இந்நூலை திருமூலரின் திருமந்திரத்தின் சுருக்கம் எனக் கூறுவர். சைவ சமயக் கருத்துக்களைக் கொண்டது. 310 குறள்களையுடையது.
1.மோட்சம் செல்லும் வழி
- 1. வீட்டுனெறிப்பால்
ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்
தோதிய நூலின் பயன். 1
- கல்வி என்பதின் பயன் ஆதிப் பொருளாய் நிற்கும் இறைநிலையை உணர்வதாகும்
பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்- பரவெளிச் சக்தியானது தன்னுள் இணைந்து விண்,வாயு, அக்னி,நீர், நிலம் என்ற ஐம்பூதங்களுள் உயிராக விளங்குவதால் பிறப்பு என்பது உருவாகிறது
தரமாறிற் றோன்றும் பிறப்பு. 2
ஓசை பரிசமுருவஞ் சுவை நாற்ற- உயிர் காந்த சக்தியின் மாற்றங்களான(பஞ்ச தன் மாத்திரைகள்) ஒலி, ஊறு உணர்வு, காட்சி, சுவை, மணம் என்ற அடிப்படை இச்சைகளே வினைப்பதிவுகளை உருவாக்கும்
மாசை படுத்து மளறு. 3
- எங்கும் நிறைந்திருக்கும் பரவெளி இவ்வுடலெனும் உருவம் கொண்டதன் பயனானது அறநெறி,செல்வம், காமம் மற்றும் தன்னைத் தானறிந்து பரவெளியாம் வீடு அடைதல் என்பதாகும்
தருமம் பொருள் காமம்வீடெனு நான்கு
முருவத்தா லாய பயன். 4
- நிலம், நீர், தீ, காற்று, விண் என்னும் ஐந்து தோற்றங்களும் நிலத்தில் உள்ளன. நீர், தீ, காற்று, விண் என்னும் நான்கு தோற்றங்களும் நீரில் உள்ளன. தீ, காற்று, விண் என்னும் மூன்று தோற்றங்களும் தீயில் உள்ளன. காற்று, விண் என்னும் இரண்டு தோற்றங்களும் காற்றில் உள்ளன. விண்ணில் ’விண்’ என்னும் உயிர்த்தோற்றம் உள்ளது
நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே
யுலவை யிறண்டொன் றுவிண். 5
மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ- மாயன், பிரமன், உருத்திரன், கேசன், சிவன் என்பன ஐந்து மூர்த்திகள்.
டாயுஞ்சிவ மூர்த்தி யைந்து. 6
- மால், அயன், அங்கி, இரவி, மதி, உமை, ஏல் என்பன ஆறு சக்திகள்.
மாலய னங்கி யிரவிமதி யுமையோ
டேலும் திகழ்சத்தி யாறு. 7
- தொக்கு என்னும் தோல், உதிரம் என்னும் இரத்தம், ஊன் என்னும் உடம்புக்கறி, மூளை, நிணம் என்னும் கொழுப்பு, எலும்பு, பாலுணர்வு ஊற்றாகிய சுக்கிலம் என்பன ஏழு தாதுக்கள்.
தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
சுக்கிலந் தாதுக்க ளேழு. 8
- மண் நீர் தீ மதி (குளுமை) காற்று இரவி விண் மூர்த்தி என்பன எட்டு எச்சங்கள்
மண்ணோடு நீரங்கி மதுயொடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு. 9
- இவையெல்லாம் ஒன்றுகூடி உடம்பாக உருவாகி விந்தைக் கொண்டுள்ளது.
இவையெல் லாங்கூடி யுடம்பாய வொன்றி
னவையெல்லா மானது விந்து. 10
உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா
- 2. உடம்பின் பயன்
முடம்பினி லுத்தமனைக் காண். 11
உடம்பினை நாம் பெற்றிருக்கிறோம். இதனைப் பெற்றிருக்கும் பயன் எல்லாமே நம் உடம்பில் இருக்கும் உத்தமனைக் காண்பதே. உத்தமன் – ஒப்புயர்வற்ற இறைவன்.
உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே
யுணர்க உணர்வு டையார். 12
அந்த உத்தமனை உணர்வால்தான் காணமுடியும். அந்த உணர்வுதான் உடம்பின் பயன். எனவே உணர்வுடையார் உத்தமனை உணரவேண்டும்.
ஒருபய னாவ துடம்பின் பயனே
தருபயனாஞ் சங்கரனைச் சார். 13
ஒப்புயர்வற்ற ஒரு பயன் உடம்பைப் பெற்றிருக்கும் பயனே. அது தரும் பயனாக விளங்கும் சங்கரனைச் சார்வோமாக. நம்மிடம் இருக்கும் சங்கரனிடம் நாம் உணர்ந்து சேர்ந்துகொள்வதே.
பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந்
துறப்பதாந் தூநெறிக்கட் சென்று. 14
பிறந்துள்ளோம். பேறு பெறவேண்டும். அதுதான் பிறப்பின் பயன். துறப்பதுதான் பிறப்பின் பயன். தூய நெறியில் வாழ்ந்த பின்னர் துறக்க வேண்டும். துறப்பது, எதனை? ஐம்புல ஆசையை.
உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை
யுடம்பினா லுன்னிய தேயாம். 15
துறவு உடம்பால் மட்டுந்தான். உணர்வால் துறக்க இயலாது. உடம்பிலுள்ள உணர்வால் எண்ணிப்பார்த்தே இதனைச் சொல்கிறேன்.
மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு. 16
மனத்தில் மாசு இல்லா நிலையை அடைந்த உடம்பே ஈசனாகத் தோன்றும்.
ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும்
நேசத்தா லாய வுடம்பு. 17
உடம்பு நேசம் என்னும் பற்றால் ஆனது. அது மெய்ப்பாட்டு ஓசைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும்.
உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே
அயிர்ப்பின்றி யாதியை நாடு. 18
உயிருக்கு உறுதி எல்லாமே உடம்பும் அதன் பயனுமே. உயிர் சோரும் அயிர் பீறிட்டுக்கொண்டு வந்தால் ஆதியாகிய இறைவனை விரும்பித் தேடிக்கொள். உடலோ மனமோ சோர்ந்தால் இறைவனைப் பற்றிக்கொள்.
உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம்
திடம்பட வீசனைத் தேடு. 19
உடம்புக்குள்ளும், அதற்குத் துணைநிற்கும் வெளிப்புறத்திலும் ஈசனை உறுதியாகப் பற்றித் தேடிக்கொள்வதே உடம்பினால் பெறக்கூடிய பயன். எல்லாப் பயனும் இதுவே.
அன்னத்தா லாய உடம்பின் பயனெல்லா
முன்னோனைக் காட்டி விடும். 20
சோற்றால் உருவாகியிருக்கும் உடம்பின் பயனெல்லாம் அதன் முன்னோனாகிய உயிரைக் காட்டுவதே. உயிரோட்டத்தைக் காட்டுவதே உடல். உயிர் என்பது சக்தியாகிய ஆற்றல்..
21.கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலா
- 3. உள்ளுடம்பின் (சூக்கும சரீரம்) நிலைமை
முற்றுடம்பா லாய வுணர்வு.
ஊன்றிப்பார்ப்பதனால் (perception) உண்டாகும் சூக்கும உடலில் உண்டாகும் அறிவால் உருவாகும் உணர்வினால் எல்லாவற்றையும் கற்கலாம், கேட்கலாம், அறிவுக்கண்ணால் பார்க்கலாம். இச்சருக்கத்தில், உடலென்பது சூக்கும உடலேயாகும். இத்தகுதியை அடைந்தவர்கள் மறைகளில் இருக்கும் சாற்றிறப் பூட்டுக்களை உடைத்துப் பொருள் காணமுடியும், மருமங்களையும் அறியமுடியும்.
22.வெள்ளிபொன் மேனிய தொக்கும் வினையுடைய
வுள்ளுடம்பி னாய வொளி.
தூல உடல் எப்படி உள்ளதோ, அதைப் போல சூக்கும உடலைக் கண்டால் எப்படியிருக்கும் என்றால், வெள்ளியாகிய சுக்கிலத்தின் நிறத்தையும் நாதத்தின் பொன் நிறத்தையும் பொருந்தி இருக்கும்.
23.சென்றுண்டு வந்து திரிதரு முள்ளுடம்பு
என்றுங் கெடாத திது.
சூக்கும உடலானது, மனம் நினைக்கும் இடங்களுக்குச் சென்று, அவ்விடங்களில் உள்ளவற்றைக் கிரகித்துக் கொண்டு தூலத்திற்குத் திரும்பி வந்து திரிந்து கொண்டிருக்கும். இப்படிப் பட்ட சூக்கும உடல் தூல உடலைப்போல் அழிவதில்லை.
24.வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கு
மொருபயனைக் காட்டு முடம்பு.
சூக்கும உடலானது வேண்டிய பலனை அடைந்து, ஆனந்தித்து மகிழ்வதோடு, கனலின் வெம்மையும் ஒளியும் கூடிய ஒப்புயர்வற்ற ஓங்காரத்தில் (பிரணவத்தில்) நிலைத்து நிற்கும் படியான பலனைக் காட்டும் (வெளிப்படுத்தும்). ஓங்காரத்தின் பயனாவது எல்லாத் தத்துவங்களையும் (உண்மை, (உள் + மெய்)) காட்டி இரவு பகலற்ற சிதாகாயம் (சிதா+காயம்) அணைந்து நிலைத்து நிற்பதே.
25.அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தாய
தொல்லை யுடம்பின் றொடர்பு.
(ஆய்ந்து – ஆராய்ச்சியினால்; ஆய – உண்டாகிய;)
ஆராய்ச்சியினால் உண்டாகிய தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் தூல உடலின் தொடர்பாகிய சூக்கும உடலானது, தொல்லைகளுடன் கூடிய இப்பிறவிப் பிணியை அகற்றும்(ஒழித்தலில்லை).
26.நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ்
செய்வினைக்கும் வித்தா முடம்பு.
தூல உடலானது, நல்வினையையும் தீவினையையும் செய்து அதற்குறிய பலன்களை அடைந்து திரிந்துகொண்டிருக்கும். சூக்கும உடலோ ஞான காரியங்கள் செய்வதற்கு விதையாக நிற்கும்.
27.உள்ளுடம்பின் வாழ்வன வொன்பது மேழைக்
கள்ள வுடம்பாகி விடும்.
தூல உடலிலுள்ள ஒன்பது வாயில்கள் அறிவின் வயப்படாததாலும், சூக்கும உடலின் ஒன்பது சூக்கும வாயில்கள் அறிவின் வழியே செல்வதாலும், தூல உடல் செயலற்ற நிழலுடம்பாகிவிடும். தூல உடலிலுள்ள ஒன்பது வாயில்கள் வேறு; சூக்கும உடலின் சூக்கும வாயில்கள் வேறு.
28.பொய்க்கெல்லாம் பாசனமா யுள்ளதற் கோர்வித்தாகு
மெய்க்குள்ளா மாய வுடம்பு.
எல்லாப் பொய்கட்கும் ஆதாரமாயுள்ள தூல உடலுக்குள் இருக்கும் சூக்கும உடல் மெய்க்கு ஒரு வித்தாக உள்ளது. ஞானவினைக்கு, ஐம்புலன்கள் ஆசையற்று நின்று சூக்கும உடலையடையும். தூல உடலில் உள்ள ஐம்புலன்கள் ஞானத்தோடு ஒவ்வாது தன் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப புரட்சி செய்யும் ஆகையால் “பொய்க்கெல்லாம் பாசனம்” என்றார்.
29.வாயுவினா லாய வுடம்பின் பயனே
யாயுவி னெல்லை யது.
ஆயுவு – ஆயுள். உடலிலுள்ள உயிரின் இயக்கத்தினால் ஏற்பட்ட சீவவாயுவுவே ஆயுள் முடிவதற்கு ஆதாரமாயுள்ளது. சீவவாயுவுக்கு ஆயுளை முடிப்பதற்கு அதிகாரம் உண்டானதற்குக் காரணம் அசைவே(சலனம்).
30.ஒன்பது வாசலுமொக்க வடைத்தக்கா
லன்பதி லொன்றா மரன்.
குருபிரான் சுட்டிக்காட்டும் (சூக்கும) வாயில்கள் ஒன்பதையும் (நவத்துவாரம்) அடைத்தால் ஐம்பது பீசங்களோடு ஐம்பத்தி ஒன்றாகச் சிவன் இருப்பான்.
- 4. நாடி தாரணை
எழுபத் தீராயிர நாடி யவற்றுள்
முழுபத்து நாடி முதல். 31
துடிக்கும் நாடி நரம்புகள் உடலில் 72 ஆயிரம் (72,000) உள்ளன. அவற்றுள் முழுமையான பத்து நாடித்துடிப்புக்கள் முதன்மையானவை.
நரம்பெனு நாடியிவை யினுக்கெல்லா
முரம்பெறு நாடியொன் றுண்டு. 32
நரம்பாக இருக்கும் இந்த நாடித் துடிப்புகளுக்கெல்லாம் உரமூட்டும் நாடித்துடிப்பு ஒன்று உண்டு. | மூலாதாரம்.
உந்திமுதலா யுறுமுடிகீழ் மேலாய்ப்
பந்தித்து நிற்கும் பரிந்து. 33
உந்து சக்தி இருக்கும் மூலாதாரத்தை மையமாகக் கொண்டு மேலும் கீழும் கட்டுக்கோப்பாக அவை பிரிந்து செல்லும் | உந்தி – மூலாதாரம் – ஆண், பெண் உணர்வுகளை உந்தும் அடிவயிற்று மையம். | பந்தித்தல் – உறவு கொள்ளுதல் | பரிந்து – ஆவலோடு.
காலொடு கையி னடுவிடத் தாமரை
நூல்போலு நாடி நுழைந்து. 34
உடலின் கால், கை, நடுப்பகுதிகளில் தாமரைபூவின் தண்டில் நூல் இழைகள் நுழைந்து இருப்பது போல அந்த நாடி-நரம்புகள் உடலில் நுழைந்து ஓடும். | நீரின் உயரத்துக்கு ஏற்பத் தாமரையின் நூலிழை ஈடுகொடுப்பது போல உடல் வளைவுக்கு ஏற்ப அவை வளைந்து கொடுக்கும்.
ஆதித்தன்றன் கதிர்போல வந்நாடிகள்
பேதித்துத் தாம்பரந்த வாறு. 35
சூரிய வெளிச்சம் பாய்வது போல உடம்பை மாறுபடுத்திக்கொண்டு நாடித்துடிப்புகள் பரந்து செல்லும்.
மெய்யெல்லாமாகி நரம்போ டெலும்பிசைந்து
பொய்யில்லை நாடிப் புணர்வு. 36
நாடித் துடிப்பு உடம்பெங்கிலும் எலும்போடு இசைவாக ஒட்டிக்கொண்டிருக்கும் நரம்பில் நிகழும். இது பொய்மை இல்லாத உண்மை.
உந்திமுதலாகி யோங்காரத்துட் பொருளாய்
நின்றது நாடி நிலை. 37
உயிரூற்று உந்தும் மூலாதார முதலில் ஓங்காரத்தின் உட்பொருள் சுழல்வது போல் சுழன்று நிற்பது நாடிநிலை ஆகும்.
நாடிகளூடு போய்ப் புக்க நலஞ்சுடர்தான்
வீடு தருமாம் விரைந்து. 38
நாடிகளின் ஊடே புகுந்து போகும் நம் உணர்வு-ஒளி நமக்கு விரைவாக வீடு பேற்றினைத் தரும்.
நாடி வழக்கமறிந்து செறிந்தடங்கி
நீடொளி காண்ப தறிவு. 39
நாடித் துடிப்பின் வழக்கம் இது என்பதை அறிந்துகொண்டு, அடக்கமாக வளரும் ஒளியைக் காண்பது அறிவுடைமை ஆகும்.
அறிந்தடங்கி நிற்குமந் நாடிகடோறுஞ்
செறிந்தடங்கி நிற்குஞ் சிவம். 40
அறிந்து, அடங்கி நிற்கும் நாடித் துடிப்பு ஒவ்வொன்றிலும் செறிவாக அடக்கமாக நிற்பதுதான் சிவம் | சிவப் பேறு.
மூலத்திற்றோன்றி முடிவிலிரு நான்காகிக்
- 5. வாயுதாரணை
கால்வெளியிற் பன்னிரண்டாங் காண். 41
மூச்சை இழுக்கும் சக்தி மூலாதாரத்தில் தோன்றும். மூச்சை இழுக்கும்போது எட்டு (இருநான்கு) அளவீட்டு மாத்திரை காலம் இழுக்க வேண்டும். காற்று நுரையீரலில் (கால்வெளி) தங்கும் காலம் பன்னிரண்டு அளவீட்டுக்கால மாத்திரையாக இருக்க வேண்டும்.
இடைபிங் கலைகளி ரேசக மாற்றி
லடையு மரனா ரருள். 42
இடைக்கலை என்பது மூக்கின் இடப்புறத் துளை வழியாக மூச்சை இழுத்தல். பிங்கலை என்பது மூக்கின் வலப்புறத் துளை வழியாக மூச்சை இழுத்தல் இரேசகம் என்பது மறு-துளை வழியாக மூச்சை வெளிவிடுதல். இவற்றை முறையாக அடைத்து இழுத்து வெளிவிட்டால் சிவன்-அருள் வந்தடையும்.
அங்குலியான் மூடிமுறையா லிரேசிக்கிற்
பொங்குமாம் பூரகத்தி னுள். 43
பெருவிரலும் சுண்டுவிரலும் செயல்படுவது அங்குலி. அங்குலியால் மூக்கின் ஒரு துளையை மூடி மூச்சை விட்டு இழுத்தால் உள்ளிழுக்கும் காற்று பூரித்துப் பொங்கும். (முதலில் உள்ளிருக்கும் காற்றை முற்றிலுமாக வெளிவிட்டுவிட்டு, பின்னர் வெளிக்காற்றை உள்ளே இழுக்க வேண்டும்)
எண்ணிலியூழி யுடம்பா யிரேசிக்கி
லுண்ணிலமை பெற்ற துணர்வு. 44
எண்ணல் இல்லாமல் ஊழிக்காலம் மூச்சை வெளியேற்றினால், மூச்சு தானே உள்ளே சென்று உடல் உணர்வு பெறும்.
மயிர்க்கால்வழி யெல்லா மாய்கின்றவாயு
வுயிர்ப்பின்றி யுள்ளே பதி. 45
உடலிலுள்ள மயிர்க்கால் வழியெங்கிலும் கூட காற்று உள்நுழைந்து வெளியேறும். குளிர்காற்று உடம்பைத் தாக்கும்மோது உடம்பிலிருந்து சூடு-காற்று வெளியேறும். இந்தக் காற்றை வெளியேறாவண்ணம் உள்ளே இருக்குமாறு பதித்துக்கொள். மூச்சுப்பயிற்சியால் உடம்புக் காற்றைச் சீராக்கிக்கொள்.
இரேசிப்பது போலப்பூரித்து நிற்கிற்
றராசுமுனை நாக்கதுவே யாம். 46
மூச்சு விடுவது போலப் பூரித்து நிற்கின்ற தராசுமுனை நாக்கு. நாக்கு வழியாக மூச்சுக்காற்றை வாங்கிப் பயிற்சி செய்துகொள்.
கும்பகத்தினுள்ளே குறித்தரனைத் தானோக்கிற்
றும்பிபோ னிற்குந் தொடர்ந்து. 47
மூச்சை உள் வாங்கும்போது உள் நுழையும் சிவனை (சீவன் = சிவன்) நினைத்துப் பார்த்தால் அது துதிக்கை கொண்ட யானை போல நின்று தொடரும்.
இரேச கபூரக கும்பக மாற்றிற்
றராசு போனிற்குந் தலை. 48
மூச்சை வாங்கி, நிறுத்தி, வெளிவிட்டு முறைப்படி பயிற்சி செய்தால், தலை நடுக்கம் இல்லாமல் தராசுமுள் போல நிலைகொள்ளும்.
வாயு வழக்க மறிந்து செறிந் தடங்கி
லாயுட் பெருக்க முண்டாம். 49
இப்படி மூச்சுக்காற்றின் போக்கைத் தெரிந்துகொண்டு பயிற்சி செய்தால், வாழ்நாள் பெருகும்.
போகின்ற வாயு பொருந்திற் சிவமொக்குந்
தாழ்கின்ற வாயு வடக்கு. 50
வெளியேறும் மூச்சு சிவன் போன்றது. உள்வாங்கும் மூச்சு சீவன். எனவே உள்வாங்கும் மூச்சை அடக்குவதற்குப் பயிற்சி செய். போகின்ற வாயு = வெளியேறும் மூச்சு | தாழ்கின்ற வாயு = உள்வாங்கும் மூச்சு.அந்தத்தி லங்கி யழல்போலத் தானோக்கிற்
- 6. அங்கிதாரணை
பந்தப் பிறப் பறுக்கலாம். 51
முடிவில் அங்கியை எரியும் தீயைப் போல நோக்கினால் நம்மோடு பின்னிக் கிடக்கும் பிறவியை அறுத்துவிடலாம்.
உள்ளும் புறம்பு மொருங்கக் கொழுவூரிற்
கள்ள மல மறுக்கலாம். 52
அங்கி உடம்புக்குள்ளும் உடம்புக்கு வெளியிலும் ஊறுமாறு நுரையீரலில் நிறுத்திப் பயிற்சி செய்தால், உடம்புக்கு உள்ளே சேரும் அழுக்குகளைப் போக்கிக் கொள்ளலாம்.
எரியுங் கழல்போல வுள்ளுற நோக்கிற்
கரியுங்கன லுருவ மாம். 53
நம் உடல் எரிவது போன்று பாவனைப் பயிற்சி செய்தால் நம் உடம்பு உயிருடன் இருந்துகொண்டே எரிந்த கரியாக மாறும்.
உள்ளங்கி தன்னை ஒருங்கக் கொழுவூறில்
வெள்ளங்கி தானாம் விரைந்து. 54
உள்ளத்தில் இருக்கும் அங்கி உடலோடு ஒன்றுபட்டு நுரையீரலில் ஊறினால் உடலில் இருக்கும் அங்கி வெண்ணிறச் சுடருடன் எரியும்.
உந்தியி னுள்ளே யொருங்கச் சுடர்பாய்ச்சி
லந்தி யழலுருவ மாம். 55
அங்கியைத் தொப்புகுக்கு உள்ளே பாயும்படிச் செய்தால் அந்தி நேரம் போல அங்கி செந்நிறம் கொள்ளும்.
ஐயைந்து மாய வகத்துளெரி நோக்கிற்
பொய்யைந்தும் போகும் புறம். 56
பொறி ஐந்தும், புலன் ஐந்துமாக இருக்கும் உடலுக்குள்ளே உணர்வுகளை நோக்கினால் பொய்மை உணர்வுகள் ஐந்தும் நீங்கிவிடும்.
ஐம்பது மொன்றுமழல் போலத்தா னோக்கி
லும்ப ரொளியாய் விடும். 57
உடலிலுள்ள 51 கூறுகளை கொழுந்து விட்டு எரியும் அழல் போல நோக்கினால் வானுலக ஓளி வெளிப்படும்.
தூண்டும் சுடரைத் துளங்காமற் றானோக்கில்
வேண்டுங் குறை முடிக்கலாம். 58
மனவெழுச்சிச் சுடரை துளங்கி எரிய விடாமல் பார்த்துக்கொண்டால் நமக்கு வேண்டிய குறைகளை நிறைவாக்கிக் கொள்ளலாம்.
உள்ளத்தாலங்கி யொருங்கக் கொழுவூறில்
மெள்ளத்தான் வீடாம் விரைந்து. 59
மனவெழுச்சி அங்கி மனக் கொழுவாகிய கருமையத்தில் ஊறினால், மெல்ல மெல்ல வீடுபேறாக அது மாறும்.
ஒள்ளிதா யுள்ள சுடரை யுறநோக்கில்
வெள்ளியா மாலை விளக்கு. 60
ஒளியுடன் திகழும் சுடரை உணர்வினில் பொருத்திப் பார்த்தால் மன-மாலையாகிய செந்நிற விளக்கு வெள்ளியாக மாறி ஒளிரும்.
அண்ணாக்குத் தன்னையடைத் தங்கமிர் துண்ணில்
- 7. அமுததாரணை
விண்ணோர்க்கு வேந்தனு மாம். 61
தூய காற்றானது அண்ணாக்கை அடைந்து வெளிவருமாறு பயிற்சி செய்தால், தேவர்களுக்கே அரசன் ஆகலாம்.
ஈரெண் கலையி னிறைந்தவமிர் துண்ணில்
பூரண மாகும் பொலிந்து. 62
16 கலைகளில் நிறைந்திருக்கும் அமிழ்தக் காற்றை உட்கொண்டால் உடம்பும் உயிரும் நிறைவுற்றதாகப் பொலிவு பெறும்.
ஓங்காரமான கலசத்தமிர் துண்ணில்
போங்காலமில்லை புரிந்து. 63
“ஓம்” என்னும் ஒலியுடன் அமிழ்தக் காற்றை உண்டால் சாகாமல் வாழலாம்.
ஆனகலசத் தமிர்தை யறிந்துண்ணில்
போனகம் வேண்டாமற் போம். 64
துரியம் என்னும் கலசத்தில் நினைவை நிலைநிறுத்தினால் உணவு இல்லாமல் வாழமுடியும்.
ஊறுமமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில்
கூறும் பிறப்பறுக்க லாம். 65
நினைவாக ஊறும் அமிழ்தத்தை உணவாக்கிக்கொண்டு பார்த்தால், பிறவியை அறுக்க முடியும்.
ஞான வொளிவிளக்கா னல்லவமிர் துண்ணில்
ஆன சிவ யோகி யாம். 66
ஞானம் என்னும் விளக்கில் ஒளி ஏற்றி அமிழ்தம் உண்டால் “சிவயோகி” ஆகலாம்.
மேலையமிர்தை விளங்காமற்றா னுண்ணில்
காலனை வஞ்சிக்க லாம். 67
நாச்சுவையாகிய மேலை அமிழ்தத்தை விளங்காமல் அடக்கி காற்றமிழ்தத்தை உண்டால் எமனை ஏமாற்றலாம்.
காலன லூக்கங் கலந்த வமிர்துண்ணில்
ஞான மதுவா நயந்து. 68
மூச்சுக் காற்று என்னும் அனல்-சூடு கலந்த அமிழ்தத்தை உண்டால் அதுதான் “ஞானம்”.
எல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில்
தொல்லை முதலொளியே யாம். 69
எல்லை இல்லா இந்த இனிய அமிழ்தை உண்ட நிலையில் இருந்தால் அதுதான் ஆதியில் தோன்றிய முதல் மூச்சொளி ஆகும்.
நிலாமண்டபத்தி னிறைந்த வமிர்துண்ணில்
உலாவலா மந்தரத்தின் மேல். 70
பிறை நிலா மண்டபமாகிய ஆக்கினையில் அமிழ்தம் உண்டால் அந்தரத்தில் உலாவலாம்.
மண்டலங்கள் மூன்று மருவவுட நிறுத்தி
- 8. அர்ச்சனை
அண்டரனை யர்ச்சிக்கு மாறு. 71
காலை, மதியம், மாலை என்னும் மூன்று மண்டல காலங்களிலும் அரனை அரவணைத்து உடன் வைத்துக்கொள்ளுதல் என்பது சிவனுக்கு அருச்சனைப் பூசை செய்யும் முறையாகும்.
ஆசனத்தைக் கட்டியரன் றன்னை யர்ச்சித்து
பூசனைசெய் துள்ளே புணர். 72
இருக்கையில் அமர்ந்துகொண்டு சிவனை அருச்சனை செய்து, சிவனுக்குப் பூ போட்டுப் பூசை செய்து அவனைப் புணரவேண்டும்.
உள்ளமே பீடமுணர்வே சிவலிங்கத்
தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு. 73
உள்ளம் இருக்கையா, உணர்வு சிவலிங்கமா இருத்திக்கொண்டு அருச்சிக்கும் முறைமையைத் தெளிவுடையோர் பின்பற்றுவர்.
ஆதாரத்துள்ளே யறிந்து சிவனுருவைப்
பேதமற வர்ச்சிக்கு மாறு. 74
மூலாதாரத்தில் சிவனுருவம் இருப்பினை உணர்ந்து மனம மாறுபாடு இல்லாமல் அருச்சிப்பதே நெறிமுறை ஆகும்.
பூரித்திருந்து புணர்ந்து சிவனுருவைப்
பாரித்தங் கர்ச்சிக்கு மாறு. 75
புணர்ச்சியின்போது ஆணுறுப்பு பூரிப்பது போலவும், பெண்ணுறுப்பு பாரித்து விரிவது போலவும் சிவனுரு இலிங்கத்தை அருச்சிக்க வேண்டும்.
விளக்குறு சிந்தையான் மெய்ப்பொருளைக் கண்டு
துளக்கற வர்ச்சிக்கு மாறு. 76
விளக்கினைத் தூண்டுவது போல சிந்தையைத் தூண்டிக்கொண்டு பெய்ப்பொருளை மனம் அங்குமிங்கும் ஆடாமல் அருச்சிப்பதே நெறிமுறை ஆகும்.
பிண்டதினுள்ளே பேரா திறைவனைக்
கண்டுதா னர்ச்சிக்கு மாறு. 77
தன் உடலாகிய பிண்டத்துக்குள்ளே பெயராமல் இருக்கும் இறைவனைக் கண்டு அருச்சிக்க வேண்டும்.
மந்திரங்களெல்லா மயங்காம லுண்ணினைந்து
முந்தரனை யர்ச்சிக்கு மாறு. 78
மந்திரங்கள் எல்லாவற்றையும் மயக்கம் இல்லாமல் உள்ளத்தில் நினைத்துப் பார்த்து தன் அகக் கண் முன்னே நிற்கும் அரன் என்னும் சிவனை அருச்சிப்பதே முறைமை.
பேராக்கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்
தாராதனை செய்யு மாறு. 79
பேராத கருத்தோடு பிண்டத்துக்கொள்ளே இறைவன் இருப்பை நினைத்துக்கொண்டே பூ போடும் ஆராதனை செய்ய வேண்டும்.
உள்ளத்தினுள்ளே யுறப்பார்த்தங் கொண் சுடரை
மெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு. 80
மனத்துக்குள்ளே சுடர் விட்டு எரியும் சிவ-விளக்கை பொருத்திப் பார்த்துக்கொண்டே மென்மையோடு அருச்சிக்க வேண்டும்.
எண்ணிலியூழி தவஞ் செய்திங் கீசனை
- 9. உள்ளுணர்வு
உண்ணிலைமை பெற்ற துணர்வு. 81
எண்ணமுடியாத ஊழிக் காலம் தவம் செய்து ஈசன் தனக்குள் இருக்கிறான் என்பதை உணர்வு கண்டுகொண்டது.
பல்லூழி காலம் பயின்றனை யர்ச்சித்து
நல்லுணர்வு பெற்ற நலம். 82
பல ஊழிக் காலம் அந்த அரனோடு பழகி, அருச்சித்து, நல்ல உணர்வுகளை நலமாக இருப்புக் கொள்ளும் பேற்றினைப் பெற்றுள்ளேன்.
எண்ணற்கரிய வருந்தவத்தா லன்றே
நண்ணப் படுமுணர்வு தான். 83
நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அரிய தவத்தால்தான் இந்த உணர்வு கைகூடும்.
முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான். 84
முற்பிறவியில் முயன்று பெற்ற தவத்தால் இப்பிறவியில் இந்த உணர்வு கைவரப் பெற்றுள்ளேன்.
காயக்கிலேச முணர்ந்த பயனன்றே
ஓயா வுணர்வு பெறல். 85
உடம்பாகிய உருப்பொருள் உணர்ந்ததன் பயன்தான் ஓயாத இந்த உணர்வு கைவரப் பெற்றுள்ளேன்.
பண்டைப்பிறவிப் பயனாந் தவத்தினால்
கண்டங் குணர்வு பெறல். 86
முந்தைய பிறவியின் பயனால் இந்தப் பிறவியில் தவம் செய்து இந்த உணர்வினைப் பெற்றுள்ளேன்.
பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை
ஆராய்ந் துணர்வு பெறின். 87
இடம் பெயராமல் செய்த தவத்தின் பயன்தான் மறுபிறப்பு இல்லாத பேறு. ஆராய்ந்து உணர்ந்தால் இது புலப்படும்.
ஞானத்தாலாய வுடம்பின் பயனன்றே
மோனத்தா லாய வுணர்வு. 88
ஞான உணர்வை உடல் பெற்றுள்ளது. மோன உணர்வே அதன் பயன்.
ஆதியோடொன்று மறிவைப் பெறுவதுதான்
நீதியாற் செய்த தவம். 89
ஆதியோடு கலந்து ஒன்றாகும் அறிவினைப் பெறுவதுதான் முறையாகச் செய்யும் தவத்தின் பேறு.
காடு மலையுங் கருதித்தவஞ் செய்தால்
கூடு முணர்வின் பயன். 90
நாம் போகும் சுடுகாடும் சிவன் இருக்கும் மலையும் கருத்தில் கொண்டு தவம் செய்தால் உணர்வின் பயனைப் பெறலாம்.
பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில்
- 10. பத்தியுடைமை
முத்திக்கு மூலமது. 91
பத்தியோடு உள்ளத்தில் ஆர்வம் கொண்டு அரனை நோக்கினால் அது முத்திக்கு வேர்.
பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத்
தேடுஞ் சிவ சிந்தையால். 92
பலமுறை சிவன் மீது நேசம் வைத்துச் சிவ நினைவோடு பாடுதல், ஆடுதல் பத்தி.
அன்பா லழுது மலறியு மாள்வானை
யென்புருகி யுள்ளே நினை. 93
சிவன் மீதுள்ள அன்பால் அழுதல், கூச்சலிடுதல், தன்னை ஆளும் பெருமானை தன் எரும்பெல்லாம் உருகும்படி நினைத்தல் ஆகியவை பத்தி.
பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து
நேசத்தா லீசனைத் தேடு. 94
பூ போட்டுப் பூசனை செய்து, புகழ்ந்து பாடி, மனம் நிறைவோடு, நேசம் கொண்டு ஈசனைத் தேடு.
கண்ணா லுறப்பார்த்துக் காதலாற் றானோக்கில்
உண்ணுமே யீச னொளி. 95
மனக்கண்ணால் பார்த்து, உள்ளத்தில் ஊறும் காதலால் உற்று நோக்கினால், ஈசன் ஒளி நம்மை உண்டு ஆள்கொள்ளும்.
நல்லானப் பூசித்து நாதனென வுருகில்
நில்லதோ வீச னிலை. 96
நல்லவனுக்குப் பூசை செய்து ‘நாதன்’ என எண்ணி உள்ளம் உருகினால், ஈசன் நம்மிடம் நிலைகொள்வான்.
அடியார்க் கடியராயன் புருகித் தம்முள்
படியொன்றிப் பார்த்துக் கொளல். 97
அடியவர்களுக்கு அடியவராய் அவர்மீது அன்பு கொண்டு உருகி, உள்ளம் படிந்து, அவரோடு உள்ளம் ஒன்றியிருக்கும்படிப் பார்த்துக்கொள்.
ஈச னெனக்கருதி யெல்லா வுயிர்களையும்
நேசத்தால் நீ நினைந்துகொள 98
எல்லா உயிர்களையும் ஈசன் எனக் கருதி, நேசத்தோடு பழகவேண்டும்.
மெய்ம்மயிர் கூரவிருப்புற்று வேர்த்தெழுந்து
பொய்ம்மையி லீசனைப் போற்று. 99
உடம்பில் உள்ள மயிர்க் கால்கள் வேர்க்கும்படி விதிர்விதிர்த்து பொய்ம்மைக் கோலம் ஆகும்படி ஈசனைப் போற்று.
செறிந்தறிந்து நாடிச் செவ்விதா யுள்ளே
அறிந்தரனை யாய்ந்து கொளல். 100
உள்ள உறுதியோடும் அடக்கத்தோடும் செவ்விய முறையில் அரனை அறிந்துகொள்ள வேண்டும்.
அருளினா லன்றி யகத்தறி வில்லை
- 11. அருள் பெறுதல்
அருளின் மலமறுக்க லாம். 101
இறையருள் இருந்தாலன்றி நெஞ்சில் இறைவனை உணரும் அறிவு கிட்டாது. அந்த அகத்தறிவால் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மல மாசுகளை அறுக்கலாம்.
இருளைக் கடிந்தின் றிறைவ னருளால்
தெருளும் சிவசிந்தை யால். 102
இறைவன் அருளால் மனத்திருள் நீக்கித் தெளிவான சிவசிந்தை கிட்டும்.
வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற
தூய்மையா மீச னருள். 103
வாய்மையோடு பொய்யா மனத்தோடு வாழ்ந்தால் ஈசன் அருள் மாசற்ற தாய் உள்ளத்தோடு கிட்டும்.
ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கால்
அவ்வகத்து ளானந்த மாம். 104
ஒப்பிய உள்ளத்தோடு நிற்கின்ற சிவன் அருளைப் பெற்றுவிட்டால் அந்த நெஞ்சு ஆனந்த மயமாகும்.
உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய்
மன்னுமருள் பெற்றக் கால். 105
இறையருளே நிலைபெற்ற அருள். அதனைப் பெற்றுவிட்டால் நினைத்ததைப் புகழத்தக்க வகையில் செய்து முடிக்கலாம்.
எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன்
தொல்லையருள் பெற்றக் கால். 106
ஈசனின் பழமையான அருளைப் பெற்றுவிட்டால் எல்லாப் பொருளையும் இனிதே நிறைவேற்றலாம்.
சிந்தையு ணின்ற சிவனருள் பெற்றக்கால்
பந்தமாம் பாச மறும். 107
சிவனருள் சிந்தையில் நிற்கும். அதனைப் பெற்றுவிட்டால் கட்டுப்பாடுகளும், ஆசையும் அறுந்துவிடும்.
மாசற்ற கொள்கை மதிபோலத்தான் றோன்றும்
ஈசனருள் பெற்றக் கால். 108
ஈசன் அருளைப் பெற்றுவிட்டால் மாசற்ற கோட்பாடு வானத்து மதியம் போல குளுமையாக ஒளி வீசும்.
ஆவாவென் றோதியருள் பெற்றார்க் கல்லாது
தாவாதோ ஞான ஒளி. 109
ஆ ஆ என்று ஓதி அருனினைப் பெற்றவரிடம் அல்லது ஞான வெளிச்சம் தங்கி நிற்காது.
ஓவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித்
தாவாத வின்பந் தரும். 110
தடையின்றிச் சிவனருள் பெற்றுவிட்டால் பேச்சொன்றும் இல்லாமல் இன்பம் விளையும்.
- 2. திருவருட்பால்
12. நினைப்புறுதல் (111-120)
- 12. நினைப்புறுதல்
*******************************
111.கருத்துறப் பார்த்துக் கலங்காம லுள்ளத்
திருத்திச் சிவனை நினை.
அசைவையொழித்துப் (கலங்காமல்) பார்வையால் உள்ளத்தில் எண்ணங்களை நிலைநிறுத்திக் கருத்தினில் சதா சதாசிவனை நினை.
112.குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சிந்தித்து
மண்டலங்கள் மேலாகப் பார்.
ஓங்காரமாம் பிரணவத்தின் நடுவில் முக்கலையொன்றி அதன் மேல் ஊன்றிப்பார்
113.ஓர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்றன்னைப்
பார்மின் பழம்பொரு ளேயாம்.
மூல வித்தாகிய விந்துகலையைக் கொண்டு நினைவில் முக்கலையொன்றித்தால் சிவத்தைக் காணலாம். இதுவே அகத்தவமாம்.
114.சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீசனை
மிக்க மலத்தை விடு.
ஞானாசிரியனைக் கண்டுகொண்டு, தன் மலங்களை ஒழித்துப் பின் அவனிடமிருந்து அகத்தவம் செய்யும் முறையைக் கற்று அதன்படி செய்து தேர்ச்சியுற்றால் சிவத்தையடையலாம்.
115.அறமின்கள் சிந்தையி லாதாரத் தைச்சேர்ந்
துறுமின்க ளும்முளே யோர்ந்து.
நினைவினில் கலைகளையொன்றித்து உள்ளே எழும் ஒளிவெள்ளத்தில் உள்ளே நடப்பதை அறி.
116.நித்தம் நினைத்திரங்கி நின்மலனையொன்றுவிக்கில்
முற்றுமவ னொளியே யாம்.
இந்திரிய சத்திகளை பிரணவத்தில் ஒன்றுவிக்கில் சிவக்கலையாகிய சக்தி பலம்பெறும்.
117.ஓசை யுணர்ந்தங்கே யுணர்வைப் பெறும்பரிசால்
ஈசன் கருத்தா யிரு.
அறிவை அடையும் முயற்சியில், அநாகத சத்தத்தை யுணர்ந்து, சதா சிவசிந்தனையில் நில்.
118.இராப் பகலன்றி யிருசுடர்ச் சிந்திக்கில்
பராபரத்தோ டொன்றலு மாம்.
எல்லாக் காலத்தேயும் சூரிய சந்திர கலைகளைச் சந்தித்து சிந்திக்கில் சிவமாகிய பராபரத்தை அடையலாம்.
119.மிக்க மனத்தால் மிகநினந்து சிந்திக்கில்
ஒக்க சிவனுருவ மாம்.
ஒருமித்த மனத்தால் திருவைந்தெழுத்தையே நினைந்து நினைந்து சிவசிந்தனையொடு வாழ சிவனுரு வெளிப்படும்.
120.வேண்டுவோர் வேண்டும் வகைதான் விரிந்தெங்கும்
காண்டற் கரிதாஞ் சிவம்.
பார்ப்பதற்கு அரிதாகிய சிவம் ஞானசித்தியடைந்தவர்கள் நினைத்தபடி எத்திக்கும் பரவி நிற்கும்.
121.தேறித் தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில்
- 13. தெரிந்து தெளிதல்
கூறிய பல்குணமு மாம்.
உடலின் உள்ளே தோன்றும் அறிவாகிய ஓங்காரத்தில் நிலைத்து நின்று, அதையே சிவ சொரூபமென தெளிந்தறிந்தால், ஆன்றோர்களால் சொல்லப்பட்ட ஞானிக்குறிய எல்லாக் குணங்களியும் அடையலாம்.
122.உண்டில்லை யென்று முணர்வை யறிந்தக்கால்
கண்டில்லை யாகுஞ் சிவம்.
அறிவு இருப்பதை அறிந்தவற்குச் சிவத்தை(இறைவனை) உணர்ந்து காணமுடியும். அறிவை அறியாதோருக்கு அது முடியாது.
123.ஒருவர்க் கொருவனே யாகுமுயிர்க் கெல்லாம்
ஒருவனே பல்குணமு மாம்.
ஒப்பற்ற ஞானிகட்குத் தனிச் சிவம் அறிவுமயமான ஒன்றே. ஞானமற்றவர்க்கெல்லாம் அச்சிவமே வேறுபட்ட குணமுடையவனாவான் (அதாவது,அவர்களுடைய குணமயமாகவும் இருப்பான்)
124.எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம்.
சீவர்களுக்கெல்லாம் ஒரே தெய்வம் என்று ஆய்ந்து உணர்ந்தோருக்கு மரணபயமில்லை.
125.ஆயுமிரவியு மொன்றே யனைத் துயிர்க்கும்
ஆயுங்கா லொன்றே சிவம்.
ஆராய்ந்து பார்க்குங்கால், பரந்த உலகுக்கு ஒரே சூரியன் இருப்பதைப் போல அதில் வாழும் அனைத்து சீவன்களுக்கும் சிவம் ஒன்றே. பின்னர்தான் விஞ்ஞானிகளால் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு சூரியன் இருப்பதாக நிறுவப்பட்டது.
126.ஓவாத தொன்றே பலவா முயிர்க்கெல்லாந்
தேவான தென்றே தெளி.
பலவகையான சீவன்களுக்கெல்லாம் ஓங்காரமே தேவனாகும்(சிவமாகும்).
127.தம்மை யறியாதார் தாமறிவோ மென்பதென்
செம்மையா லீசன் றிறம்.
தம்மைத் தாம் அறியாதவர்கள் ஈசனாகிய சிவத்தின் திறத்தை அறிவோமென்று சொல்லுதல் எவ்வாறு?
128.எல்லா வுலகத் திருந்தாலு மேத்துவார்கள்
நல்லுலக நாத னடி.
ஞானத் தேட்டமுடைய எல்லா சீவர்களும் உலக வாழ்வில் அழுந்தியிருந்தாலும் உலகநாதனுடைய திருவடியினை ஏத்தி வணங்குவர்.
129.உலகத்திற் பட்ட உயிர்க்கெல்லா மீசன்
நிலவுபோ னிற்கும் நிறைந்து.
உலகத்தில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும், சிவம் நிலவைப்போல நிறைந்த குளுமையை அளிப்பான்.
130.உலகத்தில் மன்னு முயிர்க்கெல்லா மீசன்
அலகிறந்த வாதியே யாம்.
உலகத்தில் வாழும், தம்மைக் காத்துக்கொள்ளும் சக்தியற்ற உயிரினங்களையெல்லாம், சிவன் சீவனாகி அவைகளுக்குள்ளே இருந்து காக்கிறான்.
131.சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில்
- 14. கலை ஞானம்
முத்திக்கு மூல மது.
“இரவி சங்கரன் – ஈசுவரி திங்கள்” என வீமேசுவரம் கூறுகிறது. ஆக சத்தியே சந்திரன்(திங்கள்). அந்தச் சத்தியாம் சந்திரனுடைய கலையைச் சங்கரனின் கலையாம் சூரிய கலையொடு ஊடுருவினால் அவ்வினையே முத்திக்கு மூலமாம்.
132.அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்றில்
நயனமா முத்திக்கு வீடு.
அயனங்கொள் சந்திரன் = தேய்வும் வளர்ச்சியும் பெற்ற சந்திரன் நோக்கி(கண்களினால்) சூரிய சந்திர கலைகளை ஒன்றித்தால் அதுவே முத்திக்கு வீடு
133.அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந்
துஞ்சாதவர் துறக்கு மாறு.
அறம் – ஆன்ம தெரிசனம்(தெரி+சன்+அம்)
பொருள் – ஆன்மாவொடு இருக்கும் அழியாச் செல்வங்கள்
இன்பம் – ஆன்ம ஆநந்தம்
சாகாமல் சாகும் வல்லமையுடையோர் (துஞ்சாதார் = நித்திரையை வென்றவர்கள்). ஐம்பூதங்களாலுண்டாகும் இந்திரிய சலனங்களை வெறுப்பதே அறம், பொருள், இன்பம் அடையச் சிறந்த வழி. (முக்கியமாக விந்து விரையம் தடுக்கப் படல்வேண்டும்)
134.ஈசனோ டொன்றி விசையாப் பொருளில்லை
தேசவிளக் கொளியே யாம்.
சீவனாகிய சிவத்தொடு ஒன்றில், எல்லாப் பொருளும் இசைந்து வரும்; உலகத்தின் ஒளி போல, இத் தேசமாகிய உடலினுள்ளே ஒளி தெரியும்.
135.தாஞ்செய் வினையெல்லாந் தன்மையற வுணரில்
காஞ்சனமே யாகுங் கருத்து.
அகத்தவத்தால் தன்னைத் தானேயுணர்ந்து அறிந்தால் அவன் நினைவினில் உதிக்கும் கருத்துக்கள் பொன்போலாகிவிடும்.
136.கூடகமான குறியெழுத்தைத் தானறியில்
வீடக மாகும் விரைந்து.
ஆதியெழுத்தாம் மெளன எழுத்தை அறிந்து ஞான வினையாற்ற உடல் மோட்சவீடாகும். (சாத்திரப் பூட்டுடைக்க அதிகாரமில்லை)
137.வீடக மாக விழைந்தொல்லை வேண்டுமேல்
கூடகத்திற் சோதியோ டொன்று.
ஒல்லை – விரைவாக
உடல் விரைந்து முத்தியாக வேண்டுமெனில், கூடாகிய இவ்வுடலினுள்ளே இருக்கும் ஓங்கார சோதியைக் கண்டு கலந்துணரல் வேண்டும்.
138.பூரித்து நின்ற சிவனைப் புணரவே
பாரித்த தாகுங் கருத்து.
அகத்தவத்தால் கருத்தைப் பொன்னாக்கினால் அருளொளியோடு கூடிய சிவத்தொடு ஒன்றலாம்.
139.இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில்
பூரிப்ப துள்ளே சிவம்.
அகத்தவத்தால் மன அசைவின்றி நிற்கில் உடலினுள்ளே சிவம் பூரித்து நிற்கும். இரேசகம் என்பது வெளிவாயுவை மூக்கின் மூலமாய் உள்ளே இழுப்பதென்பது தவறாகும். அதற்குப் பலனில்லை.
140.சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம்
சந்திரனிற் றோன்று முணர்வு.
சத்தியாகிய சந்திரகலையை அறிவு உடலில் (சிதாகாயத்தில்) பாய்ச்ச சாக்கிரத்தில் இருப்பதுபோல் உணர்வு எட்டும்.
141.எள்ளகத் தெண்ணெ யிருந்ததனை யொக்குமே
- 15.உருவொன்றி நிற்றல்
உள்ளகத் தீச னொளி.
எள்ளுக்குள் எண்ணை நிறைந்திருப்பதைப் போல் உடலுக்குள் இருக்கும் பிரணவத்துள் இறைவனின் ஒளியும் இருக்கிறது.
மஸ்தான் கீர்த்தனைகள்:
“நாடாத பேர்கள் பயம்பயம் பயமென்ன
நம்பிய பேர்கள் ஜெயம்ஜெயம் ஜெயமென்ன
தேடிய பேர்கள் நயம்நயம் நயமென்ன
திக்குத் திசைகளெங்கு மிக்கவொளி பரப்பி
ஒக்க உலகமொரு கைக்குள் ளடங்கும்
நம் பரமுததன் குணங்குடி.”
142.பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே
நூலின்க ணீச னுழைந்து.
பாலில் நெய் உறைந்துள்ளது போல, சிவாகம சாற்றிறங்களில் (பொதுவாக எல்லா சாற்றிறங்களிலும்) உள்நுழைந்து எங்கும் பரவி நிற்கும் சிவமாகிய இறை.
திருமூலர்:
“அண்ண லருளா லருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.”
அண்ணலாம் சிவன் தக்கவரின் வாயிலாக அருளிச்செய்த இருபத்தெட்டு ஆகமங்களில் உள்ள பாட்டுகள் (சூத்திரங்கள்) இருபத்தெட்டு கோடி நூறாயிரமாகும். விண்ணவர் ஈசனாம் சிவனின் விழுமிய மாண்பினை அவ்வாகமங்களின் வழியே உரைத்து அருளினார். அடியேனும் அச்சிவன் திருவடியினை எண்ணி ஏத்துவன்.
“அண்ண லருளா லருளுஞ் சிவாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
அண்ண லறைந்த வறிவறி யாவிடி
லெண்ணிலி கோடியும் நீர்மே லெழுத்தே.”
அண்ணலாம் சிவன் அருளிச்செய்த சிவாகமங்களில் கூறப்பட்டுள்ளவைகளின் மெய்ப்பொருள் விண்ணில் வாழும் அமரர்களுக்கும் விளங்கல் அரிதாம். அம் மெய்ப்பொருள் உண்மை கைவரச் செய்யும் சிவ உணர்வுச் சிறப்பினை அறியாவிடில் அவையெலாம் நீர்மேல் எழுத்துப்போல் பயன்தரா.
“பண்டித ராவர் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வாரென்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையு
மண்ட முதலான் அரன்(றஞ்) சொன்ன வாறே.”
பதினெட்டு மொழிகளிலும் கூறப்படும் பொருட் கருத்தை உள்ளவாறு உணருபவர் பண்டிதர் ஆவார். அப்பதினெட்டு மொழிகளையும் தக்கார் வாயிலாக உலகினுக்கு அருளியவன் அரனாம் சிவனே.
143.கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்
இரும்புண்ட நீரு மியல்பு.
உலக வழக்கம் என்னவெனில்:
கரும்பினில் கற்கண்டு போலவும், காயவைத்த பாலில் நெய் ஆடையாக வெளிப்பட்டு நிற்பது போலவும், அங்கியில் (நெருப்பில்) பழுக்கக் காயவைத்த இரும்பு உட்கொண்ட நீரைப் போன்றதேயாம்.
சாற்றிறங்களில் விரவியிருக்கும் இறையை அறியும் மனு மூன்று வகை:
உத்தமர்: ஆகமங்களை நோங்கிக் கற்று, சத்தாகிய உட்பொருளைப் பிரித்து எடுத்து, சாற்றை எடுத்துப் பக்குவப்படுத்தி ஆத்ம இன்பத்திற்கு உபயோகித்துக் கொண்டு, சக்கையை எறிந்துவிடுவர். இவர்களைக் குறித்து, “கரும்பினிற் கட்டியும்” என்றார்.
மத்திமர்: ஆகமங்களைக் கற்று, சத்தாகிய உட்பொருளைப் புரிந்தவரை பிரித்து எடுத்து, சாற்றை எடுத்து விளங்கியபடி இயன்றவரை ஆன்ம இன்பத்திற்குப் பயன்படுத்திக் கொண்டு நூலையும் பாதுகாத்து வைப்பர். சாற்றைப் பிரித்துவிட்ட பின், மிகுதி உள்ளவரையில் நீக்க வேண்டியதையும் உள்ளிழுத்துக் கொள்வர். சக்கையாகிய தயிரையும் உட்கொள்வர். அதனால், “காய் பாலில் நெய்” என்றார்.
அதமர் : ஆகமங்களையே அறியார். அறிந்தாலும் சாற்றை உட்கொள்ள இயலவில்லை. இது குறித்தே, “இரும்புண்ட நீர்” என்றார். அதாவது, பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டு எப்படி நீரை உட்கொண்டு ஒளிபொருந்திய வண்ணத்தையும் இழக்கும் நிலையாம்.
144.பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு நிற்கு
மழுத்தினா லீச னிலை.
பழுத்த பழத்தைப் பிழியின் இனிக்கும் சாறு வெளிப்படல் போல், ஞானமடைய விரும்பும் வினைஞன் இறையிருக்குமிடத்தை யறிந்து ஞானவினையில் சரத்துடன் நிற்கச் சிவமாகிய இறை வெளிப்படும்.
145.தனுவொடு தோன்றுமே தானெல்லா மாகி
யணுவதுவாய் நிற்கு மது.
சிவமாகிய இறை ஒவ்வொரு உடலிலும் உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து சூரியனிலும், சந்திரனிலும் அணு உருவாய் நிற்கும்.
வாசிட்டம்: தேவ பூசை கதை:
“என்னதுடலிற்சிற்கதிரா யிலங்குதெய்வ நானென்னை
யுன்னுமனங் கண்வாக்குக்களுடைய சத்தித்திரளெல்லாம்
பின்னமின்றி நாயகனைப் பிரியாமகளிர் போனாளுந்
துன்னுமென்றேய நவரதந்தொடர் பாவனை செய்திடல்வேண்டும்.”
திருமந்திரம்:
“படர்கொண்ட வாலதின் வித்தது போலச்
சுடர்கொண் டணுவினைத் தூவழி செய்ய
விடர்கொண்ட பாச விருளற வோட்டி
நடர்கொண்ட நல்வழி நாடலு மாமே.”
விழுது ஊன்றி விரிவாய்ப் படர்ந்துள்ள ஆலமரத்தின் தன்மை முற்றும் அதன் வித்தில் அடங்கியிருக்கிறது. அதுபோல, திருவருள் ஒளியினைக் கொண்டு அணுவாகிய உயிர் வாழச் செந்நெறியினைத் தம் உள்ளத்தே அமைத்தனன். அந்த நன்னெறியில் சென்று எந்நாளும் துன்பத்தை மிகுவிக்கும் பாச இருளை முற்றிலும் ஓட்டிப் பின்னர் அகத்தும் புறத்தும் ஐந்தொழில் செய்யும் எம்பிரானின் திருவடியில் ஒன்றித் திருநெறியை நாடுவது நன்மை தரும்.
“அணுவு ளவனு மவனு ளணுவுங்
கணுவற நின்ற கலப்ப துணரா
ரிணையிலி யீசனவ னெங்குமாகித்
தனிவற நின்றான் சராசரந் தானே.”
அவன் = சிவன். கணு = பேதம். தணிவு = எல்லை.
மிகவும் நுண்ணியதாகிய அணுவாம் உயிருள் சிவனும், அச்சிவனில் உயிரும் வேறறக் கலந்து நிற்பதை உணரார். ஒப்பிலாத சிவன் எங்கும் எல்லையின்றிக் கலந்து நிற்கிறான். அதனால் அவனே இயங்கு திணையாகவும், நிலைத் திணையாகவும் ஆகிய எல்லாப் பொருள்களும் ஆகிறான். அதைத் திருவடிக்கண்ணால் உணர்தல் வேண்டும்.
“அணுவி லணுவினை யாதிப் பிரானை
யணுவி லணுவினை யாயிரங் கூறிட்
டணுவி லணுவை யணுக வல்லார்க்
கணுவி லணுவை யணுகலு மாமே.”
அணுவாகிய உயிருக்கு உயிராய் நுண்ணியனாய் விளங்குபவன், ஆதியாம் அம்மையை உடையவன் சிவபெருமானாம். அவன் அணுவுக்கு அணுவாய்த் திகழ்பவன். அவனைத் திருவருள் உணர்வால் அளவில்லாது நுணுகி ஆராய வல்லார்க்கு, அவனை அணுகுதல் கைகூடும்.
146.வித்து முளைபோல் விரிந்தெங்கு நிற்குமே
ஒத்துளே நிற்கு முணர்வு.
சூரிய, சந்திர கலைகளுடன் கூடிய உணர்வாகிய அறிவு (பிரணவம்) உடலுக்குள் வித்திலிருந்துண்டாகும் முளையைப்போல் உண்டாகி, வெளிவந்து எங்கும் விரிந்து நிற்கும்.
147.அச்ச மாங்கார மகத்தடக்கி னாற்பின்னை
நிச்சயமா மீச னிலை.
அச்சம் எனும் கீழ்நோக்குஞ் சத்தியையும், ஆங்காரம் எனும் மேல்நோக்குஞ் சத்தியையும் உடலகத்தேயுள்ள பிரணவ மத்தியில் அடக்கினால் அவைகள் அங்குள்ள அக்கினிக்குள் அடங்கிவிடும். அதன்பின் ஈசன் ஒளிர்விடுவது நிச்சயம்.
148.மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமே
வீட்டுளே நிற்கு மியல்பு.
உடலுக்குள் இருக்கும் சிவத்தின் தன்மை, உயர்ந்த மேட்டிலுள்ள நீர், மணம் (வாசனை), முளை, கோழிமுட்டை இவைகளயொத்து இருக்கும். உயர்ந்த இடத்திலிருக்கும் நீர், கீழ்நோக்கி மிக விரைவாகவும், முழுதுமாய் இறங்குதல்போல், பக்குவம் கிட்டின் விரைவாயும், ஆநந்தத்துடனும் சிவம் வெளிவரும்.
மணமானது, மலர்களிலிருந்து கிளம்பி காற்றினால் பரவிநிற்றல் போல், சிவம் பிராணாபான வாயுக்களின் கூட்டுறவாலாகிய வேகத்தினாலேயே, பிராணன், பார்வை, மனம் இவைகள் அசைவற்ற நிலையில் இருக்கும் சமயம், தன் கலையைப் பரப்பிவிடும்.
முளை: நிலத்தில் நீர் கலந்து, வித்தானது இரு பங்காகப் பிளந்து, அதன் மத்தியிலிருந்து சத்தாகிய முளையை வெளிப்படுத்துதல்போல், சிவமானது சேர்ந்திருக்கும் சூரிய சந்திர கலைகளை நில (மண்) சத்தியின் சம்பந்தத்தால், கலைகள் பிளவுற்று மத்தியில் ஒளியோடு வெளிப்படும்.
முட்டை: முட்டையானது, நாத பிந்துக்களைப் பாதுகாத்துக் கொண்டு, தன்னை வெளிப்படுத்திய பெட்டைக்கோழியினாலேயே, காக்கப்பெற்று அதன் வெப்பத்தால் உருவாகி வெளிப்படுதல்போல், சூக்கும நாதபிந்து கலைகள், மேலுங்கீழுமாய் இருப்பதைச் சிவனருளாலேயே கூட்டப்பட்டு, அவனே வெளிப்படுவதாலும், இந்த நான்கினாலும் சிவம் இருந்து வெளிப்படும் வழியைக் காட்டி இருக்கிறதாம்.
149.நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும்
அனைத்துயிர்க்குந் தானா மவன்.
எல்லா சீவன்களுக்குமுள்ளே இருக்கும் சிவம், ஞானவினஞர்களின் உணர்வுக்குள்ளே மலமற்று ஒளி வீசிக்கொண்டிருப்பான்.
150.ஓசையி நுள்ளே யுதிக்கின்ற தொன்றுண்டு
வாசமலர் நாற்றம்போல் வந்து.
மலரிலிருந்து நறுமணம் வெளிப்படுதல்போல், ஒலியிலிருந்து சதாசிவம் வெளிப்படும்
151.மனத்தோ டுறுபுத்தி யாங்காரஞ் சித்தம்
- 16. முத்தி காண்டல்
அனைத்தினு மில்லை யது.
உட்கரணங்களாகிய மனம், புத்தி, செருக்கு (அகங்காரம்), உள்ளம்(சித்தம்) ஆகியவற்றில் முத்தி கிடையாது.
152.வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள்
ஆக்கிய நூலினு மில்.
வாக்கு வல்லமை உடையோராலும், பெயர் புகழுக்கு ஆசைப் படுபவராலும், ஐயம் முதலியவை நீங்காது மயங்கிக் கொண்டிருக்கும் மதத்தை யுடையோராலும் எழுதப்பட்ட நூல்களாலும் முத்தி கிடையாது.
153.உருவ மொன்றில்லை யுணர்வில்லை யோதும்
அருவமுந் தானதுவே யாம்.
உருவம், அருவம், உணர்வு இவைகள் முத்திக்குக் கிடையாது. “முத்தி” என்பது இராப்பகலற்ற இடமேயாம்.
154.தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி
மனத்தகமாய் நிற்கு மது.
உருவற்ற முத்தியானது, உடலில் எங்கும் பரவி, மனமுதிக்கும் இடத்தில் நிலைபெற்று நிற்கும்.
155.பெண்ணா ணலியென்னும் போரொன் றிலதாகி
விண்ணாகி நிற்கும் வியப்பு.
முத்தியானது, பெண்-ஆண்-அலி என்னும் பெயர் இல்லாததாகி, அறிவு உடலாய்(சிதாகாய) வியக்கும்படி நிற்கும்.
156.அனைத்துருவ மாய வறிவை யகலில்
தினைத்துணையு மில்லை சிவம்.
எல்லா உருவங்களாகவும் எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் அறிவாகிய பிரணவத்தை அறியாது நீங்கச் சிவத்தையடைய இயலாது.
157.துணிமுகத் துக்காதி யாத்துன் னறிவின்றி
அணிதா ரிரண்டு விரல்.
துணி = ஒளியுள்ள; துன் = பொருந்திய; தார் = அங்குசமாகிய சுண்டுவிரல்;
கட்டை விரலை ஆட்காட்டி விரலொடு இணைத்து, மற்ற மூன்று விரல்களையும் நீக்கும் சின்முத்திரையைப் போன்றது. ஈங்கு, கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் நடு விரலொடு இணைத்து, மற்ற இரு விரல்களையும் நீக்கும் தந்திரத்தை குருமுகத்தினால் அறிக. (விளக்கவியாலா மருமம்)
158.மயிர்முனை யிற்பாதி மனத்தறி வுண்டேல்
அயிர்ப்புண் டங்காதி நிலை.
அயிர்ப்பு = ஐயப்பாடு;
மயிர் முனையில் பாதியளவு அசைவற்ற மனமும் அறிவும் உண்டானால், அங்கு சிவம் நிலைபெற்று இருக்கும்.
159.தற்பர மான சதாசிவத்தோ டொன்றில்
உற்றறி வில்லை யுயிர்க்கு.
மனமானது அறிவில் பொருந்தி அசைவற்ற நிலையிலிருப்பின் சிவத்தொடு சேரும். ஆங்கு, சீவர்களிடத்துள்ள மனத்தின் விரிவாகிய உணர்ச்சிகள் நீங்கிவிடும்.
160.உறக்க முணர்வு பசிகெடப் பட்டால்
பிறக்கவும் வேண்டா பிறப்பு.
மனுவின் உறக்கம், உணர்ச்சி, பசி ஆகியவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர, ஏமனை(மறலி) எதிர்த்து மரணத்தைத் தள்ளிப் போடலாம். அடுத்த பிறவி நம்பிக்கை உடையவர்கள் பிறவிப் பிணியறுக்கலாம்.
161.கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில்
- 17. உருபாதீதம்
உருவின்றி நிற்கு முணர்வு.
உடலைத் தன் வயப்படுத்தியிருக்கும், கருவாகிய மனம், புத்தி, சித்த, ஆங்காரம் இல்லாது, எண்ணமாகிய கருத்தை நினைவில் அசைவற்று நிறுத்த, அவ்வுடலில் (மோட்ச வீடு) அறிவாகிய உணர்வு உருவற்ற நிலையில் நிற்கும்.
162.பிறத்த லொன்றின்றிப் பிறவாமை வேண்டில்
அறுத்துருவ மாற்றி யிரு.
பிறப்பித்த அந்தக்கரணங்கள் ஒன்றுமில்லாமலும், மற்றபடி உற்பத்தி ஆகாமலும் செய்யவேண்டுமானால், அதற்கு மூலகாரணமான சக்திகளை அவை தங்கியிருக்கும் இடங்களிலிருந்து வேறுபடுத்தி (பேதித்து), பிரணவத்தில் சேர்த்து அல்லது அவைகள் உதிக்குமிடங்களிலிருந்து எதிரான இடத்திற்கு மாற்றி, அசைவற்று இரு.
ஞான விரோதமான தத்துவங்களை நீக்கியும், மறுபடியும் உதிக்கவிடாமலும் செய்வதற்கும் அவற்றின் சக்திகளின் உருவத்தைக் கண்டு அவைகளின் இடத்திலிருந்து வேறுபடுத்தி விடவேண்டும்.
163.உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில்
கருவேது மில்லை தனக்கு.
அஞ்ஞான குணங்களுக்கு மூலகாரணமாக உள்ள உருவங்களை யெல்லாம் அவ்விடத்திலிருந்து பெயர்த்து, குணங்கள் எழாமலிருக்கும்படியான இடத்துக்குப் பூரணமாக மாற்றில் மனுவுக்கு அஞ்ஞான தத்துவங்களினால் ஏற்படுங் குணங்கள் ஒழியும்.
அதாவது, குணங்களின் சூக்கும சக்திகளை மாற்றி விட்டால் குணங்கள் ஒழியும்.
164.கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சை
யறுத்துருவ மாற்றி யிரு.
கறுப்பு – வாயு சக்தி
வெளுப்பு – ஆகாய சக்தி
சிவப்பு – அங்கி(அக்கினி) சக்தி
பொன் – பூமி சக்தி
பச்சை – நீர் சக்தி
இச் சக்திகளையெல்லாம் தன் இருப்பிடத்திலிருந்து பெயர்த்துப் பூரணமாகப் பிரணவத்தில் சேர்த்து அசைவற்று இரு. அதாவது, ஐம்பூத சக்திகளை அதன் இருப்பிடத்திலிருந்து பெயர்த்து அவற்றின் நிறங்களாகிய குணங்களோடு பிரணவத்தில் அடைத்துவிடு.
திருமந்திரம்:
“அஞ்சுள சிங்க மடவியில் வாழ்வன
வஞ்சும்போய் மேய்ந்துதம் மஞ்சக மேபுகு
மஞ்சி னுகிரு மெயிறு மறுத்திட்டா
லெஞ்சா திறைவனை யெய்தலு மாமே.”
சிங்கம் = இந்திரியம். உகிர் = நகம் (செல்லுதல்). எயிறு = பல் (பற்றுதல்).
உடல் ஒரு தத்துவக் காடாகவும், புள்ளியாகிய இந்திரியங்கள் ஐந்தும் சிங்கமாகவும் உருவகிக்கப் பட்டுள்ளன. இவ்வைந்தும் புறத்தே சென்று அலைந்து, புறப் பொருட்களை நுகர்ந்து பின் அகம் வந்து சேரும். ஐந்து சிங்கத்தின் கூரிய நகத்தையும் பல்லினையும் அறுக்க உறுதியாய்ச் சிவத்திருவடியை அடையலாம்.
இதை, சிவப்பிரகாசர்:
“மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை
ஆயவா ருயிரின் மேவும் மருளெனில் இருளாய் நிற்கும்
மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை
ஆயவா ருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய் நிற்கும்”
என்றார்.
திருமந்திரம்:
“பாய்ந்தன பூதங்க ளைந்தும் படரொளி
சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு
வாய்ந்துகொ ளானந்த மென்னு மருள்செய்யில்
வேய்ந்துகொண் மேலை விதியது தானே.”
விதி = முறை. படர்க்கின்ற = படர்கின்ற.
ஐம்பூதங்களாகிய புலன்கள் ஐந்தும் புறத்தே பாயும் தன்மையுடைத்து. அங்ஙனம் பாய்வதைத் திருவருளால் அகற்றி, சிவ மந்திரத்தின் உதவி கொண்டு திருவடி உணர்வாகிய கட்டுத் தறியில் கட்டிப் பூட்டவேண்டும். அப்படிச் செய்தவர்க்கு, சிவன் திருவடிப் பேரின்பம் என்னும் பெரும் பேரருளைத் தருவான்.
165.அனைத்துருவ மெல்லா மறக்கெடுத்து நின்றால்
பினைப்பிறப் பில்லையாம் வீடு.
உடலில் உறையும் எல்லா ஞானவிரோதத் தத்துவங்களின் மூல சக்திகளாகிய உருவங்களை எல்லாம் முழுமையாக வேறுபடுத்தி அசைவற்ற நிலையில் மனம் நின்றால், பின்னை(பின்னர்) எண்ணப் பிறப்புக்கள் உதிக்காது (பிறப்பில்லை).
166.நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால்
தனக்கொன்று மில்லை பிறப்பு.
நினைப்பு மறப்பற்ற நிலையிலிருந்து உதிக்கும் குணங்களின் உருவங்களை மறுத்துத் தள்ளி விட்டால் அகத்தவத்திற்கு ஊறுவராது. தனக்குப் பிறப்பில்லை.
167.குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில்
மறித்துப் பிறப்பில்லை வீடு.
உடலில் உதித்திருக்கும் உருவங்களைக் கண்ணால் பார்த்து உதிக்குமிடங்களை மற்றிவிட்டால் மறுபடியும் உதிக்காது.
168.பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்ச
விகற்ப முணர்வதே வீடு.
உலக வேறுபாடுகளைப் பேசும் வாக்கின் உணர்ச்சியை உண்டாக்கும் சலசத்தியைப் வேறுபடுத்தி அறிவோடு சேர்த்து நிற்பதே வீடுபேறாகும்.
169.பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி
அறுத்துருவ மாற்றி யிரு.
உதித்திருக்கும் அஞ்ஞான குணங்களை நாசம் செய்ய குணங்களின் மூலசத்தியாகிய உருவத்தை இருக்குமிடத்திலிருந்து வேறுபடுத்தி பேருவமையற்ற பிரணவ வீட்டில் சேர்த்து அசைவற்றிரு.
170.ஓசை யுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றக்கால்
பேசவும் வேண்டா பிறப்பு.
உயிர்ப்பின்மை = செயலற்ற தன்மை, கிளர்ச்சியற்ற தன்மை.
ஓசை, உணர்வு, உயிர்ப்பின்மை ஆகியவை அழிய எண்ணங்கள் அழியும். பிறப்பு அறும்.
171.தன்னை யறியு மறிவு தனைப்பெறில்
- 18. பிறப்பறுதல்
பின்னைப் பிறப்பில்லை வீடு.
“தான் யார்?” என அறிவதற்குறிய கருவியான அறிவாகிய ஓங்காரத்தை உணர்ந்தால் பிறப்பற்ற வீடுபேறு அடையலாம்.
அறிவை அலட்சியம் செய்யாதே!:
வாசிட்டம்:
“பற்றத்தகு வாக்கியப் பொருளைப்பயிறன் நெஞ்சாற் பாவித்தோர்க்
குற்றுப்புகல் சொற்றிரளுள்ளே யொடுங்கும் வெந்தநில நீர்போற்
கற்றுப்பரமப் பொருணோக்கார் கண்ணா மறிவைக் கண்டறியார்
வற்றத்திரணம்போல் வாளாதிரிவர் மனச் செய்கை லெவரும்.”
“ஆதலினா லீதொன்றுஞ் செய்வதல்ல வடுத்துளவிச்சகமில்லை யறிவுமட்டு
மேதகுசங் கற்பிதமே வேதாவாகு மெய்யாக வறிவன்றி – வேறொன்றில்லைச்
சேதனமாத் திரத்துதித்த சிருஷ்டியந்தச் சேதனமே வடிவென்று செப்பலாகு
மோதியசெய்வோன் புசிப்போ னிரண்டுமல்ல வுறுபவந்தீர் பிரம்மமே யுள்ளவெல்லாம்.”
திருமந்திரம்:
“தன்னில் தன்னை அறியுந் தலைமகன்
தன்னில் தன்னை யறியத் தலைப்படுந்
தன்னில் தன்னையும் சார்கில னாயிடில்
தன்னில் தன்னையுஞ் சார்தற் கரியவே.”
தலைமகன் = சிறந்தவன்.
தன்னையுணரும் முறையிலேயே தலைமகனாம் சிவனையும் உணர்தல் வேண்டும். தன்னையும் தன் தலைவனையும் அறிந்தவர்க்கு சிவன் தோன்றுவான். இதுவே தலைப்படுதலாம். ஆன்ம அருளால் தலைவனைச் சார்தல் வேண்டும். இல்லையெனில் அத்தலைவனும் சார்தற்கு அரிய நிலமையை உடையவன் ஆவான். ஈங்கு, தலைமகன் என்பது அறிவைக் குறிக்கும்.
இ·தையே, அப்பர் பெருமான்(அப்பர்:5.97 – 29):
“தன்னில் தன்னை அறியுந் தலைமகன்
தன்னில் தன்னை அறியில் தலைப்படும்
தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடில்
தன்னில் தன்னையும் சார்தற் கரியனே.” என்பர்.
172.அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால்
பிறந்துழல வேண்டா பெயர்ந்து.
பாவ புண்ணியங்களை ஆராய்ந்து அறியும் அறிவாகிய பிரணவத்தை உணர்ந்தால், அதை விட்டு நீங்கிப் பிறப்பெடுத்து இன்னலுற வேண்டாம்.
173.சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில்
பவநாச மாகும் பரிந்து.
சிவனுருவம் ஞானவினையின் வலிமையால் தானாகவே பிரணவத்தில் சேர்ந்து அடங்கி, அசைவற்று நிற்கில் உடலழிவு நாசமாகும்.
174.உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம்.
உறக்கம், மனனம், பிராணனின் அசைவு இவை தோன்றாமல் ஒழிந்தால் உடல் இறை வாழும் இல்லமாகும்.
உறக்கம், மனனம், பிராணனின் அசைவு இவை மூன்றும் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதன.
சீவ பாவம்:
உறக்கமில்லையெனில் உடல் அமைதியுறாது. மனனம் இல்லையெனில் பகுத்தறிவு இல்லாது போய்விடும். பிராணனின் அசைவு இல்லாவிடில் இந்திரியங்கள் செல்லாது. தூங்காமல் தூங்குவது, மனனமற்ற மனம், அசைவற்ற பிராணன் இம்மூன்றும் ஞான மார்க்கத்துக்கு இன்றியமையாதன.
அறிவு பாவம்:
தூங்காமல் தூங்குவதால், சாக்கிரம், சொற்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் ஆகிய அவத்தைகளை அறியலாம். மனமற்ற நிலையினால் அறிவு எங்கும் விரிந்த நிலைபெறும். பிராணன் அசைவற்றால் சிவத்தைக் கண்டு சீவனைப் பரத்தோடு சேர்க்கலாம்.
175.நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால்
அனைத்துலகும் வீடா மது.
உடலின்கண் உண்டாகும் நினைவும், யாவற்றையும் அறியவொட்டாது மறைக்கும் மும்முடிச்சுகளும், பசியும் ஒழிந்தவிடத்து, எல்லா உலகுக்கும் உடல் உறைவிடமாகும்.
உலக பாவம்:
நினைப்பு –
எண்ணங்களின் வல்லமையால்தான் எண்ணிய கருமத்தை முடிக்க.
மறப்பு –
மனம், வாக்கு, காயங்களினாலுண்டாகும் உழைப்புக்கு ஆறுதல் செய்ய.
பசி –
உணவுகளை உட்கொள்ளுதற்கும், விருப்பத்தோடு உட்கொண்ட உணவைச் சீரணித்துப் பின் பக்குவஞ்செய்து, சுக்கிலம், நாதம், மலமாகப் பிரிக்கும்.
ஞான பாவம்:
எண்ணங்களை கொல்ல மனம் வலிமையடையும். பிந்து பலப்படும். ஞானவினைக்கு உதவி செய்யும். மறப்பற்றால், தன்னையும் ஈரேழு உலகங்களையும் அறியலாம். பசியொழிய அமுதத் தன்மை உண்டாகிறது. ஆன்ம வல்லமை, உடல் வலிமை உண்டாகிறது. ஐம்புலன்களை உள்நோக்கிச் செலுத்தும் சூக்கும தத்துவங்களுக்கும், தூல தத்துவங்களுக்கும் வல்லமையைக் கொடுக்க, அமுத ஊற்று சுரக்கும்.
திருமந்திரம்:
“பிறப்பறியார் பலபிச்சை செய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வமும் பெறுவர்
மறுப்பில ராகிய மாதவஞ் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றோரே.”
பிச்சை = தவ உணவு. பிச்சைசெய் மாந்தர் = தவசிகள்.
மறப்பிலராகி = இரவு பகலாகிய நினைப்பு மறப்பு இல்லாதவராகி.
உயிருக்குயிராகிய இறைவன் தந்த உடலினில் உள்ள உயிர் பிழைக்க உழைக்காது பிச்சை எடுத்து உண்ணும் பலர், பிறப்பு இறப்புக்களால் ஏற்படும் பெரும் துன்பத்தினை அறிய மாட்டார். சிவன் திருவடிகளை மறவாமையே பெருந்தவம். அப்பெரும் தவம் செய்தோர் சிறப்பாகிய வீடுபேறு பெறுவதுடன் வேண்டிய இம்மை மறுமைச் செல்வங்களையும் அடைவர். அவர்களே பிறப்பினை அறுக்கும் சிவபுண்ணியப் பெருமை பெற்றவர்களாம்.
176.உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னொன்றுண்டு
திடம்படு மீசன் றிறம்.
தூல சூக்கும உடல்கள் வேறு வேறு என எண்ணாது ஒன்றாய்க் கலந்திடில் ஒப்பற்ற சிவத்தருள் அதிகமாகும்.
தூல சூக்கும ஐக்கியமே காலனை வெல்வதாகும். சிவம் காலனைக் காலால் உதைக்கும் தத்துவம் இ·தே.
177.தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால்
பின்னைப் பிறப்பில்லை வீடு.
உடலில் தன்னைத் தானாகிய அறிவை அறிந்து அதனுடன் சேர்ந்து அதனுள் ஒன்றினால், பிறகு பிறப்பில்லை (தத்துவத் தோற்றங்கள் கிடையா).
அறிவில் ஒன்றிப் பின் நான் என்னும் சீவபாவம் ஒழிய ஞானவிரோத தத்துவங்கள் ஒழியும்.
178.மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய்
இருளின்றி நிற்கு மிடம்.
மா = பெருமை பொருந்திய
தூ = தூய, பரிசுத்தமான
பிரம்மத் தானத்தில் அச்சமற்று மும்மலங்களையும் ஒழிக்க, இராப்பகலற்ற சிதாகாயந் தோன்றும்.
179.விகாரங்கெட மாற்றி மெய்யுணர்வு கண்டால்
அகாரமாங் கண்டீ ரறிவு.
அகாரத்தால் குறிக்கப்படும் சுக்கிலத்தை, உடலின்பங்களை வெறுத்து மாற்றி உடலுக்குள் உணர்ந்தால் ஓங்காரம் வெளிப்படும்.
திருமந்திரம்:
“அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித்துத் தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே.”
அங்கப் புணர்ச்சி = பரி அங்கி யோகம்.
பங்கப்படாமல் = நாத விந்து கெடாமல்.
தத்துவம் = அழியாதது. போகம் = நுகர்வு, நினைப்பு.
பரிகரித்து = நீக்கிச் செலுத்தி.
அங்கப் புணர்ச்சியாகிய பரியங்க யோகப் பயிற்சியால், நுகர்வு நினைவால் விந்து கீழிறங்கி வீணாகாமல் மேற்செலுத்திப் புருவநடுவில் தேக்கிவைப்பர். அத்தன்மையோரே, பொறி புலன்களைத் தம் வழிப்படுத்தும் தலைவர்.
“வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய வகண்டமு மண்டமும் பாரிப்பக்
காயவைம் பூதமுங் காரிய மாயையில்
ஆயிட விந்து வகம்புற மாகுமே.”
காயஐம்பூதம் = ஆகாய முதலாகிய ஐம்பூதங்கள்.
காரிய மாயை = விந்துவின் விகாரமான அசுத்த மாயை.
பெருமையுடைய விந்துவின் ஆற்றலால் அண்டமும் அகண்டமும் ஆக்கப்பட்டன. ஆகாய முதலிய ஐம்பூதம் உள்ளிட்ட முப்பத்தொரு மெய்களும் தூமாயையாகிய விந்துவின் காரியம்; பால் தயிரானது போன்ற திரிபு. இதுவே தூமாயையின் கீழ்ப்பகுதியாகிய தூவாமாயை.
“அண்ண லுடலாகி யவ்வனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவுங்
கண்ணுங் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்து
உண்ணி லமிர்தாகி யோகிக்கறி வாமே.”
கண்ணுங்கனல் = மூலாக்கினி.
அகத்தவம் செய்வோருக்குச் சிவன் உடலாய்த் திகழ்வதால், விந்து மாயையாகிய அனல் பிழம்பும், மண்ணில் வீணாய் கழித்து மாய்விக்கும் விந்துவும், முக்கனலில் கூடிக்கலந்து பேரொளிப் பிழம்பாய்ச் சுடர்விட்டு அகத்து அமுதாகியும் யோகிக்கு அறிவாகவும் ஆகும்.
180.சிந்த யாங்காரஞ் செறிபுல னற்றக்கால்
முந்தியே யாகுமாம் வீடு.
ஐம்புலன்களின் வெளிநோக்குச் செயல்களை நீக்கி இருக்க ஆத்தும ஞானத்தை அடையலாம்.
181.தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த்
- 19.தூயவொளி காண்டல்
தோன்றியக் காற்றூய வொளி.
உதித்து உருவாகி நிற்குந் தத்துவங்களையும், அதன் தொடர்புகளையும் நீக்கி, தூய்மையான தத்துவாதிகளற்ற வெளிப்பிரதேசமாய்த் தோன்றும் பொழுது தூய ஆத்மஒளி உதிக்கும். சுருங்கச் சொல்லின் அஞ்ஞான தத்துவங்களின் தொடர்பு அற சிதாகாயத்தில் மலமறுத்துவிட்டால் ஆன்மவொளி ஒளி வீசும்.
வாசிட்டம்:
“அன்றியே யதுதனையுந் தீரநீக்கி யறிபொருளின் முடிவான வறிவாற்றுன்னி
யென்றுமுப சாந்தனாய்ப் பளிங்குப்போலுள் ளொளிமேவிச் சீவனொருமித்து நிற்பனன்றுணர் சிற்சுகராகிப் பெரியோராகி ஞானபரராய்ப் பரம நன்றாய்ப் பெற்றோர் நின்றசைவார் புறத்தின் மயிர் பீலிபோல நிலைகலங்கார் மேருவைப்போனெஞ் சினுள்ளே.”
திருமந்திரம் :
“உண்டில்லை யென்னும் உலகத் தியல்வது
பண்டில்லை யென்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானிடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை யுள்ளே விளக்கொளி யாகுமே.”
உண்டில்லை = உலகம் உண்டு, இல்லை என வாதாடும் உலகில்.
பண்டு = கேவல நிலை. பரங்கதி = முத்திநிலை.
கண்டில்லை மானிடர் = இதுவரை காணாத மானிடர்.
கண்ட கருத்து = அறிந்த அறிவு. விண்டு = உரைக்க.
சுட்டியுணரப்படும் உலகம் உண்டு எனவும், இல்லை; இது கானல் நீர் எனவும் வாதாடிக் கொண்டிருக்கும் இவ்வுலகில், இருள் மலத்துடன் கூடிய புலம்பு நிலையில் உயிர்கள் உள்ளன. புலம்பு நிலையும், புணர்வு நிலையுங் கடந்த புரிவு நிலையாம் திருவடி பேறு இல்லையோவென ஐயுற்று நின்றன. ஏனைப் பொருள்களைப்போல் சுட்டுணர்வு சிற்றுயிர்களுக்கு எட்டாது. அத்திருவடிப் பேறு மானிடர்களுக்கும் மற்ற ஒரு சில உயிர்கட்கு மட்டுமே கிட்டும். சிவத்தைக் கண்டேன் என்றால் அது உண்மையாக இருக்க ஒண்ணாது. அத் திருவடிப் பேறு சொல்லவியலா அறிவுப் பேரொளியாம்; அது உயிர்களின் அகத்தே அமர்ந்துள்ளது.
182.தெளிவாய தேசவிளக் கொளியைக் காணில்
வெளியாய வீடதுவே யாம்.
வீடாகிய உடலில் மறைவின்றி சிவவொளியைக் காணில் அண்டத்தில் உள்ளனவற்றையெல்லாம் தெளிவாகக் காணலாம்.
திருமந்திரம்:
“புகலெளி தாகும் புவனங்க ளெட்டு
மகலொளி தாயிரு ளாசற வீசும்
பகலொளி செய்ததுமத் தாமரை யிலே
யிகலொளி செய்தெம் பிரானிருந் தானே.”
அகலொளிதாய் = அகண்ட ஒளி பரவி.
பகல் ஒளி = கதிரவன் ஒளி.
அத் தாமரை = அந்த உள்ளத் தாமரை.
இகலொளி = கதிரவன் ஒளிக்கு மாறுபட்ட ஒளி.
அறிவொளி கண்ட உயிர்க்குப் புவனங்கள் எட்டுக்குள்ளும் எளிதாகப் புகுந்து அனைத்திலுமுள்ள நிகழ்வுகளை உள்ளபடி உணர்ந்து உரைத்தல் எளிது. அறிவின் அறிவாம் சிவ ஒளி கதிர் வீச மலம் முதலிய குற்றங்கள் மடிந்து அகலும். உயிரின் உள்ளத் தாமரையிலே கதிரவன் ஒளிக்கு மறுபட்ட சிவஒளி செஞ்சுடர் விட்டு ஒளிரும். ஆங்கே சிவனிருப்பான்.
183.மின்போ லுருவ விளக்கொளிபோல் மேற்காணில்
முன்போல மூலம் புகும்.
தலையுச்சிக்குமேல் பதினாறு அங்குலத்தளவில் மின்னலைப் போல், சுடரைப்போல் ஒளி வெளிப்பட்டு காணில் அது முன்பிருந்ததுபோல் உந்திக்கமலமாம் பிரணவ வீட்டில் திரும்பி வந்து புகுந்துவிடும். அதாவது, மூலாக்கினியை எழுப்பி சிரத்துக்கும்மேல் கொண்டுவந்து நிறுத்தி அதன் மூலமாகத் தேகம், தேயம் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு உந்திக் கமலத்தில் சேர்த்துவிட வேண்டும்.
184.பளிங்கு வலம்புரி பானிகர்த்த தாகில்
துளங்கொளியாந் தூய நெறி.
எல்லாவற்றையும் விளக்கிக் காட்டும் ஆன்ம ஒளியானது, தூய்மையானதாயும் படிகத்தின் நிறத்தையும் வலம்புரிச் சங்கின் நிறத்தையும் பாலின் நிறத்தையும் ஒத்து உச்சியில் அசைவுடன் இருக்கும்.
திருமந்திரம்:
“ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம்
ஏரொளி யக்கலை யெங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கர மந்நடு வன்னியே.”
மூலாதாரத்தில் தோன்றுவது நாலிதழ்த் தாமரை. அதன் உள்ளிருந்து உச்சித்துளைவரை செல்லும் வீணாத் தண்டின் இருபுறமும் ஒளிவீசும் (ஏரொளி). ஏரொளியின் துணையால் விந்துவின் ஒளி தோன்றும். நாத ஒலி கேட்கும். ஒப்பிலாத அந்த ஏரொளி எங்கும் நிறையும். அதனுள்ளே சுடர்ச் சக்கரம் அனல் பிழம்பாகி நிற்கும்.
185.சங்கு நிறம்போற் றவளவொளி காணில்
அங்கையி னெல்லியே யாகும்.
மேற்கூறிய ஆன்மவொளியைச் சங்கின் நிறம்போல் கண்டால் மற்றவையெல்லாம் உள்ளங்கை நெல்லியெனத் தெரியும்.
186.துளங்கிய தூண்டா விளக்கொளி காணில்
விளங்கிய வீடாம் விரைந்து.
சிரத்தின் உச்சியில் அசைதலோடு கூடிய தூண்டா விளக்கினைக் கண்டால் மிகவிரைவில் ஆன்மஒளி உடலுக்குள் யாவற்றையும் விளக்கிக் காட்டும்.
187.மின்மினி போன்ற விளக்காகத் தான்தோன்றில்
அன்னப் பறவையே யாம்.
மின்மினிபோல் (தோன்றித் தோன்றி மறையும்) ஆன்மஒளி தோன்றில் சீவன் அன்னப் பறவையின் குணங்களைப் பெற்றிடும்.
188.உள்ளொளி தோன்றி லுணரி லருளொளி
அவ்வொளி யாதி யொளி.
உடலினுள்ளே தோன்றும் மூலாக்கினியையெழுப்பி அந்த மூல ஒளியினை உணர்ந்தால் அதுவே அருள் ஒளியாகும்.
189.பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணில்
பரம்பரமே யாய வொளி.
ஈங்கு பரம்பரமென்றது – பரம், அபரம்.
பரமானது ஞானவினையைக்கொண்டு பரத்தைக் காண்பது. அபரமென்பது இல்லறத்திலிருந்துகொண்டே விந்து நாசம் செய்யாது துறவு காத்தல். பரவித்தை, அபரவித்தை ஆகியவைகளினால் வெளிப்படும்
ஆன்மவொளியானது சிதாகாய விரிவிலும் சென்று படரும்.
190.ஆதியொளியாகி யாள்வானுந் தானாகி
ஆதி யவனுருவு மாம்.
சாதகனிடமுள்ள மூலாக்கினியாயும் இருந்து அதை ஆள்பவனாகவுமுள்ள சீவன், பயிற்சியாளனின் தூலமாகிய உடலுக்குள்ளேயிருந்து வெளியாகும்.
191.பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
- 20. சதாசிவம்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம்.
எட்டுத் திக்குகளும், மேல், கீழ் ஆகியவைகளும் சேர்ந்து பத்துத் திக்குகளாயின. உலகமெலாம் உள்ள தூல சூக்குமங்களில் சிவம் வியாபித்து கலந்து நிலைத்திருக்கும்.
192.விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.
ஆகாயத்தில் பூரணமாக நிலையாக நின்று விளங்கும் சுடரொளியாகிய ஆதவன் (ஆ+தவன்) போல் உடலினுள்ளே சிவஒளி வியாபித்துள்ளது.
வாசிட்டம் மாவலி கதையில் மாவலிக்கு சுக்கிரன் சொன்ன முடிவு:
“வருங்கற்பகவிண் விரைந்தேக வந்தேன்பல சொல்லியும் பயனென்
சுருங்கச் சொல்லும் பயன்கேளாய் தோன்ற விளங்குள்ளது வுஞ்சித்
தொருங்கப் புறத்துஞ்சித் தெல்லையுள்ள துஞ்சித் தெல்லையற
நெறுங்குற்றதுஞ் சித்து யான்சித்து நீசித்துலக நிறைசித்தே.”
193.ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி
ஏகமாய் நிற்குஞ் சிவம்.
ஆகம் = உடல்;
தேகம் தேகி இவைகளைக் கட்டியிருக்கும் ஆசை; உடல், சீவன், ஆகியவைகளைக் கட்டியிருக்கும் ஆசை ஆகியவைகளில் சிவம் தானேயாகிக் கலந்து நிற்கும்.
194.வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்
ஆயுமிடந் தானே சிவம்.
உடலிலுள்ள பத்துவித வாயுக்களாயும், மனமாயும், உயிராயும், இன்னும் அவற்றினோடு கலந்திருக்கும் கலைகளாயும், ஆய்ந்தறிந்த பிரணவ உச்சியில் சிவமிருக்கும்.
திருமந்திரம்:
“உணர்வு மவனே யுயிரு மவனே
புணர்வு மவனே புலவி யவனே
யிணரு மவன்றன்னை யெண்ணலு மாகான்
துணரின் மலர்க்கந்தந் துன்னி நின்றானே.”
புலவி = பிணக்கு. துணர் = கொத்து.
இணரும் = இதயத்தில் கலந்திருக்கும்.
சிவனும், அவனின் அடிமையாம் உயிரும், மலரும் மணமும் போல இருக்கும். அதனால், உயிர்களின் உணர்வும் அவனே, உயிரும் அவனே, புணரும் புணர்வும் அவனே, புலப்பும் அவனே. உள்ளத் தாமரையாகிய பூங்கொத்தில் இடையறாது கலந்தருள்கின்றனன். எனினும் அழுந்தி அறிவதாகிய அனுபவத்தாலன்றி, எழுந்து மொழிவதாகிய சொல்லால் கூற முன்னிலையாகிய எண்ணத்தால் எண்ணவும் ஆகான்.
“உண்ணின் றொளிரு முலவாப் பிராணனும்
விண்ணினின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின் றியங்கும் வாயுவுமாய் நிற்குங்
கண்ணின் றிலங்குங் கருத்தவன் றானே.”
கருத்தவன் = கருதும் பொருளானவன்.
உயிரின் உள்ளத்தே நின்று இடையறாது இயங்கும் உயிர்ப்பும் அவனால் இயங்குகின்றது. அதனால் அவ்வுயிர்ப்பும் சிவனே. வானத்தே வலம்வரும் விரிந்த கதிர்களையுடைய கதிரவனும் அவனே. மண்ணுலகத்தே ஒலித்தசைத்துத் திரட்டும் காற்றும் அவனே. உயிர்களின் கண்களில்(நெஞ்சகத்தே) நின்றியக்கும் கருத்தும் அவனே.
தாயுமானவர்:
“அங்கிங்கெ னாதபடி எங்கும்பிர காசமா யானந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குள்ளே யகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும்படிக் கிச்சைவைத் துயிர்க்குயி ராய்த் தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாம நின்றதெது சமயகோ டிகளெலாந் தன்தெய்வ மென்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது வெங்கெணும் பெருவழக்கா
யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமா யென்றைக்கு முள்ளதெதுமேல்
கங்குல்பக லறநின்ற வெல்லையுள தெதுவது கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவொளியதாகவுங் கருதியஞ்சலி செய்குவாம்.”
195.எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.
கணக்கற்ற பிறவிகளில் (யோனி) பலவாறாக, எங்கும் பரவி, உடலில் நிறைந்து நிற்கும் சிவம்.
196.ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்
ஒன்றாகி நிற்குஞ் சிவம்.
மூல வித்தாகி, அதிலிருந்து கிளர்ந்தெழும் எல்லா உயிர்களின் உடலுக்குள் பரவி, ஒரே சீவனாகி நிற்கும் சிவம்.
திருமந்திரம்:
“விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்தைப் பல்லுயிர் மன்னுயி ருக்கெல்லாம்
அந்தமும் ஆதியு மாமந் திரங்களும்
விந்து அடங்க விளையுஞ் சிவோகமே.”
விந்துவும் நாதமும் கட்டுப்பட்டு விளைய விளைந்தது உயர்திணை. திருவருளால் தோன்றிய பல உயிர்கட்குள்ளும் ஆறறிவு நிறைந்தது உயர்திணை. உயிர்கட்கு முதலும் முடிவுமாகிய அருந்தமிழ் மந்திரம் இரண்டு. அவை: “சிவசிவ”; “நமசிவய”. இம் மந்திர வலிவால் விந்துவை கட்டியவர்களுக்கு சிவோகமே விளையும்.
197.மூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்கும்
காலமாய் நிற்குஞ் சிவம்.
எல்லா உயிருக்கும் மூலம் விந்து. விந்து வெளிவந்தால் முடிவு. மூலத்திற்கும், முடிவுக்கும், அதற்கு நடுவேயுள்ள காலத்திற்கும் விந்துவே ஆதாரம். ஆக, எல்லா உடலிலும் விந்து சக்தியாகச் சிவம் நிலைத்துள்ளது.
198.மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி
விண்ணகமே யாகுஞ் சிவம்.
பூமியில் உண்டாயிருக்கும் உயிர்களுக்கெல்லாம், சிவம் தானே சீவனாகிச் சிதாகாயத்தில் இருக்கிறான்.
199.தோற்றமது வீடாகித் தொல்லைமுத லொன்றாகி
ஏத்தவரு மீச னுளன்.
ஆதி (தொல்லை = பழமை) வித்துவாகிய விந்து உடலோடு கலந்து உள்ளது. அதைப் பிரித்து மேலேற்ற, அதன் தோற்றமே சிவத்தின் இருப்பிடமாகிவிடும். அதுவே சிதாகாயம்.(சிதா + காயம் = அறிவு உடல்)
இக்குறளுக்கு விளக்கம் ஆயிரம் கூறலாம். ஆகவே, விரிக்காது கீழ்க்கண்ட நூலாதாரங்களை இட்டிருக்கிறோம். அவரவர் நிலைக்குத் தக்க மெய்ப்பொருள் கண்டு தெளிக.
திருமந்திரம்:
“தானே திசையொடு தேவருமாய் நிற்குந்
தானே யுடலுயிர் தத்துவமாய் நிற்குந்
தானே கடல்மலை யாதியுமாய் நிற்குந்
தானே யுலகிற் றலைவனு மாமே.”
சிவபெருமான் கலப்பினால் பத்துத் திசையும் பற்றுடைத் தேவருமாய் நிற்பான். அதுபோல், உடலாய் உயிராய் ஏனைய தத்துவங்களுமாய், கடலும் மலையுமாய், எல்லாப் பொருள்களாயுமாய் நிற்பான். பொருள் தன்மையால் சிவன் இவை அனைத்திற்கும் முதல்வனாய் நிற்பான்.
சிவவாக்கியர்:
“ஆதியான தொன்றுமே யனேகனேக ரூபமாய்
சாதிபேத மாயெழுந்து சர்வஜீவ னானபின்
ஆதியோடு கூடிமீண் டெழுந்தசென்ம மானபின்
சோதியான ஞானியாருஞ் சுத்தமா யிருப்பரே.”
ரிபு கீதை:
“அருளுருவாம் பரமசிவனனந்த சக்திக்காதாரமாக வமர்ந்திருப்பதாலே
சருவசக்காரணமா மவ்வீசற்குச் சமமேனும் மல்லதவற் கதிகமேனும்
ஒருபொருளு மிலையதனா னன்றோன்றானே யோதுமு பரதான – நிமித்தங்களாவன்
கருதிய யிவ்வீசற்கு மேலாய்வேறோர் காரணமு மொருக்காலு மெங்குமில்லை.”
சொரூபசாரம்:
“சிற்சொரூபந் தானெ செகசொரூப மானவெலாந்
தற்சொரூப காரமாச் சாற்றவே – பொற்சொரூப
மச்சுருவாம் போல வதுவதுவாய்த் தோற்றுமொரு
சொச்சொரூந் தானெ துணை.”
திருவாய்மொழி:
“திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவதுமா யவையவை தொறும்
உடன்மிசை யுயிரெனக் கரந்தெங்கும்பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையுண் டசுரனே.”
ஞானவாசிட்டம்:
“அத்தமியாத சோதிய ருக்கனா யளவிலாதாய்
மெத்திய பினியிலாதாய் மேவரும் பிறப்பிலாதா
யெத்தலங்களிலு மென்று மியாவுமா யாவுஞ்செய்து
முத்தியுமாகி யோங்குமுதற் பரம்பொருளொன்றுண்டு.”
சிவஞானபோதம்:
“அவனவள துவெனு மவைமூ வினைமையின்
றோற்றியதிதியே யொடுங்கி மலத் துளதா
மந்தமாதி யென்மனார் புலவர்.”
திருவாசகம்:
“பூதங்க ளைந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்க ளனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கொடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்க டொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே.”
(விளங்குதில்லை = விளங்கவில்லை அல்ல; விளங்கு + தில்லை)
கர்நாமிர்தம்:
“திரைநுரை குமிழியெல்லாந் திரைகடற் றோன்றுமாபோ
லுரையுயிர் மாயையாக்கை யுனதிடையுதிக்கக்கண்டேன்
பரைதிரு வுருவவாகிப் பசுத்தொருங் குடியிருந்து
திருமறுமார்பன் போற்றுந் திருப்புலி வனத்துளானே.”
சூதசங்கிதை:
“பரத்துவமாய்த் தத்துவங்களெவைக்கும் பகர்தத்துவமாகி
வரமுற்றிடுசிற் சத்தியுமாய் மருவுசட சத்தியுமாகி
யரவுற்றிடுமச் சத்திகடம் பேதங்களுமா யொளிர்கின்ற
வரவச்சடையோ னெவனவனை யடியேன் போற்றித் துதிக்கின்றேன்.”
இத்துடன் நீங்கள் அலுப்புறாவண்ணமும், விரிவஞ்சியும் விடுத்தனம்.
200.நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி
உற்றெங்கும் நிற்குஞ் சிவம்.
இயங்கு திணை, நிலைத்திணை ஆகிய எல்லா அண்டங்களிலுள்ள அனைத்து உருவங்களிலும் சிவம் சீவனாகி நிலைத்து நிற்கிறது.
201.தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள்
- 21. குருவழி
அன்பா யிருக்கு மரன்.
தன்னைத்தான் அறியும்படியான அகத்தவத்தைச் செய்யும் தவசிகளின் நினைவில் அரனாகிய சிவம் நிலைத்து நிற்கும்.
202.சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்
சிந்தித் திருக்குஞ் சிவம்.
சிவத்தையே சிந்தித்திருக்கும் தவஞானிகளின் சிந்தனையானது சிவம் செய்யும் சிந்தனையாக மாறிவிடும்.
மணிவாசகப் பெம்மான் (திருவாசகம்):
“சிந்தனை நின்றனக்காக்கி நாயினேன்றன் கண்ணினை நின்றிருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையுமம் மலர்க்கேயாக்கி வாக்குன்மணி வார்த்தைக் காக்கி யைம்புலன்களார
வந்தனை யாட்கொண் டுள்ளே புகுந்த விச்சைமாலமுதப் பெருங்கடலே மலையேயுன்னை
தந்தனை செந்தாமரைக் காடனைய மேனித் தனிச் சுடரே இரண்டுமிலி தனிய னேற்கே.”
203.குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம்.
ஞானாசிரியனால் திருவடி ஞானம் பெறாதோருக்கு சிவம் உருவற்று நிற்கும். அப்படியெனில், திருவடி ஞானம் பெற்று, முக்கலையொன்றித்து ஞானவினை செய்யும் தவசிகளுக்குத் தன் சிந்தையிலேயே உணர்வாய் நிற்குஞ் சிவம் என்பதாம்.
204.தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால்
வலைப்பட்ட மானதுவே யாம்.
ஞானவினையின் மருமங்களையறிந்த ஞானாசிரியனின் (சந்=ஞானஒளி; நிதி= புதைந்துள்ள மெய்ப்பொருள்; ஒளிமிகு பொருள்) சந்நிதி இல்லையெனில், வலையாகிய உலக மாயைகளில் அகப்பட்டு மானாகிய சீவன் அலைக்கழிக்கப்படும்.
மாணிக்கவாசகப் பெருமான்:
“உரியனல்லே நுனக்கடிமை யுன்னைப்பிரிந்திங் கொருபொழுதுந்
தரியேனாயே னின்னதென் றறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோ னொருவன் கண்டு கொளென்றுன் பொய்கழலடி காட்டிப்
பிரியேனென்றென் றருளியவரும் பொய்யோ வெங்கள் பெருமானே.”
205.நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிரிவற் றிருக்குஞ் சிவம்.
ஐயந்திரிபறக் கற்று அதன் வழி நிற்கும் ஞானாசிரியன் முறைப்படி சுட்டிவிளக்க, அதைச் சலனமில்லாது ஆற்றுபவனுக்குச் சிவம் பிரிவற்றிருக்கும்.
திருமந்திரம்:
“தொழிலறி வாளர் சுருதி கண்ணாகப்
பழுதறி யாத பரம குருவை
வழிய றிவார் நல்வழி யறிவாள
ரழிவறிவார் மற்றையல்லா தவரே.”
தொழில் = ஞானவினைகள். சுருதி = மறை, ஆகமம்.
பழுது = குற்றம். வழியறிவார் = வழிபட அறிவார்.
அழிவறிவார் = அழிவினைச் செய்யும் வழி அறிவார்.
தமிழ் மறைகளையும், ஆகமங்களையும், கண்களாகக் கருதும், குற்றமற்ற சிவகுருவின் திருவடி சார்ந்து அவரை வழிபாடு செய்தலை அறிவோர்கள் வீடுபேறு அடையத்தக்க நன்னெறியாளர்கள். இந்த உண்மையை அறியாதவர்கள், பிறந்து இறந்து உழலும் அழிவு நெறியினையே அறிவர். ஆகவே, வீடுபேற்றுக்கு உரியவர் அல்லர்.
தாயுமானவர்:
“குருமொழியே மலையிலக்கு மற்றமொழி யெல்லாங்
கோடின்றி வட்டாடல் கொள்வதொக்குங் கண்டாய்.”
பட்டினத்தார்:
“குருமார்க்க மில்லாத குருடருடன் கூடிக்
கருமார்க் கத்துள்ளே கருத்தழிந்துகெட்டேனே.”
சீடாசாரம்:
“கட்டுண்ட கள்வன்றானே கட்டினை விட்டுக்கொள்வான்
விட்ட வேதனையைத்தீர்த்துவிடுவிப்பானொருவன்வேண்டு
மட்டமா சித்தியோக வறிவினா லறியலாமோ
தட்டடறப் பாசந்தீர்க்கத் தற்பர குருவே வேண்டும்.”
206.நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
எல்லையில் லாத சிவம்.
நல்லவற்றைக் கூறும் பல ஞான நூல்களைப் படிப்பதால் மட்டும் எல்லையில்லா சிவத்தையுணர்தல் அரிது.
சச்சிதானந்த சுவாமிகள்:
“ஏட்டைப் படித்திங் கிறுமாப்பா லென்னபயன்
நாட்டம் படித்தன்றோ நாமறுப்பம் – வாட்டமெலாம்
எச்சனனத் தேனு மிரும்பொருளை நாடாத
எச்சத்தா லன்றோ இவை.”
அருணகிரியந்தாதி:
“கற்றதனாற் றொல்லைவினைக் கட்டறுமோ நல்லகுலம்
பெற்றதினாற் போமோ பிறவிநோய் – உற்றகடல்
நஞ்சுகந்து கொண்டருணை நாதரடி தாமரையை
நெஞ்சுகந்து கொள்ளா நெறி.”
சிற்றம்பல நாடிகள்:
“தற்கம் படித்துத் தலைவெடித்துக் கொள்ளுமதைக்
கற்கநினையா தருளைக் காட்டுங் கருணையனோ.”
சச்சிதானந்த விளக்கம்:
“கோடிபல நூலறிவு வேதமுறை பேசினுங்
குருபாதம் வெளியாகுமோ.”
பிரம்மகீதை:
“வேதமாகம புராணமிருதிகள் வேறா மார்க்க
ரோது மாகமங் கடர்க்கமொன்றோடொன் றெவ்வாதாகு
மீதெலா மொக்கப் பண்ணலாவதன் றிதயதுக்க
மாதலா லனைத்தும் விட்டிங்கனைத்து மாஞ்சிவத்தை பார்ப்பான்.”
திருவருட்பிரகாச வள்ளலார்:
“சதுமறையாகம சாத்திரமெல்லாஞ் சந்தைப்படிப்பு நஞ் சொந்தப்படிப்போ
விதுநெறி சுத்தசன் மார்க்கத்தின் சாகாவித்தையை கற்றனனுத் தரமெனுமோர்
பொதுவளர் திசைநோக்கி வந்தனனென்றும் பொன்றாமைவேண்டிடிலென்றோழி நீதான்
அதுவிது வென்னாம லாடோடிபந்து வருட்பெருஞ்சோதி கண்டாடோடி பந்து.”
சிவபோதசாரம்:
“கற்குமடப் பட்டுமிகக் கற்றவெலாங் கற்றவர்பாற்
றற்கமிட்டு நாய்போலச் சள்ளிடவோ – நற்கருணை
வெள்ள மொடுங்கும் விரிசடையார்க் காளாகி
யுள்ள மொடுங்க வல்லவோ.”
சசிவன்ன போதம்:
“ஆகம விதங்க ளறிவார்கள் பரமறியார்
யோகமொ டுறங்கு மவரேபர முணர்ந்தோர்
புராண மிதிகாச மெவையும்பொருளனைத்தின்
பிராண நறியா துளவிடத்திவை பிதற்றே.”
207.நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந்
தனைப்பிரி யாது சிவம்.
நினைப்பு, மறப்பற்ற நெஞ்சத்தில் சிவம் வாழும்.
208.ஒன்றிலொன் றில்லாத மனமுடை யாருடல்
என்றுமொன் றாது சிவம்.
முக்கலை யொன்றித்தலாகிய ஞானவினை செய்யாதவரிடம் எப்போதும் சிவம் சேராது.
திருமந்திரம்:
“மந்திர மாவதும் மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவது
மெந்தை பிரான்ற னிணையடி தானே.”
உடல்நோய், உளநோய், ஊறு, பகை, பிறப்பு முதலிய எல்லாவகை துன்பங்களையும் அறவே அகற்றும் மந்திரம், எம்பிரானின் திருவடிகளே. திருவடி என்பது “சிவயநம”. உயிராம் யகரத்தின் முன்னும் பின்னுமுள்ள வகரமும் நகரமும் சிவனின் திருவடியாம். வகரம் வலது திருவடியாகிய கதிரவன். நகரம் இடது திருவடியாம் திங்கள். இவ்விணையற்ற திருவடிகளே, மந்திரம், மாமருந்து, தந்திரமாகிய நூலுணர்வு, தானங்களாகிய ஒளி நிலைக்களங்கள். உயிர், உணர்வு, உள்ளம், உடல், உடை, உறையுள் ஆகியவற்றிற்கு அழகு தருவதும் திருடிகளே. தூயநெறியும் இதுவே.
“இதயத்தும் நாட்டத்து மென்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும்மெய் காட்டிய வாறும்
விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே.”
அடியேன் உள்ளத்தும், கள்ளமிலாக் கண்ணகத்தும் உச்சியிலும் தன் திருவடி பதிப்பித்தான் நந்தியாம் சிவன். திருவடிப்பேறாகிய கதி அமைத்தவாறும், சிவகுருவாய் எளுந்தருளி மெய்ப்பொருள் உணர்த்தியவாறும், திருமறை ஆகமங்கள் கூறியவாறும், அவன் அருள் இன்றி உயிர்களின் சுட்டறிவு சிற்றறிவுகளால் வெளிப்படுத்திக் கூற இயலாது.
209.நாட்டமில் லாவிடம் நாட்ட மறிந்தபின்
மீட்டு விடாது சிவம்.
பார்வையை செலுத்தவியலா இடத்தில் பார்வையாகிய நோக்கை சலனமின்றி நிலைநிறுத்த சிவம் நீங்காது(ஞானாசிரியன் தேவை).
210.பஞ்சமா சத்த மறுப்பவர்க் கல்லாஅல்
அஞ்சலென் னாது சிவம்.
ஐந்து இந்திரியங்கள் சேரும்போது உண்டாகும் பெருமை பொருந்திய (ஆக்ஞா சக்கரத்திலிருந்து) நாதசக்தியை எழுப்பி அதனோடு ஒன்றிய மனுவைச் சிவமழைத்து அஞ்சாதே என்று சொல்லும்.
211. அங்கியிற் பஞ்சுபோ லாகாயத் தேநினையில்
- 22. அங்கியில் பஞ்சு
சங்கிக்க வேண்டாஞ் சிவம்.
சிதாகாயமாம் பரவெளியில் இருக்கும் நினைவில் மூலாக்கினியைப் பாய்ச்சினால் அனலிற் பஞ்சுபோல் உடனே சிவம் சோதியாய் வெளிப்படும். ஐயுற வேண்டாம்.
212. மெய்ப்பா லறியாத மூடர்த நெஞ்சத்தின்
அப்பால தாகுஞ் சிவம்.
உயிர்ப்பை அறியும் உள் மெய்த் தத்துவத்தை அறியாதவர் மனதில் தெய்வ சக்தி இல்லாது சிவம் நீங்கி இருக்கும். மடமையே குடியிருக்கும்.
213. நெஞ்சகத்து ணோக்கி நினைப்பவர்க் கல்லாஅல்
அஞ்சலென் னாது சிவம்.
உந்திக்கமலத்தில் மனதை உதிக்கவிடாது செய்து சிவத்தைக் கருத்தில் நிலைத்து நிறுத்திச் சிந்திக்காதவர்களுக்குச் சிவம் அஞ்சேல் எனக்கூறாது.
214. பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது
கற்றதனா லென்ன பயன்.
சாற்றிறங்களைக் கற்றதனாலாய பயன், உருவம் அற்றதாயுள்ள இறைவன் திருவடி காணலே.
திருக்குறள்:
“கற்றத னாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்.”
215. தம்மை யறிவாரைத் தாமறிந்து கொண்டபின்
தம்மை யறிவரோ தான்.
தன்னையறிய தலைவனைக் காணலாம். தலைவனைக் கண்டபின் தம்மை அறிய முயலுதல் அறிவுடைய செயலில்லை.
216. அசபை யறிந்துள்ளே யழலெழ நோக்கில்
இசையாது மண்ணிற் பிறப்பு.
மனவசைவை அறிந்து உந்திக் கமலத்துள்ளே அக்கினி கலையைப் பாய்ச்ச, பிறப்பறும். (எண்ணங்களறும் என்பருமுண்டு.)
திருமந்திரம்:
“உடம்பு முடம்பு முடம்பைத் தழுவி
யுடைம்பிடை நின்ற வுயிரை யறியார்
உடம்பொ டுயிரிடை நட்பறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே.”
உடம்பும் = வருந்தும். மடம் = சைவர் வாழும் வீடு.
பிறப்பு முதல் ஒடுக்கம் வரை மாறாதிருக்கும் நுண்ணுடல் ஓய்வின்றி வருந்தும் உடலாயிற்று. அவ்வுடல் இருவினைக்கு ஈடாக அடுத்தடுத்துப் பிறந்திருக்கும் பருவுடலெடுக்கும். இவ்விரு உடல்களில் உள்ளும் ஓடும் உயிர் தவிர, தவிர, இன்னுமொரு உயிர் உண்டு. அவ்வுயிர், இவற்றைக் கருவியாகக் கொண்டு உலகியல் பற்றற்றுச் சிவத்திருவடிப் பற்றுற்று பேறு எய்தச் சிவன் தந்தது. இவ்வுண்மையை உணர்வதே, உடலொடு உயிருக்குள்ள நட்பினை உணர்தலாம். இதனை அறியாதார், தனக்கு வேண்டிய எலும்பு, இறைச்சி புழங்காத சிவமடத்தில் புகுந்து ஒன்றும் கிடைக்காது மயங்கும் நாய் போலவாம்.
இதுகுறித்து சேக்கிழார்:
“மிக்க செல்வ மனைகடொறும் விளையு மின்பம் விளங்குவன
பக்க நெருங்கு சாலைதொறும் பயில்சட் டறங்கள் பல்குவன
தக்க வணிகொண் மடங்கள்தொறும் சைவமேன்மை சாற்றுவன
தொக்க வளங்கொள் இடங்கள்தொறும்அடங்கநிதியம் தோன்றுவன.”
அசபையை செங்கிருதத்தில் “அஜபா” என்பர். அசபை எனில் அசைவு, ஆட்டைப்போல் அசைந்து கொண்டே இருக்கும் மனம். அதையடக்கத் தூலமழியினும் சூக்குமழியாது. அச்சூக்குமத்தொடு சீவனொன்றிவிடும். அசபையை விரித்துக் கூற அனுமதியில்லை. ஆர்வமுடையவர்கள் (ஞானாசிரியனின்றி)அசபையைச் செய்து ஆபத்தைத் தேடலாகாதென்பதே நோக்கம்.
217. இமையாத நாட்டத் திருந்துணர் வாருக்
கமையாத வானந்த மாம்.
மனவசைவை நீக்கி ஞானவினை செய்வோருக்கு எப்பொழுதும் சச்சிதானந்தமே (சத் + சித் + ஆநந்தம்).
திருமந்திரம்:
“பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத்திருப் பார்க்கு
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே.”
பொறிக்கப்பட்ட = அடைக்கப்பட்ட.
அந்நிலம் = கொப்பூழ். மாம்பழம் = சிவக்கனி.
நாட்டத்தை = நாடுதலை. தூங்கல் = உண்டு உறைதல்.
மீட்டு = புறஞ்செலவிடாது அகமுகப் படுத்தி.
நயனத்திருப்பார்க்கு = முக்கலையொன்றும் பயிற்சியில் இருப்பவர்க்கு.
தோட்டம் = திருவருள் வெளி. தேட்டற்ற = மேல்செல்லுதலற்ற.
உடலில் பூட்டி அடைக்கப்பட்ட உயிர்ப்பைக் கொப்பூழில் அடக்கி வைத்தல் வேண்டும். நினைவின் எண்ணத்தை அதன்மேலேயே நாட்டி வைத்து இருப்பவர்கள் தோட்டத்து மாம்பழம் (நமசிவாயப் பழம்) போல் இனிக்கும் திருவருளுடன் இணைந்திருக்கலாம்.
218. துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு.
மரணம் = உற்பத்தி; பிறப்பு = லயம்;
உடலில் துரியங் கடந்த துரியாதீதத்தில் சோதி கண்டால் பிறப்பு இறப்பு (எண்ணங்களின் உற்பத்தி, மறதி இல்லை).
219. மதிபோ லுடம்பினை மாசற நோக்கில்
விதிபோ யகல விடும்.
உடலினுள் நினைவில் சந்திரகலை பரிணமிக்க, விதிக்கப்பட்ட கால அளவுகளை எளிதாகக் கடக்கலாம்.
220. சீவன் சிவலிங்க மாகத் தெளிந்தவர்தம்
பாவ நசிக்கும் பரிந்து.
சீவனைச் சிவத்துடன் ஒன்றித்துச் சிவத்தைச் சிவலிங்கமாகக் காணும் ஒருவனின் பாவ வினைகள் நாசமாகும்.
221. மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ் சுடர்நோக்கில்
- 23. மெய்யகம்
கையகத்தி னெல்லிக் கனி.
உடலினுள்ளே உந்திக்கமலத்தில் (உன் + தீ + கமலத்தில்) செஞ்சுடர் நோக்கச் சிவம் உள்ளங்கை நெல்லிக்கனி எனத்தெரியும்.
திருமந்திரம்:
“மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்குஞ்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந்தொழிந் தேனன்றே.”
மெய்த்தவப் பயன் அருளும் மெய்ப்பொருள் சிவனே. அவனை விரும்பித் தொழுபவர்க்கு (யோகம் செய்பவருக்கு) உள்ளங்கையில் நெல்லிக்கனி போல் விளங்குவான். நெல்லி உண்டு பின்னர் நீர் அருந்தியதும் இனிப்பதுபோல பிறவிப்பிணி நீங்கும்; பின்னர் இனிப்பாம் பேரின்ப நுகர்வு உண்டாகும். சிவன் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய தூயோன். தூய நெறியில் நிற்கும் தேவர்களுக்கு அத்தன். அத்தகையவனை நாடித் தினமும் தொழுதேன்.
222. கரையற்ற செல்வத்தைக் காணுங் காலத்தில்
உரையற் றிருப்ப துணர்வு.
கரையில்லாச் செல்வமாம் உணர்வை அறிந்து உணருங்காலத்தில், நினைக்கப் பேச ஒன்றுமிருக்காது. மவுனம்தான் நிலவும்.
ஞான வாசிட்டம்: உத்தாலகன் கதை:
“அன்னை காலையி லிருள்சுடர்துயில் மயக்கனைத்தையு மறுத்தோட்டி
மன்னுமோ ரவத்தயை யடைந்தொருகணம் வருத்தமாறியதுள்ளம்
இன்னறீர்ந்துடனே யனைத்துருவமா மறிவை யெய்தியதன்றே
நன்னெடுங்கரை தடுக்கநிறெதிர்த்து முற்றல நிறைந்திடு நீர்போல்.”
223. உண்டு பசிதீர்ந் தார்போ லுடம்பெல்லாஅங்
கண்டுகொள் காதல் மிகும்.
பசிதீர உண்டபின் மனம் எவ்வாறு மனநிறைவடையுமோ, அவ்வாறே உடலின் உள்ளும் புறமும் அன்பு சுரந்து மனநிறைவு அடையுங் காலத்தை அறிந்து உணர்ந்துகொள்.
224. உரைசெயு மோசை யுரைசெய் பவர்க்கு
நரைதிரை யில்லை நமன்.
ஓசையின் மூலமாய் உண்டாகும் சொல்லின் மருமப் பொருள் உணர்ந்தார்க்கு, நரை, திரை, மரணம் இல்லை.
ஞான வாசிட்டம்:
“பிரணவத்தினுச் சாரணமுடிவில் பிறந்த சொல்லூறுமுண்மை
விரவுநாட்டத்தாற் றுயில்பவனுணர்வு தான்வெளிப்படி லுயிர்நிற்கும்
பரவுதாலுமூலஞ் செறியிதழினை படருநாவாற்றள்ளி
யுரவினாலுயர் புரையிலே பிராணனையோட்டினா லுயிர்நிற்கும்.”
225. தோன்றாத தூயவொளி தோன்றியக்கா லுன்னைத்
தோன்றாமற் காப்ப தறிவு.
எவருக்கும் வெளிப்பட்டு நிற்காத தூய்மையான ஆத்தும ஒளியானது வெளிப்பட்டு உன்னைச் சூழ்ந்திருக்க, மற்ற நினைவுகள் தோன்றாமல் அறிவு காக்கும். நினைவுகள் என்பது எண்ணங்கள்.
226. வாக்கு மனமு மிறந்த பொருள்காணில்
ஆக்கைக் கழிவில்லை யாம்.
பேச்சும் மனனமும் இல்லாத தனது இயல்பான வடிவத்தை (செங்கிருதத்தில் மனோகோசரமாகிய வடிவம்) உணர்ந்தால், தூல உடலுக்கு அழிவு இல்லையாம்.
கோசரம் = Sensation, perception; comprehension, உணர்வு.= புலப்படுதல்
வார்த்தை அல்லவடி …..அகப்பேய்!
வாசா மகோசரத்தே
ஏற்ற தல்லவடி …..அகப்பேய்!
என்னுடன் வந்ததல்ல.
கம்ப இராமாயணம் – பாலகாண்டம் – மிதிலை காட்சிப் படலத்தில் சீதா பிராட்டியாரின் காதல் நிலைமை:
பிறையெனும் நுதலவள் பெண்மை எனப்படும்
நறைகமழ் அலங்கலான் நயன கோசரம்
மறைதலும் மனமெனும் மத்த யானையின்
நிறையெனும் அங்குசம் நிமிர்ந்து போயதே.
தேன் துளிர்க்கும் நறுமண மலர் மாலை யணிந்த இராமன் தன் பார்வையிலிருந்து மறைந்து சென்றதும், மனம் என்கிற மதம் கொண்ட யானை நிறை என்கிற அங்குசத்தை யழித்துச் செல்லுதலைப் போன்று பிறைச் சந்திரனை யொத்த நெற்றியுடைய சீதாப் பிராட்டியின் பெண் தன்மைதான் எத்தகைய நிலைமையை யடையுமோ! நாணம் முதலான குணங்கள் ஒழிந்தன என்பதாம்.
227. கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால்
உன்னகத்தே நின்ற வொளி.
ஆத்தும ஒளியானது ஞானக் கண்ணிலிருந்து வெளிப்படுவதை உணர்ந்தால், உணர்வு ஆநந்தத்தை உணரும்.
228. ஆநந்த மான வருளை யறிந்தபின்
தானந்த மாகு மவர்க்கு.
ஆநந்த சொரூபமாகிய அருளொளியை உணர்ந்தபின் அதுவே அவர்கட்கு அந்தமாகும் (முடிவாகும்).
229. மறவாமற் காணும் வகையுணர் வாருக்
கிறவா திருக்கலு மாம்.
மறதியை ஒழித்து அதனால் பார்வைக்குத் தோன்றும் தோற்றங்களை பகுத்துணர்ந்து கொண்டவர்க்கு இறவாவரம் கிட்டும்.
230. விண்ணிறைந்து நின்ற பொருளே யுடம்பதன்
உண்ணிறைந்து நின்ற வொளி.
உடலினுள் நிறைந்து அசைவற்று நிற்கும் அருள் ஒளியே, சிதாகாயத்தில் அகண்ட பரிபூரணமாய்ப் பரவியிருக்கும் சிவமாம்.
231. கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள்
- 24. கண்ணாடி
உண்ணாடி நின்ற வொளி.
உடலினுள்ளிருக்கும் குண்டலிக்குள் உறைந்திருக்கும் ஒளியானது, சூரியவொளியில் வைத்த கண்ணாடிக்குள் தெரியும் சூரியனின் உருவைப்போல் இருக்கும்.
232. அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத்
துஞ்சுவ தில்லை உடம்பு.
ஐம்புலன்களின் சக்திகளைப் பிரணவத்தில் சேர்க்க வகையறிந்தால், உடலிழக்கவேண்டாம்.
திருமந்திரம்:
“பாய்ந்தன பூதங்க ளைந்தும் படரொளி
சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு
வாய்ந்துகொ ளானந்த மென்னு மருள்செய்யில்
வேய்ந்துகொண் மேலை விதியது தானே.”
விதி = முறை. படர்க்கின்ற = படர்கின்ற.
ஐம்பூதங்களாகிய புலன்கள் ஐந்தும் புறத்தே பாயும் தன்மையுடைத்து. அங்ஙனம் பாய்வதைத் திருவருளால் அகற்றி, சிவ மந்திரத்தின் உதவி கொண்டு திருவடி உணர்வாகிய கட்டுத் தறியில் கட்டிப் பூட்டவேண்டும். அப்படிச் செய்தவர்க்கு, சிவன் திருவடிப் பேரின்பம் என்னும் பெரும் பேரருளைத் தருவான்.
“கிடக்கு முடலிற் கிளரிந் திரிய
மடக்க லுறுமவன் றானே யமரன்
விடக்கிரண் டின்புற மேவுறு சிந்தை
நடக்கி னடக்கும், நடக்கு மளவே.”
விடக்கு = உடல். அமரர் = விரும்பத் தக்கவர்.
நடக்குமளவு = உயிர்ப்பு இயங்கும் வரை.
இரண்டு = அருந்தல், பொருந்தல். அமர்வு = விருப்பம்.
அனைத்து உயிரும் உய்யும் வண்ணம் சிவனால் தரப்பட்ட உடலில் உள்ள பொறிகள் அந்நன்மைக்குத் துணையாகவே அமைக்கப்பட்டுள்ளன. மலச்சார்பினால் அவைகள் தீய வழிகளில் செல்கின்றன. அவ்வழியில் உயிராகிய நாமும் செல்லாது நலச்சார்பால் சிவனின் திருவடிக்கு ஒப்புவித்து மீளா அடிமையாய் வாழ வேண்டும். இதுவே புலனடக்கமாம். புலனடக்கம் உள்ளவரே புலவர். புலவரால் விரும்பப் படுபவர் அமரர். உடல் அருந்தல், பொருந்தல் ஆகிய இருவின்பத்திலும் ஈடுபட உயிர்ப்பு வீணாகும். அவ்வுயிர்ப்புள்ளவரை உடலும் நடக்கும்.
233. நாபி யகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு.
நாபியாகிய உந்திக்கமலத்தில் முக்கலையொன்றி அசைவற்று நிற்க, உடல் சாகாது.
நாபி = பிரணவ மத்தி.
திருமந்திரம்:
“உந்திக்கமலத் துதித்தெழுஞ் சோதியை
யந்திக்கு மந்திரமாரு மறிகிலர்
அந்திக்கு மந்திரமாரு மறிந்தபின்
தந்தைக்குமுன்னே மகன் பிறந்தானே.”
அந்திக்க = வந்திக்க, வணங்க.
படைப்புக் களமாம் கொப்பூழில் தோன்றிச் சுடர்விட்டுக் கிளம்பும் ஒளிப்பைழம்பை வணங்கி வழிபடும் முறையினை யாரும் அறிகிலர். அதை அறிந்தால், தந்தையாகிய சிவத்திற்கு முன் ஆவியாகிய மகன் தோன்றுவான். “சிவயசிவ” எனும் திருவைந்தெழுத்தில் சிகரத்துக்கு முன் யகரம் நிற்கும் நிலையினையே தந்தைக்குமுன் மகன் பிறந்தான் என்பதைக் குறிக்கும். கொப்பூழுக்கு முன்னிடமாகிய மூலத்தில் ஓம் மொழிப் பிள்ளையார் தோன்றியதைக் கூறுதலும் ஒன்று.
“நாவியின் கீழது நல்லவெழுத் தொன்று
பாவி களத்தின் பயனறிவா ரில்லை
யோவிய ராலு மறியாவொண் ணாதது
தேவியுந் தானுந் திகழ்ந்திருந் தாரே.”
நாவி = நாபி; கொப்பூழ். பாவிகள் = தீவினையாளர்.
ஓவியர் = படைப்போன் முதலிய தேவர்.
கொப்பூழின்கீழ் முலத்தே திகழும் ஒரு நல்ல எழுத்தாம் ஓங்காரம். சிவசிவ எனச் சொல்லாத தீவினையாளர் இதன் பயனை அறியார். படைப்போன் முதலிய தேவர்களாலும் அறிதல் அரிது. அம்மையொடு அப்பனும் ஆங்கே திகழ்கிறான்.
234. கண்டத் தளவிற் கடிய வொளிகாணில்
அண்டத்த ராகு முடம்பு.
கண்டமாகப் பிரிதிருக்கும் அகண்டமாகிய கண்களினுள்ளே ஞானாசிரியனால் சுட்டப்பட்ட இடத்தில் ஒளியை நிலைத்துக் காண பொன்னிறமாகிய உடலையடையலாம்.
235. சந்திர னுள்ளே தழலுற நோக்கினால்
அந்தர மாகு முடம்பு.
இடது திருவடியாகிய சந்திரனில் உள்ளே அக்கினி கலையைச் எழுப்பிப் பொருந்தும்படி செலுத்தத் தூல உடலானது சத்தி நடுவிலோடி ஆகாயத்தையொக்கும்.
236. ஆர்க்குந் தெரியா வுருவந்தனை நோக்கில்
பார்க்கும் பரமா மவன்.
தன்னைத் தவிர யாருக்கும் தெரியாத ஓங்கார உருவத்தைக் கண்டுணர்ந்தால், அவனே இறைவனாம்.
237. வண்ண மில்லாத வடிவை யறிந்தபின்
விண்ணவ ராகு முடம்பு.
வண்ணமற்ற ஓங்கார உருவையறிந்து உணர்ந்தபின், அங்ஙனம் உணர்ந்தவனின் உடல் தேவர்களின் உடலை ஒத்திருக்கும்.
238. நெற்றிக்கு நேரே நிறைந்த வொளிகாணில்
முற்று மழியா துடம்பு.
நெற்றிக்கு நேரே மேல்பாகத்தில் (தலைக்கு மேல்) வண்ணமற்ற ஒளிகாணில், தூல சூக்கும உடல்கள் அழியாது.
239. மாதூ வெளியின் மனமொன்ற வைத்தபின்
போதக மாகு முடம்பு.
மா = பெருமை பொருந்திய
தூவெளி = தூய சிதாகாயம்
மனத்தை அசைவற்ற நிலையில் இராப்பகலற்ற இடத்தில் நிலைத்து நிற்கச் செய்து பழகிவர, உடலில் முதுமை வராது.
240. சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால்
முற்று மழியா துடம்பு.
முக்கலையும் பிரணவத்தொடு ஒன்றி மனனம் அழிய உடலழியாது.
241. நிரவி யழலுருவாய் நீண்ட வெளிகாணில்
- 25. சூனிய காலமறிதல்
அரவணை யானாகு முடம்பு.
எல்லையற்ற சிதாகாயத்தில் அக்கினி கலைகளினாலாய சோதிகாண, நம் உடல் அரவினை (அணைத்த) அணையாகக் கொண்டவனின் உடல்போலாகும்.
அரவினை (அணைந்தவன்) அணிந்தவன் சிவன்.
அரவிணை அணையாகக் கொண்டவன் விட்டுணு.
அரவணை என்பதன் பொருள் குண்டலி சத்தியே. இதை விட்டுணு ஆசனமாகவும், சிவன் மாலையாக அணிந்திருப்பதாகவும் புராணம் கூறுகிறது. மணிபூரகத்தில் விட்டுணு உருவம் குண்டலியை ஒன்றாக்கி அதன்மேல் (நிற்பதால்) படுத்திருப்பதால் ஆசனமாகவும், சிவநடன காலத்தில் குண்டலி சுற்றி வளைத்து மேலேறுவதால் அது கழுத்தணியாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளது.
242. உருவந் தழலாக வுள்ளத்தே சென்று
புருவத் திடையிருந்து பார்.
யோக நிட்டையில் புருவமத்தியென்பதற்கு, இரு புருவங்களின் மத்திய பாகத்தைப் பார் என்பர். இரு புருவங்களின் மத்திய பாகம் புருவங்களின் மத்தியாகும். ஆனால், ஒரு புருவமத்தியே, புருவமத்தியாம். அப்படியேயாயின், ஒரு புருவமத்தியை எப்படி இரு கண்களால் நோக்குவது? எனும் வினாவுக்கு விளக்கம்:
இரு கண்களாலும் நாசி நுனி நோக்க கீழ்நோக்கு முக்கோணம். அதை அப்படியே மேல்நோக்கு முக்கோணமாக்கப் பார்வை புருவ மத்தியின் வழியாக மேலே செல்லும். புருவ மத்தியின் வழியே சிதாகாயஞ்சென்று சோதிமயமான சிவத்தைக் கண்டுணரல் வேண்டும்.
மணிவாசகப் பெருமான் சிவம் செந்தழல்போலிருப்பதை:
“பந்தணை விரலாள் பங்க நீயல்லாற்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே.”
243. புருவத் திடையிருந்து புண்ணியனைக் காணில்
உருவற்று நிற்கு முடம்பு.
மேற்கூறியபடி புருவமத்தியின் வழியே சிதாகாயஞ் சென்று சிவத்தைக் கண்டுணர, நம் உடல் இருப்பதைக் காண இயலாது (சிவம் பூரணமாக நிலைபெற்றுவிடுவதால் நம் உடல் உருவமற்றுவிடும்).
244. அகம்புறம் பேராப் பொருளை யறியில்
உகம்பல காட்டும் உடம்பு.
உள்ளும் புறமும் தானாக வெளிப்படாத, ஞானாசிரியன் சுட்டிய திருவடிக் கமலங்கள்மூலம் முக்கலை யொன்றித்தலாம் ஞான வினையினால் சிவத்தைக் கண்டுணர பலயுகம் காட்டும் உடம்பு.
245. ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின்
ஓவிய மாகு முடம்பு.
வாசியாகிய மூச்சுக் காற்றாம் ஆவியை உடலுக்கு வெளியே செலுத்திச் செலவிடாது, உள்ளே முடிந்தவரை நிறுத்திவைக்க, நம் உடல் ஓவியத்தில் வரைந்ததுபோல இளமையுடன் இருக்கும்.(பாம்பின் மூச்சுக் காற்றைக் கவனிக்க விளங்கும்)
திருமந்திரம்:
“ஓவிய மான உணர்வை யறிமின்கள்
பாவிக ளித்தின் பயனறி வாரில்லை
தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும்
பூவி லிருந்திடும் புண்ணியத் தண்டே.”
பரவெளி = ஆயிர இதழ்த் தாமரை
தண்டு = வீணாத் தண்டு.
இதனுள் ஓடுவது நடுநாடியாம் சுழுமுனை.
உயிர்ப்படங்கி அசைவற்றிருக்கும் உணர்வை அறியுங்கள். மீண்டும் பிறப்பினை அடையக் காரணமாய் உள்ள உள்ள உடலைப் பெற்ற தீவினையாளர்கள் இவ்வுண்மையை அறியார். ஞாயிறு, திங்கள், அங்கி ஆகிய மூன்று மண்டிலங்களும் பரவெளி மண்டிலத்தோடு தொடர்புடையன.
ஞான வாசிட்டம்: உத்தாலகன் கதை:
“அந்தணன் றனதறி வெனுமன்ன மாநந்தமா நிலையோடை
வந்தமர்ந்தது சரற்கக னத்திலே வயங்குமா மதியென்ன
வுந்து காற்றிலாவிளக் கெனவோவியத் துருவெனத் திரையிலாச்
சிந்துவென்ன நீர்சுருக் கொண்டு பொழியலாச் சேண்முகிலென நின்றான்.”
246. அஞ்சு மடக்கி யறிவோ டிருந்தபின்
துஞ்சுவ தில்லை யுடம்பு.
அஞ்சு இந்திரிய சத்திகளையும் உணர்வாகிய அறிவுடன் இணைத்து நிற்கச் சீவன் சிவத்துடன் ஒன்றிவிடும். ஐம்பூதங்களின் சூக்குமசத்திகள்தான் ஐம்புலன்களுக்குச் சத்திகளாகும். அதற்கு மூல அக்கரங்கள் முறையே: அ, இ, உ, எ, ஒ ஆகும்.
247. தீயாக வுள்ளே தெளிவுற நோக்கினால்
மாயாது பின்னை யுடம்பு.
உந்திக்கமலத்தில் உந்தீ(உன்+தீ)யால் தெளிவாய் நோக்க, அறிவாகிய உணர்வுடன் ஒன்றும். உடல் நசிக்காது.
248. தானந்த மின்றித் தழலுற நோக்கிடில்
ஆனந்த மாகு முடம்பு.
தான் குறைவுறாது அக்கினி கலையையெழுப்பி உந்திக்கமலத்தில் எப்பொழுதும் அக்கினி நிரப்பி இருக்க உடல் ஆநந்திக்கும்.
249. ஒழிவின்றி நின்ற பொருளை யுணரில்
அழிவின்றி நிற்கு முடம்பு.
இடைவிடாது பார்வை சென்றவிடமெல்லாம் சிவத்தைக் காண உடல் நசிக்காது. (இளமை குன்றாது)
250. பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்திக்கில்
முற்று மழியா துடம்பு.
பற்றில்லாச் சிவத்தைச் சிந்திக்கத் தூல சூக்கும உடல்களுக்கு இளமை குன்றாது.
251. அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி
- 26. சிவயோக நிலை
முடிமிசை யோடி முயல்.
உந்திக் கமலத்தின் அடிப்பாகத்திலிருந்து உண்டாகும் வாயுவாகிய அபானனைத் திருவடிகளோடு செலுத்திப் பிறகு பிரணவ உச்சிக்குள் செலுத்திவிடு.
வாசிட்டம் : புசுண்டர் கதை :
“ஆடுகின்ற பிராண லயத்தருகு மேவியபான லயத்தரு –
குற்றுப்பிராணாபான
ணூடுபயில் சிற்பரத்தை யேத்துகின்றே நுற்றவபானன் –
றேற்றமொழிந்துநிற்க
நீடுபிராணனு மிறக்க மூக்கினுச்சிநேர் விசும்பிற் –
சிற்பரத்தை நீக்கமில்லேன்
நாடுமலமொன்று மறக்கலைகள்சூழ நாகர்தொழும் –
பதம் பெற்றே னல்லநோக்கால்.”
252. உண்ணாடி வாயு வதனையுட னிறப்பி
விண்ணோடு மெள்ள விடு.
சந்திர சம்பந்தமான அபானனை இன்னதென அறிந்து கொண்டு, உந்திக்கமலத்தில் கலக்க வைத்து, சிதாகாயத்தில் செல்லும்படி விடு. இக்குறளில், இரேசக தந்திரத்தைச் சொல்லிப் பின் பூரக ஆரம்பத்தையும் சொல்லுகிறார்.
வாசிட்டம்:
“குண்டலியெனுஞ் சீவசத்திமிக நல்லதாய் கூடிநிற்கு
மண்டுபிராணாபான வடிவமாதலிற் கீழ்மேல் வந்துபோகு
மிண்டற மேல்போகிலு மெல்லா மாய்ப்போ மீளினு மெல்லாமாய் மீளுந்
தண்டலிலாப்பு மானாகிச் சாமேவும் பிராணனுமிச் சத்திதானே.”
253. மெள்ள விரேசித்து மெய்விம்மிப் பூரித்துக்
கொள்ளுமின் கும்பங் குறித்து.
மிருதுவாக அபானனைப் பிராணனோடு கலக்கவைத்து, உடல் விதிர்விதிர்த்து, கலைகள் பெருத்து மேல் நோக்கும்படி செய்து, கும்பக நிலையடையும் சமயத்தை அறி.
மணிவாசகப் பெம்மான்:
“மெய்தானரும்பி விதிர்விதிர்த்துன் விரையார் கழற்கென் கைதான் தலைவைத்துக்கண்ணீர்ததும்பிவெதும்பியுள்ளம் பொய்தான் றவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றி யென்னுங் கைதானெகிழ விடேனுடையா என்னைக் கண்டுகொள்ளே.”
வாசிட்டம் :
இரேசகம் :
“மருவிதய விண்ணினுந் தன்னித யத்தூடே
வருத்தமறப் பிராணனன்கள் புறநோக் கெய்தல்
புரிவுறவுண் மேவுமிரே சகந்தா னாகும்.”
பூரகம்:
“விராவிந்த பிராணன் விடாதசைவாஞ்சத்தி
மேவியொழி யாதுலவு மேனியுள்ளே
திரமின்றிப் பிறத்தினும் முள்ளினுமெப்போதுந்
திரும்பாது மேற்போதல் செய்கையாம்.”
“மற்றையபானனு மசைவாஞ் சத்திமேவி
மாறாமலுலவு மகவாகியத்தி
லுற்றவுடலிற் கீழேயோடாநிற்கும் முறுநனவு
கனவிலு மிவ்வுயர் பிராணன்
முற்றுற மீள்வது நன்றாமறிந்தோர்க் கின்பமுழுதளிக்கு
மிதனியல்பை மொழியக் கேளாய
பெற்றபுறத் தீராறு விரன்மட்டோடும் பிராணன்
மீட்டுடலூறல் பூரகமாய்ப் பேசும்.”
கும்பகம்:
“புறநின்று சாலவு முள்ளடங்கவன்பு பொருந்தாம லபானனுடற் புகுதலெய்துந்
திறனென்று மதனையும் பூரகமாய்ச் செப்புந் தீரவபானனு மொளித்துப் பிராணந்தானு
மறவுமிதயத் தசைவற்றிருக்கு மெம்மட்டம் மட்டுங் கும்பக மரமவத்தையாகும்
இறவறுநல் யோகியரீ தனுபவிப்ப ரெக்கலையுங் கற்றுணர்ந்த வேதத்தோனே.”
254. இரேசக முப்பத் திரண்டது மாத்திரை
பூரகம் பத்தாறு புகும்.
இரேசகத்திற்கு வேண்டிய கால அளவு முப்பத்தியிரண்டு மாத்திரை. பூரகத்திற்கு வேண்டிய கால அளவு பதினாறு மாத்திரை.
“கண்ணிமைப் பொழுதும், கைநொடிப்பொழுதும் மாத்திரைக்களவாம்.” – பவணந்தி
திருமந்திரம்:
“மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்
பாலாமி ரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே
யாலால முண்டா னருள்பெற லாமே.”
மேல் = தலை, கண், காது முதலியன.
கீழ் = கால், பெருவிரல் முதலியன.
நடு = நெஞ்சம், கொப்பூழ் முதலியன.
மேலும், நடுவும் நிறையுமாறு உயிர்ப்பை உள்ளிழுக்க வேண்டும். இதுவே பூரித்தல். அவ்வாறு எடுத்ததைத் தக்க அளவுக்கு வெளிவிடுதல் வேண்டும் இதுவே இரேசகம். பூரித்தலுக்கும் இரேசகத்துக்கும் நடுவே எடுத்ததைத் தடுத்து நிறுத்துவதே கும்பகம். இங்ஙனம் செய்வதுவே வளிப்பயிற்சி. இதை இடையறாது செய்து வந்தால் ஆலகால விடத்தை (மாலால் விழையும் மேலாம் பிழை) உண்டவன் அருள் கிட்டும்.
“ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.”
வாமம் = இடகலை.
ஈரெட்டு = பதினாறு மாத்திரை, அறுபத்தி நான்கு மாத்திரை.
மாறுதல் = மடை மாறுதல். சிவசிவ என்பது நான்கு மாத்திரை.
“சிவசிவ” எனும் மந்திரமே செந்தமிழ்த் திருமாமறை முடிபு.
ஏறுதல் – பூரகம்:
சிவசிவ என நான்குமுறை கணித்து(இடது நாசியை வலது கையின் மோதிர விரல், சுண்டு விரல்களால் அடைத்து) வலது நாசித்துவாரத்தினால் தூய மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்.
ஆறுதல் – கும்பகம்:
சிவசிவ எனப் பதினாறுமுறை கணித்து உள்ளிழுத்த மூச்சை மூடி உள்ளே நிறுத்தல்.
ஊறுதல் – இரேசகம்:
உள் நிறுத்திய மூச்சை சிவசிவ என எட்டுமுறை கணித்து வல நாசித் துளை வழியே மெதுவாக வெளியில் விடுவது.
இவ்வாறே, மடைமாற்றி இடநாசி வழியாகவும் செய்தல் வேண்டும். இங்ஙனம் இயன்ற அளவு மாறிமாறிப் பயிலல் வேண்டும்.
இடகலை,பிங்கலை ஆகிய இரு கலைகளினாலும் பூரக, கும்ப, இரேசகத்தை மாற்றி மாற்றிச் செய்தால் மூலக் குகையைத் திறந்து உட்செல்லலாம்.
இட பிங்கலைகள் என்பது சூரியன், சந்திரன் என்னும் இரு திருவடிகளை அடக்கி வைத்திருக்கும் இட, வலக் கண்களே. இங்கு இரேசித்தல் என்பது ஒன்றுசேர்தலாம். சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்ந்தால் காருவா என்னும் அமாவாசையாகும். அச்சமயமே ஞான வினைகளைத் தொடங்கும் காலம்.
வாசிட்டம் – புசுண்டர் கதை :
“நீ யிங்கெதிர்காணும் பூதவுடலாம் மனைநடுவே பொருந்துமிதய புண்டரிகச் சீதமலரில் உள்ளிரண்டு செறியும்பிராண நபானனென்.”
திருமந்திரம் :
“விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணென்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுறுக்கயொ ரொப்பிலா ஆனந்தக
கண்ணின்று காட்டிக்களிம் பறுத்தானே.”
தலைக்காவல் = சிறந்தகாவல், தலைக்குக் காவல். களிம்பு = ஆணவமலம்.
ஆருயிர்களை ஆட்கொள்ள வேண்டிய அருள்வினைக்கு ஈடாக விண்ணாகிய சிவ உலகத்திலிருந்து நில உலகத்திற்கு இறங்கிச் சிவகுருவாக வந்தருளினான். மிகவும் குளிர்ச்சி பொருந்திய தாளை(திருவடி)த் தலையில் முன்புறம் அமைத்து அருளினான். அவனே உள்நின்று நெகிழச் செய்து ஒப்பிலாப் பேரின்பக் கண்ணாகிய அகக்கண் காட்டி, அன்பு முதிர்ச்சியால் அருளை வளரச் செய்து களிம்பாம் ஆணவமலத்தை அறுத்தான்.
அமாவாசை காலத்தில், நாம் வெளிப்படையாகச் செய்யும் வினைகள் எல்லாவற்றையும் உள்முகத்தில் அமைத்துப் பார்க்க மெய் விளங்கும்.
255. கும்பக நாலோ டறுபது மாத்திரை
தம்பித் திடுவது தான்.
கும்பகமாவது, உந்திக்கமலத்தில் அறுபத்தினாலு மாத்திரையளவு, பிராணாபானனை அசைவற்ற நிலையில் நிறுத்துவதே.
256. முன்ன மிரேசி முயலுபின் பூரகம்
பின்னது கும்பம் பிடி.
இரேசகத்தில் தொடங்கிப் பூரகத்தைச் செய்து இறுதியில் கும்பகத்தில் நிறைவுசெய். உலகத்தார் உள்வாங்கி வெளிவிடும் கழிவுப் பொருளாகிய வாயுவால் இம்முறையில் செய்யப் பலனில்லை.
257. ஈரைந் தெழுபத்தீ ராயிர நாடியுஞ்
சேருமின் வாயுச் செயல்.
இரு வாயுக்களான, பிராணாபான வாயுக்கள், தன் வினையினால் பஞ்சேந்திரியங்களையும், எழுபத்தியீராயிரம் நாடிநரம்புகளையும் ஒன்றாக்கிவிடும்.
வாசிட்டம்:
“சீமானாஞ் சிகித்துவசன் கதைக்கிடையே வினவுதலாற் செப்புகின்றேன்
கோமானே பிராணாதிபவனத்தின் பரிசயத்தின் கொள்கையாகிச்
சாமாறில்லாப்பயன் செய்நெறிகேட்பாய் வாதனைகள் சற்றுமின்றிப்
போமாறு செய்துளத்தி லிதற்கடுத்தவாதனையே பொருந்திநின்று.”
258. வாசலீ ரைந்து மயங்கிய வாயுவை
ஈசன்றன் வாசலி லேற்று.
கண்ணிரண்டு, காதிரண்டு, மூக்கிரண்டு, வாய் ஒன்று ஆகிய ஏழு வாசல்களின் வழியாய் நுழையமாட்டாது திகைக்கும் வாயுவைச் சிவன் வெளிப்படும் பிரமரந்திரமாகிய சுழுமுனைத் துளையினுள் நுழை.
திருமந்திரம்:
“ஆரிய னல்லன் குதிரை யிரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறிவா ரில்லை
கூரிய நாதன் குருவினருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.”
ஆரியன் = பெருமை மிக்க மனம். விரகு = முறைமை.
கூரிய = நுண்ணறிவுள்ள. வாரி = சேர்த்து.
குதிரை இரண்டு = இடகலை, பிங்கலை.
இடகலை, பிங்கலை ஆகிய இரு குதிரைகளைச் (உயிர்ப்பு) செலுத்தும் ஆரியனாகிய மனம் நல்லவனே. அவ்வுயிர்ப்பினை விடுத்தலும் எடுத்தலும் போலவே தடுத்தலாம் வீசிப் பிடிக்கும் வழி அறியாது மயங்குகிறார்கள். திருவருள் அருளால் நன்னெறி ஒழுக சிவகுரு எழுந்து வந்து ஆட்கொள்ளுவார். அத்திருவருள் கிட்டியபின்தான் குதிரையாம் உயிர்ப்பு வயப்படும்.
“மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்
பாலாமி ரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே
யாலால முண்டா னருள்பெற லாமே.”
மேல் = தலை, கண், காது முதலியன.
கீழ் = கால், பெருவிரல் முதலியன.
நடு = நெஞ்சம், கொப்பூழ் முதலியன.
மேலும், நடுவும் நிறையுமாறு உயிர்ப்பை உள்ளிழுக்க வேண்டும். இதுவே பூரித்தல். அவ்வாறு எடுத்ததைத் தக்க அளவுக்கு வெளிவிடுதல் வேண்டும் இதுவே இரேசகம். பூரித்தலுக்கும் இரேசகத்துக்கும் நடுவே எடுத்ததைத் தடுத்து நிறுத்துவதே கும்பகம். இங்ஙனம் செய்வதுவே வளிப்பயிற்சி. இதை இடையறாது செய்து வந்தால் ஆலகால விடத்தை (மாலால் விழையும் மேலாம் பிழை) உண்டவன் அருள் கிட்டும்.
259. தயாவினில் வாயு வலத்தி லியங்கில்
தியான சமாதிகள் செய்.
அருளை வீசும் நாபிக்கமலத்திலிருந்து உண்டாகும் பிராணாபான வாயுக்கள் பிங்கலையில் பாயும்போது, தாரணை, தியான சமாதிகளைச் செய்.
திருமந்திரம்:
“நடுவுநில் லாமல் லிடம்வல மோடி
அடுகின்ற வாயுவை யந்தணன் கூடி
யிடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.”
அந்தணன் = சிவன். நடுவு = சுழுமுனை.
பணி = குண்டலி. தீபம் = உயிர்ப்பு அடங்கும் சோதி.
உயிர்ப்பு ஓட்டம் நடுநாடியாம் சுழுமுனையில் நிற்க வேண்டும். அப்படி நில்லாது இடம் வலம் ஓடினால் இறப்பு நேரும். அவ்வுயிர்ப்பினை சிவன் திருவடியில்மிடையறாது நிறுத்த மூலச்சத்தி எழும். திருவருள் ஒளி ஆவியுடன் விளங்கும்.
“மாறி வருமிரு பான்மதி வெய்யவ
னேறி யிழியு மிடைபிங் கலையிடை
ஊறு முயிர்நடு வேயுயி ருக்கிரந்
தேறி யறிமின் தெரிந்து தெளிந்தே.”
உயிர்ப்பின் ஓட்டமே சரம்.
அது, வெள்ளி, திங்கள் கிழமைகளில் இடமூக்கு வழியாகச் செல்லுதல் வேண்டும்.
சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் வலமூக்கின்வழி செல்லுதல் வேண்டும்.
வியாழக் கிழமைக்கு, வளர்பிறையில் இடமூக்கும், தேய்பிறையில் வலமூக்குமாக ஓடுதல் வேண்டும்.
திங்கட் கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் உயிர்ப்பு ஓட்டம் நடக்கவேண்டிய முறைக்கு மாறாக நடந்து ஏறி இறங்குவதும், நடுநாடியில் புகுவதும் கண்டால் உயிருக்கு இடர் வரும் எனத் தெளிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
“உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரு
முதித்தது வேமிக வோடிடு மாகில்
உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே.”
அதிர்த்து = சிதறி. இராசி = ஒழுங்கு.
மேற்கூறியபடி அவ்வக் கிழமைகட்குக் கூறிய முறைப்படி உயிர்ப்பு ஓடும்போது சிதறி ஓடினால் இறப்பு நெருங்குமென அஞ்சு. அவ்வுயிர்ப்பு அளவில்லாமல் ஓடினால் உடன் இறப்பராம்.
260. ஆதியா மூலமறிந் தஞ்செழுத் தினைப்
பேதியா தோது பிணை.
யோகசாதனைக்கு மூலமாயுள்ள நாபிக் கமலத்தை அறிந்து, பஞ்சேந்திரிய சத்திகளை வேறுபடாது சேர்த்துவிடு.
பிரணவத்தோடு பஞ்சேந்திரிய சக்திகளைச் சேர்ப்பதே “ஓம் நமசிவய” என்னும் மந்திர உபதேசத்தின் கருத்தாம்.
261. தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந்
- 3. தன்பால்
- 27. ஞான நிலை
துற்பன மஞ்சை யுரை.
தற்புருடம் = பிந்துகலை; மா = பெருமைபொருந்திய;
அஞ்சை = பஞ்சேந்திரியங்கள்; உற்பனம் = தோன்றும்;
உரை = கலக்கிவை ( தயிர் எடுக்க உரை ஊற்றுதல்).
பிந்து கலையின் பெருமை பொருந்திய முகத்தில் பார்வையை மட்டும் வைத்து அதை நிறுத்தி, தோன்றும் பஞ்சேந்திரிய சக்திகளைக் கலக்கவை.
திருமந்திரம்:
“ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப் பலகோடி களத்தினா
லூழ்கொண்ட மந்திரந் தன்னா லொடுங்கே.”
சனவேதசத்தி = திரோதாயி.
ஊழ்கொண்ட மந்திரம் = அசபா மந்திரம்.
உயிர்களை நன்னெறிப்படுத்த உடன் உறைந்து நடத்துவிக்கும் மறைப்பாற்றலினிடத்து அவ்வாற்றல் வனப்பாற்றலாக மாறும்படி அவ்வுயிர்கள் அன்பு செய்தால், நெல்வித்து ஒன்று பல்லாயிரக் கணக்காகப் பெருகுதல்போல் மீண்டும் மீண்டும் வினைக்கீடாகப் பெருகிவரும் உடல்களின் எல்லை முடிவு எய்தும். திருவைந்தெழுத்தின் முதலெழுத்தாம் “சி”கரமே பேசாவெழுத்தாம். அதன்கண் உயிர் ஒடுங்குதல் முறையாம். இதுவே அசபையாம்.
“திறத்திறம் விந்து திகழு மகார
முறப்பற வேநினந் தோதுஞ் சகார
மறிப்பது மந்திர மன்னிய நாத
மறப்பற யோகிக் கறநெறி யாமே.”
உறப்பு = செறிவு.
விந்துவாகிய தூமாயையிலிருந்து தோன்றும் அகரமும், அதனுடன் செறிவறவே நினைந்து ஓதும் சகரமும் சேர்ந்ததே “அச”(அசபை). மீண்டும் மீண்டும் இடையறாது அவ்வொலியை மறப்பின்றி நினைவில் நிறுத்தி நிற்றலே அகத் தவம் செய்பவருக்கு அறநெறியாம்.
அண்டத்தில், சிவமுகங்கள் ஐந்து; பிண்டத்திலும் ஐந்து;
1.தற்புருடம் – பிந்து கலையினுச்சி
2.ஈசானியம் – சூரியகலையுச்சி(ஈசானிய திக்கிலும்)
3.வாமனம் – சந்திர கலையிலும்
4.அகோரம் – அபானனுச்சியில்
5.சத்தியோசாதம் – நாதபிந்து சேருமிடத்தில்
262. தற்புருட மாமுகமேற் றாரகை தன்மேலே
நிற்பது பேரொளி நில்.
பிந்துகலை ஊர்த்துவமுகத்துக்கு எழும்பும்போது அதனுச்சியில் நற்சேத்திரங்களும், அதன்மேல் பேரொளியுமுண்டு. கருத்தால் அதைக் காண்.
திருமந்திரம்:
“மேலா நிலத்தெழு விந்துவும் நாதமுங்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமிர்துண்டு பற்றப் பற்றினால்
மாலா னதுமாள மாளுமவ் விந்துவே.”
மேலா நிலம் = தலை. கோலால் = காலாம் காற்றால்.
குறி = ஞானாசிரியன் குறிப்பிட்டபடி.
மாலானது = இருளாம் மருளானது.
மாளும் = கட்டுப்படும்.
மேல் நிலமாம் தலையில் உதிக்கும் விந்துவையும் நாதத்தையும் காலால் நடத்திக் குறிக்குள்ளே சென்றால் ஊறும் அமுதத்தை உண்டு, பற்ற வேண்டியதைப் பற்றினால் இருளாகிய மருள் கட்டுக்குள் வரும்.
263. ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே
பேதியா தோது பிணை.
பிந்துகலையை ஊர்த்துவமுகத்துக்குக் கொண்டுசெல்லும் போது, திருவடிகளை ஒன்றோடொன்று கலக்கச்செய்து (சூரிய சந்திர கலைகளைக் கலந்து), இட பிங் கலைகளோடு வேறுபடாது கலந்து பிரணவ உச்சியில் கொண்டு சேர்.
திருமந்திரம்:
“விந்துவென் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய வங்கியி னாலே நயந்தெரித்
தந்தமில் பானு வதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.”
விண்டேன் இப்பொழுதே “வெட்டாத சக்கரமே திருவடி.”
வீசம் = வித்து.
பானுவதி கண்டம் = கதிரவன் இருக்குமிடம் – வலக்கண்(வலமூக்கு).
சந்திரன் சார்பு = திங்கள் இருக்குமிடம் – இடக்கண் (இடமூக்கு).
விந்துவாம் உயிர்வாழ் வித்துள்ள மூலத்தே விளங்கும் மூல அனலால் செம்மையுறச் செய்து கொப்பூழ் முதல் நெஞ்சம் வரையுள்ள கதிரவன் மண்டிலத்துக்கு வலப்பால் நாடிவழி ஏற்றி, அதற்குமேல் நெஞ்சம் முதல் நெற்றிவரை உள்ள திங்கள் மண்டிலத்துக்கு இடப்பால் நாடிவழி ஏற்றித் திங்கள் மண்டிலத்தில் அடைக்கலம் புகத் தண்மையும் வெண்மையும் மிக்க மெய்யமுதம் கிட்டும்.
264. கொழுந்துறு வன்னி கொழுவுற வொவ்வில்
எழுந்தா ரகையா மிது.
அக்கினியை கொம்பினால் கிளரும்போது, பொறி நட்சத்திரம்போல் கிளம்பும். அதுபோல, கொழுகொம்பானது பிரம்மத் தானத்தில் பொருந்தி இருக்கச் செய்யின் அக்கினிச் சுவாலை கொழுந்து விட்டெரியும். அப்பொழுது, பிந்துகலை நற்சேத்திர உருவங்களாகக் கருத்தில் தெரியும்.
“கொழுகொம்பு” – ஞானாசிரியன் கற்பிக்கும் முதல் தந்திரம்.
திருமந்திரம்:
“தாரகை யாகச் சமைந்தது சக்கரந்
தாரகை மேலோர் தழைத்தது பேரொளி
தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.”
பேரொளி = சிவ ஒளி.
தரகை கண்டது = நட்சத்திர வடிவான அக்கரம் காணப்பட்டது.
சக்கரம் நட்சத்திர வடிவாக அமைக்கப்பட்டது. அவ் விண்மீன்களுக்கு ஒளி கொடுத்துக்கொண்டு செழித்த சிவ ஒளி மேலாக நிற்கிறது. இந்த நட்சத்திரச் சக்கரத்தில் சந்திரன், சூரியன் வர நட்சத்திர வடிவான எழுத்து முறையாகக் காணப்பட்டது.
“நின்றிடு விந்துவென் றுள்ள வெழுத்தெலாம்
நின்றிடு நாதமு மோங்கு மெழுத்துடன்
நின்றிடு மப்பதி யவ்வெழுத் தேவரில்
நின்றிடு மப்புறந் தாரகை யானதே.”
விந்து முதலாகக் கூறப்படும் குறியெழுத்துக்களெல்லாம் நாதம் உள்ளிருந்து ஒலிப்பிக்க ஒலிக்கும். அந்த அந்த மனைக்குரிய எழுத்துக்கள் வந்தால் அங்கே நிற்கும். அதன்பின் தரகை எனும் நாள்கள்(நற்சேத்திரங்களாம் நட்சத்திரங்கள்) நிற்கும். மூலமுதல் நிலைகள் ஆறுக்கும் மனைகள் இரண்டிரண்டாம்.
265. மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே
குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு.
மறித்து – தடுத்து; கொளுவிடு – சேர்த்துவிடு;
சீயை – பிந்துகலை;
சூரிய, சந்திர கலைகளின் கூட்டுறவால் ஏற்படும் அக்கினி மத்தியில் குறிவைத்து பிந்துகலையைப் பாய்ச்சு.
திருமந்திரம்:
“வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய வகண்டமு மண்டமும் பாரிப்பக்
காயவைம் பூதமுங் காரிய மாயையில்
ஆயிட விந்து வகம்புற மாகுமே.”
காயஐம்பூதம் = ஆகாய முதலாகிய ஐம்பூதங்கள்.
காரிய மாயை = விந்துவின் விகாரமான அசுத்த மாயை.
பெருமையுடைய விந்துவின் ஆற்றலால் அண்டமும் அகண்டமும் ஆக்கப்பட்டன. ஆகாய முதலிய ஐம்பூதம் உள்ளிட்ட முப்பத்தொரு மெய்களும் தூமாயையாகிய விந்துவின் காரியம்; பால் தயிரானது போன்ற திரிபு. இதுவே தூமாயையின் கீழ்ப்பகுதியாகிய தூவாமாயை.
266. காலுந் தலையு மறிந்து கலந்திடில்
சாலவும் நல்லது தான்.
காலாகிய பிராணாபான வாயுக்களையும், தலையாகிய பிரணவ வுச்சியையும் கலந்து, அங்கு பிந்துகலையை இட்டால் மிகவும் நல்லது.
திருமந்திரம்:
“இருந்தனள் தன்முக மாறொடு நாலாய்
பரந்தன வாயு திசைதிசை தோறுங்
குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி
நடந்தது தேறல் அதோமுக மம்பே.”
ஈங்கு முகத்தில் ஆறொடு நாலாய், அதாவது (6+4=10) பத்தாய் (10=ய) இருக்கும் தானத்தையறிய வழிபிறக்கும்.
வாயு = உயிர்ப்பு. அதோமுகம் = கீழ்முகம்.
திசை பத்து. அம்மையும் பத்து முகங்களுடன் வீற்றுள்ளாள். அம்மையின் உயிர்ப்பே ஆருயிர்க்குக் காற்றாய் வழங்குதலால் காற்றாய் எங்கும் பரவி இருந்தனள். அருள் ஒளி அத்திருமுகத்தில் ஒருங்கு திரண்டு பொலிந்து விளங்கிற்று. அவொளியின் ஆணையால் உயிர் அம்புபோல் விரைந்து இன்பம் பொழியும் கீழ்முகம் நோக்கி நடந்தது.
267. பொன்னொடு வெள்ளியி ரண்டும் பொருந்திடில்
அன்னவன் றாளதுவே யாம்.
பொன்னாகிய நாதத்துடன் வெள்ளியாகிய பிந்து கலந்து பொருந்தினால் அதுவே சிவத்தின் திருவடியாகிய “ய” ஆகும்.
திருவடிகள் பொருந்த நாதமும் பிந்துவும் சேர்ந்து நாதபிந்துக்களாகும்.
திருமந்திரம்:
“அடிசார லாமண்ணல் பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த வின்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.”
தூய நெறியில் வாழும் அடியார்கள் சிவத் திருவடி அடைவர். பண்டைப் பழவடியாராகிய முனிவர்கள் சிவத் திருவடி இரண்டையும் தம் முடிக்கு அணியாய் அணிந்தனர். வழிவழியாக இன்ப நிறைவினராகிய அடியாருள் இணங்கி வாழும் இன்ப வெள்ளத்துள் மூழ்குதலே நன்னெறிச் செல்வர்களின் தூநெறியாம்.
268. நின்ற வெழுத்துட னில்லா வெழுத்தினை
யொன்றுவிக் கிலொன் றேயுள.
நின்றவெழுத்து = நிறையவும் குறையவுமிலாது எப்பொழுதும் பன்னிரண்டு கலைகளுடன் கூடிய சூரிய கலை;
நில்லாவெழுத்து = வளர்ந்து தேய்ந்து நின்ற சந்திர கலை;
நின்றவெழுத்தும் நில்லாவெழுத்தும் கூடினால், இரண்டும் ஒப்பிலாத ஒன்றாகிய சிவமாகிவிடும்.
269. பேசா வெழுத்துடன் பேசுமெழுத்துறில்
ஆசான் பரநந்தி யாம்.
ஒலியெழும்பாத (பேசாவெழுத்து) பிரணவத்துடன், நாவெழுந்து ஒலிக்கும் சபசத்தத்துடன் பொருந்த, நந்தியாகிய (நம்+தீ) சிவம் வெளியுற்று, குருவாய் நின்று விளக்கும்.
திருமந்திரம்:
“சத்தமுஞ் சத்த மனமும் மனக்கருத்
தொத்தறி கின்ற விடமும் அறிகிலர்
மெய்த்தறி கின்ற விடமறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடமும் அவ்விடந் தானே.”
கண், நாக்கு, மூக்கு, செவி, மெய் என்னும் அறிதற் கருவிகளைந்தும் இங்கே சத்தமெனப்பட்டது. அந்த ஓசையினை வெளிப்படுத்தத் துணை புரியும் மனமும், அம் மனக்கருத்து ஒத்து அறிகின்ற புலன்களும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்ந்து சிவனருளால் இயங்குகின்றன எனும் உண்மையினை அறிய வல்லார்க்கு அவ்வறிவாகவே சிவனிருப்பான்.
270. அழியா வுயிரை யவனுடன் வைக்கில்
பழியான தொன்றில்லை பார்.
பிந்துவிலிருந்து கலையைப் பிரித்து ஓங்காரவுச்சிக்குள் ஊசித்தமர் வழியாகச் செலுத்திவிட்டால், விந்தடங்கி, ஏமன் வருங்காலை, சுத்த சீவப் பிரயாணம் நடைபெறும். (நல்ல சைவச் சாவு = விந்தொழுகாச் சாவு). இல்லையெனில், விந்தொழுகி, நாறி, நாற்றச் சாவு வரும்; அப்போது, மற்றவர்கள், “யோனியாசையால் விந்தொழுகிச் செத்தான்” என்று பழி சுமத்துவர்.
திருமந்திரம்:
“விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்
அந்த வழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாசமும் நாதத்தாற் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.”
நந்திய = மிகுந்த. அழிவு = விரயம் (வெளிச்செல்லல்).
எண்பது துளிச் செந்நீர்(அரத்தம்) வெண்ணீரின் ஒரு துளியாம். எண்பது வெண்ணீர்த் துளியே ஒரு முழுத்துளி விந்துவாம். இங்ஙனம் துளித்துளியாய்க் கூடி விளையும் விளைவும், விளந்து முற்றி எய்தும் பயனும், உணந்து அடங்கல் வேண்டும். விந்து விரயம் தடுக்கப்படில் நீண்ட காலம் வாழலாம். அவ்வாறின்றி கலவியின்பமே பெரிதென நினைந்து வாழ்பவரின் வாழ்நாள் குறைவே. விந்து அடங்கப் பேராக்கம் உண்டாகும். இல்லையேல் பெரும்போக்கு ஏற்படும். நாதத்தால் ஏற்படும் விந்துவின் சிறப்பை உணர்வோருக்கு விந்து அடங்கி வெற்றி உண்டாகும்.
“வித்திடு வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்கன்றி மிக்கோ ரறிவில்லை
வித்தினில் வித்தை விதற வுணர்வரேல்
மத்தி லிருந்ததோர் மாங்கனி யாமே.”
விது + அற = விதற. விது = அசைவாம் சலனம்.
மாங்கனி = சிவம்.
உலகியலில் நிலத்தில் வித்து போட்டால்தான் விளவு. வித்து இடுவோருக்கே சிறப்புடைய அறிவு உண்டு. அதுபோலக் கரு இடுவாருக்கும் அனத்தும் உள்ளன. விந்து மயையாம் தூமாயையிலிருந்து கருமுதலாம் விந்து உண்டாகும். அவ்விந்துவிலிருந்து கிட்டும் உயிர் வித்தை அசைவின்றி இருந்து உணர்ந்தால் தயிர் கடைய உதவும் மத்து போல விளங்கித் தோன்றும். அம்மத்தின் உள்ளே சிவன்(மாங்கனி) தோன்றுவான்.
“விந்துவும் நாதமும் மேவக் கனல்மூல
வந்த வனன்மயிர்க் கால்தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவமக மாகவே
விந்துவு மாளுமெய்க் காயத்தில் வித்திலே.”
வித்து = காரணம். மாளுதல் = கட்டுப்படுதல்.
கனல்மூல = மூலக்கனல்.
விந்துவும் நாதமும் நடுநாடி வழிச்சென்று உடலில் சார மூலத்தே எழும் கனல் மயிர்த்துளை தோறும் நிலைபெறும்படி நெஞ்சம் பயிற்சியால் உலகியலில் உழலாது; இடையறாது “சிவசிவ” என எண்ணிக் கொண்டிருப்பவர் சிவமாவர். இம்முறையால் விந்து தூய்மையாகிக் கட்டுக்குள் வரும். இதுவே உடல் நிலைக்கு வித்தாகும்.271. பிறந்திட மாலிடம் பேரா திருப்பின்
- 28. ஞானம் பிரியாமை
இறந்திடம் வன்னி யிடம்.
ஞானவினைக்கு வேண்டிய தத்துவங்கள் வெளிப்படுமிடம், திருமால் வாழும் மணிபூரகமாகிய உந்திக் கமலமே. அவ்விடத்தைத் திறக்காமலிருப்பின், நாம் இறந்தபின் சேரவேண்டியது வன்னியாகிய அக்கினியிடமே.
272. சாகா திருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு.
இறவாது தடுக்கும் பொருள்களின் இருப்பிடமே மவுனமாகிய நாபிக்கமலம்தான். அங்கே, நோக்கைக் கருத்துடன் இணைத்துச் சலனமின்றி இரு. உந்திக்கமலம் திறப்பதற்கு முந்தி தோற்றாமல் அதற்குச் சம்பந்தமில்லாத வினையினால் திறந்து எல்லாவற்றையும் தோற்றுவிப்பதால் மவுனம் எனப் பெயர் பெற்றது.
273. வெளியில் விளைந்த விளைவின் கனிதான்
ஒளியி லொளியா யுறும்.
அண்டத்திலுண்டான கனியாகிய அன்னமே, மூலாக்கினியில் கலந்து வெண்ணிற ஒளியாய் நிற்கும்.
274. மறவா நினையா மவுனத் திருக்கில்
பிறவா ரிறவார் பினை.
பினை = பின்னர்
நினைப்பு மறப்பற்று மவுன நிலையில் ஞானவினை ஆற்றியவனுக்கு பிறப்பு, இறப்பு கிடையாது.
275. குருவாம் பரநந்தி கூடல் குறித்தாங்
கிருபோது நீங்கா திரு.
உந்திக்கமலத்தில், நந்தி குருவாம் சிவம் உதிக்குமட்டும் மவுனத்தில் நிலைத்து நில்.
276. சுந்திரச் சோதி துலங்கு மிடமது
மந்திரச் சக்கரமு மாம்.
சக்கரமாகிய திருவடிகளைக் கண்டு அதனால் புரியும் ஞானவினையால் மந்திரமாகிய பிரணவம் வெளிப்படும். அதன் மத்தியில் உள்ள உந்திக்கலமாகிய மவுனத்தில் இருந்து வெளிவரும் அழகிய சோதியே சிவம்.
277. தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது
பாராப் பராபரம் பார்.
பர, அபர வித்தைகள் காணாதோருக்குத் சொல்ல முடியாத தூரமாயும், கண்டவருக்கு வெகு அருகிலும் இருக்கும்.
278. ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன்
நீரொளி மீது நிலை.
குருநந்தி எனும் சிவன், மேலும் கீழுமாய் இருக்கும் நாத ஒளியையும், பிந்து ஒளியையும், இதுதான் எனக் குறிப்பாலுணர்ந்து, அதன் மத்தியில் உள்ள நீர்மண்டலமாகிய உந்திக்கமலத்திலிருந்து ஒளி வெளிப்படும் இடமே மவுனமெனச் சொன்னான்.
திருமந்திரம்:
“மேலொளி கீழதன் மேவிய மாருதம்
பாரொளி யங்கி பரந்தொளி யாகாசம்
நீரொளி செய்து நெடுவிசும் பொன்றிலும்
மேலொளி யைந்து மொருங்கொளி யாமே.”
மேலொளி = ஆகாயம். மாருதம் = காற்று.
பார் ஒளி = மண்.
ஐம்பூதங்களில் மேலாக நிற்கும் ஒளி ஆகாயம். அதைத் தடவி வரும் ஒளிப்பொருள் காற்று. காற்றைச் சார்ந்து ஒளி வீசுவது தீ. எல்லா இடத்தும் பரந்துள்ளது நிலம். அதன்மேல் விளங்குவது நீர். மேற்கூரிய ஐந்து ஒளிகளும் ஒருங்கிணைந்து ஒறே ஒளியாகிய சிவவொளியாய்த் திகழ்கிறது.
279. அந்தமு மாதியு மில்லா வரும்பொருள்
சுந்தர ஞானச் சுடர்.
முதலும் முடிவுமற்ற அருமைப்பொருளாம் கருத்தில் நினைவே ஞானச் சுடராம்.
280. இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து
பதிவைத் தனன்குரு பார்.
இதுதான் முத்திக்கு வழியென ஏட்டில் வரைந்து பதியாகிய இறைவன் குரு (இருள்நீக்குபவன்)வை நம்கபாலக் குகையில் வைத்தான்; அதைப் பார்.281. செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ்
- 29. மெய்நெறி
சொல்லு மவுனத் தொழில்.
உந்திக்கமலத்தில் செய்யும் ஞானவினையினால் முக்காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.
திருமந்திரம்:
“விளங்கிடும் வாயுவை மேலெழ வுன்னி
நலங்கிடுங் கண்டத்து நாபியி னுள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே.”
கும்பிச்சு = நிறைந்து. நலங்கிடுதல் = ஒடுங்குதல். ஒடுங்கும் கழுத்திலும் கொப்பூழிலும் உள்ள உயிர்ப்பை மேல்நோக்கி எழுமாறு நினைந்து கழுத்தைச் சுருக்கிச் சாலந்திரை முத்திரை, ஒட்டியாணப் பிணிப்பு முத்திரை ஆகியவைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்ய சாலந்திரையால் மெய்யமிழ்து கீழ் ஒழுகுதல் தடைப்படும். ஒட்டியாணப் பிணிப்பால் உயிர்ப்பு மடங்கும். நெற்றி மண்டிலத்தே அமிழ்து நிறையும்.
“சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்
சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ்
சொல்லலு மாகு மிவையஞ்சுங் கூடிடிற்
சொல்லலு மாந்தூர தரிசனந் தானே.”
மாகம் = பரவெளியாம் விண். தூரம் = பரவெளி. நிலம், நீர், தீ, வளி, விண் ஆகிய ஐம்பூதங்களும் உடலில் ஒருமுகப்பட்டுக் கூடினால் உயிர்ப்பு கைவயப்படும். உயிர்ப்பு வயப்பட பரவெளி முழுமுதற் சிவத்தை அருட்கண்ணால் கண்டு கும்பிடலாம்.
“தூர தரிசனஞ் சொல்லுவன் காணலாங்
காராருங் கண்ணி கடைஞான முட்பெய்திட்
டேராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்
பாரா ருலகம் பகன்முன்ன தாமே.”
ஆருலகம் = உலகியல் துய்ப்பு. கடைஞானம் = முடிந்த ஞானம். பரவெளியில் சிவத்தை வணங்குவதைச் சொல்வேன். மழைபோன்ற கண்ணையுடைய திருவருளால் முடிஞானம் எனப்படும் அறிவில் அறிவாம் (ஞானத்தில் ஞானமாம்) திருவடி உணர்வை உணர்வில் கொண்டால், அவ்வுணர்வு உள்ளத்தே அழகு மிக்க ஒளிவடிவாகும். உள்ளம் அழகு மிக்க உள்ளமாகும். இவ்வுள்ளம் அமைந்தோர்க்கு உலகும் உலகியல் துய்ப்பும் பகலில் கணப்படும் பொருள்போல் தெள்ளிதே விளங்கும்.
தூரதெரிசனம் முக்காலத்தையும் உணர்த்தி விடும்.
282. பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து
துஞ்சாது ஞானச் சுடர்.
மூலாக்கினியை எழுப்பி அறிவுடன் இணைத்துவிட்டால், பஞ்சில் பட்ட நெருப்பு போல அறிவுச் சுடரானது பரவி, மறையாமலிருந்து அவியாது ஒளிவீசிக்கொண்டிருக்கும்.
283. இமைப்பிற் பரந்தங் கொடுங்கு மின்போல்
நமக்குட் சிவன்செயல் நாடு.
இமைகொட்டும் நேரத்தில் உதித்துப்பரவி, உதித்த இடத்திலேயே மறையும் மின்னலைப்போல், சிவன் செயலும் நம்முள் தோன்றி மறையும்.
284. குவித்து மனத்தைக் குவித்துள்ளே யோங்கில்
செவித்துப் பெறுவ தெவன்.
ஒரே சிந்தையுடன், மனதில் நினைப்பற்று பிரணவத்தின் மத்திய பாகத்தில் எழும் கலைகளைக் கூட்டி மேலேற்றி நிற்க அதைவிட மேலானதில்லை.
285. காலுந் தலையு மொன்றாகக் கலந்திடம்
நாலா நிலையென நாடு.
காலாகிய பிராணாபான வாயுக்களும், தலையாகிய பிரணவ உச்சியும் ஒன்றாய்க் கலந்தவிடம் நாலாம் நிலையாகிய துரியம் ஆகும்.
திருமந்திரம்:
“துரிய மிருப்பதுஞ் சாக்கிரத் துள்ளே
நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
துரிய மிறந்திடஞ் சொல்லவொண் ணாதே.”
துரியாதீதம் = துரியம் இறந்த இடம்; அப்பால். நரிகள் பதினாலு = கன்மேந்திரியம் 5, ஞானேந்திரியம் 5, அகக்கலன்களாம் அந்தக்கரணம் 4, ஆக 14.
பரிய புரவி = விரைந்து செல்லும் ஓசை முதலிய 5.
பேருறக்கமாகிய துரியம் இருப்பது நனவாகிய சாக்கிரத்துக்குள்ளேதான். இப்பதினான்கு கருவிகளும் புற நுகர்ச்சியில்லாததால் நஞ்சுண்டது போலாகி ஒத்து அடங்கின. புலன்கொள்ளும் புலன்கள் பத்தும் புரவியைப் போல் தொடர்வின்றிப் பறந்தது. உயிர்ப்பு அடங்கலாகிய துரியாதீதத்தில் நிகழும் நிலயிலுள்ள இன்பம் இத்தன்மையது எனச் சொல்ல இயலாது.
286. மூல நிலமிசை மூன்றா நிலத்தினில்
ஆல மருந்துஞ் சிவம்.
உடலின் மூலமாம் கண்களுக்குள் இருக்கும் மணிபூரகமாகிய நாபிக்கமலத்துள் விடமருந்திய நீலகண்டமுள்ளான்.
திருமந்திரம்:
“மூலத்து மேலது முச்சது ரத்தது
காலொத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.”
மூலத்து = எருவாய்க்கு. கால் = உயிர்ப்பு.
சந்தினில் = இணைப்பில். கோலங்கள் = தோற்றங்கள்
மேலைப்பிறை = மேலேயுள்ள சந்திர மண்டிலம்.
நெற்றிநேர் = புருவ நடுவு.
மூலத்துக்கு மேலாக முக்கோணமும் நாற்சதுரமும் உள்ளன. உயிர்ப்புகள் ஒத்துப் பொருந்த கூடும் இணைப்பில் திங்கள் மண்டிலத்திலிருந்து கணப்படும் அழகிய திருக்கோலங்கள் வெவ்வேறாகும்.
“மூலத்து வாரத்து மூளு மொருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்
ஞாலக் கடவூர் நலமா யிருந்ததே.”
மூலாதாரத்தில் உள்ள நடுநாடி வழியாக உயிர்ப்பினை ஏற்றி உச்சித்துளையினுள் செலுத்தல் ஞானவினையின் அடிப்படை. அங்ஙனம் செலுத்தப் பரவெளியில் சிவம் காட்சியளிக்கும். அவ்வாறு வழிபாடு செய்தவனின் ஆவியைக் கொண்டுபோக வந்த காலனைக் காலால் உதைத்துக் காய்ந்தவன். எவராலும் கடக்க முடியாத மரணத்தைக் கடக்க நிலைகளமான இடமாதலின் அவ்வூர் கடவூர் ஆயிற்று.
287. எழுஞ்சுட ருச்சியின் மேன்மனம் வைக்கத்
தொழிலொன் றிலாத சுடர்.
உந்திக்கமலித்திலிருந்து எழும் சுடரின் உச்சியின்மேல் மனம் அசைவற்று நின்றால் சுடரும் அசைவற்ற நிலையில் நின்று ஒளிவீசும்.
288. அடைத்திட்ட வாசலின் மேன்மனம் வைத்துப்
படைத்தவன் தன்னையே பார்.
மூடியிருக்கும் இரு உதயக் குகையின் வாசலின்மேல் அசைவற்ற மனத்தை நிறுத்தித் தன்னை அகண்டமாகப் பார். இங்கு படைத்தவன் என்பதற்கு, கண்கள் எனப் பொருள்படும். கண் பார்த்தவுடன்தான் எல்லாம் தெரிகிறது. மனம் விழிக்கிறது. பொருள் தெரிந்து புரிகிறது.
289. அறுபதொ டாறு வருட மிதனை
உறுதிய தாக யுணர்.
சந்திர கலைகள் பதினாறையும், அவற்றைச் செலுத்த வேண்டிய தந்திரங்களின் வழியையும் ஒரு வருட காலம் பழகவேண்டும்.
திருமந்திரம்:
“முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டி
லணிந்த அணிமாகை தானா மிவனுந்
தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே.”
முடிந்திட்டு = அடக்கி.
அகத்தவமாம் யோகத்தில் திளைத்து இருந்து கலவி இன்பத்திற்கேங்கி விந்துவை விரயம் செய்யாது (பானுவில் விடாது) முடிந்து(அடக்கி) வைக்க புகழ்ந்து கூறப்பட்ட பஞ்சினும் நுண்ணிய(நொய்) அணிமா ஓராண்டினில் கைவரப்பெறும்.
290. அட்டமா சித்தி யடையுமோ ராண்டினில்
இட்ட மிதனைத் தெளி.
மேற்கூறிய விடயங்களை அறிந்து, தெளிந்து, செயலாற்ற ஓராண்டினில் அட்டமா சித்திகளுஞ் சேரும்.291. வன்னிய தெட்டு மதியம் பதினாறு
- 30. துரிய தரிசனம்
முன்னிய பன்னிரண்டு முள்.
முதன்மையான சூரியனுக்குப் பன்னிரண்டு கலைகளும், அங்கிக்கு எட்டு கலைகளும், சந்திரனுக்குப் பதினாறு கலைகளுமுள்ளன.
292. சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம்
பாருமி னீது பயன்.
சூரியனோடு அக்கினி கலந்தபின் சந்திரன் உதிப்பான். அந்த ஆநந்தத்தை நீங்களே உணர்ந்து அறிக.
திருமந்திரம்:
“குரவ னுயிர்முச் சொரூபமுங் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி நந்திபேச் சற்று
வுருகிட என்னையங் குய்யக்கொண் டானே.”
உயிர்முச்சொரூபம் = தூலம், சூக்குமம், காரணம்.
அரிய பொருள் = உடல், பொருள், ஆவி.
முத்திரையாக = காணிக்கையாக.
பேச்சற்று = மவுனமாய். குரவன் = ஞானகுரு.
சிவகுருவாம் இறைவன், உயிருடைய பருமை(தூலம்), நுண்மை(சூக்குமம்), முன்மை(காரணம்) எனும் மூவகை உடல்களையும் இரவலை ஏற்பதுபோல் தன்னுடைமை ஆக்கிக்கொள்ளுகிறான். உடல், பொருள், ஆவி ஆகியவைகளைக் காணிக்கையாகக் கொள்கிறான். சிவத்திருவடியாம் நந்தி என்னை உய்யக் கொண்டான். அதனால் உள்ளமுருகி இன்பவெள்ளம் பெருகியது.
293. மதியொடு வன்னியொன் றாகவே வந்தால்
கதிரவ னாமென்று காண்.
சந்திரனோடு அக்கினி ஒன்றாய்க் கலந்து வெளிப்படில் சூரியான் தானாக வெளிப்படுவான்.
294. மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில்
உதிக்குமாம் பூரணைச் சொல்.
சூரியன் அக்கினியுடன் கலந்துவந்து சந்திரனுடன் ஒடுங்கில் அதுவே பதினாறு கலைகளோடு கூடிய பருவமாம்.
திருமந்திரம்:
“அங்கி மதிகூட வாகுங் கதிரொளி
யங்கி கதிர்கூட வாகு மதியொளி
யங்கி சிவத்தினிற் கூடவத் தாரகை
தங்கி யதுவே சகலமு மாமே.”
மூலத்தீயும் திங்களின் கதிரும் சேரப் பகலவன் கதிரொளி விளங்கும். மூலத்தீயும் கதிரவன் கதிரும் சேர்ந்தவிடத்து மதியொளி திகழும். மூலத்தீ திருவட் உணர்வோடு கலந்தக்கால் விண்மீனை ஒத்த ஆவிகளின் ஒருநிலைத் தங்குதல் ஏற்படும். அந்நிலையே எல்லாம் ஆகும் நிலையாம்.
295. தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில்
சாற்று மமாவாசை தான்.
உடலினுள் சூரியகலையும் சந்திர கலையுமொன்ற காருவா (அமாவாசை)தான். ஆக அமாவாசையில் செய்யவேண்டிய காரியங்களை ஞானியர், சூரிய கலையும் சந்திர கலையும் கலக்கும்போது செய்வர்.
296. வன்னி கதிரவன் கூடிடி லத்தகை
பின்னிவை யாகு மெலாம்.
காருவா (அமாவாசை), வெள்ளுவா (பூர்ணிமை) எல்லாம் உடலுக்குள், சூரிய சந்திர கலைகளின் புணர்ச்சியால்தான்.
297. அமாவாசை பூரணை யாகு மவர்க்குச்
சமனா முயிருடம்பு தான்.
சூரியனிருக்கும் ஓரை(இராசி)யில் சந்திரன் சேர அமாவாசையும், சந்திரன் சூரியனுக்கு ஏழாம் இராசியில் சேரும்போது பூர்ணமையாகவும் ஆகும்.
அதைச் சூக்குமத்தில் உடலில் செய்து உணர்வோருக்கு, உடலும் உயிரும் சமமாக ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமலும் இருக்கும்.
298.அண்டத் திலுமிந்த வாறென் றறிந்திடு
பிண்டத் திலுமதுவே பேசு.
அண்டத்தில் எப்படி சூரிய சந்திரர்களின் சேர்க்கையுண்டோ அப்படியே பிண்டத்திலுமுண்டாம். “அண்டத்திலுள்ளது பிண்டத்தில்.”
299. ஏறு மதிய மிறங்கிடி லுறங்கிடும்
கூறுமப் பூரணை கொள்.
சூரியன் சந்திரன் இரண்டும் சேரும்நாள் காருவா(அமாவாசை)யாகவும், பிரிந்த நாள் முதல் மறுபடியும் சேர்வதற்கு முன்னாள் வரை வெள்ளுவா (பூர்ணிமை) வாகவும் ஞானிகள் கொள்ளல் வேண்டும். ஏனெனில், தேய்வுக்கு ஞானவினையில் இடம் கொடுக்கலாகாது. பூரண கலையொடு சந்திரன் சூரியனுடன் சேருவதால், இரவும் பகலும் ஒழிந்து, இராப்பகலற்றவிடத்தில் ஆநந்தத்தில் உதிக்க இயலும்.
திருமந்திரம்:
“எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியே
யெய்துவ தூல மிருவகைப் பக்கத்து
ளெய்துங் கலைபோல வேறி யிறங்குமாந்
துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே.”
மதியின் தேய்தலும் வளர்தலுமாகிய இருவகைப் பக்கத்துமுள்ள கலைகள் நூண்மையிலிருந்து பருமையாய் விளங்குவதற்கும், பருமையிலிருந்து நுண்மையாய் ஒடுங்கி மறைவதற்கும் எடுத்துக்காட்டாய் இருப்பன. அதுபோல, மனு உடலும் நுண்மையிலிருந்து பருமையாய் விளங்குதலும், பருமையிலிருந்து நுண்மையாய் ஒடுங்குதலும் இருக்கிறதெனக் கொள்ளவேண்டும். உடல் மல நீக்கத்திற்காகத் தரப்பட்டது.
“ஆகின்ற சந்திரன் சூரிய னங்கியு
ளாகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்து
ளேகின்ற வக்கலை யெல்லா மிடைவழி
யாகின்ற யோகி யறிந்த வறிவே.”
சந்திரன் ஈரெட்டு = சந்திரகலை 16.
சூரியன் ஆறிரண்டு = 6 X 2 = 12.
அங்கி ஈரைந்து = 2 X 5 = 10.
இடைவழி = இடகலை.
ஞாயிறு, திங்கள், தீ ஆகிய முக்கலைகளையும் அகமுகப் பயிற்சியால் நடுநாடி வழியாக மேலேத்துவர். அங்ஙனம் செய்தவரின் உடல் எழிலுற விளங்கும்.
300.உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில்
மதிக்கு மமாவாசை யாம்.
அண்டத்தில்:
காருவா(அமாவாசை)க்கு அடுத்த நாளாம் பிரதமை திதியில் சந்திரனைக் கண்டுறங்க நல்லது என்பர் மூத்தோர்.
பிண்டத்தில்:
சூரியனை(சூரிய கலையை) விட்டு சந்திரன் (சந்திரகலை) பிரியும்பொழுது விழி எப்படியிருக்குமோ, அந்நிலயில் இருந்து ஞானவினையாம் தவம் செய்ய, அமாவாசையாம் இருளாம் (சூனிய இருளாம் கன்சூல் மகபியாவென்னும்) அன்னையைக் காணலாம்.301. கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப்
- 31. உயர்ஞான தரிசனம்
பிண்டமு மூழி பிரியா.
சூரிய சந்திர அக்கினி கலைகளை உந்திக்கமலத்தில் உள்ள அக்கினி மண்டலத்தில் சேர்த்துவிட்டால், உயிரையும் உடலையும் காலம்(ன்) பிரிக்கச் சக்தியற்றுப் போய்விடும்.
302. வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத்
தள்ளுமின் கால சரம்.
திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று கிழமைகளிலும், சந்திர கலையைப் பிங்கலையில் சேர்க்க வேண்டும்.
303. செவ்வாய் சனிநா யிறுவல மாகவே
கொள்ளிலிவ் வாறிடரு மில்.
செவ்வாய், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், சூரிய கலையைச் சந்திரனிடம் சேர்க்க இடறொன்றும் வராது.
304. வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம்
வளர்பிறை யென்றே மதி.
வளர்பிறை வியாழக் கிழமைகளில் சந்திரகலையை சூரியகலையிலும், தேய்பிறை வியாழக் கிழமைகளில் சூரியகலையைச் சந்திரகலையுடனும் சேர்க்கவேண்டும். இவ்விரண்டு ஞானவினையும் வளர்பிறையாம்.
305. வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு
செலுத்துபே ராது செயல்.
சனிக்கிழமைகளில் மட்டும் இரவும் பகலும் சூரியகலையைப் பிரித்து இடப்பக்கம் பாய்ச்சும்போது, அபானனையும் சேர்த்துப் பாச்சுதல் வேண்டும்.
306. இயங்கும் பகல்வலமி ராவிடம் வாயு
தயங்குறல் நாடிக்குட் டான்.
குண்டலியின் மத்தியில் உதிக்கும் பிராணாபான வாயுக்கள், பகலில் வலத்திலும், இரவில் இடப் பக்கத்திலும் உலாவிவரும்.
307. அரசறி யாம லவன்பே ருறைந்துத்
தரைதனை யாண்ட சமன்.
அரசன் தன் உருவத்தை வெளிப்படுத்தாது நாட்டை அரசாளுவது போலத்தான், ஞானவினை புரிதலும்.
308. கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச்
செல்லாத தென்ன செயல்.
படிக்காத (ஞானம் புரியாத) மூடர்கள் திருவுருவை அடையவேண்டி, புண்ணிய காரியங்கள் என்று சொல்லப்படும் காரியங்களைச் செய்தால், இறைப் பதத்தை அடைய இயலாது. ஞானவினையில் முழுவதும் சலனமில்லது ஈடுபட்டால்தான் இறைப்பதம் கிட்டும்.
309. திருவருட் பாலைத் தெரிந்து தெளியில்
குருவிருப் பாமென்று கொள்.
ஞானக் குறள் – திருவருட்பாலின் உட்கருத்தை அறிந்து, தெளியும் நிலையில், வழிநடாத்த ஞானாசிரியன் நம்மைத்தேடி வருவான்.
310. கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற
நிற்கில் பரமவை வீடு.
ஞான நூல்களைப் படிப்பதாலும், கேட்பதாலும், ஞான எண்ணமுதித்து, ஞானவினை செய்வானேயாகில், வீடுபேறு என்றழைக்கப்படும் சிவத்தையடைவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக