குறுந்தொகை

 


 குறுந்தொகை – தமிழ் உரையுடன்

எளிய தமிழ் உரை – வைதேகி

குறுந்தொகை உரை நூல்கள்:

குறுந்தொகை – உ. வே. சாமிநாத ஐயர், உ. வே. சா. நூல் நிலையம், அடையார், சென்னை, தொலைபேசி எண் – 44-24911697

குறுந்தொகை – பொ. வே. சோமசுந்தரனார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 600008, தொலைபேசி எண் – 44-65146363

 குறிஞ்சித் திணை –  புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

முல்லைத் திணை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

மருதத் திணை – ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தற்  திணை – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலைத் திணை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

குறிஞ்சித் திணையில் அடிக்கடி வரும் சொற்கள்:  Mountain – வரை, மலை, குன்று, Mountain slope – சாரல், Mountain range – அடுக்கம், Millet – ஏனல், தினை,  இறடி, Millet field –  அவணை,  Millet stubble – இருவி, தாள், Millet spikes – குரல் (millet spikes),  Grain stubble – தட்டை and also bamboo rattle to chase parrots, Gadgets to chase parrots – வெதிர், புனை, தட்டை, குளிர், தழல், கவண், தினை, Mountain farmer – புனவன், Mountain dweller –  குறவன், Forest dweller – கானவன், Mountain girl – கொடிச்சி, High platform in the millet field –  கழுது, இதண், மிடை, Chasing parrots –  ஓப்புதல், Fauna – யானை, குரங்கு, மஞ்ஞை (peacock), கிளி,   புலி,  பாம்பு, பன்றி, கேழல் (wild boar), வரை ஆடு, Bee – வண்டு, சுரும்பு, ஞிமிறு, தும்பி, (mountain goat),  Waterfalls – அருவி, Springs – சுனை, Fruit trees – பலாமரம், சந்தன மரம், வேங்கை மரம், அகில் மரம், மாமரம், Bamboo – பணை, வேய், அமை, உந்தூழ், மூங்கில்,  Flowers –  குறிஞ்சி, குவளை (Blue waterlily), காந்தள் (Glorylily), Honey – தேன், Cloud – மஞ்சு,  மழை (word is used for both cloud and rain),  Rain – பெயல், Wild rice – ஐவனம்

முல்லைத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள் – புறவு (முல்லை நிலம்), Fauna – இரலை மான், முயல், ஆ (பசு), கன்று, ஆடு, முயல், Rain – மழை, கார், Flowers – முல்லை, காயா, கொன்றை, குருந்தம், தோன்றல், பித்திகம், Chariot – தேர், Charioteer – பாகன், மாரி, Cattle herders – கோவலர், ஆயர் – Flute – குழல்

மருதத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள்:  Pond – வயல், பழனம், குளம், கயம், பொய்கை, Field – கழனி, Farmers – உழவர், அரிநர், Paddy – நெல், Trees – மாமரம், ஞாழல் மரம், நொச்சி மரம், காஞ்சி மரம்,  மருத மரம், Sugarcane – கரும்பு, Fauna – நீர்நாய் (otter), எருமை, காரான் (buffalo), குருவி, கோழி, சேவல்,  முதலை, களவன் (நண்டு), கொக்கு, வாளை மீன், வாகை மீன், கெண்டை மீன், ஆமை, Flowers – ஆம்பல் தாமரை

நெய்தற் திணையில்  அடிக்கடி வரும் சொற்கள் –   கடல், கடற்கரை, பரதவர், மீன், சுறா, முதலை, திரை (wave), அலை, கானல் (கடற்கரை சோலை),  திமில் (boat), அம்பி (boat), சேரி (settlement) , புன்னை, ஞாழல், Fragrant screwpines – தாழை, கைதல், கைதை,  உப்பு, உமணர் (salt merchant), உப்பங்கழி (salty land), மணல், எக்கர் (மணல் மேடு), அலவன் (நண்டு), அடும்பு (a creeper with beautiful pink flowers), நெய்தல் (blue waterlily), ஆம்பல் (white waterlily), Conch – கோடு, வளை, Fishing net – வலை, Birds – குருகு, நாரை, அன்றில்

பாலைத் திணையில்  அடிக்கடி வரும் சொற்கள்  –  Wasteland/wasteland path அத்தம், சுரம், Path – நெறி, ஆறு, Wasteland tribes – எயினர், Fauna – பல்லி, ஓதி, ஓந்தி (garden lizard), செந்நாய், யானை, புலி,  பாதிரி (summer blooming flower), கள்ளி (cactus), Trees – யா மரம், ஓமை, குரவம், கோங்கு மரம்,  ஞெமை, இருப்பை மரம், வேம்பு, மூங்கில், உகாய், Eagle – கழுகு,  Shallow grave – பதுக்கை,  பரல் கற்கள்

குறுந்தொகை (301 பாடல்கள்):  1-267, 269, 280, 283, 285, 288, 290, 292, 298, 301, 306, 309, 310, 315, 316, 319, 324, 325, 329, 330, 335, 340, 343, 345, 362, 365, 369, 370, 374, 375, 380, 390, 392, 397, 399

குறுந்தொகை 1, திப்புத்தோளார்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னதுஅவனுடைய கையுறையை மறுத்து
செங்களம் படக் கொன்ற அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டி யானைக்
கழல் தொடிச் சேஎய் குன்றம்,
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.

பாடல் பின்னணி:  தலைவன் செங்காந்தள் பூவைக் கையுறையாகக் கொடுத்துத் தோழியிடம் தன் குறை கூறிய வழி, அவள் “இஃது எங்கள் மலையிடத்தும் உள்ளதாகலின் இதனை வேண்டேம்” என்று மறுத்துக் கூறியது.

பொருளுரை:  போர்க்களம் குருதியால் செந்நிறம் ஆகும்படி அசுரர்களைக் கொன்று அழித்த, குருதியால் சிவந்த திரண்ட அம்பையும், குருதியால் சிவந்த தந்தத்தையுடைய யானையையும் நெகிழுமாறு அணியப்பட்ட தொடியையும் உடைய முருகக் கடவுளின் இம்மலையானது சிவந்த காந்தள் மலர்களையுடையது.

குறிப்பு:  கையுறையை மறுத்தது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச் செய்யுளை பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் ‘தோழி தலைவியை இடதுய்த்து நீக்கியத்து’ என்னும் துறைப்படுத்தோதுவர்.  அஃதாவது, தலைமகனது வரவு உணர்ந்த தோழி தலைமகளைப் பொழிலின்கண் ஒரு குறியிடத்தே கொண்டு சென்று, “சேஎய்குன்றம் குருதிப் பூவின் குலைக்காந்தட்டு ஆண்டுத் தெய்வம் உறைதலின் நின்னால் வரப்படாது; யான் சென்று கொய்து வருவேன்; நீ அதுகாறும் இப்பொழிலிடத்தே நிற்கக்கடவாய்” என நிறுத்தி நீங்குதல் என்பதாம்.  கையுறை – உ. வே. சாமிநாதையர் உரை – கையின்கண் சேர்ப்பது.  தமிழண்ணல் உரை – எங்களிடம் இருப்பதால் வேண்டாம் என மறுக்கும் சொல் பாடலில் இல்லை. சொல் எஞ்சி குறைந்து நிற்பதால் இதைச் ‘சொல்லெச்சம்’ என்பர்.  திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – அம்பின், பூவின் என்பவற்றிலுள்ள ‘இன்’ சாரியைகள்.  காந்தட்டே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:  செங்களம் பட – போர்க்களம் குருதியால் செந்நிறம் ஆகும்படி, கொன்ற அவுணர்த் தேய்த்த – அசுரர்களைக் கொன்று அழித்த, செங்கோல் அம்பின் – சிவந்த திரண்ட அம்பையும், செங்கோட்டி யானை – சிவந்த தந்தத்தையுடைய யானை, கழல் தொடி – நெகிழுமாறு அணிந்த தொடி, சேஎய் குன்றம் – முருகக் கடவுளின் குன்றம் (சேஎய் – அளபெடை), குருதிப் பூவின் குலைக் காந்தட்டே – சிவந்த காந்தள் மலர்களையுடையது

குறுந்தொகை 2, இறையனார்குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ,
பயி்லியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே? 5

பாடல் பின்னணி:  தலைவனும் தலைவியும் இயற்கைப் புணர்ச்சியில் இணைந்த பின்னர், தலைவியின் கூந்தலில் இயற்கை மணம் உடையது என்பதைத் தலைவன் வண்டை வினவுவதின் மூலம் புலப்படுத்தி, அவளுடைய அழகைப் புகழ்கின்றான்.

பொருளுரை:  பூக்களிலே இருக்கின்ற பூந்தாதினை ஆராய்ந்து உண்ணும் வாழ்க்கையைப் பெற்ற அழகிய சிறகினையுடைய வண்டே!  நான் விரும்பியதைக் கூறாமல், நீ உண்மையாகவே அறிந்து கண்டதைக் கூறுவாயாக.  என்னோடு தொடர்ந்து நெருங்கிய நட்பினைக் கொண்ட, மயில் போன்ற மென்மையும் நெருக்கமான பற்களையும் கொண்ட என் தலைவியின்  கூந்தலைப் போல நறுமணம் உடைய மலர்கள் உண்டோ, நீ அறியும் மலர்களுள்?

குறிப்பு:  ‘கொங்கு தேர் வாழ்க்கையென்னும் பாட்டு இயற்கைப் புணர்ச்சிக்கண் நிகழ்ந்த செய்யுள்’ – தொல்காப்பியம், செய்யுள் இயல் 187.  நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்துக் களவியல் 10ஆம் சூத்திரத்துக்கு இச் செய்யுளை எடுத்துக்காட்டி, “இதனுள் தும்பி என்றது முன்னிலையாக்கல், கண்டது மொழிமோ என்றது சொல்வழிப்படுத்தல், கூந்தலின் நறியவும் உளவோ என்றது நன்னயமுரைத்தல், காமம் செப்பாது என்றது எந்நிலத்து வண்டாகலின் எனக்காகக் கூறாது மெய் கூறெனத் தன் இடம் அதுவாகக் கூறலின் இடமணித்தென்றது.  பயிலியது கெழீஇய நட்பென்றது தம் நிலையுரைத்தல்”, என்று எழுதியுள்ளார்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தும்பி விடை தாராதாகவும் விடை கூறுவது போன்று வினவியது, பாடல் சான்ற புலனெறி வழக்கம்.  இதனை ‘சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇ செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கியும்’ (தொல்காப்பியம் பொருளியல் 2) என வரும் தொல்காப்பிய விதியாலும் உணர்க. திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – கூந்தலின் என்றதன் ஐந்தனுருபு எல்லைப்பொருளேயன்றி உவமைப் பொருளுமாம்.  மோ – முன்னிலையசை, பூவே – ஏகாரம் ஈற்றசை.  அஞ்சிறை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய சிறகு, இரா. இராகவையங்கார் உரை – அகச்சிறை, உ. வே. சாமிநாதையர் உரை – உள்ளிடத்து சிறை.

சொற்பொருள்:  கொங்கு – பூந்தாது, தேன், தேர் வாழ்க்கை – ஆராய்ந்து உண்ணும் வாழ்க்கை, அம் சிறைத் தும்பி – அழகிய சிறகினை உடைய வண்டே, அகச் சிறகு உடைய வண்டே (தும்பி – விளி), காமம் செப்பாது – நான் விரும்பியதைக் கூறாமல்,  கண்டது மொழிமோ – நீ கண்டதைக் கூறுவாயாக, பயி்லியது கெழீஇய நட்பின் – தொடர்ந்து பொருந்திய நட்பினை உடைய (கெழீஇய- அளபெடை, நட்பின் – இன் சாரியை), பழகிய நட்பினை உடைய, மயில் இயல் – மயிலின் தன்மை,  செறி  எயிற்று – நெருக்கமான பற்களைக் கொண்ட,  அரிவை – இளம் பெண், கூந்தலின் நறியவும் உளவோ- கூந்தலைப் போல நறுமணமும் உள்ளனவா (கூந்தலின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), நீ அறியும் பூவே – நீ அறிந்த மலர்களுள் (பூ – பூக்களுள், ஏழனுருபு இறுதிக்கண் தொக்கது, பூவே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 3, தேவகுலத்தார்,  குறிஞ்சித் திணை  –  தலைவி தோழியிடம் சொன்னது
நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று,
நீரினும் ஆரளவின்றே, சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

பாடல் பின்னணி: தலைவியை வரையாது (திருமணம் புரியாது) இருக்கும் தலைவன் சிறைப்புறமாக (வேலிக்கு புறத்தில்) நிற்பதை அறிந்த தோழி, அவன் வரைந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் அவனை பழித்துக் கூறிய போது, தலைவி அந்நட்பு சிறப்புடையது என்று தோழிக்கு உணர்த்தியது.

பொருளுரை:  மலைச் சரிவில் உள்ள கரிய நிறமான கொம்புகளை உடைய குறிஞ்சிச் செடியின் மலர்களைக் கொண்டு வண்டுகள் சிறப்பான தேனைச் செய்யும் நாட்டையுடைய என் தலைவனொடு நான் செய்த நட்பானது, நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது, கடலை விட அளத்தற்கரிய ஆழமுடையது.

குறிப்பு:  ‘பெருந்தேன்’ என்பது ஆழ்ந்த நட்பைக் குறிக்கின்றது. ‘கருங்கோல் குறிஞ்சி’ என்பதற்கு வலிமையான கொம்புகளைக் கொண்ட குறிஞ்சிச் செடி என்ற பொருளுமுண்டு. அவர்களுடைய காதல் வலிமையானது எனக் கொள்ளலாம்.  நீரினும் ஆரளவின்றே (2) – உ. வே. சாமிநாதையர் உரை – கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது.  கருங்கோல் குறிஞ்சி: அகநானூறு 308 – கருங்கோல் குறிஞ்சி நும் உறைவின் ஊர்க்கே, குறுந்தொகை 3 – கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு, புறநானூறு 374 – கருங்கோல் குறிஞ்சி அடுக்கம்.  இரா.  இராகவையங்கார் உரை – நிலமும் வானும் நீரும் பருவத்தில் இயைந்து பயன்படுதல் போல நட்பும் வரைதற்குரிய நன்னாள் இயைந்து பயன்படுதல் குறித்தது எனினும் அமையும்.   நாடனொடு நட்பே (4) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – நாடனொடு நட்பு என்பதற்கு நாடன் நட்பு என்று உரை கூறி ‘ஒடு’ இசை நிறை எனலுமாம்.  பெரிதே – ஏ அசை நிலை, அளவின்றே – ஏ – அசை நிலை, நட்பே என்பது பெருமை வியப்பு.

சொற்பொருள்:   நிலத்தினும் பெரிதே – நிலத்தை விட பெரியது, வானினும் உயர்ந்தன்று – வானத்தை விட உயர்ந்தது, நீரினும் ஆர் அளவின்றே – கடலை விட அளத்தற்கரிய ஆழமுடையது (நீர் – கடலுக்கு ஆகுபெயர்),  சாரல் – மலைச் சரிவு,  கருங்கோல் குறிஞ்சி – கரிய நிறமான கொம்புகளைக் கொண்ட குறிஞ்சிச் செடி (கருமை – கரிய, வன்மையுமாம்), வலிமையான கொம்புகளைக்  கொண்ட குறிஞ்சிச் செடி, பூக் கொண்டு – மலர்களைக் கொண்டு,  பெரும் தேன் – நிறையத் தேன், நிறைய தேனடைகள், இழைக்கும்  – செய்யும், நாடனொடு நட்பே – நாடனுடைய நட்பு, குறிஞ்சி நிலத் தலைவனுடைய நட்பு

குறுந்தொகை 4, காமஞ்சேர் குளத்தார்நெய்தற் திணைதலைவி தோழியிடம் சொன்னது
நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே,
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்,
அமைவிலர் ஆகுதல், நோம் என் நெஞ்சே.

பாடல் பின்னணி:  பிரிவைத் தாங்க முடியாமல் தலைவி வருந்துகின்றாள் என்று கவலையுற்ற தோழிக்கு, ‘தலைவன் முன்பு எனக்குச் செய்த தண்ணளியை நினைத்து ஆற்றினேன்’ என்பது புலப்படத் தலைவி சொன்னது.

பொருளுரை:  வருந்துகின்றது  என் நெஞ்சு.  வருந்துகின்றது  என் நெஞ்சு.   இமைகளைத் தீயச் செய்யும் என் கண்ணீரைத் துடைத்து  எனக்குப் பொருத்தமாக இருந்த என் காதலர் இப்பொழுது பொருந்தாதவராக ஆகி விட்டார்.  வருந்துகின்றது  என் நெஞ்சு.  அமைதற்கு அமைந்த (3) – உ. வே. சாமிநாதையர் உரை – அளவளாவதற்கு அமைந்த,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆற்றியிருத்தற்குக் காரணமான தண்ணளி பொருந்திய, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மனம் பொருந்திய.

குறிப்பு: நெஞ்சே – ஏ அசை நிலை.  தமிழண்ணல் உரை – நோம் என் நெஞ்சே என மூன்று முறை அடுக்கும் பாடல் அமைப்பே துன்பத்தின் மிகுதியை புலப்படுத்தி விடுகின்றது.  அமைதற்கு அமைந்த (3) – உ. வே. சாமிநாதையர் உரை – அளவளாவதற்கு அமைந்த,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆற்றியிருத்தற்குக் காரணமான தண்ணளி பொருந்திய, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மனம் பொருந்திய.

சொற்பொருள்:  நோம் என் நெஞ்சே – வருந்தும் என் நெஞ்சு (நெஞ்சே – ஏகாரம் அசைநிலை), நோம் என் நெஞ்சே – வருந்தும் என் நெஞ்சு (நெஞ்சே – ஏகாரம் அசைநிலை),  இமை – கண் இமைகள், தீய்ப்பன்ன – சுடுவதைப் போல்,  கண்ணீர் தாங்கி – கண்ணீரைத் துடைத்து, அமைதற்கு அமைந்த – பொருத்தமாக அமைந்த, தண்ணளி செய்த, நம் காதலர் – என்னுடைய காதலர், அமைவிலர் ஆகுதல் –  பொருந்தாதவராய் ஆகியதால், நோம் என் நெஞ்சே – வருந்தும் என் நெஞ்சு (நெஞ்சே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 5, நரிவெரூ உத்தலையார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அது கொல் தோழி காம நோயே,
வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை
உடை திரைத் திவலை அரும்பும் தீ நீர்
மெல்லம்புலம்பன் பிரிந்தெனப்,
பல்லிதழ் உண்கண் பாடு ஒல்லாவே? 5

பாடல் பின்னணி:  பிரிவு ஆற்றாமையால் தலைவி வருந்துதலை அறிந்து கவலையுற்ற தோழிக்கு, தலைவி தன் கண்கள் துயிலாமையை உணர்த்தும் வாயிலாகக் காமநோயின் கொடுமையைக் கூறியது.

பொருளுரை:   தோழி! தன்னிடத்தில் தங்கும் குருகுகள் உறங்குவதற்குக் காரணமான இனிய நிழலை உடைய புன்னை மரம் உடையும் கடல் அலைகளின் நீர்த் திவலையால் அரும்பும் மெல்லிய கடற்கரைத் தலைவன் என்னை விட்டுப்  பிரிந்ததால், பல இதழுடைய தாமரை மலரைப்போன்ற தோற்றத்தையுடைய, கண்மை இட்ட எனது கண்கள் தூங்க முடியாதவையாக ஆகி விட்டன.  இது தான் காதல் நோயின் தன்மையோ?

குறிப்பு:  இரா.  இராகவையங்கார் உரை – கடலன்ன செல்வத்தால் பொலிவு பெறும் மனைக் கண்ணே வரையாது இனிது உறங்குகின்றான் என்பது.  பிரிந்தென (4) – உ. வே. சாமிநாதையர் உரை – தலைவன் பிரிவினால், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பிரிந்தான் என்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தம்மகத்தே பிரியாது இருப்பவும் அஃது அறியாது பிரிந்துபோயினனாகக் கருதி.

சொற்பொருள்:  அது கொல் தோழி –  இந்தத் தன்மை உடையது தானா, காம நோயே – காதல் நோய் (ஏ – அசை நிலை), வதி குருகு – வாழும் குருகுகள்,  உறங்கும் – தூங்கும்,  இன் நிழல் – இனிய நிழல்,  புன்னை – புன்னை மரம்,  நாகம், Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, உடை திரை – உடைக்கும் அலைகள்,  திவலை – நீர்த் திவலை,  அரும்பும் – மலரச் செய்யும்,  தீ – இனிய,  நீர் – கடல் நீர்,  மெல்லம்புலம்பன் – கடற்கரையின் தலைவன் (அம் – சாரியை, புலம்பு = கடற்கரை, நெய்தல் நிலம்), நெய்தல் நிலத்தின் தலைவன், பிரிந்தென – பிரிந்ததால், பல்லிதழ் – பல இதழ்களையுடைய தாமரை மலர் (பூவிற்கு ஆகுபெயர், அகரம் கெட்டு ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்து 160, என்றதனால் லகரம் இரட்டித்து பல்லிதழ் என முடிந்தது), உண்கண் – மை உண்ட கண்கள்,  பாடு ஒல்லாவே – தூங்க இயலாது

குறுந்தொகை 6, பதுமனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நள்ளென்றன்றே யாமம், சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்றி,
நனந்தலை உலகமும் துஞ்சும்,
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே!

பாடல் பின்னணி:  திருமணப் பரிசப் பொருளை ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த பொழுது ஆற்றாளாகிய தலைவி, நள்ளிரவில் யாவரும் துயிலவும் ‘யான் துயின்றிலேன்’ என்று தோழியிடம் கூறியது.

பொருளுரை:  நடு இரவு இருட்டாக இருக்கின்றது.  சொற்கள் அடங்கி விட்டன.  வெறுப்பு எதுவும் இன்றி இனிமையாக மக்கள் உறங்குகின்றனர்.   அகன்ற உலகமும் உறங்குகின்றது,  ஆனால் நான் மட்டும் உறங்காமல் இருக்கின்றேன்.

குறிப்பு:   நள்ளென்றன்றே (1) – உ. வே. சாமிநாதையர் உரை – செறிந்த இருளை உடையதாக இரா நின்றது, நள்ளென்னும் ஓசையை உடையதாயிற்று எனலுமாம்.  மாக்கள் (2) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மாக்கள் என்று இழிவுதோன்றக் கூறினாள், உ. வே. சாமிநாதையர் உரை – ஐயறிவுடையோர் என்பது தாய் முதலியோரை, மாவும் மாக்களும் ஐ அறிவினவே (தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல் 32).  முனிவின்று (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இன்றி என்னும் வினையெச்சத்து இறுதி இகரம் செய்யுள் ஆகலின் இன்று என்று உகரமாகத் திரிந்தது, இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி நின்ற இகரம் உகரம் ஆதல் தொன்று இயல் மருங்கின் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர்மயங்கியல் 35).  ஓர் யான் மன்ற துஞ்சாதேனே (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எனக்கு உசாத்துணையாய் ஆற்றுவிக்கும் கடமையுடைய நீயும் இனிதே தூங்கினை என இடித்துக் கூறினபடியாம்.  நள்ளென்றன்றே: ஏகாரம் அசை நிலை, அடங்கினரே: ஏகாரம் அசை நிலை, துஞ்சாதேனே: ஏகாரம் அசை நிலை.  நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  நள்ளென்றன்றே யாமம் – நடு இரவு இருட்டாக இருந்தது (நள் – நளியென்னும் உரிச்சொல் ஈறு திரிபு), சொல் அவிந்து – சொற்கள் அடங்கின,  இனிது அடங்கினரே – இனிமையாக உறங்கினர்,  மாக்கள் – மக்கள்,  முனிவு இன்றி – வெறுப்பின்றி,  நனந்தலை – அகன்ற,  உலகமும் துஞ்சும் – உலகமும் உறங்குகின்றது, ஓர் யான் – நான் மட்டும்,  மன்ற – உறுதியாக (தேற்றப் பொருளில் வந்தது),  துஞ்சாதேனே – உறங்காமல் இருக்கின்றேன்

குறுந்தொகை 7, பெரும்பதுமனார்பாலைத் திணை – கண்டோர் சொன்னது
வில்லோன் காலன கழலே, தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே, நல்லோர்
யார் கொல்? அளியர் தாமே, ஆரியர்
கயிறாடு பறையின் கால் பொரக் கலங்கி,
வாகை வெண் நெற்று ஒலிக்கும், 5
வேய் பயில் அழுவம் முன்னியோரே.

பாடல் பின்னணி:  தலைவனும் தலைவியும் தங்கள் குடும்பத்தை விட்டு நீங்கி உடன்போன வேளையில், எதிரே வந்தவர்கள், தலைவி காலில் அணிந்திருந்த சிலம்பினால்  அவ்விருவருக்கும் திருமணம் நடைபெறவில்லை என்று உணர்ந்து இரங்கிக் கூறியது.

பொருளுரை:  வில்லை வைத்திருக்கும் அவன், கால்களில் கழல்களை அணிந்திருக்கின்றான்.  வளையல் அணிந்த அவள், மென்மையான கால்களில் சலங்கை அணிந்துள்ளாள்.  இந்த நல்லவர்கள் யாரோ?  பரிதாபத்திற்கு உரியவர்கள் ஆகத் தோன்றுகின்றார்கள், ஆரியக் கழைக் கூத்தாடிகள் கயிற்றின் மேல் ஆடும்பொழுது கொட்டப்படும் பறைக் கொட்டு போல், வீசும் காற்றினால் வாகை மரங்களின் விதைக் கூடுகள்  நடுங்கி ஒலிக்கும் இந்த மூங்கில் நிறைந்த பாலை நிலப்பரப்பைக் கடந்து செல்ல எண்ணி வரும் இவர்கள்!

குறிப்பு:  சிலம்பு கழிதல் என்பது திருமணத்திற்கு முன் நடந்த ஒரு சடங்கு.  உ. வே. சாமிநாதையர் உரை – தலைவனால் தலைவி வரைந்து கொள்ளப்படாமையைப் புலப்படுத்துவார், ‘மெல்லடி மேலவும் சிலம்பே’ என்றார்.  மணம் புரிவதற்கு முன், மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குவதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்.  அது ‘சிலம்பு கழி நோன்பு’ எனப்படும்.  உள்ளுறை – இரா.  இராகவையங்கார் உரை – அழுவத்தில் காலில் கழலும் சிலம்பும் ஒலிக்கப் புகும் இந்நல்லோரைக் கண்டு கலங்கி அறிவில்லாத வாகை வெண்ணெற்று ஒலித்தல், சாடுவாற் கொள்ள வைத்தது கண்டோர் இரக்கம் புலப்பட என்பது.  ஏகாரங்கள், தாம் – அசை நிலைகள்.  வாகை நெற்று ஒலித்தல்:  குறுந்தொகை 7 – ஆரியர் கயிறாடு பறையின் கால் பொரக் கலங்கி வாகை வெண் நெற்று ஒலிக்கும், குறுந்தொகை 369 – அத்த வாகை அமலை வால் நெற்று அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக் கோடை தூக்கும் கானம், அகநானூறு 45 – உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் ஆடு களப் பறையின் அரிப்பன ஒலிப்ப, அகநானூறு 151 – உழுஞ்சில் தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள் அரிக் கோல் பறையின் ஐயென ஒலிக்கும்.  அழுவம் (7) – உ. வே. சாமிநாதையர் உரை – பாலைப் பரப்பு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாலை நிலம், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – காட்டு நிலத்தின் பரப்பு. முன்னியோரே(7) – உ. வே. சாமிநாதையர் உரை – கடந்து செல்ல நினைந்து வருபவர்களில்,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – செல்லக் கருதிச் செல்லா நிற்போர் (செல்லா நிற்போர் – செல்லுபவர்கள்), தமிழண்ணல் உரை – பிறர் அறியாமல் இவ்வழியைத் தேடி நடப்பவர்கள், முன்னுதல் – திட்டமிட்டு செல்லுதல்.  வரலாறு:  ஆரியர்.

சொற்பொருள்:  வில்லோன் – வில்லை உடையவன், காலன கழல் – கால்களில் கழல்கள் உள்ளன, ஏ – அசை, தொடியோள் – வளையல் அணிந்தவள், மெல்லடி – சிறிய அடி, மேலவும் – அவற்றின் மேல், சிலம்பு – சலங்கை, ஏ – அசை, கொலுசு, நல்லோர் – நல்ல மக்கள், யார் கொல் – யார் இவர்கள் (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), அளியர் – பரிதாபத்திற்கு உரியவர்கள், ஆரியர் – ஆரியர்கள், கயிறாடு – கயிற்றின் மேல் ஆடுதல், பறையின் – கொட்டப்படும் பறையைப் போல் (இன் உருபு ஒப்புப் பொருளது, , ஐந்தாம் வேற்றுமை உருபு), கால் பொர – காற்று வீசுவதனால், கலங்கி – நடுங்கி, வாகை – உழிஞ்சில், Sirissa Tree, Albizia lebbeck, வெண் நெற்று ஒலிக்கும் – வெள்ளை விதைக் கூடு ஒலிக்கும், வேய் பயில் – மூங்கில் நிறைந்த, அழுவம் – பரப்பு, இங்கு அது பாலை நிலத்தை உணர்த்துகின்றது, முன்னியோர் – கடந்து செல்ல எண்ணி வருபவர்கள், கடந்து செல்ல எண்ணி வருபவர்களுடன் வரும் இவர்கள்

குறுந்தொகை 8, ஆலங்குடி வங்கனார்மருதத் திணை – பரத்தையின் கூற்று
கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்,
எம் இல் பெருமொழி கூறித், தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல, 5
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.

பாடல் பின்னணி:  தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என அறிந்த பரத்தை, அத் தலைவியின் தோழியர் கேட்கும்படி இதனைக் கூறியது.

பொருளுரை:  வயலில் உள்ள மரத்திலிருந்து விளைந்து விழும் இனிய பழத்தை  குளத்தில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணும் ஊரைச் சார்ந்தவன், என்னுடைய வீட்டில் என்னைப் பெருமைப்படுத்தும் சொற்களைக் கூறுவான்.  ஆனால் தன்னுடைய வீட்டில், முன் நின்றார் தம் கையையும் காலையும் தூக்கத் தூக்க, தானும் கையையும் காலையும் தூக்குகின்ற, கண்ணாடியில் தோன்றுகின்ற நிழல் பாவையைப் போல், தன்னுடைய மனைவிக்கு, அவள் விரும்பியவற்றைச் செய்வான்.

குறிப்பு:  உள்ளுறை – இரா.  இராகவையங்கார் உரை – விளைந்து உகு தீம் பழம் பழன வாளை கதூஉம் ஊரன் என்றது, தலைவியர்க்குரிய தலைவரைக் கிடைத்தபோது துய்ப்பது பரத்தையர் இயல்பென்று குறித்தாளாம்.   உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – கழனிக் கரையிலிருந்து தானே உதிர்ந்த பழத்தை வயலிடத்து வாளை கௌவினாற் போல இவ்வூரில் உள்ள எல்லா இன்பங்களையும் தாமே கிடைப்ப முயற்சியின்றி எய்துகின்றான் என்று உள்ளத்தான் உவமங் கொள்ளவைத்தவாறு காண்க.  இப்புலவருடைய பாடல்கள்: அகநானூறு 106, குறுந்தொகை 8, 45, புறநானூறு 319.

சொற்பொருள்:  கழனி – வயல், மாஅத்து – மாமரத்தினது (அத்து சாரியை), விளைந்து உகு – பழுத்து விழும், தீம்பழம் – இனிய பழம், பழன வாளை – குளத்தில் உள்ள வாளை மீன், கதூஉம் – கவ்வி உண்ணும் (கதூஉம் – அளபெடை), ஊரன் – ஊரைச் சார்ந்தவன், எம் இல் – என்னுடைய இல்லத்தில், பெருமொழி கூறி – பெரிய சொற்களைக் கூறி, தம் இல் – தன்னுடைய இல்லத்தில், கையும் காலும் தூக்கத் தூக்கும் – பிறர் தூக்க தானும் கையையும் காலையும்  தூக்கும், ஆடிப் பாவை போல – கண்ணாடியில் தோன்றுகின்ற பொம்மையைப்போல், மேவன செய்யும் – விரும்புவதைச் செய்வான், தன் புதல்வன் தாய்க்கு – தன்னுடைய மனைவிக்கு (தாய்க்கே – ஏகாரம் அசை நிலை)

குறுந்தொகை 9, கயமனார்நெய்தற் திணை –  தோழி தலைவனிடம் சொன்னது
யாய் ஆகியவளே மாயோளே,
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய் சாயினளே,
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இன மீன் இருங்கழி ஓதம் மல்குதொறும் 5
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை,
நம் முன்  நாணிக் கரப்பாடும்மே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்து மீண்ட தலைவன் வாயில் (இல்லத்தில் புகுதல்) வேண்டிப் புகுந்தவிடத்துத் தோழி தலைவனிடம்  நீ அவளை அடைதல் எளிதெனக் கூறுகின்றாள்.

பொருளுரை:   மாநிறமான என் தோழி மிக நல்ல பண்புடையவள்.  மூட்டுவாய் பொருந்திய மாட்சிமையுடைய பெட்டியில் வைத்த அணியாத மலர்கள் வாடியதைப்போல், அவளுடைய  உடம்பு வாடி விட்டது.  மீன் கூட்டங்கள் நிறைந்த பெரிய உப்பு நீர்க் குளங்களில் கடல் நீர் பெருகி வருகின்ற வேளைதோறும் குவளை மலர்கள் பசுமையான இலைகளுக்கு மேல் உயர்ந்து, குளத்தில் மூழ்கிக் குளிக்கும் பெண்களின் கண்களைப் போல் தோன்றும் குளிர்ந்த துறையின் தலைவனின் கொடுமையை அவள் நம்மிடம் மறைக்கின்றாள், நாணத்துடன்.

குறிப்பு:  நெய்தலுள் மருதம்.  தலைவனது கொடுமையைத் தலைவி மறந்து அவனை ஏற்றுக்கொள்வாள் என்பது கருத்து.  ஆகியவளே – ஏகாரம் அசைநிலை, மாயோளே – ஏகாரம் அசைநிலை, சாயினளே – ஏகாரம் அசைநிலை, கண்ணின் – ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது.  இரா.  இராகவையங்கார் உரை – தண்ணந்துறைவன் கண்கள் அல்லாத நெய்தல்களை இவையும் கண்கள் என்று வேறு சொல்ல ஒக்கும் துறையையுடையவன் ஆதலால், தன் கண்ணாகிய தலைவியல்லாத பரத்தையைக் கண்டார் இவற்கு இவளும் கண்ணாவாள் எனப் பேணி ஒழுகுபவன் என்று அவன் தலைவியை பேணாது ஒழுகுதலைக் குறித்தாள்.  யாய் ஆகியவள் (1) – இரா. இராகவையங்கார் உரை – குற்றம் பொருத்துரையாடும் சிறப்பால் யாய் ஆயினள் என்றாள், உ. வே. சாமிநாதையர் உரை – தலைவியை யாயென்றது, புலத்தற்கு காரணமான பரத்தமை தலைவன் பால் உளதாகவும் அதை மனங் கொள்ளாத கற்பின் சிறப்பை நோக்கி, ச. வே. சுப்பிரமணியன் உரை – தாய்போல் மதிக்கத் தக்கவள், தமிழண்ணல் உரை – பொறுமையில் தாய் போல ஆகினாள், கற்புக்கடம் பூண்ட நம் தலைவி தாய்போல் மதிக்கத்தக்க பெருமையுடையவளே, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – தாயென தக்காள் ஆயினள்.

சொற்பொருள்:  யாய் ஆகியவளே – நல்ல பண்பு உடையவள்,  மாயோளே – மாமை நிறத்தை உடையவள் (மாந்தளிர் மேனி),  மடை – மூட்டுவாய்,  மாண் – மாட்சியுடைய, செப்பில் – பெட்டியில்,  தமிய – தனியாக,  வைகிய – வைத்த,  பெய்யாப் பூவின் – அணியாத மலர்களைப்போல் (பூவின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மெய் சாயினளே – உடம்பு வாடியவள்,  பாசடை – பசுமையான இலைகள்,  நிவந்த – மேலே,  கணைக்கால் – பெரிய காம்பு, நெய்தல் – குவளை மலர்கள், இனமீன் – மீன் கூட்டம்,  இருங்கழி – உப்பு நீர்க் குளங்கள், ஓதம் – வெள்ளம், மல்கு தொறும் – நிறையும் பொழுதெல்லாம், கயம் மூழ்கு மகளிர் – குளத்தில் குளிக்கும் பெண்கள்,  கண்ணின் மானும் – கண்களைப் போன்று இருக்கும் (கண்ணின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் உவம உருபோடு வந்தது, மான என்பது வினை உவமைத்தின்கண் வந்தது), தண்ணந்துறைவன் – நெய்தல் நிலத்தலைவன் (தண்டுறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல்), கொடுமை – கொடுமை, நம் முன்  நாணி – நம்  முன்னால் அவமானப் பட்டு,  கரப்பு ஆடும் – அதை மறைப்பாள் (கரப்பாடும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)

குறுந்தொகை 10, ஓரம்போகியார்மருதத் திணை – பரத்தையிற் பிரிந்து மீண்ட தலைவனிடம் தோழி சொன்னது
யாய் ஆகியளே விழவு முதலாட்டி,
பயறு போல் இணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூமென் சினைக்
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள், ஆகலின் நாணிய வருமே.  5

பாடல் பின்னணி:  தலைவனுக்குத் தோழி வாயில் நேர்ந்தது.

பொருளுரை:  தலைவி ஆனவள் தலைவன் செல்வம் பெறுவதற்குக் காரணமாக இருப்பவள். பயற்றின் கொத்துப் போன்ற பூங்கொத்துக்களில் உள்ள பூந்தாது தங்கள் மேல் படும்படி உழவர்கள் வளைத்த நறுமணம் கமழ்கின்ற பூக்களையுடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட காஞ்சி மரத்தையுடைய ஊரனின் கொடுமையை அவள் மறைத்தாள் ஆதலால், இப்பொழுது அவன் நாணும்படி அவனை ஏற்றுக்கொள்ள வருகின்றாள்.

குறிப்பு:   முதலாட்டி (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தலைவன் செல்வம் பெற்று மகிழ்ந்து குலாவுவதற்குக் காரணமாக உள்ளாள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலையின் விழவிற்கு முதன்மையை ஆளும் தன்மையுடையவள் ஆயினள், விழவு – ஈண்டு இன்பம் என்னும் பொருட்டாய் நின்றது.  இரா. இராகவையங்கார் உரை – உழவர் தம் மேனியிலும் தம் உழு பகட்டினும் தாது படிந்து தாம் உழு நிலத்துக் காஞ்சி மரங்களை வளைத்த செயல் தோன்ற வந்தாற்போலத் தலைவனும் அவன் தன் பாணனும் பரத்தையரை வளைத்துச் சேரியினிகழ்த்தியன மனையிற் தலைவி காண வந்து நின்றது கருதிற்று. உழவன் தலைவனாகவும் உழு பகடு பாணனாகவும் உழு நிலம் சேரியாகவும் காஞ்சி மரங்கள் பரத்தையராகவும் கொள்க.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பூங்கொத்து உண்டாதனாலே உழவர் வளைத்த காஞ்சி மரத்தையுடைய ஊரன் என்றதனானே, தம்மிடத்து வேட்கை கொண்டமை உணர்ந்ததனானே பரத்தையரால் வளைக்கப்படும் இயல்பினன் என்பதாம்.  படீஇயர் – அளபெடை, வருமே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   யாய் ஆகியளே – தலைவி ஆனவள், விழவு முதலாட்டி – தலைவன் செல்வம் பெறுவதற்குக் காரணமாக இருப்பவள், பயறு போல் இணர பைந்தாது – பயற்றின் கொத்துப் போன்ற பூங்கொத்துக்களில் உள்ள பூந்தாது, படீஇயர் – தங்கள் மேல் படும்படி, உழவர் வாங்கிய – உழவர்கள் வளைத்த, கமழ் பூமென் சினைக் காஞ்சி ஊரன் – கமழ்கின்ற பூக்களையுடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட காஞ்சி மரத்தையுடைய ஊரன், கொடுமை கரந்தனள் – கொடுமையை அவள் மறைத்தாள், ஆகலின் – ஆதலால், நாணிய வருமே – அவன் நாணும்படி ஏற்றுக்கொள்ள வருகின்றாள்

குறுந்தொகை 11, மாமூலனார்பாலைத் திணை – தலைவி தன் நெஞ்சிடம் சொன்னதுதோழி கேட்கும்படியாக
கோடு ஈர் இலங்கு வளை ஞெகிழ நாடொறும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே,
எழு இனி, வாழி என் நெஞ்சே, முனாது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது  5
பல்வேல் கட்டி நன்னாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே.

பாடல் பின்னணி:  தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி, தோழி கேட்கும்படி நெஞ்சை நோக்கிக் கூறித் தன்னுடைய துயரத்தை வெளிப்படுத்தியது.

பொருளுரை:  நீடு வாழ்வாயாக என் நெஞ்சே! சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட ஒளியுடைய வளையல்கள் என் கை மெலிந்ததால் கழன்று, நாள்தோறும் உறங்காமல் கலங்கி அழும் கண்களுடன் வருந்தி இங்கு வாழ்வதிலிருந்து நாம் தப்புவோம். தலைவர் இருக்கும் இடத்திற்கு செல்லுவதற்கு இப்பொழுது எழுவாயாக நீ! கஞ்சங் குல்லைக் மலர்க் கண்ணியை அணிந்த வடுகரின் இடத்திற்கு முன்னே உள்ள, பல வேல்களையுடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டிற்கு அப்பால் உள்ள மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவர் ஆயினும், அவர் இருக்கும் நாட்டிற்குச் செல்லுதலை எண்ணினேன் நான்.

குறிப்பு:   இரா. இராகவையங்கார் உரை – ‘ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்’ என்பது வளை நெகிழ்தலும் கண் கவிழ்தலுங் கண்டு அன்னை இடித்துரைக்கவும் ஊரலர் தூற்றவும் நெஞ்சே நீயும் யானும் இங்கு இப்படி வருந்தி வதிவதும் தப்புவேம் என்றதாம்.  ‘வடுகர் முனையது மொழிபெயர் தேஎத்தராயினும் என்றது’ தலைவியது ஆண்மையும் உணர்வும் குறித்து நின்றதெனின் நன்கு பொருந்தும். முனையது (5) – உ. வே. சாமிநாதையர் உரை – முன்னே உள்ளதாகிய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பகைப்புலத்ததாகிய, தமிழண்ணல் உரை – எல்லை, இரா. இராகவையங்கார் உரை – பகைப்புலத்ததாய்.  ஆங்கே, நாட்டே – .அசை நிலைகள்.  உறைதலும் – உம் அசைநிலை, சாரியையுமாம்.  வரலாறு:  வடுகர், கட்டி.  வடுகர் – வேங்கடத்தின் வடக்கில் உள்ளவர்கள்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்.

சொற்பொருள்:   கோடு ஈர் இலங்கு வளை ஞெகிழ – சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட விளக்கமுடைய வளையல்கள் கை மெலிந்ததால் நெகிழ, நாடொறும் பாடு இல கலிழும் கண்ணொடு – நாள்தோறும் உறங்காமல் கலங்கி அழும் கண்களுடன், புலம்பி – தனித்து, வருந்தி, ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் – இங்கு வாழ்வதிலிருந்து நாம் தப்புவோம், ஆங்கே – தலைவர் இருக்கும் இடத்திற்கு, எழு இனி – செல்லுவதற்கு இப்பொழுது எழுவாயாக, வாழி என் நெஞ்சே – நீடு வாழ்வாயாக என் நெஞ்சே, முனாது – முன்னே உள்ள, பகைப்புலத்ததாகிய, குல்லைக் கண்ணி வடுகர் முனையது – கஞ்சங் குல்லைக் கண்ணியை அணிந்த வடுகரின் இடத்தின், பல்வேல் கட்டி நன்னாட்டு உம்பர் – பல வேல்களையுடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டிற்கு அப்பால் உள்ள, மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் – மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவர் ஆயினும் (தேஎத்தர் – அளபெடை), வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே – அவருடைய நாட்டிற்குச் செல்லுதலை எண்ணினேன் (சின் – தன்மை அசைச்சொல், நாட்டே – ஏகாரம் அசை நிலை

.
குறுந்தொகை 12, ஓதலாந்தையார்பாலைத் திணை – தலைவி சொன்னது
எறும்பி அளையின் குறும்பல் சுனைய,
உலைக் கல் அன்ன பாறை ஏறிக்
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப, அவர் சென்ற ஆறே!
அது மற்று அவலம் கொள்ளாது, 5
நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே.

பாடல் பின்னணி:  தலைவி தலைவனது பிரிவை ஆற்றும் வன்மையிலள் ஆயினாள் என்று கவலையுற்ற தோழி கேட்கும்படி தலைவி சொல்லியது.

பொருளுரை:  அவர் சென்ற பாலை நிலத்தில் எறும்பு அளைகள் போன்ற பாதைகளும், சிறிய பல சுனைகளும், கொல்லனின் உலைகள் போல் (சூடான) உள்ள பாறைகளில் ஏறி வளைந்த வில்லையுடைய எயினர்கள் தங்கள் அம்புகளைக் கூர்மையாக்கும் வழிகளும் உண்டு எனக் கூறுகின்றனர்.  அதுப்பற்றி வருந்தாது, பழிச் சொற்களைக் கூறுகின்றது, ஆரவாரமுடைய இந்த ஊர்.

குறிப்பு:  இரா. இராகவையங்கார் உரை – அவர் சென்ற ஆற்றில் உணவளிப்பது எறும்பியளை, நீர் தருவது அறுநீர்ச்சுனை, உறைவிடம் உலைக்கலன்ன பாறை, வாழ்வோர் பகழி மாய்க்கும் கொடுவில் எயினர் என அவர் சென்ற ஆற்றின் இடையூறெல்லாம் தெரியக் கூறினாள்.  ஊர் – உ. வே. சாமிநாதையர் உரை – ஊர் என்றது தோழியை.  தோழியை ஊரென்றல் மரபு.  அகநானூறு  377 – சிறு புல் உணவு நெறி பட மறுகி நுண் பல் எறும்பி கொண்டளைச் செறித்த வித்தா வல்சி வீங்கு சிலை மறவர்.  தோழியை ஓரென்றல் மரபு.  மற்று, ஏகாரங்கள் – அசை நிலைகள்.

சொற்பொருள்:  எறும்பி அளையின் – எறும்பின் அளைகளைப்போல் (இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), குறும்பல் சுனைய – சிறிய பல சுனைகள்,  உலைக்கல் அன்ன – கொல்லனது உலைக்கல்லைப் போல் வெட்பமுடைய,  பாறை ஏறி – பாறை மீது ஏறி, கொடு வில் எயினர் – வளைந்த வில்லையுடைய எயினர்கள், கொடூர வில்லையுடைய எயினர்கள் (பாலை நிலத்தில் பிறரை துன்புறுத்துவோர்),  பகழி மாய்க்கும் – அம்புகளைத் தீட்டும்,  கவலைத்து – கடினமான வளைந்தப் பாதைகளில்,  என்பவர் – எனக் கூறுகின்றனர், சென்ற ஆறே – சென்ற வழி, அது மற்று அவலம் கொள்ளாது –  என்னுடைய துன்பத்தை அறியாது (மற்று – அசைநிலை), நொதுமல் கழறும் – பழிக்கும் சொற்கள் கூறும்,  இவ் – இந்த, அழுங்கல் ஊரே – ஆரவாரமுடைய ஊர்

குறுந்தொகை 13, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மாசுஅறக் கழீஇய யானை போலப்,
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்,
நோய் தந்தனனே தோழி!
பசலை ஆர்ந்த, நம் குவளை அம் கண்ணே. 5

பாடல் பின்னணி:  தலைவனின் பிரிவாற்றாமல் வருந்திய தன் வேறுபாடுகளை உணர்ந்து கவன்ற தோழியிடம் தலைவி தன்னுடைய ஆற்றாமைக்குக் காரணத்தைப் புலப்படுத்தியது.

பொருளுரை:  தோழி! பெருமழை பொழிந்ததால் மாசு நீங்கிய ஈரமான சொரசொரப்பான கரிய பாறைக் கல்லானது, புழுதி நீங்கி சுத்தம் செய்யப்பெற்ற யானையைப் போலக் காட்சியளித்தது. அக்கல்லின் ஒரு பக்கத்தே கூடியிருந்தான் தலைவன்.  அவன் தான் நம்மைப் பிரிந்து துன்பம் தந்தான்.  அதனால் குவளை மலர் போன்ற என்னுடைய அழகிய கண்களில் பசலை படர்ந்தன.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – துறுகல் தன் இயல்பினை மறைக்கும் மாசு நீங்கப் பெற்ற நாடன் இவ்வியல்புக்கு மாறாக என் கண்களின் இயல்பை மறைக்கும் பசலையை வளரச் செய்தனன் என்பது.  பாறையும் யானையும்:  அகநானூறு 57 –  இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும், அகநானூறு 178 – பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 –  பிடி மடிந்தன்ன குறுந்தொகை 13 – மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல், குறுந்தொகை 36 – துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும், குறுந்தொகை 111 – கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், குறுந்தொகை 279 – மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும், கலித்தொகை 108 – பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 – புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம்.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – ஏதந்தராத துறுகல் ஏதந்தரும் யானை எனக் காண்பார் வருந்தத் தாங்கும் நாடன் என்றதனானே, இனிமை தருங் கூட்டமும் பிரிந்திடுவானோ என்ற கவற்சியால் இனிமை பயவாதிருக்கும்படி ஒழுகினான் என்பதாம்.  ஆர்ந்த (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பசலை நிறம் கொண்டன, உ. வே. சாமிநாதையர் உரை – பசலை நிறம் நிரம்பப் பெற்றன, தமிழண்ணல் உரை – முழுவதும் பசலை நிறம் ஆகிப்போயின.  ஏகாரங்கள் – அசை நிலைகள்.

சொற்பொருள்:  மாசு அற – புழுதி இல்லாமல், கழீஇய – கழுவப்பட்ட (அளபெடை), யானை போல – யானையைப் போல, பெரும் பெயல் – பெருமழை, உழந்த-அலைத்த, இரும்பிணர் – கரிய சொரசொரப்பான, கரிய சருச்சரையை உடைய, துறுகல் – பாறை, பைதல் – பசுமையான, ஈரமான,  ஒருதலை – ஒரு பக்கம், சேக்கும் – கூடும், நாடன் – தலைவன், நோய் தந்தனனே- நோய் தந்து விட்டனனே, பசலை ஆர்ந்த – பசலை படர்ந்த, நம் குவளை – என்னுடைய குவளை மலர் போன்ற, அம் கண்ணே- அழகிய கண்களில்

குறுந்தொகை 14, தொல்கபிலர்குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னதுதோழி கேட்கும்படி 
அமிழ்து பொதி செந்நா அஞ்சவந்த
வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுக தில் அம்ம யானே! பெற்றாங்கு
அறிக தில் அம்ம, இவ்வூரே! மறுகில்,
நல்லோள் கணவன் இவன் எனப் 5
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.

பாடல் பின்னணி:  தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைவன் அத்தோழி கேட்பக் கூறியது.

பொருளுரை:  அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற் போன்ற சிவந்த  நாக்கு அஞ்சுமாறு நேராக விளங்கும் கூர்மையான பற்களையுடைய சில மொழிகளைப் பேசும் என் தலைவியை யான் (மடலேறி) பெறுவேனாக.  நான் அவளைப் பெற்ற பின், இந்த ஊரார் அதை அறிந்து கொள்ளட்டும்.  அவ்வாறு, ஊரார் பலரும் தெருவில் ‘நல்லோள் கணவன் இவன்’ என்று கூறும் போது, நாங்கள் சிறிது நாணமடைவோம்.

குறிப்பு:  நாணுகம் (6) – உ. வே. சாமிநாதையர் உரை – யாம் என்பது தலைவியையும் உடன்படுத்தி.  தில் – காலம் பற்றி வந்த இடைச்சொல், அம்ம, சிறிதே – ஏகாரம் அசைநிலை..  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).  வார்– வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  அமிழ்து பொதி – அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற் போன்று (இனிமையான சொற்களைப் பேசும்), செந்நா- சிவந்த நாக்கு, அஞ்ச வந்த – அஞ்சுவதற்குக் காரணமான, வார்ந்து இலங்கு – நேராக விளங்கும், வை எயிற்று – கூர்மையான பற்களையுடைய (எயிறு – பல்), சின்மொழி அரிவையை – சில சொற்களைப் பேசும்  பெண்ணை, (என் தலைவியை), பெறுக – பெறுவேனாக, தில் – விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், அம்ம – ஓர் அசைச் சொல், பெற்றாங்கு – பெற்ற பின், அறிக  – அறிந்து கொள்ளட்டும், தில் – காலம் பற்றி வந்த இடைச்சொல், அம்ம – ஓர் அசைச் சொல், இவ்வூரே- இவ்வூரவர், மறுகில் – தெருவில், நல்லோள் கணவன் – நல்ல பெண்ணின் கணவன், இவன் என – இவன்  என்று, பல்லோர் கூற – பலரும் சொல்ல, யாஅம்- நானும் தலைவியும் (அளபெடை), நாணுகம் – நாணமடைவோம், சிறிதே- சிறிது (ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 15, ஔவையார்பாலைத் திணை – செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
பறைபடப் பணிலம் ஆர்ப்ப, இறை கொள்பு
தொன் மூது ஆலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன் மொழி போல
வாயாகின்றே தோழி, ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு  5
தொகு வளை முன் கை மடந்தை நட்பே.

பாடல் பின்னணி:  செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.  

பொருளுரை:  அழகிய வீரக்கழலையும் சிவந்த இலையையுடைய வெள்ளிய வேலையும் உடைய தலைவனோடு தொக்க வளையல்களை முன்கையில் அணிந்த உன்னுடைய மகள் கொண்ட நட்பானது, மிகப் பழைய ஆலமரத்தைக் கொண்ட பொது இடத்தில் தங்குதலைக் கொண்டு தோன்றிய கோசர்களின் நல்ல சொற்கள் உண்மையாவதைப் போல, மணப்பறைகள் ஆரவாரிக்க சங்குகள் ஒலிக்க திருமணம் செய்ததால், உண்மையாகின்றது தோழி!

குறிப்பு:  அகநானூறு 251 – புனை தேர்க் கோசர் தொல்மூது ஆலத்து அரும் பணைப் பொதியில் இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க.   பறைபட (1) – உ. வே. சாமிநாதையர் உரை – முரசு முழங்க, பறையும் சங்கும் மங்கல நாளில் முழங்குவன, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மணப் பறைகள் ஆரவாரிப்பவும்.  நட்பே – வாயாகின்றே – ஏகாரம் அசை நிலை, நட்பே – ஏகாரம் அசை நிலை.  கொடுப்போர் இன்றியும் – கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்து உடன் போகிய காலையான (கற்பியல் 3, தொல்காப்பியம்).

சொற்பொருள்:  பறைபடப் பணிலம் ஆர்ப்ப – மணப்பறைகள் ஆரவாரிக்க சங்குகள் ஒலிக்க, இறை கொள்பு – தங்கிய, தொன் மூது ஆலத்துப் பொதியில் – மிகப் பழைய ஆலமரத்தைக் கொண்ட பொது இடத்தில், தோன்றிய – தோன்றிய, நாலூர்க் கோசர் நன் மொழி போல வாயாகின்றே தோழி – நான்கு ஊரில் உள்ள கோசர்களின் நல்ல சொற்கள் உண்மையாவதைப் போல உண்மையாகின்றது தோழி, ஆய் கழல் சேயிலை வெள் வேல் விடலையொடு – அழகிய வீரக்கழலையும் சிவந்த இலையையுடைய வெள்ளிய வேலையும் உடைய தலைவனோடு, தொகு வளை முன் கை மடந்தை நட்பே – தொக்க வளையல்களை முன்கையில் அணிந்த நின் மகள் கொண்ட நட்பு

குறுந்தொகை 16, சேர மன்னன் பாலை பாடிய பெருங்கடுங்கோ – பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
உள்ளார் கொல்லோ தோழி, கள்வர் தம்
பொன் புனை பகழி செப்பம் கொண்மார்
உகிர் நுதி புரட்டும் ஓசை போலச்,
செங்கால் பல்லி தன் துணை பயிரும்,
அம் கால் கள்ளியங்காடு இறந்தோரே? 5

பாடல் பின்னணி:  பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த காலத்தில், கவலையுற்ற தலைவியைத் தோழி ஆற்றுப்படுத்தியது.

பொருளுரை:  உன்னை அவர் நினைப்பாரா தோழி, வழிப்பறி செய்யும் கள்வர்கள் தங்கள் கூர்மையான நக முனையினால் இரும்பினால் செய்த தங்கள் அம்புகளை செம்மைப்படுத்தும் பொருட்டு உரசும் ஓசையைப் போல்,  சிவந்த கால்களையுடைய பல்லி தன் துணையை அழைக்கும் ஓசைத் தோன்றும் அழகிய அடியையுடைய கள்ளிச் செடிகளைக் கொண்ட காட்டு வழிச் சென்ற நம் தலைவர்?   உறுதியாக நினைப்பார்.

குறிப்பு:  பொன் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – இரும்பு.  உகிர் நுதி புரட்டும் ஓசை (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உகிரால் வருடும் ஓசை.  உ. வே. சாமிநாதையர் உரை – தலைவர் விரைவில் வந்து விடுவார், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பல்லி துணை பயிரும் ஒலி கேட்புழி அவர் தம் துணையாகிய உன்னை நினையாதிரார்.  நினைப்பார் ஆகலின் விரைந்து வருவார் என ஆற்றியவாறு.  இறைச்சி – தமிழண்ணல் உரை – சிற்றுயிர்களாகிய கார்ப்பொருளின் காதலைக்கூறி, மானிட உரிப்பொருளுக்குத் துணையுமாக வரும் இதுவே ‘இறைச்சி’ எனப்படும். ஓ, ஏ – அசை நிலைகள்.

சொற்பொருள்:  உள்ளார் கொல்லோ தோழி – நினைப்பாரா தோழி, கள்வர் – வழிப்பறி செய்யும் கள்வர்கள், தம் – தம்முடைய, பொன் புனை பகழி – இரும்பினால் செய்த அம்பு, செப்பங் கொண்மார் – செம்மைப்படுத்தும் பொருட்டு, உகிர் நுதி – கூர்மையான நக நுனி, புரட்டும் –  சொரியும், உரசும், ஓசை போல – ஓசையைப் போல, செங்கால் பல்லி – சிவந்த கால்களையுடைய பல்லி, தன் துணை  பயிரும் – தன் துணையை அழைக்கும், அம் கால் – அழகிய அடி, கள்ளியங்காடு – கள்ளிச் செடி நிறைந்த காடு, இறந்தோரே – சென்றவர்

குறுந்தொகை 17, பேரெயில் முறுவலார்குறிஞ்சித் திணை  – தலைவன் தோழியிடம் சொன்னது
மாவென மடலும் ஊர்ப, பூவெனக்
குவி முகிழ் எருக்கங்கண்ணியும் சூடுப,
மறுகின் ஆர்க்கவும் படுப,
பிறிதும் ஆகுப, காமம் காழ்க் கொளினே.

பாடல் பின்னணி:  தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைவன், அத்தோழியிடம், தான் மடலேற எண்ணியிருத்தலை உரைத்தது.உலகின்மேல் வைத்து தன் குறையைக் கூறினான்.

பொருளுரை:  காம நோய் மிகவும் முதிர்ந்தால், பனைமடலையும் குதிரையெனக் கொண்டு ஆண்கள் அதனை செலுத்துவார்கள், அடையாள மாலையாக குவிந்த அரும்பையுடைய எருக்கம்பூவின் கண்ணியையும் தங்கள் தலையில் சூடுவார்கள், தெருவில் பிறர் தம்மைக் கண்டு ஆரவாரிக்கவும் படுவார்கள். தங்கள் கருத்து முற்றவில்லை என்றால் சாவுதற்குரிய செயலையையும் துணிந்து செய்வார்கள்.

குறிப்பு:  பூவென (1) – உ. வே. சாமிநாதையர் உரை – அடையாள மாலையைப் போல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – சூடும் மரபில்லாதாயினும் சூடும் மரபுடைய பூவாகக் கொண்டு.   கண்ணியும் சூடுப (2) – உ. வே. சாமிநாதையர் உரை – கண்ணி தலையில் புனைவதாதலின் சூடுப என்றான்.  மடலும் – உம்மை இழிவு சிறப்பு, கொளினே – ஏகாரம் அசை நிலை.  மடல் ஏறுதல் –  சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைந்ததாக அறிவிக்கின்றான்.   காழ்க் கொள்ளுதல் – உ. வே. சாமிநாதையர் உரை – முதிர்வுற்றல், காமமாகிய கனி பரலை உடையதானால் என்று கொண்டு, பரல் என்பதற்கு பரல் போன்ற தடையென்று உருவக ஆற்றால் பொருள் செய்து காமம் நிறைவேறாமல் தடைப்படுமாயின் என்று உரைகோடலும் ஒன்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நனி முதிர்ந்தல்,  தமிழண்ணல் உரை – வைரம் பாய்ந்து முற்றுதல், இரா. இராகவையங்கார் உரை- முற்றிய பரலாகிய விதையைத் தம் முட்கொள்ளின் என்றவாறு.

சொற்பொருள்:  மாவென மடலும் ஊர்ப – பனைமடலையும் குதிரையெனக் கொண்டு ஆண்கள் அதனை ஊர்வர், பூவெனக் குவி முகிழ் எருக்கங்கண்ணியும் சூடுப – அடையாள மாலையாக குவிந்த அரும்பையுடைய எருக்கம்பூ கண்ணியையும் தங்கள் தலையில் சூடுவார்கள், மறுகின் ஆர்க்கவும் படுப – தெருவில் பிறர் தம்மைக் கண்டு ஆரவாரிக்கவும் படுவார்கள், பிறிதும் ஆகுப – தங்கள் கருத்து முற்றவில்லை என்றால் சாவுதற்குரிய செயலையையும் துணிந்து செய்வார்கள், காமம் காழ்க் கொளினே – காம நோய் மிகவும் முதிர்ந்தால்

குறுந்தொகை 18, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது 

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே! 5

பாடல் பின்னணி:  இரவில் வந்து மீளும் தலைவனிடம் தோழி “விரைவில் வரைந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியது.

பொருளுரை:   மூங்கிலை வேலியாகக் கொண்டவிடத்தில், வேரில் பழக் குலைகள் தொங்கும் பலா மரங்கள் நிறைந்த மலைநாட்டுத் தலைவனே!  விரைவில் தலைவியை மணம் செய்துகொள்ளும் காலத்தை உண்டாக்கிக் கொள்க!  உன்னைத் தவிர யாரால் தலைவியின் இந்நிலையை அறிந்துகொள்ள முடியும்?  மலையிலே, சிறிய கொம்புகளிலே பெரிய பலாப்பழம் தொங்கிக் கொண்டிருப்பதைப் போன்று,  தலைவியின் உயிரோ மிகச்சிறியது.  அவள் உன் மேல் கொண்ட விருப்பமோ பெரியது.

குறிப்பு: கலித்தொகை 137-2 – பெரிதே காமம் என் உயிர் தவச் சிறிதே.  நற்றிணை 232 – வேரல் வேலிச் சிறுகுடி.  வேரல் வேலி (1) – உ. வே. சாமிநாதையர் உரை – சிறு மூங்கிலாகிய வாழ் வேலி உடைய, மலைச் சாரலில் இயல்பாகவே வளர்ந்த மூங்கிலே பலா மரத்திற்கு வேலியாயிற்று.  இத்தகைய வேலையை வாழ்வேலி என்பர் (பெரும்பாணாற்றுப்படை 126 – வாழ் முள் வேலிச் சூழ் மிளைப் படப்பை, தமிழண்ணல் உரை – சிறு மூங்கில்களையே உயிர் வேலியாக உடைய.  யார் அஃது அறிந்திசினோரே (3) –  உ. வே. சாமிநாதையர் உரை – அந்நிலையை அறிந்தவர் யார்?  ஒருவருமில்லை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின்னை அல்லால் பிறர் யாரே அதனை அறிந்து கொள்வார் உளர்.  சிறு கோடு (4) – இரா. இராகவையங்கார் உரை – சிறு கோடு என்பதனால் தலைவியினது இளமையும் மென்மையும் தெரிய வைத்தாள்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிறு கொம்பில் பலாக்கனி பின்னும் பருத்து முதிருமாயின் அக்கொம்பினை முறித்துக்கொண்டு வீழ்ந்து சிதறுமாறு போலத் தலைவியின் காமம் பின்னும் முதிருங்கால் அவள் உயிருக்கு இடையூறு செய்து தானும் கெடும் என்பது உவமையாற் போந்தமை உணர்க.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  தவ – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  வேரல் வேலி – மூங்கில் வேலி, வேர்க்கோள் – வேரில் பழக் குலைகள் தொங்கும், பலவின் – பலா மரங்களையுடைய, சாரல் நாட- மலை நாட்டவனே, செவ்வியை – வரைந்து (மணம் செய்து கொள்ளும்) கொள்ளும் காலத்தை, ஆகுமதி- உண்டாக்கு, யார் அஃது அறிந்திசினோரே – யாரால் தலைவியின் இந்நிலையை அறிந்துகொள்ள முடியும், சிறுகோட்டு – சிறிய கொம்பிலே, பெரும்பழம் – பெரிய பலாப்பழம், தூங்கி ஆங்கு – தொங்கிக் கொண்டிருந்தவாறு,  இவள்- தலைவி, உயிர் தவச் சிறிது – உயிர் மிகச் சிறியது, காமமோ பெரிதே – விருப்பமோ பெரியதே

குறுந்தொகை 19, பரணர்மருதத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
எவ்வி இழந்த வறுமை யாழ்ப் பாணர்
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி, வாழிய நெஞ்சே, மனை மரத்து
எல் உறு மௌவல் நாறும்
பல் இரும் கூந்தல், யாரளோ நமக்கே. 5

பாடல் பின்னணி:  தலைவி ஊடிய போது அவ்வூடலைத் தான் தெளியச் செய்யவும் தெளியாளாகி அவள் பின்னும் ஊடிய காலத்தில் தவிர்ந்த நெஞ்சை நோக்கித் தலைவன் கூறியது.

பொருளுரை:  நெஞ்சே!  வீட்டு மரத்தில் படர்ந்த கொடியின் ஒளியை உடைய முல்லை மலர்களின் நறுமணத்தையுடைய அடர்ந்த கருமையான கூந்தலை உடைய இவள் இனி நமக்கு யாரோ! எவ்வி என்ற வள்ளல் இறந்ததால் வறுமையுற்ற யாழ் வாசிக்கும் பாணர்களின் பொற்பூ இல்லாத வெறும் தலையானது பொலிவு இழந்ததைப் போலப் பொலிவு இழந்து நீ வருந்துவாயாக.

குறிப்பு:  இனைமதி – மதி முன்னிலையசை, வாழிய, ஏகாரம் அசை நிலை. எவ்வி – மிழலை நாட்டின் மன்னன் – தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் கொல்லப்பட்டான் – புறநானூறு 24, வாய்வாள் எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய வள் உயிர் வணர் மருப்பு அன்ன – அகநானூறு 115.   இரா. இராகவையங்கார் உரை – மனைமரத்து இரவிலுற்ற முல்லை மலர்கள் ஒருவருஞ் சூடாமலே மணம் நாறுதல் போல இவள் கூந்தலும் நாம் அணையாமலே நாறும் என்பது குறிப்பு.  இனை (3) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – இன்னை என்பதன் இடைக்குறை, வருந்தினை என்பது பொருள், உ. வே. சாமிநாதையர் உரை – வருந்துவாயாக, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வருந்துக.  வாழிய (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ வாழ்வாயாக, உ. வே. சாமிநாதையர் உரை – அசை நிலை.  வரலாறு:  எவ்வி.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).  பாணர் – பாண் மரபினர், பாண் என்பது பண் அடியாகப் பிறந்த பெயர், இசை பாடுபவர்.

சொற்பொருள்:  எவ்வி இழந்த வறுமை யாழ்ப் பாணர் – எவ்வி என்ற வள்ளல் இறந்ததால் வறுமை அடைந்த பாணர்கள், பூ இல் வறுந்தலை போல – பொற்பூ இல்லாத வெறும் தலையைப் போல, புல்லென்று – பொலிவின்றி, இனைமதி – நீ வருந்துவாயாக, வாழிய நெஞ்சே – நெஞ்சே, மனை மரத்து எல் உறு மௌவல் – வீட்டு மரத்தில் உள்ள  ஒளியுடைய காட்டு முல்லை மலர்கள், நாறும் – நறுமணமுடைய, பல் இரும் கூந்தல் – அடர்ந்த கருமையான கூந்தலை உடையவள் (இருங்கூந்தல் – அன்மொழித்தொகை), யாரளோ நமக்கே – அவள் நமக்கு  யார் இனி

குறுந்தொகை 20, கோப்பெருஞ்சோழன்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அருளும் அன்பும் நீக்கித், துணை துறந்து,
பொருள் வயின் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக,
மடவம் ஆக மடந்தை நாமே.

பாடல் பின்னணி:  தலைவனின் பிரிவை உணர்த்திய தோழியை நோக்கி, தலைவி இவ்வாறு கூறினாள்.

பொருளுரை:  அன்பையும் அருளையும் விலக்கி விட்டு, துணையான என்னை விட்டு விலகி, பொருளுக்காகச் செல்லும் தலைவர் அறிவுடையவர் என்றால், அவர் அறிவுடையவராகவே இருக்கட்டும். நான் மடமையானவளாகவே இருந்து விட்டு போகின்றேன்.

குறிப்பு:  ஏகாரம் – அசை நிலை.

சொற்பொருள்:  அருளும் அன்பும் நீக்கி – அன்பையும் அருளையும் நீக்கி, துணை துறந்து – துணையான என்னை மறந்து, பொருள் வயின் பிரிவோர் – செல்வம் சேர்க்க பிரியும் தலைவர், உரவோர் ஆயின் – அறிவுடையவர் என்றால், உரவோர் உரவோர் ஆக – அவர் அறிவுடையவராக இருக்கட்டும், மடவம் ஆக மடந்தை நாமே –  நான் மடமையானவளாக இருந்து விட்டு போகின்றேன்

குறுந்தொகை 21, ஓதலாந்தையார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு,
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப் பூங்கொன்றை,
கானம் கார் எனக் கூறினும்,
யானோ தேறேன், அவர் பொய் வழங்கலரே. 5

பாடல் பின்னணி:  தலைவன் குறித்துச் சென்ற கார்ப் பருவத்தைக் கண்டு தலைவி வருந்துவாள் என்று எண்ணிய தோழியிடம் தலைவி கூறியது. 

பொருளுரை:  காட்டில், புதிய சரக்கொன்றை மலர்கள், தழைகளின் இடையே, வண்டுகள் தேனை உண்ணுவதற்காக வந்து விழும்படி, நீண்ட சரங்களாக மலர்ந்துள்ளன.  அவை, பொன் தலை அணிகளைக் கோத்துக் கட்டிய பெண்களின் கூந்தலைப் போல் தோன்றுகின்றன.  இது மழைக் காலம் என்று காடு கூறினாலும், நான் நம்ப மாட்டேன்.  என்னுடைய காதலர் பொய் சொல்ல மாட்டார்.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – கொன்றை மகளிரைப் போலத் தோற்றினும் மகளிரல்ல என்று தெளிவது போல, இது கார்ப்பருவம் என்று தோற்றினும் அன்றென்று தெளிந்தேன் என்றபடி.  வண்டுபடத் ததைந்த (1) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – வண்டு மொய்க்கும்படி நெருங்கிய, வண்டுகள் விழுததாற் சிதறின என்றலுமாம்.   கதுப்பின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஓகாரம் – பிரிநிலை, ஏகாரம் – அசை நிலை.

சொற்பொருள்:  வண்டு படத் ததைந்த – வண்டுகள் வந்து வீழும்படி செறிந்த, கொடி – சரம், நீண்ட, இணர் – கொத்துக்கள், இடையிடுபு – தழைகளின் இடையே, பொன் செய் புனை இழை – பொன்னால் செய்த நகைகள், கட்டிய மகளிர் – கோத்துக் கட்டிய மகளிர், கதுப்பின் தோன்றும் – கூந்தலைப் போன்று தோன்றும் (கதுப்பின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), புதுப் பூங் கொன்றை – புதிய கொன்றை மலர்கள், கானம் – காடு – மழைக் காலம் என்று கூறினாலும், யானோ தேறேன் – நான் நம்ப மாட்டேன், அவர் பொய் வழங்கலரே – அவர் பொய் சொல்ல மாட்டார்

குறுந்தொகை 22, சேரமானெந்தைபாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய,
யாரோ பிரிகிற்பவரே? சாரல்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அம் சினை கமழும்
தேம் ஊர் ஒண்ணுதல் நின்னொடுஞ்செலவே.  5

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்து செல்வான் என்பதைக் குறிப்பால் அறிந்து வருந்திய தலைவியை தோழி ஆற்றுவித்தாள்.

பொருளுரை:  மலைப்பக்கத்திற்கு அழகு தரும், இதழ்கள் வலதுபுறம் சுரிந்த, கடம்ப மரத்தின் வேனிற் காலத்தில் மலர்ந்த அழகிய கிளையில் உள்ள மலர்களின் நறுமணம் போன்ற, நறுமணம் பரவிய ஒளியுடைய நெற்றியுடையவளே!  தலைவர் பிரிவார் எனக் கருதி நீ கண்ணீர் வடிக்கின்றாய்.  நீ இங்கே தனியாக வருந்துமாறு உன்னை விட்டு யார் தான் பிரிவார்?  தலைவர் உன்னுடன் தான் செல்லுவார்.

குறிப்பு:  தலைவன் பிரிந்து செல்வான் என்பதைக் குறிப்பால் அறிந்து வருந்திய தலைவியை தோழி ஆற்றுவித்தாள்.  பிரிகிற்பவரே (2) – உ. வே. சாமிநாதையர் உரை – நின்னைப் பிரிந்து செல்லும் ஆற்றலையுடையவர், பிரியச் சம்மதிப்போர் எனலுமாம்.  தேம் ஊர் ஒண்ணுதல் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – நன்மணம் பரவிய விளக்கத்தையுடையாய், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வண்டுகள் ஊர்தரும் ஒளியுடைய நுதலினையுடையாய்.  ஊரும் என்ற வினையால் வண்டு எனலே நன்று. வலஞ்சுரி மராஅம் – அகநானூறு 83 – வலஞ்சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீ, ஐங்குறுநூறு 348 – வலஞ்சுரி மராஅம் வேய்ந்து நம் மணங்கமழ் தண் பொழில், ஐங்குறுநூறு 383 – நெடுங்கால் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி வலஞ்சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற, குறுந்தொகை 22 – சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து வேனில் அம் சினை கமழும்.  பிரிகிற்பவரே – ஏகாரம் அசை நிலை, கண்ணை – குறிப்பு முற்றெச்சம், மராம் – ஆகுபெயர் பூவிற்கு, தேம் தேன் என்றதன் திரிபு, ஒண்ணுதல் – அன்மொழித்தொகை, செலவே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  நீர் வார் கண்ணை – கண்ணீர் வடிக்கும் கண்களையுடையை, நீ இவண் ஒழிய – நீ இங்கே தனியாக இருக்க, யாரோ பிரிகிற்பவரே – உன்னை விட்டு யார் தான் பிரிவார், சாரல் சிலம்பணி கொண்ட – மலைப்பக்கத்தில் அழகு கொண்ட, வலஞ்சுரி மராஅத்து – வலைப்பக்கத்தே இதழ்கள் சுரிந்த கடம்ப மரத்தின் மலர்கள், வேனில் அம் சினை – வேனிற் காலத்தில் மலர்ந்த அழகிய கிளை, கமழும் தேம் ஊர் – நறுமணம் பரவிய, தேன் வண்டுகள் மொய்க்கும், ஒண்ணுதல் – ஒளியுடைய நெற்றியுடையவளே, நின்னொடுஞ்செலவே – உன்னுடன் செல்லுவார்

குறுந்தொகை 23, ஔவையார்குறிஞ்சித் திணை – தோழி அகவன் மகளிடம் சொன்னது
அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக்கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே!
இன்னும் பாடுக பாட்டே, அவர்
நன் நெடும் குன்றம் பாடிய பாட்டே. 5

பாடல் பின்னணி:  தோழி அறத்தொடு நின்றது.

பொருளுரை: கடவுளை அழைத்துப் பாடும் கட்டுவிச்சியே! கடவுளை அழைத்துப் பாடும் கட்டுவிச்சியே! சங்கு மணியால் கோர்த்த கோவையைப் போன்ற நல்ல நீண்ட கூந்தலையுடைய கட்டுவிச்சியே! பாட்டுக்களைப் பாடுவாயாக! இன்னும் பாடுவாயாக, அவருடைய நல்ல உயர்ந்த குன்றைப் பற்றின பாட்டை!

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – ‘அவர் நன் நெடும் குன்றம் பாடிய பாட்டு’ எனக் கூறின், ‘அவர் யார்?’ என்னும் ஆராய்ச்சி தாயரிடையே பிறந்து உண்மை அறிதற்கு ஏதுவாமாகலின் இஃது அறத்தொடு நிற்றலாயிற்று.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – முருகவேள் உறைவதொரு மலையைப் பாடினாளாக அம்மலையே தலைவன் மலையுமாகலின், அப்பாடல் கேட்டுத் தலைவி மகிழ்வெய்தல் கண்ட தோழி, மீண்டும் அம்மலையையே பாடுக என்றாள்.   அகவன் மகளே (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தெய்வங்களை அழைத்துப் பாடுதலைச் செய்யும் கட்டுவிச்சியே,  இரா. இராகவையங்கார் உரை – தெய்வங்களையும் குலத்தோரையும் அழைத்தலுடைய பெண்டே, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – வெறியாடும் மகளே என்றும் வேலனை அழைக்கும் மகளே என்றும் உரைக்கலாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழைக்கும் மகள், கட்டுவிச்சி குறி சொல்வழித் தெய்வங்களையும் குறி சொல்லப்படுவோர் குலத்தையும் அழைத்துப் பாடுதல் பற்றி அவளுக்கு அகவன் மகள் என்று பெயராயிற்று.  கட்டு – உ. வே. சாமிநாதையர் உரை – முறத்தில் நெல்லை வைத்துத் தெய்வங்களைப் பாடி எண்ணிப் பார்த்துக் கட்டுவிச்சிக் காணும் குறி.  பாட்டே – ஏகாரம் பிரிநிலை.

சொற்பொருள்: அகவன் மகளே – கடவுளை அழைத்துப் பாடும் கட்டுவிச்சியே, அகவன் மகளே – கடவுளை அழைத்துப் பாடும் கட்டுவிச்சியே, மனவுக் கோப்பு அன்ன – சங்கு மணியால் ஆன கோவையைப் போன்ற, நன் நெடும் கூந்தல் – நல்ல நீண்ட கூந்தல், அகவன் மகளே – குறி சொல்லும் கட்டுவிச்சியே, பாடுக பாட்டே – பாட்டுக்களை பாடுவாயாக, இன்னும் பாடுக – இன்னும் பாடுவாயாக, பாட்டே – பாட்டை, அவர் நன் நெடும் குன்றம் பாடிய பாட்டே – அவருடைய நல்ல உயர்ந்த குன்றத்தைப் பற்றின பாட்டு

குறுந்தொகை 24, பரணர்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கருங்கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவது கொல்லோ?
ஆற்று அயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழையக் கொடியோர் நாவே,  5
காதலர் அகலக் கல்லென்றவ்வே.

பாடல் பின்னணி:  பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி உரைத்தது.

பொருளுரை:   கரிய அடிப்பகுதியையுடைய வேப்ப மரத்தின் ஒளியுடைய மிகுந்த புதிய மலர்கள் என் தலைவன் இல்லாமல் வாடிச் சென்று விடுமோ? ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த வெள்ளை கிளைகளையுடைய அத்தி மரத்தின், ஏழு நண்டுகள் மிதித்த ஒரு பழம் போல, நான் வருந்துமாறு கொடியவர்களின் சொற்கள் கல்லென முழங்கின, என்னுடைய காதலர் அகன்றதால்.

குறிப்பு:   அகநானூறு 380 – நாவல் உண் துறை உதிர்த்த கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு தன் தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம் அலவன்.  குறுந்தொகை 24 – வேம்பின் ஒண் பூ யாணர் என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ, ஐங்குறுநூறு 350 – வேம்பின் ஒண் பூ உறைப்பத் தேம்படு கிளவி அவர்த் தெளிக்கும் பொழுதே.  வேம்பின் ஒண் பூ (1) –  இரா. இராகவையங்கார் உரை – பாண்டியரும் அவர் படையும் சூடிய சிறப்பால் ஒண்பூ என்றாள்.   கொடியோர் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – கொடிய மகளிருடைய நாக்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – புறங் கூறுவோரின் நா, தமிழண்ணல் உரை – கொடிய ஊர்ப்பெண்டிரின் நாக்கள்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  என்னைஎன்  – அன்னை என்னை என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 50).  கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், இரக்கக்குறிப்புமாம், கொல்லோ – ஓகாரம் அசைநிலை, கல்லென்றவ்வே – விரிக்கும் வழி விரித்தல், ஏ – அசை நிலை, அதவத்து – அத்து சாரியை.

சொற்பொருள்:  கருங்கால் வேம்பின் – கரிய தாளையுடைய (அடிப்பகுதியையுடைய) வேப்ப மரத்தின், ஒண் பூ யாணர் என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ – ஒளியுடைய மிகுந்த புதிய மலர்கள் என் தலைவன் இல்லாமல் சென்று விடுமோ, ஆற்று அயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து – ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த வெள்ளை கிளைகளையுடைய அத்தி மரத்தின், எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல – ஏழு நண்டுகள் மிதித்த ஒரு பழம் போல, குழைய – நான் வருந்த, கொடியோர் நாவே – கொடியவர்கள் சொற்கள், காதலர் அகல – என்னுடைய காதலர் அகன்றதால், கல்லென்றவ்வே – கல்லென முழங்கின

குறுந்தொகை 25, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது 
யாரும் இல்லைத், தானே கள்வன்,
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே. 5

பாடல் பின்னணி:  தலைவன் நீண்ட காலம் தன்னை மணஞ்செய்யாமல் இருத்தல் பற்றி தலைவி வருந்தித் தோழிக்குக் கூறியது.

பொருளுரை:  தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில், அங்கே சான்றாகத் தக்கார் யாரும் இல்லை.  என் நலத்தை நுகர்ந்த கள்வன் அவன்.  அவன் என்னிடம் கொடுத்த உறுதி மொழியிலிருந்து தவறினால் நான் என்ன செய்வேன்?  நான் அவனோடு இருந்த நாளில், அங்கே ஓடுகின்ற நீரில் செல்லுகின்ற ஆரல் மீனின் வருகையைப் பார்த்துக் கொண்டு, தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகு மட்டுமே இருந்தது.

குறிப்பு:  பாட வேறுபாடு – வரி 1 – யாரும் இல்லைத் தானே களவன்.  அகநானூறு 246 – கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக.  களவன் – சாட்சியாக இருந்தவன்.  குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே (5) – இரா. இராகவையங்கார் உரை – குருகு பாராதாயினும் அக்களத்தில் அவன் சூளுரைத்தது கேட்டதேயாம் என்று ‘குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே’ என்றாள்.  உ. வே. சாமிநாதையர் உரை – அவன் மணந்த நிகழ்ச்சியை எண்ணி பெருமிதம் கொள்ளும் தலைவி தாம் என்று பன்மையாற் கூறி கள்வனாதலைக் கூறுகையில் உண்டான செறல்பற்றி தான் என்று ஒருமையாற் கூறியதாகக் கொள்க.  தலைவனைக் கள்வன் என்றல் –  நற்றிணை 28 – கள்வர் போலக் கொடியன், நற்றிணை 40 – நள்ளென் கங்குல் கள்வன் போல, கலித்தொகை 51 – கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்.  யாரும் – உம்மை முற்றுப்பொருள், தானே – ஏகாரம் பிரிநிலை, செய்கு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை, குருகும் – உம்மை இழிவு சிறப்பு, ஞான்றே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  யாரும் இல்லை – யாரும் அங்கு இல்லை, தானே கள்வன்-  அவன் கள்வன், அக்களத்தில் இருந்தவன் அவனே, சாட்சியாக இருந்தவன் அவனே, தான் அது பொய்ப்பின் – அவன் உறுதிமொழி பொய்யானால், யான் எவன் செய்கோ – நான் என்ன செய்வேன்,  தினைத்தாள் அன்ன – தினையின் அடிப்பகுதியைப் போல, சிறு பசுங்கால – சிறிய பசிய கால்கள், ஒழுகு நீர் – ஓடிச் செல்லும் நீர், ஆரல் பார்க்கும் – விலாங்கு மீனின் வருகையைப் பார்த்திருக்கும், குருகும் உண்டு – குருகு இருந்தது, தான் மணந்த ஞான்றே – தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில்

குறுந்தொகை 26, கொல்லன் அழிசியார்குறிஞ்சித் திணை  – தோழி சொன்னது
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கு எழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரின் தோன்று நாடன்,
தகாஅன் போலத் தான் தீது மொழியினும்,
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே,  5
தேன் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத் துவர் வாய்
வரையாடு வன் பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும், அக்கொடியோனையே.

பாடல் பின்னணி:  தோழி அறத்தொடு நின்றது.  தலைவியின் வேறுபாட்டுக்குக் காரணம் பிறிதோர் கடவுள் (முருகன்) என்று கட்டுவிச்சியால் அறிந்த தாயர் முதலியோருக்குத் தோழி, “இவள் ஒரு தலைவனோடு நட்புப் பூண்டாள்.  அவனை ஓர் ஆண் குரங்கும் அறியும்” என்று உண்மையைக் கூறியது.

பொருளுரை:  அரும்புகள் முற்றவும் மலர்ந்த கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் மேலே ஓங்கி வளர்ந்த பெரிய கிளைகளில் இருந்த மயில்கள், மலர்களைப் பறிக்கும் மகளிரைப் போல் தோன்றும் நாடன், தகுதியில்லாதவன் போல, கட்டுவிச்சி, “இது கடவுளால் வந்தது” என்று தீங்கானதைக் கூறினாலும், தன் கண்களால் கண்டதை “நான் காணவில்லை” என்று பொய் சொல்லாது, இனிய மாவின் கனியை உண்ணும் முள்ளைப் போன்ற பற்களையும் சிவந்த வாயினையும் உடைய, மலையில் விளையாடும் வலிய குட்டியின் தந்தையான ஆண் குரங்கு.  அந்தக் கொடியவனாகிய தலைவனை அது அறியும்.

குறிப்பு:  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மலர்ந்த வேங்கையின் மேலோங்கிய சினையிலிருந்த தோகை, பூக்கொய் மகளிரைப்போன்று தோன்றினாற்போல, தலைவன் தன் நெஞ்சத்திடத்துப் பிறிது நினைத்திருக்கும் வெளித்தோற்றத்து வேண்டியன செய்வான்போற் காணப்பட்டான் என்பதாம். உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மகளிர் இல்லாத மயில் மகளிர் போன்று தோன்றுமென்றது, நோய்க்காரணமாகாத தெய்வம் கட்டுவிச்சிக்கு நோய்க்காரணமாகத் தோன்றியது என்பது..  கருங்கால் வேங்கை (1) – உ. வே. சாமிநாதையர் உரை – கரிய அடியையுடைய வேங்கை மரம், வலிய தாளையுடைய வேங்கை மரம்.  தேன் கொக்கு – கொக்கு மாமரம் – ஈண்டு அதன் பழத்தை உணர்த்திற்று.  மகளிரின் – ஐந்தாம் வேற்றுமை உருபு, இன் உருபு ஒப்புப் பொருளது, கடுவனும் – உம்மை இழிவு சிறப்பு, அன்றே – ஏகாரம் அசை நிலை, அக்கொடியோனையே – ஏகாரம் அசை நிலை.  பறழ் – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

சொற்பொருள்:  அரும்பு அற மலர்ந்த – அரும்புகள் முற்றவும் மலர்ந்த, கருங்கால் வேங்கை – கரிய அடியையுடைய வேங்கை மரம், வலிய அடியையுடைய வேங்கை மரம், மேக்கு எழு பெருஞ்சினை இருந்த தோகை – மேலே ஓங்கி வளர்ந்த பெரிய கிளைகளில் இருந்த மயில்கள், பூக்கொய் மகளிரின் தோன்று நாடன் – மலர்களைப் பறிக்கும் மகளிரைப் போல் தோன்றும் நாடன், தகாஅன் போல – தகுதியில்லாதவன் போல, தான் – கட்டுவிச்சி, தீது மொழியினும் – கடவுளால் வந்தது என்று தீங்கானதைக் கூறினாலும், தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே – தன் கண்களால் கண்டதை நான் காணவில்லை என்று பொய் சொல்லாது, தேன் கொக்கு அருந்தும் – இனிய மாவின் கனியை உண்ணும், முள் எயிற்றுத் துவர் வாய் – முள்ளைப் போன்ற பற்களையும் சிவந்த வாயினையும் உடைய, வரையாடு வன் பறழ்த் தந்தைக் கடுவனும் அறியும் – மலையில் விளையாடும் வலிய குட்டியின் தந்தையான ஆண் குரங்கும் அறியும், அக்கொடியோனையே – அந்தக் கொடியவனாகிய தலைவனை

குறுந்தொகை 27, வெள்ளிவீதியார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம்பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என் ஐக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.  5

பாடல் பின்னணி:  பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைவி உரைத்தது.  “நான் ஆற்றியிருப்பவும் என் மாமையழகு வீணாகும்படி அதனைப் பசலை உண்டது” எனக் கூறியது.

பொருளுரை:  நல்ல ஆவின் (பசுவின்) இனிய பால், அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல், கறக்கும் கலத்திலும் விழாது, மண்ணில் வீணே சிந்தினாற்போல், தேமல் படர்ந்த என் அல்குலின் கருமை அழகை பசலை உண்டதால், அது எனக்கும் பயன்படாது, என் தலைவனுக்கும் இன்பம் செய்யாது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச்செய்யுள் வெள்ளிவீதியார் என்னும் நல்லிசைப் புலமையாட்டியார் தம் கணவனைப் பிரிந்த காலத்தே கூறியது என்றும் தம் பெயரையாதல் கணவன் பெயரையாதல் கூறின் புறமென்று அஞ்சி வாளா கூறப்பட்டு அகமாயிற்று என்றும் கூறுப.  இரா. இராகவையங்கார் உரை – இது வெள்ளிவீதியார் என்னும் நல்லிசைப் புலமை மெல்லியர் தம் தலைவன் பிரிவிடை ஆற்றாது சொல்லியது என்பது (தொல்காப்பியம், அகத்திணையியல் 54) நச்சினார்க்கினியரின் உரையால் அறியப்படுகின்றது.  இப்பாடலைக் கூறிய பின்னர்ப் பிரிவு பொறாது தம் காதலர் உள்ள ஊருக்குச் செல்லத் தலைப்பட்டனர் என்பது ஒளவையாரின் பாட்டால் (அகநானூறு 147 வரிகள் 8-10 “நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே”) அறியப்படுகின்றது.  எனக்கும் என் ஐக்கும் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – உவமையிரண்டனுள் முன்னது எதிரது;  பின்னது இறந்தது தழீஇயது.   திதலை அல்குல் (5) – தமிழண்ணல் உரை – தேமல் படர்ந்த அடிவயிற்றின் அடிப்பகுதி.  என்னைஎன்  – அன்னை என்னை என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 50).  உணீஇயர் –  செய்யியர் என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை.  கவினே –  ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  கன்றும் உண்ணாது – அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல், கலத்தினும் படாது – கறக்கும் கலத்திலும் விழாது, நல் ஆன் தீம்பால் – நல்ல ஆவின் (பசுவின்) இனிய பால், நிலத்து உக்காஅங்கு – மண்ணில் வீணே சிந்தினாற்போல், எனக்கும் ஆகாது – எனக்கும் பயன்படாது, என் ஐக்கும் உதவாது – என் தலைவனுக்கும் இன்பம் செய்யாது, பசலை உணீஇயர் வேண்டும் – பசலை தான் உண்ணுதலை விரும்பும், திதலை அல்குல் என் மாமைக் கவினே – அல்குலில் தேமல் படர்ந்த என்னுடைய கருமை அழகு

குறுந்தொகை 28, ஔவையார்பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன்! யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்,
அலமரல் அசை வளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே? 5

பாடல் பின்னணி:  தலைவன் பரிசப் பொருளுக்காகப் பிரிந்த காலத்தில் அவன் விரைந்து வராமையால் கவலையுற்ற தன் தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  சுழலை உடைய அசையும் காற்று என்னை வருத்த, என்னுடைய துன்ப நோயை அறியாமல் தூங்கும் இந்த ஊரில் உள்ளவர்களை முட்டுவேனா? தாக்குவேனா? ‘ஆ’ , ‘ஒல்’ எனக் கத்துவேனா, ஒரு காரணத்தை மேற்கொண்டு? என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரையில் பாடலின் முதல் சொல் ‘மூட்டுவேன்’ என்று உள்ளது.  உ.வே. சாமிநாத ஐயரின் உரையில் ‘முட்டுவேன்’ என்று உள்ளது.  உ. வே. சாமிநாதையர் உரை – முட்டுதல் உடம்பால் தீண்டுதல் என்றும் தாக்குதல் கோல் முதலிய கருவிகளால் தீண்டுதல் என்றும் கொள்க.  முட்டுதல் எதிர்த்தலுமாம்.  சுவர் முதலியவற்றில் முட்டிக் கொள்வேனா தாக்கிக் கொள்வேனா என்று பொருள் கூறலும் ஆம்.  ஓரேன் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – இன்னது செய்வது என்பதை அறியேன், பொ. வே. சோமசுந்தரனார் உரை – யான் யாது செய்வதென்று தெரிகில்லேன், தமிழண்ணல் உரை – தனி ஒருத்தியாகிய யான்.  ஊர்  (5) – உ. வே. சாமிநாதையர் உரை – ஊரினர், இரா. இராகவையங்கார் உரை – ஊர் என்பது செவிலி, தாய் முதலியோர்.  கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt.  அசை வளி (4) – உ. வே. சாமிநாதையர் உரை – அசைந்து வருகின்ற தென்றற் காற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் கூதிர் காலமாகலின் வளி ஈதல் வாடை.  அலமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).  ஊர்க்கே –  ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   முட்டுவேன் கொல் – முட்டுவேனா, தாக்குவேன் கொல் – தாக்குவேனா,  ஓரேன் – ஒன்றும் புரியவில்லை, யானும் – நானும், ஓர் – ஒரு, பெற்றி மேலிட்டு – ஒரு தன்மையை மேற்கொண்டு, ஒரு திறத்தால், ஒரு காரணத்தால், ஆஅ ஒல்லென –  ஆ எனவும் ஒல் எனவும், கூவுவேன் கொல் – கத்துவேனா, அலமரல் – சுழலுதல், அசை – அசையும், வளி – காற்று, அலைப்ப – வருந்த, என் – என், உயவு – துன்ப, நோயறியாது – நோயை அறியாது, துஞ்சும் ஊர்க்கே – தூங்கும் ஊரில் உள்ளவர்களை (ஊர்க்கே –  ஏகாரம் அசை நிலை)

குறுந்தொகை 29, ஔவையார்குறிஞ்சித் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
நல் உரை இகந்து, புல் உரை தாஅய்ப்
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல,
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிது அவா உற்றனை நெஞ்சே, நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு  5
மகவுடை மந்தி போல,
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.

பாடல் பின்னணி:  இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன், தலைவியுடன் கூடுவதற்கு அவாவுற்ற தன் நெஞ்சிடம் இவ்வாறு கூறுகின்றான்.

பொருளுரை:  நல்ல உரைகள் நீங்கி பயனற்ற உரைகள் பரவப்பட்டு, பெய்யும் மழை நீரை ஏற்றுக் கொண்ட  சுடப்படாத மண் கலத்தைப் போல, உள்ளத்தினால் பொறுக்க முடியாத ஆசை வெள்ளத்தில் நீந்தி, கிடைப்பதற்கு அரியதாய் உள்ளதன் மீது நீ விருப்பம் கொண்டாய் என் நெஞ்சே!  உயர்ந்த மரக்கிளையில் தன் குட்டியால் தழுவப்பெற்ற பெண் குரங்கைப் போல மனம் பொருந்த உன்னுடைய கருத்தைக் தழுவி உன் குறையை நிறைவேற்றுபவர்களை நீ பெறுவாயின்,  உன்னுடைய போராட்டம் மிகவும் நன்றாகும்.

குறிப்பு:  மகவுடை மந்தி போல அகன் உறத் தழீஇ (6-7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குட்டியை உடைய மந்தி அதனை அகனுறத் தழுவிக் கொள்ளுமாறு போல, உ. வே. சாமிநாதையர் உரை – குட்டியை உடைய பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைவது போல, இரா.  இராகவையங்கார் உரை – தன்னைத் தழுவிய மகவைத் தான் தழுவி அணைத்து ஏறும் மந்தி போல.  இரா. இராகவையங்கார் உரை –  விரைவில் வரைந்து கொண்டு கூடுவதே நல்லுரைக்குரிய செயல் என்றும் வரைந்து கொள்ள நினையாது பின்னுங் களவிற் கூடுதல் புல்லுரைக்குரியது என்றும் கருதியவாறாம்.  நற்றிணை 308 – ஈர் மண் செய்கை நீர் படு பசுங்கலம் பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு எம் பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நல்லுரை – தன் விருப்பத்திற்கு இணங்கி இரவுக்குறியில் வர உடன்படுதல், புல்லுரை – இரவுக்குறி மறுத்தல்.  பெரிதால் – பெரிது + ஆல், ஆல் = அசைச்சொல், பெறினே – ஏகாரம் அசை நிலை.  பசுங்கலம்:  ஈர் மண் செய்கை நீர்படு பசுங்கலம் பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு – நற்றிணை 308.  நீர்க்கு (2) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – ‘நீர்க்கு’ என்ற நான்காவது, ‘நீரை’ என இரண்டாவதன் பொருட் கண் வந்தது.  வேற்றுமை மயக்கம்.  என்னை? யாதன் உருபின் கூறிற்று ஆயினும் பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும் (தொல்காப்பியம், வேற்றுமை மயங்கியல் 23).

சொற்பொருள்:  நல் உரை இகந்து – நல்ல உரைகள் நீங்கி, புல் உரை – பயனற்ற உரைகள்,  தாஅய் – பரவி, பெயல் நீர்க்கு ஏற்ற  – பெய்யும் மழை நீரை ஏற்றுக் கொண்ட , பசுங்கலம் போல – சுடப்படாத மண் கலத்தைப் போல, உள்ளம் தாங்கா – உள்ளத்தினால் பொறுக்க முடியாத, வெள்ளம் நீந்தி – ஆசை வெள்ளத்தில் நீந்தி,  அரிது – கிடைப்பதற்கு அரிது, அவா உற்றனை நெஞ்சே – விருப்பம் கொண்டாய் என் நெஞ்சே,  நன்றும் பெரிதால் – மிகவும் பெருமையுடையது,  அம்ம – ஓர் அசைச் சொல்,  நின் பூசல் – உன்னுடைய போராட்டம்,  உயர் கோட்டு மகவுடை மந்தி போல – உயர்ந்த மரக்கிளையில் குட்டியையுடைய பெண் குரங்கைப் போல, அகன் உறத் தழீஇ – மனதில் உள்ளதைத் தழுவி (தழீஇ – அளபெடை), கேட்குநர்ப் பெறினே – கேட்பவர்களைப் பெறுவாயின்

குறுந்தொகை 30, கச்சிப்பேட்டு நன்னாகையார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கேட்டிசின்! வாழி தோழி! அல்கல்,
பொய்வலாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க் கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந்தனனே, குவளை
வண்டு படு மலரின் சாஅய்த் 5
தமியேன் மன்ற, அளியேன் யானே.

பாடல் பின்னணி:  தலைவன் வரை பொருளின் (திருமணப் பரிசப் பொருள்) பொருட்டுப் பிரிந்த காலத்தில் தலைவியது ஆற்றாமைக்கான காரணத்தைத் தோழி வினவ, தலைவி கூறியது.

பொருளுரை:   இதைக் கேளடி தோழி!  இரவில் பொய் சொல்லுவதில் வல்லவனான என் காதலன் என் உடலை அணைத்ததைப் போல், உண்மையாகவே தோன்றிய பொய்க் கனவு ஒன்றை நான் கண்டேன்.   தூக்க மயக்கத்தில் அவன் என்று நினைத்து மெத்தையைத் தடவினேன்.   வண்டுகள் விழுந்து உழக்கிய குவளை மலரைப் போல நான் மெலிந்து, தனிமையில் தவிக்கின்றேன்.  நான் இரங்கத்தக்கவள்!

குறிப்பு:    மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  கேட்டிசின் – சின் முன்னிலை அசை, மரீஇய – அளபெடை, கனா – கனவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது, தைவந்தனனே – ஏகாரம் அசை நிலை, மலரின் – இன் உருபு ஒப்புப் பொருளது.  சாஅய் – அளபெடை, யானே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  கேட்டிசின் – கேட்பாயாக, வாழி – அசை நிலை, தோழி – தோழி,  அல்கல் – இரவில், பொய்வலாளன் – பொய் சொல்லுவதில் வல்லவன், மெய்யுறல் மரீஇய – என் உடலை அணைத்ததுப் போல், வாய்த்தகைப் பொய்க் கனா – மெய்போலும் தன்மையுடைய பொய்க் கனவு,  மருட்ட – மயக்கத்தை உண்டாக்கிய, ஏற்றெழுந்து – தூக்கத்திலிருந்து எழுந்து, அமளி தைவந்தனனே – மெத்தையை நான் தடவினேன், குவளை வண்டு படு மலரின் – வண்டுகள் விழுந்து உழக்கிய குவளை மலரைப் போல,  சாஅய் – மெலிந்து, தமியேன் – தனிமையில் தவிக்கின்றேன், மன்ற – உறுதியாக, அளியேன் யானே – நான் இரங்கத்தக்கவள்

குறுந்தொகை 31, ஆதிமந்தியார்மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது 
மள்ளர் குழீஇய விழவினானும்,
மகளிர் தழீஇய துணங்கையானும்,
யாண்டுங் காணேன் மாண்டக்கோனை,
யானுமோர் ஆடுகள மகளே, என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த 5
பீடு கெழு குரிசலும், ஓர் ஆடுகள மகனே.

பாடல் பின்னணி:  நொதுமலர் வரைவுழித் தலைமகள் தோழிக்கு அறத்தொடு நின்றது.  அகநானூறு 336 – முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்.

பொருளுரை:   வீரர்கள் கூடி ஆடும் விழாவிலும், பெண்கள் தழுவி ஆடும் துணங்கை ஆட்டத்திலும் என் மாட்சிமையுடைய தலைவனைக் காண முடியவில்லை சங்கினை அறுத்து இயற்றிய என் வளையல்களை நெகிழச் செய்தவன் அவன்.  நான் நடனம் ஆடும் பெண்.  பெருமை மிகுந்த என் தலைவனும் நடனம் ஆடுபவன்.

குறிப்பு:   அகநானூறு 336 – முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்.  இரா. இராகவையங்கார் உரை – மகளிர் தம் ஆடவரைத் தழுவி ஆடும் இடமாதலால் மாண்டக் கோனை ஆண்டுந் தேடியது கூறினார்.  “மள்ளர் அன்ன மரவம் தழீஇ, மகளிர் அன்ன ஆடு கொடி நுடக்கும்” (ஐங்குறுநூறு 400) என உவமித்தலான் இவ்வுண்மையுணர்க.  இவர் காதலர் கெடுத்து அறிவு பிரிதாகிப் பேதுற்றுப் பன்னாட்டினும் பல்லூரினுந் தேடினாராதலின் யாண்டுங் காணேன் என்றார்.  “ஆட்டனத்தியை காணீரோ என நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி போல” (அகநானூறு 236) என்பதால் அறிக.  ஆதிமந்தி: அகநானூறு 45 – காதலர் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ, அகநானூறு 76 – கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன் வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ என ஆதிமந்தி பேதுற்று இனைய, அகநானூறு 135 – ஆதிமந்தியின் அறிவு பிறிதாகிப் பேதுற்றிசினே காதலம் தோழி, அகநானூறு 222 – ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத் தாழ் இருங்கதுப்பின் காவிரி வவ்வலின் மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதிமந்தி, அகநானூறு 236 – கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி போல, 396 – மந்தி பனி வார் கண்ணள் பல புலந்து உறைய.  சோழ மன்னன் கரிகாலனின் மகள்:  இரா. இராகவையங்கார் உரை – இது பாடிய ஆதிமந்தியார் மன்னன் கரிகாலன் மகளாதல் சிலப்பதிகாரத்தான் அறியப்பட்டது (சிலப் 21:11).  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இப்பாடல் கரிகால் மன்னன் மகளாகிய ஆதிமந்தியார் என்னும் நல்லிசை புலமையாட்டியார் தங் கணவனைக் காணாது தேடியபொழுது கூறியது என்ப.  யானும் ஓர் ஆடுகள மகளே (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இங்ஙனம் ஆண்டுஞ் சென்று தேடுதலானே யானும் கூத்தாடும் களத்திற்குரிய மகளே ஆயினேன்.

சொற்பொருள்:  மள்ளர் – வீரர்கள்,  குழீஇய – கூடிய,  விழவினானும் – விழாவிலும்,  மகளிர் – பெண்கள், தழீஇய –  தழுவிய, துணங்கையானும்  – துணங்கை ஆட்டத்திலும்,   யாண்டுங் காணேன் – எங்கும் காணவில்லை, மாண் தக்கோனை – மாட்சிமையுடைய தலைவனை, யானுமோர் ஆடுகள மகளே – நானும் ஓர் ஆடும் மகள், என்கைக் – என் கை, கோடு ஈர் இலங்கு வளை – சங்கினை அறுத்து இயற்றிய விளங்குகின்ற வளையல்களை, நெகிழ்த்த – நெகிழச்செய்த, பீடு கெழு –  பெருமையுடைய,  குரிசலும் – தலைவனும், ஓர் ஆடுகள மகனே – ஒரு ஆடும் மகன்

குறுந்தொகை 32,  அள்ளூர் நன்முல்லையார்குறிஞ்சி திணை –  தலைவன் தோழியிடம் சொன்னது

பாடல் பின்னணி:  தோழியிடம் தன்னுடைய குறையைக் கூறி அவள் உடன்படாததை அறிந்த தலைவன், அவளுடைய உதவியை விரும்பி, அவளை இரந்து நின்றான்.

காலையும், பகலும், கை அறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும் என்றி,
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்,
மா என மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே, 5
வாழ்தலும் பழியே, பிரிவுதலை வரினே.

பொருளுரை:  காலையும், பகலும், செயலற்று இருக்கும் மாலையும், ஊர் தூங்கும் நடு இரவும், விடியும் பொழுதும், ஆகிய இப்பொழுதுகள் எல்லாம் தெளிவாகத் தெரிந்தால், அத்தகையோருடைய காதல் உண்மையானது இல்லை.  பனை மடல் குதிரையில் ஏறி நான் தெருவில் சென்றால் கண்டிப்பாக இழிவான பேச்சும், பழியும் ஏற்படும்.  இந்த நிலையில், அவளிடமிருந்து பிரிந்தால், வாழ்வதும் பழி தான்.

குறிப்பு:   இப் பொழுது இடை  (3) – தமிழண்ணல் உரை – இப்பொழுதுகள் இடையே தெரியின், உ. வே. சாமிநாதையர் உரை – இச் சிறுபொழுதுகள் இடையே தோற்றுமாயின், இடை வேறுபாடுமாம், இரா. இராகவையங்கார் உரை – இப்பொழுதுகளின் செவ்வி, பொழுதும் இடமும் என்பதும் பொருந்தும்.  பொய்யே காமம் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – காமம் உண்மைக் காமம் அன்று,  தமிழண்ணல் உரை – காமம் என்பது பொய்யே, இரா. இராகவையங்கார் உரை – காமம் பொய்யே, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பொய்யாகுமோ காமம், பொய்யே என்பதில் ஏகாரம் வினா.  பொய்யே – ஏகாரம் தேற்றப்பொருளில் வந்தது, பழியே, வரினே – ஏகாரங்கள் – அசை நிலைகள்.

சொற்பொருள்:  காலையும் பகலும் – காலையும் பகலும், கை அறு மாலையும் – செயலற்று இருக்கும் மாலையும்,  ஊர் துஞ்சு யாமமும் – ஊர் உறங்கும் நடு இரவிலும்,  விடியலும் – விடியும் பொழுதும்,  என்ற இப் பொழுது இடை தெரியின் – என்ற இப்பொழுதுகள் இடையே தெளிவாகத் தெரிந்தால், என்ற இடையில் உள்ள பொழுதிலும் தெளிவாகத் தெரிந்தால், என்ற இப்பொழுதும் இடமும் தெரிந்தால், பொய்யே காமம் – காதல் உண்மையானது இல்லை,  மா என மடலோடு – குதிரையின் மடலுடன்,  மறுகில் தோன்றி –  தெருவில் தோன்றி, தெற்றென – தெளிவாக,  தூற்றலும் – வம்புப் பேச்சும்,  பழியே –  பழியே,  வாழ்தலும் பழியே – வாழ்வதும் பழி தான்,  பிரிவுதலை வரினே – நான் அவளிடமிருந்து பிரிந்தால்

குறுந்தொகை 33, படுமரத்து மோசிகீரனார்மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னதுவாயிலாக புக்க பாணன் கேட்ப
அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன்,
தன் ஊர் மன்றத்து என்னன் கொல்லோ?
இரந்து ஊண் நிரம்பா மேனியொடு,
விருந்தின் ஊரும் பெருஞ்செம்மலனே.

பாடல் பின்னணி:  வாயிலாக புக்க பாணன் கேட்பத் தோழியிடம் தலைவி வாயில் நேர்வாள் கூறியது (வாயில் – தூது, வாயில் நேர்வாள் – தூதிற்கு உடன்படுவாளாகி).  இவன்  இங்கும் விருந்தைப் பெறுவான் என்று குறிப்பால் உணர்த்துகின்றாள்.

பொருளுரை:  தோழி!  இப்பாணன் ஒரு இளைய மாணவன்.  தன்னுடைய ஊரில் உள்ள மன்றத்தில் எத்தகைய சிறப்புடையவனோ?  இரந்து உண்ணும் உணவினால் முற்றும் வளராத உடலுடன் இருந்தாலும், புதிதாகப் பெறும் விருந்தின்பொருட்டுச் செல்லும் பெரும் தலைமையுடையவன்.

குறிப்பு:  புலவரின் பெயர் படுமாத்து மோசிகீரனார் என்றும் சில உரை நூல்களில் உள்ளது.  இரா. இராகவையங்கார் உரை – படுமாத்தூர் என்பது சேது நாட்டுச் சிவகங்கையைச் சார்ந்துள்ள ஊர்.  அன்னாய் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தோழியைத் தலைவி அன்னாய் என்றல் மரபு.  அன்னை என்னை என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 52).   தன் ஊர் மன்றத்து என்னன் கொல்லோ (2) – உ. வே. சாமிநாதையர் உரை – தன் ஊரில் தான் தங்கும் மன்றத்தில் இன்னும் சிறந்த வன்மையுடையவன் போலும்! என்னும் கருத்தால் என்னன் கொல்லோ என்றாள்,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவன் தன் ஊர் மன்றத்தே எத்தகைய சிறப்புடையனோ?  இரா. இராகவையங்கார் உரை – தான் பிறந்தவூரிலுள்ள அவைக்கண் ஏறிய காலத்து எத்தகையன் ஆவனோ?  பெருஞ்செம்மலனே (4) – உ. வே. சாமிநாதையர் உரை – பெரிய தலைமையுடையவன்,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய தலைமையுடையவனாக விளங்குகின்றான், இரா. இராகவையங்கார் உரை – முதுகாலத்து இவன் தலைமையுடையவன் ஆவன்.  விருந்தின் ஊரும் (4) – உ. வே. சாமிநாதையர் உரை விருந்தின்பொருட்டு செல்லும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – புதிதாகிய இவ்வூரிடத்தும், இரா. இராகவையங்கார் உரை – விருந்தோடு யானை, பரி, தேர் இவற்றில் ஊர்ந்து செல்லும்.   கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை, விருந்தின் – இன் சாரியை, செம்மலனே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  அன்னாய் – தோழியே, இவன் ஓர் இள மாணாக்கன் – இப்பாணன் ஒரு இளைய மாணவன், தன் ஊர் மன்றத்து என்னன் கொல்லோ – தன்னுடைய ஊரில் உள்ள மன்றத்தில் எத்தகைய சிறப்புடையவனோ, இரந்து ஊண் நிரம்பா மேனியொடு – இரந்து உண்ணும் உணவினால் முற்றும் வளராத உடலுடன், விருந்தின் ஊரும் பெருஞ்செம்மலனே – விருந்தின்பொருட்டுச் செல்லும் பெரும் தலைமையுடையவன்

குறுந்தொகை 34, கொல்லிக் கண்ணனார்மருதத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர்,
தமியர் உறங்கும் கௌவையின்றாய்,
இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே,
முனாஅது யானையங்குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்  5
குட்டுவன் மரந்தை அன்ன, எம்
குழை விளங்கு ஆய் நுதல் கிழவனும் அவனே.

பாடல் பின்னணி:  தலைவனே மகட் பேசி வரைந்து கொள்ள வந்துள்ளான் என்று தோழி தலைவிக்கு அறிவுரைத்தது.

பொருளுரை:   முன்னிடத்தில் உள்ள கடற்கரையில் உள்ள யானையங்குருகின் பெரிய தொகுதியானது, பகைவரைக் கொன்ற மறவர்களின் வென்று முழங்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சுகின்ற இடமான சேரனின் மரந்தை நகரத்தைப் போன்ற பொலிவுடைய, அடர்ந்து விளங்கும் கூந்தலையும் அழகிய நெற்றியையுமுடைய உன்னை, மணம் புரிய வருகின்றான் நம் தலைவன்.  முன்பு, உன்னை விட்டு நீங்காத நம் தாயர் உன்னைக் கண்டித்தனர்.  உன் களவு ஒழுக்க நிலை அறியாது அவனுடன் மணம் தகாது என்று மறுத்துக் கூறினார்கள் உன் தந்தையும் ஐமாரும்.  தங்கள் தலைவருடன் கூடாது, தனியாக உறங்கும் வருத்தம் தங்களுக்கு இல்லாதவர்களாய், இவ்வூரார், அவன் உன்னை வரைந்துக் கொள்வான் என்ற இனிய செய்தியைக் கேட்டு, மகிழ்ச்சி அடையட்டும்.

குறிப்பு:  இப்பாடலில் உள்ள பல சொற்களுக்கு அறிஞர்களின் உரைகளில் மிகுந்த வேறுபாடு உள்ளன.  ஓவலர் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவியைவிட்டு நீங்காத செவிலி, நற்றாய் முதலியோர்.  மறுப்ப (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தோழியர் பல காரணங்கள் கூறி இங்ஙனம் வருந்துதல் தகாதென்று மறுத்துக் கூறவும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – களவில் கூடியது தேறாத தந்தை முதலியோர் தலைவர்க்கு மணம் மறுக்கவும்.  முன்னர் மறுத்துப் பின்னர்த் தலைவனுடைய தகுதி கண்டு உடன்பட்டனர் என்க.  தமியர்இவ்வூரார் (2, 4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தமியர் என்றும் இவ்வூரார் என்றும் படர்க்கைப் பலர்பாலிற் கூறினாளேனும், ஈண்டு அது தலைவியைச் சுற்றியே பேசப்பட்டது என்க.  மரந்தை (6) – மாந்தை என்று சில உரைகளில் காணப்படுகின்றது.  குழை விளங்கு ஆய் நுதல் ஆய் நுதல் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூந்தல் புரண்டு விளங்காநின்ற பலரும் ஆராய்ந்து நன்றென்றற்குக் காரணமான நெற்றியுடையாள், உ. வே. சாமிநாதையர் உரை – பனிச்சை விளங்குகின்ற அழகிய நெற்றி, தமிழண்ணல் உரை – கூந்தல் அடர்ந்து விளங்கும் அழகிய நெற்றி, இரா. இராகவையங்கார் உரை – குழலை அடுத்து விளங்கும் நுணுகிய நுதலையுடையவள்.  வரலாறு:  குட்டுவன், மரந்தை.  இவ்வூரே – ஏகாரம் அசை நிலை, அம் – சாரியை, வெரூஉம் – அளபெடை, முனாஅது – அளபெடை, ஆய் நுதல் – அன்மொழித்தொகை.

சொற்பொருள்:   ஒறுப்ப ஓவலர் – நீங்காத தாயர் கண்டிக்க, மறுப்ப தேறலர் – களவு ஒழுக்கத்தை அறியாதவர்களாக தந்தையும் ஐமாரும் திருமணத்தை மறுக்க,  தமியர் உறங்கும் கௌவை இன்றாய் – தங்கள் தலைவர்களுடன் இல்லாது தனியாக உறங்குபவர்கள் துன்பம் இல்லாமல், இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே – இனிய திருமணச் செய்தியைக் கேட்டு இவ்வூரார் இன்புறுக, முனாஅது – முன்னால் உள்ளது, யானையங்குருகின் கானல் அம் பெருந்தோடு – கடற்கரையில் உள்ள யானையங்குருகின் பெரிய தொகுதியானது, அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம் – பகைவரைக் கொன்ற மறவர்களின் வென்று முழங்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சும், குட்டுவன் மரந்தை அன்ன – சேரனின் மரந்தை நகரத்தைப் போன்று, எம் குழை விளங்கு ஆய் நுதல் கிழவனும் அவனே – எம்முடைய கூந்தல் அடர்ந்து விளங்கும் அழகிய நெற்றி உடைய உனக்கு உரிமையுடையவனும் அவனே

குறுந்தொகை 35, கழார்க்கீரன் எயிற்றியார்மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நாண் இல மன்ற எம் கண்ணே, நாள் நேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன் முதிர்ப்பு அன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ
நுண் உறை அழி துளி தலைஇய
தண்வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே.  5

பாடல் பின்னணி:  தலைவனின் பிரிவால் மெலிவுற்று தோழி அழுதாளாக, “நீ அழுதது ஏன்” என வினவிய தோழியிடம், தன் ஆற்றாமைக்குக் காரணம் கூறியது.

பொருளுரை:   தலைவர் பிரியுங்கால் உடன்பட்டு, கர்ப்பத்தையுடைய பச்சைப் பாம்பினது கருவின் முதிர்வு போன்ற திரண்ட கரும்பின் குவிந்த அரும்பு மலரும்படி, நுண்ணிதாகத் தூவுகின்ற துளி பொருந்திய குளிர்ச்சியுடன் வரும் வாடைக்காற்றை உடைய கூதிர்க்காலத்திலும், பிரிந்து உறையும் தலைவர் பொருட்டு அழுதலாலே, எம்முடைய கண்கள் உறுதியாக நாணம் இல்லாதன.

குறிப்பு:   நாள் நேர்பு (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாள் நேர்தலாவது, போர் முதலியன குறித்துப் பிரியும் தலைவன் யான் இன்ன காலத்தே மீண்டும் வருவன்.  அது காலும் ஆற்றியிரு என்று தேற்றுங்கால் அதற்கு உடன்பட்டிருத்தல்.  அழி துளி (4) – உ. வே. சாமிநாதையர் உரை – அழிந்த துளி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழிந்து விழும் துளி, இரா. இராகவையங்கார் உரை – பெருந்துளி.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  இல – இல்லை என்பதன் விகாரம், மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், பிரிந்திசினோர் – இசின் படர்க்கையின்கண் வந்ததோர் இடைச்சொல், தலைஇய – அளபெடை, அழலே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:   நாண் இல – நாணம் இல்லை, மன்ற – உறுதியாக, எம் கண்ணே – என் கண்கள், நாள் நேர்பு – தலைவர் பிரியுங்கால் உடன்பட்டு, சினைப்பசும் பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன – கர்ப்பத்தையுடைய பச்சைப் பாம்பினது கருவின் முதிர்வு போன்ற, கனைத்த கரும்பின் – திரண்ட கரும்பின், கூம்பு பொதி அவிழ – குவிந்த அரும்பு மலரும்படி, நுண் உறை அழி துளி தலைஇய தண்வரல் வாடையும் – நுண்ணிதாகத் தூவுகின்ற துளி பொருந்திய குளிர்ச்சியுடன் வரும் வாடைக்காற்றை உடைய கூதிர்க்காலத்திலும், பிரிந்திசினோர்க்கு அழலே – பிரிந்து உறையும் தலைவர் பொருட்டு அழுதலாலே

குறுந்தொகை 36, பரணர்குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
துறுகல் அயலது மாணை மாக்கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்,
நெஞ்சு களன் ஆக நீயலென் யானென
நற்றோள் மணந்த ஞான்றை மற்று அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது,  5
நோயோ தோழி நின்வயினானே.

பாடல் பின்னணி:  தலைவன் வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள் எனக் கவன்ற தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:   உருண்டைக் கல்லின் அருகில் உள்ள மாணை என்னும் பெரிய கொடியானது, துயில்கின்ற யானை மீது படரும் மலை நாடன், உன் நெஞ்சு இடமாக இருந்து “நான் பிரியமாட்டேன்” என்று எனது நல்ல தோள்களை அணைத்த பொழுது அவன் கெடாத உறுதிமொழிகளை உரைத்தது, வருந்துவதற்கு காரணமாகுமோ தோழி உன்திறத்து? ஆகாது!

குறிப்பு:   தமிழண்ணல் உரை – மாணைக்கொடி யானை உறக்கம் கலைந்து எழுந்ததும் சிதைவுபடும்.  தலைவனின் சூளுரையை நம்பியதால் தலைவியின் நிலைமை மாணைக்கொடியின் நிலைமையைப் போன்றது, உ. வே. சாமிநாதையர் உரை – துஞ்சுகின்ற அளவும் துறுகல் என்று தோன்றும் யானையின் மேல் படர்ந்து, துயில் நீங்கி அது சென்ற இடத்துப் பற்றுக்கோடின்றி இருத்தலைப் போல தலைவன் தோள் மணந்து உடன் இருந்த அளவும் கெடாதாக இருந்த வஞ்சினத்தை மெய்யாகக் கருதி மகிழ்ந்த யான் அவன் பிரிய வருந்துவேனாயின்.  பாறையும் யானையும்:  அகநானூறு 57 –  இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும், அகநானூறு 178 – பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 –  பிடி மடிந்தன்ன குறுந்தொகை 13 – மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல், குறுந்தொகை 36 – துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும், குறுந்தொகை 111 – கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், குறுந்தொகை 279 – மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும், கலித்தொகை 108 – பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 – புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம்.  நெஞ்சு களன் ஆக (3) – உ. வே. சாமிநாதையர் உரை – நின் நெஞ்சு இடமாக இருந்து, இரா. இராகவையங்கார் உரை – தன் நெஞ்சு சான்றாக, தன் நெஞ்சே அறியும் அவைக்களனாக.  நோயோ (6) – உ. வே. சாமிநாதையர் உரை – ஓகாரம் எதிர்மறைப் பொருளது, நினக்கு நோயாதற்குக் காரணமில்லை என்றபடி.  களன் – களம் என்பதன் போலி, ஞான்றை – ஐ சாரியை, வயினானே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:   துறுகல் அயலது மாணை மாக்கொடி – உருண்டைக் கல்லின் அருகில் உள்ள மாணை என்னும் பெரிய கொடி, துஞ்சு களிறு இவரும் – துயில்கின்ற யானை மீது படரும், குன்ற நாடன் – மலை நாடன், நெஞ்சு களன் ஆக – உன் நெஞ்சில் இருந்து, நீயலென் யானென – நான் பிரியமாட்டேன் என்று, நற்றோள் மணந்த ஞான்றை – எனது நல்ல தோள்களை அணைத்த பொழுது, மற்று அவன் தாவா வஞ்சினம் உரைத்தது – அவன் கெடாத உறுதிமொழிகளை உரைத்தது, நோயோ – வருந்துவதற்கு காரணமாகுமோ, தோழி – தோழி, நின்வயினானே – உன்திறத்து

குறுந்தொகை 37, சேர மன்னன் பாலைபாடிய பெருங்கடுங்கோபாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நசை பெரிது உடையர், நல்கலும் நல்குவர்,
பிடி பசி களைஇய பெருங்கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி, அவர் சென்ற ஆறே.

பாடல் பின்னணி:  தலைவனது பிரிவால் வருந்தும் தலைவியிடம் தோழி கூறியது.

பொருளுரை:   தோழி! அவர் சென்ற வழியில், தன்னுடைய பெண் யானையின் பசியை நீக்க, பெரிய தும்பிக்கையையுடைய ஆண் யானை, மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரித்து தன்னுடைய அன்பைப் புலப்படுத்தும். உன் மீது மிகவும் விருப்பமுடையவர் தலைவர். நல்குதலையும் செய்வார்.

குறிப்பு:   குறுந்தொகை 37 – பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும், குறுந்தொகை 232 – உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல், குறுந்தொகை 255 – யாஅத்துப் பொரி அரை முழு முதல் உருவக் குத்தி மறங்கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச் சிறுகண் பெருநிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை, அகநானூறு 335 – யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை யாஅத்து, மலைபடுகடாம் 429 – உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்.  இறைச்சி:  தமிழண்ணல் உரை – ஆண் யானை பிடியின் பசியை நீக்கும் காட்சி தலைவனது விருப்பத்தைத் தூண்டி, அவனை விரைவில் திரும்ப வைக்கும் எனும் இது இறைச்சி எனப்படும்.  களைஇய – அளபெடை, ஆறே – ஏகாரம் அசைநிலை, யாஅம் – அளபெடை.

சொற்பொருள்:   நசை பெரிது உடையர் – தலைவர் மிகவும் விருப்பமுடையவர், நல்கலும் நல்குவர்- நல்குதலையும் செய்வார், பிடி பசி களைஇய – தன்னுடைய பெண் யானையின் பசியை நீக்க, பெருங்கை வேழம் – பெரிய தும்பிக்கையையுடைய ஆண் யானை, மென் சினை யாஅம் பொளிக்கும் – மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரிக்கும், அன்பின- அன்பைப் புலப்படுத்தும் இடமாக உள்ள, தோழி – தோழி, அவர் சென்ற ஆறே – அவர் சென்ற வழியில்

குறுந்தொகை 38, கபிலர்குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்று மன், வாழி தோழி! உண்கண்
நீரொடு ஒராங்குத் தணப்ப 5
உள்ளாது, ஆற்றல் வல்லுவோர்க்கே.

பாடல் பின்னணி வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழியிடம் கூறியது.

பொருளுரை:  தோழி!   காட்டு மயில்கள் பாறையில் இட்ட முட்டைகளை, கருங்குரங்கின் குட்டிகள் வெயிலில் உருட்டி விளையாடும் நாடவனின் நட்பு  எனக்கு மிகவும் நல்லது.  ஆனால்,  அவன் பிரிந்தால் மை இடப்பட்ட என் கண்களில் நீர் பெருகுகின்றது.  அப்பிரிவைப் பற்றி வருந்தாமல் இருக்கும் ஆற்றல் மனதில் வலிமை உள்ளவர்களுக்கு மட்டுமே இருக்கும்.  எனக்கு அது இல்லை.

குறிப்பு:  வெயில் – வெய்யில் என்பதன் விகாரம், மன் மிகுதியை உணர்த்தியது, வாழி – முன்னிலை அசை வல்லுவோர்க்கே: ஏகாரம் – பிரிநிலை, மன் மிகுதியை உணர்த்தியது, மன் ஒழியிசைப் பொருளில் வந்ததாகக் கொண்டால் ‘யான் அதைப் பெற்றிலேன்’ என வரும்.  தமிழண்ணல் உரை – மயில் போட்டுவிட்டுப் போன முட்டையை விளையாடும் குரங்குக் குட்டி உருட்டுகின்றது, தலைவன் பிரிவால் வருந்தும் தலைவியை ஊரார் பேசும் அலர் மேலும் துன்புறுத்துவதை இது குறிக்கின்றது.  இரா. இராகவையங்கார் உரை – குருளை விளையாட்டில் முட்டையுள் குஞ்சுக்கு இடர் செய்வது போலத் தன் வினோதத்து நீளுதலான் வரையாது நம்மை இடர் செய்பவன் என்பதாம்.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மனையகத்து வைக்கப்படாமையின் மறைவிடத்திராத மயிலின் முட்டையை ஈனும் பொழுது உளதாம் துயரத்தை அறியாத முசுக்குருளை ஈன்ற மயிலின் வருத்தத்தையும் எடுத்த முட்டையின் மென்மையையும் எண்ணாது உருட்டுகிறாற்போல காதலர் கருத்தில் வைக்கப்படாத எனது காமத்தை நீ உற்று உணராமையான் என் வருத்தத்தையையும் காமத்தையும் மென்மையையும் கருதாது நீ இவ்வாறு உரைக்கின்றனை என்பதாம்.  நன்று மன் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – மிக நல்லது, நன்று பெரிதுமாம், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – நன்று பெரியது, மன் கழிவின்கண் வந்தது.  நன்று பெரிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 45).  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  வல்லுவோர்க்கே (6) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – உகரம் சாரியை, ஈற்று மிசை ஆ ஓ ஆயிற்று.

சொற்பொருள்:  கான மஞ்ஞை – காட்டு மயில்கள், அறை ஈன் – பாறையில் ஈன்ற,  முட்டை – முட்டைகளை,  வெயிலாடு – வெயிலில் விளையாடும், முசுவின் குருளை – கருங்குரங்கின் குட்டி, உருட்டும் – உருட்டும், குன்ற நாடன் – மலை நாடனின், கேண்மை என்றும் – நட்பு என்றும், நன்று மன் – மிகவும் நல்லது (மன் மிகுதியை உணர்த்தியது), வாழி – அசை நிலை, தோழி – தோழி,  உண்கண் – மை உண்ட கண்கள், நீரொடு – நீருடன்,  ஒராங்கு – ஒரு படியாக உள்ளது,  தணப்ப – அவன் பிரிய,  உள்ளாது – நினைக்காது, ஆற்றல் – (இருக்கும்) ஆற்றல்,  வல்லுவோர்க்கே – வலிமை உடையர்வளுக்கு மட்டும் தான் இருக்கும் (எனக்கு அது இல்லை)

குறுந்தொகை 39, ஔவையார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வெந்திறல் கடு வளி பொங்கர் போந்தென
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்ப, நம்
முலை இடை முனிநர் சென்ற ஆறே.

பாடல் பின்னணி பிரிவிடை ஆற்றல் வேண்டும் என்ற தோழியிடம் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைவி கூறியது.

பொருளுரை:   வெப்பமுடைய வலிமையான காற்று பொங்கி வந்ததால் நெற்றாக விளைந்த வாகை மரத்தின் முற்றிய வற்றல் ஒலிக்கும் இடமாகிய மலைகளையுடைய கடத்தற்கரிய பாலை நிலம் என்பார்கள், என் முலைஇடத்து துயிலுதலை வெறுத்துப் பொருள் ஈட்டச் சென்ற தலைவர் போன வழி.

குறிப்பு:  ஆறே – ஏகாரம் அசைநிலை.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலையுடை அருஞ்சுரம் என்பதால் இது குறிஞ்சி திரிந்த பாலை நிலம் என்க.

சொற்பொருள்:  வெந்திறல் கடு வளி பொங்கர் போந்தென – வெப்பமுடைய வலிமையான காற்று பொங்கி வந்ததால், நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் – நெற்றாக விளைந்த வாகை மரத்தின் முற்றிய வற்றல் ஒலிக்கும், மலையுடை அருஞ்சுரம் என்ப – மலைகளையுடைய கடத்தற்கரிய பாலை நிலம் என்பார்கள், நம் முலை இடை முனிநர் சென்ற ஆறே – என் முலைஇடத்து துயிலுதலை வெறுத்துப் பொருள் ஈட்டச் சென்ற தலைவர் போன வழி

குறுந்தொகை 40, செம்புலப் பெயனீரார்குறிஞ்சித் திணை  – தலைவன் தலைவியிடம் சொன்னது 
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. 5

பாடல் பின்னணி இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர், பிரிவரெனக் கருதி அஞ்சிய தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் கூறியது.

பொருளுரை:  என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் எந்த விதத்தில் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர்?  என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் எந்த முறையில் உறவினர்கள்?  நானும் நீயும் எவ்வாறு ஒருவரை ஒருவர் முன்பு அறிந்திருந்தோம்?  மழை நீர் செம்மண் நிலத்தில் விழுந்து கலந்தது போல் நம்முடைய அன்பான நெஞ்சங்கள் தாமாகவே ஒன்றுபட்டுள்ளன.

குறிப்பு:  ஏகாரமும் ஓகாரமும் அசை நிலைகள்.  இரா. இராகவையங்கார் உரை – பெயல் மேலே வானத்தும் செம்புலம் கீழே தரையினும் வேறு வேறு இடங்களில் வேறு வேறாகவுளவேனும் இவை தாமாக இயைந்து ஒரே செந்நீர் ஆயினாற்போல வேறு வேறிடத்து ஒருவர்க்கொருவர் உறவில்லாது வேறுபட்டிருந்தும் தம் நெஞ்சங்கள் தாமாகக் கலந்து அன்பால் ஒன்றாயின என்பதாம்.  உ. வே. சாமிநாதையர் உரை – யாய், ஞாய், தாய் என்னும் மூன்றும் முறையே என் தாய், நின் தாய், அவர் தாயென மூவிடத்தோடும் ஒட்டி வருவன.  இம்மூன்றிடத்தும் ஒட்டப்பட்ட பெயர்கள் ஆறாம் வேற்றுமை முறையைக் குறித்து மேற் சொல்லியவாற்றான் தந்தை, நுந்தை, எந்தை எனவும், யாய், ஞாய், தாய் எனவும், தம்முன், நும்முன், எம்முன் எனவும், தம்பி, நும்பி, எம்பி எனவும் முதல்வனையும் ஈன்றாளையும் முன்பிறந்தானையும் பின்பிறந்தானையும் உணர்த்தும் பன்மைச் சொற்கள் (தொல்காப்பியம், எச்சவியல் 14) என்று தெய்வச்சிலையார் எழுதிய அரிய உரைப்பகுதியால் இது புலப்படும்.  அறிதும் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – எதிர்காலம் இறந்தகாலப் பொருளில் வந்தது,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – எவ்வாறு அறிந்துள்ளோம்.

சொற்பொருள்:  யாயும் – என்னுடைய தாயும், ஞாயும் – உன்னுடைய தாயும், யார் ஆகியரோ – ஒருவரை ஒருவர் அறிந்திருந்தார்களா, எந்தையும்- என்னுடைய தந்தையும், நுந்தையும் – உன்னுடைய தந்தையும், எம்முறை – எந்த முறையில், கேளிர்- உறவினர்கள், யானும் நீயும் – நானும் நீயும், எவ்வழி – எவ்வாறு, அறிதும் – ஒருவரையொருவர் முன்பு அறிந்து கொண்டோம், செம்புலப் பெயல் நீர் போல – செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல, அன்புடை நெஞ்சம்  – அன்பான நெஞ்சங்கள், தாம் – தாமாகவே, கலந்தனவே – கலந்துகொண்டனவே

குறுந்தொகை 41, அணிலாடு முன்றிலார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
காதலர் உழையராகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற,
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலம்பு இல் போலப் புல்லென்று 5
அலப்பென் தோழி, அவர் அகன்ற ஞான்றே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்தகாலத்தில் தன்னுடைய பொலிவு இழந்த மேனியைக் கண்டு கவலையுற்ற தோழியிடம், “தலைவன் என்னுடன் இருப்பின், நான் மகிழ்வுற்று விளங்குவேன்.  பிரிவின், பொலிவு இழந்தவள் ஆவேன்” என்று தலைவி கூறியது.

பொருளுரை:  என் காதலர் என்னுடன் இருந்தால் விழாக் கொண்ட ஊரினர் மகிழ்வதைப் போல் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் தோழி.  அவர் என்னைப் பிரிந்த காலத்தில், பாலை நிலத்தில் பொருந்திய அழகிய குடிகளை உடைய சிறு ஊரில், மனிதர்கள் நீங்கிச் சென்ற, அணில்கள் முன் முற்றத்தில் விளையாடும் தனிமையான வீட்டைப் போல, பொலிவு இழந்து வருந்துவேன்.

குறிப்பு:  ஊரின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஞான்றே: ஏகாரம் அசை நிலை.  நற்றிணை – 153 – வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே, கலித்தொகை 23 – நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:   காதலர் – காதலர்,  உழையர் ஆக – அவர் அருகில் இருந்தால், அவர் உடன் இருந்தால்,  பெரிது உவந்து – மிகவும் மகிழ்ச்சி அடைந்து,  சாறு கொள் ஊரின் – விழாவுடைய ஊரைப் போன்று, புகல்வேன் – மகிழ்வேன், மன்ற – உறுதியாக, அத்த – பாலை நிலத்தின்,  நண்ணிய – பொருந்திய, அம் – அழகிய,  குடிச் சீறூர் – குடிகளை உடைய சிறிய ஊர்,  மக்கள் போகிய – மக்கள் அகன்ற,   அணில் ஆடு – அணில் விளையாடும்,  முன்றில் – இல் முன், வீட்டு முற்றம்,  புலம்பு இல் போல – தனிமையான இல்லம் போல்,  புல்லென்று – பொலிவின்றி,   அலப்பென் – நான் வருந்துவேன்,  தோழி – தோழி,  அவர் – அவர்,  அகன்ற ஞான்றே – பிரிந்து சென்ற பொழுது

குறுந்தொகை 42, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத்து இயம்பும் நாட! எம்
தொடர்பும் தேயுமோ நின்வயினானே?

பாடல் பின்னணி:  இரவில் வந்து தலைவியுடன் பழக வேண்டும் என்று விரும்பிய தலைவனை குறிப்பால் தோழி மறுத்தது.

பொருளுரை:  நடு இரவில் மின்னல் இடியுடன் பொழியும் பெருமழை பெய்ததால், நீர் பெருகி அதனால் பின்னாலும் அருவியாக மலை இடுக்குகளில் ஒலிக்கும் மலை நாடனே! காமம் நீங்குவதாக ஆயினும் இவள் உன்னிடம் கொண்ட தொடர்பு  அழியுமா?  அழியாது.

குறிப்பு:  தேயுமோ – ஓகாரம் எதிர்மறை, நின்வயினானே – ஏகாரம் அசை நிலை.  காமம் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – இங்கே மெய்யுறு புணர்ச்சி,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டு மெய்யுறு புணர்ச்சியை.  கருவி மா மழை (2) – மின்னல் இடி தொகுதிகளையுடைய பெரிய மழை, இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய கரிய முகில்கள்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாவரும் உறங்கும் இடையிரவிலே மழை பெய்ததாயினும் அதனாற் பெருகிய அருவி, மழை உண்டென்று அறியாதாரையும் அறியக் காட்டி வழிநாள் முழைஞ்சுகளிலே முழங்கினாற் போன்று, நீ இரவின்கண் யாருமறியாது இவளைக் கூடி பிரிவாய் ஆகினும் அதனால் உண்டாக்கிய வேறுபாடு வழிநாள் பலரும் அறியத் தூற்றும் என்னும் உள்ளுறை கருதி ‘யாமத்துக் கருவி மாமழை வீழ்ந்தென அருவி விடரகத்து இயம்பும் நாட’ என்றாள்.

சொற்பொருள்:  காமம் ஒழிவது ஆயினும் – காமம் நீங்கியதாகினும், யாமத்து – நடு இரவில்,  கருவி – மின்னல் இடியுடன் மிகுதியாக,  மாமழை வீழ்ந்தென அருவி – மாமழைப் பெய்ததால் அருவி,  விடரகத்து இயம்பும் நாட – மலை இடுக்குகளில் ஒலிக்கும் நாடனே, எம் – எம்முடைய,  தொடர்பும் தேயுமோ – தொடர்பும் குறையுமோ,  நின்வயினானே – உன்னிடத்தில்

குறுந்தொகை 43, ஔவையார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே,
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே,
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல்
நல் அராக் கதுவியாங்கு, என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.  5

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவி, தோழியிடம் உரைத்தது.

பொருளுரை:  தலைவர் செல்ல மாட்டார் என்று எண்ணி அவர் செலவை அழுங்காமல் சோர்ந்திருந்தேன் நான்.  பிரிவை உணர்த்தினால் இவள் உடன்பட மாட்டாள் என்று எண்ணி பிரிவு உணர்த்தலில் சோர்ந்திருந்தார் அவர்.  அவ்வழி, இருவரிடமும் உள்ள மனவலிகள் செய்த போரினால், நல்ல பாம்பு கடித்தாற்போல் வருந்துகின்ற என் நெஞ்சம் மேலும் சுழலுகின்றது.

குறிப்பு:  இகழ்ந்தனனே, இகழ்ந்தனரே, அலமலக்குறுமே – ஏகாரம் அசைநிலைகள்.

சொற்பொருள்:  செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே – தலைவர் செல்வார் செல்ல மாட்டார் என்று எண்ணி செலவு அழுங்காமல் சோர்ந்திருந்தேன், ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே – பிரிவை உணர்த்தினால் இவள் உடன்பட மாட்டாள் என்று எண்ணி அவர் பிரிவு உணர்த்தலில் சோர்ந்திருந்தார், ஆயிடை – அவ்வழி, இரு பேர் ஆண்மை செய்த பூசல் – இருவரிடமும் உள்ள ஆண்மைகள் செய்த போரினால் (ஆண்மை – ஆளுந்தன்மை), நல் அராக் கதுவியாங்கு – நல்ல பாம்பு கடித்தாற்போல், என் அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே – வருந்தும் என் நெஞ்சம் மேலும் சுழலுகின்றது

குறுந்தொகை 44, வெள்ளிவீதியார்பாலைத் திணை –  செவிலித் தாய் சொன்னது
காலே பரி தப்பினவே, கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே,
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ்வுலகத்துப் பிறரே.

பாடல் பின்னணி:  தலைவி தலைவனுடன் உடன்போக்கில் சென்ற பின்னர், அவர்களைப் பாலை நிலத்தில் தேடிச் சென்ற செவிலி கூறுகின்றாள்.

பொருளுரை:  என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன.  என் கண்கள் பிறரைப் பார்த்துப் பார்த்து ஒளியை இழந்து விட்டன.  உறுதியாக, இந்த உலகத்தில்,  அகண்ட இருண்ட  வானத்தின் விண்மீன்களை விட அதிகப் பேர் உள்ளனர் (தலைவனும் தலைவியும் அல்லாத பிறர்).

குறிப்பு: பலரே: ஏகாரம் தேற்றப்பொருளில் வந்தது, ஏனை ஏகாரங்கள்: அசை நிலை.  இரா. இராகவையங்கார் உரை – அகன்ற பெருவிசும்பின் மீனினும் பலர் இவ்வுலகத்துப் பிறர் ஆடவர் உள்ளனர் என்றது அம்மீன் நடுவண் விளங்கும் உவா மதியனையாரைக் காணேன் என்று குறித்ததாம்.  இதை ‘வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே’ (அகநானூறு 147) என்றபடி இவர் செலவயர்ந்துழிக் கூறிய பாட்டாகும்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  மீன் – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மின்னுவது என்னுங் காரணம்பற்றி.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71).  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).

சொற்பொருள்:  காலே பரி தப்பினவே – என் கால்கள் நடந்து நடந்து ஓய்ந்தன, கண்ணே – என் கண்கள், நோக்கி நோக்கி வாள் இழந்தனவே- பிறரைப் பார்த்துப் பார்த்து ஒளியை இழந்து விட்டன, அகல் இரு – அகண்ட இருண்ட, விசும்பின் – வானத்தின், மீனினும் பலரே – விண் மீன்களை விட அதிகம் பேர் , மன்ற – உறுதியாக,  இவ் உலகத்து பிறரே – இந்த உலகத்தில் பிறர்

குறுந்தொகை 45, ஆலங்குடி வங்கனார்மருதத் திணை – தோழி சொன்னது
காலை எழுந்து கடுந்தேர் பண்ணி
வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்லல் ஊரன் எல்லினன் பெரிதென,
மறுவரும் சிறுவன் தாயே,
தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே.  5

பாடல் பின்னணி:  தோழி வாயில் நேர்ந்தது.  தலைவன் விடுத்த தூதுவர் தலைவியின் உடன்பாட்டை வேண்டியபொழுது, தலைவி உடன்பட்டாள் என அறிந்த தோழி, இவ்வாறுக் கூறி, குறிப்பினால், தலைவியின் உடன்பாட்டைத் தெரிவித்தது.

பொருளுரை:  காலையில் எழுந்து, விரைந்து செல்லும் தேரை ஒப்பனை செய்து, தூய அணிகலன்கள் அணிந்த பரத்தையரைத் தழுவப் போகும் வளப்பமுடைய ஊரையுடைய தலைவன் மிகுந்த விளக்கத்தை உடையவன் என்று எண்ணி, மகனைப் பெற்ற தாய்மைத் தன்மையுடைய தலைவி, அவனுடைய பரத்தமைக்காக வருந்தினாலும் அவனை ஏற்றுக் கொள்வாள்.  இது அவளுடைய உயர்குடி பிறப்பினால் உள்ள நடத்தை.  உயர்குடியில் பிறத்தல் அவளுக்குத் துன்பம் தருவதேயாம்.

குறிப்பு:   மறுவரும் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – அவனை ஏற்றுக் கொள்வாளாயினும் மனம் சுழலுவாள், பொ. வே. சோமசுந்தரனார் உரை –  மனம் சுழலுவாள் ஆயினும் அவனை ஏற்றுக் கொள்வாளாயினள்.  தெறுவது அம்ம (5) – உ. வே. சாமிநாதையர் உரை – ‘தெறுவது அம்ம’ என்று தோழி கூறியமையால் அவனை ஏற்றுக் கோடல் தகாதென்பது அவள் கருத்தாதல் விளங்கும்.  பரிபாடல் 20 – சேக்கை இனியார் பால் செல்வான் மனையாளால் காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ? கூடா; தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார் இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்.  கலித்தொகை 11 – மாய மகிழ்நன் பரத்தைமை நோவென் தோழி, கடன் நமக்கு எனவே.  தழீஇய – அளபெடை, அம்ம – அசை நிலை, தாயே – ஏகாரம் அசைநிலை, பிறத்தல்லே – லகர ஒற்று செய்யுளோசை நோக்கி விரிக்கும்வழி விரிந்தது, ஏகாரம் அசைநிலை.  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).

சொற்பொருள்:  காலை எழுந்து – காலையில் எழுந்து, கடுந்தேர் பண்ணி – விரைந்து செல்லும் தேரை ஒப்பனை செய்து, வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற – தூய அணிகலன்கள் அணிந்த பரத்தையரைத் தழுவப் போன, மல்லல் ஊரன் எல்லினன் பெரிதென – வளப்பமுடைய ஊரையுடைய தலைவன் மிகுந்த விளக்கத்துடன் காணப்பட்டான் என, மறுவரும் சிறுவன் தாயே – மகனைப் பெற்ற தாய்மைத் தன்மையுடைய தலைவி வருந்துவாள், தெறுவது – துன்பம் தருவது, அம்ம – அசைநிலை, இத் திணைப் பிறத்தல்லே – இக்குடியில் பிறந்தது

குறுந்தொகை 46, மாமலாடனார்மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து
எருவின் நுண் தாது குடைவன ஆடி,
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும் 5
புன்கண் மாலையும் புலம்பும்
இன்று கொல் தோழி, அவர் சென்ற நாட்டே?

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றமாட்டாள் என்று வருத்திய தோழியிடம் ‘என்னுடைய பிரிவினால் தலைவர் துன்புறுவார்’.  ஆதலின் விரைந்து வருவார் எனத் தலைவி கூறியது.

பொருளுரை:  ஆம்பல் மலரின் காய்ந்த இதழ்களை ஒத்த குவிந்த சிறகுகளையுடைய இல்லத்தில் தங்கும் குருவிகள், முற்றத்தில்காயப்போட்ட உணவுப் பொருட்களை உண்டு, பொது இடத்தில் உள்ள எருவாகிய நுண்ணிய துகளில் கிளறி விளையாடி இல்லத்தின் இறைப்பகுதியில் (மழையும் வெயிலும் படாத கூரைக்கு கீழ் உள்ள இடம்) தம் குஞ்சுகளுடன் தங்குவதற்கு காரணமான பிரிந்தவர்களுக்குத் துன்பத்தைத் தரும் மாலைக்காலமும் தனிமையும், அவர் சென்ற நாட்டில் இல்லையோ தோழி?

குறிப்பு:   எரு – சாணம்.  நற்றிணை 343 – தாது எரு மறுகின், நற்றிணை 271 – பைந்தாது எருவின் வைகு, கலித்தொகை 103 – தாது எரு மன்றத்து, கலித்தொகை 108 – தாது உக்கன்ன தாது எரு மன்றத்து, புறநானூறு 33 – தாது எரு மறுகின், புறநானூறு 215 – தாது எரு மறுகின், புறநானூறு 311 – தாது எரு மறுகின்.  இறைச்சி – தமிழண்ணல் உரை – ஊர்க்குருவி பற்றிய காட்சி இறைச்சி எனப்படும்.  கருப்பொருளின் ‘வாழ்வை’ உரிப்பொருள் போலச் சுட்டும் இது.  வருந்திய காலத்தில் வற்புறுத்தப் பயன்படுகிறது.  சிறகர் – சிறகு என்பதன் போலி, குரீஇ – இயற்கை அளபெடை, கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், நாட்டே – ஏகாரம் அசைநிலை.  எருவின் நுண் தாது (4) – உ. வே. சாமிநாதையர் உரை – நுண்ணிய உலர்ந்த சாணத்தின் பொடி, தமிழண்ணல் உரை – நுண்ணிய சாணப்பொடி, இரா. இராகவையங்கார் உரை – நுண்ணிய பூழி (புழுதி).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன – ஆம்பல் மலரின் காய்ந்த இதழ்களை ஒத்த, கூம்பிய சிறகர் – குவிந்த சிறகுகளையுடைய, மனை உறை குரீஇ – இல்லத்தில் தங்கும் குருவிகள், முன்றில் உணங்கல் மாந்தி – முற்றத்தில்காயப்போட்ட உணவுப் பொருட்களை உண்டு (முன்றில் – இல்முன்), மன்றத்து – பொது இடத்தில் உள்ள, எருவின் நுண் தாது குடைவன ஆடி – எருவாகிய நுண்ணிய துகளில் கிளறி விளையாடி, இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும் – இல்லத்தின் இறைப்பகுதியில் (மழையும் வெயிலும் படாத கூரைக்கு கீழ் உள்ள இடம்) தம் குஞ்சுகளுடன் வதிக்கும், புன்கண் மாலையும் – பிரிந்தவர்களுக்குத் துன்பத்தைத் தரும் மாலைக்காலமும், புலம்பும் – தனிமையும், இன்று கொல் தோழி, அவர் சென்ற நாட்டே – அவர் சென்ற நாட்டில் இல்லையோ தோழி

குறுந்தொகை 47, நெடுவெண்ணிலவினார்குறிஞ்சித் திணை  – தோழி நிலாவிடம் சொன்னதுதலைவன் கேட்கும்படியாக
கருங்கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை, நெடு வெண்ணிலவே!

பாடல் பின்னணி:  தலைவன் இரவில் வந்து பழகும் காலத்தில் அவனை விரைந்து மணம் செய்யும்படி தூண்ட எண்ணிய தோழி, நிலாவிற்கு உரைப்பாளாய் ‘நீ இவ்வாறு இரவில் வருவது களவிற்கு நல்லதில்லை’ எனக் கூறி இரவுக்குறி மறுத்தது.  முன்னிலைப் புறமொழியாக கூறியது. நிலாவிற்கு உரைப்பாளாய்த் தோழி உரைத்தது (முன்னிலைப் புறமொழி – கூறப்படும் செய்தியைக் கேட்டு அறிதற்குரியவர் முன்னே இருப்பவும் அவரை விளித்துக் கூறாமல் வேறு ஒருவரையேனும் பிறிதொரு பொருளையேனும் விளித்துக் கூறுவது – தொல்காப்பியம், கற்பியல் 26, நச்சினார்க்கினியர் உரை).

பொருளுரை:  நீண்ட கதிர்களையுடைய வெண்ணிலாவே!  கரிய அடியை உடைய வேங்கை மரத்தின் (மஞ்சள் நிற) மலர்கள் பாறை மீது விழுவதால் பாறை பெரிய புலிக் குட்டியைப் போல் தோன்றும்.  அவ்வாறு காணப்படும் காட்டு வழியே இரவில் களவு ஒழுக்கத்திற்கு வரும் தலைவனுக்கு நீ நன்மை செய்யவில்லை.

குறிப்பு:  வேங்கை மலரும் புலியும் – அகநானூறு 12 – வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலி செத்து வெரீஇய புகர் முக வேழம், அகநானூறு 141 – புலிக்கேழ் உற்ற பூ இடைப் பெருஞ்சினை நரந்த நறும்பூ நாள் மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை, அகநானூறு 227 – புலிக் கேழ் வேங்கை, அகநானூறு 228 – வேங்கை ஒள் வீப் புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், நற்றிணை 389 – வேங்கையும் புலி ஈன்றன, குறுந்தொகை 47 – வேங்கை வீ உகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும், ஐங்குறுநூறு 396 – புலிப் பொறி வேங்கைப் பொன் இணர்.   இரும்புலிக் குருளையின் (2) –  உ. வே. சா. உரை – பெரிய புலிக்குட்டியைப் போன்று, இரா. இராகவையங்கார் உரை – பெரிய புலியின் குட்டியினைப் போன்று.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – வேங்கை மலர் வீழ்ந்த கற்கள் புலியின் குருளைப் போல அச்சந்தரும் என்றதனானே, வரைவு உடன்படுவாராகிய எமது தமர் வரைவுடன் படார் போல உனக்கு அச்சம் செய்கின்றனர் என்பதாம்.  குருளையின் – இன் உருபு ஒப்புப் பொருளது,

சொற்பொருள்:   கருங்கால் வேங்கை – கரிய அடியை உடைய வேங்கை மலர்கள், வீ உகு – மலர்கள் உதிர்ந்த, துறுகல் – பாறை, இரும் புலிக் குருளையின் தோன்றும் – பெரிய புலிக் குட்டியைப் போல் தோன்றும், காட்டிடை – காட்டில், எல்லி வருநர் – இரவில் வருபவர், களவிற்கு நல்லை அல்லை – களவு ஒழுக்கத்திற்கு நீ நல்லது செய்யவில்லை, நெடு வெண்ணிலவே – நீண்ட கதிர்களையுடைய வெண்ணிலாவே

குறுந்தொகை 48, பூங்கணுத்திரையார்பாலைத் திணை – தோழி சொன்னது
‘தாதின் செய்த தண் பனிப் பாவை
காலை வருந்தும், கையாறு ஓம்பு’ என
ஓரை ஆயம் கூறக் கேட்டும்,
இன்ன பண்பினினை பெரிது உழக்கும்
நன்னுதல் பசலை நீங்கவன்ன,  5
நசையாகு பண்பின் ஒரு சொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே?

பாடல் பின்னணி:  தலைவன் பகற்பொழுதில் வந்து தலைவியுடன் பழகும் காலத்தில் அவனைக் காணாது நெடுநேரம் கழிவதால் துயருற்ற தலைவியின் மேனியில் பசலை முதலிய வேறுபாடுகள் உண்டானதைக் கண்டு வருந்தித் தோழி கூறியது.

பொருளுரை:  “பூந்தாதினால் செய்த மிக்க குளிர்ந்த விளையாட்டுப் பாவை காலை வெயிலில் வருந்தும்.  அதனைக் காப்பாயாக” என்று விளையாட்டு மகளிர் சொல்லக்கேட்டும், இத்தகைய பண்புடன் பெரிதும் துன்புறும், நல்ல நெற்றியையுடைய இத்தலைவியின் பசலை நீங்கும்படி அவளுக்கு விருப்பத்தை உண்டாக்கும் ஒரு சொல்லைக் கூற, இந்நோய் தந்த காதலருக்கு இயலாதா?

குறிப்பு:  ஒப்புமை:  குறுந்தொகை 48 – தாதின் செய்த தண் பனிப் பாவை, அகநானூறு 392 – தாது செய் பாவை அன்ன.  நன்னுதல் – அன்மொழித்தொகை, கேட்டும் – உம்மை உயர்வு சிறப்பு, கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை, தமக்கே – ஏகாரம் அசைநிலை.  காதலர் தமக்கு – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – தம் சாரியை.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – காலை வருந்தும் கையாறு என்றது, காலை வெயிலிலே கிடந்து முறுகும் என்றவாறு.  அது காலை வெயிலில் கிடந்து முறுகுதலைப் பிள்ளையுறும் துன்பமாகக் கருதிக் கையாறு என்றாள்.  கையாறு ஓம்பலாவது அப்பாவையை எடுத்து அது அழுமாறு போலக் கொண்டு அவ்வழுகை தணியப் பாராட்டுதல்.

சொற்பொருள்:   தாதின் செய்த தண் பனிப் பாவை – பூந்தாதினால் செய்த மிக்க குளிர்ந்த விளையாட்டுப் பாவை, காலை வருந்தும் கையாறு ஓம்பு – காலை வெயிலில் வருந்தும் அதனைக் காப்பாயாக, என ஓரை ஆயம் கூறக் கேட்டும் – என்று விளையாட்டு மகளிர் சொல்லக்கேட்டும், இன்ன பண்பினினை பெரிது உழக்கும் – இத்தகைய பண்புடன் பெரிதும் துன்புறும், நன்னுதல் பசலை நீங்கவன்ன – நல்ல நெற்றியையுடைய இத்தலைவியின் பசலை நீங்கும்படி, நசையாகு பண்பின் ஒரு சொல் – விருப்பத்தை உண்டாக்கும் ஒரு சொல், இசையாது கொல்லோ காதலர் தமக்கே – இந்நோய் தந்த காதலருக்கு இயலாதா?

குறுந்தொகை 49, அம்மூவனார்நெய்தற் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்,
நீ ஆகியர் என் கணவனை,
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே5

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  தலைவன் பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த காலத்தில் முன்பு இருந்த ஆற்றாமை நீங்கி, அவனோடு கூடி மகிழ்ந்த தலைவி கூறியது.

பொருளுரை:   அணில் பல்லைப் போன்ற முள்ளையும், பூந்தாதையும் உடைய கழிமுள்ளிச் செடிகள் நிறைந்த நீலமணியின் நிறத்தை ஒத்த கடலினுடைய கரையின் தலைவனே!  இந்தப் பிறவி முடிந்து அடுத்த பிறவி ஆனாலும் நீயே எனக்குக் கணவன் ஆகுக.  நான் உன்னுடைய நெஞ்சுக்கு பொருந்துபவள் ஆகுக.

குறிப்பு:  கணவனை – ஐ சாரியை, நேர்பவளே: ஏகாரம் அசை நிலை.  அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப (49) – உ. வே. சாமிநாதையர் உரை – அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும் நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையையுமுடைய கடற்கரையை உடைய தலைவ, இரா. இராகவையங்கார் உரை – அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய முண்டக மலர்களில் மணிநிறமுள்ள காரன்னங்கள் (கறுப்பு அன்னங்கள்) மாட்சிமைப்படுகின்ற நீர்க்கடற் சேர்ப்ப.

சொற்பொருள்:   அணில் பல் அன்ன – அணிலின் பல்லைப் போன்று,  கொங்கு முதிர் – தாது நிறைந்த, முண்டகத்து – கழிமுள்ளி செடியின்,  மணி – நீல மணி,  கேழ் – கருமை,  அன்ன – போல்,   மாநீர் – கடல்,  சேர்ப்ப – நெய்தல் நிலத் தலைவனே,  இம்மை – இந்தப் பிறவி,  மாறி – மாறி, மறுமையாயினும் – மறு பிறவி ஆனாலும்,  நீ ஆகியர் என் கணவனை – நீயே என் கணவன் ஆகுக,  யான் ஆகியர் – நான் ஆகுக,  நின் நெஞ்சு – உன்னுடைய நெஞ்சுக்கு,  நேர்பவளே – ஒத்தவள்

குறுந்தொகை 50, குன்றியனார்மருதத் திணை – தலைவி தூது வந்தவரிடம் சொன்னது
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்,
செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்
துறை அணிந்தன்று அவர் ஊரே, இறை இறந்து
இலங்கு வளை ஞெகிழச் சாஅய்ப்
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே.

பாடல் பின்னணி:  தலைவன், ஊடியிருந்த தலைவியின் ஊடலை நீக்கத் தூது விட்டபொழுது, அத்தூதுவரிடம், ‘தலைவன் தகாத முறையில் ஒழுகினான்’ எனத் தலைவி கூறியது.

பொருளுரை:  வெள்ளைச் சிறு கடுகைப் போன்ற மலர்களையுடைய ஞாழல் மரத்தின் சிவந்த மலர்கள் மருத மரத்தின் பழைய மலர்களோடு சேர்ந்துப் பரந்து, அவருடைய நீர்த் துறையை அழகு செய்தன.  என்னுடைய விளங்கும் வளையல்கள் மூட்டுவாய்ச் சந்தைக் கடந்து நெகிழும்படி, அவர் அணைத்த என்னுடைய தோள்கள் மெலிந்து, தனிமையைப் பெற்றுள்ளன.

குறிப்பு:  ஊரே – ஏகாரம் அசை நிலை, தோளே: ஏகாரம் அசை நிலை.  உ. வே. சாமிநாதையர் உரை – தானும் அவனும் ஒன்றுபட்டு வாழும் கற்புக்காலத்தில் அவனூரே தனது ஊராகவும், ‘அவர் ஊரே’ என்று பிரித்துச் சொன்னது அவன்பால் உள்ள புலவி பற்றி.  ‘துறை அணிந்தன்று அவர் ஊரே’ என்றது அவன் பரத்தையரோடு அத்துறைக்கண் விளையாடினான் என்பதை அறிந்தமையைக் குறிப்பிட்டது.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – அவர் ஊரிடத்துத் துறையை ஞாழல் மருதின் பூவொடு தாஅய் அழகு செய்தது; அவர் மணந்த தோள் மெலிந்து துயரைத் தங்கியது; இஃது ஒரு வியப்பு இருந்தவாறு என்னை! என்பதாம்.

சொற்பொருள்:  ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் – வெள்ளைச் சிறு கடுகைப் போன்ற மலர்களையுடைய ஞாழல் மரத்தின், செவ் வீ – சிவந்த மலர்கள், மருதின் – மருத மரத்தின், செம்மலொடு – பழம் பூக்களுடன், தாஅய் – பரந்து, துறை அணிந்தன்று – நீர்த் துறையை அழகு செய்தது, அவர் ஊரே – அவருடைய ஊரில், இறை இறந்து – மூட்டுவாய்ச் சந்தைக் கடந்து, இலங்கு வளை – விளங்கும் வளையல்கள், ஞெகிழ – நெகிழும்படி, சாஅய் – மெலிந்து, புலம்பு அணிந்தன்று – தனிமையை பெற்றது, அவர் மணந்த தோளே – அவர் அணைத்த என் தோள்

குறுந்தொகை 51, குன்றியனார்நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கூன் முண் முண்டகக் கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறித்
துறைதொறும் பரக்கும் தூ மணல் சேர்ப்பனை
யானும் காதலென், யாயும் நனி வெய்யள்,
எந்தையும் கொடீஇயர் வேண்டும்,  5
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.

பாடல் பின்னணி:  வரைவு மலி (மணம் செய்து கொள்ளுதற்குரிய முயற்சி).  வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி திருமண முயற்சிகளின் மிகுதி கூறியது

பொருளுரை:  வளைந்த முள்ளையுடைய கழிமுள்ளியினது மிக்க குளிர்ச்சியுடைய கரிய மலர், நூல் அறுந்து விழுந்த முத்துக்களைப் போல் காற்றினால் சிதறி கடற்கரைத் துறையின்தோறும் பரவும் தூய மணலையுடைய கடற்கரையின் தலைவனை, நானும் விரும்புகின்றேன். நம் தாயும் மிகவும் விரும்புகின்றாள். நம் தந்தையும் அவனுக்கே உன்னை மணஞ் செய்துக் கொடுக்க விரும்புகின்றான். பழிச்சொற்களைக் கூறும் ஊர்மக்களும் அவனுடன் உன்னைச் சேர்த்துச் சொல்லுவார்கள்.

குறிப்பு:   உ. வே. சாமிநாதையர் உரை – முட்செடியாகிய முள்ளினிடத்திலுள்ள மலர் கைவருந்திப் பறித்துக் கொள்ளும்படி  அமையாமல் காற்றினால் கவரப்பட்டு எளிதில் கொள்ளும்படி மணலில் பரந்து கிடப்பது போல, அரிதின் முயன்று உடன்பாடு பெற்று நிறைவுறுத்தும் வரைவு தலைவனுடைய முயற்சியால் மலிந்து எல்லாருடைய உடம்பாட்டையும் பெற்றது என்பது குறிப்பு.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – முள்ளுடைய செடியின் மலர்ந்த மலரைக் காற்றுச் சிதறச் செய்து மணல் துறையை அழகுபடுத்தும் என்றது, காவல் மிக்க பெருங்குடிப் பிறந்த தலைவியை தெய்வம் தலைவனோடே கூட்டி அணி செய்யா நிற்கும் என்பது.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – முள் மிக்க தாழையின் குளிர்ந்த மலர், காற்றாற் சிதறுண்டு துறைதோறும் பரிக்கும் கடற்கரையினன் என்றதனானே இடையூற்றை மிகுதியாக உடைய களவகத்து இன்பமும் ஊராரால் தூற்றப்பட்டு மன்றத்திடத்துப் பரவுமாறு செய்திட்டான் என்பதாம்.  நூல் அறுந்த முத்து வடம் – அகநானூறு 225 – துளை முத்தின் செந்நிலத்து உதிர, அகநானூறு 289 – நெகிழ் நூல் முத்தின், குறுந்தொகை 51 – நூல் அறு முத்தின், குறுந்தொகை 104 – நூல் அறு முத்தின், கலித்தொகை 82 – கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன.  முத்தின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, காலொடு – காலினால், காற்றால், ‘ஒடு’ ‘ஆல்’ உருபின் பொருளில் வந்தது, கொடீஇயர் – அளபெடை, மொழிமே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  கூன் முண் முண்டக – வளைந்த முள்ளையுடைய கழிமுள்ளியினது, கூர்ம் பனி மா மலர் – மிக்க குளிர்ச்சியுடைய கரிய மலர், நூல் அறு முத்தின் – நூல் அறுந்து விழுந்த முத்துக்களைப் போல், காலொடு பாறித் துறைதொறும் பரக்கும் – காற்றினால் சிதறி கடற்கரைத் துறையின்தோறும் பரவும், தூ மணல் சேர்ப்பனை – தூய மணலையுடைய கடற்கரையின் தலைவனை, யானும் காதலென் – நானும் விரும்புகின்றேன், யாயும் நனி வெய்யள் – நம் தாயும் மிகவும் விரும்புகின்றாள், எந்தையும் கொடீஇயர் வேண்டும் – நம் தந்தையும் அவனுக்கே உன்னை மணஞ் செய்துக் கொடுக்க விரும்புகின்றான், அம்பல் ஊரும் அவனொடு மொழிமே – பழிச்சொற்களைக் கூறும் ஊர்மக்களும் அவனுடன் உன்னைச் சேர்த்துச் சொல்லுவார்கள்

குறுந்தொகை 52, பனம்பாரனார்குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பிற்
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே,
நரந்த நாறும் குவை இருங்கூந்தல்
நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை,
பரிந்தனென் அல்லனோ, இறை இறை யானே?  5

பாடல் பின்னணி:  வரைவு மலிவு கேட்ட தலைவிக்குத் தோழி ‘முன்னாளில் நான் அறத்தொடு நின்றமையால் இது விளைந்தது’ எனக் கூறியது.

பொருளுரை:  நரந்த மலர்கள் கமழும் அடர்ந்த கருங்கூந்தலையும் வரிசையாக உள்ள வெள்ளை பற்களையுமுடைய மடந்தையே! தன்னிடத்தில் பொருந்திய ஆண் யானைகள் மிதித்ததால் உண்டாகிய பள்ளத்தில் உள்ள நீர் விளங்கும் மலையில் உறையும் கடவுளால் விரும்பப்பட்ட பண்பினையுடையாய் ஆகி நீ நடுங்குதல் கண்டு, நான் சிறிது சிறிதாக வருந்தினேன் அல்லவா?

குறிப்பு:   சூர் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தீண்டி வருத்தும் தெய்வம், சூரர மகளிருமாம், உ. வே. சாமிநாதையர் உரை – சிலம்பிற் சூர் முகுகனுமாம், தமிழண்ணல் உரை – தெய்வ மகளிர்.  நடுங்கல் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – நீ நம் கற்புக்கு ஏதம் வருமோ என்று அஞ்சி நடுங்கினாள், காப்பு மிகுதியினாலும் தாயர் வெறியாட்டு எடுக்க விரும்பியதனாலும் தலைவி நடுங்கினாள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன் பொருட்டாகச் செவிலி எடுக்கும் வெறி பாடலால் கற்புக்கு ஏதங் விளையுங் கொல்!  இந்நோய் நம்மால் வந்ததன்று என்று தெய்வத்தால் வந்தது போலும் எனத் தலைவன் கருதின், நம் நிலை என்னாகும் எனக் கருதி மெய் நடுங்கல்.  யானே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   ஆர் களிறு மிதித்த நீர் திகழ் – தன்னிடத்தில் பொருந்திய ஆண் யானைகள் மிதித்ததால் உண்டாகிய பள்ளத்தில் உள்ள நீர் விளங்கும், சிலம்பில் – மலையில் உறையும், சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே – கடவுளால் விரும்பப்பட்ட பண்பினை உடையாய் ஆகி நடுங்குதல் கண்டு, நரந்த நாறும் குவை இருங்கூந்தல் – நரந்த மலர்கள் கமழும் அடர்ந்த கருங்கூந்தல் (நரந்தம் – நாரத்தம்பூ – நச்சினார்க்கினியர் உரை, குறிஞ்சிப்பாட்டு 94), நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை – வரிசையாக உள்ள வெள்ளை பற்களையுமுடைய பெண்ணே, பரிந்தனென் அல்லனோ இறை இறை யானே – நான் சிறிது சிறிதாக உனக்காக வருந்தினேன் அல்லவா

குறுந்தொகை 53, கோப்பெருஞ்சோழன்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
எம் அணங்கினவே மகிழ்ந, முன்றில்
நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறி அயர் களந்தொறும்
செந்நெல் வான் பொரி சிதறியன்ன,
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை,  5
நேர் இறை முன் கை பற்றிச்
சூரர மகளிரோடு உற்ற சூளே.

பாடல் பின்னணி:  வரைவு நீட்டித்தவழித் தோழி தலைவனிடம் உரைத்தது.

பொருளுரை:  தலைவனே! இல்லத்தின் முன் முற்றத்தில் புன்க மரத்தின் அரும்பு முதிர்ந்த மலர்கள் உதிர்ந்த வெண்மணலில், வேலனால் அமைக்கப்பட்ட வெறியாட்டம் எடுக்கும் இடந்தொறும் செந்நெல்லின் வெள்ளை பொரி சிதறினாற்போன்ற தோற்றத்தைத் தரும் மணல் மேடுகள் பொருந்திய எங்கள் ஊரின் அகன்ற நீர்த்துறையில், என் தோழியின் நேரிய மூட்டுவாயினையுடைய முன்கையைப் பிடித்துக்கொண்டு, தெய்வ மகளிரைச் சுட்டி நீ கூறிய உறுதிமொழிகள் எம்மைத் துன்புறுத்தின.

குறிப்பு:   நெற்பொரியைப் போல் புன்கு – அகநானூறு 116 – பொரி எனப் புன்கு அவிழ் அகன் துறை, பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, நற்றிணை 9 – பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, குறுந்தொகை 53 – நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறி அயர் களந்தொறும் செந்நெல் வான் பொரி சிதறியன்ன, குறுந்தொகை 341 – பொரிப் பூம் புன்கொடு, ஐங்குறுநூறு 347 – பொரிப்பூம் புன்கின், ஐங்குறுநூறு 368 – எரிப்பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் பொரிப்பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும்.   இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – புன்கின் பூ செந்நெற்பொரியைச் சிதறினாற் போலத் தோன்றும் என்றதனானே நீ உற்ற பொய்ச்சூளுறவுகளும் மெய்ச்சூளுறவுகளேபோல எம்மை மயங்கச் செய்தன என்பதாம்.  எம் அணங்கினவே (1) – உ. வே. சாமிநாதையர் உரை – சூள் பலமுறை செய்யப்பட்டனவாதலின் அணங்கின என்று பன்மையாற் கூறினாள்.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார்வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார். சூளே – ஏகாரம் அசை நிலை.  இரா. இராகவையங்கார் உரை – இதனைத் தலைவி கூறியதாகக் கொள்வர் நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், களவியல் 10).  அங்ஙனமாயின் சூள் உரைத்த நின்னையும் நீ கைப்பற்றிய என்னையும் அச் சூள் அணங்குதல் தகும்.  என் வாய்க் கேட்ட என் தோழியும் அணங்குதல் மருட்கைத்தாம் என்பது தெரிய எம் அணங்கின என்றாளாகக் கொள்க.

சொற்பொருள்:   எம் அணங்கினவே – எம்மைத் துன்புறுத்தின, மகிழ்ந – தலைவனே, முன்றில் – இல்லத்தின் முன்னிடத்தில் (முன்றில் – இல்முன்), நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் – புன்க மரத்தின் அரும்பு முதிர்ந்த மலர்கள் உதிர்ந்த வெண்மணல், வேலன் புனைந்த – வேலனால் அமைக்கப்பட்ட, வெறி அயர் களந்தொறும் – வெறியாட்டம் எடுக்கும் இடந்தொறும், செந்நெல் வான் பொரி சிதறியன்ன – செந்நெல்லின் வெள்ளை பொரி சிதறினாற்போல, எக்கர் நண்ணிய – மணல் மேடுகள் பொருந்திய, எம் ஊர் வியன் துறை – எங்கள் ஊரின் அகன்ற நீர்த்துறையில், நேர் இறை முன் கை பற்றி – நேரிய மூட்டுவாயினையுடைய முன்கையைப் பிடித்துக்கொண்டு, சூரர மகளிரோடு உற்ற சூளே – தெய்வ மகளிரைச் சுட்டி கூறிய உறுதிமொழி

குறுந்தொகை 54, மீனெறி தூண்டிலார்குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
யானே யீண்டையேனே, என் நலனே
ஏனல் காவலர் கவண் ஓலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு, ஆண்டு ஒழிந்தன்றே.  5

பாடல் பின்னணி:  வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைவி தோழியிடம் உரைத்தது.

பொருளுரை:  நான் மட்டுமே இங்கிருக்கின்றேன். ஆனால் என்னுடைய பெண்மை நலனோ, தினைப்புனம் காப்போரின் கவண் ஒலிக்கு அஞ்சி, காட்டு யானை கைவிட்ட பசுமையான மூங்கில் மீனைக் கவர்ந்துகொண்ட தூண்டிலைப்போல் நிமிர்ந்து மேலே செல்லும் காட்டையுடைய என் தலைவனுடன், அவ்விடத்திலேயே நீங்கியது.

குறிப்பு:  குறுந்தொகை 54 – கான யானை கைவிடு பசுங்கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும், குறுந்தொகை 74 – விட்ட குதிரை விசைப்பினன்ன விசும்பு தோய் பசுங்கழை, புறநானூறு 302 – வெடி வேய் கொள்வது போல ஓடித் தாவுபு உகளும் மாவே, ஐங்குறுநூறு 278 – கழைக்கோல் குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி மீன் எறி தூண்டிலின் நிவக்கும்.  உ. வே. சாமிநாதையர் உரை – யானை வளைக்குங் காலத்தில் வளைந்து அது கைவிடத் தூண்டிலைப் போல மூங்கில் நிமிரும் நாடன் என்றது தன் நெஞ்சத்து அன்புளதாகிய காலத்து நம்பால் மருவிப் பணிந்து ஒழுகி அன்பற்ற காலத்துப் பணிவின்றித் தலைமை செய்து நம் நலங்கொண்ட தன் கொடுமை போன்ற ஒழுகுகின்றான் என்பதாம்.   உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – ஏனலைக் காப்பவரது கவணின் ஒலியை அஞ்சி யானை நுகர்தற்கு வளைத்த கழையைக் கைவிட்டுச் செல்லுமாறு போல, ஊரார் தூற்றும் அலரை அஞ்சித் தன் எண்ணத்தின்படி தாழ்த்தி நுகர்ந்த என்னைக் கைவிட்டுச் சென்றான் என்பதாம்.  யானே  – பிரிநிலை, யீண்டையேனே – ஏகாரம் அசைநிலை,  நலனே – ஏகாரம் அசைநிலை, வெரீஇ – அளபெடை, தூண்டிலின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஒழிந்தன்றே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:   யானே யீண்டையேனே – நான் மட்டும் இங்கிருக்கின்றேன், என் நலனே – என் பெண்மை நலன், ஏனல் காவலர் – தினைப்புனம் காப்போர், கவண் ஓலி வெரீஇ – கவண் ஒலிக்கு அஞ்சி, கான யானை கைவிடு பசுங்கழை – காட்டு யானை கைவிட்ட பசுமையான மூங்கில், மீன் எறி தூண்டிலின் – மீனைக் கவர்ந்துகொண்ட தூண்டிலைப்போல், நிவக்கும் – மேலே செல்லும், கானக நாடனொடு – காட்டையுடைய தலைவனுடன், ஆண்டு ஒழிந்தன்றே – அங்கு நீங்கியது

குறுந்தொகை 55, நெய்தல் கார்க்கியர்நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
மாக் கழி மணிப் பூக் கூம்பத் தூத்திரைப்
பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட்டு ஆகும்,
சின்னாட்டு அம்ம, இச் சிறு நல்லூரே.  5

பாடல் பின்னணி:  ‘நீ வரைவொடு வராவிடின் இவள் இறந்துவிடுவாள்’ எனத் தோழி கூறியது.

பொருளுரை:  இந்த சின்ன நல்ல ஊர் கரிய உப்பங்கழியில் உள்ள நீலமணி போன்ற மலர்கள் குவியும்படி தூய அலைகளில் பொங்கிய பிசிராகிய நீர்த் துளிகளுடன், முகில்களை அணிந்துகொண்டு, காதலர்களைப் பிரிந்தவர்கள் செயலற்று வருந்தும்படி வந்த தடவுதலையுடைய வாடைக்காற்றோடு துன்பத்தைத் தரும் தங்கும் இடமாக ஆகும் சில நாட்களை மட்டுமே உடையது.  நீ வராவிடின் இவள் சில நாட்களே வாழ்வாள்.

குறிப்பு:  மணிப்பூ (1) – உ. வே. சாமிநாதையர் உரை – மணிப்பூ என்றமையால் நீலமணி போன்ற முள்ளி நெய்தல் முதலியவற்றைக் கொள்க.  மங்குல் தைஇ (2) – உ. வே. சாமிநாதையர் உரை – மேகத்தைப் பொருந்தி,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – முகில்களையும் அணிந்துகொண்டு, இரா. இராகவையங்கார் உரை – மேகத்தையும் வீசி.  ‘சேம்பின் இலை பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇ’ (குறுந்தொகை 76) என்புழிச் சேம்பின் இலை யானைச் செவிபோல அசைய வீசி எனப் பொருள் ஆதலால் உணர்க.   உ. வே. சாமிநாதையர் உரை – ‘இன்னா உறையுட்டு ஆகும் சின்னாட்டு அம்ம இச் சிறு நல்லூரே’ என்று ஊரின் மேல் வைத்துச் சொன்னாலும், தோழி நினைந்தது, ‘தலைவி இன்னும் சின்னாளே இவ்வூரில் உயிர் வாழ்வாள்.  அச் சின்னாளும் இன்னாமை தரும் இயல்புடையன’ என்பதாகக் கொள்க; இதனால் தலைவனுக்கு விரைந்து வரைந்துகொள்வதன் இன்றியமையாமையைக் குறிப்பித்தாள்.  பிதிர்த் துவலை – இருபெயரொட்டு, அம்ம – அசை நிலை, நல்லூரே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   மாக் கழி மணிப் பூக் கூம்ப – கரிய உப்பங்கழியில் உள்ள நீலமணி போன்ற மலர்கள் குவியும்படி, தூத்திரைப் பொங்கு பிதிர்த் துவலையொடு – தூய அலைகளில் பொங்கிய பிசிராகிய துளிருடன், மங்குல் தைஇக் கையற வந்த தைவரல் ஊதையொடு – முகில்களை அணிந்துகொண்டு பிரிந்தவர்கள் செயலற்று வருந்தும்படி வந்த தடவுதலையுடைய வாடைக்காற்றோடு, இன்னா உறையுட்டு ஆகும் – துன்பத்தைத் தரும் தங்கும் இடமாக ஆகும், சின்னாட்டு – சில நாட்களையுடையது, அம்ம – அசை நிலை, இச் சிறு நல்லூரே – இந்த சின்ன நல்ல ஊர்

குறுந்தொகை 56, சிறைக்குடி ஆந்தையார்பாலைத் திணை – தலைவன் சொன்னது
வேட்டச் செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகல் சில் நீர்
வளை உடைக் கையள் எம்மொடு உணீஇயர்
வருகதில் அம்ம தானே
அளியளோ அளியல், என் நெஞ்சு அமர்ந்தோளே.  5

பாடல் பின்னணி:  தானே போகின்ற வேளையில், பாலை நிலத்தில் உள்ள தீமைகளைக் கண்டு, தலைவன் கூறியது.  இரா. இராகவையங்கார் உரை – இது களவில் தலைவன் தலைவியை உடன்கொண்டு போகத் துணிந்தது என இளம்பூரணரும் (தொல்காப்பியம், அகத்திணையியல் 44), கற்பில் தலைவன் தோழி கேட்பக் கூறியது என நச்சினார்க்கினியரும் (தொல்காப்பியம், கற்பியல் 5) கொள்வர்.  அங்ஙனமாயின் சுரத்தின் பொல்லாங்கு தெரியத் தலைவன் போதற்கு முன்னே கூறியதாகக் கொள்ளப்படும்.

பொருளுரை:   பாலை நிலத்தில் உள்ள வேட்டையாடும் நாய்களால் தோண்டி உண்ணப்பட்டு எஞ்சிய, காட்டு மல்லிகையின் இலைகள் உதிர்ந்து மூடிய அழுகல் நாற்றத்தையுடைய சிறிதாக உள்ள நீரை, என்னுடன் சேர்ந்து உண்ணுவதற்கு என் நெஞ்சில் இருக்கும் வளையல் அணிந்த என் தலைவி வந்தால், அவள் மிகவும் இரங்கத் தக்கவள் ஆவாள்.

குறிப்பு:  வருகதில் (4) – தமிழண்ணல் உரை – வருகதில் என்பதில் ‘தில்’ விருப்பத்தை உணர்த்தும் இடைச் சொல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வருகதில் என்பதில் ‘தில்’ விழைவுப் பொருளும் ஒழியிசைப் பொருளும் ஒரு சேரக் குறித்து நின்றது, வருகதில் என்பதற்கு வருவாளாக, உ. வே. சாமிநாதையர் உரை – வருக; வந்தால், இரா. இராகவையங்கார் உரை – வந்தால் இதன் பொல்லாங்கு அவளும் காண்பள் என்றவாறு.   குளவி (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காட்டு மல்லிகை, ஈண்டு அதன் சருகிற்கு ஆகுபெயர்.  அம்ம (4) – தமிழண்ணல் உரை – இரக்கக் குறிப்பு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கேள் என்னும் பொருட்டு, உ. வே. சாமிநாதையர் உரை – அசை நிலை.  உணீஇயர் – அளபெடை, தானே – ஏகாரம் அசை நிலை, அமர்ந்தோளே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  வேட்டச் செந்நாய் – வேட்டையாடும் செந்நாய்கள், கிளைத்து ஊண் மிச்சில் – தோண்டி உண்ணப்பட்டு எஞ்சிய, குளவி மொய்த்த – காட்டு மல்லிகையின் இலைகள் உதிர்ந்து மூடிய, அழுகல் சில் நீர் – அழுகல் நாற்றத்தையுடைய சிறிதாக உள்ள நீரை, வளை உடைக் கையள் எம்மொடு உணீஇயர்  – என்னுடன் சேர்ந்து உண்ணுவதற்கு வளையல் அணிந்த தலைவி, வருகதில் – வந்தால், வருவாளாக, அம்ம – அசைநிலை, கேட்பாயாக, தானே அளியளோ அளியல் – அவள் மிகவும் இரங்கத் தக்கவள் ஆவாள், என் நெஞ்சு அமர்ந்தோளே – என் நெஞ்சில் இருப்பவள்

குறுந்தொகை 57, சிறைக்குடி ஆந்தையார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போலப்,
பிரிவு அரிதாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல, கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து,  5
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.

பாடல் பின்னணி:  காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைவி, தோழியிடம் கூறியது.

பொருளுரை:   செய்யவேண்டிய கடமைகளை முறையே அறிந்து, தலைவனும் தலைவியுமாகிய இருவராக இருக்கும் இவ்வுலகத்தில், பிரிந்து ஒருவராக வாழும் துன்பத்திலிருந்து தப்பும் பொருட்டு, ஒரு மலர் தங்கள் இடையில் வந்தாலும் பல ஆண்டுகள் கழிந்தாற்போன்ற துன்பத்தை உண்டாக்கும் தன்மையையுடைய நீரின்கண் வாழும் மகன்றில் பறவைகளின் புணர்ச்சியைப்போல, பிரிந்து வாழ்தல் அரிதாகிய குறையாத காதலுடன், பிரிவு நேர்ந்தவுடன் எம் உயிர் போகட்டும்.

குறிப்பு:  மகன்றில் புணர்ச்சி:  குறுந்தொகை 57 – நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல, பரிபாடல் 8-44 – அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி, ஐங்குறுநூறு 381 – குறுங்கால் மகன்றில் அன்ன உடன் புணர் கொள்கை, அகநானூறு 220 – நோலா இரும்புள் போல நெஞ்சு அமர்ந்து காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்.  உடன் உயிர் போகுக (4) – உ. வே. சாமிநாதையர் உரை – என் உயிர் போவன ஆகுக, பொ. வே. சோமசுந்தரனார் உரை – எம் உயிர் போவனவாகுக, தமிழண்ணல் உரை – எங்கள் உயிர் போவதாக.  இருவேம் ஆகிய (5) – உ. வே. சாமிநாதையர் உரை – பிறவிதோறும் தலைவனும் தலைவியாகிய இருவேமாகப் பயின்று வந்த, பொ. வே. சோமசுந்தரனார் உரை – செய்யக்கடவ கடமைகளை அறிந்து ஓர் உயிர்க்கு ஈருடம்பினேமாய்ப் பயின்று வரும்.   புன்மை (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிறுமை, உ. வே. சாமிநாதையர் உரை – துன்பம்,  தமிழண்ணல் உரை – இழிவு.  உயற்கே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  பூ இடைப் படினும் – ஒரு மலர் இடையில் வந்தாலும் (படினும் – உம்மை இழிவு சிறப்பும்மை), யாண்டு கழிந்தன்ன – பல ஆண்டுகள் கழிந்தாற்போன்ற துன்பத்தை உண்டாக்கும் தன்மையையுடைய, நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல – நீரின்கண் வாழும் மகன்றில் பறவைகளின் புணர்ச்சியைப்போல, பிரிவு அரிதாகிய தண்டாக் காமமொடு – பிரிந்து வாழ்தல் அரிதாகிய குறையாத காதலுடன், உடன் உயிர் போகுக – பிரிவு நேர்ந்தவுடன் எம் உயிர் போகட்டும், தில்ல – விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச் சொல், ஈறு திரிந்தது வந்தது, கடன் அறிந்து – செய்யும் முறையை அறிந்து, இருவேம் ஆகிய உலகத்து – தலைவனும் தலைவியாக இருக்கும் இவ்வுலகத்தில், ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே – பிரிந்து ஒருவராக வாழும் துன்பத்திலிருந்து தப்பும் பொருட்டு

குறுந்தொகை 58, வெள்ளிவீதியார்குறிஞ்சித் திணைதலைவன் தோழனிடம் சொன்னது
இடிக்கும் கேளிர்! நுங்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று, மற்றில்ல,
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்,
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்  5
பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே.

பாடல் பின்னணி:  தன்னை இடித்துக் கூறிய தோழனை நோக்கி, தலைவன் இவ்வாறு கூறுகின்றான்.

பொருளுரை:   இடித்துரைக்கும் நண்பரே!   நுமது காரியமாக என் காதல் நோயை நிறுத்தல் செய்தால் நல்லது.   பிற இல்லை.  கதிரவன் காய்தலாலே வெம்மையுடைய பாறையில், கை இல்லாத ஊமை ஒருவன் தன்  கண்ணினால் பாதுகாக்கும் வெண்ணையைப் போலப் பரவியுள்ளது என்னுடைய இந்தக் காதல் நோய்.  இதைப் பொறுத்துக் கொள்வது கடினம்.

குறிப்பு:  கழறுதல் – தலைவனைப் பாங்கன் இடித்துரைத்தல்.  கேளிர் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கேளிர், நும் என்னும் பன்மைச் சொற்கள் செறல்பற்றி நண்பன் ஒருவனுக்கே வந்தன.  மற்றில்ல (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிற இலவாகும், உ. வே. சாமிநாதையர் உரை – மன் தில்ல, தில் விழைவின்கண் வந்தது, தமிழண்ணல் உரை – மன் தில்ல, தில் விருப்பத்தை உணர்த்தும் இடைச்சொல்.  ஆற்றினோ – ஓகாரம் அசை நிலை,  அரிதே – ஏகாரம் அசை நிலை.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  இடிக்கும் கேளிர் – இடித்துரைக்கும் நண்பரே,  நுங்குறை ஆக – நுமது காரியமாக,  நிறுக்கல் ஆற்றினோ நன்று – என் காதல் நோயை நிறுத்தல் செய்தால் நல்லது,  மற்றில்ல – பிற இல்லை (அல்லது மன் தில்ல),  ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில் – கதிரவன் காய்தலாலே வெம்மையுடைய பாறையினிடத்தே, கை இல் ஊமன் – கை இல்லாத ஊமை ஒருவன், கண்ணின் காக்கும் வெண்ணெய் – கண்ணினால் பாதுகாக்கும் வெண்ணை,  உணங்கல் போல – உருகிய வெண்ணையைப் போல, பரந்தன்று இந்நோய்  – பரவியுள்ளது இந்த காதல் நோய், நோன்று கொளற்கு அரிதே – இதைப் பொறுத்துக் கொள்வது அரிது

குறுந்தொகை 59, மோசிகீரனார்பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அரலைக் குன்றத்து அகல்வாய்க் குண்டு சுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறு நின்
நறுநுதல் மறப்பரோ மற்றே? முயலவும்,
சுரம் பல விலங்கிய அரும் பொருள்  5
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் தலைவன் பிரிந்த காலத்தில், ஆற்றாமல் வருந்திய தலைவியிடம், தோழி கூறியது.

பொருளுரை:   பதலை என்னும் முரசை முழக்கும் தாளத்தையுடைய இரவலர்க்கு பரிசளிக்கும் மன்னனின் அரலை என்ற குன்றத்தின் அகன்ற வாயையுடைய ஆழமான சுனையில் மலர்ந்த குவளை மலர்களுடன் சேர்த்துக் கட்டிய காட்டு மல்லிகையின் நறுமணத்தையுடைய உன்னுடைய நெற்றியை தலைவர் மறப்பாரோ? பல நாட்கள் முயன்றாலும் பாலை நிலம் பல குறுக்கிட்ட இடத்தில் சென்று அரிய பொருளை எண்ணியவாறு அடையாவிட்டாலும், நீட்டித்து அங்கு அவர் தங்க மாட்டார்.

குறிப்பு:  இரா. இராகவையங்கார் உரை – அரலைக் குன்றம் – சேலம்.  ஓசூர்ப்புறத்து ‘அரலி குண்டா’ என்பது ஒன்றுண்டு.  ஆண்டே நள்ளி என்னும் பெருவள்ளளுடைய தோட்டி மலையாகிய அங்குசகிரியும் உண்டு.  இவற்றால் இக்கோமான் நள்ளி என்பது பொருந்தும்.  இன்றே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் – பதலை என்னும் முரசை முழக்கும் தாளத்தையுடைய இரவலர்க்கு பரிசளிக்கும் மன்னன், அரலைக் குன்றத்து அகல்வாய்க் குண்டு சுனைக் குவளையொடு – அரலை என்ற குன்றத்தின் அகன்ற வாயையுடைய ஆழமான சுனையில் மலர்ந்த குவளை மலர்களுடன், பொதிந்த குளவி நாறு நின் நறுநுதல் மறப்பரோ – சேர்த்துக் கட்டிய காட்டு மல்லிகையின் நறுமணத்தையுடைய உன்னுடைய நெற்றியை மறப்பாரோ, மற்றே – அசை நிலை, முயலவும் – பல நாட்கள் முயன்றாலும், சுரம் பல விலங்கிய – பாலை நிலம் பல குறுக்கிட்ட, அரும் பொருள் – அரிய பொருள், நிரம்பா ஆகலின் – முற்றக் கைகூடல் ஆகலின், நீடலோ இன்றே – அவர் நீட்டித்து அங்கு தங்குதல் இலவாகும்

குறுந்தொகை 60, பரணர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
குறுந்தாள் கூதளி ஆடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உள் கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கியாங்குக் காதலர்
நல்கார் நயவார் ஆயினும்,  5
பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே.

பாடல் பின்னணி:   தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவி, வருந்தித் தோழியிடம் கூறியது.

பொருளுரை:   குறுகிய அடியையுடைய கூதளஞ் செடி அசைந்த உயர்ந்த மலையில் பெரிய தேனடையைக் கண்டு அமர்ந்திருந்த முடவன் தன் உள்ளங்கையாகிய சிறிய குவிந்த பாத்திரத்தை கீழே இருந்தபடியே தேனடையைச் சுட்டிக் காட்டி நக்கினாற்போல், என்னுடைய காதலர் அருள் செய்யாராயினும் என்னை விரும்பாராயினும், பலமுறை அவரைக் காண்பது என் நெஞ்சத்திற்கு இனிமை தருகின்றது.

குறிப்பு:  அகநானூறு 255 – கூதள மூது இலைக் கொடி.  குறுந்தாள் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறுந்தாளை முடவனுக்கேற்றுக.  குறுந்தாளுடைமையின் நிற்றலாற்றாது இருத்தலொன்றே உடைய முடவன்.  குறுகிய தாளையுடைய கூதளஞ்செடி என்பாருமுளர், இரா. இராகவையங்கார் உரை – தாளின் குறுமையால் எழுந்து நிற்க இயலாமல் இருத்தலையுடைய முடவன், உ. வே. சாமிநாதையர் உரை – குறிய அடியையுடைய கூதளஞ்செடி.  இனிதே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   குறுந்தாள் கூதளி – குறுகிய அடியையுடைய கூதளஞ் செடி, ஆடிய – அசைந்த, நெடுவரைப் பெருந்தேன் கண்ட இருக்கை முடவன் – உயர்ந்த மலையில் பெரிய தேனடையைக் கண்டு அமர்ந்திருந்த முடவன், உள் கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கியாங்கு – உள்ளங்கையாகிய சிறிய குவிந்த பாத்திரத்தை கீழே இருந்தபடியே தேனடையைச் சுட்டிக் காட்டி நக்கினாற்போல் (கோலி –  குழித்து), காதலர் நல்கார் நயவார் ஆயினும் – காதலர் அருள் செய்யாராயினும் என்னை விரும்பாராயினும், பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே – பலமுறை அவரைக் காண்பது என் நெஞ்சத்திற்கு இனிமை தருகின்றது

குறுந்தொகை 61, தும்பிசேர் கீரனார்மருதத் திணை – தூதாக வந்த பாணனிடமும் பிறரிடமும் தோழி சொன்னது
தச்சன் செய்த சிறு மா வையம்
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல,
உற்று இன்புறேஎம் ஆயினும், நற்றேர்ப்
பொய்கை ஊரன் கேண்மை  5
செய்து இன்புற்றனெம், செறிந்தன வளையே.

பாடல் பின்னணி:   தலைவனின் தூதுவர்களாக வந்தவர்களுக்குத் தோழி வாயில் மறுத்தது.

பொருளுரை:   தச்சனால் செய்யப்படச் சிறிய குதிரைப்பூட்டிய வண்டியை ஏறிச் செலுத்தி இன்பம் அடையாதவர்கள் ஆயினும், கையினால் வண்டியை இழுத்து இன்பம் அடையும் சிறுவர்களைப் போல, தலைவனுடன் இன்பம் அடையாது இருப்பவர்கள் ஆக இருந்தாலும், நல்ல தேர்களையும் குளங்களையும் உடைய தலைவனின் நட்பை அடைந்து இன்புற்றோம். தலைவியின் வளையல்கள் இறுக்கமாக ஆயின

குறிப்பு  உ. வே. சாமிநாதையர் உரை – நற்றேர்ப் பொய்கை ஊரன் என்றது, தலைவன் தன் தேரில் ஏறிப் பரத்தையருடன் பொய்கை நீராடுவான் என்று அறிந்ததைக் குறித்தது.  இரா. இராகவையங்கார் உரை – பொய்கை ஊரன் என்றது எல்லோரும் தோயும் நீர்நிலை போல வரையாது தோயப்படுவான் எனக் குறித்ததாம்.  இன்புறேஎம் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – தோழி தனக்கும் தலைவிக்கும் உள்ள ஒற்றுமைப் பற்றி தன்மைபன்மையாற் கூறினாள்.  நற்றேர் (4) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பிறகுறிப்பு, இழிந்தாரை ஏற்ற உதவுவதால்.

சொற்பொருள்:  தச்சன் செய்த – தச்சனால் செய்யப்பட, சிறு மா வையம் – சிறிய குதிரைப்பூட்டிய வண்டியை, ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் – ஏறிச் செலுத்தி இன்பம் அடையாதவர்கள் ஆயினும் (இன்புறாஅர் – அளபெடை), கையின் ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல – கையினால் இழுத்து இன்பம் அடையும் சிறுவர்களைப் போல (இன்புறூஉம் – அளபெடை), உற்று இன்புறேஎம் ஆயினும் – தலைவனுடன் இன்பம் அடையாது இருப்போர் ஆயினும் (இன்புறேஎம் – அளபெடை), நற்றேர்ப் பொய்கை ஊரன் கேண்மை செய்து இன்புற்றனெம் – நல்ல தேர்களையும் குளங்களையும் உடைய தலைவனின் நட்பை அடைந்து இன்புற்றோம், செறிந்தன வளையே – வளையல்கள் இறுக்கமாக ஆயின

குறுந்தொகை 62, சிறைக்குடி ஆந்தையார்குறிஞ்சித் திணை  – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
கோடல் எதிர் முகைப் பசு வீ முல்லை
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது, முயங்கற்கும் இனிதே.  5

பாடல் பின்னணி:   இடந்தலைப்பாடு.  இயற்கைப்புணர்ச்சிக்குப் பின் மீண்டும் தலைவியை முன்னாள் கண்ட இடத்தில் சென்று கூட நினைக்கும் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது.

பொருளுரை:   காந்தள் மலர்களையும் அரும்பிலிருந்து மலர்ந்த புதியதான மலர்களாகிய முல்லை மலர்களையும், மணக்கின்ற இதழ்களை உடைய குவளை மலர்களுடன் இடையிடையே கலந்து, அழகாகத் தொடுத்த மலர்மாலையைப் போல், நறுமணத்தை உடைய தலைவியின் மேனி தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தியது.  அது தழுவுவதற்கு இனிமையானது

குறிப்பு:   பொ. வே. சோமசுந்தரனார் உரை – கோடல் – இது காந்தள் மலர்.  இது தலைவியின் கைகளை நினைந்து கூறியது.  எதிர் முகைப் பசு வீ முல்லை – இது புதிதாக முளைத்தெழும் தலைவியின் எயிற்றொழுங்கினை எண்ணி இயம்பியது. நாறு இதழ்க் குவளை, இமையையுடைய கண்களைக் கருதி என்க.  இவ்வுறுப்புகள் அழகுற அமைந்திருக்கும் அழகு கருதி ‘ஐது தொடை மாண்ட கோதை’ என்றான்.  எதிர் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தோற்றிய, தோன்றிய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரும்பிய, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – ஒளி.

சொற்பொருள்:   கோடல் எதிர் முகைப் பசு வீ முல்லை  – காந்தள் மலர்களையும் அரும்பிலிருந்து மலர்ந்த புதியதான மலர்களாகிய முல்லை மலர்களையும், நாறு இதழ்க் குவளையொடு – மணக்கின்ற இதழ்களை உடைய குவளை மலர்களுடன், இடையிடுபு விரைஇ – இடையிடையே கலந்து, ஐது தொடை மாண்ட கோதை போல – அழகாகத் தொடுத்த மலர்மாலையைப் போல், நறிய நல்லோள் மேனி – நறுமணத்தை உடைய தலைவியின் மேனி, முறியினும் வாய்வது – தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தியது, முயங்கற்கும் இனிதே – தழுவுவதற்கு இனிமையானது

குறுந்தொகை 63, உகாய்க்குடிகிழார்பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி; அவ்வினைக்கு
அம் மா அரிவையும் வருமோ?
எம்மை உய்த்தியோ? உரைத்திசின் நெஞ்சே.

பாடல் பின்னணி:   பொருள் தேட வேண்டுமென்று துணிந்த நெஞ்சிடம் ‘பிரிவது அரிது’ என்று உணர்த்தித் தலைவன் செலவு தவிர்த்தது.

பொருளுரை:   தங்களிடம் வேண்டுபவர்க்குக் கொடுத்தலும், இன்பங்களை அனுபவித்தலும், பொருள் இல்லாத ஏழைகளுக்கு இல்லை என, பொருள் ஈட்டுவதற்குரிய செயல்களை மிகவும் எண்ணுகின்றாய்.  அச்செயலைச் செய்வதற்கு அழகிய மாமை நிறத்தையுடைய தலைவி வருவாளா? எம்மை மட்டுமே நீ செலுத்துகின்றாயா?  கூறுவாயாக என் நெஞ்சே!

குறிப்பு:   அம் மா அரிவை (3) – இரா. இராகவையங்கார் உரை – அம் மா அரிவை என்றான் அவளுடன் வாராதொழியின் அவள் மாமை சிதையும் என்பது கருதி.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

சொற்பொருள்:   ஈதலும் – வேண்டுபவர்க்குக் கொடுத்தலும், துய்த்தலும் – இன்பங்களை அனுபவித்தலும், இல்லோர்க்கு இல் என – பொருள் இல்லாத ஏழைகளுக்கு இல்லை என, செய்வினை கைம்மிக எண்ணுதி – பொருள் ஈட்டுவதற்குரிய செயல்களை மிகவும் எண்ணுகின்றாய்; அவ்வினைக்கு அம் மா அரிவையும் வருமோ – அச் செயலைச் செய்வதற்கு அழகிய மாமை நிறத்தையுடைய தலைவி வருவாளா, எம்மை உய்த்தியோ – எம்மை மட்டுமே நீ செலுத்துகின்றாயா, உரைத்திசின் நெஞ்சே – கூறுவாயாக என் நெஞ்சே

குறுந்தொகை 64, கருவூர்க் கதப்பிள்ளைமுல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தெனப்
புன்தலை மன்றம் நோக்கி மாலை
மடக் கண் குழவி அணவந்தன,
நோயேம் ஆகுதல் அறிந்தும்,
சேயர் தோழி, சேய் நாட்டோரே.  5

பாடல் பின்னணி:   தலைவனின் பிரிவால் வருந்திய தலைவியிடம் ‘அவர் விரைவில் வருவார்’ எனத் தோழி கூற, “அவர் என்னுடைய துன்பத்தை அறிந்தும் இன்னும் வரவில்லை” எனத் தலைவி கூறுகின்றாள்.

பொருளுரை:   பல பசுக்கள் நீண்ட வழியில் நீங்கிச் சென்றன என்று, அப்பசுக்கள் இல்லாத பொலிவு இழந்த மன்றத்தை நோக்கி, அந்தி வேளையில், மடப்பம் பொருந்திய கண்களுடைய கன்றுகள்,  தலையை நிமிர்த்தி வருந்தின தங்கள் தாய்ப் பசுக்களை எதிர்பார்த்து.  நாமும் அவ்வாறு துன்பத்தை அடைவோம் என அறிந்தும், தொலைவு நாட்டிற்குச் சென்ற நம் தலைவர் நெடுந்தொலைவில் உள்ளார்.

குறிப்பு:   பிரிவிடை ஆற்றாமை கண்டு வருவர் எனச் சொல்லிய தோழிக்குத் தலைவி உரைத்தது.  உ. வே. சாமிநாதையர் உரை – பிரிந்து சென்ற பசுக்கள் மாலைக்காலத்தில் மீண்டு வருதலை அவற்றின் கன்றுகள் எதிர்நோக்கி நிற்றலைப் போல, பிரிந்து சென்ற தலைவனது வரவை உரிய பருவத்தில் எதிர்நோக்கி இருப்பேன் என்று உவமையை விரித்துக் கொள்க.  புன்தலை (2) – உ. வே. சாமிநாதையர் உரை –  பொலிவு அழிந்த இடம், பசுக்கள் இன்மையின் பொழிவழிந்ததாயிற்று, மன்றம் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – பசுக்கள் தங்கியிருக்கும் இடம்.  மடக் கண் குழவி (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மடப்பம் பொருந்திய ஆன் கன்றுகள், மடப்பம் பொருந்திய கண்ணையுடைய கன்றுகள், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – அறியாமையைப் புலனாக்கும் கண்ணையுடைய கன்றுகள்.  சேயர் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – இன்னும் நெடுந்தூரத்திலே உள்ளார், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டுக் காலச் சேய்மை.  காலத்தானும் சேயராய் வாராராயினர்.   குழவி – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).

சொற்பொருள்:   பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென – பல பசுக்கள் நீண்ட வழியில் நீங்கிச் சென்றன என, புன்தலை மன்றம் நோக்கி – பொலிவு இழந்த மன்றத்தை நோக்கி, மாலை  – அந்தி வேளையில், மடக் கண் குழவி – மடப்பம் பொருந்திய கண்களுடைய கன்றுகள்,  அணவந்தன – தலையை நிமிர்த்தின, நோயேம் ஆகுதல் அறிந்தும் – துன்பத்தை அடைவோம் என அறிந்தும், சேயர் தோழி – தொலைவில் உள்ளார், சேய் நாட்டோரே –  தொலைவு நாட்டிற்குச் சென்ற நம் தலைவர்

குறுந்தொகை 65, கோவூர்கிழார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வன்பரல் தெள் அறல் பருகிய இரலை தன்
இன்புறு துணையொடு மறுவந்து உகளத்
தான் வந்தன்றே, தளிதரு தண் கார்,
வாராது உறையுநர் வரல் நசைஇ,
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே.  5

பாடல் பின்னணி:   பருவங்கண்டு வருந்திய தலைவி தோழிக்கு உரைத்தது.

பொருளுரை:   வலிய பரற்கற்கள் மேல் இருந்த தெளிந்த நீரைக் குடித்த ஆண்மான் இன்பத்தை நுகர்வதற்குரிய தன் பெண்மானுடன் மீண்டும் மீண்டும் வந்து துள்ளி விளையாடவும், தான் குறித்த நேரத்தில் திரும்பி வராத தலைவரை விரும்பி வருந்தி துன்புற்று இருக்கும் என்னிடம் “உயிருடன் உள்ளீரோ”, என்று வினவவும் மழைத் துளிகளைத் தருகின்ற குளிர்ந்த கார்காலம் வந்தது.

குறிப்பு:   இரா. இராகவையங்கார் உரை – தெள்ளறல் பருகிய இரலை உகள என்றது மழை பெய்வதற்கு முன் வருவோம் என்றவர் பெய்து பருகி உகளா நிற்கவும் வந்திலர் என்பது குறித்து வந்தது.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – ஆண்மான் தெள்ளிய நீரைப் பருகித் துணையோடு கூடி இருந்தும் வருந்தித் தாவச் செய்யும் கார்காலம் என்றதனானே, பிரிவால் உணவை உட்கொள்ளுதலன்றித் தனித்து உறைவாரை என்ன இன்னல் தான் எய்தச் செய்யாதோ? என்பதாம்.  வருந்தி நொந்து உறைய இருந்திரோ என (5) – உ. வே. சாமிநாதையர் உரை – மிக வருந்தித் தங்கும் பொருட்டு உயிர் வைத்துக் கொண்டிருந்தீரோ என கேட்பதற்கு, வருந்தித் துயருடன் தங்குமாறு (தனித்து) இருந்தீரோ  என்பதாக.

சொற்பொருள்:   வன்பரல் தெள் அறல் பருகிய இரலை – வலிய பரற்கற்கள் மேல் இருந்த தெளிந்த நீரைக் குடித்த ஆண்மான், தன் இன்புறு துணையொடு – இன்பத்தை நுகர்வதற்குரிய தன் பெண்மானுடன், மறுவந்து உகள – மீண்டும் மீண்டும் வந்து துள்ள, தான் வந்தன்றே – அது வந்தது, தளிதரு தண் கார் – மழைத் துளிகளைத் தருகின்ற குளிர்ந்த கார்காலம், வாராது உறையுநர் வரல் நசைஇ – தான் குறித்த நேரத்தில் திரும்பி வராது சென்ற இடத்தில் தங்கிய தலைவரை விரும்பி, வருந்தி நொந்து – வருந்தி துன்புற்று, உறைய இருந்திரோ – உயிருடன் உள்ளீரோ, எனவே – என்று

குறுந்தொகை 66, கோவர்த்தனார்முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மடவ மன்ற, தடவு நிலைக் கொன்றை,
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த,
வம்ப மாரியைக் கார் என மதித்தே.  5

பாடல் பின்னணி:   பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, ‘பருவம் அன்று’ என்று வற்புறுத்தியது.

பொருளுரை:   உறுதியாக அறியாமை உடையன பெரிய அடிப்பகுதியை உடைய கொன்றை மரங்கள்!  மலைகள் விளங்கும் பாலை நிலத்திற்குச் சென்ற நம் தலைவர், மீண்டு வருவேன் எனக் கூறிய பருவம் வராத வேளையில், இவை அடர்த்தியாகக் கிளைகளில் நெடிய பூங்கொத்துக்களை மலர்வித்துள்ளன, உரிய பருவம் இல்லாத காலத்தில் பெய்யும் நிலையற்ற மழையைக் கார்காலம் என எண்ணி.

குறிப்பு:   குறுந்தொகை 94 – பெரும் தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே, குறுந்தொகை 251 – மடவ வாழி மஞ்ஞை மா இனம் கால மாரி பெய்தென அதன் எதிர் ஆலலும் ஆலின பிடவும் பூத்தன.  நற்றிணை 99 – பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ ஆகலின் மலர்ந்தன பலவே.  இரா. இராகவையங்கார் உரை – உடலாற் பருமையுள்ள நிலையுடைய கொன்றை மரங்கள் உள்ளத்தால் பேதைமை உடையன.  தலைவனை மடையன் என்னாது தோழி கொன்றை, முல்லை, மஞ்ஞை முதலியவற்றை மடவ என்று குறித்து மொழி கிளவியாற் படைத்துக் கூறி ஆற்றுவித்தல் கவிமரபேயாம்.   மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 25).  அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 26).  வம்ப – வம்பு நிலை இன்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  தடவு நிலை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிற்றலால் அடிமரத்தை ஆகுபெயரால் ‘நிலை’ என்றார், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பெரிய நிலையினையுடைய கொன்றைகள், வளைந்த நிலையாம்.

சொற்பொருள்:   மடவ மன்ற –  உறுதியாக அறியாமை உடையன, தடவு நிலைக் கொன்றை – பெரிய அடிப்பகுதியை உடைய கொன்றை மரங்கள், கல் பிறங்கு அத்தம் சென்றோர் – மலைகள் விளங்கும் பாலை நிலத்திற்குச் சென்ற நம் தலைவர், கற்கள் விளங்கும் பாலை நிலத்திற்குச் சென்ற நம் தலைவர், கூறிய பருவம் வாரா அளவை – மீண்டு வருவேன் எனக் கூறிய பருவம் வராத வேளையில், நெரிதரக் கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த – அடர்த்தியாக கிளைகளில் நெடிய பூங்கொத்துக்களை மலர்வித்தன, வம்ப மாரியை – உரிய பருவம் இல்லாத காலத்தில் பெய்யும் புதிய மழையை, உரிய பருவம் இல்லாத காலத்தில் பெய்யும் நிலையற்ற மழையை, கார் என மதித்தே – கார்காலம் என எண்ணி

குறுந்தொகை 67, அள்ளூர் நன்முல்லையார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது  
உள்ளார் கொல்லோ தோழி, கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப்
பொலங்கல ஒரு காசு ஏய்க்கும்,
நிலங்கரி கள்ளியங் காடு இறந்தோரே?  5

பாடல் பின்னணி:   தலைவனது பிரிவை ஆற்றாது வருந்திய தலைவி தோழியிடம் கூறியது.

பொருளுரை:   நம்மை நினைக்க மாட்டாரா தோழி, கிளி வளைந்த தன் அலகில் கொண்ட வேப்ப மரத்தின் ஒளியுடைய பழம், புதிய பொற்கம்பியைச் செலுத்தும் பொற்கொல்லனின் முனை மாட்சிமைப்பட்ட கூரிய கை நகத்தில் கொண்ட பொன் அணிகலனின் ஒரு பொற்காசை ஒக்கும், நிலம் கரிந்துள்ள கள்ளியை உடைய பாலை நிலத்தைக் கடந்துச் சென்ற நம் தலைவர்?

குறிப்பு:   குறுந்தொகை 24 – வேம்பின் ஒண் பூ யாணர் என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ, ஐங்குறுநூறு 350 – வேம்பின் ஒண் பூ உறைப்பத் தேம்படு கிளவி அவர்த் தெளிக்கும் பொழுதே.  இரா. இராகவையங்கார் உரை – வேப்பம்பழம் காசேய்க்கும் இந்நிலையிலும் காடு இறந்தோர் உள்ளார் கொல் என்றாள்.  வேம்பின் ஒண்பூ உதிர்தற்கு முன்னர் வருவம் என்றவர் பழநிலையினும் நினையார் என்பது கருத்து.  புது நாண் நுழைப்பான் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – புதிய பொற்கம்பியை ஊடு செலுத்தும் பொற்கொல்லன், இரா. இராகவையங்கார் உரை – புதிய நூலை நுழைக்கும் பொருட்டு.  நுழைப்பான் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுழைக்கும் பொருட்டு.  பான் விகுதி பெற்ற வினையெச்சம், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – ஆன் உருபு ஒடு உருபின் பொருளில் வந்தது.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – கிள்ளை உணவின் பொருட்டு வாயில் கொண்ட வேப்பம்பழம் பொலங்கலக்காசுப் போல தோன்றும் காடு என்றதனானே, ஈட்டலைக் குறித்துக் கைக்கொண்ட இன்னாத பிரியும் அவர்க்கு இனிமை தருவதாயிற்று; அன்பின்மையும் என்பதாம்.  உ. வே. சாமிநாதையர் உரை – கிளியின் அலகுக்குக் கைவிரல் நகங்களும், வேப்பம் பழத்திற்கு உருண்டையான பொற்காசும் உவமைகள்.  காசைப் பற்றுதற்குரிய தகுதியுடையதைப் புலப்படுத்தி ‘நுதிமாண் வள்ளுகிர் என்றாள்’.  ஒருவகைப் பொற்காசு உருண்டை வடிவமாகவும் இருந்ததென்பது.

சொற்பொருள்:   உள்ளார் கொல்லோ தோழி –  நம்மை நினைக்க மாட்டாரா தோழி, கிள்ளை வளைவாய்க் கொண்ட – கிளி வளைந்த அலகில் கொண்ட, வேப்ப ஒண் பழம் – வேப்ப மரத்தின் ஒளியுடைய பழம், புது நாண் நுழைப்பான் – புதிய பொற்கம்பியைச் செலுத்தும் பொற்கொல்லனின், நுதி மாண் வள் உகிர் – முனை மாட்சிமைப்பட்ட கூரிய கை நகம், பொலங்கல ஒரு காசு ஏய்க்கும் – பொன் அணிகலனின் ஒரு பொற்காசை ஒக்கும், நிலம் கரி – நிலம் கரிந்துள்ள, கள்ளியங் காடு இறந்தோரே – கள்ளியை உடைய பாலை நிலத்தைக் கடந்துச் சென்ற நம் தலைவர்

குறுந்தொகை 68,  அள்ளூர் நன்முல்லையார்குறிஞ்சி திணை – தலைவி சொன்னது
பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்
அரும்பனி அச்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிதில்லை, அவர் மணந்த மார்பே.

பாடல் பின்னணி:   தலைவன் முன்பனி பருவத்தும் வராமையால் பெரிதும் வருந்திய தலைவி தனது ஆற்றாமையைத் தோழியிடம் கூறியது.

பொருளுரை:   காடையின் கால்களைப் போன்ற சிவந்த நிறத்தையுடைய தாளையுடைய உழுந்துச் செடிகளின் முற்றியக் காய்களை மான் கூட்டங்கள் தின்னும் பொருட்டுக் கொள்ளும் தாங்குதற்கரிய பனி பெய்யும் இந்த முன்பனிக்காலத்தால் உண்டாகிய என்னுடைய காதல் நோய்க்கு என்னை மணந்த என் தலைவனின் மார்பு தான் மருந்து.  வேறு மருந்து யாதும் இல்லை.

குறிப்பு:   அள்ளூர் பாண்டிய நாட்டின் ஊர் – பிண்ட நெல்லின் அள்ளூர் (அகநானூறு 46).  இரா. இராகவையங்கார் உரை – மார்பை பனி என்றதால் பனி நோயாயிற்று.  புலத்தின்கண் வித்திய உழுந்து பூத்தற்கு முன்னர் வருவமென்று தெளித்துப் போனவர் அது முதுகாய் விட்டு உழையினங் கவரும் போதும் வந்திலர் என்பது கருதிக் கூறினாள்.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மானினம் உழுந்தின் காயைக் கவரும் அச்சிரம் என்றதனானே, விலங்கும் தனக்கு வேண்டிய நுகர்ச்சியை இனத்தோடு பெற்று மகிழாநிற்கும் இக்காலத்து, யானே தனித்து எவ்வகை நுகர்ச்சியும் இன்றித் துன்பமுறலானேன்; என் செய்வேன்! என்பதாம்.  பூழ் – குறும்பூழ் என்பதன் குறை, அச்சிரம் – ஆகுபெயர், மார்பே, பிரிநிலை ஏகாரம்.

சொற்பொருள்:  பூழ்க்கால் அன்ன – காடையின் காலைப் போன்ற,  செங்கால் உழுந்தின் – சிவந்தக் தாளையுடைய உழுந்தின்,  ஊழ்ப்படு முதுகாய் – முற்றியக் காய், உழையினங் கவரும் – மான் கூட்டம் உண்ண வரும்,  அரும்பனி – தாங்குதற்கரிய முன்பனிக் காலம்,  அச்சிரம் தீர்க்கும் – முன்பனிக்காலத்தால் உண்டாகும் துன்பத்தைப் போக்கும் (அச்சிரம் – ஆகுபெயர்), மருந்து பிறிதில்லை – மருந்து வேறு இல்லை,  அவர் மணந்த மார்பே – என்னை மணந்த அவருடைய மார்பு

குறுந்தொகை 69,  கடுந்தோட் கரவீரனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்,
கைம்மை உய்யாக் காமர் மந்தி,
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி,
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட!  நடுநாள் 5
வாரல், வாழியோ, வருந்துதும் யாமே.

பாடல் பின்னணி:  தோழி இரவுக்குறி மறுத்தது.

பொருளுரை:  தாவுகின்ற  கரிய கண்ணையுடைய ஆண் குரங்கு ஒன்று மரணம் அடைந்ததால், கைம்மைத் துன்பத்தை நீக்க முடியாத, அதன் மீது காதல் கொண்ட  அதன் பெண் குரங்கு அவர்களையுடைய முதிர்ச்சி அடையாத வலுவான குட்டியை உறவினர்களிடம் கொடுத்து விட்டு, உயர்ந்த மலையின் சரிவிலிருந்து குதித்து மரணம் அடையும் மலை நாடனே!  நீ நீடு வாழ்வாயாக!  நீ இனி நடு இரவில்  இங்கு வராதே.  அவ்வாறு நீ வந்தால் நானும் தலைவியும் மிகவும் வருத்தம் அடைவோம்.

குறிப்பு:  வாழியோ – ஓகாரம் அசை நிலை. யாமே – ஏகாரம் அசை நிலை.  இரவுக்குறி மறுத்தது. பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாக்கலை என்றதன்கண் தாவுதற் தொழில் பெரும்பிறிதிற்குக் குறிப்பேதுவாய் நின்றது.  கொம்பிழக்காது தாவும் தொழில் வல்ல குரங்கும் தப்பி வீழ்ந்து பெரும்பிறிதுற்றது என்றவாறு.  எனவே, இருள் செறிந்த நெறியின் ஏதம் எடுத்துக்காட்டினாள் ஆயிற்று.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பெண் குரங்கு கைம்மையைக் கைக்கொள்ளாது அடுக்கத்துப் பாயும் சாரனாடன் என்றததானே,நின் மலையகத்து அஃறிணையாகிய விலங்கும் பேரறிவு உடையதாய் நீ மட்டிலும் களவைக் காதலித்து நல்லறமாகிய இல்லறத்தைக் கைக்கொண்டிலை; ஆகலின் நின் தகுதிக்கு இது தகாது என்பதாம்.  பறழ் – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

சொற்பொருள்:  கருங்கண் – கருமையான கண்,  தா – தாவும், வலிமையுடைய, கலை – ஆண் குரங்கு,  பெரும்பிறிது – மரணம், உற்றென – அடைந்தது என, கைம்மை உய்யா – கைம்மை வருத்தத்தை தாங்க இயலாது,  காமர் மந்தி – காதல் கொண்ட பெண் குரங்கு,  அழகிய பெண் குரங்கு, கல்லா வன் பறழ் – மரம் ஏறுதல் முதலிய தம் தொழிலைக் கற்காத வலுவான தன் குட்டியை,  கிளைமுதல் சேர்த்தி – உறவினர்களிடம் கொடுத்து விட்டு,  ஓங்கு வரை அடுக்கத்து – உயர்ந்த மலையின் பக்கத்தில்,  பாய்ந்து உயிர் செகுக்கும் – பாய்ந்து உயிரைப் போக்கும்,  சாரல் – மலைச்சரிவு, மலைப்பக்கம், நாட – நாட்டவனே,  நடுநாள் – நடு இரவில்,  வாரல் – வராதே,   வாழியோ – நீ நீடு வாழ்வாயாக,  வருந்துதும் யாமே – நாங்கள் வருந்துவோம்

சொற்பொருள்:  கருங்கண் – கருமையான கண்,  தா – தாவும், வலிமையுடைய, கலை – ஆண் குரங்கு,  பெரும்பிறிது – மரணம், உற்றென – அடைந்தது என, கைம்மை உய்யா – கைம்மை வருத்தத்தை தாங்க இயலாது,  காமர் மந்தி – காதல் கொண்ட பெண் குரங்கு,  அழகிய பெண் குரங்கு, கல்லா வன் பறழ் – மரம் ஏறுதல் முதலிய தம் தொழிலைக் கற்காத வலுவான தன் குட்டியை,  கிளைமுதல் சேர்த்தி – உறவினர்களிடம் கொடுத்து விட்டு,  ஓங்கு வரை அடுக்கத்து – உயர்ந்த மலையின் பக்கத்தில்,  பாய்ந்து உயிர் செகுக்கும் – பாய்ந்து உயிரைப் போக்கும்,  சாரல் – மலைச்சரிவு, மலைப்பக்கம், நாட – நாட்டவனே,  நடுநாள் – நடு இரவில்,  வாரல் – வராதே,   வாழியோ – நீ நீடு வாழ்வாயாக,  வருந்துதும் யாமே – நாங்கள் வருந்துவோம்

குறுந்தொகை 70, ஓரம்போகியார்குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்ணுதல் குறுமகள்
நறும் தண் நீரள் அணங்கினளே,
இனையள் என்று அவள் புனை அளவு அறியேன்,
சில மெல்லியவே கிளவி,
அணை மெல்லியள், யான் முயங்கும் காலே.  5

பாடல் பின்னணி:  புணர்ந்து நீங்கும் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது.

பொருளுரை:  நெஞ்சே!  ஒடுங்கிய எண்ணெய்ப் பூசிய கூந்தலையுடைய ஒளியுடைய நெற்றியை உடைய தலைவி நறுமணத்தையும் குளிர்ச்சியையுமுடைய தன்மை உடையவள்.  அவளைப் பிரிந்த வேளையில் மிகுந்த வருத்தத்தைக் கொடுப்பவள்.  இத்தன்மை உடையவள் அவள் என்று சொற்களால் புனைந்து உரைக்கும் எல்லையை நான் அறியேன்.  சில மென்மையான சொற்களை உடையவள் அவள்.  நான் அணைக்கும் பொழுது பஞ்சணையை ஒத்த மென்மையை உடையவள்.

குறிப்பு:   தமிழண்ணல் உரை – தலைவன் தான் ஐம்புல இன்பமும் ஒருங்கே பெற்றதை இதில் குறிப்பாக வெளிப்படுத்துகிறான்.  ஓதியும் ஒண்ணுதலும் கண்ணுக்கு இன்பம்; நறுந்தண் நீரள் முகர்தற்கு இன்பம்;  மெல்லிய கிளவி செவிக்கு இன்பம்; அணை மெல்லியளாதல் தொடுவதற்கு இன்பம்; முயங்குதல் குறிப்பால் சுவைக்கும் இன்பம்.  ஒடுங்கு ஈர் ஓதி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இருபுறமும் ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தல், உ. வே. சாமிநாதையர் உரை – ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தல், ஐவகைக் கூந்தற் பகுப்பில் ஒன்றாகிய சுருளை, இரா. இராகவையங்கார் உரை – இடத்தும் வலத்தும் ஒடுங்கிய ஈர்ந்த கூந்தல், தமிழண்ணல் உரை – ஒடுக்கி கொண்டையாக முடித்த எண்ணெய் பூசிய நெய்ப்புடைய கூந்தல்.

சொற்பொருள்:  கருங்கண் ஒடுங்கு ஈர் ஓதி ஒண்ணுதல் குறுமகள் – ஒடுங்கிய எண்ணெய்ப் பூசிய கூந்தலையுடைய ஒளியுடைய நெற்றியை உடைய தலைவி, நறும் தண் நீரள் – நறுமணத்தையும் குளிர்ச்சியையுமுடைய தன்மை உடையவள் (நீர்மை – தன்மை), அணங்கினளே – பிரிந்த வேளையில் மிகுந்த வருத்தத்தைக் கொடுப்பவள், இனையள் என்று – இத்தன்மை உடையவள் என்று, அவள் புனை அளவு அறியேன் – சொற்களால் புனைந்து உரைக்கும் எல்லையை நான் அறியேன், சில மெல்லியவே கிளவி – சில மென்மையான சொற்களை உடையவள் அவள், அணை மெல்லியள் – பஞ்சணையை ஒத்த மென்மையை உடையவள், யான் முயங்கும் காலே – நான் அணைக்கும் பொழுது (முயங்குங்காலே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 71, கருவூர் ஓதஞானியார்பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மருந்தெனின் மருந்தே, வைப்பெனின் வைப்பே,
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலைப்
பெருந்தோள் நுணுகிய நுசுப்பின்
கல் கெழு கானவர் நல்குறு மகளே.

பாடல் பின்னணி:  பொருள் ஈட்டுதற்பொருட்டுத் தலைவியைப் பிரிய எண்ணிய நெஞ்சிடம் தலைவன் கூறிச் செலவு அழுங்கியது.

பொருளுரை:  தோன்றிய தேமலை உடைய அழகிய பெருமையுடைய இள முலைகளையும் பெரிய தோளையும் நுண்ணிய இடையையும் உடைய, மலைகள் பொருந்திய காட்டை உடையவர் ஈன்று அளித்த மகள் ஆனவள், என் காதல் நோய்க்கு மருந்து வேண்டுமானால் அவளே மருந்து, செல்வம் பேண்டுமென்று எண்ணினால் அவளே செல்வம்.

குறிப்பு:   பொ. வே. சோமசுந்தரனார் உரை – வனப்பும் பெருமையும் ஒருங்கே உடைய என்பான் அம் பகட்டு இள முலை என்றான்.  பின்றைக்கு வேண்டுமென வைக்கப்படுத்தலின் வைப்பு என்பது செல்வத்திற்கு ஏதுப் பெயராகிற்று.  இரா. இராகவையங்கார் உரை – மருந்தும் வைப்பும் இன்பமும் என்னும் இம்மூன்றும் சுணங்கையும் முலையையும் தோளையும் நுசுப்பையுங் கொண்டு எனக்குரிய மகளாக இயைந்திருக்க ஈண்டிருந்து துய்த்தல்விட்டுப் புறம் போவது எற்றுக்கென்று செலவு அழுங்கினான்.

சொற்பொருள்:  மருந்து எனின் மருந்தே – என் காதல் நோய்க்கு மருந்து வேண்டுமானால் அவளே மருந்து, வைப்பு எனின் வைப்பே – செல்வம் பேண்டுமென்று எண்ணினால் அவளே செல்வம், அரும்பிய சுணங்கின் – தோன்றிய தேமலை உடைய,   அம் பகட்டு இள முலைப் பெருந்தோள் நுணுகிய நுசுப்பின் – அழகிய பெருமையுடைய இள முலைகளையும் பெரிய தோளையும் நுண்ணிய இடையையும் உடைய, கல் கெழு கானவர் நல்குறு மகளே – மலைகள் பொருந்திய காட்டை உடையவர் ஈன்று அளித்த மகள், கற்கள் பொருந்திய காட்டை உடையவர் ஈன்று அளித்த மகள்

குறுந்தொகை 72, மள்ளனார்குறிஞ்சித் திணை – தலைவன் தோழனிடம்  சொன்னது
பூ ஒத்து, அலமரும் தகைய ஏ ஒத்து,
எல்லாரும் அறிய நோய் செய்தனவே,
தேமொழித் திரண்ட மென்தோள் மா மலைப்
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஓப்புவாள் பெரு மழைக் கண்ணே.  5

பாடல் பின்னணி:  இயற்கைப் புணர்ச்சி எய்திப் பிரிந்த பின்னர் தலைவியை எய்தப்பெறாமையால் வருந்திய தலைவனிடம் வேறுபாடு கண்டு வினவிய தோழனுக்கு உரைத்தது.

பொருளுரை:  இனிய சொற்களையும் பருத்த தோளையும் உடைய, பருத்தியை இடையில் விதைத்த தினைப் புனத்தில் குருவிகளை விரட்டுபவளின் பெரிய குளிர்ச்சியை உடைய கண்கள், குவளை மலர்களை ஒத்துச் சுழலும் தன்மை உடையன.  ஆயினும் அம்பினை ஒத்து, யாவரும் அறியும்படி எனக்குத் துன்பத்தை அளித்தன.

குறிப்பு:   உ. வே. சாமிநாதையர் உரை – கண்கள் பூவைப்போலக் காண்டற்கு இனிமை தந்து தாம் வெகுண்டன போலச் சுழலுமாயினும் என்பால் அம்பு போற் கொடியவனாகி அவ்வம்பாலுண்டாகி யாவரும் அறியும் புண் போன்ற காம நோயைத் தந்தனவென்று பொருளை விரித்துக் கொள்க.

சொற்பொருள்:  பூ ஒத்து – பூவினை ஒத்த, குவளை மலர்களை ஒத்த, அலமரும் தகைய – சுழலும் தன்மை உடையன, ஏ ஒத்து – அம்பினை ஒத்து, எல்லாரும் அறிய நோய் செய்தனவே – யாவரும் அறியும்படி துன்பத்தை அளித்தன, தேமொழித் திரண்ட மென்தோள் – இனிய சொற்களையும் பருத்த தோளையும் உடைய, மா மலைப் பரீஇ வித்திய ஏனல் – பருத்தியை இடையில் விதைத்த தினைப் புனத்தில், குரீஇ ஓப்புவாள் – குருவிகளை விரட்டுபவளின், பெரு மழைக் கண்ணே – பெரிய குளிர்ச்சியை உடைய கண்கள்

குறுந்தொகை 73, பரணர்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ
அழியல் வாழி தோழி, நன்னன்
நறு மா கொன்று நாட்டில் போகிய
ஒன்றுமொழிக் கோசர் போல,
வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.  5

பாடல் பின்னணி:  தலைவன் பகலில் வருவதை மறுத்துரைத்து இரவில் வரச் செய்து, பின்னர் அதனையும் மறுத்து, வரைந்து கொள்ளும் பொருட்டு அங்ஙனம் செய்வதன் இன்றியமையாமையைத் தலைவிக்குக் கூறியது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  தலைவனின் மார்பை நீ விரும்புகிறாய்.  அதன்பொருட்டு நீ வருந்தாதே.  நன்னனின் நறுமணமுடைய மாமரத்தை வெட்டி அவனது நாட்டிற்குள் புகுந்த வஞ்சினத்தை உடைய கோசர் போல இரக்கமில்லாத சூழ்ச்சியும் சிறிது வேண்டும் நமக்கு.

குறிப்பு:   வரலாறு:  நன்னன், கோசர்.  நன்னன் குறுநில மன்னன்.  கோசர்கள் கோசர் குடியைச் சார்ந்த வீரர்கள்.

சொற்பொருள்:  மகிழ்நன் மார்பே – தலைவனின் மார்பு, வெய்யை – நீ விரும்புகிறாய், ஆல் (ஆல் – அசைநிலை) நீ அழியல் – நீ வருந்தாதே, வாழி – நீடு வாழ்வாயாக, அசை, தோழி – தோழி, நன்னன் நறு மா கொன்று – நன்னனின் நறுமணமுடைய மாமரத்தை வெட்டி, நாட்டில் போகிய – நாட்டில் புகுந்த, ஒன்றுமொழிக் கோசர் போல – வஞ்சினத்தை உடைய கோசர் போல, வன்கண் சூழ்ச்சியும் வேண்டும் – இரக்கமில்லாத சூழ்ச்சியும் வேண்டும், ஆல் (ஆல் – அசைநிலை) – சிறிதே – சிறிது (ஏகாரம் அசை)

குறுந்தொகை 74, விட்டகுதிரையார்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
விட்ட குதிரை விசைப்பினன்ன
விசும்பு தோய் பசுங்கழைக் குன்ற நாடன்,
யாம் தன் படர்ந்தமை அறியான், தானும்
வேனில் ஆன் ஏறு போலச்
சாயினன் என்ப நம் மாண் நலம் நயந்தே.  5

பாடல் பின்னணி:  தோழியின்பால் தலைவன் குறை இரந்தானாக அதற்கு உடன்பட்ட தோழி ‘தலைவனை ஏற்றுக்கொள்க’ என்பதுப் பட தலைவிக்குக் கூறியது.

பொருளுரை:  அவிழ்த்து விட்ட குதிரை துள்ளி எழுவதை ஒத்த, வளைத்து விட்டதன் பின் வானத்தைத் தொடும் பசுமையான மூங்கிலை உடைய மலை நாடன், நாம் அவனை நினைத்து அடைந்த துன்பத்தை அறியவில்லை.  அவனும் வேனில் காலத்தில் வெப்பத்தைத் தாங்கமுடியாத காளை மாட்டினைப் போல் மெலிந்துள்ளான், நம்முடைய மாட்சிமையுடைய அழகை விரும்பி.

குறிப்பு:   நற்றிணை 78 – புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா, குறுந்தொகை 54 – கான யானை கைவிடு பசுங்கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும், குறுந்தொகை 74 – விட்ட குதிரை விசைப்பினன்ன விசும்பு தோய் பசுங்கழை, புறநானூறு 302 – வெடி வேய் கொள்வது போல ஓடித் தாவுபு உகளும் மாவே, ஐங்குறுநூறு 278 – கழைக்கோல் குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி மீன் எறி தூண்டிலின் நிவக்கும்.  என்ப (5) – தமிழண்ணல் உரை – கூறுவர், பொ. வே. சோமசுந்தரனார் உரை, உ. வே. சாமிநாதையர் உரை – அசைநிலை.

சொற்பொருள்:  விட்ட குதிரை விசைப்பினன்ன – அவிழ்த்து விட்ட குதிரை துள்ளி எழுவதை ஒத்த, விசும்பு தோய் பசுங்கழைக் குன்ற நாடன் – வளைத்து விட்டதன் பின் வானத்தைத் தொடும் பசுமையான மூங்கிலை உடைய மலை நாடன், யாம் தன் படர்ந்தமை அறியான் – நாம் அவனை நினைத்து அடைந்த துன்பத்தை அறியவில்லை நம் தலைவன், தானும் வேனில் ஆன் ஏறு போலச் சாயினன் – அவனும் வேனில் காலத்தில் வெப்பத்தைத் தாங்கமுடியாத காளை மாட்டினைப் போல் மெலிந்துள்ளான், என்ப – அசைநிலை, எனக் கூறுகின்றனர், நம் மாண் நலம் நயந்தே – நம்முடைய மாட்சிமையுடைய அழகை விரும்பி

குறுந்தொகை 75,  படுமரத்து மோசிகீரனார்மருதத் திணை – தலைவி பாணனிடம்  சொன்னது – ஊடலின் பொழுது பாணர்கள் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே தூது செல்வார்கள்
நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?
ஒன்று தெளிய  நசையினம் மொழிமோ!
வெண்கோட்டு யானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்!
யார் வாய்க் கேட்டனை காதலர் வரவே? 5

பாடல் பின்னணி:  தலைவன் வரவு உணர்த்திய பாணற்கு தலைவி உரைத்தது.

பொருளுரை:   நீ கண்டாயா? கண்டவர்கள் சொன்னதைக் கேட்டாயா?  உண்மையாகிய ஒன்றை தெளிவாக அறிய விரும்பினேம்.  வெள்ளைத் தந்தங்களுடைய யானைகள் விளையாடும்  சோணை நதியையுடைய,  பொன் நிறைந்த பாடலி நகரை நீ பெறுவாயாக.  என் காதலர் வரவை யார் சொல்லக் கேட்டாய்?

குறிப்பு:  அகநானூறு 265 – பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் சீர் மிகு பாடலி.  யானை சோணை படியும் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – சோணை ஆற்றில் துளைந்து விளையாடும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – சோணை ஆற்றில் நீராடும்.  மொழிமோ:  மோ முன்னிலையசை, வரவே – ஏகாரம் அசை நிலை.  பாடலி (4) – அகநானூறு 265 – சீர் மிகு பாடலிக் குழீஇக் கங்கை நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ?  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம், இடையியல் 26).

சொற்பொருள்:   நீ கண்டனையோ – நீ கண்டாயா?,  கண்டார்க் கேட்டனையோ – (அல்லது) கண்டவர் சொன்னதைக் கேட்டாயா?, ஒன்று –  ஒன்றை, தெளிய  – தெளிவாக அறிய,  நசையினம் – விரும்பினேம் (தன்மைப் பன்மை வினைமுற்று), மொழிமோ – கூறுவாயாக,  வெண்கோட்டு – வெள்ளைத் தந்தம் உடைய (கோடு – மருப்பு, தந்தம்),  யானை – யானை,  சோணை படியும் – சோணை நதியில் விளையாடும், சோணை ஆற்றில் நீராடும், பொன்மலி – பொன் நிறைந்த, பாடலி – பாடலி நகரம், பெறீஇயர் – நீ பெறுவாயாக (இயர் வியங்கோள் வினைமுற்று விகுதி, வாழ்த்துப்பொருளில் வந்தது, அளபெடை),  யார் வாய்க் கேட்டனை – யார் சொல்லக் கேட்டாய், காதலர் வரவே – என்னுடைய காதலரின் வரவை (மகளே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 76, கிள்ளிமங்கலம் கிழார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச்
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்
சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள் இலை
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇத்
தண் வரல் வாடை தூக்கும்  5
கடும் பனி அச்சிரம் நடுங்கு அஞர் உறவே.

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்தச் சென்ற தோழிக்கு, அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைவி, புலந்து கூறியது.

பொருளுரை:   மலையில், அசைதலை உடைய சேம்பின் வளப்பமான இலை, பெரிய களிற்று யானையின் செவிக்கு ஒப்பாகத் தோன்றும்படி அதைத் தடவி அசைக்கும், குளிருடன் வரும் வாடைக் காற்று, மிக்கப் பனியை உடைய இந்த அச்சிரக்காலத்தில், பிரிவினால் நடுங்குவதற்குக் காரணமான வருத்தத்தை நான் அடையும்படி, கற்களையுடைய மலையைப் போன்ற மார்பையுடைய நம் தலைவர், காந்தள் செடிகளை வேலியாகக் கொண்ட உயர்ந்த மலையுடைய நல்ல நாட்டிற்குச் செல்வார் எனக் கூறுகின்றனர்.

குறிப்பு:  இரா. இராகவையங்கார் உரை – ‘கல்வரை மார்பர் செல்ப என்பவோ’ என்புழிக் கல்வரை மார்பர் கல் நெஞ்சினர் என்றவாறு.  என்பவோ – உ. வே. சாமிநாதையர் உரை – ஓகாரம் இரக்கக்குறிப்பு, அசைநிலையுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – எனக் கூறுகின்றனரோ.

சொற்பொருள்:   காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச் செல்ப – காந்தள் செடிகளை வேலியாகக் கொண்ட உயர்ந்த மலையுடைய நல்ல நாட்டிற்கு செல்வார், என்பவோ – எனக் கூறுகின்றனர், எனக் கூறுகின்றனரோ (என்பவோ – ஓகாரம் வினா, இரக்கக்குறிப்பு, அசைநிலையுமாம்), கல் வரை மார்பர் – கற்களையுடைய மலையைப் போன்ற மார்பையுடைய நம் தலைவர், சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள் இலை – மலையில் சேம்பின் அசைதலை உடைய வளப்பமான இலை, பெருங்களிற்றுச் செவியின் மான – பெரிய களிற்று யானையின் செவிக்கு ஒப்பாகத் தோன்றும், தைஇ – தடவி, தண் வரல் வாடை தூக்கும் – குளிர்ச்சியுடைய வாடைக்காற்று அசைக்கும், கடும் பனி அச்சிரம் – மிக்கப் பனியை உடைய அச்சிரக்காலம், நடுங்கு அஞர் உறவே – நடுங்கச் செய்யும் துன்பத்தை அடையும்படி

குறுந்தொகை 77, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி, யாவதும்
தவறு எனின் தவறோவிலவே, வெஞ்சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடு நல் யானைக்கு இடு நிழலாகும்
அரிய கானம் சென்றோர்க்கு  5
எளியவாகிய, தட மென்தோளே.

பாடல் பின்னணி:  பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவி, தோழியிடம் சொல்லியது.

பொருளுரை நீடு வாழ்வாயாகத் தோழி!  நான் கூறுவதை நீ கேட்பாயாக! வெப்பமான பாலை நிலத்தில் கள்வர்களால் கொல்லப்பட்ட வழிப்போக்கர்களின் உடலை மறைக்க இலைகளால் உருவாக்கிய குவியலானது உயர்ந்த நல்ல யானைக்கு நிழல் ஆகும் கடத்தற்குக் கடினமான பாலை நிலத்திற்குச் சென்ற தலைவர்பொருட்டு, மெலிந்த என்னுடைய பெரிய மென்மையான தோள்களைத் தவறு எனக் கூறினால், அவை சிறிதும் தவறு இல்லாதவை.

குறிப்பு:  அகநானூறு 267 – சுரம் பல இறந்தோர் தாம் பழி உடையர் அல்லர் நாளும் நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா வயங்கு வினை வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த தோளே தோழி தவறு உடையவ்வே.  அம்ம (1) – உ. வே. சாமிநாதையர் உரை – இடைச்சொல், ஒன்று சொல்வேன், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கேட்பித்தற்கண் வந்தது, ‘அம்ம கேட்பிக்கும்’ (தொல்காப்பியம், இடையியல் 28).  தவறோவிலவே (2) – உ. வே. சாமிநாதையர் உரை – தவறு இல்லை (ஓகாரம் அசைநிலை), இரா. இராகவையங்கார் உரை – தவறு ஒவில (தவறு நீங்கில), தவறோ இல என்பதும் ஆம்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம். உரியியல் 26). பதுக்கை – உ. வே. சாமிநாதையர் உரை – பதுங்கியிருத்தலுக்கு உரியதாகலின் இப்பெயர் பெற்றது போலும்.  அகநானூறு 289 –   உயர் பதுக்கு.

சொற்பொருள்:   அம்ம – கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலையுமாம், தோழி – தோழி,, யாவதும் – சிறிது அளவும், தவறு எனின் – தவறு என்று கூறின், தவறோ இலவே – தவறு இல்லை, வெஞ்சுரத்து உலந்த வம்பலர் – வெப்பமான பாலை நிலத்தில் கொல்லப்பட்ட வழிப்போக்கர், உவல் இடு பதுக்கை – உடலை மறைக்க இலைகளால் உருவாக்கிய குவியல், நெடு நல் யானைக்கு இடு நிழலாகும் –  உயர்ந்த நல்ல யானைக்கு நிழல் ஆகும், அரிய கானம் சென்றோர்க்கு – கடத்தற்குக் கடினமான பாலை நிலத்திற்குச் சென்ற தலைவர்பொருட்டு, எளியவாகிய – மெலிந்த, தட மென்தோளே – பெரிய மென்மையான தோள்கள்

குறுந்தொகை 78, நக்கீரர்குறிஞ்சித் திணை – தலைவனின் தோழன் அவனிடம் சொன்னது
பெருவரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச்
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப!
நோதக்கன்றே, காமம் யாவதும்
நன்றென உணரார் மாட்டும்  5
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே.

பாடல் பின்னணி:  தலைவனின் மன வேறுபாட்டை அறிந்த தோழன் இடித்துரைத்தது.

பொருளுரை:  பெரிய மலையின் உச்சியில் உள்ள நெடிய வெள்ளை அருவியானது அறிவு வாய்ந்த கூத்தரின் முழவைப் போல் ஒலித்துப் பக்க மலையிலிருந்து வீழும் ஒளியுடைய மலையின் தலைவனே!  காதல் நல்லது எனச் சிறிதும் உணராதவர்களிடம் சென்று தங்கும் பெரும் மடமை உடையது.  இது வருந்தத்தக்கது.

குறிப்பு:   ச. வே. சுப்பிரமணியன் உரை – காமம் தன்னைச் சிறிதும் நல்லது என எண்ணாதவரிடத்தும் தானே சென்று தங்கும் மிகப்பெரிய பேதைமை அறியாமை உடையது.  அது மிகவும் நொந்து வெறுக்கத்தக்கது.  தமிழண்ணல் உரை – காமம் தன்னைச் சிறிதும் ‘நல்லது’ என எண்ணாதவரிடத்தும் தானே சென்று, அவரிடம் தங்கும்படியான மிகப் பேதைமையை உடையது.  காமத்தை அறிவில்லாதது எனப் பாங்கன் திட்டுகின்றான்.  காமத்தின் இயல்பை இது விளக்குகின்றது.

சொற்பொருள்:   பெருவரை மிசையது நெடு வெள் அருவி – பெரிய மலையின் உச்சியில் உள்ள நெடிய வெள்ளை அருவி, முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி – அறிவு வாய்ந்த கூத்தரின் முழவைப் போல் ஒலித்து, சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப – பக்க மலையிலிருந்து வீழும் ஒளியுடைய மலையின் தலைவனே!  நோதக்கன்றே – வருந்துவதற்கு ஏற்றது, காமம் யாவதும் நன்றென உணரார் மாட்டும் சென்றே – காதல் சிறிதும் நல்லது என உணராதவர்களிடம் சென்று, நிற்கும் பெரும் பேதைமைத்தே – தங்கும் பெரும் மடமை உடையது

குறுந்தொகை 79, குடவாயில் கீரனக்கனார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கான யானை தோல் நயந்து உண்ட
பொரி தாள் ஓமை வளி பொரு நெடுஞ்சினை
அலங்கல் உலவை ஏறி ஒய்யெனப்
புலம்புதரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச்  5
சேந்தனர் கொல்லோ, தாமே யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லாது அகறல் வல்லுவோரே?

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவனை நினைந்த தலைவி தோழிக்குச் சொல்லியது.

பொருளுரை:  நாம் அவர் பிரிவதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்ற தவறினால் நம்மிடம் சொல்லாமல் செல்லுவதில் வல்லமை உடைய நம் தலைவர், காட்டு யானை பட்டையை விரும்பி உண்ட பொரிந்த அடிப்பகுதியை உடைய ஓமை மரத்தில் காற்று அடிப்பதால் அசையும் நீண்ட உலர்ந்த கிளையில் ஏறி, தன் துன்பத்தை வெளிப்படுத்தும் குரலில், விரைந்து, ஆண் புறாக்கள் தங்கள் பெண் புறாக்களை அழைக்கும், பாலை நிலத்தில் உள்ள அழகிய குடிகளை உடைய சிற்றூரில் தங்கி உள்ளாரா?

குறிப்பு:   இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – புலம்புதரு குரல்வாய்ப் புறவுப் பேடை பயிரும் அத்தம் என்றதனானே, ‘இயற்கையில் நந்திறத்து பேரன்புடையார், அதனைக் கேட்டுப் பொருள் கடைக்கூட்டாது மீண்டிடுவாரோ? என்பதாம்.  புறவு – புறா புற என்றாகி உகரம் ஏற்றது. குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  பெடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  புறவுப் பெடை பயிரும் (4) –   உ. வே. சாமிநாதையர் உரை – ஆண் புறாக்கள் பெண் புறாக்களை அழைக்கும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆண் புறாக்கள் பெண் புறாக்களை அழையாநின்ற (அழையாநின்ற – அழைக்கின்ற).

சொற்பொருள்:   கான யானை தோல் நயந்து உண்ட – காட்டு யானை பட்டையை விரும்பி உண்ட, பொரி தாள் ஓமை – பொரிந்த அடிப்பகுதியை உடைய ஓமை மரம், வளி பொரு – காற்று அடிக்கும், நெடுஞ்சினை – நீண்ட கிளை, அலங்கல் உலவை ஏறி – அசைதலை உடைய உலர்ந்த கிளையில் ஏறி, ஒய்யென – ஒய்யென்று (விரைவுக்குறிப்பு), புலம்புதரு குரல – தனிமையை  வெளிப்படுத்தும் குரலில், துன்பத்தை வெளிப்படுத்தும் குரலில், புறவுப் பெடை பயிரும் – ஆண் புறாக்கள் தங்கள் பெண் புறாக்களை அழைக்கும், பெண் புறாக்கள் தங்கள் ஆண் புறாக்களை அழைக்கும், அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் – பாலை நிலத்தில் உள்ள அழகிய குடிகளை உடைய சிற்றூர், சேந்தனர் கொல்லோ – தங்கியுள்ளாரா (கொல்லோ – ஓகாரம் அசை), தாமே – தாம், ஏ அசைநிலைகள், யாம் தமக்கு ஒல்லேம் என்ற தப்பற்கு – நாம் அவர் பிரிவதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்ற தவறினால், சொல்லாது அகறல் வல்லுவோரே – சொல்லாமல் செல்லுவதில் வல்லமை உடையோர் (வல்லுவோரே – ஏகாரம் அசை)

குறுந்தொகை 80, ஔவையார்மருதத் திணைபரத்தை சொன்னது
கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சிப்
பெரும் புனல் வந்த இருந்துறை விரும்பி
யாம் அஃது அயர்கம் சேறும், தான் அஃது
அஞ்சுவது உடையள் ஆயின், வெம் போர்
நுகம்படக் கடக்கும் பல் வேல் எழினி  5
முனை ஆன் பெரு நிரை போலக்
கிளையொடும் காக்க, தன் கொழுநன் மார்பே.

பாடல் பின்னணி:  தலைமகளின் தோழியர் கேட்பப் பரத்தை சொன்னாள்.

பொருளுரை:  கூந்தலில் வெண்குவளை மலர்களின் புற இதழ்களை ஒடித்த முழு மலர்களை அணிந்து, வெள்ளம் வந்த பெரிய நீர்த்துறையில் விருப்பத்துடன் நாம் அங்கு விளையாடுவதற்குச் செல்வோம்.   நாம் தலைவனுடன்  நீரில் விளையாடுவதற்கு, தலைவி அஞ்சுவாளாயின், பகைவரை நடுநிலைமையுடன் கொல்லும் பல வேற்படையை உடைய எழினி என்பவன் போர் முனையில் உள்ள தன் பசுக்களைக் காப்பது போல, தன்னுடைய உறவினர்களுடன் காப்பாளாக அவளது கணவனின் மார்பை.

குறிப்பு:  எழினி என்பது அதியமான் நெடுமான் அஞ்சி.  அகநானூறு 105 – பல் வேல் எழினி கெடல் அருந் துப்பின் விடு தொழில் முடிமார் கனை எரி நடந்த கல் காய் கானத்து வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர் தேம் பிழி நறுங்கள் மகிழின் முனை கடந்து வீங்கு மென் சுரைய ஏற்று இனம் தரூஉம், அகநானூறு 372 நெடுநெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி கடுமுனை அலைத்த கொடு வில் ஆடவர் ஆ கொள் பூசலின்.  மலரின் புறவிதழ் நீக்குதல் – புறநானூறு 116 – முழு நெறி, கலித்தொகை 143 – நெய்தல் நெறிக்க, குறுந்தொகை 80 – முழு நெறி, நற்றிணை 138 – பூவுடன் நெறிதரு.   கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி (1) – உ. வே. சாமிநாதையர் உரை – கூந்தற்கண் ஆம்பலின் புற இதழ் ஒடித்த முழுப் பூவை செருகி, பொ. வே. சோமசுந்தரனார் உரை,  இரா.  இராகவையங்கார் உரை – ஆம்பலினுடைய கூந்தல் போன்ற நெறிப்பினையுடைய முழு நெறித் தழையை உடுத்து.  நுகம்பட (5) – உ. வே. சாமிநாதையர் உரை – நடுநிலைமையுண்டாகும்படி, நுகம் – நுகத்தின் தன்மை, நடுவு நிலைமை, இங்கே ஆகுபெயர், நச்சினார்க்கினியர் உரை மலைபடுகடாம் 87 – வலியுண்டாக.   மார்பே: ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  கூந்தல் – கூந்தல், ஆம்பல் – வெண்குவளை மலர்கள், முழு நெறி அடைச்சி – புற இதழ்கள் ஒடித்த முழு மலர்களை அணிந்து, பெரும் புனல் வந்த இருந்துறை – வெள்ளம் வந்த பெரிய நீர்த்துறை, விரும்பி – விரும்பி, யாம் அஃது அயர்கம் – நாம் அங்கு விளையாடுவோம், சேறும் – செல்வோம், தான் – தலைவி,  அஃது – நாம் தலைவனுடன் விளையாடுவது, அஞ்சுவது உடையள் ஆயின் – அவள் அஞ்சுவாளாயின்,  வெம் போர் நுகம் படக் கடக்கும் – கடுமையான போரில் பகைவரை நடுநிலைமையுடன் கொல்லும்,  விரும்பிய போரில் பகைவரை நடுநிலைமையுடன் கொல்லும், பல் வேல் எழினி – பல வேற்படையை உடைய எழினி,  முனை ஆன் பெரு நிரை போல – போர் முனையில் உள்ள பசுக்களைப் போல, கிளையொடும் காக்க தன் கொழுநன் மார்பே – உறவினர்களுடன் காப்பாளாக அவளது கணவனின் மார்பை

குறுந்தொகை 81, வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
இவளே நின் சொல் கொண்ட என் சொல் தேறிப்
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறைப்
புது நலன் இழந்த புலம்புமார் உடையள்,
உதுக்காண் தெய்ய, உள்ளல் வேண்டும்,
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக்  5
கடலும் கானலும் தோன்றும்
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல்லூரே.

பாடல் பின்னணி:  தோழியின்பாற் குறை இரந்து அவள் உதவியால் தலைவியைப் பெற்று அவளுடன் கூடிப்பிரிந்த தலைவனிடம் தோழி கூறியது.

பொருளுரை:   நீ உன் குறையை என்னிடம் கூற நான் அவளிடம் அதைக் கூற மனம் தெளிந்து, இள அரும்புகளை உடைய பல கிளைகளை உடைய ஞாழல் மரத்தின் ஒரு பக்கம் புதிதாகப் பெற்ற தன் அழகை நீ பிரிந்ததால் இழந்து வருந்துபவள் ஆக உள்ளாள் இவள்.  அதோ பார்!  நிலவும் அதனுடன் இருக்கும் இருளையும் போல் புலால் நாற்றம் வீசும் அலைகளை உடைய கடலும் கடற்கரைச் சோலையும் கண்ணுக்குத் தோன்றும் மடல்கள் தாழ்ந்துள்ள பனைமரங்களை உடைய எம்முடைய சிறிய நல்ல ஊர்.  நீ இனி அவளை மறவாது நினைக்க வேண்டும்.

குறிப்பு:  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  புது நலன் இழந்த புலம்பு உடையள் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – இதுகாறும் புதிதாக இருந்த தன் பெண்மை நலத்தை இழந்ததால் உண்டான தனிமையை உடையாள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – புதுவதாகப் பெற்ற அழகினையும் நீ பிரிந்ததாலே இழந்த தனிமைத் துன்பத்தையும் உடையாள்.

சொற்பொருள்:  இவளே – இவள், தலைவி, நின் சொல் கொண்ட என் சொல் தேறி – நீ உன் குறையை என்னிடம்  கூற நான் அவளிடம் அதைக் கூற அவள் மனம் தெளிந்து, பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறை – பசிய/ இள அரும்புகளை உடைய பல கிளைகளை உடைய ஞாழல் மரத்தின் ஒரு பக்கம், புது நலன் இழந்த புலம்புமார் உடையள் – புதிதாக பெற்ற அழகை நீ பிரிந்ததால் இழந்து வருந்துபவள் ஆக உள்ளாள், புதிதாக இருந்த தன் பெண்மை நலத்தை இழந்து வருந்துபவள் ஆக உள்ளாள் (மார் – அசைநிலை), உதுக்காண் – அதோ பார், தெய்ய – அசைநிலை, உள்ளல் வேண்டும் – நினைக்க வேண்டும், நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக் கடலும் கானலும் தோன்றும் – நிலவும் அதனுடன் இருக்கும் இருளையும் போல் புலால் நாற்றம் வீசும் அலைகளை உடைய கடலும் கடற்கரைச் சோலையும் கண்ணுக்குத் தோன்றும், மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே – மடல்கள் தாழ்ந்துள்ள பனைமரங்களை உடைய எம்முடைய சிறிய நல்ல ஊர் (ஊரே – ஏகாரம் அசை)

குறுந்தொகை 82, கடுவன் மள்ளனார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வார் உறு வணர் கதுப்பு உளரிப் புறம் சேர்பு
அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார்
யார் ஆகுவர் கொல் தோழி, சாரல்
பெரும் புனக் குறவன் சிறு தினை மறு கால்
கொழுங்கொடி அவரை பூக்கும்  5
அரும்பனி அச்சிரம் வாராதோரே?

பாடல் பின்னணி:  பருவங்கண்டு வருத்திய தலைவி, ‘அவர் வருவார்’ என வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது.

பொருளுரை:   தோழி! பக்கமலையில் உள்ள குறவன் சிறு தினையை அரிந்த மறுகாலில் தடித்த கொடியையுடைய அவரைப் பூக்கும் பொறுத்தற்குக் கடினமான பனியை உடைய அச்சிரக்காலத்திலும் வராத நம் தலைவர், என்னுடைய நீண்ட வளைந்த கூந்தலை விரலால் கோதி, என் முதுகைச் சார்ந்து “நீ அழாதே” எனக்கூறி என் கண்ணீரைத் துடைப்பார். இப்பொழுது எவ்வாறு உள்ளாரோ?

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – தினைக்கதிரை அரித்த பின் அதன் அடியில் மீட்டும் கிளைத்துக் கதிர் உண்டாகும்.  அதனை மறுகால் என்பர்.  அம்மறுகாலில் விதைத்த அவரை வளர்ந்தது.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  வார் உறு வணர் கதுப்பு உளரிப் – நீண்ட வளைந்த கூந்தலை விரலால் கோதி, புறம் சேர்பு – முதுகை சார்ந்து, அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார் யார் ஆகுவர் கொல் – அழாதே எனக்கூறி என்னுடைய அழும் கண்களை துடைப்பவர் யார் உள்ளார் (கொல் – அசைநிலை), தோழி – தோழி, சாரல் பெரும் புனக் குறவன் – பக்கமலையில் உள்ள குறவன், சிறுதினை மறு கால் – சிறு தினையை அரிந்த மறுகாலில், கொழுங்கொடி அவரை பூக்கும் – தடித்த கொடியையுடைய அவரைப் பூக்கும், அரும்பனி அச்சிரம் வாராதோரே – பொறுத்தற்குக் கடினமான பனியை உடைய அச்சிரக்காலத்திலும் வராத நம் தலைவர்

குறுந்தொகை 83, வெண்பூதனார்குறிஞ்சித் திணை – தோழி செவிலித்தாயை வாழ்த்தி தலைவிக்கு உணர்த்தியது
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை,
தம் இல் தமது உண்டன்ன சினைதொறும்
தீம்பழம் தூங்கும் பலவின்
ஓங்கு மலை நாடனை, வரும் என்றோளே.  5

பாடல் பின்னணி:  தலைவன் தலைவியை வரைந்துகொள்ள வருகின்ற நற்செய்தியைச் செவிலி தோழிக்குக் கூறினாளாக. அச்செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறி செவிலியை வாழ்த்தியது.

பொருளுரை:   தம்முடைய இல்லத்திலிருந்து தம் முயற்சியால் ஈட்டிய பொருளில் உண்டாற்போன்ற இனிமையுடைய பழங்கள் தொங்குகின்ற பலா மரங்களையுடைய உயர்ந்த மலைகள் கொண்ட நாட்டை உடைய நாடனை, “அவன் வரைதற்கு வருவான்” என்றாள் அன்னை.  அவள் பெறுவதற்கு அரிய அமிழ்தம் உணவாக உள்ள பெரும் புகழை உடைய மேல் உலகத்தைப் பெறுவாளாக!

குறிப்பு:  தோழிதானே செவிலி மகளே (களவியல் 123).  குறுந்தொகை 201 – அமிழ்தம் உண்க அயல் இல் ஆட்டி……மலை கெழு நாடனை வரும் என்றாளே.  தம் இல் தமது உண்டன்ன (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தம் இல் இருந்து தமது உண்டன்ன இன்பமுடைய நாடன் என்க, உ. வே. சாமிநாதையர் உரை – தமது முயற்சியால் ஈட்டிய பொருளில் தம் கூற்றை உண்டாற்போன்ற இன்சுவையைத் தருவனவாகி கொம்புதோறும் தொங்குகின்ற பலாமரங்களை உடைய, தமிழண்ணல் உரை – தமது சொந்த வீட்டிலிருந்து தாம் முயன்று தேடிய செல்வத்தைக் கொண்டு உண்பதால் ஏற்படும் இன்பத்தைப்போல் இன்சுவை தருமாறு பலாமரத்தினது கிளைகள்தோறும் இனிய பலாப் பழங்கள் தொங்குகின்றன.  இவ்வின்பத்தைத் தீம்பழத்திற்கு ஏற்றுவாரும் உளர், இரா. இராகவையங்கார் உரை – தம் மனைக்கண்ணே தமக்குரியதென்று நூல் வகுத்ததை உண்டாற்போன்ற இன்பமுடைய நாடன்.  வரும் என்றோளே (5) – உ. வே. சாமிநாதையர் உரை – வரைதற்குரிய பொருளோடு வருவான் என்று கூறியவளாகிய.

சொற்பொருள்:  அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆக – பெறுவதற்கு அரிய அமிழ்தம் உண்ணும் உணவாக, பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ- பெரும் புகழை உடைய மேல் உலகைப் பெருவாளாக, அன்னை – அன்னை, தம் இல் – தம்முடைய இல்லத்திலிருந்து, தமது உண்டன்ன – தம் முயற்சியால் ஈட்டிய பொருளில் உண்டாற்போன்று, சினைதொறும் – கிளைகள்தோறும், தீம்பழம் தூங்கும் பலவின் – இனிய பழங்கள் தொங்குகின்ற பலா மரங்களையுடைய, ஓங்கு மலை நாடனை – உயர்ந்த மலைகள் கொண்ட நாட்டை உடைய நாடனை, வரும் என்றோளே – அவன் வரைதற்கு வருவான் என்றாள்

குறுந்தொகை 84, மோசிகீரனார்பாலைத் திணை – செவிலித்தாய் சொன்னதுதலைவி உடன்போக்கில் சென்றபின்
பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள்,
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே,
கழல் தொடி ஆய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.  5

பாடல் பின்னணி:  தலைவி தலைவனுடன் உடன்போக்கில் சென்ற பின், அதனை அறிந்த செவிலித் தாய் இவ்வாறு கூறுகின்றாள்.

பொருளுரை:  நான் அவளை மீண்டும் மீண்டும் தழுவிய வேளையில், “நான் வியர்வை அடைந்தேன்” என்று என்னிடம் கூறினாள்.  இப்பொழுது அறிந்தேன், அவளுக்கு வெறுப்பு உண்டாகியது ஏன் என்று.  சுழலும் தொடியை அணிந்த ஆய் அண்டிரன் என்ற மன்னனின் முகில்கள் தவழும் பொதியை மலையில் உள்ள வேங்கை மலர்கள் மற்றும் காந்தள் மலர்கள் ஆகியவற்றின் நறுமணத்தைப் பரப்பிய என் மகள், ஆம்பல் மலரைவிடக் குளிர்ச்சியானவள்.

குறிப்பு:  வேங்கை, காந்தள் ஆகிய மலர்களின் நறுமணம், தலைவி தலைவனுடன் களவு ஒழுக்கத்தில் இருந்தாள் என்பதைக் குறிக்கின்றது.  தான் – அசை நிலை, தண்ணியளே – ஏகாரம் இரக்கக் குறிப்பு.  ஆய் – கடையெழு வள்ளல்களில் ஒருவன்.  ஆய், காரி, பாரி, ஓரி, நள்ளி, அதிகன், பேகன் ஆகியோர் கடையெழு வள்ளல்கள்.

சொற்பொருள்:  பெயர்த்தனென் முயங்க – நான் அவளை மீண்டும் மீண்டும் தழுவ, யான் வியர்த்தனென் என்றனள் – நான் வியர்வை அடைந்தேன் என்று கூறினாள்,  இனி அறிந்தேன் – இப்பொழுது அறிந்தேன், அது துனி ஆகுதலே – அவளுக்கு வெறுப்பை உண்டாக்கியதை, கழல் தொடி ஆய் – சுழலும் தொடியை அணிந்த ஆய் அண்டிரன், மழை தவழ் பொதியில் – முகில்கள் தவழும் பொதியை மலையில்,  வேங்கையும் காந்தளும் நாறி – வேங்கை மலரின் நறுமணத்தையும் காந்தள் மலரின் நறுமணத்தையும் வீசி, ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே – ஆம்பல் மலரைவிட அவள் குளிர்ச்சியானவள்

குறுந்தொகை 85, வடம வண்ணக்கன் தாமோதரனார்மருதத் திணை – தோழி தலைவனின் தூதுவனாக வந்த பாணனிடம் சொன்னது
யாரினும் இனியன், பேரன்பினனே,
உள்ளூர்க் குரீஇத் துள்ளு நடைச் சேவல்
சூன் முதிர் பேடைக்கு ஈன் இல் இழைஇயர்
தேம் பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்  5
யாண ஊரன், பாணன் வாயே.

பாடல் பின்னணி:  வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.  பாணன் கூற்றால் வெகுண்டு படர்க்கையில் அவன் கேட்பக் கூறியது.

பொருளுரை:  ஊரில் உள்ள குருவியின் துள்ளும் நடையையுடைய சேவல் கர்ப்பம் முதிர்ந்த தன்னுடைய பெண் குருவிக்கு முட்டையிட கூடு அமைக்கும் பொருட்டுத் தேன் பொருந்திய இனிய கோலை உடைய கரும்பின் மணம் வீசாத வெள்ளை மலர்களைக் கோதி எடுக்கும் வளமையுடைய ஊரின் தலைவன், பாணனின் சொற்களில் ‘எல்லோரை விடவும் இனிமையானவன், தலைவியிடம் பேரன்பு உடையவன்’.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஊர்க் குருவி சேவல் சூன்முதிர் பெடைக்குக் கூடு இயற்றும் அன்புடையனவாகும் இயல்பும் தலைவன்பால் இல்லை.  அவன் தன் தலைவியை நீத்துப் பரத்தமையுடையவன் ஆயினான் என்பது.  இரா. இராகவையங்கார் உரை – இவ்வூர்க் குரீஇ மனையுறை குருவியாதலால் தலைவன் பல்கால் இவற்றின் நட்பினைக் கண்டு உள்ளுதல் கூடும் என்று குறித்தாள்.  உள்ளூர் – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை- முன்பின்னாகத் தொக்க.  ஆறன்றொகை.  பேடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:  யாரினும் இனியன் – எல்லோரை விடவும் இனிமையானவன், பேரன்பினனே – தலைவியிடம் பேரன்பு உடையவன், உள்ளூர்க் குரீஇத் துள்ளு நடைச் சேவல் – ஊரில் உள்ள குருவியின் துள்ளும் நடையையுடைய சேவல், சூன் முதிர் பேடைக்கு – கர்ப்பம் முதிர்ந்த தன்னுடைய பெண் குருவிக்கு, ஈன் இல் இழைஇயர் – முட்டையிட கூடு அமைக்கும் பொருட்டு, தேம் பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் – தேன் பொருந்திய இனிய கழையை உடைய கரும்பின், நாறா வெண்பூக் கொழுதும் – மணம் வீசாத வெள்ளை மலர்களைக் கோதி எடுக்கும், யாண ஊரன் – புது வருவாயை உடைய ஊரின் தலைவன், வளமையுடைய ஊரின் தலைவன், பாணன் வாயே – பாணனின் சொற்களில்

குறுந்தொகை 86, வெண்கொற்றனார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கிப்
பிறரும் கேட்குநர் உளர் கொல், உறை சிறந்து
ஊதை தூற்றம் கூதிர் யாமத்து,
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்,  5
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே?

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாள் என வருந்திய தோழியிடம் தலைவி சொன்னது.

பொருளுரை:  மழைத்துளிகள் மிகுந்து வாடைக்காற்று வீசும் குளிர்ந்த நள்ளிரவில், எருதானது ஈக்கள் ஒலிக்கும்பொழுதெல்லாம் அசைந்து ஒலிக்கும் நாவினால் முழங்கும் கொடிய மணியின் மெல்லிய ஓசையை, ஆற்றியிருக்க வேண்டும் என்று என்னால் தடுக்கப்பட்ட கண்ணீர் உடைந்து துளித் துளியாக விழுகின்ற சிவந்த வரிகளையுடைய குளிர்ச்சியுடையக் கண்களுடனும் பொறுப்பதற்கு அரிய காதல் நோயுடனும் தனிமைத் துன்பத்தால் கலங்கிக் கேட்டு வருந்தும் என்னையன்றி பிற மகளிரும் உள்ளனரோ?

குறிப்பு:  உளம்புதல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அசைதல்.  ஈண்டு ஒலித்தல் என்னும் பொருட்டு.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  சிறை பனி உடைந்த – தடுக்கப்பட்ட நீர் உடைந்த, சேயரி மழைக் கண் – சிவந்த வரிகளையுடைய குளிர்ச்சியடைய கண்கள், பொறை அரு நோயொடு – பொறுப்பதற்கு அரிய காதல் நோயுடன், புலம்பு அலைக் கலங்கி – தனிமையில் வருந்துவதால் கலங்கி, பிறரும் கேட்குநர் உளர் கொல் – கேட்பவர்கள் பிறர் உள்ளனரா, உறை சிறந்து – மழைத்துளிகள் மிகுந்து, ஊதை தூற்றம் – வாடைக்காற்று வீசும், கூதிர் யாமத்து – குளிர்ந்த நள்ளிரவில், ஆன் – எருது, நுளம்பு உலம்புதொறு – ஈ ஒலிக்கும்பொழுதெல்லாம், உளம்பும் – அசைந்து ஒலிக்கும், நா நவில் கொடு மணி – நாவினால் (மணியின் தொங்கும் பகுதி) முழங்கும் கொடிய மணி, நல்கூர் குரலே – மெல்லிய ஓசை

குறுந்தொகை 87, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி சொன்னது
மன்ற மராஅத்த பேஎ முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப, யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்,
பசைஇப் பசந்தன்று நுதலே,
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென்தோளே.  5

பாடல் பின்னணி:  தலைவன் கடவுள்காட்டிச் சூளுற்றுப் பின் பிரிந்து நீட்டித்தானாக, தலைவனை அக்கடவுள் ஒறுக்குமோ என்று அஞ்சிய தலைவி, கடவுளை வாழ்த்தியது (சூளுற்று – உறுதிமொழி உரைத்து).

பொருளுரை:  ஊரின் பொது இடத்தின் கடம்ப மரத்தில் உள்ள அச்சம் தரும் முதிர்ந்த கடவுள் கொடியவர்களை வருத்தும் என அறிந்தவர்கள் கூறுவார்கள்.  சிறிதும் அக்கடவுளால் வருத்தம் அடையும் நிலையில் உள்ள கொடியவர் இல்லை, குன்றுகள் பொருந்திய நாட்டையுடைய என் தலைவர்.  என் நெற்றி அவரை விரும்பியதால் பசலை அடைந்தது.  என் மனம் அவரை எண்ணி நெகிழ்ந்ததால் பரந்த மெல்லிய என் தோள்கள் மெலிந்தன.  என்பால் உண்டான வேறுபாடுகளுக்குத் தலைவர் பொறுப்பில்லை.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – தலைவன் தலைவியோடு அளவளாவியிருந்த பொழுது கடம்ப மரத்தில் உறையும் கடவுள் மேல் ஆணையிட்டு ‘நின்னைப் பிரியேன்; பிரிவின் ஆற்றேன்” என்று தெளித்தான்.  பின்னர் அவன் பிரிந்து நீட்டித்தானாக அப்பிரிவினால் தலைவி வேறுபாடு உற்றாள்.  தன்னுடைய வேறுபாடுகளுக்குக் காரணம் தலைவன் பிரிந்துறையும் கொடுமையே ஆதலின் அவனால் சூளுறப்பட்ட கடவுள் அவனை ஒதுக்குமென்று அவன் கவன்றான்.  ஆதலின் தலைவன் கொடுமையுடையவன் அல்லன் என்று கூறி அவன் துன்புறாமற் செய்ய வேண்டும் என்று தெய்வத்தை பரவினாள்.  மராஅத்த – அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது, பேஎ – அளபெடை, தெறூஉம் – அளபெடை, பசைஇ – அளபெடை, ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி.  மராஅத்த பேஎ முதிர் கடவுள் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – பிறர்க்கு அச்சம் செய்தல் முதிர்ந்த தெய்வம்,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடம்பில் உறைகின்ற பிறர்க்கு அச்சம் செய்தலில் முதிர்ந்த முருகக்கடவுள், இரா. இராகவையங்கார் உரை- அச்சம் செய்வதில் பழமைப்பட்ட தெய்வம், தமிழண்ணல் உரை – செங்கடம்பு மரத்தில் உறையும் அச்சம் மிக்க தெய்வம்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 24). அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம். உரியியல் 26).

சொற்பொருள்:  மன்ற மராஅத்த பேஎ முதிர் கடவுள் – பொது இடத்தின் கடம்ப மரத்தில் உள்ள அச்சம் தரும் முதிர்ந்த கடவுள், பொது இடத்தின் கடம்ப மரத்தில் உள்ள அச்சம் தரும் முருகக்கடவுள், கொடியோர்த் தெறூஉம் என்ப – கொடியவர்களை வருந்தச் செய்யும் எனக்கூறுவார்கள், யாவதும் கொடியர் அல்லர் – சிறிதும் அக்கடவுளால் வருத்தம் அடையும் நிலையில் உள்ள கொடியவர் இல்லை, எம் குன்று கெழு நாடர் – குன்றுகள் பொருந்திய நாட்டையுடைய என் தலைவர், பசைஇப் பசந்தன்று நுதலே – என் நெற்றி அவரை விரும்பியதால் பசலை அடைந்தது, ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென் தோளே – என் மனம் அவரை எண்ணி நெகிழ்ந்ததால் பரந்த மெல்லிய என் தோள்கள் மெலிந்தன

குறுந்தொகை 88, மதுரைக் கதக்கண்ணனார்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
ஒலி வெள்ளருவி ஓங்கு மலை நாடன்
சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
தொல் முரண் சோரும் துன் அருஞ்சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம்,
வடு நாணலமே தோழி நாமே.  5

பாடல் பின்னணி:   ‘தலைவன் இரவுக்குறியை விரும்புகின்றான்.  இனி இரவில் வருவான்’ என்று தோழி தலைவியிடம் கூறியது.

பொருளுரை:  தோழி!  ஒலிக்கும் வெள்ளை அருவியை உடைய உயர்ந்த மலைகளையுடைய நாட்டின் தலைவன், சிறிய கண்களையுடைய பெரிய களிற்று யானை வலிமை உடைய புலியைத் தாக்கி, தன்னுடைய பழைய வலிமையை இழந்துத் தளரும், நெருங்குதற்கு அரிய மலைப்பக்கம், நடு இரவில் வருதலும் செய்வான்.  அதனால் ஏற்படும் பழிக்கு  நாம் நாணம் அடைய மாட்டோம்.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – அருவியானது ஓங்கிய மலையிலிருந்து கீழ் இழிந்து நிலப்பரப்பில் உள்ளார்க்குப் பயன்படுவதுபோலத் தலைவன் நெடுந்தூரம் கடந்து வந்து நமக்கு பயன்படுவான்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை –  துன்னற்கரிய அவ்வழியே வருங்கால் தலைவனுக்கு விலங்கு முதலியவற்றானே ஏதம் உண்டாயின் அப்பொழுது உண்டாகும் பழி பெரிது என்பாள் வடு என்றாள்.

சொற்பொருள்:  ஒலி வெள்ளருவி – ஒலிக்கும் வெள்ளை அருவி, ஓங்கு மலை நாடன் – உயர்ந்த மலைகளையுடைய நாட்டின் தலைவன், சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கி – சிறிய கண்களையுடைய பெரிய களிற்று யானை வலிமை உடைய புலியைத் தாக்கி, தொல் முரண் சோரும் – பழைய வலிமை சோரும், துன் அருஞ்சாரல் – நெருங்குதற்கு அரிய மலைப்பக்கம், நடுநாள் வருதலும் வரூஉம் – நடு இரவில் வருதலும் செய்வான், வடு – பழிக்கு, நாணலமே – நாம் நாணம் அடைய மாட்டோம், தோழி நாமே – நாம்

குறுந்தொகை 89, பரணர்மருதத் திணை – தோழி தனக்குத் தானே சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பாவடி உரல பகுவாய் வள்ளை
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவது எவன் கொல் இப்பேதை ஊர்க்கே,
பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கண் தெய்வம் குட வரை எழுதிய  5
நல் இயல் பாவை அன்ன, இம்
மெல்லியல் குறுமகள் பாடினள் குறினே?

பாடல் பின்னணி:   ஊரினர் அலர் தூற்றுகின்றனர்.  விரைவில் வரைதல் வேண்டும் என தலைவனுக்கு உணர்த்தியது.

பொருளுரை:  பெரிய அணிகலன் உடைய சேர மன்னனின் கொல்லி மலையில் உள்ள அச்சம் தருதல் மிக்கக் கருமை நிறக் கண்களையுடைய கடவுள் அம்மலையின் மேற்குப் பக்கத்தில் வரைந்த பாவையை ஒத்த இந்த மென்மையான இயல்பை உடைய தலைவி, பரந்த அடியை உடைய உரலின் பகுத்த குழியில் தானியத்தை இட்டு இடிக்கும்பொழுது தலைவனைக் குறித்து பாடும் வள்ளைப்பாட்டைக்குறித்துக் குறை கூறுதலையும் செய்வார்கள் அயலார்.  இத்தகைய அறிவில்லாத ஊரினர் கூறும் சொற்களுக்கு நாம் வருந்துவதனால் என்ன பயன்?

குறிப்பு:  வரலாறு:  பொறையன், கொல்லி மலை.  ஏதின் மாக்கள் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அயலோராகிய அறிவிலிகள், அயற்றன்மை உடையார், உ. வே. சாமிநாதையர் உரை – மாக்கள் என்றாள் தலைவியின் நிலையை அறிந்து இரங்கும் தன்மை இன்மையின்.  பெரும்பூண் – உ. வே. சாமிநாதையர் உரை பேரணிகலன், இது மார்பில் அணியப்படுவது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய அணிகலனையுடைய.  பேம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).

சொற்பொருள்:  பாவடி உரல – பரந்த அடியை உடைய உரலின், பகுவாய் – பகுத்த குழியில், வள்ளை – இடிக்கும்பொழுது பாடும் வள்ளைப்பாட்டு, ஏதில் மாக்கள் – அயலார்கள்,நுவறலும் நுவல்ப – குறை கூறுதலையும் செய்வார்கள், அழிவது எவன் கொல் – வருந்துவது எதற்கு (கொல் – அசை), இப்பேதை ஊர்க்கே – இந்த அறிவில்லாத ஊர் மக்களுக்கு (ஊர் – ஆகுபெயர் ஊர்மக்களுக்கு), பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் கருங்கண் தெய்வம் – பெரிய அணிகலன் உடைய சேர மன்னனின் கொல்லி மலையில் உள்ள அச்சம் தருதல் மிக்கக் கருமை நிறக் கண்களையுடைய கடவுள், குட வரை எழுதிய நல் இயல் பாவை அன்ன- அம்மலையின் மேற்குப் பக்கத்தில் வரைந்த பாவையை ஒத்த, இம் மெல்லியல் குறுமகள் – இந்த மென்மையான இயல்பை உடைய தலைவி, பாடினள் குறினே – பாட்டைக் குறித்து

குறுந்தொகை 90, மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
எற்றோ வாழி தோழி, முற்றுபு
கறி வளர் அடுக்கத்து இரவின் முழங்கி
மங்குல் மா மழை வீழ்ந்தெனப் பொங்கு மயிர்க்
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக்கனி
வரை இழி அருவி உண் துறைத் தரூஉம்  5
குன்ற நாடன் கேண்மை,
மென்தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே?

பாடல் பின்னணி:   வரைவு நீட்டித்தவழி தோழி கூறியது.

பொருளுரை:  நீ நீடு வாழ்வாயாகத் தோழி! மிளகுக்கொடிகள் முற்றிய பருவம் அடைந்து (சூல் அடைந்து) வளரும் மலைப்பக்கத்தில் இரவு வேளையில் முழக்கம் செய்து முகிலின் பெரிய மழைக்கால் வீழ்ந்தனவாக, மிக்க மயிரை உடைய ஆண் குரங்கு தொட்டதால் நழுவி விழுந்த, மலர்மணத்தை வீசும் பலாப்பழத்தை மலையிலிருந்து விழும் அருவி நீருண்ணும் துறைக்குக் கொண்டு வரும் மலை நாடனின் நட்பு, உன்னுடைய மெல்லிய தோள்களை மெலியச் செய்தும், மன அமைதியைத் தந்துள்ளது. இது எத்தகையது?

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – மலை உச்சியிலே கலையால் விரும்பப்பட்ட பழத்தை அதன் கைபடாதபடி அருவியானது பலரும் அறியத் தான் பயன்படும் துறையைச் சேர்ந்து அப்பழம் பயன்பட வைத்ததுப் போல, பிறரால் வரைந்து கோடற்கு உரிய நிலையில் உள்ள தலைவியை அவர் பெறாமற் செய்து தான் மணந்து தான் பிறர்க்குதவி செய்து வாழும் தனது இல்லத்தின்கண் அவளையும் விருந்தோம்பல் முதலிய அறம்புரியச் செய்வதற்குரிய என்பது.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பெரிய மழைபொழிதலை அஞ்சிய கலை தொடக் கிளையின் நீங்கிய பலவின் பழத்தை அருவி கொண்டு சென்று ஊருண் துறையில் பயன்படத் தந்தாற்போல், அலரை அஞ்சிய யான் கொண்டுத் தரக் கிளையின் நீங்கிய உன்னைத் தான் கொண்டு சென்று தன் மனையிடத்து வைத்து இல்லறப் பயனுறச் செய்வான் என்பதாம்.

சொற்பொருள்:  எற்றோ – எத்தகையது, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, முற்றுபு – முதிர்ந்து, கறி வளர் அடுக்கத்து – மிளகுக்கொடிகள் வளரும் மலைப்பக்கத்தில், இரவின் முழங்கி மங்குல் மா மழை வீழ்ந்தென- இரவு வேளையில் முழக்கம் செய்து முகிலின் பெரிய மழைக்கால் வீழ்ந்தனவாக, பொங்கு மயிர்க் கலை தொட  – மிக்க மயிரை உடைய ஆண் குரங்கு தீண்டியதால், இழுக்கிய பூ நாறு பலவுக்கனி – நழுவிய மலர்மணத்தை வீசும் பலாப்பழம், வரை இழி அருவி – மலையிலிருந்து விழும் அருவி, உண் துறைத் தரூஉம் குன்ற நாடன் – நீருண்ணும் துறைக்குக் கொண்டு வரும் மலை நாடன்,  கேண்மை – நட்பு, மென்தோள் சாய்த்தும் – உன்னுடைய மெல்லிய தோள்களை மெலியச் செய்தும், சால்பு ஈன்றன்றே – மேன்மையைத் தந்துள்ளது, மன அமைதியைத் தந்துள்ளது

குறுந்தொகை 91, ஔவையார்மருதத் திணை – தலைவி தன் நெஞ்சிடம் சொன்னதுஅல்லது தோழி தலைவியிடம் சொன்னது
அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளைகனி
குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்துறை ஊரன் பெண்டினை ஆயின்,
பல ஆகுக நின் நெஞ்சில் படரே,
ஓவாது ஈயும் மாரி வண்கைக்  5
கடும் பகட்டு யானை நெடுந்தேர் அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போலச்,
சிலவாகுக நீ துஞ்சு நாளே.

பாடல் பின்னணி:   பரத்தையரிடம் சென்று மீண்டுவந்த தலைவன் வாயில் வேண்டி புக்கவழி, அவன்பால் ஊடலையுடையவளாயினும் தன் நெஞ்சம் அவன் பால் செல்லுவதை அறிந்த தலைவி கூறியது.  தலைவன் பரத்தையரிற் பிரிந்தமையால் ஊடிய தலைவி அவனைக் கண்டதும் நெஞ்சு நெகிழ்ந்ததால் தோழி இடித்துரைத்ததுமாம்.

பொருளுரை:  ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ள பிரம்புக் கொடியின் வரிகளுடைய விளைந்த பழத்தை ஆழமான நீரை உடைய குளத்தில் உள்ள கெண்டை மீன் கவ்வும் குளிர்ந்த நீர்த் துறையையுடைய ஊரனின் மனைவியாக நீ இருந்தால், உன் நெஞ்சில் துன்பம் மிகுதியாக ஆகட்டும்!  தொடர்ந்து இரவலர்க்குக் கொடுக்கும் மழையைப் போன்று ஈயும் கைகளையும் விரைந்து செல்லும் பெருமையுடைய யானைகளையும் உயர்ந்த தேர்களையும் உடைய நெடுமான் அஞ்சியின் அச்சம் தரும் போர்முனையில் உள்ள இரவை உடைய ஊரின் மக்கள் போல், நீ உறங்கும் நாட்கள் சில ஆகட்டும்!

குறிப்பு:  குறுந்தொகை 364 – அரில் பவர்ப் பிரம்பின்.  அஞ்சி – அதியமான் நெடுமான் அஞ்சி, கடையெழு வள்ளல்களில் ஒருவன்.  ஆய், காரி, பாரி, ஓரி, நள்ளி, அதிகன், பேகன் ஆகியோர் கடையெழு வள்ளல்கள்.  உ. வே. சாமிநாதையர் உரை – பிரம்பின் காய்த்துப் பழுத்து முதிர்ந்த கனியை எளிதிற் கெண்டை பெரும் ஊரன் என்றது, தன்னுடைய சிறப்பால் அன்பும் செல்வமும் முதிர்ந்த தலைவனை பரத்தையர் எளிதிற் கவர்ந்து கொள்வர் என்பது.  கொன் – அச்சம் பயம் இலி காலம் பெருமை என்று அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 6).  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.  பெண்டினையாயின் (3) – பொ.வே. சோமசுந்தரனார் உரை – பெண்டாகிய நீ இத்தன்மையுடையை ஆனால்.  பவர்ப் பிரம்பு – இரு பெயரொட்டு, கொடியாகிய பிரம்பு.

சொற்பொருள்:  அரில் – ஒன்றோடு ஒன்று பிணைந்தது, பவர்ப் பிரம்பின் – பிரம்பின் கொடி, வரிப் புற விளைகனி – வரிகளுடைய விளைந்த பழம், குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை – ஆழமான நீரை உடைய குளத்தில் உள்ள கெண்டை மீன், கதூஉம் – கவ்வும், தண்துறை ஊரன் – குளிர்ந்த நீர்த் துறையையுடைய ஊரன், பெண்டினை ஆயின் – மனைவியாக நீ இருந்தால், பல ஆகுக நின் நெஞ்சில் படரே – உன் நெஞ்சில் துன்பம் மிகுதியாக ஆகட்டும், ஓவாது ஈயும் – தொடர்ந்து இரவலர்க்குக் கொடுக்கும், மாரி வண்கை – மழையைப் போன்று ஈயும் கைகளையும், கடும் பகட்டு யானை –  விரைந்து செல்லும் பெருமையுடைய யானைகள், நெடுந்தேர் அஞ்சி – உயர்ந்த தேர்களையுடைய நெடுமான் அஞ்சி, கொன் முனை – அச்சம் தரும் போர்முனை, இரவு ஊர் போல – இரவை உடைய ஊரின் மக்கள் போல் (ஊர் – ஆகுபெயர் ஊரில் உள்ள மக்களுக்கு), சிலவாகுக நீ துஞ்சு நாளே – நீ உறங்கும் நாட்கள் சில ஆகட்டும்

குறுந்தொகை 92, தாமோதரனார்நெய்தற் திணை – தலைவி சொன்னது 
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடும் சிறைப் பறவை,
இறை உறை ஓங்கிய நெறி அயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரை கொண்டமையின், விரையுமால் செலவே. 5

பாடல் பின்னணி:  வரைவு நீட்டித்ததால் பெரிதும் வருந்தியிருந்த தலைவி பொழுது கண்டு சொன்னது.

பொருளுரை:   சூரியன் மறைந்த அகன்ற வானத்தில் வளைந்த சிறகுகளை உடைய பறவைகள் உணவை அலகில் தூக்கிக் கொண்டு,  வழி அருகில் உள்ள உயர்ந்த கடம்ப மரத்தில் உள்ள தங்கள் கூடுகளுக்குச் சென்று, குஞ்சுகளின் வாயின் உள்ளே  திணிக்கும்.  அவை இரங்கத்தக்கன.

குறிப்பு:  தாம், ஏ, ஆல் – அசை நிலைகள்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அன்பின் வழியே இப்பறவைகள் இயங்குதலால் அவை இரக்கத்தக்கன என்னுமுகத்தால் அன்பின்றித் தன்னை மறந்துறையும் வன்கண்மையுடைய தலைவர் இவ்வன்புதானும் அறிகிலரே என்று கருதி இறங்கியவாறாம்.  தமிழண்ணல் உரை – இறைச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டான பாட்டு இது.

சொற்பொருள்:   ஞாயிறு பட்ட – சூரியன் மறைத்த,  அகல்வாய் வானத்து – அகன்ற வானத்தில்,  அளிய தாமே – அவை இரங்கத்தக்கன, கொடும் – வளைந்த,  சிறை – இறகு,  பறவை – பறவைகள்,  இறை – உயர்ந்த,  உறை – வாழும்,  ஓங்கிய – உயர்ந்த, நெறி – வழி,  அயல் – அருகில்,  மராஅத்த – கடம்ப மரங்கள் (அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது), பிள்ளை – குஞ்சுகள்,  உள்வாய் – வாய்க்கு உள்ளே, செரீஇய – சொருகும் (அளபெடை),  இரை கொண்டமையின் – உணவைக் கொண்டமையால், விரையுமால் செலவே – விரைவாகச் செல்லும் (விரையும் + ஆல், ஆல் அசைநிலை)

குறுந்தொகை 93, அள்ளூர் நன்முல்லையார்மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நன் நலம் தொலைய, நல மிகச் சாஅய்,
இன் உயிர் கழியினும் உரையல், அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி,
புலவியஃது எவனோ, அன்பு இலங்கடையே?

பாடல் பின்னணி:  தூதாக வந்த தோழிக்கு வாயில் மறுத்தது.

பொருளுரை:   தோழி!  என்னுடைய பெண்மை நலம் கெடவும், மேனி அழகு மிகவும் பாழ்படவும், இனிய உயிர் நீங்கினாலும் அவர்பால் அன்புக்கொண்ட சொற்களை என்னிடம் நீ கூறாதே.  தலைவர் நமக்குத் தாயும் தந்தையும் இல்லையா? அவருக்கு என் மேல் அன்பு இல்லாதபொழுது ஊடல் கொள்வது எதற்காக?

குறிப்பு:  அகநானூறு 46 – யாரையோ நிற் புலக்கேம்.  நலம் – உ. வே. சாமிநாதையர் உரை – முன்னது பெண்மை நலம், பின்னது அழகு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முன்னது அழகு பின்னது நாணம்.  உ. வே. சாமிநாதையர் உரை – அன்னை என்றால் பிரித்தற்கரிய தொடர்பைப் பற்றி, அத்தன் என்றாள் அவன் ஆணைக்கடங்கி ஒழுகுதல் பற்றி.

சொற்பொருள்:   நன் நலம் தொலைய – பெண்மை நலம் கெடவும், நல மிகச் சாஅய் – மேனி அழகு மிகவும் பாழ்பட, இன் உயிர் கழியினும் – இனிய உயிர் நீங்கினாலும், உரையல் – சொற்களைக் கூறாதே, அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ – தலைவர் நமக்குத் தாயும் தந்தையும் இல்லையா, தோழி – தோழி, புலவி அஃது எவனோ – ஊடல் உண்டாவது எதற்காக, அன்பு இலங்கடையே – அவருக்கு என் மேல் அன்பு இல்லாதபொழுது

குறுந்தொகை 94, கந்தக்கண்ணனார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பெரும் தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே,
யானே மருள்வேன் தோழி, பானாள்
இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும்
என் ஆகுவர் கொல் பிரிந்திசினோரே,  5
அருவி மா மலைத் தத்தக்
கருவி மா மழைச் சிலைதரும் குரலே?

பாடல் பின்னணி:  கார்ப்பருவம் வந்த பின்னும் தலைவன் வராமையால் தலைவி ஆற்றாமல் வருந்துவாள் என்று தோழி வருந்தினாள். அது கண்ட தலைவி ‘நான் ஆற்றுவேன்’ என்றது.

பொருளுரை:   தோழி!  பெரும் குளிர்ச்சியடைய மழைக்காலத்தில் மலர வேண்டிய அறிவில்லாத பிச்சியின் அரும்புகள், சிவக்க வேண்டிய காலத்திற்கு முன்னமே சிவந்துள்ளன.  அதைக் கண்டு இது கார்காலம் என நானா மயங்குவேன்?  என்னைப் பிரிந்து தனித்து வருந்தி இருக்கும் தலைவர், அருவியானது பெரிய மலையிலிருந்து தத்தி வீழும்படி கூட்டமாக உள்ள பெரிய முகிலானாது முழங்கும் ஓசையைக் கேட்டால், என்ன நிலைமை உடையவர் ஆவாரோ?

குறிப்பு:  குறுந்தொகை – 66 – மடவ மன்ற தடவு நிலைக் கொன்றை கல் பிறங்கு அத்தம்  சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக் கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த வம்ப மாரியைக் கார் என மதித்தே, குறுந்தொகை 251 – மடவ வாழி மஞ்ஞை மா இனம் கால மாரி பெய்தென அதன் எதிர் ஆலலும் ஆலின பிடவும் பூத்தன.  நற்றிணை 99 –  பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ ஆகலின், மலர்ந்தன பலவே.  பித்திகம் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – பிச்சி.  யானே மருள்வேன் (3) – உ.வே. சாமிநாதையர் உரை – நானா மயங்குவேன்? பொ.வே. சோமசுந்தரனார் உரை – யான் மயங்காநின்றேன்.  கருவி மா மழை (7) –  இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய கரிய முகில்கள்.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

சொற்பொருள்:   பெரும் தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே – பெரும் குளிர்ச்சியடைய மழைக்காலத்தில் மலர வேண்டிய அறிவில்லாத பிச்சியின் அரும்புகள், முன்னும் மிகச் சிவந்தனவே – சிவக்க வேண்டிய காலத்திற்கு முன்னமே சிவந்துள்ளன, யானே மருள்வேன் – அதைக் கண்டு இது கார்காலம் என நானா மயங்குவேன், தோழி – தோழி, பானாள் இன்னும் தமியர் – என்னைப் பிரிந்து தனித்து இருப்பவர், கேட்பின் – கேட்டால், பெயர்த்தும் – விலகிச் சென்றும், என் ஆகுவர் கொல் – என்ன நிலைமையை உடையவர் ஆவாரோ (கொல் – அசைநிலை), பிரிந்திசினோரே – பிரிந்திருக்கும் தலைவர், அருவி மா மலைத் தத்த – அருவியானது பெரிய மலையிலிருந்து தத்தி வீழ, கருவி மா மழைச் சிலைதரும் குரலே – கூட்டமாக உள்ள பெரிய முகிலானாது முழங்கும் ஓசை

குறுந்தொகை 95,  கபிலர்,  குறிஞ்சித் திணை – தலைவன் தன் நண்பனிடம் சொன்னது
மால் வரை இழி தரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்,
சிறு குடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்,
நீரோரன்ன சாயல்,
தீயோரன்ன என் உரன் வித்தன்றே. 5

பாடல் பின்னணி:  தனது வேறுபாடு கண்டு வினவிய தோழனிடம் தலைவன் கூறியது.

பொருளுரை:   உயர்ந்த மலையிலிருந்து விழும் தூய வெள்ளை அருவி மலைக் குகைகளில் ஒலிக்கும் மலர்கள் நிறைந்த மலைச்சரிவில் உள்ள சிறுகுடியில் வாழும் குறவனின் பெரியத் தோளையுடைய, இள மகளினது நீர் போன்ற மென்மை, என் வலிமையைக் கெடச் செய்தது.

குறிப்பு:  வித்தன்றே – ஏகாரம் அசை நிலை.  இரா. இராகவையங்கார் உரை – சிறுகுடிக் குறவன் குறமகள் என்றது தான் பெருங்குடி பெருமகனாதலைக் குறித்து.  பெருந்தோள் கூறியது தன் பெருந்தோள் தழுவற்கு ஒப்புமை கருதி.  உ. வே. சாமிநாதையர் உரை – பெருந்தோள் குறமகள் என்றது குறிப்பால் என் உரன் அவிதற்கு அத்தோளும் காரணமாயது என்பதை உணர்த்தியது.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம்,  உரியியல் 29).

சொற்பொருள்:   மால்வரை – உயர்ந்த மலை,  இழிதரும் – வடியும்,  தூவெள் அருவி – தூய வெள்ளை அருவி,  கல்முகைத் – மலைக் குகைகள், ததும்பும் –  நிறைந்திருக்கும், பன்மலர் – நிறைய மலர்கள்,  சாரல் – மலைச் சரிவுகள்,  சிறுகுடிக் குறவன் – சிறியக் குடியில் வாழும் மலைக் குறவன்,  பெருந்தோள் – பெரியத் தோள்,  குறுமகள் – இளம் மகள்,  நீரோரன்ன சாயல் – நீர் போன்ற மென்மை,  தீயோரன்ன என் – தீயைப்போன்ற,  உரன் வித்தன்றே – என் வலிமையைக் கெடச் செய்தது

குறுந்தொகை 96, அள்ளூர் நன்முல்லையார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
“அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ” என்றி, யான் அது
நகையென உணரேன் ஆயின்,
என் ஆகுவை கொல் நன்னுதல் நீயே?

பாடல் பின்னணி:  தலைவன் வரையாது வந்து ஒழுகிய காலத்தில் அவனைத் தோழி இயற்பழித்தாளாக, அது கேட்ட தலைவி தோழியைச் சினந்து கூறியது.

பொருளுரை:   நல்ல நெற்றியை உடையாய்!  “அருவிகளும் வேங்கை மரங்களையும் உடைய பெரிய மலை நாடனுக்கு நான் என்ன செய்வேன்” எனக் கூறுகின்றாய்.  அது விளையாட்டுச் சொற்கள் என்று நான் கொள்ளாவிட்டால், என்ன பாடுபடுவாய்?  நீ துன்புறுவாய்.

குறிப்பு:  இயற்பழித்தல் – இயல்பை பழித்துக் கூறல்.   உ. வே. சாமிநாதையர் உரை – அருவி வேங்கைப் பெருமலை நாடன் என்றது, அருவியானது தன்னைச் சார்ந்த வேங்கையைக் குறைவின்றிப் பாதுகாத்தலைப் போலத் தலைவனும் தன்னைச் சார்ந்த என்னைப் பாதுகாப்பான் என்பது.

சொற்பொருள்:   அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு – அருவிகளும் வேங்கை மரங்களையும் உடைய பெரிய மலை நாடனுக்கு, யான் எவன் செய்கோ – நான் என்ன செய்வேன் (செய்கோ – செய்கு + ஓ, ஓகாரம் அசை), என்றி – என்கின்றாய், யான் அது நகையென உணரேன் ஆயின் – அது விளையாட்டுச் சொற்கள் என்று கொள்ளாவிட்டால், என் ஆகுவை கொல் – என்ன பாடுபடுவாய் (கொல் – அசைநிலை), நல் நுதல் – நல்ல நெற்றி, நீயே – நீ (ஏகாரம் அசை)

குறுந்தொகை 97, வெண்பூதியார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
யானே ஈண்டையேனே, என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே
துறைவன் தம் ஊரானே,
மறை அலர் ஆகி மன்றத்தஃதே.

பாடல் பின்னணி:  வரைவு நீட்டித்தவழி தலைவி தோழிக்குச் சொல்லியது.

பொருளுரை:   நான் இங்குத் தனிமையில் உள்ளேன், என் பெண்மை நலம் நீங்காத காதல் நோயுடன் கடற்கரைச் சோலையில் உள்ளது. நம் தலைவன் தன்னுடைய ஊரில் இருக்கின்றான்.  களவுச் செய்தியை பலரும் அறிந்து விட்டனர்.  அது பழிமொழி ஆகி ஊர் மன்றத்தில் பரவியுள்ளது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை –  ‘துறைவன் தம் ஊரான்’ என்றும் ‘மறை அலராகி மன்றத்தஃது’ என்றும் புலந்து கூறினாள்.  கானலஃது, மன்றத்தஃது – ஆய்தம் விரிக்கும்வழி விரித்தல்.

சொற்பொருள்:   யானே ஈண்டையேனே – நான் இங்குத் தனிமையில் உள்ளேன், என் நலனே – என் பெண்மை நலம், ஆனா நோயொடு – நீங்காத காதல் நோயுடன், கானல் அஃதே – கடற்கரைச் சோலையில் உள்ளது, துறைவன் தம் ஊரானே – தலைவன் தன்னுடைய ஊரில் இருக்கின்றான், மறை அலர் ஆகி மன்றத்து அஃதே – களவு விவரம் அறியப்பட்டு அது பழிமொழி ஆகி ஊர் மன்றத்தில் பரவியுள்ளது (அஃதே – ஏகாரம் அசை)

குறுந்தொகை 98, கோக்குளமுற்றனார்முல்லைத் திணை – தலைவி சொன்னது
இன்னள் ஆயினள் நன்னுதல் என்று அவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்று மன் வாழி தோழி நம் படப்பை
நீர் வார் பைம்புதல் கலித்த
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே.  5

பாடல் பின்னணி:  பருவங்கண்டு வருந்திய தலைவி தோழிக்கு உரைத்தது.

பொருளுரை:  தோழி! நம் தோட்டத்தில் உள்ள நீர் வடிகின்ற பசுமையான புதர்களில் படர்ந்துள்ள மழைக் காலப் பீர்க்கையின் மலர்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு தலைவரிடம் சென்று, “நல்ல நெற்றியையுடைய உன் தலைவி இந்த மலர்களைப் போல் பசலையை அடைந்தாள்” என்று கூறுபவரைப் பெற்றால் மிகவும் நன்றாக இருக்கும்.

குறிப்பு:  ஏகாரங்கள் – அசை நிலைகள்.  வாழி – அசைச் சொல்,  நன்னுதல் – அன்மொழித்தொகை.  உ. வே. சாமிநாதையர் உரை – செப்புவார் உளரேல் அவர்கள் வாழ்வாராக என்பதும் பொருந்தும்.  நற்றிணை 197 – நுதலே பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே, கலித்தொகை 53 – நுதல் பீர் அலர் அணி கொண்டு.  மன் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – மிகுதியை உணர்த்தியது, பெற்றிலேன் எனலுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒழியிசைப் பொருட்டாய் அது கைகூடப் பெற்றிலேம் என்பது.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  இன்னள் ஆயினள் – இவ்வாறு ஆகி விட்டாள், நன்னுதல் – நல்ல நுதல், அழகிய நெற்றியை உடையவள், என்று – என்று, அவர் துன்னச் சென்று – தலைவரிடம் நெருங்கிச் சென்று, செப்புநர்ப் பெறினே – சொல்லுவாரைப் பெற்றால், நன்று மன் – மிகவும் நல்லது (மன் – அசைச்சொல், மிகுதியை உணர்த்தியது), வாழி – அசைச் சொல், நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நம் படப்பை – நம் தோட்டம், நீர் வார் – நீர் வடிகின்ற, பைம் புதல் கலித்த – பசுமையான புதர்களில் தழைத்துப் படர்ந்த, மாரிப் பீரத்து – மழைக் கால பீர்க்கையின், அலர் சில கொண்டே – சில மலர்களை எடுத்துக் கொண்டு

குறுந்தொகை 99, ஔவையார்முல்லைத் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது
உள்ளினென் அல்லனோ யானே? உள்ளி
நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து?
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே?
நீடிய மரத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உணச் சென்று அற்றாங்கு,  5
அனைப் பெருங்காமம் ஈண்டு கடைக்கொளவே.

பாடல் பின்னணி:  பொருள் முற்றிப் புகுந்த தலைவன் ‘நீர் பிரிந்தவிடத்து எம்மை நினைத்தீரோ’ என்று கேட்ட தோழிக்குச் சொல்லியது.

பொருளுரை:  உயர்ந்த மரத்தின் கிளையைத் தொடும் அளவிற்குப் பெருகும் வெள்ளம் போன்ற பெரும் காதல் நோயானது இங்கு நான் வருவதால் முடியும்படி தலைவியை ஆழ்ந்து எண்ணினேன் அல்லவா நான்? அவ்வாறு எண்ணி பெரிதும் அவளை நினைத்தேன் அல்லவா நான்?  அவளை நினைத்து நான் மருட்சி அடைந்தேன் அல்லவா?  என் நினைவு நிறைவேறுவதற்கு மாறாக இருக்கும் இந்த உலகத்தில் இயல்பை  எண்ணி நான் மருட்சி அடைந்தேன் அல்லவா?

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – உலகத்து பண்பென்றது இல்லறம் நடத்துபவன் அதற்குக் கருவியாம் பொருளுக்குப் பிரிந்தால் அப்பொருள் பெற்றே மீண்டு வர வேண்டும் என்னும் மரபை ‘எள்ளல் நோனாப் பொருள்தரல் விருப்பொடு நாணுத் தளை ஆக வைகி’ (அகநானூறு 29) என்பது இதனைப் புலப்படுத்தும்.  அல்லெனோ என வரும் மூன்றும் வினா.  எதிர் வினாவும் விடைகளாக அமைந்து முறையே உள்ளினென், நினைத்தனென், மருண்டனென் என்னும் பொருளைப் பயந்தன.

சொற்பொருள்:  உள்ளினென் அல்லனோ யானே – ஆழ்ந்து எண்ணினேன் அல்லவா நான் (அல்லனோ – ஓகாரம் வினா), உள்ளி நினைத்தனென் அல்லனோ பெரிதே – அவ்வாறு எண்ணி பெரிதும் நினைத்தேன் அல்லவா நான் (அல்லனோ – ஓகாரம் வினா), நினைத்து மருண்டனென் அல்லனோ – நினைத்து நான் மருட்சி அடைந்தேன் அல்லவா (அல்லனோ – ஓகாரம் வினா), உலகத்துப் பண்பே – உலகத்தின் இயல்பு, நீடிய மரத்த கோடு – உயர்ந்த மரத்தின் கிளை, தோய் மலிர் நிறை – தொட்டுப் பெருகும் பெரும் வெள்ளம், இறைத்து உணச் சென்று அற்றாங்கு – கையால் இறைத்து உண்ணும் அளவு குறைந்தாற்போல்,  அனைப் பெருங்காமம் – அந்த வெள்ளத்தைப் போன்ற பெரும் காதல் நோய், ஈண்டு கடைக்கொளவே – இங்கு நான் வருவதால் முடியும்படி

குறுந்தொகை 100, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவன் தோழனிடம் சொன்னது அல்லது தன் நெஞ்சிடம் சொன்னது
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பின்,
கடுங்கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்,
வல்வில் ஓரி கொல்லிக் குட வரைப்  5
பாவையின் மடவந்தனளே,
மணத்தற்கு அரிய பணைப் பெருந்தோளே.

பாடல் பின்னணி:  தலைவியைப் பொழிலில் கண்டு மணந்த தலைவன் தன் தோழனிடம் கூறியது.  அல்லகுறிப்பட்டு மீளும் தலைவன் தன் நெஞ்சிடம் சொல்லியதுமாம்.

பொருளுரை:  அருவி பாயும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து, பருத்த இலைகளையுடைய மலை மல்லிகையுடன் இடையிடையே வளரும் பசிய மரல் செடிகளைக் களைந்து எரியும், காந்தள் செடிகளை வேலியாகக் கொண்ட சிறு ஊரின் மக்கள், உணவின்றிப் பசியில் இருந்தால் கொடூரக் களிற்று யானையின் தந்தத்தை விற்று உண்ணும், வலிமையான வில்லையுடைய ஓரி என்னும் மன்னனின் மேற்கு மலையில் வரையப்பட்ட பாவையைப் போல், மடமை உடையவள் ஆவாள் என் தலைவி.  தழுவுவதற்கு அரியனவாகும் அவளின் மூங்கிலைப் போன்ற பெரிய தோள்கள்.

குறிப்பு:  பாவையின் மடவந்தனளே (6) – உ. வே. சாமிநாதையர் உரை – பாவையைப் போல மடப்பம் வரப் பெற்றாள், பாவையைப் போல அறியாமையை உடையளாயினள், பொ. வே. சோமசுந்தரனார் உரை –  பாவை தன்னைக் கண்டார்க்கு மடமைவரச் செய்யுமாபோல மடமை வரச் செய்பவள் ஆவள், இரா. இராகவையங்கார் உரை – பாவையைப் போல கண்டார்க்கு அறியாமை வருதல் செய்தாள், தமிழண்ணல் உரை – இளமை தவழும் அழகு பொருந்தியவள்.  வரலாறு:  ஓரி, கொல்லி.  நொடுத்து (4) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – கொடை என்பதனடியாக ‘கொடுத்து’ என வருதல் போல, நொடை என்பதனடியாக நொடுத்து என வந்தது.

சொற்பொருள்:  அருவிப் பரப்பின் ஐவனம் வித்தி – அருவி பாயும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து, பரு இலைக் குளவியொடு – பருத்த இலைகளையுடைய மலை மல்லிகையுடன், பசுமரல் கட்கும் காந்தள் வேலிச் சிறுகுடி – பசிய மரலை களைந்து எரியும் காந்தள் செடிகளை வேலியாகக் கொண்ட சிறு ஊர், பசிப்பின் கடுங்கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும் – உணவின்றிப் பசியில் இருந்தால் கடுமை உடைய களிற்று யானையின் தந்தத்தை விற்று உண்ணும், வல்வில் ஓரி கொல்லிக் குட வரைப் பாவையின் – வலிமையான வில்லையுடைய ஓரி என்னும் மன்னனின் மேற்கு மலையில் வரையப்பட்ட பாவையைப் போல், மடவந்தனளே – மடமை உடையவள் ஆவாள்,, ஏகாரம் அசைநிலை, மணத்தற்கு அரிய – தழுவுவதற்கு அரியதாகும், பணைப் பெருந்தோளே – மூங்கிலைப் போன்ற பெரிய தோள்கள் (பெருந்தோளே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 101, பரூஉ மோவாய்ப் பதுமனார்குறிஞ்சித் திணைதலைவன் தலைவியின் தோழியர் கேட்ப சொன்னது அல்லது தன் நெஞ்சிடம் சொன்னது
விரி திரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கின் சீர் சாலாவே,
பூப் போல் உண்கண் பொன் போல் மேனி
மாண் வரி அல்குல் குறுமகள்  5
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே.

பாடல் பின்னணி:  தலைவியோடு இன்பம் நுகர்ந்த தலைவன் அவளுடைய தோழியர் கேட்கும்படி தலைவியைப் புகழ்ந்து கூறியது, அல்லது பொருள் ஈட்டத் தூண்டும் தன் நெஞ்சிடம் தலைவியின் பெருமையைக் கூறியது.

பொருளுரை:  விரிந்த அலைகளையுடைய பெரிய கடல் சூழ்ந்த உலக இன்பமும், பெறுதற்கு அரிய சிறப்புடைய தேவர்களின் மேல் உலக இன்பமும், ஆகிய இந்த இரண்டையும் ஆராய்ந்தாலும், மலர்கள் போன்ற மையிட்ட கண்களையும், பொன்னை ஒத்த மேனியையும், மாட்சிமையுடைய வரிகளையுடைய அல்குலையும் உடைய என் தலைவியுடன் தோளுடன் தோள் மாறுபட்டுத் தழுவும் நாளில் நான் பெரும் இன்பத்திற்கு அவை ஒப்பாக மாட்டா.

குறிப்பு:  தோள் மாறுபடூஉம் (6) – உ. வே. சாமிநாதையர் உரை – ஒருவர் இடத்தோள் மற்றவர் வலத்தோளிலும் ஒருவர் வலத்தோள் மற்றவர் இடத்தோளிலும் பொருந்தத் தழுவுதல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாறுபட்டுத் தழுவும்.

சொற்பொருள்:  விரி திரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் – விரிந்த அலைகளையுடைய பெரிய கடல் சூழ்ந்த உலகமும் (வளைஇய – சூழ்ந்த), அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும் – பெறுதற்கு அரிய சிறப்புடைய தேவர்களின் மேல் உலகமும், இரண்டும் தூக்கின் – இரண்டையும் ஆராய்ந்தாலும் (தூக்கினும் என்ற உம்மை விகாரத்தால் (வேறுபாட்டால்) தொக்கது), சீர் சாலாவே – நான் பெரும் இன்பத்திற்கு ஒப்பாக மாட்டா, பூப் போல் உண்கண் – மலர்கள் போன்ற மையிட்ட கண்கள், பொன் போல் மேனி – பொன்னை ஒத்த மேனி, மாண் வரி அல்குல் குறுமகள் – மாட்சிமையுடைய வரிகளையுடைய அல்குல், தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே – தோளுடன் தோள் மாறுபட்டுத் தழுவும் நாளில் பெரும் இன்பம் . (மாறுபடூஉம் – அளபெடை, எமக்கே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 102, ஔவையார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உள்ளின் உள்ளம் வேமே, உள்ளாது
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி
வான் தோய்வற்றே காமம்,
சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்து நெடுங்காலம் நீட்டித்தானாக, அவனது பிரிவைத் தலைவி ஆற்றாள் எனக் கவன்ற தோழியிடம் தலைவி உரைத்தது.

பொருளுரை:  தலைவரை நான் நினைத்தால் என் நெஞ்சம் வேகும்.  அவரை நான் நினையாமல் இருந்தால், அவ்வாறு இருத்தல் நான் தாங்கும் அளவிற்கு உட்பட்டது இல்லை.  என்னை வருந்தச் செய்து, என்னுடைய காதல் நோய் வானை உரசுதல் போன்றுப் பெருகியுள்ளது.  என்னால் அணைக்கப்பட்டவர் அருள் புரியும் சால்பு உடையவர் அல்லர்.

குறிப்பு:  நற்றிணை 365 – வான் தோய் மா மலைக் கிழவனை சான்றோய் அல்லை என்றனம் வரற்கே.  மரீஇயோர் – ச. வே. சுப்பிரமணியன் உரை – என்னைக் கூடி மகிழ்ந்த தலைவர், உ. வே. சாமிநாதையர் உரை – எம்மால் மருவப்பட்ட தலைவர்.

சொற்பொருள்:  உள்ளின் உள்ளம் வேமே – தலைவரை நான் நினைத்தால் என் நெஞ்சம் வேகும் (வேமே – ஏகாரம் அசைநிலை), உள்ளாது இருப்பின் – அவரை நான் நினையாமல் இருந்தால், எம் அளவைத்து அன்றே – அவ்வாறு இருத்தல் நான் தாங்கும் அளவிற்கு உட்பட்டது இல்லை (அன்றே – ஏகாரம் அசைநிலை), வருத்தி – என்னை வருந்தச் செய்து, வான் தோய்வற்றே காமம் – என்னுடைய காதல் வானை உரசுதல் போன்று பெருகியுள்ளது, சான்றோர் அல்லர் – அருள் புரியும் சான்றோர் அல்லர்,  யாம் மரீஇயோரே – என்னால் அணைக்கப்பட்டவர் (மரீஇயோரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 103, வாயிலான் தேவனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கடும் புனல் தொகுத்த நடுங்கு அஞர் அள்ளல்
கவிர் இதழ் அன்ன தூவிச் செவ்வாய்
இரை தேர் நாரைக்கு எவ்வமாகத்
தூஉந் துவலைத் துயர் கூர் வாடையும்,
வாரார் போல்வர் நம் காதலர்,  5
வாழேன் போல்வல் தோழி, யானே.

பாடல் பின்னணி:  பருவங்கண்டு வருந்திய தலைவி தோழியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி! கடுமை மிக்க ஓடும் நீரால் தொகுக்கப்பட்ட நடுக்கத்தைச் செய்யும் துன்பம் தரும் சேற்றில், முள்முருக்கம் மலரின் இதழ்போன்ற மெல்லிய இறகையும் சிவந்த அலகையும் உடைய, இரையைத் தேடும் நாரைக்குத் துன்பம் ஆகும்படி, தூவும் நீர்த்துளிகளை உடைய வருத்தம் மிகுவதற்குக் காரணமான கூதிர் காலத்திலும் வரமாட்டார் போல் உள்ளார் நம் தலைவர். நான் உயிர் வாழமாட்டேன் போலத் தோன்றுகின்றது.

குறிப்பு:  வாடையும் (4) –  உ. வே. சாமிநாதையர் உரை – உம்மை இழிவு சிறப்பு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிறப்பு உம்மை.  வாழேன் போல்வல் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உயிர் வாழ்ந்திரேன் போல இருந்தேன், உயிர் வாழ மாட்டேன் என்றே எண்ணுகின்றேன், உ. வே. சாமிநாதையர் உரை – வாழேன் என்பது வாழ்வேன் அல்லேன், போல்வல் என்பது உரையசை.  ஒப்பில் போலியும் அப்பொருட்டாகும் (தொல்காப்பியம், இடையியல் 29).  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – சிறகாகிய போர்வையையுடைய நாரைக்கு ஏதந்தரும் வாடை என்றதனானே அணைக்குந் துணையாயினாரைப் பெறாத மகளிர்க்கு அது என்ன இன்னல் தான் செய்யாதாம்? என்பதாம்.

சொற்பொருள்:  கடும் புனல் தொகுத்த – கடுமை மிக்க ஓடும் நீரால் தொகுக்கப்பட்ட, நடுங்கு அஞர் அள்ளல் – நடுக்கத்தைச் செய்யும் துன்பத்தைத் தரும் சேறு, கவிர் இதழ் அன்ன தூவி – முள்முருக்கம் மலரின் இதழ்போன்ற மெல்லிய இறகு, செவ்வாய் இரை தேர் நாரைக்கு – சிவந்த அலகுடைய உண்ண இரையைத் தேடும் நாரைக்கு, எவ்வம் ஆக – துன்பம் ஆகும்படி, தூஉம் துவலை துயர் கூர் வாடையும் வாரார் போல்வர் – தூவும் நீர்த்துளிகளை உடைய வருத்தம் மிகுவதற்குக் காரணமான கூதிர் காலத்திலும் வரமாட்டார் போல் உள்ளார், நம் காதலர் – நம் தலைவர், வாழேன் – நான் உயிர் வாழமாட்டேன், போல்வல் – போலத் தோன்றுகின்றது, அசையுமாம், தோழி – தோழி, யானே – நான் (யானே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 104, காவன்முல்லைப் பூதனார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! காதலர்
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்பத்
தாளித் தண்பவர் நாள் ஆ மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்,
பிரியும் நாளும் பல ஆகுபவே.  5

பாடல் பின்னணி:  பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவி தோழிக்குக் கூறியது.  சிறிய உள்ளி பெரிய மறக்க வேண்டாவோ என்ற தோழிக்குத் தலைவி கூறியதுமாம்.

பொருளுரை:  நீடு வாழ்வாயாகத் தோழி! நான் கூறுவதை நீ கேட்பாயாக! நூல் அறுந்த முத்து வட்டத்திலிருந்து உதிரும் முத்துக்களைப் போலக் குளிர்ந்த பனித்துளிகள் சிதற, தாளி அறுகின் குளிர்ந்த கொடியை விடியற்காலையில் பசுக்கள் மேயும் பனி விழுகின்ற காலத்தில் தலைவர் பிரிந்துச் சென்று பல நாட்கள் ஆகின்றன.

குறிப்பு:  நூல் அறுந்த முத்து வடம் – அகநானூறு 225 – துளை முத்தின் செந்நிலத்து உதிர, அகநானூறு 289 – நெகிழ் நூல் முத்தின், குறுந்தொகை 51 – நூல் அறு முத்தின், குறுந்தொகை 104 – நூல் அறு முத்தின், கலித்தொகை 82 – கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன.   உ. வே. சாமிநாதையர் உரை – நெடுநல்வாடை என்ற பெயர்க்காரணம் கூறவந்த நச்சினார்க்கினியர் ‘தலைவனைப் பிரிந்திருந்தது வருந்துந்  தலைவிக்கு ஒரு பொழுது ஓர் ஊழிபோல் நெடிதாகிய வாடையாய்’ என்பதைக் கருதுக.  வாழி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உரையசை, நீ வாழ்வாயாக, நீ வாழ்வாயாக என வாழ்த்து முகத்தானே யான் வாழ்கல்லேன் எனக் குறித்தாள் எனினுமாம்.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – தாளியின் கொடியை ஆ மேயும் பனிக்காலம் என்றதனானே, விலங்கும் வேண்டும் நுகர்ச்சியை எளிதிற்பெற, யான் மட்டும் வேண்டும் நுகர்ச்சியைப் பெற்றிலேன் என்பதாம்.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  அம்ம – கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, காதலர் – தலைவர், நூல் அறு முத்தின் – நூல் அறுந்த முத்து வட்டத்திலிருந்து உதிரும் முத்துக்களைப் போல, தண் சிதர் உறைப்ப – குளிர்ந்த பனித்துளிகள் சிதற, தாளித் தண்பவர் – தாளி அறுகின் குளிர்ந்த கொடி, நாள் ஆ மேயும் – விடியற்காலையில் பசுக்கள் மேயும், பனிபடு நாளே பிரிந்தனர் – பனி விழுகின்ற காலத்தில் பிரிந்தார் (நாளே – ஏகாரம் பிரிநிலை), பிரியும் நாளும் பல ஆகுபவே – பிரிந்துச் சென்று பல நாட்கள் ஆகின்றன (ஆகுபவே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 105, நக்கீரர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக்
கடி உண் கடவுட்கு இட்ட செழுங்குரல்
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை,  5
நீர் மலி கண்ணொடு நினைப்பாகின்றே.

பாடல் பின்னணி:  வரைவு நீட்டித்தவிடத்துத் தலைவி தோழியிடம் சொல்லியது.

பொருளுரை:  குறவனுடைய (மலையில் வாழ்பவனின்) தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறு தினையின், புதியதை உண்ணும் கடவுளுக்குப் பலியாக இட்டு வைத்த வளப்பமான கதிர்க்கொத்துக்களை, அறியாது உண்ட மயில், ஆடும் பெண் வெறியுற்று ஆடும் அழகைப் போல் நடுங்கும், கடவுள் உறையும் மலைநாடனின் நட்பு, கண்ணீர் நிறைந்த கண்களுடன் நினைத்து வருந்துவதற்கு மூலமாக உள்ளது.

குறிப்பு:  குறுந்தொகை 133 – புனவன் துடவைப் பொன் போல் சிறு தினை.  கடி (2) –  உ. வே. சாமிநாதையர் உரை – கடி என்னும் உரிச்சொல் புதுமையென்னும் பொருளில் வந்தது.  ஆடுமகள் (3) – உ. வே. சாமிநாதையர் உரை, தமிழண்ணல் உரை – வெறியாடுபவள், கணிக்காரிகை, தேவராட்டி (a woman who is divinely inspired and with oracular powers), பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரங்கின்கண் கூத்தாடுகின்ற விறலி, இரா. இராகவையங்கார் உரை – தெய்வமேறி ஆடுபவள்.  வெய்துற்று (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – துன்புற்று, உ. வே. சாமிநாதையர் உரை – வெம்மையுற்று.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – புனவன் சிறுதினைக் குரலை அறியாது உண்ட மஞ்ஞை வெய்துற்று நடுங்கினாற்போல, தமர் காவலில் உள்ள என்னை அவர்கள் அறியாதவாறு, தகாத களவினால் திளைத்த தலைமகன் தமரை வரையக் கேட்டிலனாய் அஞ்சி நடுங்குகின்றான் என்பதாம்.  கடி – கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87).

சொற்பொருள்:  புனவன் துடவைப் பொன் போல் சிறு தினை – குறவனுடைய (மலையில் வாழ்பவனின்) தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறு தினை, கடி உண் கடவுட்கு இட்ட செழுங்குரல் அறியாது உண்ட மஞ்ஞை – புதியதை உண்ணும் கடவுளுக்குப் பலியாக இட்டு வைத்த வளப்பமான கதிர்க்கொத்துக்களை அறியாது உண்ட மயில், ஆடுமகள் வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும் – ஆடும் பெண் வெறியுற்று ஆடும் அழகைப் போல் நடுங்கும், சூர் மலை நாடன் கேண்மை – கடவுள் உறையும் மலை நாடனின் நட்பு, நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே.- கண்ணீர் நிறைந்த கண்களுடன் நினைத்து வருந்துவதற்கு மூலமாக உள்ளது (ஆகின்றே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 106, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்,
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று, வாழி தோழி, நாமும்
‘நெய் பெய் தீயின் எதிர்கொண்டு  5
தான் மணந்தனையம்’ என, விடுகம் தூதே.

பாடல் பின்னணி:  குறிஞ்சியுள் மருதம்.  பரத்தையிற் பிரிந்த தலைவனின் தூது கண்டு தலைவி தோழியிடம் கூறியது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  புல்லிய விழுதுகளை உடைய இற்றி மரத்தின் பாறைகளில் படர்கின்ற வெள்ளை வேர், மலையிலிருந்து வீழும் அருவியைப்போல் தோன்றும் நாட்டையுடைய தலைவன் தன் குற்றமற்ற நெஞ்சத்திலிருந்து கூறிய சொற்கள் நம்மிடத்து வந்துள்ளது.  நாமும் நெய்யைப் பெய்த தீயைப் போல, அவன் என்னை மணந்தபொழுது எவ்வாறு இருந்தோமோ அவ்வாறே உள்ளோம் என்று தூது விடுவோம்.

குறிப்பு:  இரா. இராகவையங்கார் உரை – பேராசிரியர் இதனைக் கற்பாகக் கொள்ளல் காண்க (தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 23), இளம்பூரணர் இதனைக் களவாகக் கொள்ளல் காண்க (தொல்காப்பியம் களவியல் 2).  புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் (1) – இரா. இராகவையங்கார் உரை – ‘புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்’ என்றதனால் இற்றிமரம் கல்லினின்று வெளியே வளர்ந்து கோடுகள் புறப்பட நீடினும் தனக்கு இடனாகிய கல்லினை விடாது வீழினால் பற்றிக் கோடற்கு இவர்தல் போலத் தலைவன் இல்லினின்று வெளியே சென்று ஒழுகினும் தனக்கு இடனாகிய மனையை விடாது தூது மொழியினால் பற்றிக் கொள்கின்றான் எனக் குறித்தாளாம்.  நாமும் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – உம்மை இறந்தது தழீஇயது.  தலைவன் மணந்த காலத்தில் நிறைந்த அன்போடு இருந்தவாறே இப்பொழுதும் குறைவின்றி இருப்பேம் என்றமையின் அவனை ஏற்றுக்கோடற் குறிப்புப் பெற்றது.  இற்றி மர விழுது:  குறுந்தொகை 106 – புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் வரை இழி அருவியின் தோன்றும்,   நற்றிணை 162 – வேனில் இற்றித் தோயா நெடு வீழ் வழிநார் ஊசலின் கோடை தூக்குதொறும் துஞ்சு பிடி வருடும் அத்தம் அகநானூறு 345 – ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் கல் கண் சீக்கும் அத்தம்.

சொற்பொருள்:  புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் – புல்லிய விழுதுகளை உடைய இற்றி மரத்தின் பாறைகளில் படர்கின்ற வெள்ளை வேர், வரை இழி அருவியின் தோன்றும் – மலையிலிருந்து வீழும் அருவியைப்போல் தோன்றும் (அருவியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), நாடன் – நாட்டையுடைய தலைவன், தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின் வந்தன்று – குற்றமற்ற நெஞ்சத்திலிருந்து வந்த சொற்கள் நம்மிடத்து வந்துள்ளது, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, நாமும் – நாமும் நெய் பெய் தீயின் எதிர்கொண்டு – நெய்யைப் பெய்த தீயைப் போல (தீயின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), தான் மணந்த அனையம் – அவன் மணந்தபொழுது எவ்வாறு இருந்தோமோ அவ்வாறே உள்ளோம், என – என்று, விடுகம் தூதே – நாம் தூது விடுவோம்

குறுந்தொகை 107, மதுரைக் கண்ணனார்மருதத் திணை – தலைவி சேவலிடம் சொன்னது
குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செந்நெற்றிக் கணங் கொள் சேவல்!
நள் இருள் யாமத்தில் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகிக்
கடு நவைப் படீஇயரோ நீயே, நெடு நீர் 5
யாணர் ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே.

பாடல் பின்னணி:  பொருள் முற்றி வந்த தலைவனுடன் இருந்த தலைவி தனது காம மிகுதியைக் கூறியது.

பொருளுரை:   குவிந்த, கொத்தான காந்தள் மலரைப் போன்ற சிவப்பு கொண்டையை உடைய, கூட்டத்தோடு வாழும் சேவலே! ஆழமான நீரை உடைய பணம் மிகுந்த ஊரினனோடு நான் மிக இனிய துயிலில் இருந்தப் பொழுது, நீ என்னை எழுப்பி விட்டாய்.  இருண்ட இரவில், எலியைத் தேடும் இளம் காட்டுப் பூனை, கொஞ்சம் கொஞ்சமாக உண்ணும் உணவாக ஆகி, நீ மிகுந்த துன்பத்தை அடைவாயாக!

குறிப்பு:  படீஇயரோ – ஓகாரம் அசை நிலை, நீயே – ஏகாரம் அசை நிலை, எடுப்பியோயே – ஓகாரம் அசை நிலை.  அகநானூறு 145-14 கடு நவைப் படீஇயர்.  நெடு நீர் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – ஆழமாகிய நீர், தமிழண்ணல் உரை – ஆழமான நீர் நிலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – செய்ய வேண்டியதொன்றனை அங்ஙனம் செய்யாது கால நீட்டிருத்தற் பண்பு, இரா. இராகவையங்கார் உரை – நெடுங்கால தாமதம்.  ஏம இன் துயில் (7) – உ. வே. சாமிநாதையர் உரை – இன்பத்தைத் தரும் இனிய துயில், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மிக இனிய துயில், இரா. இராகவையங்கார் உரை – இன்பத்திற்குக் காரணமான இனிய துயில்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  குவி இணர் – குவிந்த கொத்து, தோன்றி – காந்தள், malabar glory lily, ஒண் பூ – ஒளியுடைய மலர், அன்ன – போன்று, தொகு – முழுக்க, செந்நெற்றி – கொண்டை (நெற்றி – ஆகுபெயர் சேவலின் கொண்டைக்கு), கணங்கொள் சேவல் – கூட்டத்துடன் இருக்கும் சேவலே, நள்ளிருள் யாமத்தில் – இருண்ட இரவில், எலி பார்க்கும் – எலியைத் தேடும், பிள்ளை வெருகிற்கு – இளம் காட்டுப் பூனைக்கு, அல்கு இரை ஆகி – வைத்து உண்ணும் இரை ஆகி, கடு நவை – மிகவும் துன்பம், படீஇயரோ – அடைவாயாக (அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி), இகழ்ச்சிப்பொருளில் வந்தது, நீயே – நீயே, நெடு நீர் – ஆழமான நீர், யாணர் – புது வருமானம், ஊரன் – ஊரினன், தன்னொடு வதிந்த – அவனோடு இருக்கும் பொழுது, ஏம இன் துயில் – மிக இனிய துயில், எடுப்பியோயே – எழுப்பி விட்டாயே

குறுந்தொகை 108, வாயிலான் தேவனார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது 
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
கறவை கன்று வயின் படரப் புறவில்,
பாசிலை முல்லை ஆசில் வான் பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று,
உய்யேன் போல்வல் தோழி, யானே. 5

பாடல் பின்னணி:  பருவங்கண்டு வருந்திய தலைவி, தோழியிடம் கூறியது.

பொருளுரை:   தோழி! முகில்கள் விளையாடும்இடமாகிய மலையைச் சேர்ந்த சிற்றூரில் மேய்வதற்காகச் சென்ற பசுக்கள் தம்முடைய கன்றுகளை நினைத்துத் திரும்புகின்றன.  முல்லை நிலத்தில் பசுமையான இலைகளையுடைய முல்லைக் கொடிகளின் குற்றமில்லாத வெள்ளை மலர்கள் சிவந்த வானத்தைப் போன்று அழகு கொண்டுள்ளன.  இப்பொழுது தலைவர் வராவிட்டால் நான் உயிர் வாழ மாட்டேன்.

குறிப்பு:  யானே – ஏகாரம் அசை நிலை.  உய்யேன் போல்வல் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உயிர் வாழ்ந்திரேன் போலும், தமிழண்ணல் உரை – உயிர் வாழேன் போலத் தோன்றுகின்றது, உ. வே. சாமிநாதையர் உரை – உய்யேன் என்பது உயிர் வாழேன், போல்வல் என்பது அசை நிலை.  இறைச்சிகள் – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – (1) கன்றை மறவாது மாலைக் காலத்து கறவை அக்கன்றிடத்துப் படரும் புறவு என்றதனானே நம்மை மறவாது குறித்த காலத்து நம்மிடம் வரவேண்டியவர் வந்திலர்; அவர் அன்பிருந்தவாறு என்னை?  என்பதாம்.  (2) மலருங் காலத்தைப் பெற்று முல்லை செவ்வி கொண்டது என்றதனானே, அழகு மிகுதற்கேற்ற குறித்த காலத்தில் செவ்வி அழிவோமாயினோம்; எவ்வாறு உய்குவோம்! என்பதாம்.

சொற்பொருள்:  மழை விளையாடும் – முகில்கள் விளையாடும், குன்று சேர் சிறுகுடி – மலையைச் சேர்ந்த சிற்றூர், கறவை – பசுக்கள், கன்று வயின் படர – தம் கன்றுகளை நோக்கிச் செல்ல, புறவில் – முல்லை நிலத்தில், பாசிலை முல்லை – பசுமையான இலைகளையுடைய முல்லை, ஆசில் வான் பூ – குற்றமில்லாத வெள்ளை மலர்கள், குற்றமில்லாத சிறந்த மலர்கள்,  செவ்வான் சிவந்த வானம், செவ்வி கொண்டன்று – அழகைக் கொண்டது, உய்யேன் போல்வல் – உயிர் வாழ மாட்டேன் போல, தோழி – தோழி, யானே – நான்

குறுந்தொகை 109, நம்பி குட்டுவனார்நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
முடக்கால் இறவின் முடங்கு புறப் பெருங்கிளை
புணரி இகு திரை தரூஉந்துறைவன்,
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ, நன்னுதல் கவினே.

பாடல் பின்னணி:  தலைவிக்கு கூறுவாளாய், தலைவனுக்கு வரைய வேண்டியதன் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.

பொருளுரை:   வளைந்த காலையுடைய இறாமீனின் வளைந்த முதுகையுடைய பெரிய இனத்தை அலைகள் கீழே கொண்டு வந்து தரும் இடமாகிய துறையையுடைய தலைவன், உன்னுடன் கூடி இருந்த பொழுதும், உன்னுடைய அழகிய நெற்றியின் அழகு இவ்வாறு உள்ளதே.  இது இரங்கற்குரியது!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாழும் திரையே இறாமீனை உந்திக் கொணர்தலின் ‘இகு திரை தருஉம்’ என்றாள் வளமுடைய துறைவன் என்றவாறு.  கடலலைகள் தரும் இறாலைத் தன் முயற்சியின்றிப் பெற்றமைகின்ற தலைவன் என்றது, ஊழால் தரப்பட்ட களவின்பமே நுகர்ந்து வரைதல் முயற்சியின்றி அமைபவன் என்றவாறு.   இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – தன்னை அடைந்த இறா மீனின் கிளையைக் கடல் கொடிய அலைகளால் கரைக்கண் யாரும் அறியத் தந்தாற்போல, அவனைப் பற்றுக்கோடாகக் கொண்ட நம்மையும், நமது கிளையொடு கூட்டித் தனது கொடிய களவொழுக்கத்தால் எல்லாரும் அறிந்து தூற்றுமாறு அவன் வைத்திட்டான் என்பதாம்.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  புணரிய (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் – புணரும்பொருட்டே வருதலன்றி, வரைந்துகொண்டு அறஞ்செய்யும் கருத்திலன் என்று இகழ்ந்தவாறு.

சொற்பொருள்:  முடக்கால் இறவின் – வளைந்த காலையுடைய இறாமீனின், முடங்கு புறப் பெருங்கிளை – வளைந்த முதுகையுடைய பெரிய இனம், புணரி இகு திரை தரூஉந் துறைவன் – கடல் அலைகள் கீழே கொண்டு வந்து தரும் இடமாகிய துறையையுடைய தலைவன்,  புணரிய இருந்த ஞான்றும் – உடன் இருந்த பொழுதும், இன்னது  நன்னுதல் கவினே – உன்னுடைய அழகிய நெற்றியின் அழகு இவ்வாறு உள்ளது, அது இரங்கற்குரியது

குறுந்தொகை 110, கிள்ளிமங்கலம் கிழார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
யார் ஆகியரோ தோழி, நீர
நீலப் பைம்போது உளரிப் புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த  5
வண்ணத் துய்ம் மலர் உதிரத் தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
‘என்னாயினள் கொல்’, என்னாதோரே?

பாடல் பின்னணி:  பருவங்கண்டு வருந்திய தலைவி, தோழியிடம் கூறியது.  தலைவனைக் கொடுமைகூறித் தலைவியைத் தோழி வற்புறுத்தியதுமாம்.

பொருளுரை:   தோழி!  நீரில் உள்ள குவளையின் பசிய அரும்புகளை அசைத்து, புதரில் உள்ள கருவியை மலர்களை ஆட்டி, நுண்ணிய முட்களை உடைய ஈங்கையின் செவ்விய அரும்புகள் மலர்ந்த நிறமும் துய்யும் உடைய மலர்கள் உதிர, குளிர்ச்சியடைய, துன்பம் தந்து வீசும் வாடைக்காற்றினால் ‘அவள் எவ்வாறு ஆயினளோ’ என எண்ணாதவர், வராது இருப்பினும் வந்தாலும், அவர் நமக்கு எத்தகைய உறவினர் ஆவார் ?

குறிப்பு:  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – நீரிலுள்ள மலர்களை அலைத்துப் புதலிடத்துக் கருவிளையும் ஈங்கைத் துய்ம்மலரும் உதிரும்படி வீசும் வாடை என்றதனானே அவர் தக்க நிலையில்லாத தனித்த மகளிரை துயருறுத்தல் கூற வேண்டுமோ! என்பதாம்.  துய்ம் மலர் – யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகுமே (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 62), மெல்லெழுத்துறழும் மொழியு மாருளவே.(தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 65).

சொற்பொருள்:  வாரார் ஆயினும் – அவர் வராது இருப்பினும், வரினும் – வந்தாலும், அவர் நமக்கு யார் ஆகியரோ – அவர் நமக்கு எத்தகைய உறவினர் ஆவார் (ஆகியரோ – ஓகாரம் அசைநிலை), தோழி – தோழி, நீர நீலப் பைம்போது உளரி – நீரில் உள்ள குவளையின் பசிய அரும்புகளை அசைத்து, புதல பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி – புதரில் உள்ள கருவியை மலர்களை ஆட்டி, நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த – நுண்ணிய முட்களை உடைய ஈங்கையின் செவ்விய அரும்புகள் மலர்ந்த, வண்ணத் துய்ம் மலர் உதிர – நிறமும் துய்யும் உடைய மலர்கள் உதிர (துய் – பஞ்சின் நுனி போலும் உள்ளது) தண் என்று இன்னாது எறிதரும் வாடையொடு – குளிர்ந்து துன்பம் தந்து வீசும் வாடைக்காற்றினால், என்னாயினள் கொல் என்னாதோரே – அவள் எவ்வாறு ஆயினளோ என எண்ணாதவர் (கொல் – அசைநிலை, என்னாதோரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 111,  தீன்மதி நாகனார்குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது,  

பாடல் பின்னணி:  தலைவன் தடுப்புக்குப் பின் இருப்பதை அறிந்த தோழி, அவன் கேட்கும்படியாகத் தலைவியிடம் கூறுகின்றாள்.  வரைவு நீட்டித்தவழி தலைவி வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமையைத் தோழி கூறியது.

மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடுவேள் என்னும், அன்னையும்
அதுவென உணரும் ஆயின், ஆயிடைக்
கூழை இரும்பிடிக் கை கரந்தன்ன
கேழ் இரும் துறுகல் கெழுமலை நாடன் 5
வல்லே வருக தோழி, நம்
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே.

பொருளுரை:   தோழி! கரிய சிறு பெண் யானைகள் தும்பிக்கையின்றி இருப்பது போல் தோன்றும் பெரிய பாறைகள் உடைய நாட்டவனான உன் காதலன் இப்பொழுது விரைந்து நம் வீட்டிற்கு வந்தால் மிகவும் வேடிக்கையாக இருக்கும்.  உன் மென்மையான தோள்கள் நெகிழ்ந்ததால், அது முருகனால் ஏற்பட்டது என்று எண்ணி, உன் அன்னை முருகன் கோவில் பூசாரியான வேலனை இங்கு அழைத்து இருக்கின்றாள்.

குறிப்பு:  சிறிதே – ஏகாரம் அசை நிலை.  புலவரின் பெயர் தீன்மிதி நாகனார் என்று சில நூல்களில் உள்ளது. அகநானூறு 178 – பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 –  பிடி மடிந்தன்ன குறும்பொறை, குறுந்தொகை 111 – கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந் துறுகல்,  கலித்தொகை 108 – பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 – புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம்.   நற்றிணை 34 – வேலன் வேண்ட வெறி மனை வந்தோய்…….முருகே.  நெடுவேள் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – ஆகுபெயர், அவன் செயலுக்கு ஆயினமையின்.  வல்லே வருக என்றது தாய் விரைவில் வெறியெடுக்க கருதுவாள் என்பதையும் குறிப்பித்தது.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பிடியின் கை மறைந்தாற்போல செழுமலை காணப்படும் நாடன் என்றதனானே, வரைவு நீட வந்த நமது வாட்டத்தை இல்லோர் மற்றொன்றானாயது என்று மாறுபடக் கருதுமாறு செய்திட்டான் என்பதாம்.  பாறையும் யானையும்:  அகநானூறு 57 –  இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும், அகநானூறு 178 – பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 –  பிடி மடிந்தன்ன குறுந்தொகை 13 – மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல், குறுந்தொகை 36 – துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும், குறுந்தொகை 111 – கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், குறுந்தொகை 279 – மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும், கலித்தொகை 108 – பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 – புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம்.  செல்லல் – செல்லல் இன்னல் (தொல்காப்பியம், உரியியல் 6).

சொற்பொருள்:   மென்தோள் – மென்மையான தோள்கள்,  நெகிழ்த்த செல்லல் – மெலியச் செய்தல், வேலன் – முருகன் கோவில் பூசாரி,  வென்றி – வெற்றி,  நெடுவேள் – நெடிய முருகன்,  என்னும் அன்னையும் – என்று எண்ணும் தாய்,  அதுவென உணரும் ஆயின் – அதுவென்று நினைப்பாள் ஆயின்,  ஆ இடை – அந்த வேளையில்,   கூழை – சிறிய,  இரும்பிடி – கரிய பெண் யானை,  கை கரந்தன்ன – தும்பிக்கை மறைந்ததைப் போல்,  கேழ் இரும் – கரிய நிறத்தையுடைய,  துறுகல் – பெரிய பாறை, கெழு மலை – உடைய மலை,  நாடன் – நாட்டவன்,  வல்லே வருக – விரைந்து வந்து,  தோழி – தோழி,  நம் – நம்முடைய,  இல்லோர் – இல்லத்தில் உள்ளோர்,  பெரு நகை – பெரிய சிரிப்பு,  காணிய – காண,  சிறிதே – சிறிது நேரம்

குறுந்தொகை 112, ஆலத்தூர் கிழார்குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்,
எள் அற விடினே உள்ளது நாணே,
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நார் உடை ஒசியல் அற்றே,
கண்டிசின் தோழி, அவர் உண்ட என் நலனே.  5

பாடல் பின்னணி:  வரைவு நீட்டித்தவழித் தலைவி தோழிக்குச் சொல்லியது.

பொருளுரை:  தோழி!  இதனைக் காண்பாயாக! பிறர் கூறும் பழிக்கு அஞ்சினால், காமம் வருத்தும்.  பிறரின் பழிச்சொல்லுக்கு அஞ்சி அதை விட்டால், என்னிடம் இருப்பது நாணம் மட்டுமே ஆகும்.  பெரிய களிற்று யானை இழுத்து முறித்து நிலத்தில் வீழாத நார் மிகுந்த ஒடிந்த கிளையைப் போன்றது, தலைவர் நுகர்ந்த என்னுடைய பெண்மை நலம்.

குறிப்பு:  வரைவு நீட்டித்தவழித் தலைவி தோழிக்குச் சொல்லியது.  இரா. இராகவையங்கார் உரை – நாருடை ஒசியல் என்றதனால் தேய்ந்த உயிரில் தொங்குகின்ற பெண்மையைக் குறித்தாள்.  பெருங்களிறு வாங்க முரிந்த ஒசியலை உவமை கூறியதால், என் மெல்லிய நாணால் அவர் வலியைத் தடுத்து என் பெண்மையைத் தாங்ககில்லேன் என்றவாறு.  அகநானூறு 120 – பெருநாண் அணிந்த நறு மென் சாயல் மாண் நலம் சிதைய.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  உ. வே. சாமிநாதையர் உரை – களிறு வளைத்துத் தழைகளை உண்டதனால் ஒடிந்த மரக்கிளையானது தன்னுடைய இயல்பான நிலையை ஒழிந்து மீட்டும் அந்நிலையைப் பெறாத வண்ணம் இருப்பினும், முற்ற ஒடிந்து கீழே விழுந்து வாடி உலராமல் நாரின் தொடர்பினால் மீண்டும் தழைக்கும் நிலை இருத்தலைப் போல, தலைவனால் உண்ணப்பட்ட நலன் பண்டைய நிலைமையைப் பெறாத நிலை இருப்பினும், முற்றும் அழிந்தொழியாமல் தலைவர் வரைவார் என்னும் கருத்தினால் பின் சிறக்கத்தக்க நிலையில் அமைந்துள்ளதென்று உவமையை விரித்துக் கொள்க.   படாஅ – அளபெடை.  கண்டிசின் – இசின் முன்னிலை அசை.  அற்றே – ஏ அசை நிலை, நலனே – ஏ அசை நிலை

சொற்பொருள்:   கௌவை அஞ்சின் – பிறர் கூறும் பழிக்கு அஞ்சினால், காமம் எய்க்கும் – காமம் வருத்தும், எள் அற விடினே – பிறரின் பழிச்சொல்லுக்கு அஞ்சி அதை விட்டால், உள்ளது நாணே – என்னிடம் இருப்பது நாணம் மட்டுமே ஆகும், பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ நார் உடை ஒசியல் அற்றே – பெரிய களிற்று யானை இழுத்து முறித்து நிலத்தில் வீழாத நார் மிகுந்த ஒடிந்த கிளையைப் போன்றது, கண்டிசின் – காண்பாயாக தோழி – தோழி, அவர் உண்ட என் நலனே – தலைவர் நுகர்ந்த என்னுடைய பெண்மை நலம்

குறுந்தொகை 113, மாத்திரத்தனார்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஊர்க்கும் அணித்தே பொய்கை, பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறு கான்யாறே,
இரை தேர் வெண்குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால் பொழிலே, யாம் எம்
கூழைக்கு எருமண் கொணர்கம் சேறும்,  5
ஆண்டும் வருகுவள், பெரும் பேதையே.

பாடல் பின்னணி:  பகற்குறியில் தலைவியோடு அளவளாவி நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு பகற்குறியிடம் வேறு என்று குறிப்பால் கூறியது.

பொருளுரை:  ஊருக்கும் அருகில் உள்ளது பொய்கை. பொய்கையிலிருந்து தொலைவில் இல்லை (அருகில் உள்ளது) சிறிய காட்டு ஆறு.  உணவைத் தேடும் வெள்ளை நாரை அன்றி வேறு எவ்வுயிரும் நெருங்கிச் செல்வதில்லை அங்கு.  நாங்கள் எங்கள் கூந்தலுக்கு வண்டல் மணல் கொள்வதற்கு அங்குச செல்வோம்.  அங்கும் வருவாள், பெரும் பேதைமை உடைய தலைவி.

குறிப்பு:  எருமண் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – களிமண், பொ. வே. சோமசுந்தரனார் உரை – உறைந்து உலர்ந்த மண், தமிழண்ணல் உரை – வண்டல் அனைய கருமண்.  இரா. இராகவையங்கார் உரை நூலில் வரி 5 ‘கூழைக்கு எருமணம் குறுகஞ் சேறும்’ என்றுள்ளது (எருமணம் – செங்கழுநீர்).  ஊருக்கும் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – உம் எதிரது தழுவிய எச்ச உம்மை.  சௌரிப் பெருமாளரங்கன் உரை – பொய்கையிடத்தை ஒழித்துப் பொழிலிடத்தைக் குறிப்பிடமாகக் கொள்க எனக் குறிப்பினால் உணர்த்தினாளாம்.

சொற்பொருள்:   ஊர்க்கும் அணித்தே பொய்கை – ஊருக்கும் அருகில் உள்ளது பொய்கை (அணித்தே – ஏகாரம் அசைநிலை), பொய்கைக்குச் சேய்த்தும் அன்றே சிறு கான்யாறே – பொய்கையிலிருந்து தொலைவில் இல்லை (அருகில் உள்ளது) சிறிய காட்டு ஆறு (அன்றே, கான்யாறே – ஏகாரம் அசைநிலைகள்), இரை தேர் வெண்குருகு அல்லது யாவதும் துன்னல் போகின்றால் பொழிலே – உணவிற்கு மீனைத் தேடும் வெள்ளை நாரை அன்றி வேறு எவ்வுயிரும் நெருங்கிச் செல்வதில்லை (போகின்றால் – ஆல் அசைநிலை, பொழிலே – ஏகாரம் அசைநிலை, துன்னல் – நெருங்கல்), யாம் எம் கூழைக்கு – நாங்கள் எங்கள் கூந்தலுக்கு, எருமண் கொணர்கம் – வண்டல் மணல் கொள்வோம், சேறும் – அங்கே செல்வோம், ஆண்டும் வருகுவள் – அங்கும் வருவாள், பெரும் பேதையே – பெரும் பேதைமை உடைய தலைவி (பேதையே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 114, பொன்னாகனார்நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நெய்தல் பரப்பிற் பாவை கிடப்பி
நின்குறி வந்தனென் இயல் தேர்க் கொண்க!
செல்கம் செல வியங்கொண்மோ, அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என் மகள் நுதலே.  5

பாடல் பின்னணி:  இடத்து உய்த்து நீங்கும் தோழி தலைவனிடம் கூறியது.  அதாவது தலைவியை கொணர்ந்துச் சேர்த்துவிட்டு அகலும் தோழி கூறியது.

பொருளுரை:  இயற்றப்பட்ட தேரையுடைய தலைவனே!  நெய்தல் நிலத்தில் என் பாவையை (பொம்மையை) வைத்துவிட்டு நீ இருக்கும் இடத்திற்கு வந்தேன்.  நாங்கள் குறியிடத்திற்குச் செல்கின்றோம்.  அவளைக் கண்டு அளவளாவி அதன்பின் விரைவில் போகும்படி நீ அவளை ஏவுவாயாக.  ஆரல் (விலங்கு) மீனை உண்டு நிறைந்த வயிற்றையுடைய நாரை மிதிக்கும், என் பொம்மையின் நெற்றியை.

குறிப்பு:  பாவை என்றது தலைவியை.  நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி (1) – உ. வே. சாமிநாதையர் உரை – நெய்தல் நிலத்தின்கண் எனது பாவையை வளர்த்தி விட்டு, நெய்தற் பூவின் பரப்பு எனினுமாம், பாவை என்றது தலைவியை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெய்தல் பரப்பின்கண் எனது பாவையைத் துயிலப் போகட்டு, நெய்தற் பூவினைப் பரப்பிய படுக்கையுமாம்,  இரா. இராகவையங்கார் உரை – நெய்தன் மணற் பரப்பின் வண்டற் பாவையைக் கிடக்கச் செய்து.  செல்கம் (3) – செல்கம் எனப் பன்மையால் கூறினமையின் தோழியுடன் தலைவி வந்துள்ளாள் என்பதையும் அவளைக் குறியிடத்தே நிறுத்தித் தோழி வந்தாள் என்பதையும் தலைவன் உணர்வான்.  இயல் தேர்க் கொண்க (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய தேரையுடைய தலைவனே, உ. வே. சாமிநாதையர் உரை – இயற்றப்பட்ட தேரையுடைய தலைவ,  இரா. இராகவையங்கார் உரை – இயலும் தேரையுடைய கடல் தலைவா.  ஆரல் அருந்த வயிற்ற (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆரல் அருந்த வயிற்ற என்றதும் பிறர் பழி நாடித்திரியும் அறிவிலிகள் என்றவாறாம்.  நாரை மிதக்கும் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாரை மிதிக்கும் என்றது, இரவு வரின் பிறர் அறிந்து அலர் தூற்ற ஏதுவாம் என்று குறிப்பால் உணர்த்தியது என்க.  வியங்கோள் – ஏவலை மேற்கொள்ளல்.  ஏவுவாயாக என்பது பொருள் இங்கு.

சொற்பொருள்:   நெய்தல் பரப்பில் – நெய்தல் நிலத்தில், நெய்தல் மலர்களின் மேல், பாவை கிடப்பி – பொம்மையை வைத்துவிட்டு, நின்குறி வந்தனென் – நீ இருக்கும் இடத்திற்கு வந்தேன், இயல் தேர்க் கொண்க – இயற்றப்பட்ட தேரையுடைய தலைவனே, , இயலும் தேரையுடைய தலைவனே, செல்கம் – யாம் அங்குச் செல்கின்றோம், செல வியங்கொண்மோ – அவள் செல்வதற்கு நீ விடுப்பாயாக (செல – இடைக்குறை, மோ – முன்னிலை அசை), அவளைப் போகும்படி ஏவுவாயாக, அல்கலும் – இரவில், ஆரல் அருந்த வயிற்ற நாரை மிதிக்கும் – விலாங்கு மீனை உண்டு நிறைந்த வயிற்றையுடைய நாரை மிதிக்கும் (அருந்த – அருந்திய என்னும் எச்சத்தின் திரிபு), என் மகள் நுதலே – என் பொம்மையின் நெற்றியை

குறுந்தொகை 115, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரே;
ஒரு நன்று உடையள் ஆயினும், புரி மாண்டு
புலவி தீர அளிமதி, இலை கவர்பு
ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல்
மெல் நடை மரையா துஞ்சும்  5
நன் மலை நாட, நின் அலது இலளே.

பாடல் பின்னணி:  தலைவனுடன் போகும்படி தலைவியை உய்க்கும் தோழி அவனிடம் கூறியது.

பொருளுரை:  அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த குளிச்சியுடைய நறுமண மலைப்பக்கத்தில் மென்மையான நடையையுடைய பெண் மரைமான் இலைகளை விரும்பி உண்டு உறங்கும் நல்ல மலைநாட்டின் தலைவா!  பெரிய நல்லதை நமக்கு ஒருவர் செய்தால் நன்மை செய்தாரைப் போற்றாதவரும் உள்ளாரோ?   சிறிதளவு நன்மையை இவள் பெற்றவளாக இருக்கும் வேளையிலும் விருப்பம் மாட்சிமைப்பட்டு ஊடல் தீரும்படி இவளை நீ பாதுகாப்பாயாக!  உன்னை அன்றி வேறு பற்றுக் கோடு எதுவும் இல்லாதவள் இவள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை, அகநானூறு 3-7 – மரையா – ஆன் என்றமையால் பெண் மரை என்க.  உளரே (1) – உ. வே. சாமிநாதையர் உரை – உள்ளாரோ, ஏகார வினா எதிர்மறைப் பொருள் தந்தது.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – இனிய ஓசையுடைய மலைச் சாரலில் உணவைக் கொள்ள விரையாது அச்சமற்றுத் துயிலும் மரையாவைப் போல, உங்கள் அன்பை உயர்த்திக் கூறும் இல்லிடத்து, எண்ணியவற்றை எளிதில் பெற்று அச்சமின்றித் தங்கும்படி தோழியை வைத்திடுவை என்பதாம்.

சொற்பொருள்:   பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரே- பெரிய நல்லதை நமக்கு ஒருவர் செய்தால் நன்மை செய்தாரைப் போற்றாதவரும் உள்ளாரோ; ஒரு நன்று உடையள் ஆயினும் – சிறிதளவு நன்மையை இவள் பெற்றவளாக இருக்கும் வேளையிலும், புரி மாண்டு – விருப்பம் மாட்சிமைப்பட்டு, புலவி தீர – ஊடல் தீரும்படி, அளிமதி – இவளை நீ பாதுகாப்பாயாக (மதி – முன்னிலை அசை), இலை கவர்பு – இலைகளை விரும்பி, ஆடு அமை ஒழுகிய – அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த, தண் நறும் சாரல் – குளிச்சியுடைய நறுமண மலைப்பக்கம், மெல் நடை மரையா துஞ்சும் நன் மலை நாட – மென்மையான நடையையுடைய பெண் மரைமான் உறங்கும் நல்ல மலைநாட்டின் தலைவா, நின் அலது இலளே.- உன்னை அன்றி வேறு பற்றுக் கோடு எதுவும் இல்லாதவள் இவள் (இலளே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 116, இளங்கீரனார்குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
யான் நயந்து உறைவோள், தேம் பாய் கூந்தல்
வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை
நுண் மணல் அறல் வார்ந்தன்ன,
நல் நெறியவ்வே நறுந்தண்ணியவே.

பாடல் பின்னணி:  இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

பொருளுரை:  என்னால் விரும்பப்பட்டு வாழும் தலைவியின் வண்டுகள் பாயும் கூந்தலானது, வளமைப் பொருந்திய சோழர்களின் உறந்தை ஊரின் பெரிய நீர்த்துறையில் உள்ள நுண்ணிய மணல் நீண்டு இருப்பதை ஒத்த, நல்ல வளைவு உடையது. நறுமணமும்  குளிர்ச்சியும் உடையது.

குறிப்பு:  அறல் போல் கூந்தல்:  அகநானூறு 142 – அறல் அன்ன இரும் பல் கூந்தல், அகநானூறு 162 – அறல் என அவிர்வரும் கூந்தல், அகநானூறு 213 – அறலென நெறிந்த கூந்தல், அகநானூறு 265 – அறலின் நெறித்த கூந்தல், அகநானூறு 299 – அறல் மருள் கூந்தலின், குறுந்தொகை 116 – தேம் பாய் கூந்தல் வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண் மணல் அறல் வார்ந்தன்ன, குறுந்தொகை 286 – அறல் போல் கூந்தல், கலித்தொகை 71 – கதுப்பு அறல், கலித்தொகை 98 – நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, பொருநராற்றுப்படை 25 – அறல் போல் கூந்தல்.  வரலாறு:  சோழர், உறந்தை.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).  தேம் பாய் கூந்தல் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – வண்டுகள் தாவுகின்ற கூந்தல், சோமசுந்தரனார் உரை – வண்டுகள் பாய்தற்குக் காரணமான கூந்தல், தமிழண்ணல் – இனிமை தவழும் கூந்தல், வண்டுகள் வந்து பாய்கின்ற கூந்தல் வகைகள், வண்டு மொய்க்கும் மலர்களால் ஆன கூந்தல்.

சொற்பொருள்:   யான் நயந்து உறைவோள் – என்னால் விரும்பப்பட்டு வாழும் தலைவி, தேம் பாய் கூந்தல் – வண்டுகள் பாயும் கூந்தல் (தேம் தேன் என்றதன் திரிபு),. வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண் மணல் அறல் வார்ந்து அன்ன – வளமைப் பொருந்திய சோழர்களின் உறந்தை ஊரின் பெரிய நீர்த்துறையில் உள்ள நுண்ணிய மணல் நீண்டு இருப்பதை ஒத்த, நல் நெறி அவ்வே – நல்ல வளைவு உடையது (நெறிப்பு – படிப்படியாய் நீரோட்டத்தினால் மணலில் உண்டாகும் சுவடு), நறும் தண்ணியவே.- நறுமணமும்  குளிர்ச்சியும் உடையது (தண்ணியவே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 117, குன்றியனார்நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர்
கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன்,
வாராது அமையினும் அமைக,  5
சிறியவும் உள, ஈண்டு விலைஞர் கை வளையே.

பாடல் பின்னணி:  வரைவு நீட்டித்தவிடத்துத் தலைவிக்குத் தோழி சொல்லியது.  வரைவு கடாயது.

பொருளுரை:  கார்காலத்தின் ஆம்பல் மலர்களைப் போன்ற தோற்றம் உடைய கொக்கின் பார்வையை அஞ்சிய துன்பத்தை அடைந்த ஈரமான நண்டு, தாழை வேரின் இடையே உள்ள தன் அளைக்குச் செல்லும் பொருட்டு, ஆயர்களால் கட்டப்பட்ட கயிற்றை அறுத்துச் செல்லும் எருதைப் போல் விரையும் கடல் துறையை உடைய நம் தலைவன், வராது இருந்தாலும் இருக்கட்டும். வளையல் விற்பவரிடம் உள்ள கை வளையல்கள் சிறியவும் உள்ளன.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நண்டு கொக்கின் பார்வையை அஞ்சி வளைபுக விரையும் என்றது, நாம் அலர் தூற்றுவார் பார்வையை அஞ்சி அவர் அறியுமுன் தலைவன் இல்லத்தே புக விழைகின்றோம் என்னும் குறிப்புடையது.  இது இரவுக்குறி பகற்குறியாகிய இருவகைக் குறியும் மறுத்துத் தலைவனைக் குறிப்பால் வரைவு கடாயது.  பார்வல் – பார்வை.  கதழ்வு – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள (தொல்காப்பியம், உரியியல் 17).

சொற்பொருள்:   மாரி ஆம்பல் அன்ன கொக்கின் – கார்காலத்தின் ஆம்பல் மலர்களைப் போன்ற தோற்றம் உடைய கொக்கின், பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு – பார்வையை அஞ்சிய துன்பத்தை அடைந்த ஈரமான நண்டு (ஞெண்டு – நண்டு என்பதன் போலி), கண்டல் வேர் அளைச் செலீஇயர் – தாழையின் வேரின் இடையே உள்ள தன் அளைக்குச் செல்லும் பொருட்டு, அண்டர் கயிறு அரி எருத்தின் கதழும் – ஆயர்களால் கட்டப்பட்ட கயிற்றை அறுத்துச் செல்லும் எருதைப் போல் விரையும் (எருத்தின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), துறைவன் – கடல் துறையை உடைய நம் தலைவன், வாராது அமையினும் அமைக – வராது இருந்தாலும் இருக்கட்டும்,  சிறியவும் உள – சிறியவும் உள்ளன, ஈண்டு விலைஞர் கை வளையே – வளையல் விற்பவரிடம் உள்ள கை வளையல்கள் (வளையே – ஏகாரம் அசை)

குறுந்தொகை 118, நன்னாகையார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய,
நள்ளென வந்த நாரில் மாலைப்
பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர்
‘வருவீர் உளீரோ’ எனவும்,
வாரார் தோழி, நம் காதலோரே.  5

பாடல் பின்னணி:  வரைவு நீட்டித்தவிடத்துத் தலைவி பொழுதுகண்டு வருந்தித் தோழிக்குச் சொல்லியது.

பொருளுரை:  பறவைகளும் விலங்குகளும் தனிமையுடன் தங்க, நள்ளென்னும்ஓசையுடன் வந்த, அன்பு இல்லாத மாலை வேளையில், பலரும் புகும் வாயிலை அடைப்பதற்கு விருந்தினரை வினவி அழைப்பவர் “வருபவர் யாரும் உள்ளீரோ” எனக் கூறவும், வரவில்லை தோழி நம் தலைவர்.

குறிப்பு:  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – துணையையுடைய அஃறிணையாகிய பறவைகளும் விலங்குகளும் வருந்த வந்தது மாலை என்றதனானே, துணையற்ற உயர்ந்த மகளிர் ஆடவர் இவர்களைத் துயர் உறுத்தல் கூற வேண்டுமோ! என்பதாம்.  புலம்பொடு (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தனிமையோடு,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தனிமையோடு, தமிழண்ணல் உரை – தனிமையில், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – துயரத்தோடு.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:   புள்ளும் மாவும் – பறவைகளும் விலங்குகளும், புலம்பொடு வதிய – தனிமையுடன் தங்க, நள்ளென வந்த – நள்ளென்னும்ஓசையுடன் வந்த, நார் இல் மாலை – அன்பு இல்லாத மாலை வேளையில், பலர் புகு வாயில் – பலரும் புகும் வாயில்,  அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ எனவும் – அடைப்பதற்கு விருந்தினரை வினவி அழைப்பவர் வருபவர் யாரும் உள்ளீரோ எனக் கூறவும், வாரார் தோழி, நம் காதலோரே – வரவில்லை தோழி நம் தலைவர் (காதலோரே – ஏகாரம் அசை)

குறுந்தொகை 119, சத்திநாதனார்குறிஞ்சித் திணை – தலைவன் தோழனிடம் சொன்னது
சிறு வெள்ளரவின் அவ்வரிக் குருளை,
கான யானை அணங்கியாஅங்கு,
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளை உடைக் கையள், எம் அணங்கியோளே.

பாடல் பின்னணி:  இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் கூறியது.

பொருளுரை:  சிறிய வெள்ளைப் பாம்பின் அழகிய கோடுகளையுடைய குட்டியானது காட்டு யானையை வருத்தினாற்போல்,   முளையைப்போன்ற ஒளியுடைய பற்களை உடைய, வளையல் அணிந்த கைகளையுடைய, இளைய தலைவி எம்மை வருந்தச் செய்தாள்.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – பாம்பின் இளமை தலைவியின் இளமைக்கும் அதன் வரி அவளுடைய வளைக்கும் உவமைகள்.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71).  குருளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (மரபியல் 1, தொல்காப்பியம்).

சொற்பொருள்:   சிறு வெள் அரவின் அவ்வரிக் குருளை – சிறிய வெள்ளைப் பாம்பின் அழகிய கோடுகளையுடைய குட்டி, கான யானை அணங்கியாஅங்கு – காட்டு யானையை வருத்தினாற்போல் (அணங்கியாஅங்கு – அளபெடை), இளையள் – இளமையை உடையவள், முளை வாள் எயிற்றள் – முளையைப்போன்ற ஒளியுடைய பற்களை உடையவள், வளை உடைக் கையள் – வளையல் அணிந்த கைகளையுடையவள், எம் அணங்கியோளே – எம்மை வருந்தச் செய்தாள் (அணங்கியோளே – ஏகாரம் அசை)

குறுந்தொகை 120, பரணர்குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
இல்லோன் இன்பங் காமுற்றாஅங்கு,
அரிது வேட்டனையால் நெஞ்சே, காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு,
அரியள் ஆகுதல் அறியாதோயே.

பாடல் பின்னணி:  அல்லகுறிப்பட்டு மீளும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன் பிரிந்த வழிக் கலங்கியதுமாம்.

பொருளுரை:  நெஞ்சே!  பொருள் இல்லாத ஏழை இன்பத்தை விரும்பினாற்போல் பெறுவதற்கு அரியதை நீ விரும்புகிறாய்.  தலைவி நமக்கு நன்மை தருபவள் என்பதை அறிந்தாற்போல், அவள் பெறுவதற்கு அரியவள் என்பதை நீ அறியவில்லை.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – நல்லாகுதலை அறிந்தது இதற்கு முன் நிகழ்ந்த கூட்டங்களில்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறிந்தாங்கு  அறியாதோய் என்ற உவமை மாறுபட வந்த உவமைத்தோற்றம் என்க.

சொற்பொருள்:   இல்லோன் இன்பங் காமுற்றாஅங்கு – பொருள் இல்லாத ஏழை இன்பத்தை விரும்பினாற்போல் (காமுற்றாஅங்கு – அளபெடை), அரிது வேட்டனையால் நெஞ்சே – பெறுவதற்கு அரியதை நீ விரும்புகிறாய் என் நெஞ்சே (வேட்டனையால் – ஆல் அசைநிலை), காதலி நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு – தலைவி நமக்கு நன்மை தருபவள் என்பதை அறிந்தாற்போல், அரியள் ஆகுதல் அறியாதோயே – அவள் பெறுவதற்கு அரியவள் என்பதை நீ அறியவில்லை (அறியாதோயே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 121, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மெய்யோ, வாழி தோழி, சாரல்
மை பட்டன்ன மா முக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
கோட்டொடு போகியாங்கு, நாடன்
தான் குறி வாயாத் தப்பற்குத்,  5
தாம் பசந்தன என் தட மென்தோளே.

பாடல் பின்னணி:  தலைவன் செய்த குறியென்று பிறிதொன்றை எண்ணிச் சென்று அவனை எதிர்ப்படப்பெறாமல் ஒரு நாள் மீண்ட தலைவி, பின் ஒரு நாள் அவன் வந்தமை கூறிய தோழியிடம் கூறியது.

பொருளுரை:  இது உண்மையா தோழி?  நீடு வாழ்வாயாக!  மலைப்பக்கத்தில் மையைத் தடவினாற்போல் கரிய முகத்தை உடைய ஆண்குரங்கு மரக்கிளை தன்னைத் தாங்கும்படியாகப் பாயாத தவறினால், ஏற்றுக்கொண்ட அக்கிளையுடன் சென்றாற்போல், நம் தலைவன் குறியை நிகழுமாறு செய்யாத தவறினால் என்னுடைய பெரிய மெல்லிய தோள்கள் பசலை அடைந்தன.

குறிப்பு:  அகநானூறு 267 – மை பட்டன்ன மா முக முசுவினம்.  உ. வே. சாமிநாதையர் உரை – குரங்கு கொம்பு ஏற்றுக்கொள்ளும்படி பாயாமையால் அது முறிந்து போனதுபோல தலைவர் தான் அறியும் வண்ணம் குறி செய்யாத தவற்றால் என் தோள்கள் பிசைந்தன என்று தலைவி கூறியது.  மெய்யோ வாழி (1) – உ. வே. சாமிநாதையர் உரை – மெய்யாயின் அவனது வரவாகிய நற்செய்தியை உரைத்த நீ வாழ்வாய் எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 24).  அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம். உரியியல் 26).

சொற்பொருள்:   மெய்யோ – இது உண்மையா, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, சாரல் மை பட்டன்ன மா முக முசுக்கலை – மலைப்பக்கத்தில் மையைத் தடவினாற்போல் கரிய முகத்தை உடைய ஆண்குரங்கு, ஆற்றப் பாயாத் தப்பல் – மரக்கிளை தாங்கும்படியாகப் பாயாத தவறினால், ஏற்ற கோட்டொடு போகியாங்கு – ஏற்றுக்கொண்ட அக்கிளையுடன் சென்றாற்போல், நாடன் தான் குறி வாயாத் தப்பற்கு – தலைவன் குறியை நிகழுமாறு செய்யாத தவற்றிற்கு, தாம் – அசைநிலை, பசந்தன என் தட மென்தோளே – பசலை அடைந்தன என்னுடைய பெரிய மெல்லிய தோள்கள்

குறுந்தொகை 122, ஓரம்போகியார்நெய்தற் திணை – தலைவி சொன்னது
பைங்கால் கொக்கின் புன்புறத்து அன்ன,
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின, இனியே
வந்தன்று வாழியோ மாலை,
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்திருந்த காலத்தில் மாலைப்பொழுது கண்டு தலைவி வருந்திக் கூறியது.

பொருளுரை:  பசிய கால்களை உடைய கொக்கின் பொலிவில்லாத புறத்தைப் போன்ற, ஆழமான நீர்நிலையில் உள்ள ஆம்பல் மலர்களும் கூம்பின.  வந்தது மாலை.  அது வாழ்வதாக!  அதற்குப்பின் வரும் இரவையும் உடையது அது.  இனி நான் என்ன செய்வேன்!

குறிப்பு:  குறுந்தொகை 387 – கங்குல் வெள்ளங்கடலினும் பெரிதே.  உ. வே. சாமிநாதையர் உரை – மாலையை வாழ்த்தியது குறிப்புமொழி.  தனக்குத் துன்பத்தைத் தரும் அது வாழ்தற்குரியதன்று என்பது தலைவியின் உள்ளக்கிடக்கை.  ஆவூர் மூலங்கிழாரின் செய்யுள் பகுதியில் (புறநானூறு 196) ‘செல்வல் அத்தை சிறக்க நின் நாளே’ என்று உரையாசிரியர் கூறியது காண்க.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘மாலை வாழ்க’ என்பது ‘அது கெடுக’ என்னும் பொருளில் வந்த குறிப்புமொழி.

Meanings:  பைங்கால் கொக்கின் – of storks with green legs, புன்புறத்து அன்ன – like the small backs, like the narrow backs (புறத்து – புறம், அத்து சாரியை), குண்டு நீர் ஆம்பலும் கூம்பின – the white waterlilies in the deep waters have closed (ஆம்பலும் – உம்மை உயர்வு சிறப்பு), இனி – now, ஏ – அசைநிலை, an expletive, வந்தன்று – it has come, வாழி – may it live long ,  ஓ – அசைநிலை, an expletive, மாலை – evening time, ஒரு தான் அன்றே – not only that, கங்குலும் உடைத்து – it also has night (உம்மை இறந்தது தழீஇயது), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 123, ஐயூர் முடவனார்நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
இருள் திணிந்தன்ன ஈர்ந்தண் கொழு நிழல்,
நிலவுக் குவித்தன்ன வெண்மணல் ஒரு சிறைக்
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப,
இன்னும் வாரார், வரூஉம்
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே.  5

பாடல் பின்னணி:  பகற்குறியிடத்து வந்த தலைவனைக் காணாத தோழி, அவன் இருப்பதை அறிந்து தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  நிலவின் ஒளியைக் கூட்டிக் குவித்து வைத்தாற்போல் வெள்ளை மணலின் ஒரு பக்கத்தில் உள்ள இருள் அடர்ந்து இருந்தாற்போல் ஈரமும் குளிர்ச்சியும் உடைய கொழுத்த நிழலையுடைய, கரிய கிளைகளை உடைய புன்னை மரங்கள் உடைய பூஞ்சோலை தனிமையில் இருக்க, நம் தலைவர் இன்னும் வரவில்லை.  பலவகை மீன்களைப் பிடிக்கச் சென்ற என் அண்ணன்மாரின் படகு வந்துவிடும்.

குறிப்பு:  புலம்ப (3) – உ. வே. சாமிநாதையர் உரை – தனிப்ப, தனிமைப் பட்டிருப்ப, தலைவன் வாராமையால் பொழில் தனிமையுடையதாயிற்று.  நிலவு மணல்: அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர், மதுரைக்காஞ்சி 114 – நிலவுக் கானல்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:   இருள் திணிந்தன்ன ஈர்ந்தண் கொழு நிழல் – இருள் அடர்ந்து இருந்தாற்போல் ஈரமும் குளிர்ச்சியும் உடைய கொழுத்த நிழல், நிலவுக் குவித்தன்ன வெண்மணல் – நிலவின் ஒளியைக் கூட்டிக் குவித்து வைத்தாற்போல் வெள்ளை மணல், ஒரு சிறை – ஒரு பக்கம், கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப – கரிய கிளைகளை உடைய புன்னை மரங்கள் உடைய பூஞ்சோலை தனிமையில் இருக்க, இன்னும் வாரார் – தலைவர் இன்னும் வரவில்லை, வரூஉம் – வந்துவிடும் (அளபெடை), பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே – பலவகை மீன்களைப் பிடிக்கச் சென்ற என் அண்ணன்மாரின் படகு (திமிலே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 124, சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோபாலை திணை – தோழி தலைவனிடம் சொன்னது
உமணர் சேர்ந்து கழிந்து மருங்கின் அகன்றலை
ஊர் பாழ்த்தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றீர் ஆயின்,
இனியவோ பெரும, தமியோர்க்கு மனையே?

பாடல் பின்னணி:  தலைவி தலைவனுடன் செல்ல விரும்பினாள்.  தன்னோடு வரின் அவள் இன்னல் எய்துவள் என்று தலைவன் கூறினான்.  அப்பொழுது அத்தலைவனிடம் தோழி கூறியது.

பொருளுரை:   உப்பு வணிகர்கள் சேர்ந்து கழிந்த பக்கத்தையும் அகன்ற இடத்தையும் உடைய குடியிருந்த ஊர் பாழாகப் போனதைப் போன்ற தோற்றத்தையுடைய ஓமை மரங்கள் நிறைந்த பெரிய காடு துன்பம் தருவது (தலைவிக்கு) என்று நீ கூறுவாயின், துணைவரைப் பிரிந்து தனியே இருக்கும் மகளிர்க்கு இல்லம் இனிமையானதா?

குறிப்பு:   மனையே – ஏகாரம் அசை நிலை.   பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘காடு இன்னா என்றீர்’ என்றது ‘உடன்போவார்க்கு இனியாவாகவும் நீயிர் இன்னா என்கின்றீர்’ என்பதுபட நின்றது.  ‘இனியவோ’ என்றது இன்னாவுடையனவாதல் ஒருதலை’ என்பதுபட நின்றது.  இனியவோ (4) – உ. வே. சாமிநாதையர் உரை – இந்த வினா எதிர்மறைப் பொருளுடையது.

சொற்பொருள்:   உமணர் – உப்பு வணிகர்கள், சேர்ந்து – சேர்ந்து, கழிந்து மருங்கின் – கடந்து சென்ற பக்கத்தையும், அகன்றலை – அகன்ற இடம்,  ஊர் பாழ்த்தன்ன – குடியிருந்த ஊர் பாழாகப் போனதைப் போன்ற தோற்றத்தையுடைய,  ஓமையம் பெருங்காடு – ஓமை மரங்கள் நிறைந்த பெரிய காடு, இன்னா என்றீர் ஆயின் – துன்பம் தருவது என்று நீ கூறுவாயின்,  இனியவோ – இனிமையானதா (இனிமையானது இல்லை), பெரும – தலைவா, தமியோர்க்கு – தனிமையில் இருப்பவர்களுக்கு,  மனையே – இல்லம்

குறுந்தொகை 125, அம்மூவனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இலங்கு வளை நெகிழச் சாஅய் யானே
உளெனே, வாழி தோழி, சாரல்
தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல்
பறை வலம் தப்பிய பைதல் நாரை  5
திரை தோய் வாங்கு சினை இருக்கும்
தண்ணந்துறைவனொடு கண்மாறின்றே.

பாடல் பின்னணி:  வரைவு நீட்டித்தவிடத்து தலைவி தோழியிடம் சொன்னது.

பொருளுரை:   தோழி!  மலைச் சரிவில் உள்ள தழையினால் செய்த ஆடையை அணிந்த அல்குலையுடைய மகளிர் யாவரினும் விழாவைப் போன்ற சிறப்புடைய என்னுடைய அழகு, பழைய அழகையுடைய சிறகின் வன்மை தவறியதால் துன்புறும் நாரை அலைகள் மோதும் வளைந்த மரக்கிளைகளில் தங்கி இருக்கும் குளிர்ந்த அழகிய துறையை உடைய தலைவனுடன் என்னை விட்டுப் பிரிந்து இடம் பெயர்ந்தது.  நான் மட்டும் ஒளியுடைய வளையல்கள் நெகிழும்படி மெலிந்து இன்னும் உயிருடன் இருக்கின்றேன்.

குறிப்பு:   இரா. இராகவையங்கார் உரை – திரை இருக்குமிடத்து மீனொடு வாராதாயின் நாரை உயிர் வாழாமை போலத் தானுள்ள இடத்துத் தலைவன் வரைவொடு வாரானேல் உயிர் வாழேன் என்று குறித்தாளாம்.  தண்ணந்துறைவனொடு (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தண்ணந்துறைவன் என்றது இகழ்ச்சிக் குறிப்பு.  என்னை?  அவன் துறை மட்டுமே தண்ணிது, இவன் வெய்யன் ஆயினன் என்பதுபட நிற்றலான் என்க.   உ. வே. சாமிநாதையர் உரை – நாரை தன் பழைய சிறை வலி கெட்டு திரைத் தானே கொணர்ந்து தரும் மீனைப் பெற்றாலன்றி வேறு இறை பெறாத நிலையில் திரை தோயும் சினையில் இருத்தலைப் போல, யான் என் பழைய நலனை இழந்து தலைவன் தானே உளமிறங்கிச் செய்யும் தண்ணளியை எதிர்நோக்கி, ஈண்டுள்ளேன் என்பது குறிப்பு.

சொற்பொருள்:   இலங்கு வளை நெகிழச் சாஅய் – ஒளியுடைய வளையல்கள் நெகிழும்படி மெலிந்து, யானே உளெனே – நான் மட்டும் இன்னும் உயிருடன் இருக்கின்றேன் (உளெனே – ஏகாரம் அசைநிலை), வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, சாரல் தழை அணி அல்குல் மகளிர் உள்ளும் – மலைச் சரிவில் உள்ள தழையினால் செய்த ஆடையை அணிந்த அல்குலையுடைய மகளிர் யாவரிலும், விழவு மேம்பட்ட என் நலனே – விழாவைப் போன்ற சிறப்புடைய என்னுடைய அழகு, பழ விறல் பறை வலம் தப்பிய பைதல் நாரை – பழைய அழகையுடைய சிறகின் வன்மை தவறியதால் துன்புறும் நாரை, திரை தோய் வாங்கு சினை இருக்கும் – அலைகள் மோதும் வளைந்த மரக்கிளைகளில் தங்கி இருக்கும், தண்ணந்துறைவனொடு – குளிர்ந்த அழகிய துறையை உடைய தலைவனுடன், கண் மாறின்றே – இடம் பெயர்ந்தது, பிரிந்துச் சென்றது (கண் – இடம், மாறின்றே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 126, ஒக்கூர் மாசாத்தியார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இளமை பாரார், வள நசைஇச் சென்றோர்,
இவணும் வாரார், எவணரோ எனப்,
பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறாக
நகுமே தோழி, நறும் தண் காரே.  5

பாடல் பின்னணி:  பருவங்கண்டு வருந்திய தலைவி தோழிக்குச் சொல்லியது.

பொருளுரை:  தோழி!  பொருளை விரும்பி அதனை ஈட்டச் சென்ற நம் தலைவர் இளமையின் அருமையை எண்ணிப் பார்க்கவில்லை.  இங்கும் அவர் மீண்டு வரவில்லை.  ‘எவ்விடத்தில் உள்ளாரோ அவர்’ என்று யாம் எண்ணியிருக்க, நறுமணமுடைய குளிர்ந்த கார்கால மழையால் பாதுகாக்கப்பட்ட, மலர்களை உடைய முல்லைக் கொடிகள், தொகுப்பாக உள்ள அரும்புகளை ஒளியுடைய பற்களாகக் கொண்டு நம்மைப் பார்த்துச் சிரிப்பனவாக உள்ளன.

குறிப்பு:   இரா.  இராகவையங்கார் உரை – முல்லை நகும் என்பதற்கு ஏது தலைவர் அம்முல்லையைக் காட்டி ‘மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் என’  (நற்றிணை 316) கூறிச் சென்றாராதலால் அவரை நம்பி ஆற்றியிருந்தது பற்றியெனக் கொள்ளத்தகும்.  இங்ஙனம் கொள்ளாது ‘முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக நகுமே தோழி நறும் தண் காரே’ என்று பாடம் கொள்ளின் முல்லையின் திரண்ட முகைகள் விளங்கிய பற்கள் போலாக நறுந்தண் கார் ஒலிக்கும் என்று பொருள் கொள்க.  கார் நாற்பதில் (14) ‘முல்லை இலங்கு எயிறின் நறுந்தண் கார் மெல்ல இனிய நகும்’  என வந்த இடத்து பழைய உரைக்காரர், ‘முல்லைக் கொடிகள் விளங்குகின்ற மகளிர் பற்களைப் போன்ற அரும்புகளை ஈனும்படி அழகிய குளிர்ந்த மேகங்கள் இனியனவாய் மெதுவா ஒலியா நின்றன’ எனப் பொருள் கூறுதல் காண்க.  பெயல் புறந்தந்த முல்லை என்றாள் தனக்கு அம் மழை இப்பொழுது பகையாய் வருந்துதல் குறித்து.  பற்களைப் போன்ற அரும்பு:  குறுந்தொகை 126 – முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக, குறுந்தொகை 162 – சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை, குறுந்தொகை 186 – முல்லை மென் கொடி எயிறு என முகையும், நற்றிணை 316 – மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் என.

சொற்பொருள்:   இளமை பாரார் – இளமையின் அருமையை எண்ணிப் பார்க்கவில்லை, வள நசைஇச் சென்றோர் – பொருளை விரும்பி அதனை ஈட்டச் சென்ற நம் தலைவர், இவணும் வாரார் – இன்னும் இங்கும் அவர் மீண்டு வரவில்லை (இவணும் – உம்மை உயர்வு சிறப்பு), எவணரோ – எவ்விடத்தில் உள்ளாரோ அவர் – எங்கு உள்ளாரோ அவர் (எவணரோ – ஓகாரம் ஐயம்), என – என்று, பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லை – மழையால் பாதுகாக்கப்பட்ட மலர்களை உடைய முல்லைக் கொடிகள், தொகு முகை இலங்கு எயிறாக நகுமே – தொகுப்பாக உள்ள அரும்புகள் ஒளியுடைய பற்கள் போல் தோன்றிச் சிரிக்கும், தோழி – தோழி, நறும் தண் காரே – நறுமணமுடைய குளிர்ந்த கார்காலம் (ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 127, ஓரம்போகியார்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
குருகு கொளக் குளித்த கெண்டை அயலது
உருகெழு தாமரை வான் முகை வெரூஉம்
கழனியம் படப்பைக் காஞ்சி ஊர!
ஒரு நின் பாணன் பொய்யனாக,
உள்ள பாணர் எல்லாம்  5
கள்வர் போல்வர், நீ அகன்றிசினோர்க்கே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்து மீண்ட தலைவன் ஊடியிருந்த தலைவியை அஞ்சி அவள் ஊடலைத் தீர்க்க பாணனை அனுப்பி, அவன் பின் நின்றபொழுது அத்தலைவனிடம் தோழி கூறியது.

பொருளுரை:   நாரை அலகால் கவர்ந்து கொள்ள, அதனிடமிருந்து தப்பி நீருள் குளித்த கெண்டை மீன் அதன் பின் அருகில் உள்ள அழகு பொருந்திய தாமரையின் வெள்ளை அரும்பைப் பார்த்து அஞ்சும்,  வயல்களையுடைய அழகிய  பக்கங்களில் காஞ்சி மரங்கள் வளரும் ஊரையுடைய தலைவா!  தூதாக வந்த உன்னுடைய பாணன் பொய் பேசுபவனாக இருப்பதால், பிறப் பாணர்கள் எல்லோரும் கள்வர்கள் போல் தோன்றுகின்றனர், கைவிடப்பட்ட மகளிர்க்கு.

குறிப்பு:   ஐங்குறுநூறு 139 – நின்னினும் பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே, நற்றிணை 200 – கை கவர் நரம்பின் பனுவல் பாணன் செய்த அல்லல் பல்குவ வை எயிற்று ஐது அகல் அல்குல் மகளிர் இவன் பொய் பொதி கொடுஞ்சொல் ஓம்புமின். படப்பை (3) – உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை, பக்கம், தமிழண்ணல் உரை – தோட்டம்.  உ. வே. சாமிநாதையர் உரை – நீ அகன்றிசினோர்க்கு என்றது நீ பல மகளிரோடு நட்புடையாய் என்னும் கருத்தை உள்ளடக்கியது.  குருகிற்கு அஞ்சிய கெண்டை அக்குருகைப் போன்ற தோற்றத்தை மட்டும் உடையதும் கொடுமை இல்லாததுமாகிய தாமரை முகையையும் அஞ்சினாற்போல நீ விடுத்த பாணனைப் பொய்யனாகக் கண்டு வெறுத்த மகளிர் பிற பாணரையும் வெறுத்தர் என்பது குறிப்பு.  இரா. இராகவையங்கார் உரை – தன்னுடன் பாடின்றித் தன்னுடைய கணவனைப் பரத்தையர் சேரிக்குக் கொண்டேகுவாராகக் கருதிக் கள்வர் போல்வர் என்றாள்.  அகன்றிசினோர்க்கு என்ற பன்மையால் இத் தலைவன் பல் பெண்டிராளன் என அறியலாம்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – குருகு கொளக் குளித்த கெண்டை என்றது அன்னத்தால் கவ்வப்பட்டுழி அதற்கு அகப்படாது நீரினுள் புகுந்து உயிர் உய்த்த கெண்டை மீன் என்றவாறு.  எனவே நின் பாணன் பொய்யில் மயங்காது தப்பினேம் என்றபடியாம்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  பாணர் – பாண் மரபினர், பாண் என்பது பண் அடியாகப் பிறந்த பெயர், இசை பாடுபவர்.

சொற்பொருள்:   குருகு கொளக் குளித்த கெண்டை – நாரை அலகால் கவர்ந்து கொள்ள அதனிடமிருந்து தப்பி நீருள் குளித்த கெண்டை மீன், அயலது உருகெழு தாமரை வான் முகை வெரூஉம் – அருகில் உள்ள அழகு பொருந்திய (நிறம் பொருந்திய) தாமரையின் வெள்ளை அரும்பைப் பார்த்து அஞ்சும் (வெரூஉம் – அளபெடை), கழனி அம் படப்பைக் காஞ்சி ஊர – வயல்களையுடைய அழகிய (அம் – அழகு, சாரியையுமாம்) பக்கங்களில் (தோப்புக்களில்) காஞ்சி மரங்கள் வளரும் ஊரையுடைய தலைவா, ஒரு நின் பாணன் பொய்யனாக – உன்னுடைய தூதாக வந்த பாணன் பொய் பேசுபவனாக இருப்பதால், உள்ள பாணர் எல்லாம் – ஊரில் உள்ள பாணர்கள் எல்லோரும், கள்வர் போல்வர் – கள்வர்கள் போல் தோன்றுகின்றனர், நீ அகன்றிசினோர்க்கே – கைவிடப்பட்ட மகளிர்க்கு (அகன்றிசினோர்க்கே – ஏகாரம் அசைநிலை, இசின் – படர்க்கையின்கண் வந்ததோர் இடைச்சொல்)

குறுந்தொகை 128, பரணர்நெய்தற் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
குணகடல் திரையது பறை தபு நாரை,
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆரிரைக்கு அணவந்தாங்குச்,
சேயள் அரியோள் படர்தி,
நோயை நெஞ்சே, நோய்ப் பாலோயே.  5

பாடல் பின்னணி:  குறியிடத்தில் தலைவியைக் காணாது மீளும்பொழுது தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது.

பொருளுரை:   என் நெஞ்சே!  கிழக்கில் உள்ள கடல் அலைக்கு அருகில் உள்ள சிறகுகளை இழந்த நாரை, திண்மையான தேரை உடைய சேர மன்னனின் தொண்டி என்னும் பட்டினத்தில் கடற்கையின் முன் உள்ள அயிரை மீனை உணவாகப் பெறுவதற்குத் தன்னுடைய தலையை நிமிர்த்தினாற்போல், தொலைவில் உள்ளவளும் பெறுவதற்கு அரியவளுமான தலைவியை நீ பெறுவதற்கு நினைத்தாய். வருந்துவதற்கு மூலமாகிய ஊழ்வினையை உடையை நீ.

குறிப்பு:   முன்துறை (2) – உ. வே. சாமிநாதையர் உரை – துறை முன், பின் முன்னதாகத் தொக்கது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவியைத் தனது முயற்சியால் எய்த இயலாமை கூறுவான் ‘பறை தபு நாரை’ என்றான்.  அவள் நாம் விரும்புமாறு எய்துதற்கு உரியவளும் அல்லள் என்பான் ‘அரியோள்’ என்றான்.  வரலாறு:  பொறையன், தொண்டி.

சொற்பொருள்:   குணகடல் திரையது பறை தபு நாரை – கிழக்கில் உள்ள கடல் அலைக்கு அருகில் உள்ள சிறகுகளை இழந்த நாரை, திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆரிரைக்கு அணவந்தாங்கு – திண்மையான தேரை உடைய சேர மன்னனின் தொண்டி என்னும் பட்டினத்தில் கடற்கையின் முன் உள்ள அயிரை மீனை உணவாகப் பெறுவதற்குத் தன்னுடைய தலையை நிமிர்த்தினாற்போல்,  சேயள் அரியோள் படர்தி – தொலைவில் உள்ளவளும் பெறுவதற்கு அரியவளுமான தலைவியை நீ பெறுவதற்கு நினைத்தாய், நோயை நெஞ்சே – என் நெஞ்சே, நோய்ப் பாலோயே – வருந்துவதற்கு மூலமாகிய ஊழ்வினையை உடையை நீ (நோய்ப் பாலோயே – ஏகாரம் அசைநிலை, தேற்றமுமாம்)

குறுந்தொகை 129, கோப்பெருஞ்சோழன்குறிஞ்சித் திணை – தலைவன் தன் தோழனிடம் சொன்னது
எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப!
புலவர் தோழ! கேளாய்! அத்தை
மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப்
பசு வெண்திங்கள் தோன்றியாங்குக்
கதுப்பயல் விளங்கும் சிறு நுதல்,  5
புதுக்கோள் யானையின், பிணித்தற்றால் எம்மே.

பாடல் பின்னணி:  இயற்கைப் புணர்ச்சி எய்தித் தலைவியைப் பிரிந்து வந்த தலைவனின் வேறுபாட்டைக் கண்டு அது எதனால் ஏற்பட்டது என்று தோழன் வினவியபொழுது தலைவன் கூறியது.

பொருளுரை:   என் நண்பனே!  சிறுவர்கள் இன்புறுவதற்கு மூலமாக நட்பையுடையோனே!  அறிவுடையவர்களுக்குத் தோழனே!  இதனைக் கேட்பாயாக!  பெரிய கடலின் நடுவே எட்டாவது நாள் இளைய வெள்ளி நிலவு தோன்றியாங்கு, கூந்தலின் அருகில் விளங்கும் தலைவியின் சிறிய நெற்றி, புதிதாகப் பிடிபட்ட யானையைப்போல் எம்மைப் பிணித்தது.

குறிப்பு:   மாக் கடல் நடுவண் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – பெரிய கடலின் நடுவில், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரிய கடலினிடையே, இரா. இராகவையங்கார் உரை – கருங்கடலிடையே, தமிழண்ணல் உரை – கரிய கடலின் நடுவே, ச.வே. சுப்பிரமணியன் உரை – கரிய பெருங்கடலின் நடுவில்.  புதுக்கோள் யானை (6) – உ. வே. சாமிநாதையர் உரை – புதிதாகக் காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட யானை.  தலைவன் தான் முன்னர் இத்தகைய உள்ளக் கவர்ச்சியை அடைந்தவனல்லன் ஆதலின் புதுக் கோள் யானையை உவமை கூறினான்.  இராஇராகவையங்கார் உரை – எண் நாள் பக்கத்துப் பசு வெண்திங்கள் (3,4) – ‘பசு வெண் பக்கத்து திங்கள் எண் நாள்’ என்க.

சொற்பொருள்:   எலுவ – என் நண்பனே, சிறாஅர் ஏமுறு நண்ப – சிறுவர்கள் இன்புறுவதற்கு மூலமாக நட்பையுடையோனே (ஏமம் ஏம் எனக் குறைந்து நின்றது), புலவர் தோழ – அறிவுடையவர்களுக்குத் தோழனே, கேளாய் – கேட்பாயாக, அத்தை – அசைநிலை, மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசு வெண்திங்கள் தோன்றியாங்கு – பெரிய கடலின் நடுவே எட்டாவது நாள் இளைய வெள்ளி நிலவு தோன்றினாற்போல், கதுப்பு அயல் விளங்கும் சிறு நுதல் – கூந்தலின் அருகில் விளங்கும் சிறிய நெற்றி, புதுக்கோள் யானையின் – புதிதாகப் பிடிபட்ட யானையைப்போல் (யானையின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), பிணித்தற்றால் எம்மே – எம்மைப் பிணித்தது (பிணித்தற்றால் -ஆல் அசைநிலை, எம்மே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 130, வெள்ளிவீதியார்பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது அல்லது தலைவி தோழியிடம் சொன்னது
நிலம் தொட்டுப் புகாஅர், வானம் ஏறார்,
விலங்கு இரு முந்நீர் காலில் செல்லார்,
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
குடி முறை குடி முறை தேரின்,
கெடுநரும் உளரோ, நம் காதலோரே?  5

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்திருக்கும்போது வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.  அல்லது தோழி தலைவனிடம் தூது விடும்பொருட்டுத் தலைவி தனது ஆற்றாமையால் அவளிடம் கூறியது.

பொருளுரை:  நம் தலைவர் நிலத்திற்கு உள்ளே நுழையவில்லை, வானத்திற்கும் ஏறவில்லை, விலக்கும் பெரியக் கடல் உள்ளும் நடந்துச் செல்லவில்லை.  நாம் அவரை நாடுகள் தோறும், ஊர்கள் தோறும், குடிகள் தோறும் முறையாகத் தேடினால் அகப்படாமல் போய் விடுவாரா?

குறிப்பு:  புகாஅர் – அளபெடை, காதலோரே – ஏகாரம் அசைநிலை.  அகநானூறு 147 – நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே.   அகநானூறு 236 – ஆட்டன் அத்தியை காணீரோ என நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி.  குடி முறை (4) – உ. வே. சாமிநாதையர் உரை – குடிகள்தோறும், நாடு, ஊர், குடி ஒன்றனுள் ஒன்று அடங்கியவை ஆதலின் அம்முறைப்படி கூறினாள்.  குடியென்றது குடும்பத்தை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – குடிகள்தோறும்,  தமிழண்ணல் உரை – தனித்தனி குலம்.  இது சாதி வழிப் பிரிவன்று. பின்னர் புகுந்த சாதி குலங்களையும் வேற்றுமை பாராட்ட வைத்தது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோழி கூற்றாயின், ‘அங்ஙனம் ஆராய்ந்து தலைவனைத் தேடிக் கொணர்வன்.  நீ ஆற்றியிரு’ என்பது குறிப்பெச்சம்.  தலைவி கூற்றாயின், ‘நீ அங்ஙனம் முயன்று அவரைத் தேடித் தாராய் ஆயின் யான் இறந்துபடுவல்’ என்பது குறிப்பெச்சம்.  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

சொற்பொருள்:   நிலந்தொட்டுப் புகார் – அவர் நிலத்தைத் தோண்டி உள்ளே நுழையவில்லை, வானம் ஏறார் – அவர் வானத்திற்குள் ஏறவில்லை, விலங்கு இரு முந்நீர் – விலக்கும் பெரிய கடலில்,  காலில் செல்லார் – காலினால் நடந்து செல்லவில்லை அவர்,  நாட்டின் நாட்டின் – நாடுகள் தோறும்,  ஊரின் ஊரின் – ஊர்கள் தோறும், குடிமுறை குடிமுறை –  முறையாகக் குடிகள்தோறும், தேரின் – தேடினால், கெடுநரும் உளரோ – அகப்படாமல் போய் விடுவாரா, நம் காதலோரே – நம் தலைவர்

குறுந்தொகை 131, ஓர் ஏர் உழவனார்பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத்தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே,
நெடுஞ்சேண் ஆர் இடையதுவே நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓர் ஏர் உழவன் போலப்  5
பெரு விதுப்பு உற்றன்றால், நோகோ யானே.

பாடல் பின்னணி:  வினை முற்றிய தலைவன் பருவ வரவின்கண் சொல்லியது.

பொருளுரை:   அசைகின்ற மூங்கிலை ஒத்த அழகுடைய பருமையான தோள்களையும் பெரிது போரிடும் கண்களையுமுடைய தலைவியின் ஊர் நெடுந்தொலைவில் அடைவதற்கு அரிய இடத்தில் உள்ளது.  என் நெஞ்சு, மழை விழுந்ததால் உழவுக்கு ஏற்ற ஈரம் பொருந்திய செவ்வியை உடைய பசிய புனத்தையுடைய ஒற்றை ஏரையுடைய உழவனைப் போல் பெரிதும் விரைவை அடைந்தது.  அதனால் நான் வருந்துவேன்.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – ஓர் ஏர் உழவன் ஈரம் வீண்படாமல் உழுவதற்கு விரைதலைப் போல என் நெஞ்சம் தலைவியை உரிய பருவத்தே கண்டு அளவளாவ விரைகின்றது என்றான்.

சொற்பொருள்:   ஆடு அமை புரையும் – அசைகின்ற மூங்கிலை ஒத்த, வனப்பின் பணைத்தோள் –  அழகுடைய பருமையான தோள், பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே – பெரிது போரிடும் கண்களையுடைய தலைவியின் ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை), நெடுஞ்சேண் ஆர் இடையதுவே – நெடுந்தொலைவில் அடைவதற்கு அரிய இடத்தில் உள்ளது, நெஞ்சே – என் நெஞ்சு (நெஞ்சே – ஏகாரம் அசைநிலை), ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து – மழை விழுந்ததால் உழவுக்கு ஏற்ற ஈரம் பொருந்திய செவ்வியை உடைய பசிய புனத்தையுடைய, ஓர் ஏர் உழவன் போல – ஒற்றை ஏரையுடைய உழவனைப் போல், பெரு விதுப்பு உற்றன்றால் – பெரிதும் விரைவை அடைந்தது (உற்றன்றால் = உற்றன்று + ஆல், ஆல் அசைநிலை), நோகோ யானே – நான் வருந்துவேன் (நோகு + ஓ, ஓகாரம் அசை, யானே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 132, சிறைக்குடி ஆந்தையார்குறிஞ்சித் திணை – தலைவன் தன் தோழனிடம் சொன்னது
கவவுக் கடுங்குரையள், காமர் வனப்பினள்,
குவவு மென் முலையள், கொடிக் கூந்தலளே,
யாங்கு மறந்தமைகோ யானே? ஞாங்கர்க்
கடுஞ்சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,  5
சாஅய் நோக்கினளே மாஅயோளே.

பாடல் பின்னணி:  தோழன் இடித்துரைத்தபோது தலைவன் அதனை எதிர் மறுத்துக் கூறியது.

பொருளுரை:   மாமை நிறமுடைய தலைவி தழுவுவதில் விரைவை உடையவள். விருப்பம் தரும் அழகை உடையவள். குவிந்த மெல்லிய முலையுடையவள். நீண்ட கூந்தலை உடையவள். மிகுந்த பால் சுரத்தலை உடைய நல்ல பசுவின் நடுங்கும் தலையுடைய கன்று தாயைக் காணும் விருப்பத்துடன் இருப்பதைப் போன்ற விருப்பமுடைய, மெலிந்த பார்வையை உடையவள். எவ்வாறு அவளை மறந்து இருப்பேன்?

குறிப்பு:  கவவு (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அகத்தீடு, அஃதாவது தழுவுதல் என்னும் பொருட்டு.  கவவு அகத்திடுமே (தொல்காப்பியம், உரியியல் 59).  குழவி – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).  குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).

சொற்பொருள்:   கவவுக் கடுங்குரையள் – தழுவுவதில் விரைவை உடையவள் (குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று), காமர் வனப்பினள் – விருப்பம் தரும் அழகை உடையவள், குவவு மென் முலையள் – குவிந்த மெல்லிய முலையுடையவள், கொடிக் கூந்தலளே – நீண்ட கூந்தலை உடையவள், யாங்கு மறந்து அமைகோ யானே – எவ்வாறு அவளை மறந்து இருப்பேன் (அமைகோ = அமைகு + ஓ, ஓகாரம் அசைநிலை), ஞாங்கர்க் கடுஞ்சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி தாய் காண் விருப்பின் அன்ன – மிக்க சுரப்பை உடைய நல்ல பசுவின் நடுங்கும் தலையுடைய கன்று தாயைக் காணும் விருப்பத்துடன் இருப்பதைப் போன்ற விருப்பமுடைய (விருப்பின் – இன் சாரியை), சாஅய் நோக்கினளே மாஅயோளே – மெலிந்த பார்வையை உடையவள் மாமை நிறமுடைய தலைவி (சாஅய் – அளபெடை, மாஅயோளே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 133, உறையூர் முதுகண்ணன் சாத்தனார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
புனவன் துடவைப் பொன் போல் சிறு தினை
கிளி குறைத்து உண்ட கூழை இருவி
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்தாங்கு, என்
உரம் செத்தும், உளெனே தோழி, என்
நலம் புதிது உண்ட புலம்பினானே.  5

பாடல் பின்னணி:  வரைவு நீட்டித்தவிடத்து தலைவி கூறியது.

பொருளுரை:   தோழி! குறவனின் தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறிய தினையின் கதிர்களை, கிளிகள் ஒடித்து உண்டதால் கூழை ஆகிய தாளில் பெரிய மழை உண்டாமையால், இலைகள் தழைத்தாற்போன்று, . தலைவர் என் பெண்மை நலத்தைப் புதுவதாக உண்டு பிரிந்தமையால் உண்டான தனிமை வருத்தத்துடன், என் வலிமை அழிந்தும் நான் இன்னும் உயிருடன் உள்ளேனே.

குறிப்பு:  குறுந்தொகை 106 – புனவன் துடவைப் பொன் போல் சிறு தினை.  உ. வே. சாமிநாதையர் உரை – கிளி உண்டமையால் கதிர் இழந்த நினைத்தாள் பெரும் பெயலுண்மையால் உலர்ந்து வாடாமல் இலை விட்டதுபோல, தலைவர் உண்டமையால் நலன் இழந்த யான் அவரது தண்ணளியை நினைத்து உயிர் வைத்துள்ளேன் என்றது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  குறவன் – மலையில் வாழ்பவன்.

சொற்பொருள்:   புனவன் துடவைப் பொன் போல் சிறு தினை – குறவனின் தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறிய தினையின் கதிர்களை, கிளி குறைத்து உண்ட கூழை இருவி – கிளிகள் ஒடித்து உண்டதால் கூழை ஆகிய தாள் (செடியின் தண்டு), பெரும் பெயல் உண்மையின் – பெரிய மழை உண்டாமையால், இலை ஒலித்தாங்கு – இலைகள் தழைத்தாற்போன்று, என் உரம் செத்தும் – என் வலிமை அழிந்தும், உளெனே தோழி – நான் இன்னும் உயிருடன் உள்ளேனே தோழி, என் நலம் புதிது உண்ட புலம்பினானே – தலைவர் என் பெண்மை நலத்தைப் புதுவதாக தலைவர் உண்டு பிரிந்தமையால் உண்டான தனிமை வருத்தத்துடன் (புலம்பினானே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 134, கோவேங்கைப் பெருங்கதவனார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி, நம்மொடு
பிரிவு இன்று ஆயின் நன்று, மன் தில்ல,
குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப்
பூவுடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக்
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி  5
நிலம் கொள் பாம்பின் இழிதரும்
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே.

பாடல் பின்னணி:  தலைவன் வரைபொருட்குப் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவியை ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது.

பொருளுரை:   தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  சிறிய கற்கள் இடையே வளர்ந்த உயர்ந்த அடியை உடைய வேங்கை மரத்தின் பூக்கள் உடைய அசைந்த மரக்கிளைகள் மலர்கள் உதிர்ந்து தனித்திருக்கும்படி அவற்றைத் தாக்கி, பாறைகளை இடித்து ஒலிக்கும் விரைந்து வீழும் அருவி நிலத்தின்கண் பாம்பைப் போன்று சென்று இறங்குதற்குரிய இடமான, குறிக்கிட்டுக் கிடக்கும் மலைகளின் தலைவனுடன் நெஞ்சு கலந்து உண்டான நட்பானது பிரிவு இல்லாது இருந்தால் நன்றாக இருக்கும்.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – அருவி நிலப்பரப்பில் இழிந்து வளம் தருவத்தேனும் இடையில் மலரை உதிர்த்தலும் கல்லைப் பொருதலும் பாம்பு போலத் தோன்றலுமாகிய துன்பத்திற்கு ஏதுவான செயலைச் செய்தது போல, நாடனது நட்பு முடிவில் நன்மையையே தருவதாயினும் இடையில் பிரிவினால் துன்பத்திற்குக் காரணமாக ஆயிற்று என்பது.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  நிலம் கொள் பாம்பின் இழிதரும் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலையினின்றும் நிலத்தின்கண் செல்லாநின்ற பாம்பைப் போன்று செல்கின்ற, உ. வே. சாமிநாதையர் உரை – நிலத்தைத் தனக்கு இடமாக ஊர்ந்து கொள்ளும் பாம்பைப் போல் இறங்கும்.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – அருவி குறிஞ்சி நிலத்துள்ள வேங்கையின் மலருள்ள சினை வருந்தத் தாக்கி கல்லோடு மோதிக் கீழிறங்குமாறு போல, மலைநாடன், என் மனையிடத்திருந்த எனது சிறந்த நலத்தை வருந்தத் திளைத்து, வலிதாகக் கூறிய நின்னோடும் மாறுபட்டு, மனம் சென்றாங்கே பிரிந்து சென்றிட்டான் என்பதாம். ‘நிலங்கொள் பாம்பின்’ என்ற ஏனை உவமம் உள்ளுறை உவமத்திற்குச் சிறப்புக் கொடுத்து நின்றது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  கல் – இச்சொல் சிறிய கல், பெரிய கல், பாறை, மலை ஆகியப் பொருள்களைக் கொண்டது.

சொற்பொருள்:   அம்ம – கேட்பாயாக (இடைச்சொல்), வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, நம்மொடு பிரிவு இன்று ஆயின் நன்று – பிரிவு இல்லையென்றால் நன்றாக இருக்கும், மன் – ஒழியிசை, ஒழிந்த பொருள் தரும் சொற்களைத் தருவது, தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப் பூவுடை அலங்கு சினை புலம்பத் தாக்கி- சிறிய கற்கள் இடையே வளர்ந்த உயர்ந்த அடியை உடைய வேங்கை மரத்தின் பூக்கள் உடைய அசைந்த மரக்கிளைகள் மலர்கள் உதிர்ந்து தனித்திருக்கும்படி அவற்றைத் தாக்கி, கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி நிலம் கொள் பாம்பின் இழிதரும் – பாறைகளை இடித்து ஒலிக்கும் விரைந்து வீழும் அருவி நிலத்தின்கண் பாம்பைப் போன்று சென்று இறங்குதற்குரிய இடமான (பாம்பின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), விலங்கு மலை நாடனொடு  – குறிக்கிட்டுக் கிடக்கும் மலைகளின் தலைவனுடன் , கலந்த நட்பே – நெஞ்சு கலந்து உண்டான நட்பு (நட்பே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 135, பாலை பாடிய பெருங்கடுங்கோபாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
வினையே ஆடவர்க்கு உயிரே, வாணுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிரென,
நமக்கு உரைத்தோரும் தாமே,
அழாஅல் தோழி, அழுங்குவர் செலவே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிய எண்ணியிருப்பதை அறிந்து வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.

பொருளுரை:   தொழில் தான் ஆண்களுக்கு உயிர் ஆகும்.  இல்லத்தில் இருக்கும், ஒளியுடைய நெற்றியையுடைய மகளிர்க்குக் கணவர்களே உயிர் ஆவார்கள் என்று நமக்குக் கூறியவரும் அவரே.  அழாதே தோழி.  செல்லுவதைத் தவிர்ப்பார் அவர்.

குறிப்பு:  வினையே – ஏகாரம் பிரிநிலை, தாமே – ஏகாரம் தேற்றம், அழாஅல் – அளபெடை, செலவே: ஏகாரம் அசை நிலை, உயிரே: ஏகாரம் அசை நிலை.  உ. வே. சாமிநாதையர் உரை – இது கற்புக் காலத்தது.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71).

சொற்பொருள்:  வினையே – தொழில் தான், ஆடவர்க்கு – ஆண்களுக்கு, உயிரே – உயிர் ஆகும், வாள் நுதல் – ஒளியுடைய நெற்றி, மனை உறை மகளிர்க்கு – இல்லத்தில் இருக்கும் மகளிர்க்கு, ஆடவர் உயிரென – கணவர்களே உயிர் ஆவார்கள் என்று, நமக்கு உரைத்தோரும் – நமக்குக் கூறியவரும், தாமே – அவரே, அழாஅல் தோழி – அழாதே தோழி, அழுங்குவர் செலவே – செல்லுவதைத் தவிர்ப்பார்

குறுந்தொகை 136, மிளைப் பெருங்கந்தனார்குறிஞ்சித் திணை- தலைவன் தோழனிடம் சொன்னது
“காமம் காமம்” என்ப, காமம்
அணங்கும் பிணியும் அன்றே, நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே, யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.  5

பாடல் பின்னணி:  ‘காம நோயால் கலங்குவது நின் பெருமைக்குத் தகவன்று’ என்று இடித்துரைத்த தோழனிடம் தலைவன் கூறியது.

பொருளுரை:   “காமம் காமம்” என என்று அதை அறியாதவர்கள் இகழ்ந்து கூறுவார்கள்.  காமம் வருத்தமும் நோயும் இல்லை.  நுண்மையாகி மிகுதலும் குறைதலும் இல்லை.  அதைக் கண்டு மகிழ்பவர்களைப் பெற்றால், காமமானது, யானை தழையை உண்டு அதனால் கொண்ட மதத்தைப் போல வெளிப்படும் தன்மையை உடையது.

குறிப்பு:  மிளைப்பெருங்கந்தனார் – குறுந்தொகை 204, தோழன் தலைவனிடம் சொன்னது – காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் முதைச் சுவல் கலித்த முற்றா இளம் புல் மூது ஆ தைவந்தாங்கு விருந்தே காமம் பெருந்தோளோயே.  அன்றே – ஏகாரம் அசை நிலை, இன்றே – ஏகாரம் அசை நிலை, பெறினே – ஏகாரம் அசை நிலை. காமம் காமம் என்ப (1) – உ. வே. சாமிநாதையர் உரை – காமம் காமம் என்று உலகினர் அதைக் குறை கூறுவர், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – காமம் காமம் என்று உயர்த்திக் கூறுவர், தமிழண்ணல் உரை – காமம் காமம் என்று ஏதோ இழிவுடையது போல் பேசுவர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – உலகில் உள்ளோர் காமம் காமம் என்று தீயது ஒன்றிற்கு அஞ்சிக் கூறுவார் போலக் கூறுவர், இரா. இராகவையங்கார் உரை – காமம் காமம் என இழித்துக் கூறுவர்.

சொற்பொருள்:  “காமம் காமம்” என்ப – “காமம் காமம்” என என்று அதை அறியாதவர்கள் இகழ்ந்து கூறுவார்கள், காமம் அணங்கும் பிணியும் அன்றே – காமம் வருத்தமும் நோயும் இல்லை, நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே – நுண்மையாகி மிகுதலும் குறைதலும் இல்லை, யானை – யானை, குளகு மென்று ஆள் மதம் போல – தழையை உண்டு அதனால் கொண்ட மதத்தைப் போல, பாணியும் உடைத்து – வெளிப்படும் தன்மையும் உடையது, அது காணுநர்ப் பெறினே – அதைக் கண்டு மகிழ்பவர்களைப் பெற்றால்

குறுந்தொகை 137, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோபாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
மெல்லியல் அரிவை! நின் நல் அகம் புலம்ப
நின் துறந்து அமைகுவென் ஆயின், என் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக, யான் செலவுறு தகவே.

பாடல் பின்னணி:  இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன் தலைவிக்குப் பிரிவு அச்சம் உணர்த்தியது.

பொருளுரை:   மென்மைத் தன்மை உடைய இளம் பெண்ணே!  உன்னுடைய நல்ல நெஞ்சம் தனிமையில் வருந்த உன்னைப் பிரிந்து, சென்ற இடத்தில் மனம் பொருந்தி நான் இருப்பேன் ஆனால், என்னை நீங்கி இரப்போர் வராத நாட்கள் பல ஆகுக, நான் அவ்வாறு செல்வதற்கு உற்ற வினையினால்.

குறிப்பு:  புறநானூறு 72 – புரப்போர் புன்கண் கூர இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  மெல்லியல் அரிவை – மென்மைத் தன்மை உடைய பெண்ணே, நின் நல் அகம் புலம்ப நின் துறந்து – உன்னுடைய நல்ல நெஞ்சம் தனிமையில் வருந்த உன்னைப் பிரிந்து, அமைகுவென் ஆயின் – சென்ற இடத்தில் மனம் பொருந்தி நான் இருப்பேன் ஆனால், என் துறந்து இரவலர் வாரா வைகல் பல ஆகுக – என்னை நீங்கி இரப்போர் வராத நாட்கள் பல ஆகுக, யான் செலவு உறு தகவே – நான் அவ்வாறு செல்வதற்கு உற்ற தகுதியினால் (தகவே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 138, கொல்லன் அழிசிமருதத் திணை – தோழி சொன்னதுதலைவன் கேட்குமாறு 
கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே,
எம் இல் அயலது, ஏழில் உம்பர்
மயிலடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே. 5

பாடல் பின்னணி:  முதல் நாள் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து தலைவியைக் காணாத தலைவன், மறுநாள் அருகில் நிற்பதை அறிந்த தோழி உரைத்தது.  இரவுக்குறி நேர்ந்ததூஉமாம்.

பொருளுரை:  பெரிய ஊரில் உள்ளவர்கள் தூங்கி விட்டார்கள்.  ஆனால் நாங்கள் தூங்கவில்லை. எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள உயர்ந்த ஏழில் குன்றத்தின் அருகில் உள்ள, மயிலின் கால்களைப் போன்ற இலைகளையுடைய நொச்சி மரத்தின் பெரிய கொத்துகளாக உள்ள, நீலமணியின் நிறத்தை ஒத்த மலர்கள், மென்மையான கிளைகளில் இருந்து உதிர்வதைக் கேட்டபடியே படுத்திருந்தோம்.

குறிப்பு:  துஞ்சலமே – ஏகாரம் அசை நிலை. கேட்டே – ஏகாரம் அசைநிலை.  கொன் ஊர் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – பெரிய ஊர், அலரால் தலைவியை அஞ்சுவித்தலின் அச்சம் தரும் ஊருமாம்.  ஏழில் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – ஏழிற் குன்றம், ஏழிலைப் பாலை மரமுமாம், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – எழில் என்பதன் நீட்டல்.  மயிலடி அன்ன இலை – நற்றிணை 305 – மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், நற்றிணை 115 – மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி, குறுந்தொகை 138 – மயில் அடி இலைய மா குரல் நொச்சி.  கலித்தொகை 46 – குரல் நொச்சிப் பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக.

சொற்பொருள்:   கொன் ஊர் – பெரிய  ஊர் (உ. வே. சா. – கொன் என்னும் இடைச் சொல் பெருமை என்னும் பொருளில் வந்தது), அலரால் தலைவியை அஞ்சுவித்தலின் அச்சமுமாம், துஞ்சினும் – தூங்கினாலும்,  யாம் துஞ்சலமே – நாங்கள் தூங்கவில்லை,  எம் இல் அயலது – எங்கள் வீட்டிற்கு அருகில்,  ஏழில் உம்பர் – உயர்ந்த ஏழில் மலையில்,  மயிலடி இலைய – மயிலின்  கால்களைப் போன்ற இலைகளை  உடைய,  மா குரல் – கருமையான அல்லது பெரிய குலைகள்,  நொச்சி –  நொச்சி – Chaste Tree Flowers, அணி மிகு – மிகவும் அழகான,  மென் கொம்பு – மெல்லிய கிளைகள்,  ஊழ்த்த – உதிர்த்த,  மணி மருள் – நீலமணியைப் போன்ற,  பூவின் – பூக்கள்,  பாடு நனி கேட்டே – விழுவதை கேட்டவாறு

குறுந்தொகை 139,  ஒக்கூர் மாசாத்தியார்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது 
மனை உறை கோழிக் குறுங்கால் பேடை,
வேலி வெருகு இன மாலை உற்றெனப்
புகுமிடம் அறியாது தொகுபுடன் குழீஇய
பைதல் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு,
இன்னாது இசைக்கும் அம்பலொடு 5
வாரல், வாழியர் ஐய, எம் தெருவே.

பாடல் பின்னணி:  பரத்தையர் இல்லத்திற்குத் சென்று திரும்பும் தலைவனுக்குத் தோழி வாயில் மறுத்தாள்.

பொருளுரை:   நீடு வாழ்வாயாக ஐயா! வீட்டில் வாழும் சிறிய கால்களையுடைய பெண் கோழி மாலை நேரத்தில் காட்டுப் பூனைகளுக்கு அஞ்சி வீட்டு வேலிக்குள் புக நினைக்கும்.  அது புகும் இடம் அறியாது, தன் குஞ்சுகளை ஆரவாரத்துடன் கூவி அழைப்பதைப் போல் மிகுந்த பழிச்சொற்கள் எழும், நீர் இங்கு வந்தால்.  ஆகையால் எங்கள் தெருவுக்கு வராதீர்!

குறிப்பு:  தெருவே – ஏகாரம் அசை நிலை.  உ. வே. சாமிநாதையர் உரை – தன்னால் பாதுகாக்கப்பட்ட தன் துன்புற்ற பிள்ளையை வெருகு கவருமோ என்னும் அச்சத்தினால் கோழிப் பேடை கூவியது போலத் தம்பால் இருந்து வந்த தலைவனைத் தலைவி கவர்ந்து தன்பால் இருத்திக் கொள்வாளோ என்னும் அச்சத்தினால் பரத்தையர் பழிமொழி கூறினர் என்பது.  வெருகினம்  (2) – தலைவன் பாணரும் இளைஞரும் சூழ வருகின்றான் ஆகலின், வெருகினம் என்றாள்.  வாழியர் (6) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – செற்றத்தால் வாழியர் என்றாள்.  பேடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:   மனை உறை கோழி – வீட்டில் வாழும் கோழி, குறுங்கால் பேடை  – குட்டையானக் காலை உடைய பெடை, வேலி – வேலி,  வெருகு இன – காட்டுப் பூனை,  மாலை உற்றென – மாலை நேரம் வந்து விட்டதால், புகுமிடம் அறியாது  – புகுவதற்கான இடத்தை அறியாமல்,   தொகுபுடன் குழீஇய – சேர்ந்து கூடும் பொருட்டு (குழீஇய – அளபெடை), பைதல் பிள்ளைக் கிளை – துன்புற்ற தன் குஞ்சுகளை, பயிர்ந்தாஅங்கு – கூவி அழைத்ததுப் போல் (அளபெடை), இன்னாது இசைக்கும் அம்பலொடு – இனிதாக இல்லாத பழிச்சொற்கள் எழும், வாரல் – வராதீர் (அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), வாழியர் ஐய – வாழ்க ஐயா,  எம் தெருவே – எங்கள் தெருவிற்கு

குறுந்தொகை 140, அள்ளூர் நன்முல்லையார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வேதின வெரிநின் ஓதி முது போத்து
ஆறு செல் மாக்கள் புள் கொளப் பொருந்தும்
சுரனே சென்றனர் காதலர், உரன் அழிந்து
ஈங்கு யான் தாங்கிய எவ்வம்
யாங்கு அறிந்தன்று, இவ்வழுங்கல் ஊரே?  5

பொருளுரை:   ஈர்வாள் (ரம்பம்) போன்ற முதுகையுடைய முதிய ஆண் ஓணான், வழியில் செல்லும் மக்கள் நிமித்தமாகக் கொள்ளும்படி தங்கியிருக்கும் பாலை நிலத்திற்குச் சென்றார் நம் தலைவர்.  வலிமை அழிந்து, இங்கு நான் தாங்கிய வருத்தத்தை எவ்வாறு அறிந்தது இரக்கத்தையுடைய இந்த ஊர்?

குறிப்பு:  இவ்வழுங்கல் ஊரே (5) – தமிழண்ணல் உரை – ஊர் என்றது மறைமுகமாகத் தோழியை, உ. வே. சாமிநாதையர் உரை – ஊரென்றது தோழியை, கற்புக் காலத்திலும் அலர் எழுந்ததென்று கூறுதல் தலைவிக்கு உண்டு (தொல். கற்பு 19), இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ஊர் என்பதற்கு ஊரினர் என்றே பொருள் கொண்டனர் என்று தெரிகின்றது.  ஓதி முது போத்து – முது போத்து ஓதி என மாற்றுக.  புள் கொளப் பொருந்தும் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை.  ஓந்தி ஆறு செல்வோர்க்கு நன்னிமித்தம் கொள்ளுமாறு வழியிற் சென்று பொருந்தும் என்றது, தலைவர் பிரியுங்கால் செலவு அழுங்குவியாது அவர் பிரிதற்கு இயைந்தொழுகினை என உள்ளுறையானே தோழியை இடித்துரைத்தவாறு.

சொற்பொருள்:   வேதின வெரிநின் ஓதி முது போத்து – ஈர்வாள் (ரம்பம்) போன்ற முதுகையுடைய முதிய ஆண் ஓணான் (ஓதி – ஓந்தி, இடைக்குறை), ஆறு செல் மாக்கள் – வழியில் செல்லும் மக்கள், புள் கொளப் பொருந்தும் சுரனே – நிமித்தமாகக் கொள்ளும்படி தங்கியிருக்கும் பாலை நிலம் (சுரனே – ஏகாரம் அசைநிலை), சென்றனர் காதலர் – சென்றார் நம் தலைவர், உரன் அழிந்து – வலிமை அழிந்து, ஈங்கு யான் தாங்கிய எவ்வம் யாங்கு அறிந்தன்று – இங்கு நான் தாங்கிய வருத்தத்தை எவ்வாறு அறிந்தது, இவ்வழுங்கல் ஊரே – இரக்கத்தையுடைய இந்த ஊர் (அழுங்கல் – இரக்கம், ஊரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 141, மதுரைப் பெருங்கொல்லனார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
‘வளைவாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர்
செல்க என்றோளே அன்னை’ என நீ
சொல்லின் எவனோ தோழி, கொல்லை
நெடுங்கை வன்மான் கடும் பகை உழந்த
குறுங்கை இரும்புலிக் கோள் வல் ஏற்றை  5
பைங்ககண் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆர் இரு நடுநாள் வருதி,
சாரல் நாட வாரலோ, எனவே?

பாடல் பின்னணி:  இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்த தலைவனுக்கு ஏதம் வரும் என்று அஞ்சிப் பகலின்கண் தினைப்புனத்திற்கு வருமாறு குறிப்பாலே அவன் கேட்குமாறுத் தோழிக்குச் சொல்லியது.

பொருளுரை:   தோழி! நீ மலைநாடனிடம் , “நீண்ட தும்பிக்கையை உடைய வலிய யானையின் கடிய பகையினால் வருந்திய குறுகிய கைகளையுடைய கொல்லுதல் வல்ல பெரிய ஆண் புலியானது, பசிய கண்களையுடைய செந்நாய் தன்னிடம் அகப்படுவதற்கு உரிய வேளையைப் பார்க்கும், வருதற்கு அரிய இருளுடைய நடு இரவில் நீ வருகின்றாய். இவ்வாறு நீ வராதே” என்றும், “வளைந்த அலகையுடைய சிறிய கிளிகளைத் தினையை உண்ணாதவாறு விரட்டுவதற்குச் செல்வீராக என்றாள் அன்னை” என்றும் கூறினால் என்ன ஆகும்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இது தினையிற் கிளி கடிதற்குப் பொருட்டு யாங்கள் வருவேமாகலின் ஏதமற்ற பகற்குறியிடத்தும் நாம் காணலாம்.  ஆதலிற் பகலில் வருக என்பதை உணர்த்துக என்றவாறு.

சொற்பொருள்:   வளைவாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர் செல்க என்றோளே அன்னை – வளைந்த அலகையுடைய சிறிய கிளிகளைத் தினையை உண்ணாதவாறு அவற்றை விரட்டுவதற்குச் செல்வீராக என்றாள் அன்னை (வளைவாய் – வினைத்தொகை, கடீஇயர் – அளபெடை, என்றோளே – ஏகாரம் அசைநிலை), என நீ சொல்லின் எவனோ – என்று நீ கூறினால் என்ன ஆகும் (எவனோ – ஓகாரம் அசைநிலை), தோழி – தோழி, கொல்லை நெடுங்கை வன்மான் – நீண்ட தும்பிக்கையை உடைய வலிய யானை,கடும் பகை உழந்த – கடிய பகையினால் வருந்திய, குறுங்கை இரும்புலி – குறுகிய கைகளையுடைய பெரிய புலி, கோள் வல் ஏற்றை – கொல்லுதல் வல்ல ஆண், பைங்ககண் செந்நாய் – பசிய கண்களையுடைய செந்நாய், படுபதம் பார்க்கும் – அகப்படும் வேளையைப் பார்க்கும்,  ஆர் இரு நடுநாள் வருதி  – வருதற்கு அரிய இருளுடைய நடு இரவில் வருகின்றாய், சாரல் நாட வாரலோ –  இவ்வாறு நீ வராதே மலைநாடனே (வாரலோ – ஓகாரம் அசைநிலை), எனவே – என்று (எனவே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 142, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவன் தனக்குள் சொன்னது அல்லது தோழியிடம் சொன்னது
சுனைப் பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக் கிளி கடியும் பூங்கண் பேதை
தான் அறிந்தனளோ இலளோ, பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து என்
உள்ளம் பின்னும் தன் உழையதுவே.  5

குறுந்தொகை 142, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவன் தனக்குள் சொன்னது அல்லது தோழியிடம் சொன்னது
சுனைப் பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக் கிளி கடியும் பூங்கண் பேதை
தான் அறிந்தனளோ இலளோ, பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து என்
உள்ளம் பின்னும் தன் உழையதுவே.  5

பாடல் பின்னணி:  இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைவன் சொன்னது.  தோழிக்குத் தலைவன் தன் குறை கூறியதுமாம்.

பொருளுரை:   நடு இரவில் உறங்கும் யானையைப் போல் பெருமூச்சு விட்டு, என் நெஞ்சம் அவளைப் பிரிந்து வந்த பின்னும் அவளிடம் இருக்கின்றது.  சுனையில் மலர்ந்த மலர்களைப் பறித்து மாலையாகக் கட்டி தினைப் புனத்தில் தினையை உண்ண வரும் கிளிகளை விரட்டுகின்ற பேதையாகிய தலைவி இதனை அறிந்தாளோ இல்லையோ?

குறிப்பு:  கிளி கடி:  அகநானூறு 118 – குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள், அகநானூறு 194 – கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும், குறுந்தொகை 142 – புனக் கிளி கடியும் பூங்கண் பேதை, குறுந்தொகை 198 – படுகிளி கடிகம் சேறும், குறுந்தொகை 217 – தினை கிளி கடிக எனின், குறுந்தொகை 291 – ஏனல் படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே இசையின் இசையா இன்பாணித்தே, குறுந்தொகை 360 –  ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே, பதிற்றுப்பத்து 78 – மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலிக் கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல.

சொற்பொருள்:   சுனைப் பூக் குற்றுத் தொடலை தைஇப் புனக் கிளி கடியும் பூங்கண் பேதை – சுனையில் மலர்ந்த மலர்களைப் பறித்து மாலையாகக் கட்டி தினைப் புனத்தில் தினையை உண்ண வரும் கிளிகளை விரட்டுகின்ற பேதையாகிய தலைவி, தான் அறிந்தனளோ இலளோ – இதனை அறிந்தாளோ இல்லையோ (அறிந்தனளோ இலளோ – ஓகாரங்கள் ஐயப்பொருள்), பால் நாள் பள்ளி யானையின் உயிர்த்து – நடு இரவில் உறங்கும் யானையைப் போல் பெருமூச்சு விட்டு, என் உள்ளம் பின்னும் தன் உழையதுவே – என் நெஞ்சம் அவளைப் பிரிந்து வந்த பின்னும் அவளிடம் இருக்கின்றது (உழையதுவே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 143, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அழியல் ஆயிழை, அழிபு பெரிது உடையன்,
பழியும் அஞ்சும் பய மலை நாடன்,
நில்லாமையே நிலையிற்று, ஆகலின்
நல் இசை வேட்ட நயன் உடை நெஞ்சின்
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத்  5
தங்குதற்கு உரியது அன்று, நின்
அம் கலுழ் மேனிப் பாய பசப்பே.

பாடல் பின்னணி:  தலைவன் வரைபொருட்காகப் பிரிந்தவிடத்து வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.

பொருளுரை:   ஆராய்ந்த அணிகலங்களை அணிந்தவளே!  பயனை உடைய மலைநாட்டின் தலைவன் மிகுந்த இரக்கம் உடையவன்.  மிகுந்த இரக்கம் உடையவன்.  பழியையும் அஞ்சுவான்.  நில்லாது அழியும் தன்மையே உலகில் நிலைபெற்றது. ஆதலால் நல்ல புகழை விரும்பிய நீதி உடைய நெஞ்சை உடைய கைம்மாறு கருதாது உதவி செய்பவனுடைய பொருள் போல் தங்குவதற்கு உரியது இல்லை, உன் அழகு ஒழுகும் மேனியில் பரவிய பசலை.

குறிப்பு:  இரா. இராகவையங்கார் உரை – ஒப்புரவாளன் பொருள் போலப் பரந்து வெளிப்பட்ட பசப்பு, அப்பொருள்  போலத் தங்குவதற்குரியதன்று என்றவாறு.  அழிபு பெரிது உடையன் (1) – உ. வே. சாமிநாதையர் – நம்மைப் போல இரங்குதலை மிக உடையவன்.

சொற்பொருள்:   அழியல் ஆய் இழை – நீ வருந்தாதே ஆராய்ந்த அணிகலங்களை அணிந்தவளே, நீ வருந்தாதே அழகிய அணிகலங்களை அணிந்தவளே (ஆய் இழை – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), அழிபு பெரிது உடையன் – மிகுந்த இரக்கம் உடையவன், பழியும் அஞ்சும் பய மலை நாடன் – பழியையும் அஞ்சுவான் பயனை உடைய மலைநாட்டின் தலைவன், நில்லாமையே நிலையிற்று – நில்லாது அழியும் தன்மையே உலகில் நிலைபெற்றது, ஆகலின் – ஆதலால், நல் இசை வேட்ட – நல்ல புகழை விரும்பிய, நயன் உடை நெஞ்சின் – நீதி உடைய நெஞ்சை உடைய, கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத் தங்குதற்கு உரியது அன்று – கைம்மாறு கருதாது உதவி செய்பவனுடைய பொருள் போல் தங்குவதற்கு உரியது இல்லை, நின் அம் கலுழ் மேனிப் பாய பசப்பே – உன் அழகு ஒழுகும் மேனியில் பரவிய பசலை (கலுழ் – வழிகின்ற, ஒழுகுகின்ற), பசப்பே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 144, மதுரை ஆசிரியர் கோடன் கொற்றனார்,  பாலைத் திணை – செவிலித்தாய் சொன்னது 
கழிய காவி குற்றும் கடல
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர,
இவ்வழிப் படுதலும் ஒல்லாள், அவ்வழிப்
பரல் பாழ் படுப்பச் சென்றனள் மாதோ, 5
செல் மழை தவழும் சென்னி
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.

பாடல் பின்னணி:  மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.

பொருளுரை:   உப்பு நீருடைய குளத்தில் செங்குவளை மலர்களைப் பறித்தும், வெள்ளை மேல் பகுதியையுடைய கடல் அலைகளில் விளையாடியும், பிரியாது ஒன்றாகவே இருந்த தன் தோழியருடன் அவரவர்க்குப் பிடித்தமான விளையாட்டுகளையும் விளையாடும் என் மகள், இவ்விடத்தில் பொருந்துதற்கும் உடன்படாளாகி, இப்பொழுது முகில்கள் விரைவாகச் சென்று மலை உச்சியில் தங்கும், வானத்து அளவு உயர்ந்து விளங்கும் குறுக்கு மலைகள் உடைய நாட்டிற்கு, தன் கால்கள் பாதையில் உள்ள பருக்கைக் கற்களால் பாழாகும்படி, தலைவனுடன் சென்று விட்டாள்.

குறிப்பு:  மாதோ – மாது, ஓ – அசை நிலைகள், நன்றே – ஏகாரம் அசை நிலை, நாட்டே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   கழிய – உப்பு நீருடையக் குளத்தில், காவி – சிவப்பான மலர்கள் (செங்குவளை), குற்றும் – பறித்தும், கடல – கடலில் உள்ள, வெண்டலைப் – வெள்ளைத் தலைகளையுடைய, புணரி ஆடியும் – அலைகளில் ஆடியும், நன்றே – மிக, பிரிவு இல் ஆயம் – பிரிவு இல்லாத தோழியருடன், உரியது ஒன்று அயர – எல்லோருக்கும் உரிய விளையாட்டையும் புரிய, இவ்வழிப் படுதலும் ஒல்லாள் – இந்த வழிக்கு ஒத்து இருக்காமல், அவ்வழி – அந்த வழியில், பரல்பாழ் படுப்பச் சென்றனள் – பருக்கைக் கற்கள் தன் கால்களை பாழாக்கும்படி சென்று விட்டாள், மாது – அசை நிலை, ஓ – அசை நிலை,  செல்மழை – செல்லும் முகில்கள், தவழும் சென்னி – தவழும் மலை உச்சி, விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே   – வானத்து அளவும் உயர்ந்த விளக்கத்தை உடைய குறுக்கிடும் மலைகள் உள்ள நாட்டிற்கு (சென்று விட்டாள் என் மகள்).

குறுந்தொகை 145, கொல்லன் அழிசியார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உறை பதியன்றித் துறை கெழு சிறுகுடி
கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி,
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள்
துஞ்சாது, உறைநரொடு உசாவாத்
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே.  5

பாடல் பின்னணி:  தலைவன் வரைபொருட்குப் பிரிந்து நீட்டிப்ப, அதனால் வருந்திய தலைவி தனது ஆற்றாமையைப் புலப்படுத்தியது.

பொருளுரை:   கடற்கரைச் சோலையுடைய தலைவனின் கொடுமையை எண்ணி நீங்காத துன்பத்துடன் வருந்தி நடு இரவில் உறங்காது தங்குவாரை ‘ஏன்’ என்று வினவாத துயில்தல் பொருந்திய கண்களுடைய மக்களுடன் நெடிய இரவை உடையது இந்த ஊர். நாம் தங்குவதற்கு ஏற்றது இல்லை இந்தச் சிற்றூர்.

குறிப்பு:  சௌரிப் பெருமாளரங்கன் உரை – பிரிந்தார்க்கு இரவு நீண்டதாய்த் தோன்றுமாதலின் நெட்டிரா என்றாள்.  நெட்டிரா – அதில் உருபும் உம்மையும் தொக்கன.

சொற்பொருள்:   உறை பதி அன்றி – நாம் தங்குவதற்கு ஏற்றது இல்லை இந்த ஊர், துறை கெழு சிறுகுடி – கடற்கரை பொருந்திய இந்த சிற்றூர், கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி – கடற்கரைச் சோலையுடைய தலைவனின் கொடுமையை எண்ணி, ஆனாத் துயரமொடு வருந்தி – நீங்காத துன்பத்துடன் வருந்தி, பானாள் துஞ்சாது உறைநரொடு – நடு இரவில் உறங்காது தங்குவாரை (பானாள் – பால் + நாள், பாதி நாள், நடு இரவு), உசாவா – வினவாத, துயிற்கண் மாக்களொடு – துயில்தல் பொருந்திய கண்களுடைய மக்களுடன், நெடு இரா உடைத்தே – நெடிய இரவை உடையது இரா – இரவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது, உடைத்தே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 146, வெள்ளிவீதியார்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ,
தண்டுடைக் கையர், வெண்தலைச் சிதவலர்,
‘நன்று நன்று’ என்னும் மாக்களோடு,
‘இன்று பெரிது’ என்னும் ஆங்கணது அவையே.  5

பாடல் பின்னணி:  வரைவிற்கு பெரியவர்கள் உடன்பட்டதைத் தோழி கூறியது.

பொருளுரை:   தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதை நீ கேட்பாயாக!  நம் ஊரில் பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்பவர்கள் இருந்தனர்.  அங்கு உள்ள அவையிடத்தில் ஊன்றுகோலைக் கையில் வைத்திருக்கும் நரையுடைய தலையில் தலைப்பாகை அணிந்தவர்களுடன் ‘நன்று நன்று’ எனக் கூறுபவர்களுடன் (தலைவனின் குடும்பத்தாருடன்), ‘இந்நாள் நீங்கள் வந்ததால் பெருமையுடையது’ என்றும் கூறுவார்.

குறிப்பு:  தண்டுடைக் கையர் வெண்தலைச் சிதவலர் (3) – இரா. இராகவையங்கார் உரை – களவில் புணர்ந்து பிரிந்தோரைக் கரணத்திற் புணர்ப்போர் நம்மூரில் இருந்தனரே என்றவாறு.  தண்டுடைக் கையரும் வெண்தலைச் சிதவலருமாய் நன்று நன்று என்னும் மாக்களோடு ஆங்கணதவை இன்று பெரிது என்னும் ஆதலான் பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ என்றனள் என்க,  உ. வே. சாமிநாதையர் உரை – தோழி, கேட்பாயாக.  அவ்விடத்தில் உள்ளதாகிய நம்மைச் சார்ந்த குழுவிலுள்ளார், தண்டைப் பிடித்த கையினரும், நரையையுடைய தலைக்கண் துகிலையுடையவருமாகிய நன்று நன்று என்று கூறும் தலைவன் தமரோடு, இந்நாள் நீங்கள் வரப் பெற்றமையால் பெருமையுடையதென்று முகமன் கூறுவார்.  ஆதலின், நமது ஊரின்கண் பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போர் இருந்தனர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோழி!  நீ வாழ்க!  யான் கூறுவதனைக் கேட்பாயாக.  ஆங்கணது தண்டினைப் பிடித்த கையுடையாரும் வெள்ளிய நரையினையுடைய தலையின்கண் துகிலை உடையாருமாகிய நந்தமர் மொழிக்கெல்லாம் நன்று நன்று என்று கூறி மகிழும் தலைவன் தமரோடு, இந்நாள் நும் வருகையால் பெருமையுடையதாம் என்று முகமன் கூறாநிற்கும்.  ஆதலால் நம்மூரின்கண்ணும் பிரிந்தோரைச் சேர்த்து வைக்கும் சான்றோர் உளர் என்று அறிகின்றேன்.  அம்ம  அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:   அம்ம – கேட்பாயாக, வாழி – நீ நீடு வாழ்வாயாக, அசையுமாம், தோழி – தோழி, நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் – நம் ஊரில் பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்பவர்கள் இருந்தனர், கொல்லோ – கொல், ஓ அசைநிலைகள், தண்டுடைக் கையர் – ஊன்றுகோலைக் கையில் வைத்திருப்பவர்கள், வெண்தலைச் சிதவலர் – நரையுடைய தலையில் தலைப்பாகை அணிந்தவர்கள்,நன்று நன்று என்னும் மாக்களோடு – நன்று நன்று எனக் கூறுபவர்களுடன், இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே – இந்நாள் பெருமையுடையது என்றும் கூறுவார் அங்கு அவையிடத்தில் (அவையே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 147, கோப்பெருஞ்சோழன்பாலைத் திணை – தலைவன் தன் கனவிடம்  சொன்னது
வேனில் பாதிரிக் கூன் மலர் அன்ன,
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை,
நுண் பூண் மடந்தையைத் தந்தோய் போல,
இன் துயில் எடுப்புதி கனவே,
எள்ளார் அம்ம துணைப் பிரிந்தோரே.  5

பாடல் பின்னணி:  தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற இடத்துத் துயிலும்பொழுது அவளைக் கனவில் கண்டு பிரிவாற்றாமல் சொல்லியது.

பொருளுரை:   கனவே!  வேனில் காலத்தில் மலரும் பாதிரி மலரின் வளைந்த மலரின் துய்யை ஒத்த தலைமயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாமை நிறத்தையும், நுண்ணிய வேலைப்பாடு அமைந்த அணிகலனையும் அணிந்த தலைவியை நீ தந்ததைப்  போல காட்டி இனிய உறக்கத்திலிருந்து எழுப்புகின்றாய்.   உன்னை இகழவில்லை தம் துணையைப் பிரிந்தவர்கள்.

குறிப்பு:  நற்றிணை 118-8 – துகிலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி.

சொற்பொருள்:   வேனில் பாதிரிக் கூன் மலர் அன்ன – வேனில் காலத்தில் மலரும் பாதிரி மலரின் வளைந்த மலரினை ஒத்த, மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை – தலைமயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாமை நிறம் (கலுழ் – வழிகின்ற, ஒழுகுகின்ற), நுண் பூண் மடந்தையைத் தந்தோய் – நுண்ணிய வேலைப்பாடு அமைந்த அணிகலனை அணிந்த தலைவியை நீ தந்தாய், போல – அதைப் போல,  இன் துயில் எடுப்புதி கனவே – இனிய உறக்கத்திலிருந்து எழுப்புகின்றாய் கனவே (கனவே – விளி), எள்ளார் அம்ம துணைப் பிரிந்தோரே – உன்னை இகழவில்லை தம் துணையைப் பிரிந்தவர்கள் (பிரிந்தோரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 148, இளங்கீரந்தையார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்
காசினன்ன போது ஈன் கொன்றை
குருந்தோடு அலம்வரும் பெருந்தண் காலையும்
கார் அன்று என்றி ஆயின் 5
கனவோ மற்றிது வினவுவல் யானே.

பாடல் பின்னணி:  பருவங்கண்டு வருந்திய தலைவியிடம் ‘இது பருவம் அன்று’ எனத் தோழி கூற, ‘இது கார்ப்பருவம் தான்’ எனத் தலைவி கூறியது.

பொருளுரை:  பணக்காரக் குழந்தைகளின் சிறியக் கால்களில், தவளை வாயைப் போன்ற வாயை உடைய, ஒலிக்கும் மணிகளுடன் அணியப்பட்ட கொலுசுகளில் உள்ள பொன்னால் செய்த காசுகளைப் போன்ற மலர் அரும்புகளையுடைய கொன்றை  மரங்கள் குருந்த மரங்களுடன் சுழலும் காற்றில் அசைகின்றன.  இது கார்காலம் இல்லை என்று நீ  கூறுவாய் ஆயின், நீ கனவு காண்கின்றாயா என்று நான் கேட்பேன்.

குறிப்பு:  மற்றிது – மற்று – அசைநிலை, யானே – ஏகாரம் அசை நிலை.  கனவோ – ஓகாரம் வினா, கலித்தொகை 86 – தேரைவாய்க் கிண்கிணி.

சொற்பொருள்:   செல்வச் சிறாஅர் – பணக்காரச் சிறுவர்கள், சிறு அடி பொலிந்த – சிறிய கால்களில் விளங்கிய,  தவளை வாய – தவளை வாயைப் போன்ற வாயை உடைய, பொலஞ்செய் கிண்கிணி – பொன்னால் செய்த கொலுசு,  காசினன்ன – காசைப் போன்ற, போது ஈன் கொன்றை – மலர் மொட்டை ஈன்ற கொன்றை,  சரக்கொன்றை,  Laburnum, Golden Shower Tree, Cassia sophera,  குருந்தோடு அலம் வரும் – குருந்த மரத்தோடு (Indian Atalantia, citrus variety) சுழலும், பெருந்தண் காலையும் – மிகுந்த குளிர்ச்சியுடைய பருவத்தையும்,  கார் அன்று என்றி ஆயின் – கார் காலம் இல்லை என்று நீ சொல்வது ஆனால், இது – இது,  கனவோ மற்றிது – மற்று இது கனவோ, வினவுவல் யானே – நான் கேட்பேன்

குறுந்தொகை 149, வெள்ளிவீதியார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அளிதோ தானே நாணே, நம்மொடு
நனி நீடு உழந்தன்று மன்னே, இனியே
வான் பூங்கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை
தீம் புனல் நெரிதர வீய்ந்துக் உக்காஅங்கு,
தாங்கும் அளவைத் தாங்கிக்  5
காம நெரிதரக் கை நில்லாதே.

பாடல் பின்னணி:  உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.

பொருளுரை:  நாணம் நம்மோடு மிகவும் நீண்ட காலம் இருந்து வருந்தியது.  இனி, அது வெள்ளை மலர்களையுடைய கரும்பினையுடைய  உயர்ந்த மணலையுடைய சிறிய கரை இனிய நீர் நெருங்கி அடித்ததால் அழிந்து வீழ்ந்தாற்போல் தாங்கும் அளவு தாங்கி காதல் மேன்மேலும் நெருக்க, என்பால் நிற்காது.  அது இரங்கற்குரியது.

குறிப்பு:  அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த நிச்சமும் பெண்பாற் குரிய என்ப (தொல்காப்பியம், களவியல் 8).  கை (6) – இரா. இராகவையங்கார் உரை – கை = ஒழுக்கம்.  தன் பெண்மை ஒழுக்கம் வளரக் காத்து நின்றதனால் நாணைச் சிறையாக உவமித்தாள்.  கை நில்லாது  (6) – உ. வே. சாமிநாதையர் உரை – என்பால் நில்லாது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஏனைப் பெண்மை நலன் எல்லாவற்றிற்கும் நாணம் ஆக்கமாய் நின்று அவற்றை நிலைபெறுத்தலின் ‘கரும்பு நின்ற மணற் சிறு சிறை’ என்றாள்.  குறுந்தொகை 149, 395 -அளிதோ தானே நாணே, குறுந்தொகை 212 – அளிதோ தானே காமம்.   நீடு உழந்தன்று  (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இயற்கைப் புணர்ச்சிப் நிகழ்ந்த நாள் தொடங்கி இற்றை நாள் வரை நாணம் தன்னோடு பெரிதும் உழந்தமைக் கருதிக் கூறியதென்க.  கற்பைக்காக்கும் பொருட்டு நாணம் விடப்பட வேண்டும்.  நாண் காவல் கொண்டு கற்பும் காக்கப்படின் நன்று.  காமநோய் முடுக்கலால் இப்பொழுது கற்புக் கடன் பூணற்கு நாண் துறந்து,உடன் போக்கு இசைகின்றேன் என்பாள் ‘காம நெரிதரக் கை நில்லாதே’ என்றாள்.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:   அளிதோ – இரங்கற்குரியது, ஓகாரம் அசைநிலை, தானே –  தான், ஏ அசைநிலைகள், நாணே – (நாணம் – ஏகாரம் அசைநிலை), நம்மொடு நனி நீடு உழந்தன்று – நம்மோடு மிகவும் நீண்ட காலம் இருந்து வருந்தியது (நனி நீடு – ஒரு பொருட் பன்மொழி), மன்னே – மன் கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், ஏ அசைநிலை, இனியே – இனி, ஏகாரம் அசைநிலை, வான் பூங்கரும்பின் – வெள்ளை மலர்களையுடைய கரும்பினையுடைய, ஓங்கு மணல் சிறு சிறை தீம் புனல் நெரிதர வீய்ந்துக் உக்காஅங்கு – உயர்ந்த மணலையுடைய சிறிய கரை இனிய நீர் நெருங்கி அடித்ததால் அழிந்து வீழ்ந்தாற்போல், தாங்கும் அளவைத் தாங்கிக் காம நெரிதர – தாங்கும் அளவு தாங்கி காதல் மேன்மேலும் நெருக்க, கை நில்லாதே.- என்பால் நிற்காது

குறுந்தொகை 150, மாடலூர் கிழார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி
வான்மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின், உண்ணோய் மல்கும்,
புல்லின் மாய்வது எவன் கொல் அன்னாய்? 5

பாடல் பின்னணி:  இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைவி தன் உடன்பாட்டைத் தெரிவித்தது.

பொருளுரை:  தோழி!  தொலைவில் பரண் மீது இருக்கும் மலைக்குறவன் கொளுத்திய நறுமணப் புகை உடைய கொள்ளி, வானத்தில் உள்ள விண்மீன்களைப் போல் இடந்தோறும் ஒளி வீசும் உயர்ந்த மலையுடைய நாடன் அவன்.  அவனை நினைத்தால் என்னுள் இருக்கும் காம நோய் அதிகமாகும்.  அவனைத் தழுவினால் அது அழியும். என்ன வியப்பு இது!

குறிப்பு:  கொல் – அசை நிலை.  சேணோன் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – வேங்கை மரத்தின் மீது கட்டப்பட்ட பரணிலும் யானைகளாலும் எட்ட முடியாத குன்றின் மீது கட்டப்பட்ட பரணிலும் இருப்பவன் ஆதலின் இவன் சேணோன் எனப்பட்டான்.  அன்னாய் (5) – உ. வே. சாமிநாதையர் உரை (குறுந்தொகை 34 உரையில்) – தோழியைத் தலைவி அன்னாய் என்றல் மரபு.

சொற்பொருள்:  சேணோன் – தொலைவில் பரண் மீது இருப்பவன் (மலைக் குறவன், தினைப் புனத்தைக் காவல் காப்பவன்),  மாட்டிய – கொளுத்திய,  நறும் புகை – நறுமணம் உடைய புகை,  ஞெகிழி – தீப்பந்தம், வான் மீனின் –  வான் மீன் போன்று (மீனின்- இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது),  வயின்வயின் இமைக்கும் – இங்கும் அங்கும் ஒளிக்கும், ஓங்குமலை – உயர்ந்த மலை,  நாடன் – நாடன்,  சாந்து புலர் அகலம் – சந்தனத்தைப் பூசிய மார்பு,  உள்ளின் – நினைத்தால்,  உள் நோய் – உள் இருக்கும் காம நோய்,  மல்கும் – அதிகமாகும், புல்லின் – (அவனை) தழுவினால்,  மாய்வது – அழியும் (அந்த நோய்),  எவன் கொல் அன்னாய் – என்ன வியப்பு இது தோழி

குறுந்தொகை 151, தூங்கலோரியார்பாலைத்  திணை – தலைவன் சொன்னது 
வங்காக் கடந்த செங்காற் பேடை
எழால் உற வீழ்ந்தெனக், கணவன் காணாது,
குழலிசைக் குரல குறும்பல அகவும்
குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது,
மறுப்பு அரும் காதலி ஒழிய, 5
இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே.

பாடல் பின்னணி:  பொருள் தேடிவரும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்த தன் நெஞ்சிடம் தலைவன் சொல்லியது.

பொருளுரை:   ஆண் வங்காப் பறவை உடன் இல்லாத வேளையில், அதனுடைய சிவந்த கால்களையுடைய பெண் பறவையின் மீது எழால் பறவை விழுந்து தாக்கியது. அந்தப் பெண் பறவை அச்சம் கொண்டுச் சிறிய பல கூவல்களை விடுத்தது.  அது குழலின் இசையைப் போன்று இருந்தது.  என் காதலியை விட்டுப் பிரிந்து மலைப் பாதையில் செல்வது கடினமான காரியம்.  அவ்வாறு செல்வதை விடச் சாவது தான் என் இளமைக்கு ஏற்ற முடிவாகும்.

குறிப்பு:  முடிவே – ஏகாரம் தேற்றம், அசை நிலை.  பேடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:   வங்காக் கடந்த – (ஆண்)  வங்கா சென்றப் பின், செங்காற் பேடை – அதனுடைய சிவந்தக் கால்களையுடைய பெண் பறவை,  எழால் – எழால் பறவை,  உற வீழ்ந்தென – மேல் விழுந்தது,  கணவன் காணாது – தன் கணவனைக் காணாததால்,  குழலிசைக் குரல – குழலின் இசையைப் போன்ற குரலில்,  குறும் பல அகவும் – குறுகிய சில கூவலைக் கூவ,  குன்றுகெழு – மலையில்,  சிறு நெறி – சிறிய பாதை,  அரிய என்னாது – கடினம் என்று நினைக்காமல், மறுப்பு அரும் காதலி – விடுவதற்கு முடியாத காதலி,  ஒழிய – விட்டு விலக, இறப்பல் என்பது – சாவு என்பது,  ஈண்டு இங்கு,  இளமைக்கு முடிவே – எனது இளமைக்கு முடிவாகும்

குறுந்தொகை 152, கிளிமங்கலங்கிழார்குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
யாவதும் அறிகிலர் கழறுவோரே,
தாய் இல் முட்டை போல உள் கிடந்து
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தோ,
யாமைப் பார்ப்பின் அன்ன,
காமம் காதலர் கையற விடினே? 5

பாடல் பின்னணி:  வரைவு நீட்டித்தவழி, ஆற்றாளாகிய தலைவி, ‘நீ ஆற்றுகின்றலை’ எனக் கூறிய தோழிக்கு உரைத்தது.

பொருளுரை:   தாய் முகத்தைப் பார்த்து வளரும் தன்மையுடையது ஆமையின் குட்டி. தலைவரைப் பலகாலும் கண்டால் வளரும் தன்மையுடையது காதல். அவர் நான் செயலறும்படி என்னைக் கைவிட்டால், தாயில்லாத முட்டை கிடந்து அழிவது போல், உள்ளத்தின் உள்ளே இருந்து அழிவதைத் தவிர, வேறு என்னவாகும்?  என்னை இடித்து உரைப்பவர்கள் இதனைச் சிறிதேனும் அறியாதவர்கள்.

குறிப்பு:  கழறுவோரே: ஏகாரம் அசை நிலை, உடைத்தோ – ஓகாரம் அசை நிலை, விடினே – ஏகாரம் அசை நிலை, பார்ப்பின் – இன் வேண்டாவழிச் சாரியை.  ஐங்குறுநூறு 44 – தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்புத் தாய் முகம் நோக்கி வளர்ந்திசினாஅங்கு அதுவே ஐய நின் மார்பே.

சொற்பொருள்:  யாவதும் அறிகிலர் – சிறிதேனும் அறியாதவர்கள், கழறுவோரே – என்னை இடித்துரைப்பவர்கள், தாய் இல் முட்டை போல – தாய் இல்லாத முட்டையைப் போல், உள் கிடந்து – உள்ளே கிடந்து, சாயின் அல்லது – அழிவதைத் தவிர, பிறிது எவன் உடைத்தோ – வேறு என்ன உள்ளது, யாமைப் பார்ப்பின் அன்ன – ஆமையின் குட்டியைப் போன்றது, காமம் – காதல், காதலர் கையற விடினே – அவர் என்னை செயலறும்படி கைவிட்டால்

குறுந்தொகை 153, கபிலர்குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
குன்றக் கூகை குழறினும், முன்றில்
பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும்,
அஞ்சுமன், அளித்த என் நெஞ்சம், இனியே
ஆர் இருள் கங்குல் அவர் வயின்
சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே. 5

பாடல் பின்னணி:   தலைவன் இரவில் வருவதால் நான் அஞ்சுகிறேன்.  களவு ஒழுக்கத்தை மாற்றி வரைவு கடாவுக எனக் கூறியது.

பொருளுரை:  முன்பு, குன்றத்தில் உள்ள பேராந்தை ஒலித்தாலும், முற்றத்தில் உள்ள பலா மரத்தின் பெரிய கிளையில் ஆண் குரங்கு தாவி துள்ளினாலும், அச்சத்தை அடைந்த என் நெஞ்சம், இப்பொழுது அவரிடம் செல்வதற்கு அடர்ந்த இருளை உடைய இரவில் மலைச் சரிவில் உள்ள நீண்ட வழியில் செல்லுதலை தவிர்க்காது. அது இரங்குதற்கு உரியது.

குறிப்பு:  இனியே – ஏகாரம் அசை நிலை, ஆனாதே – ஏகாரம் அசை நிலை.  கூகை குழறினால் மகளிர் அஞ்சுதல் – அகநானூறு 158 – வெருவர மன்ற மராஅத்த கூகை குழறினும் நெஞ்சு அழிந்து அரணம் சேரும், நற்றிணை 218 – பராரை வேம்பின் படுசினை இருந்த குராஅல் கூகையும் இராஅ இசைக்கும் ஆனா நோய் அட வருந்தி, குறுந்தொகை 153 – குன்றக் கூகை குழறினும் முன்றில் பலவின் இருஞ்சினைக் கலை பாய்ந்து உகளினும் அஞ்சுமன் அளித்த என் நெஞ்சம்.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  குன்றக் கூகை குழறினும் – குன்றத்தில் உள்ள பேராந்தை ஒலித்தாலும், முன்றில் –  முற்றத்தில், பலவின் இருஞ் சினை – பலா மரத்தின் பெரிய கிளையில்,  கலை பாய்ந்து உகளினும் – ஆண் குரங்கு தாவி துள்ளினாலும், அஞ்சுமன் – அஞ்சும் (மன் – கழிவுக் குறிப்பு), அளித்த – இரங்குதற்கு உரிய, என் நெஞ்சம் – நெஞ்சம், இனியே – இப்பொழுது, ஆர் இருள் – அடர்ந்த இருள், கங்குல் – இரவு, அவர் வயின் – அவரிடத்து, சாரல் நீள் இடை – மலைச் சரிவில் உள்ள நீண்ட வழியில்,  செலவு ஆனாதே  – செல்லுதலை தவிர்க்காது

குறுந்தொகை 154, மதுரைச் சீத்தலைச் சாத்தனார் – பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
யாங்கு அறிந்தனர் கொல் தோழி, பாம்பின்
உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து,
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளிப்
பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை
பொரி கால் கள்ளி விரி காய் அம் கவட்டுத்  5
தயங்க இருந்து புலம்பக் கூஉம்,
அருஞ்சுர வைப்பின் கானம்
பிரிந்து, சேண் உறைதல் வல்லுவோரே?

பாடல் பின்னணி:   பொருள்வயின் பிரிந்த தலைவனை நினைந்து தலைவி தோழிக்கு உரைத்தது.

பொருளுரை:  பாம்பு உரித்த தோல் (பாம்பின் சட்டை) மேல் எழுந்தாற்போல் வெப்பம் விளங்குகின்ற வேளையில், இரையை விரும்பி எழுந்துச் சென்ற ஆண் பறவையை எண்ணி, பொறிகளைக் கழுத்தில் உடைய சிறிய அடியிடும் நடையை உடைய பெண் புறா பொரித்த அடியையுடைய கள்ளியின் வெடித்த காயை உடைய அழகிய கிளையில் விளங்கும்படி இருந்து தனிமையில் கூவும் கடத்தற்கு அரிதாக உள்ள இடமாகிய பாலை நிலத்தைக் கடந்து தொலைவில் தங்குதலில் வல்ல நம் தலைவர், எவ்வாறு தெரிந்து கொண்டார்?

குறிப்பு:  தமிழண்ணல் உரை – பாலை நிலக்காட்டில் பெண்புறா பிரிந்த ஆண் புறாவை நினைத்து கூவுவதை அவ்வழியாகச் செல்லும் தலைவர் காண்பாராதலின் அவருக்கு நம் நினைவு வரும்.  அவரும் நம்மைப் போல் வருந்துவார் எனும் குறிப்பு பொருள் இதில் உளது.  இது இறைச்சி ஆகும்.  பேடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  யாங்கு அறிந்தனர் – எவ்வாறு தெரிந்துக் கொண்டனர், கொல் – அசைநிலை, தோழி – தோழி, பாம்பின் உரி நிமிர்ந்தன்ன – பாம்பு உரித்த தோல் மேல் எழுந்தாற்போல், உருப்பு அவிர் அமையத்து – வெப்பம் விளங்குகின்ற வேளையில், இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி – இரையை விரும்பி எழுந்துச் சென்ற ஆண் பறவையை எண்ணி, பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை – பொறிகளைக் கழுத்தில் உடைய சிறிய அடியிடும் நடையை உடைய பெண் புறா, பொரி கால் கள்ளி விரி காய் அம் கவட்டுத் தயங்க இருந்து புலம்பக் கூஉம் – பொரித்த அடியையுடைய கள்ளியின் வெடித்த காயை உடைய அழகிய கிளையில் விளங்கும்படி இருந்து தனிமையில் கூவும் (கூஉம் – அளபெடை), அருஞ்சுர வைப்பின் கானம் பிரிந்து – கடத்தற்கு அரிதாக உள்ள இடமாகிய பாலை நிலத்தைக் கடந்து, சேண் உறைதல் வல்லுவோரே – தொலைவில் தங்குதலில் வல்லவர் (வல்லுவோரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 155, உரோடகத்துக் கந்தரத்தனார்முல்லைத் திணை – தலைவி தனக்குள் சொன்னது
முதைப்புனம் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப்
பொழுதோ தான் வந்தன்றே, மெழுகு ஆன்று
ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண் மணி
மரம் பயில் இறும்பின் ஆர்ப்பச் சுரன் இழிபு  5
மாலை நனி விருந்து அயர்மார்,
‘தேர் வரும்’ என்னும் உரை வாராதே.

பாடல் பின்னணி:   தலைவி பருவங்கண்டு வருந்தியது.

பொருளுரை:  பழைய கொல்லையில் உள்ள மரங்களை வெட்டி உழுத மிக்க ஆரவாரத்தை உடைய உழவர்கள், விதையை விதைப்பதற்குரிய வட்டிகள், மலர்கள் நிறையும்படி மாலைப் பொழுது வந்தது.  மெழுகினால் அமைத்த கருவின்கண் ஊதுகின்ற கொல்லனின் உலையில் இயற்றிய பிளவுபட்ட வாயினையும் தெளிந்த ஒலியையும் உடைய மணிகள், மரங்கள் நெருங்கி வளர்ந்த காட்டில் ஒலிக்கும்படி, பாலை வழியைக் கடந்து, மாலை வேளையில் மிகவும் விருந்து நுகரும்பொருட்டு வரும் தலைவரின் ‘தேர் வருகின்றது’ எனக் கூறும் ஒலி வரவில்லை.

குறிப்பு:  இரா. இராகவையங்கார் உரை – தொல்காப்பியக் கற்பியல் (6) உரைக்கண் நச்சினார்க்கினியர் இப்பாட்டை எடுத்தோதி ‘இது தலைவி பொழுது கண்டு மகிழ்ந்து கூறியது’ என்பது எழுதினர் பிழைப்பாகும்.  இரா. இராகவையங்கார் உரை – விதையைச் சொரிந்து வட்டி போது (மலர்) நிறைந்து வருதல், தன் காதல் கொண்டு சொல்லிய தூது அவர் காதல் கொண்டு சொல்ல வருதல் குறித்தது.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  முதைப்புனம் கொன்ற ஆர்கலி உழவர் – பழைய கொல்லையில் உள்ள மரங்களை வெட்டி உழுத மிக்க ஆரவாரத்தை உடைய உழவர்கள், விதைக்குறு வட்டி – விதையை விதைப்பதற்குரிய வட்டிகள், போதொடு பொதுள – மலர்கள் நிறையும்படி, பொழுதோ தான் வந்தன்றே – மாலைப் பொழுது வந்தது (பொழுதோ – ஓகாரம் அசைநிலை, தான் – அசைநிலை), மெழுகு ஆன்று ஊது உலைப் பெய்த – மெழுகினால் அமைத்த கருவின்கண் ஊதுகின்ற கொல்லனின் உலையில் இயற்றிய, பகுவாய்த் தெண் மணி – பிளவுபட்ட வாயினையும் தெளிந்த ஒலியையும் உடைய மணி, மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப – மரங்கள் நெருங்கி வளர்ந்த காட்டில் ஒலிக்கும்படி, சுரன் இழிபு – பாலை வழியைக் கடந்து, மாலை நனி விருந்து அயர்மார் – மாலை வேளையில் மிகவும் விருந்து நுகரும்பொருட்டு வரும் தலைவர், தேர் வரும்’ என்னும் உரை வாராதே – தேர் வருகின்றது எனக் கூறும் ஒலி வரவில்லை (வராதே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 156, பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்குறிஞ்சித் திணை – தலைவன் பார்ப்பனத் தோழனிடம் சொன்னது
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம்பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொல் உள்ளும்,  5
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ? மயலோ இதுவே.

பாடல் பின்னணி:   இடித்துரைத்த பார்ப்பனத் தோழனிடம் தலைவன் கூறியது.

பொருளுரை:  பார்ப்பன மகனே பார்ப்பன மகனே – பார்ப்பன மகனே பார்ப்பன மகனே!  சிவந்த நிறமுடைய மலர்கள் கொண்ட முருக்க மரத்தின் நல்ல பட்டையை நீக்கி விட்டு அதன் தண்டுடன் ஏந்திய தாழ்கின்ற கரகத்தையும் விரத உணவையும் உடைய பார்ப்பன மகனே!  எழுதாத காற்றலையுடைய உன்னுடைய மறையில் பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்கும் தன்மையுடைய மருந்துச் சொற்களும் உண்டோ?  இவ்வாறு நீ இடித்துரைப்பது உன் மனக்கலக்கத்தால் வந்தது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பார்ப்பனன் என்றாலும் நீ பேதை என்பான், பார்ப்பன மகனே என்னும் விளியை மும்முறை அடுக்கினான்.  முருக்கந்தண்டு பார்ப்பனர்கள் பிடிப்பதொன்று.  கரகமும் பார்ப்பனர்க்கு உரியது.  தொல்காப்பியம் மரபியல் 70, நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை அந்தணர்க்குரிய.

சொற்பொருள்:  பார்ப்பன மகனே பார்ப்பன மகனே – பார்ப்பன மகனே பார்ப்பன மகனே, செம்பூ முருக்கின் நல் நார் களைந்து – சிவந்த நிறமுடைய மலர்கள் கொண்ட முருக்க மரத்தின் நல்ல பட்டையை நீக்கி, தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே – அதன் தண்டுடன் ஏந்திய தாழ்கின்ற கரகத்தையும் விரத உணவையும் உடைய பார்ப்பன மகனே, எழுதாக் கற்பின் நின் சொல் உள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ – எழுதாத உன்னுடைய மறையில் பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்கும் தன்மையுடைய மருந்துச் சொற்களும் உண்டோ, மயலோ – மயல் , மயக்கம், ஓகாரம் அசைநிலை, இதுவே – இவ்வாறு நீ இடித்துரைப்பது (இதுவே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 157, அள்ளூர் நன்முல்லையார்மருதத் திணை – தலைவி தனக்குள் சொன்னது
குக்கூ என்றது கோழி, அதன் எதிர்,
துட்கென்றன்று தூய நெஞ்சம்,
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல், வைகறை வந்தன்றால் எனவே.

பாடல் பின்னணி:   பூப்பெய்திய தலைவி உரைத்தது.

பொருளுரை:  கோழிச்சேவல் குக்கூ எனக் கூவியது.  அக்குரலைக் கேட்ட என் தூய நெஞ்சம் துட்கென அஞ்சியது, என் தோள்களை அணைத்த என் தலைவரை என்னிடமிருந்து பிரித்து வைக்கும் வாளைப் போல், விடியற்பொழுது வந்தது என்று.

குறிப்பு:  தமிழண்ணல் உரை – பூப்பு எய்தியதை தலைவி இவ்வாறு கூறுவதால் இதை ‘இடக்கரடக்கல்’ என்பர்.  வீட்டு விலக்கான மூன்று நாளும் கூட்டம் கூடாதென்பது தமிழர் வாழ்வு மரபு.  விலக்கமானதை ‘கோழி கூவி விட்டது’ என மரபுத் தொடராகக் கூறும் பழக்கம் முன்பு இருந்துளது.

சொற்பொருள்:  குக்கூ என்றது கோழி – கோழிச்சேவல் குக்கூ எனக் கூவியது, அதன் எதிர் துட்கென்றன்று தூய நெஞ்சம் – அக்குரலைக் கேட்ட என் தூய நெஞ்சம் துட்கென அஞ்சியது, தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் வாள் போல் –  என் தோள்களை அணைத்த என் தலைவரை என்னிடமிருந்து பிரித்து வைக்கும் வாளைப் போல், வைகறை வந்தன்றால் எனவே – விடியற்பொழுது வந்தது என்று (வந்தன்றால் – ஆல் அசைநிலை, எனவே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 158, ஔவையார்குறிஞ்சித் திணை – தலைவி மழையிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நெடுவரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மா மழை!
ஆர் அளி இலையோ, நீயே பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை,  5
துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனே?

பாடல் பின்னணி:   தலைவன் இரவுக்குறி வந்தபோது அவன் கேட்பத் மழைக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

பொருளுரை:  உயர்ந்த மலையின் பக்கத்தில் உள்ள பாம்பு இறக்கும்படி மிக்க உடைய இடியின் இடிக்கும் முழக்கத்துடன் கலந்து, காற்றுடன் வந்த நிறைந்த நீராகிய சூலை உடைய பெரிய மழையே!  நிறைந்த இரக்கம் உன்னிடம் இல்லையா?  நீ பெரிய புகழையுடைய இமய மலையையும் அசைக்கும் தன்மை உடையாய்.  தங்கள் துணைவர்கள் உடன் இல்லாத இரங்கத்தக்க பெண்களை ஏன் துன்புறுத்துகின்றாய்?  இது எதன் பொருட்டு?

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – தலைவன் பெருமழையினால் துன்புறுவானோ என்றும் வாரானோ என்றும் அஞ்சிய தலைமகள் தான் அங்ஙனம் அஞ்சியதை இதனால் தலைவனுக்கு உணர்த்தினாள்.  இங்கனம் அஞ்சுதற்குரிய ஒழுகலாற்றை விடுத்து வரைந்துகொண்டு எப்பொழுதும் உடனுறைவதே நன்றென்பது எச்சப் பொருளாதலின், இது வரைவு கடாயதாகும்.  இடி பாம்புகளை வருத்தவும் கொல்லவும் செய்யும் என்னும் செய்தி உள்ள பாடல்கள் – அகநானூறு 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 37, 58, 126, 211, 366 and 369.  வரலாறு:  இமயம்.  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 59).  துளக்கும் (5) – இரா. இராகவையங்கார் உரை – நடுக்கும், உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அசைக்கும்.

சொற்பொருள்:  நெடுவரை மருங்கின் பாம்பு பட இடிக்கும் கடு விசை உருமின் – உயர்ந்த மலையின் பக்கத்தில் உள்ள பாம்பு இறக்கும்படி மிக்க உடைய இடியின், கழறு குரல் அளைஇ – இடிக்கும் முழக்கத்துடன் கலந்து, காலொடு வந்த கமஞ்சூல் மா மழை – காற்றுடன் வந்த நிறைந்த நீராகிய சூலை உடைய பெரிய மழையே, ஆர் அளி இலையோ – நிறைந்த இரக்கம் உன்னிடம் இல்லையா, நீயே – நீ, பேர் இசை இமயமும் துளக்கும் பண்பினை – பெரிய புகழையுடைய இமய மலையையும் அசைக்கும் தன்மை உடையாய், துணை இலர் அளியர் பெண்டிர் – தங்கள் துணைவர்கள் உடன் இல்லாத இரங்கத்தக்க பெண்டிர், இஃது எவனே – இது எதன் பொருட்டு (எவனே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 159, வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்குறிஞ்சித் திணை – தோழி சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
தழை அணி அல்குல் தாங்கல் செல்லா
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வமாக,
அம் மெல் ஆகம் நிறைய வீங்கிக்
கொம்மை வரி முலை செப்புடன் எதிரின,
யாங்கு ஆகுவள் கொல், பூங்குழை என்னும்  5
அவல நெஞ்சமொடு உசாவாக்
கவலை மாக்கட்டு இப் பேதை ஊரே?

பாடல் பின்னணி:   தலைவியைத் தாய் இற்செறிக்க எண்ணி இருப்பதைத் தோழி புலப்படுத்தியது.  வேற்று வரைவு வரினும் அதை மாற்றுவதற்கு கூறியதாம்.

பொருளுரை:  இந்த பேதமையுடைய ஊர், அல்குகில் அணிந்த தழை ஆடையை பொறுக்க முடியாத, மிகச் சின்ன இடை துன்புற அழகிய மெல்லிய மார்பகம் நிறைய பருத்து பெருமையையும் தேமலையும் உடைய முலைகள், செப்புடன் மாறுபட்டன.  பூத்தொழிலை உடைய காதணியை அணிந்த தலைவி ‘என்ன துன்பத்தை அடைவாளோ’, என்று எண்ணும் கவலை உடைய நெஞ்சத்துடன் ஏன் எனக் கேட்காத கவலையுடைய மக்களை உடையது.

குறிப்பு:  நுழை சிறு நுசுப்பிற்கு (2) – நுணுகிய சிறிய இடைக்கு,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறிவு நுழைந்து நோக்குவதற்குக் காரணமான சிறுமையையுடைய நுசுப்பு என்க, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – சிறிய இடைக்கு, நுழை சிறு – ஒருபொருட் பன்மொழி.  கொம்மை வரி முலை செப்புடன் எதிரின (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெருமையையும் தேமலையும் உடைய முலைகள் செப்போடு மாறுபட்டன, கொம்மை = பெருமை, வட்டம், உ. வே. சாமிநாதையர் உரை – பெருமையையும் தேமலையும் உடைய நகில்கள் செப்போடு மாறுபட்டன.  அகநானூறு 315 – முலையும் சூழி மென் முகம் செப்புடன் எதிரின.  அகநானூறு பாடலின் உரை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுனியில் மெல்லிய முகத்தோடு அவள் முலைகளும் வளர்ந்து சிமிழ் போலாயின, வேங்கடசாமி நாட்டார் உரை – முலையும் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழுடன் மாறுபட்டன.

சொற்பொருள்:  தழை அணி அல்குல் – தழை ஆடை அணிந்த அல்குல், தாங்கல் செல்லா நுழை சிறு நுசுப்பிற்கு – பொறுக்க முடியாத நுணுகிய சிறிய இடைக்கு (நுழை சிறு – ஒருபொருட் பன்மொழி), எவ்வமாக – துன்பமாக, அம் மெல் ஆகம் நிறைய வீங்கி – அழகிய மெல்லிய மார்பகம் நிறையப் பருத்து, கொம்மை வரி முலை – பெருமையையும் தேமலையும் உடைய முலைகள், செப்புடன் எதிரின – செப்புடன் மாறுபட்டன, யாங்கு ஆகுவள் கொல் – என்ன துன்பத்தை அடைவாளோ (கொல் – அசைநிலை), பூங்குழை – பூத்தொழிலை உடைய காதணியை அணிந்த தலைவி (அன்மொழித்தொகை), என்னும் அவல நெஞ்சமொடு – என்று எண்ணும் கவலை உடைய நெஞ்சத்துடன், உசாவா – ஏன் எனக் கேட்காத, கவலை மாக்கட்டு இப் பேதை ஊரே – கவலையுடைய மக்களை உடையது இந்தப் பேதமையுடைய ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 160, மதுரை மருதன் இளநாகனார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்,
இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு,
தடவின் ஓங்கு சினைக் கட்சியில் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்,  5
இஃதோ தோழி, நம் காதலர் வரைவே.

பாடல் பின்னணி:   பொருள் ஈட்டச் சென்ற தலைவன் வரைவு நீட்டிமையால் ஆற்றாளாகிய தலைவியை நோக்கித் தோழி ‘ அவர் வரைவர்’ என ஆற்றுவிப்புழித் தலைவி உரைத்தது.

பொருளுரை:  தோழி!  நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய அன்றில், இறாமீனை ஒத்த வளைந்த அலகை உடைய பெண் அன்றிலுடன் தடா மரத்தின் உயர்ந்த கிளையில் உள்ள கூட்டிலிருந்து, துணைவரைப் பிரிந்தோர் செயலற்று வருந்தும்படி, ஒலிக்கும், அடர்ந்த இருளையுடைய இரவையுடைய பெரிய குளிர்ச்சியான வாடைக் காலத்திலும் அவர் வரவில்லை.  நம் தலைவர் என்னை மணந்து கொள்வது இது தானா?

குறிப்பு:  செந்தலை (1) – உ. வே. சாமிநாதையர் உரை – செந்தலையென்றது செஞ்சூட்டை.  தலை – ஆகுபெயர்.  பெடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).  நள் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – செறிந்த, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஓசை.

சொற்பொருள்:  நெருப்பின் அன்ன – நெருப்பைப் போன்ற (நெருப்பின் – இன் சாரியை), செந்தலை அன்றில் – சிவந்த தலையையுடைய அன்றில், இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு – இறாமீனை ஒத்த வளைந்த அலகை உடைய பெண் அன்றிலுடன் (இறவின் – இன் சாரியை), தடவின் ஓங்கு சினைக் கட்சியில் – தடா மரத்தின் உயர்ந்த கிளையில் உள்ள கூட்டிலிருந்து, பிரிந்தோர் கையற – துணைவரைப் பிரிந்தோர் செயலற்று வருந்தும்படி, நரலும் – ஒலிக்கும், நள்ளென் யாமத்து  – அடர்ந்த இருளையுடைய, ஓசையுடைய, பெருந்தண் வாடையும் வாரார் –  பெரிய குளிர்ச்சியான வாடைக் காலத்திலும் அவர் வரவில்லை (வாடையும் – உம்மை உயர்வு சிறப்பு), இஃதோ தோழி – இது தானா தோழி, நம் காதலர் வரைவே – நம் தலைவர் என்னை மணந்து கொள்வது (வரைவே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 161, நக்கீரனார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பொழுதும் எல்லின்று, பெயலும் ஓவாது,
கழுது கண் பனிப்ப வீசும் அதன்றலைப்
புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி
அன்னாவென்னும் அன்னையும், அன்னோ,
என் மலைந்தனன் கொல் தானே, தன் மலை  5
ஆரம் நாறு மார்பினன்,
மாரி யானையின் வந்து நின்றனனே.

பாடல் பின்னணி:   இரவுக்குறிக்கண் வந்த தலைவனைக் காப்பு மிகுதியால் எதிர்ப்படப் பெறாத தலைவி, பிற்றை ஞான்று தலைவன் கேட்கும்படி தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

பொருளுரை:  பொழுதும் ஒளி இல்லாது ஆயிற்று. மழையும் ஓயாமல் பேய்கள் கண்களை அடிக்கடி கொட்டி நடுங்கும்படி விரைவாகப் பெய்யும்.  அதற்கு மேலும், புலிப்பல் கோத்த சங்கிலியை அணிந்த மகனைத் தழுவி ‘அன்னையே’ என்று என்னை அன்னை விளிப்பாள்.  தன்னுடைய மலையில் விளைந்த சந்தனம் கமழும் மார்பையுடைய நம் தலைவன் மழையில் நனைந்த யானையைப் போல் வந்து நின்றான்.  அந்தோ!  அவன் எதனைச் செய்தனனோ என்பதை நான் அறியேன்?

குறிப்பு:  தாலி: அகநானூறு 7 – புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி, அகநானூறு 54 – பொன்னுடைத் தாலி என் மகன், குறுந்தொகை 161 – புலிப்பல் தாலிப் புதல்வர், புறநானூறு 77 – தாலி களைந்தன்றும் இலனே, புறநானூறு 374 – புலிப் பல் தாலிப் புன்தலைச் சிறாஅர்.  அன்னா (4) – உ. வே. சாமிநாதையர் உரை – புதல்வனைப் புல்லிய தாய் அன்னா என்று என்னையும் அழைத்தலின் நானும் அவளருகில் இருத்தல் இன்றியமையாததாயிற்று என்று தலைவி புலப்படுத்தினாள்.  அன்னையென்றது விளியேற்று.  முறைப்பெயர் மருங்கின் ஐ என் இறுதி ஆவொடு வருதற்கு உரியவும் உளவே (தொல்காப்பியம், விளிமரபு 9) விதிப்படி அன்னா என வந்தது.  புதல்வனைப் புல்லி அவனையே அன்னா என்று என்னுமென்று பொருள் கொள்ளுதலும் ஒன்று.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆண்மகவினைப் பெண் மகவு போலும், பெண்மகவினை ஆண் மகவு போலும் விளித்தல் தாயர் வழக்கமாதலை இன்றும் காணலாம்.  எல்லின்று (1) – உ. வே. சாமிநாதையர் உரை – சூரியனும் விளக்கம் இலனாயினன்,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இருண்டு விட்டது.

சொற்பொருள்:  பொழுதும் எல்லின்று – பொழுதும் ஒளியின்றி ஆயிற்று, கதிரவனும் ஒளி இல்லாது ஆயிற்று, பெயலும் ஓவாது கழுது கண் பனிப்ப வீசும் – மழையும் ஓயாமல் பேய்கள் கண்களை அடிக்கடி கொட்டி நடுங்கும்படி விரைவாகப் பெய்யும்,  அதன் தலை – அதற்கு மேலும், புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி – புலிப்பல் கோத்த சங்கிலியை அணிந்த மகனைத் தழுவி, அன்னா என்னும் அன்னையும் – அன்னையே என்று அன்னை விளிப்பாள், அன்னோ – அந்தோ, ஐயோ, என் மலைந்தனன் கொல் – அவன் எதனைச் செய்தனனோ (கொல் – ஐயப்பொருட்டு வந்தது), தானே – தான், ஏ அசைநிலைகள், தன் மலை ஆரம் நாறு மார்பினன் – தன்னுடைய மலையில் விளைந்த சந்தனம் கமழும் மார்பையுடைய நம் தலைவன், மாரி யானையின் வந்து நின்றனனே – மழையில் நனைந்த யானையைப் போல் வந்து நின்றான் (யானையின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, நின்றனனே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 162, கருவூர்ப் பவுத்திரனார்முல்லைத் திணை – தலைவன் முல்லை மலரிடம் சொன்னது
கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப்
பலர் புகுதரூஉம் புல்லென் மாலை,
முல்லை வாழியோ முல்லை! நீ நின்
சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்,  5
தகுமோ மற்றிது, தமியோர் மாட்டே?

பாடல் பின்னணி:   வினை முற்றி மீளும் தலைவன் முல்லையிடம் உரைத்தது.

பொருளுரை:  முல்லையே!  நீ நீடு வாழ்வாயாக முல்லையே!  மழையைப் பொழியும் முகில்  பாதுகாத்த நீர் உடைய அகன்ற முல்லை நிலத்தில், பலர் தம் இல்லத்தில் புகும் ஒளி இழந்த மாலை நேரத்தில்,  நீ உனது சிறிய வெள்ளை அரும்புகளால் புன்னகை செய்தாய்.  தலைவரைப் பிரிந்து தனியாக இருப்பவரிடத்து எள்ளி நகைப்பது போல் காட்டுவது உனக்குத் தகுமா?

குறிப்பு:  பற்களைப் போன்ற அரும்பு:  குறுந்தொகை 126 – முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக, குறுந்தொகை 162 – சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை, குறுந்தொகை 186 – முல்லை மென் கொடி எயிறு என முகையும், நற்றிணை 316 – மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் என, கலித்தொகை 27 – மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப.

சொற்பொருள்:  கார் புறந்தந்த நீருடை வியன் புலத்து – மழையைப் பொழியும் முகில்  பாதுகாத்த நீர் உடைய அகன்ற முல்லை நிலத்தில், பலர் புகுதரூஉம் புல்லென் மாலை – பலர் தம் இல்லத்தில் புகும் ஒளி இழந்த மாலை நேரம் (புகுதரூஉம் – அளபெடை), முல்லை – முல்லை, வாழியோ முல்லை – நீ நீடு வாழ்வாயாக முல்லையே! நீ நின் சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை – நீ உனது சிறிய வெள்ளை அரும்புகளால் புன்னகை செய்தாய், நகுவை போலக் காட்டல் தகுமோ – எள்ளி நகைப்பது போல் காட்டுவது உனக்குத் தகுமா (காட்டல் – அல் ஈற்று எதிர்மறை வியங்கோள், காட்டாற்க என்றவாறு), மற்று – அசைநிலை, இது – இது, தமியோர் மாட்டே – தலைவரைப் பிரிந்து தனியாக இருப்பவரிடத்து

குறுந்தொகை 163, அம்மூவனார்நெய்தற் திணை – தலைவி கடலிடம் சொன்னது
யார் அணங்குற்றனை கடலே, பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடு பரந்தன்ன
மீன் ஆர் குருகின் கானலம் பெருந்துறை
வெள் வீத் தாழை திரை அலை
நள்ளென் கங்குலுங் கேட்கு நின் குரலே?  5

பாடல் பின்னணி:   தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவி கடலிடம் கூறியது.

பொருளுரை:  கடலே!  பூழி நாட்டினரது சிறிய தலையையுடைய வெள்ளத்தின் தொகுதி (கூட்டம்) பரவியதை ஒத்த மீன்களை உண்ணும் கொக்குகளை உடைய சோலையுடைய பெரிய துறையில், வெள்ளை மலர்களை உடைய தாழையை அலைகள் அசைக்கின்ற அடர்ந்த இருள் சூழ்ந்த இரவிலும் உன்னுடைய குரல் கேட்கின்றது. நீ யாரால் வருத்தம் அடைந்தாய்?

குறிப்பு:  வெள்ளாட்டின் தொகுதி கொக்கின் தொகுதிக்கு உவமை. மலைபடுகடாம் 414 – வெள்ளை – வெள்ளாடு.  பூழியர் நாட்டில் ஆட்டு நிரை – நற்றிணை 192 – பூழியர் உருவத் துருவின், நாள் மேயல் ஆரும் மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை.  நள்ளென் கங்குலும் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – நடு இரவிலும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நள் என்னும் ஓசையுடைய இடை இரவிலும்.

சொற்பொருள்:  யார் அணங்குற்றனை கடலே – நீ யாரால் வருத்தம் அடைந்தாய் கடலே, பூழியர் சிறுதலை வெள்ளைத் தோடு பரந்தன்ன – பூழி நாட்டினரது சிறிய தலையையுடைய வெள்ளத்தின் தொகுதி (கூட்டம்) பரவியதை ஒத்த, மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந்துறை – மீன்களை உண்ணும் கொக்குகளை உடைய சோலையுடைய பெரிய துறை (அம் சாரியை), வெள் வீத் தாழை – வெள்ளை மலர்களை உடைய தாழையை, திரை அலை – அலைகள் அசைக்கின்ற, நள்ளென் கங்குலும் – அடர்ந்த இருள் சூழ்ந்த இரவிலும், கேட்கு நின் குரலே – உன்னுடைய குரல் கேட்கும் (குரலே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 164, மாங்குடி மருதனார்மருதத் திணை – பரத்தை தன் தோழியிடம் சொன்னது
கணைக் கோட்டு வாளை கமஞ்சூல் மட நாகு
துணர்த் தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம்,
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது,
தண் பெரும் பவ்வம் அணங்குக தோழி,
மனையோள் மடமையின் புலக்கும்,  5
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – வாளை நாகு தான் இருந்தவிடத்தே இருந்து முயற்சி சிறிதுமின்றி எளிதில் கொக்கின் பழத்தைப்  பெற்றது போல, யாம் முயலாமே தலைவன் வலிய வந்து எம்மை நயப்ப யாம் அவனோடு உறைந்தேம்.  ஆதலின் யாம் குறை கூறற்கு அரியேம் அல்லேம் என்றாள்.  குறுந்தொகை 8 – கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் பழன வாளை கதூஉம்.  வரலாறு:  வேளிர், குன்றூர்.  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 59).  நாகு – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:  கணைக் கோட்டு வாளை கமஞ்சூல் மட நாகு – திரண்ட கொம்பையுடைய வாளை மீனின் நிறைந்த கருவை உடைய மடப்பம் உடைய பெண் மீன், துணர்த் தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம் – கொத்தையுடைய இனிய இனிய மாவின் உதிர்ந்த இனிய பழத்தைக் கவ்வும், தொன்று முதிர் வேளிர் – மிகப் பழைய வேளிர், குன்றூர்க் குணாது – குன்றூரின் கிழக்கே உள்ள, தண் பெரும் பவ்வம் அணங்குக – குளிர்ந்த பெரிய கடல் எம்மை வருத்துவதாக, தோழி – தோழி, மனையோள் மடமையின் புலக்கும் அனையேம் – தலைவி தன் அறியாமையினால் எம்மை வெறுப்பதற்குக் காரணமாகிய அத்தன்மை உடையேம் யாம், மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே – தலைவன் பொருட்டு யாம் ஆனோம் என்றால் (எனினே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 165, பரணர்குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு,
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை,
அருங்கரை நின்ற உப்பு ஒய் சகடம்
பெரும் பெயல் தலைய வீந்தாங்கு, இவள்
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே.  5

பாடல் பின்னணி:   தலைவியைப் பெறுவதற்குத் தோழியின்பால் இரந்தும் குறை நேரப்படாத தலைவன், அரியளாய தலைவியைப் பெரிதும் விரும்பும் தன் நெஞ்சிடம் கூறியது.

பொருளுரை:  நெஞ்சே!  ஏறுவதற்கு அரிய கரையில் உப்பைச் செலுத்துகின்ற வண்டி பெரிய மழைப் பொழிந்ததால் அழிந்தாற்போல், தலைவியின் கரிய பல பகுதியாக உள்ள கூந்தலின் இயற்கை அழகைக் கண்டு,  மறுக்கப்பட்டோம் என்று அறிந்த பின்னும் நாணம் அழிந்து, கள்ளைக் குடித்து மகிழ்ச்சி அடைந்த பின்பும் கள்ளைக் குடித்தாற்போல, ஒருமுறை விரும்பிய பின்பும் நீமீண்டும் விருப்பத்தை அடைந்தாய்.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – உப்புச் சகடமானது பெருமழையால் அழிந்தது போல நீ நாணும் உரனும் அழிந்தாயெனவும், ஒரு முறை கள்ளுண்டான் நாணும் அறிவும் அற்று மயங்கினும் அதை உணராது மீண்டும் உண்டு மகிழ்ந்தது போல ஒரு முறை தலைவியை விரும்பி இத்தோழிபாற் பணிந்து குறை இரந்து நாணமிழந்து நின்றும் அமையாமல் மீண்டும் விரும்பினை எனவும் உவமைகளை விரித்துக் கொள்க.  பல் கூந்தல் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – பலவாகிய கூந்தலின், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஐந்து பகுதியாக கை செய்யப்படும் கூந்தல் ஆதலின் பல் கூந்தல் என்றான்.

சொற்பொருள்:  மகிழ்ந்ததன் தலையும் – கள்ளைக் குடித்து மகிழ்ச்சி அடைந்த பின்பும், நற உண்டாங்கு – கள்ளைக் குடித்தாற்போல, விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை – ஒருமுறை விரும்பிய பின்பும் நீ விருப்பத்தை அடைந்தாய், அருங்கரை நின்ற உப்பு ஒய் சகடம் பெரும் பெயல் தலைய வீந்தாங்கு – ஏறுவதற்கு அரிய கரையில் உப்பைச் செலுத்துகின்ற வண்டி பெரிய மழைப் பொழிந்ததால் அழிந்தாற்போல், இவள் இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே – தலைவியின் கரிய பல பகுதியாக உள்ள கூந்தலின் இயற்கை அழகைக் கண்டு, தலைவியின் கரிய ஐம்பால் கூந்தலின் இயற்கை அழகைக் கண்டு (கண்டே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 166, கூடலூர் கிழார்நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
தண் கடல் படுதிரை பெயர்த்தலின், வெண்பறை
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்
ஊரோ நன்று மன் மரந்தை,
ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே.

பாடல் பின்னணி:   தலைவி இற்செறிக்கப்பட்டு புறம் போகாதபடி காவல் செய்யப்பட்ட நிலையின் தன்மையைக் கூறியது.

பொருளுரை:  குளிர்ந்த கடலில் அலைகள் மோதி மீன்களைப் பெயரச் செய்வதனால் வெள்ளை சிறகுகளையுடைய நாரை இனம் அங்கிருந்து நீங்கி அயிரை மீன்களை உண்ணும் இடமாகிய மரந்தை என்னும் ஊர் தலைவனுடன் இருக்கும்பொழுது மிகவும் நன்றாக இருந்தது. தனியாகத் தங்கினால் வருத்தத்தைத் தருகின்றது!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார், இரா. இராகவையங்கார் உரைகளில் மாந்தை என்றுள்ளது இவ்வூர்.  உ. வே. சாமிநாதையர் உரை – திரை மீனைப் பெயர்த்தாலும் நாரை அம்மீன் உள்ள இடத்தே சென்று அதனை ஆர்ந்தது போல, தாயர் முதலியோர் இற்செறித்துக் காப்பிடை வைப்பினும் தலைவன் தலைவியிருக்குமிடத்து வந்து கண்டு இன்புறல் வேண்டுமென்பது குறிப்பு.  ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டுத் தாய் முதலிய தமர் சூழ இருந்தும் தலைவன் இன்மையால் காட்டின் ஊடே தனித்துறைவாள் போல்வதொரு உணர்ச்சி உடையளாதல்.  வரலாறு:  மரந்தை – குறுந்தொகை 34, நற்றிணை 35, 395, அகநானூறு 127, 376.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  தண் கடல் படுதிரை பெயர்த்தலின் – குளிர்ந்த கடலில் அலைகள் மோதி மீன்களைப் பெயரச் செய்வதனால்  , வெண்பறை நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும் – வெள்ளை சிறகுகளையுடைய நாரை இனம் நீங்கி அயிரை மீன்களை உண்ணும், ஊரோ நன்று மன் – ஊர் நன்றாக இருந்தது தலைவனுடன் இருக்கும்பொழுது (ஊரோ – ஓகாரம் அசைநிலை, மன் – மிகுதிக் குறிப்பு), மரந்தை – மரந்தை, ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே – தனியாகத் தங்கினால் வருத்தத்தைத் தருகின்றது – (ஆகின்றே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 167, கூடலூர் கிழார்முல்லைத் திணை – செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது  
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்,
குவளை உண்கண் குய் புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்,
இனிதெனக் கணவன் உண்டலின்,  5
நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே.

பாடல் பின்னணி:  தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது.

பொருளுரை:  முற்றிய தயிரைப் பிசைந்த, காந்தள் மலரின் இதழைப் போன்ற தன் மெல்லிய விரல்களைத் துடைத்துக் கொண்ட ஆடையைத் துவைக்காமல் உடுத்திக் கொண்டு, குவளை மலரைப் போன்ற மையிட்டக் கண்களில் தாளிப்பின் புகை மணக்க, தானே துழவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பை இனிதெனத் தன் தலைவன் உண்பதால், நுண்ணிதாக மலர்ந்தது ஒளியுடைய நெற்றியுடைய தலைவியின் முகம்.

குறிப்பு:  முல்லைப்பாட்டு 95 – கோடல் குவி முகை அங்கை அவிழ, குறுந்தொகை 167 – காந்தள் மெல்விரல், பரிபாடல் 19 – கை போல் பூத்த கமழ் குலைக் காந்தள், பொருநராற்றுப்படை 33 – காந்தள் மெல் விரல், புறநானூறு 144 – காந்தள் முகை புரை விரலின்.  கழாஅது – அளபெடை, உடீஇ – அளபெடை, ஒண்ணுதல் – அன்மொழித்தொகை, முகன்: முகம் என்பதன் போலி, முகனே – ஏகாரம் அசை நிலை.  விரல் கழுவுறு கலிங்கம் (1-2) – உ. வே. சாமிநாதையர் உரை – விரலை துடைத்துக் கொண்ட ஆடையை,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோய்த்துத் தூய்மை செய்யப்பட்ட ஆடை. விரல் கழாஅது கழுவுறு கலிங்கத்தை உடுத்தென்க.  விரலைக் கழுவாமலே நெகிழ்ந்த ஆடையை உடுத்திக் கொண்டு தாளிப்பாயாயினள்.  கமழ  (3) – உ.வே.சா உரையில் இவ்வாறு உள்ளது. பொ. வே. சோமசுந்தரனார் உரையில் ‘கழும’ என உள்ளது.  கண்ணிற் புகை நிறைய என அதன் பொருள் உள்ளது

சொற்பொருள்:  முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் – முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரலை, கழுவுறு கலிங்கம் – துடைத்துக் கொண்ட ஆடையை, கழாஅது உடீஇ – துவைக்காமல் உடுத்திக் கொண்டு, குவளை உண்கண் குய் புகை கழும – குவளை மலரைப் போன்ற மையிட்ட கண்களில் தாளிப்பின் புகை மணக்க, தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் – தானே துழவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பை தன் தலைவன் இனிதென உண்பதால், நுண்ணிதின் மகிழ்ந்தன்று – நுண்ணிதாக மலர்ந்தது, ஒண்ணுதல் முகனே – ஒளியுடைய நெற்றியுடைய முகம், தலைவியின் முகம்

குறுந்தொகை 168, சிறைக்குடி ஆந்தையார்பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை
இரும் பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன,
நறும் தண்ணியளே நல் மா மேனி,
புனல் புணை அன்ன சாய் இறைப் பணைத்தோள்  5
மணத்தலும் தணத்தலும் இலமே,
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.

பாடல் பின்னணி:  பொருள் ஈட்ட விரும்பும் தன் நெஞ்சிற்குத் தலைவன் உரைத்தது.

பொருளுரை:   அழகிய மாமை நிற மேனி கார்காலத்தின் பிச்சியின் நீர் ஒழுகும் கொழுவிய அரும்புகளில் பலவற்றைப் பெரிய பனங்குடையில் மூடிவைத்து, பெரிய மழை பொழிந்த விடியற்காலையில் விரித்து விட்டாற்போல் நறுமணமும் குளிர்ச்சியும் கொண்டவள்.நீரில் உள்ள தெப்பத்தைப் போன்று வளைந்த சந்தியையுடைய பருத்த தோள்களைப் பொருந்துதல் பிரிதலும் இலமாயினேம்.  அவளைப் பிரிந்தால் உயிர் வாழ்தல், அதனினும் இலமே.

குறிப்பு:  புறநானூறு 352 – பசுங்குடையான் புதன் முல்லைப் பூப்பறிக்குந்து, அகநானூறு 37 – பயில் இதழ்ப் பசுங்குடைக் கய மண்டு பகட்டின் பருகி, அகநானூறு 121 – ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண்குடை, கலித்தொகை 23 – வேணீர் உண்ட குடை ஓரன்னர்.  புணை (5) – உ. வே. சாமிநாதையர் உரை – பேய்க்கரும்பால் செய்த தெப்பம்.

சொற்பொருள்:  மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை – கார்காலத்தின் பிச்சியின் நீர் ஒழுகும் கொழுவிய அரும்புகள், இரும் பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து – பெரிய பனங்குடையில் பலவற்றை மூடிவைத்து, பெரும் பெயல் விடியல் – பெரிய மழை பொழிந்த விடியற்காலை, விரித்து விட்டன்ன – விரித்து விட்டாற்போல், நறும் தண்ணியளே – நறுமணமும் குளிர்ச்சியும் கொண்டவள், நல் மா மேனி – அழகிய கருமை மேனி, அழகிய மாமை நிற மேனி, புனல் புணை அன்ன சாய் இறைப் பணைத்தோள் – நீரில் உள்ள தெப்பத்தைப் போன்று வளைந்த சந்தியையுடைய பருத்த தோள்கள், மணத்தலும் – பொருந்துதலும், தணத்தலும் – பிரிதலும், இலமே – இலமாயினேம் (தன்மைப் பன்மை, ஏகாரம் அசைநிலை), பிரியின் வாழ்தல் அதனினும் இலமே – பிரிந்தால் உயிர் வாழ்தல் அதைவிட இலமாவேம் (இலமே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 169, வெள்ளிவீதியார்மருதத் திணை – தலைவனிடம் தலைவி அல்லது தோழி சொன்னது
சுரஞ்செல் யானைக் கல் உறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ ஐய, மற்றியாம்
நும்மொடு நக்க வால் வெள் எயிறே,
பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல,
எமக்கும் பெரும் புலவாகி,  5
நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே.

பாடல் பின்னணி:  தலைவன் தன்பால் பரத்தமை இல்லையென்று தலைவியிடம் கூறித் தெளிவிக்குங் காலத்து, ஊடல் தீராத தலைவி உரைத்தது.  இனி, வரைவு நீட்டித்தவழி தோழி வரைவு கடாயதுமாம்.

பொருளுரை:  ஐயா!  நும்முடன் சிரித்த தூய வெள்ளை பற்கள், பாலை நிலத்தில் செல்லும் யானையின் பாறையைக் குத்திய தந்தத்தைப் போல் விரைவாக அழியட்டும்!  பாணர் பிடித்து வைத்த பச்சை மீனைப் பெய்து வைத்த பாத்திரத்தைப் போல் எமக்கும் பெரிய வெறுப்பைத் தருவதாக ஆகி, உம்மையும் யாம் பெறேம்.  அழிக எம் உயிர்!

குறிப்பு:  பாணரும் மீனும்:  அகநானூறு 196 – வராஅல் துடிக் கண் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடி வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து, அகநானூறு 216 – நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள், குறுந்தொகை 169 – பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல, ஐங்குறுநூறு 47 – முள் எயிற்றுப் பாண் மகள் இன் கெடிறு சொரிந்த, ஐங்குறுநூறு 48 – வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த, ஐங்குறுநூறு 49 – பாண்மகள் சில் மீன் சொரிந்து,  ஐங்குறுநூறு 111 – பாணன் சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇச் சினைக் கயல் மாய்க்கும், புறநானூறு 348 – மீன் சீவும் பாண் சேரி, மதுரைக்காஞ்சி 269 – மீன் சீவும் பாண் சேரியொடு, பெரும்பாணாற்றுப்படை 284-285 – கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ.  பாணர் – பாண் மரபினர், பாண் என்பது பண் அடியாகப் பிறந்த பெயர், இசை பாடுபவர்.

சொற்பொருள்:  சுரஞ்செல் யானைக் கல் உறு கோட்டின் தெற்றென இறீஇயரோ – பாலை நிலத்தில் செல்லும் யானையின் மலையைக் குத்திய (பாறையைக் குத்திய) தந்தத்தைப் போல் விரைவாக அழியட்டும் (உறு – குத்திய, கோட்டின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, இறீஇயரோ – அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி, ஓகாரம் அசைநிலை, இகழ்ச்சிப்பொருளில் வந்தது), ஐய – ஐயா, மற்று யாம் நும்மொடு நக்க வால் வெள் எயிறே – நும்முடன் சிரித்த தூய வெள்ளை பற்கள் (மற்று – அசைநிலை, வால் வெள் – ஒருபொருட் பன்மொழி), பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல – பாணர் பிடித்து வைத்த பச்சை மீனைப் பெய்து வைத்த பாத்திரத்தைப் போல், எமக்கும் பெரும் புலவாகி – எமக்கும் பெரிய வெறுப்பைத் தருவதாக ஆகி, நும்மும் பெறேஎம் – உம்மையும் யாம் பெறேம் (பெறேஎம் – அளபெடை), இறீஇயர் எம் உயிரே – அழிக எம் உயிர் (இறீஇயர் – அளபெடை, உயிரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 170, கருவூர்கிழார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பலவும் கூறுக அஃது அறியாதோரே,
அருவி தந்த நாள் குரல் எருவை
கயம் நாடு யானை கவள மாந்தும்
மலை கெழு நாடன் கேண்மை
தலை போகாமை, நற்கு அறிந்தனென் யானே. 5

பாடல் பின்னணி:  தலைவன் வரைபொருள் நிமித்தம் (பொருட்டு) பிரிந்து போன காலத்தே அவனது பிரிவை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைவி கூறியது.

பொருளுரை:   அறியாதவர்கள் பலரும் பலவற்றைக் கூறுகின்றனர்.  அருவி கொண்டு வரும் புதிய நாணலை கவளமாக உண்பதற்காகக் குளத்தை நாடும் யானைகள் உடைய மலை நாட்டவனின் கெடாத நட்பை நான் நன்கு அறிகின்றேன்.

குறிப்பு:  அறியாதோரே – ஏகாரம் அசைநிலை, யானே – ஏகாரம் அசைநிலை, தலைபோகாமை – தலை என்றது அசை நிலையாக நின்றது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறியாதோர் என்றது ஈண்டுத் தோழியை முன்னிலைப் புறமொழியாகக் கூறியதாம்.  உ. வே. சாமிநாதையர் உரை – கவளமாந்திய யானை பின்னும் அதனை வேண்டி வருவது போலப் பின்னும் தலைவன் வரும் என்பது குறித்தாள்.  பலரும் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – செவிலி முதலியோர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறியாதோர் என்றது ஈண்டுத் தோழியை முன்னிலைப் புறமொழியாகக் கூறியதாம்.

சொற்பொருள்:  பலவும் – பலரும்,  கூறுக அஃது – கூறுவது,  அறியாதோரே – அறியாதவர்களே, அருவி தந்த – அருவிக் கொண்டு வந்த,  நாள் – புதிய,  குரல் – கொத்து,  எருவை –  இளம் கொறுக்கச்சி தட்டிகளை, Arundo donax, கயம் – குளம்,  நாடு – நாடிச் செல்லும்,  யானை – யானைகள்,  கவள – கவளமாக,  மாந்தும் – உண்ணும், மலைகெழு நாடன் – மலை நாடன், கேண்மை – நட்பு, தலை போகாமை – கெட்டுப் போகாமல்,  நற்கு – நன்கு,  அறிந்தனென் யானே – நான் அறிவேன்

குறுந்தொகை 171, பூங்கணுத்திரையார்மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
காண் இனி, வாழி தோழி, யாணர்க்
கடும் புனல் அடைகரை நெடுங்கயத்து இட்ட
மீன் வலை மாப் பட்டாஅங்கு,
இது மற்று எவனோ, நொதுமலர்தலையே?

பாடல் பின்னணி:  தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் அயலார் வரையப் புக்கனராக, அது கண்டு கவன்ற தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  இப்பொழுது பார்ப்பாயாக!  புதிதாக வந்த மிகுந்த நீர், நிறைந்த கரையையுடைய ஆழமான குளத்தில் மீன் பிடிப்பதற்கு இட்ட வலையில் அகப்பட்ட விலங்கைப் போல, அயலாரிடத்தில் வரைவுக்கு உரிய முயற்சி என்ன பயன் உடையது?

குறிப்பு:  காண் இனி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இப்பொழுது காண என்றது இப்பொழுது அயலார் மகட்பேசி வந்துள்ள நிகழ்ச்சியை நோக்கு என்றவாறு.  நமர் உடன்படாமைக்கு வேண்டிய அறத்தொடு நிற்றல் முதலியன செய்க என்பது குறிப்பு.  மா (3) – உ. வே. சாமிநாதையர் உரை – நீர்நாய் முதலியன.  அகநானூறு 369 –  தமர் மணன் அயரவும் ஒல்லாள்.  உ. வே. சாமிநாதையர் உரை – மீனுக்கென அமைத்த வலையில் விலங்கு பட்டாற்போலத் தலைவனுக்கென அமைந்த என்திறத்து நொதுமலர் வரைய முயன்றனர் என்று உவமையை விரித்துக் கொள்க.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாணர்க் கடும் புனல் அடைகரை நெடுங்கயத்து என்றது, திருவும் ஒழுக்கமும் நிறைந்த உயர்குடி என்று தன் குடிப் பெருமை கருதிக் கூறியது என்க.  உயர்குடிப் பிறப்புடைய யாம் கற்புக்கடன் பூண்டமை அறியார் வீணே முயல்கின்றனர் என்றவாறு.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  காண் இனி – இப்பொழுது பார்ப்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, யாணர்க் கடும் புனல் – புதிதாக வந்த மிகுந்த நீர், அடைகரை – மணல் அடைந்த கரை, நீர் அடைந்த கரை, நெடும் கயத்து போட்ட – ஆழமான குளத்தில் இட்ட, மீன் வலை மாப் பட்டாஅங்கு – மீன் பிடிப்பதற்கு இட்ட வலையில் அகப்பட்ட விலங்கைப் போல (பட்டாஅங்கு – அளபெடை), இது – இந்த முயற்சி, மற்று – அசைநிலை, எவனோ – என்ன பயன் உடையது (எவனோ – ஓகாரம் அசைநிலை),நொதுமலர்தலையே – அயலாரிடத்தில் (நொதுமலர்தலையே – அசைநிலை)

குறுந்தொகை 172, கச்சிப்பேட்டு நன்னாகையார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
தாஅ அஞ்சிறை நொப்பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை,
எமியமாக ஈங்குத் துறந்தோர்
தமியராக இனியர் கொல்லோ?
ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த,  5
உலை வாங்கு மிதிதோல் போலத்
தலைவரம்பு அறியாது, வருந்தும் என் நெஞ்சே.

பாடல் பின்னணி:  வரைபொருள் நிமித்தம் தலைவன் பிரிந்த காலத்தில் இவள் ஆற்றாள் எனக் கவன்ற தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  தோழி!  வலிமையான அழகிய சிறகுகளையுடைய மென்மையான பறத்தலையுடைய வௌவால்கள் பழ மரங்களை எண்ணிச் செல்லும் துன்பம் தரும் மாலை நேரத்தில் யாம் தனித்திருக்கும்படி எம்மை விட்டு அகன்ற தலைவர், தான் தனிமையுடையவராக இருப்பவும் இனிமை உடையவரோ?  ஏழு ஊர்களில் உள்ளவர்களின் பொது வினைக்கு ஓர் ஊர் ஊரில் அமைத்த உலையில் பொருத்திய துருத்தியைப் போல எல்லையை அறியாமல் வருந்தும் என்னுடைய நெஞ்சம்.

குறிப்பு:  அகநானூறு 202 – குருகு ஊது மிதி உலை, குறுந்தொகை 172 – உலை வாங்கு மிதி தோல், பெரும்பாணாற்றுப்படை 207 – மென்தோல் மிதி உலைக் கொல்லன்.  எமியமாக (3) – இரா. இராகவையங்கார் உரை – எமியமாக எனப் பன்மையாற் கூறுதற்கேற்ப என் நெஞ்சே என்ற பாடம் கொள்க, உ. வே. சாமிநாதையர் உரை – எமியம் என்றது தோழியையும் நினைந்து.  தமியராக (4) – உ. வே. சாமிநாதையர் உரை – தாம் (தலைவர்) தனிமையை உடையவராக,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன்மைப் பன்மை,  யாம் (தலைவி) பிரிவாலே தமியராய் வருந்துமாறு, ஓர் ஊர் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – ஓரூரில் உள்ள கொல்லன், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஓர் ஊரிடத்தே அமைக்கப்பட்ட கொல்லுலையிலே செறித்த துருத்தி.  மிதிதோல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – துருத்தி, ஏழூர்க்குத் தொழில் பொதுவிற் செய்யவேண்டிய கொல் உலையின் துருத்தி இடையறாது இரவு பகல் பரபரப்போடு இயங்கும் அன்றோ, அவ்வாறு என் நெஞ்சம் ஓயாது துன்பம் உழக்கும் என்றபடி.  பெரும்பாணாற்றுப்படை 206 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொல்லன் துருத்திக்கு ஆகுபெயர், காலாலே மிதித்துத் துருத்தியை ஊதச் செய்தலை இன்றும் காணலாம்

சொற்பொருள்:  தாஅ அம் சிறை நொப்பறை வாவல் – வலிமையான அழகிய சிறகுகளையுடைய மென்மையான பறத்தலையுடைய வௌவால்கள் (தாஅ – அளபெடை),பழுமரம் படரும் பையுள் மாலை – பழ மரங்களை எண்ணிச் செல்லும் துன்பம் தரும் மாலை நேரம், எமியமாக  – யாம் தனித்திருக்கும்படி, ஈங்கு துறந்தோர் – எம்மை விட்டு அகன்ற தலைவர், தமியராக இனியர் கொல்லோ – தான் தனிமையுடையவராக இருப்பவும் இனிமை உடையவரோ (கொல்லோ – கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை), ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த உலை வாங்கு மிதிதோல் போல – ஏழு ஊர்களில் உள்ளவர்களுக்கு பொதுவாக வினைக்கு ஓர் ஊர் ஊரில் அமைத்த உலையில் பொருத்திய துருத்தியைப் போல, தலைவரம்பு அறியாது – எல்லையை அறியாமல், வருந்தும் என் நெஞ்சே – வருந்தும் என்னுடைய நெஞ்சம் (நெஞ்சே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 173, மதுரைக் காஞ்சிப்புலவன்குறிஞ்சித் திணை  – தலைவன் தோழியிடம் சொன்னது
பொன் நேர் ஆவிரைப் புது மலர் மிடைந்த
பன் நூல் மாலைப் பனைபடு கலி மாப்
பூண் மணி கறங்க ஏறி, நாண் அட்டு,
அழிபடர் உள் நோய் வழி வழி சிறப்ப,
“இன்னள் செய்தது இது” என, முன் நின்று 5
அவள் பழி நுவலும் இவ்வூர்,
ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளெனே.

பாடல் பின்னணி:  தலைவன் தோழியிடம் குறை இரப்ப அவள் மறுத்தாளாக, ‘இனி நான் மடலேறுவேன்’ என அவன் கூறியது.

பொருளுரை:   பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய மலர்களை நெருக்கமாகப் பல நூல்களால் கட்டிய மாலையை அணிந்து, பனை மடலால் செய்த செருக்கான மடல் குதிரையின் கழுத்தில் கட்டிய மணி ஒலிக்கும்படி அதன் மீது ஏறி, நாணத்தைத் தொலைத்து, மிகுந்த துன்பத்தைத் தரும் காதல் நோய் உள்ளத்தில் மேலும் மேலும் மிகுதியாக, இவள் இவ்வாறு செய்தாள் என்று நான் கூறினால், எல்லோருக்கும் முன்னால் நின்று அவளைப் பழிக்கும் இந்த ஊர்.  அதை நான் உணர்ந்ததால், இங்கிருந்து நான் போவதற்குத் தயாராக உள்ளேன்.

குறிப்பு:  உளெனே – ஏகாரம் அசை நிலை.  அழிபடர் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – மிக்க துன்பம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மிக்க நினைவு.

சொற்பொருள்:  பொன் நேர் ஆவிரைப் புது மலர் மிடைந்த – பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய மலர்களை நெருக்கமாகக்  கட்டிய, பன் நூல் மாலை – பல நூல்களால் கட்டிய மாலை,  பனைபடு கலி மாப் பூண் மணி கறங்க ஏறி – பனை மடலால் செய்த செருக்கான குதிரைக்குக் கழுத்தில் கட்டிய மணி ஒலிக்கும்படி ஏறி,  நாண் அட்டு – நாணத்தைத் தொலைத்து, அழிபடர் – மிகுந்த துன்பம், உள் நோய் – உள்ளத்தில் உள்ள காதல் நோய், வழி வழி சிறப்ப – மேலும் மேலும் மிகுதியாக,  இன்னள் செய்தது இது என –  இவள் இவ்வாறு செய்தாள் என்று, முன் நின்று அவள் பழி நுவலும் இவ்வூர் – எல்லோருக்கும் முன்னால் நின்று பழிக்கும் இந்த ஊர், ஆங்கு உணர்ந்தமையின் – அதை நான் உணர்ந்ததால், ஈங்கு ஏகுமார் உளெனே –  இங்கிருந்து நான் போவதற்குத் தயாராக உள்ளேன்

குறுந்தொகை 174, வெண்பூதியார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பெயன் மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவை முள் கள்ளிக் காய்விடு கடு நொடி
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார், நத்துறந்து
பொருள்வயிற் பிரிவார் ஆயின், இவ் உலகத்துப்  5
பொருளே மன்ற பொருளே,
அருளே மன்ற ஆரும் இல்லதுவே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள்வயின் பிரிய எண்ணுகின்றான் எனக் கூறிய தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:   பெய்தலுடைய முகில் பெய்யாது நீங்கிய தனிமை மிகுந்த பாலை நிலத்தில், பிரிவு பொருந்திய முள்ளையுடைய கள்ளியின் காய் வெடிக்கும் பொழுது விடும் கடிய ஒலி, மெல்லிய சிறகுகளையுடைய துணைகளாக உள்ள ஆண்புறாவும் பெண்புறாவும் நீங்கச் செய்யும் பாலை நிலம் கடினம் எனக் கருதவில்லை நம் தலைவர்.  நம்மைத் துறந்து பொருளுக்காக அவர் பிரிவார் என்றால் இந்த உலகத்தில் பொருளே உறுதிப் பொருளாவது போலும்.  அருள் உறுதியாக தன்னை ஏற்றுக் கொள்வார் யாரும் இல்லாதது.

குறிப்பு:  நற்றிணை 314 – நொடி விடுவன்ன காய்விடு கள்ளி.  தமிழண்ணல் உரை – கள்ளிக் காயின் வெடிப்பொலி துணைப் புறாக்களைப் பிரிக்கின்றது.  அது போலப் பொருட் செல்வ ஆசை இணைந்திருப்போரைப் பிரிக்கின்றது. உள்ளுறை வகை.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெயல் – முகில், ஆகுபெயர்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  புறவு – புறா புற என்றாகி உகரம் ஏற்றது. குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  பெயன் மழை – பெய்தலையுடைய மழை, பெய்தலுடைய முகில், துறந்த – பெய்யாது நீங்கிய, புலம்பு உறு கடத்து – தனிமை மிகுந்த பாலை நிலத்தில் (உறு – மிக்க), கவை முள் கள்ளிக் காய்விடு கடு நொடி – பிரிவு பொருந்திய முள்ளையுடைய கள்ளியின் காய் வெடிக்கும் பொழுது விடும் கடிய ஒலி, துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும் – மெல்லிய சிறகுகளையுடைய துணைகளாக உள்ள ஆண்புறாவும் பெண்புறாவும் நீங்கும், அத்தம் அரிய என்னார் – பாலை நிலம் கடினம் எனக் கருதவில்லை, நத்துறந்து பொருள்வயிற் பிரிவார் ஆயின் – நம்மைத் துறந்து பொருளுக்காக அவர் பிரிவார் என்றால் (நம் துறந்து நத்துறந்து என விகாரமாயிற்று), இவ் உலகத்துப் பொருளே மன்ற பொருளே – இந்த உலகத்தில் பொருளே உறுதிப் பொருளாவது (முன்னது பிரிநிலை ஏகாரம், பின்னது தேற்றம்), அருளே மன்ற ஆரும் இல்லதுவே – அருள் உறுதியாக தன்னை ஏற்றுக் கொள்வார் யாரும் இல்லாதது (அருளே – ஏகாரம் அசைநிலை, இல்லதுவே – அசைநிலை)

குறுந்தொகை 175, உலோச்சனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பருவத் தேன் நசைஇப் பல் பறைத் தொழுதி
உரவுத் திரை பொருத திணி மணல் அடைகரை
நனைந்த புன்னை மாச் சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு,
இரங்கேன் தோழி, ஈங்கு ‘என் கொல்’ என்று  5
பிறர் பிறர் அறியக் கூறல்,
அமைந்தாங்கு அமைக அம்பலஃது எவனே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியை நோக்கி ‘நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என்று வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:   தோழி!  செவ்வியை உடைய தேனை விரும்பி பல வண்டுக் கூட்டங்கள் உலாவும் அலைகள் மோதிய செறிந்த மணலை உடைய கரையில் உள்ள நனைந்த புன்னை மரத்தின் பெரிய கிளையில் கூடும் மலர்ந்த மலர்களையும் கரிய நீரையுடைய கடற்கரைத் தலைவன் பொருட்டு, வருந்த மாட்டேன் நான்.  இவள் இங்கு ஏன் இவ்வாறு ஆயினாள் என்று பிறர் பலரும் அறியும்படி என்னிடம் இடித்துரைத்துக் கூறுதல், அவர்களுடைய மனம் அமைந்தபடி இருப்பதாக.  அவர்கள் கூறும் பழிமொழி என்ன துன்பத்தைச் செய்யும்?

குறிப்பு:  பறை (1) – உ. வே. சாமிநாதையர் உரை – பறத்தல் தொழிலை உடைமை பற்றிப் பறவைக்காயிற்று.  தேன் நசைஇ என்ற குறிப்பால் பறை என்ற பொதுப் பெயர் இங்கே வண்டிற்காயிற்று.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – செவ்வித் தேனை விரும்பிப் புன்னைக் கிளையில் வண்டினங்கள் தொகூம் என்றது, அங்ஙனம் தொக்க வண்டுகள் தேனைப் பெற்றவுடன் தம் சேக்கையாகிய இறாலை நாடி வருதல் ஒருதலையாதல் போலப் பொருள் நசைஇச் சென்ற நம் தலைவரும் அஃது ஈட்டியவுடன் மீண்டு வந்து அருளுவர் என்னும் துணிவாளே யான் இரங்காது இருக்கின்றேன் என்பதற்கு உவமம் என்க.  ஈங்கு என் கொல் என்று பிறர் பிறர் அறியக் கூறல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவ்விடத்தில் நீ ஆற்றாயாகின்றது என்னை என்று அயலார் பலரும் அறியும்படி என்னை இடித்துரையாதே.  அம்பல் (7) – உ. வே. சாமிநாதையர் உரை – சிலர் அறிந்து கூறும் பழிமொழி.

சொற்பொருள்:  பருவத் தேன் நசைஇ – செவ்வியை உடைய தேனை விரும்பி (நசைஇ – அளபெடை), பல் பறைத் தொழுதி – பல வண்டுக் கூட்டங்கள், உரவுத் திரை பொருத – உலாவும் அலைகள் மோதிய, திணி மணல் அடைகரை – செறிந்த மணலை உடைய கரை, நனைந்த புன்னை மாச் சினை தொகூஉம் – நனைந்த புன்னை மரத்தின் பெரிய கிளையில் கூடும் (தொகூஉம் – அளபெடை), மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு – மலர்ந்த மலர்களையும் கரிய நீரையுடைய கடற்கரைத் தலைவன் பொருட்டு, இரங்கேன் – வருந்த மாட்டேன், தோழி – தோழி, ஈங்கு என் கொல் என்று – இவள் இங்கு ஏன் இவ்வாறு ஆயினாள் என்று (என் – ஏன் இவ்வாறு, கொல் – அசைநிலை), பிறர் பிறர் அறியக் கூறல் – பிறர் பலரும் அறியும்படி என்னிடம் கூறுதல், அமைந்தாங்கு அமைக – அவர்களுடைய மனம் அமைந்தபடி இருப்பதாக, அம்பல் அஃது எவனே – அவர்கள் கூறும் பழிமொழி என்ன துன்பத்தைச் செய்யும் (எவனே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 176, வருமுலையாரித்தியார்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
ஒரு நாள் வாரலன், இரு நாள் வாரலன்,
பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றி, என்
நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை,
வரை முதிர் தேனின் போகியோனே,
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ?  5
வேறு புலன் நல் நாட்டுப் பெய்த
ஏறுடை மழையின் கலிழும் என் நெஞ்சே.

பாடல் பின்னணி:  தன்பால் பலமுறை வந்து குறை இரந்து செல்லும் தலைவனுக்கு இரங்கித் தோழி தலைவியிடம் ‘நீ அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ எனக் கூறியது.

பொருளுரை:   ஒரு நாள் வந்தான் அல்லன்.  இரண்டு நாட்கள் வந்தான் அல்லன்.  பல நாட்கள் வந்து பணிவான சொற்களைப் பலமுறைக் கூறி, என்னுடைய நல்ல நெஞ்சம் நெகிழ்ந்த பின்பு, மலையில் முதிர்ந்து வீழ்ந்த தேன் இறாலைப் போல் சென்றவன், பற்றுக்கோடாக ஒரு தந்தையைப்போல் உள்ளவன் எங்கு இருக்கிறானோ?  வேற்று நிலங்களையுடைய நல்ல நாட்டில் பெய்த, இடியுடன் கூடிய மழைநீரைப் போன்று கலங்குகிறது என் நெஞ்சம்.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – வரையில் முதிர்ந்த தேனடை தன்பால் உள்ள தேனை ஒருவருங் கொள்ளாது வீழ்ந்து கழிதல் போல, தன் மொழியை யாருங் கொள்ளாமையின் தலைவன் போயினான் என்ற உவமையை விரித்துக் கொள்க.  ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன் கொல்லோ – குறுந்தொகை 176-5, 325-4, புறநானூறு 235, 307.

சொற்பொருள்:  ஒரு நாள் வாரலன் – ஒரு நாள் வந்தான் அல்லன், இரு நாள் வாரலன் – இரண்டு நாட்கள் வந்தான் அல்லன், பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றி, – பல நாட்கள் வந்து பணிவான சொற்களைப் பலமுறைக் கூறி, என் நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை – என்னுடைய நல்ல நெஞ்சம் நெகிழ்ந்த பின்பு (நன்னர் – நல்ல), வரை முதிர் தேனின் போகியோனே – மலையில் முதிர்ந்து வீழ்ந்த தேன் இறாலைப் போல் சென்றவன், ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ – பற்றுக்கோடாக ஒரு தந்தையைப்போல் உள்ளவன் எங்கு இருக்கிறானோ (ஆசு – பற்றுக்கோடு, கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை),  வேறு புலன் நல் நாட்டுப் பெய்த – வேற்று நிலங்களையுடைய நல்ல நாட்டில் பெய்த, ஏறுடை மழையின் – இடியுடன் கூடிய மழைநீரைப் போன்று (மழையின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), கலிழும் என் நெஞ்சே –  கலங்குகிறது என் நெஞ்சம் (நெஞ்சே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 177, உலோச்சனார்நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கித்,
துறை நீர் இருங்கழி புல்லென்றன்றே,
மன்ற அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும், இன்று அவர்
வருவர் கொல், வாழி தோழி, நாம் தன்  5
புலப்பினும், பிரிவு ஆங்கு அஞ்சித்,
தணப்பு அருங்காமம் தண்டியோரே.

பாடல் பின்னணி:  தலைவனின் வரவு உணர்ந்து தோழி தலைவிக்கு உரைத்தது.

பொருளுரை:   தோழி! நீ நீடு வாழ்வாயாக! கடலின் ஒலி அடங்கிக் கடற்கரைச் சோலை மயங்கித் துறையையும் நீரையும் உடைய கரிய உப்பங்கழி பொலிவு இல்லாது உள்ளது. ஊர் மன்றத்தில் உள்ள அழகிய பனை மடலில் பொருந்தி வாழும் அன்றிலும் மெல்ல கூவும்.  முன்பு நாம் அவரைப் புலந்த வேளையிலும், அவ்விடத்துப் பிரிதலை அஞ்சி, நீங்குதற்கரிய காதல் இன்பத்தைப் பெற்றவராகிய நம் தலைவர் இன்று வருவார்.

குறிப்பு:  வருவர் கொல் – கலித்தொகை 11, நச்சினார்க்கினியர் உரை – வருவர் போல இருந்தது.  தண்டியோர் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அமையப் பெற்றோர்.  அமைந்தோர், ‘தண்டாக் காமம்’ என்னும் அதன் எதிர்மறையானும் உணர்க.  தண்டியோர் என்பதற்கு ‘அலைத்தும் பெற்றோர்’ எனப் பொருள் கூறினார் உ. வே. சா ஐயரவர்கள்.  அவர் கருதியபடி கருதினும் காமத்தை அலைத்தோர் என்பதால் அலைத்தும் பெற்றோர் என்பதற்கு இடமின்மை அறிக.

சொற்பொருள்:  கடல் பாடு அவிந்து – கடலின் ஒலி அடங்கி, கானல் மயங்கி – கடற்கரைச் சோலை மயங்கி, துறை நீர் இருங்கழி புல்லென்றன்றே – துறையையும் (கரையையும்) நீரையும் உடைய கரிய உப்பங்கழி பொலிவு இல்லாது இருந்தது (புல்லென்றன்றே – ஏகாரம் அசைநிலை), மன்ற அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை அன்றிலும் – ஊர் மன்றத்தில் உள்ள அழகிய பனை மடலில் பொருந்தி வாழும் அன்றிலும், பையென நரலும் – மெல்ல கூவும், இன்று அவர் வருவர் – இன்று வருவார்,கொல் – அசைநிலை, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, நாம் தன் புலப்பினும் – முன்பு நாம் அவரைப் புலந்த வேளையிலும், பிரிவு ஆங்கு அஞ்சி – அவ்விடத்துப் பிரிதலை அஞ்சி, தணப்பு அருங்காமம் தண்டியோரே – நீங்குதற்கரிய காதல் இன்பத்தைப் பெற்றவராகிய நம் தலைவர் (தண்டியோரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 178, நெடும்பல்லியத்தையார்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
அயிரை பரந்த அம் தண் பழனத்து
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள் கால்
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள்
இடை முலைக் கிடந்து நடுங்கல் ஆனீர்,
தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு 5
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனிர், நோகோ யானே.

பாடல் பின்னணி:  கடிநகர் புக்க தோழி, தலைவன் தலைவியின்பால் கொண்ட வேட்கையைக் கண்டு, ‘நீர் களவுக்காலத்தில் எவ்வாறு ஆற்றியிருந்தனரோ’ என இரங்கிக் கூறியது.

பொருளுரை:  அயிரை மீன்கள் பரவிய அழகிய குளிர்ந்த பொய்கையில், அழகுடன் நீருக்கு மேல் உயர்ந்திருக்கும் மலர்களாகிய உள் துளையையும்  திரண்ட தண்டையும் உடையனவாய் உள்ள ஆம்பலின் பூக்களைப் பறிப்போர், நீரினுள் நின்றாலும் குடிநீர் விருப்பத்தினால் வருந்தினாற்போன்று, இத்தலைவியின் முலைகளின் இடையே துயிலப் பெற்றும் நடுங்கல் உடையவராய் ஆனீர்.  மக்கள் தொழுது காணும் பிறைநிலாவைப் போல் தோன்றி, நுமக்குக் காண்பதற்கு அரியேம் ஆகிய களவுக் காலத்தில் பெரிதும் வருத்தங்களை நீவிர் பொறுத்தீர்.  அதனை எண்ணி நான் வருந்துகின்றேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – களவுக் காலத்தில் பல இடையூறுகள் உண்மையின், பிறை போன்று இடையீற்றுக் காணப்படுவேமாய், ஏனைப் பொழுதில் காணப்படேமாய் இருந்தேமன்றே, அக்காணப்படாத போதெல்லாம் என் பட்டீரோ என்று இரங்கியவாறு.  உ. வே. சாமிநாதையர் உரை – இடை முலை – முலை இடை.  இடை – நடுவில்.  முன்பின்னாகத் தொக்கது.  உ. வே. சாமிநாதையர் உரை – ஆம்பல் – இங்கே ஆம்பல் மலர், ஆகுபெயர்.  மலர (2) – தமிழண்ணல் உரை- மலர்களாகிய, உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலரையுடையனவாகிய.

சொற்பொருள்:  அயிரை பரந்த அம் தண் பழனத்து – அயிரை மீன்கள் பரவிய அழகிய குளிர்ந்த பொய்கையில், ஏந்து எழில் – பொருந்திய அழகையுடைய, நீருக்கு மேல் உயர்ந்த அழகிய, மலர – மலர்களாகிய, மலரையுடையனவாகிய, தூம்புடைத் திரள் கால் ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு – உட்துளையுடைய திரண்ட தண்டை உடையனவாய் உள்ள ஆம்பல் மலர்களைப் பறிப்போர் குடிநீர் விருப்பத்தினால் வருந்தினாற்போன்று, இவள் இடை முலைக் கிடந்து நடுங்கல் ஆனீர் – தலைவியின் முலைகளின் இடையே துயிலப் பெற்றும் நடுங்கல் உடையவராய் ஆனீர், தொழுது காண் பிறையின் தோன்றி – மக்கள் தொழுது காணும் பிறையைப் போல் தோன்றி (பிறையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), யாம் நுமக்கு அரியம் ஆகிய காலை – களவுக் காலத்தில் நுமக்குக் காண்பதற்கு அரியேம் ஆகிய வேளையில், பெரிய நோன்றனிர் – பெரிதும் வருத்தங்களை நீவிர் பொறுத்தீர், நோகோ யானே – நான் வருந்துகின்றேன் (நோகோ – நோகு, ஓகாரம் அசை, யானே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 179, குட்டுவன் கண்ணனார்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கல்லென் கானத்துக் கடமா ஆட்டி,
எல்லும் எல்லின்று, ஞமலியும் இளைத்தன,
செல்லல் ஐஇய, உது எம் ஊரே,
ஓங்கு வரை அடுக்கத்துத் தீந்தேன் கிழித்த,
குவை உடைப் பசும் கழை தின்ற கயவாய்ப்  5
பேதை யானை சுவைத்த,
கூழை மூங்கில் குவட்டு இடை அதுவே.

பாடல் பின்னணி:  பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது.

பொருளுரை:  ஐயா! ‘கல்’ என்னும் ஆரவாரத்தையுடைய காட்டில், கடமாவை விரட்டித் துன்புறுத்தி உன்னுடைய வேட்டை நாய்களும் இளைத்துவிட்டன.  பகற்பொழுதும் கழிந்து இப்பொழுது இருட்டி விட்டது.  உன்னுடைய ஊர்க்கு நீ இந்த வேளையில் செல்லாதே!

உயர்ந்த மலைப் பக்கத்தில் இனிய தேன் கூடுகளைக் கிழித்த, கூட்டமாக வளர்ந்துள்ள, பசுமையான மூங்கிலைப் பெரிய வாயையுடைய பேதமையுடைய யானை தின்றதால் கூழையாகிய மூங்கிலையுடைய மலை உச்சியின் இடையே உள்ளது எங்கள் ஊர்.  எங்கள் ஊரில் தங்குவாயாக.

குறிப்பு:  வரைவு கடாயது.  அதுவே – ஏகாரம் அசைநிலை.  உ. வே. சாமிநாதையர் உரை – சொல்லல் என்றும் உது எம் ஊர் என்றும் கூறியதால், நீ போகாமல் எம்முடன் வந்து இரவில் தங்கிச் செல்வாயாக என்றாளாயிற்று.  இதனால் இடையறாது உடனுறைய வேண்டுமானால் தம் விருப்பத்தை உணர்த்தி, அங்ஙனம் இருத்தற்கு ஏற்ற நிலை வரைந்துகொண்டு இல்லறம் நடத்தலே என்பதை உய்த்துணர வைத்தாள்.

சொற்பொருள்:  கல்லென் கானத்து – கல் என்னும் ஆரவாரத்தையுடைய காட்டில், கடமா ஆட்டி, கடமாவை விரட்டித் துன்புறுத்தி, எல்லும் எல்லின்று – பகற்பொழுதும் இருட்டி விட்டது, ஞமலியும் இளைத்தன – வேட்டை நாய்களும் இளைத்தன, செல்லல் – உன் ஊர்க்கு செல்லாதே, ஐஇய – ஐயா (அளபெடை), உது எம் ஊரே – அங்கு இருப்பது எங்கள் ஊர், ஓங்கு வரை அடுக்கத்து – உயர்ந்த மலைப் பக்கத்தில், தீந்தேன் கிழித்த – இனிய தேன் கூடுகளைக் கிழித்த, குவை உடைப் பசும் கழை தின்ற –  மலை உச்சியில் உள்ள கூட்டமாக வளர்ந்துள்ள பசுமையான மூங்கிலைத் தின்ற, கயவாய்ப் பேதை யானை – பெரிய வாயையுடைய பேதமையுடைய யானை, சுவைத்த கூழை மூங்கில் – தின்றதால் கூழையாகிய மூங்கில், குவட்டு இடை அதுவே – உச்சியின் இடையே உள்ளது

குறுந்தொகை 180, கச்சிப்பேட்டு நன்னாகையார்பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பழூஉப்பல் அன்ன பரு உகிர்ப் பா அடி
இருங்களிறு இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து
எய்தினர் கொல்லோ பொருளே, அல்குல்  5
அவ்வரி வாடத் துறந்தோர்
வன்பராக, தாம் சென்ற நாட்டே?

பாடல் பின்னணி:  பொருள்வயின் தலைவன் பிரிந்தானாக, ஆற்றாமை மிக்க தலைவியை ‘ வினை முற்றியபின் அவர் வருவார்.  நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என வற்புறுத்தியது.

பொருளுரை:  உன் அல்குலில் அழகிய தேமல் வாடும்படி சென்ற நம் தலைவர், பேயின் பற்களைப் போன்று பருத்த நகங்களை உடைய படர்ந்த காலடிகளை உடைய பெரிய களிற்று யானைத் திரளின் வரிசையினது தலைவன் வந்ததால் அழிந்து பாத்தியில் வீழ்ந்த கரும்புகளின் கணுக்களின் இடையே உள்ள பகுதியைப் போன்ற வருந்துதலை உடைய ஒற்றை மூங்கில் ஓங்கிய பாலை நிலத்தைக் கடந்து, வன்னெஞ்சினராக, தாம் சென்ற நாட்டிடத்து எண்ணிச் சென்ற பொருளை ஈட்டினாரோ?

குறிப்பு:  கரும்பின் கண் இடை அன்ன (3) – கரும்பின் கணுக்களின் இடையே உள்ள பகுதியைப் போன்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரும்புகளின் இடையே மாயாது நின்ற ஒற்றைக் கரும்பு போல, இடை ஆகுபெயர், கண் ஏழாவதானுருபு, தமிழண்ணல் உரை – கரும்பின் இரு கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதியைப் போன்று.   பைதல் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – வருந்துதலுடைய, இரா. இராகவையங்கார் உரை – வருந்திய.  இரா. இராகவையங்கார் உரை – களிற்று இன நிரையிற் தப்பி ஒரு கழை நீடியது போல அவ்வரி வாடத் துறந்தோர் இடையூறுகளிற் தப்பிப் பொருள் எய்தி நீடுதல் குறித்தாள்.

சொற்பொருள்:  பழூஉப்பல் அன்ன – பேயின் பற்களைப் போன்று (பழூஉப்பல் – அளபெடை), பரு உகிர்ப் பா அடி இருங்களிறு – பருத்த நகங்களை உடைய படர்ந்த காலடிகளை உடைய பெரிய ஆண் யானை, இன நிரை ஏந்தல் வரின் – பெரிய திரளின் வரிசையின் தலைவன் வந்தால், மாய்ந்து – அழிந்து, அறை மடி கரும்பின் – பாத்தியில் வீழ்ந்த கரும்புகளின், கண் இடை அன்ன – கணுக்களின் இடையே உள்ள பகுதியைப் போன்ற, பைதல் ஒரு கழை – வருந்திய ஒற்றை மூங்கில், நீடிய – ஓங்கிய, சுரன் இறந்து – பாலை நிலத்தைக் கடந்து, எய்தினர் கொல்லோ பொருளே – எண்ணிச் சென்ற பொருளை ஈட்டினாரோ (கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை), அல்குல் அவ்வரி வாடத் துறந்தோர் – அல்குலில் அழகிய தேமல் வாடும்படி சென்ற நம் தலைவர், வன்பராக – வன்னெஞ்சினராக, தாம் சென்ற நாட்டே – தாம் சென்ற நாட்டில் (நாட்டே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 181, கிள்ளிமங்கலம் கிழார்மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இது மற்று எவனோ தோழி, துனி இடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி,
இரு மருப்பு எருமை ஈன்ற அணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாஅல் பைம்பயிர் ஆரும் ஊரன்,  5
திரு மனைப் பல கடம் பூண்ட
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே?

பாடல் பின்னணி:  தலைவன் பரத்தையிற் பிரிந்த பொழுது, அவனைப் பழித்து பேசிய தோழியைக் கடிந்து கூறியது.

பொருளுரை:  தோழி! பெரிய கொம்பையுடைய அண்மையில் ஈன்ற பெண் எருமை, உழவனால் கட்டப்பட்ட தன் கன்றின் அருகிலிருந்து விலகாது, பக்கத்தில் உள்ள பசிய பயிர்களை மேயும் இடமாகிய ஊரின் தலைவனின், செல்வ மனைக்குரிய கடமைகளை மேற்கொண்ட பெரிய முதிய பெண்டிராகிய நமக்குப் புலவி காலத்தில், தலைவர் இத்தன்மை உடையவர் என்னும் இனிமை இல்லாத கூற்றாகிய இதனால் என்ன பயன்?

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – எருமை கட்டப்பட்ட தன் குழவியினின்றும் அகலாமல் அருகிலே உள்ள பயிரை ஆரும் ஊரன் என்றது, தலைவன் இல்லின்கண் உறையும் தலைவிபாற் கொண்ட அன்பு குறையாமல் தனக்கு வேண்டிய இன்பத்தை அருகில் உள்ளார்பாற் பெறுகின்றான் என்னும் குறிப்பை புலப்படுத்துவது.  இது (1) – உ. வே. சாமிநாதையர் உரை – செய்யுளாகலின் சுட்டு முன் வந்தது.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – அணிமையில் மகப்பெற்ற நாமும், அம்மகவு தங்கிய மனையைவிட்டு அகலாது அவன் தந்தவற்றை விரும்பி நுகர்ந்து தங்கல் வேண்டுமென உள்ளுறை முகத்தான் இயற்பட மொழிந்தாளாம்.  காரான் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார் ஆன், பெண்மை சுட்டிய பெயராகலின் எருமைக் காரான் என்றாள்.  பெற்றமும் எருமையும் மரையும் ஆவே (தொல்காப்பியம், மரபியல் 60).  ஆன் – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – னகர மெய் சாரியை.  குழவி – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).

சொற்பொருள்:  இது மற்று எவனோ தோழி – இதனால் பயன் என்ன தோழி (எவனோ – ஓகாரம் அசைநிலை), துனி இடை – புலவி காலத்தில், ஊடல் காலத்தில், இன்னர் என்னும் இன்னாக் கிளவி – தலைவர் இத்தன்மை உடையவர் என்னும் இனிமை இல்லாத கூற்று, இரு மருப்பு எருமை – பெரிய கொம்பையுடைய எருமை, ஈன்ற அணிக் காரான் – ஈன்ற அணிமை உடைய பெண் எருமை, உழவன் யாத்த குழவியின் அகலாது – உழவனால் கட்டப்பட்ட கன்றின் அருகிலிருந்து விலகாது, பாஅல் பைம்பயிர் ஆரும் – பக்கத்தில் உள்ள பசிய பயிர்களை உண்ணும் (பாஅல் – அளபெடை), ஊரன் – மருத நிலத் தலைவன், திரு மனைப் பல கடம் பூண்ட – செல்வ மனைக்குரிய கடமைகளை மேற்கொண்ட, பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே – பெரிய முதிய பெண்டிராகிய நமக்கு (நமக்கே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 182, மடல் பாடிய மாதங்கீரனார்குறிஞ்சித் திணை  – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னதுதோழி கேட்கும்படியாக

விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்
மணி அணி பெருந்தார் மரபின் பூட்டி,
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி,
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ,  5
கலிழ்ந்து அவிர் அசை நடைப் பேதை
மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே?

பாடல் பின்னணி:  தன்னுடைய குறையைத் தோழி மறுத்ததால், “தலைவியும் இரங்கவில்லை.  தோழியும் உடன்படவில்லை.  ஆகவே நான் மடல் ஏறுவேன்” என்று தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது.

பொருளுரை:  அழகுடன் விளங்கும் அசைந்த நடையையுடைய தலைவி என்மாட்டு நெஞ்சம் நெகிழவில்லை.  நான் அவளிடம் விடுவதற்கு ஏற்ற தூது, சிறந்த உச்சியையுடைய பனையின் முதிர்ந்த மடலால் செய்த குதிரைக்கு மணிகள் அணிந்த பெரிய மாலையைச் சூட்டி, வெள்ளை எலும்பினால் செய்த மாலையை நான் அணிந்து கொண்டு, பிறர் இகழும்படி அந்த மடல் குதிரையின் மேல் ஏறி ஒரு நாளில் என் நாணத்தை விட்டு விட்டுத் தெருவில் செல்வது தான்.  அவ்வாறு சென்றால் நான் அவளை அடைய முடியுமா?

குறிப்பு:  கொல்லோ – ஓகாரம் அசை நிலை, தூதே – ஏகாரம் அசை நிலை.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

சொற்பொருள்:  விழுத்தலைப் பெண்ணை – சிறந்த உச்சியையுடைய பனை, விளையல் மா மடல் – முதிர்ந்த பெரிய மடலால் செய்த குதிரை, மணி அணி பெருந்தார் – மணிகள் அணிந்த பெரிய மாலை, மரபின் பூட்டி – முறைப்படி அணிந்து, வெள் என்பு அணிந்து – வெள்ளை எலும்பை (மாலையை) அணிந்து, பிறர் எள்ள – பிறர் இகழ, தோன்றி – தோன்றி, ஒரு நாள் மருங்கில் – ஒரு நாளில், பெரு நாண் நீக்கி – பெரிய நாணத்தை விட்டு விட்டு, தெருவின் இயலவும் தருவது கொல்லோ – தெருவின் கண் செல்லவும் தருவதோ, கலிழ்ந்து அவிர் அசை நடைப் பேதை – அழகு ஒழுகும் விளங்கும் அசைந்த நடையையுடைய தலைவி, மெலிந்திலள் – நெஞ்சம் நெகிழ்ந்து இலள், நாம் விடற்கு அமைந்த தூதே – நாம் அவளிடம் விடுதற்கு அமைந்த தூது

குறுந்தொகை 183, ஔவையார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சென்ற நாட்ட கொன்றையம் பசு வீ
நம் போல் பசக்குங்காலைத் தம் போல்
சிறுதலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு
இரலை மானையும் காண்பர் கொல், நமரே
புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை  5
மென் மயில் எருத்தின் தோன்றும்,
கான வைப்பின் புன்புலத்தானே?

பாடல் பின்னணி:  கார்ப்பருவம் வரவும் தலைவன் வராமையால் தலைவி ஆற்றாளென்று வருந்திய தோழியிடம், தலைவி, கார்காலத்தின் அடையாளங்களைக் கண்டு அவர் என்னை நினைந்து வருவார்’ எனக் கூறியது.

பொருளுரை:  மழை பொழிவதற்கு முன் பொலிவு இல்லாது இருந்த காயா மலர்கள் பொருந்திய பெரிய மரக்கிளை மழை விழுந்த பின் மென்மையான மயிலின் கழுத்தைப் போன்று தோன்றும் பொலிவு இல்லாத நிலத்திற்கு எம்மைப் பிரிந்து தலைவர் சென்று தங்கிய நாட்டில் உள்ள கொன்றையின் அழகிய செவ்வி மலர்கள், நம்மைப் போல் பசலை அடையும் கார்காலத்தில், சிறிய தலையை உடைய பெண் மானிடமிருந்து நீங்கிய நெறிந்த கொம்பையுடைய ஆண் மானை நம் தலைவர் காண்பாரா?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார்ப் பருவத்தின் முன்னர்ச் சென்ற முதுவேனிலின் வெம்மையால் உலர்ந்த புற்கென்ற காயா, இப்போது மயில் எருத்துப் போல மலர்ந்தன என்பாள் ‘புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை’.  பிணையின் தீர்ந்த (3) – கார் காலத்தே புன்புல வைப்பிற் புல் அருந்தி ஆணும் பெண்ணுமாகத் துள்ளியாடும் இணைமானைக் காண்பரன்றி பிணைப் பிரிந்த மானைக் காணல் இயலாதாகலின், ‘காண்பர் கொல்’ என்பர், காணமாட்டார் என்னும் பொருள் பயந்து, இணைமானையே காண்பர், காணுங்கால் நம்மை நினைத்து மீள்வர் என்னும் குறிப்புப் பொருளையும் தந்து நின்றது.

சொற்பொருள்:  சென்ற நாட்ட – பிரிந்து சென்று தங்கிய நாட்டில், கொன்றை அம் பசு வீ – கொன்றையின் அழகிய செவ்வி மலர்கள், நம் போல் பசக்குங்காலை – நம்மைப் போல் பசலை அடையும் காலத்தில், தம் போல் சிறுதலைப் பிணையின் தீர்ந்த – சிறிய தலையை உடைய பெண் மானிடமிருந்து நீங்கிய, நெறி கோட்டு இரலை மானையும் – நெறிந்த கொம்பையுடைய ஆண் மான் (நெறி கோட்டு – வினைத்தொகை), காண்பர் கொல் – காண்பாரா (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), நமரே – நம் தலைவர், புல்லென் – புல்லிய நிலத்தில், பொலிவு இல்லாத நிலத்தில், காயாப் பூக்கெழு பெருஞ்சினை மென் மயில் எருத்தின் தோன்றும் – காயா மலர்கள் நிறைந்த பெரிய மரக்கிளை மென்மையான மயிலின் கழுத்தைப் போன்று மழை விழுந்த பின் தோன்றும் (எருத்தின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), கான வைப்பின் புன்புலத்தானே – காட்டில் உள்ள புல்லிய நிலத்தில் (புன்புலத்தானே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 184, ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்நெய்தற் திணைதலைவன் தோழனிடம் சொன்னது
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே
இதற்கு இது மாண்டது என்னாது அதன் பட்டு
ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம்
மயில் கண் அன்ன மாண் முடிப் பாவை  5
நுண் வலைப் பரதவர் மடமகள்
கண் வலைப்படூஉம் கானலானே.

பாடல் பின்னணி:  தன்னை இடித்துரைத்த நண்பனிடம் தலைவன் கூறியது.

பொருளுரை:  மயிலின் பீலிக் கண்ணைப் போன்ற மாட்சிமைபொருந்திய கூந்தலையுடைய, பொம்மையைப் போன்ற, நுண்ணிய வலை பரதவரின் இள மகளின் கண் வலையில் அங்குச் செல்பவர்கள் அகப்படுகின்ற கடற்கரைச் சோலையில், என்னுடைய மாண்பு மிக்க நெஞ்சம் இப்பொருளுக்கு இப்பொருள் ஏற்ற மாட்சியை உடையது என்று ஆராயாது, அகப்பட்டு அவ்விடத்தில் தங்கிவிட்டது.  தாம் கண்டதை மறைத்துப் பொய்  சொல்லுதல் அறிவுடையவர்களுக்கு இல்லை.  நான் கூறுவதை உண்மையாகக் கொள்ளுங்கள்.  அவளுடைய சிற்றூருக்குச் செல்வதைத் தவிருங்கள்.

குறிப்பு:  செலவே – ஏகாரம் அசை நிலை, ஒழிந்தன்றே – ஏகாரம் அசை நிலை, கானலானே – ஏகாரம் அசை நிலை, ஓம்புமின் (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி).  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாண்தகை நெஞ்சம் என்றான், அவளைக் காணுமுன்பெல்லாம் ‘தக்க இன்ன தகாதன இன்ன’ என்று ஆராயும் மாண்புடைய நெஞ்சமே யானும் உடையேன்.  நுண் வலை (6) – உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுண்ணிய நூலாயான வலை.

சொற்பொருள்:  அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை – தாம் கண்டதை மறைத்துப் பொய் சொல்லுதல் அறிவுடையவர்களுக்கு இல்லை, குறுகல் – அருகில் செல்லுதல், ஓம்புமின் – பாதுகாத்துக் கொள்ளுங்கள், சிறுகுடிச் செலவே – சிற்றூருக்குச் செல்லுதல், இதற்கிது மாண்டது – இப்பொருளுக்கு இப்பொருள் ஏற்ற மாட்சியை உடையது, என்னாது – ஆராயாது, அதன் பட்டு – அந்த வலையில் பட்டு, ஆண்டு ஒழிந்தன்றே – அவ்விடத்தில் தங்கியது, மாண் தகை நெஞ்சம் – என்னுடைய மாட்சிமையையுடைய நெஞ்சம், மயில் கண் அன்ன – மயிலின் தோகையில் உள்ள கண்ணைப் போல, மாண் முடிப் பாவை – மாட்சிமையுடைய முடியையுடைய பாவை போல்வாளாகிய பெண், மாட்சிமையுடைய முடியையுடைய பொம்மையைப் போன்ற பெண் (பாவை – பொம்மை, சிலை), நுண் வலை – நுண்ணிய வலை, பரதவர் மடமகள் – பரதவரின் இளமகள், கண் வலைப்படூஉம் – கண் வலையில் அகப்படுகின்ற (வலைப்படூஉம் – அளபெடை), கானலானே – கடற்கரைச் சோலையில்

குறுந்தொகை 185, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
‘நுதல் பசப்பு இவர்ந்து, திதலை வாடி,
நெடு மென் பணைத்தோள் சாஅய்த், தொடி நெகிழ்ந்து,
இன்னள் ஆகுதல், நும்மின் ஆகும்’ எனச்
சொல்லின் எவனாம் தோழி, பல் வரிப்
பாம்பு பை அவிந்தது போலக் கூம்பிக்  5
கொண்டலின் தொலைந்த ஒண் செங்காந்தள்
கல் மிசைக் கவியும் நாடற்கு, என்
நல் மா மேனி அழிபடர் நிலையே?

பாடல் பின்னணி:  தலைவன் இருளில் ஏதம் மிக்க வழியில் வருவதை அஞ்சி உடல் மெலிந்த தலைவியைத் தோழி ‘ஏன் வருந்துகின்றாய்?’ என வினவ, ‘நான் வேறுபட்டது எதனால் என்று அவனிடம் கூறு’ என்று தலைவி உரைத்தது.

பொருளுரை தோழி! பல வரிகளையுடைய பாம்பின் படம் ஒடுங்கியதைப் போல் குவிந்து கீழ்க்காற்றினால் வீழ்த்தப்பட்ட ஒளியுடைய செங்காந்தள் மலர்கள் பாறைகளின் மேல் கவிந்து கிடக்கும் நாடனிடம், என்னுடைய நெற்றியில் பசலை படர்ந்தது, உடலில் உள்ள தேமல் ஒளி இழந்தது, நெடிய மெல்லிய மூங்கிலை ஒத்த தோள்கள் மெலிந்தன, வளையல்கள் நெகிழ்ந்தன, நல்ல மாந்தளிர் நிற மேனி மிக்கத் துயரத்தை உடைய நிலைமையை அடைந்தது. இவள் இத்தகைய வேறுபாட்டை உடையவள் ஆகுதல் உன்னால் ஆனது, எனக் கூறினால் என்ன குற்றம் ஆகும்?

குறிப்பு:  இரா. இராகவையங்கார் உரை – கொண்டலிற் கூம்பித் தொலைந்த காந்தள் என்றது இரவுக்குறி வந்து ஒழுகா நின்ற நிலையில் அதனாலே வாடும் தன்னைக் குறித்ததாம். அழிபடர் நிலை வாடிய பின்னை நிலைக்கும் கொள்க.  ஈண்டு பாம்பு பையவிதல் தோழியின் வாட்டமாக நினையலாம்.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மாரியால் விளக்கமற்ற காந்தள் மலையிற் கவிந்து தங்கினாற்போல், நாடன் களவிடைக் கூட்டத்தால், வாட்டமடைந்த யான் நின்னைப் பற்றுக்கோடாக் கொண்டு உயிர் வாழ்கின்றேன் என்பதாம்.

சொற்பொருள்:  நுதல் பசப்பு இவர்ந்து – நெற்றியில் பசலை படர்ந்து, திதலை வாடி – தேமல் ஒளி இழந்து, நெடு மென் பணைத்தோள் சாஅய் – நெடிய மெல்லிய பருத்த தோள் மெலிந்து (சாஅய் – அளபெடை), நெடிய மெல்லிய மூங்கிலை ஒத்த தோள் மெலிந்து, தொடி நெகிழ்ந்து – வளையல்கள் நெகிழ, இன்னள் ஆகுதல் – இத்தகைய வேறுபாட்டை உடையவள் ஆகுதல், நும்மின் ஆகும் எனச் சொல்லின் எவனாம் – உன்னால் ஆனது எனக் கூறினால் என்ன குற்றம் ஆகும், தோழி – தோழி, பல் வரிப் பாம்பு பை அவிந்தது போலக் கூம்பி – பல வரிகளையுடைய பாம்பின் படம் ஒடுங்கியதைப் போல் குவிந்து, கொண்டலின் தொலைந்த ஒண் செங்காந்தள் கல் மிசைக் கவியும் நாடற்கு – கீழ்க்காற்றினால் வீழ்த்தப்பட்ட ஒளியுடைய செங்காந்தள் மலர்கள் பாறைகளின் மேல் கவிந்து கிடக்கும் நாடனுக்கு, என் நல் மா மேனி – என்னுடைய நல்ல மாமை நிற மேனி, என்னுடைய நல்ல மாந்தளிர் நிற மேனி, அழிபடர் நிலையே – மிக்க துயரத்தை உடைய நிலைமை (நிலையே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 186, ஒக்கூர் மாசாத்தியார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த, முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்,
துயில் துறந்தனவால் தோழி, என் கண்ணே.

பாடல் பின்னணி:  பருவங் கண்டு தலைவி கூறியது.

பொருளுரை:   ஆரவாரத்தையுடைய இடியுடன் மேகம் மழைபெய்து கலந்த முல்லை நிலத்தில் உள்ள மென்மையான முல்லைக் கொடிகள் பற்களைப் போன்று அரும்பும் நாடனுக்காக, என் கண்கள் உறக்கத்தைக் கைவிட்டன.

குறிப்பு:  தலைமணந்த – தலை அசை நிலை, துறந்தனவால் – ஆல் அசைநிலை, கண்ணே – ஏகாரம் அசைநிலை.  பற்களைப் போன்ற அரும்பு:  குறுந்தொகை 126 – முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக, குறுந்தொகை 162 – சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை, குறுந்தொகை 186 – முல்லை மென் கொடி எயிறு என முகையும், நற்றிணை 316 – மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் என.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

சொற்பொருள்:  ஆர்கலி ஏற்றொடு – ஆரவாரத்தையுடைய இடியுடன், கார் தலைமணந்த – மேகம் மழை பெய்து கலந்த, கொல்லைப் புனத்த – முல்லை நிலத்தில் உள்ள, முல்லை மென் கொடி எயிறு என முகையும் நாடற்கு – மென்மையான முல்லைக் கொடிகள் பற்களைப் போன்று அரும்பும் நாடனுக்கு, துயில் துறந்தனவால் தோழி, என் கண்ணே – உறக்கத்தை ஒழிந்த தோழி என்னுடைய கண்கள்

குறுந்தொகை 187, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
செவ்வரைச் சேக்கை வருடை மான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்திப்
பெருவரை நீழல் உகளும் நாடன்,
கல்லினும் வலியன் தோழி,
வலியன் என்னாது, மெலியும் என் நெஞ்சே.  5

பாடல் பின்னணி:  வரைப்பொருட்குப் பிரிந்த தலைவன் நீட்டித்ததால் அவனைக் குறைக் கூறிப் பழித்தாள் தோழி.  தலைவி அவள் கூற்றை மறுத்துத் தலைவனைப் புகழ்ந்தது.

பொருளுரை:   செங்குத்தான மலையில் உறையும் வருடை மானின் குட்டி தன் தாயின் மடியிலிருந்து ஒழுகும் பாலை நிரம்பப் பருகி, பெரிய மலைப்பக்கத்தில் உள்ள நிழலில் துள்ளும் நாட்டையுடைய தலைவன், கல்லைக் காட்டிலும் வலிமையுடையவன் தோழி! அவன் வன்மையுடையவன் என்று கருதாமல் அவன்பொருட்டு மெலிகின்றது என்னுடைய நெஞ்சம்.

குறிப்பு:   உ. வே. சாமிநாதையர் உரை – வருடையின் மறி பாலை ஆர மாந்தி வரை நிழலில் உகளும் நாடன் என்றது, தலைவன் வரைதற்குரிய பொருள் நிரம்பப் பெற்று ஈண்டு வந்து வரைந்து கொண்டு இல்லறம் நடத்துவான் என்ற குறிப்பையுடையது.  நீழல் – நிழல் என்பதன் விகாரம்.  நெஞ்சே – ஏகாரம் அசைநிலை.  மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

சொற்பொருள்:  செவ்வரைச் சேக்கை – செம்மையான மலையில் உறையும், செங்குத்தான மலையில் உறையும், அழகான மலையில் உறையும், வருடை மான் மறி – வருடை மானின் குட்டி, சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி – தாயின் மடியிலிருந்து ஒழுகும் பாலை நிரம்பப் பருகி, பெருவரை நீழல் உகளும் நாடன் – பெரிய மலைப்பக்கத்தில் உள்ள நிழலில் துள்ளும் நாட்டையுடைய தலைவன், கல்லினும் வலியன் தோழி – கல்லைக் காட்டிலும் வலிமையுடையவன் தோழி, வலியன் என்னாது, மெலியும் என் நெஞ்சே – அவன் வன்மையுடையவன் என்று கருதாமல் அவனுக்காக மெலியும் என்னுடைய நெஞ்சம்

குறுந்தொகை 188, மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார்முல்லைத் திணை – தலைவி சொன்னது
முகை முற்றினவே, முல்லை முல்லையொடு
தகை முற்றினவே தண் கார் வியன் புனம்,
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்,
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே.

பாடல் பின்னணி:  பருவங் கண்டு தலைவி கூறியது.

பொருளுரை:  முல்லைக் கொடிகளில் அரும்புகள் முதிர்ந்தன.  குளிர்ந்த கார்காலத்தை ஏற்ற அகன்ற முல்லை நிலங்கள் முல்லை மலர்களுடன் அழகு நிரம்பப் பெற்றன. என்னுடைய தூய அணிகலன்களை நெகிழச் செய்த என் தலைவர் இன்னும் வரவில்லை. ஆனால் மாலை நேரம் வந்துள்ளது, என்னுடைய மாட்சிமையுடைய அழகைக் கெடுக்க எண்ணி.

குறிப்பு:  முற்றினவே – ஏகாரம் அசை நிலை, குறித்தே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  முகை முற்றினவே முல்லை – முல்லைக் கொடிகளில் அரும்புகள் முதிர்ந்தன, முல்லையொடு தகை முற்றினவே – முல்லை மலர்களுடன் அழகு நிரம்பப் பெற்றன, தண் கார் – குளிர்ந்த கார்காலம், வியன் புனம் – அகன்ற இடம், வால் இழை நெகிழ்த்தோர் – என்னுடைய தூய அணிகலன்களை நெகிழச் செய்தவர், வாரார் – இன்னும் வரவில்லை, மாலை வந்தன்று – மாலை நேரம் வந்தது, என் மாண் நலம் குறித்தே – என்னுடைய மாட்சிமையுடைய அழகைக் கெடுக்க எண்ணி

குறுந்தொகை 189, மதுரை ஈழத்துப் பூதன்தேவனார்முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
இன்றே சென்று, வருவது நாளைக்
குன்று இழி அருவியின் வெண்தேர் முடுக,
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்பக்
கால் இயல் செலவின், மாலை எய்திச்  5
சில் நிரை வால் வளைக் குறுமகள்
பன் மாண் ஆகம் மணந்து உவக்குவம்மே.

பாடல் பின்னணி:  அரசனால் வினையின்கண் ஏவப்பட்ட தலைவன், தன் தேர்ப்பாகனை நோக்கிக் கூறியது.

பொருளுரை வினையின் பொருட்டு இன்று சென்று நாளை மீண்டும் வருவோம். மலையிலிருந்து விழும் அருவியைப் போல் வெள்ளைத் தேர் விரைந்து செல்ல, இளம்பிறையைப் போன்ற விளங்குகின்ற ஒளியையுடைய தேரின் சக்கரம் வானிலிருந்து விழும் கொள்ளியைப்போல் பசிய பயிர்களை அழிக்கக் காற்றை ஒத்த இயலப்பையுடைய வேகத்தினால், மாலையில் தலைவி இருக்கும் இடத்தை அடைந்து, சிலவாகிய வரிசையுடைய வெள்ளை வளையல்களை அணிந்த தலைவியின் பலவாக மாட்சிமையுடைய மார்பை அணைத்து யாம் மகிழ்வோம்.

குறிப்பு:  அகநானூறு 254 – நெடுந்தேர் ஆழி உறுப்ப நுண் கொடி மின்னின் பைம்பயிர் துமிய.  உ. வே. சாமிநாதையர் உரை – நேமி போகும்பொழுது மண்ணில் புதைந்த பகுதி போக எஞ்சிய பகுதியே வெளியில் தெரியுமாதலின் அப்பகுதிக்குப் பிறை உவமையாயிற்று.  விசும்பினின்றும் வீழும் கொள்ளியினால் பயிர் துமிர்தலைப் போல நேமியால் துமிந்தது.  வெண்தேர் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெள்ளிய தேர், உ. வே. சாமிநாதையர் உரை – யானை தந்தத்தால் செய்த வெள்ளிய தேர், தமிழண்ணல் உரை – தந்தத்தால் செய்த நம் வெண்மை நிறத்தேர் , இரா. இராகவையங்கார் உரை – வெண்பொற்றகடுகள் பதித்த தேர்.  பொலம்படைப் பொழிந்த வெண்சுடர் (குறுந்தொகை 205) என்பது காண்க.  வால் வளைக் (6) – உ. வே. சாமிநாதையர் உரை – சங்கினால் செய்த வளையல்.

சொற்பொருள்:  இன்றே சென்று – வினையின் பொருட்டு இன்று சென்று (இன்றே – ஏகாரம் அசைநிலை), வருவது நாளை – நாளை மீண்டும் வருவோம், குன்று இழி அருவியின் – மலையிலிருந்து விழும் அருவியைப் போல், வெண்தேர் முடுக – வெள்ளைத் தேர் விரைந்து செல்ல, இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி – இளம்பிறையைப் போன்ற விளங்குகின்ற ஒளியையுடைய தேரின் சக்கரம், விசும்பு வீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்ப – வானிலிருந்து விழும் கொள்ளியைப்போல் பசிய பயிர்களை அழிக்க (கொள்ளியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), கால் இயல் செலவின் – காற்றை ஒத்த இயலப்பையுடைய வேகத்தினால், மாலை எய்தி – மாலையில் தலைவி இருக்கும் இடத்தை அடைந்து, சில் நிரை வால் வளைக் குறுமகள் – சிலவாகிய வரிசையுடைய வெள்ளை வளையல்களை அணிந்த தலைவி, பன் மாண் ஆகம் மணந்து உவக்குவம்மே – பலவாக மாட்சிமையுடைய மார்பை அணைத்து யாம் மகிழ்வோம் (உவக்குவம்மே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 190, பூதம்புல்லனார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நெறி இருங்கதுப்பொடு பெருந்தோள் நீவிச்
செறி வளை நெகிழச் செய் பொருட்கு அகன்றோர்,
அறிவர் கொல், வாழி தோழி, பொறி வரி
வெஞ்சின அரவின் பைந்தலை துமிய
உரவுரும் உரறும் அரை இருள் நடுநாள்,  5
நல் ஏறு இயங்குதொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள் ஈட்டும் பொருட்டுப் பிரிந்த காலத்தில் ஆற்றாளாகிய தலைவி தோழிக்குச் சொல்லியது.

பொருளுரை தோழி! நீடு வாழ்வாயாக! நெளிவை உடைய என் கரிய கூந்தலுடன், என் பெரிய தோள்களைத் தடவி என்னைத் தேற்றிவிட்டு, இறுக்கமாக இருந்த என் வளையல்கள் நெகிழும்படி பொருள் ஈட்டுவதற்கு என்னைப் பிரிந்து சென்ற நம் தலைவர், புள்ளிகளையும் வரிகளையும் உடைய மிக்கச் சினமுடைய பாம்புகளின் பசிய தலைகள் வெட்டுப்படும்படி இடி முழங்குகின்ற இருள் செறிந்த நடு இரவில், நல்ல காளை ஒன்று அசையும்தோறும் ஒலிக்கின்ற, பல பசுக்கள் இருக்கும் தொழுவத்தில் ஒரு மணியின் குரலை அறிவாரோ?

குறிப்பு:  பைந்தலை (4) – உ. வே. சாமிநாதையர் உரை – பசிய தலை, தமிழண்ணல் உரை – பசுமையான படமுள்ள தலை.  இடி பாம்புகளை வருத்தவும் கொல்லவும் செய்யும் என்னும் செய்தி உள்ள பாடல்கள் – அகநானூறு 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 37, 58, 126, 211, 366 and 369.  இயங்குதொறு – குறுந்தொகை 279 – திரி மருப்பு எருமை இருள் நிறம் மை ஆன் வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி புலம்புகொள் யாமத்து இயங்குதொறும் இசைக்கும்.  அரை இருள் நடுநாள் (5) – இரா. இராகவையங்கார் உரை – அரை நாள் நடு இரவு என்றது ஒரு நாள் பாதியாகிய இருட்போதின் நடுவண் என்றவாறு.  ‘பானாள் இரவில்’ (கலித்தொகை 90) என்புழி “ஒரு நாளில் பாதியாகிய இராப்பொழுதிலே” என நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க.  ‘நள்ளென் யாமத்து …… பானாள் இரவின்’ என வரும் (அகநானூறு 328).

சொற்பொருள்:  நெறி இருங்கதுப்பொடு – நெளிவை உடைய கரிய கூந்தலுடன், பெருந்தோள் நீவி – பெரிய தோள்களைத் தடவி,  செறி வளை நெகிழச் செய் பொருட்கு அகன்றோர் – இறுக்கமாக இருந்த வளையல்கள் நெகிழும்படி பொருள் ஈட்டுவதற்கு அகன்றவர், அறிவர் கொல் – அறிவாரோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, பொறி வரி வெஞ்சின அரவின் பைந்தலை துமிய உரவுரும் உரறும் – புள்ளிகளையும் வரிகளையும் உடைய மிக்கச் சினமுடைய பாம்புகளின் பசிய தலைகள் வெட்டுப்படும்படி இடி முழங்குகின்ற, அரை இருள் நடுநாள் – இருள் செறிந்த நடு இரவில், நல் ஏறு இயங்குதொறு இயம்பும் – நல்ல காளை ஒன்று அசையும்தோறும் ஒலிக்கின்ற, பல் ஆன் தொழுவத்து – பல பசுக்கள் இருக்கும் தொழுவத்தில், ஒரு மணிக் குரலே – ஒரு மணியின் குரல் (குரலே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 191, பாடியவர் பெயர் கிடைக்கவில்லைமுல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உதுக்காண் அதுவே! இது என் மொழிகோ,
நோன் சினை இருந்த இரு தோட்டுப் புள்ளினம்
தாம் புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ளா
தீங்குரல் அகவக் கேட்டு நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின், ‘போதின்  5
பொம்மல் ஓதியும் புனையல்,
எம்மும் தொடாஅல்’ என்குவெம் மன்னே.

பாடல் பின்னணி:  பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குத் தலைவி உரைத்தது.

பொருளுரை இதனை என்னவென்று நான் கூறுவேன்?  வலிய மரக்கிளைகளில் இருந்த பெரிய தொகுதியையுடைய பறவை இனம் தாம் துணையுடன் சேர்ந்தமையால் துணைவரைப் பிரிந்தவருடைய துன்பத்தை எண்ணாதனவாக, இனிய குரலால் அழைப்பதைக் கேட்டும், நம்மைப் பிரிந்த  அயற்தன்மையை உடைய தலைவர் இங்கு வந்தால், “பொங்குதல் உள்ள எம் கூந்தலை மலர்களால் அழகு செய்யாதே, எம்மையும் தொடாதே” எனக் கூறுவேம்.  அங்ஙனம் செய்தலை உவ்விடத்து நீ காண்பாயாக.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – ஏதிலாளர் என்று பன்மையால் கூறியவள் பின் புனையல், தொடாஅலென ஒருமையால் கூறினாள் தன் உள்ளத்தெழுந்த செறல் பற்றி.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  உதுக் காண் – உவ்விடத்து நீ காண்பாயாக (உது – இடைச்சுட்டு), அதுவே – அங்ஙனம் செய்தலை, இது என் மொழிகோ – இதனை என்னவென்று நான் கூறுவேன் (மொழிகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓ – அசைநிலை), நோன் சினை இருந்த இரு தோட்டுப் புள்ளினம் – வலிய மரக்கிளைகளில் இருந்த பெரிய தொகுதியையுடைய (கூட்டத்தையுடைய) பறவை இனம், தாம் புணர்ந்தமையின் – தாம் துணையுடன் சேர்ந்தமையால், பிரிந்தோர் உள்ளா – துணைவரைப் பிரிந்தவருடைய துன்பத்தை எண்ணாதனவாக, தீங்குரல் அகவக் கேட்டு – இனிய குரலால் அழைப்பதைக் கேட்டும், நீங்கிய ஏதிலாளர் – நீங்கிய அயற்தன்மையை உடைய தலைவர், இவண் வரின் – இங்கு வந்தால், போதின் பொம்மல் ஓதியும் புனையல் – மலர்களால் பொங்குதல் உள்ள கூந்தலை அழகு செய்யாதே, எம்மும் தொடாஅல் – எம்மையும் தொடாதே, என்குவெம் – எனக் கூறுவேம், மன்னே (மன் – அசைநிலை, மிகுதிக் குறிப்பு, ஏ – அசைநிலை)

குறுந்தொகை 192, கச்சிப்பேட்டு நன்னாகையார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஈங்கே வருவர் இனையல் அவர் என
அழாஅற்கோ இனியே, நோய் நொந்து உறைவி
மின் இன் தூவி இருங்குயில் பொன்னின்
உரை திகழ் கட்டளை கடுப்ப மாச் சினை
நறும்தாது கொழுதும் பொழுதும்,  5
வறுங்குரல் கூந்தல் தைவருவேனே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்த காலத்தில் ‘நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என்று கூறிய தோழியிடம் தலைவி உரைத்தது.

பொருளுரை “நோயால் வருந்தித் தங்கியிருக்கும் தோழி! வருந்தாதே! தலைவர் இங்கு வருவார்” என நீ கூறுவதானால் இப்பொழுது நான் அழாமல் இருப்பேனா? மின்னுகின்ற இனிய சிறகுகளை உடைய கரிய குயில் பொன்னின் பொடி விளங்குகின்ற பொன் உரசும் உரைகல்லை ஒக்கும்படி மாமரத்தின் கிளையில் நறுமணப் பூந்தாதைக் கோதுகின்ற இளவேனில் பருவத்திலும் அவர் வராததனால் புனையப்படாத என் அடர்ந்த கூந்தலை தடவுவேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – குயிலின் தூவி உரைகல் போன்று மின்னும் என்றது, பூந்தாது படியும் பொழுது குயில் பொன்னிறம் பெறினும் அந்நிறம் அதன் நிறமன்று; அது பறக்கும்போது உதிர்ந்துவிட எப்பொழுதும் கருங்குயிலாதலே இயல்பு.  அதுபோல நினது வன்புறைச் சொற்கள் கேட்கும்பொழுது யான் சிறிது ஆற்றுவேன் போலக் காணப்படுகின்றேன்.  பின்னர் உன் உரை மறைந்துவிட என் நெஞ்சின்கண் இயல்பாயுள்ள துன்பமே வெளிப்படுகின்றது.  யான் அழாது என்ன செய்வேன் என்னும் குறிப்பு.  அழாஅற்கு (2) – உ. வே. சாமிநாதையர் உரை – தன்மை ஒருமை, எதிர்மறை முற்றுவினை, அழுகென்னும் உடம்பாட்டின் எதிர்மறை.  அழேன் என்னும் பொருளது.  ஓகார வினாவுடன் சேர்ந்து அழேனோ என்னும் பொருளாயிற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழாமல் அமைவேனா, தமிழண்ணல் உரை – அழாமல் அமைவேனா.  வறுங்குரல் கூந்தல் (6) – உ. வே. சாமிநாதையர் உரை – புனையப் பெறாமல் உள்ள வறிய கொத்தாகிய கூந்தல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வறிய கொத்தாகிய கூந்தல், இரா. இராகவையங்கார் உரை – குரல் வறிய கூந்தல், குரல் – பூங்கொத்து. ‘கூந்தற் போது குரலணிய’ (அகநானூறு 104) என்ப.

சொற்பொருள்:  ஈங்கே வருவர் – இங்கு வருவார், இனையல் – வருந்தாதே, அவர் – தலைவர், என – என்று, அழாஅற்கோ – நான் அழாமல் இருப்பேனா (ஓகாரம் அசைநிலை), இனியே – இப்பொழுது (ஏகாரம் அசைநிலை), மின் இன் தூவி இருங்குயில் பொன்னின் உரை திகழ் கட்டளை கடுப்ப – மின்னுகின்ற இனிய சிறகுகளை உடைய கரிய குயில் பொன்னின் பொடி விளங்குகின்ற உரைக்கல்லை ஒக்கும்படி, மாச் சினை நறும்தாது கொழுதும் பொழுதும் – மாமரத்தின் கிளையில் நறுமணப் பூந்தாதைக் கோதுகின்ற இளவேனில் பருவத்திலும், வறுங்குரல் கூந்தல் – புனையப்படாத கொத்தாகிய (அடர்ந்த) கூந்தல், , பூங்கொத்து அணியப்படாத கூந்தல், தைவருவேனே – தடவுவேன் (தைவருவேனே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 193, அரிசில் கிழார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மட்டம் பெய்த மணிக் கலத்து அன்ன,
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையின் கறங்கு நாடன்,
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன் மன் நெடுந்தோளே,  5
இன்று முல்லை முகை நாறும்மே.

பாடல் பின்னணி:  தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்ற தோழி, ‘நீ வரையும் நாளளவும் ஆற்றியிருந்தாய்’ என்று பாராட்ட, தலைவி அதற்கான காரணத்தை உரைத்தது.

பொருளுரை கள்ளைப் பெய்த நீலமணி நிறக் குப்பியைப் போன்ற சிறிய வாயையுடைய சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள், கிளிகளை விரட்டும் கருவியான தட்டைப் பறையைப் போன்று ஒலிக்கும் நாடன் கடந்த திங்களில் வளர்பிறை காலத்தில் என் நீண்ட தோள்களைத் தழுவினான்.  இன்றும் என் மேனியில் முல்லை மலரின் மணம் உள்ளது.

குறிப்பு:   தட்டைப் பறை (3) – உ. வே. சாமிநாதையர் உரை – தட்டைப் பறை என்றது தட்டையையே.  தட்டை மகளிர் தினைப் புனத்தில் கிளி முதலியவற்றைக் கடிவதற்குரிய கருவிகளுள் ஒன்று. மூங்கிலைக் கண்ணுக்கு கண் உள்ளதாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை உண்டாக ஒன்றிலே தட்டப்படுவது.  மலைபடுகடாம் 9 – அரிக்குரல் தட்டை.  தட்டை கீழ்க்கண்ட இசைக் கருவிகளுடன் இசைக்கப்படுவதை நாம் மலைகடாம் பாடலில் காணலாம். – முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, தூம்பு, எல்லரி, பதலை.  முல்லை முகை நாறும்மே (6) – உ. வே. சாமிநாதையர் உரை – முல்லையினது மொட்டறா மலரின் மணத்தை என் தோள்கள் வீசா நிற்கும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவனது மேனியின் இயற்கை மணமாகவே முல்லைப் பூவின் மணம் என் தோள்கள் கமழா நிற்கும்.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  மட்டம் பெய்த மணிக் கலத்து அன்ன – கள்ளைப் பெய்த நீலமணி நிறக் குப்பியைப் போன்ற (கலத்து – கலம், அத்து சாரியை), இட்டு வாய்ச் சுனைய – சிறிய வாயையுடைய சுனையில், பகுவாய்த் தேரை – பிளந்த வாயையுடைய தேரைகள், தட்டைப் பறையின் கறங்கு நாடன் – கிளிகளை விரட்டும் கருவியான தட்டைப் பறையைப் போன்று ஒலிக்கும் நாடன் (பறையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின் மணந்தனன்  மன் நெடுந்தோளே – கடந்த திங்களில் வளர்பிறை காலத்தில் என் நீண்ட தோள்களைத் தழுவினான் (மன் – அசைநிலை, மிகுதியை உணர்த்தியது, (நெடுந்தோளே – ஏகாரம் அசைநிலை), இன்று முல்லை முகை நாறும்மே – இன்றும் என் மேனியில் முல்லை மணம் உள்ளது (நாறும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)

குறுந்தொகை 194, கோவர்த்தனார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
என் எனப்படும் கொல் தோழி, மின்னுபு
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ, அதன் எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்
ஏதில கலந்த இரண்டற்கு, என்
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே?  5

பாடல் பின்னணி:  பருவ வரவின்கண் ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குத் தலைவி உரைத்தது.

பொருளுரை மின்னி முகில் எழுந்து இடிக்கும் செயல் ஒன்று மட்டுமா எனக்குத் துன்பம் தருவது? அம்முகிலின் இடிக்கு எதிராகக் காட்டு மயில்கள் விரைவாக ஆரவாரிப்பதும் எனக்குத் துன்பத்தைத் தருகின்றது. இவ்வாறு அயன்மையாகிக் கலந்த இவை இரண்டாலும் என்னுடைய பேதை நெஞ்சம் பெரும் கலக்கத்தை அடைந்து வருந்துகின்றது. என் நெஞ்சின் நிலை எத்தகையது எனச் சொல்லப்படும், தோழி?

குறிப்பு:   இரா. இராகவையங்கார் உரை – ஒரு மாலையிற் சூன்முகில் கண்டு மயில் களித்துக் கூவி ஆடுதல் கண்டு நின்றபொழுது இயற்கைப் புணர்ச்சியிற் கூடியவள் ஆதலான் இவற்றை நட்பாகக் கருத்தியுள்ளவள் தலைவர் இல்லாதபோது தம் குரலால் வருத்தலான் ஏதில கலந்த என்றாள்.

சொற்பொருள்:  என் எனப்படும் கொல் தோழி –  எத்தகையது எனச் சொல்லப்படும் தோழி (கொல் – அசைநிலை), மின்னுபு வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ – மின்னி முகில் எழுந்து இடிக்கும் செயல் ஒன்று மட்டுமா, அதன் எதிர் கான மஞ்ஞை கடிய ஏங்கும் – அம்முகிலின் இடிக்கு எதிராகக் காட்டு மயில்கள் விரைவாக ஆரவாரிக்கும், ஏதில கலந்த இரண்டற்கு – அயன்மையாகிக் கலந்த இவை இரண்டாலும், என் பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே – என்னுடைய பேதை நெஞ்சம் பெரும் கலக்கத்தை அடையும் (மலக்குறுமே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 195, தேரதரனார்நெய்தற் திணை – தலைவி தனக்குள் சொன்னது
சுடர் சினம் தணிந்து குன்றம் சேரப்
படர் சுமந்து எழுதரு பையுள் மாலை,
யாண்டு உளர் கொல்லோ, வேண்டு வினை முடிநர்
இன்னாது இரங்கும் என்னார், அன்னோ
தைவரல் அசை வளி மெய் பாய்ந்து உறு தரச்  5
செய்வுறு பாவை அன்ன, என்
மெய் பிறிது ஆகுதல் அறியாதோரே?

பாடல் பின்னணி:  பிரிவிடைப் பருவ வரவின்கண் தலைவி வருந்திக் கூறியது.

பொருளுரை தடவுதலை உடைய அசைந்து வரும் வாடைக்காற்று உடலில் மோதித் தீண்ட, அரக்கால் செய்த பாவையைப் போன்ற என்னுடைய உடலின் வேறுபாட்டை அறியாதவர், தான் வேண்டும் வினையை முடிக்கும் பொருட்டு, கதிரவன் வெம்மை நீங்கி மலையை அடைய, துன்பத்தை மேற்கொண்டு, வரும் வருத்தத்தைத் தரும் மாலைக் காலத்தில் எங்கே இருக்கின்றாரோ, ‘மாலை நேரம் துன்பத்தைத் தரும், அவள் வருந்துவாள்’ என நினையாத நம் தலைவர்?  அந்தோ!

குறிப்பு:   பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிரிவுத் தீயாலே உடல் உருகுதற்கு அரக்குப் பாவை உவமை.  செய்யுறு பாவை அரக்கால் இயற்றிய பாவை என்க.  உ. வே. சாமிநாதையர் உரை – பாவை அன்ன என் மேனி என்றது கழிந்ததற்கு இறங்கியதாகலின் தற்புகழ்ச்சி ஆகாது.  பாவை பொன்னால் செய்தது.  அசை வளி (5) – உ. வே. சாமிநாதையர் உரை – மெலிந்த காற்று.  மெல்லென்ற காற்று எனலுமாம்.  கூதிர்ப்பருவம் குறிக்கப்பட்டது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அசைந்து இயங்கும் வாடைக்காற்று.

சொற்பொருள்:  சுடர் சினம் தணிந்து குன்றம் சேர – கதிரவன் வெம்மை நீங்கி மலையை அடைய, படர் சுமந்து – துன்பத்தை மேற்கொண்டு, எழுதரு பையுள் மாலை – வரும் துன்பத்தைத் தரும் மாலை, யாண்டு உளர் கொல்லோ – எங்கே இருக்கின்றாரோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை), வேண்டு வினை முடிநர் – தான் வேண்டும் வினையை முடிக்கும் பொருட்டு, இன்னாது – துன்பம் தரும், இரங்கும் – அவள் வருந்துவாள், என்னார் – என நினையாதார், அன்னோ – அந்தோ, தைவரல் அசை வளி – தடவுதலை உடைய அசைந்து வரும் வாடைக்காற்று, மெய் பாய்ந்து உறு தர – உடலில் மோதித் தீண்ட (உறுதர -தீண்ட), செய்வுறு பாவை அன்ன – அரக்கால் செய்த பாவையைப் போன்ற, ஒப்பனை செய்யப்பட்ட பொம்மையைப் போல, என் மெய் பிறிது ஆகுதல் அறியாதோரே – என்னுடைய உடல் வேறுபாட்டை அறியாதவர் (அறியாதோரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 196, மிளைக்கந்தனார்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது (தலைவியும் தலைவனும் ஊடல் கொண்டப் பொழுது சொன்னது)
வேம்பின் பைங்காய் என் தோழி தரினே,
தேம்பூங் கட்டி என்றனிர்!  இனியே,
பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
வெய்ய உவர்க்கும் என்றனிர், 5
ஐய! அற்றால் அன்பின் பாலே!

பாடல் பின்னணி:  வாயில் (இல்லத்தில் புகுதல்) வேண்டிப் புக்க தலைவனுக்குத் தோழி கூறியது.  தனது பரத்தமையாலே ஊடியிருந்த தலைவியின் ஊடல் தீர்த்து உடம்படச் செய்யும்படித் தோழியை வேண்டிய தலைவனுக்கு அவள் கூறியது.

பொருளுரை:   ஐயா! முன்பு என் தோழி உங்களிடம் பச்சை வேப்பங்காயைக் கொடுத்தால், அதை இனிய வெல்லக்கட்டி என்று கூறுவீர்கள்.  இப்பொழுது அவள் பாரியின் பறம்பு மலையில் உள்ள குளிர்ச்சியான சுனையின் தெளிந்த தை மாதத்து நீரைத் தந்தால் கூட,  “அது சூடாக உள்ளது, உவர்ப்பாக உள்ளது” என்று கூறுகின்றீர்கள். உங்கள் அன்பு இவ்வாறு உள்ளது.

குறிப்பு:  தரினே – ஏகாரம் அசை நிலை, இனியே: ஏகாரம் அசை நிலை, அற்றால்: ஆல் அசை நிலை, பாலே: ஏகாரம் அசை நிலை.  பறம்பு மலையின் சுனை:  அகநானூறு 78 –  கடும் பரிப் புரவிக் கைவண் பாரி தீம் பெரும் பைஞ்சுனை, குறுந்தொகை 196 – பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர், புறநானூறு 109 – வானத்து மீன் கண் அற்று அதன் சுனையே, புறநானூறு 116 – தீ நீர்ப் பெருங்குண்டு சுனை, புறநானூறு 176 – பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர், புறநானூறு 337 – பாரி பறம்பின் பனிச் சுனை.

சொற்பொருள்:   வேம்பின் பைங்காய் – வேப்ப மரத்தின் பச்சைக்காய், என் தோழி தரினே – என் தோழி உன்னிடம் தந்தால், தேம்பூங்கட்டி என்றனிர் – இனிய வெல்லக்கட்டி என்று கூறினீர், இனியே – இப்பொழுது, பாரி பறம்பில் – பாரியின் பறம்பு மலையின், பனிச்சுனை – குளிர்ந்த சுனையின், தெண்ணீர் – தெளிவான நீர், தைஇத் திங்கள் தண்ணிய  – தை மாதத்திற்கு உரிய குளிர்ச்சியான, தரினும் – தந்தாலும், வெய்ய – வெட்பமாக, உவர்க்கும்  என்றனிர் – உவர்க்கும் என்றுக் கூறுகின்றீர், ஐய – ஐயா, அற்றால் அன்பின் பாலே – இவ்வாறு உள்ளது உன்னுடைய அன்பின் தன்மை

குறுந்தொகை 197, கச்சிப்பேட்டு நன்னாகையார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
யாது செய்வாம் கொல் தோழி, நோதக
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை
ஊதையம் குளிரொடு பேதுற்று மயங்கிய
கூதிர் உருவிற் கூற்றம்,
காதலர்ப் பிரிந்த என் குறித்து வருமே.  5

பாடல் பின்னணி:  பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி உரைத்தது.

பொருளுரை:   தோழி! நோகும்படி நீரை ஏற்றுக்கொண்ட மின்னல் இடி முதலிய தொகுதியையுடைய கார்காலத்தை ஏற்றுக்கொண்ட கிளைத்த மழை உடைய ஊதைக்காற்றின் குளிர்ச்சியுடன் மிக மயங்கிக் கலந்த கூதிர் காலமாகிய உருவத்தைக் கொண்ட கூற்றம் தலைவரைப் பிரிந்திருக்கும் என்னைக் கொல்வதற்குக் குறிக்கொன்டு வரும். யாது செய்வோம்?

குறிப்பு:  கருவிய (2) – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  இரா. இராகவையங்கார் உரை – கூற்றம் காதலர்ப் பிரிந்து எற்குறித்து நோதக வரும் என்றாள்.  இதே கூதிர்காலம் காதலர் உடனுறையும் அமையத்து  இன்பத்திற்கு உதவியாயிருந்தது என்பது குறித்தது.

சொற்பொருள்:   யாது செய்வாம் – என்ன செய்வோம், கொல் – அசைநிலை, தோழி – தோழி, நோதக – நோகும்படி, நீர் எதிர் கருவிய கார் – நீரை ஏற்றுக்கொண்ட மின்னல் இடி முதலிய தொகுதியையுடைய கார்காலம், எதிர் கிளை மழை – ஏற்றுக்கொண்ட கிளைத்த மழை, ஊதையம் குளிரொடு பேதுற்று மயங்கிய – ஊதைக்காற்றின் குளிர்ச்சியுடன் மிக மயங்கிக் கலந்து (ஊதையம் குளிரொடு – ஊதைக் காற்றினது குளிர்ச்சியுடன், அம் சாரியை), கூதிர் உருவிற் கூற்றம் – கூதிர் உருவத்தைக் கொண்ட கூற்றம், காதலர்ப் பிரிந்த என் குறித்து வருமே – தலைவரைப் பிரிந்திருக்கும் என்னைக் கொல்வதற்குக் குறிக்கொன்டு வரும் (வருமே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 198, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்,
கரும்பு மருள் முதல பைந்தாள் செந்தினை
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு
கரிக்குறட்டு இறைஞ்சிய செறி கோள் பைங்குரல்
படுகிளி கடிகம் சேறும், அடு போர்  5
எஃகு விளங்கு தடக்கை மலையன் கானத்து
ஆரம் நாறு மார்பினை,
வாரற்க தில்ல, வருகுவள் யாயே.

பாடல் பின்னணி:  தோழி குறியிடம் மாற்றிக் கூறியது.

பொருளுரை:   யா மரத்தை வெட்டிய மரங்களைச் சுட்ட வழியில், கரும்பைப் போன்ற அடியையுடைய பசிய காம்பையுடைய சிவந்த தினையானது மடப்பத்தை உடைய பிடி யானையின் தும்பிக்கையை ஒத்தனவாகி, மாவு நிறைந்து, உலைக்கரியை எடுக்கும் குறடு போல் வளைந்த, செறிந்த பசிய கொத்துக்களை உடைய கதிர்களில் உண்ணுவதற்காக வீழும் கிளிகளை ஒட்டுவேமாக ஆங்குச் செல்வோம்.  பகைவரைக் கொல்லும் வேற்படை விளங்குகின்ற பெரிய கைகளையுடைய மலையனின் காட்டில் வளர்ந்த சந்தனம் பூசிய மார்புடையவனாக நீ வராதே.  தாய் அங்கு வருவாள்.  இது எங்கள் விருப்பம்.

குறிப்பு:  அகநானூறு 118 – குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள், அகநானூறு 194 – கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும், குறுந்தொகை 142 – புனக் கிளி கடியும் பூங்கண் பேதை, குறுந்தொகை 198 – படுகிளி கடிகம் சேறும், குறுந்தொகை 217 – தினை கிளி கடிக எனின், குறுந்தொகை 291 – ஏனல் படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே இசையின் இசையா இன்பாணித்தே, குறுந்தொகை 360 –  ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே, பதிற்றுப்பத்து 78 – மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலிக் கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல.  வரலாறு:  மலையன்.  சுட்ட (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுட்டியவெனப் பெயரெச்சத்தின் அகரம் கெட்டது.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

சொற்பொருள்:   யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில் – யா மரத்தை வெட்டிய மரங்களைச் சுட்ட வழியில் (யாஅம் – அளபெடை), கரும்பு மருள் முதல பைந்தாள் செந்தினை – கரும்பைப் போன்ற அடியையுடைய பசிய காம்பையுடைய சிவந்த தினை (மருள் – போன்ற), மடப் பிடித் தடக்கை அன்ன – மடப்பத்தை உடைய பிடி (பெண்) யானையின் தும்பிக்கையை ஒத்தனவாகி, பால் வார்பு – பால் நிறைந்து, மாவு நிறைந்து, கரிக்குறட்டு இறைஞ்சிய – உலைக்கரியை எடுக்கும் குறடு போல் வளைந்த, செறி கோள் பைங்குரல் படுகிளி கடிகம் சேறும் – செறிந்த (அடர்ந்த) பசிய கொத்துக்களை உடைய கதிர்களில் உண்ணுவதற்காக வீழும் கிளிகளை ஒட்டுவேமாக ஆங்குச் செல்வோம், அடு போர் எஃகு விளங்கு தடக்கை மலையன் கானத்து – பகைவரைக் கொல்லும் வேற்படை விளங்குகின்ற பெரிய கைகளையுடைய மலையனின் காட்டில் வளர்ந்த, ஆரம் நாறு மார்பினை – சந்தனம் பூசிய மார்புடையவனாக, வாரற்க – நீ வராதே, தில்ல – தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, வருகுவள் யாயே – தாய் வருவாள் (யாயே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 199, பரணர்குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
பெறுவது இயையாது ஆயினும் உறுவது ஒன்று
உண்டு மன், வாழிய நெஞ்சே, திண் தேர்க்
கைவள் ஓரி கானந்தீண்டி
எறி வளி கமழு நெறிபடு கூந்தல்
மை ஈர் ஓதி மாஅயோள் வயின்,  5
இன்றையன்ன நட்பின் இந்நோய்,
இறுமுறை என ஒன்று இன்றி,
மறுமை உலகத்து மன்னுதல் பெறுமே.

பாடல் பின்னணி:  தலைவி இற்செறிக்கப்படுவாள் என்பதை தோழியின் மூலம் அறிந்த தலைவன், தன் நெஞ்சிடம் உரைத்தது.

பொருளுரை:   நெஞ்சே!  திண்ணிய தேர்களை உடைய கைவண்மையுடைய (வள்ளன்மையுடைய) ஓரி என்னும் மன்னனின் காட்டைத் தீண்டி வீசும் காற்றைப் போல் மணம் வீசும் வளைவு அமைந்த கூந்தலை உடைய, மாமை நிறம் பொருந்தி தலைவியிடத்து இன்று போல் என்றும் உள்ள நட்பையுடையது இக்காதல் நோய்.  இப்பிறவியில் நாம் அவளைப் பெறாவிட்டாலும், அழியும் முறை என்பது ஒன்றும் இல்லாமல், மறுமை உலகில் அவளைப் பெறுதல் உறுதி.

குறிப்பு:  வாழிய (2) – உ. வே. சாமிநாதையர் உரை – அசை, தமிழண்ணல் உரை – நீ வாழ்வாயாக.  வரலாறு:  ஓரி.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இயற்கைப்புணர்ச்சிக்கண் அக்கூந்தலே பாயலாகக் கிடந்து நுகர்ந்தானாகலின், அதன் மணம், நிறம், நெறிப்பு, நெய்ப்பு முதலியவற்றையே வியந்து பாராட்டினான்.  மறுமை உலகத்து (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மறுமை உலகம் என்றது மறுபிறப்பின் வாழுதற்கிடமான உலகம் என்றவாறு.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:   பெறுவது இயையாது ஆயினும் – தலைவியை இப்பிறவியில் பெற இயலாது ஆயினும், உறுவது ஒன்று உண்டு மன் – அவளை அடையும் பயன் ஒன்று உண்டு (மன் – அசைநிலை), வாழிய – நீ வாழ்க, அசைநிலை, நெஞ்சே – நெஞ்சே, திண் தேர்க் கைவள் ஓரி கானந்தீண்டி எறி வளி கமழு நெறிபடு கூந்தல் – திண்ணிய தேர்களை உடைய கைவண்மையுடைய (வள்ளன்மையுடைய) ஓரி என்னும் மன்னனின் காட்டைத் தீண்டி வீசும் காற்றைப் போல் மணம் வீசும் நெறிப்பு (வளைவு) அமைந்த கூந்தல், மை ஈர் ஓதி மாஅயோள் வயின்- மையை ஒத்த கருமையினையும் நெய்யணிந்த கூந்தலையும் உடைய மாமை நிறம் பொருந்தியவள் இடத்து (மாஅயோள் – அளபெடை), இன்றை அன்ன நட்பின் இந்நோய் – இன்று போல் என்றும் உள்ள நட்பையுடைய இக்காதல் நோய், இறுமுறை என ஒன்று இன்றி – அழியும் முறை என்பது ஒன்றும் இல்லாது, மறுமை உலகத்து மன்னுதல் பெறுமே – மறுமை உலகிலும் பெறுதல் உறுதி (பெறுமே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 200, ஔவையார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்
மீமிசைச் தாஅய வீஇ சுமந்து வந்து
இழிதரும் புனலும் வாரார் தோழி,
மறந்தோர் மன்ற, மறவா நாமே,
கால மாரி மாலை மாமழை  5
இன்னிசை உருமின முரலும்
முன்வரல், ஏமம் செய்து அகன்றோரே.

பாடல் பின்னணி:  பருவங்கண்டு கவன்ற தலைவியிடம் ‘இது கார் அன்று, வம்பு’ எனக் கூறிய தோழியிடம் தலைவி கூறியது.  

பொருளுரை:   தோழி!  கார்காலத்தில் பெய்தற்குரிய மழையையுடைய மாலைக் காலத்து கரிய முகில்கள் இனிய ஒலியுடைய இடியுடன் முழங்கும்.  முன்பு மழை பெய்த மலையின்கண் மலர் மணம் கமழ்கின்ற குளிர்ந்த கலங்கலின் மேல் பரவிய மலர்களைச் சுமந்து வந்து அருவிப் புனலும் வீழும்.  கார்காலத்திற்கு முன்பு வருவேன் என ஒரு காவலை நமக்குச் செய்து சென்ற நம் தலைவர் இன்னும் வரவில்லை.  அவர் நிச்சயமாக நம்மை மறந்தார். நாம் அவரை மறவோம்.

குறிப்பு:  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  கலுழ் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – அருவி நீரில் புதுமழையால் உண்டாவது.  பூ நாறு – உ. வே. சாமிநாதையர் உரை – முன்னரே வீழ்ந்த பூக்களும் தாதும் உண்மையின் கலுழ் பூ நாறியது.

சொற்பொருள்:   பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ் மீமிசைச் தாஅய – மழை பெய்த மலையின்கண் மலர் மணம் கமழ்கின்ற குளிர்ந்த கலங்கலின் மேல் (மீமிசை – ஒருபொருட் பன்மொழி, தாஅய – அளபெடை), பரவிய வீஇ சுமந்து வந்து புனலும் இழிதரும் – பரவிய மலர்களைச் சுமந்து வந்து அருவிப் புனலும் வீழும் (வீஇ – அளபெடை), வாரார் – இன்னும் வரவில்லை, தோழி – தோழி, மறந்தோர் மன்ற – நிச்சயமாக நம்மை மறந்தார், மறவா நாமே – நாம் அவரை மறவோம் (நாமே – ஏகாரம் பிரிநிலை), கால மாரி – கார்காலத்தில் பெய்தற்குரிய மழை, மாலை மாமழை – மாலைக் காலத்தின் கரிய முகில்கள், இன்னிசை உருமின முரலும் – இனிய ஒலியுடைய இடியுடன் முழங்கும், முன்வரல் ஏமம் செய்து அகன்றோரே – கார்காலத்திற்கு முன்பு வருவேன் என ஒரு காவலை நமக்குச் செய்து சென்ற நம் தலைவர் (அகன்றோரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 201, பாடியவர் பெயர் கிடைக்கவில்லைகுறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
அமிழ்தம் உண்க அயல் இல் ஆட்டி!
பால் கலப்பு அன்ன தேக் கொக்கு அருந்துபு
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை
நெல்லியம் புளி மாந்தி அயலது
முள் இல் அம் பணை மூங்கில் தூங்கும் 5
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை, வரும் என்றாளே.

பாடல் பின்னணி:  தலைவனும் தலைவியும் மணந்துகொண்டு இல்லறம் நடத்தும் மனைக்கண் சென்ற தோழி, ‘வரைந்துகொள்ளும் வரையில் நீ வேறுபடாமல் எங்ஙனம் ஆற்றியிருந்தாய்’ என்று கூற, ‘நான் ஆற்றியிருக்கும் வண்ணம் அயல் இல் கிழத்தி முன்பு தலைவன் வரவைக் கூறினாள்.  அவள் வாழ்க’ என்று தலைவி சொன்னது.

பொருளுரை:  பக்கத்துவீட்டுப் பெண் அமிர்தம் உண்ணட்டும்!  பாலைக் கலந்தாற்போன்ற இனிய மாம்பழத்தை தின்று கரிய மெல்லிய சிறகுகளையும் கூர்மையான நகங்களையும் உடைய வௌவால் புளித்த நெல்லிக்காயை உண்டு அருகில் உள்ள முள் இல்லாத பருத்த அழகிய மூங்கிலில் தொங்குகின்ற மூங்கில் உயர்ந்து வளர்ந்த சோலையுடைய மலைகள் பொருந்திய நாட்டையுடைய நம் தலைவன் வருவான் என்றாள்.

குறிப்பு:  நெல்லியம் புளி – அம் சாரியை, என்றோளே: ஏகாரம் அசை நிலை.  உ. வே. சாமிநாதையர் உரை – தேமாம்பழத்தை உண்ட வௌவால் பின்பு மாறுபாட்ட சுவையையுடைய நெல்லிக்காயை உண்டு சிறிதும் ஊறு உண்டாக்காத முள்ளில்லாத மூங்கிலில் தூங்கியதுபோல, களவுப் புணர்ச்சியின்கண் இன்பம் துய்த்த தலைவன் அவ்வின்பத்திற்கு மாறாகிய இடையீடுகளையும் ஏற்றுப் பின் வரைந்து கொண்டு சிறிதும் ஏதமின்றி இன்பம் துய்க்கும் நிலையினான் என்பது.

சொற்பொருள்:  அமிழ்தம் உண்க – அமிர்தம் உண்ணட்டும், அயல் இல் ஆட்டி – பக்கத்து வீட்டுப்பெண், பால் கலப்பு அன்ன – பால் கலவை அன்ன, தேக் கொக்கு – இனிய மாம்பழம், அருந்துபு – உண்ணும், நீல மென்சிறை – கரு நீல நிற மெல்லிய சிறகு, வள் உகிர் – வலிய நகம், பறவை – வௌவால், நெல்லியம் புளி – புளிப்பான நெல்லிக்காய், மாந்தி – உண்டு,  அயலது – அருகில், முள் இல் – முள் இல்லாத, அம் பணை – அழகிய திரண்ட, மூங்கில் – மூங்கில், தூங்கும் – தொங்கும், கழை – மூங்கில், Bambusa arundinacea, நிவந்து ஓங்கிய – உயர்ந்து வளர்ந்த, சோலை – சோலை, மலை கெழு நாடனை – மலைகள் நிறைந்த நாட்டவனை, வரும் என்றாளே – அவன் வருவான் என்றாள்

குறுந்தொகை 202, அள்ளூர் நன்முல்லையார்மருதத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே,
புன்புலம் அமன்ற சிறி இலை நெருஞ்சிக்
கட்கு இன் புது மலர் முள் பயந்தாங்கு,
இனிய செய்த நம் காதலர்,
இன்னா செய்தல், நோம் என் நெஞ்சே.  5

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது.

பொருளுரை:  வருந்துகின்றது என் நெஞ்சு.  வருந்துகின்றது என் நெஞ்சு.  புன்செய் நிலத்தில் முளைத்த சிறிய இலைகள் பொருந்திய, நெருங்கி முளைத்த நெருஞ்சிச் செடியின் கண்ணுக்கு இனிய புதிய மலர்கள், முள்ளைத் தந்தாற்போல், இனியவற்றைச் செய்த என் காதலர், இன்னாதனவற்றைச் செய்வதால், வருந்துகின்றது என் நெஞ்சு.

குறிப்பு:  நெஞ்சே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  நோம் என் நெஞ்சே – வருந்தும் என் நெஞ்சு,  நோம் என் நெஞ்சு – வருந்தும் என் நெஞ்சு, புன்புலம் அமன்ற – புன்செய் நிலத்தில் நெருங்கி முளைத்த, சிறி இலை நெருஞ்சி – சிறிய இலைகளையுடைய நெருஞ்சிச் செடி, கட்கு இன் புது மலர் – கண்ணுக்கு இனிய புதிய மலர்கள், முள் பயந்தாங்கு – முள்ளைத் தந்தாற்போல்,  இனிய செய்த நம் காதலர் – இனியவற்றைச் செய்த நம் காதலர், இன்னா செய்தல் –  இன்னாதனவற்றைச் செய்வதால், நோம் என் நெஞ்சே – வருந்தும் என் நெஞ்சு

குறுந்தொகை 203, நெடும்பல்லியத்தனார்மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மலை இடை இட்ட நாட்டரும் அல்லர்,
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்,
கண்ணின் காண நண்ணுவழி இருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல,
ஒரீஇ ஒழுகும் என் ஐக்குப்  5
பரியலென் மன் யான், பண்டு ஒரு காலே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியை நோக்கி ‘அவர்பால் முன்பு பரிவுடையேன்.  இப்பொழுது அது நீங்கியது’ என்று தலைவி மறுத்துக் கூறியது.

பொருளுரை:  தலைவர் மலைகள் இடையே இருப்பதால் தொலைவில் உள்ள நாட்டினரும் அல்லர்.  அங்குள்ள மரங்கள் நமக்குத் தோன்றாத தொலைவில் உள்ள ஊரினரும் அல்லர்.  கண்களால் காணும்படி வருவதற்கு உரிய அண்மையில் இருந்தும், கடவுளை தங்கள் உள்ளத்தால் நெருங்கிய துறவிப் பகுதியினர் போல், நம்மைவிட்டு விலகி ஒழுகும் என் தலைவர் பொருட்டு இரக்கத்தை உடையவளாக இருந்தேன் நான் முன்பு ஒரு காலத்தில். அது இப்பொழுது கழிந்தது.

குறிப்பு:  மரந்தலை (2) – உ. வே. சாமிநாதையர் உரை – மரங்கள் (தலை = அசை), தமிழண்ணல் உரை, இரா. இராகவையங்கார் உரை – மரங்களின் தலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மரங்கள்.  கடவுள் நண்ணிய பாலோர் போல (4) – தமிழண்ணல் உரை – கடவுள் மாட்டு அன்பு பூண்டு துறவுக் கோலத்தை அடைந்தவர்கள் உலகை விட்டு மேன் மேலும் நீங்கிப் போவதைப் போல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடவுளை உளத்தாலே அணுகிய துறவிப் பகுதியினர் போன்று, உ. வே. சாமிநாதையர் உரை – முனிவரைக் கண்டால் தன் தூய்மையன்மை காரணமாக அஞ்சி விலகி ஒழுகும் தன்மையைப் போல, இரா. இராகவையங்கார் உரை – தேவ குலத்தோர் இழிகுலத்தோரை வழியிற் கண்டு ஒரீஇ ஒழுகுதல் போல.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  மலை இடை இட்ட நாட்டரும் அல்லர் – தலைவர் மலைகள் இடையே இருப்பதால் தொலைவில் உள்ள நாட்டினரும் அல்லர், மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர் – அங்குள்ள மரங்கள் நமக்குத் தோன்றாத தொலைவில் உள்ள ஊரினரும் அல்லர், கண்ணின் காண நண்ணுவழி இருந்தும் – கண்களால் காணும்படி வருவதற்கு உரிய அண்மையில் இருந்தும், கடவுள் நண்ணிய பாலோர் போல – கடவுளை தங்கள் உள்ளத்தால் நெருங்கிய துறவிப் பகுதியினர் போல், ஒரீஇ ஒழுகும் என் ஐக்கு – நம்மைவிட்டு விலகி ஒழுகும் என் தலைவர் பொருட்டு,  பரியலென் யான் – இரக்கத்தை உடையவளாக இருந்தேன் நான், பண்டு ஒரு காலே – முன்பு ஒரு காலத்தில் (காலே – ஏகாரம் அசைநிலை), மன் – அது இப்பொழுது கழிந்தது

குறுந்தொகை 204, மிளைப்பெருங்கந்தனார்குறிஞ்சித் திணை – தலைவனிடம் தோழன் சொன்னது
“காமம், காமம்” என்ப, காமம்
அணங்கும் பிணியும் அன்றே, நினைப்பின்
முதைச் சுவல் கலித்த முற்றா இளம் புல்
மூது ஆ தைவந்தாங்கு,
விருந்தே காமம், பெருந்தோளோயே.  5

பாடல் பின்னணி:  காம நோயால் வேறுபட்டு மெலிந்த தலைவனைத் தோழன் இடித்துரைத்தது.

பொருளுரை:  பெரிய தோள்களை உடைய நண்பனே!  “காமம் காமம்” என்று அதை அறியாதவர்கள் இகழ்ந்து கூறுவார்கள்.  காமம் வருத்தமும் நோயும் இல்லை. நினைக்கும்பொழுது, பழைய கொல்லையில் உள்ள மேட்டு நிலத்தில், முற்றாத இளைய புல்லை ஒரு முதிய பசு நாவால் தடவி இன்புற்றாற்போல், அக்காமம் புதிய இன்பத்தை உடையதாகும்.

குறிப்பு:  குறுந்தொகை 136 – மிளைப் பெருங்கந்தனார், குறிஞ்சித் திணை- தலைவன் தோழனிடம் சொன்னது, காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே யானை குளகு மென்று ஆள் மதம் போலப் பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே.  காமம் காமம் என்ப (1) – உ. வே. சாமிநாதையர் உரை – காமம் காமம் என்று அதனை அறியார் இகழ்ந்து கூறுவர், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – காமம் காமம் என்று உயர்த்திக் கூறுவர், தமிழண்ணல் உரை – காமம் காமம் என்று ஏதோ இழிவும் வெறுப்பும் தோன்றக் கூறுவார்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – காமநோய் காமநோய் என அதன் இயல்பு அறியார் அதற்கு அஞ்சி மெலிவர், இரா. இராகவையங்கார் உரை – தாழ்த்துச் சொல்ல வேண்டியது ஒன்றைக் காமம் காமம் என எடுத்துச் சொல்வர்.  அணங்கு (2) – உ. வே. சாமிநாதையர் உரை – வருத்தம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தீண்டி வருத்தும் தெய்வம், தமிழண்ணல் – தெய்வம் வருத்துவது போல் தாக்கி மனத்துயரை உண்டாக்குவது.  பெருந்தோளோயே (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெருந்தோளோய் என்றது அவன் ஆண்மையை நினைவூட்டி, நின் ஆண்மைக்கு தக மனவடக்கம் உடையை அல்ல என்று இகழ்ந்தவாறு என்க.  உ. வே. சாமிநாதையர் உரை – அறிவுடையார்பால் காமம் தோன்றாது என்றும், அறிவின்றி மனத்தின் வழியே செல்வார்க்கு அது விருந்தாவது என்றும் புலப்படுத்தி இடித்துரைத்தான்.  பெருந்தோளோயே – ஏகாரம் அசை நிலை

சொற்பொருள்:  “காமம் காமம்” என்ப – “காமம் காமம்” என்று அதை அறியாதவர்கள் இகழ்ந்து கூறுவார்கள், காமம் அணங்கும் பிணியும் அன்றே – காமம் வருத்தமும் நோயும் இல்லை, தீண்டி வருத்தும் கடவுளும் இல்லை, நினைப்பின் – நினைக்கும்பொழுது, முதைச் சுவல் – பழைய கொல்லையில் உள்ள மேட்டு நிலத்தில், கலித்த முற்றா இளம் புல் – முற்றாத இளைய புல்லை, மூது ஆ தைவந்தாங்கு – முதிய பசு நாவால் தடவி இன்புற்றாற்போல், விருந்தே காமம் – அக்காமம் புதிய இன்பத்தை உடையதாகும், பெருந்தோளோயே – பெரிய தோள்களை உடைய நண்பனே

குறுந்தொகை 205,  உலோச்சனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்குப்,
பொலம் படைப் பொலிந்த வெண் தேர் ஏறிக்
கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப
இனிச் சென்றனனே இடு மணல் சேர்ப்பன், 5
யாங்கு அறிந்தன்று கொல் தோழி, என்
தேங்கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?

பாடல் பின்னணி:  வரைவிற்கு பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்ததால் தலைவி ஆற்றாள் என வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது.

பொருளுரை:  மின்னலையும் இடியையும் மழையையும் உண்டாக்கும் முகில்கள் வானில் மிதக்கின்றன.  கடல் நீர் அலைகளால் கலங்குகின்றது.  என்னுடைய தலைவன் தங்க அணிகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளைத் தேரை கடற்கரையில் செலுத்திக்கொண்டு போகின்றான். அவனுடைய தேர்ச் சக்கரம் அலைகளின் நீர்த் துளிகளால் நனைந்து மேலும் கீழும் ஆடிச் செல்லும்.  அப்பொழுது, அன்ன பறவை தன் சிறகுகளை அசைத்துப் பறப்பது போன்று தோன்றும் அத் தேர்.  காற்று மணலை கரையில் கொண்டு வந்து சேர்க்கும் நெய்தல் நிலத்தின் தலைவன் போவதை என் தேன்மணம் கமழும் நெற்றி எவ்வாறு அறிந்தது தோழி?  அதில் பசலைப் படர்ந்தது.

குறிப்பு:  சென்றனனே – ஏகாரம் அசை நிலை, பசப்பே – ஏகாரம் அசை நிலை.  கருவிய (1) – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய.  படை (3) – உ. வே. சாமிநாதையர் உரை – தட்டு, பக்கத்தில் அமைத்த பலகைகளுமாம்.

சொற்பொருள்:  மின்னுச்செய் – மின்னலுடன், கருவிய – இடியும் சேர்ந்து பெய்யும், பெயன் – மழை,  மழை – மேகம்,  தூங்க – தொங்க,  விசும்பு – ஆகாயம்,  ஆடு – பறக்கும்,  அன்னம் – அன்னம்,  பறை நிவந்தாங்குப் – சிறகுகளை மேலும் கீழும் ஆட்டி பறந்ததுப் போல்,  பொலம்படை – பொன் அலங்காரம்,  பொலிந்த வெண் தேர் – அழகிய வெள்ளை தேர்,  ஏறி – ஏறி,  கலங்கு கடல் – கலங்கும் கடல் நீர்,  துவலை – நீர்த் துவலை,  ஆழி – தேர்ச் சக்கரம்,  நனைப்ப – நனைத்து,  இனிச் சென்றனனே – அவன் போய் சென்றான்,  இடுமணல் – (காற்று கொண்டு வந்து) இடும் மணல்,  சேர்ப்பன் – நெய்தல் நிலத்தின் தலைவன்,  யாங்கு – அதனை, அறிந்தன்று கொல் தோழி – எவ்வாறு அறிந்தது தோழி? என் – என், தேங்கமழ் – தேன் மணம் கமழும்,  திருநுதல் – அழகிய நெற்றி,  ஊர்தரும் பசப்பே – படர்ந்தன பசலையை

குறுந்தொகை 206, ஐயூர் முடவனார்குறிஞ்சித் திணை – தலைவன் தோழனிடம் சொன்னது
அமிழ்தத்து அன்ன அம் தீம் கிளவி
அன்ன இனியோள் குணனும் இன்ன,
இன்னா அரும் படர் செய்யும் ஆயின்,
உடன் உறைவு அரிதே காமம்,
குறுகல் ஓம்புமின், அறிவுடையீரே.  5

பாடல் பின்னணி:  ‘காம நோயால் நீ வருந்துவது அழகன்று’ என்று இடித்துரைத்த நண்பனிடம் தலைவன் கூறியது.

பொருளுரை:   அறிவு உடையவர்களே!  அமிழ்தத்தைப் போன்ற அழகிய இனிய சொற்கள் உடைய இனிமையானவளின் குணமும் இத்தகைய இத்தகைய இன்னாத துன்பங்களைத் தரும் ஆயின், காதலானது உடன் வாழ்வதற்கு அரிது.  அருகில் நெருங்குதலைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறிவுடையீர் என்றது இகழ்ச்சிக் குறிப்பு.

சொற்பொருள்:  அமிழ்தத்து அன்ன – அமிழ்தத்தைப் போன்ற (அமிழ்தத்து – அமிழ்தம், அத்து சாரியை), அம் தீம் கிளவி – அழகிய இனிய சொற்கள், அன்ன – அத்தகைய, இனியோள் – இனியவள், குணனும் – குணமும் (குணன் குணம் என்றதன் போலி, குணனும் – உம்மை உயர்வு சிறப்பு), இன்ன இன்னா அரும் படர் செய்யும்  ஆயின் – இத்தகைய இன்னாத துன்பங்களைத் தரும் ஆயின், உடன் உறைவு அரிதே – உடன் உறைதல் அரிது, காமம் – காதல், குறுகல் ஓம்புமின் – அருகில் நெருங்குதலைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், அருகில் அணுகாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), அறிவுடையீரே – அறிவு உடையவர்களே (அறிவுடையீரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 207, உறையனார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று,
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி,
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும்,
கல் வரை அயலது தொல் வழங்கு சிறுநெறி  5
நல் அடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்து செல்வான் என்பதை குறிப்பால் அறிந்த தோழி அதை தலைவிக்கு அறிவுறுத்த, அவளைத் தலைவி புலந்து கூறியது.

பொருளுரை:   நம்முடைய செலவைத் தலைவியிடம் கூறிவிட்டு சென்றால், செல்லுதல் அரிதாகும் என்று எண்ணி, பாலை நிலத்தில் உள்ள ஓமை மரத்தின் அழகிய கிளையில் இருந்த தன்னுடைய இனத்திலிருந்து பிரிந்து வந்த பருந்தின் தனிமையைப் புலப்படுத்தும் தெளிந்த ஓசை பாலை நிலத்தில் செல்லும் மக்களுக்கு அளவளாவும் துணையாக இருக்கும், கற்களை உடைய மலையின் பக்கத்தில் யாவரும் நடக்கும் சிறு வழியில், தம் நல்ல காலடிகள் சுவடு செய்யத் தாவிச் சென்றார் உன் தலைவர் எனக் கேட்ட நம் அன்பர்கள் பலராவர்.

குறிப்பு:  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).   உ. வே. சாமிநாதையர் உரை – “என்பால் அன்புடையார் பலர் கேட்டு இதனை எனக்கு முன்னரே தெரிவித்தனர்.  நீ இப்பொழுது தெரிவித்ததால் ஆகும் பயன் யாது?  எல்லோரையும் போல் நீ கேட்டலை அன்றிச் செலவு அழுங்குவித்தாய் அல்லை” எனத் தோழியின் நொதுமல் தண்மையைச் சுட்டித் தலைவி இரங்கினாள்.

சொற்பொருள்:  செப்பினம் செலினே – தலைவியிடம் கூறிவிட்டு சென்றால், செலவு அரிது ஆகும் என்று – செல்லுதல் அரிதாகும் என்று, அத்த ஓமை அம் கவட்டு இருந்த – பாலை நிலத்தில் உள்ள ஓமை மரத்தின் அழகிய கிளையில் இருந்த, இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி – தன்னுடைய இனத்திலிருந்து பிரிந்து வந்த பருந்தின் தனிமையைப் புலப்படுத்தும் தெளிந்த ஓசை, சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும் – பாலை நிலத்தில் செல்லும் மக்களுக்கு அளவளாவும் துணையாக இருக்கும், கல் வரை அயலது தொல் வழங்கு சிறுநெறி – கற்களை உடைய மலையின் பக்கத்தில் யாவரும் நடக்கும் சிறு வழி, நல் அடி பொறிப்பத் தாஅய்ச் சென்றென – தம் நல்ல காலடிகள் சுவடு செய்யத் தாவிச் சென்றார் என (தாஅய் – அளபெடை, சென்றென – சென்றார் என),  கேட்ட நம் ஆர்வலர் பலரே – கேட்ட நம் அன்புடையவர் பலராவர் (பலரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 208, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஒன்றேன் அல்லேன், ஒன்றுவென் குன்றத்துப்
பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்மார்
நின்று கொய மலரும் நாடனொடு,
ஒன்றேன் தோழி, ஒன்றனானே.  5

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துத் தலைவன் பொருள்வயின் பிரிந்த காலத்தில் ஆற்றாளாகிய தலைவியை நோக்கி ‘நீ ஆற்றல் வேண்டும்’ என்ற தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  தோழி!  நான் தலைவனுடன் பொருந்தாத இயல்பை உடையவள் இல்லை.  பொருந்தும் இயல்பை உடையவள்.  அயலார் வரைவொடு புகுவதால், மலையில் ஒன்றோடு ஒன்று போரிடும் களிற்று யானைகள் மிதித்த நெரிந்த அடியை உடைய வேங்கை மரங்கள், மலையில் வாழும் பெண்கள் தம்முடைய கூந்தலில் அணியும் பொருட்டு நின்றபடி மலர்களைக் கொய்யும்படி தாழ்ந்து மலர்ந்து இருக்கும் நாட்டையுடைய தலைவனுடன் பொருந்தேன் நான்.

குறிப்பு:  பொரு களிறு (2) – உ. வே. சாமிநாதையர் உரை – ஒன்றோடொன்று பொருதும் களிறுகள், தமிழண்ணல் உரை – புலியொடு போரிடும் களிறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தம்முள் போர் செய்த களிற்று யானைகள்.  உ. வே. சாமிநாதையர் உரை – பெருங்களிறு என்றமையால், தலைமகள் தமர் தலைவன் வரைவிற்கு உடன்படுவாரும் மறுப்பாருமாகி மாறுபட்டனர் என்பது தோன்றுகின்றது.  பொருகளிறு மிதித்த வேங்கை என்றதால் வரைவு உடன்படாதார் தலைமகனை அவமதித்தவாறு காட்டிற்று. வேங்கை நின்று கொய்ய மலரும் என்றதால் முன்பு ஏறிப் பறித்தல் வேண்டுவது இப்பொழுது நின்று பறிக்கலாயிற்று என்னும் பொருள் பட்டது.  இதனால் பண்டு நமக்கு அறியனான தலைமகன் எளியனாகி அருள் செய்கின்றான் பொருள்படக் கிடந்தவாறு காண்க.  மிதியுண்டு வீழ்ந்த வேங்கை குறை உயிரோடு மலர்ந்தாற்போல் யானும் உளனேன் ஆயினேன் என்றாள் தலைமகள்.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்மார் நின்று கொய மலருமாறு போல, கூடுங் கருத்தின்றிக் கூடிய தலைமகனால் நிலைப்பட்ட யான் எளிதில் எல்லாரும் தூற்றுமாறு உள்ளேனாயினேன் என்பதாம்.

சொற்பொருள்:  ஒன்றேன் அல்லேன் – நான் தலைவனுடன் ஒத்துப்போகாத இயல்பை உடையவள் இல்லை, ஒன்றுவென் – ஒத்துப்போகும் இயல்பை உடையவள், குன்றத்துப் பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை – மலையில் ஒன்றோடு ஒன்று போரிடும் களிற்று யானைகள் (ஆண் யானைகள்) மிதித்த நெரிந்த அடியை உடைய வேங்கை மரங்கள், மலையில் புலிகளுடன் போரிடும் களிற்று யானைகள் (ஆண் யானைகள்) மிதித்த நெரிந்த அடியை உடைய வேங்கை மரங்கள், குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்மார் – மலையில் வாழும் பெண்கள் தம்முடைய கூந்தலில் அணியும் பொருட்டு, நின்று கொய – நின்றபடி மலர்களைக் கொய்யும்படி (கொய – கொய்ய என்பதன் இடைக்குறை), மலரும் – தாழ்ந்து மலரும், நாடனொடு – நாட்டையுடைய தலைவனுடன், ஒன்றேன் – பொருந்தேன், தோழி – தோழி, ஒன்றனானே – வரைவை நீட்டித்ததால், அயலார் வரைவொடு புகுவதால் (ஒன்றனானே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 209, பாலை பாடிய பெருங்கடுங்கோபாலைத் திணை – தலைவன் தோழியிடம் சொன்னதுதலைவி கேட்கும்படியாக
அறம் தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோள் இடம் கறங்கும்
இறப்பு அருங்குன்றம் இறந்த யாமே,
குறுநடை, பல உள்ளலமே, நெறி முதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித் 5
தளை அவிழ் பல் போது கமழும்
மை இரும் கூந்தல் மடந்தை நட்பே.

பாடல் பின்னணி:  பொருள் முற்றி மீளும் தலைவன் தோழிக்கு உரைப்பானாய்த் தலைவிக்கு தன் அன்பின் நிலைமையை உணர்த்தியது.

பொருளுரை:  குறுகிய அடியிட்டு நடக்கும் பெண்ணே!  பாதையில் செல்வோர்க்கு உதவும்படி மரத்திலிருந்து கீழே உதிரும் அழகிய பசுமையான நெல்லிக்கனிகளை உடைய இடமான, வலுவான புலிக்குட்டிகள் கொள்ளக்கூடிய பாதையில், கடத்தற்கரிய மலைகளைக் கடந்து சென்ற நான் வரும்பொழுது, பலவற்றைப் பற்றி எண்ணவில்லை.  வளைந்த கிளைகளையுடைய வெட்சி செடிகளின் அரும்பு அவிழ்ந்து மலரும் பொழுது உள்ள நறுமணத்தை உடைய கருமையான அழகிய கூந்தலை உடைய இளம் பெண்ணின் நட்பைப் பற்றி மட்டுமே நினைத்தேன்.

குறிப்பு:  யாமே – ஏகாரம் அசை நிலை, உள்ளலமே – ஏகாரம் அசை நிலை, தன்மைப் பன்மை, நட்பே – பிரிநிலை ஏகாரம்.   பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெல்லிக்கனி நீர் வேட்கை தணிக்கும் இயல்புடையது.  ஆதலின், பாலை நிலத்தே ஆறு செல்வோர் தம் நீர் வேட்கை தணிக்கும் நெல்லியினது காய் என்பான் ‘அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்’ என்றான்.  குறுநடை (4) – உ. வே. சாமிநாதையர் உரை – குறுக அடியிட்டு நடக்கும் தோழி,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறிய நடையினுடைய தோழி கேள், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – குறுநடையை உடைய தலைவி, இரா. இராகவையங்கார் உரை – குறுநடை கொண்டு வழி நெடிதாதல் கண்டவன் மீளும்போது நட்பே நினைந்து பெருநடைக் கொண்டு வழி குறிதாதல் தேர்ந்து கூறியவாறாம்.  கறங்கும் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – உதிர்ந்து உருளுகின்ற, கீழே உதிர்ந்து ஒலிக்கும் என்பதுமாம்.

சொற்பொருள்:  அறம் தலைப்பட்ட –  கொடுப்பதில் சிறந்த, நெல்லி அம் பசுங்காய் – நெல்லி மரத்தினது அழகிய பசுமையான நெல்லிகாய்,  மறப்புலிக்  குருளை – வலுவான புலிக்குட்டிகள், கோள் இடம்- பாய்ந்து கொள்ளும் இடம்,  கறங்கும் – உதிரும், உதிர்ந்து ஒலிக்கும், இறப்பு – கடத்தல், அருங்குன்றம் – கடினமான மலைகள்,  இறந்த யாமே – நான் கடக்கும் பொழுது,  குறுநடை – குறுகிய அடியிட்டு நடக்கும் தோழியே, பல உள்ளலமே – பலவற்றை எண்ணவில்லை,  நெறி முதல் – பாதையில், கடற்றில் – காட்டில்,  கலித்த – செம்மையாக வளரும்,  முடச் சினை வெட்சி – வளைந்த கிளைகளையுடைய வெட்சி செடிகள்,  தளை அவிழ் பல் போது – மலரும் பல அரும்புகள், கமழும் – நறுமணமுடைய,   மை இரும் கூந்தல் – கருமையான கூந்தல், மடந்தை நட்பே – இளம் பெண்ணின் நட்பு

குறுந்தொகை 210, காக்கை பாடினியார் நச்செள்ளையார்முல்லைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
திண் தேர் நள்ளி கானத்து, அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு,
ஏழு கலத்து ஏந்தினும், சிறிது, என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு,  5
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.

பாடல் பின்னணி:  தலைவியைப் பிரிந்து சென்றிருந்த தலைவன் மீண்டும் வந்தடைந்தான்.  தலைவிக்கு துணையாக இருந்த தோழிக்கு நன்றி கூறுகின்றான்.  அப்பொழுது அவள் இவ்வாறு உரைக்கின்றாள்.

பொருளுரை:  திண்மையான தேரையுடைய நள்ளியின் காட்டில் உள்ள இடையர்களின் பல பசுக்கள் கொடுத்த நெய்யுடன், தொண்டி என்ற ஊர் முழுவதும் நன்கு விளைந்த நெல்லினால் ஆக்கப்பட்ட சோற்றை, ஏழு கிண்ணங்களில் தூக்கிக் கொடுத்தாலும், என்னுடைய தோழியின் பெரிய தோளை நெகிழச் செய்த துன்பம் நீங்குவதற்கு, நீ வரும்படி கரைந்த காக்கைக்குக் கொடுக்கும் பலி, சிறிதே.

குறிப்பு:  பலி (6) – பலியே – ஏகாரம் அசை நிலை.  நள்ளி கடையெழு வள்ளல்களில் ஒருவன்.  ஐங்குறுநூறு 391 – மறு இல் தூவிச் சிறு கருங்காக்கை! அன்புடை மரபின், நின் கிளையோடு ஆரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ வெஞ்சின விறல் வேல் காளையொடு அம் சில் ஓதியை வரக் கரைந்தீமே.   உ. வே. சாமிநாதையர் உரை – காக்கைக்கு இடும் உணவைப் பலி என்றல் மரபு.

சொற்பொருள்:  திண் தேர் நள்ளி – திண்மையான தேரையுடைய நள்ளி,  கானத்து – காட்டில் உள்ள, அண்டர் – இடையர், பல் ஆ பயந்த – பல பசுக்கள் கொடுத்த, நெய்யின் – நெய்யுடன், தொண்டி முழுதுடன் விளைந்த – தொண்டி என்ற ஊர் முழுதுடன் நன்கு விளைந்த,  வெண்ணெல் வெஞ்சோறு – வெண்ணெல் அரிசியால் ஆக்கிய வெம்மையான சோறு, ஏழு கலத்து ஏந்தினும் – ஏழு கிண்ணங்களில் தூக்கிக் கொடுத்தாலும்,  சிறிது – சிறிது, என் தோழி பெருந்தோள் நெகிழ்த்த – என்னுடைய தோழியின் பெரிய தோளை நெகிழச் செய்த, செல்லற்கு – நீக்கும் பொருட்டு, விருந்து வர – விருந்தினர் வரும்படி, நீ விருந்தினராக வரும்படி, கரைந்த காக்கையது பலியே – கரையும் காக்கைக்குக் கொடுக்கும் பலி (உணவு)

குறுந்தொகை 211, காவன்முல்லைப் பூதனார்பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அம் சில் ஓதி! ஆய் வளை நெகிழ
நேர்ந்து நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
எஞ்சினம், வாழி தோழி, எஞ்சாத்
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ்சினை
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி  5
ஆராது பெயரும் தும்பி
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்த காலத்தில் சுரத்திடை துணையைப் பிரிந்த விலங்குகளும் பறவைகளும் வருந்துவது கண்டு தானும் வருந்துவானா என்று ஐயுற்ற தலைவியிடம் ‘அவன் அங்ஙனம் மீள்வான் அல்லன்’ என்று தோழி கூறியது.

பொருளுரை:  தோழி!  அழகிய நுண்ணிய மயிரினை உடையாய்!  குறைந்து வேனிலால் தீய்ந்த கடம்ப மரத்தின் உயர்ந்த உலர்ந்த மரக்கிளையின்கண் வேனில் காலத்தில் மலர்ந்த ஒற்றைப் பூங்கொத்தில் உள்ள தேனை ஊதி, அதன்கண் ஒன்றும் இல்லாததால் நீங்கும் தேனீக்களையும் தும்பிகளையும் உடைய நீர் இல்லாத இடமாகிய பாலை நிலத்திற்கு, உன்னுடைய அழகிய வளையல்கள் நெகிழும்படி, நம்மிடம் அருள் செலுத்தார் ஆகி, நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் பொருட்டு நாம் அஞ்சுதலை கைவிட்டோம், அவர் செல்வதற்கு நாம் உடன்பட்டதால்.

குறிப்பு:  எஞ்சா – எஞ்சிய என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  அம் சில் ஓதி (1) – இரா. இராகவையங்கார் உரை – அழகிய நுண்ணிய முன் மயிரினை உடையாய், உ. வே. சாமிநாதையர் உரை – அழகிய சிலவாகிய கூந்தலையுடைய நினது.  நேர்ந்து (2) – உ. வே. சாமிநாதையர் உரை – நம் விருப்பத்திற்கு உடன்பட்டு, இரா. இராகவையங்கார் உரை – நாம் உடன்பட்டதனால்.

சொற்பொருள்:  அம் சில் ஓதி – அழகிய நுண்ணிய மயிரினை உடையாய் (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), அழகிய சிலவாகிய மயிரை உடைய உன்னுடைய, ஆய் வளை நெகிழ – அழகிய வளையல்கள் நெகிழும்படி, மெலிவை பிறர் ஆராய்வதற்குக் காரணமான வளையல்கள் நெகிழ, நேர்ந்து – உடன்பட்டு, நாம் உடன்பட்டதால், நம் அருளார் – நம்மிடம் அருள் செலுத்தார், நீத்தோர்க்கு – நீங்கிச் சென்றவர்க்கு, அஞ்சல் எஞ்சினம் – அஞ்சுதலை நீக்கினோம், வாழி – நீ நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, எஞ்சாத் தீய்ந்த மராஅத்து – குறைந்து வேனிலால் தீய்ந்த கடம்ப மரத்தின், ஓங்கல் வெஞ்சினை – உயர்ந்த உலர்ந்த மரக்கிளை, வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி – வேனில் காலத்தில் மலர்ந்த ஒற்றைப் பூங்கொத்தில் உள்ள தேனை ஊதி, வேனில் காலத்தில் மலர்ந்த ஒற்றைப் பூங்கொத்தை தேன் என்னும் வந்துதான் ஊதி, ஆராது பெயரும் தும்பி – உண்ணாமல் நீங்கும் தும்பி, நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே – நீர் இல்லாத இடமாகிய பாலை நிலத்திற்குச் சென்ற நம் தலைவர் (சுரன் – சுரம் என்பதன் போலி, இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 212, நெய்தற் கார்க்கியன்நெய்தற் திணை – தோழி சொன்னது
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
தெண் கடல் அடைகரைத் தெளி மணி ஒலிப்பக்
காண வந்து நாணப் பெயரும்,
அளிதோ தானே காமம்,
விளிவது மன்ற, நோகோ யானே. 5

பாடல் பின்னணி:  தலைவியை கூட்டுவித்தற் பொருட்டுத் தோழியிடம் தலைவன் வேண்ட, அதற்கு இணங்கிய தோழி அவனை ஏற்றுக்கொள்ளும்படி தலைவியிடம் கூறியது.

பொருளுரை:  நெய்தல் நிலத் தலைவனான உன்னுடைய காதலன் தாமரை அலங்காரத்தையுடைய உயர்ந்த தேரில் மணிகளின் ஒலியுடன் வருகின்றான்.  தெளிந்த நீரை உடைய கடல் அலைகள் இடிக்கும் மணல் நிறைந்த கடற்கரையில் தேரை ஓட்டிக் கொண்டு உன்னைக்காண வந்து விட்டு, நாம் நாணும்படி சென்று விடுகின்றான்.  இந்தக் காதல் பரிதாபத்திற்கு உரியது.  உறுதியாக இது அழிந்து விடும்.  நான் உனக்காக வருந்துகின்றேன்.

குறிப்பு:  அளிதோ – ஓகாரம் அசை நிலை, தானே – தான், ஏ – அசை நிலைகள், நோகோ – ஓகாரம் அசை நிலை, யானே: ஏகாரம் அசை நிலை.  கொடுஞ்சி (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தாமரை மொட்டின் வடிவமாகச் செய்து தேர் முன் நடப்படுவது.  தேரூரும் தலைவர் இதைக் கையால் பற்றிக் கொள்வது வழக்கம்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  குறுந்தொகை 149, 395 -அளிதோ தானே நாணே, குறுந்தொகை 212 – அளிதோ தானே காமம்.

.

சொற்பொருள்:   கொண்கன் – நெய்தல் நிலத் தலைவன், ஊர்ந்த – ஓட்டிக் கொண்டு வந்த, கொடுஞ்சி – தேரின் முன் பகுதியில் உள்ள அலங்காரம், நெடுந்தேர் – உயர்ந்த தேர், தெண் கடல் – தெளிவான நீரையுடையக் கடல்,  அடைகரை – மணல் நிறைந்த கரை, நீர் நிறைந்த கரை, தெளிமணி – தெளிவான மணிகள், ஒலிப்ப – ஒலிக்க, காண வந்து – உன்னைப் பார்க்க வந்து, நாணப் பெயரும் – நாம்நாணும்படி சென்று விடுவது, அளிதோ தானே காமம் – காதல் என்பது பரிதாபமானது, விளிவது – அழியும், மன்ற – கண்டிப்பாக, நோகோ யானே – நான் வருந்துகின்றேன்

குறுந்தொகை 213, கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நசை நன்கு உடையர் தோழி, ஞெரேரெனக்
கவைத்தலை முது கலை காலின் ஒற்றிப்
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉம் பெரும் ததரல்
ஒழியின் உண்டு வழு இல் நெஞ்சின்
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழலாகி  5
நின்று வெயில் கழிக்கும் என்ப, நம்
இன் துயில் முனிநர் சென்ற ஆறே.

பாடல் பின்னணி:  வினைவயிற் பிரிந்து சென்ற தலைவர், நம் நிலை உணர்வாராயின் மேற்கொண்ட வினையின்கண் செல்லாது இடையில் மீண்டு விடுவாரோ என்று ஐயுற்ற தலைவியிடம் ‘அவர் அங்ஙனம் மீளார்’ என்று தோழி உரைத்தது.

பொருளுரை தோழி!  தலைவர் உன்பால் விருப்பம் மிக உடையவர். உன்னுடன் செய்யும் இனிய துயிலை வெறுத்துப் பிரிந்து சென்ற தலைவர் போன வழியில், கிளைத்த கொம்பை உடைய முதிய ஆண்மான் காலினால் விரைவாக உதைத்து பசி நோயைத் தீர்க்கும் பொருட்டு வளைத்த பருத்த பெரிய மரப்பட்டையைத் தன் குட்டி உண்ட பின் எஞ்சியதை உண்டு, குற்றம் இல்லாத நெஞ்சுடன் துள்ளி நடக்கும் இயல்புடைய தன் குட்டிக்கு நிழலாகி, அசையாது நின்று வெயிலை நீக்கும் என்று கூறுவர்.

குறிப்பு:  தமிழண்ணல் உரை – மான்களின் வாழ்க்கை பற்றிய இது இறைச்சி எனப்படும்.  ‘இடைச் சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி அன்புறு தக்க கிளத்தல் தானே கிழவோன் செய்வினைக்கு அச்சமாகும்’ (தொல்காப்பியம், கற்பியல் 7) என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு இத்தகைய பாடல்கள் தக்க சான்றாவன.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – உடல் நிழல் குட்டிக்கு ஆகும்படி வெயிலை மறைத்து நின்றது என்பது தான் வருந்தியும் தன் கடமை வழுவாது செய்வர் என்று உணர்த்தியவாறு.  மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

சொற்பொருள்:   நசை நன்கு உடையர் – விருப்பம் மிக உடையவர், தோழி – தோழி, ஞெரேர் என – விரைவாக, கவைத் தலை முது கலை – கிளைத்த கொம்பை உடைய முதிய ஆண்மான் (கவை – ஆகுபெயர்), காலின் ஒற்றி – காலினால் உதைத்து, பசிப் பிணிக்கு இறைஞ்சிய – பசி நோயைத் தீர்க்கும் பொருட்டு வளைத்த, பரூஉம் பெரும் ததரல் – பருத்த பெரிய மரப்பட்டை, ஒழியின் உண்டு – தன் குட்டி உண்ட பின் எஞ்சியதை உண்டு, வழு இல் நெஞ்சின் – குற்றம் இல்லாத நெஞ்சுடன், தெறித்து நடை மரபின் – துள்ளி நடக்கும் இயல்புடைய, தன் மறிக்கு நிழலாகி – தன் குட்டிக்கு நிழலாகி, நின்று வெயில் கழிக்கும் என்ப – நின்று வெயிலை நீக்கும் என்று கூறுவர், நம் இன் துயில் முனிநர் சென்ற ஆறே – உன்னுடன் செய்யும் இனிய துயிலை வெறுத்துப் பிரிந்து சென்ற தலைவர் போன வழி (ஆறே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 214, கூடலூர் கிழார்குறிஞ்சித் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும் புறம் தாழ்
அம் சில் ஓதி அசை இயல் கொடிச்சி
திருந்திழை அல்குற்குப் பெரும் தழை உதவிச்
செயலை முழு முதல் ஒழிய, அயலது  5
அரலை மாலை சூட்டி
ஏமுற்றன்று இவ்வழுங்கல் ஊரே.

பாடல் பின்னணி:  வெறியாட்டு எடுத்துக் கொண்டவிடத்து தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.

பொருளுரை மரங்களை வெட்டிய குறவன் கொல்லையை உழுது விதைத்த விளங்குகின்ற கதிர்களை உடைய தினையைக் காக்கும், முதுகில் தாழ்ந்து விழும் அழகிய சிலவாகிய கூந்தலையும் மெலிந்த சாயலையுமுடைய தலைவியின் திருத்தமான அணிகலனை அணிந்த அல்குலிற்கு, பெரிய தழையாகிய உடையை அளித்து, அதனோடு தொடர்பு இல்லாத அலரி மாலையை முருகனுக்கு அணிவித்து மயக்கமுற்றது இந்த ஆரவாரத்தை உடைய ஊர்.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – ஊரென்றது தாய் முதலியோரை.  அசை இயல் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – அசை இயல் – மெலிந்த சாயல், இரா. இராகவையங்கார் உரை –  கட்புலனாகிவியங்கும் சாயல், தமிழண்ணல் – அசையும் இயல்பு.  அயலது (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவியோடு அயன்மையுடைய மற்றொரு மரம்,  உ. வே. சாமிநாதையர் உரை – செயலை மரத்தோடு தொடர்பு இன்றி அயலதாய் நின்ற, இவளுக்கு யாதோர் இயைபுமில்லாத அயன்மையுடையதாகிய வெறியாட்டம்.  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

சொற்பொருள்:   மரம் கொல் கானவன் – மரங்களை வெட்டிய குறவன் (மலையில் வாழ்பவன்), புனம் துளர்ந்து வித்திய – கொல்லையை உழுது விதைத்த, பிறங்கு குரல் இறடி காக்கும் – விளங்குகின்ற கதிர்களை உடைய தினையைக் காக்கும், புறம் தாழ் அம் சில் ஓதி அசை இயல் கொடிச்சி – முதுகில் தாழ்ந்து விழும் அழகிய சிலவாகிய கூந்தலையும் மெலிந்த சாயலையுமுடைய தலைவி (கொடிச்சி – மலையில் வாழும் பெண்), திருந்திழை அல்குற்கு – திருத்தமான அணிகலனை அணிந்த அல்குலிற்கு, பெரும் தழை உதவிச் செயலை முழு முதல் ஒழிய – பெரிய தழையாகிய உடையை அளித்து உதவிய அசோக மரத்தின் பெருத்த அடி ஒழிய, அயலது – அதனோடு தொடர்பு இல்லாத, அரலை மாலை சூட்டி ஏமுற்றன்று – அலரி மாலையை முருகனுக்கு அணிவித்து மயக்கமுற்றது, இவ்வழுங்கல் ஊரே – இந்த ஆரவாரத்தை உடைய ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 215, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
படரும் பைபயப் பெயரும் சுடரும்
என்றூழ் மா மலை மறையும் இன்று அவர்
வருவர் கொல், வாழி தோழி! நீர் இல்
வறுங்கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும்பொறை மருங்கின் அமர் துணை தழீஇக்  5
கொடுவரி இரும்புலி காக்கும்,
நெடுவரை மருங்கின் சுரன் இறந்தோரே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாமை எய்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.

பொருளுரை:   நீடு வாழ்வாயாக, தோழி! உன் துன்பமும் உன்னை விட்டு மெல்ல மெல்ல நீங்கும். ஒளிர்கின்ற ஞாயிறும் பெரிய மலையின் பின் சென்று மறையும். நீர் இல்லாத வறிய குளத்தைத் துழவிய விளங்குகின்ற மருப்புகளை (தந்தங்களை) உடைய யானை, சிறிய மலையின் அருகில், தான் விரும்பும் பெண் யானையைத் தழுவி கொண்டு வளைந்த வரிகளையடைய பெரிய புலி தாக்காது பாதுகாக்கும் உயர்ந்த மலையின் அருகில் உள்ள பாலை நிலத்தைக் கடந்து சென்ற நம் தலைவர், இன்று வருவார்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீரில் வறுங் கயத்தைத் துழவிய களிற்று யானை குறும்பொறை மருங்கில் பிடியைப் புலி தாக்காமல் காக்கும் என்றது பொருள் நிமித்தம் வறிய பாலை நிலத்தே சென்ற நம் தலைவர் விரைவில் மீண்டு வந்து நின்னைப் பிரிவுத் துன்பம் வருத்தாமல் அருளுவர் என்னும் குறிப்பிற்று.  இரா. இராகவையங்கார் உரை – முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்த நிலன் ஆதலால் குறும்பொறை மருங்கும் நெடுவரை மருங்கும் கூறினாள்.  தமிழண்ணல் உரை – விலங்குகள் மக்களின் உரிப் பொருளைச் சிறப்பிக்க வருவதே இறைச்சி.  யானை தன் பிடியைக் காப்பதைப் பார்க்கும் தலைவர் அன்பு தூண்டப் பெற்று நிச்சயம் திரும்புவர் என்பது குறிப்பு.  இதுவே இறைச்சிப் பொருள்.  ‘அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும் வன்புறை ஆகும் வருந்திய பொழுதே’ (தொல்காப்பியம், பொருளியல் 35) என்பதற்கு இது தக்க சான்றாகும்.  பைபய – பையப்பைய பைபய என மருவியது.  துழைஇய – அளபெடை.  தழீஇ – அளபெடை.  சுரன் – சுரம் என்பதன் போலி.  இறந்தோரே – ஏ அசை நிலை.

சொற்பொருள்:   படரும் பைபயப் பெயரும் – துன்பமும் மெல்ல மெல்ல நீங்கும், சுடரும் என்றூழ் மா மலை மறையும் – ஒளிர்கின்ற ஞாயிறும் பெரிய மலையின் பின் சென்று மறையும், இன்று அவர் வருவர் கொல் – இன்று அவர் வருவார் (கொல் அசைநிலை), வாழி தோழி – நீடு வாழ்வாயாக தோழி, நீர் இல் வறுங்கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை – நீர் இல்லாது உலர்ந்த குளத்தை துழவிய விளங்குகின்ற மருப்புகளை உடைய யானை, குறும்பொறை மருங்கின் – சிறிய மலையின் அருகில், சிறிய பாறையின் அருகில், அமர் துணை தழீஇ – தான் விரும்பும் பெண் யானையைத் தழுவிக் கொண்டு, கொடுவரி இரும்புலி காக்கும் – வளைந்த வரிகளையடைய பெரிய புலி தாக்காது பாதுகாக்கும், நெடுவரை மருங்கின் சுரன் இறந்தோரே – உயர்ந்த மலையின் அருகில் உள்ள பாலை நிலத்தைக் கடந்து சென்ற நம் தலைவர்

குறுந்தொகை 216, கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவரே கேடு இல் விழுப் பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியங்காடு இறந்தோரே;
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ ஏங்கிப்
பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே;
அன்னள் அளியள் என்னாது மா மழை  5
இன்னும் பெய்ய முழங்கி,
மின்னும் தோழி, என் இன் உயிர் குறித்தே.

பாடல் பின்னணி:  பருவ வரவின்கண் தலைவி ஆற்றாள் என வருந்திய தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:   தோழி!  நம் தலைவர்  கேடு இல்லாத உயர்ந்த செல்வதை ஈட்டி வரும்பொருட்டு, பசிய இலைகள் வாடாத வள்ளிக்கொடிகள் படர்ந்த காட்டைக் கடந்து சென்றார்.  நான் தொகுப்பாக உள்ள ஒளியுடைய என் கை வளையல்கள் நெகிழ கவலை அடைந்து படுத்தல் அமைந்த படுக்கையில் வருத்தம் மிகுந்துள்ளேன்.  அவள் இரங்கத் தக்கவள் எனக் கருதாது, என் உயிரைக் கொள்ளுதல் குறித்து, கரிய முகில்கள் இன்னும் மழையைப் பெய்யும் பொருட்டு முழக்கம் செய்து மின்னுகின்றது.

குறிப்பு:  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  வாடா வள்ளியங்காடு (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பசிய இலைகளையுடைய வாடாத வள்ளிக் கொடி படர்ந்த காடு, உ. வே. சாமிநாதையர் உரை – பச்சையிலைகளையுடைய வாடாத வள்ளிக்கொடி படர்ந்த காடு, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பாசிலை வாடா வள்ளிக் கூத்தினையுடைய காடு.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்:   அவரே – தலைவர் (ஏகாரம் அசைநிலை, கேடு இல் விழுப் பொருள் தருமார் – கேடு இல்லாத உயர்ந்த செல்வதை ஈட்டி வரும்பொருட்டு, பாசிலை வாடா வள்ளியங்காடு இறந்தோரே – பசிய இலைகள் வாடாத வள்ளிக்கொடிகள் படர்ந்த காட்டைக் கடந்து சென்றார் (வள்ளியம் – அம் சாரியை, அழகிய காடுமாம்), யானே – யான் (ஏகாரம் அசைநிலை), தோடு ஆர் எல் வளை ஞெகிழ – தொகுப்பாக உள்ள ஒளியுடைய வளையல்கள் நெகிழ, ஏங்கிப் பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே – கவலை அடைந்து படுத்தல் அமைந்த படுக்கையில் வருத்தம் மிகுந்துள்ளேன், அன்னள் அளியள் என்னாது – அவள் இரங்கத் தக்கவள் எனக் கருதாது, மா மழை இன்னும் பெய்ய முழங்கி மின்னும் – கரிய முகில்கள் இன்னும் மழையைப் பெய்யும் பொருட்டு முழக்கம் செய்து மின்னுகின்றது, தோழி – தோழி, என் இன் உயிர் குறித்தே – என் உயிரைக் கொள்ளுதல் குறித்து (குறித்தே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 217, தங்கால் முடக்கொல்லனார் (தங்கால் முடக்கொற்றனார்)குறிஞ்சித் திணை- தோழி தலைவியிடம் சொன்னது 

தினை கிளி கடிக எனின் பகலும் ஒல்லும்
இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல்,
‘யாங்குச் செய்வாம் எம் இடும்பை நோய்க்கு’ என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப், பிறிது செத்து,
ஓங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற, 5
ஐதே காமம், யானே
‘கழிமுதுக் குறைமையும்’ பழியும் என்றிசினே.

பாடல் பின்னணி:  இற்செறிப்பு முதலிய காவல் மிகுதியால், தலைவனுடன் நீ உடன்போக்கில் செல்லக்கடவை என்று தோழி குறிப்பால் தலைவியிடம் கூறியது.

பொருளுரை:   உயர்ந்த மலை நாடனாகிய தலைவனுடன் நான் பேசினேன். “அன்னை, கிளியை விரட்டுவதற்காக எங்களைத் தினைப் புனத்திற்கு அனுப்புவாள்.  நீ வருவதற்குப் பொருத்தமான நேரம் அது.  நீ இரவில் வந்தால் நாங்கள் அஞ்சுவோம். இந்தக் காதல் நோய்க்குப் பதில் யாது?” என நான் அவனிடம் கேட்டேன். சிறிது நேரம் சிந்தித்து விட்டு, பெருமூச்சு விட்டான்.  “காதல் நுட்பமானது. நீ நினைப்பது சரி தான். ஆனால் அதனால் பழியும் ஏற்படலாம்”, என்று நான் அவனிடம் சொன்னேன்.

குறிப்பு:  ஐதே:  ஐ – உரிச்சொல், ஏகாரம் அசை நிலை, யானே – ஏகாரம் அசை நிலை, குறைமையும் – உம் அசை நிலை, பழியும் – உம் அசை நிலை, என்றிசினே: ஏகாரம் அசை நிலை.  கிளி கடி:  அகநானூறு 118 – குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள், அகநானூறு 194 – கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும், குறுந்தொகை 142 – புனக் கிளி கடியும் பூங்கண் பேதை, குறுந்தொகை 198 – படுகிளி கடிகம் சேறும், குறுந்தொகை 217 – தினை கிளி கடிக எனின், குறுந்தொகை 291 – ஏனல் படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே இசையின் இசையா இன்பாணித்தே, குறுந்தொகை 360 –  ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே, பதிற்றுப்பத்து 78 – மெல் இயல் மகளிர் ஒல்குவனர் இயலிக் கிளி கடி மேவலர் புறவு தொறும் நுவல.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

சொற்பொருள்:  தினை கிளி கடிக எனின் – தினையை உண்ண வரும் கிளிகளை விரட்டு,  பகலும் ஒல்லும் – பகல் நேரம் பொருத்தமானது,  இரவு நீ வருதலின் – இரவில் நீ வந்தால், ஊறும் அஞ்சுவல் – இடையூறு ஏற்படுமோ என்று அஞ்சுகின்றோம், யாங்குச் செய்வாம் – என்ன செய்வது, எம் இடும்பை நோய்க்கு – இந்தக் காதல் நோய்க்கு,  என – என,  ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு – அங்கு நான் கூறியப் பின்னர், பிறிது செத்து – சிறிது நேரம் சிந்தித்து,  ஓங்குமலை நாடன் – உயர்ந்த மலையின் தலைவன்,  உயிர்த்தோன் – பெருமூச்சு விட்டான், மன்ற – உறுதியாக,  ஐதே – நுட்பமானது, மென்மையானது, காமம் – காதல்,  யானே – நானே,  கழிமுதுக் குறைமையும் – நீ நினைத்தவாறு செய்வது மிக்க அறிவுடையது,  பழியும் என்றிசினே – பழியும் ஏற்படலாம் என்று சொன்னேன்

குறுந்தொகை 218, கொற்றனார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாம், கைந்நூல் யாவாம்,
புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்,
உள்ளலும் உள்ளாம், அன்றே தோழி,
உயிர்க்குயிர் அன்னர் ஆகலின், தம்மின்று 5
இமைப்பு வரை அமையா நம்வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே.

பாடல் பின்னணி:  தலைவனின் பிரிவினால் தலைவி ஆற்றாள் என வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது.

பொருளுரை:  தோழி!  அவர் என் உயிருக்கு உயிரானவர்.  இமைப்பொழுதும் அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது.  என்னை நினையாது மறந்து விட்டு, தான் சென்று அவ்விடத்தில் தங்குதலில் வல்ல தலைவர் பொருட்டு, நான் பிளவுகளும் குகைகளும் உடைய தொடர் மலையில் உள்ள சூலிக்குப் பலிக்கடன் செய்ய மாட்டேன், என் கையில் காப்பு நூல் கட்ட மாட்டேன், பறவைகளின் நிமித்தங்களைக் கேட்க மாட்டேன், நல்ல சொல்லுக்காகக் காத்துக்கொண்டு இருக்க மாட்டேன்.  அவரை நான்  நினைக்கவும் மாட்டேன்.

குறிப்பு:  அன்றே – அன்று, ஏ – அசை நிலைகள், மாட்டே – ஏகாரம் அசைநிலை, நம்வயின் – உருபு மயக்கம்.  விரிச்சி:  நற்றிணை 40 – விரிச்சி நிற்ப, குறுந்தொகை 218 – விரிச்சியும் நில்லாம், புறநானூறு 280 – விரிச்சி ஓர்க்கும், முல்லைப்பாட்டு 11 – விரிச்சி நிற்ப.  சூலிக்கு (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை, தமிழண்ணல் உரை – கொற்றவைக்கு, உ. வே. சாமிநாதையர் உரை – துர்க்கைக்கு.

சொற்பொருள்:   விடர் முகை – மலையின் பிளவு, குகை, அடுக்கத்து – தொடர் மலை,  விறல்கெழு சூலிக்கு – வீரம் உடைய சூலிக்கு, கடனும் பூணாம் – நான் பலிக்கடன் செய்ய மாட்டேன்,  கைந்நூல் யாவாம் – கையில் காப்பு நூல் கட்ட மாட்டேன்,  புள்ளும் ஓராம் – பறவைகளின் நிமித்தங்களைக் கேட்க மாட்டேன்,  விரிச்சியும் நில்லாம் – நற்சொல்லுக்காக நான் காத்துக்கொண்டு இருக்க மாட்டேன்,  உள்ளலும் உள்ளாம் – நினைக்க மாட்டேன், அன்றே  தோழி – இல்லையா தோழி,  உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் – என்னுடைய உயிருக்கு உயிராக உள்ளவராக இருப்பதால்,  தம்மின்று – அவர் இல்லாமல்,  இமைப்பு வரை – இமைப் பொழுதும், அமையா நம்வயின் – என்னை பிரிந்திருக்கும் பொழுது நினைக்காது,  மறந்து – மறந்து,  ஆண்டு – அங்கு,  அமைதல் – தங்குதல்,  வல்லியோர் மாட்டே – வல்ல தலைவர் திறத்து

குறுந்தொகை 219, வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பயப்பு என் மேனியதுவே, நயப்பவர்
நார் இல் நெஞ்சத்து ஆர் இடை அதுவே,
செறிவும் சேண் இகந்தன்றே, அறிவே
ஆங்கண் செல்கம் எழுகென ஈங்கே
வல்லா கூறி இருக்கும் முள் இலைத்  5
தடவு நிலைத் தாழைச் சேர்ப்பர்க்கு
இடம் மன் தோழி, என் நீரிரோ எனினே.

பாடல் பின்னணி:  தலைவன் சிறைப்புறத்தே வந்து நிற்பதை அறிந்த தலைவி, தன் துன்ப மிகுதியை அவன் உணரும் வண்ணம் தோழிக்குக் கூறுவாளாகய்க் கூறியது.

பொருளுரை:  தோழி! பசப்பு என் மேனியில் உள்ளது. விருப்பம் அவரது அன்பு இல்லாத நெஞ்சமாகிய செல்லுதற்கு அரிய இடத்தில் உள்ளது. என்னுடைய அடக்கமும் நெடும் தொலைவிற்கு நீங்கியது. என்னுடைய அறிவு தலைவர் இருக்கும் இடத்திற்குச் செல்வோம் என்று நம்மால் இயலாதவற்றைக் கூறி இங்கே தங்கி இருக்கும். “என்ன தன்மையில் உள்ளீரோ” எனக்கேட்டு நம் குறையைத் தீர்ப்பாராயின், முள்ளை இலையில் கொண்ட பருத்த அடியையுடைய தாழையை உடைய கடற்கரைத் தலைவருக்கு இது தக்க நேரம் ஆகும்,

குறிப்பு:  நார் இல் நெஞ்சம் (2) –  தமிழண்ணல் உரை, உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை ஆகியவற்றில் – தலைவரின் அன்பற்ற நெஞ்சம், இரா. இராகவையங்கார் உரை – என் நாரில் நெஞ்சம், நற்றிணை 269ஆம் பாடலில் உள்ள ‘அதனினுங் கொடிதே…..வாரா என் நாரில் நெஞ்சம்’ என்னும் வரிகளை எடுத்துக்காட்டாக காட்டுகின்றார்.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

சொற்பொருள்:   பயப்பு என் மேனியதுவே – பசப்பு என் மேனியில் உள்ளது (மேனியதுவே – ஏகாரம் அசைநிலை), நயப்பு அவர் நார் இல் நெஞ்சத்து ஆர் இடை அதுவே – விருப்பம் அவரது அன்பு இல்லாத நெஞ்சமாகிய செல்லுதற்கு அரிய இடத்தில் உள்ளது (அதுவே – ஏகாரம் அசைநிலை), செறிவும் சேண் இகந்தன்றே – அடக்கமும் நெடும் தொலைவிற்கு நீங்கியது (இகந்தன்றே – ஏகாரம் அசைநிலை), அறிவே ஆங்கண் செல்கம் எழுகென ஈங்கே வல்லா கூறி இருக்கும் – என்னுடைய அறிவு தலைவர் இருக்கும் இடத்திற்குச் செல்வோம் என்று நம்மால் இயலாதவற்றைக் கூறி இங்கே தங்கி இருக்கும், முள் இலைத் தடவு நிலைத் தாழைச் சேர்ப்பர்க்கு – முள்ளை இலையில் கொண்ட பருத்த அடியையுடைய தாழையை உடைய கடற்கரைத் தலைவருக்கு, இடம் – இது தக்க நேரம் ஆகும், மன் – அசைநிலை, தோழி – தோழி, என் நீரிரோ – என்ன தன்மையில் உள்ளீரோ, எனினே – (எனினே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 220, ஒக்கூர் மாசாத்தியார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை,
வெருகு சிரித்தன்ன பசு வீ மென் பிணிக்
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின்  5
வண்டு சூழ் மாலையும் வாரார்,
கண்டிசின் தோழி, பொருள் பிரிந்தோரே.

பாடல் பின்னணி:  பருவ வரவின்கண் தலைவி தோழிக்கு உரைத்தது.

பொருளுரை:  தோழி!  பொருள் ஈட்டும்பொருட்டு நம்மைப் பிரிந்து சென்ற தலைவர், பழைய மழையினால் தழைத்த புனத்தில் உள்ள புதிய வரகின், ஆண்மான் மேய்ந்ததால் குறைதல் உடைய நுனியை உடைய அரிந்த தாள் சேர்ந்த பக்கத்தில் மலர்ந்த முல்லைக்கொடியின் காட்டுப்பூனை சிரித்தாற்போன்ற தோற்றத்தை உடைய பசிய பூக்களின் மெல்லிய பிணிப்பை உடைய சிறிய அரும்புகள் மலர்ந்த நறுமண மலர்களையுடைய முல்லை நிலத்தில் வண்டுகள் மலர்களை ஊதும் மாலைக் காலத்திலும் வரவில்லை. இதனை நீ அறிவாயாக!

குறிப்பு:  காட்டுப் பூனையின் பற்களைப் போன்ற முல்லை அரும்பு: அகநானூறு 391 – பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன வரி மென் முகைய, குறுந்தொகை 220 – முல்லை வெருகு சிரித்தன்ன பசு வீ மென் பிணி குறு முகை அவிழ்ந்த, குறுந்தொகை 240 – வெருக்குப்பல் உருவின் முல்லையொடு, புறநானூறு 117 – பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும்.  பாவை இருவி (2-3) – உ. வே. சாமிநாதையர் உரை – நுனியை உடைய கதிர் அரிந்த தாள்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

சொற்பொருள்:   பழ மழைக் கலித்த – பழைய மழையினால் தழைத்த, புதுப் புன வரகின் – புனத்தில் உள்ள புதிய வரகின், இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை இருவி – ஆண்மான் மேய்ந்ததால் குறைதல் உடைய நுனியை உடைய அரிந்த தாள், சேர் மருங்கில் – சேர்ந்த பக்கத்தில், பூத்த முல்லை – மலர்ந்த முல்லைக்கொடியின், வெருகு சிரித்தன்ன – காட்டுப்பூனை சிரித்தாற்போன்ற தோற்றத்தை உடைய, பசு வீ – பசிய பூவின், மென் பிணிக் குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின் வண்டு சூழ் மாலையும் வாரார் – மெல்லிய பிணிப்பை உடைய சிறிய அரும்புகள் மலர்ந்த நறுமண மலர்களையுடைய முல்லை நிலத்தில் வண்டுகள் மலர்களை ஊதும் மாலைக் காலத்திலும் வரவில்லை, கண்டிசின் – இதனை நீ அறிவாயாக (இசின் – முன்னிலை அசை), தோழி – தோழி, பொருள் பிரிந்தோரே – பொருள் ஈட்டும்பொருட்டு நம்மைப் பிரிந்து சென்ற தலைவர்

குறுந்தொகை 221, உறையூர் முதுகொற்றனார்,  முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வாரார், முல்லையும் பூத்தன,
பறியுடைக் கையர் மறி இனத்து ஒழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய வெல்லாம், சிறுபசு முகையே. 5

பாடல் பின்னணி:  தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்தது கண்டு, கவலை அடைந்த தன்னை, ஆற்றுப்படுத்தும் தன்னுடைய தோழியை நோக்கித் தலைவி வருத்தத்துடன் கூறுகின்றாள். 

பொருளுரை:   அவர் இன்னும் வரவில்லை.  முல்லை மலர்கள் மலர்ந்து விட்டன.  பனை ஓலையையைக் கையில் கொண்ட இடையன் தன் ஆட்டு குட்டிகளைப் பிற ஆடுகளோடு தங்க வைத்து விட்டு, பாலைக் கொண்டு வந்து கொடுத்துச் சோற்றைப் பெற்றுச் செல்கின்றான்.  அந்த இடையன் தன் தலையில் சிறிய பசுமையான முல்லை அரும்புகளைச் சூடி இருக்கின்றான்.

குறிப்பு:  பருவங் கண்டு தலைவி கூறியது.  அவரோ – ஓகாரம் அசை நிலை, இரங்கற் குறிப்புமாம், முகையே – ஏகாரம் பிரிநிலை. முல்லையும் – உம்மை, சிறப்பு, முல்லை பூத்தல் கார் காலத்திற்கு அடையாளம்,  பறி (2) – உ. வே. சாமிநாதையர் உரை – இடையர்கள் மழைக்காகத் தலையில் கவிழ்த்துக் கொள்ளும் ஒரு வகைக் கருவி.  இது பனை ஓலையால் செய்யப்பட்டது.  இடை மகன் சென்னிச் சூடிய எல்லாம் சிறு பசு முகையே (4-5) – இரா. இராகவையங்கார் உரை – தான் சூடலாகாமை குறித்ததாம்.  தமிழண்ணல் உரை – பாலைத் தந்து உணவைப் பெறுவது பண்டமாற்று.  உ. வே. சாமிநாதையர் உரை – மேய்ப்பவர்கள் மேய்ச்சல் நிலத்தில் தங்க இடையன் இடையன் பாலை வீட்டிற்குக் கொணர்ந்து கொடுத்து அவர்களுக்குப் பால் சோற்றைக் கொண்டு சென்றான்.  பாலை விற்கும் பொருட்டு வந்த இடையன் ஊரில் அதனை விற்று விட்டு அதற்கு விலையாக உணவிற்குரிய தானியத்தைப் பெற்றுச் சென்றான் எனலும் உண்டு.  அகநானூறு 123 – இறவொடு வந்து கோதையொடு பெயரும், அகநானூறு 149 – பொன்னொடு வந்து கறியொடு பெயரும், குறுந்தொகை 221 – பாலொடு வந்து கூழொடு பெயரும்.  மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

சொற்பொருள்:   அவரோ வாரார் – அவர் இன்னும் வரவில்லை, முல்லையும் பூத்தன – முல்லை மலர்களும் மலர்ந்து விட்டன, பறியுடைக் கையர் – பனை ஓலையை உடையவர், மறி இனத்து ஒழிய – குட்டிகளோடு உள்ள ஆட்டின் திரளோடு சென்று தங்க, பாலொடு வந்து கூழொடு பெயரும் – பாலைக் கொண்டு வந்து கொடுத்து சோற்றைப் பெற்றுச் செல்லும், ஆடுடை இடைமகன் – ஆடுகளையுடைய இடையன், சென்னிச் சூடிய – தலையில் சூடியது, எல்லாம் – எல்லாம், சிறுபசு முகையே – சிறிய பசுமையான முல்லை அரும்புகளே

குறுந்தொகை 222, சிறைக்குடி ஆந்தையார்குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
தலைப் புணைக் கொளினே தலைப் புணைக் கொள்ளும்,
கடைப் புணைக் கொளினே கடைப் புணைக் கொள்ளும்,
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்
ஆண்டும் வருகுவள் போலும், மாண்ட
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச்  5
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே.

குறுந்தொகை 222, சிறைக்குடி ஆந்தையார்குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
தலைப் புணைக் கொளினே தலைப் புணைக் கொள்ளும்,
கடைப் புணைக் கொளினே கடைப் புணைக் கொள்ளும்,
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்
ஆண்டும் வருகுவள் போலும், மாண்ட
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச்  5
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே.

பாடல் பின்னணி:  தலைவியும் தோழியும் ஆயமகளிருடன் நீராடும்பொழுது, அத் தோழியின்பால் தலைவிக்கு உளதாகிய ஒற்றுமையை அறிந்து, ‘இவளே தலைவியை நாம் பெறுதற்குரிய வாயில்’ என தலைவன் நினைந்தது.

பொருளுரை:   மாட்சிமையுடைய மழைக்காலத்தில் வளரும் பிச்சியின் நீர் ஒழுகும் கொழுத்த அரும்புகளின் சிவந்த புறத்தைப் போன்று இருக்கும் கொழுவிய கடைப்பகுதியையும் குளிர்ச்சியையும் உடைய கண்களையும், மழைத்துளிகள் தன் மீது பெய்யப்பட்ட தளிரைப் போன்ற மென்மையையும் உடைய தலைவி, தெப்பத்தின் தலைப்பை அவளுடைய தோழி பற்றிக்கொண்டால் தானும் அதன் தலைப்பைப் பற்றிக்கொள்வாள். தெப்பத்தின் கடைப்பகுதியை அவளுடைய தோழி பற்றிக்கொண்டால் தானும் கடைப் பகுதியைப் பற்றிக்கொள்வாள்.  தெப்பத்தைக் கைவிட்டு நீரோடு அவளுடைய தோழி சென்றால் அங்கும் தலைவி வருவாள் போலும்.

குறிப்பு:  பித்திகம் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – பிச்சி மலர்.  ஒன்றித் தோன்றுந் தோழி (தொல்காப்பியம் அகத்திணை 39).  இரா. இராகவையங்கார் உரை – பித்திகத்துக்கு மாரிப் பருவமும் தளிர்க்குத் துளியும் போல இத் தோழி தலைவிக்கு இன்றியமையாமையும் நினைத்தானாம்.  தலைப் புணைகடைப் புணை –  உ. வே. சாமிநாதையர் உரை – புணைத்தலை, புணைக்கடை என்பவை மாறி நின்றன. புணையென்பது வாழைமரத்துண்டு, மிதக்கும் மரத்துண்டுகள் போன்றவை.

சொற்பொருள்:   தலைப் புணைக் கொளினே தலைப் புணைக் கொள்ளும் – தெப்பத்தின் தலைப்பை அவளுடைய தோழி பற்றிக்கொண்டால் தானும் அதன் தலைப்பைப்  பற்றிக்கொள்வாள் (கொளினே – ஏகாரம் அசைநிலை), கடைப் புணைக் கொளினே கடைப் புணைக் கொள்ளும் – அவள் தெப்பத்தின் கடைப்பகுதியைப் பற்றிக்கொண்டால் தானும் கடைப் பகுதியைப் பற்றிக்கொள்வாள் (கொளினே – ஏகாரம் அசைநிலை), புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின் ஆண்டும் வருகுவள் போலும் – தெப்பத்தைக் கைவிட்டு நீரோடு அவள் சென்றால் அங்கும் தலைவி வருவாள் போலும், மாண்ட மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச் செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண் – மாட்சிமையுடைய மழைக்காலத்தில் வளரும் பிச்சியின் நீர் ஒழுகும் கொழுத்த அரும்புகளின் சிவந்த புறத்தைப் போன்று இருக்கும் கொழுவிய கடைப்பகுதியையும் குளிர்ச்சியையும் உடைய கண்கள் (உறழும் – போன்று இருக்கும்), துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே – மழைத்துளிகள் பெய்யப்பட்ட தளிரைப் போன்ற மென்மை உடைய தலைவி (அன்னோளே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 223, மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பேரூர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம் என்றி, அன்று இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல,
தழலும் தட்டையும் முறியும் தந்து, இவை
ஒத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி, 5
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என்னை கொண்டான், யாம் இன்னமால் இனியே.

பாடல் பின்னணி:  வரைபொருள் பொருட்டு தலைவன் பிரிந்த காலத்தில் ‘நீ ஆற்றியிரு’ என வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  பெரிய ஊரில் உள்ளவர்கள் கொண்டாடும் ஆரவாரமுடைய விழாவிற்குப் போகலாம் போகலாம் என்று நீ கூறினாய்.  அன்று நாம் செல்லும் பொழுது இங்குள்ள நல்லவர்கள் பல நல்ல சொற்களைக் கூறினார்கள் (நிமித்தங்கள் பலவற்றைக் கூறினார்கள்).  கிளி விரட்டும் கருவிகளான தழலையும் தட்டையும் தழை ஆடையையும் என்னிடம் தந்து இவை உனக்குப் பொருத்தமானவை என்று பொய்யைக் கூறி, என் தாய் பாதுகாத்த என்னுடைய அழகிய பெண்மை நலத்தை என்னுடைய தலைவன் கவர்ந்து கொண்டான்.  நான் இப்பொழுது இவ்வாறு ஆகி விட்டேன்.

குறிப்பு:  பலவால் – ஆல் அசை நிலை, இன்னமால் – ஆல் அசை நிலை. இனியே – ஏகாரம் அசை நிலை.  தில்ல – தில் காலத்தின்கண் வந்த இடைச் சொல், ஈறு திரிந்தது வந்தது.  தழல் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – கையால் சுற்றிய காலத்துத் தன்னிடத்துப் பிறக்கும் ஓசையாற் கிளி முதலியவற்றை ஓட்டும் கருவி. குறிஞ்சிப்பாட்டு 43 – தழலும் தட்டையும் குளிறும் பிறவும்.  தட்டை (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை குறிஞ்சிப்பாட்டில் – மூங்கிலை குறுக்கே நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை உண்டாகும்படி ஒன்றிலே தட்டும் கருவி.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

சொற்பொருள்:  பேரூர் கொண்ட – பெரிய ஊரினர் மேற்கொண்ட, ஆர்கலி விழவில் – ஆரவாரமுடைய விழாவிற்கு, செல்வாம் செல்வாம் என்றி – போகலாம் போகலாம் என்று நீ கூறினாய் (என்றி – முன்னிலை ஒருமை), அன்று – அன்று, இவண் நல்லோர் – இங்குள்ள நல்லவர்கள், நல்ல பலவால் – நல்ல பலவாகிய சொற்கள் இருந்தன, தில்ல – தில் காலத்தின்கண் வந்த இடைச் சொல், ஈறு திரிந்தது வந்தது, தழலும் தட்டையும்  – கிளி விரட்டும் கருவிகளான தழலையும் தட்டையும்,  முறியும் தந்து – தழை ஆடையையும் தந்து, இவை ஒத்தன நினக்கு என  – இவை உனக்கு பொருத்தமானவை என்று, பொய்த்தன கூறி – பொய்யைக் கூறி, அன்னை ஓம்பிய ஆய் நலம் – தாய் பாதுகாத்த என்னுடைய அழகிய பெண்மை நலத்தை, என் ஐ கொண்டான் – என்னுடைய தலைவன் எடுத்துக் கொண்டான், யாம் இன்னமால் – யாம் இப்பொழுது இவ்வாறு ஆகினோம் (இன்னம் + ஆல், ஆல் – அசை நிலை), இனியே – இப்பொழுது

குறுந்தொகை 224, கூவன் மைந்தனார்பாலைத் திணை – தலைவி சொன்னது
கவலை யாத்த அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றித் துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே, கூவல்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத்,  5
துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்த காலத்தில் ‘இவள் இறந்து படுவாளோ’ என்று கவலையுற்ற தோழி கேட்பத் தலைவி உரைத்தது.

பொருளுரை கிணற்றில் விழுந்த குரால் நிறப் பசுப் படும் துன்பத்தை இரவில் கண்ட ஊமை ஒருவன் அத் துயரத்தைக் கூற முடியாமல் துன்புறுவதைப் போல, எனக்காக வருந்தும் என் தோழி படும் துன்பத்தைத் தாங்க முடியாதவளாய் நான் இருக்கின்றேன். அத் துன்பம், பிளவுடைய வழிகளில் யா மரங்களையுடைய துன்பத்தை உடைய நீண்ட வழியில் என்னைப் பிரிந்துச் சென்ற தலைவரின் கொடுமையை எண்ணி உறங்காமல் இருக்கும் என்னுடைய துன்பத்தைக் காட்டிலும் மிகுந்த துன்பமாக உள்ளது.

குறிப்பு:  ஆகின்றே – ஏகாரம் அசை நிலை, நோய்க்கே – ஏகாரம் அசை நிலை.  உயர்திணை ஊமன் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – ஊமன் என்பது அஃறிணையாகிய கோட்டானுக்கும் வருதலின் அதை விலக்க ‘உயர்திணை ஊமன்’ என்றாள்.  இது வெளிப்படை என்னும் இலக்கணத்தின் பாற்படும்.

சொற்பொருள்:   கவலை யாத்த – பிளவுடைய வழிகளில் யா மரங்களையுடைய, அவல நீள் இடைச் சென்றோர் – துன்பத்தை உடைய நீண்ட வழியில் சென்ற என் தலைவர், கொடுமை எற்றி – கொடுமையை எண்ணி, துஞ்சா நோயினும் – துயிலாமல் இருக்கும் என் துன்பத்தைக் காட்டிலும், நோய் ஆகின்றே – மிக்க துன்பமாகின்றது, கூவல் குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட – கிணற்றில் விழுந்த குரால் நிறப் பசு படும் துன்பத்தை இரவில் கண்ட, உயர்திணை ஊமன் போலத் துயர் பொறுக்கல்லேன் – ஊமை ஒருவன் அத் துயரத்தை கூற முடியாமல் தவித்துத் துன்புறுவதைப் போல நான் பொறுக்க முடியாமல் இருக்கின்றேன், தோழி நோய்க்கே – என் தோழியின் துன்ப நோய்க்கு

குறுந்தொகை 225, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கன்று தன் பய முலை மாந்த முன்றில்
தினை பிடி உண்ணும் பெருங்கல் நாட!
கெட்டிடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல,
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க்  5
கலி மயில் கலாவத்து அன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரியும் தலைவனிடம் தோழி கூறியது.

பொருளுரை யானைக் கன்று தன்னுடைய பால் பயனுடைய முலையில் பால் குடித்துக் கொண்டிருக்க, வீட்டின் முன் முற்றத்தில் உள்ள தினைப் பயிரை பெண் யானை உண்ணும் இடமாகிய பெரிய மலையின் நாடனே! தான் வறுமை அடைந்த காலத்தில் பிறரால் பெற்று மகிழ்ந்த உதவியைத் தான் அரசுக் கட்டில் சிறப்பைப் பெற்ற பின்பு மறந்து விட்ட மன்னனைப் போல, யாம் நுமக்குச் செய்த உதவியை மறந்து விடாது அவளை மணந்துக் கொள்வீர் ஆயின், மெல்லிய சிறப்பை உடைய ஆரவாரிக்கும் மயிலின் தோகைப் போன்ற அடர்ந்த மெல்லிய கூந்தல் உமக்கே உரிமை உடையன ஆகும்.

குறிப்பு:  கெட்டிடம் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – கெட்ட இடம் என்பது கெட்டிடம் என ஆயிற்று.  முன்றில் – இல்முன்.

சொற்பொருள்:   கன்று தன் பய முலை மாந்த முன்றில் தினை பிடி உண்ணும் பெருங்கல் நாட – யானைக் கன்று தன்னுடைய பால் பயனுடைய முலையில் குடித்து நிற்ப வீட்டின் முன் முற்றத்தில் உள்ள தினைப் பயிரை பெண் யானை உண்ணும் இடமாகிய பெரிய மலையின் நாடனே, கெட்ட இடத்து உவந்த உதவி  – தான் வறுமை அடைந்த காலத்தில் பிறரால் பெற்று மகிழ்ந்த உதவி, கட்டில் வீறு பெற்று மறந்த மன்னன் போல – அரசுக் கட்டில் சிறப்பைப் பெற்று மறந்து விட்ட மன்னனைப் போல, நன்றி மறந்து அமையாய் ஆயின் – யாம் நுமக்குச் செய்த உதவியை மறந்து விடாது இருப்பாய் ஆனால், அதை நினைந்து அவளை மணந்துக் கொள்வீர் ஆயின், மென் சீர்க் கலி மயில் கலாவத்து அன்ன இவள் ஒலி மென் கூந்தல் – மெல்லிய சிறப்பை உடைய ஆரவாரிக்கும் மயிலின் தோகைப் போன்ற அடர்ந்த (தழைத்த) மெல்லிய கூந்தல், உரியவால் நினக்கே – உனக்கே உரிமை உடையன ஆகும் (நினக்கே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 226, மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பூவொடு புரையும் கண்ணும், வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும், பிறை என
மதி மயக்குறூஉ நுதலும் நன்றும்
நல்ல மன், வாழி தோழி, அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண்பூக்  5
குருகு என மலரும் பெருந்துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு, நகாஅ ஊங்கே.

பாடல் பின்னணி:  தலைவன் வரை பொருள் ஈட்டப் பிரிந்த காலத்தே, தலைவி ஆற்றாள் என வருத்திய தோழியிடம் தலைவி உரைத்தது.

பொருளுரை தோழி!  இரவுதோறும் ஒளியுடைய அலைகளால் மோதப்பட்ட தாழையின் வெள்ளை மலர்கள் நாரைகளைப் போல் மலரும் இடமான பெரிய துறையை உடைய அகன்ற நீர்ப்பரப்பை உடைய கடற்கரையின் தலைவனுடன்நகைத்ததற்கு முன்பு, என்னுடைய தாமரை மலரை ஒத்த கண்களும், மூங்கிலை ஒத்த வெற்றியை உடைய அழகை அடைந்த தோள்களும், பிறைநிலா என்று அறிவை மயங்கச் செய்யும் நெற்றியும், மிகவும் நன்றாக இருந்தன.  இப்பொழுது அவை அவ்வாறு இல்லை.

குறிப்பு:  இரா. இராகவையங்கார் உரை – தாழை வெண்பூ குருகென மலரும் பெருந்துறை என்றதனால் தாழை உண்மையில் பூத்துள்ளது.  குருகென்று மயங்கிக் கொள்ளப்பட்டு ஒருவரும் எடுக்க முயலாமையால் சூடாது கழிந்தாற்போல் தலைவன் தன்னிலை உண்மையின் உணராமையானும் வரைய முயலாமையானும் தான் அவனாற் துய்க்கப்படாது  கழிவலோ என்பது தலைவி குறித்ததாகும்.  விரிநீர் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடல், அன்மொழித்தொகை.  நகாஅ – செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.   மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  நகாஅ ஊங்கே (7) – தமிழண்ணல் உரை – கூடி மகிழும் முன், இரா. இராகவையங்கார் உரை – மகிழாத முன்பு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நகுதலே தனது உடன்பாட்டை முதன் முதலாகத் தலைவனுக்கு அறிவித்தது ஆதலின், இயற்கைப் புணர்ச்சியை அதன் மேலிட்டு ‘நகாஅ ஊங்கே’ என்றாள்.  ஊங்கு என்னும் சுட்டு காலங் குறித்தது, உ. வே. சாமிநாதையர் உரை – நக்குவதற்கு முன்பு,.நகுதல் – அளவளாவுதல்.  இஃது இடக்ககரடக்கிக் கூறியது.

சொற்பொருள்:   பூவொடு புரையும் கண்ணும் – தாமரை மலரை ஒத்த கண்களும் (பூவொடு – உருபு மயக்கம். இரண்டாவது மூன்றாவதன் உருபாய் வந்த மயக்கம்), வேய் என விறல் வனப்பு எய்திய தோளும் – மூங்கிலை ஒத்த வெற்றியை உடைய அழகை அடைந்த தோள்களும், பிறை என மதி மயக்குறூஉ நுதலும் – பிறைநிலா என்று அறிவை மயங்கச் செய்யும் நெற்றியும், நன்றும் நல்ல – மிகவும் நன்றாக இருந்தன, மன் – கழிவுக் குறிப்பு (முந்தைய நிலையை உணர்த்திற்று) இப்பொழுது அவ்வாறு இல்லை, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, அல்கலும் தயங்கு திரை பொருத தாழை வெண்பூக் குருகு என மலரும்  – இரவுதோறும் ஒளியுடைய அலைகளால் மோதப்பட்ட தாழையின் வெள்ளை மலர்கள் நாரைகளைப் போல் மலரும், பெருந்துறை விரிநீர்ச் சேர்ப்பனொடு – பெரிய துறையை உடைய அகன்ற நீர்ப்பரப்பை உடைய கடற்கரையின் தலைவனுடன், நகாஅ ஊங்கே – நகைத்ததற்கு முன்பு (ஊங்கே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 227, ஓதஞானியார்நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பூண் வனைந்தன்ன பொலஞ்சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப, வள் இதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து, இவண்
தேரோன் போகிய கானலானே.

பாடல் பின்னணி:  அல்லகுறிப்பட்டு மறுநாள் வந்த தலைவன் மறைவில் இருப்ப, அவன் முதல் நாள் வந்ததை தோழி தலைவிக்கு உணர்த்தியது.

பொருளுரை தேருடன் வந்த தலைவன் சென்ற கடற்கரைச் சோலையில், இவ்விடம் பூணைப் பதித்தாற்போல் பொன்னால் ஆன சக்கரத்தின் வாளைப் போன்ற கூரிய விளிம்பு வெட்டியதால், வளவிய இதழ்கள் ஒடிக்கப்பட்ட குறையாகிய நெய்தல் மலர்களையும் உடையது.

குறிப்பு:   பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவன் முதல் நாள் இரவு தலைவியைக் காணாது மீண்டதற்கு அவன் குறி வாய்ப்பச் செய்யாமையே காரணம் ஆவதன்றித் தலைவியின் தவறு அன்று. அவள் ஊக்கத்துடன் எதிர்நோக்கியே இருந்து வருந்தினாள் என்று அவனுக்கு குறிப்பால் உணர்த்தியவாறாயிற்று.  இரா. இராகவையங்கார் உரை – வருதேர் நேமியால் நெய்தல் குறைதல் கூறாது போகிய போது வறியதனால் அவன் மனஞ் சோர்ந்து ஊர்ந்தது குறித்தாளாம்.  இங்கனம் கொள்ளாக்கால் தலைவிக்குத் தழையும் பூவும் நல்க இருக்கும் நெய்தலைச் சிதைய ஊர்ந்தான் எனப்பட்டு அருள் இலனும் அன்பு இலனும் ஆவன் தலைவன் என்க.

சொற்பொருள்:   பூண் வனைந்தன்ன பொலஞ்சூட்டு நேமி வாள் முகம் துமிப்ப – பூணைப் பதித்தாற்போல் பொன்னால் ஆன சக்கரத்தின் வாளைப் போன்ற விளிம்பு வெட்டியதால் (சூடு – விளிம்பு), வள் இதழ் குறைந்த கூழை நெய்தலும் உடைத்து – வளவிய இதழ்கள் ஒடிக்கப்பட்ட குறையாகிய நெய்தல் மலர்களையும் உடையது, இவண் – இங்கு, இவ்விடம், தேரோன் போகிய கானலானே – தேருடன் வந்த தலைவன் சென்ற கடற்கரைச் சோலையில் (கானலானே – அசைநிலை)

குறுந்தொகை 228, செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை
குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,
திரை வந்து பெயரும் என்ப, நம் துறந்து
நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும்,  5
நெஞ்சிற்கு அணியர் தண் கடல் நாட்டே.

பாடல் பின்னணி:  தலைவனுடன் இல் வாழ்க்கை நடத்திய தலைவியை நோக்கி ‘நீ வரைவு நிகழும்வரையிலும் நன்கு ஆற்றியிருந்தனை’ என்று தோழி கூறிய பொழுது அதற்குத் தலைவி தான் ஆற்றியிருந்ததற்குக் காரணம் கூறியது.

பொருளுரை தலைவர் நம்மைப் பிரிந்து மிகவும் தொலைவில் உள்ள நாட்டில் உறைபவர் ஆயினும், நெஞ்சிற்கு அணிமையில் உள்ள அவரின் குளிர்ச்சியுடையக் கடலை உடைய நாட்டின் அலைகள், விழுது தாழ்ந்த தாழையின் முதிர்ந்த கொழுத்த அரும்பு நாரைகள் கொடுக்கின்ற சிறகைப் போன்று விரிந்து மடல்கள் மலரும் கடற்கரைச் சோலையில் பொருந்திய நம் சிற்றூரின் இல்முன் வந்து மீண்டு செல்லும்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவன் நாட்டுத் திரை நம் சிறுகுடி முன்றில் வந்து பெயரும் என்று இயைபு காண்க..  தலைவனது உடைமை அவன் நாட்டுப்பொருள் முதலியவற்றைக் கண்டுழித் தலைவனையே கண்டாற்போன்று மகிழ்வது அன்புமிக்க குலமகளிரின் பண்பு.  ஆதலான், அவர் நாட்டுக் கடல் திரை நம் முன்றிலிலே வரும்போதெல்லாம் அவர் வந்தாற்போன்றே மகிழ்வேனாய் ஆற்றியிருந்தேன் என்பாள், “அவர் தண் கடல் திரை நம் சிறுகுடி முன்றிலில் வந்து பெயரும்” என்றாள்.  

சொற்பொருள்:  வீழ் தாழ் தாழை ஊழ் உறு கொழு முகை – விழுது தாழ்ந்த தாழையின் முதிர்ந்த கொழுத்த அரும்பு, குருகு உளர் இறகின் – நாரைகள் கொடுக்கின்ற சிறகைப் போன்று (இறகின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), விரிபு தோடு அவிழும் – விரிந்து மடல்கள் மலரும் (விரிபு – செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம், விரிந்து என்பது பொருள்), கானல் நண்ணிய சிறுகுடி முன்றில் – கடற்கரைச் சோலையில் பொருந்திய சிற்றூரின் இல் முன் (முன்றில் – இல் முன்), திரை வந்து பெயரும் – அலைகள் வந்து மீண்டு செல்லும் (என்ப – அசைநிலை), நம் துறந்து நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும் – நம்மைப் பிரிந்து மிகவும் தொலைவில் உள்ள நாட்டில் உறைபவர் ஆயினும், நெஞ்சிற்கு அணியர் தண் கடல் நாட்டே – நெஞ்சிற்கு அணிமையில் உள்ளவரின் குளிர்ச்சியுடைய கடலை உடைய நாட்டின் (நாட்டே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 229, மோதாசானார்பாலைத் திணை – கண்டோர் சொன்னது
இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில் சிறு செரு உறுப மன்னோ,
நல்லை மன்ற அம்ம, பாலே! மெல் இயல் 5
துணை மலர்ப் பிணையல் அன்ன, இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.

பாடல் பின்னணி:  தலைவனையும் தலைவியையும் முன்பு அறிந்தோர், சுரத்தில் அவர்களைக் கண்டபின் தம்முள் கூறியது.

பொருளுரை:  இவன் இவளுடைய ஐந்துப் பகுதியாக உள்ள கூந்தலைப் பிடித்து இழுப்பான்.  இவள் இவனுடைய குறைந்த  தலை மயிரை வளைத்து இழுத்து விட்டு ஓடுவாள்.  இவர்களுடைய அன்பான செவிலித் தாய்மார்கள் அதைத் தடுக்க முயற்சித்தாலும், தொடர்ந்து இவர்கள் அயலார் போலச் சிறு சண்டைகளைச் செய்வார்கள்.  ஊழ்வினையே!  நீ உறுதியாக நல்ல காரியம் செய்தாய்.  மலர்களை சேர்த்துக் கட்டிய இரட்டை மாலையைப் போல் இவர்கள் மணம் புரிந்து மகிழும் இயல்பை உண்டாக்கினாய்.

குறிப்பு:  அம்ம (5) – உ. வே. சாமிநாதையர் உரை  – வியப்பு இடைச்சொல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கேட்பித்தற் பொருட்டு.  மன்றம்ம (5) – உ. வே. சாமிநாதையர் உரை – மன்ற அம்ம என்பது மன்றம்ம என வந்தது.  விகாரம்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:   இவன் இவள் ஐம்பால் பற்றவும் – இவன் இவளுடைய ஐந்துப் பகுதியாக உள்ள கூந்தலைப் பிடித்து இழுக்கவும், இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் – இவள் இவனுடைய புல்லிய தலை மயிரை வளைத்து இழுப்பாளாக, பரியவும் – ஓடவும், காதல் செவிலியர் தவிர்ப்பவும் – அன்பான செவிலித் தாயார் தடுக்கவும்,  தவிராது – நிறுத்தாமல், ஏதில் சிறு செரு உறுப – அயன்மையையுடைய சிறு சண்டைகளைச் செய்வார்கள், மன் – கழிவுக்குறிப்பு, ஓ – அசை நிலை, நல்லை மன்ற – உறுதியாக நல்லது, அம்ம – வியப்பு இடைச்சொல், பாலே – ஊழ் வினையே, மெல் இயல் – மென்மையான, துணை மலர்ப் பிணையல் அன்ன – மலர்களை சேர்த்துக் கட்டிய இரட்டை மாலையைப் போல் அல்லது இரண்டிரண்டு மலர்களால் இணைத்துக் கட்டிய ஒரு மாலையைப் போன்று, இவர் மணம் மகிழ் இயற்கை காட்டியோயே – இவர்கள் மணம் புரிந்து மகிழும் இயல்பை உண்டாக்கினாய்

குறுந்தொகை 230, பாண்டியன் அறிவுடைநம்பிநெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி, கொண்கன்
தான் அது துணிகுவன் அல்லன், யான் என்
பேதைமையால் பெருந்தகை கெழுமி
நோதகச் செய்தது ஒன்று உடையேன் கொல்லோ?
வயச்சுறா வழங்கு நீர் அத்தம்  5
சின்னாள் அன்ன வரவு அறியானே.

பாடல் பின்னணி:  குறை நயப்பித்தது.  தன்பாற் குறை இரந்த தலைவனை ஏற்றுக்கொள்ளும்படி தோழி கூறியது.

பொருளுரை:  தோழி! நான் கூறுவதை நீ கேட்பாயாக! தலைவன் வலிமையுடைய சுறா மீன் வழங்கும் நீரை உடைய வழியில், சில நாட்களாக முன்பு வந்ததைப் போன்று இப்பொழுது வருவதை அறியான். அவ்வாறு வராது இருத்தலைத் தானாகத் துணிந்து ஒழுகும் இயல்பை உடையவன் அல்லன் அவன். நான் என் அறியாமையினால் பெரிய உரிமையைப் பொருந்தி அவன் வருந்தி இங்கு வராதபடி செய்த செயல் ஒன்றை உடையேனா?

குறிப்பு:  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).   பெருந்தகை கெழுமி (3) – இரா. இராகவையங்கார் உரை – அவன் விரைந்து வரைந்து கொள்ளுதலான் தலைவிக்கு உண்டாகும் உயர்ந்த தகுதியை விரும்பல்.  உ. வே. சாமிநாதையர் உரை – பெரிய உரிமையைப் பொருந்தி.

சொற்பொருள்:   அம்ம – கேட்பாயாக, இடைச்சொல், வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, கொண்கன் – தலைவன், தான் அது துணிகுவன் அல்லன் – அவ்வாறு வராது இருத்தலைத் தானாகத் துணிந்து ஒழுகும் இயல்பை உடையவன் அல்லன், யான் என் பேதைமையால் – நான் என் அறியாமையினால், பெருந்தகை கெழுமி நோதகச் செய்தது ஒன்று உடையேன் கொல்லோ – பெரிய உரிமையைப் பொருந்தி அவன் வருந்தி இங்கு வராதபடி செய்த செயல் ஒன்றை உடையேனா, அவன் உன்னை வரைந்துக்கொள்ள வேண்டும் என்று அவன் வருந்தி இங்கு வராதபடி செய்த செயல் ஒன்றை உடையேனா (கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை), வயச்சுறா வழங்கு நீர் அத்தம் – வலிமையுடைய சுறா மீன் வழங்கும் நீரை உடைய வழியில், சின்னாள் அன்ன வரவு அறியானே – முன்பு சில நாட்கள் வந்ததைப் போன்று இப்பொழுது வருவதை அறியான் (அறியானே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 231, பாலைபாடிய பெருங்கடுங்கோமருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஓரூர் வாழினும் சேரி வாரார்,
சேரி வரினும் ஆர முயங்கார்,
ஏதிலாளர் சுடலை போலக்
காணாக் கழிப மன்னே, நாண் அட்டு
நல் அறிவு இழந்த விழுந்த காமம்,  5
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே.

பாடல் பின்னணி:  தலைவனின் தூதாக வந்த தோழிக்கு வாயில் மறுத்தது.

பொருளுரை:  தலைவர் நம் ஊரில் வாழ்ந்தாலும் நம்முடைய தெருவிற்கு வாரார்.  நம் தெருவிற்கு வந்தாலும் நன்றாகத் தழுவுவது இல்லை.  நாணத்தை அழித்து நல்ல அறிவை இழக்கச் செய்யும் காதலானது, வில்லால் செலுத்திய அம்பைப் போல் நெடுந்தொலைவில் வீழ்ந்து அழியும்படி, அயலாரின் சுடுகாட்டைப் போல நம்மைக் கண்டும் காணாமல் விலகிச் செல்லுவார்.

குறிப்பு:  சேரி (1,2) – உ. வே. சாமிநாதையர் உரை – தெரு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெரு.  ஆர (2) – உ. வே. சாமிநாதையர் உரை – நன்றாக, மன நிறைவு உண்டாகும்படி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெஞ்சு பொருந்த, வேட்கைத் தீர.  காணா (4) – செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:   ஓரூர் வாழினும் சேரி வாரார் – தலைவர் நம் ஊரில் வாழ்ந்தாலும் நம்முடைய தெருவிற்கு வாரார், சேரி வரினும் ஆர முயங்கார் – நம் தெருவிற்கு வந்தாலும் நன்றாகத் தழுவுவது இல்லை, ஏதிலாளர் சுடலை போலக் காணாக் கழிப – அயலாரின் சுடுகாட்டைப் போல நம்மைக் கண்டும் காணாமல் விலகிச் செல்லுவார், மன்னே – மன், ஏ அசைநிலைகள், நாண் அட்டு நாணத்தை அழித்து, நல் அறிவு இழந்த விழுந்த காமம் – நல்ல அறிவை இழக்கச் செய்யும் காதல், வில் உமிழ் கணையின் – வில்லால் செலுத்திய அம்பைப் போல் (கணையின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), சென்று சேண் படவே – நெடுந்தொலைவில் வீழ்ந்து அழியும்படி (படவே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 232, ஊண் பித்தையார்பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
உள்ளார் கொல்லோ தோழி, உள்ளியும்
வாய்ப்பு உணர்வு இன்மையின் வாரார் கொல்லோ,
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல் துஞ்சும்,  5
மா இருஞ்சோலை மலை இறந்தோரே?

பாடல் பின்னணி:  தலைவன் வினைவயின் (வேலையின் பொருட்டு) பிரிந்த காலத்தில் ஆற்றாளாய தலைவிக்கு ‘நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என்பதுபடத் தோழி கூறியது.

பொருளுரை:   மரலாகிய உணவை உண்ட பெரிய கழுத்தையுடைய ஆண் மான், உரலைப்போன்ற காலையுடைய யானை ஒடித்து உண்ட யா மரத்தின் வரிவரியான நிழலில், உறங்கும் பெரிய கரிய சோலைகளையுடைய மலைகளைக் கடந்து சென்ற நம் தலைவர், நம்மை நினைக்க மாட்டாரா தோழி?  நினைத்தும், தான் மேற்கொண்ட வினை முற்றுதல் பெறாமையினால் திரும்பி வர மாட்டாரோ?  விரைவில் வந்து விடுவார்.

குறிப்பு:   கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை, யாஅ – அளபெடை.  இறந்தோரே – ஏகாரம் அசைநிலை.   குறுந்தொகை 37 – பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும், குறுந்தொகை 232 – உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல், குறுந்தொகை 255 – யாஅத்துப் பொரி அரை முழு முதல் உருவக் குத்தி மறங்கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச் சிறுகண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை, அகநானூறு 335 – யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை யாஅத்து, மலைபடுகடாம் 429 – உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்.  உ. வே. சாமிநாதையர் உரை – தனக்கு வேண்டிய உணவைப் போதிய அளவு உண்ட இரலை யாமரத்தின் அடியின்கண் வந்து துஞ்சுதலைப் பார்ப்பாராதலின் தமக்கு வேண்டிய வினையை நன்கு முடித்து ஈண்டு வந்து நின்னொடு இன்புறுவர் என்பது குறிப்பு.  உள்ளார் கொல்லோ (1) பொ. வே. சோமசுந்தரனார் உரை – உள்ளார் கொல் என்ற வினா உள்ளுவர் என்னும் பொருள்பட நின்றது.  வாய்ப்பு உணர்வு (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வினைமுற்றும் இடமறிதல், வினை முற்றாது மீள்வது அவர்க்குத் தகவு அன்று என்பாள் ‘உள்ளியும் வாரார்’ என்றாள்.

சொற்பொருள்:   உள்ளார் கொல்லோ தோழி – நம்மை நினைக்க மாட்டாரா தோழி, உள்ளியும் வாய்ப்பு உணர்வு இன்மையின் வாரார் கொல்லோ – தான் மேற்கொண்ட வினை முற்றுதல் பெறாமையினால் திரும்பி வர மாட்டாரோ, மரல் புகா அருந்திய – மரலாகிய உணவை உண்ட, மா எருத்து இரலை – பெரிய கழுத்தையுடைய ஆண் மான், உரல் கால் யானை – உரலைப்போன்று காலையுடைய யானை, ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல் துஞ்சும் – ஒடித்து உண்ட யா மரத்தின் வரிவரியான நிழலில் உறங்கும், மா இருஞ்சோலை மலை இறந்தோரே – பெரிய கரிய சோலைகளையுடைய மலைகளைக் கடந்து சென்ற நம் தலைவர்

குறுந்தொகை 233, பேயனார்முல்லைத் திணை – தலைவன் தேர்ப் பாகனிடம் சொன்னது
கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய்ச் செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன,
கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்,  5
வரை கோள் அறியாச் சொன்றி
நிரை கோல் குறுந்தொடி தந்தை ஊரே!

பாடல் பின்னணி:  வரையாது சென்று வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.

பொருளுரை:   சான்றோர்களுக்கு நீருடன் கொடுத்து எஞ்சிய பொருளையும் எல்லோருக்கும் தடை செய்தல் இல்லாது (எல்லை இல்லாது) கொடுக்கும் சோற்றையும் உடைய, வரிசையான திரட்சியுடன் கூடிய குறிய வளையல்களை அணிந்த தலைவியினுடைய தந்தையின் ஊரானது, கவலைக் கிழங்கைக் கிண்டி எடுத்ததால் (தோண்டி எடுத்ததால்) உண்டான அகன்ற வாயை உடைய சிறிய குழிகளில் கொன்றை மரத்தின் ஒளியுடைய மலர்கள் விழுந்துப் பரவி, அவை செல்வர்களின் பொன்னை இட்டு வைக்கும் பெட்டியின் மூடியைத் திறந்து வைத்தாற்போல் இருக்கும் கார்காலத்தை ஏற்றுக் கொண்ட முல்லை நிலத்தில் உள்ளது.

குறிப்பு:   பொ. வே. சோமசுந்தரனார் உரை – களவு வெளிப்பட்ட பின்னர் வரைந்து கொள்ளாதே வினைமேற் சென்ற தலைவன் வினைமுற்றி மீண்டு வரும்பொழுது தலைவியின் ஊரைப் பாகற்குக் காட்டிக் கூறியது.  இச் செய்யுளைக் கற்பின்கண் பிரிவாகக் கருதுவாரும் உளர்.  குறுந்தொகை 148 – காசின் அன்ன போது ஈன் கொன்றை.  சோற்று வளமுடைய தந்தை – தந்தை அல்குபத மிகுந்த கடியுடை வியனகர் (அகநானூறு 49), கூழுடை தந்தை இதனுடைய வைப்பின் (அகநானூறு 145).

சொற்பொருள்:   கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறு குழி – கவலைக் கிழங்கைக் கிண்டி எடுத்ததால் (தோண்டி எடுத்ததால்) உண்டான அகன்ற வாயை உடைய சிறிய குழிகள், கொன்றை ஒள் வீ தாஅய்ச் செல்வர் பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன – கொன்றை மரத்தின் ஒளியுடைய மலர்கள் பரவி அவை செல்வர்களின் பொன்னை இட்டு வைக்கும் பெட்டியின் மூடியைத் திறந்து வைத்தாற்போல், கார் எதிர் புறவினதுவே – கார்காலத்தை ஏற்றுக் கொண்ட முல்லை நிலத்தில் (புறவினதுவே – ஏகாரம் அசைநிலை), உயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் – சான்றோர்களுக்கு நீருடன் கொடுத்து எஞ்சியது, யாவர்க்கும் வரை கோள் அறியாச் சொன்றி – எல்லோருக்கும் தடை செய்தல் இல்லாது (எல்லை இல்லாது) சோறு, நிரை கோல் குறுந்தொடி தந்தை ஊரே – வரிசையான திரட்சியுடன் கூடிய குறிய வளையல்களை அணிந்த தலைவியினுடைய தந்தையின் ஊர் (குறுந்தொடி – அன்மொழித்தொகை, ஊரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 234, மிளைப்பெருங்கந்தனார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சுடர் செல் வானம் சேப்பப் படர் கூர்ந்து
எல் அறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கியோரே,
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை,  5
பகலும் மாலை, துணை இலோர்க்கே.

பாடல் பின்னணி:  பருவ வரவின்கண் தோழிக்குத் தலைவி உரைத்தது.

பொருளுரை:   அறிவு மயங்கியவர்கள், கதிரவன் மறைந்து வானம் சிவந்த நிறத்தை அடைய, துன்பம் மிக்க ஒளி இல்லாத பொழுதில் முல்லை மலர்கள் மலர்கின்ற மாலைக் காலம் என வரையறுத்துக் கூறுபவர்கள்.  துணைவரைப் பிரிந்தவர்களுக்கு, நெடிய நகரத்தின்கண் கொண்டையை உடைய சேவல் கூவும் பெரிய இரவு புலர்கின்ற விடியற்காலமும் மாலைக் காலமாகும்.  பகற்காலமும் மாலைக் காலமாகும்.

குறிப்பு:   எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).  பெரும் புலர் விடியலும் மாலை பகலும் மாலை – உ. வே. சாமிநாதையர் உரை – பெரிய இராப்பொழுது புலர்கின்ற விடியற்காலமும் மாலைக்காலமாகும்; பகற்காலமும் மாலைக்காலமாகும்.

சொற்பொருள்:   சுடர் செல் வானம் சேப்ப – கதிரவன் மறைந்து வானம் சிவந்த நிறத்தை அடைய, படர் கூர்ந்து எல் அறு பொழுதின் – துன்பம் மிக்க ஒளி இல்லாத பொழுதில், முல்லை மலரும் மாலை என்மனார் – முல்லை மலர்கள் மலரும் மாலைக் காலம் எனக் கூறுபவர்கள், மயங்கியோரே – அறிவு மயங்கியவர்கள் (மயங்கியோரே – அசைநிலை), குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும் – கொண்டையை உடைய சேவல் நீண்ட ஊரில் கூவும் (பொ. வே. சோமசுந்தரனார் உரை- நெடிய நகரத்தின்கண், நெடிய வீடுமாம்), பெரும் புலர் விடியலும் மாலை – பெரிய இரவு புலர்கின்ற விடியற்காலமும் மாலைக் காலமாகும், பகலும் மாலை – பகற்காலமும் மாலைக் காலமாகும், துணை இலோர்க்கே – துணைவரைப் பிரிந்தவர்களுக்கு (இலோர்க்கே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 235, மாயெண்டனார்பாலைத் திணை – தலைவன் வாடைக் காற்றிடம் சொன்னது
ஓம்புமதி வாழியோ வாடை! பாம்பின்
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக்
கல் உயர் நண்ணியதுவே, நெல்லி
மரை இனம் ஆரும் முன்றில்
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே.  5

பாடல் பின்னணி:  களவுக் காலத்தில் வினையின் பொருட்டுப் பிரிந்து சென்ற தலைவன் மீளும்பொழுது பாகன் கேட்ப வாடைக் காற்றிடம் கூறுதல்.

பொருளுரை:   வாடைக் காற்றே! நீ நீடு வாழ்வாயாக! நெல்லிக்காயை மரை மான் இனம் உண்ணுகின்ற முற்றத்தையுடைய, புல்லால் வேயப்பட்ட குடிசைகளைக் கொண்ட, ஊரானது, பாம்பின் தொங்குகின்ற தோலை ஒக்கும் தூய வெள்ளை அருவியை உடைய மலையின் உயரத்தில் பொருந்தியது.  அங்குள்ள என் தலைவியைப் பாதுகாப்பாயாக!

குறிப்பு:   வாழியோ – ஓகாரம் அசை நிலை, நண்ணியதுவே – ஏகாரம் அசை நிலை, ஊரே – ஏகாரம் அசை நிலை.  அகநானூறு 327 – செவ் வரை கொழி நீர் கடுப்ப அரவின் அவ்வரி உரிவை அணவரும் மருங்கில்.  இரா. இராகவையங்கார் உரை – இன மரை உண்ணும் முற்றம் என்றது இவை கண்டு தான் தலைவனொடு கூடி வாழாமை கருதி நெஞ்சு நொந்து தலைவன் வரவு நோக்கி இருப்பாள் என்ற குறிப்பிற்று.  மழைக் காலத்துக்குப் பிந்தியது வாடையாதலான் வற்றிச் சிறிதாக ஒழுகும் அருவியாதல் கருதி பாம்பின் தோல் கடுக்கும் என்றான்.  இதனால் ஒன்று மற்றொன்றாகத் தோன்றுதல் காட்டி வரைய இருக்கும் தன்னைத் தலைவி வேறாகக் கருதி வருந்துவாள் என்பது குறித்தான்.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

சொற்பொருள்:  ஓம்புமதி – பாதுகாப்பாயாக (மதி – முன்னிலை அசை), வாழியோ – நீடு வாழ்வாயாக, வாடை – வாடைக் காற்றே, பாம்பின் தூங்கு தோல் கடுக்கும் – பாம்பின் தொங்குகின்ற தோலை ஒக்கும், தூ வெள் அருவிக் கல் உயர் நண்ணியதுவே – தூய வெள்ளை அருவியை உடைய மலையின் உயரத்தில் பொருந்தியது, நெல்லி மரை மான் இனம் ஆரும் முன்றில் – நெல்லிக்காயை மரை இனம் உண்ணுகின்ற முற்றத்தையுடைய (முன்றில் – இல்முன்), புல் வேய் குரம்பை – புல்லால் வேயப்பட்ட குடிசைகள், நல்லோள் ஊரே – நல்ல தலைவியின் ஊர்

குறுந்தொகை 236, நரிவெரூ உத்தலையார்நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னதுதலைவி கூறுவதுபோல்
விட்டென விடுக்கு நாள் வருக, அது நீ
நேர்ந்தனை ஆயின், தந்தனை சென்மோ,
குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படுசினை
வம்ப நாரை சேக்கும்  5
தண் கடல் சேர்ப்ப, நீ உண்ட என் நலனே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துத் தலைவியை பிரிந்து செல்ல எண்ணிய தலைவன் தோழியை நோக்கி ‘இவளை வருந்தாது பாதுகாப்பாயாக’ என்று கூற, அவள் ‘நீ உண்ட நலனைத் தந்து செல்வாயாக’ என்று கூறியது. 

பொருளுரை:   குன்றம் அன்ன குவிந்த மணலை உடைய நீர் அடைந்த கரையில் வளர்ந்து நின்ற புன்னை மரத்தின் நிலத்தில் தோய்ந்திருக்கும் கிளைகளில் புதிய நாரைகள் தங்கும் குளிர்ந்த கடலின் சேர்ப்ப! இவளை நீ கைவிடும் நாள் வருவதாயின் வருக. நீ அதற்கு உடன்பட்டாயின்,நீ நுகர்ந்த என் பெண்மை நலத்தைத் தந்து செல்வாயாக.

குறிப்பு:   நம் நலம் தா என்று தோழி கேட்டல் மரபு.  தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமையால், தலைவியின் நலனைத் தன் நலன் என்று தோழி குறிப்பிடுகிறாள் – தாயத்தின் அடையா ஈயச் செல்லா வினைவயின் தங்கா வீற்றுக் கொள்ளப்படா ”எம்” என வரூஉம் கிழமைத் தோற்றம் அல்ல ஆயினும் புல்லுவ உளவே. (தொல்காப்பியம், பொருளியல் 27).  தமிழண்ணல் உரை – இது நாடக வழக்கு.  வழக்கறிஞர் கட்சிக்காரராக தம்மை எண்ணிப் பேசுவது போன்றது.  தலைவி கூற்று எனற்பாலது சிறிது மிகைப்படின், பண்பு கருதி தோழி கூற்றென வகுத்துள்ளனர்.  தோழியாகவே தோன்றும் உண்மைப் பாத்திரமாகவும் தலைவியின் குரலாக ஒலிக்கும் நிழற்பாத்திரமாகவும் இருவகைப்பட இருப்பதைப் பகுத்தறிய வேண்டும்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நலன் தந்து சேறல் நினக்கியலாதாற் போன்று நின் பிரிவின்கண் அவளை ஆற்றுவித்தலும் எனக்கியலாதாம் என்பது குறிப்பு.  நலம் தா – என் நலன் என்றாள் தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமைபற்றி.  தலைவனிடம் நலம் தா எனத் தோழி கூறும் மரபு, ‘மாணலம் தாவென வகுத்தற்கண்ணும் ‘ (தொல்காப்பியம், கற்பு 9) என்பதனால் பெறப்படும்.  தலைவி கூறுவது போல் தோழி கூறுதல் – அகநானூறு 362 – நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின் இன்றிப் பொழுதும் யான் வாழலனே, நற்றிணை 124 – புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை யானும் ஆற்றேன், நற்றிணை  175 – என் பசலை மெய்யே, நற்றிணை  178 – அவர்த் தெளிந்த என் நெஞ்சே, நற்றிணை 191 – என் நோக்கினளே அன்னை, நாளை மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின் அணிக் கவின் உண்மையோ அரிதே, நற்றிணை 211 – யார்க்கு நொந்து உரைக்கோ யானே …… துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?, கலித்தொகை 18 – என் தோள் எழுதிய தொய்யிலும், கலித்தொகை 70 – எம் புதல்வனை மெய் தீண்டப் பொருந்துதல் இயைபவால், குறுந்தொகை 236 – தந்தனை சென்மோ நீ உண்ட என் நலனே,  குறுந்தொகை 238 – தொண்டி அன்ன என் நலம் தந்து கொண்டனை சென்மோ, ஐங்குறுநூறு 45 – பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே.  இரா. இராகவையங்கார் உரை – ‘அடைகரைப் புன்னை படுசினை வம்ப நாரை சேக்கும்’ என்றது, மருத நிலத்து நாரை தன் நிலம் அல்லாத நெய்தலில் தான் வயிறாரத் துய்த்த நன்றியால் தன்னிலஞ் செல்லாது தங்குதல் காட்டி, நீயும் இவளை விடாது இவள் உள்ள இடத்தே தங்குதற்குரியை என்று குறிப்பித்து இவளுடன் வாழ்வதற்குரிய வரைவினை நினைவித்தாளாம்.

சொற்பொருள்:  விட்டென விடுக்கு நாள் வருக – இவளை நீ கைவிடும் நாள் வருவதாயின் வருக, அது நீ நேர்ந்தனை ஆயின் – நீ அதற்கு உடன்பட்டாயின், தந்தனை சென்மோ – தந்து விட்டுச் செல்வாயாக, குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை – குன்றம் அன்ன குவிந்த மணல் அடைந்த கரை, குன்றம் அன்ன குவிந்த மணலை உடைய நீர் அடைந்த கரை (குன்றத்து – குன்றம், அத்து சாரியை), நின்ற புன்னை நிலம் தோய் படுசினை வம்ப நாரை சேக்கும் – வளர்ந்து நின்ற புன்னை மரத்தின் நிலத்தில் தோய்ந்திருக்கும் கிளைகளில் புதிய நாரைகள் தங்கும், தண் கடல் சேர்ப்ப – குளிர்ந்த கடலின் சேர்ப்ப, நீ உண்ட என் நலனே – நீ நுகர்ந்த பெண்மை நலம் (நலனே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 237, அள்ளூர் நன்முல்லையார்பாலைத் திணைதலைவன் தேர்ப் பாகனிடம் சொன்னது
அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇய,
நெஞ்சு நப் பிரிந்தன்று ஆயினும், எஞ்சிய
கை பிணி நெகிழின், அஃது எவனோ, நன்றும்
சேய அம்ம, இருவாம் இடையே
மாக்கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு  5
கோள் புலி வழங்கும் சோலை,
எனைத்து என்று எண்ணுகோ, முயக்கிடை மலைவே.

பாடல் பின்னணி:  பொருளுக்காகத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் அதனை ஈட்டிக் கொண்டு வருகையில், தேர்ப்பாகனை நோக்கி கூறியது.

பொருளுரை:   அஞ்சுவதை அறியாமல் நான் விரும்பும் தலைவியைத் தழுவும் பொருட்டு, என் நெஞ்சு நம்மைப் பிரிந்துச் சென்றது.  ஆனாலும், இங்கு எஞ்சிய என்னுடைய கைகளால் அவளைத் தழுவ இயலாது.  அவளைத் தழுவ முடியாத என் நெஞ்சு அவளிடம் சென்றதால் என்ன பயன்?  எனக்கும் தலைவிக்கும் இடையே உள்ள தூரம் மிக அதிகம்.  நான் அவளைத் தழுவுவதற்கு இடையில் உள்ள தடையாக, கரிய கடலின் அலைகளைப் போல் முழங்கி, வலிமையுடன் எழும் கொல்லும் புலிகள் திரியும் சோலைகள் எத்துணை உண்டு என்று நான் எவ்வாறு எண்ணுவேன்?

குறிப்பு:  எவனோ – ஓகாரம் அசைநிலை, இடையே – ஏகாரம் அசை நிலை, திரையின் – இன் உருபு ஒப்புப் பொருளது, எண்ணுகோ – ஓகாரம் அசை நிலை, மலைவே – ஏகாரம் அசை நிலை.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.

சொற்பொருள்:   அஞ்சுவது அறியாது – அஞ்சுவதை அறியாமல்,  அமர் துணை தழீஇய – விரும்பும் தலைவியைத் தழுவும் பொருட்டு,  நெஞ்சு நப் பிரிந்தன்று  –  என் நெஞ்சு நம்மைப் பிரிந்துச் சென்றது, ஆயினும் – ஆனாலும்,  எஞ்சிய கை  – இங்கு எஞ்சிய என்னுடைய கைகள், பிணி நெகிழின் – தழுவுதல் நெகிழ்ந்தால், அஃது எவனோ –  என்ன பயன், நன்றும் சேய – மிக்க சேய்மையாக உள்ளன, அம்ம – அசைச் சொல்,  இருவாம் இடையே – இருவருக்கும் இடையே,  மாக்கடல் திரையின் முழங்கி – கரிய கடலின் அலைகளைப் போல் முழங்கி, வலன் ஏர்பு கோள் புலி வழங்கும் சோலை –  வலிமையுடன் எழும் கொல்லும் புலிகள் திரியும் சோலைகள், எனைத்து என்று எண்ணுகோ – எத்துணை உண்டு என்று எண்ணுவேன் (எண்ணுகோ = எண்ணுகு + ஓ), முயக்கிடை மலைவே – தழுவுவதற்கு இடையில் உள்ள தடைகள் (மலைவு + ஏ, மலைவு = தடை, இடையூறு)

குறுந்தொகை 238, குன்றியனார்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி
ஒள் தொடி மகளிர் வண்டல் அயரும்
தொண்டி அன்ன என் நலம் தந்து,
கொண்டனை சென்மோ, மகிழ்ந நின் சூளே.  5

பாடல் பின்னணி:  பரத்தையிடமிருந்து மீண்டு வந்த தலைவன் தலைவியின் ஊடலை நீக்கும் பொருட்டு, தோழியின்பால் சூள் கூறித் தெளிவிக்க புகுகையில், தோழி அவனுக்கு வாயில் மறுத்தது.

பொருளுரை:   மகிழ்ந! பச்சை அவலை இடித்த கரிய வைரம் பொருந்திய உலக்கையை அழகிய கதிர்களை உடைய நெற்பயிரை உடைய வயலின் வரப்பாகிய அணையில் படுக்க வைத்து விட்டு, ஒளியுடைய வளையல்களை அணிந்த பெண்கள் வண்டல் விளையாடும் தொண்டி நகரைப் போன்ற என் பெண்மை நலத்தை என்னிடம் தந்து விட்டு, எம்மிடம் நீ தந்த உன்னுடைய உறுதி மொழியைப் பெற்றுக்கொண்டு செல்வாயாக.

குறிப்பு:  நலம் தா – என் நலன் என்றாள் தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமைபற்றி.  தலைவனிடம் நலம் தா எனத் தோழி கூறும் மரபு, ‘மாணலம் தாவென வகுத்தற்கண்ணும் ‘ (தொல்காப்பியம், கற்பு 9) என்பதனால் பெறப்படும்.  நெல் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – வயலுக்கு ஆகுபெயர்.  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – குறுந்தொகை 236ஆம் பாடலின் தமிழண்ணல் உரை – இது நாடக வழக்கு.  வழக்கறிஞர் கட்சிக்காரராக தம்மை எண்ணிப் பேசுவது போன்றது.  தலைவி கூற்று எனற்பாலது சிறிது மிகைப்படின், பண்பு கருதி தோழி கூற்றென வகுத்துள்ளனர்.  தோழியாகவே தோன்றும் உண்மைப் பாத்திரமாகவும் தலைவியின் குரலாக ஒலிக்கும் நிழற்பாத்திரமாகவும் இருவகைப்பட இருப்பதைப் பகுத்தறிய வேண்டும்.  தலைவி கூறுவது போல் தோழி கூறுதல் – அகநானூறு 362 – நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின் இன்றிப் பொழுதும் யான் வாழலனே, நற்றிணை 124 – புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை யானும் ஆற்றேன், நற்றிணை  175 – என் பசலை மெய்யே, நற்றிணை  178 – அவர்த் தெளிந்த என் நெஞ்சே, நற்றிணை 191 – என் நோக்கினளே அன்னை, நாளை மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின் அணிக் கவின் உண்மையோ அரிதே, நற்றிணை 211 – யார்க்கு நொந்து உரைக்கோ யானே …… துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?, கலித்தொகை 18 – என் தோள் எழுதிய தொய்யிலும், கலித்தொகை 70 – எம் புதல்வனை மெய் தீண்டப் பொருந்துதல் இயைபவால், குறுந்தொகை 236 – தந்தனை சென்மோ நீ உண்ட என் நலனே,  குறுந்தொகை 238 – தொண்டி அன்ன என் நலம் தந்து கொண்டனை சென்மோ, ஐங்குறுநூறு 45 – பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே.  வண்டல் (3) – தமிழண்ணல் உரை – சிறுவீடு கட்டிச் சிறுமியர் விளையாடும் விளையாட்டு.

சொற்பொருள்:   பாசவல் இடித்த – பச்சை அவலை இடித்த, கருங்காழ் உலக்கை – கரிய வைரம் பொருந்திய உலக்கை, ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி – அழகிய கதிர்களை உடைய நெற்பயிரை உடைய வயலின் வரப்பாகிய அணையில் படுக்க வைத்து (நெல் – வயலுக்கு ஆகுபெயர்), ஒள் தொடி மகளிர் வண்டல் அயரும் – ஒளியுடைய வளையல்களை அணிந்த பெண்கள் வண்டல் விளையாடும், தொண்டி அன்ன என் நலம் தந்து – தொண்டி நகரைப் போன்ற என் பெண்மை நலத்தை என்னிடம் தந்து விட்டு, கொண்டனை சென்மோ – பெற்றுக்கொண்டு செல்வாயாக (மோ – முன்னிலை அசை), மகிழ்ந – மகிழ்ந, நின் சூளே – உன்னுடைய உறுதி மொழியை (சூளே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 239, ஆசிரியர் பெருங்கண்ணனார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
தொடி நெகிழ்ந்தனவே, தோள் சாயினவே,
விடும் நாண் உண்டோ தோழி, விடர் முகைச்
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள்
நறும் தாது ஊதும் குறுஞ்சிறைத் தும்பி
பாம்பு உமிழ் மணியின் தோன்றும்  5
முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே?

பாடல் பின்னணி:  வரைவு கடாயது.

பொருளுரை:   தோழி! பிளவுகளையும் முழைகளையும் உடைய மலை முழுவதும் மணம் கமழும், அசையும் கொத்துக்களில் உள்ள காந்தள் மலர்களின் நறுமணத் தாதை ஊதுகின்ற குறிய சிறகுகளையுடைய தும்பியானது பாம்பு உமிழ்ந்த மணியைப் போல் தோன்றும் மூங்கிலை வேலியாக உடைய மலைகளை உடைய தலைவனின் பொருட்டு என்னுடைய வளையல்கள் நழுவின, தோள்கள் மெலிந்தன. இனி விடுவதற்கு நாணம் உண்டோ?

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – காந்தளின் தாதை ஊதி அதன் மணம் எங்கும் பரவும்படி செய்யும் தும்பியைப் போல, என் நலன் நுகர்ந்து அலர் எங்கும் பரவச் செய்தான்.  காந்தளும் தும்பியும் பொருந்தியது பாம்பும் மணியும் போலும் வெருவரும் தோற்றத்தைத் தந்ததுப் போல எம் இருவர் நட்பும் அஞ்சுதற்குரியதாயிற்று எனவும் குறிப்புக்கள் தோன்றின.  இரா. இராகவையங்கார் உரை – முந்தூழ் மலை வேலி என்று முள்ளுடை மூங்கில் வேலி கூறியதனால் தலைவன் புகற்கரிய காவலுடைமை குறித்தாளாம்.  விடும் நாண் உண்டோ (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘விடும் நாண் உண்டோ’ என்னும் வினா, என் நாணம் முழுவதும் அழிந்து ஒழிந்தது.  இனி விடுவதற்கு நாண் இல்லை என்று இரங்கியவாறு.  நாணம் மகளிர்க்கு சிறந்ததாதலின், அதன் அழிவை விதந்து (சிறப்பித்து, மிக்கு) ஓதினாள்.  உயிரினும் சிறந்தது நாணே (தொல்காப்பியம், களவியல் 22) எனத் தொகாப்பியரும் ஓதுதல் காண்க.

சொற்பொருள்:   தொடி நெகிழ்ந்தனவே – என்னுடைய வளையல்கள் நழுவின, தோள் சாயினவே – தோள்கள் மெலிந்தன, விடும் நாண் உண்டோ – இனி விடுவதற்கு நாணம் உண்டோ, தோழி – தோழி, விடர் முகைச் சிலம்பு உடன் கமழும் – பிளவுகளையும் முழைகளையும் (குகைகளையும், முழைஞ்சுகளையும்) உடைய மலை முழுவதும் மணம் கமழும், அலங்கு குலைக் காந்தள் நறும் தாது ஊதும் குறுஞ்சிறைத் தும்பி – அசையும் கொத்துக்களில் உள்ள காந்தள் மலர்களின் நறுமணத் தாதை ஊதுகின்ற குறிய சிறகுகளையுடைய தும்பி, பாம்பு உமிழ் மணியின் தோன்றும் – பாம்பு உமிழ்ந்த (கக்கிய) மணியைப் போல் தோன்றும் (மணியின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே – மூங்கிலை வேலியாக உடைய மலைகளை உடைய தலைவனின் பொருட்டு (கிழவோற்கே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 240, கொல்லன் அழிசியார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பனிப் புதல் இவர்ந்த பைங்கொடி அவரைக்
கிளிவாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர்
வெருக்குப்பல் உருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் தலையும், நோய் பொரக்
கண்டிசின் வாழி தோழி, தெண் திரைக்  5
கடல் ஆழ் கலத்தின் தோன்றி
மாலை மறையும், அவர் மணி நெடுங்குன்றே.

பாடல் பின்னணி:  வரைப்பொருள் ஈட்டத் தலைவன் பிரிந்த பொழுது தலைவி ஆற்றாள் எனக் கவன்ற தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:   தோழி!  குளிர்ந்த புதர்களில் படர்ந்த பசிய கொடியாகிய அவரையின் கிளியின் அலகை ஒத்த ஒளியை வெளிப்படுத்தும் பல மலர்கள் காட்டுப் பூனையின் பல்லைப்போன்ற உருவத்தை உடைய முல்லை மலர்களுடன் நெருங்கும்படி,வாடைக் காற்று வீசத் தொடங்கிய பின்னும், காதல் துன்பம் வருத்தும்படி, தலைவரின் நீலமணி போன்ற உயர்ந்த குன்றம் தெளிவான அலைகளை உடைய கடலில் உள்ள சிறிது சிறிதாக மறையும் கப்பலைப் போன்றுத் தோன்றி மாலைக்காலத்தில் மறையும்.  இதனை நீ காண்பாயாக!

குறிப்பு:  காட்டுப் பூனையின் பற்களைப் போன்ற முல்லை அரும்பு – குறுந்தொகை 220 – முல்லை வெருகு சிரித்தன்ன பசு வீ மென் பிணி குறு முகை அவிழ்ந்த, குறுந்தொகை 240 – வெருக்குப்பல் உருவின் முல்லையொடு, அகநானூறு 391 – பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன வரி மென் முகைய, புறநானூறு 117 – பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  கடல் ஆழ் கலத்தின் (6) – உ. வே. சாமிநாதையர் உரை – கடலில் ஆழ்கின்ற கப்பலைப் போல,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடலின்கண்ணே மூழ்காநின்ற மரக்கலம் போலே, தமிழண்ணல் உரை – கடலில் சிறிது சிறிதாக மறையும் கப்பலைப் போல, இரா. இராகவையங்கார் உரை – கடலில் நெடுந்தூரம் செல்லுதலாற் கூம்புந் தெரியாது ஆழ்ந்த மரக்கலம்.

சொற்பொருள்:   பனிப் புதல் இவர்ந்த பைங்கொடி அவரைக் கிளிவாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர் – குளிர்ந்த புதர்களில் படர்ந்த பசிய கொடியாகிய அவரையின் கிளியின் அலகை ஒத்த ஒளியை வெளிப்படுத்தும் பல மலர்கள், வெருக்குப்பல் உருவின் முல்லையொடு கஞலி – காட்டுப் பூனையின் பல்லைப்போன்ற உருவத்தை உடைய முல்லை மலர்களுடன் நெருங்கும்படி, வாடை வந்ததன் தலையும் – வாடைக் காற்று வீசத் தொடங்கிய பின்னும், நோய் பொர – காதல் துன்பம் வருந்தும்படி, கண்டிசின் – காண்பாயாக (சின் – முன்னிலை அசை), வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, தெண் திரைக் கடல் ஆழ் கலத்தின் தோன்றி – தெளிவான அலைகளை உடைய கடலில் உள்ள ஆழ்கின்ற கப்பலைப் போன்றுத் தோன்றி, தெளிவான அலைகளை உடைய கடலில் உள்ள சிறிது சிறிதாக மறையும் கப்பலைப் போன்றுத் தோன்றி (கலத்தின் – இன் உருபு ஒப்புப் பொருளது), மாலை மறையும் – மாலைக்காலத்தில் மறையும், அவர் மணி நெடுங்குன்றே – தலைவரின் நீலமணி போன்ற உயர்ந்த குன்றம், தலைவரின் நீலமணிகள் உண்டாகும் குன்றம் (நெடுங்குன்றே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 241, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
யாமே காமம் தாங்கவும், தாம் தம்
கெழுதகைமையின அழுதன தோழி,
கன்று ஆற்றுப்படுத்த புன்தலைச் சிறாஅர்
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி
ஏறாது இட்ட ஏமப் பூசல்  5
விண் தோய் விடரகத்து இயம்பும்
குன்ற நாடன் கண்ட, எம் கண்ணே.

பாடல் பின்னணி:  பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:   தோழி!  நாம் காதல் துன்பத்தைப் பொறுத்து ஆற்றி இருக்கவும், கன்றுகளை மேய்த்தற்குரிய வழியில் செலுத்திய பொலிவு இழந்த தலையை உடைய சிறுவர்கள் மன்றத்தில் உள்ள வேங்கை மரத்தின் அரும்புகள் மலரும் செவ்வியை நோக்கி அம்மரத்தில் ஏறாது செய்த மகிழ்ச்சியான ஆரவாரம் வானைத் தொடும் மலையின் முழைஞ்சுகளில் ஒலிக்கும் குன்றுகளை உடைய மலை நாடனான நம் தலைவனைக் கண்ட என் கண்கள், தமக்கு உண்டான உரிமையால் அழுதன.

குறிப்பு:  இரா. இராகவையங்கார் உரை – சிறாஅர் மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி ஏறாது இட்ட ஏமப் பூசல் விண் தோய் விடரகத்து இயம்பும் குன்ற நாடன் என்றது தமக்குரிய காரியமாக விளையாடல்களை முடித்த ஆயம் இவள் வேறுபாடு நோக்கி, இவள் உயர்வு கருதி, இவள் விளையாடாமலேயே உண்டாக்கிய அலர் தாயரும் தன் ஐயரும் அறியச் செய்து இவன் செவியினும் புகாநிற்பவும் வரைய முயலாது வாளாவிருப்பவன் என்றது குறித்ததாம்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மன்ற மரத்தில் தெய்வம் உறைதலின் ஏறாயாயினர் என்க.  கெழுதகைமையின அழுதன (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – என் கண்களே முதன்முதலாக தலைவனைக் கண்டனவாதலின் தமக்கு உண்டான சிறப்புரிமையானே தாமே அழுகின்றன என்றவாறு.

சொற்பொருள்:   யாமே காமம் தாங்கவும் – நாம் காதல் துன்பத்தைப் பொறுத்து ஆற்றி இருக்கவும் (யாமே – ஏகாரம் பிரிநிலை, வேறுபடுத்திக்காட்டும் நிலை), தாம் தம் கெழு தகைமையின அழுதன – தமக்கு உண்டான உரிமையால், தோழி – தோழி, கன்று ஆற்றுப்படுத்த புன்தலைச் சிறாஅர் – கன்றுகளை மேய்த்தற்குரிய வழியில் செலுத்திய பொலிவு இழந்த தலையை உடைய சிறுவர்கள் (சிறாஅர் – அளபெடை), மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி ஏறாது இட்ட ஏமப் பூசல் – மன்றத்தில் உள்ள வேங்கை மரத்தின் அரும்புகள் மலரும் செவ்வியை நோக்கி அம்மரத்தில் ஏறாது செய்த மகிழ்ச்சியான ஆரவாரம், விண் தோய் விடரகத்து இயம்பும் – வானைத் தொடும் மலையின் முழைஞ்சுகளில் (குகைகளில்) ஒலிக்கும், குன்ற நாடன் – மலைநாடன், கண்ட எம் கண்ணே – கண்ட என் கண்கள் (கண்ணே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 242, குழற்றத்தனார்முல்லைத் திணை – செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
கானங்கோழி கவர் குரல் சேவல்
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப்
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளே மடந்தை, வேறு ஊர்
வேந்து விடு தொழிலொடு செலினும்,  5
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே.

பாடல் பின்னணி:  தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று மீண்டு வந்த செவிலித்தாய் நற்றாயிடம் கூறியது.

பொருளுரை:   நம் மகள், காட்டுக்கோழியின் தன் பெடையைக் கவர்கின்ற இனிய குரலையுடைய சேவலின் ஒளியுடைய புள்ளிகளை உடைய கழுத்தில் குளிர்ந்த நீர்த்துளிகள் பட்டுத் தங்குமாறு புதரின்கண் நீர் ஒழுகும் மலர் மணம் வீசுகின்ற முல்லை நிலத்தில் உள்ள சிறிய ஊரில் உள்ளாள். வேறு ஊருக்கு வேந்தனால் ஏவப்பட்ட தொழிலுக்காகச் சென்றாலும் சென்ற இடத்தில் தங்கிப் பின் வருதலை அறியாது, அவள் கணவனின் தேர். உடனேயே வந்துவிடும்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – புதல் கானங்கோழியின் எருத்தில் தண் சிதர் உறைக்கும் என்றது, தன் பால் அடைக்கலம் புக்க தலைவியின் பால் தலைவன் பெரிதும் தண்ணளியுடையவன் என்னும் குறிப்பிற்று.  கவர் குரல் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கவர்கின்ற இனிய குரல், உ. வே. சாமிநாதையர் உரை – கவர்த்த குரல், தமிழண்ணல் உரை – கவர்பட்டது போன்ற இரட்டைக் குரல்.  கவர்வு – கவர்வு விருப்பு ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 66).

சொற்பொருள்:   கானங்கோழி கவர் குரல் சேவல் ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்ப – காட்டுக்கோழியின் தன் பெடையைக் கவர்கின்ற இனிய குரலையுடைய (கவர்த்த குரலையுடைய) சேவலின் ஒளியுடைய புள்ளிகளை உடைய கழுத்தில் குளிர்ந்த நீர்த்துளிகள் பட்டுத் தங்குமாறு (கானங்கோழி – அம் சாரியை), புதல் நீர் வாரும் பூ நாறு புறவில் – புதரின்கண் நீர் ஒழுகும் மலர் மணம் வீசுகின்ற முல்லை நிலத்தில் உள்ள,  சீறூரோளே – சிறிய ஊரில் உள்ளாள், மடந்தை – தலைவி, நம் மகள், வேறு ஊர் வேந்து விடு தொழிலொடு செலினும் – வேறு ஊருக்கு வேந்தனால் ஏவப்பட்ட தொழிலுக்காகச் சென்றாலும், சேந்துவரல் அறியாது – சென்ற இடத்தில் தங்கிப் பின் வருதலை அறியாது, செம்மல் தேரே – தலைவனின் தேர் (தேரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 243, நம்பி குட்டுவனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்,
புள் இமிழ் பெருங்கடல் சேர்ப்பனை
உள்ளேன் தோழி, படீஇயர் என் கண்ணே.  5

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி வருந்தியது கண்டு ‘நீ ஆற்றி இருக்க வேண்டும்’ என்று வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  மானின் குளம்பை ஒத்த பிளவை உடைய இலைகளைக் கொண்ட அடும்புக் கொடியின், குதிரையின் கழுத்தில் அணியப்படும் மாலையில் உள்ள மணிகளைப்போல் ஒளியுடைய மலர்களைக் கொய்து, ஒளியுடைய வளையல்களை அணிந்த பெண்கள் வண்டல் விளையாட்டு விளையாடும் பறவைகள் ஒலிக்கும் பெரிய கடற்கரையின் தலைவனை, நான் நினைக்க மாட்டேன் இனி.  என் கண்கள் துயிலட்டும்!

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – தம் விளையாட்டு ஒன்றையே கருதி, மகளிர் பூவை அலைக்கும் சேர்ப்பன் என்றது, தன் வினை ஒன்றையே கருதிப் பிரிந்து என்னை வருந்தச் செய்வான் என்னும் குறிப்பினது.  இரா. இராகவையங்கார் உரை – மகளிர் தார்மணி போன்ற நல்ல அரும்பின் மலரைக் கொழுதி வண்டற் பாவைக்குச் சூட்டி மகிழும் சேர்ப்பனாகியும் தான் என்னைச் சூட்டாது மடிந்திருப்பான் என்று குறித்தாள்.

சொற்பொருள்:   மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின் – மானின் குளம்பை ஒத்த பிளவை உடைய இலைகளைக் கொண்ட அடும்புக் கொடியின், தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி – குதிரையின் கழுத்தில் அணியப்படும் மாலையில் உள்ள மணியைப்போல் ஒளியுடைய மலர்களைக் கொய்து, ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் – ஒளியுடைய வளையல்களை அணிந்த பெண்கள் வண்டல் விளையாட்டு விளையாடும், புள் இமிழ் பெருங்கடல் சேர்ப்பனை – பறவைகள் ஒலிக்கும் பெரிய கடற்கரைத் தலைவனை, உள்ளேன் தோழி – நினைக்க மாட்டேன் இனி, படீஇயர் என் கண்ணே – என் கண்கள் துயிலட்டும் (படீஇயர் – அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி, வேண்டல் பொருளில் வந்தது, கண்ணே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 244, கண்ணனார்குறிஞ்சித் திணை  – தோழி தலைவனிடம் சொன்னது
பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து
உரவுக் களிறு போல் வந்து இரவுக் கதவு முயறல்
கேளேம் அல்லேம், கேட்டனெம் பெரும,
ஓரி முருங்கப் பீலி சாய
நன் மயில் வலைப் பட்டாங்கு, யாம்  5
உயங்கு தொறும் முயங்கும், அறன் இல் யாயே.

பாடல் பின்னணி:  தலைவன் இரவுக்குறி வந்து ஒழுகிய காலத்தில் காப்பு மிகுதியால் தலைவியைக் காணப் பெறாமையின், தோழி அதன் காரணம் கூறி, வரைவு கடாயது.

பொருளுரை பலரும் உறங்கும் நள்ளிரவில் வலிமையான ஆண் யானையைப் போல் வந்து இரவில் தாழிட்ட எங்கள் இல்லத்தின் கதவை நீ திறக்க முயன்றதை நாங்கள் கேட்காமல் இருக்கவில்லை.  கேட்டோம் ஐயா!  தலைக் கொண்டை சிதைய, தோகை பாழ்பட, நல்ல மயில் ஒன்று வலையில் அகப்பட்டாற்போல், நாங்கள் வருந்தும்தோறும், வருத்தத்திற்குக் காரணத்தை அறியாத அறம் இல்லாத எங்கள் அன்னை எங்களைத் தழுவினாள்.  அதனால் உன்னுடைய குறிப்பறிந்தும் உன்பால் வர இயலவில்லை.

குறிப்பு:  யாயே – ஏகாரம் அசை நிலை. நள் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – நளி ‘நள்’ என்பதன் திரிபு.  உ. வே. சாமிநாதையர் உரை – ஓரி – ஆண் தலைமயிர்.  இங்கே ஆண் மயிலின் கொன்றைக்காயிற்று.  அறன் இல் யாய் – குறுந்தொகை 244, 262, நற்றிணை 63, 145, 376.

சொற்பொருள்:  பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து – பலரும் உறங்கும் நள்ளிரவில், உரவுக் களிறு போல் வந்து – வலிமையான ஆண் யானையைப் போல் வந்து, இரவுக் கதவு முயறல் – இரவில் தாழிட்ட கதவைத் திறக்க முயன்றது, கேளேம் அல்லேம் – நாங்கள் கேட்காமல் இருக்கவில்லை, கேட்டனெம் பெரும – கேட்டோம் ஐயா, ஓரி முருங்க – தலைக் கொண்டை சிதைய, பீலி சாய – தோகை பாழ்பட, நன் மயில் வலைப் பட்டாங்கு – நல்ல மயில் வலையில் அகப்பட்டாற்போல், யாம் உயங்கு தொறும் – நாங்கள் வருந்தும்தோறும், முயங்கும் – அணைக்கும், அறன் இல் யாயே – அறம் இல்லாத அன்னை

குறுந்தொகை 245, மாலைமாறனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்
நலம் இழந்ததனினும் நனி இன்னாதே,
வாள் போல் வாய கொழு மடல் தாழை
மாலை வேல் நாட்டு வேலி ஆகும்
மெல்லம்புலம்பன் கொடுமை,  5
பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பொருள்வயின் தலைவன் பிரிந்த காலத்தில், தலைவி ஆற்றாள் எனக் கவன்ற தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை வாளின் விளிம்பை ஒத்த விளிம்பையுடைய கொழுத்த மடலையுடைய தாழையானது, வரிசையாக உள்ள வேல்களை நட்டிய வேலியைப் போல் இருக்கும் மெல்லிய கடற்கரையை உடைய தலைவனின் கொடுமை பலர் அறியும்படி பரவி வெளிப்பட்டால், அது அழகிய கடற்கரைச் சோலையில் விளையாடும் தோழியர் பாராட்டிய என் அழகை இழந்ததைக் காட்டிலும் மிகவும் துன்பம் தருவது ஆகும்.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – செயற்கையானன்றி இயல்பாகவே உள்ள தாழை வேலி ஆவது போல, நீ கூற வேண்டாமே இயல்பாகவே தலைவன் கொடுமையை நான் மறைத்து ஆற்றுவேன் என்பது குறிப்பு.  இரா. இராகவையங்கார் உரை – வாள் போல வாய கொழுமடல் தாழை என்றது தாழை கொழுமடலுடையது, வாள் போல் வாயுடைய தோடும் உடையதாயினாற் போல, இக்களவு இன்பமுடையதாயும் துன்பமுடையதாயும் இருத்தல் இயல்பென்று குறித்தாள்.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என் நலம் இழந்ததனினும் –  அழகிய கடற்கரைச் சோலையில் விளையாடும் தோழியர் பாராட்டிய என் அழகை இழந்ததைக் காட்டிலும் (அம் – சாரியையுமாம்), நனி இன்னாதே – மிகவும் துன்பம் தருவது, வாள் போல் வாய கொழு மடல் தாழை – வாளின் விளிம்பை ஒத்த விளிம்பையுடைய கொழுத்த மடலையுடைய தாழை, மாலை வேல் நாட்டு வேலி ஆகும் – வரிசையாக உள்ள வேல்களை நட்டிய வேலியைப் போல் இருக்கும் (மாலை – நிரல், வரிசை), மெல்லம்புலம்பன் கொடுமை – மெல்லிய கடற்கரையை உடைய தலைவனின் கொடுமை (மெல்லம்புலம்பன் – அம் – சாரியை, புலம்பு – கடற்கரை), பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே – பலர் அறியும்படி பரவி வெளிப்பட்டால் (வெளிப்படினே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 246, கபிலர்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பெருங்கடல் கரையது சிறுவெண்காக்கை
களிற்றுச் செவியன்ன பாசடை மயக்கிப்
பனிக் கழி துழவும் பானாள், தனித்தோர்
தேர் வந்து பெயர்ந்தது என்ப, அதற்கொண்டு
ஓரும் அலைக்கும் அன்னை, பிறரும்  5
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்
இளையரும் மடவரும் உளரே
அலையாத் தாயரொடு நற்பாலோரே.

பாடல் பின்னணி:  தோழிக்கு கூறுவாளாய்த் காவல் மிகுதியைக் கூறி வரைவு கடாயது.

பொருளுரை பெரிய கடற்கரையிடத்து உள்ள சிறிய வெண்மையை உடைய கடற்காக்கையானது, களிற்று யானையின் செவியைப் போன்ற பசிய இலைகளைக் கலக்கி குளிர்ந்த கழி நீரை இரையைத் தேடும் பொருட்டுத் துழவும் பாதி இரவில், தனியாக ஒரு தேர் வந்து சென்றது என்று பிறர் கூறுகின்றனர். அது முதல், அன்னை என்னைத் துன்புறுத்துகின்றாள். பின்னலை தொங்கவிட்ட கூந்தலை உடைய மின்னுகின்ற அணிகலனை அணிந்த மகளிருள் இளமை உடையவர்களும் மடப்பமுடையவர்களும் ஆகிய பிறரும் உள்ளனர், அவர்களைத் துன்புறுத்தாத தாய்மாருடன். அவர்கள் நல்வினையை உடையவர்கள் ஆவார்கள்.

குறிப்பு:  பானாள் (3) –  உ. வே. சாமிநாதையர் உரை – பாதி இரவு, இரா. இராகவையங்கார் உரை – பாதியாகிய பகல். பின்னு விடு (6) –  உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பின்னல் நாலவிடப்பட்ட (தொங்கவிடப்பட்ட), பின்னுதல் செய்யப்பட்ட கூந்தல் எனினுமாம்.  பின்னு விடு – அகநானூறு 158 – வேங்கடசாமி நாட்டார் உரை – பின்னல் நெகிழ்ந்தமையின், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பின்னல் அவிழ்ந்தமையாலே, நற்றிணை 51 – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பின்னி விடுத்தற்குரிய, ஒளவை துரைசாமி உரை – பின்னப்படுகின்ற.

சொற்பொருள்:  பெருங்கடல் கரையது சிறுவெண்காக்கை – பெரிய கடற்கரையிடத்து உள்ள சிறிய வெண்மையை உடைய கடற்காக்கை, களிற்றுச் செவியன்ன பாசடை மயக்கிப் பனிக் கழி துழவும் பானாள் – களிற்று யானையின் செவியைப் போன்ற பசிய இலைகளைக் கலக்கி குளிர்ந்த கழி நீரை இரையின் பொருட்டு துழவும் பாதி இரவில் (பானாள் – பால் + நாள், பாதி நாள், நடு இரவு), தனித்து ஓர் தேர் வந்து பெயர்ந்தது என்ப – தனியாக ஒரு தேர் வந்து சென்றது என்று பிறர் கூறுகின்றனர், அதற்கொண்டு – அது முதல், ஓரும் – அசைநிலை, அலைக்கும் அன்னை – அன்னை என்னைத் துன்புறுத்துகின்றாள், பிறரும் – பிறரும், பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் – பின்னலை தொங்கவிட்ட கூந்தலை உடைய மின்னுகின்ற அணிகலனை அணிந்த மகளிர், இளையரும் மடவரும் உளரே – இளமை உடையவர்களும் மடப்பமுடையவர்களும் உள்ளனர், அலையாத் தாயரொடு – துன்புறுத்தாத தாய்மாருடன், நற்பாலோரே – நல்ல வினையுடையவர்கள்

குறுந்தொகை 247, சேந்தம் பூதனார்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
எழின் மிக உடைய ஈங்கு அணிப்படூஉம்
திறவோர் செய் வினை அறவதாகும்,
கிளை உடை மாந்தர்க்குப் புணையுமாம் இவ்வென
ஆங்கு அறிந்திசினே தோழி, வேங்கை
வீயா மென் சினை வீ உக யானை  5
ஆர் துயில் இயம்பும் நாடன்
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே.

பாடல் பின்னணி:  தலைவன் விரைவில் வரைந்து கொள்வான் என்று தலைவியிடம் தோழி கூறியது.

பொருளுரை தோழி! வேங்கை மரத்தின் கெடாத மெல்லிய கிளைகளில் இருந்து மலர்கள் உதிர யானை அரிய துயில் செய்வதால் பெருமூச்சு விட்டு நெடுந்தூரம் ஒலிக்கும் நாட்டை உடைய தலைவனின் மார்பை நமக்கு உரிமையாகக் கொண்ட குற்றமற்ற நட்பானது மிக அழகு உடையது. இங்கு அண்மைக் காலத்தில் உண்டாகும். திறமை உடையவர்கள் செய்த வினை அறத்தொடு பொருந்தியது ஆகும். சுற்றத்தையுடைய மக்களுக்குப் பற்றுக்கோடு ஆகும் இது என்று அங்ஙனம் அறிந்தேன்.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – வேங்கை மலர் தன் மேல் உதிரப் புறத்தே செவிப்படும் ஒளியோடு யானை தூங்கும் நாடன் என்றது தலைவன் இருவகைச் சுற்றத்தாரும் பாராட்ட அவரிடையே தலைவியை மணந்துக் கொண்டு வெளிப்படையாகத் தலைவியின் இன்பம் நுகர்வான் என்ற குறிப்பினது.  திறவோர் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரணஞ் செய்யும் முறைகளைத் திறம்பட கற்றோர் என்பாள், ‘திறவோர்’ என்றாள்.  மென் சினை வீ உக (4-5) – உ. வே. சாமிநாதையர் உரை – மெல்லிய கிளைகளில் இருந்து மலர்கள் உதிர, அங்ஙனம் உதிரும் இடத்திலே, தமிழண்ணல் உரை – மெல்லிய கிளை பூக்களை உதிர்க்குமாறு அதன் கீழ்ப் படுத்திருக்கும் யானை பெருமூச்சு விடும்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

சொற்பொருள்:  எழில் மிக உடைய – மிக அழகு உடையது, ஈங்கு அணிப்படூஉம் – இங்கு அண்மைக் காலத்தில் உண்டாகும் (அணிப்படூஉம் – அளபெடை), , திறவோர் செய் வினை அறவதாகும்  – திறமை உடையவர்கள் செய்த வினை அறத்தொடு பொருந்தியது ஆகும், கிளை உடை மாந்தர்க்குப் புணையுமாம் இவ்வென – சுற்றத்தையுடைய மக்களுக்குப் பற்றுக்கோடு ஆகும் இது என்று, ஆங்கு அறிந்திசினே – அங்ஙனம் அறிந்தேன் (இசின் – தன்மை அசைநிலை), தோழி – தோழி, வேங்கை வீயா மென் சினை வீ உக – வேங்கை மரத்தின் கெடாத மெல்லிய கிளைகளில் இருந்து மலர்கள் உதிர, யானை ஆர் துயில் இயம்பும் நாடன் – யானை அரிய துயில் செய்வதால் பெருமூச்சு விட்டு நெடுந்தூரம் ஒலிக்கும் நாட்டை உடைய தலைவன், மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே – மார்பை நமக்கு உரிமையாகக் கொண்ட குற்றமற்ற நட்பு (நட்பே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 248, உலோச்சனார்நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அது வரல் அன்மையோ அரிதே, அவன் மார்
உறுக வென்ற நாளே குறுகி
ஈங்கு ஆகின்றே தோழி, கானல்
ஆடு அரை புதையக் கோடை இட்ட
அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனைக்  5
குறிய ஆகும் துறைவனைப்
பெரிய கூறி யாய் அறிந்தனளே.

பாடல் பின்னணி:  வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைவியை நோக்கி ‘வரைவு நிகழ்தற்குரிய ஏதுக்கள் உளவாதலை உணர்த்தித் தோழி ஆற்றுப்படுத்தியது.

பொருளுரை தோழி! கடற்கரைச் சோலையில் உள்ள அசைந்த அடிப்பகுதி புதையும்படி மேல் காற்றுக் கொண்டு வந்து இட்ட அடும்புக்கொடி படர்ந்த மணல் குவியலில் பரவுவதால், நெடிய பனை மரங்கள் குறியன ஆகும் கடற்கரை உடைய நம் தலைவன்பால் நீ கற்புக்கடம் பூண்டமையை யான் கூறுதலானே, நம் தாய் அறிந்து கொண்டாள். அதனால் வரைவுக்கு உரிய நாள் வராமை அரியது ஆகும். ‘அவனது மார்பை அடைக’ எனக் குறிப்பிட்ட நாள் அணிமையாக வந்தும் உன்பால் ஆற்றாமை உண்டாகின்றது.

குறிப்பு:  இரா. இராகவையங்கார் உரை – மணற்கோடு உயர உயர நமக்கு எட்டாத நடும் பனை எளிதிற் பயன் துய்க்கக் குறுகியது போல யாம் களவின் அரிதின் ஒழுகிய நாள் உயர உயர யாம் எளிதில் இன்பம் துய்த்தற்குரிய வதுவை நெருங்கியது என்றது கருத்து.  அடும்பு இவர் மணற்கோடு என்றது அவர் படர்தற்குரிய களவு ஒழுக்கமாம்.  அது கோடை இட்டது என்றது ஊழ் தொகுத்தது என்றவாறு.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெடிய பனையின் அடியைக் கோடைக் காற்றுப் புதைத்துக் குறியதாக்கும் என்றது, வரைவுக்கு நெடிதாயிருந்த காலத்தை ஊழ் அணித்தே கொண்டு வந்தது என்னும் குறிப்பிற்று.  யாய் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டுச் செவிலி.  பெரிய கூறி (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவி கற்புக்கடம் பூண்டமையை யான் கூறுதலானே, உ. வே. சாமிநாதையர் உரை – முருகனென்று சொல்லி வெறியெடுத்து.

சொற்பொருள்:  அது வரல் அன்மையோ அரிதே – வரைவுக்கு உரிய நாள் வராமை அரியது ஆகும் (அது – நெஞ்சறி சுட்டு, வரைவு நாளைச் சுட்டியது, அன்மையோ – ஓகாரம் அசைநிலை, அரிதே – ஏகாரம் தேற்றம்), அவன் மார் உறுக வென்ற நாளே குறுகி ஈங்கு ஆகின்றே – அவனது மார்பை அடைக எனக் குறிப்பிட்ட நாள் அணிமையாக வந்தும் உன்பால் ஆற்றாமை உண்டாகின்றது, தோழி – தோழி, கானல் ஆடு அரை புதையக் கோடை இட்ட அடும்பு இவர் மணல் கோடு ஊர – கடற்கரைச் சோலையில் உள்ள அசைந்த அடிப்பகுதி புதையும்படி மேல் காற்றுக் கொண்டு வந்து இட்ட அடும்புக்கொடி படர்ந்த மணல் குவியலில் பரவ, நெடும் பனைக் குறிய ஆகும் – நெடிய பனை மரங்கள் குறியன ஆகும், துறைவனைப் பெரிய கூறி யாய் அறிந்தனளே – நம் தலைவன்பால் கற்புக்கடம் பூண்டமையை யான் கூறுதலானே, நம் தலைவனை முருகன் எனக்கூறி தாய் வெறியாட்டம் நிகழ்த்தி அறிந்து கொண்டாள் (அறிந்தனளே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 249, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து,
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்பப்,
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக்
குன்ற நோக்கினென் தோழி,
பண்டை அற்றோ, கண்டிசின் நுதலே. 5

பாடல் பின்னணி:  தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்த காலத்தில் ‘நீ ஆற்றும் ஆற்றல் உடையையோ?’ என்ற தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  மயில் கூட்டங்கள் கூவும் மரங்கள் நிறைந்த காட்டில், வெள்ளை முகத்தையுடைய குரங்கு தன் குட்டியுடன் பனியில் நடுங்குமாறு பெருமழை பொழியும் மலைச் சரிவையுடைய அவருடைய நாட்டின் குன்றை நான் நோக்கினேன், தோழி.  அதன் பின் என் நெற்றி பசப்பு இல்லாத தன் முந்தைய தன்மையை அடைந்ததா? நீ காண்பாயாக.

குறிப்பு:  நுதலே – ஏகாரம் அசை நிலை.  கண்டிசின் – இசின் முன்னிலை அசையில் வந்தது.  வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்.  உ. வே. சாமிநாதையர் உரை –  தலைவி “இப்பொழுது என் நுதலைப் பார்.  பழைய விளக்கம் அதன்பால் உண்டாயிற்றன்றே.  இங்ஙனமே தலைவர் குன்றத்தைப் பார்த்துப் பார்த்து ஆற்றுவேன்” என்று கூறினாள்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

சொற்பொருள்:  இன மயில் – மயில் கூட்டங்கள், அகவும் – கூவும்,  மரம் பயில் கானத்து – மரங்கள் அடர்ந்த காட்டில், நரை முக ஊகம் – வெள்ளை முகத்தையுடைய குரங்கு, பார்ப்பொடு – தன் குட்டியுடன், பனிப்ப – பனியில் நடுங்க,  படு மழை பொழிந்த – பெரு மழைப் பொழிந்த,  சாரல் – மலைச் சரிவு, அவர் நாட்டு – அவருடைய நாட்டின், குன்ற – குன்றை, நோக்கினென் தோழி – நோக்கினேன் தோழி, பண்டை அற்றோ – (பசப்பு இல்லாத) பழையத் தன்மையை அடைந்ததா, கண்டிசின் நுதலே – என் நெற்றியில் இதை நீ காண்பாயாக

குறுந்தொகை 250, நாமலார் மகனார் இளங்கண்ணனார்பாலைத் திணை – தலைவன் தேர்ப் பாகனிடம் சொன்னது
பரல் அவல் படுநீர் மாந்தித் துணையோடு
இரலை நன் மான் நெறி முதல் உகளும்
மாலை வாரா அளவைக் கால் இயல்
கடு மாக் கடவுமதி பாக, நெடு நீர்ப்
பொரு கயல் முரணிய உண்கண்  5
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீண்டுவரும் தலைவன் தலைவியை விரைந்து காணும் அவாவினால் பாகனுக்குக் கூறியது.

பொருளுரை:  பரல் கற்களை உடைய பள்ளத்தில் உள்ள நீரை உண்டு தன் துணையுடன் ஆண் மான் தாவும் வழியிடத்தில், மாலைக் காலம் வருவதற்கு முன், ஆழ்ந்த நீரில் ஒன்றை ஒன்று பொருதும் இரண்டு கயல் மீன்களை ஒத்த மையுண்ட கண்களையும் ஆராய்ந்த இனிய சொற்களையும் உடைய தலைவி துன்பத்திலிருந்து உய்யுமாறு, காற்றின் தன்மையை உடைய விரைந்து இயங்கும் குதிரையை நீ செலுத்துவாயாகப் பாகனே,

குறிப்பு:  உண்கண் (5) – இரா. இராகவையங்கார் உரை – மையிட்ட கண்கள், என் நெஞ்சத்தை உண்ட கண்கள்  என்பதுமாம்.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  தெருமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).

சொற்பொருள்:  பரல் அவல் படுநீர் மாந்தித் துணையோடு இரலை நன் மான் நெறி முதல் உகளும் – பருக்கைக் கற்களை உடைய பள்ளத்தில் உள்ள நீரை உண்டு தன் துணையுடன் வழியிடத்தில் தாவும் ஆண் மான், மாலை வாரா அளவை –  மாலைக் காலம் வருவதற்கு முன், கால் இயல் கடு மாக் கடவுமதி பாக – காற்றின் தன்மையை உடைய விரைந்து இயங்கும் குதிரையை நீ செலுத்துவாயாகப் பாகனே, நெடு நீர்ப் பொரு கயல் முரணிய உண்கண் தெரி தீம் கிளவி – ஆழ்ந்த நீரில் ஒன்றை ஒன்று பொருதும் இரண்டு கயல் மீன்களை ஒத்த மையுண்ட கண்களையும் ஆராய்ந்த இனிய சொற்களையும் உடைய தலைவி (தெரி தீம் கிளவி – அன்மொழித்தொகை), தெருமரல் உயவே – துன்பத்திலிருந்து உய்யுமாறு (தெருமரால் – மனச் சுழற்சி, துன்பம், உயவே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 251, இடைக்காடனார்முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மடவ வாழி மஞ்ஞை மா இனம்,
கால மாரி பெய்தென அதன் எதிர்
ஆலலும் ஆலின, பிடவும் பூத்தன,
கார் அன்று இகுளை, தீர்க நின் படரே,
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்  5
புது நீர் கொளீஇய உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.

பாடல் பின்னணி:  தலைவன் கூறிச்சென்ற கார்காலம் வந்தபொழுது தலைவி வருந்த, ‘இது கார்ப்பருவ மழையன்று.  வம்ப மழை’ எனக்கூறி, தோழி அவளை ஆற்றுவித்தது.

பொருளுரை:  தோழி!  சென்ற கார்காலத்தில் பெய்யாது எஞ்சிய நீரை, புது நீரைக் கொள்ளும் பொருட்டுப் பொழிகின்ற தொடர்பற்ற முகிலினது முழங்கும் ஓசையைக் கேட்டு, அறியாமை உடைய மயில்களாகிய பெரிய கூட்டங்கள், பருவத்திற்கு உரிய மழை பெய்தது எனத் தவறாக எண்ணி, அம்மழைக்கு எதிரே ஆடின.  பிடவ மலர்களும் பூத்துள்ளன.  இது கார்காலம் இல்லை.  உன் துன்பத்தை நீ நீக்குவாயாக!

குறிப்பு:  குறுந்தொகை – 66 – மடவ மன்ற தடவு நிலைக் கொன்றை கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக் கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த வம்ப மாரியைக் கார் என மதித்தே, குறுந்தொகை 94 – பெரும் தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே, நற்றிணை 99 –  பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ ஆகலின், மலர்ந்தன பலவே.   கொளீஇய – அளபெடை, படரே, கேட்டே – ஏகாரங்கள் அசை நிலைகள்.  இரா. இராகவையங்கார் உரை – ஐயறிவுடைய மயில் காலமென ஆலின ஆதலின், ஓரறிவு உயிராகிய பிடவும் பூத்தன.  இவை எல்லாம் நம் போல் ஆறறிவு உடைய அல்லாதலின் ‘மடவ’ என்று கூறி பருவம் ஆயின் அவர் வரவு தப்பாது என்று தேற்றியவாறாம்.

சொற்பொருள்:   மடவ – அவை அறியாமை உடையன, வாழி – அசை நிலை, மஞ்ஞை மா இனம் – மயில்களாகிய பெரிய கூட்டங்கள், மயில்களாகிய கரிய கூட்டங்கள், கால மாரி பெய்தென – பருவத்திற்கு உரிய மழை பெய்தது என்று எண்ணி, அதன் எதிர் ஆலலும் ஆலின – அம்மழைக்கு எதிரே ஆடின, பிடவும் பூத்தன – பிடவ மலர்களும் பூத்துள்ளன, கார் அன்று – இது கார்காலம் இல்லை, இகுளை – தோழி, தீர்க நின் படரே – உன் துன்பத்தை நீக்குவாயாக, கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர் – சென்ற கார்காலத்தில் பெய்யாது எஞ்சிய நீர், புது நீர் கொளீஇய – புது நீரைக் கொள்ளும் பொருட்டு, உகுத்தரும் நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே – பெய்கின்ற அயன்மையுடைய (அந்நிய, தொடர்பற்ற) முகிலினது முழங்கும் ஓசையைக் கேட்டு

குறுந்தொகை 252, கிடங்கில் குலபதி நக்கண்ணனார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த
கொடியனாகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலையின் இன்முகம் திரியாது
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி
மடவை மன்ற நீ எனக் கடவுபு,  5
துனியல் வாழி தோழி, சான்றோர்
புகழும் முன்னர் நாணுப,
பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனைத் தலைவி ஏற்றுக் கொள்ள, ‘இங்ஙனம் ஏற்றுக் கொள்ளல் அறிவோ?’ என்று வினவிய தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  “நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த கொடியனாகிய குன்று கெழு நாடன் வருவதோர் காலையின் – நீண்ட திரண்ட தோள்களை மெலியச் செய்து அவற்றில் உள்ள அவற்றில் அணிந்த வளையல்களை நெகிழச் செய்த கொடியவனாகிய மலைகள் பொருந்திய நாடனான நம் தலைவன் வரும் வேளையில், இனிய முகம் வேறுபடாமல் கடவுள் தன்மை உடைய உன்னுடைய கற்பினால், அவனை எதிர்கொண்டு அழைத்துப் போற்றியதால் நீ உறுதியாக அறிவு இல்லாது ஆயினை” என வினவி வருத்தம் அடையாதே.  அறிவுடைய பெரியவர்கள் தம்மைப் பிறர் புகழ்ந்தால் நாணம் அடைவார்கள். ஆராய்நதுப் பார்த்தால், பழிச்சொற்களை நாம் அவர்கள் முன் உரைத்தால், எவ்வாறு அதை அவர்கள் பொறுப்பார்கள்?

குறிப்பு:  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  வாழி (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வாழ்வாயாக, உ. வே. சாமிநாதையர் உரை – அசைநிலை.  சான்றோர் புகழும் முன்னர் நாணுப (6-7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தங்கண் முன்னர்ப் பிறர் தம்மைப் புகழும் புகழையும் நல்லோர் நாணுப என்றவாறு, உ. வே. சாமிநாதையர் உரை – சான்றோர் இயல்பு இதுவென உலகின் மேல் வைத்துக் கூறினும் தலைவி கருதியது தலைவனையே என்க.  தமிழண்ணல் உரை – என் தலைவன் சான்றோன் ஆவான்.  சான்றோர்கள் தங்களை யாரும் புகழ்ந்தாலும் அவர்க்கு எதிரே தலைகுனிந்து நாணுவர். நன்கு சிந்திக்குமிடத்து அப்படிப்பட்டவர்கள் பழி எதுவும் நேர்ந்தால் எங்ஙனம் தங்குவார்கள்?  அதனால் தான் முகம் சுளிக்காமல் வரவேற்றேன்.

சொற்பொருள்:   நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த கொடியனாகிய குன்று கெழு நாடன் வருவதோர் காலையின் – நீண்ட திரண்ட தோள்களை மெலியச் செய்து அவற்றில் உள்ள அவற்றில் அணிந்த வளையல்களை நெகிழச் செய்த கொடியவனாகிய மலைகள் பொருந்திய நாடனான நம் தலைவன் வரும் வேளையில், இன்முகம் திரியாது கடவுள் கற்பின் – இனிய முகம் வேறுபடாமல் கடவுள் தன்மை உடைய கற்பினால், அவன் எதிர் பேணி மடவை மன்ற நீ எனக் கடவுபு – அவனை எதிர்கொண்டு அழைத்துப் போற்றியதால் நீ உறுதியாக அறிவு இல்லாது ஆயினை என வினவி (மன்ற – உறுதியாக), துனியல் – வருத்தம் அடையாதே, வாழி – நீ நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, சான்றோர் புகழும் முன்னர் நாணுப – அறிவுடைய பெரியவர்கள் தம்மைப் பிறர் புகழ்வதற்கு நாணம் அடைவார்கள், பழி யாங்கு ஒல்பவோ – பழிச்சொற்களை நாம் கூற எவ்வாறு பொறுப்பார்கள் (ஒல்பவோ – ஓகாரம் அசைநிலை), காணுங்காலே – எண்ணும்பொழுது (காணுங்காலே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 253, பூங்கண்ணனார்பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கேளார் ஆகுவர் தோழி, கேட்பின்
விழுமிது கழிவது ஆயினும், நெகிழ் நூல்
பூச்சேர் அணையின் பெருங்கவின் தொலைந்த நின்
நாள் துயர் கெடப்பின் நீடலர் மாதோ,
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல்  5
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை
ஆறு சென் மாக்கள் சேக்கும்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிவை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.

பொருளுரை:  தோழி!  ஒன்றுடன் ஒன்று உரசி ஒலி எழுப்பும் உயர்ந்த மூங்கில் உடைய உயர்ந்த மலைப்பக்கதில் புலி தன்னுடைய இரையை வைத்திருப்பதால் புலவு நாறும் கற்குகையில் வழியில் செல்லும் மக்கள் தங்கும், குவடுகள் (சிகரங்கள்) உயர்ந்த ஒளியுடைய மலைகளைக் கடந்து சென்ற நம் தலைவர், உன்னுடைய துயரத்தை கேட்காதவர் ஆவர்.  கேட்டார் ஆனால், தான் வேண்டிய சிறந்த பொருள் கைகூடாது ஆயினும், நெகிழ்ந்த நூலால் தொடுத்த மலர் மாலைகள் உடைய படுக்கையில் உன்னுடைய பேரழகு நீங்கிய உன்னுடைய துயரமானது கெடும்படி, அங்குத் தங்காது வந்துவிடுவார்.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – கேட்பின் நீடலர் என்ற குறிப்பு நான் தூது விட்டு நின் துயர் நிலையை அறிவித்து மீளச் செய்வேன் என்னும் கருத்தைப் புலப்படுத்துகின்றது.  இது கற்பு காலத்தது.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

சொற்பொருள்:   கேளார் ஆகுவர் – உன்னுடைய துயரத்தை கேட்காதவர் ஆவர் நம் தலைவர், தோழி – தோழி, கேட்பின் – கேட்டார் ஆனால், விழுமிது கழிவது ஆயினும் – தான் வேண்டிய சிறந்த பொருள் கைகூடாது ஆயினும், நெகிழ் நூல் பூச்சேர் அணையின் பெருங்கவின் தொலைந்த நின் நாள் துயர் கெட  – நெகிழ்ந்த நூலால் தொடுத்த மலர் மாலைகள் உடைய படுக்கையில் உன்னுடைய பேரழகு நீங்கிய உன்னுடைய துயரமானது கெடும்படி, பின் நீடலர் – அங்குத் தங்காது வந்துவிடுவார், மாதோ – மாது, ஓ அசைநிலைகள், ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல் – ஒன்றுடன் ஒன்று உரசி ஒலி எழுப்பும் உயர்ந்த மூங்கில் உடைய உயர்ந்த மலைப்பக்கம், புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை ஆறு சென் மாக்கள் சேக்கும் – புலி தன்னுடைய இரையை வைத்திருப்பதால் புலவு நாறும் கற்குகையில் வழியில் செல்லும் மக்கள் தங்கும், கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குவடுகள் (சிகரங்கள்) உயர்ந்த ஒளியுடைய மலைகளைக் கடந்து சென்ற நம் தலைவர் (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 254, பார்காப்பானார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்
தலை அலர் வந்தன, வாரா தோழி,
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்,
பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார்,  5
செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர்
எய்தினரால் வரூஉம் தூதே.

பாடல் பின்னணி:  பருவங்கண்டு வருந்தும் தலைவியிடம் ‘நீ ஆற்றல் வேண்டும்’ என்று வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  தோழி!  இலை இல்லாத அழகிய மரக் கிளையில் திரளாகிய வண்டுகள் ஆரவாரிக்கும்படி, முலையை ஒத்த மென்மையான அரும்புகள் விரிந்த கோங்க மரத்தின் முதல் மலர்கள் தோன்றின. ஈட்டுவதற்குரிய பொருளை கொண்டு வர விரும்பிச் சென்ற தலைவர், திரும்பி வந்துவிட்டார் என்று அறிவிப்பதற்கு வரும் தூது வரவில்லை.  அவர் துயில்வதற்கு இனிய இரவு வேளையில் உடன் துயிலும் துயிலை மறந்து விட்டார்.   என் அடர்ந்த, நறுமணக் கூந்தலாகிய படுக்கையையும் நினையார்.

குறிப்பு:  கோங்க முகைப்போன்ற முலை:  அகநானூறு 99 – மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு, அகநானூறு 240 – கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து, குறுந்தொகை 254 – முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர், கலித்தொகை 56 – முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை, கலித்தொகை 117 – கோங்கின் முதிரா இள முகை ஒப்ப, புறநானூறு 336 – கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை, திருமுருகாற்றுப்படை 34 – தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை, சிறுபாணாற்றுப்படை 25-26 – யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை.  முலை ஏர் மென் முகை (2) –  உ. வே. சாமிநாதையர் உரை – நகிலை ஒத்த அரும்புகள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – முலையினது அழகைக் கொண்ட மெல்லிய அரும்புகள்.  பயில் நறும் கதுப்பு (5) – இரா. இராகவையங்கார் உரை – செறிந்த நறிய கூந்தல், உ. வே. சாமிநாதையர் உரை – தாம் பழகுகின்ற கூந்தல்,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாம் அடிக்கடி கோதியும், மலர் சூட்டியும், மோந்தும், படுக்கைக் கொண்டும் பயின்ற நறிய கூந்தல்.

சொற்பொருள்:   இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப – இலை இல்லாத அழகிய மரக் கிளையில் திரளாகிய வண்டுகள் ஆரவாரிக்கும்படி, முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர் வந்தன – முலையை ஒத்த மென்மையான அரும்புகள் விரிந்த கோங்க மரத்தின் முதல் மலர்கள் தோன்றின, , முலையின் அழகைக் கொண்ட மென்மையான அரும்புகள் விரிந்த கோங்க மரத்தின் முதல் மலர்கள் தோன்றின, வாரா – வரவில்லை, தோழி – தோழி, துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர் – துயில்வதற்கு இனிய இரவு வேளையில் உடன் துயிலும் துயிலை மறந்து விட்டார், பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார் – அடர்ந்த நறுமணக் கூந்தலாகிய படுக்கையையும் நினையார், தாம் பழகிய நறுமணம் உடைய அணையாகிய கூந்தலையும் எண்ணார், செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர் – ஈட்டுவதற்குரிய பொருளை கொண்டு வர விரும்பிச் சென்ற தலைவர் (நசைஇ – அளபெடை), எய்தினரால் வரூஉம் தூதே –  திரும்பி வந்துவிட்டார் என்று அறிவிப்பதற்கு வரும் தூது (எய்தினரால் – ஆல் அசைநிலை, வரூஉம் – அளபெடை, தூதே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 255, கடுகு பெருந்தேவனார்பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பொத்து இல் காழ அத்த யாஅத்துப்
பொரி அரை முழு முதல் உருவக் குத்தி
மறங்கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச்
சிறுகண் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர் தோழி,  5
தம் கடன் இறீஇய எண்ணி இடந்தொறும்
காமர் பொருள் பிணிப் போகிய
நாம் வெங்காதலர் சென்ற ஆறே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைநின்று மீள்வர் என்று எண்ணிய தலைவியிடம் தோழி சொன்னது.

பொருளுரை:  தோழி! தம்முடைய கடமையைச் செய்யும் பொருட்டு இடங்கள்தோறும் விருப்பத்தை உடைய பொருள் மேல் உள்ள பிணிப்பினால் சென்ற, நாம் விரும்பும் தலைவர் சென்ற வழியில், பொந்து இல்லாத (உட்துளை இல்லாத) வைரம் பாய்ந்த யா மரங்களின் பொரிந்த திரண்ட அடிப்பகுதியை உருவும்படி கொம்பினால் குத்தி, வலிமை உடைய வளைந்த தும்பிக்கையினால் வளைத்து வருந்திய நடையையும் சிறிய கண்களையும் உடைய தன்னுடைய பெரிய யானைக் கூட்டத்தின் மிகுந்த பசியைத் தீர்க்கும் வளைந்த தந்தங்களை உடைய ஆண் யானையைக் கண்டார்.

குறிப்பு:  குறுந்தொகை 37 – பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும், குறுந்தொகை 232 – உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல், குறுந்தொகை 255 – யாஅத்துப் பொரி அரை முழு முதல் உருவக் குத்தி மறங்கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச் சிறுகண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை, அகநானூறு 335 – யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை யாஅத்து, மலைபடுகடாம் 429 – உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்.   தமிழண்ணல் உரை – யானைக் குடும்ப வாழ்க்கை தலைவனுக்குப் பொருளைத் தேடிச் சென்று மக்களைக் காப்பாற்ற வேண்டும் எனும் விழைவைத் தூண்டும்.  இதுவே இறைச்சி எனப்படும்.  யானை தன் குடும்பப் பசியைத் தீர்த்ததைக் காணும் அவர், பொருளைத்தேடியே திரும்புவர் என்ற குறிப்பை உணர்த்துகிறது.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 24).  அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம். உரியியல் 26).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  கண்டனர் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – காண்பார் என்னாது கண்டனர் என்றது துணிவு பற்றி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கண்டனர் என்று துணிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினாள். இனி, பண்டு நம் தலைவர் இங்ஙனம் கண்டனர் அன்றோ?  இப்பொழுதும் காண்பார் என்றாளுமாம். என்னை?  இந்நிகழ்ச்சியைத் தலைவன் கூறவே இவள் அறிந்தாளாகலின் என்க.  எனவே, பண்டு கண்டதனை அவர் கூறக்கேட்டனம்.  இப்பொழுதும் அவர் காண்பார் என்று குறிப்பால் உணர்த்திநாளாயிற்று.

சொற்பொருள்:   பொத்து இல் காழ அத்த யாஅத்துப் பொரி அரை முழுமுதல் உருவக் குத்தி – பொந்து இல்லாத (உட்துளை இல்லாத) வைரம் பாய்ந்த யா மரங்களின் பொரிந்த திரண்ட அடிப்பகுதியை உருவும்படி குத்தி (யாஅத்து – அளபெடை), மறங்கெழு தடக் கையின் வாங்கி – வலிமை உடைய வளைந்த தும்பிக்கையினால் வளைத்து, உயங்கு நடைச் சிறுகண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை கண்டனர்- வருந்திய நடையையும் சிறிய கண்களையும் உடைய பெரிய யானைக் கூட்டத்தின் மிகுந்த பசியைத் தீர்க்கும் வளைந்த தந்தங்களை உடைய ஆண் யானையைக் கண்டார், தோழி – தோழி, தம் கடன் இறீஇயர் எண்ணி – தம்முடைய கடமையைச் செய்யும் பொருட்டு (இறீஇயர் – அளபெடை), இடந்தொறும் காமர் பொருள் பிணிப் போகிய – இடங்கள்தோறும் விருப்பத்தை உடைய பொருள் மேல் உள்ள பிணிப்பினால் சென்ற (காமர் – விருப்பம்), நாம் வெங்காதலர் சென்ற ஆறே – நாம் விரும்பும் தலைவர் சென்ற வழி (ஆறே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 256, பாடியவர் பெயர் கிடைக்கவில்லைபாலைத் திணை – தலைவன் தனக்குள் சொன்னது
‘மணி வார்ந்தன்ன மாக்கொடி அறுகை
பிணி கால் மென் கொம்பு பிணையொடும் ஆர்ந்த
மான் ஏறு உகளும் கானம் பிற்பட,
வினை நலம் படீஇ வருதும் அவ் வரைத்
தாங்கல் ஒல்லுமோ பூங்குழையோய்?’ எனச்  5
சொல்லா முன்னர், நில்லா ஆகி
நீர் விலங்கு அழுதல் ஆனா,
தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிய எண்ணிய தலைவன் செலவு அழுங்கியது.

பொருளுரை:  “பொலிவை உடைய காதணிகளை அணிந்தவளே!  நீலமணியின் கதிர்கள் ஒழுகினாற்போல் கரிய கொடிகளாகிய அறுகையின் பிணித்த வேர்களையுடைய மெல்லிய கிளையைத் தன் பெண்மானுடன் உண்ட ஆண்மான் துள்ளும் காடு பின்னே கிடக்கும்படி, தொழிலால் உண்டாகும் நலத்தைப் பெற்று மீண்டு வருவோம்.  யாம் வருமளவும் நின்னால் பொறுத்திருக்க முடியுமா?”  என யாம் சொல்லும் முன்னே, தலைவியின் கண்கள் தங்கள் பழைய நிலையில் இல்லாது, நீரால் மாறுபாடு உடைய அழுகை நீங்காதது ஆகி, எம் தேரைத் தடை செய்தன.

குறிப்பு:  நீர் விலங்கு அழுதல் (7) – உ. வே. சாமிநாதையர் உரை – நீரால் மாறுபடுதலை உடைய அழுகை, நீர் கண்ணில் உள்ள பாவையை மறைக்கின்ற அழுகை என்பதும் ஆம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீர்த் துளிகள் புறப்பட்டு ஒழுகுதல், இரா. இராகவையங்கார் உரை – நீர்த்துளிகள் நில்லாவாய்க் குறுக்கிடும் அழுகை.  அகநானூறு 5 – பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:   மணி வார்ந்தன்ன மாக்கொடி அறுகை – நீலமணியின் கதிர்கள் ஒழுகினாற்போல் கரிய கொடிகளாகிய அறுகை, பிணி கால் மென் கொம்பு பிணையொடும் ஆர்ந்த மான் ஏறு உகளும்- பிணித்த வேர்களையுடைய மெல்லிய கிளையைத் தன் பெண்மானுடன் உண்ட ஆண்மான் துள்ளும்,  கானம் பிற்பட – காடு பின்னே கிடக்கும்படி, வினை நலம் படீஇ வருதும் – தொழிலால் உண்டாகும் நலத்தைப் பெற்று மீண்டு வருவோம் (படீஇ – அளபெடை), அவ் வரைத் தாங்கல் ஒல்லுமோ பூங்குழையோய் – நான் வருமளவும் நின்னால் பொறுத்திருக்க முடியுமா பொலிவை உடைய காதணிகளை அணிந்தவளே, எனச் சொல்லா முன்னர் – என நாம் சொல்லும் முன்னே, நில்லா ஆகி – பழைய நிலையில் இல்லாது, நீர் விலங்கு அழுதல் ஆனா தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே – நீரால் மாறுபாடு உடைய அழுகை நீங்காதது ஆகி எம் தேரைத் தடை செய்தன தலைவியின் கண்கள் (விலங்கினவால் – ஆல் அசைநிலை, கண்ணே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 257, உறையூர்ச் சிறுகந்தனார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வேரும் முதலும் கோடும் ஒராங்குத்
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம்,
அகலினும் அகலாது ஆகி  5
இகலும் தோழி, நம் காமத்துப் பகையே.

பாடல் பின்னணி:  வரைவு உணர்த்திய தோழியிடம் தலைவி சொன்னது.

பொருளுரை:  தோழி! நம் காதலின் பகையானது, வேர், அடிமரம், கிளைகள் எல்லாம் ஒன்றாகத் தொடுத்து வைத்தாற்போல, தொங்கித் தொடர்ந்து கீழே தாழ்ந்தாற்போன்ற தணிந்த குலைகளை உடைய பலாமரங்கள் உடைய ஆரவாரத்தை உடைய மலையின் தலைவன் வரும் பொழுதெல்லாம் வெளிப்படும். அவன் அகன்றாலும் அது நீங்காது ஆகி மாறுபடும்.

குறிப்பு:  வீழ் கோள் பலவின் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – தணிந்த குலைகளையுடைய பலா மரத்தினை உடைய, தமிழண்ணல் உரை – விழுவதுபோலத் தோன்றும் பழக்குலைகள்.  பொ. வே. சோமசுந்தரனார் – உரைகளவிற் போன்று புணர்தலும் பிரிதலுமின்றி யாண்டும் ஒருபடியாய் இனித் தலைவன் நம்மோடு உடனுறைந்து இன்பம் செய்வன் என்பாள், ‘வேரும் முதலும் கோடும் ஓராங்குத் தொடரிய கோட்பலாவுடைய வெற்பன்’ என்றாள்.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

சொற்பொருள்:   வேரும் முதலும் கோடும் ஒராங்குத் தொடுத்த போல – வேர், அடிமரம், கிளைகள் எல்லாம் ஒன்றாகத் தொடுத்து வைத்தாற்போல, தூங்குபு தொடரிக் கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின் – தொங்கித் தொடர்ந்து கீழே தாழ்ந்தாற்போன்ற தணிந்த குலைகளை உடைய பலாமரங்கள் உடைய (கோள் – காய்க்குலை), ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம் – ஆரவாரத்தை உடைய மலையின் தலைவன் வரும் பொழுதெல்லாம் வெளிப்படும் (வரூஉம் – அளபெடை), அகலினும் அகலாது ஆகி இகலும் – அவன் அகன்றாலும் நீங்காது ஆகி மாறுபடும், தோழி – தோழி, நம் காமத்துப் பகையே – நம் காதலின் பகை ( காமத்து – அத்து வேண்டாவழிச் சாரியை, பகையே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 258, பரணர்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வாரல் எம் சேரி, தாரல் நின் தாரே,
அலர் ஆகின்றதால் பெரும, காவிரிப்
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை
அரியல் அம் புகவின் அம் தோட்டு வேட்டை 5
நிரைய ஒள் வாள் இளைஞர் பெருமகன்
அழிசி ஆர்க்காடு அன்ன, இவள்
பழி தீர் மாண் நலம் தொலைதல் கண்டே!

பாடல் பின்னணி:  தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தல்.  வாயில் உடன்பட்டது என்பதும் பொருந்தும்.

பொருளுரை:  எங்கள் தெருவிற்கு வராதீர்!  உம்முடைய மாலையை நீர் அவளுக்குத் தர வேண்டாம்!  பலர் குளிக்கும் காவிரியின் பெரிய துறையில் உள்ள மருத மரத்தில் உயர்ந்த தந்தத்தையுடைய யானைகளைக் கட்டும் சேந்தனின் தந்தையும், கள்ளாகிய உணவை உண்டு அழகிய விலங்கு தொகுதிகளை வேட்டையாடுபவர்களாகவும், எதிரிகளுக்கு நரகமாக உள்ள ஒளியுடைய வாட்களை ஏந்தியவர்களாகவும் உள்ள இளம் வீரர்களுக்குத் தலைவனுமான அழிசியின் ஆர்க்காடு ஊரைப் போன்ற பழியற்ற இவளுடைய அழகு தொலைந்ததைக் கண்டு, ஊரின் பழிச் சொல் மிகுதி ஆயிற்று, ஐயா!

குறிப்பு:  அரியலம் – அரியல் அம், அம் சாரியை, கண்டே – ஏகாரம் அசை நிலை.  நற்றிணை 190- சேந்தன் தந்தை தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி.  சேரி – உ. வே. சாமிநாதையர் உரை, குறுந்தொகை 231 – தெரு.  இரா. இராகவையங்கார் உரை – சேந்தன் பலராடு பெருந்துறை மருதிடத்து யானையைப் பிணித்த என்றது பலருமாறியப் பாணன் தலைவனைப் பரத்தையிடத்துப் பிணித்ததாகவும், அரியலம் புகவின் அம் தோடு வேட்டை என்றது அப் பரத்தையருடன் மகிழ்தற்குத் தன் செல்வம் இழப்பவன் ஆகவும் குறித்துக் கொள்ளலாம்.

சொற்பொருள்:   வாரல் எம் சேரி – எங்கள் தெருவிற்கு வராதீர், தாரல் நின் தாரே – உம்முடைய மாலையைத்  தர வேண்டாம், அலர் ஆகின்றதால் – ஊரின் பழிச் சொல் மிகுதி ஆயிற்று, பெரும – ஐயா, காவிரிப் பலர் ஆடு பெரும் துறை – பலர் குளிக்கும் காவிரியின் பெரிய துறை, மருதொடு பிணித்த – மருத மரத்தில் கட்டிய, ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை – உயர்ந்த தந்தத்தையுடைய யானைகளையுடைய சேந்தனின் தந்தை, அரியல் அம் புகவின் – கள்ளாகிய உணவு, அம் தோட்டு வேட்டை – அழகிய விலங்கு தொகுதிகளை வேட்டையாடும், நிரைய – நரகம், ஒள் வாள் இளைஞர் – ஒளியுடைய வாளை ஏந்திய இளைஞர்கள், பெரு மகன் அழிசி ஆர்க்காடு அன்ன – பெருந்தலைவன் அழிசியின் ஆர்க்காட்டைப் போன்ற, இவள் பழி தீர் மாண் நலம் தொலைதல் கண்டே – இவளுடைய பழி இல்லாத, சிறந்த அழகு தொலைவதைக் கண்டு

குறுந்தொகை 259, பரணர்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து
அருவி ஆர்ந்த தண் நறுங்காந்தள்
முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறுநுதல்
பல்லிதழ் மழைக் கண் மாஅயோயே!
ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும்,  5
நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போற்
பொய் மொழி கூறல் அஃது எவனோ,
நெஞ்சம் நன்றே நின் வயினானே?

பாடல் பின்னணி:  காவல் மிகுந்ததால் தலைவியின் உடன்பாடின்றத் தானே அறத்தொடு நின்ற தோழி கூறியது.

பொருளுரை:  முகில்கள் சேர்ந்து எழுந்த மழையை உடைய மலையில் பொருந்திய குளிர்ச்சியடைய நறுமணமான காந்தள் மலர்கள் விரிந்து, அமையாதனவாய் மணம் வீசும் நறுமண நெற்றியையும் பல இதழ்களை உடைய தாமரை மலர் போல் குளிர்ச்சியுடையக் கண்களையும் உடைய மாமை நிறம் பொருந்தியவளே! நீ என் பிழையைப் பொறுப்பாய் ஆயினும், சினத்தால் என்னைக் கொல்வாய் ஆயினும், உனது உயர்வை அளந்து அறியும் ஆற்றல் உடையை நீ. ஆதலின் நீ விரும்பியதனைச் செய்வாயாக. மெய்யைப் போல் பொய்ச்சொற்களைக் கூறுதலால் என்ன பயன்? தலைவனது நெஞ்சம் உன்பொருட்டு நலமுடையது.

குறிப்பு:  அருவி ஆர்ந்த தண் நறுங்காந்தள் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அருவி நீரைப் பருகிய தண்ணிய நறிய காந்தள், உ. வே. சாமிநாதையர் உரை – அருவிக்கு அருகில் பொருந்திய தண் நறு காந்தள், தமிழண்ணல் உரை – அருவிநீர் படிந்த தண்ணிய நறிய காந்தள், இரா. இராகவையங்கார் உரை – அருவியோர்த்து நிறைந்த காந்தள்.  கொல்வை ஆயினும் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – சினந்து கொல்வாய் ஆயினும், இரா. இராகவையங்கார் உரை – அவனுடன் போவதற்கு உன் நாணினைக் கொல்வையாயினும்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார்ப் பருவத்தே மலையினது அருவியைப் பருகிக் காந்தள் முகை அவிழ்ந்து ஆனா நாறும் என்றது, ‘யான் அறத்தொடு நின்றமையால் செவிலி உட்கொண்டு நற்றாய் முதலியோர்க்கு உணர்த்துவள்; அதனால் தமர் வரைவு மலிந்து திருமணம் நிகழும்’ என்று குறிப்பால் உணர்த்தியவாறு.

சொற்பொருள்:   மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து அருவி ஆர்ந்த – முகில்கள் சேர்ந்து எழுந்த மழையை உடைய மலையில் பொருந்திய (மழை – ஆகுபெயர் முகிலுக்கு, ஆர்ந்த – பொருந்திய, பருகிய, படிந்த, ஓர்த்த), தண் நறுங்காந்தள் முகை அவிழ்ந்து – குளிர்ச்சியடைய நறுமணமான காந்தள் மலர்கள் விரிந்து, ஆனா நாறும் நறுநுதல் – அமையாதனவாய் மணம் வீசும் நறுமண நெற்றி, பல்லிதழ் மழைக் கண் மாஅயோயே – பல இதழ்களை உடைய தாமரை மலர் போல் குளிர்ச்சியுடையக் கண்களையும் உடைய மாமை நிறம் பொருந்தியவளே, ஒல்வை ஆயினும் – நீ என் பிழையைப் பொறுப்பாய் ஆயினும், கொல்வை ஆயினும் – சினத்தால் என்னைக் கொல்வாய் ஆயினும், நீ அளந்து அறிவை – அளந்து அறியும் ஆற்றல் உடையை நீ, நின் புரைமை – நின் உயர்வை, வாய் போற் பொய் மொழி கூறல் அஃது எவனோ – மெய்யைப் போல் பொய்ச்சொற்களைக் கூறுதலால் என்ன பயன், நெஞ்சம் நன்றே நின் வயினானே – தலைவனது நெஞ்சம் உன்பொருட்டு நலமுடையது (நன்றே – ஏகாரம் தேற்றம், வயினானே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 260, கல்லாடனார்பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
குருகும் இரு விசும்பு இவரும், புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே,
சுரி வளைப் பொலிந்த தோளும் செற்றும்,
வருவர் கொல் வாழி தோழி, பொருவார்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை  5
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்துக்
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே.

பாடல் பின்னணி:  தலைவனது பிரிவை ஆற்றாதிருந்த தலைவியை நோக்கி ‘நல்ல நிமித்தங்கள் உண்டாகின்றன.  ஆதலின் தலைவர் விரைவில் வந்து விடுவார்’ என்று தோழி கூறியது.

பொருளுரை:  தோழி!  வாழ்வாயாக!  நாரைகளும் பெரிய வானத்தில் உயரப் பறக்கும்.  புதரில் உள்ள அரும்புகள் வரிகளையுடைய வண்டுகள் ஊதுவதால் மலர்ந்தன.  சுழித்த சங்கினால் செய்த வளையல்களால் பொலிந்த நின் தோள்களும் செறியும். பகைவர்களின் மண்ணை எடுத்து உண்ணும் தலைமை உடைய யானைகளையும், வளவிய தேர்களையும் உடைய தொண்டையர்களின் சுரபுன்னை மலர்கள் நெருங்கிய மலைப்பக்கத்தில், கன்று இல்லாத ஒற்றைப் பசுவை தன்னுடைய நிழலினால் விலகாது இருக்கும்படி செய்த புல்லிய அடியை உடைய ஓமை மரங்கள் உடைய பாலை நிலத்தைக் கடந்து சென்ற  நம் தலைவர் மீண்டு வருவார்.  நீ வருந்தாதே!

குறிப்பு:  அகநானூறு 213-1 – வினை நவில் யானை விறல் போர்த் தொண்டையர்.  வாழி (4) – உ. வே. சாமிநாதையர் உரை – அசைநிலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை, தமிழண்ணல் உரை – நீ வாழ்வாயாக.  புன் தாள் (8) – உ. வே. சாமிநாதையர் உரை – புல்லிய அடியை உடைய, சிவந்த தாளெனலும் பொருந்தும்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாரை வானத்தில் உயர்ந்து பறத்தல் நன்நிமித்தம் என்னும் கொள்கை உண்டு போலும்.  வண்டு ஊதா நிற்பப் புதல் மலர்தல் தலைவர் வருகையை அறிவிக்கும் தூது பெறுவாம் என்னும் குறிப்புடைத்து.  தோள்வளை இறுகுதல் நன்னிமித்தம்.  கன்றில்லா மலட்டு ஆவே தங்கும் என்றமையாலே, நின்பாற் பேரன்புடைய தலைவர் நின்னை நினைந்து மீள்வர் என்பது குறிப்பு.  வரலாறு:  தொண்டையர்.  உ. வே. சாமிநாதையர் உரை – தொண்டையர் அடுக்கம் என்றது வேங்கட மலையை.

சொற்பொருள்:   குருகும் இரு விசும்பு இவரும் – நாரைகளும் பெரிய வானத்தில் உயரப் பறக்கும், புதலும் வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே – புதரில் உள்ள அரும்புகள் வரிகளையுடைய வண்டுகள் ஊதுவதால் மலர்ந்தன (புதல் – ஆகுபெயர் புதரில் உள்ள அரும்புகளுக்கு), சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும் – சுழித்த சங்கினால் செய்த வளையல்களால் பொலிந்த தோள்களும் செறியும் (சுரிவளை – வினைத்தொகை), வருவர் – தலைவர் வருவார், கொல் – அசைநிலை, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, பொருவார் மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை – பகைவர்களின் மண்ணை எடுத்து உண்ணும் தலைமை உடைய யானையையும்,  வண் தேர்த் தொண்டையர் – வளவிய தேரையுடைய தொண்டையர், வழை அமல் அடுக்கத்துக் கன்று இல் ஓர் ஆ விலங்கிய – சுரபுன்னை மலர்கள் நெருங்கிய மலைப்பக்கத்தில் கன்று இல்லாத ஒற்றைப் பசுவை தன்னுடைய நிழலினால் விலகாது இருக்கும்படி செய்த (அமல் – செறிந்த), புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே – புல்லிய அடியை உடைய ஓமை மரங்கள் உடைய பாலை நிலத்தைக் கடந்து சென்ற தலைவர் (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 261, கழார்க்கீரன் எயிற்றியார்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பழ மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய
சிதட்டுக்காய் எண்ணின் சில் பெயல் கடை நாள்
சேற்று நிலை முனைஇய செங்கண் காரான்,
நள்ளென் யாமத்து ஐ எனக் கரையும்
அஞ்சுவரு பொழுதினானும், என் கண்  5
துஞ்சா வாழி தோழி, காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே.

பாடல் பின்னணி:  வரைவு கடாயது.

பொருளுரை:  தோழி!  நீ வாழ்வாயாக!  நாழிகைக் கணக்கர் இரவில் நாழிகையை ஆராயும் திறத்தைப் போல் ஆராய்ந்து வருந்தி, என் நெஞ்சம் புண்பட்ட துன்பத்தால், பழைய மழை பொழிந்ததால் பதம் அழிந்து உள்ளே உருகிய உள்ளீடு இல்லாத ஊமைக் காயை உடைய எள்ளின் செடிகளை உடைய, சிறிய மழையை உடைய கார்காலத்தின் இறுதி நாட்களில் சேற்றின்கண் நிற்றலை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமையானது இருள் செறிந்த நடு இரவில் ‘ஐ’ என ஒலிக்கும் அச்சம் பொருந்திய பொழுதில் என் கண்கள் துயிலாதவை ஆயின.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தனக்கு ஒவ்வாத மழை பெய்தமையாலே உருகிச் சிதடாய்ப் போன எள்ளையுடைய காலம் என்றது, தனக்கு ஒல்லாத் துன்பங்களாலே நெஞ்சுருகி யான் அழியாநின்றேன் என்னும் குறிப்பிற்று என்க.  இற்செறிக்கப்பட்ட தன் நிலைக்கு உள்ளுறை உவமமாகச் சேற்று நிலை முனையஇய செங்கட் காரான் கரைதலைக் கூறினாள்.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

சொற்பொருள்:   பழ மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய சிதட்டுக்காய் எண்ணின் – பழைய மழை பொழிந்ததால் பதம் அழிந்து உள்ளே உருகிய உள்ளீடு இல்லாத ஊமைக் காயை உடைய எள்ளின் செடிகளை உடைய, சில் பெயல் கடை நாள் சேற்று நிலை முனைஇய செங்கண் காரான் – சிறிய மழையை உடைய கார்காலத்தின் இறுதி நாட்களில் சேற்றின்கண் நிற்றலை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை (முனைஇய – அளபெடை), நள்ளென் யாமத்து ஐ எனக் கரையும் அஞ்சுவரு பொழுதினானும் – இருள் செறிந்த (அடர்ந்த) நடு இரவில் ஐ என ஒலிக்கும் அச்சம் பொருந்திய பொழுதில், என் கண் துஞ்சா – என் கண்கள் துயிலாதவை ஆயின, வாழி – நீ வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, காவலர் கணக்கு ஆய் வகையின் வருந்தி – நாழிகைக் கணக்கர் இரவில் நாழிகையை ஆராயும் திறத்தைப் போல் ஆராய்ந்து வருந்தி, என் நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே – என் நெஞ்சம் புண்பட்ட துன்பத்தால் (விழுமத்தானே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 262, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோபாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
ஊஉர் அலர் எழச் சேரி கல்லென
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க தன் மனை, யானே
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசின், அவரொடு சேய்நாட்டு  5
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன்
கரும்பு நடு பாத்தி அன்ன
பெரும் களிற்று அடிவழி நிலைஇய நீரே.

பாடல் பின்னணி:  தோழி தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தியது.

பொருளுரை:  ஊரில் பழிமொழி உண்டாகத் தெருவில் உள்ளவர்கள் கல்லென்று ஆரவாரிக்க அமையாமல் வருத்துகின்ற அறம் இல்லாத தாய், உன்னைப் பிரிந்து தான் ஒருத்தியாக இருப்பாளாக வீட்டில். நான் நெடுந்தூரத்தில் உள்ள நாட்டில் வானத்தைத் தொடும்படி உயர்ந்த குறுக்கிட்ட மலையின் அடிப்பகுதியில் கரும்பை நட்ட பாத்தியைப் போல் பெரிய ஆண்யானையின் அடிச்சுவட்டில் தங்கிய நீரை தலைவருடன் நெல்லிக்காயைத் தின்ற முள்ளைப் போன்ற கூர்மையான பற்கள் விளங்கும்படி நீ உண்ணுதலை நினைத்தேன்.

குறிப்பு:  அறன் இல் யாய் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவியின் நிலையை ஊகத்தால் அறிந்து அவள் விரும்பிய தலைவர்க்கு அவளை மணஞ் செய்வித்தற்கு முயறல் போக்கி, இற்செறித்தல் முதலியவற்றானே அலைத்துக் கொடுமை செய்தலின், அறனில் அன்னை என்றாள்.  ஈண்டு அறன் என்பது தலைவியைத் தலைவனோடே கூட்டுவிக்கும் செயலை.  அறன் இல்லாரோடு உடனுறைதலும் தகாது என்பாள் ‘தானே இருக்க தன் மனை’ என வெறுத்தோதினாள். குறுந்தொகை 244, 262, நற்றிணை 63, 145, 376.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெல்லிக்காயின் துவராலே பல் மாசுபடுதலின் அது தீரவும் நெல்லிக்காயைத் தின்ற பின்னர் நீர் பருகின்  அஃது இனிதாதலினாலும் ‘முள் எயிறு தயங்க நீருணல்’ என்றாள்.  தலைவனோடே இருந்து உண்ணப்படுவது வறிய நீரே ஆயினும் அமிழ்தினும் இனிதென்பதுபட ‘அவரொடு உணல்’ என்றாள்.  இது தான் நீ இப்பொழுது செய்யக்கிடந்த அறம் என்பாள் ‘ஆய்ந்திசின்’ என்றாள்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

சொற்பொருள்:   ஊஉர் அலர் எழச் சேரி கல்லென ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை – ஊரில் பழிமொழி உண்டாகத் தெருவில் உள்ளவர்கள் கல்லென்று ஆரவாரிக்க அமையாமல் வருத்துகின்ற அறம் இல்லாத தாய் (ஊஉர் – அளபெடை), தானே இருக்க தன் மனை – உன்னைப் பிரிந்து தான் ஒருத்தியாக இருப்பாளாக வீட்டில், யானே – நானே, நெல்லி தின்ற முள் எயிறு தயங்க உணல் ஆய்ந்திசின் – நெல்லிக்காயைத் தின்ற முள்ளைப் போன்ற கூர்மையான பற்கள் விளங்கும்படி நீ உண்ணுதலை நினைத்தேன், அவரொடு – தலைவருடன், சேய்நாட்டு விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன் – நெடுந்தூரத்தில் உள்ள நாட்டில் வானத்தைத் தொடும்படி உயர்ந்த குறுக்கிட்ட மலையின் அடிப்பகுதியில், கரும்பு நடு பாத்தி அன்ன பெரும் களிற்று அடிவழி நிலைஇய நீரே – கரும்பை நட்ட பாத்தியைப் போல் பெரிய ஆண்யானையின் அடிச்சுவட்டில் தங்கிய நீரை (நீரே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 263, பெருஞ்சாத்தனார்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னதுதலைவன் கேட்கும்படியாக
மறிக் குரல் அறுத்துத், தினைப் பிரப்பு இரீஇச்,
செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்கத்
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்திப்,
பேஎய்க் கொளீஇயள் இவள் எனப்படுதல், 5
நோதக்கன்றே தோழி, மால் வரை
மழை விளையாடும் நாடனைப்
பிழையேம் ஆகிய நாம் இதன்படவே.

பாடல் பின்னணி:   அன்னை வெறியாட்டெடுக்க கருதியதை தலைவிக்குக் கூறுவாளாகித் தலைவனுக்கு உரைத்தது.

பொருளுரை:  பெரிய மலையில் முகில்கள் விளையாடும் நாட்டுத் தலைவன் மாட்டுக் களவு ஒழுக்கத்தால் நாம் எந்தத் தவறும் செய்யவில்லை.  ஆட்டுக்குட்டியின் கழுத்தை அறுத்து, தினையைப் பரப்பி, ஆற்றுத் தீவில் பல வகையான இசைக் கருவிகளை ஒலித்து, வேலன் மேல் தோன்றுவதைத் தவிர வேறு பயன் இல்லாத வேறு பெருந்தெய்வங்கள் பலவற்றை வாழ்த்தி, “இவள் பேயால் கொள்ளப்பட்டாள்” என்று கூறுவது வருந்துவதற்கு உரியதாகும்.  நாம் எந்தப் பிழையையும் செய்யவில்லை.  மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

குறிப்பு:  நோதக்கன்றே – ஏகாரம் அசை நிலை, இதன்படவே – ஏகாரம் அசை நிலை.  அன்னை வெறியாட்டெடுக்க கருதியது கவலை (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆற்றிடைக் குறை.  ஆற்றிடைக் குறையில் தெய்வம் உறையும் என்பதை ‘கவின்பெறு துருத்தியும்’ (திருமுருகாற்றுப்படை 223) என்றும் ‘நல்யாற்று நடுவும்’ (பரிபாடல் 4-67) என்றும் பிறர் கூறுமாற்றானும் உணர்க.  மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

சொற்பொருள்:   மறிக் குரல் அறுத்து – ஆட்டுக்குட்டியின் கழுத்தை அறுத்து (குரல் – கழுத்திற்கு ஆகுபெயர்), தினைப் பிரப்பு இரீஇ – தினையை உடைய பிரப்பை வைத்து (இரீஇ – அளபெடை), செல் ஆற்றுக் கவலை – ஓடுகின்ற ஆற்றின் தீவு, பல் இயம் கறங்க – பல வகையான இசைக் கருவிகள் ஒலிக்க, தோற்றம் அல்லது – வேலன் மேல் தோன்றுவதைத் தவிர வேறு பயன் இல்லாத, நோய்க்கு மருந்து ஆகா – உன்னுடைய காம நோய்க்கு மருந்து ஆகாத, வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்தி – வேறு பெருந் தெய்வங்கள் பலவற்றை வாழ்த்தி, பேஎய்க் கொளீஇயள் இவள் – இவள் பேயால் கொள்ளபபட்டாள் (பேஎய் – அளபெடை, கொளீஇயள்- அளபெடை), எனப்படுதல் – என்று கூறப்படுவது, நோதக்கன்றே – வருந்துவதற்கு உரியதாகும், தோழி – தோழி, மால் வரை மழை விளையாடும் நாடனை – உயர்ந்த மலையில் முகில்கள் விளையாடுகின்ற நாட்டின் தலைவன் மாட்டு, பிழையேம் ஆகிய நாம் – தவறு செய்யாத நாம், இதன்படவே – இந்தக் களவு ஒழுக்கத்தில் நிகழ்ந்து இருக்க

குறுந்தொகை 264, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கலி மழை கெழீஇய கான்யாற்று இகு கரை
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை,
பயந்தக் காலும் பயப்பு ஒல்லாதே.  5

பாடல் பின்னணி:  தலைவனின் பிரிவால் வருந்திய தலைவி ‘நான் ஆற்றியிருப்பேன்’ என்றது.

பொருளுரை:  ஆரவாரத்தை உடைய மழை பொருந்திய காட்டு ஆற்றின் தாழ்ந்த கரையில், தழைத்த நெடிய தோகை அசைய நடந்து ஆடுகின்ற மயில்கள் கூவும் நாடன் நம்முடன் விருப்பத்துடன் கொண்ட நட்பானது, பிரிவாலே என் மேனி பசலை அடைந்தாலும், அப்பசலையுடன் பொருந்தாது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழையின் ஆரவாரத்தையுடைய காட்டாற்றின் கரைக்கண் உள்ள மயில், இனி முகில் மழை பொழிதல் உறுதியென எண்ணிக் களித்து ஆடுதலே அன்றி அகவினாற் போன்று என் உள்ளம் அவனது கேண்மையை நினையுந்தோறும் களித்து மகிழாநின்றது என்பது குறிப்பு.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  இகுகரை (1) – தமிழண்ணல் – உடைகரை, உ.வே. சாமிநாதையர் , தாழ்ந்த கரை, இகுத்தல் என்பதற்கு அடித்தல் என்னும் பொருளுண்மையின் அலைகள் மோதும் கரையெனப் பொருள் கொள்ளுதலும் ஆம்., பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாழ்ந்த கரை. காட்டாற்றின் கரைகள் காலந்தோறும் மழையாலே கரைந்து தாழ்தலின் ‘இகுகரை’ என்றாள்.  கலி (1) – உ. வே. சாமிநாதையர் உரை – இடி முதலியவற்றால் உண்டாகும் ஆரவாரம்.

சொற்பொருள்:  கலி மழை கெழீஇய கான்யாற்று இகு கரை ஒலி நெடும் பீலி துயல்வர இயலி – ஆரவாரத்தை உடைய மழை பொருந்திய காட்டு ஆற்றின் தாழ்ந்த கரையில் தழைத்த நெடிய தோகை அசைய நடந்து (கெழீஇய – பொருந்திய), ஆடு மயில் அகவும் நாடன் – ஆடுகின்ற மயில்கள் கூவும் நாடன், நம்மொடு நயந்தனன் கொண்ட கேண்மை – நம்முடன் விருப்பத்துடன் கொண்ட நட்பு, பயந்தக் காலும் பயப்பு ஒல்லாதே – நாம் பசலை அடைந்தாலும் அப்பசலையுடன் பொருந்தாது (ஒல்லாதே – பொருந்தாது)

குறுந்தொகை 265, கருவூர்க் கதப்பிள்ளைகுறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
காந்தள் அம் கொழு முகை காவல் செல்லாது
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும்
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்,  5
நன்னர் நெஞ்சத்தன் தோழி, நின் நிலை
யான் தனக்கு உரைத்தனென் ஆகத்
தான் நாணினன், இஃது ஆகாவாறே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் தலைவன் பிரிந்த பொழுது, ‘அவர் பிரிந்தது வரைவு கோடல் காரணமாக’ என்று கூறி தோழி தலைவியை ஆற்றுவித்தது. 

பொருளுரை:  தோழி! காந்தளின் அழகிய கொழுத்த அரும்புகள் தாமே மலரும் வரையில் காத்து இருக்காமல் வண்டுகள் அவற்றின் மூடிய இதழ்களைத் திறக்கும் வேளையில், முன்பும் தாம் அறிந்த செம்மையான சான்றோர்களைக் கண்ட அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை அறிந்த மக்கள் போல, இவ்வண்டுகளுக்கு இடம் அளித்து இதழ்கள் பிணைப்பு அவிழ்ந்து மலரும் மலர்களையுடைய மலையின் தலைவன் நல்ல நெஞ்சைத்தை உடையவன். உன்னுடைய நிலைமையை நான் அவனிடம் சொன்னேன். அது கேட்டு, அவன் நாணத்தை அடைந்தான். இக்களவு ஒழுக்கம் நீட்டித்து நிகழாதபடி உன்னை அவன் விரைவில் வரைந்துக் கொள்வான்.

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – தானே மலரும் பருவத்திற்கு முன் வண்டு மலரைத் திறக்கும் என்றது களவு வெளிப்பட்டு அலராதலுக்கு முன் வரைந்து கொள்ளும் எண்ணம் உடையான் தலைவன் என்ற குறிப்பினது.  வண்டு வாய் திறக்கும் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – வண்டுகள் மூடிய இதழ்களைத் திறக்கும், பாடுதலுமாம்,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வண்டுகள் கிண்டித் திறக்கும்.

சொற்பொருள்:  காந்தள் அம் கொழு முகை காவல் செல்லாது வண்டு வாய் திறக்கும் பொழுதில் – காந்தளின் அழகிய கொழுத்த அரும்பை தாமே மலரும் வரையில் காத்து இருக்காமல் வண்டுகள் மூடிய இதழ்களைத் திறக்கும் வேளையில், பண்டும் தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட கடன் அறி மாக்கள் போல – முன்பும் தாம் அறிந்த செம்மையான சான்றோர்களைக் கண்ட கடமை அறிந்த மக்கள் போல, இடன் விட்டு இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் – இவ்வண்டுகளுக்கு இடம் அளித்து இதழ்கள் பிணைப்பு அவிழ்ந்து மலரும் மலர்களையுடைய மலையின் தலைவன் (இடன் – இடம் என்பதன் போலி, ஏகல் – மலை), நன்னர் நெஞ்சத்தன் – நல்ல நெஞ்சைத்தை உடையவன் அவன் (நன்னர் – நல்ல), தோழி – தோழி, நின் நிலை யான் தனக்கு உரைத்தனென் ஆக – உன்னுடைய நிலைமையை நான் அவனுக்குச் சொன்னேன் ஆக,  தான் நாணினன் – அவன் நாணத்தை அடைந்தான், இஃது ஆகாவாறே – இக்களவு ஒழுக்கம் நீட்டித்து நிகழாதபடி (ஆகாவாறே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 266, நக்கீரனார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று
இன்னா இரவின் இன் துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ,
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே?

பாடல் பின்னணி:  தலைவன் வரையாது பிரிந்தவிடத்து தலைவி கூறியது.

பொருளுரை:  நம்மைப் பிரிந்து செல்வதற்கு உரிய வலிமை உடைய நம் தலைவர், பறவைகள் வாயிலாக விடும் தூது மொழிகளை நம்மைப் பொருட்படுத்தி நமக்கு ஒன்றை அவர் கூறார் ஆயினும், தமக்குப் பொருந்திய துன்பமான இரவு வேளைகளில் இனிய துணையாக இருந்த தோட்டத்தில் உள்ள வேங்கை மரத்திற்குத் தூது அனுப்ப மறந்தாரோ?

குறிப்பு:  உ. வே. சாமிநாதையர் உரை – வேங்கைக்குத் தூது மறந்தனர் கொல் என்றது, இரவுக் குறியின் இடத்து வந்து அளவளாவிய செய்திகளை மறந்தனரோ என்னும் கருத்தினது.

சொற்பொருள்:  நமக்கு ஒன்று உரையார் ஆயினும் – நமக்கு ஒன்றை அவர் கூறார் ஆயினும், தமக்கு ஒன்று இன்னா இரவின் – தமக்குப் பொருந்திய துன்பமான இரவு வேளைகளில், இன் துணை ஆகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ – இனிய துணையாக இருந்த தோட்டத்தில் உள்ள வேங்கை மரத்திற்குத் தூது அனுப்ப மறந்தாரோ (கொல்லோ – ஓகாரம் அசைநிலை, கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), துறத்தல் வல்லியோர் – நம்மைப் பிரிந்து செல்வதற்கு உரிய வலிமை உடைய நம் தலைவர், புள்வாய்த் தூதே – பறவைகள் வாயிலாக விடும் தூது மொழிகளை (தூதே – ஏகாரம் அசைநிலை)

குறுந்தொகை 267, காலெறி கடிகையார்பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
இருங்கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம்
ஒருங்குடன் இயைவது ஆயினும், கரும்பின்
கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன
வால் எயிறு ஊறிய வசை இல் தீ நீர்க்
கோல் அமை குறுந்தொடிக் குறுமகள் ஒழிய,  5
ஆள் வினை மருங்கில் பிரியார், நாளும்
உறன் முறை மரபிற் கூற்றத்து
அறன் இல் கோள் நற்கு அறிந்திசினோரே.

பாடல் பின்னணி:  தலைவன் செலவு தவிர்த்தது.

பொருளுரை:  நெஞ்சே! நாள்தோறும் நிகழ்தலாகிய முறையை உடைய மரபினையுடைய கூற்றுவனின் அறம் இல்லாத கொலைத் தொழிலை நன்கு அறிந்தவர்கள், பெரிய இடத்தையுடைய உலகத்தில் அடையும் இன்பமாகிய பயன் உடைய பெரிய செல்வம் ஒருங்கே பொருந்துவது ஆயினும், கரும்பின் அடிப்பகுதியை வெட்டி உண்டாற்போன்ற சுவையையுடைய வெள்ளைப் பற்களில் ஊறிய குற்றம் இல்லாத இனிய நீரையும் திரண்ட சிறிய வளையல்களையும் அணிந்த தலைவியை விட்டு விட்டுத் தாம் பிரிந்து போதலைச் செய்ய மாட்டார்கள். நீ அவளைப் பிரியும் எண்ணத்தைக் கைவிடு!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரும்பின் அடிப்பகுதியை மிகவும் இனிதாதல் பற்றிக் ‘கரும்பின் கால் எறி கடிகை’ என்றான்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

சொற்பொருள்:  இருங்கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம் ஒருங்குடன் இயைவது ஆயினும் – பெரிய இடத்தையுடைய உலகத்தில் அடையும் இன்பமாகிய பயன் உடைய பெரிய செல்வம் ஒருங்கே பொருந்துவது ஆயினும், கரும்பின் கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன – கரும்பின் அடிப்பகுதியை வெட்டி உண்டாற்போன்ற சுவையையுடைய, வால் எயிறு ஊறிய – வெள்ளைப் பற்களில் ஊறிய, வசை இல் தீ நீர்க் கோல் அமை குறுந்தொடிக் குறுமகள் – குற்றம் இல்லாத இனிய நீரையும் திரண்ட சிறிய வளையல்களையும் அணிந்த தலைவி, ஒழிய – பிரிய, ஆள் வினை மருங்கில் பிரியார், நாளும் – நாள்தோறும், உறல் முறை மரபின் – நிகழ்தலாகிய முறையை உடைய மரபினையுடைய (உறல் – பொருந்திய), கூற்றத்து அறன் இல் கோள் நற்கு அறிந்திசினோரே – கூற்றுவனின் அறம் இல்லாத கொலைத் தொழிலை நன்கு அறிந்தவர்கள் (அறன்-  அறம் என்பதன் போலி, அறிந்திசினோரே – அசைநிலை)

குறுந்தொகை 269, கல்லாடனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி 
சேயாறு சென்று, துனை பரி அசாவாது
உசாவுநர்ப் பெறினே நன்று, மற்றில்ல,
வயச்சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும்
நீல நிறப் பெருங்கடல் புக்கனன், யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனிச் சென்றனள், இதனால்,
பனியிரும் பரப்பின் சேர்ப்பற்கு
இனி வரின் எளியள் என்னும் தூதே.

பாடல் பின்னணி:   தோழிக்குக் கூறுவாள் போல் தலைவனிடம் கூறியது.

பொருளுரை:   தளராமல், மிகத் தொலைவான வழியைக் கடந்து விரைந்துச் சென்று, சென்றவரிடம் அறிவுரைக் கூறுபவரைப் பெற்றால் மிகவும் நல்லது.  இது என் விருப்பம்.  வலுவான சுறா மீனால் ஏற்பட்ட புண் தணிந்து என் தந்தை நீல நிறக் கடலுக்குச் சென்றுள்ளார்.  என் தாயும் உப்பிற்கு மாற்றாக வெள்ளை நெல்லைப் பெறுவதற்கு உப்பு விளையும் உப்பளத்திற்குச் சென்றுள்ளாள்.   குளிர்ந்த பெரிய கடற்கரையின் தலைவர் இப்பொழுது வந்தால்,  நான் பெறுவதற்கு எளியவள் என்பது நான் விடும் தூது.

குறிப்பு:  பெறினே, தூதே – ஏகாரங்கள் அசை நிலைகள்.  அகநானூறு 140 – நெல்லின் நேரே வெண்கல் உப்பு, அகநானூறு 390 – நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீரோ, குறுந்தொகை 269 – உப்பை மாறி வெண்ணெல் தரீஇய.  குறுந்தொகை 52, மற்றில்ல – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிற இலவாகும், உ. வே. சாமிநாதையர் உரை – மன் தில்ல, தில் விழைவின்கண் வந்தது, தமிழண்ணல் உரை – மன் தில்ல, தில் விருப்பத்தை உணர்த்தும் இடைச்சொல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நற்றிணை 392 – மன் தில்ல என்னும் இடைச்சொற்கள் மற்றில எனப் புணர்ந்தன.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  துனை பரி அசாவாது – உ. வே. சாமிநாதையர் உரை – விரையும் நடையினால் வருந்தாது, விரைந்து நடந்து போதலுக்கு சோர்வுறாது, பொ. வே. சோமசுந்தரனார் உரை, தமிழண்ணல் உரை – விரைகின்ற புரவிகள் தளராமையிலே.

சொற்பொருள்:   சேய் ஆறு சென்று – மிகத் தொலைவான வழியைக் கடந்து சென்று, துனை பரி – மிகவும் வேகமாக நடந்து, அசாவாது – தளராமல், அச் செலவிற்கு வருந்தாமல், உசாவுநர்ப் பெறினே நன்று மன் – அறிவுரைக் கூறுபவரைப் பெற்றால் மிகவும் நல்லது, தில்ல – இது என் விருப்பம், வயச்சுறா எறிந்த – வலுவான சுறா மீனால் ஏற்பட்ட, புண் தணிந்து – புண் தணிந்து, எந்தையும் நீல நிறப் பெருங்கடல் புக்கனன் – என் தந்தை நீல நிறக் கடலுக்குச் சென்றுள்ளார், யாயும் – என் தாயும், உப்பை மாறி வெண்ணெல் தரீஇய – உப்பிற்கு மாற்றாக வெள்ளை நெல்லைப் பெறுவதற்கு, உப்பு விளை கழனிச் சென்றனள் – உப்பு விளையும் உப்பளத்திற்கு சென்றுள்ளாள், இதனால் – இதனால், பனி இரும் பரப்பின் சேர்ப்பற்கு – குளிர்ந்த பெரிய கடற்கரையின் தலைவனுக்கு, இனி வரின் – இனி அவர் வந்தால், எளியள் –  நான் பெறுவதற்கு எளியவள், என்னும் தூதே – என்ற தூது

குறுந்தொகை 280, நக்கீரர்குறிஞ்சித் திணை – தலைவன் தோழனிடம் சொன்னது
கேளிர் வாழியோ, கேளிர்! நாளும் என்
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப்
பெரும் தோள் குறுமகள் சிறு மெல் ஆகம்,
ஒரு நாள் புணரப் புணரின்,
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே.  5

பாடல் பின்னணி:   தன்னை இடித்துரைத்த பாங்கனிடம் தலைவியின் அருமையைத் தலைவன் கூறியது.

பொருளுரை:   நண்பரே!  நீடு வாழ்வீராக நண்பரே!  எப்பொழுதும் என் நெஞ்சைத் தன்னிடத்தில் பிணித்துக்கொண்ட அழகிய சிலவாகிய கூந்தலையும் பெரிய தோளையும் உடைய தலைவியின், சிறிய மென்மையான மேனியை, ஒரு நாள் அவளுடன் கூடி இணைந்தால், நான் அரை நாள் வாழ்க்கையையும் வேண்டேன்.

குறிப்பு:   கேளிர் வாழியோ கேளிர் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கேளிர் அண்மை விளி.  தக்கது மொழிந்திலை என்னும் செறலானே இருமுறை விளித்தான், கேளிர் – கேண்மை உடையீர், யானே – ஏகாரம் அசை.

சொற்பொருள்:   கேளிர் – நண்பரே, வாழியோ – நீடு வாழ்வீராக, கேளிர் – நண்பரே, நாளும் என் நெஞ்சு பிணிக் கொண்ட – எப்பொழுதும் என் நெஞ்சைத் தன்னிடத்தில் பிணித்துக்கொண்ட,  அம் சில் ஓதிப் பெரும் தோள் குறுமகள் – அழகிய சிலவாகிய கூந்தலையும் பெரிய தோளையும் உடைய தலைவியின், சிறு மெல் ஆகம் – சிறிய மென்மையான மேனியை, ஒரு நாள் புணரப் புணரின் – ஒரு நாள் அவளுடன் கூடி இணைந்தால், அரை நாள் வாழ்க்கையும் வேண்டலென் – அரை நாள் வாழ்க்கையையும் வேண்டேன், யானே – நானே

குறுந்தொகை 283, பாலை பாடிய பெருங்கடுங்கோபாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உள்ளது சிதைப்போர் உளர் எனப் படாஅர்,
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு எனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி, என்றும்
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர் 5
ஆற்றிருந்து அல்கி வழங்குநர்ச் செகுத்த
படுமுடை பருந்து பார்த்திருக்கும்,
நெடு மூது இடைய நீர் இல் ஆறே.

பாடல் பின்னணி:   தலைவன் பொருள்வயின் பிரிந்த பொழுது தலைவி சொன்னது.

பொருளுரை தோழி!  ‘பூர்வீகச் சொத்தை தொலைப்பவர்கள் தங்களிடம் சொத்து இருந்தாலும் செல்வர்கள் ஆக மாட்டார்கள்.  பிறர் விட்டுச் சென்ற சொத்தில் வாழ்பவர்கள், பிச்சை எடுத்து வாழ்வதைக் காட்டிலும் இழிவான வாழ்க்கையை வாழ்பவர்கள்’ என்பதை என்னிடம் திருத்தமாகச் சுட்டிக் காட்டி, தெளிவுபடக் கூறி விட்டு, பணம் சம்பாதிக்கச் சென்றுள்ளார் தலைவர்.  அவர் வாழ்வாராக.   அவர் சென்ற நீண்ட பழைய இடத்தில் உள்ள வழியில் கூற்றுவன் கொல்வதைப் போல் கொல்லும் மறவர்கள் செல்வோரைக் கொல்லுவார்கள்.  இறந்தவர்களின் உடலை உண்ண பருந்துகள் வரும்.

குறிப்பு:  ஆறே – ஏகாரம் அசை நிலை.  தலைவன் பொருள்வயின் பிரிந்த பொழுது தலைவி சொன்னது.

சொற்பொருள்:   உள்ளது சிதைப்போர் – பூர்வீகச் சொத்தைத் தொலைப்பவர்கள்,  உளர் எனப் படாஅர் – சொத்து இருந்தாலும் செல்வர்கள் ஆக மாட்டார்கள், இல்லோர் வாழ்க்கை – பிறர் விட்டுச் சென்ற பணத்தில் வாழ்வோரின் வாழ்க்கை,  இரவினும் இளிவு – பிச்சை எடுப்பதை விட கீழானது,  என – என, சொல்லிய வன்மை – திருத்தமாகச் சொல்லி, தெளியக் காட்டி – தெளிவாகக் காட்டி, சென்றனர் – (பணம் சம்பாதிக்கச் சென்ற என் தலைவர்,  வாழி – அவர் வாழ்வாராக, தோழி – என் தோழி,  என்றும் – என்றும், கூற்றத்து அன்ன – கூற்றுவனைப் போல்,  கொலை வேல் மறவர் – கொலையைப் புரியும் மறவர்கள், ஆற்றிருந்து அல்கி – வழியில் தங்கி, வழங்குநர் – செல்வோரை, செகுத்த – கொன்ற, படு முடை – கொன்றவர்களின் தசை (முடை – தசை, ஆகுபெயர்),  பருந்து – பருந்து, பார்த்திருக்கும் – காத்துக்கொண்டிருக்கும், நெடு மூது இடைய – நீண்ட முதிய இடம்,  நீர் இல் ஆறே – நீர் இல்லாத பாதை

குறுந்தொகை 285, பூதத் தேவனார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வைகல் வைகல் வைகவும் வாரார்,
எல்லா எல்லை எல்லையும் தோன்றார்,
யாண்டு உளர் கொல்லோ தோழி? ஈண்டு இவர்
சொல்லிய பருவமோ இதுவே, பல் ஊழ்
புன் புறப் பெடையொடு பயிரி இன் புறவு  5
இமைக்கண் ஏது ஆகின்றோ, ஞெமைத்தலை
ஊன் நசைஇ ஒரு பருந்து இருக்கும்,
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

பாடல் பின்னணி:   வேறுபட்ட (வருத்திய) தலைவியை நோக்கித் தோழி வற்புறுத்தியபோது, அவளிடம் தலைவி வருந்திக் கூறியது.

பொருளுரை தோழி! இனிய ஆண் புறா பல முறை புல்லிய முதுகையுடைய தன் பெண் புறாவை அழைத்து இமைப்பொழுதில் எத்தனை இன்பத்தை அடைகின்றது!  இவ்வாறு அவை இருக்கவும், ஞெமை மரத்தின் உச்சியில் இறந்தவர்களின் தசையை விரும்பி ஒற்றைப் பருந்து இருக்கின்ற வானளவு உயர்ந்த ஒளியுடைய மலையைக் கடந்து சென்ற நம் தலைவர் விடியற்காலம் நீங்கிப் பகல் வரவும் அவர் வரவில்லை.  பகலின் எல்லையாகிய இரவிலும் அவர் வரவில்லை.  எங்கு இருக்கின்றாரோ அவர்?  இங்கு மீண்டு வருவேன் என்று அவர் நம்மிடம் சொல்லிய பருவம் இதுதான்.  நான் எவ்வாறு ஆற்றியிருப்பேன்?

குறிப்பு:   உ. வே. சாமிநாதையர் உரை – ஆண் புறா, பெண் புறாவின் அருகிருந்து அழைத்து இன்புறுதலைத் தலைவரும் கண்டிருதல் கூடும் என்பதும் அக்காலத்து தன்னை நினைத்து மீண்டிலரே என்பதும் தலைவியின் எண்ணம்.  புறவு – புறா புற என்றாகி உகரம் ஏற்றது.  குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  பெடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:   வைகல் வைகல் வைகவும் வாரார் – விடியற்காலம் நீங்கிப் பகல் வரவும் அவர் வரவில்லை, எல்லா எல்லை எல்லையும் தோன்றார் – பகலின் எல்லையாகிய இரவிலும் அவர் வரவில்லை, யாண்டு உளர் கொல்லோ தோழி – எங்கு உள்ளாரோ அவர் தோழி, ஈண்டு இவர் சொல்லிய பருவமோ இதுவே – இங்கு மீண்டு வருவேன் என்று அவர் நம்மிடம் சொல்லிய பருவம் இதுதான், பல் ஊழ் – பல முறை, புன் புறப் பெடையொடு பயிரி – புல்லிய முதுகையுடைய பெண் புறாவை அழைத்து, இன் புறவு – இனிய ஆண் புறா, இமைக்கண் ஏது ஆகின்றோ – இமைப்பொழுதில் எத்தனை இன்பத்தை அடைகின்றது, ஞெமைத்தலை ஊன் நசைஇ – ஞெமை மரத்தின் உச்சியில் இறந்தவர்களின் தசையை விரும்பி, ஒரு பருந்து இருக்கும் – ஒற்றைப் பருந்து இருக்கின்ற, வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – வானளவு உயர்ந்த ஒளியுடைய மலையைக் கடந்து சென்ற நம் தலைவர்

குறுந்தொகை 288, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கறிவளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங்கல் நாடன்
இனியன் ஆகலின், இனத்தின் இயன்ற
இன்னாமையினும், இனிதோ
இனிதெனப்படூஉம் புத்தேள் நாடே? 5

பாடல் பின்னணி:   தலைவனின் வரவை உணர்ந்து, ‘அவன் அன்பிலன்’ என்று கூறிய தோழியிடம் ‘அவன் செய்வன இனியவை’ என்று உரைத்தது.

பொருளுரை:   மிளகுக் கொடிகள் வளரும் மலை அடுக்கத்தில் திரளாகச் சேர்ந்து தளிரை உண்ணும் குரங்குகளை உடைய பெரிய மலை நாடன், என்னைப் பிரிந்தப் பொழுதும் இனிமையாக உள்ளவன்.  நம்மிடம் உறவு உடையர்கள் துன்பம் விளைவித்தாலும் கூட,  அதனுடைய இனிமையை விட அதிக இனிமையானதா  மேல் உலகத்தின் இனிமை?

குறிப்பு:  இனிதோ – ஓகாரம் எதிர்மறைப் பொருளுடையது, நாடே: ஏகாரம் அசை நிலை.  இனிதோ (4) – உ. வே. சாமிநாதையர் உரை – ஓகாரம் எதிர்மறைப் பொருளது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தளிர் அருந்தும் குரங்கு மிளகுத் தளிரையும் தின்னுதலும் அத்தளிர் உறைப்புச் சுவை உடையதாயினும் ஏனைத் தளிரினும் உடலாக்கம் தருவதும் போல, யாமும் தலைவன் செயல்களில் சில துன்பம் தருவதாயினும் அதுவே ஆக்கம் தருவதாம் என்று அமைதல் வேண்டும் என்பாள், ‘என்றாள்.

சொற்பொருள்:   கறிவளர் – கரு மிளகுக் கொடிகள் வளரும், அடுக்கத்து – அடுக்கு மலையில், ஆங்கண் – ஆங்கு, முறி அருந்து – தளிரை உண்ணும், குரங்கு ஒருங்கு இருக்கும் – குரங்குகள் ஒன்றாகத் திரண்டு இருக்கும், பெருங்கல் நாடன் – பெரிய மலையின் நாடன், இனியன் ஆகலின் – (பிரிந்தாலும்) இனிமை உடையவன், இனத்தின் இயன்ற இன்னாமையினும் – உறவு உடையவரின் இன்னாமையைக் காட்டிலும்,  இனிதோ – இனியதா, இனிதெனப்படூஉம் புத்தேள் நாடே – இனிது என்று கூறப்படும் மேல் உலகம் (இனிதெனப்படூஉம் – அளபெடை)

குறுந்தொகை 290, கல்பொரு சிறுநுரையார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
காமம் தாங்குமதி என்போர் தாம் அஃது
அறியலர் கொல்லோ? அனை மதுகையர் கொல்?
யாம் எம் காதலர்க் காணேம் ஆயின்,
செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெரு நீர்க்
கல் பொரு சிறு நுரை போல, 5
மெல்ல மெல்ல இல்லாகுதுமே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்த காலத்தில் ‘நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என்று கூறிய தோழியிடம் கூறியது.

பொருளுரை:   உன்னுடைய காதல் நோயைப் பொறுத்து இருப்பாயாக என்று என்னிடம் கூறுபவர்கள் காதலின் தன்மையை அறியாதவர்களா?  அத்துணை வலிமையுடையவர்களோ?  என் தலைவனை நான் காணவில்லை என்றால் செறிந்த மிகுந்த துன்பமுடைய நெஞ்சத்துடன் பெரிய வெள்ளத்தில் பாறையின் மேல் மோதி அழியும் சிறிய நுரையைப் போல், மெல்ல மெல்ல தேய்ந்து இல்லையாகி விடுவேன்.

குறிப்பு:  கொல்லோ – ஓகாரம் அசை நிலை. இல்லாகுதுமே – ஏகாரம் அசை நிலை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

சொற்பொருள்:   காமம் தாங்குமதி என்போர் – காதல் நோயைப் பொறுத்து இருப்பாயாக என்று கூறுபவர்கள், தாம் – அசை நிலை, அஃது அறியலர் கொல்லோ – காதலின் தன்மையை அறியாதவர்களா, அனை மதுகையர் கொல் – அத்துணை வலிமையுடையவர்களோ, யாம் எம் காதலர்க் காணேம் ஆயின் – என் தலைவனை காணவில்லை என்றால், செறி துனி பெருகிய நெஞ்சமொடு – செறிந்த மிகுந்த துன்பமுடைய நெஞ்சத்துடன், பெரு நீர் – மிகுந்த வெள்ளத்தில், கல் பொரு சிறு நுரை போல – பாறையின் மேல் மோதும் சிறிய நுரையைப் போல், மெல்ல மெல்ல இல்லாகுதுமே – மெல்ல மெல்ல இல்லையாகி விடுவேன்

குறுந்தொகை 292, பரணர்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னதுதலைவன் கேட்கும்படியாக
மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவை
புனல் தரு பசுங்காய் தின்ற தன் தப்பற்கு,
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல,  5
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை,
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்தெனப்
பகை முக ஊரின் துஞ்சலோ இலளே.

பாடல் பின்னணி:  தலைவி தமரால் (தலைவியின் குடும்பத்தாரால்) பாதுகாக்கப்படுகின்றாள் என்பதையும் வரைந்து கொள்ளுதலே நன்று என்பதையும் தோழி புலப்படுத்துகின்றாள்.

பொருளுரை:  ஆற்றுக்குக் குளிப்பதற்காகச் சென்ற, ஒளியுடைய நெற்றியையுடைய இளம் பெண் நீரில் மிதந்து வந்த மாங்கனியைத் தின்ற தவறுக்காக, எண்பத்தொரு களிற்று யானைகளுடன், அவள் எடைக்கு ஈடாகப் பொன் பாவையையும் அவளுடைய உறவினர்கள் அவனுக்குக் கொடுத்தும், அதனை ஏற்றுக்கொள்ளாமல் அந்தப் பெண்ணைக் கொன்ற நன்னனைப் போன்று, எல்லையில்லா நரகத்திற்குச் செல்லட்டும் அன்னை.  ஒரு நாள் நகுதல் உடைய முகத்துடன் தலைவன் வந்ததால், பகைமையுள்ள போர்க்களத்தின் அருகில் உள்ள ஊரைப் போன்று, இவள் தூங்குவதில்லை.

குறிப்பு:   இந்தப் பெண்ணிற்காக அமைக்கப்பட்ட மாசாணி அம்மன் கோவில் இன்றும் கோவை மாவட்டத்தில் உள்ளது.  செலீஇயரோ – ஓகாரம் அசை நிலை, துஞ்சலோ – ஓகாரம் அசை நிலை, இலளே – ஏகாரம் அசை நிலை.  புறநானூறு 151 – நன்னன் மருகன் அன்றியும் நீயும் முயங்கற்கு ஒத்தனை.  நன்னன் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவன் ஒரு குறுநில மன்னன் போல் தெரிகின்றது.  மலைபடுகடாம் கொண்ட நன்னன் அல்லன்.  மலைபடுகடாம் கொண்ட நன்னன் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் எனப்படுவான்.  ஈண்டு பெண் கொலை செய்த நன்னன் கொண்கானவேள் நன்னன் எனப்படுவான்.

சொற்பொருள்:  மண்ணிய சென்ற – குளிப்பதற்காகச் சென்ற, ஒண் நுதல் அரிவை – ஒளியுடைய நெற்றியையுடைய இளம் பெண், புனல் தரு பசுங்காய் தின்ற தன் தப்பற்கு – ஆறு தந்த மாங்கனியைத் தின்ற தவறுக்காக, ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு – எண்பத்தொரு ஆண் யானைகளுடன், அவள் நிறை பொன் செய் பாவை கொடுப்பவும் – அவள் எடைக்கு ஈடாக பொன்னால் செய்த பாவையைக் கொடுத்தாலும், கொள்ளான் பெண் கொலை புரிந்த நன்னன் போல – ஏற்றுக்கொள்ளாமல் பெண் கொலை புரிந்த நன்னனைப் போன்று, வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை – எல்லையில்லா நரகத்திற்கு செல்லட்டும் அன்னை (செலீஇயரோ – அளபெடை, இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி), ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்தென – ஒரு நாள் நகுதல் உடைய முகத்துடன் புதிதாக தலைவன் வந்ததால், பகை முக ஊரின் – பகைமையுள்ள போர்க்களத்தின் அருகில் உள்ள ஊரைப் போன்று (ஊரின் – இன் உருபு ஒப்புப் பொருளது), துஞ்சலோ இலளே – இவள் தூங்கவில்லை

குறுந்தொகை 298, பரணர்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
சேரி சேர மெல்ல வந்து வந்து,
அரிது வாய்விட்டு இனிய கூறி,
வைகல் தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி,
இன் கடும் கள்ளின் அகுதை பின்றை  5
வெள் கடைச் சிறு கோல் அகவன் மகளிர்
மடப் பிடிப் பரிசில் மானப்
பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும்புற நிலையே.

பாடல் பின்னணி:  தலைவன் மடல் ஏறத் துணிந்ததை உணர்த்தியது.

பொருளுரை:  நம் தெருவை அடைய மெல்ல வந்து வந்து, அருமையாக வாயைத் திறந்து, இனியவற்றை நம்மிடம் கூறி, நாள்தோறும் ஒளி மாறி வாழும் அவனுடைய துன்பத்தை வெளிப்படுத்தும் பார்வையை நீ நினைப்பாயாக என் தோழி!  இனிய கடுமையானக் கள்ளையுடைய அகுதைக்குப் பின் நின்ற வெள்ளிய முனையையுடைய சிறிய கோலை உடைய அகவன் மகளிர் பெறும் மடப்பம் பொருந்திய பெண் யானையாகிய பரிசிலைப் போல, வேறு ஒன்றைக் குறித்தது (மடல் ஏறுவதை), அவன் நீண்ட நேரம் என் பின் நிற்பது.

குறிப்பு:  சேரி (1) – உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை –  தெரு.  அகவன் மகளிர் மடப் பிடிப் பரிசில் மான – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாடல் மகளிர் பெறா நின்ற மடப்பமுடைய பிடி யானையாகிய பரிசிலைப் போல, உ. வே. சாமிநாதையர் உரை – அகவன் மகளிர் பெறும் மடப்பம் பொருந்திய பிடியாகிய பரிசிலைப் போல, தமிழண்ணல் உரை – அகவன் மகளிர் வாய்விட்டுச் சொல்லாமல் பெற விரும்பும் பெண் யானைப் பரிசிலைப் போன்று.  மான – உவம உருபு. நிலையே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:  சேரி சேர – நம் தெருவை அடைய, மெல்ல வந்து வந்து – மெல்ல வந்து வந்து, அரிது வாய்விட்டு – அருமையாக வாயைத் திறந்து, இனிய கூறி – இனியவற்றை நம்மிடம் கூறி, வைகல் தோறும் – நாள்தோறும், நிறம் பெயர்ந்து உறையும் – ஒளி மாறித் தங்கும், அவன் – அவனுடைய, பைதல் நோக்கம் – துன்பத்தை வெளிப்படுத்தும் பார்வை, நினையாய் தோழி – நீ நினைப்பாயாக என் தோழி, இன் கடும் கள்ளின் அகுதை பின்றை – இனிய கடுமையானக் கள்ளையுடைய அகுதைக்குப் பின் நின்ற, வெள் கடைச் சிறு கோல் அகவன் மகளிர் – வெள்ளிய முனையையுடைய சிறிய கோலை உடைய அகவன் மகளிர், மடப் பிடிப் பரிசில் மான – மடப்பம் பொருந்திய பெண் யானையாகிய பரிசிலைப் போல, பிறிது ஒன்று குறித்தது – வேறு ஒன்றைக் குறித்தது, அவன் நெடும்புற நிலையே – அவன் நீண்ட நேரம் என் பின் நிற்பது

குறுந்தொகை 301, குன்றியனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பைக்
கருங்கால் அன்றில் காமர் கடுஞ்சூல்
வயவுப் பெடை அகவும் பானாள் கங்குல்,
மன்றம் போழும் இன மணி நெடுந்தேர் 5
வாராதாயினும், வருவது போலச்
செவி முதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால் தோழி, என் கண்ணே.

பாடல் பின்னணி: வரைவிடை வைத்துப் பொருள்வயின் தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி கூறியது.

பொருளுரை:   தோழி! முழவைப் போன்ற அடி மரத்தையுடைய வளைந்த பனை மரத்தினது வளமையான ஓலையில் சிறு குச்சிகளால் செய்த கூட்டிலுள்ள கரிய காலையுடைய அன்றிலினது விருப்பத்தையுடைய முதல் சூலினால் உண்டான நோயையுடைய பெண் பறவை தன் ஆண் பறவையை அழைக்கின்ற நடு இரவில், தனது சக்கரத்தால் ஊர் மன்றத்தைப் பிளந்து கொண்டு வரும், நிறைய மணிகளையுடைய என் தலைவனது உயர்ந்த தேர் வராவிட்டாலும் வருவதுப் போல் என் காதில் ஒலிக்கும் ஒலியினால் என்னுடைய கண்கள் தூக்கத்தை நீத்தன!

குறிப்பு:  துறந்தனவால் – ஆல் அசை நிலை, கண்ணே – ஏகாரம் அசை நிலை.  பெடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:  முழவு முதல் அரைய – முழவைப் போன்ற அடி மரத்தையுடைய, தடவு நிலை பெண்ணை – வளைந்த நிலையையுடைய பனை, கொழு மடல் – வளமையான ஓலை, இழைத்த – இயற்றிய, சிறு கோல் – சிறு சுள்ளிகள், குச்சிகள் குடம்பை – கூடு, கருங்கால் அன்றில் – கரிய கால்களையுடைய அன்றில் பறவை, காமர் – விருப்பத்தையுடைய, கடுஞ்சூல் – முதல் கர்ப்பம், வயவுப் பெடை – நோயையுடைய பெண், அகவும் – அழைக்கும், பானாள் கங்குல் – பாதி இரவு, மன்றம் போழும் – சக்கரத்தால் மன்றத்தை பிளக்கும், இனமணி – நிறைய மணிகள், நெடுந்தேர் – உயர்ந்த தேர், வாராதாயினும் – வராவிட்டாலும், வருவது போல – வருவது போல், செவி முதல் இசைக்கும் – காதினில் ஒலிக்கும், அரவமொடு – ஒலியுடன், துயில் துறந்தனவால் – உறக்கத்தை நீத்தன, தோழி – தோழி, என் கண்ணே – என் கண்கள்

குறுந்தொகை 306, அம்மூவனார்நெய்தற் திணை – தலைவி தன் நெஞ்சிடம் சொன்னது
மெல்லிய, இனிய, மேவரு தகுந,
இவை மொழி யாம் எனச் சொல்லினும், அவை நீ
மறத்தியோ, வாழி என் நெஞ்சே, பலவுடன்
காமர் மாஅத்துத் தாது அமர் பூவின்
வண்டு வீழ் அயரும் கானல் 5
தண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே?

பாடல் பின்னணிகாவல் மிகுதியால் வருந்தும் தலைவி, வரையாது ஒழுகும் தலைவனை நினைத்துத் தன் நெஞ்சிடம் சொன்னது.

பொருளுரை என் நெஞ்சே! மென்மையான இனிமையான விருப்பத்தக்கனவும் ஆக உள்ள சொற்களைப் பேச வேண்டாம் என்று நான் உனக்குச் சொன்னாலும், அழகிய மரத்தின் தாதுகளை உடைய மலர்களில் வண்டுகள் வீழும் சோலையையுடைய குளிர்ச்சியான கடலின் கரையின் தலைவனைக் கண்டவுடன் நான் கூறியவற்றை மறந்து விடுகின்றாயா?

குறிப்பு:  பின்னே – ஏகாரம் அசை நிலை.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மா அத்துத் தாது அமர் பூவில் வண்டு வீழ்ந்து ஆண்டுப்படும் கள்ளுண்டு மயங்கினாற் போன்று நீயும் தலைவனைக் கண்டுழி மயங்கா நின்றனை (மயங்கி நின்றனை) என்பது குறிப்பாகக் கொள்க.

சொற்பொருள்:  மெல்லிய – மென்மையாக, இனிய – இனிமையாக, மேவரு தகுந – விருப்பத்தக்கனவும் ஆக, இவை மொழியாம் எனச் சொல்லினும் – நான் இவ்வாறு பேச வேண்டாம் சொன்னாலும், அவை நீ மறத்தியோ – அவற்றை நீ மறந்து விடுகின்றாயா, வாழி – அசை நிலை, என் நெஞ்சே – என்னுடைய நெஞ்சே, பலவுடன் காமர் மாஅத்து – அழகிய மாமரத்தின், தாது அமர் பூவின் – காதுகள் பொருந்திய மலரிடத்து, வண்டு – வண்டுகள், வீழ் அயரும் – வீழ்தலைச் செய்யும், கானல் – கடற்கரைச் சோலை, தண் கடல் – குளிர்ச்சியான கடல், சேர்ப்பனைக் கண்ட பின்னே – நெய்தல் நிலத்தின் தலைவனை கண்ட பின்

குறுந்தொகை 309, உறையூர்ச் சல்லியன் குமாரனார்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார்,
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட
நீடின வரம்பின் வாடிய விடினும்,
கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது,
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்  5
நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும,
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்,
நின் இன்று அமைதல் வல்லாமாறே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்துவந்து வாயில் வேண்டிய தலைவனை, தோழி ஏற்றுக்கொண்டது (வாயில் நேர்ந்தாள்).

பொருளுரை:  தலைவா! நீ எங்களுக்கு இன்னாதாகிய பல செயல்களைச் செய்தாலும், நீ இல்லாது வாழ வலிமை இல்லாமையினால், களைகளைக் கையால் பறிக்கும் உழவர்கள் தாம் செய்யும் தொழிலை முடிக்கும்பொருட்டு, வண்டு உண்ணும்படி மலர்ந்த மலரின் நறுமணம் கீழேபடும்படி நீண்ட வரப்பிலே வாட விட்டாலும், “இந்தக் கொடியவர்களின் நிலத்தை விட்டு நீங்கிச் செல்வோம்” என்று எண்ணாது, நகர்த்தியும் தம்மை நீக்கிய வயலிலே பூக்கும் உன்னுடைய ஊரின் நெய்தல் மலர்களைப் போன்றவர்கள் நாங்கள்.

குறிப்பு:  வல்லாமாறே – இடைச்சொல், ஏகாரம் அசை நிலை.  நற்றிணை 275 – செந்நெல் அரிநர் கூர் வாள் புண்ணுறக் காணார் முதலொடு போந்தென பூவே படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத் தன்னுறு விழுமம் அறியா மென்மெல தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும்.   கைவினை மாக்கள் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தொழில் புரியும் உழவர், தமிழண்ணல் உரை – பயில் வளரக் களைகளைக் கையால் பறிக்கும் உழவர்கள்.

சொற்பொருள்:  கைவினை மாக்கள் – களைகளைக் கையால் பறிக்கும் உழவர்கள், தம் செய் வினை முடிமார் – தாம் செய்யும் தொழிலை முடிக்கும்பொருட்டு, சுரும்பு உண மலர்ந்த – வண்டு உண்ணும்படி மலர்ந்த (உண – உண்ண என்பதன் விகாரம்), வாசம் கீழ்ப்பட – நறுமணம் கீழேபடும்படி, நீடின வரம்பின் வாடிய விடினும் – நீண்ட வரப்பிலே வாட விட்டாலும், கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது – இந்த கொடியவர்கள் நிலத்தை விட்டு நீங்கிச் செல்வோம் என்று எண்ணாது, பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் – நகர்த்தியும் தம்மை நீக்கிய வயலிலே பூக்கும், நின் ஊர் நெய்தல் அனையேம் – உன்னுடைய ஊரின் நெய்தல் மலர்களைப் போன்றவர்கள் நாங்கள், பெரும – தலைவா, நீ எமக்கு இன்னாதன பல செய்யினும் – நீ இன்னாதாகிய பல செயல்களைச் செய்தாலும், நின் இன்று அமைதல் வல்லாமாறே – நீ இல்லாது பொருந்துவதற்கு வலிமை இல்லாமையினால்

குறுந்தொகை 310, பெருங்கண்ணனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
புள்ளும் புலம்பின, பூவும் கூம்பின,
கானலும் புலம்பு நனி உடைத்தே, வானமும்
நம்மே போலும் மம்மர்த்து ஆகி
எல்லை கழியப் புல்லென்றன்றே,
இன்னும் உளெனே தோழி, இந்நிலை 5
தண்ணிய கமழும் ஞாழல்
தண்ணந்துறைவர்க்கு உரைக்குநர்ப் பெறினே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பொருள்வயின் தலைவன் பிரிந்த வேளையில் வற்புறுத்திய (“நீ ஆற்றியிருப்பாயாக” எனக் கூறிய) தோழியின்பாற் சினமுற்று கூறியது.

பொருளுரை:   பறவைகள் தனிமையை நாடிவிட்டன! மலர்கள் இதழ்களை மூடி விட்டன!  கடற்கரைச் சோலையும் தனிமையில் வாடுகின்றது! வானமும் நம்மைப் போல் கலங்கி நிற்கின்றது!  வெளிச்சம் போய்ப் பொலிவின்றி உள்ளது இந்த நேரம்!  அழகிய புலிநகக் கொன்றை மரங்களையுடைய குளிர்ச்சிப் பொருந்திய துறையை உடைய தலைவனுக்கு என்னுடைய நிலைமையைப் பற்றி யாராவது கூறினால், நான் இன்னும் உயிரோடு வாழ்வேன், தோழி.

குறிப்பு:  புல்லென்றன்றே – ஏகாரம் அசை நிலை, பெறினே: ஏகாரம் அசை நிலை.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன் நிலையை அறிந்து ஆவன செய்யாது, தோழி வாளா இடித்துரைப்பாளாதல் பயனின்று என்பாள்.  தண்ணந்துறைவர் – தண்டுறைவர் என்பது தண்ணந்துறைவர் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல்.

சொற்பொருள்:   புள்ளும் புலம்பின – பறவைகள் தனிமையை நாடின – புலம்பல் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் – தனிமை, வருந்துதல், பூவும் கூம்பின – மலர்கள் இதழ்களை மூடி விட்டன, கானலும் புலம்பு நனி உடைத்தே – கடற்கரைச் சோலையும் தனிமையில் வாடுகின்றது, வானமும் நம்மே போலும் மம்மர்த்து ஆகி – வானமும் நம்மைப் போல் கலங்கி நிற்கின்றது, எல்லை கழியப் புல்லென் றன்றே – வெளிச்சம் போய் பொலிவின்றி உள்ளது, இன்னும் உளெனே தோழி – நான் இன்னும் உயிரோடு வாழ்வேன் தோழி, இந்நிலை – இந்தச் சூழ்நிலை, தண்ணிய கமழும் ஞாழல் – அழகிய/குளிர்ச்சிப் பொருந்திய நறுமணமான ஞாழல்/புலிநகக்கொன்றை, தண்ணந் துறைவர்க்கு – அழகிய துறைத் தலைவனுக்கு, உரைக்குநர்ப் பெறினே – கூறுவாரைப் பெற்றால்

குறுந்தொகை 315, மதுரை வேள் ஆதத்தனார்,  குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது 
எழுதரு மதியம் கடல் கண்டாங்கு
ஒழுகு வெள்ளருவி ஓங்குமலை நாடன்,
ஞாயிறு அனையன் தோழி,
நெருஞ்சி அனைய, என் பெரும் பணைத்தோளே.

பாடல் பின்னணி:   தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரியுங்காலத்தில் தலைவி சொன்னது.

பொருளுரை:   தோழி!  எழுகின்ற நிலவின் உருவம் கடலில் காணப்பட்டாற் போல் தோன்றும் வடியும் வெள்ளை அருவிகளையுடைய உயர்ந்த மலைநாட்டையுடைய தலைவன், கதிரவனைப் போன்றவன்.  என் பெரிய மூங்கிலைப் போன்ற தோள்கள், நெருஞ்சி மலர்களைப் போன்றன.

குறிப்பு:  பணைத்தோளே: ஏகாரம் அசை நிலை.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெருஞ்சி மலர் ஞாயிற்றின் ஒளியில் ஈடுபட்டு அதன் இயக்கத்தோடு ஒத்துத் திரும்புதல் போன்று, யானும் தலைவானது அன்பில் ஈடுபட்டு அவன் செயலோடு ஒத்து இயக்குவேன் ஆகலின் ஆற்றியிருப்பேன் என்றவாறு.  நெருஞ்சி ஞாயிற்றை நோக்கி நிற்றல் – அகநானூறு 336 – சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, புறநானூறு 155 – நெருஞ்சிப் பசலை வான் பூ ஏர்தரு சுடரின் எதிர் கொண்டாஅங்கு.  உ. வே. சாமிநாதையர் உரை – அருவிக்குப் பிறையும் கடலுக்கு மலையும் உவமைகள்.

சொற்பொருள்:   எழுதரு மதியம் – எழும் நிலவை, கடல் கண்டாங்கு – கடலில் கண்டதைப் போல், ஒழுகு வெள்ளருவி – வடியும் வெள்ளை அருவிகள், ஓங்குமலை – உயர்ந்த மலையின், நாடன் – தலைவன், ஞாயிறு அனையன் தோழி – கதிரவனைப் போன்றவன் தோழி, நெருஞ்சி அனைய – நெருஞ்சியைப் போன்றன, என் பெரும் பணைத்தோளே – என் பெரிய மூங்கில் போன்ற தோள்கள்

குறுந்தொகை 316, தும்பிசேர் கீரனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும்,
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்,
உளெனோ வாழி தோழி, விளியாது
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட  5
வாய்ந்த அலவன் துன்புறு துனை பரி
ஓங்குவரல் விரி திரை களையும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே?

பாடல் பின்னணி:  தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்தபொழுது தலைவி, ‘நான் எங்ஙனம் ஆற்றுவேன்?’ எனத் தோழியிடம் கூறியது.

பொருளுரை:   தோழி!  இடைவிடாமல் வலிய கடலால் மோதப்பட்ட மணல் கலந்த நீர் அடைந்த கரையில் ஓரை என்னும் விளையாட்டை ஆடும் மகளிர் ஒரு தன்மையாக அதை விரட்ட, அவர்களிடம் அகப்பட்டுக் கொண்ட நண்டு ஒன்று வருத்தம் மிகுந்து விரைந்து ஓடியது.  உயர்ந்து வருகின்ற அகன்ற அலை அதைக் கடலுக்குள் அடித்துச் சென்று அந்நண்டின் துன்பத்தை நீக்குகின்றது.  அத்துறையையுடைய நம் தலைவனின் சொற்களோ வேறுபட்டன.  என் அழகிய வளையல்கள் நெகிழ்ந்தன.  அயர்வினை உடலில் நிலைக்கச் செய்யும் துன்பம் மிக்க என்னுடைய பிரிவு நோயை அன்னை அறிவாளாயின் நான் உயிருடன் இருப்பேனா?

குறிப்பு:   துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  உளெனோ – ஓ எதிர்மறைப் பொருளில் வந்தது, ஆயினவே – ஏகாரம் அசைநிலை.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஓரை மகளிர் நண்டினை அலைக்க அது துன்புற்று ஓடுங்கால் கடல் அலை பெருகி அதனை எடுத்து அதன் செலவு தவிர்த்து உய்ய கொண்டாற்போல, ஈண்டு யாயின் கொடுமையை அஞ்சுவேனைத் தலைவன் விரைவில் வந்து வரைந்து உய்யக் கொள்ளினன் அல்லால் எனக்கு உய்தி இல்லை என்பது குறிப்பு.

சொற்பொருள்:  ஆய் வளை ஞெகிழவும் – அழகிய வளையல்கள் நெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும் – அயர்வினை உடலில் நிலைக்கச் செய்யும், நோய் மலி வருத்தம் அன்னை அறியின் – துன்பம் மிக்க என்னுடைய பிரிவு நோயை அன்னை அறிவாளாயின், உளெனோ – உயிருடன் இருப்பேனா, வாழி – அசைநிலை, நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, விளியாது – கெடாது, இடைவிடாமல், உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை – வலிய கடலால் மோதப்பட்ட மணல் கலந்த நீர் அடைந்த கரை, ஓரை மகளிர் – விளையாட்டு மகளிர், ஓராங்கு ஆட்ட  – ஒரு தன்மையாக விரட்ட, வாய்ந்த அலவன் துன்புறு துனை பரி – பொருந்திய நண்டின் வருத்தம் மிகுந்த விரைந்த செலவு, ஓங்குவரல் விரி திரை களையும் – உயர்ந்து வருகின்ற அகன்ற அலை ஒன்று அந்நண்டின் துன்பத்தை நீக்குகின்ற, துறைவன் சொல்லோ பிற ஆயினவே – துறையையுடைய நம் தலைவனின் சொற்களோ வேறுபட்டன

குறுந்தொகை 319, தாயங்கண்ணனார்முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மான் ஏறு மடப்பிணை தழீஇ மருள் கூர்ந்து
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்,
கை உடை நன்மாப் பிடியொடு பொருந்தி
மை அணி மருங்கின் மலையகம் சேரவும்,
மாலை வந்தன்று மாரி மா மழை,  5
பொன் ஏர் மேனி நன் நலம் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்,
என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே?

பாடல் பின்னணி:   தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்தது கண்டு வருந்திய தலைவி கூறியது.

பொருளுரை ஆண் மான்கள் மடப்பம் பொருந்திய தங்கள் பெண் மான்களைத் தழுவி, மயக்கம் மிகுந்து, காட்டில் உள்ள, புதரில் மறைந்து ஒடுங்கியிருக்கவும், தும்பிக்கையையுடைய நல்ல ஆண் யானைகள் தங்கள் பெண் யானைகளுடன் சேர்ந்து முகில்கள் அணிந்த பக்கங்களையுடைய மலையில் அடையவும்படியும், மாலையில் வந்தது கார்காலத்தின் பெரிய மழை.  என்னுடைய பொன்னை ஒத்த மேனியின் அழகைக் கெடுத்த என் தலைவர் இன்னும் வரவில்லை ஆனால், என் இனிய உயிரின் நிலை என்னவாகும் தோழி?

குறிப்பு:  நிலையே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   மான் ஏறு மடப்பிணை தழீஇ – ஆண் மான்கள் மடப்பம் பொருந்திய தங்கள் பெண் மான்களைத் தழுவி (தழீஇ – அளபெடை), மருள் கூர்ந்து – மயக்கம் மிகுந்து, கானம் நண்ணிய – காட்டில் உள்ள, புதல் மறைந்து ஒடுங்கவும் – புதரில் மறைந்து ஒடுங்கியிருக்கவும், கை உடை நன்மாப் பிடியொடு பொருந்தி – தும்பிக்கையையுடைய நல்ல ஆண் யானைகள் தங்கள் பெண் யானைகளுடன் சேர்ந்து, மை அணி மருங்கின் மலையகம் சேரவும் – முகில்கள் அணிந்த பக்கங்களையுடைய மலையில் அடையவும், மாலை வந்தன்று மாரி மா மழை – மாலையில் வந்தது கார்காலத்தின் பெரிய மழை, பொன் ஏர் மேனி நன் நலம் சிதைத்தோர் – என்னுடைய பொன்னை ஒத்த மேனியின் அழகைக் கெடுத்தவர் (ஏர் – உவம உருபு), இன்னும் வாரார் ஆயின் – இன்னும் வரவில்லை ஆனால், என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே – என் இனிய உயிரின் நிலை என்னவாகும் தோழி

குறுந்தொகை 324, கவை மகனார்நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கொடுங்கால் முதலைக் கோள் வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானலம் பெருந்துறை,
இன மீன் இருங்கழி நீந்தி நீ நின்
நயன் உடமையின் வருதி, இவள் தன்
மடன் உடமையின் உயங்கும், யானது,  5
கவை மக நஞ்சு உண்டாங்கு,
அஞ்சுவல் பெரும, என் நெஞ்சத்தானே.

பாடல் பின்னணி:   வரையாமல் வரும் தலைவனிடம் தோழி வரைவு கடாயது.

பொருளுரை இவளைக் காண, வளைந்த கால்களையுடைய முதலையின் கொல்லுவதில் வல்ல ஆண் வழியில் செல்லுபவர்களைத் தடுக்கும், கடற்கரைச் சோலையையுடைய பெரிய துறையில், கூட்டமாக மீன்களையுடைய உப்பங்கழியில், நீந்தி நீ அன்புடன் வருகின்றாய்.  உனக்கு எதுவும் நேர்ந்து விடுமோ என்று இவள் தன்னுடைய மடப்பத்தினால் வருந்துகிறாள். நான் இரட்டைப் பிள்ளைகள் நஞ்சு உண்டால் வருந்தும் தாயைப் போல் அச்சமடைகின்றேன், ஐயா என் நெஞ்சத்தில்.

குறிப்பு:  கானலம் – அம் சாரியை, நெஞ்சத்தானே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   கொடுங்கால் முதலைக் கோள் வல் ஏற்றை – வளைந்த கால்களையுடைய முதலையின் கொல்வதில் வல்ல ஆண், வழி வழக்கு அறுக்கும் – வழியில் செல்லுவதைத் தடுக்கும், கானலம் பெருந்துறை – கடற்கரைச் சோலையையுடைய பெரிய துறை, இன மீன் இருங்கழி நீந்தி – கூட்டமாக மீன்களையுடைய உப்பங்கழியில் நீந்தி, நீ நின் நயன் உடமையின் வருதி – நீ அன்புடன் வருகின்றாய், இவள் தன் மடன் உடமையின் உயங்கும் – இவள் தன்னுடைய மடப்பத்தினால் வருந்துகிறாள், யானது கவை மக நஞ்சு உண்டாங்கு அஞ்சுவல் – நான் இரட்டைப் பிள்ளைகள் நஞ்சு உண்டால் வருந்தும் தாயைப் போல் அச்சமடைகின்றேன், பெரும – ஐயா, என் நெஞ்சத்தானே – என் நெஞ்சத்தில்

குறுந்தொகை 325, நன்னாகையார்நெய்தற் திணை – தலைவி சொன்னது
‘சேறும், சேறும்’ என்றலின் பண்டைத் தன்
மாயச் செலவாச் செத்து ‘மருங்கு அற்று
மன்னிக் கழிக’ என்றேனே, அன்னோ,
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன் கொல்லோ?
கருங்கால் வெண்குருகு மேயும்  5
பெருங்குளம் ஆயிற்று என் இடை முலை நிறைந்தே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்தகாலத்து கவலையுற்ற தோழியிடம் தலைவி வருந்திக் கூறியது.

பொருளுரை  “நான் செல்லுவேன் நான் செல்லுவேன்” என்று பலமுறை தலைவன் கூறியதால், முன்பு சொன்னதாகிய பொய் என்று நினைத்து, “என்னிடமிருந்து நீங்கி நிலைபெற்று செல்வாயாக என்றேனே”!  ஐயோ!  நமக்குப் பற்றுக்கோடாகிய தலைவன் எங்கு இருக்கின்றானோ? என்னுடைய முலைகளின் இடையில் உள்ள இடம், அவனது பிரிவால் அழுத என் கண்ணீரால் நிறைந்து, கரிய காலையுடைய நாரைகள் உண்ணும் பெரிய குளமாக ஆயிற்று.

குறிப்பு:   நற்றிணை 229 – சேறும் சேறும் என்றலின் பல புலந்து சென்மின் என்றல் யான் அஞ்சுவலே.  இடை முலை (6) – உ. வே. சாமிநாதையர் உரை – முலை இடை என்றது இடை முலையென மாறி நின்றது.  ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன் கொல்லோ – குறுந்தொகை 176-5, 325-4, புறநானூறு 235, 307.

சொற்பொருள்:   சேறும், சேறும் என்றலின் – செல்லுவேன் செல்லுவேன் என்று பலமுறை கூறியதால், பண்டைத் தன் மாயச் செலவாச் செத்து – முன்பு சொன்னதாகிய பொய் என்று நினைத்து, மருங்கு அற்று – என்னிடமிருந்து நீங்கி, என் கண்ணோட்டத்தினின்று நீங்கி, மன்னிக் கழிக என்றேனே – நிலைபெற்று செல்வாயாக என்றேனே, அன்னோ – ஐயோ, ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன் கொல்லோ – நமக்குப் பற்றுக்கோடாகிய தலைவன் எங்கு இருக்கின்றானோ, கருங்கால் வெண்குருகு மேயும் பெருங்குளம் ஆயிற்று – கரிய காலையுடைய நாரைகள் உண்ணும் பெரிய குளமாக ஆயிற்று, என் இடை முலை – என்னுடைய முலைகளின் இடையில் உள்ள இடம், நிறைந்தே – கண்ணீர் நிறைந்து

குறுந்தொகை 329, ஓதலாந்தையார்பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கானம் இருப்பை வேனல் வெண்பூ
வளி பொரு நெடுஞ்சினை உகுத்தலின் ஆர் கழல்பு
களிறு வழங்கு சிறுநெறி புதையத் தாஅம்
பிறங்கு மலை அருஞ்சுரம் இறந்தவர்ப் படர்ந்து,
பயில் இருள் நடுநாள் துயில் அரிதாகித்  5
தெள் நீர் நிகர் மலர் புரையும்
நன் மலர் மழைக் கணிற்கு எளியவால் பனியே.

பாடல் பின்னணி:   தலைவன் பிரிந்த காலத்தில் தோழி வற்புறுத்தியதால், ‘நான் ஒருவாறு ஆற்றுவேன்’ என்றது.

பொருளுரை:  காட்டில் உள்ள இருப்பை மரத்தினது, வேனில் காலத்தில் மலரும் வெள்ளை மலர்களை காற்றினால் அலைக்கப்பட்ட நெடிய கிளைகள் உதிர்ப்பதனால், அவை காம்பிலிருந்து கழன்று, களிற்று யானைகள் செல்லும் சிறிய வழி மறையும்படி பரவுகின்ற, விளங்குகின்ற மலைகளையுடைய அரிய பாலை நிலத்தைக் கடந்து சென்ற தலைவரை நினைந்து, மிக்க இருளையுடைய நடு இரவில் துயில்தல் அரியதாகி, தெளிந்த நீரில் உள்ள ஒளியுடைய மலரை ஒத்திருக்கும் நல்ல மலர்ந்த குளிர்ச்சியுடைய என் கண்களில் நீர்த்துளிகள் எளிதில் உண்டாயின.

குறிப்பு:  தாஅம் – அளபெடை, எளியவால் – ஆல் அசைநிலை, பனியே –  ஏகாரம் அசை நிலை, கணிற்கு – கண்ணிற்கு என்பதன் தொகுத்தல் விகாரம்.

சொற்பொருள்:  கானம் இருப்பை – காட்டில் உள்ள இருப்பை மரம், வேனல் வெண்பூ – வேனில் காலத்தில் மலரும் வெள்ளை மலர்கள், வளி பொரு – காற்றினால் அலைக்கப்பட்டது, நெடுஞ்சினை உகுத்தலின் – நெடிய கிளைகள் உதிர்ப்பதனால், ஆர் கழல்பு – காம்பிலிருந்து நீங்கி (கழன்று), களிறு வழங்கு சிறுநெறி புதைய – களிற்று யானைகள் செல்லும் சிறிய வழி மறையும்படி, தாஅம் – பரவுகின்ற, பிறங்கு மலை அருஞ்சுரம் – விளங்குகின்ற மலைகளையுடைய அரிய பாலை நிலம், இறந்தவர்ப் படர்ந்து – கடந்து சென்ற தலைவரை நினைந்து, பயில் இருள் நடுநாள் துயில் அரிதாகி – மிக்க இருளையுடைய நடு இரவில் துயில்தல் அரியதாகி, தெள் நீர் நிகர் மலர் புரையும் – தெளிந்த நீரில் உள்ள ஒளியுடைய மலரை ஒத்திருக்கும், நன் மலர் மழைக் கணிற்கு – நல்ல மலர்ந்த குளிர்ச்சியுடைய கண்ணிற்கு, எளியவால் பனியே – நீர்த்துளிகள் எளிதில் உண்டாயின

குறுந்தொகை 330, கழார்க் கீரனெயிற்றியனார்மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்தெடுத்துத்
தலைப்பு உடை போக்கித் தண் கயத்து இட்ட
நீரில் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்,
பேரிலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ
இன் கடுங்கள்ளின் மணமில கமழும், 5
புன்கண் மாலையும் புலம்பும்
இன்று கொல் தோழி, அவர் சென்ற நாட்டே?

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவி தோழிக்குக் கூறியது.

பொருளுரை:   அழகையும் நன்மையையும் உடைய வண்ணாத்தி கஞ்சியிலே தோய்த்து எடுத்து முதல் தப்பலைத் தப்ப விட்டு, குளிர்ந்த நீருடைய குளத்தில் இட்ட பருத்த திரியை உடைய முறுக்கு உடைய ஆடையைப் போன்ற பெரிய இலையுடைய வெள்ளை பகன்றை மலர்கள் மலர்ந்து இனிய கடுமையான கள்ளைப் போல், நறுமணம் இல்லாமல் நாறுகின்ற துன்பத்தைத் தரும் மாலைக் காலமும் தனிமையும், அவர் பிரிந்துச் சென்ற நாட்டிலே இருக்குமா?

குறிப்பு:  நாட்டே – ஏகாரம் அசைநிலை.  இல – இல்லை என்பதன் விகாரம்.  புலைத்தி – அகநானூறு 34 – பசை கொல் மெல் விரல் பெருந்தோள் புலைத்தி, அகநானூறு 387 – பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய பூந்துகில், நற்றிணை 90 – வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு, குறுந்தொகை 330 – நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து, கலித்தொகை 72 – ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி, புறநானூறு 311 – புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை, புறநானூறு 259 முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல, கலித்தொகை 117 மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர் போழில் புனைந்த வரிப் புட்டில்.

சொற்பொருள்:   நலம் தகை – அழகும் தகையும், புலைத்தி – வண்ணாத்தி, பசை தோய்த்தெடுத்து – பசையில் முக்கி எடுத்து, தலைப்பு உடை போக்கி – முதலில் துணியை அலசி, தண் – குளிர்ந்த, கயத்து இட்ட – குளத்தில் போட்ட, நீரில் – நீரில்,  பிரியா – (நூல்) பிரியாத,  பரூஉத் திரி – பருத்த திரித்த நூல் (பரூஉ- அளபெடை), கடுக்கும் – போலும்,  பேரிலை – பெரிய இலை,  பகன்றை – பகன்றை மலர், (Indian jalap, Ipomaea Turpethum), பொதி அவிழ் – மொட்டு மலர்ந்து, வான் பூ – வெள்ளை மலர்,   இன் – இனிய,  கடுங்கள்ளின் – கடுமையான கள்ளின்,  மணம் இல – நறுமணம் இல்லாமல்,  கமழும் – கமழும்,  புன்கண் – வருத்தமான,  மாலையும் – மாலையும், புலம்பும் – தனியாக இருந்து வருந்தும்,  இன்று கொல் – இல்லையா?  தோழி – தோழி,  அவர் சென்ற நாட்டே – அவர் சென்ற நாட்டில்

குறுந்தொகை 335, இருந்தையூர்க் கொற்றன் புலவனார்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர்
இருங்கல் வியல் அறைச் செந்தினை பரப்பிச்,
சுனை பாய் சோர்விடை நோக்கிச், சினை இழிந்து
பைங்கண் மந்தி பார்ப்போடு கவரும்,
வெற்பு இடை நண்ணியதுவே, வார்கோல் 5
வல் வில் கானவர் தங்கைப்
பெருந்தோள் கொடிச்சி இருந்த ஊரே.

பாடல் பின்னணி:   தலைவி இற்செறிக்கப்படுதலை உணர்த்திய தோழி, இரவுக்குறி பெறுதல் அரிது என்பதைத் தலைவனுக்குப் புலப்படுத்தியது.  வரைவு கடாயது.

பொருளுரை:   வலிய வில்லையும், நீண்ட அம்புக்களையும் உடைய கானவரின் தங்கையான பெரியத் தோளையுடைய தலைவியின் ஊர் கருமையான மலையில் உள்ளது.  அங்குக் கையில் நிறைய வளையல்களையும் அழகிய நகைகளையும் அணிந்தப் பெண்கள் அகன்ற பாறைகளில் சிவந்த தினையைப் பரப்பி இருப்பார்கள்.  அவர்கள் சோர்வடைந்து சுனையில் பாய்ந்து குளிக்கும் வேளையில் பச்சைக் கண்களையுடைய பெண் குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் மரங்களின் கிளைகளிருந்து இறங்கி வந்து தினையைத் திருடி உண்ணும்.

குறிப்பு:   நண்ணியதுவே – ஏகாரம் அசை நிலை, ஊரே – ஏகாரம் அசை நிலை.  பொ. வே. சோமசுந்தரனார் உரை –  வார் கோல் வல் வில் கானவர் தங்கை என்றமையான் இரவுக்குறிக்கண் தலைவியை எய்தலாகாமையைக் குறிப்பால் உணர்த்தினாள்.  மகளிர் சோர்விடை நோக்கி மந்தி தினை கவரும் என்றது,’கானவர் சோர்வாலே நீ தலைவியை எய்தினாய்’ என்பது.

சொற்பொருள்:  நிரை வளை முன்கை – வளையல்கள் நிறைந்த முன் கை, நேர் இழை – நல்ல நகைகள், மகளிர் – பெண்கள், இருங்கல் – கருமையான மலை, வியல் அறை – அகன்றப் பாறை, செந்தினை – சிவப்பு நிறமுள்ள தினை, பரப்பி – பரப்பி, சுனை பாய் – சுனையில் பாயும், சோர்விடை நோக்கி – சோர்வுடைய நேரத்தைப் பார்த்து, சினை – மரக் கிளைகள், இழிந்து – இறங்கி, பைங்கண் மந்தி – பச்சைக் கண்களையுடைய பெண் குரங்குகள், பார்ப்போடு – குட்டியுடன், கவரும் – எடுக்கும், வெற்பு இடை – மலையிலே,  நண்ணியதுவே – பொருந்தியது, வார்கோல் – நீண்ட அம்புகள்,  வல்வில் கானவர் தங்கை – வலிமையான வில்லையுடைய கானவனின் தங்கை, பெருந்தோள் – பெரியத் தோள், கொடிச்சி – கானவர் மகள், இருந்த ஊரே – இருந்த ஊர்

குறுந்தொகை 340, அம்மூவனார்நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
காமம் கடையின் காதலர்ப் படர்ந்து,
நாம் அவர்ப் புலம்பின் நம்மோடு ஆகி,
ஒரு பால் படுதல் செல்லாது, ஆயிடை
அழுவம் நின்ற அலர் வேய்க் கண்டல்
கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம்  5
பெயர்தரப் பெயர்தந்தாங்கு
வருந்தும் தோழி, அவர் இருந்த என் நெஞ்சே.

பாடல் பின்னணி:  இரவுக் குறி உணர்த்திய தோழிக்குத் தலைவி, தலைவனின் ஏதம் கருதி அதனை மறுத்தது.

பொருளுரை:   தோழி! காதலர் இருந்த என் நெஞ்சு, காதல் மிகுந்தால் அவரிடம் சென்று, நாம் அவர்பொருட்டு வருந்தினால், நம்முடன் தங்கி, ஒரு இடத்தில் இருக்காமல் இரு பக்கமும் சென்று, கடற்கரையில் உள்ள மலர்கள் பொருந்திய தாழை உப்பங்கழி பெருகுகின்ற இடத்தில் தளர்ந்து வெள்ளம் பெயரும்பொழுது தானும் பெயர்வதைப் போல, வருந்தும்.

குறிப்பு:  நெஞ்சே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   காமம் கடையின் – காதல் மிகுந்தால், காதலர்ப் படர்ந்து – காதலரிடம் சென்று, நாம் அவர்ப் புலம்பின் – நாம் அவர்பொருட்டு வருந்தினால், நம்மோடு ஆகி – நம்முடன் தங்கி, ஒரு பால் படுதல் செல்லாது – ஒரு கூற்றிலே இருக்காமல், ஆயிடை – அவற்றின் இடையே, அழுவம் நின்ற அலர் வேய்க் கண்டல் – கடற்கரையில் இருந்த மலர்கள் பொருந்திய தாழை, கழி பெயர் மருங்கின் ஒல்கி – உப்பங்கழி பெருகுகின்ற இடத்தில் தளர்ந்து, ஓதம் – வெள்ளம், பெயர்தரப் பெயர்தந்தாங்கு – பெயரும் பொழுது தானும் பெயரும், வருந்தும் தோழி, வருந்தும் தோழி, அவர் இருந்த என் நெஞ்சே – தலைவர் இருந்த என் நெஞ்சம்

குறுந்தொகை 343, ஈழத்துப் பூதன்தேவனார்பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நினையாய் வாழி தோழி, நனை கவுள்
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென,
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை
வெண்கோடு செம் மறுக் கொளீஇய விடர் முகைக்
கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை  5
வாடு பூஞ்சினையின் கிடக்கும்,
உயர் வரை நாடனொடு பெயருமாறே.

பாடல் பின்னணி:  ‘நீ தலைவனுடன் உடன்போக்கில் செல்வதை விரும்பி மேற்கொள்வாயாக’ எனத் தோழி கூறியது.

பொருளுரை:   நீ நீடு வாழ்வாயாக தோழி!  மதத்தால் கன்னத்தில் நீர் வடிந்த, தலைமையுடைய யானையின் அழகிய முகத்தில் பாய்ந்ததால், மிகுந்த வலிமையையுடைய பிளந்த வாயையுடைய ஆண் புலி ஒன்று, அந்த யானையின் வெள்ளைத் தந்தத்தை தன் குருதியால் சிவப்பாகச் செய்து, மலை பிளவில் உள்ள கோடைக் காற்று வீழ்த்திய கரிய அடியை உடைய வேங்கை மரத்தின் வாடிய மலர்களையுடைய கிளையைப் போல் இறந்து கிடக்கும், உயர்ந்த மலையுடைய நாட்டையுடைய தலைவனுடன் உடன்போக்கில் செல்லுவதற்கு நீ எண்ணுவாயாக!

குறிப்பு:   கலித்தொகை 38 – உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக் கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை, கலித்தொகை 46 – வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும்,  குறுந்தொகை 343 – கருங்கால் வேங்கை வாடு பூஞ்சினையின் கிடக்கும்.  வேங்கை வாடு பூஞ்சினையின் கிடக்கும் (5-6) –  உ. வே. சாமிநாதையர் உரை –  கன் முழையிலுள்ள, மேல் காற்று வீழ்த்திய, கரிய அடியையுடைய வேங்கை மரத்தினது வாடிய பூவையுடைய கிளையைப் போல இறந்து கிடக்கும், இரா. இராகவையங்கார் உரை – புலி ஏற்றை யானை முகம் பாய்ந்ததால் செம்மறுக் கொளீஇச் சினையின் விடர் முகைக் கிடக்கும் என்றியைக்க.  உ. வே. சாமிநாதையர் உரை – ‘அவனது நாட்டில் உள்ள யானை தன்னை எதிர்த்த மிகுவலியுடைய புலியைத் தான் எதிர்க்காமலே கொம்பினால் வீழச் செய்தது’ என்பதால், அந்நாட்டுக்குரியனாகிய தலைவனும் இடையூறுகளை எளிதில் வெல்லும் ஆற்றல் உடையவன் என்பதை உய்த்துணர வைத்தாள்.  பெயருமாறே – ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   நினையாய் – எண்ணுவாயாக, நினைப்பாயாக, வாழி – நீ வாழ்வாயாக, தோழி – தோழி, நனை கவுள் அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென – மதத்தால் கன்னத்தில் நீர் வடிந்த தலைமையுடைய யானையின் அழகிய முகத்தில் பாய்ந்ததால், மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை – மிகுந்த வலிமையையுடைய பிளந்த வாயையுடைய ஆண் புலி, வெண்கோடு செம் மறுக் கொளீஇய – வெள்ளைத் தந்தத்தை குருதியால் சிவப்பாகச் செய்து, விடர் முகைக் கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை – மலை பிளவில் உள்ள கோடைக் காற்று வீழ்த்திய கரிய அடியை உடைய வேங்கை மரம், வாடு பூஞ்சினையின் கிடக்கும் – வாடிய மலர்களையுடைய கிளையைப் போல் இறந்து கிடக்கும், உயர் வரை நாடனொடு பெயருமாறே – உயர்ந்த மலையுடைய நாட்டையுடைய தலைவனுடன் செல்லுவதற்கு

குறுந்தொகை 345, அண்டர்மகன் குறுவழுதியார்நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந்தேர்
வரை மருள் நெடுமணல் தவிர்த்து நின்று அசைஇத்
தங்கினிர் ஆயின் தவறோ, தெய்ய,
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகலத்
தாழை தைஇய தயங்கு திரைக் கொடுங்கழி 5
இழுமென ஒலிக்கும் ஆங்கண்,
பெருநீர் வேலி எம் சிறுநல் ஊரே.

பாடல் பின்னணி:  பகலில் வந்து ஒழுகுவானைத் தோழி ‘இரவில் வா’ என்றது.

பொருளுரை:   நெய்தல் நிலத் தலைவனே!  அணிகலனுடைய  உன்னுடைய உயர்ந்த தேரை மலையைப் போன்ற மணல் மேடுகள் நிறைந்த நீண்ட கடற்கரையில் நிறுத்தி விட்டு, அங்கு நின்று தங்கினால், தவறு என்ன?  இலைகளால் செய்யப்பட்ட ஆடையை இடைப் பகுதியில் அணிந்திருக்கும் என்னுடையத் தோழி, தாழை மரங்கள் நிறைந்த, ஒலிக்கும் விளங்கிய அலைகளைக்  கொண்ட,  வளைந்த கடற்கரையில் தனிமையில் புலம்புகின்றாள்.  கடலை வேலியாகக் கொண்டது எங்கள் சிறிய ஊர்.

குறிப்பு:  தெய்ய: அசை நிலை. ஊர் – அசை நிலை.  இரா. இராகவையங்கார் உரை – இழுமென ஒலிக்கும் என்பதால் பகல் வருதல்பற்றி அலர் தொடங்கிற்றென்று குறித்தாளாம்.  தாழை தைஇய……அங்கண் என்பதனால் இரவிற் சேர்தற்குக் குறியிடம் உணர்த்தினாளாம்.  தாழை தைஇய என்பதனால் மறைவும், கொடுங்கழி என்பதனாற் பிறர் புகாமையும், ஒலிக்கும் என்பதனால் நீவிர் உரையாடினும் அரவங் கேளாமையும் கருதி உரைத்தாள் ஆவள்.

சொற்பொருள்:   இழை அணிந்து – அணிகலன் அணிந்து,  இயல்வரும் – இயன்று வரும்,  கொடுஞ்சி – தேரின் முன்னால் உள்ள தாமரை மொட்டு போன்ற வடிவம், நெடுந்தேர் – உயர்ந்தத் தேர், வரை மருள் நெடுமணல் – மலையை ஒத்த மணல் மேடுகள் (மருள் – உவம உருபு),  தவிர்த்து – நிறுத்தி,  நின்று அசைஇ – நின்று அங்குத் தங்கி (அசைஇ – அளபெடை), தங்கினிர் ஆயின் தவறோ – தங்கினால் என்ன குறைவு?,  தெய்ய – ஓர் அசைச் சொல், தழை – இலைகள்,  தாழ் – தொங்கும்,  அல்குல் – இடையின் அடிப்பகுதி,  இவள் புலம்பு – தனிமையில் வருந்த,  அகல – செல்ல, தாழை – தாழை, தைஇய – அணிந்த (அளபெடை),  தயங்கு திரை – விளங்கிய அலைகள்,  கொடுங்கழி – வளைந்த உப்பு நீர் உடைய கடற்கரை, இழுமென ஒலிக்கும் – பெரும் ஒலியுடன், ஆங்கண் – ஆங்கு, பெருநீர் – கடல்,  வேலி – வேலி,  எம் சிறுநல் ஊரே – எங்கள் சிறிய ஊர்

குறுந்தொகை 362, வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்குறிஞ்சித் திணை  – தோழி வேலனிடம் சொன்னது

முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல!
சினவல் ஓம்புமதி! வினவுவது உடையேன்!
பல் வேறு உருவில் சில் அவிழ் மடையொடு
சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி
வணங்கினை கொடுத்தியாயின், அணங்கிய 5
விண் தோய் மா மலைச் சிலம்பன்
ஒண் தார் அகலமும் உண்ணுமோ பலியே?

பாடல் பின்னணி:  தலைவியின் நோய் முருகனால் வந்தது எனக் கருதித் தாய் வெறியாட்டத்திற்கு ஏற்பாடு செய்கின்றாள்.  வெறியாடும் வேலனை நோக்கி, தோழி பேசுகின்றாள்.

பொருளுரை:   முருகனை வழிபட்டு வந்த அறிவு வாய்ந்த வேலனே!  என் மீது சினம் கொள்வதைக் காப்பாயாக!  உன்னைக் கேட்பது ஒன்று உடையேன்.  பல்வேறு நிறத்தையுடைய சில சோற்றையுடைய பலியுடன், சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று, தலைவியுடைய நறுமணமுடைய நெற்றியைத் தடவி, முருகனை வணங்கி, பலியாகக் கொடுப்பாயின், இவளைத் துன்புறுத்திய வானத்தைத் தோய்க்கும் பெரிய மலையின் தலைவனின் ஒளியுடைய மாலையை அணிந்த மார்பு நீ கொடுக்கும் பலியை உண்ணுமோ?

குறிப்பு:  பலியே – ஏகாரம் அசைநிலை.   எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், கூறுதல், உசாதல், ஏதீடு தலைப்பாடு, உண்மை செப்புங் கிளவியொடு, தொகைஇ எழு வகைய என்மனார் புலவர் (தொல்காப்பியம் பொருளியல் 12).  இங்கு உசாவுதல் (கேட்டல்) பொருந்தும்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை –  தலைவி நோய்க்குக் காரணம் தலைவனேயாம். தெய்வமன்று என்பதைச் செவிலிக்குக் குறிப்பால் உணர்த்தப்பட்டமை உணர்க.  உ. வே. சாமிநாதையர் உரை – சிறு மறி என்றது இரங்கத்தக்க இளமையுடையது என்னும் நினைவிற்று.  இரா. இராகவையங்கார் உரை – இதனைப் பேராசிரியர் தலைவி கூற்றாகவே கொண்டார் தனது தொல்காப்பிய உரையில் (தொல்காப்பியம், செய்யுளியல் 197).   மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

சொற்பொருள்:   முருகு அயர்ந்து வந்த – முருகனை வழிபட்டு வந்த, முதுவாய் வேல – அறிவு வாய்ந்த வேலனே, சினவல் ஓம்புமதி – சினம் கொள்வதைக் காப்பாயாக, வினவுவது உடையேன் – உன்னைக் கேட்பது ஒன்று உடையேன், பல் வேறு உருவின் – பல்வேறு நிறத்தையுடைய, சில் அவிழ் மடையொடு – சில சோற்றையுடைய பலியுடன், சிறு மறி கொன்று – சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று, இவள் நறு நுதல் நீவி – தலைவியுடைய நறுமணமுடைய நெற்றியைத் தடவி, வணங்கினை கொடுத்தியாயின் – முருகனை வணங்கிப் பலியாகக் கொடுப்பாயின், அணங்கிய – இவளைத் துன்புறுத்திய, விண் தோய் – வானத்தைத் தோய்க்கும், மா மலைச் சிலம்பன் – பெரிய மலையின் தலைவன், ஒண் தார் அகலமும் – ஒளியுடைய மாலையை அணிந்த மார்பும், உண்ணுமோ பலியே – நீ கொடுக்கும் பலியை உண்ணுமோ

குறுந்தொகை 365, மதுரை நல்வெள்ளியார்குறிஞ்சித் திணை  – தோழி தலைவனிடம் சொன்னது
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே,
துன் அரு நெடு வரைத் ததும்பிய அருவி
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும்,
மருங்கில் கொண்ட பலவின்  5
பெருங்கல் நாட, நீ நயந்தோள் கண்ணே.

பாடல் பின்னணி:  தான் வரையும் வரை (திருமணம் செய்யும் வரை) தலைவி பொறுத்திருப்பாளோ என்று கேட்ட தலைவனை நோக்கித் தோழி இவ்வாறு கூறுகின்றாள்.

பொருளுரை:   நெருங்குதற்கு அரிய, உயர்ந்த மலையில் உள்ள தண்ணென்ற ஒலியை உடைய முரசைப் போன்ற ஆரவாரத்தை வெளிப்படுத்தும் அருவிகளையும், பலா மரங்களையும் உடைய பெரிய மலையின் நாடனே!

உன்னால் விரும்பப்படும் தலைவியின், சங்குகளை அறுத்துச் செய்த வளையல்கள், வழுக்கி விழுகின்றன.  அவளுடைய கண்கள் நாள்தோறும் துயில் இல்லாது, கலங்கி, நீர்த்துளிகள் நீங்காதனவாக உள்ளன.

குறிப்பு:  ஆனாவே – ஏகாரம் அசைநிலை. கண்ணே – ஏகாரம் அசைநிலை.  இல – இல்லை என்பதன் விகாரம்.

சொற்பொருள்:  கோடு ஈர் இலங்கு வளை – சங்குகளை அறுத்துச் செய்த வளையல்கள், நெகிழ – நெகிழ, நாளும் – நாள்தோறும், பாடு இல – துயில் இல்லை, கலிழ்ந்து – கலங்கி, பனி ஆனாவே –  நீர்த்துளிகள் நீங்காதனவாக, துன் அரு நெடு வரை – நெருங்குதற்கு அரிய உயர்ந்த மலை,  ததும்பிய அருவி – ஒலித்த அருவி, தண்ணென் முழவின்  – தண்ணென்ற ஒலியை உடைய முரசைப் போன்று, இமிழ் இசை காட்டும் – ஆரவாரத்தை வெளிப்படுத்தும், மருங்கில் கொண்ட பலவின் – அருகில் கொண்ட பலா மரங்களை உடைய, பெருங்கல் நாட – பெரிய மலையின் நாடனே, நீ நயந்தோள் கண்ணே – நீ விரும்பியவளின் கண்கள்

குறுந்தொகை 369, குடவாயிற் கீரத்தனார்,  பாலைத் திணை – தோழி  தலைவியிடம் சொன்னது  
அத்த வாகை அமலை வால் நெற்று
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக்
கோடை தூக்குங் கானம்
செல்வாந் தோழி, நல்கினர் நமரே.

பாடல் பின்னணி:  தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தியது.

பொருளுரை:   அவர் உன்னை உடன் அழைத்துச் செல்ல ஒத்துக் கொண்டுள்ளார். கோடையில் காற்று வீசுவதால் பாலை நிலத்தில் உள்ள வாகை மரங்களின் உலர்ந்த வெள்ளைக்  காய்களில் உள்ள விதைகள் கொலுசுகளின் பரலைப் போன்று ஒலிக்கும் காட்டுக்கு அவருடன் நீ செல்வாயாக.

குறிப்பு:  நமரே: ஏகாரம் அசைநிலை.  இரா. இராகவையங்கார் உரை  – சிலம்பு கழி நோன்பு தலைவன் அகத்து நிகழ்வது குறித்துக் கூறினாள்.  செல்வாம் (4) – இரா. இராகவையங்கார் உரை – செல்வாம் எனத் தோழி தன்னை உளப்படுத்தித் தன்மைப் பன்மையாற் கூறினாள் என்பது தோழியும் உடன்போதல் வழக்கு இன்மையால் இயையாமை காண்க.  வாகை நெற்று ஒலித்தல்:  குறுந்தொகை 7 – ஆரியர் கயிறாடு பறையின் கால் பொரக் கலங்கி வாகை வெண் நெற்று ஒலிக்கும், குறுந்தொகை 369 – அத்த வாகை அமலை வால் நெற்று அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக் கோடை தூக்கும் கானம், அகநானூறு 45 – உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் ஆடு களப் பறையின் அரிப்பன ஒலிப்ப, அகநானூறு 151 – உழுஞ்சில் தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள் அரிக் கோல் பறையின் ஐயென ஒலிக்கும்.

சொற்பொருள்:  அத்த வாகை – பாலை நிலத்தின் வாகை மரம், அமலை – ஒலி, வால் – வெள்ளை, நெற்று – உலர்ந்தக் காய், அரி – பரல், ஆர் – அழகிய, சிலம்பின் – கொலுசின், அரிசி – விதை, ஆர்ப்ப – ஒலிக்க,  கோடை – வெயில் காலம், தூக்குங் கானம் – காற்று அசைகின்ற காடு, செல்வாந் தோழி – செல்வாய்த் தோழி, நல்கினர் நமரே – அவர் ஒத்துக் கொண்டுள்ளார்

குறுந்தொகை 370, வில்லகவிரலினார்மருதத் திணை – பரத்தை தலைவனைப்பற்றி கூறினது 
பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழு முகை
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு,
இருப்பின் இரு மருங்கினமே கிடப்பின்,
வில்லக விரலில் பொருந்தியவன்,
நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே. 5

பாடல் பின்னணி:  தலைவி தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்டுப் பரத்தை தலைவியின் தோழியர் கேட்பக் கூறியது.

பொருளுரை:   பொய்கை ஆம்பலின் அழகிய நிறத்தை உடைய பெரிய மொட்டுக்களை மலரச் செய்யும் வண்டுகள் உள்ள, குளிர்ந்த துறையை உடைய ஊரில் உள்ள தலைவனோடு நான் இருக்கும் பொழுது, எங்கள் இரு உடல்களும் இணைந்து ஒன்றாக இருப்போம், வில்லில் இணைந்து இருக்கும் விரல்களைப் போல்.  அவன் தன் நல்ல இல்லத்திற்குச் சென்று விட்டால், நான் தனியாக, ஒற்றை ஆளாக இருக்க வேண்டி உள்ளது.

குறிப்பு:  மருங்கினமே – ஏகாரம் அசை நிலை.  மருங்கினம் – தன்மைப் பன்மை வினைமுற்று.

சொற்பொருள்:   பொய்கை ஆம்பல் அணி நிற கொழு முகை – பொய்கை ஆம்பலின் அழகிய நிறத்தை உடைய பெரிய மொட்டுக்கள், வண்டு வாய் திறக்கும் – வண்டுகள் மலரச் செய்யும், தண் துறை ஊரனொடு இருப்பின் – குளிர்ந்த துறையை உடைய ஊரில் உள்ள தலைவனோடு இருக்கும் பொழுது, இரு மருங்கினமே கிடப்பின் – இரு உடல்களும் அருகில் இருக்க, வில்லக விரலில் பொருந்தி – வில்லை பிடித்திருக்கும் விரல்களைப் போல் இணைந்து இருப்போம், அவன் நல் அகம் சேரி ஒரு மருங்கினமே – அவன் தன் நல்ல இல்லத்திற்கு சென்று விட்டால் நான் தனியாக இருக்க நேரிடுகின்றது

குறுந்தொகை 374, உறையூர்ப் பல்காயனார்குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
எந்தையும் யாயும் உணரக் காட்டி,
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்த பின்,
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப,
நன்று புரி கொள்கையின், ஒன்றாகின்றே,
முடங்கல் இறைய தூங்கணம் குரீஇ  5
நீடு இரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும், மயங்கிய மையல் ஊரே.

பாடல் பின்னணி:  தலைவன் வரைவொடு புக்க காலத்துத் தமர் அவனை ஏற்றுக்கொண்டாராக, ‘யான் அறத்தொடு நிற்றதால் இது நிகழ்ந்தது’ என்று தோழி கூறியது.

பொருளுரை நம் தந்தையும் தாயும் உணரும்படி அவர்களிடம் கூறி, நாம் மறைத்து வைத்த களவொழுக்கத்தை வெளிப்படும்படி நான் கூறிய பின்னர், மலைகள் பொருந்திய நாட்டவனான நம் தலைவன் வந்து பெண் கேட்க, நம் குடும்பத்தாரின் நன்மையைச் செய்யும் கொள்கையினால், ஒன்றுப்பட்டது, வளைந்த சிறகுகளை உடைய தூக்கணாங்குருவி உயர்ந்த கருமையான பனை மரத்தில் அமைத்த கூட்டைக்காட்டிலும் மயங்கிய இந்த மயக்கத்தையுடைய ஊர்.

குறிப்பு:  ஒன்றாகின்றே – ஏகாரம் அசை நிலை, ஊரே – ஏகாரம் அசை நிலை.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தூக்கணாங்குருவியின் கூடு ஒருவழிப்படாது பல்லாற்றானும் பின்னப்பட்டிருத்தலானே பல்லாற்றானும் மயங்கி அலர் தூற்றும் ஊர்க்கு உவமை ஆயிற்று.

சொற்பொருள்:   எந்தையும் யாயும் – நம் தந்தையும் தாயும், உணரக் காட்டி – உணரும்படி அவர்களிடம் கூறி, ஒளித்த செய்தி – நாம் மறைத்து வைத்த களவொழுக்கத்தை, வெளிப்படக் கிளந்த பின் – வெளிப்படும்படி நான் கூறிய பின்னர், மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப – மலைகள் பொருந்திய நாட்டவனான நம் தலைவன் வந்து பெண் கேட்க, நன்று புரி கொள்கையின் – நம்மையைச் செய்யும் கொள்கையினால், ஒன்றாகின்றே – ஒன்றுப்பட்டது, முடங்கல் இறைய தூங்கணம் குரீஇ – வளைந்த சிறகுகளை உடைய தூக்கணாங்குருவி (குரீஇ – இயற்கை அளபெடை), நீடு இரும் பெண்ணைத் தொடுத்த – உயர்ந்த பெரிய/கருமையான பனை மரத்தில் அமைத்த, கூடினும் – கூட்டைக்காட்டிலும், மயங்கிய மையல் ஊரே – மயங்கியது இந்த மயக்கத்தையுடைய ஊர்

குறுந்தொகை 375, பாடியவர் பெயர் கிடைக்கவில்லைகுறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னதுசிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி, இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே, சாரல்
சிறு தினை விளைந்த வியன் கண் இரும் புனத்து
இரவு அரிவாரின் தொண்டகச் சிறு பறை
பானாள் யாமத்தும் கறங்கும்  5
யாமம் காவலர் அவியாமாறே.

பாடல் பின்னணி:  தலைவன் கேட்குமாறு ‘காவலருடைய காவல் மிக்கது’ என்று தலைவிக்குக் கூறும் வாயிலாக, வரைதல் வேண்டும் என்பதை அவனுக்கு தோழி உணர்த்தியது.

பொருளுரை: தோழி! நீடு வாழ்வாயாக! நான் கூறுவதைக் கேட்பாயாக! மலைப்பக்கத்தில் சிறிய தினை விளைந்த அகன்ற இடத்தையுடைய பெரிய தினைப்புனத்தில், தினைக் கதிர்களை இரவு நேரத்தில் அரிபவர்களின் சிறிய பறை பாதி இரவிலும் ஒலிப்பதால் இரவு காவலாளிகள் தூங்காமையால், நம் தலைவர் இன்று இங்கு வராமல் இருந்தால் நல்லது.

குறிப்பு:   அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – அசைநிலை, நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, இன்று அவர் வாரார் ஆயினோ நன்றே – இன்று அவர் வராமல் இருந்தால் நல்லது, சாரல் – மலைப்பக்கத்தில், சிறு தினை விளைந்த – சிறிய தினை விளைந்த, வியன் கண் இரும் புனத்து – அகன்ற இடத்தையுடைய பெரிய தினைப்புனத்தில்,  இரவு அரிவாரின் தொண்டகச் சிறு பறை – தினைக் கதிர்களை இரவு நேரத்தில் அரிபவர்களின் சிறிய பறை, பானாள் யாமத்தும் கறங்கும் – பாதி இரவிலும் ஒலிக்கும், யாமம் காவலர் அவியாமாறே – இரவுக் காவலாளிகள் தூங்காமையால்

குறுந்தொகை 380, கருவூர்க் கதப்பிள்ளைபாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
விசும்பு கண் புதையப் பாஅய் வேந்தர்
வென்று எறி முரசின் நன் பல முழங்கிப்
பெயல் ஆனாதே வானம், காதலர்
நனி சேய் நாட்டர் நம் உன்னலரே
யாங்குச் செய்வாம் கொல் தோழி, ஈங்கைய  5
வண்ணத் துய் மலர் உதிர
முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே.

பாடல் பின்னணி:  தலைவன் குறித்த பருவத்தில் வராததால் வருந்திய தோழி கூறியது.

பொருளுரை தோழி!  வானம் மறையும்படி பரவி, வேந்தர்கள் பகைவர்களை வென்று அறையும் முரசினைப் போல் நன்கு பலமுறை முழங்கி, மேகம் மழை பெய்தலை நீங்காது உள்ளது.  நம் தலைவர் மிகத் தொலைவில் உள்ள நாட்டில் இருக்கின்றார். நம்மை அவர் எண்ணவில்லை, ஈங்கைச் செடியின் நிறத்தையும் உளையையும் உடைய மலர்கள் உதிரும்படி, நம் எதிரே வரும் கடுமையான பனிப்பருவத்தில் நாம் என்ன செய்யலாம்?

சொற்பொருள்:   விசும்பு கண் புதைய பாஅய் – வானம் மறையும்படி பரவி (பாஅய் – அளபெடை), வேந்தர் வென்று எறி முரசின் – வேந்தர்கள் பகைவர்களை வென்று அறையும் முரசினைப் போல் (முரசின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு) நன் பல முழங்கிப் பெயல் ஆனாதே – நன்கு பலமுறை முழங்கி மழை பெய்தல் நீங்காது, வானம் – மேகம், காதலர் நனி சேய் நாட்டர் – தலைவர் மிகத் தொலைவில் உள்ள நாட்டில் இருக்கின்றார், நம் உன்னலரே – நம்மை அவர் நினைக்கவில்லை, யாங்குச் செய்வாம் கொல் தோழி – நாம் என்ன செய்யலாம் தோழி (கொல் – அசைநிலை), ஈங்கைய வண்ணத் துய் மலர் உதிர – ஈங்கைச் செடியின் நிறத்தையும் உளையையும் உடைய மலர்கள் உதிர, முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே – இனி நம் எதிரே வரும் கடுமையான பனிப்பருவத்தில்

குறுந்தொகை 390, உறையூர் முதுகொற்றனார்பாலைத் திணை – கண்டோர் சொன்னது
எல்லும் எல்லின்று, பாடுங் கேளாய்,
செல்லாதீமோ, சிறுபிடி துணையே
வேற்று முனை வெம்மையிற் சாத்து வந்திறுத்தென,
வளையணி நெடுவேல் ஏந்தி,
மிளை வந்து பெயரும், தண்ணுமைக் குரலே. 5

பாடல் பின்னணி:  தலைவியை உடன் அழைத்துக் கொண்டு பாலை நிலத்தில் போகும் தலைவனை எதிரே கண்டோர் ‘பகல் போயிற்று.  ஆறலை கள்வரால் ஏதம் நிகழும்’ என்று அறிவுறுத்தி மேற்செல்லுதலைத் தடுத்தது.

பொருளுரை:   சிறிய யானையைப்போன்ற துணைவியை உடையவனே!  ஒலிக்கும் ஒலிகளைக் கேள்!  இந்த வழியில் செல்லாதே!  கதிரவனின் ஒளி அடங்கி விட்டது.  வணிகர்களின் கூட்டம் வந்ததால், வளையல் அணிந்த, பெரிய வேல்களைக் கொண்ட கள்வர்கள் தங்களுடைய தண்ணுமை முரசை அடிக்கன்றனர்.  அந்த ஒலி காவல் காட்டிற்கு வந்து செல்கின்றது.  அக்கள்வர்களின் பகைமையினால் இது போர்க்களம் போன்று தோன்றுகின்றது.

குறிப்பு:  குரலே – ஏகாரம் அசை நிலை.  எல்லும் எல்லின்று (1) – உ. வே. சாமிநாதையர் உரை – சூரியனும் விளக்கம் இலனானான், இரா. இராகவையங்கார் உரை – பகற்பொழுதும் இருண்டு சென்றது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஞாயிறும் விளக்கமிலதாயிற்று.  அகநானூறு 110, அகநானூறு 370 பாடல்களில் ‘எல்லும் எல்லின்று’ என்பதற்கு – வேங்கடசாமி நாட்டார் உரை – பகலும் ஒளி இழந்தது, பகலும் ஒளி குறைந்தது,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பகற்பொழுது ஒளி இல்லையாய் இருந்தது, பகற்பொழுதும் ஒளி குன்றிற்று.  வளையணி நெடுவேல் ஏந்தி (4) – உ. வே. சாமிநாதையர் உரை – வளையை அணிந்து நெடிய வேலை ஏந்தி, தமிழண்ணல் உரை – தோள்வளை அணிந்த கையில் நெடிய வேலை ஏந்தி, இரா. இராகவையங்கார் உரை – வளையம் அணிந்த நெடிய வேலைத் தாங்கி.  செல்லாதீமோ (2) – செல்லாதீம் முன்னிலைப் பன்மை வியங்கோள் வினைமுற்று.

சொற்பொருள்:   எல்லும் எல்லின்று – வெளிச்சம் போய் விட்டது,  பாடுங் கேளாய் – ஒலிக்கும் ஒலிகளைக் கேள், செல்லாதீமோ – செல்லாதீர், சிறு பிடி துணையே – சிறிய யானையைப்போல் உள்ள பெண்ணுக்கு துணைவனே, வேற்று முனை – போர்க்களம்,  வெம்மையில் – பகைமை,   சாத்து – வணிகர்கள், வந்திறுத்தென – வந்ததால், வளையணி – வளையல் அணிந்த,  நெடுவேல் – நீண்ட வேலை,  ஏந்தி – தூக்கிக் கொண்டு, மிளை வந்து – காவல் காட்டுக்கு வந்து,  பெயரும் – விலகும், தண்ணுமைக் குரலே – தண்ணுமை முரசின் குரல்

குறுந்தொகை 392, தும்பிசேர் கீரனார்,  குறிஞ்சித் திணை – தோழி தும்பியிடம் சொன்னதுதலைவன் கேட்கும்படியாக
அம்ம வாழியோ, அணிச்சிறைத் தும்பி!
நன்மொழிக்கு அச்சமில்லை, அவர் நாட்டு
அண்ணல் நெடுவரைச் சேறி ஆயின்,
கடமை மிடைந்த துடவையஞ் சிறுதினைத்
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை 5
தமரின் தீராள் என்மோ, அரசர்
நிரை செலல் நுண்தோல் போலப்
பிரசந்தூங்கு மலை கிழவோர்க்கே.

பாடல் பின்னணி:  வரைவு நீட்டித்த தலைவன் சிறைப்புறத்தில் நிற்பதை அறிந்த தோழி, வண்டினை நோக்கி கூறுவாளாய் அவனுக்குக் கூறியது.

பொருளுரை:   அழகிய இறகுகளை உடைய தும்பியே!  நான் கூறுவதைக் கேள்!  நல்ல சொற்களைக் கூறுவதற்கு அஞ்சத் தேவையில்லை.  தேன் கூடுகள் மன்னனின் நுண்ணிய கேடயங்களைப் போல் வரிசையாகத் தொங்கும் ஓங்கிய உயர்ந்த மலைகளையுடைய அவருடைய நாட்டுக்கு நீ சென்றால், தலைவனிடம்.  “கடமை மான்கள் நெருங்கிய தோட்டத்தில் அழகிய சிறிய தினையிடத்தே அவளுடைய அண்ணன்மார் களைக்கொட்டால் களையைக் கொத்தித் தோண்டுவதால் புழுதி கிளம்பும்  அவ்விடத்தில், அவர்களை விட்டு விலகி உன்னிடம் வர முடியாத நிலையில் அவள் இருக்கின்றாள்” எனக் கூறு.

குறிப்பு:  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).  கிழவோர்க்கே – ஏகாரம் ஈற்றசை.

சொற்பொருள்:   அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழியோ – அசைநிலை, நீடு வாழ்வாயாக, (ஓகாரம் அசைநிலை), அணி – அழகிய,  சிறை – சிறகு,  தும்பி – தும்பி,  நன்மொழிக்கு அச்சமில்லை – நல்ல சொற்கள் சொல்வதற்கு அஞ்சத் தேவை இல்லை, அவர் நாட்டு – அவருடைய நாட்டின்,  அண்ணல் – ஓங்கிய, நெடுவரை – உயர்ந்த மலைகளை, சேறி ஆயின் – நீ சென்று அடைந்தால்,  கடமை – கடமை மான்கள் நெருங்கிய, மிடைந்த  – நெருங்கிய, துடவை –  தோப்புகளில், அம் – அழகிய,  சிறுதினை – சிறிய தினை, துளர் எறி –  களைக்கொட்டால் களையைக் கொத்தித் தோண்டுவதால்,  நுண் துகள் – நுண்மையான புழுதி,  களைஞர் – வயலில் களையை நீக்குபவர்கள், தங்கை – தங்கை, தமரின் – உறவினர்கள், தீராள் – பிரிய முடியாத நிலையில் இருப்பவள், என்மோ – என்று சொல், அரசர் – மன்னர்கள்,  நிரை செலல் – வரிசையாக அடுக்கிய, நுண் தோல் போல – நுண்ணிய கேடயங்களைப் போல்,  பிரசம் தூங்கு – தேன் கூடுகள் தொங்கும், மல கிழவோர்க்கே – மலைநாடன்

குறுந்தொகை 397, அம்மூவனார்நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது 
நனை முதிர் ஞாழல் சினை மருள் திரள் வீ
நெய்தல் மாமலர்ப் பெய்தல் போல,
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப!
தாய் உடன்று அலைக்கும் காலையும் வாய் விட்டு
அன்னா என்னுங் குழவி போல, 5
இன்னா செயினும், இனிது தலையளிப்பினும்,
நின் வரைப்பினள் என் தோழி,
தன் உறு விழுமங் களைஞரோ இலளே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்து நீங்கும் தலைவனிடம் தோழி உரைத்தது.

பொருளுரை:   முதிர்ந்த மொட்டுக்கள் முட்டைகள் போல் திரட்சியாக ஞாழல் மரத்தில் மலரும்.  வீசும் வாடைக்குளிர் காற்றினால் அவை கீழே உள்ள கருமையான குவளை மலர்கள் மீது மழையைப் போல் விழும்.  வலிய கடற்கரையின் தலைவனே, தாய்க் கோபமாக இருக்கும் பொழுதும் ‘அம்மா’ என்று அழும் குழந்தையைப் போல் என் தோழி இருக்கின்றாள்.  நீ அவளிடம் இனிமையாக இருந்தாலும், அவளுக்குத் துன்பம் கொடுத்தாலும், உன்னுடைய எல்லைக்கு உட்பட்டவள் அவள்.  உன்னையன்றி அவளுடைய துன்பத்தை நீக்குபவர், வேறு யாரும் இல்லை.

குறிப்பு:  களைஞரோ – ஓகாரம் அசைநிலை, இலளே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:   நனை – மொட்டுக்கள், முதிர் – முதிர்ந்த, ஞாழல் – ஞாழல் மரத்தின், சினை – முட்டைகள், மருள் – போல், திரள் – திரண்ட,  வீ – மலர்கள்,  நெய்தல் மாமலர் – கருமையான குவளை மலர்கள், பெய்தல் போல – பெய்ததுப் போல்,  ஊதை – குளிர் காற்று, தூற்றும் – தூவும், உரவு நீர் சேர்ப்ப – வலிய கடற்கரையின் தலைவனே, தாய் உடன்று அலைக்கும் காலையும் – தாய் கோபமாக இருக்கும் பொழுதும்,  வாய் விட்டு – வாய் விட்டு, அன்னா என்னுங் குழவி போல – ‘அம்மா’ என்று அழும் குழந்தையைப் போல்,  இன்னா செயினும் – நீ அவளுக்கு துன்பம் கொடுத்தாலும், இனிது தலையளிப்பினும் – இனிமையாக அருள் செய்தாலும், நின் – உன்னுடைய, வரைப்பினள் – எல்லைக்கு உட்பட்டவள், என் தோழி – என் தோழி, தன் உறு விழுமம் – துன்பத்துடன் இருக்கின்றாள், களைஞரோ இலளே – அதை நீக்குவார் யாரும் இல்லை

குறுந்தொகை 399, பரணர்மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஊருண் கேணி உண்டுறைத் தொக்க
பாசியற்றே பசலை, காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி,
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.

பாடல் பின்னணி:  வரைவு (திருமணம்) நீட்டித்த காலத்தில் தோழியிடம் தலைவி சொன்னது.

பொருளுரை:  என் காதலர் என்னைத் தொடும் பொழுதெல்லாம் நீங்கி, அவர் பிரியும் பொழுதெல்லாம் என் மேனியில் பரவுவதாலே, இந்தப் பசலையானது, ஊர் மக்களால் குடிக்கப்படும் நீரை உடைய குளத்தின் துறையில் கூடிய பாசியை ஒத்தது.

குறிப்பு:  அற்றே – ஏகாரம் அசைநிலை, பரத்தலானே – ஏகாரம் அசை நிலை.  கலித்தொகை 130 – விடுவழி விடுவழிச் சென்றாங்கு அவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே.  உ. வே. சாமிநாதையர் உரை – தொடுதல் இடக்கரடக்கு.  விடுவுழி விடுவுழி எனப் பன்மை கூறியது வரையாது ஒழுகும் களவொழுக்கத்தில் அடுத்தடுத்துப் பிரிவு நேர்வது குறித்தது.

சொற்பொருள்:   ஊர் உண் கேணி – ஊர் மக்கள் குடிக்கும் நீரை உடைய சிறு குளம்/ கிணறு, உண் துறை – நீர் உண்ணும் துறை, நீர் உண்ணும் கரை, தொக்க – கூடிய, பாசி அற்றே – பாசியைப் போன்றது, பசலை – பசலை (காதல் வசப்பட்டிருக்கும் பெண்ணின் தோலில் ஏற்படும் மஞ்சள் நிறமான தேமல்),  காதலர் – காதலர், தொடுவுழித் தொடுவுழி – தொடும் பொழுதெல்லாம், தொடும் பொழுதெல்லாம், நீங்கி – விலகி, விடுவுழி விடுவுழி – பிரியுந்தோறும்,  பிரியுந்தோறும், பரத்தலானே – அது பரவுவதால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக