நாலடியார் : காமத்துப்பால்

நாலடியார் - 38.பொது மகளிர்

விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.
371

விளக்கினது ஒளியும் பொது மகளிரது அன்பும் ஆகிய இரண்டையும் தெளிவாக ராஆய்ந்து பார்த்தால் இரண்டும் வேறானவை அல்ல. விளக்கினது ஒளியும் எண்ணெய் வற்றிய போதே நீங்கும். பொது மகளிர் அன்பும் (தம்மை நாடுவார்) கைப்பொருள் நீங்கியபோதே நீங்கும்.


அங்கோட்டு அகல் அல்குல் ஆயிழையாள் நம்மோடு
செங்கோடு பாய்துமே என்றாள்மன்; - செங்கோட்டின்
மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.
372

---------


அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்
செங்கண்மா லாயினும் ஆகமன்; - தம்கைக்
கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளிர் அன்னார்
விடுப்பர்தம் கையால் தொழுது.
373

அழகிய இடமகன்ற தேவர் உலகில் உள்ள தேவர்களால் தொழப்படும் சிவந்த கண்களையுடைய திருமாலைப் போன்றவராக இருப்பினும், பொருள் இல்லாதவரை, கொய்தற்குரிய இளந்தளிர் போலும் மேனியுடைய பொது மகளிர், தம் கையால் கும்பிட்டு அனுப்பிவிடுவர்.


ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக்
காணமி லாதார் கடுவனையர்; - காணவே
செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னர் அவர்க்கு.
374

அன்பில்லாத மனத்தையும், அழகிய குவளை மலர் போன்ற கண்களையும் உடைய பொது மகளிர்க்கு, பொருள் இல்லாதவர் நஞ்சு போல் விரும்பத்தகாதவர் ஆவர். பலரும் காணச் செக்காட்டுவோர் ஆயினும், மிகுதியாகப் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர் அப்பொது மகளிர்க்குச் சர்க்கரை போல் இனியவராவர்.


பாம்பிற்கு ஒருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் - ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவி னார்.
375

இனிமை மிக்க, தெளிந்த நீருள்ள பொய்கையிலே பாம்புக்கு ஒரு தலையைக் காட்டி, மற்றொரு தலையை மீனுக்குக் காட்டும் விலாங்கு மீனை ஒத்த செய்கையையுடைய பொதுமகளிரின் தோள்களை, மிருகத்தைப் போன்ற அறிவற்றவர்கள் தழுவுவர். (பாம்புக்கும் மீனுக்கும் ஆசைகாட்டி இரண்டையும் ஏமாற்றும் விலாங்கு மீனைப் போன்ற வஞ்சகமுள்ளவர் பொதுமகளிர்).


பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும் போல்
நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த
பொற்றொடியும் போர்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
நிற்றியோ போதியோ நீ.
376

நூலும் (அதில் கோத்த) மணியும் போன்றும், இணை பிரியாத அன்றிற் பறவைகள் போன்றும், நாளும் நம்மை விட்டுப் பிரிய மாட்டோம் என்று சொன்ன, பொன்னாலான வளையலையுடையவளும் போர் செய்யும் ஆட்டுக் கடாவின் முறுக்கேறிய கொம்பினைப் போல் குணம் மாறினாள். ஆதலின் நெஞ்சே! நீ இன்னமும் ஆசை கொண்டு அவளுடன் போவாயோ? அன்றி என்னிடம் நிற்பாயோ? சொல்!


ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு
சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை.
377

காட்டுப் பசுவினைப் போல், இன்பம் உண்டாகத் தழுவி, தம்மைச் சேர்ந்தவருடைய பொருளையெல்லாம் கவர்ந்துகொண்டு அவர் வறுமையுற்றதும், அவரைப் பார்த்து உடனே குப்புறப்படுத்துக்கொள்ளும் பொதுமகளிரின் அன்பைத் 'தமது' என மயங்கி ஏமாந்து இருப்பவர், பலரால் ஏளனமாகச் சிரிக்கப் பெறுவர்.


ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த்
தாமார்ந்தபோதே தகர்க் கோடாம் - மானோக்கின்
தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே,
செந்நெறிச் சேர்தும்என் பார்.
378

தம்மை நாடி வந்தவர், தம் அழகில் மயங்கியிருக்கும்போது (பொருளைப் பறித்துக்கொண்டு) பின் அவர்கள் வறுமையுற்றதும், ஆட்டுக் கடாவின் வளைந்த முறுக்கேறிய கொம்புபோல் மாறுபடும் குணத்துடன் கூடிய, மான்போலும் பார்வையுடைய பொது மகளிரின் கொங்கைகளை, அறநெறி செல்லும் சான்றோர் விரும்ப மாட்டார்கள்.


ஊறுசெய் நெங்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி
எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்
தமரல்லர் தம்உடம்பி னார்.
379

ஒளி வீசும் நெற்றியையுடைய பொது மகளிர் துன்பம் செய்யும் மனத்தைப் பிறர் அறியாதவாறு தம்முள்ளே மறைத்து வைத்துப் பேசிய ஆசை மொழிகளை நம்பி, 'இவள் எமக்கு உரியவள்' என நினைப்பார் நினைக்கட்டும்! உண்மையில் அப்போது மகளிர் யார்க்கும் உரியரல்லர்!


உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார்
கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளி
அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பி னவர்.
380

ஒளி பொருந்திய நெற்றியுடைய பொதுமகளிரின் மனம் ஒருவனிடத்தே இருக்க, அதனை மறைத்து, தம்மை அடைந்தவா¢டம் எல்லாம் சையுடையார் போல் பேசும் போலிச் சொற்களைத் தெளிவாக உணர்ந்தபோதும் பழி நிறைந்த உடம்பை உடைய பாவிகள், அப்பொது மகளிரின் உடம்பை விட்டொழித்தலை அறியார்.

 நாலடியார் - 39.கற்புடை மகளிர்


அரும்பெற்று கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் - விரும்பிப்
பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை.
381

பெறுதற்கு அரிய கற்பினையுடைய இந்திராணியைப் போன்ற புகழ்மிக்க மகளிரேயாயினும் அவர்களுள், தன்னை அடைய வேண்டும் என்னும் ஆசையால் தன் பின்னால் டவர் நிற்காத முறையிலே தன்னைத் காத்துக்கொள்ளும் நல்ல நெறியை உடைய ஒருத்தியே சிறந்த மன¨வி ஆஸ்வாள்.


குடநீர்அட் டுண்ணும் இடுக்கண் பொழுதும்
கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும்
கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.
382

ஒரு குடத்தில் இருக்கும் தண்ணீரையே காய்ச்சிக் குடிக்கத்தக்க வறுமை வந்தாலும், கடல் நீரே வற்றுமாறு பருகத்தக்க அளவு மிகுந்த எண்ணிக்கையில் சுற்றத்தார் வந்தாலும், விருந்தோம்பும் குணத்தை ஒழுக்க நெறியாகக் கொண்டு இனிய மொழி பேசும் பெண், இல்வாழ்க்கைக்குரிய சிறந்த குணம் உடையவள் ஆவாள்.


நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழும்மாண் கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.
383

சுவர்கள் இடிந்தமையால் நான்கு பக்கங்களிலும் வழியாகி, மிகவும் சிறியதாகி, எல்லா இடங்களிலும் கூரையின் மேற்புறத்திலிருந்து மழைநீர் வீழ்வதாயினும், இல்லறக் கடமைகளைச் செய்ய வல்லவளாய், தான் வாழும் ஊரில் உள்ளார் தன்னைப் புகழுமாறு மேன்மை பொருந்திய கற்பினையுடையவளாய்த் திகழும் மனைவி இருக்கும் இல்லமே சிறந்த இல்லமாகும்.


கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்; - உட்கி
இடனறிந்து ஊடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்.
384

கண்ணுக்கு இனிய அழகினளாய், தன் கணவன் விரும்பும் வகையில் தன்னை அலங்கா¢த்துக்கொள்பவளாய், அச்சம் உடையவளாய், ஊரார் பழிக்கு நாணம் உடையவளாய், கணவனுடன் சமயம் அறிந்து ஊடல் கொண்டு, அவன் மகிழும் வண்ணம் அவ்வூடலிலிருந்து நீங்கி இன்பம் தரும் இனிய மொழி உடையவளே நல்ல பெண் ஆவாள்.


எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.
385

நாள்தோறும் எம் கணவர் எம் தோளைத் தழுவி எழுந்தாலும் முதல்நாள் நாணம் அடைந்ததைப் போலவே இன்றும் நாணம் அடைகின்றோம். (இப்படியிருக்க) பொருள் ஆசையால் பலருடைய மார்பையும் தழுவிக்கொள்ளும் பொது மகளிர் எப்படித்தான் நாணமின்றித் தழுவுகின்றனரோ? (கற்புடை மகளிர்க்கு நாணமும் ஓர் அழகாகும்).


ஊள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; - தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்.
386

இயல்பாகவே கொடைத் தன்மையுடையவனிடம் கிடைத்த செல்வமானது, நுண்ணறிவாளன் கற்ற கல்விபோல யாவர்க்கும் பயன்படும். நாணம் மிகுந்த குல மகளின் அழகு, அறிவிற்சிறந்த வீரனின் கையில் உள்ள கூரிய வாள் போல்யாராலும் நெருங்குதற்கு அரிதாம்.


கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரான்; - ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையும் தோய வரும்.
387

ஒரு சிற்றூரான் தாழ்ந்த கருங்கொள்ளையும், உயர்ந்த செங்கொள்ளையும் வேறுபாடின்றி காசுக்கு ஆறு மரக்கால் என வாங்கிக் கொண்டானாம்! அது போல, முழுதும் எம்மோடு ஒத்திராத அழகிய நெற்றியையுடைய பொதுமகளிரை அனுபவித்த மலை போன்ற மார்புடைய கணவன் குளிக்காமல் என்னையும் அனுபவிக்க வருகிறான் (அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டும் உடையவர் கற்புடை மகளிர்).


கொடியவை கூறாதி பாண! நீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற்கு அதனால்
வலக்கண் அனையார்க்கு உரை.
388

பாணனே! கொடுமையான சொற்களை எம்மிடம் கூறாதே! ஏனெனில், தலைவனுக்கு உடுக்கையின் இடப் பக்கத்தைப் போலப் (பயன்படாதவர்களாக) நாங்கள் இருக்கிறோம். அத்தகைய சொற்களைக் கூறுவதானால் மெதுவாக இங்கிருந்து விலகிச் சென்று, உடுக்கையின் வலப் பக்கத்தைப் போல அவருக்குப் பயன்படும் பொதுமகளிர்க்குச் சொல்! (தலைவா¢ன் பிரிவை உணர்த்திப் பாணனை நோக்கித் தலைவி கூறியது இது. இதனால் தன் கணவனைப் பற்றிய எந்தப் பழிப்புரையையும் கற்புடைய பெண் கேட்கவும் விரும்பமாட்டாள் என்பது புலப்படும்).


சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்; - தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
நோக்கி இருந்தேனும் யான்.
389

கோரைப் புற்களைப் பறித்த இடத்தில் நீர் சுரந்து விளங்கும் குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த ஊரில் உள்ள தலைவன் மீது முன்பு ஈ பறந்தாலும் அது கண்டு வருந்தியவளும் யானே! இப்போது, தீப்பொறி எழுமாறு பொதுமகளிரின் கொங்கைகள் மோதப் பெற்றுச் சந்தனம் கலைந்த தலைவனின் மார்பைப் பொறுமையோடு பார்த்துக் கொண்டு இருப்பவளும் யானே! (தம் கணவர் பரத்தையரைக் கூடிய போதும் கற்புடை மகளிர் பொறுத்திருக்கும் இயல்பினர் என்பது கருத்து).


அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
பெரும்பொய் உரையாதி, பாண; - கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற்கு அதனால்
இடைக்கண் அனையார்க்கு உரை.
390

பாணனே! அரும்புகள் மலர்கின்ற மாலைகள் அணிந்த தலைவன் எமக்கு அருள் புரிவார் என்று பொய்யான சொற்களைக் கூறாதே. ஏனெனில், நாங்கள் கரும்பின் கடைசிக் கணுக்களை ஒத்திருக்கிறோம். அதனால் இப் பேச்சை இடையில் உள்ள கணுக்களைப் போன்ற பரத்தையா¢டம் சொல்!' (நுனிக் கரும்பாகவோ, இடைக் கரும்பாகவோ இல்லாமல் எப்போதும் அடிக்கரும்பாக இருக்கவே குல மகளிர் விரும்புவர் என்பது கருத்தாம். 'மறுமையிலாவது தலைவனின் அன்பைப் பெறவேண்டும்' எனக் குறுந்தொகைப் பாடல் ஒன்றின் தலைவி கூறும் கருத்து இந்தப் பாடலுடன் ஒப்பிடத் தக்கது).

 நாலடியார் - 40.காம நுதலியல்


முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கு ஓதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு.
391

கடல் அலைகள் ஓயாது மோதுதற்கு இடமான நீண்ட கழிகளினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய அரசனே! கணவனுடன் கூடிப் புணராவிடின் மேனி எங்கும் பசலை படரும்; ஊடி வருந்தாவிடின் காதலானது சுவையில்லாமல் போகும். எனவே முதலில் கூடிப் பின் ஊடுவதும் காதல் நெறியாம். (தலைவனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைவியின் புலவி நீங்கச் சொல்லியது).


தம்அமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்கும் துணையில்லார்க்கு - இம்மெனப்
பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.
392

தம்மால் விரும்பப்படும் தலைவருடைய மாலை அணிந்த அழகிய மார்பை, உடம்பு பூரிக்கத் தழுவும், அத் தலைவரைப் பிரிந்த மகளிர்க்கு, 'இம்' என்னும் ஒலியுடன் மேகம் நீரைப் பொழிய திக்குகளெல்லாம் எழும் அவ்வோசை சாப்பறையை ஒத்திருந்தது. (பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்கு உரைத்தது).


கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.
393

மிக வருந்தி வேலை செய்யும் கம்மாளரும் வேலையை நிறுத்திக் கருவிகளை எடுத்து வைக்கும் மயக்கம் பொருந்திய மாலைக் காலத்தில், மலர்களை ஆய்ந்தெடுத்து மாலையாகத் தொடுத்து, அம்மாலையைக் கையில் வைத்துக்கொண்டு, தலைவன் இல்லாத மகளிர்க்கு இம்மாலை என்ன பயனைத் தரும் என் மனம் கலங்கி அழுதாள். (தலைவி செலவுடன் படாமையைத் தோழி தலைவனுக்குக் கூறியது).


செல்சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறிய விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணும்கொல், அந்தோதன்
தோள்வைத்து அணைமேற் கிடந்து.
394

சூரியன் மறையும் மாலை நேரத்தைக் கண்டு வருந்தி, செவ்வா¢ பரந்த கண்கள் கொண்ட நீரை மெல்லிய விரல்களால் முறையாக எடுத்தெறிந்து விம்மி அழுது, தனது மெல் விரல்களால் நான் பிரிந்து சென்ற நாட்களைக் கணக்கிட்டு, படுக்கையில் தனது தோளையே தலையணையாகக் கொண்டு படுத்து, நான் வராத குற்றத்தை எண்ணுவாளோ? (வினை முடித்து மீண்ட தலைவன் பாகன் கேட்பக் கூறியது).


கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; - பின்சென்றும்
ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம்
கோட்டிய வில்வாக்கு அறிந்து.
395

சிறிய மீன் கொத்திப் பறவை என் தலைவியின் கண்களைக் கயல் மீன் எனக் கருதி அவளைப் பின் தொடர்ந்து சென்றது. அப்படிச் சென்றும், ஊக்கத்துடன் முயன்றும், அவளுடைய ஒளிமிக்க புருவத்தை வில்லின் வளைவு என்று எண்ணிக் கண்களைக் கொத்தாமல் விட்டு விட்டது. (தலைவன், தலைவியின் அழகை வியந்து தோழனிடம் கூறியது).


அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ; - அரக்கார்ந்த
பஞ்சிகொண்டு ஊட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப் பின்வாங்கும் அடி.
396

செவ்வாம்பல் போன்ற வாயையும், அழகிய இடையையும், உடைய என் மகள் முன்னர், செம்பஞ்சுக் குழம்பைப் பாதத்தில் பஞ்சினால் தடவிய போதும், மெல்ல மெல்ல எனக்கூறிக் காலைப் பின்னுக்கு இழுத்துக் கொள்வாள். அந்தோ! அந்தப் பாதங்கள் பரற்கற்கள் பொருந்திய பாலை வழியின் கொடுமையை எவ்வாறு தாங்கின? (தலைவனுடன் போன தலைவியை எண்ணித் தாய் ஏங்கியது).


ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல்
கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து.
397

ஓலையிலே எழுதும் கணக்கா¢ன் ஓசை ஒழியும்படியான மாலை நேரத்தில், தலைவன் பிரிதலை நினைத்து, மாலையைக் கழற்றி, வீசியெறிந்து, அழகிய கொங்கைகளில் பூசப்பட்டிருந்த சந்தனக் குழம்பையும் உதிர்த்துத் தள்ளித் துன்புற்று அழுதாள். (தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவியின் துன்ப றிலையைத் தோழி கூறியது).


கடக்கருங் காலத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி; - சுடர்த்தொடீஇ
பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.
398

ஒளி பொருந்திய வளையலையுடையளே! 'கடந்து போதற்கு அரிய பாலை வழியிலே காளை போன்ற நின் காதலனுடன் நாளை நடந்து செல்லும் ஆற்றல் உடையையோ?' என்று தானே கேட்கின்றாய்? ஒருவன் ஒரு குதிரையை எப்பொழுது பெற்றானோ அப்பொழுதே அதில் ஏறிச் செல்லும் முறையையும் கற்றவன் ஆவான். ஆதலால் காதலன்பின் செல்லுதல் அரிதன்று. (தலைவனுடன் போகச் சம்மதித்த தலைவி தோழிக்குக் கூறியது).


முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
பூம்பாவை செய்த குறி.
399

முலைக்காம்புகளும் முத்துமாலையும் உடல் முழுதும் அழுந்தும்படி தழுவிக்கொண்டதன் காரணத்தை அப்போது யான் அறியேன்! தாமரைப் பூவில் உறையும் திருமகள் போன்ற என் மகள், மான் கூட்டங்கள் புலிக்கு அஞ்சும் பாலை வழியில் என்னை விட்டுப் பிரிந்து தன் காதலனுடன் செல்வதற்குத் தான் அப்படி அன்பாகத் தழுவிக் கொண்டாளோ? (தலைவனுடன் போன தன் மகளை எண்ணி நற்றாய் வருந்திச் சொல்லியது).


கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
என்ஈன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயின்
பாங்கனார் சென்ற நெறி.
400

பொன் போலும் தேமல் பொருந்திய, கோங்க மலரைப் போன்ற முலையையுடைய தோழி! முக்கண்ணனான சிவபெருமானும், காக்கைப் பறவையும், படமுடைய பாம்பும், என்னைப் பெற்ற தாயும் எனக்கு என்ன குற்றம் செய்தனர்? அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை! பொருளாசையால் என் தலைவன் பிரிந்த வழியே எனக்குக் குற்றம் செய்தது. (தலைவி தனது பிரிவாற்றாமையைத் தோழிக்கு உரைத்தது. மன்மதனை முழுதும் எரிக்காமல் உயிர் கொடுத்த சிவனும், தன் கூட்டில் பொரித்த குயில் குஞ்சைக் கொல்லாமல் வளர்த்த காக்கையும், சந்திரனை விழுங்கிப் பின் உமிழ்ந்த பாம்பும், தன்னைப் பெற்ற போதே கொல்லாமல் வளர்த்த தாயும் குற்றம் செய்தவர் ஆவர் எனக் கூற வந்தவள், அப்படிக் கூறாது, அவர்கள் குற்றம் ஏதும் செய்யவில்லை என மாற்றிக் கூறினாள். இதன் நயம் உணர்ந்து மகிழத்தக்கது).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக