பழமொழி நானூறு - முன்றுறை அரையனார் (உரையாசிரியர்: புலியூர்க் கேசிகன்)

 

     சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது. இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு ஆகும். இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன.

அணிந்துரை

     பழமொழி என்றால் என்ன?

     பழம் தின்னச் சுவைப்பது; உண்பாரின் உடல் வளத்துக்கும் உதவுவது. இவ்வாறே கேள்விக்கு இனிதாகவும் அறிவுக்கு வளம் சேர்ப்பதாகவும் விளங்கும் அரிய வாக்குகளையே, 'பழமொழிகள்' என்கிறோம்.

     நம் முன்னோர்களின் வாழ்விலே பூத்துக் காய்த்துக் கனிந்த அனுபவ வாக்குகளே பழமொழிகள். அந்த வாக்குகளை உளங்கொண்டு, நடத்தைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் போது, அப்படிக் கொள்பவரின் வாழ்வு வளமாகின்றது. பழமொழிகளைக் கற்கும் போது, நினைவிற் கொள்ள வேண்டிய ஓர் உண்மை இதுவாகும்.

     இனிப் பழையவர்களான நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தோன்றி, காலங்காலமாகத் தொடர்ந்து வழக்கிலிருந்து வரும், 'பழைய வாக்குகள்' என்றும் பழமொழிகளைக் கூறலாம். இப்படிக் கூறும் போது, தமிழினத்தின் பண்பாட்டிலே விளைந்த அறிவுச் சுடர்கள் இவை என்று அறிய வேண்டும்.

     தமிழினத்தின் செம்மையான நல்வாழ்வுக்கு உதவும் அறிவொளி விளக்கங்களாகப் பழமொழிகள் அமைந்து விளங்குகின்றன. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஞானத் தெளிவுரைகளாகவும் அவை சுடரிடுகின்றன.

     பழமொழிக்கு 'முதுமொழி' என்றும் ஒரு பெயர். முதுமொழியின் இலக்கணத்தைத் தொல்காப்பியனார், அக்காலத்திலேயே வரையறுத்துக் கூறியுள்ளார்.

'நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும்
ஒண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப'

என்பது தொல்காப்பியர் கூறுவதாகும்.

இந்த வகையில் அமைந்த பழமொழிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு, பழங்காலப் புலவர்கள் பல புதுமை வழிகளைக் கையாண்டுள்ளனர். பழமொழிகள் பெரும்பாலும் மக்கள் வழக்கில் வழங்கி வருகின்றன. அவற்றைத் தொகுத்து வகைப்படுத்தி வழங்கும் முயற்சிகள் பல இக்காலத்தே மேற்கொள்ளப் பெறுகின்றன. அக்காலத்துப் பெரும்புலவர்கள், இப்பழமொழிகளின் அடிப்படையிலே மக்களின் ஒழுக்கங்களை வகுத்துக் கூறும் பல செய்யுட்களைப் படைத்து, அவ்வொழுக்கங்களை நிலைப்படுத்தவும், அப்பழமொழிகளை நிலைப்படுத்தவும் முயன்றிருக்கின்றனர். இம்முயற்சியில், மிகவும் போற்றத்தக்கதாகத் திகழ்வது பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான பழமொழி நானூறு என்னும் அமைப்பு ஆகும்.

ஒவ்வொரு பழமொழியையும் சொல்லி, அதன் அடிப்படையில் ஒரு நீதியையும் விளக்கும் ஒவ்வொரு செய்யுளாக, மொத்தம் நானூறு செய்யுட்களால் அமைந்துள்ளது பழமொழி நானூறு.

     இப்படி ஒரு நூலை உருவாக்கி, மக்களின் ஒழுகலாறுகளை முறைப்படுத்தவும், பழமொழிகளை நிலைப்படுத்தவும் முயன்ற பெருமைக்கு உரியவர், முன்றுறை அரையனார் என்னும் தமிழ்ச் சான்றோர் ஆவார்.

     'அரையனார்' என்னும் சொல்லால் இவரை அரசகுடியினர் என்று கூறலாம். முன்றுறை என்பது கடல் மற்றும் ஆற்றின் கரைகளில், மக்கள் நீராடவும் மற்றும் படகு, வள்ளம் போன்றவற்றில் சென்று வரவும் வசதியாக அமைந்த துறைகளையே 'முன்றுறை' என்பார்கள். கொற்கை முன்றுறை, கழார் முன்றுறை, காவிரி முன்றுறை, வையைக் கரையின் திருமருத முன்றுறை என்று பல முன்றுறைகளைப் பற்றி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவற்றுள் ஒன்றைச் சேர்ந்த பகுதியில் பிறந்தவர் இவராகலாம்.

     இந்நூலின் அமைப்பிலே பயின்று வரும் சொற்களையும் கருத்துக்களையும், பழமொழிகளையும் கருத்திற் கொண்டால், இவரைத் தென்பாண்டி நாட்டின் சீர்மிகு பழம் புலவருள் ஒருவர் எனலாம். சமண சமயக் கோட்பாடுகளில் அழுத்தமான பற்றினர் என்றும் அறியலாம்.

     முதலிரண்டு அடிகளில் தாம் சொல்லக் கருதுகின்ற உண்மையை அமைத்தும், செய்யுளின் இறுதியில் அதற்கேற்றதும் அவ்வுண்மையை வலியுறுத்துவதுமான பழமொழியை அமைத்தும், இந்நூற் செய்யுட்களை இவர் அமைத்துள்ளார். ஒரு சில செய்யுட்களில் மட்டுமே இரண்டு பழமொழிகளைச் சேர்த்துள்ளார்.

     'நானூறு' என்னும் தொகையமைப்பு புறநானூறு, அகநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு என்னும் தொகை நூல்களுள் நிலவும், நானூறு செய்யுட்கள் என்னும் தொகுப்பு மரபைத் தழுவியதாகும்.

     செய்யுட்கள் முத்தகச் செய்யுட்களாதலால், ஒவ்வொரு செய்யுளின் பொருளும் தனியே நின்று அந்தச் செய்யுளிலே முடிந்து வருகின்றது. எனவே, ஒவ்வொரு செய்யுளாக மனப்பாடம் செய்து, ஒவ்வொரு கருத்தாக உளமேற்றி, ஒவ்வொருவரும் உயர்வதற்கு இந்நூல் உதவியாக அமைந்துள்ளது. முன்றுறை அரையனார் பலப்பல காலங்களில் தம்முடைய மாணவர்கட்கு அறிவுறுத்திக் கூறிய செய்யுட்களின் தொகுப்பாக அமைந்ததே இந்நூல் என்றும் கருதலாம். அறிவாளர்கள், தாம் சொல்லக் கருதும் உண்மைகளை விளக்குவதற்கு வழக்கிலுள்ள முதுமொழிகளை எடுத்துப் பயன்படுத்துவது இயல்பே என்பதையும் இந்நூலாற் காணலாம்.

     இந்நூலுக்குரிய பால் இயல் அதிகாரப் பகுப்புக்கள் போன்றவற்றை முன்னோர் செய்துள்ளதாகத் தெரியவில்லை. இந் நூலை அச்சிட்ட பிற்காலத் தமிழறிஞர்களே இந்த பகுப்பு முறைகளைச் செய்துள்ளனர் என்று தெரிகின்றது.

     முதன் முதலாக, இந்தப் பழமொழி நானூறை அச்சேற்றி வெளியிட்டவர்கள் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் அவர்களாவர் (1874). இதனையடுத்து நி.சு. ஆறுமுக நயினார் அவர்களின் பதிப்பு வெளிவந்தது (1954). இதனையடுத்துக் கி.பி. 1914இல் திருமணம் செல்வக் கேசவராய முதலியார் அவர்களின் பதிப்பு வெளிவந்தது. ஏட்டுப் பிரதிகளில் கண்ட வரிசையை மாற்றாமல் வெளியிட்ட ஆறுமுக நயினார் அவர்களின் பதிப்பும், திருநாராயண அய்யங்கார் அவர்களின் (200 பாடல்கள் மட்டும்) பதிப்பும் (கி.பி. 1918-1922) இந் நூலின் செழுமையைத் தமிழ் அன்பர்களிடம் பரப்பின.

     திருமணம் செல்வக் கேசவராய முதலியாரவர்கள் பத்து பத்துப் பாடல்கள் கொண்ட அதிகாரப் பகுப்புக்களையும் பால் இயல் என்னும் பகுப்புக்களையும் செய்து, சிறந்த உரையுடன் இந்நூலை அருமையாக வெளியிட்டு உதவினார்கள்.

     இந்த நிலையிலே, பழமொழிகளுக்கே முதன்மை தரவேண்டும் என்னும் எண்ணத்துடன், இந்நூலிலே பயின்று வரும் பழமொழிகளைத் தொகுத்து அகரவரிசைப்படுத்திக் கொண்டு, அந்த அகர வரிசைக்கு ஏற்றபடி செய்யுட்களையும் வரிசைப்படுத்திக் கொண்டு, இந்தப் பதிப்பைத் தெளிவுரையுடன் நான் அமைத்திருக்கின்றேன்.

     பழமொழிகளை உளத்தில் பதிக்கவும், மீண்டும் மீண்டும் நினைக்கவும், அவை அமைந்த செய்யுட்களை நினைவு படுத்திப் பயன் பெறவும், இந்த புதிய அமைப்பு உதவும் என்று நம்புகிறேன்.

     ஒரே செய்யுளில் இரண்டு பழமொழிகள் அமைந்து விளங்கும் போது முதலில் வருகின்ற பழமொழியைத் தழுவியே செய்யுளை வரிசைப்படுத்தியுள்ளேன். அச் செய்யுட்கள்.

இல்லை அட்டாரை ஒட்டாக்கலம்
தொட்டாரை ஒட்டாப் பொருள் இல்லை. 51

இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு இல்லை. 57

கனா முந்துறாத வினை இல்லை
வினா முந்துறாத உரை இல்லை. 146

சுரம் போக்கி உலகு கொண்டார் இல்லை
மரம் போக்கிக் கூலி கொண்டார் இல்லை. 194

புலிமுன்னர்ப் புல்வாய்க்குப் போக்கு இல்லை
வளிமுன்னர் வைப்பாரம் இல்லை. 313

என்பனவாகும்.

     இந்தப் புதிய வரிசைப்படுத்தல் தமிழ் அன்பர்களால் வரவேற்கப் பெறும் என்று நம்புகின்றேன். இதன் முன்னைய பதிப்புகளும் தமிழுலகத்தால் வரவேற்கப் பெற்றிருப்பதும் என் நம்பிக்கைக்குச் சான்றாக விளங்குகின்றது.

     பதினெண் கணக்கு நூல்களுள் மிகவும் செல்வாக்குப் பெற்றதாக விளங்குவது திருக்குறள் ஆகும். திருக்குறளுக்கு அடுத்தபடியாக நாலடியார் பலராலும் விரும்பிக் கற்கப் பெறுகின்றது. நாலடியாரைப் போலவே பழமொழி நானூறும் விரும்பிக் கற்கப் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும். அந்த விருப்பமே இந்நூலை அமைப்பதற்கு என்னைத் தூண்டியது என்றும் கூறலாம்.

     நாலடியாரையும் இந் நூலையும் கற்றறிந்த பின் திருக்குறளைக் கற்கும் போது, திருக்குறளின் பொருளானது மிகவும் தெளிவாகவும் நுட்பமாகவும் விளக்கம் பெறும் என்பார்கள் சான்றோர்கள்.

     உலக வாழ்விலே, ஒழுக்கத்தைப் பேணியும், உள்ளத்தைத் தெளிவாக்கியும், உயர்ந்த நெறிகளில் நின்றும் வாழ்வது தான் சிறப்பாகும். இப்படி வாழ்பவர்களே,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர், வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

என்னும் வாக்கின்படித் தெய்வ நிலைக்கு உயர்கின்றனர்; பிறரோ விலங்கு நிலைக்குத் தாழ்ந்து விடுகின்றனர்.

     மனிதப் பிறவி பெற்றவர்கள் தெய்வ நிலைக்கு உயர்வதே செய்யத்தக்கது. அதற்கு இயலாவிட்டாலும், மனித நிலையிலாவது வழுவாமல் வாழவேண்டும். இவ்வாறு வாழும் வகையறிந்து வாழ்வதற்கு இந்நூல் வழிகாட்டி உதவும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

     இந்தத் தெளிவுரை அமைப்பைச் செய்வதற்கு எனக்கு உதவியாக விளங்கிய இந் நூலின் முதற்பதிப்புப் பேராசிரியர்கட்கு எல்லாம் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

     தமிழினத்தின் வாழ்க்கை மரபுகளில் புதிய பல சிந்தனைகளை ஊன்றி வளர்ப்பதிலும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பல புதிய படைப்புக்களை வழங்குவதிலும், ஒரு சிறந்த இடத்தைப் பெற்று விளங்குபவர்கள் தமிழகச் சமண முனிவர்கள் ஆவர். அவர்கட்கும், அவர்கள் வழி நின்று இந் நூலை உருவாக்கிய முன்றுறை அரையர்க்கும் தமிழுலகம் நன்றி செலுத்தும் கடப்பாடு உடையதாகும்.

     இந்நூலினை அனைவரும் விரும்பி வரவேற்றுக் கற்று மகிழ்ந்து, வாழ்வில் வளம்பெருக்கி இன்புறுவதற்கு முன்வருவார்கள் என்றும் நம்புகின்றேன். இந்தப் புதிய பதிப்பினை ஆர்வமுடன் வெளியிட்டுத் தமிழ் நலம் வளர்க்கும் முல்லை நிலையத்தாருக்கும் என் அன்பு நன்றி உரியதாகும்.

     வாழ்க தமிழ்! வளர்க தமிழார்வம்!

புலியூர்க் கேசிகன்

புறத்திரட்டிலே கண்ட சில மிகைப் பாடல்கள்

அருளுடைமை, கொல்லாமை, ஐந்தடக்கல், வாய்மை,
இருளடையாக் கல்வியொடு, ஈகை, புரை இல்லா
உள்ளத்தில் தீர்த்தம் இவைஉளவா கப்பெற்றால்,
வெள்ளத்தில் தீர்த்தம் மிகை. (146)

'அமையப் பொருள் இல்லார்' என்பது
இமையத்து அனையார்மண் இல்லை; சிமைய
நகையேர் இலங்கருவி நல்வரை நாட!
நகையேதான் ஆற்றி விடும். (1107)

அறியாமையோடு இளமை ஆவதாம், ஆங்கே
செறியப் பெறுவதாம் செல்வம்; சிறிய
பிறைபெற்ற வாணுதலாய்! தானேயா டும்பேய்
பறைபெற்றால் ஆடதோ பாய்ந்து? (1139)

தற்சிறப்புப் பாயிரம்

     அசோக மரத்தின் நீழலிலே அமர்ந்து, அந்நாளிலே அறம் உரைத்த பெருமான் அருகதேவன். அவன் திருவடிகளைப் பணிந்து, தொன்மையான பழமொழிகளுள் நானூறு மட்டும் எடுத்துக் கொண்டு, நான்கு அடிகளையும் இனிமையாகச் செய்து முன்றுறை அரையன், உலகிற்கு உபகாரமாக இந்த நூலை அமைத்தனன். இனிய பொருள் துறைகள் செறிந்த வெண்பாக்கள் இவை நானூறும் ஆகும்.

பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்
பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா
முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்
இன்றுறை வெண்பா இவை.

     பிண்டி - அசோகு, பண்டைப் பழமொழி - தொன்றுபடு பழமொழி எனச் சான்றோரால் சொல்லப்படுவது. நூலாசிரியரே இதனைப் பாடினர்; அதனால், இது தற்சிறப்புப் பாயிரம் ஆயிற்று. 'இவற்றை அனைவரும் கற்று மனங்கொண்டு சிறந்து விளங்குக' என்பது ஆசிரியர் குறிப்பாகக் கூறுவது ஆகும்.

     அவித்து அடக்குவதற்கு அருமையானவை ஆசைகள். அந்த ஆசைகளை அவித்து, மெய்ஞ்ஞானத்தைக் குற்றமற உணர்ந்தவன் அருகதேவன். பரந்த கடல் சூழ்ந்த அகன்ற இடத்தையுடைய இப் பெரிய உலகத்திலே, அவன் திருவடிகளைத் தமக்கு உரிமையாகும்படியாகத் தம் உள்ளத்திலே தெளிந்து உணர்ந்தவர்கள் எவரோ, அவர்களே பெரியவர்கள். பெரிய செயல் செய்த உடம்பினுள் இருக்கும் உயிரும் பெருமை உடையதாயிருக்கும் அல்லவா! அது போலவே, பெரிய செயல் செய்த அவர்களின் உயர்வும் பெரியதாகும்.

அரிதவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம்
விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்து
உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
'பெரியதன் ஆவி பெரிது.'

     உடலின் சிறந்த செயல்கள் உயிருக்கும் சிறப்பைத் தரும். 'பெரிய தன் ஆவி பெரிது' என்பது பழமொழி. ஆசு - குற்றம். செயற்கரிய செய்வாரே பெரியார்; இவ்வுலகில் ஐம்புல இச்சைகளை அவித்தலே செயற்கரிய பெருஞ்செயல்; அச்செயலைச் செய்து உயர்ந்த பெரியோனின் திருவடிகளை உளங் கொள்வோம். இப்படி உளம் கொள்பவரும் ஆசைகளை அவித்துப் பெரியவராக விளங்கிப் பெருமையடைவர் என்பதும் இதன் கருத்தாகும்.

2. மேல்நிலை அடைதல்

     மணல் மேடுகளிலே விளங்கும் அடும்பின் கொடிகளிலே, பூக்கள் மலிந்திருக்கும் கடற்கரை நாட்டிற்கு உரியவனே! மிகுதியான பழிச் செயல்களை ஒருவன் அதிகமாகச் செய்து விட்டால், மீண்டும் அந்தப் பழியைப் போக்கிக் கொள்ளத்தக்க வழிகளையும் அவன் அறிந்திருக்க வேண்டும். அப்படி அறியாதவன் மேல் நிலையடைதல் என்பது ஒரு போதும் நடவாததாகும். 'அகலினுள் உள்ள நீரிலே நீர் துளும்பக் குளித்துத் தூய்மை யாவேன்' என்பது போல, அது ஒரு போதும் நடக்க முடியாததேயாகும்.

மிக்க பழிபெரிதும் செய்தக்கால், மீட்டதற்குத்
தக்கது அறியார், தலைசிறத்தல், - எக்கர்
அடும்பு அலரும் சேரப்ப! 'அகலுள்நீ ராலே
துடும்பல் எறிந்து விடல்'.

     பழியொடுபட்ட வாழ்வு பயனற்ற வாழ்வு. 'அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல்' என்பது பழமொழி. துடும்பல் எறிதல் - நீர் துளம்பி விழக் குதித்து நீராடல்.

3. அறநெறியாளனுக்கு உபதேசம்

     மாறுபாடில்லாத செயல்களின் மூலமாகவே ஒருவன் பெரும்பொருள் பெற்றனன். அந்தப் பொருள் வந்து சேர்ந்த வகையும் அதற்கான முதலீடும் அப்படியே அறநெறிக்கு மாறுபாடில்லாதது. அங்ஙனமானால், 'பல திறப்பட்ட வகைகளால் எல்லாம் அறம் செய்வாயாக' என அவனிடம் சான்றோர் சினந்து கூறவேண்டாம். அப்படி அவர் கூறினாலும், அது சர்க்கரையாற் பாலின் சுவை மயக்கமடையும் நிலைமையினைப் போன்றதேயாகும்.

தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால் அப்பொருள்
தொக்க வகையும் முதலும் அதுவானால்
'மிக்க வகையால் அறஞ்செய்க!' எனவெகுடல்
'அக்காரம் பால்செருக்கும் ஆறு'.

     பாலில் சர்க்கரை சேர்த்ததும் இனிப்புச் சுவை கூடி, அது மேலும் விரும்பப்படுவது போல, அத்தகையோனைத் தரும காரியங்களிலே ஈடுபடத் தூண்டுவதனால் அவன் மேலும் சிறப்பே அடைவான். 'அக்காரம் பால் செருக்கும் ஆறு' என்பது பழமொழி.

4. தளராதவன் செல்வனாவான்

     ஒருவனிடம் உள்ளது, அவனுடைய உள்ளூர்க்காரர்கள் மிகச் சிறிய அளவினதே என்று உணர்ந்ததான சிறு முதலே என்றாலும், அதனையும் இகழ்ந்து ஒதுக்காமல் பேணி, அவன் தன் தொழிலை முயற்சியுடன் வளர்க்க வேண்டும். விளங்கும் அணிகலன்களை அணிந்தவளே! பழைய ஊரிலேயுள்ள ஆரவார மிகுந்த கடைத் தெருவிலே மேய்ந்த பழைய கன்றே என்றாலும், அதுவும், பின் ஒரு காலத்திலே வளர்ந்து எருதாகிச் சிறப்படைதலும் உண்டல்லவா?

உள்ளூர் அவரால் உணர்ந்தாம் முதலெனினும்
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய்! - தள்ளாது
அழுங்கல் முதுபதி 'அங்காடி மேயும்
பழங்கன்று ஏறாதலும் உண்டு'.

     கைமுதல் சிறிதேயானாலும், விடாமுயற்சியினால் அதனைப் பெரிதாக்கித், தன்னை இகழ்ந்த ஊரும் மெச்ச வாழலாம். முயற்சிதான் வேண்டும். 'அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு' என்பது பழமொழி.

5. கொடியவன் பார்க்க மாட்டான்

     பெரிய புன்னை மரத்திலுள்ள பூக்களில் நறுமணமானது, புன்மையான புலால் நாற்றத்தினைப் போக்கி விடுகின்ற கடற்றுறைகளை உடையவனே! சிறு பிராணிகளை அடித்துத் தின்னும்போது அவை வருந்தும். அது கண்டு, தின்னும் பெரிய விலங்குகள் அஞ்சி அவற்றைத் தின்னாது போவதில்லை. அது போலவே, எப்போதும் கொடிய செயல்களையே செய்பவரான கீழ்த்தரமானவர்கள், தம்மேல் பெரும் பழிச்சொற்கள் ஏறிக்கொண்டே போவதைக் கண்டாலுங் கூட, அதனைப் பொருட்படுத்தாது, அவற்றிலேயே மீண்டும் மீண்டும் ஈடுபடுவார்கள்.

கருந்தொழிலர் ஆய கடையாயர் தம்மேல்
பெரும்பழி யேறுவ பேணார் - இரும்புன்னை
புன்புலால் தீர்க்கும் துறைவ! மற்று 'அஞ்சாதே
தின்பது அழுவதன் கண்'.

     கீழ்மக்கள் கீழ்த்தரமான செயல்களைப் பழிக்கு அஞ்சியும் கூடக் கைவிட மாட்டார். 'அஞ்சாதே தின்பது அழுவதன் கண்' என்பது பழமொழி.

6. தருமம் செய்யுங்கள்

     தோன்றுவதற்கு அருமை உடையதாகிய மக்கட் பிறப்பினைப் பெற்றுள்ளோம். அதனால், முடிந்த வகைகளிலே எல்லாம் தரும காரியங்களைச் செய்து வருக. கொஞ்சமும் மாற்றுவதற்கு இயலாதவண்ணம் அஞ்சப்படும் நோய், முதுமை, அருங்கூற்று ஆகியவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இறக்கும்படியான நிலையிலே தருமஞ் செய்யலாமென்று ஒதுக்கி வைத்தல், அந்த வேளையிலே, தருமம் செய்ய இயலாதபடி அறிவு மயக்கமும் வந்து சேர்ந்து விடலாம்.

தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறஞ்செய்க! - மாற்றின்றி
'அஞ்சும் பிணிமூப்(பு) அருங்கூற்(று) உடனியைந்து
துஞ்ச வருமே துயக்கு'.

     யாக்கையின் நிலையாமை கூறினார். தருமத்தை இளமையிலேயே செய்க; பின்னர் பார்த்துக் கொள்ளலாமென்றால், அது முடியாதும் போகலாம். 'அஞ்சும் பிணி, மூப்பு, அருங்கூற்று உடனியைந்து துஞ்ச வருமே துயக்கு' என்பது பழமொழி.

7. கோழைக்குப் பாதுகாப்பே கிடையாது!

     வலிமை உடையவர்களின் துணையுடையவர்கள் என்றாலும், தம் அளவிலே வலிமையில்லாதவருக்கு, வலிமையைப் பெய்து அவரைப் புகழிலே நிலை பெறுத்துதல் எவராலும் ஆகுமோ? ஆகவே ஆகாது. வெண் மேகங்கள் தங்கம் சோலைகளையுடைய மலை நாடனே! எப்படிப்பட்ட துணைகளை உடையவர்களானாலும், உள்ளத்தில் அஞ்சி நடுங்கும் கோழைகளாக இருப்பவர்களுக்குப் பாதுகாக்கும் அரண் என்பது எதுவுமே கிடையாது என்று அறிவாயாக.

வன்சார்(பு) உடையர் எனினும் வலிபெய்து
தஞ்சார்(பு) இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ
மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
'அஞ்சுவார்க் கில்லை அரண்'.

     'வலிமை' என்பது ஒருவர்க்குத் தம்பால் அமைவதேயல்லாமல், பிறர் ஊட்டலாலும், அரண் முதலிய பாதுகாப்பாலும், துணையாலும் அமைவதன்று, 'அஞ்சுவார்க்கு இல்லை அரண்' என்பது பழமொழி.

8. குடிப் பெருமையின் சிறப்பு

     தாயினாலே யானாலும், தந்தையினாலே யானாலும், யாதாயினும் ஒரு சிறப்புக் கூறப்படுதல் இல்லாமலே, தம் வாயினாலேயே தம்மைப் பெருமையாகக் கூறும் தற்புகழ்ச்சியாளர்களைப் பிறரும் புகழ்தல், புகழ்பவருக்கு ஒரு துன்பமும் தருவதன்று என்றாலும், அது, அடுப்பின் ஓரத்தில் முடங்கிக் கிடக்கும் நாயினைப் புலியாகும் என்று சொல்வது போலப் பொருத்தமில்லாத பொய்ப் புகழ்ச்சியே யாகும்.

தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்
நோயின்(று) எனினும் 'அடுப்பின் கடைமுடங்கும்
நாயைப் புலியாம் எனல்'.

     குடிப்பெருமை இல்லாதவர் உயர்ந்த பண்பினர் ஆதல் இல்லை அவருடைய போலித் தோற்றங்கண்டு புகழ்வதெல்லாம், பொய்யான புகழ்ச்சியே அல்லாமல் உண்மைப் புகழ்ச்சியாகாது. 'அடுப்பின் கடை முடங்கும் நாயைப் புலியாம் எனல்' என்பது பழமொழி.

9. மகனுக்குச் செய்ய வேண்டியது

     ஒரு தகப்பன், எந்த வகையிலே யானாலும், தன் மக்களைச் செம்மையான நெறியிலேயே மேம்பட்டு நிற்குமாறு அதற்குத் தகுதியானவற்றையே செய்தல் வேண்டும். தான் செய்த பாவையே ஒரு சிற்பிக்குப் பின்னர் தெய்வமானது போல, அப்படிச் செந்நெறியிலே மக்களை நிலையாக நிற்கச் செய்தால், அம்மக்கள் பிற்காலத்தில் தந்தையாலும் போற்றப்படும் உயர்ந்த பெருநிலையினை அடைவார்கள்.

எந்நெறி யானும் இறைவன்தன் மக்களைச்
செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் - அந்நெறி
மான்சேர்ந்த நோக்கினாய்! - ஆங்க 'அணங்காகும்
தான்செய்த பாவை தனக்கு'.

     மக்களைச், செந்நெறிமேற் செல்லுதலில் தகுதியுடையவராக்குதல் தான் ஒரு தந்தையின் கடமை. அணங்கு - தெய்வம், பாவை - செதுக்கிய சிலை. 'அணங்காகும் தான் செய்த பாவை தனக்கு' என்பது இதிலுள்ள பழமொழி. 'இறைவன்' என்றதால், ஓர் அரசன் தன் குடிமக்களைச் செந்நெறிமேல் நிற்கச் செய்ய வேண்டும் என்பதும் இதனால் அறியப்படும்.

10. முகஸ்துதிக்கு மகிழ வேண்டாம்

     மூங்கில்கள் அடர்ந்திருக்கும் மலைகளுக்கு உரியவனே! தம்மவரேயானாலும், ஒருவர் தம்மைப் புகழ்ந்து பேசுகின்ற சமயத்திலே, அந்த முகஸ்துதிக்கு மனமகிழலாகாது. அப்படிப் பேசுதலை உடனேயே தடுத்துவிட வேண்டும். தம்முடையனவே என்றாலும், பொருத்தமில்லாத ஆபரணங்களை எவரும் அணிவதில்லை அல்லவா?

தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
அமரா(து) அதனை அகற்றலே வேண்டும்
அமையாகும் வெற்ப! 'அணியாரே தம்மைத்
தமவேனும் கொள்ளாக் கலம்'.

     முகஸ்துதியை விரும்பினால், உள்ளத்து அகந்தையே நிறையும். அதனால், அது தம்மவராலே சொல்லப்பட்டாலும் தம் நல்ல ஒழுக்கத்திற்கு ஊறு செய்வதினால் ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று என்பதாம். 'அணியாரே, தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்' என்பது பழமொழி. கொள்ளாக் கலம் - பொருந்தாத நகைகள்.

11. அறிவு ஆடை போன்றது!

     அறிவினாலே வந்த பெருமைகளே பெருமைகளாகும். அவை ஒன்றும் இல்லாத ஒருவன், பிற செல்வங்களினாலே பெருமை உடையவனாதல் எங்ஙனமாகும்; பொலிவு பெறச் செய்தலையுடைய இரத்தினாபரணமும், பொன்னாபரணமும், சந்தனமும், மாலையும் ஆகிய இவை போன்ற அணி வகைகள் எல்லாம், உடுத்தும் ஆடைக்குப் பின்னரே கருதி மதிக்கப்படுவன அல்லவா?

அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம்? - பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
'அணியெல்லாம் ஆடையின் பின்'.

     ஆடையின் மேல் அவ்வணிகளையும் அணியின் அழகு தரும். அதுபோல, அறிவுடைமையின் மேல் பிற செல்வங்களும் சேரின் பயன் தரும். இன்றேல் தருவதில்லை. 'அணியெல்லாம் ஆடையின் பின்' என்பது பழமொழி. ஆடையே முதன்மையானது என்பது கருத்து.

12. வம்புக்காரனின் வாய்

     நன்மை தீமைகளை அறிந்து நடக்கத் தெரியாதவர்களுடைய திறமையில்லாத சொற்களைக் கேட்க நேர்ந்தால், அதற்காக வருத்தப்படாதவர் போல, அதனைப் பொருட்படுத்தாமல் இருந்து விடுங்கள். பிறர் மீது இரக்கம் இல்லாது பழிதூற்றும் இயல்புடைய வம்பலர்களின் வாயை அடக்குவதற்காகக் கருதிச் செல்பவர்களே, ஊர்ப் பொதுவிடத்தைத் தாழிட்டு வைக்க முயன்றவர்கள் போன்ற அறியாமை உடையவராவார்கள்.

தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால்
பரியாதார் போல இருக்க! - பரிவுஇல்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே,
'அம்பலம் தாழ்க்கூட்டு வார்'.

     பழி கூறித் திரிபவரின் கீழ்மையை அறிந்து அவர் சொற்களைப் பாராட்டாமல் பொறுக்கும் அறிவுடைமை வேண்டும். அன்றி, அவர் வாயை அடக்க முயல்பவர், ஊர்ப் பொதுவிடத்தைத் தாழிட முயன்றவர் போலத் தாமே மிகுதியான அவமானம் அடைவார்கள்.

     பரிவு - இரக்கம்; துன்பம். 'அம்பலம் தாழ் கூட்டுவார்' என்பது பழமொழி.

13. அன்பால் சாதிக்க வேண்டும்

     அன்பினால் ஒருவனுடைய உள்ளம் நெகிழ்ச்சி அடையுமாறு செய்து அவன் வழியே நடந்து, அவனால் காரியத்தை முடித்துக் கொள்ளுதலே சிறந்தது. அங்ஙனமில்லாமல், நின்ற இடத்திலேயே அவனை வற்புறுத்திக் காரியத்தை முடித்துக் கொள்ள முயல்வது தவறானதாகும். அது, கன்றைக் குடிக்க விட்டுப் பசுவிலே பால் சுரந்து வரும்பொழுது கறந்து கொள்ளாமல் அம்பு எய்து பசுவைக் கொன்று பால் கறக்க முயல்வது போன்ற பேதைமையான செயலும் ஆகும்.

அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது,
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
கன்றுவிட்(டு) ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய்,
'அம்புவிட்(டு) ஆக்கறக்கும் ஆறு'.

     செயலை முடிக்கும் முறைமை இதன்கண் கூறப்பட்டது. பிறரை மனம் நோகச் செய்து காரியம் சாதிக்க நினைப்பவரின் பேதைமையும் சொல்லப்பட்டது. 'அம்பு விட்டு ஆக்கறக்குமாறு' என்பது பழமொழி.

14. இனத்தைக் கொண்டே மதிப்பிடலாம்

     கயல் மீன்களையும் தம் நீட்சியால் மாறுபாடு கொள்ளச் செய்யும் மை தீட்டிய கண்களை உடையவளே! பக்கத்து வீட்டார்கள் அறியாதவாறு சமைத்து உண்பதென்பது ஒரு போதுமே இயலாது. அதனால் ஒருவருடைய தன்மையை அறியப் பெரிய முயற்சிகள் எதுவுமே தேவையில்லை. காட்டில் வாழும் முனிவர்களே என்றாலும், அவர்கள் நல்ல இயல்பினர்களா அல்லது தீய இயல்பினர்களா என்பதை, அவருடன் சேர்ந்திருப்பவர்களைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். அவரியலை மெய்ப்பிக்க வேறு சாட்சிகள் எதுவுமே வேண்டாம்.

முயலலோ வேண்டா; முனிவரை யானும்
இயல்பினார் என்பது இனத்தால் அறிக!
கயலியலும் கண்ணாய்! கரியரோ வேண்டா;
'அயலறியா அட்(டு)ஊணோ இல்'.

     'இனத்தைக் கொண்டு தன்மையை அறிக' என்று சொல்லி, நல்லினம் சேர்தலின் இன்றியமையாமை வற்புறுத்தப்பட்டது. 'அயலறியா அட்டூணோ இல்' என்பது பழமொழி.

15. பயன்நோக்கிச் செய்வது உதவியாகாது

     இதழ் விரிந்த பூக்கள் பலவும் ஆற்றிலே ஒன்றாகக் கலந்து செல்லும் புதுப்புனல் வளத்தையுடைய ஊரனே! சிறிய பொருளினை ஒருவர்க்குக் கொடுத்து உதவித் தாம் செய்த அந்தக் காரியத்தால், பின்னர் அதனால் பெரும் பொருளை அடைய நினைப்பவர்கள் தர்மவான்களே அல்லர். அவர்கள் விரும்பப்படும் அயிரையாகிய சிறுமீனைத் தூண்டிலிலே கோத்துவிட்டுப், பெரிய மீனாகிய வராலைப் பிடிக்கின்றவர்களைப் போன்றவரே யாவர்.

சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால்
பெரிய பொருள்கருது வாரே; - விரிபூ
விராஅம் புனலூர! வேண்(டு); 'அயிரை விட்டு
வராஅல் வாங்கு பவர்'.

     'வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; பிறவெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து' என்ற குறளின் கருத்தினைக் கொண்டது இச்செய்யுள். ஈகையால் இம்மையிற் கைம்மாறையோ, மறுமையில் இன்பத்தையோ பெறலாம் எனக் கருதாது, அதனைக் கடமையாகக் கருதிச் செய்க என்பது கருத்து. 'அயிரை விட்டு வரால் வாங்குபவர்' என்பது பழமொழி.

16. நல்லதை உணரத் தீயவரால் முடியாது

     காட்சிக்கு இனியதாகத் தோன்றுகின்ற மயில்கள் ஆடிக் கொண்டிருக்கின்ற, பெரிய மலைகளையுடைய வெற்பனே! எஃகினை எப்பொழுதுமே எஃகினைக் கொண்டே தான் பிளக்கலாம். அதைப் போலவே நல்லவர்களின் நல்ல தன்மையை உணர வேண்டுமானால் அவர்களை விட, நல்லவர்களே அதனை முறையாக உணரக் கூடியவர்கள். தீயவர்கள் ஒரு போதும் அதனை உணரவே மாட்டார்கள்.

நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப; பிறர் உணரார்; - நல்ல
மயிலாடு மாமலை வெற்ப! மற்று என்றும்
'அயிலாலே போழ்ப அயில்'.

     'வயிரத்தைக் கொண்டுதான் வயிரத்தை அறுக்க வேண்டும்' என்று வழங்கும் பழமொழியையும் நினைக்க. நல்ல தன்மை இல்லாதவர் கண்ணுக்கு நல்லவரும் தீயவராகவே தோன்றுவர் என்பது கூறி, நல்ல தன்மை உடையவராவதன் சிறப்பு வற்புறுத்தப்பட்டது. 'அயிலாலே போழ்ப அயில்' என்பது பழமொழி.

17. செய்பவனுக்குத்தான் வருத்தம் தெரியும்!

     மக்கள் வரிசையாக இருந்து, அதனால் மாட்சிமைப்பட்டு விளங்கும் ஒரு வட்டாடும் அரங்கம். அந்த அரங்கினுள்ளே, தாம் வட்டாடாமல் ஒதுங்கிப் பக்கத்திலே இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் சிலர்; அவர்களுக்கு வட்டாடும் போர் மிகவும் எளிதாகவே தோன்றும். அதன் நுட்பத்தினை அறிந்தவர்க்கே, அதன் உண்மையான நிலைமைகள் தோன்றும். அது போலவே, அருகே இருந்து நுண்மையான கருத்துக்களைச் சொன்னாலும் ஈடுபடும் செயலானது குறைபாடுடையதாக இருப்பதான அதன் தன்மையை அறியாதவன், அதனைச் செய்யப் புகுந்தால், செயல் முற்றுப்பெறாது அழிவடைதலும் உண்மையாகும்.

உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம்
புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல்,
நிரையிருந்து மாண்ட 'அரங்கினுள் வட்டு,
கரையிருந் தார்க்கெளிய போர்'.

     செயலின் உண்மையான நிலையறியாமல் ஈடுபடுவது அழிவைத் தரும். 'அரங்கினுள், வட்டு கரையிருந்தார்க்கு எளிய போர்' என்பது பழமொழி.

18. பகையை அறவே ஒழிக்க வேண்டும்

     தம்முடன் மனம் ஒத்துப் போகாதவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்ற இடத்தும், அதனாலும் மனம் அமைதியடைந்து இருந்து விடக் கூடாது. அப்படி இருக்காதவர்களாக, அவர்கள் இறந்து போக வேண்டும் என்னும் அளவிற்குச் சினங்கொள்ளுதலே மன்னரின் இயல்பு. அருவிகள் பரந்து வீழ்கின்ற மலைகளுக்குரிய வெற்பனே! அதுதான், கதிர் அரிந்து வைத்த அரிதாளையும் விடாமல் உழுது, நீருள் அமிழ்த்தி அழுகச் செய்வது போன்ற அறிவுடைய செயலாகும்.

பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும்,
இருந்தமையா ராகி இறப்ப வெகுடல்
விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே
'அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு'.

     தாளை விட்டு வைத்தால் பின்னர் அதனடியினின்றும் வளமற்ற பயிர் கிளைக்குமாதலால், உழவர் அதனை அழித்து அழுகச் செய்வார்கள். அது போலப் பகையையும் வேரறக் களைவது ஒரு நாட்டுத் தலைவனின் பொறுப்பு. அரை குறையாக விட்டு வைத்தால் மீண்டும் ஆபத்துத்தான் 'அரிந்தரிகால் நீர்ப்படுக்குமாறு' என்பது பழமொழி.

19. மூடர்களின் உறவு கூடவே கூடாது

     பரந்து ஒலிக்கும் அலைகளின் மிகுதியையுடைய கடற்கரைகளுக்கு உரிய சேர்ப்பனே! நெல் அரிபவர்களுக்கு அவ்வேலையானது கெடும்படியாக எவரும் நரியைக் காட்டமாட்டார்கள். அதுபோலவே, அனைத்தையும் ஆராய்ந்து அறிந்து உணர்ந்து அதன்பால் நிலை பெற்றிருப்பவர்கள், நுண்ணறிவு இல்லாதவர்களின் இடையிலே செல்லவே மாட்டார்கள். ஆராய்ந்து அறிந்த உடையவர்களுடன் கலந்து நல்ல பண்புகளை மேலும் அறிவதிலேயே ஈடுபடுவார்கள்.

தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார்
பரியார் இடைப்புகார் பண்பறிவார், மன்ற;
விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!
'அரிவாரைக் காட்டார் நரி'.

     பயனுள்ள நெல்லரிவார்க்குப் பயனற்ற நரியைக் காட்டிப் பொழுதை வீணே காயச் செய்தல் கூடாது. அறிவுடையோரும், அறிவுடையோருடன் கலந்து பழக வேண்டுமே தவிரப் பயனற்ற அறிவற்றோர் கூட்டத்தில் சேர்தலே கூடாது. 'அரிவாரைக் காட்டார் நரி' என்பது அவரை வேறு ஒன்றில் மனம் திருப்புதல் ஆகும்.

20. ஈகையே செல்வத்திற்கு அழகு

     முழவுகளின் ஒலி போல அலைகள் முழங்கும், கடல் சூழ்ந்த உலகம் முழுவதையுமே ஒன்றாக ஒரு குடைக்கீழ் ஆண்டவர் பெருமன்னர்கள். அவர்களுங்கூடத் திருவிழா நடந்த ஊரிலே நிகழ்ந்த கூத்தைப் போல மறுநாள் வீழ்ச்சியுற்று அழிதலைப் பார்த்திருக்கிறோம். 'இருப்பது பிறருக்கு உதவியாகப் போகட்டும்' என்று ஒரு பொருளை யேனும் மனதாரக் கொடுத்து மகிழாதவனுடைய செல்வமானது, அழகும் வடிவும் உடையவளான ஒரு பெண் கண்ணிழந்த குருடியாக விளங்குவதைப் போன்றதாகும்.

முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்,
விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும்,
இழவென்று ஒருபொருள் ஈயாதான் செல்வம்,
'அழகொடு கண்ணின் இழவு'.

     அவள் அழகும் வடிவும், அவள் கண்ணிழந்த ஒரு காரணத்தால் தம் பெருமையற்றுப் போவது போல, அவன் செல்வமும் அவனது ஈயாத் தன்மையால் பயனற்ற செல்வமாகும் என்பது கருத்து. 'அழகொடு கண்ணின் இழவு' என்பது பழமொழி.

21. உயர்ந்தவரை உயர்ந்தவர் அறிவார்

     அடுக்கடுக்காக விளங்கும் மலைத் தொடர்களையுடைய நாட்டிற்கு உரியவனே! மணிகளின் இயல்புகளை உணர்பவர்களுக்கு, அவை சேறாகி இருந்த காலத்திலும் மணிகளாகவே காணப்படும். அதுபோலவே, தொடர்ச்சி அறாது உயர்ந்து விளங்கும் நல்ல குடியிற் பிறந்தவர்களை அவர்களுக்கு என்னவிதமான தாழ்ச்சிகள் வந்த காலத்தினும், அறிவுடையவர், உயர்வாகவே எண்ணி மதிப்பார்கள்.

இணரோங்கி வந்தாரை என்னுற்றக் கண்ணும்;
உணர்பவர் அஃதே உணர்ப; - உணர்வார்க்கு
அணிமலை நாட! 'அளறாடிக் கண்ணும்
மணிமணி யாகி விடும்'.

     வறுமை முதலியவற்றால் தாழ்ச்சியடைந்த காலத்தினும், குடிப்பிறப்பின் உயர்வு ஒருவரை விட்டு என்றும் மாறாது. சான்றோர் அவரை மதித்துப் போற்றுவர் என்பதாம். 'அளறாடிக் கண்ணும் மணிமணியாகி விடும்' என்பது பழமொழி.

22. உறவாடும் பகைவரை ஒதுக்கிவிட வேண்டும்

     பறவைகளின் ஆரவாரத்தைக் கொண்ட பொய்கைகளையுடைய நீர்வளமிகுந்த ஊரனே! பகைவர்கள் வெள்ளம்போற் பெரும்படையினை உடையவர்கள் என்றாலும், அவர் வேற்றிடத்தினராயிருந்தால் அவர்களால் என்ன தீங்கைச் செய்து விட முடியும்? ஆனால், உள்ளத்திலே கள்ளம் உடையவராக நம்முடன் நெருங்கிப் பழகுபவரின் பெரிய போலி நட்பு இருக்கிறதே, அது மிகவும் கேட்டைத் தரும். அதுதான் ஒரே வீட்டிற்குள்ளேயே கடன் பட்டது போல இடையறாத பெரிய வேதனையைத் தருவதுமாகும்.

வெள்ளம் பகையெனினும், வேறிடத்தார் செய்வதென்?
கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு
புள்ளொலிப் பொய்கைப் புனலூர! அஃதன்றோ,
'அள்ளில்லத்(து) உண்ட தனிசு'.

     உட்பகையின் பெருங்கேடு கூறி, அதனை ஒறுத்து நடத்தும் நெறி வற்புறுத்தப்பட்டது. தனிசு - கடன். 'அள்ளில்லத்து உண்ட தனிசு' என்பது பழமொழி.

23. தருமம் செய்யப் பாவம் போகும்

     செல்வத்தைத் தேடுவதற்கு வேண்டிய புறச்செயல்களைச் செய்ய, வறுமை நீங்கிச் செல்வமானது பெருகும். அதுபோல, நல்ல தருமங்களைச் செய்யப் பழைய பாவங்கள் எல்லாம் நீங்கிப் போய்விடும். ஆதலால், தருமஞ் செய்யும் இடத்தின் தகுதிகளை அறிந்து செய்த காலத்திலே, தருமம் செய்பவர்களுக்கும் அவர்கள் செல்லும் மறுமை உலகத்தின் கண் அதனால் நன்மை உண்டாகும்.

அறஞ்செய் பவர்க்கும் அறவுழி நோக்கித்
திறந்தெரிந்து செய்தக்கால் செல்வழி நன்றாம்
புறஞ்செய்யச் செல்வம் பெருகும்; 'அறஞ்செய்ய
அல்லவை நீங்கி விடும்'.

     அறம் செய்பவரும், தகுதி உடையவர்க்கே அதனைச் செய்வதனால்தான் அறத்தின் பயனை உண்மையாக அடைவார்கள். 'அறம் செய்ய அல்லவை நீங்கிவிடும்' என்பது பழமொழி. 'அறம் செய்யப் பாவம் நீங்கும்' என்பது கருத்து.

24. அவன் மயக்கம் தெளியவில்லை!

     தொடியணிந்த தோள்களையும், மடப்பத்தையும் உடையவரான பரத்தையர்களின் மார்பினைத் தன் மார்பிலே சேர்த்துக் கொண்டவனாக, அவர்களுடைய மார்பிலே நம் தலைவன் மயங்கிக் கிடக்கின்ற அச்செயலானது முறைமை உடையதன்று. அதனை, நீ அவன் பாற் சொல்லாதிருப்பாயாக. பாணனே! பொய்த்தூக்கம் தூங்குபவரை எழுப்பி விடுதல் என்பது எவருக்குமே முடியாத செயலாகும்.

தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம்
மடுத்(து), அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப,
நெறியல்ல சொல்லல்நீ, பாண! - 'அறிதுயில்
யார்க்கும் எழுப்பல் அரிது'.

     தலைவனுக்காகத் தலைவியிடம் சமரசம் பேச வந்த பாணனிடம், தலைவனின் பரத்தையர் மோகம் இன்னும் தெளியவில்லை என்று கூறித் தலைவி மறுத்துச் சொல்லுகிறாள். அறிதுயில் - யோக நித்திரையுமாம்; இங்கே அது பொய்த்துயில் ஆகும். 'அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது' என்பது பழமொழி.

25. அறிந்து செய்யும் அறியாமைச் செயல்

     செறிந்த மடல்களையுடைய, அழகிய தாழை மரங்கள் பொருந்தியிருக்கும் கடற்கரைக்கு உரிய தலைவனே! முல்லைக் கொடிக்குத் தேரினையும் மயிலுக்குப் போர்வையினையும் முன் காலத்திலே கொடுத்தவர்களைக் கேள்வி வாயிலாக நாமும் அறிந்துள்ளோம். ஆகவே, சொல்லப் போவோமானால், சான்றோர்களுக்கு, அவர்கள் அறிந்தே செய்யும் அறியாமைச் செயல்களுங்கூடச் சிறப்பையே தருவதாயிருக்கும் என்று அறிவாயாக.

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கேட்டறிந்தும்; - சொல்லின்
நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!
'அறிமடமும் சான்றோர்க்(கு) அணி'.

     'பாரியும் பேகனும், முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் அளித்தனர்' என்று புலவர்கள் போற்றுவர். அவை கொடுத்தற்கு உரியன அன்றென அறிந்தும் அறியாதார் போல அவர்கள் கொடுத்தலால் அவர்கள் சிறப்படைந்தனர். சான்றோர் பெருமை இதனால் கூறப்பட்டது. 'அறிமடமும் சான்றோர்க்கு அணி' என்பது பழமொழி. அறிந்தே செய்யும் மடமைச் செயலும் சான்றோர்க்குச் சிறப்பே தருவதும் சொல்லப் பெற்றது.

26. பெரியவர் பெரியவற்றை அறிவார்கள்

     நல்லனவற்றையும் பொல்லாதனவற்றையும், அருகே நெருங்கியிருப்பவர் தம் சொற்களைப் பெய்து அறிவுடையோருக்கு அறியச் செய்தலும் வேண்டுமோ? வில் போன்ற புருவத்தின் கீழே செவ்வரி படர்ந்திருக்கும் பரந்து அகன்ற கண்களை உடையவளே! பெரிய செயல்களை முதன்மையுடையவனாக இருந்து ஆட்சி செய்து நடத்தும் ஒருவனே, பெருமையுடைய சிறந்த செயல்களின் தன்மையும் அறிபவனாயிருப்பான் என்று அறிவாயாக.

பொற்பவும் பொல்லா தனவும் புணர்ந்திருந்தார்
சொற்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்
அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! - 'அறியும்
பெரிதாள் பவனே பெரிது'.

     அறிவுடையோர் சிறந்த செயல்களையே செய்ய விரும்புவர்; அதனால், அவரே அதனை அறிந்து செய்பவராவர்; அவர்க்கு எவரும் அதனைச் சொல்லுதல் வேண்டாம். 'அறியும், பெரிதாள்பவனே பெரிது' என்பது பழமொழி.

27. பேதை எதையும் செய்யமாட்டான்

     தனக்கு வந்து நேருகின்ற துன்பங்கள் பலவற்றையும், இன்ன வகையால் அவை வந்தனவென அறியாதிருக்கின்ற அறியாமையையே தன் வாழ்விற்குப் பற்றுக் கோடாகக் கொண்டிருப்பவன் பேதையாவான். அவன், என்றும் அதனை வெல்லும் வெற்றியுடையவன் ஆகவே மாட்டான். 'வெற்றி பெறல்' என்பது, ஊழ்வினைப் பயனால் வந்து வாய்த்த வழியேயல்லாமல், ஒருவனின் தன் முயற்சியினாலே மட்டும் அடையக் கூடியதன்று' என்று நினைத்து, அந்த அறிவினால் உண்டாகும் அச்சமே, அந்தப் பேதைக்கு அதிகமாயிருக்கும்.

உறுகண் பலவும் உணராமை கந்தாத்
தறுகண்மை ஆகாதாம் பேதை, - 'தறுகண்
பொறிப்பட்ட வாறல்லால், பூணாது' என் றெண்ணி,
'அறிவச்சம் ஆற்றப் பெரிது'.

     'ஊழையும் உப்பக்கங் காண்பர் தாளாது உஞற்றுபவர்' ஆனால், பேதையோ அனைத்தையும் ஊழின் பயன் என்று கருதி அஞ்சி, முயற்சியின்றித் துன்பங்களில் உழன்று அழிவான். 'அறிவச்சம் ஆற்றப் பெரிது' என்பது பழமொழி.

28. ஊழ்வினையால் அமைவதே செயல்

     மதித்துச் சொல்லப்படுகின்ற பேரறிவு உடையவர்களிடத்தும் உளவான குறைபாடுகள் பலவாயிருந்தால், அதற்குக் காரணம், அவர்களின் முன்வினைப் பயன் வந்து பொருந்தியதன் வகையாகவே செயல்கள் நிகழ்வதனால் என்க. அதனால் அவருடைய நல்ல அறிவினையும் கூட ஊழ்வினை கெடுத்துவிடும் என்று அறிதல் வேண்டும்.

சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்,
பட்ட இழுக்கம் பலவானால் - பட்ட
பொறியின் வகைய கருமம்; அதனால்,
'அறிவினை ஊழே அடும்'.

     மிக்க அறிவோரும், தவறான காரியங்களைச் செய்ய நேர்தல், ஊழ்வசத்தின் காரணமாகவே என்பது சொல்லப்பட்டது. பொறி - தலை எழுத்து எனவும் சொல்வர். 'இழுக்கம்' - விருத்தம் என்றும் பாடபேதம். 'அறிவினை ஊழே அடும்' என்பது பழமொழி. 'பொறியின் வழிய கருமம்' என்பதையும் ஒரு பழமொழியாகக் கருதலாம்.

29. வல்லவன் காரியம் கெடாது

     நெடுங்காலமாக நீர் வற்றாது நிறைந்திருக்கின்ற ஒரு குளமானது ஒருவர் சற்றே நீர் எடுத்துச் சென்றதனால், நீரற்றுப் போய்விடாது. அதுபோலவே, பல ஆண்டுகளாக வந்து சேர்ந்ததாகிய, பயனில்லாமல் சேர்ந்து கிடந்த செல்வத்தையும், கொடுத்தலிலே வல்லமை உடையவனான ஒருவன், கொடுக்கும் தகுதியினைத் தெரிந்து, தகுதியுடையவருக்கு வழங்கும் காலத்திலே, அதனால் வரும் ஆக்கமும் விரைவிலே நீங்காது நீடித்து நிற்கும்; அச்செல்வமும் குறைந்து அழிந்து போய்விடாது; மென்மேலும் பெருகவே செய்யும்.

பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
வல்லான் தெரிந்து வழங்குங்கால், - வல்லே
வலிநெடிது கொண்ட(து) அறாஅது; அறுமோ,
'குளநெடிது கொண்டது நீர்?'.

     'செல்வத்தின் பயனே தக்கவர்க்கு ஈதல்'. அதனால், அவர் செல்வமும் குறையாது. 'அறுமோ குளநெடிது கொண்டது நீர்' என்பது பழமொழி.

30. வருவாய் உடைய செல்வம்

     விளைந்த நெற்பயிரை அறுக்கும் பொருட்டாக வயல்களில் தேங்கி நிற்கும் நீர் வடியுமாறு, உழவர்கள் அணைகளைத் திறந்துவிடும் நீர் வளமுடைய ஊரனே! நரி நக்கிவிட்டது என்பதனால் கடல் நீர் முழுவதும் வற்றி விடுமோ? வற்றாது! அதுபோலவே, தமக்கு ஏவல் செய்பவர் பலராலும் களவு செய்யப்பட்டாலும், வருவாய் மிகுந்தவர்களுடைய பெருஞ்செல்வமும் குறைந்து போவதில்லை.

களமர் பலரானும் கள்ளம் படினும்
வளமிக்கார் செல்வம் வருந்தா; - விளைநெல்
அரிநீர் அணைதிறக்கும் ஊர! 'அறுமோ
நரிநக்கிற்(று) என்று கடல்'.

     ஏவலர் சிறு களவுகள் செய்தனர் என்றாலும், அதனைப் பெரிதாகப் பொருட்படுத்தாதிருக்க வேண்டும்; அதனால் செல்வம் குறைந்துவிடாது என்பது கருத்து. 'அறுமோ, நரிநக்கிற்று என்று கடல்' என்பது பழமொழி.

31. ஊழ்வினைதான் காரணம்

     ஓங்கி உயர்ந்த மலைமுடிகளையுடைய மலை நாடனே! செல்வம் வந்து ஆகிவருகின்ற நல்லூழ் உள்ளவர்க்குச் செய்வதொரு முயற்சியுங்கூட வேண்டியதில்லை. செல்வம் போகின்ற போகூழ் வந்தவர்க்கு, அதனைப் போகாமல் நிலை நிறுத்தச் செய்யும் முயற்சிகளாலும் பயனில்லை. எத்தகைய முயற்சிகளைச் செய்து எத்தகைய செல்வத்தைப் பெற்றாலும், ஆகாத தலையெழுத்து உள்ளவர்களுக்கு ஆகிவருவதும் ஒன்றும் இல்லை என்பதை அறிவாயாக.

ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்
போகும் பொறியார் புரிவும் பயனின்றே;
ஏகல் மலைநாட! என்செய்தாங்கு என்பெறினும்
'ஆகாதார்க்(கு) ஆகுவது இல்'.

     செல்வமும் வறுமையும் ஊழ்வினைப் பயனால் வந்து வாய்ப்பன என்பது கருத்து. 'ஆகாதார்க்கு ஆகுவது இல்' என்பது பழமொழி. ஆள்வினை - முயற்சி.

32. மூர்க்கனின் புத்தி மாறுவதில்லை

     தான் ஆராய்ந்து உணர்ந்த கருத்துக்களையும், உலக ஒழுக்கத்தினையும் உணராத மூர்க்கனுக்கு யாதொன்றும் உறுதிப் பொருள்களைச் சொல்ல வேண்டாம். மூர்க்கன், தான் கொண்டதையே மீண்டும் மீண்டும் பற்றிக் கொண்டு விடாதிருப்பவன். நீல நிறத்தினை உண்டதான ஒரு பொருள், என்றும் தன் நிறம் மாறுபட்டும் பிறிதொன்றாக ஆக மாட்டாதல்லவா?

ஓர்த்த கருத்தும் உலகும் உணராத
மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க! - மூர்க்கன்தான்
கொண்டதே கொண்டு விடானாகும்; 'ஆகாதே
உண்டது நீலம் பிறிது'.

     நீலநிறம் பற்றியபின், அது என்றும் அந்தப் பொருளை விட்டு மறைவதில்லை. அதுபோலவே, மூர்க்கனும் தன் புத்தியினின்று எதனாலும் மாறமாட்டான். 'மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா' என்பதை நினைக்க. 'ஆகாதே உண்டது நீலம் பிறிது' என்பது பழமொழி. பாடபேதம்; உலகும், உணர்வும்; யாதும், உறுதி.

33. கொடியவன் செய்வது செயலாகாது

     வலிமையானது நிலையாகத் தங்கியிருத்தலையுடைய, மலை போன்ற மார்பினை உடையவனே! நத்தையானது உழுது வரைந்தவெல்லாம் பொருள் கணக்கு ஆகுமோ! அது போலவே, தம்முடைய தொழில்களைச் செய்து முடிக்கின்ற திறமையுடையவர்கள் செய்யும் காரியங்களைச் செய்வது, கொடுந்தொழிலர்களாகிய வெகுளிகட்கு எப்போதாவது கைகூடி வருமோ? வரவே வராது.

தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன,
வெந்தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?
மைந்(து)இறை கொண்ட மலைமார்ப! 'ஆகுமோ
நந்துழுத எல்லாம் கணக்கு?'.

     நத்தை கீறிச் செல்லலை உழவு என்று கூறினாலும் அது உழவாகிப் பயன் தராதது என்பது போல, செய்வினைத் திறம் இல்லாதவர் செய்யும் காரியங்களும் பயனற்றுக் கைகூடாமற் போம். 'ஆகுமோ, நந்து உழுதவெல்லாம் கணக்கு' என்பது பழமொழி.

34. பொய்யைப் போக்கும் வழி

     ஒரு பொருளை மதித்துக் கொள்ளப்படத் தகுதி இல்லாதவர்கள் சொல்லிய பொய்யாகிய குறளையை, வேந்தன், பொய்யென்று தெளியுமாறு செய்யும் வகையினைத் தெரிந்து செய்பவரே அறிவுடையவர்கள். அப்படிச் செய்வதல்லாமல், உணர்வது உணரும் அறிவினை உடைய அவர்கள், குறளையைச் சொல்லப்பட்டவர் அஞ்சும்படியாகத் தாமும் அவரோடு எதிர்த்து எழுந்து, மூங்கிலாற் செய்த பொய்க் காலைப் போலத் தாமும் குறளை பேசி ஆடவே மாட்டார்கள்.

பொருளல்லார் கூறிய பொய்க்குறளை வேந்தன்
தெருளும் திறந்தெரிதல் அல்லால் - வெருளவெழுந்து
ஆடு பவரோடே ஆடார், உணர்வுடையார்,
'ஆடுபணைப் பொய்க்காலே போன்று'.

     'மணக்கால்' என்பதும் பாடம். அமைச்சர்கள், பொய் கூறி வேந்தன் மனத்தை எவராவது மாற்றினால், வேந்தனைத் தெளிவிக்கும் வகைகளை நாடுவாரே அல்லாமல், தாமும் அந்தப் பொய்யர்களோடு சேர்ந்து ஆடமாட்டார்கள் என்பது கருத்து. 'ஆடுபணைப் பொய்க்காலே போன்று' என்பது பழமொழி. உணர்வுடையார் - அறிவுடையார்.

35. மக்களிடம் அன்பு

     குற்றங் குறைகளுடைய மனத்தினன் அல்லாத, பெரிய நலங்களை எல்லாம் உடைய வேந்தனானவன், தன் குடிமக்களிடத்தே அன்புள்ள உள்ளத்தானாக நடந்துவரல் வேண்டும். அப்படி நடந்து வந்தான் என்றால், அவனைக் கொல்ல எண்ணும் பகைவர்கள், வேண்டிய அளவு முன்னுரைகள் எல்லாம் கூறிப் படை திரட்டினாலும், அவ்வரசனை என்ன செய்துவிட முடியும்? ஆயிரம் காக்கையை ஓட்டுவதற்கு ஒரு சிறு கல்லே போதுமானது போல. அவ்வேந்தன் ஒருவனே, அப் பகைவர்கள் அனைவரையும் தோற்று ஓடச் செய்து விடுபவனாவான்.

மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன்
உறுமனத்த னாகி ஒழுகின் - செறுமனத்தார்
பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப?
'ஆயிரம் காக்கைக்கோர் கல்'.

     'தெறுமனத்தார்' என்பதும் பாடம். இதனால், ஆட்சியில் இருப்பவர்க்கு குடிமக்களின் அன்புக்குப் பாத்திரமாவதே சிறந்த வலிமையாகும் என்று சொல்லப்பட்டது. 'ஆயிரம் காக்கைக்கு ஓர்கல்' என்பது பழமொழி. இப்படியே அவனுடைய பகையும் அஞ்சி கலைந்துபோம்.

36. ஆராய்ந்த பின் நம்புங்கள்

     தமக்கு அன்பு உடையவர்களாக விளங்குபவர்களிடத்தினும், அவர்களை முழுவதும் ஆராயாதவனாகி நம்பிக்கை கொண்டவன், உறுதியாகக் கெட்டே போவான். அப்படியிருக்க, 'எப்பொழுதும் வெகுண்டவர்களைப் போல, மனம் வேறுபட்டவர்களாகி நிற்கும் ஈரமற்றவர்களை நம்ப வேண்டாம்' என்று, கொஞ்சமும் சொல்ல வேண்டாம் அல்லவோ?

விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும்
முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா
அளிந்தார்கண் ஆயினும் 'ஆராயா னாகித்
தெளிந்தான் விளிந்து விடும்'.

     'விளிந்துவிடும்' விரைந்து கெடும் என்பதும் பாடம். முளிதல் - காய்தல். தஞ்சம் - எளிமை. அன்புடையவர்களாகவோ அன்பற்றவர்களாகவோ விளங்கினாலும், எவரையும், ஆராய்ந்தே நண்பராகக் கொள்ளல் வேண்டும். 'ஆராயானாகித் தெளிந்தான் விளிந்து விடும்' என்பது பழமொழி.

37. ஏவியது செய்யாத ஊழியர்

     'எம்மவராதலாலே நீவிர் இக்காரியத்தை எமக்குச் செய்து தருவீராக' என்று வேந்தன் தன்னுடைய சுற்றத்தார்களை நம்பி நியமித்த இடத்து, அக்காரியத்தைச் செய்வதற்கு ஏற்றுக் கொண்ட அச்சுற்றத்தினர், அம்மன்னனுக்காக வேல் முனையிலேயாயினும் வீழ்ந்து அதனை எப்படியாயினும் நிறைவேற்ற வேண்டும். அப்படியல்லாமல், அந்தக் காரியத்தை வேண்டாமென மறுத்துச் சொல்வார்களானால், 'ஆல்' என்று சொல்லப் 'பூல்' என்று மறுத்துச் சொல்வது போன்றதே அதுவாகும்.

எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
தமரைத் தலைவைத்த காலைத் - தமரவற்கு
வேலின்வா யாயினும் வீழார் மறுத்துரைப்பின்
'ஆல்என்னிற் பூல்என்னு மாறு'.

     'ஆல்' பெரிது; 'பூல்' சிறிது. பெரியதைச் சொல்ல அதனை மறுத்துச் சிறியதை உரைப்பவர் தகுதியற்றவர். அரசச் சுற்றத்தார் தம் உயிர் கொடுத்தாயினும் அரசனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் அன்றி, மறுப்பவர் ஊழியத்துக்கு உதவார் என்பது கருத்து. 'ஆல் என்னிற் பூலென்னுமாறு' என்பது பழமொழி.

38. பனைபோலச் செய்யும் உதவி

     பெரிய மூங்கில் வில்லினையும் தன் வடிவினாலே வெற்றி கொண்ட அழகிய புருவத்தை உடையவனே! தம்மை விரும்பி வந்து சேர்ந்திருப்பவர்களுக்கும், தம்முடைய சுற்றத்தினர்களுக்கும் அவர்களை வருத்துகின்ற பசித்துன்பத்தினைப் போக்காதவர்கள், யாரோ புதியவர்களுக்கு உதவுதலானது, தன்னை மிகவும் பாதுகாத்து வளர்த்தார்க்கு உதவாது, நெடுங்காலஞ் சென்று, பின்வரும் புதியவர்களுக்கு உதவுகின்ற இயல்பினையுடைய கரிய பனைபோலும் தன்மையை உடையதாகும்.

விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்
வருந்தும் பசிகளையார் வம்பர்க்(கு) உதவல்,
இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! 'ஆற்றக்
கரும்பனை அன்ன துடைத்து'.

     செல்வம் உடையவர்களாயிருந்தும், வந்த விருந்து உறவுமான பசித்தவர்க்கு உதவாமற் போனால், அது பயனற்ற செல்வமே. 'ஆற்றக் கரும்பனை அன்னது உடைத்து' என்பது பழமொழி.

39. எளியவன் கண்ணீர் வலியவனை அழிக்கும்

     தம்முடைய குடிப்பிறப்பினாலே பொல்லாத தன்மையை உடையவர்கள்; எத்தகைய துணைவலிமையும் இல்லாதவர்கள்; மிகவும் வறுமைப்பட்டிருப்பவர்கள்; பதில் கூறும் சொற்களினாலே தம் பகைவரைப் போன்றிருக்கிறார்கள் என்று, வலியவர் ஒருவர் அவரை அலைக்கழித்த காலத்திலே, அந்தத் துயரத்தைப் பொறுக்க மாட்டாது வலியற்றவரான அவர்கள் அழுத கண்ணீர் ஆகிய அவையே அப்படி ஆட்டுவித்தவர்களுக்கு எமனாகி, அவர்களை அழித்துவிடும்.

தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்
மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்
'ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும்'.

     எளியாரை வலியார் வருத்தினால், அவரால் அவரை எதிர்த்து அழிக்க முடியாவிட்டாலும், அவர்கள் பெருக்கிய கண்ணீரே அவ்வலியாரை அழித்து விடும். 'ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்த்து விடும்' என்பது பழமொழி.

40. கற்றவர் எந்நாட்டினும் சிறப்படைவர்

     கற்க வேண்டிய நூல்களை மிகுதியும் கற்று அறிந்தவர்களே அறிவுடையவர் ஆவார்கள். அத்தகைய அறிவினை உடையவர்களது புகழானது நாற்றிசைகளினும் சென்று பரவாத நாடே இல்லையாகும் அந்நாடுகள் அவர்களுக்கு வேற்று நாடுகளும் ஆவதில்லை. அவர்களின் சொந்த நாடுகளாகவே அவை விளங்கும். அங்ஙனமானால், அத்தகையோர் செல்லும் வழிக்குக் கட்டுச் சோறு கொண்டு போக வேண்டியது இல்லை அல்லவா!

ஆற்றவும் கற்றவும் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா; தமவேயாம் ஆயினால்
'ஆற்றுணா வேண்டுவ தில்'.

     கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் தம்நாடு போலவே மதித்துச் சிறப்பளிக்கும் நாடுகளாகும். 'ஆற்றுணா வேண்டுவது இல்' என்பது பழமொழி. ஆற்றுணா - வழிக்கு உதவும் கட்டுச் சோறு; அது வேண்டாம். எனவே எங்கும் உபசரிக்கப் பெறுவர் என்பதாம்.
 
41. பகைவரைச் சூழ்ச்சியால் அழித்தல்

     'மன வேறுபாடு' என்பது, எத்திறத்தார்களுக்கும் உள்ளதே. அவ்வேறுபாட்டால் அவர் கூறும் மாறுபட்ட சொற்களை, அதற்கு எதிராகக் கூறும் எதிர்மாற்றங்களே உடைக்க வல்லன. தம் பகைவர்களை அவரிடம் மிகுந்த பகைமை கொண்டுள்ளவரைக் கொண்டே எளிதாக களைதல் வேண்டும். ஆதலால், அங்ஙனம் தம் பகைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அழிக்க வல்லானே, தான் ஒருவனாகவே நூறு பேர்களைக் கொல்லும் பேராற்றல் உடையவனாவான்.

மாற்றத்தை மாற்றம் உடைத்தலால் மற்றவர்க்(கு)
ஆற்றும் பகையால் அவர்களைய - வேண்டுமே
வேற்றுமை யார்க்குமுண் டாகலான் 'ஆற்றுவான்
நூற்றுவரைக் கொன்று விடும்'.

     பகைவரிடத்து ஒட்டி நண்பரைப் போல நடந்து, அவரை அழிக்க வல்லவர்களைப் பெற்றால், எத்தகைய பெரும் பகையையும் எளிதில் வென்றுவிடலாம். 'ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்' என்பது பழமொழி.

42. அறத்தைப் பாதியிலே நிறுத்தக் கூடாது

     நல்லறம் செய்வதற்குப் பொருந்திய வகையினாலே, செய்யக் கருதிய நல்லறத்தைப் பலரும் வருத்தமடையாமல், ஒரு கட்டுக்கோப்பு உடையதாகவே செய்து வருவானாக. இடையில், அது இடையூறு உடையதாகி, அதனால் இடையிலே நிறுத்தி ஒழிதலைவிடப், பயிரை நட்டுவிட்டுக் காத்து விளையவைத்து அறுத்துப் பயன் பெறாமற் போயினவனாதலை விட நடாமலிருப்பவனாயிருத்தலே நல்லதாகும்.

பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம்
முட்டுடைத் தாகி 'இடைதவிர்ந்து வீழ்தலின்
நட்டறான் ஆதலே நன்று'.

     அறம் செய்பவர், குறுக்கிடும் இடர்ப்பாடுகளைக் கருதி, இடையிலே அதனை நிறுத்தி விடுதல் கூடாது. தொடங்கியதை முற்றவும் செய்து பயன்பெறுதல் வேண்டும். 'இடை தவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று' என்பது பழமொழி.

43. பகைவரின் துணைவரை நட்பாக்கிக் கொள்க

     "யானும் இவ்விடத்திலே துணையாகப் பகைவருடன் இருந்த என் தமையனும் ஒன்று சேர்ந்துவிட்ட காலத்திலே, பகைவருடைய வீரம் எல்லாம் செல்வதற்கு இடம் எதுவும் இல்லை" இப்படிச் சொல்லி, அவரும் தம்முடனே கூடிப் படைத் துணையாகி நின்று பகைவருடன் மாறுகொள்ளுமாறு, பகைவரிடமிருந்து அவரைப் பிரிந்து விடத் தூண்டுதல் சிறந்ததாகும். அதுதான், இடையரின் நாய்க்கு ஆடு திருடும் கள்ளர்கள் எலும்பினை இடுதலோடு ஒக்கும்.

யானும்மற்(று) இவ்விருந்த எம்முனும் ஆயக்கால்
வீரம் செயக்கிடந்த(து) இல்லென்று - கூடப்
படைமாறு கொள்ளப் பகைதூண்டல் அஃதே
'இடைநாயிற்(று) என்பிடு மாறு'.

     பகைவர் இருவராகிய இடத்து, அவருள் ஒருவரை உறவாடிப் பிரித்துத் தம்மவராக்கிக் கொள்ளல் சிறப்புடையது. 'இடைநாயிற்கு' - கிடை நாயிற்கு என்றும் பாடம். 'இடை நாயிற்கு என்பு இடுமாறு' என்பது பழமொழி. என்பு பெற்ற நாய் கள்ளற்குச் சாதகமாவது போலப் பகைவர்க்குத் துணையாக வந்தாரும் மாறி விடுவர் என்பதாம்.

44. இல்லாததைத் தருவதாகச் சொல்ல வேண்டாம்

     வேலினது தன்மையைப் பெற்று, முற்றவும் அமர்ந்த கண்களையுடைய, பசிய வளையல்களை அணிந்தவளே! மிகவும் நெருங்கிப் பழகியவர்கள் தமக்கொன்று வேண்டும் என்று கூறும் சொற்களைக் கேட்டால் தன்னிடத்திலே இல்லாத அப்பொருளைத் தன்னிடத்தே உடையதொன்றாகவும் அதனைத் தாம் தருபவராகவும் உறுதியாகக் கூறினால், அங்ஙனம் வீணே கூறுதல், இடையனால் வெட்டப்பட்ட மரத்தினைப் போன்றதாகும்.

அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமை யொட்டின் - படைபெற்று
அடைய அமர்த்தகண் பைந்தொடி! அஃதால்
'இடையன் எறிந்த மரம்'.

     இடையன் கொஞ்சங் கொஞ்சமாகக் கிளையை ஒடித்தே ஒரு மரத்தை அழித்து விடுகிறான். அது போலவே, இல்லாததைத் தருவதாக வாக்களிப்பவனின் புகழும், கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து அழிந்து போம். 'இடையன் எறிந்த மரம்' என்பது இக்கருத்தை விளக்கும் பழமொழி.

45. கொடுப்பவனும் கொடுக்க மாட்டான்

     தன்னிடம் வந்து கேட்பவர்களுக்கு எதனையும் மறுக்கும் இயல்பில்லாதவனும், பலரும் தன்னிடத்தேயுள்ள ஒரு பொருளை வந்து யாசித்தால், அதனை அனைவருக்கும் தன்னால் கொடுக்க முடியாததனால், அவர்களுள் பெறாதவன் மயக்கம் அடைதலை நினைத்து மனம் பொறாதவனாகித் தன்னிடத்தேயுள்ள அப்பொருளை ஒளித்து வைத்து இல்லையென்று மறைப்பான். அதனால், யாசித்து உண்பதற்குப் பலராகச் செல்லுதல் எப்போதும் தீமையையே தருவதாகும்.

மறாஅ தவனும் பலரொன் றிரந்தால்
பெறாஅஅன் பேதுறுதல் எண்ணிப் - பொறாஅன்
கரந்துள்ள தூஉம் மறைக்கும் அதனால்
'இரந்தூட்குப் பன்மையோ தீது'.

     இரந்து உண்ணுதலுக்குப் பலராகச் செல்லுதல் கூடாது. 'இரந்து ஊட்குப் பன்மையோ தீது' என்பது பழமொழி. கொடுக்க நினைப்பவனையும் கொடுக்க விடாது செய்து விடும் என்பது இதன் கருத்தாகும்.

46. வாழ்விலே உறுதி வேண்டும்

     இல்லற வாழ்க்கையானாலும், அஃதில்லாத துறவற வாழ்க்கையானாலும் தாம் உறுதியாக இரண்டிலொன்றை மேற்கொண்டு ஒருவர் ஒழுகலாம். அப்படி ஒழுகாதவராகிச் சிறந்த வாழ்நாள் வீணாகக் கழிந்துப் போக, நடுவே எதனிலும் செல்லாமல் தடைப்பட்டு நின்று எல்லாவற்றையும் ஆழ்ந்து, உறுதியாகத் துணிந்து ஒரு வழியாலே நடக்காதவர்கள் வாழ்வைப் பயனின்றிக் கழித்தவர்கள். அவர்களே, காவடியின் இரு பக்கத்திலுள்ள பொருள்களையும் நீக்கிவிட்டுத் தண்டினை மட்டுமே சுமந்து செல்பவர்களுக்குச் சமானமாவார்கள்.

இல்வாழ்க்கை யானும் இலதானும் மேற்கொள்ளார்
நல்வாழ்க்கை போக நடுவுனின்(று) - எல்லாம்
ஒருதலையாச் சென்று துணியா தவரே
'இருதலையும் காக்கழித் தார்'.

     இருவகை வாழ்க்கையினும் எதன்பாலும் முறையே ஈடுபட்டு நிலைத்து வாழாது வாழ்நாட்களைக் கழிப்பவர், பயனற்று வாழ்ந்தவராவர். 'இருதலையும் காக் கழித்தார்' என்பது பழமொழி. இருபக்கமும் சுமையைத் தொங்கவிட்டு எடுத்துச் செல்ல உதவுவது காவடித் தண்டு. சுமைகளை அகற்றிவிட்டு வெறுந்தண்டைச் சுமந்து போவது நகைப்பிற்கே இடமாகும்.

47. போலி நண்பர்கள் கேடு செய்வார்கள்

     தம்மிடத்திலே மிகுதியாக நட்புப் பூண்டவர்களுக்கும், அவர்களுடைய பகைவர்களுக்கும் இடையே சென்று, இருவரிடத்தும் மன வேறுபாடு இல்லாமல் மிகவும் நட்புடையவர்கள் போலவே பேசிப் பழகி, அவர்களுள் ஒருவருடன் மனம் ஒருமைப்பட்டு விளங்காதவர், மிகவும் கெட்டவர்கள். அவர்களே, இருதலைக் கொள்ளி என்று சொல்லப்படுபவராவர்.

பெரியநட் டார்க்கும் பகைவர்க்கும் சென்று
திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள்
ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே
'இருதலைக் கொள்ளியென் பார்'.

     இருவரது பகைமையும் வளர, இருவராலும் இருவருக்கும் கேடே விளைதலால், 'இருதலைக் கொள்ளி' போன்றவராயினர் அவர் என்க. 'இருதலைக் கொள்ளி என்பார்' என்பது பழமொழி. சமாதானம் செய்ய முயல்பவர் இருவருக்கும் பகையாதலும் கூடும் என்பது கருத்து.

48. அச்சம் உள்ளவனுக்குப் பாதுகாப்பே இல்லை

     கோட்டை வாயிலை அடைத்து வைத்துப் பாதுகாவல் பெற்றுக் கோட்டையினுள்ளே இருந்தாலும் போருக்கு ஆற்றாது அச்சங்கொண்டு உள்ளே புகுந்திருப்பவர், அந்த அச்சத்தின் காரணமாகவே பகைவர்களிடம் எளிதாக அகப்பட்டு விடுவார்கள். பயந்து, இருளினிடத்தே போய் இருந்தாலும், பறவையானது, அது உண்மையாகவே இருளினையுடைய இரவாயிருந்தாலுங் கூட, அதனைப் பகலென நினைத்தே அஞ்சும்.

இஞ்சி அடைத்துவைத்(து) ஏமாந்(து) இருப்பினும்
அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் - அஞ்சி
இருள்புக் கிருப்பினும் மெய்யே வெரூஉம்புள்
'இருளின் இருந்தும் வெளி'.

     உள்ளத்திலே, அச்சம் உடையவர்கள் வீரராவது இல்லை; அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதும் எளிதன்று. 'இருளின் இருந்தும் வெளி' என்பது பழமொழி. இருளில் மறைந்து இருந்தாலும், பகை தன்னைக் கண்டு அழித்து விடுமோ என அஞ்சும் என்பதாம்.

49. வாய்ப் பேச்சு வீரர்கள்

     நல்ல கல்வியறிவு உடையவர்கள் கூடியிருக்கிற அவையினைக் கண்டால் தம் நாவைச் சுழட்டி வைத்துக் கொண்டு, நன்மையானவைகளை உணராத புல்லர்களின் கூட்டத்திலே, நம்மைப் புகழ்ந்து பேசிக் கொள்ளுதல், பகைவரிடத்திலே உள்ள வீரத் தன்மைக்குப் பயந்த ஒருவன், தன் வீட்டின் உள்ளேயே இருந்து கொண்டு, தன் வில்லை வளைத்து நாணேற்றி எதிர்ப்பட்ட பானை சட்டிகளிலே எய்து, தன் போர்த் திறமையைக் காட்டுவது போன்றதாகும்.

நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப்
புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல் - புல்லார்
புடைத்தறுகண் அஞ்சுவான் 'இல்லுள்வில் லேற்றி
இடைக்கலத்து எய்து விடல்'.

     இடைக்கலம் - கருங்கலம்; பானை சட்டிகள்; புல்லார் - பகைவர். 'இல்லுள் வில்லேற்றி இடைக் கலத்து எய்துவிடல்' என்பது பழமொழி. இப்படிச் செய்வது புல்லறிவாண்மை என்பது கருத்து.

50. நல்ல விதி இருப்பவன் சிறப்பு அடைவான்

     பகைவர் இட்ட நெருப்பினாலே காலிற் சுடப்பட்டு உயிர் பிழைத்துச் சென்ற பராந்தகச் சோழனின் மகனாகிய கரிகால் வளவனும், இரும்பிடர்த்தலையார் என்னும் பெயரையுடையவரைத் தனக்குத் துணையாகப் பெற்று, பின் காலத்திலே தன் பகைவர்களை எல்லாம் வென்று, குற்றமற்ற செங்கோல் செலுத்தினான். அதனால் உயிருடையவர் முயன்றால் அடையா தொழில் எதுவுமில்லை என்றறிக.

சுடப்பட்டு உயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால்
செயிரறு செங்கோல் செலீஇயினான் 'இல்லை
உயிருடையார் எய்தா வினை.'

     முயற்சியுடையார் தம் உயிரைக் காத்துக் கொண்டால், என்றேனும் நல்வாழ்வு பெற்றே தீர்வர் என்பதாம். 'இல்லை உயிருடையார் எய்தா வினை' என்பது பழமொழி. எனவே, உயிரைக் காத்துக் கொண்டு ஆகும் காலத்தை எதிர்நோக்கிச் செயலாற்ற வேண்டும் என்பது கருத்து.

 51. நாணயம் இல்லாதவனிடம் ஒப்பிக்க வேண்டாம்


     கையினாலே தொட்டவர்களை ஒட்டிக் கொள்ளாத பொருள் உலகில் ஒன்றுமே இல்லை. சமையல் செய்தவரை ஒட்டிக் கொள்ளாத பாத்திரமும் கிடையாது. அதனால் கட்டுப்பாடு உடையதாக ஒருவனைத் தொடர்ந்து ஒரு செயலைச் செய்யுமாறு ஏற்படுத்துவதானால், அச்செயலினோடு கலந்து, அதன் பயன் அனைத்தையும் உட்கொண்டு ஓடிவிடுகின்ற அன்பில்லாதவர்களை, ஒரு போதும் அதன் பால் வைக்கவே வேண்டாம்.

கட்டுடைத் தாகக் கருமம் செயவைப்பின்
பட்டுண்டாங்(கு) ஓடும் பரியாரை வையற்க
தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை 'இல்லையே
அட்டாரை ஒட்டாக் கலம்'.

     ஒன்றைச் செய்ய ஒருவனை ஏவும் பொழுது அவனே அந்தச் செயலின் பயனை எடுத்துக் கொண்டு போய்விடும் இயல்புடையவனானால் அவனை அதன்பால் ஈடுபடுத்த வேண்டாம்; வேறு தக்கவனையே ஏற்படுத்துக. 'இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம்' என்பது பழமொழி.

52. பிழைக்கும் பொறி இருப்பவனுக்கு ஆபத்தே இல்லை

     ஆரவாரமாகப் பேசுகின்றாரே என்று துணைவராகக் கொள்ளப்பட்டவர்கள் அந்த எண்ணமானது பழுது பட்டுப் போக, அந்தப் பிணிப்பினின்று தப்பி எழுந்து போனாலும் போய்விடுவார்கள். ஆனால், அரக்கு மாளிகையினுள் இடப்பட்ட ஐவராகிய பாண்டவர்களும் இறந்துவிடாமல் தப்பிப் போய்விட்டார்கள் அல்லரோ! அதனால் பிழைக்கும் பொறி உள்ள உயிருக்குப் பிழைக்க முடியாத ஆபத்தான இடம் என்பது எதுவும் இல்லை என்று அறிக.

குரைத்துக் கொளப்பட்டார் கோளிழுக்குப் பட்டுப்
புரைத்தெழுந்து போகினும் போவர் - அரக்கில்லுள்
பொய்யற்ற ஐவரும் போயினார் 'இல்லையே
உய்வதற்(கு) உய்யா இடம்'.

     நண்பர்கள் கைவிட்டாலும் நல்ல ஊழ் இருந்தால் அவருக்கு எவ்விதமான ஆபத்தும் வராது. 'இல்லையே உய்வதற்கு உய்யா இடம்' என்பது பழமொழி.


53. உதவாதது எதுவுமே இல்லை

     வானகத்திலே தோய்ந்திருப்பன போல விளங்கும் உயரமான குன்றுகள் பரந்து கிடக்கும் நாட்டுக்கு உரியவனே! ஒருவர் மற்றொருவரைத் தமக்குத் துணையாகக் கொள்ளுதல் நன்மையேயாகும். பாம்பினால் வரவிருந்த ஒரு துன்பத்தை பார்ப்பான் பக்கத்திலே இருந்த் நண்டுங்கூட நீக்கியது. அதனால், சொல்லப் போகுமிடத்து, ஒன்றுக்கும் உதவாத பொருள் என, இவ்வுலகில் ஒன்றுமே இல்லை.

நன்றே ஒருவர்த் துணையுடைமைப் பாப்பிடுக்கண்
நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் - விண்டோயும்
குன்றகல் நன்னாட! கூறுங்கால் 'இல்லையே
ஒன்றுக்(கு) உதவாத ஒன்று'.

     பார்ப்பான் ஒருவன் தன் தாயின் ஆணைப்படி நண்டைத் துணையாகக் கொண்டு செல்ல, அது அவனைக் கடிக்க வந்த பாம்பினைத் தன் கொடுக்கால் இறுக்கிப் பிடித்துக் காத்தது என்பது கதை. இதனால், எத்தகைய நண்பராலும் சமயத்துக்கு அவராலும் உதவி கிடைக்கும் என்பது கூறப்பட்டது. 'இல்லையே, ஒன்றுக்கும் உதவாத ஒன்று' என்பது பழமொழி. சிறு துரும்பும் பற்குத்த உதவும்' என்பதும் இதே கருத்தைக் கூறுவது.

54. தற்பெருமை அழிவையே தரும்

     உலகம் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்டவன் மாவலி. அவனும் பின் வந்து சம்பவிக்கப் போகின்ற தன் நிலையை ஆராய்ந்து அறியாதவனாயினான். 'எனக்கு எல்லாம் முடியும்! எனக்கு எல்லாம் எளிதே' என்று தன் குருவான சுக்கிரர் தடுத்தும் கேளாமல், செருக்கினால் மிகுந்து இரந்து வந்த வாமனனுக்கு மூன்றடி மண் நீர் வார்த்துக் கொடுத்தான். அதன் பயன், அனைத்தையுமே இழந்து விட்டான். ஆதலால், குற்றமுடைய ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவர்களுக்குத் தாமே தமக்குக் கொண்டு தர வராத துன்பங்களே இல்லையாகும்.

ஆஅம் எனக்கெளி(து) என்றுலகம் ஆண்டவன்
மேஎம் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
தோஒம் உடைய தொடங்குவார்க்(கு) 'இல்லையே
தாஅம் தரவாரா நோய்'.

     குற்றமுள்ள செயலிலே ஈடுபட்டவர் தமக்குத்தாமே துன்பத்தைத் தேடிக் கொள்ளும் அறியாமை உடையவர்கள். தோஒம் - குற்றம். 'இல்லையே தாம் தர வாரா நோய்' என்பது பழமொழி.

55. அரசனே முறை தவறினால் செய்வது என்ன?

     அலைகள் மிகுதியாக வருகின்ற கடற்கரைக்கு உரியவனே! தன்னுடைய வெண்குடையின் கீழாக வாழ்கின்ற குடிமக்களுக்கு அரசனும், செங்கோன்மை உடையவனாகவே விளங்க வேண்டும். அப்படி இல்லாமற் போனால், அந்த மக்கள் தாம் செய்வதற்கு என்ன இருக்கிறது? யானையானது தொட்டு உண்ணத் தொடங்கி விட்டால், அதற்கு மூடி மறைத்து வைக்கத் தகுதியான பாத்திரம் என்பது எதுவுமே கிடையாதல்லவா?

வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும்
செங்கோலன் அல்லாக்கால் செய்வதென் - பொங்கு
படுதிரைச் சேர்ப்ப! மற்று, இல்லையே, யானை
தொடுவுண்ணின் மூடுங் கலம்'.

     அரசன் எப்பொழுதும் செங்கோன்மை உடையவனாக இருக்க வேண்டும். 'கொடுங்கோன் மன்னன் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடே நன்று' என்பதையும் நினைக்க, 'இல்லையே, யானை தொடு வுண்ணின் மூடுங்கலம்' என்பது பழமொழி. அரசனே முறை தவறினால் தடுப்பவர் யாரும் இல்லை என்பதாம்.

56. படித்தவனிடமே பொறுப்பை ஒப்புவிக்கவும்

     ஒரு செயலைச் செய்வதற்குரிய ஆளினை ஆராயுங் காலத்திலே, இவன் நம் உறவினன் என்றோ, உறவினன் அல்லாதவன் என்றோ கருத வேண்டாம். ஒள்ளிய பொருளைக் கற்றறிந்த ஒருவனை ஆராய்ந்து பார்த்து அவனிடமே அதை ஒப்புவிக்கவும். படித்தவன், தன் உரிமையாளனின் பேச்சைக் கேட்பான். அவன் கேளாமற் போனாலும் அது எருது உண்டு விட்ட உப்பைப் போன்று நன்மை தருவதாக முடியுமே அல்லாமல் உடைமைக்காரனுக்கு நட்டமாகாது.

உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக்
கற்றானை நோக்கியே கைவிடுக்க - கற்றான்
கிழவனுரை கேட்கும் கேளான் எனினும்
'இழவன்று எருதுண்ட உப்பு'.

     கற்றவனிடமே காரியத்தை ஒப்புவிக்க வேண்டும் என்பது கருத்து. எருது உப்பைத் தின்றாலும், அதிக உரமுடையதாக உரியவனுக்கு நன்றாக உழைப்பது போலக் கற்றவனும் உழைப்பான் என்பதாம். 'இழவன்று எருதுண்ட உப்பு' என்பது பழமொழி.

57. கல்லாதவனுக்கு உபதேசிப்பதும் தீங்கே

     நல்ல பெண்மைப் பண்புகளை உடையவளே! தாம் ஒழுக்கக் குறைபாட்டினாலே இழிவுடையவராவதைக் காட்டினும் ஒருவர்க்கு இழிவு தருவது யாதும் இல்லை. அதே போல ஒழுக்கத்தின் சிறப்பினாலே வரும் உயர்வை விட சிறந்த உயர்வும் ஒருவர்க்கு யாதுமில்லை. இவை போலக் கல்லாதவர்களிடையிலே சென்று உறுதிப் பொருள் பற்றிக் கட்டு உரைபப்தினும், மிகுதியான ஒரு பொல்லாங்கும் இல்லை என்று அறிவாயாக.

கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
பொல்லாத தில்லை ஒருவற்கு - நல்லாய்!
'இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை,
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு'.

     கல்லாதவன், அதனைக் கேட்டதும் சொன்னவரையே அவமதிக்க முற்படுவான்; அதனால் பொல்லாங்கே மிகுதியாகும் என்பது கருத்து. 'இழுக்கத்தின் மிக்க இழிவில்லை', 'இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு' என்பன இரண்டும் பழமொழிகள்.

58. தொழுவதால் வினை மாறாது

     இவ்வுலகத்து நம் வாழ்வு முழுவதையும், நாம் பிறவி எடுப்பதற்கு முன்பாகவே வகுத்து விட்டவன் என்று கருதி கடவுளைத் தொழுது கொண்டே இருந்தால், வந்த துன்பங்கள் எல்லாம் தாமே ஒழிந்து போய் விடுமோ? காவலைக் கைவிட்டவன் பசு நிரையைக் காப்பாற்றுவதில்லை; அவ்வாறே முதலில் ஓலையைப் பழுதுபட எழுதினவன், தானே குற்றம் செய்தவனாக, அவனே மீண்டும் அதனை நேராது காப்பவனாதல் என்பதும் ஒரு போதும் இல்லையாகும்.

முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்
'இழுகினான் ஆகாப்ப தில்லையே முன்னம்
எழுதினான் ஓலை பழுது'.

     ஊழ்வினையால் துன்பம் வருவதாயினும், அதனை முயற்சியால் மாற்றிக் கொள்ளலாமே தவிரத் தெய்வங்களைத் தொழுது மட்டும் மாற்றிக் கொள்ள முடியாது. 'இழுகினான் ஆ காப்பதில்லையே முன்னம் எழுதினான் ஓலை பழுது' என்பது பழமொழி. இழுகினான் ஆ காப்பது இல்லை; முன்னம் ஓலை பழுதாக எழுதினான், அவனைக் காப்பது மில்லை என்க.

59. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

     சிறப்பினையுடைய தன்னுடைய இனமெல்லாம் தன் உடனே இல்லாமற் போய்த் தனித்துக் காணப்பட்ட இடத்தும், இளையது, என்று கருதியும், எவரும் பாம்பினை இகழ்ச்சியாகக் கருத மாட்டார்கள். அது போலவே, சிறந்த தகுதிகளை உடைய மன்னர்கள் தம்முடைய சிறந்த நிலைமையனைத்தும் கெட்டுப் போய் விளங்கிய காலத்தும், அந்த நிலைமையைப் பார்த்து, அதற்குத் தக்கபடி அவரை இழிவாகக் கூறி யாரும் இகழ்ந்து பேசவே மாட்டார்கள்.

சீர்த்தகு மன்னர் சிறந்ததனைத்தும் கெட்டாலும்
நேர்த்துரைத்(து) எள்ளார் நிலைநோக்கிச் - சீர்த்த
கிளையின்றிப் போஒய்த் தனித்தாயக் கண்ணும்
'இளைதென்று பாம்பிகழ்வார் இல்'

     அரச குடிப்பிறப்பின் உயர்வு பிற கேடுகள் வந்த காலத்திலும் ஒருவரை விட்டு மாறாது; அவரை எள்ளற்கு யாரும் துணியார் என்பது கருத்து. 'இளைதென்று பாம்பிகழ்வார் இல்' என்பது பழமொழி.

60. கிடைத்ததைக் கொண்டு முயல்க

     வாய்ப்பதற்கு அரியதான ஓர் இடத்தினுள்ளே, முதலிலே ஒருவன் இருப்பதற்கு இடம் பெற்று விட்டானென்றால், அடுத்து, அவன் படுப்பதற்கான இடத்தையும் அங்கேயே பெற்று விடுவான். அதுபோலவே, முதலில் சிறிதளவான ஊதியம் பெற்றுச் செல்வரைச் சேர்ந்தவர்கள், விரைவிலே பெரிதளவான ஊதியத்தையும் அவரிடமிருந்து பெறுவார்கள்.

சிறியதாய கூழ்பெற்றுச் செல்வரைச் சேர்ந்தார்
பெரிதாய கூழும் பெறுவர் - அரிதாம்
'இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்
கிடப்புழியும் பெற்று விடும்'.

     செய்யும் முயற்சியிலே, முதலில் சிறிதான பலன் கிடைத்தாலும் இகழாது நிலைத்து நிற்பவர், விரைவிற் பெரிய பலனையும் அடைவர். 'இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும்' என்பது பழமொழி.

61. தளராத முயற்சியே உயர்வு தரும்

     வெள்ளமானது அலையெழுந்து கரையிலே மோதி ஆரவாரிக்கும் கடல் நீர்ப் பெருக்கினையுடைய சேர்ப்பனே! தான் படித்து அறிந்தது என ஒரு தகுதி இல்லாது போனாலும், தான் எடுத்த செயலை இறுதி வரையும் முடித்து விடுகின்றவன் அறிவுடையவனே யாவான். அங்ஙனம் செயலைச் செய்து முடிப்பவன், வயதில் இளையவனே யானாலும், அவனை அறிவினால் முதிர்ந்தவன் என்றே கொள்ளல் வேண்டும்.

கற்றதொன்(று) இன்றி விடினும் கருமத்தை
அற்ற முடிப்போன் அறிவுடையான் - உற்றியம்பும்
நீத்தநீர்ச் சேர்ப்ப! 'இளையோனே ஆயினும்
மூத்தோனே ஆடு மகன்'.

     இறுதி வரையும் ஏற்றதை முடித்துக் காணும் தளராத முயற்சி உடைமையே அறிவுடைமையாகும். 'இளையோனே யாயினும் மூத்தானே ஆடு மகன்' என்பது பழமொழி.

62. தகுதியற்றவரை விலக்குவதற்கு

     காதிற் குழைகளை அலைத்து விளங்கும் அகன்ற கண்களை உடையவளே! சாகப் போகின்ற காராட்டை உடன்பாடு கொள்ளச் செய்து அதன் பின்னரே அதன் குருதியை உண்டவர் உலகத்திலே எவருமில்லை. அதே போல, ஒரு காரியத்தைச் செய்வதற்கென்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவர்கள், அந்தக் காரியத்தளவிலே நன்மை செய்யும் தகுதியற்றவரானால், அதனை அவருக்கு எடுத்துக் காட்டி, அவர் சம்மதத்தைப் பெற்று நீக்கிவிடுவோம் என்று ஒரு போதும் நினைக்க வேண்டாம்.

நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலராயின்
காட்டிக் களைதும் எனவேண்டா - ஓட்டி
இடம்பட்ட கண்ணாய்! 'இறக்கும்மை யாட்டை
உடம்படுத்து வெளவுண்டார் இல்'.

     காரியம் முடிக்கத் தகுதியற்றவரை அவருடைய தகுதியின்மையை உணர்த்திக் காட்டி விலக்க முயல வேண்டாம்; உடனேயே நீக்கி விடவேண்டும். 'இறக்குமையாட்டை உடம்படுத்து வௌவுண்டார் இல்' என்பது பழமொழி.

63. இழந்ததை அடையவே முடியாது

     ஒலி முழங்கும் நீரினை உடைய உப்பங்கழிகள் அலை வீசிக் கொண்டிருக்கின்ற கானற் சோலைகளுக்கு உரிய அழகிய சேர்ப்பனே! கழிந்து போன ஒன்றினை மீட்டுத் தருவதற்கான வழியினை அறிபவர்கள் எவருமே இல்லை. அதனால், தம்மிடத்திலே உள்ள பொருள்களைத் தாமே போற்றிப் பேணுவதல்லாது, சிறந்தவராகிய சுற்றத்தார் எனக் கருதி, நம்பக் கூடாதவரிடத்திலே, பொருளைப் போற்றுபவர் மறந்துங் கூட விட்டு வைக்க மாட்டார்கள்.

மறந்தானும் தாமுடைய தாம்போற்றின் அல்லால்
சிறந்தார் தமரென்று தோற்றார்கை வையார்
கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப!
'இறந்தது பேர்தறிவார் இல்'.

     தம்முடைய உடைமைகளைத் தாமே காத்துப் பேண வேண்டுமேயல்லாமல், நம்பிக்கையற்ற பிறர் பேணுவார் என விடுதல், அதனை இழத்தற்கே காரணமாகும். 'இறந்தது பேர்த்தறிவார் இல்' என்பது பழமொழி.

64. கொடுக்கக் கொடுக்கப் பெருகும்

     கடற்பரப்பிலே, துறையினின்று செல்வனவும் துறை நோக்கி வருவனவுமான தோணிகள் நிலையாக உலவிக் கொண்டிருக்கிற, அசைகின்ற நீர்ப் பெருக்கினையுடைய கடல் நாடனே! தம்மிடத்தே வந்து யாசித்தவர்களுக்கு ஒன்றைக் கொடுப்பதனால் தம் செல்வம் குறைந்து போய் விடும் என்று நினைத்துத் தம் செல்வத்தை மறைத்து வைப்பவர்கள், இறைக்குந்தோறும் ஊறிப் பெருகும் கிணற்றினைப் பார்த்தேனும், பொருளின் உண்மைத் தன்மையை அறிய மட்டார்களோ?

இரப்பவர்க்(கு) ஈயக் குறைபடும் என்றெண்ணிக்
கரப்பவர் கண்டறியார் கொல்லோ - பரப்பிற்
துறைத்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!
'இறைத்தோறும் ஊறும் கிணறு'.

     கொடையால், பொருள் மிகுதியாகும் நல்லூழ் ஒருவனுக்கு வந்து வாய்க்கும். 'இறைத்தொறும் ஊறும் கிணறு' என்பது பழமொழி. 'இறைத்த கிணறு ஊறும், இறையாத கிணறு நாறும்' என்று இந்நாளில் வழங்குவதையும் நினைக்கவும்.

65. மக்கள் விரும்புவன செய்க

     ஒன்றைச் செய்யவேண்டுமென மனங்கொண்ட இடத்தும் பொருந்தி வராத ஒன்றினை அறிவுடையோர் செய்ய மாட்டார்கள். சான்றோர்கள் சொன்ன அறிவுரைகளை உள்ளத்திலே பெரிதாகக் கொண்டு பேணிக்காத்து வருதல் வேண்டும். மக்கள் விரும்புவனவான செயல்களைச் செய்யக் கூடாதென, விரும்பினதற்காக மக்களினத்தையே கழுவேற்றினவர் எவரும் இல்லை.

மனங்கொண்டக் கண்ணும் மருவில செய்யார்
கனங்கொண்(டு) உரைத்தவை காக்கவே வேண்டும்
சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க
'இனங்கழு வேற்றினார் இல்'.

     மக்களிற் பெரும்பாலோரின் விருப்பத்திற்கு ஆட்சியாளர்கள் மதிப்புக் கொடுக்க வேண்டுமே தவிர, சட்டம் இப்படிக் கூறுகிறதென அவர்களுக்கு மாறுபட்டு நிற்றல் வேண்டாம்; அவர்களை ஒழிக்கவும் முயல வேண்டாம். 'இனம் கழுவேற்றினார் இல்' என்பது பழமொழி.

66. இனிமையாகவே பேசுக

     ஒருவனைப் புன்மையான சொற்கள் துன்பத்திற் கொண்டு விடுமேயல்லாமல், இனிமையான சொற்கள் ஒரு போதும் துன்பத்திற் கொண்டு விடுவதில்லை. புன்மையான சொற்களும் நன்மையான சொற்களும் தருகின்ற பயனை உண்மையாக உணர்வதற்கு வல்லவர்கள், வன்மையான பேச்சுப் பேசுகிறவர்களாக வாழ்ந்திருத்தலும் உண்டோ?

புன்சொல்லும் நன்சொல்லும் பொய்யின்(று) உணர்கிற்பார்
வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?
புன்சொல் இடர்ப்படுப்ப தல்லால் ஒருவனை
'இன்சொல் இடர்ப்படுப்ப தில்'.

     இனிமையாகவும் நன்மைதரும் சொற்களாலும் பேசுவதே சிறப்புடையது. 'இன்சொல் இனிதீன்றல்' என்ற குறளையும் நினைக்க. 'இன்சொல் இடர்ப்படுப்ப தில்' என்பது பழமொழி.

67. ஒருவனை எதிர்க்க இருவர்

     பெரிய மலைகளையுடைய நாட்டிற்கு உரியவனே! வேட்டையாடுதல் என்பது சிறிது பொழுதளவே என்றாலும் ஒரு நாயைக் கொண்டே இருவர் வேட்டையாடினால், அது துன்பந் தருவதேயாகும். அதுபோல, ஒருவன் சொல்பவைகளைச் சொன்னால், அதனைக் காரணமாகக் கொண்டு அவனுக்கு மாறுபட்ட இருவர் ஒரே சமயத்தில் அதற்கு எதிர்வாதமிடத் தொடங்குதலும் தகுதி உடையதாகாது.

ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு
இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா
பெருவரை நாட! சிறிதேனும் 'இன்னாது
இருவர் உடனாடல் நாய்'.

     அவையிலே, ஒருவர் சொன்ன கருத்தினை ஒரே சமயத்திலே ஒருவர் தாம் மறுத்துப் பேசலாமே தவிரப் பலரும் எழுந்து மறுத்துப் பேசுதல் அவைப் பண்பு ஆகாது. பாலா - பண்பாகுமோ? 'இன்னாது இருவர் உடனாடல் நாய்' என்பது பழமொழி.

68. பேயையும் பிரிய முடியாது

     விளங்கும் அருவிகள் பாய்ந்து வீழ்கின்ற வளமுடைய மலை நாட்டிற்கு உரியவனே! விலங்கேயானாலும், தம்மோடு உடன் வாழ்தலைக் கொண்டிருக்கும் பழகியவர்களைக் கைவிட்டுப் போவதற்கு இசையாது; ஆதலால் பேயோடென்றாலும் முதலிலே பழகிவிட்டால் பின்னர் பிரிவதென்பது துன்பம் உடையதாகவே இருக்கும்.

விலங்கேயும் தம்மோ(டு) உடனுறைதல் மேவும்
கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா - இலங்கருவி
தாஅய இழியும் மலைநாட! 'இன்னாதே
பேஎயோ டானும் பிரிவு'.

     நட்பு செய்வதற்கு முன்னர், தகுதி உடையவரை நாடியே நட்புச் செய்தல் வேண்டும். 'இன்னாதே பேயோடானும் பிரிவு' என்பது பழமொழி. இதை நினைக்க வேண்டும்.

69. கெட்டாலும் பெரியோர் பெரியோரே

     மேல்மாடங்களையுடைய பெரிய வீடானது அழிந்த விடத்தும், அதிலுள்ள மரங்கள் மீண்டும் கட்டுவதற்கான ஒரு கூட்டத்திற்காவது பயன்படும்; அதுபோலவே, பெரியோர்கள் செல்வம் இல்லாத இடத்தும், தம்முடைய பெருந்தன்மையினின்றும் குறைபாடுறவே மாட்டார்கள். அதனால் இணையில்லாத சிறப்புடைய ஒன்றுக்கு என்றுமே அழிவில்லை என்று அறிதல் வேண்டும்.

மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல்
பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர்
'ஈடில் லதற்கில்லை பாடு'.

     பெரியோர், தம் வலிமையாலும் செழுமையாலும் குறைந்த காலத்தினும் பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவுவார்கள். சிறியோர் அங்ஙனம் உதவார். ஆதலின் அவர் தொடர்பைக் கைவிடுக. 'ஈடில்லதற்கில்லை பாடு' என்பது பழமொழி.

70. எப்போதும் பொறுக்க முடியாது

     இனிதாக இசைத்தல் பொருந்திய யாழின் இனிய ஒலியைப் போல, வண்டினம் ஆரவாரிக்கும் நீர்வளமுடைய ஊரனே! வாழை மரங்கள் இருமுறை எப்போதாவது குலை ஈனுமோ? ஈனாது. அது போலவே முன்னம் ஒருமுறை பிழை செய்தவனையே, அவனே பின்னரும் மிகுதியாகப் பிழை செய்த காலத்தில் எவராவது பொறுப்பார்களோ?

முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும்
பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ? - இன்னிசை
யாழின் வண்டார்க்கும் புனலூர! 'ஈனுமோ
வாழை இருகால் குலை?'

     சான்றோர், பிறர் செய்த குற்றங்களைப் பொறுப்பார்கள் என்றாலும் அவர் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. இதனால், சான்றோர் பொறுப்பார்கள் எனக் கீழ்த்தரமானவர் அவர்களுக்குத் தொடர்ந்து தீமை செய்ய முனைதல் கூடாதென்பதும் பெறப்படும். 'ஈனுமோ, வாழை இருகால் குலை' என்பது பழமொழி.

71. உடை மதிப்புத் தரும்

     படுத்து உறங்குவதற்கு ஓர் இடம் என்பதும் இல்லாத வறியராக இருந்தபோதும், நன்றாக உடுத்து வருபவர்களைப் பார்த்துப் 'பசிக்கு உணவு உண்கிறீர்களோ?' என்று கேட்பவர் யாரும் இல்லை. அதனால், வீட்டினிடத்தே அழிவு மிகுதியாயிருந்த காலத்தும், ஒருவர் எப்படியாயினும் தம் புறத்தோற்றத்தினால் பொலிவுற்று விளங்குதலே நன்றாகும்.

அகத்தால் அழிவு பெரிதாயக் கண்ணும்
புறத்தால் பொலிவுறல் வேண்டும் - எனைத்தும்
படுக்கை இலராயக் கண்ணும் 'உடுத்தாரை
உண்டி வினவுவார் இல்'.

     உயர்குடிப் பிறந்தவர் எத்துணை வறுமைக் கண்ணும், பிறர் அதனைக் கண்டு தம்மீது கருணை கொள்ளுமாறு தம்மை தாழ்த்திக் கொள்ளமாட்டார்கள் என்பது கருத்து. 'உடுத்தாரை, உண்டி வினவுவார் இல்' என்பது பழமொழி.

72. உண்ட வீட்டிற்குத் தீவினை

     'பழைய உறவினர்' என்று, தம் சுற்றத்தாரையும் தம்மையும் ஏற்றுக் கொண்ட வகையாலேயே, தம் குறை அனைத்தும் தீர்ந்து போகுமாறு ஒருவர் கருணையுடன் நோக்கிய காலத்திலே, அப்படிச் சொன்னவரோடு சேர்ந்திருந்து பயன்பெற்றுப் பின் அவரைப் பற்றி ஒருவன் புறங்கூறித் திரிந்தானென்றால், உண்ட வீட்டிற்குத் தீயிடுவது போன்றதே அவன் செய்யும் செயலாகும்.

பண்டினர் என்று தமரையும் தம்மையும்
கொண்ட வகையால் குறைதீர நோக்கியக்கால்
விண்டவரோ(டு) ஒன்றிப் புறனுரைப்பின் அஃதால்
'உண்டஇல் தீயிடு மாறு'

     உதவின நன்றியை மறந்து புறங்கூறுவாரின் இழிதகைமை மிகவும் கொடியது. வெறுக்கத்தக்கது என்பது கருத்து. 'உண்ட இல் தீயிடுமாறு' என்பது பழமொழி.

73. வீரன் துரோகம் செய்ய மாட்டான்

     தெளிவாக நிறைந்த வலிமையைப் பெற்றனவும், தம்முள் மாறுபட்டனவுமான இரண்டு காளை மாடுகள், ஒரு துறையுள் நின்று நீர் குடிக்குமோ? குடிக்கா. அது போலவே, தன் அரசனுக்கு ஒரு துன்பம் வந்துற்றால் தம் உடம்பையும் கொடுக்கக் கூடிய ராஜபக்தி உடையவன் அரசனுக்குப் பகையானவர்களோடு சேர்பனாவானோ? சேரமாட்டான் என்க.

உற்றால் இறைவற்(கு) உடம்பு கொடுக்கிற்பான்
மற்றவற்(கு) ஒன்னாரோ(டு) ஒன்றுமோ! - தெற்ற
முரண்கொண்டு மாறாய உண்ணுமோ? 'உண்ணா
இரண்டேறு ஒருதுறையுள் நீர்'.

     'தன் மன்னனிடம் பாசமுள்ள ஒரு வீரன், என்றும், துரோகக் கும்பலிலே சேரமாட்டான் என்பது கருத்து. இதனால், வீரர்களின் இயல்பு சொல்லப்பட்டது. 'உண்ணா இரண்டேறு ஒரு துறையுள் நீர்' என்பது பழமொழி.

74. கூற்றமும் உட்பகையும்

     கூற்றமானவன், விதித்த ஆயுள் நாளை எண்ணிக் கொண்டே காத்திருந்து, உயிர்களைப் பற்றிச் செல்வதனை விரும்பித் திரிந்து கொண்டே இருப்பவன். என்றாலும் அப்படி ஓர் உயிரையும், தான் உண்ணும் காலம் வரையும் அவனும் காத்தே நிற்பான். அதுபோலவே கண்ணினுள் இருக்கும் கருமணியைப் போல அன்புடன் நண்பு காட்டிப் பழகிய போலி நண்பாளர்களும், தமக்கு ஆக வேண்டிய பயன் நம்மால் முடிந்தன என்று எண்ணும் அந்தப் பொழுதிலேயே, நம்முடைய பகைவராகி நிற்பார்கள்.

கண்ணுள் மணியேபோல் காதலாய் நட்டாரும்
எண்ணும் துணையில் பிறராகி நிற்பராய்
எண்ணிஉயிர் கொள்வான் வேண்டித் திரியினும்
'உண்ணுந் துணைக்காக்கும் கூற்று'.

     போலி நண்பர்களை ஆராய்ந்து ஒதுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்த அவர் இயல்பு கூறப்பட்டது. 'உண்ணுந் துணைக்காக்கும் கூற்று' என்பது பழமொழி.
75. பணியாளரை அன்புடன் நடத்துக

     தம் காரியங்களைத் தாமே திறமையுடன் முடித்துக் கொள்ளுவதற்கு ஆற்றல் இல்லாதவர்கள், தம்மால் அதற்கென அடையப் பெற்றவர்களையும், தீமையான பதில்களாலே தமக்குப் பகையாக்கி விட்டு, அவர்கள் பகைமைக்குப் பயந்து, அவர்கள் அறியாததன் முன்பே தமக்குப் பாதுகாவலாக ஓடுதலை மேற்கொண்டு போய் விடுவார்கள். இவர்கள் செயல்தான், இரந்து உண்ணும் ஓடாகிய உண்கலத்தையே உடைப்பவனின் செயலைப் போன்றதாகும்.

தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத்
தீமாற்றத் தாலே பகைப்படுத்திட்(டு) - ஏமாப்ப
முன்ஓட்டுக் கொண்டு முரண்அஞ்சிப் போவாரே
'உண்ஒட்(டு) அகல்உடைப் பார்'.

     த்ன் திற்மையில்லாத ஒருவன், பிறர் துணையாலும் ஒரு காரியத்தை முடிக்கச் சக்தியற்றவனாகவே இருப்பான். 'உண் ஓட்டு அகல் உடைப்பார்' என்பது பழமொழி.

76. பயனற்றவனின் உறவே வேண்டாம்

     அருவிகள், விட்டுவிட்டு ஒளி செய்து பொன்னைக் கொழித்து வீழ்ந்து கொண்டிருக்கின்ற, தண்மையான மலை நாட்டிற்கு உரியவனே! தம்மை வந்து புகலாக அடைந்தவர்களுக்கு உற்ற ஒரு துயரத்தைத் தமக்கு வந்து சேர்ந்ததாகவே கொண்டு, 'எமக்குத் துன்பம் வந்துற்றது' என்று உணராது அவரைக் கைவிட்டால், அதனை என்னென்று சொல்வது? 'உமியைக் குற்றுதலாலே கை வருந்துவது போன்ற செயல்' என்று தான் கூற வேண்டும்.

தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க்(கு) உற்ற(து)
எமக்குற்ற தென்றுணரா விட்டாக்கால் என்னாம்
இமைத்தருவி பொன்வரன்றும் ஈர்ங்குன்ற நாட!
'உமிக்குற்று கைவருந்து மாறு'.

     சுற்றத்தாருள் யாருக்காவது துன்பம் வந்த காலத்திலே உதவாத ஒருவன் பயனற்றவன் அவனைச் சுற்றத்தான் எனக் கருதி நாடிச் செல்லுதல், உமிக் குற்றிக் கைநோகிறதே என்பது போன்ற வீண் செயலேயாகும். 'உமிக்குற்றுக் கை வருந்துமாறு' என்பது பழமொழி.

77. இரண்டறக் கலப்பதே நட்பு

     உளம் பொருந்திய காதலுடைய உமையவளைத் தன்னிலே ஒரு கூறாக அமையுமாறு, தண்டினையும் வெல்லுகின்ற ஏற்றுக் கொடையைத் தனக்கு உரியதாகக் கொண்டவனும் கொண்டிருக்கிறான். தம்மை நட்புச் செய்தவர்களைச் சேர்ந்த பொழுதிலே, அவரைவிட்டு அவ்விடத்தே கொஞ்சமேனும் அகலாமல், முழு உடம்பும் பொருந்தக் கலந்து விடுபவர்களே சிறந்த நண்பர்கள் ஆவர்.

ஒட்டிய காதல் 'உமையாள் ஒரு பாலாக்
கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே'
விட்டாங்கு அகலா முழுமெய்யும் கொள்பவே
நட்டாரை ஒட்டி யுழி.

     சிறந்த நண்பர்கள், நண்பரே தாம் என்று கருதும் கலந்த ஈடுபாடு உடையவர்கள் என்பது கருத்து. 'உமையாள் ஒரு பாலாக் கட்டங்கம் வெல் கொடி கொண்டானும் கொண்டான்' என்பது பழமொழி. தண்டு என்றது பகைவரின் பெரும்படையை.

78. உள்ளம் தெரிந்த பின் உறவாடுக

     கொல்லுகிற முறைப்படியே கொன்ற பின்னர் அல்லாது, மானின் தசையைத் தின்ன நினைப்பவன், அதனைத் தப்பிப் போக விட்டுவிட்டு, அந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதில்லை. அது போலவே, ஒருவர் உள்ளத்திலே நிலவும் அன்பின் தகுதியை அறிந்த பின்னர் அல்லாமல், யாரும் யார்க்கும் தம்முடைய இரகசியத்தை முன்னதாகவே ஓடிச் சென்று சொல்லாதிருப்பாயாக.

அன்பறிந்த பின்அல்லால் யார்யார்க்கும் தம்மறையே
முன்பிறர்க்(கு) ஓடி மொழியற்க - தின்குறுவான்
கொல்வாங்குக் கொன்றபின் அல்லது 'உயக் கொண்டு
புல்வாய் வழிப்படுவார் இல்'.

     அன்பின் தகுதியை அறிந்த பின்னரே தம் இரகசியத்தை ஒருவரிடம் சொல்லலாம் என்பது கருத்து. 'உயக்கொண்டு புல்வாய் வழிப்படுவார் இல்' என்பது பழமொழி.

79. தகுந்தவரையே சேர்ந்து வாழ்க

     ஆற்றினுள்ளே புரள்கின்ற கயல்மீன்களைப் போல விளங்கும் மையுண்ட கண்களையும், பொற்குழையினையும் உடையவளே! பெரிதாகத் தோன்றுதல் வேண்டும் என்ற விருப்பமுள்ளவர்கள், அந்த விருப்பத்தை நிறைவேற்ற ஆற்றலில்லாதவர்களை அடைந்து அவரைப் பின்பற்றி நடத்தல், வண்டிக்கு இடுகின்ற மையினுள்ளே குளிக்கின்ற செயலைப் போன்றதாகும்.

தோற்றம் பெரிய நசையினார் அந்நசை
ஆற்றா தவரை அடைந்தொழுகல் - ஆற்றுள்
கயற்புரை உண்கண் கனங்குழாய்! அஃதால்
'உயவுநெய் யுட்குளிக்கும் ஆறு'.

     'குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்டது போல' என்ற பழமொழியையும் இங்கே நினைக்க. குளிக்க நினைத்து வண்டி மையினைப் பூசிக் கொண்டால் விகாரமே மிகுதியாகும்; அது போலவே ஆற்றலற்றவரை அடைபவரும் அவமானமே அடைவார்கள் என்பது கருத்து. 'உயவு நெய்யுட் குளிக்கும் ஆறு' என்பது பழமொழி.

80. உருவின் உயர்வு

     அந்த நாளிலே, வாளாற்றல் உடையவனாகிய திருமாலைக் கொல்லும் பொருட்டு மதுகைடவர் என்போர் வளைத்துக் கொண்டார்கள். அப்போது, திருமால், தன்னுடைய திருமேனியின் விளங்குதல் பொருந்திய பேரொளியைக் காட்டவும், ஒப்பற்ற அந்த வடிவழகின் தன்மையைக் கண்டு, அவர்கள் தம் நினைவைக் கைவிட்டார்கள். உருவப் பொலிவு ஒருவனுக்கு வெற்றியைத் தேடித் தரும் என்பதும் அதனைப் போன்றதுதான்.

வாள்திற லானை வளைத்தார்கள் அஞ்ஞான்று
வீட்டிய சென்றார் விளங்கொளி - காட்டப்
பொறுவரு தன்மைகண்(டு) அஃதொழிந்தார் அஃதால்
'உருவு திருவூட்டு மாறு'.

     உருவத் தோற்றத்தின் சிறப்பு இதன் கண் சொல்லப் பட்டது. இதனை, ஆங்கிலத்தில் 'பெர்சனாலிடி' என்பார்கள். 'உருவு திருவூட்டுமாறு' என்பது பழமொழி. திருமால் மோகினிப் பெண் வடிவிலே தோன்ற அவர்கள் மயங்கித் தமக்குள்ளேயே அடித்துக் கொண்டு இறந்தனர் என்பர்.

81. இகழ்வான் இகழப்படுவான்

     பலவாகிய பசுக்கூட்டங்களை மேய்ச்சற் புறங்களிலே காத்து நின்ற நெடியோனாகிய திருமாலேயானாலும், அவையில் ஒருவனை இகழ்ந்து பேசினால், தானும் அவனால் இகழ்ந்து பேசப்படுதலை அடைதலே உளதாகும். ஆகையால், பலரும் கூடியிருக்கின்ற அவையின் நடுவிலே நன்னெறியின் பால் ஒழுகிவரும் சான்றோர்கள், ஒருவரையும், அவர்கள் மனம் வருந்தும்படியான சொற்களைச் சொல்லி இகழவே மாட்டார்கள்.

பல்லார் அவைநடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும் உள்ளூன்றப் பல்லா
நிரைப்புறங் காத்த நெடியோனே யாயினும்
'உரைத்தால் உரைபெறுதல் உண்டு'.

     'உரைத்தால் உரை பெறுதல் உண்டு' என்பது பழமொழி. எவரையும் இகழ்ந்து பேசுதல் கூடாது என்பது கருத்து. அப்படிச் செருக்குற்றுப் பேசினால், அவரும் இகழத் தலைக்குனிவே ஏற்படும் என்பது முடிவு.

82. நண்பரைப் பழித்தல் கூடாது

     கண்கள் விழித்திருப்பன போன்று மலர்கின்ற நெய்தற் பூக்களையுடைய கடற்றுறைகட்கு உரியவனே! ஆராய்ந்து தெளிந்து கொள்ளப்பட்ட நண்பர்களைப் பழித்து, அறிவுடையோர் பலர் நடுவிலே சொல்லாட மாட்டார்கள்; என்ன காரணம் என்றால், தமக்கு இழிவைத் தருவன பற்றிக் கனவு கண்டவர், அதனை யாருக்கும் சொல்ல மாட்டார்கள் என்பதனால்.

கொழித்துக் கொளப்பட்ட நண்பின் அவரைப்
பழித்துப் பலர்நடுவண் சொல்லாடார் - என்கொல்?
விழித்தலரும் நெய்தல் துறைவா! 'உரையார்
இழித்தக்க காணிற் கனா'.

     நண்பரைப் பழி கூறித் தூற்றினால் அந்த இழிவு நம்மையும் வந்தடையும் என்பது கருத்து. 'உரையார் இழித்தக்க காணிற் கனா' என்பது பழமொழி.

83. முறையாகவே எதனையும் ஆராய்ந்து செய்க

     இந்த உலகத்தினுள்ளே இல்லாத ஒரு பொருளுக்குப் பெயரும் இல்லையாகவே இருக்கும். அது போலவே, முடிந்து போன ஒரு செயலுக்கு முயற்சியும் வேண்டுவதில்லை. முடிவுறா இடையிலே முறிந்த செயலுக்குப் பெருக்கமும் இல்லை. குற்றமறச் செய்யவல்லதான ஒன்றைச் செய்வதிலே வருத்தமும் கிடையாது.

முடிந்தற்(கு) இல்லை முயற்சி; முடியாது
ஒடிந்ததற்(கு) இல்லை பெருக்கம்; - வடிந்தற
வல்லதற்(கு) இல்லை வருத்தம்; 'உலகினுள்
இல்லதற்(கு) இல்லை பெயர்'.

     எந்தச் செயலையும் குறைபாடில்லாமல் முற்றவும் செய்து முடிக்க வேண்டும் என்பது கருத்து! 'உலகினுள் இல்லதற்கு இல்லை பெயர்' என்பது பழமொழி.

84. அளவற்ற ஆசைப் படுபவர்

     இந்த உலகத்திலே, அளவுக்கு அதிகமான பெருஞ் செல்வத்தை விரும்புகிறவர்கள் சிலர். அவர்கள், நலத்தின் தகுதிகளால் மேம்பட்ட அரசர்களுள், நல்லவர்களைச் சார்ந்து அதனை ஈட்ட நினைப்பர். எனினும், அவர்களைச் சென்று சார்ந்ததும் நிலைகொள்ளாத காலினராகத் தருக்கி, ஏதும் அடையாதே கெடுவர். ஆராய்ந்து பார்த்தால், இத்தகையவரே உலக்கையின் மேலே இருக்க முயலும் காக்கை என்று சொல்லப்படுவராவர்.

நிலத்தின் மிகையாம் பெருஞ்செல்வம் வேண்டி
நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து
நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின்
'உலக்கைமேல் காக்கை' என்பார்.

     உலக்கையை உயர்த்திக் குத்துகின்ற காலத்து, அதன் மேல் காக்கை அமர்வதும் இயலாது. உரலின் கண் இருப்பதை அதனால் உண்ணவும் முடியாது. இது போல, மனத்திலே அறியாமையுடையவர்களின் முயற்சியும் பயனற்றுப் போகும். 'உலக்கை மேல் காக்கை' என்பது பழமொழி.

85. பகைவனை அன்பால் வசமாக்க முடியாது

     நிலத்தைச் சுற்றினும் சுவர் எடுத்துப் பொருத்தமாக நீர் பெருக்கி வெப்பத்தை தணிக்க முயன்ற போதிலும், உவர் நிலம் உள்ளேயுள்ள தன் கொதிப்பு மாறாமல், என்றும் உடையதாகவே இருக்கும். அதே போலச் சுற்றத்தார் அல்லாத பகைவர்களை எவ்வளவுதான் தலையளி செய்து போற்றினாலும், அது அவருக்கு நன்மையாகத் தோன்றுவதேயில்லை. விருப்பமற்ற குறிப்பினை உடையதாகவே தோன்றும்.

தமர்அல் லவரைத் தலையளித்தக் கண்ணும்
அமராக் குறிப்பவர்க்(கு) ஆகாதே தோன்றும்
சுவர்நிலம் செய்தமையக் கூட்டியக் கண்ணும்
'உவர்நிலம் உட்கொதிக்கு மாறு'.

     பகைவரை, அவர்க்கு அருள் செய்வதன் மூலம் நமக்கு வேண்டியவராக்கி விட முடியாது. நம் செயலை அவர்கள் ஐயுற்று அதிகமான உட்கொதிப்பே அடைவர்கள். ஆகவே அதனைச் செய்பவர் முயற்சி பயனற்றது. 'உவர் நிலம் உட்கொதிக்குமாறு' என்பது பழமொழி.

86. கீழ்மக்களுக்குச் செய்த உதவி

     பரந்து வரும் கடலலைகள் வெள்ளத்தைப் போல விளங்கும்; கடற்கரைகள் தண்மையுடன் விளங்கும்; அவற்றிற்கு உரியவனான சேர்ப்பனே! ஒருவருக்கு ஒரு துன்பமானது வந்த காலத்திலே, சுற்றத்தாராலும் தம் முயற்சியினாலும் அதற்குத் தகுதியான ஒரு செயலைச் செய்து, அவர் மனம் ஒத்தவராக நடந்தவர் என்பவர் எவரும் கிடையாது. செய்த உதவிகளை நினைத்து உவப் படையாத கீழ் மக்களுக்குக் கொடுத்த கொடையெல்லாம், இழந்து போன பொருள்களாகவே கருதப்படும்.

தமராலும் தம்மாலும் உற்றால்ஒன்(று) ஆற்றி
நிகராகிச் சென்றாகும் அல்லர் - இவர்திரை
நீத்தநீர்த் தண்சேர்ப்ப! செய்தது 'உவவாதார்க்(கு)
ஈத்ததை எல்லாம் இழவு'.

     உதவியின் பயனை அனுபவித்தும், அதனை உதவியவரின் செயலுக்கு நன்றி காட்டாத பயனற்ற மக்களுக்கு உதவுதல் கூடாதென்பது கருத்து. 'உவவாதார்க்கு ஈத்ததை எல்லாம் இழவு' என்பது பழமொழி.

87. கள்ளத்தை முகத்திலே காணலாம்

     ஒளி பொருந்திய அமர்த்த கண்களை உடையவளே! ஒருவர், எவ்வளவுதான் பிறர் அறியாத வகையாகத் தம் கள்ளத்தனத்தை மறைத்தாலும், அவருடைய உள்ளத்திலே நிலவுவதை அவர் முகமானது பிறருக்கு எடுத்துச் சொல்லிவிடும். அதனால், வெள்ளம் வருகின்ற காலத்திலே அதுவருமிடம் எங்கும் ஈரம் பட்டு விளங்குவதைப் போலக் கள்ளமான எண்ணம் உடையவர்களையும், அவர்களைப் பார்த்த அளவாலேயே அறிந்து கொள்ளலாம்.

வெள்ளம் வருங்காலை ஈரம்பட்(டு) அஃதேபோல்
கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம்
ஒள்அமர் கண்ணாய்! ஒளிப்பினும் 'உள்ளம்
படர்ந்ததே கூறும் முகம்'.

     உள்ளத்தில் உள்ளதை முகம் காட்டி விடும். ஆதலால் எவரும் உள்ளத்தில் தூய்மை உடையவராகவே வாழ்தல் வேண்டும் என்பது கருத்து. 'உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்' என்பது பழமொழி. 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பதும் நினைக்க.

88. கீழோர்க்கு உபதேசிப்பதும் ஆபத்து

     தேரின் உள்ளே தானே இருந்து கொண்டு, ஒருவன் தானே அதனுடைய அச்சாணியைக் கழற்றி எறிந்து விடுதல், தேருடன் அவனுக்கும் அவனே இழிவைத் தேடிக் கொள்வதாகும். தாம் கூறுகின்ற சொற்களை ஏற்றுக் கொண்டு, தம்மைப் போற்றி நடக்காதவர்களாக, கல்லால் எறிந்தாற் போலக் கடுஞ்சொற்களைப் பேசிப் பகைமையை மேற்கொள்ளும் கீழ் மக்களை, அவர்களுடைய வீட்டிலேயே இருந்து கொண்டு, அவர் செயலுக்காக அவர் மீது இரங்கிப் பேசி, அவருக்குக் கோபம் வருமாறு செய்தலும், அப்படிப்பட்ட அறியாமையான செயலேயாகும்.

சொல்எதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய்க்
கல்எறிந்தாற் போலக் கலாந்தலைக் கொள்வாரை
இல்இருந்(து) ஆற்ற முனிவித்தல் 'உள்ளிருந்து
அச்சாணி தாம்கழிக்கு மாறு'.

     நீயோரால் ஒரு செயலைச் செய்து கொள்ளக் கருதும் அறிவுடையோர், தம் செயல் நிறைவேறும் வரைக்கும், அவர்களைக் கோபமூட்டும் வகையாக எதுவுமே பேசக் கூடாது என்பது கருத்து. 'உள்ளிருந்து அச்சாணி தாம் கழிக்குமாறு' என்பது பழமொழி.

89. வரும் சிறப்பு தவறாது வரும்

     'கழுமலம்' என்னும் இடத்திலே கட்டப்பட்டிருந்த களிற்று யானையும், கருவூரிலே இருந்த சிறப்புடையோனாகிய கரிகால வளவனிடத்தே சென்றது. அவனைக் கொண்டு வந்து சோழ நாட்டுக்கு அரசனாகவும் ஆக்கிற்று. அதனால், சிறந்த பொருள்கள், தம்மை ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அடைதற்குரியதான முன் வினைப்பயன் உள்ளவனைத் தாமே வலியச் சென்று அடையாமற் போவது அருமையாகும்.

கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற்சென் றதனால் - விழுமிய
வேண்டினும் வேண்டா விடினும் 'உறற்பால
தீண்டா விடுதல் அரிது'.

     'நல்ல சிறப்பு வரும் ஊழ்வினை இருந்தால், அது எப்படியும் வந்தே தீரும்' என்பது கருத்து. கழுமலம் - சீர்காழி என்பர், 'உழற்பால தீண்டா விடுதல் அரிது' என்பது பழமொழி. 'வருவது வந்தே தீரும்' என்பதும் இது.

90. வரவேண்டிய துன்பம் தவறாமல் வரும்

     பொங்கிப் பெருகி வந்து கற்பாறையினிடத்தே பாய்கின்ற, அருவிகள் அழகு செய்யும் மலைநாட்டிற்கு உரியவனே! அழகிய இடமான வானத்திலிருந்து பரந்த நிலவுக் கதிர்களைப் பொழிந்து உதவும் திங்களும், இராகு கேதுக்களால் தீமை அடைவதைப் பார்க்கின்றோம். அதனால், வரக்கடவதான துன்பங்கள் எவ்வளவு சிறந்தோர்க்கும் தவறாமல் வந்தே சேரும் என்று அறிய்வாயாக.

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
திங்களும் தீங்குறுதல் காண்டுமால் - பொங்கி
அறைப்பாய் அருவி அணிமலை நாட!
'உறற்பால யார்க்கும் உறும்'.

     உயர்வுடைய சான்றோரும் ஒவ்வோர் சமயத்தே துன்பத்திற்காளாவது அவருடைய ஊழ்வினைப் பயன் என்பது கருத்து. அறை - பாறை. 'உறற்பால யார்க்கும் உறும்' என்பது பழமொழி. 'வினை வீயாது பின்சென்று அடும்' என்பதும் நினைக்க.

91. தீயவனை ஊரே அறியும்

     ஊரிலே அறியப்படாத பொலிகாளை என்பது எங்குமே கிடையாது. அது போலக், கூர்மையான அறிவுடையவர்களிடத்திலே சென்று நல்ல பண்பு உடைய அவர் அறிவுரைகளைக் கேட்டுப் பயன் பெறாது, தம்மிடமுள்ள இருண்ட அறிவான புல்லறிவினையே தம் வாழ்விற்குப் பற்றுக் கோடாகக் கொண்டு, கடிதான செயல்களையே செய்தொழுகும் முரடர்களின் பெயரை அறியாத அறிவிலிகளும், நாட்டிலே யாருள்ளனர்?

கூரறிவி னார்வாய்க் குணமுடைச்சொல் கொள்ளாது
காரறிவு கந்தாக் கடியன செய்வாரைப்
பேரறியார் ஆயின பேதைகள் யாருளரோ?
'ஊரறியா மூரியோ இல்'.

     மூரி - கட்டுக்கு அடங்காது அலையும் கொழுத்த எருது. அவர் போலப் புல்லறிவாளரும் கட்டுக்கடங்காது தலை நிமிர்ந்து செருக்கித் திரிவார்கள் என்பது கருத்து. அவர் தொடர்பைக் கைவிடல் வேண்டும் என்பது முடிவு. 'ஊரறியா மூரியோ இல்' என்பது பழமொழி. இவரை ஊரே அறியும் என்பதும் கூறப்பெற்றது.

92. சாவை நினைத்து, தருமத்தை உடனே செய்க

     அவர்கள் இல்லாமல், தாம் அமைவதே இயலாத சிறப்புடையவரான, இருமுது குரவராகிய தாய் தந்தையர்களும் கூடத் தம்மை விட்டுப் போய்விட்டதனைக் கண்டும் இவ்வுலகத்து வாழ்வை நிலையான ஒரு பொருளாக அறிவுடையோர் கொள்வார்களோ? அதனால், பொருத்தமான வகையினால் எல்லாம் காலத்தால் தருமங்களைச் செய்வீர்களாக. குன்றமானது ஊர்ந்து உருண்டு செல்லத் தொடங்கினால் அதன் வழியைத் தடுப்பது எதுவுமில்லை. அதுபோலவே, சாவு வருங்காலத்தும் அதனை வராது தடுப்பது எதுவும் இல்லை.

இன்றி யமையா இருமுது மக்களைப்
பொன்றினமை கண்டும் பொருள்பொருளாக் கொள்பவோ
ஒன்றும் வகையான் அறம்செய்க 'ஊர்ந்துருளின்
குன்று வழியடுப்ப தில்'.

     உடலின் நிலையாமையான தன்மை கூறி, அறம் செய்தல் வற்புறுத்தப்பட்டது. 'ஊர்ந்துருளின் குன்று வழியடுப்பதில்' என்பது பழமொழி. சாவும் அவ்வாறு தடுக்கவியலாதது என்பது கருத்து.

93. போர் வீரரின் முனைப்பு

     ஆராய்ந்து பார்க்குமிடத்திலே, காட்டிலிருந்து தவம் செய்யும் அமணர்க்கும், ஓட்டால் வரும் பயன் எல்லாம் பலர் உறையும் ஊரினிடத்ததாகவே விளங்கும். "மாலை பொருந்திய பெரிய பெரிய மார்பினையுடைய அரசன் குறித்து நோக்கியபோதே, போரை ஏற்றுச் செல்வோம்" எனத் தறுகண்மை பேசுபவர்கள், 'அவன் பொதுவாகவே நோக்கினான்; நம்மைக் குறிப்பிட்டு நோக்கவில்லையே' என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். யாவர் மேற்றாக அவன் பார்த்தாலும், அதனைத் தம்மேலேயாக நோக்கினான் என்று கருதி, அச்செயலை முடிக்கச் செல்வதே சிறப்பு.

தாரேற்ற நீண்மார்பின் தம்இறைவன் நோக்கியக்கால்
போரேற்றும் என்பார் பொதுவாக்கல் வேண்டுமோ?
யார்மேற்றாக் கொள்ளினும் கொண்டீக காணுங்கால்
'ஊர்மேற்ற தாம்அமணர்க்(கு) ஓடு'

     ஓடேந்தி அமணர் சென்றால் ஈகைப் பயன் உணர்ந்தவர் தாமே வந்து மனதார இட்டுச் செல்வது போல, வீரர்கள் போரிலே தம் கடனாகவே எண்ணித் தம் க்டமையைச் செய்ய, அதனால் அரசனும் வெற்றி பெறுவான் என்பது கருத்து. 'ஊர் மேற்றதாம் அமணர்க்கு ஓடு' என்பது பழமொழி.

94. துன்பத்துக்கு அஞ்ச வேண்டாம்

     ஆண் யானையானது பனியால் வரும் துயருக்கு அஞ்சித் தன் பிடியினைத் தழுவிக் கிடக்கும் மூங்கில்கள் சூழ்ந்த மலை நாடனே! தன் ஊழ்வினைப் பயனால் தன்னை நோக்கி வரும் அம்பு ஒரு போதும் குறி தவறி நிலத்திலே வீழ்வதில்லை. அது போலவே, செய்யத்தக்கது இதுவென உணரும் அறிவுடையவர்கள், தம்மால் மிகவும் பயப்படத் தக்கதான துன்பங்கள் வந்தாலும், தம்மிடத்தே உண்டாகும் துன்பத்துக்கு ஒரு போதும் அஞ்சமாட்டார்கள்.

நனியஞ்சத் தக்க அவை வந்தால் தங்கண்
துனியஞ்சார் செய்வ(து) உணர்வார் - பனியஞ்சி
வேழம் பிடிதழூஉம் வேய்சூழ் மலைநாட!
'ஊழம்பு வீழா நிலத்து'.

     அதனை ஊழ்வினைப் பயன் எனக் கருதி அமைந்து தாம் தளராமல் நல்வினைகளிலேயே ஈடுபட்டு வருவார்கள் என்பது கருத்து. 'ஊழம்பு வீழா நிலத்து' என்பது பழமொழி.

95. அறமே சிறந்த பெருஞ்செல்வம்

     தாம் தேடிப் பாதுகாவலாக வைத்த செல்வத்தைத் தமக்கு ஆபத்துக் காலத்திலே உதவும் பெருநிதி யென்று எவரும் நினைக்க வேண்டாம். அதனைத் தாமும் அனுபவித்தும், பிறருக்கும் கொடுத்து, இருமைக்கும் அழகியதாகத் தக்க இடம் பார்த்து, முறையாக அறம் செய்து வந்தால், அதுவல்லவோ, தாம் தளர்ந்த காலத்து உதவும் பெருநிதி என்று சொல்லப்படுவதாகும்.

வைத்ததனை வைப்பென்று உணரற்க தாமதனைத்
துய்த்து வழங்கி இருபாலும் - அத்தகத்
தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ
'எய்ப்பினில் வைப்பென் பது'.

     தருமநெறியே இருமையிலும் தன்மை தருவது. இதனை உணர்ந்து பொருளைப் பதுக்கி வைக்காமல் தருமத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்பது கருத்து, 'எய்ப்பினில் வைப்பென்பது' என்பது பழமொழி.

96. தீவினை செய்தால் தப்ப முடியாது

     எல்லா வகையினாலும் மிகவும் பெரியவர்களாக விளங்கும் சான்றோர்களைக் கல்வியறிவில்லாத அறியாமை உடையவர்கள் பல சமயங்களில் வெறுக்குமாறு செய்து விடுகின்றனர். தகுதி நிறைந்து, ஒலி முழங்குகின்ற வளைகளை அணிந்தவளே! சொல்லப் போனால், அதுவே, எருக்கந் தூற்றிலே மறைந்து இருந்து கொண்டு, ஒருவன் யானையை மதம் பாய்ச்சி விடுகின்ற செயலினைப் போன்றதாகும்.

எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரைக்
கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் - சொல்வின்
நிறைந்தார் வளையினாய்! அஃதால், 'எருக்கு
மறைந்துயானை பாய்ச்சி விடல்'.

     அவன் உயிரிழப்பது உறுதியாவது போல, பெரியோர் வெறுத்துப் பேசும் அறிவிலிகளும் அழிவது திண்ணம் என்பது கருத்து. 'எருக்கு மறைந்து யானை பாய்ச்சி விடல்' என்பது பழமொழி. எருக்கந்தூரில் இருப்பவனை யானை எளிதாக மிதித்து விடுவது போல, அறியாமையாளரும் அழிக்கப்படுவர் என்பது கருத்தாகும்.

97. பகை மன்னரிடை உறவு

     போர்ச் செருக்கினையுடைய மன்னர்கள் இருவர்களிடையே ஒருவன் புகுந்து அவருள் ஒருவருக்கு உதவாத செய்தியைச் சொன்னான் என்றால், அதனைக் கேட்டு அவர்கள் சீறி எழுவர். அதனைத் திருத்துவதற்குத் தனக்கும் முடியாமற் போக, அது முடிவில் சொன்னவனுக்கே தீமையாய் முடியும். இரண்டு எருதுகளின் நடுவே இட்டிருக்கும் வைக்கோலைத் தின்னப்புகும் மோழை மாடு, அவை இரண்டாலும் குத்தப்பட்டுத் துன்பம் அடைவதன்றி, வைக்கோலைத் தின்ன முடியாதவாறு போலவே, அவன் கதியும் பயனற்றுத் துன்பமாக முடியும்.

செருக்குடைய மன்னர் இடைப்புக்(கு) அவருள்
ஒருத்தற்(கு) உதவாத சொல்லின் தனக்குத்
திருத்தலும் ஆகாது தீதாம்; அதுவே
'எருத்திடை வைக்கோல் தினல்'.

     பேரரசர்கள் இடையே புகுந்து இருவருக்கிடையிலும் இலாபம் பெற ஏதாவது சொல்பவன் மிகவும் விழிப்பாயிருக்க வேண்டும் என்பது கருத்து. இருவராலும் அவனுக்குக் கேடு விளையக்கூடும் என்பதாம். 'எருத்திடை வைக்கோல் தினல்' என்பது பழமொழி.

98. இன்சொல்லின் சிறப்பு

     உடுக்க உடையும், நோய்க்கு மருந்தும், தங்குவதற்கு இருப்பிடமும், உண்ண உணவும் இவற்றோடு இன்ன பிறவும் பிறருக்குக் கொடுத்து, அவர் குறைகளைத் தீர்த்தலான செயல்களைச் செய்து, அவரை அனுப்பி வைத்து, அவர்பால் இனிமையான சொற்களை மட்டும் சொல்லாமல் இருப்பது மிகவும் தவறாகும். அது, எருமையைக் கொன்று சமைத்து விருந்து வைக்கத் தொடங்கும் ஒருவர், அதற்குரிய மசாலாப் பொருள்களுக்குக் கஞ்சத்தனம் செய்வது போன்றதாகும்.

உடுக்கை மருந்து உறையுள் உண்டியோ(டு) இன்ன
கொடுத்துக் குறைதீர்த்தல் ஆற்றி - விடுத்தின்சொல்
ஈயாமை என்ப 'எருமை எறிந்தொருவர்
காயக்கு லோபிக்கும் ஆறு'.

     எல்லாக் கொடையிலும், இன்சொல் வழங்குதலே சிறப்புடையது என்பது கருத்து. 'எருமை எறிந்தொருவர் காயக்கு லோபிக்குமாறு' என்பது பழமொழி. இன்சொல் வழங்காத கொடை மதிப்பிழக்கும் என்பதும் கருத்தாகும்.

99. அடைந்தவர் வறுமையைப் போக்க வேண்டும்

     தம்மைச் சேர்ந்தவர் ஒருவரை, அவரால், சேர்ந்து ஒழுகப்பட்டவர் முடிந்த உறவினராகக் கொண்டு நடந்தாலும், ஆராய்ந்து அவரை விட்டுப் போகாத வறுமையினைக் கண்டு, அது போவதற்கு வேண்டியவற்றைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாத விடத்து, அவர் செல்லும் நெறி வேறு என்ன உண்டாகுமோ? யாவரும் சமைத்து உண்ணும் உணவிற்கு ஆவன செய்வதே உண்மையான முயற்சியாகும். பிறவெல்லாம் பொய்யான செயலே.

சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர்
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும் - தேர்ந்தவர்க்குச்
செல்லாமைக் காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்
'எல்லாம்பொய் அட்டூணே வாய்'.

     உதவுவார் என அடைந்த ஒருவர் உதவாவிட்டால், அப்படி அடைந்தவர் அவரை விட்டுத் தாமே தம் முயற்சியில் ஈடுபட வேண்டுமேயல்லாமல், அவரையே தொடங்கிக் கொண்டு இருப்பது கூடாது என்பது கருத்து. 'எல்லாம் பொய்; அட்டூணே வாய்' என்பது பழமொழி.

100. அரசனுக்குக் கோபம் வரும் செயல்

     வெம்மையான சினத்தையுடைய அரசனானவன், தான் விரும்பாத ஒன்றையே தனக்குச் செய்தாலுங்கூட, அவனையடுத்து வாழ்பவர், அதனைத் தம் நெஞ்சத்துட் கொண்டு பகைகொள்ளும் செயலைச் சிறிது கூடச் செய்தலே வேண்டாம். என்ன தீவினைகளைச் செய்து அகப்பட்டுக் கொண்ட போதும், எவரேனும் தூங்கும் புலியைத் துயில் எழுப்புவார்களோ?

வெஞ்சின மன்னவன் வேண்டாதவே செயினும்
நெஞ்சத்துட் கொள்வ சிறிதும் செயல்வேண்டா
என்செய்து அகப்பட்டக் கண்ணும் 'எழுப்புபவோ
துஞ்சு புலியைத் துயில்'.

     புலியைத் துயில் எழுப்பினால், அவர்களே அழிவார்கள். அதுபோல, அரசன் மீது அவர்களும் பகைத்து அவன் கோபத்தைக் கிளறி விட்டால், அவர்களே அழிய நேரும் என்பது கருத்து. 'எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில்' என்பது பழமொழி.

101. எளியாரை இகழாதவர் இல்லை

     புகழ் பொருந்திய பிற மன்னர்களை வென்று அவர்களுக்கு மேற்பட்டவர்களாக நடந்து வருவது அல்லாமல், மதயானைகளைக் கொண்ட மன்னர்களுக்கு, அவர்களைக் கைகடந்து தம்மேற் செல்லுமாறு விடுதல், தமக்கே இறுதியில் துன்பமாக முடியும். மழைத் துளியை உண்ணும் பறவையான வானம்பாடியைப் போல, செவ்வையானவற்றையே உணர்பவர்களினும், எளியவர்களை இகழாதவர் உலகில் இல்லையாகும்.

ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால்
களியானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதம்
துளியுண் பறவைபோல் செவ்வன்நோற் பாரும்
'எளியாரை எள்ளாதார் இல்'.

     போர் வலியற்ற அரசன் மிக நல்லவனானாலும் மதிக்கப்பட மாட்டான் என்பது கருத்து. 'எளியாரை எள்ளாதார் இல்' என்பது பழமொழி. நல்லவனாக இருப்பது போதாது; வல்லவனாகவும் இருந்தால் தான் பிறர் மதிப்பார் என்பது கருத்தாகும்.

102. மன நலமே நலம்!

     ஆறுகள் மிகுதியான வெள்ளப் பெருக்குடன் வந்து மிகுதியான நல்ல தண்ணீரே பாய்ந்த காலத்தினும், ஒலிக்கும் கடலானது உப்புத் தன்மையினின்றும் நீங்குதலைப் பெற மாட்டாது. அது போலவே, மிகுதியான இனத்தின் நன்மைகள் நன்றாக உடையவர்களானாலும், எக்காலத்துங் கீழ்மையான புத்தியுடையவர்கள் நல்ல மனம் உடையவர் ஆகவே மாட்டார்கள்.

மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்
உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க
இனநலம் நன்குடைய ராயினும் 'என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ்'

     'நல்லவர் தொடர்பினாலும் கீழோர் திருந்த மாட்டார்கள்' என்பது கருத்து. 'என்றும் மனநலம் ஆகாவாம் கீழ்' என்பது பழமொழி. அவர்கள் மனம் கீழ்மைப் போக்கிலேயே செல்லும் என்பதாம்.

103. கெடுக்க முயன்றவன் நண்பனானால்...?

     நீலோற்பல மலர்கள் என்று கருதிய வண்டினம், உண்மையான பூக்களைக் கைவிட்டுப் பக்கத்திலே மொய்த்துக் கொண்டிருக்கின்ற கண்களை உடையவளே! ஒருவன் ஒருவனை நலிந்து கெடுப்பதற்கு நாள்தோறும் சென்றான்; அதனால், அந்த ஒருவன் தளர்ச்சியுற்று வீழ்ந்து விடாமல் இருப்பதைப் பார்த்தான்; பின்பு, அவனோடு மிகவும் நட்புடையவனாகச் சென்று சேர்ந்தான்; இப்படிச் சேர்வது அம்பினால் எய்து ஒருவனைக் கொல்ல முயன்றவன், எய்யப்பட்டவன் அதற்குத் தப்பிவிட, அவனைப் பின்னர் தனக்குக் காவலாகக் கொள்வது போன்றதாகும்.

நலிந்தொருவர் நாளும் அடுபாக்குப் புக்கால்
மெலிந்தொருவர் வீழாமைகண்டு - மலிந்தடைதல்
பூப்பிழைத்து வண்டு புடையாடும் கண்ணினாய்!
'ஏப்பிழைத்துக் காக்கொள்ளு மாறு'.

     ஒருவனைக் கெடுக்க முயன்று முடியாமல் போக அவனுடன் நண்பராக முயல்பவர், என்றும் அந்தக் கெட்ட எண்ணத்துடனேயே இருப்பார்கள். அவர்கள் தொடர்பு அறவே கூடாதென்பது கருத்து. 'ஏப் பிழைத்துக் காக் கொள்ளுமாறு' என்பது பழமொழி. தன்னால் வெல்ல முடியாத ஒருவனைத் தனக்குக் காவலாகக் கொள்வது இயல்பு என்பதும் ஆகும்.


104. ஆட்சித் தலைவனைக் கோபித்தல்

     காட்டுப் பசுக்கள் திரிந்து கொண்டிருக்கும் அழகிய மலைகளுக்கு உரிய வெற்பனே கேட்பாயாக! தாமாகவும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்கள், தாவிப் பாய்ந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேரினை உடைய மன்னரைக் கோபித்துக் கொள்வது எதற்காகவோ? கோங்க மரத்திலே ஏறினவர் என்றும் பாதுகாப்புடன் இருக்க முயன்றாலும், எக்காலத்தும் தம் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாதவர்களே யாவர்.

தாமேயும் தம்மைப் புறந்தர வாற்றாதார்
வாமான்றோ மன்னரைக் காய்வது எவன்கொலோ?
ஆமா உகளும் அணிவரை வெற்ப! கேள்
'ஏமரார் கோங்கு ஏறினார்'.

     கோங்க மரத்தில் ஏறினான் கிளை முறிந்து வீழக்கூடும். அவர் செயல் போலவே, வலியுடைய மன்னருக்குச் சினம் உண்டாக எப்போதாவது பேசிய வலியற்றவர்களும், அவரால் அழிக்கப்படுவார்கள். ஆதலின் அப்படிச் செய்வது தவறு என்பது கருத்து. 'ஏமரார் கோங்கு ஏறினார்' என்பது பழமொழி.

105. ஏவலாளனுக்குப் பொறுப்புக் கிடையாது

     மின்னலைப் போல விளங்கும், நுண்மையான இடையினை உடையவளே! ஒருவனால் ஏவி விடப்பட்ட ஏவலாளன் ஒரு ஊரையும் கூட அவன் ஏவினால் சுட்டுப் பொசுக்கிவிடுவான். அதற்கு, அவனை ஏவினவனை நோக வேண்டுமே அல்லாமல், அவனை நோவதனால் ஒரு பயனும் இல்லை. அது போலவே, "முன் பிறவியிலேயே யாம் ஆத்திரங்கொண்டு செய்த பழைய வினைகள் தொடர்ந்து வந்து இன்று எம்மை வருத்துகின்றது" என்ற உண்மையைச் சிந்தித்து அறியாதவர்கள், தம்மைத் துன்பப்படுத்தும் பகைவர்களை, அது அவர்கள் செயலாகக் கொண்டு நொந்து கொள்வது எதற்காகவோ?

பண்டுருத்துச் செய்த பழவினை வந்தெம்மை
இன்றொறுக் கின்ற தெனவறியார் - துன்புறுக்கும்
மேவலரை நோவதென்? மின்னேர் மருங்குலாய்!
'ஏவலாள் ஊருஞ் சுடும்'.

     'பகைவரால் நேரும் துன்பம் எல்லாம் நம் பழவினைப் பயனால் வந்தனவென்றே கருதவேண்டும். அவர்கள் ஊழ்வினையின் ஏவலைச் செய்பவர்களே தான் என்பது கருத்து. 'ஏவலாள் ஊருஞ் சுடும்' என்பது பழமொழி. 'எய்தவன் இருக்க அம்பை நோவதேன்' என்பதும் இது.

106. குடிப்பிறப்பின் பண்பு குறையாது

     நல்ல எருதுக்குப் பிறந்த ஒரு கன்றானது, வளர்ப்போனால் மிகுதியும் பேணப் படாததாகித் தின்னும் புல்லும் சரிவரக் கிடைக்கப் பெறாமல், எதையோ மேய்ந்து கொண்டிருந்தாலும், பின்னர், உறுதியாக நல்லதொரு எருதாகி விடும்; அது போலவே, நல்ல குடியிலே பிறந்த சான்றாண்மை உடையவன், தான் தேடித் தொகுத்த சிறந்த பொருள்கள் யாதும் தன்னிடத்தே இல்லை என்றாலும் தன் குடிப்பண்பின் காரணமாக உபகாரம் செய்பவனாகவே இருப்பான்.

ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புரவு
ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன் - ஆற்றவும்
போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும்
'ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும்'.

     ஒப்புரவு - உயர்ந்தோர் மேற்கொண்ட நெறிப்படி நடத்தலும் ஆகும். குடிப்பிறப்பின் சிறப்பு ஒரு போதும் ஒருவனை விட்டு மாறாது என்பது கருத்து. 'ஏற்றுக் கன்று ஏறாய்விடும்' என்பது பழமொழி.

107. பகைவரை வீட்டுக்கு அழைத்தல்

     போவதற்குத் தகுந்த வழியிடையிலும், பெற்றோர் பின்னாகச் செல்ல முடியாது, ஒக்கலிலேயே செல்லும் குழந்தைகள், பெரிய காட்டினிடத்தே செல்லும் பெற்றோர் தம்மை இடுப்பிலே எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்பி அழுதனர் என்றால், பெற்றோர் அதற்கு ஒருபோதும் இசைவதில்லை. ஏனென்றால் அது பெரிதும் துன்பம் தருவது என்பதனை அவரே அறிவார். அதுபோலவே, தம் முகத்தை வெளியிலே கண்டாலும் பொறுக்காத பகையுடையார் ஒருவரை 'வீட்டிற்கு போகலாம்' என்று அழைத்து வேண்டும் ஆசையும் பொருத்தமற்ற ஆசையேயாகும்.

முகம்புறத்துக் கண்டால் பொறுக்கலா தாரை
அகம்புகுதும் என்றிரக்கும் ஆசை, இருங்கடத்துத்
தக்க நெறியிடைப் பின்னும் செலப்பெறார்
'ஒக்கலை வேண்டி அழல்'.

     தம்மை மதியாத ஒருவரைத் தாம் ஒதுக்கி விடுதலே சிறப்பு. அவரோடு நாம் உறவாடினால் நமக்குத்தான் கேடு வரும் என்பது கருத்து. 'ஒக்கலை வேண்டி அழல்' என்பது பழமொழி. நடக்கும் சக்தியிருந்தும் ஒக்கலை வேண்டி அழும் பிடிவாதத்துக்கு இசைவது கூடாது என்பதாம்.

108. பாதி அழித்தால் பகை தீராது

     உள்ளத்துள் கபடமில்லாமல் இனிதாகப் பேசுதல்; மாண்புடைய பொருள்களைக் கொடுத்தல்; சூழ்ச்சி பொருந்திய வஞ்சகமான முறைகளால் தமக்கு எளியராக ஆக்கித் தம் வசப்படுத்திக் கொள்ளுதல்; முறைமையாலே முன்னர் அவரைப் பகைத்துக் கெட்டவர்க்கு நடுநிலையாகச் சென்று அவரை நன்றாக அழித்தல்; ஆகியவற்றால் அல்லாமல், ஒடித்து எறிவதனால் மட்டுமே, பகைமை முற்றிலும் தீர்ந்துவிடாது.

மறையா(து) இனிதுரைத்தல் மாண்பொருள் ஈதல்
அறையான் அகப்படுத்துக் கோடல் - முறையால்
நடுவணாச் சென்றவரை நன்கெறிதல் அல்லால்
'ஒடியெறியத் தீரா பகை'.

     ஒடி எறிதல் - பாதி வெட்டியும் வெட்டாமலும் வைத்தல். சாம, தான, பேத, தண்டம் என்னும் நான்கு வகை உபாயங்களாலும் பகைவரைப் போக்குவது பற்றிக் கூறியது இது. 'ஓடி எறியத் தீரா பகை' என்பது பழமொழி. முற்றவும் அழியச் செய்ய வேண்டும் என்பது கருத்து.

109. தாயும் அரச நீதியும்

     செல்வர்களுக்கும் வறுமையாளர்களுக்கும், அவரவர்க்குச் செய்யும் முறைமைகளைத் தெரிந்து, அதனின்றும் வழுவாமல், இருவருக்கும் நேர் சமமாகவே அரசன் பாரபட்சமில்லாமல் நீதி செலுத்த வேண்டும். அரச முறையிலே மாறுபட்டு, நேராக அவன் நடக்கவில்லையென்றால், ஒரு பக்கம் ஒரு பிள்ளைக்கு நீரும், அடுத்த பக்கம் அடுத்த பிள்ளைக்குப் பாலும் ஒரு பெண்ணுக்குச் சுரப்பது போன்றதாகும்.

முறைதெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும்
இறைதிரியான் நேரொக்க வேண்டும் - முறைதிரிந்து
நேரொழுகா னாயின் அதுவாம் 'ஒருபக்கம்
நீரொழுகிப் பாலொழுகு மாறு'.

     தன் குடிகளிடையே பாரபட்சம் கற்பித்து நீதி தவறுதல், அரசனுக்கு மிகவும் பழி தரும் செயலாகும். நீதியின் முன் ஏழையையும் பணக்காரனையும் சமமாகவே பாவிக்க வேண்டும். 'ஒரு பக்கம் நீரொழுகிப் பாலொழுகுமாறு' என்பது பழமொழி. இபப்டி நடப்பது தவறு என்பது கருத்து.

110. நண்பர் தீங்கினைப் பொறுத்தல்

     கரையோடு பொருதலான அலைகள் வந்து உலவுகின்ற பொங்கும் நீர் வளத்தினையுடைய சேர்ப்பனே! ஒருவர் பொறுக்கும் பொறுமையானது இருவரின் நட்புக்கும் உதவியாகும். நட்புச் செய்தவர்களுக்குத் தம்மால் செய்யப்பட்ட தொரு தீமை எதுவும் இல்லாதவர்கள், தமக்கு நண்பர்கள் செய்யும் தீமையையும், 'எம் தீவினைப் பயனால் வந்துற்றதே இது' என்று நினைத்து அதனைப் பாராட்டாது பொறுத்துக் கொள்ளவே செய்வார்கள்.

தம்தீமை இல்லாதார் நட்டவர் தீமையும்
எம்தீமை என்றே உணர்பதாம் - அந்தண்
பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப!
'ஒருவர் பொறைஇருவர் நட்பு'.

     நட்பில் பிழை பொறுத்தல் இல்லாத போது அது நிலையாது என்பது கருத்து. 'ஒருவர் பொறை இருவர் நட்பு' என்பது பழமொழி.

111. வஞ்சிக்கவும் செய்யலாம்

     நெருக்கமாகக் கட்டப்பெற்றுள்ள மாலையினை அணிந்திருக்கின்ற வேந்தனானவன், செவ்வையில்லாத ஒரு செயலிலே ஈடுபட்டான் என்றால், அறிவுடையவரான அவன் அமைச்சர்கள், பொய்யுரைத்து அவனை வஞ்சித்தாயினும், அவனை அதனின்றும் நீக்கவே முயலுவார்கள். சந்திரனைக் காட்டி, அதன் மேல் இல்லாததெல்லாம் பழி சொல்லிப் பிள்ளைகளை மருட்டும் தாய்மார்களைப் போல என்க. ஒள்ளியவனான நெறிகளை இன்னபடியென்று காட்டாத, அவன் விருப்பப்படியே சார்ந்து நடப்பவர்களுக்கு, அப்படிச் செய்தல் என்பது அரிதாகும்.

செறிவுடைத் தார்வேந்தன் செவ்வியல பெற்றால்
அறிவுடையார் அவ்வியமும் செய்வர் - வறிதுரைத்துப்
பிள்ளை களைமருட்டும் தாயர்போல் அம்புலிமேல்
'ஒள்ளியகாட் டாளர்க்(கு) அரிது'.

     ஆட்சியிலுள்ளார் தவறான செயல்களில் ஈடுபட்டால், அறிவுடையார் பொய்யுரைத்து மருட்டியாயினும், அவரைத் திருந்தும்படிச் செய்தல் வேண்டுமென்பது கருத்து. 'ஒள்ளிய காட்டாளர்க்கு அரிது' என்பது பழமொழி.

112. தம்மவராயினும் தண்டித்தல்

     தம்முடைய கண் போன்றவர்களானாலும், அவர்கள் தகுதியில்லாத செயல்களைச் செய்தலைக் கண்டால், 'இவர் எம் கண் போன்றவர்' எனக் கருதி அதனைப் பாராட்டாது விட்டு விடுதல் அரச நெறிக்குக் குற்றம் தருவதாகும்; அதனால் வன்கண்மை உடையவனாகத் தன்னைச் செய்து கொண்டு, அரசன் அத்தகையவர்களையும் அரசநெறிப்படி முறையே தண்டிப்பானாக; அப்படித் தண்டிக்க மாட்டாத கண்ணோட்டம் உடையவனான ஒருவன், தன் அரசாட்சியினைச் செவ்வையாக ஒரு போதும் நடத்தவே மாட்டான்.

எங்கண் இணையர் எனக்கருதின் ஏதமால்;
தங்கண்ணார் ஆயினும் தகவில கண்டக்கால்;
வன்கண்ண னாகி ஒறுக்க 'ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான் அரசு.

     தமக்கு வேண்டியவர்கள் குற்றம் செய்தாலும், அவரை வேண்டியவர் எனக் கருதி விட்டுவிடாமல், முறையாகத் தண்டிப்பதே ஒரு சிறந்த அரசியல் தலைவனுக்கு அழகாகும். அல்லாமல், அவனிடம் தாட்சணியம் காட்டினால், அவன் நெடுங்காலம் ஆளமாட்டான் என்க.

     'ஒறுக்கல்லா மென்கண்ணன் ஆளான் அரசு' என்பது பழமொழி.

113. எங்கும் பிச்சை கிடைக்கும்

     'மாரி' என்ற ஒன்று இல்லாமற் போய், உலகமே வறண்டு போயிருந்த காலத்தினும் கூடப் பாரி வள்ளலின் மடப்பத்தை உடைய மகளானவள், பாணனுக்கு, நீர் உலையுள் பெய்து அழகாகச் சமைத்து வைத்திருந்த சோற்றுப் பானையைத் திறந்து, பொன்மனங் கொண்டு சோற்றைக் கொடுத்து உதவினாள். ஆதலால், சென்று இரந்தால் ஒன்றுங் கிடையாது போகிற வீட்டு முற்றம் என்பது உலகில் எதுவுமே இல்லையாகும்.

மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு - நீருலையுள்
பொன்தந்து கொண்டு புகாவாக நல்கினாள்
'ஒன்றுறா முன்றிலோ இல்'.

     வீட்டினர், தம் வாயில் தேடி வந்தவர்க்கு எதையேனும் தவறாது உதவுவார்; உதவவேண்டும் என்பது கருத்து. 'பொன் கொண்டு திறந்து புகாவாக நல்கினாள்' - பொன்னைப் பெய்து கொண்டு வந்து சோறிடுவது போலச் சொரிந்து உதவினாள் எனலுமாம். 'ஒன்றுறா முன்றிலோ இல்' என்பது பழமொழி.

114. சொல்லும் பொருளும் உணர்த்தல்

     வளைவான உப்பங்கழிகள் நிறைந்துள்ள குளிர்ச்சி பொருந்திய கடற்கரை நாட்டுக்கு உரியவனே! உள்ளத்திலே கள்ளமில்லாமல் நட்புச் செய்தவர்களுக்கு நண்பர்கள் சொன்ன சொல்லும், அவற்றின் பொருள் முடிவும் ஒன்றாகவே தோன்றும். சொன்ன சொற்களை வேறுபட்ட பொருளாக எடுத்துக் கொண்டு பழி கூறுதல், ஒருவனுடைய பாவினை ஏற்றி மற்றொருவனுடைய பாவாகக் கட்டுதலோடு பொருத்தம் உடையதாகும்.

புரையின்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
உரையும் பொருள்முடிவும் ஒன்றால் - உரைபிறிது
கொண்டெடுத்துக் கூறல் கொடுங்கழித் தண்சேர்ப்ப!
'ஒன்றேற்று வெண்படைக்கோள் ஒன்று'.

     நண்பர்கள் திறந்த உள்ளமுடையவர்களாகப் பழகுவார்களேயல்லாமல், சொல் வேறு பொருள் வேறாகப் பேசிப் பழகுபவர்கள் அல்லர். அப்படிச் சொல் வேறு பொருள் வேறாகப் பேசுவார்கள் நட்பினை நட்பாகக் கொள்ளுதல் வேண்டாம்; ஒதுக்கி விடுக என்பது கருத்து. 'ஒன்றேற்றி வெண்படைக்கோள் ஒன்று' என்பது பழமொழி.

115. அமைச்சரின்றி மக்கள் நலமில்லை

     தாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றினும், மனத்தாலும் வாயாலும், உடலாளும், அறிந்து அடங்கியவர்களாக விளங்கி, தம் நாட்டின் நன்மை ஒன்றையே எண்ணியவராக இருந்து, ஒன்றுக்கும் வருத்தங் கொள்ளாதவராகக் காத்து வருபவரே நாட்டின் சிறந்த அமைச்சர்களாவர். அத்தகையவர் இல்லையென்றால், அந்த நாட்டில் உள்ள உயிர்கள் எல்லாம், அந்த நாட்டை விட்டுக் குடிபெயர்ந்து வேறு நாட்டுக்குச் சென்று அல்லற்படுவன ஆகிவிடும்.

மனத்தினும் வாயினும் மெய்யினும் செய்கை
அனைத்தினும் ஆன்றவிந்தா ராகி - நினைத்திருந்து
ஒன்றும் பரியலராய் 'ஓம்புவார் இல்லெனில்
சென்று படுமாம் உயிர்'.

அமைச்சர்கள் திரிகரண சுத்தியாக நாட்டின் நலம் ஒன்றையே கருதிச் செயற்பட வேண்டும் என்பது கருத்து. 'ஓம்புவார் இல்லெனின் சென்று படுமாம் உயிர்' என்பது பழமொழி. 'சென்றுபடும்' என்பது 'செத்து ஒழியும்' என்றும் பொருள்படும்.

116. ஊரைத் தழுவி நடக்கவும்

     தம்மை வந்து அடைக்கலமாகச் சேர்ந்தவர்கள் வருத்தம் அடையுமாறு ஒரு போதுமே நடக்க வேண்டாம். துறவியர்களின் ஒழுக்க நெறியினைப் பேணி நடவாமல் ஒதுங்கி நிற்பதும் கூடாது. தான் ஆராய்ந்து கண்ட பொருள் நுட்பத்தைப் பலகாலும் சிந்தித்துச் சிந்தித்து தான் மேற்கொள்க. ஊரினர் நடக்கும் பாதையிலே, அது சரியா, இது முறையா என்றெல்லாம் கேளாமலே தானும் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க, இவையே சிறந்த நெறிகளாகும்.

செல்லற்க சேர்ந்தார் புலம்புறச் செல்லாது
நில்லற்க நீத்தார் நெறியொரீப் - பல்காலும்
நாடுக தான்கண்ட நுட்பத்தைக் கேளாதே
'ஓடுக ஊரோடு மாறு'.

     'ஊருடன் ஒத்து வாழ்தல் வேண்டும்' என்பது கருத்து. அடைந்தவர்க்கும் துறவியர்க்கும் உதவுதலும், கற்று நன்மையென நுட்பமாகத் தெளிந்த ஒன்றைக் கைவிடாமையும் வேண்டும் என்பதும் சொல்லப்பட்டது. 'ஓடுக ஊரோடு மாறு' என்பது பழமொழி.

117. தலைமை கருதுபவரை அழிக்க வேண்டும்

     மலை மேலே வளர்ந்திருக்கும் மூங்கிலையும், தம் அழகினாலே தோற்று அழியச் செய்யும் மென்மையான தோள்களை உடையவனே! 'தமக்குத் தலைமையான ஒரு நிலைமை இருக்க வேண்டும்' என்று கருதுகின்ற ஆணவத் தன்மை உடையவர்களை அரசனானவன் தன்னுடைய பிற சூழ்நிலைகளின் காரணமாகச் சமாதானப்படுத்தி வைத்துக் கொள்வதானது, ஒரே அறையினுள் பாம்புடன் கூடி வாழும் பரிதாப நிலைமை போன்றதாகும்.

தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையால் நேர்செய் திருத்தல் - மலைமிசைக்
காம்பனுக்கும் மென்தோளாய்! அஃதன்றோ 'ஓரறையுள்
பாம்போ(டு) உடனுறையும் ஆறு'.

     அத்தகையோரைப் பகையாகக் கருதி அழித்து விடுதலே அரசன் தன்னைப் பேணிக் கொள்வதற்குச் செய்ய வேண்டிய செயலாகும் என்பது கருத்து. 'ஓர் ஆயுள் பாம்போடு உடனுறையுமாறு' என்பது பழமொழி. 'குடத்துள் பாம்போடு உடனுறைந்தற்று' எனவும் இப்பழமொழி வழங்கும்.

118. மாற்ற அரிது மனம்

     நேர்மையான வழியல்லாமல், குணமற்ற ஒன்றை ஒருவர் தம் உள்ளத்திலே கொண்டிருந்தால், அத்தகையவரை மீண்டும் அந்தத் தவறான எண்ணத்தினின்றும் தெளிவித்தல், பெரியார்க்குங்கூட இயலாத ஒன்றாகும். கூர்மையான நுண்பொருளின் கேள்வியினால் அறிவு உடையவர்களுக்கே என்றாலும், அவர் எண்ணியதையே பறையானது ஒலிக்கும் என்பதை அறிக.

நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால்
பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே,
கூர்த்தநுண் கேள்வி அறிவுடையார்க்(கு) ஆயினும்
'ஓர்த்தது இசைக்கும் பறை'.

     பறை, அவரவர் கருத்தை ஒட்டியே ஒலிப்பது போல, மனமும் அவரவர் கொண்ட கருத்துப்படியே போய்க் கொண்டிருக்கும். அதனைப் பிறர் தம் கருத்துப் போல மாற்றுதல் எளிதன்று என்பது கருத்து. 'ஓர்த்தது இசைக்கும் பறை' என்பது பழமொழி.

119. கடன் கொடுத்தல் வேண்டாம்

     மடமான தன்மையினையுடைய மானின் நோக்கினையுடையவளே! தம் கையை விட்டுக் கடந்து போன ஒரு சிறந்த பொருளானது மீண்டும் தம் கைக்கு வந்து சேர்வது என்பதே இவ்வுலகிற் கிடையாது. இப்படிச் சொல்பவர்கள் பொருளின் இயல்பை உண்மையாகவே உணர்ந்தவர்களாவார்கள். உண்மையாகக் கீழ்மக்களாகிய பிறர்க்குக் கடன் கொடுத்தவன் பெறுவதெல்லாம் வாங்கியவன் அதனை மறுத்துப் பாம்புக் குடத்தினுள்ளேயும் கைவிடத் துணிதலாகிய பொய்ப் பிரமாணம் ஒன்றேயாகும்.

கைவிட்ட ஒண்பொருள் கைவரவு இல்லென்பார்
மெய்ப்பட்ட வாறே உணர்ந்தாரால் - மெய்யா
மடம்பட்ட மானோக்கின் மாமயில் அன்னாய்!
'கடம்பெற்றான் பெற்றான் குடம்'.

     கடன் வாங்கியவர்களுக்கு மீண்டும் அதனைத் திருப்பித் தருவதற்கு மனம் வருவதே கடினம். அதனால், பொருளைப் பேணுபவன் தீயோருக்குக் கடன் கொடாமல் இருக்க வேண்டும் என்பது கருத்து. 'கடன் பெற்றான் பெற்றான் குடம்' என்பது பழமொழி.

120. மூடனுக்குச் செய்த உபதேசம்

     மனத்தினுள்ளே நன்மை தீமைகளைப் பற்றிய கவலையில்லதவர்களாகி, நல்லது எது என்பதையும் உணராதவர்கள் ஆகிய, மனவலிமையுள்ள மூடர்கள் கூடி மொய்த்துக் கொண்டிருக்கிற ஒரு சபையினுள்ளே சென்று, உடலளவான மனிதருள் ஒருவனாக விளங்கும் ஒரு மூடனுக்கு, உறுதி தரும் பொருள் பற்றிச் சொல்லுதல் வீணானதாகும். அது, கடலினுள் மாம்பழத்தைக் கொட்டுவது போன்ற பயனற்ற செயலுமாகும்.

நடலை இலராகி நன்றுணரார் ஆய
முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்
உடலா ஒருவற்கு உறுதி உரைத்தல்
'கடலுளால் மாவடித் தற்று'.

     அறிவுடையோர் புல்லறிவு உடையோருக்கு உபதேசம் செய்வதற்கு முயலுதல் கூடாது; அவர்க்கு உரைப்பது எல்லாம் வீணே என்பது கருத்து. 'கடலுளால் மாவடித் தற்று' என்பது பழமொழி.

121. பணம் உடையவர்க்கு ஆகாதது இல்லை

     விளங்கும் நீர்ப் பெருக்கினையுடைய கடற்கரைக்குரிய நாட்டினனே! பொருள் உடையவர்களின் செயல்கள் எல்லாம், இடையிலே முடிதல் இல்லாமற் போகாமல், நல்லதாகவே முறையாக முற்றவும் நடந்து முடியும்; பொருள் வசதி இல்லாதவர்களுக்கோ அவர்கள் செயல்கள் எல்லாம் மிகவும் வருத்தத்துடனேயே நடந்து வரும். அதனால், பொருள்வளம் உடையவர், கடலினுள்ளே செல்பவரானாலுங் கூட, அங்கும் தமக்கு நன்மையான தக்க வசதிகளைச் செய்து கொள்ளக் கூடியவர்கள் என்று அறிவாயாக.

ஒல்லாத இன்றி உடையார் கருமங்கள்
நல்லவாய் நாடி நடக்குமாம் - இல்லார்க்கு
இடரா வியலும் இலங்குநீர்ச் சேர்ப்ப!
'கடலுள்ளும் காண்பவே நன்கு'.

     பொருள், வாழ்வுக்கு மிகவும் தேவவ என்பதைச் சொல்வது இது. பொருள் உடையவர் காரியங்கள் நிறைவேறுவதும், பொருள் இல்லாதவர் காரியங்கள் தடைபடுவதும் உலக இயல்பு. 'கடலுள்ளும் காண்பவே நன்கு' என்பது பழமொழி.

122. சான்றோர் என்றும் யாசியார்

     பனை மடல்களின் இடையிலேயுள்ள தம் கூடுகளோடு, கடற் பறவைகளும் சேர்ந்து ஆரவாரிக்கின்ற, பெரிய கடற்கரைகளுக்கு உரியவனே! கடலோடு துரும்பு ஒரு போதும் சேர்ந்து இருப்பதில்லை. அது போலவே, தம்முடைய உடலானது ஒடுங்கும்படியான அளவுக்குப் பசித்தாலும், மாண்பு உடையவர்கள், பிறருடைய பொருள் அடைய விரும்பி, அவர் பாற் சென்று நின்று யாசிக்கவே மாட்டார்கள்.

மடங்கிப் பசிப்பினும் மாண்புடை யாளர்
தொடங்கிப் பிறருடைமை மேவார் - குடம்பை
மடலொடு புட்கலாம் மால்கடற் சேர்ப்ப!
'கடலொடு காட்டொட்டல் இல்'.

     கடலொடு, துரும்பு ஒட்டாதது போல, சான்றோர் பால் இரந்து நிற்றலாகிய குணமும் ஒரு போதும் சேராது என்பது கருத்து. 'கடலோடு காட்டு ஒட்டல் இல்' என்று பழமொழி. காட்டு - துரும்பு; மடலின் அசைவுடன் புள்ளும் சேர்ந்து ஆரவாரிக்கும் என்பதாம்.

123. துறவிகள் புலால் விரும்புதல்

     விடுவதற்கு அரியவான வலிமையுடைய ஆசைகளையெல்லாம் மிகவும் மனவுறுதியுடனே தம்மிடத்தினின்றும் நீக்கி விட்டவர்கள், ஒழுகுவதற்கு அரியதான நல்லொழுக்க நெறியினிடத்தையே நிலைபெற்ற சான்றோர்கள். அவர்கள் தமக்குத் துன்பம் வந்த காரணத்தினாலே, கிடைத்த புலாலினை உண்ணுதல், கடலினின்றும் நீந்திக் கரை சேர்ந்த ஒருவன், கன்றின் குளம்படி அளவான நீரிலே வீழ்ந்து அமிழ்ந்துவிட்டது போன்றதாகும்.

விடலரிய துப்புடைய வேட்கையை நீக்கிப்
படர்வரிய நன்னெறிக்கண் நின்றார் - இடருடைத்தாய்ப்
பெற்ற விடக்கு நுகர்தல் 'கடல்நீந்திக்
கற்றடியுள் ஆழ்ந்து விடல்'.

     புலால் உண்ணுதல், பிற எல்லாத் தீய ஆசைகளினும் கொடியதாகும்; அதனை விட்டவரே சான்றோர் என்பது கருத்து. 'கடல் நீந்திக் கற்றடியுள் ஆழ்ந்துவிடல்' என்பது பழமொழி. கற்றடி - கன்றின் அடி; அந்த ஆழமுடைய நீர் என்பது பொருள். பழங்கால முனிவர்களிற் பலர் புலாலுண்டு வந்ததைக் கண்டிக்கும் வகையில் கூறியது இது.

124. மன்னர் கருத்துக்கு இசைய நடக்க

     மடல்கள் நிரம்பியிருக்கிற பனைமரங்கள், மிகுதியாக விளங்கும் கடற்கரைக்கு உரியவனே! மன்னரைச் சேர்ந்து வாழ்ந்து வருகிறவர்கள், அம்மன்னர், தம்மை விலக்கி விடுதற்குரிய செயல்களைச் செய்து, அதனால் அவர்கள் தம்மை எனன் செய்வார்களோ என்று பயந்து கொண்டே வாழாமல், அரியதான உடலினைப் பெற்ற அம்மன்னர்கள் மகிழ்வடையத் தக்கவாறே நடந்து வர வேண்டும். அப்படி அவர்கள் நடந்து கொண்டார்கள் என்றால், கடலினும் கிடையாத அளவு பெருஞ் செல்வ வளம் எல்லாம் அவர்களுக்கு வந்து வாய்க்கும்.

விடலமை செய்து வெருண்டகன்று நில்லாது
உடலரும் மன்னர் உவப்ப ஒழுகின்
மடலணி பெண்ணை மலிதிரை சேர்ப்ப!
'கடல்படா வெல்லாம் படும்'.

     மன்னர் உவக்க நடந்தால், பெருஞ் செல்வமெல்லாம் அவராற் பெற்று இன்புறலாம் என்பது கருத்து. 'கடல் படா எல்லாம் படும்' என்பது பழமொழி.

125. நண்பர்க்கு உதவ வேண்டும்

     பரந்த அலைகளை கரையாகிய பாரிலே வந்து மோதுகின்ற கடற்கரைக்கு உரிய தலைவனே! தம்மால் விரும்பிப் பாதுகாக்கப்படுவர் பண்பற்றவர்களாக இருந்தாலும், சான்றோர்கள், அதனால் தங்கள் தன்மையினின்றும் சற்றும் மாறுபாடு அடைவார்களோ? மாட்டார்கள். ஆகையால், ஊர் அறிய நம்முடன் நட்புச் செய்தவர்க்கு உணவளிப்பதும் நம் கடமை அல்லவோ?

பரியப் படுபவர் பண்பிலார் ஏனும்
திரியப் பெறுபவோ சான்றோர் - விரிதிரைப்
பாரெறியும் முந்நீர்த் துறைவ! 'கடனன்றோ
ஊரறிய நட்டார்க்கு உணா'.

     நட்டார் குணக்கேடரானாலும், சான்றோர் அவர்க்கும் உதவுவதையே தம் கடனாகக் கொள்வார்கள் என்பது கருத்து. 'கடனன்றோ ஊரறிய நட்டார்க்கு உணா' என்பது பழமொழி. ஊரறிய நட்டார்க்கு உதவா விடின் ஊர்ப்பழிக்கு உள்ளாகல் நேரும் என்பதாம்.

126. சிறந்தவர் கொடுத்தல்

     புனத்து இடங்களிலே, கோட்டான் கூப்பிட்டிக் கொண்டிருக்கும் குளிர்ந்த மலைகளையுடைய நாடனே! ஒருவன் பிச்சை எடுத்து உண்ணும் ஓட்டிலே போய்க் கல்லைப் போடுபவர்கள் இந்த உலகில் எவருமே இல்லை; ஆனால் அறிவினாலே மாட்சிமையுடைய சான்றோர்களோ, 'தம்மிடத்தே இரந்து வருபவர், தம் உள்ளத்திலே எண்ணியது இது' என்று, அவருடைய தன்மையையே ஆராய்ந்து பார்த்து அவர் மனத்திலுள்ளதை அறிந்து அதற்கேற்பக் கொடுத்து உதவுபவராகவே இருப்பார்கள்.

நினைத்த(து) இதுவென்றந் நீர்மையே நோக்கி
மனத்தது அறிந்தீவார் மாண்டார் - புனத்த
குடிஞை இரட்டும் குளிர்வரை நாட!
'கடிஞையில் கல்லிடுவார் இல்'.

     கொடுப்பவர் பலராயினும், வருபவர் குறிப்பறிந்து, அவர் கேளாததன் முன்பே அவர் கருதி வந்ததைக் கொடுத்து உதவுவதே சிறந்த கொடையாகும் என்பது கருத்து. 'கடிஞையில் கல் இடுவார் இல்' என்பது பழமொழி. கடிஞையில் கல் இடுவார் மிகவும் கொடியவர் என்பதாம்.

127. உடனே பகையை ஒழிக்க வேண்டும்

     மின்னலின் ஒளியைப் போல ஒளி நிலைபெற்றதாகி, மூங்கில் போல அமைவுடன் விளங்கும் அழகிய தோள்களை உடையவளே! ஒரு பாத்திரத்தின் உள்ளேயிருந்து கடித்து விட்டு ஓடும் பாம்பின் பல்லைப் பிடுங்க நினைப்பவர் எவருமே இல்லை. அதனை அது செய்வதற்கு முன் அவர்களே அதன் விஷத்தால் செத்து விடுவார்கள். அதனால், மிகவும் பகைமை கொண்டு முற்படத் தம்மை நலிந்து எழுந்தவர்களை, அப்போதே அடக்காது, பின்னர் அடக்குவோம் என்று சோம்பி இருத்தல் அறிவற்ற தன்மையேயாகும்.

முன்னலிந்து ஆற்ற முரண்கொண்டு எழுந்தோரைப்
பின்னலிந்தும் என்றிருத்தல் பேதைமையே - மின்னின்று
காம்பன்ன தோளி! கடிதிற் 'கடித்தோடும்
பாம்பின்பல் கொள்வாரோ இல்'.

     பகையை அடியோடு முதலிலேயே அழித்து விடுவது தான் அறிவுடைமை. பின்னர் பார்த்துக் கொள்வோம் எனக் காலங் கடத்துவது அறிவற்ற தன்மை என்பது கருத்து. 'கடித்தோடும் பாம்பின் பல் கொள்வாரோ இல்' என்பது பழமொழி. கலத்தில் கடித்து விட்டு ஓடிம் பாம்பை அடித்துக் கொல்வதே நல்லது; அதுபோலக் குறும்பு செய்யும் பகைவரையும் அழித்திடுக என்பதும் ஆகும்.

128. மன்னன் விரும்புவதை விரும்பாமை

     இடப்படும் தவளக் குடையினைக் கொண்ட தேரினை உடையவர்கள் மன்னர்கள். அவர்கள், 'எமக்கு இது பொருந்தும்' என்று எண்ணி மிகவும் விரும்புகின்ற ஒரு பொருளை, அவரைச் சேர்ந்து வாழ்பவர்கள் எவரும் விரும்புதல் கூடாது. அவர்கள், தாமும் விருப்பங்கொண்டு கொஞ்சமும் ஆராயாமல் தம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் முயலுதல் மிகவும் ஆபத்தானதாகும். அது கடிய விலங்குகளைத் தாமே கூவித் தம்மிடத்தே வரவிடுவதைப் போன்றதாகும்.

இடுகுடைத்தேர் மன்னர் எமக்கமையும் என்று
கடிதவர்தாம் காதலிப்பத் தாம்காதல் கொண்டு
மூடிய எனைத்தும் உணரா முயறல்
'கடியன கனைத்து விடல்'.

     'மன்னன் விரும்புவதை அவனைச் சார்ந்து வாழ்பவர் விரும்புவது கூடாது' என்பது கருத்து. 'கடியன கனைத்து விடல்' என்பது பழமொழி.

129. அதிகமாகத் துன்புறுத்தக் கூடாது

     ஒரு நாயை வளர்ப்பவன், அதனை அன்புடன் பேணாமல், கடைவாயிலை அடைத்து வைத்துக் கொண்டு அதனை அடித்தானென்றால், அந்த நாயும் தன் சொந்தக்காரனான அவனைக் கடித்துவிடும். ஆகவே, தாம் வறுமையுற்று வந்து தம்மைப் புகலாக அடைந்த உறவினரையும், 'இவர் தம்மை எதிர்க்க வலியில்லாதவர்' என்று கருதிப் பிறருக்கு வெளிப்பட இகழ்ந்து பேசி, எவரும் அவரை வருத்தாமல் இருக்க வேண்டும்.

ஆற்றார் இவரென்(று) அடைந்த தமரையும்
தோற்றத்தாம் எள்ளி நலியற்க - போற்றான்
'கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
உடையானைக் கவ்வி விடும்.

     பலரறிய இகழ்ந்தால் அவரும் எதிர்த்து நிற்பர் என்பது கருத்து. 'கடையடைத்து வைத்துப் புடைத்தக் கால் நாயும் உடையானைக் கவ்வி விடும்' என்பது பழமொழி.

130. கண்ணே காட்டிக் கொடுக்கும்

     மலர்ந்திருக்கும் ஆம்பற் பூக்கள் கலியாண வீட்டைப் போல மணம் கமழ்ந்து கொண்டிருக்கின்ற அலைகள் மிகுந்த கடற்கரைப் பகுதிகளுக்கு உரியவனே! 'யாம் செய்த தீய செயல்கள் வெளிப்படாமல் மலையே மறைத்துக் கொண்டிருக்கிறது' என்று நினைத்துக் கொள்வார்கள் தீயவர்கள்; தாம் செய்த தீமையால் வரும் பழிபாவங்களை அவர்கள் தெளிந்து உணர்வதில்லை. கண் பார்வை அம்பினும் கூர்மையாகச் சென்று ஊடுருவ வல்லது என்பதை அவர்கள் அறியார்கள்.

யாம்தீய செய்த மலைமறைந்த(து) என்றெண்ணித்
தாம்தீயார் தம்தீமை தேற்றாராய் - ஆம்பல்
மணவில் கமழும் மலிதிரைச் சேர்ப்ப!
'கணையினுந் கூரியவாம் கண்'.

     தீமை எவ்வளவுதான் மறைக்கப்பட்டாலும், வெளிப்பட்டுத் தோன்றி அதனைச் செய்தவர்க்குப் பழி பாவங்களைக் கொண்டு வந்து விடும். அதனால், அனைவரும் தீயன செய்யாது வாழ வேண்டும் என்பது கருத்து. ஆம்பல்-அல்லி; 'கணையினும் கூரியவாம் கண்' என்பது பழமொழி. 'கண் பார்வையானது அம்பினும் கூர்மையாக ஊடுருவிச் செல்வது' என்பது கருத்து.

131. இன்ப துன்பம் இல்லை என்பவர்

     ‘மறுமை இன்பம் துன்பம் என்பதொன்று இருக்கிறதோ? மனத்திலே தோன்றியவற்றை எல்லாம் பெற்று இன்புறுகின்ற வழியையே செய்து வாழுங்கள்’ இப்படிச் சொல்வார் சிலர். இவர்கள், நறுமணமுள்ள நெய்யிலே இட்டுச் செய்த சுவையான அடையினை எடுத்து எறிந்து விட்டுக் கண்ணை மூடிக் கொண்டு செங்கல்லை உண்ணும் தீயவர்களுக்குச் சமமானவர்கள்.

மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மின் என்பாரே - நறுநெய்யுள்
கட்டி அடையைக் களைவித்துக் 'கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர்'.

     மக்களுக்கு தீய உபதேசங்கள் செய்பவர்கள் மிகவும் கொடியவர்கள் என்பது கருத்து. கட்டு அடை - பாகு பெய்த அடையுமாம். இட்டிகை - செங்கல்; ‘கண் சொரீஇ இட்டிகை தீற்றுபவர்’ என்பது பழமொழி.

132. குறிப்பால் குணம் அறியலாம்

     எவரிடத்தும் கண்டவான கூடுபாடுகளே அவர்களைப் பற்றிய முடிவினை நாம் செய்து கொள்வதற்கு உரிய காரணங்களாக அமையும். பெரிய உலைப் பாத்திரத்தினுள்ளே பெய்த அரிசியை, அந்த அரிசி வெந்தமை அறிவதற்கு, ஓர் அகப்பையாலே எடுத்துக் கண்டு உணரலாம். அது போலவே, எவரிடத்தும் அவரவர் செயல்களாகக் கண்டவற்றைக் கொண்டே அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

பேருலையுள் பெய்த அரிசியை வெந்தமை
ஓர்மூழை யாலே உணர்ந்தாங்கு - யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யார்கண்ணும்
'கண்டது காரணம்ஆ மாறு.'

     செயலைக் கொண்டே மனிதர் மதிப்பிடப் படுவதனால், யாவரும் மறந்தும் பிழைபட்ட செயல்களிலே மனஞ் செலுத்தக் கூடாதென்பது கருத்து. மூழை - அகப்பை. ‘கண்டது காரணம் ஆமாறு’ என்பது பழமொழி.

133. பிறர் தவறு கூறலாகாது

     அழகிய குளிர்ந்த நீர் வளத்தினையுடைய புகார் நாட்டிலே, விளை நிலங்கள் இன்னின்னார்க்கு இவ்வளவு உளவென்று குறித்துக் காண்பதற்கு விரும்பிய அரசன், மக்களை அழைத்து அது பற்றி விசாரித்தான். அப்போது சான்றோன் ஒருவன், பிறனொருவன் தன் வலிமையால் அபகரித்துக் கொண்டு அநுபவித்து வருகின்ற ஒரு நிலத்தைப் பற்றித் தான் அறிந்திருந்தும், அதனைச் சொல்வதற்கு நாணங் கொண்டு மறைந்து நின்றான். ஆகவே, தன் கண்ணினாற் கண்டதே யானாலும் அதனால் வரும் பின் விளைவுகளை ஆராய்ந்து பார்த்தே சொல்ல வேண்டும்.

பூந்தண் புனற்புகார்ப் பூமிகுறி காண்டற்கு
வேந்தன் வினாயினான் மாந்தரைச் - சான்றவன்
கொண்டதனை நாணி மறைத்தலால் தன் 'கண்ணிற்
கண்டதூஉம் எண்ணிச் சொலல்'.

     காண்பவற்றினை நன்கு ஆராயாமல் வெளிப்படச் சொல்வது கூடாது என்பது கருத்து. ‘கண்ணிற் கண்டதூஉம் எண்ணிச் சொலல்’ என்பது பழமொழி.

134. கயவரிடம் ரகசியம் சொல்லக் கூடாது

     மழை மேகத்தினைப் போலக் கருமையாக விளங்கும் கூந்தலையுடைய பொன்வளை அணிந்தவளே! அன்பு படத் தம்முடன் நட்புக் கொண்டு நடப்பவர்களுள்ளும், தாம் கேட்ட ஒரு செய்தியைப் பிறருக்குச் சொல்ல ஆராயாது போகின்றவர்களாக ஒருவருமே இல்லாதிருக்கின்றனர். அதனால், சான்றோர்கள் ரகசியமான செய்திகளைக் கயமைக் குணம் உடையவர்களுக்கு ஒரு போதும் சொல்லவே மாட்டார்கள்.

நயவா நட்டொழுகு வாரும்தாம் கேட்ட(து)
உயவா(து) ஒழிவார் ஒருவரும் இல்லை;
புயலமை கூந்தல் பொலந்தொடி! சான்றோர்
'கயவர்க்(கு) உரையார் மறை'.

     நண்பர்களே ரகசியங்கள் வெளிப்படுத்தும் போது, கயவர்கள் எவ்வளவு தூரம் அதனைப் பகிரங்கப்படுத்தி விடுவார்கள்! அதனால், அவரிடத்து ஒரு போதும் ரகசியங்களைச் சொல்ல வேண்டாம் என்பது கருத்து. ‘கயவர்க்கு உரையார் மறை’ என்பது பழமொழி.

135. சொல்வீரர் பயனற்றவர்

     வெகுண்டு எழுந்த போரினுள்ளே, பகைவர்கள் எல்லாரும் அழியும்படியாகத் தம்முடைய படைச் செருக்கினாலே போர் செய்து வெற்றி கொள்ள முயலாத கோழைகள், தாமும் போர் செய்பவர்கள் போல வீறாப்பாகப் பேசிக் கொண்டு, தம் அரசனின் சோற்றைச் சாப்பிட்டுத் திரிவார்கள். அத்தகையோர் நிலை உடலால் வலுவற்ற ஒருவர், ஆடைகளாற் புனைந்து தம்மைப் பகட்டித் திரிவது போன்றதாகும்.

உருத்தெழு ஞாட்பினுள் ஒன்னார் தொலையச்
செருக்கினால் செய்கல்லார் செய்வாரே போலத்
தருக்கினால் தம் இறைவன் கூழுண் பவரே
'கருக்கினால் கூறைகொள் வார்'.

     வீரம் செயலில் தான் திகழவேண்டும்; வெறும் ஆடம்பரக்காரர்களும், பேச்சு வீரர்களும் வீரர்களாக மாட்டார் என்பது கருத்து. கூறை - ஆடை; கூறுபடுத்தியது. ‘கருக்கினால் கூறை கொள்வார்’ என்பது பழமொழி.

136. பழியில்லாத செயலே செய்ய வேண்டும்

     பெரிய சக்கரவாளம் ஆகிய மலை சூழ்ந்த வட்டமாகிய எல்லையிடத்தே சேர்ந்திருக்கும் மகாமேரு முதலாகிய மலைகளுங் கூட ஒரு காலத்துத் தேய்ந்தாலும் தேயலாம்; வடுப்பட்ட சொற்களோ ஒன்றுமே மறையாது. ஆதலால் தான் கெட்டுப் போவோம் என்று சொல்லப்படும் இக்கட்டான நிலைமையிலுங் கூடத் தனக்கு ஒரு வடுவும் ஏற்படாத செயல்களையே ஒருவன் செய்து வருதல் வேண்டும்.

கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை
முற்றுநீர் ஆழி வரையகத்(து) ஈண்டிய
'கல்தேயும் தேயாது சொல்'.

     பழி மறையாது; வழி வழி தொடர்ந்து, தன் குடிக்கும் வந்து கொண்டேயிருக்கும். அதனால், அத்தகைய பழி வரும் செயல்களைச் செய்வதினும் ஒருவன் சாதலே நல்லது. ‘கற்றேயும் தேயாது சொல்’ என்பது பழமொழி.

137. வலிமை அறிந்து எழுதல்

     வேறு ஓர் ஒப்புமையுமில்லாமல், வில்லொடு மட்டுமே சரியாக ஒப்புமையுடையதாக விளங்கும் புருவத்தை உடையவளே! போர் இல்லாத சமயத்திலே வீரமாகப் பேசுபவர்கள் என்றாலும், அவர்கள் பேச்சை நம்பி, அவர்கள் பகைவருக்கு ஏற்ற வலிமையுடையவராக இல்லாவிட்டால், அவரைப் ‘பகைவர் மேல் சென்று போரிடுக’ என விடுத்தல், அப்படி விடுத்த மண்ணுக்கே முடிவில் துன்பந் தருவதாகும். அப்படிச் செய்வது, கல்லுடன் தன் கையைத் தானே மோதிக் கொள்வது போன்றதாகும்.

அமர்நின்ற போழ்தின்கண் ஆற்றுவா ரேனும்
நிகரின்றி மேல்விடுதல் ஏதம் - நிகரின்றி
வில்லொடுநே ரொத்த புருவத்தாய்! அஃதன்றோ
'கல்லொடு கையெறியு மாறு'.

     ‘எதிர்த்த வலியற்றாரைப் பகைவர் அழிப்பதுடன் ஏவிய மன்னனையும் அழித்து விடுவார்கள்’ என்பது கருத்து. ‘கல்லொடு கையெறியுமாறு’ என்பது பழமொழி. கல்லைக் கையில் அடித்தால் கைதான் நோவு கொள்ளும் என்பது தெரிந்ததே.

138. நம்மால் உயர்த்தப்பட்டவர்

     மென்மையானதும், மேன்மையான மாலை தரித்ததுமான மூங்கில் போன்ற தோள்களை உடையவளே! கன்னத்திலே அடக்கிக் கொண்ட நீரைக் குடிக்கவும் செய்யலாம்; அல்லது துப்பி விடவும் செய்யலாம்! அது போலவே, தம்மிடம் ஏவல் செய்பவரை வலிமையுடையவராகச் செய்தவர்கள், அவர்களை அழித்தாலும் அழிக்கலாம், உயர்த்தினாலும் உயர்த்தலாம். அது அவர்களாலே முடியும். இதற்கு, மெல்ல ஆராய்கின்ற ஓர் அறிவுத் திறமை எதுவுமே வேண்டுவதில்லை.

வழிபட் டவரை வலியராச் செய்தார்
அழிப்பினும் ஆக்கினும் ஆகும் - விழுத்தக்க
பையமர் மாலைப் பணைத்தோளாய்! பாத்தறிவென்
மெல்லக் 'கவுட்கொண்ட நீர்'.

     தம்மால் உயர்த்தப்பட்டவரானாலும், அவர் தமக்கு மாறுபட்ட விடத்து ஆராயாமல் அழித்து விடுவதே அரச நெறி என்பது கருத்து. ‘கவுட் கொண்ட நீர்’ என்பது பழமொழி.

139. குடியைக் கண்டதும் மகிழ்வான்

     தம்முடன் ஒத்த தகுதியற்ற பகைவரைத் தாமே எதிர்த்து அழிக்க முடியாதவரா யிருக்கலாம். அத்தகையவரும், அவர்களோடு பகை கொண்ட பிறர் சொல்லும் இகழ்ச்சியான சொற்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைவார்கள். அதுபோலவே, உணவாக நிரப்பி உதவும் ஒரு தகுதி இல்லை என்றாலும் கள்ளினைக் கண்டவுடனேயே குடிகாரனின் உள்ளமும் களிப்படையும்.

மாணாப் பகைவரை மாறொறுக் கல்லாதார்
பேணா துரைக்கும் உரைகேட்டு வந்ததுபோல்
ஊணார்ந்(து) உதவுவதொன்று இல்லெனினும் 'கள்ளினைக்
காணாக் களிக்கும் களி'.

     குடிகாரன், கள் தனக்கு உணவாகாது என்பது அறிந்தும், கள்ளைக் கண்டதும் தன் அறியாமை காரணமாக அதை உண்டு மகிழ்வான். ‘கள்ளினைக் காணாக் களிக்கும் களி’ என்பது பழமொழி.

140. கள்ளும் சோம்பேறித்தனமும்

     மாட்சிமைப்பட்ட அணிகலன்களை அணிந்தவளே! கள்ளைக் குடித்துவிட்டுக் குடித்துவிட்டோமென்று வருந்துபவர்கள் யாருமே இல்லை. கொடி கட்டிய வலிமையான தேர்களையுடைய மன்னர்களால், பகுதிப் பணம் கொள்ளைப்பட்டு உயிர் வாழ்கின்ற சிற்றரசர்கள், அந்த மன்னர்கள் ஒரு காரியத்தை மனதிற் கொண்டு ஏவிய செயலைத் தம் சோர்வு காரணமாகச் செய்யாது விடுதல் என்ன பயனைத் தரும்? அவர்க்கு அழிவையே தரும்.

கொடித்திண்டேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்
எடுத்துமேற் கொண்டவர் ஏய வினையை
மடித்தொழிதல் என்னுண்டாம்? மாணிழாய்! 'கள்ளைக்
குடித்துக் குழைவாரோ இல்'.

     குடிகாரன் குடித்தற்கு வருந்தாமலிருக்கலாம்; அதன் விளைவுகளுக்குத் தப்ப முடியாது. அடிமையரசர்களும் தம் சோம்பேறித்தனத்திற்கு வருந்தாமலிருக்கலாம். ஆனால் அதனால் வரும் விளைவுகளுக்குத் தப்ப முடியாது. ‘கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல்’ என்பது பழமொழி.

141. ஆபத்தில் உதவாத நண்பர்கள்

     பாம்புக் கொடியை உடையவன் துரியோதனன். அவனுக்கு நண்பன் வெண்மேனியினனான பலராமன். பாரதப் போரினுள், அவன் தன் நண்பனுக்கு உதவியாக எதிரிகளைத் தாக்கிப் போரிலே ஈடுபடவில்லை. அவனைப் போலத் தம் நண்பர்களுக்கு ஆபத்துக் காலத்தில் உதவாமல் அவரே அழிய விட்டுவிட்டுப் பின், ‘அவர் ஆன்மா சாந்தியடைக’ என்று பெருந்தவம் செய்பவர், உண்மை நண்பர்கள் ஆக மாட்டார்கள். அவர் செயல், திருவிழாப் பார்க்க வந்த குழந்தையை விழா முடியும் வரை தோளிலேற்றிக் காட்டாதிருந்த ஒரு தகப்பன், விழா முடிந்த பிறகு தோளில் ஏற்றிச் சுமந்து செல்வதைப் போன்றதாகும்.

பாப்புக் கொடியாற்குப் பால்மேனி யான்போலத்
தாக்கி அமருள் தலைப் பெய்யார் - போக்கி
வழியராய் நட்டார்க்கு மாதவம் செய்வாரே
'கழிவிழாத் தோளேற்று வார்'.

     ஆபத்தில் உதவாத நண்பர் நண்பராகார். ‘கழிவிழாத் தோளேற்றுவார்’ என்பது பழமொழி.

142. பெரியவரைத் தாழ்த்த நினைத்தல்

     மிகவும் சிறியதாகவும் எளிமையுடையதாகவும் தோன்றினாலும் குளிர்ச்சியான மலையின் மேலுள்ள கல்லினைக் கிள்ளிக் கைவலியில்லாமல் தப்பியவர் எவருமே இலர். ஆதலால், முதன்மையாய் மிகுந்த பொருள் உடையவராகி, மிகவும் மதிக்கப்பட்ட செல்வாக்கும் உள்ளவர்களை, ‘வறுமையாக்கிவிட முயல்வோம்’ என்று ஒருவன் சொல்லுதல், அவனுக்கே கேடாக வந்து முடியும்.

மிக்குடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரை
ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும்
நற்கெளி தாகி விடினும் நளிர்வரைமால்
'கற்கிள்ளிக் கையுந்தார் இல்'.

     பிறருடைய செல்வமும் செல்வாக்கும் கண்டு பொறாமையினாலே அவரை அழிப்பேன், எனக் கறுவுதல் தவறு. அது அப்படி நினைத்தவர்க்கே தீங்காக முடியும். ‘கற்கிள்ளிக் கையுந்தார் இல்’ என்பது பழமொழி.

143. பாடங் கேட்டுப் படித்தல்

     ‘உண்ணுதற்கு இனிமையாயிருக்கும் இனிதான தண்ணீர் இந்தக் கிணற்றைத் தவிர வேறு எங்குமே கிடையாது’ என்று கருதும் கிணற்றினுள்ளேயிருக்கும் தவளை. அதனைப் போல அறிவுடையோர் என்றும் ஆகமாட்டார்கள். நூல்களை முழுவதுமாகப் பகல் எல்லாம் வெறுப்பில்லாமல் இனிதாகப் படித்து அறிதலைக் காட்டினும், அவற்றைத் தக்க ஆசிரியன்மாரிடம் முறையோடு பாடங்கேட்டு அறிந்து கொள்ளுதலே நன்மையானதாகும்.

உணற்கினிய இன்னீர் பிறிதுழி இல்லென்னும்
கிணற்றுகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
'கற்றலின் கேட்டலே நன்று'.

     தானே கற்று வரும் போது எழும் ஐயங்கள் தீர்வின்றிப் போகும்; ஆகவே பொருள் அறிந்து கற்றுப் பயனடைய வேண்டுமானால், ஆசிரியன் ஒருவனை அண்டிக் கேட்டுத் தெளிவதே சிறப்பு. ‘கற்றலின் கேட்டலே நன்று’ என்பது பழமொழி. ‘செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்’ என்பதும் இதுவே.

144. முட்டாள் கற்றும் பயனில்லை

     மலைச் சாரல்களிலே, பாறைகளின் மேல், வீழ்கின்ற அருவிகள் பலவாக விளங்கும் நல்ல நாட்டையுடையவனே! சொல்லப் போகும் சொற்களைக் கவனத்திலே கொண்டு துடியிலே பண் உண்டாக்கலாம். அதுபோல, நல்ல அறிவு இயல்பாக இல்லாதவர்களைக் கல்வி போதிப்பதால் அறிவுடையவராக நிலைநிறுத்தவே முடியாது. ஆகையினாலே, நூல்களைக் கற்பதனால் வரும் அறிவு மட்டுமே உலகத்தில் முற்றிலும் செல்லுபடியாவதில்லை என்று அறிவாயாக.

நற்கறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதே
சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவபோல்
வெற்பறைமேல் தாழும் இலங்கருவி நன்னாட!
'கற்றறிவு போகா கடை'.

     தட்டுவார் இல்வழித் துடியினின்றும் பண் எழுவதில்லை. அதுபோல, அறிவுறுத்துவார் இல்லாத போது கடையரின் அறிவும் செயற்படாது. அவர் கற்றும் பயனில்லை. அவர்க்குக் கற்பிப்பது வீண் என்பது கருத்து. ‘கற்றறிவு போகா கடை’ என்பது பழமொழி.

145. கல்வியை நாளும் கற்க

     தம்மினும் கல்வியுடையார் முன்னர்ச் சென்று சொல்லும் பொழுதிலெல்லாம், சொல்வதிலே தளர்ச்சியானது தோன்றலாம். அதனால், சோர்வு அடையவே கூடாது. புதிதாக ஒன்றைக் கற்குந்தொறும், தான் கல்லாதவன் என்று கருதி, அதனைக் கற்கும் வழியினை நினைத்து இரங்கி மனம் ஒருமைப்பட அது ஒன்றையே சிந்தித்து, வருந்தியாயினும் அந்த ஒன்றை அறிய முற்பட வேண்டும். இப்படியாவதனால், புதிதாக ஒவ்வொன்றையும் கற்குந்தொறும், தான் அதனை முன்னர்க் கல்லாத தன்மையே தோன்றும் என்க.

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றொன்று அறியுமேல்
'கற்றொறுந்தான் கல்லாத வாறு'.

     ‘கல்வி கரையில்’ என்பதை உணர்ந்து, செருக்கின்றி நாளும் கற்றலிலே மனஞ் செலுத்த வேண்டும் என்பது கருத்து. ‘கற்றொறுந் தான் கல்லாதவாறு’ என்பது பழமொழி. ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ என்பதும் இது.

146. படியாதவனின் அறிவாலும் பயனில்லை

     நற்குணம் உடையவனே! முதலிலே கேள்வி என ஒன்று எழாதிருந்தால் அதற்கான ஒரு விடையும் எழுவதில்லை. முதலில் உள்ளத்தில் ஒரு கனவு தோன்றாமற் போனால் எந்தவொரு செயலும் பின் நிகழ்வதுமில்லை. அதனால், படித்தவர்கள் முன்னிலையிலே விளக்கிச் சொல்லும் போது சொற்சோர்வுபட்டுப் போவதனால், நூற்களைக் கல்லாத ஒருவன் தன் இயற்கையறிவால் கண்ட சிறந்த நுட்பங்களும், நுட்பங்களாக மதிக்கப்படுவதுமில்லை.

கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால் சோர்வு படுதலால் - நல்லாய்!
'வினாமுந் துறாத உரையில்லை; இல்லை
கனாமுந் துறாத வினை'.

     இயற்கையறிவு இருந்தாலும் கல்வியறிவு இருந்தாலன்றி, அது சிறப்பதில்லை என்பது கருத்து. ‘வினா முந்துறாத உரையில்லை’, ‘கனா முந்துறாத வினையில்லை’; இவை இரண்டும் பழமொழிகள்.

147. கீழோர் பால் பொருளை ஒப்பித்தல்

     தனக்கு ஒரு போக்கிடம் இல்லாத கடலானது, நீர்த் துளிகளைத் தூவிக் கொண்டிருக்கும், அலைகள் கரையைப் பொருதுகின்ற கழிகளையுடைய குளிர்ந்த கடற்கரைப் பகுதிகளுக்கு உரியவனே! ஒருவர், தாம் வருந்தி முயன்று தேடிய சிறந்த பொருளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கீழ் மக்களிடத்தே ஒப்பித்தல், காக்கையைக் காவலாக வைத்த சோற்றைப் போல, விரைவிலே இல்லாமல் அழிந்து போய்விடும்.

ஊக்கி உழந்தொருவர் ஈட்டிய ஒண்பொருளை
நோக்குமின் என்றிகழ்ந்து நொள்வியார் கைவிடுதல்
போக்கில்நீர் தூஉம் பொருகழித் தண்சேர்ப்ப!
'காக்கையைக் காப்பிட்ட சோறு'.

     காக்கை தன் இனத்தையும் அழைத்து அந்தச் சோற்றையெல்லாம் உண்டுவிடுவது போல, அத் தீயவர்களும் தம் இனத்துடன் கூடி அதனைப் போக்கடித்து விடுவார்கள். ‘காக்கையைக் காப்பிட்ட சோறு’ என்பது பழமொழி.

148. தமக்குத் தாமே தண்டித்தல்

     சான்றோர்கள், பிறர் காணமாட்டார்கள் என்று இருந்தாலுங் கூட, மாட்சியற்ற ஒரு செயலைச் செய்யவே மாட்டார்கள். ‘எனக்குத் தகுதி அல்லவா?’ என்ற ஒன்றையே கருதினான்; தகுதிக்குத்தானே சான்றாகவும் ஆயினான்; தன் பிழையை நினைத்துத் தன்கையையே குறைத்துக் கொண்டான், பாண்டியனான பொற்கைப் பாண்டியனும். இதுவே, சான்றோர் இயல்பு ஆகும்.

எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித்
தனக்குத் கரியாவான் தானாய்த் - தவற்றை
நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் 'காணார்
எனச்செய்தார் மாணா வினை'.

     கீரந்தை மனைவிக்காகக் கதவைத் தட்டிய ‘பாண்டியன்’ தான் செய்தது நன்மை கருதியானாலும், தகுதியன்று எனத் தன் கையை குறைத்துப் பின் பொற்கையன் ஆயினான்; இதுவே சான்றோர் பண்பு. ‘காணார் எனச் செய்யார் மாணா வினை’ என்பது பழமொழி.

149. சூதினால் சாவும் வரும்!

     பாரதக் கதையினுள்ளும் தம் தாயப் பொருளினையே பந்தயப் பொருளாகக் கொண்டு, நூற்றுவரும் பாண்டவரோடு சூதுப் போர் செய்தனர். அது காரணமாக, அவர்க்குப் பகைவராகிப் போர்க்களத்தின் இடையே உயிரும் இழந்தனர். அதனால், படித்தவர் எவரும் விருப்பமுடன் சூதாடவே மாட்டார்கள்.

பாரதத் துள்ளும் பணையம்தம் தாயமா
ஈரைம் பதின்மரும் போரெதிர்ந்(து) ஐவரோடு
ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால்
'காதலோ(டு) ஆடார் கவறு'.

     பாரதக்கதை நாடறிந்த வொன்று. அதனைக் காட்டிச் சூதின் விளைவை விளக்குவது செய்யுள். ‘காதலோ டாடார் கவறு’ என்பது பழமொழி.

150. காப்பாரும் பார்ப்பாரும்

     வெயிலின்கண் காயவைத்த வற்றலைப் பார்த்துக் கொண்டிருப்பவர் இமைகொட்டும் அளவு நேரத்தினுள்ளும், தம் பார்வையிலே பட்டதென்றால் அதனைப் பறவைகள் திருடிச் சென்றுவிடும். அதுபோலப் போற்றிப் புறந்தந்து சேர்த்து வைத்த சிறந்த பொருள்களுக்கும், அதனைக் காப்பவரைவிடத் திருடப் பார்ப்பவர்களே அதிகமாகும்.

நோக்கி யிருந்தார் இமைக்கும் அளவின்கண்
நோக்கப் படினும் உணங்கலைப் புட்கவரும்
போற்றிப் புறந்தந்(து) அகப்பட்ட ஒண்பொருட்கும்
'காப்பாரில் பார்ப்பார் மிகும்.'

     பொருளை, அதனால் பூட்டி வைக்காது நல்ல காரியங்களிலே செலவிட்டு வாழவேண்டும் என்பது கருத்து. ‘காப்பாரிற் பார்ப்பார் மிகும்’ என்பது பழமொழி. பார்ப்பார் - தாம் கைக்கொள்ளப் பார்ப்பவர்.

151. நல்லபடி நடவாத நண்பர்

     மான் போன்ற மருட்சியான கண்களை உடையவளே! உள்ளத்தாலே ஒருவரைச் சிநேகித்து, நண்பர் என்று நாம் நடந்து வருங்காலத்து, அவர் தம்முடைய உள்ளத்திலே நாணம் என்பது கொஞ்சமேனும் இல்லாமல், நல்ல முறையிலே நம்மிடத்து நடவாமலிருந்தார் என்றால் அதனால் என்ன? காட்டினிடத்தே எறித்த நிலவைப் போன்று பயனற்ற அந்த நட்புக்காகச் சான்றோர் மறந்தும் வருத்தப்படவே மாட்டார்கள். அதனை உடனேயே கைவிட்டு விடுவார்கள்.

தாமகத்தால் நட்டுத் தமரென்று ஒழுகியக்கால்
நாணகத்துத் தாமின்றி நன்றொழுகார் ஆயினென்?
மான்மானும் கண்ணாய்! மறந்தும் பரியலரால்
'கானகத்து உக்க நிலா'.

     தான் அன்பு காட்டியும் அதனை உணரவில்லை என்றால், அது காட்டிடத்தே பெய்த நிலவுபோலப் பயன் அற்றதாகும் என்பது கருத்து. 'கானகத்து உக்க நிலா' என்பது பழமொழி.


152. பொருளால் தருமம் செய்க

     அடுத்துத் தொடர்ந்து வருகின்ற பிறவிகளுக்கு உதவும் நல்வினைப் பயனாக விளங்கும்படி, ஒரு தர்மத்தையும் செய்யாத செல்வர்கள் சிலர், அவர்கள் தம் பொருளையே தொடர்ந்து செல்லும் பற்றின் காரணமாக அதனைத் தொகுத்து வைத்துவிட்டு, அதன் பயனை அனுபவியாமல் சாவார்கள். போர்க்களத்திலே பகைவரோடு போர் செய்யும் பொழுது, பகைவரின் ஆயுதத்தால் தாக்குண்டு தம் குடர் சரிய, அதனை உள்ளே மீண்டும் எடுத்து இட்டு மேலே கட்டுக்கட்டி வைத்துத் தாம் பிழைத்து விட்டதாக மகிழ்பவர் போன்றவர் அவர்கள்.

படரும் பிறப்பிற்கொன்(று) ஈயார் பொருளைத்
தொடருந்தம் பற்றினால் வைத்திறப் பாரே
அடரும் பொழுதின்கண் இட்டுக் 'குடரொழிய
மீவேலி போக்கு பவர்'.

     குடர் சரிந்த பின் அவன் வாழ்வும் விரைவிலே முடிந்து போகும். அதனை அறியாமல் அவன் மகிழ்வது போன்றதே பொருளை வழங்காது வைத்துச் சாகின்றவனின் அற்பமான மகிழ்வும். மீவேலி - மேற்கட்டு. 'குடரொழிய மீவேலி போக்குபவர்' என்பது பழமொழி.

153. வேரோடு அறுத்துவிட வேண்டும்

     மார்பிலே முத்துவடங்கள் விளங்கும் மன்னனே! எல்லையற்ற நற்குணங்களுடைய பெரியவனாக விளங்கியவன், பாண்டவருள் மூத்தோனாகிய தருமபுத்திரன். அவனும், தன் பகையை ஒழித்துக் குடியை நிலை நிறுத்தும் பொருட்டுப் பொய் கூறினான். மிகுதியான நரகத்தை அடைவது தெரிந்தும், தன் குடிக்காகப் பொய்கூறி அந்த நரகத்திற்குச் சென்றான். ஆதலால், தம்முடைய குடி கெடுமாறு பகைவர் எதிர்த்து வந்தால் அவருக்கு இரங்கமாட்டார் அறிவுடையோர்; தம் குடியின் வாழ்வு நோக்கி அப்பகையை என்ன செய்தும் அடியோடு அழித்து விடவே முயல்வர்.

நிரம்ப நிரையத்தைக் கண்டதும் நிரையம்
வரம்பில் பெரியானும் புக்கான் - இரங்கார்
கொடியார மார்ப! 'குடிகெட வந்தால்
அடிகெட மன்றி விடல்'.

     தருமன் பாரதப் போரில், 'அசுவத்தாம ஹத' என்று சொன்னதாக வரும் சம்பவம் இங்கு காட்டப் பெற்றது. பகையை யாது செய்தும் அழிப்பது ராஜ தருமம் என்பது கருத்து. 'குடிகெட வந்தால் அடிகெட மன்றி விடல்' என்பது பழமொழி.

154. தீயவனுக்கு வழங்க வேண்டாம்

     அடக்கம் இல்லாத உள்ளத்தை உடையவன் ஆகிய ஒருவன், அவனுடைய நடத்தையிலும் தூய்மையுடையவன் அல்லாதவனாக இருப்பான். உடைமையாகிய பெரிய செல்வத்தால் வரும் உயர்ந்த சிறப்புக்களை எல்லாம் அத்தகைய ஒருவன் பால் வைப்பது தகாது. அது குரங்கின் கையிலே கொள்ளியைக் கொடுத்து அனுப்புவது போன்ற அறியாமையான செயலேயாகும்.

உடைப்பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை
அடக்கமில் உள்ளத்தன் ஆகி - நடக்கையின்
ஒளளியன் அல்லான்மேல் வைத்தல் 'குரங்கின்கைக்
கொள்ளி கொடுத்து விடல்'.

     குரங்கின் கையிலே கொள்ளியைக் கொடுத்து அனுப்பினால், அது ஊர் முழுவதையும் சுட்டுப் பொசுக்கிவிடும். அதுபோலத் தீயவனுக்கு அரசன் பொருள்களை வழங்கினால், பலர் அதனால் துன்பம் அடைவார்கள். 'குரங்கின் கைக் கொள்ளி கொடுத்து விடல்' என்பது பழமொழி.

155. நீசருள் பண்புடையார் தோன்றார்

     மிகவும் மரங்கள் செறிந்திருக்கிற சோலைகளையுடைய மலைநாடனே! குரங்கு இனங்களினுள்ளே எந்தக் காலத்தினும் அழகான முகத்தை உடையது இருந்ததே இல்லை. அது போலவே, வழிவழியாகத் தீய குணங்கள் பெருக வந்து கொண்டிருக்கும் கீழ்த்தரமான குடிகளுக்குள்ளே, விரிவாக ஒருவர் ஆராய்ந்த காலத்தும், பண்புடையவராக எவருமே காணப்படுவதில்லை.

நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம்
பரந்தொருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார்
மரம்பயில் சோலை மலைநாட! என்றும்
'குரங்கினுள் நன்முகத்த இல்'.

     பண்புடைமை, சிறந்த உயர்குடிப் பிறத்தலாலேயே அமைவது. கீழ்மைக் குணமுடைய குடியினரிலே பண்புடைமை உடையவரை காணவே முடியாது. 'குரங்கினுள் நன்முகத்த இல்' என்பது பழமொழி.

156. இரப்பார்க்கு உதவாத பொருள்

     கண் குருடானால், அவர் தூங்கினாலும் விழித்திருந்தாலும் பயன் ஒன்று தான். அவர் எதையும் காணமாட்டார். அதுபோலவே, தம் நாவினாலே ஒரு பொருளைத் தருக என்று கேட்டவர்களது குறையினைக் கேட்டு அறிந்தும், தம்முடைய செல்வத்தினை மாட்சிமைப்படப் பூட்டிக் காப்பவர்கள் பிற தீவினைகளுக்கு அஞ்சினாலென்ன, அஞ்சாவிட்டால் தான் என்ன? அந்த ஒரு தீவினையே அவர்களுக்குக் கேடாக முடிந்து விடும்!

நாவின் இரந்தார் குறையறிந்து தாமுடைய
மாவினை மாணப் பொதிகிற்பார் - தீவினை
அஞ்சிலென் அஞ்சா விடிலென் 'குருட்டுக்கண்
துஞ்சிலென் துஞ்சாக்கால் என்?'

     ஈயாதவனிடம் பொருளிருப்பது குருடனருகே அழகிய பொருள்கள் இருப்பது போலப் பயனற்றது என்பது கருத்து. 'குருட்டுக் கண் துஞ்சிலென் துஞ்சாக்கால் என்?' என்பது பழமொழி.

157. பணக்காரனுக்கு விருந்து

     குருவியானது தொடையை அறுத்த அளவிலே குடர் சரிந்து விழுந்துவிடும் என்பது நடைமுறையாகும். அதனால் மிகவும் பெரிய செல்வம் உடையவர்கள் வறுமையாளர்களிடத்திலே செல்லும் விருந்தினர்களாகப் போக வேண்டாம். தம் தகுதிக்கு மீறி அவர்கள் இவர்களுக்கு விருந்து செய்வதற்குப் படுகின்ற வருத்தம் மிகவும் அதிகமாயிருக்கும். இருந்தாலும் செல்பவர் நிறைவு அடையவும் முடியாது.

நல்கூர்ந் தவர்க்கு நனிபெரியர் ஆயினார்
செல்விருந் தாகிச் செலவேண்டா - ஒல்வது
இறந்தவர் செய்யும் வருத்தம் 'குருவி
குறங்கறுப்பச் சோரும் குடர்.'

     வறியவர், செல்வர் விருந்தாக வந்த போது என்னதான் கஷ்டப்பட்டு விருந்து செய்தாலும், அதனால் செல்பவர்கள் திருப்தி அடைந்து மனநிறைவு கொள்ளப் போவதில்லை. ஆகவே, அது செய்ய வேண்டாம் என்பது கருத்து. 'குருவி குறங்கறுப்பச் சோறும் குடர்' என்பது பழமொழி.

158. படியாமலே வரும் அறிவு

     கரிகாற் பெருவளத்தானிடம் இரு முதியவர்கள் ஒரு வழக்கினைத் தீர்த்துக் கொள்ள வந்தனர். அவனுடைய இளமையைக் கண்டதும், 'இவன் இளமைப் பருவத்தான்; சொல்லும் வழங்கிலே முடிவினைக் காணமுடியாதவன்' என்று கருதினர். அதனையறிந்த அவன், நரை மயிரை முடித்தவனாகத் தன்னை முதியவன் போல ஒப்பனை செய்து கொண்டு வந்தமர்ந்து, அப்படிச் சொன்னவர்கள் மகிழுமாறு, அவர்கள் வாக்குமூலங்களைக் கேட்டு நியாயம் வழங்கினான். இதனால், குலத்துக்கு உரிய அறிவுச் செழுமை கற்று அறியாமலேயே, இயல்பாக ஒருவனுக்கு வந்து படியும் என்று அறிதல் வேண்டும்.

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் 'குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்'.

     'குலவிச்சை கல்லாமல் பாகம் படும்' என்பது பழமொழி. விச்சை - கல்வி; வித்தை.

159. திருடரின் காணிக்கை

     பல நாட்களும் அரசனுக்குரிய தொழில்களைச் செய்து, அவனுடைய செல்வத்தைக் களவு செய்து உண்டு களித்தவர்கள், அரசன் தமக்குத் துன்பஞ் செய்யாமல் இருக்க வேண்டும் என்று விரும்பியவர்களாக, அவனுக்குப் பொன் அணிகளைக் காணிக்கையாகக் கொண்டு கொடுத்துச் சென்றடைதல், குவளை மலரை அதன் தண்டிலே உரித்த நாரினாலேயே கட்டுவதைப் போன்றதாகும்.

பன்னாள் தொழில்செய்து உடைய கவர்ந்துண்டார்
இன்னாமை செய்யாமை வேண்டி இறைவர்க்குப்
பொன்யாத்துக் கொண்டு புகுதல் 'குவளையைத்
தன்னாரால் யாத்து விடல்'.

     அவனிடம் திருடியவற்றுள் சிறிதையே அவனுக்குக் காணிக்கையாகத் தந்து, அவன் அன்பைப் பெற முயல்வதனால், இப்படிக் கூறினார். 'குவளையைத் தன்னாரால் யாத்து விடல்' என்பது பழமொழி.

160. தீவினையின் பயன்

     எத்துணையோ பல்வகையான பிறப்புக்களிலும் தாம் தேடித் தொகுத்துக் கொண்ட வினைப்பயன்கள், தம் மேல் வந்து இப்பிறப்பிலே பொருந்துதலுக்கு அஞ்சி, எவ்வளவு சிறிய தீவினையும் தமக்குத் துன்பம் விளைவித்துக் கழிந்து போகும் போது, அதனைப் பொறுக்க முடியாமற் போவதைக் காண்கின்றோம். அதுதான், ஒரு குழியினிடத்திலே தோண்டிய புழுதியானது மீண்டும் அதனுட் கொள்ளாது அதிகமாகவே இருப்பதைப் போன்றதாகும்.

எனைப்பல் பிறப்பினும் ஈண்டித்தாம் கொண்ட
வினைப்பயன் மெய்யுறுதல் அஞ்சி - எனைத்தும்
கழிப்புழி ஆற்றாமை காண்டும் அதுவே
'குழிப்புழி ஆற்றா குழிக்கு'.

     செய்த தீவினையைவிட, அதன் பயனாக அனுபவிக்கும் தீவினைப் பயன்மிக அதிகமாயிருக்கும் என்பது கருத்து. தீவினை செய்தற்கு அஞ்ச வேண்டும் என்பது முடிவு. 'குழிப்பூழி ஆற்றா குழிக்கு' என்பது பழமொழி.

161. அவையை ஊடறுக்க எண்ணக் கூடாது

     காற்றினாலே மோதி எறியப்படும் அலைகள் கரைமேற் சென்று உலவிக் கொண்டிருக்கும் கடற்கரைகளுக்கு உரிய தலைவனே! சூரியனையே ஊடறுத்துச் சென்றாலும் செல்லலாம், அறிஞர்கள் கூடியிருக்கிற அவையினை ஊடறுத்துப் போகவே கூடாது. அப்படிப் போவது, அறிவுடைமையும் அன்று; பிறந்த குடிக்கு அழகிய செயலும் அன்று; அறிவதாகிய அறநெறியின் பாற்பட்டதும் அன்று. கீழ்மக்கள் என்று சொல்லப்படுகின்ற பழிச் சொல்லையே அது கொண்டு தரும்.

அறிவன்று அழகன்று அறிவதூஉம் அன்று
சிறியர் எனப்பாடம் செய்யும் - எறிதிரை
சென்றுலாம் சேர்ப்ப! 'குழுவத்தார் மேயிருந்த
என்றூடு அறுப்பினும் மன்று'.

     சான்றோர் அவையிலே அவர்களை மறுத்துப் பேசுவது கூடாது; அது அவமானமே தரும் என்பது கருத்து. 'குழுவத்தார் மேயிருந்த என்றூடு அறுப்பினும் மன்று' என்பது பழமொழி.

162. பணக்காரரிடம் பலர் வருவார்கள்

     எருமையின் மேலே நாரையானது இருந்து உறங்கி வழிந்து கொண்டிருக்கும் நீர் வளமுடைய ஊரனே! குளத்தினைத் தோண்டியவர் எவரும், அதன்பால் இருப்பதற்காகத் தவளைகளை அழைத்து வரத் தேடிச் செல்வது இல்லை. அவை தாமே வந்து சேர்ந்து விடும். அது போலவே, பெறுவதற்கு அருமையுடையதான பொருளை உடையவர்களும், தங்களிடம் காரியம் இருக்கின்றவர்களைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை; தாமாகவே பலர் அவரிடம் வந்து சேர்ந்து விடுவார்கள்.

அருமை யுடைய பொருளுடையார் தங்கண்
கருமம் உடையாரை நாடார் - எருமைமேல்
நாரை துயில்வதியும் ஊர! 'குளந்தொட்டுத்
தேரை வழிச்சென்றார் இல்'.

     'பணக்காரர் பின் பத்துப் பேர்' என்ற பழமொழியையும் இதனுடன் கருதுக. 'குளந்தொட்டுத் தேரை வழிச் சென்றார் இல்' என்பது பழமொழி.

163. கீழோர் தாமே அழிவர்

     முத்து மாலைகள் விளங்குகின்ற மார்பினை உடையவனே! குற்றமற, நல்லொழுக்கத்தைப் பேணி நடந்து வராத கீழ்மக்கள் செய்த பிழைகளை மேன்மக்கள், தம்முடைய உள்ளத்திலே பெரிதாகக் கொண்டு, அவருக்கு எதிராக எதனையும் செய்ய முயலுதல் வேண்டாம். அப்படி முயல்வது, சிறிய நரியை அழிப்பது கருதி நல்ல 'நாராயணம்' என்னும் அம்பினைத் தொடுக்க நினைப்பது போன்றதாகும்.

காழார மார்ப! கசடறக் கைகாவாக்
கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர்
உள்ளத்துக் கொண்டுநேர்ந்(து) ஊக்கல் 'குறுநரிக்கு
நல்லாநா ராயம் கொளல்'.

     கீழோரை அழிக்கச் சான்றோர் முயலவேண்டாம்; அவர் தாமே அழிந்து விடுவர் என்பது கருத்து. நாராயம் - நாராயண அத்திரம். 'குறுநரிக்கு நல்ல நாராயம் கொளல்' என்பது பழமொழி.

164. வேலையை விட்டு நீக்குதல்

     ஒரு வேலையைச் செய்வதற்குத் தகுதி உடையவர் என்று ஒருவரை நியமித்துவிட்டு, அவர் பேரில் சந்தேகித்து, அவரிடம் எல்லாவிதமான விளக்கமும் கேளாமலேயே அவரை அந்தப் பொறுப்பினின்றும் நீக்கி விடுதல், மிகவும் கீழான பண்பிற்குப் பொருந்தியதொரு செயலாகும். 'அது' சிறுபிள்ளைகள் கோலை நட்டு விளையாடுதலைப் போன்றது எனலாம்.

உறுமக்க ளாக ஒருவரை நாட்டிப்
பெறுமாற்றம் இன்றிப் பெயர்த்தே யொழிதல்
சிறுமைக்கு அமைந்ததோர் செய்கை அதுவே
'குறுமக்கள் காவு நடல்'.

     குழந்தைகள் கோலை நடுவதாகச் சொல்லிச் செடிகளைப் பெயர்த்துப் பெயர்த்து நட்டு விளையாடுவார்கள். எதுவும் ஓரிடத்திலே நிலைத்து இருக்க விடுவது அவர்கள் இயல்பன்று. அது போன்ற அறியாமைச் செயல் என்பது கருத்து. 'குறுமக்கள் காவு நடல்' என்பது பழமொழி.

165. போகூழானால் முயற்சியும் பயன் தராது

     பூக்களிடையே புகுந்து வண்டுகள் மொய்த்துக் கொண்டு ஆரவாரிக்கும் ஊரனே! எங்கும் வெற்றி கொண்டவனாக வந்து கொண்டிருக்கும் ஒரு பேரரசன் தன் நாட்டினுள் புகுந்த விடத்து, அதனை ஆளும் குறுநில மன்னன் பணிந்து போவதல்லது எதிர்த்துச் செய்யக் கூடியது யாதுமில்லை. அது போலவே, பொருளை நிறைவு செய்யும் முயற்சியும், துன்பமே துணையாகத் தெய்வமானது முடிவு செய்த காலத்தே, எந்த விதமான பயனையும் செய்வதில்லை.

எவ்வம் துணையாய்ப் பொருள்முடிக்கும் தாளாண்மை
தெய்வம் முடிப்புழி என்செய்யும்? - மொய்கொண்டு
பூப்புக்கு வண்டார்க்கும் ஊர! 'குறும்பியங்கும்
கோப்புக் குழிச்செய்வ(து) இல்'.

     நல்ல ஊழ்வினை இல்லாது போனால், செல்வம் முயற்சியாலும் வந்து வாய்க்காது என்பது கருத்து. 'குறும்பு, இயங்கும், கோ புக்குழிச் செய்வது இல்' என்பது பழமொழி.

166. கொடியவர் மனம் மாறுவதில்லை

     நாள்தோறும் கையின்கண் இருப்பதாகவே வளர்த்து வந்தாலும், காடைக்கு மனமெல்லாம் வயற்புறங்களிலேயே ஈடுபட்டிருக்கும். அது போலவே, காட்டின் கண் வாழும் வாழ்க்கை முறைமையினை உடையவர்களான கொடுந் தொழில் செய்யும் மக்களை, நாட்டின் கண்ணே வாழுமாறு வேண்டியன செய்து உதவினாலும், அவர்கள் நல்ல முறையிலே நடக்க மாட்டார்கள்.

காடுறை வாழ்க்கைக் கருவினை மாக்களை
நாடுறைய நல்கினும் நன்கொழுகார் - நாடொறும்
கையுள தாகி விடினும் 'குறும்பூழ்க்குச்
செய்யுள(து) ஆகும் மனம்'.

     மக்கள் தொடர்ந்து பழகிவிட்ட வாழ்வு முறைகளை மாற்றுவது அவ்வளவு எளிதன்று. என்ன செய்தாலும் அவர்களின் இயல்பான குணம் போகாது என்பது கருத்து. 'குறும்பூழ்க்குச் செய்யுளது ஆகும் மனம்' என்பது பழமொழி.

167. நம்பிக்கைத் துரோகிகள்

     உண்மையான வழிகளிலேயே நிலைபெற்று அதனால், அரசனால் மிகவும் மதிப்புடனும் கருதப்பட்டவர்கள் கைகடந்து நின்று, அந்த அரசன் சினங்கொள்ளும் செயல்களைச் செய்து நடப்பவர்களாகி, வஞ்சனையையும் மேற்கொண்டவர்களாக, அந்த அரசனையே கொன்றார்களானால், அவர்கள் பனையைத் தம்மேலேயே விழுமாறு வெட்டியவர்கள் போன்றவர்களாவர்.

மெய்ம்மையே நின்று மிகநோக்கப் பட்டவர்
கைம்மேலே நின்று கறுப்பன செய்தொழுகிப்
பொய்ம்மேலே கொண்டவ் விறைவற்கொன் றார் 'குறைப்பர்
தம்மேலே வீழப் பனை.'

     அந்த அரசன் அழிய, நம்பிக்கைத் துரோகிகளான அவர்கள் அழிவிற்கும் அதுவே காரணமாகிவிடும் என்பது கருத்து. 'குறைப்பர் தம் மேலே வீழப் பனை' என்பது பழமொழி.

168. உயர்ந்தோரின் சிறு குற்றம்

     அளவு கடந்த தீய செயல்களையே வெகுண்டு பல நாட்கள் செய்து வந்த போதும், கீழ்மக்களிடத்திலே, அவற்றைப் பற்றிய ஒருவிதமான பழியும் தோன்றுவதில்லை. அது அவர் இயல்பு எனச் சான்றோர் ஒதுக்கி விடுவர். ஆனால், உயர்ந்த நிலையிலே உள்ளவர்களிடத்தே தோன்றிய குற்றமானது ஒன்றாகவே இருந்தாலுங்கூட, அது குன்றின் மேலே இட்டு வைத்த விளக்கைப் போல நெடுந்தொலைவுக்கு தெரிந்து பழிக்கப்படுவதாக ஆகிவிடும்.

கன்றி முதிர்ந்த கழியப்பன் னாள்செயினும்
ஒன்றும் சிறியார்கண் என்றானும் - தோன்றாதாம்
ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்
'குன்றின்மேல் இட்ட விளக்கு'.

     உயர்ந்தோர் - உயர்குடியினரும், உயர் நிலையினரும் ஆம். உயர்ந்தோர் தம்பால் எவ்விதச் சிறு குற்றமும் ஏற்படாதவாறு விழிப்புடன் நடத்தல் வேண்டுமென்பது கருத்து. 'குன்றின் மேல் இட்ட விளக்கு!' என்பது பழமொழி.

169. நல்ல குடியினர் எவர்?

     தம்மை அண்டி வந்தவர்களின் துன்பங்கள் முழுவதும் நீங்குமாறு தாராளமாகவே உதவிகளைச் செய்தும், எப்போதும் குற்றமற்றவைகளைச் செய்யாதவர்களாக விளங்குபவர்கள் மிகவும் வளமுடையவர்களாகவே இருந்தாலுங் கூடச் சிறப்புடையவர் ஆக மாட்டார்கள். குற்றம் அறுமாறு மாட்சி உடையதாக விளங்கும் மனம் உடையவர்கள் ஆவதே சிறப்பாகும். அப்படி ஆகாத கூளங்கள் ஒரு போதும் நல்ல குடியினராக ஆகவே மாட்டார்கள்.

பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து
ஆசறு செய்யாராய் ஆற்றப் பெருகினும்
மாசற மாண்ட மனமுடையர் ஆகாத
'கூதறைகள் ஆகார் குடி.'

     தடபுடலாக எவ்வளவு தருமங்கள் செய்தாலும், எவ்வளவு செல்வம் உடையவரானாலும், குற்றமில்லாத நல்லொழுக்கம் இல்லாதவர்களானால், அவர்கள் நல்ல குடும்பத்தினர் ஆக மாட்டார்கள் என்பது கருத்து. 'கூதறைகள் ஆகார் குடி' என்பது பழமொழி. கூதறை - கூளம்.

170. செயலை வெற்றியுடன் முடித்தல்

     பருத்த தோள்களை உடையவனான செம்பியனது சீற்றம், பரந்த வானத்தின் கண்ணே அசைந்து சென்று கொண்டிருந்த அசுரர்களின் கோட்டையையும் அழித்தது. அதனால், எந்தக் காரியத்தையும் அது வெற்றியுடன் முடியும் வழியினை ஆராய்ந்து அவ்வாறு முயன்று முடிக்க வேண்டும். கூர்மையான அம்பு அடிபொருந்த இழுத்துச் செலுத்தப்படும் போது, அதனை வந்து பாயாது தடுப்பதற்குரிய பாதுகாவல் எதுவுமே இல்லையாகும்.

வீங்குதோள் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு
முடியும் திறத்தால் முயல்க; தாம் 'கூரம்பு
அடியிழுப்பின் இல்லை அரண்'.

     எதனையும் முடிக்கும் வகையினை ஆராய்ந்து வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்பது கருத்து. செம்பியன் - சோழன், தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன். 'கூரம்பு அடியிழுப்பின் இல்லை அரண்' என்பது பழமொழி.

171. வலியவர் துணையால் வலிமை வரும்

     அழகுடனே தோன்றுகிற மேற் புள்ளிகளையும், ஒளி வீசும் ஆபரணங்களையும் உடையவளே! எருதானது வலியதாயிருந்ததானால், அதனுடைய கொம்பும் கூர்மையானதாகவே இருக்கும். அதனால், போர்த்தன்மை பொருந்திய ஆற்றலுடைய மன்னரைத் துணையாகச் சேர்ந்தவர்கள், மற்றவர்களுக்குப் பயந்து, தாம் மனம் தளர்தலும் உண்டோ? தளர வேண்டியதில்லை.

செருக்கெழு மன்னர் திறனுடையார் சேர்ந்தார்
ஒருத்தரை அஞ்சி உலைதலும் உண்டோ?
உருத்த சுணங்கின் ஒளியிழாய்! 'கூரிது
எருத்து வலியதன் கொம்பு'.

     எருது வலியதானால், அதனைச் சேர்ந்த கொம்பும் கூர்மையுடையதாகப் பகையை அழிக்கும் ஆற்றலைப் பெறுவது போலத் தாம் வலியற்றவரும் வலியுடைய மன்னரைச் சேர்ந்தால் வலிமையாளர் ஆவர் என்பது கருத்து. 'கூரிது எருத்து வலியதன் கொம்பு' என்பது பழமொழி.

172. கொடையும் கூலிவேலையும்

     வெற்றித் தன்மையுடைய குதிரையைப் போல அலைகள் ஆரவாரத்துடன் பாய்ந்து வருகின்ற, கடலின் குளிர்ச்சியான கரைகளையுடைய தலைவனே! வந்து சேர்கின்ற பயனைப் பற்றியும் கருதாது, மிகுதியாகப் பகுத்தறிவு என்பது ஒன்றும் இல்லாமல், புகழ் ஒன்றையே கருத்தாகக் கொண்டு ஈகின்றவர்களின் கொடையானது பயனற்றதாகும். அது, கூலிக்கு வேலை செய்து உண்ணுவது போல்வதாகும்.

பயன்நோக்கா(து) ஆற்றவும் பாத்தறிவொன் றின்றி
இசைநோக்கி ஈகின்றார் ஈகை - வயமாப்போல்
ஆலித்துப் பாயும் அலைகடல் தண்சேர்ப்ப!
'கூலிக்குச் செய்துண்ணு மாறு'.

     கூலிக்கு வேலை செய்பவன் கூலியைக் கருத்தாகக் கொண்டவனே அல்லாமல், செய்யும் வேலையின் தராதரங்களையோ, அல்லது அதனால் வரும் பயனையோ நினைக்க மாட்டான். அது போன்றதே இவர் கொடையும் என்க. 'கூலிக்குச் செய்துண்ணுமாறு' என்பது பழமொழி.

173. நிலையாமை அறிந்து நன்னெறி நாடுக

     செல்வத்தால் வரும் வளமையும், புகழும், வலிமையும், வனப்பும், இளமையும், குடிப்பிறப்பும் இவை எல்லாம் உள்ளனவாக மதித்து, அதற்கு அஞ்சித் தன் செயலைக் கைவிட்டுப் போகும் தன்மை, கூற்றத்திற்குக் கிடையாது. அதன் பிடியினின்றும் தப்பிப் பிழைத்துப் போனவர்களாக அறியப்படுபவர்கள் ஒருவருமே இலர்.

வளமையும் தேசும் வலியும் வனப்பும்
இளமையும் இற்பிறப்பும் எல்லாம் - உளவாய்
மதித்தஞ்சி மாறுமஃ தின்மையால் 'கூற்றம்
குதித்துய்ந்து அறிவாரோ இல்'.

     இந்த மதிப்புக்கள் எல்லாம் சாவினை வெல்லும் சக்தி உடையன அன்று. அதனால், நல்ல நெறியிலே சென்று, சிறப்புடையவராக முயல்க என்பது கருத்து. 'கூற்றம் குதித்து உய்ந்து அறிவாரோ இல்' என்பது பழமொழி.

174. பெரியார் பகை கூடாது

     நோன்புகள் பலவற்றையும் மேற்கொண்ட பெருமையினை உடையவர்களும், கூற்றத்தை அதன்பின்னே நின்று கைகொட்டி வலிய அழைப்பவர்கள் அல்லர். இந்த உண்மையைப் போற்றாது, சீதையைக் கவர்ந்ததால், கூற்றத்தை வலிய அழைத்துக் கொண்டான். அதனால், மிகவும் பெரியவர்களுடைய பகைமையை எவருமே விரும்பி மேற்கொள்ளாமலிருப்பார்களாக.

ஆற்றப் பெரியார் பகைவேண்டிக் கொள்ளற்க
போற்றாது கொண்டரக்கன் போரில் அகப்பட்டான்
நோற்ற பெருமை உடையாரும் 'கூற்றம்
புறங்கொம்மை கொட்டினார் இல்'.

     "பகைமையை வேண்டிக் கொள்வதுதான் தவறு. அதுவாக நேர்ந்தால், போரிட்டு அழிவது சிறப்பே அன்றி இழிவு ஆகாது" என்பது கருத்து. 'கூற்றம் புறங் கொம்மை கொட்டினார் இல்' என்பது பழமொழி.

175. பொறாது பொறுத்தல்

     செய்யத்தகாத காரியம் ஒன்றைச் செய்தவரை, அவர் தனக்கு மிகவும் வேண்டியவரே யானாலும், அரசன் அதற்கேற்பத் தண்டித்து விட வேண்டும். அப்படியில்லாமல், வெளியே பொறாதவன் போலக் காட்டிக் கொண்டு கடிந்து பேசிவிட்டுப் பின் பொறுத்து மன்னிப்பது தவறாகும். அது மனம் பொறாத செய்கைகளை மேலும் செய்து கொள்ளுதலைப் போல, வேதனை தருவதாகவே முடியும். அதுதான் முதுகின் மேல் எழுந்த கட்டிபோல எப்பொழுதும் துன்பந் தருவதென்று சொல்லப்படும்.

உறாஅ வகையது செய்தாரை வேந்தன்
பொறாஅன் போலப் பொறுத்தால் - பொறாஅமை
மேன்மேலும் செய்து விடுதல் அதுவன்றோ
'கூன்மேல் எழுந்த குரு'.

     'அரசன் தனக்கு வேண்டியவர் கருதி நீதி கோணுதல், அவனுக்கு வேதனையாகவே முடியும்' என்பது கருத்து. 'கூன் மேல் எழுந்த குரு' என்பது பழமொழி. கூன் - முதுகு; கூன் விழுந்த முதுகுமாம்.

176. பெரியார் வருந்தக் கேடு வரும்

     அடும்பின் கொடிகளும் பூக்களும் நிறைந்து அழகு செய்து கொண்டிருக்கும் கடற்கரைச் சோலைகளுக்கு உரியவனே! நெடுங்காலமாகவே தம்மோடு தொடர்பு கொண்டு வந்தவர்கள், தீய தன்மையிலே இருப்பக் கண்டு பெரியோர்கள் தம் உள்ளம் நடுக்கமுற்றுப் பெரிதும் வருந்துவார்கள். அவர்கள் வருந்தியதும் கொடுஞ்செயலை உடைய அவனுடைய குடும்பமே அழிந்து போகும்.

நெடுங்காலம் வந்தார் நெறியின்மை கண்டு
நடுங்கிப் பெரிதும் நலிவார் பெரியர்
அடும்பார் அணிகானற் சேர்ப்ப! 'கெடுமே
கொடும்பாடு உடையான் குடி'.

     சான்றோர்களின் மனம் வருந்துமாறு செய்வது ஒருவனுடைய குடும்பத்தை வேருடன் அழித்துவிடும் என்பது கருத்து. 'கெடுமே கொடும்பாடு உடையான் குடி' என்பது பழமொழி.

177. உளம் கலவாத நண்பர்கள்

     மொட்டுக்கள் தம் பிணிப்பவிழ்ந்து மலர்ந்து கொண்டிருக்கின்ற மாலையானது விளங்கிக் கொண்டிருக்கும் மார்பினை உடையவனே! முட்டுப்பாடு ஏதும் இல்லாமல் ஒருவர் வளமுடையவரா யிருக்கின்ற சமயத்திலே, அவர் வீட்டிலே சமைத்ததைத் தின்பவர்கள் ஆயிரம் பேர்களாக இருப்பார்கள். அவர்கள், துன்பம் வந்து அழிவெய்தப் போகும் நிலையடைந்த காலத்திலோ, கேடுற்ற அவர்களுக்கு உதவும் நண்பர்கள் எவருமே இலராவர்.

முட்டின்(று) ஒருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார் மார்ப! கலியூழிக் காலத்துக்
'கெட்டார்க்கு நட்டாரோ இல்'.

     'இருந்தால் வருபவர் ஆயிரம் பேர்; இழந்தால் வருபவரோ எவரும் இலர்' என்பது கருத்து. 'கெட்டார்க்கு நட்டாரோ இல்' என்பது பழமொழி.

178. பொல்லாங்கு பேசுவார் நட்பு

     நாம் சிறந்தவரென்று நண்பராகக் கொண்டிருக்கும் ஒருவரைப் பற்றி மற்றொருவர் பொல்லாங்குபடப் பேசுகின்றதை அறிந்தால், 'இவர் நம்மையும் பற்றிப் பிறரிடம் இப்படித்தானே பேசுவார்' என்று கருதி அவரை நண்பராகக் கொள்ளாது விடுக. வேம்பு, தேவர்களே தின்றாலுங் கூடக் கசக்கவே செய்யும். அது போல அவர்களும் எவரிடத்தே யானாலும் நல்லமுறையில் நடக்கவே மாட்டார்கள்.

தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால்
இற்றே அவரைத் தெளியற்க - மற்றவர் யாவரே யாயினும் நன்கொழுகார் 'கைக்குமே
தேவரே தின்னினும் வேம்பு'.

     'பிறர் பொல்லாங்கு பேசுபவரோடு நண்பராயிருத்தல் கூடாது' என்பது கருத்து. 'கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு' என்பது பழமொழி.

179. கொடுப்பவன் கெடுவதில்லை

     நெருங்கி வளர்ந்திருக்கிற, இருள் போன்ற கரிய, ஐவகையாக முடிக்கும் கூந்தலை உடையவளே! தம்மை வந்து அடைந்து ஒன்றை யாசித்து நின்றவர்களுக்கு அந்த ஒரு பொருளைக் கொடுத்தவர்களை, அப்படிக் கொண்டவர்களே பிற்காலத்து 'இவர் ஏழையாவர்' என்று சொல்லிப் போனாலும் போகட்டும்; எத்தகையவர்களுக்கே யானாலும் கொடுத்து அதனால் ஏழையாயினவர் எவரும் இல்லை.

அடுத்தொன்(று) இரந்தார்க்கொன்று ஈந்தாரைக் கொண்டார்
படுத்தேழை யாமென்று போகினும் போக
அடுத்தேறல் ஐம்பாலாய்! யாவர்க்கே யாயினும்
'கொடுத்தேழை யாயினர் இல்'.

     வாங்கிச் செல்பவரே நன்றியில்லாமல் பழித்துச் செல்லும் காலத்தினும், கொடுத்தவர் ஏழைமை அடைவதில்லை என்பது கருத்து. 'கொடுத்தேழை யாயினார் இல்' என்பது பழமொழி.

180. கொடையின் அளவு

     தன்னுடைய புகழைப் பாக்களாகத் தொடுத்துப் பாடிய பெரும்புலவனான கோதமனின் சொல்லிலே வெளிப்பட்ட, அவனுடைய குறையானது தீரும்படியாக, துக்கத்தை யானும் என்னவரும் அடையத் தருவாயாக என்றவனுக்கு, அதற்குரிய வேள்வியின்றி அவனை அனுப்பி வைத்து, வாழ்வீராக என வாழ்த்தியும் விடை கொடுத்தான் சேரமான். அதனால், இரப்பவர்களை, இன்ன தன்மையர் என்று கருதவே வேண்டாம். கொடுக்கின்றவர் தம்முடைய சிறப்பின் அளவையறிந்து அதற்கேற்பவே கொடுப்பார்கள்.

தொடுத்த பெரும்புலவன் சொற்குறை தீர
அடுத்தர என்றாற்று வாழியரோ என்றான்
தொடுத்தின்னார் என்னலோ வேண்டா 'கொடுப்பவர்
தாமறிவார் தஞ்சீர் அளவு'.

     கொடை, கொடுப்பவர் தகுதியை ஒட்டியதே, வாங்குபவர் தகுதியை ஒட்டியதன்றென்பது கருத்து. 'கொடுப்பவர் தாமறிவார் தம் சீர் அளவு' என்பது பழமொழி. இங்கே குறித்தது பாலைக் கோதமனாரை.

181. மனக்கசப்புத் தரும் கடன்

     கடனாகக் கொண்ட ஒரு சிறந்த பொருளைக் கடனாளியின் கையிலே விட்டு வைத்திருப்பவர்கள், அவரிடத்திலே சென்று, எம்பொருளை இன்றே எமக்குத் தருவீராக என்றால், அவர் தருவதே முறை. அஃதன்றிப் பகையினை மேற்கொண்டவர் போலப் பேசத் தொடங்கி, அந்தப் பொருளைக் கடனாகப் பெற்றுக் கொண்டவர் வெகுண்டால், அது விளையாட்டாகச் சொன்னதே யானாலும், மனக் கசப்பைத் தருவதாய் விடும்.

கடங்கொண்ட ஒண்பொருளைக் கைவிட் டிருப்பார்
இடங்கொண்டு தம்மினே - என்றால் தொடங்கிப்
பகைமேற்கொண் டார்போலக் 'கொண்டார் வெகுடல்
நகைமேலும் கைப்பாய் விடும்'.

     வாங்கிய பொருளைத் தந்தவர் கேட்டதும் கொடாமல் இருப்பது மிகவும் தவறு. 'கொண்டார் வெகுடல் நகை மேலும் கைப்பாய் விடும்' என்பது பழமொழி.

182. வித்தைப் பொரிக்கும் மூடர்

     தம் உள்ளத்திலே ஆசைகள் அற்றவனாக அடங்கியிருந்து, ஐம்புலன்களையும் தம் ஆணைக்குள் அகப்படுமாறு செய்து, அவை மேற்செல்லாதபடி காத்துத் தாம் ஏற்றுத் தொடங்கிய துறவு நெறியின் கண், மனம் வாக்குக் காயம் என்ற மூன்றினாலும் மாட்சிமையுடையவராக விளங்கி, இவ்வுலகத்தே உடம்பானது ஒழிந்து போகுமாறு கைவிட்டுச் செல்லும் மறுமை நெறிக்குப் பாதுகாவலான உறுதியை, இளமையிலேயே செய்யாதவர்களே தீயின் மீது விதை நெல்லைப் பெய்து பொரித்து உண்ணும் மூடர்களாவார்.

அடங்கி அகப்பட ஐந்தினைக் காத்துத்
தொடங்கிய மூன்றினால் மாண்டீண்டு - உடம்பொழியச்
செல்லும்வாய்க்(கு) ஏமம் சிறுகாலைச் செய்யாரே
'கொள்ளிமேல் கொட்டு வைத்தார்'.

     விதை நெல்லால் பின்வரும் பயன் கருதாமல், வாய்ச் சுவைக்கு அடிமையாகிப் பொரித்துத் தின்பவர் அறிவிலிகளே; உடலெடுத்ததன் பயனாக உயிர்க்கு உறுதி தரும் காரியங்கள் செய்வதை மறந்து உடலின்பங்களிலே ஈடுபடுபவர் அவர். 'கொள்ளி மேல் கொட்டு வைத்தார்' என்பது பழமொழி. 'வித்துக் குற்றி உண்டாங்கு' என்பதும் இந்த மடமை குறித்ததே.

183. சொல்லால் வளைக்கவும்

     "யாம் உலகனைத்தையும் ஆள்வோம்" என்பது சொல்லும் அரசர்கள், வரையறை என்பதொன்று இல்லாமல் தீமை செய்தவர்களையுங் கூட அவசரப்பட்டுக் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். வீட்டுத் தோட்டத்திலே ஒருவன் தனக்குப் பயன் தருமாறு வளர்த்து வரும் மரத்தைப் போலச் சொற்களால் அவனை வளைத்துத் தமது அடி நிழலின் கீழ் இருக்கச் செய்து அடக்கியே கொள்வார்கள்.

எல்லையொன்(று) இன்றியே இன்னாசெய் தாரையும்
ஒல்லை வெகுளார் உலகாள்வதும் என்பவர்
சொல்லின் வளாஅய்த்தம் தாள்நிழல் கொள்பவே
'கொல்லையுள் கூழ்மரமே போன்று'.

     மன்னர்கள், தம் பகைவரையும் தமக்கு அடிப்பட்டவராக்கி ஆள்தலையே செய்ய வேண்டும் என்பது கருத்து. 'கொல்லையுள் கூழ் மரமே போன்று' என்பது பழமொழி. கூழ்மரம் - கூழைப் பலாமரமும் ஆம்; பயன் தரும் பழமரமும் ஆம்.

184. குடிப்பிறப்பும் பண்பும்

     தாம் கற்றது ஒரு நூலேயாயினும், இல்லாது போயின காலத்தினும் கூட, நல்ல குடியிலே பிறந்தவர்கள், கல்வி ஒன்றை மட்டுமே அறிந்தவரினுங் காட்டில், மாட்சிமைப்பட மிகவும் நல்லவர்களாகவே விளங்குவார்கள். கற்றோர் நல்ல பண்புகளைப் பற்றி அழகுடனே சொல்வதற்காக அவரிடம் சொல்ல வேண்டாம். கொல்லர்களுடைய குடியிருப்பிலே சென்று தைக்கும் ஊசியை விலை கூறுவோர் இல்லையல்லவா!

கற்றதொன் றின்றி விடினும் குடிப்பிறந்தார்
மற்றொன் றறிவாரின் மாணமிக நல்லால்
பொற்ப உரைப்பான் புகவேண்டா 'கொற்சேரித்
துன்னூசி விற்பவர் இல்'.

     நல்ல குடியிற் பிறந்தவர்களிடம் படிந்திருக்கும் பண்பு நலம் சொல்லப்பட்டது. 'கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல்' என்பது பழமொழி.

185. சிறந்ததைச் சிறந்ததே வெல்லும்

     விரும்பப்படும் அணிகலன்கள் அணிந்த பெண்களின் வெருண்ட மானின்பிணை போன்ற மடமையான பார்வையானது, ஆடவரிடம் நிறைந்திருக்கும் நாணத்தினையும் வெளிப்படாமல் மறைக்கும் வல்லமை உடையதாகும். யமுனை நதியினிடத்தே திருமாலையுங் கூடப் பின்னை என்பவள் தன்னழகினால் முன்னம் நாணிழந்து மயங்கச் செய்தனள். அதுவே ஒரு சிறந்த பண்பினை, மற்றொரு சிறந்த பண்பே அழிக்கின்ற தன்மை ஆகும்.

விழும்இழை நல்லார் வெருள்பிணைபோல் நோக்கம்
கெழுமிய நாணை மறைக்கும் - தொழுநையுள்
மாலையும் மாலை மறுக்குறுத்தாள் அஃதால்
'சால்பினைச் சால்பறுக்கு மாறு'.

     மகளிரின் வெருண்ட நோக்கம் ஆடவரின் தகுதியை மறைத்து அவர்க்கு அவரை அடிமைப்படச் செய்வதென்பது கருத்து. 'சால்பினைச் சால்பு அறுக்குமாறு' என்பது பழமொழி.

186. பகையைக் காலமறிந்து வெல்லுதல்

     போரின்கண் வலிய படைத்துணை உடைய பகைவர்களை இகழ்ந்து, அந்த வலிமையில்லாதவர்கள் எதிர்த்து நிற்பது அவருக்கே துன்பந்தருவதாகும். அதனால், அப் பகைவரை விட்டு நெடுந்தொலைவிற்கு ஓடிப்போய், என்ன சூழ்ச்சிகளைச் செய்தானாலும் உயிர் பிழைத்துக் கொள்க. சாவாதிருப்பவன், படைத்துணை பெற்று என்றாவது அந்தப் பகைவனை வென்று, தன் முன்கையில் கடகமும் அணிந்து கொள்ளக்கூடும்.

இகலின் வலியாரை எள்ளி எளியார்
இகலின் எதிர்நிற்றல் ஏதம் - அகலப்போய்
என்செய்தே யாயினும் உய்ந்தீக 'சாவாதான்
முன்கை வளையும் தொடும்'.

     பகை பெரிதானால் அதனை எதிர்த்து மோதி அழியாது, தப்பிச் சென்று, தக்க துணையுடன் வந்து வெல்வதே சிறப்பு என்பது கருத்து. 'சாவாதான் முன்கை வனையுந் தொடும்' என்பது பழமொழி. வனை - வீரர்கள் அணியும் கடகம். தொடுதல் - அணிதல்.

187. தேசத்துரோகி என்ன ஆவானோ?

     மை தீற்றப்பெற்று அமர்ந்திருக்கும் கண்களையும், மாட்சிமையுடைய அணிகளையும் உடையவளே! அடர்ந்து எழுந்த போர்க்களத்தினிடத்தே பகைவர்களின் வாயினின்றும் போந்த பொய்யான உரைகளைக் கேட்டு, அதனால் கீழறுக்கப்பட்டுத் திரிபவர்களுக்கு என்ன தான் வீரமோ? அறிவு நிறைந்தவர்கள், பிறர் கைப்பொருளை உண்டவரானாலும் கூட, எப்போதும் உண்மையையே பேசுவார்கள்.

மொய்கொண் டெழுந்து அமரகத்து மாற்றார்வாய்ப்
பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க்(கு) என்கொலோ?
மையுண்(டு) அமர்ந்தகண் மாணிழாய்! 'சான்றவர்
கையுண்டும் கூறுவர் மெய்'.

     அறை போதல் - லஞ்சம் வாங்கிப் பகைவரோடு சேர்ந்து கொள்ளுதல். அறிவுடையார் அப்படித் துரோகம் செய்ய மாட்டார் என்பது கருத்து. தேசத் துரோகிகளின் அழிந்த பண்பு கூறப்பட்டது. 'சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய்' என்பது பழமொழி.

188. பகைவர்க்கும் அருளுதல்

     பாம்பு தெளிவாக அடித்துக் கொல்லப்படும் கொடிய தன்மை உடையதே என்றாலும், சான்றோர் கூட்டத்திலே சென்றால், அதுவும் கூடச் சாகாமல் தப்பிவிடும். பகைவர்கள் படும் துன்பத்தைத் தெளிவாக உண்மையெனக் கண்டபோது, மேன்மக்கள் அவர்கள் பாலும் கண்ணோட்டஞ் செலுத்தி உதவவே செய்வார்கள்.

தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால்
மற்றுங்கண் ஓடுவர் மேன்மக்கள் - தெற்ற
நவைக்கப் படுந்தன்மைத் தாயினும் 'சான்றோர்
அவைப்படின் சாவாது பாம்பு'.

     பகைவர்க்கும் துன்பத்தில் உதவுவது சான்றோர் பண்பு என்பது கருத்து. 'சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு' என்பது பழமொழி. அவர், இரக்கத்தால் அதனைக் கொல்லாது போக விடுவர் என்பதாம்.

189. கடனும் கடமையும்

     மடமாகிய பண்பினைக் கொண்டவளும், சாயலிலே மயிலைப் போன்றவளுமான பெண்ணே! அறிவாற் சிறந்த சான்றோர்கள், கடன் வாங்கியாவது செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாது செய்பவர்கள். அப்படிப்பட்டவர்கள், தொடர்ந்து வறுமையுடையவர்களாக இருத்தலால் ஒன்றைச் செய்யவியலாத காலத்தும், 'செய்யுங்காலம் வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்' என்று கருதி இருக்க மாட்டார்கள்; அதனை எப்படியும் செய்யவே முற்படுவார்கள்.

அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்
இடங்கண்(டு) அறிவாம்என்(று) எண்ணி இராஅர்
மடங்கொண்ட சாயல் மயிலன்னாய்! 'சான்றோர்
கடங்கொண்டும் செய்வார் கடன்'.

     சான்றோர் கடன் பெற்றும் கடமையைச் செய்பவர் என்பது கருத்து. கடமையில் தவறாத அவர் பண்பு சொல்லப்பட்டது. 'சான்றோர் கடங்கொண்டும் செயலார் கடன்' என்பது பழமொழி. கடம் - பாலை நிலமும் ஆம்; அதனைக் கடந்து போயும் கடமையைச் செய்வார் என்பதும் பொருந்தும்.

190. பகையை முதலில் நலியச் செய்தல்

     இயல்பாகத் தன்னுடைய பகையினை வெல்ல நினைப்பவன், தனக்குப் பாதுகாப்பாக, முன்னர் அயலாக அவருக்குள்ள பகைவர்களைத் தந்திரமாகத் தூண்டிவிட்டு ஒரு நயமான தன்மையிலே அதற்கேற்ற சினத்தையும் அவர்களுக்குக் கொடுத்து, அவர்களை முதலிலே பகைவனுடன் மோதச் செய்து, அவனைத் தன் கைக்கு எளிதாக விழுமாறு செய்து கொள்க. அப்படிச் செய்வதே, பெரிய குரங்கு, முதலிலேயே சிறிய குரங்கின் கையை விட்டுத் துழாவிச் சூடறிந்து கொள்ளுதலைப் போன்ற அறிவுள்ள செயல் ஆகும்.

இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தால்
கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே
'சிறுகுரங்கின் கையால் துழா'.

     பகைவரை முதலில் தான் வெல்ல நினையாது, பிற பிற பகைகளைத் தூண்டிவிட்டு நலியச் செய்து, பின் எளிதாக வெல்வதே அறிவுடைமை என்பது கருத்து. 'சிறுகுரங்கின் கையாற் றுழா' என்பது பழமொழி.

191. இலாபமான செயல் செய்பவரே அனைவரும்

     வெற்றியுடைய பறவையான கருடன் மீது ஊர்ந்து வருபவனும், உலகம் முழுவதையும் தாவி அளந்தவனுமான, அண்ணலான திருமாலேயானாலும் தனக்கு ஊதியமுடையதான ஒன்றைச் செய்யாதவர்கள் இல்லை. ஆகையால், சுற்றத்தார் நட்பினர் எனவெல்லாம் கருதிச் சென்று வரும் காலத்தினும் கூட, அவர் மறைத்துச் செய்யுங் காரியங்களைப் பற்றித் தெரிவதற்கு, அறிவுடையோர் முற்பட மாட்டார்கள்.

சுற்றத்தார் நட்டார் எனச்சென்று ஒருவரை
அற்றத்தால் தேறார் அறிவுடையார் - கொற்றப்புள்
ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்
'சீர்ந்தது செய்யாதார் இல்'.

     பிறர் இரகசியங்களை அறிந்து கொள்வதிலே அறிவுடையோர் முயல்வதில்லை என்பது கருத்து. 'சீர்ந்தது செய்யாதார் இல்' என்பது பழமொழி. சீர்ந்தது - சிறப்பாக அமைவது.

192. பொன்மேல் மணி போன்றது!

     மலைப் புறங்களிலே மூங்கிலோடு மூங்கில்கள் உரசிக் கொண்டிருக்கின்ற மலைநாடனே! சிறந்தனவாகிய இன்பங்களை அனுபவித்து லாபம் செல்வச் செழுமை உடையவர்கள், அறஞ் செய்து பிற உயிர்களினிடத்து அருள் உடையவராகவும் ஆதல், பொற்சுமையோடு அதன் மேல் மணிகளையும் வைத்துக் கொண்டு செல்வது போன்றதாகும்.

சிறத்த நுகர்ந்தொழுகும் செல்வம் உடையார்
அறஞ்செய்து அருளுடையர் ஆதல் - பிறங்கல்
அமையொடு வேய்கலாம் வெற்ப! அதுவே
'சுமையொடு மேல்வைப்ப மாறு'.

     செல்வர்கள், தாம் இன்புறுவதுடன், அறமும் அருளும் உடையவராகவும் விளங்குதல் சிறப்புடையதாகும். 'சுமையொடு மேல்வைப்பாமாறு' என்பது பழமொழி.

193. புதைத்து வைக்கும் செல்வம்

     பொருள்களை ஈயாது மறைத்து வைக்கும் இயல்பு உடையவர்கள், சேர்த்து வைத்த செல்வம், பகைவரைக் கடிதலையுடைய மன்னர்களுக்கே பயன்படுவதாகும் அல்லாமல், அப்படி வைத்தவர்களுக்கு இறுதிக் காலத்திற்கும் பயன்படாதேதான் போகும். அங்ஙனமில்லாமல், மிகவும் துன்பம் மிகுந்தவர்களுக்கு உதவும்படியாக அவன் ஒரு பொருளைக் கொடுத்தால், பாலை நிலத்திடையிலே பெய்த மழை போல, ஒரு போதும் நடை பெறாததேயாகும்.

கரப்புடையார் வைத்த கடையும் உதவா
துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால்
நிரப்பிடும்பை மிக்கார்க்கு உதவஒன் றீதல்
'சுரத்திடைப் பெய்த பெயல்'.

     புதைத்து வைத்த பணம் அவனுடைய வழியினர்க்கும் உதவாமல், இறுதியில் எவரோ எப்போதோ தேடி எடுக்க, அரசுக்குச் சொந்தமாய் விடும் என்று கொள்க. 'சுரத்திடைப் பெய்த பெயல்' என்பது பழமொழி. சுரப்பு - ஒளித்து வைத்தல்.

194. இளமையிலேயே கற்க வேண்டும்

     வழியை மிகவும் கடந்து போக விட்டுவிட்டுப் பின், பின் தொடர்ந்து சென்று வரிப்பணம் வாங்கியவர் எவரும் இல்லை. ஓடத்தை செலுத்திக் கரையிலே கொண்டு விட்ட பின் முறையான கூலி பெற்றவரும் எவருமில்லை. அவை போலக், கற்கத் தகுதியான இளமைப் பருவத்திலே கற்காத ஒருவன், முதுமைக்கண் கல்வியைப் போற்றுபவனாவான் என்பதும் பொருந்தாததேயாகும்.

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ? - ஆற்றச்
'சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே; இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்'.

     உரிய காலத்திலே செய்யாமல், பின்னர் செய்வோமென ஒதுக்கி வைப்பது எதுவும் உருப்படுவதில்லை என்பது கருத்து. 'சுரம் போக்கி உலகு கொண்டார் இல்', 'மரம் போக்கிக் கூலி கொண்டார் இல்லை' என்பன பழமொழிகள்.

195. நடவாத செயல்கள்

     மலையினின்றும் வீழ்கின்ற அருவிகள் விளங்கும் மலைநாடனே! புகழ் நிறைந்தவரான சான்றோர்கள் வறுமையினாலேயே ஒடுங்கி வாழ்கின்ற போது, நல்ல குடிமரபினர் கூட்டத்தினை இல்லாதவரான கயவர், செல்வத்தால் தலை நிமிர்ந்து பெருமை பெறுதல் ஆகிய இதுவே, சுரை நீரில் அமிழ்வதையும் அம்மி மிதப்பதையும் போன்றதாகும்.

உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
நிறையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்
வரைதாழ் இலங்கருவி வெற்ப! அதுவே
'சுரையாழ அம்மி மிதப்பு'.

     சுரை தாழ்வதுமில்லை; அம்மி மிதப்பதும் இல்லை. அதுபோலச் சான்றோர் பெருமை குறைவதுமில்லை; கீழோர் செல்வராய் நிமிர்ந்தாலும் சிறப்பதுமில்லை என்பது கொள்க. 'சுரையாழ அம்மி மிதப்பு' என்பது பழமொழி.

196. அறிவில்லாதவன் முடிவு

     பெண் மான்கள் தம்முடைய துணைகளை அழைத்துக் கொண்டிருக்கும் சிறந்த மலைநாடனே! கற்க வேண்டிய நூல்களைக் கற்ற அறிவுடையவர் பலரைத் தனக்குக் கண்ணாகப் பெற்றிராத ஓர் அரசன், யாதாயினும் துன்பம் வந்து இடர்ப்பட்ட பொழுதிலே தானே கொள்ளும் முடிவானது சுரை பொருந்திய யாழின் நரம்பை அறுத்துவிட்டு, இசைக்க முயல்வது போன்றதாகும்.

கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்
உற்றிடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்
மரையா துணைபயிரும் மாமலை நாட!
'சுரையாழ் நரம்பறுத் தற்று'.

     நரம்பறுத்த பின் யாழிலே இசை எழாது; அவ்வளவு மூடத்தனமாக இருக்கும் அவன் முடிவு என்பது கருத்து. அமைச்சர்கள் கல்வியில் வல்லவராக இருத்தல் வேண்டும் என்பதும் சொல்லப்பட்டது. 'சுரையாழ் நரம்பறுத் தற்று' என்பது பழமொழி.

197. அதிக வரியும்! அதன் பின் உதவியும்!

     தன்னை முற்றவும் பாதுகாவலாக எண்ணி அடைந்திருக்கின்ற குடிகளைத் தீயவைகளைச் செய்து துன்புறுத்தி, கொடுக்கும் இயல்பு உடையவனாக இருக்க வேண்டிய அரசன் கொடுங்கோலனாக மாறிக் குடிகள் மேல் கொள்ளும் இறைப்பொருளை அளவுக்கு அதிகமாகப் பெற்றுக் கொண்டு பின்னர் அவருக்கு உதவுதல், மயிலினது உச்சிக் கொண்டையை அறுத்து, அதற்கு உணவாக அதன் வாயிலே இடுவது போன்றதாகும்.

அடைய அடைந்தாரை அல்லவை செய்து
கொடைவேந்தன் கோல்கொடியன் ஆகிக் குடிகள்மேல்
கூட்டிறப்பக் கொண்டு தலையளிப்பின் அஃதன்றோ
'சூட்டறுத்து வாயில் இடல்'.

     'துன்புறுத்தி அதிக வரி வாங்கியவன், பின் என்ன நன்மை செய்தாலும் மக்கள் அவனைப் போற்ற மாட்டார்கள்' என்பது கருத்து. 'சூட்டறுத்து வாயில் இடல்' என்பது பழமொழி.

198. அரசாணையை நிறைவேற்றல்

     வெற்றிச் சிறப்புடைய வேலினனான வேந்தன் ஏவல் கொண்டால், யாம் ஒன்றும் அதனால் பெற்றிலேம் என்று சொல்வது அறியாமையேயாகும். அவன் ஏவலை எவ்விதக் குறைபாடும் இல்லாதவராகச் செய்து முடிக்க, அதுவல்லவோ, செய்க என்றவன், பின் உண்க என்று உபசரிக்கச் செய்யும் வழியாகும்.

வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால் யாமொன்றும்
பெற்றிலேம் என்பது பேதைமையே - மற்றதனை
எவ்வம் இலராகிச் செய்க அதுவன்றோ
'செய்கென்றான் உண்கென்னு மாறு'.

     செயலுக்கு ஏவியவன், அது முடிந்ததும், பாராட்டிப் பரிசுதராமற் போவதில்லை என்பது கருத்து. 'செய்கென்றான் உண்கென்னுமாறு' என்பது பழமொழி.

196. அறிவில்லாதவன் முடிவு

     பெண் மான்கள் தம்முடைய துணைகளை அழைத்துக் கொண்டிருக்கும் சிறந்த மலைநாடனே! கற்க வேண்டிய நூல்களைக் கற்ற அறிவுடையவர் பலரைத் தனக்குக் கண்ணாகப் பெற்றிராத ஓர் அரசன், யாதாயினும் துன்பம் வந்து இடர்ப்பட்ட பொழுதிலே தானே கொள்ளும் முடிவானது சுரை பொருந்திய யாழின் நரம்பை அறுத்துவிட்டு, இசைக்க முயல்வது போன்றதாகும்.

கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்
உற்றிடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்
மரையா துணைபயிரும் மாமலை நாட!
'சுரையாழ் நரம்பறுத் தற்று'.

     நரம்பறுத்த பின் யாழிலே இசை எழாது; அவ்வளவு மூடத்தனமாக இருக்கும் அவன் முடிவு என்பது கருத்து. அமைச்சர்கள் கல்வியில் வல்லவராக இருத்தல் வேண்டும் என்பதும் சொல்லப்பட்டது. 'சுரையாழ் நரம்பறுத் தற்று' என்பது பழமொழி.

197. அதிக வரியும்! அதன் பின் உதவியும்!

     தன்னை முற்றவும் பாதுகாவலாக எண்ணி அடைந்திருக்கின்ற குடிகளைத் தீயவைகளைச் செய்து துன்புறுத்தி, கொடுக்கும் இயல்பு உடையவனாக இருக்க வேண்டிய அரசன் கொடுங்கோலனாக மாறிக் குடிகள் மேல் கொள்ளும் இறைப்பொருளை அளவுக்கு அதிகமாகப் பெற்றுக் கொண்டு பின்னர் அவருக்கு உதவுதல், மயிலினது உச்சிக் கொண்டையை அறுத்து, அதற்கு உணவாக அதன் வாயிலே இடுவது போன்றதாகும்.

அடைய அடைந்தாரை அல்லவை செய்து
கொடைவேந்தன் கோல்கொடியன் ஆகிக் குடிகள்மேல்
கூட்டிறப்பக் கொண்டு தலையளிப்பின் அஃதன்றோ
'சூட்டறுத்து வாயில் இடல்'.

     'துன்புறுத்தி அதிக வரி வாங்கியவன், பின் என்ன நன்மை செய்தாலும் மக்கள் அவனைப் போற்ற மாட்டார்கள்' என்பது கருத்து. 'சூட்டறுத்து வாயில் இடல்' என்பது பழமொழி.

198. அரசாணையை நிறைவேற்றல்

     வெற்றிச் சிறப்புடைய வேலினனான வேந்தன் ஏவல் கொண்டால், யாம் ஒன்றும் அதனால் பெற்றிலேம் என்று சொல்வது அறியாமையேயாகும். அவன் ஏவலை எவ்விதக் குறைபாடும் இல்லாதவராகச் செய்து முடிக்க, அதுவல்லவோ, செய்க என்றவன், பின் உண்க என்று உபசரிக்கச் செய்யும் வழியாகும்.

வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால் யாமொன்றும்
பெற்றிலேம் என்பது பேதைமையே - மற்றதனை
எவ்வம் இலராகிச் செய்க அதுவன்றோ
'செய்கென்றான் உண்கென்னு மாறு'.

     செயலுக்கு ஏவியவன், அது முடிந்ததும், பாராட்டிப் பரிசுதராமற் போவதில்லை என்பது கருத்து. 'செய்கென்றான் உண்கென்னுமாறு' என்பது பழமொழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக