அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்

வாழ்த்து  

ஆதியின் தொல்சீர் அறநெறிச் சாரத்தை
 ஓதியும் கேட்டும் உணர்ந்தவர்க்குச் - சோதி
 பெருகிய உள்ளத்த ராய் வினைகள் தீர்ந்து
 கருதியவை கூடல் எளிது. 
பாடல் - 1

விளக்கவுரை : அனைத்ததின் தொடக்கமுமான தெய்வத்தின் மிக பழமையான சீர்மிகுந்த அறநெறிச்சாரம் என்னும் இந்நூலைக் கற்றும் கேட்டும் புரிந்தவர், ஞான ஒளி மிக்க மனம் உடையவராய், தீய வினைகள் நீங்கப்பெற்று, அவர்கள் கருதியவை எளிதில் முடியும்.

பாயிரம் அறவுரையின் இன்றியமையாமை 

மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
 பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை
 கேட்கும் திருவுடை யாரே பிறவியை
 நீக்கும் திருவுடை யார். 
பாடல் - 2

விளக்கவுரை: பாவத்தை வளர்க்கின்ற நூல்களும், ஆசையை வளர்க்கும் நூல்களும், பிறவற்றை வளர்க்கும் நூல்களும் கலந்து நிறைந்த இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர்.

அறத்துக்கு இன்றியமையா நான்கு 

உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவது
 உரைத்ததனால் ஆய பயனும் - புரைப்பு இன்றி
 நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்
 வான்மையின் மிக்கார் வழக்கு 
பாடல் - 3

விளக்கவுரை: அறத்தை உரைப்பவனையும், அந்த அறத்தைக் கேட்பவனையும் உரைக்கப்படும் அறத்தையும், கூறியதால் ஏற்படும் பயனையும் குற்றம் இல்லாமல் ஆராய்ந்து, அந்நான்கினுள்ளும் குற்றமானவற்றை அகற்றி, (நல்லனவற்றை) நிலைபெறும்படி செய்தல் உயர்ந்தவர் கடனாகும்.

அறம் கூறுபவனின் இயல்பு 

அறம்கேட்டு அருள்புரிந்து ஐம்புலன்கள் மாட்டும்
 இறங்காது இருசார் பொருளும் - துறந்துஅடங்கி
 மன்உயிர்க்கு உய்ந்துபோம் வாயில் உரைப்பானேல்
 பன்னுதற்குப் பாற்பட் டவன் 
பாடல் - 4

விளக்கவுரை: அறநூல்கள் பலவற்றையும், கற்றறிந்தவனாயும் கருணை உடையவனாயும், மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளால் அனுபவிக்கப்படும், இன்பம் துய்க்கப் புகாதவனாயும் அகப்பற்று - புறப்பற்று ஆகிய இரண்டையும் விட்டவனாயும் அடக்கம் கொண்டவனாயும் உலகில் நிலை பெற்ற உயிர்களுக்கு வீடு பேற்றுக்குரிய வழியினை, உரைப்பவன் ஒருவன் இருப்பானாயின் அத்தகையவன் அறம் உரைக்க தகுதியானவன்.

அறம் உரைத்ததற்குத் தகுதி அற்றவர் 

பிள்ளைபேய் பித்தன் பிணியாளன் பின்நோக்கி
 வெள்ளை களிவிடமன் வேட்கையான் - தெள்ளிப்
 புரைக்கப் பொருள் உணர்வான் என்றஇவரே நூலை
 உரைத்தற்கு உரிமைஇலா தார் 
பாடல் - 5

விளக்கவுரை: கற்க வேண்டியதைக் கல்லாத சிறுவனும், பேயால் பிடிக்கப்பட்டவனும், பித்துக்கொண்டவனும், நோயாளியும், தொலைநோக்கம் இல்லாதவனும், அறிவற்றவனும், கள் குடிப்பவனும், அயலவர்க்குத் துன்பம் செய்பவனும், குற்றம் உடையனவற்றையே ஆராய்ந்து அதனைச் சிறந்த பொருள் எனக்கொள்பவனும், ஆகிய இவர்களே அறநூலைக் கூறுதற்கு உரிமை இல்லாதவர் ஆவார்.

அறம் கேட்பவர் இயல்பு 

தடுமாற்றம் அஞ்சுவான் தன்னை உவர்ப்பான்
 வடுமாற்றம் அஞ்சித் தன்காப்பான் - படும்ஆற்றால்
 ஒப்புரவு செய்துஆண்டு உறுதிச்சொல் சேர்பவன்
 தக்கான் தரும உரைக்கு 
பாடல் - 6

விளக்கவுரை: தான் சோர்வுபடுதற்கு அஞ்சுபவனும், பிறர்தன்னைப் புகழ்ந்து கூறும்போது அதை வெறுப்பவனும், பழி தனக்கு வராது அதற்கு அஞ்சி தன்னைப் பாதுகாத்துக்கொள்பவனும் தன்னால் இயன்ற அளவு, பிறர்க்கு உதவியைச் செய்து அந்நிலையில், சான்றோரிடம் உறுதிமொழியைக் கேட்டு அதன்வழி நடப்பவனும் ஆன ஒருவன் அறநூல் கேட்பதற்கு உரியவன் ஆவான்.

அறம் கேட்டற்குத் தகாதவர்  

தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடிபிணக்கன்
 புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான் - இன்சொல்லை
 ஏன்றுஇருந்தும் கேளாத ஏழை எனஇவர்கட்கு
 ஆன்றவர்கள் கூறார் அறம். 
பாடல் - 7

விளக்கவுரை: தான் கூறும் சொல்லையே சிறந்தது எனக்கூறுபவனும், கர்வம் உள்ளவனும் மிக்க மாறுபாடு கொண்டவனும் பிறர்கூறும் இழிவான சொற்களையே எதிர்பார்த்திருப்பவனும், இன்பம் தரும் உறுதிமொழிகளை, கேட்கக்கூடிய இடம் வாய்த்தும் கேளாத மூடனும் என்ற இவர்களுக்குப் பொ¢யோர்கள் அறத்தைக் கூறமாட்டார்கள்.

நல்லறத்தின் இயல்பு  

வினைஉயிர் கட்டுவீடு இன்ன விளக்கித்
 தினைஅனைத்தும் தீமைஇன்று ஆகி - நினையுங்கால்
 புல் அறத்தைத் தேய்த்துஉலகி னோடும் பொருந்துவதாம்
 நல் அறத்தை நாட்டும் இடத்து. 
பாடல் - 8

விளக்கவுரை: ஆராயுமிடத்து நல்ல அறத்தினை நிலைநிறுத்த எண்ணினால் அந்த நல்ல அறமானது வினையும் உயிரும் பந்தமும் வீடுபேறும் ஆகிய இத்தகையவற்றை நன்கு உணர்த்தி தினை அளவும் குற்றம் அற்றதாய்ப் பாவச் செயல்களை அழித்து உயர்ந்தவர் ஒழுக்கத்தோடும் பொருத்தமுற்றதாகும்.

புல்லறத்தின் இயல்பு 

ஆவட்டை போன்றுஅறி யாதாரை மயக்குஉறுத்திப்
 பாவிட்டார்க்கு எல்லாம் படுகுழியாய்க் - காவிட்டு
 இருமைக்கும் ஏமம் பயவா தனவே
 தருமத்துப் போலிகள் தாம் 
பாடல் - 9

விளக்கவுரை: மரணம் அடைகின்ற நிலையில் இருப்பவரைப் போன்று அறிவற்றவரை, மயக்கம் அடையச்செய்து, விரும்பியவர்க்கெல்லாம், மிகுந்த துன்பம் தருவனவாய், துன்பம் உண்டானவிடத்து உதவுதல் இன்றி இம்மை மறுமைகளுக்கு உறுதியைத் தராதவை யாவையோ அவை அறநூல்கள் போல இருப்பினும் அறநூல்கள் அல்ல.

அறக் கேள்வியின் பயன் 

புல்லஉரைத்தல் புகழ்தல் பொருள் ஈதல்
 நல்லர் இவர்என்று நட்புஆடல் - சொல்லின்
 அறம்கேள்வி யால்ஆம் பயன்என்று உரைப்பர்
 மறம்கேள்வி மாற்றி யவர். 
பாடல் - 10

விளக்கவுரை: கூறுமிடத்துப் பாவத் தன்மையை அறநூல் கேட்டதால் மாற்றிய சான்றோர், பலரும் தம்மையடையுமாறு கூறுதலும் பலரால் புகழப்படுதலும், பொருள் கொடுக்கப்படுதலும், இவர் நல்லவர் என எண்ணி, நண்பராய் வந்தடைதலும் ஆன இவற்றை அறநூல்களைக் கேட்பதால் உண்டாகும் பயன் என்று சொல்லுவர்.

அறத்தால் ஆம் பயன் (தொடர்ச்சி) 

காட்சி ஒழுக்கொடு ஞானம் தலைநின்று
 மாட்சி மனைவாழ்தல் அன்றியும் - நீட்சியில்
 வீட்டுஉலகம் எய்தல் என இரண்டே நல்லறம்
 கேட்டதனால் ஆய பயன். 
பாடல் -  11

விளக்கவுரை: நல்ல அறநூல்களைக் கேட்பதனால் ஏற்படும் பயன்கள் நற்காட்சி நல்லொழுக்கங்களுடன் பெருமையுடைய இல்லறத்தில் வாழ்தலும் அதுவே அல்லாது நல்ஞானத்தால் சிறந்து, மீளுதல் அற்ற முத்தி உலகத்தை அடைதலும் ஆகிய இரண்டே ஆகும்.

நூல் பத்து அறங்கள் 

மெய்ம்மை பொறையுடைமை மென்மை தவம்அடக்கம்
 செம்மைஒன்று இன்மை துறவுஉடைமை - நன்மை
 திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன
 அறம்பத்தும் ஆன்ற குணம் 
பாடல்  - 12

விளக்கவுரை: வாய்மையும், பொறுமையும், பெருமையும் தவமும், அடக்கமும், நடுவுநிலைமையும், தனக்கு என ஒன்று இல்லா திருத்தலும், பற்று அறுதலும், நல்லன செய்தலும், மாறுபடாத நோன்புகளை மேற்கொள்ளுதலுமான இத்தன்மையான அறங்கள் பத்தும் மேலான குணங்களாகும்.

அறமே சிறந்தது 

தனக்குத் துணையாகித் தன்னை விளக்கி
 இனத்துள் இறைமையும் செய்து - மனக்கு இனிய
 போகம் தருதலால், பொன்னே, அறத்துணையோடு
 ஏகமாம் நண்புஒன்றும் இல். 
பாடல் - 13

விளக்கவுரை: திருமகளைப் போன்றவளே, தன்னைச் செய்தவனுக்கு இம்மை மறுமைகளில் துணையாகித் தன்னைப் பலரும் அறியும்படி செய்து, சுற்றத்தார் பலருக்கும் தலைவனாகவும் செய்து, உள்ளத்துக்கு இனிமையான செல்வத்தைக் கொடுப்பதனால், அறமான துணையுடன் ஒன்றாக எண்ணுதற்குரிய நண்பர் எவரும் இலர்.

மறுமைக்கு அறமே துணை 

ஈட்டிய ஒண்பொருளும் இல்ஒழியும் சுற்றத்தார்
 காட்டுவாய் நேரே கலுழ்ந்துஒழிவர் - மூட்டும்
 எரியின் உடம்புஒழியும் ஈர்ங்குன்ற நாட
 தெரியின் அறமே துணை 
பாடல் - 14

விளக்கவுரை : குளிர்ச்சியுடைய மலை நாட்டின் மன்னனே! தேடிய சிறந்த செல்வமும், வீட்டில் தங்கிவிடும், உறவினர் சுடுகாட்டின்வரை அழுதுகொண்டு வந்து நீங்கிவிடுவர், மூட்டப்படுகின்ற நெருப்பால் உடம்பானது அழிந்துவிடும், ஆராயின் ஒருவனுக்குத் துணையாவது அறமே ஆகும்

இல்லற துறவறங்களின் உயர்வு 

நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
 நோற்பவர்க்குச் சார்வாய் அறம்பெருக்கி - யாப்புடைக்
 காழும் கிடுகும்போல் நிற்கும் கயக்கின்றி
 ஆழிசூழ் வையத்து அறம் 
பாடல் - 15

விளக்கவுரை: துறவிகள் இல்லறத்தார்க்குப் பற்றுக் கோடாகியும், இல்லறத்தாரும் துறவியர்க்குப் பற்றுக் கோடாகியும் இல்லற துறவறங்கள், தளர்வில்லாமல் உறுதி பெற்ற தூணும் சட்டப் பலகையும் போல் ஒன்றுக்கொன்று ஆதரவாக நிற்கும்

இளமைப் பருவத்தில் அறம் செய்க 

இன்சொல் விளைநிலமா, ஈதலே வித்தாக,
வன்சொல் களைகட்டு, வாய்மை எருஅட்டி,
அன்புநீர் பாய்ச்சி, அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறு காலைச் செய். 
பாடல் - 16

விளக்கவுரை: இனிமையான சொல்லே விளை நிலமாகவும் ஈகையே விதையாகவும் கடுஞ்சொல்லான களையைப் பிடுங்கி, உண்மையான எருவினை இட்டு, அன்பு என்னும் நீரைப் பாய்ச்சி அறம் என்ற கதிரை ஈனுவதாகிய ஒப்பில்லாத பசுமையான பயிரை, இளம் பருவத்திலேயே மனமே, செய்வாயாக.

இளமையில் அறம் செய்தலின் இன்றியமையாமை 

காலைச் செய் வோம்என்று அறத்தைக் கடைப்பிடித்துச்
 சாலச்செய் வாரே தலைப்படுவார் - மாலைக்
 கிடந்தான் எழுதல் அரிதால் மற்று என்கொல்
 அறங்காலைச் செய்யாத வாறு. 
பாடல்  - 17

விளக்கவுரை: தருமத்தை இளமையிலேயே செய்வோம் என எண்ணி உறுதியாகக்கொண்டு மிக செய்பவரே சிறந்தவர் ஆவர். இரவில் படுத்தவள் காலைப் போதில் விழித்து எழுவது அருமை. (அங்ஙனமிருக்கவும்) தருமத்தை இளமையிலேயே செய்யாதிருத்தல் என்ன காரணமோ! 

இளமையில் அறம் செய்யாமையால் ஏற்படும் இழிவு 

சென்றநாள் எல்லாம் சிறுவிரல்வைத்து எண்ணலாம்
 நின்றநாள் யார்க்கும் உணர்வுஅரிது - என்று ஒருவன்
 நன்மை புரியும் நாள்உலப்ப விட்டிருக்கும்
 புன்மை பெரிது புறம். 
பாடல் - 18

விளக்கவுரை : ஆயுளில் கழிந்த நாட்கள் எல்லாவற்றையும் சிறு விரல்களால் எண்ணிக் கணக்கிட்டு விடலாம். இனி இருக்கும் நாட்களை எத்தகையவர்க்கும் இத்தனை என்று அளவிட்டு அறிய இயலாது என எண்ணி, ஒருவன் நல்வினையை விரைவாகச் செய்யாது ஆயுள் நாள் வீணே கழியும்படி விட்டிருப்பதால் ஏற்படும் துன்பம் பின்னர் மிகும்.

இயமனின் நடுவு நிலைமை 

கோட்டுநாள் இட்டுக் குறையுணர்ந்து வாராதால்
 மீட்டு ஒரு நாளிடையும் தாராதால் - வீட்டுதற்கே
 வஞ்சம்செய் கூற்றம் வருதலால் நன்றுஆற்றி
 அஞ்சாது அமைந்திருக்கற் பாற்று. 
பாடல்  - 19

விளக்கவுரை : விதிக்கப்பட்ட நாள் விட்டுக் குறை நாளில் வருவதும் இல்லை. ஒரு நாள், கூடவும் தருவதில்லை வருவதை முன்னம் அறிவிக்காமல் வருகின்ற இயமன் அழிப்பதற்கே வருவதனால் அறத்தைச் செய்து மரணத்துக்கு அஞ்சாது அடங்கி இருத்தல் வேண்டும்.

உடம்பும் செல்வமும் நிலையா 

இன்றுஉளார் இன்றேயும் மாய்வர்; அவர் உடைமை
 அன்றே பிறர்உடைமை யாய்இருக்கும் - நின்ற
 கருமத்தர் அல்லாத கூற்றின்கீழ் வாழ்வார்
 தருமம் தலைநிற்றல் நன்று. 
பாடல் - 20

விளக்கவுரை : இன்று உயிருடன் வாழ்பவர் இன்றைக்கேயும் இறப்பர். அவரது செல்வம், அவர் இறந்த நாளிலேயே பிறர் செல்வமாக ஆகியிருக்கும். (ஆகவே) கொடிய எமனது ஆணைக் கீழ் வாழும் மாந்தர் நிலைபெற்ற செயலையுடையவராய் அறத்தை மேற்கொண்டு ஒழுகுதல் நல்லது

இளமை நிலைக்காது 

மின்னும் இளமை உளதாம் எனமகிழ்ந்து
 பின்னை அறிவென் என்றல் பேதைமை - தன்னைத்
 துணித்தானும் தூங்காது அறம்செய்க கூற்றம்
 அணித்தாய் வருதலும் உண்டு 
பாடல் - 21

விளக்கவுரை : மின்னலைப்போன்ற இளமைப் பருவமானது நிலைத்திருக்கும் என்று எண்ணி, மகிழ்ச்சி அடைந்து, முதுமையில் அறத்தை அறிந்து கொள்வேன் என்று நினைத்தல் அறியாமையாகும். இயமன் அண்மையிலேயே (இளமையிலேயே) வாழ்நாளைக் கவர்ந்து செல்ல வருதலும் உண்டு. ஆதலால் தன்னை வருத்தியேனும் காலத்தைத் தாழ்த்தாது அறத்தை ஒவ்வொருவரும் செய்வாராக. 

அறமே காவல் 

மூப்பொடு தீப்பிணி முன்உறீஇப் பின்வந்து
 கூற்ற அரசன் குறும்புஎறியும் - ஆற்ற
 அறஅரணம் ஆராய்ந்து அடையின் அ•துஅல்லால்
 பிறஅரணம் இல்லை உயிர்க்கு. 
பாடல்  - 22

விளக்கவுரை : முதுமையையும், கொடிய நோயையும், முன்னம் அடைவித்து இயமனான மன்னன் பின்பு வந்து அடைந்து உடம்பு என்ற அரணை அழிப்பான். பல வகையாலும் ஆராய்ந்து அடைந்தால் அல்லது, அந்த அறமே அன்றி, உயிர்க்கு பாதுகாவலான அறத்தை மற்ற மிக்க பாதுகாவல் வேறு எதுவும் இல்லை.

நன்றாகச் செய்ய வேண்டியது அறமே

திருத்தப் படுவது அறக்கருமம் தம்மை
 வருத்தியும் மாண்புஉடையார் செய்க - பெருக்க
 வரவும் பெருங்கூற்றம் வன்கண் ஞமன்கீழ்த்
 தரஅறுத்து மீளாமை கண்டு.
 பாடல்  - 23

விளக்கவுரை : நன்கு செய்யப்படுவது தருமச்செயல்களே ஆகும். வன்மைமிக்க இயமன் உயிரைக் கவர்ந்து கொள்ளப் பலமுறை வரவும் கொடிய அந்த இயமனது கட்டளையை மீறி அந்த இயமனால் கவரப்பட்ட உயிர் மீளாமையையும் பார்த்தலால் சான்றோர் தம் உடலை வருத்தியேனும் அந்த அறத்தினைச் செய்க.

அறத்தை விரைந்து செய்ய வேண்டும்

முன்னே ஒருவன் முடித்தான்தன் துப்புஎலாம்
 என்னே ஒருவன் இகழ்ந்திருத்தல் - முன்னே
 முடித்த படிஅறிந்து முன்முன் அறத்தைப்
 பிடிக்க பொ¢தாய் விரைந்து.
 பாடல்  - 24

விளக்கவுரை : தன் முன்னே பிறன் ஒருவன் தன் அனுபவப் பொருள்களை எல்லாம் அழித்துச் சென்றான். அதனைப் பார்த்த பிறகும் அறம் செய்யாமல் ஏளனம் செய்த வண்ணம் இருத்தல் என்னே அறியாமை! முன்பு சான்றோர் செய்த வழியை அறிந்து மேலும் மேலும் மிகவும் விரைந்து அறத்தினைச் செய்க.

அறம் செய்யாமையால் ஏற்படும் கேடு

குறைக்கருமம் விட்டு உரைப்பின் கொள்ள உலவா
 அறக்கருமம் ஆராய்ந்து செய்க - பிறப்பிடைக்கு ஓர்
 நெஞ்சுஏமாப்பு இல்லாதான் வாழ்க்கை நிரயத்துத்
 துஞ்சாத் துயரம் தரும்.
 பாடல்  - 25

விளக்கவுரை : மறு பிறவிக்கு ஒப்பு இல்லாத தன் உள்ளத்தை அரணாகக் கொள்ளாதவன் வாழ்க்கையானது நரகில் அழிவற்ற துன்பத்தை அளிக்கும். (எனவே) உள்ளமே! அறச் செயலை ஆராய்ந்து செய்வாயாக; இன்றியமையாத செயல்களை விரித்துச் சொல்லப் புகுந்தால் அளவிடல் முடியாது.

உடலின் நிலையற்ற தன்மை

அறம்புரிந்து ஆற்றுவ செய்யாது நாளும்
 உறங்குதல் காரணம் என்னை? - மறந்து ஒருவன்
 நாட்டுவிடக்கு ஊர்தி அச்சுஇறும் காலத்துக்
 கூட்டுத் திறம் இன்மையால்.
 பாடல்  - 26

விளக்கவுரை : பிரமன் படைத்த, இறைச்சியால் ஆன வாகனம் (உடல்) அச்சு ஒடிந்து உயிர் நீங்கி அழியும் காலத்தில், அதைப் பொருத்தி நடத்தும் தன்மை இல்லாமையால், தருமத்தை விரும்பி செய்யக் கூடியவற்றைச் செய்யாமல், எப்போதும் காலத்தை வீணே கழிப்பதற்கு நெஞ்சே! யாது காரணம்?

அறமற்ற வாழ்க்கை அழியும்

பாவம் பெருகப் பழிபெருகத் தன்ஓம்பி
 ஆவதுஒன்று இல்லை அறன்அழித்துப் - பாவம்
 பொறாஅ முறைசெய் பொருவுஇல் ஞமன்கீழ்
 அறாவுண்ணும் ஆற்றவும் நின்று
 பாடல்  - 27

விளக்கவுரை : நீதியைச் செய்யும் நிகர் இல்லாத இயமன் நாம் இயற்றும் பாவத்தைப் பொறுக்காமல் மிகவும் அசைவு இன்றி நின்று மறைந்து இருந்து ஆயுளைக் குறைப்பான். (ஆதலால்) தருமத்தைக் கொன்று பாவம் பெருகவும், பழி பெருகவும் தன் உடலைப் பாதுகாத்து வாழ்வதால் ஆகும் பயன் ஏதும் இல்லை.

அறத்தை மறக்காதே

முன்செய் வினையின் பயன்துய்த்துஅது உலந்தால்
 பின்செய் வினையின்பின் போகலால் - நற்செய்கை
 ஆற்றும் துணையும் அறமறவேல், நல் நெஞ்சே
 கூற்றம் குடில்பிரியா முன். பாடல்  - 28

விளக்கவுரை : நல்ல உள்ளமே! முன்னைய பிறவியில் செய்த வினையானது பயனை அனுபவித்து அது அழிந்தால் இப் பிறப்பில் செய்த வினை வழியே போய் உயிர் பிறவியை அடைதலால், இயமன் உடலினின்று உயிரை வேறுபடுத்தற்கு முன்னம் நல்வினையைச் செய்யக்கூடிய ஆற்றல் உள்ள காலம் வரை தருமத்தை மறக்காதே.

உள்ளதைக் கொண்டு அறம் செய்

திரைஅவிந்து நீராடல் ஆகா உரைப்பார்
 உரைஅவித்து ஒன்றும்சொல் இல்லை - அரைசராய்ச்
 செய்தும் அறம் எனினும் ஆகாது உளவரையால்
 செய்வதற்கே ஆகும் திரு.  பாடல்  - 29

விளக்கவுரை அலைகள் ஒழிந்து (அடங்கிய பின்பு) நீராடுதல் எவர்க்கும் முடியாது (என்று) கூறுபவர் உரையை விட்டால் வேறு வாய்மை பொருந்தும் சொல் இல்லை. (ஆதலால்) ஒருவர் அரசராய்ச் செல்வம் பெற்ற பின்பு அறத்தைச் செய்வோம் என நினைத்தால், அக்காலத்தில் அவர்க்கு அறம் செய்யச் செல்வம் உதவுவதில்லை. (ஆகவே) பெற்றுள்ள அளவுக்கேற்ப அவ்வப்போது அறம் செய்யப் புகு

அறிவுரையால் மூடனுக்குப் பயனில்லை

கல்லா ஒருவனைக் காரணம் காட்டினும்
 இல்லைமற்று ஒன்றும் அறன்உணர்தல் - நல்லாய்,
 நறுநெய் நிறைய முகப்பினும் ஊமூழை
 பெறுமோ சுவைஉணரு மாறு. பாடல்  - 30

விளக்கவுரை : பெண்ணே! அகப்பை நல்ல நெய்யுடன் கலந்த உணவை நிறைய முகந்தாலும் சுவையை அறியும் தன்மையை உடையதாகுமோ! (ஆகாது) அது போன்று கல்வி கல்லாத ஒருவனுக்குக் காரணத்தைக் காட்டி விளங்கும் வண்ணம் விரித்துக் கூறினாலும் அவன் அறத்தை ஒரு சிறிதும் உணரான்.

கீழ் மகனுக்கு அறவுரை ஏறாது பாடல்  - 31

வைகலும் நீருள் கிடப்பினும் கல்லிற்கு
 மெல்என்றல் சால அஃதுஆகும் - அ•தே போல்
 வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்மகட்குக்
 கல்லினும் வல்என்னும் நெஞ்சு.

விளக்கவுரை நாள்தோறும் நீரினுள்ளே கிடந்தாலும் கல்லுக்கு மென்மை அடைதல் சிறிதும் இல்லை! அதைப் போல் நாள்தோறும் நல்ல அறநூல்களை கல்லார் கூறக் கேட்டாலும், கீழ் மக்களுக்கு மனமானது கல்லைவிடத் திண்மையுடையதாகவே இருக்கும்.

கீழ் மக்கட்குக் கல்வியால் பயனில்லை

கயத்திடை உய்த்திடினும் கல்நனையாது என்றும்
 பயற்றுக் கறிவேவாது அற்றால் - இயற்றி
 அறஉரை கேட்டஇடத்தும் அனையார்
 திறஉரை தேறா தவர். பாடல்  - 32

விளக்கவுரை நீர்நிலையில் செலுத்தினாலும் கல் மென்மைத் தன்மையை அடையாது. எக்காலத்தும் பயறுகளுள் பத்தினிப் பயறாக இருப்பது வேகாது. அதைப் போன்று விதிக்கு உட்படுத்தி அற நூல்களைக் கேட்கும்படி செய்தாலும் கீழானவர் உறுதி மொழிகளை உணராதவர் ஆவர்.

நெஞ்சின் கொடுமை 

அற்ற பொழுதே அறம்நினைத்தி யாதுஒன்றும்
 பெற்ற பொழுதே பிற நினைத்தி - எற்றே
 நிலைமையில் நல்நெஞ்சே, நின்னொடு வாழ்க்கை
 புலைமயங்கி அன்னது உடைத்து.  பாடல்  - 33

விளக்கவுரை பொருள் இல்லாத காலத்தில் பொருள் இருந்தால் அறம் செய்யலாம். பொருள் இல்லையே! என்று எண்ணி வருந்துகின்றாய்; ஏதேனும் ஒரு பொருளை அடைந்த போதோ அறத்தை நினைக்காமல் பாவச் செயலை நினைக்கின்றாய்! ஒரு நிலைமையில் நில்லாத நல்ல மனமே, இது என்னே! உன்னுடன் சேர்ந்து வாழ்தல் புலை மக்களுடன் கூடி வாழ்வதைப் போன்றது.

உடம்பின் அழிவு

ஒருபால் திருத்த ஒருபால் கிழியும்
 பெருவாழ்க்கை முத்தாடை கொண்ட - திருவாளா
 வீண்நாள் படாமைநீ துன்னம்பொய் யேஆக
 வாணாள் படுவது அறிதி. பாடல் - 34

விளக்கவுரை : ஒரு பக்கம் தைக்க மற்ற ஒருபக்கம் கிழிகின்ற பெருவாழ்வான விலை மிக்க உடலான ஆடையினை உடுத்த செல்வத்தை உடையவனே! நீ தைத்தல் பயன் இல்லாது ஆயுள் நாள் அழிவதை, நாட்கள் வீணாய்க் கழியு முன் அறிவாயாக!

அறம் செய்யாமையால் உண்டாகும் இழிவு 

உள்ளநாள் நல்அறம் செய்கஎன்னும் சாற்றுஅன்றோ
 இல்லைநாள் போய்ஏன்று இடம்கடிந்து - தொல்லை
 இடைக்கடையும் ஆற்றார் இரந்தார்க்கு நின்றார்
 கடைத்தலைவைத்து ஈயும் பலி. பாடல் - 35

விளக்கவுரை : முன்னம் செல்வம் உடையவராய் அறம் சிறிதும் ஆற்றாமல் பின் வறுமையுற்ற காலத்தில் தம்மிடத்தை விட்டுப் பெயர்ந்து அங்கங்குப் போய் ஏற்றுத்திரிந்து பிறா¢டம் யாசித்தவர்க்கு, இரக்கப்பட்டார் தலை வாயிலில் வைத்துத் தரும் பிச்சையானது, செல்வம் பெறும் காலத்தில் நன்மை தரும் தருமத்தைச் செய்க என அவர்க்குச் சொல்லும் சொல்லாகும் அன்றோ!

வயிறே நின்னுடன் வாழ்தல் அரிது

ஒருநாளும் நீதரியாய் உண்என்று சொல்லி
 இருநாளைக்கு ஈந்தாலும் ஏலாம் - திருவாளா
 உன்னோடு உறுதி பெரிது எனினும் இவ்வுடம்பே
 நின்னோடு வாழ்தல் அரிது. பாடல் - 36

விளக்கவுரை பசியால் வருந்தும் உடம்பே! உணவற்ற காலத்தில் ஒரு நாளும் பொறுத்திராமல் உண்பாய் என்று கூறி (செல்வம் மிக்க காலத்தில்) இரண்டு நாள்களுக்கு உணவு அளித்தாலும் ஏற்றுக்கொள்ளமாட்டாய்! திருவுடையவனே! உன்னுடன் கூடி வாழ்வதால் அடையும் பயன் சிறந்தது என்றாலும், உன்னுடன் வாழ்வது என்பது துன்பம் தருவதாகும்

காட்சி திரியின் அறம் திரியும்

கட்டளை கோடித் திரியின் கருதிய
 இட்டிகையும் கோடும் அதுபோலும் - ஒட்டிய
 காட்சிதிரியின் அறம்திரியும் என்று உரைப்பர்
 மாட்சியின் மிக்கவர் தாம். பாடல் - 37

விளக்கவுரை செங்கல்லை அறுக்கும் கருவி கோணலானால் அதனால் அறுப்பதற்கு எண்ணிய செங்கல்லும், கோணலாக அமையும். (அது போன்று) பொருந்திய அறிவு வேறுபட்டால் அறமும் வேறுபடும் எனச் சான்றோர் உரைப்பர்.

அறநூலால் அறிய வேண்டியவை 

தலைமகனும் நூலம் முனியும் பொருளும்
 தொலைவின் துணிவொடு பக்கம் - மலைவு இன்றி
 நாட்டியிவ் வாறும் உரைப்பரே, நன்னெறியைக்
 காட்டி அறம்உரைப் பார். பாடல் - 38

விளக்கவுரை நல்ல ஒழுக்க நெறியை விளக்கித் தரும நூலை உணர்த்துவோர் அருகனும், மெய்ந்நூலும், துறவியும், உண்மைப் பொருளும், அழிவின் நிச்சயத்தையும், அருகதேவனிடத்து அன்பும் என இந்த ஆறும் மாறுபாடு இல்லாததாகக் கூறுவர்.

சமய முடிவு 

இறந்தும் பெரியநூல் எம்மதே தெய்வம்
 அறந்தானும் இஃதே சென்று ஆற்றத் - துறந்தார்கள்
 தம்பாலே வாங்கி உரைத்ததனால் ஆராய்ந்து
 நம்புக நல்ல அறம்.  பாடல் - 39

விளக்கவுரை இல்லறத்தை விட்டு நீங்கி அகப்பற்று, புறப்பற்றுக்களை முழுவதும் விட்டவர்களிடமிருந்தே பெற்றுக் கூறியதால் மிகவும் சிறந்த நூல் எம்முடையதே; தெய்வமும் இதுவே; அறமும் இதுவே ஆகும். நன்றாக ஆராய்ந்து சிறந்த அறமான இதை நம்பி மேற்கொள்வீராக!

சிறந்த அறமாவன 

ஒன்றொடு ஒன்று ஒவ்வாத பாசண்டத் துள்எல்லாம்
 ஒன்றொடு ஒன்று ஒவ்வாப் பொருள்தெரிந்து - ஒன்றொடுஒன்று
 ஒவ்வா உயிர்ஓம்பி உள்தூய்மை பெற்றதே
 அவ்வாய தாகும் அறம். பாடல்  - 40

விளக்கவுரை ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட அயல் சமய நூல்கள் பலவற்றுள்ளும், ஒன்றுடன் ஒன்று மாறுபட்ட பொருள் இவை என ஆராய்ந்து அறிந்து பல்வேறு வகையான உயிர்களைக் காத்து அகத்தூய்மை பெறுவதே மேலான அறமாகும்.

நூலை உணரும் முறை 

நிறுத்துஅறுத்துச் சுட்டுரைத்துப் பொன்கொள்வான் போல
 அறத்தினும் ஆராய்ந்து புக்கால் - பிறப்புஅறுக்கும்
 மெய்ந்நூல் தலைப்பட லாகும்மற்று ஆகாதே
 கண்ணோடிக் கண்டதே கண்டு. பாடல் - 41

விளக்கவுரை (பொன்னை) நிறுத்தும் அறுத்தும் தீயால் சுட்டும் உரைத்துப் பார்த்தும் பொன்னை வாங்குபவனைப் போல், அற நூல்களையும் பலவற்றால் தேடி ஆராய்ந்தோமானால் பிறப்பினை நீக்கும்படியான உண்மை நூலைப் பெறலாகும்; (மாறாக) கண்போய்ப் பார்த்ததையே பார்த்து விரும்பி உண்மை எனக் கற்றால் உண்மை நூலை அடைய இயலாது.

நடுநிலையை அறியும் முறை 

காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருள்கண்
 ஆய்தல் அறிவுஉடையார் கண்ணதே - காய்வதன்கண்
 உற்றகுணம் தோன்றாதாகும்; உவப்பதன்கண்
 குற்றமும் தோன்றாக் கெடும். பாடல் - 42

விளக்கவுரை வெறுக்கப்படும் பொருளில் உள்ள குணம், ஆராய்பவனுக்கு தோன்றாது; விரும்பப்படும் பொருளிடத்துள்ள குற்றமும் தோன்றாமல் மறையும். (ஆதலால்) வெறுத்தல் விரும்புதல் அவ்விரண்டையும் போக்கி, ஒரு பொருளிடத்து ஆராய்ந்து குணத்தையும் குற்றத்தையும் அறிதல் அறிவுடையாரிடம் இருக்க வேண்டிய செயலே ஆகும். 

உண்மைத் துறவை அறியும் வழி 

துறந்தார் துறந்திலர் என்றுஅறியல் ஆகும்
 துறந்தவர் கொண்டுஒழுகும் வேடம் - துறந்தவர்
 கொள்ப கொடுப்பவற்றால் காணலாம் மற்றவர்
 உள்ளம் கிடந்த வகை. பாடல் - 43

விளக்கவுரை துறவியர் மேற்கொண்டு ஒழுகும் கோலத்தால் பற்று அற்றவர், பற்று அறாதவர் என்று அறியக் கூடும். அன்னாரது மனம் பற்று அற்று விளங்கும் நிலையை அவர் மற்றவரிடமிருந்து ஏற்றுக்கொள்வதாலும் பிறர்க்குக் கொடுக்கும் பொருளிலிருந்தும் அறியக்கூடும்.

தேவர் உலகத்துக்கு உரியவர் 

இந்தியக்கு ஒல்கா இருமுத் தொழில்செய்தல்
 சிந்தைதீர அப்பியத்தின் மேல்ஆக்கல் - பந்தம்
 அரிதல் இவைஎய்தும் ஆறுஒழுகு வார்க்கே
 உரிதாகும் உம்பர் உலகு. பாடல்  - 44

விளக்கவுரை ஐம்பொறிகளுக்குத் தளராத இரண்டும் மூன்றுமான ஐந்து பொறிகளின் தொழிலை இயற்றுதல், அவாவினை ஆற்ற வெறுத்து அறுத்தல், பாசக்கட்டை கெடுத்தல் என்ற இவை பொருந்தும் படியாக நடப்பவர்க்கே மேல் உலகம் அடைதற்கு உரியதாகும்.

துறவியரின் செயல் 

அழல்அடையப் பட்டான் அதற்கு மாறாய
 நிழல்ஆதி தன்இயல்பே நாடும் - அழலது போல்
 காமாதி யால்ஆம் கருவினைக் கட்டுஅழித்துப்
 போம்ஆறு செய்வார் புரிந்து. பாடல்  - 45

விளக்கவுரை கதிரவனின் வெப்பத்தால் வருந்தியவன் அந்த வெப்பத்துக்கு மாறுபட்ட நிழல் முதலியவற்றின் இயல்பையே விரும்புவான். நிழலை அடைந்தவனை வெப்பம் நீங்குதலைப் போல் காமம் முதலியவற்றால் உண்டான கொடிய செயலால் ஆன தளையைக் கெடுத்து முத்தியை அடையபோகின்ற வழியை விரும்பிச் செய்பவரே முனிவர் ஆவார்.

ஒழுக்கம் விழுப்பம் தரும் 

வெப்பத்தால் ஆய வியாதியை வெல்வதூஉம்
 வெப்பமே என்னார் விதிஅறிவார் - வெப்பம்
 தணிப்பதூஉம் தட்பமே தான்செய் வினையைத்
 துணிப்பதூஉம் தூய ஒழுக்கு. பாடல் - 46

விளக்கவுரை நோயை நீக்கும் முறையை அறிபவர் வெப்பத்தால் ஆன நோயை நீக்குவது வெப்பமே என்று கூற மாட்டார்; வெப்பத்தைப் போக்குவது குளிர்ச்சியே ஆகும். (அதைப் போல்) தான் செய்த வினையினைப் போக்குவதும் தூய்மையான குற்றம் அற்ற ஒழுக்கமே ஆகும்.

பொய்ந்நூல்கள் 

தத்தமதுஇட்டம் திருட்டம் எனஇவற்றோடு
 எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர் - பித்தர்அவர்
 நூல்களும் பொய்யேஅந் நூல் விதியின் நோற்பவரும்
 மால்கள் என உணரற் பாற்று. பாடல் - 47

விளக்கவுரை தாம் சொல்லும் பொருள்களை தங்கள் தங்களின் விருப்பம் காட்சி என்ற இவற்றுடன் ஒரு சிறிதும் பொருந்தாதபடி உரைப்பவரைப் பைத்தியக்காரன் எனவும் அவர்கள் கூறும் நூல்களைப் பொய்ந்நூல்கள் எனவும் அந்த நூல்கள் கூறும் நெறியில் நின்று தவம் செய்பவரும் மயக்கம் உடையார் எனவும் உணரும் தன்மை உடையது.

நற்கதிக்கு இன்றியமையாமை 

குருட்டுச் செவிடர்கள் கோல்விட்டுத் தம்முன்
 தெருட்டி வழி சொல்லிச் சேறல் - திருட்டேட்டம்
 மாறு கொளக்கிடந்த மார்க்கத்தால் நற்கதியில்
 ஏறுதும் என்பார் இயல்பு. பாடல்  - 48

விளக்கவுரை ஐம்புலக் காட்சியும் உள்ளத்து உணர்ச்சியும் செலுத்தும் வழிகள் மாறுபடக் கிடப்பதை அறியாமல் அந்த வழியில் போய் நற்கதியை அடைய நினைப்பவர் செயல் குருடரும் செவிடருமான இருவர் கோலினது உதவியால் ஒருவர்க்கு ஒருவர் வழியினது இயல்பை விளக்கிக் கொண்டு குறித்த இடத்தை அடையச்செல்வத்தைப் போன்றதாகும்.

உரைப்பவரும் கேட்பவரும் 

அற்றறிந்த காரணத்தை ஆராய்ந்து அறவுரையைக்
 கற்றறிந்த மாந்தர் உரைப்பவே - மற்றதனை
 மாட்சி புரிந்த மதியுடை யாளரே
 கேட்பர் கெழுமி இருந்து. பாடல் - 49

விளக்கவுரை உண்மைப் பொருளைக் கற்றுணர்ந்த மக்கள் பற்றைவிட்டு அறிய வேண்டிய மெய்ந்நூல்களை அறியும் காரணத்தையும் அறநூல் பொருளையும் ஆராய்ந்து கூறுகூர்; அவ்வுரையை நற்குணம் மிக்க அறிவுடையவர்களே உள்ளம் இசைந்திருந்து உரிமையோடு கேட்பார்கள்.

முத்திநெறியை அடையும் வழி 

உருவும் ஒழுக்கமும் நூலும் பொருளும்
 பொருவுஇல் தலைமகனோடு இன்ன - ஒருவாது
 கண்டு கருதிக் கயக்குஅறத் தேர்ந்தபின்
 கொண்டுவீடு ஏற்க அறம். பாடல்  - 50
விளக்கவுரை வடிவும் நல்ல ஒழுக்கமும் உரைக்கப்படும் நூலும் அந்த நூலில் கூறப்படும் பொருளும் ஒப்பு அற்ற இறைவனும் ஆகிய இவற்றை நீங்காமல் ஆராய்ந்து சிந்தித்துக் கலக்கம் இல்லாமல் உணர்ந்த பின்பு அறத்தை மேற்கொண்டு முத்தியை அடைதற்கு முயற்சி செய்க. 

வீடு அடைபவனின் இயல்பு பாடல்  - 51
நூல்உணர்வு நுண்ஒழுக்கம் காட்டுவிக்கும் நொய்யவாம்
 சால்புஇன்மை காட்டும் சவர்ச்செய்கை - பால் வகுத்துப்
 பட்டிமையால் ஆகா பரமார்த்தம் பற்றுஇன்மை
 ஓட்டுவான் உய்ந்துபோ வான்.

விளக்கவுரை ஒருவனின் சிறந்த ஒழுக்கம் அவன் கற்றறிந்த நூலில் உள்ள நுண் உணர்வைப் புலப்படுத்தும்; ஒருவனது வெறுக்கக்கூடிய இழிவான செய்கை அவனது இழி தகைமையான நல்ல நூல் பயிற்சி இன்மையைப் புலப்படுத்தும்; பகுதி தோறும் வேறுபட்டு ஒருவன் செய்யும் பொய்யான ஒழுக்கத்தால் பரம்பொருளை அடைய இயலாது; உண்மையாகவே ஒருவன் பற்று அற்ற இயல்பை மேற்கொள்வானானால் அவன்

வீரம் அற்ற படைத்துணை பயன் அற்றது பாடல்  - 52

புனைபடை கண்டுஅஞ்சித் தற்காப்பான் தன்னை
 வினைகடியும் என்றுஅடி வீழ்தல் - கனை இருள்கண்
 பல்எலி தின்னப் பறைந்திருந்த பூனையை
 இல்எலி காக்கும்என் றற்று.

விளக்கவுரை படைக்கலன்களைக் கைக்கொண்டு வரும் படையைப் பார்த்துப் பயந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டி விரைவாய் ஓடும் ஒருவனை (வேறொருவன்) எனக்கு வந்த போரைப் போக்குக என்று அவனது அடியில் விழுந்து வேண்டிக்கொள்ளுதல், நள் இருளில் பல எலிகளும் வீட்டில் உள்ள பொருள்களைத் தின்று கொண்டிருப்பதாகக் கண்டும் ஒன்றும் செய்ய முடியாது வீணே கூச்சல் இட்ட பூனையை ஒத்தது.

அவா உடையார் ஆசிரியர் ஆகார் பாடல் - 53

மாடமும் மண் ஈடும் கண்டுஅடக்கம் இல்லாரைக்
 கூடி வழிபடும் கோளமை - ஆடுஅரங்கின்
 நோவக மாய் நின்றான்ஓர் கூத்தனை ஊர்வேண்டிச்
 சேவகமாய் நின்றது உடைத்து.

விளக்கவுரை சிறிய வீட்டையும் பெரிய மாளிகைகளையும் பார்த்து அடங்காத ஆசை உடையவரைத் தலைப்பட்டு ஆசிரியர் எனக் கருதி வழிபடும் தன்மை, அமைக்கப்பட்ட நடன சாலையில் வருத்தம் உடையவனாய் நிற்பவனான கூத்தன் நடிக்க, அவன் கொண்ட அரச கோலத்தைக் கண்டு மயங்கி, அவனை ஊரார் தம்மை ஆள்க என்று சொல்லிப் பணி செய்து நிற்பதைப் போன்றதாகும்

உறுதிப் பொருள் உரையார் பாடல் - 54

நாற்றம் ஒன்று இல்லாத பூவொடு சாந்தினை
 நாற்றந்தான் வேண்டியது போலும் - ஆற்ற
 மறுவறு சீலமும் நோன்பும் இல்லாரை
 உறுபயன் வேண்டிக் கொளல்.

விளக்கவுரை குற்றம் இல்லாத ஒழுக்கமும் தவமும் மிக இல்லாதவர்களை உறுதிப்பொருளை உணர்த்துமாறு வேண்டிக்கொள்ளல், நறுமணம் சிறிதும் இல்லாத மலா¢டம் சந்தனத்தையும் நறு மணத்தையும் தரும் என விரும்பியது போலாம்.

நற்குணம் இல்லாதவரிடம் உறுதியை எதிர்பார்க்கக் கூடாது பாடல் - 55

மால்கடல்சூழ் வையத்து மையாதாம் காத்துஓம்பிப்
 பால்கருதி அன்னது உடைத்துஎன்பர் - மேல்வகுத்து
 மன்னிய நற்குணம் இல்லாரைத் தாம் போற்றிப்
 புண்ணியம் கோடும் எனல்.

விளக்கவுரை : பொருந்திய நல்ல குணங்களைப் பெற்றிராதவரை உயர்ந்தவராகத் துதித்து நாம் புண்ணியத்தை அடைவோம் என்று நினைத்தல் பெரிய கடல் சூழ்ந்த உலகத்தில் சிலர் மலட்டுப் பசுவை மிகவும் பாதுகாத்து அதனால் பாலை அடைய எண்ணியதைப் போன்றது எனவுரைப்பர். 

பலபேர் சொன்னாலும் பொய் மெய்யாகாது பாடல் - 56

உடங்கமிழ்தும் கொண்டான் ஒருவன் பலரும்
 விடம்கண்டு நன்றுஇதுவே என்றால் - மடம் கொண்டு
 பல்லவர் கண்டது நன்றுஎன்று அமிழ்து ஒழிய
 நல்லவனும் உண்ணுமோ நஞ்சு.

விளக்கவுரை உயிரும் உடலும் ஒன்று கூடி நிற்றற்குரிய தேவாமிர்தத்தைப் பெற்ற ஒருவன், பல பேரும் நஞ்சைப் பார்த்து, இதுவே அமிழ்தம் எனக்கூறினாலும் பல பேர் கண்டதே உண்மையாய் இருக்கும் என்று நம்பி அமிழ்தத்தைப் பெற்ற அவனும் அறியாமையை உடையவனாய்க் கையிலே உள்ள அமிர்தத்தை விட்டு விடத்தை உண்ணுவானோ! உண்ணமாட்டான்.

ஞானியர் இவர் பாடல் - 57

தன்னையும் தன்னில் பொருளையும் பட்டாங்கில்
 பன்னி அறம்உரைக்க வல்லாரை - மன்னிய
 சிட்டர் எனச் சிட்டன் தேற்றுவது அல்லாரைச்
 சிட்டர் என்று ஏத்தல் சிதைவு.

விளக்கவுரை தன்னையும் தன்னால் அறியத்தக்க பொருளையும் உண்மையாகச் சொல்லி அறத்தை உரைக்கும் ஆற்றல் உள்ளவரை நிலைபெற்ற ஞானம் உடையவர் என, ஞானி பலருக்கும் தெளிவிப்பது நன்மையைத் தருவதாகும். அத் தகையவர் அல்லாதவரை ஞானியர் எனப் புகழ்தல் கேட்டை அளிப்பதாகும்.

ஏகான்ம வாதியரின் இயல்பு பாடல் - 58

எத்துணை கற்பினும் ஏகான்ம வாதிகள்
 புத்தியும் சொல்லும் பொலிவுஇலவாய் - மிக்க
 அறிவன்நூல் கற்றார் அலஎனவே நிற்கும்
 எறிகதிர் முன் நீள்சுடரே போன்று.

விளக்கவுரை எவ்வளவு நூல்களைக் கற்றாலும் ஆன்மா ஒன்றே என்று வாதிப்பவரின் அறிவும் சொல்லும் கதிரவன் முன்பு உயர்ந்து எரியும் விளக்கைப் போல விளங்குதல் இல்லாமல், மிகுந்த இறைவனால் அருளப்பட்ட நூல் கற்றவர் அல்லர் என்று கூறும்படி விளங்கும்.

பிறவிப் பிணியைப் போக்க வல்லார் பாடல் - 59

அவ்விநயம் ஆறும் மும்மூடம் எண்மயமும்
 செவ்விதின் நீக்கிச் சினம்கடிந்து - கவ்விய
 எட்டுஉறுப்பின் ஆய இயல்பின்நற் காட்சியார்
 சுட்டுஅறுப்பர் நாற்கதியின் துன்பு.

விளக்கவுரை அச்சத்தினால் வணங்குதல் முதலிய ஆறு அவ்வி நயங்களும், உலக மயக்கம் முதலான மூன்று மயக்கங்களும், அறிவினால் வரும் எட்டுவகைச் செருக்குகளுமானவற்றை நன்கு முற்றிலும் அகற்றி சினத்தை விலக்கி மேற்கொள்வதற்குரிய ஐயம் இல்லாமை முதலான எட்டு உறுப்புகளுடன் கூடிய சிறந்த நற்காட்சியர் ஆகிய அறிவினர் நான்கு வகையான பிறவியால் வரும் பிணியை எரித்து அழிக்கும்.

அவ்விநயம் ஆறு பாடல் -60

அச்சமே ஆசை உலகிதம் அன்புஉடைமை
 மிக்கபா சண்டமே தீத்தெய்வம் - மெச்சி
 வணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்ட
 குணங்களில் குன்றா தவர்.

விளக்கவுரை மாட்சிமைப்பட்ட குணங்களில் குறையாத சான்றோர்கள் அச்சமும் ஆசையும் லெளகிகமும் அன்புடைமையும் இழிவு மிகுந்த புறச் சமயமும், கொடிய தெய்வத்தைப் பாராட்டி வணங்குவதும் விநயம் அல்லாதது என்று கூறுவர்.

ஆறு பெரியோர் பாடல் - 61

மன்ன னுடன் வயிறு மாண்புஉடைத் தாய்தந்தை
 முன்னி முடிக்கும் முனியாசான் - பன்னி அங்கு
 ஆயகுரவர் இவர்என்ப வையத்துத்
 தூய குலம்சாதி யார்க்கு.

விளக்கவுரை இந்தவுலகத்தில் தூய்மையான குலத்தின் நலமும் சாதி நலனும் உடையவர்க்கு அரசனும், தம்மைப் பெற்றதால் மேன்மையுடைய தாயும், தந்தையும் எண்ணியதைச் செய்து முடிக்கும் துறவியும், குருவும் அவருடைய மனைவியும் ஆகிய இவர்களே குரவர்கள் என்று சான்றோர் கூறுவர்.

அறிவற்றவர்கள் பாடல் - 61

கண்டதனைத் தேறா தவனும் கனாக்கண்டு
 பெண்டிரைப் பேதுற்றுக் கொன்றானும் - பண்டிதனாய்
 வாழ்விப்பக் கொண்டானும் போல்வரே வையத்துக்
 கோள்விற்பக் கொள்ளாநின் றார்.

விளக்கவுரை இந்த உலகத்தில் பொய்யை மெய் என்று சொல்லி விற்க, அதை விலை தந்து வாங்குவோர், தானே நோ¢ல் பார்த்ததைத் தெளிவு கொள்ளாதவனும், கனவில் தன் மனைவி அயலானைக் கூடியிருப்பதாகக் கனவு கண்டு அவளைக் கொன்றவனும், அறிவு உடையவனாய் இருந்தும், தன் வாழ்வுக்குப் பிறர் உதவியை நாடுபவனும் போல அறிவற்றவரே ஆவர்.

பாசண்டி மூடம் பாடல்  - 63

தோல்காவி சீரைத் துணிகீழ் விழஉடுத்தல்
 கோல்காக் கரகம் குடைசெருப்பு - வேலொடு
 பல்என்பு தாங்குதல் பாசண்டி மூடமாய்
 நல்லவரால் நாட்டப்படும்.

விளக்கவுரை தோலையும், காவியாடையையும், மரவுரியையும் துணியையும், கீழே விழும்படி உடுத்திக்கொள்ளலும் தண்டையும், காவடியையும், கமண்டலத்தையும், குடையையும், செருப்பையும், வேலையும், பல்லையும் எலும்பையும் தாங்குதல் ஆகியவை புறச் சமயங்களின் அறயாமையாகப் பொ¢யவரால் கூறப்படும்.

பயன் அற்ற வெளிக்கோலம் பாடல் - 64

ஆவரணம் இன்றி அடுவாளும் ஆனைதேர்
 மாஅரணம் இன்றி மலைவானும் - தாஇல்
 கழுதை இலண்டம் சுமந்தானும் போலப்
 பழுதாகும் பாசண்டி யார்க்கு.

விளக்கவுரை கேடயம் இல்லாது பகைவரைக் கொல்கின்ற வாளும், யானைப்படையும், தேர்ப்படையும், குதிரைப்படையும், அரணும் இல்லாமல் போர்செய்யும் வீரன் செயலும், குற்றம் இல்லாத கழுதையின் மீது ஏறிச் சென்றும் சுமையைத் தன் தலையில் தாங்கிச் செல்பவள் செயலும் போல் போலித் துறவியர்க்கு அவர் மேற்கொண்டுள்ள வேடமும் பயன் அற்றதாகும். 

எட்டுவகையான செருக்கு பாடல் - 65

அறிவுடைமை மீக்கூற்றம் ஆனகுலனே
 உறுவலி நற்றவம் ஓங்கியசெல்வம்
 பொறிவனப்பின் எம்போல் வார் இல்என்னும் எட்டும்
 இறுதிக்கண் ஏமாப்பு இல.

விளக்கவுரை அறிவு உடைமையாலும், புகழாலும், உயர்ந்த பிறவியாலும், மிக்க வலிமையாலும், நல்ல தவத்தினாலும், உயர்வான செல்வத்தாலும், நல் ஊழாலும், உடல் அழகாலும் எம்மைப் போன்றவர் இல்லை எனச் சொல்லி மகிழ்ச்சி அடையும் எட்டு வகையான செருக்கும் இறுதியில் இன்பம் செய்யா.

சினத்தால் பயன் சிறிதும் இல்லை பாடல்  - 66

உழந்துஉழந்து கொண்ட உடம்பினைக்கூற்று உண்ண
 இழந்துஇழந்து எங்ஙணும் தோன்றச் - சுழன்று உழன்ற
 சுற்றத்தார் அல்லாதார் இல்லையால், நல் நெஞ்சே
 செற்றத்தால் செய்வது உரை.

விளக்கவுரை நல்ல மனமே! பலமுறை முயன்று நாம் அடைந்த உடலை இயமன் கவர்ந்து கொண்டு போக எவ்விடத்தும் பிறத்தலால் உலக வாழ்வில் நம்மொடு கூடிச் சுழன்று திரிந்த மக்களுள் உறவினர் அல்லாதவர் வேறு எவரும் இலர். அங்ஙனமேல் பிறர்மாட்டுக் கொள்ளும் சினத்தால் செய்யக் கூடியது யாது? கூறுவாய்!

குணத்தைக் கொள்ள வேண்டும் பாடல்  - 67

உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளிச்
 செயிரும் சினமும் கடிந்து - பயிரிடைப்
 புல்களைந்து நெற்பயன் கொள்ளும் ஒருவன்
 நல்பயன் கொண்டிருக்கற் பாற்று.

விளக்கவுரை உயிரும் உடலும் வேறு வேறாகப் பிரிவது தவறாது என்பதை எண்ணிக் களைச் செடியைப் பிடுங்கி எறிந்து நெல்லின் பயனை அடையும் உழவனைப் போன்று பகையும் கோபத்தையும் அகற்றி இன்பத்துக்குக் காரணமான நல்ல செயலை மேற்கொண்டு ஒழுகுதல் நன்மை தருவதாகும்.

நற்காட்சிக்கு உரிய எட்டு உறுப்புகள் பாடல் - 68

ஐயம் அவாவே உவர்ப்பு மயக்குஇன்மை
 செய்பழி நீக்கல் நிறுத்துதல் - மெய்யாக
 அன்புடைமை ஆன்ற அறவிளக்கம் செய்தலோடு
 என்றுஇவை எட்டாம் உறுப்பு.

விளக்கவுரை சந்தேகமும் ஆசையும் வெறுப்பும் மயக்கமும் என்ற இவை இல்லாமையும், பழியினின்று மனத்தை மீட்டலும், மன மொழி மெய்களை நல்ல நெறியில் நிறுத்துதலும், உயிர்களிடம் எப்போதும் மாறாத அன்புடைமையும், சிறந்த அறத்தைப் பலர்க்கும் செய்வதும் ஆகிய இவ்வெட்டும் நற்காட்சிக்கு உரிய அங்கங்களாகும்.

அறநெறியினின்று வழுவார் பாடல் - 69

மக்கள் உடம்பு பெறற்குஅரிது பெற்றபின்
 மக்கள் அறிவும் அறிவுஅரிது - மக்கள்
 அறிவது அறிந்தார் அறத்தின் வழுவார்
 நெறிதலை நின்றுஒழுகு வார்.

விளக்கவுரை மனித உடல் அடைவதற்கு அரியதாகும். பிறந்த பின்னர் மக்கள் உணர்வான ஆறு அறிவையும் பெறுதல் அதைவிட அரியதாகும். ஆறறிவையுமுடைய மக்களாய்த் தோன்றி அறிய வேண்டியதை அறிந்தவர் அற நெறியினின்றும் சிறிதும் தவறார். அன்றியும் அறநெறியை மேற்கொண்டு அதற்கு ஏற்ப நடப்பார்.

ஒழுக்கம் விழுப்பம் தரும் பாடல்  - 70

பிறந்த இடம் நினைப்பின் பேர்த்து உள்ளல் ஆகா
 மறந்தேயும் மாண்பொழியும் நெஞ்சே - சிறந்த
 ஒழுக்கத்தோடு ஒன்றி உயப்போதி அன்றே
 புழுக்கூட்டுப் பொச்சாப்பு உடைத்து.

விளக்கவுரை பெருமை அற்ற மனமே! இதற்கு முன்பு தோன்றிய இடங்களை நீ எண்ணிப் பார்க்கின், அவற்றை மறந்தும் திரும்ப நினைத்தல் ஆகாது. (ஆதலால் நீ) புழுக்கள் கூடி வாழும் இடமாகிய இந்த உடலைப் பெற்றதால் ஏற்படும் மறதியைக் கெடுத்து, பெரியவர் ஒழுக்கத்தில் நின்று, துன்பத்தினின்றும் உயர்வாயாக.

கற்றவர்க்குரிய ஒழுக்கம் பாடல் - 71

தேசும் திறன்அறிந்த திட்பமும் தேர்ந்து உணர்ந்து
 மாசு மனத்தகத்து இல்லாமை - ஆசு இன்றிக்
 கற்றல் கடன்அறிதல் கற்றார் இனத்தராய்
 நிற்றல் வரைத்தே நெறி.

விளக்கவுரை புகழும், நன்மை தீமைகளின் கூறுபாடுகளை அறிந்த உள்ளத்தின் உறுதியும் உடையவராய், மெய்ப்பொருளை ஆராய்ந்து உணர்ந்து உள்ளத்தில் குற்றம் இன்றிப் பிழையறக் கற்றலும், தன் கடமையை அறிதலும், கற்றவர் இனத்தவராய் நிற்றலுமான எல்லையை உடையதே கற்றவர்க்கு உரிய ஒழுக்கம்.

கல்வியின் இன்றியமையாமை பாடல்  - 72

எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவர்க்கு
 மக்கட் பிறப்பின் பிறிதுஇல்லை - அப்பிறப்பில்
 கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
 நிற்றலும் கூடப் பெறின்.

விளக்கவுரை எந்தப் பிறவியாயினும் மக்களது பிறவியைப் போன்று ஒருவனுக்கு இன்பம் செய்வது வேறு ஒன்று இல்லை. அந்த மக்கள் பிறவியில் கற்க வேண்டியவற்றைக் கற்றலும் கற்றவற்றைச் சான்றோரிடத்துக் கேட்டுத் தெளிதலும் கேட்ட அந்நெறியில் நிற்பதும் கைகூடப் பெற்றால்!

கல்விக்கு அழகு பாடல்  - 73

கற்றதுவும் கற்றொருபால் நிற்பக் கடைப்பிடியும்
 மற்றுஒருபால் போக மறித்திட்டுத் - தெற்றென
 நெஞ்சத்துள் தீமை எழுதருமேல் இன்னாதே
 கஞ்சத்துள் கல்பட்டாற் போன்று.

விளக்கவுரை கற்கத் தக்கனவற்றைக் கற்றதனால் ஆன அறிவு ஒழுக்கத்தில் சிறிதும் கலவாது ஒரு புறம் நிற்கவும், எடுத்த செயலை முடிக்கும் துணிவு அந்நூல் துணிவுளில் மாறுபட மற்றொரு புறம் போகவும், நல்ல வழியின் செலவைத் தடுத்து உள்ளத்தில் விரைய தீய எண்ணம் தோன்றுமானால், உண்ணப் புகுந்த அப்பக் கூட்டத்துள் பொருந்திய கல்லைப் போல் அது மிக்க துன்பத்தை அளிப்பதாகும்.

கற்றவர் தவற்றைப் பலரும் காண்பர் பாடல் - 74

விதிப்பட்ட நூல்உணர்ந்து வேற்றுமை நீக்கிக்
 கதிப்பட்ட நூலினைக் கைஇகந்து ஆக்கிப்
 பதிப்பட்டு வாழ்வார் பழிஆய செய்தல்
 மதிப்புறத்தில் பட்ட மறு.

விளக்கவுரை ஒழுக்க விதிகளை உடைய நூலைக் கற்று உணர்ந்து, அவற்றுக்குள் உடன்படாதவற்றைச் செய்யாது அகற்றி, ஞான நூலை எல்லை இல்லாமல் உலகவர் பொருட்டாகச் செய்து, இறைவனை அடைய விரும்பி வாழ்பவர், மற்றவர் பழித்தற்குக் காரணமானவற்றைச் செய்தல் சந்திரனிடத்தில் ஏற்பட்டுள்ள களங்கம் போன்றதாகும்.

அறிவில்லாதவரைச் சேராது விலகுக பாடல்  - 75

பற்றொடு செற்றம் பயம்இன்றிப் பலபொருளும்
 முற்ற உணர்ந்தான் மொழிந்தன கற்றும்
 கடையாய செய்து ஒழுகும் கார் அறிவினாரை
 அடையார் அறிவுடை யார்.

விளக்கவுரை ஆசையும் பகையும் அச்சமும் இல்லாது பல பொருள்களின் இயல்பையும் ஒன்று விடாமல் அனைத்தையும் அறிந்த அருகக் கடவுள் கூறியவற்றைக் கற்றாலும் பழிக்கப்படுகின்றவற்றைச் செய்து நடக்கின்ற அறிவு அற்றவர்களை அறிவுடையவர் அடைய மாட்டார்கள். (நெருங்கமாட்டார்கள்)

செல்வங்களுக்குக் காரண பாடல் - 76

நல்வினைப்பின் அல்லால் நறுந்தாமரை யாளும்
 செல்லாள் சிறந்தார்பின் ஆயினும் - நல்வினைதான்
 ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி
 நீத்தல் ஒருபொழுதும் இல்.

விளக்கவுரை தன்னை விரும்புபவரிடத்தும் நல்வினை காரணமாக அன்றி, நல்ல தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் செல்லமாட்டாள்; அந்நல்வினை, கல்வியும் ஒழுக்கமும் கொடைக்குணமும் உள்ள இடத்தில் எப்போதும் நீங்குதல் இல்லை. (எனவே திருமகள் நல்வினை உள்ளவா¢டத்தில் நீங்காதிருப்பாள்)

தன்னை உயர்த்துபவன் தானே பாடல்  - 77

தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறி நிற்பில்
 ஒன்றானும் தான்நெறி நில்லானேல் - தன்னை
 இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்
 சிறுவனாச் செய்வானும் தான்.

விளக்கவுரை ஒருவன் நல்ல நெறியில் நிற்பானாயின் அவனை விட வேறான வேறு ஒரு தெய்வம் இல்லை. அவன் அவ்வித நெறியில் நில்லாது போனால் அவனின் தாழ்ந்தது வேறு ஒன்றும் இல்லை. தன்னைப் பிறர்க்குத் தலைவனாகச் செய்து கொள்பவனும் அவனே ஆவான். தன்னை மற்றவர்க்குத் தாழ்ந்தவனாகச் செய்துகொள்பவனும் தானே ஆவான்

நல்வினையை நாடுக பாடல்  - 78

அஞ்சினாய் ஏனும் அடைவது அடையுங்காண்
 துஞ்சினாய் என்று வினைவிடா - நெஞ்சே
 அழுதாய் எனக்கருதிக் கூற்று ஒழியாது ஆற்றத்
 தொழுதேன் நிறையுடையை ஆகு.

விளக்கவுரை உள்ளமே! துன்பத்தைப் பார்த்து அச்சம் கொண்டாய் என்றாலும் வரும் துன்பம் வந்தே சேரும். தீவினைப் பயனைப் பொறுக்காது இறந்தாய் என்று எண்ணிச் செய்த வினைகள் உன்னை மறுபிறவியில் தொடராமல் இரா. நீ இறப்புக்கு அஞ்சி அழுதாய் என்று நினைத்து வந்த இயமன் உயிரைக் கவராமல் போகான். (ஆதலால்) மிகவும் உன்னை வணங்கினேன்! நிறைந்த தன்மையைக் கொண்டவனாதலால்.

தற்புகழ்ச்சி கூடாது பாடல் - 79

 பலகற்றோம் யாம்என்று தற்புகழ வேண்டர்
 அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்;
 சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு
 அச்சாணி அன்னதோர் சொல்.

விளக்கவுரை பரந்த கதிர்களையுடைய கதிரவனைக் கையில் உள்ள சிறிய குடையும் மறைக்கும். (ஆகவே) யாம் பல நூல்களையும் கற்றுள்ளோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது. (ஏனென்றால்) பல நூல்களையும் ஆராய்ந்து கற்றவர் கட்கும் அச்சாணி போன்ற இன்றியமையாத உறுதிச் சொல் சில நூல்களையே கற்றவரிடத்தும் இருக்கும். 

பொறுமையை மேற்கொள்ளத் துன்பம் நீங்கும் பாடல்  - 80

தன்னை ஒருவன் இகழ்ந்துரைப்பின் தான் அவனைப்
 பின்னை உரையாப் பெருமையான் - முன்னை
 வினைப்பயனும் ஆயிற்றாம் என்று அதன்கண் மெய்ம்மை
 நினைத்தொழிய நெஞ்சில் நோய்இல்.

விளக்கவுரை ஒருவன் தன்னை இகழ்ந்து பேசினால், பின்பு தானும் இகழ்ந்து உரைத்த அவனை உரையாத பெருமையுடையவன், முன்பிறப்பில் செய்த தீவினைப் பயனும் இதனால் ஆனதுது என்று அதன் உண்மையை எண்ணி, அதனைக் கருதாது மனத்தில் துன்பம் இல்லாது இருப்பான்.

கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்க பாடல்  - 81

எள்ளிப் பிறர்உரைக்கும் இன்னாச்சொல் தன்நெஞ்சில்
 கொள்ளிவைத் தாற்போல் கொடிதுஎனினும் - மெள்ள
 அறிவுஎன்னும் நீரால் அவித்துஒழுகல் ஆற்றின்
 பிறிதுஒன்று வேண்டா தவம்.

விளக்கவுரை தன்னை மற்றவர் இகழ்ந்து கூறும் கொடிய சொல் நெருப்பினால் சுட்டாற் போன்று தன் மனத்தில் துன்பத்தைத் தருவதாயினும் அறிவாகிய நீரால் அமைதியாக அந்தத் துன்பத்தைக் கெடுத்து ஒழுகுவாய் என்றால் வேறு தவம் ஒன்றைச் செய்ய வேண்டியதில்லை.

பிறர்க்கு முற்பகல் செய்த தீமை பிற்பகல் விளைதல் பாடல் - 82

நம்மைப் பிறர்சொல்லும் சொல்இவை நாம்பிறரை
 எண்ணாது சொல்லும் இழுக்குஇவை என்று எண்ணி
 உரைகள் பா¢யாது உரைப்பார்இல் யாரே
 களை கணதில்லா தவர்.

விளக்கவுரை நம்மைக் குறித்து மற்றவர் கூற வேண்டும் என்று நாம் கருதும் சொற்கள் இவை; நாம் ஆராயாமல் மற்றவரை இகழ்ந்து கூறும் சொற்கள் இவை என ஆராய்ந்து இரங்காமல் (பாராமல்) பிறர் மீது கடுஞ்சொற்கள் கூறுபவராயின் அவரைப்போல் பற்றுக்கோடு அற்றவர் யார்? ஒருவரும் இல்லை.

முன்பகல் செய்யின் பின்பகல் விளையும் பாடல் - 83

பிறர்க்கு இன்னா செய்தலின் பேதைமை இல்லை
 பிறர்க்கு இன்னாது என்றுபேர் இட்டுத் - தனக்கு இன்னா
 வித்தி விளைத்து வினைவிளைப்பக் காண்டலின்
 பித்தும் உளவோ பிற.

விளக்கவுரை நாம் மற்றவர்க்குத் துன்பம் செய்வதைக் காட்டிலும் அறியாமை இல்லை. மற்றவர்க்குச் செய்யும் துன்பம் எனக் கருதித் தனக்குப் பயிர் செய்து வினையைத் தேடிக்கொள்வதை விடப் பிற அறியாமை தான் உண்டோ! நீ சொல்வாய்!

புறம் சொல்லுதலின் இழிவு பாடல் - 84

முன்நின்று ஒருவன் முகத்தினும் வாயினும்
 கல்நின்று உருகக் கலந்துரைத்துப் - பின்நின்று
 இழித்துஉரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
 விழித்துஇமையார் நின்ற நிலை.

விளக்கவுரை வானவர் விழித்தகண் மூடாமல் நிற்கும் நிலைக்குக் காரணம், ஒருவனுக்கு முன் இருந்து கல்லும் உருகுமாறு முகம் மலர்ந்து வாயாலும் இன்சொல் கூறிப் புகழ்ந்து, அவன் இல்லாத இடத்தில் அவனையே இகழ்ந்து பேசுகின்ற கயவர்களை, கண்களை மூடினால் நம்மையும் அவர்கள் இகழ்வார்களே என்று அச்சம் கொண்டதால் ஆகும்.

புறம் கூறாததால் ஏற்படும் உயர்வு பாடல் - 85

பொய்ம்மேல் கிடவாத நாவும் புறன்உரையைத்
 தன்மேல் படாமைத் தவிர்ப்பானும் - மெய்ம்மேல்
 பிணிப்பண்பு அழியாமை பெற்ற பொழுதே
 தணிக்கும் மருந்து தலை.

விளக்கவுரை புறங்கூறுதலைத் தன்னிடம் உண்டாகாமல் காத்துக்கொள்பவன், பொய்ம்மை பேசுவதில் செயல்படாத நாவையும், மெய் பேசுவதில் பொருந்தியிருக்கும் பண்புடைமை நீங்காமையையும் பெற்ற அப்போதே பிறவி நோயைப் போக்கும் சிறந்த மருந்தைப் பெற்றவன் ஆவான். 

குடியால் ஏற்படும் தீங்கு பாடல் - 86

ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்றோர்
 தெளியுடையர் என்று உரைக்கும் தேசும் - களிஎன்னும்
 கட்டுரையால் கோதப்படுமேல் இவைஎல்லாம்
 விட்டுஒழியும் வேறாய் விரைந்து.

விளக்கவுரை கள் குடியன் என்னும் பொருளுடைய பழிச்சொல்லால் ஒருவன் குற்றப்படுவானாயின், எல்லாராலும் நன்கு மதிக்கப்படுதலும், அந்தப் புகழுக்கு ஏற்ற செயலும், பெரியோர் இவர் தெளிவான அறிவை உடையவர் என்று கூறும் புகழும் என்னும் இவை அனைத்தும் வேறுபட்டு விரைவில் அவனை விட்டு நீங்கும்.

சூதால் உண்டாகும் தீமை பாடல் -  87

ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால்
 மேதை எனப்படும் மேன்மையும் - சூது
 பொரும் என்னும் சொல்லினால் புல்லப்படுமேல்
 இருளாம் ஒருங்கே இவை.

விளக்கவுரை சூதாடுவான் என்ற சொல்லால் ஒருவன் பற்றப்படுவானானால் அறிவு நூல்களைக் கற்றலும், கற்றவற்றை ஆராய்தலும், அறிவுடையவன் என்னும் பெருமையும் - இவை முழுதும் அவனை விட்டு மறையும்.

மானம் அழியின் இறத்தலே நன்று பாடல்  - 88

தனக்குத் தகவுஅல்ல செய்து ஆங்குஓர் ஆற்றால்
 உணற்கு விரும்பும் குடரை - வனப்புஅற
 ஆம்பல்தாள் வாடலே போல அகத்து அடக்கித்
 தேம்பத்தாம் கொள்வது அறிவு.

விளக்கவுரை ஒருவன் தனக்கு தகுதியற்றவற்றைச் செய்து ஒருவாறு உண்ணுவதை விரும்பும் குடலை, ஆம்பற்கொடி வாடுதலைப் போல் அழகு கெடவும் இளைக்கு மாறும் தாம் உள்ளே அடக்கிக்கொண்டிருப்பது அறிவுடைமையாகும்.

பிறர் மனைவியை விரும்பினால் வரும் கேடு பாடல்  89 

அறனும் அறன்அறிந்த செய்கையும் சான்றோர்
 திறன்உடையன் என்றுஉரைக்கும் தேசும் - பிறன்இல்
 பிழைத்தான் எனப்பிறரால் பேசப்படுமேல்
 இழுக்காம் ஒருங்கே இவை.

விளக்கவுரை அயலவன் மனைவியை விரும்பினான் என்று மற்றவரால் ஒருவன் பேசப்படுவானாயின் அவன் மேற்கொண்ட அறமும், அந்த அறத்துக்கு ஏற்ற செயலும், பெரியவர் நெறி உடையவன் என்று கூறும் புகழும் ஆகிய இவை முழுவதும் பழியாகும்.

காம எண்ணத்தின் கொடுமை பாடல்  - 90

சாவாய் நீ நெஞ்சமே சல்லிய என்னைநீ
 ஆவதன்கண் ஒன்றானும் நிற்கஒட்டாய் - ஓவாதே
 கட்டுஅழித்துக் காமக் கடற்குஎன்னை ஈர்ப்பாயே
 விட்டுஎழுங்கால் என் ஆவாய் சொல்.

விளக்கவுரை மனமே! நீ கெடுவாயாக! கலக்கம் அடைந்த என்னை நல்ல நெறியில் ஒன்றிலும் நிற்கும்படி விடாமல் ஒழிவின்றி உறுதியைக் கெடுத்து, ஆசை என்னும் கடலுக்கு என்னை இழுக்கின்றாய். பொருளின் மீதுள்ள பற்றை விட்டு நான் எழும்போது நீதான் எந்த நிலையை அடைவாய் கூறுவாயாக!

காம எண்ணத்தை விலக்குதல் பாடல் - 91

 பழியோடு பாவத்தைப் பாராய்நீ கன்றிக்
 கழிபெருங் காம நோய் வாங்கி - வழிபடாது
 ஓடும் மனனே விடுத்து என்னை விரைந்துநீ
 நாடிக்கொள் மற்றோர் இடம்.

விளக்கவுரை மிகப்பெரிய ஆசை நோயை உட்கொண்டு என் வழியே இணங்காமல் பெண்களின் பால் ஆசை மிக்கு வருந்தி அவர்களிடம் ஓடும் மனமே, நீ பழியுடனே பாவங்களையும் எண்ணிப் பார்க்க மாட்டாய். ஆதலால் என்னை விட்டு நீங்கி அடைவதற்குரிய வேறு இடத்தை நீ விரைவில் தேடி அடைவாயாக!

செல்வமும் காமமும் விரும்புவோர் மக்கள் ஆகார் பாடல் - 92

மக்களும் மக்கள்அல் லாரும் என இரண்டு
 குப்பைத்தே குண்டுநீர் அவையகம் - மக்கள்
 அளக்கும் கருவிமற்று ஒண்பொருள் ஒன்றோ
 துளக்குறு வெள்வளையார் தோள்.

விளக்கவுரை ஆழமான நீரையுடைய கடல் சூழ்ந்த உலகம் மனிதர்களும் மனிதர் அல்லாதவரும் என இரு குவியல்களையுடையது. மக்களை அளவிடுகின்ற கருவிகள் சிறந்த செல்வமும், விளங்கும் சங்கு வளையல்களை அணிந்த மகளிர் தோளும் ஆகும்.

நன்னெறி காட்டுபவர் நட்பினர் பாடல் - 93

இம்மை அடக்கத்தைச் செய்து புகழ்ஆக்கி
 உம்மை உயர்கதிக்கு உய்த்தலால் - மெய்ம்மையே
 பட்டாங்கு அறம்உரைக்கும் பண்புஉடையாளரே
 நட்டார் எனப்படு வார்.

விளக்கவுரை இந்தப் பிறவியில் மன மொழி மெய்களால் அடங்கும் படி செய்து புகழைப் பொருந்தி மறு பிறவியில் வீடு பேற்றை அடையச் செய்தலால் இயல்பாகவே உண்மையான அறத்தை உரைக்கின்ற குணம் உடையவர்களே நட்பினர் என்று கூறப்படுவதற்கு உரியவர் ஆவார்.

அயல்நெறி விலக்குவார், பெரு நட்பாளர் பாடல் -  94

நட்டார் எனப்படுவார் நாடுங்கால் வையத்துப்
 பட்டாம் பலபிறப்புத் துன்பம் என்று - ஒட்டி
 அறநெறி கைவிடாது ஆசாரம் காட்டிப்
 பிறநெறி போக்கிற் பவர்.

விளக்கவுரை ஆராயுமிடத்து நட்பினர் எனக் கூறுதற்குரியவர், இப்பூமியில் பல பிறவிகளால் துன்பம் அடைந்தோம் எனக் கூறித் துணிந்து அறநெறியைத் தளரவிடாமல் ஒழுக்கத்தை உணர்த்தி மற்ற நெறியினின்றும் நீக்குபவர் ஆவார்.

வீடுபேற்றை அடையச் செய்பவர் பாடல்  - 95

நட்டாரை வேண்டின் நறுமென் கதுப்பினாய்!
 விட்டாரை அல்லால் கொளல் வேண்டா - விட்டார்
 பொறிசுணங்கு மென்முலைப் பொன் அன்னாய்! உய்ப்பர்
 மறிதரவு இல்லாக் கதி.

விளக்கவுரை நறுமணம் பொருந்திய மென்மையான கூந்தலை உடையவளே! நண்பரை அடைய விரும்பினால் பற்றுவிட்ட பெரியோரை அல்லாமல் பிறரைக் கொள்ள வேண்டா. பொலிவையும் சுணங்கையும் மென்மையையும் கொங்கையையும் உடைய இலக்குமியைப் போன்றவளே! அந்தப் பற்று அற்ற பொ¢யோர்கள் பிறவாமைக்குக் காரணமான வீடுபேற்றை அடையுமாறு செய்வர்.

தந்நலம் அற்றவர் தாய் போன்றவர் பாடல் - 96

காலொடு கை அமுக்கிப்பிள்ளையை வாய்நெறித்துப்
 பாலொடு நெய்பெய்யும் தாய்அனையர் - சால
 அடக்கத்தை வேண்டி அறன்வலிது நாளும்
 கொடுத்துமேற் கொண்டுஒழுகு வார்.

விளக்கவுரை மிகவும் அடங்கி இருக்குமாறு செய்ய எண்ணி ஒவ்வொரு நாள்தோறும் அறத்தைத் தாமாக வற்புறுத்தித் தந்து அடக்கி ஆளும் சான்றோர் கால்களுடன் கையைப் பற்றி அடக்கி வாயைத் திறந்து குழந்தைக்குப் பாலுடனே நெய்யையும் உண்ணச் செய்யும் தாய் போன்றவர் ஆவார்.

பெரியவர் நட்பினால் செல்வம் பெருகும் பாடல் - 97

கழியும் பகல்எல்லாம் காலை எழுந்து
 பழியொடு பாவம் படாமை - ஒழுகினார்
 உய்க்கும் பொறியாரை நாடி உழிதருமே
 துய்க்கும் பொருள்எல்லாம் தொக்கு.

விளக்கவுரை கழியும்படியான நாட்களில் எல்லாம் விடியற்காலையில் எழுந்து பழியுடன் பாவத்துக்குக் காரணமான செயல்கள் தம்மிடம் நிகழாமல் ஒழுகும் பெரியோர்களை தம்மிடம் அடைவிக்கும் செல்வம் உடையவரைத் தேடி அனுபவிக்கும் பலபொருள்களும் சேர்ந்து அடையும்.

தீநட்புடையார் திருடர் பாடல் - 98

காய உரைத்துக் கருமம் சிதையாதார்
 தாயரோடு ஒவ்வாரோ தக்கார்க்கு - வாய் பணிந்து
 உள்ளம் உருக உரைத்துப் பொருள் கொள்வார்
 கள்ளரோடு ஒவ்வாரோ தாம்.

விளக்கவுரை தளர்ச்சி அடைந்த போது மனம் வருந்தும்படி சொல்லி எடுத்த செயலை முடிக்குமாறு செய்பவர்கள் சான்றோர்களுக்கு தாயை ஒப்பவர் ஆவார். கேட்பவரின் மனம் உருகும் வண்ணம் வாய் அளவில் பணிவு உடையவராய்ப் பேசி உள்ள செல்வத்தைக் கவர்ந்து கொண்டு நீங்குபவர் திருடர்களை ஒப்பாவர்.

தீயார் நட்பு தீமை பயக்கும் பாடல்  - 99

அறுதொழில் நீத்தாரை மெச்சாது அவற்றோடு
 உறுநரைச் சார்ந்துஉய்யப் போதல் - இறுவரைமேல்
 கண்ணில் முடவன் துணையாக நீள்கானம்
 கண்ணிலான் சென்றது உடைத்து.

விளக்கவுரை அவ்விநயமான ஆறு தொழில்களையும் விட்டவரை விரும்பி அடையாமல் அவற்றைச் செய்து ஒழுகுபவர்களை அடைந்து பிறவி நோயினின்று விலக எண்ணுதல் கற்கள் நெருங்கிய மலை மீது உள்ள பெரிய காட்டைக் கடப்பதற்கு கண்ணும் காலும் இல்லாத முடவன் ஒருவனைத் துணையாகக் கொண்டு வேறு ஒரு குருடன் ஆனவன் சென்றார் போலும்.

பெரியோர் விலகுவர் பாடல் - 100

குற்றத்தை நன்றுஎன்று கொண்டு குணம் இன்றிச்
 செற்றம் முதலா உடையவரைத் - தெற்ற
 அறிந்தார் என்று ஏத்தும் அவர்களைக் கண்டால்
 துறந்துஎழுவர் தூய்க்காட்சி யவர்.

விளக்கவுரை தீமையை நன்மையாய் எண்ணி நற்குணம் என்பது சிறிதும் இல்லாமல் சினம் முதலியன உடையவர்களை மாறுபட அறிவுடையவர் என்று பாராட்டித் துதிப்பவர்களைப் பார்த்தால் நற்காட்சி உடையவர் அவர்களை விட்டு எழுவர்.

ஊன் உண்ணாதவனைத் துன்பங்கள் அணுகா பாடல் - 101

கொன்றுஊன் நுகரும் கொடுமையை உள்நினைந்து
 அன்றே ஒழிய விடுவானேல் - என்றும்
 இடுக்கண் எனஉண்டோ இவ்வாழ்க்கைக் குள்ளே
 படுத்தானாம் தன்னைத் தவம்.

விளக்கவுரை பிற உயிர்களைக் கொன்று புலாலை உண்ணும் தீய செயலை மனத்தால் எண்ணி ஆராய்ந்து அப்பொழுதே புலால் உண்பதை முற்றிலும் நீக்குவானானால் எக்காலத்தும் துன்பம் என உள்ளதாகுமோ? (ஆகாது) அவன் இல்லறத்தானாக இருந்தபடியே தன்னைத் துறவற நெறியில் நின்று தவம் செய்பவரை ஒத்தவன் ஆவான்.

அறிவற்ற செயல் பாடல் - 102

தம்புண் கழுவி மருந்திடுவர் தாம்பிறிதின்
 செம்புண் வறுத்த வறைதின்பர் - அந்தோ,
 நடுநின்று உலக நயன்இலா மாந்தர்
 வடுஅன்றோ செய்யும் வழக்கு.

விளக்கவுரை தமக்கு ஒரு புண் ஏற்பட்டால் அதை மற்றவர் கழுவித் தூய்மை செய்து மருந்தைப் பூசி ஆற்றுவர். (ஆனால்) அவர்கள் மற்றொன்றினுடைய சிவந்த புண்ணாம் இறைச்சியான வறுத்த புலாலை உண்பர். ஐயோ, நடுநிலையாய் நின்று உலக அறத்தை உணராத மனிதர் செய்கின்ற முறைமை குற்றமே ஆகும்.

நா, செவி, கண், மனம் ஆகியவற்றின் தூய்மை பாடல் - 103

அறம்கூறு நாஎன்ப நாவும் செவியும்
 புறம்கூற்றுக் கேளாத என்பர் - பிறன்தாரத்து
 அற்றத்தை நோக்காத கண்என்ப யார்மாட்டும்
 செற்றத்தைத் தீர்ந்ததாம் நெஞ்சு.

விளக்கவுரை அறத்தைச் சொல்லும் நாக்கே சிறந்த நா ஆகும் என்பர். புறம் கூறுதலைக் கேளாத காதும் சிறந்த செவியாகும் என்பர். மற்றவனது மனைவியினது சோர்வை எதிர்பாராத கண்ணே சிறந்த கண் ஆகும் என்று இயம்புவர். தீமை செய்பவரிடத்தும் பகைமை நீங்கியிருப்பதே மனம் ஆகும்.

தூய்மை முதலியவை இன்மை பாடல் - 104

பெண்விழைவார்க்கு இல்லை பெருந்தூய்மை பேணாதுஊன்
 உண்விழைவார்க்கு இல்லை உயிர்ஓம்பல் எப்பொழுதும்
 மண் விழைவார்க்கு இல்லை மறம் இன்மை மாணாது
 தம்விழைவார்க்கு இல்லை தவம்.

விளக்கவுரை அயலார் மனைவியை விரும்புபவர்க்கு மிக்க தூய்மை இல்லை. அருளை விரும்பாது புலால் உண்பதை விரும்புபவர்க்கு உயிரைக் காக்கும் தன்மை இல்லை. எப்போதும் அயலவரின் நாட்டை விரும்புபவர்க்கு அறம் இல்லை. பெருமைக்குத் தகாத செயல்களைச் செய்வதால் தவ ஒழுக்கம் உண்டாகாது.

கல்லான் முதலியவர் இயல்பு பாடல் - 105

கல்லான் கடைசிதையும் காமுகண் கண்காணான்
 புல்லான் பொருள் பெறவே பொச்சாக்கும் - நல்லான்
 இடுக்கணும் இன்பமும் எய்தியக் கண்ணும்
 நடுக்கமும் நன்மகிழ்வும் இல்.

விளக்கவுரை கற்க வேண்டியவற்றைக் கல்லாதவன் கீழானவனாய் அழிவான். காமம் கொண்ட ஒருவன் கண் தெரியாதவன் ஆவான். அற்பன் பொருளைப் பெற்ற அளவிலேயே தன் நிலைமை மறந்து நடந்துகொள்வான். அறிவுடையவன் துன்பமும் இன்பத்தையும் அடைந்தபோதும் நடுங்குதலும் நல்ல மகிழ்ச்சியும் அடைவதில்லை.

பழியின்றி வாழும் திறம் பாடல் - 106

தானத்தின் மிக்க தருமமும் தக்கார்க்கு
 ஞானத்தின் மிக்க உசாத்துணையும் - மானம்
 அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉம் இல்லை
 பழியாமல் வாழும் திறம்.

விளக்கவுரை சான்றோர்க்கு வேண்டியவற்றை உதவுதலை விடச் சிறந்த அறமும் இல்லை. பெரியோர்க்கு அறிவைக் காட்டிலும் சிறந்த ஆராயும் துணைவனும், பெருமை கொடாத ஒழுக்கத்தை விடச் சிறந்த நல்லொழுக்கமும் இல்லை. இவை பிறர் பழிக்காமல் வாழ்வதற்கேற்ற செயல்கள் ஆகும்.

உயர்வான முக்குணங்கள் பாடல் - 107

தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள்
 ஆய பொழுதுஆற்றும் ஆற்றலும் - காய்விடத்து
 வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையும் இம்மூன்றும்
 சாற்றுங்கால் சாலத் தலை.

விளக்கவுரை குற்றம் இல்லாமல் சொல்லும் குணமும் துன்பங்கள் உண்டான பொழுது தளர்ச்சியின்றி இருக்கும் பொறுமையும் தம்மை பெறுப்பவரிடத்தும் வேற்றுமை பாராட்டாத உண்மை நிலையும் இந்த மூன்றும் கூறுமிடத்து மிகவும் உயர்ந்தவை ஆகும்.

உலக வாழ்வுக்கான மூன்று பாடல் - 108

வெம்மை உடையது அடிசில் விழுப்பொருள்கண்
 செம்மை உடையதாம் சேவகம் - தம்மைப்
 பிறர்க்கு வாழ்வதாம் வாழ்க்கை இம்மூன்றும்
 ஊறவருவது ஓர்வதாம் ஓர்ப்பு.

விளக்கவுரை உணவாவது வெப்பத்துடன் இருப்பதாகும். மிக்க வருமானத்துடன் நடுவு நிலைமை தவறாதிருப்பதே உத்தியோகம் ஆகும். தம்மை மற்றவர் நினைத்து வாழ்வதற்கு ஏற்ப வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும். இம்மூன்றையும் அடைவிப்பதே ஆராய்வதான செயல்முடிக்கும் துணிவாகும்.

தீமையினை நன்மையினாலே வெல் பாடல் - 109

ஒறுப்பாரை யான் ஒறுப்பன் தீயார்க்கும் தீயேன்
 வெறுப்பார்க்கு நால்மடங்கே என்ப - ஒறுத்தியேல்
 ஆர்வம் மயக்கம் குரோதம் இவைமூன்றும்
 ஊர்பகை நின்கண் ஒறு.

விளக்கவுரை  மனமே, என்னைத் துன்புறுத்துபவர்களை நான் துன்புறுத்துவேன் என்றும், தீயவருக்கும் கொடியவன் ஆவேன் என்றும், என்னை வெறுப்பவர்க்கு நான்கு மடங்கு வெறுப்பேன் என்றும் உலகத்தவர் உரைப்பர். நீ இவற்றை மேற்கொண்டு மற்றவரை அடக்கச் செல்வாயானால் ஆசை அறியாமை வெகுளி என்னும் இவை இம்மூன்றும் நின்னை மேற்கொள்ளும் பகைகளாய்த் தோன்றும் (ஆதலால்) உன்னிடம் இவை உளவாகாவாறு அடக்கு

செல்வரை வழிபடக் காரணம் பாடல் - 110

குலத்துப் பிறந்தார் வனப்பு உடையார் கற்றார்
 நினைக்குங்கால் நின்றுழியே மாய்வர் - வினைப் பயன்கொல்
 கல்லார் குலம்இல்லார் பொல்லார் தறுகட்பம்
 இல்லார்பின் சென்ற நிலை.

விளக்கவுரை உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களும் அழகு உடையவர்களும் கற்றவர்களும் மானம் அழிந்ததையே நினைத்தால் நின்ற இடத்திலேயே உயிர்விடக் கூடியவர்களுமாகிய சான்றோர் கல்லாதவர்களும் தாழ்ந்த குலத்தவர்களும் தீயவர்களும் தீவினை செய்ய அஞ்சாதவர்களும் ஆகிய செல்வம் உடைய இழிந்தவர்களை வழிபட்டு நிற்பதற்குக் காரணம், அவர்கள் முன் செய்த தீவினைப் பயனே ஆகும்.

பெண் மயக்கு பாடல் - 111

வேட்டவாய்க் கேட்பர் விரைந்தோடி ஞாலத்தார்
 கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால் - கோட்டில்லா
 ஓதுமின் ஓதி அடங்குமின் என்னும் சொல்
 கூதற்குக் கூதிர் அனைத்து.

விளக்கவுரை மூதேவி போன்ற ஒருத்தியைப் பாடுமிடத்து உலகத்தவர் விரைவாகச் சென்று விரும்பி விருப்புடன் கேட்பர். மாறுபாடு இல்லாத நூல்களைக் கற்பீராக. கற்று அவற்றுக்கு ஏற்றபடி ஒழுகுவீராக என்று சான்றோர் கூறும் சொல் முன்னமே குளிரால் நடுங்கும் உடலுக்கு குளிர் காற்று வீசியதைப் போன்றதாகும்.

உணவு குறைய உயிர் குன்றும் பாடல் - 112

இறைஇறை யின்சந்தித்து என்பொடு ஊன்சார்த்தி
 முறையின் நரம்புஎங்கும் யாத்து - நிறைய
 அவாப்பெய்த பண்டியை ஊர்கின்ற பாகன்
 புகாச்சுருக்கில் பூட்டா விடும்.

விளக்கவுரை உறுப்புகளில் மூட்டு வாயை ஒன்றுடன் ஒன்று பொருத்தி எலும்புடனே தசையைச் சேர்த்து முறையே உடம்பில் நரம்பால் எல்லா இடங்களையும் உறுதியாய்க் கட்டி மிகுதியாக ஆசையை நிரப்பிய உடல் என்ற வண்டியை ஏறிச் செலுத்தும் உயிர் என்னும் பாகன் உணவைக் குறைத்தால் செலுத்துவதை விட்டுவிடுவான்.

உடம்பின் நிலையாமை பாடல் - 113

ஆசையும் பாசமும் அன்பும் அகத்துஅடக்கி
 பூசிப் பொதிந்த புலால் உடம்பு - ஊசல்
 கயிறுஅற்றால் போலக் கிடக்குமே கூற்றத்து
 எயிறுஉற்று இடைமுரிந்தக் கால்.

விளக்கவுரை பொருள் மீது ஆசையையும் வேட்கையையும் உறவினரிடம் பொருந்திய அன்பையும் மனைவியிடம் வைத்துள்ள காதலையும் உள்ளத்துள் அடக்கி தசையினால் கட்டப்பட்ட புலால் நாற்றம் வீசும் உடம்பானது, இயமனது பல்லில் சிக்கி அழிந்த போது, ஊஞ்சல் கயிறு அறுந்த போது ஊஞ்சல் செயலற்றுக் கிடப்பதைப் போன்று (அந்த உடல்) செயல் இழந்து விழுந்து கிடக்கும்.

வாழ்வு நிலையற்றது பாடல் -  114

மறந்து ஒருவன் வாழும்இம் மாயமாம் வாழ்க்கை
 அறிந்துஒருவன் வாழுமேல் இல்லை - செறிந்துஒருவன்
 ஊற்றம் இறந்துஉறுதி கொள்ளாக்கால் ஓகொடிதே
 கூற்றம் இடைகொடுத்த நாள்.

விளக்கவுரை இவ்வுலகத்தில் ஒருவன் தன் ஆன்ம சொரூபத்தை மறந்து வாழ்வதால் ஆன இப்பொய்யான வாழ்க்கை, அவன் ஆன்ம வடிவை அறிந்து வாழ்வானாயின் இல்லையாகும். ஒருவன் பற்றைவிட்டு ஞானத்தை அடையானாயின் இயமனிடம் அகப்படும் நாளில் அவன் அடையும் துன்பம் கொடியதே ஆகும்.

உலக வாழ்க்கை மாயமானது பாடல் -  115

தோற்றமும் சம்பிரதம்; துப்புரவும் சம்பிரதம்;
 கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம்; - தோற்றம்
 கடைப்பட்ட வாறு அறநிது கற்று அறிந்தார் துஞ்சார்
 படைப்பட்ட நாயகனே போன்று.

விளக்கவுரை பிறப்பும் மாய வித்தையாகும். பிறந்த உயிர் உலகப் பொருள்களை அனுபவித்தலும் மாயவித்தையாகும். இயமனும் வாழும் உயிர்களைக் கொண்டு செல்வதும் மாய வித்தையாகும். ஆதலால் ஞான நூல்களைக் கற்றுத் தெளிந்தோர் பிறப்பின் இழிவை அறிந்து போர் முனையை அடைந்த படைத்தலைவனைப் போன்று தளர்வு இல்லாது பிறப்பை அறுக்க முயல்வர்.

அறம்கெட வாழலாகாது பாடல் -  116

தெரிவுஇல் இளமையும் தீப்பிணியும் மூப்பும்
 பிரிவும் துயிலும் உறீஇப் - பருவந்து
 பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு
 வித்துக்குற்று உண்பார் பலர்.

விளக்கவுரை பொருள்களை ஆராய்தற்கு இயலாத இளமைப் பருவத்தையும், கொடிய நோய்களையும், முதுமைத் தன்மையையும், உறவினரைப் பிரிதலையும், மரணத்தால் வரும் துன்பங்களையும் அடைந்து வருந்திப் பயனில்லாது சில நாள் வாழும் வாழ்க்கைக்கு, அறிவற்ற வேளாளன் தான் விதைக்க வைத்துள்ள நெல் முதலியவற்றைக் குற்றி உண்டு விடுபவர் போல, வீடு பேற்றுக்குக் காரணமான அறத்தையே

அறிவு அற்றவர் மயக்கம் பாடல் - 117

பிறப்பு இறப்பு மூப்புப் பிணிஎன்று இந்நான்கும்
 மறப்பர் மதியிலா மாந்தர் - குறைகூடாச்
 செல்வம் கிளைபொருள் காமம்என்று இந்நான்கும்
 பொல்லாப் பொறி அறுக்கப்பட்டு.

விளக்கவுரை பிறப்பும், இறப்பும், முதுமையும், நோயும் என்ற இந் நான்கையும் அறிவு அற்ற மக்கள் மறந்து வாழ்வர். (அவர்கள் அவ்வாறு மறப்பதற்குக் காரணமான) குறையாத செல்வம், சுற்றம், மக்கள், காதல் மனைவி என்ற இந்த நான்கும் இடையில் தீய ஊழானது வர ஒழிந்து போனாலும் போகும் (ஆதலால்) அறிவு உடையார் பிறவி முதலியவற்றை மறக்க மாட்டார்.

ஒப்பில்லாத தவமே உடம்புக்கு உறுதி பாடல் -  118

மூப்புப் பிணியே தலைப்பி¡¢வு நல்குரவு
 சாக்காடும் எல்லாம் சலம்இலவாய் - நோக்கீர்
 பருந்துக்கு இரையாம்இவ் யாக்கையைப் பெற்றால்
 மருந்து மறப்பதோ மாண்பு.

விளக்கவுரை முதுமையும், நோயும், மனைவி, மக்களைப் பிரிதல், வறுமை, மரணம் ஆகிய இவையெல்லாவற்றையும் அவற்றின் காரணங்களையும் பொய் இல்லாமல் உண்மையாக ஆராயமாட்டீர். கழுகுகளுக்கு இரையாகும் இந்தவுடம்பைப் பெற்றால் இனி உடலை அடையாதவாறு தடுக்கின்ற மருந்தான தவத்தை மறந்து விடுவது பெருமையாகுமோ? ஆகாது.

இன்பத்து இயல்பு அறியாதார் பாடல் -  119

நீக்கஅருநோய் மூப்புத் தலைப்பிரிவு நல்குரவு
 சாக்காடு என்று ஐந்து களிறுஉழக்கப் - போக்கஅரிய
 துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்துஎய்தும்
 இன்பத்து இயல்புஅறி யாதார்.

விளக்கவுரை அகப்பற்று, புறப்பற்று ஆகியவற்றை விட்டு அடையும் இன்பத்தின் இயல்பை உணராதவர் தீர்த்தற்கு அரிய நோயும் முதுமையும் மனைவி மக்களைப் பிரிதலும் வறுமையும் இறப்பும் என்கின்ற ஐந்து யானைகளும் வருத்துவதனால் நீக்குதற்கு அருருமையான மிகப்பெரிய துன்பத்தை அடைவர்.

துறத்தல் சிறந்தது! பாடல் -  120

எக்காலும் சாதல் ஒருதலையே யான்உனக்குப்
 புக்கில் நிறையத் தருகிலேன் - மிக்க
 அறிவனை வாழ்த்தி அடவி துணையாத்
 துறத்தல்மேல் சார்தல் தலை.

விளக்கவுரை (மனமே!) எப்பொழுதேனும் இறந்து போவது உறுதியேயாகும். (ஆதலால்) நான் நினக்கு அழியும் தன்மையுடைய உடலை நிரம்பத் தந்துகொண்டு இருக்க மாட்டேன். உயர்ந்தவரான அருகப் பெருமானைத் துதித்துக் காட்டைத் துணையாக எண்ணி அடைந்து துறத்தலை மேற்கொள்ளுதல் சிறந்ததாகும்.

பாடல் -  121

அங்கம் அறஆடி அங்கே படமறைந்து
 அங்கே ஒருவண்ணம் கோடலால் என்றும்
 அரங்காடு கூத்தனே போலும் உயிர்தான்
 சுழன்றுஆடு தோற்றப் பிறப்பு

விளக்கவுரை உயிர்கள் ஏழு வகைப்பட்ட பிறவிகளிலும், சுழலுவதற்குக் காரணமான தோற்றத்தையுடைய பிறப்பால், உடல் நீங்கும் வரையில் தொழில் ஆற்றி, பின் உயிர் நீங்க, உலகினின்றும் நீங்கி, உலகத்தில் பின்பு ஒரு வடிவத்தைக் கொள்வதால், எந்நாளும் நாடகத்தில் அரங்கம் முடியும்வரை ஆடியும், பிற்பட மறைந்தும், பின்பு வேறோர் அரங்கத்தில் வேறு ஒரு கோலம் பூண்டு ஆடியும்  இப்படியாக.

பாடல் -  122

இக்காலத்து இவ்வுடம்பு செல்லும் வகையினால்
 பொச்சாவாப் போற்றித்தாம் நோற்பாரை - மெச்சாது
 அலந்துதம் வாய்வந்த கூறும் அவா¢ன்
 விலங்குகள் நல்ல மிக.

விளக்கவுரை இந்த உடல் இப்போதே அழிந்து போகின்ற தன்மையை அறிந்து, மறவாமல், குறிக்கொண்டு தம்மைப் பாதுகாக்கத் தவம் முயல்வாரைப் புகழாமல், வருந்தி, தம் வாயில் வெளிப்படும் சொற்களைச் சொல்லி இகழ்கின்றவர்களைக் காட்டிலும் மிருகங்கள் மிகவும் நல்லவையாம்.

பிறவியின் கொடுமையை உணர்ந்து அதற்குத் தக நடக்க வேண்டும் பாடல் - 123

எண்ணற்கு அரிய இடையூறு உடையதனைக்
 கண்ணினால் கண்டும் கருதாதே - புண்ணின்மேல்
 வீக்கருவி பாய இருந்தற்றால் மற்றதன்கண்
 தீக்கருமம் சோர விடல்.

விளக்கவுரை நினைக்க முடியாத துன்பத்துக்கு இடமானது இவ்வுடல் என்பதைக் கண்ணால் பார்த்தும், பிறப்பை ஒழிக்க முயலாமல், அதன் மேலும் தீய செயல்களில் மனத்தைச் சேரும்படி விடுதல், புண் மீது வாள்தாக்க அதைத் தடுக்காது இருந்தது போலும்!

உடலின் இழிவு பாடல் - 124

நெடுந்தூண் இருகாலா நீண்முதுகு தண்டாக்
 கொடுங்கால் விலாஎன்பு கோலி - உடங்கியநல்
 புன்தோலால் வேய்ந்த புலால்வாய்க் குரம்பையை
 இன்புறுவர் ஏழை யவர்.

விளக்கவுரை இரண்டு கால்களையும் உயர்ந்த தூண்களாக ஊன்றி நீண்ட முதுகு எலும்பைச் சட்டமான இட்டு, விலா எலும்புகளைக் கொடுங்கைகளாக வளைத்து, அவை கூடி நிற்பதற்கு நல்ல மென்மையான தோல் மூடிய இறைச்சி மயமான உடலால் ஆன சிறிய வீட்டினை அறிவில்லாதவர் பார்த்துப் பார்த்து மகிழ்வர்.

உடலின் இழிவு பாடல் - 125

என்புகால் ஆக இருதோளும் வேயுளா
 ஒன்பது வாயிலும் ஊற்றாத் - துன்பக்
 குரம்பை உடையார் குடிபோக்கு நோக்கிக்
 கவர்ந்துஉண்ணப் போந்த கழுகு.

விளக்கவுரை எலும்பை இரு தூண்களாகவும், இரண்டு தோள்களை வேய்ந்த மாடமாகவும் உடைய ஒன்பது வாயில்களிலும் (துளைகளிலும்) மலம் ஒழுகும் துன்பத்துக்குக் காரணமான குடிலையுடையவர், அதிலிருந்து நீங்கியதைப் பார்த்து, கழுகுகள் அக்குடிலைப் பிடுங்கி உண்பதற்கு வந்தன.

உலகம் அறியவில்லையே! பாடல் - 126

ஒருபாகன் ஊரும் களிறுஐந்தும் நின்ற
 இருகால் நெடுங்குரம்பை வீழின் - தருகாலால்
 பேர்த்துஊன்றல் ஆகாப் பெருந்துன்பம் கண்டாலும்
 ஓர்த்துஊன்றி நில்லாது உலகு.

விளக்கவுரை உள்ளம் என்ற பாகன் ஏறிச் செலுத்தும் ஐம்புலன்களாகிய யானைகள் ஐந்தும், நின்ற இரண்டு கால்களுடன் கூடிய நெடிய உடம்பானது வீழ்ந்தால், வேறு கால்களால் மீண்டும் நிலைபெறச் செய்ய இயலாத மிகுந்த துன்பச் செயலைப் பார்த்தாலும் உலகினர் உடலின் நிலையாமையை ஆராய்ந்து நிலையாய் (நல்லறத்தில்) நில்லார்; இ·து என்ன பேதைமை!

 நாள் சில; பிணி மூப்பு முதலியன பல பாடல் - 127

வாழ்நாளில் பாகம் துயில் நீக்கி மற்றவற்றுள்
 வீழ்நாள் இடர்மூப்பு மெய்கொள்ளும் - வாழ்நாளுள்
 பல்நோய் கவற்றப் பரிந்து குறைஎன்னை
 அன்னோ அளித்துஇவ் வுலகு.

விளக்கவுரை ஆயுள் காலத்தில் பாதியைத் தூக்கத்தில் கழித்து, மறு பாதியில் தளரும் காலத்தில் துன்பத்துக்குக் காரணமான முதுமையை உடம்பு அடையும். உறக்கமும் முதுமையும் போக எஞ்சிய வாழ்நாளில், பல துன்பங்கள் வருத்த, வாழ்நாள் வீணாயிற்றே என்று வருத்தப்படுவதனால் என்ன பயன்?

வீண் வாழ்வு பாடல் -  128 

உடம்பும் கிளையும் பொருளும் பிறவும்
 தொடர்ந்துபின் செல்லாமை கண்டும் - அடங்கித்
 தவத்தொடு தானம் புரியாது வாழ்வார்
 அவத்தம் கழிகின்ற நாள்.

விளக்கவுரை உடலும், சுற்றமும், செல்வமும், வீடு முதலியனவும், தம்மை உடையவன் இறந்த பின்பு அவன் பின் போகாதிருத்தலைப் பார்த்தும், மனம் சொல் உடம்புகளால் அடங்கி, தவத்தையும் தானத்தையும் செய்யாமல் வாழ்பவர்களுகு;குக் கழியும் நாட்கள் வீண் ஆகும்

வயிற்றை வளர்க்கப் பிறரைப் புகழலாகாது! பாடல் -  129

போற்றியே போற்றியே என்று புதுச்செல்வம்
 தோற்றியார் கண்எல்லாம் தொண்டேபோல் - ஆற்றப்
 பயிற்றிப் பயிற்றிப் பலஉரைப்பது எல்லாம்
 வயிற்றுப் பெருமான் பொருட்டு.

விளக்கவுரை புதிதாய்ச் செல்வம் உண்டானவரிடத்து எல்லாம் போய், அடிமை போல், 'நீ என்னைக் காக்க வேண்டும்; நீ என்னைக் காக்க வேண்டும்' என்று புகழ்ந்து பேசுவது எல்லாம் வயிற்றை வளர்தற் பொருட்டே ஆகும்.

உடலை ஓம்புதலால் பயன் இல்லை பாடல் - 130

புகாஉண்பார் அல்உண்ணார் போகும் துணைக்கண்
 தவாவினை வந்து அடையக் கண்டும் - அவாவினைப்
 பற்றுச்செய்து என்னைப் பயம்இன்றால், நல்நெஞ்சே!
 ஒற்றி உடம்பு ஓப்புதற்கு.

விளக்கவுரை என் நல்ல மனமே! பகலில் சோற்றை உண்ட வரும் இரவில் சோறுண்ண இராது இறந்து போவர்; தவறாது ஒருவன் செய்த வினையே அவனிடம் வந்து சேரும் என்பதை அறிஞர் வாயால் கேட்டு அறிந்தும், உடைமையற்ற இந்த உடம்பைப் பாதுகாப்பதற்குப் பொருள்களிடம் ஆசை கொள்வதால் வரும் பயன் யாது? ஒன்றும் இல்லை!

பாடல் -  131

புழுப்போல் உவர்ப்பு ஊறிப் பொல்லாங்கு நாறும்
 அழுக்குஉடம்பு தன்னுள் வளர்ந்தாய் - விழுந்துஉமிழ்ந்து
 இன்ன நடையாய் இறக்கும் வகையினை
 நல்நெஞ்சே, நாடாய்காண் நற்கு.

விளக்கவுரை புழுக்களைப் போல் வெறுகு;கும் குணங்களும் மிகுவதால் தீமைகள் பிறத்தற்கு இடமாக உள்ள தூய்மையற்ற உடம்பில் நல்ல மனமே, நீ வளர்ந்தாய்! நீ வளரும் உடல் படுக்கையில் விழுந்து கோழையைக் கக்கி உமிழ்ந்து, இவை போன்ற ஒழுக்கத்தோடு இறக்கும் என்பதை நன்றாக ஆராய்ந்து அறிந்து அதன் மீது கொண்ட பற்றினை விடுவாயாக!

ஒழுக்கம் அற்றவர் விடுதல் நல்லது பாடல் - 132

ஒழுக்கம் இலனாகி ஓர்த்துஉடைய னேனும்
 புழுப்பொதித்த புண்ணில் கொடிதாம் - கழுக்கு இரையை
 ஓம்பின்மற்று என்னை உறுதிக்கண் நில்லாக்கால்
 தேம்பி விடுதலே நன்று.

விளக்கவுரை அறிவு நூல்களை ஆராய்ந்து அறிவை உடையவனாயினும் புழுக்கள் நிரம்பிய புண்ணினும் கொடியதும் கழுகுகளுக்கு இரையாவதுமான உடலை ஒழுக்கம் அற்றவனாகி வளர்த்து வருவானாயின் அவன் அறிவால் அடையும் பயன் யாது? நன்னெறியில் நில்லாத இடத்து அவன் அழிந்து விடுதலே நல்லது!

உண்மைப் பெரியார் உலக வாழ்வை வெறுப்பர் பாடல் - 133

முடையுடை அங்கணம் நாள்தோறும் உண்ட
 கடைமுறைவாய் போதரக் கண்டும் - தடுமாற்றில்
 சாவாப் பிறவாஇச் சம்பிரத வாழ்க்கைக்கு
 மேவாதாம் மெய்கண்டார் நெஞ்சு.

விளக்கவுரை அழுகும் நாற்றத்தையுடைய சாக்கடை போல நாள்தோறும் உண்ட உணவுப் பொருள்கள் இழிந்த நிலையில் எருவாய் முதலியவற்றின் வழியாக வெளிவருதலைப் பார்த்திருந்தும் மக்கள் மனமாற்றத்தினால் செத்தும் பிறந்தும் வாழ்கின்ற இந்த நிலையில்லா வாழ்க்கையில் உண்மைப் பொருளை உணர்ந்த சான்றோரின் மனம் பொருந்தாது.

அறிவுடையாரின் கடமை பாடல் - 134

வயிறு நிறைக்குமேல் வாவின்மிக் கூறிச்
 செயிரிடைப்பாடு எய்துமாம் சீவன் - வயிறும்ஓர்
 பெற்றியால் - ஆர்த்திப் பெரும்பயன் கொள்வதே
 கற்றறிந்த மாந்தர் கடன்.

விளக்கவுரை உணவால் வயிறு நிரப்பப்படுமானால் உயிர் மிகுந்த அவாவை அடைந்து தீ வினைகளிடையே கேட்டை அடையும். ஆகவே வயிற்றையும் கருவி கரணங்கள் இயக்கத்திற்கு உரியனவாகுமாறு சிறிதே உண்பித்து, இவ்வுடம்பால் இனிப் பிறவாமைக்குக் காரணமான செயல்களைச் செய்து மிக்க பயனை அடைவதே கற்க வேண்டிய நூல்களைக் கற்று உணர்ந்த பெரியோரின் கடமையாகும்.

மிகுதியாய் உண்ணக் கூடாது பாடல் - 135

புலன்கள் பொருட்டாகப் பொச்சாந்து நெஞ்சே!
 சலங்களைச் சாரா ஒழுகல் - புலன்கள்
 ஒறுக்கும் பருவத்து உசாத் துணையும் ஆகா
 வெறுத்துநீ உண்டல் கடன்.

விளக்கவுரை உள்ளமே! பின்னால் துன்பம் வரும் என்பதை மறந்து ஐம்பொறிகளாலும் அனுபவிக்கப்படும் இன்பத்தின் பொருட்டுத் தீவினைக்குரிய செயல்களைச் செய்யாதே! அத் தீவினைகள் உன்னை ஒறுக்கும்போது அப்பொறிகள் ஐந்தும் உனக்கு அறிவுரை கூறுதற்கேற்ற துணையும் ஆகா. ஆதலால் புலன் நுகர்ச்சி காரணமாக மிக்க உணவை விரும்பாது அளவுடன் உண்பது கடமையாகும்.

மிக்க உணவால் வரும் கேடு பாடல் - 136

புகாப்பெருக ஊட்டின் புலன்கள் மிக்கூறி
 அவாப்பெருகி அற்றம்தருமால் - புகாவும்ஓர்
 பெற்றியான் ஊட்டிப் பெரும்பயன் கொள்வதே
 கற்றறிந்த மாந்தர் கடன்.

விளக்கவுரை வயிற்றுக்கு உணவை மிகுதியாக ஊட்டினால் ஐம்பொறிகள் அடங்காமல் ஆசை மிகப்பெற்று அழிவை அளிக்கும்; ஆகவே உணவைக் கரணங்கள் தொழிப்படுவதற்கு ஏற்ற நிலையில் சிறிதளவே உண்டு இந்த உடலால் வீடு பேற்றுக்கு உரிய செயல்களைச் செய்துகொள்வதே அற நூல்களைக் கற்றுத் தெளிந்தோர் கடமையாகும்.

உன்னை அடக்கினால் ஊரை அடக்கலாம் பாடல் - 137

ஒறுக்கிலேன் ஊர்பசை என்கண் பிறரை
 ஒறுக்கிற்பேன் என்றுஉரைப்பை யாகில் - கறுத்துஎறிந்த
 கல்கறித்துக் கற்கொண்டு எறிந்தாரைக் காய்கல்லாப்
 பல்கழல் நாய் அன்னது உடைத்து.

விளக்கவுரை என்னை ஊர்ந்து செலுத்தும் அவாவை அடக்கேன்; எனக்கு இடையூறு செய்யும் பிறரை அடக்குவேன் என எண்ணினால் நெஞ்சே! அது, கல்லால் தன்னை எறிந்தவரைச் சினந்து கடியாமல், அவர்களால் சினந்து எறியப்பட்ட கல்லைக் கடித்துப் பல்லை இழந்த நாயினது செயலை ஒக்கும்.

சான்றோரைத் துணையாய்க் கொள்ளல் பாடல் - 138

உள்ளப் பெருங்குதிரை ஊர்ந்து வயப்டுத்திக்
 கள்ளப் புலன்ஐந்தும் காப்புஅமைத்து - வெள்ளப்
 பிறவிக்கண் நீத்தார் பெருங்குணத் தாரைத்
 துறவித் துணைபெற்றக் கால்.

விளக்கவுரை துறவியாகிய சிறந்த குணம் உடையவரை ஒருவர் தமக்குத் துணையாகப் பெறுவாராயின், அவர் தம் மனம் என்னும் சிறந்த குதிரை மீது ஏறி அதைத் தம் வசப்படுத்தி, தம்மை வஞ்சிக்கும் ஐம்புலன்களையும் புறத்தே செல்லாது தடுத்து, 'வெள்ளம்' என்னும் பேரெண்ணின் அளவையுடைய மிகப் பல பிறவிகளையும் கடந்து வீடு பேற்றினைப் பெறுவர்.

உள்ளத்தை அடக்கி ஆளல் பாடல் - 139

பரிந்துஎனக்குஓர் நன்மை பயப்பாய்போல் நெஞ்சே!
 அரிந்துஎன்னை ஆற்றவும் தின்னல் - புரிந்துநீ
 வேண்டுவ வேண்டுவேன் அல்லேன் விழுக்குணம்
 பூண்டேன் பொறியிலி போ.

விளக்கவுரை உள்ளமே! எனக்கு ஒரு நன்மையைச் செய்வதைப் போன்று காட்டி, என்னை மிகவும் அரிந்து தின்னாதே! நீ விரும்பி அடைய நினைப்பவற்றை நான் விரும்பிச் செய்வேன் அல்லேன். பற்று விடுதலை நான் மேற்கொண்டேன்; பேதையே, அப்பாற்போ!

மனம் அடங்கினால் பல நன்மை உண்டாகும் பாடல் - 140

தன்னைத்தன் நெஞ்சம் கா¢யாகத் தான்அடங்கின்
 பின்னைத்தான் எய்தா நலன்இல்லை - தன்னைக்
 குடிகெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவல் செய்தல்
 பிடிபடுக்கப் பட்ட களிறு.

விளக்கவுரை ஒருவன் தன் செயல்களுக்குத் தனது மனத்தையே சான்றாக வைத்துத் தான் அடங்கப் பெற்றான் என்றால், பின்பு, அவன் அடைய முடியாத இன்பம் ஒன்றும் இல்லை தன்னைப் பிறந்த குடியுடன் கெடுக்கின்ற தீய மனத்தினுக்குத் தொண்டு செய்து நடத்தல், பார்வை விலங்காக நிறுத்தப்பட்ட பெண் யானையை விரும்பிக் குழியிடத்து அகப்பட்ட ஆண் யானையைப் போல், எப்போதும் வருந்துதற்குக்  குறியதாகும்.

உள்ளத்தே உயர்வே உயர்வு பாடல் -  141

உள்ளூர் இருந்தும்தம் உள்ளம்அறப் பெற்றாரேல்
 கள்அவிழ் சோலையாம் காட்டுஉளர் காட்டுள்ளும்
 உள்ளம் அறப்பெறு கல்லாரேல் நாட்டுள்ளும்
 நண்ணி நடுவூர் உளார்.

விளக்கவுரை இல்வாழ்வை மேற்கொண்டு ஊரினுள் வாழ்ந்தாலும் தம் மனம் அடங்கப் பெறுவாரானால் அவர், தேன் சொரியும் மலர்கள் நிறைந்த சோலையையுடைய காட்டில் வாழும் துறவியே ஆவார். துறவற வாழ்வை மேற்கொண்டு, காட்டில் வாழ்கின்றவராயினும் மனம் அடங்கப் பெறார் என்றால், அவர், நாட்டில் உள்ள மனை வாழ்க்கையை அடைந்து தீய செயலைப் பொருந்தி வாழ்கின்ற கயவர் ஆவார்.

மனத்தை அடக்குவார் அடையும் பெரும் பயன் பாடல் - 142

நின்னை அறப்பெறு கிற்கிலேன் நல்நெஞ்சே!
 பின்னையான் யாரைப் பெறுகிற்பேன் - நின்னை
 அறப்பெறு கிற்பனேல் பெற்றேன்மற்று ஈண்டே
 துறக்கம் திறப்பதுஓர் தாழ்.

விளக்கவுரை என் நல்ல நெஞ்சமே! உன்னை என் வயமாக்கிக்கொள்ள இயலாதவனாய் உள்ளேன்; இனி யான், யாரை என் வயமாக்கிக் கொள்வேன்? உன்னை என் வயமாக்கிக் கொள்வேன் ஆயின், சொர்க்க உலகினைத் திறப்பதான நிகரற்ற திறவு கோலை, நான் இப்பிறவியிலேயே பெற்றவன் ஆவேன்.

அறிவிலார்க்கு ஐம்பொறியும் பகையே பாடல் - 143

ஆதன் பெருங்களி யாளன் அவனுக்குத்
 தோழன்மார் ஐவரும் வீண் கிளைஞர் - தோழர்
 வெறுப்பனவும் உண்டுஎழுந்து போனக்கால் ஆதன்
 இறுக்குமாம் உண்ட கடன்.

விளக்கவுரை  அறிவு அற்றவனும் மிக்க மயக்கத்தை உடையவனும் ஆன ஒருவனுக்கு ஐந்து பொறிகளாகிய நண்பர் ஐவரும் துன்பம் வந்தபோது உதவாத உறவினரே ஆவர்; அந்த நண்பர், அறிவுடையவர்களால் வெறுக்கப்படும் தீவினை காரணமாக வருவனவற்றையும் உவகையுடன் அனுபவித்து, உடம்புடன் எழுந்து போன பின்பு (மரணத்துக்குப் பின்னர்) அவர்களை உண்பிக்கத் தான் பட்ட கடனான தீவினையை அடைவர்.

உள்ளம் அடங்கினவன் உயர் தெய்வம் பாடல் - 144

தன்ஒக்கும் தெய்வம் பிறிதுஇல்லை தான்தன்னைப்
 பின்னை மனம்அறப் பெற்றானேல் - என்னை
 எழுத்துஎண்ணே நோக்கி இருமையும் கண்டாங்கு
 அருள்கண்ணே நிற்பது அறிவு.

விளக்கவுரை ஒருவன் தன்னை இன்பம் தருவது போன்று தீ நெறிகளில் முன்னம் செலுத்திப் பின்பு வருந்தும் மனத்தை அடக்குவான் ஆயின், அவனைப் போன்ற தெய்வம் வேறு ஒன்று இல்லை; இலக்கணம் சோதிடம் முதலியவற்றை ஆராய்வதால் மறுமைக்கு ஆகும் பயன் யாது? இம்மையில் புகழும் மறுமையில் இன்பமும் அளிக்கும் நூல்களையே ஆராய்ந்துணர்ந்து அருளை மேற்கொண்டு ஒழுகுவதே அறிவுடைமையாகும்

அறிவாரும் அறியாரும் உறங்கார் பாடல் - 145

தடுமாற்றம் அஞ்சிய தன்மை உடையார்
 விடுமாற்றம் தேர்ந்துஅஞ்சித் துஞ்சார் - தடுமாற்றம்
 யாதும் அறியாரும் துஞ்சார்தம் ஐம்புலனும்
 ஆடும்வகை யாதாம்கொல் என்று.

விளக்கவுரை கலக்கத்துக்கு காரணமான பிறப்பு இறப்புகளுக்குப் பயந்த இயல்பு உடையவர், அவற்றைப் போக்கும் உபாயத்தை ஆராய்ந்து அச்சம் கொண்டு உறங்க மாட்டார்; பிறப்பு இறப்புகளைப் பற்றிச் சிறிதும் எண்ணாதவரும் தம் ஐம்பொறிகளாலும் இன்பத்தை அனுபவித்தற்கேற்ற உபாயம் எது என்று ஆராய்ந்து கொண்டே அக் கவலையால் உறங்க மாட்டார்.

ஐம்பொறிகளால் துன்பமும் இன்பமும் பாடல் - 146

ஆர்வில் பொறிஐந்திற்கு ஆதி இருவினையால்
 தீர்வுஇலநீ கோதாதி சேர்விக்கும் - தீர்வுஇல்
 பழிஇன்மை எய்தின் பறையாத பாவம்
 வழியும் வருதலும் உண்டு.

விளக்கவுரை நீ செல்வம் உற்ற காலத்தில் மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளுக்கும் ஆளாகின்றாய்; நீ வறுமையை அடைந்த காலத்தில் நல்வினை தீவினை என்ற இருவினைகளால், குற்றம் முதலியவற்றில் சேர்க்கின்ற நீங்குதல் இல்லாத பழியும், இன்ன தன்மையுடையது எனக் கூற இயலாக் கொடிய பாவமும் அப்பொறிகளின் வழியே ஏற்படுவதும் உண்டு.

உள்ளத்துத் துறவுடையார் மயங்கார் பாடல் - 147

அலைபுனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற
 இலையின்கண் நீர்நிலாது ஆகும் அலைவுஇல்
 புலன்களில் நிற்பினும் பொச்சாப்பு இலரே
 மலம்கடிவு ஆளா தவர்க்கு.

விளக்கவுரை அலைகளையுடைய நீருள் நின்றாலும் தாமரைக்கொடியில் உள்ள இலையில் நீரானது ஒட்டி நில்லாது. (அதைப் போன்று) சஞ்சலத்தைத் தரும் ஐம்பொறிகளுடன் கூடியிருந்தாலும் துறவிகளை அழிவைத் தரும் ஆசை வெகுளி முதலியவை அடிமைகொள்ளா. அவர்களும் மறதியால் அவற்றின் பிடியில் சிக்குதல் இல்லை.

சிறந்த அறத்தின் இயல்பு பாடல் - 148

பெற்ற கருமம் பிழையாமல் செய்குறின்
 பற்றின்கண் நில்லாது அறம்செய்க - மற்றது
 பொன்றாப் புகழ்நிறுத்திப் போய்ப்பிறந்த ஊர்நாடிக்
 கன்றுடைத் தாய்போல் வரும்.

விளக்கவுரை நல்ல குணம் உடைய செயல்களைத் தவறாமல் செய்ய எண்ணினால், அவா இல்லாது அறத்தைச் செய்வாயாக! அந்த நல்லறம் இம்மையில் அழிவில்லாத புகழை நிலை பெறச் செய்து, மறுமையில் நீ சென்று பிறந்த ஊரைத் தேடி, தாய்ப்பசு தன் பாலை உண்பிக்க கன்றை நாடிச் செல்வது போன்று, தன் பயனான இன்பத்தை அனுபவிக்கச் செய்ய உன்னிடம் விரைந்து வரும்.

இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக எண்ண வேண்டும் பாடல் - 149

பேறுஅழிவு சாவு பிறப்புஇன்பத் துன்பம் என்ற
 ஆறுஉள அந்நாள் அமைந்தன - தேறி
 அவைஅவை வந்தால் அழுங்காது விம்மாது
 இவைஇவை என்றுஉணரற் பாற்று.

விளக்கவுரை செல்வம், வறுமை, இறப்பு, பிறப்பு, இன்பம், துன்பம் என்னும் இந்த ஆறும் முன்பு செய்த வினை காரணமாக ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ளன; (ஆதலால்) இன்ப துன்பங்களுக்குக் காரணமாகிய அவை மாறி மாறி வருந்தோறும் மகிழாது, வருந்தாது நம்மை நாடி வந்த இவை, இன்ன வினைகளால் வந்தன என்று ஆராய்ந்து அடங்குவதே செய்யத்தக்கது.

ஒருவன் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் தானே! பாடல் - 150

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
 தானே தனக்கு மறுமையும் இம்மையும்
 தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
 தானே தனக்குக் கரி.

விளக்கவுரை ஒருவன் தனக்குத் துன்பம் செய்யும் பகைவனும், இன்பம் செய்யும் நண்பனும் தானே ஆவான்; பிறர் அல்லர்! தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்து கொள்பவனும் தானே ஆவான். தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத்தானே அனுபவித்தலால் தனக்குச் சான்று தானே ஆவான்.

சிறந்த துணையாவது செய்வினையே பாடல் - 151

செய்வினை அல்லால் சிறந்தார் பிறர்இல்லை
 பொய்வினை மற்றைப் பொருள்எல்லாம் - மெய்வினவில்
 தாயார் மனைவியார் தந்தையார் மக்களார்
 நீயார் நினைவாழி நெஞ்சு.

விளக்கவுரை நெஞ்சே! நீ செய்த வினை உனக்குத் துணையாய் அமைவதின்றிச் சிறந்த துணைவர் வேறு எவரும் இல்லை! நிலை பெற்றவை என நீ எண்ணுபவை எல்லாம் அழியும் தன்மை உடையவையே! உண்மையை அறிய வினவினால் தாய் யார்? மனைவி யார்? தந்தை யார்? மக்கள் யார்? நீ இவர்களுக்கு யார்? (இவர்கள் உன்னுடன் எத்தகைய தொடர்பை உடையவர்?) இவர்கள் நிலையான தொடபற்றவர்கள்.

எண்ணருந்துன்பம் உடலுக்கு! பாடல் - 152

உயிர்திகிரியாக உடம்புமண் ணாகச்
 செயிர்கொள் வினைகுயவ னாகச் - செயிர்தீர்
 எண்அரு நல் யாக்கைக் கலம்வனையும் மற்றதனுள்
 எண்அருநோய் துன்பம் அவர்க்கு.

விளக்கவுரை குற்றம் தரும் வினை, பாண்டம் செய்யும் குயவனாக நின்று, உயிர்க் காற்றையே தண்ட சக்கரமாகவும், எழுவகைப்பட்ட, தாதுவையே களிமண்ணாகவும் கொண்டு குற்றத்தினின்று நீங்காத நினைத்தற்கு அரிய பாத்திரத்தைச் செய்யும் அந்த உடலுக்குள் அதனை அனுபவிக்கும் சீவர்க்கு அளவிட இயலாத கொடிய நோய்கள் பல உள்ளன.

மறுமையைப் பற்றி எண்ண வேண்டும் பாடல் - 153

முன்பிறப்பில் தாம்செய்த புண்ணியத்தின் நல்லதுஓர்
 இல்பிறந்து இன்புஉறா நின்றவர் - இப்பிறப்பே
 இன்னும் கருதுமேல் ஏதம் கடிந்து அறத்தை
 முன்னி முயன்றுஒழுகற் பாற்று.

விளக்கவுரை முன்னைய பிறவியில் தாம் இயற்றிய அறச் செயல் காரணமாக, நல்ல ஒரு குடியில் தோன்றி இன்பத்தை அனுபவிப்பவர்கள், இம்மை இன்பத்தையே இன்னமும் எண்ணி, அதற்காக முயல்வாராயின், மறுமையில் அடைவது துன்பமே ஆகும். ஆதலால் இம்மை இன்பத்தில் செலுத்தும் கருத்தை ஒழித்து, மறுமை இன்பத்துக்குக் காரணமான அறத்தை நினைத்து முயன்று அதனைச் செய்வதே சிறந்தது.

மறுமைக்கு அறம் செய்யாதவர் அறியாதவர் பாடல் - 154

அம்மைத் தாம் செய்த அறத்தின் வரும்பயனை
 இம்மைத் துய்த்து இன்புஉறா நின்றவர் - உம்மைக்கு
 அறம்செய்யாது ஐம்புலனும் ஆற்றுதல் நல்லாக்
 கறந்து உண்டுஅஃது ஓம்பாமை யாம்.

விளக்கவுரை முன் பிறவியில் தாம் செய்த அறம் காரணமாக இப்பிறவியில் இன்பம் அனுபவிப்பவர்கள் அறத்தைச் செய்யாமல் ஐந்து பொறிகளாலும் அனுபவிக்கப்படும் இன்பங்களை நுகர்ந்து கொண்டு வாளா இருத்தல், நல்ல பசுவின் பாலைக் கறந்து அருந்தி, அப்பசுவை உணவிட்டுக் காவாமல் இருத்தல் போலாம்.

நல்ல பிறவி தீய பிறவிகளுக்குக் காரணம் பாடல் - 155

இறந்த பிறப்பில்தாம் செய்த வினையைப்
 பிறந்த பிறப்பால் அறிக - பிறந்திருப்பது
 செய்யும் வினையால் அறிக - இனிப்பிறந்து
 எய்தும் வினையின் பயன்.

விளக்கவுரை மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் முன் பிறவியில் செய்த நல்வினை தீவினைகளை, எடுத்துள்ள இப் பிறவியில் அடையும் இன்பதுன்பங்களால் அறிந்து கொள்க. இனிமேல் பிறவி எடுத்து அடையும் இன்ப துன்பங்களை, இம்மையில் பிறந்து செய்யும் நல்வினை தீவினைச் செயல்களால் அறிவார்களாக!

வீடுபேற்றை அடையாத பிறவி பயன் அற்றது பாடல் - 156

தாய்தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தார்
 ஆய்வந்து தோன்றி அருவினையால் - மாய்வதன்கண்
 மேலைப் பிறப்பும் இதுவானால் மற்று என்னை?
 கூலிக்கு அழுத குறை.

விளக்கவுரை மக்கள் வேறொரு தொடர்பும் இல்லாமல் தம்தம் வினை காரணமாகத் தாயும் தந்தையும் மக்களும் உடன் பிறந்தாரும் என உறவினராய் வந்து பிறந்து வீடு பேற்றை அடைய முயலாமல் தம்முள் சிலர் வருந்த இறந்துபோதல், வரும் பிறவியிலும் அவர் மீண்டும் தோன்றி அவர்களுள் சிலர் வருந்த இறந்து விட்டால், அவர்கள் வாழ்க்கை ஒருவருக்கொருவர் கூலியின் பொருட்டு அழுத செயலாகும்.

சிறந்த இல்வாழ்க்கை தவத்தை விடச் சிறந்தது! பாடல் - 157

வினைகாத்து வந்த விருந்துஓம்பி நின்றான்
 மனைவாழ்க்கை நன்று தவத்தின் - புனைகோதை
 மெல்லியல் நல்லாளும் நல்லள் விருந்துஓம்பிச்
 சொல்எதிர் சொல்லாள் எனில்.

விளக்கவுரை தீவினைகளைச் செய்யாமல் விலக்கி, தம்மிடம் வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்நோக்கி நிற்பவனின் இல்வாழ்க்கை, தவத்தை விடச் சிறந்ததாகும். அலங்கரிக்கப்பட்ட கூந்தலையும் மென்மையான இயல்பையும் உடைய பெண்ணும் வந்த விருந்தினரைப் பேணி, கணவன் சொல்கின்ற சொல்லுக்கு மாறுபாடாக எதிர்த்து ஒன்றையும் சொல்லாதிருப்பாளாயின் சிறப்பு.

இல்லாளுக்குரிய இயல்புகள் பாடல் - 158

கொண்டான் குறிப்புஒழுகல் கூறிய நாண்உடைமை
 கண்டது கண்டு விழையாமை - விண்டு
 வெறுப்பன செய்யாமை வெ·காமை நீக்கி
 உறுப்போடு உணர்வுடையாள் பெண்.

விளக்கவுரை கணவனின் குறிப்பறிந்து நடத்தலும், மங்கையர்க்குரிய நாண் உடைமையும், எப்பொருளையும் கண்டவுடன் விரும்பாமையும், கணவனுடன் மாறுபட்டு வெறுப்பனவற்றைச் செய்யாமையுமான இவற்றை மேற்கொள்வதுடன் அழகும் அறிவும் உடையவள் பெண் ஆவாள்.

பாடல் - 159

மடப்பதூஉம் மக்கள் பெறுவதூஉம் பெண்பால்
 முடிப்பதூஉம் எல்லாரும் செய்வர் - படைத்ததனால்
 இட்டுண்டுஇல் வாழ்க்கை புரிந்துதாம் நல்அறத்தே
 நிற்பாரே பெண்டிர்என் பார்.

விளக்கவுரை மங்கைப் பருவம் அடைதலும், புதல்வர்களைப் பெறுவதும் பெண்களுக்குரிய அணிகளை அணிவதும் என்னும் இவற்றை எல்லாப் பெண்களும் செய்வர். ஆயினும் பெற்றது சிறிதே ஆயினும் அதனால் இரப்பார்க்கு இட்டுத் தாமும் உண்டு, இல்லறத்துக்குரிய மற்றவற்றையும் விரும்பிச் செய்து கற்பு நெறியின் தவறாது நிற்பவர்களே பெண்டிர் எனச் சிறப்பித்துக் கூறப்படுவார்.

கணவனால் கொண்டாடப்படுபவள் பாடல் - 160

வழிபாடு உடையாளாய் வாழ்க்கை நடாஅய்
 முனியாது சொல்லிற்றுச் செய்தாங்கு - எதிர்உரையாது
 ஏத்திப் பணியுமேல் இல்லாளை ஆண்மகன்
 போற்றிப் புனையும் புரிந்து.

விளக்கவுரை கணவனின் கொள்கைகளை மேற்கொண்டு, வாழ்க்கையை நடத்தி அவன் கூறியவற்றை வெறுப்பு இல்லாமல் செய்து, அவன் சினந்து கூறும்போதும் எதிர்த்துக் கூறாது புகழ்ந்து வணங்குவாளாயின் மனைவியைக் கணவன் விரும்பிக் காத்தல் செய்வான்.

கற்பொழுக்கத்துக்கு ஆகாத செயல்கள் பாடல் - 161

தலைமகனில் தீர்ந்துஉறைதல் தான்பிறர்இல் சேர்தல்
 நிலைமையில் தீப்பெண்டிர்ச் சேர்தல் - கலன்அணிந்து
 வேற்றுஊர்ப் புகுதல் விழாக்காண்டல் நோன்பிடுதல்
 கோல்தொடியாள் கோள் அழியுமாறு.

விளக்கவுரை கணவா¢டமிருந்து பிரிந்து வாழ்தல், அடிக்கடி அயலார் வீடுகளுக்குப் போதல், நெறியில் நீங்கிய தீய மகளிருடன் சேர்ந்து பழகுதல், அணிகளை அணிந்து அயலூர்க்குத் தனியே செல்லுதல், தனியே சென்று திருவிழாவைக் காணுதல், கணவன் ஆணையின்றி விரதம் மேற்கொள்ளுதல் ஆகிய இவை பெண்ணின் கற்புக் கெடுதலுக்குரிய வழிகளாகும்.

கற்பற்ற மனைவியர் கணவர்க்கு இயமன் பாடல் - 162

அயல்ஊர் அவன்போக அம்மஞ்சள் ஆடிக்
 கயல்ஏர்கண் ஆர எழுதிப் - புயல்ஐம்பால்
 வண்டுஓச்சி நின்றுஉலாம் வாள்ஏர் தடங்கண்ணாள்
 தண்டுஓச்சிப் பின்செல்லும் கூற்று.

விளக்கவுரை கணவன் வேற்றூரை அடைந்த சமயம் பார்த்து, அழகுடைய மஞ்சளைப் பூசி நீராடி, கயல் மீனைப் போன்ற அழகுடைய கண்கள் எழில் பெற மையைத் தீட்டி, கரிய மேகம் போன்ற கூந்தலில் அணிந்த மலரில் உள்ள வண்டுகளை ஓட்டிக் கொண்டு, வெளியில் உலவும் ஒளியுடைய அழகிய பெரிய கண்களை உடையவள், தண்டாயுதத்தை எடுத்துக்கொண்டு அவன் அறியாமல் பின் செல்லும் இயமனாவாள்.

இணைபிரியாக் காதலே இல்வாழ்க்கைக் குயிராம் பாடல் - 163

மருவிய காதல் மனையாளும் தானும்
 இருவரும் பூண்டு உய்ப்பின் அல்லால் - ஒருவரால்
 இல்வாழ்க்கை என்னும் இயல்புடைய வான்சகடம்
 செல்லாது தெற்றிற்று நின்று.

விளக்கவுரை  பொருந்திய காதல் கொண்ட மனைவியும் தானும் ஆகிய இருவரும் மேற்கொண்டு செலுத்தினால் அன்றி, அந்த இருவருள் ஒருவரால் இல்வாழ்க்கை எனப்படுகின்ற அழகிய உயர்ந்த வண்டி செலுத்தப்படின் செல்லாமல் தடைப்பட்டு நின்று விடும்.

இல்லறத்தான் இயல்புகள் பாடல் - 164

பிச்சையும் ஐயமும் இட்டுப் பிறன்தாரம்
 நிச்சலும் நோக்காது பொய்ஒரீஇ -நிச்சலும்
 கொல்லாமை காத்துக் கொடுத்துஉண்டு வாழ்வதே
 இல்வாழ்க்கை என்னும் இயல்பு.

விளக்கவுரை யாசித்தவர்க்கும் துறந்தவர்க்கும் வேண்டுவனவற்றைத் தந்து, அயலானின் மனைவியை எக்காலத்திலும் விரும்பாது, பொய் பேசாது, எப்போதும் கொலைச் செயலைச் செய்யாமல் காத்து விருந்தினரை உபசரித்துத் தாமும் உண்டு வாழ்தலே இல்வாழ்க்கையின் இயல்பாகும் என்று அறநூல்கள் கூறும்.

இல்லறத்தானாகான இயல்புகள் பாடல் - 165

விருந்து புறம்தரான் வேளாண்மை செய்யான்
 பெருந்தக் கவரையும் பேணான் - பிரிந்து போய்க்
 கல்லான் கடுவினை மேற்கொண்டு ஒழுகுமேல்
 இல்வாழ்க்கை என்பது இருள்.

விளக்கவுரை விருந்தினரை உபசரியாமலும், இரப்பவர்க்குக் கொடாமலும் பெருமையில் சிறந்தவரை மதியாமலும், மனைவி மக்களைப் பிரிந்து போய்க் கல்லாமலும் தீவினையை மேற்கொண்டு ஒருவன் வாழ்வானாயின் இல் வாழ்க்கை என்பது அவனுக்கு நரகமே ஆகும்.

துறவியர்க்கு அளிப்பதே சிறப்பான அறம் பாடல் - 166

அட்டுஉண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும்
 அட்டுஉண்ணா மாட்சி உடையவர் - அட்டுஉண்டு
 வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்றுஉரைத்தல்
 வீழ்வார்க்கு வீழ்வார் துணை.

விளக்கவுரை சமைத்து உண்டு வாழும் இல்லறத்தார்க்கு விருந்தினர் ஆவார் எக்காலத்திலும் சமைத்து உண்ணாத பெருமையுடைய துறவியரே ஆவர்; சமைத்து உண்டு வாழும் இல்லறத்தார்க்கு அங்ஙனம் வாழும் இல்லறத்தார் விருந்தினர் ஆவார் எனக் கூறுதல் மலையின் உச்சியிலிருந்து விழுபவர்க்கு அவ்வாறு வீழ்பவர் துணை ஆவர் என்று கருதுவதைப் போலாம்.

பாடல் - 167

நொறுங்கு பெய்து ஆக்கிய கூழ்ஆர உண்டு
 பிறங்குஇரு கோட்டொடு பன்றியும் வாழும்
 அறம்செய்து வாழ்வதே வாழ்க்கைமற்று எல்லாம்
 வெறும்பேழை தாழ்க்கொளீஇ யற்று.

விளக்கவுரை நொய்யை இட்டு சமைத்த உணவை வயிறார உண்டு விளங்கும் இரண்டு கோரப் பற்களுடன் பன்றியும் வாழும்; ஆதலால் அறத்தைச் செய்து வாழ்வதே சிறந்த இல்வாழ்க்கையாகும், மற்றவையெல்லாம் தன்னிடம் ஒன்றும் அற்ற பெட்டியைத் தாழிட்டுப் பூட்டி வைத்தாற் போன்றதாகும்.  

உடல் பொருள் என்பவை பிறர்க்கு உதவவே! பாடல் - 168

உப்புக் குவட்டின் மிசைஇருந்து உண்ணினும்
 இட்டுஉணாக் காலத்துக் கூராதாம் - தொக்க
 உடம்பும் பொருளும் உடையானோர் நன்மை
 தொடங்காக்கால் என்ன பயன்!

விளக்கவுரை மலை போன்ற உப்யலின் மீது ஒருவன் அமர்ந்து உணவை உண்டாலும், உப்பை உணவில் சேர்த்து உண்ணாத போது அதன் சுவை உணவில் பொருந்தாது (அது போல) ஏழு வகைப்பட்ட தாதுக்களுடன் கூடிய உடம்பையும் பொருளையும் உடையவன் ஒப்பில்லாத அறத்தைத் தொடங்கிச் செய்யானானால் அவற்றால் என்ன பயன்? ஒரு பயனையும் அவன் அடையான். எளியார்க்கு உதவ வேண்டும்

கிடைத்தவற்றில் சிறிதினை அவ்வப்பொழுது எளியார்க்குதவுக பாடல் - 169

பெற்றநாள் பெற்றநாள் பெற்றதனுள் ஆற்றுவது ஒன்று
 இற்றைநாள் ஈத்துஉண்டு இனிது ஒழுகல் - சுற்றும்
 இதனில் இலேசுடை காணோம் அதனை
 முதல்நின்று இடைதெரியுங் கால்.

விளக்கவுரை செல்வத்தை அடையுந்தோறும் பெற்ற அச்செல்வத்தில் செய்வதற்குரிய அறத்தை இன்றே செய்வோம் என்று நினைத்து இரப்பவர்க்குத் தந்து, நீயும் உண்டு இனிமை தரும் நன்னெறியில் நின்று ஒழுகுவாயாக! அந்த அறம் செய்ததற்குரிய வழியை முதல் தொடங்கி முழுமையும் ஆராயுமிடத்து எவ்விடத்து; இதைக் காட்டிலும் எளியது வேறொன்றும் இல்லை.

கொடாது இருப்பது அறியாமை பாடல் - 170

கொடுத்துக் கொணர்ந்து அறம் செல்வம் கொடாது
 விடுத்துத்தம் வீறுஅழிதல் கண்டார் - கொடுப்பதன் கண்
 ஆற்ற முடியாது எனினும்தாம் ஆற்றுவார்
 மாற்றார் மறுமைகாண் பார்.

விளக்கவுரை தாம் முன் பிறவியில் செல்வம் உள்ள காலத்தில் வறியவர்க்கு கொடுத்ததால் (அறம்) கொண்டு வந்து தந்த, செல்வத்தை வவறியவர்க்குக் கொடுக்காமல் தம் பெருமை அழியும் பிறரைக் கண்ட சான்றோர், வறுமை அடைந்து இரந்தவர்க்குக் கொடைத் தன்மையுடன் மிகவும் வழங்க முடியாது என்றாலும் தம் பொருள் நிலைக்கு ஏற்பக் கொடுத்து உதவுவர்; இரந்தவர்க்கு இல்லை எனக் கூறார்.

உடல் பெற்றதால் உண்டாகும் பயன் பாடல் - 171

பட்டார்ப் படுத்துப் படாதார்க்கு வாள்செறிந்து
 விட்டுஒழிவது அல்லால் அவ் வெங்கூற்றம் - ஓட்டிக்
 கலாய்க் கொடுமை செய்யாது கண்டது பாத்து உண்டல்
 புலால்குடிலால் ஆய பயன்.

விளக்கவுரை முந்தைய பிறவியில் அறம் செய்யாது குறைவான வாழ் நாளை இப்பிறவியில் பெற்றவர்களைக் கொன்றும், முன் பிறவியில் அறம் செய்ததால் நீண்ட வாழ்நாளைப் பெற்றார்க்கு அவர்க்கு முன் தம் வாளை உறைக்குள் வைத்து அவரைக் கொல்லாது விட்டுச் செய்வதன்றி அக்கொடிய இயமன் தன் மனம் போனபடி முறையில்லாது சினம் கொண்டு துன்பம் செய்யான். (ஆதலால்) ஒருவன் தனக்குக் கிடைத்த பொருளைப் பிறர்க்குப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டல், புலாலினாலாய உடம்பினைப் பெற்றதாலுண்டாம் பயன்.

அறியார், அறியவர்க்கு யவை பாடல் - 172

தண்டாமம் பொய்வெகுளி பொச்சாப்பு அழுக்காறு என்ற
 ஐந்தே கெடுவார்க்கு இயல்புஎன்ப - பண்பாளா!
 ஈதல் அறிதல் இயற்றுதல் இன்சொல்கற்று
 ஆய்தல் அறிவார் தொழில்.

விளக்கவுரை நற்குணம் உடையவனே! சான்றோரைப் பணியாமைக்கும் செய்யத் தகுவனவற்றைச் செய்யாமைக்கும் காரணமான நன்மையின் நீங்கிய மானமும் பொய் பேசுதலும் சினம் கொள்ளுதலும் மறத்தலும் பொறாமையும் எனக் கூறும் ஐந்தும் அழிகின்றவர்களுக்கு உரிய குணங்கள் ஆகும் எனவும், இரந்தவர்க்குக் கொடுத்தலும் நல்லனவற்றை ஆராய்ந்து அறிதலும் அறிந்தவற்றைத் தளர்ச்சி இன்றிச் செய்தலும், யாவர்மாட்டும் இன்சொல் சொல்லுதலும், அறிவு நூல்களைக் கற்று ஆராய்தலுமாகிய இவ்வைந்தும் அறிவுடையோர் தொழில்களாகுமெனவுங் கூறுவர் பெரியோர்.

தூய அறம் பாடல் - 173

நீத்தாற்றின் நின்ற நிலையினோர் உண்டாக்கால்
 ஈத்துஆற்றி னாரும் உயப் போவார் - நீத்து ஆற்றில்
 பெற்றிப் புணைஅன்னார் பேர்த்து உண்ணா விட்டக்கால்
 எற்றான் உயப்போம் உலகு.

விளக்கவுரை பற்றைத் துறந்து துறவற நெறியில் ஒழுகுகின்ற சான்றோர் உண்பாரானால் அன்னவரை உண்ணச் செய்து அறநெறியில் செலுத்தியவரும் பிறவிப் பிணிப்பினின்று நீங்கப் பெறுவர். தம் துறவு ஒழுக்கத்தினால் பிறரையும் பிறவிக் கடலினின்று கரையேற்றுவதில் வல்ல புணை போன்ற அவர் இருக்கையினின்றும் போந்து உண்ணாது ஒழிந்தால் இல்லற நெறியில் உள்ள உலகத்தவர் அக் கடலின் றெங்ஙனம் கரையேறுவர்?

தீயோரை உண்ணச் செய்வது தீங்காம் பாடல் - 174

கொடுத்துஉய்யப் போமாறு கொள்வான் குணத்தில்
 வடுத்தீர்த்தார் உண்ணின் பெறலாம் - கொடுது;தாரைக்
 கொண்டு உய்யப் போவார் குணம் உடையார் அல்லாதார்
 உண்டுஈத்து வீழ்வார் கிழக்கு.

விளக்கவுரை துறவு, மெய் உணர்வு முதலான குணங்களை உடையவர் தமக்கு உணவு முதலியவற்றைத் தந்து உதவியவரையும் பிறவிப் பிணியின் நீக்கித் தாமும் உய்வர். துறவு முதலிய குணங்கள் அற்றவர் மற்றவர் தருவதை உண்டு தம்மை உண்பித்தவரையும் இழுத்துக்கொண்டு போய் நரகத்தில் வீழ்த்துவர் (ஆதலால்) இல்லற நெறியில் நின்று ஈகையால் உய்யும் நெறியை அடைய எண்ணுபவன் குற்றமற்ற குணத்தினையுடைய துறவிகளை ஊட்டின் அதனை அடையலாம்.

மூவகை ஈகைகள் பாடல் - 175

அடங்கினார்க்கு ஈதல் தலையே; அடங்காது
 அடங்கினார்க்கு ஈதல் இடையே; - நுடங்கு இடையாய்!
 ஏற்பானும் தானும் அடங்காக்கால் அஃதுஎன்ப
 தோற்பாவைக் கூத்தினுள் போர்.

விளக்கவுரை துவள்கின்ற இடையை உடையவளே! கொடுப்பவர் பணிவுடன் ஐம்பொறிகளும் அடங்கிய துறவியர்க்கு உணவு முதலியவை கொடுத்தல் தலையான அறம் ஆகும். அங்ஙனம் அவர் பணியாது அடங்கினவர்க்கு கொடுத்தல் அடைப்பட்ட அறமாகும். தானும் அடங்காமல் அடங்காதவனுக்குக் கொடுத்தால் அச்செயல் நாடக மேடையில் தோலால் செய்த பொம்மைகள் ஒன்றுடன் ஒன்று போர் செய்தலைப் யொக்கும் என்று கூறுவர் பெரியோர்.

உணவுக் கொடையே உயர்ந்த கொடை பாடல் - 176

வாழ்நாள் உடம்பு வலிவனப்புச் செல்கதியும்
 தூமாண் நினைவு ஒழுக்கம் காட்சியும் - தாம் மாண்ட
 உண்டி கெடுத்தான் கொடுத்தலால் ஊண்கொடையோடு
 ஒன்றும் கொடைஒப்பது இல்.

விளக்கவுரை சிறந்த உணவைக் கொடுத்தவன் நீண்ட வாழ்நாளையும் உடலின் வன்மையையும், அழகையும் மறுமைப் பயனையும் தூய சிறந்த எண்ணத்தையும் நல்ல ஒழுக்கத்தையும் நற்காட்சியையும் கொடுப்பதால் பசித்தவர்க்கு உணவு கொடுத்தலுடன் ஒத்த கொடை ஒன்றும் இல்லை.

இரப்பவரைவிடச் சிறந்த வள்ளல் இல்லை பாடல் -  177

பரப்புநீர் வையகத்துப் பல்உயிர்கட்கு எல்லாம்
 இரப்பரின் வள்ளல்களும் இல்லை - இரப்பவர்
 இம்மைப் புகழும் இனிச்சொல் கதிப்பயனும்
 தம்மைத் தலைப்படுத்த லால்.

விளக்கவுரை யாசிப்பவர், இப்பிறவியில் புகழையும் அடைய இருக்கும் மறுமைப் பயனையும் ஈவோரை அடையச் செய்தலால் கடல் சூழ்ந்த உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இரப்பவரைப் போன்று வள்ளல்கள் வேறு எவரும் இல்லை.

செல்வரின் கடமை பாடல் - 178

செல்வத்தைப் பெற்றார் சினம்கடிந்து செவ்வியராய்ப்
 பல்கிளையும் வாடாமல் பார்த்துண்டு - நல்லவாம்
 தானம் மறவாத தன்மையரேல் அ·து என்பார்
 வானகத்து வைப்பதுஓர் வைப்பு.

விளக்கவுரை பொருட் செல்வத்தைப் பெற்றவர்கள் சினத்தை அகற்றி காண்பதற்கு எளியராய்ச் சுற்றத்தார் பலரும் வறுமையால் வாடாதபடி அவர்கட்கும் பகுத்துத் தந்து தாமும் உண்டு இம்மை மறுமைப் பயன்களை அடையச் செய்கின்ற கொடை அறத்தையும் மறவாமல் செய்யும் தன்மை உடையவராயின் அச்செயல் மேல் உலகத்தில் தமக்கு உதவும்படி வைக்கின்ற சேமநிதி என்று சான்றோர் உரைப்பர்.

தானம் செய்பவரை வானம் வாயில் திறந்து வரவேற்கும் பாடல் - 179

ஒன்றாக நல்லது உயிர்ஓம்பல் ஆங்குஅதன்பின்
 நன்றுஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் - என்று இரண்டும்
 குன்றாப் புகழோன் வருகஎன்று மேல்உலகம்
 நின்றது வாயில் திறந்து.

விளக்கவுரை உயிர்களைக் கொல்லாமல் பாதுகாத்தல் என்பது தனக்கு ஒப்பாவது யாதுமின்றி உயர்ந்த அறமாகும்; அதனையடுத்து ஞான நூல்களை ஆராய்ந்து, ஐம்புலன்களும் அடங்கப் பெற்றார்க்கு உணவு முதலியன தந்து, தானும் உண்ணுதல் என்னும் இவ்விரண்டு செயல்களாலும் நிறைந்த புகழை உடையவனை 'வருக' என வாயிலைத் திறந்து அவனது வருகையை எதிர்நோக்கி, மேல் உலகமானது காத்து நிற்கும்.

தன்னைப் போற்றுவதும் ஈகையே யாகும் பாடல் - 180

சோரப் பசிக்குமேல் சோற்றுஊர்திப் பாகன்மற்று
 ஈரப் படினும் அதுஊரான் - ஆரக்
 கொடுத்துக் குறைகொள்ளல் வேண்டும்; அதனால்
 முடிக்கும் கருமம் பல.

விளக்கவுரை உணவால் நிலைபெறும் உடலான ஊர்தியைச் செலுத்தும் உயிர்ப் பாகன், மிக்க பசியை அடைவானாயின் வாளால் அறுப்பினும் அதைச் செலுத்தமாட்டான். (ஆயினும்) அந்த உடலால் முடிக்க வேண்டிய கருமங்கள் பல உள்ளன. ஆதலால் அந்த உடலைத் தொழிற்படச் செய்வதற்கு ஏற்ப உண்பித்துச் செயல்களை முடித்துக்கொள்ளல் வேண்டும்.

மறுமைக்கு ஏற்றது ஈகையே பாடல் - 181

ஈவரின் இல்லை உலோபர் உலகத்தில்
 யாவரும் கொள்ளாத வாறுஎண்ணி - மேவஅரிய
 மற்றுஉடம்பு கொள்ளும் பொழுதுஓர்ந்து தம்உடைமை
 பற்று விடுதல் இலர்.

விளக்கவுரை தம் பொருளை உலகில் எவரும் கவராதவாறு காக்க வல்லதும், அப்பொருளை அடைவதற்கு அரிய மறு பிறவியைத் தாம் அடையும் காலத்தும் அதனைத் தம்பால் தரவல்லதும் அறமே என்பதனை ஆராய்ந்து அறிந்து, அப்பொருளின்மீது கொண்ட பற்று நீங்காதவராய் ஈதலால், இரப்பார்க்கு அவர் வேண்டுவதை ஈவார் போன்ற கடும் பற்றுள்ளம் உடையவர் வேறு எவரும் இல்லை.

உலோபி தடியால் அடிக்க உதவுவான் பாடல் - 182

இட்டக் கடைத்தரார் ஈண்டும் பலிமரீஇப்
 பட்ட வழங்காத பான்மையார் - நட்ட
 சுரிகையாற் கானும் சுலாக்கோ லாற் கானும்
 செரிவதாம் ஆபோல் சுரந்து.

விளக்கவுரை தம்மிடம் பொருந்திய நெருங்கிய நண்பர்களுக்கும் கொடாமலும், பிச்சை ஏற்று வாழ்பவர்க்கும் கொடாமலும் வாழும் உலோப குணம் உடையவர், உடை வாளால் தம்மைத் தாக்க வருபவனுக்கும், தடி கொண்டு தம்மை அடிக்க வருபவனுக்கும், பசு தனது பாலைக் கறப்பனுக்குச் சுரந்து கொடுப்பது போல் மிகுதியாகக் கொடுப்பது உண்டு.

அறிவுப் பொருளைக் கொடுத்தலும் பெறுதலும்  பாடல் - 183

கொடுப்பான் பசைசார்ந்து கொள்வான் குணத்தில்
 கொடுக்கப் படுதல் அமையின் - அடுத்துஅடுத்துச்
 சென்றுஆங்கு அடைந்து களைவினை என்பரே
 வென்றார் விளங்க விரித்து.

விளக்கவுரை ஞான ஆசிரியன் அன்பு கொண்டு, தன்னை அடைந்த மாணவனின் பண்புக்கு ஏற்றவாறு உபதேசம் செய்ய வல்லவனாக அமைந்தால், பலமுறை அவ்வாசிரியனிடம் சென்று, அவன் கூறும் உறுதிமொழிகளைக் கேட்டபின், 'பிறவிக்குக் காரணமான வினைகளை நீக்குங்கள்!' என ஐம்புலன்களையும் வென்ற முனிவர் யாவரும் உணருமாறு விரிவாகக் கூறுவர்.

புரவலரும் இரவலரும் தருபொருளும் பாடல் - 184

கொடுப்பான் வினைஅல்லன் கொள்வானும் அல்லன்
 கொடுக்கப் படும்பொருளும் அன்றால் அடுத்து அடுத்து
 நல்லவை யாதாங்கொல் நாடி உரையாய்நீ
 நல்லவர் நாப்பண் நயந்து.

விளக்கவுரை இவ்வுலகில் கொடுக்கும் கொடையாளி கொடுக்கும் தொழிலை மேற்கொள்ளாதவனாகவும், கொள்பவனான யாசிப்பவன் அவன் தொழிலை மேற்கொள்பவனாகவும் அல்லாமல் யாவரும் செல்வராகவும், தருதற்குரிய பொருளும் கொடுத்தற்கு அல்லாமல் ஓரிடத்தே நிலைத்திருக்குமானால், பெரியோரிடையே அடிக்கடி ஏற்படி வேண்டிய நற்செயல்கள் எங்ஙனம் ஏற்படும் என்பதை, நீ உலக நன்மையை விரும்பியவனாய் ஆலோசித்து  சொல்வாயாக.

நல் ஞானத்தின் இயல்பு பாடல் - 185

அறிவு மிகப்பெருக்கி ஆங்காரம் நீக்கிப்
 பொறிஐந்தும் வெல்லும்வாய் போற்றிச் - செறிவினால்
 மன்உயிர் ஓம்பும் தகைத்தே காண் நல்ஞானம்
 தன்னை உயக்கொள் வது.

விளக்கவுரை நல்ல ஞானமானது தன்னை உடையவனுக்கு உய்யும் நெறியை அருளுதல் என்பது, அறிவை மிகவும் பெருகும் படியாகச் செய்து, அகங்காரத்தை அகற்றி, பொறிகள் ஐந்தையும் வெல்லும் வழியை வளர்த்து, அடக்கத்தோடு, நிலைபெற்ற உயிர்களைத் துன்பம் அணுகாதபடி காக்கும் தன்மையை உடையவனாக ஆக்குவதே ஆகும்.

செயற்கு அரியவற்றைச் செய்வதே சிறந்தது! பாடல் - 186

சோறியாரும் உண்ணாரோ! சொல்லியாரும் சொல்லாரோ
 ஏறியாரும் வையத்துள் ஏறாரோ - தேறி
 உரியதோர் ஞானம் கற்று உள்ளம் திருத்தி
 அரிய துணிவதாம் மாண்பு.

விளக்கவுரை சோறு உண்ணுவதை யாரும் செய்யாரோ? அரியவற்றைச் செய்வேன் என்று யாரும் சொல்லாரோ? எருதுகள் பூட்டும் வண்டியில் எவரும் ஏறிச் செல்லாரோ? இவற்றையெல்லாம் உலகத்துள் உள்ளவர் யாவரும் செய்வர். ஆயின் கற்பதற்குரிய ஞான நூல்களைக் கற்றுத் தெளிந்து மனத்தில் உள்ள அழுக்கை அகற்றி அரியவற்றைச் செய்து வீடுபேற்றை அடைய எண்ணுவதே பெருமை தருவதாகும். 

ஞானநூல் அறிவை வளர்க்கும் பாடல் - 187

பாம்புஉண்ட நீர்எல்லாம் நஞ்சுஆம்; பசுஉண்ட
 தேம்படு தெள்நீர் அமுதமாம் - ஓம்பற்கு
 ஒளியாம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோல்
 களியாம் கடையாயார் மாட்டு.

விளக்கவுரை பாம்பு உண்ட நீர் முழுவதும் நஞ்சாக மாறும்; அதுபோலக் கயவர்கள் கற்கும் ஞானநூல்கள் அவர்களிடம் மயக்கத்தையே ஏற்படுத்தும்; பசுக்கள் குடித்த இனிய தெளிந்த நீர் பாலாக ஆகும்; அதைப் போல் உயர்ந்தவர்கள் கற்கும் ஞானநூல்கள் அவர்களிடம் போற்றுதற்குரிய அறிவை வளர்க்கும்.

ஞானநூல் பயிற்சியாண்டும் வேண்டும் பாடல் - 188

கெடுக்கப் படுவது தீக்கருநூம்; நாளும்
 கொடுக்கப் படுவது அருளே; - அடுத்துஅடுத்து
 உண்ணப் படுவது நல்ஞானம்; எப்பொழுதும்
 எண்ணப் படுவது வீடு.

விளக்கவுரை எக்காலத்தும் அழிக்கப்படுவது தீயசெயலாகும்; பிறரிடம் செய்வதற்குரிய அருள் ஆகும்; பல முறையும் ஆராய்ந்து இன்பம் அடைவதற்கு உரியது நல்ல ஞான நூலே ஆகும்; எப்பொழுதும் மனத்தால் நினைக்கப்படுவது வீடு பேறாகும்.

வீடு வேண்டுவார் செயல் பாடல் - 189

இந்தியக் குஞ்சரத்தை ஞான இருங்கயிற்றால்
 சிந்தனைத் தூண்பூட்டிச் சேர்த்தியே - பந்திப்பர்
 இம்மைப் புகழும் இனிச் செல்கதிப் பயனும்
 தம்மைத் தலைப்படுத்து வார்.

விளக்கவுரை இப்பிறவியில் புகழும், மறுமையில் வீடு பேற்றையும் தவறாது அடைய எண்ணுபவர்கள், ஐம்பொறிகள் என்னும் யானைகளை உள்ளம் என்னும் தூணில் சேர்த்து, (விலகாதபடி) ஞானம் என்னும் வலிமையான கயிற்றால் கட்டுவர்.

பிறவி நோயை ஒழிக்கும் வழி பாடல் - 190

உணர்ச்சிஅச் சாக, உசாவண்டி யாகப்,
 புணர்ச்சிப் புலன்ஐந்தும் பூட்டி - உணர்ந்ததனை
 ஊர்கின்ற பாகன் உணர்வுடையன் ஆகுமேல்
 பேர்கின்றது ஆகும் பிறப்பு.

விளக்கவுரை அறிவை அச்சாணியாகக் கொண்ட ஆராய்ச்சி என்னும் வண்டியில், ஐம்பொறிகளாகிய குதிரைகள் ஐந்தையும் சேர்த்துப் பூட்டி, செலுத்தும் நெறியை அறிந்து அவ்வண்டியைச் செலுத்தும் உயிர் என்ற பாகன், தெளிந்த அறிவையும் உடையவனாயின் பிறப்பு என்னும் நோய் அவனை விட்டு நீங்கும்.

பிறவியை ஒழிப்பது நல்ஞானம் பாடல் - 191

தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்
 உறுதிக்கு உறுதி உயிர்ஓம்பி வாழ்தல்
 அறிவிற்கு அறிவாவது எண்ணின் மறுபிறப்பு
 மற்றுஈண்டு வாரா நெறி.

விளக்கவுரை ஆராய்ந்து பார்த்தால் அஞ்சாமையுள் அஞ்சாமையாவது, தன்னிடம் குறையிருக்குமானால் அதை எண்ணி வருந்துதல்; நல்ல செயல்களுள் நல்ல செயலாவது உயிர்களைப் பாதுகாத்து வாழ்தல்; அறிவிற்கு அறிவாகிய நல்ஞானமாவது, இந்த உலகில் மீண்டும் பிறவாமைக்குக் காரணமான நெறியில் செல்வதாகும்.

வீடுபேற்றை அடையும் விதம் பாடல் - 192 

உயிர்வித்தி ஊன்விளைத்துக் கூற்று உண்ணும் வாழ்க்கை
 செயிர்வித்திச் சீலம்தின்று என்னை - செயிரினை
 மாற்றி மறுமை புரிகிற்பின் காணலாம்
 கூற்றம் குறுகா இடம்.

விளக்கவுரை உயிர்களாகிய விதையை விதைத்து உடல்களாகிய தானியத்தை விளைவித்து, கூற்றுவன் உண்ணுதற்குக் காரணமாகிய இவ்வுலக வாழ்க்கையை மெய்யென நம்பி, தீமையை விதைத்து  நல்லொழுக்கமாகிய விதைகளை விதையாமல் தின்பதால் வரும் பயன் யாது? தீவினையை மாற்றி மறுமை இன்பத்துக்குக் காரணமாகிய அறத்தினைச் செய்யின் எமன் அணுகாத வீட்டினை அடைந்து இன்புறலாம்.

நல்லொழுக்கமே முத்திக்கு விதை பாடல் - 193

இருளே உலகத்து இயற்கை; இருள் அகற்றும்
 கைவிளக்கே கற்ற அறிவுடைமை; - கைவிளக்கின்
 நெய்யேதன் நெஞ்சத்து அருள்உடைமை,
 பால்போல் ஒழுக்கத் தவரே பரிவுஇல்லா மேல் உலகம் எய்துபவர்.

விளக்கவுரை இந்த வுலகம் அறியாமை என்னும் இருள் நிறைந்ததாகும். ஞான நூல்களைக் கற்றதால் ஏற்பட்ட அறிவுடைமை அந்த இருளைப் போக்கும் கைவிளக்கே ஆகும். மனத்தில் உள்ள அருள் அந்த விளக்கை ஏற்றுவதற்குரிய நெய் ஆகும். நெய்க்குக் காரணமான பால் போன்ற ஒழுக்கத்தை உடையவரே துன்பம் அற்ற வீட்டுலகத்தை அடைபவர் ஆவார்.

வீட்டு நெறியின் இயல்பு பாடல் - 194

ஆர்வமும் செற்றமும் நீக்கி அடங்குதல்
 சீர்பெறு வீட்டுநெறி என்பார் - நீர்புகப்
 பட்டிமை புக்கான் அடங்கினன் என்பது
 கெட்டார் வழிவியக்கு மாறு.

விளக்கவுரை காம வெகுளிகளை அகற்றி மனமொழி மெய்களால் தீயவை செய்யாமல் அடங்குதல் சிறப்புடைய வீட்டை அடையச் செய்யும் நெறியாகும் என்று சான்றோர் கூறுவர். அவ்வாறின்றிப் புனலில் மூழ்கித் துறவுக்கோலம் மட்டும் கொண்டவன் அடங்கியவனாய்ப் பாவித்திருத்தல் தீ ஊழினை உடையார் அதை வியந்து பின்பற்றுவதை ஒத்ததாகும்.

பற்றற்றால் வீடுபேறு கிட்டும் பாடல் - 195

அருளால் அறம்வளரும் ஆள்வினையால் ஆக்கம்
 பொருளால் பொருள்வளரும் நாளும் - தெருளா
 விழைவு இன்பத் தால்வளரும் காமம்அக் காம
 விழைவுஇன்மை யால்வளரும் வீடு.

விளக்கவுரை துன்பத்தால் வருந்தும் உயிர்கட்கு இரங்கி அருள்வதால் அறமானது வளரும். முயற்சியால் பெருவாழ்வு உண்டாகும். எக்காலத்தும் செல்வத்தால் செல்வமானது பெருகும். மயக்கம் தரும் சிற்றின்பத்தினால் ஆசை பெருகும். காம ஆசையை விடுவதால் வீடுபேறு கிட்டும்.

செவிப்பயன் பாடல் - 196

பண்அமை யாழ்குழல் கீதம்என்று இன்னவை
 நண்ணி நயப்ப செவிஅல்ல - திண்ணிதின்
 வெட்டெனச் சொல்நீக்கி விண்இன்பம் வீட்டொடு
 கட்டுரை கேட்ப செவி.

விளக்கவுரை இசையுடன் பொருந்திய யாழும் குழலும் இசைப் பாட்டும் என்னும் இவற்றை அவை நிகழும் இடங்களுக்குப் போய் அவற்றை விரும்பிக் கேட்பவை செவிகள் ஆகா. உறுதியுடன் பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைக் கேளாது நீக்கித் துறக்க இன்பத்தையும் வீடுபேற்றையும் தரும் உறுதிமொழிகளைக் கேட்பதே செவிகளாகும்.

அறிவுரை கேட்க! பாடல் - 197

புண்ணாகப் போழ்ந்து புலால்பழிப்பத் தாம்வளர்ந்து
 வண்ணப்பூண் பெய்வ செவிஅல்ல - நுண்நூல்
 அறவுரை கேட்டுஉணர்ந்து அஞ்ஞானம் நீக்கி
 மறவுரை விட்ட செவி.

விளக்கவுரை புண் ஆகுமாறு துளைக்கப்பட்டு, புலால் நாற்றம் வீசுகிறது எனப் பிறர் பழிக்கத் தாம் வளர்ந்து அழகிய அணிகள் அணியும் செவிகள் உண்மையான செவிகள் அல்லஆ நுட்பமான அறநூலின் பொருள்களைக் கேட்டு ஆராய்ந்து அறியாமை அகற்றிப் பாவத்துக்குக் காரணமான சொற்களைக் கேளாது போவன செவிகள் ஆகும்.

அறநூற் பொருள்களைக் கேட்பனவே செவிகள்! பாடல் - 198

கண்டவர் காமுறூஉம் காமருசீர்க் காதில்
 குண்டலம் பெய்வ செவிஅல்ல - கொண்டு உலகில்
 மூன்றும் உணர்ந்தவற்றின் முன்னது முட்டுஇன்றிச்
 சூன்று சுவைப்ப செவி.

விளக்கவுரை பார்த்தவர் விரும்பும் அழகிய சிறப்புடைய செவியில் குண்டலங்கள் அணியப்படுவன செவிகள் ஆகா. இவ்வுலகத்தில் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் உணர்த்தும் நூல்களைக் கேட்டு உணர்ந்து அவற்றுள் தலைமை சான்ற அறநூலை ஒழிவு இல்லாமல் கேட்டு ஆராய்ந்து இன்பம் அடைவதற்குக் காரணமானவையே செவிகள் ஆகும்.

அருகக் கடவுளைக் காண்பதே கண்! பாடல் - 199

பொருள்எனப் போழ்ந்தகன்று பொன் மணி போன்றுஎங்கும்
 இருள்அறக் காண்பன கண்அல்ல - மருள் அறப்
 பொய்க் காட்சி நீக்கிப் பொருவறு முக்குடையான்
 நற்காட்சி காண்பன கண்.

விளக்கவுரை பொருள் என்று சொன்ன அளவில் மிகத் திறந்து அழகிய நீலமணியைப் போல் எல்லாப் பக்கங்களிலும்இருள் நீங்கக் காண்பவை கண்கள் ஆகா. காமம் வெகுளி மயக்கம் நீங்குமாறு பொய்யான காட்சிகளை அறவே ஒழித்து, ஒப்பில்லாத மூன்று குடைகளை உடைய அருகக் கடவுளின் நிலை பெற்ற திருவுருவைக் காண்பனவே கண்களாகும்.

சிறந்த மூக்குகள்! பாடல் - 200

சாந்தும் புகையும் துருக்கமும் குங்குமமும்
 மோந்துஇன் புறுவன மூக்கல்ல - வேந்தின்
 அலங்குசிங் காதனத்து அண்ணல் அடிக்கீழ்
 இலங்குஇதழ் மோப்பதாம் மூக்கு.

விளக்கவுரை சந்தனமும் அகிற் புகையும் கத்தூ¡¢யும் குங்குமப் பூவும் (ஆகியவற்றை) மோந்துபார்த்து மகிழ்ச்சி அடைபவை மூக்குகள் ஆகா. உயர்ந்து இனிது விளங்கும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அருகனின் திருவடிகளில் பெய்து விளங்கும் மலர்களை மோந்து இன்புறுவதே மூக்காகும்.

அருகனின் திருவடியைத் துதிப்பனவே நா! பாடல் - 201

கைப்பன கார்ப்புத் துவர்ப்புப் புளிமதுரம்
 உப்புஇரதம் கொள்வன நாஅல்ல - தப்பாமல்
 வென்றவன் சேவடியை வேட்டுவந்து எப்பொழுதும்
 தின்று துதிப்பதாம் நா.

விளக்கவுரை கசப்புடையவை கார்ப்பு உடையவை துவர்ப்புச் சுவை புளிப்பவை இனிப்பானவை உப்புச் சுவையுடையவை ஆகிய அறுவகைக் சுவைகளை சுவைப்பவை நாக்குகள் ஆகா. தவறாமல் காமம் வெகுளி மயக்கங்களை வென்ற அருகப் பெருமானின் சிவந்த திருவடிகளை விரும்பி எப்போதும் நின்று துதிப்பதே நாவாகும்.

அறவுரை உரைப்பா¡¢டம் செல்வன கால்கள்! பாடல் - 202

கொல்வதூஉம் கள்வதூஉம் அன்றிப் பிறர்மனையில்
 செல்வதூஉம் செய்வன கால்அல்ல - தொல்லைப்
 பிறவி தணிக்கும் பெருந்தவர் பால்சென்று
 அறவுரை கேட்பிப்ப கால்.

விளக்கவுரை மற்ற உயிரைக் கொல்லவும் பிறர் பொருளைத் திருடவும் அல்லாது பிறர் மனைவியை விரும்பிக் கூடச் செல்வதற்கும் உதவுபவை கால்கள் அல்ல; துன்பம் தரும் பிறவிப் பிணியைப் போக்கும் பெருந்துறவியா¢டம் போய் அவர் கூறும் அறிவுரையைக் கேட்கச் செய்வன கால்கள் ஆகும்.

அருகப் பெருமானின் திருவடிகளை வணங்குவனவே தலைகள் பாடல் - 203

குற்றம் குறைத்துக் குறைவுஇன்றி மூவுலகின்
 அற்றம் மறைத்துஆங்கு அருள்பரப்பி - முற்ற
 உணர்ந்தானைப் பாடாத நாவல்ல, அல்ல
 சிறந்தான் தாள் சேராதவை.

விளக்கவுரை காமம் வெகுளி மயக்கங்களைக் கெடுத்து மூன்று உலகத்தில் உள்ளவா¢ன் அச்சத்தை குறைவு இல்லாமல் போக்கி அவர்களுக்கெல்லாம் அருள் செய்து இயல்பாகவே எல்லாம் உணர்ந்த அருகதேவனைப் பாடாதவை நா அல்ல. சிறந்த அக்கடவுளின் திருவடிகளைச் சேராத தலைகள், தலைகள் ஆகா.

உயிருடனே தொடர்ந்து செல்வது அறியாமை பாடல் - 204

உடன்பிறந்த மூவர் ஒருவனைச் சேவித்து
 இடம்கொண்டு சின்னாள் இருப்பர் - இடம்கொண்ட
 இல்லத்து இருவர் ஒழிய ஒருவனே
 செல்லும் அவன்பின் சிறந்து.

விளக்கவுரை உயிர் தோன்றும்போது உடன் தோன்றிய காம வெகுளி மயக்கங்கள் தம்மை வழிபடுமாறு அதனை அடிமை கொண்டு சிலநாள் உடலிடை இருக்கும். பின்னர் இடமாகக் கொண்ட உடலுடன் காம வெகுளிகள் நீங்க மயக்கமானது அந்தவுயிரை விடாது தொடர்ந்து செல்லும்.

வெகுளியை விட்டவர் வீடு பெறுவர் பாடல் - 205

சுட்டுஎனச் சொல்லியக்கால் கல்பிளப்பில் தீயேபோல்
 பொட்டப் பொடிக்கும் குரோதத்தை - வெட்டெனக்
 காய்த்துவரக் கண்டக்கால் காக்கும் திறலாரே
 மோக்க முடிவுஎய்து வார்.

விளக்கவுரை தம்மை மற்றவர் சினந்து வன்சொற்களைக் கூறியபோதும், கடுகடுத்துத் தம்மைத் தாக்குதற்கு வரக்கண்டபோதும், கல்லை உடைக்கும்போது அதில் தோன்றும் தீயைப் போன்று விரைவாகத் தோன்றும் சினத்தை மேலே எழாதபடி அடக்க வல்ல ஆற்றல் உடையவரே வீட்டின்பத்தை அடைபவர் ஆவார்.

வீடுபேற்றுக்குரிய நெறிகளாவன பாடல் - 206

நல்வினை நாற்கால் விலங்கு நவைசெய்யும்
 கொல்வினை அஞ்சிக் குயக்கலம் - நல்ல
 உறுதியும் அல்லவும் நாள்பேர் மரப்பேர்
 இறுதியில் இன்ப நெறி.

விளக்கவுரை நல்ல வினைகளைச் செய்ய முயல்க; துன்பத்தைத் தரும் தீவினைகளை அஞ்சி விலகுக; சிறந்த ஆன்ம லாபத்தை புல் (தழுவுக). ஆன்ம லாபம் அல்லாதவற்றை முனி (வெறுத்து விடுக) இவை வீடு எய்துதற்குரிய நெறிகளாகும்.

மீண்டும் பிறவி வாராது ஒழிக்கும் நெறி பாடல் - 207

பறவை அரும்பொருள், இன்சொல் முதிரை,
 உறுதிக்கண் ஊன்உண் விலங்கு - சிறியன
 நீர்ப்புகள், குயக்கலம் புல்லவை ஊர்வது
 பேர்த்துஈண்டு வாரா நெறி.

விளக்கவுரை இரப்பவர்க்கு அரிய பொருள், ஈ; இனிய சொற்களைக் கொள்; ஆன்ம லாபத்துக்கு உரியவற்றைச் செய்யும்போது மடங்கல் (நிலை தளராதே); அற்ப இன்பத்தை உள்ளல் (கருதாதே); அற்பரின் அவையை அகல் (சேராதே). இவற்றை மேற்கொள்வதே திரும்பவும் இவ்வுலகத்தில் பிறப்பு வாராது தடுக்கும் வழியாகும்.

வீடு அடைய எண்ணுபவர் எண்ண வேண்டியவை பாடல் - 208

உட்கப் படும்எழுத்து ஓர்இரண்டு ஆவதே;
 நட்கப் படும் எழுத்தும் அத்துணையே; - ஒட்டி
 இழுக்கா எழுத்து ஒன்று இமிழ்கடல் தண்சேர்ப்ப
 விழுச்சார்வு வேண்டு பவர்க்கு.

விளக்கவுரை ஒலிக்கும் குளிர்ச்சியுடைய கடல் துறையை உடையவனே அழியா நிலையை அடைய விரும்புவோர் அஞ்சத்தக்கது இரண்டு எழுத்துக்களால் ஆன 'வினை'யே ஆகும்; விரும்பப்படும் எழுத்தும் அந்த இரண்டு எழுத்துக்களால் ஆன வீடே ஆகும்; நட்பாகக் கொண்டு அதனின்று வழுவாது இருக்கத்தக்கது ஓர் எழுத்தான 'அ' என்னும் எழுத்தைக் குறித்து அவர் அருளிய ஆகமத்தை நினைவுபடுத்துவதாம்.

தூயவரை எல்லாப் பொருளும் வந்து அடையும் பாடல் - 209

முப்பெயர் மூன்றும் உடன்கூட்டி ஓர்இடத்துத்
 தப்பிய பின்னறத்தம் பேர்ஒழித்து - அப்பால்
 பெறுபெயரைக் காயப் பெறுபவேல் வையத்து
 உறுமவனை எல்லாம் ஒருங்கு.

விளக்கவுரை மூன்றாகப் பெயர் கொண்ட உலக மூடம், பாசண்டி மூடம், தெய்வ மூடம் என்னும் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து, அமைதியான ஓர் இடத்தில் அமர்ந்து ஆலோசித்து அந்த மூன்றையும் ஒழித்த பின்பு 'தான்' என்னும் ஆணவமான செருக்கை ஒழித்து, துறவு நிலைக்குப் பின்பு பெறக் கூடிய 'தூயோன்' என்ற புகழ்ச் சொல்லையும் வெறுக்க, மக்கள் பெறுவாராயின் இவ்வுலகத்தில் அவ்விதம் பெற்ற அப் பெரியோனை எல்லாப் பொருளும் ஒன்றாக அடையும்.

தூற்றப்படுபவன் செய்ய வேண்டியது பாடல் - 210

ஆற்றாமை ஊர அறிவுஇன்றி யாதொன்றும்
 தேற்றான் எனப்பட்டு வாழ்தலின் - மாற்றி
 மனையின் அகன்றுபோய் மாபெருங் காட்டில்
 நனையில் உடம்புஇடுதல் நன்று.

விளக்கவுரை துன்பங்கள் மிக, அறிவு இல்லாது தன் உயிர்க்கு உறுதி பயப்பதான ஒன்றையும் தொ¢யாதவன் எனப் பலரால் இகழ்ந்து பேசப்பட்டு வாழ்வதை விட இல்வாழ்க்கையை விட்டு, வீட்டினின்று அகன்று மிகவும் பெரிய காட்டில் சென்று, இனிமை தராத அந்த உடம்பை விடுதல் (இறத்தல்) நன்மை தரும்.

உண்மைச் சுற்றத்தார் பாடல் - 211

நல்அறம் எந்தை, நிறைஎம்மை, நன்குஉணரும்
 கல்விஎன் தோழன், துணிவுஎம்பி - அல்லாத
 பொய்ச்சுற் றத்தாரும் பொருளோ? பொருளாய
 இச்சுற்றத் தாரில் எனக்கு.

விளக்கவுரை நல்லறமே என் தந்தை; அறிவே என் தாய்; நன்மையை உணர்தற்குக் காரணமான கல்வியே என் நண்பன்ஆ உள்ளத் தெளிவே என் தம்பி;உறுதிப் பொருளை அளிக்கும் இந்த உறவினரைப் போல் எனக்கு, அவர் அல்லாத தந்தை தாய் தோழன் உடன் பிறந்தான் என்னும் உறவினரான பொய்ச் சுற்றத்தார் உறுதி தருவரோ? தாரார்.

பொய்ச் சுற்றத்தாரும் அவரால் வரும் துன்பமும் பாடல் - 212

மக்களே, பெண்டிர், மருமக்கள், தாய், தந்தை
 ஒக்க உடன்பிறந்தார் என்று இவர்கள் - மிக்க
 கடும்பகை யாக உழலும் உயிர்தான்
 நெடுந்தடு மாற்றத்துள் நின்று.

விளக்கவுரை பிள்ளைகளும், மனைவியரும், மருமக்களும், தாயும், தந்தையும், தன்னுடன் ஒன்றாய்ப் பிறந்தவரும் ஆகிய இவர்கள் இன்பம் தருபவர்களைப் போல் மிகவும் கொடிய துன்பத்தைத் தருவதால், உயிரானது மிக்க கலக்கத்துக்குக் காரணமான உலக வாழ்க்கையில் தள்ளப்பட்டு மிகவும் வருந்தும்.

உடம்பின் இன்றியமையாமை பாடல் - 213

அளற்றுஅகத்துத் தாமரையாய் அம்மலர்ஈன்ற ஆங்கு
 அளற்று உடம்பாம்எனினும் நன்றுஆம் அளற்றுஉடம்பின்
 நல்ஞானம் நல்காட்சி நல்லொழுக்கம் என்றவை
 தன்னால் தலைப்படுத லான்

விளக்கவுரை
சேற்றில் வளர்ந்த தாமரை அழகிய மலர்களை ஈனுதல் போல், தூய்மையற்ற உடம்போடு கூடி வாழும் போதே, நல்ல ஞானமும், நல்ல காட்சியும், நல்ல ஒழுக்கமும் ஆகிய மும்மணிகளை ஒருவனால் அடையக் கூடும். ஆதலால் உடம்பு மலமயமானது என்றாலும் அதனுடன் சேர்ந்து வாழ்தல் நன்று.

மயக்கவுணர்வால் வரும் துன்பங்கள் பாடல் - 214

தேற்றம்இல் லாத ஒருவனைப் பின்நின்றாங்கு
 ஆற்ற நலிவர் இருநால்வர் - ஆற்றவும்
 நல்லார்போல் ஐவர் பகைவளர்ப்பர் மூவரால்
 செல்லும் அவன்பின் சிறந்து.

விளக்கவுரை உண்மைப் பொருளின் இயல்பு இது என்று தெளியாத ஒருவனை, அப்பிரத்தியாக்கியான குரோதம் முதலிய எட்டும் பின்பற்றி மிகவும் மெலிவிக்கும்; மெய் முதலிய பொறிகள் ஐந்தும் இன்பம் தருபவை போல மிகவும் துன்பத்தையே வளர்க்கும். ஐ, வளி, பித்தம் என்னும் மூன்றன் மாறுபாட்டால் அவன் பின் மரணத்தை அடைவான்.

அறிவாளி உண்மைப் பொருளை உணர்வார் பாடல் - 215

அருவினையும் ஆற்றுள் வருபயனும் ஆக்கும்
 இருவினையும் நின்றவிளைவும் - தி¡¢வுஇன்றிக்
 கண்டு உணர்ந்தார்க்கு அல்லது காட்டதரும் நாட்டதரும்
 கொண்டுஉரைப்பான் நிற்றல் குதர்.

விளக்கவுரை துறவையும், அதில் அடையும் பயனையும், உலகவர் செய்யும் நல்வினை தீவினைகளையும், அவற்றால் உண்டானவையும், உள்ளவாறு பார்த்து அறிய விரும்புவார்க்கன்றி, மற்றவர்க்கு உலக நெறியையும் வீட்டு நெறியையும் உட்கொண்டு சொல்லத் தொடங்குதல் வீணாகும்.

அறநெறிச் சாரத்தால் அறிவு சிறந்து விளங்கும் பாடல் - 215

ஆதியின் தொல்சீர் அறநெறிச் சாரத்தை
 ஓதியும் கேட்டும் உணர்ந்தவர்க்குச் - சோதி
 பெருகிய உள்ளத்த ராய் வினைகள் தீர்ந்து
 கருதியவை கூடல் எளிது.

விளக்கவுரை முதற் கடவுளான அருகப் பெருமானின் பழமையான புகழை விளக்குகின்ற அறநெறிச்சாரம் என்னும் இந்நூலைக் கற்றும் கேட்டும் அறிந்தவர், ஞான ஒளி மிக்க மனம் உடையவராய், இருவகை வினைகளினின்று நீங்கப் பெறுவதால், அவர்கள் கருதியவை எளிதில் முடியும்.

அறநெறிச்சாரம் வீட்டினை அடைவிக்கும் பாடல் - 216

எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என்செய்யும்
 பொய்ந்நூல் அவற்றின் பொருள்தொ¢ந்து - மெய்ந்நூல்
 அறநெறிச் சாரம் அறிந்தான்வீடு எய்தும்
 திறநெறிச் சாரம் தெளிந்து.

விளக்கவுரை பொய்ந் நூல்களாகிய பிற நூல்களைக் கற்றாலும் கேட்டாலும் அவற்றின் பொருளை உணர்ந்து கொள்வதாலும் யாது பயன்? உண்மை நூலான அறநெறிச்சாரம் என்னும் நூலைக் கற்று உணர்ந்தவன் உறுதி தரும் நெறியின் பயனை அறிந்து அதில் நின்று முத்தியினை அடைவான். (அறநெறிச் சாரம் உணர்ந்து அதன் வழி நடப்போர் முத்தியடைவர்).

சினனைச் சிந்திக்கப் பாவம் இல்லை பாடல் - 217

அவன்கொல் இவன்கொல்என்று ஐயப் படாதே
 சினன்கண்ணே செய்ம்மின்கள் சிந்தை - சினன்தானும்
 நின்றுகால் சீக்கும் நிழல்திகழும் பிண்டிக்கீழ்
 வென்றிச்சீர் முக்குடையான் வேந்து.

விளக்கவுரை இறைவன் அவனோ இவனோ என்று நினைத்து ஐயம் கொள்ளாமல் அருகப் பெருமானிடமே உள்ளத்தை நிறுத்துங்கள். அந்த அருகப் பெருமான் எப்போதும் அடைந்தவரின் துன்பத்தைப் போக்குவார். அருள்மிக்க அசோக மரத்தின் கீழ் வீற்றிருக்கும் வெற்றியை உடைய சிறந்த மூன்று குடைகளையுடையவரான அருகப் பெருமானே முழு முதற் கடவுள் ஆவார்.

அருகனைப் பாடி அனைவரும் உய்வோம் பாடல் - 218

முனைப்பாடி யானைச்சூர் முக்குடைச் செல்வன்
 தனைப்பாடி வந்தேற்குத் தந்த பரிசில்
 வினைப்பாடு கட்டழித்து வீட்டின்பம் நல்கி
 நினைப்பாடி வந்தோர்க்கு நீம்ஈக என்றான் நிறை விளக்குப் போல் இருந்து.

விளக்கவுரை திருமுனைப்பாடியில் எழுந்தருளியிருப்பவனும் தெய்வத் தன்மையுடைய மூன்று குடைகளையுடையவனுமான அருகனைப் பாடி வந்த எனக்கு அளித்த பரிசாவது, மிக்க வினைத் தொடர்பை அறுத்து முத்தி இன்பத்தைக் கொடுத்ததன்றி, நந்தா விளக்கைப் போல் விளங்கி, உன்னைப் பாடி வந்தோர்க்கு அறிவை நல்குவையாக என்று கூறி அருளியதும் ஆகும்.

   
  முற்றும்

2 கருத்துகள்:

  1. இருவகை கடவுள் வாழ்த்து

    இறை வணக்கம்

    தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
    பூவின்மேல் சென்றான் புகழடியை - நாவின்
    துதித்து ஈண்டற நெறிச் சாரத்தைத் தோன்ற
    விரிப்பன் சுருக்காய் விரைந்து. 1
    https://www.tamilvu.org/ta/library-l6190-html-l6190ind-145821
    https://www.chennailibrary.com/moral/aranericharam.html

    ஆதியின் தொல்சீர் அறநெறிச் சாரத்தை
    ஓதியும் கேட்டும் உணர்ந்தவர்க்குச் - சோதி
    பெருகிய உள்ளத்த ராய் வினைகள் தீர்ந்து
    கருதியவை கூடல் எளிது.
    http://www.ahimsaiyatrai.com/p/blog-page_82.html


    பதிலளிநீக்கு