தெளிந்து தெளிந்துதெளிந் தாடுபாம்பே - சிவன்
சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே
ஆடும்பாம்பே தெளிந்தாடு பாம்பே - சிவன்
அடியினைக் கண்டோமென் றாடு பாம்பே.
நீடுபதம் நமக்கென்றுஞ் சொந்த மென்றே
நித்திய மென்றே பெரிய முத்தி யென்றே
பாடுபடும் போதுமாதி பாத நினைந்தே
பன்னிப் பன்னிப் பரவிநின் றாடுபாம்பே.
பொன்னிலொளி போலவெங்கும் பூரணமதாய்ப்
பூவின் மணம் போலத்தங்கும் பொற்புடையதாய்
மன்னும் பல உயிர்களில் மன்னிப் பொருந்தும்
வள்ளலடி வணங்கி நின் றாடுபாம்பே.
எள்ளிலெண்ணெய் போலவுயி ரெங்கு நிறைந்த
ஈசன் பதவாசமலர் எண்ணி யெண்ணியே
உள்ளபடி அன்புபத்தி ஓங்கி நிற்கவே
ஒடுங்கிய டங்கித்தெளிந் தாடு பாம்பே.
அண்டபிண்டந் தந்த வெங்கள் ஆதிதேவனை
அகலாம மேலநினைந் தன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி யேத்தியே
ஏகமன மாகநாடி யாடு பாம்பே.
சோதிமய மானபரி சுத்த வஸ்துவைத்
தொழுதழு தலற்றிற் தொந்தோந்தோ மெனவே
நீதிதவ றாவழியில் நின்று நிலையாய்
நினைந்து நினைந்துருகி யாடு பாம்பே.
அருவாயும் உருவாயும் அந்தியாயும்
அந்தமாயும் ஒளியாயும் ஆகமமாயும்
திருவாயுங் குருவாயும் சீவனாயும்
செறிந்தவஸ் துவைப்போற்றி யாடு பாம்பே.
சுட்டிக்காட்டி ஒண்ணாதபாழ் சூனி யந்தன்னைச்
சூட்சமதி யாலறிந்து தோஷ மறவே
எட்டிபிடித் தோமென் றானந்த மாகப்பை
எடுத்து விரித்துநின் றாடு பாம்பே.
எவ்வுயிரும் எவ்வுலகு ஈன்று புறம்பாய்
இருந்து திருவிளையாட் டெய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியுநின்ற
ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே.
சாற்றுமுடல் பொருளாவி தத்த மாகவே
தானம் வாங்கி நின்ற வெங்கள் சற்கு ருவினைப்
போற்றி மனம் வாக்குக்காயம் மூன்றும் பொருந்தப்
புகர்ந்து புகழ்ந்துநின் றாடாய் பாம்பே.
பொய்ம்மதங்கள் போதனைசெய் பொய்க்கு ருக்களைப்
புத்திசொல்லி நன்னெறியிற் போக விடுக்கும்
மெய்ம்மதந்தான் இன்ன தென்றும் மேவ விளம்பும்
மெய்க்குருவின் பதம் போற்றி ஆடாய்பாம்பே.
வேதப்பொருளின்ன தென்று வேதங் கடந்த
மெய்ப்பொருளைக்கண்டுமனம் மேவிவிளம்பிப்
போதப்பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
பூரணசற் குருதாள்கண் டாடாய் பாம்பே.
உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
கள்ளமனந் தன்னைத்தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்
சுளித்துக் களித்துநின் றாடாய் பாம்பே.
அங்கையிற்கண் ணாடிபோல ஆதி வஸ்துவை
அறிவிக்கும் எங்களுயி ரான குருவைச்
சங்கையறச்சந்ததமுந் தாழ்ந்து பணிந்தே
தமனியப் படமெடுத் தாடாய் பாம்பே.
காயம்நிலை யழிகையைக் கண்டு கொண்டுபின்
கற்புநிலை யுள்ளிற்கொண் டெக்காலமும் வாழும்
தூயநிலை கண்டபரி சுத்தக் குருவின்
துணையடி தொழுதுநின் றாடாய் பாம்பே.
கூடுவிட்டுக் கூடுபாயுங் கொள்கை யுடைய
குருவின் வல்லபமெவர் கூற வல்லவர்
வீடுபெறும் வகையைமென் மேலுங் காட்டும்
மெய்க்குருவைப் பணிந்துநின் றாடாய் பாம்பே.
அட்டதிக்கும் அண்டவெளி யான விடமும்
அடக்கிய குளிகையோ டாடி விரைவாய்
வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின்
மலரடி தஞ்சமென் றாடாய் பாம்பே.
கற்பகாலங்க டந்தாதி கர்த்தா வோடுங்
கடமழி யாதுவாழுங் காரணக்குரு
பொற்பதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து
பூரணச் சிந்தையோ டாடாய் பாம்பே.
வச்சிரத்திற் கோர்பழுது வாய்க்கு மாயினும்
வல்லுடம்புக் கோர் குறை வாய்த்தி டாது
மெச்சகட முள்ள வெங்கள் வேத குருவின்
மெல்லடி துதித்துநின் றாடாய்பாம்பே.
நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே
பாடிப்பாடி நின்றுவிளை யாடு பாம்பே.
வளைபுகும் போதேதலை வாங்கும் பாம்பே
மண்டலமிட் டுடல்வளை வண்ணப் பாம்பே
தளைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே
தலையெடுத் தேவிளையாடு பாம்பே.
குற்றமற்ற சிவனுக்குக் குண்டல மானாய்
கூறுந்திரு மாலினுக்குக் குடையு யானாய்
கற்றைக்குழல் பார்வதிக்குங் கங்கண மானாய்
கரவாமல் உளங்களித் தாடு பாம்பே.
மண்டலத்தைத் தாங்குமிக வல்லமை கொண்டாய்
மாயனுக்குப் படுக்கைக்கு வண்ணப் பாயானாய்
கண்டபடை நடுங்கிடக் காட்சியும் பெற்றாய்
கண்ணேசெவி யாகக்கொண்டாய் ஆடு பாம்பே.
சந்திரனைச் சூரியனைத் தாவித் தீண்டினாய்
சங்கரனுக் காபரணந் தானுமாகினாய்
மந்திரத்திற் கடங்கினாய் மண்டல மிட்டாய்
வளைந்து வளைந்துநின் றாடு பாம்பே.
எட்டுநாகந் தம்மைக்கையா லெடுத்தேயாட்டுவோம்
இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்
கட்டுக்கடங் காதபாம்பைக் கட்டி விடுவோம்
கடுவிஷத் தன்னைக்கக்கி யாடு பாம்பே.
ஆதிசேடன் ஆயிகினுமெம் மங்கையி னாலே
ஆட்டிவிடு வோமெங்கள் ஆக்கினைக்குள்ளே
நீதியோடங்கியே நின்றிடச் செய்வோம்
நின்றநிலை தவறாமல் ஆடுபாம்பே.
தூணைச்சிறு துரும்பாக தோன்றிடச் செய்வோம்
துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம்
ஆணைபெண்ணும் பெண்ணை யாணு மாகச் செய்குவோம்
ஆரவாரித் தெதிராய்நின் றாடு பாம்பே.
எட்டுமலை களைப்பந்தாய் எடுத்தெ றிகுவோம்
ஏழுகட லையுங்குடித் தேப்ப மிடுவோம்
மட்டுப்படா மணலையும் மதித்திடுவோம்
மகாராஜன் முன்புநீ நின் றாடுபாம்பே.
மண்டலமுற் றுங்கையால் மறைத்து விடுவோம்
வானத்தையும் வில்லாக வளைத்து விடுவோம்
தொண்டருக்குச் சூனியஞ் சொல்லிக் காட்டுவோம்
தோன்றலுக்கு முன்பு நின் றாடாய் பாம்பே.
மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கிவருவோம்
முந்நீருள் இருப்பினு மூச்ச டக்குவோம்
தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்
தார்வேந்தன் முன்புநீ நின் றாடு பாம்பே.
செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் னாக்குவோம்
செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்
இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்
எங்கள் வல்ல பங்கண்டுநீ யாடு பாம்பே.
வேதன்செய்த சிருஷ்டிகள்போல் வேறுசெய்குவோம்
வேதனையு மெங்கள் கீழே மேவச் செய்குவோம்
நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்
நாங்கள் செய்யும் செய்கையிதென் றாடு பாம்பே.
அறுபத்து நாலுகலை யாவு மறிந்தோம்
அதற்குமே லொருகலை யான தறிந்தோம்
மறுபற்றுச் சற்றுமில்லா மனமு முடையோம்
மன்னனே யாசானென் றாடு பாம்பே.
சிறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச்
சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்
வீறுபெருங் கடவுளை எங்களுடனே
விளையாடச் செய்குவோமென் றாடு பாம்பே.
வாசுகியை ஒருபக்கம் மன்னநிறுத்தி
மகத்தான பதுமனை மறுபக்கம் வைத்தே
தேசுலவு தக்கனைத் தன்றிக்கிற் சேர்த்துச்
செய்யபது மனைக்கொள் சித்த னாரே.
அனந்தனை யொருபக்க மாக நிறுத்தி
அதன்பக்கங் குளிகனை யண்டச் சேர்த்துக்
கனங்கொண்ட கார்க்கோடகன் காணக் காட்டுங்
கடுஞ்சங்க பாலனைத்தான் சித்த னாரே.
அட்டதிக்குஞ் சக்கரங் களாகக் கீறி
அக்கோண நிலைகளி லக்கரஞ் சேர்த்துத்
திட்டமுடன் மந்திரத்தைச் செபித்து நில்லும்
சித்தந்தடு மாறாதீர் சித்த னாரே.
அட்டதிக்குஞ் சக்கரங்க ளமைத்து விட்டோம்
அவ்வவற்றிற் சக்கரங்க ளமைத்து விட்டோம்
எட்டுநாக மிருக்கின்ற இடத்தில் விட்டோம்
இனியென்ன செய்வம்சொல்லும் சித்த னாரே.
நடுவாக ஆதிசேடன் றன்னைநாட்டும்
நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும்
கடுவிஷங் கக்கவேயக் கட்செ விகளைக்
கையிலெடுத் தாடுங்கள் சித்த னாரே.
நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம்
நடுவன் வரும்பொழுது நாடி வருமோ
கூடுபோன பின் பவற்றாற் கொள்பய னென்னோ
கூத்தன் பதங் குறித்துநின் றாடாய் பாம்பே.
யானைசேனை தேர்ப்பரி யாவு மணியாய்
யமன்வரும் போதுதுணை யாமோ அறிவாய்
ஞானஞ்சற்று மில்லாத நாய்கட் குப்புத்தி
நாடிவரும் படிநீநின் றாடுபாம்பே.
மாணிக்கமா மணிமுடி வாகு வலயம்
மார்பிற்றொங்கும் பதக்கங்கண் மற்றும் பணிகள்
ஆணிப் பொன்முத் தாரமம் பொன் அந்தகடகம்
அழிவானபொருளெனநின் றாடாய் பாம்பே.
மாடகூடமாளிகைகள் வண்ண மண்டபம்
மதில்சூழ்ந்த அரண்மனை மற்றும் முள்ளவை
கூடவாரா வென்றவந்தக் கொள்கை யறிந்தோர்
குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே.
மலைபோன்ற செம்பொற்குவை வைத்தி ருப்பவர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ
அலையாமல் அகத்தினை அத்தன் பால்வைத்தோர்
அழியாரென் றேநீ துணிந் தாடாய் பாம்பே.
பஞ்சணையும் பூவணையும் பாய லும்வெறும்
பாழ்சுடு காடதிலே பயன் பெறுமோ
மஞ்சள் மணம் போய்சுடு நாறுமணங்கள்
வருமென்று தெளிந்துநின் றாடாய்பாம்பே.
முக்கனியுஞ் சர்க்கரையும் மோத கங்களும்
முதிர்சுவைப் பண்டங்களும் முந்தி யுண்டவாய்
மிக்கவுயிர் போனபின்பு மண்ணை விழுங்க
மெய்யாகக் கண்டோமென் றாடாய் பாம்பே.
வண்ணப்பட்டும் வாசனையும் வாய்த்த கோலமும்
வண்கவிகை ஆலவட்டம் மற்றுஞ் சின்னமும்
திண்ணமுடன் யமபுரஞ் செல்லுங் காலத்தில்
சேரவர மாட்டாவென் றாடாய் பாம்பே.
மக்கள்பெண்டிர் சுற்றமரு மக்கள் மற்றவர்
மாளும்போது கூடவவர் மாள்வ தில்லையே
தக்கவுல கனைத்தையுந் தந்த கர்த்தனைத்
தாவித்தாவித் துதித்துநின் றாடாய் பாம்பே.
கானலைமான் நீரெனவே கண்டு செல்லல்போல்
காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்
மேனிலைகண் டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்
மெய்யன்பதம் நாடுவாரென் றாடாய் பாம்பே.
வெயில்கண்ட மஞ்சள்போன்ற மாத ரழகை
விரும்பியே மேல்விழுந்து மேவு மாந்தர்
ஒயில்கண்டே இலவுகாத் தோடுங் கிளிபோல்
உடல்போனால் ஓடுவாரென் றாடாய் பாம்பே.
செண்டுமுலை வண்டுவிழி கொண்ட தோகையைச்
சித்தப்பால் விழுங்கியே சீயென்று ஒறுத்தோம்
குண்டுகட் டெருமை யேறுங் கூற்றுப் பருந்தைக்
கொன்றுதின்று விட்டோமென் றாடாய் பாம்பே.
வட்டமுலை யென்றுமிக வற்றுந் தோலை
மகமேரு என்றுவமை வைத்துக் கூறுவார்
கெட்டநாற்ற முள்ளயோனிக் கேணியில் வீழ்ந்தோர்
கெடுவரென்றே நீதுணிந் தாடாய் பாம்பே.
மலஞ்சொரி கண்ணைவடி வாளுக் கொப்பாக
வருணித்துச் சொல்வார்மதி வன்மை யில்லாதார்
குருநலம் பேசுகின்ற கூகைமாந்தர்கள்
கும்பிக்கே இரையாவரென் றாடாய் பாம்பே.
சிக்குநாறுங் கூந்தலைச் செழுமை மேகமாய்ச்
செப்புவார்கள் கொங்கைதனைச் செப்புக் கொப்பதாய்
நெக்குநெக்கு ருகிப்பெண்ணை நெஞ்சில்நினைப்பார்
நிமலனை நினையாரென் றாடாய் பாம்பே.
நாறிவரும் எச்சில்தனை நல்லமு தென்றும்
நண்ணுஞ்சளி நாசிதனை நற்கு மிழென்றும்
கூறுவார்கள் புத்தியில்லாக் கூகை மாந்தர்
கோனிலையை யறியாரென் றாடாய் பாம்பே.
மயிலென்றுங் குயிலென்றும் மாணிக்க மென்றும்
மானேயென்றும் தேனேயென்றும் வானமு தென்றும்
ஒயிலான வன்னமயிற் கொத்தவ ளென்றும்
ஓதாமற் கடிந்துவிட் றாடாய் பாம்பே.
மின்னற்கொடி யென்றுஞ்சோதி விளக் கென்றும்
மெல்லியென்றும் வல்லியென்றும் மேனகை யென்றும்
கன்னற்கட்டி யென்றுஞ்சீனிக் கற்கண் டென்றும்
கழறாமற் கடிந்தோமென் றாடாய் பாம்பே.
பூவையென்றும் பாவையென்றும் பொன்னே யென்றும்
பூந்திருவே என்றுமென்றன் பொக்கிஷ மென்றும்
கோவையென்றுங் கோதையென்றுங் கோகில மென்றும்
கூறாமல் துறந்தோம்நாமென் றாடாய் பாம்பே.
மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும்
மல்கும்புழுக் கூட்டின்மேல் வண்ணத் தோலென்றும்
சலக்குழிக் குள்ளேநாற்றஞ் சார்ந்த சேறென்றும்
தானறிந்து தள்ளினோமென் றாடாய் பாம்பே.
ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலினிலே உண்டை சேர்த்தே
வாய்த்தகுய வனார் பண்ணும் பாண்டம்
வறகோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே.
இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையா யிருப்பினு மந்தச் சூளை
அரைக்காசுக் காகாதென் றாடாய் பாம்பே.
பரியாசம் போலவே கடித்த பாம்பு
பலபேரறியவே மெத்த வீங்கிப்
பரியார மொருமாது பார்த்த போது
பையோடே கழன்றதென் றாடாய் பாம்பே.
சீயுமல முஞ்செறி செந் நீரும் நிணமுஞ்
சேர்ந்திடு துர்நாற்றமுடைக் குடமது உடைந்தால்
நாயுநரி யும்பெரிய பேயுங் கழுகும்
நமதென்றே தின்னுமென் றாடாய் பாம்பே.
நீரிலெழும் நீர்க்குமிழி நிலைகெ டல்போல
நில்லாதுடல் நீங்கிவிடும் நிச்சய மென்றே
பாரிற் பல உயிர்களைப் படைத்த வன்றனைப்
பற்றவேநீ பற்றித்தொடர்ந் தாடாய் பாம்பே.
நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளுங்கழு வினுமதன் நாற்றம் போமோ
கூறுமுடல் பலநதி யாடிக் கொண்டதால்
கொண்ட மலம் நீங்காதென் றாடாய் பாம்பே.
காய்த்தமர மதுமிக்க கல்லடிப்படும்
கன்மவினை கொண்டகாயம் கண்டனை பெறும்
வாய்த்ததவ முடையவர் வாழ்பவ ரென்றே
வத்துத்திரு வடிதொழு தாடாய் பாம்பே.
பேசரிய நவவாயிற் பீற்றல் துருத்தி
பெருங்காற்றுள் புகுந்ததாற் பேச்சுண் டாச்சே
ஈசனிலை அறியாருக் கிந்தத் துருத்தி
எரிமண்ணிற் கிரைமென் றாடாய் பாம்பே.
மரப்பாவை போல வொரு மண்ணுருச் செய்து
வளமான சீவனென்னுஞ் சூத்திரம் மாட்டித்
திரைக்குள்ளி ருந்தசைப்போன் தீர்ந்த பொழுதே
தேகம்விழு மென்றுதெளிந் தாடாய் பாம்பே.
தசநாடி தசவாயு சத்த தாது
சார்ந்தமரக் கப்பலது தத்தி விழுமே
இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில்
எந்நாளும் ஓட்டத்துணிந் தாடாய் பாம்பே.
தாமரையி னிலையினிலே தண்ணீர் தங்காத
தன்மைபோலச் சகத்தாசை தள்ளி விட்டெங்கும்
தூமணியாம் விளங்கிய சோதி பதத்தைத்
தொழுது தொழுதுதொழு தாடாய்பாம்பே.
கள்ளங் கொலை காமமாதி கண்டித்த வெல்லாம்
கட்டறுத்து விட்டுஞானக் கண்ணைத் திறந்து
தெள்ளிதான வெட்டவெளி சிற்சொ ரூபத்தைத்
தேர்ந்துபார்த்துச் சிந்தைதெளிந் தாடாய் பாம்பே.
சொல்லும்புளி யம்பழத்தி னோடு போலவே
சுற்றத்திருந் தாலுமவர் தொந்தங் களற்று
நில்லுமன மேநீபர நின்ம லத்திலே
நின்றுணைதான் வெறும்பாழென் றாடாய் பாம்பே.
சேற்றில் திரிபிள்ளைப்பூச்சி சேற்றை நீக்கல்போல்
தேசத்தோ டொத்துவாழ்வார் செய்கை கண்டபின்
சாற்றுபர வெளிதனைச் சாரும் வழியே
தானடக்க வேணுமென் றாடாய் பாம்பே.
எண்ணெய்குந் தண்ணீர்க்குந் தொந்தமில்லா வாறுபோல்
எப்போதும் இப்புவியி லெய்த வேண்டும்
கண்ணுக்குக் கண்ணான வொளிகண்டு கொள்ளவே
கட்டறுத்து வாழ்ந்திடநின் றாடாய் பாம்பே.
கக்கிவிட்ட சோறுகறி கந்த மூலங்கள்
கண்களுக்கு சுத்தமான காட்சி போலவே
சிக்கிக்கொண்ட சகத்தினைச் சீயென் றொறுத்துச்
சீர்பாதங் காணத்தெளிந் தாடாய் பாம்பே.
கோபமென்னும் மதயானை கொண்ட மதத்தை
கூர்கொள்யுத்தி அங்குசத்தாற் கொன்று விட்டோங்காண்
தீபமென்னுஞ் சிற்சொரூப செய்ய பொருளைச்
சேர்ந்துறவு கொண்டோமென் றாடாய் பாம்பே.
நித்தியமென் னுமலையில் நின்று கொண்டோம்யாம்
நினைத்தபடியே முடித்து நின்மல மானோம்
சத்தியமாய் எங்கள் கடந்தானழி யாதே
சந்ததமும் வாழ்வோமென் றாடாய் பாம்பே.
மனமென்னுங் குதிரையை வாகன மாக்கி
மதியென் னுங்கடிவாளம் வாயிற் பூட்டிச்
சினமென்னுஞ் சீனிமேற் சீரா யேறித்
தெளிவிடஞ் சவாரிவிட் டாடாய் பாம்பே.
ஆசையென்னுஞ் செருப்பின்மேல் அடிமை வைத்தே
ஆங்கார முட்காட்டை அறவே மிதித்தே
காசையெனுந் துர்குணத்திற் கனலைக் கொளுத்திக்
காலாகாலங் கடந்தோமென் றாடாய் பாம்பே.
காலனெனுங் கொடிதான கடும்ப கையைநாம்
கற்பமெனும் வாளினாலே கடிந்து விட்டோம்
தாலமதிற் பிறப்பினைத் தானும் கடந்தோம்
தற்பரங் கண்டோமென் றாடாய் பாம்பே.
தேனில் வீழ்ந்த ஈயைப்போலச் சிந்தை குலைந்து
திகையாமற் சிற்சொரூப தெரிச னைகண்டு
வானிற் பறந் திடச்சூத வான்ம ணிதீர்ந்து
வாயிற்போட் டேகநீநின் றாடாய் பாம்பே.
தூக்கியநற் பாதங்கண்டேன் சோதியும் கண்டேன்
சுத்தவெளிக் குள்ளேயொரு கூத்தனைக் கண்டேன்
தாக்கிய சிரசின்மேல் வைத்த பாதம்
சற்குருவின் பாதமென் றாடாய் பாம்பே.
ஆலடிப் பொந்தினிலே வாழ்ந்த பாம்பே
அரசடிப் பொந்திலே புகுந்து கொண்டாய்
வாலடி தன்னிலே பார்த்துப் பார்த்து
வாங்கியே தூங்கிநின் றாடாய் பாம்பே.
நாலு தெருவினிலே நாலு கம்பம்
நடுத்தெரு வினிலேயோ பொன்னுக் கம்பம்
போலும் விளங்குபொன்னுக் கம்பத்தி னுக்கே
பூமாலை சூட்டிநின் றாடாய் பாம்பே.
ஆழிபெயர்ந் தாலுமேரு மட்டேயலையும்
அடியோடு பெயர்ந்தாலு மன்றிக் கால
ஊழிபெயர்ந்து தாலுமதி யுண்மைப் படிக்கே
உறுதி பெயராதுநின் றாடாய் பாம்பே.
வாயுவினை இரையாக வாங்கி உண்டே
வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே
தேயுபிறை குளிர்காய்ந்து வெட்ட வெளியில்
திகைப்பறச் சேர்ந்துநின் றாடாய் பாம்பே.
மாசில்கதி வளையிலே மண்டல மிட்டே
மதியான பெரும்பட மடலை விரித்தே
ஆசில்பரா பரமான ஆதி பாதத்தை
அடுத்தடுத் தேதுதித் தாடாய் பாம்பே.
காடுமலை நதிபதி காசி முதலாய்க்
கால்கடுக்க ஓடிப்பலன் காணலாகுமோ
வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே
வேதாந்தத் துறையினின் றாடாய் பாம்பே.
எள்ளளவும் அன்பகத்தில் இல்லா தார்முத்தி
எய்துவது தொல்லுலகில் இல்லை யெனவே
கள்ளப்புலன் கட்டறுத்துக் கால காலனைக்
கண்டு தொழுதேகளித் தாடாய் பாம்பே.
சூரியனைக் கண்டபனி தூர வோடல்போல்
சொந்தபந்தஞ் சிந்தபரி சுத்த தலத்தில்
ஆரியனைக் கண்டுதரி சித்தே யன்புடன்
அகலாமற் பற்றித் தொடர்ந் தாடாய் பாம்பே.
காந்தம்வலி யிரும்புபோல் காசில் மனத்தைக்
காட்சியான வஸ்துவுடன் கலக்கச்சேர்த்துச்
சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போலச்
சலியாமற் தொடர்ந்து நின் றாடாய் பாம்பே.
உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி
உலகத்தின் மூடர்களுக் குண்டோ உணர்ச்சி
புளியிட்ட செம்பிற்குற்றம் போமோ அஞ்ஞானம்
போகாது மூடருக்கென் றாடாய் பாம்பே.
திரளான போரிலூசி தேடல் போல்முத்தி
சிக்காது தேசாசார தேசிகர் தம்மால்
அருளான மூலகுரு வையர் செயலால்
ஆனந்தங் கொண்டோமென் றாடாய் பாம்பே.
ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல்
எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே
நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே
நாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே.
தன்னையறிந் தொழுகுவார் தன்னை மறைப்பார்
தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்
பின்னையொரு கடவுளைப் பேண நினையார்
பேரொளியைப் பேணுவாரென் றாடாய் பாம்பே.
பாலிற்சுவை போலுமெங்கும் பாய்ந்த வொளியைப்
பற்றுப்பொன் பற்றவைத்த பான்மை போலே
காலிற்சுழு முனைநின்று கண்டு கொண்டு
களித்துக் களித்துநின் றாடாய் பாம்பே.
தேக்கெடுத்தே ஓடும்வானத் தேனை உண்டபின்
தேகபந்தம் கொண்டனமித் தேச வாழ்வினை
ஓக்காளமென் றெண்ணிமிகு மோகை யுடனீ
உள்ளந் தெளிந்துநின் றாடாய் பாம்பே.
சதுர்வேதம் ஆறுவகை சாஸ்தி ரம்பல
தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே.
சமயபேதம் பலவான சாதி பேதங்கள்
சகத்தோர்க்கே யல்லாதுசற் சாதுக் களுக்கோ
சிமயத்தி லேறினபேர் சித்த மாறுமோ
சித்தர்சித் தாந்தந்தேர்ந் தாடாய் பாம்பே.
பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ
பூமிவலஞ் செய்ததனாற் புண்ணிய முண்டோ
ஆசையற்ற காலத்திலே ஆதி வஸ்துவை
அடையலா மென்றுதுணிந் தாடாய் பாம்பே.
மூலவேர றிந்துகொண்டால் மூன்று லகமும்
முன்பாகவே கண்டுநித்ய முத்தி சேரலாம்
சாலவேர றிந்ததாலே தான்பய னுண்டோ
சகத்தைப்பொய் யென்றுதெளிந் தாடாய் பாம்பே.
சகத்தனாதி யென்றிடாது தான னாதியார்
சமைந்ததென் றுரைப்பார்கள் சத்தை யறியார்
மகத்துவ நிலைகற்ப வன்மை யல்லாது
மற்றும் வன்மை யில்லையேயென் றாடாய் பாம்பே.
ஆயிரத்தெட்டி தழ்வீட்டி லமர்ந்த சித்தன்
அண்டமெல்லாம் நிறைந்திடும் அற்புதச் சித்தன்
காயமில்லா தோங்கிவளர் காரணச் சித்தன்
கண்ணுளொளி யாயினானென் றாடாய் பாம்பே.
நாற்பத்துமுக் கோணநிலை நாப்ப ணதாக
நாடுமக்க ரச்சொரூப நாய கன்தனை
மேற்படுத்திக் கொண்டாலந்த மேலு லகெலாம்
மெல்லடிக்குத் தொண்டேயாமென் றாடாய் பாம்பே.
கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே
விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே
கொண்டகோல முள்ளவர்கள் கோனிலை காணார்
கூத்தாடிக்கூத் தாடியேநீ யாடாய் பாம்பே.
ஆறுகலைக் குச்சுக்குள்ளே ஆடுமொருவன்
அயல்வீடு போகுமுன்னே அரண்கோ லிக்கொள்ளு
வேறுபட்டால் அவன்றனை மீட்ட லரிதே
மேவிமுன்னே விடாதுகொண் டாடாய் பாம்பே.
எண்ணரிய புண்ணியங்கள் எல்லாஞ் செய்துமென்
ஏகனடி நெஞ்சமதி லெண்ணா விடிலே
பண்ணரிய தவப்பயன் பத்தி யில்லையேற்
பாழ்படு மென்றுதுணிந் தாடாய் பாம்பே.
எவ்வுலகுஞ் சொந்தமதாய் எய்தும் பயனென்
எங்களாதி பதாம்புயம் எண்ணாக் காலையில்
இவ்வுலக வாழ்வுதானு மின்றே அறுமென்று
எண்ணிக்கர்த்தன் அடிநினைந் தாடாய் பாம்பே.
மணக்கோலங் கொண்டுமிக மனம கிழ்ந்துமே
மக்கள்மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய்
பிணக்கோலங் கண்டுபின்னுந் துறவா விட்டால்
பிறப்புக்கே துணையாமென் றாடாய் பாம்பே.
பிறப்பையும் இறப்பையும் அறுத்து விடயான்
பெருமருந் தொன்று சொல்வேன் பெட்புடன் கேளாய்
திறப்புடன் மனப்பூட்டுஞ் சிந்தைக் கதவும்
திறந்திடும் வகையறிந் தாடாய் பாம்பே.
இறந்தவர் ஐவரவர் இட்ட மானவர்
எய்தும்அவ ரிறந்தாரென் றெல்ல வார்க்குஞ்சொல்
மறந்தவர் ஒருவரென்றே மண்ணினி லுள்ளோர்
வகையறிந் திடவேநின் றாடாய் பாம்பே.
ஆகார முதலிலே பாம்ப தாக
ஆனந்த வயலிலே படம் விரித்தே
ஊகார முதலிலே யொத்தொ டுங்கி
ஓடி வகாரத்தி னாவை நீட்டிச்
சீகாரங் கிடந்ததோர் மந்திரத் தைச்
சித்தப்பி டாரனார் போதஞ் செய்ய
மாகாரப் பிறப்பையும் வேர றுத்து
மாயபந்தங் கடந்தோமென் றாடாய் பாம்பே.
தந்திரஞ் சொல்லுவார் தம்மை யறிவார்
தனிமந்தி ரஞ்சொல்லுவார் பொருளை யறியார்
மந்திரஞ் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்
மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்.
அந்தரஞ் சென்றுமே வேர்பி டுங்கி
அருளென்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே
இந்த மருந்தினைத் தின்பீ ராகில்
இனிப்பிறப் பில்லையென் றாடாய் பாம்பே.
களிமண்ணி னாலொரு கப்பல் சேர்த்தே
கனமான பாய்மரங் காண நாட்டி
அளிபுலந் தன்னையே சுக்கா னாக்கி
அறிவென்னு மாதாரச் சீனி தூக்கி
வெளியென்னும் வட்டத்தே யுள்ள டக்கி
வேதாந்தக் கடலினை வெல்ல வோட்டித்
தெளிவுறு ஞானியா ரோட்டுங் கப்பல்
சீர்பாதஞ் சேர்ந்ததென் றாடாய் பாம்பே.
உள்ளத்துக் குள்ளே யுணர வேண்டும்
உள்ளும் புறம்பையு மறிய வேண்டும்
மெள்ளக் கனலை யெழுப்ப வேண்டும்
வீதிப் புனலிலே செலுத்த வேண்டும்
கள்ளப் புலனைக் கடிந்து விட்டுக்
கண்ணுக்கு மூக்குமேற் காண நின்று
தெள்ளு பரஞ்சோதி தன்னைத் தேடிச்
சீர்பாதம் கண்டோமென் றாடாய் பாம்பே.
ஓங்காரக் கம்பத்தின் உச்சி மேலே
உள்ளும் புறம்பையு மறியவேண்டும்
ஆங்காரக் கோபத்தை யறுத்து விட்டே
ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக் கொண்டே
சாங்கால மில்லாமற் தாணு வோடே
சட்டதிட்ட மாய்ச்சேர்ந்து சாந்த மாகத்
தூங்காமல் தூங்கியே சுக மடைந்து
தொந்தோம் தொந்தோமென் றாடாய் பாம்பே.
விரகக் குடத்திலே பாம்ப டைப்போம்
வேதாந்த வெளியிலே விட்டே யாட்டுவோம்
காரணங்க ளைப்பிடுங்கி இரைகொ டுப்போம்
காலக் கடுவெளிநின் றாட்டு விப்போம்
துரகந் தனிலேறித் தொல்லுல கெங்கும்
சுற்றிவலம் வந்து நித்ய சூட்சங் கண்டும்
உரையற்ற மந்திரஞ் சொல்லி மீட்டோம்
ஒருநான்கும் பெற்றோமென் றாடாய் பாம்பே.
காயக் குடத்திலே நின்ற பாம்பைக்
கருணைக் கடலிலே தியங்க விட்டு
நேயச் சுழுமுனை நீடு பாய்ச்சி
நித்யமான வஸ்துவை நிலைக்க நாடி
மாயப் பெருவெளி தன்னி லேறி
மாசற்ற பொருளினை வாய்க்கத் தேடி
ஆயத் துறைகடந் தப்பாற் பாழின்
ஆனந்தஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே.
மூலத் தலத்திலே நின்ற கருத்தை
முற்றுஞ் சுழுமுனை தன்னி லூடே
மேலத் தலத்திலே விந்து வட்டம்
வேலை வழியிலே மேவி வாழும்
பாலத் திருத்தாய்க் கருணை யதனால்
பரகதி ஞானசொ ரூபமாகி
ஆலச் சயனத்து மாலுட னின்றே
ஆனந்தஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே.
புலனைந்து வீதியில் வையாளி பாயும்
புரவி யெனுமனதை ஒருமைப் படுத்தி
மலபுந்த வுலகங் கடந்த தாலே
மன்னுகுரு பாதத்தி னிலையை நாடித்
தலமைந்து பூலோகங் கடந்த தாலே
சந்திர மண்டலமுங் கடந்த தாகும்
அலமந்து பூலோகக் கடலை நீக்கி
ஆனந்த மாகிநின் றாடாய் பாம்பே.
குருவென்னும் ஆசானி னுருவெ டுத்துக்
குறியான ஞானந்துப் பாக்கியாக்கி
அருளென்னும் அருளையே உண்டை யாக்கி
ஆனந்த மாகவே அதைக்க டந்தே
மருளென்னு மாதர்மன நெறியைத் தொட்டு
வாங்காம லெரிந்திட நெட்டை யிட்டு
பருவளைக் குள்ளேயே பட்ட தென்றே
பற்றானைப் பற்றிநின் றாடாய் பாம்பே.
கன்னான் குகையிலே கான்ம றிப்போம்
கருமா னுலையிலே தீயை மூட்டுவோம்
சொன்னார் தலையிலே பொன்னை யாக்குவோம்
கருதி யருகல்வி ஒப்பஞ் செய்வோம்
மின்னார்கள் பாசத்தை விட்டே யெரிப்போம்
மெய்ப்பொருட் குறிகண்டு விருப்பை யடைவோம்
பன்னாதே பன்னாதே சும்மா விருந்து
பராபரஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே.
சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்
வீதிப் பிரிவினிலே விளையா டிடுவோம்
வேண்டாத மனையினி லுறவு செய்வோம்
சோதித் துலாவியே தூங்கி விடுவோம்
சுகமான பெண்ணையே சுகித்தி ருப்போம்
ஆதிப் பிர்மர்கள் ஐந்து பேரும்
அறியார்கள் இதையென் றாடாய் பாம்பே.
நெட்டெழுத் ததனிலே நிலைபி டித்து
நீங்கா வெழுத்திலே வாலை முறுக்கி
விட்டவ் வெழுத்திலே படம்வி ரித்து
விண்ணின் வழியிலே மேவி யாடிப்
பட்ட வெழுத்தையும் பதிந்தி ருப்போம்
பன்னிரண் டாமெழுத்தினிற் பன்னிக் கூடித்
திட்டமுட னெமக்கருள் தேசிக னார்தம்
சீர்பாதஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே.
ஊசித்துளைக் குடத்தினிற் பாம்பை யடைப்போம்
உலகெலாஞ் சுற்றி யுலாவிவருவோம்
மாசுள்ள பிறவியை மறந்தி ருப்போம்
மனமொத்த வெளியிலே விட்டே யாட்டுவோம்
மாசுப் புலன்களை இரைகொ டுப்போம்
மனமுற்ற உச்சியிலேறி யாடுவோம்
பேசு மெழுத்தையும் விழுங்கி விடுவோம்
பிறப்பிறப் பற்றோமென் றாடாய் பாம்பே.
ஆணிக் குடத்திலே பாம்ப டைப்போம்
அக்கினிக் கோட்டைமே லேறிப் பார்ப்போம்
மாணிக்கத் தூணின்மேல் விட்டே யாட்டுவோம்
மனம்வாக்குக் காயத்தை யிரைகொ டுப்போம்
நாணிக் கயிற்றையும் அறுத்து விடுவோம்
நமனற்ற நாதன்பதம் நாடியே நிற்போம்
ஏணிப் படிவழிகண் டேறி விடுவோம்
யாருமிதை அறியாரென் றாடாய் பாம்பே.
வடக்குங் கிழக்குமாக நூலை யிழைப்போம்
மற்றுஞ் சுழலிலே பாவு பூட்டுவோம்
நடக்கும் வழியினிலே யுண்டைசேர்ப்போம்
நடவா வழியினிலே புடவை நெய்வோம்
குடக்குக் கரையினிலே கோலைப் போடுவோம்
கொய்ததை எங்குமே விற்று விடுவோம்
அடக்கியே யேகத்துளே வைக்கவும் வல்லோம்
ஆதிபதங் கண்டோமென் றாடாய் பாம்பே.
சூத்திரக் குடத்திலே பாம்பை யடைப்போம்
சுழுமுனைக் குள்ளேயோ சுகித்தி ருப்போம்
பாத்திரங் கொண்டுமே பலியி ரப்போம்
பத்தெட்டு மூன்று படிகட ந்தோம்
ஊத்தைச் சடலத்தினைப் புடமே யிடுவோம்
உளவ னெமக்குநல் லுறுதி சொல்லப்
பார்த்துரை யிதன்மெய் பலிக்க வெண்ணிப்
பதனம் பதனமென் றாடாய் பாம்பே.
மவ்வக் குடத்திலே பாம்ப டைப்போம்
மணிவட்ட வாசியை வாரி யுண்டோம்
வவ்வக் குடங்களைத் தள்ளி விடுவோம்
வக்கிர சொர்ப்பனந் தாண்டி விடுவோம்
பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம்
பஞ்ச கருவியைப் பலிகொ டுப்போம்
சிவ்வுரு வாகியே நின்றோ மென்றே
சீர்பாதங் கண்டுதெளிந் தாடாய் பாம்பே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக