அகத்தியர் ஞானப் பாடல்கள்

 

1-5

1

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்

சகல உயிர் சீவனுக்கு மதுதானாச்சு

புத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்

பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு

பத்தியினால் மனம் அடங்கி நிலையில் நிற்பார்

பாழிலே மனத்தை விடார் பரமஞானி :

சுத்தியே அலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்

சுழியிலே நிலையறிந்தால் மோடசம் தானே

2

மோட்சமது பெறுவதற்குச் சூட்சம் சொன்னேன்

மோகமுடன் பொய்களவு கொலை செய்யாதே

காயச்சலுடன் கோபத்தைத் தள்ளிப்போடு

காசினியில் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு

பாய்ச்சலது பாயாதே பாழ் போகாதே

பலவேத சாஸ்திரமும் பாரு பாரு

ஏச்சல் இல்லாதவர் பிழைக்கச் செய்த மார்க்கம்

என் மக்காள் எண்ணி எண்ணிப் பாரீர் நீரே

3

பாரப்பா நாலுவேதம் நாலும் பாரு

பற்று ஆசை வைப்பதற்கோ பிணையோ கோடி

வீரப்பா ஒன்று ஒன்றுக்கு ஒன்றை மாறி

வீணிலே அவர் பிழைக்கச் செய்த மார்க்கம்

தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள்

தெய்வநிலை ஒருவருமே காணார் காணார்

ஆரப்பா நிலை நிற்கப் போறார் ஐயோ

ஆச்சரியம் கோடியிலே ஒருவன் தானே

4

ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும்

உத்தமனாய் பூமிதனில் இருக்க வேணும்

பருவமதில் சேறுபயிர் செய்ய வேணும்

பாழிலே மனத்தை விடான் பரம ஞானி

திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி

தேசத்தில் கள்ளரப்பா கோடா கோடி

வருவார்கள் அப்பனே அநேகம் கோடி

வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே

5

தானென்ற தானே தான் ஒன்றே தெய்வம்

தகப்பனும் தாயும் அங்கே புணரும் போது

நானென்று கருப்பிடித்துக் கொண்டு வந்த

நாதனை நீ எந்நாளும் வணங்கி நில்லு

கோன் என்ற திருடனுக்கும் தெரியும் அப்பா

கோடான கோடியிலே ஒருவன் உண்டு

ஏன் என்றே மனத்தாலே அறிய வேணும்

என் மாக்கள் நிலை நிற்க மோட்சம் தானே

6

மோட்சமது பெறுவதற்குச் சூட்சம் கேளு

முன் செய்த பேர்களுடன் குறியைக் கேளு

ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு

எல்லாரும் கூடழிந்தது எங்கே கேளு

பேச்சலது மாய்கையப்பா ஒன்றும் இல்லை

பிதற்றுவார் அவர் அவரும் நிலையும் காணார்

கூச்சலது பாளையந்தான் போகும் போது

கூட்டோடே போச்சுது அப்பா மூச்சுத் தானே

7

மூச்சொடுங்கிப் போன இடம் ஆரும் காணார்

மோட்சத்தின் நரகாதி இருப்பும் காணார்

வாச்சென்றே வந்தவழி ஏற்றம் காணார்

வளிமாறி நிற்கின்றார் மணிவழியும் காணார்

வீச்சப்பா வெட்ட வெளி நன்றாய்ப் பாரு

வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே

ஆச்சப்பா கருவுதனில் அமைத்தால் போலாம்

அவனுக்கே தெரியும் அல்லால் அறிவாய்ப் பாரே

8

பாரப்பா உலகுதனில் பிறவி கோடி

படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி

வீரப்பா அண்டத்தில் பிறவி கோடி

வெளியிலே ஆடுதப்பா உற்றுப் பாரு

ஆரப்பா அணுவெளியில் உள்ள நீதான்

ஆச்சரியம் புழுக்கூடு அலை மோதப்பா

கூரப்பா அண்டத்தில் பிண்டமாகும்

குணவியவான் ஆனக்கால் சத்தியமாமே

9

சத்தியமே வேணுமடா மனிதன் ஆனால்

சண்டாளம் செய்யாதே தவறிடாதே

நித்திய கர்மம் விடாதே நேமம் விட்டு

நிட்டையுடன் சமாதி விட்டு நிலை பேராதே

புத்தி கெட்டுத் திரியாதே பொய் சொல்லாதே

புண்ணியத்தை மறவாதே பூசல் கொண்டு

கத்தியதோர் சள்ளிட்டுத் தர்க்கியாதே

கர்மியென்று நடவாதே கதிர்தான் முற்றே

ஞானம் 2

[தொகு]

1

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே

உயர் ஞானம்

2

உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கி

உறங்குகின்ற போதெல்லாம் அதுவே யாகும்

பெண்ணின்பால் இந்திரியம் விடும்போது எல்லாம்

பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு

திண்ணும் காய் இலை மருந்தும் அதுவே யாகும்

தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்

மண்ணூழி காலம் மட்டும் வாழ்வார் பாரு

மறலி கையில் அகப்படவும் மாட்டார் தாமே

3

ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று

உமையாளும் கணபதியும் முந்தியாகி

விண்ணொளியாம் அம்மரம் ஓம் அவ்வும் உவ்வும்

விதித்த பரம் ஒருவருக்கும் எட்டாது அப்பா

பண்ணான உன்னுயிர் தான் சிவம் அதாச்சு

பாற்கடலில் பள்ளி கொண்டோன் விண்டுவாச்சு

கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்

கலந்து உருகி ஆடுமடா ஞானம் உற்றே

4

விந்துநிலை தனியறிந்து விந்தைக் கண்டால்

விதமான நாதமது குருவாய்ப் போகும்

அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால்

ஆதியந்த மானகுரு நீயே ஆவாய்

சந்தேகம் இல்லையடா புலத்தி அன்னே

சகலகலை ஞானம் எல்லாம் இதற்கு ஒவ்வாவே

முந்தாநாள் இருவருமே கூடிச் சேர்ந்த

மூலமதை அறிவாக்கி மூலம் பாரே

5

மூலமதை அறிந்தக்கால் யோகம் ஆச்சு

முறைமையுடன் கண்டக்கால் வாதம் ஆச்சு

சாலமுடன் கண்டவர்முன் வசமாய் நிற்பார்

சாத்திரத்தைச் கண்டரிதால் அவனே சித்தன்

சீலமுள்ள புலத்தியனே பரமயோகி

செப்பு மொழி தவறாமல் உப்பைக் கண்டால்

ஞாலமுள்ள எந்திரமாம் சோதி தன்னை

நாட்டினால் சகலசித்தும் நல்கும் முற்றே

ஞானம் – 3

[தொகு]

1

பாரப்பா சீவன் விட்டுப் போகும் போது

பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார்

ஆரப்பா அறிந்தவர்கள் ஆரும் இல்லை

ஆகாய சிவத்துடனே சேரும் என்பார்

காரப்பா தீயுடல் தீச் சேரும் என்பார்

கருவறியா மானிடர்கள் கூட்டம் அப்பா

சீரப்பா காமிகள் தாம் ஒன்றாய்ச் சேர்ந்து

தீய வழிதனைத் தேடி போவார் மாடே

2

மாடுதான் ஆனாலும் ஒரு போக்கு உண்டு

மனிதனுக்கோ அவ்வளவுத் தெரியாது அப்பா

நாடுமெத்த நரகம் என்பார் சொர்க்கம் என்பார்

நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்

ஆடுகின்ற தேவதைகள் அப்பா கேளு

அரியதந்தை இனம் சேரும் என்றுந் தோணார்

சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பாய் எண்ணித்

தளமான தீயில் விழத் தயங்கினாரே

3

தயங்காமல் பிழைப்பதற்கே இந்த ஞானம்

சார்வாகப் பாராட்டும் ஞானம் வேறே

மயங்குதற்கு ஞானம்பார் முன்னோர் கூடி

மாட்டினார் கதை காவ்யம் புராணம் என்றும்

இயலான ரசந்தனில் ஈப்புகுந்தாற் போலும்

இசைத்திட்டார் சாத்திரங்கள் ஆறென்றே தான்

வயலான பயன்பெறவே வியாசர் தாமும்

மாட்டினார் சிவனார் உத்தரவினாலே

4

உத்தாரம் இப்படியே புராணம் காட்டி

உலகத்தில் பாரதம் போல் கதை உண்டாக்கி

கர்த்தாவைத் தானென்று தோண ஒட்டாக்

கபட நாடகம் மாகம் ஏதம் சேர்த்துச்

சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க்கு எல்லாம்

சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடிப்

பத்தாகச் சைவர்க்கு ஒப்பனையும் செய்து

பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே

5 பாடினதோர் வகையேது சொல்லக் கேளு

பாரத புராணம் என்ற சோதியப்பா

நீடியதோர் ராவணன் தான் பிறக்க என்றும்

நிலையான தசரதன்கை வெல்ல என்றும்

நீடியவோ ராசன் என்றும் முனிவர் என்றும்

நிறையருள் பெற்றவர் என்றும் தேவர் என்றும்

ஆடியதோர் அரக்கர் என்றும் மனிதர் என்றும்

பாடினார் நாள்தோறும் பகையாய்த் தானே

6

கழிந்திடுவார் பாவத்தால் என்று சொல்லும்

கட்டியதால் நல்வேதம் அறு சாத்திரங்கள்

அழிந்திடவே சொன்னது அல்லால் வேறொன்று இல்லை

அதர்மம் என்றும் தர்மம் என்றும் இரண்டு உண்டாக்கி

ஒழிந்திடுவார் என்று சொல்லிப் பிறப்பு உண்டு என்றும்

உத்தமனாய்ப் பிறப்பன் என்றும் உலகத்தோர்கள்

தெளிந்திடுவோர் குருக்கள் என்றும் சீடர் என்றும்

சீவனத்துக்கு அங்கல்லோ தெளிந்து தாணே

ஞானம் - 4

[தொகு]

1

பூரணமே தெய்வம் என உரைத்தார் ஐயா

பூரணத்தை இன்னது என்று புகல வேண்டும்

காரணத்தைச் சொல்லுகிறேன் நினைவாய்க் கேளு

கலையான பதினாறும் பூரணமே ஆகும்

மாரணமா மூலகத்தில் மதி மயங்கி மதிகெட்டுப்

பூரணத்தை இகழ்ந்தார் ஐயா

வாரணத்தை மனம் வைத்துப் பூரணத்தைக் காத்தால்

வாசி என்ற சிவயோக வாழ்க்கை ஆச்சே

2

ஆச்சப்பா இந்தமுறை பதினெண் பேரும்

அயன்மாலும் அரனோடும் தேவர் எல்லாம்

மூச்சப்பா தெய்வம் என்றே அறியச் சொன்னார்

முனிவோர்கள் இருடியர் இப்படியே சொன்னார்

பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்துப்

பேரான பூரணத்தை நினைவாக் காரு

வாச்சப்பா பூரணத்தைக் காக்கும் பேர்கள்

வாசி நடுமைத்துள் வாழ்வார் தானே

3

தானென்ற பெரியோர்கள் உலகத்து உள்ளே

தாயான பூரணத்தை அறிந்த பின்பு

தேனென்ற பானமதைப் பானம் செய்து

தெவிட்டாத மௌன சிவயோகம் செய்தார்

ஊனென்ற உடலை நம்பி இருந்த பேர்க்கே

ஒரு நான்கு வேதம் என்றும் நூல் ஆறென்றும்

நானென்றும் நீயென்றும் சாதி என்றும்

நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத் தானே

4

பிழைப்பதற்கு நால் பலவும் சொல்லா விட்டால்

பூரணத்தை அறியாமல் இறப்பார் என்றும்

உழைப்பதற்கு நூல் கட்டிப் போடா விட்டால்

உலகத்தில் புத்தி கெட்டே அலைவார் என்றும்

தழைப்பதற்குச் சாதி என்றும் விந்து என்றும்

தந்தை தாய் பிள்ளை என்றும் பாரி என்றும்

உழைப்பதற்குச் சொன்னது அல்லால் கதி வேறில்லை

உத்தமனே அறிந்தோர்கள் பாடினார்கள்

5

பாடினார் இப்படியே சொல்லா விட்டால்

பரிபாடை அறியார்கள் உலக மூடர்

சாடுவார் சிலபேர்கள் பல நூல் பார்த்துத்

தமைமறந்து படுகுழியில் விழுவார் சாவார்

வாடுவார் நாமம் என்றும் ரூபம் என்றும்

வையகத்தில் கல்செம்பைத் தெய்வம் என்றும்

நாடுவார் பூரணத்தை அறியார் மூடர்

நாய்போலே குரைத்தல்லோ ஒழிவார் தானே

6

காணாமல் அலைந்தோர்கள் கோடா கோடி

காரணத்தை அறிந்தோர்கள் கோடா கோடி

வீணாகப் புலம்பினதால் அறியப் போமோ

விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்கு ஆகும்

கோணாமல் சுழுமுனியில் மனத்தை வைத்துக்

குருபாதம் இருநான்கில் நாலைச் சேர்த்து

நாணாமல் ஒருநினைவாய்க் காக்கும் போது

நாலும் எட்டும் ஒன்றாகும் நாட்டிக் கொள்ளே

7

ஊதியதோர் ஊரறிந்தால் அவனே சித்தன்

உத்தமனே பதினாறும் பதியே ஆகும்

வாதிகளே இருநான்கும் பதியின் பாதம்

வகை நான்கும் உயிராகும் மார்க்கம் கண்டு

சோதிபரி பூரணமும் இலை மூன்றும் தான்

தூங்காமல் தூங்கி அங்கே காக்கும் போது

ஆதியென்ற பராபரையும் அரனும் ஒன்றாய்

அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே

8

பாரப்பா உதயத்தில் எழுந்து இருந்து

பதறாமல் சுழுமுனையில் மனத்தை வைத்துக்

காரப்பா பரிதிமதி இரண்டு மாறிக்

கருவான சுழுமுனையில் உதிக்கும் போது

தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு

தியங்காமல் சுழுமுனைக்குள் அடங்கும் பாரு

சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும்

சிதறாமல் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து போமே

9

ஒன்றான பூரணமே இதுவே ஆச்சு

உதித்தகலை தானென்றும் இதுவே ஆச்சு

நன்றாகத் தெளிந்தவர்க்கு ஞானம் சித்தி

நாட்டாமல் சொன்னதனால் ஞானம் ஆமோ

பன்றான வாதிகுரு சொன்ன ஞானம்

பரப்பிலே விடுக்காதே பாவம் ஆகும்

திண்டாடும் மனத்தோர்க்குக் காணப் போகா

தெளிந்தவர்க்குத் தெரிவித்த உகமை தானே

10

உகமை இன்னம் சொல்லுகிறேன் உலகத்துள்ளே

உவமையுள்ள பரிகாசம் நனி பேசாதே

பகைமை பண்ணிக் கொள்ளாதே வீண் பேசாதே

பரப்பிலே திரியாதே மலை ஏறாதே

நகையாதே சினங்காதே உறங்கிடாதே

நழுகாதே சுழுமுனையில் பின் வாங்காதே

செகமுழுதும் பரிபூரணம் அறிந்து வென்று

தெளிந்துபின் உலகத்தோடு ஒத்து வாழே

11

வாழாமல் உலகம் விட்டு வேடம் பூண்டு

வயிற்றுக்காய் வாய் ஞானம் பேசிப் பேசித்

தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை

தமை அறியாச் சண்டாளர் முழு மாடப்பா

பாழாகப் பாவிகளின் சொல் கேளாதே

பதறாதே வயிற்றுக்காக மயங்கிடாதே

கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக் கேட்டுக்

கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே

12

உடலுயிரும் பூரணமும் மூன்றும் ஒன்றே

உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறு என்பர்

உடலுயிரும் பூரணமும் ஏது என்றக்கால்

உத்தமனே பதினாறும் ஒருநான்கு எட்டும்

உடலுயிரும் பூரணமும் அயன் மால் ஈசன்

உலகத்தோர் அறியாமல் மயங்கிப் போனார்

உடலுயிரும் பூரணடி முடியும் ஆச்சே

உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே

13

பதியின்ன இடம் என்ற குருவைச் சொல்லும்

பரப்பிலே விள்ளாதே தலை இரண்டாகும்

விதியின்ன இனம் என்று சொல்லக் கெளு

விண்ணான விண்ணுக்குள் அண்ணாக்கு அப்பா

மதி ரவியும் பூரணமும் கண்வாய் மூக்கும்

மகத்தான செவியோடு பரிசம் எட்டும்

பதியவிடம் சுழுமுனை என்றதற்குப் பேராம்

பகருவார் சொர்க்கமும் கைலாசம் என்றே

14

கைலாசம் வைகுந்தம் தெய்வலோகம்

காசி கன்யாகுமரி என்றும் சேது என்றும்

மயிலாடு மேகம் என்றும் நாகம் என்றும்

மாய்கை என்றும் மின்னல் என்றும் மவுனம் என்றும்

துயிலான வாடை என்றும் சூட்சம் என்றும்

சொல்லற்ற இடம் என்றும் ஒடுக்கம் என்றும்

தயிலான பாதம் என்றும் அடி முடி என்றும்

தாயான வத்து என்றும் பதியின் பேரே

15

பேரு சொன்னேன் ஊர் சொன்னேன் இடமும் சொன்னேன்

பின்கலையும் முன் கலையும் ஒடுக்கம் சொன்னேன்

பாருலகில் பல நூலின் மார்க்கம் சொன்னேன்

பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன்

சீருலகம் இன்னது என்று தெருட்டிச் சொன்னேன்

சித்தான சித்து எல்லாம் சுருக்கிச் சொன்னேன்

நேரு சொன்னேன் வழி சொன்னேன் நிலையும் சொன்னேன்

நின்னுடம்பை இன்னது என்று பிரித்துச் சொன்னேன்

16

பிரித்து உரைத்தேன் சூத்திரம் ஈரெட்டுக் குள்ளே

பித்தர்களே நன்றாகத் தெரிந்து பார்க்கில்

விரித்து உரைத்த நூலினது மார்க்கம் சொன்னேன்

விள்ளாதே இந்த நன்னூல் இருக்குது என்று

கருத்துடனே அறிந்து கொண்டு கலை மாறாதே

காரியத்தை நினைவாலே கருத்தில் கொள்ளு

சுருதிசொன்ன செய்தி எல்லாம் சுருக்கிச் சொன்னேன்

சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே

ஞானம் 5

[தொகு]
1 

கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா

கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா

சர்ப்பமென்ன நாகமதோர் தலையில் நின்று

சாகாத கால்கண்டு முனையில் ஏறி

நிற்பமென்று மனம் உறுத்து மனத்தில் நின்று

நிசமான கருநெல்லி சாற்றைக் காணு

சாற்பமென்று விட்டு விட்டால் அலைந்து போவாய்

துரியமென்ற பராபரத்தில் சென்று கூடே

2

கூடப்பா துரியம் என்ற வாலை வீடு

கூறரிய நாதர் மகேச்சுரியே என்பார்

நாடப்பா அவன் தனையே பூசை பண்ணு

நந்தி சொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும்

ஊடப்பா சிகாரவரை எல்லாம் தோன்றும்

ஊமையென்ற அமிர்த வெள்ளம் ஊறலாகும்

தேடப்பா இதுதேடு காரியம் ஆகும்

3

ஆமென்ற பூரணம் சுழுமுனையில் பாராய்

அழகான விந்துநிலை சந்திரனில் பார்

ஓமென்ற ரீங்காரம் புருவ மையம்

உத்தமனே வில்லென்ற வீட்டில் காணும்

வாமென்ற அவள்பாதம் பூசை பண்ணு

மற்றொன்றும் பூசையல்ல மகனே சொன்னேன்

நாமென்ற பரமனல்லோ முதல் எழுத்தாம்

பாடினேன் வேதாந்தம் பாடினேனே

4

பாடுகின்ற பொருல் எல்லாம் பதியே ஆகும்

பதியில் நிற்கும் அட்சரந்தான் அகாரம் ஆகும்

நாடுகின்ற பரமனது ஓங்காரம் ஆகும்

நலம் பெரிய பசுதானே உகாரம் ஆகும்

நீடுகின்ற சுழுமுனையே தாரை ஆகும்

நின்றதோர் இடைகலையே நாத விந்தாம்

ஊடுகின்ற ஓங்கார வித்தை ஆகும்

ஒளியான அரியெழுத்தை ஊணிப் பாரே

5

ஊணியதோர் ஓங்காரம் மேலும் உண்டே

உத்தமனே சீருண்டே ஊணிப் பாரே

ஆணியாம் நடுநாடி நடுவே மூட்டும்

ஆச்சரிய எழுத்தெல்லாம் அடங்கி நிற்கும்

ஏணியாய் இருக்குமடா அஞ்சு வீடே

ஏகாந்தம் ஆகிய அவ்வெழுத்தைப் பாரு

தோணிபோல் காணுமடா அந்த வீடு

சொல்லாதே ஒருவருக்கும் துறந்திட்டேனே

6

துறந்திட்டேன் மேல்மூலம் கீழ்மூலம் பார்

துயரமாய் நடு நிலையை ஊணிப் பாராய்

அறைந்திட்டேன் நடுமூலம் நடுநாடிப் பார்

அப்பவல்லோ வரை தாக்கும் தாரை காணும்

உறைந்திட்ட ஐவரும் தான் நடனம் காணும்

ஒளிவெளியும் சிலம்பொலியும் ஒன்றாய்க் காணும்

நிறைந்திட்ட பூரணமும் இது தானப்பா

நிசமான பேரொளிதான் நிலைத்துப் பாரே

7

சும்மா நீ பார்க்கையிலே மனத்தை அப்பா

சுழுமுனையில் ஓட்டி அங்கே காலைப் பாராய்

அம்மா நீ தேவியென்று அடங்கிப் பாராய்

அப்பவல்லோ காயசித்தி யோக சித்தி

உம்மாவும் அம்மாவும் அதிலே காணும்

ஒரு மனமாய் சுழுமுனையில் மனத்தை ஊன்று

நம்மாலே ஆனதெல்லாம் சொன்னோம் அப்பா

நாதர்களில் இதை யாரும் பாடார் தானே

8

காணுகின்ற ஓங்கார வட்டம் சற்றுக்

கனலெழுப்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்

பூணுகின்ற இடைகலையில் பரம் போலாடும்

பொல்லாத தேகம் என்றால் உருகிப் போகும்

ஆணவங்கள் ஆனவெல்லாம் அழிந்து போகும்

அத்துவித துரியாட்டம் ஆடி நிற்கும்

ஊணியதோர் எழுத்தெல்லாம் தேவியாகும்

ஓங்காரக் கம்பமென்ற உணர்வு தானே

9

உணர்வென்றால் சந்திரனில் ஏறிப் பாவி

ஓடியங்கே தலையென்ற எழுத்தில் நில்லே

அணுவென்றால் மனையாகும்சிவனே உச்சி

அகாரமென்ன பதியுமென்ன சூட்சமாகும்

கணுவென்ன விற்புருவம் அகண்ட வீதி

கயிலாயம் என்றதென்ன பரத்தின் வீடு

துணுவென்ற சூரியன்தன் நெருப்பைக் கண்டு

தூணென்ற பிடரிலே தூங்கு தூங்கே

10

மூவெழுத்தும் ஈரெழுத்தும் ஆகிநின்ற

மூலமதை அறிந்து உரைப்போன் குருவுமாகும்

ஊவெழுத்துக் குள்ளேதான் இருக்குது அப்பா

உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான்

யாவருக்கும் தெரியாதே அறிந்தோம் என்றே

அவரவர்கள் சொல்வார்கள் அறியா மூடர்

தேவலோடு மால் அயனும் தேடிக் காணார்

திருநடனம் காண முத்தி சித்தியாமே

11

ஈரெழுத்து ஓரெழுத்தும் ஆகியாங்கே

இயங்கி நிற்கும் அசபையப்பா மூலத்துள்ளே

வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டும் கொண்டு

வித்திலே முளைத்து எழுந்து விளங்கி நிற்கும்

சீரெழுத்தை ஊணி நல்ல வாசியேறித்

தெரு வீதி கடந்த மணி மண்டபத்துச்

சாரெழுத்தின் உட்பொருளாம் பரத்தை நோக்கிச்

சார்ந்தவர்க்குச் சித்தி முத்தி தருமே தானே

12

ஏகமெனும் ஓரெழுத்தின் பயனைப் பார்த்தே

எடுத்துரைக்க இவ்வுலகில் எவரும் இல்லை

ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக் கொண்டே

அறிந்தம் என்பார் மவுனத்தை அவனை நீயும்

வேகாச்சா காத்தலைகால் விரைந்து கேளாய்

விடுத்ததனை உரைப்பவனே ஆசானாகும்

தேகமதில் ஓரெழுத்தைக் காண்போன் ஞானி

திருநடனம் காண முத்தி சித்தியாமே

13

குருவாக உமையாக எனக்குத் தந்த

கூறரிய ஞானமது பத்தில் மூன்று

பொருளாகச் சொல்லி விட்டேனப்பா நீதான்

பொருள் அறிந்தால் பூரணமும் பொருந்திக் காணே

அருளாக இந்நூலைப் பழித்த பேர்கள்

அருநரகில் பிசாசெனவே அடைந்து வாழ்வார்

அருளாக ஆராய்ந்து பார்க்கும் பேர்கள்

ஆகாயம் நின்றநிலை அறியலாமே
  • முற்றும்

அகத்தியம்

அகத்தியம் 12000 நூற்பாக்களைக் கொண்டிருந்தது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அரசியல், அமைச்சியல், பார்ப்பனவியல், சோதிடவியல் முதலான இயல்களை அகத்தியம் கொண்டிருந்தது. சான்று:முனைவர் பாக்யமேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,NCBH வெளியீடு,சென்னை-98,முதற்பதிப்பு-சூலை-2008.

இந்த நூற்பாக்கள்

என்றார் அகத்தியன்
என்பது அகத்தியம்

என்பனவற்றில் ஒன்றைப் பெற்று முடிகின்றன.

மொழிமுதல்

பெயரினும் வினையினும் மொழிமுதல் அடங்கும்.  

நூற்பா விளக்கம் பெயர்ச்சொல், வினைச்சொல் என்னும் இரண்டில் மொழியானது அடக்கம்.

உரை இயல்பு

வயிர ஊசியும் மயன்வினை இரும்பும்
செயிரறு பொலிவினைச் செம்மைச்செய் ஆணியும்
தமக்கமை கருவியும் தாமமை பவைபோல்
உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே. 
 
நூற்பா விளக்கம் கண்ணாடியை அறுக்கும் வயிரவூசி போலவும், தட்டான் பொன்னிரும்பால் அணிகலன் செய்வது போலவும், அணிகலன் செய்ய உதவும் அரம் என்னும் ஆணி போலவும் செயல்பட்டு, நூற்பாவுக்கு அமைந்த கருவியாகச் செயல்பட்டு, ஆசிரியன் உரைத்த திறத்தை உணர்த்துவதே, உரைநூலின் இயல்பாக இருக்கவேண்டும்.

ஒருமொழி

பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே
அடிசில் பொத்தகம் சேனை அமைந்த
கதவம் மாலை கம்பலம் அனைய 
 
நூற்பா விளக்கம் சமைத்த உணவிலும், எழுதிய ஓலைகளைப் பொத்தல் போட்டுக் கட்டிய சுவடியிலும், பலர் சேர்ந்திருக்கும் படையிலும், தாழ்ப்பாள் முதலானவற்றுடன் கூடிய கதவிலும், மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையிலும், மயிர்நூலால் நெய்யப்பட்ட கம்பலத்திலும் பல பொருள்கள் இயைந்திருந்தாலும், அவை ஒன்று எனவே கொள்ளப்படும்.

தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்

கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபால் இருபுறச் சையத்து
உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும்
முடியுடை மூவரும் இடுநில ஆட்சி
அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த
பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும்

நூற்பா விளக்கம் இந்த நூற்பா திரிசொல் வழங்கும் 15 நாடுகளையும், செந்தமிழ் வழங்கும் 15 நாடுகளையும் பட்டியலிடுகிறது.

திரிசொல் வழங்கும் நிலம்

    1. கன்னித் தென்கரைக்கண் பழந் தீவம்
    2. சிங்களம்
    3. கொல்லம்
    4. கூவிளம் என்னும் எல்லையில் புறத்தீவும்
    5. ஈழம்
    6. பல்லவம்
    7. கன்னடம்
    8. வடுகு
    9. கலிங்கம்
    10. தெலிங்கம்
    11. கொங்கணம்
    12. துளுவம்
    13. குடகம்
    14. குன்றம் என்பன
    15. குடபால் இருபுறச் சையத்து உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்கள்

செந்தமிழ் நிலம்

    • சேரர் சோழர் பாண்டியர் என முடியுடை மூவரும் (3)
    • இடுநில ஆட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் (10)
    • உடனிருப்பு இருவரும் (2) படைத்த பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும்

ஆக மொத்தம் 15 நாடுகள்

வேற்றுமை 7 என்பது 8 ஆனது

ஏழியன் முறைய எதிர்முக வேற்றுமை
வேறுஎன விளம்பான் பெயரது விகாரமென்று
ஓதிய புலவனும் உளன்ஒரு வகையான்
இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன் 
 
நூற்பா விளக்கம் தமிழில் வேற்றுமை 7 என்று ஒரு இலக்கணப் புலவன் ஓதினான். எட்டாம் வேற்றுமையைப் பெயர்(எழுவாய்) வேற்றுமையின் திரிபு என அவன் கொண்டான். இது ஒரு வகை. இந்திரன் என்பவன் விளிவேற்றுமையை எட்டாம் வேற்றுமை என்றான்.

முதல் வேற்றுமை

வினைநிலை உரைத்தலும் வினாவிற்கு ஏற்றலும்
பெயர்கொள வருதலும் பெயர்ப்பய னிலையே

நூற்பா விளக்கம் முதல் வேற்றுமை பயனிலை கொள்ளும் வகை இதில் கூறப்பட்டுள்ளது.
        வினைகந்தன் வந்தான்
        உரைத்தல்கந்தன் சொன்னான்
        வினாவிற்கு ஏற்றல்கந்தன் யார்
        பெயர்கொள வருதல்கந்தன் நல்லன்

மூன்றாம் வேற்றுமை

ஆலும் ஆனும் ஓடும் ஒடுவும்
சாலும் மூன்றாம் வேற்றுமைத் தனுவே 
 
நூற்பா விளக்கம் வேற்றுமை உருபை இவர் வேற்றுமைத் தனு என்கிறார். ஆல், ஆன், ஒடு, ஓடு என்பவை மூன்றாம் வேற்றுமைத் தனு.

ஆறாம் வேற்றுமை

ஆறன் உருபே அது ஆது அவ்வும்
வேறொன்று உரியதைத் தனக்குரிய தையென
இருபாற் கிழமையின் மருவுற வருமே
ஐம்பால் உரிமையும் அதன்தற் கிழமை 
 
நூற்பா விளக்கம் அது, ஆது, உ - ஆகியவை ஆறாம்வேற்றுமை உருபுகள். வேறொன்றுக்கு உரியது, தனக்கு உரியது என இரு பாங்கில் வரும். ஆண்பால், பெண்பார், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் ஐந்து பாலிலும் பொருந்தி வரும்.

முற்றின்பொழி

மற்றுச்சொல் நோக்கா மரபின அனைத்தும்
முற்றி நிற்பன முற்றின் மொழியே 
 
நூற்பா விளக்கம் வேறு எந்தச் சொல்லும் வேண்டாது தானே முற்றிநிற்பது முற்றின்மொழி 
 
செய்தனென் (யான் என்பது இல்லாமலேயே அதனை உணர்த்தும்)
செய்தனை (நீ)
செய்தனன் (அவன்)
செய்தனள் (அவள்)
செய்தனர் (அவர்)
செய்தது (அது)
செய்தன (அவை)

மாரைக்கிளவி

காலமொடு கருத வரினும் மாரை
மேலைக் கிளவியொடு வேறுபாடு இன்றே 
 
நூற்பா விளக்கம் செய்ம்மார் வந்தார் (இதில் செய்ம்மார் என்பது எதிர்காலத்தை மட்டும் உணர்த்தும் என்பது அகத்தியன் கருத்து)

முற்றுச்சொல்

முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினும்
முற்றுச்சொல் என்னும் முறைமையில் திரியா 
 
நூற்பா விளக்கம் உண்கு வந்தேன் (உண்டேன் வந்தேன்) உண்கும் வந்தேம் (உண்டோம் வந்தோம்)

பெயரெச்சம்

காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது
பெயர்கொள் ளும்மது பெயரெச் சம்மே

நூற்பா விளக்கம் செய்த பொருள் (இதில் இறந்தகாலமும், செய்தல் வினையும் தோன்றின. செய்தது அவனா, அவளா, அவரா எனத் தெரியவில்லை. எனவே பால் தோன்றவில்லை. இவ்வாறு வருவது பெயரெச்சம்) செய்கின்ற பணி, செய்யும் கை என்றெல்லாம் பிற காலத்தோடும், பெயரோடும் ஒட்டிக்கொள்க.

வினையெச்சம்

காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது
வினைகொள் ளும்மது வினையெச் சம்மே 

நூற்பா விளக்கம் செய்து வந்தான்

முற்றுமொழி

எனைத்துமுற்று அடுக்கினும் அனைத்தும்ஒரு பொருள்மேல்
நினைத்துக்கொள நிகழும் நிகழ்த்திய முற்றே
வினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும்
பலபல அடுக்கினும் முற்றுமொழிப் படியே 
 
நூற்பா விளக்கம் நினைத்தான் வந்தான் அமர்ந்தான் கந்தன் (பல முற்றுகள் அடுக்கி வந்தன) நினைத்து வந்து அமர்ந்து பேசினான் (வினையெச்சங்கள் அடுக்கி வந்தன) நல்ல சிறிய அழகிய பறவை (பெயரெச்சங்கள் அடுக்கி வந்தன)

பால் மயக்கம்

கண்டுபால் மயங்கும் ஐயக் கிளவி
நின்றோர் வருவோர் என்றுசொல் நிகழக்
காணா ஐயமும் பல்லோர் படர்க்கை  

நூற்பா விளக்கம்
மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா (மூர்க்கன் என்னும் உயர்திணையும், முதலை என்னும் அஃறிணையும் இணைந்து வந்து விடா என்னும் பல்லோர் படர்க்குயில் முடிவுற்றது)
ஊன் துவை கறி சோறு உண்டு வருந்தும் தொழில் (கடிக்கும் ஊன்,நக்கும் துவையல். கொறிக்கும் கறி, தின்னும் சோறு ஆகியவை உண்ணல் என்னும் பொதுவினையைக் கொண்டு முடிந்தன)

முதுமறை நெறி

உலக வழக்கமும் ஒருமுக் காலமும்
நிலைபெற உணர்தரு முதுமறை நெறியான் 
 
நூற்பா விளக்கம் உலக வழக்கத்தையும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்கால அறிவையும் உணர்ந்து நடப்பது முதுமறை நெறி

அடுக்குத்தொடர்

அசைநிலை இரண்டினும் பொருண்மொழி மூன்றினும்
இசைநிறை நான்கினும் ஒருமொழி தொடரும் 
 
நூற்பா விளக்கம்
ஒக்கும் ஒக்கும் (அசைநிலை)
போ போ போ (பொருண்மொழி)
பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ (இசைநிறை)

 

அகத்தியரின் மாணவர்கள்

 

  1. செம்பூண்சேய்
  2. வையாபிகனர்
  3. அதங்கோட்டாசான்
  4. அபிநயனர்
  5. காக்கைப்பாடினியார்
  6. தொல்காப்பியர்
  7. வாய்ப்பியர்
  8. பனம்பாரனார்
  9. கழாகரம்பர்
  10. நத்தத்தர்
  11. வாமனர்
  12. துராலிங்கர்