கீதை – முதல் அத்தியாயம் : அர்ஜுன விஷாத யோகம்


குருக்ஷேத்திரப் போர் நடக்கையிலே, கண்ணில்லாத திருதராஷ்டிர ராஜன், தான் அங்கு செல்லக் கூடாமையால் அஸ்தினாபுரத்தில் தனதரண்மனையில் இருந்துகொண்டே போர்க்களத்தில் நடக்கும் செய்திகளைத் தனக்குச் சொல்லும்படி சஞ்ஜயன் என்ற மந்திரியை நியமிக்கிறான்.

வேதவியாசரருளால் ஞானதிருஷ்டி பெற்றவனாய் சஞ்ஜயன் போர்க்களத்துச் செய்திகளைத் திருதராஷ்டிரனுக்குச் சொல்கிறான். கண்ணனுக்கும் பார்த்தனுக்கும் போர்த் தொடக்கத்தில் நிகழ்ந்த சம்பாஷணையை சஞ்ஜயன் கூறுவதாகச் சமைக்கப்பட்ட பகவத்கீதைக்கு இந்த முதலத்தியாயம் பாயிரமாகக் கருதத்தகும்.


धृतराष्ट्र उवाच
धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः।
मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय ॥१॥

த்⁴ருதராஷ்ட்ர உவாச
த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ​:|
மாமகா​: பாண்ட³வாஸ்²சைவ கிமகுர்வத ஸஞ்ஜய ||1-1||

த்⁴ருதராஷ்ட்ர உவாச = திருதராஷ்டிரன் சொல்லுகிறான்;
த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே = அற நிலமாகிய குரு நிலத்தில்,
ஸமவேதா: = ஒன்று கூடி;
யுயுத்ஸவ: = போர்செய்ய விரும்பித் திரண்ட;
மாமகா: = நம்மவர்களும்;
பாண்ட³வா: = பாண்டவரும்;
கிம் அகுர்வத = என்ன செய்தனர்?

திருதராஷ்டிரன் சொல்லுகிறான்: சஞ்ஜயா, அற நிலமாகிய குரு நிலத்தில் போர்செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவரும் என்ன செய்தனர்?


सञ्जय उवाच
दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा।
आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् ॥२॥

ஸஞ்ஜய உவாச
த்³ருஷ்ட்வா து பாண்ட³வாநீகம் வ்யூட⁴ம் து³ர்யோத⁴நஸ்ததா³|
ஆசார்யமுபஸங்க³ம்ய ராஜா வசநமப்³ரவீத் ||1-2||

ஸஞ்ஜய உவாச = ஸஞ்ஜயன் சொல்லுகிறான்;
ததா³ து³ர்யோத⁴ந = அப்போது துர்யோதனன்;
வ்யூட⁴ம் பாண்ட³வாநீகம் = அணிவகுத்து நின்ற பாண்டவர் படையை;
த்³ருஷ்ட்வா = பார்த்துவிட்டு;
ஆசார்யம் உபஸங்க³ம்ய = துரோணனிடம் போய்;
வசனம் அப்³ரவீத் = வார்த்தைகளை சொல்லலாயினன்;

சஞ்ஜயன் சொல்லுகிறான்: அப்போது துரியோதன ராஜன் அணிவகுத்து நின்ற பாண்டவர் படையைப் பார்த்துவிட்டு, ஆசாரிய (துரோண)னிடம் போய்(ப் பின்வரும்) வார்த்தை சொல்லலாயினன்:


पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीं चमूम्।
व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता॥३॥

பஸ்²யைதாம் பாண்டு³புத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்|
வ்யூடா⁴ம் த்³ருபத³புத்ரேண தவ ஸி²ஷ்யேண தீ⁴மதா ||1-3||

ஆசார்ய தவ ஸி²ஷ்யேண = ஆசார்யரே! உன்னுடைய சீடனான;
தீ⁴மதா= நிபுணனான;
த்³ருபத³ புத்ரேண = துருபதன் மகனால்;
வ்யூடா⁴ம் பாண்டு³புத்ராணாம் = வகுப்புற்ற பாண்டுவின் பிள்ளைகளின்;
ஏதாம் மஹதீம் சமூம் = இந்த பெரிய படையை;
பஸ்²ய = பார்!

குருவே, துருபதன் மகனும் நின் சீடனுமாகிய நிபுணனால் வகுப்புற்ற இப்பெரிய பாண்டவப் படையப் பார்!


अत्र शूरा महेष्वासा भीमार्जुनसमा युधि।
युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः॥४॥

அத்ர ஸூ²ரா மஹேஷ்வாஸா பீ⁴மார்ஜுநஸமா யுதி⁴|
யுயுதா⁴நோ விராடஸ்²ச த்³ருபத³ஸ்²ச மஹாரத²​: ||1-4||

அத்ர = இங்கு;
மஹேஷ்வாஸா: = பெரிய வில்லாளிகளும்;
யுதி⁴ = போரில்;
பீ⁴மார்ஜுநஸமா: = வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய;
ஸூ²ரா: = சூரர்;
யுயுதா⁴ந: = யுயுதானன்;
த்³ருபத³: = மகாரதனாகிய துருபதன்;

இங்கு சூரரும் பெரிய வில்லாளிகளும் போரில் வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள் யுயுதானன்; விராடன்; மகாரதனாகிய துருபதன்;


धृष्टकेतुश्चेकितानः काशिराजश्च वीर्यवान्।
पुरुजित्कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः॥५॥

த்⁴ருஷ்டகேதுஸ்²சேகிதாந​: காஸி²ராஜஸ்²ச வீர்யவாந்|
புருஜித்குந்திபோ⁴ஜஸ்²ச ஸை²ப்³யஸ்²ச நரபுங்க³வ​: ||1-5||

த்⁴ருஷ்டகேது: = திருஷ்ட கேது;
சேகிதாந: = சேகிதானன்;
வீர்யவாந் காஸி²ராஜ: = வீரியமுடைய காசி ராஜன்;
புரூஜித் =புரூஜித்;
குந்திபோ⁴ஜ: = குந்தி போஜன்;
நரபுங்க³வ ஸை²ப்³ய: = மனிதரேறாகிய சைவியன்;

திருஷ்ட கேது; சேகிதானன்; வீரியமுடைய காசி ராஜன்; புருஜித்; குந்தி போஜன்; மனிதரேறாகிய சைவியன்;


युधामन्युश्च विक्रान्त: उत्तमौजाश्च वीर्यवान्।
सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः॥६॥

யுதா⁴மந்யுஸ்²ச விக்ராந்த: உத்தமௌஜாஸ்²ச வீர்யவாந்|
ஸௌப⁴த்³ரோ த்³ரௌபதே³யாஸ்²ச ஸர்வ ஏவ மஹாரதா²​: ||1-6||

விக்ராந்த: = வலிமை மிக்க;
யுதா⁴மந்யு: = யுதாமந்யு;
வீர்யவாந் உத்தமௌஜா: = வீரன் உத்தமௌஜா;
ஸௌப⁴த்³ர: = சுபத்திரை மகன்;
த்³ரௌபதே³யா: = திரௌபதி மக்கள்;
ஸர்வ ஏவ மஹாரதா²: = எல்லோருமே மகாரதர்;(6)

வலிமை மிக்க யுதாமந்யு; உத்தமௌஜா என்ற வீரன்; சுபத்திரை மகன்; திரௌபதி மக்கள்; எல்லோருமே மகாரதர்.


अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम।
नायका मम सैन्यस्य सञ्ज्ञार्थं तान्ब्रवीमि ते॥७॥

அஸ்மாகம் து விஸி²ஷ்டா யே தாந்நிபோ³த⁴ த்³விஜோத்தம|
நாயகா மம ஸைந்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்த²ம் தாந்ப்³ரவீமி தே ||1-7||

த்³விஜோத்தம் = இருபிறப்பாளரில் மேம்பட்டவனே;
அஸ்மாகம் = நம்முள்ளே;
யே விஸி²ஷ்டா: = எவர் விசேஷமாக இருக்கின்றனரோ;
தாந் = அவர்களை;
நிபோ³த⁴ = தெரிந்து கொள்;
மம ஸைந்யஸ்ய = எனது படையின்;
யே நாயகா: = எவர் நாயகர்களோ;
தாந் = அவர்களை;
ஸம்ஜ்ஞார்த²ம் = கவனத்திற்காக;
ப்³ரவீமி = சொல்லுகிறேன்;

இனி, எனது படைக்கு நாயகராய், நம்முள்ளே சிறந்தோரையுந் தெரிந்து கொள். இருபிறப்பாளரில் மேம்பட்டவனே, குறிப்பின் பொருட்டாக அவர்களை உனக்குச் சொல்லுகிறேன்.


भवान्भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः।
अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च॥८॥

ப⁴வாந்பீ⁴ஷ்மஸ்²ச கர்ணஸ்²ச க்ருபஸ்²ச ஸமிதிஞ்ஜய​:|
அஸ்²வத்தா²மா விகர்ணஸ்²ச ஸௌமத³த்திஸ்ததை²வ ச ||1-8||

ப⁴வாந் = நீ;
பீ⁴ஷ்ம: கர்ண: க்ருப: = பீஷ்மன், கர்ணன், கிருபன்;
ஸமிதிஞ்ஜய: = பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய;
ததா² ஏவ = அதே போல;
அஸ்²வத்தா²மா விகர்ண: ஸௌமத³த்தி: = அசுவத்தாமன், விகர்ணன், சோமதத்தன் மகன்;

நீ; பீஷ்மன்; கர்ணன்; பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய கிருபன்; அசுவத்தாமன்; விகர்ணன்; சோமதத்தன் மகன்;


अन्ये च बहवः शूरा: मदर्थे त्यक्तजीविताः।
नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः॥९॥

அந்யே ச ப³ஹவ​: ஸூ²ரா: மத³ர்தே² த்யக்தஜீவிதா​:|
நாநாஸ²ஸ்த்ரப்ரஹரணா​: ஸர்வே யுத்³த⁴விஸா²ரதா³​: ||1-9||

அந்யே ச = இன்னும் வேறு;
ப³ஹவ: ஸூ²ரா: = பல சூரர்;
மத³ர்தே² = என் பொருட்டு;
த்யக்தஜீவிதா: = வாழ்க்கையைத் துறந்தோர்;
ஸர்வே = எல்லோருமே;
நாநாஸ²ஸ்த்ரப்ரஹரணா: = பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்;
யுத்³வவிஸா²ரதா³: = போரில் நிபுணர்;

இன்னும் வேறு பல சூரர்; என் பொருட்டு வாழ்க்கையைத் துறந்தோர்; பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்; எல்லோருமே போரில் நிபுணர்.


अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम्।
पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम्॥१०॥

அபர்யாப்தம் தத³ஸ்மாகம் ப³லம் பீ⁴ஷ்மாபி⁴ரக்ஷிதம்|
பர்யாப்தம் த்வித³மேதேஷாம் ப³லம் பீ⁴மாபி⁴ரக்ஷிதம்||10||

பீ⁴ஷ்மாபி⁴ரக்ஷிதம் = பீஷ்மனால் காக்கப்படும்;
அஸ்மாகம் ப³லம் = நமது படை;
அபார்யாப்தம் = (கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை;
பீ⁴மாபி⁴ரக்ஷிதம் = வீமனால் காக்கப்படும்;
ஏதேஷாம் ப³லம் = இவர்களுடையை படையோ;
பர்யாப்தம் = நிறைந்திருக்கிறது

(எனினும்) பீஷ்மனால் காக்கப்படும் நமது படை (கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை. வீமனால் காக்கப்படும் இவர்களுடையை படையோ நிறைந்திருக்கிறது.


अयनेषु च सर्वेषु यथाभागमवस्थिताः।
भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि॥११॥

அயநேஷு ச ஸர்வேஷு யதா²பா⁴க³மவஸ்தி²தா​:|
பீ⁴ஷ்மமேவாபி⁴ரக்ஷந்து ப⁴வந்த​: ஸர்வ ஏவ ஹி ||1-11||

ஸர்வேஷு அயநேஷு = எல்லா இடங்களிலும்;
யதா²பா⁴க³ம் அவிஸ்த²தா: = வகுப்புகளின்படி நின்றுகொண்டு;
ப⁴வந்த: ஸர்வ = நீங்களனைவரும்;
பீ⁴ஷ்மம் ஏவ = பீஷ்மனையே;
அபி⁴ரக்ஷந்து = காக்கக் கடவீர்

நீங்களனைவரும் வகுப்புகளின்படி எல்லா இடங்களிலும் நின்றுகொண்டு பீஷ்மனையே காக்கக் கடவீர்.


तस्य सञ्जनयन्हर्षं कुरुवृद्धः पितामहः।
सिंहनादं विनद्योच्चैः शङ्खं दध्मौ प्रतापवान्॥१२॥

தஸ்ய ஸஞ்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்³த⁴​: பிதாமஹ​:|
ஸிம்ஹநாத³ம் விநத்³யோச்சை​: ஸ²ங்க²ம் த³த்⁴மௌ ப்ரதாபவாந் ||1-12||

குருவ்ருத்³த⁴: = கௌரவரில் மூத்தவராகிய;
ப்ரதாபவாந் பிதாமஹ: = கீர்த்திமிக்க பாட்டன்;
தஸ்ய = அவனுடைய(துரியோதனனுடைய இதயத்தில்);
ஹர்ஷம் ஸஞ்ஜநயந் = மகிழ்ச்சி விளைவிக்குமாறு;
உச்சை: ஸிம்ஹநாத³ம் = உயர்ந்த குரலில் சிங்கநாதம்;
விநத்³ய = புரிந்து;
ஸ²ங்க²ம் த³த்⁴மௌ = சங்கை யூதினான்;

(அப்போது) துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு கீர்த்திமிக்க கௌரவர் கிழவனாகிய பாட்டன் உயர்ந்த குரலில் சிங்கநாதம் புரிந்து சங்கை யூதினான்.


ततः शङ्खाश्च भेर्यश्च पणवानकगोमुखाः।
सहसैवाभ्यहन्यन्त स शब्दस्तुमुलोऽभवत्॥१३॥

தத​: ஸ²ங்கா²ஸ்²ச பே⁴ர்யஸ்²ச பணவாநககோ³முகா²​:|
ஸஹஸைவாப்⁴யஹந்யந்த ஸ ஸ²ப்³த³ஸ்துமுலோऽப⁴வத் ||1-13||

தத: = அப்பால்;
ஸ²ங்கா² ச பே⁴ர்ய: ச = சங்குகளும், பேரிகைகளும்;
பணவ ஆநக கோ³முகா²: = தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும்;
ஸஹஸா = திடீரென;
அப்⁴யஹந்யந்த = ஒலித்தன;
ஸ: ஸ²ப்³த³ = அந்த ஓசை;
துமுல: = பயங்கரமாக;
அப⁴வத் = இருந்தது;

அப்பால், சங்குகளும், பேரிகைகளும், தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும், திடீரென ஒலித்தன. அஃது பேரோசையாயிற்று.


ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ।
माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः॥१४॥

தத​: ஸ்²வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்த³நே ஸ்தி²தௌ|
மாத⁴வ​: பாண்ட³வஸ்²சைவ தி³வ்யௌ ஸ²ங்கௌ² ப்ரத³த்⁴மது​: ||1-14||

தத: = பின்பு;
ஸ்²வேதை: ஹயை: யுக்தே = வெள்ளை குதிரைகள் பூட்டிய;
மஹதி ஸ்யந்த³நே = பெருந் தேரில்;
ஸ்தி²தௌ மாத⁴வ: பாண்ட³வ: = நின்ற மாதவனும் பார்த்தனும்;
தி³வ்யௌ ஸ²ங்கௌ² = தெய்வீகமான சங்குகளை;
ப்ரத³த்⁴மது: = ஊதினர்

பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெருந் தேரில் நின்ற மாதவனும் பார்த்தனும் (தம்முடையை) தேவச் சங்குகளை யூதினர்.


पाञ्चजन्यं हृषीकेशो देवदत्तं धनञ्जयः।
पौण्ड्रं दध्मौ महाशङ्खं भीमकर्मा वृकोदरः॥१५॥

பாஞ்சஜந்யம் ஹ்ருஷீகேஸோ² தே³வத³த்தம் த⁴நஞ்ஜய​:|
பௌண்ட்³ரம் த³த்⁴மௌ மஹாஸ²ங்க²ம் பீ⁴மகர்மா வ்ருகோத³ர​: ||1-15||

ஹ்ருஷீகேஸ²: பாஜ்ஜந்யம் = கண்ணன் பாஞ்சஜன்யம் என்கிற பெயருடைய சங்கை;
த⁴நஞ்ஜய: தே³வத³த்தம் = அர்ஜுனன் தேவ தத்தம் என்ற சங்கை;
பௌணட்³ரம் மஹாஸ²ங்க²ம் பீ⁴மகர்மா வ்ருகோத³ர: = பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன்;
த³த்⁴மௌ = ஊதினான்;

கண்ணன் பாஞ்சஜன்யத்தை யூதினான்; தேவ தத்தம் என்ற சங்கை தனஞ்ஜெயன் ஒலித்தான்; அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன் பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை ஊதினான்.


अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः।
नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ॥१६॥

அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதி⁴ஷ்டி²ர​:|
நகுல​: ஸஹதே³வஸ்²ச ஸுகோ⁴ஷமணிபுஷ்பகௌ ||1-16||

அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதி⁴ஷ்டி²ர​: = அநந்த விஜயம் என்ற சங்கை குந்தியின் மகனான ராஜா யுதிஷ்டிரன்;
நகுல​: ஸஹதே³வஸ்²ச ஸுகோ⁴ஷமணிபுஷ்பகௌ = சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளை நகுலனும் சகாதேவனும்

குந்தி மகனாகிய யுதிஷ்டிரன் அநந்த விஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகதேவனும் (முறையே) சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினர்.


काश्यश्च परमेष्वासः शिखण्डी च महारथः।
धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः॥१७॥

காஸ்²யஸ்²ச பரமேஷ்வாஸ​: ஸி²க²ண்டீ³ ச மஹாரத²​:|
த்⁴ருஷ்டத்³யும்நோ விராடஸ்²ச ஸாத்யகிஸ்²சாபராஜித​: ||1-17||

பரமேஷ்வாஸ: காஸ்²ய: ச = வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும்;
மஹாரத²: ஸி²க²ண்டீ³ ச = மகாரதனாகிய சிகண்டியும்;
த்⁴ருஷ்டத்³யும்ந விராட: ச = திருஷ்டத்யும்னனும் விராடனும்;
அபராஜித: ஸாத்யகிஸ்²ச = வெல்லப்படாத ஸாத்தியகியும்;

வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும், மகாரதனாகிய சிகண்டியும், திருஷ்டத்யும்நனும், விராடனும், வெல்லப்படாத ஸாத்தியகியும்,


द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते।
सौभद्रश्च महाबाहुः शङ्खान्दध्मुः पृथक्पृथक्॥१८॥

த்³ருபதோ³ த்³ரௌபதே³யாஸ்²ச ஸர்வஸ²​: ப்ருதி²வீபதே|
ஸௌப⁴த்³ரஸ்²ச மஹாபா³ஹு​: ஸ²ங்கா²ந்த³த்⁴மு​: ப்ருத²க்ப்ருத²க் ||1-18||

த்³ருபதோ³ த்³ரௌபதே³யா: ச = துருபதனும் திரௌபதியின் புதல்வர்களும்;
மஹாபா³ஹு: ஸௌப⁴த்³ர: = பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும்;
ஸர்வஸ²: = எல்லோரும்;
ப்ருதி²வீபதே = பூமிக்குத் தலைவனே! (சஞ்சயன் திருதராட்டிரனிடம்);
ப்ருத²க் ப்ருத²க் = தனித்தனியாக;
ஸ²ங்கா²ந் த³த்⁴மு: = சங்குகளை ஒலித்தனர்;

துருபதனும், துரோபதை மக்களும், பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும் தனித்தனியே தத்தம் சங்குகளை ஒலித்தனர். ‘பூமிக்குத் தலைவனே!’


स घोषो धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत्।
नभश्च पृथिवीं चैव तुमुलो व्यनुनादयन्॥१९॥

ஸ கோ⁴ஷோ தா⁴ர்தராஷ்ட்ராணாம் ஹ்ருத³யாநி வ்யதா³ரயத்|
நப⁴ஸ்²ச ப்ருதி²வீம் சைவ துமுலோ வ்யநுநாத³யந் ||1-19||

ஸ: துமுல: கோ⁴ஷ: = அந்த பயங்கர ஓசை;
நப⁴: ப்ருதி²வீம் ச = ஆகாயத்தையும் பூமியையும்;
வ்யநுநாத³யந் = ஒலிக்கச் செய்து;
தா⁴ர்தராஷ்ட்ரணாம் = திருதராஷ்டிரக் கூட்டத்தாரின்;
ஹ்ருத³யாநி = நெஞ்சுகளை;
வ்யதா³ரயத் = பிளந்தது;

அந்தப் பெருமுழக்கம் வானையும் மண்ணையும் உடனொலிக்கச் செய்வதாய், திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளைப் பிளந்தது.


अथ व्यवस्थितान्दृष्ट्वा धार्तराष्ट्रान्कपिध्वजः।
प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः॥२०॥

அத² வ்யவஸ்தி²தாந்த்³ருஷ்ட்வா தா⁴ர்தராஷ்ட்ராந்கபித்⁴வஜ​:|
ப்ரவ்ருத்தே ஸ²ஸ்த்ரஸம்பாதே த⁴நுருத்³யம்ய பாண்ட³வ​: ||1-20||

அத² = அப்பால்;
கபித்⁴வஜ: பாண்ட³வ: = குரங்குக் கொடியுயர்த்த பார்த்தன்;
வ்யவஸ்தி²தாந் தா⁴ர்தராஷ்ட்ராந் = எதிர் நிற்கும் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை;
த்³ருஷ்ட்வா = நோக்கி;
ததா³ ஸ²ஸ்த்ரஸம்பாதே ப்ரவ்ருத்தே = அப்போது ஆயுதங்களை விடுக்க முனைகின்ற போது;
த⁴நு: உத்³யம்ய = வில்லையேந்திக் கொண்டு;

அப்பால், (இரு திறத்தும்) அம்புகள் பறக்கத் தலைப்பட்டன. அப்போது குரங்குக் கொடியுயர்த்த பார்த்தன் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை நோக்கி வில்லை யேந்திக் கொண்டு, கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.


हृषीकेशं तदा वाक्यमिदमाह महीपते।

अर्जुन उवाच
सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय मेऽच्युत॥२१॥

ஹ்ருஷீகேஸ²ம் ததா³ வாக்யமித³மாஹ மஹீபதே|

அர்ஜுன உவாச
ஸேநயோருப⁴யோர்மத்⁴யே ரத²ம் ஸ்தா²பய மேऽச்யுத ||1-21||

ஹ்ருஷீகேஸ²ம் இத³ம் வாக்யம் = கண்ணனிடம் இந்த வார்த்தைகளை;
ஆஹ = சொல்கிறான்;
மஹீபதே = ராஜனே!;
அர்ஜுன உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான். 
அச்யுத = ஹே அச்சுதா;
மே ரத²ம் = என்னுடைய ரதத்தை;
உப⁴யௌ: ஸேநயோ: = இரண்டு படைகளின்;
மத்⁴யே = நடுவே;
ஸ்தா²பய = நிறுத்துக

அர்ஜுனன் சொல்லுகிறான்: “அச்சுதா, படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு நிறுத்துக” என்று. (கேளாய், திருதராஷ்டிர ராஜனே!)


यावदेतान्निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान्।
कैर्मया सह योद्धव्यमस्मिन्रणसमुद्यमे॥२२॥

யாவதே³தாந்நிரீக்ஷேऽஹம் யோத்³து⁴காமாநவஸ்தி²தாந்|
கைர்மயா ஸஹ யோத்³த⁴வ்யமஸ்மிந்ரணஸமுத்³யமே ||1-22||

அஸ்மிந் ரணஸமுத்³யமே = இந்தப் போர்த் தொடக்கத்தில்;
மயா கை: ஸஹ யோத்³வவ்யம் = என்னால் எவருடன் போர் செய்ய நேருமோ
யோத்³து⁴காமாந் அவஸ்தி²தாந் ஏதாந் = சமரை விரும்பி நிற்கும் இவர்களை;
யாவத் = எவ்வளவு நேரம் ;
அஹம் நிரீக்ஷே = நான் பார்க்கிறேன்

“சமரை விரும்பி நிற்கும் இவர்களை நான் பார்க்க வேண்டும். இந்தப் போர்த் தொடக்கத்தில் என்னோடு போர் செய்யக் கடவோர் யார்?”


योत्स्यमानानवेक्षेऽहं य एतेऽत्र समागताः।
धार्तराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रियचिकीर्षवः॥२३॥

யோத்ஸ்யமாநாநவேக்ஷேऽஹம் ய ஏதே’த்ர ஸமாக³தா​:|
தா⁴ர்தராஷ்ட்ரஸ்ய து³ர்பு³த்³தே⁴ர்யுத்³தே⁴ ப்ரியசிகீர்ஷவ​: ||1-23||

து³ர்பு³த்³தே⁴: தா⁴ர்தராஷ்ட்ரஸ்ய = கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்கு;
யுத்³தே⁴ ப்ரியசிகீர்ஷவ: = போரில் நன்மை செய்யும் வண்ணம்;
யே = எவர்;
ஏதே = இந்த அரசர்கள்;
அத்ர ஸமாக³தா: =இங்கே வந்துள்ளனர்;
யோத்ஸ்யமாநாந் = போர் செய்ய திரண்டு நிற்பவர்களை;
அஹம் அவேக்ஷே = நான் காண வேண்டும்

“கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்குப் பிரீதி செய்யும் வண்ணம், இங்கு போர் செய்யத் திரண்டு நிற்போரை நான் காண வேண்டும்” என்றான்.


सञ्जय उवाच
एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत।
सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम्॥२४॥

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்தோ ஹ்ருஷீகேஸோ² கு³டா³கேஸே²ந பா⁴ரத|
ஸேநயோருப⁴யோர்மத்⁴யே ஸ்தா²பயித்வா ரதோ²த்தமம் ||1-24||

ஸஞ்ஜய உவாச = ஸஞ்ஜயன் சொல்லுகிறான் 
பா⁴ரத = (கேளாய்) பரத நாட்டரசே;
கு³டா³கேஸே²ந = அர்ஜுனனால்;
ஏவம் உக்த: = இவ்வாறு சொன்னவற்றை கேட்டு;
ஹ்ருஷீகேஸ²: = கண்ணன்;
உப⁴யோ: ஸேநயோ: = இரண்டு படைகளுக்கும்;
மத்⁴யே = நடுவில்;
ரதோ²த்தமம் = மேன்மை கொண்ட அத்தேரை;
ஸ்தா²பயித்வா = நிறுத்தி;

சஞ்ஜயன் சொல்லிக்கொண்டு வருகிறான்: (கேளாய்) பரத நாட்டரசே, இங்ஙனம் பார்த்தனுரைத்துக் கேட்ட கண்ணன் மிகவும் மேன்மை கொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினான்.


भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम्।
उवाच पार्थ पश्यैतान्समवेतान्कुरूनिति॥२५॥

பீ⁴ஷ்மத்³ரோணப்ரமுக²த​: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்|
உவாச பார்த² பஸ்²யைதாந்ஸமவேதாந்குரூநிதி ||1-25||

பீ⁴ஷ்மத்³ரோணப்ரமுக²த: = பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்ற வேந்தருக்கும் முன்பாக;
ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம் = எல்லா அரசர்களுக்கு முன்;
இதி உவாச = இவ்வாறு சொன்னான்;
ஸமவேதாந் = கூடி இருக்கும்;
ஏதாந் குருந் = கௌரவரை;
பஸ்²ய = பார்

பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்றெல்லா வேந்தருக்குமெதிரே தேரை நிறுத்திக்கொண்டு, “பார்த்தா! இங்குக் கூடி நிற்கும் கௌரவரைப் பார்!” என்றான்.


तत्रापश्यत्स्थितान्पार्थः पितॄनथ पितामहान्।
आचार्यान्मातुलान्भ्रातॄन्पुत्रान्पौत्रान्सखींस्तथा॥२६॥

தத்ராபஸ்²யத்ஸ்தி²தாந்பார்த²​: பித்ரூநத² பிதாமஹாந்|
ஆசார்யாந்மாதுலாந்ப்⁴ராத்ரூந்புத்ராந்பௌத்ராந்ஸகீ²ம்ஸ்ததா² ||1-26||

அத² பார்த² = இதற்கு பின் அர்ஜுனன்;
தத்ர ஸ்தி²தாந் = அங்கே நிற்கும்;
பித்ரூந் பிதாமஹாந் ஆசார்யாந் மாதுலாந் = தந்தை உடன் பிறந்தவர்களையும் பாட்டனாரும் குருக்களும் மாமன்மார்களும்;
ப்⁴ராத்ருந் புத்ராந் பௌத்ராந் = சகோதரர்களும், பிள்ளைகளும், பேரரும்;
ததா² = அதே போல;
ஸகீ²ந் = நண்பர்களும்;
அபஸ்²யத் = பார்த்தான்

அங்குப் பார்த்தன் தன்னுடைய தந்தையாரும், பாட்டன்மாரும், குருக்களும், மாதுலரும், அண்ணன் தம்பிகளும், மக்களும், பேரரும், தோழர்களும் நிற்பது கண்டான்.


श्वशुरान्सुहृदश्चैव सेनयोरुभयोरपि।
तान्समीक्ष्य स कौन्तेयः सर्वान्बन्धूनवस्थितान्॥२७॥

ஸ்²வஸு²ராந்ஸுஹ்ருத³ஸ்²சைவ ஸேநயோருப⁴யோரபி|
தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய​: ஸர்வாந்ப³ந்தூ⁴நவஸ்தி²தாந் ||1-27||

ஸேநயோ: உப⁴யோ: அபி = இரண்டு படைகளிலும்;
ஸ்²வஸு²ராந் = மாமன்மாரும்;
ஸுஹ்ருத³ ச = நண்பர்களும்;
ஸர்வாந் ப³ந்தூ⁴ந் = உறவினரெல்லாரும்;
அவஸ்தி²தாந் = நிற்பவர்களை;
ஸமீக்ஷ்ய = நன்றாக பார்த்து;
கௌந்தேய​: = அர்ஜுனன்

அங்ஙனமே மாமன்மாரும், நண்பர்களும், உறவினரெல்லாரும் இரண்டு படைகளிலும் நிற்கக் கண்டு, குந்தி மகனாகிய அப்பார்த்தன் மிகவும் இரக்கமுற்றவனாய்த் துயருடன் சொல்லுகிறான்:


कृपया परयाऽविष्टो विषीदन्निदमब्रवीत्।
अर्जुन उवाच
दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुत्सुं समुपस्थितम्॥२८॥

க்ருபயா பரயாऽவிஷ்டோ விஷீத³ந்நித³மப்³ரவீத்|
அர்ஜுன உவாச
த்³ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்தி²தம் ||1-28||

ஸ: கௌந்தேய: = அந்த அர்ஜுனன்;
பரயா க்ருபயா அவிஷ்ட: = மிகுந்த இரக்கத்துடன் நிரம்பியவனாக;
விஷீத³ந் = துயரடைந்து;
இத³ம் அப்³ரவீத் = இவ்வாறு சொல்லுகிறான்
க்ருஷ்ண = ஹே கிருஷ்ணா;
யுயுத்ஸும் = போர் செய்ய விருப்பத்துடன்;
ஸமுபஸ்தி²தம் = நிற்கிற;
இமம் ஸ்வஜநம் த்³ருஷ்ட்வா =இந்த சுற்றத்தார்களை கண்டு;

அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, போர் செய்ய வேண்டு இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு,


सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति।
वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते॥२९॥

ஸீத³ந்தி மம கா³த்ராணி முக²ம் ச பரிஸு²ஷ்யதி|
வேபது²ஸ்²ச ஸ²ரீரே மே ரோமஹர்ஷஸ்²ச ஜாயதே ||1-29||

மம கா³த்ராணி ஸீத³ந்தி = என்னுடைய உறுப்புகள் சோர்கின்றன;
முக²ம் பரிஸு²ஷ்யதி = வாய் உலர்கிறது;
மே ஸ²ரீரே வேபது²: = என்னுடைய உடலில் நடுக்கம்
ரோமஹர்ஷ: ஜாயதே = மயிர் சிலிர்ப்பு அடைகிறது

என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது.


गाण्डीवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदह्यते।
न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः॥३०॥

கா³ண்டீ³வம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரித³ஹ்யதே|
ந ச ஸ²க்நோம்யவஸ்தா²தும் ப்⁴ரமதீவ ச மே மந​: ||1-30||

ஹஸ்தாத் கா³ண்டீ³வம் ஸ்ரம்ஸதே = கையிலிருந்து காண்டீபம் என்கிற வில் நழுவுகிறது;
த்வக் ச ஏவ பரித³ஹ்தே = உடலிலும் எரிச்சல் உண்டாகிறது;
மந: ப்⁴ரமதி இவ = மனம் குழம்புவது போல;
அவஸ்தா²தும் ந ஸ²க்நோமி = நிற்கவும் முடியவில்லை

காண்டீவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது.


निमित्तानि च पश्यामि विपरीतानि केशव।
न च श्रेयोऽनुपश्यामि हत्वा स्वजनमाहवे॥३१॥

நிமித்தாநி ச பஸ்²யாமி விபரீதாநி கேஸ²வ|
ந ச ஸ்²ரேயோऽநுபஸ்²யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே ||1-31||

விபரீதாநி நிமித்தாநி ச பஸ்²யாமி = விபரீதமான சகுனங்களும் காண்கிறேன்;
ஆஹவே = போரிலே;
ஸ்வஜநம் ஹத்வா = சுற்றத்தார்களை கொன்று;
ஸ்²ரேய: ச = நன்மையும்;
ந அநுபஸ்²யாமி = தோன்றவில்லை;

கேசவா, விபரீதமான சகுனங்கள் பல காண்கிறேன். போரிலே சுற்றத்தார்களை மடிப்பதில் எனக்கு நன்மை தோன்றவில்லை.


न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च।
किं नो राज्येन गोविन्द किम् भोगैर्जीवितेन वा॥३२॥

ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகா²நி ச|
கிம் நோ ராஜ்யேந கோ³விந்த³ கிம் போ⁴கை³ர்ஜீவிதேந வா ||1-32||

விஜயம் ராஜ்யம் ச ஸுகா²நி = வெற்றியையும் ராஜ்யத்தையும் இன்பங்களையும்;
கோ³விந்த³ =ஹே கோ³விந்தா;
ந காங்க்ஷே = விரும்புகிலேன்;
ஜீவிதேந ராஜ்யேந: போ⁴கை³ வா = உயிர் வாழ்க்கையாலோ அல்லது ராஜ்யத்தாலோ அல்லது இன்பங்களாலோ
கிம் = என்ன

கண்ணா, நான் வெற்றியை விரும்புகிலேன்; ராஜ்யத்தையும் இன்பங்களையும் வேண்டுகிலேன். கோவிந்தா. நமக்கு ராஜ்யத்தால் ஆவதென்? இன்பங்களால் ஆவதென்? உயிர் வாழ்க்கையாலேனுமாவதென்னே?


येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च।
त इमेऽवस्थिता युद्धे प्राणांस्त्यक्त्वा धनानि च॥३३॥

யேஷாமர்தே² காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போ⁴கா³​: ஸுகா²நி ச|
த இமேऽவஸ்தி²தா யுத்³தே⁴ ப்ராணாம்ஸ்த்யக்த்வா த⁴நாநி ச ||1-33||

யேஷாம் அர்தே² = எவருக்காக;
ராஜ்யம் போ⁴கா³: ஸுகா²நி த⁴நாநி = அரசு, போகங்கள் இன்பங்கள், செல்வம்;
ந: காங்க்ஷிதம் = நமக்கு விருப்பமோ;
தே இமே = அந்த இவர்களே;
யுத்³வே = யுத்தத்தில்;
ப்ராணாந் = உயிர்களை;
த்யக்த்வா = இழந்தவராய்;
இமே’ அவஸ்தி²தா = நிற்கிறார்கள்

யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்தோராய் இங்கு வந்து நிற்கிறார்கள்.


आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः।
मातुलाः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा॥३४॥

ஆசார்யா​: பிதர​: புத்ராஸ்ததை²வ ச பிதாமஹா​:|
மாதுலா​: ஸ்²வஸு²ரா​: பௌத்ரா​: ஸ்²யாலா​: ஸம்ப³ந்தி⁴நஸ்ததா² ||1-34||

ஆசார்யா: பிதர: புத்ரா: = குருமார்கள், தந்தையர், மக்கள்;
ததா² பிதாமஹா: மாதுலா: ஸ்²வஸு²ரா: = அதே போல, பாட்டன்மார், மாமன்மார், மாமனார்கள்;
பௌத்ரா: ஸ்²யாலா: ஸம்ப³ந்தி⁴ந: = பேரரும், மைத்துனரும், உறவினர்களும்

குருக்களும், தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும், மாதுலரும், மாமன்மாரும், பேரரும், மைத்துனரும், சம்பந்திகளும் (இங்குளர்). 34


एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन।
अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किं नु महीकृते॥३५॥

ஏதாந்ந ஹந்துமிச்சா²மி க்⁴நதோऽபி மது⁴ஸூத³ந|
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ​: கிம் நு மஹீக்ருதே ||1-35||

மது⁴ஸூத³ந = மதுசூதனா!
க்⁴நத: அபி = நான் கொல்லப் பட்டாலும்
த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: = மூவுலகின் ஆட்சிக்காகவும்;
ஏதாந் ஹந்தும் ந இச்சா²மி = இவர்களை கொல்ல விரும்பவில்லை;
மஹீக்ருதே கிம் நு = பூமிக்காக (சொல்லவும் வேண்டுமா);

மதுசூதனா, யான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல விரும்புகிலேன். மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும் (இது செய்யேன் செய்யேன்!) பூமியின் பொருட்டு செய்வனோ?


निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन।
पापमेवाश्रयेदस्मान्हत्वैतानाततायिनः॥३६॥

நிஹத்ய தா⁴ர்தராஷ்ட்ராந்ந​: கா ப்ரீதி​: ஸ்யாஜ்ஜநார்த³ந|
பாபமேவாஸ்²ரயேத³ஸ்மாந்ஹத்வைதாநாததாயிந​: ||1-36||

ஜநார்த³ந = ஜனார்தனா!
தார்தராஷ்ட்ராந் நிஹத்ய = திருதராஷ்டிரக் கூட்டத்தாரை கொன்று;
ந: கா ப்ரீதி: ஸ்யாத் = நமக்கு என்ன இன்பம் ஏற்படப் போகிறது;
ஏதாந் ஆததாயிந: ஹத்வா = இந்த பாவிகளை கொல்வதால்;
அஸ்மாந் பாபம் ஏவ ஆஸ்²ரயேத் = நம்மை பாவமே சாரும்

ஜநார்த்தன! திருதராஷ்டிரக் கூட்டத்தாரைக் கொன்று நாம் என்ன இன்பத்தையடையப் போகிறோம்? இந்தப் பாதகரைக் கொல்வதனால் நம்மைப் பாவமே சாரும்.


तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान्स्वबान्धवान्।
स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव॥३७॥

தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தா⁴ர்தராஷ்ட்ராந்ஸ்வபா³ந்த⁴வாந்|
ஸ்வஜநம் ஹி கத²ம் ஹத்வா ஸுகி²ந​: ஸ்யாம மாத⁴வ ||1-37||

மாத⁴வ = ஹே மாதவா;
தஸ்மாத் = இதிலிருந்து;
ஸ்வபா³ந்த⁴வாந் தா⁴ர்தராஷ்ட்ராந் = சுற்றத்தார்களான திருதராஷ்டிர வர்க்கத்தாரை;
ஹந்தும் வயம் ந அர்ஹா: = கொல்வதற்கு நாம் உரியவர் அல்லர்;
ஹி = ஏனெனில்;
ஸ்வஜநம் ஹத்வா = பந்துக்களை கொன்றபின்;
கத²ம் ஸுகி²ந: ஸ்யாம = எப்படி இன்புற்று இருப்போம்?

ஆதலால், சுற்றத்தாராகிய திருதராஷ்டிர வர்க்கத்தாரைக் கொல்வது நமக்குத் தகாது. மாதவா, பந்துக்களைக் கொன்றபின் நாம் இன்புற்றிருப்பதெப்படி?


यद्यप्येते न पश्यन्ति लोभोपहतचेतसः।
कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम्॥३८॥

யத்³யப்யேதே ந பஸ்²யந்தி லோபோ⁴பஹதசேதஸ​:|
குலக்ஷயக்ருதம் தோ³ஷம் மித்ரத்³ரோஹே ச பாதகம் ||1-38||

லோப⁴ உபஹதசேதஸ: = அவாவின் மிகுதியால் அறிவிழந்து;
ஏதே = இவர்கள்
குலக்ஷயக்ருதம் தோ³ஷம் = குலத்தை அழிப்பதால் வரும் குற்றம்;
மித்ரத்³ரோஹே பாதகம் = நண்பருக்கு துரோகம் இழைக்கும் பாவத்தையும்;
ந பஸ்²யந்தி = காண்கிலர் ;
யத்³யபி = இருந்தும்;

அவாவின் மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலத்தையழிப்பதில் விளையும் தீங்கையும் நண்பருக்குச் சதி செய்வதிலுள்ள பாதகத்தையும் காண்கிலராயினும்,


कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुम्।
कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन॥३९॥

கத²ம் ந ஜ்ஞேயமஸ்மாபி⁴​: பாபாத³ஸ்மாந்நிவர்திதும்|
குலக்ஷயக்ருதம் தோ³ஷம் ப்ரபஸ்²யத்³பி⁴ர்ஜநார்த³ந ||1-39||

ஜநார்த³ந = ஜனார்தனா!
குலக்ஷயக்ருதம் தோ³ஷம் = குல நாசத்தினால் வரும் குற்றம்
ப்ரபஸ்²யத்³பி⁴ = நன்கு அறிந்த
அஸ்மாபி⁴​: = நம்மால்
பாபாத் நிவர்திதும் = பாவத்தில் இருந்து விலக;
கத²ம் ந ஜ்ஞேயம் = அறியாமல் இருப்பது ஏன்;

ஜநார்த்தன! குலநாசத்தால் ஏற்படுங் குற்றத்தையுணர்ந்த நாம் இப்பாவத்தினின்று விலகும் வழியறியாதிருப்பதென்ன?


कुलक्षये प्रणश्यन्ति कुलधर्माः सनातनाः।
धर्मे नष्टे कुलं कृत्स्नमधर्मोऽभिभवत्युत॥४०॥

குலக்ஷயே ப்ரணஸ்²யந்தி குலத⁴ர்மா​: ஸநாதநா​:|
த⁴ர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமத⁴ர்மோऽபி⁴ப⁴வத்யுத ||1-40||

குலக்ஷயே = குலநாசத்தினால்;
ஸநாதநா​: = தொன்று தொட்டு வருகின்ற;
குலத⁴ர்மா​: = குல தர்மங்கள்;
ப்ரணஸ்²யந்தி = அழிகின்றன;
த⁴ர்மே நஷ்டே = தர்மம் அழிவதில்;
க்ருத்ஸ்நம் குலம் = குலம் முழுவதிலும்;
அத⁴ர்ம: உத அபி ப⁴வதி = அதர்மமும் பரவுகிறது;

குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே?


अधर्माभिभवात्कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः।
स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्करः॥४१॥

அத⁴ர்மாபி⁴ப⁴வாத்க்ருஷ்ண ப்ரது³ஷ்யந்தி குலஸ்த்ரிய​:|
ஸ்த்ரீஷு து³ஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர​: ||1-41||

அத⁴ர்ம: அபி ப⁴வாத் = அதர்மம் பரவுவதால்;
க்ருஷ்ண = கண்ணா!;
குலஸ்த்ரிய​: = குலப் பெண்கள்;
ப்ரது³ஷ்யந்தி = கெட்டுப் போகிறார்கள்;
து³ஷ்டாஸு ஸ்த்ரீஷு = கெட்ட பெண்களால்;
வர்ணஸங்கர​: ஜாயதே = வர்ணக் கலப்பு உண்டாகிறது;
வார்ஷ்ணேய = விருஷ்ணி குலத் தோன்றலே!

கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது.


सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च।
पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्डोदकक्रियाः॥४२॥

ஸங்கரோ நரகாயைவ குலக்⁴நாநாம் குலஸ்ய ச|
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோ³த³கக்ரியா​: ||1-42||

ஸங்கர: = குழப்பத்தால்;
குலஸ்ய ச = குலத்தையும்;
குலக்⁴நாநாம் = குல நாசம் செய்தவர்களையும்;
நரகாய ஏவ = நரகத்துக்கே (கொண்டு செல்கிறது);
பிண்ட³, த³கக்ரியா​: லுப்த = பிண்டமும் சடங்குகளும் இன்றி;
ஏஷாம் பிதர: ஹி = இவர்களுடைய முன்னோர்களும்;
பதந்தி = வீழ்வர்

அக்குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது. இவர்களுடைய பிதிர்க்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள்.


दोषैरेतैः कुलघ्नानां वर्णसङ्करकारकैः।
उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः॥४३॥

தோ³ஷைரேதை​: குலக்⁴நாநாம் வர்ணஸங்கரகாரகை​:|
உத்ஸாத்³யந்தே ஜாதித⁴ர்மா​: குலத⁴ர்மாஸ்²ச ஸா²ஸ்²வதா​: ||1-43||

குலக்⁴நாநாம் = குலநாசம் செய்பவர்களின்;
ஏதை: வர்ணஸங்கரகாரகை​: தோ³ஷை = இந்த வர்ணக் கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களால்;
ஸா²ஸ்²வதா​: = என்றும் உள்ள;
ஜாதித⁴ர்மா​: குலத⁴ர்மா ச = குல ஜாதி தருமங்கள்;
உத்ஸாத்³யந்தே = அழிகின்றன;

வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக்குற்றங்களால் ஜாதி தர்மங்களும் தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன.


उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन।
नरके नियतं वासो भवतीत्यनुशुश्रुम॥४४॥

உத்ஸந்நகுலத⁴ர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்த³ந|
நரகே நியதம் வாஸோ ப⁴வதித்யநுஸு²ஸ்²ரும ||1-44||

உத்ஸந்ந குலத⁴ர்மாணாம் = எடுபட்டுப் போன குல தருமங்கள்;
மநுஷ்யாணாம் = மனிதர்களுக்கு;
அநியதம் நரகே வாஸ: = அளவற்ற காலம் நரக வாசம்;
ப⁴வதி = ஏற்படுகிறது;
இதி அநுஸு²ஸ்²ரும = கேள்விப் படுகிறோம்;

ஜநார்த்தனா! குலதர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.


अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयम्।
यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः॥४५॥

அஹோ ப³த மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்|
யத்³ராஜ்யஸுக²லோபே⁴ந ஹந்தும் ஸ்வஜநமுத்³யதா​: ||1-45||

அஹோ = அந்தோ;
ப³த = பாவம்;
வயம் மஹத் பாபம் கர்தும் = பெரும் பாவம் செய்வதற்கு நாம்;
வ்யவஸிதா = முனைந்து இருக்கிறோம்;
யத்³ ராஜ்ய ஸுக² லோபே⁴ந = ஏனெனில் ராஜ்ய சுகத்திற்கு ஆசைப் பட்டு;
ஸ்வஜநம் ஹந்தும் = சுற்றத்தாரைக் கொல்ல;
உத்³யதா​: = முனைந்து விட்டோம்;

அந்தோ! அரசவின்பத்தை விழைந்து சுற்றத்தாரைக் கொல்ல முற்படும் நாம் பெரிய பாவஞ் செய்யத் தலைப்பட்டோம்!


यदि मामप्रतीकारमशस्त्रं शस्त्रपाणयः।
धार्तराष्ट्रा रणे हन्युस्तन्मे क्षेमतरं भवेत्॥४६॥

யதி³ மாமப்ரதீகாரமஸ²ஸ்த்ரம் ஸ²ஸ்த்ரபாணய​:|
தா⁴ர்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே க்ஷேமதரம் ப⁴வேத் ||1-46||

அஸ²ஸ்த்ரம் = ஆயுதம் இன்றி;
அப்ரதீகாரம் = எதிர்த்து போரிடாமல்;
மாம் = என்னை;
ஸ²ஸ்த்ரபாணய​: = ஆயுதம் தாங்கிய;
தா⁴ர்தராஷ்ட்ரா = திருதராஷ்டிரக் கூட்டத்தார்;
யதி³ ரணே ஹந்யு = ஒருவேளை போரில் கொன்று விடினும்;
தத் மே = அதில் எனக்கு;
க்ஷேமதரம் ப⁴வேத் = நன்மையே ஆகிறது;

கையிலாயுதமில்லாமல், எதிர்க்காமல் நிற்குமென்னை இந்தத் திருதராஷ்டிரக் கூட்டத்தார் ஆயுதபாணிகளாய்ப் போரில் மடித்துவிடினும் அது எனக்குப் பெரிய நன்மையேயாம்.”


सञ्जय उवाच
एवमुक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत्।
विसृज्य सशरं चापं शोकसंविग्नमानसः॥४७॥

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்²யே ரதோ²பஸ்த² உபாவிஸ²த்|
விஸ்ருஜ்ய ஸஸ²ரம் சாபம் ஸோ²கஸம்விக்³நமாநஸ​: ||1-47||

ஸங்க்²யே = போர்க்களத்தில்;
ஸோ²க ஸம்விக்³ந மாநஸ​: = சோகத்தினால் கலங்கிய மனத்துடன்;
அர்ஜுந​: ஏவம் உக்த்வா = அர்ஜுனன் இவ்வாறு கூறி;
ஸஸ²ரம் சாபம்= அம்பையும் வில்லையும்;
விஸ்ருஜ்ய = எறிந்து விட்டு;
ரதோ²பஸ்த² = தேர்த்தட்டில்;
உபாவிஸ²த் = உட்கார்ந்தான்;

சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக்களத்தில் இவ்வாறு சொல்லிவிட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப்பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்.


ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
श्रिकृष्णार्जुन सम्वादेऽर्जुनविषादयोगो नाम प्रथमोऽध्याय: || 1 ||

ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘அர்ஜுன விஷாத யோகம்’ எனப் பெயர் படைத்த
முதல் அத்தியாயம் நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக