சிறுபாணாற்றுப்படை : உரை – வைதேகி
பாடியவர் – இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
பாடப்பட்டோன் – ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன்
திணை – பாடாண்
துறை – ஆற்றுப்படை
பா வகை – அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள் – 269
தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும். (தொல்காப்பியம், புறத்திணையியல் 29).
ஆற்றுப்படை: ஆற்றுப்படை என்பது ஒரு கொடையாளியிடம் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர் வந்த வறியோர்க்கு அவ்வள்ளலிடம் சென்று தாம் பெற்றவாறு அவர்கள் பெறுமாறு வழிப்படுத்தல். இப்பாடலில், ஒரு பாணர் மற்றொரு பாணரிடம், தான் பரிசு பெற்ற மன்னனிடம் சென்று பரிசு பெறும் முறையைக் கூறுகின்றார். சங்க நூல்கள் பதினெட்டில் நான்கு நூல்கள் பாணர்கள் பற்றி இருப்பது, சங்க காலத்துப் பாணர்களின் சிறப்பை வெளிப்படுத்துகின்றது.
புலவர்: இடைக்கழி நாட்டின் நல்லூர் என்ற ஊரினர் இப்புலவர் பெருமான். தத்தன் என்பது இவர் இயற்பெயர். ந என்னும் சிறப்புப் பொருளைத்தரும் இடைச்சொல் சேர்த்து நத்தத்தன் என்றாயிற்று. இவர் எழுதியதாக வேறு பாடல் எதுவும் கிடைக்கவில்லை.
பாட்டுடைத் தலைவன்: ஓய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் ஓவியர் குடும்பத்தில் பிறந்தவன். மிகுந்த வள்ளன்மையுடையவன். மாவிலங்கை என்ற ஊரைத் தன் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். ஓய்மான்நாடு திண்டிவனம் அருகில் உள்ள நாடு. அவனுடைய நாட்டில் வேலூர், கிடங்கில், ஆமூர், எயிற்பட்டினம் ஆகிய ஊர்கள் இருந்தன. அவன் பகைவர்களின் மிகுதி கண்டு அஞ்சி முருகனை வழிபட்டான் என்றும், முருகன் அவன் கனவில் தோன்றி, “இவ்வூர்க்கண் உள்ள ஒரு கேணியில் பூத்த பூவைப் பறித்து நின் பகைவர் மேல் விடுதி” என அருளினார் என்றும், அவ்வாறே இவனும் அப்பூவைப் பறித்துப் பகைவர் மேல் எறிய, அது வேல் ஆகிச் சென்று பகைவரை அழித்தது என்றும் இக்காரணத்தால் தான் அவ்வூர் வேலூர் என வழங்கப்பட்டது என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையால் அறியலாம். இவனுக்காகப் புறத்திணை நன்னாகனார் எழுதிய பாடல்கள் இரண்டு புறநானூற்றில் கிடைத்துள்ளன (176, 376).
கதைச்சுருக்கம்: விறலியரின் அழகை புலவர் இனிமையாக விவரித்துள்ளார். ஆற்றுப்படுத்தும் பாணர் தாம் மன்னனைக் காணுமுன் உள்ள தம்முடைய வறுமை நிலைமையை விவரிக்கின்றார். மூவேந்தரைக் காட்டிலும், கடையெழு வள்ளல்களைக் காட்டிலும், பரிசுகள் கொடுப்பதில் சிறந்தவன் நல்லியக்கோடன் எனக் கூறுகின்றார். எயிற்பட்டினம், ஆமூர், வேலூர் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் முறையையும் அங்குள்ள மக்களின் விருந்தோம்பல் பற்றியும் கூறுகின்றார். நல்லியக்கோடனின் விருந்தோம்பல் சிறப்பை விவரிக்கின்றார். மறவர்களும் மகளிரும் அவனைப் புகழ்கின்றனர். விருப்பத்துடன் அவனிடம் செல்லுமாறு கூறுகின்றார்.
நிலமகளின் தோற்றம்
மணி மலைப் பணைத்தோள் மாநில மடந்தை
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல,
செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று. (1–3)
பொருளுரை: மூங்கிலாகிய தோள்களையுடைய பெரிய நிலமகளின் நீலமணிகளையுடைய மலையாகிய அழகிய மார்பில், தொலைவிலிருந்து, இரு பக்கங்களிலிருந்தும் வந்து, அசையும் முத்து மாலையைப் போல அசைந்துக் கூடி , கரையில் இருக்கும் மரங்களை வருத்தி ஓடுகின்றன காட்டு ஆறுகள்.
குறிப்பு: அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் (2) – நச்சினார்க்கினியர் உரை – இரண்டு மலையினின்றும் வீழ்ந்து, இரண்டு ஆற்றிடைக் குறையைச் சூழ் வந்து கூடுதலின் முத்து வடமாயிற்று. இது மெய்யுவமம். பெருக்கால் கோடுகள் வருந்தலின் உழந்தவென்றார். (ஆற்றிடை குறை – தீவு). புறநானூறு 198 – அருவி தாழ்ந்த பெருவரை போல ஆரமொடு பொலிந்த மார்பின். புனல் உழந்த (3) – வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – பெருக்கினால் மரக்கிளைகள் ஆட்டமெடுப்பதனால் ‘புனல் உழந்த’ என்றது. பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலையும், கான்யாறும், பொழிலும் கூறினமையின் இப்பாலை, குறிஞ்சி திரிந்த பாலை என்க. நிலமடந்தை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிலமகள்.
சொற்பொருள்: மணி மலை – நீலமணியையுடைய மலைகள், பணைத்தோள் – மூங்கிலாகிய தோள்களையுடைய, மாநில – பெரிய நிலம், மடந்தை – இளம் பெண், அணி முலை – அழகிய மார்பு, துயல்வரூஉம் ஆரம் போல – அசையும் முத்து மாலையைப் போல (வரூஉம் – அளபெடை), செல் புனல் உழந்த – ஓடும் நீராலே மரங்களை வருத்திய, சேய்வரல் கான் யாற்று – தொலைவிலிருந்து வரும் காட்டு ஆறுகளின்
கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
புதுப்பூஞ் செம்மல் சூடி, புடை நெறித்து, 5
கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல். (4-6)
பொருளுரை: ஆற்றின் நீரினால் இடிக்கப்படும் கரையில் உள்ள நறுமணமுடைய சோலையில் உள்ள குயில்கள் தங்கள் அலகினால் குத்திக் கீழே உதிர்த்த புதிய வாடல் மலர்களைச் சூடிய, பக்கங்கள் சுருண்ட நிலமகளின் கூந்தல் விரிந்திருப்பது போல இருந்தது கருமையான நுண்ணிய மணல்.
குறிப்பு: கூந்தலைப் போன்ற மணல் – ஐங்குறுநூறு 345 – கதுப்பு அறல், கலித்தொகை 32 – எஃகு இடை தொட்ட கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் மை அற விளங்கிய துவர் மணல், சிறுபாணாற்றுப்படை 6 – கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல்.
சொற்பொருள்: கொல் கரை – ஆற்றின் நீரினால் இடிக்கப்படும் கரை, நறும் பொழில் – நறுமணமுடைய சோலை, குயில் குடைந்து உதிர்த்த புதுப்பூ – குயில் குத்தி உதிர்த்த புதிய மலர்கள், செம்மல் சூடி – வாடல் மலர்களைச் சூடி, புடை நெறித்து – பக்கங்கள் நெளிந்து, பக்கங்கள் சுருண்டு, கதுப்பு விரித்து அன்ன – கூந்தல் விரிந்திருப்பது போல, காழ் அக நுணங்கு அறல் – கருமையான நுண்ணிய மணல் (காழ் – கருமை)
இளைப்பாறும் பாணன்
அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து
வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழிப்ப,
வேனில் நின்ற வெம்பத வழி நாள்,
காலை ஞாயிற்றுக் கதிர் கடா உறுப்ப, 10
பாலை நின்ற பாலை நெடு வழி,
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ, (7-12)
குறிப்பு: வேனில் நின்ற (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இளவேனிற் பருவம் நிலைபெற்ற. வழிநாள் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பின்னாகிய முதுவேனில்.
பொருளுரை: இரும்பில் உள்ள வெப்பத்தைப் போன்ற சூட்டையுடைய பரல் கற்கள் தங்கள் கால்களைக் கிழித்ததால், மெல்ல நடந்து சென்று, முதுவேனில் காலத்தின் வெப்பமான காலை நேரத்தில், காலைக் கதிரவன் தன் கதிர்களால் வெப்பத்தைச் செலுத்த, பாலைத் தன்மையைக் கொண்ட நீண்ட பாலை வழியையுடைய சுரத்தில் உள்ள கடம்ப மரத்தின் வரிகளாக உள்ள நிழலில் தங்கி,
சொற்பொருள்: அயில் உருப்பு அனைய – இரும்பில் உள்ள வெப்பத்தைப் போன்ற, ஆகி – ஆகி, ஐது நடந்து – மெல்ல நடந்து சென்று, வெயில் உருப்புற்ற வெம்பரல் – வெயிலின் வெப்பத்தையுடைய சூடான பரல் கற்கள், கிழிப்ப – கிழிக்க, வேனில் நின்ற வெம்பத வழிநாள் – வேனில் நிலைபெற்ற காலத்திற்கு பின் வந்த முதுவேனில் காலத்தின் வெப்பமான நாள், காலை ஞாயிற்று – காலைக் கதிரவனின், கதிர் – கதிர்கள், கடா உறுப்ப – வெப்பத்தைச் செலுத்த, பாலை நின்ற – பாலைத் தன்மையைக் கொண்ட, பாலை நெடு வழி – நீண்ட பாலை வழி, சுரன் முதல் – பாலை நிலத்தில் (சுரன் – சுரம் என்பதன் போலி), மராஅத்த வரி நிழல் அசைஇ – கடம்ப மரத்தின் வரிகளாக உள்ள நிழலில் தங்கி (மராஅத்த – அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது, அசைஇ – அளபெடை)
விறலியரின் அழகு
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி,
நெய் கனிந்து இருளிய கதுப்பின், கதுப்பு என
மணிவயின் கலாபம் பரப்பி பலவுடன் 15
மயில் மயில் குளிக்கும் சாயல், சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ,
வயங்கு இழை உலறிய அடியின், அடி தொடர்ந்து
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், குறங்கு என 20
மால் வரை ஒழுகிய வாழை, வாழைப்
பூ எனப் பொலிந்த ஓதி (13-22)
பொருளுரை: மென்மையாக விழும், தாழ்வாகப் பெய்யும் மழை மேகத்தின் அழகுடன் இருந்த எண்ணெய் தடவிய கரிய கூந்தலையும், கூந்தலைப் போன்ற நீலமணி போலும் கண்களையுடைய தோகைகளை விரித்து ஆடும் ஆண் மயில்கள் விறலியரின் அழகுக்கு ஒப்பாகத் தாம் இல்லையே என்று தங்கள் பெண் மயில்களின் பின் மறைவதற்குக் காரணமான மென்மையையும், ஓடித் தளர்ந்த, வருந்திய நாயின் நாக்கைப் போன்று நல்ல அழகு உடைய அணிகலன் இல்லாத பொலிவு இழந்த அடியினையும், அடி தொடர்ந்து நிலத்தில் பொருந்திய கரிய பெண் யானையின் பெரிய தும்பிக்கையைப் போல் உடன் சேர்ந்த நெருங்கிய தொடைகளையும், தொடையைப் போலத் திரண்டு, உயர்ந்த மலையில் வளரும் அழிதல் இல்லாத அழகிய வாழையின் பூவைப் போன்று பொலிந்த கூந்தல் முடிச்சும்,
குறிப்பு: விறலியர் ஆடவும் பாடவும் வல்ல பெண்கள். பொருநராற்றுப்படை 40 – இரும் பிடித் தடக் கையின் செறிந்து திரள் குறங்கின், பொருநராற்றுப்படை 42 – வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி. நற்றிணை 225 – வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல் இயல் மகளிர் ஓதி அன்ன. நற்றிணை 252 – முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய் நல் நாப் புரையும் சீறடி. ஒழுகிய வாழை (21) – நச்சினார்க்கினியர் உரை – ஒழுங்குபட வளர்ந்த வாழை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடையறவு படாது ஒன்றன் பின் ஒன்றாய்க் கிளைத்து வாழும் இயல்பினுடைய வாழை மரம். குறங்கு என (20) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மகளிர் தொடையைப் போலத் திரண்ட வாழை, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – தொடையைப் போலத் திரண்ட வாழை, செறிந்த குறங்கின் குறங்கு (20) – நச்சினார்க்கினியர் உரை – ஒரு குறங்குடனே ஒரு குறங்கு நெருங்கியிருக்கின்ற குறங்கினையும். நாயின் நாக்கு அன்ன அடி: நற்றிணை 252 – கத நாய் நல் நாப் புரையும் சீறடி, மலைபடுகடாம் 42-43 – ஞமலி நாவின் அன்ன துளங்கு இயல் மெலிந்த கல்பொரு சீறடி, பொருநராற்றுப்படை 42 – வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி, சிறுபாணாற்றுப்படை 17-18 – உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ வயங்கு இழை உலறிய அடியின் அடி. ஒற்றைமணிமாலை அணி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒன்றைக்கூறி முடித்த பின்னர் அதன்கண் அமைந்த பொருளையே மீண்டும் உவமையாக எடுத்து நிரல்படக் கூறுதல். சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29). தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).
சொற்பொருள்: ஐது வீழ் இகு பெயல் – மென்மையாக விழும் தாழப் பெய்யும் மழை, அழகு கொண்டு அருளி – எழிலுடன் அருளி, நெய் கனிந்து இருளிய கதுப்பின் – எண்ணெய் தடவிய கரிய கூந்தலையும், கதுப்பு என – கூந்தலைப் போன்ற, மணி வயின் கலாபம் பரப்பி – நீலமணி போலும் கண்களையுடைய தோகைகளை விரித்து (மணி வயின் கலாபம்: மணி – நீலமணி, கலாபம் – தோகை, வயின் – இடம்), பலவுடன் மயில் மயில் குளிக்கும் – பல தம் பெடைகளுக்குப் பின் மறையும், சாயல் – மென்மை, சாஅய் உயங்கு நாய் – ஓடித் தளர்ந்த வருந்திய நாய் (சாஅய் – அளபெடை), நாவின் – நாக்கைப் போன்று, நல் எழில் – நல்ல அழகு, அசைஇ – வருத்தி (அளபெடை), வயங்கு இழை – ஒளியுடைய அணிகலன்கள், உலறிய – பொலிவு இழந்த, அடியின் – அடியினையும், அடி தொடர்ந்து ஈர்ந்து நிலம் தோயும் – அடி தொடர்ந்து நிலத்தில் பொருந்திய, இரும் பிடி – பெரிய பெண் யானை, கரிய பெண் யானை, தடக் கையின் – பெரிய தும்பிக்கையைப் போல் (இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் – உடன் சேர்ந்த நெருங்கிய தொடைகளையும், குறங்கு என – தொடையைப் போல் திரண்டு, மால் வரை – உயர்ந்த மலை, ஒழுகிய – ஒழுங்கான, வாழை (வாழ் ஐ) – அழிதல் இல்லாத வாழ்தலையுடைய அழகிய, வாழைப்பூ என – வாழைப் பூவைப் போன்று, பொலிந்த ஓதி – பொலிந்த கூந்தல் முடிச்சும்
நளிச்சினை வேங்கை நாள் மலர் நச்சி
களிச் சுரும்பு அரற்றும் சுணங்கின், சுணங்கு பிதிர்ந்து
யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் 25
பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை, முலை என
வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின், எயிறு என
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த,
முல்லை சான்ற கற்பின், மெல் இயல், 30
மட மான் நோக்கின், வாணுதல் விறலியர் (23-31)
பொருளுரை: அடர்ந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்று மலர்ந்த மலர் என்று விரும்பி, அதன் தேனை உண்டு களித்த வண்டுகள் ஆரவாரிக்கும் மஞ்சள் தேமலையும், மஞ்சள் தேமல் சிதறினாற்போல் புதிதாக மலர்ந்த மலர்களையுடைய கோங்க மரத்தின் விளங்குகின்ற மொட்டுக்களை எள்ளி நகையாடும் அணிகலன் கிடக்கின்ற விருப்பம் தருகின்ற முலையையும், முலையைப் போன்ற பெரிய குலையையுடைய பெண்ணை வளர்த்த நுங்கில் உள்ள இனிய நீரைப் போன்று ஊறலுடைய பற்களையும், பற்களைப் போன்ற கஞ்சங் குல்லையுடைய அழகிய காட்டின்கண்ணே குவிந்த அரும்புகள் மலர்ந்த முல்லை மலர்களைச் சூடுதற்கு அமைந்த கற்பினையும், மெல்லிய இயல்பினையும், மான் போன்ற நோக்கையும், ஒளியுடைய நெற்றியையும் உடைய, ஆடலிலும் பாடலிலும் சிறந்த விறலியரின்
குறிப்பு: அகநானூறு 274 – முல்லை சான்ற கற்பின், நற்றிணை 142 – முல்லை சான்ற கற்பின், பரிபாடல் 15 – முல்லை முறை, சிறுபாணாற்றுப்படை 30 – முல்லை சான்ற கற்பின், சிறுபாணாற்றுப்படை 169 – முல்லை சான்ற. கோங்க முகைப்போன்ற முலை: அகநானூறு 99 – மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு, அகநானூறு 240 – கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து, குறுந்தொகை 254 – முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர், கலித்தொகை 56 – முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை, கலித்தொகை 117 – கோங்கின் முதிரா இள முகை ஒப்ப, புறநானூறு 336 – கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை, திருமுருகாற்றுப்படை 34 – தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை, சிறுபாணாற்றுப்படை 25-26 – யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை. யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83). பற்களைப் போன்ற அரும்பு: குறுந்தொகை 126 – முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக, குறுந்தொகை 162 – சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை, குறுந்தொகை 186 – முல்லை மென் கொடி எயிறு என முகையும், நற்றிணை 316 – மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் என. நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), நளி என் கிளவி செறிவும் ஆகும், (தொல்காப்பியம், உரியியல் 24).
சொற்பொருள்: நளிச் சினை வேங்கை – அடர்ந்த கிளைகளையுடைய வேங்கை மரம், பெரிய கிளைகளையுடைய வேங்கை மரம், நாள் மலர் நச்சி – அன்று மலர்ந்த மலர் என்று விரும்பி, களி சுரும்பு அரற்றும் – தேனை உண்டு களித்த வண்டுகள் ஆரவாரிக்கும், சுணங்கின் – மஞ்சள் தேமலையும், சுணங்கு – மஞ்சள் தேமல், பிதிர்ந்து – சிதறி, யாணர்க் கோங்கின் – புதிதாக மலர்ந்த மலர்களையுடைய கோங்க மரம், அவிர் முகை – விளங்குகின்ற மொட்டுக்கள், எள்ளி – எள்ளி, பூண் அகத்து ஒடுங்கிய – அணிகலன் கிடக்கின்ற, வெம்முலை – விருப்பம் தருகின்ற முலை, முலை என – முலையைப் போன்று, வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் இன் சேறு – பெரிய குலையையுடைய பெண்ணை வளர்த்த நுங்கில் உள்ள இனிய நீர், இகுதரும் – வடிகின்ற, எயிற்றின் – தரும் பற்களையும், எயிறு என – பற்களைப் போன்று, குல்லை – கஞ்சங்குல்லை, அம் புறவில் – அழகிய காட்டில், குவி முகை – குவிந்த மொட்டுக்கள், அவிழ்ந்த – மலர்ந்த, முல்லை சான்ற கற்பின் – முல்லை மலர்களைச் சூடுதற்கு அமைந்த கற்புடைமையும், மெல் இயல் – மென்மையான தன்மை, மட மான் நோக்கின் – மான் போன்ற நோக்கினுடைய, வாள் நுதல் – ஒளியுடைய நெற்றி, விறலியர் – ஆடலிலும் பாடலிலும் சிறந்த பெண்கள்
விறலியரின் காலைத் தடவி விடும் இளைஞர்கள்
நடை மெலிந்து அசைஇய நல்மென் சீறடி,
கல்லா இளையர் மெல்லத் தைவரப் (32 – 33)
பொருளுரை: நடை தளர்ந்து ஓய்ந்த அழகிய மென்மையான சிறிய அடியினை, தம் தொழிற்குரிய கல்வி அல்லாத பிற கல்வியைக் கற்காத இளைஞர்கள் மெதுவாகத் தடவ,
சொற்பொருள்: நடை மெலிந்து அசைஇய – நடை தளர்ந்து ஓய்ந்த (அசைஇய – அளபெடை), நல் மென் சீறடி – அழகிய மென்மையான சிறிய அடிகள், கல்லா இளையர் – தம் தொழிற்குரிய கல்வி அல்லாத பிற கல்வியைக் கற்காத இளைஞர்கள், மெல்லத் தைவர – மெதுவாகத் தடவ
பரிசில் பெற்ற பாணன் குடும்பத்துடன் வந்த பாணனைச் சந்திக்கிறான்
பொன் வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின்
இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ, 35
நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
கைவல் பாண்மகன், கடன் அறிந்து இயக்க,
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ,
துனிகூர் எவ்வமொடு, துயர் ஆற்றுப்படுப்ப,
முனிவு இகந்து இருந்த, முதுவாய் இரவல (34-40)
பொருளுரை: பொற்கம்பிகளை நீட்டினாற்போல உள்ள முறுக்கின நரம்பின் இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடது பக்கமாகத் தழுவி, நட்டப்பாடை என்னும் பண் நிறைந்த இனிமை தெரிகின்ற பாலை யாழை இயக்குதல் முறைமையை அறிந்து பாணன் இயக்க, அசையாத உலகத்தில் பரிசில் தருவாரை விரும்பி, வள்ளல்கள் இல்லாததால் வெறுப்பு மிக்க வருத்தத்துடன், வறுமைத் துயரம் நின்னைக் கொண்டு போவதால், வழி வருத்தம் தீர்ந்திருந்த, பேரறிவு உடைய பரிசில் நாடுபவனே, நான் கூறுவதைக் கேட்பாயாக!
குறிப்பு: பாலை (36) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இஃது ஐந்து வகைப்படும். தக்கராகம், நோதிறம், காந்தார பஞ்சமம், சோமராகம், காந்தாரம் என்னும் ஐந்துமாம். இயங்கா வையத்து – இயங்காத வண்டியாகிய உலகத்தில், வெளிப்படை. இயங்கா வையத்து (38) – நச்சினார்க்கினியர் உரை – வள்ளியோர் இன்மையின் பரிசிலர் செல்லாத உலகத்தே. இனி இயங்கும் வையம் சகடமாகலின் உலகத்திற்கு இயங்கா வையமென வெளிப்படை கூறிற்றுமாம். வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – அசைதல் இல்லாத பூமியிலே. குறிஞ்சிப்பாட்டு 146 – நைவளம் பழுநிய பாலை வல்லோன், சிறுபாணாற்றுப்படை 36 – நைவளம் பழுநிய நயந்தெரி பாலை. புறநானூறு 135, 308, பெரும்பாணாற்றுப்படை 15, சிறுபாணாற்றுப்படை 34 – பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின். வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).
சொற்பொருள்: பொன் வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின் இன்குரல் சீறியாழ் – பொற்கம்பிகளை நீட்டினாற்போல உள்ள முறுக்கின நரம்பின் இனிய ஓசையையுடைய சிறிய யாழ், இடவயின் தழீஇ – இடது பக்கமாகத் தழுவி (தழீஇ – அளபெடை), நைவளம் பழுநிய – நட்டப்பாடை என்னும் பண் நிறைந்த, நயந்தெரி பாலை – இனிமை தெரிகின்ற பாலை யாழ், கைவல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க – இயக்குதல் தெரிந்த முறைமையை அறிந்து, இயங்கா வையத்து – அசையாத உலகத்தில், இயங்கும் உலகத்தில், (இயங்கா வையம் – இயங்காத வண்டியாகிய உலகம், பூவா வஞ்சி என்றும் சூடா வஞ்சி என்றும் வஞ்சி நகரைக் குறித்தல் போன்று), வள்ளியோர் நசைஇ – பரிசில் தருவாரை விரும்பி (நசைஇ – அளபெடை), துனி கூர் எவ்வமொடு – வெறுப்பு மிக்க வருத்தத்துடன், துயர் ஆற்றுப்படுப்ப – வறுமைத் துயரம் கொண்டு போவதால், முனிவு இகந்து இருந்த – வழி வருத்தம் தீர்ந்திருந்த, முதுவாய் இரவல – பேரறிவு உடைய பரிசில் நாடுபவனே
சேர நாட்டின் வளமை
கொழுமீன் குறைய ஒதுங்கி, வள் இதழ்க்
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை,
பைங்கறி நிவந்த பலவின் நீழல்,
மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர,
விளையா இளங்கள் நாற, மெல்குபு, பெயரா, 45
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும் (41-46)
பொருளுரை: கொழுத்த மீன் வெட்டுப்படும்படி நடந்து, வளப்பமான இலைகளையுடைய செங்கழுநீர் மலரை மேய்ந்த, பெரிய வாயையுடைய எருமை, மிளகுக் கொடி படர்ந்த பலா மரத்தின் நிழலில், மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகினைத் தடவ, புளிப்பு முற்றிலும் ஏறாத இளங்கள் மணக்கும்படி, மென்று அசையிட்டு, காட்டு மல்லிகையாகிய படுக்கையில் உறங்கும்.
குறிப்பு: மெல்குபு பெயரா (45) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மென்று அசையிட்டு. பெயரா – பெயர்த்து (நகர்த்தி) என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.
சொற்பொருள்: கொழு மீன் குறைய ஒதுங்கி – கொழுத்த மீன் துணிபடும்படி (வெட்டுப்படும்படி) நடந்து, வள் இதழ் கழுநீர் மேய்ந்த – வளப்பமான இலைகளையுடைய செங்கழுநீர் மலரை மேய்ந்த, கய வாய் எருமை – பெரிய வாயையுடைய எருமை, பைங்கறி நிவந்த பலவின் நீழல் – மிளகுக் கொடி படர்ந்த பலா மரத்தின் நிழல் (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), மஞ்சள் மெல் இலை மயிர்ப்புறம் தைவர – மஞ்சளின் மெல்லிய இலை மயிரையுடைய முதுகினைத் தடவ, விளையா இளங்கள் நாற – புளிப்பு முற்றிலும் ஏறாத இளங்கள் மணக்கும்படி, மெல்குபு பெயரா – மென்று அசையிட்டு, குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும் – காட்டு மல்லிகையாகிய படுக்கையில் உறங்கும்
குட புலம் காவலர் மருமான், ஒன்னார்
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த,
எழு உறழ் திணி தோள், இயல் தேர்க் குட்டுவன்,
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே, அதாஅன்று (47-50)
பொருளுரை: மேற்குத் திசையைக் காக்கும் சேர மன்னரின் குடியில் பிறந்தவன், பகைவருடைய வடபுலத்தின்கண் உள்ள இமய மலையின் மேல் சேரரின் சின்னமான வளைந்த வில்லினைப் பொறித்த, கணைய மரத்தை ஒத்த திண்ணிய தோள்களையுடைய, ஓடும் தேரையுடைய குட்டுவனின், பெருகி வரும் நீரினையும் வாயிலையுமுடைய வஞ்சி நகரத்தில் கிடைக்கும் பரிசும் சிறிதே. அது மட்டும் அல்லாது,
குறிப்பு: அதாஅன்று (50) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று. அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு. அது என்னும் சுட்டு வஞ்சியைச் சுட்டி நின்றது. குட்டுவன் (49) – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – குட்ட நாட்டை உடையோன். வஞ்சி (50) – வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – வஞ்சி என்பது சேரரின் தலை நகரம். திவாகரம் முதலிய நிகண்டுகளில் வஞ்சி என்பது கருவூர் எனக் கூறப்பட்டுள்ளது. வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).
சொற்பொருள்: குடபுலம் காவலர் மருமான் – மேற்குத் திசையைக் காக்கும் சேரர் குடியில் பிறந்தவன், ஒன்னார் வடபுலம் இமயத்து வாங்கு வில் பொறித்த – பகைவருடைய வட புலத்தின்கண் உள்ள இமய மலையின் மேல் வளையும் வில்லினைப் பொறித்த, எழு உறழ் திணி தோள் – கணைய மரத்தை ஒத்த திண்ணிய தோள்கள் (கணைய மரம் – கதவில் உள்ள குறுக்கு மரம்), இயல் தேர்க் குட்டுவன் – ஓடும் தேரையுடைய குட்டுவன், புனையப்பட்ட தேரையுடைய குட்டுவன், வரு புனல் – பெருகி வரும் நீர், வாயில் – வாயில், வஞ்சியும் – வஞ்சி நகரமும் (வஞ்சி – இன்றைய கரூர்), வறிதே – சிறிதே, அதாஅன்று – அது மட்டும் அல்லாது (அளபெடை)
பாண்டிய நாட்டின் பெருமை
நறவுவாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து
அறைவாய்க் குறுந்துணி அயில் உளி பொருத,
கை புனை செப்பம் கடைந்த மார்பின்,
செய்பூங் கண்ணி செவி முதல் திருத்தி,
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த (51-55)
பொருளுரை: மலர்கள் தேனைச் சொட்டும் இளமை முதிர்ந்த நுணா மரத்தினது வெட்டின சிறிய மரக்கட்டைத் துண்டுகளில், இரும்பு உளியால் குடைந்து கையினால் செம்மையாகக் கடைந்து செய்த மாலையை மார்பில் அணிந்தும், நெட்டியால் செய்யப்பட்ட மாலையைச் செவி அடியில் சூடி, வலிமையான காளைகளையுடைய உப்பு வணிகருடைய வண்டியுடன் வந்த,
குறிப்பு: செய்பூங் கண்ணி செவி முதல் திருத்தி (54) – நச்சினார்க்கினியர் உரை – கிடேச்சையாற் செய்த பூவினையுடைய மாலையைச் செவியடியில் நெற்றி மாலையாகக் கட்டி. நறவுவாய் உறைக்கும் (51) – நச்சினார்க்கினியர் உரை – தேனைப் பூக்கள் தம்மிடத்தினின்றும் துளிக்கும்.
சொற்பொருள்: நறவுவாய் உறைக்கும் – தேனை மலர்கள் சொட்டும் (நறவு – ஐகாரம் கெட முற்று உகரம் பெற்று நறவு என்றாயிற்று), நாகு முதிர் – இளமை முதிர்ந்த, நுணவத்து – நுணா மரத்தின் (நுணவு என்றாகி அத்துச் சாரியை பெற்று நுணவத்து என நின்றது), அறைவாய்க் குறுந்துணி அயில் உளி பொருத – வெட்டிய வாயையுடைய சிறிய மரத்துண்டுகளை இரும்பு உளியால் கடைந்து, கை புனை செப்பம் கடைந்த – கையினால் செம்மையாகக் கடைந்து செய்த, மார்பின் – மார்பில், செய் பூங்கண்ணி – நெட்டியால் செய்த மலர்க்கண்ணி, செவி முதல் திருத்தி – செவி அடியில் நெற்றி மாலையாகச் சூடி, நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த – வலிமையான எருத்தினையுடைய உப்பு வணிகருடைய வண்டியுடன் வந்த
மகாஅர் அன்ன மந்தி, மடவோர்
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம்,
வாள் வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி,
தோள் புற மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற 60
கிளர் பூண் புதல்வரொடு, கிலுகிலி ஆடும் (56-61)
பொருளுரை: பிள்ளைகளைப் போன்ற பெண் குரங்கு ஒன்று, மடப்பத்தையுடைய மகளிரின் பற்களை ஒத்த, செறிந்த அழகான முத்துக்களை உள்ளே அடக்கிய, வாளின் வாயைப் போன்ற வாயையுடைய கிளிஞ்சலை, நுண்ணிய இடையையும், பின்புறத்தை மறைக்கின்ற அசையும் ஐந்து பகுதியாகப் பிரிக்கப்பட்ட கூந்தலையுமுடைய உப்பு வணிகரின் மனைவி பெற்ற, விளங்குகின்ற அணிகலன்களை அணிந்த புதல்வர்களுடன், கிலுகிலுப்பை ஆகக் கொண்டு விளையாடும்.
குறிப்பு: நளி நீர் (57) – நச்சினார்க்கினியர் உரை- செறிந்த நீர்மையுடைய, உ. வே. சாமிநாதையர் உரை, குறுந்தொகை 368 – செறிந்த நீர். முத்தைப் போன்ற பற்கள்: அகநானூறு 27 – முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 – இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 – முத்து ஏர் வெண் பல், கலித்தொகை 64 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏய்க்கும் வெண் பல், கலித்தொகை 131 – முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 – எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 – முத்த முறுவல், பொருநராற்றுப்படை 27 – துவர் வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 – நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 – முத்து உறழ் முறுவல். நளி – நளி என் கிளவி செறிவும் ஆகும் – (தொல்காப்பியம், உரியியல் 27).
சொற்பொருள்: மகாஅர் அன்ன – பிள்ளைகளைப் போல (மகாஅர் – அளபெடை), மந்தி – பெண் குரங்கு, மடவோர் நகாஅர் அன்ன – மடப்பத்தையுடைய மகளிரின் பற்களை ஒத்த (நகாஅர் – அளபெடை), நளி நீர் முத்தம் – செறிந்த நீர்மையுடைய முத்து, செறிந்த நீரின் முத்து, செறிந்த அழகான, வாள் வாய் – வாளின் வாய், எருந்தின் – கிளிஞ்சலின், வயிற்றகத்து அடக்கி – உள்ளே அடக்கி, தோற்புறம் மறைக்கும் – பின்புறத்தை மறைக்கும், நல்கூர் நுசுப்பின் – நுண்ணிய இடையையுடைய, உளர் இயல் ஐம்பால் – அசைகின்ற ஐந்து பகுதியாகப் பிரிக்கப்பட்ட கூந்தல், உமட்டியர் – உப்பு வணிகரின் மனைவி, ஈன்ற – பெற்ற, கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் – விளங்குகின்ற அணிகலன்களை அணிந்த புதல்வர்களுடன் கிலுகிலுப்பை விளையாடும்
தத்து நீர் வரைப்பின் கொற்கைக் கோமான்,
தென் புலம் காவலர் மருமான், ஒன்னார்
மண் மாறு கொண்ட மாலை வெண்குடை
கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன், 65
தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின்,
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே, அதாஅன்று (62-67)
பொருளுரை: நிறைந்த நீரை எல்லையாகவுடைய கொற்கையின் மன்னன், தென்னாட்டின் மன்னர் குடியைச் சேர்ந்தவன், பகைவரின் நிலங்களைக் கொண்டவன், முத்து மாலையை அணிந்தவன், வெண்குடை உடையவன், கண்ணுக்கு அழகாகத் தோன்றும் மலர்ச்சரத்தை அணிந்தவன், விரைந்து செல்லும் தேரையுடைய பாண்டியனின் தமிழ் வீற்றிருந்த, பொறுத்தற்கு அரிய மரபையுடைய, மகிழ்வைத் தருகின்ற தெருக்களையுடைய மதுரையில் பெறும் பரிசும் சிறிதே. அது மட்டும் அல்ல,
குறிப்பு: வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40). குறிப்பு: வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40). தாங்குஅருமரபின் (66) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொறுத்தற்கரிய முறைமையினை உடைய, வை. மு. கோபாலகிருஷ்ணமாசாரியார் உரை – தாங்குதற்கு முடியாத நிலைமையினை உடைய.
சொற்பொருள்: தத்து நீர் வரைப்பு – நிறைந்த நீரை எல்லையாகவுடைய, கொற்கைக் கோமான் – கொற்கையின் மன்னன், தென் புலம் காவலர் மருமான் – தென்னாட்டின் மன்னர் குடியைச் சேர்ந்தவன், ஒன்னார் மண் மாறு கொண்ட – பகைவரின் நிலங்களைக் கொண்ட, மாலை – முத்து மாலை, வெண்குடை – வெண்குடை, கண்ணார் கண்ணி – கண்ணுக்கு அழகாகத் தோன்றும் மலர்ச்சரம், கடுந்தேர்ச் செழியன் – விரைந்து செல்லும் தேரையுடைய பாண்டியன், தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின் – தமிழ் வீற்றிருந்த பொறுத்தற்கு அரிய மரபையுடைய, மகிழ்நனை மறுகின் மதுரையும் – மகிழ்வைத் தருகின்ற தெருக்களையுடைய மதுரையும், வறிதே – சிறிதே, அதாஅன்று – அது மட்டும் அல்ல (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று. அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, அளபெடை)
சோழ நாட்டின் பெருமை
நறு நீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
துறு நீர்க் கடம்பின் துணை ஆர் கோதை,
ஓவத்து அன்ன உண் துறை மருங்கில், 70
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் (68-71)
பொருளுரை: நறுமணமான நீரையுடைய பொய்கையின் அடைத்த கரையில் நிற்கும் செறிந்த தன்மையை உடைய கடம்ப மரத்தின் இணைதல் நிறைந்த மாலையைப் போன்று பூத்த மலர்களின், இந்திரகோபத்தைப் போன்று தோன்றும் மலர்த் தாது உதிர்ந்ததால், காண்பதற்கு ஓவியத்தைப் போன்று உள்ள குடிக்கும் நீரையுடைய துறையின் அருகில்,
குறிப்பு: துணை ஆர் கோதை (69) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடம்பின் பூ புனைந்த மாலை போறலின், துணை ஆர் கோதை என்றார். நச்சினார்க்கினியர் உரை – கோதை போல பூத்தலிற் கோதை என்றார்.
சொற்பொருள்: நறு நீர்ப் பொய்கை அடைகரை – நறுமணமான நீரையுடைய பொய்கையின் அடைத்து நிற்கும் கரை, நிவந்த துறு நீர்க் கடம்பின் – செறிந்த தன்மையை உடைய கடம்ப மரத்தின், துணை ஆர் கோதை – இணைதல் நிறைந்த மாலையைப் போன்று பூத்த மலர்கள், ஓவத்து அன்ன – ஓவியத்தைப் போன்று (ஓவம், அத்து சாரியை), உண் துறை மருங்கில் – குடிக்கும் நீரையுடைய துறையின் அருகில், கோவத்து அன்ன – பட்டுப்பூச்சியைப் போன்று, இந்திர கோபம், மூதாய், தம்பலம் (கோவத்து – கோவம், அத்து சாரியை), கொங்கு சேர்பு உறைத்தலின் – மலர்த் தாது உதிர்ந்ததால்
வருமுலை அன்ன வண்முகை உடைந்து
திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை,
ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன,
சேயிதழ் பொதிந்த செம் பொற்கொட்டை, 75
ஏம இன் துணை தழீஇ, இறகு உளர்ந்து
காமரு தும்பி காமரம் செப்பும் (72-77)
பொருளுரை: எழுகின்ற முலையை ஒத்த பெரிய அரும்பு நெகிழ்ந்து அழகிய முகம் போல மலர்ந்த தெய்வத் தன்மையுடைய தாமரை, குற்றமில்லாத உள்ளங்கையில் அரக்கைத் தோய்த்தாற்போல் உள்ள சிவந்த இதழ்கள் சூழ்ந்த, செம்பொன்னால் செய்தாற்போல் உள்ள நடுப்பகுதியின் மீது, தன்னுடைய இன்பமான இனிய துணையைத் தழுவி, சிறகை அசைத்து விருப்பமுடைய ஆண் தும்பிகள் சீகாமரப் பண்ணை இசைக்கும்.
சொற்பொருள்: வருமுலை அன்ன வண் முகை உடைந்து திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை – எழுகின்ற முலையை ஒத்த பெரிய அரும்பு நெகிழ்ந்து அழகிய முகம் போல மலர்ந்த தெய்வத் தன்மையுடைய தாமரை, ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன – குற்றமில்லாத உள்ளங்கையில் அரக்கைத் தோய்த்தாற்போல், சாதிலிங்கம், சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை – சிவந்த இதழ் சூழ்ந்த செம்பொன்னால் செய்தாற்போல் உள்ள நடுப்பகுதி, ஏம இன் துணை தழீஇ – தன்னுடைய இன்பமான இனிய துணையைத் தழுவி (ஏம இன் – ஒருபொருட்பன்மொழி. தழீஇ – அளபெடை), இறகு உளர்ந்து காமரு தும்பி – சிறகை அசைத்து விருப்பமுடைய தும்பிகள் (காமரு – காமர் என்பதன் விகாரம்), காமரம் செப்பும் – சீகாமரப் பண்ணை இசைக்கும்
தண் பணை தழீஇய தளரா இருக்கை,
குணபுலம் காவலர் மருமான், ஒன்னார்
ஓங்கு எயில் கதவம் உருமுச்சுவல் சொறியும் 80
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்,
ஓடாப் புட்கை உறந்தையும் வறிதே, அதாஅன்று (78-83)
பொருளுரை: மருத நிலம் சூழ்ந்த நிலையான குடியிருப்பையுடைய, கிழக்கின்கண் உள்ள நிலத்தின் மன்னர் குடியில் பிறந்தவன். இடி தன்னுடைய கழுத்தினால் உரசும் கதவையுடைய பகைவரின் உயர்ந்த தொங்கும் கோட்டையை அழித்தவன் சோழன். ஒளியுடைய கடகம் அணிந்த பெரிய கைகள் உடையவன். தான் தேடாது அடைந்த நல்ல புகழையுடையவன். நல்ல தேர்களையுடைய சோழனின் குடிமக்கள் நாட்டை விட்டு விலகாத சோழ நாட்டின் உறந்தையில் கிடைக்கும் பரிசும் சிறிதே. அது மட்டும் அன்று,
குறிப்பு: ஓங்கு எயில் கதவம் உருமுச்சுவல் சொறியும் (80) – வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – ஓங்கிய மதிலின் கதவில் உருமேறு தன் கழுத்தைத் தேய்க்கின்ற. எயிலின் கதவம் வானத்து ஓங்கிய தன்மையை விளக்கினார். தூங்கு எயில் (81) – திரிபுர அசுரர்கள் தெய்வத்தன்மை உடைய மூன்று மதில்களை வரத்தால் பெற்று, அவற்றுள் பாதுகாப்போடு இருந்து கொண்டு, தாங்கள் நினைத்தவாறு பறந்து சென்று பல இடங்களைப் பாழ்படுத்தி, தேவர்களை வருத்தியதால், சிவபெருமான் அம்மதில்களை எரித்து அழித்தான். வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40). தட – தடவும் கயவும் நளியும் பெருமை (உரியியல் 24, தொல்காப்பியம்).
சொற்பொருள்: தண் பணை தழீஇய தளரா இருக்கை குண புலம் – மருத நிலம் தழுவிய (சூழ்ந்த),(தழீஇய – அளபெடை), நிலையான குடியிருப்பையுடைய கிழக்கின்கண் உள்ள நிலம், காவலர் மருமான் – மன்னர் குடியில் பிறந்தவன், ஒன்னார் ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும் – ஓங்கி உயர்ந்த பகைவரின் கோட்டைக் கதவில் தன் கழுத்தைத் தேய்க்கும் இடி, தூங்கு எயில் எறிந்த – தொங்கும் கோட்டையை அழித்த, தொடி விளங்கு தடக்கை – ஒளியுடைய கடகம் அணிந்த பெரிய கைகள், நல்லிசை நாடா – தான் தேடாது அடைந்த நல்ல புகழ், நற்றேர்ச் செம்பியன் – நல்ல தேர்களையுடைய சோழன், ஓடாப் புட்கை – ஓடாமைக்குக் காரணமான வலிமை, உறந்தையும் – உறந்தையும், வறிதே – சிறிதே, அதாஅன்று – அது மட்டும் அல்ல (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று. அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, அளபெடை)
கடையெழு வள்ளல்களின் சிறப்பு
பேகன்
வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் (84-87)
பொருளுரை: மழை பொய்க்காமல் பெய்ததால் செழிப்பாக உள்ள மலைப் பக்கத்தில் குளிரால் அது வருந்துகிறது என்று எண்ணி, ஒரு காட்டு மயிலுக்குத் தன் போர்வையைக் கொடுத்த, பெறுவதற்கு அரிதான வலிமையையும் அழகையுமுடைய, ஆவியர் குடியில் பிறந்த அண்ணலும், பெரிய மலையின் தலைவனுமான பேகனும்,
குறிப்பு: பேகன், வையாவிக் கோப்பெரும் பேகன், ஆவியர் குடும்பத்தில் பிறந்தவன், குறுநில மன்னன், பொதினி மலையை உடையவன். பொதினி மலை – இன்றைய பழனி.
சொற்பொருள்: வானம் வாய்த்த – மழை பொய்க்காமல் பெய்ததால், வளமலைக் கவாஅன் – வளமான பக்க மலையில் (கவாஅன் – அளபெடை), கான மஞ்ஞைக்கு – காட்டு மயிலுக்கு, கலிங்கம் நல்கிய – ஆடையைக் கொடுத்த, போர்வையைக் கொடுத்த, அருந்திறல் – பெறுவதற்கு அரிதான வலிமையையுடைய, அணங்கின் – அழகையுடைய, ஆற்றலுடைய, ஆவியர் பெருமகன் – ஆவியர் குடியில் பிறந்த அண்ணல், பெருங்கல் நாடன் – பெரிய மலையின் தலைவன், பேகனும் – பேகனும்
பாரி
……………சுரும்பு உண
நறு வீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறு வீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல் 90
பறம்பின் கோமான் பாரியும் (87 – 91)
பொருளுரை: வண்டுகள் உண்ணுவதற்காகத் தேனைச் சொட்டும் நறுமணமான மலர்களையுடைய நாக மரங்கள் கொண்ட நீண்ட வழியில் உள்ள, சிறிய மலர்களையுடைய முல்லைக் கொடிக்குத் தன் பெரிய தேரினைக் கொடுத்தவனும், நிறைந்த வெள்ளை அருவிகள் மலைச் சரிவிலிருந்து விழும் பறம்பு மலையின் மன்னனுமான பாரியும்,
குறிப்பு: பாரி, வேள் பாரி, வேளிர் குடும்பத்தில் பிறந்தவன், குறுநில மன்னன், பறம்பு மலையை உடையவன், பறம்பு மலை – இன்றைய பிரான் மலை, மதுரைக்கு அருகில் உள்ளது.
சொற்பொருள்: சுரும்பு உண – வண்டுகள் உண்ணுவதற்காக (உண உண்ண என்பதன் விகாரம்), நறு வீ – நறுமணமான மலர்கள், உறைக்கும் – சொட்டும், கொட்டும், தழைக்கும், நாக – நாக மரங்கள், (சுரபுன்னை மரங்கள்), நெடுவழி – நீண்ட பாதை, சிறு வீ முல்லைக்கு – சிறிய மலர்களையுடைய முல்லைக் கொடிக்கு, பெருந்தேர் – பெரிய தேர், நல்கிய – கொடுத்த, பிறங்கு – நிறைந்த, ஒளியுடைய, ஒலிக்கும், வெள்ளருவி – வெள்ளை அருவி, வீழும் – விழும், சாரல் – மலைச் சரிவு, பறம்பின் கோமான் பாரியும் – பறம்பு மலையின் மன்னனான பாரியும்,
காரி
……………………… கறங்கு மணி
வால் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல் மொழி இரவலர்க்கு ஈந்த,
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல் தொடித் தடக் கை காரியும் (91-95)
பொருளுரை: ஒலிக்கும் மணிகளையும் வெள்ளைப் பிடரி மயிரினையுமுடைய குதிரைகளுடன், உலகத்தோர் வியக்கும்படி, அன்பான நல்ல சொற்களைப் பொருள் வேண்டி வருபவர்களுக்கு அளிப்பவனும், சினம் மிகுந்த, சிறப்புடைய, இமைக்கும், அச்சத்தை உண்டாக்கும் பெரிய வேலினை உடையவனும், சுழல இட்ட கடிகைகளையுடைய (வளையல்களையுடைய) பெரிய கைகளையுடைய காரியும்,
குறிப்பு: தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24). காரி, மலையமான் திருமுடிக்காரி, குறுநில மன்னன், திருக்கோவிலூர் இவனது ஊர், அது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது.
சொற்பொருள்: கறங்கு மணி – ஒலிக்கும் மணிகள், வால் உளைப் புரவியொடு – வெள்ளைப் பிடரி மயிரையுடைய குதிரைகளுடன், வையகம் மருள – உலகத்தோர் வியக்க, ஈர நல் மொழி – அன்பான நல்ல சொற்கள், இரவலர்க்கு – பொருள் வேண்டி வந்தவர்களுக்கு, ஈந்த – கொடுத்த, அழல் – சினம், திகழ்ந்து – சிறந்து, இமைக்கும் – மின்னும், அஞ்சுவரு – அச்சம் உண்டாக்கும், நெடுவேல் – பெரிய வேல், கழல் தொடி – சுழல இட்ட வீர வளை (வினைத்தொகை), தடக் கை காரியும் – பெரிய கைகளையுடைய காரியும்
ஆய் அண்டிரன்
…………… நிழல் திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்து புலர் திணிதோள்
ஆர்வ நன் மொழி ஆயும் (95-99)
பொருளுரை: ஒளியுடன் விளங்கும் நீல மணியையும், பாம்பு கொடுத்த ஆடையையும், ஆல மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிவனுக்கு விருப்பத்துடன் கொடுத்தவனும், வில்லைத் தாங்கிய சந்தனம் உலர்ந்த உறுதியான தோளினை உடையவனும், ஆர்வத்துடன் நல்ல சொற்களைக் கூறுபவனுமான ஆயும்,
குறிப்பு: அமர்ந்தனன் கொடுத்த – முற்றெச்சம். ஆய், ஆய் அண்டிரன், குறுநில மன்னன், பொதியை மலையை உடையவன், இன்றைய அகத்தியர் மலை, கன்னியாகுமரி அருகில் உள்ளது.
சொற்பொருள்: நிழல் திகழ் – ஒளியுடன் விளங்கும், நீல – நீலமணி, நாகம் நல்கிய – பாம்பு கொடுத்த, கலிங்கம் – ஆடை, ஆல் அமர் செல்வற்கு – ஆல மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிவனுக்கு, அமர்ந்தனன் கொடுத்த – விருப்பத்துடன் கொடுத்த , சாவம் – வில், தாங்கிய – தாங்கிய, சாந்து புலர் – சந்தனம் உலர்ந்த, திணிதோள் – உறுதியான தோள், ஆர்வ நன்மொழி ஆயும் – ஆர்வமுடைய நல்ல சொற்களையுடைய ஆயும்,
அதிகன்
……………………….. மால் வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி 100
அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த,
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும் (99-103)
பொருளுரை: உயர்ந்த மலையின் கமழும் பூக்களையுடைய மலைச் சரிவில் உள்ள அழகான அமிர்தமாகிய, விளைந்த இனிய நெல்லிக்கனியை, ஒளவைக்குக் கொடுத்தவனும், வலிமை உடைய சினம் நின்று எரியும் பெரிய வேலையும், ஒலிக்கும் கடலைப் போன்ற படையை உடையவனுமாகிய அதிகனும்,
குறிப்பு: அதிகன், அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகன், அதியன், அஞ்சி, அதிகமான், குறுநில மன்னன், அதிகர் குடும்பத்தில் பிறந்தவன், தகடூரில் ஆண்டவன். தகடூர் – இன்றைய தருமபுரி.
சொற்பொருள்: மால் வரை – உயர்ந்த மலை, பெருமையுடைய மலை, கமழ் – மணக்கும், பூஞ்சாரல் – பூக்களையுடைய மலைச் சரிவு, கவினிய – அழகான, நெல்லி – நெல்லிகாய், அமிழ்து – அமிர்தம், விளை – முற்றிய, தீம் கனி – இனிய கனி, ஒளவைக்கு ஈந்த – ஒளவைக்குக் கொடுத்த, உரவுச் சினம் கனலும் – வலிமை உடைய சினம் நின்று எரியும், ஒளி திகழ் – ஒளியுடன் விளங்கும், நெடுவேல் – பெரிய வேல், அரவக்கடல் தானை – ஒலிக்கும் கடலைப் போன்ற படையும், அதிகனும் – அதிகனும்
நள்ளி
…………………………. கரவாது
நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த முனை விளங்கு தடக்கை, 105
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு
நளி மலை நாடன் நள்ளியும் (103-107)
பொருளுரை: தங்கள் மனதில் உள்ளதை மறைக்காது, தன்னிடம் அன்புடன் இருப்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை இடையூறு இல்லாது நன்றாக வாழ்வதற்காக எல்லையில்லாதுப் பொருட்களைக் கொடுத்தவனும், போரில் வெற்றி பெற்ற பெரிய கைகளையுடையவனும், துளியையுடைய மழை பொய்யாது பொழியும், காற்றுத் தங்கும் உயர்ந்த உச்சிகள் கொண்ட அடர்ந்த மலைகளையுடைய நாட்டையுடைய நள்ளியும்,
குறிப்பு: நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), நளி என் கிளவி செறிவும் ஆகும், (தொல்காப்பியம், உரியியல் 27). நள்ளி, கண்டீரக் கோப்பெரு நள்ளி, குறுநில மன்னன், கண்டீர நாட்டை ஆண்டவன், இன்றைய நீலகிரி.
சொற்பொருள்: கரவாது – மறைக்காது, நட்டோர் – நண்பர்கள், உவப்ப – மகிழும்படி, நடைப்பரிகாரம் – இடையூறுகள் நீங்கி வாழ்க்கையை வாழ்வதற்கு உரிய பொருட்கள் (பரிகாரம் – பொருட்கள், இடையூறு நீக்குகை), முட்டாது – எல்லை இல்லாது, கொடுத்த – கொடுத்த, முனை விளங்கு – போரில் வெற்றிப் பெற்ற, தடக்கை – பெரிய கைகள், துளி மழை பொழியும் – மழைத் துளி பெய்யும், வளி துஞ்சு – காற்று தங்கும், நெடுங்கோட்டு – உயர்ந்த உச்சிகள் கொண்ட, நளி மலை நாடன் நள்ளியும் – அடர்ந்த மலைகளையுடைய நாட்டையுடைய நள்ளியும், பெரிய மலைகளையுடைய நாட்டையுடைய நள்ளியும்
ஓரி
…………………….. நளி சினை
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும் பொறை நல் நாடு கோடியர்க்கு ஈந்த,
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த 110
ஓரிக் குதிரை ஓரியும் (107-111)
பொருளுரை: அடர்ந்த கிளைகளில் நறுமணமான மலர்கள் நெருங்கி இருந்த இளமை முதிர்ந்த சுரபுன்னை மரங்களையும் சிறிய மலைகளையும் உடைய நிலங்களைக் கூத்தாடுபவர்களுக்குக் கொடுத்தவனும், காரி என்ற பெயரையுடைய குதிரையையுடைய காரி என்பவனோடு போரிட்டவனும், ஓரி என்ற பெயரையுடைய குதிரையையுடைய ஓரியும்,
குறிப்பு: காரிக்கும் ஓரிக்கும் நடந்த போர் பற்றின குறிப்புகள்: அகநானூறு 209, நற்றிணை 320, சிறுபாணாற்றுப்படை (110-111) ஆகிய பாடல்களில் உள்ளன. ஓரியைக் கொன்று, பின் ஓரியின் கொல்லி மலையைச் சேர மன்னனுக்குப் பரிசாகக் காரி கொடுத்தான் (அகநானூறு 209). பொ. வே. சோமசுந்தரனார் உரை – காரிக்குதிரை – கரிய குதிரையுமாம், ஓரிக்குதிரை – பிடரி மயிரையுடைய குதிரையுமாம். நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), நளி என் கிளவி செறிவும் ஆகும், (தொல்காப்பியம், உரியியல் 27). ஓரி, வல்வில் ஓரி, குறுநில மன்னன், கொல்லி மலையை உடையவன், கொல்லி மலை நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது.
சொற்பொருள்: நளி – அடர்ந்த, பெரிய, சினை – மரத்தின் கிளைகள், நறும் போது – நறுமணமான மலர்கள், கஞலிய – நெருங்கின, பொலிந்த, நாகு – இளமை, முதிர் – முதிர்ந்த, நாகத்து – சுரபுன்னை மரங்களுடைய, குறும் பொறை – சின்ன மலைகள், நல்நாடு – நல்ல நிலங்கள், கோடியர்க்கு – கூத்தாடுபவர்களுக்கு, ஈந்த – ஈன்ற, காரிக் குதிரை – காரி என்ற பெயரையுடைய குதிரை, காரியொடு – காரியுடன், மலைந்த – போரிட்ட, ஓரிக் குதிரை ஓரியும் – ஓரி என்ற பெயரையுடைய குதிரையையுடைய ஓரியும்
……………………. என ஆங்கு
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் (111-112)
பொருளுரை: என அந்த ஏழு பேர், எழுந்த போர்களில் வெற்றி அடைந்தவர்கள், கணைய மரம் போன்ற திண்மையான தோள்களை உடையவர்கள்.
சொற்பொருள்: என ஆங்கு எழு சமம் கடந்த – என அங்கு ஏழு பேர் எழுந்த போர்களில் வெற்றி பெற்றோர், எழு உறழ் திணி தோள் – கணைய மரம் போன்ற திண்மையான தோள்களை உடையவர்கள் (எழு – கணைய மரம், கோட்டைக் கதவில் உள்ள குறுக்கு மரம், உறழ் – உவம உருபு)
நல்லியக்கோடனின் ஈகைச்சிறப்பு
எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்,
விரிகடல் வேலி வியலகம் விளங்க,
ஒரு தான் தாங்கிய உரனுடை நோன் தாள் (113-115)
பொருளுரை: அக்கடையெழு வள்ளல்கள் மேற்கொண்ட ஈகையாகிய பாரத்தை, பரந்த கடலை வேலியாகக் கொண்ட அகன்ற உலகம் தழைக்க, ஒருவனாகத் தானே தாங்கிய வலிமையுடைய முயற்சியை உடையவன் நல்லியக்கோடன்.
சொற்பொருள்: எழுவர் பூண்ட ஈகை – ஏழு பேர் மேற்கொண்ட ஈகை, செந்நுகம் – கொடையாகிய பாரம், செம்மையான பாரம் (நுகம் – காளையின் கழுத்தில் பூட்டப்படும் மரம்), விரிகடல் வேலி வியலகம் விளங்க – பரந்த கடலை வேலியாகக் கொண்ட அகன்ற உலகம் தழைக்க, ஒரு தான் தாங்கிய உரனுடை நோன் தாள் – ஒருவனாகத் தானே பொறுத்த வலிமையுடைய முயற்சியை உடையவன்
நறு வீ நாகமும், அகிலும், ஆரமும்,
துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய,
பொரு புனல் தரூஉம் போக்கறு மரபின்,
தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய,
நல் மா இலங்கை மன்னருள்ளும், 120
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய்வாள்
உறு புலித் துப்பின் ஓவியர் பெருமகன்,
களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி
பிடிக்கணம் சிதறும் பெயல் மழைத் தடக்கை
பல் இயக் கோடியர் புரவலன் (116-125)
பொருளுரை: நறுமணமுடைய மலர்களை உடைய சுரபுன்னை, அகில், சந்தனம் ஆகிய மரங்களின் துண்டுகளை நீராடும் துறையில் உள்ள பெண்களின் தோள்களுக்குத் தெப்பமாகக் கொண்டு வந்து தரும், கரையை இடிக்கின்ற ஆற்றினையுடைய, தொன்மையான பெருமைமிக்க இலங்கையின் பெயரை, நகரம் தோன்றிய பொழுதில் இருந்து கொண்ட, அழித்தற்கு அரிய மரபை உடைய, மாவிலங்கையின் சிறந்த மாவிலங்கை மன்னர்கள் பலருள்ளும் மறு இல்லாது விளங்கும், பழியில்லாத குறியைத் தப்பாத வாளினையுடைய, புலியைப் போன்ற மிகுந்த வலிமையுடையவன் அவன். ஓவியர் குடியில் பிறந்த பெருமான். களிற்றைச் செலுத்தியதால் ஏற்பட்ட தழும்பு உடைய அசையும் வீரக் கழல்களை அணிந்த திருத்தமான அடிகளையும், பெண் யானைகளை வாரி வழங்கும் மழையைப் போன்ற வள்ளன்மையுடைய பெரிய கைகளையும் உடையவன். பல இசைக் கருவிகளையுடைய கூத்தர்களைப் பாதுகாப்பவன்.
குறிப்பு: புறநானூறு 176 – பெரு மாவிலங்கைத் தலைவன் சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக்கோடனை. தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய நல் மா இலங்கை (119) – நச்சினார்க்கினியர் உரை – கருப்பித்த முகூர்த்தத்திலே பழையதாகிய பெருமையையுடைய இலங்கையின் பெயரைப்பெற்ற நன்றாகிய பெருமையுடைய இலங்கை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ராவணன் ஆண்ட வலி மிக்க பழைய இலங்கை என்றவாறு. புறநானூறு பாடல் 158 – இதில் கடையெழு வள்ளல்களைப் பற்றின குறிப்பு உள்ளது. தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24). ஓவியர் பெருமகன் – புறநானூறு 176வது பாடல் உரையில் – இவன் ஓவியர் குடியில் பிறந்தவன் என்றும் அறியலாம். ஓவியர் மா நாடு என்பது ஓய்மா நாடு என மருவியது போலும். உறு -உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).
சொற்பொருள்: நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் – நறுமணமுடைய மலர்களை உடைய சுரபுன்னையும் அகிலும் சந்தனமும், துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய – நீராடும் துறையில் உள்ள பெண்களின் தோள்களுக்குத் தெப்பமாக, பொரு புனல் தரூஉம் – கரையை இடிக்கின்ற நீர் கொண்டு வந்து தரும் (தரூஉம் – அளபெடை), போக்கறு மரபின் – அழித்தற்கு அரிய மரபை உடைய, தொல் மா இலங்கை – தொன்மையான பெருமை மிக்க இலங்கை, கருவொடு பெயரிய – நகரத்தை அமைக்கத் தொடங்கியபோதே பெயரைப்பெற்ற, நல் மா இலங்கை – சிறந்த மாவிலங்கை, மன்னருள்ளும் – மன்னர்கள் பலருள்ளும், மறு இன்றி விளங்கிய – மறு இல்லாது விளங்கிய, வடு இல் வாய்வாள் – பழியில்லாத குறியைத் தப்பாத வாள், உறுபுலித் துப்பின் – புலியைப் போன்ற மிகுந்த வலிமையுடன் (உறு – மிக்க), ஓவியர் பெருமகன் – ஓவியர் குடியில் பிறந்த பெருமான், களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி – களிற்றைச் செலுத்தியதால் ஏற்பட்ட தழும்பு உடைய வீரக்கழல் அசையும் திருத்தமான அடிகள், பிடிக் கணம் சிதறும் பெயல் மழைத் தடக்கை – பெண் யானைகளை வாரி வழங்கும் மழையைப் போன்ற வள்ளன்மையுடைய பெரிய கைகள், பல் இயம் கோடியர் புரவலன் – பல இசைக் கருவிகளையுடைய கூத்தர்களைப் பாதுகாப்பவன்
பரிசு பெற்ற பாணன்
மன்னனைப் பாடிச் சென்ற முறை
………………………………………………………..பேர் இசை
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு,
தாங்கரு மரபின், தன்னும், தந்தை
வான் பொரு நெடு வரை வளனும் பாடி,
முன் நாள் சென்றனம் ஆக (125-129)
பொருளுரை: பெரும் புகழையுடைய நல்லியக்கோடனைக் காண்பதற்கு, விரும்பிய கொள்கையுடன், மற்றவர்களால் பொறுத்தற்கு அரிய மரபையுடைய அவனைப் பற்றியும் அவனுடைய தந்தையைப் பற்றியும் அவனுடைய வானைத் தீண்டும் உயர்ந்த மலையின் வளமையையும் பற்றிப் பாடிச் சில நாட்களுக்கு முன் நாங்கள் அவனிடம் சென்றோமாக,
குறிப்பு: தாங்குஅருமரபின் (127) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொறுத்தற்கரிய குடிப்பிறந்தோர்க்கு உரிய முறைமைகளை உடைய, வை. மு. கோபாலகிருஷ்ணமாசாரியார் உரை – பிறரால் பொறுத்தற்கு அரிய குடிப்பிறந்தோரின் முறைமைகளையுடைய.
சொற்பொருள்: பேர் இசை நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு – பெரும் புகழையுடைய நல்லியக்கோடனைக் காண்பதற்கு விரும்பிய கொள்கையுடன், தாங்கு அரு மரபின் – மற்றவர்களால் பொறுத்தற்கு அரிய மரபையுடைய, தன்னும் தந்தை வான் பொரு நெடு வரை வளனும் பாடி முன் நாள் சென்றனம் ஆக – அவனைப் பற்றியும் அவனுடைய தந்தையைப் பற்றியும் அவனுடைய வானைத் தீண்டும் உயர்ந்த மலையின் வளமையையும் பற்றிப் பாடிச் சில நாட்களுக்கு முன் நாங்கள் சென்றோமாக (வளன் – வளம் என்பதன் போலி)
நல்லியக்கோடனைக் காணுமுன்
இருந்த வறுமை நிலை
……………….. இந்நாள்
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை, 130
கறவாப் பால் முலை கவர்தல் நோனாது,
புனிற்று நாய் குரைக்கும், புல்லென் அட்டில் (129-132)
பொருளுரை: இந்த நாளில், திறக்காத கண்களையுடைய வளைந்த காதுகளையுடைய குட்டிகள், தன் முலைகளிலிருந்து பால் உண்ணுதலை, தன் பசி மிகுதியால் பொறுக்க முடியாத, அண்மையில் ஈன்ற தாய் நாய் குரைக்கும், புன்மையுடைய எங்கள் அடுக்களையில்.
குறிப்பு: கறவா பால் முலை (131) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிறரால் கறக்கப்படாத பாலினையுடைய முலை. புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (உரியியல் 79, தொல்காப்பியம்). குருளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (மரபியல் 1, தொல்காப்பியம்).
சொற்பொருள்: இந்நாள் திறவாக் கண்ண சாய் செவிக் குருளை – இந்த நாளில் திறக்காத கண்களையுடைய வளைந்த காதுகளையுடைய குட்டிகள், கறவாப் பால் முலை கவர்தல் – பால் கறக்கப்படாத முலைகளிலிருந்து உண்ணுதல், நோனாது – தன் பசி மிகுதியால் பொறுக்க முடியாது, புனிற்று நாய் குரைக்கும் – அண்மையில் ஈன்ற நாய் குரைக்கும், புல்லென் அட்டில் – புன்மையுடைய எங்கள் அடுக்களை
காழ் சோர் முது சுவர்க் கணச் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி,
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல், 135
வளைக் கை கிணைமகள், வள் உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை,
மடவோர் காட்சி நாணிக் கடை அடைத்து,
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்,
அழி பசி வருத்தம் வீட………… (133-140)
பொருளுரை: கூரையின் கைம்மரம் தளர்ந்து விழும் பழைய சுவரில் கூட்டமாகிய கறையான் அரித்த புழுதியில் உள்துளையுடைய காளான் பூத்த, வருந்துவதற்குக் காரணமான பசியால் ஒடுங்கிய மெலிந்த இடையையும், வளையல் அணிந்த கையையும் உடைய என் கிணைப் பறையை அடிக்கும் மனைவி, அவளுடைய பெரிய நகத்தினால் கிள்ளிக் கொணர்ந்த குப்பையில் வளரும் வேளைக்கீரையை உப்பு இல்லாமல் வேக வைத்து, பழித்துப் பேசுபவர்கள் காண்பதை நாணி, கதவை அடைத்து விட்டுப் பெரிய சுற்றத்தார் கூட்டத்துடன் ஒன்றாக இணைந்து உண்ணும் நிலைமையையுடைய அழிக்கும் பசியினால் உண்டான வருத்தம் நீங்க,
குறிப்பு: கிணைமகள் (136) – நச்சினார்க்கினியர் உரை – கிணைப் பறை கொட்டுவோனுடைய மனைவி, மகள். இரும்பேர் ஒக்கல் – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 – கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை – புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 – மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 – கரிய பெரிய சுற்றத்தார், பொ. வே. சோமசுந்தரனார் உரை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அகநானூறு 301 – மிகப் பெரிய சுற்றத்தார்.
சொற்பொருள்: காழ் சோர் முது சுவர் – கூரையின் கைம்மரம் தளர்ந்து விழும் பழைய சுவரில், கணச் சிதல் அரித்த பூழி – கூட்டமாகிய கறையான் அரித்த புழுதி, பூத்த புழல் காளாம்பி – உள்துளையுடைய காளான் பூத்த, ஒல்குபசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் – வருந்துவதற்குக் காரணமான பசியால் ஒடுங்கிய மெலிந்த இடை, வளைக் கை கிணைமகள் – கையில் வளையல் அணிந்த கிணையை அடிக்கும் பெண், உகிர்க் குறைத்த குப்பை வேளை – பெரிய நகத்தினால் கிள்ளின குப்பையில் வளரும் வேளைக் கீரை, உப்பு இலி வெந்த – உப்பு இல்லாமல் வெந்த, மடவோர் காட்சி நாணி – பழித்துப் பேசுபவர்கள் காண்பதை நாணி, கடை அடைத்து – கதவை அடைத்து, இரும்பேர் ஒக்கலொடு – மிகப்பெரிய சுற்றத்தார் கூட்டத்துடன் (இரும்பேர் – ஒருபொருட்பன்மொழி), ஒருங்கு உடன் மிசையும் – ஒன்றாக இணைந்து உண்ணும், அழி பசி வருத்தம் வீட – அழிக்கும் பசியினால் உண்டான வருத்தம் நீங்க
நல்லியக்கோடனின் வறுமை போக்கிய வள்ளன்மை
…………………. பொழி கவுள்
தறுகண் பூட்கைத் தயங்கு மணி மருங்கின்
சிறுகண் யானையொடு, பெருந்தேர் எய்தி,
யாம் அவண் நின்றும் வருதும். (140-143)
பொருளுரை: மதம் வடிகின்ற கன்னத்தையும், கொடுமையுடைய வலிமையையும், அசையும் மணிகளையும், சிறிய கண்களையுமுடைய யானையுடன், பெரிய தேரினையையும் அவனிடம் பெற்றவர்களாக, அங்கிருந்து நாங்கள் வருகின்றோம்.
குறிப்பு: தறுகண் பூட்கை (141) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விரைந்து கொல்லுதல் செய்யும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – கொடுமையுடைய வலிமை.
சொற்பொருள்: பொழி கவுள் – மதம் வடிகின்ற கன்னம், தறுகண் பூட்கை – கொடுமையுடைய வலிமை, கொலைத்தன்மை மிக்க, தயங்கு மணி மருங்கின் சிறு கண் யானையோடு – அசையும் மணியை உடைய சிறிய கண்களையுடைய யானையுடன், பெருந்தேர் எய்தி அவண் நின்றும் வருதும் – பெரிய தேரினை அடைந்து அங்கிருந்து நாங்கள் வருகின்றோம்
பாணனின் ஆற்றுப்படுத்தும் பண்பு
……………………… நீயிரும்
இவண் நயந்து இருந்த இரும்பேர் ஒக்கல்
செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின் (143-145)
பொருளுரை: நீங்களும் இங்கு உங்களை விரும்பி இருக்கும் மிகப் பெரிய சுற்றத்துடன், உயர்ந்த உள்ளத்துடன் செல்வீர் ஆயின்,
குறிப்பு: இரும்பேர் ஒக்கல் – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 – கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை – புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 – மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 – கரிய பெரிய சுற்றத்தார், பொ. வே. சோமசுந்தரனார் உரை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அகநானூறு 301 – மிகப் பெரிய சுற்றத்தார்.
சொற்பொருள்: நீயிரும் இவண் நயந்து இருந்த இரும்பேர் ஒக்கல் – நீங்களும் இங்கு உங்களை விரும்பி இருக்கும் மிகப்பெரிய சுற்றத்துடன் (இரும்பேர் – ஒருபொருட் பன்மொழி), செம்மல் உள்ளமொடு செல்குவீர் ஆயின் – உயர்ந்த உள்ளத்துடன் செல்வீர் ஆயின்
எயிற்பட்டினத்திற்குச் செல்லும் வழியும்
பரதவர் தரும் விருந்தும்
அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும்,
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்,
கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்,
நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்,
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர, 150
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி
மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனி நீர்ப் படுவின் பட்டினம் படரின் (146-153)
பொருளுரை: அலையும் நீரையுடைய கடற்கரையில் அன்னத்தைப் போன்ற தோற்றத்தையுடைய மலர்களைத் தாழை மரங்கள் பூக்கவும், வேனில் காலத்தின் துவக்கத்தில் மலர்ந்த செருந்தி மலர்கள் கண்டாரைப் பொன்னென மருளச் செய்யவும், முதல் சூலையுடைய முள்ளிச் செடிகள் நீலமணியைப் போன்ற மலர்களைப் பூக்கவும், நெடிய தாளினையுடைய புன்னை மரங்கள் முத்துப் போன்ற அரும்புகொள்ளவும், கடற்கரையின் வெண்மணலில் கடல் நீர் படர்ந்து ஏற, புலவர் பாடும்படியான சிறப்புடைய நெய்தல் நிலத்தில் உள்ள நீண்ட வழியில் நீலமணியைப் போன்ற நீர் சூழ்ந்த இடங்களையும், மதிலையும், மதிலைத் தன் பெயரில் கொண்ட, குளிர்ந்த நீரையுடைய குளங்களையும் உடைய, எயிற்பட்டினத்திற்குச் செல்வீர் ஆயின்,
சொற்பொருள்: அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும் – அலையும் நீரையுடைய கடற்கரையில் அன்னத்தைப் போன்ற தோற்றத்தையுடைய மலர்களைத் தாழை மரங்கள் பூக்கவும், தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும் – வேனில் காலத்தின் துவக்கத்தில் மலர்ந்த செருந்தி மலர்கள் கண்டாரைப் பொன்னென மருளச் செய்யவும், கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் – முதிர்ந்த/முதல் சூலையுடைய முள்ளிச் செடிகள் நீலமணியைப் போன்ற மலர்களைப் பூக்கவும், நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும் – நெடிய தாளினையுடைய (அடிப்பகுதியையுடைய) புன்னை மரங்கள் முத்துப் போல் அரும்புகொள்ளவும், கானல் வெண்மணல் கடல் உலாய் நிமிர்தர – கடற்கரையின் வெண்மணலில் கடல் படர்ந்து ஏற, பாடல் சான்ற நெய்தல் நெடுவழி – புலவர் பாடும்படியான சிறப்புடைய நெய்தல் நிலத்தில் உள்ள நீண்ட வழி, மணிநீர் வைப்பு மதிலோடு – நீலமணியைப் போன்ற நீர் சூழ்ந்த ஊர்களையுடைய மதிலையுடைய, பெயரிய – மதிலைத் தன் பெயரில் கொண்ட (எயில் – மதில்), பனி நீர்ப் படுவின் பட்டினம் – குளிர்ந்த நீரையுடைய குளங்களையுடைய எயிற்பட்டினம், படரின் – செல்வீர் ஆயின்
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன,
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின், 155
கரும் புகைச் செந்தீ மாட்டிப், பெருந்தோள்
மதி ஏக்கறூஉம் மாசு அறு திருமுகத்து
நுதி வேல் நோக்கின் நுளைமகள் அரித்த
பழம் படு தேறல் பரதவர் மடுப்ப,
கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான், 160
தளை அவிழ் தெரியல் தகையோற் பாடி
அறல் குழல் பாணி தூங்கியவரொடு,
வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவீர் (154-163)
பொருளுரை: உயர்ந்த ஒட்டகம் துயில் கொண்டிருந்தாற்போல் மிகுந்த அலைகள் கொண்டு வந்து குவித்த நறுமணமுடைய அகில் மரத்தின் விறகினால் கரிய புகையையுடைய சிவந்த நெருப்பைக் கொளுத்தி, பெரிய தோளினையும், நிலாவும் ஏங்கும்படியான மாசற்ற அழகிய முகத்தில் கூர்மையான வேலைப் போன்ற கண்களையும் உடைய பரதவர் பெண் அரித்த, பழையதாகிய கள்ளைப் பரதவர் உங்களுக்குக் கொணர்ந்துக் குடிக்கக் கொடுப்பார்கள். மலர்க் கொத்துக்களையுடைய தோட்டங்களை உடைய கிடங்கில் என்னும் ஊர்க்கு மன்னன், அரும்பு அவிழ்ந்த (மலர்ந்த) மாலையை அணிந்த நல்லியக்கோடனைப் பாடி, தாள இறுதி உடைய குழலின் தாளத்திற்கு ஆடும் விறலியருடன் நீங்கள் உலர்ந்த குழல் மீன் குழம்பை மனைதோறும் மனைதோறும் பெறுவீர்.
குறிப்பு – அறல் (162) – தாள இறுதி. பாணி – தாளம். வயின் (163) – இடம். இங்கு மனைக்கு ஆகுபெயர்.
சொற்பொருள்: ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன – உயர்ந்த ஒட்டகம் துயில் கொண்டிருந்தாற்போல், வீங்கு திரை கொணர்ந்த – மிகுந்த அலைகள் கொணர்ந்த, விரை மர விறகின் கரும் புகைச் செந்தீ மாட்டி – நறுமணமுடைய அகில் மரத்தின் விறகினால் கரிய புகையையுடைய சிவந்த நெருப்பைக் கொளுத்தி, பெருந்தோள் மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து நுதி வேல் நோக்கின் நுளைமகள் – பெரிய தோளினையும் நிலாவும் ஏங்கும்படியான மாசற்ற அழகிய முகத்தில் கூர்மையான வேலைப் போன்ற கண்களையுடைய பரதவர் பெண் (ஏக்கறூஉம் – அளபெடை), அரித்த பழம்படு பரதவர் மடுப்ப – அரித்த பழையதாகிய கள்ளைப் பரதவர் உங்களுக்குக் கொணர்ந்துக் குடிக்கக் கொடுப்பார்கள், கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான் – மலர்க் கொத்துக்களை உடைய தோட்டங்களை உடைய கிடங்கில் என்னும் ஊர்க்கு மன்னன், தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி – அரும்பு அவிழ்ந்த (மலர்ந்த) மாலையை அணிந்த நல்லியக்கோடனைப் பாடி, அறல் குழல் பாணி தூங்கியவரொடு – தாள இறுதி உடைய குழலின் தாளத்திற்கு ஆடும் விறலியருடன், வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவீர் – உலர்ந்த குழல் மீன் குழம்பை எல்லா இடங்களிலும் (மனைதோறும் மனைதோறும்) பெறுவீர்
வேலூர் செல்லும் வழியும்
எயினர் தரும் விருந்தும்
பைந்நனை அவரை பவழம் கோப்பவும்,
கரு நனைக் காயா கண மயில் அவிழவும், 165
கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவும்,
செழுங்குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்,
கொல்லை நெடு வழிக் கோபம் ஊரவும்,
முல்லை சான்ற முல்லை அம் புறவின்
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கிச் 170
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கித்
திறல் வேல் நுதியின் பூத்த கேணி,
விறல் வேல் வென்றி வேலூர் எய்தின் [164-173]
பொருளுரை: பசிய அரும்புகளையுடைய அவரைக் கொடி பவளம் போன்ற பூக்களைத் தொடுப்பவும், கருமையான காயா மலர்கள் கூட்டமாக இருக்கும் மயிலின் கழுத்தைப் போன்று மலரவும், தடித்த முசுண்டைக் கொடிகள் சிறிய பனை இலைப் பெட்டியைப் போலும் உள்ள மலர்களை மலரவும், பெரிய காந்தள் மலர்க் குலைகள் கைகள் போன்று மலரவும், கொல்லையில் உள்ள நீண்ட வழியில் இந்திரகோபம் (மூதாய்) ஊர்ந்து இருக்கவும், முல்லை ஒழுக்கம் பொருந்திய முல்லைக் கொடிகள் உடைய முல்லைக் காட்டில், மலை இடுக்குகளில் குதிக்கும் அருவிகளையுடைய பெரிய மலையில் ஞாயிறு மூழ்கிய நேரத்தில் வானை நோக்கி, வலிமை மிக்க வேலின் நுனியைப் போல உள்ள மலர்கள் பூத்த குளங்களையுடைய வெற்றியுடைய வேலால் வெற்றி பொருந்திய , வேலூரை நீங்கள் அடைந்தால்,
குறிப்பு – கொட்டம் (166) – நச்சினார்க்கினியர் உரை – பனங்குருத்தால் செய்விக்கப்படும் சிறிய பெட்டி, கொட்டை – நூற்கின்ற கொட்டையுமாம். முல்லை சான்ற கற்பு: முல்லை சான்ற முல்லை அம் புறவின் (169) – நச்சினார்க்கினியர் உரை – கணவன் கூறிய சொற்பிழையாது இல்லிலிருந்து நல்லறம் செய்து ஆற்றி இருந்த தன்மை அமைந்த. அகநானூறு 274 – முல்லை சான்ற கற்பின், நற்றிணை 142 – முல்லை சான்ற கற்பின், பரிபாடல் 15 – முல்லை முறை, சிறுபாணாற்றுப்படை 30 – முல்லை சான்ற கற்பின், சிறுபாணாற்றுப்படை 169 – முல்லை சான்ற முல்லை அம் புறவின், மதுரைக்காஞ்சி 285 – முல்லை சான்ற புறவு.
சொற்பொருள்: பைந்நனை அவரை பவழம் கோப்பவும் – பசிய அரும்புகளையுடைய அவரைக் கொடி பவளம் போன்ற பூக்களைத் தொடுப்பவும், கரு நனைக் காயா கண மயில் அவிழவும் – கருமையான காயா மலர்கள் கூட்டமாக இருக்கும் மயிலின் கழுத்தைப் போன்று மலரவும், கொழுங்கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் – தடித்த முசுண்டைக் கொடிகள் கொட்டம் போலும் உள்ள மலர்களை மலரவும், Rivea ornata, Leather-berried bindweed, செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும் – பெரிய காந்தள் மலர்க் குலைகள் கைகள் போன்று மலரவும், கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும் – கொல்லையில் உள்ள நீண்ட வழியில் இந்திரகோபம் (மூதாய் ) ஊர்ந்து இருக்கவும், முல்லை சான்ற முல்லை அம் புறவின் – முல்லை ஒழுக்கம் பொருந்திய முல்லைக் கொடிகள் உடைய முல்லைக் காட்டில், விடர்கால் அருவி – மலை இடுக்குகளில் குதிக்கும் அருவி, வியன் மலை மூழ்கிச் சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி – பெரிய மலையில் ஞாயிறு மூழ்கிய நேரத்தில் வானை நோக்கி, திறல் வேல் நுதியின் பூத்த – வலிமை மிக்க வேலின் நுனியைப் போல பூத்த, கேணி – குளம், நீர்நிலை, ஊற்று நீர்க் கூவல், விறல் வேல் வென்றி – வெற்றியுடைய வேலால் வெற்றி பொருந்திய, வேலூர் எய்தின் – வேலூரை அடைந்தால்
உறுவெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை
எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ்சோறு, 175
தேமா மேனி சில் வளை ஆயமொடு,
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர் [174-177]
பொருளுரை: மிகுந்த வெயிலுக்கு வருந்துகின்ற வெப்பம் விளங்குகின்ற குடிசைகளில் உள்ள எயினக் குலத்து மகளிர், இனிய புளியை இட்டுச் சமைத்த வெப்பமான சோற்றை, இனிய மாமரத்தின் தளிர்போன்ற மேனியையும் சில கை வளையல்களையும் அணிந்த நும் குடும்பத்தின் பெண்களோடு, நீவீர் ஆமான் சூட்டு இறைச்சியுடன் நும் பசி கெடுமாறு பெறுவீர்.
குறிப்பு – அகநானூறு 394 – இன் புளி வெஞ்சோறு. உறு -உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).
சொற்பொருள்: உறு வெயிற்கு – மிகுந்த வெயிலுக்கு (உறு – மிக்க), உலைஇய உருப்பு – வருந்துகின்ற வெப்பம் (உலைஇய – அளபெடை), அவிர் விளங்கும் – வெப்பம் விளங்குகின்ற, குரம்பை – குடிசை, எயிற்றியர் – எயினக் குலத்து மகளிர், அட்ட இன் புளி வெஞ்சோறு – ஆக்கிய இனிய புளியை இட்டுச் சமைத்த வெப்பமான சோறு, தேமா மேனி – இனிய மாமரத்தின் தளிர்போன்ற மேனி (தேமா – ஆகுபெயர் மாந்தளிர்க்கு), சில் வளை ஆயமொடு – சில வளையல்கள் அணிந்த நும் மகளிருடன், ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர் – ஆமான் சூட்டு இறைச்சியுடன் நும் பசி கெடுமாறு பெறுவீர்
ஆமூர் வளமும் உழத்தியரின் விருந்தோம்பலும்
நறும் பூங்கோதை தொடுத்த நாட் சினைக்
குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி,
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து, 180
புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச்சிரல்,
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை,
முள் அரைத் தாமரை முகிழ் விரி நாட் போது
கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல்,
மதி சேர் அரவின் மானத் தோன்றும், 185
மருதம் சான்ற மருதத் தண் பணை,
அந்தணர் அருகா அருங்கடி வியன் நகர்,
அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின் (178-188)
பொருளுரை: நறுமணமான மலர்களை மாலையாகத் தொடுத்தது போலப் பருவத்தில் பூக்களைக் கொண்ட கிளைகளையும் குறிய தாளினையுமுடைய காஞ்சி மரத்தின் கிளையில் ஏறி, எல்லாக் காலத்திலும் நிலையாக இருத்தல் அரிதாகிய உள்ள குளத்தின்கண் கூர்ந்து நோக்கி, நெடும் பொழுதிருந்து, புலவு நாற்றமுடைய கயல் மீனை மூழ்கி எடுத்த பொன் நிற வாயையுடைய நீலமணியின் நிறத்தையுடைய கிச்சிலியின் (மீன்கொத்திப் பறவையின்) பெரிய நகம் கிழித்த வடு அழுந்திய பச்சை இலையையும், முள்ளுடைய தண்டினையுடைய தாமரையின் அரும்பு மலர்ந்த அதிகாலை மலரில், தேனை நுகரும் நீல நிறத்தையும் சிவந்த கண்ணையுமுடைய ஆண் வண்டு நிலாவைச் சேர்கின்ற கரும்பாம்பை ஒக்கும், மருத ஒழுக்கம் நிலைபெறுதற்கு அமைந்த மருத நிலத்தின் குளிர்ந்த வயல்களையும் அந்தணர்கள் குறைதல் இல்லாத அரிய காவலையுடைய பெரிய மனைகளையும், அழகிய குளிர்ச்சியான அகழியையும் உடைய அவனுடைய ஆமூரை நீவீர் அடைந்தால்,
குறிப்பு: மருதம் சான்ற: மருதம் சான்ற – மதுரைக்காஞ்சி 270, சிறுபாணாற்றுப்படை 186. மருதம் சான்ற மருதத் தண் பணை (186) – நச்சினார்க்கினியர் உரை – ஊடியும் கூடியும் போக நுகரும் தன்மையமைந்த மருத நிலத்தின் குளிர்ந்த வயலிடத்து. அரவு நுங்கு மதி: குறுந்தொகை 395 – அரவு நுங்கு மதியினுக்கு, அகநானூறு 114 – அரவு நுங்கு மதியின், அகநானூறு 313 – அரவு நுங்கு மதியின், நற்றிணை 377 – அரவுக் குறைபடுத்த பசுங் கதிர் மதியத்து, புறநானூறு 260 – பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின், கலித்தொகை 15 – பாம்பு சேர் மதி போல, கலித்தொகை 104 – பால் மதி சேர்ந்த அரவினை, பரிபாடல் 10-76 – அரவு செறி உவவு மதியென, சிறுபாணாற்றுப்படை 84 – மதி சேர் அரவின்.
சொற்பொருள்: நறும் பூங்கோதை தொடுத்த நாட் சினைக் குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி – நறுமணமான மலர்களை மாலையாகத் தொடுத்தது போலப் பருவத்தில் பூக்களைக் கொண்ட கிளைகளையும் குறிய தாளினையுடைய காஞ்சி மரத்தின் கிளையில் ஏறி (கொம்பர் – மொழி இறுதிப் போலி), நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து – நிலையாக இருத்தல் அரிதாகிய குளத்தின்கண் கூர்ந்து நோக்கி நெடும் பொழுதிருந்து, புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச்சிரல் – புலவு நாற்றமுடைய கயல் மீனை மூழ்கி எடுத்த பொன் நிற வாயையுடைய நீலமணியின் நிறத்தையுடைய கிச்சிலி, வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை – பெரிய நகம் கிழித்த வடு அழுந்திய பச்சை இலை, முள் அரைத் தாமரை – முள்ளை உடைய தண்டினை உடைய தாமரை, முகிழ் விரி நாட்போது – அரும்பு மலர்ந்த அதிகாலை மலரில், கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல் – தேனை நுகரும் நீல நிறத்தையும் சிவந்த கண்ணையுமுடைய ஆண் வண்டு, மதி சேர் அரவின் மானத் தோன்றும் – நிலாவைச் சேர்கின்ற பாம்பை ஒக்கும் (அரவின் – இன் சாரியை), மருதம் சான்ற மருதத் தண் பணை – மருத ஒழுக்கம் நிலைபெறுதற்கு அமைந்த மருத நிலத்தின் குளிர்ந்த வயல், அந்தணர் அருகா – அந்தணர்கள் குறைதல் இல்லாத, அருங்கடி வியன் நகர் – அரிய காவலையுடைய பெரிய மனைகள், அம் தண் கிடங்கின் – அழகிய குளிர்ச்சியான அகழியுடைய, அவன் ஆமூர் எய்தின் – அவனுடைய ஆமூரை நீவீர் அடைந்தால்
வலம்பட நடக்கும் வலி புணர் எருத்தின்
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை, 190
பிடிக்கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத்
தொடிக் கை மகடூஉ, மகமுறை தடுப்ப,
இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர். (189-195)
பொருளுரை: வெற்றி உண்டாகும்படி நடக்கும், வலிமையான கழுத்தினைக் கொண்ட, உடல் வலிமையுடைய எருதினை உடைய, உழவரின் தங்கை, பெண் யானையின் தும்பிக்கையைப் போன்ற பின்னின மயிர் வீழ்ந்து கிடக்கின்ற சிறிய முதுகையும் வளையல்கள் அணிந்த கையையுடைய பெண், தன்னுடைய மக்களைக் கொண்டு, நும்மைப் போகாது தடுக்க, கரிய வைரம் பாய்ந்த மரத்தினால் செய்த உலக்கையின் பூணின் முகத்தைத் தேயச் செய்த குற்றுதல் அமைந்த மாட்சிமைப்பட்ட அரிசியினால் செய்த கட்டியாகிய வெள்ளைச் சோற்றை, பிளந்த காலையுடைய நண்டின் கலவையுடன் உங்களுக்குத் தருவாள்.
குறிப்பு : மகமுறை தடுப்ப (192) – நச்சினார்க்கினியர் உரை – உழவர் தங்கையாகிய மகடூ தான் உள்ளே இருந்து தன் பிள்ளைகளைக் கொண்டு நும்மை அடையவே எல்லாரையும் போகாது விலக்குகையினாலே. இனிப் பிள்ளைகளை உபசரிக்குமாறு போல உபசரித்து விலக்கவென்றுமாம். கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர் (195) – நச்சினார்க்கினியர் உரை – கவைத்த காலினுடைய ஞெண்டும் பீர்க்கங்காயுங் கலந்த கலப்புடனே பெறுவிர். அவைப்பு அரிசி – பெரும்பாணாற்றுப்படை 275 – அவையா அரிசி, அகநானூறு 394 – அவைப்பு மாண் அரிசியொடு, சிறுபாணாற்றுப்படை 193 – உலக்கை இரும்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி.
சொற்பொருள்: வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின் உரன் கெழு நோன் பகட்டு – வெற்றி உண்டாகும்படி நடக்கும் வலிமையுடைய கழுத்தையுடைய உடல் வலிமையுடைய எருதினையுடைய, உழவர் தங்கை – உழவருடைய தங்கை, பிடிக்கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து – பெண் யானையின் தும்பிக்கையைப் போன்ற பின்னின மயிர் வீழ்ந்துகிடக்கின்ற சிறிய முதுகையும், தொடிக் கை மகடூஉ – வளையல்கள் அணிந்த கையையுடைய பெண் (மகடூஉ – அளபெடை), மகமுறை தடுப்ப – மக்களைக் கொண்டு நும்மைப் போகாது தடுக்க, இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த – கரிய வைரம் பாய்ந்த (வைரம் பாய்ந்த – மிகத் திண்மையான) மரத்தினால் செய்த உலக்கையின் பூணின் முகத்தைத் தேயச் செய்த, அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு – குற்றுதல் மாட்சிமைப்பட்ட அரிசியினால் செய்த கட்டியாகிய வெள்ளைச் சோற்றை, கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர் – பிளந்த காலையுடைய நண்டின் கலவையுடன் பெறுவீர்கள்
நல்லியக்கோடனின் ஊர்ச்சிறப்பும்
அதன் அண்மையும்
எரி மறிந்தன்ன நாவின், இலங்கு எயிற்றுக்
கரு மறிக் காதின், கவை அடிப் பேய் மகள்,
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல,
பிணன் உகைத்துச் சிவந்த பேர் உகிர் பணைத்தாள்
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப, 200
நீறு அடங்கு தெருவின், அவன் சாறு அயர் மூதூர்
சேய்த்தும் அன்று, சிறிது நணியதுவே (196-202)
பொருளுரை: நெருப்பு சாய்ந்ததை ஒத்த நாக்கினையும், வெள்ளாட்டுக் குட்டிகளை அணிந்த காதுகளையும், பிளவுபட்ட கால்களையும் உடைய பேய் மகள், இறந்தவர்களின் கொழுப்பை உண்டு விட்டு ஒளியுடைய பற்களுடன் சிரித்த தோற்றம் போல இருந்தது, பிணங்களைப் பெரிய காலினால் உதைத்துச் சிவந்த நிறத்தைப் பெற்ற நகங்களையுடைய களிற்று யானைகளின் தோற்றம். தலைமையுடைய இந்த யானைகளின் வடியும் மதம், தூசியை அடக்க, புழுதி அடங்கின தெருக்களையுடைய நல்லியக்கோடனின் விழாக்கள் கொண்டாடப்படும் பழமையான ஊர், தொலைவில் இல்லை. சிறிது அண்மையில் தான் உள்ளது.
சொற்பொருள்: எரி மறிந்தன்ன நாவின் – நெருப்பு சாய்ந்ததை ஒத்த நாக்கினையும், இலங்கு எயிற்று – ஒளியுடைய பற்களையும், கருமறிக் காதின் – வெள்ளாட்டுக் குட்டிகளை அணிந்த காதுகளையும், கவை அடிப் பேய் மகள் – பிளவுபட்ட கால்களையுடைய பேய் மகள், நிணன் உண்டு – இறந்தவர்களின் கொழுப்பை உண்டு (நிணன் – நிணம் என்பதன் போலி), சிரித்த தோற்றம் போல – சிரிக்கும் பொழுது தோன்றுவதைப் போல, பிணன் உகைத்துச் சிவந்த பேர் உகிர் பணைத்தாள் – பிணங்களைக் காலால் உதைத்துச் சிவந்த பெரிய நகங்களையுடைய பெரிய கால்கள் (பிணன் – பிணம் என்பதன் போலி), அண்ணல் யானை – தலைமையுடைய யானை, அருவி – வடியும் மதம், துகள் அவிப்ப- தூசியை அடக்க, நீறு அடங்கு தெருவின் – புழுதி அடங்கின தெருக்களையுடைய, அவன் – நல்லியக்கோடன், சாறு அயர் மூதூர் சேய்த்தும் அன்று – விழாக்கள் கொண்டாடப்படும் பழமையான ஊர் தொலைவில் இல்லை, சிறிது நணியதுவே – சிறிது அண்மையில் உள்ளது
நல்லியக்கோடனின் அரண்மனை வாயில்
பொருநர்க்கு ஆயினும், புலவர்க்கு ஆயினும்,
அருமறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்,
கடவுள் மால் வரை கண்விடுத்தன்ன, 205
அடையா வாயில் அவன் அருங்கடை குறுகி, (203-206)
பொருளுரை: கிணைப் பறையைக் கொட்டுபவர்கள் ஆயினும், புலவர்கள் ஆயினும், அரிய மறையை இசைக்கும் நாவினையுடைய அந்தணர் ஆயினும், கடவுள்கள் இருக்கும் உயர்ந்த மேரு மலை ஒரு கண்ணை விழித்துப் பார்ப்பதுபோல் உள்ள அடைக்கப்படாத வாசலையுடைய அவனது அரிய காவலுடைய தலைவாயிலை நெருங்கி,
குறிப்பு: அருங்கடை (206) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஏனையோர் புகுவதற்கு இயலாத.
சொற்பொருள்: பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும் அருமறை நாவின் அந்தணர்க்கு என்றாலும் – கிணைப் பறையைக் கொட்டுவார்கள் ஆயினும் புலவர்கள் ஆயினும் அரிய மறையை இசைக்கும் நாவினையுடைய அந்தணர் ஆயினும், கடவுள் மால் வரை கண்விடுத்தன்ன – கடவுள்கள் உடைய உயர்ந்த மேரு மலை ஒரு கண்ணை விழித்துப் பார்ப்பதுபோல், அடையா வாயில் அவன் அருங்கடை குறுகி – அடைக்கப்படாத வாசலையுடைய அவனது அரிய காவலுடைய தலைவாயிலை நெருங்கி
சான்றோர் புகழ்தல்
செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும்,
இன்முகம் உடைமையும், இனியன் ஆதலும்,
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த, (207-209)
பொருளுரை: பிறர் தனக்குச் செய்த நன்மையை மறக்காமல் அவர்க்கு நன்மை செய்தலும், அறிவும் ஒழுக்கமும் இல்லாதவர்களின் கூட்டம் தனக்கு இல்லாமையும், இனிய முகத்தை உடையவனும் ஆன நல்லியக்கோடனை அவனுடன் இருக்கும் நிறைந்து விளங்குகின்ற சிறப்பையுடைய பலவற்றையும் அறிந்த சான்றோர் புகழ,
சொற்பொருள்: செய்ந்நன்றி அறிதல் – பிறர் தனக்குச் செய்த நன்மையை மறக்காமல் அவர்க்கு நன்மை செய்தல், சிற்றினம் இன்மையும் – அறிவும் ஒழுக்கமும் இல்லாதவர்களின் கூட்டம் தனக்கு இல்லாமையும், இன்முகம் இனியன் ஆதலும் – இனிய முகத்தை உடையவனும், செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த – அவனுடன் இருக்கும் நிறைந்து விளங்குகின்ற சிறப்பையுடைய பலவற்றையும் அறிந்த சான்றோர் அவனைப் புகழ
மறவர் போற்றல்
அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ்சினம் இன்மையும், 210
ஆண் அணி புகுதலும், அழிபடை தாங்கலும்,
வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த (210-212)
பொருளுரை: தன்னுடைய வலிமையைக் கண்டு அஞ்சி வீழ்ந்த பகைவர்க்கு அருள் செய்தலையும், கொடிய சினம் இன்மையையும், பகை மறவர்கள் இருக்கும் அணியைத் துணிவுடன் சென்று அழிக்கும் ஆற்றலையும், தன் கெட்ட படையைப் பொறுத்தலையும், அவனுடைய வாள் வலிமையால் மேலாகிய மறவர் புகழ,
சொற்பொருள்: அஞ்சினர்க்கு அளித்தல் – தன்னுடைய வலிமையைக் கண்டு அஞ்சி வீழ்ந்த பகைவர்க்கு அருள்தல், வெஞ்சினம் இன்மையும் – கொடிய சினம் இன்மையும், ஆண் அணி புகுதல் – பகை மறவர்கள் இருக்கும் அணியைத் துணிவுடன் சென்று அழிக்கும் ஆற்றலும், அழி படை தாங்கலும் – கெட்ட படையைப் பொறுத்தலும், வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த – வாள் வலிமையால் மேலாகிய சொல்லையுடைய மறவர் புகழ,
மகளிர் வாழ்த்தல்
கருதியது முடித்தலும், காமுறப்படுதலும்,
ஒருவழிப் படாமையும், ஓடியது உணர்தலும்,
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த (213-215)
பொருளுரை: தான் கருதிய புணர்ச்சியை முடிக்கும் தன்மையும், பெண்கள் தன்னை மிகவும் விரும்புதலும், தான் அவர்கள் வசம் ஆகாமையும், அவர்கள் வருந்தியதை உணர்ந்து அவர்களைப் பாதுகாத்தலும் உடையவன் ஆதலால், செவ்வரியுடைய அழகிய மையிட்ட கண்களையுடைய மகளிர் அவனைப் புகழ,
குறிப்பு: கருதியது முடித்தலும் (213) – நச்சினார்க்கினியர் உரை – தன் நெஞ்சு கருதிய புணர்ச்சியைக் குறைகிடவாமல் முடிக்க வல்ல தன்மையையும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன்பால் ஊடல் கொண்ட மகளிரின் ஊடலை எளிதே தீர்த்து அவரைத் தான் எண்ணியாங்கு எண்ணியபொழுது புணர்ந்து மகிழும் தன்மையையும். ஓடியது உணர்தல் (214) – வை. மு. கோபாலகிருஷ்ணமாசாரியார் உரை – அம்மகளிர் வருந்திய தன்மையை உணர்ந்து அவரைப் மகளிர் பாதுகாத்தலையும். மகளிர் நெஞ்சில் நிகழ்ந்ததை உணர்ந்து அவர் குறை முடித்தல் எனினுமாம்.
சொற்பொருள்: கருதியது முடித்தலும் – தான் கருதிய புணர்ச்சியை முடிக்கும் தன்மையும், காமுறப்படுதலும் – பெண்கள் தன்னை மிகவும் விரும்புதலும், ஒருவழிப் படாமை – அவர்கள் வசம் ஆகாமை, ஓடியது உணர்தலும் – அவர்கள் வருந்தியதை உணர்ந்து அவர்களைப் பாதுகாத்தலும், அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த – செவ்வரியுடைய அழகிய மையிட்ட கண்களையுடைய மகளிர் புகழ
பரிசிலர் ஏத்தல்
அறிவு மடம் படுதலும், அறிவு நன்கு உடைமையும்,
வரிசை அறிதலும், வரையாது கொடுத்தலும்,
பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த (216-218)
பொருளுரை: தான் கூறுவதை அறியாத அறியாமை உடையவர்களிடம் அறியாமையுடையவன் போல் தோன்றுதலும், தன்னை ஒத்த அறிவுடையோரிடம் அறிவைக் காட்டுதலும், பரிசிலரின் தகுதியை அறிந்து ஏற்றவாறு கொடுத்தலும், எல்லையில்லாமல் கொடுத்தலும் ஆகிய பண்புகளால், பிறரிடத்தில் பொருளைப் பெற்று வாழும் பரிசிலர் அவனைப் புகழ,
சொற்பொருள்: அறிவு மடம் படுதலும் – தான் கூறுவதை அறியாத அறியாமை உடையவர்களிடம் அறியாமையுடையவன் போல் தோன்றுதலும், அறிவு நன்கு உடைமையும் – தன்னை ஒத்த அறிவுடையோரிடம் அறிவைக் காட்டுதலும், வரிசை அறிதலும் – பரிசிலரின் தகுதியை அறிந்து கொடுத்தலும், வரையாது கொடுத்தலும் – எல்லையில்லாமல் கொடுத்தலும், பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த – பிறரிடத்தில் பொருளைப் பெற்று வாழும் பரிசிலர் புகழ,
நல்லியக்கோடன் அவையில் வீற்றிருக்கும் காட்சி
பன் மீன் நடுவண் பால்மதி போல
இன்நகை ஆயமொடு இருந்தோற் குறுகி [219-220]
பொருளுரை: பல விண்மீன்களுக்கு நடுவில் உள்ள பால் போன்ற ஒளியையுடைய வெண்ணிலவைப் போல, இயல் இசை நாடகம் ஆகியவற்றாலும் இனிய மொழியாலும் இனிமையாக இருக்கும் சுற்றத்தாருடன் இருப்பவனை அணுகி,
குறிப்பு: இன்நகை ஆயமொடு இருந்தோற் குறுகி (220) – நச்சினார்க்கினியர் உரை – இயல் இசை நாடகத்தாலும் இனிய மொழிகளாலும் இனிய மகிழ்ச்சியைச் செய்யும் திரளோடே இருந்தவனையணுகி.
சொற்பொருள்: பல் மீன் நடுவண் பால் மதி போல – பல விண்மீன்களுக்கு நடுவில் உள்ள பால் போன்ற ஒளியையுடைய வெண்ணிலவைப் போல, இன் நகை ஆயமொடு இருந்தோற் குறுகி – இயல் இசை நாடகம் ஆகியவற்றாலும் இனிய மொழியாலும் இனிமையாக இருக்கும் சுற்றத்தாருடன் இருப்பவனை அணுகி
நல்லியக்கோடன் முன்னிலையில்
யாழ் வாசிக்கும் முறைமை
பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன,
அம் கோடு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின்,
மணி நிரைத்தன்ன வனப்பின் வாய் அமைத்து,
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து,
கானக் குமிழின் கனி நிறம் கடுப்ப, 225
புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு, தேம் பெய்து,
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்,
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விக்
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக,
நூல் நெறி மரபின், பண்ணி ஆனாது (221-230)
பொருளுரை: பச்சைக் கண்களையுடைய குரங்கு, பாம்பின் தலையைப் பிடித்தபொழுது அப்பாம்பு குரங்கின் கையை இறுக்கியும் நெகிழ்த்தும் பிடிப்பது போல் அழகிய தண்டில் நெருக்கமாகச் சுற்றின நெகிழ வேண்டிய இடத்தில் நெகிழ்ந்தும் இறுக வேண்டிய இடத்தில் இறுகியும் நரம்பு இருக்கும் வார்க்கட்டையும், இரண்டு விளிம்பும் சேர்த்து இணைத்த இடத்தில் மணியை அடுக்கி வைத்தாற்போல் அழகாக பொருந்திய ஆணிகளையும், வயிறு சேர்ந்த ஒழுங்கான தொழில் வகை அமைந்த பத்தரினையும் (உடல் பகுதியையும்), காட்டில் உள்ள குமிழ மரத்தின் கனி நிறத்தை ஒத்த தோல் போர்வையினையும், தேனைப் பெய்து அமிழ்தத்தைத் தன்னிடத்தில் பொதிந்து துளிக்கும் நரம்பினையும் கொண்டது யாழ். பாடும் துறைகள் யாவும் பாடுதற்கு அமைந்த பயன் விளங்குகின்ற கூடுதல் இசையைக் கொண்டது இனிய யாழ். இசை நூல்கள் கூறுவதைப் போல் செம்மையாக ஆக்கி அவனைக் குறையாது நீவிர் பாடுவீராக.
குறிப்பு: பாடு துறை முற்றிய (228) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீவிர் பாடும் துறைகள் எல்லாம் முடியப் பாடுதற்கு. முற்றிய – செய்யிய என்னும் வினையெச்சம். கூடு கொள் (229) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூடுதல் கொண்ட, கூடுதல் – சுதி சேர்தல் என்க.
சொற்பொருள்: பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன – பச்சைக் கண்களையுடைய குரங்கு பாம்பின் தலையைப் பிடித்தபொழுது அப்பாம்பு குரங்கின் கையை இறுக்கியும் நெகிழ்த்தும் பிடிக்கும், அம் கோடு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின் – அழகிய தண்டினையுடைய நெருங்கச் சுற்றின நெகிழ வேண்டியபொழுது நெகிழ்ந்தும் இறுக வேண்டியபொழுது இறுகியும், மணி நிரைத்தன்ன வனப்பின் வாய் அமைத்து – இரண்டு விளிம்பும் சேர்த்து இணைத்த இடத்தில் உள்ள ஆணிகளை மணியை நிரைத்து வைத்தாற்போல் அழகாகப் பொருந்தச் செய்து, வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து – வயிறு சேர்ந்த ஒழுங்கான தொழில் வகை அமைந்த பத்தரினையும் (யாழின் உடல் பகுதியையும்), கானக்குமிழின் கனி நிறம் கடுப்ப புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு – காட்டில் உள்ள குமிழ மரத்தின் கனி நிறத்தை ஒத்த தோல் போர்வையுடன் (கடுப்ப – உவம உருபு), தேம் பெய்து அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்குபுரி நரம்பின் – தேனைப் பெய்து அமிழ்தத்தைத் தன்னிடத்தில் பொதிந்து துளிக்கும் நரம்பினையுடைய (தேம் – தேன் என்றதன் திரிபு), பாடு துறை முற்றிய – பாடும் துறைகள் முடியப் பாடுதற்கு, பயன் தெரி கேள்விக் கூடு கொள் இன் இயம் – பயன் விளங்குகின்ற இசையைக் கூடுதல் கொண்ட இனிய யாழை (பயன் – இனிமை, தெரி, விளங்குகின்ற, கேள்வி – இசை), குரல் குரல் ஆக நூல் நெறி மரபின் பண்ணி – இசை நூல்கள் கூறுவதைப் போல் செம்மையாக ஆக்கி, ஆனாது – விடாது
மன்னனைப் புகழ்ந்து பாடும் தன்மை
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்,
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்,
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்,
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்,
நீ சில மொழியா அளவை…………….. (231-235)
பொருளுரை: பெரியவர்களுக்குக் குவித்த கைகளை உடையவன் நீ என்றும், மறவர்களுக்கு மலர்ந்த மார்பையுடையவன் நீ என்றும், உழவர்களுக்கு நிழல் தருகின்ற செங்கோலை உடையவன் நீ என்றும், தேரினை உடைய அரசர்களுக்கு வெம்மையான வேலை உடையவன் நீ என்றும், அவனைப் புகழ்ந்து நீ சில சொற்களைக் கூறுவதற்கு முன்னர்,
குறிப்பு: கையினை, மார்பினை, கோலினை, வேலினை – முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்றுக்கள்.
சொற்பொருள்: முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும் – பெரியவர்களுக்கு குவித்த கைகளை உடையவன் நீ என்றும், இளையோர்க்கு மலர்ந்த மார்பு – மறவர்களுக்கு மலர்ந்த மார்பையுடையவன் என்றும், மகளிர்க்கு மலர்ந்த மார்பையுடையவன், ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும் – உழவர்களுக்கு நிழல் தருகின்ற செங்கோலை உடையவன் என்றும், தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் – தேரினை உடைய அரசர்களுக்கு வெம்மையான வேலை உடையவன் என்றும், நீ சில மொழியா அளவை – நீ சில புகழ்ச்சியான சொற்களைக் கூறுவதற்கு முன்னர்,
மன்னன் இரவலரை உபசரிக்கும் பாங்கு
………………மாசில்
காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇப்,
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி,
கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன் முன்
பனி வரை மார்பன் பயந்த நுண் பொருள் 240
பனுவலின், வழாஅப் பல் வேறு அடிசில் (235-241)
பொருளுரை: மாசு இல்லாத மூங்கிலின் தோலை உரித்தாற்போன்ற ஆடையை உடுக்கச் செய்து, பாம்பு சினந்து எழுந்தது போன்ற எழுச்சியைத் தரும் கள்ளைக் கொடுத்து, நெருப்புக் கடவுள் வேண்டியதால் காண்டவம் என்ற காட்டினை எரித்த அம்பையுடைய அம்புறாத்தூணியையும் பூக்கள் வரைந்த கச்சை அணிந்த அருச்சுனனின் அண்ணனாகிய, பனியுடைய இமயத்தைப் போன்ற மார்பையுடைய வீமசேனன், எழுதிய நுண்மையான சமையல் குறிப்புகளுடைய நூலினின்றும் வழுவாது, பல்வேறு உணவு வகைகளை,
குறிப்பு: அறுவை (36) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆடை அறுக்கப்பட்டதால் அறுவை என்பது ஆடைக்கு காரணப்பெயர் என்க. பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி (237) – நச்சினார்க்கினியர் உரை – பாம்பேறி மயக்கினாற்போல மயக்கின கள் தெளிவைத் தந்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாம்பினது நஞ்சேறி மயக்கினாற்போன்று மயக்கும் கள்ளினது தெளிவைப் பருகும்படி தந்து, ச. வே. சுப்பிரமணியன் – பாம்பு சினந்து எழுந்தது போன்று எழுச்சியைத் தரும் கள் தெளிவைத் தருவான். அகநானூறு 348 – கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி.
சொற்பொருள்: மாசு இல் காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ – மாசு இல்லாத மூங்கிலின் தோலை உரித்தாற்போன்ற ஆடையை உடுக்கச் செய்து (உடீஇ – அளபெடை), பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி – பாம்பு சினந்து எழுந்தது போன்ற எழுச்சியைத் தரும் கள்ளைக் கொடுத்து, கா எரியூட்டிய கவர் கணைத் தூணி – நெருப்புக் கடவுள் வேண்டியதால் காண்டவம் என்ற காட்டினை எரித்த அம்பையுடைய அம்புறாத்தூணி, பூவிரி கச்சைப் புகழோன் தன்முன் – பூக்கள் வரைந்த கச்சையை அணிந்த அருச்சுனனின் அண்ணன், பனி வரை மார்பன் – பனியுடைய இமயத்தைப் போன்ற மார்பையுடைய வீமசேனன், பயந்த – கொடுத்த, நுண் பொருள் பனுவலின் வழாஅ – நுண்மையான சமையல் மரபுடைய நூலினின்றும் வழுவாது (வழாஅ – அளபெடை), பல்வேறு அடிசில் – பல்வேறு உணவு வகைகளை
வாள் நிற விசும்பிற் கோள்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து,
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி (242-245)
பொருளுரை: ஒளியுடைய நீலவானத்தில் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர்களையுடைய கதிரவனை இகழும் தோற்றமுடைய, விளங்கும் பொற்கலங்களில், நீ விரும்பி உண்ணுபவற்றைத் தானும் விரும்பி மனதில் கொண்டு, நும் மீது மிகுகின்ற விருப்பத்தால் தானே நின்று நும்மை உண்ணச் செய்து,
சொற்பொருள்: வாள் நிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த – ஒளியுடைய நீலவானத்தில் கோள்மீன் சூழ்ந்த, இளங்கதிர் ஞாயிறு – இளங்கதிர்களையுடைய கதிரவன், எள்ளும் தோற்றத்து – இகழும் தோற்றமுடைய, விளங்கு பொற்கலத்தில் – விளங்கும் பொற்கலங்களில், விரும்புவன பேணி – நீ விரும்பி உண்ணுபவற்றைத் தானும் விரும்பி மனதில் கொண்டு, ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி – நும் மீது மிகுகின்ற விருப்பத்தால் தானே நின்று நும்மை உண்ணச் செய்து
நல்லியக்கோடன் அளிக்கும் பரிசுப் பொருட்கள்
திறல் சால் வென்றியொடு, தெவ்வுப் புலம் அகற்றி,
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி,
நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின்,
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு (246-249)
பொருளுரை: வலிமையுடைய வெற்றியுடன், பகைவரை அவர்களுடைய நிலத்திலிருந்து அகற்றி, வெற்றியை உடைய மன்னர்களின் அரண்களை அழித்து, அங்குக் கிடைத்த பொருளால் தன்னிடம் விரும்பி வருபவர்களுக்கும் பாணர்களுக்கும் உதவி, அவர்களுடைய துன்பத்தைத் தீர்த்த பின்னர், தன்னுடைய படை மறவர்கள் கொண்டுவந்து தந்த மிகுந்த பொருட்களுடன்,
சொற்பொருள்: திறல் சால் வென்றியொடு – வலிமையுடைய வெற்றியுடன், தெவ்வுப் புலம் அகற்றி – பகைவரை அவர்களுடைய நிலத்திலிருந்து அகற்றி, விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி – வெற்றியை உடைய மன்னர்களின் அரண்களை அழித்து, நயவர் பாணர் – தன்னிடம் விரும்பி வருபவர்களுக்கும் பாணர்களுக்கும், புன்கண் தீர்த்த பின் – துன்பத்தைத் தீர்த்த பின்னர், வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு – தன்னுடைய படை மறவர்கள் கொண்டுவந்து தந்த மிகுந்த பொருட்களுடன்
பருவ வானத்துப் பால் கதிர் பரப்பி 250
உருவ வான் மதி ஊர் கொண்டாங்கு,
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
ஆரம் சூழ்ந்த அயில்வாய் நேமியொடு,
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடுஞ்சினைத்
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல, 255
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை,
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி,
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடைப் பாகரொடு (250-258)
பொருளுரை: தேர் ஒன்றையும் கொடுப்பான். கூதிர்கால வானில் பால்போலும் ஒளியைப் பரப்பி ஊர்ந்து செல்லும் வடிவான திங்களைப் போல் தோன்றும், கூரிய உளியினால் ஆழ்ந்து செதுக்கின வலிமையான நடுப்பகுதியில் இருந்து (குடத்தில் இருந்து) பிரிந்த ஆர்களை சூழ்ந்த இரும்பு விளிம்பை உடைய உருளைகளுடன் (சக்கரங்களுடன்), சிந்துகின்ற அரும்பினை உடைய முருக்க மரத்தின் உயர்ந்து ஓங்கி வளர்ந்த கிளைகளில் உள்ள சிவப்பு நிற பூங்கொத்துக்கள் முறுக்கு நெகிழ்ந்த தோற்றம் போல, உள்ளே உருக்கப்பட்ட செவ்வரக்கு வைத்து செய்த மேல் பலகையினையும் உடைய (கூரையினையும் உடைய), வலிய தொழிலைப் புரியும் தச்சரின் கைத்தொழில் முற்றுப் பெற்ற பின்னர் ஓட்டம் உண்டு என்ற நல்ல பெயர்பெற்ற அழகிய நடையுடைய அத்தேருடன்,
குறிப்பு: பாகரொடு (258) – நச்சினார்க்கினியர் உரை – பாகருடைய தேரைப் பாகரென்றார் ஆகுபெயரால், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – தேரோடு, பாகர் என்பது மரத்தினால் இயன்ற தேரின் சுற்றுச் சுவர். அயில்வாய் (253) – நச்சினார்க்கினியர் உரை – கூரிய வாய், சூட்டிற்கு ஆகுபெயர்.
சொற்பொருள்: பருவ வானத்துப் பால் கதிர் பரப்பி உருவ வான் மதி ஊர் கொண்டாங்கு – கூதிர்கால வானில் பால்போலும் ஒளியைப் பரப்பி வடிவான திங்கள் ஊர்ந்து கொண்டாற்போல் தோன்றும், கூர் உளி பொருத வடு ஆழ் – கூரிய உளியினால் ஆழ்ந்து செதுக்கின, நோன் குறட்டு – வலிமையான சக்கரத்தின் குடத்தில், வலிமையான சக்கரத்தின் நடுப்பகுதியில், ஆரம் – சக்கரத்தின் குடத்தையும் விளிம்பையும் இணைக்கும் மரக்கட்டைகள், சூழ்ந்த – சூழ்ந்த, அயில்வாய் – சக்கரத்தைச் சுற்றியுள்ள இரும்பு விளிம்பு, நேமியொடு – உருளையுடன், சக்கரத்துடன், சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடுஞ்சினை ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல – சிந்துகின்ற அரும்பினை உடைய முருக்க மரத்தின் உயர்ந்து ஓங்கி வளர்ந்த கிளைகளில் உள்ள பூங்கொத்துக்கள் முறுக்கு நெகிழ்ந்த தோற்றம் போல, உள் அரக்கு எறிந்த உருக்கு உறு போர்வை – உள்ளே உருக்கப்பட்ட செவ்வரக்கு வைத்து செய்த மேல் பலகையினையும், கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி – வலிய தொழிலைப் புரியும் தச்சரின் கைத்தொழில் முற்றுப் பெற்ற பின்னர், ஊர்ந்து பெயர் பெற்று எழில் நடைப் பாகரொடு – ஓட்டம் உண்டு என்று பெயர்பெற்ற அழகிய நடையுடைய தேருடன் (பாகர் – தேர், ஆகு பெயர்)
மா செலவு ஒழிக்கும் மதனுடை நோன் தாள்
வாள் முகப் பாண்டில் வலவனொடு தரீஇ 260
அன்றே விடுக்குமவன் பரிசில் (259-261)
பொருளுரை: குதிரையின் ஓட்டத்தைப் பின் நிறுத்தும் மிக்க வலிமையுடைய கால்களையும் ஒளியுடைய முகத்தையுடைய எருதையும், அதனைச் செலுத்தும் பாகனுடன் தருவான். அன்றே உங்களுக்கு அவன் பரிசிலைத் தருவான்.
சொற்பொருள்: மா செலவு ஒழிக்கும் மதனுடை நோன் தாள் வாள் முகப் பாண்டில் வலவனொடு தரீஇ – குதிரையின் ஓட்டத்தைப் பின் நிறுத்தும் மிக்க வலிமையுடைய கால்களையும் ஒளியுடைய முகத்தையுடைய எருதையும் அதனைச் செலுத்தும் பாகனுடன் தருவான் (பாண்டில் – எருது, தரீஇ – அளபெடை), அன்றே விடுக்கும் அவன் பரிசில் – அன்றே பரிசிலைத் தருவான் அவன்
நல்லியக்கோடனின் புகழும் மாட்சியும்
………………………………………………….மென் தோள்
துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர்,
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின்
மணி மயில் கலாபம் மஞ்சு இடைப் பரப்பி,
துணி மழை தவழும் துயல் கழை நெடுங்கோட்டு, 265
எறிந்து உரும் இறந்து ஏற்று அருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான், கொய் தளிர்க் கண்ணி
செல் இசை நிலைஇய பண்பின்
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே. (261-269)
பொருளுரை: மென்மையான தோள், ஆடை அணிந்த இடை, தளர்ந்த தன்மையையுடைய மகளிர் அகில் புகையை ஊட்டுவதற்கு விரித்த அழகும் மென்மையுமுடைய கூந்தல் போலே, நீலமணியின் நிறத்தையுடைய மயிலின் தோகையை மஞ்சின் இடையே விரித்து, தெளிந்த முகில் தவழும் அசையும் மூங்கிலையுடைய நெடிய உச்சியில் இடி இடித்துப் பிறர் ஏறுவதற்கு அரிதாக உள்ள மலைகள் மிக்க நாட்டிற்குத் தலைவன், கொய்யப்பட்ட தளிரினால் தொடுத்த மாலை அணிந்த பிறர்பால் நில்லாது செல்லும் இயல்புடைய புகழ் தன்னிடத்தில் நிலைத்து நிற்பதற்குரிய பண்பையுடைய நல்லியக்கோடனிடம் நீவிர் விரும்பிச் சென்றால்.
சொற்பொருள்: மென் தோள் – மென்மையான தோள், துகில் அணி அல்குல் – ஆடை அணிந்த அல்குல், துளங்கு இயல் மகளிர் – தளர்ந்த தன்மையையுடைய மகளிர், அகில் உண விரித்த அம் மென் கூந்தலின் – அகில் புகையை ஊட்டுவதற்கு விரித்த அழகும் மென்மையுமுடைய கூந்தல் போல் (கூந்தலின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு), மணி மயில் கலாபம் மஞ்சு இடைப்பரப்பி – நீலமணியைப் போன்ற மயிலின் தோகையை மஞ்சின் இடையே விரித்து, துணி மழை தவழும் – தெளிந்த முகில் தவழும், துயல் கழை நெடுங்கோட்டு – அசையும் மூங்கிலையுடைய நெடிய மலையுச்சியில், எறிந்து உரும் இறந்த ஏற்று – இடி இடித்துச் சென்று பிறர் ஏறுவதற்கு அரிதாக உள்ள, அருஞ் சென்னிக் குறிஞ்சிக் கோமான் – மலையுச்சியையுடைய மலையின் தலைவன், கொய் தளிர்க் கண்ணி – கொய்யப்பட்ட தளிர் மாலை, செல் இசை நிலைஇய பண்பின் நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே – பிறர்பால் நில்லாது செல்லும் புகழ் தன்னிடத்தில் நிலைத்து நிற்பதற்குரிய பண்பையுடைய நல்லியக்கோடனிடம் நீவிர் விரும்பிச் சென்றால் (நிலைஇய – அளபெடை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக