தொல்காப்பியம்- மரபியல்

 

தொல்காப்பியம் - மரபியல் - நூற்பா மூலம் - அடுக்கு

மாற்ற முடியாத சிறப்பினை உடையது மரபு
இதில் காணப்படும் மாறக்கூடிய, மாற்றக்கூடிய செய்திகள் தொல்காப்பியர் கூறியவை அல்ல

குல வாழ்க்கை மாறக்கூடியது
நூல், சூத்திரம், உத்தி முதலானவை மரபு அல்ல
இவை இடைச்செருகல்கள்

இளமைப் பெயர்

மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் \ பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் \ கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று \ ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே. 1

ஆண் பெயர்

ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும் \ சேவும் சேவலும் இரலையும் கலையும் \ மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் \ போத்தும் கண்டியும் கடுவனும்  பிறவும் \ யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப. 2

பெண் பெயர் 

பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் \ மூடும் நாகும் கடமையும் அளகும் \ மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் \ அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே. 3

மரபில் வந்த இளமைப் பெயர்கள்

அவற்றுள், \ பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை. 4

தவழ்பவைதாமும் அவற்று ஓரன்ன. 5

மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு \ ஆங்கு அவை நான்கும் குட்டிக்கு உரிய. 6

பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை. 7

நாயே பன்றி புலி முயல் நான்கும் \ ஆயும் காலை குருளை என்ப. 8

நரியும் அற்றே நாடினர் கொளினே. 9

குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார். 10

பிள்ளைப் பெயரும் பிழைப்பு ஆண்டு இல்லை \ கொள்ளும் காலை நாய் அலங்கடையே. 11

யாடும் குதிரையும் நவ்வியும் உழையும் \ ஓடும் புல்வாய் உளப்பட மறியே. 12

கோடு வாழ் குரங்கும் குட்டி கூறுப. 13

மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் \ அவையும் அன்ன அப் பாலான. 14

யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் \ மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய. 15

எருமையும் மரையும் வரையார் ஆண்டே. 16

கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே. 17

ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும். 18

குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை. 19

ஆவும் எருமையும் அது சொலப்படுமே. 20

கடமையும் மரையும் முதல் நிலை ஒன்றும். 21

குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும் \ நிரம்ப நாடின் அப் பெயர்க்கு உரிய. 22

குழவியும் மகவும் ஆயிரண்டு அல்லவை \ கிழவ அல்ல மக்கட்கண்ணே. 23

பிள்ளை குழவி கன்றே போத்து எனக் \ கொள்ளவும் அமையும் ஓர் அறிவு உயிர்க்கே. 24

நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே. 25

சொல்லிய மரபின் இளமைதானே \ சொல்லும் காலை அவை அல இலவே. 26

உயிரின அறிவு

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே \ இரண்டு அறிவதுவே அதனொடு நாவே \ மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே \ நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே \ ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே \ ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே \ நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. 27

புல்லும் மரனும் ஓர் அறிவினவே \ பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 28

நந்தும் முரளும் ஈர் அறிவினவே \ பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. 29

சிதலும் எறும்பும் மூ அறிவினவே \ பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 30

நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே \ பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 31

மாவும் மாக்களும் ஐ அறிவினவே \ பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 32

மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே \ பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 33

ஒரு சார் விலங்கும் உள என மொழிப. 34

ஆண், பெண் மரபுப்பெயர்

வேழக்கு உரித்தே விதந்து களிறு என்றல். 35

கேழற்கண்ணும் கடி வரை இன்றே. 36

புல்வாய் புலி உழை மரையே கவரி \ சொல்லிய கராமொடு ஒருத்தல் ஒன்றும். 37

வார் கோட்டு யானையும் பன்றியும் அன்ன. 38

ஏற்புடைத்து என்ப எருமைக்கண்ணும். 39

பன்றி புல்வாய் உழையே கவரி \ என்று இவை நான்கும் ஏறு எனற்கு உரிய. 40

எருமையும் மரையும் பெற்றமும் அன்ன. 41

கடல் வாழ் சுறவும் ஏறு எனப்படுமே. 42

பெற்றம் எருமை புலி மரை புல்வாய் \ மற்று இவை எல்லாம் போத்து எனப்படுமே. 43

நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய. 44

மயிலும் எழாலும் பயிலத் தோன்றும். 45

இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய. 46

கலை என் காட்சி உழைக்கும் உரித்தே \ நிலையிற்று அப் பெயர் முசுவின்கண்ணும். 47

மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் \ யாத்த என்ப யாட்டின்கண்ணே. 48

சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் \ மா இருந் தூவி மயில் அலங்கடையே. 49

ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம் \ ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப. 50

ஆண்பால் எல்லாம் ஆண் எனற்கு உரிய \ பெண்பால் எல்லாம் பெண் எனற்கு உரிய \ காண்ப அவை அவை அப்பாலான. 51

பிடி என் பெண் பெயர் யானை மேற்றே. 52

ஒட்டகம் குதிரை கழுதை மரை இவை \ பெட்டை என்னும் பெயர்க்கொடைக்கு உரிய. 53

புள்ளும் உரிய அப் பெயர்க்கு என்ப. 54

பேடையும் பெடையும் நாடின் ஒன்றும். 55

கோழி கூகை ஆயிரண்டு அல்லவை \ சூழும் காலை அளகு எனல் அமையா. 56

அப் பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே. 57

புல்வாய் நவ்வி உழையே கவரி \ சொல்வாய் நாடின் பிணை எனப்படுமே. 58

பன்றி புல்வாய் நாய் என மூன்றும் \ ஒன்றிய என்ப பிணவின் பெயர்க்கொடை. 59

பிணவல் எனினும் அவற்றின் மேற்றே. 60

பெற்றமும் எருமையும் மரையும் ஆவே. 61

பெண்ணும் பிணாவும் மக்கட்கு உரிய. 62

எருமையும் மரையும் பெற்றமும் நாகே. 63

நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே. 64

மூடும் கடமையும் யாடு அல பெறாஅ. 65

பாட்டி என்ப பன்றியும் நாயும். 66

நரியும் அற்றே நாடினர் கொளினே. 67

குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி. 68

குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும் \ மரம் பயில் கூகையைக் கோட்டான் என்றலும் \ செவ் வாய்க் கிளியைத் தத்தை என்றலும் \ வெவ் வாய் வெருகினைப் பூசை என்றலும் \ குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும் \ இருள் நிறப் பன்றியை ஏனம் என்றலும் \ எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும் \ முடிய வந்த அவ் வழக்கு உண்மையின் \ கடியல் ஆகா கடன் அறிந்தோர்க்கே. 69

பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே. 70

மக்களில் பாகுபாடு
மக்கள் பயன்படுத்தும் பொருள்
மக்கள் தொழில் 
இவை மாறக்கூடியவை
தொல்காப்பியர் கூறியிருக்க மாட்டார்

நூலே கரகம் முக்கோல் மணையே \ ஆயும் காலை அந்தணர்க்கு உரிய. 71

படையும் கொடியும் குடையும் முரசும் \ நடை நவில் புரவியும் களிறும் தேரும் \ தாரும் முடியும் நேர்வன பிறவும் \ தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய. 72

அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு \ ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே. 73

பரிசில் பாடாண் திணைத் துறைக் கிழமைப்பெயர் \ நெடுந்தகை செம்மல் என்று இவை பிறவும் \ பொருந்தச் சொல்லுதல் அவர்க்கு உரித்தன்றே. 74

ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும் \ யாரும் சார்த்தி அவை அவை பெறுமே. 75

தலைமைக் குணச் சொலும் தம்தமக்கு உரிய \ நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துப என்ப. 76

இடை இரு வகையோர் அல்லது நாடின் \ படை வகை பெறாஅர் என்மனார் புலவர். 77

வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை. 78

மெய் தெரி வகையின் எண் வகை உணவின் \ செய்தியும் வரையார் அப் பாலான. 79

கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே. 80

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது \ இல் என மொழிப பிற வகை நிகழ்ச்சி. 81

வேந்து விடு தொழிலின் படையும் கண்ணியும் \ வாய்ந்தனர் என்ப அவர் பெறும் பொருளே. 82

அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே. 83

வில்லும் வேலும் கழலும் கண்ணியும் \ தாரும் மாலையும் தேரும் மாவும் \ மன் பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய. 84

அன்னர் ஆயினும் இழிந்தோர்க்கு இல்லை.85

புல்
மரம்

புறக் காழனவே புல் என மொழிப. 86

அகக் காழனவே மரம் என மொழிப. 87

தோடே மடலே ஓலை என்றா \ ஏடே இதழே பாளை என்றா \ ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும் \ புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர். 88

இலையே தளிரே முறியே தோடே \ சினையே குழையே பூவே அரும்பே \ நனை உள்ளுறுத்த அனையவை எல்லாம் \ மரனொடு வரூஉம் கிளவி என்ப. 89

காயே பழமே தோலே செதிளே \ வீழொடு என்று ஆங்கு அவையும் அன்ன. 90

இருதிணை 
ஐம்பால்
நெறி

நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் \ கலந்த மயக்கம் உலகம் ஆதலின் \ இரு திணை ஐம் பால் இயல் நெறி வழாஅமைத் \ திரிவு இல் சொல்லொடு தழாஅல் வேண்டும். 91

அன்றைய செய்யுள் முறை
இது மரபு அன்று
இது மாறக்கூடியது 
இனி வருவனவும் மாறக்கூடியவை
தொல்காப்பியர் கூறியவை அல்ல
பிற்காலத்தவரின் செருகல்

மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை \ மரபு வழிப் பட்ட சொல்லினானே. 92

மரபுநிலை திரியின் பிறிது பிறிது ஆகும். 93

வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே \ நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான. 94

அன்றைய நூல் வகை

மரபுநிலை திரியா மாட்சிய ஆகி \ உரை படு நூல்தாம் இரு வகை இயல \ முதலும் வழியும் என நுதலிய நெறியின. 95

வினையின் நீங்கி விளங்கிய அறிவின் \ முனைவன் கண்டது முதல் நூல் ஆகும். 96

வழி எனப்படுவது அதன் வழித்து ஆகும். 97

வழியின் நெறியே நால் வகைத்து ஆகும். 98

தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து \ அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே. 99

சூத்திரம்

ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை \ மெய்ப்படக் கிளந்த வகையது ஆகி \ ஈர் ஐங் குற்றமும் இன்றி நேரிதின் \ முப்பத்திரு வகை உத்தியொடு புணரின் \ நூல் என மொழிப நுணங்கு மொழிப் புலவர். 100

உரை எடுத்து அதன் முன் யாப்பினும் சூத்திரம் \ புரை தப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும் \ விதித்தலும் விலக்கலும் என இரு வகையொடு \ புரை தப நாடிப் புணர்க்கவும் படுமே. 101

மேற் கிளந்தெடுத்த யாப்பினுள் பொருளொடு \ சில் வகை எழுத்தின் செய்யுட்கு ஆகி \ சொல்லும் காலை உரை அகத்து அடக்கி \ நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்து ஆகி \ துளக்கல் ஆகாத் துணைமை எய்தி \ அளக்கல் ஆகா அரும் பொருட்டு ஆகி \ பல வகையானும் பயன் தெரிபு உடையது \ சூத்திரத்து இயல்பு என யாத்தனர் புலவர். 102

பழிப்பு இல் சூத்திரம் பட்ட பண்பின் \ கரப்பு இன்றி முடிவது காண்டிகை ஆகும். 103

விட்டு அகல்வு இன்றி விரிவொடு பொருந்தி \ சுட்டிய சூத்திரம் முடித்தற் பொருட்டா \ ஏது நடையினும் எடுத்துக்காட்டினும் \ மேவாங்கு அமைந்த மெய்ந் நெறித்து அதுவே. 104

சூத்திரத்துட் பொருள் அன்றியும் யாப்புற \ இன்றியமையாது இயைபவை எல்லாம் \ ஒன்ற உரைப்பது உரை எனப்படுமே. 105

மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய் \ தன் நூலானும் முடிந்த நூலானும் \ ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கி \ தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇ \ துணிவொடு நிற்றல் என்மனார் புலவர். 106

சிதைவு

சொல்லப்பட்டன எல்லா மாண்பும் \ மறுதலை ஆயினும் மற்று அது சிதைவே. 107

சிதைவு இல் என்ப முதல்வன் கண்ணே. 108

முதல் வழி ஆயினும் யாப்பினுள் சிதையும் \ வல்லோன் புணரா வாரம் போன்றே. 109

சிதைவு எனப்படுபவை வசை அற நாடின் \ கூறியது கூறல் மாறு கொளக் கூறல் \ குன்றக் கூறல் மிகை படக் கூறல் \ பொருள் இல கூறல் மயங்கக் கூறல் \ கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல் \ பழித்த மொழியான் இழுக்கம் கூறல் \ தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் \ என்ன வகையினும் மனம் கோள் இன்மை \ அன்ன பிறவும் அவற்று விரி ஆகும். 110

எதிர் மறுத்து உணரின் அத் திறத்தவும் அவையே. 111

உத்தி

ஒத்த காட்சி உத்தி வகை விரிப்பின் \ நுதலியது அறிதல் அதிகார முறையே \ தொகுத்துக் கூறல் வகுத்து மெய்ந் நிறுத்தல் \ மொழிந்த பொருளொடு ஒன்ற வைத்தல் \ மொழியாததனை முட்டு இன்றி முடித்தல் \ வாராததனான் வந்தது முடித்தல் \ வந்தது கொண்டு வாராதது உணர்த்தல் \ முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றே \ ஒப்பக் கூறல் ஒருதலை மொழிதல் \ தன் கோள் கூறல் முறை பிறழாமை \ பிறன் உடன்பட்டது தான் உடம்படுதல் \ இறந்தது காத்தல் எதிரது போற்றல் \ மொழிவாம் என்றல் கூறிற்று என்றல் \ தான் குறியிடுதல் ஒருதலை அன்மை \ முடிந்தது காட்டல் ஆணை கூறல் \ பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல் \ தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் \ மறுதலை சிதைத்துத் தன் துணிபு உரைத்தல் \ பிறன் கோள் கூறல் அறியாது உடம்படல் \ பொருள் இடையிடுதல் எதிர் பொருள் உணர்த்தல் \ சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல் \ தந்து புணர்ந்து உரைத்தல் ஞாபகம் கூறல் \ உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு மெய்ப்பட நாடிச் \ சொல்லிய அல்ல பிற அவண் வரினும் \ சொல்லிய வகையான் சுருங்க நாடி \ மனத்தின் எண்ணி மாசு அறத் தெரிந்துகொண்டு \ இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும் \ நுனித்தகு புலவர் கூறிய நூலே. 112

தொல்காப்பியம் முற்றும் 

தொல்காப்பியம் - மரபியல் - நூற்பா - செய்திகள் 


(மொழி மாற்ற முடியாத மரபு நெறியில் வழிவழியாக  வளரும். உயர்திணையில் மட்டுமே ஆண், பெண் பாகுபாடுகள் உண்டு. அஃறிணைச் சொற்களுக்கு அவை இல்லை. இந்த வரம்பை மீறிச் சில சொற்கள் தோன்றியுள்ளன. ஆண்யானையைக் களிறு என்றும், பெண்யானையைப் பிடி என்றும் கூறுகிறோம். இது மரபு. இவற்றை நாம் விலக்க முடியாது. இப்படிப்பட்ட மரபுகளை தொகுத்துக் கூறுவதே இந்த  மரபியல்.)

மாற்ற முடியாத சிறப்புகளை உடையது மரபு.      (1)

இளமைப் பெயர் - 9

  1. பார்ப்பு
  2. பறழ் 
  3. குட்டி 
  4. குருளை 
  5. கன்று
  6. பிள்ளை 
  7. மகவு
  8. மறி
  9. குழவி (1)

ஆண் பெயர்

  • ஏறு 
  • ஏற்றை 
  • ஒருத்தல் 
  • களிறு 
  • சே
  • சேவல்
  • இரலை 
  • கலை 
  • மோத்தை
  • தகர் 
  • உதள் 
  • அப்பர் 
  • போத்து 
  • கண்டி 
  • கடுவன் (2)

பெண் பெயர் 

  • பேடை
  • பெடை
  • பெட்டை
  • பெண்
  • மூடு
  • நாகு
  • கடமை
  • அளகு
  • மந்தி
  • பாட்டி
  • பிணை
  • பிணவு
  • பிடி (3)

மரபில் வந்த இளமைப் பெயர்கள்

  1. கன்று - யானை, குதிரை, கழுதை, கடமை, மான் -15 \\ எருமை, மரை -16 \\ கவரி, கராம் -17 \\ ஒட்டகம் -18 \\ ஆ, எருமை - 20 \\ கடமை, எருமை 21 \\ குரங்கு, முசு, ஊகம் -22
  2. குட்டி - மூங்கா, வெருகு, எலி, அணில் - 6  \\  நரி - 10 \\ குரங்கு -13  
  3. குருளை - நாய், பன்றி, புலி, முயல் - 8 \ நரி - 9
  4. குழவி - குஞ்சரம் -19 \\ மக்கள் -23
  5. பறழ் - மூங்கா, வெருகு, எலி, அணில் - 7 \\ நரி - 10 \\ குரங்கு -14 
  6. பார்ப்பு - பறவை - 4 \\ தவழ்வன - 5 \\ குரங்கு -14
  7. பிள்ளை - பறவை  - 4 \\ தவழ்வன -5 \\ பன்றி, புலி, முயல், நரி - 11 \\ குரங்கு -14
  8. மகவு - குரங்கு -14 \\ மக்கள் -23
  9. மறி - ஆடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய் -12 \\ 
  • மக்கள் - குழவி, மகவு  -23
  • ஓர் அறிவு உயிர் - பிள்ளை, குழவி, கன்று, போத்து -24 \\ நெல்லையும், புல்லேயும் இந்தப் பெயர்களால் சொல்லக்கூடாது -25
  • இளமைப் பெயர்களை இவற்றிற்குக் கொள்ள வேண்டும் -26

உயிரின அறிவு

  1. ஓர் அறிவு - உடம்பு அறியும் உற்றறிவு -27 \\ புல், மரம், போன்றவை -28
  2. ஈர் அறிவு - அதனொடு நாக்கு சுவை அறிதல் -27 \\ நத்தை, சங்கினம் போன்றவை -29
  3. மூன்று அறிவு - அவற்றொடு மூக்கு மணம் அறிதல் -27 \\ கறையான், எறும்பு போன்றவை 30
  4. நான்கு அறிவு - அவற்றொடு கண்ணின் பார்வை -27 \\ நண்டு, தும்பி போன்றவை 31
  5. ஐந்து அறிவு - அவற்றொடு காதால் கேட்டறிதல் -27 \\ விலங்கு, மக்கள் போன்றவை 32
  6. ஆறு அறிவு - அவற்றொடு மனத்தின் படைப்பாற்றல் -27 \\ மக்கள் போன்றவர் -33 \\ ஒரு வகையான விலங்குகளுக்கும் நினைக்கும் மனம் உண்டு -34
ஆண், பெண் மரபுப்பெயர்

  • களிறு - ஆண்யானை  -35 \\ ஆண்பன்றி -36
  • ஒருத்தல் - புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம் என்னும் முதலை -37 \\ யானை, பன்றி -38 \\ எருமை -39
  • ஏறு - பன்றி, புல்வாய், உழை, கவரி -40 \\எருமை, மரை, பெற்றம் -41 \\ சுறா மீன் -42 
  • போத்து - பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய் -43 \\ நீர் வாழ் இனம் -44  \\ மயில்,  எழால் -45 
  • இரலை, கலை - ப்ல்வாய் -46
  • கலை - உழை, முசு -47
  • மோத்தை, தகர், உதள், அப்பர் -  ஆடு -48
  • சேவல் - மயில் அல்லாத சிறகுள்ள பறவைகள் -49
  • ஏற்றை - ஆற்றல் மிக்க ஆண்பால் விலங்கினம் -50
  • ஆண்பால் எல்லாம் ஆண். பெண்பால் எல்லாம் பெண் -51
  • பிடி - பெண்யானை -52
  • பெட்டை - ஒட்டகம், குதிரை, கழுதை, மரை -53 \\ பெண் பறவைகள் -54 \\ பெட்டை = பேடை -55
  • இளகு - கோழி, கூகை -56 \\ மயில் -57 
  • பிணை - புல்வாய், நவ்வி, உழை, கவரி -58
  • பிணவு  - பன்றி, புல்வாய், நாய் -59 \\ பிணவு = பிணவல் -60
  • ஆ - பெற்றம், எருமை, மரை -61
  • பெண், பிணா - மக்கள் -62
  • நாகு - எருமை, மரை -63 \\ நீர் வாழ் நந்து -64 
  • மூடு, கடமை - ஆடு (பிறவற்றுக்கு இல்லை) -65
  • பாட்டி - பன்றி, பன்றி -36 \\ நரி -67
  • மந்தி - குரங்கு, முசு, ஊகம் -68
  • கடுவன் = ஆண்குரங்கு -69
  • கோட்டான் = கூகை -69
  • தத்தை = கிளி -69
  • பூசை = வெருகுப் பூனை -69
  •  சேவல் = ஆண்குதிரை -69
  • ஏனம் = கருநிறப் பன்றி -69
  • கண்டி = ஆண்எருமை -69 -- போன்றவற்றை விலக்கக்கூடாது.
  • பெண், ஆண், பிள்ளை - பாகுபாடுகள் இவை. -70

மக்களில் பாகுபாடு, மக்கள் பயன்படுத்தும் பொருள், மக்கள் தொழில் போன்றவை மாறக்கூடியவை. எனவே, கீழே வரும் இந்தக் கருத்துக்களை மரபாக எடுத்துக்கொண்டு தொல்காப்பியர் கூறியிருக்க மாட்டார். குழப்பும் செய்திகளும், வைசிகன் போன்ற பிற்காலச் சொல்லாடுசிகளும் கொண்ட இவற்றை யாரோ ஒருவர் பிற்காலத்தில் செருகியிருக்க வேண்டும்.

  • அந்தணர் பூணூல் அணிந்திருப்பர். தண்ணீர் உள்ள கரகச் செம்பு, அமரும் மணைப் பலகை, அமர்ந்திருக்கும்போது கையை தாங்கிக்கொள்ள உதவும் முக்கோல் ஆகியவற்றை வைத்திருப்பர். -71

  • அரசர் - படை, கொடி, குடை, குதிரை, களிறு, தேர், தலையில் சூடும் தார் என்னும் குடிப்பூ மாலை, செங்கோல் -  ஆகியவற்றுடன் தோன்றுவர். -72
  • அந்தணர்க்கு உரிய பொருளையும் அரசன் கொண்டிருக்கலாம். -73
  • பரிசில் வேண்டுவோர் நெடுந்தகை, செம்மல் என்றெல்லாம் அரசனைப் பாராட்டுவர். -74
  • அரனின் ஊர், படைக்கருவிகள் பாராட்டப்படும் -75
  • அரசனின் தலைமைக்குணம் பெரிதுபடுத்தப்படும் -76
  • அரசர், வணிகர் அல்லாதோர் படைக்கருவிகளை வைத்திருக்கக் கூடாது -77
 
  • வைசிகன் வாணிகம் செய்வான் -78
  • 8 வகையான உணவுப் பொருள்களை வாங்கி விற்பது இவர்களின் வாணிகம் -79
  • கண்ணி, தார் மாலைகளை இவர்கள் அணிந்துகொள்ளலாம் -80

  • வேளாண் மாந்தர் உழுது உண்பர். பிற சிறப்பு அணிகள் இவர்களுக்கு இல்லை -81
  • வேந்தன் அனுப்பினால் படை, தலைமாலை சிறப்புகளை இவர்கள் பெறலாம் -82

  • அந்தணர் அரசுப் பணியையும் மேற்கொள்வர் -83
  • வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், குதிரை - விருதுகள் பிறருக்கும் உண்டு. -84
  • எனினும் இழிந்தோர்க்கு இந்த விருதுகள் இல்லை -85

புல்
மரம்

  • உள்ளே துளையும், வெளியே காழ் என்னும் கெட்டிப் பகுதியும் கொண்டவை - புல் -86
  • உள்ளே காழ் கொண்டவை மரம் -87

  • தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலை - ஆகியவை புல்லின் உறுப்புகள் -88 
  • இலை, தளிர், முறி, கோடு, சினை, குழை, பூ, அரும்பு, நனை - ஆகியவை மரத்தின் உறுப்புகள் -89
  • காய், பழம், தோல், செதிள், வீழ் - பன்பனவும் மரத்தின் உறுப்புகள் -90 

இருதிணை 
ஐம்பால்
நெறி

  • நிலம் தீ நீர் வளி விசும்பு என்னும் ஐந்தும் கலந்த மயக்கமாக உலகம் இருப்பது போல் இரண்டு திணைகளும், அவற்றின் 5 பால்களும் கொண்ட சொற்களை வழு இல்லாமல் தழுவிக்கொள்வதே மரபு -91

அன்றைய செய்யுள் முறை
இது மரபு அன்று
இது மாறக்கூடியது 
இனி வருவனவும் மாறக்கூடியவை
தொல்காப்பியர் கூறியவை அல்ல
பிற்காலத்தவரின் செருகல்

  • மரபுநிலைச் சொற்கள் செய்யுளில் திரிவது இல்லை -92 
  • திரிந்தால் செய்யுள் கந்தலாகிவிடும் -93
  • இங்கு மரபு வழக்கு என்பது உயர்ந்தோர் வழக்கமே. அவர்களின் வழக்கத்தைத்தானே பின்பற்றுகிறோம் -94

அன்றைய நூல் வகை

  • மரபுநிலை திரியாமல் உரைக்கப்படும் நூல்கள் முதல்நூல், வழிநூல் என்று இரண்டு வகை.  -95
  • வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூல் ஆகும். 96
  • அதன் வழியில் தோன்றுவது வழிநூல் -97
  • வழிநெறி 4 வகை -98
  1. தொகுத்தல் 
  2. விரித்தல் 
  3. தொகைவிரி 
  4. மொழிபெயர்த்து யாத்தல். - என்பன அவை 99

சூத்திரம்

  • காண்டிகை உரைக்கும்படியான சூத்திரம் கொண்டதாய், 10 வகைக் குற்றங்களையும் நீக்கி, 32 உத்திகளோடு சொல்லப்படுவது நூல் -100
  • சிலவற்றை விதித்தும், சிலவற்றை விலக்கியும் சூத்திரம் புணர்க்கப்படும் -101
  • சுருக்கம், நுட்பம், தெளிவு, உண்மை, அரிய பொருள் ஆகியவற்றைச் சூத்திரம் கொண்டிருக்கும் -102
  • சூத்திரம் சொல்வதைக்  காணுமாறு மறைக்காமல் காண்டிகை உரை -103
  •  காரணம், எடுத்துக்காட்டு முதலானவற்றுடன் விரித்துக் காட்டுவது விருத்தி உரை -104
  • சூத்திப் பொருள் எல்லாம் விளங்குமாறு உரைப்பது உரை -105
  • இதில் மறுப்பு வினாக்களுக்கு விடை சொல்லப்பட்டிருக்கும் -106

சிதைவு

  • மாண்பு சிதைந்தது சிதைவு -107
  • முதல்வன் நூலில் சிதைவு இருக்காது -108
  • முதல் நூலின் வழியே தோன்றினாலும் யாப்பு வேறுபடும் -109
  • சிதைவு எனப்படுபவை 
  1. கூறியது கூறல் 
  2. மாறு கொளக் கூறல் 
  3. குன்றக் கூறல் 
  4. மிகை படக் கூறல் 
  5. பொருள் இல கூறல் 
  6. மயங்கக் கூறல் 
  7. கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல் 
  8. பழித்த மொழியான் இழுக்கம் கூறல் 
  9. தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் 
  10. என்ன வகையினும் மனம் கோள் இன்மை - போன்றவை -110
  • எதிர் மறுத்து உணர்தலும் அது. 111

உத்தி வகை

  1. நுதலியது அறிதல் 
  2. அதிகார முறையே 
  3. தொகுத்துக் கூறல் 
  4. வகுத்து மெய்ந் நிறுத்தல் 
  5. மொழிந்த பொருளொடு ஒன்ற வைத்தல் 
  6. மொழியாததனை முட்டு இன்றி முடித்தல் 
  7. வாராததனான் வந்தது முடித்தல் 
  8. வந்தது கொண்டு வாராதது உணர்த்தல் 
  9. முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றே 
  10. ஒப்பக் கூறல் 
  11. ஒருதலை மொழிதல் 
  12. தன் கோள் கூறல் 
  13. முறை பிறழாமை 
  14. பிறன் உடன்பட்டது தான் உடம்படுதல் 
  15. இறந்தது காத்தல் 
  16. எதிரது போற்றல் 
  17. மொழிவாம் என்றல் 
  18. கூறிற்று என்றல் 
  19. தான் குறியிடுதல் 
  20. ஒருதலை அன்மை 
  21. முடிந்தது காட்டல் 
  22. ஆணை கூறல் 
  23. பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல் 
  24. தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் 
  25. மறுதலை சிதைத்துத் தன் துணிபு உரைத்தல் 
  26. பிறன் கோள் கூறல் அறியாது உடம்படல் 
  27. பொருள் இடையிடுதல் 
  28. எதிர் பொருள் உணர்த்தல் 
  29. சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல் 
  30. தந்து புணர்ந்து உரைத்தல் 
  31. ஞாபகம் கூறல் 
  32. உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு - முதலானவை-112

தொல்காப்பியம் முற்றும்