தெய்வம் சுட்டும் பெயர்கள் - சொல்லாய்வு

மனிதன் கண்களால் கண்டறிய முடியாத பொருட்களின் வார்த்தைகளின் வரையறைக்கும் நாம் சார்ந்தது இருக்க வேண்டியது  மறைநூல்களாகும். மறைநூல்கள் இல்லையென்றால் அது தொடர்பான சொல்லே நமக்கு கிடைத்து இருக்காது. எனவே வார்த்தையை அதிலிருந்து எடுத்துக் கொண்டு வரையறையை கற்பனை செய்ய முடியாது. 

 தெய்வம் 

தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தந் தமக்கிலவே
உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். - (தொல்காப்பியம்)

கருத்து: தெய்வம் - பாலினமற்றது ஆனால் உயர்திணை 

எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே. - (சிவவாக்கியம்-224)

கருத்து: தெய்வம் ஒன்றே ஒன்று தான், பன்மையில் இல்லை 

தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறி நிற்பில்
ஒன்றானும் தான்நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானும் தான். - அறநெறிச்சாரம் 77

விளக்கவுரை ஒருவன் நல்ல நெறியில் நிற்பானாயின் அவனை விட வேறான வேறு ஒரு தெய்வம் இல்லை. அவன் அவ்வித நெறியில் நில்லாது போனால் அவனின் தாழ்ந்தது வேறு ஒன்றும் இல்லை. தன்னைப் பிறர்க்குத் தலைவனாகச் செய்து கொள்பவனும் அவனே ஆவான். தன்னை மற்றவர்க்குத் தாழ்ந்தவனாகச் செய்துகொள்பவனும் தானே ஆவான்

கருத்து: தெய்வம் ஒருவனே, அவன் தன்னை மக்களில் சிலரை தலைவனாக ஏற்க செய்கிறான், மற்றும் சிலரை அவனை பொருட்படுத்தாத அளவுக்கு சிறுவனாகவும் தானே காட்டிக் கொள்கிறான்.    

இறை

தெய்வம் கண்ணுக்குத் தெரியாத இறைவன் - திருக்குறள் 5, 10

தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறி நிற்பில்
ஒன்றானும் தான்நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானும் தான். - அறநெறிச்சாரம் 77

விளக்கவுரை ஒருவன் நல்ல நெறியில் நிற்பானாயின் அவனை விட வேறான வேறு ஒரு தெய்வம் இல்லை. அவன் அவ்வித நெறியில் நில்லாது போனால் அவனின் தாழ்ந்தது வேறு ஒன்றும் இல்லை. தன்னைப் பிறர்க்குத் தலைவனாகச் செய்து கொள்பவனும் அவனே ஆவான். தன்னை மற்றவர்க்குத் தாழ்ந்தவனாகச் செய்துகொள்பவனும் தானே ஆவான் 

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - (குறள் 5)

பொருள்இருள் சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். (குறள் 10)

பொருள்: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

அரசன் கண்ணுக்குத் தெரியும் இறைவன் - திருக்குறள் அதிகாரம் 39, 432, 436, 564, 778

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும் - (குறள் 388)

பொருள்: நீதிமுறை செய்து குடிமக்களைக்‌ காப்பாற்றும்‌ மன்னவன்‌, மக்களுக்குத்‌ தலைவன்‌ என்று தனியே கருதி மதிக்கப்படுவான்‌.

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு - (குறள் 432)

பொருள்: பொருள்‌ கொடாத தன்மையும்‌, மாட்சியில்லாத மானமும்‌, தகுதியற்ற மகிழ்ச்சியும்‌ தலைவனாக இருப்பவனுக்குக்‌ குற்றங்களாகும்‌.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு - 436

பொருள்: முன்னே தன்‌ குற்றத்தைக்‌ கண்டு நீக்கிப்‌ பிறகு பிறருடைய குற்றத்தை ஆராயவல்லவனானால்‌ தலைவனுக்கு என்ன குற்றமாகும்‌?

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும் - 564

பொருள்: நம்‌ அரசன்‌ கடுமையானவன்‌ என்று குடிகளால்‌ கூறப்படும்‌ கொடுஞ்‌ சொல்லை உடைய வேந்தன்‌, தன்‌ ஆயுள்‌ குறைந்து விரைவில்‌ கெடுவான்‌

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர். - குறள் 778

பொருள்: போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.

கருத்து: தெய்வம் ஒருவனே, ஆனால் இறைவன் (அரசன்/தலைவன்) ஒருவன் அல்ல என்பது இந்த பாடல் மூலம் புலப்படுகிறது. தெய்வத்தை இறைவனாக வைக்க முடியும், ஆனால் இறைவனெல்லாம் தெய்வமாக முடியாது

மேலும் இறை என்பதற்கு பல்வேறு பொருள் உள்ளது, 

 அரசனாகிய இறைவனுக்கு நாம் தரும் வரி இறை எனப்படும். அவன் அதனை நமக்கு இறைப்பதனாலும் அதற்குப் பெயர் இறை: இறைவற்கு இறை ஒருங்கு ஈவது நாடு - திருக்குறள் 733

இறை என்னும் சொல் தோளைக் குறிக்கும். நமக்குத் தோள் கொடுப்பவனை இறைவன் என்கிறோம்: இறை இறவா நின்ற வளை - திருக்குறள் 1157

  • காப்பாற்றுதல் : இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறை காக்கும் முட்டாச் செயின் 547
  • முறைசெய்து காப்பாற்றுதல் : இறையென்று வைக்கப் படும் - குறள் 388
  • குற்றத்துக்குத் தண்டனை வழங்குதல் : ஓர்ந்து கண்ணோடாது யார்மாட்டும் இறை புரிந்து - திருக்குறள் 541

போன்ற செயல்களைப் புரிந்து தலைவனாக விளங்கிவதால் கடவுளும், அரசனும் இறைவன் எனப் போற்றப்படுகின்றனர்.

இறைவனைத் தலை தாழ்த்தி வணங்குகிறோம். இப்படித் தலை தாழ்த்துவதை இறைஞ்சுதல் என்கிறோம். (இறை – இறைஞ்சு) -  நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் - திருக்குறள் 1093

கடவுள்  

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன முன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. (தொல். புறத்திணைவியல்: 85)
      • வழிபடும் கடவுளின் ஏற்றம் கூறுவது கொடிநிலை
      • பெரும்பொருள் என்பது கந்தழி-யின் பொருள் 
      • வள்ளண்மையைக் கூறுவது வள்ளி
(பொருள்) கொடிநிலை கந்தழி வள்ளி முதலியனவற்றில் குற்றம் நீங்கி சிறப்பாக கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும்.

ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! - 




சாமி 


ஆண்டவர் 


கர்த்தர் 


தேவன் 


14 கருத்துகள்:

  1. இறை என்றால் என்ன?

    முன்னுரை:

    சங்க காலந்தொட்டு இன்றுவரை மக்கள் பேச்சுவழக்கிலும் எழுத்து வழக்கிலும் இருந்துவரும் பல தமிழ்ச் சொற்களுள் இறை என்ற சொல்லும் ஒன்றாகும். இச் சொல்லுக்குப் பலவிதமான பொருட்களை இன்றைய தமிழ் அகராதிகள் கூறுகின்றன. ஆயினும் பல பாடல்களில் இந்த அகராதிப் பொருட்களுள் ஒன்றுகூடப் பொருந்திவராத நிலையே காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறொரு புதிய பொருள் இருப்பதையே காட்டுகிறது. அந்த புதிய பொருள் எது என்பதைப் பற்றியும் இப் புதிய பொருளில் இருந்து பிற பொருட்கள் எவ்வாறு உருவாகியிருக்கக் கூடும் என்பதனையும் பல ஆதாரங்களுடன் விளக்கமாகக் காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

    இறை - தற்போதைய பொருட்கள்:

    இறை என்ற சொல்லுக்குத் தற்போதைய அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளது.

    சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி:

    , n. < இற-. 1. Height; உயரம். ஏந்துகொடி யிறைப்புரிசை (புறநா. 17, 27). 2. Head; தலை. (சூடா.) 3. Supreme God; கடவுள். இறை நிலையுணர்வரிது (திவ். திருவாய். 1, 3, 6). 4. Šiva; சிவன். (பிங்.) 5. Brahmā; பிரமன். (பிங்.) 6. King, sovereign, monarch; அரசன். இறைகாக்கும் வையக மெல்லாம் (குறள், 547). 7. Eminence, greatness; தலைமை. (பிங்.) 8. Impartiality; justice; நடுவுநிலைமை. கண்ணோடா திறைபுரிந்து (குறள், 541). 9. [K. eṟe.] Any one who is great, as one's father or guru or any renowned and illustrious person; உயர்ந்தோன். (தொல். பொ. 256; திவா.) 10. Superior, master, chief; தலைவன். (திவா.) 11. Elder brother; தமையன். (பரிபா. 11, 8.) 12. Husband, as lord of his wife; கண வன். நப்பின்னைதக்கிறை (திவ். பெரியதி. 2, 3, 5). 13. [K. eṟake, M. iṟa.] Inside of a sloping roof, eaves of a house; வீட்டிறப்பு. குறியிறைக் குரம்பை (புறநா. 129). 14. Feather, quill; இறகு. (பிங்.) 15. Wing, plumage; சிறகு. 16. Death, dying, extinction; இறக்கை. (கலித். 18, உரை.) 17. Mango tree; மாமரம். (மலை.)

    , n. < இறு²-. 1. Abiding, halting, tarrying; தங்கல். நெஞ்சிறை கொண்ட (மணி. 4, 69). 2. Seat; ஆசனம். இறையிடை வரன்முறை யேறி (கம்பரா. அயோத். மந்திர. 12). 3. Duty, obligation; கடமை. (திவ். திருவாய். 5, 2, 8.) 4. [M. iṟa.] Tax on land, duty, share of the produce accruing to the king as rent; அரசிறை. இறைவற் கிறையொ ருங்கு நேர்வது நாடு (குறள், 733). 5. Answer, reply; விடை. எண்ணிறையுள் (நன். 386). 6. Lines inside the finger joints; விரல்வரை. இறைக்கரஞ் சிவப் பெய்திட (இரகு. நாட்டுப். 34). 7. Measure of the first joint of the fore-finger being about 1 inch; விரலிறையளவு. 8. Very small particle, atom, minute quantity, short space of time; அற்பம். இறையு ஞானமி லாதவென் புன்கவி (கம்பரா. சிறப்பு. 10). 9. Wrist, fore-arm; முன்கை. எல்வளை யிறை யூரும்மே (கலித். 7). 10. Arm; கை. இறைவளை யாழ்தழீஇ யிருப்ப (சீவக. 656). 11. Joints of the body; உடலுறுப்பின் மூட்டுவாய். இறைகளவை நெறு நெறென (திவ். பெரியதி. 5, 10, 4). 12. Corner; மூலை. முடங்கிறை (முல்லை. 87).

    பதிலளிநீக்கு
  2. பொருள் பொருந்தா இடங்கள்:

    இறை என்பதற்கு அகராதிப்பொருட்கள் எவையும் பொருந்தாத பல பாடல்கள் உள்ளன. இருப்பினும் சான்றுக்கு இங்கே சில பாடல்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன.

    கறையுங்கொப் பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்க
    இறையுங்கொப் பளித்த கண்ணார் - தேவாரம்: 242

    மேற்காணும் தேவாரப் பாடலில் இருந்து இறை என்பது கண்ணுடன் தொடர்புடைய உறுப்பு என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் கண்ணுடன் தொடர்புடைய உறுப்பு எதுவும் மேற்கண்ட அகராதிப் பொருட்களில் இல்லை.

    நெய்தல் உண்கண் ஏர் இறைப் பணைத்தோள் - ஐங்கு - 181

    நேர்இறை பணைத்தோட்கு ஆர்விருந் தாக - ஐங்கு - 468

    சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல் - ஐங்கு - 481

    வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள், - புறநா.

    சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை;
    வீங்குஇறைப் பணைத்தோள், மடந்தை - புறநா.

    நுணங்குஅமை புரையும் வணங்குஇறைப் பணைத் தோள், - அகம்.

    மேலே காணும் பாடல்கள் யாவற்றிலும் 'இறை' என்பது தோளுடன் இணைத்தே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் தோள் என்பது கண்ணுடன் தொடர்புடைய உறுப்பு என்று ' தோள் என்றால் என்ன? ' என்ற ஆய்வுக் கட்டுரையில் நாம் முன்னரே பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். இதிலிருந்து இறை என்பதும் கண்ணுடன் தொடர்புடைய ஓர் உறுப்பே என்பது உறுதியாவதுடன் அகராதிகள் எவையும் இதுவரை இப் பொருளைக் கூறவில்லை என்பதும் தெளிவாகிறது.

    பதிலளிநீக்கு
  3. இறை - புதிய பொருள் என்ன?

    இறை என்பது கண்ணுடன் தொடர்புடைய ஓர் உறுப்பு என்று மேலே கண்டோம். என்றால் அது கண்ணின் எந்த உறுப்பினைக் குறிக்கிறது?. இதைப் பற்றி இங்கே காணலாம்.

    கீழ்க்காணும் பாடல்களில் இறை என்பது பொழுதுடன் கூடி இறைப்போது என்றும் இறைப்பொழுது என்றும் வருகிறது.

    குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்
    உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.- திருமந்திரம் - 16

    நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் பல பாடல்களில் இறைப்போது வருகிறது. அவற்றில் சில பாடல்கள் மட்டும் கீழே.

    விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய்.
    ................................
    பொறுத்து இறைப்போது இரு நம்பீ. - 144

    திருமாலவன் திருநாமங்கள் எண்ணக் கண்ட விரல்களால்
    இறைப்பொழுதும் எண்ணகிலாதுபோய் - 362

    எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினில் எல்லாம்
    கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென்னும் கடிநகரே. - 395.

    பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகள் நால்வரையும்
    இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த உறைப்பனூர் - 403

    மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன்
    இறைப் பொழுதின் கண் கூடி வாளினால் எறியல் உற்றான் - பெரியபுராணம்: 482

    பதிலளிநீக்கு
  4. தேவாரத்தில் இந்த இறை என்னும் சொல்லானது மாத்திரை என்னும் சொல்லுடன் இணைந்து பொழுதைக் குறிக்கும் பொருளில் வருகிறது.

    மறையன் மாமுனி வன்மரு வார்புரம்
    இறையின் மாத்திரை யில்லெரி யூட்டினான் - தேவாரம்: 479.

    மேலேகண்ட பாடல்களில் இருந்து இறை என்னும் உறுப்பானது பொழுதுடன் தொடர்புடைய ஒரு தொழிலைச் செய்வது என்னும் கருத்து பெறப்படுகிறது. மேலும் இவ் உறுப்பானது கண்ணுடன் தொடர்புடையது என்பதால் அவ் உறுப்பு 'கண்ணிமை' தான் என்பது பெறப்படுகிறது. ஏனென்றால் கண்ணின் பல்வேறு உறுப்புகளில் கண்ணிமை மட்டுமே பொழுதுடன் தொடர்புடைய தொழிலான இமைத்தல் என்ற பணியைச் செய்கிறது. இதிலிருந்து,

    இறைப்போது, இறைப்பொழுது, இறைமாத்திரை என்பவை கண்ணிமைக்கும் கால அளவினைக் குறித்து வந்தவை என்பதை அறியலாம்.

    பதிலளிநீக்கு
  5. நிறுவுதல்:

    இறை என்பது கண்ணிமையைக் குறிக்கும் என்று மேலே கண்டோம். கண்ணிமையின் பண்புகளைக் குறிக்கும் சில பாடல்களை சான்றாகக் காட்டி மேலும் இதை உறுதிப்படுத்தலாம்.

    (1) கண்ணிமையானது மென்மையானது.

    சில்வளை சொரிந்த மெல்இறை - அகம்.

    (2) காதலின்போது நாணத்தினால் தலைவி தலைவனை நேராகப் பார்க்காமல் தலைதாழ்த்தியே இருப்பாள். அப்போது அவளது கண்இமை தாழ்ந்தே இருக்கும். இதை சாய் இறை என்றும் வணங்கு இறை என்றும் இலக்கியம் கூறுகிறது.

    சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல் - ஐங்கு - 481
    நுணங்குகட் சிறுகோல் வணங்குஇறை மகளிரொடு - அகம்.

    (3) மணமான பின்னர் கணவனை மனைவி நோக்கும்போது அவளின் கண்ணிமை தாழ்ந்திராமல் நேராக இருக்கும். இதை நேர் இறை என்று குறிப்பிடுகிறது இலக்கியம்.

    நேர்இறை பணைத்தோட்கு ஆர்விருந் தாக - ஐங்கு - 468

    (4) பெண்கள் தங்கள் கண்ணிமையை வண்ணம் பூசி அழகு செய்வர்.

    வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள், - புறம்

    (5) கடவுளைத் தொழும்போது நம் கண்களும் கைகளும் கூப்பியபடி அதாவது மூடியபடி இருக்கும். இதனைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் கூறுகிறது.

    வல்லே வருக, வரைந்த நாள்; என,
    நல்இறை மெல்விரல் கூப்பி,
    இல்லுறை கடவுட்கு ஓக்குதும், பலியே! - அகம்.

    மேலே கண்ட சான்றுகளில் இருந்து இறை என்பது கண்ணிமை தான் என்பது உறுதியாகிறது.

    பதிலளிநீக்கு
  6. இறையும் வளையும்:

    இறை என்ற சொல் பயின்றுவரும் பல பாடல்களில் வளை என்ற சொல்லும் இணைந்தே வருகிறது. இந்த வளை என்பது என்ன? என்பதைப் பற்றியும் இங்கே காண்லாம். இறையும் வளையும் சேர்ந்து வரும் பல பாடல்களில் சில மட்டும் கீழே தரப்பட்டுள்ளன.

    துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
    இறைஇறவா நின்ற வளை. - குறள்: 1157

    துறைநணி யூரனை உள்ளியென்
    இறையேர் எல்வளை நெகிழ்பு ஓடும்மே.- ஐங்கு -10

    துறைவன் துறந்தெனத் துறந்துஎன்
    இறையேர் முன்கை நீக்கிய வளையே. - ஐங்கு - 163

    துறைவன் சொல்லிய சொல்என்
    இறையேர் எல்வளை கொண்டு நின்றதுவே. - ஐங்கு - 165

    வளர்பிறை போல வழிவழிப் பெருகி
    இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு - குறு -

    மாஇதழ் புரையும் மலிர்கொள் ஈர்இமை,
    ............................
    வெய்ய உகுதர, வெரீஇப், பையென,
    சில்வளை சொரிந்த மெல்இறை முன்கை - அகம்-

    செவ்வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி,
    இறைவளை நெகிழ்ந்த நம்மொடு - அகம்.

    மேற்காணும் பாடல்களில் இறையானது வளை என்னும் அணியினை உடையது என்றும் இந்த வளையானது அழுகையினால் நெகிழக் கூடியது என்றும் கூறப்பட்டுள்ளது. பெண்கள் மனம் வருந்தி அழும்போது உண்டாகும் கண்ணீரால் வளை எனப்படும் கண்ணின் அணி கெடுகிறது என்று கூறுவதில் இருந்து இந்த வளை என்பது கண்ணிமையில் பூசப்படும் ஓர் அழகுப் பொருள் தான் என்பது தெளிவாகிறது.

    மேலும் காதலனின் பிரிவினால் கண்கள் கலங்கி அழுது அழுது காதலியின் இமைகளும் வெம்மையுற்றன. அவ் வெம்மை தாளாத காதலி ஒருத்தி தன்மீது மழைநீர் மொத்தமும் பொழிய மேகத்திடம் வேண்டுவதைப் பாருங்கள்.

    கனைஇருள் வானம்! - கடல் முகந்து, என் மேல்
    உறையொடு நின்றீயல் வேண்டும்; ஒருங்கே -
    நிறைவளை கொட்பித்தான் செய்த துயரால்
    இறைஇறை பொத்திற்றுத் தீ. - கலித்தொகை.

    இந்த வளை என்னும் பெயர்ச்சொல்லானது வளைத்தல் என்ற வினையின் அடிப்படையில் பிறந்ததாகும். வளைத்தல் என்ற சொல்லுக்கு எழுதுதல், வரைதல் என்றும் பொருள் கூறுகிறது சென்னை இணையத் தமிழ்ப்பேரகராதி.

    பதிலளிநீக்கு
  7. வளை²-த்தல் vaḷai-
    , 11 v. tr. Caus. of வளை¹-. 1. To bend, inflect; வளையச்செய்தல். 2. To surround; சூழ்தல். இடுமுட் புரிசை யேமுற வளைஇ (முல்லைப். 27). 3. To hinder, obstruct; தடுத்தல். வள்ளனீங்கப் பெறாய் வளைத்தேனென (சீவக. 889). 4. To grasp, seize; பற்றுதல். 5. To carry off, sweep away; to steal; கவர்தல். திருடர் வந்து எல்லாவற்றையும் வளைத்துக்கொண்டு விட்டார் கள். 6. To reiterate, to revert again and again; பேச்சு முதலியவற்றைத் திருப்புதல். வளைத்து வளைத்துப் பேசுகிறான். 7. To paint, delineate; எழுதுதல். உருவப்பல்பூ வொருகொடி வளைஇ (நெடு நல். 113). 8. To wear, put on; அணிதல். சடை முடிமேல் முகிழ்வெண்டிங்கள் வளைத்தானை (தேவா. 871, 1).

    இப்படி கண்ணிமையில் எழுதப்பட்ட அல்லது பூசப்பட்ட அணியின் பெயரே வளை என்றானது.

    இறையும் இதர பொருட்களும்:

    இறை என்ற சொல்லுக்கு கண்ணிமைதான் முதன்மைப்பொருளாக இருந்திருக்குமோ என்று எண்ணத்தக்க வகையில் பல சொற்களின் பொருட்கள் விளங்குகின்றன. இங்கே இந்த இதர சொற்கள் எவை என்பதையும் அவற்றின் பொருட்கள் இறை என்ற சொல்லில் இருந்து எவ்வாறு கிளைத்தன என்பதைப் பற்றியும் காணலாம்.

    (1) இறையாகிய கண்ணிமையின் முதன்மைத் தொழில் கண்ணைப் பாதுகாப்பது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த கண்இமையைப் போலவே குடிமக்களைப் பாதுகாப்பதால் அரசனுக்கும் உலக உயிர்களைக் காப்பதால் கடவுளுக்கும் இறை என்ற பெயர் ஏற்பட்டது.

    (2) கண்ணின் இமை போல பார்ப்பதற்கு தாழ்வாக இறங்கி இருப்பதால் வீட்டின் முகப்பில் உள்ள தாழ்வாரத்தையும் இறை என்றே அகராதிகள் குறிப்பிடுகின்றன.

    (3) இறைக்குத்து: இதற்கு சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கீழ்க்காணும் பொருளைத் தருகிறது.

    இறைக்குத்து iṟai-k-kuttu
    , n. < இறை¹ +. Fixed gaze of the eyes at the approach of death; சாகுந் தருணத்திற் கண்விழி அசைவற்று நிற்கை. Loc.

    சாகும் தருணத்தில் கண்ணிமை மேலே சென்று ஆடாமல் அசையாமல் கண்கள் ஒரே இடத்தில் வெறித்துப் பார்க்கும் நிலையினையே இறைக்குத்து என்று கூறுவர்.

    (4) இறைகூர்தல்: இதன் பொருள் தங்குதல், தூங்குதல் என்பதாகும். கண்ணிமைகளை மூடி ஓய்வெடுக்கும் நிலையினை இது குறிக்கிறது.

    (5) இறைத்தல் : கண்ணிமைத்தலின் போது இமையானது கீழும் மேலும் இயங்கும். கண்ணிமையினைப் போலவே கீழும் மேலுமாக இயக்குவதால் கிணறு போன்ற ஆழமான இடங்களில் இருந்து நீர் முதலியனவற்றை முகப்பதற்கும் இறைத்தல் என்ற பெயர் ஏற்பட்டது.

    இறை ------> இறைத்தல் = இமையை மூடித் திறத்தல் -----> கீழும் மேலுமாக இயக்குதல் = நீர் இறைத்தல் போன்றவை.

    நீர் இறைத்தலுடன் தொடர்புடைய பிற பொருட்கள் இறைகூடை (இறைவை), இறைப்பெட்டி மற்றும் இறைமரம் ஆகியவை.

    (6) இறைஞ்சுதல்: பணிவாக நிற்கும்போதும் வணங்கும்போதும் கண்ணிமையானது தாழ்ந்தே இருக்கும். அடிக்கடி தாழ்ந்து எழும் இயல்புடைய கண்ணிமையினைக் குறிக்கும் இறை என்ற சொல்லில் இருந்து இறைஞ்சுதல் என்ற புதிய சொல் கீழ்க்கண்டவாறு பிறக்கிறது.

    இறை ---- > இறைஞ்சுதல் = தாழ்தல், பணிதல், வணங்குதல்.

    பதிலளிநீக்கு
  8. முடிவுரை:

    இறை என்னும் சொல்லுடன் வளை என்ற சொல் இணைந்து வரும் பல பாடல்களை இக் கட்டுரையில் கண்டோம். இதைப் போலவே தோள் என்ற சொல்லுடன் தொடி என்ற சொல் பல பாடல்களில் இணைந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. எப்படி வளை என்ற சொல்லானது இறையின் மேல் பூசப்படும் அழகுப் பொருளைக் குறிக்கிறதோ அவ்வாறே இந்த தொடி என்பதும் தோளாகிய கண்ணின் வட்டப் பகுதியில் பூசப்படும் அழகுப் பொருளாக இருப்பது எண்ணி வியக்கத்தக்கது. இதைப் பற்றி 'தோள் என்றால் என்ன?' என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

    https://thiruththam.blogspot.com/2013/06/blog-post_14.html

    பதிலளிநீக்கு
  9. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

    நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை
    இறைத்து உண சென்று அற்று ஆங்கு – குறு 99/4,5

    உயர்ந்த மரத்தின் உச்சிக் கிளைகளைத் தொட்டுக்கொண்டு சென்ற பெருவெள்ளம்
    கையால் இறைத்து உண்ணும் அளவுக்குக் குறைந்து அற்றுப்போய்விடுவது போல

    பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக
    புறங்காலின் போக இறைப்பேன் – கலி 144/46,47

    பெருகி வரும் கரிய கடலே! நீ வெறும் மணல்வெளியாய்ப் போகும்படி
    என் புறங்காலால் உன் நீரை எல்லாம் இறைத்துவிடுவேன்,

    குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 265

    ஒடுக்கமாக இறங்கும் கூரையினையுடைய குடிசையின் பறியையுடைய முன்பக்கம்

    இறைஉறை புறவின் செம் கால் சேவல் – பெரும் 439

    இறங்கிய கூரையின் நீட்டிய பாகத்தின் உட்பக்கத்தில் தங்கும் புறாவின் சிவந்த காலையுடைய சேவல்

    நேர் இறை முன்கை பற்றி நுமர் தர – குறி 231

    அழகிதாக இரண்டுபக்கமும் இறங்கும் முன்கையைப் பிடித்து உம் வீட்டார் தர

    திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என – மலை 319

    திருத்தமான வேலினை உடைய அரசனுக்குப் புதிதாக அளிக்கும் பொருளாக இருக்கும் என்று

    அஞ்சல் என்ற இறை கைவிட்டு என – நற் 43/8

    அஞ்சவேண்டாம் என்ற அரசன் கைவிட்டான் என்று

    உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினை – நற் 113/1

    மான்கள் அண்ணாந்து உண்டதால் சிறிதளவே வளைந்த உயர்ந்த கிளைகள்

    இறை ஏர் எல் வளை குறு_மகள் – நற் 167/10

    முன்கையிலுள்ள அழகிய ஒளிவிடும் வளையல்கள் அணிந்த சிறுபெண்

    இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த – குறு 92/3

    தங்கும்படியாக உயர்ந்த வழியை அடுத்துள்ள மரத்தில்

    சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின் – பரி 8/79

    தண்டிக்கின்ற இறைவனை ஆற்றுங்கள், அவன் அடியினைச் சேர்ந்து புகழுங்கள்.

    இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும் – அகம் 103/9

    கிளைகள் தழ்ழ்ந்திருக்கும் நிழலின் ஒரு பக்கத்தில் தனிமைத் துயரோடு பெருமூச்செறியும்

    ஏந்து கொடி இறை புரிசை – புறம் 17/27

    ஏந்திய கொடிகளும்,உயர்ந்த கோட்டைமதிலும்

    https://solalvallan.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88/

    பதிலளிநீக்கு
  10. இறைவனிடம் இருக்கத் தக்கவை

    7. கடைஇல்அறிவு, இன்பம், வீரியம், காட்சி
    உடையான் உலகுக்கு இறை

    * வரம்பு இல்லா அறிவு, இன்பம், வீரியம், காட்சி இந்நான்கும் உடையவன் உயிர்களுக்கு இறைவன்

    https://marainoolkal.blogspot.com/2022/10/blog-post.html?sc=1664645600114#c7287047981392710224

    பதிலளிநீக்கு
  11. இறைவனிடம் அறத்தினை உரைத்தல்

    8. தெறித்த பறையின் இராகாதி இன்றி
    உரைத்தான் இறைவன் அறம்

    * வேறுபாடு இன்றி முழங்கும் முரசு போல விருப்பு வெறுப்பு இன்றி அறங்களை உரைத்தவன் இறைவன்

    பதிலளிநீக்கு
  12. தெய்வம் நமக்குள், நம்மோடு இருப்பது. கடவுள் நம்மைக் கடந்து உள்ளது.

    கடவுள் என்னும் சொல் திருக்குறளில் இல்லை. தெய்வம் என்னும் சொல் திருக்குறளில் ஆறு இடங்களில் பயின்று வருகிறது.

    தெய்வம் என்பது ஊழ். [10]இது நம் உடலோடும் உயிரோடும் ஊழ்த்துக் (பூத்துக்) [11] கிடப்பது.
    தெய்வம் என்பது ஊழ். தன் குடிப்பெருமை மேலோங்கப் பாடுபடும் ஒருவனுக்கு உதவ ஊழ்த்தெய்வம் வரிந்துகட்டிக்கொண்டு வந்து துணைநிற்கும்.[12]
    வான் உறையும் தெய்வம்: தெய்வத்தில் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று 'வான் உறையும் தெய்வம்'. இதனை யாரும் கண்டதில்லை. வையத்தில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவர் இந்த வான்தெய்வத்துக்கு ஒப்பாக வைத்துத் தொழப்படுவர்.[13]
    எதற்கெடுத்தாலும் சந்தேகப்படாமல் பிறர் குறிப்பறிந்து நடந்துகொள்பவனைத் தெய்வத்துக்கு ஒப்பாக எண்ணவேண்டும்.[14]
    தெய்வம் எனப் போற்றப்படுபவர் துறவிகள். இல்லறத்தான் பேணவேண்டிய புலத்துறைக் களங்கள் ஐந்து. அவை தென்புலத்தார் எனப்படும் வயது முதிர்ந்தோர், தெய்வம் எனப்படும் துறவிகள், விருந்தினர், ஒருவனைச் சார்ந்து வாழும் ஒக்கல், தான் - என்னும் களங்கள். [15]
    கணவன், தெய்வத்தைப் பேணவேண்டும். மனைவி தொழமாட்டாள். காரணம், கணவனே அவளுக்குத் தெய்வம்.[16]

    தெய்வத்தால் ஆகா(து) எனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும். - திருக்குறள் 619

    இணர் ஊழ்த்தும் நாறா மலர் - திருக்குறள் 650
    'குடிசெய்வல்' என்னும் ஒருவற்குத் தெய்வம்
    மடிதற்றுத் தான்முந் துறும் - திருக்குறள் 1023

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும் - திருக்குறள் 50

    ஐயப் படாஅ(து) அகத்த(து) உணர்வானைத்
    தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல் - திருக்குறள் 702

    தென்புலத்தார், தெய்வம், விருந்(து),ஒக்கல், தான்,என்(று)ஆங்(கு)
    ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - திருக்குறள் 43

    தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழு(து)எழுவாள்
    'பெய்'எனப் பெய்யும் மழை - திருக்குறள் 55

    https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D#cite_note-10

    பதிலளிநீக்கு
  13. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை. (குறள் : 55)

    இந்தக் குறளிற்கான விளக்கத்தினைப் பலரும் “வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!” என்ற பொருள் படவே கூறிவருகின்றார்கள். இக் குறளினை எளிமை கருதி மூன்று பகுதிகளாப் பிரித்துப் பொருள் கண்டு, பின்னர் முழுமையாகப் பார்ப்போம்.

    பெய்யெனப் பெய்யும் மழை :
    ‘’கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
    செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ
    நல்லவை செய்வான் அரசன்; இவர் மூவர்
    பெய் எனப் பெய்யும் மழை’’ – திரிகடுகம் (96) – நல்லாதனார்

    இங்கு அன்பால், அறிவால் ஆளும் பெண்டாட்டி (பெண்டு + ஆட்டி = பெண்டாட்டி), தவசி (தன் நெறிக்கு உண்டான நோன்புகளை, முறைப்படி செய்து முடிப்பான் தவசி), மக்களுக்கு வரும் கொடுமைகளை நீக்கி நல்லது செய்யும் அரசன் ஆகிய மூவரும் எந்தவித பயனும் கருதாமல் தேவைப்படும் போது பெய்யும் மழைக்குச் சமனானவர்கள் என்ற பொருளிலேயே பாடல் இடம்பெற்றுள்ளது (இங்கு தவசியோ அல்லது அரசனோ கணவனை வழிபடுபவர்கள் அல்ல). எனவே, இதே விளக்கத்தினையே நாம் குறளில் இடம்பெறும் பெய் எனப் பெய்யும் மழைக்கும் கொடுக்கலாம்.

    கொழுநன் தொழுதெழுவாள்:இங்கு கொழுநன் என்பது கணவனையும், எழுதல் என்பது படுக்கையிலிருந்து எழுந்திருத்தல் என்பதையும் குறிக்கும் என்பது பல உரையாசிரியர்கள் கூறியது போன்று சரியானவையே. எஞ்சியிருக்கும் ‘’தொழு’’ என்ற வினைச்சொல்லிற்கான பொருளிலேயே இக் குறளிற்கான விளக்கத்திற்கான திறவுகோலே உண்டு. ‘’தொழு’’ என்ற சொல்லினை ‘’வழிபடு’’ என்றே பலரும் கருதியிருந்தனர். இங்கு அச் சொல்லிற்கு வேறு பொருள் இருக்கின்றதா? எனப் பார்ப்போம். தொழு என்ற வினைச்சொல்லிற்கு பல்வேறு வகைகளில் பொருள் கொள்ளலாம் எனினும் இங்கு பொருத்தமாக வருவது சேர்தல் / இணைதல் என்பதாகும். இதனைச் சற்று விரிவாகவே பார்ப்போம்.

    இன்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் தொகுதி (கூட்டம்) என்ற சொல் தொழுதி என்ற சொல்லின் மருவிய வடிவமேயாகும். ‘’பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி’’ என்ற பாடலில் (நெடுநல்வாடை-15) மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் கூறும் தொழுதி என்ற சொல்லும், ‘’பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி’’ (குறுந்தொகை-175) என்ற பாடலிலும் இச் சொல்லின் (தொழுதி) பயன்பாட்டினைக் காணலாம். இவற்றில் தொழுதி என்ற சொல் கூட்டம் (இணைந்து வாழுமிடம்) என்ற பொருளிலேயே இடம்பெற்றுள்ளது. பெயர்ச்சொற்கள் எல்லாம் வினைச்சொல் அடியினை ஒட்டியே பிறக்கின்றன என்ற தமிழறிஞர்களின் கருத்துப்படி, இங்கு தொழுதி என்ற சொல்லிற்கு அடிப்படையாக அமைந்த வினைச்சொல் ‘’தொழு’’ (சேரல்) என்பதேயாகும். இன்றும் மாடுகள் வாழுமிடத்தை ‘’தொழுவம்’’ என்று அழைக்கின்றோம்.

    தெய்வம் தொழாஅள்:

    இப்போது குறளின் மூன்றாவது பகுதிக்கு வந்தால், இங்கு ‘’தொழாஅள்’’ என்பது ‘’சேர மாட்டாள்’’ என்ற பொருளில் (நாம் ஏற்கனவே பார்த்த விளக்கத்தின்படி) வரும். இங்கு நாம் பொருள் காண வேண்டியது `தெய்வம்` என்ற சொல்லிற்கே ஆகும். தெய்வம் என்னும் சொல் திருக்குறளில் ஆறு இடங்களில் பயின்றுவருகிறது. இங்கு நாம் முதன்மையாகப் பார்க்கும் ‘’தெய்வம் தொழாஅள்’’ என்ற குறள் தவிர்த்த ஏனைய ஐந்து குறள்களையும், அவற்றில் தெய்வம் என்ற சொல்லினை என்ன பொருளில் பயன்படுத்துகின்றார் எனவும் பார்ப்போம்.

    “தெய்வத்தால் ஆகா(து) எனினும்
    முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” – (குறள்: 619)
    {தெய்வம் = ஊழ்}

    “குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
    மடிதற்றுத் தான்முந் துறும்.” – (குறள்: 1023)
    {தெய்வம் = ஊழ்}

    “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்.” (குறள்: 50)
    {தெய்வம் = வாழ்வாங்கு வாழ்ந்தோர்}

    “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (குறள்: 43)
    {தெய்வம் = வாழ்வாங்கு வாழ்வோர்}

    “ஐயப் படாஅ(து), அகத்த(து) உணர்வானைத்,
    தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல்” (குறள்: 702)
    { தெய்வம் = ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்ல மனிதன்}

    மேலே ‘’தெய்வம்’’ என்ற சொல் இடம்பெறும் ஐந்து குறள்களிலும், அச் சொல்லானது வெவ்வேறு பொருள்களில் இடம்பெற்றுள்ளது என்பதனைக் காணலாம். இந்த வகையில் ஆறாவது குறளிலும் (குறள்: 55) தெய்வம் என்ற சொல் வேறொரு பொருள் கொள்ளலாம் என்பது தெளிவாகின்றது.

    குறளின் விளக்கம்: இப்போது மேலே பார்த்த மூன்று பிரிவுகளையும் ஒன்றாக்கினால் குறளின் விளக்கம் தெளிவாகும். (பார்ப்பனத்) தெய்வத்துடன் புணராமல், கணவனுடன் சேர்ந்திருந்து துயில் எழும் மனைவியானவள் தேவைப்படும்போது பெய்யும் மழை போன்றவள் என்பதே இக்குறளின் விளக்கமாகும்.

    https://www.vinavu.com/2019/03/14/thirukural-against-brahmanism-patriarchy/

    பதிலளிநீக்கு
  14. இறைவன்- பண்பாகுபெயர்.

    கடவுள்-காரணப்பெயர்.

    தெய்வம்- இயற்பெயர்.

    ஆண்டவன்-வினையாலணையும் பெயர்.

    https://ta.quora.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

    பதிலளிநீக்கு