கொன்றை வேந்தன் -

 

கடவுள் வாழ்த்து

      கொன்றை வேந்தன் செல்வ னடியிணை
      என்று மேத்தித் தொழுவோ மியாமே.

(பதவுரை) கொன்றை - கொன்றைப் பூமாலையைச் சூடிய,வேந்தன் - சிவபெருமானுக்கு, செல்வன் - குமாரராகிய விநாயகக்கடவுளுடைய, அடி இணை - பாதங்களிரண்டையும், யாம் - நாம்,என்றும் - எந்நாளும், ஏத்தி - துதிசெய்து, தொழுவோம் -வணங்குவோம்.

(பொழிப்புரை) சிவபெருமானுக்குத் திருக்குமாரராகிய விநாயகக் கடவுளின் இரண்டு திருவடிகளையும் நாம் எப்பொழுதும் துதித்து வணங்குவோம். (ஏ - ஈற்றசை)

  
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

(பதவுரை) அன்னையும் - தாயும், பிதாவும் - தகப்பனும், முன் - முன்னே, அறி - காணப்பட்ட, தெய்வம் - தெய்வங்களாவார்.

(பொழிப்புரை) தாயும் தந்தையும் முன்பு காணப்பட்ட தெய்வங்களாவார்.

  
2. ஆலயம் தொழுவது சாலவு நன்று

(பதவுரை) ஆலயம் - கோயிலுக்குப்போய், தொழுவது -கடவுளை வணங்குவது, சாலவும் - மிகவும், நன்று - நல்லது.

(பொழிப்புரை) கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்குவது மிகவும் நல்லது

  
3. இல்லற மல்லது நல்லற மன்று

(பதவுரை) இல்லறம் - (மனையாளோடு கூடிச் செய்யும்) இல்லறமானது, நல் அறம் - நல்ல அறமாகும்; அல்லது - இல்லற மல்லாத துறவறமானது, அன்று - நல்ல அறமன்றாகும்.

(பொழிப்புரை) வீட்டிலிருந்து மனைவியுடன் கூடிச் செய்யும் இல்லறமே நல்லறமாகும்; துறவறம் நல்லறமன்று. (இல்லறம் எளிதிற் செய்யத் தகுந்தது. துறவறம் எளிதிற் செய்யக் கூடாதது.).

  
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்

(பதவுரை) ஈயார் - கொடாதவருடைய, தேட்டை - சம்பாத்தியத்தை, தீயார் - (கள்வர் முதலிய) தீயவர், கொள்வர் - அபகரிப்பர்

(பொழிப்புரை) வறியவர்க்குக் கொடாத உலோபிகள் தேடிய பொருளைத் தீயோர் அபகரித்துச் செல்வர்.

  
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு

(பதவுரை) உண்டி - உணவு, சுருங்குதல் - குறைதல், பெண்டிர்க்கு - பெண்களுக்கு, அழகு - அழகாகும்.

(பொழிப்புரை) மிதமாக உண்பது மாதர்களுக்குச் சிறப்பாகும்.

  
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

(பதவுரை) ஊருடன் - ஊராருடன், பகைக்கின் - (ஒருவன்)விரோதித்தால், வேருடன் - (தன்) வமிசத்துடன், கெடும் - (அவன்) கெடுவான்.

(பொழிப்புரை) ஒருவன் தன் ஊராருடன் பகைத்துக்கொண்டால் அடியுடன் அழிந்துவிடுவான்.

  
-
7. எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகும்

(பதவுரை) எண்ணும் - கணிதநூலும், எழுத்தும் - இலக்கணநூலும், கண் எனத் தகும் - (மனிதருக்கு) இரண்டு கண்களென்று சொல்லப்படும்.

(பொழிப்புரை) கணிதமும் இலக்கணமும் மனிதர்க்கு இரண்டு கண்கள் என்று சொல்லத்தகும்.

  
8. ஏவா மக்கண் மூவா மருந்து

(பதவுரை) ஏவா - (பெற்றவர் இதைச் செய் என்று) ஏவுதற்குமுன் குறிப்பறிந்து செய்கிற, மக்கள் - பிள்ளைகள், மூவாமருந்து - (அப்பெற்றவருக்கு) தேவாமிர்தம் போல்வார்.

(பொழிப்புரை) பெற்றோர்கள் கட்டளை யிடுவதற்குமுன் குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகள் அவர்களுக்குத் தேவாமிர்தத்தை யொப்பார்கள்.

  
9. ஐயம் புகினுஞ் செய்வன செய்

(பதவுரை) ஐயம் புகினும் - பிச்சை எடுத்தாலும், செய்வன -செய்யத்தக்கவைகளை, செய் - (விடாது) செய்

(பொழிப்புரை) பிச்சையெடுத்துச் சீவித்தாலும் செய்யத்தக்க காரியங்களைச் செய்.

  
10. ஒருவனைப் பற்றி யோரகத் திரு

(பதவுரை) ஒருவனை - (நற்குணமுடைய) ஒருவனை, பற்றி - (துணையாகப்) பற்றிக்கொண்டு, ஓரகத்து - ஓரிடத்தில், இரு - வாசம் பண்ணு.

(பொழிப்புரை) தக்கான் ஒருவனைத் துணையாகப் பற்றிக்கொண்டு ஓரிடத்தில் வாசஞ்செய்


11. ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம்

(பதவுரை) வேதியர்க்கு - பிராமணருக்கு, ஒழுக்கம் -ஆசாரமானது, ஓதலின் - (வேதம்) ஓதலினும், நன்றே- நல்லது.

(பொழிப்புரை) பிராமணருக்கு வேதம் ஓதுவதைக் காட்டிலும் நல்லொழுக்கம் சிறந்தது.

  

12. ஒளவியம் பேசுத லாக்கத்திற் கழிவு


(பதவுரை) ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசுதல்- (ஒருவன்) பேசுதல், ஆக்கத்திற்கு - (அவன்) செல்வத்திற்கு, அழிவு - கேட்டைத் தருவதாகும்.

(பொழிப்புரை) ஒருவன் பொறாமை வார்த்தை பேசுவது அவன்செல்வத்திற்கு அழிவைத் தரும்.

  

13. அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடு


(பதவுரை) அஃகமும் - தானியத்தையும், காசும் - திரவியத்தையும், சிக்கெனத் தேடு - வீண்செலவு செய்யாமற் சம்பாதி.

(பொழிப்புரை) தானியத்தையும் திரவியத்தையும் வீண் செலவு செய்யாமல் தேடிக்கொள்.

  

14. கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை


(பதவுரை) கற்பு எனப்படுவது - (பெண்களுக்குக்) கற்பென்று சொல்லப்படுவது, சொல் - (கணவர்) சொல்லுக்கு, திறம்பாமை - தப்பி நடவாமையாம்.

(பொழிப்புரை) மகளிர்க்குக் கற்பு என்று சொல்லப்படுவது கணவர் வார்த்தைக்கு மாறுபட்டு நடவாமையாம்.

  

15. காவ றானே பாவையர்க் கழகு


(பதவுரை) காவல்தானே - (கற்புக்கு அழிவு வராமல் தம்மைக்) காத்துக்கொள்வதுதானே, பாவையர்க்கு - பெண்களுக்கு, அழகு - அழகாகும்.

(பொழிப்புரை) கற்பினின்று வழுவாமல் தம்மைக் காத்துக் கொள்வதே மாதர்களுக்கு அழகாகும்.

  

16. கிட்டா தாயின் வெட்டென மற


(பதவுரை) கிட்டாதாயின் - (இச்சித்த ஒரு பொருள்) கிடையாதானால், வெட்டென - சீக்கிரத்தில்தானே, மற - (அப்பொருளை) மறந்துவிடு.

(பொழிப்புரை) நீ விரும்பிய பொருள் கிடைக்காவிட்டால், சீக்கிரத்தில் அதனை மறந்துவிடு.

  

17. கீழோ ராயினுந் தாழ வுரை


(பதவுரை) கீழோர் ஆயினும் - (கேட்பவர் உனக்குக்) கீழ்ப்பட்டவராய் இருந்தாலும், தாழ - (உன் சொல்) வணக்கமுடையதாய் இருக்கும்படி, உரை - (அவருடன்) பேசு.

(பொழிப்புரை) தாழ்ந்தோரிடத்திலும் தாழ்மையாகப் பேசு.

  

18. குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை


(பதவுரை) குற்றம் - குற்றங்களை, பார்க்கின் - (ஆராய்ந்து) பார்த்தால், சுற்றம் - உறவாவோர், இல்லை - (ஒருவரும்) இல்லை.

(பொழிப்புரை) குற்றத்தையே ஆராய்ந்து பார்த்தால் சுற்றமாவார் ஒருவருமில்லை. (குற்றமே யில்லாதவர் ஒருவருமில்லை யாகையால் சுற்றத்தார் அகப்படார் என்பதாம்.)

  

19. கூரம் பாயினும் வீரியம் பேசேல்


(பதவுரை) கூர் அம்பு ஆயினும் - (உன் கையிலிருக்கிறது) கூர்மை பொருந்திய அம்பானாலும், வீரியம் - வீரத்தன்மையை, பேசேல் - (வீணாகப்) பேசாதே.

(பொழிப்புரை) உன் கையிலே கூரிய அம்பு இருந்தாலும், உன் வீரத்தை வியந்து பேசாதே.

  

20. கெடுவது செய்யின் விடுவது கருமம்


(பதவுரை) கெடுவது - தீமையை, செய்யின் - (தன் சிநேகன்)செய்தால், விடுவது - (அவன் சிநேகத்தை) விடுவதே, கருமம் - நற்செய்கையாம்.

(பொழிப்புரை) தன் நண்பன் தீமையைச் செய்தால், அவனது நட்பை விட்டுவிடுவது நற்செய்கையாம்.

  

21. கேட்டி லுறுதி கூட்டு முடைமை

(பதவுரை) கேட்டில் - (கைப்பொருள்) இழந்த காலத்தில், உறுதி - மனந்தளராமை, உடைமை - செல்வத்தை, கூட்டும் - சேர்க்கும்.

(பொழிப்புரை) பொருளை இழந்த காலத்தில் மனந்தளராமல் உறுதியுடனிருப்பது மீட்டும் செல்வத்தை யுண்டாக்கும்.

  
22. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி

(பதவுரை) கைப்பொருள் தன்னின் - கையிலிருக்கிற பொருளைப் பார்க்கிலும், மெய்ப்பொருள் - மெய்ப்பொருளாவது, கல்வி - கல்வியேயாம்.

(பொழிப்புரை) கையிலிருக்கிற திரவியத்தைப் பார்க்கிலும் கல்வியே உண்மைப் பொருளாகும்

  
23. கொற்றவ னறித லுற்றிடத் துதவி

(பதவுரை) கொற்றவன் - அரசனானவன், அறிதல் - (ஒருவனை) அறிந்திருத்தல், உற்ற இடத்து - (அவனுக்கு ஆபத்து) வந்த இடத்து, உதவி - உதவியாகும்.

(பொழிப்புரை) ஒருவனுக்கு அரசன் அறிமுகமாயிருப்பது அவனுக்கு ஆபத்தில் உதவியாகும். (உற்றவிடத்து என்பது உற்றிடத்து என விகாரப்பட்டது.)

  
24. கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு

(பதவுரை) கோட்செவி - கோள் கேட்குங் குணமுடையவனது காதிலே, குறளை - (பிறர்மேல் ஒருவன் வந்து சொன்ன) கோளானது, காற்றுடன் - காற்றுடன் சேர்ந்த, நெருப்பு - நெருப்பைப் போல மூளும்.

(பொழிப்புரை) கோள் கேட்கும் இயல்புள்ளவன் காதில் ஒருவன் சொன்ன கோள்வார்த்தை காற்றுடன் சேர்ந்த நெருப்புப்போல மூளும்.

  
25. கௌவை சொல்லி னெவ்வருக்கும் பகை

(பதவுரை) கௌவை - (பிறர்மேலே) பழிச்சொற்களை, சொல்லின் - (ஒருவன்) சொல்லினால், எவ்வருக்கும் - எல்லாருக்கும், பகை - (அவன்) பகையாவான்.

(பொழிப்புரை) ஒருவன் பிறர் பழிகளைச் சொல்லிக்கொண்டிருந்தால் அவன் யாருக்கும் பகையாவான் (எவருக்கும் என்பது எவ்வருக்கும் என விகாரப்பட்டது.)

  
26. சந்ததிக் கழகு வந்திசெய் யாமை

(பதவுரை) சந்ததிக்கு - தன் வமிசம் பெருகுதற்கு, அழகு - அழகாவது, வந்தி - மலடியாக, செய்யாமை - செய்யாமல் (தன் மனையாளோடு) கூடி வாழ்தலாம்.

(பொழிப்புரை) வமிசத்திற்கு அழகாவது மக்கட்பேறு உண்டாகும்படி மனைவியுடன் கூடி வாழ்தலாம்.

  
27. சான்றோ ரென்கை யீன்றோட் கழகு

(பதவுரை) சான்றோர் என்கை - (தன் புத்திரரைக் கல்வியறிவால்) நிறைந்தோர் என்று (பிறர்) சொல்லுகிறது, ஈன்றோட்கு - பெற்றவளுக்கு, அழகு - அழகாகும

(பொழிப்புரை) தன் புதல்வரை, அறிவுடையோர் என்று பிறர் சொல்லக் கேட்பது பெற்ற தாய்க்கு மகிழ்ச்சியாகும்.

  
28. சிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு

(பதவுரை) சிவத்தை - (முதற் கடவுளாகிய) பரமசிவத்தை, பேணின் - (ஒருவன்) வழிபட்டால், தவத்திற்கு - (அவன் செய்யும்) தவத்திற்கு, அழகு - அழகாகும்.

(பொழிப்புரை) ஒருவன் சிவபெருமானை விரும்பி வழிபட்டால் அதுவே அவன் தவத்திற்கு அழகாகும்.

  
29. சீரைத் தேடி னேரைத் தேடு

(பதவுரை) சீரை - சௌக்கியத்தை, தேடின் - (உனக்குத்) தேடுவாயானால், ஏரை - பயிரிடுந்தொழிலை, தேடு - தேடிக்கொள்ளு.

(பொழிப்புரை) சுகமாக வாழ விரும்பினால் உழுது பயிரிடுந் தொழிலைத் தேடிக்கொள்.

  
30. சுற்றத்திற் கழகு சூழ விருத்தல்

(பதவுரை) சுற்றத்திற்கு - உறவினருக்கு, அழகு - அழகாவது, சூழ இருத்தல் - சுற்றிலும் வந்திருத்தலாகும்.

(பொழிப்புரை) சுற்றத்தார்க்கு அழகாவது நலந்தீங்குகளில் சூழ வந்திருப்பதாகும்.


31. சூதும் வாதும் வேதனை செய்யும்

(பதவுரை) சூதும் - சூதாடுதலும், வாதும் - குதர்க்கம்பேசுதலும், வேதனை - வருத்தத்தை, செய்யும் - உண்டாக்கும்.

(பொழிப்புரை) சூதாடுதலும் விதண்டாவாதம் பேசலும் துன்பத்தை உண்டாக்கும்.

  
32. செய்தவ மறந்தாற் கைதவ மாளும்

(பதவுரை) செய்தவம் - செய்யுந் தவத்தை, மறந்தால் - (ஒருவன்) மறந்தால், கைதவம் - பொய்யாகிய அஞ்ஞானமானது, ஆளும் - (அவனை அடிமை கொண்டு) ஆளும்.

(பொழிப்புரை) ஒருவன் செய்யுந் தவத்தை மறந்துவிட்டால் அவனை அஞ்ஞானம் அடிமைகொள்ளும்.

  
-
33. சேமம் புகினும் யாமத் துறங்கு

(பதவுரை) சேமம் - காவற்கூடத்திலே; புகினும் - போய்இருந்தாலும், யாமத்து - ஏழரை நாழிகைக்குப்பின்; உறங்கு - நித்திரை பண்ணு.

(பொழிப்புரை) காவற்கூடத்திலே போய் இருந்தாலும் இரவுஏழரை நாழிகைக்குப்பின் நித்திரை செய். (காவல் வேலைசெய்தாலும் நள்ளிரவில் உறங்கவேண்டும். 'சாமத்துறங்கு' என்றும் பாடம்.

  
34. சையொத் திருந்தா லைய மிட்டுண்

(பதவுரை) சை ஒத்து இருந்தால் - பொருள் ஒத்திருந்தால்,ஐயம் இட்டு - பிச்சை இட்டு, உண் - உண்டு வாழு.

(பொழிப்புரை) பொருள் ஒத்திருந்தால் பிச்சையிட்டு உண்டு வாழ். (சை - பொருள்.)

  
35. சொக்க ரென்பவ ரத்தம் பெறுவர்

(பதவுரை) சொக்கர் என்பவர் - பொன்னுடையவர் என்றுசொல்லப்படுவோர், அத்தம் - (அறமும் இன்பமுமாகியமற்றைப்) புருடார்த்தங்களையும், பெறுவர் - பெறுவர்.

(பொழிப்புரை) பொருளுடையவர் அறமும் இன்பமும் ஆகிய மற்றைப் புருடார்த்தங்களையும் பெறுவர். (முயற்சியுடையவர் பொருள் பெறுவர் என்றும், களங்கமற்றவர் நல்வழியை அடைவர் என்றும் இதற்குப் பொருள் சொல்வதும் உண்டு.)

  
36. சோம்ப ரென்பவர் தேம்பித் திரிவர்

(பதவுரை) சோம்பர் என்பவர் - சோம்பலுடையவர் என்று சொல்லப்படுவோர், தேம்பி - (வறுமையினால்) வருந்தி, திரிவர் - (இரந்து) திரிவர்.

(பொழிப்புரை) சோம்பலுடையோர் வறுமையால் வருந்தி அலைவார்கள்.

  
37. தந்தைசொன் மிக்க மந்திர மில்லை

(பதவுரை) தந்தை - பிதாவினுடைய; சொல் - சொல்லுக்கு,மிக்க - மேற்பட்ட, மந்திரம் - (பலனைத் தரும்) மந்திரமானது, இல்லை - இல்லையாம்.

(பொழிப்புரை) பிதாவின் சொல்லுக்கு மேற்பட்ட மந்திரம் இல்லை. (மந்திரம் என்பதற்கு ஆலோசனை என்றும் பொருள் கூறலாம்.).

  
38. தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை

(பதவுரை) தாயின் - மாதாவைப் பார்க்கிலும், சிறந்த - சிறப்புப் பொருந்திய, ஒரு கோயிலும் - ஓர் ஆலயமும்,இல்லை - இல்லையாம்.

(பொழிப்புரை) அன்னையைப் பார்க்கிலும் சிறந்த கோயில் இல்லை. (தாயைப் பூசித்தால் ஆலயத்திற்கடவுளைப் பூசிக்கும் பலனை அடையலாம் என்பதுகருத்து. சிறந்த என்பது சிறந்து என விகாரப்பட்டது. 'தாய்சொற் றுறந்தால் வாசக மில்லை' என்றும் பாடம்.
இதற்கு, தாயின் வார்த்தையைத் தப்பினால் உறுதி பயக்கும்வேறு வாசகமில்லை என்பது பொருளாகும்.)

  
39. திரைகட லோடியுந் திரவியந் தேடு

(பதவுரை) திரை கடல் - அலைவீசுகின்ற கடலிலே,ஓடியும் - (கப்பலேறி, தூரதேசங்களிற்) போயானாலும்,திரவியம் - திரவியத்தை, தேடு - சம்பாதி.

(பொழிப்புரை) கடல் வழியாகத் தேசாந்தரஞ் சென்றும் பொருளைத் தேடு..)

  
40. தீராக் கோபம் போரா முடியும்

(பதவுரை) தீரா - நீங்காத, கோபம் - கோபமானது, போரா - (பின்பு) சண்டையாக, முடியும் - முடிந்துவிடும்.

(பொழிப்புரை) தணியாத கோபமானது கலகமாக முடியும்

41. துடியாப் பெண்டிர் மடியி னெருப்பு


(பதவுரை) துடியா - (தங் கணவனுக்குத் துன்பம் வந்தபோது) மனம் பதையாத, பெண்டிர் - பெண்கள், மடியில் - (அவர்) வயிற்றில், நெருப்பு - நெருப்பாவர்.

(பொழிப்புரை) கணவர்க்குத் துன்பம் வந்தபோது மனம் பதையாத மகளிர், அவர் வயிற்றில் நெருப்பாவர். (மடியில்நெருப்பு என்பதற்கு உடையிற் கட்டிய நெருப்பை யொப்பர்என்றும் பொருள் கூறலாம்.)

  

42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்


(பதவுரை) தூற்றும் - (தங் கணவர்மேற் குற்றஞ்சொல்லித்) தூற்றுகிற, பெண்டிர் - பெண்களை, கூற்று எனத்தகும் - (அவருக்கு) இயமன் என்று எண்ணத்தகும்.

(பொழிப்புரை) கணவர்மேல் அவதூறு சொல்லும் பெண்டிரை அவருக்கு இயமன் என்று சொல்லத்தகும்.

  

43. தெய்வஞ் சீறிற் கைதவ மாளும்.


(பதவுரை) தெய்வம் - தெய்வமானது, சீறின் - (ஒருவனைக்)கோபித்தால், கைதவம் - (அவனுக்குக்) கைகூடியிருந்ததவமும், மாளும் - (பயன் கொடாமல்) அழியும்.

(பொழிப்புரை) ஒருவன் கடவுளின் சினத்துக்கு ஆளானால்அவனுக்குக் கைகூடிய தவமும் அழிந்துவிடும். (கைத்தவம் என்பது கைதவம் என விகாரப்பட்டது.)

  

44. தேடா தழிக்கிற் பாடா முடியும்


(பதவுரை) தேடாது - (ஒருவன் வருந்திச்) சம்பாதியாமல்,அழிக்கின் - (இருக்கிற பொருளைச்) செலவழித்தால், பாடாமுடியும் - (அவனுக்குப் பின்) வருத்தமாக முடியும்.

(பொழிப்புரை) பொருளைச் சம்பாதியாமல் செலவழித்துக்கொண்டிருந்தால் பின்பு துன்பமாக முடியும்.

  

45. தையும் மாசியும் வையகத் துறங்கு


(பதவுரை) தையும் - தை மாதத்திலும், மாசியும் - மாசி மாதத்திலும், வை அகத்து - (பனிவருத்தந் தராத) வைக்கோல் வீட்டிலே, உறங்கு - நித்திரைபண்ணு.

(பொழிப்புரை) தை, மாசி மாதங்களாகிற பனிக்காலத்தில் வைக்கோலால் வேய்ந்த கூரைவீட்டில் நித்திரை செய்.(வை - வைக்கோல்.)

  

46. தொழுதூண் சுவையி னுழுதூ ணினிது


(பதவுரை) தொழுது - (ஒருவரைச்) சேவித்து, ஊண் - உண்ணும் உணவினது, சுவையின் - சுவையைப்பார்க்கிலும், உழுது - உழுது பயிர்செய்து, ஊண் - உண்ணும் உணவின் சுவை, இனிது - இன்பந்தருவதாகும்.

(பொழிப்புரை) சேவகஞ்செய்து உண்ணும் உணவைப் பார்க்கிலும் உழுது பயிர்செய்து உண்ணும் உணவு இன்பந் தருவதாகும்.

  

47. தோழ னோடு மேழைமை பேசேல்


(பதவுரை) தோழனோடும் - (உன்) சிநேகிதனோடாயினும், ஏழைமை - (உனக்கு இருக்கிற) சிறுமையை, பேசேல் - பேசாதே.

(பொழிப்புரை) உன் வறுமை முதலிய எளிமையை நண்பனிடத்திலும் சொல்லாதே.

  

48. நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும்


(பதவுரை) நல் இணக்கம் அல்லது - நல்ல சகவாசம்அல்லாதது, அல்லல் - துன்பத்தையே, படுத்தும் - உண்டாக்கும்.

(பொழிப்புரை) நற்சேர்க்கையல்லாத கெட்ட சகவாசம் துன்பத்தை உண்டாக்கும்.

  

49. நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை


(பதவுரை) நாடு எங்கும் - தேசமெங்கும், வாழ - செழித்திருக்குமாயின், கேடு ஒன்றும் - ஒரு கெடுதியும், இல்லை - இல்லை.

(பொழிப்புரை) தேசமெங்கும் செழித்திருந்தால் யாருக்கும் ஒரு குறைவுமில்லை.

  

50. நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை


(பதவுரை) நிற்க - நிலைபெறும்படி, கற்றல் - கற்றலாவது, சொல் - (தான் சொல்லும்) சொற்கள், திறம்பாமை - தப்பிப்போகாமையாம்.

(பொழிப்புரை) நிலைபெறக் கற்றலாவது சொல்லுஞ் சொல் தவறாமையாம். கற்றவர்கள் பயனின்றி யொழியாது நிலைபெறும் சொற்களைச் சொல்லுதல் வேண்டும். (சொல் திறம்பாமை என்பதற்கு வாக்குறுதியிற் பிறழாதிருத்தல் என்றும் பொருள் சொல்லலாம்.)

  

51. நீரகம் பொருந்திய வூரகத் திரு

(பதவுரை) நீர் - நீர்வளமானது, அகம் - தனக்குள்ளேயே, பொருந்திய - அமைந்த, ஊரகத்து - ஊரினிடத்திலே, இரு - குடியிரு.

(பொழிப்புரை) நீர்வளம் பொருந்திய ஊரிலே குடியிரு.

  
52. நுண்ணிய கருமமு மெண்ணித் துணி

(பதவுரை) நுண்ணிய - சிறிய, கருமமும் - தொழிலையும், எண்ணி - (நன்றாக) ஆலோசித்து, துணி - (பின்பு அதைச்) செய்யத்துணி.

(பொழிப்புரை) சிறிய காரியத்தையும் நன்கு ஆலோசனை செய்து செய்யத்துணி.

  
53. நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு

(பதவுரை) நூல் - தருமநூலிலே சொல்லப்பட்ட, முறை - (விதிகளின்) முறையை, தெரிந்து - அறிந்து, சீலத்து - நல்லொழுக்க வழியில், ஒழுகு - நட.

(பொழிப்புரை) நீதிநூலிற் சொல்லப்பட்ட விதிகளை அறிந்து நல்லொழுக்க வழியில் நட.

  
54. நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை

(பதவுரை) நெஞ்சை - (தம்முடைய) மனசுக்கு, ஒளித்த - மறைக்கப்பட்ட, ஒரு வஞ்சகம் - யாதொரு வஞ்சனையும், இல்லை - இல்லை.

(பொழிப்புரை) மனத்திற்குத் தெரியாத வஞ்சகம் ஒன்றுமில்லை.

  
55. நேரா நோன்பு சீரா காது

(பதவுரை) நேரா - (மனசினால்) உடன்படாத, நோன்பு - தவமானது, சீர் ஆகாது - சீராக முடியாது.

(பொழிப்புரை) மனம்பொருந்திச் செய்யாத தவமானது செம்மையாக முடியாது

  
56. நைபவ ரெனினு நொய்ய வுரையேல்

(பதவுரை) நைபவர் எனினும் - (கேட்போர் எதிர்பேசாமல்)வருந்துவோராயினும், நொய்ய - அற்பவார்த்தைகளை, உரையேல் - சொல்லாதே.

(பொழிப்புரை) கேட்பவர் எதிர்பேசாமல் வருந்து வோராயினும் அற்பவார்த்தைகளைப் பேசாதே.

  
57. நொய்யவ ரென்பவர் வெய்யவ ராவர்

(பதவுரை) நொய்யவர் என்பவர் - (உருவத்தினாலே) சிறியவர் என்று இகழப்படுவோரும், வெய்யவர் ஆவர் - (செய்காரியத்தால் யாவரும்) விரும்பும் குணத்தை யுடையவராவர்.

(பொழிப்புரை) உருவம் முதலியவற்றால் சிறியவரென்று இகழப்படுவோருஞ் செய்யுங் காரியத்தால் யாவரும் விரும்புந்தன்மையினர் ஆவர்.

  
58. நோன்பென் பதுவே கொன்று தின்னாமை

(பதவுரை) நோன்பு என்பது - தவமென்று சொல்லப்படுவது, கொன்று - (ஒரு சீவனைக்) கொலை செய்து, தின்னாமையே - (அதன் மாமிசத்தைத்) தின்னாமையேயாம்.

(பொழிப்புரை) விரதம் என்று சொல்லப்படுவது ஓருயிரைக் கொன்று அதன் ஊனைத் தின்னாமையாம்.

  
59. பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும்

(பதவுரை) பண்ணிய - (ஒருவன்) செய்த, பயிரின் - பயிரின் விளைவினாலும் விளைவில்லாமையினாலும், புண்ணியம் - (அவனிடத்தே) புண்ணியம் இருத்தலும் இல்லாமையும், தெரியும் - அறியப்படும்.

(பொழிப்புரை) ஒருவன் செய்த பயிர் விளைவதிலிருந்து அவன் முன்பு செய்த புண்ணியம் அறிந்து கொள்ளப்படும்.

  
60. பாலோ டாயினுங் கால மறிந்துண்

(பதவுரை) பாலோடு ஆயினும் - பாலோடு கூடிய அன்னத்தை உண்டாலும், காலம் அறிந்து - (உண்ணத்தகுங்) காலத்தை அறிந்து, உண் - (அதை) உண்ணு.

(பொழிப்புரை) பாலுடன் கூடிய அன்னமாயினும் உண்ணத்தகும் காலமறிந்து உண்.

  
61. பிறன்மனை புகாமை யறமெனத் தகும்

(பதவுரை) பிறன் - பிறனுடைய, மனை - மனையாளிடத்தில், புகாமை - (இச்சித்துப்) போகாமையே, அறம் எனத் தகும் - (எல்லாத் தருமங்களிலும் உயர்ந்த) தருமம் என்று சொல்லத்தகும்.

(பொழிப்புரை) பிறன்மனைவியை விரும்பாமையே உயர்ந்த தருமம் என்று சொல்லத்தகும்.

  
62. பீரம் பேணி பாரந் தாங்கும்

(பதவுரை) பீரம்பேணி - தாய்ப்பால் குறைவற உண்டு வளர்ந்தவன், பாரம் - பாரமான சுமையை, தாங்கும் - சுமப்பான்.

(பொழிப்புரை) தாய்ப்பாலைக்குறைவற உண்டு வளர்ந்தவன் பெரும் பாரத்தைச் சுமக்க வல்லவனாவான். (காரணத்தைக் குறைவறக் கொண்டவன் காரியத்தை எளிதில் முடிப்பான்.) (பீரம் என்பதில் அம் சாரியை.)

  
63. புலையுங் கொலையும் களவுந் தவிர்

(பதவுரை) புலையுயம் - புலாலுண்ணுதலையும், கொலையும் - சீவ வதை செய்வதையும், களவும் - பிறர்பொருளைத் திருடுதலையும்., தவிர் - (செய்யாது) ஒழித்துவிடு.

(பொழிப்புரை) புலால் உண்ணுதலும், பிறவுயிரைக்கொல்லுதலும், பிறர்பொருளைத் திருடுதலும், செய்யாதே.

  
64. பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம்

(பதவுரை) பூரியோர்க்கு - கீழ்மக்களுக்கு, சீரிய - சிறப்பாகிய, ஒழுக்கம் - நடையானது, இல்லை - இல்லை.

(பொழிப்புரை) கீழ்மக்களிடத்தில் சிறந்த நடை காணப்படுவதில்லை.

  
65. பெற்றோர்க் கில்லை சுற்றமுஞ் சினமும்

(பதவுரை) பெற்றோர்க்கு - (மெய்ஞ்ஞானத்தைப்) பெற்றவர்க்கு, சுற்றமும் - உறவினர்மேல் ஆசையும், சினமும் - (மற்றவர்மேல்) வெறுப்பும், இல்லை - இல்லை.

(பொழிப்புரை) கடவுளருளைப் பெற்றோர்க்கு உறவுமில்லை கோபமும் இல்லை.

  
66. பேதைமை யென்பது மாதர்க் கணிகலம்

(பதவுரை) பேதைமை என்பது - அறியாமை யென்று சொல்லப்படுங் குணமானது, மாதர்க்கு - பெண்களுக்கு, அணிகலம் - ஆபரணமாகும்.

(பொழிப்புரை) அறிந்தும் அறியாதவர்போல அடங்கியிருக்கும் குணம் மாதர்களுக்கு ஆபரணமாகும்.

  
67. பையச் சென்றால் வையந் தாங்கும்

(பதவுரை) பைய - மெள்ள, சென்றால் - (ஒருவன்தகுதியான வழியிலே) நடந்தால், வையம் - பூமியிலுள்ளோர், தாங்கும் - (அவனை) மேலாகக் கொள்வர்.

(பொழிப்புரை) ஒருவன் தகுதியான வழியில் நடந்தால் உலகத்தார் அவனை மேலாகக் கொள்வர்.

  
68. பொல்லாங் கென்பவை யெல்லாந் தவிர்

(பதவுரை) பொல்லாங்கு என்பவை - தீங்குகளென்று சொல்லப்பட்டவை, எல்லாம் - எல்லாவற்றையும், தவிர் - (செய்யாது) ஒழித்துவிடு.

(பொழிப்புரை) தீங்குகள் என்று சொல்லப்பட்ட யாவற்றையும் செய்யாதொழி.

  
69. போனக மென்பது தானுழந் துண்டல்

(பதவுரை) போனகம் என்பது - போசனமென்று சொல்லப்படுவது, தான் உழந்து - தான் பிரயாசைப்பட்டுச் சம்பாதித்து, உண்டல் - உண்ணுதலாம்.

(பொழிப்புரை) உணவென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது தான் வருந்திச் சம்பாதித்து உண்பதாம்.

  
70. மருந்தே யாயினும் விருந்தோ டுண்

(பதவுரை) மருந்தே ஆயினும் - (உண்ணப்படுவது கிடைத்தற்கு அரிய) தேவாமிர்தமேயானாலும், விருந்தோடு - வந்த விருந்தாளிகளோடு கூடி, உண் - உண்ணு.

(பொழிப்புரை) கிடைத்தற்கரிய தேவாமிர்தமே யானாலும் விருந்தினரோடு புசி.

  
71. மாரி யல்லது காரிய மில்லை

(பதவுரை) மாரி அல்லது - மழையினால் அல்லாமல், காரியம் - யாதொரு காரியமும், இல்லை - (யாருக்கும்நடப்பது) இல்லை.

(பொழிப்புரை) மழை யிருந்தாலல்லாமல் உலகத்தில் எக்காரியமும் நடப்பதில்லை.

  
72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை

(பதவுரை) மின்னுக்கு எல்லாம் - (வானத்திலே காணப்பட்ட) மின்னலுக்கு எல்லாம், பின்னுக்கு மழை - பின்னே மழை உண்டாகும்.

(பொழிப்புரை) மின்னுவதெல்லாம் பின்னே மழை பெய்தற்கு அடையாளம். (ஒருவனுடைய ஊக்கம் முதலியவெல்லாம் அவனுக்குப் பின்னே வரும் நன்மைக்கு அடையாளம்.)

  
73. மீகாம னில்லா மரக்கல மோடாது

(பதவுரை) மீகாமன் - (தன்னை ஓட்டத்தக்க) மாலுமி, இல்லா - இல்லாத, மரக்கலம் - கப்பல், ஓடாது - (கடலிலே செவ்வையாக) ஓடாது.

(பொழிப்புரை) மாலுமி யில்லாத கப்பல் ஓடாது. (நல்வழியில் நடத்தும் தலைவனில்லாத குடும்பமும், வேந்தனில்லாத நாடும் முதலியன செவ்வையாக நடைபெறமாட்டா.)

  
74. முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்

(பதவுரை) முற்பகல் - ஒரு பகலின் முன்பங்கிலே, செய்யின் - (பிறனுக்குத் தீங்கு) செய்தால், பிற்பகல்- அதன் பின்பங்கிலே, விளையும் - (செய்தவனுக்கு) அத்தீங்கு தானே உண்டாகும்.

(பொழிப்புரை) ஒரு பகலின் முற்பாகத்தில் பிறருக்குத் தீங்கு செய்தால் பிற்பாகத்தில் தனக்கு அத்தீங்கு உண்டாகும். (முற்பகல் பிற்பகல் என்று சொன்னது விரைவில் உண்டாகும் என்பதைக் காட்டுதற்கு. நன்மை தீமை இரண்டுக்கும் பொதுவாகச் சொன்னதாகவும் கொள்ளலாம்.)

  
75. மூத்தோர் சொன்ன வார்த்தை யமிர்தம்

(பதவுரை) மூத்தோர் - (கல்வியறிவினாலே) முதிர்ந்தவர், சொன்ன - சொல்லிய, வார்த்தை - வார்த்தையானது, அமிர்தம் - தேவாமிர்தத்தைப் போலும்.

(பொழிப்புரை) பெரியோர் சொல்லிய வார்த்தையானது தேவாமிர்தம்போல் இன்பத்தைச் செய்யும்.

  
76. மெத்தையிற் படுத்த னித்திரைக் கழகு

(பதவுரை) மெத்தையில் - பஞ்சணையிலே, படுத்தல் - படுத்தலானது, நித்திரைக்கு - (ஒருவன் செய்கிற) நித்திரைக்கு, அழகு - அழகாகும்.

(பொழிப்புரை) மிருதுவான பஞ்சணையிற் படுத்தல் நித்திரைக்கு அழகாகும். (மெத்தெனப்படுத்தல் என்றும் பாடம்.)

  
77. மேழிச் செல்வம் கோழை படாது

(பதவுரை) மேழி - கலப்பைபிடித்து உழுது பயிர் செய்தலால் உண்டாகின்ற, செல்வம் - செல்வமானது, கோழை படாது - (ஒருபோதும்) குறைவை அடையாது.

(பொழிப்புரை) உழுது பயிர்செய்தலால் வரும் செல்வம் சிறுமையுறாது.

  
78. மைவிழி யார்தம் மனையகன் றொழுகு

(பதவுரை) மை விழியார் தம் - மை தீட்டிய கண்களையுடைய வேசிகளது, மனை - வீட்டினை, அகன்று ஒழுகு - விலகி நட.

(பொழிப்புரை) மைதீட்டிய கண்களையுடைய பரத்தையர் மனையை அணுகாமல் விலகிநட.

  
79. மொழிவது மறுக்கி னழிவது கருமம்

(பதவுரை) மொழிவது - (பெரியோர்) சொல்வதை, மறுக்கின் - கேளாமற் செய்தால், கருமம் - (ஒருவன் செய்யுந்) தொழில், அழிவது - கெடுவதாகும்.

(பொழிப்புரை) ஒருவன் பெரியோர் சொல்லை மீறி நடந்தால் அவன் செய்யும் தொழில் பயன்படாது அழியும்.

  
80. மோன மென்பது ஞான வரம்பு

(பதவுரை) மோனம் என்பது - மௌனநிலை என்பது, ஞானம் - மெய்ஞ்ஞானத்துக்கு, வரம்பு - எல்லையாகும்.

(பொழிப்புரை) மௌனம் என்பது ஞானத்திற்கு எல்லையாம்.

  
81. வளவ னாயினு மளவறிந் தழித்துண்

(பதவுரை) வளவன் ஆயினும் - (செல்வத்தில் நீ) சோழனுக்கு ஒப்பானவன் ஆனாலும், அளவு - (பொருள் வரவின்) அளவை, அறிந்து - தெரிந்து, அழித்து - செலவழித்து, உண் - அனுபவி.

(பொழிப்புரை) நீ சோழன்போன்ற செல்வ முடையவன் ஆனாலும் வரவுக்குத் தக்கபடி செலவுசெய்து உண்ணு.

  
82 வானஞ் சுருங்கிற் றானஞ் சுருங்கும்

(பதவுரை) வானம் - மழையானது, சுருங்கின் - குறையுமாயின், தானம் - தருமமானது, சுருங்கும் - குறைவுபடும்.

(பொழிப்புரை) மழை பெய்வது குறைந்தால் தானஞ்செய்வது குறையும்.

  
83. விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம்

(பதவுரை) விருந்து இலோர்க்கு - விருந்தினரை உபசரித்தல் இல்லாதவருக்கு, பொருந்திய - தகுதியான, ஒழுக்கம் - இல்லற வொழுக்கம், இல்லை - இல்லையாம்.

(பொழிப்புரை) விருந்தினரை உபசரியாதவர்களுக்குத் தகுதியான இல்லற வொழுக்கம் இல்லையாம்.

  
84. வீரன் கேண்மை கூரம் பாகும்

(பதவுரை) வீரன் - வீரனுடைய, கேண்மை - சிநேகம், கூர் அம்பு ஆகும் - கூர்மைபொருந்திய அம்பை ஒப்பாகும்.

(பொழிப்புரை) ஒருவனுக்கு வீரனுடைய நட்பு இருந்தால் அஃது அவனுக்குக் கூரிய அம்புபோல் பகையை வெல்ல உதவும்.

  
85. உரவோ ரென்கை யிரவா திருத்தல்

(பதவுரை) உரவோர் என்கை - வல்லவரென்று சொல்லப்படுதல், இரவாது - யாசியாமல், இருத்தல் - இருக்கையாம்.

(பொழிப்புரை) திட்பமுடையோர் என்று சொல்லப்படுவது சிறுமைவந்த காலத்திலும் பிறரை இரவாதிருப்பதாம்.

  
86. ஊக்க முடைமை யாக்கத்திற் கழகு

(பதவுரை) ஊக்கம் - மனந்தளராமையை, உடைமை - உடைத்தாதல்; ஆக்கத்திற்கு - செல்வத்திற்கு, அழகு - அழகாகும்.

(பொழிப்புரை) செய்யுந் தொழிலில் மனம் தளராதிருத்தல் செல்வத்திற்கு அழகாகும்.

  
87. வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை

(பதவுரை) வெள்ளைக்கு - களங்கமில்லாத பரிசுத்த குணமுடையவனிடத்து, கள்ளம் - வஞ்சனை பொருந்திய, சிந்தை - நினைப்பானது, இல்லை - இல்லை.

(பொழிப்புரை) களங்கமற்ற மனமுடையவனிடத்தில் வஞ்சக நினைப்பில்லை.

  
88. வேந்தன் சீறி னாந்துணை யில்லை

(பதவுரை) வேந்தன் - அரசனானவன், சீறின் - (ஒருவனைக்) கோபித்தால், ஆம் - (அப்போது அவனுக்கு) ஆகின்ற, துணை - உதவி, இல்லை - இல்லையாம்.

(பொழிப்புரை) அரசன் ஒருவனைக் கோபித்தால் அவனுக்கு வேறு உதவியில்லை.

  
89. வையந் தோறுந் தெய்வந் தொழு

(பதவுரை) வையம் தோறும் - பூமியிலுள்ள தலந்தோறும் (போய்), தெய்வம் - கடவுளை, தொழு - வணங்கு.

(பொழிப்புரை) பூமியிலுள்ள தெய்வத்தலந்தோறுஞ் சென்று கடவுளை வணங்கு.

  
90. ஒத்த விடத்து நித்திரை கொள்

(பதவுரை) ஒத்தவிடத்து - (மேடுபள்ளம் இல்லாமற்) சமமான இடத்திலே, நித்திரை கொள் - நித்திரைபண்ணு.

(பொழிப்புரை) சமமான இடத்திலே படுத்து நித்திரைசெய்.

  
91. ஓதாதார்க் கில்லை யுணர்வொடு மொழுக்கம்

(பதவுரை) ஓதாதார்க்கு - படியாதவர்க்கு, உணர்வொடும் - அறிவுடனே, ஒழுக்கம் - நல்லநடையும், இல்லை - (உண்டாதல்) இல்லை.

(பொழிப்புரை) நல்லநூல்களைப் பயிலாதவர்க்கு அறிவும் நன்னடையும் இல்லை.

        கொன்றைவேந்தன் மூலமும் உரையும் முற்றிற்று

  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக