நெடுநல்வாடை-மூலமும் எளிய உரையும்

நெடுநல்வாடை-மூலமும் எளிய உரையும்

அறிமுகம்

பழந்தமிழகத்தில் மூன்று சங்கங்கள் இருந்து தமிழை வளர்த்ததாக அறிகிறோம்.அதில் முதல் சங்கம் கடல் கொண்ட மதுரையிலும், இடைச்சங்கம் கபாட புரத்திலும், கடைச்சங்கம் இன்றைய மதுரையிலும் இருந்ததாகக் கொள்கின்றனர். முச்சங்கம் குறித்த செய்திகள் பற்றி வேறுபட்ட கருத்துகள் நிலவும் போதிலும், மதுரையில் புலவர்கள் கூடி தமிழாய்ந்த நிலையினைப் பத்துப்பாட்டு – எட்டுத்தொகைகளில் வரும் குறிப்புகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.‘தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மருகின் மதுரை’ (சிறுபா 84 – 762)

தொல்லாணை நல்லாசிரியர்
புணர் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் (மதுரை 761- 762)

எனவரும் அடிகள் மதுரையில் தமிழ் நிலைபெற்று விளங்கியது என்பதை அறியத் தருகின்றன. கடைச்சங்க நூல்களாகக் கருதப்படும் பத்துப்பாட்டும், எட்டுத் தொகையும் இன்று நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களில் பழமையானவை. இப்பாடல்களில் இடம்பெற்றுள்ள மன்னர்களும், அவர்தம் வரலாற்றுப் பின்னணியும் நோக்க, இப்பாடல்களில் பல, கி.பி. முதல் நூற்றாண்டிற்கு முன்னரே எழுந்திருக்க வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றன.

பத்துப்பாட்டு நூல்கள்
முருகு, பொருநாறு, பாணிரண்டு, முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி, பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
பத்துப்பாட்டுகளும் தனித்தனியான நீண்ட பாடல்களே.ஒவ்வொன்றும் வெவ்வேறு சூழ்நிலையில் வெவ்வேறு காலத்தில் எழுந்தவையே. இந்தப் பத்துப்பாட்டிற்குள், ஐந்து நூல்கள் ஆற்றுப்படை (வழிப்படுத்தும்) நூல்கள்,பழந்தமிழர்களின் செம்மாந்த பண்பினைச் செப்பிடும் நூல்கள்.திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தர் ஆற்றுப்படை) என்பன அவை. முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை ஆகிய நான்கும் அகப்பொருளன. மதுரைக் காஞ்சி புறப்பொருள் பற்றியது.
எட்டுத்தொகை
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் எனும்
இத்திறத்த எட்டுத்தொகை..
மேற்கூறப்பெற்ற எட்டு நூல்களில்,நற்றிணை, குறுந்தொகை,ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்ற ஐந்து நூல்களும் அகம் பற்றியன. பதிற்றுப்பத்து, புறநானூறு என்ற இரு நூல்களும் அகமும் புறமும் கூறுவன.
அகமும் புறமும்
காதலும் வீரமுமே சங்கப்பாடல்கள். வீட்டையும் நாட்டையும் போற்றிய தமிழ் மக்களின் உணர்வுகளால் பின்னப்பட்ட சொல்வலைக் களஞ்சியமே சங்கப்பாடல்கள். வீட்டைப் பேணும் இனிய காதல் வாழ்வும்,நாடு காத்திட நற்போர் வாழ்வும் மேற்கொண்டு செம்மாந்து வாழ்ந்த தமிழ்க் குடிகளின் வாழ்க்கைப் பின்னணியைக் காண்போம்.
அகவாழ்வு
அன்புடை இல்வாழ்வு மேற்கொண்டமையால், ஐந்நில ஒழுக்கங்களும் (குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல், பாலை) ‘அன்பின் ஐந்திணை’ என்றே போற்றப்பட்டன.
‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்’(தொல். களவியல். 89)

பொருள் சேர்த்தலும், அறன் செய்தலும், அன்போடு இல்வாழ்வு நடத்துதலும் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, பண்டைத் தமிழர் அன்புடை அக வாழ்வை நடத்தினர். அன்பின் ஐந்திணையோடு ஒருதலைக் காதலையும் (கைக்கிளை),பொருந்தாக் காதலையும் (பெருந்திணை) சேர்த்து, காதல் ஒழுக்கங்களை ஏழாக வகைப் படுத்தியிருப்பர் தொல்காப்பியர்.
‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப’
இவற்றுள் கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் தனியான நிலம் கிடையாது. அதிலும்,
‘நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே’ (தொல். பொருள்.2)
என்று குறிஞ்சி ,முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐந்தனுள் நடுவாக இருக்கும் பாலை, நான்கு நிலங்களுக்கும் பொதுவானது என்பர். 
                ஐவகை நிலத்துள் நால்வகை நிலமே,தனித்தனி சிறப்புடையன. அதனால் நானிலம் என்றனர். மலையும் காடும் வறட்சியுறுங்கால் பாலையானது. இந்நிலவழி, பிற நில மக்களின் பயணத்திற்குப் பயன்பட்டதால் இது பிரிவினைப் பாடுதற்குரிய நிலமாயிற்று.மலை, கடல். வயல். காடு. வறட்சியான நிலம் போன்ற இயற்கை அமைப்புச் சூழலுக்கேற்ப, மக்களின் வாழ்க்கை முறையும், பண்பாடும், உணவு முறைகளும், பொழுதுபோக்குகளும், கலைகளும், விழாக்களும் அமைந்திருந்தன. தனித்த இயல்பினவாய் அந்தந்த நிலத்திற்கு உரியனவாய் அவை வளர்ந்தன, வாழ்ந்தன. நில அடிப்படையில் மக்களின் உடலியற் கூறுகளும், உளவியற் கூறுகளும் அமைந்து திணை இலக்கியம் என, நில வழிப்பட்ட இலக்கியமாய் தமிழிலக்கியம் தோன்றியது.
               ஒவ்வொரு நில அமைப்பிற்கும் ஏற்ப திணை வகுத்து,முதல் பொருள் (நிலமும் பொழுதும்) கருப்பொருள் ( தெய்வம், உணவு,மக்கள்,விலங்கு, பூ, மரம், பறவை, ஊர், நீர், யாழ், பண், தொழில் போன்றன) உரிப்பொருள் (காதல் நிகழ்வு) அமையப் பகுத்துரைத்துள்ளனர். தமிழர் தம் காதல் வாழ்வைப் பாடும் புலவர்கள், இன்ன நிலத்தில்,இன்ன பொழுதில்,இன்ன பொருட்களைச் சூழ்நிலையாக வைத்து, உரிப்பொருளின் உயிர் நாடியாகிய காதல் நிகழ்வைப் பாடுவர். இவ்வாறு பாடுகின்ற போது, முதலும், கருவும் கூட ஒன்று வரலாம்; வராமலும் போகலாம். ஆனால் உரிப்பொருள் கட்டாயம் வருதல் வேண்டும் என்பர்.
நுவலுங் காலை முறைசிறந் தனவே
முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
பாடலுட் பயின்றவை நாடுங்காலை. (தொல்.பொருள். 3)
இப்படி, தொல்காப்பியர் காலத்துக்கு முன்னர் எழுந்த செய்யுட்களை வைத்து இந்தப் பகுப்பினை அவர் அமைத்துள்ளமை தெளிவாகிறது. தமிழ் அக இலக்கியத்தில் வாழ்க்கைச் சுவையினை உணர்ந்து, மலை(குறிஞ்சி) நிலத்துக்குப் புணர்தலும், காட்டுப் (முல்லை) பகுதிக்கு இருத்தலும்,பாலை நிலத்துக்குப் பிரிதலும்,மருத (வயல்) நிலத்துக்கு ஊடலும், நெய்தலுக்கு (கடல்) இரங்கலும் என ஒவ்வொரு நிலமும் அதன் பின்னணியில் நிகழும் மக்களின் உணர்வுகளைச் சொல்லும் சொல்லோவியகளாகத் திகழ்கின்றன. (அகத்திணைக்குரிய முதல், கரு ,உரிப்பொருள் குறித்த அட்டவணையைப் பின்னிணைப்பில் காண்க) அந்தந்த நிலத்துக் கிடைக்கும் பூக்களாலே அத்திணையின் பெயரையும் அமைத்துள்ளமை, ஈராயிரம் ஆண்டிற்கு முன்னரே தமிழர் தெளிந்த சிந்தனையுடையராய் இருந்தமையினையே காட்டுகிறது. இவ்வாறு படைக்கப்படும் காதல் காட்சிகளில் யார் ஒருவர் பெயரும் குறிப்பிடப்படுவதில்லை. அப்பொழுதுதான் பாடலைப் படிக்கின்ற ஒவ்வொருவரும் அந்தப் பாடலைத் தனக்குரியதாகக் கொண்டு சுவைக்க முடியும் என அமைத்துள்ளனர்.
‘மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர்’ (1000)
என்று தொல்காப்பிய நூற்பா நுவலுவது போல் சங்க இலக்கியம்,பெரிதும் மக்கள் இலக்கியமாகவே விளங்குகிறது. எனினும் ஐந்திணை நெறியாகப் படைத்துக் காட்டப்பட்டுள்ள காதல் மக்களிடம் உள்ளதா என்ற ஐயம் தோன்றலாம்.
அகத்திணைப் புலவர் படைத்திருப்பன வாழ்க்கைக் காதலா? படைப்புக் காதலா என்ற வினா எழலாம். மக்கள் வாழ்க்கையை அப்படியே சொன்னால் சுவை பயக்காது என்பதை அறிவர் புலவோர். ஆதலின் சுவைப்படப் புனைந்து கூறி, கற்பனையும் உண்மையும் கலந்து தருவர். எனவே இவை பொய்யும் அல்ல; மெய்யும் அல்ல என்பதே தொல்காப்பியரின் கருத்து.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனற வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு வகையினும்
உரிய தாகும் என்மனார் புலவர்.
மக்களின் இயல்பான வாழ்க்கையாகிய உலகியல் வழக்கும், புலவர்களால் புனைந்து பாடப்பெறும் நாடக வழக்கும் என இவ்விரு வழக்கும் கலந்து கலிப்பா, பரிபாடலில் அக இலக்கியம் பாடுவதே செய்யுள் வழக்கு இதுவே அகத்திணை வழக்கு.


புறத்திணை
அறம்,பொருள்,வீடு, கல்வி, வீரம்,புகழ், கொடை போன்ற புறவாருவுச் செய்திகளைக் கூறவதைத் தமிழர் புறத்திணையுள் அடக்குவர்.
தொல்காப்பியர் புறத்திணை ஏழு என்பர். வெட்சி, வஞ்சி,உழிஞை,தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவே அவை.
போர் செய்யும் வீரர்கள் தாங்கள் சூடியிருக்கும் பூவை வைத்து, போர் முறையை அறிவித்தனர். வெட்சிப்பூவைச் சூடியிருத்தல் நிரை கவர்தல்; பகைவர் நாட்டைக் கைப்பற்றப் போரெடுத்துச் செல்லுதல் வஞ்சி; மதிலை முற்றுகையிடுதல், உழிஞை; இரு பெரு வேந்தரும் களத்தில் போரிடுதல் தும்பை; வெற்றி பெறுதல் வாகை ; வெற்றிக்குப் பின் நிலையாமையை உணர்தல் காஞ்சி; மன்னனின் புகழ், கொடை, வீரம், இரக்கம் ஆகியவற்றைப் பாடுதல் பாடாண். எனப் புறத்திணை ஏழும் வரையறுக்கப்பட்டடுள்ளன. அகத்திணை ஐந்தும் பூக்களால் பெயர் பெற்று இயற்கைப் பின்னணியில் அமைந்திருப்பது போல, புறத்திணையிலும் இயற்கையை மதித்த உணர்வு வியப்பைத் தருகிறது.
அகமும் புறமும் இணைந்து, சொல் வளமையும் இனிமையும், கருத்துச் செறிவும் உடையனவாய்த் திகழ்வன சங்க இலக்கியங்கள்!

அகத்திணைக்கான முதல்,முதல்,கரு, உரிப்பொருள்கள்
அன்பின் ஐந்திணைக்கான முதற்பொருள் நிலமும் பொழுதும் என இரு வகைப்படும்.
நிலம்
குறிஞ்சி மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை காடும் காட்டைச் சார்ந்த இடமும்
மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை வறண்ட மணலும் மணல் சார்ந்த இடமும்,
பொழுது -பெரும்பொழுது ஆறு வகைப்படும்

கார்காலம்- ஆவணி,புரட்டாசி
குளிர் காலம்- ஐப்பசி,கார்த்திகை
முன்பனிக்காலம்- மார்கழி, தை
பின்பனிக்காலம் - மாசி,பங்குனி
இளவேனிற்காலம்- சித்திரை,வைகாசி
முதுவேனிற் காலம்- ஆனி,ஆடி
சிறுபொழுது ஆறு வகைப்படும்
காலை- காலை 6 மணிமுதல் 10 மணிவரை
நண்பகல்- 10 மணிமுதல் 2மணிவரை
எற்பாடு- மதியம் 2 மணிமுதல் 6 மணிவரை (எற் பாகு எல் –
கதிரவன் பாடு – சாயும் நேரம் (மறையும் நேரம்)
மாலை -6 மணி முதல் இரவு 2 மணி வரை
யாமம் -இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை
வைகறை- இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
திணையும் அதற்குரிய பொழுதும்
திணை- பெரும்பொழுது -சிறுபொழுது
குறிஞ்சி -குளிர்காலம்,முன்பனிக்காலம்- யாமம்
முல்லை- கார்காலம்- மாலை
மருதம் -ஆறுபெரும் பொழுதுகளும்- வைகறை
நெய்தல் -ஆறுபெரும் பொழுதுகளும்- எற்பாடு
பாலை- இளவேனில், முதுவேனில்,பின்பனி- நண்பகல்

கருப்பொருள் ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தெய்வம் தொழில், மக்கள்,பறவை,விலங்கு, ஊர்,நீர்,பூ, மரம், உணவு, பண் முதலியன

உரிப்பொருள்
ஒவ்வொரு திணைக்கும் உரித்தான,உயிரான பொருள் உரிப்பொருள். கருப்பொருளாக ஒரு நிலத்திற்குக் கூறுவன கூட மற்றொரு நிலத்திற்கு வரலாம் அவ்வாறு வருவது திணை மயக்கம் எனவும்,
‘திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே’
(தொல், பொருள்,12)
என்கிறது தொல்காப்பியம். ஆனால் உரிப்பொருள் மயங்குதல் இல்லை என்பதை,
‘உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே’
(தொல். அகத். 15)
என்கிறார் தொல்காப்பியர்.உரிப்பொருளாவன

குறிஞ்சி : புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
முல்லை : இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
பாலை : பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
மருதம் : ஊடலும் ஊடல் நிமித்தமும்
நெய்தல் : இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
நிலத்தை ஒட்டி உடலும் மனமும் இயங்குகின்ற இயல்புத்தன்மையின ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பகுத்து வைத்த தமிழரின் பட்டநிவினை நோக்க இறும்பூது ஏற்படுகிறதன்றோ?.

பொருட்சுருக்கம்
காதலும் கடமையும் கொஞ்சி விளையாடும் கவினுறு இலக்கியப் பனுவல் நெடுநல்வாடை. முல்லைப்பாட்டில் தலைவன் தேரேறி வரும் இனிய முடிவு இருந்தது. நெடுநல்வாடையிலோ,இருத்தலின் இன்பம் முடியா நிலையில், விரைவில் தலைவியின் தனிமைத்துயர் மடிய தலைவன் வருவான் என்பதைப்போர் முடிந்த காட்சியாக்கிக் குறிப்பாக உணர வைத்துள்ளார் நக்கீரர்.
மழை பெய்து கொண்டே இருக்கிறது. அம்மழை வெள்ளத்தை வெறுத்த கோவலர் தம் ஆநிரையை வேற்றிடத்திற்கு இட்டு சென்றனர். அவர்கள அணிந்தள்ள செங்காந்தள் மலராலான மாலையில் விழுந்த மழைநீர்த் துளிகள் மேனியில் தெறிக்க பெரும் குளிரால் பெரிதும் வாடினர்; மேனியின் குளிரைத் தணிவிக்க கைகளை நெருப்பில் காட்டிச் சூடேற்றினர். என்றாலும் கன்னங்கள் புடைத்து நடுங்குமாறு குளிர் இருந்தது. குரங்குகள் கூனிக் குறுகின; பறவைகள் மரங்களிலிருந்து வீழ்ந்தன; ஆவும் பால் கொடுக்க மறுத்து கன்றுகளை உதைத்தன. குன்றையே குளிர்விப்பது போல் அமைந்த இக்குளிர்காலத்தில் முசுண்டையும் பீர்க்கமும் மலர்ந்திருந்தன. நீர் வரவில் மீன் வரவு பார்த்து நின்றன கொக்குகளும் நாரைகளும்.நெல்லும் பாக்கும செழித்து வளர்ந்திருந்தன. சோலை மரங்களிலிருந்து மழை நீர் சொட்டு சொட்டாக வீழ்ந்தன.
மழை நீங்கிய வெண்மேகம் என்றாலும் நீங்காத சிறு சிறு நீர்த் திவலைகளைத் தூவி க கொண்டிருந்தது வானம். மழைத்தளிகள் தன்மேல் விழுவதையும் பொருட்படுத்தாது கள் குடித்த மனிதர்கள் தெருக்களில் சுற்றித் திரிந்தனர். இரவு எது,பகல் எது என்று அறிய முடியாத வேளையில் முல்லையின் அரும்பு மலர்வதைப் பார்த்த மகளிர்,மாலை நேரம் என்று உணர்ந்து நெல்லும் மலரும் தூவி தெய்வத்தை வழிபட்டனர்.
வீட்டில் வாழும புறாக்களும் இரை தேட மனமின்றி, கொடுங்கை தாங்கும் பலகையில் காலை மாற்றி மாற்றி வைத்து நின்று கொண்டிருந்தன. பெண்கள் சந்தனமும் நாடவில்லை; பூ மாலையும் சூடவில்லை ; பலகணியிலும் நடக்கவில்லை. மாறாக அவர்களுக்கு அகிலும்,சின்மலரும்,தாழிட்ட சாளரமும் குளிருக்கு இதமாயின. தண்ணீரை வெறுத்தனர்; நெருப்பினை விரும்பினர்.குளிரால் மாறுபட்ட யாழின் குரலை, மார்பின் சூட்டால் நிலை நிறுத்தினர் ஆடல் மகளிர்.
குளிரின் கொடுமை ஒருபுறம்; தலைவன் வாராத் துயர்ம் மறுபுறம்; தவிக்கின்றாள் தலைவி.
மலைபோல் விளங்கும் அரண்மனை; புது மணல் பரப்பப்பட்ட முற்றம்; கவரிமானும் ,அன்னமும் விளையாடும் முன்பகுதி ; குதிரையின் தனிமைக் குரலும் மயிலின் அகவலும்,நீர் விழும் ஓரையுமெனப் பல்லொலி முழங்கும் பாங்கான அரண்மனை ; அங்கே பாவை விளக்கின் வெளிச்சத்தைத் தாங்கிய அந்தப்புரம்; அவ்விடத்தில் ஒப்பனைச் செய்யப்பட்ட கட்டிலிலே,ஒப்பனைச் செய்யா ஓவியமாக விளங்கினாள் தலைவி.தலைவியின் அடி வருடித் தோழியரும், தேறுதல் மொழி சொல்லி செவிலியரும் உடனிருந்தாலும் தேறாத்தலைவி, கட்டிலின் மேல் விதானத்தில் தீட்டப்பட்ட திங்களோடு உரோகிணி சேர்ந்திருக்கும் இனிய காட்சியைக் கண்டுக் கடைக் கண்ணில் கூட்டிய கண்ணீர்த் துளிகளை விரலால் தெறித்தாள். இவ்வாறு வருந்தும் தலைவின் துயர் தீர,தலைவனின் பாசறைத் தொழில் இனிது இப்பொழுதே முடிக என்று தெய்வத்தை வேண்டினர் செவிலியர். இது இப்படியிருக்க,தலைவனோ பாசறைத் தொழிலில் மனம் ஒன்றியிருந்தான். போரில் யானைகளை வெட்டி வீழ்த்தின விழுப்பிண்னோடு வேதனையுறும் வீரர்களைப் பார்ப்பதற்குச் சென்றான் சில வீரர்களோடு. வாடைக்காற்று வீச அகல் விளக்குகள் தெற்கு நோக்கிச் சாய, அவ்வொளியில் வீரனொருவன் போர் வீரர்களைத் தலைவனுக்கு முறைப்படி காட்டி வந்தான். அவன் கையிலே வேல் ; வேலின் நுனியிலே வேப்பந்தழைதெருக்களிலே நடக்கின்றான் மன்னன்;அங்கே பெண் யானைகளும்,சேணம் களையா குதிரைகளும் நிற்கின்றன;அவை தன் மேல் விழுந்த மழைத்துளியைச் சிலிர்த்துச் சிதறின.
மன்னன் இடப்பக்கத்து ஆடையைச் சரி செய்து தழுவிக் கொண்டு, வலக்கையை வீரனின் தோளிலே வைத்துக் கொண்டு, விழுப்புண்பட்ட வீரர்களின் மனம் விரும்பும் வகையில் முகம் மலர நோக்கினான். மன்னன் மீது மழைத்துளி படாதவாறு வெண்கொற்றக்குடையும் பாதுகாத்தது. இப்படி பல பகை மன்னர்களோடும் கருத்து மாறுபட்டு செய்த போரில் புண்பட்டு வருந்திய வீரர்களை,மன்னன் சில வீரர்களின் துணையோடு இரவுப் பொழுதிலும் பார்த்து வந்தான். இதுதான் நெடுநல்வாடை தந்த அழகோவியம்.
புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவையின் துயர்தீர வழி என்ன? என்பதற்கு விறல் தந்து இனிதே முடிக என்று தம் விருப்பத்தைச் சொல்வதாக அமைத்த ஆசிரியர்,விறல் தந்ததா என்ற நம் ஆவலுக்கு விடை பகருவது போலப் போர்த்தொழில் நிறைவுற்றதற்கான அறிகுறிகளையும் காட்டி இருத்தலிலே இயங்குகின்ற தலையின் அரும் படர் தீர,தலைவன் வரும் இன்பச் செய்தி வராமலே,ஏன்? பாடலின் இறுதியிலே இன்பச்செய்தியை எதிர்பார்த்த நம்மையும் எதிர்பார்க்க வைத்து விரைவில் பணி முடிந்து தலைவன் வந்துவிடுவான் என்ற எதிர்பார்ப்போடு முடிக்கிறார். இருத்தலின் ஒழுக்கமும் அதுதானே? தலைவி மட்டுமல்ல.... படிக்கும் நம்மையும் எதிர்பார்த்தலோடு இருக்கச் செய்த நக்கீரர் கீரர்தான் ! செஞ்சொற்புலவர் பயந்த புதல்வரல்லவா?


நெடுநல்வாடை – தொகுப்புரை
மழையும் கோவலரும்
பொய்த்தலில்லாத வானம், வையகம் குளிருமாறு வலமாகச் சூழ்ந்து புது மழையினைப் பொழிந்தது. அம்மழைவெள்ளத்தை வெறுத்த வளைந்த கோலினைக் கையிலே வைத்துள்ள கோவலர்,தம் பசு, எருமை, ஆடு போன்ற நிரைக் கூட்டங்களை வேற்றிடத்திற்கு ஓட்டிச் சென்றனர்; புதிய இடம் என்பதால் வருத்தமுற்றனர்.கோவலர் கழுத்தில் அணிந்துள்ள செங்காந்தள் மலராலான மாலையில் இருந்து வீழும் மழைத்துளிகள், அவர்கள் மேனியில் படுதலால் பெரும்குளிரால் வாட்டமுற்றனர். மேனியின் குளிரைத் தணிவிக்க, பலரும் கூடி கைகளை நெருப்பில் காட்டிச் சூடேற்றினர் எனினும் இடையர்களின் கன்னங்கள் புடைத்து நடுங்குமாறு மழைக்காலத்துக் குளிரின் தன்னை இருந்தது.
கூதிர்காலத்தின் தன்மை
விலங்குகள் மேய்த்தலை மறந்தன; குரங்குகள் குளிரால் கூனிப் போயின; பறவைகள் குளிரால் நடுங்கி மரத்தின் மீதிருந்து கீழே வரும் கன்றுகளைத் தவிர்த்துக் கோபத்தோடு உதைத்துத் தள்ளின. இவ்வாறாகக் குன்றையே குளிர்விப்பது போல் குளிர்க் காலத்து நள்ளிரவு இருந்தது.
மழைக்காலத்தின் வளமை
தொன்மையான முசுண்டைக் கொடியின் பருத்த வெண்ணிறப் பூக்கள், பொன் போன்ற பீர்க்கம் பூக்களோடு புதர்கள்தொறும் மலர்ந்திருந்தன. பசுங்கால்களையும்,மென்மையான சிறகினையும் கொண்ட கொக்கின் கூட்டங்கள், கரு நிற வண்டல் மண் பரவிக் கிடக்கும் ஈரமான வெண்மணலில் செவ்வரி படர்ந்த நாரைகளோடு நின்று கொண்டிருந்தன. மழை நீரின் வேகம் குறைகின்றபோது, அந்நீரில் எதிர்த்து வரும் மீன்களை எந்தெந்த இடங்களிலிருந்து கவர முடியுமோ, அங்கே நின்று கொண்டு கவர்ந்தன. மழைத்துளிகளை மேலும் தூவுவதற்குக் கற்கும் விதமாகத் தூவிக் கொண்டே இருந்தன.
அகன்ற வயல்களில் நிறைவாக மழைப் பெய்ததினால்,செழித்து வளர்ந்த நெற்கதிர்கள் முற்றி வணங்கி நின்றன. நன்கு செழித்து வளர்ந்த பருத்த பாக்கு மரத்தின் நீலமணி போன்ற கழுத்துப் பகுதியிலுள்ள மடல்களில் காய்த்திருக்கும் பாக்குப் குலைகளின் உள்ளிருக்கும் நீர் வற்றி,பருத்து பசுமையான காய் இனிமையான காய்களாக முற்றின. மலையுச்சியில் பல்வேறு மலர்கள் பூத்திருக்கும் சோலையில் உள்ள மரக் கிளைகளின் குருத்துகளிள்ல இருந்து மழைத்துளிகள் இடையாறாது சொட்டிக் கொண்டேயிருந்தன.


தெருக்களில் சுற்றித் திரியும் முழுவலி மாக்கள்
மாடங்கள் உயர்ந்து விளங்கும் வளப்பமான மூதூரில் ஆறு கிடப்பது போல அகன்ற நீண்ட தெருக்கள்.அத்தெருக்களில் தழை மாலையணிந்து,பருத்த அழகிய வலிய தோள்களும் முறுக்குண்ட வலிமையான உடம்பும் பெற்ற மக்கள், கள்ளினை அதிகமாகக் குடித்து, மிகுந்த மகிழ்ச்சியோடு மழைத்துளி தம் மேனியில் விழுவதையும் பொருட்டுத்தாமல்,பகல் பொழுது கழிந்த பிறகும், தோளில் இரு பக்கமும் தொங்குகின்ற ஆடையோடு (துண்டு) விரும்பிய இடங்களிலெல்லாம் சுற்றித் திரிந்தனர்.


மகளிரின் மாலைக்கால வழிபாடு
வெண்மையான சங்கினால் செய்யப்பட்ட கைவளை அணிந்த முன்கையினை உடைய பெண்கள், மூங்கில் போன்ற தோளும், மென்மையான மேனியும் உடையவர்; முத்துப் போன்ற பல் உடையர்; காதணிக்குப் பொருத்தமான கண்களைப் பெற்றிருப்பவர் ; பெண்மைக்குரிய பேதைமைத் தன்மையுடைர்; இப்பெண்கள் பூந்தட்டில் வைத்திருந்த மலரும் பருவத்துப் பிச்சியின் அரும்புகள் இதழ் விரிந்தன. பிச்சியின் மலர்ச்சியைக் கண்டு பெண்கள் மாலைக் காலம் வந்து விட்டதை அறிந்தனர். இரும்பால் செய்யப்பட்ட விளக்கின் நுண்ணிய திரியினைக் கொளுத்தி, நெல்லுட்ம மலரும் தூவிக் கைத்தொழுது தெய்வத்தை வழிபட்டனர். இவ்வாறு வளமான அங்காடித் தெருவில் மாலைக்காலம் இருந்தது.


குளிர்கால நிகழ்வுகள்
புறாவின் நிலை
வீட்டில் வாழும சிவந்த கால்களையுடைய ஆண் புறாக்கள் தான் இன்புறும் பெண் புறாக்களோடு பொது இடங்களுக்குச் சென்று இரையைத் தேடி உண்ணவில்லை; எது பகல், எது இரவு என்று அறியாது செயலற்று கொடுங்கையைத் தாங்கும் பலகையிலே நின்றிருந்தன ; ஒரே இடத்தில் நிற்பதால் உண்டான கால் வலியைப் போக்கக் காலை மாற்றி மாற்றி வைத்தன.
மகளிர் நிலை
மகளில் அடர்ந்த கரிய கூந்தலில் பூமாலைகளைச் சூடார்; சிலவாகிய மலர்களையே சூடினர். குளிர்ச்சியைத் தரும் வாசனை மரத்தின் விறகில் நெருப்பை உண்டாக்கி,கரிய மர வைரமாகிய அகிலொடு, வெண்மையான அயிரையும் சேர்த்துப் புகைத்தனர்.
இயங்காத விசிறியும் தாழிட்ட சாளரமும்
கை வேலைப்பாடமைய அழகுபெற இருவாக்கப்பட்ட சிவந்த நிற விசிறியும் சிலந்தி நூல் பின்னப்பட்ட நிலையில் ஆணியில் தொங்கின. வானத்தைத் தீண்டுமாறு உயர்ந்து விளங்கும் மேல்மாடத்தில் தென்றல் வரும் பலகணியில் உலவுதலைத் தவிர்த்தனர்; பலகணியின் கதவுகளும் தாழிட்டுக் கிடந்தன.
விரும்பா தண்ணீர்,விரும்பிய நெருப்பு
கல்லென்ற ஓசையோடு சிறு தூறாலக மழைத்துளி தூவுவதால் எல்லோரும் குவிந்த வாயினையுடைய குடத்திலுள்ள குளிர்ந்த நீரைப் பருகவில்லை; அகன்ற வாயினையுடைய தூபமூட்டியில் நெருப்பின் வெம்மையை மிகுதியும் துய்த்தனர்.
திரிந்த யாழினைச் சீர்செய்யும் பெண்டிர்
குளிர்ச்சியால்வ மாறுபட்ட இனிய குரவினை எழுப்பும் யாழினை, ஆடல் தொழில் செய்யும் மகளிர் தம் மார்பகத்தின் வெப்பத்தில் தடவி பாடலை இசைப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றினார்.
காதலர் பிரிந்தோரை வாட்டும் கூதிர்
கணவரைப் பிரிந்த மகளிர் தனியே வருந்த, மழை மிகுதியாகி பனிக்காற்றும் நிலைபெற்றிருந்தது.

மன்னனின் மனை உருவாக்கப்பட்டுள்ள முறைமை
விரிந்த கதிர்களைப் பரப்பும் அகன்ற இடத்தையுடைய சூரியன் மேற்கு நோக்கி உயர்ந்து எழும நண்பகல் பொழுதில்,கட்டடக்கலை பற்றிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தோர், நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து, மனையின் பகுதிகள் அமைய வேண்டிய திசைகளைத் தெரிந்து, அத்திசைக்குரிய தெய்வங்களையும் கருத்தில் கொண்டு, பெரிய புகழினையுடைய மன்னர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அரண்மணை.
அரண்மனை வாயில்
அரண்மனையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி உயர்ந்த நிலையினையுடைய மதிலை அழைத்தனர். அம்மதில் அமைக்கப்பட்ட வாயில் நிலையோடு,பருத்த இரும்பால் இணைக்கப்பட்டிருந்த செம்மையான அரக்கு வண்ணம் பூசிய இரண்டாக அமைந்துள்ள கதவுகளைப் பொருத்தியினர். அவை நிலையோடு இணைந்து இடைவெளியின்றி நன்கு விளங்கின.
மதிலின் கதவுகள் உத்திரம் என்ற விண்மீனின் (நாள் மீன்) பெயரைக் கொண்ட வலிமை பொருந்திய சிறந்த மரத்தால் செய்யப்பட்டிருந்தன. அக்கதவுகளில் அலரும் பருவத்து குவளை மலரின் அரும்பு, இதழ் விரித்ததைப் போன்ற அமைப்புடன் புதுமை தோன்ற செய்யப்பட்ட கைப்பிடிகளை நன்கு பொருந்துமாறு பதித்திருந்தனர். இரண்டாக அமைந்திருந்த கதவுகள், கைத்தொழில் வல்ல தச்சன் நெருக்கியதால் உள் இடைவெளி இன்றி அமைந்திருந்தன.
வாயிலின் உயர்ந்த நிலையில் வெண் சிறு கடுகினை அரைத்துப் பூசி, நெய் தடவியிருந்தனர். வெற்றிக் கொடியினைத் தாங்கி வரும் யானைகள் அரண்மனைக்குஙள நுழையும் வாயில், மலைக்குள் புகுவது போல உயர்ந்த நிலையினைப் பெற்று அரண்மனையின் வாயில் விளங்கியது.
அரண்மனையின் முற்றம்,முன் வாயில்
புது மணல் பரப்பப்பட்ட அரண்மனையின் முற்றம், திருமகள் நிலைபெற்ற தன்மையினை உடையது.குற்றமற்ற சிறப்பினைப் பெற்றது ; செல்வம் நிறைந்தது.
அரண்மனை வாயிலின் முன்பகுதி,நீண்ட மயிரினையுடைய கவரிமானின் வெண்நிற ஏறு,குறுகிய கால்களையுடைய அன்னத்தோடு தாவித் திரியும் அழகினைப் பெற்றது.
அரண்மனையில் எழும் ஓசைகள்
பந்தியிலே (குதிரைகளைக் கட்டுமிடம்) நிற்பதற்கு வெறுத்த குதிரைகள் தனிமைத் துயரோடு குரலை எழுப்பின. மகரமீனின் வாய் போலப் பிளந்த வாயினையுடைய நீர் விழும் குழாயிலிருந்து மழை நீர் விழுகின்ற ஓசை, அருவி வீழும் ஓசை போன்று ஒலித்தன.
ஊது கொம்பின் இசையோ? என்று மயங்கும் வகையில் மயில் அகவும் ஒலியும் கேட்க, அரண்மனையில் எழுந்த பல்வேறு ஆரவார ஓசைகளும், மலையிலிருந்து எழும் ஆரவாரம் போல் இருந்தது.

அந்தபுரத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பனை
அந்தப்புரம் மலைகளைப் பார்ப்பது போன்ற உயர்ந்த தோற்றமுடையதாய் விளங்கியது. அங்கு மலைகளைச் சேர்ந்து வானவில் கிடப்பது போலப் பலநிறக் கொடிகளும் அசைந்தன. அந்தப்புரத்தின் பல இடங்களில் வெள்ளி போன்ற சாந்தினைப் பூசி இருந்தனர்.நீலமணியைக் காண்பது போலக் கரிய திரண்ட வலிமையான தூண்களும் காணப்பட்டன. செம்பினால் உருவாக்கப்பட்டது போல் செய்யப்பட்ட நெடிய சுவரிலே, பல வடிவத்திலான பூக்களும் ஒரு கொடியைச் சுற்றி இருத்தல் போன்ற காட்சியும் தீட்டப்பட்டிருந்தது. இவ்வாறு காண்பதற்கு இனிய நல்ல இல்லமாகக் கரு தங்கும் அறை (கரு அறை) என்று பெயர் பெற்ற அந்தப்புரம் காட்சியளித்தது.
தலைவி படுத்திருக்கும் ‘பாண்டில்’ எனும் வட்டக்கட்டில்
நாற்பது ஆண்டுகள் நிரம்பப் பெற்றதும்,‘முரசு’ என்று வியக்கும்படியான கால்களும்,போரில் சிறந்த யானை என்று புகழப்பட்ட தகுதியும்,மிக்க அழகும்,வரிகளையுடைய நெற்றியும் பெற்று போரில் இறந்த யானையின் தாமே வீழ்ந்த தந்தங்களைக் குறைத்துச் சீர்படுத்தி,அழகும் செம்மையும் தோன்ற தொழில் வல்ல தச்சனால் கூர்மையான உளி கொண்டு செதுக்கிய இரண்டு இலை வடிவம் இடையே விளங்குமாறு உருவாக்கப்பட்டிருந்தது தலைவியின் கட்டில்.
சூல் முதிர்ந்த அசைந்த இயல்பினையுடைய பெண்களின் பருத்த முலை (மார்பு) போன்று பக்கங்களில் திரண்டிருக்கும் குடத்தையுடையதாய் கட்டிலுக்கும் காலுக்கும் இடைப்பட்ட பகுதி இயற்றப்பட்டிருந்தது.
பூண்டின் வலிமையான முதற்பகுதி போல், கட்டிற்காலின் அடிப்பகுதிப் பொருத்தமுடன் விளங்கியது. இவ்வாறு அந்தப்புரத்தில் அகன்ற அளவுடன் உருவாக்கப்பட்ட பெரும் பெயர் பெற்றப் ‘பாண்டில்’ எனும் வட்டக் கட்டில் அமைந்திருந்தது.
கட்டிலில் செய்யப்பட்டிருந்த ஒப்பனை
நுண்ணிய நூலால் அழகாகத் தொடுக்கப்பட்ட முத்து மாலைகளை மூட்டுவாய் நன்கு பொருந்த கட்டிலோடு சேர்த்துக் கட்டியிருந்தனர். அவை கட்டிலுக்குச் சாளரம் போல் அமைந்திருந்தன.
புலியின் வரியினை ஒத்த நிறமுடைய பூக்கள் நிறைந்த தாம்பாளத்தைப் (தட்டு) போன்று, குத்துதல் தொழில் அமைய வடிவமைக்கப்பட்டிருந்த தகடுகளால், கட்டிலின் மேலிடத்தை மறைத்திருந்தனர்.
குற்றமற்ற பல்நிறம் ஊட்டப்பட்ட மயிர்ககற்றைகளை விரவி உருவாக்கிய கட்டிலின் விரிப்பில்,சிங்கம் வேட்டையாடுதல் போன்ற உருவினைப் பொறித்திருந்தனர். அதன் மீது அகன்ற காட்டிலே மலரும் முல்லை மலரோடு பல்வேறு மலர்களையும் பரப்பிய மென்மனையான போர்வையை விரித்திருந்தனர்.இப்படுக்கைச் சிறப்பிறக் காதலோடு துணையைப் புணர்ந்த அன்னங்களின் வெண்மையானச் சிறகினை இட்டுச் செய்த இரண்டாக இருக்கின்ற மெத்தையைக் கட்டிலின் மீது பரப்பியிருந்தனர். அதில் தலையணைகளையும் இட்டிருந்தனர். பஈடுக்கையின் மீது மலரின் இதழ்கள் போல் அமைந்திருந்த கஞ்சியிடப்பட்டு துவைத்து மடித்த ஆடையினை விரித்திருந்தனர். இப்படுக்கைச் சிறப்பிறக் காதலோடு துணையைப் புணர்ந்த அன்னங்களின் வெண்மையானச் சிறகினை இட்டுச் செய்த இரண்டாக இருக்கின்ற மெத்தையைக் கட்டிலின் மீது பரப்பியிருந்தனர். அதில் தலையணைகளையும் இட்டிருந்தனர். படுக்கையின் மீது மலரின் இதழ்கள் போல் அமைந்திருந்த கஞ்சியிடப்பட்டு துவைத்து மடித்த ஆடையினை விரித்திருந்தனர்.
படுக்கையில் இருந்த தலைவியின் நிலை
முத்து மாலை தாங்கிய பெருத்த முலையினைக் கொண்ட மார்பில்,பின்புறம் அமைந்த நீண்ட கூந்தல் தாழ்ந்து கிடக்க,நல்ல நெற்றியில் வறண்ட சில மெல்லிய மயிர் புரள,போர் மேற்சென்ற தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி கட்டிலில் அமர்ந்திருந்தாள். அவள் நீண்டு தொங்கும் நுண்ணிய குழையினைக் (காதணி) களைந்தமையால் குழையின்றி தாழ்ந்து தொங்கும் இயல்பினையுடைய காதின் சிறு துளைகளில் தாளுருவி என்னும் சிறிய காதணியை அழுத்தி யிட்டிருந்தாள்; பொன்னால் செய்யப்பட்டட வளையல் அணிந்த மயிர் ஒழுங்குபட அமைந்த முன் கையில்,வலம்புரிச் சங்கால் செய்த வளையலை அணிந்திருந்ததோடு,காப்பு நூலும் கட்டியிருந்தாள்; வாளை மீனின் பிளந்த வாயை ஒத்து விளங்கிய வளைந்த மோதிரத்தை (யெளி என்னும் மோதிரம்) அணிந்த சிவந்த விரலில் செந்நிறமுடைய (சிறிய ) மோதிரத்தைச் செருகியிருந்தாள்; பூ வேலைப்பாடமைய உருவாக்கப்பட்டப் பட்டாடை உடுதியிருந்த உயர்ந்த வனைவினையுடைய அல்குலில்,நூலால் நெய்யப்பட்ட மாசு படிந்த ஆடையினை உடுத்தியிருந்தாள். இவ்வாறு ஒப்பனை செய்யாத ஓவியத்தைப் போலத் தவையியும் ஒப்பனை எதுவுமின்றி கட்டிலில் இருந்தாள்.
தலைவியின் அடி வருடும் தோழியர்
தலைவயின் அடி வருடும் பெண்கள், தளிர் போன்ற மேனியுடையர்; அவ்வுடம்பில் தேமலைப் பெற்றிருப்பவர்; மூங்கில் போன்ற தோளினை உடையர்; தாமரையின் மொட்டு போன்ற முலையினைக் கச்சினால் இறுகக் கட்டியிருப்பவர்; வளைந்து தளர்ந்த இடையினையும் மென்மையான இயல்வினையும் உடையவர்.
தலைவியைத் தேற்றும் செவிலித்தாயர்
நரை கலந்திருக்கும் மணம் வீசும் மெல்லிய கூந்தலையும் சிவந்த முகத்தையும் உடைய செவிலியர் ஒன்று கூடி, தலைவியின் பிரிவாற்றாமையைத் தணிக்கும் வகையில்,குறைவாகப் பேச வேண்டிய இடத்தில் குறைவாகவும், விளச்கமாகச் சொல்ல வேண்டிய இடத்தில் நீட்டியும் அறிவுரைகள் பலவும் கூறி, தலைவியின் துயரத்தைத் தணிவிக்க முயற்சித்தனர். ‘உனக்கு இனிய துணையாய் அமைந்த தலைவர் இப்பொழுதே வருவார்’ என்று தலைவியின் மனம் விரும்பும் வகையிலும் இனிய மொழிகளைக் கூறினர்.
தேறாத தலைவி
செவிலியரின் சொற்களைக் கேட்டும் மனம் அமைதியடையாமல் மிகவும் கலங்கினாள் தலைவி. அவள் அமர்ந்திருந்த கட்டிலின் கால்கள் நுண்ணிதாகச் சாதிலிங்கம் பூசப்பட்டிருந்தது. அக்கால்கள் பெண்களின் பால் சுரக்காத மார்பு போன்று சிறிய குடங்களைக் கொண்டிருந்தன. கால்கள் கட்டிலோடு இணைக்கப்பட்டு, கட்டிலின் மேல் விதானத்தில் திரைச்சீலை கட்டப்பட்டிருந்தது. இதில் திங்களோடு உறையும் உரோகிணியின் சித்திரம் வரையப்பட்டிருந்தது. அதனைக் கண்ட தலைவி தானும் உரோகிணி போல் கணவரைப் பிரியாமல் வாழும் பேற்றினைப் பெறவில்லையே என்று பெருமூச்சு விட்டாள். அவளின் குவளை மலர் போலும் இமைகளில் தங்கிய கண்ணீர் மிகுந்து விழ, அதனைத் தன் சிவந்த விரலால் கடைக்கண்ணில் ஒன்று கூட்டி,சில துளி கண்ணீரை விரலால் தெறித்தத் தனிமைத் துயரில் வருந்தினாள்.

தலைவியின் துயர் தீர தெய்வத்தை வேண்டல்
‘அன்பு மிகுந்த தலைவிக்குத் துன்பம் தருகின்ற ஆற்றமுடியாத வருத்தம் தீரும் வகையில் தலைவனுக்குப் போரில் வெற்றியைத் தந்து,இப்பொழுதே முடித்துத் தருக.எம் விருப்பத்தைக் கேட்பாயாக’ என்று வெற்றியைத் தரும் கொற்றவையை வேண்டினர் செவிலியர்.
அரசனின் நிலை
ஒளி வீசும் முகபடாம் போர்த் தொழில் பழகிய யானையின் நீண்டு திரண்ட கையானது நிலத்தில் புரளுமாறு வெட்டி வீழ்த்திய பெரும் மறச் தசெணுலைச் செய்தவர் வீரர்கள். அவ்வீரர்கள் போரிலே பட்ட விழுப்புண்களைக் காண்பதற்காகப் பாசறையிருந்து வெளியே சென்றான் தலைவன். அங்கேஅகல் விளக்குகளின் பருத்த தலைகள் வடதிசையிலிருந்து வந்த குளிர்ந்த காற்று வீசும் போதெல்லாம் அசைந்து தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்தன. அவ்வொளியில் வேப்பந்தழையைத் தலைப்பகுதியில் கட்டிய வலிய காம்பினையுடைய வேலினை ஏந்தியவாறு வீரனொருவன் முன்னே சென்று புண்பட்ட வீரர்களை மன்னனுக்குக் காட்டிச் சென்றான்.
பாசறையின் கரிய சேறுடைய தெருவில்,மணிகளைப் புத்தே இட்டப் பெரிய கால்களையுடைய பெண் யானைகளோடு,சேணம் களையாத பாய்ந்து செல்லும் செருக்குடைய குதிரைகளும் தன்மேல் விழுந்த மழைத் துளிகளைச் சிதறின. தலைவனோ தன் இடப்பக்கத்து வீழ்ந்த அழகிய ஆடையினை இடக்கையால் எடுத்துத் தழுவி அணைத்துக் கொண்டான். வலக்கையினை வாளைத் தோளிலே கோர்த்துள்ள வீரனின் தோள் மேலே வைத்துக் கொண்டான். போரில் விழுப்புண்பட்ட வீரர்களின் மனம் விரும்பும் வகையில் முகம் மாலைகள் தொங்கும் வெண்கொற்றக் குடை மறைத்து நின்றது. இவ்வாறு நள்ளென்ற இரவுப் பொழுதிலும் மன்னன் துயில் கொள்ளாது சில வீரர்களோடு சென்று புண்பட்ட வீரர்களைப் பார்த்து வந்தான். ‘மன்னனின் பலரோடு முரண்பட்ட இப்பாசறைத் தொழில் இனிதே இப்பொழுதே முடிய வேண்டும்’ என்று முன்னதில் இருந்து முடிவினைப் பெற வைத்தப் பாட்டை முடிக்கின்றார் நக்கீரர்.

நெடுநல்வாடை – மூலமும் எளிய உரையும்
மழை பொழிதல்
வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
இடையர் நிலை
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புல ம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடுஇதழ்க் கண்ணி நீர்அலைக் கலாவ,
மெய்க்கொள் பெரும்பனி நலியப்,பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க,(1-8)
கருத்துரை
வையகம் குளிருமாறு,வலமாகச் சூழ்ந்து (தவறாது மழையைத் தருகின்ற பொய்யாத வானம் புது மழையினைப் பொழிந்தது. அப்போது, அம்மழை வெள்ளத்தை வெறுத்த வளைந்த கோலினைக் கையிலே வைத்துள்ள இடையர், தம்முடைய காளை மாடுகளோடு பசு,எருமை ஆடு போன்ற நிரைக் கூட்டத்தையும் வேற்றிடத்திற்கு ஓட்டிச் சென்று மேயவிட்டனர். பழகிய இடத்திலிருந்து வேற்றிடத்திற்குச் சென்றதால் ஏற்பட்ட தனிமைத்துயரில் கலங்கினர். தம் கழுத்தில் அணிந்துள்ள நீண்ட இதழ்களைக் கொண்ட செங்காந்தள் மலர் மாலையில் இருந்து நீர்த்துளிகள் மேனியில் படுவதால் வாட்டமுற்றனர். தம் மேனியின் குளிரினைத் தணிக்கப் பலரும் கூடி கைகளை நெருப்பில் காட்டிச் சூடேற்றினர். இடையர்களின் கன்னங்கள் புடைத்து நடுங்குமாறு குளிரின் தன்மை இருந்தது.
சொல்பொருள் விளக்கம்
வையகம் பனிப்ப- வையகம் குறிருமாறு, வலன் ஏர்பு வளைஇ – வளமாகச் சூழ்ந்து, பொய்யா வானம் - மழை பயெத்லைதி தவறாத வானம், புதுப்பெயல் – புது மழையினை,பொழிந்தென- பொழிந்த போது, ஆர்கலி – வெள்ளம்,கடல், (ஈண்டு மிகுந்த மழை பெய்தமையால் ஏற்பட்ட வெள்ளித்தினைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது) கொடுங்கோல் கோவலர் – வளைந்த கோலினை உடைய கோவலர் (கொடுங்கோல் கோவலர் பின்னின்று உய்த்தர. முல்லை. 15), ஏறுடை - எருதுகளோடு, இன நிரை – பசு, எருமை,ஆடு போன்ற நிரைக் கூட்டங்கள், (ஏறுடை இனநிரை அகம்.269. வரி. 3) வேறுபுலம் – வேற்றிடத்திற்கு, பரப்பி- பரவி நிற்குமாறுச் செய்து,மேயவிட்டு, புலம்பெயர் – வேற்றிடத்திற்குச் செல்லுதலால், புலம்பொடு – தனிமைத் துயரோடு,(புலம்பே தனிமை, தொல்.சொல்.147) கலங்கி – வருந்தி, கோடல் நீடிதழ்க் கண்ணி – காந்தளின் நீண்ட இதழ்களால் கட்டிய மாலை, நீரலைக் கலாவ – நீர்த்துளிகள் படுதலால் கலக்கமுற்று, மெய்க்கொள் – உடம்பு கொண்ட, பெரும்பனி நலிய – பெரிய குளிர்ச்சியால் வருத்தமுற்ற ,பலருடன் கைக்கொள் கொள்ளியர் – பலரோடும் கூடி கைகளை நெருப்பில் காட்டி, கவுள்புடையூஉ நடுங்க – கன்னங்கள் புடைத்து நடுங்க.
கூதிர்க்காலத்தின் தன்மை
மாமேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழக் கறவை
கன்று கோள் ஒழியக் கடிய வீசி,
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்( 9- 12)
(க.ரை) 
விலங்குகள் மேய்தலை மறந்தன. குரங்குகளின் உடல் குளிரால் கூனிப் போயின.பறவைகள் குளிரால் நடுங்கி மரத்தின் மீதிருந்து கீழே விழுந்தன. கன்றுகளுக்குப் பால் கொடுக்கும் மாடுகள் பால் குடிக்க வரும் கன்றுகளைத் தவிர்த்து கோபத்தோடு உதைத்துத் தள்ளின. இவ்வாறாக குன்றையே குளிர்விப்பது போல் கூதிர் காலத்து நள்ளிரவு இருந்தது.
சொற்பொருள் விளக்கம்
மா – விலங்கு,மேயல் மறப்ப – மேய்வதை மறக்க,மந்தி கூர – குரங்குகள் (குளிரால் ) கூனிப்போக,பறவை படிவன வீழ – பறவைகள் கீழே விழ,சறவை – கன்றுகளுக்குப் பால் கொடுக்கும் கறவை மாடுகள், கன்று, கோள் ஒழிய – கன்றுகளை வலிமையோடு தவிர்த்து,கடிய – கோபத்தில் ,வீசி – உதைத்து, குன்று குளிர்ப்பன்ன – குன்றினைக் குளிர்விப்பது போல, கூதிர்ப்பானாள் – கூதிர்க் காலத்து,குளிர்காலத்து (ஐப்பசி,கார்த்திகை மாதங்கள் ) (பானாள் – பால் + நாள் – நடுயாமம்,நள்ளிரவு) இருந்தது.


மழைக்காலச் செழிப்பு
புன்கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப்
பொன்போல் பீரமொடு புதல்புதல் மலரப்,
பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி,
இருங்களி பரந்த ஈர வெண்மணல்
செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்
கயல்அறல் எதிரக் கடும்புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப;
அங்கண் அகல்வயல் ஆர்பெயல் கலித்த
வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க;
முழுமுதல் கமுகின் மணிஉறழ் எருத்தின்
கொழுமடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
நுண்நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு
தெண்நீர் பசுங்காகய் சேறுகொள முற்ற
நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக்
குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க,(13- 28)
(க.ரை)
மென்மையான முசுண்டைக் கொடியின் பருத்த வெண்ணிறப் பூக்கள்,பொன் போன்ற பீர்க்கம் பூக்களோடு புதர்கள் தோறும் மலர்ந்திருந்தன. பசுங்கால்களையும் மென்மையான சிறகினையும் கொண்ட கொக்கின் கூட்டங்கள்,கருநிற வண்டல் மணல் பரவிக் கிடக்கும் ஈரமான வெண்மணலில் செவ்வரி படர்ந்த நாரைகளோடு நின்று கொண்டிருந்தன. அவை மழைநீரின் பெருக்குத் தளர்ந்தவுடன் அந்நீரில் எதிர்த்து வரும் மீன்களை எந்தெந்த இடங்களிலிருந்து கவர முடியுமோ அங்கே நின்று கொண்டு கவர்ந்தன. மழை நீங்கிய அகன்ற வானத்தில் எழுந்த வெண்மேகம் மழைத்துளிகளை மேலும் தூவுவதற்குக் கற்கும் விதமாகத் தூவிக் கொண்டேயிருந்தன.
அகன்ற வயல்களில் நிறைவாக மழை பெய்ததினால் ,செழித்து வளர்ந்த வளப்பமான தாளினையுடைய நெற்கதிர்கள் முற்றி வணங்கி நின்றன. நன்க செழித்து வளர்ந்த பருத்த பாக்கு மரத்தின் நீலமணி போன்ற கழுத்தப் பகுதியிலுள்ள மடல்களில் காய்ந்திருக்கும் பாக்குக் குலைகளின் உள்ளிருக்கும் நீர் வற்றி பருத்தும் ,பசுமையான காய் இனிமையான காய்களாக முற்றின. மலை உச்சியில் பல்வேறு மலர்கள் கலந்து பூத்திருக்கும் அகன்ற சோலையில், குளிர்ச்சியான குருந்த மரக்கிளைகளின் குருத்துகளில் இருந்து மழைத்துளிகள் இடையறாது விழுந்து கொண்டேயிருந்தன.
சொற்பொருள் விளக்கம்
புன்கொடி முசுண்டை – மென்மையான முசுண்டைக் கொடி, பொதிப்புற வான்பூ – பருத்த வெண்ணிறப் பூ,பொன்போல் பீரமொடு – பொன் போன்ற பூர்க்கம் பூக்களோடு, புதல் புதல் – புதர்கள் தொறும் ,மலர – மலர்ந்திருக்க, பைங்காற் கொக்கின் – பசுங்காலையுடைய கொக்கின்,மென்பறை – மென்மையான சிறகு, தொழுதி – கூட்டம்,இருங்களி பரந்த – பரிய வண்டல் மணலில் பரந்து, ஈர வெண்மனல் – ஈரமான வெண்மணலில் ,செவ்வரி நாரையொடு – சிவந்த வரிகளையுடைய நாரைகளோடு, எவ்வாயும் கவர – எந்தெந்த இடங்களில் மீன்கள் கிடைக்கின்றதோ அங்கு நின்று மீன்களைக் கரவ, கயல் அறல் எதிர – மீன்கள் நீரினை எதிர்த்து வர,கடும்புனல் – வேகமாக வந்த நீரின் ஓட்டம்,சாஅய் – தளர்ந்து, பெயல் – மழை ,உலர்ந்து- நீங்களி,எழுந்த – எழுந்த பொங்கல் வெண்மழை – மிகுதியான வேண்மேகம், அகல் இரு விசும்புன் – அகன்ற பெரிய வானத்தில், துவரை கற்ப- மழைத்தளிகளை மேலும் தூவுவதற்குக் கற்கும் விதமாக (தூவிக்கொண்டிருந்தன.)
அங்கண் – அவ்விடத்தில்,அகன் வயல் – அகன்ற வயல்களில், ஆர் பெயல் – நிறைவாக மழை,கலித்து – செழித்து,வளர்ந்த, வண் தோட்டு – வளப்பமான கதிர்த் தாளினை உடைய,நெல்லின் – நெல்லின்,வருகதிர் வணங்க – விளைந்த கதிர் வணங்கி நிற்க, முழுமுதற் கமுகின் – நன்கு செழித்த வளர்ந்த பாக்கு மரத்தின், மணி உறழ் – நீல மணி போன்ற,எருத்தின் – கழுததுப் பகுதியில்,கொழு மடல் – செழித்து வளர்ந்துள்ள மடல்களில், அவிழ்ந்த – காய்த்துள்ள,குழுஉக்கொள் பெருங்குலை – கூட்டமாக இருக்கும் பெரிய பாக்குக் குலைகள், நுண்நீர் – உள்ளிருக்கும் நீர் வற்றி,தெவிள வீங்கி – திரண்டு புடைத்து,புடை திரண்டு – பக்கங்களில் பருத்து, தெண்நீர் – தெளிந்த நீரினையுடைய,பசுங்காய் – பசுமையான காய்,சேறு கொள முற்ற- இனிமையான காய்களாக முற்ற ,நளிகொள்- செறிந்து விளங்கும ,சிமைய – மலையுச்சியில் விரவுமலர் – பல்வேறு மலர்கள் கலட்நது பூத்திருக்கம், வியன்கா- அகன்ற சோலையில், குளிர்கொள் சினைய - குளிர்ச்சியான மரக்கிளைகளில்,குருஉத் துளி – குருத்துக்களில் மழைத்துளி, தூங்க – இடையறாது விழுந்து கொண்டிருக்க,

தெருக்களில் சுற்றித்திரியும் மக்கள்
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்
படலைக் கண்ணி பருஏர்எறுழ் திணிதோள்
முடலை யாக்கை, முழுவலி மகிழ்சிறந்து
துவலைத் தண்துளி பேணார் பகல்இறந்து
இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர,(29- 35)
கருத்துரை
மாடங்கள் உயர்ந்து விளங்கும் வளமையான மூதூர், அங்கே ஆறு கிடப்பது போல் அகன்ற நீண்ட தெருக்கள். அத்தெருக்களில் தழை மாலை அணிந்து. பருத்து அழகுடன் விளங்கும திண்ணிய தோள்களும் முறுக்குண்ட உடம்பும் உடையராய், உடல் வலிமை முழுதும் வாய்க்கப் பெற்ற மக்கள், வண்டுகள் மொய்க்கும் கள்ளினை அதிகமாகக் குடித்து, மிகுந்த மிகுந்த மகிழ்ச்சியோடு குளிர்ந்த மழைத்துளி தம் மேனியில் விழுவதையும் பொருட்படுத்தாதவராய் பகல் பொழுது கழிந்த பிறகும், இரு பக்கமும் (முன்னும் பின்னுமாக) தொங்குகின்ற ஆடையோடு விரும்பிய இடங்களெல்லாம் சுற்றித் திரிந்தனர்.
சொற்பொருள் விளக்கம்
மாடம் ஓங்கிய – மாடங்கள் உயர்ந்த,மல்லல் – வளமையான, மூதூர் – பழமையான ஊர்,ஆறு கிடந்தன்ன – ஆறு கிடந்தது போல,அகல் – அகன்ற,நெடுந்தெருவில் – நீண்ட தெருவில்,படலைக் கண்ணி – தழை மாலை,பரு ஏர் எறுழ் – பருத்து அழகுடன் விளங்கும் வலிமையான,திணி தோள் – திண்ணிய தோள்,முடலை யாக்கை – முறுக்குண்ட உடம்பு,முழுவலி மாக்கள் – உடல் வலிமை முழுவதும் பெற்ற கீழ் மக்கள், வண்டு மூசு தேறல் – வண்டுகள் மொய்க்கும் கள், மாற்தி – அதிகமாகக் குடித்து, மகிழ் சிறந்து – மிகுந்த மகிழ்ச்சியுடன், துவளைத் தண் துளி – குறிர்ந்த மழைத்துளி தமேல் (மேனியில் ) விழுதல், பேணார் – பொருட்படுத்தாதவராய்,கருத்தில் கொளளாதவராய்,பகல் இறந்து – பகல் பொழுது கழிந்த பின்னும், இரு கோட்டு அறுவையர் - இரு பக்கமும் தொங்கவிட்ட ஆடையினை அணிந்தவராய், வேண்டு – விரும்பிய,வயின் – பக்கம், இடம்,திரிதர – சுற்றித் திரிய

மாலையில் தெய்வத்தை  வழிபடும் பெண்கள்
வெள்ளி வள்ளி வீங்குஇறைப் பணைத் தோள்
மெத்தென் சாயல்,முத்து உறழ் முறுவல்
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்துஎழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
. செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து
அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுதறிந்து
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ
நெல்லும் மலரும் குஉய் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர(36 - 44)

(க.ரை) 
வெண்மையான சங்கனில் செய்யப்பட்ட வளையல் இறுகின முன்கையினையுடைய பெண்கள், மூங்கிலைப் போன்ற தோளினை உடையர், மென்மையான மேனியுடையர், முத்துப் போன்ற பல்லுடையர், காதிரே அணிந்துள்ள அழகிய காதணிக்குப் பொருந்த மிக்க அழகுடன் கூடிய குளிர்ச்சியான கண்களையுடையர், பெண்மைக்குரிய பேதைமைத் தன்மையுடையர், இப்பெண்கள் பூந்தட்டில் இட்டு வைத்த மலரும் பருவத்தில் இருந்த பசுமையான காம்பினையுடைய பிச்சி மலரின் அரும்புகள் இதழ் விரித்து மணம் வீசின. அவை மலர்வதைக் கொண்டு மாலைக் காலம் வந்துவிட்டதை அறிந்தனர், இரும்பால் செய்யப்பட்ட விளக்கின் நுண்ணிய திரியினைக் கொளுத்தி, நெல்லும் மலரும் தூவிக் கைகளால் தொழுது தெய்வத்தை வணங்கினர்.இவ்வாறு,வளமான அங்காடித் தெருவில் மாலைக் காலத்தைக் கொண்டாடினர் பெண்கள்.
சொற்பொருள் விளக்கம்
வெள்ளி – வெண்மையான வெள்ளி – கைவளை,சங்கு, வீங்கு – இறுகிய,இறை - முன் கை,(இறை வளை யாழ் தழீஇயிருப்ப, சீவகசிந்தாமணி. 656) பணைத்தோள் – மூங்கிலாகிய தோள், மெத்தென் – மென்மையான, சாயல் – அழகு,மேனி, முத்து உறழ் முறுவல் – முத்துப் போன்ற பல்,பூங்குழைக்கு – பொலிவுடன், அழகுடன் விளங்கும் காதணி, அமர்ந்த – பொருந்த,ஏந்து எழில் – மிக்க அழகு,மழைக்கண் – குளிர்ச்சியான கண்கள், மடவரல் – பேதைமைத் தன்னை,மகளிர் – பெண்கள்,பிடகை – பூந்தட்டு, பெய்த – இட்டு வைத்த,செவ்வி அரும்பின் – மலரும் பருவத்தில் இருக்கின்ற அரும்பு,பைங்கால் பித்திகத்து – பசுமையான காம்பினையுடைய பிச்சி மலரின், அவ்விதழ் – அந்த இதழ்கள், அவிழ் பதம்- மலர்கின்ற,கமழ – மலர்ந்து மணம் வீச, பொழுது அறிந்து.மாலைக் காலம் வந்துவிட்டதை அறிந்து,இரும்பு செய் விளக்கின் - இரும்பினாலாகிய விளக்கின்,ஈந்திரி – நுண்ணிய திரியில்,கொளீஇ – கொளுத்தி, நெல்லும் மலரும் தூஉய் – நெல்லையும் மலரையும் தூவி. கைத்தொழுது – கைகளால் தொழுது,மல்லல் – வளமை,ஆவணம் – அங்காடித் தெரு, மாலை – மாலைக் காலம்,அயர – கொண்டாட..
கூதிர்க்கால நிகழ்வுகள்
மனைவாழ் புறாவின் நிலை
மனைஉறை புறவின் செங்காற் சேவல்
இன்புறு பெடையொடு மன்றுதேர்ந்து உண்ணாது
இரவும் பகலும் மயங்கி கையற்று
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப
அரைக்கப்படாத சந்தனமும்
அரைக்கப்பட்ட கத்தூரியும்
கடியுடை வியல் நகர்ச் சிறுகுறுந் தொழுவர்
கொள்உறழ் நறுங்கல் பலகூட்டு பறுக
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கில் சாந்தொடு துறப்பக்(45- 52)
(க.ரை)
வீட்டில் வாழும் சிவந்த கால்களையுடைய ஆண் புறாக்கள் தான் இன்புறும் பெண் புறாக்களோடு, பொது இடங்களுக்குச் சென்று தமது இரையை ஆராய்ந்து எடுத்து உண்ணாமல் இருந்தன. இரவு எது பகல் எது என்று அறிய முடியாது மயங்கிச் செயலிழந்து கொடுங்கையைத் தாங்கும் பலகையில் நின்றன, ஒரே இடத்தில் நிற்பதால் ஏற்பட்ட கால் வலியைப் போக்கக் காலை மாற்றி மாற்றி வைத்தன.
காவலையுடைய அகன்ற வீடுகளில் குற்றேவல் செய்வோர், கொள்ளின் நிறத்தை ஒத்த நறுமணம் மிக்க கல்லிலி (உடலுக்கு வெப்பத்தைத் தரும்) கத்தூரி முதலிய நறுமணப் பொருட்களை அரைத்தனர். வடநாட்டினர் தந்த வெண்ணிற வட்ட வடிவ சந்தனம் அரைக்கும் கற்களில்,தென்திசையிலிருந்து கிடைத்த சந்தனக் கட்டைகள் அரைக்கப்படாமல் கிடந்தன.
சொற்பொருள் விளக்கம்
மனை உறை – வூட்டில் வாழ்கின்ற,புறவுன் செங்காற் சேவல் –சிவந்த கால்களையுடைய ஆண் புறா, இன்புறு பெடையொடு – இன்புற்று வதாழும பெடையோடு,மன்று – பொது இடங்களில்,தேர்ந்து உண்ணாது – இரையை ஆராய்ந்து எடுத்து உண்ணாமல்,இரவும் பகலும் மயங்கி,கையற்று – செயலிழந்து,மதலைப் பள்ளி – கைத் தாங்கு பலகையில்,மாறுவன இருப்ப – காலை மாற்றி மாற்றி இருக்க,கடியுடை வியல்நகர் – காவலையுடைய அகன்ற வீடுகளில்,சிறு குறுந்தொழுவர்- சிறு வேலைகளைச் செய்யும் குற்றேவர் செய்வோர், கொள் உறழ் – கொள்ளின் (தானிய வகை 0 நிறத்தை ஒத்த, நறுங்கல் – நறுமணமிக்க கல்லில்,பல் கூட்டு மறுக – கத்தூரி முதலிய நறுமணப் பொருட்களை அரைக்க, வடவர் தந்த – வடநாட்டினர் தந்த,வான் கேழ் வட்டம் – வெண்ணிற வட்ட வடிவ சந்தனம் அரைக்கும் கற்கள்,தென்புல – தென்திசை, மருங்கில் – இடத்தில்,சாந்தொடு துறப்ப – சந்தனக் கட்டைகள் பயன்படாமல் கிடக்க,

மகளிர் நிலை
கூந்தல் மகளிர் கோதை புனையார் ;
பல்இருங் கூந்தல் சில்மலர் பெய்ம்மார்
தண்நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்பக்,
(க.ரை)
மகளிர் தம் கூந்தலில் பூமாலைகளைச் சூடார், அடர்ந்த கரிய கூந்தலில் சிலவாகிய மலர்களையே சூடினர். குளிர்ச்சியைத் தரும் வாசனை மரத்தின் விறகில் நெருப்பை உண்டாக்கி,கரிய மர வைரமாகிய அகிலொடு,வெண்மையான அயிரையும் சேர்த்துப் புகைத்தனர்.
சொற்பொருள் விளக்கம்
கூந்தல் மகளிர் – பெண்கள் தலைமுடியில்,கோதை - பூ மாலை,புனையார் – சூடார், பல் இரும் கூந்தல் – அடர்ந்த கருமையான கூந்தல்,சின்மலர் – சிலவாகிய மலர், பெய்ம்மார் – சூடியிருப்பர் (மார் – பல்லோர் படர்க்கை விகுதி. தொல்.சொல்.209) தண்நறும் தகரம் – குளிர்ச்சியான வாசனை மரவகை,(திருநதுதகரச் செந்நெருப்பில் சீவக. 349) முளரி – விறகு ,செருப்பு அமைத்து – நெருப்பை உண்டாக்கி,இருங்காழ் அகிலொடு – கரிய மர வைரமாகிய அகிலோடு,வெள்ளயிர் புகைப்ப – வெண்மையான அயிரையும் ( வெண்மையான புகைக்கும் வாசனைப் பொருள் வகை) சேர்த்துப் புகைப்பர்.


இயங்காத விசிறியும், தாழிட்ட சாளரமும்
கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வானூல் வலந்தன தூங்க
60வானுற நிவந்த மேனிலை மருங்கின்
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர்வாய் கதவம் தாழொடு துறப்பக்(57- 63)
(க.ரை) 
கைவேலைப்பாட்டிலே சிறந்து விளங்கும் தொழிலாளி அழகுபெற உருவாக்கிய, சிவந்த நிறத்தையுடைய விசிறி (ஆலவட்டம்) ஒடுக்கப்படும், சிலந்தியின் வெண்மையான நூல் பின்னப்பட்ட நிலையிலே வளைந்த ஆணியில் தொங்கின.
வானத்தைத் தீண்டுமாறு உயர்ந்த மேல் மாடத்தில்,தென்றல் சாற்று நேராக வருகின்ற,இளவேனிற் காலத்து உறங்கும் படுக்கையறையிலுள்ள பலகணியில் உலவுதலைத் தவிர்த்தனர். பலகணியின் வலிமையான நன்கு பொருந்துகின்ற கதவுகளும் தாழிட்டுக் கிடந்தன.
சொற்பொருள் விளக்கம்
கைவல் – கை வேலைப்பாட்டில் சிறந்த,கம்மியன் – தொழிலாளி,கவின் பெற – அழகு பெற,புனைந்த – உருவாக்கிய. செங்கேழ் வட்டம் - சிவந்த நிறத்தையுடைய விசிறி, சுருக்கி ஒடுக்கி, குறைத்து,கொடுந்தறி- வளைந்த ஆணி,சிலம்பி – சிலந்தி, வான்நூல் – வெண்மையான நூல்,வலந்தன – பின்னப்பட்டன, தூங்க – தொங்க,வான் உற – வானத்தைத் தீண்டுமாறு,நிவந்த – உயர்ந்த,மேனிலை மருங்கின் – மேல் மாடத்தில்,வேனிற் தரூஉம் – தென்றல் காற்றைத் தருகின்ற,நேர்வாய் கட்டளை – காற்று நேராக வருகின்ற பலகணி, உலவாது – திரியாது, திண்நிலைப் போர்க்கதவம்- வலிய நிலையோடு பொருந்தியிருக்கும் கதவுகள்,தாழொடு துறப்ப – தாழிட்டுக் கிடக்க,(திறந்து, மூடுதல் தொழிலினின்றி கிடத்தலால் ‘ துறப்ப ’ என்றார்)


வெறுக்கப்படும் தண்ணீர் விரும்பப்படும் நெருப்பு
கல்லென் துவலை தூவலின், யாவரும்
தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்
பகுவாய்த் தடவில் செந்நெருப்பு ஆர;( 64- 66)
(க.ரை) 
கல்லென்ற ஓசையோடு,சிறு தூறாக மழைத்துளி தூவுவதால் எல்லோரும் குவிந்த வாயினையுடைய குடத்திலுள்ள குளிர்ந்த நீரைப் பருகவில்லை, அகன்ற வாயினையுடைய தூயமூட்டியில் நெருப்பின் வெம்மையைப் பெரிதும் துய்த்தனர்.
சொற்பொருள் விளக்கம்
 கல்லென் – ‘கல்’ என்ற ஓசையோடு,துவலை தூவலின்- நீர்த் திவலைகள் தெளிப்பதால்,யாவரும் – எல்லோரும்,தொகுவாய் – குவிந்த வாயினையுடைய,கன்னல் – நீர்க்குடம்,தண்ணீர் – குளிர்ந்த நீர் – உண்ணார் – பருகார்,பகுவாய் – அகன்ற வாயினையுடைய,தடவில் –தூபமூட்டியில்,செந்நெருப்பு – சிவந்த நெருப்பினை இட்டு,ஆர – நுகர, துய்க்க, (மிகுதியும் ஆரப்பருக (திவ், திருவாய் 10.10.5) )
தண்மையின் திரிந்த யாழின் தன்மையை
வெம்முலையால் சரி செய்தல்
ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையின் திரிந்த இன்குரல் தீம்தொடை
கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇ
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப(67 – 70)
(க.ரை)
ஆடல் தொழிலில் ஈடுபட்டுள்ள மகளிர்,பாடலை வாசிப்பதற்காக யாழினைப் பொருந்துமாறு செய்தனர். குளிர்ச்சியால் மாறுபட்ட இனிய குரலினை எழுப்பும் இனிய நரம்பினைத் திரட்சியான முலையின் (மார்பகத்தில் ) வெப்பத்தில் தடவி, கரிய தண்டினை இசைப்பதற்கு ஏற்ற வகையில் முறைப்படுத்தி நிறுத்தினர்.
சொற்பொருள் விளக்கம்
ஆடல் மகளிர் – ஆடல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், பாடல் கொள – பாடலை வாசிப்பதற்காக,(மீட்டுவதற்காக ) புணர்மார் பொருந்துமாறு செய்தனர். (மார் – பல்லோர் படர்க்கை விகுதி), தண்மையின் திரிந்த- குளிர்ச்சியான தன்மையால் மாறுபட்ட இன்குரல் – இனிய குரலை எழுப்பும், தீம் தொடை – இனிய நரம்பினை, கொம்பை வருமுலை – திரட்சியான முலையின்,வெம்மையில் தடைஇ – வெப்பத்தில் தடவி, கருங்கோட்டு சீறியாழ் – கரிய தண்டினைப் பெற்ற சிறிய யாழில்,பண்ணுமுறை நிறுப்ப பண்ணினை இசைப்பதற்கு ஏற்றவாறு முறைப்படுத்தி நிறுத்தினர்.
காதலர் பிரிந்தோரை வாட்டும் கூதிர்
காதலர்ப் பிரிந்தோர் புலம்ப,பெயல் கனைந்து
கூதிர் நின்றன்றால்(71-72)
(க,ரை) 
கணவரைப் பிரிந்த மகளிர் (கார்காலம் வந்தும் கணவர் வராமை எண்ணி ) தனியே வருந்த,மழை மிகுதியாகி பனிக்காற்றும் நில்லாது நிலைபெற்றிருந்தது.
சொற்பொருள் விளக்கம்
காதலர் பிரிந்தோர் – கணவனைப் பிரிந்திருக்கும் மகளிர் புலம்ப – தனியே வருந்த,பெயல் – மழை,கனைந்து – செறிந்து.மிகுதியாகி, கூதிர் – பனிக்காற்று (பிங்), நின்று அன்றால் - நில்லாது
மன்னனின் அரண்மனையை உருவாக்கிய முறை
..........................................மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு
ஒருதிறம் சாரா அரைநாள் அமயத்து
நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி‘
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து(72- 78)
(க.ரை)
சூரியன்,திசை எங்கும் விரிந்த கதிர்களைப் பரப்பும் அகன்ற இடத்தினையுடையது.அச்சூரியன் மேற்கு நோக்கி உயர்ந்து எழுந்து ஒரு பக்கம் நிழல் சாராத வேளையில்,இரு கோலினை நட்டு அதன் நிழல் மாறுபடாது நிற்கின்ற நண்பகல் பொழுதில் (இது சித்திரை மாதம் பத்தாம் நாளுக்க மேல் இருபதாம் நாளுக்குள் நிகழும் என்பர்) கட்டடக்கலை பற்றிய நூல்கடிளக் கற்றுத் தேர்ந்தோர், நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து, திசைகளைத் தெரிந்து,அத்திசைகளுக்குரிய தெய்வங்களையும் கருத்தில் கொண்டு,பெரிய புகழினையுடைய மன்னர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அரண்மனை .
சொற்பொருள் விளக்கம்
மாதிரம் – திசை,விரிகதிர் பரப்பிய – விரிந்த கதிர்களைப் பரப்பிய வியல்வாய் – அகன்ற இடத்தினையுடைய,மண்டிலம் – ஞாயிற்று மண்டிலம், இருகோல் – வடக்கிலும் தெற்கிலும் இருகோல் (நட்டு),குறிநிலை வழு க்காது – (அவை மீது) ஞாயிற்றின் கதிர் படும் போது உண்டாகும் நிழல் நிலைத்த தன்மையோடு மாறுபடாது, குடக்கு ஏர்பு – மேற்கிலே எ ழுந்து ஒரு திறம் சாரா – ஒரு பக்கம் சாயாத,அரைநாள் அமயத்த – பகலில் உச்சிப் பொழுதில்,( சித்திரைத் திங்கள் பத்தாம் நாள் தொடங்கி இருபதாம் நாள் முடிய, ஏதேனும் ஒரு நாள் பதினைந்து நாழிகையளவில் ஞாயிற்றன் கதிர் நிலத்தின் நடுவில் இயங்கும் ) நூல் பிடித்துப் பார்த்து,தேஎம் கொண்டு – ( மனையின் பகுதிகள் அமைய வேண்டிய ) திசைகளைக் குறித்துக் கொண்டு,தெய்வம் நோக்கி – அத்திசைகளில் விளங்கும் தெய்வங்களையும் கருத்தில் கொண்டு,பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப – பெரும் புகழினையுடைய மன்னர் வாழும் அரண்மனைக்கு ஏற்ப,மனை வகுத்து – மனையின் இடங்களை வகைப்படுத்தி.
வாயில்
ஒருங்குஉடன் வளைஇ, ஓங்குநிலை வரைப்பின்
பருஇரும்பு பிணித்து, செவ்வரக்கு உரீஇ
துணைமாண் கதவம் பொருத்தி, இணைமாண்டு
நாளொடு பெயரிய கோள்அமை விழுமரத்து
போதுஅவிழ் குவளைப் புதுப்பிடி கால் அமைத்து
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின்
கைவல் கம்மியன் முடுக்கலின் புரைதீர்ந்து
ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றுஎழு கொடியொடு வேழம் சென்றுபுக
குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாயில்
(79- 88)
(க.ரை) அரண்மனையின் அனைத்தப் பகுதிகளையும் ஒரு சேர வளைத்து,உயர்ந்த நிலையினையுடைய (வாயில்நிலை) மதிலை அமைத்தனர். அம்மதிலின் நிலையோடு பருத்த இரும்பால் இணைக்கப்பட்ட செம்மையான அரக்கு வண்ணம் பூசிய இரண்டாக அமைந்துள்ள சிறந்த கதவுகளைப் பொருத்தினர். அவை நிலையோடு இணைந்து இடைவெளி இன்றி நன்கு விளங்கின.
மதிலின் கதவுகள்,உத்திரம் என்ற விண்மீனின் (நாள் மீன்) பெயரைக் கொண்ட வலிமை பொருந்திய சிறந்த மரத்தால் செய்யப்பட்டிருந்தன. அக்கதவுகளில் அலரும் பருவத்து குவளை மலரின் அரும்பு இதழ் விரித்ததைப் போன்ற அமைப்புடன் புதுமை தோன்ற செய்யப்பட்ட கைப்பிடிகளை நன்கு பொருந்துமாறு பதித்திருந்தனர். இரண்டாக அமைந்திருந்த கதவுகள் கைத்தொழில் வல்ல தச்சன் நெருக்கியதால் உளி இடைவெளி இன்றி அமைந்திருந்தன.
வாயிலின் உயர்ந்த நிலையில் வெண்சிறு கடுகினை அரைத்துப் பூசி நெய் தடவியிருந்தனர். வெற்றிக் கொடியினைத் தாங்கி வரும் யானைகள் அரண்மனைக்குள் நுழையும் வண்ணம் மலைக்குள் நுழைவது போல உயர்ந்த நிலைகளையுடையதாய் அரண்மனையின் வாயில் அமைந்திருந்தது.
சொற்பொருள் விளக்கம்
ஒருங்கு உடன் வளைஇ – அனைத்துப் பகுதிகளையும் ஒரு சேர வளைத்து,ஓங்கு நிலை வரைப்பின் – உயர்ந்த நிலையினையுடைய மதிலின்,பரு இரும்பு பிணித்து – பருத்த இரும்பால் (ஆணி) இணைத்து, செவ்வரக்கு உரீஇ – செம்மையான அரக்கு வண்ணத்தைப் பூசி (உள்ளரக்கு எறிந்த உருக்குறு போர்வை.சிறுபா.256), துணை மாண் கதவம் பொருத்தி – இரண்டாக அமைந்துள்ள சிறந்த கதவுகளைப் (நிலையோடு) பொருத்தி,இணைமாண்டு – இணைந்து நன்கு விளங்கி,நாளொடு பெயரிய – (உத்திரம் என்ற ) நாள் மீனின் பெயரைக் கொண்ட – கோள் அமை – வலிமை பொருந்திய,விழுமரத்து – சிறந்த மரத்தில்,போது அவிழ் குவளை – அலரும் பருவத்து குவளைமலரின் அரும்பு இதழ் விரித்ததைப் போன்று,புதுப்பிடி கால் அமைத்து – புதுமை தோன்ற செய்யப்பட்ட கைப்பிடியினைப் பொருத்தி,தாழொடு குயின்ற – கதவோடு சேர்த்துப் பதித்து, போர் அமை புணர்ப்பில் – இரண்டாக அமைந்தள்ள கதவுகள் நன்கு பொருந்தமாறு,கைவல் கம்மியன் முக்கலில் – கைத்தொழில் வல்ல தச்சம் நெருக்குதலால்,புரை தீர்ந்து – உள் இடைவெளி இன்றி,ஐயவி அப்பிய - வெண்சிறு கடுகு பூசப்பட்ட,நெய்யணி – நெய் (எண்ணெய் ) தடவப்பட்ட,நெடுநிலை – உயர்ந்த நிலை (வாயில் நிலையில் தெய்வம் உறைவதாக நம்புதல் மரபு. அத்தெய்வத்திற்கு நெய்யும் வெண்சிறு கடுகும் இட்டு வழிபட்டுள்ளனர்.)
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
(மதுரைக்காஞ்சி. 353- 354)
‘நெய்யொடு ஐயவி அப்பி ’ (திருமுருகாற்றுப்படை 228)
‘நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள்காழ் ’ (நற்றிணை. 370)
ஐயவி அப்பிய நெய்யணி முச்சி ‘ (மணிமேகலை.3.134)
எனவரும் இலக்கிய மேற்கோள்கலாலும் இதனை உணரலாம்.
வென்று எழு கொடியோடு – வெற்றிக் கொடியோடு,வேழம் சென்று புக – யானை அரண்மனைக்குள் நுழையும் வகையில், குன்று குயின்றன்ன – மலைக்குள் நுழைவது போல்,ஓங்குநிலை வாயில் – உயர்ந்த நிலையினையுடைய வாயில்.
முற்றம்,முன்வாயில்
திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து
நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை (89-92)
(க.ரை) அரண்மனையின் முற்றத்தில் புது மணல் பரப்பப்பட்டிருந்தது. இம்முற்றம் திருமகள் நிலைபெற்று விளங்கும் தன்மையினை உடையது. குற்றமற்ற சிறப்பினைப் பெற்றது, செல்வம் நிறைந்தது.
அரண்மனை வாயிலின் முன்பகுதி,நீண்ட மயிரினையுடைய கவரிமானின் வெண் நிறத்தையுடைய ஏறு,குறுகிய கால்களையுடைய அன்னத்தோடுத் தாவித் திரியும் அழகினைப் பெற்றது.
சொற்பொருள் விளக்கம்
திருநிலை பெற்ற – திருமகள் நிலைபெற்று விளங்கும்,தீதுதீர் சிறப்பின் – குற்றமற்ற சிறப்பினையுடைய,தருமணல் – கொண்டு வந்து பரப்பிய புது மணல்,ஞெமிரிய – பரப்பிய,(ஞெமிர்தலும்,பாய்தலும் பரத்தற் பொருள,தொல் உயிரியல்.63) திருநகர் முற்றத்து – செல்வம் நிறைந்த அரண்மனை முற்றத்தில்,நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை – நீண்ட மயிரினையுடைய ஏற்றை (கவரிமானின் ஆண்),குறுங்கால் அன்னமொடு – குறுகிய கால்களையுடைய அன்னத்தோடு, உகளும் முன்கடை – தாவித் திரியும் முன் வாயில்,
அரண்மனையில் எழும் ஓசைகள்
பணைநிலை முனைஇய பல்உளைப் புரவி
புல்உணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிவவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து
கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய
கலிந்துவீழ் அருவிப் பாடுவிறந்து,அயல
ஒலி நெடும் பீலி ஒல்க, மெல்இயல்
கலிமயில் அகவும் வயிர்மருள் இன்இசை
நளிமலைச் சிலம்பின் சிலம்பும் கோயில்
(93- 100)
(க.ரை) பந்தியிலே (குதிரைக்களைக் கட்டுமிடம் ) நிற்பதற்கு வெறுத்த, பலவாகிய பிடரி மயிரினையுடைய குதிரை, புல்லுணவுத் தெவிட்டத் தனிமைத் துயரோடு குரலினை எழுப்பியது.
அரசன் நிலவின் பயனைத் துய்க்கும் நீண்ட நிலா முற்றத்தில், மகர மீனின் (சுறா மீனின் ) வாய் போன்று பிளந்த வாயினையுடைய நீர் விழும் குழாயிலிருந்து நீர் விழுகின்ற ஓசை,அருவி விழும் ஓசை போல மிகுதியாக இருந்தது. அதன் அருகிலோ,தழைத்த நீண்ட தோகை அசைய மென்மைத் தன்மையும் செருக்குமுடைய மயில்கள்,ஊது கொம்பின் இசையோ? என்றும் மருளும் வண்ணம் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. இவ்வாறு அரண்மனையில் எழுந்த பல்வேறு ஆரவார ஓசைகளும் செறிந்த மலையிலிருந்து எழும் ஆரவாரம் போல் இருந்தது.
சொற்பொருள் விளக்கம்
திருநிலை பெற்ற – திருமகள் நிலைபெற்று விளங்கும், தீதுதீர் சிறப்பின் – குற்றமற்ற சிறப்பினையுடைய,தருணம் – கொண்டு வந்து பரப்பிய புது மணல்,ஞெமிரிய – பரப்பிய,(ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள.தொல்.உயிரியல்.63) திருநகர் முற்றத்து – செல்வம் நிறைந்த அரண்மனை முற்றத்தில்,நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை – நிண்ட மயிரினையுடைய ஏற்றை (கவரிமானில் ஆண்),குறுங்கால் அன்னமொடு – குறுகிய கால்களையுடைய அன்னத்தோடு,உகளும் முன்கடை – தாவித் திரியும் முன் வாயில்.


அரண்மனையில் எழும் ஓசைகள்
பணைநிலை முனைஇய பல்உளைப் புரவி
புல்உணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிவவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து
கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய
கலிந்துவீழ் அருவிப் பாடுவிறந்து,அயல
ஒலி நெடும் பீலி ஒல்க, மெல்இயல்
கலிமயில் அகவும் வயிர்மருள் இன்இசை
நளிமலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் (93 – 100)
(க.ரை) பந்தியிலே (குதிரைக்களைக் கட்டுமிடம்) நிற்பதற்கு வெறுத்த, பலவாகிய பிடரி மயிரினையுடைய குதிரை, புல்லுணவுத் தெவிட்டத் தனிமைத் துயரோடு குரலினை எழுப்பியது.
அரசன் நிலவின் பயனைத் துய்க்கும் நீண்ட நிலா முற்றத்தில், மகர மீனின் (சுறா மீனின்) வாய் போன்று பிளந்த வாயினையுடைய நீர் விழும் குழாயிலிருந்து நீர் விழுகின்ற ஓசை,அருவி விழும் ஓசை போல மிகுதியாக இருந்தது. அதன் அருகிலே,தழைத்த நீண்ட தோகை அசைய மென்மைத் தன்மையும் செருக்குமுடைய மயில்கள், ஊது கொம்பின் இசையோ? என்றும் மருளும் வண்ணம் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன. இவ்வாறு அரண்மனையில் எழுந்த பல்வேறு ஆரவார ஓசைகளும் செறிந்த மலையிலிருந்து எழும் ஆரவாரம் போல் இருந்தது.
சொற்பொருள் விளக்கம்
பணைநிலை முனைஇய – பந்தியிலே நிற்பதற்கு வெறுத்த, பல் உளைப் புரவி – பலவாகிய பிடரிமயிரினையுடைய குதிரை, புல்லுணாத் தெவிட்டு – புல்லாகிய உணவினைக் குதட்டும், புலம்புவிடு குரலொடு – தனிமை துயரத்தோடு எழுப்பும் குரலோடு, நிலவுப் பயன் கொள்ளும் – (அரசன்) நிலவின் பயனை நுகர்கின்ற,நெடுவெண் முற்றத்த – நீண்ட வெண்மையான முற்றத்தில்,கிம்புரி பகுவாய் – மகரவாய் (மீனின்) வடிவில் பிளந்த வாய் போல அமைக்கப்பட்ட,அம்பணம் – நீர் வீழும் குழாய்,நிறைய – நிறைந்து, கலிந்து – ஓசை ,வீழ் அருவி – அருகிலே,ஒலி – தழைத்த,நெடும் பீலி – நீண்ட தோகை,ஒல்க – அசைய,(இயலின் ஒல்கின ஆடுமடமகள் பதிற்றுப்பத்து 51-10) மெல்லியல் – மென்மைத் தன்மையும்,களிமயில் – செருக்குடைய மயில், அகவும் – ஒலி எழுப்பும்,வயிர் மருள் இன் இசை – ஊது கொம்பின் ஒலியென மருளும் இனிய இசை,நளி மலை சிலம்பில் – செறிந்த மலையிலுள்ள ஆரவாரத்தைப் போல்,சிலம்புங் கோயில் – ஆரவாரிக்கும் மன்னனின் இல்லம் (அரண்மனை)

அந்தப்புரத்தின் அமைப்பு
யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கைஏந்தும் ஐஅகல் நிறைய நெய்சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர்எரி
அறுஅறு காலைதோறு அமைவரப் பண்ணிப்
பல்வேறு பள்ளிதொறும் பாய்இருள் நீங்க
பீடுகெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் (101- 107)
(க.ரை) யவனர்களால் உருவாக்கப் பெற்ற, சிறந்த வேலைப்பாட்டுடன் விளங்கும் பாவையின் கையில் ஏந்தியிருக்கின்ற கை விளக்கில் (அகலில்) அகல் நிறையுமாறு நெய்யினை ஊற்றினர் ,பருத்த திரிகளைக் கொளுத்தினர்.பொன்நிறத்தலையோடு மேல் நோக்கி எரியும் விளக்கில்,நெய் குறையும் பொழுதெல்லாம். நெய் வார்த்துத் திரியைத் தூண்டி நன்கு எரியுமாறு செய்தனர். இப்பாவை விளக்கின் ஒளி, அரண்மனையின் பல இடங்களிலும் பரவி இருந்த இருளினை நீங்கச் செய்தது. இத்தகு அந்தப்புரம்,பெருமை பொருந்திய சிறப்பான மன்னனையல்லாது,வேறு ஆடவர் செல்ல முடியாத அரிய காவலையுடையது. குறிப்பிட்ட எல்லை உடையது.
சொற்பொருள் விளக்கம்
யவனர் இயற்றிய வினைமாண் பாவை – யவனர்களால் உருவாக்கப்பெற்ற,வேலைப் பாட்டுடன் சிறந்து விளங்கும் பாவை, கை ஏந்து ஐ அகல் – கையில் ஏந்தியிருக்கின்ற வியக்கத்தக்க அகலில் (கை விளக்கு) ( ஐ வியப்பாகும் தொல்.சொல். உயிரியல். 87), நிறைய நெய் சொரிந்து – நிறையுமாறு நெய்யை ஊற்றி, பரூஉத்திரி கொளீஇ – பருத்த திரிகளைக் கொளுத்தி குரூஉத்தலை நிமிர் எரி – பொன்நிற தலைப்பகுதியைக் கொண்டு நிமிர்ந்த எரிகின்ற (விளக்கில்) அறு அறு காலை தொறும் – நெய்யும் திரியும் குறையும் பொழுதெல்லாம், அமைவரப் பண்ணி – (நெய்வார்த்து திரியைத் தூண்டி) நன்கு எரியுமாறுச் செய்து, முல்லைப்பாட்டில் காணப்படும்,
விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர்
நெய்உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட
(47- 49)
பாவை விளக்கில் பழூஉச் சுடர் அழல
இடம்சிறந்து உயரிய எழுநிலை மாடத்து
(85- 86)
என்ற வரிகளும் இவண் ஒப்பிட்ட நோக்கத்தக்கது.
பல்வேறு பள்ளிதொறும் – அரண்மனைணின் பல்வேறு இடங்கள் தொறும், பாய் இருள் நீங்க – பரந்த இருள் நீங்க,பீடு கெழு சிறப்பின் – பெருமை பொருந்திய சிறப்பான பெருந்தகை யல்லது – மன்னனையல்லாது,ஆடவர் குறுகா – வேறு ஆடவர் செல்ல முடியாத,அருங்கடி – அரிய காவல்,வரைப்பின் – எல்லை உடையது. வரையறை உடையது.
யவனர்
சங்க நூல்களிலே பலவிடத்தும் யவனரைப் பற்றிய செய்திகளைப் பரக்கக் காணலாம்.
யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலந்து ஏந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுப்ப
(புறம் – 56, 18-20)
கன்ளிஅம் பேரி யாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி
(அகம். 149, 8- 11)
இப்பாடல்கள் வழி, மதுவினை யவனர்கள் தமிழகத்தில் இறக்குமதி செய்துள்ளனர் என்பதும் பொன்னைக் கொடுத்துத் தமிழகத்திலிருந்து மிளகினை வாங்கிச் சென்றுள்ளமையும் அறிய முடிகிறது.
காவிரிப்பூம்பட்டினத்து அரண்மனை தோட்டத்துள் அமைந்த மண்டபத்தை.
மகத வினைஞரும் மாராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும்,யவனத் தச்சரும்
தண்டிடமிழ் வினைஞர் தம்மொடு கூடீ
(மணிமேகலை.காதை.19. பரி.107- 09)
என்கிறது மணிமேகலை கி.பி.7ஆம் அல்லது 8ஆம் நூற்றாண்டில் உருவானதாகச் சொல்லப்படும் பெருங்கதையிலும் யவனரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. யவனர் நகைகள் செய்துள்ளனர்.
‘யவன மஞ்சிகை’
(1.31, 76)
அழகிய பாவை விளக்கினைச் செய்துள்ளனர்.
(1.17.175)
மகர வீணையைப் புனைந்துள்ளனர்
‘யவனக் கைவினை
மாணப் புணர்தோர் மகர வீணை’
(3. 22. 213)
யவனப் பேழை
(3.22.213)
என்று கூறுதலால் அழகிய பேழைகளையும் வனைந்துள்ளனர் யவனர் என்பது அறியலாகிறது.
‘யவனர் கைவினை’
(1.38.233)
என்பதால் கையால் வேலைப்பாடமைய கலைப் பொருட்களை உருவாக்குவதில் சிறந்து விளங்கினர் யவனர் என்பது தெளிவாகிறது.
‘யவனச் சேரி’
(3,4,8)
என்று தனியாகக் குறிப்பிடுதலால் அவர்களுக்கென்று தமிழகத்தில் வசிப்பிடங்களும் உருவாகின என்பதை அறியமுடிகிறது.
• “ கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் ரோமைக் கைப்பற்றிய அலரிக் என்பவன் மூவாயிரம் பவுண்டு நிறையுள்ள மிளகைக் கைப்பற்றினான் என்பது அறியப்படுதலால்,தமிழக வாணிகம் கி.பி. 5ஆம் நூற்றாண்டிலும் ரோம்ப் பெருநாட்டுடன் தொடர்ந்து நடைபெற்று வந்தது என்பது தெரிகிறது’‘
என்பதனைக் கொண்டு பார்க்கும் போது நம் நாட்டிலிருந்து மிளகை வாங்கி சென்ற,யவனர்களே உரோமர் என்ற கருத்தினைப் பெற வைக்கிறது.
“கிரேக்கம், உரோம்,துருக்கம் முதலிய நாடுகளிலிருந்து வணிகத்தின் பொருட்டும்,பிற தொழில் காரணமாகவும் இந்தியாவுக்கு வந்து போனவர்களெல்லாம் யவனர் என்ற ஒரே சொல்லால் பழந்தமிழர் வழங்கினர் எனத் தெரிகிறது.”••
என்ற கருத்தும் ஈண்டு நினையத்தக்கது.
அந்தபுரத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பனை
வரை கண்டன்ன தோன்றல, வரைசேர்பு
வில் கிடந்தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி அன்ன விளங்கும் கதைஉரீஇ
மணி கண்டன்ன மாத்திரள் திண்காழ்
செம்பு இயன்றன்ன செய்வுஉறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ ஒருகொடி வளைஇ
கருவொடு பெயரிய காண்புஇன் நல்இல்
(108- 114)
(க.ரை) அந்தப்புரம்,மலைகளைப் பார்ப்பது போன்ற உயர்ந்த தோற்றமுடையதாய் விளங்கியத.அங்கு மலைகளைச் சேர்ந்து வானவில் கிடப்பது போன்று பல நிறக்கொடிகளும் அசைந்தன.
அந்தபுரத்தின் பல இடங்களில் வெள்ளி போன்ற சாந்தினைப் பூசி இருந்தனர். நீலமணியைக் காண்பது போன்ற கரிய திரண்ட வலிமையான தூண்களும் காணப்பட்டன. செம்பினால் உருவாக்கப்பட்டது போன்று செய்யப்பட்ட நெடிய சுவரிலே,பல வடிவத்தினாலான பூக்களும் ஒரு கொடியைச் சுற்றி இருத்தல் போன்ற காட்சியும் தீட்டப்பட்டிருந்தது. இவ்வாறு காண்பதற்கு இனிய நல்ல இல்லமாகக் கரு தங்கும் அறை (கரு அறை ) என்று பெயர் பெற்ற அந்தபுரம் காட்சியளித்தது.
சொற்பொருள் விளக்கம்
வரை கண்டன்ன தோன்றல் – மலையைக் கண்டது போன்ற தோற்றம்,வரை சேர்பு – மலையைச் சேர்ந்து,வில் கிடந்தன்ன – வில் (வானவில்) கிடப்பது போல,கொடிய – (பலநிற) கொடிகளும்,பல்வயின் – பல இடங்களிலும்,வெள்ளியன்ன – வெள்ளியைப் போன்ற,கதை உரீஇ – சாந்தினைப் பூசி மணிகண்டு அன்ன – நீலமணியைக் காண்பது போன்ற,மாத்திரள் திண் காழ் – கரிய திரண்ட,திண்ணிய (வலிமையான) தூண்களும்,செம்பு இயன்றன்ன – செம்பினால் உருவாக்கப்பட்டது போல் (செம்பு இயன்றன்ன செஞ்சுவர் புனைந்து, செய்வு உறு நெடுஞ்சுவர் – செய்யப்பட்ட உயர்ந்த சுவர், உருவப்பல்பூ ஒரு கொடி வளைஇ – பல்வேறு வடிவமுடைய பூக்களும் ஒரு கொடியைச் சுற்றி இருத்தல்,கருவொடு பெயரிய – கரு தங்கும் அறை (கரு அறை) என்று பெயர் பெற்ற,காண்பு இன்ன நல் இல் – காண்பதற்கு இனிதான நல்ல இல்லம்.


தலைவி படுத்திருக்கும் பாண்டில் எனும் வட்டக் கட்டில்
தசநான்கு எய்திய பணைமருள் நோன்காள்
இகல்மீக் கூறும் ஏந்துஎழில் வரிநுதவல்
பொருதுஒழி நாகம் ஒழிஎயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒழிஎயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர்உளிக் குயின்ற ஈர்இலை இடைஇடுபு
தூங்குஇயல் மகளிர் வீங்குமுலை கடுப்பப்
புரை திரண்டிருந்த குடத்த இடைதிரண்டு
உள்ளி நோன்முதல் பொருந்தி அடிஅமைத்து
பேர்அளளவு எய்திய பெரும்பெயர் பாண்டில்,
(115 – 123)
(க,ரை) நாற்பது ஆண்டுகள் நிரம்பப் பெற்றதும் முரசு என்று வியந்து நோக்கும்படியான வலிமையான கால்களும், போரில் சிறந்த யானை என்று புகழப்பட்ட தகுதியும்,மிக்க அழகும,வரிளையுடைய நெற்றியும் பெற்ற போரில் இறந்த யானையின்,தாமே வீழ்ந்த தந்தங்களைக் குறைத்துச் சீர்படுத்தி, அழகும் செம்மையும் பொருந்தி விளங்குமாறு, தொழில் வல்ல தச்சனால் கூர்மையான உளிக் கொண்டு செய்த இரண்டு இலை வடிவம் இடையே விளங்குமாறு உருவாக்கப்பட்டிருந்தது தலைவின் கட்டில் .
சூல் முதிர்ந்த அசைந்த இயல்பினையுடைய பெண்களின் பருத்த முலை (மார்பு) போன்று, பக்கங்களில் திரண்டிருக்கும் குடத்தை உடையதாய் காட்டிலுக்கும் காலுக்கும் இடைப்பட்ட பகுதி இயற்றப்பட்டிருந்தது,
பூண்டின் வலிமையான முதற்பகுதி போன்று,கட்டிலினுடைய காலின் அடிப்பகுதீப் பொருத்தமுடன் விளங்க,அகன்ற அளவுடன் உருவாக்கப்பட்ட பெரும் பெயர் பெற்ற ‘பாண்டில் ’ எனும் வட்டக் கட்டில் அமைந்திருந்தது,
சொற்பொருள் விளக்கம்
தசநான்கு - நாற்பது ஆண்டுகள்,(தசம் – வடசொல்,பத்து என்று எண்ணிக்கையைக் குறிக்கும் சொல்) எய்திய – அடைந்த,பணை மருற் – முரசு என்று வியக்கும்,நோன்தாள் – சிறந்த யானை என்று கூறப்படூம்,ஏந்து எழில் ? மிக்க அழகு,வரிநுதல் – வரிகளையுடைய நெற்றி,பொருது ஒழி – போரிட்டு இறந்த,நாகம் - யானை ,ஒழி எயிறு – (தாமே ) வீழ்ந்த தந்தம்,அருகு எறிந்து – குறைந்துச் சீர்ப்படுத்தி,சீரும் செம்மையும் ஒப்ப ?- அழகும் செம்மையும் பொருந்த,வல்லோன் – தொழில் வல்ல தச்சன்,கூர உளிக் குயின்ற – கூர்மையான உளிக்கொண்டு செதுக்கிய,ஈரிலை – இரண்டு இலை வடிவம்,இடைஇடுபு – இடையே விளங்குமாறு,தூங்கு இயல் மகளிர் – (சூல் முதிர்ந்த ) அசைந்த இயலிபினையுடைய மகளிர் வீங்கு முலை கடுப்ப – பருத்த முலை போன்ற (கடுப்ப – உவம உருபு ) ,புடை திரண்டு – பக்கங்கள் திரண்டு, இருந்த குடத்த – இருக்கும் குடத்தை உடையதாய். இடை திரண்டு – கட்டிலுக்கும் காலுக்கும் இடைப்பட்ட பகுதி திரண்டமைந்து, உள்ளி நோன் முதல் – பூண்டின் வலிய மேற்பகுதிபோல்,பொருத்தி – பொருத்தமுற அடி அமைத்து- கட்டிலின் அடிப்பகுதியையும் அமைத்து,பேரளவு எய்திய – அகன்ற அளவுடன் உருவாக்கப்பட்ட,பெரும்பெயர்ப் பாண்டில் – பெரும் புகழினையுடைய பாண்டில் (அரசன் அரசியுடன் துயில் கொள்ள ஏற்றவாறு பெரிதாக உருவாக்கப்பட்ட பெருமையும்,நாட்டின் வருங்கால இளவரசரைக் கருவில் பெறக்கூடிய பெருமையும்,இக்கட்டிலே பெறுவதால், ‘ பெரும்புகழ் பாண்டில்’ என்றனர் போலும்.‘கருவொடு பெயரிய ’ என்ற சொல்லும் ஈண்டும் நினையத்தக்கது.)
கட்டிலில் செய்யப்பட்டுள்ள ஒப்பனை
மடைமாண் நுண்இழை பொலிய தொடைமாடன்
முத்துடைச் சாலேகம் நாற்றி, குத்துறுத்து
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து
ஊட்டுறு பல்மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியன்கண் கானத்து
முல்லைப் பல்போது உறழப் பூரைத்து
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணை புணர் அன்னத் தூநிறத் தூவி
இணை அணை மேம்படப் பாய்அணை இட்டு
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடு அமை தூமடி விரிந்த சேக்கை
(124- 135)
(க.ரை) மூட்டுவாய் நன்கு பொருந்த கட்டிலோடு சேர்த்துக் கட்டப்பட்ட முத்து மாலைகளை,நுண்ணிய நூலால் அழகாகத் தொடுத்து கட்டிலினைச் சுற்றிச் சாளரம் போன்று தொங்க விட்டிருந்தனர். புலியின் வரியினை ஒத்த நிறமுடைய பூக்கள் நிறைந்த தாம்பாளத்தைப் (தட்டு ) போன்று குத்துதல் தொழில் அமைய் வடிவமைக்கப்பட்டிருந்த தகடுகளால்,கட்டிலின் மேலிடம் மறையுமாறு அமைத்திருந்தனர்.
குற்றமற்ற பல்நிறம் ஊட்டப்பட்ட மயிர்க்கற்றைகள் விரவி உருவாக்கிய கட்டிலின் விரிப்பில் சிங்கம் வேட்டையாடுதல் போன்ற உருவினைப் பொறித்திருந்தனர்.அதன் மீது அகன்ற காட்டிலே மலரும் முல்லையோடு பல்வேறு மலர்களையும் இடையே சேர்த்துப் பரப்பிய மென்மையான போர்வையை விரித்திருந்தனர். இப்படுக்கைச் சிறப்புற காதலோடு துணையைப் புணர்ந்த அன்னங்களின் வெண்மையான சிறகினை இட்டுச் செய்த ,இரண்டாக இருக்கின்ற மெத்தையைக் கட்டிலின் மீது பரப்பினர். அதில் தலையணைகளையும் இட்டிருந்தனர். மலரின் இதழ்கள் போன்று அமைந்த கஞ்சிப்யிடப்பட்டுத் துவைத்து மடித்த ஆடையினைப் படுக்கையின் மீது விரித்திருந்தனர்.
சொற்பொருள் விளக்கம்.
மடை – மூட்டுவாய்,மாண் – மாட்சிமைப்பட்ட, நுண் இழை பொலிய – நுண்ணிய நூல் அழகுற,தொடை – தொடுத்தத ,மாண்டு – மாட்சிமைப்பட்டு,முத்துடை – முத்தாலாகிய மாலை ,சாலேகம் நாற்றி- பலகணியாகத் தொங்கவிட்டு,குத்துறுத்து – குத்தப்பட்ட புலிப்பொறி கொண்ட – புலியினது வரியினைக் கொண்ட,பூங்கேழ்த் தட்டத்து – பூக்களையுடைய அழகிய தட்டம்,தகடு – தகடுகளால்,கண் புதையக் – இடம் மறையும்படி ,கொளீஇ – கொள்ளச் செய்து, துகள் – குற்றம் ,தீர்ந்து – இல்லாது,ஊட்டறு பன்மயிர் விரைஇ- நிறம் ஊட்டப்பட்ட பல மயிர்களையும் விரவி,வயமான் வேட்டம் பொறித்து - சிங்கம் வேட்டையாடுதல் போன்ற உருவத்தைப் பொறித்து,வியன்கண் காணத்து – அகன்ற இடத்தையுடைய காட்டிடத்து,முல்லைப் பல்போது உறழ – முல்லை மலரோடு பல்வேறு பூக்களையும் இடை இடையே சேர்த்து,பூ நிரைத்து – பூக்களைப் பரப்பி,மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட – மென்மையான விரிக்கப்பட்ட போர்வை சிறப்புற,துணைபுணர் – துணையைக் கூடின, அன்னத் தூநிறத் தூவி – அன்னத்தின் வெண்ணிறச் சிறகு ,இணையணை இரண்டாக இருக்கின்ற மெத்தை, மேம்பட – சிறப்புற ,பாய் – பரப்பி,அணையிட்டு – தலையணைகளையும் இட்டு காடி கொண்ட – கஞ்சியிட்ட கழுவுறு கலிங்கத்துத் – துவைத்த ஆடையினை, தோடு அமை (மலரின் ) இதழ்கள் போல் அமைந்த,தூமடி – தூய்மையாக மடிக்கப்பட்டிருந்த, விரித்த – விரிக்கப்பட்டிருந்த,சேக்கை - படுக்கை


படுக்கையில் இருந்த தலைவியின் நிலை
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்
பின்அமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நல்நுதல் உலறிய சில்மெல் ஓதி
நெடுநீர் வார்குழை களைந்தென, குறுங்கண்
வாயுறை அழுத்திய வறிதுவீழ் காதின்
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை நூல்யாத்து
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகில் மரீஇய ஏந்துகோட்டு அல்குல்
அம்மாசு ஊர்ந்த அவிர்நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப, புனைவு இல் (136 – 147)
(க,ரை) போர் மேற்சென்ற தலைவனைப் பிரிந்திருக்கும தலைவி, முத்து மாலையைத் தாங்கிய பெருத்த முலையினைக் கொண்ட மார்பிலே,பின்புறம் அமைந்த நீண்ட கூந்தல் தாழ்ந்து கிடக்க நல்ல நெற்றியில் வறண்ட சில மெல்லிய மயிர்ப் புரள கட்டிலில் இருந்தாள். நீண்டு தொங்கும் நுண்ணிய குழையினைக் (காதணி) களைந்துவிட்டு, குழையின்றி தாழ்ந்து தொங்கும் இயல்பினையுடைய காதின் சிறு துளைகளில் தாளுருவி என்னும் சிறிய காதணியை அழுத்தியிட்டிருந்தாள். பொன்னால் செய்யப்பட்ட வளையல் அணிந்த மயிர் ஒழுங்குபட அமைந்த முன் கையில் வலம்புரிச் சங்கால் செய்த வளையலை அணிந்திருந்ததோடு, காப்பு நூலும் கட்டியிருந்தாள். வாளை மீனின் பிளந்த வாயை ஒத்து விளங்கிய வளைந்த மோதிரத்தை (நெளி என்னும் மோதிரம் ) அணிந்த சிவந்த விரலில், செந்நிறமுடைய (சிறிய) மோதிரத்தைச் செருகியிருந்தாள். பூ வேலைப்பாடு அமைய உருவாக்கப்பட்ட பட்டாடை உடுத்தியிருந்த உயர்ந்த வளைவினையுடைய அல்குலில் மாசு படிந்த அழகிய நூலால் நெய்யப்பட்ட ஆடையினை உடுத்தியிருந்தாள். இவ்வாறு, வண்ணங்களைக் கொண்டு ஒப்பனை செய்யாத ஓவியத்தைப் போன்று தலைவி, ஒப்பனை, ஏதுமின்றி கட்டிலில் இருந்தாள்.
சொற்பொருள் விளக்கம்
ஆரம் தாங்கிய – மாலையைத் தாங்கிய,அலர் முலை – பெருத்த முலை (அலர் முலை யாகத்து. கலி 14),பின் அமை – பின்புறம் அமைந்த,நெடு வீழ் தாழ – நீண்ட (கூந்தல்) வீழ்ந்து தாழ்ந்து கிடக்க (பின்னுவீழ் சிறுபுறத்து. சிறுபா. 191) ஈண்டு நினையத்தக்கது) துணை துறந்து – தலைவனைப் பிரிந்து,நன்நுதல் – நல்ல நெற்றி – உலறிய – (நெய்யின்றி ) வறண்ட, சில் மெல் ஓதி – சிலவாகிய மென்மையான கூந்தல்,நெடுநீர் வார்குழை – நீண்டு தொங்கும தம்மையுடைய நுண்ணிய குழை, களைந்தென – களைந்து விட்டு, குறுங்கண் – சிறு துளைகளில்,வாயுறை – தாளுருவி என்னும் சிறிய காதணி,அழுத்திய – அழுத்தின ,வறிது வீழ் காதின் – குழையின்றி சிறிது தாழ்ந்து தொங்கும் காதினையும்,பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை – பொன்னால் செய்த வளையல் அணிந்த மயிர் ஒழுங்குபட அமைந்த முன் கை, வலம்புரி வளையொடு – வலம்புரி சங்கால் செய்த வளையொடு,கடிகை நூல்நயத்து – காப்பு நூல் கட்டி, வாளைப் பகுவாய் – வாளை மீனின் பிளந்த வாய்,கடுப்ப – (உவம உருபு) போன்ற,வணக்கு – வளைந்து, உறுத்த – இருந்த, (வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம். சிலம்பு,6, 95).செவ்விரல் - சிவந்த விரல்,கொளீஇய – கொள்ளப்பட்ட (நெளிவு மோதிரம் என்க. இன்றும் தென் தமிழ் நாட்டில் திருமணத்தின் போது பெண்ணிற்குக் கொடுக்கின்ற நகைகளில் நெளிவு மோதிரமும் ஒன்று.பாண்டியனின் மீன் கொடியினை அடியொற்றி தென்தமிழ் நாட்டில் மீனின் வாய் வடிவ மோதிரம் அணிதல் என்பது சிறப்பாகக் கொள்ளப்பட்டதோ என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது) செங்கேழ் – சிவப்பு நிறமுடைய,விளக்கத்து – மோதிரத்தை அணிந்து,பூந்துகில் மரீஇய – பூ வேலைப்பாடமைந்த பட்டாடையை வழக்கமாக அணிந்த( மரீஇய கண் தொல். பொரு. 308), ஏந்து கோட்டு அல்குல் – உயர்ந்த வளைவினையுடைய அல்குலில்,அம்மாசு ஊர்ந்த – மாசு படிந்து ,அவிர்நூல் – விளங்கும் பருத்தி நூலால்,கலிங்கமொடு – ( நெய்யப்பட்ட) ஆடையோடு,புனையா ஓவியம் – ஒப்பனை இல்லாத ஓவியம், கடுப்ப – ( உவம உருபு) போல,புனைவு இல் – ஒப்பனை இல்லாத ( தலைவி கட்டிலில் இருந்தாள்)
தலைவியின் அடி வருடும் தோழியர்
தளிர்ஏர் மேனித் தாய சுணங்கின்
அம்பணைத் தடைஇய மென்தோள் முகிழ்முலை
வம்பு விசித்து யாத்த, வாங்குசாய் நுசுப்பின்
மெல்இயல் மகளிர் நல்அடி வருட;( 148- 151)
(க.ரை) தலைவியின் நல்ல பாதங்களை வருடி நிற்கும் பெண்கள், தளிர் போன்ற அழகிய மேனி உடையர், அவ்வுடம்பில் தேமலைப் பெற்றிருப்பவர், மூங்கில் போன்ற தோளினை உடையவர்,தாமரை மொட்டு போன்ற முலையினைக் கச்சினால் இறுகக் கட்டி பிணைத்திருப்பவர், வளைந்து,தளர்ந்த இடையினையும் ,மென்மையான இயல்பினையும் உடையர்.
சொற்பொருள் விளக்கம்
தளிர் ஏர் – தளிர் போன்ற அழகிய,மேனி – உடம்பு,தாய – பரவிய,கணங்கின் – தேமலினை உடையவர், அம் பணைத் –அழகிய மூங்கில்,தடைஇய – திரண்ட,மென்தோள் – மென்மையான தோள்,முகிழ் மலை – (தாமரை) முகை (மொட்டு) போலும் முலையில்,வம்பு – கச்சு,விசித்து – இறுகக் கட்டி,யாத்த – பிணைத்த,வாங்கு – வளைத்து, சாய் – தளர்ந்த, நுசுப்பின் – இடையினையும்,மெல்இயல் மகளிர் – மென்மையான இயல்புடைய மகளிர்,நல் அடி வருட – நல்ல பாதத்தினை தடவிக் கொடுக்க,


தேற்றும் செவிலியர்
நரை விராவுற்ற நறுமென் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ
குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி
‘இன்னே வருகுவர் இன் துணையோர் ’ என
உகத்தவை மொழியவும் ( 152- 156)
(க.ரை) தலைவனைப் பிரிந்திருக்கும் தவைவிக்குப் பிரிவாற்றாமை மிகுவதை அறிந்து,நரை கலந்திருக்கும் மணம் வீசும் மெலிய கூந்தலையிம் சிவந்த முகத்தையும் உடைய செவிலியர் (தோழியின் தாயர்) ஒன்று கூடினர். தலைவியின் பிரிவாற்றாமையைத் தணிக்கும் வகையில் குறைவாகப் பேச வேண்டிய இடத்தில் குறைத்தும், விளக்கமாகச் சொல்ல வேண்டிய இடத்தில் நீட்டித்தும் அறிவுரைகள் பல கூறினர், பிரிவுத் துயரம் தணிய முற்சித்தனர், உனக்கு இனிய துணையாக அமைந்த தலைவன்,‘ இப்பொழுதே வருவார்’ என்று தலைவியின் மனம் விரும்பும் வகையில் கூறினர்.
சொற்பொருள் விளக்கம்
நரை விராவுற்ற – நரை கலந்திருக்கும், நறுமென் கூந்தல் – மணம் வீசும மென்மையான கூந்தல், செம்முகச் செவிலியர் – சிவந்த முகத்தையுடைய செவிலியர் (தோழியின் தாய்) கை – பிரிவு,ஆற்றாமை ஒழுக்கம்,மிக – மிகுவதால்,குழீஇ – கூடி,குறியவும்,நெடியவும் – குறைவாகவும், நீளவும்,உரை பல – அறிவுரைகள் பல, பயிற்றி – பலகாலும் கூறியும் (நரை விராவுற்ற நறுமென் கூந்தல்,செம்முது வெவிலியர் பல பாராட்ட ,(அகநா. 12) எனவும் வருதல் காண்க.) இன்னே வருகுவர் – இப்பொழுதே வருவார், இன் துணையோர் – இனிய துணையாக அமைந்தவர், என- என்று உகத்தவை – தலைவியின் மனம் விரும்பும் வகையில்,மகிழ்ச்சி தரும் வகையில்,மொழியவும் – கூறவும் ,
தேறாத் தலைவி
.......................ஒல்லாள்,மிகக் கலுழ்ந்து
நுண்சேறு வழித்த நோன்நிலைத் திரள்கால்
ஊறா வறுமுலை கொளீஇய கால்திருத்திப்
புதுவது இயன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்நிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ஊர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுஉயிரா
மாஇதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சோத்திச் சில தெறியாப்
புலம்பொடு வதியும் (156- 166)
(க.ரை) தலைவியியோ,செவிலியரின் சொற்களைக் கேட்டும் மனம் அமைதியடையாமல் மிகவும் கலங்கினாள். தலைவி அமர்ந்திருந்த கட்டிலின் நுண்ணியதாகச் சாதிலிங்கம் பூசிய வலிமையான பருத்த கால்கள்,பால் சுரக்காத முலை ( பெண்ணின் மார்பு) போன்று சிறிய குடங்களைக் கொண்டு விளங்கின. அத்தகைய கால்களைக் கட்டிலின் மேற்பகுதியோடு இணைத்து நன்கு அமைத்திருந்தனர். புதிதாக உருவாக்கிய மெழுகு பூசிய கட்டிலின் மேல் விதானத்தில் திரைச் சீலையினைக் கட்டியிருந்தனர். அதில் வலிமை வாய்ந்த கொம்புகளையுடைய ஆட்டின் பெயருடைய மேட இராசி முதலாக ஏனைய இராசிகளிலும் வானில் திரிகின்றவனாகிய ஞாயிற்றிலிருந்து மாறுபட்ட சிறப்பினையுடைய ஆட்டின் பெயருடைய இராசி முதலாக ஏனைய இராசிகளிலும் வானில் திரிகின்றவனாகிய ஞாயிற்றிலிருந்து மாறுபட்ட சிறப்பினையுடைய திங்களோடு என்றும் பிரியாது நிலைபெற்று விளங்கும் உரோகிணி எனும் நாள்மீனின் சித்திரம் வரையப்பட்டிருந்தது. அதனைக் கண்ட தலைவி,தானும் உரோகிணிபோன்று கணவரைப் பிரியாமல் வாழும் பேற்றினைப் பெறவில்லையே என்று பெருமூச்சுவிட்டாள் அவளின் குவளை மலர் போலும் இமைகளில் தங்கிய கண்ணீர் மிகுந்து விழ, அதனைத் தன் சிவந்த விரலால் கடைக்கண்ணில் ஒன்று கூட்டி,சில துளி கண்ணீரை விரலால் கடைக்கண்ணில் ஒன்று கூட்டி,சில துளி கண்ணீரை விரலால் தெறித்துத் தனிமைத் துயரில் வருந்தினாள்.
சொற்பொருள் விளக்கம்
ஒல்லாள் – உடன்படாதவளாய், மிகக் கலுழ்ந்து – மிகக் கலங்கி, நுண் சேறு வழித்த – நுண்ணிதாகக் குழம்பு (சாதிலிங்கக் குழம்பு) பூசப்பட்ட,நோன்நிலை – வலிமை தம்மை வாய்ந்த, திரள் கால் – பருத்த கால்,ஊறா வறுமுலை கொளீஇய – பால் சுரக்காத முலை (மார்பு) போன்று சிறிய குடங்களைக் கொண்ட, கால் திருத்தி – காலை ( கட்டிலில்) இணைத்து நன்கமைத்து, புதுவது இயன்ற – புதிதாக உருவாக்கிய, மெழுகு செய் படமிசை – மெழுகு பூசிய (மேல்விதானத்து கட்டிய ) திரைச்சீலையின் மேல் ,திண்நிலை மருப்பின் – வலிமை வாய்ந்த கொம்புகளையுடைய,ஆடு – ஆட்டின் பெயருடைய மேடஇராசி, தலையாக – முதலாக,விண் ஊர்பு வானில் ஊர்கின்ற,திரி தரும் – திரிகின்ற,வீங்கு செலல் மண்டிலத்து – மேல் நோக்கிச் செல்லும் (நாவிளிம்பு வீங்கி, தொல்,எழுத்து. 96) ஞாயிற்றோடு,முரண்மிகு சிறப்பின் – மாறுபட்ட சிறப்பினையுடைய,செல்வனோடு – திங்களோடு,நிலைஇய – நிலைபெற்ற உரோகிணி, நினைவனள், நோக்கி – உரோகிணியை நினைத்துப் பார்த்த,(தானும் உரோகிணியைப் போல் கணவரோடு பிரியாமல் வாழும் பேற்றினைப் பெறவில்லையே என்று நினைத்து) நெடிது உயிர – பெருமூச்சு விட்டு, மா இதழ் ஏந்நிய – குவளை மலரின் இதழ் போலும் இமைகளில் தாங்கியுள்ள, மலிந்து வீழ் – மிகுந்து விழுகின்ற,அரி – கண்,பனி – நீர், செவ்விரல் கடைக்கண்ட சேர்த்தி – சிவந்த விரலால் கடைக் கண்ணில் ஒன்று கூட்டி ,சில தெறியா – சில துளிகளைத் தெறித்து,புலமிபொடு வதியும் – தனிமைத் துயரில் இருக்கும் .
தலைவியின் துயர் தீர தெய்வத்தை வேண்டல்
............................ நலங்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர விறல்தந்து
இன்னே முடிகதில் அம்ம
(166 – 168)
(க.ரை) அன்பு மிகுந்த கலைவிக்குத் துன்பம் தருகின்ற ஆற்றமுடியாத வருத்தம் தீரும் வகையில்,தலைவனுக்குப் போரில் வெற்றியைத் தந்து, இப்பொழுதே முடித்துத் தருக,எம் விருப்பத்தைக் கேட்பாயாக என்று வெற்றியைத் தரும் கொற்றவையை வேண்டினர்.
சொற்பொருள் விளக்கம்
நலங்கிளர் – அன்பு மிகுந்த,அரிவைக்க – பெண்ணாகிய தலைவிக்கு,இன்னா – துன்பம் தருகின்ற,அரும்படர் தீர – ஆற்ற முடியாத வருத்தம் தீரு வகையில்,விறல் தந்து – வெற்றியைத் தந்து, இன்னே – இப்பொழுதே, முடிக – முடித்துத் தருக, தில் – (எம் ) விருப்பம்
‘விழைவே காலம் ஒழியிசைக் கிளவியென்று
அம்மூன்று என்ப தில்லைச் சொல்லே’
(தொல். சொல்.இடை.5)
அம்ம –கேட்பாயாக,(அம்ம கேட்பிக்கும்.தொல்.சொல். இடை.)
அரசனின் நிலை
.............................மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினைநவில் யானை
நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரள
களிறுகளம் படுத்த பெருஞ்செய் ஆடவர்
ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
வடந்தைத் தண்வளி எறிதொறும நுடங்கித்
தெற்குஏர்பு இறைஞ்சிய தலைய நன்பல
பாண்டில் விளக்கில் பரூஉச்சுடர் அழல
வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்
(168- 177)
(க.ரை) ஒளி வீசும் முகபடாம் விளங்கும் போர்த் தொழில் பழகிய யானையின் நீண்ட திரண்ட கை நிலத்தில் புரளுமாறு வெட்டி வீழ்த்திய பெரும் மறச்செயலைச் செய்தவர் மறவர். அவ்வீரர்கள்,போரிலே வாளினால் பட்ட விழுப்புண்களைக் காண்பதற்றகாகப் பாசறையிலிருந்து வெளியே சென்றான் தலைவன். அங்கே எரிந்து கொண்டிருந்த அகல் விளக்குகளின் பருத்த தலைகள் வடதிசையிலிருந்து வந்த குளிர்ந்த காற்று வீசும்பொழுதெல்லாம், அசைந்து தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்தன. அவ்வொளியில் வேப்பந்தழையைத் தலைப்பகுதியில் கட்டிய வலிய காம்பினையுடைய வேலினை ஏந்தியாவாறு முன்னே சென்றான் வீரனொருவன், அவன்,தலைவனுக்குப் புண்பட்ட வீரர்களை ஒழுங்கு முறைப்படிக் காட்டிச் சென்றான். பின்பு,
சொற்பொருள் விளக்கம்
மின் அவிர் – ஒளி பிரகாசிக்கும், ஒடையொடு – முகபடாத்தோடு,பொலிந்த – விளங்கிய,வினை நவில் யானை – போர்த்தொழில் பழகிய யானை,நீள்திரள் தடக்கை – நீண்ட பெரிய கை,நிலமிசைப் புரள – நிலத்தின் மேல் புரளுமாறு, களிறு களம் படுத்த – களிற்றினைப் போர்க்களத்தில் வீழ்த்திய, பெருஞ்செயல் ஆடவர் – பெரிய மறச் செயலைச் செய்த ஆடவர் (மறவர்), ஒளிறுவாள் – ஒளி பொருந்திய வாள், விழுப்புண் காணிய – விழுப்புண் காண்பதற்கு ,புறத்தே போந்து – (பாசறையினின்று) வெளியே சென்று,வடந்தைத் தண் வளி – வடதிசையிலிருந்து வந்த குளிர்ந்த காற்று,எறிதொறும் – வீசுகின்ற பொழுதெல்லாம் ,நுடங்கி – அசைந்து,தெற்கு ஏர்பு – தெற்காக எழுந்து,இறைஞ்சிய – சாய்ந்த,தலைய – தலையினை உடையதாய்,நன் பல –நல்ல பலவாகிய,பாண்டில் விளக்கில் – கால்களையுடைய அகல் விளக்கில் ,(பாண்டியனின் பாசறையில் எரியும் விளக்கும் பாண்டில் ஆனதோ?) பரூஉச்சுடர் – பருத்த சுடர்,அழல – எரிய,(பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர், பதிற்றுப்பத்து 47, 6) வேம்பு தலையாத்த – வேப்பந்தழையைத் தலைப்பகுதியில் கட்டிய,நோன்காழ் – வலிய காம்பினையுடைய,எஃகமொடு – வேலோடு,முன்னோன் – முன்னே செல்லும் வீரன், முறை முறை காட்ட – (புண்பட்ட வீரர்களை) ஒழுங்கு முறைப்படி காட்ட,பின்னர் –பின்பு,
மணிபுறத்து இட்ட மாத்தாள் பிடியொடு
பருமம் களையாப் பாய்பரிக் கலிமா
இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்ப,
புடைவீழ் அம்துகில் இடவயின் தழீஇ
வாள்தோள் கோத்த வன்கண் காளை
கவல்மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து
நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென்று அசைஇ தாதுளி மறைப்ப
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே.
(178 -188)
(க.ரை) பாசறையின் கரிய சேறுடைய தெருவில்,மணிகளைப் புறத்தே இட்ட பெரிய கால்களையுடைய பெண் யானைகளோடு,சேணம் களையாத பாய்ந்து செல்லும் செருக்குடைய குதிரைகளும் தன்மேல் விழுந்த மழைத் துளிகளைச் சிதறின.
தலைவன் தன் இடப்பக்கத்து வீழ்ந்த அழகிய ஆடையினை எடுத்துத் தழுவி அணைத்துக் கொண்டான். தனது வலது கையினை வாளைத் தோளிலே கோர்த்துள்ள வலிமையான வீரனின் தோளின் மேலே வைத்தக் கொண்டு,போரில் விழுப்புண்பட்ட வீரர்களின் மனம் விரும்பும் வகையில் முகம் மலர நோக்கினான். இவ்வாறு வீரர்களைப் பார்த்த வரும்மன்னன் மேல் மழைத்துளி படாதவாறு,நூலால் கோர்க்கப்பட்ட முத்துமாலைகள் தொங்கும் வெண் கொற்றக் குடை தவ்வென்ற ஓசையோடு அசைந்து தாவும் மழைத்துளிகளை மறைத்து நின்றது. நள்ளென்ற இரவுப் பொழுதிலும் துயில் கொள்ளாது,சில வீரர்களோடு புண்பட்ட வீரர்களைப் பார்த்து வரும் மன்னர்,பல பகை மன்னர்களோடு மாறுபட்டு பாசறையிலே தங்கியுள்ள இப்போர்த் தொழில் (யாதாக வேண்டும் என்ற வினை எழும்புகிறது, விடை சொல்கிறார் நக்கீரர் 167 மற்றும் 168 வரிகளில்) விறல் தந்து இன்னே முடிகதில் அம்ம என்று முன்னதில் இருந்து முடிவினை பெற வைக்கிறார் ஆசிரியர்.
சொற்பொருள் விளக்கம்
மணிப்புறத்து இட்ட – மணிகளைப் புறத்ததே இட்ட ,மாத்தாட் பிடியொடு – பெரிய கால்களையுடைய பெண் யானைகளோடு,பருமம் களையா – சேணம் களையாத,பாய்பரிக் கலிமா – பாய்ந்து செல்லம் செருக்குடைய குதிரைகளும், இருஞ்சேற்று – கரிய சேற்றிமனையுடைய ,தெருவின் – தெருவில்,எறி துளி – தன்மேல் தெறித்த தளிகளை,விதிர்ப்ப – உதற,புடைவீழ் – பக்கம் வீழ்ந்த, அம்துகில் – அழகிய ஆடை,இடவயின் தழீஇ – இடப்பக்கம் தழுவி,வாள் தோள் – வாளினைத் தோளிலே,கோத்த – கோர்த்துள்ள,வன்கண் காளை – வலிமையான வீரனின் ,சுவல் மிசை – தோள் மேலே,அமைத்த கையன் ஞ கையினை வைத்துக் கொண்டு,முகன் அமர்ந்து – முகம் பொருந்தி,நூல்களால் யாத்த – நூலால் கோர்க்கப்பட்ட,மாலை – முத்து மாலை,வெண்குடை - வெண் கொற்றக் குடை ,தவ்வொன்று அசைஇ – தவ்வென்ற ஓசையோடு அசைந்து, தாதூளி மறைப்ப – தாவும் மழைத்துளிகளை மறைக்க,நள்ளென் யாமத்தும் – நள் என்ற இரவுப் பொழுதிலும்,பள்ளி கொள்ளான்- துயில் கொள்ளாது,சிலரொடு – சில வீரர்களோடு,திரிதரும் வேந்தன் – (பாசறையில் ) திரிகின்ற வேந்தன் பலரோடு முரணிய – பல மன்னர்களோடு வேறுபட்டு எழுந்த ,பாசறைத் தொழிலே – பாசறையிடத்தில் இருந்து இயற்றும் போர்த்தொழில்.

நெடுநல்வாடை – மூலம்
மழைப்பொழிதல்
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ,
பொயயா வானம் புதுப்பெயல் பொழிந்தென,
இடையர் நிலை
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்,
05. புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்

நீடுஇதழ்க் கண்ணி நீர்அலைக் கலாவ,
மெய்க்கொள் பெரும்பனி நலியப்,பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க,
கூதிர்க்காலத்தின் தன்மை
மாமேயல் மறப்ப மந்தி கூர
10. பறவை படிவன வீழக் கறவை

கன்று கோள் ஒழியக் கடிய வீசி,
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்
மழைக்காலச் செழிப்பு
புன்கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப்
பொன்போல் பீரமொடு புதல்புதல் மலரப்,
15 பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி,

இருங்களி பரந்த ஈர வெண்மணல்
செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்
கயல்அறல் எதிரக் கடும்புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை
20 அகல் இரு விசும்பில் துவலை கற்ப;

அங்கண் அகல்வயல் ஆர்பெயல் கலித்த
வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க;
முழுமுதல் கமுகின் மணிஉறழ் எருத்தின்
கொழுமடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
25 நுண்நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு

தெண்நீர் பசுங்காய் சேறுகொள முற்ற
நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக்
குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க,
தெருக்களில் சுற்தித் திரியும் மக்கள்

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
30. ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்
படலைக் கண்ணி பருஏர்எறுழ் திணிதோள்
முடலை யாக்கை, முழுவலி மகிழ்சிறந்து
துவலைத் தண்துளி பேணார் பகல்இறந்து
35 இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர,
மாலைக் கால வழிபாடு
வெள்ளி வள்ளி வீங்குஇறைப் பணைத் தோள்
மெத்தென் சாயல்,முத்து உறழ் முறுவல்
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்துஎழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த

40. செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து
அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுதறிந்து
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர

கூதிர்க்கால நிகழ்வுகள்
மனைவாழ் புறாவின் நிலை
45. மனைஉறை புறவின் செங்காற் சேவல்
இன்புறு பெடையொடு மன்றுதேர்ந்து உண்ணாது
இரவும் பகலும் மயங்கி கையற்று
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப

அரைக்கப்படாத சந்தனமும்
அரைக்கப்பட்ட கத்தூரியும்
கடியுடை வியல் நகர்ச் சிறுகுறுந் தொழுவர்
50 கொள்உறழ் நறுங்கல் பலகூட்டு மறுக
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கில் சாந்தொடு துறப்பக்

மகளிர் நிலை
கூந்தல் மகளிர் கோதை புனையார் ;
பல்இருங் கூந்தல் சில்மலர் பெய்ம்மார்
55 தண்நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்பக்,

இயங்காத விசிறியும், தாழிட்ட சாளரமும்

கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வானூல் வலந்தன தூங்க
60 வானுற நிவந்த மேனிலை மருங்கின்
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர்வாய் கதவம் தாழொடு துறப்பக்

வெந்நீரும் நெருப்பும்
கல்லென் துவலை தூவலின், யாவரும்
65 தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்
பகுவாய்த் தடவில் செந்நெருப்பு ஆர;

தண்மையின் திரிந்த யாழின்
தன்மையை மார்பின் வெம்மையில் சரிசெய்தல்
ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையின் திரிந்த இன்குரல் தீம்தொடை

கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇ
70 கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப

காதலர் பிரிந்தோரை வாட்டும் கூதிர்
காதலர்ப் பிரிந்தோர் புலம்ப,பெயல் கனைந்து
கூதிர் நின்றன்றால் போதே

மன்னனின் அரண்மனையை
உருவாக்கிய முறை
.........................................மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு
75 ஒருதிறம் சாரா அரைநாள் அமயத்து

நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி‘
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து

கோபுர வாயில்
ஒருங்குஉடன் வளைஇ, ஓங்குநிலை வரைப்பின்
80 பருஇரும்பு பிணித்து, செவ்வரக்கு உரீஇ

துணைமாண் கதவம் பொருத்தி, இணைமாண்டு
நாளொடு பெயரிய கோள்அமை விழுமரத்து
போதுஅவிழ் குவளைப் புதுப்பிடி கால் அமைத்து
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின்
85 கைவல் கம்மியன் முடுக்கலின் புரைதீர்ந்து

ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றுஎழு கொடியொடு வேழம் சென்றுபுக
குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாயில்

முற்றம்,முன்வாயில்
திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
90 தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து

நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை

அரண்மனையில் எழும் ஓசைகள்
பணைநிலை முனைஇய பல்உளைப் புரவி
புல்உணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
95 நிவவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து

கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய
கலிந்துவீழ் அருவிப் பாடுவிறந்து,அயல
ஒலி நெடும் பீலி ஒல்க, மெல்இயல்
கலிமயில் அகவும் வயிர்மருள் இன்இசை
100 நளிமலைச் சிலம்பின் சிலம்பும் கோயில்

அந்தப்புரத்தின் அமைப்பு
யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கைஏந்தும் ஐஅகல் நிறைய நெய்சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர்எரி
அறுஅறு காலைதோறு அமைவரப் பண்ணிப்
105 பல்வேறு பள்ளிதொறும் பாய்இருள் நீங்க
பீடுகெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்

தலைவியின் தனியிடம்
வரை கண்டன்ன தோன்றல, வரைசேர்பு
வில் கிடந்தன்ன கொடிய பல்வயின்
110 வெள்ளி அன்ன விளங்கும் கதைஉரீஇ

மணி கண்டன்ன மாத்திரள் திண்காழ்
செம்பு இயன்றன்ன செய்வுஉறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ ஒருகொடி வளைஇ
கருவொடு பெயரிய காண்புஇன் நல்இல்

கட்டிலின் வனப்பு
115 தசநான்கு எய்திய பணைமருள் நோன்காள்

இகல்மீக் கூறும் ஏந்துஎழில் வரிநுதவல்
பொருதுஒழி நாகம் ஒழிஎயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒழிஎயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர்உளிக் குயின்ற ஈர்இலை இடைஇடுபு

120 தூங்குஇயல் மகளிர் வீங்குமுலை கடுப்பப்
புரை திரண்டிருந்த குடத்த இடைதிரண்டு
உள்ளி நோன்முதல் பொருந்தி அடிஅமைத்து
பேர்அளளவு எய்திய பெரும்பெயர் பாண்டில்,

கட்டிலில் செய்யப்பட்டுள்ள ஒப்பனை
மடைமாண் நுண்இழை பொலிய தொடைமாடன்

125 முத்துடைச் சாலேகம் நாற்றி, குத்துறுத்து
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து
ஊட்டுறு பல்மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியன்கண் கானத்து

130. முல்லைப் பல்போது உறழப் பூரைத்து
மெல்லிதின் விரிந்த சேக்கை

கட்டிலில் படுக்கை விரிப்பு
------ ----------------- ---------------மேம்படத்
துணை புணர் அன்னத் தூநிறத் தூவி
இணை அணை மேம்படப் பாய்அணை இட்டு

காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
135 தோடு அமை தூமடி விரிந்த சேக்கை

படுக்கையில் இருந்த தலைவியின் நிலை
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்
பின்அமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நல்நுதல் உலறிய சில்மெல் ஓதி

நெடுநீர் வார்குழை களைந்தென, குறுங்கண்
140 வாயுறை அழுத்திய வறிதுவீழ் காதின்
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை நூல்யாத்து
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்

செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
145 பூந்துகில் மரீஇய ஏந்துகோட்டு அல்குல்
அம்மாசு ஊர்ந்த அவிர்நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப, புனைவு இல்

அடி வருடும் தோழியர்
தளிர்ஏர் மேனித் தாய சுணங்கின்

அம்பணைத் தடைஇய மென்தோள் முகிழ்முலை
150 வம்பு விசித்து யாத்த, வாங்குசாய் நுசுப்பின்
மெல்இயல் மகளிர் நல்அடி வருட;

தேற்றும் செவிலியர்
நரை விராவுற்ற நறுமென் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ

குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி
155 ‘இன்னே வருகுவர் இன் துணையோர் ’ என
உகத்தவை மொழியவும்

தேறாத் தலைவி
ஒல்லாள்,மிகக் கலுழ்ந்து
நுண்சேறு வழித்த நோன்நிலைத் திரள்கால்

ஊறா வறுமுலை கொளீஇய கால்திருத்திப்
புதுவது இயன்ற மெழுகுசெய் படமிசைத்
160 திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ஊர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய

உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுஉயிரா
மாஇதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி
165 செவ்விரல் கடைக்கண் சோத்திச் சில தெறியாப்
புலம்பொடு வதியும்

இல்லுறை தெய்வத்தை வேண்டல்
............................ நலங்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர விறல்தந்து
இன்னே முடிகதில் அம்ம

பாசறையில் தலைவனின் நிலை
.............................மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினைநவில் யானை
170 நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரள

களிறுகளம் படுத்த பெருஞ்செய் ஆடவர்
ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
வடந்தைத் தண்வளி எறிதொறும நுடங்கித்
தெற்குஏர்பு இறைஞ்சிய தலைய நன்பல

175 பாண்டில் விளக்கில் பரூஉச்சுடர் அழல
வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்
மணிபுறத்து இட்ட மாத்தாள் பிடியொடு
பருமம் களையாப் பாய்பரிக் கலிமா

180 இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்ப,
புடைவீழ் அம்துகில் இடவயின் தழீஇ
வாள்தோள் கோத்த வன்கண் காளை
கவல்மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து
நூல்கால் யாத்த மாலை வெண்குடை

185 தவ்வென்று அசைஇ தாதுளி மறைப்ப
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே.