முல்லைப்பாட்டும் பண்டைத் தமிழகமும்
முனைவர் இரா. ருக்மணி
பதிப்புரை
‘முல்லைப்பாட்டு’ பற்றி முல்லைச்செல்வியே எழுதியுள்ளார்.
அவர் எழுதுவதுதான் பொருத்தம்
எவர் எழுதியும் பயனில்லை.
சங்க இலக்கியம் ஒரு சுகமான கடல்.
அதில் நீந்திக் கரையேறுவது கடினம் ; சாதனை.
கட்டுமரங்களும் கப்பல்களும் சுகம் தராது.
இந்த அகப்பாட்டில் அகமும் புறமும் வெளிப்பட
முனைவர் ருக்மணி சிறப்பாக ஆய்ந்துள்ளார்.
தமிழைச் ‘செம்மொழி’ ஆக்கி சிறப்பித்து விட்டோம்.
இக்காலக்கட்டத்தில் எல்லோரும் இதனை அறிந்து
கொண்டாட எளிமைப்படுத்த வேண்டும்.
இனிமைப்படுத்த வேண்டும்.
அதை இவர் செய்கிறார்.
இவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
காவ்யா சண்முகசுந்தரம்
அணிந்துரை
அகம் சார்ந்த தமிழ் இவக்கியத்தில்
அழகான ஒரு நூல் முல்லைப்பாட்டு.
அதனை அற்புதமாகத் திறனாய்வு செய்துள்ளார்.
ஆசிரியர் முல்லைச்செல்வி.
கவி நடையிலே இருக்கிற அதே அழகு
உரை நடையிலேயும் இருப்பது
இதன் சிறப்பு.
நயமாக எழுதப்பட்டிருக்கிற இந்த உரை
நாடகம் பார்ப்பது போன்ற ஓர் உணர்வினையே
ஏற்படுத்துகிறது.
இது
மாணவர்களை மேம்படுத்துகிற நூல்
மற்றவர்களை மகிழ்விக்கிற நூல்.
படித்து மகிழுஙகள்.
பயன்பெறுங்கள்.
வாழ்க....... வளர்க.
அன்புடன்
தென்கச்சி கோ. சுவாமிநாதன்
சென்னை-91
06.07.2008
என்னுரை
கல்லூரி நாட்களில் முல்லைப்பாட்டினைச் சுவைத்திருக்கிறேன். அடி அளவால் குறைந்தது எனினும், தலைவன்-தலைவி இருவரது மன உணர்வுகளை ஒரு சேரப் படம்பிடித்துக் காட்டும் அற்புத உணர்வோவியம் முல்லைப்பாட்டு.
சென்ற ஆண்டு தமிழகம் வந்திருந்த அமெரிக்கத் தமிழர் திருமதி. வைதேகி கணேசன் அவர்கள் தமிழின் மீது கொண்ட பெரு விருப்பத்தால், சங்க இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டபோது, அவர்களுக்கு முதன்முதலாகக் கற்பிக்கத் தொடங்கியது முல்லைப்பாட்டு. அதன் விளைவாக முகிழ்த்ததே இந்நூல்!
என் வளர்ச்சிக்கு வித்திட்டு உற்றுழி உதவிவரும் சகோதரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களுக்கும், என் எழுத்துப் பணிகளுக்குத் துணையாய் இருந்து வரும் மகன் இராமிற்கும் நன்றி கூறும் கடப்பாடுடையேன்.
நூலை அச்சிட்டு வெளியிடும் பேராசிரியர் முனைவர் காவ்யா சு. சண்முகசுந்தரம் அவர்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.
முனைவர் இரா. ருக்மணி
கொரட்டூர்
சென்னை-80
பொருளடக்கம்
1. முல்லைப்பாட்டு - முன்னுரை
2. பொருட் சுருக்கம்
3. முல்லைப்பாட்டும் பண்டைத் தமிழகமும்
4. முல்லைப்பாட்டில் உவமைகள்
5. நப்பூதனாரின் வருணனைகள்
6. முல்லைப்பாட்டு-மூலமும் எளிய உரையும்
முல்லைப்பாட்டு
‘பத்துப்பாட்டு’ என்ற தொகைப்பெயரில், பாட்டு என்பதைத் தன்னுள் அடக்கியவை இரண்டு நூல்கள். ஒன்று முல்லைப்பாட்டு, மற்றொன்று குறிஞ்சிப்பாட்டு. பத்துப்பாட்டில் ஐந்தாவது நூல் முல்லைப்பாட்டு. அகம் சார்ந்த நூல்.
மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர் (தொல். அ. நூ. 57)
என்ற தொல்காப்பிய அகத்திணை மரபைப் பின்பற்றியே தலைவனின் இயற்பெயரைச் சுட்டாத அகநூலாகவே இலங்குகிறது.
முல்லைப்பாட்டு
அகத்திணையான முல்லைத்திணை ஒழுக்கத்தினைக் கூறும் இப்பாட்டிலும், ‘வஞ்சிதானே முல்லையது புறனே’ (தொல்.புறத்திணை. நூற்பா.61)என்பதற்கேற்ப 103 அடிகளில் 57 அடிகள் வஞ்சித்திணைப் பற்றியதாகவே அமைந்துள்ளது. அகத்திணை முல்லைக்கு நிலம் காடு. இங்கு தலைவி இருக்கிறாள். புறத்திணை வஞ்சிக்கும் நிலம் காடே. இங்கு தலைவன் இருக்கிறான்.இருவரும் தனித்து இருக்கும் இருத்தல் ஒழுக்கத்தினைப் பாடும் இனிய நூல் முல்லைப்பாட்டு. இந்நூல் நேரிசை ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டது.
முல்லைப்பாட்டின் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார். ஆசிரியரின் பெயரிலேயே அவரது ஊர்,தொழில் போன்ற செய்திகள் தெரியவருகின்றன. சங்கத் தொகைப்பாடல்களில் இவர் பாடியதாக வேறு எந்தப் பாடலும் கிடைக்கவில்லை. ஆசிரியரின் பெயரிலுள்ள பூதன் என்பது, அவரது இயற்பெயராக இருக்க வேண்டும். ‘ஆர்’ விகுதி, உயர்வு பற்றி சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இயற்பெயரின் முன்னுள்ள ‘ந’ என்ற எழுத்து,நக்கீரனார்,நச்செள்ளையார்,நத்தத்தனார், நக்கண்ணையார் என்றாற்போலவே, நப்பூதனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருத இடமேற்படுகிறது.
பத்துப்பாட்டில் அடி அளவால் சிறிய நூல் முல்லைப்பாட்டு. இதனை ‘நெஞ்சாற்றுப்படை’என்றும் கூறுவர். தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி,‘நெஞ்சாற்றுப்படுத்த நிறைதபு புலம்பொடு, நீடு நினைந்து தேற்றியும், ஓடு வளை திருத்தியும், மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்’(81-83), தன்னுடைய நெஞ்சினை ஆற்றுப்படுத்தி வாழும் உளப்பாங்கினைச் சுட்டுவதால், இப்பெயரும் இந்நூலுக்கு உண்டென்பர்.
முல்லைப்பாட்டின் காலம்
யவனரைப் பற்றிய குறிப்பு,
‘வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்’(மு.பா. 61)
என்று முல்லைப்பாட்டில் வருவதுபோல், நெடுநல்வாடையிலும்
‘யவனர் இயற்றிய வினைமான் பாவை’ (நெ. வா. 101)
என்று வருதலை நோக்க, இரண்டு இலக்கியங்களும் சம காலத்திலோ அல்லது முன் பின்னாகவோ தோன்றியிருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கண்ணகியின் பொருட்டு உயிர் துறக்க கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன், ‘நன்மாறன்’ என்ற பெயரில் மதுரையிட்ல ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தினன் என்பது ஆய்வாளர் கருத்து. இம்மன்னன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்றும் அழைக்கப்பட்டான். இவரை மணிமேகலை பாடிய மதுரை கூல வாணிகன் சீத்தலை சாத்தனார் புகழ்ந்து பாடியுள்ளார். இந்நன்மாறனின் புதல்வன் தான் தலையாலங்கானத்தச் செருவென்ற பாண்டியன் நெடுங்செழியன் என்பர் அராய்ச்சியாளர். அப்படியாயின் சீத்தலைச் சாத்தனார் வாழ்ந்த காலகட்டத்திற்கு அடுத்ததே இப்பாண்டியன் காலமாக இருத்தல் வேண்டும் என்று கருதலாம். இப்பாண்டியன் கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவன் (கி.பி. 210) என்பர் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார்1 (History of south India. P. 121) பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களும் இப்பாண்டியனின் காலம் ஏறாத்தாழ கி.பி. 250 என்றே குறித்துள்ளார்.2 (History of Tamil Language and Literature. P. 35-36) நெடுநல்வாடையும் முல்லைப்பாட்டும் சம காலத்தன என்று கொண்டால், முல்லைப்பாட்டின் காலம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது கி.பி. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனக் கொள்ளலாம்.
முல்லைப்பாட்டு பொருட்சுருக்கம்
தலைவன் தலைவியைப் பிரிந்தும், தலைவி தலைவனைப் பிரிந்தும் இருக்கின்ற காலத்தைச் சித்திரிக்கும் சொற்சித்திரமே முல்லைப்பாட்டு.
மேகம் முதல் மழையைப் பொழிந்த மாலைக்காலம். மழைக்காலம்.......... மாபலி நீர் வார்க்க நிமிர்ந்து நின்ற திருமாலைப் போல, நீரைச் சொரிந்தகொண்டே மேகங்கள் உயர்கின்றன. அந்த மாலை நேரத்தில், நெல்லும் மலரும் இறைவனுக்குத் தூவி, தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் துயர் தீர, நல்ல சொல் கிடைக்காதா என்று கை தொழுதுக் காத்திருந்தனர் முதிய பெண்கள். அந்நேரம் மழைக்காலக் குளிரில் நடுங்கியப் படி இடைக்குலப் பெண் ஒருத்தி, தன் வீட்டுத் தொழுவத்தில் நிற்கும் கன்று, தாய்ப்பசுவை நினைத்து அங்கும் இங்கும் சுற்றித் திரிவதைப் பார்த்து அதற்குப் பதிலளிப்பதுபோல, ‘கோவலர் பின்னே நின்று செலுத்த, உம் தாய் இப்பொழுதே வந்துவிடுவாள்’ என்று கூறினாள். அவள் சொல்லியதைக் கேட்ட வயதான பெண்கள் ‘நற்சொல் கிடைத்துவிட்டது’ என்று மகிழ்ந்தனர். தவைவியைத் தேற்றினர். என்றாலும் தலைவனைப் பிரிந்த வருத்தத்தினின்று நீங்காமல் தலைவி அழுதுகொண்டே இருக்கிறாள்...... வீட்டிலே தலைவியின் நிலை இவ்வாறிருக்க, காட்டில் அமைத்துள்ள பாசறையில் தலைவனின் நிலை என்னவென்று பார்ப்போம்
வீரர்கள் முள்ளாலே காட்டில் மதிலை உருவாக்கிப் போர்ப் பாசறை அமைக்கின்றனர். தழையால் கூரை வேயப்பட்டு, வீரர்களுக்கான தங்குமிடங்கள் தயாராயின. அப்பாடி வீட்டில் நாற்சந்தி கூடுமிடத்தில் காவலாக மதயானை நின்றது. அந்த யானை தனது உணவிற்காகக் கொடுக்கப்பட்ட கரும்பு, நெற்கதிர், அதிமதுரத் தழையை உண்ணாமல், அவற்றைத் தனது நெற்றியிலேத் தேய்த்துக் கொண்டிருந்தது. பாகரோ, பரிக்கோலினைக் கொண்டு உணவினை உண்ணுமாறு வற்புறுத்தினர். அந்தணன் தன் முக்கோலின் மேல் காவி உடையைத் தொங்கவிட்ட தன்மை போல வீரர்கள் வில்லைக் கொண்டு தூண் நாட்டி, அம்பாறாத் துணிகளை அதில் தொங்கவிட்டனர். வில்லினை ஊன்றிக் கயிற்றால் வளைத்துக் கட்டிய இருப்பிடத்தில், பூ வேலைப்பாடமைந்த கைவேலைக் குத்தி, கேடயத்தை வரிசையாக வைத்துப் பாசறையில் பல்வேறு அரண்களைப் பல்வேறு வீரர்கள் தங்குவதற்காக அமைத்தனர்.
பாசறையில் வீரர்களுக்கென்று அமைக்கப்பட்ட பல்வேறு அரண்களின் நடுவே, தலைவனுக்கென்று தனியாக உள்வீடு ஒன்றும் அமைத்தனர். அவ்வீட்டின் வாசலில் பெண்கள் திண்ணிய பிடியினையுடைய வாளினைக் கச்சோடுச் சேர்த்துக் கட்டி, பாவை விளக்கின் ஒளி குறையுந்தொறும் நெய் வார்க்கும் குழாயால் நெய் வார்த்து விளக்கேற்றினர். இரவு நேரத்து மெய்க்காப்பாளர், தூக்க மயக்கத்தோடு மல்லிகைக் கொடிபோல அசைந்து கொண்டே தலைவனுக்குக் காவலாக நின்றனர். கடந்து போன நாழிகை இதுவென்று நாழிகைக் கணக்கர், நாழிகையை மன்னனுக்கு அறிவித்தனர். கிரேக்க நாட்டு வீரர்கள் (யவனர்) குதிரைச் சவுக்கினை மடக்கி வளைத்து உடம்பில் நெருக்கிக் கட்டியிருப்பதால் புடைத்துத் தோன்றும் தோற்றத்தோடு இருந்தனர். வீரமும் வலிமையும் சேர்ந்த அவர்கள், புலிச் சங்கிலித் தொங்கவிடப்பட்ட அலங்கரிக்கப்பட்ட மன்னனின் பாசறையில், அழகிய மணி விளக்கினை ஏற்றும் பணியினையும் செய்தனர்.
பாசறையில் மன்னனுக்கென்று அமைக்கப்பட்டுள்ள உள் வீடு, திரைச்சலையால் இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தது. ஓர் அறையில் செய்திகளை உடம்பால் உரைக்கும் பேச முடியாத சட்டையணிந்த ஆரியர்கள் மன்னனுக்கு மெய்க்காப்பாளராக இருந்தனர்.
மன்னனோ பள்ளியறையில் நாளைக்கு நடைபெறும் போரின் விருப்பத்தால் தூக்கம் வராமல், இதுவரை நடந்த நிகழ்ச்சிகளை மனத்துள் நினைத்தவனாய் படுத்திருந்தான்.....
பகைவர் வீசிய வேல் நுழைந்தமையால் புண்பட்டு பெண் யானைகளை மறந்து வேதனையில் வருந்தம் ஆண் யானைகள்; யானைகளின் தும்பிக்கை அடிபட்ட பாம்பு போல் துடிக்கும் காட்சி;போரில் வெற்றியைத் தேடித் தந்த வீரர்களின் மரணம்; காதில் மாட்டியிருக்கும் தோற்கவசத்தையும் அறுத்துக் கொண்டு அம்பு பாய்ந்ததால், தன் செவியினைச் சாய்த்து புல் உண்ண முடியாமல் வருந்தும் குதிரைகள்; இவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டு....... ஒரு கையினைப் படுக்கையில் வைத்து, மற்றொரு கையினால் தலைவினைத் தாங்கி... அடுத்த நாள் போரினைச் சிந்தித்துக் கொண்டே படுத்திருந்தான்.
அடுத்த நாள் போர் நடைபெறுகிறது.போரில் வெற்றி பெற்று, வெற்றி முரசம் முழங்க வீட்டிற்குத் திரும்புகிறான் தலைவன். திரும்பும் வழியிலே கார்காலம் வந்துவிட்டது என்பதை அறிவிக்கும் வகையிலே முல்லை நிலக் காட்டில் மலர்கள் மலர்ந்திருக்கின்றன. பார்க்கின்றான் மன்னன்; குதிரையினை விரைந்து செலுத்துகிறான்; குதிரையின் குளம்பொலி, தலைவனைக் காணாது வருந்திக் கொண்டிருக்கும் தலைவியின் காதுகளை நிறைத்தன.
முல்லைப்பாட்டின் ஆசிரியர் 103 அடிகளில் இனிய காட்சிகளை உலவவிட்டு, மகிழ்வான நிகழ்வோடு முடித்திருக்கிறார். காட்சியில் மட்டுமல்ல மகிழ்ச்சி, படிக்கும் நமக்கும்தான்.
படிப்போம். சுவைப்போம்.
தமிழர் தம் பண்பட்ட வாழ்வை நினைத்து அகம் மகிழ்வோம்.
முல்லைப்பாட்டும் பண்டைத் தமிழகமும்
முன்னுரை
பத்துப்பாட்டில் மிகச் சிறிய நூல் முல்லைப் பாட்டு. காடும் காடு சார்ந்த இடங்ளையும் கொண்ட முல்லையில் நடக்கும் அகப்புறக் காட்சிகள், நப்பூதனாரின் கைவண்ணத்தில், சொற் சித்திரமாய் உருவான அழகிய நூல். இந்நூல், பண்டைத் தமிழகத்தினைப் பற்றி நாமறிவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்நூலிலிருந்து நாம் பெறும் செய்திகளை இக்கட்டுரையில் காண்போம்.
முல்லை சான்ற கற்பு-சிறப்பு
முல்லைத்திணைக்குரிய சிறப்பே கற்புதான். அதனால்தான், முல்லை சான்ற கற்பென்றனர். கற்பென்பது உடல் சார்ந்த ஒன்றாகக் கருதப்படும் இந்நாளில், அது உள்ளம் சார்ந்த ஒன்று என்பதை அறிவிக்கும் நூல் முல்லைப்பாட்டு. ‘கற்பெனப்படுவது சொற்திறம்பாமை’ என்பது ஔவையின் கூற்று. அப்படியானால், ‘கற்பு’ என்ற சொல்லின் பொருள், சொல் மாறுபடாமல் நடப்பதேயாகும் என்பது தெளிவாகிறது. இதைத்தான் முல்லைப்பாட்டும் உணர்த்துகிறது.
பிரிந்து சென்ற தலைவன் வரும் வரையில் தலைவி ஆற்றியிருத்தல் மட்டுமே கற்பு நெறி அன்று. தலைவியிடம் கூறியபடியே தலைவனும் சொன்ன சொல் தவறாமல் குறித்த காலத்தில் வந்து சேருவதும் கற்பின்பாற்படும் என்று பால்பாகுபாடின்றி, பொது நிலை நோக்கோடு கற்பின் சிறப்பை அறிவுறுத்துகிறது முல்லைப்பாட்டு.
முல்லைப்பாட்டின் தலைவி, ‘நெஞ்சாற்றுப்படுத்த நிறைதபு புலம்பொடு நீடு நினைந்த தேற்றியும்(81-82) என்று தனது நெஞ்சினை ஆற்றுப்படுத்தி, தலைவனிடம் ‘நீவிர் வினைமுடித்து வரும் வரை, ‘வருந்தேன்’ என்று சொல்லிய சொல்லிலிருந்து மாறுபடக் கூடாது என்பதற்காக, தன்னைத் தேற்றிக்கொண்டு வாழுகிறாள். தலைவனும், போர் வினை முடித்துத் திரும்பும் வேளையில் வழியிலே கார்காலத்து மலர்கள் மலர்ந்திருப்பதைப் பார்க்கிறான். தான் தலைவியிடம் ‘வருவேன்’ என்று சொன்ன காலம் வந்துவிட்டதை அறிந்து, உள்ளத் துடிப்போடு ‘துணை பரி துரக்கும் செலவினனாக’ விரைந்து வருகின்றான். இங்கே தலைவனும் தலைவியும் கற்பு வாழ்க்கையின் இலக்கணம் இதுதான் என்பதை நமக்கு அறிவிக்கின்றனர். இருவரும் சொல் திறம்பாமல் நடந்து கற்பு நலம் பேணுகின்றனர்.
இனிய இல்லறத்திற்கு வழிகோலிய, தலைவனும் தலைவியும் இணைந்து செயலாற்றும் இனிய உளப்பண்புக்குப் பயன்படுத்தப்பட்ட ‘கற்பு’ என்ற சொல், இன்று பொருள் மாற்றம் பெற்று, பெண்ணின் உடல் சார்ந்து வழங்கப்படுவது சிந்திக்கத்தக்கது.
முல்லை-தெய்வம்
முல்லைத் திணைக்குத் தெய்வமாகச் சொல்லப்பட்ட மாயோன் குறித்த செய்தியோடு நூலின் துவக்கம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காடு சார்ந்த இடத்திலே வாழ்ந்த மக்களின் தலைவனாக விளங்கிய மாயோனைச் சங்கு, சக்கரம் பொறித்தவனாகவும், திருமகளைத் தாங்கும் தடக்கைக் கொண்டவனாகவும் காட்டியிருப்பது, தமிழரின் சமயச் சிந்தனைகள் வளர்ந்த பிறகு எழுந்த நூல் ‘முல்லைப்பாட்டு’ என்பதைத் தெரிவிக்கிறது.
முல்லை நிலத்து மக்கள்
தமிழரின் முல்லை நிலக் காட்டில் வாழ்ந்த மக்கள் ஆயர், இவர்களைப் பற்றிய குறிப்பும் இந்நூலில் கிடைக்கிறது. சிறிய கயிற்றிலே கட்டப்பட்டுள்ள கன்று, தாயின் வரவு பார்த்து வருந்துகிறது. அதற்கு ஆயர் மகள், ‘வளைந்த கோலினையுடைய கோவலர் பின்னே நின்று செலுத்த, இப்பொழுதே உனது தாயர் வந்துவிடுவர்’ என்று கூறுகின்றாள். கன்றிடம்கூட அன்பு கனிந்த சொற்களைப் பேசும் ஆயர்குலப் பெண்ணின் இயல்பும், மழைக்காலக் குளிரில் நடுங்கியவாறு, தன் கைகளைத் தோள்களில் கட்டியிருக்கும் அப்பெண்ணின் தோற்றமும் பழந்தமிழ் மக்களாகிய ஆயரின் வாழ்வியலை நம் கண் முன்னே கொண்டு வரும் உணர்வோவியமாகும்.
பண்டைத் தமிழரின் பயன்பாட்டுக் கருவிகள்
ஆயர்கள், ஆநிரைகளை மேய்க்க, வளைந்த கோலினைப் (கொடுங்கோல்(15)) பயன்படுத்தியுள்ளனர்.
யானைப்பாகர், யானையை அடக்க, கவை முள் கருவி(35)யை உபயோகித்துள்ளனர்.
குதிரையை ஓட்டுவதற்கு, மத்திகை (59) எனும் கருவியைப் பயன்படுத்தியுள்ளனர்.
வில் (39), பூந்தலைக் குந்தம் (41) கிடுகு (கேடயம்) (41) வாள்(46) எடுத்து எறி எஃகம்(வேல்) (68) பகழி (73) போன்ற போர்க் கருவிகளும் தமிழரின் பயன் பாட்டில் இருந்துள்ளமை முல்லைப்பாட்டால் அறிய முடிகிறது.
வெற்றியைத் தெரிவிக்க, முரசு அறைந்தனர் என்பதை, ‘முரசு முழங்கு பாசறை’ (79) என்ற அடியிலும், ஊது கொம்பும், சங்கும் முழக்கினர் என்பதை ‘வயிரும், வளையும் ஆர்ப்ப’(92) என வரும் அடியிலும் அறிந்து கொள்ள முடிகிறது.
நால்வகைப் படைகள்
யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை எனும் நால்வகைப்படைகளும் இருந்துள்ளன என்பதனை முல்லைப்பாட்டு தெரிவிக்கிறது.
மன்னன் பகைவரோடு செய்த போரில்,பகைவர் எடுத்தெறிந்த வேல் நுழைந்தமையால் புண்பட்ட யானையினையும், அடிபட்ட பாம்பு துடிப்பதுபோல் ஆண் யானையின் பருத்த துதிக்கை வெட்டுப்பட்டு வீழ்ந்து துடித்ததையும்,
எடுத்த எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து
பிடிக்கணம் மறந்த வேழம் வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய (68- 70)
என்று கூறியுள்ளதால் யானைப் படையும்,
தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்தி
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் (71-72)
என்பதால் காலாட்படையும், தோலால் செய்யப்பட்ட கடிவாளத்தையும் அறுத்துக் கொண்டு கூரிய முனையுடைய அம்புகள் பாய்ந்ததால் காதுகளைச் சாய்த்து உணவு உண்ணாது வருந்தும் குதிரைகள் குறித்து,
‘தோல்துமிபு, பைந்துனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மா’ (72-74) என்று உணர்த்துவதால் குதிரைப்படையும், ‘வினை விளங்கு நெடுந்தேர்’ (103) என்பதால் தேர்ப்படையும் முல்லைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் வினையில் பெண்கள்
மன்னன் போருக்குச் செல்லும்போது பெண்களும் சென்றுள்ளனர். இவர்கள் பாசறையிலுள்ள பாவை விளக்கின் ஒளி குறையும் போதெல்லாம் நெய் வார்த்து, ஒளி குறையாது பாதுகாத்தனர். இவர்கள் தம்முடைய மேலாடையாகிய கச்சிலே, ஒளி வீசும் வாளினைச் சேர்த்துக் கட்டியிருந்தனர் என்ற செய்தியும் முல்லைப்பாட்டால் நமக்குக் கிடைத்துள்ளது.
‘திண்பிடி ஒள்வாள் விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர்’ ( 46-45)
என்ற முல்லைப்பாட்டு வரிகள் இச்செய்தியினை அறிவிக்கின்றன.
ஆடை, அணிகலன் மற்றும் சிகை ஒப்பனை
போர்ப் பாசறையில் தங்கியிருக்கும் பெண்கள். பல நிறமமைந்த கச்சு என்னும் மேலாடையை அணிந்திருந்தமையும் குறுந்தொடி (வளையல்) அணிந்த முன் கையும், கூந்தல் தவழும் முதுகுப்புறத்தினையும் உடையவரெனவும் முல்லைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதால் பெண்களின் உடை, அணி, சிகை ஒப்பனை பற்றியும் அறிய முடிகிறது. ஆண்கள் வெள்ளைத் துணியால் தலையில் தலைப்பாகைக் கட்டியிருந்தமையினை, ‘துகில் முடித்து போர்த்த’(53) என்ற வரியினாலும், ‘மெய்ப்பை’ (60) ‘படம்’ (65) என்று குறிப்பிடப்பட்ட சட்டையினை அணிந்திருந்தமையும் தெரிய வருகிறது.
அரசன் கையிலே ‘கடகம்’ என்ற ஆடவர்க்கான அணிகலனை அணிந்துள்ள செய்தி, ‘ஒரு கை முடியொடு கடகம் சேர்த்தி’(76) என்பதாலும் முல்லைப்பாட்டின்வழி அறிந்து கொள்ள முடிகிறது.
பொழுதினைக் கணக்கிடும் கருவி
ஒரு நாளின் பொழுதுகளை அளந்து கணக்கிட்டு அறிவதற்குக் ‘கன்னல்’ (நாழிகை வட்டில்) என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். முல்லைப்பாட்டு இதனை, ‘குறுநீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப’ (58) என்று உணர்த்தியுள்ளது.
பாசறையின் அமைப்பு
பகை நாட்டின் மீத படையெடுத்துச் செல்லும் மன்னன், முல்லைக்காட்டில் பிடவம் செடிகளை வெட்டி முள்ளால் வேலியமைத்துப் பாசறை அமைத்த செய்தியினை முல்லைப்பாட்டிலிருந்து பெறமுடிகிறது. அங்குத் தழையால் கூரை வேயப்பட்டு வீரர்களுக்குத் தங்குமிடங்கள் அமைத்ததாகவும், இதில் மன்னனுக்கென்று உள்வீடு ஒன்று அமைக்கப்பட்டது என்றும், அவ்வீடும் திரைச்சீலையால் இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தது என்றும் ஓர் அறையில் மெய்க்காப்பாளரான மிலேச்சியர்கள் தங்கியிருந்ததாகவும், மற்றோர் அறை மன்னனின் பள்ளியறையாக அமைந்திருந்தது என்றும் முல்லைப்பாட்டு தெரிவிக்கிறது.
மன்னனின் பணியாளர்களாக வெளிநாட்டவர்
பாசறையில் மன்னனுக்குக் காவலாக யவனர் (கிரேக்கர்) இருந்த செய்தியினை முல்லைப்பாட்டு தெரிவிக்கிறது.
“மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்” (60-61)
வலிமையான உடலும், கண்டோர் அஞ்சும் படியான தோற்றமும் உடையவர் யவனர் என்பதாக முல்லைப்பாட்டில் காட்டப்படுள்ளது. இவர்கள் மட்டுமல்லாது, மன்னனுக்குக் காவலாக இருந்தவர்கள் மிலேச்சியருமாவர். இவர்கள் பெலுச்சிதானத்திலிருந்து வந்த துருக்கர். பெலுச்சி என்பது மிலேச்சி எனத் திரிந்ததாகக் கூறுவர். (முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை பக்கம்.92) இவர்கள் வாயால் பேச முடியாதவர்கள். உடல் உறுப்புகளின் மூலமாகவே செய்திகளைத் தெரிவிக்கக் கூடியவர்கள் ‘அக்காலத்தில் மன்னர்கள் தம் அந்தபுரத்தச் செய்திகள் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக இத்தகைய வாய் பேசமுடியாத மிலேச்சியர்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதனையும் பெற முடிகிறது.
பண்டைத் தமிழரின் நம்பிக்கை
ஒன்றைப் பெறுவதற்காக, இறைவனை நினைத்து வேண்டிக் கொண்டிருக்கும்போது, நல்ல சொற்களை அயலில் உள்ளவர் கூறினால், தான் நினைத்த காரியமும் நல்லதாகவே நடக்கும் என்று பழந்தமிழர் நம்பியிருந்தனர். இந்த நம்பிக்கையை ‘விரிச்சி கேட்டல்’ என்றனர். முல்லைப்பாட்டில், ‘விரிச்சி நிற்ப’ என்பதாலும் ‘நன்னர் நன்மொழி கேட்டனம் அதனால், நல்ல நல்லோர் வாய்ப்புள்’ என்பதாலும் இச்செய்தி புலனாகிறது.
இறைவனை வழிபட்ட முறை
இறை வழிபாட்டினைச் செய்வோர், நெல்லும் மலரும் தூவி, கைதொழுது வழிபட்டனர். நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கை தொழுது’ (8- 10) என வரும் முல்லைப்பாட்டு அடிகளால் இச்செய்தி தெரியலாகிறது.
விளக்கு
பாசறையிலும் வீட்டிலும் பாவை விளக்குகள் பயன்படுத்தப்பட்டமையினை அறிய முடிகிறது.
‘கையமை விளக்கம் நந்துதொறும் (49) பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல (85) என வரும் தொடர்கள் இதனை அறிவிக்கின்றன. மணி விளக்கும் பயன்பாட்டில் இருந்துள்ளமையினை, ‘திருமணி விளக்கம்காட்டி’ (63) என்ற தொடர் தெரிவிக்கிறது.
வீடுகள்
பண்டைத் தமிழகத்தில் ஏழடுக்குகள் கொண்ட உயர்ந்த மாளிகைகள் இருந்தன என்ற செய்தியினையும், ‘இடம் சிறந்து உயரிய எழுநிலை மாடத்து’ (86) என்ற அடியினால் உணர முடிகிறது.
மலர்கள்
மழைக்காலத்துச் செழுமையில் மலர்ந்து கிடக்கும் மலர்களும் அவற்றின் தோற்றமும் நிறமும் முல்லைப்பாட்டாசிரியரால் அழகாக வருணிக்கப்பட்டுள்ளது.
“ செறியிணர்க் காயா அஞ்சனம் மலர
முறியிணர்க் கொன்றை நன்பொன் கால
தோடல் குவிமுகை அங்கை அவிழ
தோடார்தோன்றிகுருதிபூப்ப” (93-96)
என்று காட்டிலே மலர்ந்திருக்கும் மலர்கள் ஒவ்வொன்றிற்கும் நீல மலர், கொன்றை மலர், வெண்காந்தள் மலர், தோன்றி மலர் என்று பெயர் கொடுத்து இயற்கையோடு இணைந்து வாழ்ந்த செந்தமிழ்நாட்டினை முல்லைப்பாட்டில் பார்க்க முடிகிறது.
வானியல்
பண்டைத் தமிழர் வானியலில் வல்லுநர்களாக விளங்கியுள்ளனர். மழை உண்டாகும் முறையினை முல்லைப்பாட்டு ஆசிரியர் வருணிக்கும் அழகிலே இத்துறை பற்றிய அவர்களின் புலமை புலப்பட்டுள்ளது.
மேகங்கள் கடல் நீரைப் பருகி, வலமாக எழுந்து, மலையில் தங்கி, பின் உலகத்தை வளைத்து எழுந்து விரைந்து செல்லும் அவ்வாறு விரைந்து செல்லும் போது மழை ஏற்படும் என்று மழை பொழியும் தம்மையினை கவியழகும்இயற்கையறிவும் மிளிர வெளிப்படுத்தியுள்ளமை பெறப்படுகிறது.
பறவை
முல்லைப்பாட்டில் ‘ஏவுறு மஞ்ஞையின் நடுங்கி (84)’ என்று தலைவியின் துயருற்ற நிலையினை அம்பு தைத்த மயிலுக்கு உவமிப்பதால் ‘மயில்’ பண்டைத் தமிழரின் வாழ்வியலில் இடம் பெற்றிருந்த நிலையினை அறிய முடிகிறது.
களிறு
கட்டுவதற்கும் பிணைத்தற்கும் கயிற்றிணைப் பழந்தமிழர் பயன்படுத்தியுள்ளனர்.
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் (12)
கூடம் குத்தி கயிறு வாங்கு இருக்கை (40)
என்பதனால் அறியலாகிறது.
அளவை
நாழி என்ற முகத்தலளவை பயன்பாட்டில் இருந்தள்ளமை.
‘நாழி கொண்ட ’ (9)
என்ற வரியின்மூலம் அறியப்படுகிறது. இறை வழிபாட்டின்போது நாழி நெல் வைத்தல் இன்றும் நடைமுறையில் உள்ளதே.
பொன் வணிகர்
முல்லைப்பாட்டின் ஆசிரியர் காவிரிபூம்பட்டினத்துப் பொன்வாணிகர் மகனார் நப்பூதனார் என்பதால், பொன்னின் வேறுபாட்டைப் பகுத்தறியும் ‘பொன் வணிகர் ’ இருந்துள்ளமையும் பெறப்படுகிறது.
பாத்திரம்
குறுநீர்க் கன்னல் என்பது சிறிதளவு நீர் ஊற்றி வைத்திருக்கும் பாத்திரம் மட்டுமல்ல. நாழிகை வட்டிலாக பயன்பட்டதும் முல்லைப்பாட்டின்வழி அறியப்பட்டது. பிங்கலந்தை நிகண்டும், ‘கன்னலும் கிண்ணமும் நாழிகை வட்டில்’ என்றே கூறுகிறது.
கொடி
முல்லைப்பாட்டில் ‘ அதிரல்’ என்ற காட்டு மல்லிகைக் கொடியும் வள்ளிக் கொடியும் இடம் பெற்றுள்ளது.
செடி
‘சேண்நாறு பிடவம்’ (25) என்று நெடுந் தொலைவிற்கு மணம் வீசும் பிடவம் என்ற செடி வகை குறிப்பிடப்பட்டுள்ளது.
முத்து
தலைவனைப் பிரிந்து இருக்கும் தலைவியின் கண்களிலிருந்து நீர் வடிகிறத. அந்நீரில் புலவருக்க முத்துக்கள் தெரிகின்றன. பாண்டியன் தேவியைப் பாடியதாலா! பொன் வணிகர் என்பதாலா !
‘பூப்போல் உன்கண் புலம்பு முத்தறைப்ப’ (23)
தொழுதல்
இரண்டாயிரம் ஆண்டுகளக்கு முன்னரே பண்பாடுடைய சமுதாயமாக தமிழ்ச் சமுதாயம் இருந்தது என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றுகளாகத் திகழ்கின்றன.
இறைவனைத் தொழுதல், மன்னனைத் தொழுதல் என்று மரியாதைக்குரியோரைக் கை கூப்பித் தொழும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
‘நெல்லும் மலரும் தூவி கை தொழுது ’ (10)
‘தொழுது காண் கையர்’ (53)
என்ற வரிகள் தமிழர்தம் பண்பாட்டைச் சொல்லும் எழிலான வரிகள்.
அலங்காரத் தொங்கல்
பாசறையிலுள்ள மன்னனின் இல்லத்தில் புலி பொறிக்கப் பட்ட தொடர்ச்சங்கிலி தொங்கவிடப் பட்டிருந்தது. அதில் விளக்கும் இருந்தது என்று முல்லைப்பாட்டு தெரிவிக்கிறது.
புலித் தொடர்விட்ட புனைமாண் நல்இல்
திருமணி விளக்கம் காட்டி ’ (62-63)
ஆயர்குல மக்களின் உயர்வு
முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர்குல மக்கள் சமுதாயத்தில் உயர்ந்த பண்புடையவர்களாக மதிக்கப்பட்டனர். ஆயர் குலப் பெண் ‘ கோவலர் பின்னே நின்ற தசெலுத்த உம் தாயர் இப்பொழுதே வருவர்’ என்று கன்றிடம் கூறிய சொல் நற்சொல் (விரிச்சி) கேட்ட நின்ற பெண்களுக்கு நல்ல சொல்லாக அமைந்தது. சொல் மட்டுமல்ல நற்சொல், அதைச் சொன்னவர்களும் நல்லவர்கள் என்கிறாள் அம்மூதாட்டி,
நன்னர் நன்மொழி கேட்டனம்; அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் (17-18)
நல்லவர்களின் வாய்ச்சொல் நன்மையையேத் தரும் என்று உறுதிபட கூறுகின்றபோது ஆயர்குல மக்கள் சங்ககாலச் சமுதாயத்தில் பெற்றருந்த உயர்நிலையை அறிய முடிகிறது.
இசைக்கருவி
இசைக்கருவிகளும் பண்டைத் தமிழ் மக்களின் பயன்பாட்டில் இருந்துள்ளமையினை இலக்கியங்கள் வழி அறிகிறோம். அவ்வகையில் முல்லைப்பாட்டாசிரியர் யாழிசை கேட்டு இன்புற்றவர் போலும்! வண்டின் ரீங்காரமும் யாழிசையாய் இன்பம் தருகிறது அவருக்கு!
‘யாழிசை இனவண்டு ஆர்ப்ப’(8)
என்ற அடி, இசை சுவைத்த எம் முன்னோரின் இதயத்தைக் காட்டுவதாய் உள்ளது.
அருவி
மழைக்காலத்தில் வீட்டின் கூரை கூடுமிடங்களில் மழைநீர் பெரியளவுல் விழுநது கொண்டிருப்பது அருவியும் அதன் ஓசையும் கண்டு கேட்டு இன்புற்று கவியும் படைத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நம் தமிழர்களின் புலமையும் எண்ண எண்ண வியப்பைத் தருகிறது.
‘முடங்குஇறைச் சொரிதரும் மாத்திரள் அருவி’(88)
புணரி
மன்னனின் பாசறை ஆரவாரத்தோடு காணப்படுகிறது. பாவில் அதைப் படைக்க நினைத்த புலவர் அதனை ‘புணரி’ என்று குறிப்பிடுகின்றார்.
‘படுநீர்ப் புணரியின் பரந்த பாடி’(28)
ஒலிக்கின்ற நீரையுடைய கடல் போல் அகன்ற பாசறை என்று விளக்குகின்றார். கடலுக்கு பைந்தமிழர் பயன்படுத்திய புணரி என்ற சொல் அழகிய சொல் முந்நீரினையும் புணர்ந்து நின்றதால் புணரியானதோ?
கான்யாறு
மலையிலிருந்து ஓடிவரும் நீர், காட்டு வழியில் விரைந்து ஓடி வருகிறது. இனைக் காட்டாறு அல்லது கான்யாறு என்றனர். முல்லைப்பாட்டில் மன்னன் பாசறை அமைக்கின்ற இடத்தைப் பற்றிக் கூறுமிடத்து,
‘கான்யாறு தழிஇய அகல்நெடும் புறவில்’(24)
என்கிறார். பகுத்தாய்ந்து பிரித்து அறிந்து சொற்களை வழங்கி இருக்கும் தமிழர்தம் திறன் உரைத்திடற்கரியது.
மெய்ப்பை
ஆண்கள் அணியும் மேல் சட்டையைக் குறிக்கும் ‘மெய்ப்பை’ (60) ‘படம்’ (66) என்ற சொல்லாட்சிகள் இடம்பெறுகின்றன. உடம்பின் மேல் அணியும் ஆடை புதியதாகத் தம்ழிச் சமுதாயத்தில் புகுந்த போது அதற்குத் தமிழர் புதிய சொற்களைப் புனைந்துள்ளனர். ‘மெய்ப்பை’ அழகிய சொல்.
புதிய சொல் படைத்து மொழியைக் குன்றாது காத்து வளர்த்த தமிழர் தம் திறனும் வெளிப்படுகிறது.
முரண் தொடை
முரண்பட்ட சொற்களைத் தொகுத்து பாட்டின் இனிமையோடு மேலும் இனிமை சேர்த்துள்ளனர்
‘பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை’ (6)
அற்றைத் தமிழகமும் - இற்றைத் தமிழகமும்
விரிச்சி கேட்டல்
முல்லைப்பாட்டில் ‘விரிச்சி கேட்டல்’ குறிப்பிடப்பெற்றுள்ளது. நடக்கப்போகும் நிகழ்வினைப் பற்றி அறிய கோவிலில் சென்று இறைவனை வழிபட்டு நல்ல சொல்லுக்காகக் காத்திருப்பர் இன்றும் நாட்டுப்புற மக்களின் வாழ்வியலில் முக்கிய கூறாகவே இந்நம்பிக்கை இருந்து வருவது அனைவரும் அறிந்ததே.
நாழிநெல் வைத்து கைதொழுது வழிபடல்
நாழியில் கொண்டு சென்ற நெல்லோடு நறுமணம் மிக்க முல்லை மலரையும் தூவி இறைவனைக் கைதொழுது வேண்டி நின்ற செய்தி முல்லைப்பாட்டில்வ இடம்பெறுகிறது. இன்றும் நாட்டுப்புற மக்கள் தமது இல்லங்களில் நடத்துகின்ற இறைவழிபாட்டின் போது நாழி நெல் வைத்த கைதொழுது வழிபாடு செய்வதைக் காண்கிறோம். சங்க கால மக்களிள் பழக்க வழக்கங்களை இன்று வரை தமிழ் மக்கள் சுமந்து வருகின்றோம் என்பதே பெருமிதத்தை அளிக்கிறது.
முல்லைப்பாட்டில் போர்
முல்லைப்பாட்டில் தலைவன் மேற்கொண்ட போர் முடிந்ததா? இல்லை போர் இடையே நிறுத்தப்பட்டதா?
போர் நடைபெறுகிறது. அன்று இரவு மன்னன் தன் நாட்டுப் படைகளுக்கு ஏற்பட்ட சேதத்தை நினைத்துப் பார்க்கிறான். குதிரையும் யானையும் போரின் காரணமாக படும் வேதனைகள், இறந்த வீரர்கள் இத்தனையும் நினைக்கும்போது கூட ‘மண்டு அமர் நசையோடு கண்படை பெறாஅது’ என்றுதான் ஆசிரியர் நப்பூதனார் குறிப்பிடுகின்றார். போர் குறித்துப் பெரும் விருப்பத்தோடு இருக்கும் மன்னன் தூக்கம் கொள்ளாது, அன்றைய போரில் நடந்த நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்து நாளை நடைபெற இருக்கும் போரில் இழப்பினைத் தவிர்த்து வெற்றியினைப் பெறும் வழிகளைச் சிந்தித்திருந்தனன் போலும்! அதனால் முதல் நாள் போர் முடித்துத் திரும்பி வந்து தூக்கம் கொள்ளாது, நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்த மன்னன், மறுநாள் போரிலே வெற்றி பெற்ற மன நிறைவோடு இனிய துயிலினைக் கொண்டான் என்பதனையும் நப்பூதனார் குறிப்பிடத் தவறவில்லை.
“பகைவர் சுட்டிய படைகொள் நோன்விரல்
நாகைதாழ்க் கண்ணி நல்வலம் திருத்தி
அரசுஇருந்து பனிக்கும் முரசுமுங்கு பாசறை
இன்துயில் வதியுநன்” (76-80)
போரில் வெற்றி பெறா நிலையில் மன்னனின் மனநிலையையும் வெற்றி பெற்ற பின்பு மன்னனின் மனநிலையையும் காட்டசியாய் வடித்திருக்கும் கவிஞரின் கவிநலம் நினைந்து நினைந்து இன்புறத்தக்கது.
“.......... வென்று பிறர்
வேண்டுபுலம் கவர்ந்த ஈண்டுபெருந் தானையொடு
விசயம் வெல்கொடி உயரி, வலன்ஏர்பு,
வயிரும் வளையும் ஆர்ப்ப...........”(89-92)
என்பதால் போரிலே வெற்றி பெற்று, பகை நாட்டு மன்னரின் இடங்களைக் கவர்ந்து பெரும் படை யோடு வெற்றிக் கொடியை உயர்த்திப் பிடித்து வெற்றியை அறிவித்து ஊது கொம்பும் சங்கும் முழங்க வருகிறான் தலைவன் என்பதே பெறப்படுகிறது முல்லைப்பாட்டுத் தலைவன் போரினை இடையிலே முடிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
முல்லையும் வஞ்சியும்
அகத்திணையான முல்லையினைப் பாடுகின்ற போது அதற்கு இயைந்த புறத்திணையான வஞ்சித் திணையையும் இணைத்துப் பாடியிருப்பது இந்நூலின் சிறப்பு.
முல்லைத் திணைக்கு நிலம் சாடு. வஞ்சித்திணையின் நிலமும் காடே. தலைவனைப் பிரிந்து தலைவி முல்லை நிலமான வீட்டில் தங்கியிருத்தல் போலவே தவைவனும்,
“எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித்த அன்றே”(தொல்புறத்திணை நூற்பா.62)
என்று மண்ணாசை கொண்டு படையெடுத்து வரும் பகையரசனை வெல்வதற்குப் படையெடுத்துச் சென்று முல்லைநிலமாகிய காட்டில் பாடி வீடு அமைத்துத் தங்கியிருக்கிறான்.
முல்லைத் திணிக்குரிய கடவுளான திருமாலை நினைவு கூரும் வகையில் மன்னனின் பள்ளியறைக் கோலம்-
“ஒருகை பள்ளி யொற்றி யொருகை
முடியொடு கடகம் சேர்த்தி ”(75-76)
என்று காட்டப்பட்டுள்ளது.
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும்’‘ (388)
என்று மன்னனை இறை நிலையில் குறிப்பாக காட்டியிருப்பதுடன், காட்டிலும் வீட்டிலும் நடைபெறும் காட்சிகளை-தலைவன்,தலைவி மன உணர்வுகளை 103 அடிகளில் படைத்துத் தந்த நப்பூதனாரின் கவியாக்கத் திறன் நினைந்து நினைந்து இன்புறத்தக்கது.
முல்லைத்திணையின் முதல் கரு உரிப்பொருள்களும் முல்லைப்பாட்டும்
முல்லைத்திணைக்குரிய முதல் கரு உரிப் பொருள்கள், முல்லைப்பாட்டில் பயின்று வரும் பான்மையினைக் காணலாம்.
முதற்பொருள் என்று சொல்லப்படுவது நிலமும் பொழுதும். நிலம்-முல்லை நிலம். காடு சார்ந்த பகுதி. ‘கானம் நந்திய செந்நிலப் பெருவழி (97) ‘அகனெடும் புறவு’ (24) என்பதாலும் முல்லை நிலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொழுதினைச் சிறுபொழுது, பெரும்பொழுது என்று பகுப்பர். முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது மாலைக்காலம். இதனை, ‘சிறுபுன் மாலை’ (6) என்ற அடி உணர்த்துகிறது. முல்லையின் பெரும் பொழுது கார்காலம் என்று சொல்லப்படும் மழைக்காலம். இக்காலத்தை, ‘பெரும் பெயல் பொழிந்த’ (6) என்ற தொடர் தெரிவிக்கிறது.
கருப்பொருள் என்பது தெய்வம், மக்கள், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை,யாழ், பண், தொழில் என்பதாகும். முல்லை நில தெய்வம் மாயோன். ‘நீர் செல நிமிர்ந்த மாஅல் போல’ என்பதால் முல்லைத் திணையின் தெய்வமும், ‘ஆய்மகள்’, ‘கோவலர்’ என்ற சொல்லாட்சியால் அந்நிலத்து மக்களும், ‘மடமான் உகள’ என்பதால் அந்நிலத்து விலங்கும், ‘நறுவீ முல்லை’, ‘தோடர் தோன்றி ’ என்பதால் முல்லை, தோன்றி முதலிய முல்லை நில மலர்களும், ‘செறியிலைக் காயா’ முறியிணர்க் கொன்றை’ என்று சுட்டப்படுதலின், அந்நிலத்து காயா கொன்றை மரங்களும், ‘பரந்த பாடி ’ என்பதால் முல்லை நிலத்துக்கு நீர் தருமிடமாகிய காட்டாறும். ‘கைய கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தர ’ என்பதாவ் நிரை மேய்த்தல் தொழிலும், ‘வானம் வாய்த்த வாங்குகதிர் வரகு’ என்பதால் அந்நிலத்து உணவும் குறிப்பிடப் பட்டுள்ளன.
முல்லைத் திணைக்கு உரிப்பொருள் ‘ இருத்தலும் இருத்தல் நிமித்தமும்’. தலைவன் கடமை உணர்வோடு காட்டிலும், தலைவனின் நிலை உணர்ந்து தலைவி வீட்டிலும் இருக்கும் இருத்தல் ஒழுக்கம் முல்லைப்பாட்டின்வழி சிறப்புற உணர்த்தப் பெற்றுள்ளது. தலைவியின் இருத்தல் ஒழுக்கம் மட்டுமல்ல; தலைவனின் கடமை உணர்வும் கூறப்பட்டிருப்பதே இந்நூலின் பெருஞ்சிறப்பு.
மன்னனின் அருள் உள்ளம்
போரில் தன்னுடைய வெற்றிக்குத் துணையாக இருந்து இறந்த வீரர்களையும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் விலங்குகளையும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அருள் உள்ளம் கொண்ட மன்னனை நேர்முக வர்ணனையாகக் கூறியுள்ளார் ஆசிரியர் நப்பூதனார். வேல்பட்டு புண்பட்டு வருந்தும் யானையையும், துண்டுபட்டு கிடக்கும் துதிக்கை துடிப்பதையும், சேணத்தையும் அறுத்துக் கொண்டு அம்புகள் பாயந்ததால் உணவு உண்ண முடியாது வருந்தும் குதிரைகளையும், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க போரில் இறந்து கிடக்கும் வீரர்களையும் நினைத்துப் பார்க்கும் மன்னனின் உள்ளத்து உயர்வை வடிக்க முடிந்த கவிஞரின் திறன் உணர்ந்து உணர்ந்து இன்புறத்தக்கது.
பண்டைத் தமிழகத்தை அறிந்து கொள்ள மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ள இம்முல்லைப்பாட்டைக் காணும் பேற்றினை எமக்குத் தந்த தமிழன்னையின் புதல்வர்களுக்குத் தலை தாழ்ந்த வணக்கங்கள்.
முல்லைப்பாட்டில் உவமைகள்
பாட்டில் வரும் கருத்துக்களை விளக்குவதற்காக உவமைகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், அதிலும் அழகைக் காணும்போது இலக்கியம் ஏற்படுத்தும் இன்பம் அளவில்லாதது. அவ்வகையில் முல்லைப்பாட்டில் பதினோர் உவமைகள் உள்ளன.
1. ‘நீர் செல நிமிர்ந்த மாஅல் போல’
(3)
மாபலி மன்னன் அந்தணனாக வந்த கண்ணணுக்கு இந்நிலவுலகைத் தாலைவார்த்துக் கொடுத்த போது இகைகளின் வழியே நீர் ஒழுகி கைகளில் வழியும் நீரோடு திருமால் உயர்ந்த எழுந்த காட்சி போல மழை மேகமும் நீர்த்துளிகளைச் சிதறியவாறு விரைந்து எழுந்து சென்றது என்று மழை மேகத்தைத் திருமாலோமு ஒப்புமைப்படுத்திய உவமை இயற்கையான உவமை. இன்பம் நல்கும் உவமை.
2. ‘யாழிசை இனவண்டு அர்ப்ப’
(8)
அரும்புகள் மலர்ந்து மணம் வீசும் முல்லை மலரைச் சுற்றி வண்டினம் ஆரவாரம் செய்கிறது. இதன் ஒலி புலவருக்கு யாழிசை போல் கேட்கிறது. இசைகேட்டு இன்புற்ற அந்நாளைய இதயங்களுக்கு வண்டினத்தின் ரீங்காரமும் யாழினி இசையாக இருந்தது போலும்.
3. ‘பூப்போல் உண்கண் புலம்பு முத்துறைப்ப’
(23)
மலர் போன்ற மையுண்ட தலைவியின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் விழுகின்றன. அந்தக் கண்ணீர் துளிகள் கூட முத்துக்களாய் தெரிகின்றன புலவருக்கு ! பாண்டிய நாட்டுத் தலைவியோ ?
4 “கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசைநிலை கடுப்ப” (37-38)
பாசறையில் வீரகள் வில்லை ஊன்றி அதன்மேல் அம்புப்புட்டியைத் தொங்கவிட்டுள்ளனர். பாட்டிலே அதனை வடிக்க நினைத்த புலவருக்கு அதைப் போன்ற மற்றொரு காட்சியும் நினைவுக்கு வந்தது. துறவிகள் முக்கோலை நட்டு அதன் மேல் தமது காவி உடையைத் தொங்கவிட்டிருப்பது! தான் பார்த்த காட்சியினை அப்படியே உவமையாக்குகின்றார். இயல்பான உவமை மட்டுமல்ல, அன்றைய தமிழகத்த துறவிகளை நமக்கு அறிமுகப்படுத்திய உவமையும் கூட !
5 அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
சிதர்வால் அசைவளிக்கு அசைவந் தாங்கு
துகில்முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்
பெருமூ தாளர் ஏமம் சூழ (51-54)
தலையிலே வெண்துகிலால் தலைப்பாகை கட்டி நடுயாமத்தில் காவல் பணியில் ஈடூபட்டிருக்கின்றனர் காவலர். நடுயாமம் தூக்கக் கலக்கம். நடையிலே சற்று தடுமாற்றம் காவலரின் தடுமாற்ற நடையைப் பார்த்ததும் பாவலனுக்குக் காற்றுக்கு அசையும் காட்டு மல்லிகைக் கொடி நினைவுக்கு வருகிறது. உவமை உருவாகிறது. முல்லைப்பாட்டாசிரியர், கற்பனையான உவமைகளைப் படைக்கவில்லை; தான் கண்டனவற்றையே உவமைப் பொருளாக்கி உள்ளார் என்பது அவரது ஒவ்வோர் உவமையிலிருந்தும் அறிய முடிகிறது.
6. ‘வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய’ (69-70)
யானையின் துதிக்கை வெட்டப்பட்டு வழுந்து துடிப்பது அடிப்பட்ட பாம்பு துடிப்பதைப் போல் இருக்கிறது என்கிறார். ஆசிரியர் நப்பூதனார் போர்க்களத்தில் பார்க்கும் நிகழ்ச்சிக்கு ஒத்த காட்சியை உவமையாக்குகின்றார். நூற்றாண்டுகள் பல கடந்த பின்பும் அவரின் உவமை உணரக் கூடியதாகவே உள்ளது.
7. ‘ஏவுறு மஞ்ஞையின் நடுங்கி’ (84)
தலைவன் வரக்காணாது வருந்தும் தலைவியின் நிலையினை எப்படிச் சொன்னால் உணர்த்த முடியும் என்று சிந்தித்தனர் போலும் புலவர் ! மயிலின் உடலில் அம்பு பாய்ந்தால் எவ்வாறு அம்மயில் வலி தாளாமல் நடுங்கித் தன்புறுமோ, அதைப்போன்ற துன்பத்தினைத் தலைவி அடைந்திருந்தாள் என்று பெண்ணின் மிகுதியான துன்பத்தைக் கூறுதற்குக் கையாண்ட உவமை இனிது.
8. ‘செறியிலைக் காயா அஞ்சனம் மலர’
செறிந்த இலைகளையுடைய காயா மலர் பூத்திருக்கிறது. அது நம் புலவரின் கண்ணுக்குப் பெண்கள் கண்ணுக்கு இடும் இடும் மைபோல் காட்சியளிக்கிறது.
9. ‘முறியிணர் கொன்றை நன்பொன் கால’
பூங்கொத்துகளாகக் காணப்படும் கொன்றை மலர் பொன்னைப் போன்று விளங்குகிறதாம்.
10. ‘கோடல் குவிகை அங்கை அவிழ’
வெண் காந்தள் மலரின் குவிந்த மொட்டுகள் அழகிய உள்ளங்கையை விரித்தாற் போன்று மலர்ந்திருக்கிறதாம். பண்டைத் தமிழர் இயற்கைக் காட்சிகளில் ஒன்றிணைந்த தன்னையினை அவர்களின் உவமைகளே காட்டி நிற்கின்றன. ஒத்த உவமைகளை உலவவிடும் புலவரின் திறம் திகைக்க வைக்கிறது.
11. ‘தோடுஆர் தோன்றி குருதி பூப்ப’ (96)
இதழ் நிறைந்த செங்காந்தள் மலர் இரத்தம் போன்று பூத்து கிடக்கின்றது என்று உவமை எளியது அனைவரும் ஒப்பிட்டுப் பார்த்து அறியக் கூடியது.
இவ்வாறாக முல்லைப் பாட்டில் கூறியுள்ள அத்துணை உவமைப் பொருட்களும் நம்மைச் சுற்றியுள்ள நமது பயன்பாட்டில் இருக்கின்றதாகவே அமைந்துள்ளது. இனிய எளிய உவமைகளாகவும். இன்றளவும் நாம் ஒப்பிட்டுப் பார்த்து உவகை கொள்ளும் உவமைகளாகவும் இருப்பது பெரும் வியப்பை அளிக்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலகுவான உவமைகளைக் கையாண்டு இலக்கியத்திற்கு ஏற்றமும் எடுப்பபும் நல்கியுள்ள நப்பூதனாரை நன்றியுடன் நினைவு கூர்வோம். பண்டைத் தமிழிலக்கியங்களைப் பொன்னினும் இனிதெனப் போற்றிக் காப்போம்.
நப்பூதனாரின்வருணனைகள்
மாலும் மழையும்
மழைக்காலம் தொடங்கி விட்ட நேரம் கடலினி நீரினைக் குடித்து மலையைத் தழுவி கிடக்கின்றன கருமேகங்கள். அவை விரைந்து எழும்போதே பெருமழையும் பொழிகிறது. அக்காட்சியை ஆசிரியர் இயல்பாக வருணிக்கிறார். இனிதாக வருணிக்கிறார். மாபலி வார்த்த நீர் கருநிறக் கணிணனின் கை வழியே ஒழுகுகிறது. கைகளில் நீர் ஒழுக நிமிர்ந்து எழுகிறான் திருமால். அவன் நிமிர்ந்து எழுகின்ற தோற்றத்தைப்போல கருமேகங்கள் மழையைப் பொழிந்து கொண்டே உயர்ந்து எழுகின்றன. முல்லை நிலக் கடவுளின் முழு உயர்ந்து எழுகின்றன. முல்லை நிலக் கடவுளின் முழு உருவம் மட்டுமல்ல, மழை பொழியும் மேகத்தின் உருவமும் நம்முன் நிழலாடுகின்றன. கற்பனையில் நம்மை திகைக்க வைத்த ஆசிரியன் வருணிக்கும் திறன் எண்ண எண்ண இன்பம் தருவது.
அசையும் மல்லிகைக் கொடியும் ஓங்கு நடைக் காவலரும்
காட்டு மல்லிகை பூத்திருக்கிறது. மல்லிகைப் பூத்திருக்கும் அக்கொடியோ வீசுகின்ற காற்றுக்கு மெல்ல அசைகிறது முல்லை நிலக் காட்டில் பூத்திருக்கும் மல்லிகையையும் காற்றுக்கு அசைகின்ற கொடியையும் இரசித்துப் பார்த்த நப்பூதனாருக்குப் பாசறையைப் பற்றிப் பாடிக் கொண்டிருக்கும், போதும் நினைவில் மல்லிகையின் மணம் வீசுகிறது.
அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
சிதர்வால் அசைவளிக்கு அசைவந் தாங்கு
துகில்முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்
பெருமூ தாளர் ஏமம் சூழ (51-54)
நம் காவலர் தலையில் வெண் துகிலால் தலைப்பாக கட்டியிருக்கிறார்கள். அது புலவருக்க மல்லிகைக் கொடியிலே பூத்திருக்கும் மல்லிகை மலர்களை நினைவுக்குக் கொண்டு வருகிறது. நடுயாமத்துக் காவல் செய்வதால் தூக்கக் கலக்கத்தில் சிறிது தள்ளாட்டத்தோடு நடக்கின்றார்கள். காவலரின் நடையினைப் பார்க்கின்றபோத கவிஞரின் உள்ளம் கற்பனையான உவமையினைத் தேடவில்லை. கண்முன்னே கண்ட இயற்கைக் காட்சியைக் காவலரின் தளர் நடையோடு ஒப்பிட்டுப் பார்க்கிறது. உள்ளத்தில் பதிந்துள்ள காட்சியே உவமையாகிறது. வருணிக்கின்றார் புலவர். காட்டுமல்லிகை பூத்திருக்கின்ற கொடி காற்றுக்கு அசைகின்ற காட்சியோடு துகில் முடித்துப் போத்தியிருக்கும் மெய்க்காப்பாளர் தூக்க மயக்கத்தில் நடக்கும் நடையினை ஒப்புநோக்கி வருணிக்கின்றார். ஆண்டுகள் கடந்த பின்பும் இன்கரும்பாய் இனிப்பவை இவ்வருணனைகள்.
காவல் யானையின் கலாட்டா
மன்னன் போர்ப்பாசறை அமைத்துள்ள பாடி வீட்டில் ‘தழையால் வேய்ந்த கூரைகள் அமைந்த குடிசைகள் வரிகையாக அமைந்திருக்க, நாற்புறமும் இருக்கும் தெருக்கள் சந்திக்கும் இடத்தில் காவலுக்கு யானை நின்றது. அந்த யானையோ கரும்பு, நெற்கதிர் அதிமதுரத்தழை சேர்த்துக் கட்டப்பட்ட உணவுக் கட்டினை உண்ணாமல் நெற்றியில் துடைத்த, துதிக்ககையை மருப்பின்மேல் ஏற்றி வைத்திருக்கிறது. யானை இயல்பாக செய்த செயலை இனிதாக வருணிக்கிறார் ஆசிரியர்.
‘உவலைக் கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற
தேம்படு கவுள சிறுகண் யானை
ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்த
வயல்வினை இன்குளகு உண்ணாது
நுதல் துடைத்து அயல் நுனை
மருப்பின்தம் கையிடைக் கொண்டென‘ (29-34)
போர்க்களத்தில் பிடியை மறந்த களிறு பிடிக்கணம் மறந்த வேழம் (மு.பா.69) பாடி வீட்டில் பிடியை நினைந்து நின்றதோ! அதனால் இன்குளகும் இனிக்காது போயிற்றோ? நினைக்க நினைக்க இன்பம் தரும் காட்சி! யானையையே ஊட்டி வளர்க்கும் மன்னன் மக்களைப் பாதுகாக்காது போலானோ? அக்கால மன்னர்களின் பண்புநலனையும் வெளிப்படுத்தும் காட்சி.
கடமை பெரிதென நினைக்கும் காவலன்
தான் மேற்கொண்ட போர் வினையிலே முழு எண்ணத்தையும் செலுத்தி போர்ப் பாசறையில் இருக்கும் மன்னனை முல்லைப்பாட்டில் பார்க்கிறோம். பாடி வீட்டில் படுத்திருக்கும் தலைவனுக்குத் தூக்கம் வரவில்லை. துணையை நினைத்தானா ! இல்லை வேறு யாரைத்தான் நினைத்தான் ! தும்பிக்கை அறுபட்ட வேதனையால் துணையை நினைக்க முடியாது வருந்தும் யானையை நினைத்தான். அம்புகள் பாய்ந்ததால் உணவு உண்ண முடியாது வருந்தும் குதிரைகளைப் பற்றிச் சிந்தித்தான் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க உயிரைவிட்ட படை வீரர்களை எண்ணிப் பார்த்தான்..
எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து
பிடிக்கணம் மறந்த வேழம் ; வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய
தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்தி
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் ; தோல்துமிபு
பைந்நுனைப் பகழி மூழ்கலின் செவிசாய்த்து
உண்ணாது உயங்கும் மாசிந் தித்தும்.
ஒருகை பள்ளி ஒற்றி, ஒருகை
முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து ( 67-76)
ஒரு கையினைப் படுக்கையில் வைத்து மற்றொரு கடகம் அணிந்த கைகளால் தலையைத் தாங்கி நீண்ட நேரம் தலைவன் சிந்தித்த காட்சியை நம்முன் கொண்டுவந்து நிறுத்திய புலவரின் மாட்சி வெறும் சொற்களால் பாராட்டத்தக்கதன்று.
கிழவி நிலையே வினையிடத்து உரையார்
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும் (தொல். 432)
என்பதுதான் முல்லைத் தலைவனின் நோக்கம் போலும் ! உரையாத காட்சியாக உள்ளத்துள் உறைந்துவிட்டதோ தலைவியின் நினைவுகள்.
காதலன் வரவு பார்த்திருக்கும் காதலி
காதலன் வரவு பார்த்துத் தனிமைத்துயரில் தவித்துக் கிடக்கும் காதலியின் உணர்வினை உரைத்திடத்தான் முடியுமா? முடியும் என்கிறார் நப்பூதனார். வந்து விடுவார், வந்து விடுவார் என்று மனதைத் தேற்றிக் கொண்டு வாழ்ந்தாலும் உள்ளத் தவத்திலும், உடல் தலைவனின் பிரிவைக் காட்டிக் கொடுக்கின்றதே ! தலைவியின் நிலையை வருணிக்கிறார் புலவர்
....காணாள் துயர்உழந்து
நெஞ்சஆற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு
நீடுநினைந்து தேற்றியும் ஓடுவளை திருத்தியும்
மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும்
ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி,இழைநெகிழ்ந்து,(80-84)
இத்தனை வேதனைக்கிடையிலும் காதுகள் ஏழடுக்கு மாளிகையில் கூரை கூடுமிடங்களில் விழுகின்ற நீரின் ஓசையைக் கேட்டுக் கொண்டே இருந்தன. இவ்வோசை மழைக்காலம் வந்துவிட்டது என்பதைச் சொல்லிக் கொண்டேயிருந்தது. ஆனால் மனமோ தலைவன் வரவில்லையே என்று புலம்பிக் கொண்டிருந்தது! துயரத்தை மிகுவித்த மழைநீரின் ஓசைக்கிடையே இன்னிசையாய் வந்து தலைவியின் காதுகளில் ஒலித்தன, தலைவன் வரும் தேரில் பூட்டியுள்ளக் குதிரையின் குளம்பொலி!
கடமையும் காதலும் ஒன்றிணையும் நேரத்தில் பாட்டை முடித்த இன்ப நிறைவைத்தரும் முல்லையின் மணம் நுகர நுகர இன்பம் தருவது (சு)வாசிக்க (சு)வாசிக்க வாசனை குறைவின்றி இருப்பது.
முல்லைப்பாட்டு
மாலும் மழை மேகமும்
அகன்ற இடத்தையுடைய இவ்வுலகத்தைக் காக்கின்ற, சங்கு சக்கரம் பொறித்த திருமகளைத் தாங்குகின்ற பெரிய கைகளையுடைய திருமால் மாபலி சக்கரவர்த்தி தாலை வார்த்த நீர் கைகளில் பட்ட அளவிலே நிமிர்ந்து உயர்ந்து எழுந்த தோற்றத்தைப்போல, கருமேகங்கள் அலையோசை முழங்கும் குளிர்ந்த கடல்நீரைப் பருகி, வலமாக உயர்ந்து எழுந்து மலைகளில் தங்கி மழை நீரைச் சொரிந்து கொண்டே விரைந்து சென்றன.
மழைக்காலத்து மாலை நேரத்தில்
முதுபெண்டிர் விரிச்சி கேட்டல்
மேகங்கள் பெருமழையைப் பொழிந்த சிறிய துன்பம் தரும் மாலைப் பொழுதில், வயது முதிர்ந்த பெண்டிர், யாரும் அணுக முடியாத அரிய காவலையுடைய பழைய ஊரின் (திருமால்) கோவிலுக்குச் சென்று, நாழியில் கொண்டு சென்ற நெல்லோடு, யாழிசை போல் வண்டுகள் ஆரவாரிக்க அரும்புகள் மலர்ந்திருக்கும் நறுமணம் மிக்க முல்லை மலரையும் தூவி, இறைவனைக் கை தொழுது வேண்டி, நற்சொல் (விரிச்சி) கேட்டு நின்றனர்.
ஆய்மகளின் நற்சொல் கேட்டு கலைவியை ஆற்றுவித்தல்
சிறிய கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் இளம் கன்று தனது தாயினைக் காணாது அங்கும் இங்கும் சுழன்று கொண்டிருப்பதைப் பார்த்த குளிரால் நடுங்கித் தோளில் குறுக்கும் நெருக்குமாகக் கைகளைக் கட்டியிருக்கும் ஆயர்குலப் பெண், “வளைந்த கோலினைக் கையிலே வைத்துள்ள கோவலர் பின்னே நின்று செலுத்த உமது தாயர் இப்பொழுதே வருவர்” என்று கன்றிடம் கூறினாள். அவள் கூறி ய நன்மை தரும் சொல்லை விரிச்சி (நற்சொல்) கேட்டு நின்ற முதுபெண்டிர் கேட்டனர். ஆயர்குலப் பெண்ணின் நல்ல வார்த்தைகளைக் கேட்டதனால்,
“ மாந்தளிரின் நிறத்தை உடையவளே! பகைவர் இடத்தையெல்லாம் கவர்ந்து போரினை இனிதே முடித்து, தலைவன் விரைவில் வருவான். இதுஉண்மை நீ உனது வருத்தத்தினைப் போக்குவாயாக” என்று மீண்டும் மீண்டும் தலைவியிடம் கூறினர். தலைவியோ, குவளை மலர் போன்ற கண்களில் முத்து போன்ற நீர்த் துளிக்க அழுது கொண்டே வருத்தத்தில் இருந்தாள்.
பாசறை அமைத்தல்
காட்டாறு சூழ்ந்த அகன்ற நீண்ட முல்லை நிலக்காட்டில், நெடுந்தொலைவிற்கு மணம் வீசும் பிடவம் செடிகளையும், பசுமையான அதன் சிறு தூறுகளையும் வெட்டி, வேட்டுவரின்சிறு வாயில் அமைந்த அரணையும் அழித்து காட்டிலுள்ள முள்ளால் மதிலுக்குக் காவலாக வேலியை வளைத்து ஒலிக்கின்ற நீரினையுடைய கடல் போல் பரந்த பாடி வீட்டையும் வீரர்கள் அமைத்தனர்.
பாசறையில் நாற்சந்தியில் நிற்கும் யானையின் நிலை
பாசறையில் தழையால் கூரை வேயப்பட்டு, ஒழுங்காக அமைந்துள்ள தெருவில், நாற்சந்தி கூடுமிடத்து உள்ள முற்றத்தில் காவலுக்காக நின்ற யானை உயர்ந்து வளர்ந்த கரும்போடு நெற்கதிர்களையும் கலந்து கட்டியிருக்கின்ற வயலில் விளைந்த இனிய அதிமதுரத் தழையை உண்ணாது அவற்றைத் தனது நெற்றியில் துடைத்து, கூரீய முனையையுடைய மருப்பின் மேலேற்றி தும்பிக்கையில் அடக்கிக் கொண்டிருந்தது. யானையைப் பயிற்றும் மொழியன்றியும் வேறெதுவும் கல்லாத யானைப்பாகரும், கவர்த்த முள்ளுள்ள பரிக்கோல் கொண்டு வடமொழியில் யானையிடம் பேசி கவளத்தைத் தின்னுமாறு யானைக்கு ஊட்டினர்.
பாசறையில் வீரர்களின் அரண்கள்
தவவேடமுடைய அந்தணர் தன் காவி நிறம் தோய்ந்த ஆடையை முக்கோலை நட்டு அதன்மேல் தொங்க விட்டிருப்பது போல வீரர்களும் வலிய வில்லை ஊன்றி அதன் மேல் அம்புப் புட்டிலைத் தொங்கவிட்டிருந்தனர்.
கூடாரம் அமைப்பதற்காக விற்களை ஊன்றி கயிற்றால் வளைத்தக் கட்டிய இருப்பிடத்தில் பூ வேலைப்பாடமைந்த கைவேலைக் குத்தி கேடயத்தை வரிசையாக வைத்து வீரர்கள் தங்குவதற்காக வில்லாலாகிய பல்வேறு அரண்களை அமைத்தனர்.
பாசறையில் மன்னனுக்கென்று தனியிடம்
வேறு வேறான பல்வேறு படைகளின் நடுவிடத்தில் நீண்ட கோல்களோடு கூடிய பல நிறம் வாய்ந்த திரைகளால் கூறுபடுத்தி வேறோர் தனியிடம் மன்னனுக்கென்று ஒதுக்கினர்.
மன்னன் இருப்பிடத்தில் வாளேந்திய பெண்கள்
குறுகிய வளையணிந்த முன் கையினையும்,கூந்தல் புரளும் சிறு முதுகுப் புறத்தையும் உடைய பெண்கள் இரவைப் பகலாக்கும் வலிய பிடி அமைந்த ஒளி வீசும் வாளினைப் பல்வேறு நிறம் அமைந்த கச்சில் சேர்த்துக் கட்டி இருந்தனர். அப்பெண்கள் பாவையின் கைகயிலே இருக்கின்ற விளக்கில் நெய் குறையக் குறைய நெய் வார்க்கும் குழாயினைக் கொண்டு நெய் வார்த்து நெடுந்திரியினைக் கொளுத்தினர்.
பாசறையில் காவலாளர்
அழகிய மணியின் ஓசை அடங்கிய நடுயாமத்தில், காட்ட மல்லிகைப் பூத்திருக்கும் மல்லிகைக் கொடியின் சிறு தூறுகள்,நீர்த்திவலோடு வீசுகின்ற காற்றுக்கு அசைவதைப் போல தலையில் தலைப்பாகையைக் கட்டி. உடம்பினைப் போர்த்தியுள்ள வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர் தூக்க மயக்கத்தில் தளர்ந்த நடையோடு திறமையாகப் பாதுகாவலைச் செய்தனர்.
நாழிகைக் கணக்கர்
பொய்த்தல் இல்லாது நேரத்தைக் கணக்கிட்டு இவ்வளவு என்று கூறும் நாழிகைக் கணக்கர் மன்னனைக் கண்டு தொழுது,அவன் புகழ் தோன்றுமாறு வாழ்த்தி, ‘அலைக்கடல் சூழ்ந்த உலகத்தில் பகைவரை வெல்லுவதற்குச் செல்பவனே ! உனது நாழிகை வட்டிலில் (நேரத்தை அளந்தறியும் கருவி) சென்றுள்ள நேரம் இவ்வளவு’ என்று அறிவித்தனர்.
மன்னன் இருப்பிடத்தில் யவனர்
குதிரை சவுக்கினை மடக்கி வளைத்துக் கட்டியதால் புடைத்துத் தோன்றும் நெருக்கிக் கட்டிய ஆடையும் சட்டையும் அணிந்த அச்சம் தரும் தோற்றமும், வலிமையான உடம்பும் வீரமும் உடைய யவனர், புலிச் சங்கிலி தொங்க விடப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட பெருமை பொருந்திய மன்னனின் இருப்பிடத்தில் அழகிய மணி விளக்கினை ஏற்றி வைத்தனர்.
மன்னனின் பள்ளியறையில் மிலேச்சர்
வலிய கயிற்றால் வளைத்துக் கட்டப்பட்ட திரைச் சீலைகள் அமைந்த இரண்டு அறைகளைக் கொண்ட மன்னனின் பள்ளியறையில் (ஓரறையில்) செய்திகளை உடலசைவால் தெரிவிக்கும் நாவால் உரைக்க முடியாத சட்டையணிந்த மிலேச்சியர் இருந்தனர்.
பாசறையில் மன்னனின் நிலை
போர் செய்வதில் கொண்ட மிக்க விருப்பத்தால் மன்னன் பள்ளியறையில் தூக்கம் கொள்ளாது (முதல் நாள் நடைபெற்ற) போர்க்களக் காட்சிகளை நினைத்தபடியே படுத்திருந்தான். பகைவர் எடுத்தெறிந்த வேல் நுழைந்ததால் புண் ஏற்பட்டு, பெண் யாடினகளை மறந்திருக்கின்ற ஆண் யானைகளையும், அடியுண்ட பாம்பு துடிப்பதையும் போல ஆண் யானையின் பருத்த துதிக்கை வெட்டுப்பட்டு வீழ்ந்து துடித்ததையும், தேன் ஒழுகும் வஞ்சி மாலைக்கு வெற்றியைத் தந்து செஞ்சோற்றுக் கடன் தீர்த்து போர்க்களத்திலே இறந்த படைவீரர்களை நினைத்தும், தோலால் செய்து போடப்பட்டிருக்கும் கடிவாளத்தையும் அறுத்துக் கொண்டு கூரிய முனையுடைய அம்புகள் பாய்ந்ததால் காதுகளைச் சாய்த்து உணவு உண்ணாது வருந்தும் குதிரையைப் பற்றி சிந்தித்தும், ஒரு கையினைப் படுக்கையின் மேல் ஊன்றியும் மற்றொரு கடகம் அணிந்த கையினால் தலையைத் தாங்கி நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
வெற்றிக்குப் பின் பாசறையில் மன்னன்
மன்னன் நடந்த போரினை நினைத்து உறங்காமல் இருந்த அடுத்தநாள் பகைவரைக் குறித்துப் படைக்கலங்களைச் செலுத்தி வலிமையான விரலாலே தனது ஒளியைத் தங்கச் செய்யும் போருக்க அணிந்ததாகிய வஞ்சி மாலைக்கு, நல்ல வெற்றியைக் கொடுத்தமையால் மனநிறைவு பெற்று பகையரசர் கேட்டு நடுங்க வெற்றி முரசு முழங்க பாசறையில் (வெற்றி பெற்ற மகிழ்ச்சியில்) இனிமையாகத் துயில் கொண்டான்.
தலைவனைக் காணாது வருந்தும் தலைவியின் நிலை
தலைவன் வரக் காணாது துயருற்று வருந்திய தலைவியை நெஞ்சமானது, ‘நீ உனது துயரத்தை ஆற்றியிரு’ என்று சொல்லிக் கொண்டிருக்க துயரத்தை மறைக்க முடியாது வருத்தத்தில் இருக்கும் தலைவி நீண்ட நேரம் சிந்தித்துப் பின் தன்னைத் தேற்றிக் கொள்கிறாள். கழன்று விழுகின்ற வளையல்களைத் திருத்தமுற கழறாமல் அணிந்து கொள்கிறாள். வருத்தத்தின் காரணமாக அறிவு மயங்க, மயக்கத்தில் பெருமூச்செறிகிறாள். அம்பு தைத்த மயில் போல் நடுங்குகிறாள். நடுக்கத்தில் அணிந்திருக்கும் அணிகலன்களும் நெகிழ்கின்றன. இந்த நிலையிலும் தன் துயரத்தை மறைத்து பாவை விளக்கு எரிந்து கொண்டிருக்கும் அகன்ற சிறந்த உயர்ந்த ஏழடுக்கு மாளிகையில் கூரை கூடும் இடங்களில் மழைநீர் அருவி போல் சொரிகின்ற இனிய முழக்கித்தினைக் கேட்டவாறே படுத்துக் கிடக்கின்றாள்.
போரில் வெற்றி பெற்று தலைவன் வருதல்
பகைவரை வென்று அவர்களின் விருப்பமான நிலங்களைக் கவர்ந்து, பெரிய படையோட வெற்றிக் கொடியை உயர்த்திப் பிடித்து வெற்றியை அறிவிக்கும் ஊது கொம்பும் சங்கும் முழங்க திரும்புகின்றான் தலைவன்.
கார்ப்பருவத்தில் செழித்திருக்கும் முல்லை நிலம்
முல்லை நிலத்து நுண்ணிய மணலிலி நெருங்கிய இலைகளைக் கொண்டக் காயா மலர் மை போல் மலர்ந்திருந்தன. தளிரையும் பூங்கொத்துக்களையும் உடைய கொன்றை, பொன் போன்ற மலர்களைச் சொரிந்து கொண்டிருந்தன. காந்தளின் குவிந்த மொட்டுக்களோ அழகிய கை போல் மலர்ந்திருந்தன. இதழ்கள் நிறைந்த செங்காந்தள் மலர் உதிரம் போல் பூத்திருந்தன. இவ்வாறு பலவகை பூக்களால் செழித்திருக்கும் முல்லை நிலத்தின் பெயரிய வழியிலே வானம் தப்பாமல் மழை பெய்ததனால் விளைந்த வளைந்த கதிரினையுடைய வரகின் இடையே திரிந்த கொம்புகளைக் கொண்ட ஆண் மானுடன் பெண் மான் துள்ளிக் குதித்து விளையாடின.
தலைவனின் வருகை
வளமான முல்லை நிலத்தில் எதிரே செல்லும் மேகங்கள் மழையைப் பொழிகின்ற கார் காலம்.இக்கார்காலத்தில் போர் வினை முடித்துத் திரும்பும் தலைவன், முதிர்ந்த காய்களையுடைய வள்ளிக் கொடி படர்ந்திருக்கும் அழகிய காடு, பின்னோக்கிச் சென்று மறையுமாறு விரைந்து செல்லும் தேரினை விரைவாகச் செலுத்தினான். தலைவனின் நெடிய தேரில் பூட்டப்பட்டுள்ள குதிரையின் குளம்பொலி, தலைவனின் வரவு பார்த்துக் காத்திருக்கும் தலைவியின் செவிகள் நிறையுமாறு ஆரவாரித்தன.
முல்லைப்பாட்டு
மால்போலத் தோன்றும் மழைமேகம்
நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி வலன்ஏர்பு
கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி (1-5)
அகன்ற இடத்தையுடைய இந்த உலகத்தை வளைத்துக் காக்கின்ற சக்கரம், சங்கு பொறிக்கப்பட்ட திருமகளைத் தாங்குகின்ற பெரிய கைகளையுடைய திருமால் மாபலி சக்கரவர்த்தி தாரை வார்த்த நீர் கையில்பட்ட அளவிலே நிமிர்ந்த எழுந்த தோற்றம் போல-மேகங்கள், அலையோசை முழங்கும் குளிர்ந்த கடல் நீரைப் பருகி, வலமாக உயர்ந்து எழுந்து, மலைளில் தங்கி, விரைந்து சென்றன.
சொற்பொருள் விளக்கம்
நனந்தலை- அகன்ற இடம், உலகம்-ஞாலம்,வையகம், வளைஇ-வளைத்த, நேமியோடு-சக்கரத்தோடு,வலம்புரி-சங்கு, பொரித்த-பொறித்துள்ள, மா- திருமகள், தாங்கு-தாங்குகின்ற, தடக்கை-பெரிய கை,நீர் செல-நீரை வார்க்க, நிமிர்ந்த-உயர்ந்து நின்ற, மாஅல்போல-திருமால் போல பாடு இமிழ்-ஒலி முழங்கும், பனிக்கடல்-குளிர்ந்த கடல், பருகி-குடித்து, வலன்-வலமாக, ஏர்பு-எழுந்து, உயர்ந்து, கோடு-மலை, கொண்டு எழுந்த-தங்கி எழுந்த, கொடுஞ் செலவு-விரைந்து செல்லல், எழிலி-மேகம்.
மழைக்காலத்து மாலை நேரம்
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை(6)
அம்மேகங்கள் பெருமழையைப் பொழிந்த சிறிய துன்பம் தரும் மாலைப்பொழுதில்,
சொற்பொருள் விளக்கம்
பெரும்பெயல்- பெருமழை, பொழிந்து- பெய்த, சிறு- சிறு கால அளவினதாகிய, புன்- துன்பம், மாலை-மாலைப்பொழுது
முதுபெண்டிர் விரிச்சி கேட்டல்
அருங்கடி மூதூர் மருங்கில் போகி
யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப (7-11)
பெரிதும் வயது முதிர்ந்த பெண்டிர், யாரும் அணுக முடியாத அரிய காவலையுடைய பழைய ஊரின் பக்கத்தில் சென்று (திருமால் கோவிலுக்கு) நாழியில் கொண்டு சென்ற நெல்லோடு, யாழிசை போல் வண்டுகள் ஆரவாரிக்க அரும்புகள் மலர்ந்திருக்கும் நறுமணம் மிக்க முல்லை மலரையும் தூவி, (இறைவனை வேண்டி) கைதொழுது நற்சொல் (விரிச்சி) கேட்டு நின்றனர். அப்பொழுது,
சொற்பொருள் விளக்கம்
அருங்கடி- அரிய காவல், மூதூர்- பழைய ஊர், மருங்கில்-பக்கத்தில், போகி- சென்று, யாழ்இசை- யாழின்இசை, வண்டு- வண்டினம், ஆர்ப்ப-ஆரவாரிக்க, நெல்லொடு- நெல்லோடு, நாழி கொண்ட- நாழியில் கொண்ட, நறு-மணமிக்க, வீ-மலர், அரும்பு- மொட்டு, அவிழ்-மலர்ந்த, அலரி-மலர்ந்த பூ, தூஉய்- தூவி, கைதொழுது- கையினைத் தொழுது, பெருமுது- வயதான, பெண்டிர்- பெண்கள் , விரிச்சி- நற்சொல், நிற்ப-நிற்பர்.
ஆய்மகளின் நற்சொல் கேட்டலும்
தலைவியை ஆற்றுவித்தலும்
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள், ‘கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர,
இன்னே வருகுவர், தாயர் ’ என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம் : அதனால்,
நல்ல, நல்லோர் வாய்ப்புள்: தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருதல் தலைவர்,வாய்வது: நீநின்
பருவரல் எவ்வம் களை மாயோய் : என
காட்டவும் காட்டவும் காணாள் கலுழ்சிறந்து
பூப்போல் உண்கண் புலம்பு முத்துஉறைப்ப,(12-23)
சிறிய கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் இளம் கன்று தனது தாயினைக் காணாது துயருற்று அங்கும் இங்கும் சுழன்று கொண்டிக்க அதனைப் பார்த்துக் குளிரால் நடுங்கித் தோளில் குறுக்கும் நெடுக்குமாகக் கைகளைக் கட்டியுள்ள ஆயர்குலப் பெண், “வளைந்த கோலினைக் கையிலே வைத்துள்ள கோவலர் பின்னே நின்று செலுத்த உம்முடைய தாயர் இப்பொழுதே வருவர் என்று கூறி ய நன்மை தரும் நல்ல சொல்லைக் கேட்டோம்.
“நல்லவர்களின் நல்ல வாய்ச் சொல்லைக் கேட்டதனால், பகைவர் இடத்தையெல்லாம் கவர்ந்து போரினை இனிதே முடித்து தலைவன் வருவான். இது உண்மை. நீ உன்னுடைய துன்பத்தால் எழுந்த வருத்தத்தினைக் களைவாயாக! மாந்தளிர்ன் நிறத்தினை உடையவளே ” ! என மீண்டும் தலைவியிடம் வற்புறுத்திக் கூறவும், தலைவி ஆற்றாளாய் அழுது கொண்டு, குவளை மலர் போன்ற கண்களில் முத்துப் போன்று நீர்த் துளிக்க வருத்தத்தில் இருந்தாள்.
சொற்பொருள் விளக்கம்
சிறுதாம்பு-சிறிய கயிறு, தொடுத்த-கட்டப்பட்ட, பசலைக் கன்று- இளம் கன்று,உறுதுயர்-அடைகின்ற துயர், நோக்கி-பார்த்து, ஆய் மகள்-ஆயர் குலப்பெண், நடுங்கு-நடுங்கும், சுவல்-தோள், அசைத்த-கட்டிய , கையள்-கைகளை உடையவயள், கைய-கையிலுள்ள, கொடுங்கோல்-வளைந்த கோல், கோவலர்-ஆடுமாடு மேய்க்கும் ஆயர்குலத்தவர், பின்நின்று-பின்னே நின்று, உய்த்தர-செலுத்தலைச் செய்ய, இன்னே-இப்பொழுதே, வருகுவர்-வருவர், தாயர்-தாய்ப்பசு, என்போள்-என்று கூறியவள், நன்னர்-நன்மை, நன்மொழி-நல்ல மொழி, கேட்டனம்-கேட்டோம், அதனால்-அதன் காரணமாக, நல்ல-நல்ல, நல்லோர்-நல்லவர்கள், வாய்ப்புள்-வாய்ச்சொல், தெவ்வர்-பகைவர், முனைகவர்ந்து- பகைவர் இடத்தைக் கைப்பற்றி, சொண்ட-எடுத்துக்கொண்ட, திறையர்-கப்பப் பொருளாகப் பெற்றவர், வினை-போர்த்தொழில், முடித்து- நிறைவேற்றி, வருதல்-வருவார், தலைவர்-தலைவர், வாய்வது-உண்மை, நீநின்-நீ உன்னுடைய, பருவரல்-துன்பம், எவ்வம்-வருத்தம்,களை-நீக்கு, மாயோய்-மாமை நிறம் உளையவளே, என-என்று, காட்டவும் காட்டவும்-வற்புறுத்தவும் வற்புறுத்தவும், காணாள்-தேற்றுதலை ஏற்காது, கலுழ்சிறந்து-அழுகை மிகுந்து, பூப்போல்-குவளை மலர்போல், உண் கண்-மையுண்டகண், புலம்பு-தனிமை, முத்து-முத்துப்போன்ற நீர்த்துளி, உறைப்ப-ஒழுக
அடுத்து வரும் 57 வரிகளில் பாசறையின் அமைப்பும், தலைவியைப் பிரிந்து சென்று,பாசறையில் தங்கி இருக்கும் தலைவனது இயல்புன் உணர்த்தப்பட்டுள்ளன.
பாசறை அமைத்தல்
கான்யாறு தழீஇய அகல்நெடும் புறவில்
சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி
வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக் காட்ட
இடுமுட் புரிசை ஏமுற வளைஇ,
படுநீர்ப் புணரியின் பரந்த பாடி (24-28)
காட்டாறு சூழ்ந்த அகன்ற நீண்ட முல்லைநிலக் காட்டில் நெடுந்தொலைவிற்கு மணம் வீசும் பிடவம் செடிகளையும், பசுமையான சிறு தூறுகளையும் வெட்டி, வேட்டுவர்ன் சிறு வாயில் அமைந்த அரணையும் அழித்து, காட்டிலுள்ள முள்ளால் மதிலுக்குக் காவலாக வேலியை வளைத்து, ஒலிக்கின்ற நீரையுடைய கடல் போல் பரந்த பாடி வீட்டை அமைத்தனர்.
சொற்பொருள் விளக்கம்
கான்யாறு-காட்டாறு, தழீஇய-சூழ்ந்த, அகல் நெடும்-அகன்று நீண்ட, புறவு-முல்லைக்காடு, சேண்-தொலைவு, நாறு-மணம்வீசும், பிடவமொடு –பிடவம் செடிகளோடு, பைம்-பசுமையான, புதல்-சிறுதூறு, எருக்கி-அழித்து, வேட்டு-வேட்டுவர், புழை-சிறுவாயில், அருப்பம் –அரண், கோட்டை, மாட்டி-அழித்து, காட்ட-காட்டிலுள்ள, இடுமுட்-முள்ளால் இடப்பட்ட, புரிசை-மதில், ஏமுற-காவலாக, வளைஇ-வளைந்த,படுநீர்-ஒலிக்கும் நீர், புணரி-கடல், பரந்த-அன்ற, பாடி-பாசறை.
பாசறையின் நாற்சந்தியில் நிற்கும் யானையின் நிலை
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற
தேம்படு கவுள சிறுகண் யானை
ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்த
வயல்விளை இன்குளகு உண்ணாது நுதல்துடைத்து
அயில்நுனை மருப்பின்தம் கையிடைக் கொண்டென
கவைமுள் கருவியின் வடமொழி பயிற்றி
கல்லா இளைஞர் கவளம் கைப்ப,(29-36)
பாசறையில் தழையால் கூரை வேயப்பட்டு, ஒழுங்காக அமைந்துள்ள தெருவில், நாற்சந்தி கூடுமிடத்து உள்ள முற்றத்தில் காவலுக்காக நின்ற மதநீர் ஒழுகும் கன்னங்களும், சிறிய கண்களும் கொண்ட யானை- உயர்ந்து வளர்ந்த கரும்போடு நெற்கதிர்களையும் கலந்து கட்டியிருக்கின்ற வயலில் விளைந்த இனிய அதிமதுரத் தழையை உண்ணாது அவற்றைத் தனது நெற்றியில் துடைத்து, கூரீய முனையையுடைய மருப்பின் மேலேற்றி தும்பிக்கையில் அடக்கிக் கொண்டிருந்தது. (யானையைப் பயிற்றும் மொழியன்றியும் வேறெதுவும் கற்காதவர்) பாகர், வடமொழியில் யானையிடம் பேசி கவளத்தைத் தின்னுமாறு யானைக்கு ஊட்டினர்.
சொற்பொருள் விளக்கம்
உவலை-தழை, கூரை-மேற்கூரை, ஒழுகிய தெருவில்-ஒழுங்காக அமைக்கப்பட்ட தெருவில்,கவலை-நாற்சந்தி கூடுமிடம், முற்றம்-முன்னிடம், காவல் நின்ற-காவலாக நின்ற, தேம்படு-மதநீர் ஒழுகும், கவுள-கன்னம், சிறுகண் யானை-சிறிய கண்களை உடைய யானை, ஓங்குநிலை-ஓங்கிவளர்ந்துள்ள, கரும்பொஈடு-கரும்போடு, கதிர்-நெற்கதிர், மிடைந்து-நெருங்க, கலந்து யாத்த-கட்டிய,வயல் விளை-வயலில் விளைந்த, இன்குளகு-இனிய அதிமதுரத்துழை, உண்ணாது-உணவாகக் கொள்ளாது, நுதல்-நெற்றி, துடைத்து-துடைத்து,அயில் நுனை-கூர்மையான முனையையுடைய மருப்பின், தந்தத்தின், தம்-தனது, கையிடை-ஏற்றியுள்ள தும்பிக்கையின் இடையில், கொண்டென- கொண்டிருக்க, கவைமுள்-பிளவுபட்ட முள்ளால் (ஆன கருவி), கருவியின்-பரிக்கோலின், வடமொழி-வடமொழி, பயிற்றி-பல காலும் கூறி, கல்லாத-கல்லாத, வினைஞர்-யானையைச் செலுத்தும் பாகர், கவளம்-உணவு, கைப்ப-ஊட்ட
பாசறையில் வீரர்களின் அரண்கள்
கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசைநிலை கடுப்ப, நல்போர்
ஓடா வல்வில் தூணி நாற்றி
கூடம் குத்திக் கயிறுவாங்கு இருக்கை
பூந்தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து,
வாங்குவில் அரணம் அரணமாக,(37-42)
தவவேடமுடைய அந்தணர் தன் காவி நிறம் தோய்ந்த ஆடையை முக்கோலை நட்டு அதன்மேல் தொங்க விட்டிருப்ப போல வீரர்கள் தான் செய்கின்ற நல்ல போரில் புறமுதுகிட்டு ஓடாமல் இருப்பதற்குக் காரணமான வலிய வில்லை ஊன்றி அதன் மேல் அம்புப் புட்டிலைத் தொங்கவிட்டனர்.
கூடாரம் அமைப்பதற்காக விற்களை ஊன்றி கயிற்றால் வளைததுக் கட்டிய இருப்பிடத்தில் பூ வேலைப்பாடமைந்த கைவேலைக் குத்தி கேடயத்தை வரிசையாக வைத்து வீரர்கள் தங்குவதற்காக வில்லாலாகிய பல்வேறு அரண்களை அமைத்தனர்.
சொற்பொருள் விளக்கம்
கல்-காவிக்கல், தோய்த்து-நனைத்து, ஊறவைத்து, உடுத்த-அணிந்த, படிவம்-தவவேடம், பார்ப்பான்-அந்தணன், மக்கோல்-மூன்று பிரிவாக அமைந்துள்ள கோல், அசைநிலை-தங்கவைத்த தன்மை, கடுப்ப (உவம உருபு)-போல, நல்போர்-நல்லபோர், ஓடா-(புறமுதுகிட்டு) ஓடாத, வல்வில் - வலிமையான , தூணி-அம்புறாத்துணி, நாற்றி- தொங்கவிட்டு, கூடம்-கூடாரம், குத்தி-ஊன்றி, கயிறுவாங்கு-கயிற்றால் வளைத்த,இருக்கை-இருப்பிடம், பூந்தலை-பூவேலைப்பாடு அமைந்த தலைப்பகுதி, குந்தம்-கைவேல், குத்தி-நட்டு, கிடுகு-படல், கேடயம், நிரைத்து-வரிசையாக வைத்து, வாங்குவில்-வளைந்த வில், அரணம்-அரண், அரணமாக-அரண்களாக.
பாசறையில் மன்னனுக்குத் தனிஇடம்
வேறுபல் பெரும்படை நாப்பண்,வேறு ஓர்
நெடுங்காழ்க் கண்டம் கோலி அகம்நேர்பு(43-44)
வேறு வேறான பல்வேறு படைகளின் நடு விடத்தில், நீண்ட கோல்களோடு கூடிய பல நிறம் வாய்ந்த திரைகளால் கூறுபடுத்தி, வேறோர் தனி இடம் மன்னனுக்கென்று அமைத்தனர்.
சொற்பொருள் விளக்கம்
வேறுபல்-பல்வேறு, பெரும்படை-பெரிய படை, நாப்பண்-நடுவிடத்தில,வேறு ஓர்-வேறோர், நெடுங்காழ்-நீண்ட கோல், கண்டம் (வடசொல்)-கூறுபடுத்தற் குரிய பல நிறத்தாலான திரை, கோலி-வளைத்து, அகம்-உள்வீடு, நேர்பு-உடன்பாடு.
மன்னனின் இருப்பிடத்தில் விளக்கேற்றும் பெண்கள்
குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறுபுறத்து
இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர்
நெய்உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ
கைஅமை விளக்கம் நந்துதொறும் மாட்ட(45-49)
குறுகிய வளையணிந்த முன் கையினையும், கூந்தல் புரளும் அழகிய சிறு முதுகுப்புறத்தையும் உடைய பெண்கள் இரவைப் பகலாக்கும் வலிய பிடி அமைந்த ஒளி வீசும் வாளினைப் பல்வேறு நிறமமைந்த கச்சில் சேர்த்து கட்டிணிருந்தனர். பாவையின் கையிலே இருக்கின்ற விளக்கில் நெய் குறையுந் தொறும், நெய் வார்க்கும் குழாயினைக் கொண்டு நெய் வார்த்து, நெடுந்திரியினைக் கொளுத்தினர்.
சொற்பொருள் விளக்கம்
குறுந்தொடி-குறுகிய வளை, முன்கை-கையின் முன்பகுதி, கூந்தல்-தலைமயிர், அம்-அழகிய, சிறு-சிறிய, புறத்து-முதுகுப்பகுதி, இரவுபகல்-இரவைப் பகலாக்கும், செய்யும் - செய்கின்ற, பிண்பிடி-வலிய கைப்பிடி, ஒள்வாள்-ஒளி வீசும வாள் விரவு-கலந்த, சேர்ந்த, வரி-நிறம், கச்சின் - இரவிக்கையின், பூண்ட-அணிந்த, மங்கையர்-பெண்கள், நெய்உமிழ்-நெய் வார்க்கும், சுரையர்-திரிகுழாயினை உடையர், நெடுந்திரி-நீண்டதிரி-கொளீஇ-கொளுத்தி, கைமை ஞ கையிலே இருக்கின்ற, விளக்கம் –விளக்கின், நந்துதொறும்-குறையும் தொறும், மாட்ட-கொளுத்த.
பாசறையில் காவலாளர்
நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள்
அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
சிதர்வால் அசைவளிக்கு அசைவந் தாங்கு
துகில்முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்
பெருமூ தாளர் ஏமம் சூழ (51-54)
நீண்ட நாக்கினையுடைய அழகிய மணியின் ஓசை அடங்கிய நடுயாமத்தில்-காட்டு மல்லிகைப் பூத்திருக்கும் ஆடுகின்ற மல்லிகைக் கொடியின் சிறு தூறுகள். நீர்த்திவலையோடு வீசுகின்ற காற்றுக்கு அசைவதைப் போல-தலையில் தலைப்பாகையைக் கட்டி, உடம்பினைப் போர்த்தியுள்ள வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர்-தூக்க மயக்கத்தில் தளர்ந்த நடையோடு திறமையாகப் பாதுகாவலைச் செய்தனர்.
சொற்பொருள் விளக்கம்
நெடுநா-நீண்டநாக்கு, ஒண்மணி-ஒளிபொருந்திய மணி, அழகிய மணி, நிழத்திய-ஓசை அடங்கிய, நடுநாள்-நடு யாமத்தில், அதிரல்-காட்டு மல்லி, பூத்த - பூத்திருக்கும், ஆடுகொடி-ஆடுகின்ற கொடி, படாஅர்-சிறுதூறுகள், சிதர்-நீர்த் திவலை, மழைத்தூறல், வரல்-வருகின்ற, அசை-அசைந்து, வளி-காற்று, அசை-அசைந்து, வந்துஆங்கு-வருவது போல, துகில்-துணி, முடித்து-தலைப்பாகைக் கட்டி,போர்த்தி-உடம்பைப் போர்த்தி, தூங்கல்-தூக்க மயக்கம், ஓங்கு-உயர்ந்த, நடை-ஒழுக்கம், பெருமூதாளர்-வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர், ஏமம்-காவல், சூழ-சுற்றிவர.
நாழிகைக் கணக்கர்
பொழுதுஅளந்து அறியும் பொய்யா மாக்கள்
தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி,
‘எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்: நின்
குறுநீர்க் கன்னல் இனைத்து’ என்று இசைப்ப(55-58)
பொய்த்தலில்லாது நேரத்தைக் கணக்கிட்டு, இவ்வளவு என்று கூறும் நாழிகைக் கணக்கர் மன்னனைக் ககண்டு தொழுது, அவன் புகழ் தோன்றுமாறு வாழ்த்தி, ‘அலைகடல் சூழ்ந்த உலகத்தில் பகைவரை வெல்லுவதற்குச் செல்பவனே! உனது நாழிகை வட்டிலில் (நேரத்தை அளந்தறியும் கருவி ) சென்றுஙளள நேரம் இவ்வளவு’ என்று அறிவித்தனர்.
சொற்பொருள் விளக்கம்
பொழுது அளந்து-பொழுதீனை இத்துணை என்று கணக்கிட்டு, அறியும்-அறிகின்ற, பொய்யா மாக்கள்-பொய் கூறாத மக்கள், தொழுது-வணங்கி,காண்-கண்டு, கையர்-கைகளையுடையர், தோன்ற-புகழ்தெரியுமாறு, வாழ்த்தி - வாழ்த்திக்கூறி, எறிநீர்-அலையெறியும் கடல், வையகம்-ஞாலம், வெலீஇய-வெல்வதற்கு, செல்வோய்-செல்பவனே, நின்-உன்னுடைய குறுநீர்-சிறிய நீர், கன்னல்-நாழிகை வட்டில் (காலத்தை அளந்து அறியும் கருவி) , இனைத்து-சென்ற நாழிகை இவ்வளவு, என்று-என்று, இசைப்ப-சொல்ல.
மன்னன் இருப்பிடத்தில் யவனர்
மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து,
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமான் நல்இல்
திருமணி விளக்கம் காட்டி..............(59-63)
குதிரைச் சவுக்கினை மடக்கி வளைத்தக் கட்டியதால் புடைத்துத் தோன்றும் நெருக்கிக் கட்டிய ஆடையும், சட்டையும் அணிந்த-அச்சம் தரும் தோற்றமும் வலிமையான உடம்பும் வீரமும் உடைய யவனர்-புலிச்சங்கிலி தொங்கவிடப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட பொருமை பொருந்திய (மன்னன்இருக்கும் ) நல்ல இல்லத்தில் அழகிய மணி விளக்கினை ஒளிரச் செய்தனர்.
சொற்பொருள் விளக்கம்
மத்திகை-குதிரைச் சவுக்கு, வளைஇய-வளைத்துக் கட்டிய,மறித்து-மடக்கி, வீங்கு-புடைத்து, செறிவுடை-நெருக்கிக் கட்டிய, மெய்ப்பை-சட்டை, புக்க-அணிந்த,வெருவரும்-அச்சம் தரும், தோற்றத்து-தோற்றம் உடையவராய், வலிபுணர்-வலிமை பொருந்திய, யாக்கை-உடம்பு, வன்கண்-திண்மையான; வீரம் பொருந்திய, யவனர்-கிரேக்கர், சோனகர் (Ionians or Greeks) புலித்தொடர்-புலிபொறித்த சங்கிலித்தொடர், விட்ட-தொங்கவிட்ட, புனை-அலங்கரிக்கப்பட்ட, மாண்-பெருமை, நல்இல்-நல்ல இல்லத்தில், திருமணி-அழகிய மணி, விளக்கம்-விளக்கு, காட்டி-ஒளிரச் செய்து.
மன்னனின் பள்ளியறையில் மிலேச்சியர்
.................திண்ஞாண்
எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்
உடம்பிம் உரைக்கும் உரையா நாவின்
படம்புகு மிலேச்சர் உழையர் ஆக (63-66)
வலிய கயிற்றால் வளைத்துக் கட்டப்பட்ட திரைச்சீலைகள் அமைந்த இரண்டு அறைகளைக் கொண்ட மன்னனின் பள்ளியறையில், (ஓரறையில்) செய்திகளை உடலசைவால் தெரிவிக்கும் நாவால் உரைக்கமுடியாத சட்டையணிந்த ஆரியர் (மிலேச்சியர்) அருகாமையில் இருப்பர்.
சொற்பொருள் விளக்கம்
திண்ஞாண்-வலிய கயிறு, எழினி-திரைச்சீலை, வாங்கிய-வளைத்து, ஈரரை-இரண்டு அறைகள், பள்ளியுள்-படுக்கையறையில், உடம்பின்-உடம்பால், உரைக்கும்-தெரிவிக்கும், உரையா-பேசாத, நாவின்-நாவினையுடைய, படம்புகு-சட்டையணிந்த, மிலேச்சர்-ஆரியர், உழையர்-அருகிலுள்ளவர், ஆக-அவ்வாறிருக்க.
மிலேச்சர்-ஆரியர்
பெலுச்சிதானத்திலிருந்து வந்த துருக்கர்.
பெலுச்சி என்பது மிலேச்சியர் எனத் திரிந்தது.
(முல்லைப்பாட்டு அராய்ச்சியுரை. பக்கம்.92)
பாசறையில் மன்னனின் மனநிலை
மண்டுஅமர் நசையொடு கண்படை பெறாஅது,
எடுத்துஎறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து
பிடிக்கணம் மறந்த வேழம் : வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய
தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்தி,
சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளயும் : தோல்துமிபு
பைந்நுனைப் பகழி மூழ்கலின், செவிசாய்த்து
உண்ணாது உயங்கும் மாசிந் தித்தும் :
ஒருகை பள்ளி ஒற்றி, ஒருகை
முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து..( 67-76)
போர் செய்வதில் கொண்ட மிக்க விருப்பத்தால்- மன்னன் பள்ளியறையில் தூக்கம் கொள்ளாது (முதல் நாள் நடைபெற்ற போர்க்களக் காட்சிகளை நினைத்தபடியே) படுத்திருந்தான். பகைவர் எடுத்தெறிந்த வேல் நுழைந்ததால் புண் ஏற்பட்டு, பெண் யாடினகளை மறந்திருக்கின்ற ஆண் யானைகளையும்- அடியுண்ட பாம்பு துடிப்பதையும் போல ஆண் யானையின் பருத்த துதிக்கை வெட்டுப்பட்டு வீழ்ந்து துடித்ததையும்- தேன் ஒழுகும் வஞ்சி மாலைக்கு வெற்றியைத் தந்து செஞ்சோற்றுக் கடன் தீர்த்து போர்க்களத்திலே இறந்த படைவீரர்களை நினைத்தும்- தோலால் செய்து போடப்பட்டிருக்கும் கடிவாளத்தையும் அறுத்துக் கொண்டு கூரிய முனையுடைய அம்புகள் பாய்ந்ததால் காதுகளைச் சாய்த்து உணவு உண்ணாது வருந்தும் குதிரையைப் பற்றி சிந்தித்தும்- ஒரு கையினைப் படுக்கையின் மேல் ஊன்றியும் மற்றொரு கடகம் அணிந்த கையினால் தலையைத் தாங்கி நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
சொற்பொருள் விளக்கம்
மண்டு-மிக்குச் செல்லும், அமர்-போர், நசையொடு - விருப்பத்தோடு, கண்படை-உறக்கம், பெறாஅது-கொள்ளாது, எடுத்து-எடுத்து , எறி-எறிந்த, எஃகம்-வேல், பாய்தலின்-பாய்ந்ததால், புண்-புண் கூர்ந்து-மிக்கு, பிடி-பெண்யானை, கணம்-கூட்டம், மறந்த-மறந்திருக்கின்ற, வேழம்-ஆண்யானை, வேழத்து-ஆண் யானையினது, பாம்பு-பாம்பு, பதைப்பு-துடிப்பு, அன்ன-போல, பரூஉக்கை-பருத்த துதிக்கை,துமிய-அற்று வீழ, தேம்பாய்-தேன்ஒழுகுகின்ற, தேன்சிந்துகின்ற, கண்ணி-மாலை, நல்- நல்ல,வலம்-வெற்றி, திருத்தி-செம்மையாக, மனநிறைவாக, சோறு-செஞ்சோற்றுக்கடன் (தனக்கு உணவளித்தவர்களுக்குச் செய்யும் கடன் ), வாய்த்து-தப்பாமற் செய்து, ஒழிந்தோர்-இறந்தோர், உள்ளியும்-நினைத்தும், தோல்-தோல், (தோலானைக் குதிரைக் கவசம்),துமிபு-அறுத்து, வை- கூர்மை, நுனை-முனை,பகழி-அம்பு , மூழ்கலில்-அழுந்தியதால், செவி-காது, சாய்த்து-சாய்த்த, உண்ணாது-உணவினை உண்ணாது, உயங்கும்-வருந்தும், மா-குதிரை, சிந்தித்தும் (வடசொல்)-நினைந்தும், ஒருகை - ஒரு கை, பள்ளி-படுக்கை, ஒற்றி-சேர்த்தி, நெடிது-நீள, நீண்ட நேரம், நெடுநேரம், நினைந்து-நினைந்து.
வெற்றிக்குப் பின் பாசறையில் மன்னன்
பகைவர் சுட்டிய படைகொள் நோன்விரல்
நகைதாழ்க் கண்ணி நல்வலம் திருத்தி,
அரசுஇருந்து பனிக்கும் முரசுமுழங்கு பாசறை
இன்துயில் வதியுநன்.................... (77-80)
பகைவரைக் குறித்துப் படைக்கலங்களைச் செலுத்திய வலிமையான விரலாலே- தனது ஒளியைத் தங்கச் செய்யும் போருக்க அணிந்ததாகிய வஞ்சி மாலைக்கு, நல்ல வெற்றியைக் கொடுத்தமையால் மனநிறைவு பெற்று- பகையரசர் கேட்டு நடுங்க வெற்றி முரசு முழங்க பாசறையில் (வெற்றி பெற்ற மகிழ்ச்சியில்) இனிமையாகத் துயில் கொண்டான்.
சொற்பொருள் விளக்கம்
பகைவர்-பகைவர், கட்டிய-குறித்த, படை-படைக்கலம், கொள்-எடுத்த, செலுத்திய, நோன்-வலிய, விரல்-விரல்களையுடைய (கைகளைக் குறிக்கும்), நகை-ஒளி, தாழ்-தாங்கும், கண்ணி-மாலை, நல்-நல்ல, வலம்- வெற்றி, திருத்தி-செம்மையாக, மனநிறைவாக, அரசு-அரசன் (பகையரசன்) இருந்து-இருந்து, பனிக்கும்-நடுங்கும், முரசு- முரசு (வெற்றி முரசு) முழங்கும்-ஒலிக்கும், பாசறை-பாசறை, இன்-இனிய, துயில்-உறக்கம், வதியுநன்-இருப்பவன், தங்குகின்றவன்.
தலைவனைக் காணாது வருந்தும் தலைவியின் நிலை
....காணாள் துயர்உழந்து
நெஞ்சஆற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு
நீடுநினைந்து தேற்றியும் ஓடுவளை திருத்தியும்
மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும்
ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி,இழைநெகிழ்ந்து,
பாவை விளக்கில் பரூஉச் சுடர்அழல
இடம்சிறந்து உயரிய எழுநிலை மாடத்து
முடங்குஇறைச் சொறிதரும் மாத்திரள் அருவி
இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அஞ்செவி நிறைய ஆலின................(80-89)
(24ஆம் அடியில் கண்ணீர்த் துளிகள் வீழத் தனிமைத் துயரில் வருந்திய தலைவி, ஈண்டும் தலைவன் வரக்காணாது வருத்தத்தில் இருக்கின்றாள்) தலைவன் வரக்காணாது துயருற்று வருந்திய தலைவியை நெஞ்சமானது, ‘ஆற்றியிரு’ என்று சொல்லிக் கொண்டிருக்கத் துயரத்தை மறைக்க முடியாது வருத்தத்தில் இருக்கும் தலைவி, நீண்ட நேரம் சிந்தித்துப் பின் தன்னைத் தேற்றிக் கொண்டும், கழன்று விழுகின்ற வளையல்களைத் திருத்தமுற கழறாமல் அணிந்து கொண்டும், அறிவு மயங்கியும், அவ்வறிவு மயக்கத்தால் பெருமூச்செறிந்தும், அம்பு தைத்த மயில் போல் நடுங்கியும், அணிகலன்கள் நெகிழ, பாவை விளக்கின் பெரிய சுடர் எரிய, அகன்று சிறந்த உயர்ந்த ஏழு அடுக்குகளாக விளங்கும் அழகிய வீட்டில், கூரை கூடும் இடங்களில் மழைநீர் அருவி போல் சொரிய, அதனால் ஏற்படுகின்ற இனிய பலவாகிய முழக்கத்தினைக் கேட்டவாறே படுத்துக் கிடக்கின்றாள்.
சொற்பொருள் விளக்கம்
காணாள்-காணாதவளாய், துயர்-துன்பம், உழந்து-வருந்தி, நெஞ்சு- நெஞ்சம், ஆற்றுப்படுத்த-வழிப்பத்த, நிறை-ஒரு காரியத்தைப் பிறர் அறியாமல் செய்தல், தபு- கெடு, புலம்பொடு-தனிமையில், நீடு-நீண்டநேரம், நினைந்து- நினைத்தும், தேற்றியும்-தேற்றிக்கொண்டும், ஓடுவளை-ஓடுகின்ற வளையல், திருத்தியும் - திருத்தமுற அணிந்தும், மையல்-மயக்கம், கொண்டும்-கொண்டும், ஒய்யென- ஒய் என்ற ஒலி, உயிர்த்தும்-பெரு மூச்சு விட்டும், ஏ-அம்பு, உறு-தங்கிய; அடைந்த; தைத்த, மஞ்ஞையின் - மயில் போல், நடுங்கி-நடுங்கி, இழை-அணிகலன், நெகிழ்ந்து-கழன்று, பாவை-கைப்பாவை, விளக்கில்-விளக்கின், பரூஉச்சுடர்-பெரிய சுடர், அழல-எரிய, இடம்-இடம், சிறந்து-சிறந்து, உயரிய-உயர்ந்த, எழுநிலை-ஏழு அடுக்கு, மாடத்து-வீட்டில், முடங்கு-மடங்கிய, இறை-நீர்விழும் கூடல்வாய் (இரு பகுதிகள் பொருந்தும் இடம்), சொறிதரும்-விழுகின்ற, மாத்திரள்-பெரிது திரண்டு, அருவி-நீரோட்டம், இன்-இனிய, பல்-பலவாகிய, இமிழ்-முழங்கும், இசை-ஒலி, ஓர்ப்பனள்-கேட்டவளாய், கிடந்தோள்-படுத்துக் கிடந்தவள், அம்செவி-அழகிய செவி, நிறைய-நிறையுறுமாறு, ஆலின-ஆரவாரித்தன.
போரில் வெற்றி பெற்றுத் தலைவன் வருதல்
..................................................வென்று, பிறர்
வேண்டுபுலம் கவர்ந்த ஈண்டுபெருந் தானையொடு
விசயம் வெல்கொடி உயரி, வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப............( 98-92)
பகைவரை வென்று அவர்கள் விரும்புகின்ற நிலங்களைக் கவர்ந்து, பெரிய படையோடு வெற்றிக் கொடியை உயர்த்தியபடி, வெற்றியை அறிவிக்கும் வகையில், ஊது கொம்பும், சங்கும் முழங்கத் திரும்புகின்றான் தலைவன்.
சொற்பொருள் விளக்கம்
வென்று-வெற்றி பெற்று, பிறர்-பகைவர், வேண்டு-விரும்பு,புலம்-இடம், கவர்ந்த-கவர்ந்த, அகப்படுத்த, ஈண்டு-இங்கு, பெருந்தானையொடு-பெரும் படையொடு, விசயம் –வெற்றி, வெல்கொடி-வெற்றிக் கொடி, உயரி-உயர்த்தி, வலன்-வெற்றிக்கு, நேர்பு-ஒத்து வயிரும்-ஊது கொம்பும், வளையும் - சங்கும், ஆர்ப்ப-முழங்க.
கார்ப்பருவத்தில் செழித்திருக்கும் முல்லைநிலம்
.................................................அயிர
செறிஇலைக் காயா அஞ்சனம் மலர
முறிஇணர்க் கொன்றை நன்பொன் கால,
கோடல் குவிமுகை அங்கை அவிழ,
தோடுஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின்,
திரிமருப்பு இரலையொடு மடமான் உகள,
எதிர்செல் வெண்மழை பொழியும் திங்களில் (92- 100)
முல்லைநிலத்த நுண்ணிய மணலில், நெருங்கிய இலைகளைக் கொண்டக் காயா மலர் மை போல் மலர்ந்திருக்கவும், தளிரையும் பூங்கொத்துக்களையும் உடைய கொன்றை, பொன் போன்ற மலர்களைச் சொரியவும், காந்தளின் குவிந்த மொட்டுகள் அழகிய கை போல பூத்திருக்கவும், காடு செழித்திருக்கும் முல்லை நிலத்தின் பெரிய வழியிலே, வானம் தப்பாமல் பெய்த மழையின் காரணமாக விளைந்த-வளைந்த கதிரினையுடைய வரகினூடே, திரிந்த கொம்புகளைக் கொண்ட ஆண்மானுடன் பெண் மான் துள்ளிக் குதித்து விளையாடும். இத்தகைய முல்லைநிலத்தது, எதிரே செல்லும் மேகங்கள் மழையைப் பொழிகின்ற கார் காலத்தில்...
சொற்பொருள் விளக்கம்
அயிர-நுண்மணல், செறியிலை-நெருங்கிய இலை, காயா-காயா மலர் (நீல மலர்), அஞ்சனம் (வடசொல்)-மை (போன்ற நீல மலர்), மலர-மலர,முறி-தளிர், இணர்-கொத்து, கொன்றை-கொன்றை மலர், நன்பொன்-நல்ல பொன், கால-சொரிய, கோடல்-காந்தள், குவி-குவிந்த, முகை-மொட்டு, அங்கை-அழகிய கை, அவிழ-மலர, தோடு-பூவின் இதழ், ஆர்-நிறைந்த, தோன்றி-செங்காந்தள், குருதி-உதிரம் (இரத்தம்) பூப்ப-பூக்க, கானம்-காடு, நந்திய-தழைத்த, செழித்த, செந்நிலம்-செம்மையான நிலம், பெருவழி-பெரிய வழி, வானம்-வானம்,வாய்த்த-தப்பாமல் பெய்த,வாங்கு-வளைந்த, கதிர்-கதிர், வரகின்-வரகின் , திரி-முறுக்கிய, மருப்பு-கொம்பு, இரலையொடு-கலைமானோடு, மடமான்-பெண்மான், உகள-தாவ, எதிர்செல்-எதிரே செல்லும், வெண்-வெண்நிறமுடைய மேகங்கள், மழை பொழியும் - மழையைப் பொழிகின்ற , திங்களில்-மாதத்தில்.
வந்து கொண்டிருக்கிறது அரசனின் தேர்!
முதிர்காய் வள்ளியம் காடு பிறக்கொழிய,
துனைபரி துரக்கும் செலவினர்
வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே. (101- 103)
போர் வினையை நன்கு ஆற்றிய தலைவன்-முதிர்ந்த காயினையுடைய வள்ளிக்கொடி படர்ந்திருக்கும் அழகிய காடு, பின்னோக்கிச் சென்று மறைய விரைந்து செல்லும் தேரினை விரைவாகச் செலுத்த, நெடுந்தேரில் பூட்டப்பட்டுள்ளக் குதிரையின் குளம்பொலி,(தலைவனின் வரவு பார்த்துக் காத்திருக்கும் தலைவியின் செவிகள் நிறையுமாறு ஆரவாரித்தன என்று 89 ஆவது அடியின் பொருளை இணைக்க.)
சொற்பொருள் விளக்கம்
முதிர்-முதிர்ந்த, காய்-காய், வள்ளியம் காடு (வள்ளி + அம் + காடு) வள்ளிக் கொடி படர்ந்திருக்கும் அழகிய காடு, பிறக்கு-பின்னுக்கு, ஒழிய-தங்க, துனை-விரைவு, பரி-குதிரை, துரக்கும்-செலுத்தும், செலவினர்-பயணித்துக் கொண்டிருப்பவர், வினை-போர்வினை, விளங்கு-திறமை மிகுதியாக விளங்கும்படி, நெடுந்தேர்-நீண்ட தேர், பூண்ட-பூட்டிய, மாவே-குதிரையே.
முல்லைப்பாட்டு
மால்போலத் தோன்றும் மழைமேகம்
நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி வலன் ஏர்பு
கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி (5)
மழைக்காலத்து மாலை நேரம்
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
முதுபெண்டிர் விரிச்சி கேட்டல்
அருங்கடி மூதூர் மருங்கில் போகி
யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது (10)
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப
ஆய்மகளின் நற்சொல் கேட்டலும் தலைவியை ஆற்றுவித்தலும்
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள், ‘கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர, (15)
இன்னே வருகுவர், தாயர் ’ என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம் : அதனால்,
நல்ல, நல்லோர் வாய்ப்புள்: தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருதல் தலைவர்,வாய்வது: நீநின் (20)
பருவரல் எவ்வம் களை மாயோய் : என
காட்டவும் காட்டவும் காணாள் கலுழ்சிறந்து
பூப்போல் உண்கண் புலம்பு முத்துஉறைப்ப,
பாசறை அமைத்தல்
கான்யாறு தழீஇய அகல்நெடும் புறவில்
சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி (25)
வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக் காட்ட
இடுமுட் புரிசை ஏமுற வளைஇ,
படுநீர்ப் புணரியின் பரந்த பாடி
பாசறையின் நாற்சந்தியில் நிற்கும் யானையின் நிலை
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற (30)
தேம்படு கவுள சிறுகண் யானை
ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்த
வயல்விளை இன்குளகு உண்ணாது நுதல்துடைத்து
அயில்நுனை மருப்பின்தம் கையிடைக் கொண்டென
கவைமுள் கருவியின் வடமொழி பயிற்றி (35)
கல்லா இளைஞர் கவளம் கைப்ப,
பாசறையில் வீரர்களின் அரண்கள்
கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசைநிலை கடுப்ப, நல்போர்
ஓடா வல்வில் தூணி நாற்றி
கூடம் குத்திக் கயிறுவாங்கு இருக்கை (40)
பூந்தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து,
வாங்குவில் அரணம் அரணம் ஆக,
பாசறையில் மன்னனுக்குத் தனிஇடம்
வேறுபல் பெரும்படை நாப்பண்,வேறு ஓர்
நெடுங்காழ்க் கண்டம் கோலி அகம்நேர்பு
மன்னனின் இருப்பிடத்தில் விளக்கேற்றும் பெண்கள்
குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறுபுறத்து (45)
இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர்
நெய்உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ
கைஅமை விளக்கம் நந்துதொறும் மாட்ட
பாசறையில் காவலாளர்
நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள் (50)
அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
சிதர்வால் அசைவளிக்கு அசைவந் தாங்கு
துகில்முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்
பெருமூ தாளர் ஏமம் சூழ
பாசறையில் நாழிகைக் கணக்கர்
பொழுதுஅளந்து அறியும் பொய்யா மாக்கள் (55)
தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி,
‘எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்: நின்
குறுநீர்க் கன்னல் இனைத்து’ என்று இசைப்ப
மன்னன் இருப்பிடத்தில் யவனர்
மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து, (60)
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமான் நல்இல்
திருமணி விளக்கம் காட்டி..............
மன்னனின் பள்ளியறையில் மிலேச்சியர்
.................திண்ஞான்
எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்
உடம்பிம் உரைக்கும் உரையா நாவின் (65)
படம்புகு மிலேச்சர் உழையர் ஆக,
பாசறையில் மன்னனின் மனநிலை
மண்டுஅமர் நசையொடு கண்படை பெறாஅது,
எடுத்துஎறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து
பிடிக்கணம் மறந்த வேழம் : வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய (70)
தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்தி,
சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளயும் : தோல்துமிபு
பைந்நுனைப் பகழி மூழ்கலின், செவிசாய்த்து
உண்ணாது உயங்கும் மாசிந் தித்தும் :
ஒருகை பள்ளி ஒற்றி, ஒருகை (75)
முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து..
வெற்றிக்குப் பின் பாசறையில் மன்னன்
பகைவர் சுட்டிய படைகொள் நோன்விரல்
நகைதாழ்க் கண்ணி நல்வலம் திருத்தி,
அரசுஇருந்த பனிக்கும் முரசுமுழங்கு பாசறை
இன்துயில் வதியுநன்.................... (80)
தலைவனைக் காணாத தலைவியின் துயரம்
....காணாள் துயர்உழந்து
நெஞ்சஆற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு
நீடுநினைந்து தேற்றியும் ஓடுவளை திருத்தியும்
மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும்
ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி,இழைநெகிழ்ந்து,
பாவை விளக்கில் பரூஉச் சுடர்அழல (85)
இடம்சிறந்து உயரிய எழுநிலை மாடத்து
முடங்குஇறைச் சொறிதரும் மாத்திரள் அருவி
இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அஞ்செவி நிறைய ஆலின................
போரில் வெற்றி பெற்றுத் தலைவன் வருதல்
வென்று, பிறர்
வேண்டுபுலம் கவர்ந்த ஈண்டுபெருந் தானையொடு (90)
விசயம் வெல்கொடி உயரி, வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப............
கார்ப்பருவத்தில் செழித்திருக்கும் முல்லைநிலம்
.................................................அயிர
செறிஇலைக் காயா அஞ்சனம் மலர
முறிஇணர்க் கொன்றை நன்பொன் கால,
கோடல் குவிமுகை அங்கை அவிழ, (95)
தோடுஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின்,
திரிமருப்பு இரலையொடு மடமான் உகள,
எதிர்செல் வெண்மழை பொழியும் திங்களில் (100)
வந்து கொண்டிருக்கிறது அரசனின் தேர்!
முதிர்காய் வள்ளியம் காடு பிறக்கொழிய,
துனைபரி துரக்கும் செலவினர்
வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே. (103)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக