‘மணம்’ என்றால் ‘கூடுதல்’ என்பது பொருள். இதன் வேர்ச்சொல் ‘மண்’ என்றும், மண்ணுதல் என்பது கழுவுதல், தொங்குதல், கலத்தல், கூடுதல், அழகு பெறுதல், மணத்தல், இணைதல் என பல பொருளும் வழங்கப் பெறுவதாக சொற்பொருள் அகராதிகள் விளக்கம் தருகின்றன. அடிப்படையில் கலத்தல் கூடுதல், போன்ற சொற்கள் யாவும் ‘இணைதல்’ என்ற பொதுத்தன்மையான சொல் விளக்கத்தையே பெறுகின்றன. ஆக, இணைதல் என்பதன் அடிப்படையிலேயே ‘மணம்’ என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, “செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்” (தொல். நூ.) என்ற கருத்திற்கு ஏற்ப காரணத்தின் அடிப்படையில் காரணப் பெயராக இச்சொல்லைக் கொள்ளலாம். மங்கல நிகழ்வாதலின் ‘திரு’ எனும் அடையைச் சேர்த்து ‘திருமணம்’ என்றனர் எனக் கருதலாம்.
‘மண்ணைப் போல பொறுமை, அமைதி, எதையும் தாங்கும் வலிமை இவற்றை மணமக்கள் பெறுதல் வேண்டும் என்பதே அடிப்படை என்று கூறுவோரும் உளர். சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட ‘திரு’ என்ற அடைகொடுத்து அழைப்பது தமிழர் மரபாதலின் இல்லற வாழ்வில் அடிப்படையாக அமையும் ‘மணம்’இ திருமணம் என்று அழைக்கப்படுவதாக விக்கி பீடியாவில் திருமணம் என்ற பகுதியின் சொல் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய சொல் வழக்கில் உள்ள ‘கல்யாணம்’ எனும் சொல் சங்க காலத்தில் இல்லை. அதற்கு பின் நீதி இலக்கியத்தில் ஒன்றான ஆசாரக் கோவையிலும், நாலடியாரிலும் ‘கல்யாணம்’ என்ற சொல் வழங்கப்பட்டிருக்கிறது.
‘கடி மணம்’ என்ற சொல் இருக்கின்றது. இதில், ‘கடி - நீக்குதல்; காப்பு என்பர். கடி - உரிச்சொல் ஆகும். இங்கு கன்னித்தன்மை நீங்கி கற்பு வாழ்வு மேற்கொள்ளும் நிலையிலும் ஆண், பெண் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமையும் இல்லற வாழ்வைத் துவங்குதல் என்ற வகையிலும் ‘கடி’ என்ற சொல் திருமணத்தைக் குறித்தது என்பர்.
மணம் என்பது ஓர் ஆணும், பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தப்பெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம.; மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும் வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களுக்கிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன. திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவித பிணைப்பு ஆகும்” என்று விளக்கிச் செல்கிறது.