்தும்.

2701. வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி
ஆய இலிங்கம் அவற்றின்மே லேஅவ்வாய்த்
தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்
ஆயதீ ரும்ஐந்தோ டாம்எழுத் தஞ்சுமே.

பொருள் : வாயினால் உச்சரிக்கப்படும் கூத்தப்பெருமான் திருஐந்து எழுத்தாகிய சிவாயநம வாய் கழுத்து இதயம் உந்தியோடு ஆகிய இலிங்கம் என்ற ஐந்து இடங்களிலும் மேலிருந்து ஆகாயமயமாய்ப் படர்ந்து மூலாதாரத்தை அடைந்து முதுகந்தண்டின் வழியாக நேரே ஆகாய வீதியான உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தை அடைந்து, முடிவாவதில் நமசிவாய என்ற சோதி உருவம் இவ்ஐந்து இடங்களினின்றும் எழும்.

2702. கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்
கரணங்கள் விட்டுயிர் தான்எழும் போதும்
மரணங்கை வந்துயிர் மாற்றிடும் போதும்
அரணங்கை கூட்டுவ(து) அஞ்செழுத்தாமே. 

பொருள் : ஊதா, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு, இளநீலம் என்னும் ஏழு நிறக்கதிர்கள் சேர்ந்த நிலையில் எரியொளி உண்டாகும். அவ் எரி மிகுதிப்பட்டு நின்றபோது கருவிக் கூட்டங்களினின்றும் ஆருயிர் எழுந்து புறம் செல்லும் அவ்வுயிர் இறப்பினை மேற்கொண்டு உடம்பினை விட்டு அகலும், அப்பொழுது அவ்வுயிர்க்கு என்றும் பொன்றா அரணப் புகலிடமாக இருப்பது சிவபெருமானின் திருவடி. அத்திருவடியினை ஒருவாமல் மருவு விப்பது திருஐந்தெழுத்தாகும். (மரணம்-யமன், அரணம்-உயிர்க்கு அரணாகிய முத்தி.)

2703. ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர்
சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும்
வாயுற ஓதி வழுத்தலும் ஆமே.

பொருள் : சூரியனும் சந்திரனும் மிகுந்து மேல் எழும்போது, அழகு பொருந்திய ஒளியாக விளங்கும் மந்திரத்தை யாரும் அறியவில்லை. செம்மை நிறமுடைய குண்டலினி அம்மைக்குரிய பஞ்சாட்சரத்தை வாயினுள்ளே மென்மையாகச் செபித்தல் கூடும். (ஞாயிறு-பிங்கலை. திங்கள்-இடகலை.)

2704. தெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்று
உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர்
துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே.

பொருள் : தெளிந்த அமுதமயமான ஒளி உண்டாகச் சிவாய நம என்று, உள்ளே ஒளிபெற ஒருதரம் நினையுங்கள். இவ்வாறு வெள்ளம் போன்று பெருகி வரும் சீவ ஒளியை விரும்பிப் பெறாதவர், துள்ளிய நீர் மீண்டும் நீரிலேயே விழுந்து கெடுவதைப் போலப் பிறவிச் சக்கரத்தில் மீண்டும் விழுந்து கெடுவர்.

2705. குருவழி யாய குணங்களில் நின்று
கருவழி யாய கணக்கை அறுக்க
வருவழி மாள மறுக்கவல் லார்கட்(கு)
அருள்வழி காட்டுவ(து) அஞ்செழுத் தாமே.

பொருள் : ஒளி நெறியின் இயல்பினை உணர்ந்து நின்று பிறவிக்குக் காரணமான வினைகளை அறுக்க அப்பிறவி வரும் வழியைத் தடைசெய்யும் திறனுடையார்க்கு அருள் நெறியைக் காட்டுவது பஞ்சாட்சரமாகும்.

2706. வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது
செறிக்கின்ற நந்தி திருவெழுத் தோதும்
குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்
குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே.

பொருள் : மனம் தடுமாற்றத்தை அடையும் வண்ணம் தீவினையால் உண்டாகும் துயரம் வந்தபோது, உன்னிடம் செறிந்துள்ள சிவத்தைப் பிரகாசிக்கச் செய்ய திருஐந்தெழுத்தை ஓதுவாயாக. உன்னுடைய விருப்பத்தை அறிந்து ஒலிக்கின்ற திருவடியால் உனக்கு உறுதுணையாக இருப்பதை உணர்த்துவான். இவ்விதமான குறிப்பை அறிபவர் சிவரூபத்தை அமைக்கும். கோன்உரு-சிவரூபம்.

2707. நெஞ்சு நினைத்து தம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுறை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.

பொருள் : தினமும் தூங்குவதற்கு முன் திருஐந்தெழுத்தை நினைந்து தமது தொண்டை வழியாகப் பிரமாந்திரம் செல்லும் ஊர்த்துவ கதி உணர்வை எழுப்பி, சிவனது திருவடியில் அடைக்கலம் புகுவதாக எண்ணி இருப்பின், பனிப்படலம் போன்ற வெண்மை நிறமுள்ள சகஸ்ரதளத்தில் அஞ்செழுத்தில் விளங்கும் சிவனது அருளைப் பெறலாம். (வடவரை கயிலை எனினுமாம்.)

2708. பிரான் வைத்தஐந்தி பெருமை உணராது
இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்
பராமுற்றும் கீழொடு பல்வகை யாலும்
அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே.

பொருள் : பரவியுள்ள பூமி தத்துவம் முழுவதும் கீழோடு எல்லாவற்றையும் தாங்கும் குண்டலினியாகிய அரவினை உள்ளும் புறம்புமாக இயக்குபவனே சிவானாவான். அத்தகைய பெருமான் அருளிய பஞ்சாட்சரத்தின் பெருமையை உணராமல் ஞானச்செல்வம் பெறாத ஏழை மக்கள் அவர்களிடம் பொருந்திய அஞ்ஞானமாகிய இருளை அகற்றவா முடியும்? முடியாது என்றபடி (அராமுற்றும் சூழ்ந்த-ஆதி சேடனால் தாங்கப்படுகின்ற எனினுமாம்.)

6. சூக்கும பஞ்சாக்கரம்

(ஒளியை நினைந்து சிவாய நம என ஓதல் சூக்கும பஞ்சாட்சரம். இஃது ஒளிபெற்ற குருவால் சீடனுக்கு உபதேசம் செய்தல்.)

2709. எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்
தெளியவே ஓதின் சிவாயநம என்னும்
குளிகையை இட்டுப்பொன் னாக்குவான் கூட்டையே.

பொருள் : எங்களது பெருமானாகிய சிவனை எள்ளி நகையாடி அவனது இயல்பைப் பற்றி வாதம் பேசுபவர் அறியாதவர். அவ்வாறின்றி அவனை ஒளிமயமாக நினைந்து உருகுகின்ற மனமுடையவராய் அவனே ஒளியாக வெளிப்படுவான் என்று நினைந்து சிவாயநம என ஓதுங்கள். அப்போது இரசவாதிகள் குளிகையை இட்டுச் செம்பைப் பொன்னாக்குவதுபோல் அவன் மலக்குற்றத்தோடு கூடிய உடம்பைப் பொன்னொளி பெறச் செய்வான்.

2710. சிவன் சத்தி சீவன் செறுமலம் மாயை
அவம் சேர்த்த பாசம் மலம்ஐந் தகலச்
சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம் சேர்த்த பாசம் அணுககி லாவே.

பொருள் : சிவாயநம என்னும் திருஐந்தெழுத்தில் முறையே சிவன் சத்தி சீவன் அடுகின்ற மலம் மாயை என்பதாக அச்செபத்தால் துன்பத்தைக் கொடுக்கும் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகிய ஐம்மலங்களும் நீங்க, சிகர வகரத்தில் உணர்த்தப்பெறும் சிவன் சத்தியுடன் யகரமாகிய சீவன் பொருந்த துன்பத்தைத் தரும் பாசம் சீவனைப் பற்றாது போகும்.

2711. சிவனரு ளாய சிவன்திரு நாமம்
சிவன் அருள் ஆன்மாத் திரோதம் மலமாய்ச்
சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்
பவம தகன்று பரசிவ னாமே.

பொருள் : சிவசத்தியினது சிவாயநம என்ற பஞ்சாட்சரமானது சிவன் சத்தி ஆன்மா திரோதாயி மாயாமலம் என நிற்கும். சீவன் சிகாரத்தை முதலாகச் செபிக்கும் முறையில் விளைகளை ஒழித்தலோடு பிறப்பு நீங்கிப் பரசிவனாகும். சிவயநம என்றபோது சிவ பஞ்சாட்சரமாகவும், சிவாயநம என்ற போது சத்தி பஞ்சாட்சரமாகவும் கொள்ள வேண்டுமென்பது ஒருசாரார் கொள்கை.

2712. ஓதிய நம்மலம் எல்லாம் ஒழிந்தட்டுஅவ்
ஆதி தனைவிட் டிறைவன் அருட்சத்தி
தீதில் சிவஞான யோகமே சித்தக்கும்
ஓதும் சிவாய மலம்அற்ற உண்மையே.

பொருள் : மேற்கூறியவாறு சிவாயநம என்று கணிப்பதில் நம்மால் குறிக்கப்பெறும். மலமாகிய இருள் அகன்று, அவ்ஆதியாகிய குண்டலினி சக்தியை விட்டுச் சிற்சக்தியால் ஒளிமயமாகப் பிரகாசிப்பதில் தீமையில்லாத சிவஞான யோகம் கைகூடும். அப்போது சிவாய என்ற ஒளியைப் பூசியுங்கள். இதுவே மலம் நீங்கிய உண்மை நிலையாம்.

2713. நமாதி நனாதி திரோதாயி யாகித்
தமாதிய தாய்நிற்கத் தாள்அந்தத் துற்றுச்
சமாதித் துரியந் தமதாகம் ஆக
நமாதி சமாதி சிவஆதல் எண்ணவே.

பொருள் : நகரம் முதல்முறையாகவுடைய சுவாதிட்டானம்,  மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆதாரங்களில் நனவு முதலிய நிலைகளில் தொழிற்படும் உணர்வு மறைப்புச் சக்தியால் இயங்கி, சீவரது ஆதிசக்தியின் நிலையான ஒளியில் பொருந்த நனவாதி நிலைகளில் பொருந்திய உணர்வு முடிவடைந்து சுத்த வித்தியா தத்துவம் சிரசின் மேல் விளங்கித் துரிய நிலையைத் தம்மிடத்தே பெற்று, மூலாதாரம் முதல் சோதியாக விளங்குவதில் சமாதியுற்றுச் சிவாயநம என எண்ணுவதில் சிவமாவர். சிவய சிவ என எண்ணுவதே சிறப்பாகும் எனினுமாம்.

2714. அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவர் உள்ளுறை மாயை
திரிமலம் நீங்கச் சிவாய என்று ஓதும்
அருவினை தீர்ப்பதுவும் அவ்வெழுந் தாமே.

பொருள் : அருளின் பேதமாகிய சத்திக்கூட்டமும் அத்தனாகிய சிவனும் கலப்பதினால் ஆன்மாவைத் தேகத்தோடு பொருந்தும்படி செய்தவராவர். அவ்வுடம்பு மாயையில் தங்கும். ஆனால் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களும் விலகச் சிவாய என்று ஒளி உருவாகப் பூசை செய்யுங்கள். அப்போது நீங்குதற்குரிய வினைக் கூட்டங்களை அகற்றுவது சிவாய ஆகும்.

2715. சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் ளடங்கச்
சிவசிவ ஆய தெளிவின்உள் ளார்கள்
சிவசிவ மாகும் திருவரு ளாமே.

பொருள் : வாய் பேசா மௌனிகளும் சிவசிவ என்று எண்ணுவதில் உள்ள நன்மையை அறிகிலர். சிவ சிவ என்று எண்ணுவதோடு சுவாச கதியும் இயங்காமல் இலயமடைய சிவமும் சத்தியுமாய மகாமனுவைத் தெளிந்தவர்கள் திருவருள் பெற்றுச் சிவசத்தியாகவே அமைவர்.

2716. சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.

பொருள் : முற்பிறவியில் செய்த தீவினையின் காரணமே சிவசிவ என்று ஓதாமல் இருப்பதாகும். எத்தகைய தீவினையாளரும் சிவசிவ என்று கணிப்பாராயின் அவர் செய்த தீயவினைகள் கெட்டு ஒழியும், மேலும் அவர்கள் தேவசாரீரம் பெற்று விளங்குவர். அவர்களுக்கு அவ்வாறு கணிப்பதால் சிவகதியும் அமையும்.

2717. நமஎன்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவஎன்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்
பவமது தீரும் பரிசும்அ தற்றால்
அவமதி தீரும அறும்பிறப் பன்றே.

பொருள் : சிவாயநம என்ற பஞ்சாக்கரத்தைச் செபிக்கும் முறையில் நம என்ற எழுத்துக்களை நாவினுள் கண்டப் பிரதேசத்தில் நிறுத்தி, சிவ என்ற நாமத்தைச் சிரசின் மேல் மன மண்டலத்தில் நினைக்க, பாவம் நீங்கும். தன்மையும் அதுவாம். அவ்வாறாயின் அஞ்ஞானம் நீங்கும்; பிறப்பும் அகலும்.

7. அதிசூக்கும பஞ்சாக்கரம்

(சிவாய சிவசிவ என்பது அதிசூக்கும பஞ்சாக்கரம். அஃதாவது இருளை விட்ட ஆன்மா சிவசத்தியைத் தாரகமாகக் கொண்டு அழிவற்ற நிலைபெறும் என்பதாம். ஒளியில் நினைப்பும் அற்று அடங்கி நிற்றலே அதிசூக்கும பஞ்சாக்கர தரிசனமாகும்.)

2718. சிவாய நமஎனச் சித்த ஒருக்கி
அவாயம் அறவே அடிமைய தாகிச்
சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை
அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே.

பொருள் : முற்கூறியவாறு சிவாயநம என்று சித்தத்தைப் புறத்தே செல்லாமல் அகநிலையதாக்கி, மலத்தாலாகிய துன்பத்தை நீக்கிச் சிவத்துக்கு அடிமையாக்கி, சிவாய சிவசிவ என்று பலமுறை, சித்தத்தில் எண்ணி அச்சம் நீங்க ஆனந்தம் உண்டாகும். (அவாயம்-அபாயம்.)

2719. செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம்
அஞ்சண வும்முறை ஏறிவழிக்கொண்டு
சுஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனை
நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே.

பொருள் : அதிசூக்கும பஞ்சாக்கர தரிசனத்தால் மூலாதாரத்திலுள்ள அக்கினி சூரிய மண்டலத்தைப் பேதித்துச் சென்று, தோளுக்கு மேல் விளங்கும் சந்திர மண்டல ஒளியில் ஐயறிவுகளும் பொருந்தும் முறையில் போய், யோக நித்திரையில் பொருந்தியிருக்கும் அவன், உலகை மறந்திருக்கும் அப்போது சிவத்தை நெஞ்சில் இடமாகக் கொண்டு பிரியாதிருக்கும் நிலை அடையலாம்.

2720. அங்கமும் ஆகம வேதமும் ஓதினும்
எங்கள் பிரான்எழுத் தொன்றில் இருப்பது
சங்கைகெட்டு அவ்வெழுத் தொன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.

பொருள் : வேதம் ஆகமம் வேதாங்கம் ஆகியவற்றை முறையாக ஓதினாலும், அவை யாவும் சிவபிரானது எழுத்து ஒன்றாகிய சிகாரத்தில் இருப்பனவாம். சந்தேகம் நீங்கி அவ்எழுத்தின் உண்மையை உணர்ந்து சாதனை செய்தால் அதுவே முத்திக்கரையினை உடைவித்த அருமையான தோணியாதல் விளங்கும். (அங்கரை அழகிய முத்திக்கரை.)

2721. பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே
விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை
எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே.

பொருள் : பழமையான வேத சிரசினுள்ளே ஐந்து எழுத்துக்களாகிய கனி முதிர்ந்து கிடக்கின்றன. ஆனால் அக்கனியை உண்பதற்கு அதனைச் சிந்தித்து அறிதுயிர் கொள்ளும் செயல் அறிபவர் இல்லை. மூடர்கள் அதன் பெருமையை அறியாமல் அஃது எழுத்துக்களால் ஆனவைதானே என்று கூறுவர். அஃது அவரது தலைஎழுத்தை மாற்றிப் படைக்கும் எழுத்து என்பதை அறியார். (ஐந்து பஞ்சாட்சரம். எழுத்து-சி.)

8 ஏ. திருக்கூத்து தரிசனம்

(திருக்கூத்து-ஒளி அசைவு தரிசனமாவது, அவ்ஒளியில் திளைத்திருத்தல். இது பஞ்சாக்கர செபத்தால் அமைவது இவ்ஒளி அசைவே எல்லா அசைவுக்கும் காரணமாம்.)

2722. எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டதே.

பொருள் : சிவம் அகண்டமாய் எங்கும் வியாபித்துள்ளதுபோல் அதன் சத்தியும் அண்டமாய் உள்ளது. அஃது எங்கும் பரந்துள்ள அறிவாகாயத்தில் நிறைந்து எவ்விடத்தும் அசைவினை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. சிவம் அகண்டமாய் எங்கும் வியாபித்துள்ளமையால், சிவன் யாவற்றிலும் பொருந்திச் சிருஷ்டியாதி ஐந்தொழிலைத் தனது சத்தியாலே செய்கிறான்.

2723. சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனை
சொற்பத மாய்அந்தச் சுந்தரக் கூத்தனை
பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே.

பொருள் : சிவானந்தத்தை விளைவிக்கும் கூத்தனும் சொல்பதமாகிய பிரணவத் தொனியில் விளங்கும் அழகிய கூத்தனும், சிரசின்மேல் ஆகாயத்தில் பொன் ஒளியில் விளங்கும் கூத்தனும், நெற்றிக்கு நேரே பொன் ஒளியில் விளங்கும் கூத்தனும், சொல் ஒண்ணாத பரவச நிலையை அளிக்கும் கூத்தனும் ஆகிய, அறிவுருவாகிய சோதிப் பிழம்பாகிய சிவனை யாரால் அறிய முடியும்? (இம்மந்திரத்தில் 1. சிவானந்தக்கூத்து, 2. சுந்தரக்கூத்து, 3. பொற்பதிக்கூத்து, 4. பொன்தில்லைக் கூத்து, 5. அற்புதக்கூத்து எனச் சிவநடனம் ஐவகைப்படும் என்பதை உணர்த்திற்று.)

8 பி. சிவானந்தக்கூத்து

(அஃதாவது சிவானந்தத்தை விளைவிக்கும் கூத்து.)

2724. தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேனுந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்த நடம்செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே.

பொருள் : தனக்கு ஒரு அழிவில்லாச் சத்தாகிய ஆனந்த சத்தியின் இடமாக, இன்பமாகிய தேனைப் பிலிற்றும் ஆனந்தத்தை விளைவிக்கும் பெரிய கூத்தினைக் கண்டவர்களே சீவ போதம் கடந்து விளங்கும் திருக்கூத்தை இயற்றும் நம்பியாகிய சிவபெருமானுக்கு அவ்விடத்து ஆனந்தமே திருக்கூத்து ஆடுதற்கு இடமாயிற்று.

2725. ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்இயம் ஆனந்த வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்தகந் தானுக்கே.

பொருள் : ஆகாய ஒளி அணுக்களின் நடனம் ஓர் ஆனந்தம்; ஆகாயத்திலுள்ள தொனி ஆனந்தம்; ஆகாய அணுக்கள் ஒன்றோடொன்று உரசுவதால் உண்டாகும் தொனியும் ஆனந்தம்; ஆகாயப் பொருளாக விளங்கி ஆனந்தத்தை விளைவிக்கும் தோத்திரங்களின் ஞானமும் ஆனந்தமாக; ஆனந்தத்திலிருந்து நடக்கும் சிவபெருமானுக்கே அசைவனமும் அசையாதனவுமாகவுள்ள யாவும் ஆனந்தமாகும். (பல்லியம்-வாத்தியங்கள். வாச்சியம்-அபிநயம்.)

2726. ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருத்துறை அந்தத்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.

பொருள் : அறிவுப் பேரொளியாய் விளங்கும் சிவமும், தத்துவங்களை நீங்கிய நிலையில் என்றும் உள்ளதாகிய ஆன்மாவாகிய பரமும் ஆருயிர்க்கு அன்பு செய்யும் சிவகாமியாகிய இன்பம் பொருந்திய சத்தியாகிய பரமும் ஆகிய மூன்றும் கருத்தில் உறைகின்ற அந்த ஆனந்த எல்லையே சிவானந்த நடனத்தின் பயனாகும்.

2727. ஆன நடமைந்து அகள சகளத்தன்
ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.

பொருள் : உருவமில்லாத பெருமான் உருவை எடுத்துக் கொண்டு சீவர்கள் பொருட்டுப் புரிகின்ற நடனம் ஐந்தாகும். அவ்வாறான நடனத்தைப் புரிந்து ஐந்தொழிலை நடத்துவதற்காக அத்தொழிலைத் தனது சத்தியால் சிருட்டியாதி செய்து தேன் போன்ற மொழியினையுடைய உமாபாகன் நடனத்தைச் செய்தருளுவான். (ஐங்கருமத்தாக-படைப்பாதி ஐந்து தொழில்களுக்காக.)

2728. பூதாண்டம் பேதாண்டம் போகாண்டம் யோகாண்டம்
மூதாண்ட முத்தாண்டம் மோகாண்ட தேகாண்ட
தாகாண்டம் ஐங்கரு மத்தாண்ட தற்பரத்து
ஏகாந்த மாம்பிர மாண்டத்த தென்பவே.

பொருள் : ஐம்பூதங்களால் ஆகிய அண்டம், வெவ்வேறு வகையாகப் பூதங்கள் கலப்பதால் ஆகிய அண்டம், நல்வினை தீவினைக்கு ஏற்ப அனுபவங்களைப் பெறும் அண்டம், யோக பலத்துக்கு ஏற்ப யோகிகள் நிலைபெறும் அண்டம், புனர்உற்பவ காலத்துச் சீவர்கள் பிறப்பெடுக்கும் பழமையான அண்டம், சிவப்பேறு பெற்று மீளாது உறையும் முத்தர்கள் வதியும் அண்டம், ஆசையுள்ள உயிர் தேகம் விட்டபின் உறையும் அண்டம், பூத உடலோடு சீவர்கள் வாழும் அண்டம், மிகுந்த வேட்கையுடையார் வாழும் அண்டம் ஆகிய ஒன்பது அண்டங்களும் ஐந்தொழிலும் தொடர்ந்து நடைபெற்றுவரும் சிவத்தின் ஒரே ஆளுகைக்கு உட்பட்ட ஏகாந்தமாம். இவை தனியாக இருக்கக்கூடிய பிரமாண்டத்தின் கண்ணவாம். இவையனைத்தும் சிவனது ஆளுகைக்கு உட்பட்டவை.

2729. வேதங்க ளாட மிகும்ஆ கமமாடக்
கீதங்க ளாடக் கிளாண்டம் ஏழாடப்
பூதங்க ளாடப் புவனம் முழுதாட
நாதன்கொண் டாடினான் ஞானானந் தக்கூத்தே.

பொருள் : வேதங்களின் அறிவு ஆட, மிகுந்திருக்கின்ற ஆகமங்களின் அறிவு ஆட, கீதங்களின் அறிவு ஆட, ஆதார சக்கரங்களினால் வரும் ஏழுவகை அறிவும் ஆட, ஐம்பூத காரிய அணுக்களின் அறிவு ஆட, இருநூற்று இருபத்து நான்கு புவனங்களில் பெறும் அறிவு ஆட, ஞானத்தை அளிக்கும் ஆனந்தக் கூத்தைச் சிவன் நாதசத்தியைக் கொண்டு ஆடினான். (ஆடுதல்-தொழிற்படுதல்; புடைபெயர்தல். வேதம்-வாழ்க்கை நூல் ஆகமம்-வழிபாட்டு நூல்.)

2730. பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள் ஐந்தில் மிகும்ஆ கமம்ஐந்தில்
ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே.

பொருள் : ஐம்பூதங்களிலும், ஐம்பொறிகளிலும், ஐம்புலன்களிலும், ஐந்து வேதங்களிலும் மிகுந்த எண்ணிக்கையுடைய ஆகமங்களிலும் ஓதுதற்குரிய பல கலைகாலம் ஊழிகளோடு பல்வகை அண்டங்களிலுள்ள ஐவகை அறிவுகளிலும், கலந்த சித்த மூர்த்தியாகிய சிவன் அவற்றினூடே ஆடிக் கொண்டிருக்கின்றான்.

2731. தேவர் அசுரர்நரர் சித்தர்வித் யாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சாத்தர் சமயம் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்இறை ஆடவே.

பொருள் : ஒளியுடலில் சஞ்சரிப்போர், வானுலக வாசிகள், மானிடர், அறிவு உடலில் சஞ்சரிக்கும் சித்தர், கந்தருவர், பிரமன், விஷ்ணு உருத்திரர் ஆகிய மூவர், பன்னிரு ஆதித்தர், பதினேர் உருத்திரர், எட்டு வசுக்கள், இரு மருத்துவர் ஆகிய முப்பத்து மூவர், தவசிகள் ஏழு முனிவர்கள் ஆகியோர் சமயம், இயங்கும் உயிர் வருக்கம், இயங்கா உயிர் வருக்கம் ஆகிய யாவும் எம்இறையாகிய சிவன் ஆட ஆடிடும்.

8 சி. சுந்தரக்கூத்து

(அஃதாவது, சொற்பதமாகிய பிரணவத்தில் நடிக்கும் அழகிய கூத்து)

2732. அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல்
கண்டங் கரியான் கருணைத் திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.

பொருள் : மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் ஈறாக உள்ள ஏழு அண்டங்களுக்கு அப்பாலாய் சதாசிவத்தின் உச்சியின்மேல் விளங்கும் சத்தியின் இடமாக நீலகண்டப்பெருமான் கருணையே வடிவாகக் கொண்டு அவ்விடத்தில் தன்னில் பிரிந்த சத்தியாகிய உமையம்மை காணும்படியாகத் திருக்கூத்தை விரும்பி ஆடினான்.

2733. கொடுகொட்டி பாண்டரம் கோடுசங் காரம்
நடம்எட்டோடு ஐந்து ஆறு நாடியுள் நாடும்
திடம்உ ற்றெழும் தேவ தாருவனத் தில்லை
வடம்உற்ற மாவன மன்னவன் தானே.

பொருள் : கொடுகொட்டி, பாண்டரங்கம், கோடு, சங்காரம் ஆகியவற்றையும் எட்டு வகையான நடனத்தோடு ஐந்து வகை நடனத்தையும் ஆறு வகையான நடனத்தையும் இடை, பிங்கலை, சுழுமுனை வழியாகக் கண்டு அறியவும் இனி தேவதாரு வனம், தில்லை வனம், ஆலவனம் ஆகியவற்றிலும் நடராசப்பெருமான் சிறந்து விளங்குவான்.

2734. பரமாண்டத் துள்ளே பராசத்தி பாதம்
பரமாண்டத் துள்ளே படரொளி ஈசன்
பரமாண்டத் துள்ளே படர்தரு நாதம்
பரமாண்டத் துள்ளே பரன்நட மாடுமே.

பொருள் : பரமாண்டம் எனப்படும் அப்பால் அண்டத்தூடு பராசத்தியாகிய வனப்பாற்றலின் திருவடி காணப்படும். அவ்வண்டத்து ஊடு நனிமிகு ஒளியுடைய ஆண்டவன் காணப்படுவன். அதனூடு ஓசை மெய்யாகிய நாதம் காணப்படும். அவ் அண்டத்தூடு பரனாகிய சிவபெருமான் நடமாடி அருள்கின்றனனன்.

2735. அங்குசம் என்ன எழுமார்க்கப் போதத்தில்
தங்கிய தொம்தி எனுந்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போதல் இல்லையே.

பொருள் : அங்குசம் போன்று எழுகின்ற நாத சம்மியத்தில், சீவ அறிவில் பொருந்திய தொம்தீம் எனத் தட்டும் தாள ஒத்தினில், சங்கரன் சுழுமுனையாகிய மூல நாடியில் நிலை பெற்று ஆடல்புரியும் காலத்தில் மனம் புறம் போதலை விட்டு அடங்கிவிடும். (தொந்தி-தாள ஒலி, சங்கரன்-சுகத்தைச் செய்பவன், சிவன்.)

2736. ஆளத்தி ஆடிப் பின்நவக் கூத்தாடிக்
காலத்தீ ஆடிக் கருத்தில் தரித்தாடி
மூலச் சுழுனையுள் ஆடி முடிவில்லா
ஞாலத்துள் ஆடி முடித்தான்என் நாதனே.

பொருள் : சீவர்களாகிய பசுக்களின் அறியாமையைப் போக்க விரும்பி ஆடி, அறிவு பெற்றபின் சீவர்களிடம் ஒன்பது வகையாகப் பொருந்தி ஆடி, சீவர்களிடம் அஞ்ஞானமான காட்டில் விரும்பி ஆடி, அவரது கருத்தினில், பொருந்தி ஆடி மூன்று நாடிகளும் பொருந்தும் இடமான சுழுமுனையுள் ஆடி எல்லையில்லாத சிவஞானத்தில் ஆடல் பொருந்தி எனது சீவ போதத்தைக் கெடுத்து அருளினான் என் நாதனாகிய சிவபெருமான்.

2737. சத்திகள் ஐந்தும் சிவபேதந் தாம்ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம்எட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தாம்எட்டும்
சுத்திகள் எட்டீசன் தொல்நட மாடுமே.

பொருள் : ஐந்து சத்திகளிலும் சிவபேதங்களாகிய ஐந்திலும், அஷ்டமூர்த்தம் லயமடையும் நிலை எட்டிலும், அந்நிலையில் அறிவு குன்றாமல் நிற்கும் நிலைகள் எட்டிலும், அணிமாதி சித்திகள் எட்டிலும், அஷ்டமூர்த்தத்தில் ஒன்றுக்கொன்று மேலான நிலைபொருந்திய நிலை எட்டிலும், சுத்திகள் எட்டிலும் இறைவனாகிய சிவன் பொருந்தி நடமாடுகின்றான்.

2738. மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள் ஏழும் சிவபாற் கரன்ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் தாம்ஏழும்
ஆகின்ற நந்தியடிக்கீழ் அடங்குமே.

பொருள் : மேகங்கள் ஏழும், கடல்கள் ஏழும், தீவுகள் ஏழும், தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் ஆகியவற்றின் உடல்கள் ஏழும், சிவபாஸ்ர உருவங்கள் ஏழும், ஏழு நாவினையுடைய தீயும், ஏழுவகை அடக்கமும் எல்லாமாய் ஆகின்ற சிவபிரானது திருவடியின்கீழ் அடங்கும்.

8 டி. பொற்பதிக்கூத்து

(சிரசின் மேல் பொன்ஒளியில் விளங்குவது பொற்பதிக்கூத்து. பொற்பதி-பொன் ஒளி விளங்கும் சிரசு. இதுவே பொன்னம்பலமாகும்.)

2739. தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில்
அற்புத மானஓர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.

பொருள் : சதாசிவத் திருமேனியில் அற்புதமான அஞ்சுமுகத்திலும் ஒப்பற்ற பேரின்பம் தரவல்ல உருவம், அருவுருவம், அருவம் ஆகிய நலந்தரு பேதத்துள்ளும் அந்த மேலான சிவன் பொருந்தி ஒப்பற்ற நடனத்தைப் புரிந்தருள்கின்றான்.

2740. அடியார் அரன்அடி ஆனந்தங் கண்டோர்
அடியா ரவர்அர னத்தனரு ளுற்றோர்
அடிஆர் பவரே அடியவ ராவர்
அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே.

பொருள் : சிவபெருமான் திருவடி இன்பத்தினைத் திருவருளால் கண்டோர் மெய்யடியார் ஆவர். சிவபெருமானின் திருவடிக் கீழுறப் பெற்றோர் அருள் அடியார் ஆவர். திருச்சிற்றம்பலமாகிய பொன்னம்பலத்தின்கண் நிகழும் திருக்கூத்தினைக் கண்டோர் சிவனடியாராவர். இவர்கள் மெய்யே அருள்திரு மேவு சிவம் நான்மை முன் பெய்யடியார் நானிலையர் பேசு எனப்படுவார்.

(அத்தர்-சிவன் அடி, ஆர்பவர்-அடி சேர்ந்தார்.)

2741. அடங்காத என்னை அடக்கி அடிவைத்து
இடங்காண் பரானந்தத் தேஎன்னை இட்டு
நடந்தான் செயும்நந்தி தன்ஞானக் கூத்தன்
படந்தான்செய் உள்ளுட் படிந்திருந் தானே.

பொருள் : இந்திரிய வயப்பட்டு மனம் அடங்கப் பெறாதிருந்த என்னை அடங்கும் படியாகத் தனது திருவடியைப் பதிப்பித்து, சீவ சத்தியைப் பெருக்கும் ஒளியை நல்கிப் பேரின்பத்தில் என்னைத் திளைக்கச் செய்து, அவ்வொளியில் நிலைபெற்று நன்மையைத் தரும் ஞான நடனத்தைப் புரியும் கூத்தப்பிரான் சித்திரம்போல் என்னை அசைவற்று இருக்கச் செய்து எனது உள்ளத்தில் நிலைபெற்று விளங்கினான். (நிட்டையில் கூட்டுவித்தனன் என்பதாம்.)

2742. உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனை
செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனை
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்புறு நாடிஎன் அன்பில்வைத் தேனே.

பொருள் : ஆகாயத்தில் நடனம் செய்பவனை உத்தமரிடம் நடனம் செய்பவனை, செம்மையாகிய பொன்னொளி விளங்கும் ஆகாயத்தில் பிரபஞ்சப்போர் நடத்தும் சீவனுக்குத் துணை வீரனாக இருந்து நடிப்பவனைச் சீவர்களோடு உறவு கொண்டு நடிப்பவனை, தத் என்னும் சொல்லுக்குப் பொருளாய் ஆன்மாவில் நடிப்பவனை இன்பம் பெற வேண்டி எனது அன்பில் பதித்து வைத்தேன். (சேவகன்-துணை வீரன்.)

2743. மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யாரறி வாரே.

பொருள் : மூலாதார சுவாதிட்டானச் சக்கரங்களில் செவ்வொளியில் நடிப்பவனும், செறிவுடைய அஞ்ஞான இருளில் அநாகதச் சக்கரத்தில் நடிப்பவனும், பல நிறங்களோடு விளங்கும் சகஸ்ரதளத்தில் ஒளிக் கிரணங்களோடு கூடி நடிப்பவனும் துவாத சாந்தவெளியில் சோதியாக விளங்கிச் சிவானந்தத்தை விளைக்கும் கூத்தனும், அங்கு மாற்றுக் குறையாத பொன்னொளியில் விளங்குபவனும் ஆகிய கூத்தப்பெருமானை யார் முழுதும் உணர்ந்து உரைக்க வல்லவராவர்.

2744. விம்மும் வெருவும் விழும் எழும் மெய்சோரும்
தம்மையும் தாம்அறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே.

பொருள் : நன்மை மிக்க ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் விளங்கும் நடனத்தில் அத்திருவடிக் கமலத்துக்கு அன்பு கொண்டவர்க்கு, காதலால் மிக்க மகிழ்ச்சி உண்டாகும். பின் பயம் உண்டாகும். பத்தியால் விழுதலும் எழுதலும் ஆகும். உடல் தளர்ச்சி பெறும். தம் பஞ்சேந்திரிய அறிவு கெட்டுத் தம் நினைடு அறும். அதனால் தமது சாமர்த்தியமும் குறைந்துபோகும். திருஅம்பல நடனத்தைக் கண்டவர்க்கு உண்டாகும் மெய்ப்பாடுகள் கூறியவாறு.

2745. தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும் உளத் தானந்த
நாட்டம் முறுக்குறு நாடகம் காணவே.

பொருள் : சிவநடனத்தைத் திருஅம்பலத்தில் காணவே புறம் சென்று ஒன்றைத் தேட வேண்டும் என்ற எண்ணம் கெடும். நாடுகின்ற சிந்தை ஒன்றைச் சீர்தூக்கிப் பார்க்கும் செயலை விடுத்து நிற்கும். உடல் நினைவின்மையால் உடலால் வரும் தளர்ச்சி நீங்கும். பிராணன் பிரமப் புழையை நோக்கிப் பாய்வதில் உண்டாகும் உணர்வில் புத்தி செம்மையாக இருக்கும். அதனால் ஐம்புனல் அறிவும் பொருந்தா. மனம் புறம் செல்லாமையின் ஒருவித ஆசையும் உண்டாகாது. உள்ளத்தில் ஆனந்தம் பெருகும். உயிரில் சிவ நடத்தைக் காண விருப்பம் மேலும் முதிர்ந்து நிற்கும். (இதுமுன் மந்திரத் தொடர்ச்சியாக மெய்ப்பாட்டு அனுபவம் கூறியதாம்.)

2746. காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி
நாளுற அம்பலத் தேஆடும் நாதனே.

பொருள் : காளியுடன் ஆடி, பொன்மலையில் நடனம் ஆடி, பேய்களுடன் நடனம் ஆடி, பூமியில் நடனம் ஆடி, நீண்டு கிடக்கும் நீரிலும், நெருப்பிலும், காற்றிலும் பரந்துள்ள ஆகாயத்திலும் நடனம் ஆடி, சீவர்கள் நீண்ட வாழ்நாள் பெற, ஆகாயத்தே இருந்து நடனம் புரிபவன் சிவனாவான். ( காளி-வாயுவைச் செலுத்தும் சத்தி.)

2747. மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும்
சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ
டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே.

பொருள் : சகஸ்ர தளமாகிய மேருவில் சுழுமுனை நாடியும் மேல் விளங்கும் இடை நாடியும் பிங்கலை நாடியும் ஆகிய மூன்றும் மிக்குள்ள ஆகாயத்தில் பூமியின் தொடர்பின்றி விளங்கும் தீவாகிய இலங்கை போல் உடம்பின் தொடர்பின்றி விளங்கும் இடைகலை பிங்கலையாகிய இருநாடிகளும் இதயமாகிய தில்லை வனத்தை வளைத்துக் குளிர்ச்சி பொருந்திய சகஸ்ரதளமாகிய மலை உச்சியில் ஏறிச் சுழுமுனையோடு விளங்கும். ஆதலால் இதயமும் சகஸ்ரதளமும் ஆகிய இரண்டும் சிவன் விளங்கும் இடங்களாகும்.

2748. பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத் தெல்லையின் ஈறே.

பொருள் : பூமியும் மேருவும் அதன் புறத்துள்ள தென்பாகமும் சொல்லப் பெறுகின்ற இடைநாடியும், பிங்கலை நாடியும் ஒளி பொருந்திய சுழுமுனை நாடியும் ஆகும். இச்சுழுமுனை நாடியே அர்த்த சந்திரனை அணிந்த சிவபெருமான் நடிக்கின்ற திருஅம்பலமாகும். பூதாண்டத்தின் எல்லையும் இதுவே ஆகும்.

8 இ. பொற்றில்லைக் கூத்து

(ஆறு ஆதாரங்களின் ஒளிகளும் ஒன்றாகச் சேர்ந்து, நெற்றிக்கு நேரே விளங்கும் பொன் ஒளியில் ஆடும் கூத்து, பொன்தில்லைக் கூத்து.)

2749. அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

பொருள் : மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் முடியவுள்ள ஏழு அண்டங்களும் அழகிய பொன்னம்பலமாக, பழமையான ஐவகை ஆகாயங்களும் அவன் நடிக்கும் இடமாக அக்கினி கலையில் விளங்கும் சத்தியே திருஅம்பலமாகக் கொண்டு மேலான சோதி வடிவான பெருமான் கூத்தை விரும்பி நடிக்கின்றனன்.

2750. குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்துத் தென்றிசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
நிரானந்த மாக நிருத்தஞ்செய் தானே.

பொருள் : குருவால் உணர்த்தப் பெற்று இன்பமாய் விளங்கும் சந்திர மண்டல ஒளியாய் மிகுந்த நன்மையைத் தரும் மேலான ஆனந்தத்தைப் பெருக்கி, சந்திர கலையில் விளங்கும் சிவம் வலப்பால் சூரிய கலையை அடைந்து உடம்பில் இன்பம் அளிப்பனவாய் சத்தியோடு இருந்து நித்தியமான இன்பத்தை விளைக்கும் நடனத்தைச் செய்தருளினான். (குரு+ஆனந்தம்=குரானந்தம்.)

2751. ஆதி பரன்ஆட அங்கை அனலாட
ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப்
பாதி மதியாடப் பாராண்டம் மீதாட
நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.

பொருள் : ஆதிபரனாகிய சிவபெருமான் திருவுள்ளக் குறிப்பு நேர்பட அவன் திருஅங்கையின் கண் விளங்கும் கனலாடிற்று. அனைத்திற்கும் அருட் புனலிடமாக விளங்கும் திருச்சடையும் ஆடிற்று. அச்சடை எல்லாராலும் போற்றிப் புகழப்படுவது ஒன்று. அத்திருச்சடையின் கண் காணப்படும் உன்மத்தம் ஆகிய ஊமத்த மலரும் ஆடிற்று. திருச்சடையில் திகழும் ஆருயிராகிய பாதி மதியும் ஆடிற்று. நிலஅண்டங்களும் ஆடின. அருஞ்சைவர் கொள்ளும் முப்பத்தாறாம் மெய்யாகிய நாதத்தின்கண் திருவருள் ஆற்றலுடன் சிறந்தாடினன். (இதனையே நாதாந்த நடனம் என்ப.)

2752. கும்பிட அம்பலத் தாடிய கோநடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொரு ளாகும் சிவபோகம் சேர்ந்துற்றால்
உம்பர மோனஞா னாந்தத்தின் உண்மையே.

பொருள் : சீவர்கள் வணங்கி உய்யுமாறு அவரவர் சிதாகாய மண்டலத்தில் ஆடிய மேலான நடனம், அழகிய சிவபரன் அகில அண்டங்களிலும் ஆடுகின்ற நடனமாகும். இதுவே செம்பொருள் நிலையாகும். இந்நிலையைப் பொருந்தி நின்றால் உம்முடைய பரநிலையில் மோனம் கைவரப்பெற்று ஞானத்தின் முடிவாம் பேறு உண்மையாகும்.

2753. மேதினி மூவேழ் மிகும்அண்டம் மூவேழு
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமொடு அந்தம் நடனாந்தம் நாற்பதம்
பாதியோ டாடும் பரன்இரு பாதமே.

பொருள் : சிவபெருமானது இரு திருவடிகள் மூவேழ் உலகினையும் ஆட்டுவிப்பதாகும். ஓரேழ் அண்டத்தையும் ஆட்டுவிப்பதும் அவையே. கைக்கொள்வார் தகுதிக்கேற்ப படி முறை போன்று விரிந்த நெறிகள் நூற்று எட்டு, அவற்றையும் அவன் திருவடிகளே ஆட்டுவிக்கின்றன.

2754. இடைபிங் கலைஇம வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாம் சுழுனை
கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
படர்வொன்றி யெண்ணும் பரமாம் பரமே.

பொருள் : உடம்பிலுள்ள இடை பிங்கலையாகிய இரண்டும் சிரசில் இடப்புறம் பனிப்படலம் போல் விளங்கும் இமயமும், வலப்புறம் தீவுபோல் விளங்கும் இலங்கையுமாகும். நடுவாகிய சுழுமுனை பரவெளியாகிய மேருவாம். இவற்றிற்கு வேர் யாவற்றையும் செலுத்தும் இதயா காசமான தில்லை வனமாகும். இத்துணையும் வியாபித்து மேல் செலுத்துபவன் பரன் என்னும் சிவமேயாகும்.

2755. ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்பேழும்
பேறான வேதா கமமே பிறங்கலால்
மாறான தென்திசை வையகம் சுத்தமே.

பொருள் : பாரதத்தின் தென்கோடியான கன்னியாகுமரி, காவிரி, இவற்றுக்கு வேறான ஒன்பது தீர்த்தங்கள் ஏழுமலைகள் ஆகிய இடங்களில் பெறுதற்கரிய வேதங்களும் ஆகமங்களும் தோன்றுதலால் நிலையான பூமியின் தென்பாகம் சுத்தமுள்ளதாகும்.

2756. நாதத் தினில் ஆடி நாற்பதத் தேஆடி
வேதத் தினில் ஆடித் தழல்அந்தம் மீதாடிப்
போதத் தினில் ஆடிப் புவனம் முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே.

பொருள் : தீமையே யில்லாத தேவ தேவனாகிய சிவபிரான் நாதத்தொனியில் ஆடி, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களிலும் ஆடி, வேதத்தில் ஆடி, அக்கினி கலையின்மீது ஆடி, சீவரது அறிவினில் நின்று ஆடி இருநூற்று இருபத்து நான்கு புவனங்களிலும் பொருந்தி ஆடினான்.

2757. தேவரொ டாடித் திருவம் பலத்தாடி
மூவரொ டாடி முனிகணத் தோடாடிப்
பாவினுள் ஆடிப் பராசத் தியில்ஆடிக்
கோவிலுள் ளாடிடும் கூத்தப் பிரானே.

பொருள் : தேவர்கள் அறிவினில் ஆடி, அறிவு ஆகாயத்தில் ஆடி, பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகியோரிடம் நின்று ஆடி, முனிவர்களோடு ஆடி, செய்யுட் கருத்தினில் ஆடி, மேலான பராசத்தியின் இடமாக ஆடி, ஆன்மாக்களிடம் அவரது அறிவினில் பொருந்தி நடிப்பவனாக உள்ளான் சிவபெருமான். (கோ-ஆன்மா.)

2758. ஆறு முகத்தின் அதிபதி தான் என்றும்
கூறு சமயக் குருபரன் தான் என்றும்
தேறினர் தேறுத் திருவம் பலத்துள்ளே
வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே.

பொருள் : ஐந்து முகத்தோடு அதோ முகத்தையும் சேர்த்து ஆறு முகங்களோடு கூடிய சிவனார் தாம் என்றும், சமயம் கூறும் குருவும் தாமே என்றும் சிரசின் தென்புறத்திலுள்ள ஆகாயத்தினுள்ளே ஆத்ம சொரூபத்தைச் சாதகர் அறிந்தனர். இவ்வுண்மையை அறிபவரிடம் சிவபெருமான் வேறின்றி உடனாய் உணரப்படுபவனாக உள்ளான். (ஆறுமுகம்-ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம், அதோமுகம்.)

2759. அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி
உம்பர மாம் நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே.

பொருள் : திருச்சிற்றம்பலமே ஆடும் அரங்கமாகக் கொண்டு அதன்கண் எம்பெருமானாகிய சிவபெருமான் திருக்கூத்து இயற்றுகின்றனன். எம்பெருமான் தன் இரண்டு திருவடிகளிலும் இருபெரும் அறிவொளி தோன்றுமாறு திருக்கூத்து இயற்றுகின்றனன். இருபெரும் ஒளி நூலுணர்வும் நுண் உணர்வுமாகும். மேலோங்கி ஒளிரும் ஐவகை ஓசையின் கோட்டின் கண்ணும் நின்று திருக்கூத்து இயற்றுகின்றனன். அம்மட்டோ? அவ்வோசைகள் திகழும் தூமாயையினையே தன் நேர் நிலையாகக் கொண்டு எழுந்தருளி வந்து அருள்கின்றனன். (நூலுணர்வு-அபரஞானம், நுண்ணுணர்வு-பரஞானம்.)

2760. ஆடிய காலும் அதிற்சிலம் போசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடிஉள் ளேகண்டு தீர்ந்தற்ற வாறே.

பொருள் : திருக்கூத்துப் புரியும் திருவடியும், அத்திருவடிக்கண் கிடந்து ஒலிக்கும் மறைச்சிலம்பு ஒலியும், அச்சிலம்பொலியின் விரிவாகக் காணப்படும் திருமறைத் திருப்பாட்டுக்களும் அத்திருப்பாட்டுக்களின் மறைப்பொருளாய் விளங்கும் பலவகையான திருநடனங்களும் சிவபெருமான் திருவருளால் புரிந்தருளுகின்றனன். அதன் பொருட்டுக் கொண்டருளிய திருக்கோலமும் பலவாம். அவ்வகை அருள் திருக்கோலங்களைக் கொண்டு வருபவன் குருபரன். அவ்வாறு வருவதும் மெய்யுணர்வினர் கொண்டாடுதற் பொருட்டாம்; உய்தற்பொருட்டுமாம். அவனைத் திருவருளால் அடியேன் உணர்வின் உள்ளே தேடிக் கண்டுகொண்டேன். காண்டலும் அற்றது பிறப்பு. உற்றது சிறப்பு. சிறப்பெனினும் திருவடிப்பேறு எனினும் ஒன்றே. (மறைப்பொருள்-மந்திரப்பொருள்.)

2761. இருதயந் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்
குரவனாய் எங்கணும் கூத்துகந் தானே.

பொருள் : மாணிக்கக் கூத்தன் என்று சொல்லப்படும் ஒப்பில் ஒருபெரும் முதன்மைக் கூத்தன் சிவபெருமான். அவன் திருவாலங்காட்டின்கண் மணிமன்றம் அணிபெறத் தணியாப் பெருங்கூத்தியற்றுகின்றனன். அவனே அனைவர்க்கும் மெய்க்குறவன் ஆவன். மணிமன்றம்-ஐவகை மன்றினும் முதன்மை வாய்ந்தது. ஏனை நான்கு மன்றங்களும் பொன், வெள்ளி, செம்பு, ஓலியம் எனப்படும். இவ்வைந்தும் ஒரு புடையொப்பாகச் சிவயநம என்னும் திருஐந்தெழுத்தினைக் குறிப்பதாகும். (ஐந்து சபைகளாவன: 1. இரத்தின சபை-திருவாலங்காடு. 2. பொற்சபை-சிதம்பரம், 3. வெள்ளி சபை-மதுரை, 4. தாமிர சபை-திருநெல்வேலி, 5. சித்திர சபை-திருக்குற்றாலம்.)

8 எஃப். அற்புதக்கூத்து

(சொல்ல வொண்ணாத பரவசத்தை அடையச் செய்வது அற்புதக்கூத்து.)

2762. குருஉரு அன்றிக் குனிக்கும் உருவம்
அருஉரு ஆவதும் அந்த உருவே
திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்
உருவரு வாளும் உமையவள் தானே. 

பொருள் : குருவின் திருவுருவையல்லாமல் இடையறாது நினைத்து இன்புறும் திருவுரு வேறொன்றும் இன்று. குனித்தல்-இடையறாது நினைத்தல், தியானித்தல், கட்புலனாகாத அருவ வடிவமாவது அருமை வாய்ந்த அக்குருவேயாகும். திரிபுரை என்னும் திருவருள் திகழ்ந்து விளங்குவதும் அக்குருவடிவே. உருவமாயும் அருவமாயும் உற்று விளங்குபவள் உமையவள் ஆவள்.

2763.திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவமே
உருஅரு ஆவதும் உற்றுணர்ந் தோர்க்கு
அருள்வழி யாவதும் அவ்வழி தானே.

பொருள் : ஞானத்தை அடைவிக்கும் நெறியாவது சிரசுக்கு முன்னுள்ள ஆகாய மண்டலத்தில் ஒளியின் உள்ளாகத் தியானிக்கும் உருவமேயாகும். அப்போது அவ்வுருவமே மறைந்து அருவமாவதும் அங்குப் பொருந்தி ஞான நெறியில் செல்பவருக்கு அருள் சத்தி பதிதலும் அந்நெறியே யாகும்.

2764. நீடும் சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
ஓடும் உயிர்எழுந் தோங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்து
ஆடும் இடம்திரு அம்பலத் தானே.

பொருள் : சிரசின்கண் உச்சிக்குமேல் பன்னிரண்டு விரற்கிடை வரை உயிர்ப்பு எழுந்து ஓடும். ஆண்டு ஓங்கி எழுந்து தோன்றிடுமாறு நீரும் நாடுமின். நாதமுடிவாகிய நம் பெருமான் மிக்க உகப்புடன் திருக்கூத்து ஆடும் இடம் அதுவாகும். அதுவே திருஅம்பலமாகும். (திருவம்பலம்-தில்லைச் சிற்றம்பலம். உயிர்-பிராணவாயு.)

2765. வளிமேகம் மின் வில்லு வாகை ஓசை
தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்
களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்
ஒளியுரு வாகி ஒளிந்துநின் றானே.

பொருள் : வானமானது காற்றுக்கும் மேகத்துக்கும் மின்னலுக்கும் வான வில்லுக்கும் இடியோசைக்கும் இடங்கொடுத்துத் தானும் தெளிந்த ஆகாயமாய் விளங்குவது போல, இறைவனும் ஆனந்தத்தை விளைக்கும் ஆறுவகை ஒளியாகவும் அவற்றுடன் கலந்தும் வேறாயும் ஒளிவடிவமாகிச் சீவர்களுக்குப் புலனாகாமல் மறைந்து நின்று அருளுகின்றான்.

2766. தீமுதல் ஐந்தும் திசைஎட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக் கப்புற ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடம்செய்யு மாறே.

பொருள் : ஐம்பூத ஒளி அணுக்களிலும், எட்டுத் திசைகளிலும் கீழும் மேலும், ஆராய்ந்து காணும் அறிவினைக் கடந்தும் சிவானந்தம் உள்ளது. அது மாயையும், சுத்த மாயையும் கடந்து நின்றவர் காணுமாறு, எமது தலைவன் நிலைபெற்று நடனம் செய்யும் முறையாகும்.

2767. கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.

பொருள் : கூத்தனாகிய சிவபெருமான் அழகிய புள்ளிகளையுடைய வளையலை அணிந்து, கிளையுற விளங்கும் திருவருள் அம்மையுடன் கலந்து ஆருயிர்கட்கு அளவிலா நலம் உளமொடும் புரிகின்றனன். அவன்தன் திருவருட் கலப்பால் குற்றமற்ற பேரின்பம் சீருறப் பெருகும். அவன் திருவடியுணர்வு எனப்படும் குற்றமில்லாத சிவஞான விளக்கமுண்டாகும். கூத்தனும் கூத்தியும் ஆகிய சிவனும் சிவையும் திருக்கூத்தின்மேல் திருநோக்கம் கொண்டருளுகின்றனர்.

2768. இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலும் தாமாய்நின் றாடுகின் றாரே.

பொருள் : சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும் சத்தியும் அவளைப் பிரியாத எனது தந்தையாகிய சிவமும், என்னுடைய சீவ ஒளியில் கலந்து விளங்குவதை நான் அறிந்தேன். மல மறைப்பினையுடைய சீவ கோடிகள் அனைத்துக்கும் மல மறைப்பு நீங்கச் சிவசத்தி ஆடுகின்றமையை உணர்ந்தேன்.

2769. சத்தி வடிவு சகலஆ னந்தமும்
ஒத்தஆ னந்தம் உமையவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத் தெழுந்திரண்டு
ஒத்தஆ னந்தம் ஒருநடம் ஆமே.

பொருள் : சீவர்கள் அடையத் தோன்றும் சகல வடிவமும் சத்தியின் வடிவமே யாகும். சீவனது அறிவில் சத்தாகவும் சித்தாகவும் ஆனந்தமாகவும் நிலைபெற்ற ஆனந்தமே உமையம்மையின் திருமேனியாகும். சத்தியினது வடிவு சீவர்களிடத்து விளங்கி, சீவனும் சிவனும் கலப்பதில் உண்டாகும் ஆனந்தமே ஒரு நடனமாகும். (இரண்டு-சத்தி-சிவ நடமிரண்டும்.)

2770. நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலம்என்று தேர்ந்துகொண் டேனே.

பொருள் : நெற்றியின்கண் நேர்நடுவாம் புருவமத்தியில் காணப்படும் இடைவெளி தில்லைத் திருச்சிற்றம்பலமாகும். ஆண்டு உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் சிவ சிவ என்னும் செந்தமிழ்த் திருமறையாகும். பற்றற்றார் பற்றுக்குப் பற்றாய் நிற்பவன் சிவபெருமான். அவனே பரமன். அவன் உடனாக இருக்கும் இருப்பிடம் மேல் ஓதிய புருவநடுவாகிய தில்லைத் திருச்சிற்றம்பலமென்று திருவருளால் தேர்ந்து தெளிந்து கொண்டேன் என்க.

2771. அண்டங்கள் தத்துவம் ஆதி சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாமபி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

பொருள் : அண்டங்களும் அவற்றின் அடக்கமாகிய தத்துவங்களாகும் அருளோன், ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் ஐம்பெரும் நிலைகளும் சத்தியின் வடிவாயுள்ள சாத்தவி, சாம்பவி என்னும் இரண்டும் கூடிய ஏழுநிலைகளும் அடைவுபட-முறைமையாய்ச் சிவன் இருக்கையாகும். அவ்ஏழு நிலைகளும் இருக்கையாகக் கொண்டு பரஞ்சோதியாகிய விழுத்திணைச் சிவன் திருக்கூத்து உகந்தனன். (தெண்டினில்-முறைமையினில்.)

2772. மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை
சென்றது தான்இரு பத்திரு நூறுள
நின்றது தான்நெடு மண்டல மாகுமே.

பொருள் : செம்பொன் அம்பலம்-தில்லைச் சிற்றம்பலம் முதலிய மன்று நிறைந்த திருவிளக்கொளி போன்று கதிர் காலும் பெரு மலர். இது நன்மை தரும் மென்மை மலராகும். இதன் இதழ்கள் நூற்று நான்கெனவும் இருநூற்றுப் பத்தெனவும் கூறப்படும். இம்மலர்கள் ஆறா தாரத்துக் காணப்படும் என்ப. இவையனைத்தும் சிவபெருமான் நின்றருளும் நெடுமண்டலமாகும்.

2773. அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
அண்டன் நடம்செயும் ஆலயந் தானே.

பொருள் : அளவில்லாத எழு கோடி அண்டங்களும் அவை போன்று எழு கோடிப் பிண்டங்களும் தெளிந்த திரையையுடைய கடலாற் சூழப்பட்ட திசைகளும் விளங்கும் எழுகோடித் தீவுகளும் எட்டுத் திசைகளிலும் காணப்படும் அளவில்லாத சிவக்கொழுந்து எனப்படும் சிவலிங்கங்களும் எழுகோடி என்ப. இவ்விடங்கள் அனைத்தும் அண்டனாகிய சிவபெருமான் நடனம் செய்யும் திருக்கோவில்களாகும்.

2774. ஆகாச மாம் உடல் ஆங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகள்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடம்செய்கின் றானே.

பொருள் : கூத்தப்பெருமானது உடல் ஆகாய மயமானது. அந்த ஆகாய வெளியிலுள்ள கார் இருளே முயலகனாம். மேலாடை போன்று காணப்படும் எட்டுத் திசைகளும் அவனது கைகள். சீவர்கள்மேல் விருப்பத்தைக் காட்டும் மூன்று கண்களும் சோம சூரிய அக்கினியாக அறிவுப்பெருவெளியில் நடஞ்செய்பவனாக அவன் உள்ளான்.

2775. அம்பல மாவ அகில சராசரம்
அம்பல மாவன ஆதிப் பிரானடி
அம்பல மாவன அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவன அஞ்செழுத் தாமே.

பொருள் : அனைத்து உலகின்கண் காணப்படும் இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள் முற்றும் சிவபெருமான் திருக்கூத்து இயற்றும் திருஅம்பலமாகும். ஆதியாகிய நடப்பாற்றலையுடைய நாயகன் திருவடியும் அம்பலமாகும். நீர் மண்டலம் தீமண்டலம் (இனம் பற்றி ஏனைய பூதங்கள்) ஆகியவைகளும் அம்பலமாகும். மெய்ம்மை அம்பலமாவது செந்தமிழ்த் திரு ஐந்தெழுத்தேயாம்.

2776. கூடிய திண்முழ வம்குழல் ஓம்என்ன
ஆடிய மானுடர் ஆதிப் பிரான்என்ன
நாடிய நற்கணம் ஆரும்பல் பூதங்கள்
பாடிய வாறொரு பாண்டரங் காமே.

பொருள் : சிவபெருமான் ஆடிய திருக்கூத்தினைக் காணும் பேறு திருவருளால் பெற்ற மானுடர் ஆண்டு முழங்கிய குட முழாவாகிய திண்ணிய முழவோசையினையும் புல்லாங்குழல் ஓசையினையும் பொலிவு பெறக் கேட்டனர். எல்லாம் ஓம் என்று ஒலிக்கும் நுண்மையினையும் உணர்ந்தனர். ஆதிப் பிரானென்று போற்றினர். சிவபெருமானையே நாடி நிற்கும் வரிசை யமைந்த நற்கணமும் பல்வேறு வகையான பூதகணங்களும் அவன் ஆடும் பாண்டரங்கக் கூத்தினைக் கண்டு பாடியாடித் தொழுதனர்.

2777. அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண்டிரை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்
புண்பரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்
கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே.

பொருள் : வெவ்வேறாகிய அண்டங்களில் உள்ள தேவர்களும் ஏனைப் புற அண்டங்களிலுள்ள தேவர்களும் தெளிந்த அலைகளையுடைய கடலாற் சூழப்பட்ட உலகங்களுக்குள்ள தேவர்களும் செந்தாமரை மலரையொத்த திருவடித் தாமரையைத் தூக்கிப் பொன்னம்பலத்தின் கண்ணே முழுமுதற் சிவபெருமான் புரியும் திருக்கூத்தினைக் கண்டு தொழுது வழிபட்டனர். அதனால் அவரவர்தம் பெருநிலையினை எய்தியுள்ளார்கள். இன்னும் வழிபடுவதனால் மேனிலையும் அடைவார்கள்.

2778. புளிக்கண் டவர்க்குப் புனல்ஊறு மாபோல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம்
துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குள்ஆ னந்தத் தமுதூறும் உள்ளத்தே.

பொருள் : புளியினைக் கண்ணால் கண்டவுடன் நாவில் நீர் சுரப்பதுபோல் சிவானந்தத்தை அளிக்கும் திருக்கூத்தைச் சிரசின்மேல் கண்டவர்க்கு எல்லாம் இன்பக் கண்ணீர் முத்து முத்தாக விழும். சோர்வுடைய நெஞ்சமானது அன்பினால் உருகும். உள்ளத்தின்கண் உணரும் ஒளியாய்ச் சிவம் இன்பம் பெருக்கி நிற்கும். (சிவநடனத்தைக் கண்டவர் அடையும் நிலை கூறியவாறு.)

2779. திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடும் மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்
கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.

பொருள் : திருநடனம் கண்டவர் கால்கள் பலமற்றுத் திண்டாடி வீழ்தலே சிவானந்தத்தால் ஆவதாம். அவ்வாறு சிவானந்தத்தைப் பருகினவர்க்கு அக ஒளியில் பார்வை பதிந்து தன்னை மறந்த நிலை கிட்டும். யாவராலும் கொண்டாடப்பெறும் சிதாகாயத்தில் ஆடுகின்ற நடனத்தை அறிந்தவரது அருமையான இயல்பு பிரணவத் தொனியைக் கேட்டு நாதாந்தம் சென்றவர்க்கும் பொருந்தும். (உன்மத்தம்-உலகை மறந்திருக்கும் நிலை.)

2780. அங்கி தமருகம் அக்கமாலை பாசம்
அங்குசம் சூலம் கபால முடன் ஞானம்
தங்கு பயமுன் தருநீல மும்முடன்
மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.

பொருள் : சிவபெருமான் திருக்கூத்துப் புரியுங்கால் கைக்கொள்ளும் பொருள்களும் துணையும் வருமாறு: மழு, உடுக்கை, சிவமணி, கயிறு, தோட்டி, முத்தலை வேல், நான்முகன் மண்டையோடு முதலியன. துணையாக விட்டுப் பிரியாது திருவடியுணர்வாகிய அழியா விழுப்பயனைத் தந்தருளத் தங்கும் நீலத்திருச் சடைக்கண்ணுடன் எழுந்தருளியிருக்கும் மங்கையினை ஓர் உடம்பின்கண் ஒப்பில் ஒரு கூறாகக் கொண்டு மாநடம் புரிகின்றனன் சிவன்.

2781. ஆடல் பதினொன் றுறுப்பும் அடைவாகக்
கூடிய பாதச் சிலம்புகைக் கொள்துடி
நீடிய நாதம் பராற்பர தேயத்தே
ஆடிய நந்தி புறம்அகத் தானே.

பொருள் : நடனத்துக்குரிய பதினோர் உறுப்புக்களும் முறையாகப் பொருந்துமாறு பாதத்தில் சிலம்பும் கையில் உடுக்கையும் கொண்டு, நடிப்பதில் எழும் ஒலி சீவனை மேலான வற்றுக்கெல்லாம் மேலான பொருளிடையே செலுத்தியே நந்தியானவன் புறத்திலும் அகத்திலும் விளங்குகின்றான். பாண்டரங்கம் என்ற கூத்த பதினோர் உறுப்புகளின் அசைவால் நடந்தது என்று கூறுவர்.

2782. ஒன்பதும் ஆட ஒருபதி னாறாட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன்ஆட
இன்புறும் ஏழினும் ஏழ் ஐம்பத் தாறாட
அன்பனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

பொருள் : நடனத்தால் உருவம் நான்கு, அருவுருவம் ஒன்று, அருவம் நான்கு ஆகிய நலந்தரு பேதங்களும் ஆட எட்டுத் திசைகளும் அவற்றின் உள்திசை எட்டுமாகப் பதினாறு கோணங்களிலுள்ள திசைகளும் ஆட பத்தி மார்க்கங்களாகிய காணாபத்தியம், கௌமாரம், சாத்தம், சௌரம், காளாமுகம், சைவம் ஆகிய ஆறும் உடன் ஆட, இன்பத்தைத் தரும் ஏழு ஆதாரங்களும், எழுவகைத் தோற்றமும் ஐம்பத்தாறு தேசமும் ஆட, அட்சர வடிவமாகவுள்ள ஐம்பது சத்திகள் இடமாகச் சிவானந்தக் கூத்தைப் பெருமான் ஆடியருளினான்.

2783. ஏழினில் ஏழாய் இயைந்தெழுத் தேழாதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்தமைந் தொன்றாய
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழினை நாடகத் தேஇசைந் தானே.

பொருள் : சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய இசை வகை ஏழினில் ஏழாயும், ஏழும் குறுகி, சரிகமபதநி என ஏழு எழுத்துக்களில் அவ்வாறாய் அவை மேலும் ஒன்றாய்க் குறுகி விளங்கும் போது ஒரே தொனியாய் அமைந்து பிரணவமாய் இவ்வகை

2784. மூன்றினில் அஞ்சாகி முந்நூற் றறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
மூன்றினில் அக்கம் முடிவாக முந்தியே
மூன்றினில் ஆடினான் மோகாந்தக் கூத்தே.

பொருள் : மும்மண்டலங்களில் பஞ்சாக்கர வடிவாய் முந்நூற்று அறுபது கலைகளாய் மும்மண்டலங்களிலும் உள்ள ஆறு ஆதாரங்களாய், தூலம் சூக்குமம் ஆகிய பன்னிரண்டு ஆதாரங்களுக்கும் மூலமாய், அகர உகர, மகரம் என்ற மூன்றும் ஒன்றாகி இம்மூன்றாலாய பிரணவத்தில் விருப்பத்தைத் தரும் கூத்தை ஆடி நின்றருளினான்.

2785. தாமுடி வானவர் தம்முடி மேல்உறை
மாமணி ஈசன் மலரடித் தாளிணை
யாமணி யன்புடை யார்மனத் துள்ளெழும்
காமணி ஞாலம் கடந்துநின் றானே.

பொருள் : அழியும் தன்மையுடைய தேவர்களது திருமுடிமேல் உறைகின்ற வெண்ணீற்றொளியில் திகழும் ஈசனது மலர் போன்ற திருவடிகள் அழகு பொருந்திய அன்புடையாரது மனத்தில் விளங்குவனவாகும். அவ்வாறு விளங்கிக் கற்பகத்தரு போன்று வேண்டியவற்றைக் கொடுக்கின்ற பெருமான் பூமியைக் கடந்து ஆகாயத்தில் விளங்குபவனாக உள்ளான்.

2786. புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடு மளவெங்கள் சிந்தை
பரிந்தவன் ஆடிற்பல் பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல்கண் டின்புற்ற வாறே.

பொருள் : எல்லாம் உணர்ந்த சிவன் ஆடினால் சிவத்துக்குக் கீழாகவுள்ள இருநூற்று இருபத்திநான்கு புவனங்களும் ஆடும். எங்கள் தியான ஆற்றலுக்கு ஏற்ப அவன் எங்கள் உள்ளத்தில் ஆடுவான். அவன் விரும்பி உள்ளத்தில் ஆடில் அவனுக்குக் கீழான பல்பூதங்கள் ஆடித் தத்தம் நிலையினின்றும் விலகும். பேரொளிப் பிழம்பான சிவ நடனத்தைக் கண்டு சாதகன் இன்புற்ற முறை இதுவாகும்.

2787. ஆதி நடம்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடம்செய்கை ஆரும் அறிந்திலர்
ஆதி நடம்ஆடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடம்ஆடல் ஆம்அருட் சத்தியே.

பொருள் : அறிவில்லாதவர்கள் கூத்தப்பெருமான் நடனம் புரிந்தவன் என்று கூறுவார்கள். அப்படியாக அவன் நடனம் செய்ததைப் பார்த்தவர் யாரும் இல்லை. ஆதியான சிவன் அவரவர் உள்ளத்தில் நடிப்பதை அறிந்த பிறகு அருட்சத்தியே அவ்விதம் துணைபுரிந்து காணுமாறு செய்கிறது என்பதை அறிவர்.

2788. ஒன்பதொ டொன்பதாம் உற்ற அசிபதத்து
அன்புறு கோணம் அசிபதத்து ஆடிடத்
துன்புறு சத்தியுள் தோன்றிநின் றாடிட
அன்புறும் எந்தைநின்று ஆடலுற் றானே.

பொருள் : சீவனும் சிவனும் நலந்தரு பேதமாகவுள்ள தத்பதம் தொம்பதம் என்ற இரு பதங்களுள் இன்பத்தை விளைவிக்கின்ற இடமாகிய அசிபதத்தில் பொருந்தி ஆடுவதற்காகவே சீவர்களுக்குத் துன்பத்தைத் தரும் காளியாகிய சத்தியில் விளங்கி ஆடவே சீவர்களிடம் மிகுந்த அன்பு கொண்ட பெருமான் ஆடல் புரிபவன் ஆயினான்.

2789. தத்துவம் ஆடச் சதாசிவன் தான்ஆடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தான்ஆட
வைத்த சராசரம் ஆட மறைஆட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

பொருள் : சிவநடனத்தால் சகல தத்துவங்களும் ஆட, பிரமனாதியருக்கு மேலாகவுள்ள சதாசிவ மூர்த்தியும் ஆட, எல்லா வாசனைகளும் பொருந்தியிருக்கும் சித்த மண்டலம் ஆட, சிவத்தின் சத்தியும் ஆட, இவை பொருந்தும்படி வைத்த அசைவன அசையாதனவாகிய எல்லாம் ஆட, வேத சொரூபமான மூலாதாரத்திலுள்ள ஒளி ஆட, அத்தனாகிய சிவன் ஆனந்தக் கூத்து ஆடியருளினான்.

2790. இருவரும் காண எழில்அம் பலத்தே
உருவோ டருவோ டுருவரு ரூபமாய்த்
திருவருட் சத்திக்குள் சித்தன் ஆனந்தன்
அருளுரு வாகநின் றாடலுற் றானே.

பொருள் : பதஞ்சலி, வியாக்கிர பாதர் ஆகிய இருவரும் காணும்படி அழகிய ஆகாயத்தில் உருவம் அருவம் அருவுருவமாய், திருவருள் சத்திக்குள் அறிவு மயமான ஆனந்தன் அருள்வடிவாக நின்று ஆடல் புரிந்தனன்.

2791. சிவம்ஆடச் சத்தியும் ஆடச் சகத்தின்
அவம் ஆட ஆடாத அம்பர ஆட
நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்
சிவம்ஆடும் வேதாந்த சித்தாந்தத் துள்ளே.

பொருள் : சிவன் நடனம் செய்தமையால், பிரிவின்றி நிற்கும் சத்தியும் ஆடி, அதனால் நற்பயன் அளிக்காத தத்துவங்கள் ஆட, அசைவில்லாத ஆகாயம் ஆட உருவம் அருவுருவம் அருவமாகிய ஒன்பது தத்தவங்களும், அவற்றைக் கடந்து விளங்கும் நாதாந்தமும் ஆட வேதாந்த சித்தாந்தத்துள்ளே சிவம் ஆடுவதைக் காணலாம்.

2792. நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவ அந்தமும்
தாதற்ற நல்ல சதாசிவ அந்தமும்
நாதப் பிரம சிவநட மாமே.

பொருள் : நாதமாகிய ஒலியின் முடிவும் அவ்ஒலியால் பெறப்படும் நால்வகையான அறிவின் முடிவும் வேதத்தின் முடிவும் என்றும் உலைவின்றி நிலைபெற்று நிற்கும் மெய்ம்மைச் சிவபெருமானின் பேரின்பமும் திருவருள் நடனத்தால் வந்தெய்தும். குற்றமற்ற நன்மைக் கொள்கலமாம் அருளோனாகிய சதாசிவப் பேரின்பத்து நாதப் பிரமமாகிய ஓம் மறை சிவநடம்புரியும் தவநிலையாகும். (தாது-குற்றம்.)

2793. சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்
தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்
தவமாம் புரன்எங்குந் தானாகி ஆடும்
தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே.

பொருள் : பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐவர்கள் சீவர்களைப் பிறவியில் செலுத்திய செயல் முடிவுற, தவம் பொருந்திய சீவனது பாசம் நீங்க, தவத்தின் விளைவாகிய சிவானந்தத்தில் ஞானமாகிய கூத்தினைத் தவத்தால் அடையப்பெறும் பரனாகிய சிவன் எங்கும் நீக்கமற நிறைந்து ஆடுவான்.

2794. கூட நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள்
வீட நின்றான் விகிர் தாஎன்னும் நாமத்துத்
தேட நின்றான்திக ழும்சுடர் மூன்றொளி
ஆட நின்றான் என்னை ஆட்கொண்ட வாறே.

பொருள் : சிவன் என்னை ஆட்கொண்டபோது என்னோடு கூடி நின்றருளினான். சிறு தெய்வங்களின் ஆட்சியினின்றும் என்னை மீட்டனன். விகிர்தா என்று அவன் நாமத்தைச் சொல்லி அழைத்தபோது வெளிப்பட்டு நின்றனன். சோம சூரிய அக்கினியாகிய மூன்று ஒளிகளும் ஆடும்படி நிற்கின்ற சிவன் என்னை ஆட்கொண்டு அருளினான்.

2795. நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றொடு நீதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.

பொருள் : நாத தத்துவம் கடந்த நாதாந்த நிலையில் விளங்கும் ஆதிமறை நம்பியாகிய சிவன் சுவாதிட்டான மலரைப் பிரகாசப்படுத்திய போது சீவர்கள் அங்குப் பொருந்தி உலக இன்பத்தை அனுபவித்தனர். ஆனால் அவன் பிரிக்கப்பட வேண்டிய தத்துவங்களில் பொருந்திப் பிரிப்பனவாகவும் சீவர்களோடு வேறுபடாதவாறு கலந்து நின்றருளினான்.

2796. ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர்
ஆனந்தம் மாநடம் ஆரும் அறிகிலர்
ஆனந்தம் மாநடம் ஆரும் அறிந்தபின்
ஆனந்தம் அற்றிட ஆனந்தம் ஆமே.

பொருள் : இன்பம் இன்பம் என்று உண்மை காணாமல் அறிவிலார் உரைப்பர். ஆனந்தமாகிய இன்பம் மெய்யுணர்வு மாநடனத்தின்கண் உள்ளது என்னும் உண்மையை யாரும் அறிந்த பின் தன்முனைப்பு அறும். அறவே பசையாகிய பழக்க வாசனையும் அறும். அந்த இடமே திருவடிப் பேரின்பம் அருளால் பொருந்தும் ஒரு பெரு நிலைக்களமாகும். (ஆனந்தம்=ஆன்+நந்தம். நந்தம்-பெருக்கம். ஆவியின் இன்பப் பெருக்கம். தான்-ஆன்மா. அந்தம்-முடிவு.)

2797. திருந்தநற் சீஎன் றுதறிய கையும்
அருந்தவ வா என் றணைத்தபொற் கையும்
பொருந்தில் அமைப்பில் இயஎன்பொற் கையும்
திருந்தத் தீ ஆகும் திருநிலை மவ்வே.

பொருள் : திருந்திய நல்ல சிகரத்தின் நீட்டலாகிய சீ என்ற உடுக்கையை உதறிய கையும், அருமையான தவத்தினரை வா என்று அணைத்த மலர் போன்ற இடக்கையும், பொருந்துமாறு அமைத்த யகரமாகிய பொன் போன்ற  கையும், திருந்துகின்ற நகரமாகிய அக்கினியையுடைய இடக்கையும் மகரமாகிய மலத்தை அடக்கி ஊன்றிய திருவடியும் கூத்தனுக்கு ஆகும். கூத்தனது திருவுருவில் ஐந்து எழுத்துக்களுக்கும் உள்ள ஐந்து இடங்களைக் கூறியவாறு.

2798. மருவும் துடியுடன் மன்னிய வீச்சு
மருவு மமைப்பு அனலுடைக் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமஎன ஓதே.

பொருள் : உடுக்கையுடன் பொருந்திய வலக்கையும் வீசுதலையுடைய இடக்கையும், தண்ணளி பொருந்திய அபயக் கையும், அக்கினி பொருந்திய இடக்கையும் பிறப்பனை அழுத்தும் ஊன்றிய காலும் உருவமற்ற சிவாயநம என்று எண்ணி ஓதுவாயாக. பஞ்சாட்சரத்தைக் கூத்தப் பிரான் உருவமாக எண்ணி ஓத வேண்டும்.

2799. அரன்துடி தோற்றம் அமைத்தல் திதிஆம்
அரன்அங்கி தன்னில் அறையின் சங் காரம்
அரன்ஊற் றணைப்பில் அமருந்திரோ தாயி
அரன்அடி என்றும் அனுக்கிரகம் என்னே.

பொருள் : பேரொடுக்கப் பெருமானாகிய அரனார் உடுக்கையால் படைப்பும், அமைவுக் கையால் காப்பும், மழுவேந்திய திருக்கையால் துடைப்பும், ஊன்றிய திருவடியால் மறைப்பும், நான்ற (தூக்கிய) திருவடியால் அருளிப்பாடும் முறையே நிகழ்வனவாகும். (அணைப்பில்-ஊன்றிய திருவடியில். அரனடி-எடுத்த பொற்பாதம்.)

2800. தீத்திரட் சோதி திகழொளி யுள்ஒளிக்
கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினன்
மூர்த்திகள் மூவர் முதல்வ னிடைச் செல்லப்
பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே.

பொருள் : அக்கினிப் பிழம்பாயும் சீவ ஒளிக்குள் ஒளியாயும் உள்ள சிவத்தைக் கண்ட அச்சிற்சத்தி பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவரது செயலும் முடிந்து சிவத்தினிடம் ஒடுங்கியதைப் பார்த்தனள். சிரசின் மேல் வேத சொரூபமான நாதம் முழங்கிற்று. (கோமளம்-அழகு.)

2801. நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்(து)
அந்தர வானத்தின் அப்புரத் தப்பர
சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.

பொருள் : நந்தியும் எமது அப்பனும், ஞானமேயான தலைவனும் ஓம் என்ற பிரணவத்துள் பொருந்த, அதைக் கடந்து தேகப் பற்றற்ற ஆகாயத்தில் விளங்கும் சுந்தரக் கூத்தனும் ஆகியவனை வேறு விளக்குமாறு எங்ஙனம்? விளக்க முடியாது.

2802. சீய குருநந்தி திருவம் பலத்திலே
ஆயுறு மேனி யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்போடும் அத்தன்மை
ஆயுறு மேனி அணைபுக லாமே.

பொருள் : சிங்கம் போன்ற குருவாகிய நந்தியினது சிதாகாயத்தில் விளங்கும் ஆராயத்தக்க திருமேனியை, எத்தகையதென்று யாரும் அறியவில்லை. அவனது திருமேனி மூலாதாரத்தில் அக்கினி போன்ற சிவப்பாயும் சிரசின்மேல் வெள்ளையாயும் உள்ள தன்மையை ஆராய்ந்து ஒளிவடிவாகக் காணில் அது சீவர்களுக்குப் புகலிடமாகும்.

2803. தானான சத்தியும் தற்பரமாய் நிற்கும்
தானாம் பரற்கும் உயிருக்கும் தரும் இச்சை
ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்
ஆனால் அரனடி நேயத்த தாமே.

பொருள் : சிவத்தினது சத்தியே தற்பரையாய் நின்று செயல்படும். அதுவே பரனுக்கும் உயிருக்கும் தொடர்பை உண்டாக்கத் தக்கதாம். அதுவே உயிரினிடத்து இச்சை ஞானம் கிரியையாகப் பொருந்திப் பக்குவப்படுத்தும். அவ்வாறு பக்குவப்படுத்தி அருள் மயமாக்கினால் உயிர் அரனிடம் அன்பினால் ஒன்றி அறிவுருவாகும். சீவன் பராசத்தியின் அருளால் அரனோடு ஒன்றி அறிவுருவாகும்.

9. ஆகாசப்பேறு

(பராகாயத்தில் ஒளியில் திளைத்திருத்தல் ஆகாயப் பேறாகும். திருக்கூத்துத் தரிசனத்தின்பின் தன் செயலற்றிருக்கும் நிலை இங்கு உணர்த்தப்பெறும்.)

2804. உள்ளத்துள் ஓம்எனும் ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேஅங்கி யாய ஒருவனை
உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை
உள்ளத்து ளேஉறல் ஆகாய மாமே.

பொருள் : மன மண்டலத்துள் ஓங்காரமாய் நின்ற ஈசனாகிய ஒருவனும், அங்கு அக்கினி போன்று பிரகாசிக்கும் ஒருவனும், அவ்விடத்து நீதி மயமான ஒருவனும், ஆகியவனைக் கொண்டு விளங்கும் மன மண்டலம் சூழ்ந்துள்ள உடல் ஆகாயமாகும்.

2805. பெருநில மாய்அண்ட மாய்அண்டத் தப்பால்
குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்
பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்
அருநில மாய்நின்ற ஆதிப் பிரானே.

பொருள் : பெரிய நிலமயமான தேகமாகவும், தேகத்தைச் சூழ உள்ள அண்ட கோசமாயும், அதற்கு அப்பாலுள்ள ஒளியாகவும் நிற்கும் தன்மையுடையவன் ஈசன். அவனே உருவ நிலையில் பெரிய நிலமாக இருந்து தாங்குகின்ற அருளாளன். அப்பெருமானே அருவநிலையுள்ள ஆதிப்பிரானான சிவமாகும். (குரு நிலம்-ஒளிமண்டலம்.)

2806. அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியைக் குலைத்தது தானே.

பொருள் : மனிதர் உடலைச் சூழஉள்ள அண்ட ஒளியானது உலகில் ஆகாய மண்டலத்தில் விளங்கும் ஒளியுடன் தேகத்தில் உள்ள அந்தக்கரண அறிவால் பிதற்றும் வீண் பெருமையை விழுங்கி, தேகம் கடந்துள்ள பிரமாகாய வெளியில் விளங்கும் ஒளியினில் மறைந்தது. அதனால் தேக அமைப்புகள் காணாது ஒழிந்து தேகமும் ஒளிமயமாய்த் திகழ்ந்தது.

2807. பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி
அயனொடு மால்அறி யாவகை நின்றிட்டு
உயர்நெறி யாய்வெளி ஒன்றது வாமே.

பொருள் : சிற்றின்பத்துக்குப் பயனாகும் மகளிர்பால் அனுபவிக்கும் இன்பத்தின் உள்ளே காமாக்கினி விளங்கின நிலையில் ஆதியாகிய பரஞ்சோதி இன்ப உருவாகத் திகழ்ந்தனள். அப்பெருமானே சிவத்தின் பால் சீவன் அன்பு கொண்டபோது பிரமனும் விஷ்ணுவும் அறிய முடியாதவாறு விளங்கி, மேலான நெறியாகச் சீவ ஒளியில் பொருந்தி நின்றான்.

2808. அறிவுக் கறிவாம் அகண்ட ஒளியும்
பிறியா வலத்தினிற் பேரொளி மூன்றும்
அறியா தடங்கிடில் அத்தன் அடிக்குள்
பிறியா திருக்கிற் பெருங்காலம் ஆமே.

பொருள் : சிரசின்மேல் விளங்கும் சீவ ஒளிக்கு அறிவு கொடுக்கும் அகண்ட ஒளியாகிய சிவ ஒளியும், பிரியாத இடத்தில் சோம சூரிய அக்கினியாகிய மூன்று ஒளிகளும் விளங்காமல் அடங்கி நிற்கும். அவ்வாறு அத்தனாகிய சிவனது திருவடியைப் பொருந்தி இருக்கும் பேறு கிட்டினால், சீவன் உடலோடு கூடி நெடிது வாழலாம்.

2809. ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து
ஏகாச மாசுணம் இட்டங் கிருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்துநின் றப்புறம்
ஆகாச மாய்அங்கி வண்ணனு மாமே.

பொருள் : தேவர் கூட்டத்துக்கு அறிவுப் பேரு வெளியாய்க் கொழுந்து போன்று திகழ்பவன். பெரிய மலைப்பாம்பை மேலாடையாக அணிந்தவன். அவன் ஆகாய மயமாய் விளங்கி நின்று, பின்னர் அறிவுப் பேரொளியாகவும் விளங்குவான்.

2810. உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது
குயிற்கொண்ட பேதை குலாவி உலாவி
வெயிற்கொண்டென் உள்ளம் வெளியது வாமே.

பொருள் : உடலில் உயிர்ப்பாய் இருக்கின்ற பிராண சத்தியும் உலகம் முழுதும் அசைவுக்குக் காரணமாக உள்ள சோதி மயமான பிராண சத்தியும் சேர்கின்ற காலத்தில் மூலாதாரத்திலுள்ள சத்தி நாதத்தை எழுப்பி உடல் முழுதும் பரவி, ஒளியாக என் உள்ளத்தில் பொருந்திச் சூக்கும உடலைத் தனித்து வெளியாகும்படி செய்தது.

2811. நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்னொளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலும் ஆமே.

பொருள் : சீவர்கள் சிவநினைவில் உள்ளபோது சிவன் அத்தகைய சீவர்களை விட்டு அகலாமல் நிற்பான். சீவர்கள் உலக நினைவில் உறைப்புண்டு நிற்கில், அப்பெரும்பதியாகிய சிவன் விலகி நிற்பான். ஆனால் அகலாமல் விளங்கும் மின்னுகின்ற ஒளியாகவுள்ள பரவொளியை அறிந்து வழிபடின் சிவானந்தத்தைப் பெறலாம்.

2812. புறத்துள்ஆ காசம் புவனம் உலகம்
அகத்துள்ஆ காசம்எம் ஆதி அறிவு
சிவத்துள்ஆ காசம் செழுஞ்சுடர்ச் சோதி
சகத்துள்ஆ காசந் தான்அம் சமாதியே.

பொருள் : புறத்தே காணப்பெறுகின்ற ஐவகை ஆகாய வெளிகளும் இருநூற்று இருபத்துநான்கு புவனங்களையும் தாங்கும் வெளியாகும். சீவரது முதல் நிலையாகிய ஆன்மாவின் அறிவே அகமாகிய உள்ளத்துக்கு ஆகாயமாகும். வளப்பம்மிக்க சுடரும் சோதியும் பொருந்திய ஒளியே சிவம் என்ற பேரறிவு விளங்கும் ஆகாயமாகும். சிவ ஒளியில் பொருந்திச் செயலற்றிருக்கும் இடமே பூமியிலுள்ள சீவர்களுக்குரிய ஆகாயப் பேறாகும்.

10. ஞானோதயம்

(ஞானோதயமாவது தான் வேறு அவன் வேறு என்ற நிலைமாறித் தானே அவன் என்ற ஞானம் உண்டாதல். குருவினால் தீட்சை பெற்றவர்க்கு ஞானோதயம் நன்கு விளங்குவதாம். எட்டாம் தந்திரத்தில் அறிவுதயம் என்று கூறப்பட்டது வேறு என்று உணர்க.)

2813. மன சந்தியில் கண்ட மன்நன வாகும்
கனவுற ஆனந்தங் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீதொழி வென்ப
இனமுறா னந்திஆ னந்தம் இரண்டே.

பொருள் : மனமானது மெய் வாக்கு கண்மூக்கு செவியாகிய ஐம்பொறிகளோடு பொருந்தி உலகப்பொருளை அனுபவித்தல் சாக்கிரமாகும். இனி பொறிகள் நீங்கிய வழி அப்பொருளைக் கனவில் அறிதலில் நனவு போல் ஆனந்தம் உண்டாகும். இவ்வாறு நனவு கனவு நிலைகளில் உண்டாகும் ஆனந்தத்தை வினவில், இவற்றுக்கு மேல் சுட்டறிவு நீங்கிய அப்பால் நிலையில் ஓர் ஆனந்தம் உண்டென்பர். இவ்வகையாக இனமாகவுள்ள நந்தியெம் பெருமான் சீவர்களுக்கு அருளிய ஆனந்தம் விஷயானந்தம் என்றும் சிவானந்தம் என்றும் இரண்டாகும்.

2814. கரியட்ட கையன் கபாலம்கை ஏந்தி
எரியும் இளம்பிறை சூடும்எம் மானை
அரியன் பெரியன்என்று ஆட்பட்ட தல்லால்
கரியன்கொள் சேயன்கொல் காண்கின்றிலேனே.

பொருள் : யானையை உரித்துப் போர்த்தியவனும், பிரமனது கபாலத்தைக் கையில் ஏந்தியவனும், விளங்கும் பிறைச்சந்திரனை அறிந்தவனும் ஆகிய எமது தலைவனை அருமையான செயலைச் செய்தவன் என்றும் பெருங்கருணையைப் புரிந்தவன் என்றும் எண்ணி அவனிடம் அடிமை பூண்டது அல்லாமல் அவன் கருமை நிறமுடையவன் என்றோ செம்மை நிறம் உடையவன் என்றோ நான் ஆராய்ந்து காணவில்லை.

2815. மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறி யேசென்று
புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
நக்கார்க் கழல்வழி நாடுமின் நீரே.

பொருள் : செருக்கின் மிக்கவராகிய தேவர்கள் திருப்பாற்கடலில் வெளிவந்த அமுதத்தை உண்ணும்படி அருளி, நஞ்சினை உண்ட மேலான சிவனைத் தகுதியுடையோர் உரை செய்த தவநெறியே சென்று அடைந்தால் பொன்னான ஞானத்தை அப்பெருமான் கொடுக்கும். ஆதலால் சிவத்தின் நாதவழியைத் துணையாகக் கொண்டு நீங்கள் சாதனையைச் செய்வீர்களாக. (நக்கன்-சிவன். கழல்-ஒளிமிகுந்த திருவடி எனினுமாம்.)

2816. விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.

பொருள் : ஆன்மா ஒளிமயமானது என்று குருவால் உணர்த்தப்பெற்று அவ்வழியினில் நின்று அறிவைப் பெருக்கி ஆன்ம அறிவுப் பிரகாசத்தில் சிவஞானத்தைத் தூண்டி சிவத்தின் அகண்ட ஒளியில் சிவ ஒளி அடங்கக் காணும் திறமுடையார்க்கு ஆன்மாவுக்கு ஒளியைக் கொடுத்த சிவத்தினது திருவடியைப் பொருந்தி வாழ்தல் கூடும்.

2817. தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
தத்துவ ஞானத்தின் தன்மை யறிந்தபின்
தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.

பொருள் : அறிவுமயமான ஆன்மா தத்துவங்களோடு பொருந்திய போது அத்தத்துவங்கள் அறியப்படு பொருளாக இருந்தன. எங்குத் தத்துவம் அறியப்படுதல் இல்லையோ அங்கு அத்தத்துவத்தை அறியும் ஆன்மாவின் நிலையும் இல்லை. தத்துவ ஞானத்தால் தேகம் முதலியவை தான் அல்ல, தான் எல்லாவற்றையும் அறிபவன் என்று காணில் ஆன்மா அப்போது சிவனை நாடிச் சிவமாம் தன்மை பெறும்.

2818. விசும்பொன்றத் தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே
அசும்பினின் நூறும் ஆரமு தாகும்
பசும்பொன் திகழும் படர்சடை மீதே
குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே.

பொருள் : ஆகாய மயமான ஒன்று எல்லாவற்றையும் தாங்கியுள்ளது என்ற உண்மை ஞானம் வந்தபோது, சேற்று நிலமாகிய சுவாதிட்டமான மலரினின்றும் உடம்பில் பரவிய சத்தியே ஒளிமயமான அமுதமாகும். அது பசும் பொன்னின் ஒளி கொண்டு சிகை பிரதேசத்தின் மேல் படர்ந்து ஒளிரும் செந்நிறம் அமைந்த சுவாதிட்டான மலரில் பொருந்திய சிவனே இவ்வாறு விளங்குவான். (குசும்ப மலர்-செங்கழுநீர் மலர் எனினுமாம்.)

2819. முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
தொத்துப் பசும்பொன்னின் தூவொளி மாணிக்கம்
ஒத்துயர் அண்டத்தி னுள்ளமார் சோதியை
எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.

பொருள் : முத்தும் வயிரமும் முந்நீர்ப் பவழக் கொத்தும், பசும்பொன்னும், தூவொளி மாணிக்கமும், அவ் அவற்றின் ஒளியும் பிரிக்கப்படாமை போன்று சிவபெருமானும் எல்லா அண்டங்களிலும் பிரிக்கப்படாத பேரொளியாய் நின்றருள்கின்றனன். அதனால் அவன் உள்ளமர் சோதியாகின்றான். அங்ஙனம் கூறுவது அல்லாமல் வேறு எங்ஙனம் பிரித்துக் கூற முடியும்? சொல்லுவீராக.

2820. நானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும்
நானென்று தானென் றிரண்டில்லை என்பது
நானென்ற ஞான முதல்வனே நல்கினான்
நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.

பொருள் : நான்வேறு சிவன் வேறு என்று நாடினேன். அவ்வாறு நாடிய போது நான்வேறு தான் வேறு என்ற இருபொருள் இல்லை என்ற உண்மையை என்னை விழுங்கித் தானேயாய் நின்ற ஞான மூர்த்தியே அருளினான். அப்போது நான் ஒரு பொருள் என்ற எண்ணமும் நீங்கி நான் இருந்தேன்.

2821. ஞானத்தின் நன்னெறி நாதந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நான்அறி வென்றோர்தல்
ஞானத்தின் நல்யோகம் நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நன்மோனம் நாதாந்த வேதமே.

பொருள் : சிவஞானத்தை அடைந்து நாதம் கைவரப் பெற்று நாதாந்தம் செல்லுவதே இறைவனை அடைவதற்குரிய நல்ல நெறியாகும். ஞானத்தின் நல்ல நெறியாவது ஆன்மா அறிவுரு என்று அறிதலேயாகும். ஞானத்தில் நல்ல யோகமாவது சீவ போதத்தை விட்டுச் சிவ போதத்தில் அடங்கியிருத்தலாகும். ஞானத்தினால் நல்ல பிரணவப் பொருளை உணர்ந்து நாதாந்தம் அடைதலே வேத நெறியாகும்.

2822. உய்யவல் லார்கட் குயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட் குயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட் கொடுக்கும் பிரணவம்
உய்யவல் லார்உள் ளறிவறி வாரே.

பொருள் : பிறப்பு இறப்பாகிய தடுமாற்றத் துன்பத்தினின்றும் விடுமாறு நினைந்து திருவருளால் உய்ய வல்லார்கட்குத் திருவடி உணர்வாகிய சிவஞானமே உயிராகும். அதுபோல் சிவவுலகு சிவனண்மை சிவவுரு எனப்படும் நிலையினின்றும் உய்யவல்லார்க்குச் சிவ முதலே விழுப்பொருளாகும். உய்யவல்லார்க்கு ஒடுக்கம் ஓம் மொழியாகும். உய்ய வல்லார் அறிவு உண்மைப் பொருளாம் சிவத்தினைச் சார்ந்தமையால் மாறுதல் இல்லா உள் அறிவாகும்.

2823. காணவல் லார்க்கவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் னமுதொக்கும்
பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணம்வல் லார்க்கே அவன்துணை யாமே.

பொருள் : அருளின் வழிநின்று காணும் பேறு பெற்றவர்க்குச் சிவன் கண்ணினுள் மணிபோல் உடனாய் இருந்து தன்னைக் காட்டிக் காண்பன். அன்னார்க்கு அவன் திருப்பாற்கடலில் எழுந்த அமுதம் போன்று நீண்ட வாழ்நாளை அளிப்பன். வழிபடுவார்க்கு நந்தியெம்பெருமான் தவறாமல் காத்து அருள்வான். அன்புமிக்கவர்க்கே அவன் உறுதுணையாய் நின்று உதவுவான். (ஆணம்-அன்பு, பற்றுக்கோடு.)

2824. ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல்
மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மான்அடி
ஆய்நின்ற தேவர் அகம்படி யாமே.

பொருள் : ஓம் என்ற பிரணவத்தைவிட்டு நீங்காத நாதம்போல் வானுலக வாசிகளாகிய தேவர் விரும்பும் செம்பொருளாகும். மனம் வாக்குக்கு எட்டாமல் இருக்கும் செம்பொருளாகிய சிவத்தினது திருவடியைத் தொழுது நிற்கின்ற தேவர்கள் உங்களது உள்ளத்தில் விளங்குவர். ஞானோதயம் பெற்றவரது நெஞ்சினுள் தேவர் கூட்டம் பொருந்தியிருக்கும்.

சத்திய ஞானானந்தம்

(சத்திய ஞானானந்தமாவது உண்மை ஞானத்தினால் உண்டாகும் ஆனந்தம். முத்துரியம் கடந்த நிலையில் பெறும் ஆனந்தமே மெய்ப்பொருள் ஆனந்தமாகும்.)

2825. எப்பாழும் பாழாம் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே
இப்பாழும் இன்னவா றென்ப திலாஇன்பத்
தற்பரஞா னானந்தத் தான்அது வாகுமே.

பொருள் : பிரகிருதி மாயை அசுத்த மாயை சுத்தமாயை ஆகிய யாவும் சூனியத்தை எய்த ஆன்மா தத்துவங்களினின்றும் நீங்கி, சமஷ்டி சாக்கிர சொப்பன, சுழுத்தி நிலைகளையும், வியஷ்டி சாக்கிர சொப்பன சுழுத்தி நிலைகளையும் கடந்து துரியத்தை அடையவே, இத்துரிய நிலையும் சூனியமாக, அந்நிலை இன்ன தன்மையது என்று விளக்க ஒண்ணாத இன்பத்தில் தற்பரன் என்ற சிவன் ஆன்மாவில் நிலை பெற்ற போது ஆன்மா சிவமாந் தன்மை எய்தி ஆனந்தமாய் விளங்கும்.

2826. தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்
அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

பொருள் : தொம்பதம் தத்பதங்களில் சொன்ன சீவதுரியம் பரதுரியம் போல், நம்பத் தகுந்த சீவதுரியம் பரதுரியம் கடந்து விளங்கும் சிவதுரியத்தில் ஆனந்தம் பொருந்தும். ஆன்மா பிரகிருதியை நோக்கி நினைக்காத அவ் அப்பால் நிலையில் செம்பொருளாக இருந்து சீவர்களைப் பக்குவம் நோக்கி ஆட்கொள்பவன் சிறப்புமிக்க சிவனே யாவன்.

2827. மன்சத்தி ஆதி மணிஒளி மாசோபை
அன்னதோ டொப்ப மிடல்ஒன்றா மாறது
இன்னியல் உற்பலம் ஒண்சீர் நிறம் மணம்
பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே.

பொருள் : சிவத்துடன் பொருந்திய திருவருள் ஆற்றல் சத்தி எனப்படும். அது மணியொளி போன்று மிக்க அழகினை யுடையதாகும். அச்சத்தி மெய்யுணர்வாகும். அவற்றுடன் ஒப்புரைத்தலாகும் பொருள் ஒன்றும் இன்று இனிமை பொருந்திய கருங்குவளையாகிய உற்பல மலருக்குத் தூய்மை, சிறப்பு. நிறம், மணம், அழகு உள்ளன போன்று சிவபெருமானுக்கும் ஐவகை ஆற்றல்களும் உண்டாகும். அவற்றொடும்கூட அழகிய பொருள்களும் ஆறாகும். (உற்பலம்-நீலோற்பலம்-கருங்குவளை.)

2828. சத்தி சிவம்பர ஞானமும் சாற்றுங்கால்
உய்த்த அனந்தம் சிவம்உயர் ஆனந்தம்
வைத்த சொரூபத்த சத்தி வருகுரு
உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே.

பொருள் : திருவருள் ஆற்றலாகிய சத்தியும், சிவபெருமானும், திருவடியுணர்வும் சொல்லுமிடத்து உலகுயிர்களைச் செலுத்தும் ஒப்பில் பொருள்கள் ஆம் இவையனைத்தும் முடிவெய்தா. சிவத்தின் ஒப்புயர்வில்லாத பேரின்பமும் உடையவாகும். வைத்த திருவருளும் உண்மை நிலைக்கண் சிவகுருவாக வந்தருளும். அத்திருவருள் கொள்ளும் திருமேனி நீலோற்பல மலரையொத்து விளங்கும்.

2829. உருஉற் பலம்நிறம் ஒண்மணம் சோபை
தரம்நிற்ப போல்உயிர் தற்பரந் தன்னில்
மருவச் சிவமென்ற மாமுப் பதத்தின்
சொரூபத்தன் சத்தியாதி தோன்ற நின்றானே.

பொருள் : அழகிய நீலோற்பல மலரில் நிறமும் மணமும் அழகும் வேறறக் கலந்திருப்பது போல சீவன் சிவனோடு வேறறக் கலந்து நிற்க, சிவம் என்ற தத்துவமாகி மகாவாக்கியப் பொருளானவன் சத்திய ஞானானந்தம் விளங்க நின்று அருளினான். முப்பதம்-தத்துவம் அசி சத்தியாதி என்பது சத்தியா என நின்றது.

2830. நினையும் அளவில் நெகிழ வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலும் ஆகும்
எனையும்எங் கோன்நந்தி தன்னருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித் தனனே.

பொருள் : செல்லும் அளவு மனம் நெகிழும்படியாகச் சிவனை வணங்கி, பாக்களால் துதிப்பின் அவனை உள்ளத்தில் அமைத்தல் கூடும். என்னையும் அவ்வாறு எளிவந்த தலைவனான நந்தி, அவனது அருளுடன் சேர்ப்பித்து மறவாமல் நினைக்கின்ற அளவு எனக்கு அவனிடம் பற்று உண்டாகும்படி செய்தான்.

2831. பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபட உள்புகச்
சீலம் மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.

பொருள் : பாலுடன் தேனும் பழத்தின் சாறும், பரிசுத்தமான அமுதத்தின் சுவையும்போல உள்ள துரிய அவத்தையைச் சீவன் கடந்தபோது சிவன் சீவனுள் புகுந்து மயிர்க்கால்தோறும் இன்பம் பெருகும்படி நிறைந்திருக்கும்.

2832. அமரத் துவங்கடந் தண்டங் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்துப் பனிமொழி மாதர்
துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.

பொருள் : அழியாத் தன்மையையுடைய சீவனையும் அது பொருந்தியிருக்கும் அண்டகோசத்தையும் கடந்து, நாதத்துவத்தைக் கடந்து, தனித்து நிற்பவன் சிவபெருமானாகும். பவளம் போன்ற இதழ்களும் முத்துப்போன்ற பற்களும் தன்மையுடைய பனி போன்ற மொழியும் உடைய மாதரது கவர்ச்சியில் சோர்வடையாத சோதியாகிய அப்பெருமான் புறம் புறம் திரிந்த செல்வனாக உள்ளான். (அமரத்துவம் கடந்து-கூற்றுவனை வென்று எனினுமாம்.)

2833. மத்திமம் ஆறாறும் மாற்றி மலம்நீக்கிச்
சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்
பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச்
சத்திய ஞானானந் தஞ்சார்ந்தான் ஞானியே.

பொருள் : உள்நிலைக் கருவிகளாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டு, மலவாதனை நீங்கித் தூய்மையான துரியாவத்தைக் குற்றங்களைக் கடந்து, பெத்தநிலை மாறிச் சிவத்தை நோக்குவதாகி, உண்மையான ஞானானந்தத்தைப் பொருந்தியிருப்பவன் ஞானியாவான். (பெத்தம் அற-பாசம் நீங்க)

2834. சிவமாய் அவமான மும்மலம் தீர்ந்து
பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்
தவமான சத்திய ஞானனந் தத்தே
துவமார் துரியம் சொரூபம தாமே.

பொருள் : சீவன் சிவத்தைச் சார்ந்து சிவமானபோது பிறவியைத் தரும் ஆணவாதி மும்மலங்களும் நீங்க, குற்றமுள்ள பிரகிருதி மாயை, அசுத்தமாயை, சுத்தமாயை ஆகிய மூன்றினையும் கெடுத்து, அவற்றின் பற்றும் அறும்படி விட்டு நின்றால், தவத்தால் அடையும் உண்மை ஞானானந்தத்தில் சீவனும் சிவனும் பொருந்துவதில் துரியாதீதம் அடைந்து சிவரூபம் அமையும்.

12. சொரூப உதயம்

(சொரூப உதயம்-சிவ சொரூபம் வெளிப்படுதல். சிவசொரூப வெளிப்பாடு முத்தியை அளிக்கும் என்க.)

2835. பரம குரவன் பரம்எங்கும் ஆகி
திரம்உற எங்கணும் சேர்ந்தொழி வற்று
நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத் தணைந்துநின் றானே.

பொருள் : பரமாசாரியான சிவன் தத்துவங்களை விட்ட ஆன்மாவில் பொருந்தி, அது உரம்பெற எவ்விடத்தும் நீக்கமற நிறைந்து விளங்குவான். அவ்வாறு ஆன்ம சொரூபத்தில் நிலைபெற்ற சிவன் அருமையான துரிய நிலையில் பொருந்தி விளங்கினான்.

2836. குலைக்கின்ற நீரிற் குவலயம் நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடா காசம்
நிலத்திடை வானிடை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே.

பொருள் : நிலையைக் குலைக்கின்ற தன்மையுடைய பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், அலைத்தலைச் செய்கின்ற காற்று, தீ, ஆகாயம் ஆகியவையாயும், அவற்றைக் கடந்தும் நில முதல் ஆகாயம் வரை உயர்ந்து விளங்கும் சிவனை ஓர் எல்லைக்கு உட்படுத்தி வணங்கும் வகை அறியேன். (நீர்மை-தன்மை.)

2837. அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்
எங்குநின் றாரும் இறைவனென் றேத்துவர்
தங்கிநின் றான்தனி நாயகன் எம்மிறை
பொங்கிநின் றான்புவ னாபதி தானே.

பொருள் : உம்பர் உலகத்துள்ள அயன், மால், அரன் முதலிய தேவர்களும் எங்கும் நிறைந்துள்ள யாவர்களும் தாம்தாம் உய்யுமாறு இறைவனே என்று பாடிப் பரவிப் பணிவார்கள். ஒப்பில் தனி நாயகனாகிய சிவபெருமான் எங்கணும் தங்கி நின்றருளினன். அவன் தனிப்பெரும் விளக்கமாய் இருநூற்று இருபத்தி நான்கு புவனங்கள் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் உலகங்கட்கும் ஏனை அண்டங்கட்கும் ஒரு முதலாய்த் திகழ்கின்றனன்.

2838. சமையச் சுவடும் தனைஅறி யாமல்
கமையற்ற காமாதி காரணம் எட்டும்
திமிரச் செயலும் தெளியுடன் நின்றோர்
அமரர்க் கதிபதி யாகிநிற் பாரே.

பொருள் : சமயம் வகுத்துள்ள நெறிமுறையினை அறிய முடியாதபடி தடை செய்து நிற்கும் பொறுமையை அழிக்கின்ற காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், மண்ணாசை, பொன்னாசை ஆகிய எட்டும், அவற்றால் விளையும் தீமையான செயலும் உணர்ந்து சிவத்துடன் பொருந்தி நின்றவர் தேவர்களுக்குத் தலைவராக விளங்கி நிற்பார்.

2839. மூவகைத் தெய்வத் தொருவன் முதல்உரு
ஆயது வேறாம் அதுபோல் அணுப்பரன்
சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற
ஏயும் நெறியென் றிறைநூல் இயம்புமே.

பொருள் : பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவகைத் தெய்வத்தில் ஒருவனாகிய உருத்திர மூர்த்தி அவற்றோடு ஒருவனாய் அவற்றின் வேறாய் இருந்து இயக்குவதுபோல் சிவ பர சிவ முத்துரியத்தில் சீவர்களைச் செம்மையுறச் செய்யும் நெறியில் சிவனும் ஆவான் என்று வேதாகமங்கள் கூறுவனவாம்.

2840. உருவன்றி யேநின் றுருவம் புணர்க்கும்
கருவன்றி யேநின்று தான்கரு வாகும்
மருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்
குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே.

பொருள் : சிவம் அருவமானதாக இருந்துகொண்டு சகல உருவங்களையும் கூடியிருக்கும். தனக்கு ஒரு மூலமின்றித் தான் எல்லாவற்றுக்கும் மூலமாகும். அருவ நிலையையும் கடந்து விளங்கும் மாயப் பிரானை அவனே குருவாகச் சீவனில் வெளிப்பட்டு அருளினால் அன்றி யாராலும் கூட முடியாது.

2841. உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவம் நினைப்பார் உலகத்தில் யாரே.

பொருள் : சிவபெருமானின் திருவுருவினைக் குறித்து நாடுங்குணமுடையோர் சித்தத்துள் அறிவுப் பேரொளியாய் நின்று அவன் விளங்குவன். அம்முறையான் திருவுருவினை அன்புடன் நாடுவோர் பலவூழிகளையும் அருளால் காண்பர். அத்திருவுருவினை எப்போதும் நினைப்பவர் சிவவுலக வாழ்வினராவர். சிவ உலகம் திருக்கயிலை. மேலும் அக்குறியா நினைவுடையார் உலகத்தோடு இயைந்து நடப்பினும் அவர் உலகம் கடந்தவராவர். இவ்வுண்மையினை உலகிடை உண்மையால் அறிவார் எவர்? (நினைத்தல்-தியானித்தல்)

2842. பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றப்
பரஞ்சோதி என்னுட் படிந்ததன் பின்னைப்
பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்
பரஞ்சோதி தன்னைப் பறையக்கண் டேனே.

பொருள் : திருவருளால் பரஞ்சோதியாகிய பேரொளிப் பெரும் பொருளைப் பற்றும் பேறு பெற்றேன். பற்றவே அச்செம்பொருளும் என்னுள் படிந்தருளிற்று. அங்ஙனம் படிந்தருளிய பின்னை அப்பேரொளிப் பெரும்பொருளின் அகத்து அடியேனும் மெள்ள மெள்ளப் படிவிக்கப் பெற்றேன். அங்ஙனம் படியப் படியப் பேரொளிப் பெரும் பொருள் தன்னையுணர்த்தி உரைத்தருளவும் கண்டேன்.

2843. சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆமாறு போல
மருவிய சத்தியாதி நான்கும் மதித்த
சொரூபக் குரவன் சுகோயத் தானே.

2844. உரையற்ற ஆனந்த மோனசொரூ பத்தன்
கரையற்ற சத்திஆதி காணில் அகாரம்
மருவுற் றுகாரம் மகாரம தாகி
உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே.

பொருள் : சொல்லொணாப் பேரின்ப மோன உண்மை வடிவினன் சிவகுரவன். அவன்பால் எல்லையில்லாத அருட்பண்புகள் சேர் சத்தி முதலியவற்றைத் திருவருளால் காணுங்கால் இயற்கை ஒலியாகிய அகரமும், அவற்றோடும் கூடும் உகர மகரங்களும் ஆகித் தோன்றும். அத்தோற்றமே ஓம் மொழி மறையாகும். அம்மறையின் கண் அறிவுப் பேரொளியாய் உள்ளொளியாய் விளங்குவது திருவருளாகும். (தாரம்-பிரணவம்.)

2845. தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து
கலை நின்ற கள்வனில் கண்டுகொண் டேனே.

பொருள் : சிரசின்கீழ் உள்ள கண்டப் பிரதேசத்தில் நினைவை நிறுத்தித் தவம் புரிந்து இருதயப் பிரதேசத்தில் செயற்படும் கிரியா சத்திக்குத் தலைவனை நான் ஊன்பொதிந்த தேக தர்மத்தைக் கடந்து சந்திர மண்டலத்தில் விளங்கும் ஒளியில் கண்டுகொண்டேன். (தலைநின்ற தாழ்வரை-கயிலை; முலை நின்றமாது-உமை.)

2846. ஆமா றறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமா றறிந்தேன் புகுமாறும் ஈதென்றே
ஏமாப்ப தில்லை இனிஓர் இடமில்லை
நாமாம் முதல்வனும் நாமென லாமே.

பொருள் : உள்ளத்திலுள்ள சிவன் எவ்விதம் பிரகாசமுற்றுச் சீவர்களை ஆட்கொள்கிறான் என்பதை அறிந்தேன். நான் அவனைப் புகலிடமாகச் சென்றடையும் நெறி இது என்பதையும் அறிந்தேன். வேறு ஒரு பாதுகாவல் தேவையில்லை. இனி நான் சென்றடையும் இடமும் வேறு இல்லை. நாம் எல்லாம் சென்றடையும் முதல்வனும் நான் என்று கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை.

13. ஊழ்

(ஊழாவது இருவினைப்பயன் செய்தவனை வந்தடையும் நெறி. இங்கு இருவினைப் பயன் எய்திய ஞானியர் நிலைபற்றிக் கூறப்பெறும்.)

2847. செத்தில்என் சீவில்என் செஞ்சாந் தணியில்என்
மத்தகத் தேஉளி நாட்டி மறிக்கில் என்
வித்தக நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.

பொருள் : உள்ளத்தில் சிவத்தை அறிந்த ஞானிகள் பிறர் தம்மை கூரிய வாள் கொண்டு செதுக்கியும் சீவியும் துன்புறுத்தினால் என்ன? கலவைச் சந்தனம் பூசி மகிழ்வித்தால் என்ன? தலையில் உளியை நாட்டி இறக்கச் செய்தால் என்ன? சதுரப்பாடு உடைய நந்தி அமைத்த நியதிப்படியே இத்துணையும் நடப்பது என்று உணர்ந்து தம்முடைய நிலையினின்றும் திரியமாட்டார்.

2848. தான்முன்னம் செய்த விதிவழி தான் அல்லால்
வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னம் செய்ததே நன்னிலம் ஆயதே.

பொருள் : சீவன் தான் முற்பிறவியில் செய்த வினைவழி இன்பமும் துன்பமும் அமையுமேயன்றி, ஆகாய பூதநாயகரான சதாசிவன் முன்னே சீவர்களுக்காக இவைகளை நியமிக்கவில்லை. ஆதலால் அத்தலைவனை நோக்கிச் சிரசின் வழியே மேற்சென்று நான் முன்னர்ச் செய்த தவமே நல்ல மேலான இடத்தை அளித்தது.

2849. ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தழி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியை
பேறிட்டென் உள்ளம் பிரயகி லாதே.

பொருள் : ஆற்றில் இயல்பாக வந்து பொருந்திய நுண்ணிய மணலை அந்த ஆறே சுமக்காமல் பங்குகொண்டு ஆறிட்ட மேடு பள்ளங்களைத் தூர்ப்பார் பிறர் ஒருவரும் இல்லை. அதைப்போல் நான் செய்த வினைக்குரிய அனுபவம் எனக்கே உண்டு என்று உணர்ந்த நான் வெண்ணீற்று ஒளியில் விளங்கும் பெருமானை, பெறும் பேறாகக் கொண்டு அவனைவிட்டு நீங்காது இருப்பேன்.

2850. வானின் றிடிக்கில்என் மாகடல் பொங்கில்என்
கானின்ற செந்தீக் கலந்துடன் வேகில்என்
தானொன்றி மாருதம் சண்டம் அடிக்கில்என்
நானொன்றி நாதனை நாடுவன் நானே.

பொருள் : ஆகாயத்தினின்றும் இடி விழுந்தால் என்ன? பெருங்கடல் பொங்கி அழிவு நேர்ந்தால் என்ன? காட்டுத் தீயால் சூழப்பட்டு உடல் வெந்தால் தான் என்ன? ஊழிக்காற்றுப் போன்ற புயல் காற்று அடித்துப் பொருள் சேதத்தை உண்டாக்கினால் என்ன? நான் அவற்றையெல்லாம் பொருட்டாக எண்ணாமல் என் தலைவனான சிவத்தோடு ஒன்றி இருப்பதினின்றும் நழுவ மாட்டேன்.

2851. ஆனை துரத்தில்என் அம்பூ டறுக்கில்என்
கானத் துழுவை கலந்து வளைக்கில்என்
ஏனைப் பதியினில் எம்பெரு மான்வைத்த
ஞானத் துழவினை நான்உழு வேனே.

பொருள் : மதயானை கொல்லத் துரத்தினால் என்ன? கூர்மையான அம்பை உடலில் செலுத்தி அறுத்தால் என்ன? காட்டிலுள்ள புலி துரத்தி வளைத்தால் என்ன? ஞானபூபமியில் எம்பெருமான் எனக்கு அளித்த ஞானத் தொண்டினைச் செய்வதினின்றும் நான் நழுவ மாட்டேன். (ஞானத்து உழவு-ஞானம் அடைவதற்கு உரிய ஆராய்ச்சி.)

2852. கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் காலொக்கும்
பாடது நந்தி பரிசறி வார்கட்கே.

பொருள் : எடுத்த தேகத்துக்கு ஊறு நேரிடுமாயின் வேறோர் தேகம் வழங்க எம்பெருமான் உள்ளான். அதிக மழை முதலியவற்றால் ஒரு நாடு கேட்டை அடையுமாயினுள் அதிலுள்ள நம் மக்கள் கெடாது வேற்றிடம் சென்று வாழ்வர். குடியிருந்த வீடு பழுதடைந்தபோது வேறோர் வீடு புகுவதுபோல வேறோர் உடல்வாழ்வு கிட்டும். சிவஞானம் பெற்றோர்க்கு இத்தன்மை நன்கு விளங்கும். (நமர்-நம்மவர்.)

14. சிவ தரிசனம்

(சிவதரிசனம்-இக்காட்சி சிவனைச் சிந்தையில் காண்பது. சிவனை இடைவிடாது எண்ணியிருந்தால் அவன் வெளிப்பட்டருள்வான் என்க.)

2853. சிந்தைய தென்னச் சிவன்என்ன வேறில்லை
சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.

பொருள் : சிவனையே எண்ணிக் கொண்டிருப்பவர்க்குச் சிந்தை வேறு, சிவன் வேறு என்பது இல்லை. சிந்திப்பவரது உள்ளத்தில் சிவன் வெளிப்படுவான். சிவஞானத்தால் தெளிவடைந்த ஞானியர்க்கு அவர்களது எண்ணத்திலேயே சிவன் சிறந்து விளங்கினான்.

2854. வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.

பொருள் : வாக்கு மனத்துக்கு அப்பாற்பட்டவன் வேதங்களால் கூறப்பெறும் சிவனாவான். அவனை அருளால் கூர்ந்து நோக்குங்கள். அவ்வாறு நோக்கப்படும் பொருள் மிகவும் நுண்மையானது. அப்பொருளுக்குப் போக்கும் வரவும் கேடும் இல்லையாம். அவ்வாறு உண்மை உணர்ந்து அத்தனாகிய சிவனை ஆராய்ந்து தெளிவார்க்கு அதுவே தேடும் பொருளாம்.

2855. பரனாய்ப் பராபர னாகிஅப் பாற்சென்று
உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்தர்
தரனாய்த் தனாதென ஆறறி வொண்ணா
அரனாய் உலகில் அருள்புரிந் தானே.

பொருள் : சிரசுக்குமேல் விளங்கும் ஆன்ம ஒளியாய் அதன்மேல் விளங்கும் சிவனாய், அவ்வியாபகத்தைக் கடந்து பேராற்றலும் பேரறிவும் உடையதாய், எதனாலும் மறைக்க முடியாத தூய்மையுடைய சுடர் வடிவாய், தானே எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் சீவன் மனம் இந்திரியங்களோடு கூடித் தன் அறிவால் அறியப்படாத அரனாயும் உள்ள பரம்பொருள் உலகுக்கு அருள்புரிபவனாக உள்ளான்.

15. சிவசொரூப தரிசனம்.

(சிவசொரூபம் என்பது சிவத்தின் இயல்பான நிலை. அஃதாவது சத்து, சித்து, ஆனந்தம் என்பது தரிசித்தலாவது அந்நிலையை உணர்தல். சிவதரிசனத்தைக் கண்டவர்க்கு உண்டாகும் மெய்ப்பாடுகள் இங்குக் கூறப்படும்.)

2856. ஓதின் மயிர்க்கால் தொறும்அமு தூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்றகன் றப்பாலை
வேதம தோதும் சொரூபிதன் மேன்மையே.

பொருள் : சொல்லப்பெறும் உரோமத் துவாரங்கள் தோறும் இன்பம் தேக்கிய புறத்தும் அகத்தும் தடைப்படாத ஆனந்தமே உருவம், அருவுருவம், அருவம் ஆகிய மூன்று சொரூபங்களையும் கடந்து அப்பால் வேதத்தில் கூறப்பெறும் (பரப்பிரமத்தின்) சிவத்தின் மேன்மையான சொரூபமாகும். மயிர்க்கால்தோறும் அமுதூறலாவது உடம்பில் உண்டாகும் மெய்ப்பாடு.

2857. உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

பொருள் : உணர்வாகவும் அவ்வுணர்வு வெளிப்படும் உயிராகவும் உள்ளவன் அச்சிவனே யாவான். ஓர் உயிரும் மற்றோர் உயிரும் புணரும்படி செய்பவனும் பிணங்கும்படி செய்பவனும் அவனே யாவன். இவ்வாறு ஒழுங்கு செய்யும் அவனை இன்ன தன்மையன் என எண்ணத்தினால் வரையறை செய்யமுடியாது. ஆனால் இவன் ஆறாதாரங்களில் சுவாதிட்டான மலரில் பொருந்தியிருப்பவனாக உள்ளான்.

2858. துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு
முன்னி யவர்தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றதோர் தேற்றத்த னாமே.

பொருள் : முன் மந்திரத்தில் கூறியவாறு பொருந்தி நின்ற சிவனது திருமுன் இருப்பதாக நினையுங்கள். அப்போது நினைப்பவரது விருப்பத்தைத் தானே அறிந்து நிறைவேற்றி வைப்பான். அவன் ஐயங்களைப் போக்கும் வேதசொரூபமானவன். பெருமையுடைய தவத்தால் உணரத்தக்கவன். ஆருயிரின் அறிவு நிலையமான சிரசிலிருந்து தெளிவினைச் செய்பவனுமாவான்.

2859. மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி
பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்
என்னுற் றறிவானான் என்விழித் தானே.

பொருள் : திருவருளால் விளக்கம் பெற்ற அக்கண்ணைத் திறந்து பார்த்தேன். அவ்வாறு திறந்து பார்த்தலும் என்னில் நிறைந்த சோதியும் தலைவனும், ஒப்பற்ற தலைவனும் பொன் போன்ற திருமேனியையுடைய சடாதாரியான நந்தியும் ஆகிய சிவன் என்னிடம் பொருந்தி நீ அறிவுமயமானவன் என உணர்த்தி அருளினான்.

2860. சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்
சித்தத்தில் நில்லாச் சிவானந்தப் பேரொளி
சுத்தப் பிரம துரியம் துரியத்துள்
உய்த்தல் துரியத் துறுபே ரொளியே.

பொருள் : தனிமுதற் பெரும்பொருள் சிவன். அவன் இயற்கை உண்மை அறிவு இன்ப வடிவினன். சித்தம் எனப்படும் இறுப்பின்கண் நில்லாத சிவப்பேரின்பம் பேரொளி. திருவருள் செயலறலாகிய துரியம் சுத்தப் பிரமத்துரியம் எனப்படும். அத்துரியத்துள் செலுத்திய மற்றொரு செயலறல் உய்த்த துரியமாகும். அத்துரியத்துள் மிக்க பேரொளியாக இருப்பவனும் அவனே. இத்துரியம் அருளோன் செயலறல் எனப்படும்.

2861. பரனல்லன் நீடும் பராபரன் அல்லன்
உரனல்லன் மீதுணர் ஒண்சுடர் அல்லன்
தரனல்லன் தான்அவை யாய்அல்ல ஆகும்
அரனல்லன் ஆனந்தத் தப்புறத் தானே.

பொருள் : சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மானாம் செம்பொருள் பரன் அல்லன். அதனினும் சிறந்த நிலை பேறுள்ள பராபரனும் அல்லன். பேரறிவுப் பேராற்றல் வாய்ந்த பெரும் பொருளும் அல்லன். புணர்ப்பாய் நின்று மேலுணரும் ஒண்சுடரும் அல்லன். அனைத்தையும் தாங்கும் அருள்பொருளும் அல்லன். அவையனைத்தும் அல்லவாகும் அரன் அல்லன். திருவருள் இன்பமும் அல்லன். அவன் எல்லாவற்றுக்கும் அப்புறத்ததாக நிற்கும் செப்பம் சேர் ஒப்பில் ஒருபெரும் பொருளாவன். (அல்லன் என்பன அல்ல எனக் கடை குறைந்து நின்றன.)

2862. முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்(று) ஓர்க்கும் தத்துவம் கூடலால்
சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே.

பொருள் : முத்தியாகிய வீடும் சித்தியாகிய பேறும் கைகூடிய ஆருயிர்க்கிழவன் ஞானத்தோன் ஆவன். அத்திருவடியுணர்வு கைவந்ததன் பேரன்பாம் பத்திநிலை கைகூடும். அப்பத்தியுள் நின்றபின் பரத்தினுள் நிற்பன். பின் திருவருள் பெருந்திருவுள் நிற்பன். அவ்வாறு நிற்கும் நல்லோர்க்கு இயற்கையுண்மைச் சிவன் கைகூடுவன். அதனால் பொருள் அருள் தூய்மையும் அகன்றோர் ஆவர். அவரே பேரின்பப் பேரறிவினர் ஆவர்.

2863. துரிய அதீதமும் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள் ளாமிளி ரும்தன்
உருவும் திரியும் உரைப்பதெவ் வாறே.

பொருள் : செயல் அறுதலாகிய துரியமும் நினைவு அறுதலாகிய துரியாதீதமும் இத்தன்மைய என்று எவராலும் சொல்லாணாப் பாழாகும். அப்பால் நிலையாகிய துரியாதீதம் உயிர்ப்பு அடங்கலாகும். அந்நிலையை எய்தினால் விரிதலாகிய நினைப்பும் குவிதலாகிய மறப்பும் உண்டாகா. ஆருயிர்களின் சுட்டறிவும் சிற்றறிவும் பேரறிவாகத் திரிந்து விளங்கும். அவ்விளக்கத்தின்கண் சிவபெருமான் அவ்வுயிரைத் தானாக்கி நின்றருள்வன். அந்நிலையினைச் சொல்லால் சொல்லுவது எவ்வண்ணம்? (சொல்லறும்-மோனம் உண்டாம். பாழாம்-வேறுபாடு இன்றாம். விள்ளா-உண்டாகா. தன்னுருவு-சிவபோதம்.)

16. முத்தி பேதம் கரும நிருவாணம்

(முத்தி பேதம்-வீடு பேற்றின் வகை. கரும நிருவாணம்-செயல் அறுவகை. இப்பகுதியில் சச்சிதானந்தப் பொருளைக் கூடிய ஆன்மா செயலற்று மௌனநிலை எய்தும் என்பது கூறப்பெறுகிறது.)

2864. ஓதிய முத்தி அடைவே உயிர்ப்பர
பேதமி லாச் சிவம் எய்தும் துரியம்அ
நாதி சொரூபம் சொரூபத்த தாகவே
ஏத மிலாநிரு வாணம் பிறந்தததே.

பொருள் : வேதங்களில் கூறிய முத்தியாவது துரிய முறையில் முறையாக உயிர் பரம் அவற்றோடு பிரிப்பின்றியுள்ள சிவம் ஆகியவை பொருந்தி நிற்கும். அப்போது ஆன்ம சொரூபமாகிய பரம் சிவசொரூபத்தில் இலயமடைய, குற்றமில்லாத நிருவாண நிலை உண்டாகும். (நிருவாணம்-செயலறுகை; முக்தி. ஆன்மா செயலற்றுச் சிவசொரூபத்தில் அடங்கியிருத்தல் முத்தியாகும்.)

2865. பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
கற்றவர் கற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர் சுற்றி நின்றஎன் சோதியைப்
பெற்றுதற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.

பொருள் : உலகப் பற்றுக்களை விட்டவர் பற்றி நின்ற மேலான பொருளும் கல்வியைக் கற்று அதன் முடிவான சிவஞானம் எய்தினவர் விரும்புகின்ற கண்ணுதலும் கல்வியின் முடிவினை உணர்ந்தோர் பொருந்தி நிற்கும் என் சோதியும் ஆகிய சிவபெருமானை அடைந்து பொருந்தியவர் பேச்சினை விட்டு நிற்பவராவர்.

17. சூனிய சம்பாஷணை

(அஃதாவது, ஞானப்பொருளை மறைவாகப் பேசுவது. இம்மந்திரங்கள் மறைவாகக் கூறினும் அவை பொருள் விளங்கக் கூடிய அமைப்பினை உடையவனாய்ப் படிப்போர்க்கும் இன்பம் பயப்பனவாய் இருக்கும். ஞான சாதனையும் ஞான சாதனையின் பயனும் இங்குக் கூறப்பெறும். (இதைச் சித்தர் பரிபாஷை என்றும் கூறுவர்.)

2866. காயம் பலகை கவறைந்து கண்மூன்று
ஆயம் பொருவதுஓர் ஐம்பத்தோ ரக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.

பொருள் : மனித தேகம் சூதாடும் பலகை போன்றது. ஐந்து இதிரியங்களும் சூதாடும் கருவிகளாம். சீவனது இச்சா ஞானக் கிரியை ஆகிய மூன்று கண்களாய் விஷய சுகமாகிய ஆதாயத்தை அடைய ஐம்பத்தோர் அட்சரங்களையுடைய ஆதாரங்களில் பொருந்திய சீவன் இருந்து செயல்படுகின்ற மாயத்தன்மையுடைய இந்திரியங்களின் மறைப்பை அறியேன்.

2867. தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
மாறிக் கிடக்கும் வகையறி வார் இல்லை
மாறிக் கிடக்கும் வகையறி வாளருக்கு
ஊறிக் கிடக்கும் என் உள்ளன்பு தானே.

பொருள் : காமம், வெகுளி, மயக்கமென்று சொல்லப்படும் தடைகளாகிய சின்னஞ்சிறு செடிகள் முளைத்து உடம்பகத்துக் காணப்படுகின்றன. அருளால் அவற்றினின்றும் நீங்கித் தூய சிவ நன்னெறிக்கண் நிற்கும் வகையறிவாரில்லை. அங்ஙனம் நீங்கி நிற்கும் வகையறிந்து ஒழுகும் வாய்மையாளர்கட்குச் சிவன் வெளிப்பட்டருள்வன். அவர்பால் என் உள்ளம் அன்பூறி ஆர்வம் பெருகிக் கிடந்தது என்க. (தூறு-சிறுசெடி)

2868. ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறு படுவன நான்கு பனைஉள
ஏறற் கரியதோர் ஏணியிட்டு அப்பனை
ஏறலுற் றேன் கடல் ஏழுகணஅ டேனே.

பொருள் : ஆறு ஆதாரங்களாகிய தெருவில் கீழுள்ள மூலாதாரமாகிய சந்தியில் பக்குவம் அடையாதபோது இருள் முகமாகத் தொழிற்படுவனவாகிய நான்கு இதழ்களாகிய பனைகள் உள்ளன. ஏறுவதற்கு அருமையான சுழுமுனையாகிய ஏணியை வைத்து அப்பனை மரத்தின் மேல் ஏறிச் சகஸ்ரதளம் சென்றேன். ஆதார கமலங்களாகிய ஏழு கடலும் ஒன்றாகி ஒளிமயமாகப் பொங்குவதைக் கண்டேன்.

2869. வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.

பொருள் : ஞான சாதனையாகிய கத்தரி விதையை விதைக்க வைராக்கியமாகிய பாகற்கொடி தோன்றியது. தத்துவ ஆராய்ச்சியாகிய புழுதியைக் கிளறினேன். மஞ்சள் ஒளியையுடைய சகஸ்ரதளமாகிய பூசணி மலர் மலர்ந்தது. சரீரமாகிய தோட்டத்தில் அட்சரங்களாகிய குடிகள் வணங்கி அகன்றனர். வாழ்வில் தலைமை அளிக்கும் சிவமாகிய கனி சித்தித்தது. (வழுதலை வித்து-யோகப் பயிற்சி. பாகல்-வைராக்கியம். புழுதியைத் தோண்டினேன் தத்துவ ஆராய்ச்சி செய்தேன். பூசணி பூத்தது-சிவம் வெளிப்பட்டது. தோட்டக் குடிகள்-இந்திரியாதி விஷயங்கள். வாழைக்கனி; ஆன்ம லாபம். இவ்வாறு வேறு பொருள் கூறுவாரும் உளர். வழுதலை கத்தரி.)

2870. ஐயென்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவறி வார்இல்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன் றுமின்றிப் புகல்எளி தாமே.

பொருள் : ஐம்பூதக் கூட்டுறவால் உண்டாகும் வீரியமாகிய விதையினில் ஆன்மாவை விளங்கிக் கொள்ளும் விந்து மண்டலம் உள்ளது. விந்து மண்டலம் எவ்விதம் அமைகிறது என்ற தெளிந்த ஞானமுடையவர் இல்லை. நீலகண்டப் பெருமானிடம் மனம் பதிந்தால் ஆன்மா விளங்கும் ஒளி மண்டலத்தைச் சந்தேகமின்றி எளிதாய் அடையலாம்.

2871. பள்ளச்செய் ஒன்றுண்டு பாழ்ச்செய் இரண்டுள
கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு
வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.

பொருள் : பயனில்லாத சுழுத்தியாகிய பள்ள நிலம் ஒன்று உள்ளது. பயிர் விளைவில்லாச் சாக்கிரம் சொப்பனமாகிய இரண்டு நிலங்கள் உள்ளன. காண்பதற்கு அருமையான ஆன்மாவாகிய கள்ளச்செய் தன் உண்மை உணராத நிலையில் பயனற்று இம்மூன்று அவத்தையிலும் கலந்து இருந்தது. தன் உண்மையை உணர்ந்து உள்ளமாகிய நிலத்தைப் பொருந்திச் சிவத்தொண்டாகிய உழவினைச் செய்வார்க்கு சிவானந்தமாகிய வெள்ளம் பாய்ந்து சிவன் முத்தியாகிய விளைவு கிட்டியது.

2872. மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாம்அணை கோலின் தறியுறப் பாய்ந்திடும்
நாவணை கோலி நடுவிற் செறுஉழார்
காலணை கோலிக் களர்உழு வார்களே.

பொருள் : இடைபிங்கலை சுழுமுனை ஆகிய மூன்று ஏரும் உழுவது மூலாதாரமாகிய முக்காணி நிலமாகும். உழுதபின் அவை முதுகந்தண்டாகிய கயிற்றில் கட்டப்பெற்று சுழுமுனையாகிய தறியில் பொருந்திவிடும். ஞான சாதனை செய்யும் உழவர் வாக்கு ரூபமான பிரமத்தை எழுப்பி உண்ணாக்குக்கு மேல் பிரமப்புழையை அடைந்து அங்குள்ள சகஸ்ரதளமாகிய வயலை உழமாட்டார். காற்றினால் அடயோகம் செய்து விளையாத நிலத்தில் பயிரிடுகின்றனர். என்ன பரிதாபம்! தேக சித்தியைவிட ஞான சித்தியே சிறப்புடையதாம்.

2873. ஏத்தம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தோன் இறைக்க இளையோன் படுத்தநீர்
பத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடின்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்பு ள்ளாமே.

பொருள் : ஆதாரங்களாகிய ஏழு கிணறுகளும் அவற்றினின்றும் நீர் இறைப்பதற்கு இடை பிங்கலையாகிய இரண்டு ஏத்தமும் உள்ளன. சந்திர கலையாகிய மூத்தவன் இறைக்கவும் சூரிய கலையாகிய இளையவன் பாய்ச்சிய வீரியமாகிய நீர் அக்கினி கலையாகிய பாத்தியில் பாய்ந்து சகஸ்ரதளமாகிய வயலுக்குச் செல்லாமல் பயனற்று வீணே கழிந்து விடின் விலைமகள் வளர்த்த கோழிக்குஞ்சு அழிவது போலாகும்.

2874. பட்டிப் பசுக்கள் இருபத்து நால்உள
குட்டிப் பசுக்கள்ஓர் ஏழ்உள ஐந்துள
குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்
பட்டிப் பசுவே பனவதற்கு வாய்த்தவே.

பொருள் : மேய்ப்பார் இன்றித் திரியும் ஆன்ம தத்துவமாகிய பசுக்கள் இருபத்து நான்கு உள்ளன. வித்தியா தத்துவம் சிவ தத்துவமாகிய குட்டிப் பசுக்கள் முறையே ஏழும் ஐந்தும் உள்ளன. பின்னே சொன்ன சிறிய பசுக்கள் குடம் நிறையப் பால் கறந்தாலும் கறக்காத பட்டி மாடே ஆன்மாவாகிய பார்ப்பானுக்குக் கிடைத்தது. பேரின்பத்தை நாடி வளர்வதை விட்டு ஆன்மா சிற்றின்பத்தை நாடிக்கெடுகிறது. (பனவன்-பார்ப்பன்-பயனடையும் ஆன்மா.)

2875. ஈற்றுப் பசுக்கள் இருபத்து நால்உள
ஊற்றுப் பசுக்கள் ஒருகுடம் பால்போதும்
காற்றுப் பசுக்கள் கறந்துண்ணும் காலத்தில்
மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே.

பொருள் : பால் கறக்காத ஆன்ம தத்துவமாகிய பசுக்கள் இருபத்து நான்கு உள்ளன. ஊற்றுப்போல ஒளி வீசி நிற்கும் சிவதத்துவங்களாகிய பசுக்கள் கறக்கின்ற இன்பமாகிய பால் ஒரு குடம் ஆன்மாவுக்குப் போதுமானது. இடை பிங்கலையாகிய காற்றுப் பசுக்களைக் கறந்து உண்கின்ற காலத்தில் அதனின் வேறான சுத்த தத்துவமாகிய பசுக்கள் வருவதை அறிய முடியாது. உடம்பில் காற்றின் இயக்கம் இருக்கும் வரை சுத்த தத்துவம் விளங்காது.

2876. தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டாய் எழுந்தது செம்பாய் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மறைத்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.

பொருள் : சீவனது மனமண்டலத்தில் சிரசின்மேல் உள்ள ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் மொட்டுப்போல் சிறியதாய்த் தோன்றிச் செம்மையாக நாதம் படர்ந்தது. ஆகாயம் சிறந்து விளங்க வாய்மைப் பொருளான சிவத்தை நிலைபெறச் செய்து சீவன் அப்பொருளைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்டான். (தட்டான்-சீவன், செம்பால்-செம்மைத் தன்மை. வட்டம்-பிரணவம், வாய்மை-ஐந்தெழுத்து.)

2877. அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனித்
திரிக்கின்ற ஓட்டம் சிக்கெனக் கட்டி
வரிக்கின்ற நல் ஆன் கறவையைப் பூட்டினேன்
விரிக்கின்ற வெள்ளரி வித்தும்வித் தாமே.

பொருள் : துன்பம் தருகின்ற வினையாகிய பயிர்விளையும் உடம்பாகிய வயலில், கீழ்முகமாகச் செல்லும் பிராண சத்தியின் வழியை அடைத்து மேல் முகமாக்கி, கொள்ளத்தக்க நல்ல சிவத்தத்துவமாகிய பசுவைச் சேர்த்துக் கொண்டால் சிரசின்மேல் விரிந்து விளங்கும் விந்து மண்டலம் சிவப்பயிர் விளையும் வித்தாகும். (வெள்ளரி வித்து-சுக்கிலம்.)

2878. இடாக்கொண்டு தூவி எருகிட்டு வித்திக்
கிடாய்க்கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
அடர்க்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.

பொருள் : இடைக்கலையாகிய சந்திர கலையைத் தூண்டி சிவ சிந்தனையாகிய எருவினைத் தூவி உணர்வாகிய விதையை விதைத்து, இடைகலை பிங்கலையாகிய கிடாக்களை அங்குச் சேர்த்து சுவாச கதியாகிய முளையை மாற்றி, தொண்டைச் சக்கரமாகிய மிடாவில் ஞான சாதனையாகிய சோற்றினைப் பதப்படுத்தி மெத்தென உண்ணார். இதுவே கிடாக்களைக் கொண்டு சிவபதமாகிய செந்நெல்லைப் பெறுகின்ற முறையாம். (சோறட்டு-அமுதம் வரச் செய்து. செந்நெல்-சிவானுபவம்.)

2879. விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்
விளைந்து விளைந்து விளைந்தகொள் வார்க்கு
விளைந்து கிடந்தது மேவுக் காதமே.

பொருள் : சிவத்தை அடையும் உபாயத்தை அறிந்தவர்க்குச் சிவம் விளங்கும் விந்து மண்டலம் பெருகிக் கிடந்தது. அது ஒரு காத தூரம் பெருகிக் கிடந்தது. அவ்வாறு ஆகாயப்பேற்றின் நினைவாகவே இருப்பார்க்கு அது மும்முறையாகப் பெருகி ஆனந்தமயமாக விளங்கும். (காதம்-ஏழரை நாழிகை; வழி-சுமார் 10 மைல்.)

2880. களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருதலும் இல்லை
களர்உழு வார்கள் களரின் முளைத்த
வளர்இள வஞ்சியி மாய்தலும் ஆமே.

பொருள் : களராகிய உவர்நிலத்தை உழுவார்கள் என்ன எண்ணத்துடன் உழுகின்றார்கள் என்பதை நாம் அறிவதற்கில்லை. அங்ஙனம் உழுவார் என்ன குறிக்கொண்டு உழுகின்றார் என்பதும் தெரியவில்லை. அதுபோல் தவ முயற்சியின்றி மீண்டும் பிறப்பதற்கே ஆளாகி இறக்கின்றார்கள். இவர்தம் செயல் வீண் செயலாகின்றது. அதற்கு ஒப்புக்களரில் முளைத்த வளரும் தகுதி வாய்ந்த இளவஞ்சிக் கொடியானது சார்ந்த நிலத்தின் புன்மையால் பட்டு மாய்வதாகும். (மாய்தல்-கேடு அடைதல்.)

2881. கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து
ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு
நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை
ஏற்பட இல்லத்து இனிதிருந் தானே.

பொருள் : மிகவும் நுண்மை வாய்ந்த அசைவில் தொட்டகமாகிய நெஞ்சத் திடத்து திருஐந்தெழுத்தால் செய்யப்படும் தண்சுடர்த் தழலினுள் ஆருயிரைக் கட்டுறுத்தும் ஆப்பினை வைத்திடுதல்-திருவருள் பிறை போன்று ஆருயிர்களுடன் நாட்பட நின்று நிலை பெற்று நலம் புரிந்து, அருள் வீழ்ச்சியாகிய சத்தி நிபாதமும் எய்தும். எய்தவே திருவடிப் பேரின்பப் பேரில்லத்தின்கண் அவ்வுயிர் இனிது வீற்றிருந்த இன்புறும் (குறுநரிக் கொட்டகம்-அணு அளவு ஆய மனம் இருக்கும் உடல். ஆப்பிடு-கட்டப்பட்ட அங்கியுள் சிவாக்கினியில், ஆயிழை ஏற்பட-சத்தி பதிய.)

2882. மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கிளி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.

பொருள் : சிரசாகிய மலையின்மேல் ஒளிக்கிரணமாகிய மழை பரவ, பிராணனாகிய மான்குட்டி சிரசின் மத்தியில் மோத, ஊர்த்துவ சகஸ்ரதளமாகிய குலைமேல் இருந்த சிவமாகிய செழுமை மிக்க பழம் உதிர, கொல்லன் உலைக்களத்திலிட்ட இரும்புபோல அச்சிவன் மார்பகத்துக்கு மேல் ஒளியாகிய அமிர்தத்தை விளங்குமாறு செய்தான். (முலை மேல் அமிர்தம் பொழிய-சத்தி பதிய.)

2883. பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே. 

பொருள் : ஆன்மாவாகிய பார்ப்பானது உடம்பகத்தில் இந்திரியங்களாகிய கறவைப் பசுக்கள் ஐந்து உள்ளன. அவை அடக்குவாரின்றி விருப்பம் போலப் புலன்களை நோக்கிச் செல்வனவாகும். ஆன்மாவைச் செலுத்தும் சிவமாகிய மேய்ப்பாரும் உண்டாகிப் புலன்களில் செல்லும் விருப்பத்தையும் விட்டால் ஆன்மாவிடம் பொருந்திய இந்திரியங்களாகிய பசுக்கள் பேரின்பமாகிய பாலினை விளைக்கும். இந்திரியங்கள் உலக நோக்கமின்றி அக நோக்காக அமையுமாயின் பேரின்பம் உண்டாகும்.

2884. ஆமாக்கள் ஐந்தும் அரிஒன்றும் முப்பதும்
தேமா இரண்டொடு தீப்புலி ஒன்பதும்
தாமாக் குரம்கொளின் தம்மனத் துள்ளன
மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.

பொருள் : பஞ்சப் பிராணனாகிய காட்டுப் பசுக்கள் ஐந்தும் ஆன்ம தத்துவம் புருடன் நீங்கிய வித்தியாதத்துவம் ஆகிய ஆண் சிங்கம் முப்பதும் சுக துக்கமாகிய தேமா இரண்டுடன் குற்றமில்லாத சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், சேவை, அருச்சுனை, அடிமை, வந்தனம், சக்கியம், ஆத்ம நிவேதனம் ஆகிய திப்பிலி ஒன்பதும் தமக்குரியனவாக வசப்படுமாயின், தம் மனத்துள்ளனவாகிய காமாதிகள் விருத்தியடையா. அம்முறையே செலுத்தினால் ஞான ஒளியை வளர்ப்பவராவர். (தேமா-மாமரங்கள். திப்பு-கோது. இலி-இல்லாதது. குரங்குதல்-வளைதல். கடாவுதல்-செலுத்துதல்.)

2885. எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெளிந்திருந் தோத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணம்உண்ட வாறே.

பொருள் : ஏட்டில் எழுதாத வேதமாகிய புத்தகத்தின் சூக்கும வாக்காகிய பொருளை இளமை நலத்தோடு கூடிய குண்டலினியாகிய கன்னி சிரசை அடைந்து எழுப்ப ஊர்த்துவ சகஸ்ரதளமாகிய பூவின் ஆனந்தம் விளைக்கும் நாதமாகிய தேனை உடலோடு கூடாத ஆன்மாவாகிய வண்டு நாதமாகிய தேனில் திளைத்து இன்பம் பெற்றது.

2886. போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் தருங்கனி
ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.

பொருள் : உடம்பினின்றும் வெளியே செல்லுகின்ற காற்றாகிய அபானனும் புகுகின்ற காற்றாகிய பிராணனும், கூடுகின்ற உடம்பாகிய நாவல் மரத்தின் பயனைத் தருகின்ற பழமாகிய போகத்தை அனுபவிக்கின்ற ஞானேந்திரியங்களாகிய ஐவரும் வெந்து போகின்ற உடம்பாகிய கூரையில் திளைக்கின்றனர். என்ன பரிதாபம்!
(குறிப்பு : இப்பகுதியிலுள்ள பாடல்கள் மூடுமந்திரங்களாய் உள்ளமையால் பொருள் கூறுவோருள் கருத்து வேறுபாடுகள் உள்ளன.)

2887. மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினைச் சார்ந்து கிடந்த பனையில்ஓர்
பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பாரின்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.

பொருள் : மனமாகிய மூங்கில் முளையினின்று தோன்றிய வைராக்கியமாகிய வேம்பு உண்டு. அவ்வைராக்கியத்தைப் பொருந்தியிருந்த முதுகந் தண்டாகிய பனைமரத்தில் குண்டலினியாகிய பாம்பு உள்ளது. கீழே சுருண்டு கிடக்கும் குண்டலினியாகிய பாம்பை மேலே செலுத்தி அமுதம் உண்பாரின்றி வைராக்கியமாகிய வேம்பு பயன் தராது கெடுகின்றது.

2888. பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்துநின் றாரே. 

பொருள் : தச நாடிகளாகிய பருமையான புலி பத்தும், பூதங்கள் தன் மாத்திரைகள் புலன்கள் ஆகிய யானை பதினைந்தும் ஞானேந்திரியங்களாகிய வித்தகர் ஐவரும் தசவாயுக்களாய வினோதகர் பத்தும் அத்தன்மையைச் செய்யும் தாமத, இராசத, சாத்துவிகமாகிய மூவரும், பிறத்தல், கற்றல், தேடல், கூடல், வாழ்வு, தாழ்வு ஆகிய நலன்களை உயிர்க்குச் செய்யும் மருத்துவர் அறுவரும் உள்ள தேகத்தில் பொருந்தி ஆன்மா சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் ஆகிய ஐந்து அவத்தைப் படும். (வித்தகர் ஐவர்-ஞானேந்திரியங்கள். வினோதகர்-உடலின்கண் ஊழியம் செய்பவர்.)

2889. இரண்டு கடாக்களுண் டிவ்வூரி னுள்ளே
இரண்டு கடாக்கட் கொருவன் தொழும்பன்
இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கின்
இரண்டு கடாவும் ஒருகடா ஆமே.

பொருள் : இவ்வூராகிய உடம்பகத்து விடுத்தல் எடுத்தல் ஆகிய உயிர்ப்புப் பயிற்சிக்குரிய இரு தொழிலும் கடாக்கள் எனப்பட்டன. இவ்விரண்டினையும் மேய்த்து நடத்தும் உயிர் ஒன்றுண்டு. அவ்வுயிர் தொழும்பன் எனப்பட்டது. விடுத்தல் எடுத்தல்களாகிய மூச்சினை இருத்திப் பிடித்துத் தலைச் செய்யின் அவ்விரண்டு கடா ஒரு கடாவாகும். (தடுத்தல்-கும்பகம். இரண்டு கடா-இரேசகம், பூரகம்.)

2890. ஒத்த மணற்கொல்லை யுள்ளே சமன்கூட்டிப்
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்தம் கவறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்பிநின் றார்களே.

பொருள் : ஞான சாதகர் மனமண்டலத்தை விருப்பு வெறுப்பற்ற சமத்துவ புத்தியால் ஒழுங்குபடுத்தி இறைவனிடம் மனம் பதியும்படி செய்து பருத்தி போன்ற வெண்ணிற ஒளியைச் சிரசின்மேல் விளங்கும்படி பாவித்தலால் அதுவே முத்திக்குச் செல்லும் நூலேணியாக சிருஷ்டி, ஸ்திதி சம்காரங்களைச் செய்யும் பிரமன் விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவருடைய ஆட்சியிலுள்ள உடம்பாகிய ஊரினில் நாள்தோறும் சாதனை செய்து உயிரும் உடலும் சூழ்ந்துள்ள ஆகாயத்தையே தமது உடலாக்கிக் கொண்டு பூரணத்துவத்துடன் விளங்கினர். (முத்தக் கயிறு-நூலேணி.)

2891. கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையைக் கூகை நணுக லுறுதலும்
கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.

பொருள் : கூகையாகிய அறியாமையும் பாம்பாகிய சுட்டறிவும் கிளியாகிய அறமும் பூஞையாகிய பாவமும் நாகையாகிய சிற்றறிவும் பூழாகிய அறுபகையும் உடம்பின் நடுவாகிய எண்ணம் என்னும் சித்தத்தின் கண் உறைவன. நாகையாகிய சிற்றறிவினைக் கூகையாகிய அறியாமை நணுக முயலும். அப்பொழுது அருள் ஒளிபெற்ற வெள் எலியாகிய ஆருயிர் சிவனை நினைந்து கூவும். சிவனும் வெளிப்பட்டுக் கூகையை அடக்கியருள்வன். (உறைதல்-தங்கியிருத்தல். கூகை-அஞ்ஞானம். பாம்பு-காமம். கிளி-அறம். பூஞை-மறம். நாகை-சிற்றறிவு. பூழும்-குரோதமும். குறிப்புரை : கூகை-கோட்டான். பூஞை-பூனை. நாகை-நாகணவாய்ப்புள். பூழ்-காடை. எலிக்கு இரவில் கண் தெரியும்; நாகைக்கு இரவில் கண் தெரியாது.)

2892. குலைக்கின்ற நன்னகை யான்கொங் குழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்குப் புறம்எனில் ஓடும் இருக்கும்
புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.

பொருள் : குலையாகவுள்ள நல்ல எண்ணமாகிய வாசனையைக் கலக்கி விட்டால் நிலைபெற வேண்டிய சீவனாகிய வெள்ளை எலி தாமத இராசத சாத்துவிகமாகிய முக்குண வசப்பட்டு நிற்கும். அப்போது அதன் எண்ணம் உடம்பாகிய உலைக்குப் புறமாகில் மனம் வெளியே ஓடும். இல்லையெனில் அறிவினில் அடங்கியிருக்கும். உடல் பற்றுக் காரணமாகப் பிறந்த ஆசையால் அவ்வாறு மனம் அலைகிறது.

2893. காடுபுக் கார்இனிக் காணார் கடுவெளி
கூடுபுக் கானது ஐந்து குதிரையும்
மூடுபுக் கானது ஆறுள ஒட்டகம்
மூடு புகாவிடின் மூவணை யாமே.

பொருள் : அஞ்ஞான மயமான தத்துவமாகிய காட்டினுள் புகுந்தவர் சிவ பூமியாகிய வெட்ட வெளியைக் காணமாட்டார். உடம்பாகிய கூட்டினில் புகுந்ததான பஞ்ச பிராணனாகிய ஐந்து குதிரையும் தேகத்தைச் சூழவுள்ளதான மன மண்டலத்தைக் காமக் குரோ தாதிகளான ஆறு ஒட்டகமும் மறைப்பினைச் செய்யாவிடின் சீவன், சீவதுரியம் பரதுரியம் சிவதுரியம் ஆகிய மூன்றையும் கடந்து விளங்கும்.

2894. கூறையும் சோறும் குழாயகத் தெண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர்
பாறையின் உற்றுப் பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.

பொருள் : உடுக்கும் உடையும் உண்ணும் சோறும் குழாய்க் கலத்து எண்ணெயும் சுழுத்தணியாகிய காறையும் அரைஞாணும் கைவளையலும் கண்டவர் அவற்றின்கண் பெருமயக்குக் கொள்கின்றனர். இவையனைத்தும் நிலையில்லாத மாயா காரியப் பொருள்களாகும். இவற்றின் உண்மையை உணராமல் இவை நிலைக்குமென மயங்கித் தடுமாற்றம் எய்துகின்றனர். அவர்கள் உள்ளம் அப்பொருள்களின் இடத்து விரைந்து பரந்து செல்கின்றது. அதற்கு ஒப்புப் பாறையில் உலரும்படி விரித்த சீலை பெருங்காற்றால் பறந்து செல்வதாகும். அவ்வுயிர்கள் ஆறைக்குழியில் வீழ்ந்து அழுந்தும். (ஆறைக்குழி-ஆறு பகை.)

2895. துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்
வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பான்
ஒருத்திஉள் ளாள்அவள் ஊரறி யோமே.

பொருள் : துருத்தி போன்ற உடம்பின் உச்சியிலுள்ள மலை போன்ற சிரசின்மேல் மன விருத்தியைக் கண்காணிக்கக் காலை நண்பகல் மாலையாகிய மூன்று காலங்களிலும் சிதாகாயப் பெருவெளியை ஞான சாதனை செய்பவர்க நாடுவர். அவரை வருத்திக் கொண்டுள்ள மலை போன்ற தீய வினைகளைத் தவிர்ப்பவளாகிய பராசத்தி உள்ளாள். அவ்வாறுள்ள சத்தியினது துணையின்றிச் சிவனது ஊரை அறியமுடியாது.

2896. பருந்துங் கிளியும் படுபறைக் கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெருந்தவப் பூதம் பெறல்உரு ஆகும்
இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.

பொருள் : தர்மமாகிய கிளியும் அதர்மமாகிய பருந்தும் சுகதுக்கமாகிய மேளத்தைக் கொட்ட சுகத்தில் பற்றும், துக்கத்தில் வெறுப்பும் இல்லாமல் திருந்திய சீவராகிய மாதர்கள் சிவத்துடன் சேர்ந்தனர். அதனால் அவர்கள் தவத்தினால் அடையும் ஆகாய மயமான தேகம் பெறுவர். அவ்வாறு இருக்கின்ற ஆகாயப் பேற்றினில் சிவானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருப்பர்.

2897. கூடு பறவை இரைகொத்தி மற்றதன்
ஊடுபுக் குண்டி யறுக்குறில் என்னாக்கும்
சூடெறி நெய்யுண்டு மைகான றிடுகின்ற
பாடறி வார்க்குப் பயன்எளி தாமே.

பொருள் : இந்திரியமாகிய பறவை சத்தாதி விஷயங்களை நுகர்ந்து, பிறகு அதனுள் அழுந்தி அவ்விஷய அனுபவமாகிய உணவினை அனுபவிப்பதனால் என்ன ஆகும்? வெப்பம் பொருந்திய மூலாக்கினியில் உணர்வாகிய நெய்யைச் சொரிந்து அதனைத் தூண்டி சூழ்ந்த அண்டகோசத்தின் இருளைப் போக்கி ஒளிமயமாக்கும் தன்மையை அறிவார்க்கு, சிவமாகிய பயனை அடைதல் எளிதாகும்.

2898. இலையில்லை பூவுண்டு இனவண்டிங் கில்லை
தலையில்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்
குலையில்லை கொய்யும் மலர்உண்டு சூடும்
தலையில்லை தாழ்ந்த கிளைபுல ராதே.

பொருள் : நிர்க்குண பிரமத்தினிடம் சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தங்களாகிய தளிர் இல்லை. ஒளியாகிய மலர் உள்ளது. விஷய வாசனையாகிய வண்டு இவ்விடம் இல்லை. நிர்க்குண பிரமத்தின் அறிவாகிய சிரசை யாரும் காண முடியாது. ஆனால் நிர்க்குணமான பொருள் கீழேயுள்ள சகுணமான வேரிலும் கலந்தே உள்ளது. ஆனால் நிர்க்குணத்தின் இருப்பு சகுணமாகிய தாளில் இல்லை. உலகில் காணப்படும் மலர்களாகிய கொத்துக்கள் அங்கு இல்லை. ஆனால் அனுபவிக்கப்படும் ஒளியாகிய மலர் உண்டு. அவ்வொளிக் கிரணங்களை வேறாகப் பிரித்துச் சூடும் தலை இல்லை. கருமகாண்ட அறிவாகிய கிளையில் ஞானமாகிய நிர்க்குணப் பிரமத்தைக் காண முடியாது. (இம்மந்திரம் உபநிடதக் கருத்தைக் கொண்டது.)

2899. அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.

பொருள் : சகுணமாகிய கரையைக் கடந்து நின்ற நிர்க்குண பிரமமாகிய ஆலமரங்கண்டு, நிர்க்குணமாகிய சிவனை வழிபட்டுப் பொருந்தி நிற்பர். மக்கள் இனத்தில் மேன்மை பெற்ற அவர் அவித்தை அஸ்மிதை, ராகம், துவேஷம், அபினிவேசம் ஆகிய பஞ்ச கிலேசங்களை அறிந்து நிர்க்குண பிரமத்திடம் தாழ்ந்து அதன் பயனை அனுபவிப்பவராவர். (ஐவகைத் துன்பமாவன : தொன்மை இருள், செருக்கு, அவா, ஆசை, சினம் என்பன. தமிழ்ப் பெயர்கள்.)

2900. கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்
காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்
காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்
கூப்பிடும் ஈண்டதோர் கூரைகொண் டாரே.

பொருள் : சப்திக்கின்ற சம்காரமாகிய வழியிலே அஞ்ஞானமாகிய காடு இருகாதம் உள்ளது. அக்காட்டில் வழிச் செல்வோரைக் கட்டிப் போடக்கூடிய ஐம்புல வேடராகிய கள்வர் உள்ளனர். அவ் ஐம்புலன்களாகிய வேடரைச் சிவ ஒளியாகிய வெள்ளர் நாதமாகிய ஒலியை எழுப்பி அழைக்க, அக்கள்வராகிய வேடர் மீண்டு வந்து சகஸ்ரதளமாகிய கூரையில் நிலைபெற்றனர்.

2901. கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறே.

பொருள் : அறிவும் அறியாமையுமாகிய கொட்டயும் ஆம்பலும் மலர்ந்த சம்சாரமாகிய சாகரத்தில் நாம ரூபமாகிய எட்டியும் வேம்பும் விட்டு சத்து சித்து ஆனந்தமாகிய வாழையும் கற்கண்டும் தேனும் கலந்து அனுபவிக்காதவர் கவர்ச்சியுடைய உலக போகமாகிய எட்டிப் பழத்தை நாடிக் கெடுவார் ஆவார்.

2902. பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
குடைகொண்ட பாசத்துக் கோலம்உண் டானும்
கடைவண்டு தான்உண்ணும் கண்கலந் திட்ட
பெடைவண்டு தான்பெற்ற தின்பமு மாமே. 

பொருள் : உலக அன்னையாகிய பெடை வண்டும் உலக அத்தனாகிய ஆண் வண்டும் ஒன்று கலந்து திருவுள்ளக் குறிப்பால் ஏவுதலை மேற்கொள்கின்றனர். அதனால் மாயா காரியமாக பீடிகை வண்ணமாக மண் தோன்றுகிறது. குடை போன்று வானம் தோன்றுகிறது. ஏனையவும் முறையாகத் தோன்றுகின்றன. உயிர்கள் வினைக் கீடாகப் பிறக்கின்றன. வினைக்கீடாக விளையும் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன. (திருவருள் ஆற்றல் பெடை வண்டு எனப்பட்டது.)

2903. கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்தவன்
எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே
வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது
கொல்லசெய் நெஞ்சம் குறியறி யாதே.

பொருள் : சுட்டறிவாகிய அற்ப வளமுள்ள புன்செயில் மேய்கின்ற ஆன்மாக்களாகிய பசுக்களுக்கு உதவிய சிவன், அதைச் சுட்டறிவின் எல்லையைக் கடக்கச் செய்து அகண்ட சொரூபமாகிய தன்னை அடைந்து பொருந்துவதற்குரியி தகுதியை அளித்த பின் அல்லாமல் சுட்டறிவாகிய புன்செயை நாடிச் செல்லும் மனம் அகண்ட ஞான சொரூபத்தை அறியாது.

2904. தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தி னுள்ளே விளங்கவல் லார்கட்குக்
குட்டத்தில் இட்டதோர் கொம்மட்டி யாமே.

பொருள் : வலக் கண்ணாகிய தட்டத்து நீரில் சூரிய கலையாகிய செந்தாமரை மலர்ந்தது. இடக்கண்ணாகிய குட்டத்து நீரில் சந்திர கலையாகிய நீலோற்பலம் தோன்றியது. ஞான சாதனையால் இரண்டையும் சேர்த்துச் சுழுமுனையாகிய விட்டத்தில் விளங்க வல்லார்க்கு ஆழ்ந்த இடமாகிய குட்டத்தில் விளைந்த ஆனந்தமாகிய கொம்மட்டிப் பழம் கிட்டுமாம்.

2905. ஆறு பறவைகள் ஐந்தத் துள்ளன
நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன
ஏறு பெரும்பதி ஏழும் கடந்தபின்
மாறுத லின்றி மனைபுக லாமே.

பொருள் : காமாதி ஆறு பறவைகள் ஐம்பூத மயமான உடலில் உள்ளன. இவை சிரசின்மேல் உள்ள நூறு நாடிகளாகிய பறவைகளால் நுகர்ந்து செல்லப்படுவன. ஆனால் சீவன் ஏழு ஆதாரங்களையும் ஏறிக் கடந்தபின் தவறுதல் இல்லாமல் சிவன் விளங்கும் பதியை அடைதல் கூடும்.

2906. கொட்டனம்- செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டனப் பூமி மருவிவந் தூறிடும்
கட்டனம் செய்து கயிற்றால் தொழுமியுள்
ஒட்டனம் செய்தெளி யாவர்க்கு மாமே.

பொருள் : குடைதல் முதலிய கிரியையைச் செய்து திளைக்கின்ற யோனியாகிய குளத்தில் வட்டத்தால் குறிக்கப்படும் ஆகாய சம்மியம் பொருந்தி இன்பமாகிய ஊற்றுப் பெருகும். வீரியமாகிய சத்தியை வெளியே விடாமல் நடு நாடியாகிய கயிற்றால் கட்டி, உடலினுள்ளே நிலைபெறுமாறு செய்த பின், இச்சாதனையால் ஒளி யாவர்க்கும் உண்டாகும். முதல் அடிக்கு சீச போதத்தை அடக்கிச் சிவ போதத்தில் திளைத்தல் என்று பொருள் கொள்ளுதலும் உண்டு.

2907. ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி
தாழும் இருநிலத் தன்மை யதுகண்டு
வாழ நினைக்கில் அஃது ஆலயம் ஆமே.

பொருள் : உலகைச் சூழவுள்ள ஏழு கடல்களும் உலகிலுள்ள மேலான எட்டு மலைகளும் ஆழ்ந்திருக்கின்ற ஆகாயத்தினில் அக்கினி, நீர், காற்று, தாழ்ந்துள்ள பெரிய நிலம் ஆகியவை இடம்பெற்ற தன்மையை அறிந்து, நீண்டநாள் வாழ விரும்புவார்க்கு அவ் ஆகாயம் ஆலயமாகும்.

2908. ஆலிங் கனம்செய்து அகம்சுடச் சூலத்துச்
சாலிங் கமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோலிங் கமைந்தபின் கூபப் பறவைகள்
மாலிங்கு வைத்தது முன்பின் வழியே.

பொருள் : கணவர் மனைவியர் ஒருவரை ஒருவர் தழுவி, வெப்பம் உண்டாகச் செய்து, கருப்பையில் உடம்பை உருவாக்கி விட்டுக் காமச் செயலின் தலைமையை விட்டனர். கருவை இங்கு அமைத்த பிறகு, உடம்பின் கண் உள்ள இந்திரியங்கள் மயக்கத்தினின்றும் நீங்கி, இந்திரியங்களின் வழிச் சென்ற மனம் முன்னாக, இவை பின்னாக நின்றன.

2909. கொட்டுக் குந்தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.

பொருள் : திருமணச் சடங்கில் மேளமாகிய கொட்டும் உரிமையாகிய தாலியும் இரண்டும் உள்ளன. இவ்விரண்டையும் விட களவு வழி விழைவாகிய பாரை வலிமையானது. பிறர் அறியச் செய்த கொட்டுக்கும் தானே உரிமையாக அணிந்த தாலிக்கும் இயல்பாகவே உண்டாகிய விழைவுக்கும் இறைவன் அருளால் அமையும் விருப்பமே வலிமையுடையதாகும். (கொட்டு-இந்திரிய நுகர்ச்சி. தாலி-சுக துக்க அனுபவம். பாரை-பொருள்களை அனுபவிக்கும் ஆசை. இட்டம்-திருவருட்சத்தியின் சம்பந்தம்.)

2910. கயலொன்று கண்டவர் கண்டே யிருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம்பொன னாமே.

பொருள் : மாறிக் கொண்டிருக்கும் உலகமாகிய கயல் மீனைக் கண்டவர் உலகில் பிறந்து இறந்துகொண்டேயிருப்பர். சிவமாகிய முயலை அடைய வேண்டுமென்று சரியை, கிரியை யோக நெறி நிற்பவர் சிறிது சிறிதாக ஞானத்தை அடைந்து உய்வர். இவற்றை விடுத்து, தர்க்க வாதத்தில் ஈடுபடுபவன் வேதம் போற்றும் நித்தியப் பொருளான சிவம் ஆக முடியுமோ? முடியாது. (துருவம்-நித்தியம்.)

2911. கோரை யெழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படிகின்றாற் போல்நல்ல நாதனார்
பாரைக் கிடக்கப் படிகின்ற வாறே.

பொருள் : ஆசையாகிய கோரை முளைத்த சித்தமாகிய குளத்தினில் அதன் பாசமாகிய ஆசை படர்ந்து நீண்டு கிடந்தது. ஆரையும் கோரையும் நிறைந்த தடாகத்தில் மீனைப் பிடிக்கும் நாரை போல்பவன் அல்லன் சிவன். அவன் சலனமில்லாத பாரை போன்ற சித்தமாகிய தடாகத்தில் சீவனாகிய மீனைப் பிடிப்பவனாவான். நாரை உவமை மறுதலைப் பொருளின்கண் வந்தது. மற்றாங்கே என்பது போன்று.

2912. கொல்லைமுக் காதமும் காடரைக் காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி
எல்லை மயங்கா தியங்கவல் லார்களுக்கு
ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே.

பொருள் : அற்ப வளமுள்ள கொல்லையாகிய அ உ ம என்ற முக்காதமும் அதன்மேல் காடுபோன்ற அர்த்த மாத்திரைப் பிரணவமும் இவ்விரண்டும் உடம்பிலும் சிரசிலும் ஆகிய எல்லையில் ஆன்மாவைப் பிணித்திருக்கும் இரண்டு நெறிகளாகும். உடம்பும் சிரசும் ஆகிய எல்லைக்குள் கட்டுப்படாமல் செயல்படுவார். விரைவில் பிரணவத்தைக் கடந்து ஒளி ஞானம் பெற்றுச் சிவ பூமியை அடையலாம். (கொல்லை-பிரணவம். ஊர்-முத்தி உலகம்.)

2913. உழவொன்று வித்து ஒருங்கிய காலத்து
எழுமழை பெய்யாது இருநிலம் செவ்வி
தழுவி வினைசென்று தான்பய வாது
வழுவாது போவன் வளர்சடை யானே.

பொருள் : அகண்டமான சிவத்தை அடைகின்ற தவமாகிய உழவினைச் செய்து மனம் ஒருமைப்பட்ட காலத்தில் எண்ணமாகிய மழை எழுந்து பெய்யாமல், சிவ பூமிக்குரிய சத்தி பொருந்தி மலபரிபாகம் உண்டாகி வினை போகத்தைக் கொடுக்காது. தவறுதல் இன்றி வளரும் ஒளிக் கிரணங்களையுடைய சிவன் பொருந்தி விளங்குவான். (பெய்யா-பெய்து என்று பொருள் கொள்வாரும் உளர்.)

2914. பதுங்கினும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
அதுங்கிய ஆர்கலி ஆரமு தூறப்
பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.

பொருள் : சீவன் தொழிலின்றி இருப்பினும் பிராணனது அதிபதியான சூரியனது இயக்கம் பன்னிரண்டு ராசிகளிலும் சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் உடலைக் கடந்தபோது விளங்கிய குளிர்ந்த சந்திரமண்டல ஒளி பெருகவே தேன் ததும்பிய சிவக் கனியின் இன்பம் சுரக்க இதுகாறும் வருத்திய பஞ்சேந்திரிய அறிவைச் செயல் படாதவாறு சீவன் அடக்கிக் கொண்டனன்.

2915. தோணிஒன் றேறித் தொடர்ந்து கடல்புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்
நீலிக் கிறைக்குமேல் நெஞ்சின் நிலைதளர்ந்து
ஆலிப் பழம்போல் அளிகின்ற அப்பே.

பொருள் : பிரணவமாகிய தோணியில் ஏறிச் சிதாகாயமாகிய கடலில் சென்று ஒளி பெறுவதும் இருள் விடுவதுமாகிய வாணிகத்தைச் செய்து விருத்தியை விரும்பிய சீவன், மாயா காரியமாகிய நீலியைப் பற்றுகின்ற மனத்தின் தன்மையைச் சிறிது சிறிதாக விடுத்து, தேனைப் பிலிற்றுகின்ற கனிபோல இன்பம் நல்கும் தண்ணளியாகிய சந்திர மண்டல ஒளியில் திளைத்திருப்பான். (தோணி-உடல். கடல்-உலக மாய குடும்பக் கடல். நீலிக்குப் பெண்ணின் பொருட்டு என்று பொருள் கூறுவாருமுளர்.)

2916. முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள்
செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன
பக்குவம் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்குமல ருண்டு நடுவுநின் றாரே.

பொருள் : தாமதம், இராசதம், சாத்துவிகமாகிய ஆற்றில் சாக்கிரம் சொப்பனம் சுழுத்தியாகிய மூன்று வாழைகள் உள்ளன. அங்குச் செம்மை நிறமுடைய அக்கினி மண்டல விளைவாக ஆணவம் கன்மம் மாயையாகிய மும்மலச் சேர்க்கை நிறைந்து கிடந்தன. ஆனால் சிவக் காதலுடையார் இவற்றினின்றும் நீங்கியவராவர். பொய்யை மெய்போலும் பேசும் மாதரது காமச் சுவையாகிய மலரின் மணத்தை விரும்பி நுகர்ந்துகொண்டே சுழுமுனையில் தங்கள் மனத்தை நிறுத்தி நீடு வாழ்ந்தனர். வாழ்க்கைத் துணையோடு வாழ்ந்தனர் என்பது பொருள்.

2917. அடியும் முடியும் அமைந்ததோர் அத்தி
முடியும் நுனியின்கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையுங் கொளும்சார்பை யைந்து
மடியும் வலம்புரி வாய்த்தவ் வாறே.

பொருள் : மூலாதாரமாகிய அடியும் சிரசாகிய முடியும் உடைய ஆத்தி போன்ற முதுகந்தண்டு முடிகின்ற உச்சியில் மூங்கிலின் முக்கண் போன்று சோம சூரிய அக்கினியாகிய மூன்று கலைகள் உள்ளன. முக்கலைகளும் சாதனையால் வளர்ச்சி பெற்று ஒன்றானபோது கொடியும் படையும் போன்ற தீமையைத் தருவதான ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் கெட்டு ஒழியும். அப்போது அவ்வழியே சங்கநாதம் கிட்டும்.

2918. பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துள்
குன்றாமைக் கூட்டித் தராசின் நிறுத்த பின்
குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.

பொருள் : அசுத்தத்தில் விருப்பமும், பகைமையில் சீற்றமும், தீமையில் அடக்கமும், நன்மையில் எரிச்சலும், எங்கும் பொருந்திக் கிடந்த மனத்திடை, பொருந்தாமல் சிவத்துடன் பொருந்திச் சமன் செய்து நிறுத்திய பிறகு சீவனது குறை சிறிது சிறிதாகக் குறையும் என்க.

2919. மொட்டித் தெழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
கட்டுவிட் டோடின் மலர்தலும் காணலாம்
பற்றுவிட் டம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட் டாலன்றிக் காணஒண் ணாதே.

பொருள் : தாமரை மொட்டுப்போல எழுகின்ற சகஸ்ரதளமாகிய மொட்டு சிரசில் உண்டு பாசத்தினின்றும் நீங்கியபோது அம்மொட்டு ஊர்த்துவ சகஸ்ரதள மலராக விரிவதைக் காணலாம். தேசப்பற்று நீங்கித் தத்துவக் கூட்டத்தாலாகிய உடம்பு கெடுமாறு ஒளியாகக் கண்டு, பற்று நீங்கினவர்க்கு அல்லாமல் சகஸ்ரதள மலர் விரிதலைக் காண முடியாது. (மொட்டு-சிவானந்தம், மலர்தல்-சிவானந்தம் வெளிப்படுதல். மனை-முத்தி வீடு. இவ்வாறு சிலர் பொருள் கொள்வர்.)

2920. நீரின்றிப் பாயும் நிலத்தினில் பச்சையாம்
யாருமிங் கென்றும் அறியவல் லாரில்லை
கூரும் மழைபொழி யாது பொழிபுனல்
தேரின்இந் நீர்மை திடரின்நில் லாதே.

பொருள் : நீர் இல்லாமல் உணர்வு பாயும் சகஸ்ரதளமாகிய நிலத்தினில் மரகத ஒளி விளங்கும். ஞான சாதனையைச் செய்த இவ்வுண்மையைக் காணவல்லார் இல்லை. மிகுந்த மழையின்றிப் பெருகுகின்ற உணர்வாகிய நீரை ஆராயின், இவ்வுணர்வாகிய நீரின் தன்மை இந்திரிய வயப்பட்ட மனமாகிய திடரில் பொருந்தி நில்லாது என்பது புலனாகும். (நிலம்-சித்தம். பச்சையாம்-சிவம் வெளியாம். கூரும் மழை பொழியாது-இந்திரிய சேட்டைகள் இல்லாமல் (பொழிபுனல்-சிவானந்த வெள்ளம். திடர்-இந்திரிய வயப்பட்ட சித்தம். இந்நீர்மை-இத்தன்மை-இவ்வாறு பொருள் கொள்ளவும் கூடும்.)

2921. கூகைக் குருந்தம தேறிக் குணம் பயில்
மோகம் உலகுக் குணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே.

பொருள் : அஞ்ஞானமுள்ள சீவன் சிவமாகிய குருவை அடைந்து, உலகுக்கு முக்குண மாயை காரணம் என்று அறிகின்றபோது குரங்கை யொத்த மனமும் அடங்கும். மனத்தை அடக்கி நடத்துகின்ற தன்மை உடையவன் அவன்.

2922. வாழையும் சூரையும் வந்திடங் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்
வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு
வாழை இடங்கொண்டு வாழ்கின்ற வாறே.

பொருள் : வாழை போன்ற இன்பமும் சூரை போன்ற துன்பமும் இருவினைக்கு ஈடாக வந்து வாழ்வில் சீவர்களிடம் பொருந்தின. இன்பத்தை விடத் துன்பம் மிக்க வன்மையானது என்று கூறுவர். இன்பமும் துன்பமும் தேகப்பற்றினால் உண்டானவை என்று அறிந்து அவற்øக் கடிந்து நிலையான சிவத்தை இடமாகக் கொண்டு வாழ்வதே முறையாகும். (வாழ்+ஐ=வாழை. நிலையான சிவன். வன்துண்டம் செய்திட்டு-இன்ப துன்பங்களில் மனம் வையாமல் இரண்டினையும் ஒப்ப நோக்கினால்.)

2923. நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்த்த கொழுமீன்
விலக்குமீன் யாவர்க்கும் வேண்டின் குறையா
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.

பொருள் : பூமியின்கண் சகல போகத்தை அனுபவித்தும் கடல் யாத்திரை செய்து வேண்டிய செல்வங்களை ஈட்டியும் ஐம்புல அனுபவியாகிய சீவன் அடைந்த தேக உலக பாசங்களை அருள் நாட்டத்தால் அகற்றுதல் வேண்டும். அகற்றாது ஒழியின் திருவடியின்பமாகிய அருத்தம் எய்தாது. அதுமட்டுமின்றி ஆருயிர்களை மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பினுக்கு உட்படுத்தி அளவில்லாத் துன்பத்தையும் எய்துவிக்கும்.

2924. தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக்
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்தொன்றாம் ஆய்ந்துகொள் வார்க்கே.

பொருள் : தட்டிக் கொண்டிருக்கிற சப்த உணர்வில் சீவன் தேகத்தின் விருத்தியை அடையும். அங்குக் கூப்பிட்டு அடைக்கும் சங்கநாதம் உண்டு. அவ்ஓசை வழியே சென்று சிவனை நாடுவதில் சீவனுக்குக் களிப்பு உண்டாகும். அந்நாட்டம் சந்திரனுக்கும் சூரியனுக்கும் சுழுமுனையாகிய பதத்தைக் கொடுக்கும் என்ற உண்மை ஆராய்வார்க்குப் புலனாகும்.

2925. குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை
படைகண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையார் நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

பொருள் : உடம்பாகிய குடையை நீங்கிச் சித்தமாகிய கோயில் எருமை நாத சம்மியத்தை நோக்கிச் சென்றது. ஆனால் விஷயாதிகளான படையை நினைத்தபோது சித்தம் நாதத்தினின்றும் நீங்கித் தேகத்தை நோக்கியது. ஆன்மாவாகிய உடையவன் புத்தியாகிய மந்திரியோடு உண்மையை உணர்ந்ததும் ஊராரைப் போன்று நவத்துவாரங்களின் வழிச் செல்லாமல் உடலைக் கடந்து விளங்கும். (புகார்-பிறவார்.)

2926. போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடிற் பன்றியும் ஆமே.

பொருள் : புலன்களிற் செல்லும் நலமில் விருப்பமும் உள்ளே புகுந்து பற்றக்கூடிய உயிர்ப்பின் மாத்திரை அளவு எட்டும் ஆகிச் சமைந்தன கண் முதலாகிய ஒன்பது துளையுள்ள வாயில்கள். நிலையான எண்விரல் மூச்சும் நால்விரல் மூச்சும் முறையே நாகம் எனவும் புரவி எனவும் கூறப்பட்டன. இவற்றைச் செலுத்தும் ஆருயிரான பாகன் செலுத்தாமல் அடக்குதல் வேண்டும். அங்ஙனம் அடக்கினால் மெய்யுணர்வு வெற்றியுண்டாகும். (பன்றி-வெற்றி.)

2927. பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக்
கூசி யிருக்கும் குருகிரை தேர்ந்துண்ணும்
தூசி மறவன் துணைவழி எய்திடப்
பாசி கிடந்து பதைக்கின்ற வாறே.

பொருள் : காமாதி அறுபகையாகிய பாசி நிரம்பிக் கிடந்த சித்தமாகிய குளத்தினில் பாசமாகியவற்றில் பற்றுக் கொண்டிருக்கும் சீவனாகிய கொக்கு விஷயானுபவமாகிய இரையைத் தேடி உண்ணும். ஒளிமயமான கொடியையுடைய சிவனாகிய போர் வீரனது துணை கிடைத்தவுடன் இருளாகிய பாசம் கீழ்ப்படுத்தப்பட்டு நீங்குகிறது. (தூசி-கொடிப்படை, முற்படை)

2928. கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு
வம்பாய் மலர்ந்ததோர் பூஉண்(டு)அப் பூவுக்குள்
வண்டாக் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.

பொருள் : புலன் நோக்கம் அடங்கிய சித்தம் கும்பமலை எனப்பட்டது. அதன்கண் உண்டாகிய திருவடிப் பேரின்பம் என்னும் கிளையொன்றுண்டு. அப்பகுதியாகிய பேரின்பம் தொடர்ந்து வருமாறு திருவருளால் வீசுவதொரு தென்றாலாகிய தமிழ் மென்காற்று ஒன்று உண்டு. இயற்கை நறுமணம் கமழும் மெய்யுணர்வு வடிவாய் விளங்கும் அழியா ஆருயிர் மலர் ஒன்றுண்டு. அப்பூவினுள் விழுமிய முழுமுதற் சிவன் வண்டாகப் பின்னிக் கிடந்து மனங்கொண்டு இன்புறுத்துவன். (கும்பம்-இந்திரியச் சேட்டைகள் அடங்கிய மனம். கொம்பு-இன்பம். காற்று-இன்ப உணர்ச்சி.)

2929. வீணையும் தண்டும் வரிவி இசைமுரல்
தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது
வாணிபம் சிக்கென் றதுஅடை யாமுனம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே.

பொருள் : யாழ் ஓசையும் புல்லாங்குழல் ஓசையும் கலந்து ஒலிக்கச் செய்கின்ற சிவனும் பொருந்தி முறையான கேவல கும்பகம் அடையுமாறு செய்தான். அப்போது தன்னைக் கொடுப்பதும் சிவத்தைக் கொள்வதுமாகிய வாணிபம் அமையுமுன் நம்முடைய உரிமையும் அச்சிவனுக்கு ஆகிவிட்டது.

2930. கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தஅஃது
அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வார்இல்லை
திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர்
தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.

பொருள் : சிவானந்தம் அளிப்பவருடன் கொண்டு கொடுத்து வியாபாரம் செய்த தன்மையை, துரிய பூமியில் சென்று அனுபவித்தவர்க்கன்றி ஆராய்ச்சி அறிவால் அறியப்படும் தகைமை உடையதல்ல. சந்திர மண்டலத்தை அடைந்து இருளே தமது உண்மைச் சொரூபம் என்பதை அறிகிலர். அத்தகைய துரிய பூமியில் தங்கி அங்கே இருப்பவரில் சிலர் உண்மையாகவே உலகைத் துறந்தோர் ஆவர்.

2931. போதும் புலர்ந்தது பொன்னிறம் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை
ஏதம்இல் ஈசன் இயங்கும் நெறிஇது
மாதர் இருந்ததோர் மண்டலந் தானே.

பொருள் : திருவருள் நினைவால் அறியாமையாகிய இருட்பொழுதும் விடிந்தது. பேரறிவாகிய சிவ ஞாயிறு எழுந்தது. பொன்னிறம் பேரறிவு. பூந்தூள் சிந்தும் புன்னை மரங்கள் என்பது திருவருளைப் பொழியும் பெரும் பொருளாம் சிவன் என்பதாகும். அச்சிவன் அகமும் புறமுமாகிய இருகரைகளிலும் வெளிப்பட்டு நின்றருள்வன். எக்குற்றமும் இல்லாத முக்கண்ணனாகிய சிவபெருமான் செவ்வுயிர்க்கு உடனாய் நின்று உதவும் ஒப்பிலா உதவி இதுவாகும். அத்தகைய அழகு நிறைந்த நிலவுலகம் இத்தகைய நற்றவர் வாழும் இடம்.

2932. கோமுற் றமரும் குடிகளும் தம்முளே
காமுற்ற கத்தி யிடுவர் கடைதொறும்
வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி
யாமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாமே.

பொருள் : ஆன்மாவோடு பொருந்திய தத்துவங்களும் தத்தம் விருப்பப்படி சென்று அகமாகிய தேகத்தில் தத்துவச் சேட்டையால் அக்கினியை மூட்டி நிற்கும். அப்போது சிவன் அழிதல் இல்லாத இடத்துக்கு வழிகாட்டி ஆன்மாவில் நின்று அச்சுறுத்தினால் ஐந்து கோசங்களையும் கடந்து அது தனித்துவிடும்.

2933. தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரிஅழைத் தென்செயும்
மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

பொருள் : சாதனை செய்யும்போது நிட்டை கூடாமல் கலைந்து போகுமாயின், புறத்தில் சென்று கிரியை முதலியவற்றைச் செய்வதனால் என்ன பயனைப் பெற்றுவிட முடியும்? முதல்வனை முன்னிலையாகக் கொண்டு நிட்டை கூடும் வகையில் ஒருமுகப்படுத்தி உபதேசம் செய்து கொடுத்தவர் சாதகர்க்கு மனஒருமைப்பாடு அமையாதபோது என்ன செய்வார்? (முதல்வனை-தென்முகக் கடவுளை. தோட்டம்-தவச்சாலை. மாம்பழம்-நிஷ்டை. நரி-கிரியை.)

2934. புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
புலம்பி னவளோடும் போகம் நுகரும்
புலம்பனுக் கென்றும் புலர்ந்தின்று போதே.

பொருள் : ஒளி தோன்றியது என்று சிவதத்துவமாகிய பறவைகள் ஒலி செய்ய, அவ்வொளி தோன்றிய போது சிற்சத்தி சிரசில் பொருந்த ஒலி எழுப்பிய அச்சிற்சத்திபோடு சீவன் பரபோகத்தில் திளைக்கும். சீவனுக்கு எப்போதும் ஒளியோடு கூடியிருப்பதால் பொழுது விடிவது என்ற ஒன்று இல்லை.

2935. தோணிஒன் றுண்டு துறையில் விடுவது
ஆணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை யாற்றிடை
ஆணி கலங்கின் அதுஇது ஆமே.

பொருள் : சிதாகாயப் பெருவெளியாகிய துறையில் சீவனைக் கொண்டு சேர்க்கப் பிரணவமாகிய தோணி ஒன்று உள்ளது. பிரணவமாகிய தோணி தோன்றாதவாறு பிரமனாதி ஐவரும் நிலை கொள்ளுதலும், தன்னைக் கொடுத்துச் சிவத்தைக் கொள்ளும் வாணிபம் செய்யும் சீவன் சிதாகாயப் பெருவெளிக்குச் செல்லும் நெறியில் இடைப்பிரதேசத்தில் தேகப்பற்றாகிய ஆணி கழன்றால் சிவம் பொருந்திச் சீவன் சிவமாகும்.

18. மோன சமாதி

(மோன சமாதியாவது மௌனத்தில் ஒடுங்கும் நிலை. அதாவது சகச நிட்டை. இது பிரணவ யோகத்தால் அடையப் பெறுவதாகும்.)

2936. நின்றார் இருந்தார் கிடந்தார் எனல்இல்லாச்
சென்றார்தம் சித்தமே மோன சமாதியாம்
மன்றேயும் அங்கே மறைபொருள் ஒன்றுண்டு
சென்றாங் கணைந்தவர் சேர்கின்ற வாறே.

பொருள் : பிரணவ யோகத்தில் நிற்கிறார் இருக்கிறார் கிடக்கிறார் என்பது இல்லை. நாதாந்த நிலையில் சித்தம் அடங்கி இருத்தலே ஒடுக்க நிலையாம். சிரசின்மேல் சிதாகாயப் பெருவெளியில் சீவனது அறிவுக்குப் புலப்படாமல் சிவம் உள்ளது. நாதவழியே சென்று நாதாந்தத்தை அடைந்தவர் சேர்கின்ற வழி இதுவாகும்.

2937. காட்டும் குறியும் கடந்தஅக் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்
கூட்டும் குருநந்தி கூட்டிடி னல்லதை
யாட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.

பொருள் : காட்டுகின்ற குறிகளையும் அடையாளங்களையும் கடந்த அந்த மூலப்பொருளாகிய சிவபெருமானைப் பற்றி நூலில் எழுதி வைத்து என்ன பயன்? உண்மை ஞானத்தைக் கூட்டி வைக்கின்ற ஞான குருவாகிய சிவன் உணர்த்தினால் அல்லது ஆட்டின் கழுத்தில் பயனற்றுத் தொங்கும் சதைப்பிடிப்புப் போல ஏட்டின் படிப்புப் பயனற்றதாகும்.

2938. உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்துகண் டாரே.

பொருள் : சிவ நினைவில் பொருந்திய உணர்வு உடையார்களுக்கு எல்லாவற்றையும் இருந்த இடத்திலிருந்தே அறியும் திறன் பொருந்தும். அத்தகையோர் எப்போதும் சிவத்துடன் தொடர்பு கொண்டிருத்தலால் அவர்கள் எதற்கும் கவலைப்படுவதில்லை. முன்னமே உணர்வினைத் தன்பால் கொண்ட குருவானவர் சீடனுக்கு உணர்த்த அவன் உணர்ந்தபோது, உணர்வைப் பெற்ற சீடர்கள் தம் சுய அனுபவத்தில் சிவத்தைக் காணும் பேறு பெற்றனர். (உணர்வு உடையார்-பதி, பசு-பாச உணர்ச்சி உடையார்.)

2939. மறப்பது வாய்நின்ற மாயநன் நாடன்
பிறப்பினை நீக்கிய பேரரு ளாளன்
சிறப்புடை யான்திரு மங்கையும் தானும்
உறக்கமில் போகத்து உறங்கிடுந் தானே.

பொருள் : தனது அறிவுக்கு உலகம் தோன்றாதவாறு மிக நுட்பமாகச் சூக்கும மண்டலத்தில் விளங்கிக் கொண்டிருப்பவன் மௌன யோகி. அவன் மீண்டும் பிறக்க வேண்டிய நியதியைக் கடந்து பிறர்க்கு அருள்புரியும் தன்மையாளன். எல்லாச் சிறப்பும் பொருந்தியவன். சிவசத்தியும் தானும் பொருந்தி உலகை அறியாமலும் தன்னை அறிந்தும் இருப்பவனாவன். (மறப்பது வாய்-மறப்பதுவே தொழிலாய். மாய நன்னாடன்-மாயா சரீரத்தை உடையவன். திருமங்கை-திருவருட் சக்தி. உறக்கமில்போகம்-சிவயோக சமாதி. உறங்கிடும்-அமைந்திருப்பான்.)

2940. துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதன்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரைஇல் அனுபூ திகத்தில்உள் ளானே.

பொருள் : சீவ துரியம், பரதுரியம், சிவதுரியம் ஆகிய முத்துரியங்களையும் கடந்து விளங்கும் சோதியில், அருமையான துரிய நிலைக்கு மேலுள்ள மூன்று நிலைகளிலும் பொருந்தி, விரிந்தும் குவிந்தும் அனுபவித்தும் கடந்து வாயினால் கூற முடியாத அனுபவ நிலையில் இச்சாதகன் உள்ளான். விரிவு குவிவு-நினைப்பு, மறப்பு. விழுங்கி உமிழ்ந்து-ஒழித்து.)

2941. உருவிலி ஊன்இலி ஊனம்ஒன் றில்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்தென் மனம்புகுந் தானே.

பொருள் : மாய காரியமான உருவம் இல்லாதவன். மாமிச உடல் இல்லாதவன். ஒரு குறையும் இல்லாதவன். பராசத்தியைத் தன் உடலாகக் கொண்டவன். (திருஇல்லி) தீமை செய்யும் எண்ணமே இல்லாதவன். பிரமனாதி ஐவர்க்கும் தலைவன். ஒப்பு இல்லாதவன். பூதப்படையை உடையவன். தான் எல்லாப் பொருளுக்கும் ஆதாரமாய் இருந்தும் தனக்கு ஓர் ஆதாரம் இல்லாதவன். இத்தகைய சிவன் என் மனத்தையே இடமாகக் கொண்டு அமைந்தான். திரு+வில்லி=மேரு மலையை வில்லாக உடையவன் எனினுமாம்.

2942. கண்டறி வார் இல்லைக் க யத்தின் நந்தியை
எண்டிசை யோரும் சூஇறைவன்சூஎன் றேத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தம்
தொண்டர் முகந்த துறைஅறி யோமே.

பொருள் : எடுத்த உடம்பில் சிவத்தைக் கண்டு வழிபடுவார் ஒருவரும் இல்லை. ஆனால் எட்டுத் திக்கில் உள்ளவரும் சிவன் எல்லாரிடத்திலும் தங்கியுள்ளான் என்று ஏத்துகின்றனர். இந்நிலவுலகைக் கடந்த எல்லையற்ற சிவானந்தத்தை, சாதகர்கள் அனுபவித்து நிற்கும் முறைமையினை நாம் அறியவில்லை.

2943. தற்பர மல்லன் சதாசிவன் றானல்லன்
நிட்கள மல்லன் சகள நிலையல்லன்
அற்புத மாகி அனுபவக் காமம்போல்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே. 

பொருள் : முழுமுதற் சிவபெருமான் தற்பரத் திருவுருவாம் ஆண்டானும் அல்லன். அதன்மேலுள்ள அருளோனும் அல்லன். உருஉறுப்புக்கள் உடையவனும் அல்லன். அவை இல்லானும் அல்லன். இன்னவாறு உள்ளான் என்று எவராலும் கூற ஒண்ணாததொரு வியத்தகு நிலையனாகவுள்ளவன் அவன். கருத்து ஒத்த காதலர் மருவி நுகர்ந்த அக்காம இன்பம்போல் அவன் நிலையும் அவன் திருவடி இன்பமும் நுகர்வாம், நுண்ணுணர்வால் உணர்வனவாகும். நொடிப்பாம் கருவியுணர்வான் உணர வாரா என்க. அதனால் பொய்யெனப் புகலும் கற்பனையன்று; மெய்யெனக் காணுமாறு கலந்து நின்றிருளினன்.

2944. முகத்தினிற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தினிற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத்தன் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தினைச் சொல்லெனில் சொல்லுமா றெங்ஙஙே.

பொருள் : முகத்திலுள்ள கண்களால் புறப்பொருளைக் கண்டு மகிழ்கின்ற மூடர்களே! அறிவுக் கண்கொண்டு அகவுணர்வைக் காண்பதே உண்மையான சிவானந்தமாகும். ஒத்த உறுப்பும் நலனும் உடைய மகளுக்குத் தாயானவள் தன் கணவனோடு பெற்ற இன்பத்தை வாயினால் சொல்ல வேண்டுமென்று மகள் விரும்பினால் தாய் எவ்வாறு சொல்ல முடியும்? முடியாது.

2945. அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேரபர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாளக் கலந்தமை
எப்படி அப்படி என்னும்அவ் வாறே.

பொருள் : நீரினில் கலந்த உப்பு, நீராய் இருப்பது போன்று அத்தனாகிய சிவன் ஆன்மாவைப் பொருந்தி, ஆன்மா பரமாகவும் சிவன் பராபரமாகவும் இருந்தாலும் இருபொருளாக இல்லாமல் தத்துவமசி என்ற மகாவாக்கியத்தில் மூன்றாவது பதமான அசி பதம் அழிய தத் ஆகிய சிவம், துவம் ஆகிய ஆன்மாவை மூடிக்கொண்டு தன்னைப் போலவே ஆன்மாவைத் தகுதியுடையதாய் செய்யும்.

2946. கண்டார்க் கழகிது காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க் கறியலாம் அப்பழத் தின்சுவை
பெண்டான் நிரம்பி மடவிய ளானால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே.

பொருள் : பார்ப்பவர்களுக்கு எட்டிப்பழம் போல உலகம் மிகவும் கவர்ச்சியுடையது. ஆனால் அப்பழம் தின்ற பின்னர்க் கசப்பைத் தருவது போல உலக வாழ்வும் அனுபவித்த பின்னர்க் கசப்பினைத் தரும் என்பது புலனாகும். பெண்ணாகியவள் பக்குவம் அடைந்து மடந்தையாவது போலச் சீவன் உலக அனுபவத்தில் கசப்புத் தோன்றிப் பக்குவம் அடைந்தபோது சிவன் சீவனிடத்தில் விளங்கி நிற்கச் சீவனும் சிவபோகத்தில் இன்பம் பெறும்.

2947. நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியி னுள்ளே உதித்தெழும் சோதியைப்
புந்தி னாலே புணர்ந்துகொண் டேனே.

பொருள் : திருவருள் நினைவால் சிவகுரு அருளால் அகத்தவப் பயிற்சியால் உள்ளத்தின் நடுவில் நந்தி எழுந்தருளியிருந்தனன். தாலி கட்டி முடிந்தபின் மணச் சடங்குப் பொருள்கள் தாமே கழிவன போன்று நந்தி எழுந்தருளினமையால் சந்தி சமாதிகள் தாமே அகன்றன. மேல் வயிறாகிய மணிபூரகத்தினிடத்துத் தோன்றி மிக்கு எழும் திருவருள் பேரொளிப் பிழம்பாகிய சிவபெருமானை உள்ளத்தினால் தள்ளரிய அடிமையாய்ப் புணர்ந்து கொண்டேன். (உள்ளத்தின் நடு-சித்தத்தின் மத்தி. புந்தி-உள்ளம். சந்தி+சமாதி-யோகமும் சமாதியும்.

2948. விதறு படாவண்ணம் வேறிருந் தாயந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.

பொருள் : ஞான சாதனையில் சோர்வு அடையாமல் தத்துவங்களுக்கு வேறாகச் சிவத்தை நினைந்து நடுக்கம் ஏதுமின்றி நாத சம்மியம் செய்து ஓட்டெடுக்கின்ற மாயையை விட்டு நீங்கி அந்தக் கற்பனை கடந்த சோதியான சிவத்தில் பொருந்தினேன் (விதறு-சோர்வு.)

2949. வாடா மலர்புணை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்
சேடார் கமலச் செழுஞ்சுட ருட்சென்று
நாடா அமுதுற நாடார் அமுதமே.

பொருள் : சிவனது செம்மையான திருவடிகளைத் தேவர்கள் பொருந்தார். தருமநெறி நாள்தோறும் தழைக்க பெருமை பொருந்திய அக்கினி மண்டலத்தில் சென்று அமுதம் விளையுமாறு நாடார். அவ் அமுதத்தைப் பெற அவர் விரும்புவதும் இல்லை. தேவர்கள் அறநெறி இன்பத்தை நாடி அமுதத்தை விரும்பமாட்டார்.

2950. அதுக்கென் றிருவர் அமர்ந்தசொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறு சமைந்தாரக் காணின்
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.

பொருள் : அக்காம இன்பத்திற்கு என்று இருக்கும் காதலர், ஒருவர் பேச்சை மற்றவர் கேட்டதும், விரைவாகக் காமம் தோன்றுமாறு போல அந்தக்கரண விருத்தியைக் கடந்து நிற்கும் குருவைக் கண்டதும் தேன் பிலிற்றும் கொன்றை மாலையைப் போன்ற மஞ்சள் ஒளியில் சிவமும் வந்து இன்பம் தருவான்.

2951. தானும் அழிந்து தனமும் அழிந்து
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்தபின்
நானும் அழிந்தமை நானறி யேனே.

பொருள் : சிவசாட்சாத் காரத்தில் உடல் பற்று அகன்று பொருள் பற்று நீங்கி மாமிச உடலின் வேட்கையும் கெட்டு, உயிர்ப்பற்றும் விட்டு உடனே ஆகாய மயமான சூக்கும தேகப் பற்றும் விட்டு, புறத்தே செல்லும் மனமும் கெட்டு பிறகு என்னுடைய இச்சை என்பதும் கெட்டது எவ்வாறு என்பதை நான் அறியேன்.

2952. இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
பொருளிற் பொருளாய்ப் பொருந்தஉள் ளாகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கல்மனம் உற்றுநின் றேனே.

பொருள் : இருள் மயமான தத்துவங்களை நோக்காமலும் ஒளிமயமான சிவத்தைச் சுட்டி அறியாமலும் சிவத்தோடு அணைந்த சீவனாய் வேறுபாடற்றுப் பொருந்த அருளால் தன் நிலை கெடும். அப்போது அத்தனாகிய சிவத்தின் திருவடிக்குச் சென்று பிறழாத கல்போல மனம் பொருந்துமாறு நின்றேன்.

2953. ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே.

பொருள் : திருவருள் நினைவால் உள்ளம் ஒருங்கி உன்னினேன். உன்னலும், பராபரமாகிய பெரும் பொருளையுணர்ந்தேன். அதுபோன்று சிவகதியினையும் உணர்ந்தேன். அதுபோன்று திருவடியுணர்வினையும் உணர்ந்தேன். அது போன்று பல ஊழிகளையும் கண்டுணர்ந்தேன். (ஒன்றி நின்று-ஒருமுகப்பட்டு. உணர்வினை-தத்துவ அறிவை. பலவூழி-பல யுகங்கள்.)

19. வரையுரை மாட்சி

(வரை-எல்லை, உரை-தேய்வு, மாட்சி-பெருமை. வரையுரை மாட்சியாவது எல்லையற்ற பெருமை. ஆன்மா தன்னை உணர்ந்து சிவனோடு பொருந்தியிருப்பதே எல்லையற்ற பெருமையாம்.)

2954. தான்வரை வற்றபின் ஆரை வரைவது
தான்அவன் ஆனபின் ஆரை நினைவது
காமனை வென்றகண் ஆரை உகப்பது
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.

பொருள் :  ஆன்மா சீவ எல்லையைக் கடந்து பரஸ்துவாகிய சிவமான பிறகு யாருடன் சேர்வது? அவ்வாறு அகண்டமாகிய அந்நிலையில் யாரைப்பற்றி நினைப்பது? கவர்ச்சிகரமான பிரகிருதியின் இச்சையை வென்றவர்க்கு வேறு இப்பிரகிருதியில் என்ன கவர்ச்சி இருக்க முடியும்? நீங்களே உங்கள் அறிவில் தேர்ந்து சொல்லுங்கள். (காமனை-மாதர் போகத்தை எனினும் ஆம். வென்ற கண்-வெற்றி கண்ட அறிவினால்.)

2955. உரையற்ற தொன்றை உரைசெயும் ஊமர்காள்
கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போலச் சிந்தைதெளி வார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை யோனே.

பொருள் : வாக்கினால் கூறமுடியாத அகண்ட சிவத்தை அளவுபடுத்திக் கூறமுயலும் உண்மை அறியாதவர்களே! அகண்டமாகிய பொருளை இவ்வண்ணம் இவ்வுருவம் இப்பண்பு என்று வரையறுத்துக் கூற முடியுமோ? ஆனால் அலை ஓய்ந்த ஆழ்ந்த கடல்போன்ற தெளிந்த சிந்தனையுடையார்க்கு ஒளிக்கிரணங்களையுடைய சிவபெருமான் மறைவின்றி விளங்குகின்றான்.

2956. மனமாயை மாயைஇம் மாயை மயக்க
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வ தில்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந் திருப்பது தத்துவந் தானே.

பொருள் : மனோ சங்கற்பமே மாயையாகும். இச்சங்கற்பமே மயக்கத்தைத் தரும். மனத்தால் சிருஷ்டிக்கப்பட்ட சங்கற்பம் கெடுவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இதற்குமேல் கெடுவதற்கு ஒன்றும் இல்லை. வீணாகப் பேசிக் காலத்தைக் கழிக்க வேண்டாம். ஆன்மா தன் உண்மைச் சொரூபத்தை ஆராய்ந்து அடங்கியிருப்பதே மேன்மையாம். (பினை-பின்னை-அதற்கு மேல்.)

20. அணைந்தோர் தன்மை

(அஃதாவது மோனத்தில் பொருந்தியவர் இயல்பு என்பதாம்.)

2957. மலமில்லைமாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களு மில்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலம்மன்னி அன்பில் பதித்துவைப் பார்க்கே.

பொருள் : சிவகுரு நாதனை ஞானத்தினால் உறுதியுடன் பொருந்தி, தங்கள் அன்பினுள் அணைத்துக் கொள்வோர்க்கு, சீவர்களைப் பந்தித்து இருக்கும் மலம் இல்லை. அவற்றால் வரும் குற்றம் இல்லை. உயிர்ப்பற்றும் பொருட்பற்றும் இனப்பற்றும் கிடையா. தாமத இராசத சாத்துவிக குணங்களும் இல்லை. ஆதலால் சுயநலமும் இல்லையாம்.

2958. ஒழிந்தேன் பிறவி உறவெனும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்
அழிந்தாங் கினிவரும் ஆக்கமும் வேண்டன்
செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே.

பொருள் : நன்மையே தரும் சிவனைக் கண்டேன். அதனால் பிறப்பு நீங்கப் பெற்றேன். உறவாகிய பாசங்களை அகற்றி நின்றேன். சிவத்துடன் சிவ போதம் அற்றுப் பொருந்தி நின்றேன். சிவத்துடன் பொருந்தினமையால் இறந்த பின் இனி மீளவும் பிறத்தலை விரும்பேன்.

2959. ஆலைக் கரும்பும் அமுதும் அக் காரமும்
சோலைத்தண் ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
பீலிக்கண் ணன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்குக் குறையொன்று மில்லை.

பொருள் : ஆலையில் பிழியப்பெற்ற கருப்பஞ்சாறும் பாலும் வெல்லமும் சோலையிலுள்ள பொய்கை நீரும் போன்ற இனிமையான சிவானந்தம் எங்கள் சிவபூமியில் உள்ளதாம். மயில் தோகை போன்ற ஒளியினை நல்கிக் கொண்டிருக்கின்றவளாகிய ஒப்பற்ற அழகினையுடைய பராசக்தியால், அந்நாட்டிடை உள்ளோர்க்கு ஒரு குறைவும் இல்லை.

2960. ஆராலும் என்னை அமட்டஒண் ணாதினிச்
சீரார் பிரன்வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவதல் லா(து)இனி
யார்பாடுஞ் சாரா அறிவறிந் தேனே. 

பொருள் : எல்லாத் தத்துவங்களையும் கடந்து விளங்கும் சிறப்புமிக்க சிவம் வந்து என் சிந்தையில் வந்து இடங்கொண்டனன். ஆதலால் இனிமேல் எந்தத் தத்துவத்தாலும் என்னைப் பந்தப்படுத்த முடியாது. அந்தச் சிவபூமியில் பொருந்தியிருப்பது அல்லால் பிற தத்துவங்களோடு கூடி அறிய வேண்டுவது ஒன்றும் இல்லை.

2961. பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.

பொருள் : பிரமனால் அமைக்கப் பெற்ற பிறவிக்கட்டினின்றும் பிரிந்து விட்டேன். சிவகதியை அடையும் நெறியை நான் அறிந்து கொண்டேன். என்னுடைய பழைய வினைகளைக் கூர்மையான மனமாகிய வாளினால் வேறுபடுத்தினேன். (என்னுடைய ஸ்தூல சூக்கும தேகமான புரங்களைக் கெடுத்து இலட்சியத்தை நோக்கி முன்னேறுகின்றேன். (புரத்தினை-உடம்பினை.)

2962. ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண்டீர்உல குக்குயி ராவதும்
நன்றுகண் டீர்இன் னமச்சிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.

பொருள் : உலக இயக்கத்துக்குப் பேரொளிப் பிழம்பான ஒரு தெய்வம் உள்ளது என்பதை அறிந்தீர். அஃது உலகத்தை உயிர் போன்று இருந்து இயக்குவதாகும் என்பதையும் அறிந்தீர். இனி நமச்சிவாய என்ற சிவக்கனி உயிர் வருக்கத்துக்கு நன்மை தருவது என்பதை அறிந்தீர். அதனால் இச்சுவையுள்ள கனியை உண்ட எனக்கு அதன் இனிப்புத் தன்மை நன்றாக விளங்கியது.

2963. சந்திரன் பாம்பொடுஞ் சூடும் சடாதரன்
வந்தென்னை ஆண்ட மணிவிளக் கானவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவித் தியக்கறுத் தானே.

பொருள் : ஒளியாகிய சந்திரனையும் அதன் பகையாகிய பாம்பையும் ஒரு சேரத் தரித்துள்ள சடாதரனாகிய சிவபெருமான் வந்து என்னை ஆட்கொண்ட சுயஞ்சோதிப் பொருளாவான். அவ்வாறு முடிவும் முதலும் இல்லாத அருமையான மெய்ப்பொருள் என்னுடைய சிந்தையில் பொருந்தி என் மயக்கத்தைப் போக்கியருளினான்.

2964. பண்டெங்கள் ஈசன் நெடுமால் பிரமநைக்
கண்டங் கிருக்கும் கருக்கும் கருத்தறி வார்இல்லை
விண்டங்கே தோன்றி வெறுமன மாடியின்
துண்டங் கிருந்ததோர் தூறது வாமே.  

பொருள் : பழமையான எங்கள் சிவம் விஷ்ணுவையும் பிரமனையும் படைத்து அவர்களுடன் விளங்கியிருக்கும் தத்துவ உண்மையை ஆராய்ந்து அறிபவர் ஒருவரும் இல்லை. ஆனால் பிரம விஷ்ணுக்களின் காரியமாகிய தேகதர்மத்தைக் கடந்து மேற்சென்று எண்ணமற்ற நிலையை அடைந்தால், பிரணவ சொரூபமான சிவன் சீவர்களை ஆசனமாகக் கொண்டு விளங்குவான். (கண்டு-படைத்து, விண்டு-சிவானந்தம்.)

2965. அன்னையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அன்னையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை?
அன்னையும்அத்தனும் யானும் உடன் இருந்து
அன்னையும் அத்தனும் யான்புரந் தேனே.

பொருள் : தாயும் தந்தையுமாகவுள்ள இறைவன் என்னிடம் அன்புகாட்டிப் பாதுகாக்கா விட்டால் பெற்றெடுத்த தாயும் தந்தையும் என்னை அறிந்து எவ்வாறு பாதுகாக்க முடியும்? ஆதலின் தாய் தந்தையரோடு நானும் உடனாக இருந்து சத்தி சிவத்தினிடம் அன்பு பூண்டு போற்றி நின்றேன். இதுவே சமாதி என்னும் மயலறும் செயலறு நிலை.

2966. கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்துளே
உண்டனர் நான்இனஇ உய்ந்தொழிந் தேனே.

பொருள் : சிவசாட்சாத் காரத்தில் இருக்கும் என்னிடம் பூமியைத் தன்னுள் அடக்கியிருக்கும் கடலும் பூமியை விட உயர்ந்து விளங்கும் மலையின் சிகரமும் ஆகாயவாசிகளும் ஆகாய மண்டல அதிபர்களான பரமன், விஷ்ணு, உருத்திரன் முதலியோரும் ஆதிசத்தியும் எட்டுத் திக்கில் உள்ளோரும் நான் இடும் பணியைக் கேட்டு நின்றனர். நான் இப்போது அவர் எல்லாரினும் மேலாகக் கடந்து நின்றேன். (உரிமை-மனைவி, சுழி-கடல், உண்டனர்-வசப்பட்டனர்.)

2967. தானே திசையோடு தேவருமாய் நிற்கும்
தானே வடவரை ஆதியுமாய் நிற்கும்
தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே.

பொருள் : சிவபிரான் கலப்பினால் பத்துத் திசையும் பற்றுடைத் தேவருமாய்த் தானாகவே நிற்பான். அதுபோல் உடலாய் உயிராய் ஏனைய தத்துவங்களுமாய் நிற்பான். அதுபோல கடலும் மலையும் முதலாகிய எல்லாப் பொருள்களுமாய் நிற்பான். பொருள் தன்மையால் அச்சிவபெருமான் இவை அனைத்திற்கும் முதல்வனுமாய் நிற்பான். இப்பாடலுக்குப் பாடபேதமும் உள்ளது.

2968. நமன்வருன் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நான்உடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம்வரும் சிந்தைக்குத் தான்எதி ராமே.

பொருள் : உடல் பற்று நீங்கிய ஆகாய மயன் என்ற உணர்வு வந்த போது மரணம் வந்தால் நான் அஞ்சமாட்டேன். அவ்விதம் ஆகாய சம்மியம் செய்யும்போது பேரொளிப் பிழம்பான சிவன் வந்து பொருந்துமாகில் நான் எங்கும் நிறை பொருளாய் நிற்பது உறுதியாகும். பிறப்பினைத் தரும் பழைய வினைகளை முன்பே அறுத்து விட்டேன். தவத்தால் அடையப்பெறும் சிந்தைக்கு அஞ்ஞானமாகிய இருளா வந்து எதிர் நிற்க முடியும்?

2969. சித்தம் சிவமாய் மலம்மூன்றும் செற்றவர்
சுத்த சிவமாவர் தோயார் மலபந்தம்
கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாம்என் றெண்ணியே.

பொருள் : எண்ணம் சிவமாய் ஆனவம் கன்மம் மாயையாகிய மும்முலங்களையும் வென்றவர், பரிசுத்தமான சிவத்தின் ஆற்றலைப் பெற்று விளங்குவர் ஆவர். அவர்கள் பந்தப்படுத்தும் மலத்தில் கட்டுண்ணாது விளங்குவர். அந்த ஞானிகள் சத்தம் எல்லாம் சூக்கும வாக்கு என்று உணர்ந்திருப்பார். ஆதலின் வைகரி வாக்காலாகிய வாதமும் பூசலும் பிதற்றலும் செய்யார். (பரவிந்து-நாதவிந்துகளைப் பயக்கும் மா மாயை.)

2970. நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற் றறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற் றறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.

பொருள் : நினைத்தலும் மறத்தலும் இன்றி இடைவிடாது எண்ணி இருப்பவரது மனத்தில், வினைக்கூட்டங்களை அழித்துப் பொடிபடச் செய்யும் விமலனாகிய சிவன் விளங்குவான். ஆனால் வினைகளைக் கடியும் சிவபெருமானைக் குறித்து நாடி எண்ணினால், அப்பெருமான் நம்மைவிட்டு அகன்றவன் ஆவான்.

2971. சிவபெரு மானென்று நானழைத் தேத்தத்
தவபெரு மானென்று தான்வந்து நின்றான்
அவபெரு மான்சூ என்னை ஆளுடை நாதன்
பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.

பொருள் : எங்கும் நீக்கமற நிறைந்துள்ள தலைவனை சிவ பெருமானே என்று நான் அழைத்து வழிபட, தவத்தில் விளங்கும் பெருமானாகிய அவனும் இதோ இருக்கின்றேன் என்று என்னிடம் வந்து விளங்கினான். பற்றுக்களைக் கொடுக்கும் தலைவனாயும் பின்னர் அவற்றை நீக்குபவனாயும் உள்ள, நித்தியப் பொருளான தலைவனை வணங்கி என் பிறவியைக் கடந்து நின்றேன்.

2972. பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்
துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டன்
அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்
தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே.

பொருள் : மேன்மைமிக்க ஆதியான தலைவனை நான் வணங்கி நின்றேன். அவனே பரம்பொருள் என்று தெளிந்தேன். இனி அவனேயன்றி மேலான தெய்வம் ஒன்று உண்டு என்று நினைக்கமாட்டேன். என் உடலில் இடம் கொண்ட ஆதியாகிய சிவனை நான் பொருந்தி நின்றேன். என் சிவபோகத்தை விட்டு அவனோடு பொருந்தி அடங்கி நின்றபோது அவனது அகண்ட வியாபகத்தை அறிந்தேன்.

2973. என்நெஞ்சம் ஈசன் இணையடி தான்சேர்ந்து
முன்னஞ்செய் தேத்த முழுதும் பிறப்பறும்
தன்னெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னஞ்செய்து என்னைபக் பிணக்கறுத் தானே.

பொருள் : என்னுடைய மனமண்டலத்தில் சிவன் உள்ளான் என்று உணர்ந்து அவன் திருவடியைப் பொருந்தி முன்னிட்டு விளங்குமாறு வழிபடப் பிறவியும் அதற்குரிய காரணமும் கெடும். தனக்கென ஒரு மனம் இல்லாத தலைவன் பிரம லிபியைக் கெடுத்து நான் தத்துவங்களோடு போராடும் நிலையைக் கெடுத்தருளினான்.

2974. பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத் தெண்ணும்
கணக்கறுத் தாண்டனன் காண்நந்தி என்னைப்
பிணக்கறுத் தென்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவம் வந்தது தானே.

பொருள் : அடியேனை நந்தியாகிய சிவபெருமான் உலகியற் பிணக்குகளினின்றும் விடுவித்தான். மூப்பினை அகற்றினான். வாழ்நாட் கணக்கை எண்ணி ஆண்டு முடிந்தது மாண்டு மடிய வேண்டும் என்னும் உலகோர் சொல்லும் கணக்கினையும் அறுத்து ஆண்டு கொண்டனன். அதனால் அடியேன் முன் வந்து தோன்றும் துன்பங்களை அகப்புறக் கலன்களாகிய எண்ணம் எழுச்சி, இறுப்பு, என்னும் கருவிகளின் தன்மைகள் எனக் கண்டு கெடுத்தொழிந்தேன். ஒழியவே முழுமுதற் சிவபெருமான் வெளிப்பட்டுத் திருவருள் புரிந்தனன்.

2975. சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு
அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் உள்ளே அகப்பட்ட வாறே.

பொருள் : விழுமிய முழுமுதற் சிவபெருமான் பேரருளால் நந்தி முதலிய தேவர் குழாத்துடன் எழுந்தருளி வந்தனன்; வந்து அடியேனுக்குப் பிறப்பு இறப்புகளைத் தந்து பேராப்பெரும் துன்பந்தரும் சிற்றறிவு சுட்டறிவுகளாகிய உயிர்மை, உடைமை என்னும் பசு பாசத் தன்மைகளை அறுத்தருளினன். அவனே அடியேனைப் பழுதின்றி எழுமையும் புரக்கும் எந்தையாவன். அடியேனை ஆண்டுகொண்டருளிய ஆதிப்பெருமானும் அவனே அவன் தன்னருளால் அடியேன் உள்ளத்துள் வந்துற்றனன்.

2976. கரும்பும்செந் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் அக் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும்முன் கைத்தது தேனும் புளித்ததே.

பொருள் : கரும்பாகிய உண்டலும் தேனாகிய உறங்கலும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் சரக்கு நிறை காயப்பையாகிய இவ்வுடம்பகத்து முறையும் கிழங்கும் போன்று, தோன்றுதலும் நிலைத்தலும் போன்றுள்ள நிலையிலாச் சிற்றின்பத்தினை உள்ளம் விரும்பி நுகர்ந்தது. அவ்வுள்ளம் அவ் இன்பங்கள் நிலையா என அருளால் வெளிப்படக்கண்டது. கண்டதும் கரும்பாகிய உண்டலினும் தேனாகிய உறங்கலினும் உள்ளம் செல்லவில்லை. உள்ளம் வலிய ஆண்டு கொண்ட வள்ளலிடமே ஓவாது செல்லுகின்றது.

2977. உள்ளம் சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்
கைவளமின்றிக் கருக்கடந் தேனே.

பொருள் : பண்டைய பிறவிகளில் சரியை முதலிய நெறிகளில் சேர்த்து, அந்நெறிகளினின்றும் மீட்டு, என்னிடம் வள்ளலான சிவன் கருணை காட்டி அன்பு செய்த திறத்தினைப் பாடி, நான் செய்கின்ற எல்லாம் சிவன் என்னிடமிருந்து செய்விக்கிறான் என்று உணர்வதால் மேல் உண்டாகும் வினையின்றிப் பிறவியைக் கடந்தேன்.

2978. மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கின் தகளிநெய் சோர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவனசூ டாமணி
மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.

பொருள் : உலக நிலையிலிருந்து மீண்டவரது மூலாதாரத்திலுள்ள அக்கினி பொங்கி எழ, சகஸ்ரதளமாகிய விளக்கினில் உணர்வாகிய நெய் சேர்ந்ததும், சாந்தி விருத்தி பெருகிப் புவனங்களுக்கெல்லாம் தலைவியான பராசத்தி வந்து பொருந்தினாள். சீவ போதம் கெட்டுச் சிவானுபவம் கிட்டியது. (தூண்டா விளக்கு-சீவன். தகளி-உள்ளம்.)

2979. ஆறே அருவி அகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலை கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.

பொருள் : அகத்தின்கண் அமுதப் பெருக்காகிய சிற்றாறு ஒன்றுண்டு. அவ்ஆறு அருளால் போய் நிறையும் நெஞ்சம் குளமும் ஒன்றுண்டு. அங்குத் திகழ்வது அளவிடப்படாத சிவநிலை ஆகும். அதன் இயல்பும் நனிமிகு அண்மையாகும். அங்குக் குவிந்த முலையினையுடைய அருள் அன்னையை ஒரு கூறாகக் கொண்டு சிறப்பாக வீற்றிருப்பவன் சிவபெருமான். அவனே தவலில் விழுப்பொருளாவன். (தவலில்-கெடுத்ல் இல்லாத.)

2980. அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் நானே.

பொருள் : அன்பினால் இறைவன் செய்த உதவியை நினைந்து உருகி அழுவேன். அவனது தோத்திரத்தைப் பாடுவேன். என்னுடைய எலும்பு நைந்துருக இரவு பகல் என்ற வேறுபாடின்றி இறைவனும் ஈசனுமாகிய பெருமானை என்னிடம் பொருந்துமாறு ஞான சாதனை செய்து எனக்கு உரியவன் ஆக்கிக் கொள்வேன். (தான்-அசை.)

2981. மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்
மனம்வி ரிந்து குவிந்தது வாயு
மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்
மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே.

பொருள் : மனம் உலக முகமாக விரிந்து துன்புற்ற அடங்கலே உண்மையான தவமாகும். அவ்விதம் மனம் விரிந்து அடங்கப் பெற்றவர்க்குப் பிராணன் அடங்கிக் கும்பகம் அமையும். நிலைபெற்ற உயிரின் இடமாக விரிந்த மனம் ஒடுங்கி நின்றது. அப்போது பேச்சற்ற பேரானந்த முத்தி கிட்டும்.

21. தோத்திரம்

(இறைவனைப் புகழ்ந்து பாடுதல் தோத்திரமாகும். இறைவனது பெருமையும் அவன் சீவர் மாட்டுச் செய்யும் உபகாரமும் இங்கு கூறப்பெறும்.)

2982. மாயனை நாடி மனநெடுந் தேர்ஏறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக்
காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.

பொருள் : ஊனக் கண்ணுக்குப் புலப்படாத இறைவனாகிய கள்வனை அடைய மனமாகிய உயர்ந்த தேரில் ஏறி அலைந்த நாட்டின் கணக்கைச் சொல்ல முடியாமல் புலம்புவர். நானும் அவ்வண்ணமே பல இடங்களுக்கும் அலைந்து காணாமல் எங்கள் இறைவனை, மின்னல் போல் தோன்றி அழியும் இவ்வுடம்பாகிய நாட்டில் விளங்கக் கண்டேன்.

2983. மன்னும் மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவர் யாரெனின்
முன்னியல் காலம் முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றேதம் பாடறி வீரே.

பொருள் : நிலைபெற்ற கைலாயமலை என்று சொல்லப்படும் அகப்புறக்கனலாம் அந்தக்கரணங்களுள் அம்மலைபோல் காணப்படும் மத யானையாகிய உணர்வு எழுச்சியில் தோன்றும் தூய மனத்தின் மேல் மெய்யடியார்கள் செந்தமிழ் இன்னிசை வந்தவாறு பாட எழுந்தருளி இருந்தவர் யாரெனில், காலமெய்க்குக் காலமாக விளங்கும் கால காலனாகிய விழுமிய முழுமுதற் சிவபெருமான் என்க. அவர்தம் திருப்பெயராம் செந்தமிழ்த் திருஐந்தெழுத்தைப் பலகால் எடுத்து ஓதினார் என்க. அவர்கள் யாரெனில் பெருமைசேர் திருநீலகண்டப் பெருமானாகிய ருத்திரன், திருநந்தி தேவர் முதலியோர் என்க. (மன்னுமலை-உடம்பு; மத வாரணம்-மனம்.)

2984. முத்தினில் முத்தை முகிழிள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை
அத்தனைக் காணாது அரற்றுகின் றேனை ஒர்
பித்தன் இவன்என்று பேசுகின் றாரே.

பொருள் : முத்து கையில் சிறந்த அணிமுத்தைப் போன்றவனும் உதயமாகிய இளஞ்சூரியன் போன்றவனும் எத்தனையோ ஆகாய மண்டலவாசிகள் வழிபடும் இறைவனும் ஆகிய எனது தந்தையைக் காணாமல் புலம்புகின்ற என்னை ஒரு பைத்தியக்காரன் என உலகவர் கூறுகின்றனர்.

2985. புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்
புகுந்துநின் றான்அடி யார்தங்கள் நெஞ்சம்
புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே.

பொருள் : புண்ணியம் செய்தவர்களால் உணரப்பெறும் சிவாதித்தன் என்னிடம் புகுந்து விளங்கினான். அவ்வாறு புகுந்து நின்றவன் எங்களது பேரறிவாளன். அவன் அடியார்கள் உள்ளத்தில் விளங்கிக் கொண்டிருப்பவன். அவ்விதம் என்னிடம் புகுந்து நிற்கும் இறைவனை நான் போற்றி வழிபடுகின்றேன்.

2986. பூதக்கண் ணாடி புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும்
நீதிக்கண் நாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனே.

பொருள் : சிவசூரியன் ஊனக்கண்ணினால் காண முடியாதவன். சிரசின்மேல் சகஸ்ரதளத்தில் விளங்குபவன். ஞானக் கண்ணினால் சிந்தை நாடினால் வெளிப்பட்டுத் தோன்றுவான். அற ஒழுக்கத்தில் நின்று நாடுகின்றவர் மனமண்டலத்தில் எழுந்தருளியிருப்பவன். நானோ அவனை நாதமயமாக உணர்ந்து வழிபடுகின்றேன்.

2987. நாமமொ ராயிரம் ஓதுமின் நாதனை
ஏமமொ ராயிரத் துள்ளே யிசைவீர்கள்
ஓமமொ ராயிரம் ஓதவல் லாரவர்
காமமோ ராயிரங் கண்டொழிந் தாரே.

பொருள் : சிவபெருமானை அவனது ஆயிரம் திருநாமங்களால் பரவி வழிபாடு செய்யுங்கள் ஓர் ஆயிர வகையான சுகத்தை அடைவீர்கள். சிரசின் மேல் மனத்தை இடைவிடாமல் நிறுத்தி ஞான சாதனையைச் செய்கின்றவர் ஆயிரக்கணக்கான ஆசைகளினின்றும் நீங்கினவராவர்.

2988. போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப்
போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே.

பொருள் : சிவபெருமானை ஞானத்தால் புகழ்ந்து போற்றுகின்றேன். சிரசின் மேல் விளங்கும் விந்து நாதங்களே அவனது திருவடிகள் எனத் தெளிந்தேன். அதனால் சிவ யோகத்தை யாவரும் அறியுமாறு பறையறைகின்றேன். நான் அத்திருவடிகளே எமது தலைவன் என்று போற்றி வணங்குகின்றேன்.

2989. நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தி னூடுசென் றப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டவன்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.

பொருள் : பலவிதமான தொண்டுகளைப் புரிந்து சிவகுரு நாதனை நாடுங்கள். உடலிலுள்ள ஆறு ஆதாரங்களின் வழியே நடுநாடியூடே மேல் சென்று, ஆகாய மண்டலவாசிகள் வணங்கி வழிபட ஒளிநிலை பெற்றபின் சிவானந்தத்தை வேண்டுமெனவும் அனுபவித்து இன்புறலாம்.

2990. வந்துநின் றான்அடி யார்கட் கரும்பொருள்
இந்திர னாதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர்த துழனிஒன் றல்லது
அந்தர வானத்தின் அப்புற மாமே.

பொருள் : சிவஞானியர் உள்ளத்தில் அவர் வேண்டி நிற்கும் அரும்பொருளான சிவன் வந்து நிலைபெறுவான். ஆனால் இந்திரன் முதலிய தேவர்கள் விரும்பி வேண்டியபோதும் அவர்கட்கு அழகிய தேவமாதரது தேவகானம் கிட்டுமே அல்லது தேவலோகத்துக்கு அப்பாற்பட்ட சிவகதி கிடைக்குமோ?

2991. மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி இறைவன் இவன் என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணிற் படுத்தச் சிவன்அவன் ஆமே.

பொருள் : சேற்றில் கலங்கியிருக்கும் நீரின் தன்மை தெரியாதவாறு போல, மக்கள் உலகமயமான எண்ணத்தினால் கலக்கமுற்று இறைவன் இன்ன தன்மையன் என்று உணரார். உன்னுதற்குரிய நீரைக் குளத்தினின்றும் முகந்து ஒரு பாத்திரத்தில் வைத்துத் தெளிவுபடுத்துவதுபோலச் சிந்தையைச் சிவத்தில் வைத்துத் தெளிவுபடுத்தச் சீவன் சிவனாவன்.

2992. மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந்தொழிந் தேனே.

பொருள் : உண்மைத் தவத்தில் விளங்கும் சிவபெருமானை விரும்பும் ஒரு சாதகர்க்கு, உள்ளங்கையில் பொருந்திய நெல்லிக்கனி போல் அவன் விளங்குவான். ஆதலின் தூய்மையானவனும், தூய்மையான நெறியாயும் விளங்கும் தேவ தேவனை விரும்பி அவனிடம் பொருந்தி உலகினைக் கடந்து நின்றேன்.

2993. அமைந்தொழிந் தேன் அள வில்புகழ் ஞானம்
சமைந்தொழிந் தேன் தடு மாற்றம்ஒன் றில்லை
புகைந்தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலு மாமே.

பொருள் : அளவிட்டுக் கூற முடியாத புகழுடைய ஞானத்தைப் பெற்றுத் தத்துவக் கூட்டங்களைக் கடந்து நின்றேன். சந்தேக புத்தி என்னிடம் இல்லாமையால் சிவரூபம் பெற்று இருளான மலங்களினின்றும் நீங்கி நின்றேன். அப்போது மூலாதாரத்திலுள்ள அக்கினி சிரசின்மேல் எழ ஒளிமயமான புண்ணியமூர்த்தி பொருந்தி, தேகம் வேறு, தேகி வேறு என்று வகைப்படுத்தி உணர்த்திய வள்ளலாகவும் ஆனான்.

2994. வள்ளல் தலைவனை வானநன் னாடனை
வெள்ளப் புனற்சடை வேத முதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர் கொலோ என்றென்று
உள்ளத்தி னுள்ளே ஒளித்திருந் தாளுமே.

பொருள் : வள்ளல்களுக்கெல்லாம் மேலானவனும், ஒளி மண்டலத்தலைவனும் ஒளிக்கற்றையாகிய சடையைத் தரித்த நாத தத்துவ முதல்வனும் ஆகிய சிவனை வஞ்சகத் தன்மையுடைய உலகவர் கண்டு விடுவார் என்று அப்பெருமான் சீவரது உள்ளத்தில் மறைந்திருந்து ஆட்கொள்வான்.

2995. ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபடும் நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடு வைத்தொழிந் தேனே.

பொருள் : திருவடியை அளித்து ஆண்டு கொண்டு அருளிய இறைவனை, தினந்தோறும் வழிபாடு செய்து சன்மார்க்கத்தில் நின்றவரது தீய குணத்தையும் தீய செயலையும் ஒழிக்கும் சிவனிடத்து நானும் ஒளி பொருந்திய நோக்குடன் மனத்தையும் வைத்து இப்பிரபஞ்சப் பற்றைவிட்டு நின்றேன். (வாள்-ஒளிபொருந்திய நோக்கம்.)

2996. விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்
திருந்தில் அவனடி தீர்த்தமு மாகும்
வருந்தி அவனடி வாழ்த்த வல்லார்க்கே.

பொருள் : மனம் வருந்திச் சிவத்தின் திருவடியை ஏத்த வல்லார்கட்கு, உலகப்பற்றை விட்டு விரும்பினால் அவனது திருவடியே தீரர்கள் அடையும் சொர்க்கலோகமாகும். திருவடிப்பேறு பொருந்துவதே புண்ணியலோகத்தை அடைவதாகும். திருவடி உணர்வால் திருந்தியவர்க்குச் சிரசின்மேல் விளங்கும் பரவிந்து மண்டலமே மகிமையுடைய தீர்த்தமாகும்.

2997. வானகம் ஊடறுத் தான் இவ் வுலகினில்
தானகம் இல்லாத் தனியாகும் போதகன்
கானக வாழைக் கனிநுகர்ந் துள்ளுறும்
பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.

பொருள் : இவ்வுடம்பைச் சூழவுள்ள மன மண்டல இருளைப் போக்கியருளினான். தனக்கென்று ஓர் உடம்பு இல்லாமல் தனித்து விளங்கும் அறிவுமயமான சிவ குருநாதன். சீவரிடம் பொருந்திய அஞ்ஞானமாகிய கனியை நுகர்ந்து ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். சிவானந்தத்தை அருளுகின்ற சோதியைப் பற்றி நின்றேன்.

2998. விதியது மேலை யமரர் உறையும்
பதியது பாய்புனற் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
மதியது வவ்விட்ட(து) அந்தமும் ஆமே.

பொருள் : சிதாகாய ஒளியே சீவரது பிரம லிபியின் வண்ணம் ஆவது. அதுவே தேவர் வாழும் தலமாகும். அங்குப்பரவி ஓடும் ஆகாய கங்கையும் உள்ளது. துதிப்பதற்குரியது. அதுவே பழைய வினைக் கூட்டங்களை அழிக்கின்ற இடமாகும். அதுவே அருட்சத்தியைத் தாண்டிய இடமாகும். உலகினைக் கடந்து நிற்கும் முடிவு நிலையும் அதுவேயாகும்.

2999. மேலது வானவர் கீழது மாதவர்
தானிடர் மானுடர் கீழது மாதனம்
கானது கூவிள மாலை கமழ்சடை
ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே.

பொருள் : சிதாகாய ஒளியில் மேலுள்ள இடம் தேவ வர்க்கத்தினர் இருப்பது; அதன் கீழுள்ள இடம் மாட்சிமையுடைய தவத்தினர் நிலையாகும்; துன்பத்தை அனுபவிக்கும் மனிதர்களின் நிலை அதன் கீழதாகும்; அறிவானந்த சத்தியானது வில்வ மாலையால் அலங்கரிக்கப் பெற்ற சடாதாரியான சிவத்துடன் அங்குப் பொருந்தி அருமையான உயிருக்கு வேண்டிய போக போக்கிய நியதிகளைச் செய்யும்.

3000. சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
ஏழின் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி
ஆழும் சுனையும் அடவியும் அங்குளன்
வாழும் எழுத்தைந்தின் மன்னனு மாமே.

பொருள் : சூழ்ந்துள்ள கருங்கடல் நஞ்சை உண்டு கண்டத்தில் அடக்கியவன். பதினான்கு உலகுக்கும் கருவாய்ப் பிறப்பில்லாதவன் ஆவான். அவன் ஆழ்ந்துள்ள சுனையும் காடும் உடையதாகிய கயிலையில் வீற்றிருப்பவன். அவனே வாழ்வினை நல்கும் அஞ்செழுத்தில் விளங்கும் அரசனாவான். (சுனை-வனப்பாற்றல். காடு-நடப்பாற்றல். ஐந்தெழுத்து-நமசிவய.)

3001. உலகம தொத்துமண் ஒத்து உயர் காற்றை
அலகதிர் அங்கிஒத்து ஆதிப் பிரானும்
நிலவு இயல் மாமுகில் நீர்ஓத்தும் ஈண்டல்
செலவொத்து அமர்திகைத் தேவர் பிரானே.

பொருள் : உலகத்து உயிராகவும் மண்ணாகவும் உயர்ந்த காற்றாகவும் சூரியன் சந்திரன் அக்கினியாகவும் உள்ள ஆதியாகவுள்ள பெருமான் பெரிய மேகம் விளங்கும் ஆகாயமாயும் நீராயும் ஆகி, பின் அழிப்பனவாகவும் அமர்ந்திருக்கும் திக்குப்பாலர்களுக்குத் தலைவனாயும் உள்ளான்.

3002. பரிசறிந் தங்குளன் அங்கி அருக்கன்
பரிசறித் தங்குளன் மாருதத் தீசன்
பரிசறிந் தங்குளன் மாமதி ஞானப்
பரிசறிந் தன்னிலம் பாரிக்கு மாறே. 

பொருள் : அக்கினி, சூரியன் ஆகியவற்றின் தன்மை அறிந்து ஈசன் அவற்றுள் பொருந்தியிருப்பான். அதேபோன்று பெருமையுள்ள காற்றினும் உள்ளான். சந்திர மண்டலத்தின் தன்மை அறிந்து அதனுள் விளங்குவான். அச்சந்திர மண்டல அறிவு விளங்க அதனைப் பெருகச் செய்வான்.

3003. அந்தம் கடந்தும் அதுவது வாய்நிற்கும்
பெந்த உலகினிற் கீழோர் பெரும் பொருள்
தந்த உலகெங்குந் தானே பராபரன்
வந்து படைக்கின்ற மாண்பது வாமே.

பொருள் : பூதங்களின் தூலநிலை முடிவு எய்தினாலும் அவை அவை சூக்குமத்தில் ஒளி அணுக்களாகச் சிவயோதியில் நிலைபெறும். பந்தப்படுத்தும் உலகத்தில் அவனை அடைக்கலமாகக் கொண்டவர்க்குத் தாங்கும் பெரும் பொருளாக உள்ளவன். தன்னால் படைக்கப்பட்ட உலகம் அனைத்திற்கும் தானே முழு முதலாவான். பக்குவ ஆன்மாக்களுக்குத் தானே சிவகுருவாய் எழுந்தருளி ஆட்கொள்வான்.

3004. முத்தண்ட ஈரண்ட மேமுடி யாயினும்
அத்தன் உருவம் உலகே ழெனப்படும்
அத்தன்பா தாள அளவுள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்துண ராரே.

பொருள் : வழிப்பேற்றின் நிலைக்களமாகிய முத்தியண்டம் பெருமை மிக்க அண்டமாகும். அதுவே அவன்தன் திருவடியாகும். ஆயினும் அச்சிவபெருமானின் திருவுருவம் ஏழ்உலகம் ஆகும். திருவடி பாதாளம் ஏழினுக்கும் அப்பாற்பட்டது. உன்மத்தமாக உள்ளார் அறிவும் செயலும் திரிபற்று நெறியில்லா நெறிச் சென்று உழலும் நீரர். இத்தகைய தெளிவில்லாதவர் மேலோதியவற்றை விரும்பி உணரார் என்க.

3005. ஆதிப் பிரான்நம் பிரான் இவ்வகலிடச்
சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும்
ஆதிப் பிரான்அண்டத் தப்பும் கீழவன்
ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.

பொருள் : மேலே கண்ட ஆதியாகிய பெருமானே நம்மையெல்லாம் நடத்தும் தலைவனாவான். அவனே அம்முத்தி உலகத்தில் சோதியாக விளங்குவான். அவனே சோம சூரிய அக்கினியாகிய முச்சுடராய் விளங்குபவன். அவனே மேல் உலகங்களுக்கு மேலாகவும் கீழ் உலகங்களுக்குக் கீழாகவும் உள்ளவன். இவ்வுலகங்களுக்கு நடுவாக இருந்து இயக்குபவனும் அவனேயாவான்.

3006. அண்டங் கடந்துயர்ந் தோங்கும் பெருமையன்
பிண்டங் கடந்த பிறவிச் சிறுமையன்
கண்டர் கடந்த கனைகழல் காண்டொறும்
தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றாரே.

பொருள் : ஏழ் உலகங்களையும் கடந்து மேலும் உயர்ந்துள்ள பெருமையினையுடையவன். உருவம் பொருந்தும் நிலைகளை இயல்பாகவே கடந்து விளங்கும் மகா சூக்குமமானவன். அடியார்கள் விரும்பியடைந்த ஒலிக்கின்ற திருவடியைக் காணும்பொழுது அவர்கள் செல்லும் நெறியிலே நின்று அழைத்துச் செல்பவனாக உள்ளான்.

3007. உலவுசெய் யோக்கப் பெருங்கடல் சூழ்ந்த
நிலமுழு தெல்லாம் நிறைந்தனன் ஈசன்
பலம்முழு தெல்லாம் படைத்தனன் முன்னே
புலம்உழு பொன்னிற மாகிநின் றானே.

பொருள் : எங்கணும் இடைவிடாது சென்று மீள்வதாகிய உலாவுதலைச் செய்வது சிவபெருமானின் திருவருட்கண்கள். அக்கண்களையுடைய சிவபெருமான் பெருநீர்க் கடலாற் சூழப்பட்ட நிலவுலக முழுவதும் நீக்கமற எங்கணும் நிறைந்து நின்றனன். அவனே முதன்மைசேர் ஆண்டான் வேண்டும் பயனுடைப் பொருள்கள் முழுவதையும் படைத்தருளியவனும் அவனே. மெய்யடியார்களைக் காத்தருளும்படி பொன்மேனியுடன் பொலிந்து இலங்குபவனும் அவனே. (பொன்னிறமாகி-ஞான குருவாகி.)

3008. பராபர னாகிப்பல் லூழிகள் தோறும்
பராபர னாய்இவ் வகலிடம் தாங்கித்
தராபர னாய்நின்ற தன்மை யுணரார்
நிராபர னாகி நிறைந்துநின் றானே.

பொருள் : பேருலகனைத்தும் ஒருங்கு முடியுங்காலம் ஓர் ஊழி என்ப. அத்தகைய பல்லூழிகளைப் புரிந்து நிற்கும் பராபரன் சிவபெருமான். அவனே முழுமுதல்வனாய் இவ்வுலகங்களைத் தாங்கிக் காத்தருள்பவன் ஆவன். அவனே தாங்கி நிற்பதுடன் தலைவனுமாகி நிற்கின்றனன். இத்தன்மையைப் பலரும் அறியார். திருவருளால் தனக்கொரு பற்றுக் கோடின்றிச் சிவபெருமானையே பற்றி அவனைத் தாங்கும் ஆண்மை மிக்கது ஆனேறு. அவ்ஆனேற்றை ஊர்ந்து வருபவனும் சிவனே. அவன் எங்கணும் நீக்கமற நிறைந்து நின்றருளினன்.

3009. போற்றும் பெருந்தெய்வம் தானே பிறிதில்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்றுடல் தான்என் றதுபெருந் தெய்வம்
காற்றது ஈசன் கலந்துநின் றானே.

பொருள் : தூலத்திலும் சூக்குமத்திலும் சிவமே நிறைந்து விளங்குவதால் வேறே பெரிய தெய்வம் வணங்கத்தக்கது ஒன்று இல்லை. ஆதாரமாகிய உடலும், ஆதாரங்கடந்த நாதமும் நாதாந்தமும் உயிர்க்கு வேறாக விளங்கும் அகண்ட வடிவமும் ஆகிய அவனே பெருந்தெய்வமாகும். அவனே தூலத்தையும் சூக்குமத்தையும் இணைக்கும் பிராணனாயும் கலந்துள்ளான்.

3010. திகைஅனைத் தும்சிவ னே அவன் ஆகின்
மிகைஅனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே
புகைஅனைத் தும்புறம் அங்கியிற் கூடும்
முகைஅனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே.

பொருள் : சூழவுள்ள திசைகள் எல்லாம் சிவனேயானபோது, அவனுக்குப் புறம்பாக ஒரு தெய்வம் உண்டு என்று மனிதர்களே நீங்கள் சொல்ல வேண்டாம். புகை மேலோங்கிப் புறத்தே காணப்படினும் அது நெருப்பினின்றே தோன்றியது. அதுபோல உண்டாவன எல்லாம் எங்கள் ஆதிப்பிரானாகிய சிவத்தின் இடமிருந்தே தோன்றியன.

3011. அகன்றான் அகலிடம் ஏழும்ஒன் றாகி
இவன் தான் எனநின்று எளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனு மாகி
நவின்றா உலகுறு நம்பனு மாமே.

பொருள் : சிவன் கீழ்மேல் என்று சொல்லப் பெற்ற எல்லாப் புவனங்களையும் அவைகளின் வேறாகவும் வியாவித்துள்ளான். இச்சிவன் எல்லாமாய் நிற்பினும் உலகோரால் காணப்படுமாறு தோன்றுபவன் அல்லன். சிவனே பலவகைச் சீவ வர்க்கங்களில் பிராண சத்தியாய் இருந்து இயக்குபவனாகி உலக நிலையில் பொருந்தி உலகவரால் நம்புவதற்குப் பாத்திரமாகவும் உள்ளவன்.

3012. கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற
தலைவனை நாடுமின் தத்துவ நாதன்
விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப
உரையில்லை உள்ளுறும் உள்அவன் தானே.

பொருள் : தந்திர கலை, மந்திர கலை, உபதேச கலையாகிய மூன்று கலைகளையும் கடந்து அப்பாலாகவுள்ள சிவனை விரும்பி நில்லுங்கள். அவனே சகல தத்துவங்களுக்கும் தலைவன் ஆவான். அவன் விலைமதிக்க முடியாதவன். அவனைத் தேவர்களில் ஒருவனாக வைத்துக் கூறுவதற்கு இல்லை. அவ்வாறாக உள்ளவன் உங்களிடம், எண்ணியபோது சிறந்து விளங்குவான்.

3013. படிகாற் பிரமன்செய் பாசம் அறுத்து
நெடியோன் குறுமைசெய் நேசம் அறுத்து
செடியார் தவ்ததினில் செய்தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே. 

பொருள் : தலைமுறை தலைமுறையாகப் பிரமன் செய்வதற்குக் காரணமான பழைய வினையை ஒழித்து, திருமால் காத்தலின் தொழிலால் இச்சை பெருகுவதற்குரிய பற்றினை நீக்கி, அட யோகம் முதலிய துன்பம் தரத்தக்க தவமாகிய செயலினின்றும் விலக்கி என்னை உய்யுமாறு செய்து அன்பினில் அகப்படுத்தி அருளினான்.

3014. ஈசன்என் றெட்டுத் திசையும் இயங்கின
ஓசையி னின்றெழு சத்தம் உலப்பிலி
தோசம் ஒன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்                                                
வாச மலர்போல் மருவிநின் றானே.

பொருள் : சிவசோதியாகவே எட்டுத் திக்குகளும் விளங்கி ஒளி தருவன ஆயின. நாதமே வைகரிவாக்குக்குக் காரணமாவது போல அழியாது இருப்பவன் சிவன். அவன் ஒருவனே ஒளிமயமாகப் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், அக்கினி, ஆன்மா ஆகிய ஒன்பது கண்டங்களிலும் மலரின் மணம்போலக் கலந்து விளங்குவான்.

3015. இல்லனு மல்லன் உளனல்லன் எம்மிறை
கல்லது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி
சொல்லருஞ் சோதி தொடர்ந்துநின் றானே.

பொருள் : எம் இறைவன் புறக்கண்ணுக்குக் காணப்படாமல் அகக்கண்ணில் விளங்குபவன் ஆதலின் இல்லாதவன் அல்லன். புறக்கண்ணால் காண்பார்க்கு உள்ளவன் அல்லன். கல்போன்ற நெஞ்சத்தைக் கசிவித்து நிற்பவரிடம் விளங்கித் தோன்றுவான். பழமையானவனும் தூய்மையானவனும் நடுக்கமற்றவனும் குற்றமில்லாத மாணிக்கம் போன்ற பிரகாசம் உடையவனும் ஆகவுள்ள சொல்வதற்கு அருமையான சோதியாக இருந்து சீவர்களைத் தொடர்ந்து நின்றருளினன்.

3016. உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்
கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்
வள்ளற் பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்
அள்ளற் கடலை அறுத்துநின் றானே.

பொருள் : இறைவன் உள்ளமாகிய மன மண்டலத்தில் ஒடுங்குபவனாக உள்ளான். சீவர் புறநிலையான உலக மயமானபோது அவரது சீவ போதத்தில் அவன் நிலை பெற்றுள்ளான். அப்போது ஒளிமயமான சடையையுடைய நந்தியெம்பெருமான் இந்திரியங்களை இயக்கும் கள்ளத்தலைவனாக உள்ளான். பல்பேறு வள்ளல் தன்மையை அறிந்து அவனைச் சிந்திக்கும் சீவரது, துன்பம் தருவதாகிய பிறப்பினை அறுத்து நிற்பவனாக உள்ளவன்.

3017. மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்
கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
ஊறுவார் உள்ளத் தகத்தும் புறத்தும்
வேறுசெய் தாங்கே விளக்கொளி யாமே.

பொருள் : ஒருவர்க்கொருவர் எதிர்முகங் கொண்ட தேவரும் அசுரரும் நாள்தோறும் தோத்திரம் செய்து சிவபிரானது ஒலிக்கின்ற திருவடியை விரும்பி வணங்குவர். ஆனால் அடியார்கள் அகமும் புறமும் ஒத்து அவனது உபசரிக்கும் தன்மையை நினைந்து கசிவுள்ளம் கொண்டு நிற்பர். அவ் அடியார்க்கு அவன் ஊனினை நீக்கி உணர்வினைப் பெருக்கிச் சோதியாக விளங்குவான்.

3018. விண்ணினுள் வந்த வெளியினன் மேனியன்
கண்ணினுள் வந்த புலனல்லன் காட்சியன்
பண்ணினுள் வந்த பயனல்லன் பான்மையன்
எண்ணில்ஆ னந்தமும் எங்கள் பிரானே.

பொருள் : பூதாகாய வெளியில் மட்டும் நிலைபெறுபவன் அல்லன். மகா சூரியாகாயம், சிதாகாயம் என்ற ஆகாய வடிவில் உள்ளவன். அவன் புறக்கண்ணுக்குக் காட்சிப்படுபவன் அல்லன். ஆனால் அகக்கண்ணுக்குப் புலப்படுபவன் ஆவான். உள்ளப் பண்பு இன்றித் தோத்திரங்களினால் மட்டும் அறியப்படுபவன் அல்லன். உள்ளப் பண்போடு அவன்பால் அன்பும் உடையார்க்கு வெளிப்பட்டு அருள்வான். சீவர்கள் அடையும் சகல ஆனந்தத்துக்கும் காரணமாக உள்ளவனும் எங்கள் சிவனாவான்.

3019. உத்தமன் எங்கும் முகக்கும் பெருங்கடல்
நித்திலச் சோதியன் நீலக் கருமையன்
எத்தனைக் காலமும் எண்ணுவர் ஈசனைச்
சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.

பொருள் : எங்கள் சிவபிரான் எங்கும் உள்ளோரால் விரும்பப்படும் பேரானந்தக் கடல் போன்றவன். முத்துப் போன்ற ஒளியையுடையவன். அவன் அடர்ந்த நீல ஒளியை உடையவன். ஞானியர் ஒளியில் திளைக்கும் ஈசனை இடைவிடாமல் எண்ணிக் கொண்டிருப்பர். ஆனால் சித்தரும் தேவரும் அறிவு ஆராய்ச்சியினால் தெளிந்து அறிய மாட்டார்கள்.

3020. நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்
மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்
புறம்பல காணினும் போற்றகி லாரே. 

பொருள் : எந்த எந்த நிறங்கள் முகத்தின் முன் காணப்படுகின்றனவோ அந்தந்த நிறங்களின் தன்மைக்கேற்ப இறைவன் விளங்குவான். அறவொழுக்கம் எந்த அளவு கடைப்பிடிக்கப் படுகிறதோ அந்த அளவு பாவம் பொருந்தும். இவ்வாறான உண்மை நிலை புறத்தே கண்டிருந்தும் மக்கள் நன்மையைக் கடைப்பிடிக்கவில்லையே.

3021. இங்குநின் றான் அங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான் புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறாய்
எங்கும்நின் றான்மழை போல்இறை தானே.

பொருள் : பெருங்கருணை மழை போன்ற இறைவன், இவ்வுலகில் பலதவங்களில் உள்ளான். மேலுலகில் இருக்கின்றான். எவ்விடத்தும் உள்ளான். ஆகையால் எல்லாப் புவனங்களிலும் நிறைந்து நிற்கும் புண்ணிய மூர்த்தி ஆவான். அவன் சீவரது அஞ்ஞான இருளில் உள்ளான். ஞான ஒளியில் சூரியப் பிரகாசம் போன்று அவன் விளங்குவான்.

3022. உணர்வது வாயுமே உத்தம மாயும்
உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப்
புணர்வது வாயும் புல்லிய தாயும்
உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே.

பொருள் : உணர்வாக மிக மேலானதாயும், அறிவது சூக்குமமான எம்பெருமானையாம். அப்பெருமான் அணைபவனாயும் சூக்குமமாயும் உடல் உணர்வாக அண்ட ஆகாயத்தில் சீவ ஒளியிலும் நிலைபெறுபவனாக உள்ளான். (உணர்வு-ஸ்பரிச உணர்வு. ஸ்பரிச யோகத்தையே திருமூலர் விதந்து கூறுகின்றார்.)

3023. தன்வலி யால்உல கேழும் தரித்தவன்
தன்வலி யாலே அணுவினுந் தான்நொய்யன்
தன்வலி யால்மலை எட்டினும் சார்பவன்
தன்வலி யாலே தடங்கட லாமே.

பொருள் : தனது ஆற்றலால் ஏழு உலகங்களையும் தாங்கியுள்ளான். தமது ஆற்றலால் தான் அணுவைக் காட்டிலும் சூக்குமமாக இருக்கும் தன்மையன். அவனது வலிமையை நோக்கில் அஷ்டகுல பர்வதங்களையும் ஒப்புச் சொல்லப்படான். அவனது ஆற்றலால் விசாலமான கடலிலும் வியாபித்துள்ளான்.

3024. ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
தானே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.

பொருள் : எம் இறைவனாகிய சிவபெருமான் மண்ணவர் விண்ணவர் மற்றோர் யாவரிலும் மேம்பட்ட பெருமையுடையவன் ஆகிலும், அவன் சிறுமையுடைய ஊன் உடலினும் உணர்வாகக் கலந்து அங்கு உள்ளான். அவன் வானுலக வாசிகளாலும் அறியமுடியாத மகா ஒளியையுடையவன். மண் உலகத்தவர் செய்யும் தவத்தின் ஆற்றலுக்கு ஏற்ப அறியப்படுபவனாக உள்ளான்.

3025. பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளை
குண்டாலங் காய்த்துக் குதிரை பழுத்தது
உண்டார்கள் உண்டார் உணர்விலா மூடர்கள்
பிண்டத்துட் பட்டுப் பிணங்குகின் றார்களே.

பொருள் : பிண்டமாகிய உடம்பில் ஆலம் வித்துப்போன்று எழுகின்ற சிவசத்தி, பெரிய ஆலமரம் போன்ற உடம்பில் மேற்சென்று பக்குவப்பட்டு ஒளியாக விளங்கியது. அதனை விளங்கச் செய்து அனுபவித்தவர் அதனுள் திளைத்திருந்தார்கள். அவ்வுணர்வு பெறாத அறிவிலிகள் உடலைக் கடந்து ஒளியை அறியாமல் உடலே பெரிதென்று எண்ணி மயங்குகின்றனர். என்னே அவரே அறியாமை.

22. சர்வ வியாபி (அஃதாவது எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவன் என்றபடி.)

3026. ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓர் ஒளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியுந் தனைஎய்தும்
சாயும் தனது வியாபகந் தானே.

பொருள் : ஞான சாதனையால் சிவானுபவம் பொருந்தும். இதுவல்லாமல் ஆன்மா ஆராய்ச்சயால் பெறுகின்ற அறிவையும் மாயையின் சேர்க்கையினால் பொருந்திய பெரிய உடம்பையும் தன்வசமாக அடையும்படி செய்யும். அப்போது தன் விஷய வாசனைகள் கெடும். பின் ஆன்மாவினது வியாபகம் அமையும்.

3027. நானறிந் தப்பொருள் நாட இடமில்லை
வானறிந் தங்கே வழியுற விம்மிடும்
ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தானறிந் தெங்குந் தலைப்பட லாமே.

பொருள் : நான் அறிந்துள்ள அச்சிவம் எங்கும் நீக்கமற நிறைந்திருத்தலால் சென்று அடைய வேண்டியதில்லை. சிரசின் மேலுள்ள ஆகாய மண்டலத்தை அறிந்து வழிபடில் அது சிறந்து விளங்கும். அப்போது உடம்பின் தன்மையை அறிந்து அங்கு விளங்கும் ஒளிமிக்க சுடரையும் தனது யதார்த்தத்தை அறிந்தவர் எங்கும் சென்று மீளும் ஆற்றலையும் பெறுவர்.

3028. கடலிடை வாழ்கின்ற கௌவை யுலகத்து
உடலிடை வாழ்வுகண் டுள்ளொளி நாடின்
உடலிடை வைகின்ற உள்ளுறு தேனைக்
கடலின் மலிதிரைக் காணலு மாமே.

பொருள் : கடலில் அலைபோன்று ஓயாது துன்பம் தரும் உலக வாழ்வில் தேகத்தில் வாழும்போது சீவர்கள் உள்ளத்தில் விளங்கும் ஒளியை நாடி, அங்கு ஒளிக்குள் ஒளியாய் விளங்கும் சிவத்தைக் கடலின் அலைபோன்று வரும் துன்பத்திலும் கண்டு கரை சேர முடியும்.

3029. பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்
தெரிந்துட லாய்நிற்குந் தேவர் பிரானும்
இருஞ்சுடர் விட்டிட் டிகலிட மெல்லாம்
பரிந்துடன் போகின்ற பல்குரையாமே.

பொருள் : சோம சூரிய அக்கினியாகிய முச்சுடர்களுக்கும் ஒளி கொடுப்பவனாகி தேவதேவனும் அவைகளுக்கு உடலாக விளங்குவான். முன்னர்க் கூறிய சோம சூரிய அக்கினியைக் கடந்த பெருஞ்சோதியாக மாறுபாடு உடைய உலகமெல்லாம் அப்பெருமான் பரிவோடு சீவர்களைத் தொடர்ந்து செல்லும் நுண்ணியன் ஆவான்.

3030. உறுதியி னுள்வந்த உன்வினைப் பட்டும்
இறுதியின் வீழ்ந்தார் இரணம தாகும்
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெருஞ்சுடர் ராமே.

பொருள் : உலக வாழ்வு இன்பம் தருவது என்ற உறுதியினால் பெற்ற வினையில் அழுந்தித் துன்பப்பட்டு, முடிவாகத் தன் அடிசார்ந்தாரை இறைவன் தன் கடனாகக் காப்பவன் ஆவான். சிறு திசையில் ஒன்றாகிய ஈசான திக்கில் உள்ளொளியாக இருக்கும் அற்புதக் கடவுளை அடையப் பெறின் சிரசின்மேல் விளங்கும் பெரிய சோதியாக அவன் விளங்குவான். (சிறுதிசை-கோண திக்கு. திப்பியம்-திவ்வியம்.)

3031. பற்றினுள் ளேபர மாய பரஞ்சுடர்
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி
நெற்றியி னுள்ளே நினைவாய் நிலைதரும்
மற்றவ னாய்நின்ற மாதவன் தானே.

பொருள் : பற்றப்படும் பொருள்களுள் மிக மேலானது சிவமேயாகும். அது எங்கும் நிறைந்த சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று ஒளியாக நெற்றி நடுவில் நினைப்பவர்க்குத் தனது இருப்பை உணர்த்தி நிலைகொள்ளும். பின்னர் நினைப்பவர் வண்ணமாய் அத்தவசிரேஷ்டன் விளங்குவான்.

3032. தேவனு மாகுந் திசைதிசை பத்துளும்
ஏவனு மாய்விரி நீருல கேழையும்
ஆவனு மாம் அமர்ந் தெங்கும் உலகினும்
நாவனு மாகி நவிற்றுகின் றானே.

பொருள் : முன் மந்திரத்தில் கண்டவாறு சிவமாகிய சீவன் ஒளி உருவமுடைய தேவனாவான். அவன் மேம்பாடு உடையவனாகிப் பத்துத் திசைகளிலும் உள்ளோரை ஏவல் செய்யும் ஆற்றல் உடையவன். விரிந்த நீரால் சூழப்பெற்ற ஏழ் உலகங்களிலும் வியாபித்திருக்கும் ஆற்றலை அவன் பெறுவான். மேலும் அவன் உலகு எங்கும் அறிந்து கூறவல்ல நாவன்மை உடையவன் ஆவான்.

3033. நோக்கும் கருடன் நொடிஏ ழுலகையும்
காக்கும் அவனித் தலைவனும் அங்குள
நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி
போக்கும் வரவும் புரணவல் லானே.

பொருள் : கூர்மையான பார்வையையுடைய கருடனைப்போல ஏழ் உலகத்தையும் கூர்ந்து பார்த்து விரைந்து காக்கின்ற உலகநாதனும் அங்கே அடியார்படும் துன்பத்தைப் போக்குகின்ற மலமில்லாதவனும் பிறப்பில்லாதவனுமாகிய எனது தலைவன் எங்கும் போதலும் வருதலும் யாவற்றோடும் புணர்தலும் வல்லவன்.

3034. செழுஞ்சடை யன்செம்பொ னேஒக்கும் மேனி
ஒழிந்தன ஆயும் ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்
ஒழிந்தில கேழினும் ஒத்துநின் றானே.

பொருள் : சிவஞானியரிடம் விளங்கும் சிவன் ஒளிக்கிரணங்களை உடையவன். அவனது தேகம் செம்பொன்னை ஒத்து மிளிரும். அவன் உலகத்தொடர்பு இல்லாதவனாயினும் எல்லா உலகங்களிலும் தொடர்பு கொண்டு விளங்குவான். அவன் எவ்விடத்தும் விலகி நிற்பவன் அல்லன். பிறப்பு இல்லாத சிவன் ஏழ் உலகங்களினின்று நீங்கினவனாயும் ஏழ் உலகங்களிலும் கலந்தும் இருந்தான்.

3035. உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலனும் அவனே
இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

பொருள் : சிவஞானியரிடம் பொருந்தியுள்ள உணர்வும் உயிரும் சிவனேயாகும். பொருள்களுடன் கூடி அறியும் அறிவும் அதனால் அறியப்படும் விஷயங்களும் சிவனே. அவ்வாறு தொடர்ந்து வரும் அவனை எண்ணத்தில் அகப்படுத்த முடியாது. அவன் கொத்தாயுள்ள பூக்களின் மணம்போல எவ்விடத்தும் பரவி அருள வல்லவன்.

3036. புலமையில் நாற்றம் இல் புண்ணியன் எந்தை
நலமையில் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் றானே.

பொருள் :  சிவபெருமான் இயற்கையுணர்வும் முற்றுணர்வும் ஒருங்கு உடையவன். அதனால் செயற்கைப் புலமையின் நாற்றமும் இல்லாதவன். அவன் புண்ணிய வடிவினன். அவனே எந்தையாவான். நன்மைப் பாடமைந்த மெய்யுணர்வு வடிவினன். ஆருயிர்களை விட்டு நீங்காப் பெருவழக்கு உள்ளவனும் அவனே. வேதியர் தாம் கற்ற வேதங்களைக் கூறி விற்கின்றனர். அதனால் அச்சிவபெருமான் அவர்கள்பால் பாலின் நெய்போல் மறைந்து பரந்து நிற்கின்றனன்.

3037. விண்ணவ னாய்உல கேழுக்கும் மேல்உளன்
மண்ணவ னாய் வலம் சூழ்கடல் ஏழுக்கும்
தண்ணவ னாய் அதன் தண்மையில் நிற்பதோர்
கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.

பொருள் : சிவபெருமான் தூய விண்ணின்கண் உறைபவனாய் ஏழ் உலகங்களுக்கும் அப்பால் உள்ளான். மண்ணுலகத்துள் உறைபவனாய் கடல் ஏழுக்கும் இடப்பால் உள்ளான். அவன் அறவாழியந்தணன். ஆதலின் மிக்க தண்ணளியை உடையவன். இதுவே அவனுக்குரிய என்றும் பொன்றா இயற்கைத் தன்மையாகும். அவனே ஆருயிர்கட்குக் கண்போன்ற நனிமிகு பெருமையை உடையவன். அவன் அனைத்துயிருடனும் அனைத்து உலகுடனும் பிரிப்பின்றிக் கலந்து நிற்கும் பேரருட் பெருமையன்.

3038. நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலம் கீழொடு மேல்என
நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்
நின்றனன் தானே வளங்கனி யாமே.

பொருள் : அவன் திருமால் பிரமன் முதலியவர்களிடம் தானே நிலைபெற்று நின்றனன். அவனே நிலத்தின் இயல்பால் கீழும்,  ஆகாயத்தின் இயல்பால் மேலுமாக நின்றனன். அவனே உயர்ந்த மேரு மலையாகவும் ஏழு கடலாகவும் உள்ளான். அவனே சாதகர்க்கு வளமுடைய கனியை ஒத்துப் பயன் அளிப்பவனாயும் உள்ளான்.

3039. புவனா பதி மிகு புண்ணியன் எந்தை
அவனேய உலகின் அடற்பெரும் பாகன்
அவனே அரும்பல சீவனும் ஆகும்
அவனே இறைஎன மாலுற்ற வாறே.

பொருள் : எம்பெருமான் சகல புவனங்களுக்கும் தலைவனாகிய புண்ணிய மூர்த்தியாவன். அவனே எங்குமுள்ள சீவ வர்க்கத்தைச் செலுத்துபவன். அவனே எண்ணரிய சீவ வர்க்கமாகவும் உள்ளான். இத்தகைய சிவனையே தலைவன் என்று சிவஞானியர் விரும்பி நின்றனர்.

3040. உண்ணின் றொளிரும் உலவாப் பிராணனும்
விண்ணின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின் றியங்கிடும் வாயுவு மாய்நிற்கும்
கண்ணின் றிலங்கும் கருத்தன் தானே.

பொருள் : சீவரது உடம்பின்கண்ணே உள்ள கெடாத பிராணனும் அண்ட ஆகாயத்தில் விளங்கும் விரிந்த கிரணங்களையுடைய சந்திரனும் பூமித் தானத்தில் பொருந்தி இயங்கும் அபான வாயுவும் ஆகி நிற்பவன் கண்ணின் பார்வையில் விளங்கும் சிவமேயாகும்.

3041. எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்
பண்ணும் திறனும் படைத்த பரமனைக்
கண்ணில் கவரும் கருத்தில் அதுஇது
உண்ணின் றுருக்கி ஓர் ஆயமும் ஆமே.

பொருள் : தியானத்துக்குரிய பிரணவத்தைக் குரு காட்டிய வழியே செய்யும் சாதனையும் அச்சாதனையின் நெறியே செல்லும் வகையும் தோற்றுவித்தருளிய பரசிவனை அகக்கண் கொண்டு காணும் தன்மையில் அப்பொருள் சீவனது உடம்பில் பொருந்தி அதன் தன்மையை மாற்றி ஒப்பற்ற ஊதியப் பொருளும் ஆவான். (அது சிவன். இது சீவன். ஆயம்-ஊதியம்.)

3042. இருக்கின்ற எண்டிசை அண்டம் பா தாளம்
உருக்கொடு தன்நடு ஓங்க இவ் வண்ணம்
கருக்கொடே எங்கும் கலந்துநின் றானே
திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே.

பொருள் : யாண்டும் காரியமாய் நிலை பெற்றிருக்கின்ற எண்புலத்தோடும், அவ்வப் புலங்களில் காணப்படும் பல்வேறு அண்டங்களோடும் பாதாளத்தோடும் கலப்பால் உலகமே உருவமாகத் திருவுருக்கொண்டுள்ளான். அவையனைத்தும் நெறி முறையான் இயங்குதற் பொருட்டுத் தன்னிடத்து ஓங்கத் தான் நடுவாய்க் காரணமாய் நின்றுள்ளான். இம்முறையான் செம்மையுற எங்கணும் கலந்துள்ளான். அவனே திருக்கொன்றை மாலையினைப் பின்னல் திருச்சடையின்கண் சூடியருளிய பெருமானாவன்.

3043. பலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன்
செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன்
அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி
பலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே.

பொருள் : பலவாறான தத்துவங்களாகப் பூமியில் உள்ளார்க்கு விளங்கும் இறைவனது உண்மை இயல்பை அறிபவர் இல்லை. தூரத்தில் உள்ளவனாயும் அண்மையில் உள்ளவனாயும் மாறுபாடு இல்லாதவனாயும் சீவர்களுக்கு இன்பம் செய்பவனாயும் உள்ள அனாதிபதியான எமது சிவன் பல தத்துவங்களாக இருப்பதல்லாமல் எல்லாவற்றையும் கடந்து விளங்கும் தன்மையன் அல்லன்.

3044. அதுஅறி வானவன் ஆதி புராணன்
எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்
பொதுஅது வான புவனங்கள் எட்டும்
இதுஅறி வான் நந்தி எங்கள் பிரானே.

பொருள் : சிவன் எல்லாச் சீவர்களின் அறிவுக்கு அறிவானவன். இவனே மிகவும் தொன்மையானவன். அவ்விதம் இருப்பினும் அவன். அவன் நிற்கும் நிலையைச் சீவர்களால் எவ்விதத்தாலும் அறியப்படாதவன். பொதுவாகவுள்ள புவனங்கள் எட்டிலும் எங்கள் தலைவனான நந்தி எம்பெருமான் ஒவ்வொரு சீவனையும் அறிய வல்லவன் ஆவன்.

3045. நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியுமாய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை
ஊரும் சகலன் உலப்பிலி தானே.

பொருள் : நீர், நிலம், ஆகாயம், நெருப்பு, வாயு ஆகிய ஐம்பூதங்களையும் அவைகளைத் தாங்கி நிற்கும் ஆதாரமாயும் உடம்பில் பொருந்தும் சோதியுமாகவும் உள்ளான். அவனது பெயர் பராபரன் என்பதாகும். அணு சொரூபமான எமது தலைவன் சகல தத்துவங்களோடு கூடினவனாய் அழிவில்லாதவன் ஆவான்.

3046. மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்ற
மூலன்உரைசெய்த முந்நூறு மந்திரம்
மூலன் உரைசெய் முப்ப துபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே.

பொருள் : திருமூலதேவர் அருளிச் செய்த இம்மூவாயிரம் பாடல்களும், அவர் அருளிச் செய்த முந்நூறு மந்திரப் பாடல்களும், அவர் அருளிச் செய்த முப்பது உபதேசப் பாடல்களும், அவர் அருளிச் செய்த மூன்றுவகைப் பாடல்களும் ஒரே பொருளைக் குறிப்பனவாம்.

3047. வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலம்அறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலம்இலான் பாதமே.

என் சிவ குருநாதனாகிய நந்தியின் திருவடி வாழ்க! மலக்கட்டினை நீக்கருளிய அவனது திருவடி வாழ்க! மலம் அறுத்தலோடு உண்மை ஞானத்தையும் அருளிய அவனது திருவடி வாழ்க! இது குருவுக்கு உரிய வாழ்த்து. குருவே சிவமாதலின் சிவத்துக்கும் ஆம்.

திருமூலர் திருமந்திரம் முற்றிற்று.