அகநானூறு

 அகநானூறு – உரை – வைதேகி

தமிழ் உரை நூல்கள்:
அகநானூறு – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தமிழ் மண் பதிப்பகம், சென்னை
அகநானூறு – பொ. வே. சோமசுந்தரனார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை

பாடல்கள் (44): 12, 15, 16, 28, 48, 52, 66, 80, 83, 86, 105, 114, 118, 122, 128, 136, 147,  149, 175, 190, 200, 203, 204, 216, 225, 230, 232, 234, 247, 259, 275, 280, 281, 292, 294, 296, 311, 320, 339, 341, 342, 355, 385, 386.

அகநானூறு 12, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
யாயே கண்ணினும் கடுங்காதலளே,
எந்தையும் நிலன் உரப் பொறாஅன் ‘சீறடி சிவப்ப
எவன் இல குறுமகள் இயங்குதி’ என்னும்,
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்
இரு தலைப் புள்ளின் ஓர் உயிர் அம்மே,  5
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
கிளி விளி பயிற்றும், வெளில் ஆடு பெருஞ்சினை
விழுக்கோட் பலவின் பழுப் பயங் கொண்மார்
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம்  10
புலி செத்து  வெரீஇய புகர் முக வேழம்,
மழை படு சிலம்பில் கழை படப் பெயரும்,
நல் வரை நாட! நீ வரின்,
மெல் இயல் ஓரும் தான் வாழலளே.

பாடல் பின்னணி:  தோழி இரவுக்குறியை மறுத்து வரைவு கடாயது.

பொருளுரை:  எங்கள் தாய் தன்னுடைய கண்களைவிட இவள்பால் மிகுந்த அன்பை உடையவள்.  எங்கள் தந்தை இவள் நிலத்தில் நடப்பதைப் பொறுக்காதவன்.  “ஏடி மகளே! உன் சிறிய அடிகள் சிவக்க எவ்வாறு நடக்கின்றாய்?” என்று கேட்பான்.  நானும் அவளும் இரு தலைப் பறவையைப் போல் ஓர் உயிர் கொண்டவர்கள்.  தினைப் புனத்தைக் காக்கும் அழகிய பெண்கள் விடாது ஆரவாரிக்கும் பொழுதெல்லாம் கிளிகள் தங்கள் இனத்தை அழைக்கும் இடத்தில், அணில் விளையாடும் கிளைகளையுடைய பெரிய பழங்களையுடைய பலா மரத்தின் பழங்களின் பயனைக் கொள்வதற்குக் குறவர்கள் நட்டிய குடிசை மறையும்படி தேன் சொட்டும் வேங்கை மலர்கள் பரவியதைப் புலி என்று நினைத்து அஞ்சி புள்ளியுடைய யானைகள் முகிலினம் பொருந்திய மலைச் சரிவில் மூங்கில் முறிபட ஓடும் நல்ல மலைகளையுடைய நாடனே!  நீ இரவு நேரத்தில் வந்தால் மென்மையான என் தோழி உயிர் வாழ மாட்டாள்!

குறிப்பு:  ஒப்புமை:  கலித்தொகை 89-4 – ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலை.  வேங்கை மலரும் புலியும் – அகநானூறு 12 – வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலி செத்து வெரீஇய புகர் முக வேழம், அகநானூறு 141 – புலிக்கேழ் உற்ற பூ இடைப் பெருஞ்சினை நரந்த நறும்பூ நாள் மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை, அகநானூறு 227 – புலிக் கேழ் வேங்கை, அகநானூறு 228 – வேங்கை ஒள் வீப் புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், நற்றிணை 389 – வேங்கையும் புலி ஈன்றன, குறுந்தொகை 47 – வேங்கை வீ உகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும், ஐங்குறுநூறு 396 – புலிப் பொறி வேங்கைப் பொன் இணர்.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

சொற்பொருள்:  யாயே – தாயே, கண்ணினும் கடுங்காதலளே – தன்னுடைய கண்களைவிட இவள்பால் மிகுந்த அன்பை உடையவள், எந்தையும் – எங்கள் தந்தையும், நிலன் உரப் பொறாஅன் – இவள் நிலத்தில் நடப்பதைப் பொறுக்காதவன் (பொறாஅன் – அளபெடை, நிலன் – நிலம் என்பதன் போலி), சீறடி சிவப்ப – சிறிய அடிகள் சிவப்ப, எவன் – எவ்வாறு, இல குறுமகள் – ஏடி மகளே, இயங்குதி – நடக்கின்றாய், என்னும் – என்று கூறும், யாமே – நாங்கள், பிரிவு இன்று இயைந்த – பிரிவு இல்லாது ஒன்றிய, துவரா நட்பின் – துவர் இல்லாத நட்புடன், இரு தலைப் புள்ளின் ஓர் உயிர் – இரு தலைப் பறவையைப் போல் இரண்டு உடலுக்கு ஓர் உயிர், அம்மே – ஓர் அசைச் சொல், ஏனல் அம் காவலர் – தினைப் புனம் காக்கும் அழகிய பெண்கள், ஆனாது – ஓயாது, ஆர்த்தொறும் – ஆரவாரிக்கும் பொழுதெல்லாம், கிளி விளி பயிற்றும் – கிளிகள் தங்கள் இனத்தை அழைக்கும், வெளில் ஆடு – அணில்கள் ஆடும், பெருஞ்சினை – பெரிய கிளைகள், விழுக்கோட் பலவின் பழுப் பயங் கொண்மார் – பெரிய பழங்களையுடைய பலா மரத்தின் பழங்களின் பயனைக் கொள்வதற்கு, குறவர் ஊன்றிய குரம்பை புதைய – குறவர்கள் நட்டிய குடிசை மறைய, வேங்கை தாஅய – வேங்கை மரத்தின் மலர்கள் படர (தாஅய – அளபெடை), தேம்பாய் – தேன் ஒழுகும் (தேம் தேன் என்றதன் திரிபு), தோற்றம் – தோற்றம், புலி செத்து – புலி என்று நினைத்து, வெரீஇய – அஞ்சிய (வெரீஇய – அளபெடை), புகர் முக வேழம் – முகத்தில் புள்ளிகள் உள்ள யானை, மழை படு – முகிலினம் பொருந்திய, சிலம்பில் – மலைச் சரிவில், கழை படப் பெயரும் – மூங்கில் முறிபட விலகிச் செல்லும், நல் வரை நாட – நல்ல மலைகளையுடைய நாடனே! நீ வரின் – நீ வந்தால், மெல் இயல் – மென்மையான தலைவி, ஓரும் – ஓர் அசைச் சொல், தான் வாழலளே – இவள் வாழ மாட்டாள் (வாழலளே – ஏகாரம் அசை நிலை)

அகநானூறு 15, மாமூலனார்பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
எம் வெங்காமம் இயைவது ஆயின்,
மெய்ம்மலி பெரும்பூண் செம்மல் கோசர்
கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக் கண் பீலித்
தோகைக் காவின் துளு நாட்டு அன்ன,  5
வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்
அறிந்த மாக்கட்டு ஆகுக, தில்ல,
தோழிமாரும் யானும் புலம்பச்
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன்  10
பாழி அன்ன கடி உடை வியன் நகர்ச்
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
அத்த இருப்பை ஆர் கழல் புதுப்பூத்
துய்த்த வாய துகள் நிலம் பரக்க
கொன்றை அம் சினைக் குழல் பழம் கொழுதி  15
வன்கை எண்கின் வய நிரை பரக்கும்,
இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்குக்
குன்ற வேயின் திரண்ட என்
மென்தோள் அஞ்ஞை சென்ற ஆறே.  19

பாடல் பின்னணி:  மகட் போக்கிய நற்றாய் வருந்திச் சொல்லியது.

பொருளுரை:  என்னுடைய பெரிய விருப்பம் கைகூடுவதானால், தன்னுடைய இனிய துணையுடன் மாண்புமிகுந்த கொள்கையுடன் சென்ற, மலை மூங்கிலைப் போன்று திரண்ட மென்மையான தோளினையுடைய என் மகள் சென்ற வழியில், மிகுந்த மெய்மையான சொற்களையுடைய பெரிய அணிகலன்களை அணியும் மாட்சிமையுடைய கோசர்களின் திரண்ட பசுமையான காயின் நுனியில் விளைந்த பாகற் பழங்களை உண்ணும் பறை முரசைப்போன்ற புள்ளிகளைத் தங்கள் தோகையில் கொண்ட மயில்களையுடைய சோலைகளைக் கொண்ட துளு நாட்டைப் போன்று, வெறுங்கையுடன் வரும் புதியவர்களை அன்புடன் பேணும் பண்புடைய நெருங்கிய தெருக்களையும் தலைமையையும் உடைய பழைய ஊர்களும், அறன் அறிந்த சான்றோர்களும் இருக்கட்டும்!

அவளுடைய தோழியரும் நானும் வருந்த, முகபடாம் அணிந்த யானைகளையும் ஒளியுடைய அணிகலன்களையும் உடைய நன்னனின் பாழி நகரைப் போன்ற காவலையுடைய எங்கள் பெரிய இல்லத்தின் நெருங்கிய காவலைக் கடந்து, தன்னுடைய தலைவனுடன் போய் விட்டாள் பாலை நிலத்திற்கு.  அங்கு இருப்பை மரத்தின் காம்பு கழன்று உதிர்ந்த புதிய மலர்களை உண்ட வாயை உடையவையாய், தூசி நிலத்தில் பரவ, கொன்றை மரத்தின் அழகிய கிளைகளில் உள்ள உட்துளைப் பொருந்திய பழங்களைத் தின்னும் வலிமையான கைகளையுடைய  வலிமை மிக்க கரடிக் கூட்டம் பரவி இருக்கும்.

குறிப்பு:  நன்னன் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவன் மலைப்படாம் பாடலின் பாட்டுடைத் தலைவன்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  கரடி ஆர்கழல் புதுப் பூவை நுகர்ந்த வாயுடையவாய், அதிலே நிறைந்து, கொன்றைப் பழத்தைக் கோதிப் போனாற்போல அவளும் தலைவனோடு கூடிய இன்பத்திலே நிறைந்த செருக்கினாலே கூடி வளர்ந்த தோழிமாரையும் என்னையும் புறக்கணித்துப் போனாள் என்றவாறு, இதனை பழைய உரையாசிரியர் இறைச்சிப் பொருள் என்பர்.  அஞ்ஞை (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை அகநானூறு 145 – அன்பு மிகுதிப் பற்றி மகளை அன்னை என்றாள்.  ஒப்புமை:  அகநானூறு 177 – பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக் கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை, கரடி இருப்பை மலரை உண்ணுதல் – அகநானூறு 15, 81, 95, 149, 171, 247, 267, 275, 331.   வரலாறு:  கோசர், துளு நாடு, நன்னன், பாழி.

சொற்பொருள்:  எம் வெங்காமம் இயைவது ஆயின் – என்னுடைய பெரிய விருப்பம் கைகூடுவதானால், மெய்ம் மலி – மிகுந்த மெய்மை, பெரும்பூண் செம்மல் கோசர் – பெரிய அணிகலன்களை அணியும் மாட்சிமையுடைய கோசர்கள், கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த – திரண்ட பசுமையான காயின் நுனியில் விளைந்த, பாகல் ஆர்கைப் பறைக் கண் பீலித் தோகைக் காவின் – பாகற் பழங்களை உண்ணும் பறை முரசைப்போன்ற கண்களைத் தங்கள் தோகையில் கொண்ட (புள்ளிகளைத் தங்கள் தோகையில் கொண்ட) மயில்களுடைய சோலைகளையுடைய, துளு நாட்டு அன்ன – துளு நாட்டைப் போன்று, வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின் – வெறுங்கையுடன் வரும் புதியவர்களை அன்புடன் பேணும் பண்புடைய, செறிந்த சேரிச் செம்மல் மூதூர் – நெருங்கிய தெருக்களையுடைய தலைமையையும் உடைய பழைய ஊர்கள், அறிந்த மாக்கட்டு ஆகுக – அறன் அறிந்த சான்றோர்களும் இருக்கட்டும், தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, தோழிமாரும் யானும் புலம்ப – அவளுடைய தோழியரும் நானும் வருந்த, சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் பாழி அன்ன – முகபடாம் அணிந்த யானைகளையும் ஒளியுடைய அணிகலன்களையும் அணிந்த நன்னனின் பாழி நகரைப் போன்று, கடி உடை வியன் நகர் – காவலையுடைய பெரிய இல்லம், செறிந்த காப்பு இகந்து – நெருங்கிய காவலைக் கடந்து, அவனொடு போகி – அவனுடன் போய், அத்த இருப்பை ஆர் கழல் புதுப்பூத் துய்த்த வாய – பாலை நிலத்தில் உள்ள இருப்பை மரத்தின் காம்பு கழன்று உதிர்ந்த புதிய மலர்களை உண்ட வாயை உடையவையாய், துகள் நிலம் பரக்க – தூசி நிலத்தில் பரவ, கொன்றை அம் சினைக் குழல் பழம் கொழுதி – கொன்றை மரத்தின் அழகிய கிளைகளில் உட்துளைப் பொருந்திய பழங்களைத் தின்று, வன்கை எண்கின் வய நிரை – வலிமையான கைகளையுடைய வலிமை மிக்க கரடிகள் கூட்டம், பரக்கும் – பரவி இருக்கும், இன்துணைப் படர்ந்த – தன்னுடைய இனிய துணையுடன் சென்ற, கொள்கையொடு – நல்ல கொள்கையுடன், ஒராங்கு – ஒன்றாக, குன்ற வேயின் திரண்ட என் மென்தோள் அஞ்ஞை – மலை மூங்கிலைப் போன்று திரண்ட மென்மையான தோளினையுடைய என் அன்னை (மகள்), சென்ற ஆறே – சென்ற வழி (ஆறே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 16, சாகலாசனார்மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்
மாசு இல் அங்கை, மணி மருள் அவ்வாய்,
நாவொடு நவிலா நகை படு தீஞ்சொல்,
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்  5
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே
கூர் எயிற்று அரிவை குறுகினள், யாவரும்
காணுநர் இன்மையின், செத்தனள் பேணிப்
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை
“வருக மாள என் உயிர்” எனப் பெரிது உவந்து 10
கொண்டனள் நின்றோள் கண்டு நிலைச் செல்லேன்,
“மாசு இல் குறுமகள். எவன் பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு” என யான் தற்
கரைய வந்து விரைவனென் கவைஇ,
களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா  15
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
பேணினென் அல்லெனோ மகிழ்ந, வானத்து
அணங்கு அருங்கடவுள் அன்னோள், நின்
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே.  19

பாடல் பின்னணி:  பரத்தையர் இல்லத்திலிருந்து வந்த தலைவன் யாரையும் அறியேன் என்று கூறிய வேளையில் தலைவி கூறியது.

பொருளுரை:  நீர்நாய்களையுடைய பழைய நீரில் தழைத்த தாமரையின் தாதினையுடைய நடுப்பகுதியை சூழ்ந்த உள் இதழ்களை அடுத்துள்ள இதழ்களைப் போல் இருக்கும் குற்றமற்ற அழகிய உள்ளங்கையையும், பவளம் போன்று சிவந்த வாயினையும், நாவால் கற்று பேசாத கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் இனிய சொற்களையுமுடைய யாவரும் விரும்பும் பொற்தொடியை அணிந்த நம் புதல்வனை, அவன் சிறு தேர் ஓட்டி விளையாடிய தெருவில் தனியாக இருப்பதைக் கண்டு, கூர்மையான பற்களையுடைய உன்னுடைய பரத்தையான இளம் பெண் அணுகினாள்.  காணுவதற்கு எவருமே இல்லாததால், உன்னைப் போல் அவன் இருப்பதைத் தன்னுடைய மனதில் எண்ணி, பொன் அணிகள் அணிந்த இள முலைகளைக் கொண்ட அவள், “வருக என்னுயிரே” என்று மிகவும் மகிழ்ந்து, அவனை அணைத்துக் கொண்டு நின்றாள்.  அவளைக் கண்ட நான் நின்ற இடத்திலிருந்து விலகவில்லை.  “குற்றமில்லாத இளம் பெண்ணே! எதற்காகக் கலங்குகின்றாய் நீ?  நீயும் இவனுக்குத் தாய் தான்” என்று நான் கூறி விரைவாக வந்து அவளை அணைத்துக் கொள்ள, அவள் தான் செய்த களவை கண்டு கொண்டவரின் முன் உடன்பட்டு நிற்பவர் போலத் தன்னுடைய தலையைக் கவிழ்த்து, நிலத்தைத் தன்னுடைய காலால் கீறி நின்றாள். அவளுடைய நிலையைக் கண்டு, நானும், அவளை விரும்பினேன் அல்லவா தலைவா?  வானத்தில் உள்ள கடவுளான அருந்ததியைப் போன்றவள், உன்னுடைய மகனுக்குத் தாய் ஆவது பொருத்தம்.

குறிப்பு:  மாசு இல் குறுமகள் (12) –  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாசு இல் குறுமகள் என்பது இகழ்ச்சி.  ஒப்புமை: தேர் வழங்கு தெரு: அகநானூறு 16 – தேர் வழங்கு தெருவில், நற்றிணை 227 – தேர் வழங்கு தெருவின், மதுரைக்காஞ்சி 648 – தேர் வழங்கு தெருவில்.  தொல்பொருளியல் 37 – கற்புவழிப் பட்டவள் பரத்தையை ஏத்தினும் உள்ளத்து ஊடல் உண்டென மொழிப.  கிளையா – கிளைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம் எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  தாயை – ஐகாரம் சாரியை.   வானத்து அணங்கு அருங்கடவுள் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வானத்தின்கண் காண்டற்கரிய கடவுட் கற்புடைய அருந்ததி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வானத்தின் அரிய தெய்வமாகிய அருந்ததி.

சொற்பொருள்:   நாயுடை முதுநீர்க் கலித்த – நீர்நாய்களையுடைய பழைய நீரில் தழைத்த, தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் – தாமரையின் தாதினையுடைய நடுப்பகுதியை சூழ்ந்த உள் இதழ்களை அடுத்துள்ள இதழ்களை ஒக்கும், மாசு இல் அங்கை – குற்றமற்ற அழகிய உள்ளங்கை, மணி மருள் அவ்வாய் – பவளம் போன்ற வாய் (மருள் – உவம உருபு), நாவொடு நவிலா – நாவால் கற்று பேசாத, நகைபடு தீஞ்சொல் – கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் இனிய சொற்கள், யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை – யாவரும் விரும்பும் பொற் தொடியை அணிந்த புதல்வனை, தேர் வழங்கு தெருவில் – அவன் சிறு தேர் ஓட்டி விளையாடிய தெருவில், தமியோன் கண்டே – அவன் தனியாக இருப்பதைக் கண்டு, கூர் எயிற்று அரிவை குறுகினள் – கூர்மையான பற்களையுடைய இளம் பெண் அணுகினாள், யாவரும் காணுநர் இன்மையின் – காணுவதற்கு யாரும் இல்லாததால், செத்தனள் பேணி – உன்னைப் போல் இருப்பதை எண்ணி, பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை – பொன் அணிகள் அணிந்த இள முலைகள், வருக மாள என் உயிர் என – வருக என்னுயிர் என்று (மாள- ஓர் அசைச் சொல்), பெரிது உவந்து – பெரிதும் மகிழ்ந்து, கொண்டனள் நின்றோள் கண்டு – அணைத்துக் கொண்டு நின்றவளைக் கண்டு, நிலைச் செல்லேன் – நின்ற இடத்திலிருந்து நான் செல்லவில்லை, மாசு இல் குறுமகள் – குற்றமில்லாத இளம் பெண்ணே, எவன் பேதுற்றனை – எதற்காக கலங்கினாய், நீயும் தாயை இவற்கு என யான் தற் கரைய – நீயும் இவனுக்கு தாய் தான் என்று நான் கூற (ஐகாரம் சாரியை), வந்து விரைவனென் கவைஇ – வந்து விரைவாக நான் அணைத்து (கவைஇ – அளபெடை), களவு உடம்படுநரின் கவிழ்ந்து – தான் செய்த களவை கண்டு கொண்டவரின் முன் உடன்பட்டு நிற்பவர் போல தலையைக் கவிழ்த்து (உடம்படுநரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது), நிலம் கிளையா நாணி நின்றோள் நிலை கண்டு – நிலத்தை காலால் கீறி நின்றவள் நிலையைக் கண்டு, யானும் – நானும், பேணினென் அல்லெனோ – அவளை விரும்பினேன் அல்லவா, மகிழ்ந – தலைவா, வானத்து அணங்கு அருங்கடவுள் அன்னோள் – வானத்தின் கடவுளான அருந்ததியைப் போன்றவள், நின் மகன் தாய் ஆதல் புரைவது – உன்னுடைய மகனுக்கு தாய் ஆகுவது பொருத்தம் என்று (புரை – உவம உருபு), ஆங்கு – அசைநிலை, எனவே – எனவே, ஏகாரம் அசைநிலை

அகநானூறு 28, பாண்டிய மன்னன் அறிவுடைநம்பிகுறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னதுதலைவன் கேட்கும்படியாக
மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி,
கொய்யா முன்னும் குரல் வார்பு தினையே
அருவி ஆன்ற பைங்கால் தோறும்
இருவி தோன்றின பலவே, நீயே  5
முருகு முரண் கொள்ளும் தேம்பாய் கண்ணி
பரியல் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை, யாழ நின்
பூக்கெழு தொடலை நுடங்க எழுந்து எழுந்து,
கிள்ளைத் தெள் விளி இடை இடை பயிற்றி  10
ஆங்காங்கு ஒழுகாய் ஆயின், அன்னை
சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் எனப்
பிறர்த் தந்து நிறுக்குவள், ஆயின்
உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே.

பாடல் பின்னணி:  தலைவிக்கு கூறுவாளாய், அன்னை இற்செறிப்பாள் என்பதை, தலைவனுக்கு அறிவுறுத்தி வரைவு கடாயது.

பொருளுரை:   ஒருவர் மெய்யிலிருந்து ஒருவர் மெய் நீங்காதவாறு உள்ள உன்னுடைய பொருந்திய காதலினால் நீ நிலைமையை அறியவில்லை.  ஆனாலும், நான் இதை உன்னிடம் கூறுகின்றேன், தோழி! கேட்பாயாக!
நீர்ப் பாய்ச்சல் இல்லாத நம் தினைப் புனத்தில் உள்ள கொத்துக்களையுடைய நீண்ட தினைக் கதிர்களைக் கொய்வதற்கு முன், பச்சைத் தாள்களிடையே எல்லாம் உலர்ந்த தட்டைகள் பல தோன்றியுள்ளன.  நீ, பல்வேறு நறுமணங்கள் உடைய தேன் பாயும் மலர் மாலையை அணிந்த, விரைந்து செல்லும் நாய்களுடன் பல மலைகள் வழியாக வேட்டையாடி வரும் உன் தலைவனை எண்ணியபடி உள்ளாய்.  உன்னுடைய பூமாலை அசையும்படி நீ அவ்வப்பொழுது எழுந்து, கிளிகளை விரட்டுவதற்காகத் தெளிவாக இடையிடையே ஒலியை எழுப்பாது இருந்தாய் ஆனால், அன்னை, ‘இவளுக்குக் கிளிகளை விரட்டுவதற்குத் தெரியாது’ என்று கருதி, பிறரைக் கொண்டு வந்து நிறுத்துவாள். அவ்வாறு அவள் செய்தால், நீ உன் தலைவனின் படர்ந்த மார்பை அணைத்து மகிழ முடியாது.

குறிப்பு:  மெய்யின் தீரா மேவரு காமமொடு எய்யாய் (1-2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒருவர் உடம்பினின்றும் ஒருவர் உடம்பு அகலாமைக்குக் காரணமாய் ஒரு காலைக் கொருகால் மேம்பட்டு வருகின்ற நின் காமப் பண்பினாலே நினக்கு உறுதியாவதனை அறிகின்றிலை, ச. வே. சுப்பிரமணியன் உரை –  மிகுதியாக வரும் அன்பினால் வரும் துன்பத்தை நீ அறியாய், வேங்கடசாமி நாட்டார்  உரை – ஒருவர் மெய்யினின்றும் ஒருவர் மெய் நீங்காதவாறு பொருந்திய காமத்தால் நீ அறியாய்.  ஆன்ற (4) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அகன்ற, இல்லையான, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அமைந்த, இல்லையான; ஆனா என்னும் எதிர்மறைச்சொல் உடன்பாட்டில் வருங்கால ஆன்ற என்று வரும்.  முருகு முரண் கொள்ளும் தேம்பாய் கண்ணி (6) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வேறுபட்ட பல மணங்களும் கமழும் தேன் ஒழுகும் கண்ணியையுடையனான, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவன் முருகன் அல்லன் என்று வேறுபாடு அறிதற்குக் காரணமான கடம்பின் கண்ணியல்லாத தேன்சொரியும் மலரால் இயன்ற மணமாலையைத் தலையில் சூடுகின்ற.  உறற்கு (14) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அடைதற்கு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முயங்கி மகிழ்வதற்கு.

சொற்பொருள்:   மெய்யின் தீரா மேவரு காமமொடு எய்யாய் – ஒருவர் மெய்யிலிருந்து ஒருவர் மெய் நீங்காதவாறு உள்ள உன்னுடைய  பொருந்திய காதலினால் நீ நிலைமையை அறியவில்லை, ஆயினும் – ஆனாலும், உரைப்பல் தோழி – கூறுகின்றேன் தோழி, கொய்யா முன்னும் – கொய்வதற்கு முன், குரல் வார்பு தினையே – கொத்துக்களையுடைய நீண்ட தினைக் கதிர்கள், அருவி ஆன்ற – நீர்ப் பாய்ச்சல் இல்லாத, பைங்கால் தோறும் இருவி தோன்றின – பச்சைத் தாள்களிடையே எல்லாம் உலர்ந்த தட்டைகள் தோன்றுகின்றன, பலவே – பல தோன்றியுள்ளன (ஏகாரம் அசைநிலை), நீயே – நீ, முருகு முரண் கொள்ளும் தேம்பாய் கண்ணி – பல்வேறு நறுமணங்கள் உடைய தேன் பாயும் மலர் மாலை (தேம் தேன் என்றதன் திரிபு), பரியல் நாயொடு பன்மலைப் படரும் வேட்டுவற் பெறலொடு அமைந்தனை – விரைவான நாய்களுடன் பல மலைகள் வழியாக வேட்டையாடி வரும் உன் தலைவனை எண்ணியபடி உள்ளாய், யாழ – ஓர் அசை, நின் பூக்கெழு தொடலை நுடங்க – உன்னுடைய பூமாலை அசைய, எழுந்து எழுந்து கிள்ளைத் தெள் விளி இடை இடை பயிற்றி ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் – நீ அவ்வப்பொழுது எழுந்து கிளிகளை விரட்டத் தெளிவாக இடையிடையே ஒலியை எழுப்பாது இருந்தாய் ஆனால், அன்னை – அன்னை, சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் என – இவளுக்குக் கிளிகளை விரட்டுவதற்குத் தெரியாது என்று, பிறர்த் தந்து நிறுக்குவள் – பிறரைக் கொண்டு வந்து நிறுத்துவாள், ஆயின் உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே – அவ்வாறு அவள் செய்தால் உன் தலைவனின் படர்ந்த மார்பை நீ அணைத்து மகிழ முடியாது (மார்பே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 48, தங்கால் முடக்கொற்றனார்குறிஞ்சித் திணை – செவிலித்தாயிடம் தோழி சொன்னது
அன்னாய் வாழி வேண்டு அன்னை! நின் மகள்
பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு
நனி பசந்தனள் என வினவுதி, அதன் திறம்
யானும் தெற்றென உணரேன், மேல் நாள்
மலி பூஞ்சாரல் என் தோழிமாரோடு  5
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
“புலி புலி” என்னும் பூசல் தோன்ற,
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்  10
குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி,
வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு,
யாதோ மற்று அம் மா திறம் படர் என
வினவி நிற்றந்தோனே அவர் கண்டு
எம்முள் எம்முள் மெய் மறைபு ஒடுங்கி,  15
நாணி நின்றனெமாகப் “பேணி
“ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
பொய்யும் உளவோ?” என்றனன் பையெனப்
பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர் மறுத்து,  20
நின் மகள் உண்கண் பன் மாண் நோக்கிச்
சென்றோன் மன்ற, அக் குன்று கிழவோனே,
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து
அவன் மறை தேஎம் நோக்கி, “மற்று இவன்
மகனே தோழி!” என்றனள்;  25
அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே.

பொருளுரை:   அன்னையே நீ வாழ்வாயாக!  நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக!  உன்னுடைய மகள் பாலையும் பருகாமல் உள்ளாள்.  துன்பம் அடைந்து, மிகவும் பசந்துள்ளாள் என நீ வினவுகின்றாய்.  அது ஏற்பட்டதை நானும் தெளிவாக உணரவில்லை.  முன்பு ஒரு நாள், மலர்கள் நிறைந்த மலைச் சாரலில், என் தோழியருடன்,  தழைத்த கிளைகளை உடைய வேங்கை மரத்தின் பூக்களை பறிக்க சென்றபொழுது, “புலி புலி” என்ற ஆரவாரம் தோன்ற, மகளிரின் கண்கள் போல் உள்ள அழகிய இதழ்களையுடைய ஒளியுடைய செங்கழுநீர் மலர்களை, ஊசியால் சேர்த்துக் கட்டிய மலர் மாலையை அணிந்த ஒருவன், தலையில் ஒரு பக்கம் வெட்சி மலரின் கண்ணியை அணிந்தவனாய், மகளிரின் முலைகள் அழுந்துதற்கு ஏற்ப விரிந்த மார்பில் செஞ்சந்தனம் தடவி, வரிந்து கட்டிய புனைந்த வில்லை உடையவன், ஒப்பற்ற அம்பினை ஆராய்ந்து எடுத்துக் கொண்டு, அந்த விலங்கு சென்ற வழி யாது என வினவி நின்றான்.  அவனைக் கண்டு நாங்கள் ஒருவருக்குள் ஒருவர் உடலை மறைத்து ஒடுங்கி இருந்தோம், நாங்கள் நாணத்துடன் நின்றோமாக.  அப்பொழுது அவன், “நன்றாக எண்ணெய் முதலியன பெய்து ஐந்து பகுதியாக பிரித்துக் கட்டிய கருமையான கூந்தலையும் அழகிய நெற்றியையும் உடைய மகளிரே!  உளவோ – நுமது வாயில் பொய்ச் சொற்களும் உளவோ?” என்றான், குதிரைகளின் விரைவை மெதுவாக தடுத்து தேரை ஓட்டுபவன் அவன்.  நேராக நோக்காமல் அவனை நோக்காமல் பின் உன்னுடைய மகள் தன் மையிட்ட கண்களால் பல முறை அவனை நோக்கினாள்.  , அதன் பின் சென்றான் அம்மலையின் தலைவன்.  பகல் மறைந்து கதிரவன் மறைந்த அந்தி வேளையில், அவன் சென்ற திசை நோக்கி, “இவன் ஓர் ஆடவனே தோழி” என்றாள் உன் மகள்.  அதனைப் புரிந்து அறியும் கொள்கை அறிவு உடையோர்க்கே உண்டு.

குறிப்பு:  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.   தொல். களவியல் 35 – தோழி தானே செவிலி மகளே.  தொல். பொருளியல் 12 – எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், கூறுதல், உசாதல், ஏதீடு தலைப்பாடு, உண்மை செப்புங்கிளவியொடு, தொகைஇ எழு வகைய என்மனார் புலவர் – இங்கு ஏத்தல் (தலைவனை உயர்வாகக் கூறுதல்) பொருந்தும்.  வேங்கை கொய்குவம் சென்றுழி புலி புலி என்னும் பூசல் தோன்ற (6-7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புலி புலி என்றுக் கூவி அச்சுறுத்தினால் ‘வேங்கை மரம் மலர்கொய்யத் தாழ்ந்து கொடுக்கும் என்னும் ஒரு பேதைத்தன்மை, அதுவும் மலையில் வாழ்வார்க்கு உள்ளதோர் பண்பு என்று விளக்கினார் பழையவுரையாசிரியர். குயம் மண்டு ஆகம் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மகளிர் முலைகள் அழுந்துதற்கேற்ற விரிந்த மார்பு,  இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மகளிர் முலைகள் பாய்தற்குரிய மார்பு.  உண்கண் (21) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மையுண்ட கண்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவன் எழிலை உண்ணுகின்ற கண்கள், மையுண்ட கண் எனவும் அவன் அழகைப் பருகுகின்ற கண் எனவும் இரு பொருள் தோன்ற ‘உண்கண்’ என்றாள்.   ஒப்புமை:  நற்றிணை 351 – இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை அருங்கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள் பசந்தனள் என்பது உணராய் பல் நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் வாழி வேண்டு அன்னை.  குறிஞ்சிப்பாட்டு 1-7 – அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒண்ணுதல் ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும் வேறு பல் உருவில் கடவுள் பேணி நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி.  ‘புலி புலி என்று ஓசை எழுப்புதல் -அகநானூறு 48 – ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி புலி புலி என்னும் பூசல் தோன்ற, அகநானூறு 52 – வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள் இன்னா இசைய பூசல் பயிற்றலின், மதுரைக்காஞ்சி 396-397 – கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர் நறும் பூக் கொய்யும் பூசல், மலைபடுகடாம் 305-306 தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப் பூசல்.   அன்னை வருந்துதல்:  குறிஞ்சிப்பாட்டு 1-8 – அன்னாய் வாழி! வேண்டு அன்னை! ஒண்ணுதல் ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும், பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும், வேறு பல் உருவில் கடவுள் பேணி, நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று, எய்யா மையலை நீயும் வருந்துதி.  அகநானூறு 156 – கள்ளும் கண்ணியும் கையுறையாக நிலைக் கோட்டு வெள்ளை நாள் செவிக் கிடாஅய் நிலைத் துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித் தணி மருங்கு அறியாள் யாய் அழ மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே.  நற்றிணை 351 – இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை அருங்கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள் பசந்தனள் என்பது உணராய் பல் நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் வாழி! வேண்டு அன்னை!  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:   அன்னாய் வாழி – அன்னையே நீ வாழ்வாயாக, வேண்டு அன்னை – நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக, நின் மகள் பாலும் உண்ணாள் – உன்னுடைய மகள் பாலையும் பருகாமல் உள்ளாள், பழங்கண் கொண்டு – துன்பம் அடைந்து, நனி பசந்தனள் என வினவுதி – மிகவும் பசந்துள்ளாள் என நீ வினவுகின்றாய், அதன் திறம் யானும் தெற்றென உணரேன் – அது ஏற்பட்டதை நானும் தெளிவாக உணரவில்லை, மேல் நாள் – முன்பு ஒரு நாள், மலி பூஞ்சாரல் – மலர்கள் நிறைந்த மலைச் சாரலில், என் தோழிமாரோடு – என் தோழியருடன், ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி – தழைத்த கிளைகளை உடைய வேங்கை மரத்தின் பூக்களை பறிக்க சென்றபொழுது, “புலி புலி” என்னும் பூசல் தோன்ற – புலி புலி என்ற ஆரவாரம் தோன்ற, ஒண் செங்கழுநீர் – ஒளியுடைய செங்கழுநீர் மலர்களை, கண் போல் – மகளிரின் கண்கள் போல் உள்ள, ஆய் இதழ் – அழகிய இதழ்கள், ஊசி போகிய சூழ் செய் மாலையன் – ஊசியால் சேர்த்துக் கட்டிய மலர் மாலையை அணிந்தவன், பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன் – தலையில் ஒரு பக்கம் வெட்சி மலரின் கண்ணியை அணிந்தவனாய், குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி – மகளிரின் முலைகள் அழுந்துதற்கு ஏற்ப விரிந்த மார்பில் செஞ்சந்தனம் தடவி, வரி புனை வில்லன் – வரிந்து கட்டிய புனைந்த வில்லை உடையவன், ஒரு கணை தெரிந்து கொண்டு – ஒப்பற்ற அம்பினை ஆராய்ந்து எடுத்துக் கொண்டு, யாதோ – எவ்வழியோ, மற்று – அசைநிலை, அம் மா திறம் படர் என வினவி நிற்றந்தோனே – அந்த விலங்கு சென்ற வழி யாது என வினவி நின்றான், அவன் கண்டு எம்முள் எம்முள் மெய் மறைபு ஒடுங்கி – அவனைக் கண்டு நாங்கள் ஒருவருக்குள் ஒருவர் உடலை மறைத்து ஒடுங்கி இருந்தோம், நாணி நின்றனெமாக – நாங்கள் நாணத்துடன் நின்றோமாக, பேணி ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் மை ஈர் ஓதி மடவீர் – நன்றாக எண்ணெய் முதலியன பெய்து ஐந்து பகுதியாக பிரித்துக் கட்டிய கருமையான கூந்தலையும் அழகிய நெற்றியையும் உடைய மகளிரே, நும் வாய்ப் பொய்யும் உளவோ – நுமது வாயில் பொய்ச் சொற்களும் உளவோ, என்றனன் – என்றான், பையென – மெதுவாக, பரி முடுகு தவிர்த்த தேரன் – குதிரைகளின் விரைவை தடுத்து தேரை ஓட்டுபவன், எதிர் மறுத்து – நேராக நோக்காமல், நின் மகள் உண்கண் பன் மாண் நோக்கி – உன்னுடைய மகள் தன் மையிட்ட கண்களால் பல முறை அவனை நோக்கி, சென்றோன் – சென்றான், மன்ற – அசைநிலை, அக் குன்று கிழவோனே – அம்மலையின் தலைவன், பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து – பகல் மறைந்து கதிரவன் மறைந்த அந்தி வேளையில், அவன் மறை தேஎம் நோக்கி – அவன் சென்ற திசை நோக்கி, மற்று இவன் மகனே தோழி என்றனள் – இவன் ஓர் ஆடவனே தோழி என்றாள், அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே – அதனைப் புரிந்து அறியும் கொள்கை அறிவு உடையோர்க்கே உண்டு

அகநானூறு 52, நொச்சி நியமங்கிழார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப்
பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்  5
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது எனத்தம்
மலைகெழு சீறூர் புலம்பக், கல்லெனச்
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு
அறிவிப்பேம் கொல்? அறிவியேம் கொல்? என  10
இரு பால் பட்ட சூழ்ச்சி ஒரு பால்
சேர்ந்தன்று வாழி தோழி, “யாக்கை
இன் உயிர் கழிவது ஆயினும், நின் மகள்
ஆய் மலர் உண்கண் பசலை
காம நோய்” எனச் செப்பாதீமே.  15

பாடல் பின்னணி:  தலைவி இற்செறிக்கப்பட்டாள்.  அவள் வருத்தம் மிகுதியாயிற்று.  அறத்தொடு நிற்க முயலும் தோழியை அங்ஙனம் நிற்க வேண்டாம் என்று தடுப்பாள் போல், தான் அடைந்துள்ள வருத்தம் தலைவனால் ஏற்பட்டது என்று செவிலித்தாயிடம் கூற வேண்டாம் என்று, தலைவன் அருகில் இருப்பதை அறிந்து கூறியது.  வரைவு கடாயது.

பொருளுரை:   நீடு வாழ்வாயாகத் தோழி! மரங்கள் உயர்ந்து வளர்ந்த பக்க மலையில் உள்ள, வள்ளிக் கொடி சுற்றிய வேங்கை மரத்தின் மிகவும் உயர்ந்த மரக்கிளையில் உள்ள பொன் போன்ற புதிய மலர்களைப் பறிக்க விரும்பிய கொடிச்சி ஒருத்தி, கேட்டோர்க்குத் துன்பம் தரும் ஒலியுடைய ‘புலி புலி’ என்ற ஆரவாரத்தை விடாமல் எழுப்புவதால், பெரிய மலைத் தொடரில் உள்ள இருண்ட குகையையுடைய பக்க மலையில் பசுக்களைக் கொல்லும் வலிய புலி ஒன்று உள்ளது என்று எண்ணி, மலையில் பொருந்திய தங்கள் ஊரில் தனித்திருக்கும்படி, கல்லென்னும் ஒலியுடன் வில்லை வைத்திருப்பவர்கள் போகும் நாடவனாகிய, என் நெஞ்சம் விரும்புகின்ற தலைவனின் மார்பு தான் காரணம் என வெளிப்படுத்தி, தாய்க்கு நாம் தெரிவிப்போமா, அல்லது அறிவிக்காது விடுவோமா என்ற இரு வகையான ஆராய்ச்சி ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

என் உயிர் என் உடலைவிட்டுப் பிரிந்தாலும், “உன்னுடைய மகளின் அழகிய மலர்போன்ற மையிட்டுக் கண்களில் படர்ந்த பசலையானது, காதல் நோயினால் ஏற்பட்டது” என்று தாயிடம் நீ கூறாதே.

குறிப்பு:  வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல் கிளர்ந்த வேங்கை (1-2) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மரங்கள் உயர்ந்த பக்க மலையிடத்து சுற்றிய கொடியுடைய செழித்தெழுந்த வேங்கை மரங்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வள்ளிக்கொடி படர்ந்து பின்னிக்கிடத்தற்கு இடனாகிய  மரங்கள் பலவும் உயர்ந்துள்ள மலைச்சாரலின்கண் உயர்ந்துள்ள வேங்கை மரங்கள்.  பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள் இன்னா இசைய பூசல் பயிற்றலின் (3-4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொன் போன்ற புதிய மலரைக் கொய்துக் கொள்ள நினைத்த குறத்தி கேட்டோர்க்கு துன்பம் தருகின்ற ஒலியையுடைய புலி புலி என்னும் ஆரவாரத்தை இடையறாது உண்டாக்குதலாலே.  வேங்கை மலர் கொய்யும் மகளிர் புலி புலி என்று கூவி அம்மரத்தை அச்சுறுத்தினால் அது வளைந்து கொடுக்கும் என்பது ஒரு நம்பிக்கை.  ஒப்புமை:  ‘புலி புலி என்று ஓசை எழுப்புதல் –  அகநானூறு 48 – ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி புலி புலி என்னும் பூசல் தோன்ற, அகநானூறு 52 – வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள் இன்னா இசைய பூசல் பயிற்றலின், மதுரைக்காஞ்சி 396-397 – கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர் நறும் பூக் கொய்யும் பூசல், மலைபடுகடாம் 305-306 தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப் பூசல்.  ஒரு பால் சேர்ந்தன்று (11-12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இப்பொழுது அறிவிப்பேம் என்ற ஒரு முடிவுக்கு வந்துவிட்டது, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஒரு முடிவிற்கு வந்துள்ளது.

சொற்பொருள்:   வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல் கிளர்ந்த வேங்கை – மரங்கள் உயர்ந்து வளர்ந்த பக்க மலையில் வேங்கை மரத்தில் சுற்றிய வள்ளிக் கொடி, சேண் நெடும் பொங்கர் – மிகவும் உயர்ந்த மரக்கிளை, பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள் – வேங்கையின் பொன் போன்ற புதிய மலர்களை பறிக்க விரும்பிய குறமகள் (கொடிச்சி), இன்னா இசைய பூசல் பயிற்றலின் – கேட்டோர்க்குத் துன்பம் தரும் ஒலியுடைய ‘புலி புலி’ என்ற ஆரவாரத்தை விடாமல் எழுப்புவதால், ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் – பெரிய மலைத் தொடரில் உள்ள இருண்ட குகையையுடைய பக்க மலையில், ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது என – பசுக்களைக் கொல்லும் வலிய புலி என்று எண்ணி, தம் மலைகெழு சீறூர் புலம்ப – மலையில் பொருந்திய தங்கள் ஊரில் தனித்திருக்கும்படி, கல்லெனச் சிலையுடை இடத்தர் போதரும் – கல்லென்னும் ஒலியுடன் வில்லை வைத்திருப்பவர்கள் போகும், நாடன் – மலைநாடன், நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என – என் நெஞ்சம் விரும்புகின்ற தலைவனின் மார்பு தான் காரணம் என வெளிப்படுத்தி, அன்னைக்கு அறிவிப்பேம் கொல் – தாய்க்கு நாம் தெரிவிப்போமா, அறிவியேம் கொல் – அறிவிக்காது விடுவோமா, என இரு பால் பட்ட சூழ்ச்சி ஒரு பால் சேர்ந்தன்று – என்ற இரு வகையான ஆராய்ச்சி ஒரு முடிவுக்கு வந்துள்ளது, வாழி தோழி – நீடு வாழ்வாயாக தோழி, யாக்கை இன் உயிர் கழிவது ஆயினும் – என் உயிர் உடலைவிட்டு பிரிந்தாலும், நின் மகள் ஆய் மலர் உண்கண் பசலை – உன்னுடைய மகளின் அழகிய மலர்போன்ற மையிட்டு கண்களில் படர்ந்த பசலை – காம நோய் எனச் செப்பாதீமே – இது காதல் நோயினால் ஏற்பட்டது என்று தாயிடம் கூறாதே

அகநானூறு 66, செல்லூர் கோசிகன் கண்ணனார்மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
‘இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப,
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்’ எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்  5
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி,
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப், புதுவதின்
இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்
மாண் தொழில் மா மணி கறங்கக் கடை கழிந்து,  10
காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்
பூங்கண் புதல்வனை நோக்கி, “நெடுந்தேர்
தாங்குமதி வலவ” என்று இழிந்தனன், தாங்காது
மணி புரை செவ்வாய் மார்பகம் சிவணப்
புல்லிப் “பெரும! செல் இனி அகத்து” எனக்  15
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த
மாநிதிக்கிழவனும் போன்ம் என, மகனொடு
தானே புகுதந்தோனே, யான் அது
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன்
கலக்கினன் போலும் இக்கொடியோன் எனச்சென்று  20
அலைக்கும் கோலொடு குறுகத், தலைக்கொண்டு
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்
பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான்,
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
பழம் கண்ணோட்டமும் நலிய,  25
அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்த தலைவனுக்கு வாயிலாக வந்த தோழியிடம் தலைவி வாயில் நேர்ந்ததையும் அவன் பண்டு செய்ததையும் கூறியது.

பொருளுரை:  பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகையுடைய சிறுவர்களைப் பெற்ற தலைமையுடையோர் இவ்வுலகத்தில் புகழுடன் விளங்கி மறு உலக வாழ்க்கையையும் குற்றமின்றி அடைவார்கள் எனப் பலர் கூறிய பழைய சொற்கள் எல்லாம், உண்மை ஆகுதலைக் கண்டோம் தோழி.
என் கணவன் வரிசையாக மாலைகளை அணிந்தவனாக, நேற்று ஒருத்தியை மணம் புரிய விரும்பி, புதிதாகச் செய்த ஒப்பனை உடையவனாக, இத் தெருவைக் கடந்து சென்றான்.  தொழிலில் சிறந்த குதிரையின் மணி ஒலிக்க இல்லத்தின் வாயிலைக் கடந்து அவன் செல்லும்போது, தன்னைக் காணும் விருப்பத்துடன் தளர்ந்து தளர்ந்து ஓடி வந்த பூப்போன்ற கண்களையுடைய தன் புதல்வனைக் கண்டவுடன், தேரோட்டியை நோக்கி, “நீண்ட தேரினை நிறுத்துவாயாகத் தேரோட்டி!” எனக் கூறி, கீழே இறங்கினான்.  நேரம் தாழ்த்தாது, மகனின் பவளம் போன்ற சிவந்த வாய் தனது மார்பில் பொருந்த அணைத்து, “பெரும!  நீ இல்லத்திற்குள் செல்” எனக் கூறினான்.  என் மகன் ஒத்துக்கொள்ளாமல் அழுதான்.  அவன் அழுததால், தன்னைத் தடுத்த மகனுடன், குபேரன் போலும் எனக் காண்பவர்கள் கூறும்படி, இல்லத்திற்குள் வந்தான் என் கணவன்.  நான் தான் மகனைத் தூண்டி இச் செயலைச் செய்வித்தேன் என அவன் எண்ணுவான் என்று நாணி, இக்கொடியவன் (என் மகன்) தலைவனின் மண நிகழ்வை இடையூறு செய்து  கலக்கிவிட்டான் போலும் என்று அவனை அடிப்பதற்குக் கோலுடன் அவனை நான் நெருங்க, அவன் மகனை அணைத்துக்கொண்டான்.  அப்பரத்தையரின் இல்லத்தில் இருந்து வந்த ஒலிக்கும் கண்ணுடைய முழவின் இனிய இசை அவனை அழைப்பது போன்று ஒலிக்கவும் அவன் செல்லவில்லை.
முன்னொரு காலம் கழங்காடும் நம் தோழியரிடையே வந்து நமக்கு அவன் செய்த அருள் செயலைக் கெடுக்கும், தான் செய்ய விரும்பிய தன் வதுவையை, அவன் தவிர்த்தான் அல்லவா?

குறிப்பு:  மாநிதிக்கிழவனும் போன்ம் என (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன்னைத் தடுத்த மகனையும் அவனை ஏந்தி வருகின்ற குபேரனையும் ஒக்கும் எனக் கண்டோர் கூறும்படி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தடுத்த மகனோடு இவன் குபேரனும் ஆவான் எனக் கூறி.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  தானே – தான், ஏ அசை நிலைகள், புகுதன்தோன் – ஆ ஓ ஆயிற்று செய்யுள் ஆகலின். போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது. மணன் – மணம் என்றதன் போலி.

சொற்பொருள்:  இம்மை உலகத்து இசையொடும் விளங்கி மறுமை உலகமும் மறு இன்று எய்துப – இவ்வுலகத்தில் புகழுடன் விளங்கி மறு உலக வாழ்க்கையையும் குற்றமின்றி அடைவார்கள், செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோர் என – பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகையுடைய சிறுவர்களைப் பெற்ற தலைமையுடையோர் என்று, பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் – பலர் கூறிய பழைய சொற்கள் எல்லாம், வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி – உண்மை ஆகுதலை கண்டோம் தோழி, நிரை தார் மார்பன் – வரிசையாக மாலைகளை அணிந்தவனாக, நெருநல் ஒருத்தியொடு வதுவை அயர்தல் வேண்டி – நேற்று ஒருத்தியை மணம் புரிய விரும்பி, புதுவதின் இயன்ற அணியன் – புதிதாக செய்த ஒப்பனை உடையவனாக, இத்தெரு இறப்போன் – இத் தெருவைக் கடந்து செல்பவன், மாண் தொழில் மா மணி கறங்கக் கடை கழிந்து – தொழிலில் சிறந்த குதிரையின் மணி ஒலிக்க இல்லத்தின் வாயிலைக் கடந்து, காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும் – தன்னைக் காணும் விருப்பத்துடன் தளர்ந்து தளர்ந்து ஓடி வந்த, பூங்கண் புதல்வனை நோக்கி – பூப்போன்ற கண்களையுடைய தன் புதல்வனைக் கண்டு, நெடுந்தேர் தாங்குமதி வலவ என்று இழிந்தனன் – நீண்ட தேரினை நிறுத்துவாயாகத் தேரோட்டி எனக் கூறி கீழே இறங்கினான், தாங்காது – தாழ்த்தாது, மணி புரை செவ்வாய் மார்பகம் சிவணப் புல்லி – மகனின் பவளம் போன்ற சிவந்த வாய் தனது மார்பில் பொருந்த அணைத்து, பெரும! செல் இனி அகத்து எனக் கொடுப்போற்கு ஒல்லான் – பெரும! நீ இல்லத்திற்குள் செல் என கூறுபவனுக்கு ஒத்துக்கொள்ளாமல், கலுழ்தலின் – அழுததால், தடுத்த மாநிதிக்கிழவனும் போன்ம் என – தடுத்த மகனையும் அவனுடன் வரும் தலைவன் குபேரன் போலும் எனக் கூறும்படி, மகனொடு தானே புகுதந்தோனே – மகனுடன் இல்லத்திற்குள் வந்தான், யான் அது படுத்தனென் ஆகுதல் நாணி – நான் இச் செயலைச் செய்வித்தேன் என அவன் எண்ணுவான் என்று நாணி, இடித்து இவன் கலக்கினன் போலும் இக்கொடியோன் எனச்சென்று அலைக்கும் கோலொடு குறுக – இக்கொடியவன் (என் மகன்) தலைவனின் மண நிகழ்வை இடையூறு செய்து கலக்கிவிட்டான் போலும் என்று அவனை அடிப்பதற்கு கோலுடன் அவனை நான் நெருங்க, தலைக்கொண்டு – மகனை அணைத்துக்கொண்டு, இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப் பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான் – அப்பரத்தையரின் இல்லத்தில் இருந்து வந்த ஒலிக்கும் கண்ணுடைய முழவின் இனிய இசை அழைப்பது போன்று ஒலிக்கவும் செல்லவில்லை அவன், கழங்கு ஆடு ஆயத்து – கழங்கு விளையாடிய தோழியருடன், அன்று – அன்று, நம் அருளிய பழம் கண்ணோட்டமும் நலிய – நமக்கு அருள் செய்த அருள் செயலைக் கெடுக்கும், அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே – விரும்பிய தன் வதுவையை தவிர்த்தான் அல்லவா

அகநானூறு 80, மருங்கூர் கிழார் பெருங்கண்ணணார்நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கொடுந்தாள் முதலையொடு கோட்டு மீன் வழங்கும்
இருங்கழி இட்டுச் சுரம் நீந்தி இரவின்
வந்தோய் மன்ற, தண் கடல் சேர்ப்ப,
நினக்கு எவன் அரியமோ யாமே? எந்தை
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த 5
பல் மீன் உணங்கல் படு புள் ஓப்புதும்,
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண் பன் மலரக் கவட்டு இலை அடும்பின்
செங்கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,
இன மணிப் புரவி நெடுந்தேர் கடைஇ,  10
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்
தண் நறும் பைந்தாது உறைக்கும்
புன்னை அம் கானல், பகல் வந்தீமே.

பாடல் பின்னணி:  இரவுக்குறி வந்த தலைவனிடம் தோழி சொல்லியது.  இரவுக்குறி மறுத்து பகற்குறி வருக என்றது.

பொருளுரை:   நெய்தல் நிலத் தலைவனே! வளைந்த கால்களையுடைய முதலைகளோடு, கொம்பையுடைய மீன்கள் உலவும், பெரிய உப்பங்கழி வழியாகக் குறுகிய அரிய பாதையில் வந்துள்ளாய்!
நீர்முள்ளிச் செடிகள் தழைத்த நீரடைந்த கடற்கரையில், ஒளியுடைய பல மலர்களையுடைய பிளவுபட்ட இலைகளையுடைய அடும்பின் சிவந்த நிறமுடைய மெல்லிய கொடிகளை உன்னுடைய தேரின் உருள் (சக்கரம்) அறுத்துவர, பல மணிகளை அணிந்த குதிரைகளைப் பூட்டிய உயர்ந்த தேரினைச் செலுத்தி, ஒளியுடைய இலைகளுடன் பொலிந்து விளங்கும் பூங்கொத்துக்கள் மலர்ந்த பொன்போலும் குளிர்ச்சியுடைய, நறுமணமான, பசுமையான தாதுக்களைச் சொரியும் புன்னை மரங்களுடைய அழகிய கடற்கரைச் சோலைக்குப் பகலில் வருவாயாக.
அங்கு நாங்கள், எங்கள் தந்தை, பொருந்திய அலைகளையுடைய கடலில் துழாவிக் கொணர்ந்த, பல வகை மீன்களை உலர வைத்து, அவற்றைத் தாக்கும் பறவைகளை விரட்டிக் கொண்டிருப்போம்.  இவ்வாறு எம்மிடம் வருவது கடினம் என்று ஏன் நினைக்கின்றாய்?

குறிப்பு:  பகற்குறி – அகநானூறு 80 – புன்னை அம் கானல் பகல் வந்தீமே, அகநானூறு 218 – தண் பெருஞ்சாரல் பகல் வந்தீமே, நற்றிணை 156 – அதனால் பகல் வந்தீமோ.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  கொடும் தாள் – வளைந்த கால்கள், முதலையொடு – முதலைகளோடு, கோட்டு மீன் வழங்கும் – கொம்பையுடைய மீன் திரியும், சுறா மீன் திரியும், இருங்கழி – பெரிய உப்பங்கழி, கரிய உப்பங்கழி, இட்டுச் சுரம் நீந்தி – குறுகிய அரிய பாதையில், இரவின் வந்தோய் – இரவு வேளையில் வருகின்றாய், மன்ற – ஓர் அசைச் சொல், தண் கடல் சேர்ப்ப – குளிர்ந்த கடலையுடைய நெய்தல் நிலத் தலைவனே, நினக்கு எவன் அரியமோ யாமே – எம்மை அடைவது எவ்வாறு கடினமோ, எந்தை –  எங்கள் தந்தை, புணர் திரைப் பரப்பகம் – அலைகள் பொருந்திய அகன்ற கடல், துழைஇத் தந்த – நுழைந்து வலை முதலியவற்றால் பிடித்துக் கொண்டு தந்த, பல் மீன் உணங்கல் – பல மீன் வற்றல், படு புள் ஓப்புதும் – தாக்கும் பறவைகளை விரட்டிக் கொண்டிருப்போம்  நாங்கள், முண்டகம் கலித்த – நீர்முள்ளிச் செடிகள் நிறைந்த, முதுநீர் அடை கரை – நீர் அடைகின்ற கடற்கரையில், ஒண் பன் மலர – ஒளியுடைய பல மலர்களையுடைய, கவட்டு இலை – பிளவுப்பட்ட இலைகள், அடும்பின் – அடும்பினது, செங்கேழ் – சிவந்த நிறமுடைய, மென்கொடி – மெல்லிய கொடிகள், ஆழி அறுப்ப – தேரின் சக்கரங்கள் அறுக்கும்படி, இன மணி  – பல மணிகள், ஒரே மாதிரியான மணிகள், புரவி – குதிரைகள், நெடுந்தேர் கடைஇ – உயர்ந்த தேரினைச் செலுத்தி, மின் இலைப் பொலிந்த – ஒளியுடைய இலைகளோடு பொலிந்து விளங்கும், விளங்கு இணர் – ஒளியுடைய மலர் கொத்துக்கள், அவிழ் – மலர்ந்த, பொன் தண் நறும் பைந்தாது – பொன்னிறமான நறுமணமுடைய புதிய தாதினை, உறைக்கும் – கொட்டும், புன்னை – புன்னை மரங்கள், அம் கானல் – அழகிய கடற்கரைச் சோலை, பகல் வந்தீமே – பகலில் வருவாயாக

அகநானூறு 83, கல்லாடனார்பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வலஞ்சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்
சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடி
கறை அடி மடப்பிடி கானத்து அலறக்
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர் கலி சிறந்து
கருங்கால் மராஅத்து கொழுங் கொம்பு பிளந்து  5
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்
நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும்  10
சேயர் என்னாது அன்பு மிகக் கடைஇ
எய்த வந்தனவால் தாமே நெய்தல்
கூம்பு விடு நிகர் மலர் அன்ன
ஏந்து எழில் மழைக்கண் எம் காதலி குணனே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  

பொருளுரை:  பாலை நிலத்தில் நறுமணத்தைப் பரப்பும் வலதுபுறமாகச் சுரித்த வெண்கடம்ப மரத்தின் புதிய மலர்களை, உளையைப் போன்றுள்ள தங்களுடைய சுருண்ட தலைமயிரில் விளங்கும்படி அணிந்து, உரலைப் போன்ற அடியுடைய இளைய பெண் யானையானது காட்டில் அலற அதனுடைய ஆண் கன்றைப் பற்றிக் கொண்ட மகிழ்ச்சி உடையவர்களாகச் செருக்கு மிகுந்து, வலிமையான அடிப்பகுதியை உடைய வெண்கடம்ப மரத்தின் பருத்த கிளையைப் பிளந்து, பெரிதாக உரித்த அதன் வெள்ளை நாரால் அதன் காலில் வடு உண்டாகும்படி கட்டி, உயர்ந்த கொடிகள் பறக்கும் கடை வீதியையுடைய பழைய ஊரின் கள் விற்கும் நல்ல இல்லத்தின் வாயிலில் அந்த யானையின் கன்றினைக் கட்டும், தம் தொழிலையன்றிப் பிற கல்லாத இளைஞர்களின் தலைவனான புல்லி என்பவனின் அகன்ற இடத்தையுடைய நல்ல நாட்டின் வேங்கட மலையைக் கடந்து சென்றாலும், அவர் தொலைவில் இருக்கின்றார் என்னாது, மிகுந்த அன்பு செலுத்த, நெய்தலின் அரும்பு அவிழ்ந்த ஒளியுடைய மலர்களைப் போன்ற ஏந்திய அழகான குளிர்ச்சி பொருந்திய கண்களையுடைய என் காதலியின் நல்ல தன்மை நம்மை வந்து அடைந்துள்ளது.

குறிப்பு:  வலஞ்சுரி மராஅம் – அகநானூறு 83 – வலஞ்சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீ, ஐங்குறுநூறு 348 – வலஞ்சுரி மராஅம் வேய்ந்து நம் மணங்கமழ் தண் பொழில், ஐங்குறுநூறு 383 – நெடுங்கால் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி வலஞ்சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற, குறுந்தொகை 22 – சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து வேனில் அம் சினை கமழும்.  உளைத்தலை (2) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – உளை போன்ற மயிரினையுடைய தலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை தலையாட்டம் போன்று அசையும்படி தலை மயிரின் மேல், உளை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலையாட்டம் என்னும்  ஒரு வகைக் குதிரை அணி.  ஒப்புமை:  குறுந்தொகை 281 – சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடி.  ‘உளைத்தலை’ குறுந்தொகை உரைகள் – தமிழண்ணல் உரை – தலை உச்சி, உ. வே. சாமிநாதையர் உரை – மயிரையுடைய தலை.  வரலாறு:  புல்லி, வேங்கடம்.

சொற்பொருள்:   வலஞ்சுரி மராஅத்து – வலதுபுறமாக சுரித்த வெண்கடம்ப மரத்தின், சுரம் – பாலை நிலம், கமழ் புது வீ – நறுமணமுடைய புதிய மலர்கள், சுரி ஆர் – சுருள் கொண்ட, உளைத்தலை பொலியச் சூடி – குதிரை உளையைப் போன்றுள்ள தங்களுடைய சுருண்ட தலைமயிரில் விளங்கும்படி அணிந்து, கறை அடி மடப்பிடி கானத்து அலற – உரலைப் போன்ற அடியுடைய இளைய பெண் யானை காட்டில் அலற, களிற்றுக் கன்று ஒழித்த உவகையர் – ஆண் கன்றைப் பற்றிக் கொண்ட மகிழ்ச்சி உடையவர்கள், கலி சிறந்து – செருக்கு மிகுந்து, கருங்கால் மராஅத்து கொழுங் கொம்பு பிளந்து – வலிமையான அடிப்பகுதியை உடைய கடம்ப மரத்தின் பருத்த கிளையைப் பிளந்து, பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி – பெரிதாக உரித்த வெள்ளை நாரால் வடு உண்டாகும்படி கட்டி, நெடுங்கொடி நுடங்கும் – உயர்ந்த கொடிகள் பறக்கும், நியம மூதூர் – கடை வீதியையுடைய பழைய ஊர், நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும் – கள் விற்கும் நல்ல இல்லத்தின் வாயிலில் கட்டும், கல்லா இளையர் – தம் தொழிலையன்றி பிற கல்லாத இளைஞர்கள், பெருமகன் புல்லி – தலைவனான புல்லி, வியன்தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும் – அகன்ற இடத்தையுடைய நல்ல நாட்டின் வேங்கட மலையைக் கடந்துச் சென்றாலும், சேயர் என்னாது – தொலைவில் இருக்கின்றார் என்னாது, அன்பு மிகக் கடைஇ – மிகுந்த அன்பு செலுத்த, எய்த வந்தனவால் தாமே – அவை வந்தன, நெய்தல் கூம்பு விடு நிகர் மலர் அன்ன – நெய்தலின் அரும்பு அவிழ்ந்த ஒளியுடைய மலர்களைப் போன்ற, ஏந்து எழில் மழைக்கண் – ஏந்திய அழகான குளிர்ந்த கண்கள், எம் காதலி குணனே – என் காதலியின் நல்ல தன்மை

அகநானூறு 86, நல்லாவூர் கிழார்மருதத் திணை – தலைவன் வாயில் மறுத்த தோழியிடம் சொன்னது
உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி,
மனை விளக்குறுத்து மாலை தொடரிக்,
கனை இருள் அகன்ற கவின் பெறு காலைக்,  5
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்,  10
புதல்வற் பயந்த திதலை அவ்வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடிக்,
“கற்பினின் வழாஅ நற் பல உதவிப்,
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக” என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி  15
பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நன் மணம் கழிந்த பின்றைக்,
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து,
“பேர் இற் கிழத்தி ஆக” எனத் தமர் தர,
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,  20
கொடும் புறம் வளஇக் கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்த காலை யாழ, “நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை” என  25
இன்னகை இருக்கை பின் யான் வினவலின்,
செஞ்சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
அகமலி உவகையள் ஆகி முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சியோளே, மாவின்
மடங்கொள் மதைஇய நோக்கின்,  30
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே.

பாடல் பின்னணி:  வாயில் மறுத்த தோழிக்குத் தலைவன் சொல்லியது.

பொருளுரை:   உழுந்தம் பருப்பைக் கூட்டிச் சமைத்த பொங்கலோடு பெரிய சோற்றுத் திரளை உண்ணுதல் ஆரவாரத்துடன் நிகழ, வரிசையாகக் கால்களையுடைய (கம்பங்களுடைய, தூண்களுடைய) பெரிய பந்தலில், கொணர்ந்து இட்ட புதிய மணலைப் பரப்பி, மனையில் விளக்குகளை ஏற்றி வைத்து, மாலைகளைத் தொங்கவிட்டு, தீய கோள்களின் தொடர்பு நீங்கிய, வளைந்த வெண்ணிலாவைக் குற்றமற்ற சிறந்த புகழையுடைய உரோகிணி என்னும் நாள் அடைந்த வேளையில், மிக்க இருள் நீங்கிய அழகான காலை நேரத்தில், தலை உச்சியில் குடத்தை வைத்திருப்பவர்களும், புதிய அகன்ற வாயையுடைய மண்டை என்னும் பானையை உடையவர்களும் ஆகிய திருமணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவாகவும் பின்னே தருவனவாகவும் முறையே தந்திட, புதல்வர்களைப் பெற்ற, தேமலுடைய அழகிய வயிற்றையுடைய, தூய அணிகளை அணிந்த நான்கு பெண்கள் கூடி, ‘கற்பினின்று வழுவாது நல்ல பேறுகளைத் தந்து உன்னை எய்திய கணவனை விரும்பிப் பேணும் பெண்ணாக நீ ஆக’ என்று தண்ணீருடன் கூடிய ஈரமான இதழ்களையுடைய பூக்களை நெல்லுடன் அவளுடைய அடர்ந்த  கருமையான கூந்தலில் தூவி வாழ்த்தினர்.  இவ்வாறு திருமணம் முடிந்த பின்னர், அவளுடைய சுற்றத்தார் ஒலியுடன் விரைந்து வந்து,  ‘பெரிய மனைக் கிழத்தி ஆவாயாக நீ’ என்று அவளை வாழ்த்தி, என்னிடம் அவளைத் தந்தனர்.

நாங்கள் இருவரும் புணர்ச்சிக்குரிய ஓர் அறையில் தனிமையில் இருந்தோம்.  தன் முதுகினை வளைத்து, நாணத்துடன் தன்னுடைய புத்தாடையில் ஒதுங்கினாள் அவள்.  அவளை அணைக்கும் விருப்பத்துடன், நாணத்தினால் அவள் தன் முகத்தினை மறைத்த ஆடையை நான் நீக்க, அவள் அஞ்சி பெருமூச்சு விட்டாள்.  ‘உன் நெஞ்சில் உள்ளதை மறைக்காது என்னிடம் கூறு’ என்றேன் நான்.  இனிய மகிழ்ச்சியுடன், நாங்கள் ஒன்றாக இருந்த அந்த இருக்கையில், மானின் மடப்பத்தையும், பெருமையான பார்வையையும், ஒடுங்கிய குளிர்ந்த கூந்தலையும் உடையவளாக, சிவப்பு மணிகள் பதித்த காதணி தன் அழகிய காதுகளில் அசைய, நெஞ்சில் மிக்க மகிழ்ச்சியுடன், விரைந்து தலைகுனிந்தாள் அந்த மாமை நிறத்துடைய பெண்.

குறிப்பு:   அகநானூறு 136 – அம் கண் இரு விசும்பு விளங்கத் திங்கள் சகடம் (உரோகிணி) மண்டிய துகள் தீர் கூட்டத்து.  பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் (9) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொதுப்பணி செய்வதில் ஆர்வமும் ஆரவாரமும் உடைய முதுமையுடைய மங்கல நாண் உடைய பேரிளம் பெண்டிர்.  கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  ஞெமிர்தல் – ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள (தொல்காப்பியம் உரியியல் 65).  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

சொற்பொருள்:  உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை – உழுந்தம் பருப்பைக் கூட்டிச் சமைத்த செம்மையான குழைதலையுடைய பொங்கலோடு, பெருஞ்சோற்று அமலை நிற்ப – பெரிய சோற்றுத் திரளை உண்ணுதல் ஆரவாரத்துடன் நிகழ, நிரை கால் – வரிசையான கால்கள், தண் பெரும் பந்தர் – குளிர்ந்த பெரிய பந்தல் (பந்தர் – பந்தல் என்பதன் போலி), தரு மணல் – கொணர்ந்து இட்ட மணல், ஞெமிரி – பரப்பி, மனை விளக்கு உறுத்து – மனையில் விளக்குகளை ஏற்றி, மாலை – மலர் மாலைகள், தொடரி – தொங்கவிட்டு, கனை இருள் – மிக்க இருள், அகன்ற – நீங்கிய, கவின் பெறு காலை – அழகிய விடியற்காலை, கோள் கால் நீங்கிய – தீய கோள்களின் தொடர்பு நீங்கிய, கொடு வெண் திங்கள் – வளைந்த வெண்ணிலா, கேடு இல் – குற்றமற்ற, விழுப்புகழ் – சிறந்த புகழ், நாள் தலை வந்தென – உரோகிணி என்னும் நாள் அடைந்த வேளையில், உச்சி குடத்தர் – தலை உச்சியில் குடத்தை வைத்திருப்பவர்கள், புத்தகன் மண்டையர் – புதிய அகன்ற பானைகளைத் தூக்கி வைத்திருப்பவர்கள், பொது செய் கம்பலை – மணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரம், முது செம் பெண்டிர் – வயதான மங்கல மகளிர், முன்னவும் பின்னவும் – முன்னும் பின்னும், முறை முறை – முறையாக, தரத்தர – தந்திட, புதல்வற் பயந்த – புதல்வர்களைப் பெற்ற, திதலை – தேமல், அவ் வயிற்று – அழகிய வயிற்றையுடைய, வால் இழை மகளிர் – தூய அணிகளையுடைய மகளிர், நால்வர் கூடி – நான்கு பேர் கூடி, கற்பினின் வழாஅ – கற்பினின்று வழுவாது (வழாஅ – அளபெடை), நற்பல உதவி – நல்ல பேறுகளைத் தந்து, பெற்றோர் – உன்னை அடைந்தவன், பெட்கும் பிணையை ஆக – விரும்பிப் பேணும் பெண்ணாக நீ ஆக, என – என்று, நீரொடு – தண்ணீருடன், சொரிந்த – ஊற்றிய, ஈர் இதழ் அலரி – ஈரமான இதழ்களையுடையப் பூக்கள், பல் இருங்கதுப்பின் – அடர்ந்த கருமையான கூந்தலில், நெல்லொடு – நெல்லுடன், தயங்க – விளங்க,  வதுவை – மணம்,  நன்மணம் – நல்ல மணம், கழிந்த பின்றை – முடிந்த பின்பு, கல்லென் – ஆரவாரத்துடன் (ஒலிக்குறிப்பு மொழி), சும்மையர் – ஒலியினர், ஞெரேரெனப் புகுதந்து – விரைந்து வந்து, பேர் இல் கிழத்தி ஆக – பெரிய மனைக் கிழத்தி ஆவாயாக, என – என்று, தமர் தர – அவள் குடும்பத்தினர் அவளை எனக்குத் தர, ஓர் இல் – ஓர் அறை, கூடிய உடன் புணர் கங்குல் –  உடன்கூடிய புணர்ச்சிக்குரிய இரவு, கொடும் புறம் வளஇ – முதுகினை வளைத்து, கோடிக் கலிங்கத்து – புத்தாடையில், ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் – ஒரு புறம் ஒதுங்கினாள், தழீஇ – தழுவி (தழீஇ – அளபெடை),, முயங்கல் விருப்பொடு – அணைக்கும் விருப்பத்துடன், முகம் புதை – மறைத்த முகம், திறப்ப – திறக்க, அஞ்சினள் – அஞ்சினாள், உயிர்த்த காலை – பெருமூச்சு விட்டப் பொழுது, யாழ – ஓர் அசைச் சொல், நின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை – உன் நெஞ்சில் உள்ளதை மறைக்காது கூறு, என – என்று, இன்நகை – இனிய மகிழ்ச்சி, இருக்கை – இடம், பின்யான் வினவலின் – நான் கேட்டதால், செஞ்சூட்டு – சிவந்த மணிகள் பதித்த, ஒண் குழை – விளங்கும் காதணிகள், வண் காது – அழகிய காது, துயல்வர – அசைய, அகமலி உவகையள் ஆகி – உள்ளத்தில் மிக மகிழ்ச்சியுடையவள் ஆக ஆகி, முகன் இகுத்து – முகத்தைத் தாழ்த்தி (முகன் – முகம் என்பதன் போலி), ஒய்யென இறைஞ்சியோளே – விரைந்துத் தலைகுனிந்தாள் (ஒய்யென – விரைவுக்குறிப்பு, இறைஞ்சியோளே – ஏகாரம் அசைநிலை), மாவின் – மானின், மடம் கொள் – மடத்தினைக் கொண்டதும், மதைஇய நோக்கின் – செருக்கான பார்வையும், ஒடுங்கு – ஒடுங்கிய, ஈர் ஓதி – ஈரமான கூந்தல்,  மாஅயோளே – மாமை நிறைத்தையுடையவள், கருமையான பெண் (அளபெடை, ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 105, தாயங்கண்ணனார்பாலைத் திணை – உடன்போக்கில் தலைவியும் தலைவனும் சென்ற பொழுது தலைவியின் தாய் சொன்னது
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென
நல் வரை நாடன் தற்பாராட்ட,
யாங்கு வல்லுநள் கொல் தானே, தேம் பெய்து
மணி செய் மண்டைத் தீம்பால் ஏந்தி  5
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்,
நிழல் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின்
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம் மருண்டு,
பந்து புடைப்பன்ன பாணிப் பல்லடிச்
சில் பரிக் குதிரை பல் வேல் எழினி  10
கெடல் அருந் துப்பின் விடு தொழில் முடிமார்
கனை எரி நடந்த கல் காய் கானத்து
வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர்
தேம் பிழி நறுங்கள் மகிழின் முனை கடந்து,
வீங்கு மென் சுரைய ஏற்று இனம் தரூஉம்  15
முகை தலை திறந்த வேனில்
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே?

பாடல் பின்னணி:  மகட் போக்கிய நற்றாய் சொல்லியது.

பொருளுரை:  அகன்ற பாறையிடத்து மலர்ந்த வேங்கை மலர்களோடு ஒளியுடைய இலைகளைத் தொடுத்த மாலையை அணிந்த அவளைப் பாராட்டிய நல்ல மலை நாடனான தலைவனுடன் சென்று விட்டாள் என் மகள்.  மணிகள் இழைத்த பொற்கலத்தில் உள்ள இனிய பாலில் தேனை ஊற்றி, கையில் ஏந்தி, அவளுடைய செவிலித் தாய்மார் ஊட்டினாலும் குடிக்க மாட்டாள்.  நிழலுடைய குளத்தைப் போன்ற எங்கள் இல்லத்தில் உள்ள மிகுந்த செல்வத்தையும் அவள் எண்ணவில்லை.  அவளுடைய காதலனின் பொய்யை மெய் என்று நம்பி விட்டாள்.

பந்துப் புடைக்கப்பட்டு எழுவதை ஓத்த தாளத்தினை உடைய பல அடிகளையும் சில ஓட்டங்களையும் உடைய குதிரைகளையும், பல வேற்படைகளையும் உடைய எழினி என்ற குறுநில மன்னனுடைய, கெடுதல் இல்லாத வலிமை பொருந்திய, ஏவி விட்ட தொழிலை முடிக்கும் பொருட்டு மிகுந்த தீப் படர்ந்ததால் காய்ந்திருக்கும் பாறையுடைய காட்டில், போர்த் திறமையினால் அம்பைக் குறி தவறாது செலுத்தும் மறவர்கள், பிழிந்த தேனால் செய்த கள்ளினை உண்ட மகிழ்ச்சியால், போர் முனையை வென்று, பருத்த மெல்லிய மடியை உடைய பசுக்களோடும் ஏறுகளோடும் உடைய ஆநிரைகளைக் கொணர்ந்து தரும், மலைக் குகைகள் வெடித்த வேனில் காலத்தில் பகைவர்களுடன் போரிடுதலை உடைய, பல பாதைகளில் செல்வதற்கு எவ்வாறு வல்லமை உடையவள் ஆயினாள் என் மகள்?

குறிப்பு:  பகைதலை மணந்த (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பகைவரொடு கூடிய, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பகைவருடன் பொருதல் கூடிய.  ஈனாத் தாயர் – வெளிப்படை, தலைவியைப் பெறாத தாய்மார்கள் ஆகிய செவிலித் தாய்மார்கள்.  வரலாறு:  எழினி.

சொற்பொருள்:  அகல் அறை – அகன்ற பாறை,  மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை – அரும்பு முதிர்ந்த வேங்கை மலரோடு, ஒள் இலைத் தொடலை தைஇ – ஒளியுடைய இலைகளையுடைய மாலையை தொடுத்து, மெல்லென – மெல்ல மெல்ல,  நல் வரை நாடன் – நல்ல மலை நாடனான தலைவன், தற்பாராட்ட – தன்னைப் பாராட்ட, யாங்கு வல்லுநள் கொல் – எவ்வாறு வல்லமை உடையவள் ஆயினாள், தானே – தானே, தேம் பெய்து மணி செய் மண்டைத் தீம்பால்  – இனிய பாலில் தேனை ஊற்றி மணிகள் இழைத்த பொற்கலத்தில் கலந்து, ஏந்தி – கையில் ஏந்தி, ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள் –  அவளை ஈனாத செவிலித் தாய்மார் ஊட்டவும் குடிக்க மாட்டாள்,  நிழல் கயத்தன்ன- நிழலுடைய குளத்தைப்போல், நீள் நகர் வரைப்பின் எம்முடைச் செல்வமும் உள்ளாள் – எங்கள் இல்லத்தில் உள்ள மிகுந்த செல்வத்தையும் அவள் எண்ணவில்லை, பொய்ம் மருண்டு – பொய்யை மெய் என்று மயங்கி, பந்து புடைப்பன்ன பாணிப் பல்லடிச் சில் பரிக் குதிரை –  பந்து புடைக்கப்பட்டு எழுவதை ஓத்த தாளத்தினை உடைய பல அடிகளையும் சில ஓட்டங்களையுடைய குதிரைகள், பல் வேல் எழினி – பல வேற்படைகளை உடைய,  எழினி – எழினி என்ற குறுநில மன்னன், கெடல் அருந்துப்பின் – கெடுதல் இல்லாத வலிமைப் பொருந்திய, விடு தொழில் முடிமார் – ஏவி விட்ட தொழிலை முடிக்கும் பொருட்டு, கனை எரி நடந்த கல் காய் கானத்து – மிகுந்த எரி படர்ந்ததால் காய்ந்திருக்கும் பாறையுடைய காட்டில், வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர் – போர்த் திறமையினால் அம்பைக் குறி தவறாது செலுத்தும் மறவர்கள்,  தேம் பிழி நறுங்கள் மகிழின் – பிழிந்த தேனால் செய்த கள்ளினை உண்ட மகிழ்ச்சியால், முனை கடந்து – போர் முனையை வென்று,  வீங்கு மென் சுரைய ஏற்று இனம் தரூஉம் –  பருத்த மெல்லிய மடியை உடைய பசுக்களோடும் ஏறுகளோடும் உடைய ஆநிரைகளைக் கொணர்ந்து தரும்,  முகை தலை திறந்த – மலைக் குகைகள் வெடித்த,  வேனில் – வேனில் காலத்தில், பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே – பகைவர்களுடன் போரிடுதலை உடைய பல பாதைகளில் செல்லுதல்

அகநானூறு 114, பாடியவர் பெயர் கிடைக்கவில்லைமுல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
கேளாய் எல்ல தோழி வேலன்
வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்
உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு
அரவு நுங்கு மதியின் ஐயென மறையும்  5
சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என
நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க
நூல் அறி வலவ கடவுமதி உவக்காண்
நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர்  10
வானக மீனின் விளங்கித் தோன்றும்
அருங்கடிக் காப்பின் அஞ்சுவரு மூதூர்த்
திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின்
அரி மதர் மழைக் கண் அமை புரை பணைத்தோள்
அணங்கு சால் அரிவையைக் காண்குவம்  15
பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

குறிப்பு:  உவக்காண் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டுத் தலைவன் செல்லவேண்டிய வழியைச் சுட்டிக் காட்டியதாம்.  அரவு நுங்கு மதி: குறுந்தொகை 395 – அரவு நுங்கு மதியினுக்கு, அகநானூறு 114 – அரவு நுங்கு மதியின், அகநானூறு 313 – அரவு நுங்கு மதியின், நற்றிணை 377 – அரவுக் குறைபடுத்த பசுங்கதிர் மதியத்து, புறநானூறு 260 – பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின், கலித்தொகை 15 – பாம்பு சேர் மதி போல, கலித்தொகை 104 – பால் மதி சேர்ந்த அரவினை, பரிபாடல் 10-76 – அரவு செறி உவவு மதியென, பரிபாடல் 11 – பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில், சிறுபாணாற்றுப்படை 185 – மதி சேர் அரவின்.  பொலம் படை மா:  அகநானூறு 114 – பொலம்படைக் கலி மா, அகநானூறு 124 – பொன் இயல் புனை படைக் கொய் சுவல் புரவி, நற்றிணை 78 – பொலம் படைக் கலி மா, நற்றிணை 361 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 116 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 135 – ஒளிறு படைப் புரவிய தேரும், புறநானூறு 359 – பொலம் படைய மா, மலைபடுகடாம் 574 – பொலம் படைப் பொலிந்த கொய் சுவற் புரவி.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார்வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேல் என்றார்.

பொருளுரை:  நூல்கள் கற்ற தேரோட்டியே, பொன் சேணத்தினை அணிந்த செருக்கான குதிரைகள் பூண்ட தேரினை விரைந்து செலுத்துவாயாக ஆங்கு!

என்னுடைய காதலி தன் தோழியை நோக்கி இவ்வாறு கூறுவாள், “கேட்பாயாக, ஏடி தோழி, வேலன் வெறியாடும் களத்தில் பரவிய பல கலந்த மலர்களைப் போல, பூக்கள் உதிர்ந்த நறுமணமான முல்லை நிலத்தில், வலிய கதிர்களின் வெப்பம் தணிந்த மேற்கு மலையை அடைந்த கதிரவன் பாம்பு விழுங்கிய நிலவைப் போன்று மெல்ல மறைகின்ற சிறிய புல்லிய மாலைக் காலத்திலும் நம்மை அவர் நினைக்கவில்லை”.

என்னை வெறுத்து வாழும் அவளுடைய துன்பம் நீங்க, நெடிய கொடி வானைத் தோயும் மதிலில் இரவு நேரத்தில் காவல் புரிபவர்கள் ஏற்றிய விளக்குகளின் ஒளியுடைய சுடர்கள் வானின் விண்மீன்களைப் போல் ஒளியுடன் தோன்றும், அணுகுதற்கரிய, காவலுடன் பகைவர்க்கு அச்சம் தரும் அழகிய ஊரில் உள்ள, குற்றமற்ற கற்பினையுடைய, செவ்வரி படர்ந்த செருக்குடைய ஈரக் கண்களையும் மூங்கிலைப் போன்ற தோள்களையும் கொண்ட, துன்பத்தை உடைய அந்த இளம் பெண்ணை நாம் காணுவோம்.

சொற்பொருள்:  கேளாய் – கேட்பாயாக, எல்ல தோழி – ஏடி தோழி, வேலன் வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய விரவு வீ – வேலன் வெறியாடும் களத்தில் பரவிய பல கலந்த மலர்களைப் போல, உறைத்த ஈர் நறும் புறவின் – பூக்கள் உதிர்ந்த நறுமணமான முல்லை நிலத்தில், உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு – வலிய கதிர்களின் வெப்பம் தணிந்த மேற்கு மலையை அடைந்த கதிரவன், அரவு நுங்கு மதியின் – பாம்பு விழுங்கிய நிலவைப் போன்று, ஐயென மறையும் – மெல்ல மறைகின்ற, சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என – சிறிய புல்லிய மாலைக் காலத்திலும் நம்மை அவர் நினைக்கவில்லை என்று, நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க – என்னை வெறுத்து வாழும் துன்பம் நீங்க, நூல் அறி வலவ – நூல்கள் கற்ற தேரோட்டியே, கடவுமதி – விரைந்து செலுத்துவாயாக, அங்குக் காண் – ஆங்கு, நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை – நெடிய கொடி வானைத் தோயும் மதில், யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் – இரவு நேரத்தில் காவல் புரிபவர்கள் ஏற்றிய விளக்குகளின் ஒளியுடைய சுடர்கள், வானக மீனின் விளங்கித் தோன்றும் – வானின் விண்மீன்களைப் போல் ஒளியுடன் தோன்றும், அருங்கடிக் காப்பின் – அணுகுதற்கரிய காவலுடன், அஞ்சுவரு மூதூர்த் திரு நகர் அடங்கிய – பகைவர்க்கு அச்சம் தரும் அழகிய ஊரில் உள்ள, மாசு இல் கற்பின் – குற்றமற்ற கற்பினையுடைய, அரி மதர் மழைக் கண் – செவ்வரி படர்ந்த செருக்குடைய ஈரக் கண்கள், அமை புரை பணைத்தோள் – மூங்கிலைப் போன்ற தோள்கள், அணங்கு சால் அரிவையைக் காண்குவம் – துன்பத்தை உடைய இளம் பெண்ணை நாம் காணுவோம், கடவுள் போன்ற இளம் பெண்ணை நாம் காணுவோம், பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே பொன் சேணத்தினை அணிந்த செருக்கான குதிரைகள் பூண்ட தேர்

அகநானூறு 118, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்,
தேம் கமழ் இணர வேங்கை சூடித்,
தொண்டகப் பறைச் சீர்ப் பெண்டிரொடு விரைஇ,
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட  5
பகல் வரின் கவ்வை அஞ்சுதும், இகல் கொள,
இரும் பிடி கன்றொடு விரைஇய கயவாய்ப்
பெருங்கை யானைக் கோள் பிழைத்து இரீஇய
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்,  10
என் ஆகுவள் கொல் தானே? பல் நாள்
புணர் குறி செய்த புலர் குரல் ஏனல்
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்,
அளியள் தான் நின் அளி அலது இலளே.

பாடல் பின்னணி:  வரையாது களவிலேயே வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி பகற்குறியையும் இரவுக்குறியையும் மறுத்து, வரைவு கடாயது.

குறிப்பு:   அகநானூறு 118 – குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள், அகநானூறு 194 – கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும், குறுந்தொகை 142 – புனக் கிளி கடியும் பூங்கண் பேதை, குறுந்தொகை 198 – படுகிளி கடிகம் சேறும், குறுந்தொகை 217 – தினை கிளி கடிக எனின், குறுந்தொகை 291 – ஏனல் படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே இசையின் இசையா இன்பாணித்தே, குறுந்தொகை 360 –  ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே, பதிற்றுப்பத்து 78 – மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலிக் கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ முருகனைப் போலவே அழகுடைய; கானவர் குரவைக் கூத்தாடும்பொழுது வருவதனால் நின்னை எம்மவர் முருகன் நமக்கிரங்கி எழுந்தருளுகின்றான் என்று எண்ணி மகிழ்வாரல்லர்.  ஏற்றாலெனின் உனக்கு அறுமுகமில்லை, அணிமயிலில்லை, நின்னை வயநாய்கள் மட்டுமே தொடர்கின்றன.  ஆதலால் காண் என்றவாறு.  எனவே உன்னை இக்குறிஞ்சித் தலைவன் என்றுக் கொண்டு இவ்வூர் பெண்டிர் பழிதூற்றுவர்.  யாம் அதற்கு அஞ்சுகின்றோம். ஆதலின் நீ இவ்வாறு பகலில் வாராதே கொள்.

பொருளுரை:  தலைவா! ஆரவாரமுடைய வெள்ளை அருவியையுடைய ஒளியுடைய மலைச் சரிவில், தேன் மணம் கமழும் பூங்கொத்தாக மலர்ந்த வேங்கையின் மலர்களைச் சூடி, தொண்டகப் பறையின் தாளத்திற்கு ஆண்கள் மகளிருடன் கலந்து தெருவில் குரவைக் கூத்து ஆடுகின்ற எங்கள் சிறுகுடியின்கண், முருகனை ஒத்த அழகுடையாய், வலிய வேட்டை நாய்களுடன் நீ பகலில் வந்தால் அலர் ஏற்படும் என நாங்கள் அஞ்சுகின்றோம். பகைமை கொள்வதற்கு அஞ்சி, கரிய பெண் யானையோடும் கன்றினோடும் கூடிய பெரிய வாயையும் பெரிய தும்பிக்கையையுமுடைய களிற்று யானை, கொல்லப்படுவதிலிருந்து தப்பித்து விலகிய, கொல்லும் புலிகள் திரியும் வழியில், நிறைந்த இருளில் நீ நடு இரவில் தனியாக வருதலை, அதனைக் காட்டிலும் அஞ்சுகின்றோம். தினை முதிர்ந்து கதிரும் கொய்யப்பட்டன.  பல நாட்கள் நீ அவளைக் கூடுவதற்குக் குறியிடமாக எம்மால் காட்டப்பட்ட தினைப் புனத்திற்கு வந்து பாடி கிளியை விரட்ட முடியாதவாறு அவள் இற்செறிக்கப்பட்டாள். அவளுடைய நிலைமை என்னாகுமோ?  இரங்கத்தக்கவள் அவள்.  உன்னுடைய அருள் இல்லாமல் வேறு துணை அவளுக்கு இல்லை.

சொற்பொருள்:  கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன் – ஆரவாரமுடைய வெள்ளை அருவியையுடைய ஒளியுடைய மலைச் சரிவில், தேம் கமழ் இணர வேங்கை சூடி – தேன் மணம் கமழும் பூங்கொத்தாக மலர்ந்த வேங்கையின் மலர்களைச் சூடி, தொண்டகப் பறைச் சீர் – தொண்டகப் பறையின் தாளம், பெண்டிரொடு விரைஇ – ஆண்கள் மகளிருடன் கலந்து, மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து – தெருவில் குரவைக் கூத்து ஆடுகின்ற சிறுகுடியில், இயல் முருகு ஒப்பினை – முருகனை ஒத்த அழகுடையாய், வய நாய் பிற்பட பகல் வரின் கவ்வை அஞ்சுதும் – வலிய வேட்டை நாய்களுடன் நீ பகலில் வந்தால் அலர் ஏற்படும் என நாங்கள் அஞ்சுகின்றோம், இகல் கொள – பகைமை கொள்வதற்கு அஞ்சி, இரும் பிடி கன்றொடு விரைஇய கயவாய்ப் பெருங்கை யானை – கரிய பெண் யானையோடும் கன்றினோடும் கூடிய பெரிய வாயையும் பெரிய தும்பிக்கையையுமுடைய களிற்று யானை, கோள் பிழைத்து இரீஇய – கொல்லப்படுவதிலிருந்து தப்பித்து விலகிய, அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள் தனியை வருதல் – கொல்லும் புலி திரியும் வழியில் நிறைந்த இருளில் நீ நடு இரவில் தனியாக வருதல், அதனினும் அஞ்சுதும் – அதனைக் காட்டிலும் அஞ்சுகின்றோம், என் ஆகுவள் கொல் தானே – அவளுடைய நிலைமை என்னாகுமோ, பல் நாள் புணர் குறி செய்த புலர் குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள் – பல நாட்கள் நீ அவளைக் கூடுவதற்குக் குறியிடமாக எம்மால் காட்டப்பட்ட தினைப் புனத்திற்கு வந்து பாடி கிளியை விரட்ட முடியாதவாறு இற்செறிக்கப்பட்டாள், அளியள் தான் – இரங்கத்தக்கவள் அவள், நின் அளி அலது இலளே – உன்னுடைய அருள் இல்லாமல் வேறு துணை அவளுக்கு இல்லை

அகநானூறு 122, பரணர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னதுதலைவன் கேட்கும்படியாக
இரும்பிழி மாரி அழுங்கல் மூதூர்
விழவு இன்றாயினும் துஞ்சாது ஆகும்,
மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின்,
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்,
பிணி கோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்,  5
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்,
இலங்கு வேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்,
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின்,
பகலுரு உறழ நிலவுக் கான்று விசும்பின்  10
அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே,
திங்கள் கல் சேர்வு கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி வல்வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்,
வளைக் கண் சேவல் வாளாது மடியின்,  15
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்,
எல்லாம் மடிந்த காலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே, அதனால்
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து
ஆதி போகிய பாய் பரி நன் மா  20
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டன்ன,
பல் முட்டின்றால் தோழி, நம் களவே.

பாடல் பின்னணி:  தலைவன் கேட்கும்படி தன்னுடைய இடையூறுகளை தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

குறிப்பு:  நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே (18) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ‘நிலைபெறாத நெஞ்சத்தினையுடைய நம் தலைவர் வருதிலர்’, பொ. வே. சோமசுந்தரானார் உரை – ‘நில்லாத நமது நெஞ்சத்தின்கண் உறைபவராகிய நம்பெருமான் ஈண்டு வாராதொழிவர்’.  வரலாறு:  தித்தன், உறந்தை.  குறிஞ்சிப்பாட்டு 237-243 – அதற்கொண்டு, அன்றை அன்ன விருப்பொடு என்றும் இரவரல் மாலையனே வருதோறும் காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும், நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும், வேய் புரை மென் தோள் இன்துயில் பெறாஅன் பெயரினும், முனியல் உறாஅன்.  மனைச் செறி கோழி (16) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மனையிற் தங்கிய கோழிச் சேவல் மாண்புற்ற குரலை எழுப்பிக் கூவும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – இல்லத்தில் நம்மால் வளர்க்கப்பட்டு உறைகின்ற கோழிச் சேவல் தமது மாட்சிமையுடைய பெருங்குரலெடுத்துக் கூவா நிற்கும்.  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).

குறிப்பு:  நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே (18) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ‘நிலைபெறாத நெஞ்சத்தினையுடைய நம் தலைவர் வருதிலர்’, பொ. வே. சோமசுந்தரானார் உரை – ‘நில்லாத நமது நெஞ்சத்தின்கண் உறைபவராகிய நம்பெருமான் ஈண்டு வாராதொழிவர்’.  வரலாறு:  தித்தன், உறந்தை.  குறிஞ்சிப்பாட்டு 237-243 – அதற்கொண்டு, அன்றை அன்ன விருப்பொடு என்றும் இரவரல் மாலையனே வருதோறும் காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும், நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும், வேய் புரை மென் தோள் இன்துயில் பெறாஅன் பெயரினும், முனியல் உறாஅன்.  மனைச் செறி கோழி (16) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மனையிற் தங்கிய கோழிச் சேவல் மாண்புற்ற குரலை எழுப்பிக் கூவும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – இல்லத்தில் நம்மால் வளர்க்கப்பட்டு உறைகின்ற கோழிச் சேவல் தமது மாட்சிமையுடைய பெருங்குரலெடுத்துக் கூவா நிற்கும்.  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).

பொருளுரை:    மழையைப் போன்று மிக்க கள்ளுடைய ஆரவாரத்தையுடைய பழைய ஊரானது, திருவிழா இல்லாவிட்டாலும் உறங்காது.  அங்குள்ள வளமான கடைவீதியும் வேறு தெருக்களும் அடங்கினாலும், வலிய ஒலியுடன் கூடிய கடிய சொற்களைக் கூறும் அன்னை உறங்க மாட்டாள்.  என்னை இறுக்கமாகப் பிடித்துக் காவல் காக்கும் அன்னை தூங்கினாலும், காவலாளிகள் உறங்காது சுற்றி வருவார்கள்.  ஒளியுடைய வேலையுடைய இளைய காவலாளிகள் தூங்கினாலும், வலது பக்கமாகச் சுருண்ட வாலையுடைய நாய்கள் குரைக்கும்.  ஒலிமிக்க நாய்கள் குரைக்காமல் தூங்கினாலும், பகலின் ஒளியினை ஒத்த நிலவினைத் தந்து வானத்தில் அகன்ற நிலா நின்று ஒளி வீசும்.  நிலா மலையை அடைந்து மிக்க இருள் தங்கினால், வீட்டில் உள்ள எலியைத் தின்னும் வலுவான வாயை உடைய ஆந்தையானது, பேய்கள் திரியும் இரவு நேரத்தில், அழிவு உண்டாகும்படிக் கூவும்.  பொந்தில் வாழும் அந்த ஆந்தைத் தூங்கினால், வீட்டில் உள்ள சேவல் மிகுதியான ஒலியை எழுப்பும்.  இவை எல்லாம் மடிந்த பொழுது, நிலைபெறாத நெஞ்சத்தையுடைய அவர் வரவில்லை.
அதனால், பரலையுடைய சலங்கைகள் ஒலிக்க, ஓட்டத்தில் சிறந்து, ஆதி என்னும் ஓட்டத்தில் தேர்ச்சிப் பெற்ற, பாய்ந்து ஓடும் நல்ல குதிரைகளையுடைய, மதிலாகிய வேலியையுடைய தித்தனின் உறந்தையின் பாறைகள் நிறைந்த காவற்காடு போன்ற பல தடங்கல்களை உடையது என்னுடைய களவு ஒழுக்கம்.

சொற்பொருள்:  இரும்பிழி – நிறைய கள், மாரி – மழை, அழுங்கல் மூதூர் – ஆரவாரத்தையுடைய பழைய ஊர், விழவு இன்றாயினும் துஞ்சாது ஆகும் – திருவிழா இல்லாவிட்டாலும் தூங்காது, மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின் – வளமான கடைவீதியும் வேறு தெருக்களும் அடங்கினாலும், வல் உரைக் கடும் சொல் அன்னை துஞ்சாள் – வலிய ஒலியுடன் கூடிய கடியச் சொற்களைக் கூறும் அன்னை உறங்க மாட்டாள், பிணி கோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின் – இறுக்கமாகப் பிடித்துக் காவல் காக்கும் அன்னை தூங்கினாலும், துஞ்சாக் கண்ணர் காவலர் – காவலாளிகள் உறங்க மாட்டார்கள், கடுகுவர் – சுற்றி வருவார்கள், இலங்கு வேல் இளையர் துஞ்சின் – ஒளியுடைய வேலையுடைய இளைய காவலாளிகள் தூங்கினால், வை எயிற்று – கூர்மையான பற்களையுடைய, வலம் சுரித் தோகை – வலப்புறமாகச் சுருண்ட வால், ஞாளி – நாய்கள், மகிழும் – குரைக்கும், அரவ வாய் ஞமலி மகிழாது மடியின் – ஒலிமிக்க நாய்கள் குரைக்காது தூங்கினாலும், பகலுரு உறழ நிலவுக் கான்று – பகலின் ஒளியினை ஒத்த நிலவினைத் தந்து, விசும்பின் அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே – வானத்தில் அகன்ற நிலா நின்று ஒளி வீசும், திங்கள் கல் சேர்வு கனை இருள் மடியின் – நிலா மலையை அடைந்து மிக்க இருள் தங்கினால், இல் எலி வல்சி வல்வாய்க் கூகை – வீட்டில் உள்ள எலியைத் தின்னும் வலுவான வாயை உடைய ஆந்தை (வல்சி – உணவு), கழுது வழங்கு யாமத்து – பேய்கள் திரியும் இரவு நேரத்தில், அழிதகக் குழறும் – அழிவு உண்டாகும்படிக் கூவும், வளைக் கண் சேவல் வாளாது மடியின் – பொந்தில் வாழும் அந்த ஆந்தை கூவாமல் தூங்கினால், மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும் – வீட்டில் உள்ள சேவல் மிகுதியான ஒலியை எழுப்பும், எல்லாம் மடிந்த காலை – இவை எல்லாம் மடிந்த பொழுது, ஒரு நாள் – ஒரு நாள், நில்லா நெஞ்சத்து – நிலைபெறாத நெஞ்சத்தையுடைய, அவர் வாரலரே – அவர் வரவில்லை, அதனால் – அதனால், அரி பெய் புட்டில் – பரலையுடைய சலங்கைகள், ஆர்ப்ப – ஒலிக்க, பரி சிறந்து – ஓட்டத்தில் சிறந்து, ஆதி போகிய – ஆதி என்னும் ஓட்டத்தில் தேர்ச்சி பெற்ற, பாய் பரி நன் மா – பாய்ந்து ஓடும் நல்ல குதிரைகள், நொச்சி வேலித் தித்தன் உறந்தை – மதிலாகிய வேலியையுடைய தித்தனின் உறந்தை, கல் முதிர் புறங்காட்டன்ன – கல் நிறைந்த காவற்காடு போன்ற, பல் முட்டின்றால் – பல முட்டுக்களை உடையது (முட்டின்று + ஆல் , ஆல் அசைநிலை), தோழி – என் தோழியே, நம் களவே – என்னுடைய களவு

அகநானூறு 128, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே,
கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொளவரின் கனைஇக், காமம்
கடலினும் உரைஇக் கரை பொழியும்மே,
எவன் கொல், வாழி தோழி, மயங்கி  5
இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு,
இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ்சிலம்பில்
குறுஞ்சுனைக் குவளை வண்டு படச் சூடிக்,
கான நாடன் வரூஉம் யானைக்  10
கயிற்றுப் புறத்தன்ன, கல் மிசைச் சிறு நெறி,
மாரி வானந்தலைஇ நீர் வார்பு,
இட்டு அருங்கண்ண படுகுழி இயவின்,
இருள் இடை மிதிப்புழி நோக்கி அவர்
தளர் அடி தாங்கிய சென்றது இன்றே?  15

பாடல் பின்னணி:  இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, தலைவி தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

பொருளுரை:   ஊரின் பொது இடங்களில் ஒலி அடங்கிவிட்டது. இல்லங்களில் மக்கள் உறங்கிவிட்டனர். கொன்றாற்போன்ற கொடுமையுடன் இன்று நடுயாமம் கொள்ள வந்தால், மிகுந்த காதல் கடலைக்காட்டிலும் பெரிதும் ஆரவாரித்து, கரை கடந்து செல்லும். இது எதனால்? தோழி நீ நீடு வாழ்க!

நாம் இவ்வாறு கலங்கி இருக்கவும், என் நல்ல நெஞ்சம், உன்னோடும் என்னோடும் இருந்து ஆராய்ந்து நமக்குத் துணையாக இல்லாமல், கை கடந்து, சிறுகாட்டில் இருண்ட சிறிய கடத்தற்கரிய மலையில் சிறு சுனையில் உள்ள குவளை மலரை வண்டுபட அணிந்து, காட்டு நாடனான நம் தலைவன் வரும் யானையின் முதுகில் உள்ள கயிற்றின் தழும்பை ஒத்த, மலையில் உள்ள சிறு வழியில், மழை பொழிந்து நீர் ஓடியதால் செல்லுதற்கு அரிய சிறு இடங்களில், தாமே உண்டான குழிகள் உள்ள வழியில், இருளில், மிதிக்கும் இடத்தைப் பார்த்து நடக்கும் , அவரது தளர்ந்த அடியைத் தாங்க, சென்றது இன்று.

குறிப்பு:   உரைஇ (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆரவாரித்து, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பரவி.  ஒப்புமை:  அகநானூறு 65 – உயவல் யானை வெரிநுச் சென்றன்ன கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி.

சொற்பொருள்:   மன்று பாடு அவிந்து – ஊரின் பொது இடங்களில் ஒலி அடங்கியது (மன்றம் ஆகுபெயர் அங்கிருந்த மக்களுக்கு), மனை மடிந்தன்றே – இல்லங்களில் மக்கள் உறங்கிவிட்டனர் (மனை ஆகுபெயர் மக்களுக்கு), கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றே யாமம் – கொன்றாற்போன்ற கொடுமையுடன் இன்று நடுயாமம் (இன்றே – ஏகாரம் அசை நிலை, an expletive), கொள வரின் – கொள்ள வந்தால், கனைஇக் காமம் – மிகுந்த காதல் (கனைஇ – அளபெடை), கடலினும் உரைஇ – கடலைக்காட்டிலும் பெரிதும் ஆரவாரித்து (உரைஇ – அளபெடை), கரை பொழியும்மே – எல்லையையும் கடந்து போகும், கரை கடந்து செல்லும், (பொழியும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), எவன் கொல் – இது எதனால் (கொல் – அசைநிலை, an expletive), வாழி தோழி – தோழி நீ நீடு வாழ்க, மயங்கி இன்னம் ஆகவும் – நாம் இவ்வாறு கலங்கி இருக்கவும், நன்னர் நெஞ்சம் – என் நல்ல நெஞ்சம், என்னொடும் நின்னொடும் சூழாது – உன்னோடும் என்னோடும் இருந்து ஆராய்ந்து நமக்கு துணையாக இல்லாமல், கைம்மிக்கு – கை கடந்து, இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ்சிலம்பில் – சிறுகாட்டில் இருண்ட சிறிய கடத்தற்கரிய மலையில், குறுஞ்சுனைக் குவளை வண்டு படச் சூடி – சிறு சுனையில் உள்ள குவளை மலரை வண்டுபட அணிந்து, கான நாடன் வரூஉம் – காட்டு நாடனான நம் தலைவன் வரும் (வரூஉம் – அளபெடை), யானைக் கயிற்றுப் புறத்தன்ன – யானையின் முதுகில் உள்ள கயிற்றின் தழும்பை ஒத்த, கல் மிசைச் சிறு நெறி – மலையில் உள்ள சிறு வழியில், மாரி வானந்தலைஇ நீர் வார்பு – மழை பொழிந்து நீர் ஓடியதால் (தலைஇ – அளபெடை), இட்டு அருங்கண்ண – செல்லுதற்கு அரிய சிறு இடங்களில், படுகுழி இயவின் – தாமே உண்டான குழிகள் உள்ள வழியில், இருள் இடை – இருளில், மிதிப்புழி நோக்கி – மிதிக்கும் இடத்தைப் பார்த்து (மிதிப்புழி = மிதிப்பு + உழி, உழி = ஏழாம் வேற்றுமை உருபு), அவர் தளர் அடி தாங்கிய – அவரது தளர்ந்த அடியைத் தாங்க, சென்றது இன்றே – சென்றது இன்று (இன்றே – ஏகாரம் அசை நிலை, an expletive)

அகநானூறு 136, விற்றூற்று மூதெயினனார்மருதத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மைப்பு அறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்,
புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்கத் திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்துக்,  5
கடி நகர் புனைந்து கடவுள் பேணிப்,
படு மண முழவொடு பரூஉப்பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை  10
பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மா இதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு வெந்நூல் சூட்டித்,
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி,  15
மழை பட்டன்ன மணன் மலி பந்தர்,
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றித்
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
“உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம் படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்  20
பெரும் புழுக்குற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற” என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென 25
நாணினள் இறைஞ்சியோளே, பேணிப்
பரூஉப் பகை ஆம்பல் குரூஉத் தொடை நீவிச்,
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.

பாடல் பின்னணி:  தலைவி ஊடல் கொண்டபொழுது தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது.

பொருளுரை:  குற்றம் உண்டாகாதபடி சமைக்கப்பட்ட நெய் மிக்க வெள்ளைச் சோற்றை எல்லை இல்லாத வள்ளன்மைப் பண்புடன் சுற்றத்தார்க்கும் சான்றோர்களுக்கும்  உண்ணக் கொடுத்து அவர்களைக் கவனித்து,  புள் நிமித்தம் (நல்ல நேரம்) பொருந்தி இருக்கும் இனிமையான வேளையில், தெளிவான அழகிய பெரிய வானம் ஒளியாகும்படி நிலவை உரோகிணிக் கூடிய குற்றமற்ற நல்ல நாளில், மண மனையை அழகுப்படுத்தி, கடவுளை வழிபட்டு, ஒலிக்கும் மண முரசுடன், பெரிய பணை முரசும் ஒலிக்க, தலைவியை நீராட்டிய பெண்கள், தங்களின் மலர் போன்ற கண்களால் இமைக்காமல் அவளை நோக்கி, பின் விரைந்து மறைய, முதிய கன்று மென்மையான மலர்களையுடைய வாகை மரத்தின் புல்லிய (சிறப்பு இல்லாத) பின்புறத்தையுடைய பிரிவு உடைய இலைகளை உண்டப் பள்ளத்தில் படர்ந்துள்ள, ஒலிக்கும் வானின் முதல் மழைக்குத் துளிர்த்த கழுவிய நீலமணியை ஒத்தக் கரிய இதழ்களையும் கிழங்கையும் உள்ள அறுகம் புல்லின் குளிர்ந்த நறுமணமான அரும்புடன் தொடுத்த வெள்ளை நூலை அவளுக்குச் சூட்டி, மேகம் ஒலித்தாற்போல் ஒலியுடைய திருமணப் பந்தலில், அணிகளைச் சிறப்புடன் அணிந்த அவளின் வியர்வையைத் துடைத்து, அவள் குடும்பத்தார் அவளை எனக்குத் தர, முதல் நாள் இரவில், வெறுப்பு இல்லாத கற்புடைய அவள், என் உயிர்க்கு உடம்பாகப் பொருந்தும் அவள், கசங்காத புத்தாடையால் தான் உடலை முழுக்கப் போர்த்தியிருக்க, “உன் பிறை நெற்றியில் அதிகப் புழுக்கத்தினால் அரும்பியுள்ள வியர்வையை மிக்க காற்றால் போக்க, உன் ஆடையைக் கொஞ்சம் திற” என்று கூறி ஆர்வ நெஞ்சத்துடன் மூடிய அவளுடைய ஆடையை நான் கவர, உறையினின்று எடுத்த வாள் போல அவள் உருவம் வெளிப்பட்டு விளங்க, மறைக்கும் வழியை அறியாதவள் ஆகி, விரைவாக நாணம் அடைந்து, தான் அணிந்திருந்த ஆம்பல் மலர்களுடன் புனைந்த நிறம் பொருந்திய பருத்த மாலையை நீக்கி, வண்டுகள் சூழ்ந்து ஒலிக்கும் அழகிய மலர்களை அணிந்த தன்னுடைய கருமையான அடர்ந்த கூந்தலின் இருளால், தன் உடலை மறைத்து என் முன் தலைக் குனிந்தாள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பழந்தமிழ் மக்கள் உரோகிணியைத் திருமணத்திற்குச் சிறந்த நாளாகக் கொண்டிருந்தனர். கடவுள் பேணி என்பதனால், திருமணத்தின் தொடக்கத்தில் கடவுளை வழிபடும் வழக்கம் பண்டும் உளதென்பது பெற்றதாம்.  அகநானூறு 86 – கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென.  மழை பட்டன்ன மணன் மலி பந்தர் (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழை பெய்தாற்போன்ற ஒலியை உடைய புது மணல் மிக்க மணப் பந்தரிலே, வேங்கடசாமி நாட்டார்  உரை – மேகம் ஒலித்தால் ஒத்த மண ஒலி மிக்க பந்தலிலே. பரூஉப் பகை (27) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன் இடைக்கு பருமனால் பகையாகிய.  பூக்கணும் – பூக்கண்ணும், கண்ணும், இடைக்குறை, மணன் – மணம் என்றதன் போலி, வளைஇ – அளபெடை, பரூஉ – அளபெடை, பந்தர் – பந்தல் என்பதன் போலி, குரூஉ – அளபெடை, ஒய்யென – விரைவுக்குறிப்பு, வாளின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது.

சொற்பொருள்:   மைப்பு அற – குற்றம் இல்லாத, புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு – சமைக்கப்பட்ட நெய் மிக்க வெள்ளைச் சோறு, வரையா வண்மையொடு – எல்லை இல்லாத வள்ளன்மைப் பண்புடன், புரையோர்ப் பேணி – சான்றோர்களுக்கு உணவைக் கொடுத்து அவர்களைக் கவனித்து, புள்ளுப் புணர்ந்து இனிய ஆக – புள் நிமித்தம் பொருந்தி இனிமையாக, தெள் ஒளி – தெளிவான ஒளி, அம் கண் – அழகிய இடம்,  இரு விசும்பு – பெரிய வானம்,  விளங்க – ஒளிர, திங்கள் சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து – நிலவை உரோகிணிக் கூடிய குற்றமற்ற நல்ல நாள் சேர்கையில், கடி நகர் புனைந்து – மண மனையை அழகுப்படுத்தி,  கடவுள் பேணி – கடவுளை வழிபட்டு,  படு மண முழவொடு – ஒலிக்கும் மண முரசுடன், பரூஉப்பணை இமிழ – பெரிய பணை முரசும் ஒலிக்க (பரூஉ – அளபெடை), வதுவை மண்ணிய மகளிர் – தலைவிக்கு நீராட்டிய பெண்கள், விதுப்புற்று – விரைந்து, விருப்பம் அடைந்து, பூக்கணும் இமையார் நோக்குபு – மலர் போன்ற கண்களால் இமைக்காமல் நோக்கி (பூக்கணும் – பூக்கண்ணும், கண்ணும், இடைக்குறை), மறைய – மறைய,  மென்பூ – மென்மையான மலர்கள், வாகை – வாகை மரம், புன்புறக் கவட்டிலை – புல்லிய பின்புறத்தையுடைய பிளவு உடைய இலை, பழங்கன்று கறித்த – முதிய கன்று உண்ட,  பயம்பு அமல் அறுகை – பள்ளத்தில் படர்ந்த அறுகம்புல்,  தழங்கு குரல் – ஒலிக்கும் குரல், வானின் தலைப்பெயற்கு – மேகத்தின் முதல் மழை பெய்தலால், ஈன்ற – ஈன்ற,  மண்ணு மணி அன்ன – கழுவிய நீலமணியை ஒத்த, மா இதழ் – கரிய இதழுடைய, பாவை – அறுகம்புல்லின் கிழங்கு, தண் நறு முகையொடு – தண்ணிய நறுமணமான அரும்புடன், வெந்நூல் சூட்டி – வெள்ளை நூலைச் சூட்டி, தூ உடைப் பொலிந்து – தூய உடையால் பொலியச் செய்து, மேவரத் துவன்றி – விருப்பம் உண்டாகக் கூடி,  மழை பட்டன்ன – மழை பெய்தாற்போல், மேகம் ஒலித்தாற்போல்,  மணன் மலி பந்தர் – மண ஒலியுடைய பந்தல், மணல் நிறைந்த பந்தல் பந்தர் – பந்தல் என்பதன் போலி, இழை அணி சிறப்பின் – அணிகளை அணிந்த சிறப்புடன்,  பெயர் வியர்ப்பு ஆற்றி – தோன்றிய வியர்வையை துடைத்து, தமர் நமக்கு ஈத்த – அவள் குடும்பத்தார் எனக்குத் தந்த,  தலை நாள் இரவின் – முதல் நாள் இரவில்,  உவர் நீங்கு கற்பின் – வெறுப்பு நீங்கிய கற்புடைய,  எம் உயிர் உடம் படுவி – என் உயிர்க்கு உடம்பாகப் பொருந்தும் இவள்,  முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ – கசங்காத புத்தாடையால் முழுக்க போர்த்தி (வளைஇ – அளபெடை), பெரும் புழுக்கு உற்ற – அதிகமாக புழுக்கமாகிய,  நின் பிறை நுதல் – உன் பிறை நெற்றி,  பொறி வியர் – அரும்பியுள்ள வியர்வை, உறு வளி ஆற்ற – மிக்க காற்றால் போக்க, சிறு வரை திற – சிறிது நேரம் திற, என ஆர்வ நெஞ்சமொடு – என்று ஆர்வ நெஞ்சுடன், போர்வை வவ்வலின் – மூடிய ஆடையை பற்றிக் கவர்ந்ததால், உறை கழி வாளின் – உறையினின்று எடுத்த வாள் போல (வாளின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), உருவு பெயர்ந்து இமைப்ப – உருவம் வெளிப்பட்டு விளங்க,  மறை திறன் அறியாள் ஆகி – மறைக்கும் வழியை அறியாதவள் ஆகி,  ஒய்யென நாணினள் – விரைவாக நாணம் அடைந்தாள்,  இறைஞ்சியோளே பேணி –  கெஞ்சினாள், என்னை வணங்கினாள், பரூஉப் பகை – பருமையால் பகையாகிய (பரூஉ – அளபெடை), ஆம்பல் – ஆம்பல் மலர்கள், குரூஉ  – நிறம் பொருந்திய (குரூஉ – அளபெடை), தொடை – மாலை, நீவி – நீக்கி,  சுரும்பு இமிர் – வண்டு ஒலிக்கும், ஆய் மலர் வேய்ந்த – அழகிய மலர்களை அணிந்த, தேர்ந்தெடுத்த மலர்களை அணிந்த,  இரும் பல் கூந்தல் – கருமையான அடர்ந்த கூந்தல்,  இருள் – கூந்தலின் இருள், மறை ஒளித்தே – மறைத்து ஒளித்து (ஒளித்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 147, ஔவையார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஓங்கு மலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன,
ஊன்பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை
மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடர் அளைப் பிணவு பசி கூர்ந்தெனப்,  5
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்,
நெறி படு கவலை நிரம்பா நீளிடை,
வெள்ளிவீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே, பல புலந்து  10
உண்ணா உயக்கமொடு, உயிர் செலச் சாஅய்
தோளும், தொல் கவின் தொலைய, நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே.

பாடல் பின்னணி:  தலைவனின் செலவு உணர்த்திய தோழிக்குத் தலைவி கூறியது.

பொருளுரை:   தோழி! தலைவன் பிரிந்ததால், பலவற்றையும் வெறுத்து, உண்ணாத வருத்தத்துடன், உயிர் போகுமளவு மெலிந்து, தோளின் அழகுக் கெட்டு, நாள்தோறும் துன்புறுகின்றேன்.  அவர் நீங்கிய வருத்தத்திற்கு மருந்து ஒன்றும் இல்லாததால், உயிரோடு இருந்தும் செயலற்று இருக்கின்றேன்.

ஆதலால், உயர்ந்த மலைச் சாரலில், பிடவ மலர்களுடன் மலர்ந்த நறுமணமான வேங்கை மலர்களின் இலையைப் போல், பகுதி, பகுதியாக வகுத்து வைத்தாற்போல், தசையின் மறைப்பு நீங்காத வளைந்த நகத்தையுடைய குட்டிகள் மூன்றைப் பெற்ற, ஒதுங்கிய இடத்தில், மலைப் பிளவாகிய குகையில் உள்ள தன் பெண் புலி மிகுந்த பசியை அடைந்ததால், பொறி விளங்கும் பிளந்த வாயை உடைய ஆண் புலி, உடைந்த கொம்பையுடைய ஆண் மானின் குரலைக் கேட்கும், பிரிந்த பாதைகள் பொருந்திய எல்லையில்லாத பெரிய காட்டிலே, தன் கணவனைத் தேடிச் சென்ற வெள்ளிவீதியைப் போல் செல்லுதலைப் பெரிதும் விரும்புகின்றேன்.

குறிப்பு:  இரா. இராகவையங்கார் உரை வெள்ளிவீதியாரின் குறுந்தொகை 27ம் பாடலுக்கு – இது வெள்ளிவீதியார் என்னும் நல்லிசைப் புலமை மெல்லியர் தம் தலைவன் பிரிவிடை ஆற்றாது சொல்லியது என்பது (தொல். அகத் 54) நச்சினார்க்கினியரின் உரையால் அறியப்படுகின்றது.  இப்பாடலைக் கூறிய பின்னர்ப் பிரிவு பொறாது தம் காதலர் உள்ள ஊருக்குச் செல்லத் தலைப்பட்டனர் என்பது ஒளவையாரின் பாட்டால் (அகநானூறு 147 வரிகள் 8-10 “நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே”) அறியப்படுகின்றது.  வரலாறு:   வெள்ளிவீதியார்.  வேங்கை வெறித் தழை (2) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வெறி கமழும் பூவுடன் கூடிய தழையை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வேங்கை மரத்தின் மணங்கமழும் தழை.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

சொற்பொருள்:  ஓங்கு மலை – உயர்ந்த மலை, சிலம்பில் மலைச் சரிவில், பிடவுடன் மலர்ந்த வேங்கை – பிடவத்துடன் மலர்ந்த வேங்கை மலர்கள், வெறி – நறுமணம், தழை வேறு வகுத்தன்ன – இலை வேறு வேறாகப் பிரித்தாற்போல், ஊன் பொதி அவிழா – தசையின் மறைப்பு நீங்காத, கோட்டு உகிர் குருளை மூன்றுடன் – வளைந்த நகத்தையுடைய குட்டிகள் மூன்றுடன், ஈன்ற – பெற்ற, முடங்கர் – முடக்கமான இடத்தில், நிழத்த – ஓய்ந்திருக்கும், துறுகல் விடர் அளை – கல்லின் பிளவு, குகை, பிணவு – பெண், பசி கூர்ந்தென – பசி மிகுந்தலால், பொறி கிளர் – புள்ளிகள் திகழும், உழுவை – புலி, போழ் வாய் ஏற்றை – பிளந்த வாயையுடைய ஆண், அறு கோட்டு – உடைந்த கொம்பு, உழை மான் – உழை மான், ஆண் குரல் ஓர்க்கும் – ஆண் குரலைக் கேட்கும், நெறி படு கவலை – பிரிவு உடையப் பாதை, நிரம்பா நீளிடை – எல்லையில்லாத நீண்ட பாதை, வெள்ளிவீதியைப் போல – வெள்ளிவீதியைப் போல, நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே – பெரிதும் செல்லத் துணிந்தேன், பல புலந்து – பலவற்றை வெறுத்து, உண்ணா உயக்கமொடு – உண்ணாது வருந்தி, உயிர் செல – உயிர் போகுமளவு, சாஅய் – மெலிந்து, தோளும் தொல் கவின் தொலைய – தோள்கள் பழைய அழகை இழக்க, நாளும் – தினமும், பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி – பிரித்துச் சென்ற தலைவருக்காகத் தினமும் வருந்தி, மருந்து பிறிது இன்மையின் – வேறு ஒரு மருந்தும் இல்லாததால், இருந்து – உயிரோடு இருந்து, வினை இலனே – செயலற்று இருக்கின்றேன்

அகநானூறு 149, எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்,
புல்லரை இருப்பைத் தொள்ளை வான் பூப்
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள் இடைப் போகி, நன்றும்  5
அரிது செய் விழுப்பொருள் எளிதினின் பெறினும்
வாரேன், வாழி என் நெஞ்சே, சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண் நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்  10
வளங்கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ,
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடு போர்ச் செழியன்
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது,
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய  15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே.

பொருளுரை:   சிறிய புல்லிய கறையான் நெடிது முயன்று செய்த உயர்ந்த சிவந்த புற்றில் மறைந்து இருந்த புற்றாஞ்சோற்றை வெறுத்து, புல்லிய அடிப்பகுதியையுடைய இருப்பை மரத்தின் உட்துளை உடைய வெள்ளை மலர்களைப் பெரிய கைகளையுடைய கரடியின் பெரிய கூட்டம் கவர்ந்து உண்ணும் சுரத்தின் அரிய வழியில் சென்று, பெரிதும் அரிதாகிய ஈட்டும் சிறந்த பொருளை எளிதாகப் பெறுவதாயினும்,  நான் வரமாட்டேன், நீ நீடு வாழ்வாயாக என் நெஞ்சே, சேரரின் சுள்ளி என்ற பெரிய ஆற்றில் வெள்ளை நுரை கலங்க யவனர் கொண்டு வந்த மாட்சிமையுடைய நல்ல கப்பல்கள் பொன்னுடன் வந்து மிளகுடன் செல்லும் வளம் மிகுந்த முசிறி என்னும் ஊரை ஆரவாரத்துடன் வளைத்து, அரிய போரினை வென்று பொன்னால் செய்த பாவையைக் கவர்ந்த, உயரமான நல்ல யானைகளையுடைய பகைவரைக் கொல்லும் போரைப் புரியும் பாண்டியன், கொடி அசையும் கூடலின் மேற்கில் உள்ள, பல பொறிகளையுடைய மயில் உடைய வெற்றிக் கொடி உயர்த்தப்பட்ட இடைவிடாது விழாக்களையுடைய முருகனின் திருப்பரங்குன்றத்தில் உள்ள, வண்டு வந்து தீண்ட நீண்ட அழகான சுனையில் மலர்ந்த நீல மலர்களைப் கட்டினாற்போல் உள்ள (குவளை மலர்கள்),  இவளுடைய செவ்வரி படர்ந்த குளிர்ந்த மதர்த்த (அழகிய, செருக்கான) கண்கள் தெளிந்த கண்ணீரைக் கொள்ள.

குறிப்பு:  தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லி செலவு அழுங்கியது.  சுள்ளியம் பேரியாற்று (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுள்ளி என்பதும் பேரியாறு என்பதும் ஓர் யாற்றின் பெயர்களே என்க, இதனை இக்காலத்தார் பெரியாறு என்று வழங்குவர்.  வரலாறு:  செழியன், முசிறிகூடல், சேரலர், சுள்ளி ஆறு, நெடியோன் குன்றம். ஒப்புமை:  அகநானூறு 57 – கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் முதுநீர் முன்றுறை முசிறி முற்றிக் களிறு பட எருக்கிய.  Akanānūru 8, 72, 81, 88, 112, 149, 247, 257, 307 and Natrinai 125, 325 and 336 have descriptions of bears attacking termite mounds.  கரடி இருப்பை மலரை உண்ணுதல் – அகநானூறு 15, 81, 95, 149, 171, 247, 267, 275, 331.  அகநானூறு 123 – இறவொடு வந்து கோதையொடு பெயரும், அகநானூறு 149 – பொன்னொடு வந்து கறியொடு பெயரும், குறுந்தொகை 221 – பாலொடு வந்து கூழொடு பெயரும்.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).  யவனர் – அயோனியா என்ற கிரேக்க நாட்டின் பகுதியிலிருந்து வருபவர்களை இச்சொல் குறித்தாலும் இது பின்னால் வந்த ரோமானியர், துருக்கர், எகிப்தியர் ஆகியோரையும் குறித்திருக்கலாம் எனச் சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சொற்பொருள்:  சிறு  புன்  சிதலை சேண் முயன்று எடுத்த – சிறிய புல்லிய கறையான் நெடிது முயன்று செய்த, நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின் – உயர்ந்த சிவந்த புற்றில் மறைந்து இருந்த புற்றாஞ்சோற்றை வெறுத்து, புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூ – புல்லிய அடிப்பகுதியையுடைய இருப்பை மரத்தின் உட்துளை உடைய வெள்ளை மலர்கள்(இலுப்பை மரம், வஞ்சி மரம்), பெருங்கை எண்கின்  இருங்கிளை கவரும் – பெரிய கைகளையுடைய கரடியின் பெரிய கூட்டம் கவர்ந்து உண்ணும், அத்த நீள் இடைப் போகி – சுரத்தின் அரிய வழியில் சென்று, நன்றும் அரிது செய் விழுப்பொருள் எளிதினின் பெறினும் – பெரிதும் அரிதாகிய ஈட்டும் சிறந்த பொருளை எளிதாகப் பெறுவதாயினும், வாரேன் – நான் வரமாட்டேன், வாழி – அசைச்சொல், நீடு வாழ்வாயாக, என் நெஞ்சே – என் நெஞ்சே, சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண் நுரை கலங்க – சேரரின் சுள்ளி என்ற பெரிய ஆற்றில் வெள்ளை நுரை கலங்க, யவனர் தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – யவனர் கொண்டு வந்த மாட்சிமையுடைய நல்ல கப்பல்கள் பொன்னுடன் வந்து மிளகுடன் செல்லும், வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ – வளம் மிகுந்த முசிறி என்னும் ஊரை ஆரவாரத்துடன் வளைத்து (அளபெடை), அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய – அரிய போரினை வென்று பொன்னால் செய்த பாவையைக் கவர்ந்த, நெடுநல் யானை அடு போர்ச் செழியன் – நெடிய நல்ல யானைகளையுடைய பகைவரைக் கொல்லும் போரைப் புரியும் பாண்டியன், கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது – கொடி அசையும் கூடலின் மேற்கில் உள்ள (குடாஅது – மேற்கில், அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து – பல பொறிகளையுடைய மயில் உடைய வெற்றிக் கொடி உயர்த்தப்பட்ட இடைவிடாது விழாக்களையுடைய முருகனின், வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து எதிர்மலர் பிணையல் அன்ன – வண்டு தீண்ட நீண்ட அழகான சுனையில் மலர்ந்த நீல மலர்களைப் கட்டினாற்போல் உள்ள (குவளை மலர்கள்), இவள் அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே – இவளுடைய செவ்வரி படர்ந்த குளிர்ந்த மதர்த்த (அழகிய, செருக்கான) கண்கள் தெளிந்த நீரைக் கொள்ள (பனி – ஆகுபெயர் கண்ணீருக்கு, கொளவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 175, ஆலம்பேறி சாத்தனார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
விடுதொறும் விளிக்கும் வெவ்வாய் வாளி
ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின்,
பாறு கிளை பயிர்ந்து படு முடை கவரும்  5
வெஞ்சுரம் இறந்த காதலர் நெஞ்சு உணர
அரிய வஞ்சினம் சொல்லியும், பல்மாண்
தெரி வளை முன்கை பற்றியும் வினை முடித்து
வருதும் என்றனர் அன்றே தோழி,
கால் இயல் நெடுந் தேர்க் கைவண் செழியன்  10
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி
நேர் கதிர் நிரைத்த நேமியம் செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல்,  15
திரு வில் தேஎத்துக் குலைஇ உருகெழு
மண் பயம் பூப்பப் பாஅய்த்,
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே.

பாடல் பின்னணி:   (1) தலைவன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி சொன்னது, (2) பிரிவின்கண் வேறுபட்ட தலைவி தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  தடித்த தோளின் விளிம்பினை உரசிய வேகம் அமைந்த வலிமையான வில்லில் வைத்து இழுத்து விடும் அம்பினை குறி தப்புதல் இல்லாமல் செலுத்தும் கொடூர ஆண்கள் எய்யும்பொழுதெல்லாம் ஒலித்துச் செல்லும் கொடிய முனையையுடைய அம்புகள் வழியில் செல்லும் புதியவர்களின் உயிரை அழிப்பதால், பாறு (பிணம் தின்னும் கழுகு) தன் கிளையினை அழைத்து இறந்தவர்களின் ஊனை உண்ணும் கொடிய பாலை நிலத்து வழிகளைக் கடந்து போன நம் தலைவர், செல்லும் முன், உள்ளம் உணர மிக உறுதியான உறுதிமொழிகளை உரைத்தும், பல முறை ஆராய்ந்து அணியப்பட்ட வளையுடைய என் முன்கையைப் பற்றியும், “பணியை முடித்து வருவேன்” என்று கூறினார் அல்லவோ, காற்றுப் போல செல்லும் உயர்ந்த தேரினையும் வள்ளன்மையையுமுடைய பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துப் போரில் வென்று உயர்த்திய வேலைக் காட்டிலும் பலமுறை மின்னி, முரசம் போன்று பெரிய வானில் தொடர்ந்து பலமாக இடித்து, நிறைந்த கதிர்களையுடைய ஆழியையுடைய (சக்கரத்தையுடைய) திருமாலின் பகைவர்களை அழித்து வென்ற மார்பின்கண் உள்ள மாலைபோன்று பல்வேறு நிறங்கள் கொண்ட அழகிய வானவில்லை வளைத்து, நிலம் பயன் அடையும்படி பரவி, குளிர்ந்த மழையையுடைய முகில்கள் இறங்கிப் பெய்யும் காலத்தில்!  அவர் இன்னும் வரவில்லையே! என்ன செய்வது?

குறிப்பு:  வரலாறு: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.  பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான்.  நேர் கதிர் நிரைத்த நேமி (14) – வேங்கடசாமி நாட்டார்  உரை – நிரம்பிய கதிர்களின் ஒழுங்கினைக் கொண்ட ஆழி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுண்ணிய ஒளிகள் ஒழுங்குற்ற ஆழிப்படை.  விளிம்பு உரீஇய (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோளின் விளிம்பு உராயும்படி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தோளின் விளிம்பினை உரசிய, அகநானூறு 371-1 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய விளிம்புகளைக் கையால் உருவி நாணேற்றிய,  இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அழகிய விளிம்பினை உருவி நாண் ஏற்றிய, குறுந்தொகை 297-1 – உ. வே. சாமிநாதையர் உரை – மேல் விளிம்பை உருவிய, தமிழண்ணல் உரை – இழுத்துக் கட்டிய, இரா. இராகவையங்கார் உரை – விளிம்பின் நாண் உருவி.  உரீஇய – அளபெடை, தேஎத்து – அளபெடை, குலைஇ – அளபெடை, பாஅய் – அளபெடை.

சொற்பொருள்:  வீங்கு விளிம்பு உரீஇய – தடித்த தோளின் விளிம்பினை உரசிய, விசை அமை நோன் சிலை – வேகம் அமைந்த வலிமையான வில், வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் – இழுத்து விடும் அம்பு குறி தவறாமல் செலுத்தும்  கொடூர ஆண்கள், விடுதொறும் விளிக்கும் வெவ்வாய் வாளி – எய்யும்பொழுதெல்லாம் ஒலித்துச் செல்லும் கொடிய வாயுடைய அம்பு, ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின் – வழியில் செல்லும் புதியவர்களின் உயிர் அழிய போக்குவதால், பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும் – பாறு (பிணம் தின்னும் கழுகு) தன் கிளையினை அழைத்து இறந்தவர்களின் ஊனை உண்ணும், வெஞ்சுரம் இறந்த காதலர் – கொடிய பாலை நிலத்து வழிகளைக் கடந்து போன நம் தலைவர், நெஞ்சு உணர அரிய வஞ்சினம் சொல்லியும் – உள்ளம் உணர கடிய சூள் உரைத்தும், பல்மாண் தெரி வளை முன்கை பற்றியும் – பல முறை ஆராய்ந்து அணியப்பட்ட வளையுடைய என் முன்கையைப் பற்றியும், வினை முடித்து வருதும் என்றனர் அன்றே தோழி – பணியை முடித்து வருவேன் என்று கூறினார் அல்லவோ தோழி, கால் இயல் நெடுந்தேர்க் கைவண் செழியன் – காற்றுப் போல செல்லும் உயர்ந்த தேரினையும் வள்ளன்மையுமுடைய பாண்டிய மன்னன், ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த வேலினும் – தலையாலங்கானத்துப் போரில் வென்று உயர்த்திய வேலைக் காட்டிலும், பல் ஊழ் மின்னி – பலமுறை மின்னி, முரசு என மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி – முரசம் போன்று பெரிய வானில் தொடர்ந்து பலமாக இடித்து, நேர் கதிர் நிரைத்த நேமியம் செல்வன் – நிறைந்த கதிர்களையுடைய ஆழியையுடைய (சக்கரத்தையுடைய) திருமால், போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல் – பகைவர்களை அழித்து வென்ற மார்பின்கண் உள்ள மாலைபோன்று, திரு வில் தேஎத்துக் குலைஇ – பல்வேறு நிறம் கொண்ட அழகிய வானவில்லை வளைத்து, உருகெழு – அழகிய, மண் பயம் பூப்பப் பாஅய் – நிலம் பயன் அடையும்படி பரவி, தண் பெயல் எழிலி – குளிர்ந்த மழையையுடைய முகில்கள், தாழ்ந்த போழ்தே – இறங்கிப் பெய்யும் காலத்தில்

அகநானூறு 190, உலோச்சனார்நெய்தற் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது
திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி எல் பட,
வருதிமில் எண்ணும் துறைவனொடு ஊரே,
ஒருதன் கொடுமையின் அலர் பாடும்மே,
அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்  5
அலையல், வாழி வேண்டு அன்னை, உயர் சிமைப்
பொதும்பில் புன்னைச் சினை சேர்பு இருந்த
வம்ப நாரை இரிய, ஒரு நாள்
பொங்குவரல் ஊதையொடு புணரி அலைப்பவும்
உழைக்கடல் வழங்கலும் உரியன், அதன்தலை  10
இருங்கழி புகாஅர் பொருந்தத் தாக்கி
வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில
நிரை மணிப் புரவி விரை நடை தவிர,
இழுமென் கானல் விழு மணல் அசைஇ  15
ஆய்ந்த பரியன் வந்து, இவண்
மான்ற மாலைச் சேர்ந்தன்றே இலனே.

பாடல் பின்னணி:  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.

பொருளுரை:   நீடு வாழ்வாயாக அன்னையே! நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக! அலைகளில் விளையாடியதால் தளர்ச்சியுற்ற, அடுக்காக வளையல்கள் அணிந்த தோழியருடன், உப்புக்குவியலின் மீது ஏறி, கதிரவன் மறையும் பொழுது, மீன் பிடித்து வரும் பரதவரின் படகுகளை எண்ணும் மகளிரையுடைய துறையையுடைய தலைவனுடன், உன் மகளைச் சேர்த்து இந்த ஊரானது கொடுமையான அலரினைக் கூறும்.

சுழல்கின்ற குளிந்த கண்களையுடைய உன் மகள் அவனை நோக்கவில்லை. நீ அவளைத் துன்புறுத்தாதே. உயர்ந்த மணற்குன்றின் உச்சியில் உள்ள சோலையில் புன்னை மரக்கிளைகளில் இருந்த புதிய நாரைகள் விலகிச் செல்லுமாறு, ஒரு நாள், பொங்கி வரும் வாடைக்காற்றுடன் கடல் அலைகள் கரையில் மோதி இருக்கவும், அக்கடலோரத்தில் தேரில் வர உரிமையுடையவன் ஆனான் தலைவன்.

அதற்கு மேலும், பெரிய உப்பங்கழியினை உடைய துறைமுகத்தில் வலிமையான சுறா மீன் தாக்கியதால், தேரோட்டி குதிரைகளின் பூட்டுக்களை நீக்க, தமது அழகும் பயனும் குறைந்து, கட்டுப்பாடு இல்லாத, வரிசையாக மணிகள் அணிந்த குதிரைகள், விரைந்து செல்ல முடியாத நிலையில் இருந்ததால், ஒலியுடைய கடற்கரையின் சிறந்த மணலில் தங்கி மெலிந்த குதிரைகளையுடைய அத் தலைவன் இங்கு, மயங்கிய மாலை நேரத்தில் தங்கியிருக்கவும் இல்லை.

குறிப்பு:  தொல். களவியல் 35 – தோழி தானே செவிலி மகளே.  நிரைவளை ஆயமொடு (1) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – நிரைத்த வளையலையுடைய மகளிர் கூட்டத்துடன், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிரைவளை அன்மொழி, தலைவி, ஆயமொடு திரையுழந்து அசைஇய நிரைவளை எனக் கூட்டுக.  தலைவி தன் வழக்கம் போலவே அங்குச் சென்றாள்.  அலமரல் – தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).  ஊரே – ஊர் ஆகுபெயர் அலர் கூறுபவர்களுக்கு, அசைஇய – அளபெடை, பாடும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது, புகாஅர் – அளபெடை.

சொற்பொருள்:  திரை உழந்து – அலைகளில் விளையாடி, அசைஇய – தளர்ச்சியுற்ற, நிரைவளை ஆயமொடு – அடுக்காக வளையல்கள் அணிந்த தோழியருடன், உப்பின் குப்பை ஏறி – உப்புக்குவியலின் மீது ஏறி, எல் பட – கதிரவன் மறையும் பொழுது, வரு திமில் எண்ணும் துறைவனொடு – மீன் பிடித்து வரும் பரதவரின் படகுகளை எண்ணும் துறையையுடைய அத் தலைவனுடன், ஊரே ஒருதன் கொடுமையின் அலர் பாடும்மே – உன் மகளைச் சேர்த்து இந்த ஊரானது கொடுமையான அலரினைக் கூறும், அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள் – அவனைச் சுழல்கின்ற குளிந்த கண்களையுடைய உன் மகள் நோக்கவில்லை, அலையல் – நீ அவளைத் துன்புறுத்தாதே, வாழி – நீடு வாழ்வாயாக, வேண்டு – நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக, அன்னை – அன்னையே, உயர் சிமைப் பொதும்பில் – உயர்ந்த மணற்குன்றின் உச்சியில் உள்ள சோலையில், புன்னைச் சினை சேர்பு இருந்த வம்ப நாரை இரிய – புன்னை மரக்கிளைகளில் இருந்த புதிய நாரைகள் விலகிச் செல்ல, ஒரு நாள் – ஒரு நாள், பொங்குவரல் ஊதையொடு புணரி அலைப்பவும் – பொங்கி வரும் வாடைக்காற்றுடன் கடல் அலைகள் கரையில் மோதி இருக்கவும், உழைக்கடல் வழங்கலும் உரியன் – அக்கடலோரத்தில் தேரில் வர உரிமையுடையவன் ஆனான் ஒரு தலைவன், அதன்தலை – அதற்கு மேலும், இருங்கழி புகாஅர் பொருந்தத் தாக்கி வயச் சுறா எறிந்தென – பெரிய உப்பங்கழியினை உடைய துறைமுகத்தில் வலிமையான சுறா மீன் தாக்கியதால், வலவன் அழிப்ப – தேரோட்டி குதிரைகளின் பூட்டுக்களை நீக்க, எழில் பயம் குன்றிய – தமது அழகும் பயனும் குறைந்து, சிறை அழி தொழில நிரை மணிப் புரவி – கட்டுப்பாடு இல்லாத வரிசையாக மணிகள் அணிந்த குதிரைகள், விரை நடை தவிர – விரைந்து செல்ல முடியாத, இழுமென் கானல் விழு மணல் – ஒலியுடைய கடற்கரையில் சிறந்த மணல், அசைஇ – தங்கி, ஆய்ந்த பரியன் வந்து – மெலிந்த குதிரைகளையுடைய அத் தலைவன் வந்து, இவண் – இங்கு, மான்ற மாலைச் சேர்ந்தன்றே இலனே – மயங்கிய மாலை நேரத்தில் தங்கியிருக்கவும் இல்லை

அகநானூறு 200, உலோச்சனார்நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்,
புலால் அம் சேரிப் புல் வேய் குரம்பை ஊர் என
உணராச் சிறுமையொடு நீர் உடுத்து
இன்னா உறையுட்டு ஆயினும், இன்பம்
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும், வழி நாள்  5
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
வந்தனை சென்மோ, வளை மேய் பரப்ப,
பொம்மல் படு திரை கம்மென உடைதரும்
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி,
எல்லை எம்மொடு கழிப்பி, எல் உற  10
நல் தேர் பூட்டலும் உரியீர் அற்றன்று
சேந்தனிர் செல்குவிர் ஆயின், யாமும்
எம் வரை அளவையின் பெட்குவம்,
நும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கே.

பாடல் பின்னணி:  தலைவியின் குறிப்பறிந்த தோழி தலைவன் இரவிலும் தலைவியுடன் இருக்க வேண்டும் என்று உரைத்தது.

பொருளுரை:  சங்கு மேயும் நெய்தல் நிலத் தலைவனே!  நிலாவைப் போல் வெண்மையான மணல் உள்ள தெருவில் உள்ள புல்லால் வேயப்பட்ட குடிசைகளையுடைய, மீனின் நாற்றத்தைக் கொண்ட எங்கள் குடியிருப்பு, ஓர் ஊர் என்ற உணராத சிறுமையுடன், நீரால் சூழப்பட்டு, இன்னா உடையது ஆனாலும், ஒரு நாள் தங்குபவர்களுக்கு அது இன்பமானது.  அடுத்து வரும் நாளில், அவர்கள் தங்களுடைய ஊரை மறக்கச் செய்யும் தன்மையுடையது. எங்கள் ஊருக்கு வந்துவிட்டுச் செல்வாயாக.  நிறைந்த அலைகள் ஒலித்து உடையும் கரையில், உயர்ந்த மரங்கள் ஒரு பக்கம் இருக்கும் இடத்தில், உன்னுடைய தன்மைகளை நாங்கள் பாராட்ட, பகல் பொழுதை எங்களுடன் கழித்து விட்டு, இரவு ஆகும்பொழுது, உன்னுடைய நல்ல தேரைப் பூட்டி செல்வதற்கு உரியர் ஆகுவீர்.  ஆனால், எங்கள் ஊரில் தங்கிவிட்டு செல்லுவீர் ஆயின், நாங்கள் எங்களால் முடிந்த அளவில் உன்னைப் பேணுவோம்.  இது உனக்கு ஒப்புதல் ஆக உள்ளதா?  எங்களிடம் கூறுவாயாக.

குறிப்பு:  ஒப்புமை:  நிலவு மணல் – அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர், மதுரைக்காஞ்சி 114 – நிலவுக் கானல்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  அம் – சாரியை, சென்மோ – மோ முன்னிலையசை, கம்மென – விரைவுக்குறிப்பு, மரன் – மரம் என்பதன் போலி, உரைத்திசின் – சின் முன்னிலை அசைச் சொல், ஒப்பதுவோ- ஓகாரம் வினா.

சொற்பொருள்:  நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில் – நிலாவைப் போல் மணல் உள்ள தெருவில், புலால் அம் சேரி – புலால் (மீனின் நாற்றம்) நாறும் குடியிருப்பு, புல் வேய் குரம்பை – புல்லால் வேயப்பட்ட குடிசைகள், ஊர் என உணராச் சிறுமையொடு – ஓர் ஊர் என்ற உணராத சிறுமையுடன், நீர் உடுத்து – நீர் சூழப்பட்டு, இன்னா உறையுட்டு ஆயினும் – இன்னா உடையது ஆனாலும், இன்பம் ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் – ஒரு நாள் தங்குபவர்களுக்கும் இன்பமானது, வழி நாள் – பின் உள்ள நாள், தம் பதி மறக்கும் பண்பின் – தம்முடைய ஊரை மறக்கச் செய்யும் தன்மையுடையது, எம் பதி வந்தனை சென்மோ – எங்கள் ஊருக்கு வந்துவிட்டு செல்வாயாக, வளை மேய் பரப்ப – சங்கு மேயும் நெய்தல் நிலத் தலைவனே, பொம்மல் படு திரை கம்மென உடைதரும் – நிறைந்த அலைகள் ஒலித்து கரையில் உடையும், மரன் ஓங்கு ஒரு சிறை – மரங்கள் உயர்ந்து இருக்கும் ஒரு பக்கம், பல பாராட்டி – பலவாக பாராட்டி, எல்லை எம்மொடு கழிப்பி – பகல் பொழுதினை எங்களுடன் கழித்து, எல் உற – இரவு ஆகும்பொழுது, நல் தேர் பூட்டலும் உரியீர் – உன்னுடைய நல்ல தேரைப் பூட்டி செல்வதற்கு உரியர் ஆகுவீர், அற்றன்று – அதுவே அன்றி, சேந்தனிர் செல்குவிர் ஆயின் – எங்கள் ஊரில் தங்கிவிட்டு செல்லுவீர் ஆயின், யாமும் எம் வரை அளவையின் பெட்குவம் – நாங்கள் எங்களால் முடிந்த அளவில் உன்னைப் பேணுவோம், நும் ஒப்பதுவோ – இது உனக்கு ஒப்புதல் ஆக உள்ளதா, உரைத்திசின் எமக்கே – எங்களிடம் கூறுவாயாக

அகநானூறு 203, கபிலர்பாலைத் திணை – மகட்போக்கிய தாய் அல்லது செவிலித்தாய் சொன்னது
உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,
யாய் அறிந்து உணர்க என்னார், தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்,
இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள்
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்,  5
நாணுவள் இவள் என நனி கரந்து உறையும்
யான் இவ் வறுமனை ஒழிய, தானே
அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல் எனக் கழல் கால்
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுறப்  10
பன் மலை அருஞ்சுரம் போகிய தனக்கு, யான்
அன்னேன் அன்மை நன் வாய்யாக,
மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி
வெய்து இடையுறாஅது எய்தி முன்னர்ப்
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்  15
செல் விருந்து ஆற்றித் துச்சில் இருத்த
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுக மன்னே.

பாடல் பின்னணி:  மகட்போக்கிய தாய் சொல்லியது.

பொருளுரை:  கொடிய வாயினால் பேசி, பழித் தூற்றுதலை விரும்பும் புறங்கூறும் பெண்கள், தாய் மகிழ்வாள் ஆயினும், ஆத்திரம் அடைவாள் ஆயினும், தானே அவள் உணரட்டும் என்று எண்ணாது, பல நாட்களாக ‘உன் மகள் இவ்வாறு உள்ளாள்’ என்று என்னிடம் உரைத்தார்கள்.  நான் அந்தச் செய்தியை என் மகளிடம் கூறவில்லை.  அவள் நாணம் அடைவாள் என்று மிகவும் மறைத்து விட்டேன்.  தன்னுடைய தாய், தன் களவு ஒழுக்கத்தைப் பற்றி அறிந்தால், இங்கு வாழ்வது கடினம் என்று எண்ணி, என்னைத் தனியே இந்த வெற்று மனையில் விட்டு விட்டு, வீரக் கழல்களைக் காலில் அணிந்த, ஒளியுடைய நீண்ட வேலையுடைய இளைஞனைப் பின்பற்றிப் பல மலைகளையுடைய பாலை நிலத்தின் வழியே சென்று விட்டாள் என் மகள்.  நான் அத்தன்மை உடையவளாக அல்லாது நல்ல உண்மையாகத் தோன்றும் பொருட்டு, விலங்குகள் நடந்து உண்டாக்கிய மலை அடிவாரத்தில் உள்ள பின்னியப் பாதையில், தீங்கு உண்டாகாதவாறு அவர்களுக்கு முன்னமே சென்று சேர்ந்து, பொலிவற்ற பெரிய மலையைச் சார்ந்த தனிமையான சிறிய ஊரில், அவர்கள் இருவரையும் விருந்தினராய் ஏற்று, அவர்களுக்கு உணவைக் கொடுத்துத் தங்குவதற்குத் தனியிடம் கொடுத்து, முனைகள் (நுனிகள்) தளிர்க்கப்பெற்று அசைந்தாடும் நொச்சி மரங்கள் சூழ்ந்த இல்லத்தின் பெண்ணாக நான் ஆவேனாக!

குறிப்பு:  மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விலங்குகள் இயங்குதலால் உண்டான சிறிய வழிகள், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – விலங்குகள் செல்லும் பின்னிக் கிடக்கும் சிறிய நெறிகளில்.  ஒப்புமை:  அகநானூறு 168 – மான் அதர்ச் சிறு நெறி, அகநானூறு 203 – மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி, அகநானூறு 318 – கான மான் அதர் யானையும் வழங்கும், அகநானூறு 388 – காட்டு மான் அடிவழி ஒற்றி.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  இடையுறாஅது – அளபெடை.

சொற்பொருள்:  உவக்குநள் ஆயினும் – மகிழ்வாள் ஆயினும், உடலுநள் ஆயினும் – ஆத்திரம் கொள்வாள் ஆயினும், யாய் அறிந்து உணர்க என்னார் – தாய் அறிந்து உணரட்டும் என்று எண்ணாதவர்கள், தீ வாய் – தீயச் சொற்கள், அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர் – பழித் தூற்றுதலையே விரும்பும் புறங் கூறும் பெண்கள், இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள் எனக்கு வந்து உரைப்பவும் – உன் மகள் இவ்வாறு உள்ளாள் என்று பல நாட்கள் என்னிடம் கூறவும், தனக்கு உரைப்பு அறியேன் – நான் அவளிடம் கூறவில்லை, நாணுவள் இவள் என – இவள் நாணம் அடைவாள் என்று, நனி கரந்து உறையும் – மிகவும் மறைந்து இருக்கும், யான் இவ் வறுமனை ஒழிய – இந்த வெற்று இல்லத்தில் நான் தனித்து இருக்க விட்டு, தானே – அவளே, அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை எனக்கு எளிது ஆகல் இல் என – தாய் என்னுடைய களவு ஒழுக்கத்தை அறிந்தால் இங்கு வாழ்க்கை எளியதாக இருக்காது என்று, கழல் கால் – வீரக் கழல்களை அணிந்த கால்கள், மின் ஒளிர் நெடு வேல் – மின்னலைப் போன்ற ஒளியுடைய நீண்ட வேல், இளையோன் – இளைஞன், முன்னுற – முன்னே செல்ல, பன் மலை அருஞ்சுரம் போகிய தனக்கு – பல மலைகளையுடைய பாலை நிலத்தின் வழியே சென்ற அவளுக்கு, யான் அன்னேன் அன்மை – நான் அத்தன்மை உடையவளாக அல்லாது, நன் வாய்யாக – நல்ல உண்மையாகத் தோன்றும் பொருட்டு, மான் – விலங்குகள், அதர் மயங்கிய – பின்னியப் பாதைகள், மலை முதல் – மலையடி, சிறு நெறி – சிறிய பாதை, வெய்து இடையுறாஅது – துன்பம் நிகழாது, எய்தி – சேர்ந்து, முன்னர் – முன்னர், புல்லென் மா மலை – பொலிவு அற்ற பெரிய மலை, புலம்பு கொள் – தனிமை உடைய, சீறூர் – சிறிய ஊர், செல் விருந்து ஆற்றி – வருகின்ற விருந்தாக ஏற்று அவர்களுக்கு உணவுக் கொடுத்து, துச்சில் இருத்த – தனியிடத்தில் இருக்கச் செய்து, நுனை குழைத்து அலமரும் நொச்சி மனை கெழு பெண்டு யான் ஆகுக – முனைகள் (நுனிகள்) தளிர்க்கப்பெற்று அசைந்தாடும் நொச்சி மரங்கள் சூழ்ந்த இல்லத்தின் பெண்ணாக நான் ஆவேனாக, மன் – ஒழியிசை, ஏ – அசை நிலை

அகநானூறு 204, மதுரைக் காமக்கனி நப்பாலத்தனார்முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடைக்,
கடல் போல் தானைக் கலிமா வழுதி
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச்
சென்று வினை முடித்தனம் ஆயின், இன்றே
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில்  5
கணங்கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி
மணங்கமழ் முல்லை மாலை ஆர்ப்ப,
உதுக்காண் வந்தன்று பொழுதே வல் விரைந்து
செல்க பாக நின் நல் வினை நெடுந்தேர்
வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை 10
பன் மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித்
தண்டலை கமழும் கூந்தல,
ஒண்தொடி மடந்தை தோள் இணை பெறவே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது.

பொருளுரை:  பாகனே! உலகத்துக்கெல்லாம் நிழல் கொடுத்த கெடாத வெண்குடையையும், கடல் போன்ற சேனையையும், செருக்கிய குதிரைகளையும் உடைய பாண்டியன் போரில் முயன்று வென்ற அகன்ற பெரிய பாசறையின்கண் சென்று, வினையை வெற்றிபெற முடித்தோம் ஆதலினால், கார்காலத்தின் மழையை ஏற்றுக்கொண்டு தழைத்த இனிய காட்டில், கூட்டம் கூட்டமாக வரும் அழகிய சிறையையுடைய வண்டின் தொழுதி மணம் வீசும் முல்லை மலர்களில் மாலைக் காலத்தில் ஆரவாரிக்கும் காலம் வந்துவிட்டது. இப்பொழுதே பெரிதும் விரைந்து செல்லுவாயாக உனது நல்ல தொழில் திறம் அமைந்த நீண்ட தேரினை, வெண்ணெல்லை அறுப்பவர்கள் தோல் மடங்கிய வாயையுடைய தண்ணுமை முரசின் ஒலியினால் பல மலர்களையுடைய பொய்கையில் பொருந்திய நெல்லைக் கவர வரும் பறவைகளை விரட்டும் விளைந்த நெற்கதிர்களையுடைய வயல்களையும் தோட்டங்களையுமுடைய வாணனது சிறுகுடியில் உள்ள சோலை என மணக்கும் கூந்தலையுடைய, ஒளி பொருந்திய வளையலை அணிந்த என் தலைவியின் தோளை நான் அணைப்பதற்கு.

குறிப்பு:  6 பாடல்களில் சிறுகுடி என்ற சொல் ஓர் ஊரினைக் குறிக்கின்றது – அகநானூறு 54-14 (பண்ணன்), அகநானூறு 117-18 (வாணன்), அகநானூறு 204-12 (வாணன்), அகநானூறு 269-22 (வாணன்), நற்றிணை 340-9 (வாணன்), நற்றிணை 367-6 (அருமன்).  பிற இடங்களில் சிறிய குடியிருப்பை அல்லது சிறிய ஊரைக் குறிக்கின்றது.  வரலாறு:  வழுதி (பாண்டிய மன்னன்), வாணன், சிறுகுடி.

சொற்பொருள்:  உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடை – உலகத்துக்கெல்லாம் நிழல் கொடுத்த கெடாத வெண்குடை, கடல் போல் தானைக் கலிமா வழுதி – கடல் போன்ற சேனையையுடைய செருக்கிய குதிரைகளையுடைய பாண்டியன், வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச் சென்று – போரில் முயன்று வென்ற அகன்ற பெரிய பாசறையின்கண் சென்று, வினை முடித்தனம் ஆயின் – வினையை வெற்றிபெற முடித்தோம் ஆதலினால், இன்றே – இப்பொழுதே, கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில் – கார்காலத்தின் மழையை ஏற்றுக்கொண்டு தழைத்த இனிய காட்டில், கணங்கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி – கூட்டம் கூட்டமாக வரும் அழகிய சிறையையுடைய வண்டின் தொழுதி, மணங்கமழ் முல்லை மாலை ஆர்ப்ப – மணம் வீசும் முல்லை மலர்களில் மாலைக் காலத்தில் ஆரவாரிக்க, உதுக்காண் – அங்கே காண்பாயாக, வந்தன்று பொழுதே – கார்காலம் வந்துவிட்டது, வல் விரைந்து செல்க பாக – பெரிதும் விரைந்து செல்லுவாயாக பாகனே, நின் நல் வினை நெடுந்தேர் – உனது நல்ல தொழில் திறம் அமைந்த நீண்ட தேர், வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை பன் மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும் – வெண்ணெல்லை அறுப்பவர்கள் தோல் மடங்கிய வாயையுடைய தண்ணுமை முரசின் பல மலர்களையுடைய பொய்கையில் பொருந்திய நெல்லைக் கவர வரும் பறவைகளை விரட்டும், காய் நெல் படப்பை – விளைந்த நெற்கதிர்களையுடைய வயல்களையும் தோட்டங்களையுமுடைய, வாணன் சிறுகுடித் தண்டலை கமழும் கூந்தல – வாணனது சிறுகுடியில் உள்ள சோலை என மணக்கும் கூந்தலையுடைய, ஒண்தொடி மடந்தை தோள் இணை பெறவே – ஒளி பொருந்திய வளையலை அணிந்த தலைவியின் தோளை அணைப்பதற்கு

அகநானூறு 216, ஐயூர் முடவனார்மருதத் திணை – பரத்தை தன் தோழியிடம் சொன்னதுதலைவியின் தோழியர் கேட்கும்படி
நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள்
தான் புனல் அடைகரைப்படுத்த வராஅல்
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்
தண் துறை ஊரன் பெண்டிர், எம்மைப்  5
பெட்டாங்கு மொழிப என்ப, அவ்வலர்
பட்டனம் ஆயின் இனியெவன் ஆகியர்,
கடலாடு மகளிர் கொய்த ஞாழலும்,
கழனி உழவர் குற்ற குவளையும்,
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு  10
பல் இளம் கோசர் கண்ணி அயரும்
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல்
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய
பெருங்களிற்று எவ்வம் போல,  15
வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே.

பாடல் பின்னணி:  தலைவியின் தோழியர் கேட்கும்படியாக தன் தோழியரிடம் பரத்தைக் கூறியது.

பொருளுரை:  கயிற்றைக் கொண்ட நுண்ணிய தூண்டிலால் மீனைப் பிடிக்கும் பாணரது மகள், நீர் அடைந்த கரையில் இழுத்துப்போட்ட வரால் மீனை பன்னாடையினால் அரிக்கப்பட்ட கள்ளை உண்டு களித்திருந்த தன் தந்தைக்கு, வஞ்சி மரத்தின் விறகால் சுட்டு வாயில் உண்பிக்கும் குளிர்ந்த துறையையுடைய ஊரனின் மனைவி, எம்மை தாம் விருப்பியவாறெல்லாம் பழி தூற்றுகின்றாள் என்கின்றனர்.  அத்தகைய பழிக்கு நாம் ஆளாகிவிட்டோம் என்றால் இனி என்ன நிகழ்ந்தாலும் நிகழ்க.  கடலில் நீராடும் பெண்கள் கொய்த புலிநகக் கொன்றை மலர்களையும், வயலில் உழுபவர்கள் கொய்த குவளை மலர்களையும், காவல் காட்டில் மலர்ந்த முல்லை மலர்களுடன் பல இளைய கோசர்கள் கண்ணியாகக் கட்டி விளையாடும், மிக்க வளம் பொருந்திய செல்லூர் மன்னனான ஆதன் எழினி பகைவர் மீது எறியும்பொழுது சிதையாத சுரை செறிந்த வெள்ளை வேல், தனது மார்பில் பாய்ச்சப்பட்ட பெரிய களிற்று யானையின் துன்பம் போல வருந்துவாள் தலைவி, அவளுடைய தெருவிற்கு நாம் சென்றால்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஞாழல், குவளை, முல்லை என வந்தமையால் திணைமயக்கமாம்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதன்கண் ஞாழல், குவளை, முல்லை என வந்தமை திணை மயக்கமாம்.  பெண்டிர் (5) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பெண்டிர்கள், தலைமகளும் அவள் தோழியரும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெண்டிர் என்பது செறலால் ஒருமையைப் பன்மையாகக் கூறியபடியாம்’.  அகநானூறு 76, 276 மற்றும் ஐங்குறுநூறு 40 ஆகியவற்றிலும் இத்தகைய சூழ்நிலைகளை நாம் காணலாம்.  ஒப்புமை:  பாணரும் மீனும் – அகநானூறு 196 – வராஅல் துடிக் கண் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடி வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து, அகநானூறு 216 – நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள், ஐங்குறுநூறு 47 – முள் எயிற்றுப் பாண் மகள் இன் கெடிறு சொரிந்த, ஐங்குறுநூறு 48 – வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த, ஐங்குறுநூறு 49 – பாண்மகள் சில் மீன் சொரிந்து,  ஐங்குறுநூறு 111 – பாணன் சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇச் சினைக் கயல் மாய்க்கும், புறநானூறு 348 – மீன் சீவும் பாண் சேரி, மதுரைக்காஞ்சி 269 – மீன் சீவும் பாண் சேரியொடு, பெரும்பாணாற்றுப்படை 284-285 – கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ.  வரலாறு:  கோசர், செல்லிக் கோமான்(செல்லூர் மன்னன்), ஆதன் எழினி.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  வராஅல் – அளபெடை, எம்மை – தன்மைப் பன்மை, வருந்துப – படர்க்கைப் பன்மை,

சொற்பொருள்:  நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள் – கயிற்றைக் கொண்ட நுண்ணிய தூண்டிலால் மீனைப் பிடிக்கும் பாணரது மகள், தான் – அசை நிலை, புனல் அடைகரைப்படுத்த வராஅல் – நீர் அடைந்த கரையில் இழுத்துப்போட்ட வரால் மீன், நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு – பன்னாடையினால் அரிக்கப்பட்ட கள்ளை உண்டு களித்திருந்த தன் தந்தைக்கு, வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும் – வஞ்சி மரத்தின் விறகால் சுட்டு வாயில் உண்பிக்கும், தண்துறை ஊரன் – குளிர்ந்த துறையையுடைய ஊரன், பெண்டிர் – மனைவி, எம்மைப் பெட்டாங்கு மொழிப என்ப – எம்மை தாம் விருப்பியவாறெல்லாம் பழி தூற்றுகின்றாள் என்பார்கள், அவ்வலர் பட்டனம் ஆயின் இனியெவன் ஆகியர் – அத்தகைய பழிக்கு நாம் ஆளாகிவிட்டோம் என்றால் இனி என்ன நிகழ்ந்தாலும் நிகழ்க, கடலாடு மகளிர் கொய்த ஞாழலும் – கடலில் நீராடும் பெண்கள் கொய்த புலிநகக் கொன்றை மலர்களும், கழனி உழவர் குற்ற குவளையும் – வயலில் உழுபவர்கள் கொய்த குவளை மலர்களையும், கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு – காவல் காட்டில் மலர்ந்த முல்லை மலர்களுடன், பல் இளம் கோசர் கண்ணி அயரும் – பல இளைய கோசர்கள் கண்ணியாகக் கட்டி விளையாடும், மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் – மிக்க வளம் பொருந்திய செல்லூர் மன்னன், எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல் ஆதன் எழினி – ஆதன் எழினி பகைவர் மீது எறியும்பொழுது சிதையாத சுரை செறிந்த வெள்ளை வேல், அரு நிறத்து அழுத்திய பெருங்களிற்று எவ்வம் போல வருந்துப – தனது மார்பில் பாய்ச்சப்பட்ட பெரிய களிற்று யானையின் துன்பம் போல வருந்துவார், மாது – அசை நிலை, அவர் சேரி யாம் செலினே – அவருடைய தெருவிற்கு நாம் சென்றால்

அகநானூறு 225, எயினந்தை மகனார் இளங்கீரனார்பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும்,
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,
இன்றே இவணம் ஆகி, நாளைப்
புதல் இவர் ஆடு அமைத் தும்பி குயின்ற  5
அகலா அம் துளை கோடை முகத்தலின்
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல்
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ்சுரத்து,
யாத்த தூணித்தலை திறந்தவை போல்  10
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர்
கழல் துளை முத்தின் செந்நிலத்து உதிர,
மழை துளி மறந்த அங்குடிச் சீறூர்ச்
சேக்குவம் கொல்லோ நெஞ்சே, பூப் புனை
புயல் என ஒலிவரும் தாழ் இருங்கூந்தல்  15
செறி தொடி முன் கை நம் காதலி
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?

பாடல் பின்னணி:  பொருளீட்டத் தூண்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.

பொருளுரை:  என் நெஞ்சே! அன்பும், மடனும், மென்மையும், ஒழுக்கமும், எலும்பை நெகிழ்விக்கும் சொல்லும், ஏனையவும் தலைவியுடன் ஒன்றுபட்டுள்ள நல்ல கொள்கையுடன் ஒன்றிக் கலந்து இன்று இவ்வாறு ஆகி, நாளை புதர்கள் பரவிய இடத்தில் உள்ள அசையும் மூங்கிலில் வண்டு துளைத்த குறுகிய அழகிய மேல்காற்று புகுந்து வருதலால் நீர்பருகச் செல்லும் ஆநிரைக்குப் பின்னே வரும் நீண்ட கோலினையுடைய ஆயர்கள் தங்கள் குழலில் இசைக்கும் இசையைப் போன்று ஒலிக்கும் தேக்கு மரங்கள் நிறைந்த சோலைகளையுடைய, காடு உயர்ந்த அரிய பாலை நிலத்தில், அம்புக்கூடுகள் மூடி திறந்தவைப் போலப் பூத்த இருப்பை மரத்தின் தளிர் பொதியப்பட்ட குவிந்த பூங்கொத்துக்கள் கழன்று துளையுடைய முத்துக்களைப் போன்று செந்நிலத்தில் உதிர, மழையை மறந்த அழகிய சிற்றூரைச் சென்று அடைவோமா, பூவால் ஒப்பனை செய்யப்பட்ட முகிலை ஒத்த தழைத்து தாழ்ந்த கரிய கூந்தலையும், முன் கையில் நெருங்கின வளையல்களையும் உடைய நம்முடைய காதலியின் அறிவு கலங்கிய பார்வையினையும் ஊடலையும் எண்ணி?

குறிப்பு:  நூல் அறுந்த முத்து வடம்– அகநானூறு 225 – துளை முத்தின் செந்நிலத்து உதிர, அகநானூறு 289 – நெகிழ் நூல் முத்தின், குறுந்தொகை 51 – நூல் அறு முத்தின், குறுந்தொகை 104 – நூல் அறு முத்தின், கலித்தொகை 82 – கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  மடன் – மடம் என்பதன் போலி, கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், முத்தின் – ஒப்புப்பொருளில் வந்தது.

சொற்பொருள்:  அன்பும் மடனும் சாயலும் இயல்பும் என்பு நெகிழ்க்கும் கிளவியும் – அன்பும் மடனும் மென்மையும் ஒழுக்கமும் எலும்பையும் நெகிழ்விக்கும் சொல்லும், பிறவும் – ஏனையவும், ஒன்றுபடு கொள்கையொடு – தலைவியுடன் ஒன்றுபட்டுள்ள நல்ல கொள்கையுடன், ஓராங்கு முயங்கி – ஒன்றிக் கலந்து, இன்றே இவணம் ஆகி – இன்று இவ்வாறு ஆகி, நாளை – நாளைப்பொழுதில், புதல் இவர் ஆடு அமை – புதர்கள் பரவிய இடத்தில் உள்ள அசையும் மூங்கில், தும்பி குயின்ற அகலா அம் துளை கோடை முகத்தலின் – வண்டு துளைத்த குறுகிய அழகிய மேல்காற்று புகுந்து வருதலால் (இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – புகுந்து வருதலின்), நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை – நீர் பருகச் செல்லும் ஆநிரைக்கு பின்னே வரும், வார் கோல் ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும் – நீண்ட கோலினையுடைய ஆயர்கள் தங்கள் குழலில் இசைக்கும் இசையைப் போன்று ஒலிக்கும், தேக்கு அமல் சோலை – தேக்கு மரங்கள் நிறைந்த சோலை, கடறு ஓங்கு அருஞ்சுரத்து யாத்த தூணித்தலை திறந்தவை போல் – காடு உயர்ந்த அரிய பாலை நிலத்தில் அம்புக்கூடுகள் மூடி திறந்தவைப் போல, பூத்த இருப்பைக் குழை – பூத்த இருப்பை மரத்தின் தளிர், பொதி குவி இணர் – பொதியப்பட்ட குவிந்த பூங்கொத்துக்கள், கழல் துளை முத்தின் செந்நிலத்து உதிர – கழன்று செந்நிலத்தில் விழுகின்ற துளையுடைய முத்துக்களைப் போன்று, மழை துளி மறந்த அங்குடிச் சீறூர்ச் சேக்குவம் கொல்லோ – மழையை மறந்த அழகிய சிற்றூரைச் சென்று அடைவோமோ, நெஞ்சே – என் நெஞ்சே, பூப் புனை புயல் என ஒலிவரும் தாழ் இருங்கூந்தல் – பூவால் ஒப்பனை செய்யப்பட்ட முகிலை ஒத்த தழைத்து தாழ்ந்த கரிய கூந்தல், செறி தொடி – நெருங்கின வளையல்கள், முன் கை – முன் கை, நம் காதலி – நம்முடைய காதலி, அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே – அறிவு கலங்கிய பார்வையினையும் ஊடலையும் எண்ணி

அகநானூறு 230, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்நெய்தற் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர்ப்
பெருந்தண் மாத்தழை இருந்த அல்குல்,
ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று,
மை ஈர் ஓதி வாணுதல் குறுமகள்,  5
விளையாட்டு ஆயமொடு, வெண் மணல் உதிர்த்த
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு
மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம்
இம்மனைக் கிழமை எம்மொடு புணரின்
தீதும் உண்டோ, மாதராய், எனக்  10
கடும் பரி நல் மான் கொடிஞ்சி நெடுந்தேர்
கை வல் பாகன் பையென இயக்க,
யாம் தற்குறுகினமாக, ஏந்து எழில்
அரி வேய் உண்கண் பனிவரல் ஒடுக்கிச்,
சிறிய இறைஞ்சினள் தலையே,  15
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே.

பாடல் பின்னணி:  தலைவியைக் கண்ணுற்று நீங்கும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

பொருளுரை:   பெரிய உப்பங்கழியின் அருகில், கடல் நீரினால் மலர்ந்த கரிய, பெரிய, கண்களைப் போன்ற மலர்களுடன் கூடிய பெரிய குளிர்ந்த தழையுடை அணிந்த அல்குலையும், மென்மையான தேமலையும், கூர்மையான பற்களையும், கருமையான எண்ணெய்த் தேய்த்த கூந்தலையையும், ஒளியுடைய நெற்றியையுமுடைய இளம் பெண் தன் விளையாட்டுத் தோழியருடன் இருந்தாள். விரைந்துச் செல்லும் நல்ல குதிரைகளைப் பூண்ட கொடிஞ்சியுடைய உயர்ந்த தேரினை கைத் திறமை மிக்க பாகன் மெதுவாக இயக்க, நான் அவளை அணுகி கேட்டேன், “வெள்ளை மணலில் உதிர்ந்த நுண்ணிய தாதினை பொன்னினைப் போல் முகந்து என்னுடன் உரிமையில் சேர்ந்து இல்லறம் நடத்துவாயாயின் தீமை ஏதேனும் உண்டா பெண்ணே?” என்று.  தன்னுடைய மிக அழகிய வரியுடைய மையிட்டு கண்களில் தோன்றிய கண்ணீரை மறைத்து, சிறிது தலை குனிந்தாள் அவள். நான் பெருந்துன்பத்தில் ஆழ்ந்தேன்.

குறிப்பு:  ஒப்புமை:  அகநானூறு 110 – தட மென் பணைத்தோள் மட நல்லீரே எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன் மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு யானும் இக் கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?  ஐய (4) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பெயரெச்சக் குறிப்பு, வினையெச்சக் குறிப்பாக்கி மென்மையவாக அரும்பிய என்று உரைத்தலுமாம்.

சொற்பொருள்:   உறு கழி மருங்கின் – பெரிய உப்பங்கழியின் அருகில், ஓதமொடு மலர்ந்த சிறு கரு நெய்தல் – கடல் நீரினால் மலர்ந்த கரிய நெய்தல் மலர்கள், கண் போல் மா மலர் – கண்களைப் போன்ற பெரிய மலர்கள், பெருந்தண் மாத் தழை இருந்த அல்குல் – பெரிய குளிர்ச்சியான பெரிய தழையை அணிந்த அல்குல், ஐய அரும்பிய சுணங்கின் – மென்மையான தேமலை உடைய, வை எயிற்று – கூர்மையான பற்களையுடைய, மை ஈர் ஓதி – கருமையான எண்ணெய்த் தேய்த்த கூந்தல், வாணுதல் குறுமகள் – ஒளியுடைய நெற்றியுடைய இளம் பெண், விளையாட்டு ஆயமொடு – தன் விளையாட்டு தோழியருடன், வெண் மணல் உதிர்த்த புன்னை நுண் தாது – வெள்ளை மணலில் உதிர்ந்த நுண்ணிய தாது, பொன்னின் – பொன்னினைப் போல், நொண்டு – முகந்து, மனை புறந்தருதி ஆயின் – இல்லறம் நடத்துவாயாயின், எனையதூஉம் இம்மனைக் கிழமை எம்மொடு புணரின் – இல்லற உரிமையில் என்னுடன் பொருந்துவாய் ஆயின்,  தீதும் உண்டோ – தீமை உண்டா, மாதராய் – பெண்ணே, என – என்று, கடும் பரி நல் மான் – விரைந்துச் செல்லும் நல்ல குதிரைகள், கொடிஞ்சி – தேரின் அலங்கார அங்கம், நெடுந்தேர் – உயர்ந்த தேர், கை வல் பாகன் பையென இயக்க – கைத் திறமை மிக்க பாகன் தேரினை மெதுவாக இயக்க, யாம் தற் குறுகினமாக – நான் அவளை அனுகினேனாக, ஏந்து எழில் அரி வேய் உண்கண் – மிக அழகிய வரியுடைய மையிட்டு கண்கள், பனிவரல் ஒடுக்கி – கண்ணீர் வருதலை மறைத்து, சிறிய இறைஞ்சினள் தலையே – சிறிது தலை குனிந்தாள், பெரிய எவ்வம் யாம் இவண் உறவே – பெரிய துன்பத்தை நான் இங்கு அடைய

அகநானூறு 232, கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
காண் இனி வாழி தோழி! பானாள்
மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின்
மாஅல் யானை, புலி செத்து வெரீஇ,
இருங்கல் விடரகம் சிலம்பப் பெயரும்
பெருங்கல் நாடன் கேண்மை, இனியே,  5
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்,
மன்ற வேங்கை மண நாள் பூத்த
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய்
வியல் அறை வரிக்கும் முன்றில், குறவர்
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும்  10
ஆர்கலி விழவுக் களம் கடுப்ப, நாளும்
விரவுப்பூம் பலியொடு விரைஇ, அன்னை
கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி,
முருகு என வேலன் தரூஉம்,
பருவமாகப் பயந்தன்றால் நமக்கே.  15

பாடல் பின்னணி:  களவு ஒழுக்கத்தின்கண் விருப்பம் கொண்டு வரையாது ஒழுகும் தலைவனுக்கு, அன்னை அறிந்ததையும், தலைவிக்கு காவல் மிகுந்தமையும், வெறியாடல் தொடங்குதலும் அறிவுறுத்தற் பொருட்டுத் தோழி கூறியது.  வரைவு கடாயது.

குறிப்பு:  முதிர் மகளிரொடு (10) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஆடுதல் வல்ல மகளிரோடு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முதிய மகளிரோடு.  விரைஇ (12) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பொருந்தி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – விரைந்து.  உள்ளுறை: பொ. வே. சோமசுந்தரனார் உரை – முகில் முழக்கத்தை புலி முழக்கம் என்று கருதி யானை அஞ்சி ஓடும் என்றது நம் சுற்றத்தார் இனியவே பேசுவாராகவும் நம் பெருமான் அவர் மகட்கொடை மறுத்து இன்னாதன கூறுவரோ என்று அஞ்சி இரவிலே நாள்தோறும் வந்து வந்து ஓடி விடுகின்றான்.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார்வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேல் என்றார்.

பொருளுரை:  நான் கூறுவதை உணர்வாயாக தோழி! நடு இரவில் முழங்கும் இடியொலியைக் கேட்ட, மூங்கிலைத் தின்னும் பெரிய யானை ஒன்று அவ்வொலி புலியின் உறுமல் என்று எண்ணி அஞ்சி, பெரிய மலையின் குகைகளில் எதிரொலி செய்ய ஒலித்து ஓடும் பெரிய மலைகள் பொருந்திய நாடனுடைய நட்பு, இனி, குன்றுகளை வேலியாகக் கொண்ட சிற்றூரில் மன்றத்தில் உள்ள வேங்கை மரம் மண நாளில் பூத்த மணியை ஒத்த அரும்பின் பொன் நிறமான மலர்கள் அகன்ற பாறைகளில் விழுந்து அவற்றை அழகுபடுத்தும் இல்லத்தின் முற்றத்தில், மலையில் வாழ்பவர்கள் மனையில் உள்ள முதிய மகளிருடன் குரவை ஆட்டம் ஆடும் ஆரவாரம் மிக்க விழாக்களை ஒப்ப, நாள்தோறும், கலந்த பல வகை மலர்களுடன் பொருந்தி, அன்னை, காவல் பொருந்திய அகன்ற மனையின் காவலை எண்ணி, உன்னுடைய மெலிவு முருகனால் ஏற்பட்டது என்று எண்ணி, வேலனை அழைக்கும் பருவமாக அமைந்தது நமக்கு.

சொற்பொருள்:  காண் இனி வாழி தோழி – நான் கூறுவதை உணர்வாயாக தோழி, பானாள் மழை முழங்கு அரவம் கேட்ட – நடு இரவில் முழங்கும் இடியொலியைக் கேட்ட, கழை தின் மாஅல் யானை – மூங்கிலைத் தின்னும் பெரிய யானை, புலி செத்து வெரீஇ – புலி என்று எண்ணி அஞ்சி, இருங்கல் விடரகம் சிலம்பப் பெயரும் – பெரிய மலையின் குகைகளில் எதிரொலி செய்ய ஓடும், பெருங்கல் நாடன் கேண்மை – பெரிய மலைகள் பொருந்திய நாடனுடைய நட்பு, இனியே – இனி, குன்ற வேலிச் சிறுகுடி – குன்றுகளை வேலியாகக் கொண்ட சிற்றூர், ஆங்கண் – அங்கே, மன்ற வேங்கை மண நாள் பூத்த – மன்றத்தில் உள்ள வேங்கை மரம் மண நாளில் பூத்த, மணி ஏர் அரும்பின் – மணியை ஒத்த அரும்பினுடைய, பொன் வீ தாஅய் வியல் அறை வரிக்கும் – பொன் நிறமான மலர்கள் அகன்ற பாறைகளில் விழுந்து அவற்றை அழகுபடுத்தும், முன்றில் – முற்றத்தில், குறவர் – மலையில் வாழ்பவர்கள், மனை முதிர் மகளிரொடு – மனையில் உள்ள திறமை மிக்க மகளிருடன், மனையில் உள்ள முதிய மகளிருடன், குரவை தூங்கும் – குரவை ஆட்டம் ஆடும், ஆர்கலி விழவுக் களம் கடுப்ப – ஆரவாரம் மிக்க விழாக்களை ஒப்ப, நாளும் – நாள்தோறும், விரவுப் பூம் பலியொடு விரைஇ – கலந்த பல வகை மலர்களுடன் பொருந்தி, அன்னை – அன்னை, கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி – காவல் பொருந்திய அகன்ற மனையின் காவலை எண்ணி, முருகு என – முருகன் எனக் கருதி, வேலன் தரூஉம் – வேலனை அழைக்கும், பருவமாகப் பயந்தன்றால் நமக்கே – பருவமாக அமைந்தது நமக்கு

அகநானூறு 234, பேயனார்முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை,
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்,
நிரை பறை அன்னத்து அன்ன விரை பரிப்
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய
வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய  5
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்பக்,
கால் என மருள, ஏறி நூல் இயல்
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந்தேர்
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந,
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை  10
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள,
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத,
எல்லை போகிய புல்லென் மாலைப்
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர்,  15
கழிபடர் உழந்த பனி வார் உண்கண்
நல் நிறம் பரந்த பசலையள்
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

பொருளுரை:  தேரைச் செலுத்துவதில் வெற்றியுள்ள பாகனே!  முகில்கள் நீரைப் பொழிந்து நீர் வளம் மிக்கு விளங்குகின்ற இந்த நாளில், நுண்ணிய மணல் படர்ந்த குளிர்ந்த நீர் நிலையின் அருகில் வரிசையாக பறத்தலை உடைய அன்னப் பறவையை ஒத்த, விரைந்து ஓடும் புல்லிய பிடரி மயிரையுடைய செருக்கான குதிரைகளின் மென்மையாக பூட்டிய கடிவாள வாரினைப் பற்றி, பதிந்த பல ஆரங்களையுடைய உருளைகள் மென்மையான நிலத்தை அறுப்ப, காற்று என்று வியக்கும்படி, நூலின்படி இயற்றப்பட்ட, கண் பார்வையில் அமையாமல் விரைவாக ஓடுகின்ற, புனையப்பட்ட உயர்ந்த தேரினை மிக வேகமாக செலுத்துவாயாக, நெருங்கின தழையைத் தின்று வெறுத்த துள்ளும் நடையுடைய இளைய பெண்மான் தன்னுடைய ஆண் மானுடன் கூடி மகிழ்ச்சி உடையதாய் இடையூறு இன்றித் துள்ளித் திரிய, அழகிய சிறையையுடைய வண்டின் மென்மையான பறத்தலையுடைய கூட்டம் முல்லையின் நறுமணமுடைய மலர்களின் தாதினை விரும்பி ஊத, பகல் பொழுது கழிந்த புல்லிய மாலைப் பொழுதில், முல்லை நிலத்தைச் சார்ந்த உறைவதற்கு இனிமையான நல்ல ஊரில் உள்ள, மிக்க துன்பத்தால் வருந்திய, கண்ணீர் வடியும் மையிட்ட கண்களையும், நல்ல மேனியில் பரந்த பசலையுமுடைய என் தலைவியின் மின்னலை ஒத்த கூந்தலின் பிணிப்பு நீங்குவதற்கு.

குறிப்பு:  மின் நேர் ஓதி (18) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மின்னலை ஒத்த கூந்தல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மின்னல் போன்று மெலிந்த எம் காதலியின் கூந்தல்.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்,  (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  அன்னத்து – அன்னம், அத்து சாரியை, முனைஇய – அளபெடை, மதி – முன்னிலையசை.

சொற்பொருள்:  கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை – முகில்கள் நீரைப் பொழிந்து நீர் வளம் மிக்கு விளங்குகின்ற நாளில், நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின் – நுண்ணிய மணல் படர்ந்த குளிர்ந்த நீர் நிலையின் அருகில், நிரை பறை அன்னத்து அன்ன – வரிசையாக பறத்தலை உடைய அன்னப் பறவையை ஒத்த, விரை பரிப் புல் உளைக் கலி மா – விரைந்து ஓடும் புல்லிய பிடரி மயிரையுடைய செருக்கான குதிரைகள், மெல்லிதின் கொளீஇய வள்பு ஒருங்கு அமையப் பற்றி – மென்மையாக பூட்டிய கடிவாள வாரினைப் பற்றி, முள்கிய பல் கதிர் ஆழி – பதிந்த பல ஆரங்களையுடைய உருளை, மெல் வழி அறுப்ப – மென்மையான நிலத்தை அறுப்ப, கால் என மருள – காற்று என்று வியக்க, ஏறி – ஏறி, நூல் இயல் – நூலின்படி இயற்றப்பட்ட, கண் நோக்கு ஒழிக்கும் – கண் பார்வையில் அமையாமல் ஓடுகின்ற, பண் அமை நெடுந்தேர் – செய்யப்பட உயர்ந்த தேர், வல் விரைந்து – மிக வேகமாக, ஊர்மதி – செலுத்துவாயாக, நல் வலம் பெறுந – தேர் செலுத்துவதில் வெற்றியடைய பாகனே, ததர் தழை முனைஇய – நெருங்கின தழையைத் தின்று வெறுத்த, தெறி நடை மடப் பிணை – துள்ளும் நடையுடைய இளைய பெண்மான், ஏறு புணர் உவகைய – ஆண் மானுடன் கூடி மகிழ்ச்சி உடையதாய், ஊறு இல உகள – இடையூறு இன்றித் துள்ளித் திரிய, அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி – அழகிய சிறையையுடைய வண்டின் மென்மையான பறத்தலையுடைய கூட்டம், முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத – முல்லையின் நறுமணமுடைய மலர்களின் தாதினை விரும்பி ஊத, எல்லை போகிய புல்லென் மாலை – பகல் பொழுது கழிந்த புல்லிய மாலைப் பொழுது, புறவு அடைந்திருந்த – முல்லை நிலத்தைச் சார்ந்திருந்த, உறைவு இன் நல் ஊர் – உறைவதற்கு இனிமையான நல்ல ஊர், கழிபடர் உழந்த – மிக்க துன்பத்தால் வருந்திய, பனி வார் உண்கண் – கண்ணீர் வடியும் மையிட்ட கண்கள், நல் நிறம் பரந்த பசலையள் – நல்ல மேனியில் பரந்த பசலையுடைய என் தலைவி, மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே – மின்னலை ஒத்த கூந்தலின் பிணிப்பு நீங்க

அகநானூறு 247, மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை
நன் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்
அருளிலர், வாழி தோழி, பொருள் புரிந்து,
இருங்கிளை எண்கின் அழல்வாய் ஏற்றை
கருங்கோட்டு இருப்பை வெண்பூ முனையின்  5
பெருஞ்செம்புற்றின் இருந்தலை இடக்கும்
அரிய கானம் என்னார், பகை பட
முனை பாழ் பட்ட ஆங்கண் ஆள் பார்த்துக்
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும்
ஊறுபடு கவலைய ஆறு பல நீந்திப்,  10
படுமுடை நசைஇய பறை நெடுங்கழுத்தின்
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட  தலைவியின் வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைவி கூறியது.

பொருளுரை:  நீ நீடு வாழ்வாயாக தோழி! பொருளை விரும்பி, பெரிய சுற்றத்தையுடைய வெப்பமான வாயையுடைய ஆண் கரடி கரிய கிளைகளையுடைய இருப்பை மரத்தின் வெள்ளை மலர்களை வெறுத்ததால் ஈயலின் பெரிய செம்மண் புற்றின் மேல்பகுதியை உடைத்திடும் கொடிய காடு என்று நினையாராய், பகைமையுடன் போர் செய்வதால் சீறூர் பாழாகிய அவ்விடத்தில், ஆட்கள் வருவதை நோக்கி கொல்லுதலில் வல்ல யானை பாலை நிலத்தின் வழியைக் காவல்காத்துக் கொண்டிருப்பதால், இடையூறு மிகுந்த பிரிவுகள் உள்ள பல வழிகளைக் கடந்து, இறந்தவர்களின் ஊனை விரும்பும் நீண்ட கழுத்தினையுடைய பாறு மரக்கிளைகளில் தங்கி இருக்கும் உயர்ந்த உச்சியினையும் உயர்ந்த சிகரங்களையுடைய பக்க மலைகளும் உடைய மலையைக் கடந்து சென்ற நம் தலைவர், கழுவாத முத்துப்போன்ற கண்ணீர்த் துளிகள் ஒழுகும் அழகிய முலையுடைய என்னுடைய நல்ல மார்பு தனித்து வருந்தத் துறந்து சென்றவர் ஆதலின், அருள் இல்லாதவர்.

குறிப்பு:  ஒப்புமை:  கரடி இருப்பை மலரை உண்ணுதல் – அகநானூறு 15, 81, 95, 149, 171, 247, 267, 275, 331.  அகநானூறு 8, 72, 81, 88, 112, 149, 247, 257, 307 and நற்றிணை 125, 325 and 336 ஆகியவற்றில் கரடிகள் ஈயல் புற்றுக்களைத் தாக்குகின்றன.  நசைஇய – அளபெடை.

சொற்பொருள்:  மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை – கழுவாத முத்துப்போன்ற கண்ணீர்த்துளிகள் ஒழுகும் அழகிய முலை, நன் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர் அருளிலர் – நல்ல மார்பு தனித்து வருந்தத் துறந்து சென்றவர் அருள் இல்லாதவர், வாழி தோழி – நீடு வாழ்வாயாக தோழி, பொருள் புரிந்து – பொருளை விரும்பி, இருங்கிளை எண்கின் அழல்வாய் ஏற்றை – பெரிய சுற்றத்தையுடைய வெட்பமுடைய வாயையுடைய ஆண் கரடி, கருங்கோட்டு இருப்பை வெண்பூ முனையின் – கரிய கிளைகளையுடைய இருப்பை மரத்தின் வெள்ளை மலர்களை வெறுத்ததால், பெருஞ்செம்புற்றின் இருந்தலை இடக்கும் – பெரிய செம்மண் புற்றின் மேல்பகுதியை உடைத்திடும், அரிய கானம் என்னார் – கடிய காடு என்று எண்ணார், பகை பட முனை பாழ் பட்ட ஆங்கண் – பகைமையுடன் போர் செய்வதால் சீறூர் பாழாகிய அவ்விடத்தில், ஆள் பார்த்துக் கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும் – ஆட்கள் வருவதை நோக்கி கொல்லுதலில் வல்ல யானை பாலை நிலத்தின் வழியைக் காவல் கொண்டிருப்பதால், ஊறுபடு கவலைய ஆறு பல நீந்தி – இடையூறு மிகுந்த பிரிவுகள் உள்ள பல வழிகளைக் கடந்து, படுமுடை நசைஇய பறை நெடுங்கழுத்தின் பாறு – இறந்தவர்களின் ஊனை விரும்பும் நீண்ட கழுத்தினையுடைய பாறு, கிளை சேக்கும் – மரக்கிளைகளில் தங்கி இருக்கும், சேண் சிமைக் கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – உயர்ந்த உச்சியினையும் உயர்ந்த சிகரங்களையுடைய பக்க மலைகளும் உடைய மலையைக் கடந்து சென்ற நம் தலைவர்

அகநானூறு 259, கயமனார்பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
வேலும் விளங்கின, இளையரும் இயன்றனர்,
தாரும் தையின, தழையும் தொடுத்தன,
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப்
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்துக்
குறு முறி ஈன்றன மரனே, நறு மலர் 5
வேய்ந்தன போலத் தோன்றிப் பல உடன்
தேம்படப் பொதுளின பொழிலே, கானமும்
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழிநாள்
பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப்
போது வந்தன்று தூதே, நீயும்  10
கலங்கா மனத்தை ஆகி என் சொல்
நயந்தனை கொண்மோ, நெஞ்சு அமர் தகுவி,
தெற்றி உலறினும், வயலை வாடினும்,
நொச்சி மென்சினை வணர் குரல் சாயினும்,
நின்னினும் மடவள் நனி நின் நயந்த  15
அன்னை அல்லல் தாங்கி, நின் ஐயர்
புலி மருள் செம்மல் நோக்கி
வலியாய், இன்னும் தோய்க நின் முலையே.

பாடல் பின்னணி:  உடன்போக்கு நேர்ந்த தோழி தலைவியிடம் கூறியது.

பொருளுரை:  வேல்களும் திருத்தப் பெற்று விளங்குவன ஆயின. ஏவலாளரும் புறப்பட அமைந்து நின்றனர்.  மாலைகளும் கட்டப்பட்டன. தழை ஆடைகளும் தொடுக்கப்பட்டன.

நிலத்தில் நீர் இல்லாமையால் ஏற்பட்ட வெம்மை நீங்குமாறு பெய்த மழையை ஏற்றுத் தங்களுடைய உலர்ந்த இலைகளை நீக்கிச் சிறிய தளிர் இலைகளை ஈன்றன மரங்கள்.  நறுமணம் நிறைந்த மலர்களால் வேயப்பட்டது போலத் தோன்றி பலவும் தேன் பொருந்திச் செறிந்தன சோலைகள்.  காடுகள் மிகவும் நன்றாக உள்ளன.  பனிக்காலம் கழிந்த பின்னாகிய இளவேனில் காலத்தில் பால் எனப் பரவிய நிலாவைக் கொண்ட மாலைப் பொழுது தூதாக வந்தது.  நீயும் கலங்கா மனதுடையவளாக ஆகி நான் சொல்லுவதை விரும்பி கேட்பாயாக, என் உள்ளம் விரும்பும் தகுதியை உடையவளே!

மேட்டில் உள்ள மலர்கள் உலர்ந்தாலும், வயலைச் செடிகள் வாடினாலும், இல்லத்தில் உள்ள நொச்சி மரத்தின் வளைந்த கிளைகளில் உள்ள மலர் கொத்துக்கள் வாடினாலும், இவற்றையெல்லாம் நினையாதே. உன்னைக் காட்டிலும் மடப்பத்தை உடைய உன்னை மிகவும் விரும்பும் உன் அன்னையின் அல்லலையும் உன்னுடைய அண்ணன்மாரின் புலியை ஒத்த அச்சம் தரும் தலைமைத் தன்மையையும் நினைத்து கலங்காது, உன் தலைவனுடன் செல்வதற்குத் துணிவாயாக.

போகுமுன் உன்னுடைய முலைகள் என்னுடைய மார்பில் அழுந்தும்படி என்னைத் தழுவாயாக!

குறிப்பு:  வேய்ந்தன போலத் தோன்றி (4) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – புனையப்பட்டன போலத் தோன்றி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வேயப்பட்டன போல் காணப்பட்டு.  தலைஇ – அளபெடை, மரனே – மரன் மரம் என்பதன் போலி, ஏகாரம் அசை நிலை, மோ – முன்னிலையசை, தேம் தேன் என்றதன் திரிபு, மருள் – உவம உருபு.

சொற்பொருள்:  வேலும் விளங்கின – வேல்களும் திருத்தப் பெற்று விளங்குவன ஆயின, இளையரும் இயன்றனர் – ஏவலாளரும் புறப்பட அமைந்து நின்றனர், தாரும் தையின – மாலைகளும் கட்டப்பட்டன, தழையும் தொடுத்தன – தழை ஆடைகளும் தொடுக்கப்பட்டன, நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப் பெயல் நீர் தலைஇ – நிலத்தில் நீர் இல்லாமையால் ஏற்பட்ட வெம்மை நீங்குமாறு பெய்த மழையை ஏற்று, உலவை இலை நீத்துக் குறு முறி ஈன்றன மரனே – தங்களுடைய உலர்ந்த இலைகளை நீக்கிச் சிறிய தளிர் இலைகளை ஈன்றன மரங்கள், நறு மலர் வேய்ந்தன போலத் தோன்றி – நறுமணம் நிறைந்த மலர்களால் வேயப்பட்டது போலத் தோன்றி, பல உடன் தேம்படப் பொதுளின – பலவும் தேன் பொருந்திச் செறிந்தன, பொழிலே – சோலைகளில், கானமும் நனி நன்று ஆகிய – காடுகள் மிகவும் நன்றாக உள்ளன, பனி நீங்கு வழிநாள் – பனிக்காலம் கழிந்த பின்னாகிய இளவேனில், பால் எனப் பரத்தரும் நிலவின் – பால் எனப் பரவிய நிலாவைக் கொண்ட, மாலைப் போது வந்தன்று தூதே – மாலைப் பொழுது தூதாக வந்தது, நீயும் கலங்கா மனத்தை ஆகி என் சொல் நயந்தனை கொண்மோ – நீயும் கலங்கா மனதுடையவளாக ஆகி நான் சொல்லுவதை விரும்பி கேட்பாயாக, நெஞ்சு அமர் தகுவி – என் உள்ளம் விரும்பும் தகுதியை உடையவளே, தெற்றி உலறினும் – மேட்டில் உள்ள மலர்கள் உலர்ந்தாலும், வயலை வாடினும் – வயலைச் செடிகள் வாடினாலும், நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும் – இல்லத்தில் உள்ள நொச்சி மரத்தின் வளைந்த கிளைகளில் உள்ள மலர் கொத்துக்கள் வாடினாலும், நின்னினும் மடவள் – உன்னைக் காட்டிலும் மடப்பத்தை உடையவள், நனி நின் நயந்த அன்னை அல்லல் தாங்கி – உன்னை மிகவும் விரும்பும் உன் அன்னையின் துன்பத்தைத் தாங்கி, நின் ஐயர் புலி மருள் செம்மல் நோக்கி – உன்னுடைய அண்ணன்மாரின் புலியை ஒத்த அச்சம் தரும் தலைமைத் தன்மையை நினைத்து, வலியாய் – உன் தலைவனுடன் செல்வதற்குத் துணிவாயாக, இன்னும் தோய்க நின் முலையே – உன்னுடைய முலைகள் என்னுடைய மார்பில் அழுந்தும்படி என்னைத் தழுவாயாக

அகநானூறு 275, கயமனார்பாலைத் திணை – மகட்போக்கிய தாய் சொன்னது
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்திக்
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலைப் பந்து எறிந்து ஆடி
இளமைத் தகைமையை வளமனைக் கிழத்தி
பிதிர்வை நீரை பெண் நீறு ஆக என  5
யாம் தற் கழறுங்காலைத் தான் தன்
மழலை இன் சொல் கழறல் இன்றி
இன் உயிர் கலப்பக் கூறி நன்னுதல்
பெருஞ்சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்
ஏதிலாளன் காதல் நம்பித்  10
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
குருளை எண்கின் இருங்கிளை கவரும்
வெம்மலை அருஞ்சுரம் நம் இவண் ஒழிய
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி  15
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது என் மகள்
செம்புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ கண்  உடையீரே?

பாடல் பின்னணி:  மகட்போக்கிய நற்றாய் உரைத்தது.

பொருளுரை:  “வளம் பொருந்திய இல்லத்தின் செல்வியே ! உயர்ந்த நிலைத் தாழி நிறையப் பெய்து வைத்துப் பின் பனங் குடையினால் முகந்து அந்த நீரினைப் பெய்து வளர்த்த வயலைக்கொடிப் பந்தலின் கீழே, பந்தினை எறிந்து விளையாடும் இளமைத் தன்மையை உடையவளாய், திரியும் தன்மையுடையவளாக உள்ளாய் நீ. உன் பெண்மை அழிவதாக” என்று நான் கடிந்துக் கூறும் காலத்தில், தன்னுடைய மழலையான இனிய சொற்களால் என்னிடம் கடியச் சொற்கள் கூறாமல் இனிய உயிருடன் பொருந்தும்படி கூறும் அழகிய நெற்றியையுடையவள், பெருஞ்சோறு வழங்கும் எங்கள் இல்லத்தில் எம்முடன் இங்குக் கூடி இராதவளாய், பிறன் ஒருவன் பேசிய காதல் மொழிகளை நம்பி, திரண்ட அடியையுடைய இருப்பை மரத்தின் துளையுடைய வெள்ளை மலர்களைக் குட்டிக் கரடிகள் பெரும் கூட்டமாக உண்ணும் இடமான பாலை நிலத்தின் பெரிய நிலம் வெப்பம் தாங்காமல் அஞ்சி உயிர்க்கும் அல்லல் பொருந்திய காட்டிற்கு, நான் இங்கிருந்து வருந்தும்படி, நேற்றுச் சென்ற பெரிய மடப்பம் உடைய என் மகள், அகன்ற அல்குலில் அணியும் தழை ஆடைக்காகக் கொய்யும் இலைகளையுடைய குறிய நொச்சி மரத்தின் கீழே தன்னுடைய சிவந்த பக்கத்தையுடைய சிறு விறல்களால் இயற்றிய சிற்றில்லை நீங்கள் கண்டீர்களா, கண்கள் உடையவர்களே?

குறிப்பு:   பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகியதாக அகன்ற அல்குலிடத்தே தழையாகிய அணிக்குக் கொய்யும் குறிய நொச்சி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை –  மடப்பம் உடையவளுக்கு அழகியதாக அகன்ற அல்குலுக்குத் தழை அணிதற்குக் கொய்த குறிய நொச்சி.  ஒப்புமை:  கரடி இருப்பை மலரை உண்ணுதல் – அகநானூறு 15, 81, 95, 149, 171, 247, 267, 275, 331.

சொற்பொருள்:  ஓங்கு நிலைத் தாழி – உயர்ந்த நிலைத் தாழி, மல்கச் சார்த்தி – நிறையப் பெய்து வைத்து, குடை அடை நீரின் மடையினள் எடுத்த பந்தர் வயலை – பனங் குடையினால் முகந்து நீரினைப் பெய்து வளர்த்த வயலைக்கொடி படர்ந்த பந்தலில், பந்து எறிந்து ஆடி – பந்தினை எறிந்து விளையாடி, இளமைத் தகைமையை – இளமைத் தன்மையை உடையையாய், வளமனைக் கிழத்தி – வளம் பொருந்திய இல்லத்தின் செல்வியே, பிதிர்வை நீரை – திரியும் தன்மையுடையவளாக உள்ளாய், பெண் நீறு ஆக என யாம் தற் கழறுங்காலை – உன் பெண்மை அழிவதாக என்று நான் கடிந்துக் கூறும் காலத்தில், தான் தன் மழலை இன் சொல் – தன்னுடைய மழலையான இனியச் சொற்களால், கழறல் இன்றி – என்னிடம் கடிய சொற்கள் கூறாமல், இன் உயிர் கலப்பக் கூறி – இனிய உயிருடன் பொருந்தும்படி கூறி, நன்னுதல் – அழகிய நெற்றியையுடையவள், பெருஞ்சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள் – பெருஞ்சோறு வழங்கும் எங்கள் இல்லத்தில் எம்முடன் இங்கு கூடி இராதவளாய், ஏதிலாளன் காதல் நம்பி – பிறன் ஒருவன் பேசிய காதல் மொழிகளை நம்பி, திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக் குருளை எண்கின் இருங்கிளை கவரும் வெம்மலை அருஞ்சுரம் – திரண்ட அடியையுடைய இருப்பை மரத்தின் துளையுடைய வெள்ளை மலர்களை குட்டிக் கரடிகள் பெரும் கூட்டமாக உண்ணும் பாலை நிலத்திற்கு, நம் இவண் ஒழிய – நான் இவ்விடத்திலிருந்து வருந்தும்படி, இரு நிலன் உயிர்க்கும் – பெரிய நிலம் அஞ்சி பெருமூச்சு விடும், இன்னாக் கானம் – அல்லல் உடைய காடு, நெருநைப் போகிய – நேற்றுச் சென்ற, பெரு மடத் தகுவி – பெரிய மடப்பம் உடையவளும், ஐது அகல் அல்குல் – அழகிய அகன்ற அல்குல், தழை அணிக் கூட்டும் கூழை நொச்சிக் கீழது – தழை ஆடைக்காக கொய்யும் குறிய நொச்சி மரத்தின் கீழே, என் மகள் செம்புடைச் சிறு விரல் வரித்த வண்டலும் காண்டிரோ – என் மகள் தன்னுடைய சிவந்த பக்கத்தையுடைய சிறு விறல்களால் இயற்றிய சிற்றில்லை நீங்கள் கண்டீர்களா, கண் உடையீரே – கண்கள் உடையவர்களே

அகநானூறு 280, அம்மூவனார்நெய்தற் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
பன் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,
திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,
நலஞ்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும்,  5
பெறல் அருங்குரையள் ஆயின், அறம் தெரிந்து,
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு
இருநீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம் இருப்பின்,  10
தருகுவன் கொல்லோ தானே, விரி திரைக்
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்,
கானலம் பெருந்துறைப் பரதவன் எமக்கே?

பாடல் பின்னணி:  (1) தலைவியைக் கண்ணுற்று நீங்கும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  (2) அல்ல குறிப்பட்டுத் திரும்பும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

பொருளுரை:  பொன்னால் புனைந்த செருந்தியின் ஒளியுடைய கொத்துக்களாகிய பல மலர்கள் கொண்ட அழகான மாலையை அணிந்தவளும், மணல் நிறைந்த நீர் அடைந்த கரையில் நண்டுடன் விளையாடி இளைப்பாறி இருந்த அழகிய தொடியை அணிந்த இளையவளுமானத் தலைவி, நாம் நன்மைப் பொருந்தியப் பொன்னையும் மணியையும் கொடுத்தாலும் பெறுவதற்கு அரியவள் ஆனால், நாம் வாழும் நாட்டிலிருந்து விலகி வந்து, இங்கு அவனொடு கடற்கரையில் உப்புக்குவியலில் பணி புரிந்தாலும், அவனுடன் படகில் கடலுள் புகுந்தும், அவனுடன் நாம் மீன் வேட்டையாடினாலும், அவனுக்கு அடிபணிந்து நடந்தாலும், அவனுக்கு அருகில் இருந்தாலும், அறத்தினை உணர்ந்து அவளை எனக்குத் தருவானா, அகன்ற கடலிலிருந்து திரண்ட முத்துக்களைக் கொண்டு வந்து வண்டுகள் ஒலிக்கும் அகன்ற கடற்கரைச் சோலையில் அவற்றைப் பெரிய துறையின் மீனவனான அவளுடைய தந்தை?

குறிப்பு:  படுத்தனம் (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  அவனோடு மீன் வேட்டையாடி மீனை அகப்படுத்தும், வேங்கடசாமி நாட்டார்  உரை – அவன் வயமாகியும்.  விரி திரைக் கண் திரள் முத்தம் கொண்டு (11-12) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – விரிந்த கடலில் திரண்ட வடிவினையுடைய முத்துக்களைக் கொண்டு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – விரிந்த திரைக்கடலில் சென்று காண்போர் கண்ணொளி திரண்டு நோக்குதற்குக் காரணமான முத்துக்களை வாரிக் கொணர்ந்து.

சொற்பொருள்:  பொன் அடர்ந்தன்ன – பொன்னால் செய்த, ஒள் இணர்ச் செருந்திப் பன் மலர் வேய்ந்த – செருந்தியின் ஒளியுடைய கொத்துக்களாகிய பல மலர்கள் அணிந்த, நலம் பெறு கோதையள் – அழகான மாலையை அணிந்தவள், திணி மணல் – மணல் அடர்ந்த, அடைகரை – நீர் அடைந்த கரை, அலவன் ஆட்டி – நண்டுடன் விளையாடி, அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள் – இளைப்பாறி இருந்த அழகிய தொடியை அணிந்த இளைய பெண், நலஞ்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும் – நன்மை பொருந்திய பொன்னையும் மணியையும் கொடுத்தாலும், பெறல் அருங்குரையள் ஆயின் – பெறுவதற்கு அரியவள் ஆயின், அறம் தெரிந்து – அறம் அறிந்து, நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து – நாம் வாழும் நாட்டிலிருந்து விலகி வந்து, அவனொடு – அவனுடன், இரு நீர்ச் சேர்ப்பின் – கடற்கரையில், உப்புடன் உழுதும் – உப்புக்குவியலில் வேலை செய்தும், பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும் – அவனுடன் படகில் கடலுள் புகுந்தும், படுத்தனம் – அவனுடன் நாம் மீன் வேட்டையாடினாலும், பணிந்தனம் – அவனுக்கு அடிபணிந்து நடந்தாலும், அடுத்தனம் இருப்பின் – அவனுக்கு அருகில் இருந்தாலும், தருகுவன் கொல்லோ தானே – அவன் தருவானா, விரி திரைக்கண் திரள் முத்தம் கொண்டு – அகன்ற கடலிலிருந்து திரண்ட முத்துக்களை கொண்டு வந்து, ஞாங்கர் – அங்கு,தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும் கானலம் பெருந்துறைப் பரதவன் – வண்டுகள் ஒலிக்கும் அகன்ற கடற்கரைச் சோலையில் பகுக்கும் பெரிய துறையின் மீனவன், எமக்கே – எனக்கு

அகநானூறு 281, மாமூலனார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும்
அகலுள் ஆண்மை அச்சறக் கூறிய
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி
வான் போழ் வல்வில் சுற்றி நோன் சிலை  5
அவ்வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வியல்
கனை குரல் இசைக்கும் விரை செல் கடுங்கணை
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனி இருங்குன்றத்து  10
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து அவரோ சென்றனர்,
பறை அறைந்தன்ன, அலர் நமக்கு ஒழித்தே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட  தலைவியின் வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைவி கூறியது.

பொருளுரை:  செய்ய வேண்டியதை ஆராய்ந்து காண்பாயாகத் தோழி! தினமும் நம்முடைய பெரிய ஊரில் அவர் நமக்கு அச்சம் இல்லாது கூறிய சொற்கள் பொய்க்கும் என்று அஞ்சாமல், தளர்ந்து நடக்கும், மடப்பமுடைய மயில் உதிர்த்து விட்ட தோகையை நீண்ட பிளப்புகளையுடைய வலிய வில்லில் சுற்றி, அந்த வில்லின் அழகிய வார் விளிம்பில் பொருத்தி, மிக்க ஒலியுடன் விரைந்து செல்லும் கொடிய அம்புகளையுடைய செலுத்தும் மாறுபாடு மிக்க உடைய வடுகர் முன்னே வர, மோரியர் தெற்கில் உள்ள நாட்டைப் பற்ற வரும் பொருட்டு விண்ணளவு உயர்ந்த குளிர்ந்த பெரிய மலையில் ஒளியுடைய சக்கரங்கள் உருளுவதற்காகச் செதுக்கிய பாறைகளைக் கடந்து, நம் மீது பறையைக் கொட்டியதைப் போன்ற பழிச் சொற்கள் எழுமாறு தலைவர் சென்றார்.

குறிப்பு:  வான் போழ் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீண்ட பிளப்பு, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – நீண்ட வார்.  வரலாறு:  வடுகர், மோரியர்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  வடுகர் – ஒளவை துரைசாமி உரை புறநானூறு 278 – தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால் வடுகர் எனப்பட்டனர், பொ. வே. சோமசுந்தரனார் உரை அகநானூறு 213 – தெலுங்கர்.

சொற்பொருள்:  செய்வது தெரிந்திசின் தோழி – செய்ய வேண்டியதை ஆராய்ந்து காண்பாயாகத் தோழி, அல்கலும் – தினமும், அகலுள் – ஊரில், பெரிய இடத்தில், ஆங்கண் – அங்கு, அச்சற – அச்சம் இல்லாது, கூறிய சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது – கூறிய சொற்கள் பொய்க்கும் என்று அஞ்சாமல், ஒல்கு இயல் – ஒதுங்கி நடக்கும், தளர்ந்து நடக்கும், மட மயில் – மடப்பமுடைய மயில், ஒழித்த பீலி – உதிர்த்து விட்ட தோகை, வான் போழ் வல்வில் சுற்றி – நீண்ட பிளப்புகளையுடைய வலிய வில்லில் சுற்றி, நோன் சிலை – வலிய வில், அவ்வார்- அழகிய வார், விளிம்பிற்கு அமைந்த – விளிம்பிற்குப் பொருந்திய, நொவ்வு இயல் – விரைந்த தன்மை, கனை குரல் – மிக்க ஒலி, இசைக்கும் – ஒலிக்கும், விரை செல் கடுங்கணை – விரைந்து செல்லும் கொடிய அம்பு, முரண் மிகு வடுகர் – மாறுபாடு மிக்க உடைய வடுகர் (தெலுங்கர்), முன்னுற – முன்னே வர, மோரியர் தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு – மோரியர் தெற்கில் உள்ள நாட்டைப் பற்ற வரும் பொருட்டு, விண்ணுற ஓங்கிய – விண்ணளவு உயர்ந்த, பனி இருங்குன்றத்து – குளிர்ந்த பெரிய மலையில், ஒண் கதிர் திகிரி உருளிய – ஒளியுடைய சக்கரங்கள் உருளுவதற்காக, குறைத்த அறை – செதுக்கிய பாறை, இறந்து அவரோ சென்றனர் – அவர் கடந்து சென்றார், பறை அறைந்தன்ன – பறையைக் கொட்டியதைப் போல், அலர் நமக்கு ஒழித்தே – நமக்கு அலரைக் கொடுத்து

அகநானூறு 292, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கூறாய் செய்வது தோழி! வேறு உணர்ந்து,
அன்னையும் பொருள் உகுத்து அலமரும், மென் முறிச்
சிறு குளகு அருந்து தாய் முலை பெறாஅ
மறி கொலைப்படுத்தல் வேண்டி, வெறிபுரி
ஏதில் வேலன் கோதை துயல்வரத்  5
தூங்கும் ஆயின், அதூஉம் நாணுவல்,
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல், புலம் படர்ந்து
இரவின் மேயல் மரூஉம் யானைக்
கால்வல் இயக்கம் ஒற்றி, நடுநாள்
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன்  10
கடுவிசைக் கவணின் எறிந்த சிறு கல்,
உடுஉறு கணையின் போகிச், சாரல்
வேங்கை விரி இணர் சிதறித் தேன் சிதையூஉ,
பலவின் பழத்துள் தங்கும்
மலைகெழு நாடன் மணவாக்காலே.  15

பாடல் பின்னணி:  தாய் வேலனை அழைத்து வெறியாட்டம் நிகழ்த்த இருப்பதையும், அவன் இரவில் வரும் வழியின் ஏதம் குறித்துத் தான் வருந்துவதனையும் அவனுக்கு எடுத்துக் கூறும்பொருட்டு, அவன் கேட்பத் தோழியிடம் கூறியது.

பொருளுரை:  என்ன செய்வது என்று கூறுவாயாக என் தோழி! என் நிலைமையைத் தவறாக புரிந்துக் கொண்ட அன்னையும் கட்டுவிச்சி வேலன் முதலியோருக்கு வீணே பொருளைக் கொடுத்து, மனம் சுழலுகின்றாள். சிறிய இளந்தளிரை உண்ணும், தாய்ப் பாலைப் பெறாத ஆட்டுக்குட்டியைக் கொலை செய்வதற்கு விரும்பி, வெறியாட்டத்தை விரும்புகின்ற தொடர்பில்லாத வேலன் தன்னுடைய மலர்மாலை அசையும்படி வெறியாடுவான் ஆயின், அத்தகையை செயலுக்கு நான் நாணுகின்றேன்.

என்னுடைய ஒளியுடைய வளையல்கள் நெகிழும்படியான துன்பத்தைக் கண்டு, தன்னுடைய தினைப் புனத்திற்கு இரவில் மேய வரும் யானையின் காலின் நடையை அறிந்து, நடு இரவில் மலைமேல் உள்ள பரணில் இருக்கும் வலிய கைகளையுடைய கானவன் விரைந்து செலுத்தும் கவணில் வைத்து செலுத்தப்பட்ட சிறிய கல் ஒன்று இறகுடைய அம்பைப் போலச் சென்று, மலைச் சரிவில் உள்ள வேங்கை மரத்தின் மலர் கொத்துக்களைச் சிதறச் செய்து அதிலுள்ள தேன் கூட்டைச் சிதைத்து, அருகில் உள்ள பலாவினது பழத்தில் தங்கும், மலை பொருந்திய நாட்டின் தலைவன் என்னை மணக்காத வேளையில்.

குறிப்பு:  உடு (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாணிற் பொருத்தும் அம்பின் அடியுமாம்.  கலித்தொகை 41 – பிடியொடு மேயும் புன்செய் யானை அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் நெடு வரை ஆசினிப் பணவை ஏறிக் கடு விசை கவணையில் கல் கை விடுதலின் இறு வரை வேங்கையின் ஒள் வீ சிதறி ஆசினி மெல் பழம் அளிந்தவை உதிராத் தேன் செய் இறாஅல் துளைபடப் போகி நறு வடி மாவின் பை துணர் உழக்கிக் குலை உடை வாழைக் கொழு மடல் கிழியாப் பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனைப் பாடுகம் வா வாழி தோழி.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார்வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேல் என்றார்.  செல்லல் – செல்லல் இன்னல் இன்னாமையே (தொல்காப்பியம், உரியியல் 6).  உள்ளுறை – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – கானவன் எறிந்த கல் வேங்கை விரியிணர் சிதறி தேன் சிதையூஉ பலவின் பழத்துள் தங்கும் என்றது, வெறியாடலால் எழும் அலர் தலைவன் குறியிடத்து வருதலைக் கெடுத்து நமது இன்பத்தை அழித்து, நமது உள்ளத்தில் தங்குவதாகும்.

சொற்பொருள்:  கூறாய் செய்வது தோழி – என்ன செய்வது என்று கூறுவாயாக என் தோழி, வேறு உணர்ந்து அன்னையும் பொருள் உகுத்து – என் நிலைமையைத் தவறாக புரிந்துக் கொண்ட அன்னையும் பொருளைக் கொடுத்து, அலமரும் – மனம் சுழலுகின்றாள், மென் முறிச் சிறு குளகு அருந்து – சிறிய இளந்தளிரை உண்ணும், தாய் முலை பெறாஅ மறி – தாய்ப் பாலைப் பெறாத ஆட்டுக்குட்டி, கொலைப்படுத்தல் வேண்டி – கொலை செய்வதற்கு விரும்பி, வெறி புரி ஏதில் வேலன் – வெறியாட்டத்தை விரும்புகின்ற தொடர்பில்லாத வேலன், கோதை துயல்வரத் தூங்கும் ஆயின் – தன்னுடைய மாலை அசையும்படி வெறியாடுவான் ஆயின், அதூஉம் நாணுவல் – அத்தகையை செயலுக்கு நான் நாணுகின்றேன், இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல் – என்னுடைய ஒளியுடைய வளையல்கள் நெகிழும்படியான துன்பம், புலம் படர்ந்து இரவின் மேயல் மரூஉம் யானை – தன்னுடைய தினைப் புனத்திற்கு இரவில் மேய வரும் யானை, கால்வல் இயக்கம் ஒற்றி – காலின் நடையை அறிந்து, நடுநாள் – நடு இரவு, வரையிடைக் கழுதின் – மலைமேல் உள்ள பரணில், வன் கைக் கானவன் – வலிய கைகளையுடைய கானவன், கடுவிசைக் கவணின் எறிந்த – விரைந்து செல்லும் கவணால் செலுத்தப்பட்ட, சிறு கல் – சிறிய கல், உடுஉறு கணையின் போகி – இறகுடைய அம்பைப் போலச் சென்று, சாரல் வேங்கை விரி இணர் சிதறித் தேன் சிதையூஉ – மலைச் சரிவில் உள்ள வேங்கை மரத்தின் மலர் கொத்துக்களைச் சிதறச் செய்து தேன்கூட்டைச் சிதைத்து, உள்ள பலவின் பழத்துள் தங்கும் – அருகில் உள்ள பலாவினது பழத்தில் தங்கும், மலைகெழு நாடன் மணவாக்காலே – மலை பொருந்திய நாட்டின் தலைவன் என்னை மணக்காத வேளையில்

அகநானூறு 294, கழார்க்கீரன் எயிற்றியார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கித்
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகையுறப்
புள்ளி நுண் துவலைப் பூவகம் நிறையக்,
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
நீர்வார் கண்ணின் கருவிளை மலரத்,  5
துய்த்தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
நெய் தோய்ந்தன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
அவரைப் பைம் பூப் பயில அகல்வயல்
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்சக்,  10
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்
காய்சின வேந்தன் பாசறை நீடி,
நம் நோய் அறியா அறனிலாளர்
இந்நிலை களைய வருகுவர் கொல், என
ஆனாது எறிதரும் வாடையொடு  15
நோனேன் தோழி, என் தனிமையானே.

பாடல் பின்னணி:   பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி கூறியது.

பொருளுரை:   மிக இருண்ட மேகம் வானில் அதிர்ந்து முழங்கி குதிக்கின்ற மழையைப் பெய்து போன பின்னர், புகையை ஒத்த பனியின் நுண்ணிய துளிகளை ஏற்று மலர்கள் நிறைந்து நிற்க, தம் காதலரைப் பிரிந்த செயலற்ற மகளிரின் நீர் வடியும் கண்களைப் போல கருவிளம் பூக்கள் மலர, பஞ்சு போன்ற தலையையுடைய மலர்களையுடையதும் புதர்களில் படர்வதுமான ஈங்கையின் நெய்யில் தோய்த்தாற்போல் உள்ள நீரில் நனைந்த அழகிய தளிர்கள் இரு பிளவாய் உள்ள ஈரலைப் போல ஈரத்துடன் அசைய, அவரையின் அழகிய மலர்கள் மிகுந்திருக்க, அகன்ற வயல்களில் நீண்டு நன்கு காய்த்த நெற்கதிர்கள் கண்ணுக்கு இனிமையாகத் தலை வளைந்திருக்க, வண்டுகள் கிளைகளில் அசைந்திருக்கும் இந்த முன்பனிக்காலத்து நள்ளிரவில், சினம் மிக்க அரசனின் பாசறையின்கண் நீண்ட காலம் இருந்து, நாம் உற்ற துன்ப நோயை அறியாத அறன் இல்லாத தலைவர் நம்முடைய துன்ப நிலைமையைத் தீர்க்க வருவாரா என்று எண்ணி, இடை இல்லாது தொடர்ந்து வீசும் வாடைக் காற்றால், என் தனிமைத் துயரை நான் பொறுக்க இயலாதுள்ளேன் தோழி.

சொற்பொருள்:  மங்குல் மா மழை – மிக இருண்ட மேகம், விண் அதிர்பு முழங்கி – வானில் அதிர்ந்து முழங்கி, துள்ளுப் பெயல் கழிந்த பின்றை – குதிக்கின்ற மழையைப் பெய்து போன பின், புகையுறப் புள்ளி நுண் துவலைப் பூவகம் நிறைய – புகையை ஒத்த பனியின் நுண்ணிய துளிகளை ஏற்று மலர்கள் நிறைந்து நிற்க, காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் – தம் காதலரைப் பிரிந்த செயலற்ற மகளிர், நீர்வார் கண்ணின் கருவிளை மலரத் – நீர் வடியும் கண்களைப் போல கருவிளம் பூக்கள் மலர (கண்ணின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), துய்த்தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை – பஞ்சு போன்ற தலையையுடைய மலர்களையுடைய புதர்களில் படரும் ஈங்கை, நெய் தோய்ந்தன்ன நீர் நனை அம் தளிர் – நெய்யில் தோய்த்தாற்போல் நீரில் நனைந்த அழகிய தளிர்கள், இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர – இரு பிளவாய் உள்ள ஈரலைப் போல ஈரத்துடன் அசைய (ஈருளின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அவரைப் பைம் பூப் பயில – அவரையின் அழகிய மலர்கள் மிகுந்திருக்க, அகல் வயல் கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச – அகன்ற வயல்களில் நீண்டு நன்கு காய்த்த நெற்கதிர்கள் கண்ணுக்கு இனிமையாகத் தலை வளைந்திருக்க, சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள் – வண்டுகள் கிளைகளில் அசைந்திருக்கும் முன்பனிக்காலத்து நள்ளிரவில், காய்சின வேந்தன் பாசறை நீடி – சினம் மிக்க அரசனின் பாசறையின்கண் நீண்ட காலம் இருந்து, நம் நோய் அறியா அறனிலாளர் இந்நிலை களைய வருகுவர் கொல் – நாம் உற்ற துன்ப நோயை அறியாத அறன் இல்லாத தலைவர் நம்முடைய துன்ப நிலைமையைத் தீர்க்க வருவாரா (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), என – என்று, ஆனாது எறிதரும் வாடையொடு – இடையறாது வீசும் வாடைக் காற்றால், நோனேன் தோழி – என் துயரை நான் பொறுக்க இயலாதுள்ளேன் தோழி, என் தனிமையானே – என்னுடைய தனிமையால் (தனிமையானே – ஏகாரம் அசை நிலை)

அகநானூறு 296, மதுரைப் பேராலவாயார்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

கோதை இணர குறுங்கால் காஞ்சிப்
போது அவிழ் நறுந்தாது அணிந்த கூந்தல்,
அரி மதர் மழைக் கண் மாஅயோளொடு
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி, இன்றும்
பெரு நீர் வையை அவளொடு ஆடிப்  5
புலரா மார்பினை வந்து நின்று எம் வயின்
கரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில்
பன் மீன் கொள்பவர் முகந்த இப்பி
நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும்
பேர் இசை கொற்கைப் பொருநன், வென்வேல்  10
கடும் பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்
மலை புரை நெடுநகர்க் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போல,
அலர் ஆகின்று அது பலர் வாய்ப்பட்டே.

பாடல் பின்னணி:  வாயில் வேண்டிச் சென்ற தலைவனுக்கு வாயில் மறுக்கும் தோழி கூறியது.

குறிப்பு:   வரலாறு:  செழியன், வையை, கொற்கை, கூடல்.   மலை புரை நெடுநகர்க் கூடல் (12) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மலையை ஒத்த கோவிலையுடைய (அரண்மனை) மதுரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெடிய மாட மாளிகைகளையுடைய மதுரை நகரம்.

பொருளுரை:   தொடுத்த மாலை போன்ற பூங்கொத்துக்களையுடைய குறுகிய அடியையுடைய காஞ்சி மரத்தின் மலர் விரிந்து உதிர்ந்த நறுமண பூந்துகளை அணிந்த கூந்தலையுடைய, செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்களையுடைய, மாமை நிறத்தையுடைய பரத்தையுடன் நேற்றும் மணம் கமழும் பொழிலிலே துயின்று இன்றும் அவளுடன் வையை ஆற்றின் நீர்ப்பெருக்கில் விளையாடி, புலராத மார்பினை உடையையாய் என் முன் வந்து நின்று அதை மறைக்கவும் முடியுமா?  கடலில் பல மீன்களைப் பிடிப்பவர்கள் அவற்றுடன் கொள்ளும் சிப்பிகளை பன்னாடையில் அரிக்கப்பட்ட மகிழ்ச்சிதரும் கள்ளின் விலையாகக் கொடுக்கும் பெரும்புகழையுடைய கொற்கைக்குத் தலைவனான வெற்றித் தரும் வேலையும் கடிய பெரிய யானையையும் நெடிய தேரையுமுடைய நெடுஞ்செழியனின் மலையை ஒத்த நெடிய மாளிகைகளை உடைய மதுரையில் உள்ள மிகுந்த ஆரவாரம்போல், பலர் வாயில்பட்டு அலராகின்றது.

சொற்பொருள்:  கோதை இணர குறுங்கால் காஞ்சிப் போது அவிழ் நறுந்தாது – தொடுத்த மாலை போன்ற பூங்கொத்துக்களையுடைய குறுகிய அடியையுடைய காஞ்சி மரத்தின் மலர் விரிந்த நறுமண பூந்துகளை, அணிந்த கூந்தல் – அணிந்த கூந்தல், அரி மதர் மழைக் கண் மாஅயோளொடு – செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்களையுடைய மாமை நிறத்தையுடையவளுடன் (மாஅயோளொடு – அளபெடை), நெருநையும் கமழ் பொழில் துஞ்சி – நேற்றும் மணம் கமழும் பொழிலிலே துயின்று (துஞ்சி – இடக்கரடக்கு), இன்றும் பெரு நீர் வையை அவளொடு ஆடி – இன்றும் அவளுடன் வையை ஆற்றின் நீர்ப்பெருக்கில் விளையாடி, புலரா மார்பினை வந்து நின்று எம் வயின் கரத்தல் கூடுமோ மற்றே – புலராத மார்பினை உடையையாய் என் முன் வந்து நின்று மறைக்கவும் முடியுமா (மற்றே – மற்று, ஏ அசைநிலைகள்), பரப்பில் பன் மீன் கொள்பவர் – கடலில் பல மீன்களைப் பிடிப்பவர்கள், முகந்த இப்பி நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும் – அவற்றுடன் கொள்ளும் சிப்பிகளை பன்னாடையில் அரிக்கப்பட்ட மகிழ்ச்சிதரும் கள்ளின் விலையாகக் கொடுக்கும், பேர் இசை கொற்கைப் பொருநன் – பெரும்புகழையுடைய கொற்கைக்குத் தலைவன், வென்வேல் கடும் பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன் – வெற்றித் தரும் வேலையும் கடிய பெரிய யானையையும் நெடிய தேரையுமுடைய நெடுஞ்செழியன், மலை புரை நெடுநகர்க் கூடல் – மலையை ஒத்த நெடிய மாளிகைகளை உடைய மதுரை (புரை – உவம உருபு), நீடிய மலிதரு கம்பலை போல – நிறைந்த ஆரவாரம்போல், அலர் ஆகின்று அது பலர் வாய்ப்பட்டே – பலர் வாயில்பட்டு அலராகின்றது (வாய்ப்பட்டே – ஏகாரம் அசை நிலை)

அகநானூறு 311, மாமூலனார்பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று,
அருங்கடிக் காப்பின் அகன் நகர் ஒரு சிறை,
எழுதியன்ன திண் நிலைக் கதவம்
கழுது வழங்கு அரை நாள் காவலர் மடிந்தெனத்,
திறந்து நம் புணர்ந்து, “நும்மின் சிறந்தோர்  5
இம்மை உலகத்து இல்” எனப் பன்னாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடு
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப,
வருவழி வம்பலர்ப் பேணிக், கோவலர்
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி  10
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்
புல்லி நன்னாட்டு உம்பர் செல் அரும்
சுரம் இறந்து ஏகினும் நீடலர்,
அருண்மொழி தேற்றி நம் அகன்றிசினோரே.

பாடல் பின்னணி:   பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளுக்குத் தோழி சொல்லியது.

குறிப்பு:   வரலாறு:  புல்லி.  மேற்கோள்:  மூங்கில் குழாயில் உணவு – அகநானூறு 253 – கோவலர் நெடு விளிப் பயிர் அறிந்து இனம் தலைத்தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத் தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய அம் தூம்பு அகல் அமைக் கமம் செலப் பெய்த துறு காழ் வல்சியர், அகநானூறு 311- கோவலர் மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி.

பொருளுரை:   பெரிய பெண் யானையைப் பரிசில் பெரும் பாணர் போல நம்முடைய மனையின் நுழைவாயிலில் நின்று, அரிய காவலையுடைய அகன்ற மனையின் ஒரு பக்கம் ஓவியத்தில் எழுதி வைத்தாற் போன்ற திண்ணிய நிலையையுடைய கதவினை, பேய் வழங்கும் பாதி இரவில், காவலர்கள் சோர்ந்திருக்கும் நேரம் பார்த்து திறந்து, உன்னைக் கூடி, “உன்னைவிட சிறந்தவர்கள் இவ்வுலகத்தில் இல்லை” என்று பல நாட்கள் கூறி, உன் பொலிவுடைய கூந்தலைத் தடவி, நீர் இல்லாமல் பயன் எல்லாம் அழிந்து, திசையெல்லாம் கொதிக்க, வழியில் வரும் புதியவர்களைப் போற்றி, ஆயர்கள் தங்கள் இளைய காளைகளின் கழுத்தில் கட்டியுள்ள மூங்கில் குழாயில் உள்ள இனிய புளிச் சோற்றை, அப்புதியவரின் காதடைப்பு நீங்க தேக்கின் இலையில் பகிர்ந்து அளிக்கும், புல்லி என்ற அரசனின் நல்ல நாட்டிற்கு அப்பால் உள்ள கடத்தற்கரிய சுர நெறியைக் கடந்து சென்றிருப்பினும், உன்னை மறந்து காலம் தாழ்த்திருப்பவர் அல்லர், அன்புமொழி கூறி தெளிவித்து அகன்று சென்ற நம் தலைவர்.

சொற்பொருள்:  இரும் பிடிப் பரிசிலர் போல – பெரிய பெண் யானையைப் பரிசில் பெரும் பாணர் போல, கடை நின்று – நம்முடைய மனையின் நுழைவாயிலில் நின்று, அருங்கடிக் காப்பின் அகன் நகர் ஒரு சிறை – அரிய காவலையுடைய அகன்ற மனையின் ஒரு பக்கம், எழுதியன்ன திண் நிலைக் கதவம் – ஓவியத்தில் எழுதி வைத்தாற் போன்ற திண்ணிய நிலையையுடைய கதவு, கழுது வழங்கு அரை நாள் – பேய் வழங்கும் பாதி இரவில், காவலர் மடிந்தெனத் திறந்து – காவலர்கள் சோர்ந்திருக்கும் நேரம் பார்த்து அக்கதவைத் திறந்து, நம் புணர்ந்து – உன்னைக் கூடி, நும்மின் சிறந்தோர் இம்மை உலகத்து இல் எனப் பன்னாள் – உன்னைவிட சிறந்தவர்கள் இவ்வுலகத்தில் இல்லை என்று பல நாட்கள் கூறி, பொம்மல் ஓதி நீவிய காதலொடு – பொலிவுடைய கூந்தலைத் தடவி, பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப – பயன் எல்லாம் அழிந்து (நீர் இல்லாமல்) திசையெல்லாம் கொதிக்க, வருவழி வம்பலர்ப் பேணி – வழியில் வரும் புதியவர்களைப் போற்றி , கோவலர் மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி – ஆயர்கள் இளைய காளைகளின் கழுத்தில் கட்டியுள்ள மூங்கில் குழாயில் உள்ள இனிய புளிச் சோற்றை, செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும் – அப்புதியவரின் காதடைப்பு நீங்க தேக்கின் இலையில் பகிர்ந்து அளிக்கும், புல்லி நன்னாட்டு உம்பர் – புல்லி என்பவனின் நல்ல நாட்டிற்கு அப்பால், செல் அரும் சுரம் இறந்து ஏகினும் – கடத்தற்கரிய சுர நெறியைக் கடந்து சென்றிருப்பினும், நீடலர் – நீட்டிக்க மாட்டார் தலைவர், அருண்மொழி தேற்றி நம் அகன்றிசினோரே – அன்புமொழி கூறி தெளிவித்து அகன்று சென்றவர்

அகநானூறு 320, மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇத்,
திமிலோன் தந்த கடுங்கண் வயமீன்,
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர்,
விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும்
கானல் அம் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப!  5
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம்
அலர்வாய் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும்
நெடுங்கழி துழைஇய குறுங்கால் அன்னம்
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும்
தடவு நிலைப் புன்னைத் தாது அணி பெருந்துறை,  10
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
வண்டல் பாவை சிதைய வந்து, நீ
தோள் புதிது உண்ட ஞான்றைச்
சூளும் பொய்யோ, கடல் அறிகரியே?

பாடல் பின்னணி:   பகற்குறிக்கண் வந்த தலைவனைத் தோழி வரைவு கடாயது.

பொருளுரை:   உயர்ந்த அலைகளையுடைய கடற்பரப்பில் வலித்து இழுத்த விசையைக் கொண்ட படகையுடைய பரதவன் தந்த கடிய கண்களையுடைய வலிய மீன்களை, தழை ஆடையை இடையில் அணிந்த அப்பரதவரின் செல்வத் தங்கைமார் திருவிழா நடக்கும் தெருவில் கொணர்ந்து விற்கும் கடற்கரைச் சோலையையும் சிறிய குடியிருப்பையும் கொண்ட நெய்தற் பரப்பினையையும் உடைய தலைவனே! மையிட்ட மலர்போன்ற கண்களையுடைய என் தோழி துன்பத்திலிருந்தும் ஊரின் அலர் மொழியிலிருந்தும் நீங்க நீ அருளாது அவளைத் திருமணம் புரியாமல் இருந்தாலும், நீண்ட கழியில் உள்ள நீரைத் துழாவி உணவைத் தேடும் அன்னப்பறவை, அடும்புக் கொடி படர்ந்த மணல் மேட்டில் அமர்ந்து தன்னுடைய அழகிய இறகினை அலகால் கோதுகின்ற, வளைந்து நிற்கும் புன்னை மரங்கள் பூந்தாதுகளால் அழகு செய்கின்ற பெரிய துறையிடத்தே, அசைகின்ற மணலைப் பிளந்துகொண்டு, கொடுஞ்சி என்ற உறுப்பையுடைய நெடிய தேரில் ஏறி எம்முடைய விளையாட்டுப் பாவை சிதைய வந்து, என் தோழியின் தோள்கள் தரும் இன்பத்தைப் புதிதாக உண்டபொழுது, நீ கொடுத்த உறுதிமொழியும் பொய்யோ?  இந்த கடல் தான் நேரில் கண்ட சான்று ஆகும்.

சொற்பொருள்:   ஓங்கு திரைப் பரப்பின் – உயர்ந்த அலைகளையுடைய கடற்பரப்பில், வாங்கு விசைக் கொளீஇத் திமிலோன் – வலித்து இழுத்த விசையைக் கொண்ட படகையுடைய பரதவன், தந்த கடுங்கண் வயமீன் தழை அணி அல்குல் செல்வத் தங்கையர் – தந்த கடிய கண்களையுடைய வலிய மீன்களை தழை ஆடையை இடையில் அணிந்த அப்பரதவரின் செல்வத் தங்கைமார், விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும் – திருவிழா நடக்கும் தெருவில் கொணர்ந்து விற்கும், கானல் அம் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப – கடற்கரைச் சோலையையும் சிறிய குடியிருப்பையும் கொண்ட நெய்தற் பரப்பினையையும் உடைய தலைவனே, மலர் ஏர் உண்கண் எம் தோழி – மையிட்ட மலர்போன்ற கண்களையுடைய என் தோழி, எவ்வம் அலர்வாய் நீங்க – துன்பத்திலிருந்தும் ஊரின் அலர் மொழியிலிருந்தும் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும் – நீ அவளை திருமணம் புரியாமல் இருந்தாலும், நெடுங்கழி துழைஇய குறுங்கால் அன்னம் – நீண்ட கழியில் உள்ள நீரைத் துழாவி உணவைத் தேடும் அன்னப்பறவை, அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் – அடும்புக் கொடி படர்ந்த மணல் மேட்டில் அமர்ந்து தன்னுடைய அழகிய இறகினை அலகால் கோதுகின்ற, தடவு நிலைப் புன்னைத் தாது அணி பெருந்துறை – வளைந்து நிற்கும் புன்னை மரங்கள் பூந்தாதுகளால் அழகு செய்கின்ற பெரிய துறையிடத்தே, நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர் வண்டல் பாவை சிதைய வந்து – அசைகின்ற மணலைப் பிளந்துகொண்டு கொடுஞ்சி என்ற உறுப்பையுடைய நெடிய தேரில் ஏறி எம்முடைய விளையாட்டுப் பாவை சிதைய வந்து, நீ தோள் புதிது உண்ட ஞான்றை – என் தோழியின் தோள்கள் தரும் இன்பத்தைப் புதிதாக உண்டபொழுது, சூளும் பொய்யோ – உறுதிமொழியும் பொய்யோ, கடல் அறிகரியே – இந்த கடல் நேரில் கண்ட சான்று

அகநானூறு 339, நரைமுடி நெட்டையர்பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வீங்கு விசைப் பிணித்த விரை பரி நெடுந்தேர்
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்,
பாம்பு என முடுகு நீர் ஓடக், கூம்பிப்
பற்று விடு விரலின் பயறுகாய் ஊழ்ப்ப
அற்சிரம் நின்றன்றால் பொழுதே, முற்பட   5
ஆள் வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து,
ஆண்மை வாங்கக் காமம் தட்பக்
கவைபடு நெஞ்சம் கண்கண் அகைய,
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி,
ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்,  10
நோம் கொல் அளியள் தானே, யாக்கைக்கு
உயிர் இயைந்தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன காதல்,
சாதல் அன்ன பிரிவு அரியோளே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைநெறியில் தன் நெஞ்சிடம் கூறியது.

குறிப்பு:  ஒப்புமை:  அகநானூறு 324 – தண்ணில மருங்கில் போழ்ந்த வழியுள், நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுகச், செல்லும் நெடுந்தகை தேரே.

பொருளுரை:   விரைந்த குதிரைகள் பூட்டப்பட்ட மிக்க விசையையுடைய (வேகத்தையுடைய) நெடிய தேரின் வலிய ஆர் கொண்ட உருளை (சக்கரம்) ஆழ்ந்து செல்லும் இடத்தில் பாம்பு போல விரைந்து செல்லும் நீர் ஓட, குவிந்து பின் ஒன்றோடு ஒன்று தொடர்பு விட்ட விரல்கள் போல பயற்றுச் செடியில் பயிர்கள் முற்ற, பனிப் பருவம் வந்தது.  ஆண் தொழிலுக்கு தளர்வு இல்லாத உள்ளத்துடன், ஆண்மை முன்னே இழுக்க, காமம் செல்ல விடாமல் தடுக்க, இருபாற்பட்ட நெஞ்சம் கணுக்களில் தீப்பற்றி எரிதலால் இருபுறமும் தீயுடைய மூங்கில் தட்டையின் நடுவில் நின்று வருந்தி, ஒரு புறமும் செல்ல இயலாத எறும்பினைப் போல் உள்ளோம் நாம்.   தலைவி வருந்தி இருப்பாளோ?  அவள் இரங்கத்தக்கவள்.  உடலோடு ஒன்றிய உயிர் போன்ற நட்பினையும், அவ்வுயிர் வாழ்தல் போன்ற காதலுடைய சாவுதல் போன்ற துன்பத்தைத் தரும் பிரிதலையும் உடையவள், பெறுவதற்கு அரிய நம் தலைவி.

சொற்பொருள்:  வீங்கு விசைப் பிணித்த விரை பரி நெடுந்தேர் – விரைந்த குதிரைகள் பூட்டப்பட்ட மிக்க வேகத்தையுடைய நெடிய தேர், நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில் – வலிய ஆர் கொண்ட உருளை (சக்கரம்) ஆழ்ந்து செல்லும் பக்கத்தில் , பாம்பு என முடுகு நீர் ஓட – பாம்பு போல விரைந்து செல்லும் நீர் ஓட, கூம்பிப் பற்று விடு விரலின் – குவிந்து பின் ஒன்றோடு ஒன்று தொடர்பு விட்ட விரல்கள் போல (விரலின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது), பயறுகாய் ஊழ்ப்ப – பயற்றுச் செடியில் பயிர்கள் முற்ற, அற்சிரம் நின்றன்றால் பொழுதே – பனிப் பருவமாக வந்தது (ஆல் அசைநிலை), முற்பட – முன்னே, ஆள் வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து – ஆண் தொழிலுக்கு தளர்வு இல்லாத உள்ளத்துடன், ஆண்மை வாங்க – ஆண்மை முன்னே இழுக்க, காமம் தட்ப – காமம் தடுக்க, கவைபடு நெஞ்சம் – இருபாற்பட்ட நெஞ்சம், கண் கண் அகைய – கணுக்களில் தீப்பற்றி எரிதலால், இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி – இருபுறமும் தீயுடைய மூங்கில் தட்டையின் நடுவில் நின்று வருந்தி, ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம் – ஒரு புறம் செல்ல இயலாத எறும்பினைப் போல் உள்ளோம், நோம் கொல் – வருந்தி இருப்பாளோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), அளியள் தானே – அவள் இரங்கத்தக்கவள், யாக்கைக்கு உயிர் இயைந்தன்ன நட்பின் – உடலோடு ஒன்றிய உயிர் போன்ற நட்பினையும், அவ்வுயிர் வாழ்தல் அன்ன காதல் – அவ்வுயிர் வாழ்தல் போன்ற காதலுடைய, சாதல் அன்ன பிரிவு அரியோளே – அதற்கு சாவுதல் போன்ற துன்பத்தைத் தரும் பிரிதலை உடைய பெறுவதற்கு அரிய நம் தலைவி

அகநானூறு 341, ஆவூர் மூலங்கிழார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உய்தகை இன்றால் தோழி, பைபயக்
கோங்கும் கொய் குழை உற்றன, குயிலும்
தேம்பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்,
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக்
கழை அழி நீத்தம் சாஅய வழிநாள்,  5
மழை கழிந்தன்ன மாக்கால் மயங்கு அறல்,
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு,
மதவு உடை நாக்கொடு அசைவீடப் பருகி
குறுங்கால் காஞ்சிக் கோதை மெல் இணர்ப்
பொன் தகை நுண் தாது உறைப்பத் தொக்கு உடன்,  10
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும்,
யாணர் வேனில் மன், இது
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி சொன்னது.

பொருளுரை:   மெல்ல மெல்ல கோங்க மரங்களும் கொய்யும் அளவிற்குத் தளிர்களை ஈன்றுள்ளன. குயில்களும் மலர்களிலிருந்து தேன் வடியும் மாமரத்தின் உயர்ந்த கிளைகளிலிருந்து கூவுகின்றன.  நாட்டினை நீரால் நிறைக்கும் காவிரி ஆறு கரையைப் பொருந்தி, நிறைந்த நீர்பெருக்கம் கொண்டுள்ளது.  மூங்கிலாகிய ஓடக்கோலை மறைக்கும் வெள்ளம் வற்றிய பின்னாளில், மழைபொழிந்து கழிந்த வேளையில், வாய்க்காலில் உள்ள நீரை அருகம்புல்லை மேய்ந்து உண்ணும் அசைகின்ற திமிலையுடைய அழகிய காளைகள் தங்களுடைய வலிமையுடைய நாக்கினால் தளர்ச்சி நீங்க குடித்து, குறிய அடியையுடைய காஞ்சி மரத்தின் மாலைபோன்ற மெல்லிய பூங்கொத்துக்களிலிருந்து பொன் போன்ற நுண்ணியத் தங்கள் மேல் தாது உதிர, ஒருங்கே கூடிய நெடிய மேட்டு மணலில் உறங்கும், அழகான வேனில் பருவம் இது.  இது துணைவர்களுடன் கூடியிருக்கும் மகளிர்க்கே இனியதாகும். எமக்கு உய்வு இல்லையே தோழி!

குறிப்பு:  மதவு நடை நாக்கொடு (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலிய நடையினையுடைய பசுக்களோடு, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வலிமுடைய நாவினால்.  மேலும் பதவுரையில் வேங்கடசாமி நாட்டார் ‘மதவு உடை’ என்கின்றார், பொ. வே. சோமசுந்தரனார் ‘மதவு நடை’ என்கின்றார்.  ஒப்புமை:  மூங்கில் நீரில் மறைதல் – கழை மாய் நீத்தம் – அகநானூறு 72, நற்றிணை 7, கழை அழி நீத்தம் – அகநானூறு 341, கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம் – அகநானூறு 6.  வரலாறு:  காவிரி.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  உய்தகை இன்றால் தோழி – எமக்கு உய்வு இல்லை தோழி, பைபயக் கோங்கும் கொய் குழை உற்றன – மெல்ல மெல்ல கோங்க மரங்களும் கொய்யும் அளவிற்குத் தளிர்களை ஈன்றுள்ளன, குயிலும் தேம்பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும் – குயில்களும் மலர்களிலிருந்து தேன் வடியும் மாமரத்தின் உயர்ந்த கிளைகளிலிருந்து கூவும், நாடு ஆர் காவிரி – நாட்டினை நீரால் நிறைக்கும் காவிரி ஆறு, கோடு தோய் மலிர் நிறை – கரையை பொருந்திய நிறைந்த நீர்பெருக்கம், கழை அழி நீத்தம் – மூங்கிலாகிய ஓடக்கோலை மறைக்கும் வெள்ளம், சாஅய வழிநாள் – வற்றிய  பின்னாளில், மழை கழிந்தன்ன மாக்கால் மயங்கு அறல் – மழைபொழிந்து கழிந்த வாய்க்காலில் உள்ள நீர், பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு – அருகம்புல்லை மேய்ந்து உண்ணும் அசைகின்ற திமிலையுடைய அழகிய காளைகள், மதவு உடை நாக்கொடு அசைவீடப் பருகி – வலிமையுடைய நாக்கினால் தளர்ச்சி நீங்க குடித்து, குறுங்கால் காஞ்சிக் கோதை மெல் இணர்ப் பொன் தகை நுண் தாது உறைப்ப – குறிய அடியையுடைய காஞ்சி மரத்தின் மாலைபோன்ற மெல்லிய பூங்கொத்துக்களிலிருந்து பொன் போன்ற நுண்ணிய தாது உதிர, தொக்கு உடன் குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும் – ஒருங்கே கூடிய நெடிய மேட்டு மணலில் உறங்கும், யாணர் வேனில் – அழகான வேனில் பருவம், மன் – அசைநிலை, இது – இது, மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே – துணைவர்களுடன் கூடியிருக்கும் மகளிர்க்கே இனியதாகும்

அகநானூறு 342, மதுரைக் கணக்காயனார்குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஒறுப்ப ஓவலை, நிறுப்ப நில்லலை,
புணர்ந்தோர் போலப் போற்றுமதி, நினக்கு யான்
கிளைஞன் அல்லனோ நெஞ்சே, தெனாஅது
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்  5
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்,
ஏவல் இளையர் தலைவன், மேவார்
அருங்குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப்
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை
கெடாஅ நல் இசைத் தென்னன், தொடாஅ  10
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
வரையர மகளிரின் அரியள்,
அவ்வரி அல்குல் அணையாக் காலே.

பாடல் பின்னணி:  அல்லகுறிப்பட்ட தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

பொருளுரை:  என் நெஞ்சே!  தென்திசையில் உள்ள, போரில் வெற்றியடையும் பாண்டியர்களின் நல்ல நாட்டில் உள்ள மண்ணால் செய்த புற்றுக்களையுடைய கோட்டைகளைத் திறந்தலோடு பசுக்களைக் கவர்ந்துகொள்ளும் பழைய ஊரில் வாழும் கள்வர்களுக்கு அரசனும், அம்பை எய்தும் மறவர்களுக்குத் தலைவனுமான, பகைவரின் காவலுடைய அரண்களை அழித்த ஆற்றலுடன், பருந்துகள் வந்து வீழும்படி பல போர்களை வென்ற, முகிலை ஒத்த பெரிய கைகளையுடைய, கெடாத நற்புகழையுடைய பாண்டிய மன்னனின் தோண்டப்படாத நீராகிய அருவி வீழும் இடத்தில் உள்ள மலைக் குகைகளில் மறைந்திருக்கும் அழகிய வரையர மகளிர்போல, கிடைப்பதற்கு அரியவளாகிய, அழகிய வரிகளையுடைய அல்குலையுடைய நம் தலைவி நம்மை அணைக்காத பொழுது,

நான் இடித்துக் கூறினும் நீ அவளை எண்ணுவதை நீக்கவில்லை.  தடுத்தாலும் நீ அவள்பால் செல்லுவதை நிறுத்தவில்லை. நெருங்கிய நண்பர்போல் நான் கூறுவதை நீ போற்றுவாயாக. உனக்கு நான் உறவினன் அல்லவா?

குறிப்பு:  வரலாறு:  கவுரியர் (பாண்டியர்), தென்னன் (பாண்டியன்).  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  ஐங்குறுநூறு 191 – வரையர மகளிரின் அரியள்.

சொற்பொருள்:  ஒறுப்ப ஓவலை – நான் இடித்துக் கூறினும் நீ அவளை எண்ணுவதை நீக்கவில்லை, நிறுப்ப நில்லலை – தடுத்தாலும் நீ அவள்பால் செல்லுவதை நிறுத்தவில்லை, புணர்ந்தோர் போலப் போற்றுமதி – நெருங்கிய நண்பர்போல் நான் கூறுவதை நீ போற்றுவாயாக (மதி – முன்னிலையசை), நினக்கு யான் கிளைஞன் அல்லனோ – உனக்கு நான் உறவினன் அல்லவோ, நெஞ்சே – என் நெஞ்சே, தெனாஅது வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை – தென்திசையில் உள்ள போரில் வெற்றியடையும் பாண்டியர்களின் நல்ல நாட்டில் உள்ள (உள்ளதை -ஐகாரம் சாரியை), மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் – மண்ணால் செய்த புற்றுக்களையுடைய கோட்டைகளைத் திறந்தலோடு (அருப்பம் அருப்பு என்றாயிற்று), ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன் – பசுக்களை கவர்ந்துகொள்ளும் பழைய ஊரில் வாழும் கள்வர்களுக்கு அரசனும், ஏவல் இளையர் தலைவன் – அம்பை எய்தும் மறவர்களுக்கு தலைவனுமான, மேவார் அருங்குறும்பு எறிந்த ஆற்றலொடு – பகைவரின் காவலுடைய அரண்களை அழித்த ஆற்றலுடன், பருந்து படப் பல் செருக் கடந்த – பருந்துகள் வந்து வீழும்படி பல போர்களை வென்ற, செல் உறழ் தடக் கை – முகிலை ஒத்த பெரிய கைகள், கெடாஅ நல் இசைத் தென்னன் – கெடாத நற்புகழையுடைய பாண்டிய மன்னன், தொடாஅ நீர் இழி மருங்கில் – தோண்டப்படாத நீராகிய  அருவி வீழும் இடத்தில், கல் அளைக் கரந்த – மலைக் குகைகளில் மறைந்த, அவ் வரையர மகளிரின் அரியள் – அழகிய வரையர மகளிர்போல கிடைப்பதற்கு அரியள் (மகளிரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அவ்வரி அல்குல் அணையாக் காலே – அழகிய வரிகளையுடைய அல்குலையுடைய அவள் நம்மை அணைக்காத பொழுது

அகநானூறு 355, தங்கால் பொற்கொல்லனார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மாவும் வண் தளிர் ஈன்றன குயிலும்
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்
மூது இலை ஒழித்த போது அவிழ் பெருஞ்சினை
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்  5
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்த்
தாது உகு தண் பொழில் அல்கிக் காதலர்
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
தானே வந்தன்று ஆயின் ஆனாது
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப்  10
புலந்தனம் வருகம் சென்மோ தோழி
யாமே எமியம் ஆக நீயே
பொன் நயந்து அருள் இலையாகி
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே.

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்திய தோழியிடம் தலைவி உரைத்தது.

குறிப்பு:  புலந்தனம் வருகம் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவனோடு ஊடினேமாய் வருவேம், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அவனை வெறுத்து வருதற்கு நாம் செல்லக்கடவேம்.  ஒத்தன்றால் (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின் பெருந்தகைமைக்கு ஒரு சிறிதும் பொருத்தமுடையதன்று, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – நின் தகுதிக்கு ஒத்தது அன்று.

பொருளுரை:  மாமரங்களும் அழகிய தளிர்களை ஈன்றன. குயில்களும் அவற்றின் கிளைகளில் அமர்ந்து இனிய பல குரல்களால் கூவுகின்றன. முதிர்ந்த இலைகள் உதிர்ந்த மலர்களையுடைய பெரிய கிளைகளில் யாழ் வல்லோன் தடவும் நரம்புகளின் இனிய இசையைக் கொண்ட பாலை பண்ணைப் போன்று வண்டு கூட்டங்கள் இசைக்கின்றன. தெளிந்த நீர்நிலைக்கு அடுத்த தூய மணல் மேட்டில் தாது உதிர்ந்த குளிர்ந்த சோலைகளில் தங்கி, காதலர் தம்முடைய செல்வ மனையை மறந்திருக்கும் இளவேனில் காலம் வந்து விட்டது.  ஆதலால். விடாமல் வழுக்கி விழும் ஒளியுடைய வளையல்களை உடைய நம் துன்பத்தை தலைவனுக்குக் காட்டி, நாம் அவனோடு ஊடுவோம்.  நாம் சென்று வருவோம் தோழி.  அவனிடம், “நாங்கள் தனியே இங்கு இருக்க, நீயோ பொருளை விரும்பி அருள் இல்லாதவனாக இருக்கின்றாய். இவ்வாறு ஆகுதல் உன்னுடைய தகுதிக்கு ஒத்தது இல்லை” எனக் கூறுவோம்.

சொற்பொருள்:  மாவும் வண் தளிர் ஈன்றன – மாமரங்கள் அழகிய தளிர்களை ஈன்றன, குயிலும் இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும் – குயில்களும் அவற்றின் கிளைகளில் அமர்ந்து இனிய பல குரல்களால் கூவும் (கொம்பர் – மொழி இறுதிப் போலி), மூது இலை ஒழித்த போது அவிழ் பெருஞ்சினை – முதிர்ந்த இலைகள் உதிர்ந்த மலர்களையுடைய பெரிய கிளைகள், வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும் – யாழ் வல்லோன் தடவும் நரம்புகளின் இனிய இசையைக் கொண்ட பாலை பண்ணைப் போன்று வண்டு கூட்டங்கள் இசைக்கும், துணி கயம் துன்னிய – தெளிந்த நீர்நிலைக்கு அடுத்த, தூ மணல் எக்கர்த் தாது உகு தண் பொழில் – தூய மணல் மேட்டில் தாது உதிர்ந்த குளிர்ந்த சோலைகள், அல்கி – தங்கி, காதலர் செழு மனை மறக்கும் – காதலர் தம்முடைய செல்வ மனையை மறந்திருக்கும், செவ்வி வேனில் தானே வந்தன்று – இளவேனில் காலம் வந்து விட்டது, ஆயின் – ஆதலால், ஆனாது இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி – விடாமல் வழுக்கி விழும் ஒளியுடைய வளையல்களை உடைய நம் துன்பத்தைக் காட்டி, புலந்தனம் – நாம் அவனோடு ஊடுவோம், நாம் அவனை வெறுப்போம், வருகம் சென்மோ தோழி – நாம் சென்று வருவோம் தோழி, யாமே எமியம் ஆக – நாங்கள் தனியே இங்கு இருக்க, நீயே பொன் நயந்து – நீயோ பொருளை விரும்பி, அருள் இலையாகி – அருள் இல்லாதவனாகி (இலை – இல்லை என்பதன் விகாரம்), இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே -இவ்வாறு ஆகுதல் உன்னுடைய தகுதிக்கு ஒத்தது இல்லை என்று (ஒத்தன்றால் – ஆல் அசைநிலை)

அகநானூறு 385, குடவாயில் கீரத்தனார்பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
தன்னோரன்ன ஆயமும், மயிலியல்
என்னோரன்ன தாயரும் காணக்,
கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
பொன்னுடை நெடுநகர் புரையோர் அயர,  5
நன்மாண் விழவில் தகரம் மண்ணி,
யாம் பல புணர்ப்பச் செல்லாள் காம்பொடு
நெல்லி நீடிய கல்லறைக் கவாஅன்,
அத்த ஆலத்து அலந்தலை நெடுவீழ்
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ,  10
வளையுடை முன் கை அளைஇக், கிளைய
பயில் இரும் பிணையல் பசுங்காழ்க் கோவை
அகல் அமை அல்குல் பற்றிக், கூந்தல்
ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும்
தானமர் துணைவன் ஊக்க ஊங்கி,  15
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர்வாய்ச்
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே.

பாடல் பின்னணி:  உடன்போக்கில் தலைவனுடன் சென்ற தலைவியின் செவிலித்தாய் வருந்திக் கூறியது.

பொருளுரை:  மயில்போலும் சாயல் உடைய என் மகள், தன்னை ஒத்த தோழிமாரும், என்னை ஒத்த தாய்மாரும் கண்டு மகிழும்படி, தும்பிக்கையால் போர் புரியும் யானைகளையும் விரைந்து இயங்கும் தேரினையும் உடைய சோழரின் காவிரியின் அருகில் உள்ள (தோப்புகளை உடைய) உறந்தை அன்ன, செல்வம் மிகுந்த இல்லத்தில் உயர்ந்தவர்கள் நிகழ்த்த, நல்ல மாட்சிமையுடைய மணவிழாவில் அவளுடைய கூந்தலில் நறுமண மயிர்ச்சாந்தினை தடவி மண நீராட்டி யாம் பல பொருத்திய சிறப்புகளையும் செய்விக்க மணம் புரியாதவளாய், மூங்கிலுடன் நெல்லி மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள கற்பாறைகள் உடைய பக்க மலையில் வழியில் உள்ள ஆலமரத்தின் நீண்ட விழுது தன் தேமல் பொருந்திய தொடையில் உரச, அவளுடைய கூந்தல் ஆடும் மயிலின் தோகைபோல் பொங்கி பரவ, அவளால் விரும்பப்பட்ட தலைவன் வளையல் அணிந்த அவளுடைய முன்னங்கையைப் பற்றியும், பல கிளைகளை உடைய நெருங்கி பெரியதாகப் பிணைத்த அழகிய வடங்களை உடைய மேகலையைப் பற்றியும், நன்றாக ஊக்கம் தர ஊக்கம் கொண்டு, எம்மை என்னாது சென்ற கூர்மையான பற்களையும் பவளம் போன்ற வாயினையும் உடைய என்னுடைய சிறுமியாகிய கண்ணோட்டம் இல்லாத என் மகள், அறியப்படாத நாட்டில் சிலம்பு கழிதல் என்னும் சடங்கினைச் செய்தல் கொடுமை.

குறிப்பு:   கைவல் யானை (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கையால் போர்த் தொழில் செய்யும் வன்மையுடைய யானைகளையும், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வலிய கையினையுடைய யானையினையும்.  அலந்தலை (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அசைகின்ற, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வாடி அசைகின்ற.  வன்கண்ணி (17) – வேங்கடசாமி நாட்டார்  உரை – அஞ்சாமையுடையவள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கண்ணோட்டம் இல்லாதவள்.  வரலாறு:  சோழர், காவிரி, உறந்தை.  ஒப்புமை:  அகநானூறு 383 – சிறு வன்கண்ணிக்கு.  சிலம்பு கழித்தல் நோன்பு – அகநானூறு 315, 369, 399, நற்றிணை 279, ஐங்குறுநூறு 399.  தன்னோரன்ன ஆயமும், மயிலியல் என்னோரன்ன தாயரும் காண – மயிலியல் தன் ஓர் அன்ன ஆயமும் என் ஓர் அன்ன தாயரும் காண எனக் கொள்ளவும்.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).

சொற்பொருள்:  தன்னோரன்ன ஆயமும் – தன்னை ஒத்த தோழிமாரும், மயிலியல் – மயில்போலும் சாயல் உடைய என் மகள், என்னோரன்ன தாயரும் காண – என்னை ஒத்த தாய்மாரும் கண்டு மகிழ், கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர் காவிரிப் படப்பை உறந்தை அன்ன – தும்பிக்கையால் போர் புரியும் யானைகளையும் விரைந்து இயங்கும் தேரினையும் உடைய சோழரின் காவிரியின் அருகில் உள்ள (தோப்புகளை உடைய) உறந்தை அன்ன, பொன்னுடை நெடுநகர் – செல்வம் மிகுந்த இல்லத்தில், புரையோர் அயர – உயர்ந்தவர்கள் நிகழ்த்த, நன்மாண் விழவில் தகரம் மண்ணி – நல்ல மாட்சிமையுடைய மணவிழாவில் அவளுடைய கூந்தலில் நறுமண மயிர்ச்சாந்தினை தடவி மண நீராட்டி, யாம் பல புணர்ப்பச் செல்லாள் – யாம் பல பொருத்திய சிறப்புகளையும் செய்விக்க மணம் புரியாதவளாய், காம்பொடு நெல்லி நீடிய – மூங்கிலுடன் நெல்லி மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள, கல்லறைக் கவாஅன் – கற்பாறைகள் உடைய பக்க மலையில், அத்த ஆலத்து அலந்தலை நெடுவீழ் – வழியில் உள்ள ஆலமரத்தின் நீண்ட விழுது, தித்திக் குறங்கில் திருந்த உரிஞ – தன் தேமல் பொருந்திய தொடையில் உரச, வளையுடை முன் கை அளைஇ – வளையல் அணிந்த முன்னங்கையைப் பற்றி, கிளைய பயில் இரும் பிணையல் பசுங்காழ்க் கோவை அகல் அமை அல்குல் பற்றி – பல கிளைகளை உடைய நெருங்கி பெரியதாகப் பிணைத்த அழகிய வடங்களை உடைய மேகலையைப் பற்றி, கூந்தல் ஆடு மயில் பீலியின் பொங்க — கூந்தல் ஆடும் மயிலின் தோகைபோல் பொங்க, நன்றும் – நன்றாக, தானமர் துணைவன் – அவளால் விரும்பப்பட்ட தலைவன், ஊக்க ஊங்கி – ஊக்க ஊக்கம் கொண்டு, உள்ளாது கழிந்த – எம்மை என்னாது சென்ற, முள் எயிற்றுத் துவர்வாய்ச் சிறு வன்கண்ணி – கூர்மையான பற்களையும் பவளம் போன்ற வாயினையும் உடைய என்னுடைய சிறுமியாகிய கண்ணோட்டம் இல்லாத என் மகள், சிலம்பு கழீஇ அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே – அறியப்படாத நாட்டில் சிலம்பு கழிதல் என்னும் சடங்கினைச் செய்தல் கொடுமை

அகநானூறு 386, பரணர்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து
வாளை நாள் இரை தேரும் ஊர!
நாணினென் பெரும யானே, பாணன்
மல்லடு மார்பின் வலியுற வருந்தி,
எதிர் தலைக்கொண்ட ஆரியப் பொருநன்  5
நிறைத் திரண் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த
திறன் வேறு கிடக்கை நோக்கி, நற்போர்க்
கணையன் நாணியாங்கு மறையினள்
மெல்ல வந்து நல்ல கூறி,
“மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின்  10
சேரியேனே, அயல் இலாட்டியேன்,
நுங்கை ஆகுவென் நினக்கு” எனத் தன் கைத்
தொடுமணி மெல் விரல் தண்ணெனத் தைவர
நுதலும் கூந்தலும் நீவி,
பகல் வந்து பெயர்ந்த வாணுதல் கண்டே.  15

பாடல் பின்னணி:  தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது.

பொருளுரை:  பொய்கையில் உள்ள புலவு நாற்றமுடைய நீர்நாயின் ஆண், வாளை மீனை அதிகாலையில் இரைக்கு ஆராய்ந்து உண்ணும் ஊரனே!

பிறர் அறியாதபடி மறைந்து மெல்ல வந்து, தலைவியிடம் நல்ல சொற்களைக் கூறி, “கரிய கூந்தலை உடைய இளமைப் பொருந்தியவளே! நானும் உன்னுடைய தெருவின்கண் குடியிருப்பவள் தான், உனக்கு அருகில் உள்ள இல்லத்தில் தான் வாழ்கின்றேன், உனக்கு நான் தங்கை முறை ஆவேன்” என மோதிரம் அணிந்த தன்னுடைய மென்விரலால் அவளை உடல் குளிரும்படி தடவி, அவளுடைய நெற்றியையும் கூந்தலையும் தடவி, பகலில் வந்து சென்ற ஒளியுடைய நெற்றியையுடைய உன் பரத்தையைக் கண்டு, பாணன் என்பவனின் போர் செய்வதில் திறமையான மார்பின் வலிமையால் வருந்தி, அவனைப் போரில் எதிர்கொண்ட ஆரியப்பொருநன் என்பவனின் நிறைந்த திரண்ட முழவு போன்ற தோள்கள் அப்பாணன் கையில் அகப்பட்டு, அவன் அழிந்து பிணமாகக் கிடக்கும் கிடக்கையைப் பார்த்து, நல்ல போரில் ஈடுபடும் கணையன் என்பவன் நாணினாற்போல, நான் நாணம் அடைந்தேன் பெருமானே!

குறிப்பு:  பாணன் என்ற பெயருடைய மன்னர்கள் – 113 – எழாஅப் பாணன், 155 – பல் வயின் பய நிரை சேர்ந்த பாண் நாட்டு, 226 – வலி மிகும் முன்பின் பாணனொடு, 325 – நல் வேல் பாணன் நல் நாட்டு, and 386 – பாணன் மல்லடு மார்பின் வலியுற, and in an inscription at Paraiyanpattu in Tamil Nadu, which mentions Pāṇāṭu, the territory of Pānan – Early Tamil Epigraphy, page 629, Iravatham Mahadevan, Harvard University Press.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71).  வரலாறு:  பாணன், ஆரியப் பொருநன், கணையன்.

சொற்பொருள்:  பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து – பொய்கையில் உள்ள புலவு நாற்றமுடைய நீர்நாயின் ஆண், வாளை நாள் இரை தேரும் ஊர – வாளை மீனை அதிகாலையில் இரைக்கு ஆராய்ந்து உண்ணும் ஊரனே,  நாணினென் பெரும யானே – நான் நாணம் அடைந்தேன் ஐயா, பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி – பாணன் என்பவன் போர் செய்வதில் திறமையான மார்பின் வலிமையால் வருந்தி, எதிர் தலைக்கொண்ட – அவனை போரில் எதிர்கொண்ட, ஆரியப் பொருநன் நிறைத் திரண் முழவுத் தோள் – ஆரியப்பொருநன் என்பவனின் நிறைந்த திரண்ட முழவு போன்ற தோள்கள், கையகத்து ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி – அப்பாணன் கையில் பட்டு அழிந்து பிணமாகக் கிடக்கும் கிடக்கையைப் பார்த்து, நற்போர்க் கணையன் நாணியாங்கு – நல்ல போரில் ஈடுபடும் கணையன் என்பவன் நாணினாற்போல, மறையினள் மெல்ல வந்து – மறைந்து மெல்ல வந்து, நல்ல கூறி – நல்ல சொற்களைக் கூறி, மை ஈர் ஓதி மடவோய் – கரிய கூந்தலை உடைய இளமைப்  பொருந்தியவளே, யானும் நின் சேரியேனே – நானும் உன்னுடைய தெருவின்கண் குடியிருப்பவள் தான், அயல் இலாட்டியேன் – உனக்கு அருகில் உள்ள இல்லத்தில் தான் வாழ்கின்றேன், நுங்கை ஆகுவென் நினக்கு – உனக்கு நான் தங்கை முறை ஆவேன், எனத் தன் கைத் தொடுமணி மெல் விரல் தண்ணெனத் தைவர – எனத் தன் மோதிரம் அணிந்த மென்விரலால் உடல் குளிரும்படி தடவி, நுதலும் கூந்தலும் நீவி – நெற்றியையும் கூந்தலையும் தடவி, பகல் வந்து பெயர்ந்த வாணுதல் கண்டே – பகலில் வந்து சென்ற ஒளியுடைய நெற்றியையுடைய உன் பரத்தையைக் கண்டு