திருமுருகாற்றுப்படை

 திருமுருகாற்றுப்படை - உரை – வைதேகி

பாடியவர் – மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டோன் – முருகப்பெருமான்
திணை – பாடாண்
துறை – ஆற்றுப்படை
பா வகை – அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள் – 317

புலவர்:   கீரன் என்பது இப்புலவர் பெருமானின் இயற்பெயர்.  ந என்னும் சிறப்புப் பொருளைத்தரும் இடைச்சொல் சேர்த்து நக்கீரன் என்றாயிற்று. நெடுநல்வாடையை இயற்றியவரும் இவரே.  இவர் தந்தையார் மதுரையில் ஆசிரியராக இருந்தவர்.

பாட்டுடைத் தலைவன்:  முருகப்பெருமான்

ஆற்றுப்படை:  ஆற்றுப்படை என்பது ஒரு கொடையாளியிடம் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர் வந்த வறியோர்க்கு அவ்வள்ளலிடம் சென்று தாம் பெற்றவாறு அவர்கள் பெறுமாறு வழிப்படுத்தல்.  இப்பாடலில், முருகக் கடவுளை அடைந்து அவனருளைப் பெறும் முறையை விவரிக்கின்றார் புலவர்.

திருமுருகாற்றுப்படை:  முருகாற்றுப்படை என்பது முருகன்பால் வீடு பெறும்பொருட்டு ஓர் இரவலரை ஆற்றுப்படுத்துவது ஆகும்.  புலவராற்றுப்படை என்ற பெயரும் இப்பாட்டிற்கு உண்டு என ஆசிரியர் நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரை மூலம் நாம் அறிகின்றோம்.

கதைச்சுருக்கம்:   ஆறுபடை வீடுகளையும் சிறப்பித்துள்ளார் இப்புலவர்.  திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகனை முதலில் புகழ்ந்து, பின் முருகன் தெய்வயானையின் கணவர் எனக்கூறுகின்றார்.  சூரனைக் கொல்லுதல் பற்றியும் கூறுகின்றார்.  திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) தலத்தில் முருகனின் ஆறு முகங்களின் இயல்பையும், பன்னிரண்டு கைகளின் தொழில்கள் பற்றியும் விவரிக்கின்றார்.  ஆறு முகங்களில் ஒரு முகம் வள்ளியுடன் மகிழ்ச்சியுடன் பொருந்தியுள்ளதாகக் கூறுகின்றார். திருவாவினன்குடி (பழனி) தலத்தில் சிவபெருமான், திருமால், இந்திரன் ஆகிய மூவரும் முருகனின் பின் செல்வதாகாக் கூறுகின்றார்.  தெய்வயானையுடன் இருப்பதாகவும் கூறுகின்றார்.  திருவேரகம் (சுவாமிமலை) தலத்தில் பூணூல் அணிந்த அந்தணர்கள் முருகனை வணங்குவதாகக் கூறுகின்றார்.  குன்றுதோறாடல் (திருத்தணி) தலத்தில் வேலனின் வெறியாட்டம் பற்றியும் கானவர் குரவைக் கூத்து ஆடுவதையும் குறிப்பிடுகின்றார்.  பழமுதிர்சோலையில் வெறியாட்டக்களத்தில் உள்ளார்.  இறுதியில் முருகனை அடைந்தால் அவனருளைப் பெறுவாய் எனக் கூறுகின்றார்.

1. திருப்பரங்குன்றம்


குமரவேளின் பெருமை

தெய்வயானையின் கணவன்

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்,
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை,   5

மறு இல் கற்பின் வாணுதற் கணவன்; (1 – 6)

பொருளுரை:  உலகில் வாழும் உயிர்கள் மகிழும்பொருட்டு, வலிமையுடன் எழுந்து திரியும், பலரும் புகழும் கதிரவன் கீழ்க்கடலில் எழுந்தாற்போல், தொலைவிலிருந்து ஒளிரும் மிக்கு விளங்கும் ஒளியானவனும், தன்னை அடைந்தவர்களைக் காக்கின்ற வலிய திருவடிகளையும், பகைவரை அழித்த இடியுடன் மாறுபட்ட பெரிய கையினை உடையவனும், குற்றமற்ற கற்பினையும் ஒளியுடைய நெற்றியையுமுடைய தெய்வயானைக்குக் கணவனும் ஆகிய,  

குறிப்பு:  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).   மதன் உடை நோன் தாள் (4) – ச. வே. சுப்பிரமணியன் உரை – அழகையும் வலிமையையும் உடைய கால்களை உடையவன், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறியாமையை உடைத்தற்குக் காரணமான வலிய திருவடிகளையுடையவன்.  செல் உறழ் (5) – ச. வே. சுப்பிரமணியன் உரை – இடி போன்ற, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடியோடு மாறுபட்ட. வாணுதற் கணவன் (6) – நச்சினார்க்கினியர் உரை – இந்திரன் மகள் தெய்வயானையார் கணவன்.  

சொற்பொருள்:   உலகம் உவப்ப – உலகில் வாழும் உயிர்கள் மகிழும்பொருட்டு, வலன் ஏர்பு திரிதரு – வலிமையுடன் எழுந்து திரியும், வலப்புறமாக எழுந்து திரியும், பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு – பலரும் புகழும் கதிரவன் கீழ்க்கடலில் எழுந்தாற்போல் (கண்டாஅங்கு – அளபெடை), ஓவு அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – தொலைவிலிருந்து ஒளிரும் மிக்கு விளங்கும் ஒளியானவனும், உறுநர்த் தாங்கிய – தன்னை அடைந்தவர்களைக் காக்கின்ற, மதன் உடை நோன் தாள் – வலிய திருவடிகளையும், செறுநர்த் தேய்த்த – பகைவரை அழித்த, செல் உறழ் தடக்கை – இடியுடன் மாறுபட்ட பெரிய கையினை உடையவனும், இடியை ஒத்த பெரிய கையினை உடையவனும் (செல் – முகில், ஆகுபெயராய் இடி என வந்தது, உறழ் – ஒத்த, மாறுபட்ட), மறு இல் கற்பின் வாணுதற் கணவன் – குற்றமற்ற கற்பினையும் ஒளியுடைய நெற்றியையுமுடைய தெய்வயானைக்கு கணவனும் ஆகிய (வாணுதல் – அன்மொழித்தொகை)

கடம் மாலை புரளும் மார்பினன்

கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை,
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண் நறுங்கானத்து,
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து   10

உருள் பூந்தண் தார் புரளும் மார்பினன்; (7 – 11)

பொருளுரை:  கடலில் நீரை உண்டு நிறைதலை உடைய சூலினையுடைய முகிலானது, ஞாயிறும் திங்களும் இருளை நீக்கும் வானில் பெரிய துளிகளைச் சிதறி, கார்காலத்தின் முதல் பெயலைப் பொழிந்த குளிர்ந்த நறுமணமான காட்டில், இருளை உண்டாக்கும்படி தழைத்த பருத்த அடியையுடைய கடம்ப மரத்தின் தேர் உருள் மலர்களால் செய்யப்பட்ட குளிர்ந்த மாலை புரளும் மார்பை உடையவனும்,    

குறிப்பு:  கமம் – நிறைவு.  கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57).  கார்கோள் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடல், காராலே கொள்ளப்படுவது எனும் பொருட்டு, கார் – முகில், கோள் – கொள்ளப்படுவது.

சொற்பொருள்:   கார்கோள் முகந்த கமஞ்சூல் மா மழை –  கடலில் நீரை உண்டு நிறைதலை உடைய சூலினையுடைய முகில் (கார்கோள் – கடல்), வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி –  ஞாயிறும் திங்களும் இருளை நீக்கும் வானில் பெரிய துளிகளைச் சிதறி (வாள் – ஆகுபெயர் ஞாயிற்றுக்கும் திங்களுக்கும்), தலைப்பெயல் தலைஇய தண் நறுங்கானத்து – கார்காலத்தின் முதல் பெயலைப் பொழிந்த குளிர்ந்த நறுமணமான காட்டில் (தலைஇய – அளபெடை), இருள்பட  பொதுளிய பராரை மராஅத்து – இருளை உண்டாக்கும்படி தழைத்த பருத்த அடியையுடைய கடம்ப மரத்தின் (பராரை – பரு அரை பராரை எனப் புணர்ந்தது, பொதுளிய – தழைத்த), உருள் பூந்தண் தார் புரளும் மார்பினன் – தேர் உருள் போலும் பூவால் செய்யப்பட்ட குளிர்ந்த மாலை புரளும் மார்பை உடையவனும்,

சூரர மகளிர்  

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண் செஞ் சீறடிக்
கணைக்கால், வாங்கிய நுசுப்பின், பணைத்தோள்,
கோபத்து அன்ன தோயாப் பூந்துகில்,  15
பல்காசு நிரைத்த சில் காழ் அல்குல்,
கை புனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர் இழைச்,
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதிச்   20
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடை இடுபு;
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்துத்
திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து   25
துவர முடித்த துகள் அறும் முச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇ, கருந்தகட்டு
உளைப் பூ மருதின் ஒள் இணர் அட்டிக்
கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇத், துணைத்தக   30
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்
நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ்
நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை,
தேம் கமழ் மருது இணர் கடுப்பக் கோங்கின்
குவி முகிழ் இளமுலைக் கொட்டி, விரிமலர்   35
வேங்கை நுண் தாது அப்பிக் காண்வர,
வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா
கோழி ஓங்கிய வென்று அடு விறற் கொடி
வாழிய பெரிது என்று ஏத்தி, பலர் உடன்,
சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடிச்   40

சூரர மகளிர் ஆடும் சோலை; (12 – 41)

பொருளுரை:  . 

பெரிய மூங்கில் வளர்ந்துள்ள மிக உயர்ந்த மலையில், சலங்கை சூழ்ந்த ஒளியுடைய சிவந்த அடியினையும் திரண்ட காலினையும், வளைந்த இடையினையும், மூங்கில் போன்ற தோளினையும், இந்திரகோபம் போன்ற, நிறம் சேர்க்காது இயல்பாகவே சிவந்த நிறமுடைய பூந்தொழிலையுடைய ஆடையினையும், பலமணிகள் கோத்த வடமாகிய மேகலையை அணிந்த அல்குலினையும், கையால் இயற்றப்படாத அழகை இயல்பாகவே பெற்ற அழகினையும், நாவலோடு பெயர் பெற்ற பொன்னால் இயற்றிய விளங்கும் அணிகலன்களையும், மிகத் தொலைவு இடத்திலிருந்தும் விளங்கும் குற்றமற்ற மேனியை உடைய சூரர மகளிர், தோழியர் ஆராய்ந்த ஒத்த நெய்யணிந்த மயிரில், சிவந்த காம்பினையும் சிறிய இதழ்களையுமுடைய வெட்சி மலர்களை இடையிடையே இட்டு, பசிய தண்டினையுடைய குவளையில் தூய இதழ்களைக் கிள்ளி இட்டு, சீதேவி என்னும் அணிகலனை வலம்புரி வடிவில் செய்யப்பட்ட கொண்டையில் வைத்து, பொட்டு வைத்த மணமுடைய அழகான நெற்றியில் சுறாவின் வாய்போன்று செய்த அணிகலனைத் தங்குமாறு வைத்து, முற்றிலும் முடித்த குற்றமற்ற கொண்டையில் பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் சொருகி, கரிய பூங்கொத்துக்களை அதன் மேல் இட்டு, கிளையினின்றும் தோன்றி அழகாக வளர்ந்த நீரின் கீழ் நின்ற சிவந்த அரும்பைக் கட்டுதல் செய்த மாலையை வளைய வைத்து, தம்மில் ஒத்த வளவிய காதில் இட்டு நிறைந்த பிண்டியின் ஒளியுடைய தளிர் நுண்ணிய பூணையுடைய மார்பில் அசைய, திண்ணிய வைரத்தையுடைய (வலுவான உட்பகுதியுடைய) சந்தனத்தைத் தேய்த்த பொலிவினையுடைய நிறத்தையுடையதாகிய குழம்பை மணம் நாறுகின்ற மருதம் பூவை அப்பினால் ஒப்ப கோங்கின் குவிந்த அரும்பை ஒத்த இளமுலையில் அப்பி, விரிந்த வேங்கை மலர்களின் நுண்ணிய தாதினையும் அப்பி, மேலும் அழகு உண்டாக, விளாம்பழ மரத்தின் சிறிய தளிரைக் கிள்ளித் தெறித்து, கோழியின் உருவத்தைத் தன்னிடத்தில் கொண்ட, பகைவரை வீழ்த்திய வெற்றியையுடைய கொடியை வாழ்த்தி,  பலரும் ஒன்றுகூடி வளமை விளங்குகின்ற மலை எல்லாம் எதிரொலிக்குமாறு பாடி தெய்வ மகளிர் ஆடும் சோலையையுடைய,

குறிப்பு:  கோங்க முகை போன்ற முலை:  அகநானூறு 99 – மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு, அகநானூறு 240 – கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து, குறுந்தொகை 254 – முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர், கலித்தொகை 56 – முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை, கலித்தொகை 117 – கோங்கின் முதிரா இள முகை ஒப்ப, புறநானூறு 336 – கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை, திருமுருகாற்றுப்படை 34 – தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை, சிறுபாணாற்றுப்படை 25-26 – யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை.  நாவலொடு பெயரிய பொலம்புனை (18) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சம்பு என்பது நாவல் மரத்தின் பெயர் (வடமொழி).  நாவற் கனிச்சாறு பாயும் சம்பு நதியின்கண் தோன்றும் பொன் என்னும் கொள்கை பற்றி நால்வகைப் பொன்னுள் வைத்து ஒன்றனைச் சம்பூநதம் என்ப.  பொலம் (18) – பொன்.  பொன்னென் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடரியலான (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 61).  மண்ணுறுத்து (25) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தங்கச் செய்து,   நச்சினார்க்கினியர் உரை – ‘ஆவுதி மண்ணி’ என்றாற்போல கொள்க.  இனி ‘கழுவி’ என்றுமாம்.  உளைப் பூ (18) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உளைப் பூ என்பதனை உள் ஐ பூ எனக் கண்ணழித்து உள்ளே துய்யை உடைய பூ என்க.   நறுங்குறடு (33) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கட்டை.  ஈண்டுக் குறிப்பாற் சந்தனக் கட்டையை உணர்த்திற்று.  தெறியா – தெறித்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. 

சொற்பொருள்:  மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – பெரிய மூங்கில் வளர்ந்துள்ள மிக உயர்ந்த மலையில் (மால் வரை – பெரிய மூங்கில், வரை – கோடு, கணு, கணு உடைமையால் வரை என்பது ஆகுபெயராய் மூங்கிலைக் குறிக்கும் – பொ. வே. சோமசுந்தரனார் உரை), கிண்கிணி கவைஇய ஒண் செஞ்சீறடி – சலங்கை சூழ்ந்த ஒளியுடைய சிவந்த அடியினையும் (கவைஇய – அளபெடை), கணைக்கால் – திரண்ட காலினையும், வாங்கிய நுசுப்பின் – வளைந்த இடையினையும், பணைத்தோள் – பெரும் தோளினையும், மூங்கில் போன்ற தோளினையும், கோபத்து அன்ன – இந்திரகோபம் போன்ற (கோபத்து – கோபம், அத்து சாரியை), தோயாப் பூந்துகில் – நிறம் சேர்க்காது இயல்பாகவே சிவந்த நிறமுடைய பூந்தொழிலையுடைய ஆடையினையும், பல் காசு நிரைத்த சில்காழ் அல்குல் – பலமணிகள் கோத்த வடமாகிய மேகலையை அணிந்த அல்குலினையும், கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின் – கையால் இயற்றப்படாத அழகை இயல்பாகவே பெற்ற அழகினையும், நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை – நாவலோடு பெயர் பெற்ற பொன்னால் இயற்றிய விளங்கும் அணிகலன்களையும், சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி – மிகத் தொலைவிலிருந்து விளங்கும் குற்றமற்ற மேனியை உடைய சூரர மகளிர் (இகந்து – கடந்து), துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி – தோழியர் ஆராய்ந்த ஒத்த நெய்யணிந்த மயிரில், செங்கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு – சிவந்த காம்பினையும் சிறிய இதழ்களையுமுடைய வெட்சி மலர்களை இடையிடையே இட்டு (சீறிதழ் – ஆகுபெயர் மலருக்கு, இடுபு – இட்டு, செய்பு என்னெச்சம்), பைந்தாள் குவளை தூவிதழ் கிள்ளி – பசிய தண்டினையுடைய குவளையில் தூய இதழ்களைக் கிள்ளி இட்டு, தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – சீதேவி என்னும் அணிகலனை வலம்புரி வடிவில் செய்யப்பட்ட கொண்டையில் வைத்து, திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து – பொட்டு வைத்த மணமுடைய அழகான நெற்றியில் சுறாவின் வாய்போன்று செய்த அணிகலனைத் தங்குமாறு வைத்து (தைஇய – அளபெடை, தேம் – தேன் என்றதன் திரிபு), துவர முடித்த துகள் அறும் முச்சி பெருந்தண் சண்பகம் செரீஇ – முற்றிலும் முடித்த குற்றமற்ற கொண்டையில் பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் சொருகி (செரீஇ – அளபெடை), கருந்தகட்டு உள் ஐப் பூ மருதின் ஒள் இணர் அட்டி – கரிய பூங்கொத்துக்களை அதன் மேல் இட்டு (இணர் – கொத்து, ஆகுபெயர் மலருக்கு, அட்டி – இட்டு), கிளைக் கவின்று எழுதரு கீழ் நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் வளைஇ – கிளையினின்றும் தோன்றி அழகாக வளர்ந்த நீரின் கீழ் நின்ற சிவந்த அரும்பைக் கட்டுதல் செய்த மாலையை வளைய வைத்து (கீழ் நீர்- நீர்க்கீழ், வளைஇ – அளபெடை), துணைத்தக வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் நுண் பூண் ஆகம் திளைப்ப – தம்மில் ஒத்த வளவிய காதில் இட்டு நிறைந்த பிண்டியின் ஒளியுடைய தளிர் நுண்ணிய பூணையுடைய மார்பில் அசைய, திண் காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ் தேய்வை தேம் கமழ் மருது இணர் கடுப்பக் கோங்கின் குவி முகிழ் இள முலைக் கொட்டி – திண்ணிய வைரத்தையுடைய (வலுவான உட்பகுதியுடைய) சந்தனத்தைத் தேய்த்த பொலிவினையுடைய நிறத்தையுடையதாகிய குழம்பை மணம் நாறுகின்ற மருதப் பூவை அப்பினால் ஒப்ப கோங்கின் குவிந்த அரும்பை ஒத்த இளமுலையில் அப்பி (தேம் – தேன் என்றதன் திரிபு, கடுப்ப – உவம உருபு, இணர் – கொத்து, ஆகுபெயர் மலருக்கு), விரி மலர் வேங்கை நுண் தாது அப்பி – விரிந்த வேங்கை மலர்களின் நுண்ணிய தாதினையும் அப்பி, காண்வர – மேலும் அழகு உண்டாக, வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியா – விளாம்பழ மரத்தின் சிறிய தளிரைக் கிள்ளித் தெறித்து, கோழி ஓங்கிய வென்று அடு விறற் கொடி வாழிய பெரிது என்று ஏத்தி – கோழியின் உருவத்தைத் தன்னிடத்தில் கொண்ட, பகைவரை வீழ்த்திய வெற்றியையுடைய கொடியை வாழ்த்தி, பலர் உடன் சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி சூரர மகளிர் ஆடும் சோலை – பலரும் ஒன்றுகூடி வளமை விளங்குகின்ற மலை எல்லாம் எதிரொலிக்குமாறு பாடி தெய்வ மகளிர் ஆடும் சோலையையுடைய

காந்தள் கண்ணி சூடிய சென்னியன்

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து,
சுரும்பும் மூசாச் சுடர்ப் பூங் காந்தள்

பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்; (42 – 44)

பொருளுரை:  குரங்குகளும் அறியாத மரங்கள் நெருங்கிய பக்கமலையில், வண்டுகளும் மொய்க்காத நெருப்புப் போலும் மலர்களையுடைய செங்காந்தளின் பெரிய குளிர்ந்த கண்ணியை தலையில் அணிந்த திருமுடியுடையவன்.

குறிப்பு:  மந்தியும் அறியா – அகநானூறு 92 – மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின், நற்றிணை 194 – மந்தியும் அறியா மரம் பயில், திருமுருகாற்றுப்படை 42 – மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து.

சொற்பொருள்:   மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து – பெண் குரங்குகளும் அறியாத மரங்கள் நெருங்கிய பக்கமலையில் (மரன் – மரம் என்பதன் போலி), சுரும்பும் மூசா சுடர்ப் பூங் காந்தள் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் – வண்டுகளும் மொய்க்காத நெருப்புப் போலும் மலர்களையுடைய செங்காந்தளின் பெரிய குளிர்ந்த கண்ணியை (தலையில் அணியும் மலர்ச்சரத்தை) அணிந்த திருமுடியுடையவன் 

முருகன் சூரனைக் கொல்லுதல்

பார் முதிர் பனிக்கடல் கலங்க உள் புக்குச்   45

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல்; (45 – 46)

பொருளுரை:  பாறை நிலம் முதிர்ந்த குளிர்ந்த கடல் கலங்கும்படி உள்ளே புகுந்து, சூரனைக் கொன்றான், அவனுடைய ஒளிரும் இலையுடைய நெடிய வேலால்.

சொற்பொருள்:  பார் முதிர் பனிக் கடல் கலங்க உள் புக்கு – பாறை நிலம் முதிர்ந்த குளிர்ந்த கடல் கலங்கும்படி உள்ளே புகுந்து, சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல் – சூரனைக் கொன்ற ஒளிரும் இலையுடைய நெடிய வேல்

பேய்மகளின் துணங்கை

உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்
சுழல் விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்,
கழல்கண் கூகையொடு கடும் பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு   50
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூர் உகிர்க் கொடு விரல்
கண் தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்தொடித் தடக் கையின் ஏந்தி, வெருவர
வென்று அடு விறற்களம் பாடித் தோள் பெயரா   55

நிணம் தின் வாயள் துணங்கை தூங்கப்; (47 – 56)

பொருளுரை:  காய்ந்த மயிரினையும், நேராக இல்லாத பற்களையும், பிளந்த வாயினையும், சுழலும் விழியையுடைய பசிய கண்களையும், கொடிய பார்வையினையும், பிதுங்கிய கண்ணையுடைய கூகையுடன் கொடிய பாம்பு தொங்குவதாலே பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், சருச்சரை (சொரசொரப்பு) உடைய பெரிய வயிற்றையும் உடைய கண்டோர்க்கு அச்சம் உண்டுபண்ணும் பேய்மகள், குருதியில் தோய்த்த கூர்மையான நகத்தையுடைய கொடிய விரலால், கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்கத் தசை நாற்றத்தை உடைய கரிய தலையை, ஒளியுடைய வளையல்களையுடைய பெரிய கையால் எடுத்து, அவுணர்களுக்கு அச்சம் தோன்ற எதிர் நின்று கொல்லும் வெற்றிக் களத்தில் பாடி, தோளை அசைத்து கொழுப்புடைய தசையைத் தின்கின்ற வாயை உடையவளாகத் துணங்கைக் கூத்து ஆட.

குறிப்பு:  கழல் கண் (49) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூகையின் கண் பிதுங்கியிருத்தலால் கழல் கண் என்றார்.  கழி (53) – மிகுதிப் பொருள் குறித்து நின்ற உரிச்சொல்.  கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 16).  பெயரா – பெயர்த்து (நகர்த்தி) என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24). 

சொற்பொருள்:  உலறிய கதுப்பின் – காய்ந்த மயிரினையும், பிறழ் பல் பேழ்வாய் – நேராக இல்லாத பற்களையும் பிளந்த வாயினையும் (பேழ்வாய் – பெரிய வாய் எனினுமாம்), சுழல் விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின் – சுழலும் விழியையுடைய பசிய கண்களையும் கொடிய பார்வையினையும், கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க பெருமுலை அலைக்கும் காதின் – பிதுங்கிய கண்ணையுடைய கூகையுடன் கொடிய பாம்பு தொங்குவதாலே பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், பிணர் மோட்டு உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் – சருச்சரை (சொரசொரப்பு) உடைய பெரிய வயிற்றையும் கண்டோர்க்கு அச்சம் உண்டுபண்ணும் பேய்மகள், குருதி ஆடிய கூர் உகிர்க் கொடு விரல் – குருதியில் தோய்த்த கூர்மையான நகத்தையுடைய கொடிய விரலால், கண் தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்தொடித் தடக் கையின் ஏந்தி – கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க தசை நாற்றத்தை உடைய கரிய தலையை ஒளியுடைய வளையல்களையுடைய பெரிய கையால் எடுத்து (கழி – மிகுதி), வெருவர வென்று அடு விறற் களம் பாடி – அவுணர்களுக்கு அச்சம் தோன்ற எதிர் நின்று கொல்லும் வெற்றிக் களத்தில் பாடி, தோள் பெயரா நிணம் தின் வாயள் – தோளை அசைத்து கொழுப்புடைய தசையைத் தின்கின்ற வாயை உடையவளாய், துணங்கை தூங்க – துணங்கைக் கூத்து ஆட

முருகன் மாமரத்தை வெட்டுதல்

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை,
அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி,
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ் இணர்
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து   60

எய்யா நல் இசை செவ்வேற் சேஎய்; (57 – 61)

பொருளுரை:  மக்கள் வடிவமும் விலங்கின் வடிவமும் ஆகிய ஒரு பெரிய உடலை (சூரனின் உடல்), அற்று வேறு ஆகும்படி அச்சம் தோன்றுமாறு சென்று, அவுணரின் நல்ல வெற்றி இல்லையாகும்படி, கீழ் நோக்கின பூங்கொத்துக்களை உடைய மாமரத்தை வெட்டின, குற்றமில்லாத வெற்றியையும், ஒருவராலும் அளக்க முடியாத நல்ல புகழையும், செந்நிற வேலையும் உடைய முருகக்கடவுள்.

குறிப்பு:  அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி (58) – நச்சினார்க்கினியர் உரை – ஆறாகிய வேறுபட்ட கூற்றினால் அச்சந்தோன்ற மிக்குச் சென்று, இனி அவன் உடல் அற்று வேறுவேறாம் வகையால் எனினுமாம், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – ஆறாகிய வேறுபட்ட கூற்றினால் அச்சந்தோன்ற மிக்குச் சென்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அற்று வேறாம் வகையாலே அச்சந்தோன்ற மிக்குச் சென்று.

சொற்பொருள்:  இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை – மக்கள் வடிவமும் விலங்கின் வடிவமும் ஆகிய ஒரு பெரிய உடல் (சூரனின் உடல்), அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி – அற்று வேறு ஆகும்படி அச்சம் தோன்றுமாறு சென்று, ஆறு வேறு கூற்றால் அச்சம் தோன்ற மிக்குச் சென்று, அவுணர் நல்வலம் அடங்க – அவுணரின் நல்ல வெற்றி இல்லையாகும்படி, கவிழ் இணர் மா முதல் தடிந்த – கீழ் நோக்கின பூங்கொத்துக்களை உடைய மாமரத்தை வெட்டின, மறு இல் கொற்றத்து எய்யா நல் இசை செவ்வேற் சேஎய் – குற்றமில்லாத வெற்றியையும் ஒருவராலும் அளக்க முடியாத நல்ல புகழையும் செந்நிற வேலையும் (செம்மையான வேலுமாம்) உடைய முருகக்கடவுள் (சேஎய் – அளபெடை)

ஆற்றுப்படுத்தல்

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு,
நலம்புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும்,
செலவு நீ நயந்தனை ஆயின், பல உடன்
நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப   65

இன்னே பெறுதி நீ முன்னிய வினையே; (62 – 66)

பொருளுரை:  முருகனின் திருவடிக்குச் செல்லுதற்குரிய உயர்ந்த உள்ளத்துடனும் நன்மைகளையே செய்யும் கோட்பாட்டுடனும், ஞானத்தை மேற்கொண்டு தங்குதற்குரிய நெறியில் செல்லும் செலவை நீ விரும்பினாய் ஆயின், பல பிறப்புகளிலும் தொடர்ந்து முதிர்ந்த நல்ல நெஞ்சத்தில் வீடு பேற்றின்கண் விருப்பம் நிறைவுறும்படி, இப்பொழுதே நீ பெறுவாய் நீ கருதிய வினையின் பயனை. 

சொற்பொருள்:  சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கை – முருகனின் திருவடிக்குச் செல்லுதற்குரிய உயர்ந்த உள்ளத்துடனும் நன்மைகளையே செய்யும் கோட்பாட்டுடனும், புலம் பிரிந்து உறையும் செலவு நீ நயந்தனை ஆயின் – ஞானத்தை மேற்கொண்டு தங்குதற்குரிய நெறியில் செல்லும் செலவை நீ விரும்பினாய் ஆயின், பல உடன் நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப – பல பிறப்புகளிலும் தொடர்ந்து முதிர்ந்த நல்ல நெஞ்சத்தில் வீடு பேற்றின்கண் விருப்பம் நிறைவுறும்படி (நன்னர் – நல்ல), இன்னே பெறுதி நீ முன்னிய வினையே – இப்பொழுதே நீ பெறுவாய் நீ கருதிய வினையின் பயனை (பெறுதி – முன்னிலை வினைமுற்று)

திருப்பரங்குன்றத்தில் முருகன் வீற்றிருத்தல்

செருப் புகன்று எடுத்த சேண் உயர் நெடுங்கொடி
வரிப் புனை பந்தொடு பாவை தூங்க,
பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில்
திருவீற்றிருந்த தீது தீர் நியமத்து,   70
மாடம் மலி மறுகின் கூடற் குடவயின்,
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள் தாள் தாமரைத் துஞ்சி, வைகறைக்
கள் கமழ் நெய்தல் ஊதி, எல் படக்
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர்   75
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்

குன்று அமர்ந்து உறைதலும் உரியன்; அதாஅன்று, (67 – 77)

பொருளுரை:  போரை விரும்பி, தொலைவில் உள்ள நிலத்திற்குச் சென்று உயர்த்திய நெடிய கொடிக்கு அருகில், நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும் பாவையும் தொங்க, போரிடுபவர்களை அழித்த போர்த்தொழில் அரிதாகிய வாயிலினையும், திருமகள் இருந்த குற்றம் இல்லாத கடை வீதிகளையும், மாடங்கள் மிகுந்த தெருக்களையும் உடைய மதுரையின் மேற்கிலிருந்து, கரிய சேற்றினையுடைய வயலில் முறுக்கு அவிழ்ந்து மலர்ந்த முள்ளுடைய காம்பினையுடைய தாமரை மலர்களில் இரவில் துயின்று, விடியற்காலையில் தேன் மலரும்நறுமணமுடைய நெய்தற்பூவை ஊதி, கதிரவன் தோன்றிய பொழுதில் கண் போல் மலர்ந்த விருப்பமுடைய சுனைகளில் உள்ள மலர்களில் அழகிய சிறகுகள் உடைய வண்டின் அழகிய இனம் சென்று இமிரும் திருப்பரங்குன்றத்தில் அமர்ந்து இருத்தலும் உரியவன், அங்கு மட்டும் இல்லாமல்,  

குறிப்பு:  வரிப் பந்து –நற்றிணை 12 – வரி புனை பந்தொடு – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, ஒளவை துரைசாமி உரை – வரிந்து புனையப்பட்ட பந்தொடு, திருமுருகாற்றுப்படை 68 – வரிப் புனை பந்தொடு – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார்  உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தோடு, கலித்தொகை 51 – வரிப் பந்து – நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து, பரிபாடல் 9 – வரிப் பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரியினையுடைய பந்து, பெரும்பாணாற்றுப்படை 333 – வரிப்பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து.

சொற்பொருள்:  செருப் புகன்று எடுத்த சேண் உயர் நெடுங்கொடி – போரை விரும்பி தொலைவில் உள்ள நிலத்திற்குச் சென்று உயர்த்திய நெடிய கொடிக்கு அருகில், வரிப் புனை பந்தொடு பாவை தூங்க – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும் பாவையும் தொங்க, பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில் – போரிடுபவர்களை அழித்த போர்த்தொழில் அரிதாகிய வாயிலினையும், திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து – திருமகள் இருந்த குற்றம் இல்லாத கடை வீதிகளையும், மாடம் மலி மறுகின் கூடற் குடவயின் – மாடங்கள் மிகுந்த தெருக்களையும் உடைய மதுரையின் மேற்கிலிருந்து, இருஞ்சேற்று அகல்வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – கரிய சேற்றினையுடைய வயலில் முறுக்கு அவிழ்ந்து மலர்ந்த, முள் தாள் தாமரைத் துஞ்சி – முள்ளுடைய காம்பினையுடைய தாமரை மலர்களில் இரவில் துயின்று, வைகறைக் கள் கமழ் நெய்தல் ஊதி – விடியற்காலையில் தேன் நறுமணமுடைய நெய்தற்பூவை ஊதி, எல் படக் கண் போல் மலர்ந்த – கதிரவன் தோன்றிய பொழுதில் கண் போல் மலர்ந்த, காமரு சுனை மலர் – விருப்பமுடைய சுனைகளில் உள்ள மலர்களில் (காமரு – காமர் என்பதன் விகாரம்), அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் – அழகிய சிறகுகள் உடைய வண்டின் அழகிய இனம் சென்று இமிரும், குன்று அமர்ந்து உறைதலும் உரியன் – திருப்பரங்குன்றத்தில் அமர்ந்து இருத்தலும் உரியவன், அதாஅன்று – அங்கு மட்டும் இல்லாமல் (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று.  அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, அளபெடை)

2. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

ஆறுமுகன் யானையின் மேல் ஏறி வருதல்

வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்,
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்   80
கூற்றத்து அன்ன, மாற்று அரு மொய்ம்பின்

கால் கிளர்ந்தன்ன வேழம் மேல் கொண்டு, (78 – 82)

பொருளுரை:  கூரிய முனையுடைய யானைத் தோட்டி (அங்குசம்) வெட்டின வடு ஆழ்ந்த வரியுடைய நெற்றியில், பொன்னால் தொடுக்கப்பட்ட மாலையையும் நெற்றி அணிகலனையும் உடைய, தாழ்ந்துத் தொங்கும் மணிகள் ஒலிக்கின்ற பக்கத்தினையும், விரைந்த நடையுடைய கூற்றுவனை ஒத்த வலிமை உடைய, தடுத்தற்கரிய வலிமையையும் உடைய, காற்று எழுந்தாற்போல் உள்ள களிற்று யானையின் மீது ஏறி. 

குறிப்பு:  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

சொற்பொருள்:  வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – கூரிய முனையுடைய யானைத் தோட்டி (அங்குசம்) வெட்டின வடு ஆழ்ந்த வரியுடைய நெற்றியில், வாடா மாலை ஓடையொடு – பொன்னால் தொடுக்கப்பட்ட மாலையையும் நெற்றி அணிகலனையும் உடைய (வாடா மாலை – பொன் மாலைக்கு வெளிப்படை), துயல்வர படுமணி இரட்டும் மருங்கின் – தாழ்ந்துத் தொங்கும் மணிகள் ஒலிக்கின்ற பக்கத்தினையும், கடு நடைக் கூற்றத்து அன்ன – விரைந்த நடையுடைய கூற்றுவனை ஒத்த வலிமை உடைய (கூற்றத்து – கூற்றம், அத்து சாரியை), மாற்று அரு மொய்ம்பின் – தடுத்தற்கரிய வலிமையையும் உடைய, கால் கிளர்ந்தன்ன வேழம் மேல் கொண்டு – காற்று எழுந்தாற்போல் உள்ள களிற்று யானையின் மீது ஏறி

ஆறுமுகங்களின் இயல்புகள்

ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப,   85
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலங்குழை
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்
தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே;   90
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க
பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம், ஒரு முகம்  
ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே, ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ   95
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே, ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போலத்திசை விளக்கும்மே, ஒரு முகம்
செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே, ஒரு முகம்   100

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே

ஆங்கு அம்மூ இரு முகனும் முறை நவின்று ஒழுகலின், (83 – 103)

பொருளுரை:  ஐந்து வேறுபட்ட வடிவினை உடைய, செய்ய வேண்டிய தொழில் எல்லாம் முற்றுப்பெற்ற முடியுடன் ( கிரீடத்துடன்), ஒளியுடைய ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடும் அழகிய மணிகள் மின்னல் போன்ற ஒளியுடன் தலையில் பொலிவு அடைய, ஒளியுடன் அசையும் கூறு அமைந்த பொன்னால் செய்த காதணிகள் தொலைவில் சென்று விளங்கும் தன்மையுடைய ஒளியுடைய நிலவைச் சூழ்ந்து நீங்காத விண்மீன்கள் போல ஒளியை வெளிப்படுத்த, குற்றம் இல்லாத கொள்கையுடன் தம் தவத்தொழிலை முடிப்பவர்களின் நெஞ்சில் பொருந்தித் தோன்றுகின்ற ஒளிமிக்க திருமுகங்களில், ஒரு முகம் பெரும் இருளால் மறைக்கப்பட்ட உலகம் குற்றமின்றி விளங்கும் பொருட்டுப் பலவாகிய சுடர்களையும் தோற்றுவித்தது, ஒரு முகம் தன்னிடம் அன்பு செய்தவர்கள் வாழ்த்த, அதற்குப் பொருந்தி, அவர்களுக்கு இனிமையாக நடந்து, அவர்கள் மேற்கொண்ட காதலால் மகிழ்ந்து, வேண்டும் பொருட்களைக் கொடுத்தது, ஒரு முகம் மந்திரத்தால் மெய்ந்நூல் உரைத்த முறையில் தவறாத அந்தணரின் வேள்விகளுக்கு இடையூறு நிகழாதபடி எண்ணுகின்றது, ஒரு முகம் மெய்ந்நூல்களாலும் உணர முடியாத பொருள்களைச் சான்றோர் காவலுறும்படி ஆராய்ந்து உணர்த்தித் திங்கள் போல எல்லாத் திசைகளையும் விளக்கும், ஒரு முகம் போரில் பகைவரை அழித்துச் சினத்துடன் அசுரர்களை அழித்துக் களவேள்வியைச் செய்தது, ஒரு முகம் குறவர் (மலையில் வாழ்பவர்) இளமகள் ஆகிய பூங்கொடி போன்ற இடையையும் மடப்பத்தையும் உடைய வள்ளியுடன் மகிழ்ச்சியுடன் பொருந்தியது.  அவ்வாறு ஆறு திருமுகங்களும் அத்தொழில்களிடத்துச் செய்யும் முறைமைகளைப் பயின்று நடத்துகையாலே அவற்றிற்கு ஏற்ப,

குறிப்பு:  களவேள்வி – புறநானூறு 26 – மன்னிய வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே, புறநானூறு 372 – புலவுக் களம் பொலிய வேட்டோய், மதுரைக்காஞ்சி 128-130 – களம்வேட்ட அடு திறல் உயர் புகழ் வேந்தே, திருமுருகாற்றுப்படை 100 – களம் வேட்டன்றே ஒரு முகம்.  பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39).  ஐவேறு உருவின் (83) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாமம், முகடம், பதுமம், கிம்புரி, கோடகம் என்னும் ஐந்து வகையாகச் செய்யப்படும் தொழிற்திறம் முற்றிய தலையணிகலன் என்றவாறு. பொலம் (18) – பொன்.  பொன்னென் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடரியலான (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 61). 

சொற்பொருள்:  ஐவேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு – ஐந்து வேறுபட்ட வடிவினை உடைய செய்ய வேண்டிய தொழில் எல்லாம் முற்றுப்பெற்ற முடியுடன் (முடியுடன் – கிரீடத்துடன்), விளங்கிய முரண் மிகு திருமணி – ஒளியுடைய ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடும் அழகிய மணிகள், மின் உறழ் இமைப்பின் – மின்னல் போன்ற ஒளியுடன் (உறழ் – உவம உருபு), சென்னிப் பொற்ப – தலையில் பொலிவு அடைய, நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலங்குழை – ஒளியுடன் அசையும் கூறு அமைந்த பொன்னால் செய்த காதணியும் (வரூஉம் – அளபெடை), சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ – தொலைவில் சென்று விளங்கும் தன்மையுடைய ஒளியுடைய நிலவைச் சூழ்ந்து (கவைஇ – அளபெடை), அகலா மீனின் அவிர்வன இமைப்ப – நீங்காத விண்மீன்கள் போல ஒளியை வெளிப்படுத்த (மீனின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் – குற்றம் இல்லாத கொள்கையுடன் தம் தவத்தொழிலை முடிப்பவர்களின், மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – நெஞ்சில் பொருந்தித் தோன்றுகின்ற ஒளிமிக்க திருமுகங்களில் (மனன் – மனம் என்பதன் போலி, முகன் – முகம் என்பதன் போலி, ஏகாரம் அசை), மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் – ஒரு முகம் பெரும் இருளால் மறைக்கப்பட்ட உலகம் குற்றமின்றி விளங்கும் பொருட்டுப் பலவாகிய சுடர்களையும் தோற்றுவித்தது, ஒரு முகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே – ஒரு முகம் தன்னிடம் அன்பு செய்தவர்கள் வாழ்த்த அதற்குப் பொருந்தி அவர்களுக்கு இனிமையாக நடந்து அவர்கள் மேற்கொண்ட காதலால் மகிழ்ந்து வேண்டும் பொருட்களைக் கொடுத்தது, ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே – ஒரு முகம் மந்திரத்தால் மெய்ந்நூல் உரைத்த முறையில் தவறாத அந்தணரின் வேள்விகளுக்கு இடையூறு நிகழாதபடி எண்ணும் (வழாஅ – அளபெடை, ஓர்க்கும்மே – விரித்தல் விகாரம், ஒர்க்கும் + ஏ, ஏகாரம் அசை), ஒரு முகம் எஞ்சிய பொருள்களை ஏம் உற நாடி திங்கள் போலத் திசை விளக்கும்மே – ஒரு முகம் மெய்ந்நூல்களாலும் உணர முடியாத பொருள்களைச் சான்றோர் காவலுறும்படி ஆராய்ந்து உணர்த்தித் திங்கள் போல எல்லாத் திசைகளையும் விளக்கும் (ஏம் – காவல், ஏமம் என்பதன் கடைக்குறை), ஒரு முகம் செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே – ஒரு முகம் போரில் பகைவரை அழித்துச் சினத்துடன் அசுரர்களை அழித்துக் களவேள்வியைச் செய்தது, ஒரு முகம் குறவர் மடமகள் கொடி போல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே – ஒரு முகம் குறவர் (மலையில் வாழ்பவர்) இளமகள் ஆகிய பூங்கொடி போன்ற இடையையும் மடப்பத்தையும் உடைய வள்ளியுடன் மகிழ்ச்சியுடன் பொருந்தியது, ஆங்கு அம்மூ இரு முகனும் முறை நவின்று ஒழுகலின் – அவ்வாறு ஆறு திருமுகங்களும் அத்தொழில்களிடத்துச் செய்யும் முறைமைகளைப் பயின்று நடத்துகையாலே (முகன் – முகம் என்பதன் போலி)

பன்னிரு கைகளின் தொழில்கள்

ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்
செம்பொறி வாங்கிய மொய்ம்பின், சுடர் விடுபு,   105
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு, நிமிர் தோள்,
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒரு கை, உக்கம் சேர்த்தியது ஒரு கை,
நலம் பெறு கலிங்கத்துக் குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை,
அங்குசம் கடாவ ஒரு  கை, இரு கை   110
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப, ஒரு கை

மார்பொடு விளங்க, ஒரு கை
தாரொடு பொலிய, ஒரு கை
கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப, ஒரு கை
பாடுஇன் படுமணி இரட்ட, ஒரு கை   115
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய, ஒரு கை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட,

ஆங்கு அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி; (104 – 118)

பொருளுரை: பொன்னால் செய்த மாலையைத் தாங்கிய அழகிய மார்பில் கிடக்கின்ற, உத்தம இலக்கணமாகிய சிவந்த மூன்று வரிகளைத் தன்பால் வாங்கிக்கொண்ட,  வலிமை மிக்க வேலை எறிந்து, மிக்கப் புகழால் நிறையப்பெற்று, பகைவர்களின் உடலைப் பிளந்து அவ்வேலை வாங்கும் நிமிர்ந்த தோள்களில், உயர் உலகிற்குச் செல்லும் முறைமையுடைய துறவிகளுக்குப் பாதுகாவலாக ஏந்தியது ஒரு கை, இடையில் வைக்கப்பட்டது ஒரு கை,  செம்மை நிறம்பெற்ற ஆடையையுடைய தொடையின் மேல் இருந்தது ஒரு கை, யானைத் தோட்டியை (அங்குசத்தை) செலுத்தியது ஒரு கை, ஏனைய இரு கைகள் பெரிய பரிசையையும் (கேடயத்தையும்) வேலையும் வைத்திருக்க, ஒரு கை முனிவர்களுக்குத் தத்துவங்களை விளக்கி உணர்த்தும் பொழுது மார்புடன் விளங்க, ஒரு கை மாலையுடன் அழகு பெற, ஒரு கை கீழ்நோக்கி விழும் தொடியுடன் மேலே சுழன்று கள வேள்விக்கு முத்திரை கொடுப்ப, ஒரு கை இனிய ஓசையுடைய மணியை ஒலிக்கப்பண்ண, ஒரு கை நீல நிறத்தையுடைய முகிலால் மழையைப் பெய்விக்க, ஒரு கை தெய்வ மகளிர்க்கு மணமாலை சூட்ட, அவ்வாறு அப்பன்னிரண்டு கைகளும் ஆறு திருமுகங்களின் பகுதியில் படும்படி தொழில்செய்து,

குறிப்பு:  ஒரு கை வானர மகளிர்க்கு வதுவை சூட்ட (117):   நச்சினார்க்கினியர் உரை – ஒருகை தெய்வ மகளிர்க்கு மணமாலையைச் சூட்ட, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இத் திருக்கையின் செயல் உலகின்கண் இல்லறம் நிகழ வேண்டி குறவர் மடமகளோடு நகையமர்ந்த திருமுகத்தின் செயலுக்குப் பொருந்துமாறு உணர்க.

சொற்பொருள்:  ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பில் – பொன்னால் செய்த மாலையைத் தாங்கிய அழகிய மார்பில் கிடக்கின்ற, செம்பொறி வாங்கிய – உத்தம இலக்கணமாகிய சிவந்த மூன்று வரிகளைத் தன்பால் வாங்கிக்கொண்ட, மொய்ம்பின் – வலிமை மிக்க, சுடர் விடுபு – வேலை எறிந்து (சுடர் – ஆகுபெயர் வேலுக்கு, விடுபு – விட்டு, செய்பு என்னும் வினையெச்சம்), வண் புகழ் நிறைந்து – மிக்கப் புகழால் நிறையப்பெற்று, வசிந்து வாங்கு நிமிர் தோள் – பகைவர்களின் உடலைப் பிளந்து அவ்வேலை வாங்கும் நிமிர்ந்த தோள்களில், விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒரு கை – உயர் உலகிற்குச் செல்லும் முறைமையுடைய துறவிகளுக்குப் பாதுகாவலாக ஏந்தியது ஒரு கை (செலல் – இடைக்குறை), உக்கம் சேர்த்தியது ஒரு கை – இடையில் வைக்கப்பட்டது ஒரு கை, நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – செம்மை நிறம்பெற்ற ஆடையையுடைய தொடையின் மேல் இருந்தது ஒரு கை (அசைஇயது – அளபெடை), அங்குசம் கடாவ ஒரு கை – யானைத் தோட்டியை (அங்குசத்தை) செலுத்தியது ஒரு கை, இரு கை ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப – ஏனைய இரு கைகள் பெரிய பரிசையையும் (கேடயத்தையும்) வேலையும் வைத்திருக்க, ஒரு கை மார்பொடு விளங்க  – ஒரு கை முனிவர்களுக்குத் தத்துவங்களை விளக்கி உணர்த்தும் பொழுது மார்புடன் விளங்க, ஒரு கை தாரொடு பொலிய – ஒரு கை மாலையுடன் அழகு பெற, ஒரு கை கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப – ஒரு கை கீழ்நோக்கி விழும் தொடியுடன் மேலே சுழன்று கள வேள்விக்கு முத்திரை கொடுப்ப (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), ஒரு கை பாடு இன் படு மணி இரட்ட – ஒரு கை இனிய ஓசையுடைய மணியை ஒலிக்கப்பண்ண, ஒரு கை நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய – ஒரு கை நீல நிறத்தையுடைய முகிலால் மழையைப் பெய்விக்க (நீல் – கடைக்குறை), ஒரு கை வானர மகளிர்க்கு வதுவை சூட்ட – ஒரு கை தெய்வ மகளிர்க்கு மணமாலை சூட்ட, ஆங்கு அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி – அவ்வாறு அப்பன்னிரண்டு கைகளும் ஆறு திருமுகங்களின் பகுதியில் படும்படி தொழில்செய்து

அலைவாயில் ஆறுமுகன்

அந்தரப் பல்லியம் கறங்க திண்காழ்
வயிர் எழுந்து இசைப்ப, வால் வளை ஞரல,   120
உரந்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ,
விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி,
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே; அதாஅன்று, (119 – 125)

பொருளுரை:  மேல் உலகத்தில் இசைக்கருவிகள் ஒலிக்கவும், திண்மையான வைரம் பாய்ந்த மரத்தால் செய்த கொம்பு ஒலி எழுப்பவும், வெள்ளை நிறச் சங்கு ஒலிக்கவும், வலிமையைக் கொண்ட இடியின் இடிப்புப் போன்ற ஓசையையுடைய முரசுடன், பல பொறிகளையுடைய மயில் வெற்றிக்கொடியிலிருந்து அகவவும், வானமே வழி ஆக, விரைந்த செலவினை மேற்கொண்டு, உலக மக்களால் புகழப்பட்ட மிக உயர்ந்த சிறந்த புகழை உடைய அலைவாய் என்னும் திருப்பதியிலே எழுந்து அருளும் முருகக்கடவுளின் நிலைபெற்ற குணம்.  அது மட்டும் அல்லாமல்,

குறிப்பு:  அந்தரப் பல்லியம் கறங்க (119) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேவத்துந்துபி முழங்கவும். 

சொற்பொருள்:  அந்தரப் பல் இயம் கறங்க – மேல் உலகத்தில் இசைக்கருவிகள் ஒலிக்க, திண் காழ் வயிர் எழுந்து இசைப்ப – திண்மையான வைரம் பாய்ந்த மரத்தால் செய்த கொம்பு ஒலி எழுப்பவும், வால் வளை ஞரல – வெள்ளை நிறச் சங்கு ஒலிக்கவும், உரந்தலைக் கொண்ட உரும் இடி முரசமொடு – வலிமையைக் கொண்ட இடியின் இடிப்புப் போன்ற ஓசையையுடைய முரசுடன், பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ – பல பொறிகளையுடைய மயில் வெற்றிக்கொடியிலிருந்து அகவ, விசும்பு ஆறு ஆக – வானமே வழி ஆக, விரை செலல் முன்னி – விரைந்த செலவினை மேற்கொண்டு (செலல் – இடைக்குறை), உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச்சீர் – உலக மக்களால் புகழப்பட்ட மிக உயர்ந்த சிறந்த புகழை உடைய (ஓங்கு உயர் – ஒருபொருட் பன்மொழி), அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே – அலைவாய் என்னும் திருப்பதியிலே எழுந்து அருளும் முருகக்கடவுளின் நிலைபெற்ற குணம் அந்தரப் பல்லியம் கறங்க (நிலைஇய – அளபெடை), அதாஅன்று – அது மட்டும் அல்லாமல் (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று.  அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, அளபெடை)

3. திருவாவினன்குடி (பழனி)

முன் செல்லும் முனிவர்கள்

சீரை தைஇய உடுக்கையர், சீரொடு
வலம்புரி புரையும் வால் நரை முடியினர்,
மாசு அற இமைக்கும் உருவினர், மானின்
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின்
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர், நன்பகல்   130
பல உடன் கழிந்த உண்டியர், இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர், யாவதும்
கற்றோர் அறியா அறிவினர், கற்றோர்க்குத்
தாம் வரம்பு ஆகிய தலைமையர், காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர், இடும்பை   135
யாவதும் அறியா இயல்பினர், மேவரத்

துனி இல் காட்சி முனிவர் முற்புக, (126 – 137)

பொருளுரை:  மர உரியை ஆடையாகச் செய்த உடையினை உடையவர்களும், அழகுடன் வலம்புரிச்சங்கினை ஒத்த வெள்ளை நரைமுடியினை உடையவர்களும், மாசு இல்லாது விளங்கும் வடிவினை உடையவர்களும், மானின் தோலைப் போர்த்திச் செய்யும் நோன்புகளால் பட்டினி இருந்து தசை கெடுகின்ற மார்பில் எலும்புகள் தோன்றும் உடம்பினை உடையவர்களும், பல நாட்கள் ஒருங்கே உண்ணாது இருந்து இடையே உண்ணும் உணவை உடையவர்களும், மாறுபாட்டுடன் நெடுங்காலம் இருக்கும் பகையைப் போக்கிய மனத்தை உடையவர்களும், பலவற்றையும் கற்றவர்களும் அறியப்படாத இயல்பான அறிவை உடையவர்களும், கற்றோர்க்கும் தாம் எல்லை ஆகிய தலைமை உடையவர்களும், அவாவுடன் கடிய சினத்தையும் போக்கின அறிவினை உடையவர்களும், தாங்கள் செய்யும் தவத்தினால் வருத்தம் ஒருசிறிதும் அறியப்படாத இயல்பினை உடையவர்களும், பொருந்துதல் வரும்படி வெறுப்பில்லாத நல்ல அறிவினை உடையவர்களும் முன்னே செல்ல, 

சொற்பொருள்:  சீரை தைஇய உடுக்கையர் – மர உரியை ஆடையாகச் செய்த உடையினை உடையவர்களும் (தைஇய – அளபெடை), சீரொடு வலம்புரி புரையும் வால் நரை முடியினர் – அழகுடன் வலம்புரிச்சங்கினை ஒத்த வெள்ளை நரைமுடியினை உடையவர்களும் (புரை – உவம உருபு), மாசு அற இமைக்கும் உருவினர் – அழுக்கு இல்லாது விளங்கும் வடிவினை உடையவர்களும், மானின் உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் – மானின் தோல் போர்த்திய நோன்புகளால் பட்டினி இருந்து தசை கெடுகின்ற மார்பில் எலும்புகள் தோன்றும் உடம்பினை உடையவர்களும் (தைஇய – அளபெடை), நன்பகல் பல உடன் கழிந்த உண்டியர் – பல நாட்கள் ஒருங்கே உண்ணாது இருந்து இடையே உண்ணும் உணவை உடையவர்களும், இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் – மாறுபாட்டுடன் நெடுங்காலம் இருக்கும் பகையைப் போக்கிய மனத்தை உடையவர்களும், யாவதும் கற்றோர் அறியா அறிவினர் – பலவற்றையும் கற்றவர்களும் அறியப்படாத இயல்பான அறிவை உடையவர்களும், கற்றோர்க்குத் தாம் வரம்பு ஆகிய தலைமையர் – கற்றோர்க்கும் தாம் எல்லை ஆகிய தலைமை உடையவர்களும், காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் – அவாவுடன் கடிய சினத்தையும் போக்கின அறிவினை உடையவர்களும் (காட்சியர் – அறிவுடையோர்), இடும்பை யாவதும் அறியா இயல்பினர் – தவத்தினால் வருத்தம் ஒருசிறிதும் அறியப்படாத இயல்பினை உடையவர்களும், மேவரத் துனி இல் காட்சி முனிவர் முற்புக – பொருந்துதல் வரும்படி வெறுப்பில்லாத நல்ல அறிவினை உடையவர்களும் முன்னே செல்ல  (காட்சி முனிவர் – அறிவிவினையுடைய முனிவர்கள்)

மேவலர்

புகை முகந்தன்ன மாசு இல் தூஉடை,
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்துச்
செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின்   140

நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்

மென்மொழி மேவலர், இன் நரம்பு உளர, (138-142)

பொருளுரை:  புகையை முகந்து கொண்டதை ஒத்த அழுக்கு இல்லாத தூய உடையினையும், அரும்பு நிலையிலிருந்து மலர்ந்த பூக்களை உடைய மாலை சூழ்ந்த மார்பினையும், செவியால் இசையை அளந்து பண் உறுத்திய வார்க்கட்டினை உடைய யாழின் இசையால் பயின்ற நன்மையுடைய நெஞ்சால் எப்பொழுதும் மெல்லிய மொழியில் பேசும் இயல்புடையோருமாகிய வானவர் இனிய யாழின் நரம்பை மீட்டும் பொருட்டு. 

சொற்பொருள்:  புகை முகந்தன்ன மாசு இல் தூ உடை– புகையை முகந்து கொண்டதை ஒத்த அழுக்கு இல்லாத தூய உடையினையும், முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து – அரும்பு நிலையிலிருந்து மலர்ந்த பூக்களை உடைய மாலை சூழ்ந்த மார்பினையும், செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் நல் யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் – செவியால் இசையை அளந்து பண் உறுத்திய வார்க்கட்டினை உடைய யாழின் இசையால் பயின்ற நன்மையுடைய நெஞ்சால், மென்மொழி மேவலர் இன் நரம்பு உளர – எப்பொழுதும் மெல்லிய மொழியில் பேசும் இயல்புடையோருமாகிய வானவர் இனிய யாழின் நரம்பை மீட்டும் பொருட்டு

பாடும் மகளிர்

நோய் இன்று இயன்ற யாக்கையர், மாவின்
அவிர் தளிர் புரையும் மேனியர், அவிர்தொறும்
பொன் உரை கடுக்கும் திதலையர், இன்நகைப்   145
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்,

மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்கக், (143 – 147)

பொருளுரை:   நோய் இல்லாத உடம்பை உடையவர்களும், மாமரத்தின் ஒளியுடைய தளிரை ஒத்த நிறத்தை உடையவர்களும், விளங்குந்தோறும் பொன்னை உரைக்கும் கல் போன்ற திதலை (தித்தி, பசலை) உடையவர்களும், இனிய ஒளியினை உடைய கோவையாகிய மேகலையை அணிந்து தாழ வேண்டிய இடத்தில் தாழ்ந்து உயர வேண்டிய இடத்தில் உயர்ந்த அல்குலை உடையவர்களுமாகிய வானுலக மகளிருடன், தாமும் மாசு இன்றி விளங்க,

குறிப்பு:  நோய் இன்று (143) – நோய் இன்றி என்பதன்கண் இன்றி என்னும் குறிப்பு வினையெச்சம் உகரமாய் இன்று ஆயிற்று.  இன்றி என்னும் வினையெஞ்சிறுதி நின்ற இகரம் உகரம் ஆதல் தொன்றியல் மருங்கின் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 35).  பணிந்து ஏந்து அல்குல் (146) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாழ வேண்டியவிடம் தாழ்ந்து உயர வேண்டியவிடம் உயர்ந்த அல்குல்.

சொற்பொருள்:  நோய் இன்று இயன்ற யாக்கையர் – நோய் இல்லாத உடம்பை உடையவர்களும், மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் – மாமரத்தின் ஒளியுடைய தளிரை ஒத்த நிறத்தை உடையவர்களும் (புரை – உவம உருபு), அவிர்தொறும் பொன் உரை கடுக்கும் திதலையர் – விளங்குந்தோறும் பொன்னை உரைக்கும் கல் போன்ற திதலை (தித்தி, பசலை) உடையவர்களும், இன்நகைப் பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் மாசு இல் மகளிரொடு – இனிய ஒளியினை உடைய கோவையாகிய மேகலையை அணிந்து தாழ வேண்டிய இடத்தில் தாழ்ந்து உயர வேண்டிய இடத்தில் உயர்ந்த அல்குலை உடைய வானுலக மகளிருடன், மறு இன்றி விளங்க – தாமும் மாசு இன்றி விளங்க,

திருமால்சிவன்இந்திரன்

கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால் எயிற்று,
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்   150
புள் அணி நீள் கொடிச் செல்வனும், வெள் ஏறு
வலம்வயின் உயரிய பலர் புகழ் திணி தோள்,
உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூ எயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்,
நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்   155
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து,
ஈர் இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை
தாழ் பெருந்தடக்கை உயர்த்த யானை

எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும், (148 – 159)

பொருளுரை:  பையில் நஞ்சுகொண்டு இருக்கும் துளையுடைய வெள்ளைப் பற்களையும், நெருப்பு என்னும்படி உயிர்ப்புக் கொள்ளும் (மூச்சு விடும்) கண்டார்க்கு அச்சம் தோன்றும் கடிய வலிமையினையும் உடைய பாம்புகள் மருளும்படி அடிக்கின்ற, பல வரிகளை உடைய வளைந்த சிறகுகளை உடைய கருடனை அணிந்த நீண்ட கொடியினை உடைய திருமாலும், வெள்ளை ஏற்றினை (காளை மாட்டினை) வலப்பக்கத்தில் வெற்றிக்கொடியாக உயர்த்திய, பலரும் புகழும் வலிமையான தோளினையுடைய, உமை ஒரு பக்கத்தில் பொருந்தி விளங்கும், இதழ் மூடாத மூன்று கண்ணினையுடைய, அவுணர்களின் முப்புரத்தை எரித்த மாறுபாடு மிக்க சிவனும், நூற்றைப் பத்தாக அடுக்கிய (ஆயிரம் ஆகிய) கண்களையும், நூறு என்னும் எண்ணுடைய பல வேள்விகளை முடித்ததனால் பகைவர்களை வென்று கொல்லுகின்ற வெற்றியை உடையவனாய், நான்காகிய முன்புறம் உயர்ந்த கொம்புகளையும் (தந்தங்களையும்), அழகிய நடையினையும் நிலத்தில் தோய்கின்ற பெரிய தும்பிக்கையுடன் கூடிய உயர்த்துக் கூறப்படுதலையும் உடைய யானையினது புறக்கழுத்தில் ஏறிய, திருமகளின் விளக்கத்தை உடைய இந்திரனும், 

குறிப்பு:  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  திருகிளர் செல்வனும் (159) – வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – செல்வத்தினால் விளங்குகின்ற இந்திரனும், நச்சினார்க்கினியர் உரை – திருமகளின் விளக்கமுடைய இந்திரனும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – திருமகளின் விளக்கமுடைய இந்திரனும்.

சொற்பொருள்:  கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால் எயிற்று – பையில் நஞ்சுகொண்டு இருக்கும் துளையுடைய வெள்ளைப் பற்களையும், அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல் – நெருப்பு என்னும்படி உயிர்ப்புக் கொள்ளும் (மூச்சு விடும்) கண்டார்க்கு அச்சம் தோன்றும் கடிய வலிமையினையும் உடைய, பாம்பு படப் புடைக்கும் – பாம்புகள் மருளும்படி அடிக்கின்ற, பல்வரிக் கொடுஞ்சிறைப் புள் அணி நீள் கொடிச் செல்வனும் – பல வரிகளை உடைய வளைந்த சிறகுகளை உடைய கருடனை அணிந்த நீண்ட கொடியினை உடைய திருமாலும், வெள் ஏறு வலம் வயின் உயரிய – வெள்ளை ஏற்றினை (காளை மாட்டினை) வலப்பக்கத்தில் வெற்றிக்கொடியாக உயர்த்திய, பலர் புகழ் திணி தோள் – பலரும் புகழும் வலிமையான தோளினையுடைய, உமை அமர்ந்து விளங்கும் – உமை ஒரு பக்கத்தில் பொருந்தி விளங்கும், இமையா முக்கண் – இதழ் மூடாத மூன்று கண்ணினையுடைய, மூ எயில் முருக்கிய முரண்மிகு செல்வனும் – முப்புரத்தை எரித்த மாறுபாடு மிக்க சிவனும், நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்து – நூற்றைப் பத்தாக அடுக்கிய (ஆயிரம் ஆகிய) கண்களையும், நூறு பல் வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து – நூறு என்னும் எண்ணுடைய பல வேள்விகளை முடித்ததனால் பகைவர்களை வென்று கொல்லுகின்ற வெற்றியை உடையவனாய், ஈர் இரண்டு ஏந்திய மருப்பின் – நான்காகிய முன்புறம் உயர்ந்த கொம்புகளையும் (தந்தங்களையும்), எழில் நடைத் தாழ் பெருந்தடக்கை – அழகிய நடையினையும் நிலத்தில் தோய்கின்ற பெரிய தும்பிக்கையுடன், உயர்த்த யானை எருத்தம் ஏறிய  திருக்கிளர் செல்வனும் – உயர்த்துக் கூறப்படுதலையும் உடைய யானையினது புறக்கழுத்தில் ஏறிய திருமகளின் விளக்கத்தை உடைய இந்திரனும்

நான்கு தெய்வங்களும் தேவர்களும்

நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய   160
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப்
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக,
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தா இல் ஊழி
நான்முக ஒருவற் சுட்டி, காண்வர   165
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு,

ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்; (160 – 168)

பொருளுரை:  பிரமன், திருமால், சிவன், இந்திரன் என்ற நான்கு பெருந்தெய்வங்களை வைத்த நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள உலகத்தைக் காக்கும் தொழில் ஒன்றையே விரும்பும் கொள்கையுடைய, பலராலும் புகழப்பட்ட பிரமனைத் தவிர மூவரும் தத்தம் தொழில்களை முன்போல் செய்துத் தலைவராக வேண்டி, பாதுகாவல் அடைகின்ற இவ்வுலகில் தோன்றி, திருமாலின் திரு உந்தித் தாமரை பெற்ற குற்றமற்ற ஊழிகளை உடைய நான்முகன் ஒருவனைப் பழைய நிலையில் நிறுத்தக் கருதி, அழகுண்டாக, பகல் போல் தெளிவாகக் காணப்படுகின்ற மாறுபாடு இல்லாத அறிவை உடைய, நான்காகிய இயல்பாயுடைய வேறுபட்ட முப்பத்துமூவரும், பதினெண் வகையாகிய உயர்ந்த நிலையைப் பெற்றவரும். 

குறிப்பு:  நாற்பெருந்தெய்வத்து (160) – நச்சினார்க்கினியர் உரை – இந்திரன், யமன், வருணன், சோமன், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்னும் நான்கு பெருந்திசைகட்குப் பாலகரான இந்திரன், யமன், வருணன், குபேரன், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிரமன், திருமால், உருத்திரன், இந்திரன், ச. வே. சுப்பிரமணியன் உரை – பிரமன், திருமால், சிவன், இந்திரன்  ஒன்பதிற்று இரட்டி (168) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒன்பதிற்று இரட்டி என்றது பதினெண்கணங்களை, பகலில் (166) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பகுத்து,  வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – பகல்போல், ஏமுறு (163) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாதுகாவலுறுகின்ற, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – இன்பமுறுகின்ற.  பெறீஇயர் (168) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெறீஇயர் என்றது எச்சப்பொருள் அல்லது வியங்கோள் பொருளில் வராமல் தொழிற்பெயராக வந்தமை காண்க.

சொற்பொருள்:  நாற்பெருந்தெய்வத்து – பிரமன், திருமால், சிவன், இந்திரன் என்ற நான்கு பெருந்தெய்வங்களில் வைத்து, நல் நகர் நிலைஇய உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை – நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள உலகத்தைக் காக்கும் தொழில் ஒன்றையே விரும்பும் கொள்கையுடைய (நிலைஇய – அளபெடை), பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக – பலராலும் புகழப்பட்ட பிரமனைத் தவிர மூவரும் தத்தம் தொழில்களை முன்போல் செய்துத் தலைவராக வேண்டி, ஏம் உறு ஞாலம் தன்னில் தோன்றி – பாதுகாவல் அடைகின்ற இவ்வுலகில் தோன்றி (ஏம் – ஏமம் என்பதன் கடைக்குறை), தாமரை பயந்த தா இல் ஊழி நான்முக ஒருவற் சுட்டி – திருமாலின் திரு உந்தித் தாமரை பெற்ற குற்றமற்ற ஊழிகளை உடைய நான்முகன் ஒருவனைப் பழைய நிலையில் நிறுத்தக் கருதி, காண்வர – அழகுண்டாக, பகலில் தோன்றும் இகல் இல் காட்சி – பகல் போல் தெளிவாகக் காணப்படுகின்ற மாறுபாடு இல்லாத அறிவை உடைய, நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு – நான்காகிய இயல்பாயுடைய வேறுபட்ட முப்பத்துமூவரும், ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் – பதினெண் வகையாகிய உயர்ந்த நிலையைப் பெற்றவரும் (பெறீஇயர் – அளபெடை)

மீன் பூத்தன்ன தோன்றலர், மீன் சேர்பு

வளி கிளர்ந்தன்ன செலவினர் வளியிடைத்   170
தீ எழுந்தன்ன திறலினர், தீப்பட
உரும் இடித்தன்ன குரலினர், விழுமிய
உறுகுறை மருங்கில் தம் பெறுமுறை கொண்மார்

அந்தரக் கொட்பினர், வந்து உடன் காண, (169 – 174)

பொருளுரை:  விண்மீன்கள் மலர்ந்தாற்போல் தோற்றத்தை உடையவர்களாய், விண்மீன்கள் உலாவுகின்ற இடத்தைச் சேர்ந்து காற்று எழுந்ததை ஒத்த செலவினை உடையராய், காற்றிடத்தில் நெருப்பு எழுந்தாலொத்த வலிமையை உடையராய், மின்னல் தோன்ற இடி இடித்தாற்போன்ற குரலை உடையராய், துன்பமாக உள்ள தமக்குற்ற குறை வேண்டும் பகுதியில் தமது தொழில்களைப் பண்டுபோல் பெற வேண்டிய முறையில் கொள்ள வேண்டி, வானத்தில் சுழற்சி உடையவர்களாக ஒரு சேர வந்து காணும்படியாக,

சொற்பொருள்:   மீன் பூத்தன்ன தோன்றலர் – விண்மீன்கள் மலர்ந்தாற்போல் தோற்றத்தை உடையவர்களாய், மீன் சேர்பு வளி கிளர்ந்தன்ன செலவினர் – விண்மீன்கள் உலாவுகின்ற இடத்தைச் சேர்ந்து காற்று எழுந்ததை ஒத்த செலவினை உடையராய், வளியிடைத் தீ எழுந்தன்ன திறலினர் – காற்றிடத்தில் நெருப்பு எழுந்தாலொத்த வலிமையை உடையராய், தீப்பட உரும் இடித்தன்ன குரலினர் – மின்னல் தோன்ற இடி இடித்தாற்போன்ற குரலை உடையராய் (தீ – மின்னலுக்கு ஆகுபெயர்), விழுமிய உறுகுறை மருங்கில் தம் பெறுமுறை கொண்மார் –  துன்பமாக உள்ள தமக்குற்ற குறை வேண்டும் பகுதியில் தமது தொழில்களைப் பண்டுபோல் பெற வேண்டிய முறையில் கொள்ள வேண்டி, அந்தரக் கொட்பினர் வந்து உடன் காண – வானத்தில் சுழற்சி உடையவர்களாக ஒரு சேர வந்து காணும்படியாக

முருகன் மடந்தையோடு

தா இல் கொள்கை மடந்தையொடு, சில நாள்   175
ஆவினன்குடி அசைதலும் உரியன்; அதாஅன்று, (175 – 176)

பொருளுரை:  குற்றமற்ற கொள்கையுடைய தெய்வயானையுடன் சில நாள் திருவாவினன்குடி என்னும் ஊரில் இருத்தலும் உரியவன்.  அங்கு மட்டும் அல்லாது.

குறிப்பு:  மடந்தையொடு (175) – நச்சினாக்கினியர் உரை – தெய்வயானையாருடன்.

சொற்பொருள்:   தா இல் கொள்கை மடந்தையொடு – குற்றமற்ற கொள்கையுடைய தெய்வயானையுடன் (தா – குற்றம்), சில நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன் – சில நாள் திருவாவினன்குடி என்னும் ஊரில் இருத்தலும் உரியவன் (பழனி), அதாஅன்று – அங்கு மட்டும் அல்லாது (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று.  அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, அளபெடை)

4.  திருவேரகம் (சுவாமிமலை)
இரு பிறப்பாளர்

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது,
இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல்குடி
அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை   180
மூன்று வகைக் குறித்த முத்தீச் செல்வத்து,

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல, (177 – 182)

பொருளுரை:  ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல், என்னும் ஆறு நன்மையுடையவற்றில் வழுவாமல், தாயும் தந்தையுமாகிய இருவர் குலத்தையும் உலகத்தார் நன்று என்று மதித்த பலவாய் வேறுபட்ட பழைய குடியில் பிறந்த, நாற்பத்தெட்டு இளமை மிக்க நல்ல மெய் நூல்கள் குறித்த நல்ல நெறியால் கழித்த ஆண்டுகளை, அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கொள்கையையும் மூன்று தீயால் உண்டாகிய செல்வத்தினையும்  உடைய, நூல் அணிவதற்கு முன் ஒரு பிறப்பும் பின் ஒரு பிறப்புமாகிய இருபிறப்பையுடைய அந்தணர் வழிபடும் பொழுது அறிந்து வாழ்த்த,

குறிப்பு:  இருமூன்று எய்திய இயல்பு – அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்.  (தொல்காப்பியம், புறத்திணையியல் 16).

சொற்பொருள்:    இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது – ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல், என்னும் ஆறு நன்மையுடையவற்றில் வழுவாமல் (வழாஅது – அளபெடை), இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல் குடி – தாயும் தந்தையுமாகிய இருவர் குலத்தையும் உலகத்தார் நன்று என்று மதித்த பலவாய் வேறுபட்ட பழைய குடியில் பிறந்த, அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு ஆறினில் கழிப்பிய – நாற்பத்தெட்டு இளமை மிக்க நல்ல மெய் நூல்கள் குறித்த நல்ல நெறியால் கழித்த ஆண்டுகளை, அறன் நவில் கொள்கை – அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கொள்கையையும் (அறன் – அறம் என்பதன் போலி), மூன்று வகைக் குறித்த முத்தீச் செல்வத்து – மூன்று தீயால் உண்டாகிய செல்வத்தினையும் உடைய, இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல – நூல் அணிவதற்கு முன் ஒரு பிறப்பும் பின் ஒரு பிறப்புமாகிய இருபிறப்பையுடைய அந்தணர் வழிபடும் பொழுது அறிந்து வாழ்த்த

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்,
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர், தற்புகழ்ந்து   185
ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி,
விரை உறு நறுமலர் ஏந்தி பெரிது உவந்து,

ஏரகத்து உறைதலும் உரியன்; அதாஅன்று, (183 – 189)

பொருளுரை:  முந்நூல் கொண்டு முப்புரி ஆக்குதலின் ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தில் கொண்ட ஒரு புரி மூன்றாகிய நுண்ணிய பூணூலையும் உடைய, நீராடி ஈரமுடைய ஆடையை உடம்பில் கிடந்து புலருமாறு உடுத்திய, தலை மேலே குவித்த கையினை உடையவராய், தன்னைத் துதித்து, ஆறு எழுத்தினைத் தன்னிடத்தில் கொண்ட கேட்பதற்கு அரிய ஓதப்படும் மந்திரத்தை, நாவில் பெயரும் அளவில் பயில ஓதி, மணம் மிகுந்த மலர்களைத் தூவி, பெரிது உவந்து உறைதலும் உரியவன், அதுவேயன்றி.

குறிப்பு:  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).   

சொற்பொருள்:  ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் – முந்நூல் கொண்டு முப்புரி ஆக்குதலின் ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தில் கொண்ட ஒரு புரி மூன்றாகிய நுண்ணிய பூணூலையும் உடைய, புலராக் காழகம் புலர உடீஇ – நீராடி ஈரமுடைய ஆடையை உடம்பில் கிடந்து புலருமாறு உடுத்தி (காழகம் – ஆடை, உடீஇ – அளபெடை), உச்சிக் கூப்பிய கையினர் – தலை மேலே குவித்த கையினை உடையவராய், தற்புகழ்ந்து – தன்னைத் துதித்து, ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி – ஆறு எழுத்தினைத் தன்னிடத்தில் கொண்ட கேட்பதற்கு அரிய ஓதப்படும் மந்திரத்தை, நா இயல் மருங்கில் நவிலப் பாடி – நாப்புடை பெயரும் அளவில் பயில ஓதி, விரைஉறு நறுமலர் ஏந்தி – மணம் மிகுந்த மலர்களைத் தூவி (விரை உறு – மணம் மிக்க), பெரிது உவந்து ஏரகத்து உறைதலும் உரியன் – பெரிது உவந்து உறைதலும் உரியவன், அதாஅன்று – அங்கு மட்டும் அல்லாது (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று.  அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, அளபெடை)

5. குன்றுதோறாடல் (திருத்தணி)

குரவைக் கூத்து


பைங்கொடி நறைக்காய் இடை இடுபு, வேலன்   190
அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்,
நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தேக்கண் தேறல்   195
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து,

தொண்டகச் சிறுபறைக் குரவை அயர, (190 – 197)

பொருளுரை:  வெறியாட்டு முறையின்படி பச்சிலைக் கொடியால் நறுமணமுடைய சாதிக்காயை இடையில் இட்டு, அழகிய தக்கோலக்காயைக் கலந்து (வால்மிளகைக் கலந்து), காட்டு மல்லிகையுடன் வெண்தாளியையும் சேர்த்துக் கட்டின கண்ணியை உடையவனாய், நறிய சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினை உடைய, கொடிய கொல்லும் தொழிலையுடைய வலிய வில்லை உடைய கானவர், நீண்ட மூங்கிலில் விளைந்த தேனால் செய்த கள்ளினை, மலையில் உள்ள சிறிய ஊரில் உள்ள தங்கள் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து, குறிஞ்சி நிலத்திற்கு உரிய தொண்டகப் பறையின் தாளத்திற்கு ஏற்ப குரவைக் கூத்து ஆட,

குறிப்பு:  மூங்கிலில் விளைந்த கள்:  நற்றிணை 276 – வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, அகநானூறு 348 – ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி, அகநானூறு 368 – அம் பணை விளைந்த தேன் கண் தேறல், பதிற்றுப்பத்து 81 – தூம்பு அகம் பழுனிய தீம் பிழி, திருமுருகாற்றுப்படை 195 – நீடு அமை விளைந்த தேக்கண் தேறல், மலைபடுகடாம் 171 – வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல், மலைபடுகடாம் 522 – திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேலை) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  பைங்கொடி நறைக்காய் (190) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பச்சிலைக்கொடி, ச. வே. சுப்பிரமணியன் உரை – பசுமையான கொடி, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – பசிய இலையையுடைய கொடி.  புட்டில் (191) – புட்டில் என்பது சலங்கை என்ற பொருள் கொண்டது. வால்மிளகு சலங்கையின் மணியைப் போல் உள்ளதால் அதற்குப் புட்டில் எனப்பட்டது.

சொற்பொருள்:  பைங்கொடி நறைக்காய் இடை இடுபு வேலன் – வெறியாட்டு முறையின்படி பச்சிலைக் கொடியால் நறுமணமுடைய சாதிக்காயை இடையில் இட்டு (நறைக்காய் – சாதிக்காய், இடுபு – இட்டு, செய்பு என்னெச்சம்), அம்பொதிப் புட்டில் விரைஇ – அழகிய தக்கோலக்காயைக் கலந்து (வால்மிளகைக் கலந்து), குளவியொடு வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் – காட்டு மல்லிகையுடன் வெண்தாளியையும் சேர்த்துக் கட்டின கண்ணியை உடையவனாய் (விரைஇ – அளபெடை), நறுஞ்சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் – நறிய சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினை உடைய, கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர் – கொடிய கொல்லும் தொழிலையுடைய வலிய வில்லை உடைய கானவர் (கொலைஇய – அளபெடை), நீடு அமை விளைந்த தேக்கண் தேறல் – நீண்ட மூங்கிலில் விளைந்த தேனால் செய்த கள்ளினை, குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து – மலையில் உள்ள சிறிய ஊரில் உள்ள தங்கள் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து, தொண்டகச் சிறுபறைக் குரவை அயர – குறிஞ்சி நிலத்திற்கு உரிய தொண்டகப் பறையின் தாளத்திற்கு ஏற்ப குரவைக் கூத்து ஆட,

குன்றுதொறு ஆடலில் முருகன்

விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கான்
குண்டு சுனை பூத்த வண்டுபடு கண்ணி,
இணைத்த கோதை அணைத்த கூந்தல்   200
முடித்த குல்லை இலையுடை நறும்பூச்,
செங்கால் மராஅத்த வால் இணர், இடை இடுபு
சுரும்பு உணத் தொடுத்த பெருந்தண்  மாத்தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ,
மயில் கண்டன்ன மடநடை மகளிரொடு   205
செய்யன் சிவந்த ஆடையன், செவ்வரைச்
செயலைத் தண் தளிர் துயல்வரும் காதினன்,
கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன்,
குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன்,
தகரன், மஞ்ஞையன், புகர் இல் சேவல் அம்   210
கொடியன், நெடியன், தொடி அணி தோளன்,
நரம்பு ஆர்த்தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்,
முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி,   215
மென்தோள் பல்பிணை தழீஇ, தலைத்தந்து,

குன்றுதொறு ஆடலும் நின்றதன் பண்பே; அதாஅன்று, (198 – 217)

பொருளுரை:  விரலின் அலைப்பால் (உரசியதால்) மலர்ந்த வேறுபடுகின்ற மணத்தையுடைய, ஆழமுடைய சுனையில் பூத்த மலர்களால் புனையப்பட்ட வண்டு வீழ்கின்ற மாலையினையும், பிணைக்கப்பட்ட மாலையினையும் சேர்ந்த கூந்தலை உடையவராய், இலையை மேல் பகுதியில் கொண்ட கஞ்சங் குல்லையையும், நறுமணமுடைய பூங்கொத்துக்களையும் சிவந்த காலினையுமுடைய கடம்ப மரத்தின் வெள்ளை மலர்க் கொத்துக்களை நடுவில் வைத்து வண்டு தேன் உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகுடைய தழையை ஆடையாக, திருத்தமான வடங்களையுடைய அல்குலில் அசையும்படி உடுத்திய, சாயலில் மயிலை ஒத்தாற்போன்ற மடப்பம் பொருந்திய நடையுடைய மகளிருடன், சிவந்த திருமேனியை உடையவனாய், சிவந்த தாளினை உடைய அசோக மரத்தின் குளிர்ந்த தளிர்கள் அசைகின்ற காதினை உடையவனாய், உடலைச் சுற்றிக் கச்சையைக் கட்டியவனாய், வீரக்கழல் அணிந்தவனாய், வெட்சி மாலையைச் சூடினவனாய், குழல் ஊதுபவனாய், கோடு என்னும் இசைக்கருவியை ஊதுபவனாய், சிறிய பல இசைக்கருவிகளை ஒலிப்பவனாய், கிடாவையும் மயிலையும் உடையவனாய், குற்றமற்ற சேவற்கொடியை உயர்த்தி, நெடுக வளர்ந்து, தோள்களில் தொடி அணிந்தவனாய், யாழின் ஒலிபோன்று இனிய குரலையுடைய மகளிர் கூட்டத்துடன், சிறிய பொறிகள் (இடை அணிகலன்கள்) கொண்ட நறிய குளிர்ந்த மென்மையுடையதாகிய இடையில் கட்டியது நிலத்தில் தோயும் ஆடையை உடையவனாய், முழவை ஒத்த பெரிய கைகளில் பொருந்த ஏந்தி மெல்லிய தோளுடைய பெண்மான் போன்ற மகளிரைத் தழுவி, அவர்களுக்கு  ஏற்ற இருக்கையைக் கொடுத்து, மலைகள்தோறும் சென்று விளையாடுதலும் அவனுடைய நிலைபெற்ற தன்மை.  அங்கு மட்டும் இல்லாமல்,   

குறிப்பு:  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24). கான் – மணம், அகநானூறு 391 – தலை வேய் கான் மலர் தேம் பாய் முல்லையொடு, பதிற்றுப்பத்து 30-23 – கான்மிகு குளவிய, திருமுருகாற்றுப்படை 198 – விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கான், மதுரைக்காஞ்சி 337 – கான் பொழில் தழீஇய அடைகரை தோறும்.

சொற்பொருள்:  விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கான் – விரலின் அலைப்பால் (உரசியதால்) மலர்ந்த வேறுபடுகின்ற மணத்தையுடைய (கான் – நறுமணம்), குண்டு சுனை பூத்த வண்டுபடு கண்ணி – ஆழமுடைய சுனையில் பூத்த மலர்களால் புனையப்பட்ட வண்டு வீழ்கின்ற மாலையினையும், இணைத்த கோதை –பிணைக்கப்பட்ட மாலையினையும், அணைத்த கூந்தல் – சேர்ந்த கூந்தலை உடையவராய், முடித்த குல்லை – இலையை மேல் பகுதியில் கொண்ட கஞ்சங் குல்லையையும், இலையுடை நறும் பூ செங்கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு சுரும்பு உண தொடுத்த பெருந்தண் மாத்தழை – நறுமணமுடைய பூங்கொத்துக்களையும் சிவந்த காலினையுமுடைய கடம்ப மரத்தின் வெள்ளை மலர்க் கொத்துக்களை நடுவில் வைத்து வண்டு தேன் உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகுடைய தழையை (மராஅத்த – அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது, இடுபு – இட்டு, செய்பு என்னெச்சம், உண – உண்ண என்பதன் விகாரம்), திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திருத்தமான வடங்களையுடைய அல்குலில் அசையும்படி உடுத்தி (உடீஇ – அளபெடை), மயில் கண்டன்ன மடநடை மகளிரொடு – சாயலில் மயிலை ஒத்தாற்போன்ற மடப்பம் பொருந்திய நடையுடைய மகளிருடன், செய்யன் சிவந்த ஆடையன் – சிவந்த திருமேனியை உடையவனாய், செவ்வரைச் செயலைத் தண் தளிர் துயல்வரும் காதினன் – சிவந்த தாளினை உடைய அசோக மரத்தின் குளிர்ந்த தளிர்கள் அசைகின்ற காதினை உடையவனாய், கச்சினன் – உடலைச் சுற்றிக் கச்சையைக் கட்டியவனாய், கழலினன் – வீரக்கழல் அணிந்தவனாய், செச்சைக் கண்ணியன் – வெட்சி மாலையைச் சூடினவனாய், குழலன் – குழல் ஊதுபவனாய், கோட்டன் – கோடு என்னும் இசைக்கருவியை ஊதுபவனாய், குறும் பல்லியத்தன் – சிறிய பல இசைக்கருவிகளை ஒலிப்பவனாய், தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் கொடியன் – கிடாவையும் மயிலையும் உடையவனாய் குற்றமற்ற சேவற்கொடியை உயர்த்தி, நெடியன் – நெடுக வளர்ந்து, தொடி அணி தோளன் – தோள்களில் தொடி அணிந்தவனாய், நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு – யாழின் ஒலிபோன்று இனிய குரலையுடைய மகளிர் கூட்டத்துடன், குறும் பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் – சிறிய பொறிகள் (இடை அணிகலன்கள்) கொண்ட நறிய குளிர்ந்த மென்மையுடையதாகிய, மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – இடையில் கட்டியது நிலத்தில் தோயும் ஆடையை உடையவனாய் (நிலன் – நிலம் என்பதன் போலி), முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி – முழவை ஒத்த பெரிய கைகளில் பொருந்த ஏந்தி (உறழ் – உவம உருபு, இயல ஏந்தி – பொருந்தத் தூக்கி), மென் தோள் பல் பிணை தழீஇ – மெல்லிய தோளுடைய பெண்மான் போன்ற மகளிரைத் தழுவி (தழீஇ – அளபெடை), தலைத்தந்து – அவர்களுக்கு  ஏற்ற இருக்கையைக் கொடுத்து, குன்றுதொறு ஆடலும் நின்றதன் பண்பே – மலைகள்தோறும் சென்று விளையாடுதலும் அவனுடைய நிலைபெற்ற தன்மை, அதாஅன்று – அங்கு மட்டும் இல்லாமல் (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று.  அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, அளபெடை) 

6. பழமுதிர்சோலை

முருகன் இருப்பிடங்கள்

சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து,
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ,
ஊர் ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்,   220
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்,
வேலன் தைஇய வெறி அயர் களனும்,
காடும் காவும் கவின் பெறு துருத்தியும்,
யாறும் குளனும், வேறு பல் வைப்பும்,
சதுக்கமும் சந்தியும், புதுப் பூங்கடம்பும்,   225

மன்றமும் பொதியிலும், கந்துடை நிலையினும், (218 – 226)

பொருளுரை:  சிறுதினையை மலர்களுடன் கலந்து படைத்து, ஆட்டுக் குட்டியைக் கொன்று அறுத்துப் படைத்து, சேவற்கொடியுடன் முருகக் கடவுளை அங்கு நிற்கும்படி நிறுத்தி ஊர்கள்தோறும் எடுத்துக்கொண்ட சிறப்புப்பொருந்திய விழாக்களிலும், தன்பால் அன்புடையவர்கள் புகழ, மனம் பொருந்துதல் வந்த இடத்தும், வேலன் இழைத்த வெறியாடுகின்ற களத்திலும், காட்டிலும், சோலையிலும், அழகுடைய ஆற்றின் தீவிலும், ஆறுகளிலும், குளங்களிலும், வேறுபல ஊர்களிலும், நாற்சந்தியிலும், முச்சந்தியிலும், புதிய மலர்களை உடைய கடம்ப மரத்திலும், ஊர் மன்றத்திலும், அம்பலத்திலும், இறைவன் குறியாக நடப்பட்ட தறியிடத்தும் (தூண்களிடத்தும்),

குறிப்பு:  கந்துடை நிலையினும் (226) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கந்துடை நிலை என்றது, இறைவன் அருட்குறியாகக் கல் தறி நட்டியிருக்கும் இடத்தை, பண்டைக் காலத்தே இறைவணக்கம் செய்தற்பொருட்டுக் கல்தறி நட்டு அதனை வணங்கி வந்தனர்.  அக்கல்தறியே பிற்றை நாள் சிவலிங்க உருவமாகக் கொள்ளப்பட்டதென்று அறிக.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேலை) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.

சொற்பொருள்:  சிறுதினை மலரொடு விரைஇ – சிறுதினையை மலர்களுடன் கலந்து (விரைஇ – அளபெடை), மறி அறுத்து – ஆட்டுக் குட்டியைக் கொன்று அறுத்து, வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ – சேவற்கொடியுடன் முருகக் கடவுளை அங்கு நிற்கும்படி நிறுத்தி (நிறீஇ – அளபெடை), ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் – ஊர்கள்தோறும் எடுத்துக்கொண்ட சிறப்புப்பொருந்திய விழாக்களிலும், ஆர்வலர் ஏத்த – அன்புடையவர்கள் புகழ, மேவரு நிலையினும் – மனம் பொருந்துதல் வந்த இடத்தும், வேலன் தைஇய வெறி அயர் களனும் – வேலன் இழைத்த வெறியாடுகின்ற களத்திலும் (தைஇய – அளபெடை, களன் – களம் என்பதன் போலி), காடும் காவும் கவின்பெறு துருத்தியும் – காட்டிலும் சோலையிலும் அழகுடைய ஆற்றின் தீவிலும், யாறும் குளனும் – ஆறுகளிலும் குளங்களிலும் (குளன் – குளம் என்பதன் போலி), வேறு பல் வைப்பும் – வேறுபல ஊர்களிலும் , சதுக்கமும் – நாற்சந்தியிலும், சந்தியும் – முச்சந்தியிலும், புதுப் பூங்கடம்பும் மன்றமும் – புதிய மலர்களை உடைய கடம்ப மரத்திலும் ஊர் மன்றத்திலும், பொதியிலும் – அம்பலத்திலும், கந்துடை நிலையினும் – இறைவன் குறியாக நடப்பட்ட தறியிடத்தும் (தூண்களிடத்தும்)

குறமகளின் வெறியாட்டு

ஆண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி அப்பி, ஐது உரைத்து,
குடந்தம்பட்டு கொழுமலர் சிதறி,
முரண்கொள் உருவின் இரண்டு உடன் உடீஇச்   230
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி,
மதவலி நிலைஇய மாத்தாட் கொழு விடைக்
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து, பல்பிரப்பு இரீஇச்,
சிறுபசு மஞ்சளொடு நறு விரை தெளித்துப்   235
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையுற அறுத்துத் தூங்க நாற்றி,
நளிமலைச் சிலம்பில் நல்நகர் வாழ்த்தி,
நறும்புகை எடுத்து குறிஞ்சி பாடி,
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க,   240
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக், குறமகள்
முருகு இயம் நிறுத்து, முரணினர் உட்க,

முருகு ஆற்றுப்படுத்த உருகெழு வியல் நகர், (227 – 244)

பொருளுரை:  ஆண் தலையும் உடல் பறவையின் வடிவாகவும் எழுதின கொடியுடன் பொருந்துதல் வரச் செய்து, நெய்யுடன் வெண்கடுகையும் அப்பி, மென்மையாக உரைத்து வழிபட்டு, பெரிய மலர்களைத் தூவி, மாறுபட்ட வடிவினையுடைய இரண்டு ஆடையை உள் ஒன்றும் புறம் ஒன்றாகவும் உடுத்தி, சிவந்த நூலினால் ஆன காப்புக் கயிற்றைக் கட்டி, வெள்ளைப் பொரியைச் சிதறி, மிகுதியான வலிமையையுடைய நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுத்த கிடாவினது குருதியுடன் கலந்த தூய வெள்ளை அரிசியைச் சிறு பலியாக இட்டு, பலவற்றையும் பரப்பி வைத்து, சிறிய பசிய மஞ்சளுடன் நறுமணப் பொருட்களைத் தெளித்து, பெரிய குளிர்ந்த செவ்வரளி மாலையினையும் நறிய குளிர்ந்த மாலைகளையும் தம்மில் இணை ஒக்க அறுத்து அசையும்படி தொங்கவிட்டு, அடர்ந்த மலைப்பக்கத்தில் உள்ள நல்ல ஊர்களைப் “பசியும் பகையும் பிணியும் நீங்குக” என வாழ்த்தி, நறிய மணமுடைய புகையைப் பரப்பிக் குறிஞ்சிப்பண்ணில் பாடி, முழங்குகின்ற அருவி ஓசையுடன் இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, சிவந்த நிறமுடைய பல மலர்களையும் தூவி, அச்சம் வரும்படி குருதி கலந்த சிவந்த தினையையும் பரப்பி, குறவர் பெண் (மலையில் வாழும் பெண்) முருகன் உவக்கும் இசைக்கருவிகளை ஒலித்து, பிறர் அஞ்சுமாறு, முருகன் வரும்படி வழிப்படுத்த, அச்சம் பொருந்தின பெரிய நகரின்கண்,    

குறிப்பு:  ஆண்தலை (227) – மாண்தலை என்றும் பாடம் உண்டு.  நச்சினார்க்கினியர் உரை – ஆண்தலைக் கொடி என்பது பாடமாயின் தலை ஆண்மகனின் தலையாகவும் உடல் புள்ளின் உடலாகவும் எழுதின கொடி என்க.  உரு (244) – அச்சம்.  உரு உட்காகும் புரை உயர்வாகும். (தொல்காப்பியம், உரியியல் 4).  நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), நளி என் கிளவி செறிவும் ஆகும், (தொல்காப்பியம், உரியியல் 27).  குடந்தம்பட்டு (229) – நச்சினார்க்கினியர் உரை – வணங்குதல், வழிபடுதல்.  குடவென்பது தடவென்பது போல வளைவை உணர்த்துவதோர் உரிச்சொல்லாகலின் அதனடியாகப் பிறந்த பெயருமாம்.

சொற்பொருள்:  ஆண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர – ஆண் தலையும் உடல் பறவையின் வடிவாகவும் எழுதின கொடியுடன் பொருந்துதல் வரச் செய்து, நெய்யோடு ஐயவி அப்பி – நெய்யுடன் வெண்கடுகையும் அப்பி, ஐது உரைத்து குடந்தம்பட்டு – மென்மையாக உரைத்து வழிபட்டு, கொழு மலர் சிதறி – பெரிய மலர்களைத் தூவி, முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ – மாறுபட்ட வடிவினையுடைய இரண்டு ஆடையை உள் ஒன்றும் புறம் ஒன்றாகவும் உடுத்தி (உடீஇ – அளபெடை), செந்நூல் யாத்து – சிவந்த நூலினால் ஆன காப்புக் கயிற்றைக் கட்டி, வெண்பொரி சிதறி – வெள்ளைப் பொரியைச் சிதறி, மதவலி நிலைஇய மாத்தாட் கொழு விடைக் குருதியொடு விரைஇய – மிகுதியான வலிமையையுடைய நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுத்த கிடாவினது குருதியுடன் (மதவலி – ஒருபொருட் பன்மொழி, நிலைஇய – அளபெடை, விரைஇய – கலந்த, அளபெடை), தூ வெள் அரிசி சில் பலிச் செய்து – தூய வெள்ளை அரிசியைச் சிறு பலியாக இட்டு, பல் பிரப்பு இரீஇ – பலவற்றையும் பரப்பி வைத்து (இரீஇ – அளபெடை), சிறு பசு மஞ்சளொடு நறு விரை தெளித்து – சிறிய பசிய மஞ்சளுடன் நறுமணப் பொருட்களைத் தெளித்து, பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை துணையுற அறுத்துத் தூங்க நாற்றி – பெரிய குளிர்ந்த செவ்வரளி மாலையினையும் நறிய குளிர்ந்த மாலைகளையும் தம்மில் இணை ஒக்க அறுத்து அசையும்படி தொங்கவிட்டு, நளி மலைச் சிலம்பில் நல் நகர் வாழ்த்தி – அடர்ந்த மலைப்பக்கத்தில் உள்ள நல்ல ஊர்களைப் பசியும் பகையும் பிணியும் நீங்குக என வாழ்த்தி, நறும்புகை எடுத்து குறிஞ்சி பாடி – நறிய மணமுடைய புகையைக் கொடுத்து குறிஞ்சிப் பண்ணில் பாடி, இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – முழங்குகின்ற அருவி ஓசையுடன் இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, உருவப் பல் பூத் தூஉய் – சிவந்த நிறமுடைய பல மலர்களையும் தூவி (தூஉய் – அளபெடை), வெருவரக் குருதிச் செந்தினை பரப்பி – அச்சம் வரும்படி குருதி கலந்த சிவந்த தினையையும் பரப்பி, குறமகள் முருகு இயம் நிறுத்து – குறவர் பெண் (மலையில் வாழும் பெண்) முருகன் உவக்கும் இசைக்கருவிகளை ஒலித்து, முரணினர் உட்க – பிறர் அஞ்ச, முருகு ஆற்றுப்படுத்த – முருகன் வரும்படி வழிப்படுத்த, உருகெழு வியல் நகர் – அச்சம் பொருந்தின பெரிய நகரின்கண்

ஆடுகளம் சிலம்பப் பாடி, பலவுடன்   245
கோடு வாய் வைத்துக் கொடுமணி இயக்கி,
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி,
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட,

ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே; (245 -249)

பொருளுரை:  வெறியாட்டக் களம் எதிரொலிக்கப் பாடி, ஊதும் கோடுகள் பலவற்றையும் ஊதி, வளைந்த மணிகளால் ஒலி உண்டுபண்ணி, கெடாத வலிமையுடைய பிணிமுகம் என்ற யானையை வாழ்த்தி, காரியங்களை வேண்டியவர்கள் தாங்கள் விரும்பின காரியங்களை விரும்பினபடி பெற்று நின்று வழிபட, அவ்விடங்களில் முருகப்பெருமான் தங்குதலை யான் அறிந்தபடி கூறினேன்.

குறிப்பு:  பலவுடன் கோடு வாய் வைத்து (245-246) – கோடு பலவுடன் வாய் வைத்து என்று படிக்கவும்.  பிணிமுகம் (247) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிணிமுகம் என்ற பட்டத்தையுடைய யானை.  பிணிமுகம் என்பதற்குப் பெரும்பாலோர் மயில் என்றே பொருள் கூறுவர்.  பிணிமுகம் என்பது முருகன் ஏறும் யானை ஒன்றற்கே பெயர் என்பாரும் உளர்.  பிணிமுகம் வாழ்த்தும் வழக்கத்தை ‘கடம்பும் களிறும் பாடி’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 16) என்பதானும் அறிக.  பிணிமுகம் என்பதனைப் பட்டம் எனக் கொண்டு அதனுடைய யானை என்றார் நச்சினார்க்கினியர்.  இப்பொருளில் பிணிமுகம் என்பது அன்மொழித்தொகை என்க. 

சொற்பொருள்:  ஆடு களம் சிலம்பப் பாடி – வெறியாட்டக் களம் எதிரொலிக்கப் பாடி, பலவுடன் கோடு வாய்வைத்து – ஊதும் கோடுகள் பலவற்றையும் ஊதி, கொடு மணி இயக்கி – வளைந்த மணிகளால் ஒலி உண்டுபண்ணி, ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி – கெடாத வலிமையுடைய பிணிமுகம் என்ற யானையை வாழ்த்தி, வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட – காரியங்களை வேண்டியவர்கள் தாங்கள் விரும்பின காரியங்களை விரும்பினபடி பெற்று நின்று வழிபட, ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே – அவ்விடங்களில் முருகப்பெருமான் தங்குதலை யான் அறிந்தபடி கூறினேன்,

முருகனைக் கண்டு துதித்தல்

ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக, காண்தக   250
முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்திக்,
கைதொழூஉப் பரவிக், கால் உற வணங்கி,
நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ!   255
ஆல் கெழு கடவுட் புதல்வ! மால் வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி!
வானோர் வணங்கு வில் தானைத் தலைவ!   260
மாலை மார்ப! நூல் அறி புலவ!
செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள!
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை!
மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!
வேல்கெழு தடக்கைச் சால் பெருஞ்செல்வ!   265
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண் பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ!
பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக!
நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேர் ஆள!   270
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய்!
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்!
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்!
சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி!   275
போர் மிகு பொருந குரிசில்! எனப்பல

யான் அறி அளவையின் ஏத்தி, ஆனாது, (250 – 277)

பொருளுரை:  யான் முன் கூறிய இடங்கள் ஆயினும் பிற இடங்களில் ஆயினுமாக, காணும் தகுதி பெற நீ நின் முன் அப்பெருமானைக் கண்டபொழுது, முகத்தால் விரும்பி நோக்கி வாயால் வாழ்த்தி, கையைத் தலைக்கு மேல் குவித்துப் புகழ்ந்து, முருகப்பெருமானுடைய திருவடிகளில் நின் தலை பொருந்தும்படி வீழ்ந்து வணங்கி, “நெடிய பெரிய மலை உச்சியில் தருப்பைப்புல் வளர்ந்த பசிய சுனையில், விசும்பும் வளியும் (காற்றும்) தீயும் நீரும் நிலமும் ஆகிய ஐவருள் ஒருவரான தீ தன் உள்ளங்கையில் ஏற்ப, அறுவரால் பெறப்பட்ட ஆறு வடிவம் கொண்ட செல்வனே!  ஆல மரத்தின் கீழிருந்த கடவுளின் மகனே!  ஓங்கிய மலையாகிய மலையரையன் மகளின் மகனே!  பகைவர்க்குக் கூற்றுவனே! போரில் வெல்லும் கடவுளான கொற்றவையின் மகனே!  இழை அணிந்த சிறப்புடைய பெண் கடவுளான பழையோளின் மகனே!  தேவர்கள் வணங்கும் விற்படைத் தலைவனே!  கடம்ப மாலையை மார்பில் அணிந்தவனே!  நூல்களைக் கற்று அறிந்த புலவனே!  போர்த்தொழிலில் ஒப்பற்றவனே!  போரில் வெற்றியுடைய மறவனே!  அந்தணரின் செல்வமே!  சான்றோரின் சொற்களின் கூட்டமாக இருப்பவனே!  மகளிர்க்குக் கணவனே! மறவருள் சிங்கம் போன்றவனே!  வேல் பொருந்திய பெரிய கைகளை உடைய பெரும் செல்வனே!  குருகின் பெயர் பெற்ற மலையைப் பிளந்த, குறையாத வெற்றியையுடைய தேவர் உலகைத் தீண்டும் ஓங்கிய மலைகளையுடைய குறிஞ்சி நிலத்தின் உரிமையுடையவனே!  பலர் புகழும் நல்ல மொழியினை உடைய புலவர்களுக்கு அரி ஏறு (ஆண் சிங்கம்) போன்றவனே!  அரிதில் பெரும் முறைமையையுடைய பெரும் பொருளுடைய முருகனே!  விரும்பி வருவோர்க்கு அவர்கள் வேண்டியதைக் கொடுக்கும் பெரும் புகழை உடையவனே!  துன்பம் அடைந்து வருவோர்க்கு அருள் செய்யும் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தவனே!  மிக்குச் செல்கின்ற போர்களை முடித்த வெற்றி அடைந்த நின் மார்பிடத்தில் இரந்து வருவோரைத் தழுவி அவர்கள் வேண்டுவனவற்றைக் கொடுத்து பாதுகாக்கும் அச்சம் பொருந்திய பெரும் வேளே!  சான்றோர் புகழ்கின்ற மறைமொழியாகிய திருப்பெயரை உடைய இறைவனே!  சூரனின் குலத்தை அழித்த பெரும் வலிமையால் மதவலி என்னும் பெயரை உடையோய்!  என்று பலவற்றையும் யான் அறிந்து உனக்குக் கூறிய அளவிலே அவனைப் புகழ்ந்து அமையாது,   

குறிப்பு:   கொற்றவை:  பெரும்பாணாற்றுப்படை 456-458 – கடுஞ்சூர் கொன்ற பைம்பூண் சேஎய் பயந்த மாமோட்டு துணங்கை அம் செல்வி.  அகநானூறு 245-4 – கான் அமர் செல்வி.  பழையோள் (259) – நச்சினார்க்கினியர் உரை – காடு கிழாள்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  நீலப் பைஞ்சுனை (253) – பொ. வே. சோமசுந்தரனார் திருமுருகாற்றுப்படை உரை – தருப்பை வளர்ந்த பசிய சுனையிடத்தே. பொ. வே. சோமசுந்தரனார் பரிபாடல் உரை – நீலப் பூக்களை உடைய பசிய சரவணம் என்ற சுனை. பொலம் (18) – பொன்.  பொன்னென் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடரியலான (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 61). 

சொற்பொருள்:  ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக – யான் முன் கூறிய இடங்கள் ஆயினும் பிற இடங்களில் ஆயினுமாக, காண்தக முந்து நீ கண்டுழி – காணும் தகுதி பெற நீ நின் முன் அப்பெருமானைக் கண்டபொழுது, முகன் அமர்ந்து ஏத்தி – முகத்தால் விரும்பி நோக்கி வாயால் வாழ்த்தி (முகன் – முகம் என்பதன் போலி), கைதொழூஉப் பரவி – கையைத் தலைக்கு மேல் குவித்துப் புகழ்ந்து (தொழூஉ – அளபெடை), கால் உற வணங்கி – முருகப்பெருமானுடைய திருவடிகளில் நின் தலை பொருந்தும்படி வீழ்ந்து வணங்கி, நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை – நெடிய பெரிய மலை உச்சியில் தருப்பைப்புல் வளர்ந்த பசிய சுனையில், ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப – விசும்பும் வளியும் (காற்றும்) தீயும் நீரும் நிலமும் ஆகிய ஐவருள் ஒருவரான தீ தன் உள்ளங்கையில் ஏற்ப (அங்கை -அகம் கை என்பதன் மரூஉ, பெயர்ச்சொல்), அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ – அறுவரால் பெறப்பட்ட ஆறு வடிவம் கொண்ட செல்வனே, ஆல் கெழு கடவுட் புதல்வ – ஆல மரத்தின் கீழிருந்த கடவுளின் மகனே, மால்வரை மலைமகள் மகனே – ஓங்கிய மலையாகிய மலையரையன் மகளின் மகனே, மாற்றோர் கூற்றே – பகைவர்க்குக் கூற்றுவனே, வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ – போரில் வெல்லும் பெண் கடவுளான கொற்றவையின் மகனே, இழை அணி சிறப்பின் பழையோள் குழவி – இழை அணிந்த சிறப்புடைய பெண் கடவுளின் மகனே, வானோர் வணங்கு வில் தானைத் தலைவ – தேவர்கள் வணங்கும் விற்படைத் தலைவனே, மாலை மார்ப – கடம்ப மாலையை மார்பில் அணிந்தவனே, நூல் அறி புலவ – நூல்களைக் கற்று அறிந்த புலவனே, செருவில் ஒருவ – போர்த்தொழிலில் ஒப்பற்றவனே, பொரு விறல் மள்ள – போரில் வெற்றியுடைய மறவனே, அந்தணர் வெறுக்கை  – அந்தணரின் செல்வமே, அறிந்தோர் சொல்மலை – சான்றோரின் சொற்களின் கூட்டமாக இருப்பவனே, மங்கையர் கணவ – மகளிர்க்குக் கணவனே, மைந்தர் ஏறே – மறவருள் சிங்கம் போன்றவனே, வேல் கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ – வேல் பொருந்திய பெரிய கைகளை உடைய பெரும் செல்வனே, குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண் பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ – குருகின் பெயர் பெற்ற மலையைப் பிளந்த குறையாத வெற்றியையுடைய தேவர் உலகைத் தீண்டும் ஓங்கிய மலைகளையுடைய குறிஞ்சி நிலத்தின் உரிமையுடையவனே, பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே – பலர் புகழும் நல்ல மொழியினை உடைய புலவர்களுக்கு அரி ஏறு (ஆண் சிங்கம்) போன்றவனே, அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக – அரிதில் பெரும் முறைமையையுடைய பெரும் பொருளுடைய முருகனே, நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேர் ஆள – விரும்பி வருவோர்க்கு அவர்கள் வேண்டியதைக் கொடுக்கும் பெரும் புகழை உடையவனே, அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய் – துன்பம் அடைந்து வருவோர்க்கு அருள் செய்யும் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தவனே (சேஎய் – அளபெடை), மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள் – மிக்குச் செல்கின்ற போர்களை முடித்த வெற்றி அடைந்த நின் மார்பிடத்தில் இரந்து வருவோரைத் தழுவி அவர்கள் வேண்டுவனவற்றைக் கொடுத்து பாதுகாக்கும் அச்சம் பொருந்திய பெரும் வேளே (நெடுவேஎள் – அளபெடை), பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் – சான்றோர் புகழ்கின்ற மறைமொழியாகிய திருப்பெயரை உடைய இறைவனே, சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந குரிசில் – சூரனின் குலத்தை அழித்த பெரும் வலிமையால் மதவலி என்னும் பெயரை உடையோய் (மதவலி – ஒருபொருட் பன்மொழி), எனப்பல யான் அறி அளவையின் – என்று பலவற்றையும் யான் அறிந்து உனக்குக் கூறிய அளவிலே, ஏத்தி ஆனாது – புகழ்ந்து அமையாது 

“நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்
நின் அடி உள்ளி வந்தனென், நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமையோய்!” எனக்   280

குறித்தது மொழியா அளவையின், (278 -281)

பொருளுரை:  “உலகில் நிலைபெற்ற உயிர்களுக்கு உன்னை அளந்து அறிதல் அரியது ஆதலால், நின் திருவடிகளை எண்ணி நான் வந்தேன், உன்னுடன் ஒப்பாக மெய்யறிவில் யாரும் இல்லாத புலமை உடையவனே!” என நீ கருதியதைக் கூறும் முன்னமே,

சொற்பொருள்:    நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – உலகில் நிலைபெற்ற உயிர்களுக்கு உன்னை அளந்து அறிதல் அரியது ஆதலால், நின் அடி உள்ளி வந்தனென் – நின் திருவடிகளை எண்ணி நான் வந்தேன், நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோய் – உன்னுடன் ஒப்பாக மெய்யறிவில் யாரும் இல்லாத புலமை உடையவனே, எனக் குறித்தது மொழியா அளவையின் – என நீ கருதியதைக் கூறும் முன்னமே,

……………………………………………..குறித்து உடன்
வேறு பல் உருவின் குறும்பல் கூளியர்,
சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி,
“அளியன் தானே முதுவாய் இரவலன்!
வந்தோன் பெரும, நின் வண் புகழ் நயந்து!” என,   285

இனியவும் நல்லவும், நனிபல ஏத்தித், (281 – 286)

பொருளுரை:  உன் விண்ணப்பித்தலைக் குறித்து அப்பொழுதே, வேறு பல வடிவினையுடைய குறிய பலராகிய பணியாளர்கள், விழா எடுத்த களத்தில் பொலிவு பெறத் தோன்றி “அளிக்கத் தக்கவனாகிய இந்த அறிவு வாய்ந்த இரவலன் வந்துள்ளான் பெருமானே, நின்னுடைய வளவிய புகழை விரும்பி.  இனியனவும் நல்லவையுமாகிய மிகப் பலவற்றை வாழ்த்திக் கூறி வந்துள்ளான்” என்று கூற,

குறிப்பு:  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:   குறித்து உடன் – உன் விண்ணப்பித்தலைக் குறித்து அப்பொழுதே, வேறு பல் உருவின் குறும் பல் கூளியர் – வேறு பல வடிவினையுடைய குறிய பலராகிய பணியாளர்கள், சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி – விழா எடுத்த களத்தில் பொலிவு பெறத் தோன்றி, அளியன் தானே முதுவாய் இரவலன் – அளிக்கத் தக்கவனாகிய இந்த அறிவு வாய்ந்த இரவலன், வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து – வந்துள்ளான் பெருமானே நின்னுடைய வளவிய புகழை விரும்பி, என இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி – இனியனவும் நல்லவையுமாகிய மிகப் பலவற்றை வாழ்த்திக் கூறி வந்துள்ளான் என்று கூற,

முருகன் அருள் புரிதல்

தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்,
வான்தோய் நிவப்பின் தான் வந்து எய்தி,
அணங்கு சால் உயர்நிலை தழீஇப், பண்டைத்தன்
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி,   290
அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின் வரவு என
அன்புடை நல்மொழி அளைஇ, விளிவு இன்று,
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒரு நீ ஆகித் தோன்ற, விழுமிய

பெறல் அரும் பரிசில் நல்குமதி; (287 – 295)

பொருளுரை:  தெய்வத்தன்மை உடைய வலிமை விளங்கும் வடிவினையும், வானைத் தீண்டும் வளர்ச்சியையும் உடைய தான் நின் முன் எழுந்தருளி, அச்சம் தரவல்ல பெரும் நிலையை உள்ளடக்கி, பழமையான தன்னுடைய மணம் வீசுகின்ற தெய்வத் தன்மையுடைய இளமை அழகைக் காட்டி “அஞ்சுவதை நீக்குவாயாக!  உன் வருகையை யான் அறிவேன்” என அன்புடடைய நல்ல சொற்களை அருளுடன் கூறி, கெடுதல் இல்லாமல், இருள் நிறமுடைய கடலினால் சூழ்ந்த உலகத்தில், உனக்கு ஒப்பார் யாரும் இல்லை எனக் கூறும்படி நீ மேம்பட, சீரிய பிறரால் பெறுதற்கரிய வீடு பேற்றினைத் தந்து அருளுவான்.

குறிப்பு:  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். இடையியல் 26).  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடைமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, மண்ணை படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

சொற்பொருள்: தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் – தெய்வத்தன்மை உடைய வலிமை விளங்கும் வடிவினையும், வான்தோய் நிவப்பின் தான் வந்து எய்தி – வானைத் தீண்டும் வளர்ச்சியையும் உடைய தான் நின் முன் எழுந்தருளி, அணங்கு சால் உயர்நிலை தழீஇ – அச்சம் தரவல்ல பெரும் நிலையை உள்ளடக்கி (தழீஇ – அளபெடை), பண்டைத்தன் மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி – பழமையான தன்னுடைய மணம் வீசுகின்ற தெய்வத் தன்மையுடைய இளமை அழகைக் காட்டி, அஞ்சல் ஓம்புமதி – அஞ்சுவதை நீக்குவாயாக (மதி – முன்னிலையசை), அறிவல் நின் வரவு – உன் வருகையை யான் அறிவேன், என அன்புடை நல்மொழி அளைஇ – என அன்புடடைய நல்ல சொற்களை அருளுடன் கூறி (அளைஇ – அளபெடை), விளிவு இன்று – கெடுதல் இல்லாமல், இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து – இருள் நிறமுடைய கடலினால் சூழ்ந்த உலகத்தில் (வளைஇய – அளபெடை), ஒரு நீ ஆகித் தோன்ற – உனக்கு ஒப்பார் யாரும் இல்லை எனக் கூறும்படி நீ மேம்பட, விழுமிய  பெறல் அரும் பரிசில் நல்குமதி – சீரிய பிறரால் பெறுதற்கரிய வீடு பேற்றினைத் தந்து அருளுவான் (மதி என்னும் முன்னிலை அசை படர்க்கையின் கண் வந்தது)

முருகனின் மலையின் வளம்

………………………………………………….பலவுடன்
வேறுபல் துகிலின் நுடங்கி, அகில் சுமந்து,
ஆர முழு முதல் உருட்டி, வேரற்
பூவுடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு,
விண்பொரு நெடுவரைப் பரிதியின் தொடுத்த
தண்கமழ் அலர் இறால் சிதைய, நன்பல   300
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர, யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்ப பூ நுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசி பெருங் களிற்று
முத்துடை வான் கோடு தழீஇத், தத்துற்று   305
நன்பொன் மணி நிறம் கிளரப், பொன் கொழியா,
வாழை முழு முதல் துமியத், தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்,
கறிக்கொடிக் கருந்துணர் சாய பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்,   310
கோழி வயப்பெடை இரியக், கேழலொடு
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கைக் குடாவடி உளியம்
பெருங்கல் விடர் அளைச் செறியக் கருங்கோட்டு
ஆமா நல் ஏறு சிலைப்பச் சேண் நின்று   315
இழுமென இழிதரும் அருவிப்
பழம் முதிர் சோலை மலை கிழவோனே! (295 – 317)

பொருளுரை:  பல்வேறு துகிற்கொடிகள் ஒன்றாக அசைந்தாற்போன்று அசைந்து, அகில் மரத் துண்டுகளைச் சுமந்து சந்தன மரத்தை அடிப்பகுதியுடன் உருட்டி, சிறுமூங்கிலின் பூவுடைய அசைகின்ற கிளைகள் தனிப்ப வேரைப் பிளந்து, வானைத் தீண்டுகின்ற ஓங்கிய மலையில் கதிரவனின் மண்டிலத்தை ஒத்த தண்ணிய மணக்கின்ற விரிந்த தேனிறால்கள் (தேன்கூடுகள்) கெட, நல்ல பல ஆசினிப்பலாவின் முற்றிய சுளைகள் தன்னிடத்தில் கலக்க, மிக உச்சியில் உண்டான சுரபுன்னை மரங்களின் நறுமணமான மலர்கள் உதிர, கருங்குரங்குடன் கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க, புள்ளிப் பொருந்திய நெற்றியையுடைய பெரிய பிடி யானை குளிரும்படி வீசி, பெரிய ஆண் யானையின் முத்து உடைய வெள்ளைத் தந்தங்களை உள்ளடக்கிக் குதித்து நல்ல பொன்னும் மணியும் விளங்கும்படி செய்து, பொற் தூளை மேலெழுப்பி, வாழை மரத்தின் பெரிய அடிப்பகுதி ஒடிய, தென்னை மரத்தின் இளநீரை உடைய சீரிய குலைகள் உதிர மோதி, மிளகினது கொடியில் உள்ள கரிய கொத்துக்கள் சாய, பொறிகளைச் சிறகில் கொண்ட மென்மையான நடையுடைய மயில்கள் பலவற்றுடன் அஞ்சி கோழியின் வலிமையுடைய பெடைகள் ஓட, ஆண் பன்றியுடன் உள்ளே வெளிற்றினை உடைய கரிய பனையின் புல்லிய செறும்பை ஒத்த கரிய நிறத்தையுடைய மயிரையுடைய உடம்பினையும் வளைந்த அடிகளையுமுடைய கரடி மலைப் பிளவுகளில் சேர, கரிய கொம்பினையுடைய காட்டு பசுவின் காளைகள் முழங்க, மலையின் உச்சியிலிருந்து இழும் என்ற ஓசையுடன் வீழும் அருவிகளையுடைய, பழம் முற்றின சோலைகளையுடைய மலைக்கு உரிமையை உடையோனாகிய முருகப்பெருமான்.  

குறிப்பு:  யானையின் தந்தத்தில் முத்து:  அகநானூறு 282 – வால் மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, நற்றிணை 202 – புலி பொரச் சிவந்த புலால் அம் செங்கோட்டு ஒலி பல் முத்தம், புறநானூறு 161 – முத்துப்படு முற்றிய உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, புறநானூறு 170 –  வெண்கோடு பயந்த ஒளி திகழ் முத்தம், பதிற்றுப்பத்து 32 – முத்துடை மருப்பின், கலித்தொகை 40 – முத்து ஆர் மருப்பின், திருமுருகாற்றுப்படை 304 – பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇ,  குறிஞ்சிப்பாட்டு 36 – முத்து ஆர் மருப்பின், மலைபடுகடாம் 518 – முத்துடை மருப்பின்.  குரூஉ (313) – குருவும் கெழுவும் நிறனாகும்மே (தொல்காப்பியம், உரியியல் 5).  முசுக்கலை (303) – ஆண் குரங்கு.  ‘கலையென் காட்சி உழைக்கும் உரித்தே’, நிலையிற்றப் பெயர் முசுவின் கண்ணும்’ (தொல்காப்பியம். மரபியல் 45, 47).  கொழியா – கொழித்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. இரும்பனை வெளிற்றின் (312) – வெளிற்றின் இரும்பனை என மாற்றுக.

சொற்பொருள்:  பலவுடன் வேறு பல் துகிலின் நுடங்கி – பல்வேறு துகிற்கொடிகள் ஒன்றாக அசைந்தாற்போன்று அசைந்து (துகிலின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), அகில் சுமந்து ஆர முழு முதல் உருட்டி – அகில் மரத் துண்டுகளைச் சுமந்து சந்தன மரத்தை அடிப்பகுதியுடன் உருட்டி, வேரல் பூவுடை அலங்கு சினை புலம்ப – சிறுமூங்கிலின் பூவுடைய அசைகின்ற கிளைகள் தனிப்ப (வேரல் – சிறுவகை மூங்கில்), வேர் கீண்டு – வேரைப் பிளந்து, விண் பொரு நெடுவரை பரிதியின் தொடுத்த  தண் கமழ் அலர் இறால் சிதைய – வானைத் தீண்டுகின்ற ஓங்கிய மலையில் கதிரவனின் மண்டிலத்தை ஒத்த தண்ணிய மணக்கின்ற விரிந்த தேன்கூடு கெட (பரிதியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), நன்பல ஆசினி முதுசுளை கலாவ – நல்ல பல ஆசினிப்பலாவின் முற்றிய சுளைகள் தன்னிடத்தில் கலக்க, மீமிசை நாக நறுமலர் உதிர – மிக உச்சியில் உண்டான சுரபுன்னை மரங்களின் நறுமணமான மலர்கள் உதிர (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), யூகமொடு மாமுக முசுக்கலை பனிப்ப – கருங்குரங்குடன் கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க, பூ நுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசி – புள்ளிப் பொருந்திய நெற்றியையுடைய பெரிய பிடி யானை குளிரும்படி வீசி, பெருங் களிற்று முத்துடை வான்கோடு தழீஇ – பெரிய ஆண் யானையின் முத்து உடைய வெள்ளைத் தந்தங்களை உள்ளடக்கி (தழீஇ – அளபெடை), தத்துற்று நன்பொன் மணி நிறம் கிளர – குதித்து நல்ல பொன்னும் மணியும் விளங்கும்படி செய்து, பொன் கொழியா – பொற் தூளை மேலெழுப்பி, வாழை முழு முதல் துமிய – வாழை மரத்தின் பெரிய அடிப்பகுதி ஒடிய, தாழை இளநீர் விழுக்குலை உதிர – தென்னை மரத்தின் இளநீரை உடைய சீரிய குலைகள் உதிர, தாக்கி – மோதி, கறிக் கொடிக் கருந்துணர் சாய – மிளகினது கொடியில் உள்ள கரிய கொத்துக்கள் சாய, பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ – பொறிகளைச் சிறகில் கொண்ட மென்மையான நடையுடைய மயில்கள் பலவற்றுடன் அஞ்சி (வெரீஇ – அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது), கோழி வயப்பெடை இரிய – கோழியின் வலிமையுடைய பெடைகள் ஓட, கேழலொடு  இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் பெருங்கல் விடர் அளைச் செறிய – ஆண் பன்றியுடன் உள்ளே வெளிற்றினை உடைய கரிய பனையின் புல்லிய செறும்பை ஒத்த கரிய நிறத்தையுடைய மயிரையுடைய உடம்பினையும் வளைந்த அடிகளையுமுடைய கரடி மலைப் பிளவுகளில் சேர (குரூஉ – அளபெடை, விடர் அளை – இருபெயரொட்டு), கருங்கோட்டு ஆமா நல் ஏறு சிலைப்ப – கரிய கொம்பினையுடைய காட்டு பசுவின் காளைகள் முழங்க, சேண் நின்று இழுமென இழிதரும் அருவி – மலையின் உச்சியிலிருந்து இழும் என்ற ஓசையுடன் வீழும் அருவிகளையுடைய (இழுமென – ஒலிக்குறிப்பு), பழம் முதிர் சோலை மலை கிழவோனே – பழம் முற்றின சோலைகளையுடைய மலைக்கு உரிமையை உடையோனாகிய முருகப்பெருமான்