ஞானக் குறள் விளக்க விரையுடன்

 ஒளவையார் குறள்

ஒளவையார் எழுதிய விநாயகர் அகவல் மற்றும் ஞானக்குறள் ஆகியவை ஞான நூல்கள் எனப்படுகின்றன. அதாவது ஒருவன் முக்தி அடைய பின்பற்றவேண்டிய யோக வழிமுறைகள் இந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒளவையின் குறளாகிய ஞாக்குறளை திருமூலரின் திருமந்திரத்தின் சுருக்கம் எனக் கூறுவர். திருக்குறளைப் போலவே இந்த நூலும் இரு வரிகள் கொண்ட குறள் வடிவில் எழுதப்பட்டுள்ளது. வீட்டுனெறிப்பால், திருவருட்பால், தன்பால் என மூன்று பகுதிகளாகப் (பால்களாகப்) பிரிக்கப்பட்டுள்ளது. பத்துப் பாடல்கள் கொண்ட 31 அதிகாரங்கள் இதில் உள்ளன. இதற்கு அவ்வையார் குறள் எனவும் பெயர் உண்டு.

இக்குறளுக்கு விளக்கம் பல கூற முடியும். கடுகு சிறியது காரம் பெரியது என்பதுபோல இரு வரியில் உள்ள குறளில் பெரிய பெரிய தத்துவங்கள் அடங்கியுள்ளன. அதிலும் ஆன்மீக அறிவு உடையவர்களாலேயே அதன் பொருளை மிகவும் இலகுவாக அறிந்து உணர்ந்து கொள்ள முடியும். என்னால் முடிந்தவரை பல நூல்களில் இருந்தும், எனது குருநாதர் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளின் அறிவுரைகளில் இருந்தும் பெற்ற அறிவைக் கொண்டு விளக்கவுரை கூறியுள்ளேன். பிழைகள் இருப்பின் எமக்கு அறியத் தரவும் திருத்திக் கொள்கிறோம்.

குறிப்பு:

குறள் படிக்கும்போது பாவிக்கப் பட்டிருக்கும் சில சொற்களுக்கு விளக்கங்கள் அறிந்திருந்தால் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்பதால் கீழே சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆணைக் குறிப்பதுபோல சிவன் சித்தரிக்கப்பட்டாலும் சிவன் நெருப்புப் போல ஒரு சக்தியே.

இருவினை (2): நல்வினை, தீவினை

மூவாசைகள் (3): மண், பொன், பெண்

மூன்று மண்டலங்கள் (3): அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்.

முக் குணங்கள் (3): ராஜஸம், தாமசம், சாத்வீகம்.

மூன்று பிணிகள் (3): வாதம், பித்தம், சிலேத்துமம்.

மும் மலங்கள் உடல்: வியர்வை, சிறுநீர், மலம்.

மும் மலங்கள் உணர்வு: காமம், வெகுளி, மயக்கம்.

மும் மலங்கள் (3): ஆணவம், கன்மம், மாயை.

அந்தக் கரணங்கள் (4): மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.

பஞ்சபூதங்கள் (5): பிருதிவி (பூமி, நிலம், மண்), அப்பு (ஜலம், நீர், புனல்), தேயு (அக்னி, நெருப்பு, அனல்), வாயு (கால், காற்று, கனல்), ஆகாயம் (வெளி, வானம், விசும்பு).

பஞ்ச தன் மாத்திரைகள் (ஐம்பொறிகள்) (5): ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை.

பஞ்ச ஞானேந்திரியங்கள் (ஐம்புலன்கள்) (5): மெய், வாய், கண், மூக்கு, செவி.

பஞ்ச கன்மேந்திரியங்கள் (5): வாக்கு (வாய்), பாணி (கை), பாதம் (கால்), பாயுரு (மலவாய்), உபஸ்தம் (கருவாய்).

பஞ்ச கோசங்கள் (5): அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்

பஞ்ச அவஸ்தைகள் (5): சாக்கிரம் (நனவு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்), துரியம் (நிஷ்டை), துரியாதீதம் (உயிர்ப்படக்கம்).

தாதுக்கள் (7): இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மச்சை, சுக்கிலம் அல்லது சுரோணிதம்.

ராகங்கள் (8): காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், இடம்பம், அகங்காரம்.

ஏழு ஆதாரச் சக்கரங்கள்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா, துரியம்.

நவ துவாரங்கள் (9): கண்கள் (2), காதுகள் (2), மூக்கு (2), வாய் (1), குதம் (1), குறி (1)

தச நாடிகள் (10): இடைகலை (இடப்பக்க நரம்பு), பிங்கலை (வலப்பக்க நரம்பு), சுமுழுனை (நடுநரம்பு), சிகுவை (உள்நாக்கு நரம்பு), புருடன் (வலக்கண் நரம்பு), காந்தாரி (இடக்கண் நரம்பு), அத்தி (வலச்செவி நரம்பு), அலம்புடை (இடச்செவி நரம்பு), சங்கினி (கருவாய் நரம்பு), குகு (மலவாய் நரம்பு).

தசவாயுக்கள் (10): பிராணன் (உயிர்க்காற்று), அபாணன் (மலக் காற்று), வியானன் (தொழிற்காற்று), உதானன் (ஒலிக்காற்று) சமானன் (நிரவுக்காற்று), நாகன் (விழிக்காற்று) கூர்மன் (இமைக்காற்று), கிருகரன் (தும்மற் காற்று), தேவதத்தன் (கொட்டாவிக் காற்று), தனஞ்செயன் (வீங்கல் காற்று).

பகுதி 1 வீட்டுனெறிப்பால்

1. மோட்சம் செல்லும் வழி

2. உடம்பின் பயன்

3. உள்ளுடம்பின் (சூக்கும சரீரம்) நிலைமை

4. நாடி தாரணை

5. வாயுதாரணை

6. அங்கிதாரணை

7. அமுததாரணை

8. அர்ச்சனை

9. உள்ளுணர்வு

10. பத்தியுடைமை

11. அருள் பெறுதல்

பகுதி 2 திருவருட்பால்

12. நினைப்புறுதல்

13. தெரிந்து தெளிதல்

14. கலை ஞானம்

15.உருவொன்றி நிற்றல்

16. முத்தி காண்டல்

17. உருபாதீதம்

18. பிறப்பறுதல்

19.தூயவொளி காண்டல்

20. சதாசிவம்

21. குருவழி

22. அங்கியில் பஞ்சு

23. மெய்யகம்

24. கண்ணாடி

25. சூனிய காலமறிதல்

26. சிவயோக நிலை

பகுதி 3 தன்பால்

27. ஞான நிலை

28. ஞானம் பிரியாமை

29. மெய்நெறி

30. துரிய தரிசனம்

31. உயர்ஞான தரிசனம்

1. வீட்டுனெறிப்பால்

1.மோட்சம் செல்லும் வழி

ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்
தோதிய நூலின் பயன்.
          1

கல்வி கற்பதன் நோக்கம் ஆதிப் பொருளாய் நிற்கும் இறை நிலையை உணர்வதாகும்.

பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு.
   2

பரம் சக்தியாக உள்ளது. அதுவே பிரபஞ்ச சக்தி எனப்படும். வாயு, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்கள் இந்தப் பிரபஞ்ச சத்திக்குள் உள்ளன. இந்த ஐம்பூதங்களும் வேறு வேறு விதமாக இணைவதனால் வேறு வேறு உயிரினங்களின் பிறப்பு உருவாகிறது.

ஓசை பரிசமுருவஞ் சுவை நாற்ற
மாசை படுத்து மளறு.
   3

ஓசை, பரிசம், பார்வை, சுவை, மணம் ஆகியவை நமக்கு ஆசையை உருவாக்கி மனதை உலக இன்பத்தில் வழிநடத்துகிறது.

தருமம் பொருள் காமம்வீடெனு நான்கு
முருவத்தா லாய பயன்.   
4

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும், நமது மனதில் தோன்றும் எண்ண உருவத்தால் தோன்றும் விளைவுகள். அதாவது நமது எண்ணங்களால் உருவாகுபவை என்பதாகும்.

நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே
யுலவை யிறண்டொன் றுவிண்.
   5

நிலம், நீர், தீ, காற்று, விண் ஆகிய ஐந்து தோற்றங்களும் நிலத்தில் உள்ளன. நீர், தீ, காற்று, விண் ஆகிய நான்கு தோற்றங்களும் நீரில் உள்ளன. தீ, காற்று, விண் ஆகிய மூன்று தோற்றங்களும் தீயில் உள்ளன. காற்று, விண் என்னும் இரண்டு தோற்றங்களும் காற்றில் உள்ளன. விண்ணில் ’விண்’ என்னும் உயிர்த் தோற்றம் உள்ளது.

மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ
டாயுஞ்சிவ மூர்த்தி யைந்து.
   6

பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகியோர் பஞ்ச மூர்த்திகளாவார்கள் (ஐந்து மூர்த்திகள்).

மாலய னங்கி யிரவிமதி யுமையோ
டேலும் திகழ்சத்தி யாறு.
   7

ஆறு சத்திகள். மால் – விஷ்ணு, அயன் – பிரமன், அங்கி – அக்கினி, இரவி – சூரியன், மதி – சந்திரன், உமை – உமாதேவி ஆகிய அறுவர்களாகும்.

தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
சக்கிலந் தாதுக்க ளேழு.
   8

இந்தச் சரீரமானது, உதிரம் – இரத்தம், ஊண் – தசை, மூளை – மூளை, நிணம் – கொழுப்பு, என்பு – எலும்பு, சுக்கிலம் – இனப்பெருக்க சக்தி ஆகிய ஏழு தாதுக்களால் ஆனதாகும்.

மண்ணோடு நீரங்கி மதுயொடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு.
   9

மண் = பிருதிவி, நீர் = அப்பு, அங்கி = தேயு, மதி = சந்திரன், காற்று – வாயு, இரவி = சூரியன், விண் = ஆகாயம், எச்சமூர்த்தி – யாகதேவதை, ஆகிய எட்டு மூர்த்திகளாகும் (எட்டு எச்சங்கள்).

இவையெல் லாங்கூடி யுடம்பாய வொன்றி
னவையெல்லா மானது விந்து.
   10

மேற் குறிப்பிட்ட பஞ்ச பூதங்கள், பஞ்ச தன்மாத்திரைகள், பஞ்ச மூர்த்திகள், ஆறு சக்திகள், ஏழு தாதுகள், எட்டு மூர்த்திகள் ஆகிய இவை எல்லாம் கூடிய விந்துவினால் (விதை) இந்த உடல் உருவாகிறது.

2. உடம்பின் பயன்

உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா
முடம்பினி லுத்தமனைக் காண்.
   11
நாம் இந்த உடம்பினை பெற்றிருக்கிறோம். இதனைப் பெற்றிருக்கும் பயன் (காரணம்) எல்லாமே நம் உடம்பினுள் இருக்கும் உத்தமனை அந்த இறைவனைக் காண்பதற்காகவே ஆகும்.

உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே
யுணர்க உணர்வு டையார்.
   12
அந்த உத்தமனை உணர்வால்தான் அறிய முடியும். அதை உணர்வதுதான் இந்த உடலெடுத்ததன் பயனாகும். எனவே உணர்வுடையார் உத்தமனை உணரவேண்டும்.

ஒருபய னாவ துடம்பின் பயனே
தருபயனாஞ் சங்கரனைச் சார்.
   13
ஒப்புயர்வற்ற இந்த மானுட உடலெடுத்ததன் பயன் அந்த ஆதியை அந்தச் சங்கரனை அறிந்து உணர்ந்து சேர்ந்து கொள்வதே. இந்த மானுட சரீரம் எடுத்ததன் பயனாவது சிவபெருமானைச் சேர்தலாகும்.

பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந்
துறப்பதாந் தூநெறிக்கட் சென்று.
   14
பிறப்பினால் அடையும் பயனாவது உயர்ந்த மார்கத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து சகல இன்பங்களையும் துறப்பதாகும். இந்தப் பிறவியினாலாகும் பயனாவது சர்வ இன்பங்களையுந் துறப்பதாகும்.

உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை
யுடம்பினா லுன்னிய தேயாம்.
   15
இந்த உடம்பினாலேயே உணர்ச்சி உண்டாகிறது. உணர்ச்சி உணர்வினால் உண்டாவதில்லை. அதாவது ஐம் புலன்களினாலேயே உணர்ச்சி உண்டாகிறது. உடம்பினால் உணர்ச்சியுண்டாவதே அன்றி வேறெதினாலும் உண்டாவதில்லை.

மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு.
   16
மனதிலுள்ள மாசு, குற்றம் நீங்கி தூய்மையாகும்போது இந்த உடலானது ஈசனை உணரும். குற்றமற்ற மனசுடைய உடலானது கடவுளை அறியும், உணரும்.

ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும்
நேசத்தா லாய வுடம்பு
.   17
மனதிலுள்ள மாசு நீங்கி இந்த உடலானது இறைவனை அறியும், நேசிக்கும் போது, இந்த உடலானது தச (பத்து நாதம், பல நாதம்) நாதங்களையும் அதாவது ஓசையையும் உள்ளே உணரும்.

உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே
அயிர்ப்பின்றி யாதியை நாடு.
   18
ஆன்மாவுக்கு உறுதியைத் தருவது இந்தச் சரீரமாகும். எனவே ஆன்மாவானது இந்தச் சரீரத்தில் இருக்கும்போதே அந்த ஈசனை அறிந்து உணர்ந்துகொள். உடலானது ஆன்மாவுக்கு உறுதியைத் தருவதால் அதை ஆதாரமாகக் கொண்டு ஆதியைக் கண்டு கொள்ள முயல்.

உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம்
திடம்பட வீசனைத் தேடு
.   19
ஆன்மாவானது இந்த உடம்பினை எடுத்த நோக்கமே அந்த ஈசனைத் தேடி உணர்ந்து அறிந்து கொள்வதற்காகவே. இந்த உடல் இருக்கும்போதே ஆதியை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

அன்னத்தா லாய உடம்பின் பயனெல்லா
முன்னோனைக் காட்டி விடும்.
   20
அன்னத்தால் வளர்ந்த இந்த உடலின் பயனாவது ஆன்மாவுக்கு அந்த ஈசனை உணரவைப்பதேயாகும். சரீரத்தின் பயனாவது ஆதியை உணர்த்துவதாகும்.

ஆன்மாவானது இந்த உடலெடுத்தது அந்த ஆதியை அறிந்து, உணர்ந்து, இணைந்து கொள்வதற்காகவே. உடலில்லாத ஆன்மாவால் இறைவனை உணரவோ அறியவோ முடியாது என்று பொருளாகும்.

அதாவது இறப்பின்போது உடலைவிட்டுப் பிரியும் ஆன்மாவினால் அடுத்த பிறப்பெடுக்கும்வரை எந்தக் காரியத்தினையும் செய்யவும் முடியாது அதனால் இறைவனைக் கண்டு கொள்ளவும் முடியாது. உடலை விட்டுப் பிரிந்த ஒரு ஆன்மாவானது அடுத்த பிறப்பு எடுக்கும் வரை எந்தச் சிந்தனைகளும் இல்லாது சூக்கும உடலோடு இந்தப் புவியில் இந்தப் பிரபஞ்சத்தில் சுற்றித் திரியும். மனித உடலெடுத்து அந்த ஆதியைத் தேடி இறுதியில் அந்த ஆதியுடன், அந்த ஜோதியுடன் கலந்து கொள்வதே ஆன்மாவின் பிறப்பு இறப்பற்ற நிலையாகும். அதுவே ஆன்மாவின் முடிவாகும்.

3. உள்ளுடம்பின் (சூக்கும சரீரம்) நிலைமை

கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலா
முற்றுடம்பா லாய வுணர்வு.   21

தூல உடலில் உள்ள ஐம்புலன்களின் துணை இல்லாது அதனுடன் இணைந்திருக்கும் சூக்கும சரீரமானது தனது ஞான அறிவால் (உணர்வினால்) உலக நிகழ்வுகளை கற்கவோ, கேட்கவோ அன்றிப் பார்க்கவோ முடியும். யோகப் பயிற்சி மூலமாக இத் தகுதியைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு உயிருள்ள சரீரமானது, தூல உடல் என்ற வெளிப்பார்வைக்குத் தெரியும் உடலும் சூக்கும உடலான ஆன்மாவும் இணைந்ததே ஆகும்.

வெள்ளிபொன் மேனிய தொக்கும் வினையுடைய
வுள்ளுடம்பி னாய வொளி.
   22
சூக்கும தேகத்தின் தோற்றமானது வெள்ளியையும், பொன்னையும் போல காட்சியளிக்கும்.

தூல உடல் எமது சாதாரண கண்களுக்குத் தெரிவதுபோல, ஞானிகளுக்கு அவர்களது மூன்றாவது கண்ணினால் பிற சூக்கும சரீரங்களைப் பார்க்கமுடியும்.

சென்றுண்டு வந்து திரிதரு முள்ளுடம்பு
என்றுங் கெடாத திது.
   23
சூக்கும உடலானது, மனம் நினைக்கும் இடங்களுக்குச் சென்று, அவ்விடங்களில் உள்ளவற்றை அறிந்து கொண்டு மீண்டும் தூலத்திற்குத் திரும்பி வந்துவிடும். இவ்வாறு சூக்கும உடலானது வெளியே திரிந்து கொண்டிருக்கும். இப்படிப்பட்ட சூக்கும உடல் (ஆன்மாவானது) தூல உடலைப்போல் அழிவதில்லை.

உதாரணமாக தூக்கத்தின்போது எமது ஆன்மாவானது (சூக்கும உடலானது) வெளியே பல இடங்களுக்கும் சென்று வரும். அதுவே எமக்குக் கனவாக அமையும்.)

வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கு
மொருபயனைக் காட்டு முடம்பு.
   24
சூக்கும சரீரமானது தூலசரீரத்துடன் கலந்திருந்து அதன் இன்ப துன்பங்களை அடைவதுபோல, தன்னுள்ளே இறையையும் அந்த மெய்ப்பொருளையும் தேடிக்கண்டு இணைந்து இன்புறும்.

அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தாய
தொல்லை யுடம்பின் றொடர்பு.
   25
ஆன்மாவனது (சூக்கும உடலானது) சரீரத்தின் தொடர்பினால் அதாவது ஐம்புலன்களின் வழியாக மனம் சென்று பாவ புண்ணியம் செய்து அதன் மூலமாக ஏற்படும் துன்பந்தரும் பிவிப்பிணியை, நீக்கக்கூடிய வழியை தன்னுள்ளே உள்முகமாக ஆராய்ந்து, அறிந்து, உணர்ந்து அந்த ஆதியுடன் கலந்து பிறவிப்பிணியை நீக்கும்.

நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ்
செய்வினைக்கும் வித்தா முடம்பு.   
26
தூல உடலானது, ஐம்புலன்கள் வாயிலாக நல்வினையையும் தீவினையையும் செய்து அதற்குறிய பலன்களை ஆன்மா வானது (சூக்கும உடலானது) அனுபவிக்கும். ஆன்மா செய்யும் பாவ புனியங்களுக்கும் பிறவிப் பிணிக்கும் தூல உடலே (ஐம்புலன்கள்) காரணமாகும்.

உள்ளுடம்பின் வாழ்வன வொன்பது மேழைக்
கள்ள வுடம்பாகி விடும்.
   27
இரு கண்கள், இரு நாசித்துவாரங்கள், இரு காதுகள், ஒரு வாய், ஒரு மலத்துவாரம், ஒரு சலத்துவாரம் ஆகிய ஒன்பது துவாரங்கள் உள்ளன. இந்த ஆன்மாவானது அந்த ஒன்பது துவாரங்கள் உள்ள தூல உடலுடன் இணைந்து வாழும் சூக்கும உடலானது (ஆன்மாவானது) அத் துவாரங்கள் வழியாக காரியம் (இன்பம் என நினைத்து துன்பமடைகிறது) ஆற்றுகிறது. உண்மையான பேரின்பம் அந்த இறைவனைத் தேடி அடைவதாகும் என்பதனை அறிந்து கொள்வதில்லை.

பொய்க்கெல்லாம் பாசனமா யுள்ளதற் கோர்வித்தாகு
மெய்க்குள்ளா மாய வுடம்பு.
   28
பொய்களுக்கும், சிற்றின்பங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்ற சரீரத்திற்கு, ஆன்மாவானது ஆதாரமாக இருக்கிறது. பொய்யாகிய தூலசரீரத்திற்கு சூக்கும் சரிரமானது ஆதாரமாக உள்ளது. ஆன்மா இன்றி உடல் இயங்காது.

வாயுவினா லாய வுடம்பின் பயனே
யாயுவி னெல்லை யது
.   29
புணர்தலின்போது பிராணவாயுவானது விந்துவிற் கலந்து பாய்ந்த அளவே அந்த விந்துவினால் உருவாகும் உடலின் ஆயுள் காலத்தினைத் தீர்மானிக்கும்.

ஒன்பது வாசலுமொக்க வடைத்தக்கா
லன்பதி லொன்றா மரன்.
   30
உடலிலுள்ள நவத்துவாரங்களையும் மூடி அதாவது ஐம்புலன்களை அடக்கி மனதை செம்மைப்படுத்தி ஆசைகளைத் துறந்து யோகஞ் செய்வோர்கள் சிவனுடன் கலப்பார்கள்.

4. நாடி தாரணை

எழுபத் தீராயிர நாடி யவற்றுள்
முழுபத்து நாடி முதல்.
   31
சூக்கும உடலில் எழுபத்தி ஈராயிரம் (72,000) நாடிகள் உள்ளன. அவற்றுள் பத்து நாடிகள் (தசநாடிகள்) முதன்மையானவை.

அவையாவன அத்தி, அலம்புடை, இடை, காந்தாரி, குரு, சங்கினி, சிகுவை, சுழிமுனை, பிங்கலை, புருடன் என்பவைகளாகும்.

தூல உடலில் உள்ள கை, கால், இதயம் போன்ற அங்கங்கள் போல, சூக்கும உடலிலும் பல உடற்கூறுகள் அதாவது நாடி, சக்கரம், ஆன்மா என சித்தர்களால் வகைப் படுத்தப் பட்டுள்ளது.

சூக்கும உடலில் ஏழு ஆதாரங்ககள் அதாவது ஏழு சக்கரங்கள் அமைந்திருக்கும். அவையாவன “மூலாதாரம்”, “சுவாதிஷ்டானம்”, “மணிப்பூரகம்”, “அனாகதம்”, “விசுத்தி”, “ஆக்ஞை” மற்றும் “துரியம்” ஆகும். அச்சக்கரங்கள் எழுபத்தி ஈராயிரம் நாடிகள் மூலமாக இத் தூல உடலுடன் தொடர்பு கொண்டிருக்கும். இங்கு நாடி என்பது தூல உடலின் நரம்பிற்கு ஒப்பானது.

நரம்பெனு நாடியிவை யினுக்கெல்லா
முரம்பெறு நாடியொன் றுண்டு
.   32
அனைத்து நாடிகளுக்கும் ஆதாரமாக ஒரு நாடி உள்ளது. சர்வநாடிகளும் சேர்வதற்கு ஆதாரமான நாடி ஒன்றிருக்கிறது. அதுவே சுழுமுனை நாடியாகும். நாடிகள் சக்கரங்களில் இணைந்திருக்கும். சக்கரங்களை இணைப்பது சுழுமுனை நாடியாகும்.

உந்திமுதலா யுறுமுடிகீழ் மேலாய்ப்
பந்தித்து நிற்கும் பரிந்து.
   33
உந்து சக்தி இருக்கும் மூலாதாரத்தை மையமாகக் கொண்டு மேலும் கீழும் நாடிகள் பிரிந்து செல்லும். உந்தி என்பது தொப்புள் அடிவயிறு பகுதியாகும் அதாவது ஆண், பெண் உணர்வுகளை உந்தும் அடிவயிற்று மையம் ஆகும்.

காலொடு கையி னடுவிடத் தாமரை
நூல்போலு நாடி நுழைந்து.
   34
தாமரைபூவின் தண்டில் நூல் இழைகள் நுழைந்து இருப்பது போல, உடலின் கால், கையின் நடுப்பகுதிகள் மற்றும் உடல் பாகங்களில் நாடிகள் நுழைந்து பரவி இருக்கும்.

ஆதித்தன்றன் கதிர்போல வந்நாடிகள்
பேதித்துத் தாம்பரந்த வாறு.
   35
சூரியனுடைய கிரணங்களைப் போல எழுபத்தீராயிரம் நாடிகளும் உடலெங்கும் படர்ந்து கலந்திருக்கும்.

மெய்யெல்லாமாகி நரம்போ டெலும்பிசைந்து
பொய்யில்லை நாடிப் புணர்வு.
   36
நாடிகள் உடலிலுள்ள நரம்புகளிலும், தசைகளிலும் எலும்புகளிலுங் கலந்து சரீரம் பூராகவும் படர்ந்து கலந்து இருக்கும்.

உந்திமுதலாகி யோங்காரத்துட் பொருளாய்
நின்றது நாடி நிலை
.   37
உந்தியில் அதாவது அடிவயிற்றில் இருந்து உதிக்கும் ஓம்காரம்போல, (அ+உ+ம் = ஓம்). இங்கு அ என்ற உச்சரிப்பு அடிவயிற்றில் இருந்து ஆரம்பமாகும். அதுபோல அங்கிருந்தே நாடிகளும் ஆரம்பமாகின்றன.

நாடிகளூடு போய்ப் புக்க நலஞ்சுடர்தான்
வீடு தருமாம் விரைந்து.   
38
நாடிகளில் சூட்சுமமாய்க் கலந்திருக்குங் இறைவனை அறிந்து உணர்ந்து கலக்க முக்தி கிடைக்கும்.

நாடி வழக்கமறிந்து செறிந்தடங்கி
நீடொளி காண்ப தறிவு.   
39
ஐம்பொறிகள் மூலமாக வெளியில் அலைந்து திரியும் மனதை தெளியவைத்து, ஒருமுகப்படுத்தி உள்முகமாத் திருப்பி நாடிகள் ஊடக பரந்திருக்கும் இறை சக்தியை அந்த ஒளியை உணர்ந்து, அறிந்து, தரிசிக்க முயல்வதே உண்மையான அறிவாகும்.

அறிந்தடங்கி நிற்குமந் நாடிகடோறுஞ்
செறிந்தடங்கி நிற்குஞ் சிவம்.
   40
உடலிலுள்ள எழுபத்திரண்டாயிரம் சூக்கும நாடிகளிலெல்லாம் இறைவன் (ஆத்மா) கலந்துள்ளான். ஆத்மாவே இறைவனாகும்.

5. வாயுதாரணை

மூலத்திற்றோன்றி முடிவிலிரு நான்காகிக்
கால்வெளியிற் பன்னிரண்டாங் காண்.   
41
மூச்சை இழுக்கும் சக்தி மூலாதாரத்தில் இருந்து ஆரம்பமாகும். மூச்சை இழுக்கும்போது எட்டு (இருநான்கு) அளவீட்டு மாத்திரை காலம் உள்ளே பரவி, அது வெளியேறும்போது பன்னிரண்டு அளவீட்டுக்கால மாத்திரையாக இருக்கும்.

இடைபிங் கலைகளி ரேசக மாற்றி
லடையு மரனா ரருள்
.   42
இடகலை என்பது மூக்கின் இடப்புறத் துளை வழியாக முள்ளந்தண்டின் இடப்புறமாக மூலாதாரச் சக்கரம் வரை செல்லும் நாடியாகும். பிங்கலை என்பது மூக்கின் வலப்புறத் துளை வழியாக முள்ளந்தண்டின் வலப் புறமாக மூலாதாரச் சக்கரம் வரை செல்லும் நாடியாகும். இந்த நாடிகள் வழியாக மாறிமாறி மூச்சை இழுத்தல் உள்ளே அடக்குதல் மூச்சை வெளிவிடுதல். இவற்றை முறையாக அடைத்து இழுத்து வெளிவிட்டால் சிவன்-அருள் வந்தடையும். இது யோகப் பயிற்சியாகும்.

அங்குலியான் மூடிமுறையா லிரேசிக்கிற்
பொங்குமாம் பூரகத்தி னுள்.
   43

அங்குலியால் அதாவது விரல்களால் மூக்கின் ஒரு துளையை மூடி மறு துளையால் மூச்சை இழுத்து விட்டுப் பயிற்சி செய்ய, மூலம் சூடேறி வெப்பமடைந்து குண்டலிநீ குண்டலினி மேலேறி சிவனருள் கிட்டும். மகிழ்ச்சி பொங்கும். இது யோகப் பயிற்சியாகும்.

எண்ணிலியூழி யுடம்பா யிரேசிக்கி
லுண்ணிலமை பெற்ற துணர்வு.
    44
தொடர்ந்து மூச்சுப்பயிற்சி (பிராணாயாமஞ்) செய்துவர அகமானது உள்ளுணர்வு பெற்று இறையை உணரும் தகைமையை அடையும்.

மயிர்க்கால்வழி யெல்லா மாய்கின்றவாயு
வுயிர்ப்பின்றி யுள்ளே பதி.
   45
உடலின் பாகமெல்லாம் மயிர்க்கால்கள் வழியாக பரவும் வாயுவை உள்ளே அடக்கிப் பழகு. யோகப் பயிற்சியால் மூச்சை அடக்கப் பழகு. மூச்சு அடங்க அதாவது கட்டுப்பட ஆசைகள் கட்டுப்படும். வெளியில் அலையும் மனமானது உள்முமுகமமாக இறைதேடலை ஆரம்பிக்கும்.

இரேசிப்பது போலப்பூரித்து நிற்கிற்
றராசுமுனை நாக்கதுவே யாம்.
   46
யோகப் பயிற்சியில் தராசுமுனை போல நாக்கு மேல்நோக்கி அண்ணாக்கைத் தொடும்படியாக வைத்துக்கொண்டு, பூரகம் அதாவது மூச்சை உள்ளிழுக்கும்போது அந்த மூச்சுக் காற்றானது திசைமாறி இடகலை, பிங்கலை நாடிகள் வழியாக மூலாதாரத்தினை வந்தடையும்.

கும்பகத்தினுள்ளே குறித்தரனைத் தானோக்கிற்
றும்பிபோ னிற்குந் தொடர்ந்து.
   47
உள்ளிழுத்த பிராணனை (வாசியை) உள்ளே நிறுத்தும்பொழுது (கும்பகம்) அந்த வாயுவானது தும்பி (தும்பி – பூச்சி) அந்தரத்தில் நிற்பதுபோல போல மனம் தொடர்ந்து சலனமில்லாமல் நிற்கும்.

இரேச கபூரக கும்பக மாற்றிற்
றராசு போனிற்குந் தலை
.   48
இரேசக, பூரக, கும்ப வழிகளில், மாறிமாறிப் பயிற்சி செய்து வர, மனமானது தடுமாற்றமில்லாது அமைதியாகி நடுநிலையாகி துலாக்கோல் போல் நிற்கும்.

வாயு வழக்க மறிந்து செறிந் தடங்கி
லாயுட் பெருக்க முண்டாம்.
   49
இவ்வாறு பிராண வாயுவின் அசைவுகளை அறிந்து, உணர்ந்து, கட்டுப்படுத்த ஆயுள் பெருகும்.

போகின்ற வாயு பொருந்திற் சிவமொக்குந்
தாழ்கின்ற வாயு வடக்கு.
   50
வெளியே வீணாகி ப்போகின்ற, வாயுவை உள்ளே அடக்கினால் அதாவது மூச்சை உள்ளே இழுத்து அடக்கினால் உள்ளே சிவனைக் காணலாம். மூச்சை உள்ளே அடக்கும்போது உடல் வெப்பமாகி குண்டலினி கிளர்ந்தெழும் என்பது கருத்ததாகும்.

6. அங்கிதாரணை

அந்தத்தி லங்கி யழல்போலத் தானோக்கிற்
பந்தப் பிறப் பறுக்கலாம்.
   51
இவ்வாறு வாசியை உள்ளே அடக்கி பயிற்சி செய்து உடலை வெப்பமடையச் செய்து குண்டலினியை மேல் நோக்கிச் செலுத்தி சுழிமுனையில் தரிசித்தால் பிறப்பறுந்து மோட்சம் கிடைக்கும்.

உள்ளும் புறம்பு மொருங்கக் கொழுவூரிற்
கள்ள மல மறுக்கலாம்.
   52
அகமும் புறமும் ஒரே சிந்தையோடு ஒளிவடிவான சிவனை நினைத்து வாழ்ந்திருந்தால் மும் மலங்களையும் அறுத்து பற்றுக்களை ஒழிக்கலாம். அதாவது இறைவனை உள்ளேயும் வெளியேயும் ஒளி வடிவாக தரிசிக்கும் மனநிலையை நாம் அடைந்துவிட்டால், உலகப் பற்றுக்கள் எல்லாம் தானே விலகிவிடும்.

எரியுங் கழல்போல வுள்ளுற நோக்கிற்
கரியுங்கன லுருவ மாம்.   
53
எரிகின்ற அக்கினியைப்போல அகத்தே தரிசித்தால் அதாவது அக்கினிபோல கிளர்ந்தெழும் குண்டலினியை உள்ளே தரிசித்தால் அதுவே ஜோதிவடிவான சிவனாகும்.

உள்ளங்கி தன்னை ஒருங்கக் கொழுவூறில்
வெள்ளங்கி தானாம் விரைந்து
.   54
உள்ளங்கி தன்னை – அக்கினியாகிய குண்டலினியை மேலெழச் செய்து உச்சிவரை செலுத்த அங்கு பால்போல வெண்மையான அங்கி போல பேரொளி தோன்றும்.

உந்தியி னுள்ளே யொருங்கச் சுடர்பாய்ச்சி
லந்தி யழலுருவ மாம்.
   55
மூலாதாரத்தில் மூலக்கனலை குண்டலினியை வெப்பமாக்க சரீரம் உஷ்ணமாகி தணல்போலக் கொதிக்கும்.

ஐயைந்து மாய வகத்துளெரி நோக்கிற்
பொய்யைந்தும் போகும் புறம்.
   56
அக்கினியை எழுப்பி குண்டலினியை மேலெழுப்ப ஐம்புலன்களும் ஒடுங்கி சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்தும் அவற்றினால் உருவாகிய பொய்யான மாயையும் மனதை விட்டு அகன்றுவிடும். மனம் தெளிந்துவிடும்.

ஐம்பது மொன்றுமழல் போலத்தா னோக்கி
லும்ப ரொளியாய் விடும்.
   57
ஐம்பத்தோரு நாடிகளையும் அதைத் தாங்கிய சக்கரங்கள் ஊடகச் செல்லும் குண்டலினி சக்தியை அந்த அக்கினி ஜோதியைத் தரிசிக்க சிந்தையில் சிவன் ஒளி தெரியும்.

அட்சரம்: மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களில் பிராணன் பொருந்தும் போது அந்தந்த ஆதாரங்களைச் சுற்றியுள்ள நாடிகளில் 4, 6, 10, 12, 16, 2 (ஒவ்வொரு ஆதாரங்களிலும் அமைந்துள்ள நாடிகளின் எண்ணிக்கை) எழும் அதிர்வின் விளைவாக ஒலி தோன்றும். 50 நாடிகளுக்கு 50 எழுத்துக்கள் விளங்குகின்றன. பிரணவம் எனப்படும் ‘ஓம்’ எனும் ஒலியே அனைத்து ஒலிகளுக்கும் காரணமாகின்றது. ஆக, 50+1 = 51 எழுத்துக்கள். சித்தர்களின் பாடல்களில் 51 அட்சரம் எனக் குறிப்பிடப் படுகின்றன.

தூண்டும் சுடரைத் துளங்காமற் றானோக்கில்
வேண்டுங் குறை முடிக்கலாம்.
   58
மூலாக்கினியை அதாவது மூலாதாரத்தில் அமைந்திருக்கும் குண்டலினியை மேலெழுப்பி நெற்றிப் பொட்டில் நிறுத்தி தியானம் செய்துவர எமது குறைகளாகிய பிறவிப்பிணியை நீக்கி முக்தியடையலாம்.

உள்ளத்தாலங்கி யொருங்கக் கொழுவூறில்
மெள்ளத்தான் வீடாம் விரைந்து.          
   59
மனதை அடக்கி அக்கினியாலான குண்டலினி சக்தியை உச்சிக்கு கொண்டுவர அது பிரபஞ்சப் போரொளியுடன் கலந்து வீடு பேறு அதாவது முக்தி சித்தியாகும்.

ஒள்ளிதா யுள்ள சுடரை யுறநோக்கில்
வெள்ளியா மாலை விளக்கு.
   60
மனதை ஒடுங்கி மூலாக்கினியை அதாவது குண்டலினியைத் தியானிக்க மாலையில் விளக்கேற்றும் போது தோன்றும் சுடர்போல புருவ மத்தியில் செஞ்சுச்சுடர் தோன்றும்.

7. அமுததாரணை

அண்ணாக்குத் தன்னையடைத் தங்கமிர் துண்ணில்
விண்ணோர்க்கு வேந்தனு மாம். 
   61
நாக்கு நுனியால் அண்ணாக்கை அடைத்து உள்ளே செல்லும் பிராணனை மடைமாற்றி இட, பிங்கலை வழியாக மூலாதாரத்துக்குச் செலுத்தி, குண்டலினி சக்தியை மேலெழுப்ப, அது அண்ணாக்கில் அமுதமாகச் சுரக்கும். அந்த அமுதத்தினைப் பருக இறைஅருள் கூடி தேவர்களுக்குத் தலைவனான சிவனுடன் கலக்கலாம். அதுவே முக்தியாகும்.

ஈரெண் கலையி னிறைந்தவமிர் துண்ணில்
பூரண மாகும் பொலிந்து.
   62
மூலாதாரத்தில் அக்கினி கலையில் இருக்கும் குண்டலினியானது சூரிய கலையினைக் கடந்து சந்திர கலையினை அடையும்போது சுரக்கும் அமிர்தத்தினைப் பருக பிறப்பு பூரணத்துவமாகும். அதுவே முக்தியாகும்.

சூக்கும உடல் அக்கினி கலை, சூரிய கலை, சந்திர கலை என மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன் பன்னிரண்டு கலைகளை உடையது சந்திரன் பதினாறு கலைகளை உடையது. (கலை என்பது சூக்கும நாடியைக் குறிக்கும்).

ஓங்காரமான கலசத்தமிர் துண்ணில்
போங்காலமில்லை புரிந்து.
   63
பிரணவமாக இருக்கின்ற அண்ணாக்கில் அதாவது ஓம்காரத்தின் உச்சியில் சுரக்கும் அமிர்தத்தை பருகினால் மரணமிலாப் பெருவாழ்வு உண்டாகும்.

ஆனகலசத் தமிர்தை யறிந்துண்ணில்
போனகம் வேண்டாமற் போம்.
   64
அமிர்தகலசத்தில் (அண்ணாக்கில்) ஊறும் அமிர்தத்தை பருகுவோர்க்கு பிறப்பு இறப்பற்ற முக்தி நிலை கிடைக்கும்.

ஊறுமமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில்
கூறும் பிறப்பறுக்க லாம்.
   65
சிரசில் சுரக்கின்ற அமிர்தத்தை உண்டு வாழ்ந்தால் பிறவிப்பிணி நீங்கி முக்தி அடைவர்.

ஞான வொளிவிளக்கா னல்லவமிர் துண்ணில்
ஆன சிவ யோகி யாம்.
           66
குண்டலினி சக்தியை ஞான வெளிக்கு செலுத்த அதாவது துரியம் கடந்த பரவெளியுடன் கலக்கும்போது சுரக்கும் அமிர்தத்தினைப் பருகி சிவனுடன் கலந்து சிவ யோகியர் ஆகலாம்.

மேலையமிர்தை விளங்காமற்றா னுண்ணில்
காலனை வஞ்சிக்க லாம்.
   67
யோகத்தினால் குண்டலினி சக்தியை மேலெழுப்பி அண்ணாக்கில் அமிர்தம் சுரக்க வைத்த்துப் பருகினால் காலனை வெல்லலாம். பிறப்பற்ற நிலை உருவாகும்.

காலன லூக்கங் கலந்த வமிர்துண்ணில்
ஞான மதுவா நயந்து.
   68
காற்றினால் குண்டலினியை அனலாக்கி மேலெழச் செய்து துரியத்துக்குச் செலுத்திப் பரவெளியுடன் கலக்கும்போது உண்டாகும் அமிர்தத்தினைப் பருகினால் அதுவே ஞானம் என அழைக்கப்படும்.

எல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில்
தொல்லை முதலொளியே யாம்.
   69
அண்ணாக்கில் எவ்வளவு எல்லையில்லாத அளவு அதிகமாக அமிர்தம் சுரக்கிறதோ, அப்போது, இந்த ஆன்மா எங்கிருந்து வந்ததோ அந்தப் பழைமையான, ஆதியான, அந்த ஓளியுடன் கலக்கும். அதுவே முக்தியாகும்.

நிலாமண்டபத்தி னிறைந்த வமிர்துண்ணில்
உலாவலா மந்தரத்தின் மேல்.   
70
குண்டலினியானது சந்திர மண்டலத்தில் அதாவது துரியத்தினை அடையும்போது சுரக்கும் அமிர்தத்தினையும் பருகி துரியம் கடந்த நிலையில் அந்தரத்தில் அதாவது பிரபஞ்ச வெளியில் சஞ்சரிக்கும் ஆற்றல் கிடைக்கும்.

குண்டலினி சக்தியானது ஒவ்வொரு நிலைகளைக் கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி உண்டாகும். அதனால் ஏற்படும் சக்திதான் சித்தி எனப்படும். குண்டலினி மூலாதாரத்தில் இருந்து அனாகதம் வரை பயணப்படும் போது அக்கினி குண்டலினி எனவும், அனாகதம் தொடங்கி ஆக்ஞாவரை பயணப்படும் போது சூரிய குண்டலினி எனவும் அதையும் தாண்டி சுழுமுனையின் இறுதிவரை செல்லும் போது சந்திர குண்டலினி எனவும் அழைக்கப்படுகிறது. இறுதியில் சகஸ்ராரத்தில் நிலை பெறும் போது துரிய குண்டலினி என அழைக்கப்படும்.

மூலாதாரத்தில் அக்கினி ரூபத்தில் இருக்கும் குண்டலினி சக்தியானது மேலெழுந்து செல்லும்போது அதன் வெப்பம் தணிந்து இறுதியில் சந்திர குண்டலினியாக துரியத்தை அடையும்போது குளிர்ச்சியடைந்து அண்ணாக்கில் அமுதமாகச் சுரக்கிறது. சித்தர்கள் இவ் அமுதத்தினைப் பருகியே நீண்ட காலம் தேக ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள்.

8. அர்ச்சனை

மண்டலங்கள் மூன்று மருவவுட நிறுத்தி
அண்டரனை யர்ச்சிக்கு மாறு
.   71
அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களையும் நேராக நிறுத்தி குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியாக மேலெழுப்பி துரியத்துக்கு செலுத்த பேரொளி தோன்றும். அதுவே சிவனாகும். அதுவே சிவனை வழிபடும் முறையாகும்.

ஆசனத்தைக் கட்டியரன் றன்னை யர்ச்சித்து
பூசனைசெய் துள்ளே புணர்.
   72
யோக முறையில் கூறப்பட்ட ஆசனங்களில் இருந்து மனத்தை உட்புறமாகச் செலுத்தி தியானத்தில் அமர்ந்து அந்த ஈசனுடன் ஒண்டறக் கலக்க வேண்டும். அதுவே சிவ பூசையாகும்.

உள்ளமே பீடமுணர்வே சிவலிங்கத்
தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு.   73
தியானத்தில் அமர்ந்திருந்து உள்ளமே பீடமாகவும் உணர்வே சிவலிங்கமாகவும் வைத்து சிவனை வணங்கு. சிவன் வெளியில் இல்லை, உனது ஆன்மாவே சிவனாகும்.

ஆதாரத்துள்ளே யறிந்து சிவனுருவைப்
பேதமற வர்ச்சிக்கு மாறு.
   74
ஏழு ஆதாரச் சக்கரங்களிலும் சிவனை அறிந்து, உணர்ந்து தியானித்து வர இறையருள் கிட்டும்.

பூரித்திருந்து புணர்ந்து சிவனுருவைப்
பாரித்தங் கர்ச்சிக்கு மாறு
.   75
ரேசக, கும்ப, பூரக சுவாசப் பயிற்சியினால் தியானம் செய்து கருத்தினில் சிவனை வைத்து நிறுத்தி அருச்சனை செய். இங்கு சிவனின் உருவைக் காண இயலாது. சுவாசத்தின் ஓட்டத்தை மட்டுமே உணர இயலும். அதுவே சிவனின் உரு.

விளக்குறு சிந்தையான் மெய்ப்பொருளைக் கண்டு
துளக்கற வர்ச்சிக்கு மாறு.
   76
விளக்கினைத் தூண்டுவது போல சிந்தையைத் தூண்டிக் கொண்டு மனம் அங்குமிங்கும் அலையாமல் மெய்ப் பொருளை எண்ணியவாறு அருச்சனை செய்வதே சாலச் சிறந்த வழி.

பிண்டதினுள்ளே பேரா திறைவனைக்
கண்டுதா னர்ச்சிக்கு மாறு.
            77
தன் உடலாகிய பிண்டத்துக்குள்ளே பெயராமல் மனதை அலைய விடாது இறைவனை எண்ணி, கண்டு தியானித்திருக்க வேண்டும்.

மந்திரங்களெல்லா மயங்காம லுண்ணினைந்து
முந்தரனை யர்ச்சிக்கு மாறு.
   78
மந்திரங்களில் மயங்காமல், மனதை அடக்கி உன் உள்ளே உள்ள சிவனை எண்ணி தியானித்து அறிந்து வணங்கு. அதுவே சிவனை அர்ச்சிக்கும் சிறந்த முறையாகும்.

பேராக்கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்
தாராதனை செய்யு மாறு.
   79
பேராத கருத்தோடு அதாவது மனதை ஒரு நிலைப்படுத்தி உனது பிண்டத்தினுள்ளே இறைவன் இருப்பை எண்ணித் தியானித்து வணங்கு. (பிண்டம் – உடல்).

உள்ளத்தினுள்ளே யுறப்பார்த்தங் கொண் சுடரை
மெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு.
   80
மனதை ஒருநிலைப்படுத்தி உள்ளே செலுத்தி தியானிக்கும் போது புருவ மத்தியில்த் தோன்றும் செஞ்சு சுடரைக் கண்டு வணங்கு.

9. உள்ளுணர்வு

எண்ணிலியூழி தவஞ் செய்திங் கீசனை
உண்ணிலைமை பெற்ற துணர்வு.
   81
எண்ணிலடங்கா நெடுங்காலம் மனதை ஒருமுகப் படுத்தி தவமிருந்து உன்னுள்ளே ஈசனை அறிந்து, உணர்ந்து இணைந்து கொள். அதாவது ஞானம், முக்தி என்பது இலகுவில் கிடைக்காது. நீண்டகாலத் தவத்தினாலேயே அடைய முடியும்.

பல்லூழி காலம் பயின்றனை யர்ச்சித்து
நல்லுணர்வு பெற்ற நலம்.
   82
நெடுங்காலமாக பல யுகங்கள் யோகம் செய்து தவமிருந்து இறைவனை உணர்ந்து கொள்வதே மேலான நிலையாகும்.

எண்ணற்கரிய வருந்தவத்தா லன்றே
நண்ணப் படுமுணர்வு தான்.   83

நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கடும் தவத்தினாலேயே இந்த உணர்வு இறைஅருள் கைகூடும்.

முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான்.
   84
முற் பிறப்புகளில்ச் செய்துகொண்ட தவத்தினாலேயே ஒரு பிறவியில் இந்த உணர்வு (இறைஅருள்) கைவரப் பெறும்.

காயக்கிலேச முணர்ந்த பயனன்றே
ஓயா வுணர்வு பெறல்
.   85
சரீரத்தினுடைய தன்மையை அறிந்து உணர்ந்து தவஞ் செய்யும் போதுதான் சிறந்த இறை உணர்வைப் பெற முடியும்.

பண்டைப்பிறவிப் பயனாந் தவத்தினால்
கண்டங் குணர்வு பெறல்.
   86
முந்தைய பிறவிகளில் செய்யும் தவத்தின் பயனினால் இந்தப் பிறவியில் உயர்ந்த இறை உணர்வை, முக்தியை பெற முடியம். பல பிறவிகள் தவம் செய்தே முக்தி அதாவது ஆன்மா பிறப்பு இறப்பற்ற நிலையை அடைய முடியும்.

பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை
ஆராய்ந் துணர்வு பெறின்.
   87
இடைவிடாது அதாவது தொடர்ந்து செய்த தவத்தின் பயனால்த்தான் பிறவிப் பிணி நீங்கி முக்திநிலை கிடைக்கும்.

ஞானத்தாலாய வுடம்பின் பயனன்றே
மோனத்தா லாய வுணர்வு.
   88
முக்தி நிலை எனும் உயர்ந்த ஞானத்தை அடைவதற்கான கருவியே இந்த உடலாகும். ஆன்மாவானது இந்த உடலில் வாழும் போதுதான் மௌனம் என்ற தவத்தின் மூலமாக தன்னை அறிந்து முக்தி நிலை அடையும். ஆன்மாவால் உடல் இல்லாத போது அதாவது ஒரு இறப்பில் இருந்து மறு பிறப்பு வரை இறைவனைத் தேட முடியாது.

ஆதியோடொன்று மறிவைப் பெறுவதுதான்
நீதியாற் செய்த தவம்.
   89

ஆதியோடு கலந்து ஒன்றாகும் முக்தியைப் பெறும் அறிவினைப் பெறுவதுதான் முறையாகச் செய்யும் தவத்தின் பலனாகும்.

காடு மலையுங் கருதித்தவஞ் செய்தால்
கூடு முணர்வின் பயன்.
   90
காடு, மலைகளில் சென்று தவஞ் செய்யும்போதே தவம் சிறக்கும். சிறந்த ஞானம் விரைவில் கைகூடும். அதாவது மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் இருந்து தவம் செய்யும்போது மனம் இலகுவில் அமைதியடைந்து உள்ளே ஒடுங்கும்.

10. பத்தியுடைமை

பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில்
முத்திக்கு மூலமது.    
91
பத்தியோடு மனதை உள்ளே செலுத்தி இறை ஆவலுடன் அரனை நோக்கினால் அது முத்திக்கு வழிவகுக்கும்.

பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத்
தேடுஞ் சிவ சிந்தையால்.
   92
சிவன் மீது அன்பு வைத்துச் சிவ நினைவோடு பாடியும் ஆடியும், வாழ்வதே பக்தியாகும்.

அன்பா லழுது மலறியு மாள்வானை
யென்புருகி யுள்ளே நினை.
   93
பாடியும் ஆடியும் வாழ்ந்துகொண்டு சிந்தையில் சிவனைத் தேடித் தியானிப்பதே உண்மையான பக்தியாகும்.

பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து
நேசத்தா லீசனைத் தேடு.
   94
பூ போட்டுப் பூசை செய்து, மனமுருகப் புகழ்ந்து பாடி, மனம் நிறைவோடு உன்னுள்ளே இறைவனைத் தேடு.

கண்ணா லுறப்பார்த்துக் காதலாற் றானோக்கில்
உண்ணுமே யீச னொளி.
   95
மனக்கண்ணால் அறிந்து, உள்ளத்தில் ஊறும் காதலால் உற்று நோக்கினால், ஈசன் ஒளி நம்மை ஆட்கொள்ளும்.

நல்லானப் பூசித்து நாதனென வுருகில்
நில்லதோ வீச னிலை.
   96
நல்லவனாக இருந்து ஈசனை எண்ணிப் பூசை செய்து ‘நாதன்’ என எண்ணி உள்ளம் உருகினால், ஈசன் நம்மிடம் நிலை கொள்வான்.

அடியார்க் கடியராயன் புருகித் தம்முள்
படியொன்றிப் பார்த்துக் கொளல்.   
97
தொண்டருக் கெல்லாம் தொண்டராய் விளங்கும் ஈசனிடத்திப் பக்தி கொண்டு உள்ளம் உருகி, தன்னுள்ளே அவனைப் பற்றிப் பிடித்தவாறு அமைத்துக் கொள்ளல் உத்தம நிலையாகும்.

ஈச னெனக்கருதி யெல்லா வுயிர்களையும்
நேசத்தால் நீ நினைந்துகொள
.   98
சகல ஜீவ ராசிகளுக்குள்ளும் ஈசனே உறைந்திருக்கிறான் என்ற பேருண்மையை உணர்ந்துகொண்டு அன்பு செலுத்து.

மெய்ம்மயிர் கூரவிருப்புற்று வேர்த்தெழுந்து
பொய்ம்மையி லீசனைப் போற்று
.   99
உடலெல்லாம் மயிர் கூச்செறியுமாறு வியர்த்து சிலிர்ப்புற்று பக்தி செய்து புனிதமான ஈசனை வணங்குவோமாக.

செறிந்தறிந்து நாடிச் செவ்விதா யுள்ளே
அறிந்தரனை யாய்ந்து கொளல்.
   100
உள்ள உறுதியோடும் மன அடக்கத்தோடும் சீரிய முறையில் அரனை அறிந்து பற்றிக்கொள்ள வேண்டும்.

11. அருள் பெறுதல்

அருளினா லன்றி யகத்தறி வில்லை
அருளின் மலமறுக்க லாம்.
   101
இறையருள் இருந்தாலன்றி உள்ளத்தில் இறைவனை உணரும் அறிவு கிட்டாது. அந்த அகத்தறிவால் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மல மாசுகளை அறுக்கலாம்.

இருளைக் கடிந்தின் றிறைவ னருளால்
தெருளும் சிவசிந்தை யால்.
   102
எம்முள் இறைவனை உணரும்போது எமது மனதிலுள்ள அறியாமை என்ற இருள் நீக்கித் தெளிவான சிவசிந்தை கிட்டும்.

வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற
தூய்மையா மீச னருள்.
           103
நடுநிலைமையான உண்மை பேசும் மனத்தோடு சிறந்த சிந்தனைகளோடு வாழ்ந்தால் அதுவே மாசற்ற ஈசன் வாழும் உள்ளமாகும்.

ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கால்
அவ்வகத்து ளானந்த மாம்
.   104
உள்ளத்தில் நிறைந்திருக்கும், கலந்திருக்கும் ஈசனைத் தேடிக் கண்டு அவனருள் பெற்றுவிட்டால் அந்த உள்ளம் என்றும் ஆனந்தத்தில் நிலைத்திருக்கும்.

உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய்
மன்னுமருள் பெற்றக் கால்.
   105
இறையருளே நிலையான அருள். அதனைப் பெற்றுவிட்டால் எண்ணும் காரியங்கள் இலகுவில் கைகூடும்.

எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன்
தொல்லையருள் பெற்றக் கால்.
   106
ஆதியான ஈசனின் அருளைப் பெற்றுவிட்டால் எல்லாக் காரியங்களையும் இனிதே நிறைவேற்றலாம். நிறைவேறும்.

சிந்தையு ணின்ற சிவனருள் பெற்றக்கால்
பந்தமாம் பாச மறும்.
   107
சிந்தை சிவனுடன் கலந்துவிட்டால் பந்த பாசங்கள், விருப்பு வெறுப்பு, சுயநலம் போன்ற மனித எண்ணங்கள் அத்தனையும் அறுந்துவிடும். இல்லாமல்ப் போய்விடும்.

மாசற்ற கொள்கை மதிபோலத்தான் றோன்றும்
ஈசனருள் பெற்றக் கால்.
   108
சிந்தை சிவனுடன் கலந்துவிட்டால் அந்த ஈசனது அருள் கிடைத்துவிட்டால் அவர்கள் எண்ணம், செயல் எல்லாம் மாசற்ற தூய்மையான காரியங்களாக அமையும்.

ஆவாவென் றோதியருள் பெற்றார்க் கல்லாது
தாவாதோ ஞான ஒளி
.   109
ஆவலுடன் உள்ளே தேடி அந்த ஈசன் அருளை பெற்றுக் கொள்ளவேண்டுமே தவிர, அந்த இறையருள், அந்த ஜோதி சுலபமாகக் கிட்டாது.

ஓவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித்
தாவாத வின்பந் தரும்
.   110
ஆவலுடன் உள்ளே தேடி அந்த ஈசன் அருளை பெற்று விட்டால் மனம் அங்கும் இங்கும் தாவாது, புற சிற்றின்பங்களில் அலையாது, நிலையான அந்த சிவனுடன் ஐக்கியமாகி இறை இன்பத்துடன் இறை சிந்தனையில் நிலைத்திருக்கும்.

2. திருவருட்பால்

12. நினைப்புறுதல்

கருத்துறப் பார்த்துக் கலங்காம லுள்ளத்
திருத்திச் சிவனை நினை
.   111
மனதை அங்கும் இங்கும் அலையவிடாது, சிந்தையை, எண்ணங்களைக் கட்டுப்படுத்தி பார்வையை உள்ளே புருவ மத்தியில் நிலைநிறுத்திக் கருத்தினில் சிவனை நினைத்திரு.

குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சிந்தித்து
மண்டலங்கள் மேலாகப் பார்.
   112
பார்வையை மேற் புறமாகக் குவித்து, மூலாதாரத்தினுள் அமைந்திருக்கும் குண்டலினியை அறிந்து, அதனுள் கலந்திருக்கும் அறனை எண்ணியவாறு தியானம் செய்.

ஓர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்றன்னைப்
பார்மின் பழம்பொரு ளேயாம். 
  113
எண்ணத்தை, மனதை சிந்தையில் நிறுத்தி, அந்த சிவனைத் தியானித்தால், தேடினால் அந்த பழம் பொருளாகிய ஆதியாகிய சிவனை அறிந்து கொள்ளலாம்.

சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீசனை
மிக்க மலத்தை விடு
.   114
உன்னிடமுள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் துறந்து, ஆசா பாசங்களை விட்டு, சிந்தையுள் அந்த ஈசனைத் தேடிக் கண்டுகொள்.

அறமின்கள் சிந்தையி லாதாரத் தைச்சேர்ந்
துறுமின்க ளும்முளே யோர்ந்து
.   115
சிந்தையில் மூலாதாரத்தைத் நிறுத்தித் தியானித்து அந்த மூலாதாரத்தில் அமைந்திருக்கும் குண்டலினியாகிய சிவனுடன் கலந்திரு.

நித்தம் நினைத்திரங்கி நின்மலனையொன்றுவிக்கில்
முற்றுமவ னொளியே யாம்
.   116
அநுதினமும், நின்மலனை, பரிசுத்தனாகிய கடவுளை, எண்ணியவாறு தவம் செய்தால் அந்த ஜோதிமயமான சிவனுடன் கலக்கலாம்.

ஓசை யுணர்ந்தங்கே யுணர்வைப் பெறும்பரிசால்
ஈசன் கருத்தா யிரு
.   117
குண்டலினியானது சுழுமுனை வழியாக மேலெழுந்து ஒவ்வொரு சக்கரத்தினையும் கடக்கும்போது ஆங்காங்கே சப்த (பத்து) நாதங்களும் உள்ளே உணர்ந்து இறுதியில் அந்த பரமனை அறிந்து கலக்கும்வரை அந்த ஈசன் நினைவுகளுடேனேயே தியானம் செய்து வாழ்ந்திரு.

இராப் பகலன்றி யிருசுடர்ச் சிந்திக்கில்
பராபரத்தோ டொன்றலு மாம்.
   118
இரவு பகல் என்ற பேதமில்லாது எந்தநேரமும் புருவ மத்தியில் நினைவை வைத்திருந்து அங்கு தோன்றும் செஞ்சுடரைச் சிந்தித்தவாறு, எண்ணியவாறு இருக்க ஆன்மா அந்தப் ஜோதியுடன் கலக்கும்.

மிக்க மனத்தால் மிகநினந்து சிந்திக்கில்
ஒக்க சிவனுருவ மாம்.  
 119
ஒருமித்த மனத்தால் சிவனை அந்த ஜோதியை நினைந்து நினைந்து சிவசிந்தனையொடு வாழ சிவனுரு வெளிப்படும்.

வேண்டுவோர் வேண்டும் வகைதான் விரிந்தெங்கும்
காண்டற் கரிதாஞ் சிவம்.
   120
காண்பதற்கு அரிதாகிய எத்திக்கும் பரவி நிற்கும் சிவனை ஞான சித்தியடைந்தவர்களால் எண்ணிய நேரத்தில் கண்டு தரிசிக்க முடியும்.

13. தெரிந்து தெளிதல்

தேறித் தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில்
கூறிய பல்குணமு மாம்
.   121
உள்ளுணர்வால் ஆன்மாவே சிவனென, அந்தச் சிவ சொரூபமென தெளிந்தறியும்போது, அவர்கள் ஆன்றோர்களால் சொல்லப்பட்ட ஞானிக்குறிய அனைத்துக் குணங்களியும் கொண்டிருப்பர்.

உண்டில்லை யென்று முணர்வை யறிந்தக்கால்
கண்டில்லை யாகுஞ் சிவம்.
   122
உண்டு என்றும் இல்லை என்றும் பேதமுற்று விளங்கும் மனது, உள்ளுணர்வை உள்ளபடி உணர்ந்து கொள்ளும்போது அந்த சிவனை உணரும்போது பேதைமை அந்த அறியாமை அகலும்.

ஒருவர்க் கொருவனே யாகுமுயிர்க் கெல்லாம்
ஒருவனே பல்குணமு மாம்.
   123
பல் குணங்கள் உடைய எல்லா ஜீவ ராசிகளுக்குள்ளும் கலந்திருப்பவன் சிவன் என்ற ஒருவனே.

எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம்.
   124
எல்லோரும் ஒருநாள் சிவனுடன் கந்து கொள்வார்கள் என்ற உண்மையை அறிந்து உணர்ந்த ஞானிகளுக்கு பாவம் ஒழிந்து மரணமற்ற பெருவாழ்வு கிடைக்கும்.

ஆயுமிரவியு மொன்றே யனைத் துயிர்க்கும்
ஆயுங்கா லொன்றே சிவம்.
   125
ஆராய்ந்து பார்க்குங்கால், பரந்த இந்த உலகுக்கு ஒரே சூரியன் இருப்பதைப் போல இப்புவியி வாழும் அனைத்து உயிரினத்திலும் சிவன் ஒருவனே ஆன்மாவாகக் கலந்து இருக்கிறான்.

ஓவாத தொன்றே பலவா முயிர்க்கெல்லாந்
தேவான தென்றே தெளி.
   126
ஒருமைப் பொருளான சிவனே அனைத்து ஜீவ ராசிகளுக்கும் அடிப்படையாக இருக்கிறான். சிவன் என்ற ஒரு சக்தியில் இருந்து உருவாகிய ஆன்மாவே அனைத்து உயிரினங்களிலும் கலந்திருக்கிறது.

தம்மை யறியாதார் தாமறிவோ மென்பதென்
செம்மையா லீசன் றிறம்
.   127
தம்மைத் தாம் யாரென்று அறிந்து உணர்ந்து கொள்ள முடியாதவர்களால் சிவனை எப்படி அறிந்து கொள்ள முடியும்.

எல்லா வுலகத் திருந்தாலு மேத்துவார்கள்
நல்லுலக நாத னடி.  
 128
ஞானத் தேட்டமுடைய எல்லா ஞானிகளும் உலக வாழ்வில் அழுந்தியிருந்தாலும் உலகநாதனுடைய திருவடியினை ஏத்தி வணங்குவர்.

உலகத்திற் பட்ட உயிர்க்கெல்லா மீசன்
நிலவுபோ னிற்கும் நிறைந்து.
   129
உலகத்துக்கு இருளை விலக்கும் சந்திரன் போல உலகத்தில் வாழும் எல்லா உயிரினங்களிலும் சிவன் பரந்திருக்கிறான்.

உலகத்தில் மன்னு முயிர்க்கெல்லா மீசன்
அலகிறந்த வாதியே யாம்.
   130
உலகத்தில் வாழும், அனைத்து உயிரினங்களையெல்லாம், சிவன் சீவனாகி அவைகளுக்குள்ளேயே இருந்து காக்கிறான்.

14. கலை ஞானம்

சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில்
முத்திக்கு மூல மது. 
  131
சந்திர கலையாகிய துரியத்தினை செங்கதிரோன் அதாவது அக்கினியாகிய குண்டலினி சக்தி ஊடுருவும்போது சென்றடையும்போது, அதுவே ஆன்மாவின் முக்தியாகும்.

அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்றில்
நயனமா முத்திக்கு வீடு
.   132
இட கலையும் பிங்கலையும் அதாவது சந்திர கலையும் சூரிய கலையும் சந்திக்கும் இடமான புருவ மத்தியில் குண்டலினி அடையும்போது ஞானம் கிட்டும்.

அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந்
துஞ்சாதவர் துறக்கு மாறு
.   133
அறம் (இல்லறம்), பொருள் (உலக மாயைகள்) அதன்மூலமாக உண்டாகும் இன்பங்கள் நிலையில்லாப் பொருள் என உணர்ந்து மனதை அவற்றிலிருந்து விடுபடுதல் துறவு எனப்படும் அதுவே முக்திக்கு வழியாகும்.

ஈசனோ டொன்றி விசையாப் பொருளில்லை
தேசவிளக் கொளியே யாம்.
   134
ஈசனோடு கலந்து விட்டால் கைகூடாத பொருள் என்று எதுவும் இல்லையாம். (ஏனெனில்) சர்வேஸ்வரனானவன் தேசங்களுக் கெல்லாம் ஒளியாயிருக்கிறான்.

தாஞ்செய் வினையெல்லாந் தன்மையற வுணரில்
காஞ்சனமே யாகுங் கருத்து
.   135
தவத்தால் தன்னைத் தானே உணர்ந்து அறிந்தால் அவன் சிந்தையில் உதிக்கும் கருத்துக்கள் பொன்போலாகிவிடும்.

கூடகமான குறியெழுத்தைத் தானறியில்
வீடக மாகும் விரைந்து
.   136
இந்தச் சரீரம் எடுத்ததற்க்கான காரணத்தினை உண்மையாக உணர்பவர்கள் விரைவில் ஞானத்தினை அடைவார்கள். அதாவது இந்த மனித உடல் எடுத்ததே அந்த இறைவனை தேடி அறிந்து அவனுடன் கலந்து கொள்வதற்காகவே.

வீடக மாக விழைந்தொல்லை வேண்டுமேல்
கூடகத்திற் சோதியோ டொன்று.
   137
உலக இன்பங்களில் இருந்து, பிறவிப்பிணி என்ற தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமாக இருந்தால் உனக்குள்ளே அந்த ஜோதியைக் தேடி கண்டு அதனுடன் கலந்துகொள்.

பூரித்து நின்ற சிவனைப் புணரவே
பாரித்த தாகுங் கருத்து.
   138
எங்குங்கலந் திருக்கும் சிவனுடன் கலந்தால் சிந்தையும் செயலும் பரிசுத்தமடையும்.

இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில்
பூரிப்ப துள்ளே சிவம்
.   139
பிராணனை (சுவாசத்தினை) இடகலை மற்றும் பிங்கலை நாடிகள் வழியாக மாறி மாறி இழுத்துப் பயிற்சி செய்துவர மனம் ஒடுங்கி சிவத்தை அறிந்து கொள்ளலாம். இது யோகப் பயிற்சி முறையாகும்.

சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம்
சந்திரனிற் றோன்று முணர்வு
.   140
மனமானது ஒடுங்கி விண்ணில் அதாவது தலை உச்சியில் அதாவது துரியத்தில் (சந்திர கலையில்) நிலைக்க, அங்கு சிவனை உணரமுடியும்.

15.உருவொன்றி நிற்றல்

எள்ளகத் தெண்ணெ யிருந்ததனை யொக்குமே
உள்ளகத் தீச னொளி.
   141
எள்ளுக்குள் எண்ணை நிறைந்திருப்பதைப் போல உடலுக்குள் இருக்கும் ஆன்மாவினுள் இறை ஒளி கலந்துள்ளது. அதாவது ஆன்மாவே சிவனாகும்.

பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே
நூலின்க ணீச னுழைந்து
.   142
பாலுக்குள் நெய்யானது எமது கண்களுக்குத் தெரியாதவாறு கலந்திருப்பதுபோல எல்லா உயிரினங்களிலும் சிவன் கலந்திருக்கிறான்.

கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்
இரும்புண்ட நீரு மியல்பு.
   143
கரும்புக்குள் உள்ள தித்திப்பான சுவைபோல சிவம் உடலினுள் கலந்துள்ளது. நன்கு காச்சிய பாலில் வெளிவரும் நெய்போல யோகப்பயிற்சிகள், தியானங்கள் செய்து மனதை ஒருநிலைப்படுத்த மனம் ஒடுங்கி சிவனை அறியும் ஆற்றல் வரும், அப்போது பழுக்கக்காச்சிய இரும்பின்மீது நீரை ஊற்ற அந்த நீரானது அந்த இரும்பின் வெப்பத்தைத் தணித்து காணாமல்ப் போவதுபோல பக்குவப்பட்ட ஆன்மாவானது சிவனுடன் கலக்கும்.

பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு நிற்கு
மழுத்தினா லீச னிலை
.   144
நன்கு கனிந்த கணிக்குள் உறைந்திருக்கும் சுவையான சாறுபோல, பழத்தைப் பிழியின் இனிக்கும் சாறு வெளிப்படல் போல, உன்னுள் கலந்திருக்கும் இறைவனைத்தேடி கண்டறியும் பக்குவம் வரும்போது சிவமாகிய இறை உன்னுள் வெளிப்படும்.

தனுவொடு தோன்றுமே தானெல்லா மாகி
யணுவதுவாய் நிற்கு மது.
   145
இந்தத் தேகத்தினுள் கலந்திருக்கும் சிவமானது தானே எல்லாப் பொருள்களாகியும், அணுரூபமாயும் நீக்கமற வெளியே எங்கும் கலந்திருக்கும். உயிருக்கு உயிராய் நுண்ணியனாய் விளங்குபவன், ஆதியாம் சிவபெருமான். அவன் அணுவுக்கு அணுவாய்த் திகழ்பவன். அவனைத் திருவருள் உணர்வால் ஆராய வல்லார்க்கு, அவனை அறிதல் கைகூடும்.

வித்து முளைபோல் விரிந்தெங்கு நிற்குமே
ஒத்துளே நிற்கு முணர்வு.
   146
ஞானத்தைத் தேடுபவர்களது அறிவானது, வித்திலிருந்து உண்டாகும் முளையைப்போல, உண்டாகி, வெளிவந்து எங்கும் விரிந்து பரவி இருக்கும்.

அச்ச மாங்கார மகத்தடக்கி னாற்பின்னை
நிச்சயமா மீச னிலை.
   147
ஆசை, பயம், அகங்காரம் ஆகியவற்றினை உள்ளத்திலிருந்து எழாவண்ணம் அவற்றை அடக்கி ஆண்டு மனதை ஒருநிலைப்படுத்த சிந்தையில் ஈசன் வெளிப்படுவான்.

மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமே
வீட்டுளே நிற்கு மியல்பு.
   148
இறைவனைத் தேடாமல் உலக இன்பங்களில் மயங்கி உழலும் நம் சரீரத்திற்குள் இருக்கின்ற ஆன்மாவானது, முட்டையின் ஓட்டினுள்ளே இருக்கும் நாற்றமுள்ள நீருக்குள் முழையாமல் இருக்கும் கருவுக்கு ஒப்பானது.

நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும்
அனைத்துயிர்க்குந் தானா மவன்.
   149
தன்னுள் தேடுபவர்களின் மனதுள் வெளிப்படும் ஈசனே, உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிலும் கலந்திருக்கிறான்.

ஓசையி நுள்ளே யுதிக்கின்ற தொன்றுண்டு
வாசமலர் நாற்றம்போல் வந்து
.   150
வாசமுள்ள மலரிலிருந்து வெளிவரும் வாசனைபோல சத்தத்தினுள் தோன்றும் ஒரு பொருளிருக்கின்றது அதுதான் சிவமாகும். குண்டலினி ஆதாரங்களைக் கடந்து மேலெழுந்து வரும்போது தச நாதங்களை உள்ளே உணரக்கூடியதாக இருக்கும். இறுதியில் குண்டலினி துரியத்தினை அடையும் போது சிவன் வெளிப்படும்.

16. முத்தி காண்டல்

மனத்தோ டுறுபுத்தி யாங்காரஞ் சித்தம்
அனைத்தினு மில்லை யது.
   151
மனமானது சித்தம் (வெளிப்புறச்ச சிந்தனைகள்) புத்தி (சிற்றின்ப ஆசைகள்) அகங்காரம், ஆணவத்தினால் வழியே செல்லுமானால் ஞானத்தினை அடைய முடியாது.

வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள்
ஆக்கிய நூலினு மில்
.   152
வாக்குகளும், அறிவுரைகளும், வெவ்வோறு கருத்துக்களும் கூறும் மதவாதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வாசித்துப் பெறும்அறிவினால் ஞானத்தினை அடைய முடியாது.

உருவ மொன்றில்லை யுணர்வில்லை யோதும்
அருவமுந் தானதுவே யாம்.
   153
வீடு பேறு அதாவது முக்தி என்பது, உருவமோ உணர்வோ இல்லாது தன்னுள் தான் லயித்தல் ஒன்றுதல் எனும் உருவமில்லாப் பெருநிலையாகும்.

தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி
மனத்தகமாய் நிற்கு மது.
   154
தனக்கென்றொரு உருவமில்லாது தானே சிவனாக உணர்வதே முக்தி எனும் உயர் நிலையாகும்.

பெண்ணா ணலியென்னும் போரொன் றிலதாகி
விண்ணாகி நிற்கும் வியப்பு.
   155
ஆண், பெண், அலி என்னும் எண்ணம், இல்லாததாகி, அறிவு உடலாய் சிவத்துடன் கலந்திருக்கும் மேலான நிலையே முக்தியாகும்.

அனைத்துருவ மாய வறிவை யகலில்
தினைத்துணையு மில்லை சிவம்
.   156
சர்வரூபமாயு மிருக்கின்ற சிவனை புரிந்து கொள்ளாது விடுத்துச் சிவனைத் தனியாகத் தேடினால் எங்குமே கண்டு கொள்ள முடியாது. சிவன் எங்கும் வியாபித்துள்ளான்.

துணிமுகத் துக்காதி யாத்துன் னறிவின்றி
அணிதா ரிரண்டு விரல்.
   157
சூரியகலை சந்திரகலை ஆகிய இரண்டு நாடிகள் பொருந்தும் நெற்றி பொட்டில் ஒளிமயமான நுண்ணறிவு துலக்கும்போது வீடு பேறாகிய முக்திநிலை சித்தியாகிறது.

மயிர்முனை யிற்பாதி மனத்தறி வுண்டேல்
அயிர்ப்புண் டங்காதி நிலை.
   158
மயிர் முனையிற்பாதியளவு ஆவது மனதில் சிவனைப் பற்றிய தெளிவான அறிவு இருக்குமானால் அதுவே முக்திக்கு வழியாகும்.

தற்பர மான சதாசிவத்தோ டொன்றில்
உற்றறி வில்லை யுயிர்க்கு. 
  159
உண்மைப் பரம்பொருளான சிவத்துடன் மனம் ஒன்றும்போது மனதின் ஆசா பாசங்கள் உணர்ச்சிகள் ஒடுங்கிவிடும்.

உறக்க முணர்வு பசிகெடப் பட்டால்
பிறக்கவும் வேண்டா பிறப்பு
.   160
ஆசா பாசங்கள், தூக்கம், பசி போன்ற உணர்வுகள் அற்ற ஞான நிலை அடையும்போது பிறவிப்பிணி நீங்கி சிவத்துடன் ஐக்கியாமாகலாம்.

17. உருபாதீதம்

கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில்
உருவின்றி நிற்கு முணர்வு. 
  161
மனமானது விருப்பு வெறுப்பின்றி ஆதியை எண்ணி லயித்து இருக்குமாயில் அதுவே தன்னை மறந்த நிலையாகும்

பிறத்த லொன்றின்றிப் பிறவாமை வேண்டில்
அறுத்துருவ மாற்றி யிரு.
   162
பிறவிப்பிணி நீங்கவேண்டுமாயின் மனமானது தேக நினைவின்றி அந்த உருவமற்ற ஆதியுடன் கலந்து இருக்க வேண்டும்.

உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில்
கருவேது மில்லை தனக்கு
.   163
பிறவிப்பிணிக்குக் காரணமான ஐம்புலன்களின் ஆசைகளை ஒழித்து, மனதை அந்த ஜோதியுடன் ஐக்கியாமாக்கினால் பிறவிப்பிணி அகலும்.

கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சை
யறுத்துருவ மாற்றி யிரு.
   164
ஐம்பூத சக்திகளை, உணரும் ஐம்புலன்களை அதன் மூலமாக உருவாகும் ஆசைகளை அறுத்து மனதை ஒடுக்கி உருவமற்ற சிவத்தில் நிலைத்து ஐக்கியமாகு.

அனைத்துருவ மெல்லா மறக்கெடுத்து நின்றால்
பினைப்பிறப் பில்லையாம் வீடு.
   165
தேக விருப்பினால் உண்டாகும் சிற்றின்பங்களை எல்லாம் விடுத்து மனதை ஒடுக்கி சிவனை அறிந்து கலந்து கொண்டால் பிறவிப்பிணி நீங்கும்.

நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால்
தனக்கொன்று மில்லை பிறப்பு.
   166
விருப்பு வெறுப்பற்று, உணர்வற்று, தன்னை மறந்து சிந்தையில் சிவனுடன் ஐக்கியமாக பிறவிப்பிணி நீங்கும்.

குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில்
மறித்துப் பிறப்பில்லை வீடு. 
  167
ஐம்புலன்கள் வாயிலாகத் தோன்றும் வெளியுலக காட்சிகளை அதன் மூலமாகத் தோன்றும் இன்பங்களை விட்டு மனதை உள்முகமாக செலுத்தி ஒருமுகப்படுத்தி சிவனுடன் ஐக்கியமாக பிறவிப்பிணி நீங்கும்.

பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்ச
விகற்ப முணர்வதே வீடு.
   168
உலக இன்பங்களில்த் திளைத்து சிற்றினங்களில் உழலும் மனதை அவற்றிலிருந்து விடுபட்டு உள்முகமாக ஈசனைத்தேடி அந்தப் பிரபஞ்ச சக்தியுடன் இணைவதே முக்தி நிலையாகும்.

பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி
அறுத்துருவ மாற்றி யிரு.
   169
விருப்பு வெறுப்பின்றி மனதை ஒருநிலைப்படுத்தி தன்னை தன் உருவை மறந்து சிவத்துடன் ஐக்கியமாகி இருந்தால் பிறவிப்பிணி அகலும்.

ஓசை யுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றக்கால்
பேசவும் வேண்டா பிறப்பு.
   170
ஐம்புலன்கள் மூலமாக உணரும் ஓசை, உணர்வு, பார்வை, சுவை ஆகிய உணர்வுகளை மறந்து மனதை அடக்கி உள்முகமாக ஒரு நிலைப்படுத்த மனம் சிவத்துடன் ஐக்கியமாகி பிறப்பு இறப்பற்ற நிலை கைக்கூடும்.

18. பிறப்பறுதல்

தன்னை யறியு மறிவு தனைப்பெறில்
பின்னைப் பிறப்பில்லை வீடு
.   171
உள்முகமான தேடலில் தான் யார் என்று அறியும் நிலை, அந்த ஞான நிலையே பிறப்பு இறப்பற்ற முக்தி நிலையாகும்.

அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால்
பிறந்துழல வேண்டா பெயர்ந்து.
   172
பாவ புண்ணியங்களை அறிந்து அவற்றை அழிக்கும் முறையை அறிந்து உணர்ந்து அழித்துவிட்டால், மீண்டும் பிறப்பற்ற முக்தி கிடைக்கும். ஆன்மாவானது பிறப்பெடுப்பது தான் செய்த பாவ புண்ணியத்தினை அழிப்பதற்காக வேயாகும்.

சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில்
பவநாச மாகும் பரிந்து.
   173
ஆன்மாவானது சிவனுடன் ஐக்கியமாகும்போது தான் செய்த பாவ புண்ணியங்கள் அழிந்துபோகும்.

உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம்.
   174
உணர்வற்று, உணர்ச்சியற்று தான் யாரென்றதும் மறந்து மனமானது சிவத்துடன் ஒன்றுவதே பிறப்பு இறப்பற்ற முக்தி நிலையாகும்.

நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால்
அனைத்துலகும் வீடா மது.
   175
மனமானது எதனையும் சிந்திக்காது தன்னையும் தன் உடலையும் மறந்து சிந்தையில் சிவத்துடன் ஐக்கியமாகும் நிலையே முக்தியாகும்.

உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னொன்றுண்டு
திடம்படு மீசன் றிறம்
.   176
சூல உடல் சூக்கும உடல் ஆகிய இரண்டு உடல்களும் அழிந்து அதனுள் இருக்கும் ஆன்மா ஈசனுடன் கலக்கும் நிலையே வீடு பேறாகும்.

தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால்
பின்னைப் பிறப்பில்லை வீடு.
   177
மனதை ஒடுக்கி சிந்தையில் சிவனைத் தேடி அவனுடன் கலந்து தான் யாரென்று உணரும் நிலையே பிறவிப்பிணி நீங்கிய முக்தி நிலையாகும்.

மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய்
இருளின்றி நிற்கு மிடம். 
  178
பயமின்றி, தன்னை நன்றாக உணர்ந்து ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் தன்னிலிருந்து நீக்கின் மனமானது ஆதியாகிய பிரபஞ்ச சக்தியுடன் கலந்து கொள்ளும்.

விகாரங்கெட மாற்றி மெய்யுணர்வு கண்டால்
அகாரமாங் கண்டீ ரறிவு.
   179
மனதிலுள்ள பேதங்களை அதாவது விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம் போன்ற வேறுபாடுகளை அகற்றி மனதை ஒருநிலைப் படுத்தி சிவனை அகத்தே தேடி அறிந்து உணர்வதே பேரறிவாகும். அதுவே ஓங்கார நிலையாகும்.

சிந்த யாங்காரஞ் செறிபுல னற்றக்கால்
முந்தியே யாகுமாம் வீடு
.   180
ஐம்புலன்களின் மூலமான வெளிநோக்கிய செயல்களை, சிந்தனைகளை நீக்கி, நான் என்ற அகங்காரத்தினை விட்டொழித்து மனமானது அகத்தே ஒடுங்கும்போது முக்தி நிலை கிட்டும்.

19.தூயவொளி காண்டல்

தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த்
தோன்றியக் காற்றூய வொளி
.   181
இவ்வுலகத்தின் கண் உதயமாகும் அத்தனை எண்ணங் களையும், ஆசைகளையும், விருப்பு வெறுப்புக்களையும் ஆரம்பத்திலேயே முற்றாக நிராகரித்து அதாவது அவற்றில் நாட்டம் கொள்ளாது மனதில் தோன்றும் தூய்மையான சிந்தனைகளால் அந்த தூய்மையான சிவ ஒளி தோன்றும்.

தெளிவாய தேசவிளக் கொளியைக் காணில்
வெளியாய வீடதுவே யாம்
.   182
தேகத்தினுள் எப்போதும் விளக்குச் சுடர்போல ஒளிர்ந்து கொண்டிருக்கும் செஞ்சுடர் புருவ மத்தியில் தோன்றின், மனமானது உள்ளே ஒளியை உணருமாயின் அதுவே முக்திக்கு வழியாகும்.

மின்போ லுருவ விளக்கொளிபோல் மேற்காணில்
முன்போல மூலம் புகும். 
  183
மூலம் அதாவது குண்டலினி சக்தியானது மேலெழுந்து துரியத்தினை அடையும்போது மின்னல் போல பிரகாசமான விளக்கொளி தலை முகட்டில்த் தோன்றும்.

பளிங்கு வலம்புரி பானிகர்த்த தாகில்
துளங்கொளியாந் தூய நெறி.  
 184
பளிங்குபோல தூய்மையானதாயும் வலம்புரிச் சங்கு மற்றும் பாலின் நிறத்தையும் ஒத்த தூய ஒளி உச்சியில் தோன்ற மனதின் அறியாமை அகலும்.

சங்கு நிறம்போற் றவளவொளி காணில்
அங்கையி னெல்லியே யாகும்.
   185
சங்கின் நிறம்போல் தோன்றும் ஆத்ம ஒளியை சிந்தையில் கண்டு தரிசிக்க, உள்ளங் கையிலுள்ள நெல்லிக்கனிபோல உண்மையின் தத்துவம் புரியும்.

துளங்கிய தூண்டா விளக்கொளி காணில்
விளங்கிய வீடாம் விரைந்து. 
  186
சிரத்தின் உச்சியில் தூண்டாமணி விளக்கின் சுடர்போல ஆத்ம ஒளி தோன்றினால் விரைவில் ஞானம் கிட்டும்.

மின்மினி போன்ற விளக்காகத் தான்தோன்றில்
அன்னப் பறவையே யாம். 
  187
இரவில் மின்மினிப் பூச்சியில் இருந்து தோன்றும் மின்னி மின்னி மறையும் ஒளிபோல தியானத்தின்போது சிந்தையில் விட்டு விட்டு ஒளி தோன்றினால் அதுவே முக்திக்கு வழியாகும். நீரை விலக்கிப் பாலை மட்டும் உண்ணும் அன்னப் பறவைபோல தேவையற்ற சலங்கள் நீங்கி உண்மையான சிவனை உணரலாம்.

உள்ளொளி தோன்றி லுணரி லருளொளி
அவ்வொளி யாதி யொளி. 
  188

மூலாக்கினியை அதாவது குண்டலினியை மேலெழுப்பி அந்த மூல ஒளியினை சிந்தையில் உணர்ந்தால் அதுவே அந்த சிவ ஒளியாகும்.

பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணில்
பரம்பரமே யாய வொளி.
   189
தியானத்தின்போது உச்சியில் பரந்து விரிந்திருக்கும் அண்டவெளியில் ஆத்மஜோதி தோன்றின் அதுவே முக்தியாகும். ஆத்மா சிவ ஜோதியுடன் கலப்பதே முக்தியாகும்.

ஆதியொளியாகி யாள்வானுந் தானாகி
ஆதி யவனுருவு மாம்.
   190
மூலமான அதாவது ஆன்மாவின் மூலம் ஆன்மா எங்கிருந்து உதித்ததோ அதுவே மூல ஒளியாகும். அந்த மூல ஒளியாகவும் உலகத்தினை ஆள்பவனாகவும் இருப்பவன் அந்த ஒரு ஈசனே. அதுவே பழமையான ஆதி ஒளியாகும்.

20. சதாசிவம்

பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம்.
   191
பத்துத் திசைகளிலும் நீராலும் நிலத்தாலும் நிறைந்திருக்கும் அகிலமெல்லாம் சிவன் அந்த ஆதி வியாபித்து கலந்து நிலைத்திருக்கும். எட்டுத் திசைகளும் அவற்றுடன் மேல், கீழ் ஆகியவைகளும் சேர்ந்து பத்துத் திசைகளாகும்.

விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.
   192
ஆகாயத்தில் பூரணமாக நிலையாக நின்று விளங்கும் சுடரொளி அதாவது கதிரவன் போல உடலினுள்ளே சிவஒளி வியாபித்துள்ளது.

ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி
ஏகமாய் நிற்குஞ் சிவம்.   
193
இந்த உடலும், ஆன்மாவும், மனமும் அதனால் உண்டாகும் ஆசை ஆகியவைகளில் சிவம் தானேயாகிக் கலந்து நிற்கும். எங்கும் சிவம். எதிலும் சிவம். அதாவது நீயும் சிவம் நானும் சிவம். விருப்பு வெறுப்பு சிவம். இன்பம் துன்பம் சிவம். உணர்ந்தால் அதுவே சிவமாகும்.

வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்
ஆயுமிடந் தானே சிவம்.
   194
காற்றாகவும் இப்புவியில் வாழும் அனைத்து ஜீவராசிகளாகவும் ஏனைய சடப்பொருட்களின் உட்பொருளாகவும் சிவமே விளங்குகிறதென்பதை ஆராய்ந்து தெளிக்க. உயிர்களின் உணர்வும் அவனே, உயிரும் அவனே, புணர்வும் அவனே, புலப்பும் அவனே.

எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். 
  195
இப்புவியிலுள்ள எண்ணிலடங்காத ஆண், பெண், அலியென்ற பேதமுள்ள அனைத்து உயிரினங்களிலும் எங்கும் பரவி, உடலில் நிறைந்து நிற்கும் சிவம்.

ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்
ஒன்றாகி நிற்குஞ் சிவம்.
   196
மூல வித்தாகி, அதிலிருந்து உதிக்கும் எல்லா உயிர்களின் உடலுக்குள் பரவி, ஒரே சீவனாகி நிற்கும் சிவம்.

மூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்கும்
காலமாய் நிற்குஞ் சிவம்.
   197
ஒரு உயிரின் பிறப்பிலிருந்து இறப்புவரை சிவனே துணையாய் காவலாய் நிக்கும். இவ்வுலகில் எவ்வுயிர்க்கும் துணை ஈசனே.

மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி
விண்ணகமே யாகுஞ் சிவம். 
  198
பூமியில் பிறந்திருக்கும் உயிர்களுக்கெல்லாம், சிவம் தானே சீவனாகி விண்ணகத்தில் அதாவது இந்த உலகெங்கும் வியாபித்து இருந்து அவற்றைக் காக்கிறான்.

தோற்றமது வீடாகித் தொல்லைமுத லொன்றாகி
ஏத்தவரு மீச னுளன்.
   199
இந்தப் பிறப்புக்கும் அவை செய்யும் காரியங்களுக்கும் அதாவது பாவ புண்ணியங்களுக்கும் மூலகர்த்தா அந்த ஈசனே. அவனே இந்த உலகை ஆட்டுவிக்கிறான்.

நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி
உற்றெங்கும் நிற்குஞ் சிவம்.
   200
இப்புவியிலுள்ள அசையும் பொருள் அதாவது எல்லா உயிரினங்களிலும் மற்றும் அசையாப் பொருள்களிலும் அனைத்திலும் சிவம் கலந்திருக்கிறான். சிவன் தூணிலும் இருக்கிறான். துரும்பிலும் இருக்கிறான். புழுவிலும் இருக்கிறான். பூச்சியிலும் இருக்கிறான். மரத்திலும் இருக்கிறான். மனிதரிலும் இருக்கிறான்.

21. குருவழி

தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள்
அன்பா யிருக்கு மரன்
.   201
தன்னைத்தான் அறியும்படியான அகத்தவத்தைச் செய்யும் ஞானிகளின் சிந்தையில் சிவம் நிலைத்து நிற்கும்.

யோகம் செய்பவர்கள் யோகிகள். ஞானம் அடைந்தவர்கள் ஞானிகள். சிந்தை தெளிந்தவர்கள் சித்தர்கள். புத்தி தெளிந்தவர்கள் புத்தர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அனைவரும் ஒத்த கருத்துள்ளவர்களே.

சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்
சிந்தித் திருக்குஞ் சிவம்.
   202
எந்தநேரமும் சிவத்தையே சிந்தித்திருக்கும் தவஞானிகளின் சிந்தையில் சிவன் நிலையாக வீற்றிருப்பான்.

குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம். 
  203
குருவைப் பணிந்து தொழுது பணிவிடை செய்யாதவர்களது சிந்தையில் சிவன் தோன்றமாட்டான். குருவுக்கு பணிவிடை செய்து அவர் வழிகாட்டலின்படி இறைவனைத் தேடு சிவனைக் காண்பாய்.

தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால்
வலைப்பட்ட மானதுவே யாம்
.   204
ஒரு குருவின் வழிகாட்டுதல் மூலமாகவே உன்னால் ஞானத்தை அடையமுடியும். இல்லையேல் வலையில்ச் சிக்கிய மானைப் போல உலக சிற்றின்பங்களில் மயங்கித் திரிவாய்.

நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிரிவற் றிருக்குஞ் சிவம்
.   205
ஞானமடைந்த ஒரு குருவின் வழிகாட்டலில் சிவனைத் தேடினால் ஞானம் கிடைக்கும்.

நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
எல்லையில் லாத சிவம்.
   206
ஞான வழிகாட்டும் நூல்களைக் கற்பதால் மட்டும் ஞானம் கைகூடாது. அதாவது ஒரு குருவின் வழிகாட்டுதலுடனேயே சிவனைத் தேடவேண்டும்.

நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந்
தனைப்பிரி யாது சிவம்.
   207
நினைப்பு, மறப்பற்ற நெஞ்சத்தில் அதாவது தனை மறந்தார் நெஞ்சத்தில் சிவம் வாழும்.

ஒன்றிலொன் றில்லாத மனமுடை யாருடல்
என்றுமொன் றாது சிவம்.
   208
உடலும் உள்ளமும் ஒருமித்து செயற்படாதவர் சிந்தையில் சிவன் தோன்ற மாட்டான்.

நாட்டமில் லாவிடம் நாட்ட மறிந்தபின்
மீட்டு விடாது சிவம்.
   209
எல்லோருக்கும் யோகத்தில் நாட்டம் ஏற்படாது. அப்படி யோகத்தில் நாட்டம் ஏற்பட்டவர்களது சிந்தையில் சிவன் நாடி வருவான்.

பஞ்சமா சத்த மறுப்பவர்க் கல்லாஅல்
அஞ்சலென் னாது சிவம்
.   210
ஐம்புலன்களின் ஈர்ப்பினால் உண்டாகும் பஞ்சமா பாதகச் செயலில் இருந்து விடுபடாதவர்களது சிந்தையில் சிவன் தோன்ற மாட்டான். அதாவது ஐம்புலன்களை அடக்கி மனதை உள்ளே செலுத்தித் தியானித்தால் மட்டுமே சிவனை அறிய முடியும்.

22. அங்கியில் பஞ்சு

அங்கியிற் பஞ்சுபோ லாகாயத் தேநினையில்
சங்கிக்க வேண்டாஞ் சிவம்
.   211
சதாகாலமும் மனதை ஒடுக்கி நினைவை பரவெளியில் நிறுத்தி யோகம் செய்ய, அனலிற் படும் பஞ்சு உடனே தீப்பற்றிக் கொள்வதுபோல சிவன் உன்னைப் பற்றிக் கொள்வான். சிவம் சோதியாய் வெளிப்படும்.

மெய்ப்பா லறியாத மூடர்த நெஞ்சத்தின்
அப்பால தாகுஞ் சிவம்
.   212
மெய்த் தத்துவத்தை அறியாத மூடர்களது மனதில் தெய்வசக்தி இல்லாது சிவம் நீங்கி இருக்கும். மடமையே குடியிருக்கும். அவர்களால் சிவனை உணர முடியாது.

நெஞ்சகத்து ணோக்கி நினைப்பவர்க் கல்லாஅல்
அஞ்சலென் னாது சிவம்
.   213
மனதை ஒருநிலைப் படுத்தி சிவத்தைக் கருத்தில் நிறுத்தி தியானிக்காதவர் சிதையில் சிவன் தோன்றமாட்டான்.

பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது
கற்றதனா லென்ன பயன்
.   214

பற்றில்லாத சிவனை உணர்ந்து, அறிந்து, கண்டறியாதவர்கள் பல அறிவுள்ள ஞான நூல்களைக் கற்பதால் எப்பயனும் இல்லை.

தம்மை யறிவாரைத் தாமறிந்து கொண்டபின்
தம்மை யறிவரோ தான்.
   215
தம்மைப் படைத்துக் காக்கும் ஈசனை நன்கு அறிந்து தெளிந்தபின், தான் யாரென்று தேடமாட்டார்கள். சிவனே நாம் நாமே சிவம்.

அசபை யறிந்துள்ளே யழலெழ நோக்கில்
இசையாது மண்ணிற் பிறப்பு. 
  216
சலனமற்றிருக்கும் மனதுள் உறைந்திருக்கும் சிவனை அந்த ஜோதியை தரிசித்தால் பிறவிப்பிணி நீங்கும். சித்தம் சிவனுடன் கலக்க ஆன்மாவானது அந்த ஜோதியுடன் ஐக்கியமாகிவிடும்.

இமையாத நாட்டத் திருந்துணர் வாருக்
கமையாத வானந்த மாம்
.   217
கண்களை இமைக்காதவாறு மனதை உள்ளே செலுத்தி புருவ மத்தியில் நிறுத்தித் தியானிப்பவர்கள் அந்த ஜோதியைக் கண்டு தரிசித்து பேரானந்தம் அடைவார்கள்.

சிற்றின்பம் என்பது சிறிதளவு நேரத்துக்கு மட்டுமே கிடைக்கும் இன்பமாகும். பேரின்பம் எனப்படுவது எப்போதும் ஆனந்தத்தில் நிலைத்திருப்பதாகும்.

துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு
.   218
துரியங் கடந்த துரியாதீதத்தில் ஜோதி கண்டால் ஆன்மா சிவனுடன் ஐக்கியமாகி செய்த பாவ புண்ணியங்கள் நீங்கி பிறவிப்பிணி அகலும்.

துரியம் உடலில் சிரசில் அமைந்திருக்கும் ஏழாவது சக்கரமாகும். துரியாதீனம் என்பது உச்சிக்கு வெளியே ஆறு அங்குலம் அளவு உயரத்தில் நிலைத்திருக்கும் வெளிப்புறச் சக்கரமாகும்.

மதிபோ லுடம்பினை மாசற நோக்கில்
விதிபோ யகல விடும்
.   219
உள்ளத்திலுள்ள அழுக்குகள் நீங்கி இந்த உடலானது பூரண சந்திரன்போல ஒளிவீசினால், அதாவது கள்ளம் கபடமற்ற சிந்தையுடன் உள்ளே நோக்கி தியானம் செய்துவர உள்ளே ஒளிவீசும் பூரண சந்திரன்போல, பூந்துகில் ஆடைபோல இந்த உடலானது உணரப்படும்போது செய்த வினை யாவும் நீங்கி சிவனுடன் ஐக்கியமாவர்.

சீவன் சிவலிங்க மாகத் தெளிந்தவர்தம்
பாவ நசிக்கும் பரிந்து.
   220
சீவனைச் சிவத்துடன் ஒன்றித்துச் சிவத்தைச் சிவலிங்கமாகக் காணும் ஒருவனின் பாவ வினைகள் அழிந்துவிடும்.

23. மெய்யகம்

மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ் சுடர்நோக்கில்
கையகத்தி னெல்லிக் கனி
.   221
சிந்தையுள் செஞ்சுடர் தோன்றில் சிவனருள் கிட்டும்.

கரையற்ற செல்வத்தைக் காணுங் காலத்தில்
உரையற் றிருப்ப துணர்வு
.   222
அளவு கடந்த செல்வமாகிய சிவனைச் சிந்தையில் தரிசிக்குங் காலத்தில் தன்னை மறந்து, உடலற்று, உணர்வற்று, பேச்சற்று, மூச்சற்ற நிலையை உணரலாம்.

உண்டு பசிதீர்ந் தார்போ லுடம்பெல்லாஅங்
கண்டுகொள் காதல் மிகும்.
   223
பசிதீர உண்டபின் மனம் எவ்வாறு மனநிறைவடையுமோ, அவ்வாறே சிதையில் சிவனைக் கண்டு மனம் தெளிந்து மனநிறைவு அடைந்து சிவன்மேல் தீராத அன்பு உண்டாகும்.

உரைசெயு மோசை யுரைசெய் பவர்க்கு
நரைதிரை யில்லை நமன்
.   224
சிந்தையுள் சப்த நாதமும் உணர்பவர்களுக்கு அதாவது அதுவே முத்திநிலையாகும் மரணமில்லப் பெருவாழ்வு கிட்டும். குண்டலினி சக்தியானது மூலாதாரத்திலிருந்து மேலெழுந்து செல்லும்போது ஆதாரங்களில் உரசிச் செல்லுலும். அப்போது ஆதாரங்களில் இருந்து நாதங்கள் உணரப்படும். இறுதியில் குண்டலினி துரியத்தில் சிவனுடன் கலப்பதே முக்தியாகும்.

தோன்றாத தூயவொளி தோன்றியக்கா லுன்னைத்
தோன்றாமற் காப்ப தறிவு.  
 225
எவருக்கும் வெளிப்பட்டு நிற்காத தூய்மையான ஆத்ம ஒளியானது தன்னுள் வெளிப்பட்டு ஜோதியாகத் தோன்றின் அதுவே தன்னை மறந்த ஞான நிலையாகும்.

வாக்கு மனமு மிறந்த பொருள்காணில்
ஆக்கைக் கழிவில்லை யாம்
.   226
எண்ணம் செயல் அற்ற தன்னை மறந்த நிலையில் தன்னுள்ளே அந்த சிவனைக் கண்டு கொண்டால் இறப்பில்லா பெருவாழ்வு உண்டாகும்.

கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால்
உன்னகத்தே நின்ற வொளி.
   227
கண்களுக்கு மத்தியில் உள்ள புருவ மத்தியில் செஞ்சுச்சுடர் தோன்றின், அது உன்னுள்ளே இருக்கும் அந்த சிவனே ஆகும். உனது ஆத்மாவின் ஒளியேயாகும்.

ஆநந்த மான வருளை யறிந்தபின்
தானந்த மாகு மவர்க்கு.
   228
ஆனந்தம் கொடுக்கக்கூடிய அந்த சிவனருளை அந்த சிவ ஜோதியை சிந்தையில் உணர்ந்தபின் சிந்தையில் பேரானந்தம் நிலைக்கும்.

மறவாமற் காணும் வகையுணர் வாருக்
கிறவா திருக்கலு மாம்.
   229
மறக்கமுடியாத அந்த சிவனை அந்தப் பேரொளியை சிந்தையில் தரிசிப்போருக்கு மரணமில்லாப் பெருவாழ்வு கிட்டும்.

விண்ணிறைந்து நின்ற பொருளே யுடம்பதன்
உண்ணிறைந்து நின்ற வொளி
.   230
உடலினுள் நிறைந்து அசைவற்று நிற்கும் ஆத்ம ஒளியே, அண்டமெங்கும் பரிபூரணமாய்ப் பரவியிருக்கும் சிவமாம்.

24. கண்ணாடி

கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள்
உண்ணாடி நின்ற வொளி.
   231
சூரியனானது கண்ணாடிக் குவளைக்குள் உள்ள நீரில்த் தெரிவதுபோல, அண்டமெல்லாம் பரவியிருக்கும் சிவ சக்தியானது ஒவ்வொரு உயிரினத்துக்குள்ளும் பரவியுள்ளது.

அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத்
துஞ்சுவ தில்லை உடம்பு
.   232
ஐம்புலன்களின் செயல்களை அறிந்து, உணர்ந்து, தெளிந்த மனதானது, வெளியுலக நாட்டங்களில் இருந்து விலகி, புலனடக்கத்துடன், சிந்தையில் ஒடுங்கி எதற்கும் அஞ்சாத சிவ நினைவுடன், தேடலுடன் இருக்கும்.

நாபி யகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு
.   233
தொப்பூழில் தோன்றிச் சுடர்விட்டுக் கிளம்பும் ஒளிப்பிழம்பை வணங்கி தரிசிக்க பிறவிப்பிணி அகலும். அதாவது நாபிக்கமலம் அதாவது உந்திக்கு கீழே அதாவது அடி வயிற்றில் இருக்கும் குணடலினி சக்தியை எண்ணித் தியானம் செய்து அதனை மேலெழுப்பி சிரசில் தரிசிக்க பிறவிப்பிணி அகலும்.

கண்டத் தளவிற் கடிய வொளிகாணில்
அண்டத்த ராகு முடம்பு
.   234
தியானத்தின்போது கண்டத்தில் அதாவது கழுத்துப் பகுதியில் விசுத்தி சக்கரத்தில் ஒளி தோன்றினால் தேகம் அழியாத நிலையை எய்தும்.

சந்திர னுள்ளே தழலுற நோக்கினால்
அந்தர மாகு முடம்பு
.   235
சந்திர கலையில் அதாவது தலைப்பகுதியில் துரியத்தில் செஞ்சுச்சுடர் தோன்றினால் உடல் இலேசாகி ஆகாயத்தில் மிதப்பதுபோல இருக்கும். பல யோகிகள் அந்தரத்தில் மிதப்பது இக்கலையேயாகும்.

ஆர்க்குந் தெரியா வுருவந்தனை நோக்கில்
பார்க்கும் பரமா மவன்.
   236
எல்லோராலும் சாதாரண கண்களாலக் காணமுடியாத பேரொளியாம் அந்தச் சிவனை தன்னுள் கண்டுவிட்டால் அவனே எங்கும் பரந்து வியாபித்திருக்கும் பரம்பொருள் என உணர முடியும்.

வண்ண மில்லாத வடிவை யறிந்தபின்
விண்ணவ ராகு முடம்பு.
   237
வண்ணமற்ற, உருவமற்ற ஓங்கார உருவை தன்னுள்ளே அறிந்து உணரும்போது உடலானது தேவர்களது தெய்வீகமான உடல்போல ஒளிவீசும்.

நெற்றிக்கு நேரே நிறைந்த வொளிகாணில்
முற்று மழியா துடம்பு. 
  238
நெற்றிக்கு நேரே புருவ மத்தியில் செஞ்சுச்சுடர் தோன்றில் இறப்பற்ற பெருவாழ்வு கிட்டும்.

மாதூ வெளியின் மனமொன்ற வைத்தபின்
போதக மாகு முடம்பு
.   239
மகத்தாகிய பரிசுத்தமாகிய பெருவெளியில் துரியம் கடந்த நிலையில் மனதை நிறுத்திச் தியானம் செய்துவர ஆன்மாவானது ஆதியுடன் கலந்து மரணமில்லாப் பெருவாழ்வு கிட்டும்.

சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால்
முற்று மழியா துடம்பு.
   240
பரிசுத்தமான சிவனோடு மனம் ஒன்றி மனமற்ற நிலை உருவாகும்போது பிறவிப்பிணி நீங்கும்.

25. சூனிய காலமறிதல்

நிரவி யழலுருவாய் நீண்ட வெளிகாணில்
அரவணை யானாகு முடம்பு
.   241
ஆதியும் அந்தமுமில்லை ஒளிவடிவான ஜோதியை தன்னுள்ளே கண்டு உணர்ந்தால் அவ்வுடல் சிவ உடல் ஆகும்.

உருவந் தழலாக வுள்ளத்தே சென்று
புருவத் திடையிருந்து பார்
.   242
யோகத்தின் மூலமாக உடலை சூடேற்றி குண்டலினி சக்தியை கிளர்ந்தெழ வைத்து புருவ மத்தியில் கண்டு கலந்திரு.

புருவத் திடையிருந்து புண்ணியனைக் காணில்
உருவற்று நிற்கு முடம்பு.
   243
யோகத்தின் மூலமாக புருவ மத்தியில் ஜோதியைக் கண்டு தியானிக்க தன் உடல் இருப்பது மறந்து போகும். மனம் தானே சிவன் என்று உணர்ந்து கொள்ளும்.

அகம்புறம் பேராப் பொருளை யறியில்
உகம்பல காட்டும் உடம்பு.
   244
தன் உள்ளேயும் வெளியேயும் பரந்திருக்கும் அந்த சிவனை உணர்ந்து கொண்டால் இந்தச் சரீரமானது நீண்ட காலம் நிலைத்திருக்கும். பல சித்தர்கள் தமது உடலுடன் சமாதி நிலையடைந்து அவ்வுடல் பலகாலம் அழியாது இருக்கும்.

ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின்
ஓவிய மாகு முடம்பு.
   245
வாசியாகிய மூச்சுக் காற்றை உடலுக்கு உள்ளே முடிந்தவரை நிறுத்திவைத்துப் பயிற்சி செய்துவர, உடலானது ஓவியத்தில் வரைந்ததுபோல இளமையுடன் இருக்கும்.

அஞ்சு மடக்கி யறிவோ டிருந்தபின்
துஞ்சுவ தில்லை யுடம்பு. 
  246
ஐம்புலன்களையும் அடக்கி மனதை ஒருநிலைப்படுத்தி சிந்தையில் மனதை நிறுத்தித் தியானித்து வர ஆன்மாவானது சிவத்துடன் ஒன்றிவிடும். உடல் அழியாத தன்மை பெறும்.

தீயாக வுள்ளே தெளிவுற நோக்கினால்
மாயாது பின்னை யுடம்பு
.   247
யோகத்தின் மூலமாக உடலை சூடேற்றி குண்டலினி சக்தியை கிளர்ந்தெழ வைத்து மனதை சிந்தையில் நிறுத்தி சிவ ஒளி காண உடலானது அழியாத தன்மை பெறும்.

தானந்த மின்றித் தழலுற நோக்கிடில்
ஆனந்த மாகு முடம்பு
.   248
யோகத்தின் மூலமாக உடலை அனல்போல் சூடேற்றி குண்டலினி சக்தியை கிளர்ந்தெழ வைத்து மனதை சிந்தையில் நிறுத்தி தியானிக்க பேரானந்தம் உருவாகும்.

ஒழிவின்றி நின்ற பொருளை யுணரில்
அழிவின்றி நிற்கு முடம்பு.
   249
நீக்கமற நிறைந்திருக்கும், எங்கும் வியாபித்திருக்கும் இறை அருளை தன்னுள் உணரும்போது உடலானது அழியாத தன்மை பெறும்.

பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்திக்கில்
முற்று மழியா துடம்பு.
   250
நீக்கமற நிறைந்திருக்கும், எங்கும் வியாபித்திருக்கும் எல்லாவற்றிக்கும் முதலாகத் தோன்றிய சிவனைத் தன்னுள் உணரும்போது உடலானது அழியாத தன்மை பெறும்.

26. சிவயோக நிலை

அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி
முடிமிசை யோடி முயல்.
   251
அடியிலுள்ள வாயுவாகிய அபானனைத் செலுத்தி மூலாதாரத்தில் அமைந்திருக்கும் குணடலினியை கிளர்ந்தெழ வைத்து பிரணவ உச்சிக்குள் செலுத்து.

உண்ணாடி வாயு வதனையுட னிறப்பி
விண்ணோடு மெள்ள விடு
.   252

மூச்சை நன்றாக உள்ளே இழுத்து உள்ளே நிறுத்தி மூலாதாரத்தில் நினைவை வைத்து நிறுத்தி பின்னர் மெதுவாக வெளியேற்று.

மெள்ள விரேசித்து மெய்விம்மிப் பூரித்துக்
கொள்ளுமின் கும்பங் குறித்து
.   253
மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, அடக்கி மூலாதாரத்தில் நினைவை வைத்து காற்றை முக்க (காற்றை மூலாதாரத்தில் அமுக்க) குண்டலினி வெப்பமடைந்து மேலெழும்.

இரேசக முப்பத் திரண்டது மாத்திரை
பூரகம் பத்தாறு புகும்.
   254
காற்றினை பதினாறு மாத்திரை அளவு உள்ளே இழுத்து (பூரகம்), முப்பத்தியிரண்டு மாத்திரை.அளவு மெதுவாக வெளியே விடவேண்டும் (ரேசகம்). இது யோகப் பயிற்சியின் போது கடைப்பிடிக்கப்படும் மூச்சுப் பயிற்சியாகும். இப்பயிற்சியின் போது உடல் வெப்பமடையும்.

மூச்சுப் பயிற்சியின் போது சுவாசத்தினை உள்ளே இழுத்தல் பூரகம் எனவும், உள்ளே அடக்குதல் கும்பகம் எனவும், வெளியே விடுவது ரேசகம் எனவும் அழைக்கப்படும்.

கும்பக நாலோ டறுபது மாத்திரை
தம்பித் திடுவது தான்.
   255
கும்பகமாவது, மூலாதாரத்தை நினைவில் வைத்து உள்ளே இழுத்த பிராணனை அறுபத்தினாலு மாத்திரையளவு அசைவற்ற நிலையில் உள்ளே தம்பித்து நிறுத்துவதாகும்.

முன்ன மிரேசி முயலுபின் பூரகம்
பின்னது கும்பம் பிடி. 
  256
இரேசகத்தில் தொடங்கிப் பூரகத்தைச் செய்து இறுதியில் கும்பகத்தில் நிறைவுசெய். அதாவது மூச்சுப் பயிற்சியின் போது முதலில் உள்ளிருக்கும் வாயுவை (32 மாத்திரை அளவு) வெளியேற்றி, பின் (16 மாத்திரை அளவு) உள்ளிழுத்து பின் (64 மாத்திரை அளவு) உள்ளே அடக்கிப் பயிற்சி செய்ய வேண்டும்.

ஈரைந் தெழுபத்தீ ராயிர நாடியுஞ்
சேருமின் வாயுச் செயல்.
   257
உடலிலுள்ள தச (பத்து) வாயுக்களின் செயற்பாட்டினால் எழுபத்திரண்டாயிரம் (72000) நாடிகளும் இணைக்கப் படுகின்றன. தொழில்ப் படுகின்றன.

வாசலீ ரைந்து மயங்கிய வாயுவை
ஈசன்றன் வாசலி லேற்று.
 258
மூலாதாரத்திலுள்ள அபானன் என்ற வாவின் துணைகொண்டு குண்டலினி சக்தியை மேலெழச் செய்து ஈசன் வாசலுக்கு அதாவது உடலையும் அண்டத்தையும் இணைக்கும் துரியத்துக்கு செலுத்து.

தயாவினில் வாயு வலத்தி லியங்கில்
தியான சமாதிகள் செய். 
  259
வாயுவானது வலது பக்கத்தில் (பிங்கலை நாடி வழியாக) சஞ்சரிக்கின்ற காலத்திலேயே தியானம் செய்வது சிறப்பு.

எமது மூச்சுக் காற்றானது 15 நிமிடங்கள் இடகலை நாடி வழியாகவும் பின்னர் அடுத்த 15 நிமிடங்கள் பிங்கலை நாடி வழியாகவும் மாறி மாறிச் செயல்படும்.

ஆதியா மூலமறிந் தஞ்செழுத் தினைப்
பேதியா தோது பிணை.
   260
மேற்குறிப்பிட்ட செயல்முறைகள் செய்தபிறகு இறுதியில் பஞ்சாட்சர மந்திரம் ஜெபித்து தியானம் செய்யவேண்டும். சக்திகளைச் சேர்ப்பதே “ஓம் நமசிவய” என்னும் மந்திர உபதேசத்தின் கருத்தாம்.

3. தன்பால்

27. ஞான நிலை

தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந்
துற்பன மஞ்சை யுரை. 
  261
முகத்தில் புருவ மத்தியில் பார்வையைச் செலுத்தி மனதை அங்கே குவித்து நிறுத்தித் தியானம் செய்ய மஞ்சள் நிற ஒளி தோன்றும்.

தற்புருட மாமுகமேற் றாரகை தன்மேலே
நிற்பது பேரொளி நில்
.   262
புருவ மத்தியில் பார்வையைச் செலுத்தி மனதை அங்கே குவித்து நிறுத்தித் தியானம் செய்யும்போது அங்கே நட்சத்திரம்போல மின்னும் பேரொளி தோன்றும். அதனுடன் கலந்திரு.

ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே
பேதியா தோது பிணை. 
  263
புருவ மத்தியில் தோன்றும் ஒளியுடன் கலந்திருந்து ஈசனை தியானி.

கொழுந்துறு வன்னி கொழுவுற வொவ்வில்
எழுந்தா ரகையா மிது
.   264
நெருப்பை ஒரு கோலினால் கிளறும்போது, அதிலிருந்து பொறி பறந்து நட்சத்திரம்போல மின்னும். அதுபோல, புருவ மத்தியில் மனதைக் குவித்து தியானம் செய்ய புருவ மத்தியில், சிரசில் நட்சத்திரம் மின்னுவதுபோல ஒளி தோன்றி மறையும்.

மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே
குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு
.   265
இடகலை, பிங்கலை வழியாய் ஓடும் பிராணனை மறித்து அதாவது உள்ளே அடக்கி குண்டலினியை அந்த அக்கினியை நடுவாக ஓடும் சுழுமுனை வழியாக மேலே உச்சிக்குச் செலுத்து.

காலுந் தலையு மறிந்து கலந்திடில்
சாலவும் நல்லது தான்.
   266
கால்களுக்கு இடையில் இருக்கும் குண்டலினியை மேலெழுப்பி தலையில், உச்சியில் அதாவது துரியத்தில் கலந்தால் அதுவே முக்தியாகும். அதுவே சிறப்பாகும்.

பொன்னொடு வெள்ளியி ரண்டும் பொருந்திடில்
அன்னவன் றாளதுவே யாம்.
   267
பொன்போல தக தகவென்று அக்கினியாக இருக்கும் குண்டலினி சக்தியானது மேலெழுந்து வந்து துரியத்தில் வெள்ளி போன்று பிரகாசிக்கும் ஜோதியுடன் கலக்க அதுவே ஞானமாகும். அதுவே முக்தி நிலையாகும்.

நின்ற வெழுத்துட னில்லா வெழுத்தினை
யொன்றுவிக் கிலொன் றேயுள.
    268
நின்றவெழுத்து:- நிறையவும் குறையவுமிலாது எப்பொழுதும் பன்னிரண்டு கலைகளுடன் கூடிய சூரியன். அக்கினி. சூரிய கலை.

நில்லாவெழுத்து = வளர்ந்து தேய்ந்து நின்ற சந்திரன். சந்திர கலை.

அக்கினி சந்திர கலையுடன் கூடினால், இரண்டும் ஐக்கியமாகி ஒப்பிலாத ஒன்றாகிய சிவமாகிவிடும்.

பேசா வெழுத்துடன் பேசுமெழுத்துறில்
ஆசான் பரநந்தி யாம்.
   269
பேசா மந்திரம்: மூலாதாரச் சக்கரத்தினில் எண்ணத்தினை நிறுத்திக்கொண்டு பிராணனை நன்றாக உள்ளிழுக்கும்போது “ஸோ” என உள்ளே ஒலித்து, பின் அப்பிராணனை கும்பித்து நிறுத்தும்போது அது “ம்” அதாவது “ஹம்” என உள்ளே ஒலிக்கும், இதுவே “ஸோஹம்” அல்லது சிவோஹம் என உள் ஒலிக்கும் மந்திரமாகும். இதுவே “அசபை” மந்திரமாகும். இதனை “ஹம்ஸ மந்திரம்” அல்லது வாயினால் உச்சரிக்காத மந்திரமாகையால் “ஊமை மந்திரம்” எனவும் அழைப்பர். பேசா எழுந்து. பேசா மந்திரம்.

பேசும் மந்திரம்: பிங்கலைக்கு உரிய எழுத்து அகரம் “அ “; இடகலைக்கு உரியது உகரம் “உ”; சுழுமுனைக்கு உரிய எழுத்து மகரம் “ம்”. ஆகும். அடி வயிற்றிலிருந்து நன்றாக உள்நோக்கி இழுத்து நிறுத்தும்போது உள்ளே அ + உ + ம் = “ஓம்” என ஒலிக்கும். ஒப்பற்ற (ஓங்கார) ஓரெழுத்து மந்திரமாகும். இதுவே பேசும் மந்திரமாகும். பேசும் எழுத்தாகும்.

சாதனையின்போது மூச்சை உள்ளே இழுத்துத் தம்பிடித்து நிறுத்த குண்டலினி சக்தியானது வெப்பமடைந்து கிளர்ந்தெழும். அப்போது பிராணனை உள்ளே கும்பித்து வைத்திருப்பதனால் (அங்கு உள்ளே கும்பித்து வைத்திருக்கும் காற்றின் உந்து சக்தியினால்) மூலாதாரத்தில் இருந்து எழும் நாடிகளான இடகலை, பிங்கலை நாடிகள் அடைபட்டுப்போக சுழுமுனை வழியாக கொதித்தெழுந்த குண்டலினி சக்தியானது மேலெழுந்து சென்று துரியத்தில் கலக்கும். நந்தியாகிய (நம்+தீ) சிவம் வெளியுற்று, குருவாய் நின்று விளக்கும்.

அழியா வுயிரை யவனுடன் வைக்கில்
பழியான தொன்றில்லை பார். 
  270
அழிவில்லாத ஆன்மாவை சிந்தையில் சிவனுடன் கலந்தால் அப்பழுக்கில்லாத பேரானந்தம் மரணமில்லாப் பெருவாழ்வு கிட்டும்.

28. ஞானம் பிரியாமை

பிறந்திட மாலிடம் பேரா திருப்பின்
இறந்திடம் வன்னி யிடம்.
   271
திருமால் வாழும் மணிபூரகம், மூலதரச் சக்கரங்கள் திறக்காமலிருப்பின் அதாவது யோகத்தின் மூலமாக குடலினி சக்தியானது மேலெழுந்து வந்து அந்த ஜோதியுடன் கலக்காது போனால், மீண்டு நாம் இறந்து பிறக்கவேண்டும். நாம் இறந்தபின் உடலானது அக்கினியில் எரிக்கப்படும்.

சாகா திருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு
.   272
இறவாது தடுக்கும் ஆற்றல் மௌனமாகும். எனவே மனதை அடக்கி எப்போதும் மௌனமாக அதிலேயே லயித்து இரு. யோகப் பயிற்சியில் மௌனமும் ஒரு அங்கமாகும்.

வெளியில் விளைந்த விளைவின் கனிதான்
ஒளியி லொளியா யுறும்.
   273
மூலாக்கினி மேலெழுந்து துரியம் தண்டி பரவெளியில் ஜோதியுடன் கலக்கும் நிலையே ஞான ஒளியாகும். அதுவே ஞான நிலையாகும்.

மறவா நினையா மவுனத் திருக்கில்
பிறவா ரிறவார் பினை.
   274
நினைப்பு மறப்பற்று, விருப்பு வெறுப்பற்று, தன்னை மறந்து மௌன நிலையில் தியானித்து இருப்போர்க்கு ஞானவினை ஆற்றியவனுக்கு பிறப்பு, இறப்பு கிடையாது.

குருவாம் பரநந்தி கூடல் குறித்தாங்
கிருபோது நீங்கா திரு
.   275
சிந்தையில் நந்தியின் குருவாம் சிவத்துடன் கலந்து பிரியாதிரு.

சுந்திரச் சோதி துலங்கு மிடமது
மந்திரச் சக்கரமு மாம்.
   276
அழகு பொருந்திய சோதியானது, துலங்கும் இடமது, அதாவது உச்சியே, அந்தத் துரியச் சக்கரம் விளங்குகின்ற இடமே, ஓம் எனும் மந்திரம் உழலும் இடமாம்.

தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது
பாராப் பராபரம் பார்.
   277
ஞானத் தேடலில் இல்லாதோருக்கு பரம்பொருளானது பார்க்க முடியாத தூரத்திலும், தேடியவருக்கு மிக அருகிலும் இருக்கிறான் இதனை விழக்கமுடியாது நீயே அதனைக் கண்டு அறிந்து கலந்துகொள்.

ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன்
நீரொளி மீது நிலை. 
  278
ஈரொளி அதாவது இரு ஒளிகள் இல்லை. அதாவது உனக்குள் ஒரு ஒளியும் வெளியில் ஒரு ஒளியும் இல்லை ஒளிகள் இரண்டறக் கலக்கும்போது. நீ ஒளிந்து சிவனாவாய்.

அந்தமு மாதியு மில்லா வரும்பொருள்
சுந்தர ஞானச் சுடர்.
   279
ஆதியும் அந்தமும் இல்லா, முதலும் முடிவுமற்ற அருமைப் பொருளாம் கருத்தில் உதிக்கும் ஞானச் சுடர்.

இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து
பதிவைத் தனன்குரு பார்.
   280
இதுதான் முத்திக்கு வழியென ஏட்டில் எழுதி குருவாகிய நான் உனக்கு விளக்கியிருக்கிறேன் என்று ஒளவை கூறுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். குருவாகிய இறைவன் கூறுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். அதைப் படித்துப் புரிந்துகொள்.

29. மெய்நெறி

செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ்
சொல்லு மவுனத் தொழில். 
  281
தியானத்தினால் ஞானவினையினால் இறந்தகாலம் நிகழ் காலம் எதிர்காலம் ஆகிய முக்காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.

பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து
துஞ்சாது ஞானச் சுடர்
.   282
மூலாக்கினியை எழுப்பி சிவனுடன் இணைத்துவிட்டால், பஞ்சில் பட்ட நெருப்பு போல அறிவுச் சுடரொளியானது பரவி, உறங்காது ஒளி வீசிக்கொண்டிருக்கும். எல்லோருக்கும் எப்போதும் பயன்படும் அவர்களது ஞான அறிவு.

இமைப்பிற் பரந்தங் கொடுங்கு மின்போல்
நமக்குட் சிவன்செயல் நாடு.
   283
இமைகொட்டும் நேரத்திற்குள் தோன்றி மறையும் மின்னலைப்போல், சிவனும் நம்முள் தோன்றி மறைந்து அருள்புரிவான்.

குவித்து மனத்தைக் குவித்துள்ளே யோங்கில்
செவித்துப் பெறுவ தெவன்.
   284
மனத்தைக் கட்டுப்படுத்தி, ஒருநிலைப்படுத்தி உள்ளே செலுத்தி மேலேற்றி நிற்க அதைவிட மேலான நிலை என்று எதுவும் இல்லை. செபித்து அதாவது பூசை செய்து மந்திரம் ஓதி இந்நிலையை அடைய முடியாது.

காலுந் தலையு மொன்றாகக் கலந்திடம்
நாலா நிலையென நாடு.
   285
கால்களுக்கு இடையில் இருந்த எழும் குண்டலினி சக்தியும் குண்டலினி ஒளியும், பிரபஞ்ச ஒளியும் ஒன்றாகக் கலக்குமிடம் உச்சியின் துரியம் ஆகும். அதுவே உயர்ந்த நிலையாகும்.

மூல நிலமிசை மூன்றா நிலத்தினில்
ஆல மருந்துஞ் சிவம்
.   286
மூலத்தில் இருக்கும் மண் தத்துவமாகிய மூலாதாராத்தில் இருக்கும் குண்டலினி சக்தியானது, மூன்றாவது நிலமாகிய சந்திர மண்டலத்தினை அடையும்போது அதாவது துரியத்தினை அடைந்து பரவொளியுடன் கலக்கும்போது அங்கு நீல கண்டனாகிய சிவன் தென்படுவான்.

எழுஞ்சுட ருச்சியின் மேன்மனம் வைக்கத்
தொழிலொன் றிலாத சுடர்.
   287
புரிவமத்தியில்த் தோன்றும் செஞ்சுடர்மேல் நினைவை வைக்க அது காலவரையின்றி அவ்வொளியுடன் அந்த சிவத்துடன் லயித்திருக்கும்.

அடைத்திட்ட வாசலின் மேன்மனம் வைத்துப்
படைத்தவன் தன்னையே பார்
.   288
இவ்வுடலுடன் வெளியுலகத் தொடர்பை அடைத்து வைத்திருக்கும் வாசல் துரிய சக்கரமாகும். அதன் மேல் உன் சிந்தையைச் செலுத்தி உன்னைப் படைத்த அந்த சிவனைக் கண்டுகொள்.

அறுபதொ டாறு வருட மிதனை
உறுதிய தாக யுணர்.
   289
இவ்விடயங்களை யெல்லாம் அறுபத்தாறு வருடம் வரைக்கும் ஆராய வேண்டும். அதாவது அறுபத்தாறு வருட தீவிர தேடலினாலேயே இச் சூக்குமங்களை அறிந்து உணர்ந்து கொள்ளமுடியும்.

அட்டமா சித்தி யடையுமோ ராண்டினில்
இட்ட மிதனைத் தெளி.
 290
ஞானம் கிட்டி அட்டமாசித்திகளை அடையும் காலத்தில் இதனை நீ புரிந்து கொள்வாய்.

30. துரிய தரிசனம்

வன்னிய தெட்டு மதியம் பதினாறு
முன்னிய பன்னிரண்டு முள்
.   291
அக்கினி மண்டலம் (வன்னி \ தீ) 08 கலைகள், சூரிய மணடலம் – 12 கலைகள், சந்திர மண்டலம் (மதியம் \ குளுமை) – 16 கலைகள் உள்ளன (கலைகள் என்பது நாடிகளைக் குறிக்கும்).

சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம்
பாருமி னீது பயன்
.   292
சூரியனோடு அக்கினி கலந்தபின் சந்திரன் உதிப்பான். அந்த ஆனந்தத்தினை நீங்களே உணர்ந்து அறிக. அதாவது அக்கினி மண்டலத்திலிருக்கும் குண்டலினியானது மேலெழுந்து சூரிய மண்டலத்தினைக் கடந்து சந்திர மண்டலத்தினை அதாவது துரியத்தினை அடையும்போது அங்கு பேரானந்தம் உண்டாகும்.

மதியொடு வன்னியொன் றாகவே வந்தால்
கதிரவ னாமென்று காண்
.   293
சந்திரனோடு அக்கினி ஒன்றாய்க் கலந்து வெளிப்படில் சூரியன் அதாவது சிவன் அந்த ஆதி ஜோதி தானாக வெளிப்படுவான். குண்டலினியானது மேலெழுந்து சந்திர மண்டலத்தினை அதாவது துரியத்தினை அடையும்போது சிவ ஜோதி தென்படும்.

மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில்
உதிக்குமாம் பூரணைச் சொல்.
   294
சந்திரனோடு சூரியன் ஒன்றாய்க் கலக்கும்போது அங்கு பூரண நிலவு போன்ற ஒளிவட்டம் தோன்றும். குண்டலினியானது மேலெழுந்து சந்திர மண்டலத்தினை அதாவது துரியத்தினை அடையும்போது அங்கு பூரண நிலவு போன்ற பிரகாசமான ஒளிவட்டம் தோன்றும்.

தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில்
சாற்று மமாவாசை தான்.
   295
சிந்தையில் கதிரவன் போல பேரொளி தோன்றி மனதிலுள்ள அம்மாவாசை போன்ற மாய இருளை அகற்றும். அறியாமை அகலும்.

வன்னி கதிரவன் கூடிடி லத்தகை
பின்னிவை யாகு மெலாம். 
  296
அக்கினியும், கதிரவனும், கூடிடில் அதாவது இணையும்போது வரும் ஞானம் அறியாமையைப் போக்கும்.

அமாவாசை பூரணை யாகு மவர்க்குச்
சமனா முயிருடம்பு தான்.
   297
அக்கினி, சந்திரனுடன் அதாவது துரியத்தில் இணையும்போது வரும் ஞானம் பிறவிப் பிணியைப் போக்கும்.

அண்டத் திலுமிந்த வாறென் றறிந்திடு
பிண்டத் திலுமதுவே பேசு.
   298
அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் உண்டாம். அண்டத்தில் அதாவது வெளியில் எப்படி நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்கள் உண்டோ அப்படியே இந்த உடலிலும் அவை உண்டு.

ஏறு மதிய மிறங்கிடி லுறங்கிடும்
கூறுமப் பூரணை கொள்.
   299
சிந்தையில் தோன்றும் பூரண நிலவுபோன்ற ஒளி வட்டமானது அந்த சிவ ஜோதியானது நீ கவனமில்லா திருந்தால் மறைந்துவிடும். எனவே எப்போதும் அந்த ஜோதியுடன் கலந்திரு.

உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில்
மதிக்கு மமாவாசை யாம்.
   300
சிந்தையில் தோன்றும் பூரண நிலவுபோன்ற ஒளி வட்டமானது அந்த சிவ ஜோதியுடன் கலந்துவிட எண்ணம் அதாவது மனம் அற்றுப் போய்விடும்.

31. உயர்ஞான தரிசனம்

கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப்
பிண்டமு மூழி பிரியா.
   301
அக்கினி, சூரிய சந்திர கலைகள் (மண்டலங்கள்) ஊடக குண்டலினியை துரியத்துக்குக் செலுத்தி துரியத்தில் சிவவொளியுடன் கலக்க உடல் அழியாத தன்னமை பெறும்.

வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத்
தள்ளுமின் கால சரம்
.   302
திங்கள், புதன், வெள்ளி, இக்கிழமைகளில் சந்திரநாடியில் (இடகலை வழியாக) சுவாசத்தினைச் செலுத்தி யோகம் செய்ய. ஆயுள் அதிகரிக்கும்.

செவ்வாய் சனிநா யிறுவல மாகவே
கொள்ளிலிவ் வாறிடரு மில்
.   303
செவ்வாய், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், சூரிய கலையில் (இடகலை) சுவாசத்தினைச் செலுத்தி யோகம் செய்ய இடறொன்றும் வராது.

வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம்
வளர்பிறை யென்றே மதி
.   304
வளர்பிறையில் சந்திர கலையிலும் (இடகலை) தேய்பிறைக் காலத்தில் சூரியகலையிலும் (இடகலை), சுவாசத்தினைச் செலுத்தி யோகம் செய்ய இரண்டுமே யோகத்தைக் கொடுக்கும்.

வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு
செலுத்துபே ராது செயல்
.   305
சனிக்கிழமைகளில் இரவு பகலாக சூரியகலையில் (இடகலை), சுவாசத்தினைச் செலுத்தி யோகம் செய்ய யோகம் கிட்டும்.

இயங்கும் பகல்வலமி ராவிடம் வாயு
தயங்குறல் நாடிக்குட் டான்.
   306
வாயுவானது பகலில் சூரியகலை (பிங்கலை) மூலமாகவும் வலமாகவும், இரவில் இடமாகவும் சந்திர கலை மூலமாகவும் இயக்கம் நடக்கும்.

அரசறி யாம லவன்பே ருறைந்துத்
தரைதனை யாண்ட சமன்.
   307
அரசன் தன் உருவத்தை வெளிப்படுத்தாது தனது பெயரைச் சொல்லி நாட்டை அரசாளுவது போலத்தான், ஞானவினை புரிதலும்.

கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச்
செல்லாத தென்ன செயல்.
   308
யோகம் படிக்காத (ஞானம் புரியாத) மூடர்கள் திருவுருவை அடையவேண்டி, புண்ணிய காரியங்கள் என்று சொல்லப்படும் காரியங்களைச் செய்தால், இறை பதத்தை அடைய இயலாது. யோகப் பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டால்தான் இறைப்பதம் கிட்டும்.

திருவருட் பாலைத் தெரிந்து தெளியில்
குருவிருப் பாமென்று கொள்
.   309
ஞானத்தின் உட்கருத்தை அறிந்து, தெளியும் நிலையில், உன்னுடன் ஒரு குரு இருந்து கொண்டிருப்பார். குருவின் வழிகாட்டுதலுடனேயே ஞானத்தினை அடைய முடியும்.

கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற
நிற்கில் பரமவை வீடு.
   310
ஞான நூல்களைப் படித்து, அறிந்து, தெளிந்து ஞான சிந்தனையுடன் ஞானவினை ஆற்றினால், வீடுபேறு என்றழைக்கப்படும் சிவனுடன் கலக்கலாம்.

— ஞானக்குறள் முற்றும் —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக