மலைபடுகடாம்

 மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)

எளிய உரை:  வைதேகி

பாடியவர்                  –           இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
பாடப்பட்டோன்        –           நன்னன் வேண்மான்
திணை                      –           பாடாண் திணை
துறை                         –             ஆற்றுப்படை
பா வகை                    –           அகவல்பா (ஆசிரியப்பா)  

மொத்த அடிகள்      –           583

தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்  (தொல்காப்பியம், புறத்திணையியல் 29).

ஆற்றுப்படை:  ஆற்றுப்படை என்பது ஒரு கொடையாளியிடம் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர் வந்த வறியோர்க்கு அவ்வள்ளலிடம் சென்று தாம் பெற்றவாறு அவர்கள் பெறுமாறு வழிப்படுத்தல்.  இப்பாடலில், ஒரு பாணர் மற்றொரு பாணரிடம், தான் பரிசு பெற்ற மன்னனிடம் சென்று பரிசு பெறும் முறையைக் கூறுகின்றார்.  சங்க நூல்கள் பதினெட்டில் நான்கு நூல்கள் பாணர்கள் பற்றி இருப்பது, சங்க காலத்துப் பாணர்களின் சிறப்பை வெளிப்படுத்துகின்றது.

மலைபடுகடாம்:  ‘மலைக்கு யானையை உவமித்து அதன்கண் பிறந்த ஓசையைக் கடாமெனச் சிறப்பித்ததனால் இப்பாட்டிற்கு மலைபடுகடாமென்று பெயர் கூறினார்’, எனக் குறிப்பிட்டுள்ளார் நச்சினார்க்கினியர்.  கூத்தராற்றுப்படை என்ற ஒரு பெயரும் இப்பாட்டிற்கு உண்டு. 

புலவர்:   கெளசிகன் என்பது இவரது இயற்பெயர்.   இப்புலவர் பெருமானின் பெயரில் உள்ள இரணியமுட்டம் என்பது பாண்டிய நாட்டின்கண் யானைமலை முதலிய இடங்களைக் கொண்ட ஒரு சிறிய நாடாகும். இவருடைய ஊர் குன்றூர். இவர் அந்தணர் என்று இளம்பூரணர் தன் தொல்காப்பிய உரையில் கூறியுள்ளார். இவர் இசைத் தமிழ் உணர்வுடையவர்.  யாழ் முதலிய இசைக்கருவிகளை நுணுக்கமாக அறிந்தவர். நன்னனின் நவிர மலையையும் அங்குள்ளவற்றையும் நன்கு அறிந்தவர் என்பதை அவருடைய விவரிப்புகள் மூலம் அறிகின்றோம்.  இவர் நற்றிணை 44, 139 ஆகிய பாடல்களையும் எழுதியுள்ளார்.

பாட்டுடைத் தலைவன்:  இம்மன்னன் வேளிர் குடியைச் சார்ந்தவன்.  இவனுடைய தந்தையின் பெயரும் நன்னன்.  நவிர  மலையின்கண்  உறையும் சிவபெருமானின் மீது பேரன்பு கொண்டவன்.  நன்னன் என்ற பெயரில் பல மன்னர்கள் சங்க காலத்தில் இருந்தனர்.  நன்னன் செங்கண்மா என்னும் நகரிலிருந்து ஆட்சி புரிந்தான்.  இது திருவண்ணாமலைக்கு மேற்குத் திசையில் உள்ளது என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.  இவனுடைய நாட்டில் சிவபெருமான் உறையும் நவிரமலை உள்ளது.  சேயாறு என்ற ஆறு இம்மலையில் பிறக்கின்றது.  இம்மன்னனின் பிறந்த நாள் தமிழர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது என்பதை மதுரைக்காஞ்சியின் இந்த வரிகள் மூலம் நாம் அறிகின்றோம் – பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாள் சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு (மதுரைக்காஞ்சி 618-619).

கதைச்சுருக்கம்:   ஒரு பாணர் இன்னொரு பாணரை மன்னனிடம் செல்லுமாறு அன்புடன் ஊக்குவிக்கின்றார். இப்பாடலில் பேரியாழ் பற்றிய சிறப்பான விவரிப்பு உள்ளது. நன்னன் நாட்டின் சிறப்பு, அவனுடைய நற்பண்புகள், அவனுடைய போர்த்திறன், நவிர மலையின் வளம், கானவர் குடியின் விருந்தோம்பல், வழியில் உள்ள குடியினரின் விருந்தோம்பல், வழியில் உள்ள பாம்புகளைத் தவிர்த்தல், தினைக் காவலர்களின் கவணிலிருந்து தப்புதல், வழுக்கும் இடங்களில் கவனமாக இருத்தல், மலையில் உள்ள கடவுளை வழிபடுதல், இரவில் குகையில் தங்குதல், கானவரின் உதவும் தன்மை, மலையில் எழும் வெவ்வேறு ஒலிகள் (அருவி, ஆறு, கானவர், கானவரின் மகளிர், விலங்குகள், குரவைக் கூத்து ஆடும்பொழுது கொட்டப்படும் பறை), செல்லும் வழியில் உள்ள நடுகற்கள், கோவலரின் விருந்தோம்பல், மறவர்களின் உதவும் பண்பு, மருத நில மக்களின் விருந்தோம்பல், நன்னனின் மூதூர் சிறப்பு, அவன் அரண்மனை வாயிலில் உள்ள பொருட்கள், அவனைப் புகழும் முறை, அவன் அரச அவைக்குச் செல்லுதல், நன்னனின் கொடைச் சிறப்பு ஆகியவற்றை நாம் இப்பாடலில் காணலாம்.

கூத்தர் பலவகை இசைக்கருவிகளைப் பையிலிட்டு

எடுத்துச் செல்லுதல்

திருமழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழிசை கடுப்ப பண் அமைத்துத்,
திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,

மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு,   5

கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்,
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை,

கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி,  10

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்,
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப,

நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்; (1 – 13)

பொருளுரை:  வளமையை உண்டாக்கும் மழையைப் பொழிந்த இருண்ட நிறத்தையுடைய வானத்தில் முகில் அதிர்ந்து முழங்கும் ஒலியைப் போன்று, பண்கள் அமைத்துத், திண்மையான வாரால் கட்டிய மத்தளத்துடன், ஆகுளி என்ற சிறுபறையையும், நுண்மையாக உருக்கப்பட்ட விளங்கிய தகடாகத் தட்டின வெண்கலத்தால் செய்த கஞ்சதாளமும், ஒளியுடைய கரிய மயில் இறகாகிய அழகினையுடைய தழையைக் கட்டின கண்களின் இடையே, வெளியாகத் திறந்த, யானையின் தும்பிக்கைபோலும் உயிர்ப்பு உடைய நெடுவங்கியத்துடன், இளி என்னும் நரம்பின் ஓசையை ஒலிக்கும் சிறிய மேலாகிய தூம்புடன், பாட்டைச் சுருதி குன்றாமல் கைக்கொண்டு நிற்கும் இனிய குழலும் நெருங்கப்பட்டு, நடுவே நின்று ஒலிக்கும் தவளையின் குரலையுடைய தட்டைப் பறையும், விளக்கத்தையுடைய தாளத்துடன் ஒலிக்கும் எல்லரியும், மாத்திரையைச் சொல்லும் தாளத்தையுடைய பதலை முரசும், பிற இசைக்கருவிகளையும், கார்காலத்தில் பழுக்கும் பலவின் காயை உடைய கொத்தினை ஒப்ப, ஒத்த எடையை உடையனவற்றைப் பையில் கட்டி, தோளின் மீது வைத்த காவடியில் சுமந்து செல்பவர்களாய்,

குறிப்பு:  கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின் (6) – நச்சினார்க்கினியர் உரை – கண்களின் நடுவே வெளியாகத் திறந்த யானையின் கைபோலும் நெடிய வங்கியத்தோடு.  உயிர் – ஆகுபெயர் தும்பிக்கைக்கு.  இனி நெட்டுயிர்ப்பு கொண்டாற்போலும் ஓசையை உடைய என்றுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடையிடையே துளையிடப்பட்டிருந்ததால் கண் இடை விடுத்த தூம்பென்றார்.  இதன் ஒலி யானை நெட்டுயிர்ப்புக் கொள்ளும் ஒலியை ஒத்தலின் களிற்று உயிர்த் தூம்பென்றார்.  இளி (7) – யாழின் ஒரு நரம்பு.  அரிக்குரல் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘யாழ் நரம்பு’ என்ற பொருளும் உடைத்தாகலின் கரடிகை எனினுமாம்.  கரடிகை – கரடி கத்தினாற்போலும் ஓசையுடைய பறை வகை, தவளையினது குரல் எனினுமாம்.  தட்டை (9) – உ. வே. சாமிநாத ஐயர் உரை – குறுந்தொகை 193 – மூங்கிலைக் கண்ணுக்கு கண் உள்ளதாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை உண்டாக ஒன்றிலே தட்டப்படுவது.   எல்லரி (10) – C. ஜெகந்நாதாசாரியர்உரை – சல்லி, சல்லென்ற ஓசையுடையதால் பெற்ற பெயர். பிறவும் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண் விடு தூம்பு, நிசாளம், துடுகை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, துடி, பெரும்பறை, கிணைப் பறை.  காய (13) – பொ. வே. சோமசுந்தரனாரின் உரை – காவின, காவுதல் – தோளில் சுமந்து செல்லல்.  புறநானூறு 206-10 ‘காவினெம் கலனே’.  புறநானூறு 152-15 – கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்.  காவுதல் – பொ. வே. சோமசுந்தரனாரின் உரை – தோளில் சுமந்து செல்லுதல்.  தோற்சுமை எடுப்போர் ஒரு தடியின் இரு நுனிகளிலும் பொருட்களைப் பை உறி முதலியவற்றில் சம எடை உடையனவாகச் சீர் செய்து தூங்கவிட்டு (தொங்கவிட்டு) அத் தடியின் நடுவினைத் தோளில் ஏற்றிச் சுமப்பர்.  இத் தடி காவுத் தடி எனப்படும்.  இக்காலத்தே காவடி என வழங்குவர்.

சொற்பொருள்:  திரு மழை தலைஇய – வளமையை உண்டாக்கும் மழையைப் பொழிந்த (தலைஇய – அளபெடை), இருள் நிற விசும்பின் – இருண்ட நிறத்தையுடைய வானத்தில், விண் அதிர் இமிழிசை கடுப்ப – முகில் அதிர்ந்து முழங்கும் ஒலியைப் போன்று (கடுப்ப – உவம உருபு), பண் அமைத்து – பண்கள் அமைத்து, திண் வார் விசித்த முழவொடு – திண்மையான வாரால் கட்டிய மத்தளத்துடன், ஆகுளி – ஆகுளி என்ற சிறுபறை, நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில் – நுண்மையாக உருக்கப்பட்ட விளங்கிய தகடாகத் தட்டின வெண்கலத்தால் செய்த கஞ்சதாளமும் (கஞ்ச தாளம் – சால்ரா, அடர்- தகடு), மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு – ஒளியுடைய கரிய மயில் இறகாகிய அழகினையுடைய தழையைக் கட்டின, கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின் – கண்களின் இடையே வெளியாகத் திறந்த யானையின் தும்பிக்கைபோலும் உயிர்ப்பு உடைய நெடுவங்கியத்துடன், இளிப்பயிர் இமிரும் – இளி என்னும் நரம்பின் ஓசையை ஒலிக்கும், குறும் பரம் தூம்பொடு – சிறிய மேலாகிய தூம்புடன், விளிப்பது கவரும் தீம்குழல் – பாட்டைச் சுருதி குன்றாமல் கைக்கொண்டு நிற்கும் இனிய குழல், துதைஇ – நெருங்கி (அளபெடை),  நடுவு நின்று இசைக்கும் – நடுவே நின்று ஒலிக்கும், அரிக்குரல் தட்டை – தவளையின் குரலையுடைய தட்டைப் பறையும், கரடியின் குரலையுடைய தட்டைப் பறையும், கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி – விளக்கத்தையுடைய தாளத்துடன் ஒலிக்கும் எல்லரி (எல்லரி – சல்லிகை, சல்லென்ற ஓசையுடையதால் பெற்ற பெயர், கடி – விளக்கம், கவர்பு – கைக்கொண்டு), நொடிதரு பாணிய பதலையும் – மாத்திரையைச் சொல்லும் தாளத்தையுடைய பதலை முரசும், பிறவும் – பிற இசைக்கருவிகளையும், கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப – கார்காலத்தில் பழுக்கும் பலவின் காயை உடைய கொத்தினை ஒப்ப (கடுப்ப – உவம உருபு), நேர் சீர் சுருக்கிக் காய கலப்பையிர் –  ஒத்த எடையை உடையனவற்றைப் பையில் கட்டி, தோளில் சுமந்து செல்பவர்களாய் (காய – கா என்ற வினைப்பகுதியினடியால் பிறந்த குறிப்புப் பெயரெச்சம், கலப்பையிர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று)

அவர்கள் கடந்து வந்த மலை வழி

கடுக் கலித்து எழுந்த கண்அகன் சிலம்பில்,

படுத்து வைத்தன்ன பாறை மருங்கின்,   15

எடுத்து நிறுத்தன்ன இட்டு அருஞ்சிறுநெறி,
தொடுத்த வாளியர் துணை புணர் கானவர்
இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும்,
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது,

இடிச்சுர நிவப்பின் இயவுக் கொண்டு ஒழுகித் (14 – 20)

பொருளுரை:  கடு மரங்கள் மிக்கு வளர்ந்த இடம் அகன்ற பக்க மலையில், படுத்து வைத்தாற்போன்று கிடக்கும் பாறைகளின் அருகில், நிலத்தில் கிடந்த வழிகளை எடுத்து நிறுத்தினாற்போன்ற குறுகிய சிறுவழிகளில், தொடுத்த அம்புடையவர்கள் ஆகிய, தங்கள் மனைவியருடன் கூடியிருக்கின்ற கானவர், வருத்துதலைச் செய்யாது வழியில் போவாரை வழிபோக்கும், மலையின் மிகுந்த உச்சியில், அரிது எனக் கருதாது, கல்லை இடித்த உயர்ந்த வழியில் உறுதியான நெஞ்சத்துடன் சென்று,

சொற்பொருள்:  கடுக் கலித்து எழுந்த – கடு மரங்கள் மிக்கு வளர்ந்த, கண் அகன் சிலம்பில் – இடம் அகன்ற பக்க மலையில், படுத்து வைத்தன்ன பாறை மருங்கின் – படுத்து வைத்தாற்போன்ற பாறைகளின் அருகில், எடுத்து நிறுத்தன்ன  இட்டு அருஞ்சிறு நெறி – நிலத்தில் கிடந்த வழிகளை எடுத்து நிறுத்தினாற்போன்ற குறுகிய சிறுவழி, தொடுத்த வாளியர் – தொடுத்த அம்புடையவர்கள், துணை புணர் கானவர் – தங்கள் மனைவியருடன் கூடியிருக்கின்ற கானவர், இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும் – வருத்துதலைச் செய்யாது வழியில் போவாரை வழிபோக்கும், அடுக்கல் மீமிசை – மலையின் மிகுந்த உச்சியில் (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), அருப்பம் பேணாது – அரியது எனக் கருதாது, இடிச்சுர நிவப்பின் இயவுக் கொண்டு ஒழுகி – கல்லை இடித்த உயர்ந்த வழியில் உறுதியான நெஞ்சத்துடன் சென்று

பேரியாழின் இயல்பு

தொடித் திரிவு அன்ன தொண்டுபடு திவவின்,
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகாக்,
குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின்,
அரலை தீர உரீஇ வரகின்
குரல் வார்ந்தன்ன நுண் துளை இரீஇ,   25
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி,
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கிப்,
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்துப்,
புதுவது போர்த்த பொன் போல் பச்சை
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால்  30

மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப,
அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது,
கவடு படக் கவைஇய சென்று வாங்கு உந்தி,
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை,   35
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர்ப் பேரியாழ்; (21 – 37)

பொருளுரை:  தொடியின் (வளையலின்) உறழ்ச்சியை (மாறுபாட்டை) ஒத்த உறழ்ச்சியுடைய ஒன்பது வார்க்கட்டினையும், வெண்கடுகு அளவும் இசையில் குற்றம் இல்லாதவாறு ஓர்ந்து (கேட்டு) கட்டின, நீட்டி முறுக்கின நரம்பில் குற்றம் தீர தீற்றி, வரகின் கதிர் நீண்ட தன்மையுடைய நுண்ணியத் துளையில் இருத்தி, ஒலி அமைவதற்குக் காரணமான பத்தலைப் பசையுடன் சேர்த்து, விளங்குகின்ற துளைகள் நிரம்பும்படி ஆணிகளை இறுகத் தைத்து, புதிதாக யானையின் கொம்பால் செய்த யாப்பை அமைத்து, புதிதாகப் போர்த்தப்பட்ட பொன்னிறத் தோல் உடைத்ததாய், வண்டுகள் திருமணப் பெண்ணின் நறுமணத்தை  உண்டாக்குவதற்குக் காரணமான ஐந்து பகுதியாக உள்ள கூந்தலையுடைய இளம் பெண்ணின் மாட்சிமையுடைய அசையும் அழகிய மார்பிடத்தே சென்று பின்பு இல்லையாகிய மயிர் ஒழுங்குப்பட்டுக் கிடக்கின்ற அழகிய வயிற்றை ஒப்ப, பொல்லம் பொத்தல் பொருந்தி, அளவில் மாறுபடாமல், பிரிவுடன் அகத்திட்ட வளைந்த கொப்பூழ்ச்சுழியினையும், நுண்ணிய அரத்தினாலே அராவிய நுண்ணிய தன்மையுடைய, கரிய நிறத்தால் களங்கனி போன்ற நெருங்கிய, ஒளியுடைய வடிவில் அமைந்த வளைந்த உயர்ந்த கோட்டினையும் மிக்க ஒளியையும் உடையது பேரியாழ்.

குறிப்பு:  கடிப்பகை (22) – கடி என்பது பேய்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெண்கடுகு பேய்க்கு பகையாகியதால் கடிபகை என்றார்.  வதுவை நாறும் வண்டு ஐம்பால் மடந்தை (30) – நச்சினார்க்கினியர் உரை – தன்னிடமிருந்த வண்டு கலியாணம் செய்த மகளுடைய நாற்றத்தை நாறுதற்குக் காரணமான மயிரினை உடைய மடந்தை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வண்டுகள் புதுமணத்தைத் தோற்றுதற்குக் காரணமான நறுமணம் கமழ்கின்ற மயிரினையுடைய மடந்தை, வதுவை நாறும் என்றது வண்டுகள் புணர்ச்சியைத் தோற்றுவிக்கும் என்றவாறு, C. ஜெகந்நாதாசாரியர் உரை – வண்டானது கலியாணம் செய்த நாற்றத்தை நாறுதற்குக் காரணமான இயல்பான மணத்தையுடைய மயிரினையுடைய.  புறநானூறு  109 – சுகிர் புரி நரம்பின்.  தொண்டு (21) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒன்பதென்னும் தொகை, C. ஜெகந்நாதாசாரியர் உரை – இந்த எண் உண்டான வார்க்கட்டு என்றது.  வார்க்கட்டு இந்த எண்ணைப் போலே தோற்றமளித்தல் என்பது.  ஒன்பது என்ற எண் தமிழ் முறையில் ‘௯’ என்று சுருள எழுதப்படுதல்போல் வார்க்கட்டும் சுருள அமைந்திருத்தலைக் குறிக்கும். வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21). C. ஜெகந்நாதாசாரியர் உரை – ஐம்பால் எழில் நுடங்கு மடந்தை மாண்ட ஆகத்து – மயிரினையுடைய அழகு கட்புலனாகி நின்றசையும் மடந்தையினது மாட்சிமைப்பட்ட மார்பிடத்தே.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஐம்பால் மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து – மயிரினையுடைய மடைந்தையினது மாட்சிமைப்பட்ட கட்புலனாகி நின்றசையும் அழகினையுடைய மார்பிடத்தே.

சொற்பொருள்:  தொடித் திரிவு அன்ன தொண்டுபடு திவவின் – தொடியின் உறழ்ச்சியை (மாறுபாட்டை) ஒத்த உறழ்ச்சியுடைய ஒன்பது வார்க்கட்டினையும், கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா குரல் ஓர்த்துத் தொடுத்த – வெண்கடுகு அளவும் இசையில் குற்றம் இல்லாதவாறு ஓர்ந்து (கேட்டு) கட்டின, சுகிர் புரி நரம்பின் – நீட்டி முறுக்கின நரம்பில், அரலை தீர உரீஇ – குற்றம் தீர தீற்றி (உரீஇ – அளபெடை), வரகின் குரல் வார்ந்தன்ன – வரகின் கதிர் நீண்டிருந்தாற்போல், நுண் துளை இரீஇ – நுண்ணிய துளையில் இருத்தி (இரீஇ – அளபெடை), சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி – ஒலி அமைவதற்கு காரணமான பத்தலை பசையுடன் சேர்த்து, இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி – விளங்குகின்ற துளைகள் நிரம்பும்படி ஆணிகளை இறுகத் தைத்து, புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து – புதிதாக யானையின் கொம்பால் செய்த யாப்பை அமைத்து (வெண்கை – யானையின் கோடு, யானையின் தந்தம்), புதுவது போர்த்த பொன் போல் பச்சை – புதிதாகப் போர்த்தப்பட்ட பொன்னிறத் தோல் உடைத்ததாய், வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் மடந்தை – வண்டுகள் திருமணப் பெண்ணின் நறுமணத்தை  உண்டாக்குவதற்குக் காரணமான ஐந்து பகுதியாக உள்ள கூந்தலையுடைய இளம் பெண், மாண்ட நுடங்கு எழில் ஆகத்து அடங்கு மயிர் ஒழுகிய – மாட்சிமையுடைய அசையும் அழகிய மார்பிடத்தே சென்று பின்பு இல்லையாகிய மயிர், அவ்வாய் கடுப்ப – அழகிய வயிற்றை ஒப்ப (கடுப்ப – உவம உருபு), அகடு சேர்பு பொருந்தி – பொல்லம் பொத்தல் பொருந்தி, அளவினில் திரியாது – அளவில் மாறுபடாமல், கவடு பட – பிரிவுடன், கவைஇய சென்று – அகத்திட்ட (கவைஇய  – அளபெடை), வாங்கு உந்தி – வளைந்த கொப்பூழ்ச்சுழி, நுணங்கு அரம் நுவறிய – நுண்ணிய அரத்தினாலே அராவிய, நுண் நீர் – நுண்ணிய தன்மையுடைய, மாமை – கரிய நிறம்,, களங்கனி அன்ன – களங்கனி போன்ற (களாக்காய்), கதழ்ந்து – நெருங்கிய, கிளர்  உருவின் – ஒளியுடைய வடிவில், வணர்ந்து ஏந்து மருப்பின் – வளைந்து உயர்ந்த மருப்பு, வள் உயிர் – மிகுந்த ஒலி (உயிர் – ஆகுபெயர் ஒலிக்கு), பேரியாழ் – பேரியாழ்

பாணரும் விறலியும் சூழ இருந்து கூத்தர்

தலைவனை அழைத்தல்

அமைவரப் பண்ணி அருள் நெறி திரியாது,
இசை பெறு திருவின் வேத்தவை ஏற்பத்,
துறை பல முற்றிய பை தீர் பாணரொடு,   40
உயர்ந்து ஓங்கு பெருமலை ஊறின்று ஏறலின்,
மதம் தபு ஞமலி நாவின் அன்ன
துளங்கு இயல் மெலிந்த கல்பொரு சீறடிக்,
கணம் கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ,

விலங்கு மலைத்து அமர்ந்த சேயரி நாட்டத்து,   45

இலங்கு வளை விறலியர் நிற்புறம் சுற்ற,
கயம் புக்கன்ன பயம்படு தண் நிழல்
புனல் கால் கழீஇய மணல் வார் புறவில்,
புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி,
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ! (38 – 50)

பொருளுரை:  பொருந்துதல் வர அமைத்து, இசை நூலோர் அருளி அளித்த நெறியில் பிறழாது, இசையைக் கேட்கின்ற அரசர்களின் அவைக்கு ஏற்ப, தங்கள் இசைத் துறையில் முற்றுப்பெற்ற (பெரும் திறமையுடைய), பசுமை தீர்ந்த பாணர்களுடன், உயர்ந்து ஓங்கிய பெரிய மலை வழியில் இடையூறு இன்றி நீங்கள் ஏறி வந்ததால், வலிமை அழிந்த நாய்களின் நாவினைப் போன்று, அசையும் தன்மையுடைய, இளைத்த, கற்கள் உறுத்தப்பெற்ற சின்ன அடிகளையுடைய, கூட்டமாக உள்ள மயில்களின் தோகையைப்போன்று தொங்கும் அசைகின்ற கூந்தலையுடைய, மானிடமிருந்து மாறுபட்ட (மானினும் சிறந்த) சிவந்த கோடுகள் உடைய கண்களையுடைய, விளங்கும் வளையலையுடைய விறலியர் உன்னைச் சூழ, குளத்தில் புகுந்தாற்போல, பயன் தரும் குளிர்ச்சியான நிழலில், கால்வாய் வாரிக் கொண்டு சென்ற மணல் ஒழுங்குபட்ட இக்காட்டில், வழி வந்த வருத்தத்தைக் கைவிட்டிருந்த, இளங்குழந்தைகள் இல்லாதவர்களாக உள்ள, விலை உயர்ந்த அணிகலன்களைப் பெறும் கூத்தர்களின் சுற்றத்திற்குத் தலைவனே!

குறிப்பு:  பை தீர் (40) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பை – பசுமை, ஈங்கு செல்வமுடைமையின் மேற்று.  செல்வத்தை பசுமை என்றும் நல்குரவைக் கருமை என்றும் கூறுதல் மரபு.  இனி, பை இளமை எனக் கொண்டு இளமை தீர்ந்த பாணர் எனினுமாம்’.  பை தீர் பாண (நற்றிணை 167-6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வருத்தமில்லாத பாணனே, ஒளவை துரைசாமி உரை – வருத்தமுடைய பாணனே.  அமைவரப் பண்ணி (38) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாழை அமைவரப் பண்ணி என்றது பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், கைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு, என்னும் எண் வகையானும் இசை எழீஇ, வார்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை, என்னும் எட்டு வகை இசைக் கரணத்தானும் செவியால் ஓர்ந்து இயக்குதற்குத் தகுதியாக்கி என்றவாறு.  நாயின் நாக்கு அன்ன அடி:  நற்றிணை 252 – கத நாய் நல் நாப் புரையும் சீறடி, மலைபடுகடாம் 42-43 – ஞமலி நாவின் அன்ன துளங்கு இயல் மெலிந்த கல்பொரு சீறடி, பொருநராற்றுப்படை 42 – வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி, சிறுபாணாற்றுப்படை  17-18 – உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ வயங்கு இழை உலறிய அடியின் அடி.  புனிறு – புனிறென் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 77). வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  அமைவரப் பண்ணி – பொருந்துதல் வர அமைத்து, அருள் நெறி திரியாது – நூலோர் அருளி அளித்த நெறியில் பிறழாது, இசை பெறு திருவின் வேத்து அவை ஏற்ப – இசையைக் கேட்கின்ற அரசர்களின் அவைக்கு ஏற்ப, துறை பல முற்றிய – தங்கள் இசைத் துறையில் பெரும் திறமையுடைய, பை தீர் பாணரொடு – பசுமை தீர்ந்த பாணர்களுடன், உயர்ந்து ஓங்கு பெருமலை ஊறின்று ஏறலின் – உயர்ந்து ஓங்கிய பெரிய மலை வழியில் இடையூறு இன்றி ஏறியதால் (உயர்ந்து ஓங்கு – ஒருபொருட் பன்மொழி), மதம் தபு ஞமலி நாவின் அன்ன – வலிமை அழிந்த நாய்களின் நாவினைப் போன்று (நாவின் – இன் சாரியை), துளங்கு இயல் – அசையும் தன்மையுடைய, மெலிந்த – இளைத்த, கல் பொரு சீறடி – கற்கள் உறுத்தப்பெற்ற சின்ன அடிகள், கணம் கொள் தோகையின் – கூட்டமாக உள்ள மயில்களின் தோகையைப்போன்று (தோகையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கதுப்பு இகுத்து அசைஇ – தொங்கும் கூந்தல் அசைந்து (அசைஇ – அளபெடை), விலங்கு மலைத்து அமர்ந்த சேயரி நாட்டத்து – மானிடமிருந்து மாறுபட்ட சிவந்த கோடுகள் உடைய கண்களையுடைய, இலங்கு வளை விறலியர் – விளங்கும் வளையலையுடைய விறலியர், நிற்புறம் சுற்ற – உன்னைச் சூழ, கயம் புக்கன்ன – குளத்தில் புகுந்தாற்போல, பயம்படு தண் நிழல் – பயன் தரும் குளிர்ச்சியான நிழல், புனல் கால் கழீஇய – கால்வாய் வாரிக் கொண்டு சென்ற (கழீஇய – அளபெடை), மணல் வார் புறவில் – மணல் ஒழுங்குப்பட்ட இக்காட்டில், புலம்பு விட்டு இருந்த – வழி வந்த வருத்தத்தைக் கைவிட்டிருந்த, புனிறு இல் காட்சி – இளங்குழந்தைகள் இல்லாதவர்களாக, கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ – விலை உயர்ந்த அணிகலன்களைப் பெறும் கூத்தர்களின் சுற்றத்திற்கு தலைவனே

நன்னனை அடைந்தால் நல்ல பயன் பெறுவீர்கள்

எனல்

தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின்
மீமிசை நல்யாறு கடற் படர்ந்தாஅங்கு,
யாம் அவண் நின்றும் வருதும்; நீயிரும்,
கனி பொழி கானம் கிளையொடு உணீஇய,
துனை பறை நிவக்கும் புள்ளினம் மான,   55
புனை தார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்,
வனை புனை எழில் முலை வாங்கு அமைத் திரள் தோள்
மலர் போல் மழைக்கண் மங்கையர் கணவன்,
முனை பாழ்படுக்கும் துன் அருந்துப்பின்,
இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்குப்   60

புது நிறை வந்த புனல் அம் சாயல்
மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி
வில் நவில் தடக்கை மேவரும் பெரும் பூண்
நன்னன் சேய் நன்னற் படர்ந்த கொள்கையொடு,
உள்ளினிர் சேறிர் ஆயின், பொழுது எதிர்ந்த   65

புள்ளினிர் மன்ற என் தாக்குறுதலின், (51 – 66)

பொருளுரை:  தூய மலர்கள் நெருங்கின கரையை இடிக்கின்ற உயர்ந்த மலை உச்சியிலிருந்து வரும் நல்ல ஆறு கடலை நோக்கி விரைந்தாற்போல், நாங்கள் அங்கிருந்து வருகின்றோம். நீங்களும், பழங்களைச் சொரியும் காட்டில் அவற்றை சுற்றத்தாருடன் உண்ணும்பொருட்டு விரைந்து பறப்பதில் ஓங்கிய பறவை கூட்டத்தைப் போல, கையால் செய்த மாலையால் பொலிவுபெற்ற வண்டுகளை வரவழைக்கும் மார்பினை உடையவனும் ஓவியத்தால் அழகு செய்யப்பட்ட முலையையும், வளைந்த மூங்கிலைப் போன்ற திரண்ட தோள்களையும், மலர்போலும் குளிர்ச்சியை உடையக் கண்களையும் உடைய மங்கையரின் கணவன், பகை நிலத்தைப் பாழ்படச் செய்யும் கிட்டுதற்கரிய வலிமை உடையவன், பிறர் புகழைக் கூறுதல் என்னும் விதையால் அவர் தரும் பரிசை விரும்பும் ஏர் உழவினையுடைய பரிசிலர்க்கு, நீரோட்டம் போல் அழகிய மென்மையையும், அறிவிற்கு மாறாகிய கேட்டை எண்ணாது, ஆக்கத்தினை உணரும் நினைவினையும், விற்தொழில் பயின்ற பெரிய கையினையும் பொருந்திவரும் பெரிய அணிகலன்களை அணிந்த நன்னனின் மகன் நன்னனிடம் நினைத்த கொள்கையுடன் எண்ணிச் சென்றீர் ஆயின், புறப்படும் பொழுதில் வரும் நல்ல நிமித்தம் உடையீர், எம்மை நீங்கள் கண்டதால்!

குறிப்பு:   புள்ளினிர் (66) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நல்ல முழுத்தத்தையும் நன் நிமித்தத்தையும் நன்கு எதிர்ந்தவர் ஆயினிர் எனினுமாம், புள் – இன்னின்ன பறவை ஆறு செல்வோர் முன்னர் இன்ன திசைக்கண் நின்று இன்ன திசைக்கண் செல்லின் நன்மை விளையும் அல்லது தீங்கு விளையும் எனக் கூறும் நிமித்த நூல்களில் நலம் விளைதற்கு ஏதுவாகக் கூறப்பட்ட புட்கள் என்க.  இனிப் புள் என்பதனை வாய்ப்புள் என்றதன் முதற்குறையாகக் கொண்டு நீயிர் புறப்படும்பொழுது நன்னிமித்தமாகிய வாய்ப்புள் பெற்றனிர் எனினுமாம்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  துவன்றி – துவன்று நிறைவாகும் (தொல்காப்பியம், உரியியல் 34).  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  குறுந்தொகை 95 – நீர் ஓரன்ன சாயல், கலித்தொகை 42 – நீரினும் சாயல் உடையன், புறநானூறு 105 – நீரினும் இனிய சாயல், பதிற்றுப்பத்து 86 – நீரினும் தீந்தண் சாயலன், மலைபடுகடாம் 61 – புது நிறை வந்த புனல் அம் சாயல்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

சொற்பொருள்:   தூ மலர் துவன்றிய கரை பொரு – தூய மலர்கள் நெருங்கின கரையை இடிக்கின்ற, நிவப்பின் – உயர்ச்சியுடைய, மீமிசை – மலை உச்சி (மீ மிசை – ஒருபொருட் பன்மொழி), நல்யாறு கடல் படர்ந்தாஅங்கு – நல்ல ஆறு கடலை நோக்கி சென்றாற்போல் (படர்ந்தாஅங்கு – அளபெடை, ஆங்கு உவம உருபு), யாம் அவண் நின்றும் வருதும் – நாங்கள் அங்கிருந்து வருகின்றோம், நீயிரும் – நீங்களும், கனி பொழி கானம் கிளையொடு உணீஇய – பழங்களைச் சொரியும் காட்டில் அவற்றை சுற்றத்தாருடன் உண்ணும்பொருட்டு (உணீஇய – அளபெடை, செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்), துனை பறை நிவக்கும் புள்ளினம் மான – விரைந்து பறப்பதில் ஓங்கிய பறவைக் கூட்டத்தைப் போல (துனை  – உரிச்சொல், மான – உவம உருபு), புனை தார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின் – கையால் செய்த மாலையால் பொலிவுபெற்ற வண்டுகளை வரவழைக்கும் மார்பினை உடையவன், வனை புனை எழில் முலை – ஓவியத்தால் அழகு செய்யப்பட்ட முலையையும், வாங்கு அமைத் திரள் தோள் – வளைந்த மூங்கிலைப் போன்ற திரண்ட தோள், மலர் போல் மழைக்கண் மங்கையர் கணவன் – மலர்போலும் குளிர்ச்சியடைய கண்களையுடைய மங்கையரின் கணவன், முனை பாழ்படுக்கும் துன் அருந்துப்பின் – பகை நிலத்தை பாழ்படச் செய்யும் நெருங்கமுடியாத வலிமை, கிட்டுதற்கரிய வலிமை, இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு – பிறர் புகழைக் கூறுதல் என்னும் விதையால் அவர் தரும் பரிசை விரும்பும் ஏர் உழவினையுடைய பரிசிலர்க்கு, புது நிறை வந்த புனல் அம் சாயல் – நீரோட்டம் போல் அழகிய மென்மையும், மதி மாறு ஓரா – அறிவிற்கு மாறாகிய கேட்டை எண்ணாது, நன்று உணர் சூழ்ச்சி – ஆக்கத்தினை உணரும் நினைவினையும், வில் நவில் தடக்கை – விற்தொழில் பயின்ற பெரிய கைகள், மேவரும் பெரும் பூண் நன்னன் சேய் நன்னன் – பொருந்திவரும் பெரிய அணிகலன்களை அணிந்த நன்னனின் மகன் நன்னன், படர்ந்த கொள்கையொடு உள்ளினிர் சேறிர் ஆயின் – நினைத்த கொள்கையுடன்  எண்ணிச் சென்றீர் ஆயின், பொழுது எதிர்ந்த – புறப்படும் பொழுதில் வரும், புள்ளினிர் – நல்ல நிமித்தம் உடையீர், மன்ற – அசை நிலை, என் தாக்குறுதலின் – எம்மை நீங்கள் கண்டது

கூத்தன் நன்னனைப் பற்றிக் கூறுதல்

ஆற்றின் அளவும், அசையும் நல் புலமும்,
வீற்று வளம் சுரக்கும் அவன் நாடுபடு வல்சியும்,
மலையும் சோலையும், மா புகல் கானமும்,
தொலையா நல்இசை உலகமொடு நிற்பப்,   70

பலர் புறங்கண்டு அவர் அருங்கலம் தரீஇப்,
புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரியும்,
இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும், புகழுநர்க்கு
அரசு முழுது கொடுப்பினும், அமரா நோக்கமொடு

தூத்துளி பொழிந்த பொய்யா வானின்,   75

வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கையும்,
நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து
வல்லார் ஆயினும், புறம் மறைத்துச் சென்றோரைச்
சொல்லிக் காட்டிச் சோர்வு இன்றி விளக்கி,
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும்,   80

நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேர் இசை நவிரம் மேஎய் உறையும்
காரி உண்டிக் கடவுளது இயற்கையும்,
பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும்
ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும்,   85


இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்
நுகம்படக் கடந்து நூழிலாட்டிப்
புரைத்தோல் வரைப்பின் வேல் நிழற் புலவோர்க்குக்
கொடைக்கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும்,

இரை தேர்ந்து இவரும் கொடுந்தாள் முதலையொடு,   90

திரைபடக் குழிந்த கல் அகழ் கிடங்கின்
வரை புரை நிவப்பின் வான்தோய் இஞ்சி
உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும்;

கேள் இனி! (67 – 94)

பொருளுரை:  செல்லும் வழியில் உள்ள நன்மைகளின் அளவையும் தீமைகளின் அளவையும், நீங்கள் தங்குவதற்கு நல்ல இடங்களும்,  பிற நாடுகளில் இல்லாத செல்வத்தை மாறாது கொடுக்கும் அவன் நாட்டில் விளைகின்ற உணவும், மலைகளின் தன்மையையும், சோலைகளின் தன்மையையும், விலங்குகள் விரும்பித் திரியும் காட்டின் தன்மையையும், கெடாத நல்ல புகழ் உலகம் நிலைத்திருக்கும் வரை நிற்கும்படி,

புறமுதுகிட்டு ஓடிய பகைவர்களைக் கண்டு, அவர்கள் திறையாகத் தந்த பெறுதற்கரிய அணிகலன்களைக் கொண்டு வந்து புலவர்களுக்குக் கொடுக்கும் அவனது வள்ளன்மையாகிய மழையையும், தன்னை இகழும் பகைவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றலையும், தன்னைப் புகழும் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் பகைவரின் அரசை முற்றிலும் கொடுத்தாலும் அமைதி இல்லாத நோக்கத்துடன், தூய துளிகளைப் பொழிந்த முகில்கள் பின்னும் பெய்யுமாறு பொய்க்காத வானம் போல, மாறாமல் கொடுக்கும் அவனுடைய நாள் அரச அவையையும்,

நல்லவர்கள் கூடியிருக்கும் கற்றோர் தாங்கள் கற்றவற்றை நாவால் உரைப்பதற்கு ஏற்ற அவைக்களத்தில் வல்லமை இல்லாதவர்கள் ஆயினும், தம்மிடம் வந்தவர்களின் மாட்டாமையை மறைத்து, தாம் பொருளைச் சொல்லிக்காட்டி, சோர்வு இல்லாமல் விளக்கி, நல்லபடி நடத்தும் அவனுடைய சுற்றத்தாரின் ஒழுக்கத்தையும், 

கடல் சூழ்ந்த உலகம் நடுங்கும்படி அச்சம் தோன்றும் கடுமையான வலிமையுடைய பெரும் புகழுடைய நவிரம் என்னும் மலையில் பொருந்தியிருக்கும் நஞ்சை உண்ட சிவபெருமானின் இயல்பும், பரந்த இருள் நீங்கும்படி பகற்பொழுதைச் செய்து தோன்றும் கதிரவனை ஒத்த அவனுடைய தன்மையையும், அவனுடைய குற்றமில்லாத சிறப்பையும், பகைவர் நாடு தொலைவில் இருந்தாலும்,

அங்குச் சென்று தூசிப்படையை வலிமையுடன் வென்றுக் கொன்று, உயர்ச்சியுடைய யானைகள் அணிந்து நிற்கும் இடத்தில், வேற்போரின் திறமை உடைய அறிவுடையோர்க்கு கொடுத்தற்கரிய நாடும் ஊரும் பிற பரிசைகளையும் கொடுத்து கடமைகளைப் புரிந்த அவனைத் தொன்றுதொட்டு வந்த மறக்குடியில் உள்ள மறவர்கள் புகழவும், இரையைத் தேடித் திரியும் வளைந்த கால்களையுடைய முதலைகளுடன்,

அலைகள் உண்டாக ஆழ்ந்த கற்களைத் தோண்டி அகற்றிய கிடங்கினையும், மலையை ஒத்த உயர்ச்சியுடைய  உயர்ந்த வானைத் தொடும் மதில்களையும் உடைய, புகழ் எங்கும் பரக்கும்படி செறிந்த அவனது தொன்மையான ஊரின் தன்மையையும் நான் கூற, நீ கேட்பாயாக!

குறிப்பு:   புகழுநர் (73) – C. ஜெகந்நாதாசாரியர் உரை – சூதர் (நின்று ஏத்துவார்), மாதர் (இருந்து ஏத்துவார்), பாணர், கூத்தர் முதலியோர்.  நவிரம் (82) – இம்மலை திருவண்ணாமலையின் அருகில் உள்ளது.  திரிசூலகிரி என்றும் பருவதமலை என்றும் இன்று வழங்கப்படுகின்றது.  நுகம்பட (87) – நச்சினார்க்கினியர் உரை – வலியுண்டாக, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலியுண்டாக, உ. வே. சாமிநாதையர் உரை (குறுந்தொகை 80) – நடுநிலைமையுண்டாகும்படி, நுகம் – நுகத்தின் தன்மை, நடுவு நிலைமை, வலிமை.  தொல்லோர் (89) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தொன்றுதொட்டு வந்த பழங்குடி மறவர்.  தொல்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப் படையுள்ளும் சிறப்புடையது தொல்படையே.  ஆதலான் ‘தொல்லோர் வரவும்’ என்றார்.  புரை – புரை உயர்வாகும் (தொல்காப்பியம், உரியியல் 4).  வெறுத்த – விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே (தொல்காப்பியம், உரியியல் 51).  செய்யா – செய்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:   ஆற்றின் அளவும் – செல்லும் வழியில் உள்ள நன்மைகள் அளவும் தீமையின் அளவும், அசையும் நல் புலமும் – நீங்கள் தங்குவதற்கு நல்ல இடங்களும், வீற்று வளம் சுரக்கும் அவன் நாடுபடு வல்சியும் – பிற நாடுகளில் இல்லாத செல்வத்தை மாறாது கொடுக்கும் அவன் நாட்டில் விளைகின்ற உணவும் (வீறு – வேறு ஒன்றில் இல்லாத சிறப்பு), மலையும் சோலையும் – மலைகளின் தன்மையையும் சோலைகளின் தன்மையையும், மா புகல் கானமும் – விலங்குகள் விரும்பித் திரியும் காட்டின் தன்மையையும், தொலையா நல் இசை உலகமொடு நிற்ப – கெடாத நல்ல புகழ் உலகம் நிலைத்திருக்கும் வரை நிற்கும்படி,

பலர் புறம் கண்டு – புறமுதுகிட்டு ஓடிய பகைவர்களைக் கண்டு, அவர் அருங்கலம் தரீஇ – அவர்கள் திறையாகத் தந்த பெறுதற்கரிய அணிகலன்களை கொண்டு வந்து (தரீஇ – அளபெடை), புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரியும் – புலவர்களுக்கு கொடுக்கும் அவனது வள்ளன்மையாகிய மழையும், இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் – தன்னை இகழும் பகைவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றலும், புகழுநர்க்கு அரசு முழுது கொடுப்பினும் – தன்னைப் புகழும் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் பகைவரின் அரசை முற்றிலும் கொடுத்தாலும், அமரா நோக்கமொடு – அமைதி இல்லாத நோக்கத்துடன், தூத்துளி பொழிந்த – தூய துளிகளைப் பொழிந்த முகில்கள், பொய்யா வானின் வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கையும் – பின்னும் பெய்யுமாறு பொய்க்காத வானம் போல மாறாமல் கொடுக்கும் அவனுடைய நாள் அவையும்,

நல்லோர் குழீஇய – நல்லவர்கள் கூடியிருக்கும் (குழீஇய – அளபெடை), நா நவில் அவையத்து வல்லார் ஆயினும் – கற்றோர் தாங்கள் கற்றவற்றை நாவால் உரைப்பதற்கு ஏற்ற அவைக்களத்தில் வல்லமை இல்லாதவர்கள் ஆயினும், புறம் மறைத்துச் சென்றோரை- அவருடைய மாட்டாமையை மறைத்து தம்மிடம் வந்தவர்களை, சொல்லிக் காட்டி – தாம் பொருளைச் சொல்லிக்காட்டி, சோர்வு இன்றி விளக்கி – சோர்வு இல்லாமல் விளக்கி, நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் – நல்லபடி நடத்தும் அவனுடைய சுற்றத்தாரின் ஒழுக்கமும், 

நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல் – கடல் சூழ்ந்த உலகம் நடுங்கும்படி அச்சம் தோன்றும் கடுமையான வலிமையுடைய, பேர் இசை நவிரம் மேஎய் உறையும் காரி உண்டி – பெரும் புகழுடைய நவிரம் என்னும் மலையில் பொருந்தியிருக்கும் நஞ்சை உண்ட (மேஎய் – அளபெடை), கடவுளது இயற்கையும் – கடவுளின் இயல்பும் (சிவன்), பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும் ஞாயிறு அன்ன – பரந்த இருள் நீங்கும்படி பகற்பொழுதைச் செய்து தோன்றும் கதிரவனை ஒத்த அவனுடைய தன்மையும், அவன் வசை இல் சிறப்பும் – அவனுடைய குற்றமில்லாத சிறப்பும், இகந்தன ஆயினும் – தொலைவில் இருந்தாலும், தெவ்வர் தேஎம் – பகைவர் நாடு (தேஎம் – அளபெடை),

நுகம்படக் கடந்து நூழிலாட்டி – அங்கு சென்று தூசிப்படையை வலிமையுடன் வென்றுக் கொன்று, புரைத்தோல் வரைப்பின் – உயர்ச்சியுடைய யானைகள் அணிந்து நிற்கும் இடத்தில், வேல் நிழற் புலவோர்க்குக் கொடைக்கடன் இறுத்த – வேற்போரின் திறமை உடைய அறிவுடையோர்க்கு கொடுத்தற்கரிய நாடும் ஊரும் பிற பரிசைகளையும் கொடுத்து கடமைகளைப் புரிந்த, அவன் தொல்லோர் வரவும் – தொன்றுதொட்டு வந்த அவன் மறக்குடியில் உள்ள மறவர்களின் புகழ் மொழிகளையும், இரை தேர்ந்து இவரும் கொடுந்தாள் முதலையொடு – இரையைத் தேடித் திரியும் வளைந்த கால்களையுடைய முதலைகளுடன்,

திரைபட குழிந்த கல் அகழ் கிடங்கின் – அலைகள் உண்டாக ஆழ்ந்த கற்களை தோண்டி அகற்றிய கிடங்கினையும், வரை புரை – மலையை ஒத்த உயர்ச்சியுடைய (புரை – உவம உருபு), நிவப்பின் வான் தோய் இஞ்சி – உயர்ந்த வானைத் தொடும் மதில்களையும் உடைய, உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும் கேள் இனி – புகழ் எங்கும் பரக்கும்படி செறிந்த அவனது தொன்மையான ஊரின் தன்மையை நான் கூற நீ கேட்பாயாக (செல – இடைக்குறை, வெறுத்த – செறிந்த, மாலை – இயல்பு)

வழியினது நன்மையின் அளவு கூறுதல்

வேளை நீ முன்னிய திசையே,

மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின்   95
புதுவது வந்தன்று இது அதன் பண்பே,
வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது
இட்ட எல்லாம் பெட்டாங்கு விளையப்
பெயலொடு வைகிய வியன்கண் இரும் புனத்து,

அகல் இரு விசும்பின் ஆஅல் போல,   100

வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை,
நீலத்து அன்ன விதைப்புன மருங்கில்,
மகுளி பாயாது மலி துளி தழாலின்,
அகளத்து அன்ன நிறை சுனைப் புறவின்,
கௌவை போகிய கருங்காய் பிடி ஏழ்  105

நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எண்,

பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப,
கொய் பதம் உற்றன குலவுக் குரல் ஏனல்,
விளை தயிர்ப் பிதிர்வின் வீ உக்கு இருவிதொறும்,

குளிர் புரை கொடுங்காய் கொண்டன அவரை,   110

மேதி அன்ன கல் பிறங்கு இயவின்,
வாதி கை அன்ன கவைக்கதிர் இறைஞ்சி,
இரும்பு கவர்வுற்றன பெரும்புன வரகே,
பால் வார்பு கெழீஇப் பல் கவர் வளி போழ்பு
வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல்,   115


வேல் ஈண்டு தொழுதி இரிவுற்றென்னக்,
கால் உறு துவைப்பின் கவிழ்க் கனைத்து இறைஞ்சிக்,
குறை அறை வாரா நிவப்பின் அறை உற்று,
ஆலைக்கு அலமரும் தீம் கழைக் கரும்பே,

புயற் புனிறு போகிய பூ மலி புறவின்   120

அவற் பதம் கொண்டன அம்பொதித் தோரை,
தொய்யாது வித்திய துளர்படு துடவை
ஐயவி அமன்ற வெண்கால் செறுவில்
மை என விரிந்தன நீள் நறு நெய்தல்,

செய்யாப் பாவை வளர்ந்து கவின் முற்றிக்   125

காயம் கொண்டன இஞ்சி, மா இருந்து
வயவுப் பிடி முழந்தாள் கடுப்ப குழிதொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை,
காழ்மண் எஃகம் களிற்று முகம் பாய்ந்தென

ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய   130

துறுகல் சுற்றிய சோலை வாழை,
இறுகு குலை முறுகப் பழுத்த பயம் புக்கு
ஊழ் உற்று அலமரும் உந்தூழ் அகல் அறைக்
காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின்

காலின் உதிர்ந்தன கருங் கனி நாவல்,  135

மாறு கொள ஒழுகின ஊறு நீர் உயவை,
நூறொடு குழீஇயின கூவை, சேறு சிறந்து
உண்ணுநர்த் தடுத்தன தேமா, புண் அரிந்து
அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி,

விரல் ஊன்று படுகண் ஆகுளி கடுப்பக்   140

குடிஞை இரட்டும் நெடு மலை அடுக்கத்துக்
கீழும் மேலும் கார் வாய்த்து எதிரிச்
சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி

முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினைப் பலவே; (94 – 144)

பொருளுரை:  நன்னன் வேண்மானை நீ கருதிச் செல்கின்ற திசைதான், மிகுந்த செல்வம் அடைந்த புதுவருவாயை உடைய ஊர்களில் புதிது ஆகிய தன்மை கொண்டது. இத் தன்மை அந்தத் திசையின் பண்பு.  முகில் பிளந்து மின்னலாகிய வடுவுடன் பொழிய, விடாது நிலத்தில் எல்லாம் இட்ட விதைகள் எல்லாம் இன்னமுறையில் விளைய வேண்டும் என்று அங்கு உள்ளவர்கள் விரும்பினாற்போல விளைய, அந்த மழையுடன் தங்கிய அகன்ற இடங்களை உடைய பெரிய கொல்லை நிலத்தில், பெரிய வானத்தில் கார்த்திகையாகிய விண்மீன் போல, 

வெள்ளையாக மலர்ந்த மெல்லிய கொடியையுடைய முசுண்டையின் தோடுகள் நீலமணி நிறத்தையுடைய கொல்லையின் அருகில், நோய் கொள்ளாமல், மிக்க மழைத் துளிகளைத் தழுவுவதால், நீர்ப்பானைகள் போல நீர் நிறைந்த சுனைகளையுடைய காட்டில், இளந்தன்மைபோன கரிய காய்கள், ஒரு பிடியில் ஏழு காயாக எண்ணெய் உள்ளே கொள்ளும்படியாகப் பலவாகக் கிளைத்த பசுமையான எள், 

விளையாடும் பொருட்டுப் பொய்ப் போர் புரிகின்ற யானைக் கன்றுகளின் ஒன்றோடு ஒன்று சேர்ந்த தும்பிக்கைகளை ஒப்ப அறுக்கும் பதத்தை அடைந்தன ஒன்றோடு ஒன்று பிணையும் கதிர்களையுடைய தினை. விளைந்த தயிரின் பிதிர்வுபோலும் தம் மலர்களை உதிரச் செய்து, தினையரி தாள் தோறும் அரிவாளை ஒத்த வளைந்த காய்களைக் கொண்டன அவரை,  

எருமைகள் கிடந்தாற்போல் உள்ள கற்கள் நிறைந்த வழியில், வாக்குவாதம் செய்பவர்கள் கையில் இணைந்த விரல்களை ஒத்த பிளவுபட்ட கதிர்கள் முற்றியதால் வளைந்து அரிவாளால் அறுக்கப்பட்டப் பெரிய புனத்தில் உள்ள வரகுகள் பால் கட்டி முற்றிப் பலவாகப் பிரிந்த காற்று இடையே வீச, நன்றாக விளைந்த ஐவன நெல்லும் வெண்ணெல்லும், வேல் தாங்கிய தானை கெட்டுப்போவதைப் போல என்னும்படி காற்று மிக்க வீசுவதால் ஒலித்துக் கவிழ்ந்து, குறைந்து போகாத நல்ல வளர்ச்சியுடன் வெட்டப்பட்டு ஆலைகளுக்குச் செல்ல இருக்கும் இனிய கரும்பு, மழையால் ஈன்றணிமை தீர்ந்து முற்றிய மலர்கள் நிறைந்த காட்டில்,

அவல் இடிக்கும் பதத்தைக் கொண்டது அழகிய குலையையுடைய மூங்கில் நெல். உழாது விதைக்கப்பட்ட, களைக்கொட்டால் அடிவரைந்து கொத்தும் தோட்டங்களில் வெள்ளை நெல் அரி தாளையுடைய வயலில் கருமை எனும்படி வளர்ந்தன நீண்ட நறுமணமுடைய நெய்தல். யாராலும் பண்ணப்படாத பாவையாகிய இஞ்சி வளர்ந்து அழகு முதிர்ந்து காரம் கொண்டன, 

மாவாகும் தன்மை தம்மிடத்தில் இருக்க, வலிமையான பெண் யானையின் முழந்தாளை ஒப்ப குழிகள்தோறும் சிறப்பாகக் கீழே வளர்ந்திருந்தன கொழுத்த கொடியையுடைய கவலைக்கிழங்குகள்.  காம்புடைய வேல் யானையின் முகத்தைத் குத்தினாற்போல, முறைப்பட மலர்களை ஒழிந்த முகைகளின் உயர்ந்த முகங்கள் (முனைகள்) அருகில் உள்ள பெரிய பாறைகளைத் தீண்டும்படியாக,

அப்பெரிய பாறைகள் சூழ்ந்து இருந்த சோலையில் வாழை மரங்கள் இருந்தன.  இறுக்கமான குலைகள் நெகிழப் பழுத்த முற்றி பயன் தரும் அசையும் மூங்கில் நெல், அகன்ற பாறையின்கண் காலம் அன்றியும் நிலத்தின் சிறப்பினால் பயனைத் தருவதால் காற்றில் உதிர்ந்தன நாவல் மரங்களின் கருங்கனிகள்,

நீருடன் மாறுகொள்ளுமாறு படர்ந்த, அவற்றைக் கண்டவர்களின் வாயில் நீர் ஊறுவதற்குக் காரணமான உயவைக் கொடிகள், மாவுடன் முற்றித் திரண்ட கூவல் கிழங்குகள், தம் பழத்தில் உள்ள சாறு சிறந்து உண்ணுபவர்களை வேறு எங்கும் செல்லமுடியாதபடி தடுக்கும் இனிய மாமரங்கள், புண் ஆகும்படி வெடித்துத் தம் பழத்தில் உள்ள விதைகள் உதிர்ந்த நெடிய அடியை உடைய ஆசினிப் பலா மரங்கள், விரல் தீண்டுகின்ற முழங்கும் கண்ணையுடைய ஆகுளி பறையை ஒப்ப பேராந்தை ஒலிக்கும் நெடிய மலையில், கார்காலம் வாய்த்த மழையை ஏற்று, சுரத்தில் செல்லும் கூத்தருடைய முழவுகள் போல் மேலும் கீழும் காய்கள் முற்றி, தாழ்ந்து இருந்தன அசைகின்ற கிளைகளை உடைய பலா மரங்கள்.

குறிப்பு:   பால் வார்பு (114) – C. ஜெகந்நாதாசாரியர் உரை – வார்த்தல் ஒழுகலால் கட்டுதலை உணர்த்திற்று.  குறை அறை வாரா (118) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறைந்து போதலும் அற்றொழிதலும் உண்டாகாத, நச்சினார்க்கினியர் உரை – அறை குறை வாரா – பாத்தி குறைபடுதல் உண்டாகாத.  மா இருந்து (126) – நச்சினார்க்கினியர் உரை – முற்றி மாவாகும் தன்மை தன்னிடத்தே உளவாய்.  செய்யாப் பாவை (125) – நச்சினார்க்கினியர் உரை – இஞ்சிக் கிழங்கைப் பாவை என்பது மரபு, ஒருவரால் பண்ணப்படாத பாவை.  செய்யாப் பாவை – குரவ மரத்தின் மலர் (ஐங்குறுநூறு 344) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குரவம் பூ உருவத்தால் பாவை போறலின் பாவை என்றே உவமவாகு பெயராற் கூறுப.  ஈண்டுச் செய்யாப் பாவை என்றது பாயா வேங்கை, பறவாக் கொக்கு என்பனபோல வெளிப்படை.  (பாயா வேங்கை – வேங்கை மலர், பறவாக் கொக்கு – மாம்பழம்).  மின்னல் பிளத்தல்:  மின்னு வசிபு – அகநானூறு 162, 212, 322, நற்றிணை 228, 261, மலைபடுகடாம் 97, மின்னு வசி – நற்றிணை 334.  யாணர்– புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  முரஞ்சல் – முதிர்வே (தொல்காப்பியம், உரியியல் 35).  புனிறு – புனிறென் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 77).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  கரும்பு ஆலை – மலைபடுகடாம் 119 – அறை உற்று ஆலைக்கு அலமரும் தீம் கழைக் கரும்பே, மலைபடுகடாம் 340- மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக் கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும், பெரும்பாணாற்றுப்படை 261 – விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும் கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின், பட்டினப்பாலை 9 – கார்க் கரும்பின் கமழ் ஆலை, பரிபாடல் 1-14 – சாறுகொள் ஓதத்து இசையொடு. முரஞ்சல் முதிர்வே – (தொல்காப்பியம், உரியியல் 37).

சொற்பொருள்:   வேளை நீ முன்னிய திசையே – நன்னன் வேண்மானை நீ கருதிச் செல்கின்ற திசை (திசையே – ஏகாரம் பிரிநிலை, திசை ஆகுபெயர் செல்லும் வழிக்கு), மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின் புதுவது வந்தன்று – மிகுந்த செல்வம் அடைந்த புதுவருவாயை உடைய ஊர்களில் புதிது ஆகிய தன்மை வந்தது (வந்தன்று – அன் சாரியை, று – விகுதி, த் – இடை), இது அதன் பண்பே – இத் தன்மை அந்த திசையின் பண்பு (பண்பே – ஏகாரம் அசைநிலை), வானம் மின்னு வசிவு பொழிய – முகில் பிளந்து மின்னலாகிய வடுவுடன் பொழிய (மின்னு – மின் உகரச்சாரியை பெற்று மின்னு என நின்றது), ஆனாது இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய – விடாது நிலத்தில் எல்லாம்  இட்ட விதைகள் எல்லாம் இன்னமுறையில் விளைய வேண்டும் என்று அங்கு உள்ளவர்கள் விரும்பினாற்போல விளைய, பெயலொடு வைகிய வியன்கண் இரும் புனத்து – அந்த மழையுடன் தங்கிய அகன்ற இடங்களை உடைய பெரிய கொல்லை நிலத்தில், அகல் இரு விசும்பின் ஆஅல் போல – பெரிய வானத்தில் கார்த்திகையாகிய விண்மீன் போல (ஆஅல் – அளபெடை, ஆல் – ஆரல் என்பதன் விகாரம்), 

வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை – வெள்ளையாக மலர்ந்த புல்லிய (மெல்லிய) கொடியையுடைய முசுண்டை, நீலத்து அன்ன – தோடுகள் நீலமணி நிறத்தையுடைய, (நீலத்து – நீலம், அத்து சாரியை), விதைப்புன மருங்கில் – கொல்லையின் அருகில், மகுளி பாயாது – நோய் கொள்ளாமல் (மகுளி – எள்ளின்கண் தோன்றும் நோய்), மலி துளி தழாலின் – மிக்க மழைத் துளிகளைத் தழுவுவதால், அகளத்து அன்ன – நீர்ப்பானைகள் போல (அகளத்து – அகளம், அத்து சாரியை), நிறை சுனைப் புறவின் – நீர் நிறைந்த சுனைகளையுடைய உடைய காட்டில், கௌவை போகிய கருங்காய் – இளந்தன்மை போன கரிய காய்கள், பிடி ஏழ் நெய் கொள ஒழுகின பல்கவர் ஈர் எண் – ஒரு பிடியில் ஏழு காயாக எண்ணெய் உள்ளே கொள்ளும்படியாக பலவாக கிளைத்த பசுமையான எள்,

பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப – விளையாடும் பொருட்டுப் பொய்ப் போர் புரிகின்ற யானைக் கன்றுகளின் ஒன்றோடு ஒன்று சேர்ந்த தும்பிக்கைகளை ஒப்ப (கடுப்ப – உவம உருபு), கொய் பதம் உற்றன குலவுக் குரல் ஏனல் – அறுக்கும் பதத்தை அடைந்தன பிணையும் கதிர்களையுடைய தினை, விளை தயிர்ப் பிதிர்வின் வீ உக்கு – விளைந்த தயிரின் பிதிர்வுபோலும் தம் மலர்களை உதிரச் செய்து, இருவிதொறும் – தினையரி தாள் தோறும், குளிர் புரை – அரிவாளை ஒத்த (புரை – உவம உருபு), கொடுங்காய் கொண்டன அவரை – வளைந்த காய்களைக் கொண்டன அவரை, 

மேதி அன்ன கல் பிறங்கு இயவின் – எருமைகள் கிடந்தாற்போல் உள்ள கற்கள் நிறைந்த வழியில், வாதி கை அன்ன கவைக் கதிர் இறைஞ்சி – வாக்குவாதம் செய்பவர்கள் கையில் இணைந்த விரல்களை ஒத்த பிளவுபட்ட கதிர்கள் முற்றியதால் வளைந்து, இரும்பு கவர்வுற்றன பெரும்புன வரகே – அரிவாளால் அறுக்கப்பட்டப் பெரிய புனத்தில் உள்ள வரகுகள், பால் வார்பு கெழீஇ – பால் கட்டி முற்றி (கெழீஇ – அளபெடை), பல் கவர் வளி போழ்பு – பலவாகப் பிரிந்த காற்று இடையே வீச, வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல் – நன்றாக விளைந்தன ஐவன நெல்லும் வெண்ணெல்லும், வேல் ஈண்டு தொழுதி இரிவுற்றென்ன – வேல் தாங்கிய தானை கெட்டுப்போவதைப் போல என்னும்படி, கால் உறு துவைப்பின் கவிழ்க் கனைத்து இறைஞ்சி – காற்று மிக்க வீசுவதால் ஒலித்து கவிழ்ந்து (உறு – மிக்க), குறை அறை வாரா நிவப்பின் – குறைந்து போகாத நல்ல வளர்ச்சியுடன், அறை உற்று ஆலைக்கு அலமரும் தீம் கழைக் கரும்பே – வெட்டப்பட்டு ஆலைகளுக்கு செல்ல இருக்கும் இனிய கரும்பு, புயல் புனிறு போகிய – மழையால் ஈன்றணிமை தீர்ந்து முற்றிய, பூ மலி புறவின் – மலர்கள் நிறைந்த கொல்லை நிலத்தில்,,

அவற் பதம் கொண்டன – அவல் இடிக்கும் பதத்தைக் கொண்டது, அம்பொதித் தோரை – அழகிய குலையையுடைய மூங்கில் நெல், தொய்யாது வித்திய – உழாது விதைக்கப்பட்ட, துளர்படு துடவை – களைக்கொட்டால் அடிவரைந்து கொத்தும் தோட்டங்களில், ஐயவி அமன்ற – வெண்கடுகு அடர்ந்து விளைந்தன, வெண்கால் செறுவில் மை என விரிந்தன – வெள்ளை நெல் அரி தாளையுடைய வயலில் கருமை எனும்படி வளர்ந்தன,  நீள் நறு நெய்தல் – நீண்ட நறுமணமுடைய நெய்தல், செய்யாப் பாவை – யாராலும் பண்ணப்படாத பாவை (செய்யாப் பாவை – இஞ்சிக் கிழங்கிற்கு வெளிப்படை), வளர்ந்து கவின் முற்றி காயம் கொண்டன இஞ்சி – வளர்ந்து அழகு முதிர்ந்து காரம் கொண்டன இஞ்சி,

மா இருந்து வயவுப் பிடி முழந்தாள் கடுப்ப – மாவாகும் தன்மை தம்மிடத்தில் இருக்க வலிமையான பெண் யானையின் முழந்தாளை ஒப்ப (கடுப்ப – உவம உருபு, வயா என்பது வயவு ஆயிற்று, முழந்தாள் – முழங்கால் முட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள உறுப்பு), குழிதொறும் விழுமிதின் வீழ்ந்தன – குழிகள்தோறும் சிறப்பாகக் கீழே வளர்ந்தன, கொழுங்கொடிக் கவலை – கொழுத்த கொடியையுடைய கவலைக்கிழங்கு, காழ் மண் எஃகம் களிற்று முகம் பாய்ந்தென – காம்புடைய வேல் யானையின் முகத்தைத் குத்தினாற்போல, ஊழ் மலர் ஒழி முகை  உயர் முகம் தோய – முறைப்பட மலர்களை முகைகளின் உயர்ந்த முகங்கள் சென்று தீண்டும்படியாக,    

துறுகல் சுற்றிய சோலை வாழை – நெருங்கின பெரிய பாறைகள் சூழ்ந்து இருந்த சோலையில் வாழை மரங்கள் இருந்தன, இறுகு குலை நெகிழப் பழுத்த – இறுக்கமான குலைகள் முற்றிலும் பழுத்த, பயம் புக்கு ஊழ் உற்று அலமரும் உந்தூழ் – முற்றி பயன் தரும் அசையும் மூங்கில், அகல் அறை – அகன்ற பாறையின்கண், காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின் – காலமன்றியும் நிலத்தின் சிறப்பினால் பயனைத் தருவதால், காலின் உதிர்ந்தன கருங்கனி நாவல் – காற்றில் உதிர்ந்தன நாவல் மரங்களின் கருங்கனிகள்,

மாறு கொள ஒழுகின – நீருடன் மாறுகொள்ளுமாறு படர்ந்த, ஊறு நீர் உயவை – அவற்றைக் கண்டவர்களின் வாயில் நீர் ஊறுவதற்குக் காரணமான உயவைக் கொடி, நூறொடு குழீஇயின கூவை – மாவுடன் முற்றித் திரண்ட கூவல் கிழங்கு (குழீஇயின – அளபெடை), சேறு சிறந்து உண்ணுநர்த் தடுத்தன தேமா – தம் பழத்தில் உள்ள சாறு சிறந்து உண்ணுபவர்களை வேறு எங்கும் செல்லமுடியாதபடி தடுக்கும் இனிய மாமரங்கள், புண் அரிந்து அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி – புண் ஆகும்படி வெடித்துத் தம் பழத்தில் உள்ள விதைகள் உதிர்ந்த நெடிய அடியை உடைய ஆசினிப் பலா மரங்கள், விரல் ஊன்று படுகண் ஆகுளி கடுப்ப – விரல் தீண்டுகின்ற முழங்கும் கண்ணையுடைய சிறு பறையை ஒப்ப (கடுப்ப – உவம உருபு), குடிஞை இரட்டும் நெடு மலை அடுக்கத்து – நெடிய மலையில் பேராந்தை ஒலிக்கும், கீழும் மேலும் – கீழும் மேலும் தொங்கி, கார் வாய்த்து எதிரி – கார்காலம் வாய்த்த மழையை ஏற்று, சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி – சுரத்தில் செல்லும் கூத்தருடைய முழவுகள் போல் இருந்து தொங்கி, முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினைப் பலவே – முற்றுதல் கொண்டு தாழ்ந்து இருந்தன பலா மரத்தின் கிளைகள்

கானவர் குடி

தீயின் அன்ன ஒண் செங்காந்தள்,   145
தூவல் கலித்த புது முகை ஊன் செத்து,
அறியாது எடுத்த புன்புறச் சேவல்
ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென,
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய்,

வெறிக்களம் கடுக்கும் வியல் அறை தோறும்,   150

மண இல் கமழும் மாமலைச் சாரல்,
தேனினர், கிழங்கினர், ஊன் ஆர் வட்டியர்,
சிறுகட் பன்றிப் பழுதுளி போக்கி,
பொருது தொலை யானைக் கோடு சீர் ஆகத்,

தூவொடு மலிந்த காய கானவர்,   155

செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே,
இரும்பேர் ஒக்கலொடு பதம் மிகப் பெறுகுவிர்; (145 – 157)

பொருளுரை:  நெருப்பினை ஒத்த ஒளியுடைய செங்காந்தளின் மழையால் தழைத்து வளர்ந்த புதிய அரும்பினை தசையென எண்ணி அறியாது எடுத்துக் கொண்ட புல்லிய புறத்தையுடைய ஆண் பருந்து, அது தசை இல்லை என்பதால் அதைக் கீழே போட்டதால், நெருப்பை ஒத்த பல இதழ்கள் பரந்து (பரவி) வெறிக்களம் போல் தோன்றும் அகன்ற பாறைகள்தோறும், மணமனை போல மணக்கும் பெரிய மலையின் சரிவில், தேனை உடையவர்களாக,  கிழங்கை உடையவர்களாக, தசை நிறைந்த கிண்ணத்தை உடையவர்களாக, சிறிய கண்ணையுடைய பன்றியின் பழுதான பகுதிகளை நீக்கி, போரில் இறந்த யானைகளின் தந்தங்களை தங்கள் தோளில் காவுமரமாக (காவடியாக), தசையுடன் மிகுந்த காவிக் கொண்டு வந்த, கானவரின் வளமான சிறுகுடியை நீங்கள் அடைந்தால், உங்கள் மிகவும் பெரிய சுற்றத்துடன் உணவு வகைகளை நீங்கள் பெறுவீர்கள்.

குறிப்பு:   இரும்பேர் ஒக்கல் – பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை – புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 – மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 – கரிய பெரிய சுற்றத்தார்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:   தீயின் அன்ன ஒண் செங்காந்தள் – நெருப்பினை ஒத்த ஒளியுடைய செங்காந்தள் (தீயின் – இன் சாரியை), தூவல் கலித்த புது முகை – மழையால் தழைத்து வளர்ந்த புதிய அரும்பு, ஊன் செத்து அறியாது எடுத்த புன்புறச் சேவல் – தசையென எண்ணி அறியாது எடுத்துக் கொண்ட புல்லிய புறத்தையுடைய ஆண் பருந்து, ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென – தசை இல்லை என்பதால் அதைக் கீழே போட்டதால் (ஊஉன் – அளபெடை), நெருப்பின் அன்ன பல்லிதழ் தாஅய் – நெருப்பை ஒத்த பல இதழ்கள் பரந்து (நெருப்பின் – இன் சாரியை, தாஅய் – அளபெடை, பல்லிதழ் – அகரம் கெட்டு ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்து 160, என்றதனால் லகரம் இரட்டித்து பல்லிதழ் என முடிந்தது), வெறிக்களம் கடுக்கும் வியல் அறை தோறும் – வெறிக்களம் போல் தோன்றும் அகன்ற பாறைகள்தோறும், மண இல் கமழும் – மணமனை போல மணக்கும், மாமலைச் சாரல் – பெரிய மலையின் சரிவில், தேனினர் – தேனை உடையவர்கள், கிழங்கினர் – கிழங்கை உடையவர்கள், ஊன் ஆர் வட்டியர் – தசை நிறைந்த கிண்ணத்தை உடையவர்கள், சிறுகண் பன்றிப் பழுது உளி போக்கி – சிறிய கண்ணையுடைய பன்றியின் பழுதானவற்றை நீக்கி, பொருது தொலை யானைக் கோடு – போரில் இறந்த யானைகளின் தந்தங்கள், சீர் ஆக – தோளில் காவுமரமாக, தூவொடு – தசையுடன் (தூவு – ஊன்), மலிந்த காய – மிகுந்த காவிக் கொண்டு வந்த, கானவர் செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே – கானவரின் வளமான சிறுகுடியை நீங்கள் அடைந்தால் (படினே – ஏகாரம் அசைநிலை), இரும்பேர் ஒக்கலொடு பதம் மிகப் பெறுகுவிர் – உங்கள் மிகவும் பெரிய சுற்றத்துடன் உணவு வகைகளை நீங்கள் பெறுவீர்கள்  (இரும்பேர் – ஒருபொருட் பன்மொழி)

வழியிலுள்ள சிற்றூரில் நிகழும் விருந்து

அன்று அவண் அசைஇ அற்சேர்ந்து அல்கி,
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து,

சேந்த செயலைச் செப்பம் போகி,   160

அலங்கு கழை நரலும் ஆரிப் படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி,
“நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மான விறல் வேள் வயிரியம்” எனினே,

நும் இல் போல நில்லாது புக்குக்,   165

கிழவிர் போலக் கேளாது கெழீஇச்,
சேட் புலம்பு அகல இனிய கூறி,
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்; (158 – 169)

பொருளுரை:  அன்று அவ்விடத்தில் தங்கி, இரவிலும் அவ்விடத்தில் தங்கி, கனலும் தீப் போன்ற ஒளியுடைய மலர்க்கொத்துக்களை உங்கள் சுற்றத்தாருடன் அணிந்து, சிவந்த மலர்கள்கொண்ட அசோகமரத்தையுடைய செவ்விய வழியில் போய், அசைகின்ற மூங்கில் ஒலிக்கும், அரியதாக இருக்கும் இழிந்து ஏறும் வழிகளையுடைய மலையைச் சேர்ந்த சிற்றூர்களைச் சேர்ந்து, “பகைவரைப் பொறுக்காமல் புரியும் போரில் வெற்றி உண்டாகும் வலிய முயற்சியையும் மானத்தையும் வெற்றியையுமுடைய நன்னனுடைய கூத்தர் நாங்கள்” என்று நீங்கள் அவர்களிடம் கூறினால், உங்கள் மனைபோல் எண்ணி, வெளியே நீங்கள் நிற்காமல் உள்ளே புகுந்து, அவர்களுடைய உறவினர்களைப் போல் கேளாது உறவு கொண்டால், தொலைவிலிருந்து வந்த உங்களுடைய வருத்தம் தீர்க்கும்படி இனிய சொற்களைக் கூறி, பருத்த தசை சொரிந்த நெய்யில் வெந்த நிறம் மிகுந்த தினைச் சோற்றினை அவர்கள் உங்களுக்குத் தருவார்கள். 

குறிப்பு  மான விறல் வேள் (மலைபடுகடாம் 164) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மானத்தையும் வெற்றியையும் உடைய நன்னன், மான விறல் வேள் (மதுரைக்காஞ்சி 344) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மான விறல் வேள் என்ற குறுநில மன்னன்.  தாள் மான விறல் – உம்மைத்தொகை.   குரூஉ (169) – நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5). 

சொற்பொருள்:   அன்று அவண் அசைஇ – அன்று அவ்விடத்தில் தங்கி (அசைஇ – அளபெடை), அல் சேர்ந்து அல்கி – இரவிலும் அவ்விடத்தில் தங்கி, கன்று எரி ஒள் இணர் – கனலும் தீப் போன்ற ஒளியுடைய மலர்க்கொத்துக்கள்,  கடும்பொடு மலைந்து – சுற்றத்தாருடன் அணிந்து, சேந்த செயலைச் செப்பம் போகி – சிவந்த மலர்கள்கொண்ட அசோகமரத்தையுடைய செவ்விய வழியில் போய், அலங்கு கழை நரலும் – அசைகின்ற மூங்கில் ஒலிக்கும், ஆரிப் படுகர் – அரியதாக இருக்கும் இழிந்து ஏறும் வழிகள் (ஆரி – அரிதாகிய, படுகர் – வழிக்கு ஆகுபெயர், இழிந்து ஏறும் வழி, கீழும் மேலும் செல்லும் வழி), சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி – மலையைச் சேர்ந்த சிற்றூர்களைச் சேர்ந்து, நோனாச் செருவின் வலம்படு நோன் தாள் – பகைவரைப் பொறுக்காமல் புரியும் போரில் வெற்றி உண்டாகும் வலிய முயற்சி, மான விறல் வேள் வயிரியம் எனினே – மானத்தையும் வெற்றியையும் உடைய நன்னனுடைய கூத்தர் என்று நீங்கள் கூறினால் (வயிரியம் – தன்மைப் பன்மைப் பெயர்), நும் இல் போல நில்லாது புக்கு – உங்கள் மனைபோல் வெளியே நிற்காமல் உள்ளே புகுந்து, கிழவிர் போல – நீங்கள் கிழமையுடையவர்கள் போல், நீங்கள் சுற்றத்தார் போல், (கிழவிர் – கிழமையென்ற பகுதியினடியாகப் பிறந்த முன்னிலை வினையாலணையும் பெயர், கிழமை – உரிமை), கேளாது கெழீஇ – கேளாது உறவு கொண்டு (கெழீஇ – அளபெடை), சேட் புலம்பு அகல இனிய கூறி – தொலைவிலிருந்து வந்த உங்களுடைய வருத்தம் தீர்க்கும்படி இனிய சொற்களைக் கூறி, பரூஉக்குறை பொழிந்த – பருத்த தசை சொரிந்த (பரூஉ – அளபெடை), நெய்க்கண் வேவையொடு குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்– நெய்யில் வெந்த நிறம் மிகுந்த தினைச் சோற்றினை நீங்கள் பெறுவீர்கள் (குரூஉ – அளபெடை),

நன்னனது மலைநாட்டில் பெறும் பொருள்கள்

ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொடு,   170

வேய்ப் பெயல் விளையுள் தேக் கள் தேறல்,
குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறைப்
பழஞ் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர,
அருவி தந்த பழம் சிதை வெண்காழ்

வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை,   175

முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை,
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ,
வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்
இன் புளிக் கலந்து மா மோர் ஆக,

கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து,   180

வழை அமல் சாரல் கமழத் துழைஇ,
நறுமலர் அணிந்த நாறு இரு முச்சிக்
குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி,
அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ,

மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்; (170 – 185)

பொருளுரை:  விளங்கும் மலையில் ஏறிக் கொண்டுவரும் பண்டங்களுடன் மூங்கில் குழாயில் விளைந்த தேனால் செய்த கள்ளைக் குறைவில்லாமல் குடித்து, நெல்லால் செய்த கள்ளைக் குடித்து மகிழ்ந்து, அதிகாலையில் கள்ளுண்டு மகிழ்ச்சியுற்ற உம்முடைய குடிமதம் தீர்க்கும்படி, அருவி கொண்டு வந்த பலாப்பழம் உதிர்த்த வெள்ளை விதைகளையும், தன்னை நோக்கி வருகின்ற விசையைக் கெடுத்துச் செத்த கடமானின் கொழுத்த தசையையும், கொல்லப்பட்ட முள்ளம்பன்றியின் பசுமையான கொழுப்புடைய தசையையும், பெண் நாய் கடித்துக் கொண்டுவந்த உடும்பின் தசையோடு கலந்து, வெள்ளைப் பக்கங்களைக் கொண்ட துய்யை (பஞ்சுப் போன்றதை) மேலே உடைய பழத்தின் இனிய புளியைக் கலந்து, சிறந்த மோரை வார்த்து, மூங்கிலில் முற்றிய அரிசியை (விதையை) உலையில் இட்டு, சுரபுன்னை நெருங்கிய மலையில் நறுமணம் கமழ துழாவி நறுமணமான மலர்களைச் சூடின நறுமணமான கரிய பெரிய மயிர் கொண்டையையுடைய குறவர் குடிப்பெண் சமைத்த வெள்ளைச் சோறாகிய உணவை, நெஞ்சம் நிறைந்த மிக்க மகிழ்ச்சி உடையவர்களாக, விருப்பத்துடன் நெஞ்சம் கலந்து, தம் பிள்ளைகளைக் கொண்டு உங்களைப் போகவிடாது தடுத்து, மனைதோறும் உங்களுக்குக் கொடுப்பார்கள்.

குறிப்பு:  ஒப்புமை – பெரும்பாணாற்றுப்படை 131-133 – நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின் வறைகால் யாத்தது வயின்தொறும் பெருகுவிர், மலைபடுகடாம் 176-177 – முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ, புறநானூறு 177 – எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப் பைஞ்ஞிணம் பெருத்த பசு வெள் அமலை.  மூங்கிலில் விளைந்த கள்:  நற்றிணை 276 – வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, அகநானூறு 348 – ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி, அகநானூறு 368 – அம் பணை விளைந்த தேன் கண் தேறல், பதிற்றுப்பத்து 81 – தூம்பு அகம் பழுனிய தீம் பிழி, திருமுருகாற்றுப்படை 195 – நீடு அமை விளைந்த தேக் கள் தேறல், மலைபடுகடாம் 171 – வேய்ப் பெயல் விளையுள் தேக் கள் தேறல், மலைபடுகடாம் 522 – திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்.  கடமான் (175) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடமான், புறநானூறு 157-10 – ஒளவை துரைசாமி உரை – காட்டின்கண் உள்ள மான். வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின் (178) – ச. வே. சுப்பிரமணியன் உரை – மென்மையான தோட்டையுடைய புளியம்பழம்,  C. ஜெகந்நாதாசாரியர் உரை – வெள்ளிய புறத்தைக் கொண்ட ஆர்க்கினையுடைய புளியம்பழம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெள்ளிய புறத்தைக் கொண்ட ஆரத்தை இடத்தேயுடைய புளியம்பழம்.

சொற்பொருள்:   ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொடு – விளங்கும் மலையில் ஏறிக் கொண்டுவரும் பண்டங்களுடன் (தரூஉம் – அளபெடை), வேய்ப் பெயல் விளையுள் தேக் கள் தேறல் குறைவு இன்று பருகி – மூங்கில் குழாயில் விளைந்த தேனால் செய்த கள்ளைக் குறைவில்லாமல் குடித்து, நறவு மகிழ்ந்து – நெல்லால் செய்த கள்ளைக் குடித்து மகிழ்ந்து (நறவு – ஐகாரம் கெட முற்று உகரம் பெற்று நறவு என்றாயிற்று), வைகறைப் பழஞ் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர – அதிகாலையில் கள்ளுண்டு மகிழ்ச்சியுற்ற குடிமதம் தீர்க்கும்படி, அருவி தந்த பழம் சிதை வெண்காழ் –அருவி கொண்டு வந்த பலாப்பழம் உதிர்த்த வெள்ளை விதைகள், வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை – தன்னை நோக்கி வருகின்ற விசையைக் கெடுத்துச் செத்த கடமானின் கொழுத்த தசை, முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை – கொல்லப்பட்ட முள்ளம்பன்றியின் பசுமையான கொழுப்புடைய தசை, பிணவு நாய் முடுக்கிய தடியொடு – பெண் நாய் கடித்துக் கொண்டுவந்த உடும்பின் தசையோடு, விரைஇ – கலந்து (அளபெடை), வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின் – வெள்ளைப் பக்கங்களைக் கொண்ட துய்யை (பஞ்சுப் போன்றதை) மேலே உடைய பழத்தின் (பழன் – பழம் என்பதன் போலி), இன் புளிக் கலந்து மா மோர் ஆக – இனிய புளியைக் கலந்து சிறந்த மோரை வார்த்து, கழை வளர் நெல்லின் அரி – மூங்கிலில் முற்றிய அரிசி (அரிசி – விதை, அரி – அரிசி, கடைக்குறை), உலை ஊழ்த்து – உலையில் இட்டு, வழை அமல் சாரல் கமழத் துழைஇ – சுரபுன்னை நெருங்கிய மலையில் நறுமணம் கமழத் துழாவி (துழைஇ – அளபெடை), நறுமலர் அணிந்த நாறு இரு முச்சிக் குறமகள் ஆக்கிய – நறுமணமான மலர்களைச் சூடின நறுமணமான கரிய பெரிய மயிர்க் கொண்டையையுடைய குறவர் குடிப்பெண் சமைத்த, வால் அவிழ் வல்சி – வெள்ளைச் சோறாகிய உணவு, அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ – நெஞ்சம் நிறைந்த மிக்க மகிழ்ச்சி உடையவராக நெஞ்சம் கலந்து (அளைஇ – அளபெடை), மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர் – தாம் பிள்ளைகளைக் கொண்டு போகவிடாது தடுத்து மனைதோறும் பெறுவீர்கள்

மலைநாட்டில் நெடுநாள் தங்க வேண்டாம்

செருச்செய் முன்பின் குருசில் முன்னிய
பரிசில் மறப்ப நீடலும் உரியிர்,
அனையது அன்று அவன் மலை மிசை நாடே,
நிரை இதழ்க் குவளைக் கடிவீ தொடினும்,

வரையர மகளிர் இருக்கை காணினும்,   190

உயிர் செல வெம்பிப் பனித்தலும் உரியிர்;

பல நாள் நில்லாது, நிலநாடு படர்மின்; (186 – 192)

பொருளுரை:  போரைச் செய்கின்ற வலிமையுடைய நன்னனிடம் பெறுவதற்கு உரிய பரிசை மறக்கும்படி நீங்கள் அங்கு நீட்டித்து இருக்கக்கூடும்.  அவன் மலைநாடு அத்தன்மையை உடையது.   வரிசையாக உள்ள இதழ்களையுடைய குவளையின் கடவுள் விரும்பும் காவல் மலர்களை நீங்கள் அறியாது தொடுவீர்கள் ஆயினும்,  மலையில் வாழும் பெண் கடவுள்களின் இருப்பிடத்தைக் கண்டாலும், உங்கள் உயிர் போகும்படி வெதும்பி நடுங்குதலும் செய்வீர்கள்.  பல நாட்கள் அங்கு இருக்காது நிலநாட்டிற்கு நீங்கள் செல்லுங்கள்.

குறிப்பு:  குவளைக் கடிவீ தொடினும் (189) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குவளையில் தெய்வம் விரும்புதலில் கடியவாகிய பூக்களை நீயிர் அறியாதே தொடுவீராயினும்.

சொற்பொருள்:  செருச்செய் முன்பின் குருசில் முன்னிய பரிசில் மறப்ப நீடலும் உரியிர் – போரைச் செய்கின்ற வலிமையுடைய நன்னனிடம் பெறுவதற்கு உரிய பரிசை மறக்கும்படி நீங்கள் நீட்டித்து இருக்கக்கூடும், அனையது அன்று அவன் மலை மிசை நாடே – அவன் மலைநாடு அத்தன்மையை உடையது (அன்று – அசைநிலை, நாடே – ஏகாரம் அசைநிலை), நிரை இதழ்க் குவளைக் கடி வீ தொடினும் – நிரைத்த (வரிசையாக உள்ள) இதழ்களையுடைய குவளையின் கடவுள் விரும்பும் காவல் மலர்களை நீங்கள் அறியாது தொடுவீர்கள் ஆயினும், வரையர மகளிர் இருக்கை காணினும் – மலையில் வாழும் பெண் கடவுள்களின் இருக்குமிடத்தைக் கண்டாலும், உயிர் செல வெம்பிப் பனித்தலும் உரியிர் – உங்கள் உயிர் போகும்படி வெதும்பி நடுங்குதலும் செய்வீர்கள் (செல – இடைக்குறை), பல நாள் நில்லாது நிலநாடு படர்மின் – பல நாட்கள் அங்கு இருக்காது நிலநாட்டிற்கு நீங்கள் செல்லுங்கள் (படர்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

இரவில் செல்ல வேண்டாம்

விளைபுனம் நிழத்தலின் கேழல் அஞ்சிப்,
புழைதொறும் மாட்டிய இருங்கல் அரும் பொறி,
உடைய ஆறே நள் இருள் அலரி  195

விரிந்த விடியல் வைகினிர் கழிமின்; (193 – 196)

பொருளுரை:  விளைந்து முற்றிய தினைப்புனத்தை அழித்து விடும் பன்றிகளுக்கு அஞ்சி, அவை புகும் வழிகள்தோறும் நுணுக்கத்துடன் செய்த இயந்திரமாகிய பெரிய கற்பொறிகளைக் மலைக்குறவர்கள் நிறுத்தி வைத்த வழிகள் உள்ளன.  அதனால், நள்ளிருள் நீங்கி ஞாயிற்றின் கதிர்கள் விரியும் அதிகாலை வரையில் அவ்விடத்தில் தங்கிவிட்டு, அதன்பின் நீங்கள் செல்லுங்கள். 

குறிப்பு:  விலங்கைப் பிடிக்கும் பொறி: மலைபடுகடாம் 193-194 – கேழல் அஞ்சிப் புழை தொறும் மாட்டிய இருங்கல் அடாஅர், நற்றிணை 119 – தினை உண் கேழல் இரிய புனவன் சிறு பொறி மாட்டிய பெருங்கல் அடாஅர், புறநானூறு 19 – இரும்புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய பெருங்கல் அடாரும்.  அரும் பொறி (95) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செய்தற்கரிய நுணுக்கங்களையுடைய இயந்திரம்.

சொற்பொருள்:  விளைபுனம் நிழத்தலின் – விளைந்து முற்றிய தினைப்புனத்தை அழித்து விடுகையால் (விளைபுனம் – வினைத்தொகை), கேழல் அஞ்சிப் புழைதொறும் மாட்டிய இருங்கல் அரும் பொறி – பன்றிகளுக்கு அஞ்சி புகும் வழிகள்தோறும் நிறுத்தி வைத்த நுணுக்கத்துடன் செய்த இயந்திரமாகிய பெரிய கற்பொறிகள், உடைய ஆறே – உடைய வழிகள் (ஆறே – ஏகாரம் அசைநிலை), நள் இருள் அலரி விரிந்த விடியல் – நள்ளிருள் மாறி ஞாயிற்றின் கதிர்கள் விரிந்த அதிகாலை (அலரி – ஞாயிறு), வைகினிர் கழிமின் – தங்கிவிட்டு நீங்கள் செல்லுங்கள் (வைகினிர் – முற்றெச்சம், கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

பாம்புகள் உறையும் இடத்தைக்

கடந்து செல்லும் வகை

நளிந்து பலர் வழங்காச் செப்பம் துணியின்,
முரம்பு கண் உடைந்த பரல் அவற் போழ்வில்,
கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே,

குறிக் கொண்டு மரங்கொட்டி நோக்கிச்,   200

செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச

வறிது நெறி ஒரீஇ வலம் செயாக் கழிமின்; (197 – 202)

பொருளுரை:  செறிந்து பலரும் செல்லாத வழியில் போக நீங்கள் துணிந்தீர் ஆயின், மேட்டு நிலத்தின் கண் உள்ள உடைந்த பரல் கற்களையுடைய பள்ளத்தில் உள்ள பிளவுகளில் பாம்புகள் மறைந்து  ஒடுங்கியிருக்கும் குழிகளும் உள்ளன என்பதால் குறிகளைக் கவனமாக மனதில் கொண்டு, மரங்களில் ஏறிக் கொட்டிப் பார்த்து, செறிந்த வளையல்களை அணிந்த உங்கள் விறலியர் இறைவனை கைதொழுது வாழ்த்த வழியிலிருந்து சிறிது விலகி வலப்பக்கத்து வழியில் செல்லுங்கள்.

குறிப்பு:  மரங்கொட்டி (200) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மரம் என்றதன் இறுதியினின்ற குறிலிணைக் கீழ் மகரம் ஙகரமாகத் திரிந்து செய்யுள் ஓசையை நிரப்புதற் பொருட்டு அளபெடுத்தது.  செயா – செய்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).  பழிச்சும் – பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 86). நளி – நளி என் கிளவி செறிவும் ஆகும் – (தொல்காப்பியம், உரியியல் 27). 

சொற்பொருள்:  நளிந்து பலர் வழங்காச் செப்பம் துணியின் – செறிந்து பலரும் செல்லாத வழியில் போக நீங்கள் துணிந்தீர் ஆயின் (நளிந்து – நளி என்ற உரிச்சொல் அடியாகப் பிறந்த வினையெச்சம், செப்பம் – வழி), முரம்புகண் உடைந்த பரல் அவல் போழ்வில் கரந்து பாம்பு ஒடுங்கும் – மேட்டு நிலத்தின் கண் உள்ள உடைந்த பரல் கற்களையுடைய பள்ளத்தில் உள்ள பிளவுகளில் மறைந்து பாம்புகள் ஒடுங்கியிருக்கும், பயம்புமார் உளவே – குழிகளும் உள்ளன (மார் – அசைச்சொல், உளவே – ஏகாரம் அசைநிலை), குறிக் கொண்டு – குறிகளைக் கவனமாக மனதில் கொண்டு, மரங்கொட்டி நோக்கி – மரங்களில் ஏறிக் கொட்டிப் பார்த்து, செறிதொடி விறலியர் – செறிந்த வளையல்களை அணிந்த விறலியர் (செறிதொடி – வினைத்தொகை), கைதொழூஉப் பழிச்ச – இறைவனைக் கைதொழுது வாழ்த்தி (தொழூஉம் – அளபெடை), வறிது நெறி ஒரீஇ – வழியிலிருந்து சிறிது விலகி (ஒரீஇ – அளபெடை), வலம் செயாக் கழிமின் – வலப்பக்கத்து வழியில் செல்லுங்கள் (வலம் – ஆகுபெயர் வலப்பக்கத்து வழிக்கு, கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

கவண் கற்கள் படாமல் தப்பிச்

செல்லும் விதம்

புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர்,
உயர்நிலை இதணம் ஏறிக் கை புடையூஉ,

அகல் மலை இறும்பில் துவன்றிய யானைப்  205

பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடுங்கல்
இரு வெதிர் ஈர்ங்கழை தத்திக் கல்லெனக்
கருவிரல் ஊகம் பார்ப்போடு இரிய,
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன,

வரும் விசை தவிராது மரம் மறையாக் கழிமின்; (203 – 210)

பொருளுரை:  முற்றி ஈன்றணிமை தீர்ந்த தங்கள் புனத்தைக் காப்பதற்காகச் சூழ்ந்த குறவர்கள், தங்கள் உயர்ந்த பரணில் ஏறிக்  கையைக் கொட்டி அகன்ற மலையின் குறுங்காட்டில், நிறைந்த யானைகளின் பகற்பொழுது நிற்கின்ற நிலைமையைக் கெடுக்கும் கவணைச் செலுத்துகின்ற கடிய கற்கள், பெரிய மூங்கிலின் பசுமையான கோலைக் கடந்து கல்லென ஓசை உண்டாக்க, கரிய விரலையுடைய குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் அங்கிருந்து செல்ல, உயிரை நீக்கும் கூற்றுவன் அன்ன உங்களை நோக்கி வரும் விசை மாறாது வருவதால், மரங்களின் பின் ஒளிந்து நீங்கள் செல்லுங்கள்.

குறிப்பு:  புனிறு – புனிறென் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 77).  துவன்றி – துவன்று நிறைவாகும் (தொல்காப்பியம், உரியியல் 34).  மறையா – மறைந்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:  புலந்து புனிறு போகிய – முற்றி ஈன்றணிமை தீர்ந்த, புனம் சூழ் குறவர் – தங்கள் புனத்தைக் காத்ததற்கு சூழ்ந்த குறவர்கள், உயர்நிலை இதணம் ஏறிக் கை புடையூஉ – உயர்ந்த பரணில் ஏறிக்  கையைக் கொட்டி (புடையூஉ – அளபெடை, செய்யூ என்னும் வாய்பாட்டு வினையெச்சம்), அகல் மலை இறும்பில் – அகன்ற மலையின் குறுங்காட்டில், துவன்றிய யானைப் பகல் நிலை தளர்க்கும் – நிறைந்த யானைகளின் பகற்பொழுது நிற்கின்ற நிலைமையைக் கெடுக்கும், கவண் உமிழ் கடுங்கல் – கவண் செலுத்துகின்ற கடிய கற்கள், இரு வெதிர் ஈர்ங்கழை தத்தி கல்லென – பெரிய மூங்கிலின் பசுமையான கோலைக் கடந்து கல்லென ஓசை உண்டாக (கல்லென – ஒலிக்குறிப்பு), கருவிரல் ஊகம் பார்ப்போடு இரிய – கரிய விரலையுடைய குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் அங்கிருந்து செல்ல, உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன – உயிரை நீக்கும் கூற்றுவன் அன்ன (கூற்றத்து – கூற்றம், அத்து சாரியை), வரும் விசை தவிராது மரம் மறையாக் கழிமின் – உங்களை நோக்கி வரும் விசை மாறாது வருவதால் மரங்களின் பின் ஒளிந்து நீங்கள் செல்லுங்கள் (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

வழுக்கும் இடங்களைக் கடத்தல்

உரவுக் களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி
இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின்,
குமிழி சுழலும் குண்டுகய முடுக்கர்
அகழ் இழிந்தன்ன கான்யாற்று நடவை

வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பிப்,   215

பரூஉக் கொடி வலந்த மதலை பற்றித்
துருவின் அன்ன புன்தலை மகாரோடு

ஒருவிரொருவர் ஓம்பினிர் கழிமின்; (211 – 218)

பொருளுரை:  வலிமையுடைய யானையை விழுங்கும் முதலைகள் இருக்கும் இரவை ஒத்த இருள் அடர்ந்த காட்டினையும், குமிழிகள் சுழன்று ஆழமான மடுக்களையும் முடுக்குகளையுமுடைய, அகழியில் இறங்கினாற்போல் உள்ள காட்டு ஆற்றின் வழியில், வழுக்கும் இடங்களில், வழுக்காது உங்களைப் பாதுகாத்து, மரங்களைச் சூழ்ந்த பருத்த கொடிகளைப் பற்றிச் செம்மறி ஆட்டினை ஒத்த பொலிவு இழந்த தலையையுடைய பிள்ளைகளுடன் ஒருவரை ஒருவர் பாதுகாத்து நீங்கள் போவீர்களாக!

குறிப்பு:  ஒப்புமை – மலைபடுகடாம் 229 – யாற்று இயவின்.  ஒருவிரொருவர் (218) – இடையே இரண்டனுருபு தொக்கது.

சொற்பொருள்:  உரவுக் களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின் – வலிமையுடைய யானையை விழுங்கும் முதலைகள் இருக்கும் இரவை ஒத்த இருள் அடர்ந்த காட்டினையும் (இரவின் – இன் சாரியை), குமிழி சுழலும் குண்டு கய  முடுக்கர் – குமிழிகள் சுழன்று ஆழமான மடுக்களையும் முடுக்குகளையுமுடைய, அகழ் இழிந்தன்ன கான்யாற்று நடவை – அகழியில் இறங்கினாற்போல் உள்ள காட்டு ஆற்றின் வழி, வழூஉம் மருங்கு உடைய – வழுக்கும் இடங்களை உடைய (வழூஉம் – அளபெடை), வழாஅல் – வழுக்காது (வழாஅல் – அளபெடை), ஓம்பி – பாதுகாத்து, பரூஉக் கொடி வலந்த மதலை பற்றி – மரங்களை சூழ்ந்த பருத்த கொடிகளைப் பற்றி (பரூஉ – அளபெடை), துருவின் அன்ன புன்தலை மகாரோடு – செம்மறி ஆட்டினை ஒத்த பொலிவு இழந்த தலையையுடைய பிள்ளைகளுடன்  (துருவின் – இன் சாரியை), ஒருவிர் ஒருவர் ஓம்பினிர் கழிமின் – ஒருவரை ஒருவர் பாதுகாத்துப் போவீர்களாக (ஓம்பினிர் – முற்றெச்சம், கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

பாசி படிந்த குளக்கரைகளைக் கடந்து செல்லுதல்

அழுந்து பட்டு அலமரும் புழகு அமல் சாரல்

விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா,   220

வழும்புகண் புதைத்த நுண் நீர்ப் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய,
முழு நெறி பிணங்கிய நுண் கோல் வேரலொடு

எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின்; (219 – 224)

பொருளுரை:   கிழங்கு தாழ வீழ்ந்து அசையும் மலை எருக்கு அடர்ந்த பக்க மலையில், விழுந்தவர்களைக் கொல்லும் ஆழத்தையுடைய குளத்திற்கு அருகில், வழுவழுப்பினால் இடம் மறைவதற்குக் காரணமான, நுண்ணியத் தன்மையைக் கொண்ட பாசி அடியைத் தளரச்செய்யும் கடினமான இடங்களும் இருக்கின்றன. வழி முழுவதும் பின்னி வளர்ந்த சிறு மூங்கிலுடன், வேழத்தின் (கொறுக்கையின்) மெல்லிய கோல்களையும் பற்றிக் கொண்டு நீங்கள் செல்லுங்கள். 

குறிப்பு:  அழுந்து (219) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழுந்து – கிழங்கு, ஆகுபெயர், இனி நீண்டகாலமாக அடிப்பட்டுக் கிடந்து எனினுமாம்.  வழும்பு (221) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வழுவழுப்பு, நச்சினார்க்கினியர் உரை – குற்றம்.

சொற்பொருள்:  அழுந்து பட்டு அலமரும் புழகு அமல் சாரல் – கிழங்கு தாழ வீழ்ந்து அசையும் மலை எருக்கு அடர்ந்த பக்க மலையில், விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா – விழுந்தவர்களைக் கொல்லும் ஆழத்தையுடைய குளத்திற்கு அருகில் (அருகா – அருகாக), வழும்புகண் புதைத்த – வழுவழுப்பினால் இடம் மறைந்த, நுண் நீர்ப் பாசி – நுண்ணிய தன்மையைக் கொண்ட பாசி, அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய – அடியைத் தளரச்செய்யும் கடினமான இடங்களும் உடைய, முழு நெறி பிணங்கிய நுண் கோல் வேரலொடு – வழி முழுவதும் பின்னி வளர்ந்த சிறு மூங்கிலுடன், எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின் – வேழத்தின் (கொறுக்கையின்)  மெல்லிய கோல்களையும் பற்றிக் கொண்டு நீங்கள் செல்லுங்கள் (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

கடவுளைத் தொழுதல்

உயர்நிலை மாக்கல் புகர் முகம் புதைய,   225
மாரியின் இகுதரு வில் உமிழ் கடுங்கணைத்
தாரொடு பொலிந்த வினை நவில் யானைச்
சூழியின் பொலிந்த சுடர்ப்பூ இலஞ்சி
ஓர் யாற்று இயவின் மூத்த புரிசைப்

பராவு அரு மரபின் கடவுட் காணின்,   230

தொழாநிர் கழியின் அல்லது வறிது
நும் இயம் தொடுதல் ஓம்புமின்; மயங்கு துளி

மாரி தலையும் அவன் மல்லல் வெற்பே; (225 – 233)

பொருளுரை:  உயர்ந்த பெரிய நவிர மலையில், மழைபோன்று புள்ளிகளையுடைய தம் முகம் மறையும்படி பகைவரின் வில் விரையும் அம்பினைப் பொழிந்தும் அஞ்சாமல் தூசிப்படையுடன் பொலிந்த போர்த்தொழிலில் பயின்ற யானைகள் உள்ளன. மலை உச்சியில் ஒளியுடைய பூக்கள் உள்ளன. குளங்களை உடைய ஆற்று வழியில் பழைய மதிலையுடைய கோவிலில் தொழுவதற்கு அரிய மரபினையுடைய கடவுளை நீங்கள் கண்டால், அக்கடவுளை வணங்கி நீங்கள் செல்லுங்கள்.  அது மட்டும் அல்லாது சிறிது உங்களுடைய இசைக்கருவிகளைத் தீண்டுதலைக் காப்பீர்களாக, மயங்கின துளியுடைய மழை இடைவிடாது பெய்யும் அவனுடைய வளமான நவிர மலையில்.

குறிப்பு:  உயர்நிலை மாக்கல் புகர் முகம் புதைய மாரியின் இகுதரு வில் உமிழ் கடுங்கணை தாரொடு பொலிந்த வினை நவில் யானைச் சூழியின் பொலிந்த சுடர்ப்பூ இலஞ்சி ஓர் யாற்று இயவின் (225-227) – நச்சினார்க்கினியர் உரை – இனி அம்பையுடைய தூசிப் படையோடு பொலிந்த யானையென்று யானைக்கு அடையாக்கி அவ்வியானையினுடைய பூக்கள் எழுதின முகபடாம் போலே உயர்நிலைமாக்கற புகர் முகம் புதையப்பொலிந்த சுடர்ப்பூவையுடைய புரிசை என்றுமாம்; இன்னும் யானையின் மத்தகம் போலே பொலிந்த சுடர்ப்பூ இலஞ்சியையுடைய உயர்நிலை மாக்கலையுடைய புரிசை என்பாரும் உளர்; அவர் சுனையிடத்து மேலெழுந்த குவளை முதலியவற்றின் அரும்புகள் தலை சாய்ந்து கற்புதையக் கிடந்ததற்கு யானையின் மத்தகத்துப் புகரை உவமை என்று கொள்வர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – உயர்ந்து நிற்றலையுடைய பெருமை மிக்க நவிர மலையிடத்தே மழைபோன்று புகரையுடைய தம் முகம் மறையும்படி பகைவருடைய வில் பொழியா நின்ற கடிய கணையினை ஏற்று அவர் தம் தூசிப் படையோடே பிறக்கிடாது நின்று பொலிவு பெற்ற போர்த்தொழிலில் பயின்ற யானைப்படையினை உடையதும் உச்சியிலே ஒளியையுடைய பூத் தொழில் செய்யப் பெற்றதும் மடுக்களையுடைய ஆற்றின் வழியின்கண் உள்ளதுமாகிய.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அம் மலையின்கண் நன்னன் வேண்மான் தன் படைகளை வைத்திருந்தான் என்பது இதனால் உணரற்பாலது.  யானை ஒன்றே கூறினாரேனும் எடுத்த மொழியின் இனஞ்செப்பி நால்வகைப் படையும் கொள்க.  தொழாநிர் கழிமின் (231) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தொழுது, நீர் என்பது ‘நிர்’ என்று குறுகி நின்றது. தொழ நீர் கழிமின்  என்றும் பாடமுண்டு, நச்சினார்க்கினியர் உரை – இனித் தொழாநிரென்பது மறையன்றித் தொழுதென்று பொருள் தருமேனும் உணர்க.  தொழா – தொழுது என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).

சொற்பொருள்:  உயர்நிலை மாக் கல் – உயர்ந்த பெரிய நவிர மலையில், புகர் முகம் புதைய மாரியின் –  மழைபோன்று புள்ளிகளையுடைய தம் முகம் மறைய (மாரியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), இகுதரு வில் உமிழ் கடுங்கணை – பகைவரின் வில் விரையும் அம்பினைப் பொழிந்து, தாரொடு – தூசிப்படையுடன், முன்னால் செல்லும் படையுடன், முன்னணியுடன், பொலிந்த வினை நவில் யானை – பொலிந்த போர்த்தொழிலில் பயின்ற யானைகள் உடையதும், சூழியின் பொலிந்த சுடர்ப்பூ – உச்சியில் ஒளியுடைய பூக்கள் உள்ளன, யானையின் மத்தகம் போலே பொலிந்த சுடர்ப்பூவையுடைய புரிசை எனினுமாம், இலஞ்சி ஓர் யாற்று இயவின் – குளங்களை உடைய ஆற்று வழியில் (ஓர் – அசைநிலை), மூத்த புரிசை – பழைய மதிலையுடைய கோவிலில் (புரிசை – மதில், கோயிலுக்கு ஆகுபெயர்), பராவு அரு மரபின் கடவுட் காணின் – தொழுவதற்கு அரிய மரபினையுடைய கடவுளை நீங்கள் கண்டால், தொழாநிர் கழியின் அல்லது  – அக்கடவுளை வணங்கி நீங்கள் போவது அல்லது (தொழாநிர் – நீர் என்பது நிர் என்று குறுகி நின்றது), வறிது நும் இயம் தொடுதல் ஓம்புமின் – சிறிது உங்களுடைய இசைக்கருவிகளைத் தீண்டுதலைக் காப்பீர்களாக (ஓம்புமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), மயங்கு துளி மாரி தலையும் அவன் மல்லல் வெற்பே – மயங்கின துளியுடைய மழை இடைவிடாது பெய்யும் அவனுடைய வளமான நவிர மலையில் (வெற்பே – ஏகாரம் அசைநிலை)

கவனமாகச் செல்ல அறிவுறுத்தல்

அலகை அன்ன வெள்வேர்ப் பீலிக்

கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்,   235

கடும்பறைக் கோடியர் மகாஅர் அன்ன
நெடுங்கழைக் கொம்பர் கடுவன் உகளினும்,
நேர் கொள் நெடுவரை நேமியின் தொடுத்த
சூர் புகல் அடுக்கத்துப் பிரசம் காணினும்,
ஞெரேரென நோக்கல் ஓம்புமின்; உரித்தன்று   240

நிரைசெலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர்; (234 – 241)

பொருளுரை:  சோழியை ஒத்த வெள்ளை அடிப்பகுதியையுடைய பீலியாகிய தோகையையுடைய மயில்கள் காட்டில் ஆடி இளைத்து நிற்பதைக் கண்டாலும், கடிய ஒலியுடைய பறையினையுடைய கூத்தர்களின் பிள்ளைகள் போன்று உயர்ந்த மூங்கிலின் கழைகளில் குரங்குகள் பாய்ந்தாலும், நேர்மையுடைய நெடிய மலையில் தேர் உருள் (சக்கரம்) போன்று உள்ள, கடவுள் விரும்பும் மலையில் உள்ள தேன் கூடுகளைக் கண்டாலும், அவற்றை விரைந்து காணாது உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது தான் உரியது. இல்லையென்றால், வரிசையாகச் செல்லுதலையுடைய மெல்லிய அடி தவறி வழி தப்புவீர்கள்.

சொற்பொருள்:  அலகை அன்ன – சோழியை ஒத்த, வெள்வேர்ப் பீலி – வெள்ளை அடிப்பகுதியையுடைய பீலி, கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் – தோகையையுடைய மயில்கள் காட்டில் ஆடி இளைத்தாலும், கடும்பறைக் கோடியர் மகாஅர் அன்ன – கடிய ஒலியுடைய பறையினையுடைய கூத்தர்களின் பிள்ளைகள் போன்று (மகாஅர் – அளபெடை), நெடுங்கழைக் கொம்பர் கடுவன் உகளினும் – உயர்ந்த மூங்கிலில் ஆண் குரங்குகள் பாய்ந்தாலும் (கொம்பர் – மொழி இறுதிப் போலி), நேர் கொள் நெடுவரை – நேர்மையுடைய நெடிய மலையில், நேமியின் – தேர் உருள் போன்று உள்ள, தேர்ச் சக்கரத்தைப் போல் உள்ள (நேமியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது.  ஐந்தாம் வேற்றுமை உருபு), தொடுத்த – கட்டிய, சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும் – கடவுள் விரும்பும் மலையில் உள்ள தேன் கூடுகளைக் நீங்கள் கண்டாலும், ஞெரேரென நோக்கல் ஓம்புமின் – அவற்றை விரைந்துக் காணாது பாதுகாத்துக் கொள்ளுங்கள் (ஞெரேரென – விரைவுக்குறிப்பு, ஓம்புமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), உரித்தன்று – அது தான் உரியது, நிரை செலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர் – வரிசையாக செல்லுதலையுடைய மெல்லிய அடி தவறால் வழி தப்புவீர்கள் (செலல் – இடைக்குறை)

இரவில் குகைகளில் தங்குதல்

வரை சேர் வகுந்தின் கானத்துப் படினே,
கழுதில் சேணோன் ஏவொடு போகி,
இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி,

நிறப் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின்   245

நெறிக் கெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்
இருள் துணிந்தன்ன ஏனம் காணின்,
முளி கழை இழைந்த காடுபடு தீயின்
நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து,

துகள் அறத் துணிந்த மணிமருள் தெள் நீர்   250

குவளை அம் பைஞ்சுனை அசைவிடப் பருகி,
மிகுத்துப் பதம் கொண்ட பரூஉக்கண் பொதியினிர்
புள் கை போகிய புன்தலை மகாரோடு,
அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும்

இல் புக்கன்ன கல் அளை வதிமின்; (242 – 255)

பொருளுரை:  மலையைச் சேர்ந்த வழியினையுடைய காட்டில் நீங்கள் சென்றால், பரணில் உள்ள தினைக் காவலன் எய்த அம்புடன் போய், வெண்ணெய்யை ஒத்த வெள்ளை நிறக் கொழுப்பு நெருக்குற்று, மார்பில் புண் மிக்கவாய், கிழங்கிற்காக நிலத்தைத் தோண்டியதால் தேய்ந்த கொம்பினை உடையதாய் நெறி கெட்டு வீழ்ந்த, கரிய, சொரசொரப்பு உடைய கழுத்தை உடைய இருள் வெட்டப்பட்டது போல் உள்ள பன்றியை நீங்கள் கண்டால், உலர்ந்த மூங்கில் உரசி உண்டான காட்டுத் தீயில், அடர்ந்த புகை நாறாமல் அதன் மயிரை நீக்கித் தின்று, குற்றமற்ற தெளிந்த நீலமணியை ஒத்த தெளிந்த நீரில் குவளை மலர்கள் உடைய அழகிய பசிய சுனையில், நீரைக் குடித்து விட்டு, தின்னாமல் மிகுந்த தசை உணவை பருத்த இடத்தையுடைய பொதியின் சுமையை உடையவர்களாக, வளையல்கள் கையிலிருந்து போவதற்குக் காரணமான புல்லென்ற தலையினையுடைய உங்கள் பிள்ளைகளுடன், இரவுப்பொழுதில் செல்லாமல் உங்களைப் பாதுகாத்து, உங்கள் இல்லத்துள் புகுந்தாற்போல, வழியில் உள்ள மலைக் குகையில் தங்குங்கள்.

குறிப்பு:  செருக்கி (244) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெருக்குற்று.  அம்பு தைத்தவிடத்தே ஊன் நெருக்குண்டதென்பார்.  இருள் துணிந்தன்ன (247) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இருள் துண்டுபட்டு கிடந்தாற்போன்ற.  அசைவிட (251) – அசைவு விட என்பது அசைவிட எனவாயிற்று.  புள் கை போகிய (253) – நச்சினார்க்கினியர் உரை – பிள்ளையைப் பெற்றால் பெண்கள் வளையல் இடார்.  ஆதலின் வளை போதற்குப் பிள்ளைகள் காரணமாயினார்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வளையல் தம் தாயர் கையினின்றும் அகலுதற்கு காரணமான மகார் என்றவாறு.

சொற்பொருள்:  வரை சேர் வகுந்தின் கானத்துப் படினே – மலையைச் சேர்ந்த வழியினையுடைய காட்டில் சென்றால் (படினே – ஏகாரம் அசைநிலை), கழுதில் சேணோன் ஏவொடு போகி – பரணில் உள்ள தினைக் காவலன் எய்த அம்புடன் போய், இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி – வெண்ணெய்யை ஒத்த வெள்ளை நிறக் கொழுப்பு நெருக்குற்று (இழுதின் – இன் சாரியை), நிறப் புண் கூர்ந்த – மார்பில் புண் மிக்கவாய், நிலம் தின் மருப்பின் நெறிக் கெட  கிடந்த – நிலத்தைத் தோண்டியதால் தேய்ந்த கொம்பினை உடையதாய் நெறி கெட்டு வீழ்ந்த, இரும்பிணர் எருத்தின் இருள் துணிந்தன்ன ஏனம் காணின் – கரிய சொரசொரப்பு உடைய கழுத்தை உடைய இருள் வெட்டப்பட்டது போல் உள்ள பன்றியை நீங்கள் கண்டால், முளி கழை இழைந்த காடுபடு தீயின் – உலர்ந்த மூங்கில் உரசி உண்டான காட்டுத் தீயில், நளி புகை கமழாது – அடர்ந்த புகை நாறாமல், இறாயினிர் மிசைந்து – மயிரை நீக்கித் தின்று, துகள் அறத் துணிந்த மணி மருள் – குற்றமற்ற தெளிந்த நீலமணியை ஒத்த (மருள் – உவம உருபு), தெள் நீர் குவளை அம் பைஞ்சுனை – தெளிந்த நீரில் குவளை மலர்கள் உடைய அழகிய பசிய சுனையில், அசைவிடப் பருகி – இளைப்புத் தீரும்படி நீரைக் குடித்து விட்டு (அசை – அசைவு (வருத்தம்) அசையென ஈறுகெட்ட நின்றது), மிகுத்துப் பதம் கொண்ட பரூஉக்கண் பொதியினிர் – தின்னாமல் மிகுந்த தசை உணவை பருத்த இடத்தையுடைய பொதியின் சுமையை உடையவர்களாக (பரூஉ – அளபெடை), புள் கை போகிய புன்தலை மகாரோடு – வளையல்கள் கையிலிருந்து போவதற்குக் காரணமான புல்லென்ற தலையினையுடைய உங்கள் பிள்ளைகளுடன், அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற – இரவுப்பொழுதில் செல்லாமல் உங்களைப் பாதுகாத்து வழியில் உள்ள (அல் – இருள், இரவு), நும் இல் புக்கன்ன – உங்கள் இல்லத்துள் புகுந்தாற்போல, கல் அளை வதிமின் – மலைக் குகையில் தங்குங்கள் (வதிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

செம்மையான பாதையில் செல்லுமாறு கூறுதல்

அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி,
வான் கண் விரிந்த விடியல் ஏற்றெழுந்து

கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்; (256 – 258)

பொருளுரை:  இரவில் நீங்கள் யாவரும் கூடியிருந்து இளைப்பாறி, வானில் கதிரவனின் கதிர் விரிந்த விடியற்காலையில், துயிலிலிருந்து எழுந்து காட்டில் உள்ள செவ்விய வழியில் செல்லுங்கள்.

சொற்பொருள்:  அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி – இரவில் நீங்கள் யாவரும் கூடியிருந்து இளைப்பாறி, வான் கண் விரிந்த விடியல் – வானில் கதிரவனின் கதிர் விரிந்த விடியற்காலையில், ஏற்றெழுந்து கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின் – துயிலிலிருந்து எழுந்து காட்டில் உள்ள செவ்விய வழியில் செல்லுங்கள் (கொண்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

முன் எச்சரிக்கைகள்

கயம் கண்டன்ன அகன் பை அம் கண்

மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும்   260

துஞ்சு மரங் கடுக்கும் மாசுணம் விலங்கி,
இகந்து சேண் கமழும் பூவும் உண்டோர்
மறந்து அமைகல்லாப் பழனும் ஊழ் இறந்து,
பெரும் பயம் கழியினும் மாந்தர் துன்னார்

இருங்கால் வீயும் பெருமரக் குழாமும்   265

இடனும் வலனும் நினையினர் நோக்கிக்
குறி அறிந்து அவை அவை குறுகாது கழிமின்;
கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்துக்
கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின்

நாடு காண் நனந்தலை மென்மெல அகன்மின்; (259 – 270)

பொருளுரை:  குளத்தைக் கண்டாற்போன்ற அகன்ற பசிய அழகிய அக்காட்டிடத்தில், வலிமை மிகுந்த சினமுடைய களிற்று யானையின் வலிமையை அழிக்கும், கீழே விழுந்து கிடக்கின்ற பெரிய மரங்களை ஒக்கும் பெரிய பாம்புகள் உள்ளன. விலகிச் செல்லுங்கள். மரபைக் கடந்து, தொலைவில் மணங்கமழும் மலர்களும் ஒருமுறை உண்டவர்கள் அவற்றை மறந்திருக்க இயலாத பழங்களும், முறை கெட்டு அவற்றால் கொள்ளும் பயனைக் கொள்ளாது சென்றாலும், அவற்றைக் கடவுள்கள் அன்றி மக்கள் தொடுவதில்லை என்பதால், நீண்ட காம்புடைய அப்பூக்களையும் அக்கனிகளையுமுடைய பெரிய மரக்கூட்டத்தினையும் இடப்பக்கமும் வலப்பக்கமும் கவனத்துடன் நோக்கி, குறிகளை அறிந்து அவற்றையெல்லாம் அணுகாது செல்லுங்கள் நீங்கள். கிளைகள் பலவும் முதிர்ந்த கோளியாகிய பூவாது காய்க்கும் ஆலமரத்தில், கூடின பல இசைக்கருவிகளின் ஒலியை ஒத்த பறவை திரளையுடைய நாடுகளை எல்லாம் காணும்படி உள்ள அகன்ற இடத்தையுடைய மலையில் மெல்ல மெல்லச் செல்லுங்கள்.

குறிப்பு:  முரஞ்சிய – முரஞ்சல் முதிர்வே (தொல்காப்பியம், உரியியல் 35).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80). அகன் பை அம் கண் (259) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அகன்ற பசிய அழகிய காட்டிடம்.

சொற்பொருள்:  கயம் கண்டன்ன அகன் பை அம் கண் – குளத்தைக் கண்டாற்போன்ற அகன்ற பசிய அழகிய அக்காட்டிடத்தில், மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும் – வலிமை மிகுந்த சினமுடைய களிற்று யானையின் வலிமையை அழிக்கும், துஞ்சு மரம் கடுக்கும் மாசுணம் – கீழே விழுந்து கிடக்கின்ற பெரிய மரங்களை ஒக்கும் பெரிய பாம்புகள், விலங்கி – விலகி, இகந்து சேண் கமழும் பூவும் உண்டோர் மறந்து அமைகல்லாப் பழனும் – மரபைக் கடந்து தொலைவில் மணங்கமழும் மலர்களும் ஒருமுறை உண்டவர்கள் மறந்திருக்க இயலாத பழங்களும் (பழன் – பழம் என்பதன் போலி), ஊழ் இறந்து – முறை கெட்டு, பெரும் பயம் கழியினும் – அவற்றால் கொள்ளும் பயனைக் கொள்ளாது சென்றாலும், மாந்தர் துன்னார் – மக்கள் தொடுவதில்லை, இருங்கால் வீயும்  பெருமரக் குழாமும் இடனும் வலனும் நினையினர் நோக்கி – நீண்ட காம்புடைய அப்பூக்களையும் அக்கனிகளையுமுடைய பெரிய மரக்கூட்டத்தினையும் இடப்பக்கமும் வலப்பக்கமும் கவனத்துடன் நோக்கி,  குறி அறிந்து அவை அவை குறுகாது கழிமின் – குறிகளை அறிந்து அவற்றையெல்லாம் அணுகாது செல்லுங்கள் (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), கோடு பல முரஞ்சிய – கிளைகள் பலவும் முதிர்ந்த, (முரஞ்சிய – முதிர்ந்த), கோளி ஆலத்து – கோளியாகிய பூவாது காய்க்கும் ஆலமரத்தில், கூடு இயத்து அன்ன குரல் – கூடின பல இசைக்கருவிகளின் ஒலியை ஒத்த (இயத்து – இயம், அத்து சாரியை), புணர் புள்ளின் – பறவைத் திரளையுடைய, நாடு காண் நனந்தலை – நாடுகளை எல்லாம் காணும்படி உள்ள அகன்ற இடம், மென்மெல அகன்மின் – மெல்ல மெல்லச் செல்லுங்கள் (அகன்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி) 

குறவரும் மயங்கும் குன்றத்தில்

செய்ய வேண்டுவன

மா நிழற் பட்ட மரம் பயில் இறும்பின்
ஞாயிறு தெறாஅ மாக நனந்தலை
தேஎம் மருளும் அமையம் ஆயினும்,
இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும்

குறவரும் மருளும் குன்றத்துப் படினே,   275

அகன்கண் பாறைத் துவன்றிக் கல்லென

இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடுமின்; (271 – 277)

பொருளுரை:  பெரிய நிழல்தரும் மரங்கள் நெருங்கின குறுங்காட்டிலே கதிரவனால் சுடப்படாத விண்ணைத் தொடுகின்ற அகன்ற இடத்தையுடைய மலையில், திசை தெரியாமல் மருளும் வேளை ஆயினும், முறியாத வலிய வில்லை உடையவர்கள் வேட்டை ஆட விலங்கைத் தேடித் திரியும் மலையில் வாழும் குறவர்களும் மருளும் குன்றத்திற்கு நீங்கள் சென்றால், அகன்ற இடத்தையுடைய பாறையில் கூடி, மேலும் செல்லாமல், கல்லென்னும் ஓசை எழ உங்கள் இசைக்கருவிகளை இசையுங்கள். 

குறிப்பு:  துவன்றி – துவன்று நிறைவாகும் (தொல்காப்பியம், உரியியல் 34).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

சொற்பொருள்:  மா நிழற் பட்ட மரம் பயில் இறும்பின் – பெரிய நிழல்தரும் மரங்கள் நெருங்கின குறுங்காட்டிலே, ஞாயிறு தெறாஅ மாக நனந்தலை – கதிரவனால் சுடப்படாத விண்ணைத் தொடுகின்ற அகன்ற இடத்தையுடைய, (தெறாஅ – அளபெடை, நனந்தலை – ஆகுபெயர் மலைக்கு), தேஎம் மருளும் அமையம் ஆயினும் – திசை தெரியாமல் மயங்கும் பொழுது ஆயினும் (தேஎம் – அளபெடை), இறாஅ வன் சிலையர் – முறியாத வலிய வில்லை உடையவர்கள் (இறாஅ – அளபெடை), மா தேர்பு கொட்கும் – வேட்டை ஆட விலங்கைத் தேடித் திரியும், குறவரும் மருளும் குன்றத்துப் படினே – மலையில் வாழும் குறவர்களும் மருளும் குன்றத்திற்கு நீங்கள் சென்றால் (குறவரும் – உம்மை உயர்வு சிறப்பு), அகன் கண் பாறைத் துவன்றி கல்லென இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடுமின் – அகன்ற இடத்தையுடைய பாறையில் கூடி மேலும் செல்லாமல் கல்லென்னும் ஓசை எழ உங்கள் இசைக்கருவிகளை இசையுங்கள் (கல்லென – ஒலிக்குறிப்பு, தொடுமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

வழி மயங்கினார்க்குக் குறவர்கள் வந்து

உதவி புரிதல்

பாடு இன் அருவிப் பயங் கெழு மீமிசைக்
காடு காத்து உறையும் கானவர் உளரே;

நிலைத் துறை வழீஇய மதன் அழி மாக்கள்   280

புனல்படு பூசலின் விரைந்து வல் எய்தி,
உண்டற்கு இனிய பழனும் கண்டோர்
மலைதற்கு இனிய பூவும் காட்டி,
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற

நும்மின் நெஞ்சத்து அவலம் வீட,   285

இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர்;
அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு
குறியவும் நெடியவும் ஊழ் இழிபு புதுவோர்
நோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்து,

அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின்,   290

பல திறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ; (278 – 291)

பொருளுரை:  ஓசை இனிமையாக உள்ள அருவிகளின் பயன் பொருந்திய மலை உச்சியில், காட்டைக் காவல் காத்திருக்கும் குறிஞ்சி நில மக்கள் உள்ளனர். நிலையான நீர்த் துறையை விட்டு ஆழத்தில் புகுந்த வலிமை அழிந்த மக்கள் நீரில் அகப்பட்டு ஆரவாரம் செய்வதைக் கண்டு விரைந்து ஓடி வந்து அவர்களைக் காப்பவர்கள் போல், அவர்கள் விரைந்து வந்து நீங்கள் உண்பதற்கு இனிய பழங்களையும், கண்டவர்கள் சூடுவதற்கு இனியவாகிய மலர்களையும் உங்களுக்குக் காட்டி, இடையூறு உடைய வழியில் அவர்கள் உங்களுக்கு முன் செல்ல, உங்களுடைய நெஞ்சில் உள்ள துன்பம் தீரும்படி ‘இம்’ என்னும் ஓசையுடைய உங்கள் சுற்றத்தாருடன் இனிமையுடன் மகிழ்ச்சி அடைபவர்களாக நீங்கள் ஆகுவீர்கள்.  செவ்விதாக அறிந்தவர்கள் கூறிய திசைகளை உட்கொண்டு, குறியவும் நெடியவும் ஆகிய மலை வழியில் இறங்கி, புதியவர்கள் கண்களால் நோக்கினாலும் நடுக்கத்தை உண்டுபண்ணும் நோய்மிக்க மலை அடுக்கத்தில், மலர்கள் படர்ந்த வரிகளையுடைய நிழலில் நீங்கள் தங்கி இருந்தால், அங்குப் பல திசைகளிலிருந்தும் வரும் ஒலிகளை நீங்கள் கேட்பீர்கள்.  

குறிப்பு:   கூர் – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

சொற்பொருள்:  பாடு இன் அருவி பயம் கெழு மீமிசை – ஓசை இனிமையாக உள்ள அருவிகளின் பயன் பொருந்திய மலை உச்சியில் (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), காடு காத்து உறையும் கானவர் உளரே – காட்டைக் காவல் காத்திருக்கும் குறிஞ்சி நில மக்கள் உள்ளனர் (உளரே – ஈற்றசை), நிலைத் துறை வழீஇய மதன் அழி மாக்கள் – நிலையான துறையை விட்டு ஆழத்தில் புகுந்த வலிமை அழிந்த மக்கள் (வழீஇய – அளபெடை), புனல்படு பூசலின் விரைந்து வல் எய்தி – நீரில் அகப்பட்டு ஆரவாரம் செய்வதைக் கண்டு விரைந்து ஓடி வந்து அவர்களை அடைந்து, உண்டற்கு இனிய பழனும் – உண்பதற்கு இனிய பழங்களையும் (பழன் – பழம் என்பதன் போலி), கண்டோர் மலைதற்கு இனிய பூவும் காட்டி – கண்டவர்கள் சூடுவதற்கு இனிய மலர்களையும் காட்டி, ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற – இடையூறு உடைய வழியில் அவர்கள் உங்களுக்கு முன் செல்ல, நும்மின் நெஞ்சத்து அவலம் வீட இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர் – உங்களுடைய நெஞ்சில் உள்ள துன்பம் தீரும்படி இம் என்னும் ஓசையுடைய உங்கள் சுற்றத்தாருடன் இனிமையுடன் மகிழ்ச்சி அடைபவர்களாக நீங்கள் ஆகுவீர்கள் (இம்மென் – ஒலிக்குறிப்பு), அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு – அறிஞர்கள் கூறிய திசைகளை உட்கொண்டு, குறியவும் நெடியவும் ஊழ் இழிபு – குறியவும் நெடியவும் ஆகிய மலை வழியில் இறங்கி, புதுவோர் நோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்து – புதியவர்கள் கண்களால் நோக்கினாலும் நடுக்கத்தை உண்டுபண்ணும் நோய் மிக்க மலை அடுக்கத்தில், அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின் – மலர்கள் படர்ந்த வரிகளையுடைய நிழலில் நீங்கள் தங்கி இருந்தால், பல திறம் பெயர்பவை கேட்குவிர் – அங்கு பல திசைகளிலிருந்தும் வரும் ஒலிகளை நீங்கள் கேட்பீர்கள், மாதோ – மாது, ஓ அசைநிலைகள்

மலையில் தோன்றும் பலவித ஒலிகளைக் கேட்டல்

கலை தொடு பெரும்பழம் புண் கூர்ந்து ஊறலின்
மலை முழுதும் கமழும் மாதிரம் தோறும்
அருவி நுகரும் வான் அர மகளிர்,

வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும்  295

தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை;
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர்
புலம் புக்கு உண்ணும் புரிவளைப் பூசல்;

சேய் அளைப் பள்ளி எஃகு உறு முள்ளின்   300

எய் தெற இழுக்கிய கானவர் அழுகை;
கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பு என.
அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்;
தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை   305


மலைமார் இடூஉம் ஏமப் பூசல்;
கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்,
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென கிளையொடு,

நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல்,   310

கைக்கோள் மறந்த கருவிரல் மந்தி
அருவிடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு
முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றிச்
சிறுமை உற்ற களையாப் பூசல்;

கலை கையற்ற காண்பு இன் நெடு வரை   315

நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆகப்
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை;
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என,

நறவு நாட் செய்த குறவர் தம் பெண்டிரொடு,   320

மான்தோற் சிறு பறை கறங்கக் கல்லென,
வான் தோய் மீமிசை அயரும் குரவை;
நல் எழில் நெடுந்தேர் இயவு வந்தன்ன
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை;

நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து,   325

உரவுச் சினம் தணித்துப் பெரு வெளிற் பிணிமார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை;
ஒலி கழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்
கிளி கடி மகளிர் விளிபடு பூசல்;

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு   330

மலைத் தலைவந்த மரையான் கதழ் விடை,
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி,
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப,
வள் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய,

நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை;   335

காந்தட் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி,
வண் கோட் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டுபடு மிச்சில் காழ் பயன் கொண்மார்,
கன்று கடாஅவுறுக்கும் மகாஅர் ஓதை

மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக்   340

கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்,
தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்,
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும், குன்றகச் சிலம்பும்,

என்று இவ் அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி,   345

அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன்
அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த

மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்பக், (292 – 348)

பொருளுரை:  ஆண் குரங்குகள் தோண்டிய பலாப்பழங்களில் புண் மிகுந்து சாறு ஊறுதலால், மலை முழுவதும் அச் சாற்றின் நறுமணம் கமழும் திசைதோறும், அருவியில் நீராடும் பெண் கடவுள்கள் விரைந்து விழும் அந்நீரை தம் கையில் ஏற்று அதைக் குடையும்பொழுதெல்லாம்,

தாளம் தெரிகின்ற உங்களுடைய இசைக்கருவி போன்று எழும் இனிய இசையின் ஓசையும், விளங்குகின்ற உயர்ந்த தந்தத்தையுடைய, தன் இனத்திலிருந்து பிரிந்த யானையின் தலைவன், மலையின் மீது உள்ள பரணில் உள்ள கானவரின் தினைப்புனத்தில் புகுந்து தின்ன, அதைப் பிடித்தற்கு கானவர் செய்த ஆரவாரமும், தொலைவான இடத்தில் உள்ள கூர்மையான முள்ளையுடைய முள்ளம்பன்றியானது, 

தங்களை வருத்துமாறு தங்களிடமிருந்து தப்பியதால் ஏற்பட்ட கானவரின் அழுகையும், புலி பாய்ந்ததால் தங்கள் கணவரின் மார்பில் பட்ட ஆழ்ந்த புண்ணை ஆற்றுமாறு, காவல் என எண்ணி கருமணல் போல் கூந்தல் உள்ள கொடிச்சியர் பாடும் பாட்டால் எழுந்த ஓசையும், முதல் நாளில் பூத்த பொன்னைப் போல் உள்ள வேங்கை மலர்களைச்

சூடும்பொருட்டு ‘புலி புலி’ எனக் கூப்பிடும் அச்சம் தீர்ந்த ஆரவாரமும், கன்றை வயிற்றில் கொண்ட மென்மையான தலையையுடைய பெண் யானை வலிமைக்கு எல்லையாகிய அதனுடைய களிறு உணவைக் கொண்டு வந்து பாதுகாக்கப் போனபொழுது ஒளியையும் நிறத்தையும் உடைய வலிமையான புலி பாய்ந்ததால், தன் சுற்றத்துடன் நெடிய மலையில் கூப்பிடும் இடியோசை போல் முழங்கும் குரலும், 

தன் குட்டியை தன் கையால் தழுவிக்கொள்ளுதலை மறந்த மந்தி (பெண் குரங்கு), அதை மீட்டுக்கொள்ள இயலாத மலை இடுக்கில் விழுந்த தன்னுடைய குரங்குத் தொழிலைக் கல்லாத குட்டிக்கு, தளிரை மேய்ந்து வளர்ந்த உடலையுடைய சுற்றத்துடன் நெருங்கி துன்பம் மிக்க நீக்கப்படாத ஆரவாரமும், ஆண் குரங்கும் ஏற முடியாத காண்பதற்கு இனிமையான உயர்ந்த மலையில்,

நிலையாக இருக்குமாறு இடப்பட்ட மூங்கில் ஏணிகள் வழியாகச் சென்று பெரும் பயன் உண்டாகும்படி தேனீக்கள் சேர்த்து வைத்த தேனை கொள்ளைக் கொண்ட, அரிய சிறிய அரண்களை அழித்த கானவரின் மகிழ்ச்சியால் உண்டான ஆரவாரமும், திருந்திய வேலையுடைய நன்னனுக்குப் புதிதாகக் கொடுப்பதற்கு இப்பொருள்கள் பொருத்தம் எனக் கருதி, கள்ளை அதிகாலையில் குடித்த குறவர்கள் தம் பெண்களுடன்,

மானின் தோலால் செய்த சிறுபறை ஒலிக்க, கல் என்னும் ஓசை உண்டாக வானைத் தொடும் உச்சி மலையில் ஆடும் குரவை நடனத்தின் பாட்டு ஒலியும், நல்ல அழகிய உயர்ந்த தேர் தெருவில் ஓடி வந்ததுபோல் பாறைக்கல்லின் மேல் ஆறுகள் ஆரவாரத்துடன் ஓடி குகைகளில் முழங்கும் ஆரவாரமும், காட்டு ஆற்றின் நீண்ட சுழியில் விழுந்து அகப்பட்ட வலிமையுடைய யானையின்,

வலியச் சினத்தைத் தணித்து, பெரிய தூண்களில் கட்டும் பொருட்டு, வடமொழி கலந்த மொழியில் பேசி அவற்றைப் பயிலச் செய்யும் யானைப் பாகர்களுடைய ஓசையும், ஒலிக்கும் மூங்கில் தட்டையைப் புடைத்துக் கிளி விரட்டும் ஓசையும், புனங்கள்தோறும் கிளிகளை விரட்டும் காவல் மகளிரின் ஆரவார ஓசையும், தன் கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த அசையும் திமிலையுடைய நல்ல காளையும்,  

மலையிலிருந்து வந்த மரையானின் விரைந்த காளையும் மாறாத வலிமையுடன் புண் உண்டாகும்படி ஒன்றை ஒன்று தாக்க, முல்லை நிலத்தின் கோவலர் குறிஞ்சி நிலத்தின் குறவர்களுடன் சேர்ந்து வெற்றி தோன்ற ஆரவாரிப்ப, வளமான இதழ்களையுடைய குளவி மலர்களும் குறிஞ்சி மலர்களும் வாடும்படி நல்ல காளைகள் போரைப் புரிகின்ற ஆரவாரமும்,  

காந்தளின் துடுப்புப் போன்ற கமழும் மடலால் அடித்து, வளமான குலைகளை உடைய பலாவின் சுளை முற்றின இனிய பழத்தை உண்டு, அதன் மிகையான விதையின் பயனைக் கொள்வதற்காக, கன்றுகளைக் கட்டி கடா விடும் பிள்ளைகளின் ஆரவாரமும், மழைபொழிவதைப் போல் சாறு பொழிதலையுடைய ஆலைகள்தோறும் விரைவாகக் கரும்பின் கணுக்களை நறுக்குவதால் ஏற்படும் ஒலியும், 

தினையைக் குத்துகின்ற மகளிருடைய இசை மிகுந்த வள்ளைப் பாட்டும், சேம்பையும் மஞ்சளையும் வளர்த்துக் காப்பவர்கள் பன்றியை விரட்டுவதற்குக் கொட்டும் பறை ஓசையும், மலையில் எதிரொலிக்கும் இவ்வோசைகள் யாவும், நிரம்பி ஒன்றுசேரப் பொருந்தி, பள்ளங்களிலும் மலையிலும், நெருங்கிப் பலவற்றுடன், எல்லை இல்லாத பெரும் எண்ணிக்கையாக மலைகளாகிய யானை உண்டாக்கும் ஓசைகள் திசைகள்தோறும் ஒலிக்க,  

குறிப்பு:   அறல் வாழ் கூந்தற் (304) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறல்பட்ட கூந்தல், அறல் கூந்தலின்கண் வரிவரியாய் அமைந்த வடு, அறல் கருமணலுமாம்.  வயப்புலி பாய்ந்தென (309) – ச. வே. சுப்பிரமணியன் உரை – வலிமை வாய்ந்த புலி பிடியின் மீது பாய்ந்தது.  அருங் குறும்பு எறிந்த (318) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேனிறால் சிற்றரண் போறலின் ‘அருங்குறும்பு எறிந்த’ என்றார், ச. வே. சுப்பிரமணியன் உரை – அரிய சிற்றரண்கள், C. ஜெகந்நாதாசாரியர்  உரை – அரிய குறும்புகள். நச்சினார்க்கினியர் உரை – அழித்தற்கரிய குறும்பு.  இறை (319) – அரசிறை, அரசனுக்கு கொடுக்க வேண்டிய பொருட்கள்.  (சான்ம் 319) சான்ம் (467) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சாலும் என்பது சான்ம் என நின்றது, C. ஜெகந்நாதாசாரியர் உரை – சாலும் என்பது ‘சான்ம்’ என்று உகரம் கெட்டு மெய் திரிந்து நின்றது. ‘திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம்’ என்றார் முன்னரும் (319), ஒளவை துரைசாமி உரை நற்றிணை 381 – சாலும் என்பது ஈற்றசை உகரம் கெட்டுச் சான்ம் என நின்றது.  ஈற்று மகரமெய் மகரக்குறுக்கம்.  ஒளவை துரைசாமி உரை நற்றிணை 381 – சாலும் என்பது ஈற்றசை உகரம் கெட்டுச் சான்ம் என நின்றது.  ஈற்று மகரமெய் மகரக்குறுக்கம்.  விரவு மொழி பயிற்றும் பாகர் (327) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யானையைப் பயிற்றும் பாகர் பயிற்றும் சொல் வடமொழி ஆகலின் ‘விரவு மொழி’ என்றார்.   தன் தமிழ் மொழியின் இடையே வட மொழியை விரவிப் பயிற்றி என்றவாறு.  புறநானூறு 24 – திண் திமில் வன் பரதவர் வெப்புடைய மட்டுண்டு தண் குரவைச் சீர் தூங்குந்து, புறநானூறு 129 – குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள் வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து வேங்கை முன்றில் குரவை அயரும்.  முல்லைப்பாட்டு 35-36 – கவை முட் கருவியின் வடமொழி பயிற்றிக் கல்லா விளைஞர் கவளம் கைப்ப.  தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப் பூசல் (305-306) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைநாள் பூத்த பொன்போலும் கொத்தினையுடைய வேங்கைப் பூவைச் சூடுவதற்கு மகளிர் புலி புலி என்று கூப்பிடும் ஏமத்தையுடைய ஆரவாரம்.  வேங்கை வளைந்து பூவைக் கொடுத்தலின் ‘ஏமப்பூசல்’ என்றார்.  வேங்கைப் பூக்கொய்யும் மகளிர் புலி புலி என்று கூவினால் வேங்கையும் வளைந்து கொடுக்கும் என்றுகருதிக் கூவுதல் அக்காலத்து வழக்கமாம்.  ‘புலி புலி’ என்று ஓசை எழுப்புதல்:  அகநானூறு 48 – ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி புலி புலி என்னும் பூசல் தோன்ற, அகநானூறு 52 – வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள் இன்னா இசைய பூசல் பயிற்றலின், மதுரைக்காஞ்சி 396-397 – கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர் நறும் பூக் கொய்யும் பூசல், மலைபடுகடாம் 305-306 தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப் பூசல்.   கலையும் பெரும்பழமும்:   குறுந்தொகை 342-1 – கலை கை தொட்ட கமழ் சுளைப் பெரும்பழம், மலைபடுகடாம் – 292 – கலை தொடு பெரும்பழம்.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  கய – கயவென் கிளவி மென்மையும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 24).  துவன்றி – துவன்று நிறைவாகும் (தொல்காப்பியம், உரியியல் 34).  கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  கரும்பு ஆலை – மலைபடுகடாம் 119 – அறை உற்று ஆலைக்கு அலமரும் தீம் கழைக் கரும்பே, மலைபடுகடாம் 340- மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக் கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும், பெரும்பாணாற்றுப்படை 261 – விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும் கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின், பட்டினப்பாலை 9 – கார்க் கரும்பின் கமழ் ஆலை, பரிபாடல் 1-14 – சாறுகொள் ஓதத்து இசையொடு. திருந்து வேல் அண்ணற்கு (319) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுபவர்கள் மீது அறியாமையால் அறம் பிறழாது திருந்திய வேல் உடைய நன்னனுக்கு, ச.வே. சுப்ரமணியன் உரை – திருந்திய செம்மையான ஆட்சியைச் செய்யும் வேலை உடைய அண்ணலாகிய நன்னனுக்கு. விருந்து இறை (319) – புதிதாகக் கொடுத்தல்.

சொற்பொருள்:  கலை தொடு பெரும்பழம் புண் கூர்ந்து ஊறலின் மலை முழுதும் கமழும் மாதிரம் தோறும் – ஆண் குரங்குகள் தோண்டிய பலாப்பழங்களில் புண் மிகுந்து சாறு ஊறுதலால் மலை முழுவதும் அச் சாற்றின் நறுமணம் கமழும் திசைதோறும், அருவி நுகரும் வான் அர மகளிர் வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும் – அருவியில் நீராடும் பெண் கடவுள்கள் விரைந்து விழும் அந்நீரை தம் கையில் ஏற்று அதைக் குடையும்பொழுதெல்லாம்,

தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை – தாளம் தெரிகின்ற உங்களுடைய இசைக்கருவி போன்று எழும் இனிய இசை, இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல் – விளங்குகின்ற உயர்ந்த தந்தத்தையுடைய தன் இனத்திலிருந்து பிரிந்த யானையின் தலைவன், விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர் – மலையின் மீது உள்ள பரணில் உள்ள கானவர் (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), புலம் புக்கு உண்ணும் புரி வளைப் பூசல் – தினைப்புனத்தில் புகுந்து தின்ன அதைப் பிடித்தற்கு கானவர் செய்த ஆரவாரம், சேய் அளைப் பள்ளி எஃகு உறு முள்ளின் எய் – தொலைவான இடத்தில் உள்ள கூர்மையான முள்ளையுடைய முள்ளம்பன்றி,

தெற இழுக்கிய கானவர் அழுகை – தங்களை வருத்துமாறு தங்களிடமிருந்து தப்பியதால் ஏற்பட்ட கானவரின் அழுகை, கொடுவரி பாய்ந்தென – புலி பாய்ந்ததால் (கொடுவரி – வளைந்த கோடு, புலி, பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, ஆகுபெயருமாம்), கொழுநர் மார்பில் நெடுவசி விழுப்புண் தணிமார் – தங்கள் கணவரின் மார்பில் பட்ட ஆழ்ந்த புண்ணை ஆற்றுமாறு, காப்பு என அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல் – காவல் என எண்ணி கருமணல் போல் கூந்தல் உள்ள கொடிச்சியர் பாடும் பாட்டால் எழுந்த ஓசையும் (கொடிச்சியர் – மலையில் வாழும் பெண்கள்), தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை – முதல் நாளில் பூத்த பொன்னைப் போல் உள்ள வேங்கை மலர்கள்,

மலைமார் இடூஉம் ஏமப் பூசல் – சூடும்பொருட்டு ‘புலி புலி’ என கூப்பிடும் அச்சம் தீர்ந்த ஆரவாரமும் (அகநானூறு 48, 52 ஆகியற்றைக் காணவும்), கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி – கன்றை வயிற்றில் கொண்ட மென்மையான தலையையுடைய பெண் யானை, வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின் – வலிமைக்கு எல்லையாகிய அதனுடைய களிறு உணவைக் கொண்டு வந்துப் பாதுகாக்கப் போனதால், ஒண் கேழ் வயப்புலி பாய்ந்தென – ஒளியையும் நிறத்தையும் உடைய வலிமையான புலி பாய்ந்ததால், கிளையொடு நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் – தன் சுற்றத்துடன் நெடிய மலையில் கூப்பிடும் இடியோசை போல் முழங்கும் குரலும்,

கைக் கோள் மறந்த கருவிரல் மந்தி – தன் பார்ப்பைத் (குட்டியை) தன் கையால் தழுவிக்கொள்ளுதலை மறந்த மந்தி (பெண் குரங்கு), அருவிடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு – எடுக்க முடியாத மலை இடுக்கில் விழுந்த தன்னுடைய குரங்குத் தொழிலைக் கல்லாத குட்டிக்கு, முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றிச் சிறுமை உற்ற களையாப் பூசல் – தளிரை மேய்ந்து வளர்ந்த உடலையுடைய சுற்றத்துடன் நெருங்கி துன்பம் மிக்க நீக்கப்படாத ஆரவாரம், கலை கையற்ற காண்பு இன் நெடு வரை – ஆண் குரங்கும் ஏற முடியாத காண்பதற்கு இனிமையான உயர்ந்த மலை,

நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக – நிலையாக இருக்குமாறு இடப்பட்ட மூங்கில் ஏணிகள் (கண்ணேணி), பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை – பெரும் பயன் உண்டாகும்படி தேனீக்கள் சேர்த்து வைத்தத் தேனை எடுத்துக் கொண்ட கொள்ளையால் (தேம் தேன் என்றதன் திரிபு), அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை – அரிய சிறிய அரண்களை அழித்த கானவரின் மகிழ்ச்சியால் உண்டான ஆரவாரமும், திருந்து வேல் அண்ணற்கு – திருந்திய  வேலையுடைய நன்னனுக்கு, விருந்து இறை சான்ம் என – புதிதாகக் கொடுப்பதற்கு இவை பொருத்தம் எனக் கருதி (இறை – இறு – பகுதி, ஐ – செயல்படுபொருள் விகுதி, சாலும் என்பது ஈற்றசை உகரம் கெட்டுச் சான்ம் என நின்றது, ஈற்று மகரமெய் மகரக்குறுக்கம்), நறவு நாட் செய்த குறவர் – கள்ளை அதிகாலையில் குடித்த குறவர்கள் (நறவு – ஐகாரம் கெட முற்று உகரம் பெற்று நறவு என்றாயிற்று), தம் பெண்டிரொடு – தம் பெண்களுடன்,

மான் தோல் சிறு பறை கறங்க – மானின் தோலால் செய்த சிறுபறை ஒலிக்க, கல்லென வான் தோய் மீமிசை அயரும் குரவை – கல் என்னும் ஓசை உண்டாக வானைத் தொடும் உச்சி மலையில் ஆடும் குரவை நடனம் (கல்லென – ஒலிக்குறிப்பு, மீமிசை – ஒருபொருட் பன்மொழி), நல் எழில் நெடுந்தேர் இயவு வந்தன்ன – நல்ல அழகிய உயர்ந்த தேர் தெருவில் ஓடி வந்ததுபோல், கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை – கல்லின் மேல் ஆறுகள் ஆரவாரத்துடன் குகைகளில் முழங்கும் ஆரவாரமும், நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து – காட்டு ஆற்றின் நீண்ட சுழியில் விழுந்து அகப்பட்ட வலிமையுடைய யானையின்,

உரவுச் சினம் தணித்து – வலியச் சினத்தைத் தணித்து, பெரு வெளில் பிணிமார் – பெரிய தூண்களில் கட்டும் பொருட்டு, விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை – வடமொழி கலந்த மொழியில் பேசி அவற்றை பயிலச் செய்யும் யானைப் பாகர்களுடைய ஓசையும், ஒலி கழைத் தட்டை புடையுநர் – ஒலிக்கும் மூங்கில் தட்டையைப் புடைத்துக் கிளி விரட்டும் ஓசையும் (புடையுநர் – முற்றெச்சம்), புனந்தொறும் கிளி கடி மகளிர் விளிபடு பூசல் – புனங்கள்தோறும் கிளிகளை விரட்டும் காவல் மகளிரின் ஆரவார ஓசையும், இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு – தன் கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த அசையும் திமிலையுடைய நல்ல காளையும்,

மலைத் தலைவந்த மரையான் கதழ் விடை மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி – மலையிலிருந்து வந்த மரையானின் விரைந்த காளையும் மாறாத வலிமையுடன் புண் உண்டாகும்படி ஒன்றை ஒன்று தாக்கி, கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப – முல்லை நிலத்தின் கோவலர் குறிஞ்சி நிலத்தின் குறவர்களுடன் சேர்ந்து வெற்றி தோன்ற ஆரவாரிப்ப, வள் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய – வளமான இதழ்களையுடைய குளவி மலர்களும் குறிஞ்சி மலர்களும் வாடும்படி, நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை – நல்ல காளைகள் போரைப் புரிகின்ற ஆரவாரமும் (கல்லென் – ஒலிக்குறிப்பு, பொரூஉம்  – அளபெடை), 

காந்தட் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி – காந்தளின் துடுப்புப் போன்ற கமழும் மடலால் அடித்து, வண் கோட் பலவின் சுளை விளை தீம் பழம் உண்டுபடு – வளமான குலைகளை உடைய பலாவின் சுளை முற்றின இனிய பழத்தை உண்டு, மிச்சில் காழ் பயன் கொண்மார் – மிகையான விதையின் பயனைக் கொள்வதற்கு, கன்று கடாஅ உறுக்கும் மகாஅர் ஓதை– கன்றுகளைக் கட்டி கடா விடும் பிள்ளைகளின் ஆரவாரமும் (கடாஅ, மகாஅர் – அளபெடை, கடா விடுதல் – அதரிகொள்ளுதல், எருதுகளை நெல்லின் மேல் நடக்க வைத்து உமியையும் அரிசியையும் பிரித்தல்), மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக் கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும் – மழைபொழிவதைப் போல் சாறு பொழிதலையுடைய ஆலைகள்தோறும் விரைவாகக் கரும்பின் கணுக்களை உடைப்பதால் ஏற்படும் ஒலியும் (ஞெரேரென – விரைவுக்குறிப்பு),  

தினை குறு மகளிர் இசைபடு வள்ளையும் – தினையைக் குத்துகின்ற மகளிருடைய இசை மிகுந்த வள்ளைப் பாட்டும், சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர் பன்றிப் பறையும் – சேம்பையும் மஞ்சளையும் வளர்த்துக் காப்பவர்கள் பன்றியை விரட்டுவதற்குக் கொட்டும் பறை ஓசையும், குன்றகச் சிலம்பும் என்று இவ் அனைத்தும் – மலையில் எதிரொலிக்கும் இவ்வோசை யாவும், இயைந்து ஒருங்கு ஈண்டி – நிரம்பி ஒன்றுசேரப் பொருந்தி, அவலவும் மிசையவும் – பள்ளங்களிலும் மலையிலும், துவன்றிப் பல உடன் – நெருங்கிப் பலவற்றுடன், அலகைத் தவிர்த்த எண் அரும் – எல்லை இல்லாத பெரும் எண்ணிக்கை (அலகு – அளவு), திறத்த – இத் தன்மையுடைய, மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்ப – மலைகளாகிய யானை உண்டாக்கும் ஓசைகள் திசைகள்தோறும் ஒலிக்க (கடாஅம் – அளபெடை),

நன்னனது மலை

குரூஉக்கண் பிணையற் கோதை மகளிர்

முழவுத் துயில் அறியா வியலுள் ஆங்கண்,   350

விழவின் அற்று அவன் வியன்கண் வெற்பே;
கண்ண் தண்ண் எனக் கண்டும் கேட்டும்
உண்டற்கு இனிய பல பாராட்டியும்,
இன்னும் வருவதாக நமக்கு எனத்

தொல்முறை மரபினர் ஆகிப் பல்மாண்   355

செரு மிக்குப் புகலும் திரு ஆர் மார்பன்
உரும் உரறு கருவிய பெருமலை பிற்பட,

இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர்

நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடிக்

கைதொழூஉப் பரவி பழிச்சினிர் கழிமின்; (349 – 360)

பொருளுரை:  பலநிறங்கள் பொருந்திய கட்டப்பட்ட மாலைகள் அணிந்த பெண்கள் ஆடுவதற்கு ஏற்ப முழவு ஒலிக்கும் கண் உறக்கம் அறியாத அகன்ற ஊரில் கொண்ட திருவிழாக்களை ஒத்தது அவனுடைய அகன்ற இடத்தையுடைய மலை. கண்குளிரக் கண்டும் செவிகுளிரக் கேட்டும், உண்ணுதற்குரிய பல உணவுகளைக் கொண்டாடி உண்டும், ‘மேலும் இத்தகைய இன்ப நுகர்ச்சி எய்துவதாக நமக்கு’ என நீங்கள் விரும்பிப் பழைய உறவினர் போலும் முறைமை உடையவர்களாகச் சில நாட்கள் அங்கு தங்கி, பல மாட்சிமைப்பட்ட போரில் வெற்றி அடைந்தவனாகிய திருமகளை மார்பில் கொண்ட மன்னனின் இடி முழங்கும் முகில் கூட்டத்தையுடைய பெரிய மலை உங்கள் பின்னால் செல்ல, வியப்பு மிக்க யாழையுடைய விறலியர் நறுமணமான கரிய மலையில் குறிஞ்சிப்பண்ணில் பாட, கையால் தொழுது பாராட்டி, இறைவனைப் புகழ்ந்து, அதன்பின் செல்லுங்கள். 

குறிப்பு:  குரூஉ (349) – நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5).  திரு ஆர் மார்பன் (356) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – திரு ஆர் மார்பன் என்றது நன்னனின் செல்வப் பெருமை கூறியவாறு.  திருமகள் உறையும் மார்பினையுடைய திருமாலாகிய நன்னன் எனக் கொள்ளினுமாம்.   கருவிய (357) – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள்.   கண்ண் தண்ண் (352) – கண் தண் என்னும் குறிற்கீழ் ஒற்றுக்கள் சீர்நிலை எய்தற்பொருட்டு கண்ண் தண்ண் என அளபெடுத்தன.  வியல் – வியலென் கிளவி அகலப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 66).  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  பரவும் பழிச்சும் – பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 86).

சொற்பொருள்:  குரூஉக்கண் பிணையல் கோதை மகளிர் முழவுத் துயில் அறியா வியலுள் ஆங்கண் விழவின் அற்று – பலநிறங்கள் பொருந்திய கட்டப்பட்ட மாலைகள் அணிந்த பெண்கள் ஆடுவதற்கு ஏற்ப முழவு ஒலிக்கும் கண் உறக்கம் அறியாத அகன்ற ஊரில் கொண்ட திருவிழாக்களை ஒத்த (குரூஉ – அளபெடை, விழவின் – இன் சாரியை), அவன் வியன்கண் வெற்பே – அவனுடைய அகன்ற இடத்தையுடைய மலை (வெற்பே – ஏகாரம் அசைநிலை), கண்ண் தண்ண் எனக் கண்டும் கேட்டும் – கண்குளிரக் கண்டும் செவிகுளிரக் கேட்டும், உண்டற்கு இனிய பல பாராட்டியும் – உண்ணுதற்குரிய பல உணவுகளைக் கொண்டாடி உண்டும், இன்னும் வருவதாக நமக்கு எனத் தொல்முறை மரபினர் ஆகி – மேலும் இத்தகைய இன்ப நுகர்ச்சி எய்துவதாக நமக்கு என விரும்பிப் பழைய உறவினர் போலும் முறைமை உடையவர்களாகச் சில நாட்கள் தங்கி, பல் மாண் செரு மிக்குப் புகலும் திரு ஆர் மார்பன் – பல மாட்சிமைப்பட்ட போரில் வெற்றி அடைந்தவனாகிய திருமகளை மார்பில் கொண்ட மன்னன், உரும் உரறு கருவிய பெருமலை பிற்பட – இடி முழங்கும் முகில் கூட்டத்தையுடைய பெரிய மலை பின்னால் செல்ல, இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர் – வியப்பு மிக்க யாழையுடைய விறலியர் (குரல் – ஆகுபெயர் யாழுக்கு), நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடி – நறுமணமான கரிய மலையில் குறிஞ்சிப்பண்ணில் பாட (பாடி – பாட, எச்சத்திரிபு), கைதொழூஉப் பரவி – கையால் தொழுது பாராட்டி (தொழூஉ – அளபெடை), பழிச்சினிர் கழிமின் – இறைவனைப் புகழ்ந்து அதன்பின் செல்லுங்கள் (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

குன்றும் குகைகளும் நெருங்கிய மலை வழி

மைபடு மாமலை பனுவலின் பொங்கி
கை தோய்வு அன்ன கார்மழைத் தொழுதி
தூஉய் அன்ன துவலை தூற்றலின்,
தேஎம் தேறாக் கடும்பரிக் கடும்பொடு,

காஅய்க் கொண்ட நும் இயம் தொய்படாமல்   365

கூவல் அன்ன விடரகம் புகுமின்;
இருங்கல் இகுப்பத்து இறுவரை சேராது,
குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து,
நின்று நோக்கினும் கண் வாள் வெளவும்

மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு,   370

தண்டு கால் ஆகத் தளர்தல் ஓம்பி,
ஊன்றினிர் கழிமின் ஊறு தவப் பலவே;
அயில் காய்ந்தன்ன கூர்ங்கற் பாறை
வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்துக்

கதிர் சினம் தணிந்த அமயத்துக் கழிமின்; (361 – 375)

பொருளுரை:  கரிய நிறமுடைய பெரிய மலையில் பஞ்சிபோல் பொங்கி, கை தொடுவதுபோல் தன்மை ஒத்த அணுகுதலையுடைய கார்கால முகில் கூட்டங்கள், தூவல் போல மழை நீரைத் தூவுவதால், திசைகள் அறியாத விரைந்து செல்லும் உங்கள் சுற்றத்துடன், தோளில் காவிக்கொண்ட உங்களுடைய இசைக்கருவிகள் நனையாதபடி, கிணறுகள் போன்ற குகைக்குள் நுழையுங்கள்.  பெரிய கற்களின் திரட்சி முறிந்து விழும் மலைகளைச் சேராமல், மலையில் உள்ள பெரும் வருத்தத்தைச் செய்யும் குழிகளில் நின்று நோக்கினாலும் கண்ணின் ஒளியை இல்லையாக அக்குழிகள் கவ்வும்.  அங்கு செல்லும்பொழுது மார்ச்சுனை அடர்ந்த முழவின் அடிக்கும் கோலை ஊன்றும் கோலாகக் கொண்டு, வழுக்காமல் உங்களைப் பாதுகாத்து, ஊன்றிக் கொண்டு நீங்கள் செல்லுங்கள்.  வேல் காய்ந்தாற்போன்ற வெப்பம் மிக்க கூர்மையான பாறை சுடும், குளிர்ச்சி வராமல் வெயிலின் பாதுகாவலை உடைய துன்பம் தரும் வழியில், கதிரவனின் சினம் மாறிய வேளையில் செல்லுங்கள்.

குறிப்பு:  தூஉய் அன்ன (363) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலியத் தூவினாலொத்த.   காஅய்க் கொண்ட (365) – நச்சினார்க்கினியர் உரை – காவிக் கொண்ட.  இன்னல் இயக்கம் (374) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இன்னாமை எய்துவதற்குக் காரணமான செலவு.  தவ – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  மைபடு மாமலை பனுவலின் பொங்கி – கரிய நிறமுடைய பெரிய மலையில் பஞ்சிபோல் பொங்கி (பனுவலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கை தோய்வு அன்ன கார் மழைத் தொழுதி – கை தொடுவதுபோல் உள்ள கார்கால முகில் கூட்டங்கள், தூஉய் அன்ன – தூவல் போல (தூஉய் – அளபெடை), துவலை தூற்றலின் – மழை நீரைத் தூவுவதால், தேஎம் தேறா – திசைகள் அறியாத (தேஎம் – அளபெடை), கடும் பரிக் கடும்பொடு – விரைந்து செல்லும் சுற்றத்துடன், காஅய்க் கொண்ட நும் இயம் தொய்படாமல் – தோளில் காவிக்கொண்ட உங்களுடைய இசைக்கருவிகள் நனையாதபடி (காஅய்க் கொண்ட – காவடியில் கொண்ட, காஅய் – அளபெடை), கூவல் அன்ன விடரகம் புகுமின் – கிணறுகள் போன்ற குகைக்குள் நுழையுங்கள் (புகுமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), இருங்கல் இகுப்பத்து இறுவரை சேராது – பெரிய கற்களின் திரட்சி முறிந்து விழும் மலைகளைச் சேராமல் (இகுப்பம் – திரட்சி), குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து – மலையில் உள்ள பெரும் வருத்தத்தைச் செய்யும் பள்ளத்தில், நின்று நோக்கினும் கண் வாள் வெளவும் – நின்று நோக்கினாலும் கண்ணின் ஒளியை கவ்வும், மண் கனை முழவின் – மார்ச்சுனை (சேறு) அடர்ந்த முழவின்,  தலைக்கோல் கொண்டு தண்டு கால் ஆக – அடிக்கும் கோலை ஊன்றும் கோலாகக் கொண்டு, தளர்தல் ஓம்பி ஊன்றினிர் கழிமின் – வழுக்காமல் பாதுகாத்து ஊன்றிக்கொண்டு நீங்கள் செல்லுங்கள் (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), ஊறு தவப் பலவே – இடையூறு பல உள்ளன, அயில் காய்ந்தன்ன கூர்ங்கற் பாறை – வேல் காய்ந்தாற்போன்ற வெப்பம் மிக்க கூர்மையான கற்கள், வெயில் புறந்தரூஉம் – வெயிலின் பாதுகாவலை உடைய (புறந்தரூஉம் – அளபெடை), இன்னல் இயக்கத்து – துன்பம் தரும் வழியில்  (இயக்கம் – ஆகுபெயர் வழிக்கு), கதிர் சினம் தணிந்த அமயத்துக் கழிமின் – கதிரவனின் சினம் மாறிய வேளையில் செல்லுங்கள் (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி,

அரண்களும் நடுகற்களும் உள்ள வழிகள்

உரை செல வெறுத்த அவன் நீங்காச் சுற்றமொடு,
புரை தவ உயரிய மழை மருள் பஃறோல்
அரசு நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய;
பின்னி அன்ன பிணங்கு அரில் நுழைதொறும்,

முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக் கோல்   380

இன் இசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி
மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பிக்
கை பிணி விடாஅது பைபயக் கழிமின்;
களிறு மலைந்தன்ன கண்கூடு துறுகல்

தளி பொழி கானம் தலை தவப்பலவே;   385

ஒன்னார்த் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட,
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே;

இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆகத்   390

தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின்; (376 – 391)

பொருளுரை:  புகழ் பரவ, மிகுந்த அவனுடைய நீங்காத படைத் தலைவர்களுடன், உயர்ச்சி மிக உயர்ந்த  முகில் என்று மருளும் பல யானைத் திரளை உடைய போரிட வந்த பகை அரசர்களின் நிலையை கெடுக்கும் அரண்களும் உடைய, பின்னி வைத்தாற்போல் கொடிகள் பிணங்கிய சிறுகாட்டை உடைய சிறிய வழிகள்தோறும், முன் செல்பவன் தன் முகத்தில் அடிக்காது இருக்க கையால் வளைத்து விட்ட விரைவை உடைய மூங்கிலின் திரண்ட கோலானது, இனிய இசையை தன்னிடத்தில் கொண்ட நல்ல யாழின் உடல் பகுதியையும், இறுக்கமாகக் கட்டிய மார்ச்சனை செறிந்த முழவின் கண்ணையும் கெடுக்காதபடி பாதுகாத்து, அவன் கையைப் பிடித்து மெல்ல மெல்லச் செல்லுங்கள். யானைகள் போரிடுவதை ஒத்த நெருங்கிக் கிடக்கும் பாறைகள் உடைய  மழை பெய்யும் காடுகள் அம்மலையில் மிகப் பல உள்ளன.  பொருந்தாத பகைவர்கள் போரில் புறமுதுகிட்டு ஓடியபொழுது, ஆரவாரம் செய்து, பின் தங்கள் உயிரைக் கொடுப்பதற்கு நாணம் இல்லாது போரிட்ட வீரர்களின் கெடாத நல்ல புகழையுடைய பெயர்களை எழுதி நட்டின கற்கள் உடைய புறமுதுகிட்டவர்களை இகழும் பல கவர்த்த வழிகள் உள்ளன.  இன்பம் மிகுந்த தாளத்தை உடைய உங்கள் பாட்டை அந்நடுக்கல் கடவுள் விரும்புமாறு பாடி, பண்டைய மரபுப்படி உங்கள் யாழை இயக்கி வணங்கி விரைந்து நீங்கள் செல்லுங்கள்.

குறிப்பு:  முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக் கோல் இன் இசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி (380-382) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காட்டினூடே வழிபோக்கர்க்குளதாகிய நுணுகிய இடையூறு ஒன்றனை அரிதின் எடுத்துக் கூறல் பெரிதும் இன்பம் தருவதால்.  அஃதாவது காட்டின் நுழைவழியூடே  முன் செல்வான் தன் முகத்தே படாதவாறு தன் கையால் முன்னிற்கும்  வளாறுகளை (சிறிய மரக்கிளைகளை) வளைத்துக் கொண்டு செல்வதும், அவன் அப்பால் சென்றவுடன் அதனை விட்டுவிடுதலும் வளைக்கப்பட்டமையால் அவ்வளாறுகள் விசையுடன் பின் வருவாரைத் தாக்கி ஊறு செய்தலும். அத்தகைய வழிகளிற் பயில்வோர் நன்கறிவர்.  கல் ஏசு கவலை (380-382) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – போரில் புறமிட்டோர் நாணுதலான் அவரை இகழ்வது போன்ற மறக்கல் நிற்கும் வழி, C.ஜெகந்நாதாசார்யார் உரை – முதுகிட்டுப் போனவரை இகழும் பலவழிகள்.  பஃறோல் – தகரம் வருவழி ஆய்தம் நிலையலும் புகரின் என்மனார் புலமையோரே (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 74).  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  வெறுத்த – விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே (தொல்காப்பியம், உரியியல் 51). தவ – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3). கணைக் கோல் (380) – C. ஜெகந்நாதாசாரியர் உரை – மூங்கிலின் கோல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வளாறுகள் (இளங்கொம்புகள்).  ஒப்புமை – குறுந்தொகை 54 – யானை கைவிடு பசுங்கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும்.

சொற்பொருள்:  உரை செல – புகழ் பரவ (செல – இடைக்குறை), வெறுத்த அவன் நீங்காச் சுற்றமொடு – மிகுந்த அவனுடைய நீங்காத படைத் தலைவர்களுடன், புரை தவ உயரிய மழை மருள் – உயர்ச்சி மிக உயர்ந்த  முகில் என்று மருளும்படி(மருள் – உவம உருபு), பஃறோல் – பல யானைகள் (பல்தோல், குறியின் கீழ் லகரம் தகரம் வர ஆய்தமாகத் திரிந்து புணர்ந்தது), அரசு நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய – போரிட வந்த பகை அரசர்களின் நிலையை கெடுக்கும் அரண்களும் உடைய, பின்னி அன்ன பிணங்கு அரில் நுழைதொறும் – பின்னி வைத்தாற்போல் கொடிகள் பிணங்கிய சிறுகாட்டை உடைய சிறிய வழிகள்தோறும், முன்னோன் வாங்கிய கடுவிசை கணைக் கோல் – முன் செல்பவன் தன் முகத்தில் அடிக்காது இருக்க வளைத்து விட்ட விரைவை உடைய மூங்கிலின் திரண்ட கோல் அல்லது திரண்ட சிறிய மரக்கிளை, இன் இசை நல்யாழ்ப் பத்தரும் – இனிய இசையை தன்னிடத்தில் கொண்ட நல்ல யாழின் பத்தரையும் (உடல் பகுதியையும்), விசிபிணி மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி – இறுக்கமாகக் கட்டிய மார்ச்சனை செறிந்த முழவின் கண்ணும் கெடாமல் பாதுகாத்து, கை பிணி விடாஅது பைபயக் கழிமின் – அவன் கையைப் பிடித்து மெல்ல மெல்லச் செல்லுங்கள் (விடாஅது – அளபெடை, பைபய – பையப்பைய பைபய என மருவியது, கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), களிறு மலைந்தன்ன கண்கூடு துறுகல் – யானைகள் போரிடுவதை ஒத்த நெருங்கிக் கிடக்கும் கற்கள், தளி பொழி கானம் தலை தவப்பலவே – மழை பெய்யும் காடுகள் அவ்விடத்தில் மிகப் பல உள்ளன, ஒன்னார்த் தெவ்வர் உலைவிடத்து – பொருந்தாத பகைவர்கள் புறமுதுகிட்ட பொழுது, ஆர்த்தென – ஆரவாரம் செய்து, நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர் – உயிரைக் கொடுப்பதற்கு நாணம் இல்லாத போர் வீரர்கள், செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே – கெடாத நல்ல புகழையுடைய பெயர்களை எழுதி நட்டின கற்கள் புறமுதுகிட்டவர்களை இகழும் பல கவர்த்த வழிகள் உள்ளன, இன்புறு முரற்கை நும் பாட்டு – இன்பம் மிகுந்த தாளத்தை உடைய உங்கள் பாட்டு (முரற்கை – கைத்தாளம், ஆகுபெயர் தாளத்திற்கு), விருப்பு ஆக – அந்நடுக்கல் கடவுள் விரும்புமாறு, தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின் – பண்டைய மரபுப்படி உங்கள் யாழை இயக்கி வணங்கி விரைந்து நீங்கள் செல்லுங்கள் (மருப்பு – யாழின் கோடு, ஆகுபெயர் யாழிற்கு, துனைமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி),

புதியவர்களுக்கு வழி தெரியபுல்லை முடிந்து

இட்டுச் செல்லுதல்

பண்டு நற்கு அறியாப் புலம் பெயர் புதுவிர்

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்; (392 – 393)

பொருளுரை:  முன்பு நன்கு வழியை அறியாததால் வழிதவறி பின் அவ்விடத்திற்கு மீண்டும் நீங்கள் வருவீர்கள் ஆயின், பல வழிகள் கூடின அச்சந்திகளைக் கையால் துடைத்து, அடுத்து அவ்வழியில் வருபவர்களுக்கு அறிகுறியாக ஊகம்புல்லை கட்டி வையுங்கள்.  

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – முற்காலம் நன்மையறியாத தீய நிலத்தை வழி அறியாமல் போய் மீண்டு வருவீராயின் புதியவராகிய நீவிர் பின் வருகின்றவர்களும் அவ்வாறு போய் மீளாமற் பொருட்டு, பல வழிகளும் கூடின அச்சந்திகளைக் கையாலே துடைத்து அறிகுறியாக ஊகம்புல்லை முடிந்திட்டு வைப்பீர்.

சொற்பொருள்:  பண்டு நற்கு அறியா – முன்பு நன்கு அறியாததால் வழிதவறி (நற்கு – நன்கு விகாரம்), புலம் பெயர் புதுவிர் – புதியவர்களாக நீங்கள் மறுபடி வருவீர்கள் ஆயின், சந்து நீவிப் புல் முடிந்து இடுமின் – பல வழிகள் கூடின இடத்தில் கையால் துடைத்து அறிகுறியாக ஊகம்புல்லை கட்டி வையுங்கள் (இடுமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

விருந்தோம்பல்

செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார்,

கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த   395

கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை
ஒட்டாது அகன்ற ஒன்னாத் தெவ்வர்,
சுட்டினும் பனிக்கும் சுரம் தவப் பலவே;
தேம்பாய் கண்ணித் தேர் வீசு கவிகை

ஓம்பா வள்ளற் படர்ந்திகும் எனினே,   400

மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர்;
ஆங்கனம் அற்றே நம்மனோர்க்கே

அசைவுழி அசைஇ அஞ்சாது கழிமின்;

புலி உற வெறுத்த தன் வீழ் துணை உள்ளி

கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து,   405

சிலை ஒலி வெரீஇய செங்கண் மரை விடை,
தலை இறும்பு கதழும் நாறுகொடிப் புறவின்
வேறு புலம் படர்ந்த ஏறுடை இனத்த;
வளை ஆன் தீம்பால் மிளை சூழ் கோவலர்

வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின்,   410

பலம் பெறு நசையொடு பதிவயின் தீர்ந்த நும்
புலம்பு சேண் அகலப் புதுவிர் ஆகுவிர்;
பகர் விரவு நெல்லின் பல அரியன்ன
தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇக்

கல்லென கடத்திடைக் கடலின் இரைக்கும்   415

பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே,
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்;
துய்ம் மயிர் அடக்கிய சேக்கை அன்ன,
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளித்

தீத் துணையாகச் சேந்தனிர் கழிமின்; (394 – 420)

பொருளுரை:  நீங்கள் போகும் திசைகளில் போரில் இறந்த மறவன் இவன் எனப் பிறருக்கு அறிவிக்கும் பொருட்டு, கல்லில் அகழ்ந்து எழுதிய, நல்ல அடியையுடைய கடம்ப மரத்தின் அடியில் உள்ள நடுகல் கடவுள் தன்மை மிக்கதால் ஏனைய காடுகளை இகழ்கின்ற அந்த வழியில், நன்னனைப் பொருந்தாது நீங்கிய அவனுடைய ஏவலை ஏற்காத பகைவர்களும் நடுங்கும், சுரம் மிகப்பல உள்ளன.  “தேன் வடிகின்ற மலர்களையுடைய மலர்ச்சரம் அணிந்த, தேர்களைப் பரிசிலர்க்குத் தரும் கவியும் கைகளையுடைய, தனக்கென்று ஒருபொருளையும் பாதுகாக்காத நன்னனைக் காண நாங்கள் செல்கின்றோம்” என நீங்கள் கூறினால், பிற ஊர்களைவிட மிகுந்த செல்வம் உடைய நன்னனுடைய பழைய ஊர் போன்று இவ்விடமும் நம்மை ஒத்த பரிசிலர்க்கு நன்மையே செய்யும்.  நீங்கள் இளைப்புற்ற இடத்தில் இளைப்பாறி, அச்சம் இல்லாமல் செல்லுங்கள்.  

புலியின் வருகையால் வெறுத்து ஓடிய தன்னுடைய விருப்பமான பெண் மானை நினைத்த கலை மான் நின்று கூப்பிடும் காட்டை முறையாகக் கடந்து, வில்லின் ஓசைக்கு அஞ்சிய சிவந்த கண்ணையுடைய மரையின் ஆண், முற்படக் குறுங்காட்டில் விரைந்து ஓடுகின்ற, நறுமணமான கொடிகளையுடைய காட்டில், வேறு நிலத்தில் மேயும் காளைகளை உடைய ஆநிரையில் உள்ள சங்குபோன்ற வெள்ளைப் பசுக்களின் இனிய பாலை, ஆநிரைகளைக் காக்கும் இடையர்களின் வளையல் அணிந்த மகளிர் நீங்கள் மகிழும்படி கொண்டு வந்து உங்களுக்குத் தருவார்கள். அவர்கள் தருவதால் பயன்பெற வேண்டும் என விருப்பத்துடன் உங்கள் ஊரிலிருந்த சென்ற உங்கள் துன்பம் உங்களை விட்டு நீங்குவதால் புதியவர்கள் ஆவீர்கள்.

பண்டம் விற்பவர்கள் மாற்றாகப் பெற்ற கலவை நெல்லினைப் போன்று கிடாய் கலந்த செம்மறியாட்டின் வெள்ளாட்டினுடன் கல்லென்ற ஓசையுடன், காட்டில் கடல்போல் ஒலிக்கும் பல ஆட்டுக் கூட்டங்கள் உடைய இடத்திற்கு இரவில் நீங்கள் சென்றால், உங்களுக்கு என்று சமைக்காமல் தங்களுக்கு என்று சமைத்த பாற்சோற்றையும் பாலையும் பெறுவீர்கள். மெல்லிய மயிரை அடக்கிச் செய்த படுக்கையை ஒத்த ஆட்டின் தோலை உரித்துச் செய்த வார் மிதித்த தோல் படுக்கையில், கொடிய விலங்குகள் வராதபடி நெருப்பைத் துணையாகக் கொண்டு தங்கிவிட்டு நீங்கள் செல்லுங்கள்.

குறிப்பு:  மராஅத்த கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை (395) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மராத்தின் நிழலிலே இருப்பதுமாகிய தெய்வத்தன்மை மிக்க மறக்கல்லையுடையமையால் அது பெற்றிராத ஏனைய காடுகளை இகழ்கின்ற பலவழிகளில், C.ஜெகந்நாதாசார்யார் உரை – மராத்து இடத்தனவாகிய கடவுளின் தெய்வத்தன்மை மிக்க தன் கொடுமையால் பிற காடுகளை இகழும் வழிகளில்.  பகர் விரவு நெல்லின் பல அரியன்ன (413) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பகர் விரவு நெல் என்றது பண்டங்களை விற்போர் அவையிற்றுக்கு மாற்றாகப் பெற்ற கலப்பு நெல் என்றவாறு.  மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி (419) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆடுகளின் உடலையுரித்து ஒன்றாகத் தைத்த வார் மிதித்த தோல் படுக்கை (மெய் – ஆட்டின் உடல்), தீ (420) – நச்சினார்க்கினியர் உரை – கொடிய விலங்குகள் வராதபடி இடையர் ஒளித்த (ஒளி உண்டாக்கிய) நெருப்புத் துணையாகத் தங்கிப் போவிர்.  கதழும் – கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 17).  வெறுத்த – விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே (தொல்காப்பியம், உரியியல் 51).  பண்டமாற்று – அகநானூறு 60, 61, 126, 140, 245, 296, 390, நற்றிணை 83, குறுந்தொகை 221, 269, ஐங்குறுநூறு 47, பொருநராற்றுப்படை 214-215, 216-7, பட்டினப்பாலை 28-30, மலைபடுகடாம் 413-414.  தவ – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  செல்லும் தேஎத்து – நீங்கள் போகும் திசைகளில் (தேஎத்து – அளபெடை), பெயர் மருங்கு அறிமார் கல் எறிந்து எழுதிய – போரில் இறந்த மறவன் இவன் என பிறருக்கு அறிவிக்கும் பொருட்டு, கல்லில் அகழ்ந்து எழுதிய, நல் அரை மராஅத்த கடவுள் – நல்ல அடியையுடைய கடம்ப மரத்தின் அடியில் உள்ள கடவுள் தன்மையுடைய நடுகல் (மராஅத்த – அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது, அளபெடை), ஓங்கிய காடு ஏசு கவலை – கடவுள் தன்மை மிக்கதால் ஏனைய காடுகளை இகழ்கின்ற வழியில், ஒட்டாது அகன்ற ஒன்னாத் தெவ்வர் சுட்டினும் பனிக்கும் – நன்னனைப் பொருந்தாது நீங்கிய அவனுடைய ஏவலை ஏற்காத பகைவர்களும் நடுங்கும், சுரம் தவப் பலவே – சுரம் மிகப்பல, தேம் பாய் கண்ணி – தேன் வடிகின்ற மலர்களையுடைய மலர்ச்சரம் (தேம் – தேன் என்றதன் திரிபு), தேர் வீசு கவிகை – தேர்களைப் பரிசிலர்க்குத் தரும் கவியும் கைகள் (கவிகை – வினைத்தொகை), ஓம்பா வள்ளல் – தனக்கென்று ஒருபொருளையும் பாதுகாக்காத நன்னன், படர்ந்திகும் எனினே – அவனைக் காண நாங்கள் செல்கின்றோம் என நீங்கள் கூறினால், மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் – பிற ஊர்களைவிட மிகுந்த செல்வம் உடைய நன்னனுடைய பழைய ஊர், ஆங்கனம் – அங்கு (ஆங்கனம் – முதல் நீண்டது), அற்றே நம்மனோர்க்கே – நம்மை ஒத்த பரிசிலர்க்கு, அசைவுழி அசைஇ – நீங்கள் இளைப்புற்ற இடத்தில் இளைப்பாறி (அசைவுழி – உழி ஏழாம் வேற்றுமை உருபு, அசைஇ – அளபெடை), அஞ்சாது கழிமின் – அச்சம் இல்லாமல் செல்லுங்கள் (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி),

புலி உற வெறுத்த தன் வீழ் துணை உள்ளி கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து – புலியின் வருகையால் வெறுத்து ஓடிய தன்னுடைய விருப்பமான பெண் மானை நினைத்து கலை மான் நின்று கூப்பிடும் காட்டை முறையாகக் கடந்து, சிலை ஒலி வெரீஇய – வில்லின் ஓசைக்கு அஞ்சிய (வெரீஇய – அளபெடை), செங்கண் மரை விடை – சிவந்த கண்ணையுடைய மரையின் ஆண், தலைஇறும்பு கதழும் – முற்பட குறுங்காட்டில் விரைந்து ஓடி, நாறு கொடிப் புறவின் வேறு புலம் படர்ந்த ஏறுடை இனத்த வளை ஆன் தீம்பால் – நறுமணமான கொடிகளையுடைய காட்டில் வேறு நிலத்தில் மேயும் காளைகளை உடைய ஆநிரையில் உள்ள சங்குபோன்ற வெள்ளைப் பசுக்களின் இனிய பாலை, மிளை சூழ் கோவலர் வளையோர் உவப்பத் தருவனர் – ஆநிரைகளைக் காக்கும் இடையர்களின் வளையல் அணிந்த மகளிர் நீங்கள் மகிழும்படி கொண்டு வந்து தருவார்கள், சொரிதலின் பலம் பெறு நசையொடு பதி வயின் தீர்ந்த நும் புலம்பு சேண் அகலப் புதுவிர் ஆகுவிர் – அவர்கள் தருவதால் பயன்பெற வேண்டும் விருப்பத்துடன் உங்கள் ஊரிலிருந்த சென்ற உங்கள் துன்பம் உங்களை விட்டு நீங்குவதால் புதியவர்கள் ஆவீர்கள்,

பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன – பண்டம் விற்பவர்கள் மாற்றாகப் பெற்ற கலவை நெல்லினைப் போன்று (அரி – அரிசி, கடைக்குறை), தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ – கிடாய் கலந்த செம்மறியாட்டின் வெள்ளாட்டினுடன் (விரைஇ – அளபெடை), கல்லென கடத்திடைக் கடலின் இரைக்கும் – கல்லென்ற ஓசையுடன் காட்டில் கடல்போல் ஒலிக்கும் (கல்லென – ஒலிக்குறிப்பு, கடலின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே – பல ஆட்டுக் கூட்டங்கள் உடைய  இடத்திற்கு இரவில் நீங்கள் சென்றால், பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் – உங்களுக்கு என்று சமைக்காமல் தங்களுக்கு என்று சமைத்த பாற்சோற்றையும் பாலையும் பெறுவீர்கள், துய்ம் மயிர் அடக்கிய சேக்கை அன்ன மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி – மெல்லிய மயிரை உடைய படுக்கையை ஒத்த ஆட்டின் தோலை உரித்து செய்த வார் மிதித்த தோல் படுக்கை (ஆட்டின் தோலாலே தைத்து வார் இறுக்கி மிதிக்கப்பட்டதும் ஆகிய படுக்கை), தீத் துணையாகச் சேந்தனிர் கழிமின் –  கொடிய விலங்குகள் வராதபடி நெருப்பைத் துணையாகக் கொண்டு தங்கிவிட்டு நீங்கள் செல்லுங்கள்  (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

கூளியரின் உதவி

கூப்பிடு கடக்கும் கூர்நல் அம்பின்
கொடுவிற் கூளியர் கூவை காணின்,
படியோர்த் தேய்த்த பணிவு இல் ஆண்மை
கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே,

தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ,   425

ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை;

ஆங்கு வியம் கொண்மின்; அது அதன் பண்பே; (421 – 427) 

பொருளுரை:  கூப்பிடும் தொலைவில் கூர்மையான நல்ல அம்பினையும் கொடிய (வளைந்த) வில்லினையும் செலுத்தும் ஆற்றலுடைய வேடுவரின் (மறவரின்) கூட்டத்தை நீங்கள் காணுகையில், “தன்னை வணங்காதவர்களை அழித்த பணிவு இல்லாத ஆளும் தன்மை உடையவனும் பூங்கொடி போன்றவளின் கணவனும் ஆகிய நன்னனை எண்ணி நாங்கள் செல்கின்றோம்” எனக் கூறினால், தசையையும் கிழங்குகளையும் வற்புறுத்தி உங்களை உண்ணச் செய்வார்கள்.  அங்கு பாதுகாப்பவர்கள் தான் உள்ளார்களே அன்றி வருத்தம் கொடுப்பவர்கள் இல்லை.  அவர்கள் போகச் சொன்ன வழியில் செல்லுங்கள்.  அக்காட்டின் தன்மை அது தான்.

குறிப்பு:  தண்டினர் (425) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முற்றெச்சம், தண்டம் என்னும் வடமொழியடியாய்ப் பிறந்தது.  தண்டித்து என்பது பொருள்.  வற்புறுத்தி ஊட்டுவர் என்றவாறு.  கூப்பிடு கடக்கும் கூர்நல் அம்பின் கொடுவிற் கூளியர் (421 – 422) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூப்பிடு தொலைவு செல்லும் கூர் நல்லம்பு என அம்பின் மேல் ஏற்றிக் கூறினரேனும் அங்ஙனம் அம்பு எய்யும் ஆற்றலுடைய கூளியர் என்பது கருத்தாகக் கொள்க. 

சொற்பொருள்:  கூப்பிடு கடக்கும் கூர்நல் அம்பின் கொடுவிற் கூளியர் கூவை காணின் – கூப்பிடும் தொலைவில் கூர்மையான நல்ல அம்பினையும் கொடிய (வளைந்த) வில்லினையும் செலுத்தும் ஆற்றலுடைய வேடுவரின் (மறவரின்) கூட்டத்தை நீங்கள் கண்டால், படியோர்த் தேய்த்த பணிவு இல் ஆண்மை கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே – தன்னை வணங்காதவர்களை அழித்த பணிவு இல்லாத ஆளும் தன்மை உடையவனும் பூங்கொடி போன்றவளின் கணவனும் ஆகிய நன்னனை எண்ணி நாங்கள் செல்கின்றோம் எனக் கூறினால், தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ – தசையையும் கிழங்குகளையும் வற்புறுத்தி உங்களை உண்ணச் செய்வார்கள் (தரீஇ – அளபெடை), ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை ஆங்கு – அங்குப் பாதுகாப்பவர்கள் தான் உள்ளார்களே அன்றி வருத்தம் கொடுப்பவர்கள் இல்லை, வியம் கொண்மின் அது – அவர்களின் ஏவலை மேற்கொள்ளுங்கள், அவர்கள் போகச் சொன்ன வழியில் செல்லுங்கள் (வியம் – ஏவல், கொண்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), அதன் பண்பே – அக்காட்டின் தன்மை அது  (பண்பே – ஏகாரம் அசைநிலை)

நீர் அருந்திக் குளித்துச் செல்லுதல்

தேம்பட மலர்ந்த மராஅ மெல் இணரும்
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்,

தளிரொடு மிடைந்த காமரு கண்ணி   430

திரங்கு மரல் நாரில் பொலியச் சூடி,
முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென

உண்டனிர்; ஆடிக் கொண்டனிர்; கழிமின்; (428 – 433) 

பொருளுரை:  தேன் உண்டாக மலர்ந்த கடம்ப மரத்தின் மெல்லிய பூங்கொத்துக்களையும், யானை முறித்த யா மரத்தின் ஒளியுடைய தளிருடன் கட்டிய விருப்பமுடைய மலர்ச்சரத்தை மரல் நாரினால் கட்டி அழகாகச் சூடி, பரல் கற்களையுடைய மேட்டு நிலத்தில் உள்ள வழியில் மழை பெய்து குளிர்ந்ததால் அங்குள்ள நீரை நீங்கள் குடியுங்கள்.  பின் அந்நீரில் குளித்துவிட்டு வழிக்கு முகந்துகொண்டு செல்லுங்கள். 

குறிப்பு:  ஒப்புமை – பெரும்பாணாற்றுப்படை 181-182 – மரல் புரி நரம்பின் வில் யாழ் இசைக்கும், மலைபடுகடாம் 430-431 – தளிரொடு மிடைந்த காமரு கண்ணி திரங்கு மரல் நாரில் பொலியச் சூடி, புறநானூறு 264 – மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு.  குறுந்தொகை 37 – பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும், குறுந்தொகை 232 – உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல், குறுந்தொகை 255 – யாஅத்துப் பொரி அரை முழு முதல் உருவக் குத்தி மறங் கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச் சிறு கண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை, அகநானூறு 335 – யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ் சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை யாஅத்து, மலைபடுகடாம் 429 – உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்.

சொற்பொருள்:  தேம்பட மலர்ந்த மராஅ மெல் இணரும் – தேன் உண்டாக மலர்ந்த கடம்ப மரத்தின் மெல்லிய பூங்கொத்தும் (தேம் தேன் என்றதன் திரிபு, மராஅ – அளபெடை), உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் – யானை முறித்த ஒளியுடைய தளிர்களையுடைய யா மரமும் (ஆச்சா மரம்), தளிரொடு மிடைந்த காமரு கண்ணி – தளிருடன் கட்டிய விருப்பமுடைய மலர்ச்சரம் (காமரு – காமர் என்பதன் விகாரம்), திரங்கு மரல் நாரில் பொலியச் சூடி – மரல் நாரினால் கட்டி அழகாகச் சூடி, முரம்பு கண் உடைந்த நடவை – பரல் கற்களையுடைய மேட்டு நிலத்தில் உள்ள வழி, தண்ணென உண்டனிர் – மழை பெய்து குளிர்ந்ததால் அங்குள்ள நீரை நீங்கள் குடியுங்கள் (உண்டனிர் – முற்றெச்சம்), ஆடி கொண்டனிர் கழிமின் – அந்நீரில் குளித்துவிட்டு வழிக்கு முகந்துகொண்டு செல்லுங்கள் (கொண்டனிர் – முற்றெச்சம், கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

புல் வேய்ந்த குடிசைகளில் புளியங்கூழும்,

பிறவும் பெறுதல்

செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன

வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த,   435

சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ்
அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட,
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்;

பொன் அறைந்தன்ன நுண் நேர் அரிசி   440

வெண் எறிந்து இயற்றிய மாக் கண் அமலை
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக,
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்;
விசையம் கொழித்த பூழி அன்ன
உண்ணுநர்த் தடுத்த நுண் இடி நுவணை   445
நொய்ம் மர விறகின் ஞெகிழி மாட்டி
பனி சேண் நீங்க இனிதுஉடன் துஞ்சிப்

புலரி விடியல் புள் ஓர்த்துக் கழிமின்; (434 – 448)

பொருளுரை:   சிவந்த வேங்கை மரத்தின் மலர்களை ஒத்த மூங்கில் தன்னிடத்தில் கொண்ட அரிசியால் (விதையால்) செய்த சோற்றில் ஊற்றிய மேட்டு நிலத்தில் வளர்ந்த நெல்லின் அரிசியுடன், அவரையால் சமைத்த புளியங்கூழை, இரவுநேரத்தில் வழியில் வந்த உங்கள் வருத்தம் தீர்க்கும்படி, அகன்ற இடங்களையுடைய அவ்விடத்தில் மரக்கழிகளால் செய்யப்பட்ட புல் வேய்ந்த குடிசைகள் உள்ள குடிகள்தோறும் பெறுவீர்கள்.  பொன்னை நறுக்கினாற்போன்ற நுண்ணிய, தம்முள் ஒத்த அரிசியுடன் வெள்ளாட்டினைக் கொன்று செய்த பெரிய சோற்றுத் திரளில், குளிர்ச்சியான நெய் விழுதை உள்ளே இட்டுச் செய்த உணவை, இளைப்பாறி அங்குச் சில நாட்கள் தங்கினால், நாள்தோறும் பெறுவீர்கள்.  சர்க்கரையின் கொழித்த பொடியை ஒத்த உண்ணுபவர்களை வேறு எங்கும் செல்லாது தடுத்த இடித்த தினை மாவையும் பெறுவீர்கள்.  மென்மையான உட்பகுதியையுடைய மரத்தின் கொள்ளியை எரித்து, குளிர் நீங்கும்படி இனிதாக உறங்கி, விடியற்காலத்தில் பறவைகளின் ஒலியைக் கேட்டு அதன் பின் செல்லுங்கள்.    

குறிப்பு:  வெண் எறிந்து இயற்றிய மாக் கண் அமலை (440) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெள்யாட்டை அரிந்து அதன் தசையோடே சேர்த்துச் சமைத்த என்க.  இனி, வெண்ணிறம் அமைந்த மாவைத் தூவி எனினுமாம்.

சொற்பொருள்:  செவ்வீ  வேங்கைப் பூவின் அன்ன – சிவந்த வேங்கை மரத்தின் மலர்களை ஒத்த (பூவின் – இன் சாரியை), வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த – மூங்கில் தன்னிடத்தில் கொண்ட அரிசியால் (விதையால்) செய்த சோற்றில் ஊற்றி, சுவல் விளை நெல்லின் – மேட்டு நிலத்தில் வளர்ந்த நெல்லின் அரிசியுடன், அவரை அம் புளிங்கூழ் – அவரையால் சமைத்த புளியங்கூழை, அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட – இரவுநேரத்தில் வழியில் வந்த உங்கள் வருத்தம் தீர்க்கும்படி (அல் – இருள், இரவு), அகலுள் ஆங்கண் – அகன்ற இடங்களையுடைய அவ்விடத்தில், கழி மிடைந்து இயற்றிய புல் வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர் – மரக்கழிகளால் செய்யப்பட்ட புல் வேய்ந்த குடிசைகள் உள்ள குடிகள்தோறும் பெறுவீர்கள், பொன் அறைந்தன்ன நுண் நேர் அரிசி – பொன்னை நறுக்கினாற்போன்ற நுண்ணிய தம்முள் ஒத்த அரிசி, வெண் எறிந்து இயற்றிய – இடித்த வெள்ளை மாவினால் செய்த, வெள்ளாட்டினைக் கொன்று செய்த, மாக் கண் அமலை – பெரிய சோற்றுத் திரள், தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக – குளிர்ச்சியான நெய் விழுதை உள்ளே இட்டு, அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் – இளைப்பாறி அங்கு சில நாட்கள் தங்கினால் நாள்தோறும் பெறுவீர்கள், விசையம் கொழித்த பூழி அன்ன – சர்க்கரையின் கொழித்த பொடியை ஒத்த (விசயம், அகரம் ஐகாரமாயிற்று), உண்ணுநர்த் தடுத்த நுண் இடி நுவணை – உண்ணுபவர்களை வேறு எங்கும் செல்லாது தடுத்த இடித்த தினை மாவுடன், நொய்ம் மர விறகின் ஞெகிழி மாட்டி – மென்மையான உட்பகுதியையுடைய மரத்தின் கொள்ளியை எரித்து, பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி – குளிர் நீங்கும்படி இனிதாக உறங்கி, புலரி விடியல் புள் ஓர்த்துக் கழிமின் – விடியற்காலத்தில் பறவைகளின் ஒலியைக் கேட்டுச் செல்லுங்கள், விடியற்காலத்தில் நல்ல நிமித்தம் அறிந்து நீங்கள் செல்லுங்கள் (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

நன்னனது தண்பணை நாட்டின் தன்மை

புல் அரைக் காஞ்சி புனல் பொரு புதவின்

மெல் அவல் இருந்த ஊர்தொறும் நல்யாழ்ப்   450

பண்ணுப் பெயர்த்தன்ன காவும் பள்ளியும்,
பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும்,

நன் பல உடைத்து அவன் தண்பணை நாடே; (449 – 453)

பொருளுரை:  பொலிவில்லாத அடியை உடைய காஞ்சி மரத்தினையும் நீர் வந்து இடித்து வீழ்கின்ற அறுகுகளையும், மெல்லிய விளைநிலங்களையுடை ஊர்கள்தோறும், நல்ல யாழின் பண்களை இசைத்தால் எழும் இன்பம் போல், இன்பம் தரும் சோலைகளும் குடிகளும் உடைய இடத்தில் பல நாட்கள் தங்கினாலும், ஒரு நாள் மட்டுமே தங்கிவிட்டுச் சென்றாலும், நன்றாகிய பல பொருள்களை உடையது நன்னனின் குளிர்ந்த மருதநிலமுடைய நாடு.

சொற்பொருள்:  புல் அரைக் காஞ்சி புனல் பொரு புதவின் – பொலிவில்லாத அடியை உடைய காஞ்சி மரத்தினையும் நீர் வந்து இடித்து வீழ்கின்ற அறுகுகளையும் (புதவு – அறுகு, குளம் முதலியவற்றில் நீர் புகும் வழி), மெல் அவல் இருந்த ஊர்தொறும் – மெல்லிய விளைநிலங்களையுடை ஊர்கள்தோறும், நல்யாழ்ப் பண்ணுப் பெயர்த்தன்ன – நல்ல யாழின் பண்களை இசைத்தால் எழும் இன்பம் போல், காவும் பள்ளியும் – சோலைகளும் தெருக்களும் (பள்ளி – இருப்பிடம்), பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும் – பல நாட்கள் தங்கினாலும் ஒரு நாள் மட்டுமே தங்கிவிட்டு சென்றாலும், நன் பல உடைத்து அவன் தண் பணை நாடே – நன்றாகிய பலவற்றை உடையது நன்னனின் குளிர்ந்த மருதநிலமுடைய நாடு

உழவர் செய்யும் விருந்தோம்பல்

கண்பு மலி பழனம் கமழத் துழைஇ,

வலையோர் தந்த இருஞ்சுவல் வாளை,   455

நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டில்,
பிடிக்கை அன்ன செங்கண் வராஅல்,
துடிக்கண் அன்ன குறையொடு விரைஇப்
பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்

ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த,   460

விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ,
வளம் செய் வினைஞர் வல்சி நல்கத்
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித் தேறல்
இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள்தொறும் பெறுகுவிர்;

முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண்சோறு,   465

வண்டு படக் கமழும் தேம்பாய் கண்ணித்
திண்தேர் நன்னற்கும் அயினி சான்ம் எனக்
கண்டோர் மருளக் கடும்புடன் அருந்தி,
எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ்

மருதம் பண்ணி அசையினிர் கழிமின்; (454 – 470)

பொருளுரை:  சம்பங்கோரை நெருங்கின குளத்தில் அதன் மலர்கள் கமழுமாறு வலையை வீசுபவர்கள் பிடித்துக் கொண்டுவந்த பெரிய கழுத்தினையுடைய வாளை மீனின் தசையை, ஓரிடத்தில் நின்றபடி இட்ட நீண்ட கயிற்றையுடைய தூண்டிலில் அகப்பட்ட பிடி யானையின் தும்பிக்கையை ஒத்த சிவந்த கண்களையுடைய வரால் மீனின் துடியின் கண்ணை ஒத்த தசைத் துண்டுடன் கலந்து, பகன்றை மலர்கள் சூடிய கள் விற்கும் மகளிர் தருவார்கள். நண்டுகள் விளையாடும் வயலில் மேட்டு நிலத்தில் இட்ட மலையை ஒத்த வைக்கோல் போர்களை அடியில் விழ அழித்துக் கடாவிட்டு, வளமையை உண்டாக்கும் உழவர்கள் நெல்லை முகந்து தர, அசையும் பானையில் வார்த்த பசிய முளையால் செய்த கள்ளை இளங்கதிர்களை உடைய கதிரவன் எழும் விடியற்காலையில் பெறுவீர்கள். முள்ளை நீக்கி ஆக்கின கொழுப்பால் வெள்ளை நிறத்தையுடைய மீன் தடிகளை இட்ட வெள்ளைச் சோற்றை, வண்டு சூழும்படி மணக்கும் தேன் வடிகின்ற கண்ணியினையும் திண்மையான தேரையுமுடைய நன்னனுக்கு உணவாவதற்குப் பொருந்தும் என்று கண்டவர்கள் மருளும்படி, உங்கள் சுற்றத்துடன் உண்டு, எருத்தை அடிக்கும் உழவர்கள் பாடும் பாட்டின் இசையுடன் உங்கள் நல்ல யாழில் மருதப் பண்ணில் பாடி, அவ்விடத்தில் இளைப்பாறிச் செல்லுங்கள். 

குறிப்பு:  முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண்சோறு (465) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முள்ளைக் கழித்து ஆக்கின கொழுப்பால் வெள்ளிய   நிறத்தையுடைய தடிகளையிட்ட வெள்ளிய சோறு, மீன் துண்டு, அரியப்படுதலால் அரி என்றார்.  அரி – ஆகுபெயர்.  சான்ம் (467) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சாலும் என்பது சான்ம் என நின்றது, C. ஜெகந்நாதாசாரியர் உரை – சாலும் என்பது ‘சான்ம்’ என்று உகரம் கெட்டு மெய் திரிந்து நின்றது. ‘திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம்’ என்றார் முன்னரும் (319), ஒளவை துரைசாமி உரை நற்றிணை 381 – சாலும் என்பது ஈற்றசை உகரம் கெட்டுச் சான்ம் என நின்றது.  ஈற்று மகரமெய் மகரக்குறுக்கம். 

சொற்பொருள்:  கண்பு மலி பழனம் கமழ துழைஇ வலையோர் தந்த இருஞ்சுவல் வாளை – சம்பங்கோரை நெருங்கின குளம் கமழ வலையை வீசுபவர்கள் கொண்டுவந்த பெரிய கழுத்தினையுடைய வாளை மீனின் தசை (துழைஇ – அளபெடை), நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டில் பிடிக்கை அன்ன செங்கண் வராஅல் துடிக்கண் அன்ன குறையொடு விரைஇ – ஓரிடத்தில் நின்று இட்ட நீண்ட கயிற்றையுடைய தூண்டிலில் அகப்பட்ட பிடி யானையின் தும்பிக்கையை ஒத்த சிவந்த கண்களையுடைய வரால் மீனின் துடியின் கண்ணை ஒத்த தசையுடன் கலந்து (வராஅல் – அளபெடை, விரைஇ – அளபெடை), பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர் – பகன்றை மலர்கள் சூடிய கள் விற்கும் மகளிர் (பழையர் – கள் விற்போர்), ஞெண்டு ஆடு செறுவில் – நண்டுகள் விளையாடும் வயலில் (ஞெண்டு – நண்டு என்பதன் போலி), தராய்க்கண் வைத்த விலங்கல் அன்ன – மேட்டு நிலத்தில் இட்ட மலையை ஒத்த, போர் முதல் தொலைஇ – வைக்கோல் போர்களை அடியில் விழ அழித்து கடாவிட்டு (தொலைஇ – சொல்லிசை அளபெடை), வளம் செய் வினைஞர்  வல்சி நல்க – வளமையை உண்டாக்கும் உழவர்கள் நெல்லை முகந்து தர, துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித் தேறல் – அசையும் பானையில் வார்த்த பசிய முளையால் செய்த கள், இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள்தொறும் பெறுகுவிர் – இளங்கதிர்களை உடைய கதிரவன் எழும் விடியற்காலையில் பெறுவீர்கள், முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண்சோறு – முள்ளை நீக்கி ஆக்கின கொழுப்பால் வெள்ளை நிறத்தையுடைய மீன் தடிகளை இட்ட வெள்ளைச் சோற்றை, வண்டு படக் கமழும் தேம்பாய் கண்ணி – வண்டு சூழும்படி நாறும் தேன் வடிகின்ற கண்ணி (தேம் தேன் என்றதன் திரிபு), திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் – திண்மையான தேரையுடைய நன்னனுக்கு உணவாவதற்குப் பொருந்தும் (சாலும் என்பது ஈற்றசை உகரம் கெட்டுச் சான்ம் என நின்றது, ஈற்று மகரமெய் மகரக்குறுக்கம்), எனக் கண்டோர் மருள – என்று கண்டவர்கள் மருளும்படி, கடும்புடன் அருந்தி – உங்கள் சுற்றத்துடன் உண்டு, எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ் மருதம் பண்ணி  – எருத்தை அடிக்கும் உழவர்கள் பாடும் பாட்டின் இசையுடன் உங்கள் நல்ல யாழில் மருதப் பண்ணில் பாடி,  அசையினிர் கழிமின் – அவ்விடத்தில் இளைப்பாறிச் செல்லுங்கள் (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

சேயாற்றின் கரை வழியே செல்லுதல்

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச்,
செங்கண் எருமை இனம் பிரி ஒருத்தல்
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி,
வனை கலத் திகிரியின் குமிழி சுழலும்,

துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும்   475

காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின்

யாணர் ஒரு கரைக் கொண்டனிர் கழிமின்; (471 – 477)

பொருளுரை:  வெள்ளை நெல்லை அறுப்பவர்கள் கொட்டின தண்ணுமை முரசின் ஒலிக்கு அஞ்சி, சிவந்த கண்களையுடைய எருமை இனத்திலிருந்து பிரிந்த கடா ஒன்று ஆரவாரித்து விரைந்து வலிமையுடன் உங்களை நோக்கி வருவதை அறிந்து, உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். குயவனின் மண்பாண்டம் செய்யும் உருளைப் போல் உள்ள நீர்க்குமிழிகள் சுழலும், விரைந்து சென்று வாய்க்காலில் ஓய்வு இல்லாமல் ஓடும், காண்பவர்கள் கண்களுக்கு இனிமையாக இருக்கும் சேயாற்றின் வளமையான ஒரு கரையில் செல்லுங்கள்.

குறிப்பு:  தலைவாய் (475) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவாய் என்பதனை வாய்த்தலை என மாற்றுக.  இதனை வாய்க்கால் என்றும் கால்வாய் என்றும் இக்காலத்து வழங்குவர்.  ஓவு இறந்து வரிக்கும் (475) – நச்சினார்க்கினியர் உரை – ஒழிவின்றி ஓடும்.  கதழ்துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ – வெள்ளை நெல்லை அறுப்பவர்கள் கொட்டின தண்ணுமை முரசின் ஒலிக்கு அஞ்சி (வெரீஇ – அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது), செங்கண் எருமை இனம் பிரி ஒருத்தல் – சிவந்த கண்களையுடைய எருமை இனத்திலிருந்து பிரிந்த கடா, கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி – ஆரவாரித்து விரைந்து வலிமையுடன் உங்களை நோக்கி வருவதை அறிந்து உங்களைக் காத்து (செலல் – இடைக்குறை), வனை கலத் திகிரியின் – குயவனின் மண்பாண்டம் செய்யும் உருளைப் போல் (வனை கலம் – வினைத்தொகை, திகிரியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), குமிழி சுழலும் – நீர்க்குமிழிகள் சுழலும், துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் – விரைந்து சென்று வாய்க்காலில் ஓய்வு இல்லாமல் ஓடும் (செலல் – இடைக்குறை, தலைவாய் – வாய்த்தலை என மாற்றுக, வாய்க்கால் என்பது பொருள்), காணுநர் வயாஅம் கட்கு இன் – காண்பார்கள் கண்களுக்கு இனிமையாக இருக்கும் (வயாஅம் – வயாவும் என்பது ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட வயாம் என வந்தது, வயாஅம் – விருப்பம், அளபெடை).  சேயாற்றின் யாணர் ஒரு கரைக் கொண்டனிர் கழிமின் – சேயாற்றின் வளமையான ஒரு கரையில் செல்லுங்கள் (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி)

நன்னனது மூதூரின் இயல்பு

நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்,
பதி எழல் அறியாப் பழங்குடி கெழீஇ,

வியல் இடம் பெறாஅ விழுப் பெரு நியமத்து,   480

யாறு எனக் கிடந்த தெருவின் சாறு என,
இகழுநர் வெரூஉம் கவலை மறுகின்,
கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு,
மலை என மழை என மாடம் ஓங்கித்

துனிதீர் காதலின் இனிது அமர்ந்து உறையும்,   485

பனி வார் காவின் பல் வண்டு இமிரும்

நனி சேய்த்தன்று அவன் பழவிறல் மூதூர்; (478 – 487)

பொருளுரை:  செல்வம் தங்கும் உயர்ந்த மதிலையுடைய தங்கள் ஊரிலிருந்து விலகிச் செல்லுதலை அறியாத பழைய குடிமக்கள் பொருந்தி இருக்கும், அகன்றதாயினும் இடம் இல்லாத வளமையான பெரிய கடைவீதியையும், ஆறு என எண்ணும்படி உள்ள தெருக்களையும், திருவிழா என்னும்படி மக்கள் திரண்ட பகைவர்கள் செல்ல அஞ்சும் கவர்த்த தெருக்களையும், கடல் போன்றும் முகில்கள் போன்றும் ஒலிக்கும் ஒலியுடன், மலை போலும் முகில் போலும் உயர்ந்த மாடங்களையும், தன்னிடத்தில் உறைபவர்கள் வெறுப்பில்லாத விருப்பத்துடன் இனிது  இருக்கும், குளிர்ந்த சோலைகளில் வண்டுகள் இசைபாடும் நன்னனின் பழைய வெற்றியை உடைய மூதூர் மிகத் தொலைவில் உள்ளது அன்று.

குறிப்பு:  சும்மை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 51).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின் – செல்வம் தங்கும் உயர்ந்த மதிலையுடைய, பதி எழல் அறியாப் பழங்குடி கெழீஇ – ஊரிலிருந்து விலகிச் செல்லுதலை அறியாத பழைய குடிமக்கள் பொருந்தி இருக்க (கெழீஇ – அளபெடை), வியல் இடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து – அகன்றதாயினும் இடம் இல்லாத வளமையான பெரிய கடைவீதி (பெறாஅ – அளபெடை), யாறு எனக் கிடந்த தெருவின் – ஆறு என எண்ணும்படி உள்ள தெருக்களும், சாறு என இகழுநர் வெரூஉம் கவலை மறுகின் – திருவிழா என மக்கள் திரண்ட பகைவர்கள் செல்ல அஞ்சும் கவர்த்த தெருக்களுடைய (வெரூஉம் – அளபெடை), கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு – கடல் போன்றும் முகில்கள் போன்றும் ஒலிக்கும் ஒலியுடன், மலை என மழை என மாடம் ஓங்கி – மலை போலும் முகில் போலும் உயர்ந்த மாடங்கள், துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும் – தன்னிடத்தில் உறைபவர்கள் வெறுப்பில்லாத விருப்பத்துடன் இனிது அமர்ந்து இருக்கும், பனி வார் காவின் பல் வண்டு இமிரும் நனி சேய்த்தன்று அவன் பழவிறல் மூதூர் – குளிர்ந்த சோலைகளில் வண்டுகள் இசைபாடும் நன்னனின் பழைய வெற்றியை உடைய மூதூர் மிகத் தொலைவில் உள்ளது அன்று.

மூதூர் மக்கள் விருந்து எதிர்கொள்ளுதல்

பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப்
பருந்துபடக் கடக்கும் ஒள் வாள் மறவர்,

கருங்கடை எஃகம் சாத்திய புதவின்   490

அருங்கடி வாயில் அயிராது புகுமின்;
மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர்
வெல்போர்ச் சேஎய்ப் பெருவிறல் உள்ளி,
வந்தோர் மன்ற அளியர் தாம் என,

கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி,   495

விருந்து இறை அவர் அவர் எதிர்கொளக் குறுகிப்

பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட, (488 – 497)

பொருளுரை:   நன்னனைப் பொருந்தாத பகைவர்களின் கரிய தலைகள் வெட்டப்படப் பருந்துகள் வருமாறு போரினை வெல்லும் ஒளியுடைய வாளினையுடைய மறவர்கள் தங்களின் கரிய காம்பையுடைய வேலைச் சாத்தி வைத்துள்ள நுழைவாயில் அருகில் உள்ள அரிய காவல் உடைய வாயிலில், ஐயமில்லாமல் நுழையுங்கள்.  நன்னனின் மன்றத்தில் இருப்பவர்கள் பரிசில் நாடி தொலைவிலிருந்து வந்தவர்கள். வெல்லும் போரில் வெற்றிபெறும் முருகனைப் போல் உள்ள நன்னனின் கொடையை எண்ணி வந்தவர்கள்.  இவர்கள் அளிக்கத்தக்கவர்கள் எனக் கருதி அங்கு உங்களைக் கண்டவர்கள் எல்லோரும் முகம் பொருந்தி உங்களை இனிமையுடன் நோக்கி, நீங்கள் அவர்களுடைய விருந்தினர் ஆகவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்பி ஏற்றுக் கொள்வதால், நடந்து வந்த உங்கள் தனிமைத் துன்பம் போக,  

குறிப்பு:  பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட (497) – நச்சினார்க்கினியர் உரை – தரித்தலால் உண்டான தனிமை வருந்தின நும் வருத்தம் போகும்படி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘பரி புலம்பு’ என்பதற்கு வழி நடந்த வருத்தம் என்று கோடலே பொருந்துவதாகும்.  இத் தொடர்க்கு ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் பரி – மிகுதி எனக் கொண்டு தன்னுடைய சிலப்பதிகார உரையில் (10:226) ‘மிகவும் வருந்தினர்’ என்றது நோக்கற்பாலது.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 33). விருந்து இறை (496) – புதிதாகக் கொடுத்தல்.

சொற்பொருள்:  பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமிய பருந்து படக் கடக்கும் ஒள் வாள் மறவர் – நன்னனைப் பொருந்தாத பகைவர்களின் கரிய தலைகள் வெட்டப்படப்  பருந்துகள் வருமாறு போரினை வெல்லும் ஒளியுடைய வாளினையுடைய மறவர்கள், கருங்கடை எஃகம் சாத்திய புதவின் – தங்களின் கரிய காம்பையுடைய வேலைச் சாத்தி வைத்துள்ள நுழைவாயில், அருங்கடி வாயில் அயிராது புகுமின் – அரிய காவல் உடைய வாயிலில் ஐயமில்லாமல் நுழையுங்கள் (புகுமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), மன்றில் வதியுநர்  சேட்புலப் பரிசிலர் – நன்னனின் மன்றத்தில் இருப்பவர்கள் பரிசில் நாடி தொலைவிலிருந்து வந்தவர்கள், வெல் போர்ச் சேஎய்ப் பெருவிறல் உள்ளி வந்தோர் – வெல்லும் போரில் வெற்றிபெறும் முருகனைப் போல் உள்ள நன்னனின் கொடையை எண்ணி வந்தவர்கள் (சேஎய் – அளபெடை), மன்ற – உறுதியாக, அசைச் சொல்லுமாம், அளியர் தாம் என கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி – இவர்கள் அளிக்கத்தக்கவர்கள் எனக் கருதி அங்கு உங்களைக் கண்டவர்கள் எல்லோரும் முகம் பொருந்தி உங்களை இனிமையுடன் நோக்கி, விருந்து இறை அவர் அவர் எதிர்கொள குறுகி – நீங்கள் அவர்களுடைய விருந்தினர் ஆகவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்பி ஏற்றுக் கொள்வதால் அவர்களை நெருங்கி, பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட – நடந்து வந்த உங்கள் தனிமைத் துன்பம் போக (பரி – மிகுதி, நடை)

அரண்மனை வாயிலில் காணும் பொருள் வளம்

எரி கான்றன்ன பூஞ்சினை மராஅத்துத்
தொழுதி போக வலிந்து அகப்பட்ட,

மட நடை ஆமான் கயமுனிக் குழவி   500

ஊமை எண்கின் குடாவடிக் குருளை,
மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள்
வரை வாழ் வருடை வன்தலை மாத்தகர்,
அரவுக் குறும்பு எறிந்த சிறுகண் தீர்வை,

அளைச் செறி உழுவை கோள் உற வெறுத்த   505

மடக் கண் மரையான் பெருஞ்செவிக் குழவி,
அரக்கு விரித்தன்ன செந்நில மருங்கின்
பரல் தவழ் உடும்பின் கொடுந்தாள் ஏற்றை,
வரைப் பொலிந்து இயலும் மடக்கண் மஞ்ஞை,

கானக் கோழிக் கவர் குரல் சேவல்,   510

கானப் பலவின் முழவு மருள் பெரும்பழம்,
இடிக் கலப்பு அன்ன நறுவடி மாவின்
வடிச் சேறு விளைந்த தீம்பழத் தாரம்,
தூவற் கலித்த இவர் நனை வளர்கொடி

காஅய்க் கொண்ட நுகம் மருள் நூறை,   515

பரூஉப் பளிங்கு உதிர்த்த பல உறு திருமணி,
குரூஉப் புலி பொருத புண்கூர் யானை,
முத்துடை மருப்பின் முழுவலி மிகு திரள்,
வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள்,

நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்,    520

கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி
திருந்து அமை விளைந்த தேக்கள் தேறல்
கான் நிலை எருமைக் கழைபெய் தீம் தயிர்,
நீல் நிற ஓரி பாய்ந்தென நெடுவரை

நேமியின் செல்லும் நெய்க்கண் இறாஅல்,   525

உடம்புணர்வு தழீஇய ஆசினி அனைத்தும்
குடமலைப் பிறந்த தண் பெருங்காவிரி,
கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப,

நோனாச் செருவின் நெடுங்கடைத்துவன்றி, (498 – 529)

பொருளுரை:   நெருப்பை வெளிப்படுத்தினாற்போல் பூக்கிளைகளையுடைய கடம்ப மரத்தின் அருகில் இருந்த தன் இனம் எல்லாம் ஓடிவிடத் தான் ஓட முடியாது வலிய அகப்பட்ட மென்மையான நடையை உடைய காட்டுப்பசுவின் கன்றும், யானையின் இளமைக் கன்றும், வாயினால் ஒலி எழுப்பாத கரடியின் வளைந்த கால்களை உடைய குட்டியும், உயர்ந்த நிலத்தைக் கைக்கொள்ளும் செல்லுதல் உடைய வளைந்த கால்களை உடைய மலை ஆடும், வலிய தலையையுடைய பெரிய ஆண் செம்மறி ஆடும், பாம்பின் வலிமையை அழித்த சிறிய கண்களை உடைய கீரியும், குகையில் செறிந்து இருக்கும் புலி பாய்ந்ததால் வெறுத்த மடப்பத்தையுடைய கண்களையுடைய மரையின் பெரிய காதுகளை உடைய குட்டியும், அரக்கைப் பரப்பினாற்போன்று உள்ள சிவந்த நிலத்தில் பரல் கற்கள் மேல் தவழும் உடும்பின் வளைந்த கால்களையுடைய ஆணும், மலையில் அழகுடன் ஆடும் மடப்பத்தையுடைய கண்களை உடைய மயிலும், காட்டுக் கோழியின் பெடையை அழைக்கின்ற குரலையுடைய சேவலும், கானப் பலவின் முழவு போன்ற பெரும்பழமும், இடித்த மாவுபோன்ற நறுமணமான மா வடுவின் பிழியப்படும் சாறு முற்றின இனிய பழமாகிய உணவும், மழையால் தழைத்த பரந்த அரும்புகள் உடைய நறைக் கொடிகளும், தோளில் காவிக்கொண்ட நுகம் என மருளும் நூறைக்கிழங்குகளும், மரத்திலிருந்து உதிர்ந்த பருத்த கற்பூரமும், பல விலை பெற்ற மணிகளும், நிறத்தையுடைய புலி போரிட்டுப் புண் மிகுதியால் சாவை அடைந்த யானைகளின் முத்து உடைய தந்தங்களின் குறைவில்லாத வன்மையுடையக் குவியல், சங்கு உடைந்தாற்போல் தோன்றும் பெரிய இதழ்களையுடைய வெண்காந்தள் மலர்கள், புன்னை மலர்கள், திலக மலர்கள், நறிய வைரம் பாய்ந்த சந்தன மரங்கள், கரிய கொடிகளையுடைய மிளகின் காயாகிய கொத்தாக உள்ள பசிய மிளகு, நல்ல மூங்கில் குழாயில் முற்றிய தேனால் செய்த கள், காட்டில் நிலைபெற்ற எருமையின் மூங்கில் குழாயில் தோய்த்த இனிய தயிர், நீல நிறத்தையுடைய ஓரி நிறம் பரவியதாக உயர்ந்த மலையில் சக்கரத்தைப் போல் தேன் பாயும் தேன் கூடுகள், இவற்றுடன் கூடுதலாக உள்ள ஆசினிப் பலாப்பழங்களும், மேற்கு மலையில் பிறந்த குளிர்ந்த பெரிய காவிரி ஆறு கடலில் மிகுந்துச் செல்கின்ற ஆழத்தையுடைய புகார் முகத்தை ஒப்ப, பகைவரால் பொறுத்துக் கொள்ளமுடியாத போரை உடைய பெரிய வாசலில் இவை யாவும் நிறைந்திருந்தன.  

குறிப்பு:  பல (511) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காட்டுப் பலா.  குறியதன் கீழ் ஆக் குறுகலும் என்னும் விதியான் ‘பல’ என நின்றது.  காஅய் (515) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காவி, அஃதாவது தோளிற் சுமந்த என்றபடி.  குரூஉ (517) – நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5).  நீல் நிற ஓரி பாய்ந்தென (524) – நச்சினார்க்கினியர் உரை – முற்றுகையாலே நீல நிறத்தையுடைய ஓரி நிறம் பரந்ததாக, புறநானூறு 109 – அணி நிற ஓரி பாய்தலின்.  யானையின் தந்தத்தில் முத்து:  அகநானூறு 282 – வால் மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, நற்றிணை 202 – புலி பொரச் சிவந்த புலால் அம் செங்கோட்டு ஒலி பல் முத்தம், புறநானூறு 161 – முத்துப்படு முற்றிய உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, புறநானூறு 170 – வெண்கோடு பயந்த ஒளி திகழ் முத்தம், பதிற்றுப்பத்து 32 – முத்துடை மருப்பின், கலித்தொகை 40 – முத்து ஆர் மருப்பின், திருமுருகாற்றுப்படை 304 – பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇ,  குறிஞ்சிப்பாட்டு 36 – முத்து ஆர் மருப்பின், மலைபடுகடாம் 518 – முத்துடை மருப்பின்.  மூங்கிலில் விளைந்த கள்:  நற்றிணை 276 – வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, அகநானூறு 348 – ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி, அகநானூறு 368 – அம் பணை விளைந்த தேன் கண் தேறல், பதிற்றுப்பத்து 81 – தூம்பு அகம் பழுனிய தீம் பிழி, திருமுருகாற்றுப்படை 195 – நீடு அமை விளைந்த தேக்கண் தேறல், மலைபடுகடாம் 171 – வேய்ப் பெயல் விளையுள் தேக் கள் தேறல், மலைபடுகடாம் 522 – திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்.  மலையில் பிறந்த காவிரி: பட்டினப்பாலை 6-7 – மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும், மலைபடுகடாம் 327-328 – குடமலைப் பிறந்த தண் பெருங் காவிரி கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப.  துவன்றி – துவன்று நிறைவாகும் (தொல்காப்பியம், உரியியல் 34).  குழவி (500, 506) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).  நோனா – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நோன்பு என்பதன் எதிர்மறை.  பொறாமல் என்னும் பொருட்டு.  புறநானூறு 90 – உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள்.  உறு -உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  நெய் – தேன்.  கலித்தொகை 42-22, வரை மிசை மேல் தொடுத்த நெய்க் கண் இறாஅல், மலைபடுகடாம் 524 – நீல் நிற ஓரி பாய்ந்தென நெடுவரை நேமியின் செல்லும் நெய்க்கண் இறாஅல், பொருநராற்றுப்படை 214 – தேனெய்யொடு. குருளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (மரபியல் 1, தொல்காப்பியம்).

சொற்பொருள்:  எரி கான்றன்ன – நெருப்பை வெளிப்படுத்தினாற்போல, பூஞ்சினை மராஅத்து – பூக்கிளைகளையுடைய கடம்ப மரத்தின் அருகில் இருந்த, தொழுதி போக வலிந்து அகப்பட்ட மட நடை ஆமான் – தன் இனம் எல்லாம் ஓடிவிட தான் ஓட முடியாது வலிய அகப்பட்ட மென்மையான நடையை உடைய ஆமானின் (காட்டுப் பசு) கன்று, கயமுனிக் குழவி – யானையின் இளமைக் கன்று, ஊமை எண்கின் குடா அடிக் குருளை – வாயினால் ஒலி எழுப்பாத கரடியின் வளைந்த கால்களை உடைய குட்டியும், மீமிசைக் கொண்ட கவர் – உயர்ந்த நிலத்தைக் கைக்கொள்ளும் (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), பரிக் கொடுந்தாள் வரை வாழ் வருடை – செல்லுதல் உடைய வளைந்த கால்களை உடைய வருடை (மலை ஆடு), வன்தலை மாத்தகர் – வலிய தலையையுடைய பெரிய தகர் (ஆண் செம்மறி ஆடு), அரவுக் குறும்பு எறிந்த சிறுகண் தீர்வை – பாம்பின் வலிமையை அழித்த சிறிய கண்களை உடைய கீரி, அளைச் செறி உழுவை கோள் உற வெறுத்த மடக் கண் மரையான் பெருஞ்செவிக் குழவி – குகையில் செறிந்து இருக்கும் புலி பாய்ந்ததால் வெறுத்த மடப்பத்தையுடைய கண்களையுடைய மரையின் பெரிய காதுகளை உடைய குட்டி, அரக்கு விரித்தன்ன செந்நில மருங்கின் பரல் தவழ் உடும்பின் கொடுந்தாள் ஏற்றை – அரக்கைப் பரப்பினாற்போன்று உள்ள சிவந்த நிலத்தில் பரல் கற்கள் மேல் தவழும் உடும்பின் வளைந்த கால்களையுடைய ஆண், வரைப் பொலிந்து இயலும் மடக்கண் மஞ்ஞை – மலையில் அழகுடன் ஆடும் மடப்பத்தையுடைய கண்களை உடைய மயில், கானக் கோழிக் கவர் குரல் சேவல் – காட்டுக் கோழியின் பெடையை அழைக்கின்ற குரலையுடைய சேவல், கானப் பலவின் முழவு மருள் பெரும்பழம் – காட்டுப் பலாவின் முழவு என மருளும்படி உள்ள பெரிய பழங்கள் (மருள் – உவம உருபு), இடிக் கலப்பு அன்ன நறுவடி மாவின் வடிச் சேறு விளைந்த தீம்பழத் தாரம் – இடித்த மாவுபோன்ற நறுமணமான மா வடுவின் பிழியப்படும் சாறு முற்றின இனிய பழமாகிய உணவு, தூவற் கலித்த இவர் நனை வளர் கொடி – மழையால் தழைத்த பரந்த அரும்புகள் உடைய நறைக் கொடிகள், காஅய்க் கொண்ட நுகம் மருள் நூறை – தோளில் காவிக்கொண்ட நுகம் என மருளும் நூறைக்கிழங்குகள் (காஅய் – அளபெடை, மருள் – உவம உருபு), பரூஉ பளிங்கு உதிர்த்த – மரத்திலிருந்து உதிர்ந்த பருத்த கற்பூரம் (பரூஉ – அளபெடை), பல உறு திருமணி – பல விலை மிக்க மணிகள் (உறு – மிக்க), குரூஉப் புலி பொருத புண்கூர் யானை முத்துடை மருப்பின் முழு வலி மிகு திரள் – நிறத்தையுடைய புலி போரிட்டுப் புண் மிகுதியால் சாவை அடைந்த யானைகளின் முத்து உடைய தந்தங்களின் குறைவில்லாத வன்மையுடையக் குவியல் (குரூஉ – அளபெடை), வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள் – சங்கு உடைந்தாற்போல் தோன்றும் பெரிய இதழ்களையுடைய வெண்காந்தள், நாகம் – புன்னை மலர்கள், திலகம் – திலக மலர்கள், நறுங்காழ் ஆரம் – நறிய வைரம் பாய்ந்த சந்தன மரங்கள், கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி – கரிய கொடிகளையுடைய மிளகின் காயாகிய கொத்தாக உள்ள பசிய மிளகு, திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல் – நன்றாகிய மூங்கில் குழாயில் முற்றிய தேனால் செய்த கள், கான் நிலை எருமைக் கழை பெய் தீம் தயிர் – காட்டில் நிலைபெற்ற எருமையின் மூங்கில் குழாயில் தோய்த்த இனிய தயிர், நீல் நிற ஓரி பாய்ந்தென– நீல நிறத்தையுடைய ஓரி நிறம் பரவியதாக (ஓரி – முதிர்ந்த தேன், நீல் – கடைக்குறை), நெடுவரை நேமியின் செல்லும் நெய்க்கண் இறாஅல் – உயர்ந்த மலையில் சக்கரத்தைப் போல் தேன் பாயும் தேன் கூடுகள் (நேமியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, இறாஅல் – அளபெடை), உடம்புணர்வு தழீஇய ஆசினி அனைத்தும் – இவற்றுடன் கூடுதலாக உள்ள ஆசினிப் பலாப்பழங்களும் (தழீஇய – அளபெடை), குடமலைப் பிறந்த தண் பெருங்காவிரி கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப நோனாச் செருவின் நெடுங்கடை துவன்றி – மேற்கு மலையில் பிறந்த குளிர்ந்த பெரிய காவிரி ஆறு கடலில் மிகுந்துச் செல்கின்ற ஆழத்தையுடைய புகார் முகத்தை ஒப்ப பகைவரால் பொறுத்துக் கொள்ளமுடியாத போரை உடைய பெரிய வாசலில் நிறைந்திருந்தன – (கடுப்ப – உவம உருபு, செரு ஈண்டு படைகட்கு ஆகுபெயர்)

விறலியர் நன்னனைப் போற்றுதல்

வானத்து அன்ன வளம் மலி யானை   530
தாது எருத் ததைந்த முற்றம் முன்னி,
மழை எதிர் படுகண் முழவுகண் இகுப்பக்
கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர,
மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்

நரம்பு மீது இறவாது உடன் புணர்ந்து ஒன்றிக்,   535

கடவது அறிந்த இன்குரல் விறலியர்,
தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது,

அருந்திறல் கடவுட் பழிச்சிய பின்றை, (530 – 538)

பொருளுரை:   முகில்கள் போன்று வளப்பம் மிக்க யானைகளின் தாதாகிய எருச் செறிந்த முற்றத்தை அடைந்து, முகிலின் முழக்கத்திற்கு எதிராக முழங்கும் கண்ணையுடைய முழவு அதிர, மூங்கிலாகிய தூம்பு (பெருவங்கியம்) என்னும் இசைக்கருவியின் திறந்த கண்கள் ஒலிக்க, மருதத்தை இசைத்த கரிய தண்டினையுடைய சிறிய யாழின் நரம்பினுடைய ஓசைக்கு மேல் போகாது, கூடி ஒன்றுபட்டு, கடமையை அறிந்த விறலியர்கள் பழைய மரபின் முறையில் தப்பாமல் பெரும் வலிமையுடைய கடவுளை வாழ்த்திய பின்பு,

குறிப்பு:  தாது எரு – அகநானூறு 165 – தாது எரு மறுகின் மூதூர், குறுந்தொகை 46 – மன்றத்து எருவின் நுண் தாது, நற்றிணை – 271 பைந்தாது எருவின் வைகு, கலித்தொகை 103 – தாது எரு மன்றத்து, கலித்தொகை 108 – தாது உக்கன்ன தாது எரு மன்றத்து, புறநானூறு 33 – தாது எரு மறுகின், புறநானூறு 215 – தாது எரு மறுகின், புறநானூறு 311 – தாது எரு மறுகின், பதிற்றுப்பத்து 13-17 – தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து மலைபடுகடாம் 531 – தாது எருத் ததைந்த முற்றம்.  பழிச்சும் – பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 86).

சொற்பொருள்:  வானத்து அன்ன – முகில்கள் போன்று (வானத்து – வானம், அத்து சாரியை, வானம் – ஆகுபெயர் முகிலுக்கு), வளம் மலி யானை தாது எருத் ததைந்த முற்றம் முன்னி –  வளப்பம் மிக்க யானைகளின் தாதாகிய எருச் செறிந்த முற்றத்தை அடைந்து, மழை எதிர் படுகண் முழவுகண் இகுப்ப – முகிலின் முழக்கத்திற்கு எதிராக முழங்கும் கண்ணையுடைய முழவு அதிர, கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர – மூங்கிலாகிய தூம்பு (பெருவங்கியம்) என்னும் இசைக்கருவியின் திறந்த கண்கள் ஒலிக்க, மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ் – மருதத்தை இசைத்த கரிய தண்டினையுடைய சிறிய யாழ், நரம்பு மீது இறவாது – நரம்பினுடைய ஓசைக்கு மேல் போகாது (இறவாது – மேலே செல்லாது), உடன் புணர்ந்து ஒன்றி – கூடி ஒன்றுபட்டு, கடவது அறிந்த இன்குரல் விறலியர் தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது – கடமையை அறிந்த விறலியர்கள் பழைய மரபின் முறையில் தப்பாமல் (வழாஅது – அளபெடை), அருந்திறல் கடவுட் பழிச்சிய பின்றை – பெரும் வலிமையுடைய கடவுளை வாழ்த்திய பின்பு

நன்னனைப் போற்றுதல்

விருந்தின் பாணி கழிப்பி, “நீள் மொழிக்

குன்றா நல்இசைக் சென்றோர் உம்பல்!   540

இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப,
இடைத் தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தெனக்
கொடைக் கடன் இறுத்த செம்மலோய்!” என,
வென்றிப் பல்புகழ் விறலோடு ஏத்தி,

சென்றது நொடியவும் விடாஅன்; (539 – 545)

பொருளுரை:   புதியவாகப் பாடும் பாட்டுக்களைப் பாடி “வாய்மையில் குறைதல் இல்லாத நல்ல புகழுடைய வழியில் சென்றவர்களின் வழியில் வந்தவனே!  தங்கள் பெயர் இங்கு அழியாது உலகம் உள்ளளவும் நிற்கும்படி நல்லதையும் தீயதையும் ஆராய்ந்து அறியும் வள்ளல்கள் இறந்ததால் அவர்கள் மேற்கொண்ட கொடையை மேற்கொண்டு கடனை முடித்த செம்மலே!” என்று கூறி மேலும் அவனுடைய வெற்றியால் உண்டான பல புகழையும் வெற்றியுடன் புகழ்ந்து, உங்கள் மனதில் உள்ள பிற புகழ்களையும், அவன் கேட்க மாட்டாதவனாய்,

சொற்பொருள்:  விருந்தின் பாணி கழிப்பி நீள் மொழிக் குன்றா நல்இசைக் சென்றோர் உம்பல் – புதியவாகப் பாடும் பாட்டுக்களைப் பாடி ‘வாய்மையில் குறைதல் இல்லாத நல்ல புகழுடைய வழியில் சென்றவர்களின் வழியில் வந்தவனே’,  இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தென கொடைக் கடன் இறுத்த செம்மலோய் – ‘தங்கள் பெயர் இங்கு அழியாது உலகம் உள்ளளவும் நிற்கும்படி நல்லதையும் தீயதையும் ஆராய்ந்து அறியும் வள்ளல்கள் இறந்ததால் அவர்கள் மேற்கொண்ட கொடையை மேற்கொண்டு கடனை முடித்த செம்மலே’  (இறுத்த – செய்து முடித்த), என வென்றிப் பல்புகழ் விறலோடு ஏத்தி  சென்றது நொடியவும் – என்று கூறி மேலும் அவனுடைய வெற்றியால் உண்டான பல புகழையும் வெற்றியுடன் புகழ்ந்து உங்கள் மனதில் உள்ள பிற புகழ்களையும் கூறி (சென்றது – மனதில் தோன்றிய ஏனை புகழ்), விடாஅன் – கேட்க விடமாட்டான் (அளபெடை)

நன்னன் கூறும் முகமன் உரை

……         ……..      ……..   நசை தர

வந்தது சாலும் வருத்தமும் பெரிது என, (545 – 546)

பொருளுரை:   “என் மேல் விருப்பம் கொண்டு வந்தது அமையும்.  நீங்கள் வழியில் வந்த வருத்தம் பெரிது” எனக் கூறி, 

சொற்பொருள்:  நசை தர வந்தது சாலும் வருத்தமும் பெரிது என – என் மேல் விருப்பம் கொண்டு வந்தது அமையும்.  நீங்கள் வழியில் வந்த வருத்தம் பெரிது எனக் கூறி,

நாளோலக்கத்துக்கு அழைத்துச் செல்லுதல்

பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து,
திருநகர் முற்றம் அணுகல் வேண்டி,

கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ, (547 – 549)

பொருளுரை:   போரின் மாறுபாட்டை எதிர்பார்க்கும் படைத்தலைவருடன் பொலிவு பெற்ற செல்வத்தையுடைய தன் அரண்மனையின் முற்றத்தினை நீங்கள் அடைவதை விரும்பி, கல் என்னும் ஆரவாரத்தையுடைய சான்றோர் இருக்கின்ற அவையில் இருந்து,.

சொற்பொருள்:  பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து திருநகர் முற்றம் அணுகல் வேண்டி – போரின் மாறுபாட்டை எதிர்பார்க்கும் படைத்தலைவருடன் பொலிவு பெற்ற செல்வத்தையுடைய தன் அரண்மனையின் முற்றத்தினை நீங்கள் அடைவதை விரும்பி, கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ – கல் என்னும் ஆரவாரத்தையுடைய சான்றோர் இருக்கின்ற அவையில் இருந்து (கல்லென் – ஒலிக்குறிப்பு, இரீஇ – அளபெடை)

நன்னனது குளிர்ந்த நோக்கம்

உயர்ந்த கட்டில் உரும்பு இல் சுற்றத்து   550

அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து,
இலம் என மலர்ந்த கையர் ஆகி
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்,
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவிக்

கடுவரல் கலுழிக் கட்கு இன் சேயாற்று   555

வடு வாழ் எக்கர் மணலினும் பலரே;
அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் எனப்
பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு,
நயந்தனிர் சென்ற நும்மினும் தான் பெரிது

உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கி, (550 – 560)

பொருளுரை:   உயர்ந்த அரச உரிமையையும் கொடுமை இல்லாத அமைச்சர்களையும் அகன்ற நாட்டினையும் உடையவர்களாக இருந்தும், சுருங்கிய அறிவுடன், பரிசில் வேண்டி வந்தவர்களுக்கு ‘இல்லை’ எனக் கூறி விரித்தக் கையினராய் தங்கள் பெயர் தங்களுடன் அழிந்த மன்னர்கள், நெடிய மலையிலிருந்து குதிக்கும் நீரோட்டம் நிறைந்த அருவி விரைந்து வெள்ளம் மிக்க கண்ணுக்கு இனிமையான சேயாற்றின் திட்டுத் திட்டாக உள்ள மணலைக் காட்டிலும் பலர் ஆவார்கள்.  அதனால் புகழுடன் கழிக நம்முடைய எல்லையிட்ட நாட்கள் என்று கொடையில் விரிந்து அதற்கு இடங்கொடுக்கும் வானத்தை ஒத்த பெரிய உள்ளத்துடன், செல்லும் உங்களைக் காட்டிலும், மிக மகிழ்ச்சியுடன் உங்களை இனிமையாகப் பார்த்து,

குறிப்பு:  மணலினும் பலவே:  அகநானூறு 93 – தண் ஆன்பொருநை மணலினும் பலவே, புறநானூறு 9- நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே, புறநானூறு 43 – எக்கர் இட்ட மணலினும் பலவே, புறநானூறு 55 – வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே, புறநானூறு 136 – நுண் பல மணலினும் ஏத்தி, புறநானூறு 363 – இடு திரை மணலினும் பலரே, புறநானூறு 387 – கல்லென் பொருநை மணலினும், மதுரைக்காஞ்சி 236 – திரை இடு மணலினும் பலரே, மலைபடுகடாம் 556 – வடு வாழ் எக்கர் மணலினும் பலரே.  உயர்ந்த கட்டில் (550) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உயர்ந்த அரச உரிமை, அரசுக் கட்டில் (அரியணை) எனினுமாம். கட்டில் என்பதனை ஆகுபெயராக்கி ‘அரச உரிமை’ என்று கூறினார் நச்சினார்க்கினியர்.

சொற்பொருள்:   உயர்ந்த கட்டில் உரும்பு இல் சுற்றத்து – உயர்ந்த அரச உரிமையும் கொடுமையும் இல்லாத அமைச்சர்களையும், அரியணையையும் கொடுமையும் இல்லாத அமைச்சர்களையும் (உரும்பு – கொடூரம்), அகன்ற தாயத்து – அகன்ற நாட்டினையும், அஃகிய நுட்பத்து – சுருங்கிய அறிவுடன், இலம் என மலர்ந்த கையர் ஆகி தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் – பரிசில் வேண்டி வந்தவர்களுக்கு இல்லை எனக் கூறி விரித்தக் கையினராய் தங்கள் பெயர் தங்களுடன் அழிந்த மன்னர்கள், நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி கடுவரல் கலுழி கட்கு இன் சேயாற்று வடு வாழ் எக்கர் மணலினும் பலரே – நெடிய மலையிலிருந்து குதிக்கும் நீரோட்டம் நிறைந்த அருவி விரைந்து வெள்ளம் மிக்க கண்ணுக்கு இனிமையான சேயாற்றின் திட்டுத் திட்டாக உள்ள மணலைக் காட்டிலும் பலர் ஆவார்கள், அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் என – அதனால் புகழுடன் கழிக நம்முடைய எல்லையிட்ட நாட்கள் என்று (வரைந்த நாள்  – வாழ்வதற்கு எல்லையிட்ட நாட்கள்), பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு நயந்தனிர் சென்ற நும்மினும் தான் பெரிது உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கி – கொடையில் விரிந்து அதற்கு இடங்கொடுக்கும் வானத்தை ஒத்த பெரிய உள்ளத்துடன் செல்லும் உங்களைக் காட்டிலும் மிக மகிழ்ச்சியுடன் உங்களை இனிமையாகப் பார்த்து

நன்னனது கொடைச் சிறப்பு

இழை மருங்கு அறியா நுழை நூற் கலிங்கம்
எள் அறு சிறப்பின் வெள் அரைக் கொளீஇ,
முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு,

நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது,

தலைநாள் அன்ன புகலொடு வழி சிறந்து,   565
பல நாள் நிற்பினும் பெறுகுவிர்; நில்லாது
செல்வேம் தில்ல எம் தொல் பதிப் பெயர்ந்து என,
மெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள்,
தலைவன் தாமரை மலைய விறலியர்

சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய   570

நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடுந்தேர்
வாரிக் கொள்ளா வரை மருள் வேழம்,
கறங்கு மணி துவைக்கும் ஏறுடைப் பெரு நிரை,
பொலம் படைப் பொலிந்த கொய் சுவற் புரவி

நிலம் தினக் கிடந்த நிதியமொடு அனைத்தும்,   575

இலம்படு புலவர் ஏற்ற கைந் நிறைய
கலம் பெயக் கவிழ்ந்த கழல்தொடித் தடக் கையின்,
வளம் பிழைப்பு அறியாது வாய்வளம் பழுநிக்
கழை வளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழை சுரந்தன்ன ஈகை நல்கி   580

தலைநாள் விடுக்கும் பரிசில் மலை நீர்
வென்று எழு கொடியின் தோன்றும்

குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே!   (561-583)

பொருளுரை:   நூல் போன இடம் கண்களுக்குத் தெரியாதபடி நுண்ணிய நூலால் செய்த ஆடையை, இகழ்ச்சி இல்லாத சிறப்பு உண்டாக உங்கள் வறிய இடையில் உடுத்தி, பெண் நாய் கடித்துக் கொண்டு வந்த பசிய கொழுப்புடைய தசைத் துண்டுகளுடன், நீண்ட வெள்ளை நெல்லின் அரிசியை எல்லையில்லாது, முதல் நாள்போல் விருப்பத்துடன் நெஞ்சில் சிறப்பு அடைந்து பல நாட்கள் அங்கு இருந்தாலும் பெறுவீர்கள். அங்கு இன்னும் பலநாட்கள் தங்காது, “நாங்கள் செல்ல எண்ணுகின்றோம் எங்கள் ஊருக்கு” என நீங்கள் மெல்லெனக் கூறி அவனைவிட்டு புறப்படுவீர்கள் ஆயின், உங்களில் தலைவனானவன் பொற்தாமரையைச் சூடச் செய்து, விறலியர் அழகான சிறப்புடைய ஒளியுடைய அணிகலன்களை அணியச் செய்து, நீர் இயங்குவதுபோல் செல்லும் வரிசையாகச் செல்லும் நெடிய தேர்களையும், காட்டிலிருந்து எடுத்துக் கொள்ளாத மலை போன்ற யானைகளையும் (பகை மன்னர்களிடமிருந்து பெற்ற யானைகளையும்), ஒலிக்கும் மணிகளையுடைய காளைகள் உடைய பெரிய ஆன் கூட்டத்தையும் பொன்னால் செய்த கலனையால் பொலிவுபெற்ற மயிர் கொய்யப்பட்ட கழுத்தையுடைய குதிரைகளையும், மண் தின்னும்படி கிடந்த பொருட்களுடன் எல்லாவற்றையும் இல்லாமை உடைய புலவர்கள் பெறுகின்ற கை நிறையும்படி அணிகலன்களைக் கொட்டுதலால் கீழ் நோக்கி உழலும் தொடிகள் அணிந்த பெரிய கையில் தான் கொடுத்த செல்வம் கெடாதபடி, வளமை முற்றுப்பெற்ற மூங்கில் வளர்ந்த நவிரம் என்ற மலை உச்சியில் விரைவில் கொட்டும் மழையினைப் போல், பரிசுகள் தந்து முதல் நாளிலேயே போக விடுவான், மலைகளிலிருந்து வடியும் அருவிகள் வெற்றிக் கொடிகள் போல் தோன்றும் மலைகள் சூழ்ந்த நாட்டு மன்னனான நன்னன். 

குறிப்பு:  வாரி (572) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யானை பிடிக்குமிடம், வாரிக் கொள்ளா என்றது தாமே காட்டினின்றும் பிடித்துக் கொள்ளாத என்றவாறு. எனவே பகைவர் படையினின்றும் பற்றிக் கொண்ட அல்லது திறையாகப் பெற்ற யானைகள் என்றவாறு.  பொலம் படை (574) – நச்சினார்க்கினியர் உரை – பொன்னால் செய்த கலனை.  கலனை – சேணம்.  புறநானூறு 101 – தலைநாள் போன்ற விருப்பினன். பொலம் படை மா:  அகநானூறு 114 – பொலம்படைக் கலி மா, அகநானூறு 124 – பொன் இயல் புனை படைக் கொய் சுவல் புரவி, நற்றிணை 78 – பொலம் படைக் கலி மா, நற்றிணை 361 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 116 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 135 – ஒளிறு படைப் புரவிய தேரும், புறநானூறு 359 – பொலம் படைய மா, மலைபடுகடாம் 574 – பொலம் படைப் பொலிந்த கொய் சுவற் புரவி.  நாய் கொண்டு வரும் தசை – பெருபாணாற்றுப்படை 132-133 – ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின் வறைகால் யாத்தது வயின்தொறும் பெருகுவிர்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

சொற்பொருள்:   இழை மருங்கு அறியா நுழை நூற் கலிங்கம் – நூல் போன இடம் கண்களுக்குத் தெரியாதபடி நுண்ணிய நூலால் செய்த ஆடை, எள் அறு சிறப்பின் வெள் அரைக் கொளீஇ – இகழ்ச்சி இல்லாத சிறப்பு உண்டாக வறிய இடையில் உடுத்தி (கொளீஇ – அளபெடை), முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு – பெண் நாய் கடித்துக் கொண்டு வந்த பசிய கொழுப்புடைய தசைத் துண்டுகளுடன், நெடு வெண்ணெல்லின் அரிசி – நீண்ட வெள்ளை நெல்லின் அரிசி, முட்டாது – எல்லையில்லாது, தலைநாள் அன்ன புகலொடு வழி சிறந்து பல நாள் நிற்பினும் பெறுகுவிர் – முதல் நாள்போல் விருப்பத்துடன் நெஞ்சில் சிறப்பு அடைந்து பல நாட்கள் அங்கு இருந்தாலும் பெறுவீர்கள், நில்லாது செல்வேம் தில்ல எம் தொல் பதிப் பெயர்ந்து என மெல்லெனக் கூறி விடுப்பின் – அங்கு இன்னும் பலநாட்கள் தங்காது நாங்கள் செல்ல எண்ணுகின்றோம் எங்கள் ஊருக்கு என நீங்கள் மெல்லெனக் கூறி அவனைவிட்டு புறப்படுவீர்கள் ஆயின் (தில்ல – அசைச்சொல், மனவிருப்பம் என்னும் பொருட்டாய் வந்தது), நும்முள் தலைவன் தாமரை மலைய – உங்களில் தலைவனானவன் பொற்தாமரையைச் சூட, விறலியர் சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய – விறலியர் அழகான சிறப்புடைய ஒளியுடைய அணிகலன்களை அணிய, நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடுந்தேர் – நீர் இயங்குவதுபோல் செல்லும் வரிசையாகச் செல்லும் நெடிய தேர் (செலல் – இடைக்குறை), வாரிக் கொள்ளா – காட்டிலிருந்து எடுத்துக் கொள்ளாத (பகை மன்னர்களிடமிருந்து பெற்றவை), வரை மருள் வேழம் – மலை போன்ற யானைகள் (மருள் – உவம உருபு), கறங்கு மணி துவைக்கும் ஏறுடைப் பெரு நிரை – ஒலிக்கும் மணிகளையுடைய காளைகள் உடைய பெரிய ஆன் கூட்டம், பொலம்படைப் பொலிந்த கொய் சுவல் புரவி – பொன்னால் செய்த கலனையால் பொலிவுபெற்ற மயிர்க் கொய்யப்பட்ட கழுத்தையுடைய குதிரைகள் (பொலம் – பொன் என்பது பொலம் எனத் திரிந்து வந்தது, சுவல் – பிடரி மயிர், கழுத்து), நிலம் தினக் கிடந்த நிதியமொடு – மண் தின்னும்படி கிடந்த பொருட்களுடன் (தின தின்ன என்பதன் விகாரம்), அனைத்தும் – அனைத்தும், இலம்படு புலவர் ஏற்ற – இல்லாமை உடைய புலவர்கள் பெறுகின்ற, கைந் நிறைய கலம் பெய கவிழ்ந்த கழல்தொடித் தடக் கையின் – கை நிறையும்படி அணிகலன்களைக் கொட்டுதலால் கீழ் நோக்கி உழலும் தொடிகள் அணிந்த பெரிய கையில் (கழல்தொடி- வினைத்தொகை), வளம் பிழைப்பு அறியாது – தான் கொடுத்த செல்வம் கெடாதபடி, வாய்வளம் பழுநி கழை வளர் நவிரத்து மீமிசை – வளமை முற்றுப்பெற்ற மூங்கில் வளர்ந்த நவிரம் என்ற மலை உச்சியில் (பிழைப்பு – பிழைத்தல், மீமிசை – ஒருபொருட் பன்மொழி, வாய்வளம் – வாய்த்த வளம்), ஞெரேரென மழை சுரந்தன்ன – விரைவில் கொட்டும் மழையினைப் போல் (ஞெரேரென – விரைவுக்குறிப்பு), ஈகை நல்கி தலைநாள் விடுக்கும் பரிசில் – பரிசுகள் தந்து முதல் நாளிலேயே போக விடுவான், மலை நீர் வென்று எழு கொடியின் தோன்றும் – மலைகளிலிருந்து வடியும் அருவிகள் வெற்றிக் கொடிகள் போல் தோன்றும் (கொடியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே – மலைகள் சூழ்ந்த நாட்டு மன்னனான நன்னன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக