அழிதகவு - சொல்லாய்வு

அகநானூற்றில் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிகண்ணனார் பாடல் ‘அழி தகவு’ எனும் சொல்லை ஆண்டுள்ளது. அழிதகவு என்றால் வருந்துதல் என்று பொருள் சொல்கிறார் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். 

அகநானூற்றில் ஓரம்போகியார் பாடல் ‘தற்தகவு’ என்ற சொல் தருகிறது. தன் தகவு என்பதே புணர்ச்சி விதிகளின்படி தற்தகவு ஆகிறது. தற்தகவு என்றால் தன் தகுதி என்று பொருள். தன் தகுதி என்ன என்று அறியாமல், அல்லது அபரிமிதமான மதிப்பீடு வைத்துக்கொண்டு சமூகப் பெருந்திரு என்று தம்மை நினைத்துக் கொள்பவர்கள் மக்களை மந்தை என்றெண்ணி அறிவுரையாக அருளிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் ஐங்குறுநூறு நூலில் முல்லைத்திணை பாடும் பேயனார், பாணன் பத்து முதற்பாடலில் “என் அவர் தகவே?” என்று கேட்கிறார். அவனது தகுதி என்ன என்பது பொருள். அடியாட்களும் குண்டர்களும் தரகர்களுமே இன்றைய தகவுகள்.

கலித்தொகையில் மருதக்கலி பாடிய மருதன் இளநாகனார், காமக் கிழத்தி கூற்றாகக் கூறுகிறார், ‘தாழ்ந்தாய் போல் வந்து தகவில செய்யாது’ என்று. மனக்குறை உடையவன் போல இங்கு வந்து தகுதி இல்லாச் செயல்களைச் செய்யாதே என்பது பாடல்வரியின் பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக