கடவுள் வாழ்த்து
கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த் தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம், - இம் மூன்றும் பூவைப் பூ வண்ணன் அடி. |
உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும் நிகழ்த்திய திருமாலின் அடிகளை வணங்கினால் அனைத்து தீமைகளும் போகுமே.
நூல்
அருந்ததிக் கற்பினார் தோளும், திருந்திய தொல் குடியில் மாண்டார் தொடர்ச்சியும், சொல்லின் அரில் அகற்றும் கேள்வியார் நட்பும், - இம் மூன்றும் திரிகடுகம் போலும் மருந்து. |
1 |
அருந்ததி போன்று கற்புடைய பெண்ணின் தோளும், நல்ல குடியில் தோன்றிய பெருமை உடையவரது நட்பும், சொற்களினிடத்தே குற்றங்களை அகற்றும் கேள்வி உடையவரது நட்பும் இம்மூன்றும் திருகடுகம் போன்று சிறந்ததாம்.
தன் குணம் குன்றாத் தகைமையும், தா இல் சீர் இன் குணத்தார் ஏவின செய்தலும், நன்கு உணர்வின் நான்மறையாளர் வழிச் செலவும், - இம் மூன்றும் மேல் முறையாளர் தொழில். |
2 |
தனது குடிப்பிறப்பின் சிறப்பு குறையாத ஒழுக்கமும், இனிய குணத்தையுடையோர் ஏவிய தொழில்களைச் செய்வதும், வேதங்கள் கூறிய வழியில் நடத்தலும், மேன்மையானவர் செய்யும் தொழில்களாகும்.
கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம் சிறியாரைக் கொண்டு புகலும், - இம் மூன்றும் அறியாமையான் வரும் கேடு. |
3 |
கற்றறியாதவருடன் நட்பாய் இருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், சிற்றறிவினரை தம் வீட்டுள் சேர்ப்பதும் அறியாமையினால் விளைகின்ற கேடுகளாகும்.
பகை முன்னர் வாழ்க்கை செயலும், தொகை நின்ற பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், முன் தன்னைக் காய்வானைக் கை வாங்கிக் கோடலும், - இம் மூன்றும் சாவ உறுவான் தொழில். |
4 |
பகைவருக்கு முன்னே தன் செல்வத்தைக் காட்டுவதும், மாட்டு மந்தையில் கோல் இல்லாமல் செல்வதும், பகைவரோடு நட்பு பாராட்டுவதும் கெடுதியை உண்டாக்கும்.
வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப வீழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து விருந்தினனாய் வேற்றூர் புகலும், - இம் மூன்றும் அருந் துயரம் காட்டும் நெறி. |
5 |
பழகாத துறையில் இறங்கிப் போதலும், விருப்பமில்லாத பெண்ணைச் சேர்வதும், வருந்திப் பிறர்க்கு விருந்தாளியாவதும் துயரத்தைத் தரும்.
பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார் திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக் கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும் ஊராண்மை என்னும் செருக்கு. |
6 |
பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது நாணுதலும், தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளுதலும், பிறர்க்கு கைம்மாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வமாகும்.
வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான் செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சவையின் அஞ்சுவான் கற்ற அரு நூலும், - இம் மூன்றும் துஞ்சு ஊமன் கண்ட கனா. |
7 |
உள்ளன் என்னும் பறவை வாளை என்னும் மீனைப் பிடிக்க முயற்சிப்பதும், திறமையில்லாதவன் உயர்ந்த குடியில் பிறத்தலும், அஞ்சும் இயல்புடைய கற்றாரின் கல்வியும் ஊமை கண்ட கனாவைப் போல யாருக்கும் பயன்படாதது ஆகும்.
தொல் அவையுள் தோன்றும் குடிமையும், தொக்கு இருந்த நல் அவையுள் மேம்பட்ட கல்வியும், வெல் சமத்து வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும், - இம் மூன்றும் தாம் தம்மைக் கூறாப் பொருள். |
8 |
பழமையை ஆராயவல்லோர் கூடியிருக்கும் அவையில் நல்ல குடிப்பிறப்பும், பலவகை நூலோர் கூடியிருக்கும் அவையில் நல்ல கல்வி அறிவும், போர்க்களத்தில் வேந்தன் மகிழ பகைவரை கொன்று பெற்ற வெற்றியும், தானாகத் தெரிய வேண்டுமே தவிர, தாமே தம்மைக் குறித்து புகழ்ந்து பேசக்கூடாது.
பெருமை உடையார் இனத்தின் அகறல், உரிமை இல் பெண்டிரைக் காமுற்று வாழ்தல், விழுமிய அல்ல துணிதல், - இம் மூன்றும் முழு மக்கள் காதலவை. |
9 |
பெருந்தன்மை உடையாரிடம் நட்பு கொள்ளாதிருத்தலும், தமக்கு உரிமை இல்லாத பெண்களை விரும்புதலும், சிறந்தவை அல்லாதவற்றைச் செய்வதும் அறிவற்ற மூடர்கள் விரும்பிச் செய்வதாம்.
கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கு அறுக்கும் மூத்தோரை இல்லா அவைக் களனும், பாத்து உண்ணாத் தன்மையிலாளர் அயல் இருப்பும், - இம் மூன்றும் நன்மை பயத்தல் இல. |
10 |
கற்பிக்க இயலாதவர் ஊரிலிருத்தலும், கல்வி கேள்விகளில் முதிர்ந்தவர் இல்லாத சபையும், பகுத்து உண்ணும் தன்மை இல்லாதவர் பக்கத்தில் இருத்தலும் ஒருவருக்கு நன்மை தராது.
விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக் களியாதான் காவாது உரையும், தெளியாதான் கூரையுள் பல் காலும் சேறலும், - இம் மூன்றும் ஊர் எலாம் நோவது உடைத்து. |
11 |
அழையாத ஆட்டத்தைப் பார்ப்பதும், மது உண்டவன் சொல்லும், நம்பாதவன் வீட்டிற்குப் பலமுறை செல்வதும், இம்மூன்றும் ஊரில் உள்ளோருக்கு துன்பத்தைத் தரும்.
தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன்; வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்; கோளாளன் என்பான் மறவாதான்; - இம் மூவர் கேள் ஆக வாழ்தல் இனிது. |
12 |
முயற்சியுடையவன் கடன்படாது வாழ்வான். உதவி செய்பவன் விருந்தினர் பசித்திருக்க உண்ணாதவன். பிறர் காரியங்களை அறிபவன் கேட்டவற்றை மறவாதவன். இம்மூவருடனும் நட்பு கொள்ளுதல் நன்மை தருவதாகும்.
சீலம் அறிவான் இளங்கிளை; சாலக் குடி ஓம்ப வல்லான் அரசன்; வடு இன்றி மாண்ட குணத்தான் தவசி; - என மூவர் யாண்டும் பெறற்கு அரியார். |
13 |
பிறர் குணம் அறிந்து நடக்கும் உறவினன், குடிகளைக் காக்கும் அரசன், சிறந்த துறவி இம்மூவரும் பெறுதற்கு அரியர் ஆவார்
இழுக்கல் இயல்பிற்று, இளமை; பழித்தவை சொல்லுதல் வற்றாகும், பேதைமை; யாண்டும் செறுவோடு நிற்கும், சிறுமை; - இம் மூன்றும் குறுகார், அறிவுடையார். |
14 |
இளமையில் தவறு செய்வது இயல்பு என்றாலும் தவறாகும். அறிவுடையோரால் விலக்கப்பட்டதைச் சொல்லுதல் அறியாமை. எப்போதும் சினத்தோடு நிற்றல் ஈனத்தன்மையாகும். இவற்றைக் கொண்டவரிடம் அறிவுடையார் நட்பு கொள்ளமாட்டார்.
பொய் வழங்கி வாழும் பொறியறையும், கை திரிந்து தாழ்விடத்து நேர் கருதும் தட்டையும், ஊழினால் ஒட்டி வினை நலம் பார்ப்பானும், - இம் மூவர் நட்கப் படாஅதவர். |
15 |
பொய் பேசி வாழும் செல்வந்தன், தனக்கு மேலானவன் தாழ்ந்த போது போற்றாதவன், விதியால் நண்பன் துன்பப்படும்போது பயனை எதிர் பார்ப்பவன், இம்மூவரும் யாராலும் நட்பு கொள்ளத் தகாதவராவார்.
மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப் பெண்ணினுள் கற்புடையாள் - பெற்றானும், உண்ணு நீர்க் கூவல் குறை இன்றித் தொட்டானும், - இம் மூவர் சாவா உடம்பு எய்தினார். |
16 |
மண்ணுலகத்தில் புகழை அடைந்தவனும், கற்புடைய மனைவியைப் பெற்ற கணவனும், கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், எக்காலத்தும் அழியாத புகழைப் பெற்றவராவார். அவர் இறந்தாலும் அவர் புகழ் நிலைக்கும்.
மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும், கற்புடையாள் பூப்பின்கண் சாராத் தலைமகனும், வாய்ப் பகையுள் சொல் வென்றி வேண்டும் இலிங்கியும், - இம் மூவர் கல்விப் புணை கைவிட்டார். |
17 |
மூப்பு வந்தபோது துறவறத்தை மேற்கொள்ளாதவனும், கற்புடைய மனைவியைக் குறித்த காலத்தில் சேராதவனும், வாய்மொழி வெற்றியை விரும்பி பேசுகின்ற தவசிகளும், கல்வித் தெப்பத்தைக் கைவிட்டவர்கள் ஆவர்.
ஒருதலையான் வந்துறூஉம் மூப்பும், புணர்ந்தார்க்கு இரு தலையும் இன்னாப் பிரிவும், உருவினை உள் உருக்கித் தின்னும் பெரும் பிணியும், - இம் மூன்றும் கள்வரின் அஞ்சப்படும். |
18 |
உறுதியாக வரும் மூப்பு, நண்பரின் பிரிவு, உடம்பினை உருக்குகின்ற தீராத நோய், இம்மூன்றுக்கும் அஞ்சி எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.
கொல் யானைக்கு ஓடும் குணமிலியும், எல்லில் பிறன் கடை நிற்று ஒழுகுவானும், மறம் தெரியாது ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும், - இம் மூவர், நாடுங்கால், தூங்குபவர். |
19 |
யானைக்கு அஞ்சி ஓடுகின்ற வீரனும், அயலான் மனைவியை விரும்புபவனும், நச்சுப் பாம்பை ஆட்டுகின்றவனும், விரைவில் கெடுவர்.
ஆசை பிறன்கண் படுதலும், பாசம் பசிப்ப மடியைக் கொளலும், கதித்து ஒருவன் கல்லான் என்று எள்ளப்படுதலும், - இம் மூன்றும் எல்லார்க்கும் இன்னாதன. |
20 |
பிறரிடமுள்ள பொருளுக்கு ஆசைப்படுவதும், சோம்பி இருத்தலும், கல்லான் என்று இகழப்படுவதும் யாவருக்கும் துன்பம் தருபவைகளாகும்.
வருவாயுள் கால் வழங்கி வாழ்தல், செரு வாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்புடைமை, எய்தப் பல நாடி நல்லவை கற்றல், - இம் மூன்றும் நல மாட்சி நல்லவர் கோள். |
21 |
தனக்கு வரும் வருவாய்க்கு ஏற்றபடி அறம் செய்தலும், போரில் வெற்றி அடைதலும், நல்லவைகளைப் படித்தலும் நல்லவருடைய கொள்கைகள் ஆகும்.
பற்று என்னும் பாசத் தளையும், பல வழியும் பற்று அறாது ஓடும் அவாத் தேரும், தெற்றெனப் பொய்த்துரை என்னும் புகை இருளும், - இம் மூன்றும் வித்து; அற, வீடும் பிறப்பு. |
22 |
பாசப் பற்றையும், பற்று விடாத விருப்பத்தையும், பொய்மையை என்றும் அறியாமை, ஆகிய இம்மூன்றையும் நீக்கினால் வீடு பேறு அடையலாம்.
தானம் கொடுக்கும் தகைமையும், மானத்தால் குற்றம் கடிந்த ஒழுக்கமும், தெற்றெனப் பல் பொருள் நீங்கிய சிந்தையும், - இம் மூன்றும் நல் வினை ஆர்க்கும் கயிறு. |
23 |
தானம் கொடுத்தலும், பழிக்கு நாணும் நல்லொழுக்கமும், பல பொருள்களில் இருந்து நீங்கிய நல்ல சிந்தனையும், ஆகிய இம்மூன்றும் அறத்தின் பயனைத் தரும்.
காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொல்லும், தூண்டிலினுள் உட்பொதிந்த தேரையும், மாண்ட சீர், காழ்ந்த பகைவர் வணக்கமும், - இம் மூன்றும் ஆழ்ச்சிப் படுக்கும், அளறு. |
24 |
மென்மையான தோள்களையுடைய கணிகையரின் மென்மையான மொழியும், தூண்டிலில் மீனுக்கு இரையாக வைக்கப்பட்ட தவளையும், பகைவர்களுடைய வணக்கமும், ஆகிய இம்மூன்றும் நரகம் போன்றதாகும்.
செருக்கினால் வாழும் சிறியவனும், பைத்து அகன்ற அல்குல் விலை பகரும் ஆய்தொடியும், நல்லவர்க்கு வைத்த அறப்புறம் கொண்டானும், - இம் மூவர் கைத்து உண்ணார், கற்றறிந்தார். |
25 |
பெரியோரை மதிக்காத அறிவில்லாதவனும், உடலை விற்கும் விலைமகளும், நல்லவர்க்கு வைத்த அறச்சாலையை அழித்தவனும், ஆகிய இம்மூவரிடத்தும் அறிஞர்கள் உணவு உண்ணமாட்டார்.
ஒல்வது அறியும் விருந்தினனும், ஆர் உயிரைக் கொல்வது இடை நீக்கி வாழ்வானும், வல்லிதின் சீலம் இனிது உடைய ஆசானும், - இம் மூவர் ஞாலம் எனப் படுவார். |
26 |
நல்ல விருந்தினனும், உயிரைக் கொல்லாது வாழ்பவனும், ஒழுக்கத்தை உடைய ஆசிரியனும் உயர்ந்தோர் ஆவார்.
உண் பொழுது நீராடி உண்டலும், என் பெறினும் பால் பற்றிச் சொல்லா விடுதலும் தோல் வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை, - இம் மூன்றும் தூஉயம் என்பார் தொழில். |
27 |
குளித்தபின் உண்ணுவதும், பொய் சொல்லாமல் இருத்தலும், தோல் வற்றிச் சுருங்கினாலும் நற்குணங்களில் இருந்து குறையாமையும், ஆகிய இம்மூன்றும் நல்லவர் செயல்களாகும்.
வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பியும், இல்லது காமுற்று இருப்பானும், கல்விச் செவிக் குற்றம் பார்த்திருப்பானும், - இம் மூவர் உமிக் குற்றுக் கை வருத்துவார். |
28 |
வெல்ல வேண்டி சினந்து சொல்கின்ற தவம் இல்லாதவனும், கிடைத்தற்கரிய பொருளை விரும்புபவனும், பிறன் கல்வியில் குற்றத்தைப் பார்ப்பவனும் ஆகிய இம்மூவரும் துன்பத்தையே அடைவர்.
பெண் விழைந்து பின் செலினும், தன் செலவில் குண்றாமை; கண் விழைந்து கையுறினும், காதல் பொருட்கு இன்மை; மண் விழைந்து வாழ் நாள் மதியாமை; - இம் மூன்றும் நுண் விழைந்த நூலவர் நோக்கு. |
29 |
தன்னைச் சேர விரும்பும் பெண்ணைச் சேராமையும், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தலும், வாழ்கின்ற காலத்தை மதிக்காமல் இருத்தலும் கற்றவர்களின் கருத்தாகும்.
தன் நச்சிச் சென்றாரை எள்ளா ஒருவனும், மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும், என்றும் அழுக்காறு இகந்தானும், - இம் மூவர் நின்ற புகழ் உடையார். |
30 |
தன்னை மதித்தவரை இகழாது இருத்தலும், செல்வம் வந்த போது நண்பர்களை மறவாமல் இருத்தலும், பகைவரின் செல்வம் கண்டு மகிழ்வதும் செய்தவர் அழியாப் புகழ் உடையார்.
பல்லவையுள் நல்லவை கற்றலும், பாத்து உண்டு ஆங் இல்லறம் முட்டாது இயற்றலும், வல்லிதின் தாளின் ஒரு பொருள் ஆக்கலும், - இம் மூன்றும் கேள்வியுள் எல்லாம் தலை. |
31 |
நல்லவற்றைக் கற்றலும், இல்லாளோடு குறைவின்றி அறம் செய்வதும், முயற்சியால் செயற்கரிய செய்கையை முடித்தலும் சிறந்த கல்வியாகும்.
நுண் மொழி நோக்கிப் பொருள் கொளலும், நூற்கு ஏலா வெண் மொழி வேண்டினும் சொல்லாமை, நல் மொழியைச் சிற்றினம் அல்லார்கண் சொல்லலும், - இம் மூன்றும் கற்றறிந்தார் பூண்ட கடன். |
32 |
சொற்களை ஆராய்ந்து பொருள் கொள்ளுதலும், பயனற்ற சொற்களைச் சொல்லாதிருத்தலும், நல்ல சொற்களை கீழ்க்குலத்தார்க்குச் சொல்லுதலும் படித்தறிந்தவர் மேற்கொள்ள வேண்டிய கடமையாகும்.
கோல் அஞ்சி வாழும் குடியும், குடி தழீஇ ஆலம் வீழ் போலும் அமைச்சனும், வேலின் கடை மணி போல் திண்ணியான் காப்பும், - இம் மூன்றும் படை வேந்தன் பற்று விடல்! |
33 |
செங்கோலுக்கு பயந்த குடிமக்களையும், குடிமக்களை ஆலம் விழுது போல் தாங்கும் மந்திரியையும், எல்லையில் மணிபோல் உறுதியானவனின் திட்பமுடைய காவலையும் அரசன் விட்டுவிடாமல் இருக்கவேண்டும்.
மூன்று கடன் கழித்த பார்ப்பானும், ஓர்ந்து முறை நிலை கோடா அரசும், சிறைநின்று அலவலை அல்லாக் குடியும், - இம் மூவர் உலகம் எனப்படுவார். |
34 |
மூவர்க்குக் கடன் செய்த பார்ப்பானும், நீதி நிலையில் வழுவாத அரசனும், கவலையில்லாக் குடியும் உயர்ந்தோர் எனப்படுவர்.
முந்நீர்த் திரையின் எழுந்து இயங்கா மேதையும், நுண் நூல் பெருங் கேள்வி நூல் கரை கண்டானும், மைந் நீர்மை மேல் இன்றி மயல் அறுப்பான், - இம் மூவர் மெய்ந் நீர்மைமேல் நிற்பவர். |
35 |
கடலின் அலைபோல் எழுந்து தடுமாறாத அறிவுடையவனும், நுட்பமான நூல்களின் முடிவைக் கண்டானும், மனக்கலக்கம் ஒழித்தவனும், ஆகிய இம்மூவரும் அழியாத் தன்மை உடையவராவார்.
ஊன் உண்டு, 'உயிர்கட்கு அருளுடையெம்!' என்பானும், 'தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும்' என்பானும், காமுறு வேள்வியில் கொல்வானும், - இம் மூவர் தாம் அறிவர், தாம் கண்டவாறு. |
36 |
உயிரைக் கொன்று தின்று இரக்கமுடையவன் என்பானும், எல்லாம் விதி என்று சோம்பி இருப்பவனும், வேள்வியில் ஓருயிரைக் கொல்வானும், நூல்களின் உண்மையை அறியாதவன் ஆவான்.
குறளையுள் நட்பு அளவு தோன்றும்; உறல் இனிய சால் பினில் தோன்றும், குடிமையும்; பால் போலும் தூய்மையுள் தோன்றும் பிரமாணம்; - இம் மூன்றும் வாய்மை உடையார் வழக்கு. |
37 |
பொருள் சுருக்கத்தினால் நட்பின் எல்லை தோன்றும். இனிய செயல்களினால் குடிப் பிறப்பின் தன்மை தோன்றும். மனத் தூய்மையினால் வாழ்வின் அளவு தோன்றும். எனவே இம்மூன்றும் உண்மையான பெரியோரின் குணங்களாகும்.
தன்னை வியந்து தருக்கலும் தாழ்வு இன்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும், முன்னிய பல் பொருள் வெஃகுஞ் சிறுமையும், - இம் மூன்றும் செல்வம் உடைக்கும் படை. |
38 |
தன்னைத் தானே வியந்து போற்றுதலும், அடக்கமில்லாமல் சினம் கொள்ளுதலும், பலவகைப் பொருட்களை விரும்புகின்ற சிறுமையும், இம்மூன்றும் செல்வத்தை அழிக்கும் படைகளாகும்.
புலை மயக்கம் வேண்டி பொருட்பெண்டிர்த் தோய்தல், கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல், சொலை முனிந்து பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல், - இம் மூன்றும் நன்மை இலாளர் தொழில். |
39 |
உடலை விரும்பி வேசியரைச் சேர்தல், மது மயக்கம் வேண்டி கள்ளுண்டல், சூதாடுவது இம்மூன்றும் அறம் இல்லாதவர் செய்யும் தொழில்களாகும்.
வெகுளி நுணுக்கம் விறலும் மகளிர்கட்கு ஒத்த ஒழுக்கம் உடைமையும், பாத்து உண்ணும் நல் அறிவாண்மை தலைப்படலும், - இம் மூன்றும் தொல் அறிவாளர் தொழில். |
40 |
சினத்தை அடக்குதலும், பெண்கள் வயப்படப்பாமல் இருத்தலும், நல்லறிவு பெற்றிருத்தலும், கற்றவர் செயல்களாகும்.
அலந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும், துளங்கினும் தன் குடிமை குன்றாத் தகைமையும், அன்பு ஓடி நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும், - இம் மூன்றும் கேள்வியுள் எல்லாம் தலை. |
41 |
துன்பப்படுவோருக்கு ஈதலும், வறுமையான காலத்திலும் ஒழுக்கத்தோடு இருத்தலும், நட்பு செய்தவரைப் பெருகச் செய்தலும் முதன்மையான அறங்களாகும்.
கழகத்தால் வந்த பொருள் காமுறாமை, பழகினும் பார்ப்பாரைத் தீப்போல், ஒழுகல், உழவின்கண் காமுற்று வாழ்தல், - இம் மூன்றும் அழகு என்ப வேளாண் குடிக்கு. |
42 |
சூதாட்டத்தினால் கிடைத்த பொருளை விரும்பாமையும், பிராமணரை அஞ்சி நடத்தலும், பயிர் செய்து வாழ்தலும் வேளாளர்க்கு அழகு.
வாயின் அடங்குதல் துப்புரவு ஆம்; மாசு அற்ற செய்கை அடங்குதல் திப்பியம் ஆம்; பொய் இன்றி நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும்; - இம் மூன்றும் வஞ்சத்தின் தீர்ந்த பொருள். |
43 |
தீவழிச் செல்லாமலிருப்பதால் செல்வம் உண்டாகும். உடலின் செய்கை அடங்குதலால் மறுபிறப்பில் தெய்வப் பிறப்பு கிடைக்கும். பொய் இன்றி மனம் அடங்குதலால் முக்தி கிடைக்கும். இம்மூன்றும் வஞ்சத்தில் நீங்கிய பொருள்களாகும்.
விருந்து இன்றி உண்ட பகலும் திருந்திழையார் புல்லப் புடை பெயராக் கங்குலும், இல்லார்க்கு ஒன்று ஈயாது ஒழிந்தகன்ற காலையும், - இம் மூன்றும் நோயே, உரன் உடையார்க்கு. |
44 |
விருந்தினர் இல்லாமல் உண்ட பகலும், மனைவியில்லா இரவும், வறியவர்க்கும் கொடுக்காத காலையும் அறிவுடையார்க்கு நோய்களாம்.
ஆற்றானை, 'ஆற்று' என்று அலைப்பானும்; அன்பு இன்றி, ஏற்றார்க்கு, இயைவ கரப்பானும், கூற்றம் வரவு உண்மை சிந்தியாதானும்; - இம் மூவர் நிரயத்துச் சென்று வீழ்வார். |
45 |
திறமையற்ற ஏவலாளனை வேலை வாங்குபவனும், இரந்தவர்க்கு இல்லை என்று சொல்பவனும், இறப்பை நினையாமல் தீமையைச் செய்தவனும் நரகத்திற்குச் செல்வர்.
கால்தூய்மை இல்லாக் கலி மாவும், காழ் கடிந்து மேல் தூய்மை இல்லாத வெங் களிறும், சீறிக் கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி, - இம் மூன்றும் குறுகார், அறிவுடையார். |
46 |
நடக்க இயலாத குதிரையும், கட்டுத்தறியை முறித்து வீரனிருப்பதற்கேற்ற மேலிடம் தூய்மை இல்லாத பயன்படாத யானையும், மாணவர்கள் மேல் சீற்றம் கொண்டு உரைக்கும் கல்விச் சாலையும் அறிவுடையார் சேர மாட்டார்.
சில் சொல், பெருந் தோள், மகளிரும்; பல் வகையும் தாளினால் தந்த விழு நிதியும்; நாள்தொறும் நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும்; - இம் மூன்றும் காப்பு இகழல் ஆகாப் பொருள். |
47 |
மெல்லிய சொல்லையும், பெரும் தோள்களையுமுடைய மகளிரும், பலவகை முயற்சியால் தேடிய செல்வமும், நாக்கில் நீர் ஊறும்படியாகச் சமைத்த உணவும், என்றும் இகழ்ந்து கூற முடியாத பொருள்கள் ஆகும்.
வைததனை இன் சொல்லாக் கொள்வானும், நெய் பெய்த சோறு என்று கூழை மதிப்பானும், ஊறிய கைப்பதனைக் கட்டி என்று உண்பானும், - இம் மூவர் மெய்ப் பொருள் கண்டு வாழ்வார். |
48 |
வன்சொல்லை இனிய சொல்லாக கொள்கின்றவனும், நெய் ஊற்றிய சோறு எனக் கூழை மதிக்கின்றவனும், கைக்கின்ற (பழைய, சுவையற்ற) உணவை உண்கின்றவனும் மெய்ப்பொருள் கண்டு வாழ்பவர் ஆவார்.
ஏவியது மாற்றும் இளங் கிளையும், காவாது வைது எள்ளிச் சொல்லும் தலைமகனும், பொய் தெள்ளி அம் மனை தேய்க்கும் மனையாளும், - இம் மூவர் இம்மைக்கு உறுதி இலார். |
49 |
மனைவியை இகழ்ந்து பேசுகின்ற கணவனும், தந்தை சொல் கேளாத புதல்வனையும், தான் வாழும் வீட்டின் செல்வத்தை அழிக்கும் மனைவியும், எவருக்கும் பயனில்லாதவர் ஆவார்.
கொள் பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும் உள் பொருள் சொல்லாச் சல மொழி மாந்தரும், இல் இருந்து எல்லை கடப்பாளும், - இம் மூவர் வல்லே மழை அருக்கும் கோள். |
50 |
குடிமக்களை வருத்துகின்ற அரசனும், பொய் பேசுகின்ற மனிதரும், எல்லையைக் கடந்து நடக்கும் மனையாளும் இருக்குமிடத்தில் மழை பெய்யாது.
தூர்ந்து ஒழுகிக்கண்ணும், துணைகள் துணைகளே; சார்ந்து ஒழுகிக்கண்ணும், சலவர் சலவரே; ஈர்ந்த கல் இன்னார் கயவர்; - இவர் மூவர், தேர்ந்தக்கால், தோன்றும் பொருள். |
51 |
வறுமையிலும் உதவுபவர் உறவினரேயாவார், கருத்துக்கு இணங்கி நடந்தவிடத்தும் பகைவர் பகைவரே ஆவர். துன்பம் செய்யும் கயவர்கள் பிளக்கப்பட்ட கல்லுக்கு ஒப்பாவார்கள். இவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்; காமுற்ற பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை; நண்ணும் மறுமைக்கு அணிகலம் கல்வி; - இம் மூன்றும் குறியுடையோர்கண்ணே உள. |
52 |
கண்களுக்கு அணிகலம் கண்ணாடுதல், பெண்ணுக்கு அணிகலம் நாணம், மறுபிறப்புக்கு அணிகலன் கல்வி அறிவு. இம்மூன்றும் ஆராயும் இயல்புடையாரிடத்தில் உள்ளன.
குருடன் மனையாள் அழகும், இருள் தீரக் கற்று அறிவில்லான் கதழ்ந்துரையும், பற்றிய பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும், - இம் மூன்றும் எண்ணின், தெரியாப் பொருள். |
53 |
குருடனுக்கு மனைவியின் அழகும், நூலைக் கற்றுப் பொருளை அறியாதவன் சொல்லுகின்ற சொல்லும், பண்களைத் தெரியாதவன் யாழின் இசையைக் கேட்பதும், இம்மூன்றும் ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது.
தன் பயம் தூக்காரைச் சார்தலும், தான் பயவா நன் பயம் காய்வின்கண் கூறலும், பின் பயவாக் குற்றம் பிறர் மேல் உரைத்தலும், - இம் மூன்றும் தெற்றெனவு இல்லார் தொழில். |
54 |
தனக்கு உதவி செய்யாதவரைச் சேர்தல், சினம் கொண்ட போது பயன்படாத சொற்களைப் பேசுவது, குற்றங்களைப் பிறர் மேல் சொல்லுதல் ஆகியவை அறிவில்லாதவர் செயலாகும்.
அரு மறை காவாத நட்பும், பெருமையை வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும், யாண்டானும் செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும், - இம் மூவர் ஒன்றாள் எனப்படுவார். |
55 |
மறைமொழியை வெளிப்படுத்தாத நட்பும், பெருமைக் குணத்தை விரும்பாத தலைவனும், தர்மத்தின் நீங்கிய பெண்ணும் ஒற்றர்கள் என்று சொல்லப்படுவார்.
முந்தை எழுத்தின் வரவு உணர்ந்து, பிற்பாடு தந்தையும் தாயும் வழிபட்டு, வந்த ஒழுக்கம் பெரு நெறி சேர்தல், - இம் மூன்றும் விழுப்ப நெறி தூராவாறு. |
56 |
இளமைப் பருவத்தில் கற்பதும், தந்தையையும் தாயையும் போற்றி வணங்குவதும், பெரியோரைச் சேர்வதும் உயர்ந்த நெறியாகும்.
கொட்டி அளந்த அமையாப் பாடலும், தட்டித்துப் பிச்சை புக்கு உண்பான் பிளிற்றலும், துச்சிருந்தான் நாளும் கலாம் காமுறுதலும், - இம் மூன்றும் கேள்வியுள் இன்னாதன. |
57 |
தாளத்தோடு சேராத பாட்டும், இரந்து உண்பவனுடைய இரைச்சலும், ஒதுக்குக் குடி இருந்தான் பெரு வீட்டுப் பொருளை விரும்புவதும் இன்பத்தைத் தராது.
பழமையை நோக்கி, அளித்தல், கிழமையால் கேளிர் உவப்பத் தழுவுதல், கேளிராத் துன்னிய சொல்லால் இனம் திரட்டல், - இம் மூன்றும் மன்னர்க்கு இளையான் தொழில். |
58 |
முன்னோரோடு பழகியவர்களைக் காப்பதும், சுற்றத்தாரைக் காப்பாற்றுவதும், நல்லினத்தாருடன் நட்பு கொள்வதும் இளவரசன் செய்ய வேண்டியவைகளாகும்.
கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும், பைங் கூழ் விளைவின்கண் போற்றான் உழவும், இளையனாய்க் கள் உண்டு வாழ்வான் குடிமையும், - இம் மூன்றும் உள்ளன போலக் கெடும். |
59 |
சுற்றத்தார்க்கு உதவாத செல்வமும், விளையும் காலத்தில் காவல் செய்யாத உழவுத் தொழிலும், கள்ளுண்பவன் குடிப்பிறப்பும் நிலைக்காது அழியும்.
பேஎய்ப் பிறப்பிற் பெரும் பசியும், பாஅய் விலங்கின் பிறப்பின் வெரூ உம், புலம் தெரியா மக்கட் பிறப்பின் நிரப்பி இடும்பை, - இம் மூன்றும் துக்கப் பிறப்பாய்விடும். |
60 |
பேயினது பிறப்புடையவர்களின் பெரும் பசியும், பாயும் விலங்கினது அச்சமும், அறிவாகிய பொருளை உணராத மக்களின் வறுமையும் மிக்க துன்பத்தை தரக்கூடியதாகும்.
ஐஅறிவும் தம்மை அடைய ஒழுகுதல், எய்துவது எய்தாமை முன் காத்தல், வைகலும் மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல், - இம் மூன்றும் வீறு சால் பேர் அமைச்சர் கோள். |
61 |
ஐம்புலன்களை அடக்கவும், அரசனுக்கு வரக்கூடிய தீமையைக் காத்தலும், பகை அரசருடைய நிலையை அறிந்து கொள்வதும் அமைச்சர்களின் கடமைகளாகும்.
நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும், சான்றார் முன் மன்றில் கொடும்பாடு உரைப்பானும், நன்று இன்றி வைத்த அடைக்கலம் கொள்வானும், - இம் மூவர் எச்சம் இழந்து வாழ்வார். |
62 |
நன்றியறிதல் இல்லாதவனும், பொய் சாட்சி சொல்பவனும், தன்னிடம் அடைக்கலமாக வந்த பொருளை விரும்பியவனும், தம் மக்களை இழந்து வருந்துவார்.
நேர்வு அஞ்சாதாரோடு நட்பும், விருந்து அஞ்சும் ஈர்வளையை இல்லத்து இருத்தலும், சீர் பயவாத் தன்மையிலாளர் அயல் இருப்பும், - இம் மூன்றும் நன்மை பயத்தல் இல. |
63 |
துன்பத்துக்கு அஞ்சாதவர் நட்பும், விருந்தினர்க்கு உணவளிக்காத மனைவியும், நற்குணமில்லாதவர் அயலில் குடியிருத்தலும் பயனற்றவை ஆகும்.
நல் விருந்து ஓம்பலின், நட்டாளாம்; வைகலும் இல் புறஞ் செய்தலின், ஈன்ற தாய்; தொல் குடியின் மக்கள் பெறலின், மனைக் கிழத்தி; - இம் மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன். |
64 |
விருந்தினரைப் போற்றுதலால் நட்பானவள் ஆவாள். இல்லறத்தைக் காப்பதால் பெற்ற தாய் ஆவாள். மக்களைப் பெறுதலால் மனையாள் ஆவாள். இம்மூன்றும் கற்புடைய பெண்களின் கடமைகளாகும்.
அச்சம் அலை கடலின் தோன்றலும், ஆர்வு உற்ற விட்ட கலகில்லாத வேட்கையும், கட்டிய மெய்ந் நிலை காணா வெகுளியும், - இம் மூன்றும் தம் நெய்யில் தாம் பொரியுமாறு. |
65 |
ஒருவர் உள்ளத்தில் தோன்றும் பயமும், அனுபவித்தவற்றை விட்டு நீங்காத விருப்பமும், பொருளின் உண்மை நிலையை அறியாத சினமும், ஒருவருக்கு மிகுந்த துன்பத்தைத் தரும்.
கொழுநனை இல்லாள் கறையும், வழி நிற்கும் சிற்றாள் இல்லாதான் கைம் மோதிரமும்; பற்றிய கோல் கோடி வாழும் அரசும், - இவை மூன்றும் சால்போடு பட்டது இல. |
66 |
புருஷன் இல்லாதவர் பூப்பும், சிற்றாள் இல்லாதவனுடைய மோதிரமும், கொடுங்கோல் அரசும் சிறப்பற்றவையாகும்.
எதிர்நிற்கும் பெண்ணும், இயல்பு இல் தொழும்பும், செயிர் நிற்கும் சுற்றமும், ஆகி, மயிர் நரைப்ப, முந்தைப் பழ வினையாய்த் தின்னும்; - இவை மூன்றும் நொந்தார் செயக் கிடந்தது இல். |
67 |
சினத்தால் எதிர்த்துப் பேசும் மனையாளும், ஒழுக்கமில்லாத வேலையாட்களும், பகையான சுற்றமும் முற்பிறப்பிற் செய்த வினைப்பயனாகும். இவை முதுமைப் பருவம் வரைக்கும் ஒருவரை வருத்தக் கூடியது ஆகும்.
இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும், இவ் உலகின் நில்லாமை உள்ளும் நெறிப்பாடும், எவ் உயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையும், - இம் மூன்றும் நன்று அறியும் மாந்தர்க்கு உள. |
68 |
வறியவர்க்குக் கொடுக்கும் செல்வமும், நிலையாமையை எடுத்து உரைப்பதும், பிற உயிர்களுக்கு துன்பம் தரக்கூடிய செய்கைகளைச் செய்யாமல் இருப்பதும் அறவழி நிற்பவர் செய்கைகளாகும்.
அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய மெய் நிறைந்து நீடு இருந்த கன்னியும், நொந்து நெறி மாறி வந்த விருந்தும், - இம் மூன்றும் பெறுமாறு அரிய பொருள். |
69 |
உழவுச் செயலைச் செய்யும் எருதும், நெடுநாள் மணமின்றி இருந்த கன்னியும், பசித்து வந்த விருந்தினரும், பெறற்கரிய பொருள் ஆகும்.
காவோடு அறக் குளம் தொட்டானும், நாவினால் வேதம் கரை கண்ட பார்ப்பானும், தீது இகந்து ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும், - இம் மூவர் செல்வர் எனப்படுவார். |
70 |
சோலை, குளம் அமைத்தானும், வேதம் படித்த பார்ப்பானும், பிறர்க்குக் கொடுத்து உண்ணும் இல்லறத்தானும், உண்மையான செல்வர் எனப்படுவார்.
உடுத்தாடை இல்லாதார் நீராட்டும், பெண்டிர் தொடுத்தாண்டு அவைப் போர் புகலும், கொடுத்து அளிக்கும் ஆண்மை உடையவர் நல்குரவும், - இம் மூன்றும் காண அரிய, என் கண். |
71 |
ஆடையின்றி நீராடுவதும், பெண்கள் வழக்கு தொடுத்தலும், கொடையாளர்கள் வறுமையும் பார்க்கத் தகுந்தன அல்ல.
நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும்; அறனை நினைப்பானை அல் பொருள் அஞ்சும்; மறவனை எவ் உயிரும் அஞ்சும்; - இம் மூன்றும் திறவதின் தீர்ந்த பொருள். |
72 |
ஐம்புலன்களை அடக்கியவனைப் பார்த்து வறுமை பயப்படும். அறத்தையே நினைக்கின்றவனுக்கு பாவம் பயப்படும். கொலையாளிக்கு எல்லா உயிர்களும் பயப்படும். இம்மூன்றும் மிகவும் வலிமை மிக்கவனாகும்.
'இரந்துகொண்டு ஒண் பொருள் செய்வல்!' என்பானும், பரந்து ஒழுகும் பெண்பாலைப் பாசம் என்பானும், விரி கடலூடு செல்வானும், - இம் மூவர் அரிய துணிந்து ஒழுகுவார். |
73 |
பிச்சை எடுத்துப் பெரும் பொருள் ஈட்டுபவனும், வேசியை நம்பும் காமுகனும், தக்க கருவிகள் இன்றி கடலில் பொருள் ஈட்டச் செல்லும் வணிகனும், தன் முயற்சியில் வெற்றி பெற மாட்டார்கள்.
கொலைநின்று தின்று ஒழுகுவானும், பெரியவர் புல்லுங்கால் தான் புல்லும் பேதையும், 'இல் எனக்கு ஒன்று; ஈக!' என்பவனை நகுவானும், - இம் மூவர் யாதும் கடைப்பிடியாதார். |
74 |
கொலை செய்து உண்பவனும், பெரியோரைத் தழுவுகின்ற அறிவில்லாதவனும், இரப்பவனை இகழ்வானும் யாதொரு அறத்தையும் பின்பற்றாதவர் ஆவார்.
வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும், உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூலும், புணர்வின்கண் தக்கது அறியும் தலைமகனும், - இம் மூவர் பொத்து இன்றிக் காழ்த்த மரம். |
75 |
கொடையாளியிடம் உள்ள செல்வமும், உள்ளத்தில் நினைத்துப் பார்க்கும் நூல் புலமையும், தன்னைச் சேர்ந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய காரியத்தை அறியும் தலைவனும், உறுதியான மனம் படைத்தவர்கள் ஆவார்.
மாரி நாள் வந்த விருந்தும், மனம் பிறிதாக் காரியத்தில் குன்றாக் கணிகையும், வீரியத்து மாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும், - இம் மூவர் போற்றற்கு அரியார், புரிந்து. |
76 |
மழைக்காலத்தில் வந்த விருந்தினரும், பொருள் வருவாயில் நாட்டம் கொண்ட வேசையும், வெற்றியை விரும்புகின்ற வீரனும், போற்றுதற்கு உரியராவார்.
கயவரைக் கையிகந்து வாழ்தல், நயவரை நள் இருளும் கைவிடா நட்டு ஒழுகல், தெள்ளி வடுவான வாராமல் காத்தல், - இம் மூன்றும் குடி மாசு இலார்க்கே உள. |
77 |
கீழ்மக்களைச் சேராமல் வாழ்தலும், நீதியுடையவரை நட்பு செய்து கொள்ளுதலும், தனக்குப் பழி வரும் செயல்களைச் செய்யாதிருத்தலும், நல்லவர் செய்கைகள் ஆகும்.
தூய்மை உடைமை துணிவு ஆம்; தொழில் அகற்று வாய்மை உடைமை வனப்பு ஆகும்; தீமை மனத்தினும் வாயினும் சொல்லாமை; - மூன்றும் தவத்தின் தருக்கினார் கோள். |
78 |
தூய்மையுடையவராய் இருத்தலும், உண்மையுடையவராயிருத்தலும், தீமையைத் தருவதனை நினையாமலும், சொல்லாமலும் இருத்தலும், தவத்தார் மேற்கொண்ட கொள்கைகளாகும்.
பழி அஞ்சான் வாழும் பவுசும், அழிவினால் கொண்ட அருந் தவம் விட்டானும், கொண்டிருந்து இல் அஞ்சி வாழும் எருதும், - இவர் மூவர் நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய். |
79 |
பழிக்கு அஞ்சாமல் பசு போல் உயிர் வாழ்கின்றவனும், கேடு வந்த போது அரிய தவத்தினை விட்டவனும், தனக்கு உட்பட்டவளாக இருந்தாலும் மனைவிக்கு அஞ்சி எருது போல் வாழ்பவனும், எப்பொழுதும் துன்பப்படுவர்.
முறை செய்யான் பெற்ற தலைமையும், நெஞ்சின் நிறை இல்லான் கொண்ட தவமும், நிறை ஒழுக்கம் தேற்றாதான் பெற்ற வனப்பும், - இவை மூன்றும் தூற்றின்கண் தூவிய வித்து. |
80 |
முறையறிந்து செய்யாத தலைவனும், உறுதி இல்லாதவன் தவமும், ஒழுக்கமில்லாதவன் அழகும், ஆகிய இம்மூன்றும், புதரில் தூவிய வித்துக்களாகும்.
தோள் வழங்கி வாழும் துறை போல் கணிகையும், நாள் கழகம் பார்க்கும் நயம் இலாச் சூதனும், வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும், - இம் மூவர் ஆசைக் கடலுள் ஆழ்வார். |
81 |
பலருக்குப் பொதுவாய் நின்று நீரைத் தரும் கிணற்றினைப் போன்று தனது உடலைக் கொடுத்து வாழும் வேசியரும், சூதாடும் இடத்தைத் தேடி அலையும் நீதியில்லாத சூதாடியும், மிக்க வட்டிக்கு கொடுத்துப் பொருள் தேடுபவனும் பேராசை பிடித்தவர்கள் ஆவார்.
சான்றாருள் சான்றான் எனப்படுதல், எஞ் ஞான்றும் தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல், பாய்ந்து எழுந்து கொள்ளாருள் கொள்ளாத கூறாமை, - இம் மூன்றும் நல் ஆள் வழங்கும் நெறி. |
82 |
நற்குணங்கள் நிறைந்தவர்களால், நல்லோன் எனப்படுதலும், செல்வம் இருந்தபோதும், இல்லாதபோதும் நட்புடன் கருதப்படுதலும், தமது நற்சொல்லை ஏற்றுக் கொள்ளாதவரிடத்து சொல்லாதிருத்தலும் நல்லவர் குணங்களாகும்.
உப்பின் பெருங் குப்பை, நீர் படின், இல்லாகும்; நட்பின் கொழு முளை, பொய் வழங்கின், இல்லாகும்; செப்பம் உடையார் மழை அனையர்; - இம் மூன்றும் செப்ப நெறி தூராவாறு. |
83 |
உப்பின் குவியல் மீது நீர் படிந்தால் உப்பு கரைந்து போகும். நட்பில் பொய் வந்தால் கெட்டுப் போகும். நடுநிலைமையுடையர் மழை போல் எல்லோருக்கும் உதவி செய்வர். இம்மூன்றும் நல்ல நெறிகளைக் கெடுக்கா முறைகள் ஆகும்.
வாய் நன்கு அமையாக் குளனும், வயிறு ஆரத் தாய் முலை உண்ணாக் குழவியும், சேய் மரபின் கல்வி மாண்பு இல்லாத மாந்தரும், - இம் மூவர் நல் குரவு சேரப்பட்டார். |
84 |
வழி அமையா குளமும், வயிறு நிரம்ப தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அறிவில்லாத மாந்தரும், ஆகிய இம்மூவரும் வறுமைக்கு ஆளாவார்கள்.
எள்ளப்படும் மரபிற்று ஆகலும், உள் பொருளைக் கேட்டு மறவாத கூர்மையும், முட்டு இன்றி உள் பொருள் சொல்லும் உணர்ச்சியும், - இம் மூன்றும் ஒள்ளிய ஒற்றாள் குணம். |
85 |
தன் செயல்கள் பகைவருக்குத் தெரியாமலும், நடந்த காரியத்தைக் கேட்டு மறவாதிருத்தலும், அதனைத் தடையின்றி தெளிவாகச் சொல்லும் திறமையும் கொண்டவர்களே சிறந்த வேவுகாரனது குணமாகும்.
அற்புப் பெருந் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல் கற்புப் பெரும் புணை காதலின் கை விடுதல், நட்பின் நய நீர்மை நீங்கல், - இவை மூன்றும் குற்றம் தரூஉம் பகை. |
86 |
உயிரிடத்தில் அன்பு காட்டாதிருத்தலும், பொருள் மீது கொண்ட விருப்பத்தினால் கல்வியை விட்டுவிடுதலும், ஒருவரிடம் கொண்ட நட்பால் நீதித் தன்மையினின்று நீங்குதலும் குற்றங்களை விளைவிக்கின்ற பகைகளாம்.
கொல்வது தான அஞ்சான் வேண்டலும், கல்விக்கு அகன்ற இனம் புகுவானும், இருந்து விழு நிதி குன்று விப்பானும், - இம் மூவர் முழு மக்கள் ஆகற்பாலார். |
87 |
ஓருயிரைக் கொல்வதற்கு அஞ்சாதவனும், கல்லாதவர் கூட்டத்தோடு சேர்வதும், ஒரு முயற்சியும் செய்யாமல் இருக்கின்ற செல்வத்தை அழிப்பவனும், மூடர்கள் ஆவார்.
பிணி தன்னைத் தின்னுங்கால் தான் வருந்துமாறும், தணிவு இல் பெருங் கூற்று உயிர் உண்ணுமாறும், பிணைச் செல்வம் மாண்பு இன்று இயங்கல், - இம் மூன்றும் புணை இல் நிலை கலக்குமாறு. |
88 |
நோய் வந்து துன்பப்படுவதும், எமன் உயிரைக் கொண்டு போக வருத்தும் வகையும், செல்வம் இழந்த நிலையும், மன உறுதியைக் குலைப்பவையாகும்.
அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும், பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும், இறந்து இன்னா சொல்லகிற்பானும், - இம் மூவர் பிறந்தும் பிறந்திலாதார். |
89 |
அருளினை நிறைத்து வைத்துக் கொள்ளாதவனும், செல்வத்தை மறைத்து வைத்துக் கொள்கின்றவனும், பிறர்க்கு துன்பம் தரும் சொற்களைச் சொல்பவனும், மக்கட் பிறப்பாக கருதப்பட மாட்டார்.
ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறி சேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும் அருள் புரிந்து சொல்லுக, சொல்லை! - இம் மூன்றும் இருள் உலகம் சேராத ஆறு. |
90 |
செல்வத்தை உரியவனுக்கு ஈதலும், அறநெறிகளைத் தரும் நூலைச் செய்தலும், அருள் தரும் சொற்களைச் சொல்லுதலும், ஆகிய இம்மூன்றும் நரக உலகத்திற்கு செல்லாமைக்குரிய வழிகளாகும்.
பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல், உயிரை இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல், மறுவந்து தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல், - இம் மூன்றும் மன்னா உடம்பின் தொழில். |
91 |
தாய் தந்தையரை மதிக்காமல் இருத்தலும், அவர்கள் காலத்திற்குப் பின் துன்பப்படுவதும், துன்பம் வந்தபோது அறச் செயல்களைச் செய்யாது போனோமே என்று வருத்தப்படுவதும், மூடர்கள் செய்கைகளாகும்.
விழுத் திணைத் தோன்றாதவனும், எழுத்தினை ஒன்றும் உணராத ஏழையும், என்றும் இறந்துரை காமுறுவானும், - இம் மூவர் பிறந்தும் பிறவாதவர். |
92 |
சிறந்த குலத்தில் பிறவாதவனும், இலக்கண நூலை அறியாதவனும், முறையில்லாமல் பேசுபவனும், மக்களாகப் பிறந்தாலும் மக்களாக மதிக்கப்பட மாட்டார்கள்.
இருளாய்க் கழியும் உலகமும், யாதும் தெருளாது உரைக்கும் வெகுள்வும், பொருள் அல்ல காதற்படுக்கும் விழைவும், - இவை மூன்றும் பேதைமை, வாழும் உயிர்க்கு. |
93 |
அறிவில்லாதவர் இடமும், நன்மை, தீமை தெரியாது சொல்கின்ற கோப பேச்சுக்களும், நற்பொருள் அல்லாதவற்றில் விருப்பமும், அறியாமையைத் தருவதாகும்.
நண்பு இலார்மாட்டு நசைக் கிழமை செய்வானும், பெண்பாலைக் காப்பு இகழும் பேதையும், பண்பு இல் இழுக்கு ஆன சொல்லாடுவானும், - இம் மூவர் ஒழுக்கம் கடைப்பிடியாதார். |
94 |
நட்புக்குணம் இல்லாதவரிடத்து நண்பராக இருப்பதும், மனைவியை இகழ்ந்து பேசும் அறிவில்லாதவனும், குணமில்லாத சொற்களைச் சொல்பவனும், தம்முடைய ஒழுக்கத்தை உறுதியாக கடைப்பிடிக்காதவர் ஆவார்.
அறிவு அழுங்கத் தின்னும் பசி நோயும், மாந்தர் செறிவு அழுங்கத் தோன்றும் விழைவும், செறுநரின் வெவ் உரை நோனா வெகுள்வும், - இவை மூன்றும் நல் வினை நீக்கும் படை. |
95 |
நல்லறிவு கெடும்படி வருத்துகின்ற பசியாகிய நோயும், நல்லோர் விலகும்படி தோன்றும் விருப்பமும், பகைவரின் கொடிய மொழிகளைப் பொறுக்காத கோபமும், ஆகிய இம்மூன்றும் அறமுறையை நீக்குகின்ற படைக்கருவிகளாகும்.
கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ, நல்லவை செய்வான் அரசன்; - இவர் மூவர், 'பெய்' எனப் பெய்யும் மழை. |
96 |
கணவனுடைய குறிப்பறிந்து நடக்கும் மனைவியும், நோன்புகளை முறைப்படி செய்யும் தவசியும், நன்மைகளைச் செய்யும் அரசனும் பெய் என்று சொல்ல மழை பொழியும்.
ஐங் குரவர் ஆணை மறுத்தலும், ஆர்வு உற்ற எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும், நெஞ்சு அமர்ந்த கற்பு உடையாளைத் துறத்தலும், - இம் மூன்றும் நற் புடையிலாளர் தொழில். |
97 |
பெரியோர்களுடைய கட்டளையை மறுத்து நடத்தலும், நண்பனிடம் பொய் பேசுதலும், கற்புடைய மனைவியைத் துறத்தலும், பாவச் செயல்கள் ஆகும்.
செந் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும், வெஞ் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும், பெண்பால் கொழுநன் வழிச் செலவும், - இம் மூன்றும் திங்கள் மும் மாரிக்கு வித்து. |
98 |
அந்தணர்கள் தமக்குரிய அறத்தை மறவாது வாழ்தலும், அரசன் முறையாக ஆள்வதும், தன் கணவன் குறிப்பின் வழியில் நடத்தலும், மாதம் தோறும் பெய்ய வேண்டிய மழைக்குக் காரணங்களாகும்.
கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும், காமுற்று பெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும், முட்டு இன்றி அல்லவை செய்யும் அலவலையும், - இம் மூவர் நல் உலகம் சேராதவர். |
99 |
கற்றவன் கைவிட்டு வாழ்தலும், விரும்பியவற்றைச் செய்யும் அறிவில்லாதவனும், தீங்கு செய்து அவற்றைப் பேசுதலும் கொண்டவர்கள், நல் உலகம் சேர மாட்டார்கள்.
பத்திமை சான்ற படையும், பலர் தொகினும் எத் திசையும் அஞ்சா எயில்-அரணும், வைத்து அமைந்த எண்ணின் உலவா இரு நிதியும், - இம் மூன்றும் மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு. |
100 |
அன்பு நிறைந்த படையும், பகைவர் பலர் கூடி எதிர்ப்பினும் அஞ்சாத அரணும், எண்ண முடியாத அளவிற்கு இருக்கும் செல்வமும், ஆகிய இம்மூன்றும், பூமியை ஆள்கின்ற வேந்தர்க்கு உறுப்புகளாகும்.
மிகைப் பாடல்கள்
கரப்பவர் நீர்மைத்தாய் நண்பகலில் தோன்றல், இரப்பவர்கண் தேய்வேபோல் தோன்றல், இரப்பவர்க்கு ஒன்று ஈவார் முகம்போல் ஒளிவிடுதல், - இம் மூன்றும் ஓவாதே திங்கட்கு உள. (புறத்திரட்டு. 1222) |
1 |
மறைந்து வாழ்பவர்களைப் போல் பகலில் தோன்றலும், இரப்பவர்கள் போல் தேய்ந்து காணப்படுதலும், இரப்பவர்களுக்கு கொடுப்பவர்கள் போல் முகம் ஒளிருதலும், ஆகிய இம்மூன்றும் சந்திரனுக்கு உள்ள இயல்புகளாகும்.
பொருள் இல் ஒருவற்கு இளமையும், போற்றும் அருள் இல் ஒருவற்கு அறனும், தெருளான் திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும், - மூன்றும் பரிந்தாலும் செய்யா பயன். (புறத்திரட்டு.1228) |
2 |
பொருள் இல்லாதவனின் இளமையும், அருள் இல்லாதவனின் அறத்தன்மையும், தெளிவில்லாதவன் பெற்ற கல்வியும், ஆகிய இம்மூன்றினாலும் பயனில்லை.
சால் நெறிப் பாரா உழவனும், தன் மனையில் மானம் ஒன்று இல்லா மனையாளும், சேனை உடன்கொண்டு மீளா அரசும், - இம் மூன்றும் கடன் கொண்டார் நெஞ்சில் கனா. |
3 |
ஏர்க் குற்றம் பாரா உழவனும், இன் அடிசில் பாத்திட்டு ஊட்டாத பைந்தொடியும், ஊர்க்கு வரும் குற்றம் பாராத மன்னும், - இம் மூவர் இருந்திட்டு என்? போய் என், இவர்? |
4 |
சிறப்புப் பாயிரம்
உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்; அலகு இல் அக நோய் அகற்றும் - நிலை கொள் திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம் மருவு நல்லாதன் மருந்து. |
1 |
செல்வத் திருத்துளார் செம்மல், செரு அடு தோள் நல்லாதன் என்னும் பெயரானே - பல்லார் பரிவொடு நோய் அவியப் பன்னி ஆராய்ந்து, திரிகடுகம் செய்த மகன். |
2 |
திரிகடுகம் முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக