திருமூலரின் திருமந்திரம் - பாயிரம்

237 பதிகங்கள், 3000 பாடல்கள் : பொழிப்புரை : முனைவர் சி.அருனைவடிவேல் முதலியார்.

பாயிரம்: பாடல்கள் 39  


பாயிரம் : பாடல் எண் : 1

கடவுள் வாழ்த்து


ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்

சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.


பொழிப்புரை :  ஒருபொருளாய் உள்ளவன் முதற்கடவுளே; வேறில்லை. அவனது அருள், `அறக்கருணை, மறக்கருணை` என இரண்டாய் இருக்கும். அவ் அருள்காரணமாக அவன், `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளில் நிற்பான். நின்று, `அறம், பொருள், இன்பம், வீடு` என்னும் உறுதிப் பொருள் நான்கனையும் தானே உணர்ந்து உலகிற்கு உணர்த்தினான். செவிமுதலிய ஐம்பொறிகளின் வழி நுகரப்படும் ஓசை முதலிய ஐம்புலன்களின் மேல் எழுகின்ற ஐந்து அவாவினையும் வென்றான். `மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை` என்னும் ஆறு அத்துவாக்களாக விரிந்தான். `பிரம லோகம், விட்டு ணுலோகம், உருத்திர லோகம், மகேசுர லோகம், சதாசிவ லோகம், சத்தி லோகம், சிவ லோகம்` என்னும் ஏழுலகங்களுக்கும் மேற்சென்று தானேயாய் இருந்தான். அவனை, நெஞ்சே, நீ அறிந்து அடை.

****************************************************

பாடல் எண் : 2

நுதலிய பொருள்


போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை

நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை

மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்

கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.


பொழிப்புரை :  மலமாசகன்ற தூய உயிரிடத்து நிலைபெற்று விளங்கும் தூயவனும், உலகம் முழுவதற்கும் நலந் தருபவளாகிய அம்மைக்குக் கணவனும், தென்திசைக்குத் தலைவனாம் கூற்றுவனை உதைத்தவனும் ஆகிய சிவபெருமானது பெருமையை யான் துதிமுறையால் கூறுவேன்!

****************************************************

பாடல் எண் : 3

நூற் சிறப்பு


ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்

நக்கன்என் றேத்திடும் நம்பனை நாள்தொறும்

பக்கம்நின் றார்அறி யாத பரமனைப்

புக்குநின் றுன்னியான் போற்றுகின் றேனே.


பொழிப்புரை :  எண்ணில்லாத தேவர்களில் ஒருவனாய் அவர் களோடொப்ப நிற்பவனும், அவ்வாறு நிற்பினும் அவர் அனை வராலும் என்றும் வணங்கப்படுபவனும், தன்னை அடைந்தவர் களாலும் தன் தன்மை முழுதும் அறியப்படாத மேலானவனும், ஆகிய சிவபெருமானது பெருமையை யான் அவனுள் அடங்கிநின்று உணர்ந்து துதிக்கின்றேன்.

****************************************************

பாடல் எண் : 4

அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்

புகலிடத் தென்மெய்யைப் போதவிட் டானைப்

பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி

இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.


பொழிப்புரை :  மண்ணுலகத்தவராகிய மக்கட்கும், விண்ணுலகத்தவராகிய தேவர்கட்கும் முதலாய் நிற்பவனும், வந்த இடத்திலே எனது உடம்பை விழச்செய்தவனும் ஆகிய சிவபெருமானை நான் பகலும், இரவும் வணங்கியும், துதித்தும் மயக்கத்தைச் செய்யும் இவ்வுலகத்திற்றானே மயக்கமின்றி இருக்கின்றேன்.

****************************************************

பாடல் எண் : 5


பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற

தற்பரன் கற்பனை யாகும் சராசரத்

தற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்

நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.

 

பொழிப்புரை :  எங்கள் நந்தி பெருமான், ஆனேறு, மான், மழு என்பவற்றை விடாது கொண்டுள்ள சீகண்ட பரமேசுரனது உபதேசப் பொருளாகிய பொருட் பெற்றியாம் மறைபொருளையும் எனக்கு விளக்கி, தமது ஞானத்தைத் தரும் திருவடிகளையும் அடியேனது தலைமேல் சூட்டியருளினார்.

****************************************************

பாடல் எண் : 6


நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்

என்றிவர் என்னோ டெண்மரு மாமே.

 

பொழிப்புரை :  நந்திபெருமானது அருளைப்பெற்ற ஆசிரியன்மார் யாவர் என்று ஆராயுமிடத்து, அவரோடு ஒத்த நால்வரும், சிவயோக முனிவரும், தில்லை அம்பலத்தை வணங்கிய பதஞ்சலி, வியாக்கிர பாதரும் என்ற இவர் என்னொடுகூட எண்மருமாவர் என்பதாம்.

****************************************************

பாடல் எண் : 7


நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்

நந்தி அருளாலே மூலனை நாடினேன்

நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.

 

பொழிப்புரை :  நந்தி பெருமானது அருளால் நான், ஆசிரியன் எனப் பெயர் பெற்றேன். பின்பு மூலன் உடலைப் பற்றுக்கோடாகக் கொண்டேன். அவரது அருள் இவ்வுலகில், நேரே எதனைச் செய்யும்? ஒன்றையும் செய்யாது. அதனால், அவரது அருள் வழியை உலகிற்கு உணர்த்த நான் இங்கிருக்கின்றேன்.

****************************************************

பாடல் எண் : 8


மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்

இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்

கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ

டிந்த எழுவரும் என்வழி யாமே.


பொழிப்புரை :  எனது நூலாகிய இத்திருமந்திரத்தைப் பெற்று வழி வழியாக உணர்த்த இருப்பவர், மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், தறிபோன்ற உருவத்துடன் யோகத்தில் இருக்கும் காலாக்கினி, கஞ்சமலையன் என்னும் எழுவருமாவர். இவரே என்வழியினர்.

****************************************************

பாடல் எண் : 9


நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள்

நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு

நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென

நால்வரும் தேவராய் நாதரா னார்களே.

 

பொழிப்புரை :  நந்தி பெருமானுக்கு மாணாக்கராகிய எண்மருள், நந்திகள் எனப்பட்ட நால்வரும் எல்லா உலகங்கட்கும் பொருந்திய ஆசிரியர்களாய், அறம் முதலாக நால்வகைப்பட்டுப் பற்பல வகையாக விரிந்த உறுதிப்பொருள் அனைத்தையும் உணர்ந்து, நான் பெற்ற பேற்றினை உலகம் பெறுவதாக என்னும் பேரருள் உடையராய், அதனால் சிவகணத்துள்ளே ஆசிரியராயினர்.

****************************************************

பாடல் எண் : 10


மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்

ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்

செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்

கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

 

பொழிப்புரை :  பிறப்பு இறப்புகள் இல்லாத பெருமையை உடைய முக்கட் கடவுள் தனது எல்லையில்லாத பெருமையைப் பிறர்க்குக் காட்டமாட்டானாயினும், அதனை அவன் ஆசான் மூர்த்தி வாயிலாகக் காட்டியது மேற்குறித்த நால்வரோடு, சிவயோக மாமுனி முதலிய மூவர்க்குமேயாம்.

****************************************************

பாடல் எண் : 11

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்

செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல்

கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே

அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.


பொழிப்புரை :  தன்னைவிட்டு இமையளவும் பிரிய விரும்பாத நந்திகள் நால்வர்க்கும் சிவபெருமான் எதிர்ப்படத்தோன்றி, உலகம் அழிகின்ற ஊழிக் காலத்திலும் நீங்கள் நம்மை வழிபட்டிருப்பீராக என்று அருள்புரிந்தான்.

****************************************************

பாடல் எண் : 12

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு

புத்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய்

நந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்

சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.


பொழிப்புரை : என் ஆசிரியராகிய நந்தி பெருமானது இரு திருவடிகளையும் என் சென்னியிலும், சிந்தையிலும் கொண்டு, வாயினாலும் துதித்து, அவ்வாற்றானே சிவபெருமானது திருவருட் பெருமையை இடைவிடாது சிந்தித்து உணர்ந்து, அங்ஙனம் உணர்ந்த வாற்றால், சிவாகமப் பொருளைக் கூறத் தொடங்கினேன்.

****************************************************

பாடல் எண் : 13

செப்பும் சிவாகமம் என்னுமப் பேர்பெற்றும்

அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்

தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்

ஒப்பில்ஒரு கோடி யுகமிருந் தேனே.


பொழிப்புரை : உயர்த்துச் சொல்லப்படுகின்ற `சிவாகமம் என்னும் பெயரையுடைய நூலைப் பெற்ற பின்பும், அவற்றின் பொருளை உள்ளவாறு உணர்த்துகின்ற நந்தி பெருமானது ஆணை வழி, அழிவில்லாத தில்லையம்பலத்தை அடைந்து அங்குச் சிவபெருமான் செய்யும் ஒப்பற்ற நடனத்தைக் கண்டு மீண்டபின், உடம்போடிருக்க உடன்படாத நிலையிலே பலகாலம் உடம்போடு இருந்தேன்.

****************************************************

பாடல் எண் : 14

இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே

பொருந்திய செல்வப் புவனா பதியாம்

அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்

பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.


பொழிப்புரை :  இந்திரனே, உடன்பாடின்றியும் நான் அவ்வாறு நெடுநாள் உடம்போடிருந்த காரணத்தைக் கூறுகின்றேன்; கேள். எல்லா உலகங்கட்கும் தலைவியாம் அருந்தவ மாகிய செல்வியை அடியேன் அன்பினால் விரும்பி உடன் நின்று பணிந்து வந்தேன்.

****************************************************

பாடல் எண் : 15

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்

மிதாசனி யாதிருந் தேன்நின்ற காலம்

இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி

உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்.


பொழிப்புரை : இறப்புத் தோன்றாதவனாய் இருந்து வாழ்ந்த அக்காலம் முழுதும் உலகத்தில் விருப்பம் தோன்றாது மனஒடுக்கம் உடையவனாயே இருந்தேன். அவ்வாறிருக்கும் பொழுது, சிவபெருமானது ஐந்தொழில்நிலை, பொருட்பெற்றி, தமிழ்மொழி, வேதம் என்னும் இவைகளைப் புறக்கணியாது விருப்பத்துடன் கற்று உணர்ந்தேன்.

****************************************************

பாடல் எண் : 16

மாலாங்க னேஇங் கியான்வந்த காரணம்

நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு

மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்

சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.  


பொழிப்புரை :  மாலாங்கனே, திருக்கயிலையை விட்டு இத்தமிழ்நாட்டிற்கு நான் வந்தகாரணம் கேள். சிவபெருமான் முதற்கண் உமை அம்மைக்கு முதல் நூலாகச் சொல்லிய சிவாகமத்தின் பொருளைச் சொல்லுதற்காகவே வந்தேன்.

****************************************************

பாடல் எண் : 17

நேரிழை யாவாள் நிரதி சயானந்தப்

பேருடை யாள்என் பிறப்பறுத் தாண்டவள்

சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை

சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.


பொழிப்புரை : `உமையம்மை` என்று சொல்லப்படுபவள் வரம்பில் இன்பமாகின்ற பெருமையை உடையவள். அவள் எனது பிறப்பை அறுத்து வீடு தந்து என்னை ஆட்கொண்டவள்; மிக்க புகழை உடையவள்; சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாவடுதுறையாகிய இச்சிறந்த திருத்தலத்தைத் தனதாக உடையவள். அவள் திருவடி நிழலில் இதுபொழுது இருக்கின்றேன்.

****************************************************

பாடல் எண் : 18

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்

சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை

சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்

சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.


பொழிப்புரை :  சீருடையாள் பதம் சேர்ந்தமையால் அவளை ஒருபாகத்தில் உடைய சிவனையும் சேர்ந்திருக்கின்றேன். இத் திருவாவடுதுறை அவளுடையது மட்டுமன்று; அவனுடையதுந்தான். இங்குச் சிவஞானத் திருவின்கீழ் அவனது திருப்பெயர் பலவற்றையும் ஓதித் துதித்துக் கொண்டிருக்கின்றேன்.

****************************************************

பாடல் எண் : 19

இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி

இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே

இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே

இருந்தேன்என் நந்தி இணையடிக் கீழே.


பொழிப்புரை :  இங்கும் இவ்வுடம்பிலே பல்லாண்டுகள் இருந்தேன். அங்ஙனம் இருந்த காலம் முழுவதும் சிவஞானப் பேரொளியில்தான் இருந்தேன். அது தேவராலும் வணங்கப்படும் எங்கள் நந்தி பெருமானது திருவடி நிழலேயன்றி வேறில்லை.

****************************************************

பாடல் எண் : 20

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது

முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்

என்னைநன் றாக இறைவன் படைத்தனன்

தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.


பொழிப்புரை :  முற்பிறப்பில் நன்கு முயல்கின்ற தவத்தைச் செய்யாதவர், பின்னை நற்பிறவியைப் பெறுதல் எவ்வாறு கூடும்! கூடாது. ஆகவே நான்செய்த தவம் காரணமாக இறைவன் என்னைத் தன்னைத் தமிழ்மொழியால் நன்றாகப் பாடும் வண்ணம் செவ்விய முறையால் படைத்தான்.

**************************************************


பாடல் எண் : 21

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு

ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்னுள்

ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து

நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.

பொழிப்புரை : பொழிப்புரை எழுதவில்லை


****************************************************

பாடல் எண் : 22

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்

வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்

பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால்

ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.


பொழிப்புரை : பொழிப்புரை எழுதவில்லை

****************************************************

பாடல் எண் : 23

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்

உத்தம மாகவே ஓதிய வேதத்தின்

ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி

அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.


பொழிப்புரை : மக்களுடைய உள்ளத்தில் சிறந்து நிற்கின்ற நூல்கள் பலவற்றிலும் தலையானதாகச் சொல்லப்படுகின்ற வேதத்தைச் சொல்லுதற்கு ஏற்ற உடம்பையும், உள்ளக்கருத்தையும் எனக்கு இங்கு இறைவன் அளித்தது, தனது அருள் காரணமாகவாம்.

****************************************************

பாடல் எண் : 24

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்

தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.


பொழிப்புரை :  பரவெளியைப் பற்றிநிற்கின்ற வேதப்பொருளை உள்ளவாறு உணர்ந்து சொன்னால் அதுவே, `உடம்பைப் பற்றி நிற்கின்ற உயிருணர்வில் நிலைத்துநிற்கும் மந்திரம்` எனப்படும். அம்மந்திரத்தை இடையறாது உணர உணரப் பேரின்பம் கிடைப்பதாம். அவ்வாற்றால் நான்பெற்ற இன்பத்தை, இவ்வுலகமும் பெறுவதாக.

****************************************************

பாடல் எண் : 25

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்

சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி

மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை

உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே.


பொழிப்புரை : தேவர் பலரும், பிறப்பில்லாத முதல்வனும், `நந்தி` என்னும் பெயருடையவனும் ஆகிய சிவபெருமானைத் தூய்மையுடன் சென்று கைதொழுது இம் `மந்திரமாலை` நூலை மறவாது மனத்துட் கொள்வர். ஆகவே, நீவிரும் இதனை உறுதியாக நின்று ஓதுதல் வேண்டும்.

****************************************************

பாடல் எண் : 26


அங்கி மிகாமைவைத் தான்உடல் வைத்தான்

எங்கும் மிகாமைவைத் தான்உல கேழையும்

தங்கி மிகாமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்

பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.  


பொழிப்புரை :  உடம்பைப் படைத்த இறைவன், அதனுள் வேண்டும் அளவிற்கே நெருப்பை அமைத்துள்ளான். நிலவுலகைப் படைத்த அவன் அளவின்றி எங்கும் பரந்து கிடப்பப் படையாது, ஏழென்னும் அளவிற்படவே படைத்தான். அவ்வாறே தமிழ் நூல்களையும் கற்பாரின்றி வீணே கிடக்க வையாது, அளவாக வைத்தான். பொருளையும் அவற்றால் மிகைபடாது இன்றியமையாத அளவிலே புலப்பட வைத்தான்.

****************************************************

பாடல் எண் : 27

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை

மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை

ஆயத்தை அச்சிவன் றன்னை அகோசர

வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.


பொழிப்புரை :இம்மூவாயிரம் பாட்டுக்களிலே, `அறியப்படும் பொருள், அறிவு, அறிபவன், அசுத்தமாயா காரியம், சுத்தமாயா காரியம், அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகிய சிவன் என்று சொல்லப்படுகின்ற வாக்கு மனங்கட்கு எட்டாத முதல்கள் ஆகிய அனைத்தின் இயல்பையும் முற்றக் கூறுவேன்.

****************************************************

பாடல் எண் : 28

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி

அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி

துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து

வளப்பிற் கயிலை வழியில்வந் தேனே.


பொழிப்புரை :  இவை அனைத்தையும் விளக்கிச் சிவபெருமானது உபதேச முறையில் நின்று, `திருக்கயிலாய பரம்பரையில் வந்த ஆசிரியன்` என்னும் பேற்றைப் பெற்றவனாவேன்.

****************************************************

பாடல் எண் : 29

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்

நந்தி அருளாலே சதாசிவ னாயினேன்

நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்

நந்தி அருளாலே நான்இருந் தேனே.


பொழிப்புரை :  சிவபெருமானது திருவருளால் மூலனது உடலைப் பற்றி நின்றபின், அவனது திருவருளாலே ஆகமத்தைப் பாடும் நிலையை அடைந்தேன். அந்நிலையில் அவன் அருளால் நிட்டையும் பெற்றுச் சீவன் முத்தி நிலையில் பல்லாண்டுகள் இருக்கின்றேன்.

****************************************************

பாடல் எண் : 30

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி

அருக்கிய மூலத்துள் அங்கே இருக்கும்

அருக்கனும் சோமனும் ஆரழல் வீச

உருக்கி யுரோமம் ஒளிவிடுந் தானே.


பொழிப்புரை :  பல்லாண்டுகள் ஓர் உடம்பிலே இருத்தல் கூடுமோ? உடம்பு தளர்ச்சியுற்று அழிந்தொழியாதோ எனில் மறைவிடமாகிய மூலாதாரத்துள், எழாது கிடக்கின்ற அரிய நெருப்பை, `சூரியகலை. சந்திரகலை` என்னும் இருகாற்றும் அடங்கி நின்று மூட்டி வளர்க்கும்படி இருந்தால், உடம்பு நெடுங்காலம் தளர்வின்றி இருக்கும்; உரோமமும் வெளிறாது கறுத்து அழகுற்று விளங்கும்.

***************************************************


பாடல் எண் : 31

பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை

இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும்

உயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை

இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.

 

பொழிப்புரை :  இவ்வாறிருக்கின்ற நிலையில் நான் இரவும் பகலும் சிவபிரானது பெயரையே பிதற்றுவேன். நெஞ்சில் நினைப்பேன்; காயத்தால் அவனை வழிபடுவேன். அதனால், விளக்க விளங்குகின்ற என் அறிவும், இயல்பாய் விளங்குகின்ற சிவனது அறிவேயாய்த் திகழும்.

 

****************************************************

பாடல் எண் : 32

ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை

ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும்

பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்

வேர்அறி யாமை விளம்புகின் றேனே.


பொழிப்புரை : எங்கள் சிவபெருமானது திருவருளின் பெருமையை முற்ற உணர்வோர் யாவர்! அவனது பரப்பைத்தான் யாவர் உணரவல்லார்! சொல்லுக்கு அகப்படாத பேரறிவுப் பொருள் தன்னோடு ஒப்பது பிறிதொன்றில்லதாய் உளது. அதனது மெய்ந்நிலையை அறியாமலே நான் பலரும் அறியக்கூறத் தொடங்கினேன்.

****************************************************

பாடல் எண் : 33

பாடவல் லார்நெறி பாடஅறிகி லேன்

ஆடவல் லார்நெறி ஆடஅறிகி லேன்

நாடவல் லார்நெறி நாடஅறிகி லேன்

தேடவல் லார்நெறி தேடகில் லேனே..


பொழிப்புரை : இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுள் ஒன்றையும் நெறிப்பட அறிகிலேன். அளவை நூல் முறையால் ஆராயவும் வல்லனல்லேன். பேரன்பினால் இறைவனையே தேடி அலையும் நிலைமையும் இல்லேன்.

****************************************************

பாடல் எண் : 34

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்

இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்

பின்னை உலகம் படைத்த பிரமனும்

உன்னும் அவனை உணரலும் ஆமே.


பொழிப்புரை :   தன்னை அறிகின்றவரது உள்ளத்தில் வீணையுள் இனிய இசை போல மெல்ல எழுகின்றவனும், உலகத்தைப் படைத்த பிரமனாலும் தியானிக்கப் படுகின்றவனும் ஆகிய இறைவனது பெருமையை, நிலைபெற்ற மெய்ந்நூல் வழியாகவும் சிறிது உணர்தல் கூடும்.

****************************************************

பாடல் எண் : 35

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை

முத்திக் கிருந்த முனிவருந் தேவரும்

ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்

பத்திமை யால்இப் பயன்அறி யாரே.


பொழிப்புரை :  மன்னிய வாய் மொழியாகிய சிவாகமங்கள், வீடு பேற்றை அடைவதற்கு விரும்பியிருந்த முனிவரும், தேவரும் கருத்தொருமை கொண்டு உலகப் பயன் விரும்பும் மக்களை விடுத்துத் தனி இடத்திலிருந்து வேண்டிக் கொண்ட அன்பு காரணமாக இறைவன் உண்மை ஞானத்தைக் கயிலைத் தாழ்வரைக்கண் இருந்து உணர்த்தியருளிய நூல்களாம். பக்குவம் இல்லாதோர் இவ்வுண்மையை அறிய மாட்டார்.

****************************************************

பாடல் எண் : 36

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்

ஞாலம் அறியவே நந்தி அருளது

காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்

ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே..  


பொழிப்புரை : மூலன் பாடிய மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்தி பெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. அதனால், நாள்தோறும் இதனைப் பொருளுணர்ந்து ஓதுவோர் முதற் கடவுளாகிய சிவபெருமானை அடைவர்.

****************************************************

பாடல் எண் : 37

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்

முத்தி முடிவிது மூவா யிரத்திலே

புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது

வைத்த சிறப்புத் தரும்இவை தானே..

 

பொழிப்புரை : பொழிப்புரை எழுதவில்லை. குறிப்புரை : இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங்கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என்பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.

****************************************************

பாடல் எண் : 38

வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின்

முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத்

தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்

சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.


பொழிப்புரை : பொழிப்புரை எழுதவில்லை. குறிப்புரை : இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங்கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என்பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே. 

****************************************************

பாடல் எண் : 39

கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்

நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்

புலங்கொள் பரமானந் தர்போக தேவர்

நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.


பொழிப்புரை :   பொழிப்புரை எழுதவில்லை. குறிப்புரை : இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப்பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர் போகதேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங்கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என்பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.

****************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக